நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
ஆழ்வார் பாசுரங்கள் - மூலம் - பாகம் 3
(மூன்றாம் ஆயிரம் பாசுரங்கள்)
Nālāyira Divya Prabhandam
Paśurams by Seven Azhvārs,
Part 3 (pāsurams 2082-2970)
Acknowledgements:
Our sincere thanks go to Profs. Kausalya Hart and George Hart for providing a
soft copy of this work and for the permission to publish this work as part of
Project Madurai e-text collections. Our thanks also go to Tamil Virtual Academy
for providing a soft copy of the Tamil version, so that this can accompany
the English Translation.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
ஆழ்வார் பாசுரங்கள் மூன்றாம் ஆயிரம் (2082 - 2970)
உள்ளடக்கம்
13. பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி (2082-2181)
14. பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி (2182-2281)
15. பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி (2282-2381)
16. திருமழிசையாழ்வார் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி (2382-2477)
17. நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம் (2478-2577)
18. நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியம் (2578-2584)
19. நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி (2585-2671)
20. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை (2672)
21. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல் (2673-2712)
22. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடல் (2713-2790)
------------------
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - மூன்றாம் ஆயிரம்
13. பொய்கை ஆழ்வார் - முதல் திருவந்தாதி (2082-2181)
2082 வையம் தகளியா வார் கடலே நெய் ஆக
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய
சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை-
இடர்-ஆழி நீங்குகவே என்று (1)
2083 என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?-
ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது-
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது-நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் (2)
2084 பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின்
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்-
நீ அளவு கண்ட நெறி (3)
2085 நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்-
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலம் அமர் கண்டத்து அரன் (4)
2086 அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று (5)
2087 ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள்? அன்று
கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்-
திருவரங்கம் மேயான் திசை (6)
2088 திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து
இசையும் கருமங்கள் எல்லாம்-அசைவு இல் சீர்க்
கண்ணன் நெடு மால் கடல் கடைந்த கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு (7)
2089 மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே!-
போர் ஆழிக் கையால் பொருது? (8)
2090 பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று
உன்ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே-விரி தோட்ட
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க
மா வடிவின் நீ அளந்த மண் (9)
2091 மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ்
உலகு அளவும் உண்டோ உன் வாய்? (10)
2092 வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்-
காணா கண் கேளா செவி (11)
2093 செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே-
ஏனமாய் நின்றாற்கு இயல்வு (12)
2094 இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் (13)
2095 அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம் பெருமான் என்று சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த
மூர்த்தி உருவே முதல் (14)
2096 முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும்
முதல் ஆவான் மூரி நீர் வண்ணன் முதல் ஆய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது (15)
2097 பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி
அழுதேன் அரவு-அணைமேல் கண்டு தொழுதேன்-
கடல் ஓதம் கால் அலைப்பக் கண்வளரும் செங்கண்
அடல் ஓத வண்ணர் அடி (16)
2098 அடியும் படி கடப்ப தோள் திசைமேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால்
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறைப் புள்
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று (17)
2099 நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய்
தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்-
மருது இடை போய் மண் அளந்த மால் (18)
2100 மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு
ஆலின் இலைத் துயின்ற ஆழியான் கோலக்
கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப்பெற்று? (19)
2101 பெற்றார் தளை கழலப் பேர்ந்து ஓர் குறள் உருவாய்
செற்றார் படி கடந்த செங்கண் மால் நல் தா-
மரைமலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று (20)
2102 நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூவடியால்
சென்று திசை அளந்த செங்கண் மாற்கு என்றும்
படை ஆழி புள் ஊர்தி பாம்பு-அணையான் பாதம்
அடை ஆழி நெஞ்சே அறி (21)
2103 அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்-
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும்
காம்பு ஏய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு (22)
2104 தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த-
பூங்கோதையாள் வெருவ பொன் பெயரோன் மார்பு இடந்த
வீங்கு ஓத வண்ணர் விரல் (23)
2105 விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று குரல் ஓவாது
ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே?
ஓங்கு ஓத வண்ணா உரை (24)
2106 உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும்
வரைமேல் மரகதமே போலத் திரைமேல்
கிடந்தானை கீண்டானை கேழலாய்ப் பூமி
இடந்தானை ஏத்தி எழும் (25)
2107 எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே - வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை (26)
2108 மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானைப்
போர்க் கோடு ஒசித்தனவும் பூங் குருந்தம் சாய்த்தனவும்-
கார்க் கோடு பற்றியான் கை (27)
2109 கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து
ஐய மலர்மகள் நின் ஆகத்தாள் செய்ய
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின் ஆகத்து இறை (28)
2110 இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி (29)
2111 தெளிது ஆக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்து
எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆகத்
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய் நாடிக்கொள்ளும்-புரிந்து (30)
2112 புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி
அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை? (31)
2113 இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத்து அணைப்பார் அணைவரே-ஆயிர வாய்
நாகத்து அணையான் நகர் (32)
2114 நகரம் அருள்புரிந்து நான்முகற்குப் பூமேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
அந்தியால் ஆம் பயன் அங்கு என்? (33)
2115 என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆல் இலையில்
முன் ஒருவன் ஆய முகில் வண்ணா நின் உருகிப்
பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர்க் கண்
ஆய்த் தாய் முலை தந்த ஆறு? (34)
2116 ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி அடைதற்கு அன்றே-ஈர்-ஐந்து
முடியான் படைத்த முரண்? (35)
2117 முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம்
தரணி தனது ஆகத்தானே இரணியனைப்
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழிக் கையால் நீ
மண் இரந்து கொண்ட வகை? (36)
2118 வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் (37)
2119 ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை
பேர எறிந்த பெரு மணியைக் கார் உடைய
மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர்
எம் என்னும் மாலது இடம் (38)
2120 இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும்
நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே-
பேர் ஓத வண்ணர் பெரிது (39)
2122 பெரு வில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர்-
கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று (40)
2122 குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக என் நெஞ்சே என்றும்
புறன் உரையே ஆயினும் பொன் ஆழிக் கையான்
திறன் உரையே சிந்தித்திரு (41)
2123 திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்-திருமகள்மேல்
பால் ஓதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மால் ஓத வண்ணர் மனம்? (42)
2124 மன மாசு தீரும் அரு வினையும் சாரா
தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய
பூந் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தம் தொழாநிற்பார் தமர் (43)
2125 தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே
தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் தமர் உகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ் வண்ணம்-ஆழியான் ஆம் (44)
2126 ஆமே அமரர்க்கு அறிய? அது நிற்க
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய
மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை
பாதம்-அத்தால் எண்ணினான் பண்பு (45)
2127 பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலி ஏற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்-அமரர்-தம்
போகத்தால் பூமி ஆள்வார் (46)
2128 வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒருநாள
்கைந் நாகம் காத்தான் கழல் (47)
2129 கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கைமேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவு ஆழி நெஞ்சே மகிழ் (48)
2130 மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது (49)
2131 அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது (50)
2132 எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம்
தெளிய தெளிந்தொழியும் செவ்வே களியில்
பொருந்தாதவனைப் பொரல் உற்று அரியாய்
இருந்தான் திருநாமம் எண் (51)
2133 எண்மர் பதினொருவர் ஈர்-அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
திருமாலைக் கைதொழுவர் சென்று (52)
2134 சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம்
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும்
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும்
அணை ஆம் திருமாற்கு அரவு (53)
2135 அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய்
குரவை குடம் முலை மல் குன்றம் கரவு இன்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் (54)
2136 அவன் தமர் எவ் வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு அணைமேல்
பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் (55)
2137 பேரே வரப் பிதற்றல் அல்லால் என் பெம்மானை
ஆரே அறிவார்? அது நிற்க நேரே
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
அடிக்கமலம் தன்னை அயன் (56)
2138 அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற
நல் மாலை கொண்டு நமோ நாரணா என்னும்
சொல் மாலை கற்றேன் தொழுது (57)
2139 தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான்
அந்தரம் ஒன்று இல்லை அடை (58)
2140 அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள்
தன் வில் அங்கை வைத்தான் சரண் (59)
2141 சரணா மறை பயந்த தாமரையானோடு
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த உலகு (60)
2142 உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங் கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியில் ஆய புணர்ப்பு (61)
2143 புணர் மருதின் ஊடு போய் பூங் குருந்தம் சாய்த்து
மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ
ஏழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும்
சூழ் அரவப் பொங்கு அணையான் தோள் (62)
2144 தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும்
கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம் (63)
2145 நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வரும் ஆறு என் என்மேல் வினை? (64)
2146 வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் நினைதற்கு
அரியானை சேயானை ஆயிரம் பேர்ச் செங்கண்
கரியானைக் கைதொழுதக்கால் (65)
2147 காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக்கண்
ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்
பேர் ஆழி கொண்டான் பெயர் (66)
2148 பெயரும் கருங் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு (67)
2149 உணர்வார் ஆர் உன்பெருமை ஊழிதோறு ஊழி?
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை? உணர்வார் ஆர்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால்? (68)
2150 பாலன் தனது உருவாய் ஏழ் உலகு உண்டு ஆல் இலையின்
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று
வேலை நீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு (69)
2151 சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை நல் இதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று (70)
2152 நன்று பிணி மூப்புக் கையகற்றி நான்கு ஊழி
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்
விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடல் ஆழி கொண்டான்மாட்டு அன்பு (71)
2153 அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன்
பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூண் ஆரம் பூண்டான் புகழ் (72)
2154 புகழ்வாய் பழிப்பாய் நீ பூந் துழாயானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே! திகழ் நீர்க்
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் (73)
2155 ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்று ஒருபால்
மங்கையான் பூமகளான் வார் சடையான் நீள் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு (74)
2156 காப்பு உன்னை உன்னக் கழியும் அரு வினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை
வந்திப்பார் காண்பர் வழி (75)
2157 வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும்
வாராதவண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த
சீரான் திருவேங்கடம் (76)
2158 வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர் (77)
2159 இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய
பைந் நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்
கொய்ந் நாகப் பூம் போது கொண்டு (78)
2160 கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்?
மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரம் கை தோய அடுத்து? (79)
2161 அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை
வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள்? (80)
2162 ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை (81)
2163 படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூந்
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மான் மாய எய்தான் வரை (82)
2164 வரை குடை தோள் காம்பு ஆக ஆ நிரை காத்து ஆயர்
நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே? உரவு உடைய
நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர்மேல்
பேர் ஆழி கொண்ட பிரான் (83)
2165 பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்?
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து
எயிற்று அளவு போதா ஆறு என்கொலோ எந்தை
அடிக்கு அளவு போந்த படி? (84)
2166 படி கண்டு அறிதியே? பாம்பு அணையினான் புள்
கொடி கண்டு அறிதியே? கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ (85)
2167 நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா! வாசல்
கடை கழியா உள் புகா காமர் பூங் கோவல்
இடைகழியே பற்றி இனி (86)
2168 இனி யார் புகுவார் எழு நரக வாசல்?
முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு (87)
2169 நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு
என் ஆகில் என்னே எனக்கு? (88)
2170 எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம் பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால்? புனக் காயாம்
பூ மேனி காணப் பொதி அவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் (89)
2171 வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்? (90)
2172 ஊனக் குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும் ஏனத்து
உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான்? (91)
2173 வான் ஆகி தீ ஆய் மறி கடல் ஆய் மாருதம் ஆய்
தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு? (92)
2174 வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால்
பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழிக் கையா நின்
சேவடிமேல் ஈடு அழிய செற்று? (93)
2175 செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழுலகும்
மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை அல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா (94)
2176 நா வாயில் உண்டே நமோ நாரணா என்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக் கதிக்கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர்
தீக் கதிக்கண் செல்லும் திறம்? (95)
2177 திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இம்
மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய் கடைக்கண் பிடி (96)
2178 பிடி சேர் களிறு அளித்த பேராளா உன் தன்
அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடைமேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன்? (97)
2179 பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும்
நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன் (98)
2180 உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (99)
2181 ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர்ச் சேவடியும்
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே! ஓர் அடியில்
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை (100)
-------------
14. பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி (2182 – 2281)
2182 அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக
இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் (1)
2183 ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணி அமரர் கோமான் பரிசு (2)
2184 பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் புரிவார்கள்
தொல் அமரர் கேள்வித் துலங்கு ஒளி சேர் தோற்றத்து
நல் அமரர் கோமான் நகர் (3)
2185 நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லாப்
பைங் கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி (4)
2186 அடி மூன்றில் இவ் உலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அறிந்து? (5)
2187 அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன் தன்
பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே
கார் ஓத வண்ணன் கழல் (6)
2188 கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த
போர் ஆழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியை
ஓர் ஆழி நெஞ்சே! உகந்து (7)
2189 உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்றாள் ஆவி உகந்து
முலை உண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பால் ஆனமையால் அன்று (8)
2190 அன்று அதுகண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு அன்று
வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து? (9)
2191 பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து
காத்தனை பல் உயிரும் காவலனே ஏத்திய
நா உடையேன் பூ உடையேன் நின் உள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை (10)
2192 அவர் இவர் என்று இல்லை அரவு அணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார்? எண்ணில் பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து? (12)
2193 அவர் இவர் என்று இல்லை அரவு அணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார்? எண்ணில் பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து? (12)
2194 தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படர் எடுத்த பைங் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்று பண்டு? (13)
2195 பண்டிப் பெரும் பதியை ஆக்கி பழி பாவம்
கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே எண் திசையும்
பேர்த்த கரம் நான்கு உடையான் பேர் ஓதி பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து (14)
2196 திரிந்தது வெம் சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளிகொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு? (15)
2197 தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வனத் திடரை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று? (16)
2198 மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை ஒற்றைப்
பிறை இருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை இரந்து தான் முடித்தான் கொண்டு? (17)
2199 கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக்கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு (18)
2200 வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா குழக் கன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே!
பார் விளங்கச் செய்தாய் பழி (19)
2201 பழி பாவம் கையகற்றி பல் காலும் நின்னை
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ வழு இன்றி
நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும்
காரணங்கள் தாம் உடையார் தாம் (20)
2202 தாம் உளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது (21)
2203 அரியது எளிது ஆகும் ஆற்றலால் மாற்றிப்
பெருக முயல்வாரைப் பெற்றால் கரியது ஓர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து? (22)
2204 தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் தாழ்ந்த
விளங் கனிக்குக் கன்று எறிந்து வேற்று உருவாய் ஞாலம்
அளந்து அடிக்கீழ்க் கொண்ட அவன் (23)
2205 அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் அவன் கண்டாய்
காற்று தீ நீர் வான் கரு வரை மண் கார் ஓதச்
சீற்றத் தீ ஆவானும் சென்று (24)
2206 சென்றது இலங்கைமேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனை கூறுங்கால் நின்றதுவும்
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து (25)
2207 வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் உந்திப்
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி அமரர் வாழும் பதி (26)
2208 பதி அமைந்து நாடி பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம் (27)
2209 மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன் ஒரு நாள்
மா வாய் பிளந்த மகன் (28)
2210 மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை
அகன் ஆர உண்பன் என்று உண்டு மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென் இலங்கை
நீறு ஆக எய்து அழித்தாய் நீ (29)
2211 நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் நீ அன்று
கார் ஓதம் முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேர் ஓத மேனிப் பிரான் (30)
2212 பிரான் என்றும் நாளும் பெரும் புலரி என்றும்
குரா நல் செழும் போது கொண்டு வராகத்து
அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர்
மணி உருவம் காண்பார் மகிழ்ந்து (31)
2213 மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி மகிழ்ந்தது
அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும்
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து (32)
2214 துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம்
அணிந்தவன் பேர் உள்ளத்துப் பல்கால் பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை (33)
2215 வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே மிக வாய்ந்த
அன்பு ஆக்கி ஏத்தி அடிமைப்பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி (34)
2216 இனிது என்பர் காமம் அதனிலும் ஆற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று
காமம் நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது (35)
2217 சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு என் நெஞ்சே இரு (36)
2218 இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசைமுகனைத் தந்தாய் பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு (37)
2219 எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து (38)
2220 ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் ஓத்து அதனை
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு (39)
2221 சுருக்காக வாங்கி சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள் (40)
2222 பொருளால் அமர் உலகம் புக்கு இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணிவண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே! நினை (41)
2223 நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதார் அத் தோள் (42)
2224 தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான் தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு (43)
2225 சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன்பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு (44)
2226 உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று (45)
2227 பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள்
பயின்றதுவும் வேங்கடமே பல்நாள் பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் (46)
2228 மாலை அரி உருவன் பாதமலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து (47)
2229 உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே மணந்தாய் போய்
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ்
மா இரும் சோலை மலை (48)
2230 மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் முலை சூழ்ந்த
நஞ்சு உரத்துப் பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாது என்நெஞ்சே அழை (49)
2231 அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய
ஆயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும்
மாயவனே என்று மதித்து (50)
2232 மதிக் கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்
மதிக் கண்டாய் மற்று அவன் பேர் தன்னை மதிக் கண்டாய்
பேர் ஆழிநின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீர் ஆழி வண்ணன் நிறம் (51)
2233 நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி? (52)
2234 நெறியார் குழல் கற்றை முன்நின்று பின் தாழ்ந்து
அறியாது இளங் கிரி என்று எண்ணி பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு (53)
2235 வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ் இரண்டும்
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளங் கோயில் கைவிடேல் என்று (54)
2236 என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் வென்றி
அடல் ஆழி கொண்ட அறிவனே! இன்பக்
கடல் ஆழி நீ அருளிக் காண் (55)
2237 காணக் கழி காதல் கைமிக்குக் காட்டினால்
நாணப்படும் என்றால் நாணுமே? பேணி
கரு மாலைப் பொன் மேனி காட்டாமுன் காட்டும்
திருமாலை நங்கள் திரு (56)
2238 திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்பிடிமின் கண்டீர் உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந் தடக்கை எந்தை பேர்
நால் திசையும் கேட்டீரே? நாம் (57)
2239 நாம் பெற்ற நன்மையும் நா மங்கை நல் நெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து வேம்பின்
பொருள் நீர்மை ஆயினும் பொன் ஆழி பாடு என்று
அருள் நீர்மை தந்த அருள் (58)
2240 அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் அது ஒண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து (59)
2241 ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று (60)
2242 நின்றது ஓர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே! உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு (61)
2243 பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால்
மாறு என்று சொல்லி வணங்கினேன் ஏறின்
பெருத்தெருத்தம் கோடு ஒசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு (62)
2244 ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து
ஏறு ஏறி பட்ட இடுசாபம் பாறு ஏறி
உண்ட தலை வாய் நிறைய கோட்டு அம் கை ஒண் குருதி
கண்ட பொருள் சொல்லின் கதை (63)
2245 கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதயம் இருந்தவையே ஏத்தில் கதையின்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி (64)
2246 பணிந்தேன் திருமேனி பைங் கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது (65)
2247 இது கண்டாய் நல் நெஞ்சே இப் பிறவி ஆவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய்
நாரணன் பேர் ஓதி நரகத்து அருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண் (66)
2248 கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும்
மறு நோய் செறுவான் வலி (67)
2249 வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலி மிக்க வாள் வரை மத்து ஆக வலி மிக்க
வாள் நாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோள் நாகம் கொம்பு ஒசித்த கோ (68)
2250 கோ ஆகி மா நிலம் காத்து நம் கண் முகப்பே
மா ஏகிச் செல்கின்ற மன்னவரும் பூ மேவும்
செங் கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் (69)
2251 தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல எந்தைக்கு இடம் (70)
2252 இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி விடம் காலும்
தீ வாய் அரவு அணைமேல் தோன்றல் திசை அளப்பான்
பூ ஆர் அடி நிமிர்த்த போது (71)
2253 போது அறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது உள்ளம் போதும்
மணி வேங்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து (72)
2254 ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் ஏய்ந்த
பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்படத் துணிந்த யான் (73)
2255 யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம் பெருமான் யானே
இருந் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெருந் தமிழன் நல்லேன் பெருகு (74)
2256 பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை (75)
2257 வரைச் சந்தனக் குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் (76)
2258 உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்து அவன் பேர் ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம் (77)
2259 தவம் செய்து நான் முகனே பெற்றான் தரணி
நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் சிவந்த தன்
கை அனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின் (78)
2260 பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணைத் தோள்
முன் நின்று தான் இரப்பாள் மொய்ம் மலராள் சொல் நின்ற
தோள் நலத்தான் நேர் இல்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர் (79)
2261 நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் ஆர்ந்த
அடிக் கோலம் கண்டவர்க்கு என்கொலோ முன்னைப்
படிக் கோலம் கண்ட பகல்? (80)
2262 பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு (81)
2263 வடிக் கோல வாள் நெடுங் கண் மா மலராள் செவ்விப்
படிக் கோலம் கண்டு அகலாள் பல்நாள் அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்கொலோ?
கோலத்தால் இல்லை குறை (82)
2264 குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை ஆங்கு என உரைத்த மாலை இறையேனும்
ஈயும்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும்
மாயன்கண் சென்ற வரம் (83)
2265 வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருதி மூர்க்கத்தவனை நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அம் கண் மா ஞாலத்து அமுது (84)
2266 அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன
சொல் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நல் மாலை ஏத்தி நவின்று (85)
2267 நவின்று உரைத்த நாவலர்கள் நாள் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்? பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பு அரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன்கொல் இன்று? (86)
2268 இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று
கருக்கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருக்கோட்டி எந்தை திறம் (87)
2269 திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை
திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால் திறம்பாச்
செடி நரகை நீக்கி தாம் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசல் கதவு (88)
2270 கதவி கதம் சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவி போர் யானை ஒசித்து பதவியாய்ப்
பாணியால் நீர் ஏற்று பண்டு ஒருகால் மாவலியை
மாணியாய்க் கொண்டிலையே மண்? (89)
2271 மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானை கைதொழுத பின் (90)
2272 பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ பல் நூல்
அளந்தானை கார்க் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி (91)
2273 அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடிமேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது (92)
2274 கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்று அது கூடாமுன்னம் வடி சங்கம்
கொண்டானை கூந்தல் வாய் கீண்டானை கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று (93)
2275 உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பற்றிப்
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு (94)
2276 என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான் (95)
2277 அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின்மேல் துயில்வான் முத்தீ
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான் (96)
2278 எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடு மால் திருமார்பா பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பு அணைமேல் சேர்ந்தாய்
குடமூக்குக் கோயிலாக் கொண்டு (97)
2279 கொண்டு வளர்க்க குழவியாய்த் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க கொண்டு
குடம் ஆடி கோவலனாய் மேவி என் நெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை (98)
2280 இறை எம் பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய்ம் மலர்கள் தூவ அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறள் உருவாய்
மாவடிவின் மண் கொண்டான் மால் (99)
2281 மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே மேலால்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே! என் தன்
அளவு அன்றால் யானுடைய அன்பு (100)
-------------
15. பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி (2282 – 2381)
2282 திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று (1)
2283 இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டுகொண்டு என் மனம் (2)
2284 மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள்
தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச்
செருநர் உகச் செற்று உகந்த தேங்கு ஓத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து (3)
2285 மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங் கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி (4)
2286 அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்
படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம்
ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு (5)
2287 அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்?
அழகு அன்றே அண்டம் கடத்தல்? அழகு அன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல்? (6)
2288 கழல் தொழுதும் வா நெஞ்சே! கார்க் கடல் நீர் வேலைப்
பொழில் அளந்த புள் ஊர்திச் செல்வன் எழில் அளந்து அங்கு
எண்ணற்கு அரியானை எப் பொருட்கும் சேயானை
நண்ணற்கு அரியானை நாம் (7)
2289 நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய்
கண்ணனையே காண்க நம் கண் (8)
2290 கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில்
கரு மா முகில் வண்ணன் கார்க் கடல் நீர் வண்ணன்
திரு மா மணி வண்ணன் தேசு (9)
2291 தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசு இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத
நலம் புரிந்து சென்று அடையும் நன்கு (10)
2292 நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும்
பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன் சங்கு ஓதப்
பாற்கடலான் பாம்பு அணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூல் கடலான் நுண் அறிவினான் (11)
2293 அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும்
நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாள்தோறும்
பைங்கோத வண்ணன் படி (12)
2294 படி வட்டத் தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம்
ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே
மா காயமாய் நின்ற மாற்கு (13)
2295 மால்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு
நூல்பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து (14)
2296 பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து (15)
2297 வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை
ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக்கேணியான் சென்று (16)
2298 சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந் நாளும் நாள் ஆகும் என்றும்
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் (17)
2299 வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடி மண்
நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின்
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க அருள் (18)
2300 அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன்? (19)
2301 அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது
ந்தையராய் நிற்பார்க்கு முன்? (20)
2302 பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் தேசு உடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கு அரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு (21)
2303 வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடி ஆர் மலர் தூவி காணும் படியானை
செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு (22)
2304 விரும்பி விண் மண் அளந்த அஞ் சிறைய வண்டு ஆர்
சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும்
புனந் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே
மனம் துழாய் மாலாய் வரும் (23)
2305 வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீர் உருவும் ஆனான் பொருந்தும்
சுடர் ஆழி ஒன்று உடையான் சூழ் கழலே நாளும்
தொடர் ஆழி நெஞ்சே தொழுது (24)
2306 தொழுதால் பழுது உண்டே தூ நீர் உலகம்
முழுது உண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுது உண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து? (25)
2307 சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே
தாம் கடவார் தண் துழாயார் (26)
2308 ஆரே துயர் உழந்தார் துன்பு உற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங் கடலை நேரே
கடைந்தானை காரணனை நீர் அணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து? (27)
2309 அடைந்தது அரவு அணைமேல் ஐவர்க்கு ஆய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே! வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான் (28)
2310 பேய்ச்சி பால் உண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த
இருள் ஆர் திருமேனி இன் பவளச் செவ்வாய்த்
தெருளா மொழியானைச் சேர்ந்து (29)
2311 சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய்க் கண்ணி
இறைபாடி ஆய இவை (30)
2312 இவை அவன் கோயில் இரணியனது ஆகம்
அவைசெய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்து உள்ளான் நறவு ஏற்றான்
பாகத்தான் பாற்கடல் உளான் (31)
2313 பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூல் கடலும் நுண் நூல தாமரைமேல் பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் (32)
2314 பாலகனாய் ஆல் இலைமேல் பைய உலகு எல்லாம்
மேல் ஒருநாள் உண்டவனே! மெய்ம்மையே மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று (33)
2315 அன்று இவ் உலகம் அளந்த அசைவேகொல்?
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே! காண் (34)
2316 காண் காண் என விரும்பும் கண்கள் கதிர் இலகு
பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண்கண்
தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன்
கழல் பாடி யாம் தொழுதும் கை (35)
2317 கைய கனல் ஆழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் செய்ய
படை பரவை பாழி பனி நீர் உலகம்
அடி அளந்த மாயன் அவற்கு (36)
2318 அவற்கு அடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங் கடல் நீர் உள்ளான் துவர்க்கும்
பவள வாய்ப் பூமகளும் பல் மணிப் பூண் ஆரம்
திகழும் திருமார்பன் தான் (37)
2319 தானே தனக்கு உவமன் தன் உருவே எவ் உருவும்
தானே தவ உருவும் தாரகையும் தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இறை (38)
2320 இறை ஆய் நிலன் ஆகி எண் திசையும் தான் ஆய்
மறை ஆய் மறைப் பொருள் ஆய் வான் ஆய் பிறை வாய்ந்த
வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் (39)
2321 உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்க தான் அளந்த மன் (40)
2322 மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ (41)
2323 கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்து குழல் ஊதி
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் மேவி
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம்
தெரி உகிரால் கீண்டான் சினம் (42)
2324 சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனம் மேய பூமி அதனைத் தனமாக
பேர் அகலத்துள் ஒடுக்கும் பேர் ஆர மார்வனார்
ஓர் அகலத்து உள்ளது உலகு (43)
2325 உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என் நெஞ்சே புரி (44)
2326 புரிந்து மத வேழம் மாப் பிடியோடு ஊடி
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை (45)
2327 மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் (46)
2328 நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய்! நங்கள்
நரக வாய் கீண்டாயும் நீ (47)
2329 நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்?
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய்? நீ அன்றே
மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய்
தேவாசுரம் பொருதாய் செற்று? (48)
2330 செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்கு ஆய் முற்றல்
முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரிச்
சுரி ஏறு சங்கினாய்! சூழ்ந்து (49)
2331 சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த அருவித் தட வரைவாய் ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் (50)
2332 அவனே அரு வரையால் ஆ நிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே
கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்காபுரம் எரித்தான் எய்து (51)
2333 எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய் எய்ததுவும்
தென் இலங்கைக் கோன் வீழ சென்று குறள் உரு ஆய்
முன் நிலம் கைக்கொண்டான் முயன்று (52)
2334 முயன்று தொழு நெஞ்சே! மூரி நீர் வேலை
இயன்ற மரத்து ஆல் இலையின் மேலால் பயின்று அங்கு ஓர்
மண் நலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்
தண் அலங்கல் மாலையான் தாள் (53)
2335 தாளால் சகடம் உதைத்து பகடு உந்தி
கீளா மருது இடை போய் கேழல் ஆய் மீளாது
மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்குப்
பெண் அகலம் காதல் பெரிது (54)
2336 பெரிய வரை மார்பில் பேர் ஆரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல தெரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன் தன்
நீள் நெடுங் கண் காட்டும் நிறம் (55)
2337 நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன்பொலிவு? (56)
2338 பொலிந்து இருண்ட கார் வானில் மின்னேபோல் தோன்றி
மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே
தெருள் தன்மேல் கண்டாய் தெளி 57
2339 தெளிந்த சிலாதலத்தின்மேல் இருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய
வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு 58
2340 வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப்பெற்று 59
2341 பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து கற்றுக்
குணிலை விளங் கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு 60
2342 பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை
இளங் குமரன் தன் விண்ணகர் 61
2343 விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62
2344 தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து 63
2345 இசைந்த அரவமும் வெற்பும் கடலும்
பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில்
கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு? 64
2346 அங்கற்கு இடர் இன்றி அந்திப் பொழுதத்து
மங்க இரணியனது ஆகத்தை பொங்கி
அரி உருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே
கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து 65
2347 காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த
மது கைடபரும் வயிறு உருகி மாண்டார்
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு 66
2348 ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய்
ஓங்கு கமலத்தின் ஒண் போது ஆம் கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகரும் மதி என்றும் பார்த்து 67
2349 பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்ந்து கார்த்த
களங் கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேல் நாள்
விளங் கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு 68
2350 வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங் குழல்மேல் மல் பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் 69
2351 புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மதத் தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு 70
2352 களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி
ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று 71
2353 குன்று ஒன்றின் ஆய குற மகளிர் கோல் வளைக் கை
சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங் குமரர் கோமான் இடம் 72
2354 இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேர் ஓட்டி
வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத்தன்னால் உள்ள நலம் 73
2355 நலமே வலிதுகொல் நஞ்சு ஊட்டு வன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ சலமே தான்
வெம் கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான்
தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து? 74
2356 சார்ந்து அகடு தேய்ப்பத் தடாவிய கோட்டு உச்சிவாய்
ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலைச் சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு 75
2357 பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூய்க் கைதொழுதால்
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து? 76
2358 ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த
முடிப் போது மூன்று ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப் போது நங்கட்கு அரண் 77
2359 அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல்
ஏது கதி? ஏது நிலை? ஏது பிறப்பு? என்னாதே
ஓது கதி மாயனையே ஓர்த்து 78
2360 ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் கார்த்த
விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி
நிரை ஆர மார்வனையே நின்று 79
2361 நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈர் ஐஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும்
ஆர் படு வான் நேமி அரவு அணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு 80
2362 நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என்
நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால் நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ
ஓராது நிற்பது உணர்வு? 81
2363 உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை
எங்கு அணைந்து காண்டும் இனி? 82
2364 இனி அவன் மாயன் என உரைப்பரேலும்
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங் கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் 83
2365 உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண் தாமரை நெடுங் கண் மாயவனை யாவரே
கண்டார்? உகப்பர் கவி 84
2366 கவியினார் கை புனைந்து கண் ஆர் கழல் போய்
செவியின் ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி உரைக்க பொலியுமே பின்னைக்கு ஆய்
ஏற்று உயிரை அட்டான் எழில்? 85
2367 எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில்கொண்டு தான் முழங்கித் தோன்றும் எழில்கொண்ட
நீர் மேகம் அன்ன நெடு மால் நிறம் போல
கார் வானம் காட்டும் கலந்து 86
2368 கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி
மலர்ந்து மரகதமே காட்டும் நலம் திகழும்
கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை
அந்தி வான் காட்டும் அது 87
2369 அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற
பொன் அம் கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து 88
2370 முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்து உழு சால் பைந் தினைகள் வித்த தடிந்து எழுந்த
வேய்ங் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு 89
2371 சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள்
எண் திசையும் சூழ இடம் போதாது என்கொலோ
வண் துழாய் மால் அளந்த மண்? 90
2372 மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்ட தான் கட்டுண்டிருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் 91
2373 மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனைச்
சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறைசெய்து என் நெஞ்சே நினை 92
2374 நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால்?
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல்மேல் கனைத்து உலவு
வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து 93
2375 உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து (94)
2376 புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து (95)
2377 வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே கேழ்த்த
அடித் தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித் தாமரை ஆம் அலர் (96)
2378 அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை? (97)
2379 இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் நமன் சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு (98)
2380 தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு (99)
2381 சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த்
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடுங் கண்
தேன் அமரும் பூமேல் திரு (100)
-------------
16. திருமழிசை ஆழ்வார் - நான்முகன் திருவந்தாதி (2382 -2477)
2382 நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் யான் முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை
சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து (1)
2383 தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும்
பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான்பால் (2)
2384 பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து
ஒரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்த ஆறு? (3)
2385 ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே? வேறு ஒருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப் பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து (4)
2386 தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே உகத்தில்
ஒருநான்று நீ உயர்த்தி உள்வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி (5)
2387 அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே ஆதலால் இன்று (6)
2388 இன்று ஆக நாளையே ஆக இனிச் சிறிது
நின்று ஆக நின் அருள் என்பாலதே நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே
நீ என்னை அன்றி இலை (7)
2389 இலை துணை மற்று என் நெஞ்சே! ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா குலை கொண்ட
ஈர் ஐந்தலையான் இலங்கையை ஈடு அழித்த
கூர் அம்பன் அல்லால் குறை (8)
2390 குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு (9)
2391 ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும்
பூங் கார் அரவு அணையான் பொன் மேனி யாம் காண
வல்லமே அல்லமே? மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து (10)
2392 வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து (11)
2393 மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய்
மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு (12)
2394 வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்திக்
கூடு ஆக்கி நின்று உண்டு கொன்று உழல்வீர் வீடு ஆக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு
நற்பொருள் தான் நாராயணன (13)
2395 நாராயணன் என்னை ஆளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர (14)
2396 பல தேவர் ஏத்த படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை (15)
2397 நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர்
தலைமன்னர் தாமே மாற்றாக பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன்மாய பொழில் மறைய
தேர் ஆழியால் மறைத்தாரால் (16)
2398 ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு (17)
2399 மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு
கூறாகக் கீறிய கோளரியை வேறாக
ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தியிருப்பார் தவம் (18)
2400 தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த ஆழியாய் அன்றே? உவந்து எம்மைக்
காப்பாய் நீ காப்பதனை ஆவாய் நீ வைகுந்தம்
ஈப்பாயும் எவ் உயிர்க்கும் ந (19)
2401 நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் நீயே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை (20)
2402 இவையா பில வாய் திறந்து எரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள் இவையா
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு (21)
2403 அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் குழவியாய்த்
தான் ஏழ் உலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீன் ஆய் உயிர் அளிக்கும் வித்து (22)
2404 வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த
பத்தி உழவன் பழம் புனத்து? மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து (23)
2405 நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சினப் போர்ச் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை (24)
2406 வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஒன்று உண்டே? வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று (25)
2407 மற்றுத் தொழுவார் ஒருவரையும் யான் இன்மை
கற்றைச் சடையான் கரி கண்டாய் எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா! யான் உன்னைக்
கண்டுகொளகிற்குமாறு (26)
2408 மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள்! நீறாடி
தான் காண மாட்டாத தார் அகலச் சேவடியை
யான் காண வல்லேற்கு இது? (27)
2409 இது இலங்கை ஈடு அழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்க தண் தார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு (28)
2410 உகப்பு உருவன் தானே ஒளி உருவன் தானே
மகப்பு உருவன் தானே மதிக்கில் மிகப் புருவம்
ஒன்றுக்கு ஒன்று ஓசனையான் வீழ ஒரு கணையால்
அன்றிக்கொண்டு எய்தான் அவன் (29)
2411 அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது
உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவு அணையின்மேல்? (30)
2412 மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை (31)
2413 கதைப் பொருள் தான் கண்ணன் திருவயிற்றின் உள்ள
உதைப்பளவு போதுபோக்கு இன்றி வதைப்பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி (32)
2414 அடிச் சகடம் சாடி அரவு ஆட்டி யானை
பிடித்து ஒசித்து பேய் முலை நஞ்சு உண்டு வடிப் பவள
வாய்ப் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து
கோ பின்னும் ஆனான் குறிப்பு (33)
2415 குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்? (34)
2416 தாளால் உலகம் அளந்த அசைவேகொல்?
வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம்
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்து அணை (35)
2417 நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான் (36)
2418 வான் உலவு தீவளி மா கடல் மா பொருப்பு
தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் மேல் நிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு (37)
2419 அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் உகைக்குமேல்
எத் தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு (38)
2420 அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக்கூடல் கூட மழைப் பேர்
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு (39)
2421 வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடு ஆக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண் (40)
2422 காணல் உறுகின்றேன் கல் அருவி முத்து உதிர
ஓண விழவில் ஒலி அதிர பேணி
வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று (41)
2423 சென்று வணங்குமினோ சேண் உயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் என்றும்
கடிக் கமல நான்முகனும் கண்மூன்றத்தானும்
அடிக் கமலம் இட்டு ஏத்தும் அங்கு (42)
2424 மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரைமேலானும்
குடை ஏற தாம் குவித்துக் கொண்டு (43)
2425 கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப்
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே
போம் குமரருள்ளீர்! புரிந்து (44)
2426 புரிந்து மலர் இட்டுப் புண்டரிகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு (45)
2427 வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்து ஆடுதுமேல் நன்று (46)
2428 நன்மணி வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன்மணி நீ
ரோடு பொருது உருளும் கானமும் வானரமும்
வேடும் உடை வேங்கடம் (47)
2429 வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் வேங்கடமே
தானவரை வீழத் தன் ஆழிப் படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை (48)
2430 மலை ஆமைமேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று (49)
2431 கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாராவகை அறிந்தேன் ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு (50)
2432 எனக்கு ஆவார் ஆர் ஒருவரே? எம் பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புனக் காயா
வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண் எல்லாம் உண்டோ விலை? (51)
2433 விலைக்கு ஆட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்கு ஆட்பலி திரிவர் தக்கோர் முலைக்கால்
விடம் உண்ட வேந்தனையே வேறா ஏத்தாதார்
கடம் உண்டார் கல்லாதவர் (52)
2434 கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன்
அல்லால் ஒரு தெய்வம் யான் இலேன் பொல்லாத
தேவரை தேவர் அல்லாரை திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு (53)
2435 தேவராய் நிற்கும் அத் தேவும் அத் தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் யாவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை (54)
2436 கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அவர்? (55)
2437 அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு
எவரும் எதிர் இல்லை கண்டீர் உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு (56)
2438 ஒருங்கு இருந்த நல் வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கு இருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என் நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என்? (57)
2439 என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன் அஞ்ச முன் ஒருநாள் மண் அளந்தான் என் நெஞ்சம்
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு (58)
2440 அன்பு ஆவாய் ஆர் அமுதம் ஆவாய் அடியேனுக்கு
இன்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய் பொன் பாவை
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் (59)
2441 ஆள் பார்த்து உழிதருவாய் கண்டுகொள் என்றும் நின்
தாள்பார்த்து உழிதருவேன் தன்மையை கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம் (60)
2442 மனக் கேதம் சாரா மதுசூதன் தன்னைத்
தனக்கே தான் தஞ்சமாக் கொள்ளில் எனக்கே தான்
இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு (61)
2443 திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் திரு இருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய்த்
தார் தன்னைச் சூடித் தரித்து (62)
2444 தரித்திருந்தேன் ஆகவே தாராகணப் போர்
விரித்து உரைத்த வெம் நாகத்து உன்னைத் தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது (63)
2445 போதான இட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது (64)
2446 சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை
மாது ஆய மாலவனை மாதவனை யாதானும்
வல்லவா சிந்தித்திருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்? (65)
2447 இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு திடமாக
வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட் செய்யேன் வலம் (66)
2448 வலம் ஆக மாட்டாமை தான் ஆக வைகல்
குலம் ஆக குற்றம் தான் ஆக நலம் ஆக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானை
சீரணனை ஏத்தும் திறம் (67)
2449 திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புரம் தொழா மாந்தர் இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு (68)
2450 செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி அதுவே கண்டீர் கவிக்கு
நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையேதான் (69)
2451 தான் ஒருவன் ஆகி தரணி இடந்து எடுத்து
ஏன் ஒருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன்
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் (70)
2452 சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல் (71)
2453 இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும்
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத் தவமும் நாரணனே
ஆவது ஈது அன்று என்பார் ஆர்? (72)
2454 ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த
பேர் ஆழியான் தன் பெருமையை? கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி (73)
2455 பதிப் பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்து அடைந்த வாள் அரவம் தன்னை மதித்து அவன் தன்
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஒன்று ஏத்தாது என் நா (74)
2456 நாக் கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆக
தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு (75)
2457 பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தன மாயையில் பட்ட தற்பு (76)
2458 தற்பு என்னைத் தான் அறியானேலும் தடங் கடலைக்
கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் என் கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான்
எவ் வினையும் மாயுமால் கண்டு (77)
2459 கண்டு வணங்கினார்க்கு என்னாம்கொல் காமன் உடல்
கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும்
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து? (78)
2460 ஆய்ந்துகொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம்
மெய் குந்தம் ஆக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து (79)
2461 விரைந்து அடைமின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் பரந்து உலகம்
பாடின ஆடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு (80)
2462 கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன் விதை ஆக
நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழி ஆகிக் கலந்து (81)
2463 கலந்தான் என் உள்ளத்து காம வேள் தாதை
நலம் தானும் ஈது ஒப்பது உண்டே? அலர்ந்தலர்கள்
இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்றிவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து (82)
2464 வேந்தர் ஆய் விண்ணவர் ஆய் விண் ஆகி தண்ணளி ஆய்
மாந்தர் ஆய் மாது ஆய் மற்று எல்லாம் ஆய் சார்ந்தவர்க்குத்
தன் ஆற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர் (83)
2465 பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன்;அவன் எனக்கு நேரான் அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழக் காதல் பூண்டேன் தொழில் (84)
2466 தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த
வல்லாளன் வானரக் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் (85)
2467 உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன் ஒப்பான் தான் ஆய் உளன் காண் தமியேற்கும்
என் ஒப்பார்க்கு ஈசன் இமை (86)
2468 இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்? (87)
2469 உயிர் கொண்டு உடல் ஒழிய ஓதும்போது ஓடி
அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது (88)
2470 பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம்
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவாரைக்
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு (89)
2471 வீற்றிருந்து விண் ஆள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே
தாழ்வாய் இருப்பார் தமர் (90)
2472 தமர் ஆவார் யாவர்க்கும் தாமரைமேலாற்கும்
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று (91)
2473 என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கரு இருந்த நாள் முதலாக் காப்பு (92)
2474 காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை
கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம் (93)
2475 மெய் தெளிந்தார் என் செய்யார்? வேறு ஆனார் நீறு ஆக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து பை தெளிந்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறி ஆகும் என்று (94)
2476 ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன்
கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை
இடம் நாடு காண இனி (95)
2477 இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம் பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் 96
--------------
17. நம்மாழ்வார் - திருவிருத்தம் (2478 – 2577)
2478 பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 1
2479 செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ!
முழு நீர் முகில் வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவர் ஆம்
தொழுநீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே 2
2480 குழல் கோவலர் மடப் பாவையும் மண்மகளும் திருவும்
நிழல்போல்வனர் கண்டு நிற்கும்கொல் மீளும்கொல் தண் அம் துழாய்
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும்
தழல் போல் சினத்த அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே? 3
2481 தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாம் இலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே? 4
2482 பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இக் காலம் இவ் ஊர்ப்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி விசும் அம் தண்ணம் துழாய்ப்
பனிப் புயல் சோரும் தடங் கண்ணி மாமைத் திறத்துக்கொலாம்
பனிப் புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே 5
2483 தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு
கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே 6
2484 ஞாலம் பனிப்பச் செறுத்து நல் நீர் இட்டு கால் சிதைந்து
நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூங்
காலம் கொலோ? அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே 7
2485 காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இந் நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே 8
2486 திண் பூஞ் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்? இவையோ
கண் பூங் கமலம் கருஞ் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி
வண் பூங் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே 9
2487 மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக்கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உறையீர் நுமது
வாயோ? அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ? அடும் தொண்டையோ? அறையோ இது அறிவு அரிதே 10
2488 அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவு என ஞாலம் எய்தற்கு
உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே 11
2489 பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குல் ஊழிகளே இது எல்லாம் இனவே
ஈர்கின்ற சக்கரத்து எம் பெருமான் கண்ணன் தண் அம் துழாய்
சார்கின்ற நல் நெஞ்சினார் தந்து போன தனி வளமே 12
2490 தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர்? எனை ஊழிகள் ஈர்வனவே 13
2491 ஈர்வன வேலும் அம் சேலும் உயிர்மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தெய்வ நல் வேள் கணைப் பேர் ஒளியே
சோர்வன நீலச் சுடர் விடு மேனி அம்மான் விசும்பு ஊர்
தேர்வன தெய்வம் அன்னீர கண்ணோ இச் செழுங் கயலே? 14
2492 கயலோ நும கண்கள்? என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை? கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே 15
2493 பலபல ஊழிகள் ஆயிடும் அன்றி ஓர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறு ஆயிடும் கண்ணன் விண் அனையாய்!
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இப் பாய் இருளே 16
2494 இருள் விரிந்தால் அன்ன மா நீர்த் திரைகொண்டு வாழியரோ!
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு அணைமேல்
இருள் விரி நீலக் கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதிப் பெருமான் உறையும் எறி கடலே 17
2495 கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றிச் சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுந்த அக் காலம் கொலோ? புயல் காலம்கொலோ?
கடல் கொண்ட கண்ணீர் அருவிசெய்யாநிற்கும் காரிகையே 18
2496 காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரி கை ஏறி அறையிடும் காலத்தும் வாழியரோ
சாரிகைப் புள்ளர் அம் தண்ணம் துழாய் இறை கூய் அருளார்
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்மொழிக்கே 19
2497 சில்மொழி நோயோ கழி பெருந் தெய்வம் இந் நோய் இனது என்று
இல் மொழி கேட்கும் இளந் தெய்வம் அன்று இது வேல நில் நீ
என் மொழி கேள்மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை அம் தண்ணம் துழாய்கொண்டு சூட்டுமினே 20
2498 சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நல் நீர்
ஆட்டி அம் தூபம் தராநிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து இமில் ஏற்று வன் கூன்
கோட்டிடை ஆடினை கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே 21
2499 கொம்பு ஆர் தழை கை சிறு நாண் எறிவு இலம் வேட்டை கொண்டாட்டு
அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் புள் ஊரும் கள்வர்
தம் பாரகத்து என்றும் ஆடாதன தம்மில் கூடாதன
வம்பு ஆர் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே? 22
2500 புனமோ? புனத்து அயலே வழிபோகும் அரு வினையேன்
மனமோ? மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும் தெய்வத்து
இனம் ஓர் அனையீர்களாய் இவையோ நும் இயல்வுகளே? 23
2501 இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் ஒரோ குடங்கைக்
கயல் பாய்வன பெரு நீர்க் கண்கள் தம்மொடும் குன்றம் ஒன்றால்
புயல்வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய்க்
கொயல்வாய் மலர்மேல் மனத்தொடு என்னாம்கொல் எம் கோல் வளைக்கே? 24
2502 எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே? 25
2503 நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் அற மென்று கோது கொண்ட
வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாஉது அம் பூந்
தேன் இளஞ் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே 26
2504 சேமம் செங்கோன் அருளே செறுவாரும் நட்பு ஆகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே பண்டு எல்லாம் அறை கூய்
யாமங்கள் தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண்ணம் துழாய்த்
தாமம் புனைய அவ் வாடை ஈதோ வந்து தண்ணென்றதே 27
2505 தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா அருளாய்
எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே? 28
2506 இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும் நீலம் உண்ட
மின் அன்ன மேனிப் பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மைகொலோ? குடிச் சீர்மை இல் அன்னங்களே 29
2507 அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர்
இன்னம் செல்லீரோ? இதுவோ தகவு? என்று இசைமின்களே 30
2508 இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலைமேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம்
மிசை மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே? 31
2509 மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி ஒக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்? உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து நும் தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே? 32
2510 அருள் ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ?
தெருளோம் அரவணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே 33
2511 சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி
தன் சீறடியால்உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது
தண் தார்ததைக்கின்ற தண் அம் துழாய்
அணிவான் அதுவே மனமாய்ப்பதைக்கின்ற
மாதின்திறத்து அறியேன் செயற்பாலதுவே 34
2512 பால் வாய்ப் பிறைப் பிள்ளை ஒக்கலைக் கொண்டு பகல் இழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால்பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது ஓர் பனி வாடை துழாகின்றதே 35
2513 துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் அது பெயரா
எழா நெடு ஊழி எழுந்த இக் காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடுந் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே 36
2514 கொடுங் கால் சிலையர் நிரைகோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து அரு வினையேன்
நெடுங் காலமும் கண்ணன் நீள் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஒசியும் இடை இளமான் சென்ற சூழ் கடமே 37
2515 கடம் ஆயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடம் ஆயின புக்கு நீர் நிலைநின்ற தவம் இதுகொல்
குடம் ஆடி இம் மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே? 38
2516 நீலத் தட வரைமேல் புண்டரீக நெடுந் தடங்கள்
போலப் பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம் பிரான் கண்ணின் கோலங்களே 39
2517 கோலப் பகல் களிறு ஒன்று கல் புய்ய குழாம் விரிந்த
நீலக் கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேரிழையீர்
ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்றுகொலோ? 40
2518 என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே 41
2519 வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த
மென் கால் கமலத் தடம்போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் கால் பணிந்த என்பால் எம் பிரான தடங் கண்களே 42
2520 கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே? 43
2521 நிறம் உயர் கோலமும் பேரும் உருவும் இவைஇவை என்று
அறம் முயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உற உயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான பெருமையையே 44
2522 பெருங் கேழலார் தம் பெருங் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல்
வருங் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு
மருங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே 45
2523 மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப்பொன்பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக்கீழ் விட போய்
திட நெஞ்சம் ஆய் எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே 46
2524 திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ முகந்து
சொரிகின்றது அதுவும் அது கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என் ஆம் கொல் என் மெல்லியற்கே? 47
2525 மெல்லியல் ஆக்கைக் கிருமிக் குருவில் மிளிர்தந்து ஆங்கே
செல்லிய செல்கைத்து உலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ உண்டு பண்டுபண்டே 48
2526 பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இப் பாய் இருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள வண்ண
வண்டு உண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே 49
2527 ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நம் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே 50
2528 மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையா
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே 51
2529 அழைக்கும் கருங் கடல் வெண் திரைக் கைக்கொண்டு போய் அலர்வாய்
மழைக்கண் மடந்தை அரவு அணை ஏற மண் மாதர் விண்வாய்
அழைத்துப் புலம்பி முலைமலைமேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே 52
2530 வார் ஆயின முலையாள் இவள் வானோர் தலைமகன் ஆம்
சீர் ஆயின தெய்வ நல் நோய் இது தெய்வத் தண் அம் துழாய்த்
தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும் கீழ்
வேர் ஆயினும் நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே 53
2531 வீசும் சிறகால் பறத்தீர் விண் நாடு நுங்கட்கு எளிது
பேசும் படி அன்ன பேசியும் போவது நெய் தொடு உண்டு
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார்
மாசு இல் மலர் அடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே 54
2532 வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டு கள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே? 55
2533 வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திருவருளால்
உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூந் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே 56
2534 புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி ஒன்றால்
விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே 57
2535 கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து
உழறு அலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறு அலர் தாமரைக் கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே? 58
2536 அளப்பு அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண்ணம் துழாய்க்கு
உளப் பெருங் காதலின் நீளிய ஆய் உள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல் வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே 59
2537 முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூங் குழல் குறிய
கலையோ அரை இல்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம்
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே? 60
2538 வாசகம் செய்வது நம்பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழும் அவன் ஞாலம் முற்றும்
வேய் அகம் ஆயினும் சோராவகை இரண்டே அடியால்
தாயவன் ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே? 61
2539 இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்று அதிரும் கருங்கடல் ஈங்கு இவள் தன்
நிறையோ இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்
முறையோ அரவு அணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே? 62
2540 வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய
தண் மென் கமலத் தடம் போல் பொலிந்தன தாம் இவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனொடு இக் காலம் இருக்கின்றவே 63
2541 இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த
திருத் தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமச் சொல் கற்றனமே 64
2542 கற்றுப்பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கருமம்
உற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகம் எல்லாம்
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்
உற்றும் உறாதும் மிளிர்ந்த கண் ஆய் எம்மை உண்கின்றவே 65
2543 உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண் ஆய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான்
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்
கண் ஆய் அருவினையேன் உயிர் ஆயின காவிகளே 66
2544 காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரைச் செற்றமா
வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்
சேர்தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணைமலரே 67
2545 மலர்ந்தே ஒழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
தோய் தழைப் பந்தர் தண்டு உற நாற்றி பொரு கடல் சூழ்
தாவிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்
கலந்தார் வரவு எதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே 68
2546 கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து வெல்வான்
ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை புவனி எல்லாம்
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே?
வார் ஏற்று இளமுலையாய் வருந்தேல் உன் வளைத்திறமே 69
2547 வாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
வாய் நறுங் கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே 70
2548 ஊழிகள் ஆய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழம் வண்ணம் என்றேற்கு அஃதே கொண்டு அன்னை
நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை அம்மனை சூழ்கின்றவே 71
2549 சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந் திணிம்பைப்
போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்து ஒரு தமியாட்டியேன் மாமைக்கு இன்று
வாழ்கின்ற ஆறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே? 72
2550 வால் வெண் நிலவு உலகு ஆரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
விண் சுரவி சுர முதிர் மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் அடல் ஆழிப் பிரான் பொழில் ஏழ் அளிக்கும்
சால்பின் தகைமைகொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே? 73
2551 தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயல் திரு நெடுங் கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே 74
2552 உலாகின்ற கெண்டை ஒளி அம்பு எம் ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் குனி சங்கு இடறிப்
புலாகின்ற வேலைப் புணரி அம் பள்ளி அம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே? 75
2553 இடம் போய் விரிந்து இவ் வுலகு அளந்தான் எழில் ஆர் தண் துழாய்
வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே? 76
2554 திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட
செங் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை தென்பால் இலங்கை
வெங் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே 77
2555 நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோல் துணித்த
வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல மை வரை போல்
பொலியும் உருவின் பிரானார் புனை பூந் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே 78
2556 தனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலம் தத்தும்
பாதனை பாற்கடல் பாம்பு அணைமேல் பள்ளிகொண்டருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே 79
2557 சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பார் அளந்த
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே 80
2558 உறுகின்ற கன்மங்கள் மேலன ஓர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந் நொந்து பெறார்கொல்? துழாய் குழல்வாய்த்
துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும் சூழ்கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல் ஆவி எரி கொள்ளவே 81
2559 எரி கொள் செந் நாயிறு இரண்டு உடனே உதய மலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள்
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போல எம் போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையம் முற்றும் விளரியதே? 82
2560 விளரிக் குரல் அன்றில் மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை
முளரிக் குரம்பை இதுஇதுவாக முகில் வண்ணன் பேர்
கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம்
தளரின் கொலோ அறியேன் உய்யல் ஆவது இத் தையலுக்கே? 83
2561 தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கு அங்கு எல்லாம்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே 84
2562 மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப்பொன்னே அடியேன் அடி ஆவி அடைக்கலமே 85
2563 அடைக் கலத்து ஓங்கு கமலத்து அலர் அயன் சென்னி என்னும்
முடைக் கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக்கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே? 86
2564 புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் பூங் கழி பாய்ந்து
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ஆங்கு அவை நின்
வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத் திருவினையே 87
2565 திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச் சக்கரம் ஒக்கும் அன்ன கண்டும்
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினையே? 88
2566 தீவினைக்கு ஆரு நஞ்சை நல் வினைக்கு இன் அமுதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை அன்று உலகு ஈர் அடியால்
தாவின ஏற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே? 89
2567 தலைப்பெய்து யான் உன் திருவடி சூடும் தகைமையினால்
நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இம் மாயமும் மாயம் செவ்வே
நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை ஊழி சுருங்கலதே 90
2568 சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட கள்வனை வையம் முற்றும்
ஒருங்குற உண்ட பெரு வயிற்றாளனை மாவலிமாட்டு
இருங் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டிச் சென்ற
பெருங் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே 91
2569 பேண் நலம் இல்லா அரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று
காணலும் ஆம்கொல் என்றே? வைகல் மாலையும் காலையுமே 92
2570 காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப் படியே 93
2571 மைப் படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார்
எப்படி ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே.? 94
2572 யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூது ஆவியில் தடுமாறும் உயிர் முன்னமே அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்
மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே 95
2573 வணங்கும் துறைகள் பல பல ஆக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல ஆக்கி அவை அவைதோறு
அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கும் நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே 96
2574 எழுவதும் மீண்டே படுவதும் பட்டு எனை ஊழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே? 97
2575 துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்வு இலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே 98
2576 ஈனச் சொல் ஆயினும் ஆக எறி திரை வையம் முற்றும்
ஏனத்து உருவாய் இடந்த பிரான் இருங் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும்
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே 99
2577 நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப் பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்
பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே 100
-------------
18. நம்மாழ்வார் - திருவாசிரியம் (2578 – 2584)
2578 செக்கர் மா முகில் உடுத்து மிக்க
செஞ் சுடர்ப் பரிதி சூடி
அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம்
கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப் பகைப்ப
நச்சு வினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழ கிடந்த
தாமரை உந்தித் தனிப் பெரு நாயக
மூவுலகு அளந்த சேவடியோயே (1)
2579 உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர்ப் பூந் தாமரை சூடுதற்கு அவாவு
ஆர் உயிர் உருகி உக்க நேரிய
காதல் அன்பில் இன்பு ஈன் தேறல்
அமுத வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு
ஒரு பொருட்கு அசைவோர் அசைக
திருவொடு மருவிய
இயற்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினொடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே? (2)
2580 குறிப்பில் கொண்டு நெறிப்பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வன் ஆகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு
அரசு உடல் தட வரை சுழற்றிய
தனி மாத் தெய்வத்து அடியவர்க்கு இனி நாம்
ஆளாகவே
இசையுங்கொல் ஊழிதோறு ஊழி ஓவாதே? (3)
2581 ஊழிதோறு ஊழி ஓவாது வாழிய
என்று யாம் தொழ இசையுங்கொல் யாவகை
உலகமும் யாவரும் இல்லா மேல் வரும்
பெரும்பாழ்க் காலத்து இரும் பொருட்கு எல்லாம்
அரும் பெறல் தனி வித்து ஒரு தான் ஆகி
தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று
முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி
மூவுலகம் விளைத்த உந்தி
மாயக் கடவுள் மா முதல் அடியே? (4)
2582 மா முதல் அடிப் போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து
ஒண் சுடர் அடிப் போது ஒன்று விண் செலீஇ
நான்முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப
வானவர் முறைமுறை வழிபட நெறீஇ
தாமரைக் காடு மலர்க் கண்ணொடு
கனி வாய் உடையதும் ஆய் இரு நாயிறு
ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக் காவு பற்பல அன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே? (5)
2583 ஓஓ உலகினது இயல்வே!
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி
படைத்து இடந்து
உண்டு உமிழ்ந்து அளந்து தேஎர்ந்து உலகு அளிக்கும்
முதல் பெருங் கடவுள் நிற்ப புடைப் பல
தான் அறி தெய்வம் பேணுதல் தனாது
புல்லறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவியுள் நீங்காப்
பல் மா மாயத்து அழுந்துமாம் நளிர்ந்தே (6)
2584 நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆல் இலைச் சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே? (7)
------------
19. நம்மாழ்வார் -பெரியதிருவந்தாதி (2585 – 2671)
2585 முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ் (1)
2586 புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீவினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை (2)
2587 இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என்? (3)
2588 என்னின் மிகு புகழார் யாவரே? பின்னையும் மற்று
எண் இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன
கருஞ் சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று (4)
2589 பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ அம்மா காட்டும் நெறி? (5)
2590 நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கரு மா
முறி மேனி காட்டுதியோ? மேல் நாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே ஈது உரையாய்
என் செய்தால் என் படோம் யாம்? (6)
2591 யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார் பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்துப் பார் இடந்த
அம்மா! நின் பாதத்து அருகு (7)
2592 அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே
பெருகும் மிக இது என்? பேசீர் பருகலாம்
பண்புடையீர் பார் அளந்தீர் பாவியெம் கண் காண்பு அரிய
நுண்பு உடையீர்! நும்மை நுமக்கு (8)
2593 நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்து என்? மாலார்
தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர்திறத்தே
யாதானும் சிந்தித்து இரு (9)
2594 இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு
யாம் ஆர்? வணக்கம் ஆர்? ஏ பாவம் நல் நெஞ்சே
நாமா மிக உடையோம் நாழ் (10)
2595 நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை
வாழாவகை வலிதல் நின் வலியே? ஆழாத
பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ
நீரும் நீ ஆய் நின்ற நீ (11)
2596 நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போய் ஒன்று சொல்லி என்? போ நெஞ்சே நீ என்றும்
காழ்த்து உபதேசம் தரினும் கைக்கொள்ளாய் கண்ணன்தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு (12)
2597 வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே?
எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மால் காட்டு உன் மேனிச் சாய் (13)
2598 சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயர் ஆய் நீ யார்? போய்த்
தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம்
பாம்பார் வாய்க் கைந் நீட்டல் பார்த்து (14)
2599 பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம்
தம் மேனித் தாள் தடவ தாம் கிடந்து தம்முடைய
செம்மேனிக் கண்வளர்வார் சீர் (15)
2600 சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆகாக்கால் பேராளா மார்பு ஆரப்
புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே?
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து (16)
2601 சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய்திறவார் சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய
தாள் வரை வில் ஏந்தினார் தாம் (17)
2602 தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளகப்
பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இப்
பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல் உருவை யார் அறிவார்? சொல்லு (18)
2603 சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே
எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லைக்கண்
மாத் தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆகக்
காத்தானைக் காண்டும் நீ காண் (19)
2604 காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில்! மாணி
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
திரு ஆகம் தீண்டிற்றுச் சென்று (20)
2605 சென்று அங்கு வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்குப்
பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதையக்
கார் உருவன் தான் நிமிர்த்த கால் (21)
2606 காலே பொதத் திரிந்து கத்துவராம் இனநாள்
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால்
தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று
இருக்கும் இடம் காணாது இளைத்து (22)
2607 இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ் உயிர்க்கும் தான் (23)
2608 தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தன் தோன்றல் தானே
இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்? (24)
2609 ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே? சீர் ஆர்
மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் (25)
2610 யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல்வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தான் ஓர்
இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து (26)
2611 அடியால் படி கடந்த முத்தோ? அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ? நெடியாய்
செறி கழல் கொள் தாள் நிமிர்த்துச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ அளந்த அன்று (27)
2612 அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ் உருவை நெஞ்சு என்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து (28)
2613 உணர ஒருவர்க்கு எளியேனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை? உணரத்
தனக்கு எளியர் எவ் அளவர் அவ் அளவன் ஆனால்
எனக்கு எளியன் எம் பெருமான் இங்கு (29)
2614 இங்கு இல்லை பண்டுபோல் வீற்றிருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே
மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பது அன்றோ அழகு? (30)
2615 அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டு ஆடி அன்று அத்
தடங் கடலை மேயார் தமக்கு (31)
2616 தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கு என்று
தம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது? (32)
2617 யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா ஆறு தான் யாதானும்
தேறுமா செய்யா அசுரர்களை நேமியால்
பாறுபாறு ஆக்கினான்பால்? (33)
2618 பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று (34)
2619 நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை
வன் புடையால் பொன்பெயரோன் வாய் தகர்த்து மார்வு இடந்தான்
அன்புடையன் அன்றே அவன்? (35)
2620 அவன் ஆம்? இவன் ஆம்? உவன் ஆம்? மற்று உம்பர்
அவன் ஆம்? அவன் என்று இராதே அவன் ஆம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலும் ஆம் (36)
2621 ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே?
நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய்
மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம்
அது கரமே அன்பால் அமை (37)
2622 அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும்? இடைச்சி குமைத்திறங்கள்
ஏசியே ஆயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை (38)
2623 பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்?
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால்
போய் உபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு (39)
2624 வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே
போய்ப் போஒய் வெம் நரகில் பூவியேல் தீப் பால
பேய்த் தாய் உயிர் கலாய்ப் பால் உண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி (40)
2625 வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடி இடிய வாங்கி வலிய நின்
பொன் ஆழிக் கையால் புடைத்திடுதி கீளாதே
பல் நாளும் நிற்கும் இப் பார் (41)
2626 பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான்
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம்
ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே? மற்றொருவர்க்கு
ஆவான் புகாவால் அவை (42)
2627 அவையம் என நினைந்து வந்த சுரர்பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை கவை இல்
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ
மனத் துயரை மாய்க்கும் வகை? (43)
2628 வகை சேர்ந்த நல் நெஞ்சும் நா உடைய வாயும்
மிக வாய்ந்து வீழா எனிலும் மிக ஆய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே
மேலைத் தாம் செய்யும் வினை? (44)
2629 வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன் அடிக்கள் நான் (45)
2630 நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள்நாளும்
தேங்கு ஓத நீர் உருவன் செங்கண் மால் நீங்காத
மா கதி ஆம் வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதி ஆம் நெஞ்சே நினை (46)
2631 நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே நினைத்து இறைஞ்ச
எவ் அளவர்? எவ் இடத்தோர்? மாலே அது தானும்
எவ் அளவும் உண்டோ எமக்கு? (47)
2632 எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு? அமைப் பொலிந்த
மென் தோளி காரணமா வெம் கோட்டு ஏறு ஏழ் உடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு (48)
2633 கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூர் இருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள்
கார் உருவம் காண்தோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேர் உரு என்று எம்மைப் பிரிந்து (49)
2634 பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒருகால்
ஆஆ என இரங்கார் அந்தோ வலிதேகொல்
மா வாய் பிளந்தார் மனம்? (50)
2635 மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மைச்
சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய
தண் துழாயான் அடியைத் தாம் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்க்கு மாண்பு? (51)
2636 மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்து உண்டானது ஓர் உருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது
உண்ண வாய் தான் உறுமோ ஒன்று? (52)
2637 ஒன்று உண்டு செங்கண்மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்? (53)
2638 வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்று? கண்டிலமால் ஆன் ஈன்ற
கன்று உயர தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆஆ மருங்கு (54)
2639 மருங்கு ஓதம் மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு (55)
2640 வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே!
ஒரு ஆறு ஒருவன் புகாவாறு உரு மாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி (56)
2641 வழித் தங்கு வல்வினையை மாற்றானோ? நெஞ்சே!
தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள
வாழ்வு அடங்க மார்வு இடந்த மால் (57)
2642 மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் மேலால்
பிறப்பு இன்மை பெற்று அடிக்கீழ்க் குற்றேவல் அன்று
மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு (58)
2643 மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார்
காடானும் ஆதானும் கைக்கொள்ளார் ஊடே போய்ப்
பேர் ஓதம் சிந்து திரைக் கண்வளரும் பேராளன்
பேர் ஓத சிந்திக்க பேர்ந்து? (59)
2644 பேர்ந்து ஒன்று நோக்காது பின் நிற்பாய் நில்லாப்பாய்
ஈர்ந் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை (60)
2645 இறை முறையான் சேவடிமேல் மண் அளந்த அந் நாள்
மறை முறையால் வான் நாடர் கூடி முறைமுறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீது இலகித் தான் கிடக்கும் மீன்? (61)
2646 மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடு இலா வான் குடைக்குத் தான் ஓர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள்
பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் (62)
2647 பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன் (63)
2648 பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில்
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழ் அன்று
எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கைதான் தொழாவே கலந்து? (64)
2649 கலந்து நலியும் கடுந் துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல்மாலை கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு (65)
2650 சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது (66)
2651 அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில்
அதுவோ பொருள் இல்லை அன்றே? அது ஒழிந்து
மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் (67)
2652 கல்லும் கனை கடலும் வைகுந்த வான் நாடும்
புல் என்று ஒழிந்தனகொல்? ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்து அகம் (68)
2653 அகம் சிவந்த கண்ணினர் ஆய் வல்வினையர் ஆவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திருமால்
சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து? (69)
2654 அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதாவாக வைத்தேன் எனது உள்ளே
யாது ஆகில் யாதே இனி? (70)
2655 இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே?
தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர்
அகத்து உலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின் உந்தி முதல் (71)
2656 முதல் ஆம் திரு உருவம் மூன்று அன்பர் ஒன்றே
முதல் ஆகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகர் இலகு கார் உருவா நின் அகத்தது அன்றே
புகர் இலகு தாமரையின் பூ? (72)
2657 பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண்தோறும் பாவியேன்
மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று (73)
2658 என்றும் ஒருநாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக் காட்டார் குன்று
குடை ஆக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி (74)
2659 புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்?
ஊன் பருகு நேமியாய் உள்ளு (75)
2660 உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள
உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்கொல்?
உலகு அளந்த மூர்த்தி உரை (76)
2661 உரைக்கில் ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே?
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி ஆகும் துணை (77)
2662 துணை நாள் பெருங் கிளையும் தொல் குலமும் சுற்றத்து
இணை நாளும் இன்பு உடைத்தாமேலும் கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக உண் (78)
2663 உள் நாட்டுத் தேசு அன்றே? ஊழ்வினையை அஞ்சுமே?
விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே? மண் நாட்டில்
ஆர் ஆகி எவ் இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கைப்
பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு (79)
2664 பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்? (80)
2665 பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவாத்
தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார்
செழும் பரவை மேயார் தெரிந்து (81)
2666 தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா
இருந்தொழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின்
அம் மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து (82)
2667 அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறி இதுவே கண்டாய் செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து (83)
2668 வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத்
தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி
எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே
தங்கத்தான் ஆமேலும் தங்கு (84)
2669 தங்கா முயற்றிய ஆய் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டனகொல் பொங்கு ஓதத்
தண் அம் பால் வேலைவாய்க் கண்வளரும் என்னுடைய
கண்ணன்பால் நல் நிறம் கொள் கார்? (85)
2670 கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு அணையான் சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை
என் நினைந்து போக்குவர் இப்போது? (86)
2671 இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும்
கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல் (87)
--------------
20. திருமங்கை ஆழ்வார் - திரு எழு கூற்றிருக்கை (2672)
2672 ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்
ஒருமுறை அயனை ஈன்றனை ஒரு முறை
இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள்
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் (5)
அட்டனை மூவடி நானிலம் வேண்டி
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி
ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை (10)
ஏறி நால் வாய் மும் மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒருநாள்
இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத் தீ
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் (15)
அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
அறியும் தன்மையை முக் கண் நால் தோள்
ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன் (20)
அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய
அறு சுவைப் பயனும் ஆயினை சுடர்விடும்
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி (25)
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே (30)
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ் விடை அடங்கச் செற்றனை
அறு வகைச் சமயமும் அறிவு அரு நிலையினை
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறம் முதல் நான்கு அவை ஆய் (35)
மூர்த்தி மூன்று ஆய் இரு வகைப் பயன் ஆய்
ஒன்று ஆய் விரிந்து நின்றனை குன்றா
மது மலர்ச் சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த (40)
கற்போர் புரிசைக் கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகல மாற்றோ வினையே (45)
-------------
21. திருமங்கை ஆழ்வார் -- சிறிய திருமடல் (2673 -2712)
2673 கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும் (1)
2674 ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று (2)
2675 ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும் (3)
2676 வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை (4)
2677 வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே (5)
2678 ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து (6)
2679 தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித் (7)
2680 தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும் (8)
2681 தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு (9)
2682 கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும் (10)
2683 கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத் (11)
2684 தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர் (12)
2685 ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த (13)
2686 மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு (14)
2687 ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும் (15)
2688 நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
2689 நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
2690 சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
2691 சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
2692 சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
2693 பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
2694 தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
2695 தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
2696 ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
2697 கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
2698 ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
2699 ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
2730 வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
2700 சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
2701 ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
2702 ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
2703 ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
2704 கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
2705 பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
2706 ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
2707 கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
2708 ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
2709 பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
2710 ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)
-------------
22. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடல் (2713-2790)
2713 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச 1
2714 துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை 2
2715 தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் 3
2716 என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட 4
2717 பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான் 5
2718 மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும் 6
2719 என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து 7
2720 தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் 8
2721 அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க 10
2722 முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர் 11
2723 மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் 12
2724 முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை 13
2725 இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின் 14
2726 மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் 15
2727 மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல் 16
2728 துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின் 17
2729 மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல் 18
2730 பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே 19
2731 அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல் 20
2732 மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின் 21
2733 அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய்
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல்
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு 22
2734 உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த்
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள்
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய 23
2735 பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல்
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் 24
2736 தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள்
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு 25
2737 கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன்
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால் 26
2738 மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே?
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும் 27
2739 கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள்
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய் 28
2740 பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை 29
2741 பன்னாகராயன் மடப் பாவை பாவை தன்
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன்
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது 30
2742 நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள்
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் 31
2743 தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் 32
2744 என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் 33
2745 என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் 34
2746 பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள்
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள் 35
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப 36
2747 மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே? 37
2748 பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு 38
2749 என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல் 39
2750 மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் 40
2751 இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய் 41
2752 அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த 42
2753 இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் 43
2754 இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்? 44
2755 கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான் 45
2756 பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன்
கல் நவிலும் காட்டகத்து ஓர் வலலிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் 46
2757 என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி 47
2758 முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின்
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் 48
2759 தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த 49
2760 மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின்
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி 50
2761 மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும் 51
2762 தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன்
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து 52
2763 தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க 53
2764 பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் 54
2765 தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் 55
2766 மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன்
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் 56
2767 மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும்
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு 57
2768 ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல்
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை 58
2769 பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல்
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி 59
2770 என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வௌ¢ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை 60
2771 மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப்
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை 61
2772 மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம்
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை 62
2773 முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர்
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய்
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை 63
2774 தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் 64
2775 அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வௌ¢ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் 65
2776 உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம்
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை 66
2777 அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல்
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் 67
2778 மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும்
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை 68
2779 கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் 69
2780 தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள்
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண் 70
2781 துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய்
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் 71
2782 அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை 72
2783 முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த் 73
2784 தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப 74
2785 கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும் 75
2786 தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் 76
2787 துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் 77
2788 தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும் 78
2789 தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் 79
2790 உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் 80
------------
This file was last updated on 6 Sept. 2018.
Feel free to send the corrections to the webmaster.