மாவூற்று வேலப்பர் காவடிச் சிந்து
மீனாட்சிசுந்தர நாடார் எழுதியது
mAvURRu vElappar kAvaTic cintu
by mInATcicuntara nATAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our thanks also go to Tamil Virtual Academy for providing a scanned (PDF) copy
of this work. The e-text has been generated using Google OCR and subsequent
proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
மீனாட்சிசுந்தர நாடார்
பாடிய மாவூற்று வேலப்பர் காவடிச் சிந்து
Source:
மீனாட்சிசுந்தர நாடார் பாடிய
"மாவூற்று வேலப்பர் காவடிச் சிந்து"
பதிப்பாசிரியர்கள்
சுந்தர் காளி & பரிமளம் சுந்தர்
வெளியீடு
சி.கா. அ. பொ. வஜ்ரவேல், பேரூராட்சித் தலைவர், ஆண்டிபட்டி
93, கடை வீதி, ஆண்டிபட்டி - 625 512
உரிமை பதிவு, முதற்பதிப்பு : ஏப்ரல் 2003
அச்சாக்கம் : ஹேமமாலா சிண்டிகேட், சிவகாசி
படையல்:
காலஞ்சென்ற சி. கா. அ. பொன்னுச்சாமி நாடார்,
டாக்டர் அ.காளியப்பன் ஆகியோர் நினைவுக்கு
------------
அணிந்துரை : முனைவர் இரா.திருமுருகன்
பால், சந்தனம், பன்னீர் முதலிய வழிபாட்டுக்குரிய பொருள்களைக் காவடியில் வைத்துத் தோளில் சுமந்து முருகன் கோயில்களுக்கு ஆடிக்கொண்டு செல்லும்போது பாடிக்கொண்டு செல்வதற்காக இயற்றப்பெற்ற இசைப் பாடல்கள் காவடிச் சிந்துப் பாடல்கள். ஆடுவதற்கு ஏற்ற வகையில் பலவகைத் தாளநடைகளில் அமைந்திருப்பதால் அவற்றை நாடகத் தமிழ் (நாட்டியத்துக்குரிய தமிழ்ப் பாடல்) என்பது பொருந்தும்.
சிந்துப் பாடல்களின் அடிகள் எண்சீர் முதல் இருபத்து நான்கு சீர்வரையில் பெற்றனவாய் உள்ளன. அவற்றில் மாவூற்று வேலப்பர் காவடிச் சிந்துப் பாடல்கள் எண்சீரடிகளால் இயன்றுள்ளன.
சிந்துப் பாக்கள் கண்ணிகளாக நடக்கும்.
எண்ணும் இரண்டடி எதுகை ஒன்றின்
கண்ணி என்று கருதப் படுமே
(சிந்துப்பாவியல், நூற்பா 33)
என்பதால் சிந்துகளின் கண்ணிகள் இரண்டடி ஓரெதுகை பெற்று நடக்கும்.
நாலடி பெற்று நடக்கும் கண்ணியும்
ஓரடிக் கண்ணியும் உளவென மொழிப்
(சிந்துப்பாவியல், நூற்பா 34)
என்றபடி நான்கடிகள் ஓரெதுகை பெற்றுவரும் கண்ணிகளும் சிறுபான்மை வரும். அதன்படி மாவூற்று வேலப்பர் காவடிச் சிந்தில் வருவன அனைத்தும் நாலடிக் கண்ணிகள். நான்கடியும் ஓரெதுகை பெற்றுவந்துள்ளன.
காவடிச் சிந்துகளின் சீர்கள் மும்மை (திசிரம்), நான்மை (சதுசிரம்), ஐம்மை (கண்டம்), எழுமை (மிசிரம்) என அமையும். இக்காவடிச் சிந்தின் சீர்கள் அனைத்தும் மும்மை நடையில் அமைந்துள்ளன. ஒவ்வோரடியும் இடையில் தனிச்சொல் பெற்றுள்ளது.
இந்நூலின் முன், பின் பகுதிகள் சிதைவுற்றன போலும். இடைப்பட்ட 25 பாடல்களே இதில் உள்ளன. அவற்றிலும் முதற் கண்ணியில் முன்னிரண்டடிகளைக் காணவில்லை. இறுதியில் உள்ள 25ஆம் கண்ணியும் குளகமாய் (ஒரு வினை கொள்ளும் பல பாடல்களில் ஒன்றாய்) உள்ளது. எனவே நூல் முழுவதும் எத்தனைக் கண்ணிகளால் இயன்றது என்பது தெரியவில்லை.
"தாமரை மலர்களிடையே அல்லி மலர்வது போன்றது என் நூல்" என்று கூறும் அவையடக்கப் பாடலும், மந்தி பலாப்பழத்தை மத்தளமாக அடிக்கும் என்னும் இனிய வருணனைப் பாடலும் சுவை பயப்பன. கதுப்பு, செந்நெல், நந்தனச் சோலை, அக்கம், தெள்ளிய, விரகு, தந்தி முதலிய சீரிய செய்யுட் சொற்களை இடையிடையே மிடைந்திருப்பது ஆசிரியர்தம் அகன்ற இலக்கியப் பயிற்சியைக் காட்டுகிறது.
இந்நூலில் ஆங்காங்கே காணப்படும் நப்பு (10), அவலிங்கம் (15), மூளை மொக்கிடும் (16), வருதிப்படி (17), தருப்பல வீய்ந்த (20) முதலிய சொல்லாட்சிகளின் பொருள் தெளிவாகவில்லை . இவற்றில் ஏடு பெயர்த்தெழுதியோரால் மாறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம்.
சிந்துப் பாடல்கள் இசைப் பாடல்கள். அவற்றிலும் காவடிச் சிந்தின் பலவகையான மெட்டுகள் தமிழனின் நாடி நரம்புகளை உலுக்கக்கூடிய மண்ணின் மணம் வீசுபவை. காவடிச் சிந்துகளைச் சிறப்பாகப் படைத்து வழிகாட்டியவர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார். அவர் நூலைப் பின்பற்றி ஏராளமான காவடிச் சிந்துகள் எழுந்துள்ளன. அவை அனைத்தும் முருகன் புகழ் பாடுவனவே. இவற்றின் இசைநயத்தில் ஈடுபட்ட தமிழர்கள் எந்த மதத்தவர்களாயிருந்தாலும் மனத்தைப் பறி கொடுக்கிறார்கள். இசுலாமியர்களால் முருகன்மேல் காவடிச் சிந்து பாடமுடியாது. எனினும் காவடிச் சிந்து பாடாமல் அவர்களால் இருக்கமுடியவில்லை . எனவே அதே அமைப்பில் பூவடிச் சிந்து பாடியிருக்கிறார்கள்.
காவடிச் சிந்தின் யாப்பிலக்கணம் வருமாறு:
கந்தனை வழிபடக் காவடி எடுப்போர்
பாடி ஆடப் பயன்படும் பாடலாய்
நாடகத் தமிழின் நயமிகு வகையாய்
எவ்வகை அடியினும் எவ்வகை நடையினும்
தனிச்சொலும் இயைபும் நனிமிகப் பெற்றுத்
தொடைநயம் சான்ற நடையுடைத் தாகி
முடுகியல் அடிகளை இடையிடை ஏற்றுச்
சிந்து வகைகளிற் சிறப்புற நடப்பது
காவடிச் சிந்தெனக் கருதப் படுமே
(சிந்துப்பாவியல். நூற்பா 47)
நாட்டுப்புற இலக்கியத்தின் செம்மை சான்ற வடிவமான காவடிச் சிந்து நூலை அச்சியற்றி வெளியிடும் பேராசிரியர்கள் சுந்தர் காளி, பரிமளம் சுந்தர் ஆகியோரின் முயற்சியைப் பாராட்டுகிறேன்.
இந்த மாவூற்று வேலப்பர் காவடிச் சிந்து மும்மை நடையால் நடப்பது. அதனைத் தாளம் போட்டுப் பொருந்திய பண்ணில் பாடி, அதன் சொற்பொருள் இசைநலங்களைத் துய்த்து மகிழ்வோமாக.
--------------
பதிப்புரை
வள்ளிக் கிழங்கை அகழ்ந்தெடுக்கப் பளியர்கள் நிலத்தைத் தோண்டும்போது சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய மாவூற்று வேலப்பர் குடிகொண்டுள்ள கோயில் இன்று லட்சக்கணக்கான மக்கள் வந்து வழிபடும் தலமாக விளங்கி வருகிறது. இவ் வேலப்பர் மீது மீனாட்சிசுந்தர நாடார் பாடிய காவடிச் சிந்து மூன்று தலைமுறைகளாக எங்கள் வீட்டில் ஓலைச்சுவடியாக இருந்து இப்போது அச்சேறுகிறது.
இந்நூலின் ஆசிரியர் மீனாட்சிசுந்தர நாடாரின் சந்ததியினரைத் தேடிக் கண்டறிய இயலாததால் அவரது வரலாற்றை அறியமுடியவில்லை . ஏட்டுப் பிரதியில் "சின்னச் சுப்பப் பண்டாரம் மகன் முனியாண்டிப் பண்டாரத்தின் பிரதி” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவரது சந்ததியினரையும் தேடிக் கண்டறிய இயலவில்லை . ஆனால் நூலின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் 'காளியப்ப தயாளன்'' என்பவர் என் தந்தையாரின் பாட்டனாராதல் வேண்டும். அவர் நூலாசிரியரின் புரவலராய் விளங்கியிருக்கிறார். எனவே, இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியதென ஒருவாறு உய்த்துணரலாம். கண்டமனூர் ஜமீன்தார் பற்றி நூலில் வரும் குறிப்பும் இதையே வலியுறுத்துகிறது.
இந்நூலைப் பதிப்பிக்கும் பணியில் வழிகாட்டியாக இருந்து, அணிந்துரையும் வழங்கியுதவிய பெரியவர் முனைவர் இரா. திருமுருகன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏடு பெயர்த்தெழுதித் தந்த திரு. சொ.சாந்தலிங்கம் (மாவட்டத் தொல்லியல் அலுவலர், தொல்லியல் துறை, மதுரை), அதைச் சரிபார்த்துதவிய முனைவர் தி. நடராசன் (தலைவர், சுவடியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை), தக்க ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கிய பேரா. செ. போத்திரெட்டி (ஓய்வு பெற்ற பேராசிரியர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை), அட்டை உட்பட முழு நூலையும் வடிவமைத்த நண்பர் பாபு, புகைப்படங்களை எடுத்துதவிய திரு. இரா.செந்தில், கணினிப் பிரதியைத் தயார் செய்த தாஸ் கணினி மையம், நூலை அச்சிட்ட ஹேமமாலா சிண்டிகேட் ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
எங்கள் பிள்ளைகள் காரோன் காளி, நீரோன் காளி ஆகியோரின் பிறப்பை ஒட்டி இந்நூலைப் பதிப்பிப்பதாய் மாவூற்று வேலப்பரிடம் நேர்ந்துகொண்டோம். பிள்ளைகள் பிறந்து ஓராண்டு நிறைவுறும் முன்பே இந்நூல் வெளிவருவது மிகுந்த மனநிறைவைத் தருகிறது.
மதுரை சுந்தர் காளி
ஏப்ரல் 5, 2003
------------------
மாவூற்று வேலப்பர் காவடிச் சிந்து
காப்பு
சின்னக் குழந்தைகள்போல் - பாதசரம்
செஞ்சிலம்பும் புலம்ப
முன்னாகவே தோன்றி - நித்தமும்
முத்தமிழே தருவாய்
அவையடக்கம்
பஞ்சவர் தூதன்மருகன் - தன்மேல்
பண்பாயுரை தமிழ்க்கு
மிஞ்சுபுகழ்ப் பெரியோர் - சொற்குற்றம்
வினையுற் றிருந்தாலும்
கஞ்ச மலருடனே - அல்லி
கலந்துமே பூத்ததுபோல்
செஞ்சொல் மொழிக் கவிஞர் - மனதில்
திறமுற்றுக் காத்திடுவீர்
பொன்மது தங்கிநின்ற - ஆண்டி
புரந்தனில் வாழ்ந்திருக்கும்
நன்மைவாழ் சத்ரியகுலச் - சான்றோர்கள்
நாடார்கள் வங்கிசத்தில்
தன்மவான் காளியப்ப - தயாளன்
றன்னையிச் சிந்து சொல்வேன்
பன்மை யுரைத்துவிட்டா - ரதனால்
பாடினேன் சூடினேனே
சொப்பனம் தன்னில்வந்து - வேலப்பர்
சுந்தரக் காவடியை
எப்படியும் எடுப்பீர் - என்று திரு
நீறுதனை நெற்றிதனில்
மெய்ப்புறத் தானணிந்து - அனேக
விதவிதமா மயிலின்
ஒப்புச் சொன்னபடி - பக்தர்கள்
உண்மை மனதிலெண்ணி
விரதமிருந்து கொண்டு - சித்திரை
விளங்கிடும் தீர்த்தமதில்
பரத முறைப்படிக்குக் - காவடிக்குப்
பால்கறந்து கலசம்
நிறைவுற் றபிஷேகம் - செய்து
நெடுமனை சுத்திசெய்து
குறைவறக் கற்பூரம் - சாம்பிராணி
கொடுத்து மெய்யன்புவைத்து
வள்ளலாம் இராமலிங்க - சுவாமி
மடந்தனில் வீற்றிருக்கும்
தெள்ளிய அன்னக்கொடி - விநாயகன்
சேவடியைத் தொழுது......
...... ஆண்டிபட்டிக் குளத்தில் - மாவூற்று
அப்பனைக் காணீரோ?
எல்லை வனத்துடனே - விசையும்
னேகியே எத்திசையும்
வல்லமையாய்ப் பறந்து - நீதியுடன்
வாழும் பறவைகளில்
நல்ல அறிவுடைய - திருக்களர்
ஞானக் கழுகினமே
முல்லையம் பட்டிவழி - மாவூற்று
முருகனைக் காணீரோ?
வாய்த்த திறங்களன்றி - நீதியுடன்
வாழும் பறவைக்கஞ்சி
ராத்திரிக் காலமதில் - வயிற்றுக்கு
நன்றாய் இரைதேடும்
சாத்திர முறையை - எக்காலமும்
தானுரைக்கு மாகதை
கோத்தலூத்து வழியே - மாவூற்றுக்
குமரனைக் காணீரோ?
ஒப்புடன் வாழ்பறவை - பட்சிகள்
உலகெங்கும் தான் பறந்து
நப்புடன்தான் மேய்ந்து - கும்பிக்கு
நன்றாய் இரையெடுக்கும்
தப்பிதம் செய்யாத - பறவையைத்
தாக்கிடும் வல்லேதான்
குப்பாம்பட்டி வழியே - மாவூற்றுக்
குமரனைக் காணீரோ?
மதுப்பொழி தன்னிலத்தில் - வெள்ளாண்மை
மகாராசன் தானுழுது
விதைப்புகள் செய்து - அதில்
விளைந்த வெள்ளாண்மைகளை
கதுப்பொடுதான் மேய்ந்து - வருகின்ற
கானக் குயிலினங்காள்
புதுப்பட்டிப் பாதைவழி - மாவூற்றுப்
பூமனைக் காணீரோ?
கரும்புகள் செந்நெல்களும் - மாவூற்றுக்
கால்வாய் நீரோடைகளும்
நறுமணச் சோலைதொறும் - கமழ்ந்திடும்
நந்தனச் சோலையெங்கும்
தரும்புகழ் பெற்றோங்கி - மேய்ந்துவிண்
தாவிய அன்னங்களே
குரும்பப்பட்டிப் பாதை - மாவூற்றுக்
குமரனைக் காணீரோ?
வில்லிபுத்தூராழ்வார் - விளம்பிய
மேலுயர் பாரதத்தில்
வல்லமை வீமனையும் - சமர்செய்து
வாசலின் முன்னிழுக்க
நல்லகுல தருமர் - நியாயமாய்
நல்குங் காண்டாமிருகம்
நெல்லி மரத்துப்பட்டி - வழியதில்
நேயனைக் காணீரோ?
அக்கமும் காசுகளும் - சிக்கெனவே
ஆதரவாய்த் தேடி
மக்களும் பெண்டிரும் - சுற்றமும்
வாழ்வு படைத்தோங்கும்
திக்கெங்கும் கொண்டாடும் - சக்கம்மா
தேவிகோயிற் கிளியே
சக்கம்மா பட்டி - மாவூற்றுச்
சாமியைக் காணீரோ?
தவவடி சீதையம்மாள் - ஸ்தனந்தனில்
தாவியே கொத்திவிட்டு
அவலிங்க மானதென்று - பெருமாள்
அடைக்கலமே புகுந்து
கவலைகொண் டேங்கியழப் - பாதிமொழி
கண்கொண்ட காகமேநீ
சிவலிங்கம் பட்டிவழி - மாவூற்றுச்
செல்வனைக் காணீரோ?
அரட்டியே ஆக்ரமித்துக் - கதிர்கொண்டு
அகிலமெல்லாம் பறந்து
விரட்டியே பட்சிகளைக் - கொடூர
விரகுடன் தானடித்து
முரட்டுத் தனங்கள் - பண்ணித்தலை
மூளைமொக்கிடும் ராசாளி
கரட்டுப்பட்டிப் பாதை - மாவூற்றுக்
கந்தனைக் காணீரோ?
இளகிய லட்சுமணனும் - இராமர் சீதை
எழில் பெறும் பர்ணசாலை
வழமையுட னிருக்க - ராவணன்
வருதிப்படி மாரீசன்
குழைவொடு சொர்ணமயம் - ரஞ்சிதங்
கொண்டாடும் மானினமே
அழகாபுரிப் பாதை - மாவூற்று
அப்பனைக் காணீரோ?
முப்பத்து முக்கோடித் - தேவர்
முனிவர்கள் கிம்புருடர்
அப்புற்று அரவணியும் - கயிலை
அரன் உமை மால் அயனும்
ஒப்புற்று ஒருமுகமாய்த் - தீர்த்தங்கள்
உகந்துமே யாடுகின்ற
தெப்பத்துப் பட்டிவழி - மாவூற்றுச்
செல்வனைக் காணீரோ?
குளிர்வனச் சோலைகளும் - செண்பகம்
கொழுந்துடன் பாரிஜாதம்
களிறுகளும் யாளி சிங்கம் - பருத்திடும்
காட்டானை ஒட்டகமும்
துளிர்வனப் பூஞ்சோலை - கமழும்
சுகந்தநற் புஷ்பங்களே
தளிர்வனத்து ஓடைவழி - மாவூற்றுச்
சாமியைக் காணீரோ?
விருப்புற்று அமுதளிக்கும் - மாவூற்று
வேலர் கிருபை பெற்றுத்
தருப்பல வீய்ந்தகையான் - கண்டம்
ஜமீன்கிரி முன்னோடி
குறிப்பாய் வரமளித்து - முன்மண்டபக்
கோவிலில் வீற்றிருக்கும்
கருப்பசாமி கோவில் - மாவூற்றுக்
கந்தனைக் கண்டேனே
-------------------
This file was last updated on 7 Sept. 2018.
Feel free to send the corrections to the webmaster.