மாயூரநாதர் அந்தாதி
வே. முத்துஸாமி ஐயர் எழுதியது
mAyUranAtar antAti
by vE. muttucAmi aiyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our thanks also go to Tamil Virtual Academy for providing a scanned (PDF) copy
of this work. The e-text has been generated using Google OCR and subsequent
proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
மாயூரநாதர் அந்தாதி.
(அபயாம்பிகையார் துதிகளும், பொன்னி ஆற்றின்
போற்றிச் சிலேடைப் பதிகமும் கூடியது)
Source:
மாயூரநாதர் அந்தாதி.
(அபயாம்பிகையார் துதிகளும், பொன்னி ஆற்றின்
போற்றிச் சிலேடைப் பதிகமும் கூடியது)
மகாமகோபாத்தியாயர் சாமிநாதையர் அவர்கள் மாணாக்கருள் ஒருவரும்
மதுரைத் தமிழ்ச் சங்கம், அதிற் கலைத்தேர்வு ஆயும் அங்கம் இவற்றின் சார்பினரும்,
தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, தனிப்பாக்கோவை, பத்மினி, கதையும்
பாட்டும் ஆதிய நூலாசிரியரும், பலபாடசாலைப் பரீக்ஷகப் பணியாற்றி
உபகாரச்சம்பளம் பெறுபவரும், அரங்கநாதபுர வாசியும், அவ்வூர்க் கோவில்களின்
காப்பாளருமாகிய வே. முத்துஸாமி ஐயர், எம்.எ., எல்.டி. அவளர்களால் ஆக்கப் பெற்றது.
வெற்றிவேற் பதிப்பகம்,
தஞ்சை , 1942,
இதன் பதிப்புரிமை யார்க்கும் உரியது. விலை நான்கு அணா
----------
முகவுரை.
மாயூரநாதர் அந்தாதி என்னும் இந்நூல், மாயூரத் திருநகரில் கோயில் கொண்டருளும் மாயூரநாதர் மீது புனையப் பெற்ற அந்தாதியாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமையும் முற்ற வாய்ந்தது இவ்வூர். மூர்த்தி மாயூர வள்ளலார்; அம்பிகை அபயாம்பிகையாரால் மயூர (மயில்) உருக்கொண்டு போற்றப் பெற்றவர். இதனால் இத்தலம் மாயூரம் மயிலாடு துறை எனப்படும். இதற்கு சமயாசாரியரில் சம்பந்தர், அப்பர் தேவாரப் பாடல்கள் உண்டு; கவிப்பேரரசர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை-யவர்களால் ஒரு அரிய புராணமும் உண்டு. தீர்த்தமாகிய காவேரி, பொன்னிப்பேர் பூண்டு, தானே புனித மேவுதலோடு, துலாமதியில் கங்கையாதி புண்ணியப் புனல்கள் கலக்கப்பெறும்.
இத்தலத்தில் எளியேன் 1920 - 21 ஆண்டுகளில் பணி ஆற்றியபோது, இம்மூர்த்தியின்
திருவருளில் ஈடுபட்டு, ஓர் அந்தாதி பாடினேன். ஓய்வு கிடைத்த இப்போது, அதனை இக்கடைமுக நன்னாளில் (15-11-42), மாயூரத் தமிழ்க் கழகத்தார் முன்னிலையில், இறைவன் இணையடியில் இசைக்கின்றேன். மதியமும் கங்கையும் தாங்கும் மணிமுடியில், மாயூர நாதர் மத்தமும் எருக்கும் உகத்தல் போல, என் புன் சொற்களை, அப்பரமனும் அடியார்களும் கடைக் கணிப்பார்களாக.
அந்தாதி இதனுடன் அபயாம்பிகை துதிகளும், பொன்னியாற்றின் போற்றிச் சிலேடைப் பதிகமும் சேர்த்துளேன். காவேரி நதியை சிவன், உமை, மால், திரு, அயன், வாணி, விநாயகன், குகன், நால்வர், அடியார் என்னும் பதின்மருடன் தனித்தனி சிலேடையாக அமைத்துப் போற்றியது இப்பதிகம். இறைவன் திருவருள் என்றும் ”சூழ்க; வையகமுந் துயர் தீர்கவே."
அரங்கநாதபுரம், இங்ஙனம்.
திருக்காட்டுப்பள்ளி, அடியார்க்கடியேன்,
12-11-42. வே. முத்துஸாமி ஐயன்.
----------
சாத்துக் கவிகள்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் விரிவிரையாளராக
விளங்கியவரும், அங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தும் தலைமைத் தேர்வாளரும், கரந்தைப் புலவர் கல்லூரித் தலைவருமாகிய உயர்திரு. நாவலர் பண்டித. ந. மு. வேங்கடசாமி நாட்டார் நல்கியது.
கட்டளைக் கலித்துறை.
வானூறு கங்கைசேர் மாயூர நாதர் மலரடிக்கே
தேனூறு செஞ்சொலி னந்தாதிமாலை திகழுவித்தான்
நூனூறு நாடொறு மாராய் தலுங்கவி நூற்றலுஞ்செய்
மானூறு நீறணி வான்முத்துச் சாமி மறையவனே.
(மால் நூறு - மயக்கத்தைக் கெடுக்கும்)
திருக்காட்டுப்பள்ளி, சர். சிவசாமி ஐயர் ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர், உயர்திரு. மு. வடிவேற்பிள்ளை அவர்கள் பாடியது.
நேரிசை வெண்பா
அச்சூர்தி மீதேறி அம்புவியு லாப்போந்து
மெச்சுமுர வோர்க்கு விழைவிருந்தாம் - விச்சையுறு
பேர்மறையான் ஊர் அரங்கம் பெற்றமுத்துச் சாமிஜயன்
சீர்மாயூ ரத்தந்தா தி.
(ஊர் அரங்கம் அரங்கநாதபுரம் என்னும் ஊர்)
-------
சிவமயம்.
மாயூர நாதர் அந்தாதி.
காப்பு.
அகத்திய விநாயகர் துதி.
நந்தாதி யாற்றும் பணியணி ஆகிய நன்மையெலாம்
செந்தாதி யாணர் மலர்போற் சிதையும்; செழும்புவிக்கே
நந்தாதி யாண்டும் நலம்பெற மாயூர நாதரடிக்(கு)
அந்தாதி யாத்தற் ககத்தியக் கைம்மா அருள் தருமே.
(தாது- கமரந்தப்பொடி ; யாணர் - புதுமை ; 2, 3 வரிகளில் திகாரம் குற்றியலிகரம்; கைம்மா-கையுடைய மிருகம், யானை; அகத்திய விநாயகர்- தலவிநாயகர் திருப்பெயர்.)
ஆசிரிய வணக்கம்.
இருந்தமிழ் தன்னால் இருந்தே இமையோர்
விருந்தமிழ் தென்றாலும் வேண்டாப்-பெருந்தமிழ்ப்பேர்
ஆசிரியர் சாமிநாதைய ரடித்துணைச்சீர்
ஆசிரியர் சேம அரண்.
(பெரும்பேர் ஆசிரியர் - மஹா மஹோபாத்யாயர்; ஆசு இரிய- குற்றம் விரைவில் நீங்க)
அவையடக்கம்.
புல்விலக் கில்லை அருச்சனைக்; கன்பர்முன் போந்தெறிந்த
கல்விக் கில்லை கடுக்கை முடிக்குக்; களத்தினுக்கும்
அல்விலக் கில்லை; நம் மாயூர நாதனுக் காதலிற்புன்
சொல்விலக் கில்லையாம் சூட்டுமந்தாதித்தொடையலினே.
(அன்பர்-சாக்கியநாயனார்; கடுக்கை- கொன்றை ; அல்-கறுப்பு.)
நூல்.
1. திருவும் அறிவும் திறனும் பொறையும் திருந்தியால்
உருவும் ஒளியும் உறும் இவண்; பின்னர் உயர்விசும்பு
மருவும் அமரர் நல் வாழ்வுறும்; முத்தியும் வாய்த்
திடும் விண், பொருவும் மாயூரப் புனிதன் பதமலர் போற்றுநர்க்கே.
(பொருவும்-ஒக்கும் இக்கவி பயன் கூறியது.)
2. போற்றி வணங்குக மாயூரநாதன் புனைமலர்த்தாள்
சாற்றி மகிழ்க அச்சம்பு திருப்புகழ்; சார்ந்தரண்முன்
ஏற்றி வளர்க்க பலபல நெய் விளக்; கேற்ற அன்பே
ஆற்றி நினைக்கநெஞ் சண்ணலைச் சந்தியும் அந்தியுமே.
(மனம், வாக்கு, காயம் மூன்றாலும் வழிபடுக என்றவாறு.)
3. அந்திப் பிறையணி மாயூரநாதன் அருட் பெருக்கம்
சிந்திப் பரவுவ சீர்திகழ் பொன்னிச் செழும்புனல் போல்;
வந்திப் பவர்காள்! மகிழ்ந்தடி தஞ்சமா வந்தடைவீர்;
முந்திப் பவவினை போக்கும் மொய்ம் பாக்கும் முழுநலமே.
(முந்தி என்றும், முந்து இப் என்றுமாம் ; மொய்ம்பு - பலம்.)
4. மேவலர் முப்புரம் வேவ நிலவிய வெண்ணகை யான்;
ஏவலர் மாரனைக் காய்ந்தான்; தென்பாண் டிக் கிறையவனா,
நாவலர் சூழ்தர நற்றமிழ்ச் சங்கம் நடவினன் மால்,
பூவலர் காணா உருவொளிர் மாயூரப் புண்ணியனே.
(ஏ - அம்பு; அலர் - பூ ; பூவலர் - பூவில் வாழும் வல்லவர், பிர்மா. )
5. புண்ணிடைக் கோலிற் புகுதுயர் வாட்டம் புரிந்திடினும்,
பண்ணிடைக் கூத்திற் பலப்பல இன்பமே பாவிடினும்,
மண்ணிடைச் சிந்தை மருளா திருக்க வழியிதுகாண் ,
எண்ணிடைத் தொண்டர் இறைஞ்சு மாயூரனை ஏத்துகவே. !
(பண் இடைக்கூத்து - பாட்டும் நாடகமும்; எண் - எண்ணம்.)
6. உகவே டனைத்தீத் தொழிக்கினும் அம்ம! உல குவப்பக்,
குகவே டனைத்தந் தருளி அவுணர் குலமழித்தான்;
தகவே டனைத்தும் தகைபெற - முன்னர்த் தனஞ்சயன் முன்,
மிகவே டெனச் சென் றருளுமா யூரனை மேவுவமே.
(வேள்தனை தீத்து உக என்க; வேடு - வேடக்குலம், வேடன்.)
7. வம்மின் புலவீர்! மனமுற மாயூர வள்ளலுக்கே
தம்மின் புகழ்க்கவி; சாலப் புனைந்து தருகுவிரேல்
அம்மின் புரை அபயாம்பிகை பங்கன் அருட்பொலிவால்
நும்மின்பு கைக்கனியாமிம்மை அம்மை நுகர்வுறவே.
(வள்ளலார் - இறைவன் திருநாமம், அம் - அழகிய; மின்புரை - மின்னல் போன்ற; அம்மை - மறுமை )
8. உறத்தக்க தென்றுமே மாயூரநாதற் குருகுமுளம்;
தெறத்தக்க தென்றுமே ஐம்பொறித் தீயவர்செய் வினைகள்;
அறத்தக்க தென்றுமே மாதர்மண் பொன்மயல்; அஃதறவே,
பெறத்தக்க தென்று மே பேதைபங் காளன் தன் பேரருளே.
9. அருளாம் அருந்ததோர் கடலே! கடல் ஆர்த்தெ ழுந்த,
கருளாம் மருந்தம் களித்துண்டுகண் டம் கறுத்தவ! நின்,
தெருளாம் மருந்துளே சேர்த்துப் பவவினை தேய்த்தருள்;
செம், பொருளே ! அருந்தன மாயமா யூரத் தெம் புண்ணியனே!
(கருள் - கறுப்பு, மருந்தம் - நஞ்சு ; ஆய - ஆகிய)
10. இயலோடு நல்லிசை நாடக முத்தமிழ்க் கென்று மிறை,
செயலோடு காப்பழிப் பாம்முத்தொழிலும் திருத்து சிவம்;
இயலோடு சென்ற தெதிர்வு முக் காலத் திலங்கு முதல்,
கயலோடுங் காவிரி மாயூர! முக்கணங் கண்ணுதலே.
(முக்கண் நம், அம் எனப்பிரிக்க கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்.)
11. நுதனேர் கிலாத பிறையை யரன்முடி நோக்கி உமை,
கதநேர்ந் ’திதுவென்ன காட்சி கொலோ' எனக் கால் பணிவோர்க்(கு) ,
இதநேர் 'வபயாம் பிகை! உன் பெயருணர்த் திற்’ றென இவ் ,
வித நேர் உரைவிளை யாடுமெம் மாயூர வித்தகனே.
(கதம் - கோபம்; நேர்ந்து -கொண்டு ; இதம்நேர்வு - நன்மைபயத்தல்.)
12. வித்தக மாய விழுப்பொருளே! பார் விளங்குமுயிர்
வித்தக மாய முதலே! வித் தில்லதோர் மென் முளையே!,
நத்தக மாதவ ஞானிகட் கென்றும் நலந்திகழும்
புத்தக மாம்புகழ் மாயூரநாத! உன் பொன்னடியே.
(வித்தகம் - ஞானம், வித்து அகம் - விதைக்கிடம்; நத்தக - நத்து அக , ந தக என இருவிதம் பிரிக்க; ந - சிறப்பு.)
13. பொன்னிப் புனலாற் புறமும் அகமும் பொருந்துபவர்
மன்னிப் புனித மலிந்தொளிர் மாயூர வள்ளலடி
துன்னிப் புனைக நும் சென்னியில் தொல்கடல் சூழ் புவியீர்!,
முன்னிப் பணிபலர்க் கீந்தது சித்தியும் முத்தியுமே.
14. முத்தம் புரையிள மூரல் மடவார் மொழிக்கிளகிச்
சித்தம் புரைபடச் செவ்வினை யின்றிச் சிறுவினையே
நித்தம் புரிவது நீத்துமா யூர நிமலனடிப்
புத்தம் புதுமணப் போதுமுப் போதிலும் போற்றுவமே.
(புரை - ஒத்த; புசை - குற்றம்)
15. போற்றிய மார்க்கண்ட மாதவப் பிள்ளைக்குப் போந்தருள்நீ,
ஆற்றிய மார்க்கம் அறிவேன்; அவன் யா னலனெனினும்,
தேற்றிய மார்க்கச் சிறப்பெனக் கீந்ததிற் சீர்பெறலாம்,
சாற்றிய மார்க்கத் தயங்குமா யூரத் தனிமுதலே !
(அம் - ஆர்க்க - அழகு நிறைய; இயம் - இசைக்கருவிகள்)
16. தனித்து விளங்கலெவ் வாறு மெய் ஆவியைச் சாரினல்லால்;
குனித்து வணங்கும் சிலைமலை மாயூரக் கோவினருள்,
இனித்து வயங்கு பால் தேனின் மிகுசுவைத்; திஃதவனே,
நுனித்து வழங்கினல் லாதுயிர்க் கேது நுவல் கதியே.
(குனித்து - குனித்தலால், எச்சத்திரிபு; நுனித்து- ஆய்ந்து)
17. கதிரவை மூன்றமை கண்ணுடை யாய்! மலர்க் கண்ணிடந்தே,
எதிரவைத் துன்னடி யேத்துமாற் காழி பண்டீந்தனை; சீர்,
முதிரவை; வேத முழங் குமா யூர முதல்வ! புன் தோல்,
உதிரவைப் பாமிவ் வுடற்பற் றொழிய உவந்தருளே.
(இடந்து - தோண்டி; அடிஎதிரவைத்து என்க. "மாலுக்குச் சக்கரமன்றளித்தான்'' திருப்பல்லாண்டு.)
18. வந்தர ரோடு முனிவரர் மொய்த்து வணங்குத லால்,
அந்தரம் வந்தும் அணுகவொ ணாநெருக் கால் மிளிரும்,
சுந்தர மாயூரத் தோன்ற லடித்துணை தோன்று மென்றும்,
'நந்தரம் யா? எலாம் நம்பன் தரம்' என நம்பிடினே.
(அரர்-- தேவர்; அந்தரம் - ஆகாயம்; வந்தும் - காற்றும்; தரம் - பக்குவம், வன்மை.)
19. பிடியாம் நடையு மலராங் கரமும் பிரான் கரத்துத்
துடியாம் இடையும் சுவண முகையாம் துணை நகிலும்,
கடியா மதியாம் முகமும் கயல்களாம் கண்ணுமிளிர்,
படியா வருமிடப் பாகமா யூரன் பதம்சதமே.
(கடி-புதுமை, அழகு, ஒளி, இன்பம் முதலாய பலபொருள் படும்; கடியாமதி - ராகு கேதுக்கள் தீண்டாமதியுமாம்; படி - உருவம், தன்மை .)
20. சதமுறு மாண்டிற் றகவில்பன் மக்களோ? சார் பதினா(று),
இதமுறு மாண்டிறு மைந்தனோ? கேளென், றிறைவினவ,
நிதமுறு மாதவன் பின்னதே கேட்க நிலவுமகன்,
சதமுறு மாயுள்பத் தாறுறல் மாயூரன் தண்ணளியே.
(சதம் - நூறு; இறும் - முடியும்; சதமுறு ஆயுள் பத்தாறு - என்றும் 16 வயது)
21. அளியேற்கு நீயலா தார்துணை? ஐய! நிற் காட் செயவோ,
எளியேற்கு மேலெத் துணையரோ உள்ளார்! எனக்கதுவென்?,
துளியேற்கு நெற் பயிர் வானிற் பிறிது துணை கொளுமோ?,
அளி யேற்கு நாண் மலர் வான் பொழில் மாயூரத் தாண்டவனே!
(அளியேன்-இறங்கத்தக்கேன்; அளி- வண்டு)
22. தாண்டவ! தில்லைத் தமனிய மன்றுளத் தரணியெலாம்,
ஆண்டவ! அங்க மனைத்தும் தலையென் பரவவணி,
பூண்டவ! காண்டகு மாயூர நாத! புகழ் பரந்து, நீண்டவ!
நீண்டவன் நேரயன் நேடொணா நீர்மையெனே?
(தமனியம் - பொன்; என்பு - எலும்பு; நேர் அயன் - (அவனை) ஒத்த பிரமன்; நேடு- தேடு.)
23. நீரார் சடைமுடி நின்மலன் பொன்வணன் நீடு கொன்றைத்,
தாரார் தடம்புயச் சங்கரன் தேவர் தழைக்கவிடக்,
காரார் அமுதுசெய் கருணா கரன் திருக் காவிரிசூழ்,
சீரார் நலமிகு மாயூர நாதனென் சிந்தையனே.
(விடக்கார் - கார் விடம் என்க)
24. தையலோர் கூறுடை மெய்யவ! வெய்ய தழ லுருவ!,
ஐய! லோபக் குணம் அங்கணர்க் கிங்கழ கன்று; அருள் நீ,
செய்யலோ அன்றித் திறம் பலோ அச்செயல் சேர்ந்ததுயான்,
உய்யலோ அன்றி உணங்கலோ மாயூரத் துத்தமனே.
(மெய் - உடல், உண்மை ; உணங்கல்- வாடல்)
25. உத்தம நற்றவ ருள்ளத் தொளியா ஒளிருபவன்;
மத்த மனத்தவர் காணா முதல்வன்; மயிலுருவிற்,
சித்த மகிழ்ந்து மை செய்பூசை ஏற்பவன்; செய்த்தலை வெண்,
நத்த மலியெழில் மாயூர நாதன்சீர் நாடுளமே.
(மத்தம்- மயக்கம்; மயிலுரு-தலவிசேடம் கூறியது)
26. உளவாய ஏவ லிடம் பொருளா மிவ் உரிமை யெலாம்,
களவாய தீநெறி காட்டுமெக் காலும்; கதிதரற்குத் ,
தளவாய புன்னகை தவழ் அஞ்சல் நாயகி சார்ந்துயிர் கட்(கு),
அளவாய நல்லருள் ஆற்றுமா யூரன் அடி துணையே.
(தளவு - முல்லை; அஞ்சல்நாயகி - அபயாம்பிகை )
27. துணையே யென இனிச் சொல்லுவ தாரைச்? சொலற் கமைந்த,
இணையே யிலாதாய்! இருள் சேர் வினைக்கடல் ஏறுதற்குப்,
புணையே யனையவ! பொன்வளர் மார்பனைப் பொற்சிலைக்குக்,
கணையே யெனக் கொண்ட மாயூர நாத! நீ கைவிடினே.
(பொன் - திருமகள்; பொற்சிலை - மேருவில்)
28. கைக்கின்ற வேம்பணிந் தாய்தீந் தமிழ்ப்பாண்டிக் காவலனா;,
மைக்கின்ற கையனை ஆங்கதுபோல வழிக்கொளுவாய்,
தைக்கின்ற பூங்கணை தாங் காது தையலர் தங்கரத்தே,
வைக்கின்ற கிள்ளை யைத் தூதாக்கு மாயூர வாழ்முதலே!
(மைக்கின்ற கையன் - பிழைபடும் சிறியேன்.)
29. முதலிடை யீறிலாப் பூரண! ஆரணம் முன்னறி யாய்!,
நுதலிடை வில்மின் னெனும் அஞ்சலையுற நோக்கி மகிழ்,
நுதலிடைக் கண்ணுடை மாயூர நாத! நுழைந்தொளிந்து,
புதலிடைப் புட்சிமிழ்க் குங்கடை யேனைப் புரந்தருளே.
(முன்னல் - நினைத்தல்; புதல்- புதர்; சிமிழ்த்தல்- - கட்டுதல்; 'புதல் மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த்தற்று' - திருக்குறள்.)
30. புரந்தர னான்முகன் மால்முதற் தேவர்தம் போக மெலாம்,
நிரந்தர மன்றுன அருள்தரு வீடே நிலைப்பொருளாம்,
தரந்தர மென்றுணர்ந் துன்னிரு தாமரைத் தாள்பரவ,
வரந்தர வேண்டுவன் மாயூரநாத! வலம் குறிததே.
(நிரந்தரம் - எப்போதும்; தரம்தரம் - அடுக்கு உறுதிபற்றி)
31. வலஞ்சுழி நல்லூர் வலிவலம் கோவல் மருகல் திரு
வலஞ்சுழி யல்மறைக் காடு கொடுமுடி வாழ்வு கப்பாய்!,
வலஞ்சுழி மாலயனிந் திரன்காணா மலரடியாய்!,
வலஞ்சுழி காவிரி மாயூர! வந்தருள் மாநிலத்தே .
(திருவலம் - ஒரு திருப்பதி ; அடைமொழியின்றி 9 தலப் பெயர் வந்துள; வலஞ்சுழி - வலம்புரிச்சங்கு; வலம்சுழி - நலம் செய்கின்ற; இக்கவி யமகம்)
32. தேனகு கொன்றை செறிசடைக் காட்டுச் சினந்துவிழும்,
வானகு கங்கை மறைத்தனை : தாட்கண் வணங்கிய வெண்,
கூனகு திங்களவ் வேணிமுன் கூட்டிக் குலவவைத்தாய்;
மீனகு காவிரி மாயூர நாத! விழுமிதிதே.
(நகு - விளங்கு)
33. விழுவார் எழுவார் விரிகரம் கூப்புவார் மெய் யன்பினால்,
தொழுவார் துதிப்பார் துதிப்பார் பெரும்புகழ் சொல்லிநை வார் ,
அழுவார் சிரிப்பார்எம் மாயூர நாதன் அடித் தொழும்பர்;
வழுவார் மனமே! அவரடித் தொண்டே மருவுகவே.
(வழு ஆர் - குற்றம் நிறைந்த)
34. உகரக் குறுக்கம் உயிர்முன் வரின் மெய்விட் டோடுதல் போல்,
மகரக் கருவிழி யார்பொன் புவிமயல் மாய்வுறுமால்,
சிகரக் கயிலைச் சிலம்பன் மாயூரத் திருவமிகு,
நகரக் கனக்கன் நம் நம்பன் அருள்முனே நண்ணிடினே.
(உயிர் வரினுக்குறள் மெய்விட்டோடும்' - நன்னூல். மகரம் - மீன்; நகர் அக்கன் நக்கன் என்க; அக்கன் என்பும் உருத்தி ராக்கமும் அணிபவன்; நக்கன் - நிருவாணியாகிய சிவன்)
35. இடியாற் ற ளரும் அரவெனத் தீவினை யீண் டுடற்றும்,
படியாற் றமியனேன் பாடு பட் டெய்த்தேன்; பரிந்தடியார்,
முடியாற் றரை மிசை முன்பணிந் தேத்து முழக்கொடுவெண்
பொடியாற் றிகழ்வுறு மாயூர நாத! புரந்தருளே.
(உடற்றும் - வருத்தும்; வெண்பொடி - திருநீறு)
36. தருவைந்து காமனும் மாமனும் பூமனும் சாற் றரியாய்!,
உருவைந்து பூதமும் பேதமுந் தானாம் ஒருமுதல்வா!,
மருவைந்து மாமுகா! மாயூர நாதா! வழுத்திடற்குன்,
திருவைந்து தெய்வ எழுத்து மென் சிந்தையும் சேர்த்தருளே.
(கா - கற்பகச் சோலை; மன் - அரசன்; மா - திருமகள், பெரிய)
37. உள்ளுவார் உள்ளத்து ளூறித்தித் திக்கும் உயர் மதுவே!,
நள்ளுவார் அந்தமில் வீடுறுக் குந்தனி நாயகமே!,
எள்ளுவார் உண்டெனை ஏழைமை கண்டு; நீ இன்றெவரே,
கொள்ளுவார் மாயூரத் தேழைபங் காள! குவலயத்தே.
(நள்ளுவார் - நட்புடையவர்; உறுக்கும் - சேர்ப்பிக்கும்; இன்றி என்னும் வினையெச்சம் செய்யுளில் இன்று என வந்தது)
38. அத்தி யுணும்விள வின்கனி யென்ன அரு வினையின்,
சத்தி முழுதும் தனி முதல் சங்கரன் தண்ணருளாம்,
சித்தி விழுங்கும் திறமுணர்ந் தேம்; இனிச் சென்னியிற் பூந்,
தொத்தி லகும் பொழில் மாயூரன் றாண்மலர் சூடுவமே.
(அத்தி - யானை; யானை உண்ட விளாம்பழம் - ஒரு பழமொழி, சென்னி -தலை; தொத்து - கொத்து.)
39. உவமன்னுறாத உயர்பொரு ளென்பர்; உளத்தரிய
தவமன் னுவோர்சார் தனிப்பொரு ளென்பர்; மெய்ச் சத்தியொடு,
சிவமன்னு செம்பொரு ளென்பர்; அருட்சீர் திளைப்பவர்தாம்,
நவமன்னு பொற்புடைப் பொன்னிசூழ் மாயூர நாதனையே.
(மன்னு- நிலைத்த; நவம் - புதுமை)
40. தனையனை வேண்டுவர் பற்பலர் நாளும் ; தகு நலம் சார்,
மனையனை ஆதிய வாழ்வினை வேண்டுவர்; வண்புகழும்,
பனையனை செல்வமும் வேண்டுவர்; அந்தோ! பவப்பிணியாம்,
வினை யனைத் தும்கெட மாயூர வள்ளலை வேண்டலரே.
(அனைய செல்வம் - அனை செல்வம் எனச் செய்யுள் விகாரம்)
41 அலருண் டருச்சிக்க ; நீருண் டரர்க்காட்ட; அன்பு செய்தார்,
பலருண் டடி பற்ற; நாடிப் பயிலவும் பக்குவமார்,
நலருண்டு; நா ளுமுண் டின்னவை நாடி நயப்பவர்க்கு,
மலருண்டு வண்டு கொண் டாடுமா யூரன் மனத்தருளே.
(அடிபற்ற - வழிச்செல்ல; நலர் - நல்லவர்கள்)
42 அருவா யினை யென ஆரண மோர்பால் அறையு மன்றி,
உருவா யினவெலா முன்னுரு வென்றும் உரைசெயும்; இவ்,
இருவா தமுமிசை மாயூர நாத! எளியனினிக்,
கருவா தனையே கதுவா வணம்நீ கடைக்கணியே.
43. கடைபோகு மட்டுங் கடையனைக் காக்கக் கருணைவைப்பாய்,
இடை போக வீட்டிடேல்; காவிரியாற்றி னிடைத் தருக்கும்,
விடைபோகவிட்ட விமலா! வளை நெல் விளைபுலத்து,
மடைபோக விட்ட நீர் தேங்கமழ் மாயூரம் வாழ்பரனே!
(விடை - (வாகன மான்) காளை; ஆற்றிடை விட்டது - தலக் குறிப்பு; புலத்தில் வளைபோகவிட்ட மடை என்க. வளை - சங்கு)
44. பராபர மான பழம்பொரு ளே!புதுப் பான்மை யனே!
தராதலத் தேரும் மறைமாவு மாலாம் சரமுமலைப்,
புராதன வில்லும் இருக்கச் சிரித்துப் புரமெரித்தாய் !
நிராதர வாயெனை நீவிடேல் மாயூர நித்தியனே!
45. தியக்கந் தர எனக் கைவர் அகப்பகை; செல்வ மண்பெண்,
முயக்கந் தரவரு மூவர் புறப்பகை ; மூண்டு நின்றார்;
உயக்கண் டருளற்கு மாயூர நாத! உனதருளின்,
இயக்கந் துணையலால் ஏதுந் துணையிலேன் ஏழையனே.
(ஐவர் - ஐம்பொறிகள்; முயக்கம் - சேர்க்கை )
46 அநேகம் பிழைகளே யான் செய் கினும் அப
யாம்பிகை சேர், மனோகர! நீபொறுத் தாள்க;மா யூர வரத! இப்பார்,
சினேகனாம் சுந்தரற் காற்றும் பொறையும் சிறுமதிசேர் ,
தனேசனை நேசனாக் கொண்டருள் சீருந் தெரிந்ததன்றே.
(தனேசன் - குபேரன்; பார்- தெரிந்தது என்க)
47. தன்றேகம் பாதி யுமையாட் களித்தருள் தண் கருணைக்,
குன்றே! குணக்கடலே! எந்தநாளிலும் குன்றகிலா,
நன்றே ! வளம்செறி மாயூர நம்பா! நணுகுமெனை,
இன்றே யடிமைகொண் டீடேற்ற வேண்டும் இறையவனே!
(குன் றகிலா - குறையாத; நன்று- பெயர்ச்சொல்)
48. இறையவன் காண்; அண்டமெங்கு மிறைவெற் றிடமுமின்றி,
நிறையவன்காண்; நீற் றொளியவன் காண்; சீர் நிலவுமறைத்,
துறையவன் காண் ; உல குய்யநஞ் சுண்டு துலங்கு கண்டக்,
கறையவன் காண்கதி; காட்டுமா யூரக் கடவுளனே.
(இறை-தலைவன்; இறை - சிறிதும்; கறை - கறுப்பு.)
49. கடவூர் துருத்தி வழுவூர்பூங் காமனைக் காய் குறுக்கை;
திடவூர் இவற்றி னடுவே திகழ்ந்து திருமகளின்,
நடவூர் என மிளிர் மாயூர நாதன் நகுபுரம் பாழ்,
படவூர் புவித்தேர்ப் பரமன் பதச்சீர் பரவுவமே.
(துருத்தி - குற்றாலம்; திடவூர் - திடமான ஊர்கள்; நடவூர்--நடனமிடும் ஊர்; ஊர் - நடத்தும்.)
50. பரவத் தகுவது யாரும் பகராப் பனுவல்மறை;
கரவத்தகுவது காமாதிகுற்றம்; களைந்து மெய்யே
விரவத் தகுவது வெண்ணீறு கண்மணி; வேண்டி நெஞ்சிற் ,
புரவத் தகுவது மாயூர நாதன் தன் பொன்னடியே.
(காவ- மறைய; கண்மணி - உருத்திராக்கம்; புரவ- காக்க)
51. அடியே நெடுமால் புவிகீண்டுங் காணான்; அயன் பறந்தும்,
முடியே உயர்விண் முடியிலும் காணான்; முழுவுருவம்.
படியே வருதொண்டர் பார்க்க நின் றாய்; நின் பரிவிருந்த,
படியே யிது ; படி யில்லாத மாயூரப் பண்ணவனே.
(படி - பூமி ; படி - தன்மை , படி - ஒப்பு, பிரதி )
52. பண்ணும் பரதமு மார்தரும் உம்பர் பதிவிழை யேன் ,
எண்ணும் எழுத்தும் எனும் துறை ஆய்வும் இனியமையும்;
கண்ணும் கருத்துமுன் சேவடி. காணக் கருதுகண்டாய்;
விண்ணும் புவியும் விளங்கத் தென் மாயூர் மேயவனே!
(தென் மாயூரம் - வடக்கே மயிலாப்பூர் இருத்தல் பற்றி; தென் - அழகுமாம்)
53. மேயவன் வேடென முன்னாள் விசயன் வெகுண் டெதிர்ப்ப,
ஆயவன் போர்புரிந் தன்னார்க்கு வில்லோ டருளுதவும்,
மாயவன்; மாயவன் வேத னறியா மலர்முடித்தாள் (த்),
தூயவன்; மாயூரன் பாதார விந்தம் தொழுதுய்வமே..
(எதிர்ப்ப மேயவன் என்க; மாயவன் - வேடதாரி.)
54. துய்ப்பிவை கைப்பன் என்னும் ; பனிநீர் துதைந்த சந்தம்,
அப்பிடின் ஆ! ஆ! அனற் குழம் பென்னும்; அணிமதியம்,
வெப்பினில் நண்பக லோனெனும் இப்படி வேறுபடச்,
செப்பிடும் என் மகள் மாயூரன் தந்தமால் சேர்ந்தபினே.
(அகப்பொருள் துறையில் அமைந்தது; தாய் கூறுவது. மகள் - உயிராகவும், மயூரநாதன் தலைவனாகவும், நாயகி நாயகத்தன்மை காண்க. பிற கவிகளும் இவ்வாறே. மால்- மயக்கம்.)
55. சேருந் துதிநா வாரமுன் நால்வர் செயுமிசைத்தார்
ஆருந் தனிமுதற்றே வாகிவந்த அரும்பொருளைப்
பாரும் விசும்பும் காற்று நீர் தீயுமப் பாலுமெனத்
தேரும் பிரானெனும் மாயூர நாதனைச் சிந்திப்பமே.
(இசைத்தார் ஆரும் - பாமாலைசூடிய.)
56. சிந்திப் புறத்தெம தீமை யொழிப்பன; சீர்பரவி
வந்திப் பவர்க்குநல் வாழ்வை யளிப்பன், வந்து சந்தி
சந்திப்பி னொப்பிலாச் சாயுச்சியமும் தருவன; நாள்
அந்திப் புதுமலர் மாயூர நாதன் அடியிணையே.
(எம - எம்முடைய, யமனுடையவுமாம்.)
57. அடிப்படை யாஅகி லாண்டங்கள் ஆட்டுவ; ஆட்டியன்பர்
படிப்படியா உயர் பக்குவ மூட்டுவ; பார்த்துறுதி
கடைப்பிடிப் பார்க்குக் கதிநலம் காட்டுவ; கள்ளமனத்
தடிப்புடை யார்தமை வாட்டு மாயூரன் தாள்மரையே,
(மரை - தாமரை.)
58. தாமரை மாதரை யாவுருக் காட்டு; தண்கடுக்கைத்
தாமரை அன்பர்முன் நாட்டுவ; அன்னார் தளிர்க்கு மனத்
தாமரை யுட்கலைத் தேன் ஈட்டுவ; கரம் சாருமழுத்
தாமரை கூட்டுவ; மாயூர நாதன் பொற்றாளிணையே.
(தாமரை - மாலையுடையவரை; தாம்மரை தாவும்மான். இது யமகக்கவி.)
59. இணையும் எடுப்பு மிலா இன்ப மூட்டுவ; ஈண்டியெதிர்த்(து)
அணையும் பகைவர் அடுதிறல் வீட்டுவ; ஆர்த்துநமைப்
பிணையும் பிணிகடித் தோட்டுவ; சென்மப் பெருங்கடற்குப்
புணையும் பின் நீட்டுவ மாயூர வள்ளலார் பொன்னடியே.
60. பொன்னாளு மார்புசார் மால்கண் பொருந்துவ; போற்றடியார்
எந்நாளு மானாத இன்பம் அருந்துவ; எவ்விடத்தும்
கொன்னாளு நாத்திக வெம்மை வருந்துவ; கொம்பிடப்பால்
தன்னாளு மாயூர நாதன் மலர்த்தாள் தருநிழலே.
(ஆனாத - நீங்காத; கொன்- பயனின்மை ; கொம்பு- அம்பிகை.)
61. தருவன மைந்திடைத் தேவர் கோனாக்கும்; சரணடையின்
வருவன தீவினை போக்கும்; வினையின் வரம்பிகந்த
பெருவன மூக்கும்; பரம்பொருள் சேர்க்கும் பிறக்குதுறை
உருவன மார்க்கும் மாயூர வள்ளல் உயர்பதமே.
(தரு - கற்பகம்; வனம் - அழகு; உருவு அனம் அன்னம் என்க. இக்கவி திரிபு)
62 பதமாம் பொருளென நான்மறை பேசும் பராபர’ பல்
விதமா வழிபட வெவ்வே றுருவம் விளங்க எங்கும்
இதமா உறைந்தருள் வள்ளால்! எள்ளாதின் றெனக்கு வந்து
சதமாம் அருட்கதி மாயூர நாத! தருகுவையே.
(எள்ளாது - பரிகசிக்காமல் )
63. குவையாம் பொருள்நனி கூட்டும் வழி இக் குவலயத்தே
எவையாம் எனக்கவன் றேங்கி நைந்தேன்; என தேழைமை என் ?
அவையாம் சுமையென் றறிவித் தெனக்குநின் அந்தமில் சீர்ச்
சுவையாம் அடிக்கன்பு தந்தருள் மாயூரத் தொல்பொருளே.
(குவை - குவியல்; கவன்று - கவலைப்பட்டு.)
64. பொருநீர்மை வேற்கணார் பூண்முலைப் போகம் புணர்மதியீர்!
வருநீர்மை வாழ்வு மதியீர்; புனித மருவுகங்கைத்
திருநீர் துலாமதி யிற்பிற தூநீர் திகழுபொன்னி
தருநீர் படிந்துளம் சார்வீர் மாயூரன்பூந் தாள்தனையே.
(மை - கண்மை , குற்றம்; நீர்மதியீர் சார்வீர் என்க )
65. தனஞ்சயன் தன் னுடனாற்றிய மற்போர் தகவுகந்தே
கனஞ்செயும் பாசு பதமீந் தனைமுன் மார்க் கண்டனுக்குச்
சினஞ்செயும் கூற்றம் குமைத்தாய்! எம் வல்வினை தீர்த்தரு
மனஞ்செய வேண்டுவம் மாண்புறு மாயூர வானவனே!
66. அவனே இவனே அலனே உளனே என் றாரணங்கள்
அவமே உழன்றும் அறியா திளைக்கும் அரும்பொருளாம்
சிவமே! கருணையின் நஞ்சமுதாக்கும் செயலிலென்றன்
தவநேர் புரையுளம் எற்க மாயூர நாதா! இனிதே.
(தவ - மிக; புரைதவநேருௗம் - பிழைமிகச் செய்மனம்.)
67. நாதாந்த மான நலமென்பர்; நாளுநன் னாட்டமுறு
வேதாந்த மேவு விளக்கென்பர்; சிந்தையுள் மேவிமிளிர்
போதாந்த மாகும் பொருளென்பர் அன்பர்; புனித!உனை
யாதாந் தகுதியின் ஏத்துவேன்? மாயூரத் தீச்சுரனே!
68. தீச்சுர வெஞ்சுறா இல்லாமை யாம்கராச் சேர்த்தலைப்ப
மூச்சுறு சூக்குமக் காற்றாடு வாழ்வாம் முதுகடலில்
ஏச்சுறு மாறுழ லாதின்ப நற்கரை யேறுதற்குக்
காச்சுரும் பார்வள மாயூர நாதன் கழல்துணையே.
(கரா- முதலை; காச்சுரும்பு- சோலைவண்டு.)
69. கழலும் இருவினைக் கட்டுமுன் னோய்ந்து; கழலவினை
சுழலும் சுவர்க்க நரகா னுபவத் தொடக்கழியும்;
உழலும் பிறவி யொழிந்திடும்; பேரின்ப ஊற்றும் அருள்
நிழலும் நிலைக்கும்;நம் மாயூரன் பாதம் நினைப்பவர்க்கே.
70. பவர்க்கத்து ளீகாரம் பட்ட வீயென்னப் பவமுழன்றே
கவர்க்கத்து ரூகார வாழ்விற் கடையேன் களித்தலின்றித்
தவர்க்கத்து ளாகாரம் நின்னருள் நண்ணருந் தண்ணறஞ்சார்
கவர்க்கத்து ளாகாரம் வேரிசூழ் மாயூரக் கண்ணுதலே!
(பகர ஈகாரம்-இடக்கர்; ஈ யென்றும், வீ என்றும் பிரிக்க. வீ - பூ; ககர ஊ,
கூ-பூமி; தகர ஆ-தா; அருள் தா என இயைக்க; ககர ஆ-கா; காவேரி சூழ் என்க.)
71 கண்ணுறு மூன்றாம் கனியே! கழுத்திற் கருமணியே!
பெண்ணுறு கூறாப் பிறங்கமுதே! யெனப் பேசிநின்றன்
விண்ணுறு சீர்த்தி விரித்த லலாதுவின் மேலுலகம்
நண்ணுறு மென்னினும் வேண்டேன் மாயூர நகரவனே!
72. நகர்வரு மாந்தர்தம் நாகரி கத்தர் நலமுயல்வும்
பகர்வரு சிற்றூர் பயிலுநர் வம்பும் அப் பாற்படுத்து
நிகர்வற நாடு நகரெங்கு முற்றஉன் நீள்கருணை
நுகர்வுற வைத்தெமை ஆண்டருள் மாயூர நுண்மையனே!
(பகர்வரு வம்பு, நிகர்வுற உற்ற என்க.)
73. மைவைத்த கண்டனே! மான்மழுக் கையனே ! வாமமங்கை,
மெய்வைத்த மெய்யனே! விண்ணவர் துய்யனே! மிக்கருளால்,
பொய்வைத்த இவ் வாழ்வு போக்கியுன் பொற்றாள் புகலளிப்பாய்,
செய்வைத்த நீள்வள மாயூர நாத! எம் சிந்தையனே! !
(அருளால் போக்கி என்க)
74. சிந்திக்க நெஞ்சம் திருவருள்; வான்புகழ் செப்புக வாய்,
வந்திக்க அங்கம் நம் மாயூர வள்ளலை மன் பதையீர்!
நிந்திக்க லாம்வினைப் பந்திக் கலாம்;முந்தி நீண்ட இன்பம்,
சந்திக்க லாம்;பிந்தி முத்தியுந் துய்க்கலாம்; சத்தியமே.
(மன்பதையீர் - மக்களே; பந்திக் கலாம்-கூட்டக்கலகம்)
75. சத்திக் கிடப்புறந் தந்தமாயூரத் தலைவன்; அடற்
சத்திக் கரத்துக் குமரவேள் தாதை ; பார் தந் தளிக்கும்,
சத்திக் கயன்மாலிராக்கும் முதல்வன் ; சதுர்மறையின்,
சத்திக் குறுஞ்சாறு ; தித்திக்கும் செம்பொருள் சார்உளமே!
(சத்தி- அம்பிகை, வேல், பலம்; சத்து இக்கின் எனப்பிரிக்க ; இக்கு - கரும்பு; இக்கவி - யமகம்.)
76. உளமே புவிக்கு பொறையாக; அந்தோ! உயிர் சுமந்து,
களமே புரிந்து நா ளவமே கழித் தென்ன காட்சிகண்டோர்?,
உளமே ! இனியா கிலுமிவ் வுலகெலாம் உய்ய நஞ்சு,
களமேவு கண்டனை மாயூர நாதனைக் கண்டுய்வமே.
(பொறையாக உ(ள்)ளமே; களமே - கள்ளமே)
77. கண்ணகல் ஞாலத் தனியரசாட்சியும் காவினிழல்
விண்ணர சாளும் புரந்தரன் மாட்சியும் மெய்யி னுன் பால்,
திண்ணக அன்பினர் சீயென நீத்திகழ் செத்தையன்றோ?,
வண்ணகர் யாதும் இணையிலா மாயூரம் வாழ்பவனே!
(மெய்யின் - உண்மையாக ; திண் அகம் - பலத்த மனம்)
78. பவநேர் பிணிக்கு மருந்தாம் ; மலைவிலாப் பண் புடையார்,
தவநேர் செயலுக்கருளாம்; கருளாம் சகமயற்கா,
தவனேர் ஒளியாம் ; அடியார்க் கொளியாது தாம்விடைமேல்,
புவனேச் சுரியொடு. தோன்றுமா யூரப் பொருவிலியே.
(நேர் - தரும், நேர்மை ; ஆதவன் - சூரியன்)
79. வில்லாகு மேரு மலை சீர் குலைய விடுகணையாம்
அல்லாகு மேனித் திருமாலுறங்க அவைகுறித்தோ
அல்லார் புரத்தின் அரணெள்ளி யோபண் டரும்பியதும்,
எல்லார் முகமலர் மாயூர நாத! இள்நகையே
(அல் - கருமை; அல்லார் - பகைவர்; எல் - ஒளி)
80. இளை யானை ஆருரிற் றூதா இருகால் இளைத்தவனை
முளையானை முன்பறு பத்துமூ வர்முன் முளைத் தவனை,
வளை யானைத் தென்பன சைப்பூசைப் பெண்முன் வளைந்தவனை,
விளையானைத் தோலானை மாயூரத் தோற்றனை மேவுகவே.
(இருகால் - இருமுறை, இருதாளுமாம்; பனசை - திருப்பனந்தாள்; இங்குச் சிவபூசை செய்பெண், தன் ஆடை குலைதலால் உடல்குனிய, சிவபெருமான் தனது திருமேனியை வளைந்து கொடுத்தனன். இவ்வளைவு குங்கிலியக் கலைய நாயனாரால் நிமிர்ந்தது. விளை-வளர்ந்த; தோற்றன்-தோற்றவன் என்பது தொனி)
81. உகந்துமுன் சம்பந்தப் பிள்ளைக்கு ஞான உணர் வளித்தாய்,
சுகந்தவிர் அப்பர்க்குச் சூலைதந் தாண்டனை; சுந்தரர்க்குச்,
சகந்தனி லோர்மன்றல் தாக்கி யிரண்டு பின் தானளித்தாய்,
திகந்தம் புனையு மாயூரா அழகிதுன் சீரருளே.
(திகந்தம் - திசைகளின் முடிவு; இதனை ஆடையாப் புனைந்த; எல்லாத் திக்கும் போற்றும் எனவுமாம்)
82. அருவமென் றோர்பால் அறையும் மறை; அவ் வருமறையே,
உருவமென் றோதும் பிறிதொரு பால்; அவ் உயர்மறைபின்,
உருவரு வென்றுமற் றோர் பால் உரைக்கும்; இவ் உண்மையுள் நின்
பெருவளந் தேருவ தென்னோ ? மாயூர! இப் பேதையனே.
83. பேதை மருள, மாயூரப் பெதும்பை பெயராமனம்,
போதை யுறமங்கை, நைந்து மடந்தை புழுங்க, வரை,
மாதை அரிவை வெகுளத், தெரிவை வசமழிய,
வாதை யுறப்பேரிளம்பெண் இறை யுலா வந்தனனே.
(இறைவன் உலாவர ஏழுபருவ மங்கையரும் காமுற்று வருந்தினர் என்பது; போதை-மயக்கம்)
84. வந்தனை மார்தம் வயிற்றிற் பிறந்து வழிவழியே
நிந்தனை யாகு மண் பெண் பொன் எனுமயல் நீங்கியுய்யச்,
சிந் தனை ஓர்ந்து செய் நெஞ்சே! துலாமதி சேர்ந்தடியார்,
வந்தனை யாற்படி காவிரி மாயூர வள்ளலையே.
(வந்தனையால்-வணக்கத்துடன். இக்கவி திரிபு)
85. வள்ளி மணாளனு மாமுகச் செல்வனும் வந்து தழீஇக்
கொள்ளும் பிதா ; ஒரு மாதா பிதாவும் குறிக்கவொணாக்,
கள்ள முதல்வன்; பூங் காவிரி வண்கரைக் காவிரி நீர்,
வெள்ளந் தவழுமா யூரப் பிரான் எம் விழுத்துணையே.
(தழீஇ-தழுவி, சொல்லளபெடை; விழு--சிறப்பு)
86. விழுவள் எழுவள் வியர்ப்பள் மெலிவள் விதிர் விதிர்ப்பாள்,
அழுவள் அயர்ப்பாள் அழுங்குவள் நின்னெழி லார்வதனம்,
தொழுவள் இவ் வண்ண மென் பெண்ணமு துற்ற துயர் வணங்காண் ,
கொழுவன் கொம் புய்வணம் நீயே மாயூர! இக் கொடியினுக்கே.
(தாய் மகள் துயர் கூறல் என்னுந் துறை )
87. கொடிய கிராதக் குலத்தவன் அன்பூன் கொடுத்தலும் அக்,
குடியிற் கனிவிழை மைந்தன் குகன் போற் குறித்தனை ; இப்
படியிலடியேன் படிறா யின அப் படிகுணித்துன்,
அடியின் நிழலே அருள்கமா யூரத் தருமுதலே!
(கனி - கன்னி; படியில்- புவியில்; படிறு - குற்றம்.)
88. அருந்தா அமுதே! அணியே! அளியே! அருட் கடலே! ,
விருந்தே! விளைவே! விழியே! விளக்கே! வினை தவிர்க்கும்,
மருந்தே! மணியே! என உருகும் மணி வாசகர்க்கும்,
குருந்தே யமர்ந்த குருமணி மாயூரக் கொற்றவனே.
(உருகும்மணி- விரித்தல்; குருந்து- குருந்தமரம்.)
89. கொற்ற மழுக்கொடு தாதைதாள் செற்றுக் கொடுமைபுரி,
நற்றவச் சேய்ஞலூர்ப் பிள்ளைக்கு நாயகம் நல்கினை யால்,
சொற்ற அவ் வாறெனை யாளுதல் குற்றமோ? சொற்றிகழ் நீ;
குற்றம் குணமெலா மல்லையோ? மாயூரக் கோமகனே!
(சேய்ஞலூர்ப்பிள்ளை - சண்டேசர்; சொல் - புகழ் )
90. மகவான் அயன் மால் வழுத்து முதலான்; மய லறுக்கும்,
பகவான்; பகுவாய்ப் புலியதளான்; செழும் பத்தருளம்,
புகுவான்;புகுந்து பேரின்பம் புணர்ப்பான் புகலெவர்க்கும்,
மிகுவான் புனற்கா விரிசூழு மாயூர வித்தகனே
(பகு - பிளந்த; அதள் - தோல்; எவர்க்கும் புகல் என்க.)
91. அகப்பொருள் ஆகுவ தன்பே சிவமுமவ் அன்பும் ஒன்றே,
சகப்பொருள் தேடி யலைவீர்! இது நனி தேர்கவென்றே,
தகப்பொருள் நூ லெமக் கன்பு தலைப்பெய்து சாற்றினை நீ,
மிகப்பொருள் வேறிலா மாயூர நாத!நல் வித்தகனே!
(நூல்- இறையனார் அகப்பொருள்; அன்புதலைப் பெய்து - "அன்பினைந்திணை'' எனத் தொடங்கி; நூல் சாற்றினை என்க.)
92. வித்துக்கு வித்தாத் தொடர் ஆதிமூல விதைப் பொருளே!,
எத்திக்குத் தோன்றும் புதுமை யெலாம் சார்ந்தியக் குவிப்பாய்!,
மத்துக் குடையுந் தயிர்போற் கலையென் மதியுனடி,
வைத்துப் புரந் தருள் மாயூர நாத! மதிதரனே!
93. தரக்கொன்றை மாலை நம் மாயூர வள்ளல் பால் சார்ந்திரந்து,
தரக்கொண்டு வாரும் சகிகாள்! அவரது தந்திலரேல்,
உருக்கன்றிக் காமநோய்ப் பட்டுழன்றின்றே உயிரழியும்,
பரக்கின்ற பெண் பழி பூண்பீர் என நீர் பகர்மின்களே.
(மாலை வேண்டல் என்னும் அகப்பொருள் துறை )
94. மின்னும் முகிலும் முளரியும் மீனும் விளங்கிழை யார்,
துன்னும் இடையைம் பால் முகம் கண் ணெனச் சொல்லி நயம்,
தன்னைப் புகழ்ந்ததமை யும் அமையும்; தயாபரனாம்,
உன்னைப் புகழ் மதியருள் மாயூர உண்மையனே.
(ஐம்பால் - கூந்தல்; உச்சிமுடி, சுருட்டுமுடி, தொங்கல்,
சொருகல், பின்னல் என்னும் ஐந்து பாகுபாடு உடையது)
95. மையாருங் கண் மலை மாதொரு பாதியை வந்தருனை,
மெய்யாரும் சோதியை அப்பர்க்குக் கைலை விளக்கமருள்,
ஐயாற்று நீதியை ஆன்றவர் பூதியை அன்பரிரு ,
கையாற் றொழுதுய்யு மாயூர ஆதியைக் கண்டுய்வமே.
96. கண்மேவு மூன்றுடைக் கன்னல்; இரண்டு கழல் பணிவார்க்(கு),
எண்மேவு தன்னுட னொன்றாம் பதமருள் இன்ப வைப்புப்;
பண்மேவு நான்மறை தேர்முடிவு ; ஐந்தாப் பகரெழுத்தின்,
கண்மேவு செம்பொருள் கண்டோம்மா யூரக் கடிநகர்க்கே,
(ஒன்றுமுதல் 5 எண்கள் காண்க. கன்னல் - கரும்பு, கண் - கணுவுமாம்; எண்- எண்ணம்)
97. நகைசார் புரமூன் றெரித்தாய்; நுதலின் நடுவிழி யால்,
மிகைசார் மதனனைக் காய்ந்தாய்; தென் கூடலில் மேவமணப் ,
பகைசார் மடம்சுட் டழித் தாய்; பரம ! எம் பாழ்வினையின்,
தொகைசார் கனல்மடுத் தாள்க மாயூரச் சுடர்க்கொழுந்தே!
(கூடல் - மதுரை ; திரிபுரம், மன்மதன், அமணர் மடம் இவை களை எரித்தாங்கு எம் வினைத்தொகுதியையும் எரித்தருள் என்றபடி)
98. கொழுந்தே னுயர்கொம்பி னின்றோர் முடவன் குறிப்பிலன்கை ,
விழுந்தாலென இவ் வறிவு முடம்படு வீணனுக்குச்,
செழுந்தா மரையனும் கட்டா மரையனும் தேவர்களும்,
தொழுந்தாளுடையமா யூரன் தரிசனம் துன்றியதே.
(தேன் கையில் விழுந்தாலென என்க. கண் தாமரையன் - தாமரைக் கண்ணன்.)
99. துன்னல னாகியுன் கைலை துளக்கும் துகளனுக்கும்,
இன்னருள் ஈந்தனை; ஏய்ந்த அன் புன் பால் இலேனெனினும்,
நின்னிரு தாட்குப் பிழை நினைந் தாற்றிலேன்; நீத! எங்கும்,
மன்னரு சீர்திகழ் மாயூர நாத கண் பார்த்தருளே.
(துன்னலன் - பகைவன்; துகளன் - குற்றவாளி)
100. சோர்வந்து மைக்குயில் வாயடைப் பப்பைத் தோகைமயில்,
ஆர்வந் தழைத்திடக் கார்வந் ததுகாண் ; அகநிறைந்த,
நாருந்த நம்மிடை நேர் வந்து மாயூர நாதன் மணித்,
தேருந்தி முந்துறும் தீருந் துயரம் செழுந்திருவே!
(கார்ப்பருவம் வந்தமை கூறிய அகப்பொருள் துறை; கார்காலத்தில் தலைவன் தேரில் திரும்புவன் என்பது கருத்து. சோர் வந்து -சோர்ந்து, நார் - அன்பு, உந்தி - தூண்டி. திருவே என்பது முதற்கவியில் திருவும் என்னும் முதற்சொல்லொடு அந்தாதியாகிற்று. அருள் விரைவில் வரும் சுபமுடிபு.)
மாயூரநாதர் திருவடிகளே சரணம்.
மாயூரநாதரந்தாதி முற்றுப்பெற்றது.
-------------
மாயூரத் தலத்தில் ஸ்ரீ மாயூரநாதர் இடப்பாகத்தில்
இனிது மகிழ்ந்துறையும் ஸ்ரீ அபயாம்பிகையார் துதிப்பாக்கள்.
நேரிசை வெண்பா
1. காவுலவு மஞ்ஞையுருக் காட்டிமா யூரனை நாம்
பூவுலகில் ஈடேறப் போற்றிசெயும்-தேவி
அபயாம்பிகையே! அடியேற் கருள்வாய்
உபயாம் புஜத்தாள் உவந்து.
கலிநிலைத்துறை.
2. தஞ்சம் சார்பவர் தமக்கருள் தயைபொறை சாந்தம்
எஞ்ச லில்கவின் இன்பமா யூரமிக் கிலங்க
அஞ்சொல் நாயகி அரவிந்தை அகமகிழ்ந் தணியும்
அஞ்சல் நாயகி அடிமலர் முடிமிசை அணியாம்.
அறுசீர் விருத்தம்.
3. பவவா தனையே யிதுகாறும் பட்டுப் பட்டுப் பாழ்வினையேன்
அவமே யுழன்ற இது அமையும் அமையும் அமையும் இனி ஆற்றேன்,
சிவஞா னம்சேவ செல்வவளம் திகழ் மாயூரப் பதி மிளிரும்,
அவயாம்பிகை! உன் உபயபதம் அபயம் அபயம் அபயமே.
௸ - வேறு.
4. மாயூர வளநகர்க்கண் வயங்கபயாம் பிகையே! மெய்ம்மறந்து நாயேன்,
வாயார உனதுபுகழ் வழுத்தச்செய்; வேறெதுவும் வழுத்தாமற் செய்;
ஓயாதுன் னிசை காதி லுறுமா செய்; பிற அதனுள் உறாமல் நீ செய்;
தாயே! உன் உருக்காணச் செய்; பிறகா ணாவாறும் தயைசெய் வாயே.
--------
1. உபய அம்புஜம் - இருதாமரை. 2. கவின் அழகு; சொல் நாயகி - நாமகள்; அரவிந்தை - பூமகள்; அஞ்சல்நாயகி - அபயநாயகி. 3. வாதனை - துன்பம், வாசனை; அவமே-. வீணே. 4. இசை புகழ், கீதம்.
------------
பொன்னியாற்றின் போற்றிச் சிலேடைப் பதிகம்.
சிவபிரானுக்கும் காவிரிக்கும் சிலேடை
1. மாவுற வாட்ட லானும் மதிதலைக் காட்ட லானும்
தேவுறு கொன்றை யானும் திளைக்க இன் பொன்ற லானும்
ஒவற ஒளிர்தா லானு உயர்கங்கை மிளிர்த லானும்
தவறு சிவனாம் பொன்னித் தண்புனல்த் தகவு போற்றி
பார்வதிக்கும் காவிரிக்கும்
2. கிரியிடைப் பிறப்பால் நாளும் கிளர் கயற் கண்ணால் அன்பால்
தரையிடை உயிர்கள் தாங்கும் தண்ணிய நீரால் யாண்டும் போற்றி
பரவுறப் பரங்காத் தெய்வப் பதியுற லால்மா தேவி
பொருவுசீர்ப் பொன்னியாற்றின் புண்ணியப் பொலிவு
திருமாலுக்கும் காவிரிக்கும்
3. போற்றிமண் காத்தலாலும் புரிவளை தாங்கலாலும்
ஆற்றலின் அடர்த்து மோதும் ஆழிசேர் கையி னாலும்
ஏற்றநற் றிருவின் செவ்வி இலங்குற லானும் என்றும்
சாற்றுமா லாம்கா வேரித் தண்புனல்த் தூய்மை போற்றி
திருமகளுக்கும் காவிரிக்கும்
4. மாட்சிசேர் செய்ய கஞ்ச மலர்மிசை மருவலால் நல்
ஆட்சிசேர் வளங்க ளார அளித்தலால் பொன்னிப் பேரால்
நீட்சிசேர் வாச மால் பொன் நிறத் தொளிர் பூமடந்தைக்
காட்சிதேர் திருக்காவேரிக் கடிபுனல் மாண்பு போற்றி
பிரமனுக்கும் காவிரிக்கும்
5. நான்முகம் பரவு மாற்றால் நலக்கமண்டலஞ்சேர் கையால்
கான்மல ருறலால்த் தன்பால் கலைமறை பயிலு நாவால்
மான்மல ருந்தி நாளும் வயங்கலாற் பிரமனாகும்
மான்மியம் மிகு சீர்ப் பொன்னி வண்புனற் பண்பு போற்றி
------------
1. தா - குற்றம். 2. நீர் -- தன்மை , ஜலம் ; பதி தலைவன், -ஊர்கள். 3. ஆழி - சக்கரம், கடல். 4. செய்ய - சிவந்த; நிறம் - மார்பு; கடி - புதுமணம், காப்பு. 5. நல கமண்டலம் பிரமனுக்கு நலக்க மண் தலம் காவிரிக்கு, கால் மலர், கான் மலர் எனப்பிரிக்க ; மால்உந்தி - திருமால் நாபி பிரமனுக்கு; மான் உந்தி - மான்களைத் தள்ளிக்கொண்டு காவிரிக்கு.
நாமகளுக்கும் காவிரிக்கும்
6. வேதமார் முதல்வர் நாவில் விளக்க முற்றிடலால் வெள்ளைப்
போதும் துறலாற் கையிற் புத்தகம் பொலியும் சீரால்
மேதையாம் கலைகள் ஆங்கண் மேவலால் நாமடந்தை
ஓதநேர் திருக்காவேரி ஒண்புனற் றண்மை போற்றி
விநாயகருக்கும் காவிரிக்கும்
7. மாமுக முடைமை யாலும் மதகரி முழக்கத் தாலும்
தேமிகு நால்வா யானும் தெங்குறும் அகட்டி னாலும்
ஏமுறு துதிக்கையாலும் இடையூறு போக்க லாலும்
சேமஐங்கரனாம் பொன்னித் தெண்புனற் றேசு போற்றி.
சுப்பிரமணியருக்கும் காவிரிக்கும்
8. மூவிரு முகத்தினீண்டும் முயங்கெழில் வள்ளியோடு
தேவ குஞ்சர மாதுற்றும் திகழ்கங்கை சார்ந்தும் நாளும்
மாவுல கசுரவெம்மை மாற்றியும் மயில்மீ தேற்றும்
சேவலஞ் செல்வனாங் காவிரிப் புனற் சிறப்புப் போற்றி.
சமயாசாரியர் நால்வருக்கும் காவிரிக்கும்
9. ஒத்துறு கையினாலும் உழவாரப் பணியி னாலும்
சித்திரப் பரவை தோயும் செம்மையி னாலும் மேலாம்
பத்தியிற் பெருந்து றைசேர் பரிதக வானும் சைவ
வித்தகர் நால்வர் நேர்காவேரி நீர் விழுப்பம் போற்றி.
அடியார்களுக்கும் காவிரிக்கும்
10 வெள்ளிய தோற்றத் தாலும் விளங்குகண் மணிக ளாலும்
உள்ளியற் றூய்மை யாலும் உரியசெந் தண்மை யாலும்
தெள்ளிய நிறைவி னாலும் சிவதலம் செறித லாலும்
கள்ளமில் அடியார் மானும் காவிரி போற்றி போற்றி.
------
6. கை- பக்கம்; புத்தகம் - புது வீடுகள் (நதிக்கு). 7. மதகு,
அரி என்க (காவிரிக்கு); நால்- தொங்கும், நான்கு (பல என்றபடி) 8. வள்ளி - கிழங்கு. தேவகுஞ்சரம் மாது என்க (ஆற்றுக்கு). உலகு அசுர வெம்மை என்க குகனுக்கு; உலகம்சுர- உலக சுர என்று செய்யுள் விகாரம். 9. ஒத்துஒற்று, தாளம்; ஆற்றுக்கு உழவு ஆர் அப்பணி; பரவை - கடல்; பத்தி வரிசை, 10. கள் மணி என்க. (நதிக்கு)
This file was last updated on 6 Sept. 2018.
Feel free to send the corrections to the webmaster.