ஊருக்குள் ஒரு புரட்சி
சு. சமுத்திரம் எழுதியது
UrukkuL oru puraTci
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned
image (PDF) version of this work for the etext preparation. The etext has been
prepared using Google OCR Online Tool and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஊருக்குள் ஒரு புரட்சி
தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல்
சு. சமுத்திரம் எழுதியது
Source:
ஊருக்குள் ஒரு புரட்சி
தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல்
சு. சமுத்திரம்
மணிவாசகர் பதிப்பகம்,
8-7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108
முதல் பதிப்பு 1980, மறுபதிப்பு 1998
விலை ரூ 22.00
பதிப்பாசியர்: டாக்டர் ச. மெய்யப்பன்
அச்சிட்டோர்: ஸ்டேட் ஃபாஸ்ட், சென்னை 600 013
-------------
ஊருக்குள் ஒரு புரட்சி
என்னுரை
கண்ணால் கண்டு, காதால் கேட்டு, தீர விசாரித்துத் தெளிந்த நிகழ்ச்சிகளுள் ஒரு சிலவற்றின் ஒட்டுமொத்தமான உருவமே இந்த நாவல். நிலப்பிரபுத்துவத்தின் ஆணவமும், முதலாளித்துவத்தின் கபடமும், அரசாங்க 'யந்திர வாதிகளின்' ஏனோதானோப் போக்குகளும், கிராமங்களில் இப்போது நடைபெறும் நவீன சுரண்டலின் ஒருங்கிணைந்த மையமாக இருப்பதையும், ஏழைகள் கோழைகளாய் இருக்கும் வரை, ஏய்ப்பவர்கள் தான் 'மேய்ப்பவர்'களாக இருப்பார்கள் என்பதையும் விளக்கும் வகையில் இந்த நாவலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். முற்போக்கு இலக்கியவாதிகள், இதை வரவேற்பார்கள் என்று கூறுவதைவிட, இந்த நாவலை வரவேற்பவர்கள் தான் முற்போக்கு இலக்கியவாதிகளாக இருக்க முடியும் என்று சொல்லத் தோன்றுகிறது. நாவலின் முடிவு ஓரளவு மிகையானது என்பதை அறிவேன். அதே சமயம், 'ஜாதிக்' குடிசைகளும், 'சேரிக்' குடிசைகளும் சேரும் நேரமே விடியல் நேரம் என்பதையும், அந்த விடியலை உணராத மக்களின் தூக்கத்தைக் கலைக்கும் சேவலொலியாக இந்த நாவல் ஒலிக்கும் என்றும் நம்புகிறேன். பிரக்ஞை, பாதிப்பு, அடிமன வருடல், தேடல் என்பன போன்ற இலக்கிய ஜாலங்களைப் போட்டு, கௌதம முனிவரை திசை திருப்பும் 'இந்திர' சேவலல்ல இது. விடியு முன்னாலே கண்விழித்து, காடு கழனிக்குச் சென்று, கடுமையாய் உழைத்தும் விடிவு காணாத ஏழையினத்தின் நெற்றிக் கண்ணைத் திறக்கக் கூவும் வெற்றிச் சேவல் இந்த நாவல் என்று மனதார நம்புகிறேன்.
நான் முதன் முதலாக எழுதிய 'ஒரு கோட்டுக்கு வெளியே' என்ற நாவலில், பாதி பார்வையாளனாகவும், பாதி பங்காளியாகவும் இருந்தேன். அடுத்த எழுதிய 'சோற்றுப் பட்டாளத்'தில், சற்று ஒதுங்கி நின்றேன். ஆனால் இந்த நாவலில் முதற் பகுதியில் விலகி நின்ற என்னால், இறுதிவரை அப்படி விலகி நிற்க முடியவில்லை. ஆண்டியப்பனையும், சின்னானையும், காத்தாயியையும் நான் படைத்தேன் என்பதை விட, அந்தப் பாத்திரங்களே என்னைப் படைப்பாளியாக்கின என்று சொல்லலாம். இது, பலமா அல்லது பலவீனமா என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆரம்பத்தில் என்னால் படைக்கப்பட்ட இந்தப் பாத்திரங்களே, பின்னர் எனக்கு எப்படி எப்படி எழுத வேண்டும் என்று உத்தரவிட்டன! பாத்திரங்களுக்கே ஒரு பாத்திரமானேன் என்றாலும், எந்தக் கட்டத்திலும், யதார்த்தத்தை மறைக்கவில்லை. காரணம், இந்தப் பாத்திரங்கள், கிராமங்களில் பல்வேறு மனித வடிவங்களாக நிற்கின்றன.
'தேவி' வாரப் பத்திரிகையில், ஆரம்பத்தில் நான்கைந்து அத்தியாயங்களுக்குள் தொடர்கதையாக முடித்து விட வேண்டும் என்ற ஏற்பாட்டின்படி, எழுதத் துவங்கினேன். வாசகர்களிடையே இந்தத் தொடர்கதைக்கு ஏற்பட்ட வரவேற்பைக் கருதி, தேவி பத்திரிகை ஆசிரியர் திரு. பா. இராமச்சந்திர ஆதித்தன் அவர்கள், நான் எத்தனை அத்தியாயங்கள் வரை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தெரிவித்தார். அவர் கொடுத்த உற்சாகத்தில், பதினேழு அத்தியாயங்கள் எழுதி, அவர் முடிக்கச் சொல்லு முன்னாலேயே, கண்ணோட்டங் கருதி முடித்துக் கொண்டேன். வாரா வாரம் வாசகர்களின் கடிதங்களை எனக்கு அனுப்பி வைத்து, ஒரு எழுத்தாளனிடம் பத்திரிகையாசிரியர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் திரு. பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கும், அவ்வப்போது என்னுடன் தொடர்பு கொண்டு, கதையின் நலங்களையும், குறைகளையும் சுட்டிக் காட்டிய உதவி ஆசிரியர் ஜேம்ஜுக்கும் என் மனமார்ந்த நன்றி. கடிதங்கள் மூலம் பாராட்டிய தேவி வாசகர்களுக்கும் நன்றி.
தொடர்கதை வந்து கொண்டிருந்த போதே, அதை விமர்சித்து எனக்குக் கடிதங்கள் எழுதியவர் திரு. வல்லிக்கண்ணன். ஆரம்ப அத்தியாயங்கள், கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு போகிறதேயன்றி, கலையம்சமாக இல்லை என்றும், பிறகு சிறப்பாகப் பரிணாமப்பட்டதாகவும் கருத்துத் தெரிவித்தார். உண்மைதான். குறிப்பிட்ட அத்தியாயங்களுக்குள் கதையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் அப்படி எழுதினேன். இந்த நூலில் கூட, அந்தக் குறையை முற்பகுதியில் அதிகமாகச் செப்பனிடாமல் மெத்தனமாக இருந்துவிட்டேன். இளைய தலைமுறையை, காய்தல் - உவத்தலின்றி ஆய்வு செய்து அடையாளங் காட்டும் திரு. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு என் நன்றி.
தொடர்கதை என்பது வேறு. நாவல் என்பது வேறு. அதே சமயம், விசுவாசத்துடனும், சமூகப் பிரக்ஞையுடனும் எழுதப்படும் ஒரு தொடர்கதையை, சிறந்த நாவலாகவும் ஆக்கிவிடலாம் என்று எனக்கு வழிகாட்டியவர், திரு. ஆர்.கே. கண்ணன். தேவியில் வெளியான பதினேழு அத்தியாயங்களையும் படித்துவிட்டு, புரட்சிக்குரிய களம் வலுவாக இல்லை என்று கருத்துத் தெரிவித்தார். இதை அறிந்து நான் எழுதி வைத்திருந்த 'லிங்குகளை'ப் படித்துவிட்டு, அவற்றை 'ரிப்போர்ட்டாக'ச் சொல்லாமல், கதையாகச் சொல்ல வேண்டும் என்று சொல்லி தளத்தைக் களமாக்கினார். இந்த நாவலை முழுமைப்படுத்திய அந்த முழுமையான இலக்கிய ஞானவானுக்கு என் நன்றி.
தேவியில் நான் தொடர்கதை எழுதியே ஆகவேண்டும் என்று என்னை வற்புறுத்தியவர் இலக்கிய வீதி அமைப்பாளரான, என் எழுத்தாள நண்பர் இனியவன். தொடர்கதையாக எழுதும்போது, சொல்ல வேண்டிய விவகாரங்கள் விடுபட்டுப் போகலாம் என்று நினைத்து நான் தயங்கியபோது, கிட்டத்தட்ட அடிக்காத குறையாகப் பேசி எழுத வைத்தவர் நண்பர் இனியவன். இவர் உருவாக்கியிருக்கும் இளந் தலைமுறையினரான வெங்கடேச ரவி, மது, ராஜேந்திரன், எம்.வி. குமார் போன்ற கவிஞர்களும், எழுத்தாளர்களும் (இரண்டையும் செய்யக்கூடியவர்கள்) தொடர்கதையை காரசாரமாக விமர்சித்து என்னைக் கதாநாயகனாக்கினார்கள்.
'தாமரை' உதவி ஆசிரியர் சோமு அவர்கள், இந்த நாவல் வெற்றிகரமாக வெளிவருவதற்கு எல்லாவகையிலும் உதவினார். மிகச் சிறந்த எழுத்தாளரும், கவிஞருமான திரு. இளவேனிலை, எனக்கு அறிமுகப்படுத்தி, அவரையே ஒரு அற்புதமான அட்டைப்படத்தை வரையச் செய்தார். நான் தனியாக எழுதிய நான்கு அத்தியாயங்களைப் படித்து, அவற்றை மேலும் செம்மையாக்க பல ஆலோசனைகளை வழங்கினார். எனது நூல் வெளி வருவதை, தனது சொந்தப் படைப்பு வெளிவருவது போல் பெருமிதப்படும் எழுத்தாளரான சோமுவுக்கு என் நன்றி. இதுவரை வெளியான எனது படைப்புகள் அத்தனையிலும் சம்பந்தப்பட்டதுடன், அவை எந்தவிதமான வரவேற்பைப் பெறும் என்று துல்லியமாகக் கணிப்பதில் வல்லவர் சோமு. என் படைப்பில் பெருமைப்படுபவர். எழுத்தாளர்களில், இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள்? விரல் விட வேண்டிய அவசியமே இருக்காது.
இந்த நாவலின் இறுதிக் கட்டத்தில் ஓரளவு 'பிரசார வாடை' வீசுவது போல் ஒரு கருத்துத் தோன்றியது. எனக்கு அது சரியெனப் பட்டது. பாத்திரங்கள், தங்கள் கொள்கைகளைச் செயலாக்கும்போது, அவை 'பேச வேண்டுமா' என்ற நியாயமான சந்தேகம் வலுப்பெற்று, நான், 'பேச்சைக்' குறைக்கப் பேனாவை எடுத்தபோது, 'நாவலின் ஆன்மாவே இதுதான், இது பிரசாரம் அல்ல... எதைச் சொல்வதற்காக நாவல் எழுதினீர்களோ... அதுதான் இது' என்று வாதாடி வெற்றி கண்டவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சென்னைக் கிளையின் செயலாளர் கவிஞர் இளையபாரதி.
பிரபல பத்திரிகைகளில் அழுத்தமான பாத்திரங்களைப் படைப்பது கடினமான காரியம். வியாபாரப் பத்திரிகைகளில் எழுதுபவர்கள், விற்பனைப் பொருளாகி, நாளடைவில் வெறும் பொருளாய்ப் போனதுக்குக் காரணமே, இந்தச் சூழல்தான். இந்த நிலை எனக்கு வராமல் போனதற்குப் பெருங்காரணம் தாமரைப் பத்திரிகையே. அந்தப் பத்திரிகையில் நான் பெற்ற பயிற்சி, பிரபல பத்திரிகைகளிலும் எதிரொலிப்பதை அறிவீர்கள். இந்தப் பயிற்சியை அளித்தவர், கவிஞர் கே.ஸி.எஸ். அருணாசலம் அவர்கள். 'கவிதை என் கைவாள்' என்று அவர் சொன்ன ஒரு வரியை, நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஓராயிரம் வரிகளை எழுதியிருக்கிறேன். இலக்கியத்தை, நான் போர்ப் பரணியாகக் கருதுவதற்கு உருத்தந்தவர் கே.ஸி.எஸ். எனது எல்லாக் கதைகளையும் வரிக்கு வரி படித்து, ஒளிவு மறைவு இல்லாமல் விமர்சித்து ஒளி பாய்ச்சியவர். அவர் மூலமாகவே, முற்போக்கு இலக்கிய அறிமுகம் கிடைத்தது. கவிதை உலகில் என்னை அறிமுகப்படுத்தியவரும் அவரே. நான் எப்படி என் படைப்புகளை நினைத்துப் பெருமைப் படுகிறேனோ அப்படி, அவர் என்னை நினைத்துப் பெருமைப்படுபவர். இந்த நாவலின் பாத்திரங்கள் அழுத்தமாக உள்ளன என்றால், அதற்கு அவரளித்த அழுத்தமான பயிற்சியே காரணம்.
இந்த நாவலை, மறைந்த பேரறிஞர் நா. வானமாமலை அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறேன். இளந்தலைமுறையினருடன், 'தலைமுறை இடைவெளி' இல்லாமல் பழகிய அந்த இனிய அறிஞர், இந்த நூலைப் படிப்பதற்கு இல்லையே என்று நினைக்கும் போது சங்கடமாக இருக்கிறது. நான் 'ஆய்வுக்' கதைகள் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த அவருக்கு என் புரட்சி வணக்கங்கள். என் படைப்புகளில், வாசகர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.
நான் யார்?
இந்த சமூக விடுதியில் ஒரு சர்வர்.
இவர்கள் சமையல்காரர்கள்.
நீங்கள்?
சாப்பிடப் போகிறவர்கள்.
சாப்பாட்டிற்காக வாழ்கிறீர்களா, வாழ்வதற்காக சாப்பிடுகிறீர்களா என்பதைச் சொல்லப் போகிறவர்கள்.
கடிதங்கள் மூலமாகச் சொல்லுங்கள்.
பத்திரிகை ஆசிரியர்கள், வெறும் வியாபாரிகளாக மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தக் கதையைத் துணிந்து பிரசுரித்த திரு. ராமச்சந்திர ஆதித்தனுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பன்,
சு. சமுத்திரம்
--------------
காணிக்கை
பேராசிரியர் நா. வானமாமலை அவர்களுக்கு
இலக்கியம் என்றால்
என்னதென்ற கேள்விக்கு
பாட்டாளி இலக்கியமே
படைப்பிலக்கியம் என்று
விடையாக நின்றமேதை
விடைபெறாமல் போய்விட்டார்
இந்த நாவலின் முடிவு
இந்திய முடிவாகும் போது
இவரின் இறப்பே
ஒரு பிறப்பாக மலரும்.
- சு. சமுத்திரம்
--------------------------
ஊருக்குள் ஒரு புரட்சி
1
அடியில் துடித்துக் கொண்டிருக்கும் பல்லி, பாச்சான்களை, அடிவயிற்றுக்குக் கீழே மறைத்துக் கொண்டு, அசையாமல் கிடக்கும் மலைப் பாம்பு போல, நேற்றுவரைக் காட்சியளித்த சட்டாம்பட்டி, அன்று மட்டும், மொட்டைப் பனைபோல் முடியுதிர்ந்த தலையை 'விக்காலும்', முதுமைச் சுருக்கங்களைப் பவுடர் வகையறாக்களாலும், சாகச லீலைத் தடயங்களை, ஆடை ஆபரணங்களாலும், மறைத்துக் கொள்ளும் வயதான 'இளம் பெண்ணைப் போல' விழாக் கோலத்தில் மின்னியது.
அங்கே கோயிலுக்கருகே போடப்பட்டிருந்த மேடைக்கு சற்றுத் தொலைவில் இரண்டு கம்பங்களில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில், 'விவசாயி... விவசாயி' என்று அந்தக் கிராமத்தைக் கூப்பிடுவது போலவும், அந்தக் கிராமமே குரலிடுவது போலவும் பாட்டு ஒலித்தது.
அங்கே 'சிறு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்ட விழா' நடக்கப் போவதே, கிராமத்தின் இந்த 'மேக்கப்பிற்குக்' காரணம்.
அனைவரும் அமைச்சரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தார்கள். அமைச்சர்களிடமிருந்து கறவை மாடுகள், விவசாயக் கருவிகள், நெற்குதிர்கள் போன்றவற்றை வாங்கிக் கொள்வதற்காக, சில சிறு விவசாயிகள் விழா மேடைக்கு அருகில் போடப்பட்டிருந்த பெஞ்சில் முண்டாசுத் தலைகளாக 'ஜோடித்து' வைக்கப்பட்டிருந்தார்கள். 'லயன்ஸ் கிளப்' கொடுக்கும் இலவச ஆடைகளை வாங்கிக் கொள்வதற்காக பத்துப் பதினைந்து அரிஜனப் பையன்கள், அந்தப் பெஞ்சிற்கு முன்னால் உட்கார, அந்தப் பிள்ளைகளைப் பெற்றவர்கள், சற்று தொலைதூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.
இந்த அரிஜனங்கள் ஒதுங்கியிருந்த இடத்துக்கு அருகேயே, உள்ளூர் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக, அரசாங்கத்தின் உதவியோடும், பாங்குகளின் கடனோடும் அரியானாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் ஜெர்ஸி இனப் பசுமாடுகள், கன்றுகளுடன் கட்டப்பட்டிருந்தன.
அவற்றிற்கு அருகே, சில இளைஞர்கள் காரசாரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஓராண்டுக்கு முன்பு, அங்கே துவக்கப்பட்ட கிராம இளைஞர் நற்பணிமன்றத்தின் நிர்வாகிகள் அவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரி இளைஞர்கள். ஒரே ஒருவன் மட்டும் எட்டாவது வகுப்பு வரை இவர்களோடு படித்து, எல்லா பாடங்களிலும் 'பஸ்டில்' வந்து பணத்தில் 'லாஸ்டாக' வந்ததால், மேற்கொண்டு படிக்க முடியாமல் போன ஆண்டியப்பன்.
அவன் படிக்காதவன் என்பதை, அந்தக் கூட்டத்தில் அடையாளம் கண்டு கொள்ளலாம். அவ்வளவு கட்டுமஸ்தான உடல். கபடமில்லாத கண்கள். எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு அவற்றைத் தனக்குள்ளேயே ஆராய்ச்சி செய்து கொள்ளும் தனித் தோரணை. இளைஞர் மன்ற நிர்வாகத்தின் தலைவனும் பட்டதாரியும், பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவத்தின் எதிரியுமான ஒரு பண்ணையாரின் மகன் குமார். இன்னொரு பண்ணையாரின் மகனும், மன்றத்தின் பொதுச் செயலாளருமான, மாணிக்கம் பி.ஏ., பி.டி. விழாவில் பேசப் போகிற மன்றத் தலைவன் குமாருக்கு, உபதேசம் செய்து கொண்டிருந்தான்.
"இந்தா பாருடா... இளைஞர்கள் சார்பில், உன்னைப் பேசவிடாவிட்டால் கறுப்புக் கொடி பிடிக்கப் போறதாய் வாதாடி, உன் பேரை போஸ்டர்ல போட முடியாவிட்டாலும் நிகழ்ச்சி நிரலுல போட வச்சுட்டோம். ஊர்ல நடக்கிற அட்டூழியங்களை, அமைச்சர் முன்னாலே அம்பலப்படுத்த வேண்டியது உன்னோட பொறுப்பு."
"போஸ்டர்ல பேரு போடாதபோது எப்படிப் பேசலாமுன்னு யோசிக்கேன்."
"எவண்டா இவன்? போஸ்டர்ல 'மற்றும் பலர்'னு ஒரு வாசகம் இருக்கது எதுக்காக? உனக்காகத்தான்... இப்போ அது பிரச்சினை இல்ல. நம் ஊர்ல நடக்குற அக்கிரமத்த நீ பிச்சிப் பிச்சி வைக்கணும். பின்னிப் பின்னி எடுத்துடணும். அரசாங்கம் சிறு விவசாயிகளுக்கு நாலுல ஒரு பங்கு உதவித் தொகையும், மிகச் சிறு விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு உதவித் தொகையும் கொடுத்து, கறவை மாடுகள், தழைமிதிக் கருவிகள் முதலிய முக்கியமானதை, பாங்க் கடன்கள் மூலம் வாங்கிக் கொடுக்கிற திட்டந்தான் சிறு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம். ஆனால் நடந்தது என்ன?"
"பண்ணையார்கள், இவங்க பேர்ல மாடுகளை வாங்கி தாங்களே வச்சிக்கிடுறாங்க. பினாமி நிலங்களை வச்சிருக்கிற இவங்க, வேலைக்காரர்களையும் பினாமி விவசாயிகளாக்கி, அவங்க பேர்லயும் வாங்கிக்கிறாங்க. அப்புறம் கூட்டுறவு சங்கத்துல, குறிப்பிட்ட ஒரு பங்காளிக் கூட்டந்தான் சேர்ந்திருக்கே தவிர, மற்றவங்கள சேர்க்கல. சேர்க்கவும் முடியல. கூட்டுறவுத் தலைவர் 'கமிஷன்' வாங்குறார். கர்ணம் புறம்போக்கு நிலத்தை மடக்கிப் போட்டிருக்கார். இங்க இருக்கிற இந்தத் தனியார் பள்ளிக்கூடத்துக்கு, பிள்ளைகளுக்காகப் பால் பவுடர், டின் டின்னா வருது. இது பிள்ளிங்களுக்கே தெரியாது. பால் டின்னைக் கொண்டு மானேஜர் மகளும், மருமகளும், கிணற்றுக்குத் தண்ணி எடுக்க வரும்போதுதான், இந்த சமாச்சாரமே வெளில தெரியுது. அதோட, இந்த மானேஜர் பால் பவுடர் விற்கிறதோட, வாத்தியாருங்க சம்பளத்துலயும் 'கிம்பளம்' எடுத்துக்கிட்டு, பொம்புள பொறுக்கியா அலையுறான். இவன் மச்சான் போஸ்ட்டு மாஸ்டர். வேண்டாதவங்களுக்கு வருகிற லட்டர கிழிச்சிப் போட்டுடுறான். எனக்கு வந்த இன்டர்வியூ கார்டை, அவன் தராததை, நீ சுட்டிக்காட்டி 'நம் கிராமத்திலேயே அறிவாளியும் ஆற்றல்மிக்கவனுமான மாணிக்கம் பி.ஏ., பி.டி.க்கே, இந்த கதியென்றால், யாருக்கு வராது'ன்னு சொல்லு. புரியுதா... அப்புறம் மாதர் சங்கத்துக்குக் கொடுத்த தையல் மிஷின்கள் பஞ்சாயத்துத் தலைவர் வீட்லயும், முன்சீப் வீட்லயும் கிடக்குது. ஒரு மிஷின், தலைவரோட மகளுக்கு, சீதனமாப் போயிட்டுதாம். புரியுதா...?"
இப்போது, மன்றத்தின் துணைத் தலைவரும் என்ஜினீயரிங் படிப்பில் டிப்ளமா படித்தவனுமான கோபால் தன் பங்குக்குப் பேசினான்:
"அப்புறம்... பஞ்சாயத்துத் தலைவர், 'செக்' போட்டு யூனியனில் பணம் வாங்குறார். ரோட்ல மண்ண அள்ளிப் போட்டுட்டு, பாலங் கட்டுனதா ரிக்கார்ட் பண்ணுதார். நீ எதைச் சொல்ல மறந்தாலும், ஒண்ணே ஒண்ணை மட்டும் சொல்ல மறந்துடாத... அதாவது, சர்க்காருடைய சலுகைகளை, அயோக்கியங்கதான் பயன்படுத்திக்கிறாங்க. சேர வேண்டியவங்களுக்குச் சேரல... சேரவே இல்லை. இதை நீ சொல்லாம விட்டால், நான் ஒன்னை உதைக்காமல் விடமாட்டேன்!"
அந்தச் சமயத்தில் அங்கே வந்தார் மாசானம். காண்டிராக்ட் எடுத்து புதுப் பணக்காரராய் ஆனவர். பழைய பணக்காரர்கள், தன்னை புது மனிதனாக அங்கீகரிக்காமல், பழைய கருவாட்டு வியாபாரியாகவே தன்னை இன்னும் நினைப்பது கண்டு, எரிச்சல் கொண்டவர். காண்டிராக்ட் வித்தையைக் காட்டிப் பேசினார்:
"நீங்க சும்மா இருங்கப்பா... நம்ம குமார் வெளுத்து வாங்கப் போறான். இன்னையோட இந்த ஊரப் பிடிச்ச சனி விலகப் போவுது. குமார்... பாயிண்ட் பாயிண்டாய் எழுதி வச்சுக்க, எங்க கல்லப் போடணும், எங்க மண்ணப் போடணும், யார் தலையில எதப் போடணுமுன்னு நல்லா குறிச்சு வச்சுக்க!"
கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் எப்போதாவது ஆறுதல் பரிசு பெறும் குமார், அவர்களைப் பார்த்து, "நான் பேசினதுக்கு அப்புறம் பஞ்சாயத்துத் தலைவர் தூக்குப் போட்டுச் சாகணும்! மாதர் சங்கத் தலைவி, வீட்டுக்கு வெளிலேயே வரமாட்டாள் - வேணுமுன்னாப் பாருங்க" என்றான்.
அவர்கள் பார்த்தார்களோ இல்லையோ, விழா மேடையில், விவசாயக் கருவிகளையும், தையல் மிஷின்களையும், கிராமநல ஊழியர்களின் உதவியோடு, ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், அவர்களையே பார்த்தார். "மாசானம் அடே கருவாட்டு யாபாரி! ஒன்னோட வேலையா! நீ தூண்டி விடுறியா! பார்க்கலாமாடா... பாத்துப்புடலாம்" என்றாலும், தலைவருக்கு உள்ளூர நடுக்கந்தான்.
இவர் மட்டும், அந்த இளைஞர் கூட்டத்தைப் பார்க்கவில்லை. மாதர் சங்கத் தலைவி சரோஜாவின் மகள் மல்லிகா, அங்கே நின்ற மாணிக்கம் பி.ஏ., பி.டி.யையே பார்த்துக் கொண்டே நின்றாள். சீ என் ஏக்கம் இவருக்கு ஏன் புரிய மாட்டக்கு. அந்தத் தடிப்பயல்களும் அவரை விடமாட்டக்காங்க. எப்படிக் கையை ஆட்டி ஆட்டிப் பேசுறார்! என்கிட்ட இப்படிப் பேசினால் என்னவாம்...
மல்லிகா மட்டுமா பார்த்தாள்? இல்லை - விவசாயக் கூலிப் பெண்ணான தங்கம்மா, தன் 'அய்யா கூடப் பிறந்த அத்தை மகனான ஆண்டியப்பனை' அப்படியே பார்த்தாள். 'ஒரு தடவையாவது என்னைப் பார்க்குறாரா... பவுசு... பசுமாட்டை, மந்திரி கையால வாங்கப் போற பவுரு... வரட்டும். அய்யாவைப் பாக்குறச் சாக்குல, என்னப் பாக்க வராமலா போவாரு. அப்போ நானும் பார்க்காமலும் பேசாமலும் இருக்கேன்...'
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, 'டூட்டியில்' இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பனும், பஞ்சாயத்துத் தலைவரையே பார்த்தார். இந்தத் தலைவர் ஸ்டேஷனுக்கு வந்து கள்ளச்சாராயம் குடித்த அப்பாவி ஏழைபாளைகளை விடச் சொல்லும்போது, இவரும் 'பிழைச்சிப் போவட்டுமே. ஏழை ஜனங்கள்' என்று நினைத்து விட்டிருக்கிறார்.
ஆனால் இப்படி உதவியதே தப்பாப் போயிற்று. ஒரு தடவை, ஒன்றும் அறியாத ஒரு ஏழையை, குடித்ததாய் வழக்குப் போடும்படி சொன்னபோது, அவரை 'கெட் அவுட்' என்று சொல்லிவிட்டார். பஞ்சாயத்து பரமசிவமோ ஒன்ன மாத்தாட்டால், என் பேரு மாறிப் போயிடும்' என்று சவாலிட்டார். உடனே இதை சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரிடம் நடந்ததைச் சொன்னால், அவரோ, 'எந்த இந்திரன் பதவிக்கு வந்தாலும், இந்த ஏரியாவுக்கு இந்திரன் இந்தப் பரமசிவம். பார்த்து நடந்துக்கையா' என்று சொல்லிவிட்டார். தங்கப்பன், இப்போது நிஜமாகவே பயந்துவிட்டார். அமைச்சரிடம் சொல்லி, ஆசாமி, தண்ணி இல்லாத காட்டுக்கு' மாற்றிடுவானோ? - எதுக்கும் ஒரு சல்யூட் அடிக்கலாம்.
இந்த அமர்க்களம் பத்தாது என்பது போல், சேரியில் இருந்து சின்னான், தலைவிரி கோலமாக ஓடி வந்தான். பட்டதாரி வாலிபன். 'டவுனில்' சர்க்கார் உத்தியோகம். இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளைத் தாண்டிக் கொண்டே, விழா மேடைக்கருகே வந்து, அங்கே உட்கார்ந்திருந்த ஹரிஜன சிறுவர், சிறுமிகளைக் கைகளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, 'வாங்கல, நமக்குத் துணிமணிகள் கொடுக்கிறவங்க, சேரில வந்து கொடுக்கட்டும்' என்று சொல்லி அவர்களை விரட்டிப் பிடித்து இழுத்துக் கொண்டே போனான்.
சின்னான், சேரிப்பயல்களோடும் சிறுமிகளோடும், 'அடுத்த மாசச் சம்பளத்துல ஒங்களுக்கு டவுசராம், பாவாடையாம்' என்று தாஜா செய்து கொண்டே, இளைஞர் மன்ற நிர்வாகிகளைக் கடந்தபோது, சின்னானின் கல்லூரித் தோழன் மாணிக்கம், மல்லிகாவை 'இம்ப்ரஸ்' செய்ய நினைத்தவன் போல், "என்ன சின்னான் ஊர்ப் பிரச்சினைகளை தீர்க்கிறதில், எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டிய நீயே இப்படிப் பண்ணலாமா?" என்றான்.
சின்னான் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு வார்த்தைகளை ஏற்றி இறக்கிப் பேசினான்.
"அன்னக்கிளி சினிமாவுல ஒரு காட்சி இப்போ ஞாபகம் வருது. கல்யாணமான காதலனும், அன்னக்கிளியும், மனம் உருகப் பேசிக்கிட்டு இருக்காங்க... இரண்டு பேரும் அழுகிறாங்க. ரசிகர்களும் அழுகிறாங்க. அதே சமயம் அன்னக்கிளி போட்ட நெருப்புல மீனுங்க துள்ளி விழுந்து சாகுது. துடியாய் துடிக்குது. இதை யாருமே பார்க்கல. பார்க்க விரும்பல. இது மாதிரிதான் உங்க பிரச்சினை அன்னக்கிளி பிரச்சினை."
"ஆனால் சேரி ஜனங்களோட பிரச்சினை, அந்த நெருப்புல துள்ளி விழுந்து துடிக்கிற மீன்களை மாதுரியான பிரச்சினை!"
மாணிக்கம் இடைமறித்தான்.
"நீ எங்கள தப்பா நினைக்கிற சின்னான். ஒன்னை நாங்க எப்போதாவது ஹரிஜனாய் நினைச்சுப் பழகுறோமா? ஒன் வீட்ல கூட ஒரு தடவை - காபி சாப்பிட்டிருக்கேன்" என்றான்.
சின்னான், தன் தோளில் கிடந்த மாணிக்கத்தின் கையை, கீழே எடுத்துப் போட்டுக் கொண்டே, "ஹரிஜனாய் இருந்தாலும், அப்படி நினைத்துப் பழகக்கூடாதுன்னு படித்தவர்களுக்கு ஒரு எண்ணம் வருது பாருங்க... அதுதான், பழைய காலத்து ஆட்கள் எங்கள ஜாதிப் பேரச் சொல்லி கூப்புடுறதை விட மோசமான சங்கதி. நாம சமத்துவமாய் பழகுறோம் என்கிறதுல பெருமை தேடுற அகம்பாவ உணர்வின் பூர்த்தி. என் வீட்ல காபி சாப்பிட்டதே ஒரு நியூஸா இருக்குது பாருங்க. என்னைப் பார்த்ததும் ஹரிஜன் என்கிற ஒரு எண்ணம் வருது பாருங்க. இந்த இரண்டும் இருக்குற வரைக்கும், நீங்களும் உருப்படப் போறதில்ல. நாங்களும் உருப்படப் போறதில்லை. சரி. நான் வாரேன்."
சின்னான் போய்விட்டான். எல்லோரும் வெளிப்படையாக, அவன் ஜாதியைப் பேசி, திட்டிக்கொண்டிருந்த போது, ஆண்டியப்பன் மட்டும், சின்னான் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். எட்டாவது வகுப்பு படிப்பது வரைக்கும், தன்னோடு உடலுரச உட்கார்ந்து, காதுரசப் பேசி, கையுரச நடந்த இந்த சின்னான், இப்போது தன்னைப் பார்த்து, இருக்கியா செத்தியா என்று கூடக் கேட்காமல் போறதற்காக, மனத்திற்குள் மருகினான்.
'இப்படியே விட்டால் தப்பு' என்று எண்ணி, அங்கே பஞ்சாயத்து பரமசிவம் வந்து, "ஏண்டா குமார்... நீ செய்யுறது நியாயமாடா... இந்தக் கிழவனே எல்லாத்தையும் கவனிச்சிக்கிடட்டுமுன்னு இங்க நின்னா எப்டிடா... வாடா. ஏல ஆண்டி, ஒனக்கும் தனியா வெத்தல பாக்கு வச்சி அழைக்கணுமாக்கும்... போய் பெஞ்சில உட்காருல. மந்திரி தார மாட்ட வாங்குல" என்றார்.
குமாரும், ஆண்டியப்பனும், பஞ்சாயத்துத் தலைவருடன் மேடையை நோக்கிப் போனார்கள். தலைவர் வந்தபோது, 'கழட்டிக்' கொண்ட புதுப் பணக்கார மாசானம் அப்போது காது கேட்கும் தூரத்திற்கு தன்னை கடத்திக் கொண்டவர், இப்போது மீண்டும் அங்கே வந்து இளைஞர்களின் காதுகளுக்குள் கிசுகிசுத்தார்.
"இந்தப் பரமசிவம், பண்ணுத பாத்தியளா... மனுஷன் குமார எப்படி குளிப்பாட்டுதான் பாத்தியளா... இவன் நனைஞ்சுட மாட்டானே?"
இதற்குள், அமளிகளும் கிசுகிசுப் பேச்சுகளும் அடங்கின. வாணவேடிக்கைகள் வெடித்தன. மேளங்கள் முழங்கின. அமைச்சர் வந்து மேடையில் அமர்ந்தார். குமார், அவர் பக்கத்தில் உட்கார்ந்தான். கல்லூரிக் காலத்தில் அறிமுகமான அந்த அமைச்சரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். இதுவரை, அவன் இருப்பதையே ஒரு பொருட்டாகக் கருதாத மாவட்ட அதிகாரிகள் இப்போது குமாரை 'சீரியஸாக' எடுத்துக் கொண்டார்கள்.
'நீராருங் கடலுடுத்த' பாட்டை, ஒருத்தி கட்டை குரலில் பாடினாள். அதே பாட்டை, அந்தப் பள்ளியின் சங்கீத ஆசிரியை மங்களத்தைப் பாடச் சொல்லியிருந்தால், மங்களகரமாகப் பாடி இருப்பாள். அந்த ஏழை ஆசிரியைக்குப் பதிலாக, மாதர் சங்கத் தலைவியின் சித்தி மகள் பாடினாள். தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூட இன்புளுயன்ஸ் இல்லாத 'இன்புளுயன்ஸா' நோய்க்காரி மங்களம், பாட்டைக் கேட்டும் பாடியவளைப் பார்த்தும் கொஞ்சம் சங்கடப்பட்டாள்.
பாட்டு முடிந்ததும், பஞ்சாயத்துத் தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர் உட்பட அத்தனை பேரையும் பதவிக்கும், தகுதிக்கும் ஏற்றபடி அறிமுகப்படுத்திவிட்டு, இறுதியில் குமாரைப் பற்றிப் பேசும்போது "இந்த குமார், இந்த ஊரின் தவக்குமார்! வேலைக்குப் போகாமல், சேவைக்காக, தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். இவன் இல்லையானால், ஊர் ஊராக இருக்காது. வருகிற பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில், நான் நிற்கப் போவதில்லை. இவனைத்தான் நிறுத்தப் போகிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். உடனே மக்கள் கைதட்டினார்களோ, என்னவோ, மாவட்ட அதிகாரிகள் கைதட்டினார்கள். சிறிது யோசித்துவிட்டு, அமைச்சரும் கைதட்டினார். அவர், பஞ்சாயத்து பரமசிவம் தேர்தலில் நிற்க மாட்டார் என்பதற்காகவே கைதட்டினார் என்று கூட்டத்தில் ஒரு சாரார் பேசிக் கொண்டார்கள்.
குமார் பேச எழுந்தான்.
இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், காதுகளை கூர்மையாக்கி, கைகளைத் தட்டுவதற்குத் தயாராகக் காத்து இருந்தார்கள். மாசானமும், தன் நீண்ட நாள் கனவு நனவாவதைக் காண, அவரைத் தங்களின் கோஷ்டியில் சேர்க்க விரும்பாத உள்ளூர் பிரமுகர்களின் ஊழல்கள் அம்பலமாவதைக் கேட்பதைவிட, அவர்களின் முகங்கள் போகிற போக்கைப் பார்ப்பதில் அதிக அக்கறை செலுத்தினார்.
பிச்சி உதறப்போறான்! டேய், பரமசிவம்... மூணு முளக் கயிற்றை எடுத்துக்கடா!
குமார் மைக் அருகே வந்தான். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, கால்மணி நேரத்தை காலாவதியாக்கிவிட்டு, 'பொருளுக்கு' வந்தவன், அமைச்சரைப் பார்த்தான். அதிகாரிகளைப் பார்த்தான். பஞ்சாயத்துத் தலைவரைப் பார்த்தான். அத்தனையும் அன்பு முகங்கள். அவன் தேர்தலில் நிற்கவேண்டும் என்று தட்டிய கரங்கள். அவன், நன்றி இல்லாமல் பேசலாமா... கூடாது. இளைஞர் மன்ற நிர்வாகிகள் என்ன சொல்வார்கள். கிடக்கிறான்கள். சான்ஸ் கிடைத்தால், இந்தப் பயலுவளும் இப்படித்தான் பேசுவாங்க.
"அருமை அண்ணன் பரமசிவம் அவர்களின் (பரமசிவம், அவனுக்கு மாமா முறை. மேடை நாகரிகத்தைக் கருதி, அப்படிப் பேசினான்.) சேவை, இந்த கிராமத்திற்குத் தேவை. அவர்தான் பஞ்சாயத்துத் தலைவராக வர வேண்டும். (உடனே பரமசிவம் மட்டும் கைதட்டிவிட்டு, மற்றவர்கள் தட்டாமல் போனதால், சங்கடப்பட்டு நெளிந்தார்.) எனினும், அவர், யூனியன் தலைவருக்கு நிற்கும் தகுதியை எட்டியவர். அவர், அப்படி நின்றால், நான் இப்படி நிற்கத் தயார். எங்கள் கிராமத்தில் பிரச்சினைகள் சில உள்ளன. சிலவே. பிரச்சினைகள் இல்லாத ஊரேது? அவை இருந்தன - இருக்கின்றன - இருக்கும். எனினும் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் ஆசியோடும், அருமை அண்ணன் பரமசிவத்தின் - சேவைக்காய் பிறந்த இந்தப் பரமசிவத்தின் ஒப்பில்லாத தலைமையின் கீழ், நேர்மையின் நெடிதுயர்ந்த உருவமாம் எங்கள் கர்ணத்தின் ஓய்வில்லா உழைப்போடும், மாதர்குல மாணிக்கமாம் மகளிர் மன்றத் தலைவி சரோஜா அம்மையாரின் தாய்மையான பேரன்புடனும், பிரச்சினைகள் தீர்க்கப்படும். இந்த நல்லோர்க்கு, எல்லா வகையிலான ஒத்துழைப்பும் நல்கப்படும் என்பதை, இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவன் என்ற முறையில் தெரியப்படுத்திக் கொள்கிறேன்."
நற்பணி மன்றத்தின் மிச்சமீதி நிர்வாகிகள் வாயடைத்துப் போனார்கள். கைகள் இழுத்துக் கொண்டன. நெஞ்சங்கள் கொதித்துக் கொண்டன. மன்றத்தின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்கிறான். மன்றம் ஒப்பன் வீட்டுச் சொத்தால?... பஞ்சாயத்துத் தலைவரப் போய் பாராட்டுற? அவரு கால வேணுமின்னாலும் கழுவிக் குடி. மன்றத்த எதுக்குல இழுத்த? நீ, அவரு மகள பார்த்த பார்வையிலயே சந்தேகப்பட்டோம்! அப்படியும் உன்னைப் பேசச் சொன்ன எங்க வாயில மைக் கம்பிய வச்சே இடிக்கணும். துரோகிப் பய! வாவா... ஒன் கையக் கால ஒடிக்காட்டால் பாரு!
விழா முடிந்தது. அமைச்சர் 'ஏழை பாளைகளுக்கு' விவசாயக் கருவிகளைக் கொடுத்தார். கறவை மாடுகளைக் கொடுத்தார். ஹரிஜனங்களாக ஜோடிக்கப்பட்ட ஜாதிப் பையன்களுக்கு இலவச ஆடைகளையும் கொடுத்தார். அவர், பாவம் நம்பித்தான் கொடுத்தார்.
கூட்டம் கலைவதற்கு முன்பே, இளைஞர் மன்றத்தின் தலைவரில்லாத நிர்வாகிகள், ஊர்ப்பாலம் அருகே போனார்கள். அந்த வழியில் வரப்போகும் குமார் பயலை, உதை உதையென்று உதைத்து, ஒரு பல்லையாவது உடைக்க வேண்டும்!
கலைந்த கூட்டத்தில், இரண்டு பெண்களுக்கிடையே, தலைமுடி பிடிக்கிற அளவுக்குச் சண்டை.
மாணிக்கம் பி.ஏ., பி.டி., மீது மையல் கொண்டிருந்த, மகளிர் மன்றத் தலைவியின் மகள் மல்லிகா, அவனிடம், அன்று எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த போது, ஆண்டியப்பன், அவனைத் தனியாகக் கூட்டிக் கொண்டு போய் அவனுக்கு இணையாகப் பேசியதில் அவளுக்கு ஆத்திரம். இன்னொரு பெண்ணிடம் வாயை விற்றுவிட்டாள்.
"இந்த ஆண்டிய பாருங்க, இவனும் இவன் வேட்டியும் சட்டயும்... படிச்சவங்களோட நின்னால் படிச்சவன் ஆயிட முடியுமா? பழகுறதுலயும் ஒரு தரம் வேண்டாம். இந்த லட்சணத்துல மாட்டை வேற கையில் பிடிச்சிக்கிட்டு இருக்காரு துரை - நாளைக்கு இதை எங்க மாமா வீட்ல கட்டப் போறது தெரியாமல். ஆமா சங்கரி, நம்ம ஆண்டி பி.ஏ. படிச்சிருக்காரா? எம்.ஏ. படிச்சிருக்காரா? உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆயிடுமா? சீச்சீ!"
பின்னால் வந்து கொண்டிருந்த, ஆண்டியப்பனின் தாய் மாமா மகள், மல்லிகாவின் முன்னால் வந்து நின்று கர்ஜித்தாள்:
"ஆமாடி! எங்க அத்த மகன் குருவிதாண்டி. உங்கள மாதுரி கோழிக்குஞ்சைப் பிடிக்கிற பருந்துல்லடி. அவரு வேட்டி கட்டுனால் என்ன, கட்டாம நின்னா என்னடி ஒனக்கு. அதனால என்னடி நஷ்டம்?"
இதுவரைக்கும் தன்னை 'அம்மா' என்று அழைக்கும் இந்த தங்கம்மா, தனக்கு 'அடி' கொடுத்ததில், நிஜமாக அடிபட்டவள் போல முதலில் அதிர்ந்து போன மல்லிகா, ஊரின் நாட்டாண்மைக்காரரின் மகளான அந்த பி.யூ.ஸிக்காரி, தன் பெண்மையை, ஆண்மையாக மாற்றியது போலப் பேசினாள்.
"யாரடி, டீ போட்டுப் பேசுற! எச்சிக்கல நாயே! ஒப்பன் எங்க மாமா வீட்டுல நாயி மாதுரி வேலை பார்க்கார். நீ வயலுல கூலிக்கு களை பிடுங்கப் போற வேலைக்கார நாயாடி, பேசுற... நான் அவனப் பேசுனால் ஒனக்கு என்னடி? மாணிக்கம் மச்சான்கிட்ட நிற்க, அவனுக்கு என்ன தகுதிடி இருக்கு?"
"முதல்ல ஒன் மாணிக்கத்துக்கு தகுதியிருக்கான்னு பாருடி! அவரு ஒத்த கைக்கு, நீ கண்ணடிக்கிறவன் பெறுவானாடி! எங்க அத்த மகன் எப்படி இருந்தால் ஒனக்கென்னடி? உன்னையாடி கட்டிக்கப் போறாரு... நீ கூப்புட்டாலும் அவரு வரமாட்டாருடி..."
இயல்பிலேயே, பெருமைக்காரியான மல்லிகாவால் தாள முடியவில்லை. தங்கம்மாவுக்கு இணையாகவும் பேச முடியவில்லை. ஆகையால், ஆளுதவியைத் தேடினாள்.
"ஏ பெரியய்யா, இங்க வாங்க. சீக்கிரமா வாங்க. இந்தக் கூலிக்கார நாயி என்ன பேச்சுப் பேசுறான்னு பாரும்!"
தங்கம்மா, சிலிர்த்தாள்.
"நாங்க கூலிக்கார நாயி மட்டுமில்லடி... ஒன்னமாதுரி அகங்காரப் பன்னிகள வேட்டையாடப் போற நாயிங்கடி. என் அத்த மகனுக்கா மாட்டை வச்சுக்கத் தகுதியில்லன்னு சொல்லுத. ஒன் பரமசிவம் மாமாகிட்ட அவரு மாட்ட கொடுத்துட்டா, நான் இந்த ஊர்ல இருக்கலடி. ஒங்க ஜம்பம் இனுமே சாயாதடி! எங்கள மனுஷங்களா நினைக்காத ஒங்கள, நாங்க மனுஷங்களா நினைக்கப் போறதில்லை!"
தங்கம்மா, வேகமாகப் போனாள். ஆவேசந் தணியாத கண்ணகி போலப் போனாள். வழியில், அந்த ஜெர்ஸி இனப் பசுமாட்டோடு, ஆண்டியப்பன் போய்க் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும், அவளுக்கு ஆவேசம், அழுகையாகியது. ஏங்கி, ஏங்கி அழுதாள். அப்போதும், அவளை ஆறுதலாக அணைக்கப்போன ஆண்டியப்பனை முறைத்துக் கொண்டே சிறிது விலகி நின்றாள். பிறகு, நடந்த சண்டையை விளக்கினாள். ஆண்டி ஆறுதல் சொன்னான்:
"பேசினால் பேசிட்டுப் போறாள் - அவல் எப்போதுமே திமிர்பிடிச்சி பேசுறவதான்!"
"மாட்டை மட்டும் நீரு கொடுத்துடப்படாது."
"நீ சொல்றதுக்கு முன்னே தீர்மானம் ஆன விவகாரம். ஏழைகள் பேர்ல மாட்டை வாங்கிட்டு, எடுத்துக்கது என்ன நியாயம்? உன்னை விட்டாலும் விடுவனே தவிர மாட்ட விடமாட்டேன்!"
"பேச்ச பாரு..."
"அட சும்மா விளையாட்டுக்குச் சொன்னா இப்படியா? சரி. வேகமா நட. இந்த மாட்டக் கட்டிட்டு இந்தக் குமார் பயல ஒரு பிடி பிடிக்கணும். எத்துவாளிப் பய!"
ஆண்டியப்பன், மாட்டைப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக நடந்தபோது, தங்கம்மா, மாட்டை அவன் விடவில்லையானால் ஏற்படப் போகும் விளைவுகளை நினைத்து ஓரளவு கலங்கியபடி, நடந்தாள்.
-----------
2
கிட்டத்தட்ட அந்த ஓலை வீட்டின் உயரத்திற்கு காண்டாமிருகத்தின் கம்பீரத்தோடு, காட்டு யானையின் வாளிப்போடு, பச்சை வண்ண மேனியில் பால்வண்ணப் புள்ளிகள், அங்குமிங்குமாக அள்ளித் தெளித்த கோலப் புள்ளிகள் போல் காட்சியளிக்கத் தோன்றிய அந்த ஜெர்ஸி கலப்பினப் பசுவையும், சற்றுத் தொலைவில் ராட்சதக் கருவண்டு போல் காட்சியளிக்கும் அந்தக் கன்றையும் ஆண்டியப்பன் கண்கொட்டாது பார்த்தான்.
கூட்டுறவுச் சங்கத்தின் மூலம், வெட்னரி டாக்டரின் ஆமோதிப்பில், பெங்களூர்ல் இருந்து வாங்கி வரப்பட்ட அந்த மாடு, தொலைவில் கட்டப்பட்டிருக்கும் தன் கன்றை நக்குவதற்குத் திமிறி, அது முடியாமல் போகவே கட்டிக் கொண்ட கயிற்றை, நாக்கால் தடவியது. பின்பு வாய் வலித்ததாலோ, என்னவோ தான் பிணைக்கப்பட்டிருக்கும் வாதமடக்கி மரத்தை முட்டியது.
ஆண்டியப்பனுக்கு, மனம் கேட்கவில்லை. கை கால்களை உதறிக்கொண்டே எழுந்து கன்றை அவிழ்த்து, மாட்டின் நாக்குப் படும் இடத்தில் கட்டிவிட்டு, மாட்டை ஒரு கையாலும் கன்றை ஒரு கையாலும் தடவிக் கொடுத்தான். அந்தச் சமயத்தில் இளமையிலேயே, 'பதவி ஆசை' பிடித்து சிவலோகம் போய்ச் சேர்ந்த தன் அன்னையையும் வீட்டுக்குள் கைக்குழந்தையுடன் மார்பில் ஏற்பட்ட கட்டிகளால் அழாமல் அழுதுகொண்டிருக்கும் தங்கை மீனாட்சியையும் அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு தடவை தங்கையைப் பார்த்து, அவளுள் அம்மாவையும் பார்க்க வேண்டும் என்று நினைத்தவனாய் வீட்டுக்குள் போனான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓலைப் பெட்டியில் இருந்த புண்ணாக்கை எடுத்துக்கொண்டு வந்து, விளிம்பு உடைந்த மண்பானையில் அதை நீரிட்டுக் கலக்கி, மாட்டின் முன்னால் வைத்தான். அந்த சீமைப்பசு சாப்பிடுவதைப் பார்த்து தான், தனக்குப் பிடித்தமான கோழிக்கறியை சாப்பிட்டுவிட்ட திருப்தியில், தன்னையறியாமலேயே, வாயைத் துடைத்த போது, தங்கம்மா அங்கே வந்து நின்றாள்.
அவளை, ஆண்டியப்பன் கவனிக்கவில்லை என்பதை அவள் கவனிக்கவில்லை. அத்தை மகன், தன்னை அலட்சியப்படுத்துகிறான் என்பது போல், சிறிது கோபப்பட்டது போல், தன் வீட்டுக்குத் திரும்பப் போகப் போவது போல், லேசாகத் திரும்பினாள். அப்படியும், அவன் பார்க்காததால், இப்போது அவள் செருமினாள். தலை நிமிர்ந்த ஆண்டியப்பனைப் பார்த்து "மாடு வந்துட்டு... இனும ஒமக்கு கண்ணு தெரியுமா?" என்றாள் - தன் கண்களை மாட்டின் மீதும், மச்சான் மீதும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே.
சுத்தி செய்யப்படாத வைரம்போல், நாட்டுக்கட்டை மேனியில், பருவம் 'சன்மைக்கா போல்' பளபளக்க, நூல் புடவையிலும் நூதனமாக விளங்கிய மாமன் மகளிடம், ஆண்டியப்பன் சிரித்துக் கொண்டே பேசினானா அல்லது பேசிக்கொண்டே சிரித்தானா என்பது, விவாதத்துக்குரியது. பேசினான், சிரித்தான். சிரித்தான், பேசினான்.
"என்ன சொன்ன?"
"மாடு வந்துட்டு... இனும, மவராசனுக்குக் கண்ணு தெரியுமா?"
"நீ வந்தத சொல்லுதியா?"
"என்னைப் பார்த்தா ஒமக்கு மாடு மாதிரி தெரியுதா?"
"ஆமாம். நீ எனக்கு என்னைக்குமே காராம்மணிப்பசு. காமதேனுப் பெரும் பசு. இந்த மாட்டுக்கு இந்தப் புண்ணாக்கு எப்படியோ, அப்படி நீ எனக்கு."
"சரியான புண்ணாக்கு மாடன். இந்த மாட்ட வசக்க முடிஞ்சது. எங்கம்மாவ மட்டும் முடியல."
"முடியற காரியமா! புலிய வசக்குற சர்க்கஸ்காரனால கூட ஒம்மாவ வசக்க முடியாதே! பாவம்! எங்க மாமனே ஒம்மாக்கிட்ட குட்டுப்பட்டு குட்டுப்பட்டு கூனாப் போயிட்டாரே! ஒம்மா... சரியான..."
"இதுக்குமேலே எங்கம்மாவ பேசுனா... எனக்குக் கெட்ட கோபம் வரும்."
"ஒனக்குக் கோபம் வந்தால், எனக்கு யோகம் வந்தது மாதுரி. தலையில குட்டுவ, கையில கிள்ளுவ, எப்படியோ, உன் கை என்மேல பட்டா சரிதான்..."
"நான் எதுக்காவ சொல்லுதேன் என்கிறத, நீரு விளையாட்டா எடுத்துக்கிட்டா அப்புறம் நாம பழகுனதும் விளையாட்டா போயிடும்"
"பொறு தங்கம்மா... இந்த மாட்ட கட்டியாச்சு; உன்னைக் கட்டுறதுதானா பெரிசு? ஒம்மாவ பாலால குளிப்பாட்டி, ஒய்யாவ நெய்யால குளிப்பாட்டி, நீ, என்னைக் குளிப்பாட்டும்படியான காலம் வரப்போவுது..."
"மாட்ட, பரமசிவம் கேட்கலியா?"
"ரெண்டு தடவ ஆள் வந்தது. தர முடியாதுன்னு சொல்லிட்டேன். அந்த மீசக்காரன் மாட்ட 'அவுக்கப்' போனான். நான் அருவாள எடுத்தேன். திரும்பிப் பாராம போயிட்டான். வேலக்காரனுக்கு, வேலைக்காரனே எதிரியா மாறுறான் பாரு. சர்க்காருல ஏழ எளியவங்களுக்காவ கொடுக்கிற கறவ மாட்டையும், உழவு மாட்டயும், மற்ற பொருளயும் - பண்ணையாருங்க அமுக்கப் பாக்கதுல என்ன நியாயம்? உதாரணமா இந்த மாடு மூவாயிரம் ரூவா. இதுல சர்க்கார் மட்டும் ஆயிரம் ரூவா இனாமா கொடுக்குது. இதுக்காவ, நம்ம பேர்ல வாங்கச் சொல்லி, அவங்க அனுபவிக்கணுமுன்னா என்ன நியாயம்? அதுலயும் அவங்க விட்டு வச்சதத்தான் நாம எடுக்கோம். கர்ணம், பொண்டாட்டி பேருக்கு ஒரு மாடு வாங்கியிருக்காரு. அந்த அம்மா சிறு விவசாயியாம்... மிராசுதார் குமாரசாமி, காலேஜ்ல படிக்கற பேரன் பேருல உழவு மாடு வாங்கியிருக்காரு. அவன் மிகச் சிறு விவசாயியாம்... இப்டி எல்லா பணக்காரனும், பொண்டாட்டி பிள்ளியள கூட பிச்சக்காரங்களா ஜோடிச்சதுல, இப்போ கிராமத்துல எவன் பிச்சக்காரன், எவன் பிரபுன்னே சர்க்காருக்குத் தெரியல!"
"அநியாயமா இருக்கே!"
"நம்ம ஆளுங்களச் சொல்லு... முனுசாமி, தான் வாங்கின வண்டிய குமாரசாமிகிட்ட கொடுத்துட்டான். ராமசாமி, நெற்குதிர வாங்கி, சரோஜாகிட்ட ஒப்படைச்சுட்டான். இன்னைக்கி பரமசிவம் வீட்ல பண்ணைக்காரங்க மேடையில வாங்குனத எல்லாம் - அவரு வீட்ல போட்டுட்டு வாராங்க ஊரு எப்டி உருப்படும்? வீட்டு முன்னாலயே, முளையுறவங்கள வச்சி என்ன பண்ண?"
"எங்கய்யா கூட உழவு மாட்ட பரமசிவம் வீட்ல கட்டிட்டு வந்துட்டார். போதாக்குறைக்கி நான் மல்லிகா கிட்ட 'தெரியாம திட்டிட்டேன்னு' மன்னிப்புக் கேக்கணுமுன்னு ஒத்தக் காலுல நிக்காரு. நான் ரெண்டு காலுல இங்க வந்துட்டேன்."
"ஒய்யாவ மாதிரி ஆளுவளாலதான் ஊரே குட்டிச் சுவராப் போச்சு! பரமசிவத்துக்கு, செருப்புத் தைக்கதுக்காவவே உடம்புல தோல வச்சிருக்க மனுஷன். ஆனால் நான் அப்படி இல்ல. ஆனானப்பட்ட மல்லிகாவயே அடிக்காத குறையா பேசுன தங்கம்மாவோட அத்த மகன்."
"எங்கய்யா இல்லாம நான் எப்படி வந்துட்டேன்? அது கிடக்கட்டும். இனிமேல், இது ஒம்ம மாடு சரிதான?"
"நம்ம மாடுன்னு சொல்லு பிள்ள..."
"மணவறத் தட்டுல இருக்கிற பொண்ணு மாப்பிள்ளயளே மாறிப்போற காலத்துல கழுத்துல தாலி ஏறுமுன்னால, நான் அப்டிச் சொல்லப் போறதில்ல. அண்ணிக்கு எப்டி இருக்கு?"
ஆண்டியப்பன், அவளை முறைத்துப் பார்த்தான். பிரித்துப் பேசும் அவளிடம், 'ஒம்மா புத்திதான ஒனக்கும் இருக்கும்' என்று சொல்லப் போனவன், கோபத்தை அடக்கிக் கொண்டு, வார்த்தைகளை விடக்கூடாதவன் போல், உதட்டைக் கடித்தபோது, தங்கம்மா, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மாட்டைத் தடவி விடுவது போல், அதன் முதுகைத் தடவிவிட்டு, அந்தச் சாக்கில் மாட்டின் முதுகின் மீது வந்திருந்த அவன் கையருகே, தன் கையைக் கொஞ்சங் கொஞ்சமாகக் கொண்டு வந்து, அவன் கையைப் பிடித்து, லேசாக வருடிக்கொண்டே, "இப்படிச் சொன்னாலாவது ஒமக்கு ரோஷம் வந்து, சுந்தரிய, அபிமன்யூ கூட்டிகிட்டு போனதுமாதிரி, என்னைக் கொண்டு வருவீரான்னு பாக்கேன்" என்றாள்.
பிறகு அவன் கைமேல், தன் கை 'அதுக்காக' படவில்லை என்று காட்டும் வகையில், "அண்ணி எப்படி இருக்காவ?" என்றாள்.
அவனும் அவள் மேற்கொண்டு எதையாவது பேசி இப்போது ஏற்பட்ட நெருடலின் நெகிழ்வை கலைத்துவிடக் கூடாது என்று நினைத்தோ அல்லது தங்கையின் நிலையைக் கருதியோ "வீட்டுக்குள்ள சின்னான் அக்காளோட எதையோ முனங்கிக்கிட்டு இருக்காள். போயிப் பாரு" என்றான்.
தங்கம்மா, துள்ளிக் குதித்துப் போனபோது, ஆண்டியப்பனின் மனமும் துள்ளிக் குதித்தது இந்தப் பசுமாடு, எட்டு லிட்டர் பால் கறக்குது. பதினாலு ரூபாய்; சங்கத்துல பால் வாங்காமப் போனாலும் பரவாயில்ல. வெளியில விற்றுப் பணத்தைக் கட்டலாம். ஐந்து ரூபாய் லோன்ல கழிந்தால், ஐந்து ரூபாய் மாட்டுத் தீவனத்துக்குப் போய்விட்டால், தினம் நாலு ரூபாய். மாதம் நூற்றிருபது ரூபாய். தங்கை மகனுக்கு, இனிமேல் நாடிமுத்து பயக்கிட்ட வாங்குற தண்ணிப் பாலுக்குப் பதிலா நிஜப்பால கொடுக்கலாம். சேருற பணத்துல, தங்கச்சியோட மூக்குத்திய மீட்டணும். ஒரு 'அட்டியல்' செய்து போடணும். அதை அவள் கழுத்துல மாட்டி, 'முறச்சிக்கிட்டு' இருக்கிற அவள் புருஷன்கிட்ட கெஞ்சி கூத்தாடடி, ஒப்படைச்சுடணும்.
பரமசிவம், அகங்காரம் பிடித்த மனிதர். நாலு நாளாய் வெளியூர்ல இருக்கார். ஊருக்கு வந்ததும், மாட்டை விட்டு வைப்பாரா? இந்த சொசைட்டி பயலுவ கூட, பாலக் கொண்டு போனால், வாங்கமாட்டேன்னுட்டாங்களே... எல்லாம் கூட்டுக் கள்ளங்க! பாத்துப்புடலாம் மாடாச்சு... இல்லன்னா உயிராச்சு.
ஆறு மாதத்திற்கு முன்பு பரமசிவம், ஆண்டியப்பனிடம், "இதுல ஒரு கையெழுத்துப் போடுடா... சொசைட்டில மாமா ஒன்னச் சேர்க்கப் போறேன்னு" சொல்லி அவனிடம் ஒரு கையெழுத்து வாங்கினார். பிறகு, தன் சட்டைப் பையில் இருந்து, இருபத்தோரு ரூபாய் நீட்டி, "இத உன் பேர்ல சொசைட்டில கட்டிடு" என்றார். மறுநாள் ஆண்டியப்பன், "இந்தாரும் மாமா பத்து ரூபா. மீதி பதினோரு ரூபாய வேல பாத்து கழிச்சுடுறேன்" என்றான்.
பரமசிவம், வாரத்துக்கு நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் வட்டி வாங்கும் அந்த வள்ளல், "ஒன் பணம் வேற - என் பணம் வேறயால" என்று பதறிச் சொன்னபோது, ஆண்டி, "தாயா பிள்ளையா இருந்தாலும் வாய் வயிறு வேறதான் மாமா" என்று பக்குவமாகச் சொல்லி, பணத்தை அவர் பைக்குள் திணித்துவிட்டான்.
அப்புறம், ஒரு மாதத்திற்கு முன்பு அவர் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போய், நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டான். புராஜெக்ட் ஆபீஸர், அவனுக்கு, நிலமில்லாத ஏழை என்பதற்கு அடையாளமாக ஒரு 'எல்' கார்ட் கொடுத்தார். பச்சை நிறம். தபால் கார்ட் அளவு. அவன் பெயர், முகவரி எல்லாம் அதில் உள்ளன. அந்த கார்டுக்காகவும், கூட்டறவு சங்கத்தில் உறுப்பினர் ஆனதாலும், மாடு கிடைத்திருக்கிறது. அப்ளிகேஷனில் போட்ட கையெழுத்து, அவன் சொந்தக் கையெழுத்து. இந்த மாடும் அவனுக்கே சொந்தம். என்ன வந்தாலும் சரி... முடியாது, கொடுக்க முடியாது.
உள்ளத்தில் ஒரு பக்கம் உறுதி தோன்றினாலும், இன்னொரு பக்கம் கவலை தோன்றியது. படித்த இளைஞர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தைத் துவக்கியபோது அதிகமாக ஆனந்தப்பட்டவன் ஆண்டியப்பன். ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னால் குமார், மேடையில் பேசிய விதம், அவனுக்கு தன்னை யாரோ குரல்வளையை நெரிப்பது போலிருந்தது.
வாங்கிய மாட்டைக் கட்டிவிட்டு அவன் ஊர்ப் பாலத்திற்குப் போனான். அவன் போகுமுன்பே, பெரிய கலாட்டா. குமார் பங்காளிகளும், மாணிக்கம் பங்காளிகளும் ஒருவரை ஒருவர் அடிக்கப் போனார்கள். இளைஞர் மோதல், ஊர்ச் சண்டையாக மாறுமளவிற்குப் போய்விட்டது. கடைசியில் ஆண்டியப்பன் தான் 'விலக்கு'த் தீர்த்தான்.
இப்போது குமார், 'இளைஞர் பெரும்பணி மன்றம்' என்று ஒன்றைத் துவக்கி இருக்கிறான். பஞ்சாயத்துத் தலைவருடன் பேசிக்கொண்டும், அவர் மகள் பத்மாவைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறானாம். அமைச்சருடன் அரை நிமிடம் பேசியதால் அவனுக்கு புதிய செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. வேலை தேடி அலையும் எல்லாப் பயல்களும் அவன் மன்றத்தில் சேர்ந்ததால் ஒரிஜினல் மன்றம், கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறிய கதையாகப் போய்க் கொண்டிருந்தது.
சிந்தனையில் இருந்து விடுபடாமலே அவன் எழுந்தான். வீட்டுத் திண்ணைக்கு வந்து உள்ளே எட்டிப் பார்த்தான்.
உள்ளே அவன் தங்கை மீனாட்சி மல்லாந்து படுத்துக் கிடந்தாள். ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது. ஆனால் அவளால் பால் கொடுக்க முடியாத அளவுக்கு மார்பகத்தில் கட்டிகள் வந்தன. ஆளை வண்டியில் ஏற்றி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கூட்டிப் போனான். அங்கே டாக்டர்கள் இல்லை. அதே டவுனில் 'பிராக்டீஸ்' பண்ணப் போய்விட்டார்களாம்.
என்ன செய்வதென்று தெரியாமல், அவன் தவித்த போது ஆஸ்பத்திரி ஆயா, அவர்களை கடுமையாக பார்த்தாள். அந்தப் பார்வையிலேயே மீனாட்சிக்கு இன்னொரு கட்டி வரும் போலிருந்தது. இறுதியில் 'மூக்குத்தியை' மார்வாடியிடம் அடகு வைத்து, பிரைவேட் டாக்டரிடம் காட்டினான். மீனாட்சிக்கு புண் ஓரளவு சுகப்பட்டாலும், வலி நிற்கவில்லை வேறு வழியில்லாமல், மீண்டும் போனான். அப்போது முன்பிருந்த ஆயாகூட இல்லை.
ஆண்டியப்பன், தன் 'வெள்ளிக்கொடியை' அடகு வைத்து, 'பிரைவேட் டாக்டரிடம்' போனான். சுரந்த பால் வெளியேற முடியாமல் இருப்பதால், வலியெடுப்பது கண்டுபிடிக்கப்பட்டு, டாக்டர், பால் சுரக்காமல் இருக்க மாத்திரை கொடுத்தார். இந்த வகையில், இருநூறு ரூபாய் செலவாகி விட்டது. இப்படி அவன் கடன்பட்டதுக்கு, சரியாகப் பணி செய்யாத அரசாங்க டாக்டர்களே காரணம் என்று அவன் நினைக்க நினைக்க, தன்னிடம், ஒவ்வொரு டாக்டரும் கடன்பட்டிருப்பது போல் அவனுக்குத் தோன்றியது.
ஆண்டியப்பன் திண்ணையில் நின்றபடியே உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு மெய்சிலிர்த்து நின்றான்.
சின்னானின் அக்கா காத்தாயி, தன் கைப்பிள்ளையை தங்கம்மாவிடம் கொடுத்துவிட்டு, மீனாட்சியின் குழந்தையை எடுத்து, பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஏற்கெனவே, கொத்தவரைக்காய் போல் இருக்கும் இந்த ஹரிஜனப் பெண், தன் நோஞ்சான் பிள்ளைக்கே பாலில்லாத இந்த இளம் பெண், தங்கையின் பிள்ளைக்குப் பால் கொடுப்பதை நினைக்க நினைக்க ஆண்டியப்பனுக்கு, அவள் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பது போலவும், அவளைப் பார்த்து 'அம்மா அம்மா' என்று கத்த வேண்டும் போலவும் தோன்றியது. மீனாட்சி, காத்தாயியிடம் புலம்புவது, அவனுக்கு நன்றாகக் கேட்டது.
"பாரு காத்தாயி, அந்த மனுஷன் குழந்தய பாக்க வந்தாரா, இல்ல என் மூக்குத்திய பாக்க வந்தாரான்னு தெரியல. வந்ததும் வராததுமா 'மூக்குத்திய எங்க'ன்னு கேட்டாரு. நான் பதில் சொல்லுறதுக்கு முன்னாலயே 'ஒண்ணன் வித்துத் தின்னுப்புட்டானா - பெருச்சாளிப் பயன்னு' தாம் தூமுன்னு குதிச்சிட்டுப் போயிட்டாரு. பிள்ளையப் பாக்கவே இல்லை பிள்ளைய."
"அழாதீங்கம்மா... அதுக்காவ நீங்க 'எங்கண்ணன் நடந்துபோற தூசில, அறுந்துபோற தூசிக்கு பெறுவியரா? எங்கண்ணன சொன்னா ஒம்ம வாயில கட்டி வரு'முன்னு சொல்லியிருக்கப்படாது. இப்போ அவருக்கு வாயில கட்டி வந்திருக்காம். யாரையும் திட்ட முடியலியாம். நேற்று குட்டாம்பட்டிக்கு பெட்டி விக்கப் போன எங்க பெரிய்யா மவள் சொர்ணம் சொன்னாள்."
மீனாட்சி பதறினாள்.
"அய்யய்யோ கட்டி வந்துருக்காம? காத்தாயி, நீ நல்லா இருப்ப. இப்பவே போயி பார்த்துட்டு வருவியா. நான் சண்டாளி. எந்த நேரத்துல வாய் திறந்தேனோ, பாவி மனுஷன் எப்படிச் சாப்பிடுவார்? வயித்துக்குள்ள ஒண்ணுமில்லாத சமயத்துல, வாய்க்குள்ள கெட்ட வார்த்தய வச்சுக்கிட்டு துப்புற மனுஷனாச்சே காத்தாயி-காத்தாயி..."
"சும்மா கிடங்கம்மா. கட்டுன பெண்டாட்டியையும் பெத்த பிள்ளையையும் விட மூக்குத்திய பெரிசா நினைச்ச மனுஷன் கொஞ்ச நாளைக்கி லோலு படட்டும்."
"அப்படிச் சொல்லாத காத்தாயி. அவரு நல்ல மனுஷன் தான். சின்னப்பிள்ளை மாதுரி சூதுவாது தெரியாத மனுஷன். ஆனால் என் மாமியார் இருக்காளே, அவதான் மூளியலங்காரி... மூதேவி சண்டாளி... அவள் போடுற சாம்பிராணி புகையிலதான், இந்த மனுஷன் குதிப்பாரு. அப்புறம், அழுதுகிட்டு இருக்கிற என்கிட்ட வந்து என் கண்ணத் துடைச்சிட்டு, ரகசியமா வாங்கி வந்த அல்வாவ வாயில் ஊட்டுவாரு."
மீனாட்சி, வெட்கப்பட்டுக் கண்களைப் 'பொத்திக்' கொண்டாள். காத்தாயியின் குழந்தைக்கு முத்தமாரி பொழிந்து கொண்டிருந்த தங்கம்மா, அண்ணியையே பார்த்தாள். உடனே அவளுக்கு ஆண்டியப்பனின் நினைவு 'தற்செயலாக' வர, வெளியே எட்டுப் பார்த்து, சுவரோடு, சுவராக நின்ற ஆண்டியப்பனை அதட்டினாள்.
"பொம்புளய பேசுற இடத்துல உமக்கென்ன வேல...?"
ஆண்டியப்பன், தனக்கு வேலை இருப்பதுபோல், உள்ளே வந்தான். தங்கையைப் பார்த்து, "கவலைப்படாத - நானே போய் மாப்பிள்ளய பார்த்துட்டு வாரேன்" என்றதும், அல்வா சமாசாரம் அண்ணனுக்கும் தெரிந்துவிட்டதே என்று நாணப்பட்டாள்.
காத்தாயி, அவனை அதட்டினாள்.
"ஒமக்குக் கொஞ்சங்கூட பொறுப்பில்ல முதலாளி. ஒம்மாலதான் மீனாட்சியும், அது குழந்தையும் அவஸ்தப்படுது. பறச்சிகிட்ட பால் குடிச்ச பிள்ளன்னு ஊருல கிண்டல் பண்ணுவாங்க"
"செறுக்கி மவனுவள - கையக் கால ஒடிக்கேன். ஆமா, நீ பால் கொடுக்கதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?"
"பின்ன என்னய்யா? நீரு காலா காலத்துல ஒரு கல்யாணம் பண்ணியிருந்தா ஒம்ம பெண்டாட்டி இந்நேரம் ஒரு பிள்ளய பெத்திருப்பாவ. மீனாட்சியம்மா மவனுக்கும் பால் கெடச்சிருக்கும்."
"நான் கல்யாணம் செஞ்சி, வீட்டுக்காரி இவள்கிட்ட சண்டை போட்டிருந்தா நீயே என்னைப் பிடிபிடின்னு பிடிச்சி திட்டியிருப்ப."
"எங்கயாவது மாமா மகள், அத்த மகன்கிட்ட சண்ட போடுமா - நம்ம தங்கம்மா தங்கக் கம்பியா..."
"நான் தங்கம்மாவதான் கட்டியிருப்பேன்னு சொல்லுதியா..."
"நீரு விட்டாலும், அது விடாது என்கிட்ட ஒம்மப்பத்தி எவ்வளவு ஆசயோட சொல்லியிருக்கு தெரியுமா..."
"சரி, நீ சொல்றபடியே காலா காலத்துல இவளக் கல்யாணம் செஞ்சிட்டாலும் இவள் இதுக்குள்ள பிள்ள பெத்திருப்பாள் என்கிறது என்ன நிச்சயம்? முதல் பிள்ளைக்கு அவசரப்படக் கூடாதுன்னு என்கிட்டயே எத்தனை தடவ சொல்லியிருக்கா தெரியுமா...?"
தங்கம்மாவின் முகம் சிவந்தது. அப்போதே கல்யாணம் நடந்து, அப்போதே குழந்தை பிறந்துவிட்டது போல், தரையையே பார்த்தாள். பிறகு சிலிர்த்தெழுந்து "ஏன் பொய் சொல்றீரு - ஒம்ம மூஞ்சி" என்று சொல்லிவிட்டு, வெளியே 'ஓடப்போனாள்'. அதற்குள் வாசல் பக்கம் அடைக்கலசாமி நின்றதால், அய்யாவின் முகத்தில் விழிக்கப் பயந்து, உள்ளேயே ஒடுங்கிக் கொண்டாள்.
அடைக்கலசாமி, உள்ளே வந்தார். ஆண்டியப்பன் சற்று ஒதுங்கி உட்கார்ந்து கொண்டு "உட்காரும் மாமா" என்றான். தான் பேசியது, மாமாவுக்குக் கேட்டிருக்குமோ என்று சங்கோஜம். அதேசமயம், நாளைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வரும் மாமனுக்கு உறைக்கட்டும் என்ற குறும்புத்தனம்.
அடைக்கலசாமி, தான் எடுத்து வளர்த்த தங்கை மகள் மீனாட்சியை ஆதரவாகப் பார்த்துக் கொண்டே "இப்ப எப்படியம்மா இருக்கு? ஆண்டி அந்த மருந்துச் சீட்ட எடுடா எங்கிட்ட கொஞ்சம் பணமிருக்கு. கோணச்சத்திரத்தில வாங்கிட்டு வாரேன்" என்றார்.
"ஒம்ம செலவுக்கு?"
"இருக்கிற செலவப் பார்த்தால் கையில இருக்கிற காசு பத்தாது. அதெல்லாம் பாக்க முடியுமா... என் தங்கச்சி மவள் எழுந்து உட்கார்ந்தா எனக்கு எழுபதாயிரம் ரூபா கிடைச்சது மாதிரி. அப்புறம், மாட்ட ஏண்டா பரமசிவம் வீட்ல கட்டல?"
"எந்த மாட்ட மாமா?"
"என்னடா தெரியாதது மாதிரி கேக்குற. நீ ஒப்படைச்சிடுவேன்னு - நம்பிக்கையா ஒன்ன வாங்கச் சொன்ன மாட்ட, நீ வச்சிக்கிட்டு இருக்கது நம்பிக்கத் துரோகண்டா..."
"நான் செய்தது நம்பிக்கத் துரோகமில்ல மாமா! சர்க்கார்ல ஏழைங்களுக்காவ கொடுக்கிற மாடுங்கள, ஏமாத்தி வாங்குற பரமசிவந்தான் நம்பிக்கைத் துரோகி!"
"இப்போ நீ மாட்ட விடப்போறியா இல்லியாடா?"
"என் மாட்ட நான் எதுக்காவ விடணும்?"
"நான் சொல்லியும் விடமாட்டியா?"
"நீரு ஒம்ம வீட்டுக்குக் கேட்டிருந்தா, நானே கொண்டு வந்து கட்டியிருப்பேன். இப்போ நீரு தாய் மாமனா வரல - பரமசிவத்தோட வேலக்காரனா வந்திருக்கியரு..."
"நான் சொல்றதக் கேளு. அவ்வளவு பெரிய சபையில, மந்திரி கையால மாடு கொடுத்து கவுரவம் பண்ணுனவருக்கு துரோகம் பண்ணப்படாது!"
"அது கவுரவம் இல்ல மாமா! கோயிலுல வெட்டப் போற கிடாவுக்கு கொம்புல பூ சுத்துனது மாதுரி."
"ஒனக்கு எவன் கொம்பு சீவியிருக்கான்னு எனக்குத் தெரியும். ஒப்பன் புத்திதான ஒனக்கும் இருக்கும். அவன், கள்ளத் தேங்காய் பறிச்சவன் தான்..."
"மாமா! எங்கய்யாவ பேசுனா, எனக்குக் கெட்ட கோபம் வரும். அதுவும் பரமசிவம் வேலைக்காரனா வந்துக்கிட்டு..."
"ஒன்கிட்ட என்ன பேச்சி. நான் பரமசிவத்தோட உப்பத் தின்னவன். அவரு சொன்னது மாதுரி, மாட்ட அவுக்கப் போறேன். நீ என்ன பண்ணணுமோ பண்ணிக்க! அவுத்துத் தாறீயா - நானே அவுத்துக்கிடட்டுமா...?"
"அவுக்கிற கையி, துண்டா விழும். அது யாரு கையா இருந்தாலுஞ் சரி."
"பாத்துப்புடலாம்..."
அடைக்கலசாமி, ஆவேசமாக வெளியே வந்து மாட்டின் கயிற்றை அவிழ்த்துக் கொண்டிருந்தார். ஆண்டியப்பனும், 'முற்றத்தில்' கிடந்த ஒரு பாளை அரிவாளை எடுத்துக் கொண்டு, மாமனை நெருங்கினான்.
--------
3
அடைக்கலசாமிக்கு அறுபது வயதிருக்கும். வைரம் பாய்ந்த உடம்பு. எலும்பும் சதையும் ஒன்றோடொன்று ஒட்டி, இறுகப்பற்றிய எஃகு. அதோடு மனிதர் ரோஷக்காரர். பண்ணையார்கள் சார்பில், பக்கத்து ஊர்களில் போய்க்கூட, எதிரிகளை அடித்துவிட்டு வரும் புறநானூற்று வீரர். அந்தப் பசுமாடு, அவரை முட்டுவதற்காக கொம்புகளைத் தரையில் சாய்த்தபோது அவர் அதை பயங்கரமாகப் பார்க்க, மாடு 'பசுவாகி' விட்டது.
ஆண்டியப்பனை, தங்கை மகனாய் பார்க்காமல், பண்ணையாருக்குத் துரோகம் செய்த படு பாதகனாகவும், கள்ளத் தேங்காய் பறித்து, அப்படிப் பறிக்கும் போதே கீழே விழுந்து செத்துப் போன மைத்துனனின் மகனாகவும் கருதினார். ஆண்டியப்பனுக்கும், அவர் தாய்மாமனாகத் தெரியவில்லை. பரமசிவத்தின் காவல் நாயாகவே அவர் தோன்றினார். பண்ணை வயல்களில், அவர் அம்மா களை பிடுங்கும் போது ஒரு வாய்க்கால் அருகே பிறந்த அவர், இன்னும் அந்த வாய்க்காலைத் தாண்டாத, கொத்தடிமையாகவே, அவனுக்குக் காட்சி அளித்தார்.
அடைக்கலசாமி, மாட்டின் கயிற்றுச் சுருக்கைப் பிரித்துக் கொண்டிருந்தார். ஆண்டியப்பன், அரிவாளுடன் அவரை நோக்கி ஆவேசமாகப் போய்க் கொண்டிருந்தான். தங்கம்மா, அவனைப் பிடித்துக் கொள்ளப் பார்த்தாள். அவன், அவளிடம் இருந்து திமிறிக் கொண்டே ஓடினான். வெளியே வந்த காத்தாயி, என்ன செய்வதென்று புரியாமல், கைகளை நெரித்தாள். இதற்குள் அங்கே வந்த, இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளான மாணிக்கம், கோபால் முதலிய இளைஞர்களும், மன்றத்தின் 'அட்வைசர்' மாசானமும் அருகே இருந்த பனை மரத்தருகே நின்று கொண்டார்கள். ஜாக்கிரதையான தூரம். மேற்கொண்டு நகரவில்லை.
இதுவரை பனையோலைகளை வெட்டிக் கொண்டிருந்த அரிவாளுடன், ஆண்டியப்பன் பரமசிவமாகத் தெரிந்த அடைக்கலசாமியை நெருங்கிவிட்டான். கையைக் கூட ஓங்கிவிட்டான். காத்தாயி கதறினாள். தங்கம்மா, அய்யாவுக்குக் கேடயமாக நின்று கொண்டாள். அந்தக் கிழவரோ, எதையும் பொருட்படுத்தாமல், மாட்டின் கயிற்றை, முக்கால்வாசி அவிழ்த்துவிட்டார். ஆண்டியப்பன் 'எதிரியின்' மகள் தங்கம்மாவைத் தள்ளிவிட்டு, கிழவரை வெட்டப் போவதற்காக தன்னை தயார்படுத்திய போது - பசுமாட்டின் அப்பாவித்தனமான பார்வை, அவன் அரிவாள் பாய்ச்சலை அதிகமாக்கியபோது -
உள்ளே இருந்து வெளியே வரமுடியாமலும், உபயோகமில்லாமல் போய்விட்டோமே என்பது மாதிரியும், புரள முடியாமல், எல்லாம் பொய்மையாய் போனது போல் தவித்த மீனாட்சியின் ஒப்பாரிச் சத்தம், வெளியே கேட்டது. ஆண்டியப்பனுக்கு அதிகமாகக் கேட்டது.
"ஆயிரம் செய்தாலும் அவரு
நம்ம தாய்மாம அண்ணாச்சி.
அய்யாவுக்கு அய்யாவா
நம்ம வளர்த்தவரு அண்ணாச்சி.
தோளுல தூக்கி வச்சு
தூங்க வச்சவரு அண்ணாச்சி.
அவர வெட்டுமுன்ன...
என்ன வெட்டு அண்ணாச்சி"
ஏழைப் பெண்களுக்கு, தாங்கொணா சோகம் வரும்போது, ஒப்பாரி பிறக்கிறது. அந்த ஒப்பாரியே ஒரு காவியம் போல் வருகிறது. தாளநயங் கெட்ட வாழக்கையில் சலித்துப் போய், சோகத்துள் மூழ்கடிக்கப்படும்போது, அவலம் பாட்டாகவும், அந்தப் பாட்டு ஆன்மாவின் வெளிப்பாடாகவும் ஆகிவிடுகிறது. தாளம், தானாகப் பிறக்கிறது.
மீனாட்சியின் ஒப்பாரியில் ஆன்மா பேசியிருக்க வேண்டும். அங்கே 'இழவு' விழவில்லை. மீனாட்சி, மேலும் மேலும் ஒப்பாரி வைக்க வைக்க ஆண்டியப்பனின் அரிவாள் கரம், வேறு பக்கமாக விழுந்து கொண்டிருந்தது. இளமையில் தாய் தந்தையரை இழந்தபிறகு, தாய்க்குத் தாயாய், தந்தைக்குத் தந்தையாய், தோளிலே தூக்கி வளர்த்த மாமா முன்னே வந்தார். 'மேலத்தெரு' ராமையா சிறுவனாக இருந்த இவனை ஏதோ ஒரு காரணத்திற்காக அடிக்க, அந்த ராமையாவை, அரிவாளை வைத்துக் கொண்டே ஓடஓடத் துரத்திய அடைக்கலசாமி முன்னால் வந்து சிரித்தார்.
இந்தச் சமயத்தில், பசுமாட்டை பூரணமாக அவிழ்த்துவிட்ட அடைக்கலசாமி, உட்கார்ந்து கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தார். அவன் கையரிவாளைப் பார்த்துக் கொண்டே, "ஏமுல நின்னுட்ட? வெட்டுல! ஒரேயடியாய் வெட்டுல! நீ பெரிய மனுஷங்களப் பகைச்சிட்டு, அதனால படப்போற கஷ்டத்தப் பார்க்காமலே நான் ஒன் கையாலயே சாவுறேன். வெட்டுடா, வெட்டு" என்றார்.
ஆண்டியப்பன் தடுமாறிக் கொண்டிருந்தபோது, மீனாட்சி, "அம்மா சாவும்போது, எங்கள ஒம்ம கையில ஒப்படைச்சத மறந்திட்டீரே மாமா! எங்கள அனாதையா விட்டுட்டீரே மாமா. நேத்து கூட என் வாயில சோத்த உருட்டிப் போட்டுக்கிட்டே, என் தலையைக் கோதிவிட்ட மாமாவே - இப்போ எங்க வாயில மண்ணள்ளி போடுறீரே! மாட்டப் பிடிக்கது நியாயமா?" என்று சொல்லிக்கொண்டே அழுதபோது, ஆண்டியப்பனுக்கு மீண்டும் கோபம் வந்தது.
இதற்குள், காத்தாயி, ஆண்டியின் மோவாயைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டே, "ஆண்டி மவராசா - நான் சொல்லுதத கேளும் ராசா! இது காலத்தோட கோலம்! ஒம்ம மாமா வெறும் அம்புதான். அத எய்தவரு பரமசிவம். அவரு மாட்ட மவராசனா, புண்ணியவான் கொண்டு போவட்டும். இது ஒம்ம மாடு... போலிஸ்ல சொல்லலாம். போன மாடு தானா வரும்; விட்டுடுமய்யா. விட்டுடு முதலாளி..." என்றாள்.
இந்தச் சமயத்தில், பனைமரத்தடியருகே நின்ற இளைஞர் கோஷ்டியின் ஆலோசகர் மாசானமும், அங்கிருந்து நகராமலே, "ஆமாண்டா - மாட்ட இப்ப விடு; பார்க்க வேண்டிய இடத்துல, பாக்க வேண்டியதப் பாத்துப்புடலாம்" என்றார்.
மாட்டை அவிழ்த்துவிட்டு, கன்றை அவிழ்க்கப் போன அடைக்கலசாமியிடம், "மாட்ட கொண்டு போறக் கையோட, என் தலையயும் கொண்டு போயிடும்" என்று சொல்லி, அரிவாளை அவரிடம் நீட்ட, அவர் அதை வாங்கி தூரமாக எறிந்துவிட்டு, கன்றை அவிழ்த்தார். இதற்குள் சத்தம் கேட்டு, கூட்டம் கூடிவிட்டது. மீசைக்காரன் உட்பட, பண்ணையாட்களும் வந்துவிட்டார்கள்.
அடைக்கலசாமி, அவிழ்த்த மாட்டையும் கன்றையும் பண்ணையாள் ஒருவரிடம் கொடுத்து, "நீயே இந்த ரெண்டயும் கட்டு இந்தக் கயிறுல. கொஞ்சத்த வேணுமுன்னா கொடு. தூக்குப் போட்டுச் சாவணும்" என்று சொல்லிக் கொண்டே வடக்குப் பக்கமாகப் போனார்.
பண்ணையாட்கள், மாட்டோடும் கன்றோடும் தெற்குப் பக்கமாகப் போனார்கள். மாடு, மிரண்டு மிரண்டு பார்த்தது. ஆண்டியப்பனிடம் வரத் துடிப்பது போல், பண்ணையாட்களை உதறிக்கொண்டே, 'ம்மா.. ம்மா' என்றது. அதன் கழுத்தில், ஆண்டியப்பன் வாங்கிப் போட்டிருந்த மணி தாளத்துடன் ஒலிக்க - கிட்டத்தட்ட மாட்டின் சத்தம், ஒப்பாரிபோல் கேட்டது. மாடு 'சண்டித்தனம்' செய்வதைப் புரிந்து கொண்ட மீசைக்காரன் அதன் கன்றை, வலுக்கட்டாயமாக தரதரவென்று இழுத்தான். அது நகராமல் போனதால், அதை சிரமப்பட்டுத் தூக்கிக் கொண்டு போனான். இப்போது, இந்த ஜெர்ஸி இனக் கலப்புப் பசு, தாய்மைக் காந்தத்தால் இழுக்கப்பட்டு தானாக நடந்தது.
மாடு போவதை விட, தன் மானம், மரியாதை, கவுரவம் எல்லாம் தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போவது போல் ஆண்டியப்பன் செய்வதறியாது திகைத்து நின்றான். பிறகு ஆவேசப்பட்டவன் போல், தரையில் கிடந்த அரிவாளை உஷ்ணமாகப் பார்த்தபோது, அவனது 'பனை மரத்தடி' சகாக்கள் அதன் நிழலைப் போல அவனருகே வந்து, அவனது கைகால்களைப் பிடித்துக் கொள்ள, மாசானம், "பொறுடா, மாடு எங்க போயிடப் போவுது... இந்தப் பரமசிவம் எங்க போயிடப் போறான்... நாங்க எங்க போயிடப் போறோம்... இந்த ஒண்ணு போதாது, அவன பஞ்சாயத்துத் தேர்தலுல தோற்கடிக்கதுக்கு" என்றார். பஞ்சாயத்துத் தேர்தல் முடிவது வரைக்கும், போன பசுமாடு, அவனுக்குக் கிடைக்கக் கூடாது என்று அவரே நினைப்பது போல், அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஒன்றன்பின் ஒன்றாக தாமதமாக வந்தன.
இதற்குள், அடைக்கலசாமியின் கையைப் பிடித்த சீனியம்மா ஓடிவந்தாள். ஐம்பது வயதுக்காரி. அதிர்வெடி பேச்சுக்காரி.
"என் புருஷனயால வெட்டப்போன - வளத்த கிடா மார்புல பாயுமுன்னு சொல்லுதது சரியாப் போச்சே! நீ நாசமாப் போவ! ஊரான் வீட்டுச் சொத்துக்கு ஆசப்பட்ட ஒன் நெஞ்சில, புத்து வர. ஒன் வீட்ல எள்ளு வைக்க - இழவு விழ..."
சீனியம்மா, பேச்சோடு மட்டும் நிற்கவில்லை. நிற்கவும் மாட்டாள். கீழே குனிந்து, மண்ணை வாரி, மருமகன் மீது போடப் போனபோது, தங்கம்மா தாயின் கைகளைப் பிடித்துக் கொள்ள, கையிலிருந்த மண், அதை அள்ளியவள் தலையிலேயே விழ, சீனியம்மா, வாயை மகள் பக்கமாகத் திருப்பினாள்.
"சண்டாளி! வேணுமுன்னா இப்பவே இந்தப் பய வீட்ல போயி இருந்துக்களா! பெத்த அப்பன வெட்டப் போயிருக்கான். இந்நேரம், என் மவராசன் மாண்டு மடிஞ்சி மண்ணா போயிருப்பாரு, இவ்வளத்தையும் பாத்துக்கிட்டு நீ இப்படி நிக்கதவிட, அவன் வீட்ல போயி இருந்துக்கிடலாம். இவா காத்தாயிய, 'வச்சிக்கிட்டது' மாதுரி உன்னையும் வச்சிக்கிடுவான்" என்றாள்.
ஆண்டியப்பனுக்கு, மாட்டைப் பறிகொடுத்த ஆத்திரம் சீனியம்மா மீது திரும்பிக் கொண்டிருந்தது. தங்கம்மா, அவன் ஏடா கோடமாக எதையாவது சொல்லி, எதையாவது செய்து விடக் கூடாது என்பதுபோல், அவனைக் கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தாள். காத்தாயிக்கு கோபம் வந்தது. ஏதோ சொல்லப் போனாள். அதேசமயம், எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்து போன அவளால், ஒன்றும் பேச முடியவில்லை. பிறகு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு 'இந்த முண்டய பதிலுக்குக் கேட்டால் விவகாரம் ஜாதிச் சண்டையா மாறினாலும் மாறலாம். பண்ணையாருங்களுக்குக் கொண்டாட்டமாயிடும்!' என்று தனக்குள்ளே பேசிவிட்டு, சீனியம்மாவை நிமிர்ந்து, நேராகப் பார்த்தாள்.
அந்தப் பார்வையின் சூடு தாங்காத சீனியம்மா சற்று நடந்து, ஒரு மரத்தின் பக்கமாக நின்று கொண்டு, மகளை ஆவேசமாகப் பார்த்தாள். பிறகு "நீ வாரியா இல்லியாளா? இல்ல அவன் கூடயே இருக்கப் போறியாளா" என்றாள்.
தங்கம்மா, அவளைப் பொருட்படுத்தாதது போல், புடவைத் தூசியைத் தட்டி விட்டுக்கொண்டே அங்கே நின்றாள். சீனியம்மாளுக்கு, 'இஞ்சி' தின்னதுமாதிரி இருந்தது.
"ஒய்யா வடக்குப் பக்கமா போறாரு. அக்கா மவன் கொடுத்த அரிவா மரியாதையில சந்தோஷப்பட்டு ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிடப் போறாரு. வாளா - போயிப் பார்ப்போம்."
உள்ளே, இன்னும் அழுகையை விடாத அண்ணியைப் போய்ப் பார்க்க நினைத்த தங்கம்மா, ரோஷக்காரரான தந்தை, அம்மா சொன்னதுபோல ஏதாவது செய்தாலும் செய்துவிடலாம் என்று நினைத்தவள் போல், பித்துப் பிடித்த தன் தலையை உசுப்பிவிட்டுக் கொண்டாள். பின்னர், அம்மாவை நோக்கி நகர்ந்தாள்.
அத்தானைப் பார்த்துக்கொண்டே, நகர முடியாமல் நகர்ந்தாள். அவள் கண்கள், ஆண்டியப்பனின் கண்களுடன் ஒட்டிக் கொள்ளப் போவதுபோல் துடித்தன. அவனருகே நிற்கப் போகிறவைபோல், கால்கள் இழுத்தன. அவனைக் கிள்ளி விளையாடிய கைகள், இப்போது ஒன்றை ஒன்று நெரித்துக் கொண்டன. அவன் கோதிவிட்ட தலைமுடி, இப்போது பாவாடை மாதிரி, காற்றில் விரிந்தது.
'பால் பொங்குற வேளையில... பானை உடைஞ்சிட்டே மச்சான்' என்று மனத்துக்குள்ளே ஒப்பாரி வைத்துக் கொண்டு, 'நீ யாரோ நான் யாரோன்னு ஆயிட்டோமே' என்று மனதுக்குள்ளேயே மாரடித்துக் கொண்டு, தான் யாரோ என்று தவித்தவள் போல், தாயின் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தாள்.
மாடு போன வேகத்தில் மாமன் மகள் போவதை நிலைகுத்திய பார்வையுடன், நிலைகுலைந்த உள்ளத்துடன், 'அவள் போனது ஒரு அடியா அல்லது ஒரேயடியா' என்று கணக்குப் போட்டுக் கொண்டிருப்பது போல், அவள் கால் பாதத்தையும், உச்சந்தலையையும் உற்று உற்றுப் பார்த்த ஆண்டியப்பனை, மாசானம் உசுப்பினார்.
"ஏண்டா பித்துப் பிடிச்சி நிக்குற? பரமசிவம்... 'இந்தா பிடின்னு' தலையக் குடுத்துட்டான். தானா மாட்டிக்கிட்டான். இத விடப் போறதுல்ல. வீடு புகுந்து மாட்டப் பிடிச்சவன் கையில காப்பு மாட்டாட்டா - நான் மாசானம் இல்ல!"
மாணிக்கம் பிஏ.பி.டி.யும் ஆறுதல் சொன்னான்.
"கவலைப்படாத ஆண்டி. இந்த விவகாரத்த வச்சே... நம்ம ஊர்ல இருக்கிற ஒவ்வொரு விவகாரத்தையும் தீர்த்துடலாம். நாங்க இருக்கது வரைக்கும் நீ கவலைப்பட வேண்டாம்."
ஆண்டியப்பன், இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளைப் பார்த்தான். அங்கே வந்திருந்த ஏழெட்டுப் பேருமே படித்தவர்கள். ஊர் நீதிக்காக, உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருக்கிறவர்கள். இவர்கள் இருக்கும் வரை, அவன் அஞ்ச வேண்டியதில்லை. சொல்லப் போனால், ஊர் மோசடிகளை அம்பலமாக்கப் போகும் போராட்டத்தில் அவன் மாடு தற்செயலாகப் போயிருக்கிறது. அவ்வளவுதான். சற்று நேரம் வரை, மாடு கொண்டு போகப்பட்ட போது, பண்ணையாட்கள், தன்னையே கழுத்தில் கயிற்றைக் கட்டி, கால்களுக்கு இணையாக கைகளையும் ஊன்ற வைத்து, கொண்டு போவதுபோல் சிறுமைப்பட்ட ஆண்டி, சிறிது பெருமைப்பட்டுக் கொண்டான். பிறகு, அவர்களுடன் தோழமையுடன் பேசினான்:
"நீங்க இருக்கும்போது நான் எதுக்காவ கவலைப்படணும்! மீசக்காரன் மாட்ட பிடிச்சிக்கிட்டு போவும்போது - அரிவாள எடுத்து ஒரே வெட்டா வெட்டணுமுன்னு நினைச்சேன். ஆனால், நீங்க குறுஞ்சிரிப்பா சிரிச்சிக்கிட்டு நிக்கத பார்த்ததும் ஏதோ விஷயம் இருக்குன்னு தெரிஞ்சுபோச்சு!"
மாசானம், குறுக்கே புகுந்தார்.
"வந்த பயலுவ, என் ஒத்த விரலுக்குப் பெறுவானுவளா? குட்டாம்பட்டி டீக்கடையில நாலு பேர தனியா நின்னு சமாளிச்ச ஆளுடா நான்! இவங்கள ஒரு அடியில விழத்தட்டிட்டு மாட்ட ஒன்கிட்ட கொடுக்க எவ்வளவு நேரம் ஆவும்? ஏன் சின்னய்யா செய்யல? அங்கதான் விஷயம் இருக்கு. எதிரி தப்புப் பண்ணும்போது அவன அந்தத் தப்ப பண்ணவிடணும். ஒரு தப்புக்கு ஒம்பது தப்பு செய்ய விடணும். அப்புறம் ஒரே போடு. ஆளு எழுந்திருக்கப்படாது."
இன்னும், எட்டுத் தப்புகள் நடந்தால்தான், தனக்கு மாடு கிடைக்குமோ என்று சந்தேகப்பட்ட ஆண்டியப்பனுக்கு, பொறுக்க முடியவில்லை. வாய்விட்டே கேட்டான்:
"சரி. இனும் என்ன பண்ணணும் - அதைச் சொல்லுங்க."
"அதத்தான் சின்னய்யா சொல்லப் போனேன். நாம சட்டப்படி என்னெல்லாம் செய்யணுமோ அதச் செய்யுவோம். அதுக்கும் முடியாட்டா, சின்னய்யாகிட்ட இருக்கவே இருக்கு வேல் கம்பு ஒரே குத்து."
இதற்குள் கையில் சில நோட்டுப் புத்தகங்களை வைத்திருந்த, என்ஜினீயரிங் டிப்ளமாக்காரனான கோபால் "நாம இளைஞர் நற்பணி மன்றத்துக்கு மாணிக்கம் தலைவராக இருக்கணும். நான் செயலாளரு. இவன் ரவி பொருளாளரு. மற்றவங்க எல்லாம் கமிட்டி மெம்பருங்க. தீர்மானம் போட்டாச்சு. இதுல ஒரு கையெழுத்துப் போடு" என்றான்.
ஆண்டியப்பனுக்கு எரிச்சலான எரிச்சல். கையெழுத்துப் போடுவதற்கு இதுவா நேரம்? என்ன செய்ய... இவங்கள வச்சுதான், போன மாட்ட மீட்கணும்.
ஆண்டியப்பன் மன்றக் குறிப்பேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு, "சரி. இப்ப என்ன செய்யலாம்" என்றான்.
"முதல்ல கூட்டுறவு சங்கத்துல போயி சொல்லுவோம். அப்புறம் 'மாடு திருடி பரமசிவமே - இனிமேல் நீ ஓட்டு திருட முடியாது'ன்னு சுவர்ல, வாதமடக்கி இலையை வச்சி எழுதலாம்."
மாசானத்தின் ஆலோசனையின் பேரில், இ.ந. மன்றத்தின் ஏழெட்டு நிர்வாகிகளும், ஆண்டியப்பனும் கூட்டுறவுச் சங்கத்திற்குப் போனார்கள் சங்கக் கட்டிடம் அங்கே வாங்கப்படும் பால் மாதிரி, வெள்ளை வெளேரென்று இருந்தது. பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கம் அது. ஆகையால் பல ஆசாமிகளும், 'பலே' ஆசாமிகளுமாக நல்ல கூட்டம்.
உள்ளே போனால், கிளார்க் நாற்காலி. அதற்கு எதிர்த்தாற் போல் தலைவர் அறை. சங்க உறுப்பினர்கள், தாங்கள் கடனாக வாங்கிய மாடுகளின் பாலை, அங்கே வந்து கொட்டினார்கள். கிளார்க், ரிஜிஸ்டரில் வரவு வைத்துக் கொண்டிருந்தார். உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் 'மாமா மச்சான்' என்று பேசிக்கொண்டே பாலை ஊற்றினார்கள். இது உறுப்பினர்களின் ஒற்றுமையைக் காட்டுவதாக, வெளியூர்க்காரர்கள் நினைக்கலாம். விஷயம் அப்படி இல்லை. பல ஜாதிகள் நிறைந்த அந்தக் கிராமத்தில், குறிப்பிட்ட இரண்டு பங்காளிக் கோஷ்டிகளே, சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுகிறார்கள் என்பதுதான், இந்த 'மாமா மச்சானின்' நிஜமான அர்த்தம்.
முன்னால் வந்து நின்றவர்களை எடை போட்டுக் கொண்டே, கூட்டுறவுச் சங்கத் தலைவர் மாயாண்டி, ரிஜிஸ்டரில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அவர், அடித்து அடித்து எழுதுவதைப் பார்த்தால், அநேகமாக, சர்க்கரை விநியோகம் பற்றிய கணக்காக இருக்கும்.
மன்றத் தலைவர் மாணிக்கம் பேசப் போனான். செயலாளர் கோபால் பேசப் போனான். உப பொருளாளர் ரவி பேசப் போனான். ஆனால், மாசானத்தின் வாய் முந்திக் கொண்டது.
"நம்ம கூட்டுறவு மாட்ட, பரமசிவம் ஆள்வச்சி பிடிச்சிக்கிட்டு போயிட்டாரு. இத சங்கம் சும்மா விடப்படாது!"
மாயாண்டி, ரிஜிஸ்டரில் இருந்து கண்களை விலக்காமலே கேட்டார்:
"எந்த மாட்ட?"
"நம்ம ஆண்டியப்பனோட மாட்ட."
"இது என்ன போலீஸ் ஸ்டேஷனா? சங்கத்தப் பொறுத்த அளவுல, மாடு வாங்குனவங்க, பால் ஊத்தணும். இல்லன்னா தவணப் பணத்த கட்டணும். யாரு மாட்ட யாரு பிடிச்சா என்கிறது சங்கத்துக்கு சம்பந்தமில்லாத விஷயம். சட்டப்படி பார்த்தால், ஆண்டி, பணம் கட்டலன்னா, சங்கம் கோர்ட்ல வழக்குப் போடும். கோர்ட்லதான், அவன் மாடு எப்படிப் போயிட்டுதுன்னு சொல்லலாம். பரமசிவம் மச்சானுக்கும் அவனுக்கும் ஆயிரம் இருக்கும். அதுக்கு சங்கம் பொறுப்பாவாது. ஒரு வாரம் பார்ப்பேன். பணம் கட்டாட்டா, கோர்ட்ல வழக்குத்தான் போடுவேன். மாட்டுக்கு ஆண்டிதான் பொறுப்பு. அத காப்பாத்த வேண்டிய பொறுப்பும் அவனுக்குத்தான். சங்கத்துக்கு சம்பந்தமில்லாத சமாசாரம். சரி போயிட்டு வாரீயளா?"
மாசானம் கோபத்தோடு பார்த்தார்.
"நீரு பேசுறது முறையில்லாத பேச்சு. முழுப் பூசணிக்காய சோத்துக்குள்ள மறைக்கப் பாக்கிற பேச்சு. சங்கத் தலைவர் என்கிற பொறுப்போட பேசணும்."
"நான் பொறுப்போட பேச ஆரம்பிச்சா அப்புறம் நீரு வெறுப்போட போவ வேண்டியதிருக்கும். போன வருஷம் நீரு உழவு மாடு சங்கக் கடனுல வாங்கினீரு. சரி. சந்தையில் இருந்து மாட்ட வீட்ல கட்டிட்டு அப்புறமாவது வித்திருக்கலாம். செஞ்சீரா? வாங்குன சந்தையிலேயே மாட்ட வித்தீரே - இதுக்கும் வேணுமுன்னா நோட்டீஸ் அனுப்பட்டுமா?"
"மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடாதேயும் மச்சான்."
"நானும் அதத்தான் சொல்லுதேன். முழங்காலுல அடிச்சால், மொட்டத் தலையில் வலிக்கத்தான் செய்யும். மொட்டத் தலையில காயம் பட்டால் முழங்காலத் தூக்க முடியாது. நான் சொல்றது உமக்குப் புரியுதா... இல்ல புரிய வைக்கணுமா?"
மாசானத்திற்கும் புரிந்தது. புரிய வேண்டாத அளவுக்குப் புரிந்தது. ஆண்டியப்பனுக்கும் புரிந்தது. அயோக்கியத்தனம் செய்கிறவன் நியாயம் பேசினால், அந்த நியாயமே அநியாயமாகிவிடும் என்பது புரிந்தது. என்ன செய்ய - எப்படியாவது மாட்டை மீட்டியாக வேண்டும். அதுவரை, மாசானத்திடமிருந்து மீளக்கூடாது.
'பொருளாளர்' கோபால் ஒரு யோசனை சொன்னான்.
"ஆல்ரைட், மணியக்காரர் கிட்ட போவோம். அவரு கிட்ட மாடு திருடு போனதுக்கு ஒரு ரிப்போர்ட் வாங்கிக் கிட்டு, போலீஸ் ஸ்டேஷன் போவோம். நாம் யார் என்கிறத இவங்களுக்குக் காட்டியாகணும்."
மாசானம் 'கழட்டிக்' கொண்டார். இதர நபர்கள் ஊர்வலம் போலப் போனார்கள். மணியக்காரர் மாடசாமியின் வீட்டு வாசலுக்குப் போனார்கள். வெளித் திண்ணையில் உட்கார்ந்து உள்ளே எட்டிப் பார்த்தார்கள். இரண்டு தையல் மிஷின்கள், மூன்று நெற்குதிர்கள், இரண்டு ஜோடி உழவு மாடுகள், தழைமிதிக் கருவிகள், யந்திரக் கலப்பைகள்.
மாடசாமியின் மனைவியான, மகளிர் சங்கத் தலைவி சரோஜாவும், அவர் மகள் மல்லிகாவும் ஒரு பக்கம் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே அடைக்கலசாமியும் அவர் மகள் தங்கம்மாவும் நின்று கொண்டிருந்தார்கள். அடைக்கலசாமி மகளை அதட்டினார்.
"நாம பரம்பர பரம்பரயா சேவகம் செய்யுற குடும்பம் இது. மல்லிகாவ நீ திட்டுனது தப்பு. தெரியாம பேசிட்டேன்னு மட்டும் நீ சொல்லல. இப்பவே ஒரு கொலை நடக்கும். உம்... மல்லிகா கிட்ட..."
------------
4
அந்தக் காலத்தில், அடிமைகளைத் தண்டிக்கும் வகையில் அவர்களை ஒருவர் பின் ஒருவராக சிங்கக் கூண்டுக்குள் விட்டு, பசியோடு பாய்ந்து கவ்வும் சிங்கத்தையும், அதன் பசிக்கு ருசியாகி, குருதி கொப்பளிக்க, நரம்புகள் தெறிக்க, நாலு பக்கமும் அடைபட, மிருகத்தின் வாய்ப்பக்கம் போகும் அடிமையை சீமான்களும் சீமாட்டிகளும் பத்திரமான இடத்தில் அமர்ந்து ரசித்ததாக வரலாறு கூறுகிறது.
அந்த வரலாறு இப்போது வேறு ரூபத்தில் அதே சமயம் மிகப்பெரிய வித்தியாசத்துடன் நடந்து வருவதற்கு எடுத்துக்காட்டாக, மல்லிகா, தங்கம்மாவைக் கண்களால் கவ்வுகிறவள் போல் பார்த்தாள். மாதர் சங்கத் தலைவி சரோஜா அம்மையாரும், அவளை முப்பது வருடத்திற்கு முன்பே கையைப் பிடித்து, கழுத்தில் கயிறு கட்டிய கிராம முன்சீப்பும், குறுஞ்சிரிப்புடன் மோவாய்களைத் தடவிக் கொண்டு, முன் நெற்றிகளைச் சுருக்கிக் கொண்டு, தங்கம்மாவைப் பார்த்தார்கள். வெளியே திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆண்டியப்பன், தங்கம்மா பக்கமும், மாணிக்கம் பி.ஏ.பி.டி. மல்லிகா பக்கமும், மனத்துக்குள் அணிவகுத்துக் கொண்டார்கள்.
தங்கம்மாவோ, எதுவுமே நடவாததுபோல், ஒரு கையை இடுப்பில் ஊன்றி, வில் மாதிரி வளைத்துக் கொண்டு கண்களைச் சுற்றியுள்ளவர் பக்கம் சுழலவிட்டுக் கொண்டிருந்தாள். அய்யாவைத் தேடி, புளியந்தோப்புப் பக்கமாகப் போய், அங்கே அவர் இல்லாததால் பதைபதைத்து, பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் பார்த்துவிட்டு, இங்கே தெருவில் வந்து ஜாடைமாடையாகப் பார்த்த போது, அடைக்கலசாமிக் கிழவர், தன் முதுகு மாதிரி, மகளின் சுயமரியாதை ஆக வேண்டும் என்று நினைத்தவர் போல், அவளை உள்ளே கூப்பிட்டு, மன்னிப்பு கேட்கச் சொன்னார்.
நான்கு நாட்களுக்கு முன்பே, முன்சீப் நடந்த விவரத்தைச் சொன்னதும், மனத்துக்குள் மகளைப் பாராட்டிய அந்த கூனுக் கிழவர், இப்போது கேடு கெட்ட, விசுவாசம் கெட்ட, எல்லாங் கெட்ட ஆண்டிப் பயலுக்காக தன் மகள் ஒரு கிராமத் தலைவரின் மகளை - அதுவும் தான் வேலை பார்க்கும் பண்ணையாரின் தங்கை மகளை, 'நாயே பேயே' என்று பேசியது, அதிகபட்சமாகத் தெரிந்தது. அவரும் ஒருதலைப்பட்சமாக நிற்கத் துணிந்து விட்டார்.
இவள் பிறப்பதற்கு முன்பே, இவர் சேவிக்கும் குடும்பம் இது. மகள் வருவாள். போவாள். ஆனால் சேவகம் இருக்கே அது அப்படியல்ல. அது பாசத்தைத் தாண்டும் பக்தி.
தங்கம்மா, அலட்சியமாக நிற்பது, கிழவருக்கு அவமதிப்பாகத் தெரிந்தது. கண்கள், இரத்தம் கொப்பளிப்பது போல் சிவக்க, "இப்போ, தெரிஞ்சி தெரியாமப் பேசிட்டேன்னு கேட்கப் போறியா - இல்ல..." என்றார்.
தங்கம்மா, வெளியே ஆண்டியப்பனைப் பார்த்தாள். பிறகு தன்னைத்தானே சிலிர்த்துக் கொண்டு, "மன்னிப்புன்னு வந்ததுன்னா முதல்ல அதுதான் கேக்கணும். எங்க அத்த மகனை, காரணமில்லாமல் திட்டுனால், நான் கேட்டுக்கிட்டு இருக்கணுமா?" என்றாள்.
மல்லிகா, ஆட்கள் இருக்கிற தைரியத்தில் அதட்டினாள்.
"அது இதுன்னு பேசுனால், கெட்ட கோபம் வரும். நான் என்ன ஆடுமாடா?"
கிராம முன்சீப் சிலிர்த்தெழுந்தார்.
"ஒன் அய்யா முகத்துக்காவ பாக்கேன். இல்லன்னா நீ, என் மகள பேசியிருக்கிற பேச்சுக்கு, சுண்ணாம்புக் காளவாசலுல வச்சி..."
சரோஜா அம்மையார், அரசியல்வாதியானார்.
"அய்யா கேக்குறார் இல்ல. அவருக்கு மரியாத கொடுக்கிறதுக்காவது, தெரியாமப் பேசிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லேன்! இவ மூணு நாளா கன்னம் வீங்கும்படியா அழுதுகிட்டு கிடந்தாள். நாங்ககூட அவளை 'நீன்னு' சொன்னதுல்ல. பெத்த அப்பனுக்கு மரியாத கொடுக்கவளா இருந்தால், இந்நேரம் அவரு சொன்ன மாதுரி கேட்டிருப்பே. நீதான் அப்பனையே மதிக்காதவளாச்சே!"
தங்கம்மா, ஊன்றிய கையை எடுத்து, ஆள்காட்டி விரலை நீட்டிக் கொண்டு, "சும்மா வாழைப்பழத்துல ஊசியை ஏத்தறது மாதிரி பேசாண்டாம்மா. ஒவ்வொருத்திவ கட்டுன புருஷனையே மதிக்காம சிலுப்பிகிட்டு பிறத்தியாருக்கு உபதேசம் பண்ண வந்துடுறாவ. இவரு, இந்த வீட்ல இருக்கது வரைக்கும், என்னைப் பெத்த ஐயா இல்ல - உங்களோட வேலக்காரர். என் உயிரு போனாலும் போவுமே தவிர என் வாயில இருந்து நீங்க விரும்புறது மாதிரி வார்த்த வராது!"
'பெண்டாட்டி மதிக்கவில்லை என்கிற சமாசாரம், இந்த வேலைக்காரப்பய மவளுக்கும் தெரிஞ்சிப் போச்சே' என்ற இரகசியமான ஆத்திரத்தில் முன்சீப் ஐயா எழுந்தார்.
"நீ மட்டும் என் மகளாக இருந்திருந்தால், இந்நேரம் கொண்டையைப் பிடிச்சி, 'திருவு திருவு'ன்னு திருவியிருப்பேன்" என்று சரோஜா அம்மையார் சொன்னார்.
அடைக்கலசாமி ஆவேச சாமியானார். திடீரென்று மகள் மீது பாய்ந்து, அவள் தலைமுடியைப் பிடித்து கைக்குள் சுற்றிக் கொண்டு, மகளின் முதுகில் பலங்கொண்ட மட்டும் குத்தினார். 'அய்யோ, போனேனே' என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டே, தங்கம்மா, அப்பாவின் கையைப் பிடித்து, தலையை உதற உதற, அவளுக்கு வேதனை விஸ்வரூபமாகியது. எப்படியோ அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, நாலடி தள்ளிப்போய் நின்று கொண்டாள்.
இதுவரை, அய்யாவிடம் ஒருதடவை கூட அடிபடாத தனக்கு - திட்டித் தொலைக்கும் அம்மாவைக்கூட, 'என் மகள பேசுனியானா குழிவெட்டிப் புதச்சிடுவேன்' என்று சிங்கம்போல் கர்ஜிக்கும் பெற்றவன், நான்குபேர் முன்னிலையில் அடித்த அடியின் வலியைவிட, அதன் காரண காரியம், அவள் இதயத்தில் பெரும் வலியைக் கொடுத்தது. விம்மப் போனாள். 'அய்யோ அய்யோ' என்று அழப்போனாள். 'என்னையா அடிச்சியரு - என்னையா அடிச்சியரு' என்று கத்தி, தன் தலையிலே கூட, கைகளைப் பாயவிடப் போனாள். திடீரென்று அவள் கண்கள் மல்லிகாவைப் பார்த்தன. அதில் ஜொலித்த அகங்காரத்தையும், உதட்டோரத்தை விரித்த குறுஞ்சிரிப்பையும் பார்த்தன. எதுவுமே நடவாததுபோல் இருந்த சரோஜாவைப் பார்த்தன.
அவ்வளவுதான்.
நீரை விழ வைக்கப் போன கண்கள், இப்போது நெருப்பைக் கொட்டின. உள்ளத்து ஓலம், போர்ப்பரணியாகியது. இயலாமை, எதிர்ப்பாக மாறியது. தங்கம்மா, மல்லிகாவை, அவளும் அவள் பெற்றோரும் பயப்படும் அளவுக்கு சற்று நெருங்கிக் கொண்டு, அழுத்தந்திருத்தமாகப் பேசினாள்:
"அடியே, மல்லிகா! குதிரக்கொண்டை, என்னைப் பழிவாங்கிட்டதா நினைக்காதடி! நானாவது எங்கய்யா கிட்டதாண்டி அடிபட்டேன். ஒன் அகங்காரத்துக்கும், மண்டக்கனத்துக்கும் நீ ஊர்ல அடிபடப் போற காலம் வரப்போவுதுடி. எனக்கு அடி வாங்கிக் கொடுத்துட்டதா நினைக்காதடி. இப்போ எங்கய்யா என்னை அடிச்ச அடி, பிட்டுக்கு மண்சுமந்த பரமசிவத்தை, பாண்டிய ராஜா அடிச்சது மாதிரியான அடிடி! இந்த அடி, ஒங்களமாதுரி அக்கிரமக்காரங்க ஒவ்வொருவர் மேலயும் படப்போவுதடி!"
மல்லிகா வாயடைத்துப் போய் எழுந்தபோது, அடைக்கலசாமி, அருகே கிடந்த ஒரு தார்க்கம்பை எடுத்துக் கொண்டு, மகளை நோக்கி ஓடினார். திடீரென்று அவருக்கும், தங்கம்மாவுக்கும் இடையே ஓர் உருவம் வந்து நின்றது. கடுமையான கோபம், மேனியெங்கும் ஆடுவது போல் உடலெல்லாம் சிலிர்த்து நிற்க, உயிரையே பணயம் வைக்கத் தயாராவது போல், அந்தக் கம்பீர உருவம், கிழவரையும் மகளையும் மாறி மாறிப் பார்த்தது.
ஆண்டியப்பன் மாட்டைப் பறிகொடுத்துவிட்டு, மாமன் மகளையும் பறிகொடுத்தாலும் அவளைப் பலி கொடுக்கச் சம்மதிக்காத ஒரு ஏழை. கம்பீரமாகச் சவாலிட்டான்.
"இனிமேல் அவள்மேல் ஒரு அடி விழுந்தாலும், இப்பவே கொலை விழும். ஒரு கொலையோட நிக்காது. வேணுமுன்னால் அடிச்சிப் பாக்கட்டும்."
அடைக்கலசாமி, அதிர்ந்து போனார். அவருக்குக் கோபம் வரவில்லை. தனக்கு ஏன் கோபம் வரவில்லை என்றும் அவர் ஆச்சரியப்பட்டார். ஒருவேளை, தனக்கு ரோஷம் இல்லாமல் போய்விட்டதோ என்று கூடப் பயப்பட்டார். எவரையும், 'ஒத்தைக்கு ஒத்தையாய்' சமாளிக்க முடியும் என்று இதுவரை தன் வீரத்தில் அசைக்க முடியாத அபிமானம் வைத்திருந்த அந்தக் கிழவர் வாயடைத்து, கையடைத்து, காலடைத்து நின்றார். மகள் மேல், அக்காள் மகன் வைத்திருக்கும் பாசத்தின் தரிசனத்தில், அடிமனத்தில் ஏற்பட்ட பெருமிதம் அவர் வெளிமனத்தில் ஏற்பட்ட கோபதாபத்தை செல்லுபடியாக்காமல் செய்த ரசாயன மாற்றம், அவருக்கே தெரியாது.
இதற்குள், வெளியே இருந்து மாசானம், கோபால், மாணிக்கம், இன்னும் இரண்டு மூன்று இளைஞர்கள் ஓடிவந்து ஆண்டியப்பனைப் பிடித்துக் கொண்டார்கள். கிராம முன்சீப், அடைக்கலசாமியை ஒப்புக்குப் பிடித்துக் கொண்டார்.
ஆண்டியப்பன் தங்கம்மாவைப் பார்த்து ஆணையிட்டான்:
"தங்கம் வீட்டுக்குப் போ! என் வீட்டுக்குப் போ! என் மாமனும் ஒன் அய்யாவும் செத்து ஒரு மணி நேரமாவுது! இனிமேல் நீ... நீ... என் வீட்டுக்கே போகலாம். உம் போம்மா... இது நிற்கக்கூடாத இடம்."
அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவள் போல் தங்கம்மா முக்காடு போட்டுக்கொண்டு நகரப் போனாள். பிறகு, தன் முக்காட்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு, சேலையை இறுக்கிப் பிடித்துக் கட்டிக் கொண்டு கம்பீரமாக வெளியேறினாள். "ஏளா... அவன் வீட்டுக்குப் போயி தொலைச்சிராத!" என்று கிழவர் சொல்லிவிட்டதாக நினைத்தார். ஆனால் வார்த்தைகள், வாயை விட்டு வெளியேறவில்லை என்பது அவருக்கே தெரியாது.
முன்சீப்பிற்கு, இப்போது தன் உத்தியோகத்தின் நினைப்பு வந்தது. மாசானத்தைப் பார்த்ததும், அந்த எண்ணம் அதிகமாக வந்தது. அதட்டினார்.
"என்ன மாசானம்! காலிப் பயலுவள கூட்டியாந்து என் வீட்ல கலாட்ட பண்ண வந்தியா? இதே மாதிரி நானும் உன் வீட்ல கலாட்டா பண்ண எவ்வளவு நேரமாவும்... இல்ல போலீஸ் ரிப்போர்ட் பண்ணத்தான் நேரம் ஆவுமா? பதில் சொல்லுப்பா?"
மாசானம் பதில் பேசினார்.
"அண்ணாச்சி! தப்பா நினைச்சிட்டிய. சும்மா வழிலே வந்தேன். இந்தப் பையங்க, ஒங்களப் பாக்கப் போறதா சொன்னானுவ. ஆண்டியப்பன் மாட்ட இவரு பிடிச்சிக்கிட்டுப் போயிட்டதச் சொல்லி, ஒங்ககிட்ட ஒரு ரிப்போர்ட் வாங்கிக்கிட்டு, பெரிய அதிகாரிகள பாக்கப் போறதாச் சொன்னானுவ. சரி சின்னப் பயலுவ, பெரிய மனுஷங்ககிட்ட ஒண்ணுகிடக்க ஒண்ண பேசிடப்படாதேன்னு நானும் கூட வாரேன். கடைசில என்னடான்னா, எனக்குத் தான் கெட்ட பேரு. என் ஜாதகமே அப்படி. சின்ன வயசில இருந்து இப்படி."
சரோஜா அம்மா புரிந்து கொண்டாள். சின்ன வயதில், தான் காதலித்துக் கட்டிப்பிடித்த 'மாசான மச்சான்' 'கருவாட்டு ஜாதகத்தால்', தன்னை மணக்க முடியாமல் போனதை சுட்டிக் காட்டுவதைப் புரிந்து கொண்டு, அந்த ஐம்பது வயதுக்காரி, இப்போது இருபது வயதுக்காரியாகித் தவித்தாள். எப்பவோ நடந்தது இப்பத்தான் நடந்தது மாதிரி இருக்கே...
வாலிபத்தைத் திரும்ப வரவழைத்துக் கொண்டிருந்த இரண்டு முதியவர்களின் 'புனிதக் காதல்' தாபங்களைப் புரிந்து கொள்ளாத மணியக்காரர் தன்பாட்டுக்குப் பேசினார்.
"ஒரு கொலையோட நிக்காதுன்னு இவன் மிரட்டுறான். இவனுக்கா நான் ரிப்போர்ட் கொடுக்கணும். நல்லா இருக்கே நியாயம்!"
இ.ந. மன்றத்தின் உதவித் தலைவர் கோபால் பதிலளித்தான்.
"நியாயம் நல்லா இருக்கணும் பெரியப்பா! அதுக்காகத்தான் வந்தோம். பரமசிவம் மாமா தூண்டுலுல இவனோட மாட்ட, இவரு பிடிச்சிக்கிட்டுப் போயிட்டார். வேணுமுன்னா இப்பவே இவர விசாரியும். நீரு ஒரு ரிப்போர்ட் கொடுத்தால் நாங்க போலீஸ்ல கம்ளெயிண்ட் கொடுக்க வசதியா இருக்கும். அதோட இது ஒம்மோட கடமை. முடியாதுன்னு சொல்றதுக்கு உரிமை இல்லாத கடமை."
மணியக்காரர் மார்தட்டிப் பேசினார்.
"ஊர குட்டப் புழுதியாக்குறதுன்னு தீர்மானம் பண்ணிட்டிய! பரவாயில்ல. நான் ரிப்போர்ட்டும் தர முடியாது. வேணுமுன்னால், என்னைப் பற்றி தாசில்தார்கிட்ட ரிப்போர்ட் பண்ணிக்கங்க."
வேறு வழியில்லாமல், நற்பணிக்காரர்கள் வெளியே வந்தார்கள். மாணிக்கம் மல்லிகாவைத் திரும்பிப் பார்த்தான். அவள், அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். "ஒனக்கு வேணும் மல்லிகா - நீ எதுக்காக பிறத்தியாருக்கு வக்காலத்து வாங்கணும். இப்போ நடக்கத பார்த்தியா?" என்று சரோஜா, மகளிடம் கோபமாகப் பேசுவது மாணிக்கத்தின் காது வழியாக இதயத்தைக் குத்தியது. இருந்தாலும். இ.ந. மன்றத்தின் தலைவன் அவன். ஒரு லட்சியப் புருஷன். படுகளத்தில் காதல் ஒப்பாரி வைக்கலாகாது!
மாசானம் அந்த இளைஞர்களை பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்குக் கொண்டு போனார். அவர்களை ஆணையாளரின் முன்னால் நிறுத்திவிட்டு, அருகேயுள்ள அறையில் வரைபடங்களை முறைத்துக் கொண்டிருந்த யூனியன் எஞ்ஜினீயரின் காதை கடிக்கப் போய்விட்டார்.
மாணிக்கம் பி.ஏ.பி.டி., ஆணையாளரிடம் நடந்த விவரங்களை ஒப்புவித்தான். அந்த ஆணையாளர் நேர்மையானவர். அதே சமயம் தனக்குக் கீழே இருப்பவர்களையும் நேர்மையாக்க நினைத்ததால், மேலே இருப்பவர்களின் பொல்லாப்புக்கு ஆளானவர். ஏற்கெனவே இந்தப் பரமசிவம் தனக்குக் கட்டாத - கட்ட விரும்பாத வீட்டுக்கு சிமெண்ட் அலாட்மெண்ட் கொடுக்கவில்லை என்பதற்காக இவர் லஞ்சம் வாங்குவதாகக் கலெக்டருக்குப் புகார் செய்து, அந்தப் புகார் மனுவை விசாரிக்க கலெக்டர் தேதி குறித்திருக்கிறார். இந்தச் சமயத்தில், இந்தப் பரமசிவத்தைப் பகைப்பது தூக்குப் போட்டுச் சாவதற்குச் சமம்.
அதோடு ஆணையாளருக்குப் பல 'அபிஷியல்' சிரமங்கள். 'வேலைக்கு உணவு' திட்டத்தை பழுதில்லாமல் செயல்படுத்த வேண்டும். யூனியன் கணக்குகளை தணிக்கை செய்துவரும் ஆடிட்காரர்களுக்கு ஒரு மாதம் வரைக்கும் இவர் தான் சிகரெட்டில் இருந்து சினிமா வரையில் காசு கொடுப்பதோடு, அவர்களின் மூன்று வேளைச் சாப்பாட்டிற்கும் இவர் தான் 'மொய்' எழுத வேண்டும். பயணப்படி வாங்கும் ஆடிட்காரர்கள், ஒரு நயாபைசா தங்கள் உணவிற்காக செலவழிக்கத் தயாராக இல்லை. தணிக்கை என்பது ஆணையாளர் அவர்களுக்கு 'தனிக் கையால்' செலவழிக்க வேண்டும் என்று 'அன் அபிஷியலாக' ஆகிப் போன அபிஷியல் சமாச்சாரம். இந்த வேதனையில் அவருக்கு நற்பணி மன்ற வேதனை சின்னதாகத் தெரிந்தது. ஆகையால் அந்தப் பிள்ளைகுட்டிக்காரர் பக்குவமாகப் பேசினார்.
"இது எனக்கு சம்பந்தமில்லாத பிரச்சினை. கலெக்டருக்கு மனுநீதி நாள்ல மனு கொடுங்க. இல்லன்னா பால் பண்ணை அதிகாரியப் பாருங்க. இல்லன்னா கூட்டுறவு டெப்டி ரிஜிஸ்டிராரைப் பாருங்க. இல்லன்னா புராஜெக்ட் ஆபிஸரப் பாருங்க. ஒண்ணும் முடியலன்னா போலீஸ் ஸ்டேஷன் போங்க. ஆனால் ஒண்ணு - நான் தான் இவங்களைப் பாக்கச் சொன்னதா தயவு செய்து சொல்லிடாதீங்க."
மாசானம், யூனியன் அலுவலகத்திலேயே ஒதுங்கிக் கொள்ள, நற்பணிக்காரர்கள், அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தை நோக்கிப் போனார்கள். மயானத்துக்கு அருகே இருந்த போலீஸ் நிலையத்தில், வழி மறிப்பது போல் போட்டிருந்த மேஜையில், காலைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பன், அவர்களைப் பார்த்ததும், 'வாங்கோ வாங்கோ' என்று எழுந்து வரவேற்றார். உடனே ஓடிப்போய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவர்களை எதிரே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்காரச் சொன்னார். அவர்கள் உட்கார்ந்ததும் கேட்டார்:
"ஒங்க தலைவர் குமார் - மன்னிக்கணும் மிஸ்டர் குமார் வரலியா?"
மாணிக்கம் முந்திரிக் கொட்டையானான்.
"அவன் எட்டயப்பனா மாறிட்டான் சார்! எங்க மன்றத்தில் இருந்து அவன நீக்கிட்டோம் சார்! நன்றி கெட்ட பய சார்! எங்களப் பயன்படுத்தி எங்களையே காட்டிக் கொடுத்துட்டான் சார்!"
சப்-இன்ஸ்பெக்டர் முகம் இறுகியது. அப்படியானால், இந்தப் பசங்க, மிஸ்டர் குமாரோட எதிரிகளா... தெரியாத்தனமா உட்காரச் சொல்லிட்டேனே...
"என்ன விஷயம்? விஷயத்த சட்டுப்புட்டுன்னு சொல்லுங்க. ஒங்களோட குசலம் விசாரிச்சுட்டு இருக்க எனக்கு நேரமில்ல."
அதிர்ந்து போன மாணிக்கம், விவகாரத்தை ஆதியோடு அந்தமாகச் சொன்னான். சப்-இன்ஸ்பெக்டர் யோசித்துக் கொண்டே பேசினார்.
"இது சிவில் சமாச்சாரம். அதோட மாட்டைப் பிடிச்சது அடைக்கலசாமி. பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவத்த சம்பந்தப்படுத்துறது அதிகப் பிரசங்கித்தனம். இதுல யாரு ஆண்டியப்பன்?"
"இவன் தான் சார்!"
"இவன் தானா... யோவ், எழுந்து நில்லுய்யா. வேட்டிய கால்வரைக்கும் போடுய்யா - பெரிய துரை மாதுரி மடிச்சிக் கட்டிட்டு நிக்கதை. முன்சீப் ரிப்போர்ட் தந்தாராய்யா?"
ஆண்டியப்பன், அதிர்ந்து போய் எழுந்தான். யந்திரம் போல் வேட்டியைக் கீழே இறக்கினான். "முன்சீப் தரமாட்டான் சார்" என்றான்.
சப்-இன்ஸ்பெக்டர் குதித்தார்.
"பெரிய மனுஷன, அவன் இவன்னு பேசினால் பல்ல உடச்சிடுவேன். நீங்கல்லாம் படிச்சவங்க. இந்தக் கிறுக்கனை எதுக்காக இன்னும் கிறுக்கனாக்குறீங்க."
ஆண்டியப்பனும், இதர இளைஞர்களும் அதிர்ச்சியுற்று, செய்வதறியாது திகைத்த போது, சட்டாம்பட்டி தலையாரி, அங்கே வந்து, இரண்டு கடிதங்களை சப்-இன்ஸ்பெட்கரிடம் நீட்டினார். ஒன்று, முன்சீப், ஆண்டியப்பன் தன்னைக் கொலை செய்ய வந்ததாகக் கொடுத்த ரிப்போர்ட். இன்னொன்று ஆண்டியப்பனை 'உள்ளே போட' குமார் எழுதியிருந்த ரெகம்மண்டேஷன் லட்டர்.
சப்-இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டார்.
"நீங்க வரும்போதே நினைத்தேன். ஏய்யா ஆண்டி, முன்சீப்ப கொல பண்ற அளவுக்கு ஒனக்கு தைரியம் வந்துட்டு இல்ல? உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்."
ஆண்டியப்பன், 'வைக்கவேண்டிய' இடத்தில் வைக்கப்பட்டான். லாக்கப்பிற்கு உள்ளே தள்ளப்பட்ட அவன், இரும்புக்கிராதிக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு செய்வதறியாது திணறினான்.
--------------
5
தாய்ப்பாலே விஷமானது போல, தன் கையே தன் கண்ணைக் களைந்தது போல, லாக்கப்பிற்குள் ஆண்டியப்பன் தலையில் கை வைத்தபடி, உட்கார்ந்தான். நீதி நீதி என்கிறார்களே - இதற்குப் பேர்தான் நீதியா? தர்மம் தர்மம் என்கிறார்களே - இதற்குப் பேர்தான் தர்மமா?
இதோ, இந்தப் பூட்டிய அறைக்குள் இருக்கும் அவனுக்கு தொலைதூரத்தில் நடக்கும் ஒரு பொதுக் கூட்டத்தின் பேச்சுச் சத்தம் காதைக் குத்துகிறது. 'ஏழையை ஏய்க்கின்ற காலம் போய்விட்டது' என்று ஒருவர் கனைக்கிறார். உடனே பலர் கை தட்டுகிறார்கள். அப்படிக் கை தட்டுபவர்கள் அநேகமாக ஏழைகளாகத்தான் இருக்க வேண்டும். சொல்லமுடியாத கை தட்டல். இடிபோன்ற முழக்கப் பேச்சு. 'யாருமே அதர்மத்தால் பாதிக்கப்பட அனுமதிக்கப்படாது' என்ற பசப்பல்.
ஆனால் இங்கே, இதே ஆண்டியப்பன், அங்கே போய் நடந்தததைச் சொல்ல வேண்டும் என்பதுபோல், இரும்புக் கம்பிகளை அழுந்தப் பற்றுகிறான். பைத்தியக்காரன்! நடந்ததைச் சொன்னாலும், அங்கேயும் ஒரு வழக்கு 'புக்' ஆகலாம் என்பதை அறியாத பேராசைக்காரன். ஏழைக்கு இந்த மாதிரி பேராசைதானே இருக்க முடியும்? எந்த இடத்தில் 'ஏழைக்கும் காலம் வந்துவிட்டது' என்று முழங்கப்படுகிறதோ, அங்கே இருந்து ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இதோ இந்த இடத்தில் தான், இந்த ஏழை புலம்பத் தெரியாமல், புரிந்தது புரியாமல், தெரிந்தது தெரியாமல் தவிக்கிறான். திடீரென்று அந்தப் பொதுக்கூட்டத்தில் குமார் பேசுவதும், அவன் காதில் தானாய்ப் பாய்கிறது.
ஆண்டியப்பன், வெறுப்போடு சப்-இன்ஸ்பெக்டர் மேஜையைப் பார்க்கிறான். ஒரு இலக்கிய விழா அழைப்பிதழ் தென்படுகிறது. 'நீதியில் சிறந்தவன் நெடுஞ்செழியனா அல்லது மனுநீதிச் சோழனா' என்ற பட்டிமன்றம் நடக்கப் போகிறதாம். தேவைதான். நடக்கக் கூடாதவைகள் நடக்கும்போது, இது மிக மிக அவசியம்தான். அப்பனைக் கொல்கிறவன், சத்திரம் கட்டிய கதைதான்.
நடந்ததை நினைக்க நினைக்க, அவனுக்கு நினைப்போ, அந்த நினைப்பிற்கான நெஞ்சமோ, தேவையில்லை என்பதுபோல் தோன்றியது. அவன், 'உள்ளே' போனதும், வெளியே இருந்த இளைஞர் நற்பணி மன்றக்காரர்கள், முதலில் விறைத்துப் போனார்கள். பிறகு மாணிக்கம், "சார் இது அநியாயம்" என்று யார் வேண்டுமானாலும், அவனைப் பயன்படுத்தலாம் என்பது மாதிரி பேசினான். கடைசி வார்த்தையை, அவன் உச்சரித்த விதத்தில், 'அ'வை விழுங்கிவிட்டவன் போலவும் தோன்றியது.
சப்-இன்ஸ்பெக்டர் சினந்து பேசினார். "நான் உங்களை 'வாச்' பண்ணிக்கிட்டுதான் வாரேன். அன்றைக்குப் பொதுக்கூட்டத்தில் கலாட்டா பண்ணப் போனீங்க. இப்போ இங்கேயே கலாட்டா பண்ண வந்திருக்கீங்க. எல்லாம் என் தப்புதான்" என்று அவர் 'சட்டயர்' செய்த போது, மாணிக்கமும், மற்றவர்களும் தப்புச் செய்தவர்கள் போல் மருவியபோது, ராமதுரை என்ற இ.ந. வாலிபன் "சார்! ஊர்ல வந்து நடந்ததை விசாரியுங்க. அப்புறம் வேணுமுன்னால் இவனை என்ன வேணுமுன்னாலும் பண்ணுங்க. எங்க பேர்ல தப்புன்னு தெரிய வந்தால் செருப்பை வைத்து வேணுமுன்னாலும் எங்கள அடியுங்க" என்று சொன்னபோது சப்-இன்ஸ்பெக்டர் அமைதியாகக் கேட்டார்.
"ஒங்க பேரு?"
"ராமதுரை சார்."
"என்ன வேலை பாக்குறே?"
"கவர்மெண்ட் செர்வண்ட்!"
"ஓ! அந்த தைரியமா... ஒங்க டிபார்ட்மெண்ட் பெயரைச் சொல்லுங்க. உங்களுக்கு இன்னைக்கே ஒரு ரிப்போர்ட் அனுப்பிடுறேன்."
ராமதுரை பயந்துவிட்டான்! "சார்! எனக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு சார். இனிமேல் இந்த மாதிரி வம்பு தும்புக்குப் போகமாட்டேன் சார்... சார்... சார்..." என்று சொல்லிவிட்டு, அந்தப் போலீஸ் அதிகாரி புன்னகைத்தபோது, ஆசாமி வெளியேறி விட்டான்.
மிஞ்சாமலேயே மிஞ்சி இருந்தவர்களும் போகலாம் என்பதுபோல் சப்-இன்ஸ்பெக்டர் எழுந்து நின்றுகொண்டே, தீர்மானமாகப் பேசினார்.
"ஆல்ரைட். ஒங்கள மாதிரி வெட்டியாய் இருக்க எனக்கு நேரமில்ல. இவன் பேரு என்னடா... நீங்க சும்மா இருங்க. அவனே சொல்லட்டும். ஆண்டியா... ஆம். இந்த ஆண்டிப்பயல் செய்திருக்கது அட்டம்ப்ட் டு மர்டர்... கொலை செய்வதற்கான ஹோமிசைட் முயற்சி. அதனால் இவனை இன்னும் இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ளே மாஜிஸ்திரேட் முன்னால் ஆஜர் பண்ணப்போறோம்! நீங்க அங்க வந்து மாதம் முந்நூறு ரூபாய்க்கு மேல வருமானம் உள்ள இரண்டு பொறுப்பான நபர்களைக் கொண்டு வந்து, ஜாமீன் கொடுத்து மீட்கலாம். இனிமேயாவது ஒழுங்கா இருங்க. நீங்கல்லாம் படிச்சவங்க. இது நம்ம நாடு. புண்ணிய பூமி. இதுக்காக உழைக்கணுமே தவிர, இப்படி உருப்படாமல் போகக்கூடாது. உங்களுக்கு, வேலைக்கு ஆர்டர் வரும்போது, நாங்கதான் உங்களைப் பற்றிய கேரெக்டர் வெரிபிகேஷனை செய்யணுங்கறதை மறந்திடாதீங்க. ஓகே? கேன் கோ டபுளப்."
இ.ந. இளைஞர்கள், ஆண்டியையே பார்க்க, அவன், தன் ஜெர்ஸி மாடு தன்னை எப்படிப் பார்த்ததோ, அப்படி அவர்களைப் பார்க்க, அந்த இளைஞர்கள் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்தவர்கள் போல், ஒரு சேர வெளியேறினார்கள். கோபால் (இ.ந. செயலாளர் - என்ஜினியரிங் டிப்ளமா) மட்டும் "கவலைப்படாத ஆண்டி. ஒரு நொடில ஜாமீன் கொண்டு வாறோம்" என்று சொல்லிவிட்டு, தன் கண்ணிமைகளைத் துடைத்துக் கொண்டே போனான். அவர்கள் போனதும், சப்-இன்ஸ்பெக்டர், "என்னடா... ஒன் மனசுல நினைச்சுக்கிட்டே? ஒன்னை மாதிரி எத்தனை ரவுடிங்களைப் பாத்திருப்பேன்" என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார் எங்கோ...
சப்-இன்ஸ்பெக்டர் போனதும், ஸ்டேஷனுக்கு தானே இன்சார்ஜ் என்று அறிமுகப்படுத்த விரும்பியதுபோல், ஹெட்கான்ஸ்டபிள் லாக்கப்பைத் திறந்து, உள்ளே வந்து, "சோமாரி... சோதாப் பயலே! அவனவன் இருக்கிற வேலையைக் கவனிக்க முடியாம துடிக்கிறான். நீ சட்டம் பேசிக்கிட்டு வந்துட்டியோ" என்று 'ரவுடி' ஆண்டியப்பனைப் பார்த்து, லத்திக் கம்பை ஆட்டிக்கொண்டே சொன்னபோது, ஆண்டியும், சாகத் துணிந்த தைரியத்தில் பேசினான்:
"நானும் சட்டம் பேசுற காலம் வருது சார். ஏழைங்க சட்டம் பேசுறதுக்கும், வக்கீல் சட்டம் பேசுறதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு சார். ஒரு நோயாளி உலகத்துல உள்ள எல்லா மருந்துகளோட விவரத்தையும் தெரிஞ்சி வச்சிருந்தால் அந்த நோயாளிக்கு, எந்த டாக்டருடைய மருந்தும் பிரயோஜனப்படல்லன்னு அர்த்தம். இதுமாதிரிதான், ஏழைங்க... நியாயத்தத் தேடி, அது கிடைக்கிறதுக்கான தேடுன முயற்சியில நியாயம் கிடைக்காட்டாலும் சட்டத்தைப் புரிஞ்சிக்கிறாங்க. உதாரணமா என்னோட சொந்த மாடு, பட்டப் பகலுல பறிபோனதச் சொல்ல வந்தேன். இங்க வந்த பிறவு, மாடு கிடைக்கல்லன்னாலும், லாக்கப் கிடைச்சிருக்கு. அதோடு கொலை செய்ய முயற்சிக்கிறவனை, இருபத்து நாலு மணி நேரத்துல மாஜிஸ்திரேட் முன்னால ஆஜர்படுத்தணும், யார் ஜாமீன் எடுக்கணும் என்கிற விவரமும் தெரிஞ்சிட்டு."
ஆண்டியப்பனை, பேச்சால் பணிய வைக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட ஹெட்கான்ஸ்டபிள், லத்திக் கம்பைத் தூக்கியபோது, "அடியுங்க சார் - பண்ணையாருங்க, என்னைக் கொல்லத்தான் போறாங்க. அது எனக்கு சம்மதமில்ல. என்ன மாதிரி, ஒரு ஏழை கையாலயே சாகணும் என்கிற ஆசையில சொல்றேன் - பரவாயில்ல, இந்தத் தொழிலாளிய போலீஸ் தொழிலாளியான நீங்களே கொல்லுங்க" என்றான்.
ஹெட்கான்ஸ்டபிள் வாயடைத்துப் போனார். அவனையே வியப்போடு பார்த்த அந்தச் சிவப்புத் தொப்பி அணிந்த கறுப்பு மனிதர், அவனைப் பார்த்து "டீ சாப்புடுறீயாடா?" என்றார்.
எப்படியோ, இரவுப்பொழுது போய்விட்டது. அந்த அறைக்குள்ளே தூங்காமலேயே தூங்கிய ஆண்டி, தன்னோடு அடைபட்டுக் கிடந்த சைக்கிள் திருடிகள், பட்டைச் சாராய வகையறாக்களைப் பார்த்தான். இவர்கள் ஏன் இப்படிக் கெட்டுப் போகிறார்கள்? சீச்சி... ஆண்டிக்கு ஒரு சிந்தனை. இவர்களும் என்னைப் போல் நியாயங் கேட்டு, அநியாயம் பெற்றவர்களாக இருக்கலாம். அயோக்கியன் யோக்கியனாகவும், யோக்கியன் பயந்தாங்கொள்ளியாகவும் ஆகிப்போன இந்தக் காலத்தில் ஏழைகளில் ஒரு சாரார் இப்படி ஆகிறார்கள் என்றால், அதற்கு அவர்கள் பொறுப்பல்ல.
சிந்தனையைப் பின்னோக்கிச் செலுத்திய ஆண்டியப்பன், அந்த போலீஸ் நிலைய காம்பவுண்ட் வாசலையே பார்த்தான். அவனை, மாஜிஸ்திரேட் முன்னால் ஆஜர் படுத்த, போலீஸ் வான் நிற்கிறது. ஆனால் ஜாமீன் எடுக்க ஆளைக் காணவில்லை. மாணிக்கமும், கோபாலும் மற்ற இளைஞர்களும் எங்கே போய்விட்டார்கள் என்று தெரியவில்லை. மீனாட்சி எப்படித் தவிக்கிறாளோ... குழந்தைக்குப் பால் கொடுக்க காத்தாயி வந்திருக்க மாட்டாள். எப்படி வருவாள்? அவளைத்தான், அவன் மாமன் பெண்டாட்டி பழி போட்டு பேசிவிட்டாளே. தங்கம்மாவை இந்நேரம் அந்தக் கிழட்டுப் பயல் அடித்துக் கொன்னாலும் கொன்னுருப்பான். மகள் என்று அடித்து, நான் என்று கொன்றிருப்பான்.
திடீரென்று சத்தங்கேட்டு, ஆண்டியப்பன் கண்களைச் சுழற்றினான். ஜாமீன் எடுக்க வந்திருப்பார்களோ...
ஜாமீன்காரர்கள் வரவில்லை. அந்தக் காலத்து ஜமீன்தாரின் வாரிசுகளாக, தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்ட இந்தக் காலத்து பரமசிவமும், குமாரும் வந்தார்கள். அவர்களை அங்கே பார்த்ததுமே, சப்-இன்ஸ்பெக்டர், இங்கே எழுந்தது மட்டுமல்ல - எதிர்கொண்டழைக்கவும் போய்விட்டார்.
பரமசிவமும் குமாரும் அவர் காட்டிய நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.
குமார், "தேங்க் யூ வெரிமச். நீங்க இல்லாட்டா ஊர்ல லா அண்ட் ஆர்டர் ப்ராப்ளம் வந்திருக்கும்" என்றார்.
பஞ்சாயத்துத் தலைவர், "இன்னைக்கு சர்வகட்சி பொதுக்கூட்டம். நான் தலைமை தாங்கினேன், இவன் பேசினான்" என்ற போது, சப்-இன்ஸ்பெக்டர், "நான் தான் கூட்டம் நடத்தறதுக்கே லைசென்ஸ் கொடுத்தது" என்றார். உடனே எல்லோரும் சிரித்தார்கள்.
குமார் மெல்ல எழுந்து, ஆண்டியப்பன் பக்கமாக வந்து, மெல்லிய குரலில் "ஆண்டி... இனுமே ஒழுங்கா நடந்துக்குவேன்னு சொல்லு. விட்டுடச் சொல்றேன். இல்லன்னா ஏழு வருஷம். ஏதோ பழகுன பாசத்துல கேக்குறேன்" என்றான்.
ஆண்டியப்பன் யோசித்தான். நமக்கேன் வம்பு? பேசாமல், குமார் சொன்னபடி கேட்கலாமா? அடுத்த வருஷம் இவன் தயவுலேயே, பறிபோகாத பசுமாட்டை வாங்கலாம். இப்போ இவன் பேச்சைக் கேட்டு போனால், குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடக்கும் தங்கச்சிய போய்ப் பார்க்கலாமே. பாலில்லாமல் சாகக் கிடக்கும் குழந்தைக்கு ஏதாவது வழி பண்ணலாம். தங்கம்மா முகத்தைப் பார்க்கலாம். பழையபடியும் கிணறு வெட்டவோ, மரம் வெட்டவோ போவலாம். மாமாவும் சந்தோஷப்பட்டு, அவர் கையாலேயே தங்கம்பாவை கைப்பிடித்துக் கொடுப்பார். படித்தவனுகளே பொறுப்பில்லாதபோது, படிக்காத நான் எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்கணும்.
கூடாது, கூடாது. படித்தவர்களால் உருப்படாமல் போன இந்த ஊரை படிக்காதவங்களாலதான் முறைப் படுத்த முடியும். நான், என் சுயநலத்துக்காக, ஒரு லட்சியத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. மகாத்மா காந்தி படாத கஷ்டமா... நான், என்னுடைய பூரண சுதந்திரத்தை அடமானம் வைத்து, இந்த அற்ப சுதந்திரத்தை வாங்க மாட்டேன். நான் குமார் இல்ல. நான் மனிதன் - மனிதன்.
அவன் வாயில் இருந்து வருவதையே, அப்போதைக்குத் தேவ வாக்காகக் கருதியவன் போல், இளைஞர் பெரும்பணி மன்றத் தலைவன் குமார், அவனை உற்றுப் பார்த்தபோது, ஆண்டியப்பன் திட்டவட்டமாகக் கூறினான்.
"நான் பதவிக்கும் பொண்ணுக்கும் ஆசப்படுறவன் இல்ல குமார்! நான் நியாயத்துக்கு ஆசப்படுறவன். நீ பழகுன தோசத்துல கேட்டதுக்கு நன்றி. நீ உண்மையைத் தான் சொல்லியிருக்க. நீ என்கிட்ட பழகி, மாட்ட வச்சிக்கிடச் சொன்னதும், நான் உன்கிட்ட பழகி, உன்னைத் தலைவனாய் ஒத்துக்கிட்டதும் ஒரு தோசந்தான். ஒங்களால என்ன பண்ணணுமோ அதப் பண்ணுங்க..."
குமாரின் சிவப்பு முகம், ரத்தச் சிவப்பாகியது. அவனை எரிப்பதுபோல் பார்த்துக் கொண்டே, பரமசிவம் மாமா பக்கத்தில் போய் உட்கார்ந்தான். கான்ஸ்டபிள் கொண்டுவந்த கலர் பாட்டல்கள் காலியானதும், அவர்கள் போய்விட்டார்கள். "பெரியவங்க சின்னவங்க என்கிற மரியாதை இல்லாமப் போயிட்டுது என்ன..." என்று சப்-இன்ஸ்பெக்டர், அவனைப் பார்த்து முறைத்துக் கேட்டார்.
முறைத்தவர், விறைத்து உட்கார்ந்தார்.
சின்னான், அங்கே அலட்சியமாக உள்ளே வந்து, அவர் சொல்லுமுன்னாலேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். பிறகு ஆண்டியப்பனையும் லேசாகப் பார்த்துவிட்டு, மீண்டும் பார்வையை அலட்சியமாக விட்டான்.
அவன் வந்ததால் வழி கிடைத்ததாய் நினைத்த ஆண்டியப்பன், 'சின்னான் நீயுமா... நீயுமா...' என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டு, வேறுபுறமாகத் திரும்பி, கண்களைத் துடைத்துக் கொண்டான்.
-------------
6
சப்-இன்ஸ்பெக்டருக்கு சின்னான் உட்கார்ந்த தோரணையும், பார்த்த விதமும், பயப்படாதவன் போல் கண்ணைச் சிமிட்டிய லாவகமும், கட்டோடு பிடிக்கவில்லை. ஆகையால் அவனைக் 'கண்டுக்காதது போல்' ரைட்டர் எழுதி வைத்த ஏதோ ஒரு குறிப்பைப் படிப்பது போல பாசாங்கு செய்தார். மணியடித்த டெலிபோனை எடுத்து "டோண்ட் ஒர்ரி... நாலு நாளைக்கு லாக்கப்புல போட்டு, கையில காலுல விசாரிச்சா சரியாப் போயிடும்" என்று சொல்லிக்கொண்டே அவனை ஜாடை மாடையாகப் பார்த்தார்.
பத்து நிமிடம் போயிருக்கும். சின்னானால் பொறுமையாக இருக்க முடியவில்லை. "வரச் சொன்னீங்களாம். விஷயத்த சீக்கிரமாச் சொல்லலாமா? ஏன்னா நானும் பிஸி" என்றான் வினயமாக.
சப்-இன்ஸ்பெக்டர், அவனை எரிச்சலாகப் பார்த்துக் கொண்டே "அன்றைக்கு மினிஸ்டர் கலந்துக்கிட்ட கூட்டத்தில் புகுந்து, சின்னப் பையங்களை அதட்டிக் கூட்டிக்கிட்டுப் போனது அனாவசியமான ஒரு சட்ட-ஒழுங்குப் பிரச்சினை. அப்பவே, நான் ஒங்களை அரெஸ்ட் பண்ணியிருக்கலாம். படிச்சவராச்சேன்னு செய்யல... அண்டர்ஸ்டாண்ட்? எச்சரிக்கை செய்யறதுக்காகக் கூப்பிட்டேன்" என்றார்.
"பொய்! என்னை அரெஸ்ட் பண்ணினால், சேரிக்காரங்க - உங்க பாணியில சொல்லப் போனால், இந்தப் பறப்பய பிள்ளைகள், இங்கு வந்துடுவாங்கன்னு பயம். இதனால - நீங்க எங்கேயாவது போக வேண்டியதிருக்குமோ என்கிற பயம்!"
"யூ ஆர் எக்ஸீடிங் யுவர் லிமிட்."
"லிமிட் மீறிப் போகிறவங்களுக்கு, லிமிட்டுக்குள்ள இருந்து பதில் சொல்ல முடியாது. போலீஸ் ஸ்டேஷன், ஒரு சமூக ஸ்தாபனம். ஒங்கள் பிரைவேட் லிமிடெட் ஸ்தாபனம் இல்ல."
"இந்தா பாருங்க மிஸ்டர். அதிகப் பிரசங்கித்தனம் வேண்டாம். நீங்க ஒரு வகுப்புவாதியாய் மாறுறது உங்களுக்கே நல்லதுல்ல."
"ஏழை ஹரிஜனப் பையங்களுக்கு, தாழ்வு மனப்பான்மை வரக்கூடாதுன்னும், அவங்க, ஏமாத்துப் பேர்வழிகளுக்கு பகடைக்காயாய் மாறக்கூடாதுன்னு நினைத்தும் என் பிள்ளைங்களை, நான் கூட்டிட்டுப் போறது வகுப்புவாதம். அதே கூட்டத்துல ஜாதிப் பையன்களை, ஏழைப் பையன்களா ஜோடிச்சது என்ன வாதம்? எங்க பையன்கள போல, ஜாதிப் பையன்களுக்கு சீருடை கொடுத்த மோசடியைப் பற்றி, இப்பவே ஒரு கம்ளெயிண்ட் கொடுக்கேன். ஒங்களால ஆக்ஷன் எடுக்க முடியுமா?"
"அது அரசியல் பிரச்சினை."
"பிறகு என்கிட்ட பேச, உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு?"
"மீஸ்டர் நீங்க போஸ்டல் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்க்கது எனக்குத் தெரியும். ஒங்களைப் பற்றி ஒரு 'சீக்ரட்' ரிப்போர்ட் அனுப்ப அதிக நேரம் ஆகாது."
"முதல்ல அதைச் செய்யுங்க சார். அங்கே வேலை பார்க்கிற என்னோட சகாக்கள் 'நான் கோட்டாவுல வந்தவன்னு' மனசுக்குள்ளேயே எரியுற எரிச்சல் என்னையும் சுடுது. அதோட, இன்றைய சமூக அமைப்பில் மாதச் சம்பளக்காரன் எவனும் உருப்படப் போறதில்ல. இருந்தாலும், நோஞ்சான் குழந்தை செத்தால் தேவலன்னு நினைத்தாலும், அது சாகிறதைப் பார்க்க விரும்பாத தந்தையைப் போல, எனக்கும் வேலையை ராஜினாமாச் செய்ய மனம் வரல. தானா முடியாத ஒன்றை, உங்கள் போலீஸ் பேனா மூலமாவது செய்யுங்க. ஒங்களுக்குக் கோடி புண்ணியம். இவ்வளவு பேசறீங்களே... இந்த ஆண்டியப்பனுக்கு, நீங்க வழங்கி இருக்கிற நியாயம், நியாயந்தானா?"
"சம்பந்தமில்லாத விஷயத்தைப் பேசாதீங்க."
"இன்னும் ஒரே ஒரு சம்பந்தமில்லாத விஷயத்தை மட்டும் பேசிட்டு, வாயை மூடிக்கிறேன். உங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும் மிஸ்டர் தங்கப்பன். கஷ்டப்பட்ட ஒரு ஏழைக் குடும்பத்தில் படித்து முன்னேறி, பெரிய பெரிய சமூக லட்சியங்களோட வேலையில் சேர்ந்தவரு. ஆரம்ப காலத்துல ஏழைகளுக்காகப் போராடி, பணக்காரர்களோட விரோதத்தைச் சம்பாதிச்சவரு. இதனாலேயே ஒரு தடவ சஸ்பெண்ட் ஆன தியாகி. 'நாம சஸ்பெண்ட் ஆனதுக்கு, இந்த ஏழப் பயலுவதானே காரணமுன்னு நினைத்து' ஏழைகள் மேல இருந்த அன்பை, வெறுப்பாய் மாத்திக்கிட்டவரு. இதுக்கு ஒங்களைக் காரணமுன்னும் சொல்லமாட்டேன். இந்த சமூக அமைப்புதான் காரணம். கன்வெர்ட்ஸ் ஆர் ஆல்வேய்ஸ் எக்ஸ்ட்ரீமிட்ஸ். கட்சி மாறுறவன், தீவிரவாதியாய் ஆகிறது சகஜம். அப்புறம் நான் வரட்டுமா - இல்ல, எதுலயாவது கையெழுத்துப் போடணுமா, இல்ல எதுக்குள்ளயாவது போய் நிற்கணுமா?"
சப்-இன்ஸ்பெக்டர் தலையைக் கவிழ்த்துக் கொண்டே 'போகலாம்' என்றார். அவர், சின்னப்பிள்ளை மாதிரி நெளிந்தது, சின்னானுக்கே கஷ்டமாக இருந்தது. பைக்குள் வைத்திருந்த ஒரு கசங்கிய காகிதத்தை எடுத்து, அவரிடம் நீட்டி, 'படியுங்க சார்' என்றான். அதை முதலில் வேண்டா வெறுப்பாக படித்த அந்த போலீஸ் இளைஞர் பிறகு அவனைப் பிரமிப்பாகப் பார்த்தார். சின்னான் அமைதியாகப் பேசினான்:
"யெஸ் சார்! எனக்கும் சர்வீஸ் கமிஷன் நடத்துன குரூப்-ஒன் போட்டியில டி.எஸ்.பி. வேல கிடச்சது. நானும் எனக்குப் பொண்ணு கொடுக்கத் தயாராய் இருந்த ஒரு ஹரிஜன 'எம்.எல்.ஏ.' மூலம் வேலையில சேரலாமுன்னு தான் முதலில் நினைத்தேன். அப்புறம் யோசித்துப் பார்த்தேன். எனக்கு மேல் ஜாதிக்காரர்கள் மேல அளவுக்கு மீறின கோபம் இருக்கது தெரியும். நான் டி.எஸ்.பி.யாய் மாறினால் என்னால் பாரபட்சமில்லாம இருக்க முடியாதுன்னு தீர்மானித்து, மனசைக் கல்லாக்கிக்கிட்டு, வேலையை வேண்டாமுன்னுட்டேன். அந்தச் சமயத்துல தபால் இலாகாவுல கெஜட்டட் வேலை வந்ததும் ஒரு காரணம். ஒண்ணும் மட்டும் சொல்றேன் சார்...
"ஏழைகளுக்கு நீங்க நியாயமாய் நடந்தால், பணக்காரங்க விரோதத்த சம்பாதிக்கலாம். அநியாயமாய் நடந்தால், பணக்காரங்களின் பணத்த சம்பாதிக்கலாம். ஆனால், ஒண்ணு. பணக்காரங்கா விரோதம் அன்றே சாடும். கொல்லாது. ஆனால், ஏழை தரித்திர நாராயணன்களோட விரோதம் நின்றே சாடாது - கொல்லும். பழமொழியை மாற்றிப் போட்டு, பக்குவமாச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்.
"பார்த்து நடந்துக்குங்க. நான் வாரேன் ஸார்! இதுக்கு மேலேயும் நான் பேசினால், உங்க யூனிபாரத்துக்கு மதிப்புக் கொடுக்காதவனாய் ஆயிடுவேன். வரேன் ஸார்! தரித்திர நாராயணனுக்கு இன்னொரு பெயர் ஆண்டி... குட்பை."
சின்னான் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு, தன் யூனிபாரத்தைக் கழட்டிப் போட்டுவிட்டு, அவன் பின்னாலேயே ஓடவேண்டும் போலிருந்தது. ஏதோ ஒரு 'எப் ஐ ஆரை' படைத்துக் கொண்டிருந்த பிரும்மாவின் ஒரு கூறான ரைட்டரைப் பார்த்து, "பார்த்தியாய்யா ஒன்னை மாதிரி அவரும் ஒரு ஹரிஜன் தான். எவ்வளவு லட்சிய வெறியோடு இருக்காரு பார்த்தியா? நீயும் இருக்கியே. நீ என்னடான்னா ஹரிஜனங்ககிட்டத் தான் அதிகமாய் வாங்குற" என்று சீறினார். 'நான் மட்டும் தானா' என்பது மாதிரி, ரைட்டர் அவரைப் பார்த்து ஜாக்கிரதையாகச் சிரித்தார்.
ஆண்டியப்பனை இன்றைக்கு 'செமத்தையாக' கவனிப்பதாக இருந்த அந்தப் போலீஸ் இளைஞர் தானே லாக்கப் அறைக்கருகே போய் தானே இரும்புக் கதவைத் திறந்து, "ஆண்டி, நீ போகலாம்" என்றார்.
ஆண்டிக்கு அவரது மனவுளைச்சல் தெரியவில்லை. தெரியக்கூடிய நிலையிலும் இல்லை. தங்கச்சி எப்படி தவிக்காளோ... குட்டிப்பயல் எப்படிக் கிடக்கானோ... தங்கம்மா எப்படி ஆனாளோ... எல்லாரையும் பாக்கணும். உடனே பாக்கணும்.
போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த ஆண்டியப்பன், தலைவிரிகோலமாக பஸ் நிலையத்தைப் பார்த்து வேகவேகமாகப் புறப்பட்டபோது எதிரே தங்கம்மா வந்தாள். சாலையில் போவோர் வருவோரைப் பற்றிக் கவலைப்படாமல், அவனை அப்படியே வந்து கட்டிப் பிடித்துக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுதாள். "ஒங்களுக்கா மச்சான் ஜெயிலு. ஒங்களுக்கா மச்சான் ஜெயிலு? எல்லாம் என்னால - இந்தப் பாவியால" என்று புலம்பிக் கொண்டே அவனை இறுகத் தழுவினாள்.
ஒருவர் கை ஒருவர் மீது பட்டவுடனேயே துள்ளித் துடிக்கும் அந்த இரண்டு இளம் மேனிகளும், 'ஈருயிர் ஓருடலாய்' ஆனாலும், அந்தத் தலுவலில் ஒருவித ஆறுதல்தான் இருந்தது. இன்பமோ பருவத்துடிப்போ இல்லை. ஆனால் அந்த ஆறுதல் - அந்தத் துன்பப் பகிர்வு, அந்தத் தோளோடு தோள் நிற்கும் துணிவான துணை, ஆயிரம் இன்பக் கிளுகிளுப்புக்களை விட மேலானது. ஆயிரமாயிரம் பருவப் பகிர்வுகளைவிட மேலான ஆறுதல். உடலை ஊடுருவி அதனுள்ளே இருக்கும் ஆன்மாவை அணைப்பதற்கான தழுவல் முயற்சி அது. தகாத முயற்சியல்ல.
இது ஜனங்களுக்கு எப்படித் தெரியும்? தெரியவில்லை. ஆகையால் தெருவில் போய்க் கொண்டிருந்தவர்கள், அவசரமாகப் போய்க் கொண்டிருந்தவர்கள் கூட, சினிமாவுக்கு லேட்டாகப் போனவர்கள் கூட, இலவச சினிமா கிடைத்தது போல், வேடிக்கைப் பார்த்தார்கள். இதைப் புரிந்து கொண்ட ஆண்டியப்பன், தங்கம்மாவை மெல்ல விலக்கவும் இருவரும் பிரிந்து நடந்தார்கள்.
"மீனாட்சி எப்படி இருக்கா தங்கம்?"
"அத ஏன் கேக்கியரு. பாவி மனுஷி அழுத அழுகை இருக்கே... அத சொல்லியும் முடியாது, சொன்னாலும் தீராது. கையை எடுத்து மார்புல அடிச்சதுல கடைசில மார்புல இருந்த புண்ணு பழையபடி வலிக்க ஆரம்பிச்சுட்டு. சீக்கிரமாக நடயும். மயினி துடிச்சிக்கிட்டு இருப்பாவ."
"குழந்தைக்கி பாலுக்குக் காசு கொடுக்காம வந்துட்டேன். காத்தாயியும் வந்திருக்க மாட்டாள். என்ன பண்ணினாள்?"
"இந்தத் தங்கம்மா செத்துப் போயிட்டான்னு நினைச்சீராக்கும்."
"நீ இருக்கையில நான் எங்க வேணுமுன்னாலும் இருக்கலாம். லாக்கப்புல கூட இருக்கலாம். சும்மா விளையாட்டுக்குச் சொன்னால், இப்படியா முகத்த தூக்குறது? சரி. ஒய்யா எப்படி இருக்கார்? நீ என் வீட்டுக்குத்தான போனே?"
"நல்லா இருக்கே. ஆயிரந்தான் அடிச்சாலும் அவரு என்ன பெத்த அய்யா. அவரு கையப் பிடிச்சுக் கொடுக்காம நான் ஓடுகாலியா ஒம்ம வீட்டுக்கு வருவேன்னு மட்டும் நினைக்காதையும்..."
"ஏய், நீ என் வீட்டுக்கு எத்தனையோ தடவ வந்துருக்க. ஒவ்வொரு தடவயும் ஒங்க அய்யா எனக்கு ஒன் கையைப் பிடிச்சா கொடுத்தாரு? மனுஷன் ஒரு தடவகூட கொடுக்க மாட்டாரு போலுக்கே!"
"அது வேற இது வேற. நான் இதுவரைக்கும் எங்க அத்தை வீட்டுக்குத்தான் வந்துக்கிட்டு இருக்கேன். ஆண்டியப்பன் வீட்டுக்கு இல்ல."
"ஏய், பேரையாச் சொல்லுதே..."
"பெண்கள் பகுத்தறிவு மாநாடுன்னு போட்டிருக்கது ஒரு பேப்பர்ல வந்திருக்கு. படிச்சிப் பாரும்; அப்பத்தான் ஒமக்குப் புத்தி வரும். பொம்புளையள அடக்கி வச்ச காலம் மலையேறிக்கிட்டு இருக்கு."
"போவட்டும். ஒய்யா ஒன்னை அடிச்சாரா?"
"இல்ல. எனக்கும் கொஞ்சம் உதறல்தான். அய்யா வந்தாரு. பேசாமப் போய் கட்டிலுல படுத்தாரு. நானும் பேசாம இருந்தேன். இப்ப ரெண்டு நாளா நாங்க ரெண்டு பேரும் பேசுறதே கிடையாது. இதுல ஒரு நன்மையப் பாரும். கீரியும், பாம்புமா இருந்த அய்யாவும், அம்மாவும், இப்போ கோழியும் சேவலுமா ஆயிட்டாவ..."
"ஆவட்டும். நீ இங்க வந்தது யாருக்கும் தெரியுமா?"
"இந்தப் பாழாப்போற மாணிக்கமும், கோபாலும் நேத்து ராத்திரிதான் சொன்னாங்க. நான் மயினிகிட்ட மட்டும் சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடி வந்தேன்."
"ஆறு மைலும் நடந்தா வந்த? பஸ்சில் வரப்படாது? பாவம்... என்னால ஒனக்கு ரொம்ப கஷ்டம்."
"அது கஷ்டமில்ல. இப்ப கையப் பிடிக்கியரு பாரும், அதுதான் கஷ்டம். பேசாம விலகி நடயும். ஆளப்பாரு, இதுக்குத்தான் ஒம்மகிட்ட அதிகமாய் வச்சுக்கப் படாதுன்னு நினைக்கது. எனக்குக் கெட்ட கோபம் வரும். கைய விடுறீரா இல்லியா? சீ... பஸ்ல இருக்கவங்க பாக்காங்க."
ஆண்டியப்பன் அவள் கையை விட்டான். அவள் சீறியதால் அல்ல. ஒரு பஸ்சில் இருந்து மாணிக்கமும் கோபாலும் இறங்கி வந்தார்கள். மாணிக்கம் வந்து கொண்டே பேசினான்:
"ஒரு பயகூட ஜாமீன் கொடுக்க வரமாட்டேன்னுட்டான். கிணறு வெட்டப்போற ராமசாமியும், 'ஆட்டுக்கிடை' போடுற ஐயம்பெருமாள் கோனாரும் ஜாமீனுக்கு வாரேன்னு சொன்னாங்க. ஆனால், இந்தக் கர்ணம் இருக்காரே, அந்தப் பெரிய மனுஷன், இவங்களுக்கு மாத வருமான சர்டிபிக்கட் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. கடைசில ஒங்க பெரியய்யா பேரன் மயில்சாமி வந்தான். மூணு ஏக்கர் நிலம் வச்சிருக்கான். தையல் கடை வச்சிருக்கான். மாசம் நானூறு ரூபாய்க்கி மேலே வருமானம் வருது. அவன் கையில காலுல விழுந்து ஜாமீனுக்கு வர சம்மதிக்க வச்சோம். இந்தக் கணக்கப் பிள்ளை பயல் சர்டிபிகேட் கொடுக்க முடியாது - முடியவே முடியாதுன்னு சொல்லிட்டான்."
"மாசானம்?"
"கழுத களவாணி மனுஷன்! நேத்து தலைமறைவா ஆயிட்டாரு. இன்னைக்கி அகப்பட்டாரு. கேட்டால், 'நான் கவர்மெண்ட் காண்டிராக்டரு - இதுல மாட்டக்கூடாது'ன்னு சொல்லிட்டார். என்ன பொல்லாத 'ர்'? சொல்லிட்டான்."
"கோபால் ஒன் கன்னம் ஏன் வீங்கியிருக்கு?"
"ஒண்ணுமில்ல. ஒன்கூடச் சேரக்கூடாதுன்னு எங்க அப்பா லேசா அடிச்சாரு."
அனைவரும் ஊருக்குள் வந்தார்கள். அங்கே தென்பட்ட பெரிய மனிதர்கள் அத்தனை பேரும், முகங்களைத் திருப்பிக் கொண்டார்கள். பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், 'பயலை எப்படி விட்டாங்க' என்ற ஆச்சரியத்தில் மூழ்கியபோது, அவரைப் பார்த்துப் பயந்து, பல ஏழைகள் ஆண்டியப்பனிடம் பேசவில்லை.
ஆண்டியப்பன் தங்கம்மாவுடன் வீட்டுக்கு வந்தான். மீனாட்சியால் அழ முடியவில்லை. 'அண்ணாச்சி... அண்ணாச்சி' என்று அந்த வார்த்தைகளின் வழியாக உயிர் பிரிவது போன்ற வேதனைப் பிளிறல். வெளிக்காட்ட நினைத்தாலும், உடம்பு ஒத்துழைப்புக் கொடுக்காத பாசத்தின் அங்க அசைவுகள். ஆண்டி, தங்கை மகனை எடுத்து வைத்துக் கொண்டே, தங்கையின் கண்களை வேட்டி முனையால் துடைத்தபோது -
திடீரென்று பலமான அழுகை ஒலி கேட்டது. அது ஒலித்துக் கொண்டிருக்கும் போதே ஒருவர் வந்து, "தங்கம்மா நீயும் இவனும், டவுனுல கல்யாணம் செய்துக்கிட்டதா... மல்லிகா புரளியக் கிளப்பி இருக்காள். ஒங்க அய்யா மருந்த குடிச்சிட்டு துள்ளத் துடிக்கக் கிடக்காரு. சீக்கிரமா போ" என்று சொல்லிவிட்டு அவரும் ஓடினார்.
தங்கம்மா பதறியடித்து ஓடினாள்.
-------------
7
அடைக்கலசாமிக் கிழவர் இறந்துவிட்டார்.
நம்பமுடியாத உண்மை. என்றாலும் இருந்த ரோஷத்தை அது இல்லாதவர்களுக்காகவும், உடன்பிறந்த வீரத்தை, உடனிருந்தே கொல்பவர்களுக்காகவும், விட்டு வைத்திருந்த அந்த வீரக் கிழவர், பூச்சி மருந்தைக் குடித்து தன்னைத்தானே கொன்று கொண்டார். ஆண்டியப்பன் வீட்டில் இருந்து, தங்கம்மா பாதி வழியைக் கடக்குமுன்பே, துள்ளத் துடிக்க வாழ்ந்த அவள் அப்பா, துள்ளத் துடிக்கச் செத்துப் போய்விட்டார்.
தங்கம்மா அப்பாவின் மார்பில் புரண்டு அழுதாள். "நான் பாவிய்யா - படுபாவி... சண்டாளி... ஒம்ம நான் தான் கொன்னுட்டேன். எங்க அய்யாவ நானே கொன்னுட்டேனே... விடுங்க, என்னை விடுங்க. நானும் சாவணும்! அவரை வழியனுப்பி வச்சதே நான். நானும் அவரோட போயிடணும்! விடுங்க. அய்யா... அய்யா... என்னப் பெத்த அய்யா..."
தலையிலும் முகத்திலுமாக பலங்கொண்ட மட்டும் அவள் கைகளை மோதவிட்டு அடித்துக் கொண்டாள். இதனால் கையில் போட்டிருந்த கண்ணாடி வளையல்கள் நொறுங்கி, அவள் முகத்தில் குத்தி, ரத்தத்தைக் கொண்டு வந்தது.
"அய்யாவே... அய்யாவே... ஆசையுள்ள
அய்யாவே - ஒம்ம
கொல்லாமல் கொன்னுட்டேனே
கொலை பண்ணாமப் பண்ணிட்டனே - நான்
இல்லாமல் போயிட்டேனே - நீரு
எங்கேயோ போயிட்டீரே...
என்னையும் கூட்டிப் போவும்...
இரக்கமுள்ள அய்யாவே..."
அடைக்கலசாமியின் மனைவியும் அழுது கொண்டிருந்தாள். மகளைக் கட்டிப்பிடித்து, கண்களைத் துடைத்து விட்டு பின்பு தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
வெளியே நாவிதர் படபடப்போடு பேசினார்:
"பிணத்தைக் குளிப்பாட்ட கொண்டு வாங்கய்யா."
தங்கம்மா அந்தப் பிணத்தையே பார்த்தாள். பிணம் போல் பார்த்தாள்.
வெளியே ஒரே கூட்டம், கசமுசாப் பேச்சுகள்.
"எதுக்கும் கலங்காதவரு எப்படிச் செத்தாரு?"
"பிள்ளை குலமழித்தால் பெத்தவன் என்ன செய்வான் - இது பழமொழி."
"சொந்த மகள் ஓடிப் போயிட்டாள். மானமுள்ள அப்பன் வேற எதச் செய்வான்?"
"ஊரு உலகத்தில் நடக்காததா நடந்துட்டு? எத்தன பணக்கார வீட்ல கல்யாணம் ஆகுமுன்னாலேயே கள்ளப் பிள்ளியள கழிச்சிக்கிட்டு இருக்காளுவ. அத்தை மகனை போலீஸ் ஸ்டேஷன்ல பார்க்கப் போனது தப்பாவே? சோளத்தட்டைக்குள்ளயா கூட்டிக்கிட்டுப் போனாள்?"
மாடு மேய்க்கும் பையன் ஒருவன் விளக்கினான்:
"முன்சீப் வீட்டுக்கு இந்த தாத்தா வந்தாரு. தங்கம்மா அத்தைக்கு வெளியூர்ல ஒரு பையனைப் பார்த்திருக்கேன்னு சொல்லிக்கிட்டு இருந்தப்போ, மல்லிகா உள்ள இருந்து சாடப் போறது மாதிரி ஓடிவந்துக்கிட்டே, 'ஒம்ம மகள் அத்தை மகனை மீட்டி, அப்படியே கல்யாணமும் பண்ணிக்கிட்டு வாரதுக்குப் போயிட்டாளாம். வயித்துல வேறு - மூணு மாசமாம். கல்யாணமா பண்ணப் போறிய'ன்னு கேட்டாள். உடனே இந்த தாத்தா 'அப்படியே இருந்தாலும் நீ இப்படி பேசலாமாம்மா... ஒம்மாவோட சமாசாரம் ஒனக்குத் தெரியுமாம்மா... ஒங்க குடும்பத்துக்கு மாடாய் உழைக்கிறவன - நாய் மாதுரி நடத்துலாமாம்மா'ன்னு சொல்லிக்கிட்டே வெளியே வந்தார். இப்போ ஒரேயடியாய் வெளியப் பாத்து போயிட்டாரு. இது தெரியாம இந்த தங்கம்மா அத்தை... தான் அய்யாவக் கொன்னது மாதுரி அழுவுறாள். அவரக் கொன்னது அந்த மல்லிகா செறுக்கிமவள் தான்."
"எல்லாம் இந்த ஆண்டியப்பன் பயலால் வந்த வினை. ஆழந்தெரியாமக் கால விடலாமா? கல்லுல தலை மோதுனாலும் தலையில கல்லு மோதுனாலும் சேதம் தலைக்கு தானவே? இது ஏன் இந்தப் பயலுக்குத் தெரியல. பரமசிவத்துக்கிட்ட இவனால மோத முடியுமா? இவன் அவனுக்கு ஜோடியா?"
"நீரு சும்மா கிடயும்வே! அவனுக்கு இருக்கிற மானத்துல ஒமக்கு நாலுல ஒண்ணு இருந்தால் ஊரு இப்படி குட்டிச் சுவரா போயிருக்காது."
"நீரு அந்தக் குட்டிச் சுவர்ல முதுகைத் தேச்சிக்கிட்டு நிக்கமாட்டீரு. இந்த ஆண்டிப்பயல பாரும்வே. எப்படி அடிச்சிப் புரண்டு வாரான்."
ஆண்டியப்பன் தலையில் அடித்துக் கொண்டு வந்தான். வந்த வேகத்தில் ஒரு மரத்தில் மோதி, பின்னர் அந்த மரத்திலேயே தலையை மோதிக் கொண்டு நின்றான். இரண்டு பேர் ஓடிப்போய் பிடித்துக் கொண்டார்கள். அவர்களை விலக்கிக் கொண்டே அவன் மாமாவின் வீட்டுக்குள் ஓடினான்.
மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த மாமாவின் காலைப் பிடித்துக் கொண்டே, "மாமா, ஒம்ம நான் கொன்னுட்டேனே! எடுத்து வளத்த ஒமக்கு நானே எமனாய் மாறிட்டேனே"ன்னு புலம்பினான். அப்போதுதான் அழுகையை ஓய்த்துவிட்டு, மருவிக் கொண்டிருந்த தங்கம்மா, கேவிக்கொண்டே, "நாம ரெண்டு பேருமாய் அய்யாவக் கொண்ணுட்டோமே மச்சான்" என்று சொல்லி முடிக்கு முன்பே தலையில் அடித்துக் கொண்டாள்.
இன்னொரு பக்கமாக அழுதுகொண்டிருந்த அவள் அம்மா, மகளைப் பார்த்தாள். 'இன்னுமா மச்சான்...? இவனா இங்க வந்திருக்கான்?' அந்தக் கிழவி எழுந்து நின்று கத்தினாள்:
"நீ எதுக்குல வந்தே? நாய்க்குப் பொறந்த நாயே! என்னோட மவராசனை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததுமுல்லாம, கேலி பண்ணுதது மாதிரி வந்தால நிக்கே? கொலைகாரப் பாவி! நீ போறீயா... இல்ல நான் இந்த க்ஷணத்துலயே உயிர விடட்டுமா? போறீயா இல்லியா? கொலைகாரப் பாவி... போடா!"
ஆண்டியப்பன், தங்கம்மாவைப் பார்த்தான். அவள் பரிதாபப் படுவதுபோல் பார்த்தாளே தவிர பதில் சொல்லவில்லை.
கிழவிக்குக் கோபம் ரெட்டிப்பாகியது.
"இன்னுமால நிக்கிற - போறீயா இந்த க்ஷணத்துலேயே உயிரை விடட்டுமால? சோம்பேறிப் பய மவனே!"
ஆண்டியப்பன் மவுனமாக வெளியேறினான். வீட்டுக்குத்தான் போகப் பார்த்தான். அவனால் போக முடியவில்லை. வெளியே போய், ஒரு பூவரசு மரத்தின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். மரத்தோடு மரமானவன் போல், அப்படியே சாய்ந்து கொண்டான்.
எல்லாம் முடிந்து ஒரு வாரமாகிவிட்டது. பிணத்தைத் தூக்கிப் போனபோது இரண்டு போலீஸ்காரர்கள் வந்து 'தற்கொலை பண்ணியிருக்கார். புதைக்கப் போனால் எப்படிவே' என்று சொல்லிக்கொண்டு, அந்தப் பிணத்தை வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு, 'போஸ்ட் மார்ட்டம்' செய்யப் போனார்கள்.
தங்கம்மாவும், அவள் அம்மாவும் ஆஸ்பத்திரியின் நுழைவாயிலுக்குள் போகும்போதே, 'கேட்கீப்பர்' கையை நீட்டப் போனார். ஆனால் விரிந்த தலையுடன், நீர் வழியும் கண்களுடன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனிடம் நியாயம் கேட்கப் போன கண்ணகி போல் தோன்றிய தங்கம்மாவையும், ஒடிந்து போன சிலம்பு போல், ஓலைப் பாய்க்குள் முடங்கிக் கிடந்த பிணத்தையும் பார்த்தபோது, நீட்டிய கையை மடக்கிக் கொண்டார். ஆனால் ஆஸ்பத்திரியில் உள்ள 'உயிர்கீப்பர்கள்' அப்படி இல்லை. 'எப்படிச் செத்தார். அய்யோ பாவம்' என்று வாயால் சொல்லவில்லையானாலும், மனத்தில் அத்தகைய உணர்வு தோன்றி, அந்த உணர்வு முகத்தில் அனுதாபமாகப் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்த்த 'பிணச்' சொந்தக்காரர்கள், கிட்டத்தட்ட பிணமாகும்படி 'பிணத்தனமாக' நடந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் பிறந்த உயிர் ஒன்று போய்விட்டது என்ற உணர்வில்லாமலேயே, பிணத்தைப் பார்வையிட்டவர்களின் அட்டகாசமானச் சிரிப்புகள், கிரிக்கெட் உபன்யாசங்கள், அரசியல் விமர்சனங்கள். அந்தப் பிணத்தைப் பார்த்துக்கூட, நீங்களும் ஒருகாலத்தில் பிணமாகப் போகிறவர்கள் தான் என்பதை உணராத உயிர்ப்பில்லாத பேச்சுகள், பிணத்தைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே, அருகில் நின்ற நர்ஸம்மாக்களுடன் வாய் விளையாட்டுகள்...
திடீரென்று 'தங்கம்' என்ற குரல் தங்கம்மாவுக்குக் கேட்கவில்லை என்றாலும், அவள் தாய்க்குக் கேட்டது. திரும்பிப் பார்த்தாள்.
ஆண்டியப்பன்!
தானே இறந்து, தனக்குத்தானே துக்கம் அனுசரிப்பவன் போல், மேல்துண்டை எடுத்து, வாய்க்குள் வைத்துக் கொண்டு விம்மினான். குடை சாய்ந்த வண்டி போல பாதாதிகேசம் வரை ஒரு பக்கமாய்ச் சாய, "மாமா மாமா" என்றான். கிழவியால் திட்டாமல் இருக்க முடியவில்லை.
"அவர அறுக்கத வேடிக்க பாக்கவால வந்த? ஒன்னையும் இப்படி அறுக்குற காலம் வராமலா போவும். எத்தனாவது சட்டப்படி நீ இங்க வரலாம். போல... போல. நீ செஞ்சது போதும். என் மவராசன் உன்னாலயே - சாவு முன்னாலயே பிணமா போயிட்டாரு. அவரு செத்தது ஒப்புக்குத்தான். கொலகாரப்பய. இங்க எதுக்காவல வருத?"
ஆண்டியப்பன் கேவிக் கேவி அழுதான். தங்கம்மாவைப் பார்த்தான். அவள் எதுவும் பேசவில்லை. அவன் இருக்கிறான் என்பது போல் பார்க்கக்கூட இல்லை. இதற்குள் கிழவி, "போல, போயிடுல. நீ நின்னா என் மவராசனோட ஆவி நிம்மதியா இருக்காது" என்று சொன்னபோது, ஆண்டியப்பன் அங்கிருந்து நகர்ந்து நகர்ந்து, நடந்து நடந்து எங்கேயோ போய்விட்டான்.
பிணத்தைக் கொண்டுவந்து, மூன்று மணி நேரம் ஆகியும், முறையான பரிசோதனை ரிப்போர்ட் கிடைக்கவில்லை. ஆர்ம்.எம்.ஓ. எங்கேயோ போய்விட்டாராம். ஆனால் அதற்குப் பிறகு வந்த இரண்டு 'வசதியான' பிணங்கள், வந்தது தெரியாமலே போய்விட்டன.
தங்கம்மாவுக்கு ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.
'அட கடவுளே, பிணமான பிறகு கூட ஒருவன் சுதந்திரமாக விடப்படமாட்டானோ... பிணத்திற்குக்கூட ரேட்டா? இங்கே இருப்பவர்கள் மனிதர்களா, இல்ல சுடுகாட்டில் சமாதிகளில் நீட்டிக் கொண்டிருக்கும் கற்களா? பிறப்பது தெரியாமல் பிறந்து, போவது தெரியாமல் போகும் ஏழை மீது எத்தனை கரிசனம்? அறுபது வருஷமாய் உழைப்பையும், நன்றி விசுவாசத்தையும் தவிர, எதையுமே அறியாத அய்யாமீது எவ்வளவு பாசம்? கொஞ்ச நேரம் அவரை ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று எவ்வளவு பெரிய இரக்கம்? அய்யா, நீரு கொடுத்து வச்சவரு. நீரு சாவுறது வரைக்கும் பண்ணையாருங்களுக்குக் கைகட்டி கால்கட்டி நின்னியரு. இப்போ அதுக்குப் பிரதியா, அவர்களோட தூண்டுதலால், டாக்டர் துரைமாரு மவராசன்மாருங்க, ஒம்ம கையைக் காலை எப்படிக் கட்டுறாங்க. இந்த மாதிரி வாழ்க்கை யாருக்கைய்யா கிடைக்கும்? யாருக்குக் கிடைக்கும்...?'
தங்கம்மாள் விம்மியபோது, கிழவி அவளுக்கு ஆறுதல் சொன்னாள். ஆஸ்பத்திரிக்குள் நுழையும்போது, வெள்ளை யூனிபாரத்தில், வனதேவதை போலத் தோன்றிய நர்ஸம்மாக்கள், இப்போது அவளுக்கு விதவைகள் போல் தோன்றினார்கள். எப்போ ரிப்போர்ட் கிடைக்கும்? எப்போ பிணத்துக்கு விடுதலை கிடைக்கும்?
அவர்கள் தவித்துக் கொண்டிருந்த போது, சின்னான் வந்தான். கிழவி முகத்தைத் திருப்பிக் கொண்டாளே தவிர, திட்டவில்லை. "ஏய் கிழவி, இது என்ன உன் வீடுன்னு நினைச்சியா? ரிப்போர்ட் ரெடியானால் தரமாட்டோம்?" என்று ஒரு வெள்ளை யூனிபாரக்காரி விரட்டியதால், அவளால் சின்னானை விரட்ட முடியவில்லை.
சின்னான் அங்குமிங்குமாக அலைந்து, ஒருவழியாக பிணத்தை எடுத்தான். பிணத்தின் கால் இரண்டையும் இழுத்துக் கொண்டு வந்தே, கொடுக்கப்பட்டது. ஏதோ பெரிய காரியம் செய்தது போல், இரண்டு பேர் பல்லைக் காட்டிக் கொண்டு நின்றார்கள். ஊருக்கு, ஒரு வண்டியில் அதே ஓலைப்பாயில் பிணம் வந்தபோது, சேரி ஜனங்களும், 'ஜாதி' ஜனங்களும் கூடிவிட்டார்கள். மௌனம் பயங்கரமாகப் பேசியது. பயங்கரமே மௌனமாகியது. மாடியில் நின்றபடியே, மல்லிகா வாயைச் சப்புக் கொட்டிக் கொண்டே அந்தப் பிணத்தைப் பார்த்தாள். ஆண்டியப்பனும், அவள் தங்கை மீனாட்சியும் வீட்டுக்குள்ளேயே ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு, சிந்தையிழந்து, செயலிழந்து கிடந்தார்கள்.
அந்த ஊரில் எத்தனையோ பேர், தற்கொலை செய்திருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் அவர்களை வெளியே தெரியாமலே புதைத்திருக்கிறார்கள். கிராம முன்சீப்பே, சிலரை சுடுகாடு வரைக்கும் போய் வழியனுப்பி இருக்கிறார். ஆனால் 'ஒம்மா சமாசாரம் தெரியாதாம்மா' என்று, தன் சம்சாரத்தைப் பற்றிப் பேசிய அந்தக் கிழவரை, செத்த பிறகும், முன்சீப் சும்மா விட விரும்பவில்லை. அதோடு, மல்லிகா வேறு, 'தங்கம்மாவை நாய் மாதிரி இழுத்தடிக்கணும். அவள் ஆஸ்பத்திரில நாய் மாதுரி காத்துக் கிடக்கணும். நீங்க ஒங்க டூட்டியைத் தானே செய்யுறீங்க' என்றாள்.
பரமசிவம் - முன்சீப் வகையறாக்களுடைய வீடுகளுக்கு வாசல் போல, கால்களுக்குச் செருப்பு போல, கைகளுக்குக் கத்தி போல வாழ்ந்த ஒரு ஜீவனை, இறந்த பிறகு விட்டு வைக்கத் தயாராக இல்லாத மணியக்காரரின் செயல், ஊரில் இரகசியமாகக் கண்டிக்கப்பட்டது. சொல்லியே தீர வேண்டும் என்ற உணர்வில் வந்து, சொல்ல முடியாமல் போன முணுமுணுப்புகள்! ஜாக்கிரதையான குமுறல்கள்! 'மாடாய் உழைச்ச மனுஷனையே ஆஸ்பத்திரியில அறுத்துப் போட வச்சாங்கன்னால், நம்மள விட்டு வைப்பாங்களா?'
ஒரு வாரம் ஓடியது.
ஆண்டியப்பனுக்கு, லாக்கப்பே தேவலை போல் தோன்றியது. தன்னுள்ளே பாதுகாப்பாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் இருந்த ஒன்றைப் பறிகொடுத்த சோகத்திலிருந்து அவனால் மீள முடியவில்லை. மாமா, மல்லிகா சொன்னதுக்காக மட்டுமா செத்திருப்பார். இல்ல, அதுக்காக மட்டும் இருக்காது. என்னை லாக்கப்புல போட்ட வருத்தமும் இருந்திருக்கும். ஊர்ல அநியாயக்காரங்களுக்கு அடிமையா போயிட்டோமே என்கிற வருத்தமும் இருந்திருக்கும். அக்கா மகனோட மாட்டைப் பிடிச்சி மானபங்கப் படுத்திட்டோமே என்கிறதும் இருந்திருக்கும். இப்படி எல்லாம் இருந்ததுனால... அவரு இல்லாமப் போயிட்டாரு.
ஆண்டியப்பன் செய்வதறியாது திகைத்து நின்றான். தங்கைக்கு மருந்து வாங்கப் பணம் இல்லை. வேலைக்குப் போய் நாளாகிவிட்டது. இருந்த அரிசி தீர்ந்து போச்சு. 'டவுனுக்குப்' போகும்போது கூட எல்லாப் 'பயலுவளுகும்' இவனே டிக்கெட் எடுத்தான். ஒரு பயலாவது 'நான் எடுக்கேன்னு' பையைக் கூடத் தொடல. தங்கச்சி கழுத்துல, காதுல இருந்ததுல்லாம், மருந்துக்குப் போயிட்டு. குழந்தைக்கோ பாலில்லை. காத்தாயியக்கூடக் காணல. டீக்கடையில ஆழாக்கு தண்ணிப் பாலைக் கேட்டுப் பார்க்கலாம். குழந்தைக்கிக் காய்ச்சிக் கொடுத்துட்டு மத்தியானமாய் மரம் வெட்டப் போகலாம். மூணு ரூபாய் கிடைக்கும். அரைக்கிலோ அரிசி, ஒரு வாழைக்காய், மிச்சதுக்குப் பாலு.
ஆண்டியப்பன் சலிப்போடு டீக்கடைக்குப் போனான். அங்கே இருந்தவர்கள் இவனை ஏனென்று கேட்கவில்லை. வழக்கமாக அவனைப் பார்த்து, 'ஏண்டா பேரா, சடுகுடு விளையாட வாரீயா? நீ ஜெயிச்சுட்டா என் மீசையை எடுத்துடுறேன்' என்று கேலி பேசும் பழனியாண்டித் தாத்தா கூட பாராமுகமானார்.
'தங்கச்சிக்கு எப்படிடா இருக்கு' என்று கேட்கும் பெரியசாமி மாமா அவன் உட்கார்ந்த இடத்திற்கு அருகே உட்கார மனமில்லாதவர் போல், நின்று கொண்டிருந்தார். எப்படிப் பேசமுடியும்? ஒருவர் அப்படி அவனிடம் பேசிய மறுநாளே அவர் மகனுக்கு பள்ளிக்கூடத்துல சர்டிபிகேட் கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க - அதுவும் வரச் சொல்லிவிட்டு. அந்த சர்டிபிகேட் - 1966ஆம் ஆண்டு படித்த சர்டிபிகேட். கிடைத்திருந்தால் அவர் பையனுக்கு டவுனில் பியூனாய் வேலை கிடைத்திருக்கும்.
அவனோட பேசிய இன்னொருவனை போலீஸார் பட்டை சாராயம் குடித்ததற்காகக் கூட்டிக் கொண்டு போனபோது எதிரே வந்த பஞ்சாயத்துத் தலைவரிடம் 'மாமா' என்றான் அவன். அவரோ, "ஆண்டி ஜாமீனுக்கு வருவாண்டா" என்றார். அப்படிப் பேசிவிட்டு, அவனை விடுவிக்கவும் செய்தார். அவன் எப்படி இவனிடம் பேசுவான்? வாயினை விற்று வார்த்தைகள் பேசினால் பட்டை போட முடியுமோ?
ஆனால் ஒரே ஒரு எளியவன் மட்டும் ஆண்டிக்கருகே உட்கார்ந்து கொண்டு, "கவலைப்படாதடா, ஆண்டி! ஒனக்கும் காலம் வரும்" என்றான். உடனே டீக்கடைக்காரன், அவனைப் பார்த்து, "ஒன் வேலயப் பார்த்துட்டுப் போயா... இங்க யாரும் அனாவசியமா பேசப்படாது" என்றான்.
ஆண்டியப்பன் எழுந்தான். இவனிடம் பால் வாங்க முடியாது. சீ... அவன் தந்தாலும் வாங்கப்படாது.
உலகிலே யாருமே இல்லாமல் போனதுபோல, தான் மட்டும் தனியாக இருப்பது போல, ஆண்டியப்பன் புளியந்தோப்பைப் பார்த்து, போவது தெரியாமலே போய்க் கொண்டிருந்தான். வழியில் தங்கம்மா ஒரு மண்வெட்டியுடன் போனாள். கூலி வேலைக்குப் போய்க் கொண்டிருப்பாள்.
ஆண்டியப்பன் வேகமாக நடந்தான். இந்தத் தங்கம்மா கூட வீட்டுக்கு வரவில்லை. வீட்டுக்குக் கூட வர வேண்டாம். வழியில பார்த்தால் கூட, முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாள். எப்படி மனசு வந்தது. இந்த மனசுன்னு மட்டும் ஒண்ணு இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
அவன் வருவதைப் பார்த்து, தங்கம்மாவும் வேகமாக நடந்தாள். திரும்பிப் பாராமலே நடந்தாள். போகலாமா வேண்டாமா என்று சிறிது யோசித்த ஆண்டி, பிறகு ஒரே ஓட்டமாக ஓடி, அவளை வழிமறிப்பது போல் குறுக்கே நின்றுகொண்டே கேட்டான்:
"தங்கம், நான் என்ன தப்புப் பண்ணினேன்... ஏன் பேசமாட்டக்கே?" தங்கம்மா முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டே பேசினாள்:
"நான் வாரேன், நேரமாயிட்டு."
"இதுதான் ஒன் பதிலா? நான் பண்ணின தப்பையாவது சொல்லிட்டுப் போ!"
"நாம தப்புப் பண்ணுனால்தான் அவஸ்தப் படணும்னு இல்ல! பிறத்தியார் செய்யுற தப்புக்கும் - அவங்களுக்குப் பதிலா - நாம அவஸ்தப்படணும்னு ஆயிட்டுது... நான் வரட்டுமா...?"
"மச்சான் மச்சான்னு சுத்திச் சுத்தி வந்த என் தங்கமா இப்படிப் பேசுறது...?"
"நேரமாவுது, நான் வாரேன்."
"எனக்கும் ரோஷம் இருக்கு பிள்ள! நானும் போறேன்."
தங்கம்மா இப்போது குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவனை ஆசையோடு பார்த்துவிட்டு, பிறகு அதுவே தப்பு என்பது போல், முகத்தை மூடிக்கொண்டே, கைவிரல்களை விரித்து, கண்களில் படரவிட்டு, விரலெல்லாம் நனைய, வேதனையோடு பேசினான்.
"என்னை மன்னிச்சிடுங்க. நான் கொலைகாரியாய் போயிட்டேன். அப்பனைக் கொன்னவள்னு ஊர்ல பேசுறாவ. இனிமே, ஒம்ம கல்யாணம் பண்ணுனால், நான் அய்யாவக் கொன்ன கொலைகாரின்னு ஊர்ல பட்டம் கொடுத்துடுவாங்க. என்னோட அய்யாவ, ஒம்மவிட நான் உசத்தியா நினைச்சது நிசம். இந்த நிசத்தக் காட்டுறதுக்காவ நான் விலகி நிக்கேன். எப்பவும் விலகி நிக்கப் போறேன். அம்மா, ஒம்மகிட்ட நான் பேசுனால் தூக்குப் போட்டுச் சாவேன்னு சொல்லுதாள். அய்யாவ மாதுரி நான் அம்மாவையும் கொல்லப்படாது. இன்னார் மகள் அவள் அய்யா செத்ததுக்கு அபராதம் கட்டுறது மாதிரி கண்ணுக்குள்ள கண்ணாய் இருந்த அத்தை மவனையே கட்டிக்கலியாமுன்னு ஊர் சொல்லணும். 'அய்யாவக் கொன்னுப்புட்டு அத்தை மகன்கிட்ட போயிட்டா'ன்னு பேசப்படாது. எங்கைய்யா எதை அவமானமா நெனச்சி செத்தாரோ, அதையே நான் செய்யப்படாது. அவரு நினைச்சது தப்புன்னாலும், அவரோட தப்பை நான் ஏத்துக்கிடணும். மயினி எப்படி..."
"சரி. ஒனக்கு நேரமாவுது. நீ போம்மா. ஒன் கல்யாணத்துக்காவது சொல்லு. அழாதே! இந்த அழுகையை நான் செத்தபிறகு வச்சிக்கலாம்!"
தங்கம்மா சிறிது தயங்கி நின்றுவிட்டு, அவனையே குளுமையாகவும், வெறுமையாகவும் பார்த்துவிட்டு மண்வெட்டியை மறந்துவிட்டுப் போனாள். பிறகு நினைவு வந்தவளாய் திரும்பி வந்தாள். மண்வெட்டியை எடுத்து அவளிடம் கொடுக்கப் போன ஆண்டி, பிறகு அதைத் தரையில் வைத்துவிட்டு, தரையில் கால் படாதவன் போல், ஆகாயத்தில் பறப்பவன் போல், அதற்குள் எதையோ தேடுபவன் போல் நடந்தான்.
நையாண்டி மேளம்போல, இதயம் துடிக்க, உடம்பு வேர்க்க, உள்ளம் கனக்க, தலையெல்லாம் நோக, வேகவேகமாக நடந்து, ஊரின் ஒவ்வொரு மூலையிலும், இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் மாணிக்கத்தைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனால் மிஸ்டர் மாணிக்கம் பி.ஏ., பி.டி.யோ...
--------------
8
உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காமல் போன மாணிக்கம் பி.ஏ., பி.டி. சிறிது யோசித்துப் பார்க்கத் துவங்கினான். இளைஞர் பெரும்பணி மன்றம் என்று புதிய அமைப்பை உருவாக்கிய குமார், இப்போது 'பட்டி தொட்டி பதினாறும்' அறிந்த பிரமுகனாக மாறிவிட்டான். கிழவியின் பென்ஷனில் இருந்து, குமரியின் கல்யாணம் வரை, இந்த குமாரின் சொல் எடுபடுகிறது. இவனைக் கண்டால் அதிகாரிகளும் ஓரளவு பயப்படுகிறார்கள். கிராமத்தில் உள்ள படித்தவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி மொய்க்கிறார்கள்.
இன்றைய கிராமிய அரசியலிலும் மாவட்ட அரசியலிலும், அடிப்படைப் பிரச்சினைகளுக்காக வாதாடுபவனை விட 'வேலை வாங்கிக் கொடுப்பவன் - வேலையில் இருந்து எடுப்பவன் - பட்டை சாராயம் காய்ச்சுபவர்களை ஜாமீனிலோ அல்லது எதுவும் நடவாதது போலவோ காப்பாற்றுபவன் - எந்தக் காரியத்திற்கும் தராதரம் தெரியாமல் மிரட்டலின் பின்னணியில் சிபாரிசு செய்பவன்' முதலிய குணாதிசயங்களும், அந்த குணாதிசயங்களைக் கொண்டு செலுத்தும் அதிகார சங்கிலித் தொடரை ஏற்படுத்திக் கொள்பவனுந்தான் அரசியல்வாதியாக முடியும்.
இந்தப் பின்னணியில் மாணிக்கத்தால் முன்னணிக்கு வரமுடியாமல் போனதுடன், ஒரு வாத்தியார் வேலைகூட கிடைக்கவில்லை. ஊர்க்காரர்கள் குமாரையும், மாணிக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். மாணிக்கத்தைக் குப்பையில் போடவில்லை. குப்பையாகவே போடுகிறார்கள்.
மாணிக்கத்திற்கு என்னவோ போலிருந்தது. பேசாமல் தனது இ.ந. மன்றத்தையும் குமாரின் இ.பெ. மன்றத்தையும் ஒன்றாக இணைத்து விடலாமா... கீரியும், பாம்புமாக இருந்தவர்கள் இப்படி விவஸ்தை இல்லாமல் சேருகிறார்களே என்று யாராவது சொல்ல மாட்டார்களா... எப்படிச் சொல்வார்கள்? இப்போது யாருக்கு விவஸ்தை இருக்கு? விவஸ்தை கெட்ட குணம் கூட விவேகமாக அல்லவா கருதப்படுகிறது.
மாணிக்கத்திற்கு யோசிக்க யோசிக்க ஆண்டியப்பன் மீது அலுப்புத் தட்டியது. ராசியில்லாத பயல். இவனால் எனக்கு வேலை கூட கிடைக்கல. ஊர்ல ஒருவர்கூட மதிக்கல - என்ன செய்யலாம்?
என்னதான் அவன் யோசித்தாலும் அவன் கால்கள் மூளையின் கட்டளையை, மீறியவை போல் ஆண்டியப்பனின் வீட்டைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தன. அதோடு அங்கே மாட்டு விவகாரத்துக்கான 'வியூகத்தை'ப் பேசி முடிக்க வேண்டும்! கோபால் அங்கே இருப்பான். ஒரு சில இளைஞர்களும் இதற்குள் அங்கே கூடியிருப்பார்கள்.
'மாட்டு' விவகாரம் போலீஸ் நிலையத்திலிருந்து 'ரிலீஸ்' ஆனதும், மாணிக்கமும், அவன் கூட்டாளிகளும் ஆண்டியப்பனை அழைத்துக் கொண்டு போய், கோட்ட ஆட்சித் தலைவரிடம் காட்டினார்கள். அவர் கோட்ட வளர்ச்சி அதிகாரியின் விவகாரம் என்றார். இவர்களும் வளர்ச்சி அதிகாரியைப் பார்த்தார்கள். அவர் பால் பண்ணை அதிகாரியிடம் கை காட்டினார். பார்த்தார்கள். பால் பண்ணை அதிகாரி, 'கூட்டுறவு டெப்டி ரிஜிஸ்தரார் தப்பாய் நினைப்பார். ஏன்னா இது அவரோட விவகாரம்' என்றார். இவர்களும் அந்த டெப்டியைப் பார்த்தார்கள். அவரோ 'புராஜெக்ட் அதிகாரியிடம் போங்கள்' என்றார். புராஜெக்ட் அதிகாரி 'கேம்ப்' போய்விட்டார். திரும்பி வரப்போனவர்களுக்கு ஒரு திடீர் யோசனை வந்தது.
காரில் ஏறப்போன கலெக்டரிடம், வழி மறிப்பது போல் நின்று நடந்த விவகாரத்தை மீண்டும் சொன்னார்கள். கலெக்டர் சொன்னபடி விவகாரத்தை மீண்டும் எழுதி அவரது உதவியாளரிடம் கொடுத்தார்கள். என்ன ஆச்சுது என்று தெரியவில்லை.
மாணிக்கம் நடந்து கொண்டே யோசித்தான். 'மாலை நேரம்', 'மதி' மயங்கும் 'கருக்கல்' பொழுது.
ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து கொண்டிருந்தவனின் எதிரே மல்லிகா வந்து கொண்டிருந்தாள். மயக்கு விழி இருக்கோ இல்லையோ கண்ணில் மை தடவி அந்தத் தவப்புதல்வி மாணிக்கத்தைப் பார்த்து உதட்டை கடித்துச் சிரித்துக் கொண்டே வந்தாள். மாணிக்கம் எட்டாவது படித்தபோது, அதே உள்ளூர் பள்ளியில் ஐந்தாவது படித்தவள் இவள். அப்போது மாணிக்கம் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறான். 'ஏபிஸிடி... எங்கப்பன் தாடி... ஒபிஸிடி... ஒங்கப்பன் பேடி' என்று கிண்டலாகப் பாடிக்கொண்டே 'இங்கிலீஷ்' கற்றுக் கொடுத்திருக்கிறான்.
அப்புறம் இவன் எங்கேயோ, அவள் எங்கேயோ படித்தார்கள். விடுமுறையில் வரும்போது லேசாகப் பேசிக் கொண்டார்கள். படிப்பு முடிந்து ஊருக்கு வந்த பிறகு அதுவும் இந்த மாட்டு விவகாரம் வந்த பிறகு, அவள் யாரோ இவன் யாரோ. மல்லிகாவின் மீது தப்பில்லை. தண்ணீர் குடத்தை தலையில் வைத்து நடக்கும்போது அந்தக் குடம் நிஜமாகவே கீழே விழும் அளவிற்கு அவனைப் பார்த்து, கண்களால் பருகியிருக்கிறாள், வயலுக்குப் போகும்போது, அவனைப் பார்த்துச் சிரித்திருக்கிறாள். அவன் தான் இந்த ஆண்டியப்பன் அவளை விட மேலானவன் என்பதுபோல், அந்தப் பயலோடு சுற்றிச் சுற்றி, வந்தவளை உதாசீனம் செய்து, புனிதக் காதலின் பொருள் விளங்காமல் கிடக்கிறான்.
மாணிக்கம் அவளையே பார்த்துக் கொண்டு நடந்தான். இவளைப் பார்க்காமல் என்னால் எப்படி இருக்க முடிந்தது. எனக்காக, எனக்காகவே தங்கம்மாவிடம் தகாத வார்த்தைகளை வாங்கிக் கொண்டவள். நான், அவள் சொந்தக்காரர்களுக்கு எதிராக எவ்வளவோ செய்தாலும், இதோ... இப்போதுகூட என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே வருகிறாள். 'கல்லானாலும் காதலன்' என்பதுபோல சாய்வாய் பார்க்கிறாள். இந்தக் கண்ணகியை - இந்த நளாயினியை - இந்தத் தமிழ்ப் பண்பின் கற்புக்கடம் பூண்ட நங்கையை, என்னால் எப்படித் தவிர்க்க முடிந்தது? எப்படி... எப்படி...
மல்லிகாவிற்கு வழிவிட்டு மாணிக்கமும், மாணிக்கத்திற்கு வழிவிட்டு மல்லிகாவும், முதலில் ஒதுங்கி, பிறகு அவள் நிற்கிறாள் என்று இவன் நடந்தும், இவன் நிற்கிறான் என்று அவள் நடந்தும், அல்லோ கல்லப்பட்டு, இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். மாணிக்கம் பிராயச்சித்தம் செய்கிறவன் போல், அவளை வழிமறிப்பவன் போல் குறுக்கே நின்று கொண்டு, முதலில் பேசினான்:
"என்னம்மா... என்னைப் பார்த்தால் ஒனக்கு ஒதுங்கணுமுன்னு தோணுதா..."
மல்லிகா அவனைக் குனிந்து பார்த்தாள். ஏனென்றால் அவனைவிட, அவள் இரண்டு அங்குலம் உயரம். நாணத்துடனும், நாணமில்லாத கோபத்துடனும், "ஒதுங்குகிறவங்களைக் கண்டால், நானே ஒதுங்கிக்கிறது 'பெட்டர்' இல்லையா?" என்றாள்.
"அடடே... ஒனக்கு இங்கிலீஷ் வருமா?"
"ஒங்க பிகாஸூ இங்கிலீஷை விட என் இங்கிலீஷ் இஸ் பெட்டர்."
"என் இங்கிலீஷைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?"
"நீங்க எனக்கு ஐந்தாவது வகுப்புல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்த இங்கிலீஷ் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு."
"அதுமட்டும்தான... தலையில குட்டுனதும், கன்னத்தைக் கிள்ளுனதும் மறந்து போச்சோ! இன்னும் ஒருதடவை கன்னத்தைக் கிள்ளினால்தான் ஞாபகம் வருமுன்னு நினக்கேன்!"
"இந்த மாதிரிப் பேச்சை என்கிட்ட வைக்காதீங்க."
மாணிக்கத்தின் முகம் பித்தளைபோல் வெளுத்தது. அவளைக் கோபமாகப் பார்த்துவிட்டு மடமடவென்று நடக்கப் போனான். ஆனால் மல்லிகாவின் பேச்சு அவனை அங்கேயே நிற்க வைத்தது.
"ஆண்டியைப் பெரிதாய் நினைத்து ஒரு பொண்ணோட மனசைப் புரிஞ்சிக்காதவரு, என்னோடு எதுக்காகப் பேசணும்? ஒங்கள பெரிசாப் பேசுனதாலேயே, ஒரு எச்சிக்கலை தங்கம்மாகிட்ட அவமானப்பட்டேன். அப்புறமும் அந்தத் தங்கம்மாவை பெரிசா நினைக்கிறவர்கிட்ட நான் எதுக்காகப் பேசணுமாம்? நான் ஒரு முட்டாள். என்னைப் பெரிசா நினைக்காதவரை, இன்னும் பெரிசாய் நினைக்கிறேன். எனக்கே புரியமாட்டக்கு."
"மல்லி நீ சொல்றதைப் பார்த்தால் - பார்த்தால்..."
"வயலுக்குப் போறேன். வழியை விடுங்க."
"முடியாது. மீறிப்போனால் தலையில் குட்டுவேன். அடடே - நல்லா சிரிக்கிறியே. எந்த பிரஷ் வச்சும்மா பல் தேய்க்கிற? சும்மா சிகரெட் அட்டை மாதிரி ஜொலிக்குதே."
"நான் எங்க வயலுக்குப் போறேன். நீங்க வேணுமுன்னால் உங்க வயலுக்கு வாங்களேன். ரெண்டும் பக்கத்து பக்கத்து வயலுங்கதானே."
"இப்போ கொஞ்சம் வேலை இருக்கே."
"ஆண்டியப்பன் கூடத்தானே? வழியை விடுங்க. ஒங்க வாடையே வேண்டாம். உம் வழியை விடுங்க."
"மல்லி, மல்லி நான் மடையன். முட்டாள். உன்னோட அன்பைப் புரிஞ்சுக்காத இடியட். நானும் வாரேன். நானும் வாரேன்."
மல்லிகா அவனை நாணத்துடன் பார்த்தாள். அக்கம் பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று அவசர அவசரமாகப் பார்த்துக் கொண்டு, யாரும் இல்லையென்று தெரிந்தபிறகும், அவனிடம் ரகசியம் பேசுபவள் போல் பேசினாள்.
"இப்போ வேண்டாம். வயலில் அப்பா இருக்கார். அம்மான்னா கண்டுக்க மாட்டாள். நைட்ல எங்க மாமாவோட வீட்டுக்கு வாறீங்களா?"
"எந்த மாமா?"
"எனக்கு ஒரே ஒரு தாய் மாமாதான். பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம்.
"அப்படிச் சொல்லாதம்மா. பஞ்சாயத்தைக் கலைச்சாச்சு. அவரு இப்போ பழசு."
"எங்க மாமாவைப் பழசுன்னு சொன்னால் நானும் உங்களுக்குப் பழசுதான். சின்ன வயசுல நாம் பழகுனதை இப்போ புதுப்பிக்க முடியாது."
"விளையாட்டுக்குச் சொல்றதை வித்தியாசமாய் எடுத்தால் எப்டி? இனிமேல் சத்தியமாய் பரமசிவம் சித்தப்பாவுக்கு எதிராய் எதுவும் செய்யமாட்டேன், போதுமா? அவரு வீட்ல என்ன விசேஷம்?"
"ஒங்களுக்குத் தெரியாதா... பரமசிவம் மாமாவோட மூத்த பெண்ணுக்கும், மாசானம் சித்தப்பாவோட மகனுக்கும் இன்னைக்கு நிச்சயதாம்பூலம். அதே முகூர்த்தத்துல அவரோட இரண்டாவது மகள் இந்திராவுக்கும், இளைஞர் பெரும்பணித் தலைவர் குமார் அண்ணாச்சிக்கும் நிச்சயதாம்பூலம். ஏற்கெனவே அவங்க ரெண்டு பேருக்கும் காதல்."
"அடிடா சக்கே. அப்போ நாம இரண்டுபேரு மட்டுந்தான் சும்மா இருக்கோம்."
"அதுக்கு நான் காரணமில்ல. சரி. ரெண்டுல ஒண்ணைச் சொல்லுங்க. என் மனசு புரிந்திருந்தால் வாங்க!"
"ஒங்க குமார் அண்ணாச்சி இருக்கிற இடத்துல நான் எதுக்கு?"
"ஒங்க மல்லிகா இருக்கிற இடத்துக்கு - உங்களுக்காகவே இருக்கிற மல்லிகாவைப் பார்க்க வரப்படாதா? சரி வழியை விடுங்க."
"பரமசிவம் மாமாவுக்குத் துரோகம் பண்ணிட்டேன். அவரு முகத்துல எப்படி விழிக்கிறது?"
"கவலைப்படாதிங்க. அவரையும், குமார் அண்ணாச்சியையும், ஒங்களை ஒங்கள் வீட்ல வந்து கூப்பிட வைக்கிறதுக்கு நானாச்சு."
"பரவாயில்லையே."
"நான் மாதர் சங்கத் தலைவி சரோஜாவோட மகளாக்கும்."
"சரி. நானும் எங்க வயலுக்குப் போறேனாம். நீயும் ஒங்க வயலுக்குப் போறயாம். சரி, போவோமா...?"
ஆண்டியப்பன் வீட்டுக்கு அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்த மிஸ்டர் மாணிக்கம் பி.ஏ., பி.டி. மல்லிகாவுடன் தோளில் தோள்பட, கையோடு கையுரச, 'வழிமாறி' நடந்து கொண்டிருந்தான்.
இரவு வந்தது. பழைய பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம் வீட்டிற்கு பணக்காரர்கள் அதிகமாக வந்தார்கள். அந்தக் கிராமத்தில் ஜாதி வித்தியாசம் இல்லாததால் தட்டாசாரி தங்கசாமி, பண்ணையார் கதிர்வேல் பிள்ளை, ராமசாமிக் கோனார் முதலிய பெரிய மனிதர்களும், மாசானம், மாணிக்கம் முதலிய புதிய மனிதர்களும் கூடியிருந்தார்கள். மல்லிகா எப்படி மாணிக்கத்தை அங்கே கொண்டு வந்தாளோ, அதே போல் அவள் அம்மா சரோஜா கிராமத்தில் பணக்காரர்கள் 'பழைய கருவாட்டு' பேதங்காட்டாமல் ஒற்றுமையாக இருக்கவில்லையானால், ஏழைபாளைகளுக்கு இளக்காரமாகிவிடும் என்பதை உணர்ந்து, அண்ணன் பரமசிவத்திடம் வாதாடி, மாசான மச்சானிடம் பழைய காதலை ஞாபகப்படுத்தி அழுது, முன்னவரின் மகளை, பின்னவரின் மகனுக்கு 'முடிச்சு'ப் போடும் வேலையைச் செய்துவிட்டாள். பண்ணையார்கள் மத்தியில் தனக்குப் புதிய அந்தஸ்து கிடைத்த திருப்தியில், மாசானம் மகிழ்ந்து போனார்.
முகப்பு அறையில் ஒரு மேஜையின் மேல் இரண்டு தாம்பாளங்களில் தேங்காய், பழம், எல்லாவற்றிற்கும் மேல் வரதட்சணையாக ரூபாய் நோட்டுக் கற்றைகள் வைக்கப்பட்டிருந்தன.
எப்படியோ, சுபயோக தினத்தில் அந்தத் தாம்பாளத்தட்டுகள் அசல் மாப்பிள்ளை ஜோடனையோடு வந்திருந்த மாசானத்திடமும், குமாரின் அப்பாவிடமும் கொடுக்கப்பட்ட பிறகு, நாற்பது ஏக்கர் நிலத்தில், அதுவும் நஞ்சை நிலத்தில், முப்பது ஏக்கரை 'வாயில்லா மனிதர்கள்' பேரில் எழுதி வைத்திருக்கும், பண்ணையார் கதிர்வேல் பிள்ளை பெரிய சத்தத்துடன் பேசினார்.
"நாம பஞ்சபாண்டவர் மாதிரி ஒற்றுமையாய் இருந்தால் எந்தப் பய வாலாட்ட முடியும்? ஆண்டிப்பயல் கூட சட்டம் பேசுறான்னால் அது அவனோட வீரம் இல்ல! நம்மோட தெம்மாடித்தனம். செறுக்கி மவன ஆளு வச்சாவது கொல்லணும். கூலிப்பயலுவள இந்த சின்னான் பய வேற தூண்டி விடுறான். நேத்து என் முகத்துக்கு எதுருலேயே அந்தச் சேரிப் பய வீரபாகு, 'செத்த மாட்டை நாங்க தூக்கவும் மாட்டோம், தின்னவும் மாட்டோ'முன்னு சொல்றான். காலத்தைப் பாத்தியளா, அவனுவ பார்க்கிற விதமே சரியில்ல. இதுக்குல்லாம் நாமதான் காரணம். பரமசிவத்தை, ஆண்டியோட தனியா விட்டோம். அவன் ஜெயிலுக்குப் போவாம திரும்பும்படியா விட்டோம். இப்போ லேசா ஒவ்வொரு பயலும் ஆண்டிமாதிரி ஆகிக்கிட்டு வாரானுவ. அந்தப் பிச்சாண்டிப்பய ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி இப்போ மாசானத்தையே கடிக்கிறான்!"
மாசானம் பதறினார்: "என்னவாம்... என்னவாம்..."
"சரியான பயித்தியக்காரன் நீ! அந்தக் கண்ணு தெரியாத கிழவி கிட்ட வாங்கிப் போட்டியே வயலு. அந்த பிச்சாண்டிக்கிட்ட என்ன ரேட்டுக்குப் பேசி குத்தகைக்கு விட்ட?"
"பாதிக்குப் பாதி."
"பிச்சாண்டிப்பய, சர்க்கார் இப்போ போட்டிருக்கிற சட்டப்படி வெள்ளாமையில முக்கால் பங்கை எடுத்துக்கப் போறானாம். என் கிட்டேயே சொல்லுதான்."
"செருக்கி மவன செருப்பைக் கழட்டி அடிக்கப்..."
"வினையே ஒன்னாலதான் வந்தது; பரமசிவத்துக்கு வந்தது. இப்போ ஒனக்கும் வரப்போகுது."
பரமசிவம் பதறினார். "எனக்கு என்னய்யா வந்துட்டு? ஆண்டிப்பயன் எனக்கு எதிரியா? விசாரணைக்குக் கூப்புட்டதாலயே நான் குற்றவாளின்னு அர்த்தமா? பாத்துப்புடலாம்."
"நான் அதுக்காவச் சொல்லலவே! காலம் கலிகாலம். நேத்து சாணி பொறுக்குன பயலுவ கூட இப்போ சட்டம் பேசுற காலமாப் போச்சு. அதனால் நாம ஒற்றுமையா இருக்கணும். ஒருவருக்கு வார ஆபத்தை, எல்லாரும் தனக்கு வந்ததா நினைக்கணும். இல்லன்னால் நமக்குத்தான் வம்பு. ஏய், மாணிக்கம்! நம்ம மானேஜர் ஜம்புலிங்கம், ஒன்னை பள்ளிக்கூடத்தில் ஹெட்மாஸ்டராய் போட்டுருவாரு. இனிமேலாவது சும்மா இருப்பியா? சிரிக்கான் பாரு... புரியுதா..."
மாணிக்கம் புரிந்தவன் போல் ஏற்கெனவே தன்னை அணைத்துக் கொண்டிருந்த குமாரை தானும் அணைத்துக் கொண்டு சிரித்தான். பிறகு எல்லோரையும் பாசத்தோடு பார்த்தான்.
இந்தச் சமயத்தில் "எனக்கு ஒரு வழி சொல்லாட்டால் நானும் எல்லோரையும் இழுத்து விட வேண்டியது இருக்கும்" என்று சொல்லிக்கொண்டே கூட்டுறவுச் சங்கத் தலைவர் உள்லே வந்தார். ஊரில் ரகளை வரப்போவதற்கான ஒரு சம்பவத்தை சொல்லப் போனார்.
-----------
9
கூட்டுறவுச் சங்கத் தலைவரின் அநியாயமான கோபத்திற்கும் ஒரு நியாயம் இருந்தது. சங்கத்து உறுப்பினர்களில் முப்பது பேருக்கு ஒரு வங்கி, கறவை மாடு வாங்க, தலா மூவாயிரம் ரூபாய் வழங்க முன் வந்திருந்தது. அந்த வங்கியும் 'டார்ஜெட்டை' நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்ததால், சீக்கிரமாக லிஸ்டை அனுப்பும்படி சங்கத்தைக் கேட்க, கூட்டுறவுத் தலைவர் தன் உறவுக் கூட்டுக்குள் தூரமாகவும், பக்கமாகவும், இருந்த ஆறுபேரை லிஸ்டில் சேர்த்திருந்தார்.
ஆறு பேரில் நான்கு பேர் பால்மாட்டை நம்பத் தேவையில்லாத வாத்தியார்கள். இந்த ஆறு பேரும் சங்கத்தில் முறைப்படி உறுப்பினர்களாகச் சேருவதற்கு முன்னாலேயே இவர்கள் பெயர் லிஸ்டில் ஏறி, அந்த லிஸ்டு வங்கிக்குப் போய், 'டிராப்ட்டாக' மாறி, 'டிராப்ட் கறவை மாடுகளாகி, அந்த மாடுகளும், இவர்களது வீடுகளில் இறக்குமதியாயின. என்றாலும் என்னமோ தெரியவில்லை. மூன்று பசுமாடுகள் கொடுத்த ஒருவாரத்திற்குள் செத்தன. இப்போது ஒரு பசுமாடு சாகக் கிடக்கிறது. அது சாகவில்லையானாலும், மாட்டின் உரிமையாளர் அதை சாக அடித்துவிடுவார். ஏனெனில் இனிமேல் அது தேறினாலும் பால் தேறாது.
செத்த பசுக்களை வாங்கியவர்கள் கூட்டுறவுச் சங்கம் அனுப்பிய லிஸ்டில் இருந்தாலும் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேராமல் இருந்தவர்கள். இப்போது 'நான் உறுப்பினர் இல்லை. பசுமாட்டுக்குப் பணம் கட்ட முடியாது' என்கிறார்கள். மிஞ்சிக் கேட்டால், 'நீயும் வெட்னரி டாக்டரும் பங்கு போட்டது தெரியாதா... ஆயிரம் ரூபா மாட்டத்தான அநியாய விலைக்குத் தந்தியரு. நீரே கட்டும்' என்கிறார்கள்.
'எத்தனையோ பேரு மாட்டுக்குத் தவம் இருக்கையில நான் ஒங்களுக்குத் தந்தனடா' என்று தலைவர் 'தந்தனம்' பாடினால், 'அதுக்காவ செத்த மாட்டுக்குப் பணம் கட்ட முடியுமா... என்ன பேச்சுப் பேசிறியரு செத்த பேச்சு" என்றார் ஒருவர்.
"சகுனி, துரியோதரன... கூட இருந்தே கெடுத்தது மாதிரி நீரும் மாட்ட தருமுன்னாலேயே மாட்டிக்கணுமுன்னு ஊசி போட்டு தந்ததுலதான் மாடு செத்துப் போச்சு. நானும் யோசிச்சேன். மெம்பரா ஆவு முன்னாலேயே மாட்டத் தாரீயரேன்னு யோசிச்சேன். கடைசில நீரு வம்பரா இருந்திருக்கியரு. மாட்டுப்பாலு முப்பது ரூவாய்க்கு வித்திருக்கு. தீவனம் நாற்பது ரூபாய்க்குப் போட்டிருக்கேன். மீதி பத்து ரூபாய் கொடும்வே" என்று ஒருவர் 'கொடும்' பேச்சைக்கூடப் பேசிவிட்டார்.
தேள் கொட்டிய திருடன் கூட, கொட்டிய இடத்தைப் பிடித்துக் கொண்டு கசக்கலாம். ஆனால் எதையும் கசக்க முடியாமல், கசங்கிப் போன கூட்டுறவு சங்கத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் குழுமிய ஊர்ப் பிரமுகர்கள் கூட்டத்தில் முறையிட்டார். அங்கே அந்த 'நாலு பேரும்' இருந்தார்கள். 'மங்கள காரியம்' நடைபெறப் போகும்போது, 'தடிமாடுத்தனமாய்' பேசுறான் பார் என்று நினைத்தவர்கள் போல், பிரமுகர்கள் பேசாதிருந்த போது, கூட்டுறவுப் புதல்வர் குத்திக் குத்திப் பேசினார்.
"நம்மளோட சேர்ந்தவங்க பிழைக்கட்டுமேன்னு செஞ்சது தப்பாப் போச்சு. மானேஜரு பால் பவுடர விக்காரு. வாத்தியாருவ சம்பளத்துல பிடிக்காரு. வெளிலே தெரியல. கணக்கப்பிள்ளை நிலம் விக்கவன் கிட்டயும் வாங்குறவன் கிட்டயும் வாங்குறாரு. வெளில தெரியல. முன்ஸீப்பு நிலவரில, தலைக்கு ஐம்பது பைசா போடுறாரு. அது வெளிலயும் தெரியல. ரசீதுலயும் வரல. ஆனால் நான் மட்டும் மாட்டிக்கிட்டேன். ஏன்? ஏன் தெரியுமா? நீங்க ஒத்தயா செய்யுறிய. பிறத்தியாருக்கு பங்கு கொடுக்காம பண்ணுறிய. ஆனால் நான் இவங்க நாலு பேரு வீட்லயும் பசுமாடு சீதேவியாச்சே, இருக்கட்டுமுன்னு நினைச்சேன். கடைசில என்னை மூதேவியா ஆக்கிட்டாங்க.
"பால் குடுத்து பரோபகாரம் பண்ணுனவன் பல்லப் பிடிச்சிப் பாக்காங்க. பரவால்ல! நாளைக்கே ராஜினாமா பண்ணப் போறேன். ஆனால் அதுக்குள்ள நீங்கல்லாம் யார் யார் பெயருல மாடுகள வாங்கினியளோ அவங்ககிட்ட மருவாதியா மாடுகள கொடுத்துடணும். மாட்ட மட்டுமில்ல - டிராக்டரு, குதிரு, யந்திரக் கலப்பை எல்லாத்தையும் கொடுத்துடணும். இல்லன்னா நல்லா இல்ல - ஆமாம் நல்லா இல்ல. திருடும் போது சேர்ந்து திருடப்படாது என்கிறது சரியாப் போச்சு. என்ன யோசிக்கிய? பதில் சொல்லிட்டு காரியத்த கவனிங்க. ஆண்டியப்பனுக்கு அநியாயம் பண்ணுன எனக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்."
ஊர்ப்பிரமுகர்கள் அதிர்ந்து விட்டார்கள். கலைக்கப்பட்ட பஞ்சாயத்தின் முன்னாள் தலைவரான பரமசிவம் விழித்துக் கொண்டார். விரைவில் நடக்கப் போகும் விசாரணையில் இவரு கோளாறு பண்ணிட்டால், ஏற்கெனவே பஞ்சாயத்துத் தலைவர் என்பதை ப. (பழைய) தலைவர்னு சின்னான் பய சொல்லிக் கொடுத்து எல்லாப் பயலும் சொல்றாங்க. இதை இதுக்கு மேல் விடப்படாது. பரமசிவம் எழுந்து நின்று பேசினார்.
"அண்ணாச்சி நீ பேசுதது ஒனக்கே நல்லா இருக்கா? காய்ச்ச மரத்துலதான் கல்லெறி விழும். ஒன்ன நாங்க விட்டுக் கொடுப்போமா? இவங்க எங்க போயிடப் போறாங்க. நாம எங்க போயிடப் போறோம்?"
கூட்டுறவுச் சங்கத் தலைவரின் கோபம் ரெட்டிப்பானாலும், 'உலக மொறைக்காக' அந்த இடத்தில் அடக்கிக் கொண்டார்.
தாம்பாளத் தட்டுகளுடன் இருந்த மாப்பிள்ளைகளின் தந்தைமார்களிடம் "பன்னிரெண்டாயிரம் ரூபா இருக்கு, நல்லா எண்ணிக்கங்க" என்று ப. தலைவர் பரமசிவம் சொன்னபோது, அவர் அப்படிச் சொல்லும் முன்னாலேயே பணத்தை எண்ணிய மாசானமும், குமாரின் தந்தையும் லேசாக சிரித்தார்கள். குமாரும் மாசானத்தின் மைந்தனும் உள்ளே வீட்டுக்கதவில் ஒருவர் மேல் ஒருவராகச் சாய்ந்து கொண்டு மெய்மறக்க நின்ற வருங்கால மனைவிகளைப் பார்த்தார்கள்.
கூட்டுறவுச் சங்கத் தலைவர் மட்டும் 'பன்னிரண்டாயிரம்' என்றதும், 'ரிக்கார்ட்படி' தலா மூவாயிரம் மதிப்புள்ள செத்துப்போன நான்கு பசு மாடுகளை நினைத்துக் கொண்டார். பன்னிரெண்டாயிரத்துல ஒன்பதாயிரம் நம்ம தலையில விழுந்திடுமோ... மாடுவ செத்ததே செத்தது - இன்சூரன்ஸ் ஆன பிறவு செத்திருக்கப் படாதா... இல்லன்னா, இந்தப் பயலுவ மாட்ட வாங்கு முன்னால செத்திருக்கப்படாதா...
எப்படியோ நிச்சயதாம்பூலம் நிறைவு பெற்றதன் அறிகுறியாக, வாழை இழைகள் விரிக்கப்பட்டு, கேசரி வைக்கப்பட்டு, பொங்கல் போடப்பட்டு, இவை எல்லாம் தின்னப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்...
தரைப்பாயில் கிடந்த மீனாட்சி கண்ணில் பெருகிய நீரை, கைகளைத் தூக்கமுடியாமல் தூக்கித் துடைத்துக் கொண்டாள்.
அவள் மார்பிலுள்ள புண்ணில், நீர் கட்டி, ஏர் குடையும் நிலம் போல, அவள் மார்பகத்தைக் குடைந்து எடுத்தன. பிரசவ வலியைவிட பெருவலி. அழுகையை அடக்க முடியாத அரக்க வலி. ஒருவேளை டாக்டரிடம் போனால் தீரலாம். டாக்டர் டவுனில் இருக்கிறார். நேரமோ இரவு. அண்ணனிடமோ காசில்லை. மாணிக்கம் அடித்த 'பல்டியில்' அவன் சோர்ந்து போய் கிடக்கிறான். அவனிடம் எப்படிச் சொல்வது, சொல்லாமல் இந்த வலியை எப்படித் தாங்கிக் கொள்வது?
"காளியம்மா! ஒன்னையே கும்பிட்ட என்ன மார்புலயே சூலாயுதத்தால குத்துதியே. என்னை ஒரேயடியா கொல்லு. என்னைக் கொன்னு, என் அண்ணாச்சிக்குப் பலத்தக் கொடு. அய்யோ என்னால தாங்க முடியலியே! வலி தாங்க முடியலியே! அண்ணாச்சி... அண்ணாச்சி..."
வெளியே முகப்புத் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆண்டியப்பன் பதறியடித்து உள்ளே ஓடி வந்தான்.
"என்னம்மா எதுக்கு தாயி கூப்பிட்ட?"
மீனாட்சி பல்லைக் கடித்துக் கொண்டாள். அவன் முகத்தையும், அதில் இழையோடிய துயர ரேகையையும் கண்டதும், தன் மார்புவலியை விண்டுரைக்கக் கூடாது என்று நினைத்தவள் போல், ஊசிபோல் குத்திய குத்தலை, உடம்பு முழுவதையும் சுண்டியிழுக்கும் நரக வலியை சகித்துக் கொண்டாள். அண்ணாச்சி ஏற்கெனவே குழம்பி இருக்கான். நாளைக்கி திருநெல்வேலில நடக்கப்போற விசாரணைக்காவ யோசிச்சுக்கிட்டு இருப்பான். அதோட இந்த தங்கம்மா, அவன உயிரோட சாகடிச்சிட்டாள். நானும் அவன புதைச்சிடப்புடாது. என்னோட வேதனயச் சொல்லி அவன வேதனப்படுத்தப்படாது. என்ன ஆனாலும் சரி.
ஆண்டியப்பன் மீண்டும் ஏதோ கேட்கப் போனபோது குழந்தை அழுதது. அழுதது என்பதைவிட அழப் பார்த்தது. அழுவதற்கும் திராணி வேண்டாமா?
ஆண்டி குழந்தையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு முதுகைத் தட்டிக் கொடுத்தான். பிறகுதான் அதற்கு இரவு பால் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்தவன் போல், தங்கையைப் பார்த்து, "ஒனக்கு அறிவிருக்காழா... நான் தான் அது இதை நினச்சி மறந்துட்டேன்; நீயுமா..." என்று அவன் சொன்னபோது, 'எனக்குள்ள பால் இருந்தும் குழந்தைக்குக் கொடுக்க முடியல. ஒன் மனசுக்குள்ள நியாயம் இருந்தாலும் அது ஒனக்குக் கிடக்கலியே... அது மாதிரி' என்று நயத்துடன், சோகங்கரிக்கும் சுந்தர வாயால் சொல்லப் போனாள். முடியவில்லை. எழுந்த நாக்கை இழுக்க வைத்தது வலி.
ஆண்டியப்பன் குழந்தையைத் தோளில் வைத்துக் கொண்டே வீடு முழுக்கும் தேடினான். அடிக்களைப் பானைகள் மேலே இருந்த பரண், கீழே கிடந்த தகர டப்பா எங்கும், எதிலும் ஒரு இருபத்தைந்து பைசா கிடக்கவில்லை. இந்த லட்சணத்தில் நாளைக்கு திருநெல்வேலிக்குப் போகணும். பஸ் சார்ஜ், ஒரு ஆளுக்கு மட்டும் இரண்டு ரூபாய். அதுவும் போவதற்கு மட்டும். திடீரென்று அவன் மனத்தில் ஒரு ஆவேசம். பாளை அரிவாளுடன் பரமசிவம் வீட்டுக்குப் போய் மாட்டை அவிழ்த்துக் கொண்டு வரலாமா? வந்தால் மாடு வரும். இல்லையானால் உயிர் போகும். இந்த இரண்டில் ஒன்று வந்தாலும் சரி - இன்னொன்று போனாலும் சரி, லாபந்தான்.
ஏதோ ஒருவித சத்திய ஆவேசத்துடன், அவன் காசில்லாத தகர டப்பாவை கால்களால் தள்ளி, ஒரு பானையை உடைத்து, பாளை அரிவாளை எடுக்கப் போன போது, சின்னானின் அக்கா காத்தாயி வந்தாள். கடந்த ஒரு மாதமாக அவர்களின் கண்களில் அகப்படாதவள் தயங்கித் தயங்கி வந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
மீனாட்சி காத்தாயியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அதை நனைத்தாள். பழியை சுமந்து கொண்டு, அந்தப் பழியை மனிதாபிமானத்திற்காக உதறிக் கொண்டு வந்து நின்ற காத்தாயியை கண்கலங்கப் பார்த்தான் ஆண்டி. இவள் யாரோ... நான் யாரோ... இவள் ஜாதி வேற, என் ஜாதி வேற. சீ ஜாதி - மண்ணாங்கட்டி ஜாதி... தெருப்புழுதி ஜாதி. ஜாதியத் தூக்கி எருக்குழில போட - அதுக்குக் கொள்ளி வச்சு, குடமுடைக்க!
ஆண்டியப்பன் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு "அக்கா... என் கூடப் பொறக்காத பொறப்பே! ஒரு மாசமா எங்களைப் பார்க்காமல் எப்டிக்கா இருந்த? எப்டிக்கா மனசு வந்தது? எக்கா... எக்கா" என்று சொல்லிவிட்டு, அழுவது ஆண்பிள்ளைக்கு அழகில்லை என்று நினைத்தவன் போல் அவளைக் குழந்தையைப் போலவும், குழந்தை போலவும் பார்த்தான். காத்தாயி பதறினாள்.
"மொதலாளி என்ன வார்த்தப் பேசிப்புட்டீரு. இந்த அற்ப..."
"இந்தா பாரு, இனிமேலும் என்னை ஜாதிய நம்பச் சொன்னீயானா, எனக்குக் கெட்ட கோபந்தான் வரும். நீயும் பிச்சக்காரி, நானும் பிச்சைக்காரன். இதுல மொதலாளி பட்டம் எதுக்கு? நாம பட்டத்தைக் கேட்டுக் கேட்டே பட்டா நிலத்தக்கூட விட்டுட்டோம்."
"நீரு சொன்னவுடனே ஞாபகம் வருது. நீரு இருக்கிற இந்த வீடு பட்டா நிலம் இல்லியாம். புறம்போக்காம். வீட்டை பதினைஞ்சி நாளையில காலி பண்ணாவிட்டால், இடிப்பாங்களாம். தாசில்தார் நோட்டிஸ்ல கையெழுத்துப் போட்டுட்டாராம். நாளைக்கு ஒமக்கு வருமாம். சின்னான் சொன்னான். நான் இதைச் சொல்லத்தான் ஓடிவாரேன்!"
"அப்படியா! வரட்டும். இந்தப் போஸ்ட்மாஸ்டர், இந்த இதமட்டும் கிழிக்காம கொடுத்துடுவான். நோட்டீஸ் வரட்டும். அப்புறம் பார்த்துக்கிடலாம். இவன் ஒவ்வொருவனையும் சுவர்ல ஒட்டுற நோட்டீஸ கிழிக்கது மாதிரி கிழிக்கப் போறேன்!"
காத்தாயி, எந்தவிதப் பதிலும் பேசாமல், குழந்தைக்குப் பால் கொடுத்தாள். குழந்தை கால்களை துள்ளிக் கொண்டு, கைகளை ஆட்டிக்கொண்டது. பசு மாட்டின் மடுவை - முட்டிக் குடிக்குமே கன்றுக்குட்டி, அதுமாதிரி, பெறாமல் பெற்ற அந்தத் தாயின் கால்களை, தற்செயலாகத் தொடுவதுபோல், மீனாட்சி லேசாகப் பிடித்தாள். காத்தாயிக்கு, தெரியக்கூடாது என்பது மாதிரி.
பொழுது புலர்ந்தது.
ஆண்டியப்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை. இருபத்தைந்து பைசா கொடுத்து பால் வாங்க முடியாதவனால் நியாயத்தை எப்படி வாங்க முடியும்? நியாயத்தின் விலை அதிகமாயிற்றே! யோசித்தான். அதோடு இன்னொரு யோசனையும் வந்தது. மாட்டைப் பிடிச்சது மாமா. அவர் மண்ணோடு மண்ணாயிட்டாரு. சட்டப்படி, அவர் தான் முதல் எதிர். சட்டம் இல்லாதபடி, முதல் எதிரியான பரமசிவத்தின் பாதுகாப்பாக சட்டம் இருக்கலாம். மாமாவ அவமானப்படுத்தறது மாதுரி எதுக்காவ விவகாரத்தை இழுக்கணும்? அதோட நம்மளால சமாளிக்க முடியாது. எல்லாப் பயலும் கையை விட்டுட்டான். கையை விட்டால் பரவாயில்லை. அந்தக் கையை இன்னொரு பெண்ணோட கழுத்துல விடுறான். குருவி தலையில் பனங்காயை வச்சிட்டு, பனங்காட்டு நரி மாதுரி போயிட்டாங்க. நமக்கு வம்பு வேண்டாம். மாமாவோட, மாடும் செத்ததா நினைச்சிடலாம். மரம் வெட்டப் போவலாம். ஒழுங்கா தங்கச்சிக்கு சோறாவது போடலாம். மருமவப் பயலுக்கு பாலாவது கிடைக்கும்.
ஆண்டியப்பன் வீட்டை விட்டு வெளியே வந்தான். இன்று இளைஞர் நற்பணி மன்ற உதவித் தலைவன் கோபாலைக் கூட்டிக் கொண்டு, நெல்லை போவதாக ஏற்பாடு. நெல்லையும் வேண்டாம் தொல்லையும் வேண்டாம். பட்டது போதும் சாமி!
கோபாலைப் பார்த்து தன் புதிய முடிவைச் சொல்வதற்காகப் புறப்பட்ட ஆண்டியப்பன், தலையைத் தடவிக் கொண்டே நடந்தான். எதிரே தங்கம்மா வந்து கொண்டிருந்தாள். அழுக்கடைந்த புடவை, சிக்கல் விழுந்த தலைமுடி, எங்கேயோ பார்க்கும் கண்கள், தள்ளாடிக் கொண்டே நடந்த அவளைப் பார்க்க, ஆண்டிக்கே பரிதாபமாக இருந்தது.
"என்ன தங்கம் இப்படி ஆயிட்ட?"
"எங்க இப்படி?"
"இன்னைக்கி திருநெல்வேலி போகணும். யோசிச்சுப் பார்த்தேன். மாமனே செத்துட்டாரு. அவரு பிடிச்ச மாடா பெரிசு. அதோட என்னால தனியா நிக்க முடியாது. நீ எப்போ என்கிட்ட பேசுறத நிறுத்திட்டியோ அப்பவே மனசுக்குள்ள பேசிக்கிட்டிருந்த நியாயமும், படிப்படியா பேசுறத நிறுத்திட்டு. கோபாலப் பார்த்து விவகாரத்தை விட்டுடலாமுன்னு சொல்லப் போறேன். வரட்டுமா? வந்து மரம் வெட்டப் போகணும்."
தங்கம்மா, அவனை நிமிர்ந்து பார்த்தாள். கலங்கிய கண்களில் ஒருவித ஒளி! இருட்டின வீட்டில் வைத்த மெழுகுவர்த்தி போல் - தன்னையே எரித்து ஒளிமயமாக்குவது போல் கண்கள் செம்மைப்பட்டன. வாய் தானாகப் பேசியது.
"நியாயம் இப்போ கூன்பட்டு கிடக்கு. அந்த கூனை நிமுத்துறதுக்கு, நாம வளஞ்சிதான் ஆகணும். அப்படி வளையும்போது முதுகு வலிக்கும். அதப் பார்க்கப்படாது. நாம நியாயத்த நிமுத்துற வேகத்துல அந்த நியாயம் நிமுறலாம். அது நிமுறுற வேகத்துல நம்மளக்கூட தூர வீசி அடிக்கலாம். அதுக்குக் கவலைப்படப்படாது. எங்கய்யா எனக்கு நான் சாவுறது வரைக்கும் தெய்வம். ஆனால், மாட்டு விவகாரத்துல அவரு ஒரு குற்றவாளி. அவரு மாட்டைப் பிடிச்சதுக்கு நான் வேணுமுன்னாலும் சாட்சி சொல்றதுக்கு வரத் தயாரு! என்னோட அத்தான் எனக்கு புருஷனா வரப்படாதுன்னு தீர்மானம் பண்ணுன பாவிதான் நான். ஆனால், அவரு நாணயத்துக்காவ போராடுனவர்னு ஜனங்க சொல்லணுமுன்னு நினைக்கேன். அவரவிட அவரு வச்சிருக்கிற நியாயம் ஜெயிக்கணும். இல்லன்னா நான் உயிரோட இருக்கதுல நியாயமில்ல. வரட்டுமா? கையிலே ரெண்டு ரூபா இருக்கு. தரட்டுமா? நீரு கைத்தொட்டு வாங்காண்டாம். தரையில வச்சிடுதேன் எடுத்துக்கிடும்."
ஆண்டி, தங்கம்மாவை வியப்போடும் தவிப்போடும் பார்த்தான்.
அவளே, தன்னைச் சுற்றி ஒரு வேலியை, அவன் தாண்ட முடியாத அளவுக்குப் போட்டுக் கொண்டாள். அந்த முள்வேலி பட்டு இரத்தம் வரக்கூடாது என்பதற்காக, ஒதுங்கிக் கொள்ளும் வகையில், அவன் மண்வெட்டியைத் தரையில் வைத்தான். அதை, இப்போது ஏன் குத்திக் காட்டுகிறாள்?
ஆவலோடு பார்த்தவன், அவளின் கண்கள் செத்துப் போனது போலவும், காதல் அதனுடன் உடன்கட்டை ஏறியது போலவும் தோன்றியதைப் புரிந்து கொண்டான். இவள் பழைய தங்கம்மா இல்லை; அவள் செத்துட்டாள்... செத்துட்டாள். அவள் செத்ததுனால நானும் செத்துக்கிட்டே இருக்கேன்.
தன்னையே, தானே, சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போகிறவன் போல், அவன் ஆவேசமாக நடந்தான்.
---------------
10
'முத்துசாமி உயர்நிலை ஆரம்பப் பள்ளிக்கூடம்' என்று போர்ட் பெரிதாக இருந்தாலும், அந்தப் பள்ளிக்கூடத்தின் பெஞ்சுகள், கையிழந்து காலிழந்து கிடந்தாலும் பரவாயில்லை. பெரும்பாலான ஆசிரியர்களும், உறுப்புக் குறைவு இல்லாமலே, ஊனமாகக் கிடக்கிறார்கள். ஒரு வகுப்புக்கும், இன்னொரு வகுப்புக்கும் இடையே இருந்த ஓலைத் தட்டியில் கம்புகள் இருந்தனவே தவிர, காய்ந்து போன ஒரு தென்னந்தட்டி கூடக் கிடையாது. ஒன்றாவது வகுப்பில் படிக்கிற பயல்கள், பாடத்தைக் கவனிக்காமல், இரண்டாவது வகுப்பில் பிரம்பால் அடிபடும் பையன்களை ரசனை கலந்த அச்சத்தோடு பார்ப்பார்கள். ஐந்தாவது வகுப்பு ஆசிரியர் 'முதல் பானிபட் போர் எப்போண்டா நடந்தது?' என்று கேட்கும் போது, ஆறாவது வகுப்பில் படிக்கும் பையன்கள் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' என்ற ஔவையார் பாட்டை ஒப்பாரி வைப்பார்கள். அந்த ஒப்பாரி, முதல் பானிபட் போரில் அடிபட்டுக் கிடந்தவர்களின் கூப்பாடு மாதிரி, ஐந்தாவது வகுப்பில் கேள்வி கேட்ட ஆசிரியருக்குப் பதிலாக வரும். பயல்களுக்கு, பதிலளிக்க வேண்டிய அவசியமிருக்காது. இதுபோல், ஏழாவது வகுப்பில் 'எழுவாய் என்றால், என்னவென்றால் எழுவாய்' என்று ஒரு ஆசிரியர், திக்கித் திணறிப் பாடஞ்ச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, எட்டாவது வகுப்பு மாணவர்கள், ஆசிரியர் தங்களைத்தான் எழுந்திருக்கச் சொல்கிறார் என்று நினைத்து, இடுப்பு நிஜார்களைப் பிடித்துக் கொண்டே நிற்பார்கள். இப்படி 'நெருக்கமான' பள்ளிக்கூடம் அது. நூறு மாணவர்களுக்காகக் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தில், ஐந்து வகுப்புகளுக்காகக் கட்டப்பட்ட அந்தப் பாடாதிக் கட்டடத்தில், இப்போது ஐந்நூறு மாணவர்கள்; எட்டு வகுப்புகள். இந்த இலட்சணத்தில் ஒரு சில வகுப்புகளுக்குப் பல செக்ஷன்கள்.
இவ்வளவுக்கும் மானேஜர் ஜம்புலிங்கம், புதிய கட்டடம் கட்டியிருப்பதாகவும், பீரோ, விஞ்ஞானக் கருவிகள், சாய்வுப் பெஞ்சுகள் இருப்பதாகவும் கணக்குக் காட்டி, அரசாங்கத்திடம் இருந்து 'கிராண்ட்' வாங்குகிறவர். ஆகையால், தமது சுழல் நாற்காலி சிம்மாசனத்தில் 'கிராண்டாக' உட்கார்ந்து கொண்டு, இரண்டு ரிஜிஸ்டர்களைக் கையிலேந்திக் கொண்டிருந்த கண்ணாடி ஆசிரியை ஒருத்தியை விளாசிக் கொண்டிருந்தார்.
"ஏம்மா, கொஞ்சமாவது ஒனக்கு புத்தியிருக்கா?"
அந்த ஆசிரியை அவரை நிமிர்ந்து பார்க்காமலே, மருவினார். இந்த ஜம்புலிங்கத்திற்கும், பாடஞ் சொல்லிக் கொடுத்தவர் அந்தப் பெண்மணி. அப்போது, இவரது அப்பாவும், முத்துச்சாமியின் மகனுமான தங்கச்சாமி மானேஜர். ஜம்புலிங்கத்திற்கு, அரிச்சுவடி சொல்லிக் கொடுத்ததே, இந்தக் கண்ணாடி ஆசிரியைதான். புத்தியிருக்கான்னு கேக்குறான். அதுவும், 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று சொல்லிக் கொடுத்த ஆசிரியையிடமே! கண்ணாடி ஆசிரியையான அந்த குருவுக்கு, இப்போது தெய்வமாக விளங்கும் ஜம்புலிங்கம், ரிஜிஸ்டர்களைப் பிடுங்கிக் கொண்டு, பக்கங்களைப் புரட்டிக்கொண்டே, ஆள்காட்டி விரலால் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்:
"ஏம்மா, மாடக்கண்ணுக்கு வகுப்பு அட்டெண்டென்ஸ் ரிஜிஸ்டர்ல ஆப்ஸண்ட் போட்டிருக்கிங்க. அதே சமயம் நண்பகல் உணவு ரிஜிஸ்டர்ல பிரஸண்ட் போட்டிருக்கிங்க. வகுப்புக்கு வராம அவன் எப்படி சாப்பிட முடியும்?"
ஆசிரியை மென்று விழுங்கினார். 'பேப்பர்ல சாப்பாடு போடுறபோது வராதவன், சாப்பிட்டிருப்பான். போடாத சாப்பாட்டுக்கு, வராதவன் வந்தா என்னப்பா' என்று கேட்டுப் பார்ப்பதுபோல் கற்பனை செய்து கொண்டார். அறுக்கப் படுகிற ஆடு மாதிரி மானேஜரை பரிதாபமாகப் பார்த்தார். ஜம்புலிங்கம் நாற்காலியில் இருந்து சிறிது 'ஜம்ப்' செய்து கொண்டே தீர்ப்பளித்தார்.
"வகுப்புக்கு வாரவன சாப்பிடாதவனா காட்டுனால் ஒண்ணுமில்ல. வராதவன வந்தவனா காட்டுனா பெரிய தப்புமா."
"எப்போதாவது சாப்பாடு போட்டிருந்தாதான இந்த இழவு தெரியும்."
வாய்தவறி வார்த்தையை விட்டுவிட்ட ஆசிரியை, மானேஜரை, வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் பார்ப்பது போல் பரிதாபமாகப் பார்த்தார். அதிர்ந்து போன ஜம்புலிங்கம், சிறிது நேரம் தன் முந்நாளைய குருவைக் கூர்ந்து பார்த்தார். நிதானமாகக் கேட்டார்:
"ஒங்களுக்கு ரிட்டயர்ட் ஆக எத்தனை வருஷம் இருக்கு டீச்சர்?"
ஆசிரியை, ஆபத்தைப் புரிந்து கொண்டார். ஜம்புலிங்கம் யாரையும் மரியாதையாக அழைக்கிறார் என்றால், அது ஆபத்து. ஆசிரியை, அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டவாறே, "வயசாக வயசாக எனக்கு மூளை குழம்பிப் போயிட்டுது. நீங்க தான் பெரிய மனசு பண்ணி..."
ஆசிரியை மேற்கொண்டு பேச முடியாமல் திணறிய போது, மானேஜர் மேஜையில் இருந்த 'பேப்பர் வெயிட்டை' உருட்டிக் கொண்டே, மௌனமாக இருந்தார். ஐந்து நிமிடம் வரைக்கும், அவரிடம் நல்வாக்கை எதிர்பார்த்து நின்ற கண்ணாடி ஆசிரியை, மருவிக் கொண்டே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே, நடந்தார். அப்படி அவர் இறுதியாகத் திரும்பிய போது, "இடும்பன்சாமிய வரச் சொல்லுங்க. நீங்க எப்படிப் போட்டாலும் கவலைப்பட மாட்டேன். மிஞ்சி மிஞ்சிப் போனால், டெப்டி இன்ஸ்பெக்டருக்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கும். அவ்வளவுதான். சரி, போய் இடும்பன்சாமியை வரச் சொல்லுங்க" என்றார்.
கண்ணாடி ஆசிரியை, காலில் கண்ணாடி குத்திவிட்டதுபோல் துடித்துக் கொண்டே நடந்தார். இடும்பன்சாமியைக் கூப்புடுறானே - டிஸ்மிஸ் ஆனால் பென்ஷன் கிடைக்காதே!
கண்ணாடி ஆசிரியை சொன்னதும், இடும்பன்சாமி, மானேஜரின் அறைக்குள் வந்தார். இந்த சாமிக்கு நாற்பத்தைந்து வயது. ஆஜானுபாகுவான தோற்றம். இடும்பன், மலைகளைத் தூக்கினான் என்றால், இவர் ஜம்புலிங்கம் சார்பில், தென்காசிக்கு, பால்பவுடர் டின்களையும், கோதுமை மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு போகிறவர். அந்தக் காலத்தில் 'சிலம்பு' விளையாடியவர்.
"கூப்பிட்டிங்களா... மீசைக்காரன் வண்டி போவுது. கோதும மூட்டய ஏத்தட்டுமா? சின்னான் பய ஊர்ல இல்ல."
ஜம்புலிங்கம், அவரை உட்காரும்படி சைகை செய்தார். அதற்கு முன்பாகவே சாமி உட்கார்ந்தார். உச்சி வெயில், 'சிலபஸ்', ஆண்டியப்பன், சின்னான், டெப்டி இன்ஸ்பெக்டர் முதலியவர்களைப் பற்றிப் பேசிவிட்டு, கூட்டுறவு விவகாரத்தை ஜம்புலிங்கம் 'தற்செயலாகக்' கேட்பவர் போல் கேட்டார்.
"ஆமாஞ் சாமி, நீரு கூட்டுறவுத் தலைவர் கிட்டே ஏதோ தகராறு பண்ணுனியராம்..."
"நான் பண்ணல. அவருதான் பண்ணாரு. செத்த மாட்டுக்கு எவன் ரூபா கொடுப்பான்?"
"வாங்கும் போது சாகல இல்லா?"
"மாடு வாங்கும் போது சாகல. நான் உறுப்பினராயும் ஆகல. சட்டப்படி அவரு என்ன செய்யணுமோ செய்துக்கட்டும்!"
"அப்படிச் சொன்னா எப்படி? ஒமக்காவ எங்க பெரியய்யா மகன் நஷ்டப்பட முடியுமா? நீரு சொல்லுதல ஒரு நியாயம் இருக்காண்டாமா?"
"பின்ன என்ன... அந்த கருமயில, இவன், கன்னையா கிட்ட இருக்கே, அந்த மாட்ட கேட்டேன். அது இப்போ கல்லு மாதிரி இருக்கு. கேட்ட மாட்ட தராம, கேளாத மாட்ட தந்தாரு. திட்டம் போட்டே சாவுற மாட்ட தந்துட்டாரு."
"அவரு அப்படி நினைச்சிருந்தா, ஒமக்கு சட்ட விரோதமா தந்திருப்பாரா? எப்படியோ நேரு சீரா போகணும்."
"நேரு சீருன்னா?"
"பணத்தைக் கட்டணும்."
"சொல்லப்போனால், அவரு தான் மாட்டுக்குப் புண்ணாக்கு வாங்கிப் போட்டதுக்குக் காசு தரணும்."
"கடைசியா நீரு என்ன சொல்றீயரு?"
"நீங்க என்ன சொல்றிய?"
"பணத்தக் கட்டுமுன்னு சொல்லுதேன்!"
"கட்ட முடியாதுன்னு சொல்லுதேன்!"
"நான் சொன்னாக்கூடவா?"
"கடவுளே சொன்னாலும்..."
"இந்தப் பாரும்... இது நல்லா இல்ல!"
"சரி. வேற பேச்சுப் பேசலாம்."
"ஏன்?"
"இது ஒங்களுக்கு சம்பந்தமில்லாத பேச்சு."
"சம்பந்தம் இருக்கு. நீரு கோலத்துக்குள்ள குதிச்சா, நான் புள்ளிக்குள்ள குதிப்பேன். கூட்டுறவு சங்கத்தில மெம்பர் ஆகாமலே கடன் வாங்கி, சர்க்கார ஏமாத்தி, மோசடி செய்ததுக்காக, மானேஜர் என்கிற முறையில ஒம்மை நான் சஸ்பெண்ட் பண்ணலாம், தெரியுமா?"
"பொய் சர்டிபிக்கட் கொடுத்தது - இருந்த 'பீ.ஸீய' கிழிச்சிப் போட்டது - கோதுமய வித்தது - பால் பவுடர டீக் கடைக்கு வித்தது - இவ்வளவையும் நான் எழுதிப் போடலாம் தெரியுமா?"
"சரி, நீரு ஒம்மால ஆனதப் பாரும்! நான் என்னால ஆனத பாக்கிறேன்!"
"இப்பவேயா? அப்புறமா? எப்போன்னாலும் நான் ரெடி!"
ஜம்புலிங்கமும், இடும்பன்சாமியும் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டார்கள். யார் முதலில் கண்ணை எடுப்பது என்ற போட்டியில், விழியாடாமல் விழி விலகாமல் பார்த்தார்கள். அந்தச் சமயத்தில், ஒரு இளம் ஆசிரியை அங்கே வந்தாள். "இதயும் எழுதிப் போடுறேன். இங்க பள்ளிக்கூடத்துக்குப் பதிலா தேவதயா குடி நடக்கும்" என்று சொல்லிக் கொண்டே இடும்பன்சாமி வெளியேறினார்.
இடும்பன்சாமியை, எல்லா ஆசிரியர்களும் மொய்த்துக் கொண்டார்கள். 'அவன் ஆம்புளன்னா சஸ்பெண்ட் பண்ணிப் பார்க்கட்டும்' என்று இடும்பன்சாமி விடுத்த சவால் மூச்சு, ஜம்புலிங்கத்திற்கு நன்றாகக் கேட்டது. சும்மா சஸ்பெண்ட் என்று மிரட்டிப் பார்க்க நினைத்த மானேஜர், இப்போது பெரியப்பா மகனான கூட்டுறவுத் தலைவருக்கு மாட்டுப் பணம் கிடைக்க வேண்டும் என்பதைவிட, தான் ஆம்பிளை என்பதை நிரூபிப்பதற்காக, வேறு வழியில்லாமல், ஒரு காகிதத்தை எடுத்து எழுதினார். தப்பு. எழுதியது அந்த இளம் ஆசிரியை. கையெழுத்துப் போட்டது ஜம்புலிங்கம். கொடுக்கப் போனது பியூன்.
இடும்பன்சாமி சஸ்பெண்ட் காகிதத்தை கையில் வைத்துக் கொண்டே ஜம்புலிங்கத்திடம் வந்தார். கால் கையெல்லாம் ஆடியது. கர்ஜித்தார்.
"முதல்ல, என்கிட்ட நீங்க விளக்கம் கேக்கணும். அப்புறம்தான் சஸ்பெண்ட் பண்ண முடியும். சட்டந் தெரியாத பயலுவ மானேஜரா வந்தா..."
"யோவ்... மரியாதி கொடுத்து மரியாதி வாங்கு! நான் பண்ண வேண்டியத பண்ணிட்டேன்! நீ இனிமே செய்ய வேண்டியத செய்துக்க!"
இடும்பன்சாமி 'செய்ய வேண்டியதைச்' செய்தார். நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஜம்புவின் தலையைப் பிடித்துக் கொண்டு, மேஜையிலே குத்தினார். மேஜை கீழே விழுந்தது. அதற்குமேல் மானேஜர் விழுந்தார். இடும்பன்சாமி விடவில்லை. ஜம்புலிங்கத்தின் இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு, அந்தரங்கத்திற்குக் கொண்டு வந்தார்.
இதற்குள் சத்தங் கேட்டு, ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். மானேஜர், பள்ளிக்கூடத்தை 'குடும்பப் பாசத்தோடு' நடத்துபவர். ஆகையால் அவரது நெருங்கிய உறவினர்களான பல ஆசிரியர்கள், இடும்பன்சாமியின் இடுப்பில் கால்களை வைத்தார்கள். இது, உறவினரல்லாத ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை. பலர் குரலிட்டனர்.
"அவங்க சண்டைய விலக்கித் தீர்க்காம, இடும்பன எதுக்குய்யா அடிக்கிய?"
"ஏய், அருணாசலம்... இடும்பன விடுறியா... ஒன் இடுப்ப ஒடிக்கட்டுமா?"
"அவன் எப்படிய்யா எங்க மச்சான அடிக்கலாம்?"
"ஒங்க மச்சான் எப்படிய்யா அவர சஸ்பெண்ட் பண்ணலாம்? வாத்தியார்னா கிள்ளுக்கீரையோ? எப்டிய்யா சஸ்பெண்ட் பண்ணலாம்?"
இடும்பன்சாமி, இடுப்பைத் தடவிவிட்டுக் கொண்டே, தன் பக்கம் பேசிய ஆசிரியர் குழாத்தின் மத்தியில் நின்று கொண்டார். ஒரு ஆசிரியர், "இப்பவே நம்ம மாநில செகரட்டரிக்குத் தந்தி அடிக்கணும். இவரு வகுப்புக்குப் போகாம நாம போகப் போறதில்ல. பார்த்திடலாம்."
கண்ணாடி ஆசிரியை, கீழே இருந்து இன்னும் எழுந்திருக்காத ஜம்புலிங்கத்தைப் பார்த்தார். "வரவர சின்னவங்க பெரியவங்க என்கிற மரியாத இல்லாமப் போயிட்டு" என்றார் பொதுப்படையாக. கழுத்தில் கிடந்த சிலுவைக் குறியைத் தொட்டு, இயேசுநாதருக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
இதற்குள் ஊர்க்காரர்கள், அங்கே கூடிவிட்டார்கள். இடும்பன்சாமியும் சொந்தபந்தம் உள்ளவர். ஆள்பலம் ஓரளவு உள்ளவர். ஆகையால் ஊர்க்காரர்கள், இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்தார்கள். பெரிய கோஷ்டி ஜம்புவிற்கு' 'ஜே' போட்டது. சின்னது இடும்பனுக்கு.
"சஸ்பெண்ட் வாபஸ் வாங்காட்டா பள்ளிக்கூடம் நடக்காது."
"பள்ளிக்கூடம் நடக்காட்டால் ஊர் இருக்காது."
இதற்குள் கூட்டுறவுத் தலைவர் ஓடிவந்தார். ஜம்புலிங்கத்தின் கை கால் இரண்டையும் பிடித்துக் கொண்டே, "அப்பா புண்ணியவான், பங்காளி வீட்ல தீப்பிடிக்கும் போது, காலக் கட்டி அழுத கதையா பண்ணிட்டியே! இரகசியமா தீர்க்க வேண்டிய விவகாரத்த சஸ்பெண்ட் பண்ணி பெரிசாக்கி, என்னையும் நடுத் தெருவுக்குக் கொண்டு வந்துட்ட... இப்ப ஒனக்குத் திருப்திதானே" என்றார்.
ஜம்புலிங்கம் வெளுத்துப் போனார். பெரியய்யா மகனா இவன்? இவனுக்காக நான் சஸ்பெண்டும் செய்து, உதையும் தின்னுருக்கேன் - நன்றியில்லாமப் பேசறான் பாரு...
ஒரு மணி நேரத்திற்குள் போலீஸ் வந்தது. இடும்பன்சாமியை இழுத்தார்கள். எதிர்ப்புத் தெரிவித்த சக ஆசிரியர்கள் இருவரையும், சின்னக் கோஷ்டியின் மூன்று ஆசாமிகளையும் ஜீப்புக்குள் போட்டார்கள். ஊரில், சில பகுதிகளில் 'கெட்ட வார்த்தைகள்' திட்டுத் திட்டாகக் கேட்டன.
-------------
11
சாமக்கோழி கூவிய சமயம்.
பிச்சாண்டியும், இன்னும் நான்கைந்து பேர்களும், மாசானம், 'கண்ணு தெரியாத' கிழவிகிட்ட வாங்கிப் போட்ட வயலில், பன்னருவாளும் கையுமாக நின்றார்கள். வயல், நெற்பயிர்களாலும், நெற்பயிர்கள் நெல் மணிகளாலும் மோனமாகப் பேசிக் கொண்டிருந்தன. பிச்சாண்டிக்கு, பெயருக்கேற்ற அளவுக்குத்தான் சொத்து. அதுவும் புஞ்சை. மானாமாரி கிணற்றை நம்பும் மங்கலமில்லாத காடு. அதனால் தான், மாசானம் நிலத்தை குத்தகைக்கு எடுத்தான். முப்பது வயதிருக்கும். கல்யாணம் ஆனபிறகுதான், தனக்கும் பணம் வேண்டுமென்று நினைத்தான். மாசானத்திடம் வயலைக் கேட்டபோது, அவரும் தட்டாமல் கொடுத்தார். குத்தகை ரேட்டுப் பேசவில்லை. பேச வேண்டிய அவசியமிருப்பதாக இருவரும் நினைக்கவில்லை.
பன்னருவாளுடன் அவனும், அவன் ஆட்களும் குலை சாய்க்க நுழைந்தபோது, மாசானம், காண்டிராக்ட் ஆட்களுடனும், குமாரின் சொந்தக்காரர்களுடனும், அங்கே வந்தார். ஒவ்வொருவரும் வேல்கம்பு வைத்திருந்தார்கள். ஒரு சிலரிடம் பன்னருவாட்கள் வேறு. கதிர்வேல் பிள்ளை கைங்கர்யம்!
பிச்சாண்டி அப்பாவித்தனமாகக் கேட்டான்:
"என்ன மாமா! வேட்டைக்குப் போறியளா?"
மாசானம், தன் கையாட்களை யோசித்துப் பார்த்து, சமரச சன்மார்க்க சீலத்திற்கு வந்துவிடக்கூடாதே என்பதற்காக, அவர் எடுத்த எடுப்பே பெரிய எடுப்பு.
"வயலுக்குள்ள போவாத..."
"ஏன் மாமா?"
"போவாதன்னா போவாத!"
"ஏன் மாமா?"
"கதிர்வேல் பிள்ளகிட்ட என்ன சொன்ன?"
"ஒண்ணுஞ் சொல்லலியே!"
"வெள்ளாமையில முக்கால்வாசி ஒனக்குன்னு சொல்லல?"
"ஆமாம், சொன்னேன். நாற்பது அறுபதுன்னு இருந்தத சர்க்கார் எழுபத்தஞ்சு - இருபத்தஞ்சுன்னு போட்டிருக்கு. வேணுமுன்னால் கிராம சேவக்கக் கேட்டுப் பாரும்."
"நான் எதுக்குல கேக்கணும் - செறுக்கி மவன."
"மாமா, வார்த்தய விடாதயும்."
"ஏமுல விடமாட்டேன்? பாதிக்குப் பாதின்னு எல்லாரும் பயிரிடயில, ஒனக்கு மட்டும் கொம்பால முளைச்சிருக்கு?"
"ஆமாமா உரிம என்கிற கொம்பு இப்ப முளைச்சிருக்கு."
"இந்தக் கொம்ப சீவிவிட்ட சின்னான் பயலயும் சீவுறனா இல்லியான்னு பாரு. இந்தா பேச்சிமுத்து, காடசாமி, வயல அறுங்கப்பா - தேவடியாமவன் என்ன பண்ணுதான்னு பாப்போம்!"
பிச்சாண்டிக்கு அதற்குமேல் தாள முடியவில்லை.
"வயலுல இறங்குனா கொல நடக்கும்!"
பிச்சாண்டி சொல்லி முடிக்குமுன்பே, இரண்டு பேர், அவனை விலாவில் குத்தினார்கள். பிச்சாண்டியின் ஆட்களில் பாதிப்பேர் ஓடிவிட்டார்கள். மீதிப்பேர் பன்னருவாட்களை தூக்குவதற்கு முன்பே வேல்கம்புகளால் குத்தப்பட்டார்கள். பிச்சாண்டியையும், எஞ்சிய ஐவரையும் இழுத்துக் கொண்டு போய், அருகே இருந்த தென்னை மரங்களில் கட்டிவைத்தார்கள். பிச்சாண்டி தான் பயிரிட்ட வயலில், தான் விதைத்த நெல்லை, மாசானம் ஆட்கள் அறுப்பதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னையே அறுப்பது போல் அவன் துடித்தான். இருட்டில் கண்மூடி திறப்பதற்குள், நடந்துவிட்ட கதை. அக்கம் பக்கத்து வயல்களுக்கு ஆட்களே வரவில்லை.
பொழுது விடிந்த போது, நெற்பயிர் கட்டுக் கட்டாக கட்டப்பட்டு, குளத்தங்கரைக்குக் கொண்டு போகப்பட்டது. பிச்சாண்டியால் பிரமிப்பில் இருந்து விடுபட முடியவில்லை. இப்படியும் நடக்குமா... இப்படியும் நடக்குமா?
இதற்குள், கருப்பட்டி காபி போட்டு அதை ஈயப் பாத்திரத்தில் கொண்டு வந்த அவன் மனைவி, புருஷனைப் பார்த்துவிட்டு, 'கோ'வென்று கதறினாள். அவனைக் கட்டிப்பிடித்து அழுதாள். அவள் அழுதபோதும், பொழுது முழுதாகப் புலராத சமயம்.
சத்தங்கேட்டு, அக்கம் பக்கத்தில் வயல் வேலைக்காக வந்திருந்தவர்கள், யாரோ கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக நினைத்து, அங்கே ஓடி வந்தார்கள். வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஹரிஜன விவசாயக் கூலிகள். பிச்சாண்டியையும், அவன் தோழர்களையும் கட்டுகளை அவிழ்த்து விட்டார்கள். அந்த அறுவரும் குன்னிப்போய் நின்றார்கள்.
ஒரு ஹரிஜன விவசாயக் கூலி அதட்டினான். இன்னொருவன் சின்னானைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக ஓடினான்.
"என்ன மாசானம் மொதலாளி, நீரு பண்ணுனது நல்லதுக்கா, இல்ல கெட்டதுக்கா?"
"நீ எப்டி எடுத்துக்கிட்டாலும் சரிதான்."
"எதுக்குய்ய அவங்களை மரத்திலே கட்டிவச்சியரு?"
"அவங்ககிட்டயே கேளும்."
"மொதலாளி இப்டிப் பேசப்படாது. அப்புறம் தங்கப்பல்லு கட்ட வேண்டியதிருக்கும்."
"ஏல பறப்பயல..."
ஒரு 'ஜாதி' விவசாயக் கூலி, மாசானத்துக்குப் பதிலளித்தான்.
"பறப்பய கிறப்பயன்னு பேசுனா, பல்ல ஒடச்சி கையில கொடுப்பேன்! எதுக்குவே அவங்கள கட்டி வச்சியரு? ஏண்டா, கூலிப்பயலுவளா - நாளைக்கி ஒங்களையும் இவன் இப்டி கட்டி வைக்கமாட்டான் என்கிறது என்ன நிச்சயம்? ஒங்க கண்ணையே நீங்க குத்திக்கலாமாடா?"
மாசானம் ஆட்கள் கைகலப்புக்குத் தயாராக வேல் கம்புகளைத் தரையில் குத்திப் பார்த்தார்கள். ஆனால் மாசானம் விட்டுக் கொடுப்பது போல் பேசினார். கோர்ட் வழக்குன்னு எவன் அலைவான். இவனுகள குளோஸ் பண்றது தெரியாம பண்ணனும். சிமெண்ட்ல கலக்கது தெரியாம கலக்கது மாதுரி.
"நான் மாடா ஒழைத்து, இந்த நிலத்த வாங்கிப் போட்டிருக்கேன். கடன் வாங்கி நிலம் வாங்கியிருக்கேன். வாங்குன கடனுக்கு வட்டிகூட கொடுக்க முடியல. இவன் வெள்ளாமையில முக்கால்வாசி கேக்கான். நியாயமா? நீங்க சொல்லுங்க! ஏல, வேல் கம்புவள கீழ போடுங்கல. பயித்தியக்காரப் பய மவனுவளா... சொல்லுங்கப்பா..."
"நியாயமோ, அநியாயமோ? நீரு எப்டி அவங்களை கட்டி வைக்கலாம்?"
நிலைமையை எப்படிச் சமாளிக்கலாம் என்று மாசானம் யோசித்துக் கொண்டிருந்த போது, குமாரும், மாணிக்கமும் வந்து, மாசானம் பக்கத்தில் வந்து நின்று கொண்டார்கள். பரமசிவமும், ஜம்புலிங்கமும், கதிர்வேல் பிள்ளையும் கூடிவிட்டார்கள். சின்னான், நான்கைந்து சேரி ஆட்களுடன் அங்கே வந்தான்.
பிச்சாண்டிக்கு, குமாரைப் பார்த்ததும், தன் தம்பியைப் பார்ப்பது போல் இருந்தது. படித்த பையன். வார்த்தைக்கு வார்த்தை, 'சித்தப்பா சித்தப்பா' என்பவன். ஒரு தடவை, 'ஒரு நல்ல சிலாக் சட்டயா வாங்கிப் போடும் சித்தப்பா' என்று சொன்னவன். பிச்சாண்டியால் விம்மலை அடக்க முடியவில்லை. கேவிக்கொண்டே முறையிட்டான்.
"குமார் நீயே சொல்லுப்பா! எங்கள அடி அடின்னு அடிச்சி இந்த மரத்துல கட்டிவச்சிட்டாரு. நீ கூட அன்னிக்கி மேடையில பேசும்போது, 'சர்க்காரோட நிலச் சீர்திருத்தத்த அமல் பண்ணணுமுன்னு பேசலியா? சர்க்கார் கொடுக்கச் சொன்னத கேட்டது தப்பா? நீயே சொல்லு குமார்! நீ என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன்!"
குமார் பிச்சாண்டியைக் கடுமையாகப் பார்த்தான். பார்த்துக்கொண்டே கேட்டான்:
"ஒமக்கு இது பத்தாது. கலகக்காரப் பயலுவ பேச்சக் கேட்டு ஆடுற ஒம்மை... என்ன பண்ணுனாலும் தகும்!"
பிச்சாண்டி, அதிர்ச்சியோடு குமாரைப் பார்த்தான். இந்த மாதிரியான கடுமையை அவன் எதிர்பார்க்கவில்லை. அப்படியானால், வழியில் பார்க்கும் போதெல்லாம், தன்னை அவன் 'சித்தப்பா சித்தப்பா' என்று அழைத்ததெல்லாம் தாசி, தன்னிடம் வருபவனை, 'அத்தான்'னு சொல்றது மாதுரியா? பிச்சாண்டி, குமாரை அதிர்ச்சியோடயே பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான்.
சின்னான் பவ்யமாகப் பேசினான்:
"பிச்சாண்டி மொதலாளி, அவரு இப்போ தலைவரு... ஒன்கிட்ட ஒரு ஓட்டுதான் இருக்கு."
குமார், அனல் கக்க சின்னானைப் பார்த்துக் கத்தினான்:
"சின்னான், நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன். எல்லையை மீறுற. ஒங்க ஜனங்கள கெடுத்துட்டு, எங்க ஜனங்களையும் கெடுக்கப் பாக்றது ஒனக்கு நல்லதா முடியாது!"
"எங்க ஜனங்கன்னா என்ன அர்த்தம் குமார்! இந்த பிச்சாண்டி ஒங்க ஜனம்! அவரக் கட்டிவச்சது ஒங்க ஜனம்! விடுவிச்சது எங்க ஜனம்! பிச்சாண்டி முதலாளி இப்போ சொல்லும். நீரு எங்க ஜனமா? அவங்க ஜனமா?"
நிலைமையை கதிர்வேல் பிள்ளை வேறு திசைக்குத் திருப்பப் பார்த்தார்.
"சேரி ஜனங்க பேச்சக் கேக்காதியடா. பள்ளுப் பறையங்களுக்கு இடங் கொடுக்காதியடா. அப்புறம் நரிக்கு நாட்டாம கொடுத்தால் கிடைக்கு ரெண்டாடு கேட்ட கதயா முடியும். ஏ, மாசானம்! ஒனக்கு அறிவிருக்கா? அவன இப்படியா கட்டி வைக்கது? சீ... நீயில்லாம் மனுஷனா..."
பரமசிவமும் தன் பாட்டுக்குப் பேசினார்:
"மாப்புள்ளக்கி முன்யோசனையே கிடையாது. இந்தப் பிச்சாண்டி யாரு? நம்ம பல்லையே நாம குத்தி நாத்தம் பாக்கலாமா? நீரு பண்ணுன அக்கிரமத்துக்கு கோயிலுக்கு ரெண்டு தேங்கா அபராதம் போட்டிருக்கு."
கதிர்வேல் பிள்ளை, புதிர்வேல் பிள்ளையாகப் பேசினார்:
"வீடு ரெண்டுபட்டா கூத்தாடிக்குத் தொக்குடா. எல்லாத்தையும் ஊர்ல போயி கேட்டுக்கலாம். வெள்ளாமய எப்டிப் பிரிக்கதுன்னு ஊர்ல போயி தீத்துக்கிடலாம்."
ஜாதி விவசாயக் கூலிகளில் ஒரு சிலர், கொஞ்சம் சத்தம் போட்டே கேட்டார்கள்.
"அதெப்டி, வயலு விவகாரம் வயலுலயே தீரணும். எங்க ஜனம் - ஒங்க ஜனமுங்ற கத வேண்டாம். சின்னான் சொன்னதுல தப்புல்ல. ஒங்க ஜனம் - எங்க ஜனங்குறதுல்லாம் ஊர ஏமாத்துற வேல."
பெரும்பாலான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பேசாமல் நின்றார்கள். பிரச்சினை வகுப்புவாதமாகி விடக்கூடாது என்பதற்காக, சின்னானும் விட்டுக் கொடுத்துப் பேசினான்.
"சரி போகட்டும். மாசானம் பிச்சாண்டிய கட்டி வச்சதுக்காக வெள்ளாமையில அவருக்குக் கால்வாசி தான் கொடுக்கணும். மீதி பிச்சாண்டிக்குப் போகணும். இல்லன்னா வம்புதான்."
கதிர்வேல் பிள்ளை கறாராகப் பேசினார். இந்தப் பள்ளுப்பறை எதிர்ப்பை மாசானம் - பரமசிவம் வகையறாக்களால் தாங்க முடியும். நம்மளால முடியுமா? ஒத்த வீட்டுக்காரன்... இவனுவளயும் நாம பைக்குள்ள போட முடியாட்டாலும், கைக்குள்ள போட்டுக்கணும்.
"சரி மாசானம், நீ விட்டுக் கொடு. கடவுள் ஒனக்குக் காண்டிராக்ட்ல கொடுப்பாரு."
மாசானம், மௌனச் சம்மதத்தோடு இருந்தார். பரமசிவம் பொதுப்படையாகப் பேசினார்:
"ஆமாம். கதிர்வேல் பிள்ள சொன்னது மாதுரி - மாப்பிள்ள செய்திடணும். பிச்சாண்டி, ஒமக்கு முக்கால் பங்கு நெல்லு வர மச்சான் ஜவாப்பு. சரி, எல்லாரும் போயி வேலயப் பாருங்க. என்ன சின்னான், நீயும் ஒரு நஞ்சை வாங்கிப் போடப்படாதா..."
சின்னான் வினயனானான்.
"எனக்காக வாங்காட்டாலும், பிறத்தியாருக்காக வாங்கணுமுன்னு தான் இருக்கேன். நேரம் வராண்டாமா?"
அவன் சொன்னதை பரமசிவம் புரிந்து கொண்டது போலவோ, புரியாதது போலவோ காட்டிக் கொள்ளவில்லை. சிரித்துக் கொண்டார்.
பெரும்பாலானவர்கள் போய்விட்டார்கள்.
சின்னானைச் சுற்றிப் பல விவசாயக் கூலிகள் சூழ்ந்தார்கள். ஒரு ஜாதிக் கூலி, திட்டுவது மாதிரி பேசினான்.
"ஒனக்கு தைரியம் போதாது சின்னான். குமார் பயல நாக்கப் பிடுங்கிச் சாகிற மாதிரி கேட்டிருக்கணும். நாங்க உயிரோட இருக்கிற வரைக்கும் ஒன் மேல ஒரு துரும்புகூட விழாது!"
சின்னான் லேசாகச் சிரித்தபோது, இன்னும் குன்னிப் போய் நின்ற பிச்சாண்டி, சின்னானின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மினான். சின்னான், அவனுக்கு ஆறுதல் சொன்னான்.
"அழாதிங்க. நாம் அழ வைக்கிறவங்கள அழ வைக்கிறதுக்காவ பிறந்தவங்க. நாமே அழுதால் எப்படி?"
பிச்சாண்டி தன் கண்ணீரை, வெட்டரிவாள் வீச்சுப் போல் சுண்டிவிட்டான்.
------------
12
ஆண்டியப்பனுக்கு மாட்டுப் பிரச்சினையோடு வீட்டுப் பிரச்சினையும் வந்தது. அவன் புறம்போக்கு நிலத்தை 'ஆக்ரமித்து' வீடு கட்டியிருப்பதாகவும், அதை ஏன் இடிக்கக்கூடாது என்றும் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். கோபால், பதிலெழுதிக் கொடுத்திருந்தான். தலைமுறை தலைமுறையாக இருக்கும் வீட்டை இடித்து, அந்த இடத்திலிருந்து தன்னை வெளியேற்ற அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று அவன் எழுதிய காகிதத்தில் கையெழுத்துப் போட்டு, தாசில்தாருக்கு, கோணச்சத்திரம் போய் தபாலில் போட்டான். ஒரு வாரத்திற்குப் பிறகு, நோட்டீஸிற்கு ஏன் பதிலளிக்கவில்லை என்று தாசில்தார் மீண்டும் கடிதம் போட்டிருந்தார். ஆண்டி, மீண்டும் கோபால் மூலம் பழைய கடிதத்தின் நகலோடு, புதிய கடிதத்தையும் எழுதி, தாலுகா அலுவலகத்திற்கு நேராகச் சென்று, அங்கே இருந்த கிளர்க்கிடம் கொடுத்துவிட்டு வந்தான். நேற்று என்னடாவென்றால், ஒரு நோட்டீஸிற்கும், இரண்டு ரிமைண்டர்களுக்கும் அவன் பதில் போடவில்லை என்றும், நாளைக்கு மறுநாள் விசாரணை என்றும், அவன் போகவில்லையானால், அதற்கு அவனே பொறுப்பென்றும் தாசில்தார் குசலம் விசாரித்து கடிதம் போட்டிருந்தார். அதிர்ஷ்டத்தைப் போல், விசாரணையும் விசாரணையோடுதான் வரும் போலும். தாசில்தாரின் இறுதிக் கடிதம் வந்த அதே நாளில், மாவட்டக் கூட்டுறவு அதிகாரியிடம் இருந்து ஒரு விசாரணைக் கடிதம் வந்திருக்கிறது. அதாவது நாளைக்கு மறுநாள் மாடு சம்பந்தமாக விசாரணை இருப்பதாகவும், அவன் மாட்டின் உரிமைக்கான சகல தஸ்தாவேஜுகளுடனும் நெல்லைக்கு வர வேண்டும் என்றும் கடிதம் வந்திருக்கிறது.
வீடு 'போகமல்' இருக்கப் போவதா? மாடு வருவதற்குப் போவதா? இல்லாததை வரவழைக்க, இருப்பதை விட வேண்டியிருக்குமோ... மாடு பெரிசா? வீடு பெரிசா? ஆண்டியப்பன் தீவிரமாக யோசித்து யோசித்து குழம்பிக் கொண்டிருந்த போது, கோபால் ஒரு யோசனை சொன்னான். அதன்படி, திருநெல்வேலியில் நடக்கும் விசாரணையை ஆதாரம் காட்டி, வீட்டு விசாரணையை ஒத்திப் போடும்படி வட்டாட்சித் தலைவரை 'பணிவன்புடன்' கேட்டுக் கொள்ளும் மனுவை எழுதிக் கொண்டு தாலுகா அலுவலகத்திற்குப் போனான். கோபால் அவனுடன் போகவில்லை. போக வேண்டிய தேவையும் இல்லை. இப்போதெல்லாம் ஆண்டிக்கு 'தாலுகா மட்டத்தில்' தனியாகப் போகும் தெளிவு ஏற்பட்டுவிட்டது. மாவட்ட மட்டத்திற்குத்தான் கோபால் தேவை.
தாசில்தாரைப் பார்த்துவிட்டு, அப்படியே அரசாங்க ஆஸ்பத்திரியில் சிடுசிடுக்காத ஒரு டாக்டரைப் பார்த்து, கையில் காலில் விழுந்து, தங்கையின் மார்புப் புண்ணுக்கு ஏதாவது மருந்து வாங்கிக் கொண்டு வர நினைத்தான். தங்கையைக் கவனிக்காமல் போனதற்காகத் தவித்தான். இன்னும் இரண்டு நாட்களில், அவளைத் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு போயாவது, ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.
தாலுகா அலுவலகம், 'இழவு வீடு' மாதிரி தலைவிரி கோலமாகக் கிடந்தது. முன்பு தன்னிடம் கடிதத்தை வாங்கிய கிளார்க்கை அடையாளம் கண்டுகொண்டு ஆண்டி, "ஸார், நான் பத்து நாளைக்கு முன்னால ஒரு காகிதம் கொடுத்தேன். தாசில்தார்கிட்ட கொடுத்தியளா?" என்றான்.
கிளார்க், அவனை 'சம்திங்காகப்' பார்த்தான். பிறகு 'நத்திங்காக' நின்ற ஆண்டியை முறைத்துப் பார்த்துக் கொண்டு 'நீ யாருய்யா?' என்றான்.
"ஆண்டி."
"பெரிய கவர்னரு... பேரச் சொன்னதும் ஞாபகம் வந்துடும்..."
ஆண்டி, ஏதோ சொல்லப் போனான். சொல்லவில்லை. கிளார்க் வந்தது தெரியாமல் போய்விட்டான். அரசாங்கம் என்பது தான் ஒருவனே என்பது மாதிரி, அங்கே எல்லா ஆசாமிகளும் நடந்து கொண்டார்கள். ஆண்டியப்பன் காத்திருந்தான், காத்திருந்தான் - தாசில்தாரைப் பார்க்க முடியவில்லை. பார்க்கப் போனால், 'டாலிக்காரன்' விடுவதாக இல்லை. "என்னவே, தாசில்தார வெறுங்கையோட பார்க்கிறதுன்னா அவ்வளவு லேசா? பையில இருக்கத கொடுத்தா, கையில இருக்கதயும் பார்க்கலாம்..."
ஆண்டியப்பன் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய அவசரத்தில், தான் கொண்டுவந்த கருணை மனுவை, பியூனிடமே கொடுத்துவிட்டு மடமடவென்று ஆஸ்பத்திரிக்குப் போனான். 'பிஸியயே டிஸ்ஸீஸாகக்' கொண்ட டாக்டர்களிடம் பேச அவனுக்குக் கூச்சமாக இருந்தது. எப்படியோ ஒருவரைப் பார்த்துக் கேட்டான். அவர், "யோவ்... பேஷண்ட் பார்க்காம எப்டிய்யா மருந்து கொடுக்க முடியும்" என்று கோபமாகச் சொல்லிவிட்டு, அருகே இருந்த ஹவுஸ் சர்ஜனிடம், "இன்னும் கிராமம் திருந்தலன்னு சொன்னா நம்பமாட்டேன்னு சொன்னீங்க. இப்போ ஓட் இஸ் யுவர் ரிப்ளை" என்றார். பிறகு இருவரும் ஆங்கிலத்தில் எதையோ பேசி, சிரித்தார்கள். ஆதார மனிதனாக இருக்க வேண்டிய ஆண்டி, அங்கே 'ஆதாரமாக்'கப்பட்டான்.
ஆஸ்பத்திரி என்ற அந்த மயான பூமியில் இருந்து, கூனிக்குறுகி ஆண்டியப்பன் வெளியே வந்தான். விடுவிடென்று நடந்தான்.
கோணச்சத்திரத்தைத் தாண்டி ஊர்ப்பக்கம் வந்த போது, தங்கம்மா தலையில் புல்லுக்கட்டுடன் போய்க் கொண்டிருந்தாள். ஆண்டியப்பன் வேக வேகமாக நடந்து அவளோடு இணையாக நடந்தான். தங்கம்மா வேறுபுறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.
"தங்கம், என்கூட நடக்கக்கூடப் பிடிக்கலியா? ஏன் பேசமாட்டக்கே தங்கம்?"
"தங்கம்மா, அப்பனோட செத்துட்டாள். இப்ப இருக்கவா - இன்னொருத்தி."
"செத்தவ, என்னையும் சாகடிச்சிட்டு செத்திருக்கலாம்."
தங்கம்மா பதிலளிக்கவில்லை. முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. துக்க எள், துளிர் விட்ட முகம், மங்கலான பார்வை, பிணத்தில் உயிர் ஒன்று, வெறும் ஜட இயக்கத்துக்காக மட்டுமே இருப்பது போன்ற அசைவுகள். கோபப்படப் போன ஆண்டி, அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டுப் பேசினான்.
"தங்கம், ஒனக்குக் கல்யாணமுன்னு கேள்விப்பட்டேன். நிசமா சொல்லு தங்கம்?"
"அம்மா..."
"சொல்லு."
"அம்மா ஏதோ துப்புப் பார்த்துக்கிட்டு இருக்கா..."
"ஒனக்கு இதுல சம்மதந்தானா?"
"எங்கய்யா, என் சம்மதத்தோடயா இறந்தாரு? எல்லாம் நம்ம சம்மதப்படியா நடக்கு? நடக்கதுல்லாம் சம்மதமுன்னு நினைச்சாத்தான் வாழ முடியும்!"
"அப்படின்னா ஒம்மா சொல்லுத மாப்பிள்ளைக்கி கழுத்த நீட்ட தயாரா இருக்க... அப்படித்தான?"
"அய்யாவக் கொன்னவ நான். அவர கொன்ன ஊர்ல இருக்கப்படாது. இந்த ஊர விட்டு எங்கேயாவது ஓடிப் போவணும்; எப்டி ஓடிப் போனாலும் சம்மதந்தான்!"
"அப்படின்னா ஒண்ணு செய்! வீட்டுக்குப் போய் ஒரு அருவாள கொண்டு வாரேன் - ஒன் கையால என்ன வெட்டிடு."
"எனக்கு நேரமாவுது. அம்மா தேடுவாள். அய்யாவோட சமாதில போயி தங்கரளிப்பூவ வைக்கணும். இன்னைக்கி செவ்வாக்கிழம."
"என் சமாதிக்கும் ஒரு தடவயாவது வந்து... ஒரு பூவ வச்சிட்டுப் போ! முடியுமுன்னால் ஒன் புருஷனோட வேணுமுன்னாலும் வா."
ஆண்டியப்பன் வெறிபிடித்தவன் போல் நடந்தான். தங்கம்மா புல்லுக்கட்டை அங்கேயே போட்டுவிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அசையாமல் ஸ்தம்பித்து உட்கார்ந்து இருப்பது தெரியாமல், அவளைத் திரும்பிப் பாராமலே நடந்தான்.
ஆவேசம அனலாக, மனம் போன போக்கில் நினைத்து, கால் போன போக்கில் நடந்து, கண் நோக்கிய காட்சிகளைக் காணாமல், நடந்து கொண்டிருந்த ஆண்டியப்பன், திடீரென்று, லேசாக நடையைத் தளர்த்தினான். அவன், அமைச்சர் கரம் பட வாங்கிய, அந்த ஜெர்ஸி இன கலப்புப் பசுமாடு, அவனைப் பார்த்துத் தலையைச் சற்றே நிமிர்த்தி, 'ம்மா... ம்மா...' என்றது. பழைய மீசைக்காரன், அதன் மடுவைப் பிசுக்கி, பால் கறந்து கொண்டிருந்தான்.
அருகே மல்லிகாவும், பரமசிவத்தின் புத்திரிகளும் வாயளந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, அந்தப் பக்கமாக வராத ஆண்டியப்பன் அப்போது அங்கே நடந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு ஓரளவு பயந்து வாயடைத்து நின்றார்கள். பரமசிவத்தின் வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த குமாரும், மாணிக்கமும் கீழே வரப் போவதை நினைத்து, அந்தப் பெண்கள் ஓரளவு ஆறுதலடைந்தபோது, அந்தப் புறநானூற்றுப் போர்வீரர்கள், இறங்கிய படிக்கட்டில் அப்படியே நின்றார்கள். ஆண்டி ஏதாவது பண்ணிவிட்டால்...
'தோள் கண்டார் தோளே கண்டார்' என்று கம்பன் சொன்னதுபோல், ஆண்டியின் கண்களில் அந்தப் பசுமாடு மட்டுமே விழுந்தது. சொந்தமாகி, சொந்தமில்லாமல் போன அந்த மாட்டை, அவன் பார்த்துக் கொண்டே நின்றபோது, மாட்டின் வால் நுனியைப் போல் மீசை வைத்திருந்த அதே மிசைக்காரன், மாட்டை அவிழ்த்துக் கொண்டு வீட்டின் பின்பக்கமாகப் போனான்.
இப்போது அந்தப் பெண்களும், மெல்ல நடந்து, பிறகு வேகமாக நடந்து மாடிப்படியில் ஏறி, அங்கே நின்ற மன்மதர்களோடு சேர்ந்து கொண்டார்கள். மணப்பெண்கள், மாப்பிள்ளைகளுடன் திருமணத்திற்கு முன்பு சேர்ந்து நிற்கக்கூடாது என்ற மரபை மீறி, ஆபத்துக்கும் ஆண்டிக்கும் தோசம் இல்லை என்பது போல் 'அவர்கள்' அங்கே போனார்கள்.
ஆண்டியப்பன், அந்த மனிதப் பிறவிகளை நினையாமல், மாட்டுப் பிறவியை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்ததால், பிறவி எடுத்ததன் பொருள் புரியாதவன் போல் வீட்டுக்கு வந்தான்.
அவன் தனது வெறுங்கைகளைப் பின்னிக் கொண்டு விழிகளை உருட்டி, வழி புரியாமல் தவித்தபோது, தரையில் தலைவிரிகோலமாய், மார்புக் கட்டிகளின் குத்தூசிக் குத்தலில் பல்லுடன் முனங்கலையும் சேர்த்துக் கடித்துக் கொண்டிருந்த மீனாட்சி, அண்ணனின் சொல்லாத நிலையை, கேளாமல் கேட்டவள் போல், தன் கைகளை மார்புப் பக்கம் கொண்டு போனாள். பிறகு, "ஒரு மஞ்சத் துண்டு தா" என்றாள்.
தங்கை ஏதோ மருந்து கேட்கிறாள் என்று நினைத்து, அவன் செல்லரித்துக் கிடந்த 'அஞ்சறைப் பெட்டிக்குள்' அதைவிட அதிகமாகச் செல்லரித்துப் போன, மஞ்சள் துண்டை எடுத்து, தங்கையிடம் மவுனமாக நீட்டினான். ஐந்து நிமிடம் கழித்து மீனாட்சி, "இத வச்சிக்க" என்று சீட்டுக்கட்டில் உள்ள 'ஆட்டியன்' வடிவத்தில் இருந்த மாங்கல்யத்தை நீட்டினாள். அதிர்ந்துபோன ஆண்டி, தங்கையையே உற்றுப் பார்த்தான். மார்புச் சேலைக்கு மேலே கிடந்த மஞ்சள் கயிற்றுக்கடியில், அந்த மஞ்சள் துண்டு தொங்கியது.
எதுவும் புரியாமல், எங்கேயோ இருப்பது போல், யாரோ யாருக்கோ, எதையோ கொடுப்பது போல், அவன் கண்ணிருந்தும் பார்க்க முடியாதவன் போல் பார்த்தான். மீனாட்சி, அவனின் கோர மவுடீகத்தை, தன் வீரப் பேச்சால் குலைத்தாள்.
"வெண்ண திரளும்போது தாழிய உடைக்கப் படாது அண்ணாச்சி. நாளைக்கி நீ விசாரணைக்குப் போய் ஆகணும். இப்போ நான் கொடுக்கிறது நீ - நியாயத்துக்குக் கட்டப்போற தாலி! கட்டுறத கட்டு. அப்புறம் நியாயம்... 'அறுதலியா' நின்னா நிக்கட்டும். அப்டி நிக்காது. இப்போ நான் ஒன்கிட்ட கொடுக்கிற இந்தத் தாலி, அநியாயக்கார பாவியளோட தாலிய அறுக்காம விடாது. ஏன் அண்ணாச்சி கலங்குற? நம்மகிட்ட ரெண்டு இருக்கு. முதல்ல நியாயத்தை வச்சி அடிப்போம்! அது முடியாட்டால்... அருவாள் எங்கே போயிட்டு! இவனுவள எரிக்காம என் சடலம் எரியாது!"
ஆண்டியப்பன் அவளை பயத்தோடும், பயங்கலந்த வியப்போடும் பார்த்தான். சடலம் கிடலுமுன்னு பேசுறாளே! எதுக்கெடுத்தாலும் அழுகிறவள், இன்னைக்கி ஏன் இப்டிப் பேசுறாள்? முகம் ஏன் இப்டி காளியாத்தா மாதுரி கோரமா இருக்கு? கண்ண ஏன் இப்டி உருட்டுறாள்?
"வாங்குறியா... இல்லையா?"
மீனாட்சியின் அதட்டலுக்குப் பயந்தவன் போல், அவன் மறுமொழி கூறாமல், அந்தத் தாலியை பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். கால்பவுன் தங்கம். அவள் கழுத்துக்கு வேலியாக இருந்த லிங்கம் பொறித்த அந்தத் தாலி, வேலிக்குள் அடைபட்ட நீதியை, அந்நீதிக்குள் அடைபட்ட மாட்டை மீட்கும் சூலாயுதம் போல் அவனுக்குத் தோன்றியது. என்ன சொல்வதென்று புரியாமல், தன்னையே நோக்கிய தங்கையை, தானும் நோக்கி, அவளின் இதுவரை காணாத அசாத்தியமான பார்வைக் கூர்மையால் பட்டை தீட்டப்பட்டவன் போல், அவன் கண்கள் ஜொலித்தபோது காத்தாயி வந்தாள்.
"இந்தாரும் பத்துரூபா... சின்னான உருட்டி மிரட்டி வாங்குனேன். அதிகாரிவளப் பாத்து பயப்படாதயும்! முக்கால்வாசிப் பேர ஒரு கோழி முடியக் காட்டி மிரட்டினாக் கூட பயந்துடுவாங்கன்னு சின்னான் கிறுக்கன் சொல்லுதான். அநியாயக்காரங்களுக்கே பயப்படுறவங்க, நியாயக்காரனுக்கு நிச்சயமா பயப்பட்டுத்தான் ஆகணும். சும்மா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசும். ஏன் பணத்தை வாங்காம பாக்கியரு..."
ஆண்டி, அந்த பத்து ரூபாயை வாங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டான். மீனாட்சியை அர்த்தத்துடன் பார்த்த போது, அவள், "என் கழுத்துக்குக் காவலா இருந்தது. ஒன் கைக்குக் காவலா இருக்கட்டும்" என்றாள்.
பொழுது புலர்ந்தது. எஞ்சினீயரிங் டிப்ளமாக்காரன் கோபால் காலையிலேயே பெட்டி படுக்கைகளோடு வந்தான். "உம், புறப்படு டயமாயிட்டு" என்றான்.
"பெட்டி படுக்கையோடு வந்திருக்கே!"
"அப்புறமா பேசலாம். புறப்படுப்பா... நாம ஆபீஸருங்களுக்குக் காத்திருக்கலாம். ஆபீஸருங்க நமக்காகக் காத்திருக்க மாட்டாங்க."
ஆண்டியப்பன் தங்கையிடம் கண்களால் விடைகேட்டான். மீனாட்சி, விழிகளை ஆட்டி, ஆகாயத்தில் இருக்கும் சாமியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்ட போது, "இன்னைக்கு மட்டும் பொறுத்துக்க. நாளைக்கு அண்ணாச்சி, ஒன்ன எப்டியும் ஆஸ்பத்திரியில சேத்துடுதேன்" என்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். கோபால், அவன் கையை ஆதரவாகப் பிடிக்க, இருவரும் புறப்பட்டார்கள்.
பள்ளிக்கூடத்தின் அருகே வந்த ஆண்டியப்பன் மீண்டும் தங்கையைப் பார்த்துவிட்டு வர நினைத்தவன் போல் நின்று, திரும்பப் போனான். இதற்குள் அங்கே இடும்பன்சாமியும், பிச்சாண்டியும், இன்னும் சிலரும் ஆசாரிப் பையன் ஆறுமுகமும் வந்தார்கள். சஸ்பெண்டிலேயே இன்னும் காலத்தைக் கழிக்கும் இடும்பன்சாமி, சத்தம் போட்டுக் கத்தினார்.
"விட்டுக் கொடுத்துடாதடா... செறுக்கி மவனுவள செருப்பால அடிக்கணும்."
"ஒம்ம விஷயம் என்னாச்சி?"
"எனக்காவ சப்போர்ட் பண்ணுன ரெண்டு பேரையும் நேத்து சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்களாம். பாத்துப்புடலாம். இத விடப் போறதில்லை. நீயும் விடப்படாது. மாட்ட வாங்கித்தான் ஆகணும். போன வருஷம் பிச்சாண்டி பேர்ல வாங்குன மாட்ட இவன்கிட்டயே திருப்பிக் கொடுத்துட்டேன். வேணுமுன்னால், இவங்கிட்டேயே கேளு. ஏல... பிச்சாண்டி, நல்லது செய்ததையும் சத்தம் போட்டுச் சொல்லணுமில்ல."
பிச்சாண்டி சத்தம் போட்டே சொன்னான்.
"சின்னய்யா சொன்னது வாஸ்தவந்தான். இதே மாதிரி ஒன் மாடும் வீட்டுக்கு வரணும். தேவடியா மவனுவ தாஜா பண்ணப் பாப்பாங்க. நம்பிடாத. நான் நம்பி மோசம் போனேன்! எனக்கு வெள்ளாமையில முக்கால் பங்கு தாரதா பரமசிவம் 'விலக்கு'த் தீர்த்தான். கடைசில இருபது மூட்ட நெல்ல பத்து மூட்டயா கணக்குக் காட்டி முக்கால் பங்க வாங்கிக்கச் சொல்லுதாணுவ. கொல நடக்கப் போவுது பார்."
ஆசாரிப் பையன் ஆறுமுகமும், தன் பங்குக்கும் பேசினான்:
"குமாரு பரமசிவம் வகையறா திருநெல்வேலிக்கு டாக்ஸியில போறானுவ! செறுக்கி மவனுவள ஒரே வெட்டா வெட்டணும். அவனுங்களோட எங்க தட்டாசாரியயும் தீயில போட்டு புடம் போடணும்."
இதற்குள் கூட்டம் கூடிவிட்டது. பரமசிவம் சொந்தக்காரர் ஒருவர், ஆசாரிப் பையனைப் பார்த்து "ஏல ஆசாரி! வார்த்தய அளந்து பேசுல! இல்லன்னா செருப்படி படுவ - படுவாப் பயல! யாரல செறுக்கி மவன்னு சொல்லுத? இன்னொரு தடவை சொல்லு பார்க்கலாம்!"
கூட்டத்தில் நின்ற இன்னொருவன் இடும்பன்சாமியைத் தடுத்துவிட்டுப் பேசினான்:
"நான் சொல்லுதேன்! பரமசிவம் செறுக்கி மவன்! குமார் தேவடியா மவன்! இப்போ உன்னால ஆனதப் பாரு."
சொன்னவர், "நான் எதுக்கு சொன்னேமின்னால்..." என்று இழுத்தபோது, இடும்பன்சாமியை இப்போது, ஒரு நடுத்தரப் பெண்மணி - தெய்வானை தடுத்துவிட்டு, "ஏல, சுடல! மரியாதியா போ! இல்லன்னா நானே ஒன் தலையில சாணியக் கரச்சி ஊத்துவேன்! ஒன் பரமசிவம் ஊர குத்தகையால எடுத்திருக்கான்? பிச்சாண்டிக்கு சொன்னபடி கொடுத்தானா? இந்த ஆண்டிப்பயல என்ன பாடு படுத்துறான் பாத்தியா? மரியாதியா போ - இல்லன்னா..."
ஆண்டியப்பன் அவர்களை நேராகப் பார்த்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டான். கோபால் மட்டும் கூனிக் குறுகி நிற்பது போல் தோன்றியது.
இருவரும் ஊரைக் கடக்கும்போது, சிநேகித பாவமான முகங்கள் தெரிந்தன. டீக் கடைக்காரர் ஒருவர் "டீ சாப்புடுங்கடா" என்றார்.
ஆண்டியும் கோபாலும் கோணச்சத்திரம் வந்து, 'கட்டபொம்மனுக்'குள் புகுந்தார்கள்.
'கூட்டுறவே நாட்டுயர்வு' என்ற போஸ்டர் பளபளப்பான பளபளப்புடன் ஜொலிக்க, சன்மைக்கா போட்ட மேஜை, வழவழப்பான வழவழப்புடன் மினுக்க, வல்லவர்களுக்கு 'யெஸ்' போட வேண்டும் என்பதாலோ என்னவோ ஆங்கில 'எஸ்' எழுத்தின் வடிவத்தில் அமைந்த நாற்காலியில், மாவட்ட அதிகாரி உட்கார்ந்திருந்தார்.
எதிரே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் 'பழைய பஞ்சாயத்து' பரமசிவம், கூட்டுறவு சங்கத் தலைவர், குமார், மாணிக்கம், மாசானம் உட்கார்ந்திருந்தார்கள்.
"நீங்கதான் மினிஸ்டர்கிட்ட சொல்லி, எனக்கு..." என்று பேசிய அதிகாரி, ஆண்டியப்பனும், கோபாலும் அங்கே வந்து நிற்பதைப் பார்த்துவிட்டு, தனது 'டெபுடேஷன்' முயற்சி, அங்கேயே அவுட்டானதுபோல், கண்களை இமைகளுக்கு வெளியே அவுட்டாகி அவர்களை அதட்டினார்.
"நீங்க யாரு?"
"என் பேரு கோபாலு! இவரு ஆண்டியப்பன் - விசாரணைக்கு வந்திருக்கார்."
"ஒங்களைப் பார்த்தா படிச்சவர் மாதுரி தெரியுது. மானேர்ஸ் வேண்டாம். முதல்ல வெளில போய் நில்லுங்க. சீட்டுக் கொடுத்து அனுப்புங்க. கூப்பிட்ட பிறகு வாருங்க!"
ஆண்டியப்பனும், கோபாலும் வெளியே போய் நின்று கொண்டார்கள். உள்ளே கிரஷ் பாட்டல்கள் உடைக்கும் சத்தம் கேட்டது. குடிக்கும்போது ஏற்பட்ட 'விக்கல்' கேட்டது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் உள்ளே அழைக்கப்பட்டார்கள். மாவட்ட அதிகாரி விசாரணையைத் துவங்கினார்.
"நீங்க கோபாலா? உங்களை நான் கூப்புடலியே... வெளியே போங்க."
'இவங்க மட்டும் எப்படி வரலாம்' என்று கேட்கப் போன கோபால், கோபத்தை அல்லது பயத்தை அடக்கிக் கொண்டு, ஆண்டியப்பனுக்கு மட்டும் கேட்கும் வகையில், "நான் பஸ் ஸ்டாண்ட்ல நிக்கேன். நீ வா" என்று சொல்லி விட்டு வெளியேறினான். அவன் வெளியேறுவது வரைக்கும் பேசாமல் இருந்த அதிகாரி விசாரணையைத் துவக்கினார்.
"ஏய்யா... இவருதான் ஒன் மாட்ட பிடிச்சாரா?"
ஆண்டி அவர்களை நோட்டம் விட்டான். விசாரணையின் பிரதிவாதி உட்கார்ந்திருக்கிறார். வாதி நிற்கிறான். அநியாயம் அமர்ந்திருக்க நியாயம் நிற்கிறது. அவன் கோபத்தை அடக்கிக் கொண்டே பதிலளித்தான்:
"இவரு அதுதான் இந்தப் பரமசிவம்..."
"கேள்விக்கு பதில் சொல்லுய்யா... மாட்டப் பிடிச்சது யார்?"
"இவரு ஆள் வச்சி..."
பரமசிவம் எகிறினார்.
"இவனும் இவன் மாமனும் சண்டை போடுறது மாதுரி போட்டு, மாட்டை எங்கேயோ வித்துட்டு என் மேல பழியை போடுறான். இவனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்ட பாவத்துக்காவ நான் கூட்டுறவு சங்கத்துல பணத்தக் கட்டி தொலைக்கேன். இனிமேல இவன் இவ்வளவு பேசுன பிறகு நான் பணம் கட்டுறது, அபராதம் கட்டுறது மாதுரி கட்ட மாட்டேன் - கட்டவே மாட்டேன்! சர்க்கார் கடனை ஏப்பம் விடப் பாக்குறான்."
அதிகாரி பரமசிவத்தை கையமர்த்தி, அபயம் அளித்துவிட்டு, ஆண்டியை, அபாயமானவன் போல் பார்த்துக் கொண்டு அதட்டினார்.
"மாட்டைப் பிடிச்சது யாரு?"
"அடைக்கலசாமி!"
"அவர் எங்கே?"
"செத்துட்டார்."
"டெத் சர்ட்டிபிகேட் கொண்டு வந்திருக்கியா..."
"எங்க ஊரு தலைவருங்க இதோ இருக்காங்க கேளுங்க."
"இது ஆபீசா... வீடா... எனக்கு அடைக்கலசாமி இறந்துட்டார்னு ரிக்கார்ட் வேணும். அப்புறந்தான் மேற்கொண்டு விசாரிக்க முடியும். அதோட இவருதான் மாட்ட பிடிக்கச் சொன்னார்னு நீ நிரூபிக்காவிட்டால், இவரு ஒன்மேல மானநஷ்ட வழக்குப் போட்டால், நான் பொறுப்புல்ல. நாலையும் யோசித்து அடுத்த மாசம் மூணாந் தேதி வா!"
ஆண்டியப்பனால் மேற்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை.
ஆறுமாத காலமாக அடக்கி வைத்திருந்த ஆவேசம், இன்னொரு ஆண்டியப்பனாக உருவெடுத்தது. பழையவன் செத்து புதியவன் பிறந்தான். அங்கே செத்துக் கொண்டிருந்த நீதி இவனுள் வந்து துடித்தது.
"அட நிறுத்துய்யா... நீயும் ஒன் விசாரணையும்! ஒன்னை மாதுரி பொட்டப்பயலுவ ஆபீஸரா ஆனதால தான், இப்போ நியாயமும் பொட்டையாயிட்டு! ஊர்ல வந்து விசாரிக்காம, மின்சார விசிறிக்குக் கீழே நீதி வழங்குற ஒங்கள மாதுரி அயோக்கியங்களால... இப்போ யோக்கியனும் - அயோக்கியனாய் ஆகலாமான்னு யோசிக்கான். நல்லா கேளுய்யா... என்னை இந்த சட்டத்துல நம்பிக்கை இல்லாம பண்ணிட்டிய! சட்டத்துல இருக்கற ஓட்டையில அயோக்கியன் தப்பிக்கிறான். ஏழை அந்த ஓட்டையில கட்டி இருக்கிற விசாரணை என்கிற தூக்குக் கயிறுல தொங்குறான். ஒம்மகிட்டப் பேசிப் பிரயோஜனம் இல்ல! ஒம்ம பேச வெக்கிறவங்கள, பேச முடியாத இடத்துக்கு அனுப்பிட்டால் நீரும் பேசாமல் இருப்பியரு. ஏய், மாசானம், பரமசிவம் ஒங்களத்தாண்டா... குமார், மாணிக்கம், நீங்கல்லாம் ஊருக்கு வாங்க! அங்கே ஒங்களுக்கு நான் இழவு எடுக்காட்டால் - என் பேரு ஆண்டி இல்லடா... அசிங்கம் பிடிச்ச பயலுவளா!"
"போலீஸ்! போலீஸ்!" என்று அதிகாரி சன்னமான குரலிலும், மற்றவர்கள் 'வழியில் மடக்குவானோ' என்று நடுங்கிக் கொண்டும் இருந்த போது, ஆண்டியப்பன் ஆவேச வடிவாகி, அதற்குத் தன் உருவமே உயிராகி, அனைத்துமே தூசாகி, அந்த மனிதத் தூசிகளைத் தட்டிவிடுபவன் போல், வேட்டியில் படர்ந்த தூசியைத் தட்டிவிட்டுக் கொண்டே வெளியேறினான்.
"போலீஸ்ல உடனே சொல்லணும்" என்று குமார் எழுந்தான். எல்லோருமே எழ முடியாமல் எழுந்தார்கள்.
--------------
13
வேஷங்கள் கலையும்போது விபரீதங்கள் நடப்பதும், விபரீதங்கள் நடக்கும்போது வேஷங்கள் கலைவதும் இயற்கை. அந்த இயற்கையின் விஞ்ஞானபூர்வமான உணர்வு மாற்றங்களில் ரசாயன சேர்க்கையால், கிட்டத்தட்ட விபரீத மனிதனாக நடந்து கொண்டிருந்தான் ஆண்டியப்பன்.
சும்மா கிடந்த சங்கை தன் காதில் ஊதி, தன்னைக் கெடுத்து, தங்களை மேம்படுத்திக் கொண்ட உள்ளூர் வேஷதாரிகளின் மோசடித்தனமான பித்தலாட்டப் பேச்சுக்கள், ஒரு அதிகாரியின் அங்கீகாரத்துடன் நடப்பதைப் புரிந்து, புரிந்ததால் நடந்து, நெல்லை நகர வீதி ஒன்றில், நீதிக்கே பலியானவன் போல் ஆவேசமாக நடந்த அவன் எதிரில், அரசங்கச் சின்னங்களான ஒரு போலீஸ் ஜீப், 'கட்டபொம்மன்' பஸ், அமைச்சர் ஒருவரின் வருகையை வரவேற்றுப் போட்டிருந்த வரவேற்பு வளைவு ஆகிய அத்தனையும் துச்சமாகத் தெரிந்தன.
பஸ்ஸில் மோதப் போகிறவன் போல் நடந்தான். மாதச் சம்பளக்கார அதிகாரிகளை நம்பி, தனது அன்றாடச் சம்பளத்தையே பறிகொடுத்த அவன், பறிகொடுப்பதற்கு இனிமேல் எதுவும் இல்லை என்பதுபோல், தலையைச் சாய்த்து, பற்கள் வெட்டரிவாளின் கூர்மையோடு ஜொலிக்க எதையோ பறிக்கப் போகிறவன் போல் நடந்தான்.
லேசாகத் தூறிய மழை பலமாகப் பெய்தது. பையில் இருந்த ஐந்து ரூபாய் நோட்டு நனைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு பெரிய கட்டிடத்தின் வெளித் தாழ்வாரத்தில் நின்றான். தற்செயலாக உள்ளே பார்த்தான். 'வாய்மையே வெல்லும்' என்ற ஒரு வாசகம், அவனிடம் யாசகம் செய்வது போல் கெஞ்சியது. பிறகு வாசல் படிக்கட்டிற்கு மேல் ஜொலித்த போர்டைப் பார்த்தான். 'மாவட்ட விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம்' என்ற வார்த்தைகள் அவன் கண்களில் குத்தி காதுகளில் உபாதையைக் கொடுத்தன.
'இந்தக் கட்டிடத்தில் நிற்பதை விட மழையில் நனைவது எவ்வளவோ தேவலை' என்பதுபோல் அந்தக் கொட்டும் மழையில் அவன் காறித் துப்பிக் கொண்டே நடந்தான்.
வெளியே வந்து வேகமாக நடந்து கொண்டிருந்தவனின் கால்கள் தாமாக நின்றன. ஒரு தையற்கடையில் சட்டையில் 'காஜா' போட்டுக் கொண்டிருந்த ஒரு எட்டு வயதுப் பாலகனை தையல்காரர் கத்தரியால் அவன் பிஞ்சு விரல்கள் பிசகும்படி அடிக்க, அந்தச் சிறுவன் 'அய்யோ அம்மா' என்று கத்தாமல், குரூரமான அமைதியுடன் தான் வாங்கியதை பெரியவனான பிறகு, இன்னும் பிறக்காத ஒரு சிறுவனுக்குக் கொடுக்கப் போகிறவன் போல், எங்கேயோ வெறித்துப் பார்த்தான்.
மழை நீரில் சறுக்கி வண்டியைச் சறுக்க வைத்த ஒரு வயோதிக வண்டிக்காரரை டிராபிக் கான்ஸ்டபிள் 'அறிவு கெட்ட மடையா' என்கிறார். அந்த வயோதிகர் 'வயசானவனை இப்படி அறிவில்லாமக் கேட்கலாமா' என்று கூறாததால், மேற்கொண்டும் வண்டியை அவரால் 'சுதந்திரமாக' ஓட்ட முடிகிறது.
ஒரு ஏழையின் சுதந்திரம், அவன் தன்மானத்தைப் பற்றிக் கவலைப்படாத போதுதான் தற்காலிகமாகவாவது நிற்கிறது என்ற அரிய உண்மையை உணர்ந்தவன் போல், வீதியில் காலிழந்து நிற்கும் முடவர்களையும், கண்ணிழந்து நிற்கும் கிழவிகளையும், விழி பிதுங்கிய ஏழைகளையும் பார்த்த கண்களோடு, விசேஷ பஸ் ஒன்றில், பெண்களைப் பார்த்து 'சீட்டி' அடித்துக் கொண்டு போகும் ஓர் இளைஞர் கோஷ்டியையும் பார்க்கிறான்.
கல்யாணமும், கருமாதியும் ஒரே சமயத்தில் நடப்பது போல், கற்காலமும், பிற்காலமும் ஒரே சமயத்தில் இயங்குவது போல் தோன்றிய, கூட - கோபுர - குடிசை வீதியில், பளபளப்பான கார்களும், பாதுகை இல்லாத மனிதர்களும், மலிந்த வீதியில், தனியார் பஸ் ஒன்றில் அடிபட்டு, துணியால் மூடப்பட்டுக் கிடக்கும், ஒரு ஏழையின் சடலத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே அந்த ஏழைக் குடும்பம், 'நஷ்ட ஈடு' கேட்டால், தன்னைப் போல் ஏமாறத்திற்கு ஆளாகும் என்ற எண்ணம் எரிச்சலாக, தன்னை அறிந்தவன் போல் சிந்தித்து, அவன் தன்னையறியாமலே பஸ் நிலையத்திற்கு வந்துவிட்டான். மழையும் நின்றது; அவனும் நின்றான்.
திடீரென்று தன் கைகள் பிடிக்கப்படுவதை உணர்ந்து, அவன் தலையை நிமிர்த்தியபோது, கோபால் பெட்டி படுக்கையுடன், அவனை ஒட்டிக்கொண்டு நின்றான். அவனிடம் இவனோ, இவனிடம் அவனோ பேசவில்லை. ஆண்டியின் கண்களையும், நிமிர்ந்து நின்ற மோவாயையும் பார்த்துப் புரிந்து கொண்ட கோபால், அவன் முதுகை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். இருவரும் மவுனமாக, ஒரு ஹோட்டலுக்குள் போனார்கள்.
இட்லியில் கை வைத்துவிட்டு, சூடு தாங்கமுடியாமல் கையை உதறிய கோபால், "நெருப்பும் நீதியும் ஒன்று - தொட்டால் ரெண்டுமே சுடுது" என்றான். ஆண்டி எதுவும் மறுமொழி கூறாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு "இதனால தான் நீதியை ஆறப் போடுறாங்க போலுக்கு" என்றான்.
"என்ன நடந்தது" என்று நேரிடையாகக் கேட்காமல், அவன் ஜாடைமாடையாகப் பேசியதைப் புரிந்தோ அல்லது புரியாமலோ, ஆண்டியப்பன் சாப்பாட்டுத் தட்டில் கை வைக்காமலே அவனுக்கு அவனே பேசுவது போல் பேசினான்.
"எனக்கு ஒரு சந்தேகம்! என் தங்கச்சிக்கு எல்லா தாயுங்களுக்கும் வாரதுமாதுரி பிரசவத்திற்குப் பிறவு பால் சுரந்தது. அப்டி பால் சுரந்து, மார்புப் புண்ணோட உபாதை தாங்காமல் கஷ்டப்பட்டாள். அத்தை மகளுக்கு அவஸ்தைப்படும்போது ஆறுதல் சொல்றதுக்காவ மாமா மவள் வந்தாள். அதனால் சாகக்கூடாத மனுஷன் செத்துட்டார். எனக்கு ஒரு சந்தேகம்! ஏழைகளுக்கு நல்லதாய் வாரது கூட கெட்டதாய் முடியுமோ? இல்லன்னா விசாரணைக்குன்னு சந்தோஷமா வந்துட்டு, சவக்களையோடு திரும்ப வேண்டியதிருக்குமா? இல்லன்னா பால்மாடு பழிமாடா மாறுமா?"
கோபால் ஆண்டியையே மவுனமாகப் பார்த்தான். அவன் கண்கள் தொலைதூரத்தை துழாவுவதுபோல் பார்ப்பதையும், கைகளிரண்டும் வேல்களாய் மாறியவை போல் குவிந்திருப்பதையும் பார்த்த கோபால், "என்ன நடந்தது?" என்றான்.
நடந்ததை விவரித்து விட்டு, "தேவடியா மவனுவ என் மாமாவ தூண்டிவிட்டு, மாட்ட பிடிக்க வச்சிட்டு, கடைசில அவரு என்கூடச் சேர்ந்து மாட்டை விற்கதுக்கு நாடகமாடுனதா சொல்றாங்க. இவங்கள என் மாமா போன இடத்துக்கே அனுப்புனால் என்ன? இந்த வார்த்தய கேக்கதுக்காவது என் மாமா செத்துத் தொலைக்காம இருக்கப்படாதா..." என்றான்.
இதற்குள் சர்வர் வந்து, "ஆட்கள் வார சமயம் சீக்கிரமாக சாப்பிடுங்க" என்றார். ஆண்டி வெடித்தான்:
"ஏய்யா... அந்த மேஜையில நாலு பேரு டீ குடிச்ச பிறகும் பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்கள முதல்ல போகச் சொல்லய்யா. அழுக்கு வேட்டிக்காரனைக் கண்டால் ஒன்னை மாதுரி ஏழைக்குக்கூட இளக்காரமாப் போச்சு! எங்க ரெண்டு பேரில கூட என்னைப் பார்த்துதான் கேட்கிற! இந்த நாட்ல ஏழைக்கு ஏழைதாய்யா எதிரி! கவலப்படாத - சீக்கிரமாச் சாப்புடுறோம். அதுக்குள்ள ஒன் மொதலாளி கொட்டப் போற காச எடுத்து துண்டுல கட்டிக்கிடு."
சர்வர் ஒதுங்கிக் கொண்டார். இவன் ரவுடி. காசு கொடுக்காமல் சாப்பிட வந்த ரவுடி. பேசப்படாது.
கோபாலுக்கு ஆண்டியப்பனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. எப்படி அடக்கமாக இருந்தவன் எப்படி மாறிவிட்டான்! அவனை மேற்கொண்டும் பார்த்தால், தனக்கும் ஆவேசம் வந்துவிடும் என்று பயந்தவன்போல், மடமடவென்று இட்லிகளை விழுங்கினான். சர்வர் பழிவாங்கப் போகிறவர் போல் ஆண்டியிடம் 'பில்லைக்' கொடுத்தார். பயந்து கொண்டுதான் கொடுத்தார்.
இருவரும் வெளியே வந்தார்கள். நாகர்கோவிலில் இருந்து சென்னைக்குப் போகும் - வெளியே சிங்காரமாகவும், உள்ளே சீரழிந்தும் கிடந்த எக்ஸ்பிரஸ் பஸ் வந்து நின்றது. கோபால் படுக்கையை பஸ்ஸின் 'சைடில்' இருந்த மூடி மறைத்த பள்ளத்தில் போட்டுவிட்டு, சூட்கேஸுடன் பஸ்ஸுக்குள் ஏறினான். ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டு, வெளியே நின்ற ஆண்டியப்பனின் கைகளிரண்டையும் தன் உள்ளங்கைகளில் ஏந்திக் கொண்டு புலம்பினான்.
"என்னை மன்னிச்சிடு ஆண்டி! ஒனக்கே தெரியும்... ஐந்து தங்கைகளையும் நான் தான் கரையேற்றி ஆகணும். அவங்க சார்பில அவங்களுக்காகவே அப்பா என்னை படிக்க வச்சாரு. அதனால் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற இந்த வேலயை என்னால விட முடியல. பாரீன் கம்பெனி; பம்பாய்ல இட நெருக்கடியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த வேலையில் சேர்ந்தால், படிப்படியாய் சம்பளம் கூடும். 'ஒன்னை நிர்க்கதியாய் விட்டுட்டுப் போறோமேன்'னு நினைக்கவே கஷ்டமாய் இருக்கு. ஆனால் என்னோட குடும்பக் கஷ்டத்தையும் பார்க்காம இருக்க முடியல. தங்கச்சிகளோட கூலி வேலையில படிச்ச நான், அவங்களுக்குக் கூலி கொடுக்காட்டால், கடவுள் எனக்குக் கூலி கொடுப்பார். ஆனால் ஒண்ணு மட்டும் சத்தியமாச் சொல்றேன். நான் குமார் இல்ல! நான் மாணிக்கம் இல்ல! மானங்கெட்ட மாசானம் இல்ல! ஒன்னப்போல ஒரு ஏழை. ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குனாலும், தங்கச்சிகளுக்காக ஏழையா வாழப்போற பணக்கார ஏழை. நான் என்றைக்குமே ஒன் நண்பன். எங்கே போனாலும் என் மனசு ஒன்கிட்டதான் இருக்கும்... ஒன்கிட்டதான்... ஒன்கிட்ட... ஒன்..."
கோபால் அழுகையை அடகக் முடியாமல், அதை, அதன் போக்கில் விட்டான். ஆண்டியப்பன் சிலிர்த்துப் பேசினான்:
"அட எதுக்காவப்பா அழுவுற! பொம்புள்ளயளே அழாத இந்தக் காலத்துல நீ ஆம்பிள அழலாமா... அப்படியே அழுதாலும் எனக்காக அழாத! நான் இப்போ துணிஞ்ச கட்டை! இது ஒண்ணு விறகா எரியணும்! இல்லன்னா ஒருவன் தலையிலயாவது விலகாம விழணும்! அழாதப்பா... நீ பம்பாய்க்குப் போய்த்தான் ஆகணும். அஞ்சு தங்கச்சிகளும் ஒன்னையே நம்பியிருக்கையில - நீ நம்பிக்கைத் துரோகம் பண்ணப்படாது. அழாதப்பா... கண்ணைத் துடைச்சு மனசையும் துடைச்சுக்கோ!"
பஸ்சில் இருப்பவர்கள் எல்லோரும் தன்னைப் பார்க்கும்படி, கோபால் விம்மிக்கொண்டே பேசினான். கெஞ்சினான். கேவினான்.
"என் தங்கச்சிகளை, பரமசிவம் - குமார் கோஷ்டி ஏதாவது பண்ணிப்படாதே... ஏற்கெனவே மீசைக்காரனும் குமாரோட தம்பியும் ஜாடைமாடையா கிண்டல் பண்ணுனாங்களாம்... அய்யாவுக்கும் வயசாயிட்டுது."
"இந்த உடம்புல ஒரு சொட்டு ரத்தம் இருக்கது வரைக்கும், அந்த ரத்தங்கெட்ட பயலுவளால ஒன் தங்கச்சிமாருக்கு ஒரு ஆபத்தும் வராது. ஏன்னால் எனக்கு பாளை அரிவாள்தான் துணை. சட்டம் என்கிறதை சட்டம் போட்டு வைக்கிற காலத்துல அதை நான் நம்புன காலம் காலமாயிட்டு. இப்போ நானே காலனா மாறிட்டேன்! ஒன் தங்கச்சி ஒருத்தியோட கையையாவது பிடிக்கணுமுன்னு இல்ல - பிடிக்க நினைச்சாலே போதும்... அந்தக் கை ரெண்டா விழும். கவலப்படாமப் போ! இப்போ எந்தக் குணத்தோட இருக்கியோ அந்தக் குணத்தோடயே திரும்பி வா! சின்னப் பிள்ளை மாதுரி அழாத. பாரு... எல்லாரும் வேடிக்க பாக்காங்க பாரு. விருதுநகர்ல போய் முகத்தை அலம்பிக்க."
எக்ஸ்பிரஸ் பல்லவன் புறப்பட்டது. கோபால் ஆண்டியின் கைகளைத் தூக்கி முத்தமிட்டான். பஸ் சக்கரங்களும், தார் ரோட்டுக்கு முத்தமிட்டுக் கொண்டே உருண்டன. பஸ் போவது வரைக்கும் ஸ்தம்பித்து நின்ற ஆண்டியப்பனின் கண்கள், அந்த பஸ் மறைந்ததும், நீரை நெருப்புக் குழம்பாக, கீழே சிந்தியது. அதற்குப் போட்டி போடுவது போல், உள்ளம் அக்கினிக் குழம்பாக மாறிக் கொண்டிருந்தது. நெருக்கமானவனின் நிர்ப்பந்தமான பிரிவுத் துயரைவிட, அந்தப் பிரிவினால் நெருக்கமானவனும் காலச் சூழலால், மனதாலும் அந்நியப்பட்டுப் போகலாம் என்ற நட்பின் எதிர்கால அச்சுறுத்தல்தான், அவனை அதிகமாக வாட்டியது.
இதே கோபால், அடுத்த ஆண்டு வந்து 'ஹாய் ஆண்டி...' என்று சொல்லிவிட்டு இவனுடைய பதிலுக்குக் காதுகளைக் கொடுக்காமலே போகலாம். இருப்பவன் அவனைப் பொறுத்த அளவில் இறந்தவனாகப் போகலாம். இந்த வகையில் எதிர்காலம் என்பது இறந்த காலமாகலாம். நிகழ்காலம் - நீதி நிகழாத காலமாயிட்டு. காதலித்த மாமன் மகள், கண்முன்னாலேயே மாறிவிட்டாள். கண்முன்னால் நடந்த அநியாயம், வாய்வழி வார்த்தைகளாகக் கூட, ஊரில் வரவில்லை. எதிர்காலம் என்பது எதிரியாக வரும் காலம்.
சூன்யத்தால் சூழ்ந்தவன் போல் ஆண்டியப்பன் சுற்றிச் சுற்றி வந்தான். ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல், தன்னை இழந்தவன் போல், தன்னையே தானே தொலைத்துவிட்டு, தேடுபவன் போல், அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, செங்கோட்டை, திருச்செந்தூர் முதலிய இடங்களுக்குப் போவதற்காக, தனித்தனி தடங்களில் நின்று கொண்டிருந்த பஸ்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு, ஊருக்குப் போய், எவனை முதலில் 'பொலி' போடுவது என்று அவன் யோசித்துக் கொண்டே, மூலதனம் தேவை இல்லாத ஒரு திட்டத்தை அவன் தீட்டிக் கொண்டிருந்த போது -
பஸ் நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு அல்வா கடையருகே ஒரு கார் வந்து நின்றது. காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த யூனிபாரம் போட்ட இரண்டு போலீஸ்காரர்களுக்கு குமார் ஆண்டியை அடையாளம் காட்டினான். "கோபால் பயலக் காணுமே. அவனதான் மொதல்ல பிடிச்சிப் போடணும்" என்றார் மாசானம். குமார், தலைவன் ஆகையால் ஒரு தாசிக்குரிய போலித்தனத்தோடு பேசினான்:
"இன்ஸ்பெக்டர் சார்! அவனை நீங்க கஷ்டப்படுத்தணுமுன்னு நாங்க நினைக்கல! அது எங்களோட நோக்கமும் இல்ல. எங்க உயிருக்கு உத்தரவாதம் வேணும்! அதுதான் எங்க லட்சியம். ஊருக்கு வந்ததும் ஏதாவது செய்திடப்படாதே என்கிற பயத்துலதான் ஒங்ககிட்ட வந்தோம். அவனை பழிவாங்கணும் என்கிற நோக்கத்துல வரல. நல்லவேளை எங்க சித்தி மகன் கூட நீங்க 'டிரெயினிங் மேட்டாய்' இருந்திருக்கீங்க - இல்லன்னா நாங்க தைரியமா ஊருக்குப் போக முடியாது!"
இன்ஸ்பெக்டர் ஆறுதல் கூறினார்.
"நீங்க தைரியமாய் போங்க - நான் பாத்துக்கிறேன்."
கார் பறந்தது. போலீஸ்காரர்கள் ஆண்டியப்பனிடம் வந்தார்கள். எடுத்த எடுப்பிலேயே ஒரு கான்ஸ்டபிள் அவன் கன்னத்தில் அறைந்தார். இன்னொருவர் பிடரியில் அறைந்தார். இன்ஸ்பெக்டர் விறைத்து நின்ற ஆண்டியப்பனை பார்த்துச் சீறினார்.
"நீ என்ன பெரிய ரவுடியாடா... ஊர்ல கொலை செய்யுறதுக்கு குத்தகை வாங்கியிருக்கியா... ஒன் கூட்டாளி கோபால் எங்கடா? சொல்றியா... ஒதை தின்னுறியா..."
பிரயாணிகளும், ஹோட்டல்களில் பிரியாணி தின்றவர்களும், நின்ற அமர்ந்த இடங்களில் இருந்து அசையாமலே, ஆண்டியப்பனைப் பார்க்க, அவனோ முதலில் செய்வதறியாது திகைத்து, பிறகு சுபாஷ் சந்திரபோஸைப் போல - பாலகங்காதர திலகரைப் போல - பாரதியாரைப் போல - லெனினைப் போல - கண்கள், போலீஸ்காரர்களை சாட்டையடி கொடுப்பது போல, நிமிர்ந்து பார்த்தான். உடம்பில் அடிபட்டாலும் ஆன்மாவில் அடிபடாதது போல், அவன் கம்பீரமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு, விவேகானந்தரைப் போல் நின்றான். நேராக நின்றான்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அதட்டினார்.
"சொல்லுடா, கழுத! ஒன் கூட்டாளிய எங்கே? நீ சொல்லாம ஒன்னை விடப்போறதில்ல. சொல்லுடா..."
ஆண்டியப்பன் கம்பீரமாகப் பதில் சொன்னான்:
"நான் இந்த நாட்டின் பிரஜை. முதலில் என்னை 'டா' போடாமல் மரியாதை கொடுத்துப் பேசுங்க. என்னை அடிச்சதுக்கு மன்னிப்புக் கேளுங்க. அப்புறம் மீதி விவகாரத்தைப் பேசலாம்!"
இன்ஸ்பெக்டர் அதிர்ந்து போனவர் போல் அவனைப் பார்த்தபோது, கான்ஸ்டபிள் ஒருவர், "இது ஸ்டேஷன்ல கவனிக்க வேண்டிய கேஸ் ஸார்" என்றார்.
அந்தப் போலீஸ்காரர்கள் நல்லவர்கள். கையில் விலங்கு மாட்டினால், அவனுக்கு வலிக்கும் என்று நினைத்து, அவன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து, நன்றாக முறுக்கி, அவன் கைகளைப் பின்புறமாகக் கொண்டு வந்து கட்டினார்கள். அப்போது புறப்படப் போன டவுன் பஸ்சில் அவனை ஏற்றிவிட்டு அவர்களும் ஏறிக் கொண்டார்கள்.
பஸ்சில் இருந்தவர்கள், 'ஒடம்பு... இப்டி இருக்கே, இவனுல்லாம் எதுக்காகத் திருடணும்' என்று ஒருவருக்கொருவர் திருட்டுத்தனமாகப் பேசிக் கொண்டார்கள்.
பஸ் போய்க் கொண்டிருந்தது. மேம்பாலத்திற்கு அருகே இருந்த ஒரு ஜவுளிக்கடையில் குமார் கோஷ்டி புடவைகளை விரித்துப் பார்த்தார்கள். கல்யாணத்திற்கு துணி எடுக்கிறார்கள் போலும். ஆண்டியப்பனின் கண்களிலும் அவர்கள் அகப்பட்டார்கள்.
அவர்களைப் பார்த்து அங்கேயே கர்ஜனை செய்ய வேண்டும் என்பதுபோல் துடித்த ஆண்டி, அந்தத் துடிப்பை கண்களில் மட்டும் ஏவுகணைபோல் விட்டுக் கொண்டான். அவன் நெற்றியைச் சுழித்ததால் ஏற்பட்ட புருவ வளைவுகள், மூன்றாவது கண்போல் மின்னியது. வார்த்தை பிரளயங்களாக வராமல் போன வேகம் , புதியதோர் ஆறுமுகத் தீப்பொறி போல, கண்களை அக்கினிக் கட்டிகளாக்கின.
-------------
14
மத்தியான வேளை, சூரியன் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தான். அக்கினிக் கட்டிகள் ஆங்காங்கே விழுவதுபோல் ஆண்டியப்பனின் வீட்டுக்கு வெளியே கட்டாந்தரை பொசுங்கிக் கொண்டிருந்தது. வீட்டுக்கூரை தீப்பிடிப்பதுபோல் சிவந்து கொண்டிருந்தது. வலியைக் கடிப்பதுபோல் மீனாட்சி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள். காத்தாயி, அவள் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒட்டடைக் கம்பு மாதிரி உடம்பும், அந்தக் கம்பு முனையில் உள்ள குஞ்சம் போல தலையும் கொண்ட குழந்தை, காத்தாயியின் மார்பு முனையை, பசுமாட்டின் மடுவை முட்டி முட்டிக் குடிக்கும் கன்றுக்குட்டி போல, லேசாக தலையைத் தூக்கியது. பிறகு வலுவிழந்ததுபோல, தலையைக் காத்தாயியின் வலது கை மடிப்பில் சாய்த்துக் கொண்டது. அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டு, அதன் பரட்டைத் தலையைச் செல்லமாகத் தடவிவிட்டுக் கொண்டே, காத்தாயி, "எம்மாடி... ரெட்டப்பிள்ள பெத்தவளுவ என்ன பண்ணுவாளுவ" என்றாள். மீனாட்சி பதிலுக்கு ஏதோ பேசப்போனாள். மார்பு வலி அவளோடு பேசாமல் திணறிக் கொண்டிருந்ததால், அவளைப் பார்த்துச் சோகமாகச் சிரித்தாள். விளக்கினாள்:
"பாலு இல்ல போலுக்கு - ஒங்க மகன் கடிக்கான். ஆ... என்னமா வலிக்கு. பொறுத்துக்க மவராசா! வீட்ல போயி சாப்புட்டுட்டு வாரேன். ராத்திரிக்கு ஒனக்கு நல்லா பாலு கிடைக்கும். ஏன் ராசா அப்டிப் பாக்க? பாலு இல்லியா? இல்லியா கண்ணு... ராத்திரி வரைக்கும் பொறுத்துக்க மவராசா. சேரில ஒன் சவலப்பாடியும் இப்படித்தான் கடிச்சான். நம்மள மாதுரி ஏழைக்கு உடம்புகூட துரோகம் பண்ணுதப்பா. பொறுத்துக்கடா என் மவராசா... என்ன? ராத்திரி வரைக்கும் பொறுக்க முடியாதா... இன்னும் கொஞ்ச நேரத்துல என் வூட்டுக்காரரு வந்துடுவாரு. காசு வாங்கி பாலு வாங்கிட்டு வாரேன் கண்ணு."
மீனாட்சியின் கண்களில் தோன்றி, கன்னத்தில் உருண்டு மார்பை நனைத்த நீரைப் பார்த்து காத்தாயி திடுக்கிட்டாள்.
"எதுக்கும்மா அழுவிறிய?"
"ஒண்ணுமில்ல. எதையோ நினைச்சேன். என்னமோ வருது."
"அழாத ராசாத்தி! ஆயுசு முழுவதும் அழுதவியளும் இல்ல. சிரிச்சவியளுமில்ல. வேணுமுன்னா பாருங்க இன்னும் கொஞ்ச நாளையில ஒனக்கு ஒரு கொறயும் இருக்காது. இருக்கிற கஷ்டமுல்லாம் பறந்துடப் போவுது பாரு..."
"எப்ப விடியுமோ, என் தலயில என்ன எழுதியிருக்கோ..."
"ஒன் அம்மா படுத பாட்ட பாத்தியாடா என் ராசா. பால் கொடுக்க வேண்டியவ கண்ணீர கொடுக்கிறத பாத்தியாடா என் ராசா! இருக்க வேண்டியது இல்லாம, இல்லாமப் போகவேண்டியது இருக்கத பாத்தியாடா கண்ணு. இந்தா, அம்மா கண்ணீர துடடா - அம்மாவ அழாதன்னு சொல்லுடா..."
காத்தாயி, குழந்தையின் கையை எடுத்து மீனாட்சியின் கன்னத்தில் வைத்துத் துடைத்தாள். தாய்க்காரி குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிடித்தபடி சிறிது நேரம் அப்படியே லயித்திருந்தாள். பிறகு, "எம்மா... எய்யா... ஏ அண்ணாச்சி... மார்புல வலிக்கே! வலி தாங்க முடியலியே! தாங்க முடியலியே..." என்றாள்.
காத்தாயி குழந்தையை எடுத்து, பாயில கிடத்திவிட்டு, மீனாட்சியின் தலையைத் தூக்கி, தன் மடியில் வைத்துக் கொண்டாள். சிறிது நேரம் மௌனம். பின்னர் அந்த மௌனமே வலித்ததால் காத்தாயி ஆதரவாகப் பேசினாள்.
"இனுமயும் பொறுக்கதுல அர்த்தமில்ல. என் வீட்டுக்காரரு மேளத்துக்கு போயிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு. இருக்கிற பணத்த பிடுங்கிக்கிட்டு அவரையும் கூட்டிக்கிட்டு வாரேன். எந்தப் புண்ணியவான் கிட்டயாவது வண்டிய கேட்டு, ஒன்ன ஆஸ்பத்திரில சேத்துடுறோம். கவலப்படாத கண்ணாட்டி! அதுக்குள்ள ஒன் அண்ணாச்சியும் வந்துடுவாரு. இந்த சின்னான் நொறுங்குவான காணுமே..."
"அண்ணாச்சிய காணுமே காத்தாயி - ஏதாவது..."
"அவரு சீக்கிரமா வந்தாத்தான் தப்பு. நேரமாவுதுன்னா என்ன அர்த்தம்... அதிகாரிமாரு நல்லா விசாரிக்காவன்னு அர்த்தம்! பாரேன் வேணுமுன்னா மவராசன் மாட்டோடு வந்து நிக்கப் போறாரு - அப்போ நான் போயிட்டு 'செத்த' நேரத்துல வந்துருதேன்."
மீனாட்சி தலையாட்டி விடை கொடுத்தாள். அப்படித் தலையாட்டியதில் மார்பு வலிக்க முதுகை வளைத்தாள். அவளையே இமை தட்டாது சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த காத்தாயி, அவளை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தவளாய் மடமடவென்று வெளியே போனாள்.
நெருப்பைக் கக்கும் சூரியன், செந்தணல் நிறத்தோடு, மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. குழந்தை பசி மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆறுமாதப் பிள்ளை, அறுபது வயது கிழத்தோற்றத்தில் அப்படியே கிடந்தது.
மீனாட்சி அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் கணவன் வேர்க்க விறுவிறுக்க நின்று கொண்டிருந்தான். அவன் அம்மாக்காரி இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு, மகனையும், மருமகளையும் ஒருசேர மிரட்டிக் கொண்டிருந்தாள். அவர்களைப் பார்த்ததும் மீனாட்சி விம்மினாள். விம்மலுடன் தொண்டை சிக்க, வலியுடன் மார்பு சிக்கியது. மாமியார்க்காரி மகனைப் பார்த்து, "கேளேமில... வாயில கொளுக்கட்டயா வச்சிக்கிட்டு இருக்கே. இந்தா பாரு, தாலியக்கூட வித்துத் தின்னுப்புட்டான். நீ உயிரோட இருக்கும்போதே, இவா அறுத்தவா மாதிரி கிடக்கா பாரு. ஒன்ன சீரழிக்கணுமுன்னே வந்து தொலைச்சிருக்கா பாரு..."
தனக்குப் பிறந்து தொலைத்த பிள்ளையை பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சிங்காரம் - அதுதான் மீனாட்சியின் புருஷன் - அம்மாவின் பாசத்தால் உந்தப்பட்டு, "ஒங்கண்ணன் எங்கழா போயிட்டான்? செறுக்கி மவன ரெண்டு கேள்வி கேக்கணுமுன்னு வந்தேன்! நான் போட்ட தாலிய எங்கழா - சொல்றியா... நெஞ்சில மிதிக்கட்டுமா" என்றான்.
மீனாட்சி அவனை மிரள மிரளப் பார்த்தாள். கண்ணில் நீர் வரவில்லை. காதில் ஏதோ இரைவது மாதிரி இருந்தது. அவர்களைப் பார்த்ததும் ஆளுதவி கிடைத்ததாக நினைத்தவள், இப்போது பட்டமரம் போல் அப்படியே படுத்திருந்தாள். அதை அலட்சியமாய் நினைத்த மாமியார்க்காரி, "இவா சரியான நீலி! கேக்குறத கேளுல! இந்த வீட்ல எவ்வளவு நேரம் நிக்கது?" என்றாள்.
சிங்காரம், 'கேட்க வேண்டிய' கேட்கக் கூடாததைக் கேட்டான்.
"நான் இப்ப சொல்லுததுதான் - எப்ப சொல்லததும். இன்னும் பத்து நாளையில, எல்லா நகையோடயும் பொங்கலுக்கு வரவேண்டிய செப்புக் குடத்தோட வீட்டுக்கு வரணும். இல்லன்னா, தாலியயாவது யாருக்கிட்டயாவது கொடுத்துடணும். ஆமாம். சொல்லுறதச் சொல்லிப்பிட்டேன்."
மீனாட்சியின் மேனி குலுங்கியது. உலகத் துயரையெல்லாம் ஒன்றாகச் சுமந்தவள்போல், நெற்றிப் பொட்டை ஆள்காட்டி விரலால் அழுத்திவிட்டுக் கொண்டே, பிள்ளையையும், அதைப் பிறப்பித்தவனையும் மாறிமாறிப் பார்த்தாள். 'தாலிய வேணுமுன்னா தந்துடுதேன். இந்தப் பிள்ளய கொண்டு போயி காப்பாத்தும்' என்று சொல்ல நினைத்து, அவனைப் பார்க்க நினைத்தபோது, மாமியாரின் குறுக்குப் பார்வை அவள் கண்ணில் முட்டியது. சொல்ல வந்தது நெஞ்சுக்குள்ளேயே நின்றது. இதற்குள், "ஜாலமாழா போடுத. கைகேயி, மூளி, என் பிள்ள என்னைக்கு ஒன் கையப் பிடிச்சானோ - அன்னைக்கே அவன் 'கொலுக்கா' போயிட்டானே. செத்ததுலயும் கணக்கில்லாம, வாழ்ந்ததுலயும் கணக்கில்லாமப் போயிட்டானே" என்று ஒப்பாரி வைத்தபோது, அம்மா, 'மருமகள் கொடுமை' தாங்க முடியாமல் புலம்புவதாக நினைத்த சிங்காரம் "நீ ஏம்மா அழுவுற? ஒன்னத்தாமுழா! ஒன்னால பத்து நாளையில வர முடியுமா - இல்ல இன்னொரு கல்யாணம் பண்ணிக்கட்டுமா" என்றான்.
மீனாட்சியின் வெறுமை, வலியை வென்றது. கையைத் தூக்கி வாயைப் பேச வைத்தது.
"நீ கல்யாணம் செய்தாலுஞ் சரி - கருமாதி செஞ்சாலுஞ் சரி. இன்னையோட நான் தாலியறுத்துட்டேன். மொதல்ல போ, போ..."
சிங்காரம் திகைத்துத் திணறியபோது, மாமியார்க்காரி "இன்னுமால நிக்க... வா போவலாம். என்ன பேச்சு பேசிட்டா பாரு. கழுத, களவாணி முண்ட" என்று சொல்லிக்கொண்டே மீனாட்சியை சூடாகப் பார்த்தாள். பிறகு மகனை, முதுகைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே வெளியேறினாள்.
சூரியன் சாய்ந்து கொண்டிருந்தது போல், மீனாட்சியும் சாய்ந்து கொண்டிருந்தாள்.
ஊருக்குள்ளேயே வீடு இருந்தாலும் இப்போது அது தன்னந்தனியான காட்டில் சின்னஞ்சிறிய புதராக மீனாட்சிக்குத் தோன்றியது. மரணப் பாம்புக்குப் பயப்படும் எலிபோல, அவள் மல்லாந்து படுத்தவண்ணம், தன் மேனியைத் தானே நகர்த்திக் கொண்டிருந்தாள். தாளமுடியாத வலி. மீளமுடியாத மார்புப் பாரம். மீட்க வராத ஆட்கள். எலிதான் தோண்டியெடுத்து, மண்ணுக்குள் வளையமாக வைத்து வாசம் செய்யும் இருப்பிடத்திற்குள்ளேயே வந்து நிற்கும் பாம்பைப் பார்த்து, தப்பிக்கத் துள்ளுவதாக நினைத்து, பாம்பின் வாய்க்குள்ளேயே விழுவது போல், அவள் தன்னையறியாமலேயே, தன் உடம்பை நகர்த்தி, நகர்த்தி உயிருக்கு விடை கொடுத்துக் கொண்டிருந்தாள்.
திருநெல்வேலிக்குப் போன அண்ணன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. என்ன ஆனானோ என்ன செஞ்சாவளோ... திடீரென்று வீட்டுக்கு வெளியே ஆசாரிப் பையன் ஆறுமுகமும், சண்முகக் கோனாரும் பேசிக்கொண்டு போவது கேட்டது.
"அநியாயத்த பாத்தியாடா - காலம் கலிகாலமாப் போச்சு. ஆண்டி, திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட்ல நிக்கும் போது - போலீஸ்காரங்க அடி அடின்னு அடிச்சி, கையில விலங்கு போட்டுக் கொண்டு போயிருக்காங்க பாரு!"
"போலீஸ்காரங்க போடல கோனாரே! ஆண்டிக்கு விலங்கு போட்டது நாமதான். நம்மளால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைச்சிதான், அவரு கையில விலங்கு போட்டிருக்கானுவ. நாமளே விலங்க போட்டிருக்கது வரைக்கும், இப்படிப் பல அநியாயம் நடக்கும் சாமி!"
"வா, இந்த சின்னானைப் பாத்து ரெண்டுல ஒண்ண கேப்போம்!"
மீனாட்சி எழுந்திருக்கப் பார்த்தாள். காலை மடக்கிப் பார்த்தாள். கைகளை ஊன்றிப் பார்த்தாள். தலையை அழுத்தித் தாவப் பார்த்தாள். உருண்டு உருண்டு, சுருண்டு சுருண்டு, வெளியே போகப் பார்த்தாள். பேசிக்கொண்டு போனவர்களை அங்கிருந்தபடியே குரல் கொடுத்து, 'இங்க வாங்க... என் அண்ணாச்சிய என்ன பண்ணுனானுவ... சொல்லுங்க... சொல்லுங்க...' என்று சொல்லப் பார்த்தாள். கண்களைக் கழட்டி, அண்ணாச்சி இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு வருவதற்கு அனுப்பப் போகிறவள் போல் விழிதெறிக்கப் பார்த்தாள். அவள் விலங்கை உடைக்கப் போகிறவள் போல் கைகளை தரையில் அடித்தாள். அவனை உதைத்தவர்களை உதைக்கப் போகிறவள் போல், கால்களை வெட்டினாள். கழுத்தை ஆட்டினாள். உடம்பு அவள் நினைத்தபடி கேட்கவில்லை. அந்த உடம்பைத் தண்டிப்பவள் போல கைகளை எடுத்துத் தலையில் அடித்தாள். தலைமுடியைப் பிய்த்தாள். முன் நெற்றியில் அடித்தாள். தலையைத் தூக்கித் தூக்கித் தரையில் மோதினாள். கையைத் தூக்கித் தூக்கி முகத்தில் அடித்தாள். அடித்த கையை மீண்டும் தூக்கி, மார்பில் அறைந்தாள். மாறி மாறி அறைந்தா. தலை பொறுத்துக் கொண்டது. முகம் சகித்துக் கொண்டது. முன் நெற்றி விட்டுக் கொடுத்தது. ஆனால் மார்புப் புண் - மார்பகத்தில் தோன்றியிருந்த அந்த எமக்கட்டிகள் -
அவை விட்டுக் கொடுக்கத் தயாராகவில்லை. அவைகளுக்கும் விடுதலை வேண்டும் போல் தோன்றியிருக்க வேண்டும். எத்தனை நாளைக்கு இந்த ஏழைப் பிராணியிடம் தங்கியிருப்பது? எத்தனை நாளைக்கு மருந்து மாயம் செய்யாமல் தங்களை சீந்தாமல் இருக்கும் இந்த வீட்டில் இருப்பது? தங்களின் முக்கியத்துவத்தை அறியாத அந்த வீட்டில், தங்கள் முக்கியத்துவத்தைக் காட்ட விரும்பின. அவைகளுக்கு ரோஷம் ஏற்பட்டுவிட்டது. ஆவேசமான ரோஷம். அவளைத் தங்களுடன் அப்படியே தூக்கிக் கொண்டு போக நினைத்த துவேஷமான ஆவேசம்!
உச்சி இரவு - அவளுக்கு உச்சகட்டமான நரகம்.
நெஞ்சு பிளப்பதுபோல மீனாட்சி துடித்தாள். எமக்குத்தின் இறுதி நிலையில் தவித்தாள். காத்தாயியைக் காணுமே என்று தவித்தாள். அண்ணனுக்குப் பதிலாக அந்த அக்காளைப் பார்த்துவிட்டாவது கண் மூடலாம் என்பதுபோல், கண்களை உயிர்ப்புடன் வைத்திருந்தாள்.
குழந்தை லேசாக அழுதது. வாயை மேலுங் கீழுமாகக் கொண்டு வந்தது. 'ஏதாவது கொடு' என்பது போல் அவளை ஏக்கத்தோடு பார்த்தது. பால் வார்க்க வேண்டிய குழந்தை, அவளை பாலுக்காகப் பார்த்தது.
ஒரு ஓரத்தில் துடித்துக் கொண்டிருந்த மீனாட்சி, குழந்தையை நோக்கி ஆவேசப்பட்டவளாய், அணுஅணுவாக நகர்ந்து வந்தாள். மல்லாக்கப் படுத்துக் கொண்டே இரண்டு கால்களையும் கொஞ்சங் கொஞ்சமாக நகர்த்தி, தலையை லேசு லேசாக அசைத்து, முதுகை மெள்ள மெள்ளச் செலுத்தி, குழந்தைக்கருகே நெருங்கினாள். குழந்தையை நெருங்கியதும், லேசாக ஒருக்களித்தவாறு படுத்துக் கொண்டு, ஒரு கையை குழந்தையின் முதுகில் போட்டபோது, கண்ணில் இருந்து, கன்னக்கதுப்பு வழியாக வந்த கண்ணீர், அவள் கழுத்துப் பகுதியில் துளித்துளியாக வந்து தேங்கியது. அந்தப் பிள்ளை - அவள் பெற்ற பிள்ளை, அந்தக் கண்ணீரை, பாலாக நினைத்து உதடுகளை லேசாகக் குவித்துக் குடித்தது. குடித்து முடித்துவிட்டு 'இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்' என்பது போல் அவளை ஏக்கத்தோடு பார்த்தபோது -
மீனாட்சி மார்புப் புண்ணின் வலியை வென்றவள் போல், பாசத்தைத் தின்றவள் போல், கைகள் விறைக்க, கண்கள் புடைக்க, நெற்றி சுருங்க, மூக்கில் மூக்குத்திக்குப் பதிலாக, ஒரு சொட்டுக் கண்ணீர் தங்கம்போல் மினுமினுக்க, வலியால் துடிக்காமல் அசைவற்றுக் கிடந்தாள்.
--------------
15
ஆண்டியப்பனின் வீட்டிலிருந்து வெளியே வந்த காத்தாயி, சேரிக்குச் சென்று புருஷன் வந்ததும், புருஷனையும் கூட்டிக் கொண்டு வந்து, யாரிடமாவது வண்டி கேட்க வேண்டும் என்று நினைத்தவளாய் நடந்து கொண்டிருந்தாள். கிராமத்திற்கும், சேரிக்கும் இடையே உள்ள 'காவல் சாவடி' போல் காட்சியளித்த சுடலை மாடசாமியின் பாழடைந்த கோயிலுக்கருகே வந்த போது, புதிய சாலைகள் போட்டதாக வெறும் மண்ணை அள்ளிப் போட்டு, அவற்றை பாழ்படுத்தும் மாசானம், யூனியன் அலுவலகத்தில் இருந்தோ அல்லது 'பி.டபிள்யூ.டி' அலுவலகத்தில் இருந்தோ எதிரே வந்து கொண்டிருந்தார். காத்தாயியைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டார். பேச்சில் முந்திக் கொண்டார்.
"என்ன அம்மாளு, வெயிலுல... வேர்க்க விறுவிறுக்க வாற?"
"என்ன பண்றது... யாரயும் தூண்டிவிட்டுட்டு, அப்புறம் எதிரிப் பக்கம் சேர்ந்துக்கிட நான் மேல் ஜாதில பணக்காரியா பிறக்கலிய..."
"ஏன் பூடகமாப் பேசுற உடச்சிப் பேசு. பல சமாச்சாரங்களுக்காவ பல வேஷம் போட வேண்டியதிருக்கு. ஆனாலும் இந்த ஆண்டிப்பய மேல எனக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. எங்க சித்தி மவளோட நாத்தினார் சின்ன மச்சானோட பெரியய்யா பேரன் அவன் - நானாடாட்டாலும் சதை ஆடுது."
"ஒம்ம பாசத்த வண்டி மாட்ட தந்து காட்டும்."
"ஒனக்கில்லாத வண்டி மாடா - என்ன சமாச்சாரம்..."
"மீனாட்சி வலில துடிக்குது. ஆஸ்பத்திரில சேக்கணும். என் புருஷன் வந்ததும் அவரயும் கூட்டிக்கிட்டுப் போவணும். ஏன்னா பொட்டச்சிங்க தனியாப் போற காலம் இன்னும் வரலியே."
மாசானம் யோசித்தார். அவளோடு 'வினையாக' விளையாட வேண்டும் போலிருந்தது. கொஞ்சம் பயமாயும் இருந்தது. பரவாயில்ல - பட்டும் படாமலும் பேசலாம். வம்பு வந்தால் வேல் கம்பு இருக்கு. அதைவிட கூர்மையான போலீஸ் செல்வாக்குள்ள குமார் இருக்கான். பாத்துப்புடலாம். பிச்சாண்டிப்பய கூட சேர்ந்து தில்லுமுல்லு பண்ணுத சின்னான் பய அக்காவ, நடயா நடக்க வைக்கணும். ஆண்டியப்பன இப்ப பெரிய மனுஷனா பேசுற பிச்சாண்டிப்பய பயப்படும்படியா பண்ணணும். ஆண்டி குடும்பம் சீரழிஞ்சா பிச்சாண்டிப்பய 'திருந்துவான்' - 'பினாமி' நிலம் இருக்கது தெரிஞ்சி போனாலும் பயப்பட்டுப் பேசமாட்டான். பிச்சாண்டிய அடிக்கணுமுன்னா ஆண்டிய அடிக்கணும். ஆண்டிய அவன் தங்கச்சிய வச்சே அடிக்கணும். மாசானம் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டே கேட்டார்:
"காத்தாயி ஒன் புருஷன் மேளம் அடிக்கப் போயிருந்தானா..."
"இப்ப மேளத்தத்தான் அடிக்கப் போயிருக்காரு. எதுக்குக் கேக்கியரு?"
"கோணச் சத்திரத்துல வரச்சில போலீஸ்காரங்க யாரயோ ஒரு மேளக்காரன் குடிச்சதுக்காவ இழுத்துக்கிட்டு போனாங்களாம்."
"அய்யய்யோ அது என் புருஷன்தானு ஒமக்கு நல்லாத் தெரியுமா... சீக்கிரமாச் சொல்லுஞ் சாமி."
"சட்டாம்பட்டி மேளக்காரன்னு சொன்னாங்க. சாமி கவனிக்கல. பஸ்ல வரச்சில காதுல விழுந்தது."
"அட கடவுளே, 'வீட்லதான் போடுறேன் பிள்ள - வெளில போடமாட்டேன்'னு சொன்னவரு... கடைசில... சாமி... நிசமா அவராத்தான் இருக்குமா..."
"என் காதுல விழுந்தத ஒன் காதுல போட்டேன். என்னை சத்தியங்கூட பண்ணச் சொல்லுவ போலுக்கே. சரி சீக்கிரமா சின்னான போயி பாக்கச் சொல்லு."
"அந்த 'நொறுங்குவான்' தென்காசிலலா வேல பாக்கான். சாயங்காலமாத்தான் வருவான். அட கடவுளே... போலீஸ்காரங்க 'பாவி மனுஷன' என்ன பாடு படுத்துறாங்களோ..."
"ஏன் அம்மாளு பேசிக்கிட்டு இருக்க... சீக்கிரமா கொஞ்சம் பணத்த எடுத்துக்கிட்டு போறதப் பார்க்காம? ஒருவேள, கோணச்சத்திரத்தில இல்லாட்டா, ஆலங்குளத்துல போயிப் பாரு. ஏன்னா எனக்கு இந்தப் பேச்சு காதுல விழுந்த சமயம் பஸ், அத்தியுத்துக்கிட்ட நின்னுது. அதனால் அந்தப் பக்கம் இருக்குற ஆலங்குளமா - இந்தப் பக்கம் இருக்க கோணச்சத்திரமான்னு தெரியல."
"என்னய்யா நீரு - ஒம்ம ஊர்க்காரன பிடிச்சிருக்கதா கேட்ட பிறவு - கொஞ்சம் தீர விசாரிக்கப்படாதா..."
"பிச்சாண்டிக்கு சப்போர்ட்டா ஒன் தம்பி பண்ணுன கூத்துக்கு இதயாவது சொல்லுதேனே - பேச்ச வளக்காமல் ஆகவேண்டியத பாரு பிள்ள! சின்னான் வாரது வரைக்கும் காத்திருக்காத. அதோட அவன் மேல போலீஸ்ல கண்ணு. ஒன் புருஷன் மட்டும் சின்னானோட மச்சான்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, நீ அப்புறம் ஒன் புருஷன உயிரோட பாக்க முடியாது. சீக்கிரமா போ பிள்ள!"
காத்தாயி, பயத்திலாடினாள். புருஷன், இதுவரை லாக்கப் போகாதவன். லாக்கப்பில் இருந்தாக்கூட பரவாயில்லை; ஒருவேளை சின்னான் மச்சான்னு தெரிஞ்சு ஏதாவது ஏடாகோடமா பண்ணிப் புட்டாங்கன்னா... அட கடவுளே, இந்த மனுஷன் வேற உயிரோட பாக்க முடியாதுன்னு சொல்லுதான் - 'கரி' வாய் மனுஷன். இவன் சொன்னபடி நடந்திருந்தா, கடவுளே, என் புருஷன உயிரோட பாப்பேனா?
காத்தாயி வேகமாகச் சேரிக்குப் போனாள். அக்கம்பக்கத்தில் சொல்லிவிட்டு, துணைக்குப் பெரியப்பாவை கூட்டிக்கொண்டு கோணச்சத்திரத்தைப் பார்த்து ஓடினாள். அங்கிருந்து ஆலங்குளத்திற்கு பஸ்ஸில் ஏறிய பிறகுதான், அவளுக்கு மீனாட்சியின் ஞாபகம் வந்தது. மீனாட்சி அம்மா எப்டி இருக்காவளோ... என் புருஷன் எப்டி இருக்கானோ... இருவரில் யாருக்காக அழுவது என்று தெரியாமல், இறுதியில் தனக்காக அழுபவள்போல் அழுதுகொண்டு, அவள் இருக்கையில் அமர்ந்தாள். பஸ் புகையைக் கக்கிக்கொண்டது.
காத்தாயியின் கணவனைப் பற்றி சேரியிலும், 'ஊரிலும்' மக்கள் ஆங்காங்கே நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்கள். 'பெரிய பெரிய ஹோட்டலுல குடிக்கவனுகள பிடிக்கமாட்டாங்க. கூடச்சேந்து வேணுமுன்னா குடிப்பாங்க. மேளக்காரன் மாதிரி ஆள் அகப்பட்டால், உடம்புல மேளம் அடிப்பாங்க. காய்ச்சுறவன கண்டா பல்லக் காட்டுவாங்க."
பெரும்பாலும் அனுதாபத்துடன் பேசிக் கொண்டிருந்த 'ஊர்' ஜனங்களில் ஒரு பகுதி, திடீரென்று வாயடைத்துப் போய் நின்றது. ஒரு கட்டை வண்டியில் வெள்ளைத் துணி மூடப்பட்டு அந்த வண்டி வந்து கொண்டிருந்தது. ஊர்க்காரர்கள் ஓடினார்கள். முந்தாநாள் இரவு கருப்பட்டி வண்டி அடித்துக் கொண்டு போன முனியாண்டி பிரமை பிடித்தவனாய் வண்டியில் உட்கார்ந்திருந்தான். பின்னால் குமாரின் தந்தை சின்னத்துரை நடந்து வந்து கொண்டிருந்தார்.
எல்லோரும் பதறினார்கள்.
"என்ன மாமா... என்ன நடந்தது..."
"என்ன தாத்தா... என்ன இது?"
சின்னத்துரை ஏதோ சொல்லப் போனபோது முனியாண்டி 'ஹோ'வென்று கத்திக்கொண்டே வெள்ளைத் துணியை விலக்கினான். இரண்டு ஓலைப்பாய்ச் சுருட்டலில், இரண்டு பிணங்கள் சிதைந்து கிடந்தன. வயதுக்கு வந்த இரண்டு மகளையும் மூன்று சின்னப் பையன்களையும், ஒரு 'செண்டு' நிலத்தையும் வைத்திருந்த ஐம்பது வயது நயினார், முகம் சிதைந்து கிடந்தார். ஒரு வருடத்திற்கு முன்புதான் கல்யாணம் ஆன, சேரி வாலிபன் மூக்கையா, காலுக்கும், முகத்துக்கும் இடைப்பட்ட பகுதி, காணமுடியாத அளவுக்குச் சிதைந்து போயிருக்க, கர்ப்பம் தரித்த மனைவியையும், வயதான தாய் தந்தையரையும் பார்க்க நினைத்தவன் போல், கண்கள் துருத்தி நிற்க, ஏதோ பேசப் போகிறவன் போல் வாய் திறந்து நிற்க, விறைத்துக் கிடந்தான்.
முனியாண்டி பலமாக புலம்பிக் கொண்டிருந்த போது ஓரளவு அதிர்ச்சி அடைந்திருந்த சின்னத்துரை விளக்கினார்.
"முந்தாநாள் நயினாரையும், மூக்கையாவையும், கருப்பட்டு வண்டிய அடிச்சிக்கிட்டு, புனலூரப் பார்த்துப் போகச் சொன்னேனா... நான் பஸ்ல சந்தைக்கு முன்னாலயே போயிட்டேன். என்னடா வண்டியக் காணுமேன்னு பழயபடி பஸ் ஏறி வந்தால், செங்கோட்டய தாண்டி மலையாள எல்லைக்குள்ள லாரி மோதி மாடும், இவங்களும் செத்துக் கிடக்காங்க. வண்டிமேல லாரி நிக்குது. அருமயான வண்டி - சுக்குநூறா சிதறிப்போயிட்டு. கதிர்வேல் பிள்ள வண்டிய அடிச்சிக்கிட்டு வந்த இந்த முனியாண்டி, பித்துப் பிடிச்சி உட்கார்ந்திருக்கான்."
"அப்புறம்?"
"அப்புறம் என்ன... போலீஸ்காரங்க வந்தாங்க. பிரேக் இன்ஸ்பெக்டரு வந்தாரு. ஏதோ கோடு போட்டாங்க. எப்படியோ ஆளுக்குக் கொஞ்சம் கையில தள்ளிட்டு பிணத்த மீட்டிக்கிட்டு வாரேன், எய்யா... என் ஒடம்பு எப்டி நடுங்குது. யாராவது ஒரு சோடா வாங்கிட்டு வாங்கடா..."
இதற்குள் நயினாரின் மனைவியும், மகளும் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள். "இந்த வயசில குளிருல போறீரே'ன்னு நான் பாவி சொன்னதையும் கேக்காம - இப்போ ஒரேயடியாய்ப் போயிட்டீரே... போயிட்டியே என் ராசா" என்று நயினார் மனைவி, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள். அவள் மகள் 'அய்யா... அய்யா' என்று சொல்லிக் கொண்டே ஏங்கியவள், அப்படியே மயங்கி விழுந்தாள். உடனே கடையில் இருந்து, சுக்கை வாங்கி, அங்கேயே ஒரு கல்லில் வைத்து இடித்து, அவள் காதில் வைத்து ஊதினார்கள். சின்னத்துரைக்கு சோடா வாங்கிக் கொண்டு வந்தவன், அதை உடைத்து, அவள் முகத்தில் தெளித்தான். நயினார் மனைவி நடப்பது தெரியாமல் புலம்பிக்கொண்டும், அவளின் சின்னப் பையன்கள், "அய்யா... அக்கா" என்று ஏங்கி ஏங்கி அழுதுகொண்டும் இருந்தபோது, சேரிப் பையன் மூக்கையாவின் மனைவி, தலையிலும், முகத்திலும் அடித்துக் கொண்டே ஓடி வந்தாள். ஒரு மின்சாரக் கம்பத்தில், அவள் தலையை வைத்து மோதப் போனபோது, இரண்டு சேரிப் பெண்கள் அவளைப் பிடித்துக் கொண்டார்கள். மூக்கையாவின் வயதான தாய் தந்தையரை, நான்கு பேர் கைத்தாங்கலாகக் கூட்டி வந்தார்கள். சொல்ல முடியாத கூட்டம். சொல் தொடுக்க முடியாத நடுக்கம்.
பிணத்திற்கருகே வந்ததும், சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்ற மூக்கையாவின் மனைவி, பிறகு அவன் தலையோடு தன் தலையைச் சேர்த்து உருட்டிக் கொண்டே, "என் மவராசா, 'ஒரு ரூபா கொடுத்துட்டுப் போறியே! ஒனக்குல்லாம் எதுக்குப் பொண்டாட்டின்னு' பாவி மொட்ட கேட்டேனே... கேட்டேனே... ஒன்கிட்ட கடைசியா நல்ல வார்த்த சொல்லி வழியனுப்பாம வைது தொலைச்சேனே... கடைசில பொண்டாட்டி நிக்கேன். புருஷன் நீ போயிட்டியே, என் ராசா... என்னை நொந்துக்கிட்டே போனீயா... இல்லன்னு ஒரு வார்த்த சொல்லு ராசா - என் மவராசா... என் மாணிக்கமே... நான் கடைசி வரைக்கும் மஞ்சள் கயிறோட இருப்பேன்னு, நினைச்சேனே மவராசா... ஒனக்கு தங்கத்துல செயினு பண்ணிப் போடறேன்னு சொல்லிட்டு இப்ப இந்த மஞ்சக்கயித்தயும் பறிச்சிட்டியே என் மவராசா..." என்று சொல்லிச் சொல்லிக் கதறினாள்.
ஓரளவு சுயநினைவுக்கு வந்த நயினாரின் மனைவி மூக்கையவின் மனைவியின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டே, "நானாவது வாழ்ந்து முடிஞ்சவா... நீ அறியாத வயசில வாழ்ற பிள்ளை... வாரிக் கொடுத்திட்டியே. வாரிக் கொடுத்திட்டியேடி" என்று சொல்லிக் கொண்டே அழுதபோது, ஊர் ஜனங்கள் மொத்தமாக அழுதார்கள்.
ஒரு சிலர் ஆகவேண்டிய காரியங்களுக்காக தங்களைத் திடப்படுத்திக் கொண்டே, கூட்டத்தை அதட்டினார்கள்.
"சரி, இனும அழுது என்ன பிரயோஜனம்... அவங்க விதி முடிஞ்சி போச்சு."
"விதி யார விட்டுது... வீட்ல இருந்திருந்தாலும் சாவு வேற வகையில வந்திருக்கும். அன்னைக்கே தலையில எழுதினத, அடிச்சி எழுத முடியுமா? அவங்க முன்னால போறாங்க; நாம பின்னால போவப் போறோம். அவ்வளவுதான்."
"சரி. பிணத்த இறக்குங்கப்பா. சின்னத்துரை சின்னய்யா திடமான ஆளு. எப்படியோ பிணத்த கொண்டு வந்துட்டாரு. வேற ஆளா இருந்தா அங்கேயே புதச்சிட்டு வந்திருப்பாங்க. சரி. கத்தி கத்தி பேசிக்கிட்டிருந்தா எப்படிப்பா... பொம்புளயள விலக்குங்க. உம் சீக்கிரம்... மஞ்ச வெயிலு அடிக்குது பாருங்க..."
இதற்குள் தங்கம்மாவும், அவள் அம்மாவும், இதர பெண்டு பிள்ளைகளும் வந்து குவிந்தார்கள். நயினாரின் மனைவி, தங்கம்மாவின் அம்மாவுக்கு பெரியய்யா மகள். தங்கையைக் கட்டிப் பிடித்து அழுதாள். எல்லாப் பெண்களும் கட்டிப் பிடித்து அழ, ஆண்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பிணங்களை இறக்கினார்கள். ஒருவர் எல்லோர் சார்பிலும் சொன்னது ஒப்புக்கொள்ளப்பட்டது.
"இந்தக் கோரத்த வீட்டுக்குக் கொண்டு போவாண்டாம்... நேரா சுடுகாட்டுக்குக் கொண்டு போவலாம்!"
நயினாரை ஒரு கட்டிலில் வைத்து 'ஜாதி' சுடுகாட்டுக்கும், மூக்கையாவை 'சேரிச்' சுடுகாட்டிற்கும் கொண்டு போகப் போனார்கள். ஒன்றாக மடிந்தவர்கள் தனித்தனியான இடங்களுக்குக் கொண்டு போகப்படும் சமயத்தில், நயினாரின் மனைவி, புருஷன் பின்னாலும், மூக்கையாவின் மனைவி, தன் புருஷன் பின்னாலும் அலறியடித்துக் கொண்டு ஓடியபோது, ஊர் ஜனங்கள் முண்டியடித்து, அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள். மூக்கையாவின் தள்ளாத வயது தந்தை, தன் மனைவியின் கையை எடுத்துத் தோளில் வைத்துக் கொண்டு "இதுக்குப் பொறவும் நாங்க இருக்கப்படாது. எங்க ரெண்டு பேரையும் யாராவது கல்லத் தூக்கிப் போட்டுக் கொல்லுங்க" என்று சொன்னது, எல்லோர் உள்ளத்தையும் கொன்றது.
ஆண்டுக்கணக்கில் வாழ்ந்த நயினாரும், மூக்கையாவும் ஒரு மணிக்கணக்கில் புதைக்கப்பட்டார்கள். இவ்வளவு பெரிய கோரத்தை, சமீப காலத்தில் பார்த்தறியாத ஊர்மக்கள், ஒருவருடன் ஒருவர் பேசாமல், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஆறுதல் கொடுப்பவர்கள் போலவும், ஆறுதல் பெறுபவர்கள் போலவும், சோகச் சூன்யத்தில் சோர்வுற்று நின்றார்கள். அப்படியும் இப்படியுமாய் மாலை கடந்து மணி ஏழாகிவிட்டது.
எல்லாம் முடிந்து அவரவர்க்கு தம் வீட்டு விவகாரங்கள் நினைவுக்கு வரத் தோன்றியபோது, சின்னான் சேரி மக்கள் அனைவரையும் திரட்டிக் கொண்டு ஊரின் முனைக்கு வந்தான். மூக்கையா மனைவியையும் இரு பெண்கள் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். வட்ட வட்டமாக நின்று கொண்டிருந்த ஊர்மக்கள் சேரிக் கூட்டத்திற்கருகே வந்து சேர்ந்தார்கள். விவரம் புரியாமலும், விவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூட்டத்தோடு கூடியபோது, சின்னான், ஆசாரிப் பையன் ஆறுமுகத்திடம், "சீக்கிரமா நயினாரம்மாவ கூட்டிக்கிட்டு வாப்பா" என்றான். அவன் முகத்தில் கடுமை. சிநேகிதப் பையன் ஆறுமுகத்திடமும் கடுமையாகத்தான் சொன்னான்.
கூட்டத்தில் ஒருவர் பேச்சைத் துவங்க நினைத்து "என்ன சின்னான், ஒன் மச்சான போலீஸ் பிடிச்சி வச்சிருக்காம். ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிப்புடப் போறாங்க. காத்தாயி வேற போயிருக்கா... ராத்திரி நேரம் - நீ போயி பாக்கப்படாதா" என்றார்.
"ஒண்ணுமில்ல சாமி. தென்காசில மச்சான் வந்து மேலாபுரத்துக்கு மேளத்துக்கு போவூதாயும், அக்காகிட்ட சொல்லிடும்படியும் சொன்னாரு. அவளுக்கு செலவுக்குன்னு பத்து ரூபா வேற தந்து விட்டாரு."
"ஒரு வேள - அதுக்குப் பிறவு?"
"இல்லய்யா. என்னை மச்சான் பஸ் ஸ்டாண்ட்ல வந்து வழியனுப்புனாரு. அப்போ மணி நாலரை. காத்தாயி இங்கிருந்து போவும்போது ரெண்டு மணியாம்."
"அப்படின்னா?"
"இந்த மாசானம் புரளியக் கிளப்பி விட்டிருக்கான்."
"ஏ செறுக்கிமவன். இன்னும் அவனுக்கு குறுக்குசால் விடுறது போகல பாரு! அவன கவனிக்கணும்! ஆனால் இப்போ நீ போயி - காத்தாயியப் போயிப் பாக்காண்டாமா, ராத்திரி நேரம்."
"ரெண்டு பேர அனுப்பி வச்சிருக்கேன். ஆலங்குலத்துல எங்க பெரியம்மா வீடு இருக்கு. அங்க தங்கிட்டு காலையில வரச் சொல்லியிருக்கேன். பெரியம்மா, மவனுவள கூட்டிக்கிட்டுதான் போலீஸ் ஸ்டேஷன் போயிருப்பா..."
"என்னடா நீ... நீ போறது எப்டி? பிறத்தியார் போறது எப்டி?"
"இப்போ எனக்கு இதவிட முக்கியமான வேல இப்பவே இருக்கு. பிச்சாண்டி, போய் நயினாரம்மாவ கூட்டிக்கிட்டு வா. ஆறுமுகம் பேக்கன்."
"அந்தா அவளும் பின்னியளும் வாரவ பாரு. அவங்கள எதுக்காவப்பா கூப்பிட்ட..."
"சொல்லுறேன்."
சொல்லப் போன சின்னான், மேற்கு நோக்கிக் கூர்மையாகப் பார்த்தான்.
நயினாரைப் புத்தைத்துவிட்டு ஐம்பது அறுபது பேர் வந்தார்கள். மாசானம், பரமசிவம், சின்னத்துரை, முன்ஸீப், கர்ணம், ஜம்புலிங்கம் முதலிய பிரமுகர்கள் வந்து கொண்டிருந்தபோது, இடும்பன்சாமியும், இன்னும் ஒரு சிலரும் கூட்டத்தில் வந்து சேர்ந்து கொண்டார்கள். நயினார் மனைவி, அருகே இருந்த வண்டிச் சக்கரத்தில் சாய்ந்து 'மவராசா... மவராசா...' என்று புலம்பிக் கொண்டிருக்க, தங்கம்மாவின் அம்மா, அவளுக்கு முந்தானை மடிப்பை வைத்து வீசிக் கொண்டிருந்தாள். தங்கம்மா முன்னிலும் அதிக 'மங்கலான' பார்வையுடன் முட்டிக் கால்களைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். மூக்கையாவின் மனைவியையும், மாமனார் மாமியார்களையும் நான்கைந்து பேர் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வண்டியடித்துக் கொண்டு வந்த முனியாண்டி, தங்கம்மாவிடம் போட்டி போடுபவன் போல் பித்துப் பிடித்து, பைத்தியமாய் ஆகப்போகிறவன் போல் நின்றான்.
என்னமோ நடக்கப் போவுது என்பதை அனுமானித்து கூட்டம் நின்றபோது, நயினாரைப் புதைத்தவர்கள் அங்கே சங்கமமானார்கள். கதிர்வேல்பிள்ளை, "இன்னுமா கலையல? செத்தவங்ககூட சாவ முடியுமா? போயி வேலயப் பாருங்கப்பா" என்று சொன்னபோது - பரமசிவமும், சின்னத்துரையும் சற்று முன்னால் நடந்தார்கள். சின்னான் கத்தினான்:
"அங்கேயே நில்லுங்க! ஒங்களத்தான் முதலாளி! ஒரு அடி நகரப்படாது - அங்கேயே நில்லுங்க."
பரமசிவமும், சின்னத்துரையும் அதிர்ந்து போய் நின்றபோது, சின்னான் அவர்களை வழிமறிப்பதுபோல் முன்னால் போய் நின்றுகொண்டான்.
"சின்னத்துரை மொதலாளி! நான் ஒம்மகிட்ட சில கேள்வி கேக்கணும் - அய்யா பதில் சொல்லணும்."
சின்னத்துரை வெகுண்டார்.
"நீ என்னடா கேக்கது - நான் என்ன சொல்றது? வழிய விடுறியா இல்ல..."
"மொதலாளி! அப்படிச் சொன்னா எப்டி? நான் நயினாரா மாறி கேக்கேன். மூக்கையாவா மாறி கேக்கப் போறேன். இந்த ஜனங்களோட வேலக்காரனா நின்னு கேக்கேன் மொதலாளி! தர்மதுர... கோபப்படாம பதில் சொல்லணும்."
"நடுத்தெருவுல என்னடா கேள்வி?"
"ஏன்னா நடுத்தெருவுல ரெண்டு குடும்பம் நிக்குது பாருங்க."
சின்னத்துரை சார்பில், பரமசிவம் ஏதோ கோபமாகப் பதில் சொன்னபோது, மாசானம் எப்படிக் கழட்டிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் ஒரு வயதான மனிதர் "அவன் என்ன கேக்கான் என்கிறதத்தான் கேட்டுட்டுப் போங்க" என்றார். சின்னத்துரை தயங்கினார். சின்னான் கேட்டான்:
"மொதலாளி! எதிர்த்திசையில வந்த லாரி, பார வண்டி மேல அநியாயமா மோதியிருக்கு. போலீஸ்காரங்க வழக்கு போட்டிருக்காங்களா? நீங்க போலீஸ்ல கம்ளெயிண்ட எழுதிக் கொடுத்தீங்களா? நஷ்ட ஈடு கேட்டியளா?"
சின்னத்துரை சீறினார்.
"இவரு பெரிய வக்கீலு!"
கூட்டத்தில் ஒருவர் எதிர்க் கேள்வி கேட்டார்.
"சபையோட சம்மதத்துலதான் அவன் கேக்கான். ஒழுங்கா பதில் சொல்லுவே!"
கதிர்வேல் பிள்ளை புரிந்து கொண்டார். செத்தது அவர் ஆளல்ல. நியாயம் பேசினார்.
"சின்னத்துரை... நீரும் இப்டி எடக்குமடக்கா பேசப்படாது. பதில் சொன்னா கொன்னா போடுவாவ? அவங்க யாரு.. ஒம்மோட தாயி பிள்ளிய! சொல்லும் - சபை கேக்குதுல்லா..."
சின்னான் மீண்டும் கேட்டான்:
"கேட்டுட்டேன். இனும நீருதான் பதில் சொல்லணும்."
"ஒனக்காவச் சொல்லல. சபைக்காவச் சொல்லுதேன்! லாரி எப்படி மோதிச்சுன்னு தெரியல. இவங்க தூக்கக் கலக்கத்துல வண்டிய குறுக்கா ஓட்டுனதா போலீசுகாரங்க சொன்னாங்க. பிரேக் இன்ஸ்பெக்டர் சொன்னாரு. என் மேல வழக்குப் போடப்போறதா வேற மிரட்டுனாங்க. நான் பிணத்த கொண்டு வந்ததே பெரிய பாடு."
"எனக்கும் சட்டம் தெரியும் சாமி! விபத்துல யாராவது இறந்துட்டா போலீஸ் வழக்குப் போடாம இருக்க முடியாது. ஆனால் அந்த வழக்க தோக்கும்படியாயும் போடலாம் - இதனால அவங்களுக்குப் பணம் கிடைக்கும்; செத்தவன் குடும்பத்துக்கு ஒண்ணும் வராது. இது ஒமக்கு தெரிஞ்சி இருக்கணும். ஏன்னா போன வருஷம் ஒம்ம கொளுந்தியா மவன், பிரைவேட் பஸ்ல அடிபட்டுச் செத்தபோது அவங்க குடும்பத்த வழக்குப் போடச் சொல்லி பத்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்திருக்கியரு. அதோட ஏழைங்க மேல 'அர' வட்டிக் கடனுக்கு வழக்குப் போட்டு ஜப்தி பண்ணத் தெரியுற அளவுக்கு கோர்ட் அனுபவமுள்ளவரு... ஒமக்குத் தெரியாதுன்னா, நம்ப முடியாது."
"நம்புறதும் நம்பாததும் ஒன் இஷ்டம். நான் நடந்ததச் சொல்லிட்டேன். நானே பிரேக் இன்ஸ்பெக்டருக்கும், போலீஸ்காரங்களுக்கும் அம்பது அம்பது ரூபாய் வாய்க்கரிசி போட்டேன்."
திடீரென்று 'பிணவண்டி' ஓட்டிவந்த முனியாண்டி பித்தம் தலைக்கேறியவன் போலவும், பித்தம் தெளிந்தவன் போலவும் கத்தினான். இருபத்தோரு வயதுக்குரிய மென்மைக்கும் திண்மைக்கும் இடைப்பட்ட குரலில் கத்தினான்:
"பொய். சின்னத்துரை கிழவன் சொல்றது முழுப் பொய். நான் கண்ணால பாத்தேன். ஏய் கிழட்டு மூதேவி நீ உருப்படுவியாடா..."
எல்லோரும் அவனை வியப்போடு பார்த்தபோது முனியாண்டி 'ஹோ' வென்று பேரிரைச்சலை எழுப்பிவிட்டு பிறகு ஏங்கி ஏங்கி அழுதுகொண்டே பேசினான். அந்தச் சமயத்தில் குமாரும், மாணிக்கமும் அங்கே வந்து சேர்ந்தார்கள். முனியாண்டி விக்கி விக்கி திக்கித் திக்கிப் பேசினான்.
"போலீஸ்காரங்க கோடு கிழிச்சாங்க. லாரி டிரைவர கூட அடிச்சாங்க. கொஞ்ச நேரத்துல லாரி மொதலாளி வந்தாரு. அவருகிட்ட மொதல்ல அதட்டிப் பேசினாங்க. அப்புறம் பிரேக் இன்ஸ்பெக்டர்னு ஒருத்தன் வந்தான். அவனும் லாரி மொதலாளிய மிரட்டுனான். மிரட்டிக்கிட்டே எதையோ எழுதுனான். பிறவு இந்தக் கிழவன் பஸ்ல வந்து இறங்குனான். நான் 'ஓ'ன்னு அழுதேன். இவனும் மொதல்ல லேசா அழத்தான் செய்தான். அப்புறம் போலீஸ்காரங்க இவன தனியா கூட்டிக்கிட்டுப் போய் பேசுனாங்க. பிரேக் இன்ஸ்பெக்டர் எட்டி எட்டிப் பார்த்தாரு. பிறவு லாரி முதலாளி ஒரு ரூபா நோட்டுக் கட்ட இந்தச் சின்னத்துரை கிழவன் கிட்ட குடுத்தான். இவன் உள் சட்டப்பைக்குள்ள வச்சான். பிரேக் இன்ஸ்பெக்டர் எழுதுனத கிழிச்சிப் போட்டுட்டு இன்னொண்ணு எழுதுனாரு. போலீஸ்காரங்க கிழிச்ச கோட்ட அழிச்சிட்டு நடு ரோட்ல குறுக்கா கோடு போட்டாங்க. இவ்வளவையும் நான் கண்ணால பாத்தேன்; ரெண்டு கண்ணாலயும் பாத்தேன்... சத்தியமாய்ப் பார்த்தேன்..."
கூட்டத்தில் பயங்கரமான நிசப்தம். எல்லோரும் சின்னத்துரையை எரித்துவிடுவதுபோல் பார்த்தார்கள். கர்ணமும், மணியமும் அவர் பைக்குள்ளே கண்களை விட்டார்கள். சின்னத்துரை குமாரை பரிதாபமாகப் பார்த்தார். சின்னான் அதட்டினான்:
"எவ்வளவு வாங்குனியரு? ரெண்டு பிணத்த எவ்வளவு ரேட்டுக்கு வித்தீரு? சீக்கிரமாச் சொல்றது ஒமக்கு நல்லது!"
குமாருக்குக் கோபம் கொப்பளித்தது. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பது மூத்தோர் வாக்கு. தன் தந்தை சொன்ன மந்திரச் சொல்லுக்கு, அவர்கள் யந்திரம் போல் கட்டுப்படவில்லையானால் என்ன அர்த்தம்? என்னைப் பார்த்தவுடனேயே தாசில்தார் எழுந்து நிக்காரு. சப்-இன்ஸ்பெக்டர் சலாம் போடுறாரு. கலெக்டர் கை கொடுக்காரு. இந்தக் கேடுகெட்ட பஞ்சப் பராரி பயலுவளுக்கு - அவங்க அப்பா பதில் சொல்லிக்கிட்டு நிக்கதா? இதை அவன் அனுமதிப்பதா? நாட்ல சட்டம் ஒழுங்கு எப்படிக் கெட்டுப் போச்சு...
குமார் மேனியாட, விழி ரத்தச் சிவப்பாக, பயங்கரமாய் கத்தினான்:
"நீங்க வாங்கப்பா! அவங்க என்ன பண்ணணுமோ பண்ணிக்கட்டும். நாய்க்கும், பேய்க்கும் பதில் சொல்லிக்கிட்டு... வாங்கப்பா!"
குமார் சொன்னதை செயல்படுத்துபவன். ஆகையால் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு இழுத்தான். இப்போது சின்னானால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குமாருக்கு இணையாகக் கத்தினான்:
"குமார்! சொல்றதைக் கேளு! ஒரு அடி நகர்ந்த - அப்புறம் ஒரேயடியாய் விழுந்திடுவே! ஒப்பன் பிணமாவுறதுக்கு முன்னால நீ பிணமாயிடுவ!"
கூட்டத்தில் ஒரு சிலர் கோபமாக எழுந்தபோது, 'பழைய காலத்து' பரமசிவம், தன் ஜாதிக்காரர்கள் தங்களுக்காகத்தான் எழுவதாக நினைத்து, சற்று மிரட்டிப் பேசினார்:
"என்னடா சின்னான், ஒன் மனசில என்னடா நினைச்சிக்கிட்ட?" - குமார் வருங்கால மாமனாருக்கு வக்காலத்து வாங்கினான்:
"கடைசில - ஒன் பறப் புத்திய காட்டிட்ட பாரு!"
சின்னான் இப்போது அமைதியாகப் பேசினான். வகுப்புவாதியை பதிலுக்கு வகுப்பு ரீதியில் பேசி வெறியடையச் செய்யக்கூடாது.
"நான் பறையன் தான் குமார்! பறப்புத்தியத்தான் காட்டுறேன். என்னை மாதுரி படிச்ச நீ இப்படிப் பேசையில நான் அனாதயாப் போன ரெண்டு குடும்பத்துக்காவ என் பறப்புத்திய காட்டுறேன்! ஒரு மனுஷன் எவ்வளவுதான் நாகரிகப்பட்டிருந்தாலும், எவ்வளவுதான் மேனா மினுக்கியா இருந்தாலும், அவனுக்கு இயலாமை வரும்போது, அவனோட கச்சாபுத்தி... அதாவது அவனோட நிஜமான 'இவன்' வந்துடுமுன்னு சைக்காலஜி சொல்லுது. அதனால நான் வருத்தப்படல. ஆனால், ஏய் பிச்சாண்டி! நயினாரம்மாவயும், மூக்கையா சம்சாரத்தையும் இங்க கூட்டிவா!"
இடும்பன்சாமி, நயினாரம்மாவையும், பிச்சாண்டி மூக்கையாவின் மனைவியையும், மாமன் மாமியாரையும் கூட்டி வந்து, சின்னான் முன்னால் நிறுத்தினார்கள். அவர்கள் அழ அழ சின்னான் கர்ஜித்தான்:
"சும்மா மிரட்டி பிரயோஜனமில்ல! இந்த நயினாரம்மா ஒரு மகள கரையேத்தணும். மூணு பையங்கள வளர்க்கணும். இந்த மூக்கையா பெண்டாட்டி நிறைமாத கர்ப்பிணி! இவள் காலத்துக்கும் கண் கலங்கப்படாது! நயினாரும், மூக்கையாவும், சின்னத்துரை 'எசமான்' வீட்டில், வருஷக்கணக்கில் மாடா உழைச்சவங்க! அவங்க பிணத்த வேற வித்துட்டாரு! இவங்களுக்கு வழி பண்ணாம - நீங்க வழி நடக்க முடியாது!"
ஜம்புலிங்கம் இடும்பன்சாமியைப் பார்த்ததும் கோப வயப்பட்டுக் கத்தினார்:
"ஒரு நயாபைசாக்கூட தரமுடியாது! ஆனதப் பாருங்க! பிணத்துக்கு ரேட்டு பேசுற காலம் வந்துட்டு, என்ன..."
இதற்குள் நயினாரம்மா, "சின்னான், நான் என் புருஷனை விக்க வரல. வில பேச வரல. நீ கூப்பிட்டியேன்னு வந்தேன்! என் மவராசனே போயிட்டாரு. இனும பணமா பெரிசு" என்றாள். மூக்கையாவின் மனைவி, "மச்சான் நீ ரூபா வாங்கிக் கொடுக்காண்டாம். அது என் கால் தூசிக்குச் சமம்! ஒன்னால போன புருஷன கொண்டு வர முடியுமா... அது முடியுமுன்னால் செய்யி! ஒனக்குக் கோடி புண்ணியம்" என்று சொல்லிவிட்டு, நயினாரம்மாவின் மார்பில் தலைவைத்து அழ, நயினாரம்மா அவள் முகத்தைத் தடவிவிட்டுக் கொண்டே கதறினாள்.
சின்னான், அந்தப் பெண்களை பிச்சாண்டியிடமும், ஆசாரிப் பையன் ஆறுமுகத்திடமும் ஒப்படைத்துவிட்டு ஆணித்தரமாக அதட்டினான்.
"இந்த மாதுரி அழுதழுதே அழ முடியாமப் போன ஜனங்களா போயிடாதிங்கம்மா... சின்னத்துரை என்ன சொல்றீரு?"
பரமசிவம் சின்னத்துரைக்குப் பதிலாகப் பேசினார்:
"என்னடா சின்னான்... சேரியாட்கள கொண்டு வந்து மிரட்டி வழிமறிக்கிற அளவுக்கு வந்துட்டியா? மேல் ஜாதிக்காரங்கள - அவங்க ஊருக்குள்ள வந்தே மிரட்டுற அளவுக்கு வந்துட்ட இல்ல? மேல் ஜாதிக்காரங்க கையுல வளையல் போட்டிருக்கோமுன்னு நினைக்கியா? எங்க ஆட்கள் சும்மா பேசாம இருக்கிற தைரியமா? பறப்புத்தி என்கிறது..."
பரமசிவத்தின் 'ஜாதியாட்களே' இப்போது கம்பீரமாகப் பேசினார்கள். இடும்பன்சாமியையும், பிச்சாண்டியையும் பேசவிடாமல் பேசினார்கள்.
"யாருல ஒங்க ஆட்கள்... செய்யுறதயும் செய்துப்புட்டு இன்னும் ஆள் சேக்கியாக்கும்..."
"ஜாதிய பத்தி பேசுறிய! நம்ம ஜாதி நயினாரையே ஒன் சம்பந்தி வித்துட்டு வந்திருக்கான். அதை ஏன் கேக்க மாட்டக்க? வாய் செத்துட்டா? ஒன் வாய் அழுகாம சாகாது!"
ஆண்கள் மட்டும் பேசவில்லை. பெண்கள் பேசினார்கள். தெய்வானை, பரமசிவம் கண்முன்னால் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டே முழங்கினாள்:
"ஊருக்கு சொல்லுமாம் பல்லி - காடிப்பானைக்குள்ள விழுமாம் துள்ளி! ஒன் ஜாதி ஏழைவள எப்பவாவது உட்கார வச்சி பேசியிருக்கியா? இந்த கதிர்வேல் பிள்ளய எப்பவாவது நிக்கவச்சி பேசியிருக்கியா? இவன், சின்னான் கால் தூசிக்குப் பெறுவியா? நயினானையும் மூக்கனையும் வித்துட்டு முப்பழி செய்து முதத்துக்கு வந்த பயல விளக்குமாத்தால சாத்தணும்! ஏய் தங்கம்மா! சாணியக்கரச்சி கொண்டாடி - இவன் மூஞ்சில ஊத்தலாம்!"
நயினாரின் மகள் கூட்டத்தின் ஆவேசத்தை தொற்றிக் கொண்டவள் போல் பேசினாள்:
"நம்மள கெடுக்கதே இந்த ஜாதிதான்! நம்ம ஜாதி மல்லிகாதான் போனவாரம் என்னைப் பார்த்து, 'எச்சக்கல நாயே'ன்னாள். நாம எல்லாரும் குட்டாம்பட்டில உலகம்மா மாதுரி, சேரியாட்களோட சேரணும்! ஏய்யா சின்னத்துரை! எங்கய்யாவ எவ்வளவுக்குப் பேசின? எவ்வளவுக்கு வித்த?"
தங்கம்மாவின் அம்மா இப்போது முன்னால் வந்தாள். தலையில் அடித்துக்கொண்டே வந்தாள்.
"என் புருஷன் ஒங்களுக்கு செருப்பா உழச்சாரு. நில்லுங்கற இடத்துல நின்னாரு. உட்காருங்ற இடத்துல உக்காந்தாரு. அப்படிப்பட்ட மனுஷனையே ஆஸ்பத்திரில அறுத்துப் போட்டுட்ட! அவரு பெத்த மவளுக்கு, நான் பேசுன மாப்பிள்ள அய்யா, ஒன்கிட்ட விசாரிச்சா... நான் பெத்த மவள கள்ளப்பிள்ள கழிச்சதா, ஒன் தங்கச்சி சரோஜா சொல்லியிருக்கா. ஏய்யா பரமசிவம்! இவ்வளவு செய்துபுட்டும் இன்னும் பேசுறியாக்கும் பேச்சு! என் மவள் கல்யாணம் நின்னது மாதுரி, ஒன் மவள் கல்யாணம் நின்னா எப்படிக் கலங்குவ?"
இடும்பன்சாமி ஆதரவு சொன்னார்:
"ஏன் சித்தி அழுவுற... நீயும் கையில வெண்ணெய் வச்சிக்கிட்டு நெய்க்கி அலயப்படாது. சின்னான், பிச்சாண்டி - இவங்கள மரத்துல வச்சி கட்டுனாங்க. ஆண்டிப்பயல நாயா அலக்கழிச்சாங்க. இந்த பச்ச மதல தங்கம்மாவ அரப் பைத்தியமாக்கிட்டாங்க. என்ன வேற சஸ்பெண்ட் பண்ணுறாங்க. இவங்கள இப்படியே விடப்படாது! இப்போ பிணத்த வித்தாங்க - நாளைக்கி நம்மளயே உயிரோட விப்பாங்க! கட்டுங்கடா... கயிறு எங்கடா..."
பரமசிவத்தின் பங்காளிகளில் ஒரு சில ஏழைகளுக்கு மனது கேட்கவில்லை. என்னதான் இருந்தாலும் இப்படியா பேசுறது. அதுவும் பால்பவுடர் வித்த இடும்பன்.
"சரி. பைசல் பண்ணுங்க. பெரிய மனுஷங்கள ஒரேயடியா அவமானப்படுத்தப்படாது. அதுவும் சேரிக்காரங்க முன்னால."
சின்னான் அமைதியாகவே பேசினான்:
"அளகேசன்! நீரு என்னைக் குத்திக் காட்டிட்டதா நினைச்சா - ஏமாந்து போயிட்டீர்னு அர்த்தம்! பணக்காரங்க ஒண்ணும் முடியாட்டா ஜாதியயாவது தொழிலயாவது கேவலமா காட்டிப் பேசுறது இயற்கை. நான் பேசுனதால, பறையன்னு சொன்னாங்க. இதையே நீரு சொல்லியிருந்தா 'பனையேறிப் பயலா இப்டி பேசுறது'ன்னு சொல்லுவாங்க... குட்டாம்பட்டி பனையேறி மாயாண்டியோட வீட்டயே சமாதியா ஆக்குனவங்க பணக்காரங்க. அதனால கொஞ்சம் பாத்துப் பேசும். உலகம்மைன்னு ஒரு வீரப்பொண்ணு சேரில வந்து சேர்ந்திருக்காள் சாமி. நீரும் சேரணும்."
சண்முகக் கோனார் சமாதானம் சொன்னார்.
"அவன் கிடக்கான் லூஸுப் பய - விட்டுத் தள்ளு சவத்துப் பயல."
கதிர்வேல் பிள்ளை குழைந்தார்:
"சரி, ஆனது ஆச்சு, போனது போச்சு. நேரு சீரா முடிவு பண்ணுங்க."
சின்னான் இறுதியாகப் பேசுகிறவன் போல் பேசினான்.
"ஒரு ஏழையோட உடம்பு, பணக்காரனோட உடம்ப விட அதிக மதிப்புள்ளது. ஏன்னா பணக்காரன் செத்தாலும் அவன் பணம் குடும்பத்தக் காப்பாற்றும். ஆனால் ஒரு ஏழை, தன் உடம்ப மட்டுமே மூலதனமா வச்சிப் பிழைக்கிறவன். அவன் செத்தால் ஒரு குடும்பத்தோட மூலதனமே போயிட்டுதுன்னு அர்த்தம். அதனால இவங்களுக்கு ஒரு வழி பண்ணாம எவனும் நகர முடியாது. இன்னைக்கு நயினாருக்கும், மூக்கையாவுக்கும் வந்தது, நாளைக்கு இங்கே இருக்கிற யாருக்கு வேணுமுன்னாலும் வரலாம்! யார் பிணத்த வேணுமுன்னாலும் விற்கிற நிலைமை வரலாம்! இந்த நிலைமை இன்னையோட போகணும்!"
குமாருக்குக் கோபம் வந்தது. செல்லாக் கோபத்தை பொறுமையாக்கிக் கொண்டான். மாணிக்கம் மல்லிகாவைப் பார்க்க நேரமாகிறதே என்று தவித்தான். மாசானம், 'கழட்ட முடியலியே' என்று கலங்கினார். ஜம்புலிங்கம், இடும்பன்சாமியை பயத்தோடு பார்த்தார். சின்னத்துரை, 'சின்னத்தனம் வெளிப்பட்டதில்' நிலை குலைந்தார் என்றாலும் இவர்கள் எல்லோரையும் விட, அதிகமாகக் கலங்கிப் போனவர் பரமசிவம். அளகேசன் சொன்னதுக்கு சிலர் தலையாட்டியது வாஸ்தவந்தான். ஆனால் அவங்க கூட ஆட்ட வேண்டிய அளவுக்கு ஆட்டலியே! இந்த அளகேசன் கூட இப்போ பேசமாட்டக்கானே! ஒவ்வொரு பயலும் முகத்த எப்படி வச்சிருக்கான். இந்த சின்னத்துரையால நாமளும் சின்னத்தனமா ஆயிட்டோம்! இதுக்கு இந்த சின்னான் பயகூட காரணம் இல்ல. அஸ்திவாரம் போட்டதே இந்த ஆண்டிப்பயதான். செறுக்கிமவன விட்டிருப்பாங்களோ...
சின்னான் இறுதி எச்சரிக்கை விடுத்தான்:
"ரெண்டுல ஒண்ணு சொல்லுங்க. கொடுக்க முடியாதுன்னாவது சொல்லுங்க!"
கதிர்வேல் பிள்ளை அங்குமிங்கும் கண்களைச் சுழலவிட்டுக் கொண்டே பேசினார்:
"சின்னத்துரையும் அப்படிப் பண்ணியிருக்கக் கூடாது. அந்த ரெண்டு குடும்பமும் வாழணும். சின்னத்துரை... நீ கொஞ்சம் கொடுக்கணும்."
சின்னத்துரை அழாக்குறையாகக் கேட்டார்:
"பணம் எங்கய்யா இருக்கு?"
யாரோ ஓர் ஆசாமி பின்னாலிருந்து குரல் கொடுத்தான்.
"பிணத்த வித்த காசு இருக்கும். குமார வித்த பன்னிரெண்டாயிரம் ரூபாய் காசு இருக்கும்."
கதிர்வேல்பிள்ளை சின்னானின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
"சின்னான் நான் சொல்றதக் கேளு. குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொல்லுதேன் - வாங்கிக்கொடு ராஜா!"
"ஆமாம்பா... பிள்ள பொதுப்பிள்ள. நாமும் விட்டுக் கொடுக்கணும் கொஞ்சம் - அவங்கதான் புத்தி கெட்டத்தனமா..."
இன்னொரு பின் குரல்:
"எவன்யில, புத்தி கெட்டதனமாப் பேசுறது? ஒப்பன் செத்திருந்தா இப்போ இப்டி பேசுவியால..."
சின்னான் சிறிது யோசித்துவிட்டுச் சொன்னான்.
"சரி ஒங்க முகத்துக்காவ வாங்கிக்கிறோம்! ஆனால் இது அட்வான்ஸ்தான்! ஆனால் ஒரு கண்டிஷன். லாரிக்காரன் மேல வழக்குப் போடணும். நஷ்ட ஈட்டை ரெண்டு குடும்பத்துக்கும் கொடுத்துடணும். வழக்குக்கு ஆகுஞ் செலவ - எவ்வளவு ஆனாலும் சின்னத்துரை ஒத்துக்கணும். ஒருவேள இவரு அங்க பண்ணிட்டு வந்த கோளாறுல, வழக்குத் தோத்துட்டா இவரு குடும்பத்துக்கு மூவாயிரம் வீதமாவது கொடுக்கணும். சம்மதமான்னு கேட்டுச் சொல்லும்..."
"என்ன சின்னத்துரை சொல்லுத..."
சின்னத்துரை தயங்கியபோது குமார் அவருக்கு மட்டும் தெரியும்படி கண்ணடித்தான். சின்னத்துரை தலையாட்டிவிட்டு, பைக்குள்ள இருந்த ஆயிரம் ரூபாயை சின்னானிடம் நீட்டிவிட்டு, "மீதிய நாளைக்கி தாரேன்! நம்பிக்க இருக்கா!" என்ற போது சின்னான், "இப்பவே ஒரு அக்ரிமெண்ட் எழுதி கையெழுத்துப் போடுவோம்" என்றான். இதற்குள் ஒரு சிலர், "அக்ரிமெண்ட் எதுக்கு - கொடுத்த வாக்க மீறிட்டு அந்த ஆளு ஊர்ல வாழ்திடுவாரா..." என்றார்கள். சின்னான் தான் சொன்னதை வற்புறுத்தவில்லை.
பரமசிவம் வகையறாக்கள் போய்விட்டார்கள். திரும்பிப் பார்த்துக் கொண்டு போன மாசானத்தை, பிச்சாண்டி போய், அவர் சட்டையைப் பிடித்துக் கொண்டு, "ஏய் மாசானம், பொறளிய கிளப்பி விட்டுட்டு போறியாக்கும்... யாரு லாக்கப்புல இருந்தது? வந்து சொல்லிட்டுப் போ" என்று சொல்லி, பிடரியில் இரண்டு போட்ட போது, பரமசிவம் வகையறாக்கள் பொறி கலங்கி நின்ற போது, கூட்டத்தில் ஒரு சிலர் "கெடுவான் கேடு நினைப்பான். விடு. அவனும் லாக்கப்புக்குப் போற காலம் வரும். விடு" என்றார்கள். பிச்சாண்டி விட்டுவிட்டான். மாசாணம் பிய்த்துக் கொண்டார். அடிபட்டதை விட வலித்ததே அவருக்குப் பெரிய அவமானமாக இருந்தது. 'நான் கேள்விப்பட்டதைத்தான் சொன்னேன். அதுல என்ன தப்பு' என்று மாசானம் சொல்ல நினைத்தார். 'கூட்டம் நம்பாது' என்று உள்ளுணர்வு உணர்த்தியதை நம்பினார். உடம்பைத் தூக்கிக் கொண்டு ஓடினார்.
கூட்டம் போகப் பார்த்தது. கிணறு வெட்டும்போது கையொடிந்தவர்கள், பார வண்டியில் காலொடிந்தவர்கள் சின்னானைச் சூழ்ந்து கொண்டார்கள். சூழ்ந்தவர்களில் ஒருவர் "சின்னான் எங்களயும் கவனிக்கணும். நஷ்டைஇடு வாங்கித் தரணும். நஷ்ட ஈடுன்னு ஒண்ணு இருக்கதே இப்பதான் எங்களுக்குத் தெரியும்" என்றார்கள். சின்னான் கண்களைச் சிமிட்டிக் கொண்டே பதிலளித்தான்.
"வாங்கலாம்! ஆனால் ஊரு சரியா இல்லியே! ஒவ்வொரு கம்பா ஒடிச்ச அண்ணன் தம்பிங்க, ஒரு கட்டுக் கம்ப ஒடிக்க முடியாமப் போனதை பள்ளிக்கூடத்துல படிச்சோம் - புள்ளிக்கு உதவலியே!"
"அப்படிச் சொல்லாத. இப்ப நாங்க ஒன் பின்னால நிக்கலியா... எதுலயும் துரோகிப் பயலுவ இருப்பாங்க. அவங்கள கணக்குல சேக்காத..."
"என்னாத்த சேத்து என்ன பண்ண... ஆண்டியப்பன் லாக்கப்புல இருக்கானாம். கோபால போலீஸ் மதுரையில மடக்கி லாக்கப்புல போட்டிருக்காம்."
"அட கடவுளே... இத விடப்படாது சின்னான். பரமசிவம் இருக்கும்போது மட்டும் சொல்லியிருந்தே அவன பிச்சி எடுத்திருப்போம்! ஊரோட முதல் மானஸ்தன் ஆண்டியப்பன். சின்னான், சின்னான் - நீதான் ஏதாவது பண்ணணும்."
"சரி. கலெக்டருக்கு ஒரு மனு எழுதுவோம். கையெழுத்துப் போடுங்க. இப்பவே ஒரு லாரியப் புடிச்சி ஆலங்குளத்துல எங்க அக்காவப் பார்த்துட்டு, காலையில திருநெல்வேலிக்குப் போயிட்டு, மதுரைக்கும் போயிட்டு வாரேன். நயினாரம்மா, ராமாயி, இந்தாங்க பணத்த வாங்கிக்கங்க. பிச்சாண்டி, இதக் கொடு."
பிச்சாண்டி இரண்டு அமங்கலிகளின் கைகளிலும் பணத்தை வைத்தபோது, இடும்பன்சாமி, சின்னன் சொல்லச் சொல்ல எழுதினார். எழுதி முடித்ததும் சின்னான், தங்கம்மாவின் அம்மாவைப் பார்த்து, "நீங்க மொதல்லே போடுங்க. ஒங்க மருமகன் சந்தேகப்படுவார்" என்றான்.
"கையெழுத்துப் போடத் தெரிஞ்சிருந்தா என் தலையிலயே நான் கொள்ளி வைப்பனா..."
"பரவாயில்ல. இப்டி வாங்க."
சின்னான் கிழவியின் பெருவிரல் ரேகையைப் போட்டான். தங்கம்மா இரண்டாவதாகக் கையெழுத்துப் போட்டாள். பழ கிழவிகள் 'கீறலுக்கு' காகிதத்தைக் கீறுவது போல் தேய்த்தார்கள். எல்லோரும் கையெழுத்துப் போட்டார்கள். சண்முகக் கோனார் கடைப்பக்கம் நின்றவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து கையெழுத்து வாங்கினார்.
சின்னான் மனுவை எடுத்து, பைக்குள் வைத்துக் கொண்டு, ஆசாரிப் பையன் ஆறுமுகத்தை, "கோணச்சத்திரம் வரைகும் சைக்கிளில் விடுறியா" என்றபோது பையன் வீட்டுக்கு ஓடினான் - யார் சைக்கிளையோ உருட்டி வர.
சின்னான் ஆசாரிப் பையன் சைக்கிளில் ஏறிக் கொண்டான். "விடப்படாது என்ன ஆனாலுஞ் சரி" என்றது கூட்டத்தில் பல குரல்கள். தங்கம்மா, சின்னானை அர்த்தத்தோடு பார்த்தாள். 'நான் பழைய தங்கம்மாவாய் மாறிட்டேன்னு சொல்லு' என்று சொல்ல நினைத்தாள். சொல்ல முடியுமா? நாணமோ, அழுகையோ ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.
கூட்டத்தோடு கூட்டமாக நடந்து, அம்மாவுடன் வீட்டுக்கு வந்த தங்கம்மா, மீனாட்சியைப் பார்க்க நினைத்தாள். இதற்குள் நயினாரம்மாவுக்கு ஆறுதல் சொல்வதற்காக, கிழவி அவளைத் தன்னுடன் கூப்பிட்டாள். நயினாரம்மா வீட்டில் இருந்த தங்கம்மாவிற்கு, அந்தக் குடும்பத்தின் சோகக் கதையுடன், தன் கதையும் நினைவுக்கு வந்தது. ஊரே தன்னை நிரபராதியாக நினைப்பதை உணர்ந்ததும், தான் நடந்து கொண்டது உரைத்தது. 'அவரு மனசு என்ன பாடுபட்டிருக்கும். மீனாட்சி அண்ணிய, ஒரு நாளைக்கு நாலு தடவ பாக்குற நான், நாலு மாதத்துல ஒரு தடவ கூட பாக்கலியே! என்னால எப்டி இருக்க முடிஞ்சது... அண்ணி என்ன நினைப்பாள். அவரு லாக்கப்புல என்ன பாடுபடுறாரோ... அண்ணிக்குத் தெரியுமோ தெரியாதோ...'
திடீரென்று தங்கம்மா எழுந்தாள். குற்றவுணர்வில் ஓடினாள். இரவு மணி இரண்டு இருக்கும். ஆண்டியப்பனின் வீட்டுக்குப் போனதும் 'ஊரே' அதிரும்படி கத்தினாள்.
-----------
16
'லாக்கப்' குடித்தனம் மூன்றாவது நாள். அன்றும் அவனை உதைத்தார்கள்.
போலீஸ் நெருப்பில் ஆண்டியப்பன் கரியவில்லை. மாறாக புடம் போட்ட தங்கம் போல் மின்னினான். அந்த 'அடி நெருப்பு, அவனைச் சூடாக்கியதே தவிர, சுடவில்லை. வைரப்படுத்தியதே தவிர, வதக்கவில்லை. அவனில் ஒரு வைராக்கியம் பிறந்தது.
நெருப்பு, எதையாவது பிடித்துக் கொண்டுதான் நிற்குமே தவிர, அதனால் தனித்து நிற்க முடியாது. இதுபோல் தனித்து நிற்க முடியாமல், தன்னையே பிடித்துக் கொண்டிருந்த நியாய நெருப்பில் தன் மேனியில் விழுந்த அடிகள், நியாயத்தின் மீதே பட்டதாக அவன் பாவித்துக் கொண்டதாலும், 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' என்று 'அடிக்கொரு' தடவை, அவன் பாரதியாரின் அடிகளைப் பற்றிக் கொண்டதாலும், போலீஸ்காரர்களின் கைகள் தான் ஓய்ந்தன. உதைத்த பூட்ஸ் கால்களில் தான் 'சுளுக்கு' ஏற்பட்டது.
சூடு சூட்டைத் தணிக்கும் என்பது போல், போலீஸ்காரர்களின் கோப நெருப்பு, அவனது நெஞ்சில் அனலாகி, கண்களில் சூடான நெருப்பை குளிர்வித்தது.
போலீஸ்காரர்களும் புரிந்து கொண்டார்கள். அடிக்கிறபடி அடித்து, உதைக்கிறபடி உதைத்து, குத்துகிறபடி குத்தினால் திருடாதவன் கூட, 'அய்யோ சாமி... நான் திருடினது வாஸ்தவந்தான். அடிக்காதிங்க சொல்லுதேன்' என்று சொல்லிவிடுவான். ஆனால் இவனை வாயில் ரத்தங் கொட்டும்படி குத்தியும், லத்திக் கம்புகளில் ரத்தத் துளிகள் படும்படி முதுகில் அடித்தும், முடியை இழுத்தும், முன் நெற்றியை சுவரிலே மோத வைத்தும், கால்கள் இரண்டையும் நீட்டவைத்து அவற்றின் மேல் ரூல் தடியை பலங்கொண்ட மட்டும் அழுத்தியும், தாக்குதலுக்கு முன்னாலும், பின்னாலும், "சொல்லுடா ஒன் கூட்டாளி கோபால் கள்ளக்கடத்தல் செய்யுறத சொல்லு, ஒன்ன விட்டுடுறோம்! இல்லன்னா ஊமைக்காயத்தாலயே சாவப் போற" என்று அதட்டிய போதும், அவன் ஊமைபோலவே உதடுகளைக் கடித்துக் கொண்டு ஒன்றும் பேசவில்லை.
அவனை அடித்த களைப்புத் தீர, 'டீ' குடித்த போலீஸ்காரர்கள் அவனுக்கும் 'டீ' வாங்கிக் கொடுத்தார்கள். ஆண்டியப்பன் 'டீ' கோப்பையை பணிவாக வாங்கிக் கொள்வதுபோல் வாங்கி, பிறகு அதை வெளியே வீசியெறிந்தான். அந்தக் கோப்பையை, பரமசிவமாக, குமாராக, மாணிக்கமாக, மாசானமாக நினைத்துக் கொண்டு வலது கையை உயர்த்தி, கோப்பையைத் தூக்கி, பின்பு அதை - போலீஸ் சின்னமாக நினைத்துக் கொண்டு அது சின்னாபின்னமாகும்படி வீசியெறிந்தான்.
அவன் அப்படி வீசும்போது அந்த லாக்கப் அறைக்குள்ளே குடித்தனம் நடத்துவதுபோல் தோன்றிய இரண்டு வாலிபர்களும், ஒரு நடுத்தரத் துண்டு மீசைக்காரரும், அவனைப் பிடித்துக் கொண்டார்கள். போலீஸ்காரர்கள் அடித்துவிடக்கூடாதே என்பதுபோல், அவனை மறைத்துக் கொண்டார்கள். ஒரு லாக்கப் வாசி அவனை தனது சகலையாக நினைத்து உரிமையுடன் அதட்டினான்.
"அவங்க ஆசையோட வாங்கிக் கொடுக்கிறத இப்படி எறியலாமாடா... இது அவங்களேயே தூக்கி எறியுறது மாதுரி. அவங்க ஒன்ன வீசுனா கேக்குறதுக்கு யார் இருக்காங்க? விடுங்க சார். முட்டாப் பயல் - அனுபவம் இல்லாத பயல். அடுத்த தடவ வரும்போது இப்படிப் பண்ணமாட்டான்."
ஆண்டியப்பன் கோபமாக எழுந்து, படுகோபமாக உட்கார்ந்த போலீஸ்காரரைப் பார்த்தான். சக லாக்கப் வாசிகளை கொட்டக் கொட்டப் பார்த்தான். ஒருவன் சிதறிய கோப்பைத் துண்டுகளை பொறுக்கிக் கொண்டிருந்தான். இன்னொருவன் அங்குமிங்குமாகப் பரவிய தேநீர்த் துளிகளை கால்களால் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தான். அவர்களைப் பார்க்கப் பார்க்க ஆண்டியப்பனுக்கு அனுதாபமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தது.
இதற்குள் இன்னும் கோபம் தீராமல் இருப்பதுபோல் தோன்றிய போலீஸ்காரரை, தாஜா செய்யும் நோக்கத்தோடோ என்னவோ, கோப்பைத் துண்டுகளைப் பொறுக்கிய ஆசாமி, "போங்க சார், ஒரு அஞ்சு நிமிடம் லேட்டா வந்திருந்தா நான் சைக்கிள மேட்டுப்பாளையத்துல வித்திருப்பேன். நானும் எத்தனையோ போலீஸ்காரங்கள பாத்திருக்கேன். ஆனால் ஒங்கள மாதுரி கண்குத்தி பாம்ப பாக்கல சார்! நீங்க இங்க இருக்கது வரைக்கும் எங்க தொழிலு உருப்படாது சார்! சைக்கிள அக்குவேறு ஆணிவேறு ஆக்குமுன்னால நீங்க எங்கள அப்டி ஆக்கிடுவிய... இல்லியா மச்சான்... சொல்லுடே..."
போலீஸ்காரர், தன் தோள்பட்டை நம்பரை பெருமையோடு பார்த்தபோது, இதுவரை எதுவும் பேசாமல் இருந்த ஆண்டியப்பன் குரல் வெடியாக, குரல்வளையே துப்பாக்கியாக, வாய்வழியாக வார்த்தை ரவைகளை குறி பார்த்துப் போட்டான்:
"நீங்கல்லாம் மனுஷங்களா... புண்ணக்குப் பயலுவளா! ஏழைன்னு தெரிஞ்சதும் காரணமில்லாமலே, எப்டி வேணுமுன்னாலும் அடிக்கலாமுன்னு ஆயிப்போன காலத்துல - நாம காரணத்தக் கொடுக்கலாமா? நம்மள மாதுரி ஒரு சில ஏழைங்க, சைக்கிள் திருடுறதுனால பணக்காரங்க கள்ளப் பணத்துல கார் வாங்கி ஓட்டுறது தெரியாமப் போவுது. நாம கோழி திருடுறதுனால, அவங்க தேசத்தையே பட்டப் பகலுல கொள்ளையடிக்கது யார் கண்ணுக்கும் தெரியமாட்டக்கு. நாம லாக்கப்பையே வீடா நினைக்கதுனால, நம்ம குடும்பம் வீட்டையே லாக்கப்பா நினைக்குது. நாமும் மனுஷங்கப்பா! நம்மளயும் எவனும் 'நீ நான்னு' பேசுறதுக்கு உரிமை கிடையாது. நாம அந்த உரிமையை கொடுக்கப்படாது.
ஒங்களால ஏழை எளியவங்க எல்லோருக்குமே கெட்ட பேரு. சைக்கிள் கடத்துறதுல காட்டுற சாமர்த்தியத்த, உன் ஊர்லயே மோசடி பண்ணுறவங்கள, கடத்துறதுல காண்பிக்கணும். கத்தரி வச்சு, பாக்கெட்ட வெட்டுறதுல இருக்கிற திறமையை, ஏழபாளைகளோட வயித்துல அடிக்கிறவனோட வயிறு கிழிக்கிறதுல காட்டணும். அநியாயக் காரங்கள எதிர்க்கிறதுல இருக்கிற திருப்தி வேற எதுலயும் இருக்க முடியாது. இன்னைக்கி நாட்ல நடக்கிற அநியாயத்துக்கு நாமளும் காரணம். நம்மளோட சின்னச் சின்ன தப்பால பணக்காரங்களோட பெரிய பெரிய தப்புங்க மறையுது! மறைக்கப்படுது!"
போலீஸ்காரர் ஆண்டியை அதிர்ச்சியுடன் பார்த்தார். இவன் நக்ஸலைட்டாக இருப்பானோ? தெலுங்கானாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு தலைமறைவா வந்திருக்கானாமே சுப்பாராவ் - அந்த ராவா இருக்குமோ?
இன்ஸ்பெக்டர் வந்ததும் தனது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுபோல், அவர் பயத்துடனும், ஏதோ ஒரு அவார்ட் கிடைக்கப் போகிற திருப்தியுடனும், நெளிந்து கொண்டிருந்த போது, கோணச் சத்திரத்துல, 'டீ சாப்புடுறியாடா' என்று ஆண்டியைக் கேட்ட ஹெட் கான்ஸ்டபிள் அங்கே தோன்றினார். ஆண்டியைப் பார்த்துவிட்டு, "என்ன ஆண்டி இன்னும் வம்பு தும்ப விடலியா" என்றார்.
"இனுமேத்தான் ஆரம்பிக்கப் போறேன்! நீங்க எப்படி இங்க வந்திய?"
"ஒன்னை லாக்கப்புல இருந்து விட்ட மறுநாளே எனக்கு அஸிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டரா புரமோஷன் வந்துட்டு, இங்கதான் டூட்டி."
"அப்படின்னா நான் கைராசிக்காரன்னு சொல்லுங்க. எனக்கும் புரமோஷன் வந்துட்டு. முன்னால பட்டிக்காடு டவுனுல லாக்கப்பு. இப்போ ஜில்லா தலைநகர்லேயே லாக்கப் கிடச்சிருக்கு. சீக்கிரமா மெட்ராசுக்கும் புரமோஷன் வந்துடும். இல்லியா ஸார்..."
முன்னாளைய ஹெட் கான்ஸ்டபிளும், இன்னாளைய அஸிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டரும் அவனை அதிர்ந்து பார்த்தார். வன்முறையாளன் பிறக்கவில்லை; உருவாக்கப் படுகிறான்.
அன்றிரவு எல்லோருக்கும் இட்லி வடை கொடுக்கப் பட்டது. ஆண்டியப்பன் தனக்குக் கொடுக்கப்பட்டதை வாங்க மறுத்தான். அஸிஸ்டெண்ட் 'எஸ்.ஐ' எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். லாக்கப் வாசிகள், தங்களுடைய இட்லி வடைகளைக் கூட அவன் வாயில் ஊட்டினார்கள். ஆண்டி உதடுகளைக் குவித்துக் கொண்டான். "என்னை எதுக்காக அடிச்சாங்கன்னு தெரியுமுன்னால, இனிமேல் நான் சாப்பிடப் போறதில்ல" என்று ஆண்டி, அந்தப் பெயருக்கில்லாத தோரணையுடன் சொல்லிவிட்டான்.
போலீஸ்காரர்கள் உட்பட எல்லோருமே வாயடைத்துப் போனார்கள். மறுநாள் காலையிலும், அவன் 'டீ' குடிக்க மறுத்துவிட்டான். எட்டு மணிக்கு வந்த இன்ஸ்பெக்டரிடம், விவகாரம் சொல்லப்பட்டது. அவர் உள்ளூர அதிர்ந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், "எத்தனை நாளைக்கு இருக்கான்னு பார்ப்போம்! இவனை இப்போ அடக்காட்டால் எப்பவும் அடக்க முடியாது. பயங்கரவாதியாய் மாறுற அறிகுறி முகத்துல நல்லா தெரியுது" என்று போலீஸ்காரர்களிடம் சொல்லிவிட்டு, எங்கேயோ புறப்படப் போனார்.
குறுக்கே, மாட்டு விவகாரத்தை 'விசாரணை' செய்த மாவட்ட அதிகாரி ஓடிவந்தார். இதே இந்த இன்ஸ்பெக்டரின் அந்தஸ்துள்ள அதிகாரி அவர். இருவரும் ஒரே அந்தஸ்தில் இருந்ததால், யார் யாருக்கு முதலில் 'விஷ்' செய்வது என்ற சீனியாரிட்டிப் பிரச்சினை உள்ளத்தின் 'ஈகோவாக' பல பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை ஒருவர் 'கண்டுக்காமல்' இருந்திருக்கிறார்கள். இப்போது விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டரை 'கண்டுக்க' வந்துவிட்டார். காலில் விழாத குறையாகக் கேட்டார்.
"இன்ஸ்பெக்டர் சார்! ஆண்டியப்பன் மேல சார்ஜ்ஷீட் போட்டுட்டிங்களா?"
"போடல; இன்னைக்குப் போடப்போறேன். நீங்க சாட்சி சொல்ல வேண்டியதிருக்கும்."
"இன்ஸ்பெக்டர் சார்! விவகாரம் வெறும் லா அண்ட் ஆர்டர் இல்ல! கோர்ட்டுக்குப் போனால், எதுக்காக மிரட்டுனான்னு கேள்வி வரும். அந்தக் கேள்வியில் பசுமாடு வரும். கூட்டுறவுச் சங்க விவகாரம், பேப்பர்ல வரும். இப்போ நாறுற நாத்தம் போதாதா? அதனால தயவு செய்து எனக்காக அவனை அரட்டி மிரட்டி விட்டுடுங்க. பாழாப் போற இந்த வேலையிலே சேர்ந்தேன் பாருங்க... ஒங்க வேலை எவ்வளவோ தேவலை."
இன்ஸ்பெக்டர் தன் வேலை தேவலை என்பதை அங்கேயே நிரூபிப்பதுபோல் பேசினார்:
"நீங்க நினைக்கது மாதிரி விவகாரம் லைட்டா இல்ல. ஊர்ல போய் மிஸ்டர் குமாரை கொலை பண்ணிட்டான்னு வச்சுக்குவோம்; குமாரோட பெண்டாட்டி தாலியறுப்பாளோ என்னவோ - நான் தாலியறுக்க வேண்டியதிருக்கும். இது எக்ஸ்பிளாஸிவ் இஷ்ஷூ! நீங்க தலையிடாமல் இருக்கது பெட்டர்!"
"அய்யோ நான் தலையிடாவிட்டால் என் தலை போயிடும் சார்! தயவு செய்து நான் சொல்றதைக் கேளுங்க. நாம ரெண்டுபேரும் கவர்மெண்ட் செர்வண்ட்ஸ். ஒருவருக்கொருவர் அட்ஜெஸ்ட் பண்ணாட்டால் எப்படி சார்?"
"எந்தெந்த பன்னிப் பயலுங்க கூட எல்லாம் அட்ஜெஸ்ட் பண்றேன்! ஒங்க கூடவா பண்ணமாட்டேன். இது ஸீரியஸ் கேஸ். அதனாலதான்..."
"கோர்ட்ல எல்லாம் அம்பலமாகும். நீங்க பஸ் நிலையத்துல அவன் கையைக் கட்டுனதும் வெளில வரும். ஏற்கெனவே இவனோட ஆட்கள் என்கிட்ட வந்துட்டு எங்க எஸ்.பி.கிட்ட போயிருக்காங்க."
"இப்போ என்ன பண்ணலாமுன்னு சொல்றீங்க?"
"அவனை விட்டுடுங்க."
"சரி. அப்புறம் ஒரு ஹவுஸிங் சொஸைட்டி அமைக்கலாமுன்னு நினைக்கோம்! நாளைக்கு ஒங்க ஆபீசிற்கு வரட்டுமா?"
"நோ - நோ - நானே வாரேன்!"
விசாரணை அதிகாரி போய்விட்டார். அவரைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டரும், தனது ஜீப்பில் ஏறப்போனார். எஸ்.பி.யிடம் போயிருக்கும் ஆட்களை நோட்டம் விடுவதற்காக. இதற்குள் ஒரு டெலிபோன் 'கால்' வந்தது. இன்ஸ்பெக்டர் அலட்சியமாகப் போனை எடுத்துவிட்டு, முகம் அசிங்கமாகும்படி பேசினார்.
"சார்... சார்... எஸ் சார்! ஆண்டி சார்! எஸ்டர் டேய் சார்! பஸ் ஸ்டாண்ட் சார்! பிரிவண்டிவ் அரெஸ்ட் சார்! நோ சார்! சார்... சார்... எக்ஸ்யூஸ் மீ சார்! எஸ் சார்! எஸ் சார்!"
பேயறைந்தவர் போல் இன்ஸ்பெக்டர் டெலிபோனை வைத்தார். கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். பிறகு ஆண்டியப்பனைப் பார்த்தார். எஸ்.பி.யிடம் பறிகொடுத்த ஆங்காரத்தில் பத்து சதவிகிதம் மீண்டும் வந்தது.
"யோவ் ஆண்டி, ஒன்னை விட்டுடுறேன் - இனிமேல் ஒழுங்கா இருப்பியா?"
ஆண்டி அமைதியாகப் பதிலளித்தான்:
"நீங்க விடவும் வேண்டாம் - நான் ஒழுங்கா இருக்கவும் வேண்டாம்!"
"இந்த மாதுரில்லாம் உளறப்படாது! நீ உண்டு; ஒன் வேல உண்டுன்னு இருக்கணும். இல்லன்னா 'பைண்ட் ஓவர்ல' போட்டோமின்னால், வாரத்துக்கு நாலு தடவை கோணச்சத்திரத்தில் போய் போலீஸ் ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட வேண்டியதிருக்கும். இனிமேலாவது பக்குவமாகப் பேசி, பக்குவமா நடந்துக்கோ! சரி, திரும்பிப் பாராமல் ஓடு!"
ஆண்டியப்பன் திரும்பிப் பாராமல் பேசினான். பக்குவமாகப் பேசியவரைப் பாராமல் பேசினான்:
"நான் இந்த நாட்டோட பிரஜை! வாக்காளர் பட்டியலில் என் பெயர் இருக்கு. நான் தெத்தல! திருடல! கள்ளச்சாராயம் காய்ச்சல! என்னை அப்படியிருந்தும் கையைக் கட்டிக்கொண்டு வந்திங்க! அடி அடின்னு அடிச்சிங்க! மிதி மிதின்னு மிதிச்சிங்க! நியாயத்த கேட்டவனுக்கு அநியாயத்த தந்திங்க! என்னை எதுக்காக அடிச்சிங்கன்னு தெரியுமுன்னால நான் நகரப் போவது இல்ல... தயவு செய்து... நீங்க எதுக்கு எனக்கு தயவு செய்யணும்? என்னை கோர்ட்ல நிறுத்துங்க - பேச வேண்டியதைப் பேசிக்கிறேன்!"
"அப்படின்னா நீ..."
"போகச் சொன்னாலும் போகப் போறதாய் இல்ல."
இப்போதுதான், அவனும் மனிதன் என்பதுபோல் பார்த்த இன்ஸ்பெக்டர் அதிர்ந்து போனார். உடம்பில் வீங்கியிருந்த இடங்களையும், கீறியிருந்த பகுதிகளையும் ஊதிக் கொண்டே - எல்லோரையும், எல்லாவற்றையும் ஊதுகிறவன்போல், ஆண்டியப்பன் அமைதியாக, கால்களை விரித்துப் போட்டு, கைகளைப் பரப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
அவன் போகாததால் தானும் போக முடியாமல், இன்ஸ்பெக்டர் அங்கேயே இருந்தார். அவனை, 'தாஜா' செய்தால், கான்ஸ்டபிள்களுக்கு இளக்காரம். அனுப்பி வைக்காமல் போனால், எஸ்.பி. தாளித்துவிடுவார். என்ன செய்யலாம்?
இன்ஸ்பெக்டர் யோசித்துக் கொண்டிருந்த போது கையில் ஒரு காகிதத்துடன் உள்ளே நுழைந்த சின்னான், "என்ன சார், எஸ்.பி. சொல்லி ஒன் அவர் ஆகுது. இன்னுமா ஆண்டிய விடல" என்று எரிச்சலோடு கேட்டான்.
இதுவரை அமைதியாக - அதுவே ஆணவமாகத் தெரியும்படி இருந்த ஆண்டி, சின்னானைப் பார்த்ததும் கண் கலங்கினான். சின்னான் அவனருகே வந்து அவனைத் தூக்கி நிறுத்தி, மார்புடன் அணைத்தபோது, ஆண்டியப்பனால் விம்மாமல் இருக்க முடியவில்லை.
"சின்னான், இப்போதான் ஒனக்கு கண்ணு தெரிஞ்சுதா சின்னான். நாம ஒண்ணா சாப்பிட்டு, ஒரே பாயில படுத்து, ஒரு தாய் மகன்க மாதுரி இருந்ததை மறந்துட்டியே, சின்னான் மறந்துட்டியே... நான் என்ன தப்பு பண்ணுனேன் சின்னான்! எல்லாப் பயலுவட்டயும் பேசுற நீ என்கிட்ட பேசாம இருந்தியே! நான் பாவிதான் - ஆனால் நீ பேசக்கூடாத அளவுக்குப் பாவியா சின்னான்... சொல்லு சின்னான்!"
சின்னானின் கண்களும் கலங்கின. பாசம் இருவரையும் வேதனைப் பாட்டுடன் தாலாட்டிக் கொண்டிருந்தபோது, புதுவிதமான ஏழையைச் சந்தித்த அதிர்ச்சியில் இருந்து மீளாத இன்ஸ்பெக்டர், சின்னானைத் தனியாகக் கூப்பிட்டு, விவகாரத்தை விளக்கினார். சின்னான் மீண்டும் ஆண்டியிடம் வந்து, அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு காலேஜ் வாத்தியார் மாதிரி பேசினான்:
"போலீஸ்காரங்க நம்ம எதிரியில்ல! இன்றைய அசிங்கமான சமூக நிஜத்தின் நிழல்தான் போலீஸ்! நிஜத்த தொட்டால்தான் நிழலுல தெரியும். நிழல பிடிச்சு நிஜத்தப் பிடிக்க முடியாது! சரி புறப்படு!"
ஆண்டியும் சின்னானும் வெளியே வந்தார்கள். சின்னான் அவசர அவசரமாகப் பேசினான்.
"ஆண்டி, நீ மொதல்ல ஊருக்குப் போ! நான் வர்றது வரைக்கும் வாயையும் கையையும் கட்டிக்கிட்டு இருக்கணும். கோபால மதுரையில போலீஸ் புடிச்சு வச்சிருக்காங்களாம். நான் மதுரைக்குப் போயிட்டு அவனைக் கூட்டிக்கிட்டு வாரேன்... சரி சீக்கிரமா போ! இனிமேல் நீதான் சின்னான்... நான் தான் ஆண்டி... மறந்துடாதே?"
சின்னான் போய்விட்டான். தனித்து விடப்பட்ட ஆண்டியப்பன், பஸ் நிலையத்திற்கு வந்தான். அங்கே, அவனிடமிருந்து எல்லா வகையிலும் தூரமாய்ப் போன நெருங்கிய உறவினர் ஒருவர், அவனிடம் ஒரு தகவலைச் சொன்னார்.
"ஆண்டி, ஒன் வீட்ல ஒரே அழுகைச் சத்தமா கேட்டுது. ஒன் தங்கச்சிக்கோ பிள்ளைக்கோ ஜன்னி வந்து உயிருக்கு ஏதோன்னு பேசிக்கிட்டாங்க. அங்கே போட்ட அழுகைச் சத்தம், பரமசிவம் வீட்டு ரேடியோ சத்தத்துல, சரியா காதுல விழல. எதுக்கும் சிக்கிரமா போடே."
------------
17
ஆண்டியப்பனுக்கு சிந்தனை அனைத்தும் ஒருங்கிணைந்து வீட்டை நோக்கியது 'தங்கச்சிக்கு ஏதாவது ஆகியிருக்குமோ... குழந்தைக்கு ஏதாவது... அடக்கடவுளே, என் தங்கச்சியை நிராதரவாய் விட்டுட்டு வந்துட்டனே... இப்போ என்ன ஆகியிருக்குமோ... கடவுளே, அப்படியே ஏதாவது ஆகியிருந்தால்... அது குழந்தையா இருக்கட்டும். தங்கச்சியாய் இருக்கப்படாது! அய்யோ குழந்தை என்ன பாவம் பண்ணிச்சுது. கடவுளே, யாருமே சாவப்படாது... யாருமே சாவப்படாது...'
அவனுக்கு - அங்கேயே தாவி தன் வீட்டில் குதிக்க வேண்டும் போல் தோன்றியது. அங்கேயே செத்து தன் வீட்டில் ஆவியாகப் போய் நிற்க வேண்டும் போல் தோன்றியது. சட்டாம்பட்டியில் உள்ள தன் வீட்டையே தான் விடும் பெருமூச்சால் இழுத்து, அங்கேயே கொண்டு வர வேண்டும் போல் தோன்றியது. உடலெல்லாம் ஒரே அலுப்பாய் மாறியதுபோல் சுருண்டு நின்றான். பிறகு அங்கேயே நின்றுகொண்டு, தன் வீட்டில் இப்போது என்ன நடக்கும் என்பதைப் பார்க்கிறவன் போல், விஸ்வரூபம் எடுத்தவன் போல், எட்டிப் பார்த்தான். இந்நேரம் அங்கே என்ன நடந்திருக்குமோ - எது துவங்கியிருக்குமோ - எது முடிந்திருக்குமோ!
இதற்குள், தென்காசி பஸ் உறுமியது. அப்போதுதான் ஆண்டிக்கு சுயநினைவு வந்தது. வீட்டிற்குப் போக வேண்டுமானால், பஸ்சில் ஏறித்தான் போயாக வேண்டும். பறக்க முடியாது. தன்னையறியாமல் சட்டைப் பைக்குள் கைவிட்ட ஆண்டி துணுக்குற்றான். இருந்த ஐந்து ரூபாயில் நான்கு ரூபாயை ஹோட்டல் 'பில்' சாப்பிட்டுவிட்டது. பேச்சுவாக்கில் கோபாலிடம் கேட்க மறந்துவிட்டான். இப்போது என்ன செய்வது?
பஸ்சுக்குள் ஏறி கண்டக்டரிடம் நிலைமையைச் சொல்லி கெஞ்சலாமா... உள்ளே இருப்பவர்களிடம் கேட்கலாமா... வேண்டாம். பிறர் வேதனையை, தன் வேதனையாகக் கருதும் காலம் இன்னும் வரவில்லை. எல்லோரும் சிரிப்பார்கள். அதோ ஹோட்டலில் இருந்து போகிறாரே, உறவினர் - அவரிடம் ஓட்டமாய் ஓடிப்போய் கேட்கலாமா... கடனாக ரெண்டு ரூபாய் கேட்கலாமா... வேண்டாம் - வேண்டாம். அடுத்த தெருவில் - அதுவும் பங்காளி வீட்டில் நோயா, நொடியா என்பதையோ, நோயாளி, தாயா பிள்ளையா என்பதையோ தெரிந்து கொள்ள விரும்பாத இவனிடம் காசு வாங்கி, சீக்கிரமாய் வீட்டுக்குப் போறதைவிட, போகாமல் இருப்பதே மேல். அப்படிப் போனால் என் தங்கச்சி ஆன்மா சாந்தியடையாது. அய்யோ! என் தங்கச்சி செத்திருப்பாளோ...
தென்காசி பஸ் நகர்ந்து ஓடியது. அதன் பின்னால் ஓடிய ஆண்டியின் கண்களில் புழுதியை வாரி இரைத்துக் கொண்டே அது ஓடியது. அடுத்த பஸ் கண்டக்டர் பனியனுடன் நெளித்துக் கொண்டு நின்ற தோரணையைப் பார்த்தால், இன்னும் அரைமணி நேரம் ஆகும். என்ன செய்யலாம்?
ஆண்டியப்பன் அந்த நாற்பது கிலோமீட்டர் தூரத்தையும் காலாலேயே கடப்பது என்று தீர்மானித்தான். ஓட்டமும், நடையுமாகப் போனான். எல்லாம் முடிந்திருக்குமோ என்ற முடிவில்லாத் துயரத்தில் நடந்தான். கண்முன்னால் நடக்கும் அக்கிரமத்தையும், அதன் காரணகர்த்தாக்களையும் ஓட்ட முடியாமல் போனதற்குப் பிராயச்சித்தம் செய்பவன் போல் ஓடினான். எதிரே வரும் பஸ்களும், லாரிகளும் ஒதுங்கட்டும் அல்லது தன்னை ஒழிக்கட்டும் என்பது போலவும், தான் மோதினால் அவைகளால் தாங்க முடியாது என்பது போலவும் அவன் தாவி நடந்தான்.
என்னதான் ஓடினாலும், என்னதான் நடந்தாலும், உடலமைப்பு என்று ஒன்று இருக்கிறதே... அவனால் ஓட முடியவில்லை. சிறிது இளைப்பாறினான். மாறாந்தை என்ற ஊரைக் கடந்தபோது ஒரு புளிய மரத்திற்கு அருகே சிறிது நின்றான். எதிரே வரும் பஸ்களுக்கு முன்னால் போய் விழலாமா என்பது போலக் கூட நினைத்தான். அந்த மரத்திலேயே துண்டைக் கட்டி, தூக்குப் போட்டுச் சாகலாமா என்பது போலவும் எண்ணினான்.
பிறகு, மூச்சை இழுத்துப் பிடித்து, நிதானமாக விட விட, அவனுள் ஒரு வைராக்கியம் ஏற்பட்டது. தங்கச்சிக்கு ஏதாவது ஆகியிருந்தால், குறைந்தது இரண்டு பேரையாவது தீர்த்துக் கட்டியாகணும். அவள் மட்டும் இறந்திருந்தால், அவனுக்கு, ஊரே திறந்தவெளிச் சிறைச்சாலையாகிவிடும். அதைவிட, தன் குடிசை வீட்டைவிட, வலுவான சுவர்களைக் கொண்ட, இரும்பு கிராதிக் கதவுகளைக் கொண்ட கட்டடம் எவ்வளவோ மேல்.
ஆண்டியப்பன் மீண்டும் நடந்தான். கால்களே - பஸ் சக்கரங்களாக, கைகளே - 'ஸ்டேரிங்காக' அவன் தன் உடம்பை ஓட்டிக் கொண்டு, மகாத்மா காந்தி தண்டி யாத்திரையில் நடந்தது போல் நடந்தான். எண்சாண் உடம்புக்குள், எண்ணங்கள் சிறைபட, அந்த எண்ணங்களே உடம்பை யந்திரப் பொறியாக்க, யந்திரம் போல, ஆலங்குளத்தைத் தாண்டி, அத்தியூத்தைக் கடந்து, சாலைப்புதூரை நெருங்கும்போது, பிற்பகல் மூன்றூ மணியாகிவிட்டது. ஊரை நெருங்க நெருங்க அவனை உள்ளம் நெருக்கிக் கொண்டே இருந்தது.
இதற்குள் தென்காசியில் இருந்து நெல்லை நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒரு பஸ்சில் இருந்து, 'ஆண்டி ஆண்டி' என்று சத்தம் கேட்டது. உலகில் தன்னைக் கூப்பிட யாரும் கிடையாது என்பது போல, வேறு யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று நினைத்தவனாக, அவன் நடந்து கொண்டிருந்த போது, இரண்டு பேர் மூச்சிரைக்க ஓடிவந்து, அவன் தோளைப் பிடித்தார்கள்.
ஆண்டி நிமிர்ந்து பார்த்தான். ஒருவன் சேரிவாசி கோவிந்தன். இன்னொருவன், அவனுடன் மரம் வெட்டும் மாடசாமி. இருவர் கண்களிலும் சோகம் மண்டி, சாம்பல் நிறம் பூத்திருந்தது. ஆளை எரித்தால் கிடைக்கும் அஸ்தியைப் போல ஆண்டியப்பன், அவர்களைப் பார்த்தவுடன், அவர்கள்தானா என்று நிச்சயப்படுத்திக் கொள்பவன் போல் சிறிது உற்று நோக்கிவிட்டு, பிறகு படபடப்பாக "யாருக்கும் எதுவும் இல்லியே" என்று சொல்லிவிட்டு வெறித்துப் பார்த்தான்.
மாடசாமி இழுத்தான்.
"அப்படில்லாம் ஒண்ணுமில்ல..."
"ஒங்களுக்குக் கோடி புண்ணியம்... சொல்லுங்கப்பா - காலுல வேணுமுன்னாலும் விழுறேன்; உயிருக்கு ஏதாவது..."
"உயிருக்கு ஒண்ணும் இல்ல; அப்படியே ஆனால்தான் என்ன செய்ய முடியும்."
"தங்கச்சிக்கா... இல்ல..."
"மீனாட்சிக்குத்தான்! பிழைச்சிக்கிடுவாள். சரி. பஸ் வருது ஏறு!"
பஸ்சில், அவர்கள் ஆண்டியப்பனிடம், ஊரில் நடந்ததை விளக்கினார்கள். மீனாட்சியைப் பற்றி மட்டும் விளக்கமாகச் சொல்லாமல், மற்றவற்றை விளக்கமாகச் சொன்னார்கள்.
ஆண்டியப்பன், மாடசாமியையும், கோவிந்தனையும் பார்த்த பத்து நிமிடத்திற்குள்ளேயே புரிந்து கொண்டான். என்றாலும், அவர்கள் வாயால் அவன் கேட்கக் கொதிக்கும் அந்த வார்த்தையை வரவழைக்க விரும்பவில்லை. உண்மையை எதிர்நோக்கப் பயம்! தங்கை உயிருடன் இருந்தாலும் இருக்கலாம் என்கிற நப்பாசை! ஊர் போய்ச் சேரும் வரைக்காவது, அவள் உயிரோடு இருப்பதாக நினைக்கத் தூண்டிய வினோதமான எண்ணம்!
அந்த மூவரும் கோணச்சத்திரத்தில் இருந்து, சட்டாம்பட்டியை நோக்கி நடந்தார்கள். ஊருக்குள் வந்ததும், ஊரில் பெரும்பகுதியினர், தாங்கள் கையெழுத்துப் போட்டதால் தான் ஆண்டியப்பன் விடுதலையானான் என்ற பெருமிதத்தோடு, அவனைப் பார்த்தார்கள். அந்தப் பெருமிதம் கொடுத்த நெருக்கத்தில், அவன் வீட்டில் நடக்கும் சோகம், தத்தம் வீடுகளில் நடப்பது போலவும் நினைத்தார்கள். தெருக்களில் நின்றவர்கள் அனைவரும், அவன் பின்னால் நடந்தார்கள்.
ஊருக்குள் வந்தவுடன், ஆண்டியப்பனிடம் மீனாட்சி இறந்ததைப் பற்றி, யாரும் சொல்லவேண்டிய அவசியமில்லை. நாவிதர் ஊதிய இழவுச்சங்கின் ஒலி, அவன் காதுகளுக்குள் ஓலமிட்டது. பெண்களின் அழுகைக் குரல், மரங்களிலும் மண்சுவர்களிலும் இருந்த பறவைகளை சிலிர்க்க வைத்தது.
டீ கடைகளில், வழக்கமான வாடிக்கைச் சிரிப்பு இல்லை. ஒவ்வொருவர் முகத்திலும் எள் விதைத்தது போன்ற விரக்தி. அவன் சோகத்திற்கும், மீனாட்சியின் மரணத்திற்கும் தாங்களே காரணம் என்பது போன்ற ஒருவித குற்றவுணர்வு. ஒரு வயோதிகரால் தாள முடியவில்லை. ஆண்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டே, "பாவிப் பயலே, ஒரு அற்ப மாட்டுக்காவ, ஆசத் தங்கசியை பறிகொடுத்திட்டியடா" என்றார்.
"அற்ப மாட்டால இல்ல மாமா! அற்பப் பயலுவளால அவள் அற்பாயுசுல போயிட்டாள். இனும எதுக்காவ மறச்சிப் பேசணும்" என்றார், அவனை எதிர்நோக்கி வந்த இடும்பன்.
ஆண்டிக்கு - ஊரின் புதிய போக்கு தோன்றவில்லை. தனக்குப் பின்னால் தோன்றி, முன்னால் போய்விட்ட தங்கையை நினைத்துக் கொண்டே, அவன் ஓடினான். மீனாட்சி, வீட்டு வாசலுக்கு மேல் ஆகாயத்தில் நின்று கொண்டு அவனை, 'அண்ணாச்சி - அண்ணாச்சி' என்று சொல்வது போன்ற பிரமை. தான் காண்பதும், கேட்பதும் கனவு என்பது போலவும், இப்போது அந்தக் கனவு முடியப் போகிறது என்பது போலவும், அருமை உடன்பிறப்பு அருகாமையில் பாயில் படுத்துத் தூங்குவது போன்றும் ஒரு பாசாங்கு எண்ணம். நடந்ததை நிராகரிப்பவன் போல அவன் வீட்டு முகப்புக்குள், கண்கொள்ளாக் கூட்டத்தினுள்ளே ஊடுருவிப் போனபோது -
மீனாட்சி குளிப்பாட்டப்பட்டு, புதுச்சேலை கட்டப்பட்டு, நெற்றியில் திலகமிடப்பட்டு, வெளித் திண்ணையில் ஒரு மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்தாள். சுற்றிலும் பெண்கள் கூட்டம். மாரடித்து அழும் பெண்கள், தலையில் அடித்துக் கொள்ளும் தாய்மார்கள்.
"கட்டையில போற பயலுவளால நீ கட்டையாய் போயிட்டியே என் மொவளே" என்ற ஒப்பாரி.
"அநியாயக்காரப் பாவியளால, நீ அநியாயமாய் போயிட்டியே" என்ற தாய்மார்களின் கேவல்கள்.
தங்கம்மா, சத்தம் போடத் திராணி இல்லாமல், அண்ணியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அம்மா, ஆண்டியப்பனைப் பார்த்ததும், அவன் தன்னை வெளியே போகச் சொல்லுவான் என்று நினைத்தவள் போல் வெளியேறிக் கொண்டிருந்தாள்.
அழுது விட்டு ஓய்ந்திருந்த காத்தாயி, ஆண்டியைப் பார்த்ததும் அழுது புரண்டாள்.
"நான் பாவிய்யா, பாவி... மேளத்துக்குப் போன என் புருஷனை சாராயம் குடிச்சிட்டு போலீஸ் பிடிச்சிக்கிட்டுப் போனதா இந்த மாசானம் நொறுங்குவான் சொன்னான். நான் அறிவுகெட்ட ஜடம்! புத்திகெட்ட பொம்புளை - புருஷனைத் தேடி போலீஸ் ஸ்டேஷன் - ஸ்டேஷனாய் தேடி அலைஞ்சேன். நேற்று ராத்திரி வரல. என் ராசாத்தி மார்புல வலி தாங்க முடியலன்னு சொல்லிச் சொல்லி அழுதது. அவளை நான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போறதாய் ஏற்பாடு. இதைத் தெரிஞ்சிக்கிட்டு அந்த மாசானம் நொறுங்குவான் வீண் புரளியாக கிளப்பிட்டான். இதனால என் ராசாத்தி போயிட்டாள். எம்மா என் ராசாத்தி, இன்னா... ஒன் அண்ணாச்சி வந்திருக்கார். ஒன்னை பார்வைக்குப் பார்வை பார்க்கிற, பேச்சுக்குப் பேச்சுப் பேசுற, ஒன் செல்ல அண்ணாச்சி வந்திருக்கார் பாரும்மா - கண்ணைத் திறந்து பாரும்மா... ஒரு தடவையாவது பாரும்மா. என் ராசாத்தியே! என் தங்கமே! பார்க்க மாட்டியா? ஒன்னைத் தாய்க்குத் தாயா வளத்த அண்ணாச்சிய பாக்க மாட்டியாம்மா - பாருடி என் ராசாத்தி!"
காத்தாயியின் புலம்பலால், எல்லாப் பெண்களும் கூப்பாடு போட்டார்கள். தங்கம்மா என்ன செய்கிறோம் என்பது புரியாமலே ஆண்டியப்பனின் கழுத்தில் கை கோர்த்துக் கொண்டு அழுதாள். பிறகு அவன் தோளிலேயே மயங்கி விழுந்தாள். நான்கைந்து பெண்கள் அவளைத் தாங்கிப் பிடித்து முந்தானைச் சேலைகளால் முகத்தில் வீசினார்கள்.
ஆண்டியப்பனுக்கு யார் பேச்சும் கேட்கவில்லை. எந்த உருவமும் தெரியவில்லை. மூலையில் மூலையாய், கண் மூடித் தூங்குபவன் போல், 'வந்திட்டியா அண்ணாச்சி' என்று கேட்பதுபோல் உதடுகள் பிரிந்திருக்க, 'சாப்பாடு போடுறேன் வா' என்று சொல்லி எழுந்திருக்கப் போகிறவள் போல், வலது கை தரையில் ஊன்றப்பட்டிருப்பது போன்ற லாவகத்துடன், 'எனக்கு நல்ல மருந்தா கிடச்சுட்டுது; இனிமேல் மார்புல வலிக்காது அண்ணாச்சி' என்று இடது கையை, உள்ளங்கை தெரியும்படி அபிநயமாய் காட்டுபவள் போல் தோன்றிய தங்கையையே வெறித்துப் பார்த்தான்.
அப்போதுதான் பிறந்த குழந்தை போலவும், படிப்படியாக வளர்வது தெரியாமல் வளர்ந்த சிறுமி போலவும், இளம்பெண் போலவும், தான் பார்த்த பல உருவங்கள் கொண்ட, தன் ஒரே ஒரு தங்கையைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு பாளை அரிவாள் இருக்கும் இடம் நினைவுக்கு வந்தது. கைகளை நெறித்துக் கொண்டு, கன்னக்கதுப்பின் உட்புறங்களைக் கடித்துக் கொண்டு, அவன் கரங்கள் துடித்தபோது -
இரண்டு போலீஸ்காரர்கள் கிராம முன்சீப்பான மல்லிகாவின் தந்தையோடு உள்ளே வந்தார்கள். பழைய சப்-இன்ஸ்பெக்டர், "இது தற்கொலை கேசுன்னு - ரிப்போர்ட் வந்திருக்கு. பிணத்த பரிசோதனை பண்ணணும். ஆஸ்பத்திரிக்கு தூக்குங்கய்யா" என்று அதட்டினார். கிராம முன்சீப் கம்பீரமாகத் தலையாட்டினார்.
அவ்வளவுதான்!
இழவுக்கு வந்த கூட்டம் தினவெடுத்து நின்றதுபோல் சிலிர்த்து எழுந்தது.
"என்னடா நினைச்சிக்கிட்டிங்க... ஆம்புளைங்கன்னா பிணத்த தூக்குங்கடா பார்க்கலாம்! கொடுமைக்கும் ஒரு அளவு வேணுமுய்யா! பிணத்துக்கிட்ட போங்க பார்க்கலாம்! ஒங்க காக்கிச் சட்டைய கழத்தாட்டா என்னென்னு கேளுங்க..."
"போலீஸ்காரங்க என்னடா பண்ணுவாங்க... எல்லாம் இந்த முன்சீப் பாவியால வந்தது. தேவடியாமவனுக்கு இன்னொரு பாடை கட்டுங்கடா..."
-------------
18
நினைத்து பார்க்க முடியாத காலத்தில் இருந்து, மற்றவர்களுக்கு நினைவுகளுக்குரிய உணர்வுகளே இல்லாதது மாதிரி, ஒரு சிலரே எல்லாச் சமயத்திலும், பேசிக் கொண்டிருந்த நிலையை மாற்றுவதுபோல், இப்போது எல்லோரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். ஊரில் எது எது எப்படி எப்படி நடக்கிறது என்பது தெரிந்திருந்தாலும், அவை பற்றிய தெளிவில்லாமல் காலங் காலமாய் காலத்தைக் கடத்திய ஏழை - பாளைகள், இப்போது தெளிந்தது போல் பேசினார்கள். எல்லோரும் ஒரு சேரக் குழுமிய அந்த இழவு வீட்டில், பல இழவுகள் நிர்ணயிக்கப் படப் போகின்றன என்பது போன்ற வெடிச் சத்தங்கள். அடிவயிற்றின் சூட்டைக் காட்டும் நெருப்புப் பேச்சுகள். இதயத்தைத் துடைத்தெடுத்து, செம்மைப்படுத்தும் வார்த்தை ரவைகள். பிணமாக வாழ்ந்தவர்களை, பிணங்கள் தெளிய வைத்துவிட்டது போன்ற, 'சாகத் துணிந்த' துணிச்சல் பேச்சுகள். சின்னான் சொன்னது போல், தனித்தனி குச்சிகளாக இருந்தவர்கள், இப்போது ஒருசேர விறகுக் கட்டாகிவிட்டதால் ஏற்பட்ட வீரப் பார்வைகள்! வேதாந்தத்திற்குப் பதிலாக வீரத்தை உமிழ்க்கும் வார்த்தைகள்! ஆண்டாண்டு காலமாக, அடிமனத்தில் பய நெருப்பை வைத்துக் கொண்டிருந்த மனிதர்கள், இப்போது அதை நெஞ்சிலே கோப நெருப்பாகக் கொண்டு வந்தார்கள்!
மீனாட்சி இறந்ததற்கு, தான் காத்தாயியை அனுப்பியதுவே காரணம் என்று ஊர் முழுமையாகப் புரிந்து கொண்டால், உதை கிடைக்கும் என்று நினைத்து, தனியாக உதை வாங்கத் தயாராக இல்லாத மாசானந்தான், தன் பழைய காதலியின் புருஷனை 'ரிப்போர்ட்' செய்ய வைத்தார் என்பது ஒருவருக்கும் தெரியாது.
ஆண்டியப்பன் விடுதலை செய்யக் கோரி 'கை' கொடுத்தவர்கள், இப்போது 'கை நீட்டவும்' தயாராகிவிட்டார்கள். குனிந்த தலை நிமிராமல், நிர்மலமான தோற்றமும், நெஞ்சைத் தொடும் வாஞ்சையும் கொண்டு வாழ்ந்த மீனாட்சியை, ஒரு அப்பாவி ஏழைப் பெண்ணை, இறந்த பிறகும் பழிவாங்கத் துடிக்கும் முன்ஸீப்பின் அற்பத்தனம், அவர்களுக்கு ஆவேசத்தைக் கொடுத்தது. இன்றைக்கு மீனாட்சிக்கு நேர்ந்தது, நாளைக்கு தங்களுக்கும் நேரலாம் என்ற அச்ச உணர்வு, 'தாக்கும்' தற்காப்பு உணர்வாகியது. நடைப்பிணங்களாக வாழ்ந்த பெரும்பாலோர், இப்போது தங்களை, அந்தப் பிணத்தோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். உடலெல்லாம் கோபத் தீ பற்றி, மேனி எரிந்து, வாய் வழியாகப் புகை வருவது போல், வார்த்தைகள் அனல் கட்டிகளாயின.
"எங்க பிணத்தக் கொண்டு போகுமுன்னால இந்தப் பிணத்தத் தொட முடியாது."
"நீங்க மொதல்ல பிணத்த தொடுங்கடா பார்க்கலாம்!"
"ஏன்லே பேசிக்கிட்டு இருக்கிய - செறுக்கி மவனுவள தூணுல கட்டி வையுங்கள..."
பேசிக் கொண்டிருந்த கூட்டம், திடீரென்று அமைதியாகும்படி, தங்கம்மா விரித்த தலையோடு, விரித்த கரங்களோடு, கோர சொரூபியான காளிபோல, போலீஸ்காரர்கள் முன்னால் வந்து நின்றாள். புருவங்கள் வில்போல் வளைய, நாக்கு அம்புபோல் நீள, அவள் அழுத்தமான அமைதியுடன் போலீஸ்காரர்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். சப்-இன்ஸ்பெக்டருக்கு அந்தப் பார்வையின் கோரத்தை விட அதனைத் தூண்டிவிட்ட சோகம் மனதைக் கௌவியிருக்க வேண்டும். சற்று படபடப்பாகவே பேசினார்.
"நாங்க எங்க கடமயச் செய்யத்தான் வந்தோம்! ஒரு கிராம முன்ஸீப் தற்கொலை நடந்திருக்கதாய் ரிப்போர்ட் கொடுத்தால் நாங்க சும்மா இருக்க முடியாது! சும்மா இருந்தோமானால், வீட்ல சும்மா இருக்க வேண்டியது வரும். அதனால வந்தோம்! ஆஸ்பத்திரியில் பிணத்த சோதனை செய்ய வேண்டியதும், அதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதும் எங்க கடமை."
இதற்குள் காத்தாயி சிடுசிடுவென்று அங்கே ஓடிவந்து போலீஸ்காரர்களுக்கு மத்தியில் பாதுகாப்புத் தேடுபவர் போல் நின்ற முன்ஸீப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டே வெடித்தாள்.
"ஏய்யா முன்ஸீப்பு! ஒன் மொகரக் கட்டைக்கு நீயுல்லாம் முன்ஸீப்பாயா? என்ன பாத்து பதில் சொல்லுய்யா! ஒருத்தி தற்கொலை பண்ணணுமுன்னா, தங்கரளிக் கொட்டைய - இல்லன்னா பயிரோனை சாப்புடணும். என் ராசாத்தி படுத்த படுக்கையா கிடந்தாள். நடக்கவே முடியாத அவளால் தோட்டத்துல போய், தங்கரளிக் கொட்டையப் பறிக்க முடியுமாய்யா? தரையில் விழுந்த கையைத் தூக்கி வாய்கிட்ட கொண்டு போவ முடியாத அளவுக்கு இருந்தவளால எப்படிய்யா எழுந்து நடந்து, மருந்து வாங்கியிருக்க முடியும்? கொஞ்சமாவது யோசிச்சி பாத்தியா... நீ பிணத்த சோதன போடணுமுன்னு எழுதலாமாய்யா... சோதன போடணுமுன்னு நினைச்சா நீ தாங்குவியாய்யா... தூ... நீயில்லாம் - மனுஷன்?"
திடீரென்று தெய்வானை ஓடி வந்தாள். இவள் இருபது இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்ஸீப்பிடம் வரி கட்டப் போன போது, சில சமாச்சாரங்களை கையுங் களவுமாகக் கண்டவள்.
"சோதன போடணுமுன்னு எழுதியிருக்கியரே... ஒம்ம வீட்டு சங்கதி தெரியுமா? ஒம்ம மகள் மல்லிகாவோட ரத்தத்த சோதன போட்டுப் பாப்போமா? பாத்தால் அவள் ஒம்ம மவளா - மாசானம் மவளான்னு தெரியும். அதுக்கு நீரு சோதன போடச் சம்மதிச்சா - நாங்க இதுக்கு சம்மதிக்கோம். என் பிள்ளைக்கு பள்ளிக்கூடத்துல சோறு போடலன்னு, ஒம்மகிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன்? அப்போ சும்மா இருந்த கை - இப்போ எதுக்காவய்யா எழுதணும். இந்த கைய ஒடிக்க எவ்வளவு நேரமுய்யா ஆகும்? வரிப்பணத்துக்குத்தான் ரசீது தராம தின்னு தொலைக்க! இப்ப பிணத்தயும் தின்னு தொலைக்க நினைக்கியாக்கும்..."
கிராம முன்ஸிப்பால் இதற்குமேல் தாங்க முடியவில்லை. கூட்டத்தில் இருந்த 'சொக்காரப்' பயல்கள் கூட சும்மா இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஏதோ சொல்லப்போனார். இதற்குள் ஆண்டியப்பன் அடிமேலடி வைத்து நடந்து சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்றான். காத்தாயி, அவன் ஏதாவது செய்துவிடப் போகிறான் என்பது போல் குறுக்கே வந்த போது, வெறுமையுடன் வெறித்துக் கொண்டிருந்த தங்கம்மாவும், ஓரளவு சுயநினைவு பெற்றவளாய், "நீரு பேசாம நில்லும். அய்யா, போலீஸ் மவராசன்மாரே... உயிருக்கே மதிப்பில்லாத ஆஸ்பத்திரியில பிணத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்குமுன்னு தெரிஞ்சவள் நான். உங்களுக்கு சடலம் வேணுமுன்னா... என் சடலத்தை வேணுமுன்னா எடுத்துக்கிட்டுப் போங்க! எங்க மயினி..."
தங்கம்மாவால் மேற்கொண்டு பேச முடியவில்லை. தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள். முகத்தில் அடித்துக் கொண்டாள். ஆண்டியப்பன் அவளை இழுத்து தன் இடுப்புப் பக்கமாக இணைத்துக் கொண்டிருந்தபோது கூட்டம் கோபமாக எழுந்திருக்கப் போனது. ஆண்டியப்பன் கூட்டத்தினரைக் கம்பீரமாகக் கையசைத்து, சும்மா இருக்கும்படி சமிக்ஞை செய்துவிட்டு, ஆணியடிப்பது போல் பேசினான்:
"சப்-இன்ஸ்பெக்டர் சார், இது தற்கொலை இல்ல. இது கொலை ஸார். நீங்க கண்டுபிடிக்க முடியாத அப்படிக் கண்டு பிடிச்சாலும் வழக்கு போட முடியாத கொல ஸார்! என் தங்கச்சிக்கு மார்புல கட்டி வந்தவுடனே, நான் சர்க்கார் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனேன். அங்கே டாக்டர் இல்ல. டாக்டர் இருந்த சமயத்துல மருந்து இல்ல. அந்த ஆஸ்பத்திரியில அவள கவனிச்சிருந்தால் செத்திருக்க மாட்டாள். இந்தப் பாழாய்போற மாட்ட நான் மந்திரி கையால வாங்காமல் இருந்திருந்தால், நானுண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருப்பேன். கிடைக்கிற கூலியில தங்கச்சிக்கு மருந்து வாங்கியிருப்பேன். இவள் செத்திருக்க மாட்டாள். இந்த மாட்டு விவகாரத்த அதிகாரிங்க இழுத்தடிக்காம ஒழுங்கா விசாரிச்சிருந்தால், நானும் இவளோட விவகாரத்த பாத்திருப்பேன். இவளும் செத்திருக்க மாட்டாள். என் தாய் மாமா மகள் மேல, இந்த முன்ஸீப்போட மகள் அபாண்டமா பழி சொல்லாமல் இருந்திருந்தால், என் மாமன் செத்திருக்க மாட்டாரு. இவள் என் தங்கச்சிய கவனிச்சிருப்பாள். அவளும் செத்திருக்க மாட்டாள்.
"சரி. இந்தக் காத்தாயி புருஷனை போலீஸ் பிடிச்சிக்கிட்டுப் போனதா மாசானம் சொல்லாமல் இருந்திருந்தால் இந்த உடன்பிறவா சகோதரி - என்னோட சகோதரிய ஆஸ்பத்திரியில சேர்த்து பிழைக்க வச்சிருப்பாள். சரி தொலையட்டும். என்னையாவது ஒங்க ஆட்கள் கையைக் கட்டி போலீஸ் ஸ்டேஷன்ல வைக்காட்டால், நான் ஓடோடி வந்து - என்னோட உடன்பிறப்ப காப்பாத்தி இருப்பேன். செத்திருக்க மாட்டாள். அதனால இது கொலை! தற்கொலை இல்ல! கர்ணனை எல்லாருமாய் கொஞ்சங் கொஞ்சமாய் கொன்னது மாதிரி என்னோட தங்கச்சிய சர்க்கார் டாக்டருங்க, அதிகாரிங்க, என்னோட சுத்திக்கிட்டு இருந்த பயலுவ, அந்த மாசானம், இந்த முன்சீப்பு இப்டி எல்லோருமாய் கொலை பண்ணிட்டாங்க. ஒங்களால கேஸ் போட முடியுமா ஸார்..."
சற்று நேரத்திற்கு முன்பு தலையிலும், முகத்திலும் அடித்துக் கொண்ட தங்கம்மா, இப்போது இன்னொரு அவதாரம் எடுத்தவள் போல் கர்ஜித்தாள்:
"போலீஸ் எசமானுவளே! என் அத்தை மகன, ஒங்க ஆட்கள் - சர்க்கார் துணிமணியள போட்டுருக்கிற திமிறுல, அவங்களுக்குத்தான் கை காலு இருக்கது மாதிரி அடி அடின்னு அடிச்சி, மிதிமிதின்னு மிதிச்சிருக்காங்க. இன்னா பாருங்க, இந்த மனுஷனோட கையில் காயத்த, உதடு கிழிஞ்சி இருக்கத பாருங்க! வலது கண்ணு வீங்கி இருக்கத பாருங்க! தனியா அகப்பட்டவர்னு அடிச்சிட்டாங்க - இப்போ எங்க கையும் காலும் ஒங்க மேலபட்டால், எங்கள இப்போ கேக்கது யாரு? ஒங்களுக்கு இளநீர் வெட்டிக் குடுத்த பரமசிவம் வருவானா? இல்ல, ஒங்கள மிரட்டி பணியவச்ச குமாரு வருவானா? இப்போ உங்க உயிரு - எங்க கையில! யாரு கையில? சொல்லுங்க எசமான் மாரே?"
இப்போது கூட்டம் - கும்பலாக மாறியது. எல்லோரும் எழுந்து போலீஸ்காரர்களைப் பார்த்து முண்டியடித்து முன்னேறினார்கள். ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும், நிதானம் கலையாத ஒருசிலர், 'பொறுங்கடா பொறுங்கடா' என்று முரட்டுத்தனமாகப் போனவர்களை இழுத்துப் பிடிக்க, கூட்டத்தில் அகப்பட்ட குழந்தைகள் கூக்குரலிட, பிணமான மீனாட்சி, கோபந்தணியாத கண்ணகிபோல் தோன்ற, ஒரே அமளி... ஒரே கூச்சல்...
சப்-இன்ஸ்பெக்டர் பயந்து விட்டார். போலீஸ்காரர்கள் தவித்தார்கள். முன்சீப் தோலுரித்த வாழைப்பழம்போல் துவண்டார். ரிவால்வரை எடுக்கக்கூட இடமில்லாதபடி முண்டியடித்த கூட்டத்திற்குள் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர், "கொஞ்ச நேரம் சும்மா இருங்க" என்ற பலமான குரல் கேட்டு எட்டிப் பார்த்தார்.
சின்னானும், கோபாலும் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களைப் பார்த்த கும்பல், மீண்டும் கூட்டமாகி, அவர்கள் போலீஸ்காரர்களிடம் போவதற்கு வழி விட்டது. கோபால், தன் கையில் வைத்திருந்த சூட்கேஸை ஒரு ஓரமாக வைத்தான். சின்னான் அமைதியாகப் பேசினான்.
"நடந்ததை வழியில் கேள்விப்பட்டேன். நீங்கள் போலீஸ்காரர்களை அடிக்கப் போறது தப்பு! அவங்க அவங்களோட கடமையைச் செய்ய வந்திருக்காங்க."
"அவங்கள அடிக்கப் போகலப்பா... இந்த முன்ஸீப் பயல அடிக்கப் போனோம்! செறுக்கி மவனோட மிளகாய் தலைய பறிக்காம விடமாட்டோம். ஓஹோன்னானாம்..."
"அதுவும் தப்பு! முன்ஸீப், போலீஸ்காரர்கள், பண்ணையாருங்க தங்களோட பதவியையும், பணத்தயும் தப்பா பயன்படுத்துறது எப்படித் தப்போ, அப்படி நாம அடிக்கப் போறதும் தப்பு! அவங்க ஏழைகள் மேல் அதிகாரத்த ஏவிவிடுகிறது எப்படிச் சுரண்டலோ, அப்படி நிர்க்கதியா மாட்டிக்கிட்ட தனிமனிதர்களை, நாம் மெஜாரிட்டியாய் இருக்கோம் என்கிறதுக்காக அடிக்கிறதும் சுரண்டல்தான்! இதனால நிர்க்கதியாய் நிற்கிற நாமதான் மேலும் நிர்க்கதியாய் நிற்கணும்!"
சப்-இன்ஸ்பெக்டர் கொஞ்சம் சத்தம் போட்டுப் பேசினார்:
"நாங்க முன்ஸீப் ரிப்போர்ட் கொடுத்ததால வந்தோம். இப்போ மீனாட்சி இயற்கையாகவே மரணமடைந்தாள் என்கிறது புரிந்துட்டு, பஞ்சாயத்தார் இப்படி தீர்ப்பளித்துவிட்டதாய் ரிக்கார்டை குளோஸ் பண்ணிருவேன். ஒங்க இஷ்டப்படி நீங்க அடக்கம் பண்ணிக்கலாம். யோவ், முன்ஸீப்பு - ஒன்னோட பதவித் திமுறுல, விவகாரம் எப்படி விபரீதமாய் மாறிட்டு பாத்தியா? தாசில்தார்கிட்ட சொல்லி ஒன்னை என்ன பண்றேன் பாரு? ஒன்னை மாதுரி அறிவுகெட்டவங்க, சின்னச் சின்ன பதவியில இருக்கதாலத்தான் பெரிய பதவியில இருக்கவங்களும் அறிவு கெட்டவனா போயிட்டாங்க."
சமயோசித புத்தி கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சொன்னதோடு நிற்கவில்லை. மீனாட்சிப் பிணத்திற்கு அருகே சென்று, தன் தொப்பியைக் கழற்றி, கையில் வைத்துக் கொண்டு, சிறிது நேரம் மௌனமாக தலை கவிழ்ந்து நின்றார். இதைப் பார்த்த போலீஸ்காரர்களும், தங்கள் தொப்பிகளைக் கழட்டி கைகளில் வைத்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
ஐந்து நிமிடத்திற்கு முன்பு ஆவேசப்பட்ட அத்தனை பேரும், மனத்துக்குள் அழுதவர்களாய், கண்களில் பொங்கி, கன்னங்களில் வழிந்த நீரைத் துடைக்க மறந்தவர்களாய், அப்படியே குலுங்கிப் போய் நின்றார்கள். இந்த சாக்கில் முன்ஸீப் வெளியேறிவிட்டார். இதுவரை அழாமலும் அழுகைக்குரிய அடையாளங்களைக் காட்டாமலும் இருந்த ஆண்டியப்பன், அந்த ஜன சமுத்திர பாச சாகரத்தில், ஆவேசச் சூட்டைத் தணித்துக் கொண்டவன் போல் முதன்முறையாக அழுதான்.
"மீனாட்சி, ஒனக்காக எத்தனை பேரு அழுவுறாங்க பாரு மீனாட்சி, அனாதையாச் செத்தாலும், இப்போ ஒன்னை மகள் மாதுரி ஜனங்க நினைக்கிறதப் பாக்க மாட்டியா மீனாட்சி? ஒனக்காவ கூடியிருக்கிற இந்தக் கூட்டத்த, ஒரு தடவ பாத்துட்டு, அப்புறமா கண்ண மூடு மீனாட்சி. நாம அனாதை இல்ல மீனாட்சி. ஒருவேளை அண்ணன் அனாதையா நிக்கப்படாதுன்னு - நீயே தெய்வமாகி இவங்கள கொண்டு வந்தியா மீனாட்சி? யாருமே எட்டிப் பார்க்காமல் போன வீட்டுக்குக் கூட்டம் வரணுமுன்னு நினைச்சே செத்தியா? சாகும்போது என்னை நினைச்சியாம்மா... அண்ணன், அனாதையா விட்டுட்டுப் போயிட்டானேன்னு கலங்குனியாம்மா... உயிர் போவும்போது - உன் மனசு என்ன பாடுபட்டுதோ! என்னெல்லாம் நினைச்சுதோ! நம்மள மாதுரி ஏழையளுக்கு மனசுன்னே ஒண்ணு இருக்கப்படாது மீனாட்சி - இருக்கப் படாது!"
எவரோ இரண்டு பேர் ஆண்டியப்பனைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்து போனார்கள். சப்-இன்ஸ்பெட்கர் கண் கலங்கியவராய் சின்னானைப் பார்த்து, "அப்போ நான் வரட்டுமா ஸார் - டோண்ட் ஒர்ரி! ரிக்கார்டை குளோஸ் பண்ணிடுறேன்" என்றார். சின்னான் உடம்பை அசைக்காமலே, அசைக்க முடியாதபடி பதிலளித்தான்:
"மீனாட்சியோட ரிக்கார்டை நீங்க குளோஸ் பண்ணுங்க! ஆனால் அவள் ரிக்கார்டை நாங்க இனிமேல் தான் துவக்கப் போறோம்! ரொம்ப தேங்க்ஸ் ஸார்... ஒங்களுக்கு பச்சைத் தண்ணீர் கூட கொடுக்க முடியல!"
போலீஸ்காரர்கள் போய்விட்டார்கள்.
வாதமடக்கிக் கம்புகள் குறுக்கும் நெடுக்குமாகப் போடப்பட்டு, தென்னை ஓலைகள் விரிக்கப்பட்டன. நாவிதர், 'பிணத்த தூக்குங்கய்யா' என்று சொல்லிக் கொண்டே, கண்ணீரை, கையிலுள்ள சங்காலேயே லாவகமாக துடைத்துக் கொண்டு, சங்கு ஊதினார். உடம்பைச் சிலிர்த்த ஓசை, மனிதனின் ஜீவ மரணக் கணக்கை முடிப்பது போல் ஓங்காரமாக ஒலித்த ஓசைக்கிடையே, மீனாட்சி பாடையில் கிடத்தப்பட்டாள். நாவிதரின் பையன் நிலக்கரிகள் போடப்பட்டு, நெருப்பு மூட்டம் செய்யப்பட்ட கலயத்தை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டான். இதற்குள் மீனாட்சியின் புருஷனும், அவன் அம்மா இதர வகையறாக்களும் வந்துவிட்டார்கள். புருஷன்காரன் அம்மாவுக்குத் தெரியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
பாடையை நான்குபேர் தூக்கினார்கள். ஆண்டியப்பனையும் நான்குபேர் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டார்கள். தங்கம்மாவை நான்கு பேர் அணைத்துக் கொண்டார்கள். பிணம் கொண்டு செல்லப்படுவதை, பரமசிவம் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டே மாசானம், குமார், மல்லிகா, பரமசிவம் மகள் ஆகிய நான்கு பேரும் பார்த்தார்கள். நான்கும், நான்கும் ஒன்றைக் கழிக்காமல் பெருக்கும் என்பதுபோல் பெருங்கூட்டம், பிணத்திற்குப் பின்னால் போனது.
முதன்முறையாக, மெத்தை போலிருந்த படுக்கையில் படுக்கக் கொடுத்து வைத்த மீனாட்சி, சுடுகாட்டில், ஏற்கெனவே விறகுகள் அடுக்கப்பட்டிருந்த அடுக்கில் வைக்கப்பட்டாள். அவளது குழந்தைக்கு மொட்டையடிக்கப்பட்டது. அந்தச் சின்னஞ்சிறு குழந்தை அம்மாவை விநோதமாகப் பார்த்தது. இதுதான் அம்மாவைப் பார்க்கும் இறுதியான தருணம் என்பது தெரியாமல், அது உறுதியோடு பார்த்தது. அம்மா இருந்தால், கோயில் குளத்தில் எடுக்கவேண்டிய 'பிறந்த முடி' - தாயவள், மடியில் வைத்துப் பிடித்திருக்க, தாய்மாமன் முறுவலிக்க, தகப்பன் சிரிக்க, தெய்வத்திற்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டிய பிறந்த முடியை, தெய்வமாகிய அம்மாவிற்கே கொடுக்க வேண்டிய அவலநிலை தெரியாமல், அந்தக் குழந்தை சிரிக்கக்கூடச் செய்தது. 'தாயில்லாப் பிள்ளை ஊர் சிரிக்க ஆகும்' என்ற உண்மை தெரியாமல் அது சிரித்தது.
"குழந்தய, சிதைக்குக் கொள்ளி வைக்கச் சொல்லுங்கய்யா" என்றார் நாவிதர்.
ஆண்டியப்பன் இடுப்பில் இருந்த குழந்தையுடன் சிதையை நெருங்கினான். அவனால் நடக்க முடியவில்லை. நான்குபேர் தள்ளிக்கொண்டு போனார்கள். குழந்தையின் கையில், கொள்ளிக்கட்டை கொடுக்கப்பட்டது. அதன் கையையும், கட்டையையும் சேர்த்து ஒருவர் ஒப்புக்கு சிதையருகே கொண்டு போனார். ஆண்டி கதறினான். அவனையும், குழந்தையையும் முன்னால் கொண்டு வந்தவர்கள், இப்போது பின்னால் கொண்டு போனார்கள்.
சிதையில் தீ பிடித்தது! சிதையில் மட்டுமா?
--------------
19
விறகோடு சேர்ந்து மீனாட்சி எரிந்து கொண்டிருந்தாள்.
மயானக் காக்கைகள், அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்தன. பூணிக்குருவிகள் அருகே இருந்த தோட்டத்தில் எள் செடி ஒன்றை வளைத்து, சிதைத்துக் கொண்டிருந்தன. ஒரு சில சமாதிகளில் முளைத்திருந்த எருக்கலைச் செடிகளை, மைனாக் குருவிகள், அலகுகளால் முகர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன. அருகாமையில் இருந்த கிறிஸ்தவச் சுடுகாட்டில், வெள்ளை நிறத்தில் சிலுவைக் குறிகளுடன் அமைந்த சமாதிகளைப் பார்க்கையில் படுத்துக் கிடக்கும் பசு மாடுகள், தலைகளை நிமிர்த்திப் பார்ப்பது போல் தோன்றியது. அவற்றுள் நடமாடிய எருமை மாடுகள் ஒன்றிரண்டில், காகங்கள் உட்கார்ந்து, 'உன்னிகளைத்' தின்று கொண்டிருந்தன.
மாண்டு மடிந்தோரின் மரணக் கதைகளை விண்டுரைப்பதுபோல, பனையோலைகளை சலசலக்க வைத்த பேய்க்காற்று ஒரு பழுத்த பனையோலையை வீழ்த்த, அந்த ஓலை சிதையில் பட்டு, தீயோலையாக மாற, சிதைப் புகை அடியில் செந்நிறமகவும், நுனியில் கருமையாகவும் தோன்ற, பனை மரக்காடுகள் வழியாக, ஆகாயத்தைத் துளைக்கப் போவது போல் போனது. பேய்க்காற்றில் விழுந்த தென்னங் குரும்பையை, சிட்டுக்குருவி ஒன்று கொத்திக் கொண்டிருந்தது.
புல்லுக்கு மானாகவும், மானுக்குப் புலியாகவும், புலிக்கு வேடனாகவும் உருமாறியும், தாக்குவதில் துவக்கமாகவும், தாக்கப்படுவதில் முடிவாகவும் தோன்றும் உருமாற்றம் அல்லாது ஒரு மாற்றமும் இல்லாத மரணம், மவுடீகமாக கோர தாண்டவம் ஆடுவதுபோல், சிதைப்புகை பேய்க் காற்றுக்கு ஏற்றாற்போல், நெளிந்தும், சிதைந்தும் ஒன்று பலவாகவும், பல ஒன்றாகவும், தீ நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு ஆடியது.
மீனாட்சி எரிந்து சாம்பலானதும், அந்த அஸ்தியை, அருகேயுள்ள ஏரியில் கரைப்பதற்காக, சற்றுத் தொலைவில் இருபது இருபத்தைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் தவிர பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டார்கள். ஆண்டியப்பன், குழந்தையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவனைப் போல் தோன்றிய அதன் மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டு, எரியும் சிதையை ஏக்கத்தோடு பார்த்தான்.
"பெண்டாட்டி செத்த துஷ்டியைக் கூட கேக்கல" என்று சொல்லி, யாரும் இரண்டாவது கல்யாணப் பெண்ணைக் கொடுக்க முன்வராமல் இருந்து விடக்கூடாது என்பதற்காக, அம்மாவுடன் வந்தவன் போல் தோன்றிய மீனாட்சியின் புருஷன் கூட, எதையோ ஒன்றைப் பறிகொடுத்த ஏக்கத்துடன் நின்றான்.
'நான் போட்ட தாலியக் கூட வித்துத் தின்னுட்டியடா பாவி'ன்னு நாக்கப் பிடுங்கிட்டுச் சாகும்படியாய் கேளுடா என்று அம்மாக்காரி சொன்னதை மனப்பாடம் செய்திருந்த அவனால், இப்போது அதை ஒப்பிக்க முடியவில்லை. ஆண்டியைப் பார்த்து, "அப்போ நான்..." என்றான்.
மைத்துனனைப் பார்த்து தங்கையின் தாம்பத்ய வாழ்க்கையையும், ஏலாதவனைப் பெற்ற 'வல்லரக்கி' மாமியாரையும் நினைவுக்குக் கொண்டு வந்த ஆண்டியப்பன், பைக்குள் கிடந்த கால்பவுன் தாலியை எடுத்து, மைத்துனனிடம் நீட்டி, "இந்தாரும் இது ஒமக்குத் தேவையா இருக்கும்" என்று சொல்லி நீட்டினான். மைத்துனன், அவன் சொன்னதன் பொருள் புரியாமலே, அந்தப் பொருளை வாங்கிக் கொண்டு, தான் பெற்ற பிள்ளையை அங்கேயே விட்டுவிட்டு, தயங்கித் தயங்கி சிதையைப் பார்த்துக் கொண்டே போய்த் 'தொலைந்தான்.'
அவனையே பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் இப்போது மௌனத்தைக் கலைத்தது.
"முந்தாநாள் வீட்டுக்குப் போயிருந்தப்போ அண்ணாச்சின்னு ஆசயோட மீனாட்சி கூப்பிட்டாள். இப்போ? சும்மாவாச் சொன்னான் - 'தூங்கும்போது ஒரு மூச்சு! அது சுழி போட்டு இழுத்தாக் கால் போச்சு' இது தெரியாமல் துள்ளுறோம் துடிக்கிறோம்" என்றார் ஒரு கிழவர்.
சின்னான், அவருக்குப் பதிலளித்தான்.
"அது சரிதான் சாமி! மனிதன் சாகலாம். ஆனால் மனிதகுலம் சாவதில்லை. அந்தக் குலத்துக்காக, நாம சாகும் முன்னால ஏதாவது நல்லது செய்யாம, இப்டி மூச்சைப் பிடிச்சுக்கிட்டு மூச்சப் பற்றிப் பாடினால் தப்பில்லியா..."
ஆண்டியப்பன், ஆதங்கத்தோடு பேசினான்:
"நீ இவ்வளவு பேசுறியே சின்னான்; நீ கூடத்தான் தப்புப் பண்ணிட்டே!"
"என்ன பண்ணுனேன்?"
"ஊர் ஜனங்கள் எல்லாம் ஒண்ணா திரண்டு, முன்ஸீப்பையும், போலீஸ்காரங்களையும் அடிக்கப் போனபோது நீ தடுத்திட்டே. ரெண்டு செறுக்கி மவனயாவது வெட்டிப் போட்டிருக்கணும்! சரி போவட்டும்... என் கையால ஒரு கொலையாவது விழாமப் போவாது!"
"இந்தா பாரு ஆண்டி, நீ சொல்லிட்ட; நான் சொல்லல. அவ்வளவுதான் வித்தியாசம். ஆண்டி, உனக்கு ஞாபகம் இருக்கா? நாம் எட்டாவது வகுப்புப் படிக்கும்போது, 'திருவோடு' வாத்தியார் பிரெஞ்ச் புரட்சியைப் பற்றிச் சொல்லும்போது, கில்லடின் என்கிற ஆயுதத்தால எதிரிகளைக் கொன்னதாச் சொன்னாரு. உடனே நான் கில்லடின்னு எதுக்காகப் பெயர் வந்ததுன்னு கேட்டேன். வாத்தியார், ஆடு திருடுன திருடன் மாதுரி விழிச்சாரு. உடனே நான் 'கில்' பண்ணுனதால கில்லடின்னு பேர் வந்ததாச் சொன்னேன். உடனே, நீ 'கில்டியா' இருக்கவங்கள கொல்ற மிஷின் - அதனால கில்லடின்னு பேர் வந்திருக்குமுன்னு சொன்னே. ஞாபகம் இருக்கா? சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் ஆகிய லட்சியங்களுக்காகத் துவங்கிய பிரெஞ்சுப் புரட்சி, கடைசில எதேச்சாதிகாரத்துல முடியுறதுக்குக் காரணம் என்ன? சொல்லு பார்க்கலாம்..."
ஆண்டி, கோபால் உட்பட எல்லோரும் சின்னானையே பார்த்தார்கள். சின்னான் தனக்குத்தானே பேசுபவன் போல் பேசினான்:
"பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்தாத எந்தப் புரட்சியும் வெற்றி பெறாது. சொத்துரிமையை ஒழிக்காத எந்தப் புரட்சியிலும் ஆன்மா இருக்காது. வெற்றி பெறும் போராட்டத்துக்குப் பெயர் புரட்சி. அதுவே தோல்வியானால் கிளர்ச்சி. இங்லீஷில் சொல்லப் போனால் முன்னால் சொன்னது ரெவலுஷன். பின்னால் சொன்னது ரிபெல்லியன். நான் செய்ய நினைக்கது புரட்சி! நீ செய்ய நினைக்கது கிளர்ச்சி! அதாவது நீ நினைக்கது மாதுரி போலீஸ்காரர்களையோ முன்ஸீப்பையோ அடிச்சிருந்தாலும் சரி - கொன்னுருந்தாலும் சரி - போலீஸ்காரங்க இதை தங்கள் டிபார்ட்மெண்டுக்கு எதிரான நடவடிக்கையாய் நினைப்பாங்க. பொது மக்களுக்கு போலீஸ் என்றால் கிள்ளுக்கீரைன்னு ஒரு எண்ணம் வரப்படாதுன்னு, விவகாரத்த சட்ட ஒழுங்குப் பிரச்சினையாய் பார்ப்பாங்களே தவிர, பொருளாதாரப் போராட்டமாய் நினைக்க மாட்டாங்க. தமிழகம் முழுவதையும் அடக்குவதற்கு உள்ள அத்தனை ஆயுதப் போலீஸும், ரிசர்வ் போலீஸும், இந்த சட்டாம்பட்டியில் 'டேரா' போட்டு, நம்மை சட்டி பானையை உடைக்கிறது மாதுரி உடைச்சிருக்கும்! இதை நீயே விரும்பமாட்டே! அதே சமயம் ரெண்டு விதவைப் பெண்களுக்காகப் போராடி, அந்தப் போராட்டம் ஊரையே மாற்றியிருக்கு. இதை மாற்ற வேண்டிய அளவுக்கு மாற்ற ஒரு புரட்சி தேவை!"
"சரி, ஒன்னோட புரட்சி தான் என்னதுப்பா?" என்றான் பிச்சாண்டி - மாசானம் செய்த பத்து மூட்டை நெல், அந்தப் புரட்சியில் கிடைக்குமா என்பதை அறிய விரும்பியவனாய்.
சின்னான், ரகசியம் பேசுவதுபோல் பேசி, தழுதழுத்த குரலில் முடித்தான்.
"அன்றைக்குஞ் சரி, இன்றைக்குஞ் சரி, ஆண்டியை உயிருக்குயிராய் நேசிக்கிறவன் நான். கிராமங்கள் குட்டிச் சுவராய் போவதற்கு முக்கால்வாசிக் காரணம், படித்த பயல்கள் தான். இவன்கள் பூர்ஷ்வா பயல்கள். அதாவது தங்களை முக்கியப் படுத்துறதுக்காக எதையும் பிரச்சினையாக்குவாங்க. இவர்கள் மத்தியதர வகுப்பின் மேல்மட்ட வர்த்தக கலாச்சாரத்தின் வாரிசுகள். இவங்களுக்கு தத்துவம் முக்கியம் இல்ல. தலைமைதான் முக்கியம். எல்லாவற்றையும் தீர்க்கப்போறது மாதுரி பாவலா பண்ணும் இவங்க, யார்கூட வேணுமுன்னாலும் சேருவாங்க. தாங்கள் பெரிசாகணுங்கற ஒரே லட்சியத்துக்காக, தியாகம் செய்யத் தேவையில்லாத எதையும் செய்வாங்க. குமார், மாணிக்கம் இந்த வகைப் பயல்கள்... காட்டிக் கொடுக்கிறது லேசான காரியம் என்கிறதுனால, அதைச் செய்துட்டாங்க. ஏன்னா இவங்களுக்கு, இவங்கதான் முக்கியம். அதனாலதான் ஆண்டிய மாதுரி ஏழைகளைத் தூண்டிவிட்டு, அந்த ஏழைகளோட அடிவயிறுல எரியுற தீயில் குளிர் காய்வாங்க. ஆண்டியை ஆற்றில் தள்ளிட்டு அவன் பிணம் மிதக்கும்போது, இந்தப் பயல்கள், அதுல சவாரி பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியும்! அதனாலதான் ஆண்டி இவங்களோட பிரமையில் இருந்து விடுபடுறது வரைக்கும் - நான் காத்திருக்கத் தீர்மானிச்சேன். நான் இடையில தலையிட்டிருந்தால், இந்த ஆண்டியே எனக்கு விரோதமாய் மாறி இருக்கலாம்! அதே சமயம் இவனை ஆபத்தில் இருந்து மீட்கிறதுக்காக அப்பப்போ முயற்சி எடுத்திருக்கேன். ஆனால் நானும் ஒரு தப்புப் பண்ணிட்டேன்! ஆண்டியை அளவுக்கு மேல் தவிக்க விட்டுட்டேன்! இதனால மீனாட்சி இறக்க வேண்டியதாயிட்டு. அண்ணாச்சிய போலீஸ் கையைக் கட்டிக்கொண்டு போனாங்க என்கிறத கேட்ட அதிர்ச்சியிலேயே அவள் செத்திருக்கலாம்! இந்த வகையில் நானும் ஒரு கொலைக்காரன் தான்..."
கோபால் பேச முடியாமல் விக்கித்துப் போன சின்னானின் முதுகைத் தட்டி ஆசுவாசப்படுத்தினான். சின்னான் தொடர்ந்தான்:
"ஒரு வகையில் மீனாட்சியோட மரணம் ஆண்டியப்பனோட இழப்பு. இன்னொரு வகையில் இவள் மரணம் தான் நாம் செய்யப்போற புரட்சியோட விதை! மீனாட்சி ஊன ரீதியில் இறந்து, நம் புரட்சியில் ஞான ரீதியில் வாழப் போகிறாள்! நம்முடைய புரட்சிக்கு, செத்து, உயிர் கொடுத்துட்டாள்."
"சரி, ஒன்னோட புரட்சி தான் என்ன? நான் வெள்ளாமை செய்த நிலம் கிடைக்குமா? ஆண்டியோட பசுமாடு கிடைக்குமா? அதச் சொல்லு!"
"சொல்லுறேன்! நம்முடைய ஊர் நடைமுறையக் கவனிச்சாலே, உலக நடைமுறை தெரியும். ஓங்கி வளர்ந்த பனைமரத்துல ஏறி, பயினியை இறக்குறது என்பது அபாரமான வேலை. பெருமைப்படக்கூடிய சாதனை. ஆனால் அந்தத் தொழிலைச் செய்பவனை, பனையேறின்னு கேவலமாப் பேசுறோம். கிணற்றுக்குள் போய் வெடி மருந்த வச்சி பாறையை பிளக்கிறது, எல்லாராலும் செய்ய முடியாத வேலை. அந்த வேலயச் செய்பவனை கேவலமாய் நினைக்கோம். அந்த வேலையைச் செய்பவனைவிட, அந்த வேலைக்குக் காண்ட்ராக்ட் எடுக்கிறவன் பெரிய மனுஷனாயிட்டான். இதுமாதிரி - அழுக்கை எடுத்துட்டு சுத்தத்தைக் கொடுக்கிற வேலை சலவையாளர் வேலை. அவங்கள வண்ணான்னு கொத்தடிமையாய் வச்சிருக்கோம். பண்ணை நிலத்துல அல்லும் பகலும் வேலை செய்யுறவனை பறையன்னு தள்ளி வச்சிட்டோம். இப்படிக் கஷ்டமான வேலைகள் செய்றவங்களைக் கேவலப்படுத்தி அந்தத் தொழில்களையே கேவலமாக்கிட்டோம். ஏழைகள், கோழைகளாய் இருக்கும் வரை ஏய்ப்பவர்கள் தான் மேய்ப்பவர்களாய் இருப்பாங்க."
"மேய்ப்பவர்களை என்ன செய்யணுன்னு சொல்லுற" என்றார் இடும்பன்.
"சொல்லுறேன்! நம்ம சமுதாயத்துல உழைப்பவன் - மேய்ப்பவன் என்கிற பிரிவோட இன்னொரு பிரிவு இருக்கு. இது அதிகார வர்க்கம். நிலப்பிரபுத்துவ ஆணவமும், முதலாளித்துவ கபடமும் கொண்ட இந்த அதிகாரவர்க்கந்தான், சமூக சமத்துவத்தின் முதல் எதிரி! ஒரு கலெக்டர் முன்னால் கிளார்க் 'நீங்க'ன்னு சொல்லக் கூடாது. 'கலெக்டர் சொன்னார்'ன்னு தான் கலெக்டர் கிட்டேயே சொல்லணும்.
"இந்த மாதிரிக் கொத்தடிமைத்தனத்தை சங்கிலித் தொடராய்க் கொண்ட நிர்வாக அமைப்பில், சமூகத்தில் பணக்காரன் பணக்காரனாய் ஆகிறான். ஏழை ஏழையாகிறான். இதனால் நாடு முன்னேறலன்னு நான் சொல்லல. சுதந்திரத்திற்குப் பிறகு எவ்வளவோ முன்னேறி இருக்கோம். இதே ஆண்டி இன்னைக்கு போலீஸ் ஸ்டேஷனே நடுங்கும்படி புரட்சி செய்ய முடியுதுன்னால் - அது நாட்டோட முன்னேற்றம். இதே ஆண்டி இருபது வருஷத்துக்கு முன்னால இப்படிச் செய்திருந்தால், அவன் போன இடம் புல்லு முளைச்சிருக்கும். ஆக நாடு நல்லா முன்னேறியிருக்கு. அதே சமயம் நாடு முன்னேறிய அளவுக்கு நம்மள மாதுரி ஏழைகள் முன்னேறல. பஸ்ஸுல போன கோபாலை வழிமடக்கி, மதுரையில் லாக்கப்பில் அடைக்கிற காலம் போகல! அதேசமயம் அவனை என்னை மாதுரி ஒரு பறப்பையன்..."
"ஏ, அப்டியெல்லாம் சொல்லாதப்பா..."
"என்னை மாதுரி சாதாரணமானவன் மீட்கிற அளவுக்கு காலம் வந்திருக்கு. சமூக சமத்துவத்துக்காக சர்க்கார் - நிலச்சீர்திருத்த சட்டம் வந்தது. ஆனால் எல்லோரும் பினாமி பேர்ல எழுதி வச்சிருக்காங்க. நமக்கு வந்த மாடுங்க, அவங்க வீட்ல மேயுது. நாம கையைக் கட்டிக்கிட்டு சும்மா இருக்கோம். ஒரு நிகழ்ச்சிதான் ஞாபகம் வருது. கரும்புத் தோட்டத்துக்காரங்க, குரங்குகள் தோட்டத்தை அழிக்காமல் இருக்க, மூங்கில் கம்புகளைச் செதுக்கி, மிளகாய் சோற்றைச் செய்து, ஒரு பாறையில வப்பாங்க. கரும்பத் தின்ன வருகிற குரங்குங்க, இடையில இருக்கிற மிளகாய் சோற்றைத் தின்னுட்டு - அப்புறம் எரிச்சல் தாங்க முடியாமல் மூங்கில் கம்புகளை எடுத்து ஒன்றை ஒன்று அடிச்சிக்கிடும். கரும்புத் தோட்டம் பத்திரமாய் இருக்கும். இதுமாதிரி நாம் வறுமை என்கிற மிளகாய்ச் சோற்றைச் சாப்பிட்டு, வகுப்புவாதம், மொழி, ஜாதி முதலிய கம்புகளை வைத்து அடிச்சிக்கிடுறோம். நமக்குச் சேரவேண்டிய கரும்புத் தோட்டம் பத்திரமாய் இருக்கு."
"நாம தோட்டத்துக்குள்ள இறங்கணும். கரும்புகளை ஒடிக்கணும். அதுக்கு வழியச் சொல்லு."
"சொல்லுறேன்! சமூக உறவு, பொருளாதார உறவின் அடிப்படையில் அமைஞ்சது. உறவுக்கு மனிதாபிமானமோ, மனிதாபிமானத்திற்கு உறவோ தேவையில்லை. எந்த ஜாதியாய் இருந்தாலும், அந்த ஜாதியில் ஏழையாய் இருப்பவன் ஹரிஜன் தான். நீரைவிட, ரத்தம் அழுத்தமாய் இருக்கலாம். ஆனால் பணம், ரத்தத்தை விட அழுத்தமானது. பணக்காரன் பணக்காரனோடு சேரும்போது, ஏழை ஏன் ஏழையோடு சேரக்கூடாது?"
"இப்போ யாருப்பா சேரக்கூடாதுன்னு சொன்னது? சேருறதுக்கு வழியச் சொல்லாம..."
"சொல்லுறேன்! நாளைக்கு எங்க சேரில - நாம எல்லாரும் அதிகாலை ஐந்து மணிக்குக் கூடுவோம். சேரில கூடணுமுன்னு அகம்பாவத்துல சொல்லல. ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பகுதியை புனிதப் படுத்துறதுக்காக - நமக்குள்ள ஜாதி இல்லன்னு நிரூபிக்கதுக்காக கூடணுமுன்னு சொல்லுதேன். இங்க இருக்கிற இருபது பேரும் - சேரியில தேறுற முப்பது பேருமாய் ஐந்து மணிக்குக் கூடுவோம்! கூடி நம்ம மாடுகளைக் கைப்பற்றுவோம்! நம்ம பேர்ல இருக்கிற பினாமி நிலங்களில் ஏர் கட்டுவோம் - சரிதானே!"
"சரிதான்! சரிதான்! மாசானத்திட்ட இருக்க நெல்லு மூட்டைய எடுக்கணும்! சின்னத்துரைகிட்ட இருந்து மூவாயிரம், மூவாயிரம் ரூபாயை வாங்கி, மூக்கையா குடும்பத்துக்கும், நயினார் குடும்பத்துக்கும் கொடுக்கணும். செறுக்கிமவன் கேஸ் போடமாட்டேன்னு சொல்லுதானாம்..."
இதற்குள் சிதை எரிந்து முடிந்தது. அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் எழுந்து, சிதைக்கருகே போனார்கள். அஸ்தியை எடுத்துக் கொண்டு ஏரிக்கரைக்குப் போய் நீரில் கரைத்தார்கள்.
சின்னான் அவர்களை உஷார் படுத்தினான்.
"மறந்துடாதீங்க - மேளச்சத்தம் சேரியில கேட்டதும் வந்துடணும். கர்ணத்த எப்படியாவது அங்க கொண்டு வந்துடணும். ஆனால் யாரையும் அடிக்கப்படாது... மீனாட்சி, என்னென்ன காரணங்களால் மறைந்தாளோ... அந்தக் காரணங்கள் ஒழிவதற்கான காரியங்களைச் செய்யப்போகிறோம்! இது மீனாட்சி அஸ்தி சாட்சியாய் நாம் எடுக்கிற சத்தியம்! மீனாட்சியோட அஸ்தி, நம் புரட்சிக்கு அஸ்திவாரம்!"
எல்லோரும் புதிதாய் பிறந்தவர்கள் போல், ஊருக்குத் திரும்பினார்கள். ஆண்டியப்பனிடம் இருந்த குழந்தையை, சின்னான், காத்தாயியிடம் கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு போய்விட்டான்.
சூன்யத்தின் சூடு தாங்காமல், ஆண்டியப்பன் தங்கையை சாத்தி வைத்திருந்த மூலையில் சாய்ந்திருந்தான். எங்கும் இருளின் ஆதிக்கம். ஊரே தூங்கி விட்டது. வெறுமையின் வெம்மை தாங்காமல், அவன் தவித்துக் கொண்டிருந்த போது, "நான் வரலாமா" என்று ஒரு குரல் ஒலித்தது. தங்கம்மா.
சாப்பாட்டுத் தட்டுடனும், ஒரு ஈயப் பானையுடனும் வந்த தங்கம்மா, அவன் முன்னால் வந்து அமர்ந்தாள். சாதத்தைப் பிசைந்து அவன் வாயில் ஊட்டினாள். பிறகு "அம்மாதான் சாப்பாட்ட கொண்டு போகச் சொன்னாள்" என்று சொல்ல வேண்டியதை நான்கு வார்த்தைகளில் சொன்னாள்.
"தங்கம்மா என்னை கைவிட மாட்டியே!"
தங்கம்மா அவன் கைகளை அழுந்தப் பிடித்தாள். ஒருவர் கையை ஒருவர் பிடிக்க, முகம் தெரியாத அந்த இருட்டில் இருவரும், எதுவும் பேசாமல், ஒருவர் உள்ளத்தில் இன்னொருவர் வியாபிக்க, ஒருவர் மேனியில் இன்னொருவர் உயிராக, உள்ளங்கள் தழுவி ஒன்றுபட்டதைக் காட்டும் வகையில் கையோடு கை கலக்க, தோளோடு தோள் உரச, பிறகு ஒருவர் தோளில் ஒருவர் தலையும், ஒருவர் தலையில் இன்னொருவர் தோளுமாக லேசாகக் கண்ணயர்ந்தபோது -
சேரியில் மேளச் சத்தம் கேட்டது.
ஆண்டியப்பனும் தங்கம்மாவும் சிலிர்த்து எழுந்தார்கள்.
----------
20
ஊர்ச் செருப்புக்காக ஒதுக்கப்பட்ட இடம்போல் தோன்றிய சேரிப் பகுதியில், பெரும்பாலான குடிசைகளுக்கு, நடைவாசல், புறவாசல் கிடக்கட்டும், முறையான வாசலே கிடையாது. ஓலைத்தட்டிகள்தான் வாசல் கதவுகள். உடைந்து கிடந்த மணற் கட்டைகள் தான் ஸோபா ஸெட்டுகள். சமையலறைதான் சயன அறை. குடிசைகளின் குடுமி போலிருந்த ஓலைகள் செல்லரித்து, அதன் இத்துக்கள் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, சேரியின் வடக்குப் பகுதியில் இருந்த முனீஸ்வரன் கோயிலுக்கு, அர்ச்சிக்கப்பட்டவை போல் விழுந்து கொண்டிருந்தன. மனிதர்கள் குனிந்து கொண்டே நிற்க வேண்டிய குடிசைகள். தொட்டால் விழக்கூடிய மண் சுவர்கள். தொடாமலே விழும் சிலந்தி வலைகள்.
முனீஸ்வரன் கோயில் முகப்பில், ஜாதி - ஹரிஜனங்களை வரவேற்பது போல் மாவிலைத் தோரணம் கட்டப்பட்டிருந்தது. மூல விக்ரகத்திற்கு முன்னால், 'சர்வ ஜாதி செத்து, சமதர்ம ஜாதி பிறந்தது' என்று எழுத்துக்களால் கோலம் போடப்பட்டிருந்தது. கோயிலுக்கு முன்னால் உள்ள ஆலமரத் தூணைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் மேடையில் சின்னானும், இன்னும் ஒரு சில ஹரிஜன வாலிபர்களும் நின்றுகொண்டு, ஊர் முனையை நோக்கிக் கொண்டிருந்தார்கள். காத்தாயியும், இன்னும் சில பெண்களும், இடுப்பில் குழந்தைகளை வைத்திருந்தாலும் அவை இல்லாதவை போல் இயங்கிக் கொண்டிருந்தார்கள். காத்தாயியின் கணவன் முத்துக்கருப்பன், ஒரு தவில் மேளத்தை தாளத்தோடு அடிக்க, அந்தத் தாளத்திற்கு ஏற்றாற்போல், ஒரு எட்டு வயதுச் சின்னப் பயல் 'சிங்கி' போட்டான். முன்னொரு நாள் அரசாங்க விழாவில் அமைச்சர் கொடுப்பதாக இருந்த சீருடைகளை வாங்க முடியாமல் போன ஹரிஜனச் சிறுவர்களும், சிறுமிகளும் சின்னான் வாங்கிக் கொடுத்திருந்த புத்தாடைகளை அணிந்தவர்களாய், அவன் எழுதிக் கொடுத்த ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஊரிலிருந்து ஒருவர் ஒருவராக, இருவர் இருவராக வந்து கொண்டிருந்தார்கள். சாமக்கோழி கூவப்போகிற நேரம். துருவ நட்சத்திரம் சுடர்விடும் காலம். பிச்சாண்டி, சஸ்பெண்டான ஒரு ஆசிரியர், முனியாண்டி முதலியோர் மொத்தமாக வந்தார்கள்.
ஆண்டியப்பனும், தங்கம்மாவும், ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி வந்தார்கள். அவர்கள் வந்த ஐந்து நிமிடத்திற்குள், கோபாலும், அவன் தந்தை, தங்கைகளும் வந்தார்கள். அரைமணி நேரத்திற்குள் கிணறு வெட்டப் போய் காலொடிந்து காண்டிராக்டரால் கைவிடப்பட்ட லோகன், பள்ளிக்கூட சர்ட்டிபிகேட்டு மறுக்கப்பட்டு 'டவுனில்' சர்க்கார் கழுதையை மேய்க்க முடியாமல், எருமை மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் மகனைப் பெற்ற மாடசாமி, சாலையோர சர்க்கார் மரத்தை வெட்டும்படி தூண்டிவிடப்பட்டு, பின்னர் கையுங் களவுமாகப் பிடிபட்ட போது - மரவியாபாரியால் கைவிடப்பட்டு, கைவிலங்கு பட்ட காத்தவராயன், தட்டாசாரி தங்கச்சாமியிடம் 'மூதேவி' என்று அடிக்கடி அர்ச்சிக்கப்பட்ட ஆசாரிப் பையன் ஆறுமுகம், பண்ணையார்களின் வயலில் கிடைபோட்டும், வயிற்றுக்கு விடை காணாத சண்முகக் கோனார், நாவிதர், சலவையாளர் முதலியவர்கள் ஓடி வந்தார்கள். காத்தாயியின் இடுப்பில் இருந்த மீனாட்சியின் குழந்தையை, தங்கம்மா வாங்கியபோது, "இந்த மேளச் சத்தத்துலயே ஆண்டி அண்ணாச்சிய, ஒனக்குத் தாலி கட்டச் சொல்லட்டுமா" என்றாள் காத்தாயி. தங்கம்மா நாணவில்லை. பெண்மையால் 'பசலை நிறம்' படரவில்லை. காத்தாயியைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே "நான் இப்போ இந்த ஊரு திரியோதனாதிபதிகள முடிக்க வந்திருக்கிற திரௌபதி" என்றாள் - கோயில் ஒன்றில் முன்பு நடந்த ஒரு வில்லுப் பாட்டு நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டே.
இதற்குள் இன்னும் பலர் கூடிவிட்டார்கள். சின்னானால் ஓரளவு குடும்பச் சுமையை குறைத்துக் கொண்ட சேரி விதவை மூக்கையாவின் மனைவியும், ஜாதி விதவை நயினாரம்மாவும், இன்னும் பல ஏழைபாளைகளும் அங்கே ஓடோடி வந்தார்கள். சேரிக் குடிசைகள் கம்பீரப்பட்டவை போல், காற்றில் சிலிர்த்தன. வாதமடக்கி மரங்களும், பூவரசு கிளைகளும், ஒன்றுடன் ஒன்று மோதி கர்ஜித்தன. கல்லாய் இருந்த முனீஸ்வரர் உயிர்பெற்று, மனித அவதாரங்களாய் மாறியது போலவும், சேரி ஜனங்களும் சாதி ஜனங்களும் ஜாதியைத் தொலைத்துவிட்டு, ஏதோ ஒன்றைக் கண்டுபிடிப்பது போலவும், ஒருவரை ஒருவர் புதிதாகப் பார்ப்பவர்கள் போலவும், இதுவரைக்கும் அப்படிப் பார்க்காமல் போனதற்குப் பிராயச்சித்தம் தேடுபவர்கள் போலவும், ஒருவர் தோளில் இன்னொருவர் கை போட, முனீஸ்வரனின் திரிசூலத்தை, போர்க்கோலம் பூண்டவர்கள் போல் பார்த்தார்கள். கிழிந்த வேட்டிகளிலும், மக்கிப்போன சேலைகளிலும், ஒட்டிய வயிறுகளிலும், ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. மானம்! தன்மானம்! அஞ்சி அஞ்சி சாக விரும்பாத செறுக்கு! செத்து வாழ்வதைவிட, வாழ்ந்து சாக நினைக்கும் வைராக்கியம். யாரும், யாருடனும் அதிகமாகப் பேசவில்லை. வாயின் வேலைகளைக் கண்கள் எடுத்துக் கொண்டன. முனீஸ்வரனுக்குக் கர்ப்பூரம் கொளுத்தாமலே அநீதிகளைக் கொளுத்தி, அக்கிரமங்களை உடைக்கப் போகிற மனிதாபிமான பக்திப் பரவசம்!
ஆண்டியப்பன் கூட்டத்தைப் பார்த்தான். மீனாட்சி இறக்கவில்லை. இருக்கும்வரை வாழாமல் போனவள் இறந்தபிறகு வாழ்கிறாள். அக்கிரமங்களைக் களையவேண்டும் என்ற இதயங்களின் நாடித்துடிப்பாக, அதற்காக எதையும் செய்யத் தயாரான கரங்களில் எஃகாக வாழ்கிறாள். ஒரு தங்கையை விட்டுக்கொடுத்து பல தங்கைகளைச் சம்பாதித்தவன் போல், ஒரு தாய்மாமனைப் பலிகொடுத்து, பல 'அம்மான்களை' பெற்றுக் கொண்டவன் போல், ஆண்டி கூட்டத்தைப் பார்த்தான். தனி மனிதனாக நின்று சமுதாயமாக மாறிய அவனை, சமுதாயமாக நின்ற கூட்டம், தனிமனிதனாக உருமாற்றம் ஆனது போல், அவனை ஒரு சேரப் பார்த்தது.
ஆடவர்கள் வரிசை வரிசையாக நின்றார்கள். அனைவரும் வேட்டிகளைத் தார்பாய்ந்து, தோள் துண்டுகளைத் தலையில் கிரீடமாகக் கட்டிய 'மதுரை வீரன்கள்' போல் மார்பை நிமிர்த்தி நின்றார்கள். அந்த மார்புகள் இதயங்களுக்குக் கவசம் போல நிமிர்ந்து நின்றன. 'சின்னப்பய மவனுள பாரேன்' என்பது மாதிரி பார்த்துக் கொண்டிருந்த சில சேரிக் கிழவர்கள், குளிருக்காய் மூடிய போர்வைகளை வீசியெறிந்தார்கள்.
சின்னான் ஆணித்தரமாகவும் அமைதியாகவும் பேசினான்:
"இன்றையில் இருந்து, நமக்கு நல்ல காலம். சேரிக் குடிசைகளும், ஜாதிக் குடிசைகளும் ஒண்ணாயிட்டு. இனிமேல் நாம் நடத்தப் போற உரிமைப் போராட்டத்திற்கு யாரும், வகுப்புவாத பாடை போர்த்த முடியாது" என்றான்.
அவன் சொல்லி முடித்ததும் ஆண்டியப்பன், "கர்ணத்த காணுமே" என்றான். அந்தப் பக்கமாக அதிகாலையில் 'வாக்கிங்' போகும் கர்ணத்தை, குண்டுக்கட்டாகக் கட்டிக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சின்னான், கர்ணம் கடத்தப்பட்டு வருவதைக் கவனிப்பதற்காக வெளியே போகப் போனபோது, ஊர் கர்ணத்தை, நான்குபேர் தூக்கிக் கொண்டு வந்து, சின்னானின் முன்னால் நிறுத்தினார்கள். சின்னான் தூக்கிக் கொண்டு வந்தவர்களைக் கடிந்தான்: "ஏண்டா பெரிய மனுஷன வலுக்கட்டாயமா கொண்டு வர்றிங்க? கூப்பிட்டால் தானா வருவாரே?"
"நாங்க பயந்து கூப்பிட்டோம். அப்புறம் நயந்து கூப்பிட்டோம். அவர் மாட்டேன்னார் - அப்புறந்தான்" என்று தன் வயிற்றில் கர்ணத்தின் முதுகை வைத்திருந்தவன். மூச்சிரைக்கச் சொன்னான். கர்ணத்தைப் பார்த்துவிட்டு, அனிச்சையாக தலையில் கட்டிய துண்டை எடுக்கப் போனவர்கள், அவரை பிறகு 'துண்டு' போடுவதுபோல் பார்த்தார்கள். பரம்பரைப் பழக்கத்தால் எழப்போன ஒரு கிழவர், கால்மேல் கால்போட்டு, கம்பீரமாக உட்கார்ந்தார்.
கர்ணம் உடலெல்லாம் ஆட, பேச முடியாமல், ஆட்டுக்குட்டி மாதிரி நின்றார். எதுவுமே புரியாததுபோல், கண்களைக் கசக்கிக் கொண்டு, பின்பு எல்லாம் புரிந்தவர் போல் கூட்டத்தைப் பார்த்தார். சின்னான் அவரை ஆற்றுவித்தான்.
"ஒம்ம பேர்ல எங்களுக்குக் கோபமில்ல! ஒம்முடைய நிலைமையில் நான் இருந்தாலும் இப்படித்தான் நடப்பேன்! போவட்டும். சர்வே நம்பர சமஸ்கிருத மந்திரம் மாதுரி ரகசியமாய் வச்சது போதும். யார் யார் - யார் யார் பேர்ல, எந்தெந்த நிலத்த - பினாமியாய் எழுதி வச்சிருக்காங்க என்கிறத சொல்லிடும். ஒம்மை விட்டுடுறோம். இதுல நீரு வெட்கப்படுறதுக்கு அவசியமில்ல. ஒம்ம அவமானப்படுத்துறதும் எங்க நோக்கமில்ல. அதோட நீரு பெரிய மனுஷன். நீரு ஏழைகள் நிலத்துல வில்லங்கம் பண்ணுனது மாதுரி நாங்க ஒம்ம உடம்புல வில்லங்கம் பண்ணமாட்டோம். பயப்படாம விவரமாச் சொல்லும்."
சின்னானின் சினேகித பாவமான பேச்சு, கர்ணத்திற்குக் கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. தன்னைக் கண்டதும், துண்டை எடுத்து இடுப்பில் கட்டும் 'துண்டுப் பயல்கள்' கூட இப்போது தார்பாய்ந்து நிற்பதால் அதிர்ந்து போனாலும், அவர் சாமர்த்தியமாகப் பேசினார்.
"அடங்கல் பட்டாவை பார்த்தாத்தான் விவரம் புரியும். போய் எடுத்துக்கிட்டு வரட்டுமா? ஒரு நொடியில் வந்துடுறேன்."
கர்ணம் குழைந்தபோது, சின்னான் சிரித்துக் கொண்டே குழைந்து பேசினான்:
"ஒம்ம மேல எப்படி தனிப்பட்ட விரோதம் கிடையாதோ - அப்படி தனிப்பட்ட பாசமும் கிடையாது. ஒம்மை குரோதம் இல்லாமலே குத்தப்போறோம். முன்விரோதம் இல்லாமலே மூஞ்சியக் கிழிக்கப் போறோம். யாருகிட்ட கரடி விடுறீர்? தூக்கத்துல எழுப்பிக் கேட்டால் கூட, சர்வே நம்பரைச் சொல்றவரு நீரு. நீரு சொல்லித்தான் பட்டா நிலத்த பண்ணையாருங்க பினாமியாக்கியிருக்காங்க. சொல்றீரா - இல்ல திருவு திருவுன்னு திருவட்டுமா?"
திருவி விடுவாங்களோன்னு, திருதிருவென்று விழித்த கர்ணத்திற்கு ஒன்று புரிந்துவிட்டது. 'இனிமேல் இந்த பயல்களை, யாரும் எதுவும் செய்ய முடியாது. நமக்கேன் பொல்லாப்பு' மடமடவென்று ஒப்புவித்தார்.
"பேச்சிமுத்து குளத்துல - பரமசிவம் நிலம் இருபது ஏக்கர்ல, பதினைஞ்சி, தலைக்கு - மூணாய் அடைக்கலசாமி, ஆண்டியப்பன், மயானபுத்திரன், பிள்ளையார், பெருமாள் பேருக்கு இருக்கு. கிட்டப்பா நிலத்துல குளத்தடி பாசனம் பிச்சாண்டி பேர்ல!"
"சர்வே நம்பரோட சொல்லும்வே!"
கர்ணம் சர்வே நம்பருடன் சொல்லச் சொல்ல, சின்னான் குறித்துக் கொண்டான். கடைசியாய் ஒரு கேள்வியைக் கேட்டான்.
"ஒம்ம நிலம் யார் பேர்ல இருக்கு?"
"எனக்காவது விலக்குக் கிடையாதா?"
"ஒமக்கு விலக்கு கூடாது - விலங்குதான் போடணும்! சரி சொல்லும்."
"என்னோட நிலத்துல பிள்ளையார் கோயில் பக்கத்துல இருக்கிற நிலம், இந்தக் கிருஷ்ணன் பேர்ல இருக்கு."
"பிள்ளையார் கோயில் நிலம் - கோயில் சொத்தாச்சே?"
"இல்ல - அத பட்டாப் போட்டு, அப்புறம் இவன் பேருக்கு மாத்துனேன்."
"நல்லது. காத்தாயி இவருக்குக் காபி கொடுத்துட்டு ஒன் வீட்லயே இவர கொஞ்ச நேரத்துக்குக் காவலுல வை."
கர்ணத்தை இரண்டு பேர் தள்ளிக்கொண்டு காத்தாயியின் வீட்டுக்குப் போனபோது, இன்னும் சஸ்பெண்டிலேயே கிடக்கும் இடும்பன் சாமியும், இன்னொருவரும் மீசைக்காரனைத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். அவன் தலையில் இரண்டு எண்ணெய் டின்கள் இருந்தன. மீசையை சின்னானின் முன்னால் நிறுத்திவிட்டு, "உள்ளதைச் சொல்லு - இல்லன்னா முதுகுல டின்னு கட்டுவோம்" என்றார் இடும்பன்சாமி. மீசைக்காரன் அந்த மீசை படும்படி தரையில் விழுந்து, கூட்டத்தை வணங்கிவிட்டுப் புலம்பினான்:
"சாமி சத்தியமாய் சொல்லுதேன் - இந்த எண்ணெய் டின்ன பள்ளிக்கூடத்து மானேஜர் ஜம்புலிங்கம்தான் தென்காசில ரகசியமா விக்கச் சொன்னாரு. கேர்ல இருந்த பிள்ளியளுக்கு கோதுமையை தாளிச்சு ரவையா கிண்டிக் கொடுக்கதுக்காக பள்ளிக்கூடத்துக்கு வந்த எண்ணெய் டின்னுன்னு சத்தியமாய் எனக்குத் தெரியாது. நெல்லு வண்டில அந்தத் தேவடியா மவன் தான் கொண்டு வந்து போட்டான். இதுதான் நிஜம்."
ஆண்டியப்பன் பெருந்தன்மையாகப் பேசினான்:
"பரவாயில்ல அண்ணாச்சி! நீ எனக்கு சின்ன வயசில நொங்கு வெட்டிக் கொடுத்ததை மறக்கல, சரி நீயும் எங்க ஜாதில சேரு. இல்லன்னா மல்லிகா ஒன் மகள் மேலயும் பழி போடுவாள்."
மீசைக்காரன் சந்தோஷமாகச் சேர்ந்து கொண்டான். சின்னான் கூட்டத்தை உற்சாகப்படுத்தினான்.
"நான் என் வேலையை ராஜினாமாப் பண்ணிட்டேன். இனிமேல் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உங்களோடயே இருப்பேன். இப்போ நாம ஊருக்குள் புகுந்து, நம்ம பேர்ல இருக்கிற பொருட்களைக் கைப்பற்றப் போறோம்! சட்டப்படி நமக்குச் சொந்தமான நிலத்துல உழப்போறோம்! ஆனால் யாரையும் நாம் அவமானப்படுத்தப்படாது. சட்டுப்புட்டுன்னு காரியத்த முடிச்சிடணும். நாலு மூலையிலயும் அவங்க போலீஸுக்குப் போகாதபடி ஆட்களை நிறுத்தியிருக்கேன். இருந்தாலும் சீக்கிரமாய் முடிக்கணும். புறப்படுவோமா? மச்சான்! நீரு மேளத்த அடியும். டேய் பயலுவளா... நான் எழுதிக் கொடுத்த பாட்டைப் பாடுங்கடா..."
கூட்டத்தினருக்கு முன்னால் முத்துக்கருப்பனின் மேளத்திற்கு ஏற்ப சிறுவர் சிறுமியர் பாடினார்கள். சின்னான் முனீஸ்வரரிடம் இருந்த திரிசூலத்தை எடுத்து ஆண்டியப்பனிடம் கொடுத்தான். ஆலமரத்தோடு சேர்த்துக் கட்டி வைக்கப்பட்டிருந்த கூர்மையான பித்தளை வேலை எடுத்து பிச்சாண்டியிடம் கொடுத்தான். சிறுவர் சிறுமியர் தாள நயத்தோடு பாடினார்கள்.
புதிய ஜாதி புதிய ஜாதி
புதிய ஜாதி பிறக்குது
புன்மை கொன்று நன்மை ஆக்க
புதிய ஜாதி பிறக்குது!
பள்ளர் ஜாதி செத்தது; பறையர் ஜாதி செத்தது.
கள்ளர் ஜாதி செத்தது; பிள்ளை ஜாதி செத்தது.
குறவர் ஜாதி செத்தது; குடும்பர் ஜாதி செத்தது.
ரெட்டி ஜாதி செத்தது; செட்டி ஜாதி செத்தது.
சர்வ ஜாதி செத்துமே சமதர்ம ஜாதி பிறக்குது!
(புதிய)
நாட்டார் ஜாதி செத்தது; நாடார் ஜாதி செத்தது.
நாயுடு ஜாதி செத்தது; நாய்க்கர் ஜாதி செத்தது.
கவுண்ட ஜாதி செத்தது; கௌட ஜாதி செத்தது.
பலஜாதி செத்துமே பாட்டாளி ஜாதி பிறக்குது!
பாட்டாளி ஜாதி பிறக்குது!
(புதிய)
அணிவகுப்பை அறியாதவர்கள் கூட அணிவகுத்துச் சென்றார்கள். ஊர்வலம் போலவும், தீவட்டிக் கொள்ளை போலவும், ஊருக்குள் ஐம்பது பேராக நுழைந்த கூட்டத்தில், இப்போது பலர், சொல்லாமலே சேர்ந்தார்கள். யாரும் கேளாமலே அந்தப் பாட்டைப் பாடினார்கள். கூட்டத்திற்கு முன்னால், ஆண்டியப்பனும், சின்னானும் கம்பீரமாகப் போனார்கள். காத்தாயியும், தங்கம்மாவும் அதற்கு அடுத்தாற்போல் போனார்கள். ஏதோ ஒன்றை அடையாளம் கண்டுகொண்ட திருப்தியில், பல மதில்மேல் பூனைகள் கூட்டத்தையே ஒரு மதிலாக நினைத்து, அரண்போல் ஆனார்கள்.
ஊரில் உள்ள பெரும்பாலான ஏழை மக்கள் - ஆறடி உடம்பை 'நான்கடிக்குள்' கூனிக் குறுக்கி நடமாடி வந்த அந்த குற்றேவல்காரர்கள், இப்போது ஒரு பனையைவிட உயரமான நீளத்தில் உடம்பும், ஆறடி அகலத்தில் மார்புங் கொண்ட, இதுவரை பார்த்தறியாத ஒரே ஒரு அசுர மனிதனைப் போல் தோன்றினார்கள். ஒட்டுப்போட்ட ரவிக்கைகளும், கிழிந்த சேலைகளும், இத்துப்போன வேட்டிகளும், அற்றுப்போன துண்டுகளும், அந்த அசுர மனிதனின் ஆடைகளாக, பழைய ஜாதிகளைச் சாடிய புதிய பாடல், அந்த மனிதனின் ஆன்மிகக் குரலாக, ஆணென்றோ, பெண்ணென்றோ இல்லாமலும், அந்த இயல்புகள் அல்லாமலும் தோன்றிய அந்த அர்த்தநாரீஸ்வரத்தின் ஒவ்வொரு அடியும் பேரடியாக, ஒவ்வொரு வார்த்தையும் புதியதோர் பிரம்மோபதேசமாக, ஊரின் ஒவ்வொரு உறுப்பும் கதிகலங்கி, பின்னர் 'கதி' கண்டதுபோல் எதிரொலியாய் ஒலித்தது.
--------------
21
பழைய ஊர்ச் சாவடிக் கட்டடத்திற்கு அருகே உள்ள புதிய கட்டடத்திற்கு முன்னால் கூட்டம் போய் நின்றது. கூட்டுறவுச் சங்கக் கட்டடம் அது. சத்தத்தைக் கேட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்த கூட்டுறவுத் தலைவர், தற்செயலாகக் கதவைத் திறந்தார். ஏதோ கிறிஸ்தவர்கள் பாடிக்கொண்டு போவதாக நினைத்த தலைவர், ஆண்டியப்பனைப் பார்த்துவிட்டு, அந்தப் பயத்திலேயே அவனை அடுத்து நிற்பவர்களைப் பார்க்க விரும்பாமல், கதவைச் சாத்தப் போனார். கதவின் ஒரு பகுதியை மூடிவிட்டு, இன்னொரு பகுதியை மூடப்போன போது, பிச்சாண்டி அவரையும் அந்தக் கதவையும் ஒருசேர இழுத்தான். "விட்டுடுப்பா - வாரேன்" என்று தலைவர் கத்த, பிச்சாண்டியின் இரும்புப் பிடி, வெண்ணெய்ப் பிடியாக, தலைவர் வெளியே வந்து இரண்டு கைகளையும் தூக்கி தலைக்கு மேல் கொண்டு போய் வைத்துக் கொண்டு, "நீங்க என்ன சொன்னாலும் கேக்கேன்! எல்லாப் பயலுமாச் சேர்ந்து என்னையும் மோசம் பண்ணிட்டானுவ. நீங்க என்ன செய்தாலும், எனக்குச் சந்தோஷந்தான்" என்றார் அழுதுகொண்டே. சின்னான் அதட்டினான்:
"இப்போ அழுவுறீர்! அப்போ இந்த ஆண்டி அழுதான்! அவன் தங்கச்சி அழமுடியாத இடத்துக்குப் போயிட்டா! ஒரு வார்த்த பரமசிவத்த தட்டிக் கேட்டீரா? அநியாயத்த தட்டிக் கேக்காதவன் முதுகயும் தட்டிப் பார்க்கிற காலம் வந்துகிட்டு இருக்குய்யா... கூட்டுறவ... குடும்ப உறவா ஆக்கின ஒம்ம இப்போ என்ன செய்யப் போறோம் தெரியுமா?"
"சபையில நான் தோப்புக்கரணம் வேணுமுன்னாலும் போடுறேன்! என்ன சொன்னாலும் செய்யுறேன்! நானே ஒங்ககிட்டே வரப்போற சமயத்துல நீங்க என்கிட்ட வந்திருக்கிங்க."
"யோவ், இது சபை - கூட்டுறவுச் சங்கமில்ல. இந்தத் தளுக்குப் பேச்சில்லாம் வேண்டாம்."
"என்ன செய்யணும் சொல்லுங்க."
"சரி பேரேட்ட எடும். எத்தன பேரு வீட்ல - எத்தன பேரு பேர்ல - எத்தன மாடு இருக்கு. விவசாயக் கருவி இருக்குன்னுச் சொல்லணும். பேரேட்ட எடுத்துக்கிட்டு வாரும். உம் சீக்கிரம்."
கூட்டு(றவு)த் தலைவர், பைண்ட் செய்த ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தார். ஆண்டியப்பன் அதட்டினான்:
"கதவப் பூட்டிட்டு வாரும்வே! இல்லன்னா குமார் பய சங்கத்த கொள்ளையடிச்சிட்டு பழிய எங்க மேல போடுவான்."
சின்னானுக்கு திடீரென்று ஒரு யோசனை.
"கேஷ் புக்கை கொண்டு வாரும்."
தலைவர் உள்ளே போய், கேஷ் புக்கைக் கொண்டு வந்தார். அதன் அட்டை பழைய காலணா நாணயம் போல் மங்கியிருந்தது. சின்னான் அவரது கைகளிலேயே அந்த நோட்டு இருக்கும்படி பிரித்துக்கொண்டு, "கேஷ் பாலன்ஸ் ஆயிரம் ரூபாய் பதினைஞ்சி காசு இருக்கணும். இருக்கா?" என்றான்.
"அது வந்து..."
"நாங்க திருட்டுக் கூட்டம் இல்லய்யா... பணத்தத் தொடமாட்டோம். பேலன்ஸ் பணம் இருக்கான்னு செக் பண்றதுக்காகத்தான் கேட்டேன்!"
"அது வந்து... ஒரு அவசரமுன்னு மாசானம் ராத்திரி ஐந்நூறு கேட்டான்."
"மீதி ஐந்நூறு ரூபாய் பதினைஞ்சி காசு?"
"குமார் அவசரமுன்னு..."
"ஏய்யா, கூட்டுறவுன்னா என்னென்னு தெரியுமாய்யா? ஊரே ஒரு குடும்பமாய் இருந்து எல்லாத் தொழிலையும் செய்யுறதுக்காக அமைக்கப்பட்ட லட்சியம் கூட்டுறவு. காக்கா கூட ஒண்ணாச் சாப்புடுது. மனுஷனும் ஒண்ணா உழைத்து ஒண்ணாச் சாப்பிடக்கூடாதா என்கிற கேள்விக்கு விடைதாய்யா கூட்டுறவு. காக்காவப் பார்த்து கத்துக்கிடுறதுக்குப் பதிலா 'காக்கா' பிடிக்கதுக்குக் கூட்டுறவுச் சங்கத்த பயன்படுத்தலாமாய்யா."
கோபால் ஒரு காலை தரையில் தேய்த்துக் கொண்டே கத்தினான்:
"புதுசா இவன் கட்டுன வீட்டுல கூட்டுறவுப் பணம் எவ்வளவு போயிருக்குன்னு கேளு சின்னான்! இவன அடிச்சாத்தான் உள்ளத சொல்லுவான்!"
சின்னான் கோபாலை கையமர்த்தினான். கூட்டுறவுத் தலைவர் உடம்பெல்லாம் நடுங்கியது. மார்கழிக் குளிரிலும் உடம்பு வியர்க்க வெலவெலத்து நின்றார். உயிர் இப்போது 'பினாமி மாதிரி, ஒட்டியும் ஒட்டாமலும் நிற்பதுபோல், சவக்களை படர, தவளை மாதிரி தலையைத் தூக்கிப் பார்த்தார். முடியவில்லை.
சின்னான் அமைதியாகப் பேசினான்:
"சரி ஒம்மச் சொல்லிக் குற்றமில்ல. கண்ணு முன்னால பல கூட்டுறவுச் சங்கத்த மோசடி பண்ணுனவங்க, பளபளக்கிற கார்ல போறதப் பார்த்த நீரு, கஸ்டம்ஸ்ல இருந்து வந்த துணிகள, பெண்டு பிள்ளிகளுக்கு கொடுத்ததுலயோ - சர்க்கரய தென்காசியிலேயே வித்ததுலயோ - தப்பில்ல; தப்பு எங்க மேலத்தான். ஸ்டாக் ரிஜிஸ்டர் இருக்காவே? சர்க்கரை மூட்டை இருப்பு எவ்வளவு இருக்கணும்? ரிஜிஸ்டர்ல இருக்கிறபடி இருக்கா?"
"பரமசிவம் வீட்டுக் கல்யாண வகைக்காவ..."
"ஆயிரம் இழவுல ஒரு கல்யாணத்த நடத்துறவங்க கூட, இன்னும் நீரு சேரப் போறீரா?"
"சாமி சத்தியமா மாட்டேன்!"
"சரி. அப்படின்னா கூட்டத்துக்கு முன்னால நடயும்... பேரேட்ட வச்சிக்கிடும். ஒவ்வொருவனும் எத எத, யார் யார் பேர்ல வாங்கியிருக்கான்னு சொல்லணும்... சொல்லுவீரா?"
"சொல்லாட்டா காலுல கிடக்கிறத தூக்கி தலயில அடி!"
"இவன் சொன்னாலும் அடிக்கணும். சொல்லாட்டாலும் அடிக்கணும்."
"நம்ம வாயில் இருந்து இந்த மாதிரி வார்த்த வரப்படாது. சரி நடயும்."
கூட்டுறவுச் சங்கத் தலைவர் - பலருக்கு, பல மாடுகளை ஏழைகள் பேரில் வாங்கிக் கொடுத்தவர், இப்போது மாடு மாதிரி முன்னால் நடந்தார். 'வேகமா நடயும்வே' என்று கூட்டம், ஒரே குரலில் சொல்ல, அவரும் ஒரே காலில் நடப்பவர் போல் ஓடினார்.
கூட்டம் போய்க் கொண்டிருந்தபோது, ஓவர்ஸியருடன், வேகமாக நடந்துகொண்டிருந்த மாசானம், திரும்பிப் பார்த்துவிட்டு, திடுக்கிட்டுப் பார்த்துவிட்டு, ஓடப்போனார். அவரால் முன்பு உதைபட்ட பிச்சாண்டி, கையில் ஒரு பெரிய கல்லைத் தூக்கி வைத்துக்கொண்டு, "ஏல, ரெண்டு பயலுவளும் மரியாதியா நில்லுங்க. இல்லன்னா இந்தக் கல்லால ஒரே போடு" என்று சொல்லிவிட்டு, கையைக் கிரிக்கெட் ஆட்டக்காரன் மாதிரி தூக்கியபோது, மாசானமும், பஞ்சாயத்து யூனியன் ஓவர்ஸியரும், அந்தக் கல், தலைக்குமேல் போகட்டும் என்பதுபோல் குனிந்து கொண்டே நின்றார்கள். கூட்டம் அங்கே போவது வரைக்கும், மண் நோக்கி நின்றார்கள்; புலியைப் பார்த்ததும், ஓட நினைத்தும், ஓட முடியாமல், அப்படியே குன்றிப் போய் நிற்கும் ஒட்டகம் மாதிரி!
கோபால் ஓவர்ஸியரை அதட்டினான்:
"கையில என்னதுய்யா..."
"எம் புக்... யூனியன் ரோடுகளப் பற்றிய கணக்கு."
"அது எனக்குத் தெரியும். இப்டிக் கொடுங்க."
கோபால் ஓவர்ஸீயர் கொடுத்த 'எம்' புக்கைப் புரட்டிப் பார்த்தான்.
"ஆமாம். சேரில ரோடு போட்டதா எழுதியிருக்கு - எப்பய்யா போட்டியரு? குளத்துப் பக்கத்துல கல்வெர்ட் கட்டுனதா இருக்கு - எப்போய்யா போட்டியரு? நீரு கெட்டிக்காரன் - பேப்பர்ல ரோடு போடுறதுல. ஒங்கள மிஞ்ச முடியாது போலுக்கே. அவனவன், போட்ட ரோட்ல கொஞ்சம் மாற்றி எழுதி அட்ஜெஸ்ட் பண்ணுவான். நீ போடாமலே எழுதிட்ட! உண்மையிலேயே நீ ஸ்பெஷலிஸ்டுய்யா... சீ நீயில்லாம்..."
காத்தாயி கத்தினாள்.
"ஓவர்ஸியர் எஜமான், எங்க சேரில ரோடு போட இடமே இல்ல. இல்லாத இடத்துல ஒம்மால எப்டி ரோடு போட முடிஞ்சது? இப்படி ஏழை எளியவங்க வரிப் பணத்துல வாழ்றதவிட நீரு - ஒம்ம பெண்டாட்டிய கூட்டிக் கொடுத்துப் பிழைக்கலாம் எசமான். வழி தெரியாத ஜனங்களுக்கு, நீரு வழி போட்டு நல்லாத்தான் வழி காட்டியிருக்கியரு. அய்யா, நம்ம சேரில வந்து, பாவம் கஷ்டப்பட்டு- மாசானம் மவராசன் போட்ட ரோட்ட அளந்து பாத்திருக்காரு பாருங்க... ஏய் சின்னான், சாமிக்கு ஒரு கலர் உடச்சி கொடு. தூ... எங்களுக்கு நல்லது பண்ணக்கூட வேண்டாம் - நல்லது பண்ணுனதாச் சொல்லாமலாவது இருக்கப்படாதா?"
ஓவர்ஸியர் தலைகவிழ்ந்து நின்றார். அவர் போட்டிருந்த டெர்லின் சட்டையும், டபுள் நெட் பேண்டும், தனியாகக் கழன்று விழுந்து நிர்வாணமாக நிற்பதுபோல் தலைகவிழ்ந்து நின்றார். மாசானம் கொடுத்த பணத்தில் வாங்கிய ஆடைகள், அவரது மானத்தை மறைக்க முடியாமல் வியர்வையை உறிஞ்சி, உப்பின. கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி, தூக்குக் கயிறு போல் அழுத்தியது.
சின்னான் பொறுமையோடு பேசினான்:
"நானும் போனவாரம் வரைக்கும் கவர்மென்ட் சர்வண்ட்தான் ஸார்! நமக்கு சம்பளம் குறைவுன்னாலும் அரசாங்கம் நம்மை நம்பி லட்சக்கணக்கான பணத்தை, நம்ம பொறுப்புல கொடுத்திருக்கு. நாமதான் சேவை செய்யத் தகுதியானவங்கன்னு நாம படிச்சிருக்க படிப்பை நம்பி, பொறுப்பை கொடுக்குது. சர்க்கார் என்கிறது ஏதோ ஒரு ஸ்தாபனம் அல்ல. அது நாலரைக் கோடி தமிழ் மக்கள். அறுபது கோடி இந்திய மக்கள். இந்த அறுபது கோடி மக்களோட பணத்துல, நாம ஒரு காசு எடுத்தாலும் - அது நம்ம பெண்டு பிள்ளைகள அறுபது கோடி பேருக்கும் கூட்டிக் கொடுக்கதுக்குச் சமானம். இப்ப ஒம்ம போலீஸ்ல ஒப்படைச்சிடலாம்... ஒம்ம குடும்பந்தான் நடுத்தெருவுல நிக்கும். ஒம்ம இடத்துக்கு ஒரு யோக்கியன் வந்தாலும் ஒரு மாதத்துல அயோக்கியனாயிடுவான். தனிப்பட்ட சொத்துரிமை இருக்கது வரைக்கும் இந்த மாதிரி அதிகாரிகள் தான் இருப்பாங்க. ஒவ்வொருவனும் தன் தகுதிக்கு ஏற்றாற்போல ஒரு அரசியல்வாதிய பைக்குள்ள போட்டுக்குறான். அதிகாரி - அரசியல்வாதி பைக்குள்ளவும், அரசியல்வாதி - அதிகாரி பைக்குள்ளயுமாய் இருந்துக்கிட்டு, அரசாங்க பைக்குள்ள கையைப் போடுற காலம் - ஒங்கள மாதிரி ஆட்களுக்குத்தான் மேல் அதிகாரிங்க கிட்டயும் நல்ல பேரு கிடைக்கும். நீங்கதான் இஷ்டமான இடத்துக்கு, இஷ்டமான சமயத்துக்குப் போக முடியும். சரி, எதுக்காவ அழுகிறீங்க? அப்படியே அழுதாலும் - இந்த சமூக அமைப்புக்காக அழும். நாங்க ஒம்ம அடிக்க மாட்டோம் - அழாதேயும்!"
ஆண்டி குறுக்கிட்டான்:
"இவனுவ, அடிச்சா வலிக்குமேன்னுதான் அழுவாங்களே தவிர, மானம் போகுதேன்னு அழமாட்டாங்க. மானங்கெட்ட பயலுவ!"
"பொது பணத்த ஒருவன் அபகரிக்கும்போது ஒவ்வொரு பிரஜையும் - தன் சொந்தப் பணம் போறது மாதிரி துடிச்சா இந்த மாதிரி நடக்காது. அப்படி எவனும் துடிக்கவும் இல்ல. துடிக்கவும் மாட்டான். ஏன்னா பொது வாழ்க்கை வேறு. சொந்த வாழ்க்கை வேறு என்று இரண்டு நிலை இருக்கது வரைக்கும், ரெட்டை வேடமும், ரெண்டுங் கெட்டான் வேடமும் இருக்கத்தான் செய்யும். யோவ் மாசானம், இவருக்குக் காசு கொடுக்கதுக்காக கூட்டுறவுச் சங்கப் பணத்த வாங்கியிருக்கியரே நியாயமாய்யா!"
மாசானம் சமாளித்துக் கொண்டே பேசினார்.
"தப்புத்தான். ஆனால் ரெண்டு கை தட்டினால் தான் ஓசை கிடைக்கும்."
"எந்த ஓசையில சொல்றீரு..."
"இதை வெளிப்படையா சொல்லணுமா?"
"உதை வேண்டாமுன்னால் சொல்லும். பொதுப் பணத்த எடுக்கது அயோக்கியத்தனம் தெரியுமா..."
"வட்டிக்கு விடுறது?"
"என்னய்யா சொல்லுத?"
"கூட்டுறவுத் தலைவர் சும்மாத் தரல - வட்டிக்குத்தான் தந்தார்! ஐயேஞ்சு இருபத்தஞ்சு ரூபாய எடுத்துக்கிட்டுத்தான் தந்தாரு."
எல்லோரும் கூட்டுறவுத் தலைவரைப் பார்த்தார்கள். அவர் பல்லைக் கடித்துக் கொண்டே, "இவன் - பிச்சாண்டி பேர்ல போன வருஷத்துக்கு முந்தின வருஷம் ஒரு கறவ மாடு வாங்கினான்" என்றார்.
பிச்சாண்டி துள்ளினான்:
"ஒப்பன உதைக்கிற பயல! என் மாட்டத் தாறியா... இல்ல ஒன் கழுத்துல கயிறு கட்டி என் வீட்டுத் தொழுவுல கட்டட்டுமா?"
மாசானம் அறுக்கப் போகிற ஆடு மாதிரி விழித்தார். அதே அந்த ஆடு கூட்டுறவுத் தலைவரை, ஓநாய் மாதிரியும் பார்த்தது. முத்துக்கருப்பன் கத்தினான். கையை ஓங்கினான். "என்னை போலீஸ் பிடிச்சதா புரளிய கிளப்பி விட்டிருக்கியே. நீ உருப்படுவியா...?"
சின்னான் மீண்டும் அமைதியாகப் பேசினான்: "அடிபட வேண்டியது மாசானம் அல்ல; அவனைப் போன்றவர்களை உருவாக்கும் சமூக அமைப்பே!"
"சரி, சரி. நீரு - அந்த மாட்டை பிச்சாண்டிகிட்ட கொடுத்துடும்."
சின்னானின் அமைதியான வார்த்தைகளுக்குப் பின்னால் 'தர்ம அடி', 'ரெஸ்ட்' எடுத்துக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்ட மாசானம், விடுவிடென்று நடந்தார். கூட்டம் அவர் பின்னால் நடந்தது. ஓவர்ஸியர் மட்டும் அங்கேயே நின்றார். கோபால் கையிலுள்ள 'எம்' புக்கை 'எம் புக்கு' என்று சொல்ல முடியாமல், நின்ற இடத்திலேயே நின்றபோது, கூட்டம் அவரைக் கண்டுங்காணாமல் நகர்ந்தது.
மாசானம் தொழுவில் கட்டியிருந்த, கறவை மாட்டை அவிழ்த்து பிச்சாண்டியிடம் நீட்ட, அவன் "என் தொழுவுல கட்டுவே" என்று சொல்ல, அவன் மனைவி, இடையில் ஏதாவது நடந்து, வலிய வந்த மாடு போய்விடக்கூடாது என்ற பயத்தில், "சும்மா கிடயுமே - ஒரு மனுஷன ஒரேயடியாய்யா அவமானப்படுத்துறது" என்று சொல்லிக் கொண்டே மாட்டை வாங்கிக் கொண்டாள்.
"இவன் என்னை தென்னை மரத்துல கட்டி வச்சத மறந்துட்டியாடி?"
"இவன் ஒரு பொட்டத் தென்னை. இப்பதான் நல்லா 'அனுபவிக்கான்' - கட்டையில போறவன விட்டுத் தொலையும்."
பிச்சாண்டி 'விட்டுத் தொலைக்கவில்லை' - இடும்பன்சாமியையும், இன்னும் இரண்டு பேர்களையும் கூட்டிக் கொண்டு, மாசானம் வீட்டுக்குள் போய், பத்து நெல் மூட்டைகளை முதுகில் வைத்துத் தூக்கி, கூட்டத்தின் மத்தியில் போட்டான்.
ஆளுக்கொருவராய் நெல் மூட்டைகளைத் தூக்கி அருகே இருந்த இடும்பன்சாமியின் வீட்டில் போட்டுவிட்டு சின்னத்துரை வீட்டைப் பார்த்துப் போனார்கள். அந்த வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரியான கண்ணாடி ஆசிரியை சிலுவைக் குறியைத் தூக்கி, ஜீசஸுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே, கூட்டத்தில் சேர்ந்தாள். கூட்டம் மானேஜர் ஜம்புலிங்கப் பயலை, கவனிக்காமலா இருக்கும்!
சின்னத்துரையின் வீட்டு முன்னால் கூட்டம் ஒட்டு மொத்தமாக நின்றபோது, உள்ளே குளித்துக் கொண்டிருந்த 'பிணவியாபாரி' ஈரத்துண்டை கட்டிக்கொண்டே வந்தார். சின்னான் ஆவேசமாகப் பேசினான்:
"ஒம்மக்கிட்ட பேசிக்கிட்டு நிற்க நேரமில்ல. நயினாரம்மாவுக்கும், மூக்கையா பெண்டாட்டிக்கும், மொத்தம் ஆறாயிரம் ரூபாய் வேணும். கொண்டு வந்து தாறீரா- நாங்களே எடுத்துக்கட்டுமா? கொஞ்சம் பொறூங்கப்பா... அவரு விவேகி - வெட்டு விழுமுன்னு தெரியும்."
சின்னத்துரை பிரமை பிடித்து நின்றபோது, "போய் எடுத்துக்கிட்டு வாரும்வே" என்று சொல்லிக்கொண்டே, முனியாண்டி அவரைத் தள்ளினான். "அவரு செஞ்சதெல்லாம் தப்புத்தான்... நான் தாரேன்."
உள்ளே இருந்து சத்தங் கொடுத்த அவர் மனைவி பணத்துடன் வந்தாள். சின்னான் வாங்கிக் கொண்டே, சின்னத்துரையை அதட்டினான்.
"ஒம்மோட செல்ல மகன் குமார் எங்கவே... அந்த மாபெரும் தலைவரை நான் இப்போ பார்க்கணும்."
தாய்க்காரி கெஞ்சினாள். சின்னத்துரை பிரமையில் இருந்து விடுபடவில்லை.
"சின்னான், ஒன்கிட்ட பிச்சை கேக்கேன். புத்தி கெட்ட பய - என் முகத்துக்காவ..."
"கவலப்படாதிங்கம்மா... நாங்க எங்களக் காக்குறக் கூட்டமே தவிர, தாக்குற கூட்டமில்ல. என் அம்மாவ மாதிரித்தான், நீங்களும் அவனைப் பெத்து வளர்த்திருப்பீங்கன்னு தெரியும்."
சின்னத்துரையின் மனைவி கையெடுத்துக் கும்பிட்ட போது கூட்டம் நகர்ந்தது.
மாசானமும், கூட்டுறவுத் தலைவரும் கூட்டத்தின் முன்னால் வருவதைப் பார்த்துப் புரிந்துகொண்ட பண்ணையார்கள், ஜனசக்தியின் வெப்பம் தாங்க மாட்டாதவர்களாய் தத்தம் வீடுகளில் உள்ள 'பினாமி' விவசாயக் கருவிகளை எடுத்துக் கொண்டு தயாராக இருந்தார்கள். கூட்டுறவுத் தலைவர் ஒவ்வொருவர் வீட்டு முன்னாலும் நின்று, "இவன் வீட்ல குப்பனோட மாடு இருக்கு. ராமதுரையோட குதிரு இருக்கு" என்று படிப்பதும், உடனே சம்பந்தப்பட்டவர்கள், குறிப்பிட்ட பொருள்களையும் மாடுகளையும், தானாகக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இப்படி ஒவ்வொரு வீட்டு முன்னால் தலைவர் படிப்பதைக் கேட்கவும், பண்ணையார்கள் கொண்டு வந்து போடுவதைப் பார்க்கவும், கூட்டத்திற்கு ரம்மியமாக இருந்தது. சிலர் அவசரத்தில் தங்கள் நிஜப் பெயருக்கு வாங்கிய போஸ் கலப்பைகளைக்கூட கொண்டு வந்து போட்டார்கள். கூட்டத்திலிருந்தவர்களில் பலர், தாங்கள் 'ஒருநாள் ராஜாவாக' இருந்து ஆட்சி செய்த கறவை மாடுகளையும், உழவு மாடுகளையும் தாங்களே அவிழ்த்துக் கொண்டார்கள்.
அவ்வளவு பெரிய கூட்டமும், சின்ன சத்தங்கூட இல்லாமல், அசுரத்தனமான அமைதியோடும், கறவை மாடுகளுடனும், விவசாயக் கருவிகளுடனும், பழைய பஞ்சாயத்து பரமசிவத்தின் வீட்டின் முன்னால் வந்து நின்றது. பழைய காலத்துக் கட்டிடம், உறுதியாக இருந்தது. நாலைந்து படிகள் சாய்வாக ஏறித்தான் கதவுப் பக்கம் போகலாம். கூட்டுறவுச் சங்கத் தலைவர் மட்டும் படியேறி, வாசல் கதவைத் தட்டிக்கொண்டே "பரமசிவம் நம்ம காலம் முடிஞ்சிட்டு. இன்னும் நாம இதைப் புரியாட்டால் - நம்ம தலையில் நாமளே மண்ணை வாரிப் போட்டதா அர்த்தம். கதவைத் திற. உன் உயிருக்கு நான் உத்தரவாதம்" என்றார். கதவு திறக்கப்பட்டது. பல தலைகள் தெளிவில்லாமல் தெரிந்தன. முந்திய இரவு, ஏதோ 'அரிசிக் கூட்டம்' போடுவதற்காகக் கூடியிருந்த குமார், மாணிக்கம், மல்லிகா, சரோஜா அம்மையார் ஆகியோர் தலைகளும், இதர ஆசாமிகளின் தலைகளும், தூரத்துப் பார்வைக்குச் சின்ன சின்ன தேங்காய்கள் மாதிரி தெரிந்தன.
இதுவரை பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்த ஆண்டியப்பன் இப்போது கர்ஜித்தான். ஆறு மாதமாக அடக்கி வைத்திருந்த கோபம், கரையைப் பிய்த்தெறியும் காட்டு வெள்ளம் போல் சுழி போட்டது.
"ஏய் மானங்கெட்ட குமார்! அடுத்துக் கெடுக்கிற மாணிக்கம்! - நீங்க ஒரு அப்பனுக்குப் பிறந்தவங்கன்னா கீழே இறங்குங்கல! இப்போ எந்த போலீஸ் வருதுன்னு பார்ப்போம்! திருநெல்வேலியில, என் கையக் கால கட்டிக் கொண்டு போவ வச்ச எச்சிக்கல பயலுவளா - ஒங்க கையக் கால இப்போ கட்டிப் பாக்கட்டுமாடா! கீழ இறங்குங்கல! பரமசிவம் இன்னுமா என் மாட்டை தராம நிக்கிற?"
சின்னான் ஆண்டியின் தோளை அழுந்தப் பற்றிக் கொண்டே, "பழைய தலைவரே, நேரத்தக் கடத்துனால் மானம் மரியாதி எல்லாம் கடந்து போயிரும். ஆண்டி கேக்குறது காதுல விழலியா" என்றான்.
கூட்டுறவுத் தலைவர், "பரமசிவம், சீக்கிரமா வாப்பா. ஒன் உடம்புல ஒரு தூசிகூட படாது" என்றபோது - காத்தாயி, "ஏன்னா - நாங்க தூசிய அடிக்கமாட்டோம்" என்று தலைவர் கோடிடாத இடத்தைப் பூர்த்தி செய்தாள்.
ஏதோ ஒரு சக்திக்கு உட்பட்டவர்போல், பரமசிவம் கீழே இறங்குவதற்கு காலைத் தூக்கிய போது, அவரது மனைவி, "பே மனுஷன், பேத்தனமா செய்தத, காலால் உதறிப் போட்டுடுங்க! எனக்குத் தாலி பிச்சை கொடுங்க! தாலிப் பிச்சை கொடுங்க" என்று அழுதபோது, ஊர் மக்களை எப்போது அகம்பாவமாகப் பேசும், அவளையும் கூட்டம் அனுதாபத்தோடு பார்த்தது. உடனே சின்னானும், "நீங்க நினைக்கது மாதுரி நாங்க நடக்க மாட்டோம் - அழாதிங்கம்மா" என்றபோது, பரமசிவம் மடமடவென்று கீழே இறங்கினர். மீசைக்காரன் மடமடவென்று மேலே ஏறினான்.
மீசைக்காரன், தழைமிதிக் கருவி, நெற்குதிர்கள் போன்ற பொருட்களை மேலே இருந்து கொண்டுவந்து போட்டபோது - பரமசிவம், ஆண்டியப்பனின் மாட்டை, கன்றோடு கொண்டுவந்து, அவற்றின் கயிறுகளை அவனிடம் நீட்டினார். அந்த ஜெர்ஸி கலப்பினப் பசு, ஆண்டியப்பனை, தன் கன்றுக்குட்டி மாதிரி நினைத்து, அவன் கையை நாக்கால் தடவியது. கன்றுக்குட்டியோ அவனை முதலில் பார்த்து சிறிது மிரண்டுவிட்டு, பின்னர் அவனைப் பார்த்து 'ம்மா... ம்மா...' என்றது.
தங்கம்மாவுக்கும் ஆண்டியப்பனின் ஆவேசம் தொத்திக் கொண்டது. கதவருகில் நின்ற மல்லிகாவைப் பார்த்துக் கொண்டே கனல் கக்க முழங்கினாள்:
"அடியே மல்லிகா! அப்போ சொன்னது ஞாபகம் இருக்காடி. என் அத்த மகனை என்ன பேச்சுப் பேசின? என் அய்யாவ எப்டிக் கொன்னுட்ட? பழிகார முண்ட... மரியாதியா ஒன் மாமன்கிட்ட இருக்கிற மாட்டுக் கயிற்ற, என்கிட்ட வாங்கிக் கொடுடி... கொடுக்கியா இல்ல, மாட்டு வாலுல ஒன் கொண்டய கட்டணுமா? இப்பவாவது புரிஞ்சிக்கடி. சின்னான் அண்ணன் சொன்னது மாதுரி ஏழைங்க நெருப்புக் குச்சிடி! உரசிட்டா விடாதுடி. சரி மாட்ட வாங்கி என்கிட்ட கொடுடி. நீ இங்க வாரியா - இல்ல நான் அங்க வரட்டுமா? அடியே - மாசானம் வைப்பாட்டி சரோஜா! நான் கள்ளப்பிள்ள பெத்ததாச் சொன்னே - ஒன் கள்ள மவள, இங்க வந்து மாட்ட கொடுக்கச் சொல்லுடி! இல்ல..."
குமாரும், மாணிக்கமும் பேயறைந்தவர்கள் போல, பேயை அறைந்தவள் போல் நின்ற தங்கம்மாவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, பிறகு தலைகளை அதைரியமாகக் கீழே கொண்டு போனபோது, காத்தாயி, "மல்லி, வா ராசாத்தி! வந்து, மாட்ட நீ கொன்ன கிழவர் மகள் கிட்ட கொடு புண்ணியவதி" என்றாள். மல்லிகா தயங்கித் தயங்கி, ஒரு படியில் இறங்கி, இன்னொரு படியில் காலை இறக்கப் போனபோது, தங்கம்மா "அங்கேயே நில்லுடி - சவத்து முண்ட! ஒன்கிட்ட ஜெயிச்சு எனக்கு என்னடி ஆக வேண்டியதிருக்கு" என்றாள் அமைதியாக.
மல்லிகா, 'எம் புக்' ஓவர்ஸியர் மாதிரி, நின்ற இடத்திலேயே நின்றபோது, கூட்டத்தை ஒரு குரல் உலுக்கியது. பல சரக்கு சீமைச்சாமி, இரண்டு மூட்டைகளைக் கொண்டுவந்து போட்டுவிட்டு, கூட்டத்தின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டார். அந்த மூட்டைகளில் 'ஸிவில் ஸ்ப்ளை கார்ப்பரேஷன்' என்ற முத்திரை இருந்தது. சீமைச்சாமி கீழே இருந்து எழாமலே கெஞ்சினார்:
"தர்மப் பிரபுக்களே! என்னை மன்னிச்சேன்னு சொல்லணும். இந்தப் பரமசிவம் இந்த அரிசி மூட்டையுவள, என் கடையில வச்சிருக்கச் சொன்னாரு. இது சர்க்காரோட அரிசி மூட்டைன்னு தெரிஞ்சும் தெரியாம வாங்கிட்டேன்!"
சின்னான் கோபத்தோடு பேசினான்: "புட் பார் ஒர்க். அதாவது ஏழைபாளைகளுக்கு வேலைக்கேத்த உணவாய் கொடுக்கதுக்காக, அரசாங்கம் நம்பிக் கொடுத்த அரிசி மூட்டைங்க... அட பாவி! முத்திரையைக் கலைக்காமக் கூட அவசரத்துல வித்துருக்கியே. நீயில்லாம் பஞ்சாயத்துத் தலைவரா? பலசரக்கு எசமான், இது நியாயமா அய்யா... ஆயிரம் மக்களின் நாயகமே! பரமசிவம் மவராசா... பதில் சொல்லும்..."
பரமசிவம் தலையைத் தாழ்த்திக் கொண்டபோது, பலசரக்கு, "நான் தான் கொடுத்தேன். சீமைச்சாமி ஒரு பாவமும் அறியாதவன்னு சொல்லும்வே" என்று தாழ்த்திய தலை மீண்டும் தாழும்படி அதட்டியது.
கூட்டம் புறப்பட்டது. வழிநெடுகிலும் பண்ணையார்கள் எடுத்து வைத்த விவசாயக் கருவிகளையும், மாடுகளையும், கூட்டுறவுத் தலைவர் உதவியோடு, சம்பந்தப்பட்டவர்கள் வாங்கிக் கொண்டார்கள். மானேஜர் ஜம்புலிங்கம் வீட்டிற்கருகே வந்தபோது, இடும்பன்சாமி, "வாங்க உள்ள போகலாம்" என்று குரல் கொடுத்துவிட்டு, 'ஆம் ஆம்' என்ற கோரஸை எதிர்பார்த்தபோது, சின்னான், "வேண்டாம் - அதுக்கு வேற வழியிருக்கு" என்று சொல்லித் தடுத்தான். 'மூதேவி' என்று தட்டாசாரி கொடுத்த பட்டத்தைச் சுமந்த ஆசாரிப் பையன், "எங்க மூதேவி வீட்ட சோதனை போட்டால் நிறையத் தங்கம் கிடைக்கும். அது இருக்கிற இடமும் எனக்குத் தெரியும். என்ன சொல்றிய" என்றபோது சின்னான் அவனையும் தடுத்துவிட்டு கம்பீரமாகப் பேசினான்:
"இனிமேல் தான் நமக்கு சோதனையே இருக்கு. இப்போ பயப்பட்டு ஒதுங்கி நிற்கிற பரமசிவம், குமார் வகையறாக்கள் ஊருக்கு போலீஸ் கொண்டு வரலாம். பரவாயில்ல. பயப்படவும் வேண்டாம். நாமே ஒரு பள்ளிக்கூடம் கட்டுவோம். நம்ம பிள்ளிங்கள அதுல சேர்ப்போம். இடும்பன்சாமியும் சஸ்பெண்டான மீதி இரண்டு பேரும் பள்ளிக்கூடத்தைக் கவனிப்பாங்க."
கண்ணாடி ஆசிரியை கண்களால் கெஞ்சிக் கொண்டு பேசினார்:
"சின்னான், நான் ஒனக்கு ஒரு காலத்துல பாடம் சொன்ன ஆசிரியை என்கிறத மறந்துடாத சின்னான்... என்னையும் சேர்த்துக்க சின்னான். சம்பளங்கூட வேண்டாம் சின்னான். கடைசிக் காலத்துலயாவது மரியாதையாய் வேலை பார்க்கதுக்கு ஒரு ஆசை. அதை நிராசையாக்கிடாதடா கண்ணு."
சின்னான் நெகிழ்ந்து பேசினான்:
"என்னம்மா நீங்க... 'டேய் மடையா நான் தாண்டா பள்ளிக்கூடமுன்னு' கேட்காம இப்படி கெஞ்சுறீங்களே! ஆண்டி, நம்ம டீச்சர் நம்மள அப்போ அடிச்சது மாதுரி அடிச்சிக் கேளாம பேசுறதப் பாரு..."
ஆண்டியப்பன் ஆசிரியையின் கைகளை எடுத்து கண்களில் ஒத்திக் கொண்டான்.
கண்ணாடி ஆசிரியை சிலுவைக் குறியை எடுத்து அங்குமிங்கும் ஆட்டிக் கொண்டார். 'இந்த மக்குபயல் ஜம்புலிங்கம், என்ன கேள்வி கேட்டான். இந்த மாதுரி ஒரு 'இது' இருபது வருஷத்துக்கு முன்னால வந்திருந்தால் நாயி கிட்டயும் பேயி கிட்டயும் பேச்சு வாங்க வேண்டியது இருந்திருக்காதே!'
சின்னான் கூட்டத்தைப் பார்த்து பலத்த குரலில் பேசினான்:
ஒரு கூட்டுறவுச் சங்கத்தையும் அமைப்போம். நாம் அமைக்கிற இந்தச் சங்கத்துக்கும், பள்ளிக்கூடத்திற்கும், அரசாங்கத்திடம் அங்கீகாரம் கேட்போம். தந்தால் தரட்டும். தராவிட்டால் போகட்டும். இனிமேல் நாம் ஒன்றாய் வாழ்வோம். இல்லன்னா ஒன்றாய் சாவோம். நாம் ஒவ்வொருவரும் இந்தக் கூட்டத்துக்குக் கண்கள், காதுகள் என்றும், நம் ஒவ்வொருவருக்கும், இந்தக் கூட்டம், கண்கள், காதுகள் என்றும் நினைக்கும் போது எவ்வளவு ஆனந்தமாய் இருக்கு தெரியுமா? இந்த ஆனந்தத்திற்கு ஈடு ஏது? இனிமேல் நமக்குள் எந்தவித பேதமும் கிடையாது. கோபால் ஒரு எஞ்ஜினியர். இவனோட பொறுப்பில், ஒரு சிறு தொழிலை துவக்குவோம். நாம் ஐம்பது பேராய் நுழைந்து, இப்போ முந்நூறு பேராய் ஆயிட்டோம். மனதுக்குள்ளேயே குமைந்து கொண்டிருக்கும் ஏழைகள், சந்தர்ப்பம் கிடைத்தால் புரட்சிப் படையோடு சேர்வார்கள். பெரிய மனிதர்கள் விடுக்கும் போராட்டத்தை ஆண்டியை மாதுரி ஒரு சில ஏழைகள் வலுவாகப் பிடித்துக் கொண்டால் இதர ஏழைகள் நிச்சயம் நம் பக்கமே வருவார்கள் என்பதை நிரூபிச்சிட்டோம். அந்தக் காலத்து மன்னர்கள், எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு அறிகுறியாக, அந்த நாட்டுப் பசுமாடுகளைக் கைப்பற்றிக் கொண்டு வருவார்களாம். எதிரி - மாடுகளை மீட்டிவிட்டால், போர் துவங்கும். இது போல் நம் ஆண்டியோட மாட்டை பறித்து, பண்ணையார்கள் போர்ப்பிரகடனம் செய்தார்கள். நாம் அந்த மாட்டை மீட்டிவிட்டோம். இனிமேல்தான் இந்தப் போராட்டம் போராகப் போகிறது. மக்கள் சக்தியின் முன்னால், எந்த சக்தியும் தூளாகும். சரி. மாடுகளைக் கட்டிவிட்டு சீக்கிரமாய் வாருங்கள். பினாமி நிலத்தில் போய் ஏர் கட்டுவோம்."
தங்கம்மாவும், இதர பெண்களும், கறவை மாடுகளைப் பற்றிக் கொண்டு, தத்தம் இருப்பிடம் வந்தார்கள். தங்கம்மா, பசுமாட்டையும் அதன் கன்றையும் ஆண்டியின் வீட்டில் கட்டினாள். அவள் அம்மாக்காரி அதற்கு வைக்கோல் கொண்டு வந்து போட்டுவிட்டு, கூட்டத்தை நோக்கி ஓடினாள். தங்கம்மாவும் அதோ அந்தப் புளிய மரத்தில் இருந்து வயக்காட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் புதிய ஜாதியுடன் சேரத் துடித்தவளாய் ஓடுகிறாள். அந்த ஓட்டத்திலும், அத்தை மகன் ஆண்டியின் கம்பீரமான குரலில் கண்டுண்டவள் போல், சிறிது நின்று ரசித்துவிட்டு, மீண்டும் பாய்ந்து நடக்கிறாள்.
இதுவரை தெரிந்தும் தெரியாமலும் இருந்த சங்கதிகள், இப்போது அசாதாரணமாய்த் தோன்ற, அந்தத் தோற்றத்தில் உயர்ந்து கம்பீரப்பட்டவர்களாய், நீண்டதோர் போராட்டத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டவர்களாய், புதிய பாட்டாளி ஜாதி, ஆண்டியப்பன் - சின்னான் வழிநடத்த, நிலம் நோக்காமல், தொலைவில் தெரிந்த பினாமி நிலக்காட்டை நோக்கி, நிமிர்ந்து சென்று கொண்டிருந்தது.
"புதிய ஜாதி பிறக்குது" என்ற பாடல், ஆன்மிக ராகத்துடன் ஒலிக்க, அந்த ஒலியே ஆகாயம் பூமியெங்கும் பேரொலியாய் வியாபிக்க, ஒருவரே பலராய் ஆனதுபோல், பலரே ஒருவராய் ஆனதுபோல், வெல்வதும் வேண்டாம், வெல்லப்படுவதும் வேண்டாம் என்ற இலக்கை நோக்கி, கோழையாய் வாழ மறுத்த அந்த ஏழைக் கூட்டம் போய்க் கொண்டிருந்தது.
(முற்றும்)
This file was last updated on 26 August 2018.
Feel free to send the corrections to the Webmaster.