கல்கியின் சிறுகதைகள்
தொகுப்பு (பாகம் 1)
ஆசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
Short stories collection (part 1)
by Kalki Krishnamurthy
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our thanks also go to Archives.org for providing a PDF copy of this work.
The e-text has been generated using Google OCR and subsequent
proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கல்கியின் சிறுகதைகள் தொகுப்பு (பாகம் 1)
ஆசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
Source
கல்கியின் சிறுகதைகள் தொகுதி- vol 1, 2, 3
ஆசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
நக்கீரன் பதிப்பகம்,
2ம் பதிப்பு, 2014
---------------------
கல்கியின் சிறுகதைகள் தொகுதி - part 1
உள்ளடக்கம்
1. சுபத்திரையின் சகோதரன் | 9. இமயமலை எங்கள் மலை |
2. ஒற்றை ரோஜா | 10. பொங்குமாங்கடல் |
3. தீப்பிடித்த குடிசைகள் | 11. மாஸ்டர் மெதுவடை |
4. புது ஓவர்சியர் | 12. புஷ்பப் பல்லக்கு |
5. வஸ்தாது வேணு | 13. பிரபல நட்சத்திரம் |
6. அமர வாழ்வு | 14. பித்தளை ஒட்டியாணம் |
7. சுண்டுவின் சந்நியாசம் | 15. அருணாசலத்தின் அலுவல் |
8. திருடன் மகன் திருடன் |
------------
1. சுபத்திரையின் சகோதரன்
1. 0 முன்னுரை
ஆண்டவன் திருவருளினால், இப்போது எங்கள் வாழ்க்கையில் அமைதி குடிகொண்டிருக்கிறது. இன்பம் நிலவுகிறது. நானும் என் மனைவியும் அளவிறந்த அன்பு வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறோம். வேறெது எப்படியானாலென்ன?
பாவம் சுபத்திரை அனாதை. எனக்கும் தற்போது அவளைத் தவிர யாருமில்லை. அவளைக் கல்யாணம் செய்து கொண்ட நாளிலிருந்து எனது உற்றார் உறவினர் எல்லாரும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். என் தந்தைக்கு என்னிடமுள்ள அன்பு மாறவில்லையென்பது உண்மையே. அடிக்கடி கடிதங்களும் எழுதி வருகிறார். ஆனால் நானும் சுபத்திரையும் அவர் வீட்டுக்கு வருவது மட்டும் கூடாதாம். ஒரு காலத்தில் ஆசார சீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து உபந்யாசங்களும் செய்து வந்த அவர் இம்மாதிரி நடந்து கொள்வது, முதலில் எனக்கு வினோதமாகவேயிருந்தது. ஆனால், இப்போது அவர் மீது நான் குறை கூறவில்லை, அவரென்ன செய்வார்? விவாகமாகாத தங்கைகள் இருவர் எனக்கிருக்கின்றனர். மேலும் வீட்டில் இப்போது எஜமாட்டி அவரது இரண்டாவது மனைவி. என் தாயார் காலஞ் சென்று பல வருஷங்களாகின்றன.
நானும் சுபத்திரையும் அன்பு மயமான வாழ்க்கை நடத்துகிறோம். இப்புவியில் யார் மீதும் எங்களுக்கு வருத்தமில்லை. உலகமெல்லாம் எங்களைப் பகைத்தாலும் நாங்கள் உலகத்தினிடம் அன்பு செலுத்துவோம். மேலும் நாங்கள் உலகத்தினிடம் அன்பு செலுத்துவோம். மேலும் நாங்கள் இப்போது வசிப்பது ஆந்திர நாட்டின் நடுவிலுள்ள ஒரு பட்டணம். இங்கே தமிழர்கள் மிகச் சிலரே வசிக்கிறார்கள். அவர்களுக்கும் எங்கள் வரலாறு தெரியாது. என் மனைவியைச் சுட்டிக்காட்டிப் பேசுவோர் யாரும் இங்கில்லை. எனவே எங்கள் வாழ்க்கையின் இன்பத்துக்கு இடையூறு எதுவுமில்லையல்லவா?
ஆனால், நீங்கள் பொறாமைப்படவேண்டாம். எத்துணை கொடிய துன்பங்களுக்குப் பின்னர், நாங்கள் இந்த இன்ப வாழ்வை எய்தியிருக்கிறோமென்பதை அறிந்தால் நீங்கள் நடுநடுங்கிப் போவீர்கள். பெரும் புயலினால் பயங்கரமாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த கடலானது புயல் நின்றதும் அமைதியடைந்திருக்கும் நிலையை உங்கள் மனோபாவத்தினால் உருவகப் படுத்த முடியுமா? ஆம் எங்கள் வாழ்வில் இப்போது அத்தகைய அமைதியே ஏற்பட்டிருக்கிறது. எங்கள் வாழ்க்கை இன்பமயமாயிருக்கிறது என்று மேலே சொன்னேனல்லவா? அது முற்றிலும் சரியன்று. இடையிடையே பழைய நினைவுகள் தோன்றும் போது - அப்பப்பா! எங்கள் உணர்ச்சிகளை விவரித்தல் இயலாத காரியம். அத்தகைய சமயங்களில் நாங்கள் அலமாரியில் வைத்துப் பூசை செய்யும் இராஜகோபாலன் படத்துக்கருகில் சென்று மௌனமாய்க் கண்ணீர் விடுகிறோம். இராஜகோபாலன் மனித உடலில் தங்கியிருந்தபோது, சுபத்திரையின் சகோதரனாயும், என் அரிய நண்பனாயும் இருந்தான். இப்போது எங்கள் குலதெய்வமாய் விளங்குகிறான்.
என் மனைவிக்கீடான பெண் இவ்வுலகில் ஒருத்தியுமில்லை என்பது என் எண்ணம். ஒவ்வொரு கணவனும் தன் மனைவியைப் பற்றி அப்படித்தான் சொல்வான் எனக் கூறுவீர்கள். உண்மையே. ஆனால், அவளைப் போல் இவ் இளம் வயதில் இவ்வளவு துக்கங்களுக்கு ஆளானவர்கள் யாருமிரார் என்பது திண்ணம். அவள் குணத்துக்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இவ்வரலாற்றை எழுதி முடித்ததும் அவளிடம் கொடுத்து ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினால் செய்வதற்கு உரிமையளித்தேன். அவள் என்ன திருத்தங்கள் செய்தாள் என்று நினைக்கிறீர்கள்? அவளுடைய அழகைப் பற்றியோ குணாதிசயங்களைப் பற்றியோ கூறியிருந்த அந்தப் பகுதிகளையெல்லாம் அடித்து விட்டாள். பின்னர் கதைக்கு இன்றியமையாத சில இடங்களிலேனும் அவற்றை விட்டு வைக்கும்படி நான் அவளைக் கெஞ்ச வேண்டியதாயிற்று.
ஆனால் சுபத்திரையைப் பற்றியாவது, என்னைப் பற்றியாவது, எங்கள் இல்வாழ்க்கையைப் பற்றியாவது நான் இங்கு விவரிக்கப் புகுந்தேனில்லை. வீர புருஷனும் என் ஆருயிர்த் தோழனுமான சுபத்திரையின் சகோதரனுடைய சரித்திரத்தைக் கூறவே வந்தேன். ஸ்ரீராம சரிதம் பாண்டவ சரிதம் அரிச்சந்திரன் கதை முதலியவற்றைப் போல் இராஜ கோபாலனின் சரித்திரமும் போற்றப்பட வேண்டுமென்பது என் எண்ணம். இதென்ன அநீதி? ஒரு கொலைஞனுடைய வரலாற்றை இராம சரித்திரத்துடனும் அரிச்சந்திரன் கதையுடனும் ஒப்பிடுவதா என்று நீங்கள் திடுக்கிட்டு வினவலாம். நியாயந்தான். ஆனால் என் நண்பன் செய்த கொலையினால் அவனைப் பாவம் ஏதேனும் சார்ந்ததாயின் அதற்கு தகுந்த பிராயச் சித்தம் அவன் செய்து கொண்டுவிட்டான் என்பதே என் கருத்து. இவ்விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் மாறுபடலாம்; ஆனால் அவனுடைய வரலாற்றைப் படிக்கும் உங்களில் எவரும் மனம் உருகாமலிருக்க மாட்டீர்கள் என்பதில் எள்ளலவும் எனக்கு ஐயமில்லை.
கதையின் ஆரம்பமே நன்றாயில்லையே? முடிவு முன்னுரையிலேயே வந்துவிடுகிறது. "இதற்குள் முன்னுக்குப் பின் முரண் வேறு" என்று நீங்கள் எண்ணலாம். ஆம், வினை கதைக்கு உண்மை வரலாற்றுக்கும் உள்ள வேற்றுமை அதுதான். கதையென்றால் அமைப்பு ஒழுங்காகவே இருக்கும் நிகழ்ச்சிகள் முன்னுக்குப் பின் முரண் இன்றி ஒன்றன்பின் ஒன்றாய் வரும், ஆனால் வாழ்க்கையின் உண்மை சம்பவங்களை அவ்வளவு பொருத்தமாகக் கூற முடியுமா? மேலும் இவ்விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கப் புகுந்தாலே என் மனம் குழம்பி விடுகிறது. எனவே இச் சரித்திரத்திலுள்ள குறைகளுக்காக என்னை மன்னித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். பல குறைகள் நிகழ்வதாயினும் சரியே. இவ்வரலாற்றை எழுதி வெளியிடுவது என் ஆருயிர் நண்பனுக்கும் இவ்வுலகுக்கு நான் செலுத்த வேண்டிய கடமை என்னும் உறுதியினாலேயே இதை எழுதலானேன்.
1.1. கடற்கரைப் பேச்சு
இக்கதையின் முக்கியமான நிகழ்ச்சிகள் 1924-ம் ஆண்டில் ஆரம்பமாகின்றன. ஆனால், அவற்றைத் தொடங்குவதற்கு முன் என் குடும்ப நிலைமையைப் பற்றியும், எனக்கு இராஜகோபாலனுடன் நட்பு ஏற்பட்ட விதத்தைப் பற்றியும் இரண்டொரு வார்த்தைகள் கூறிவிட வேண்டுவது அவசியம். என் தந்தை ஸ்ரீமான் சுந்தரமையர் மைலாப்பூரில் ஒரு வக்கீல். இப்போதுகூட அவருக்கு மாதம் ஐந்நூறு ரூபாய் வருமானங் கிடைத்து வருமென நினைக்கிறேன். அப்போது இன்னும் அதிகமாகவே கிடைத்து வந்தது. 1917-18 வரை அவர் அரசியல் துறையில் ஆசார சீர்த்திருத்த இயக்கத்திலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அரசியல் கிளர்ச்சி கொஞ்சம் ஆபத்துக்கிடமான விஷயமாகப் போய்விடவே, அவர் சிறிது சிறிதாக பொது வாழ்விலிருந்து விலகி விட்டார். மேலும், அவரது இரண்டாம் மனைவியின் மூலமாகக் குடும்பம் பெருத்துவிட்டது. எனக்கு இப்போது நான்கு தம்பிகளும், இரண்டு தங்கைகளும் இருக்கிறார்களென்றால் அதிகம் சொல்ல வேண்டுவதில்லை. இத்தனைக்கும் என் தாயார் இறந்து 12 வருஷங்கள்தான் ஆகின்றன. இப்போது எனக்குத் தெரிந்த வரை, பணஞ் சேர்ப்பது, குடும்ப நலத்தைக் கவனிப்பது இவற்றைத் தவிர, என் தந்தைக்கு வேறெவ்விஷயத்திலும் சிரத்தையிருப்பதாகத் தெரியவில்லை.
இனி, இராஜகோபாலனைப் பற்றிச் சொல்கிறேன். அவனுடன் எனக்கு நட்பு ஏற்பட்ட விதம் மிக வினோதமானது. இன்றைக்கு ஐந்நுறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் எங்கள் வீட்டு மாடியின் முகப்பில் உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்கு அடுத்த கட்டிடத்தில் அப்போது ஹோட்டல் இருந்தது. அதன் மாடியின் மீதிருந்த அறைகளில் மாணாக்கர் சிலர் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் அந்த மாடியின் முகப்புக்கு வந்து பாடத் தொடங்கினார். அவருடைய இனிய குரல் என் மனதைக் கவர்ந்தது. அதிலும் அவர் பாடியது பாரதியின் பாட்டு. பாரதி பாட்டென்றால் எனக்கு ஏற்கெனவே பித்து உண்டு; ஆதலின், அவர் பாடி முடிந்ததும், 'தயவு செய்து இன்னொன்று பாடுங்கள்' என்று ஆங்கிலத்தில் மரியாதையுடனும் சங்கோசத்துடனும் கேட்டுக் கொண்டேன். அவர் புன்னகை செய்து, "ஓ! ஆகட்டும்" என்றார். உடனே 'சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா' என்ற கண்ணன் பாட்டை பாடத் தொடங்கினார். அவர் பாட்டுக்கு நான் அடிமையானேன். இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பமாயிற்று. அந்தோ! அந்நட்பின் பயன் இவ்வாறு முடியும் என்று அப்போது நான் கனவிலேனும் கருதியதுண்டா?
அவ்வாறு பாரதியின் பாட்டினால் என் சிந்தையைக் கவர்ந்த இளைஞர் வைத்தியகலாசாலையில் முதல் ஆண்டு மாணாக்கரென்றும், தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடி தாலுகாவில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவரென்றும் அறிந்து கொண்டேன். நாள் ஆக ஆக எங்கள் நட்பும் வளருவதாயிற்று. அப்போது நான், இண்டர் மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். தினந்தோறும் கலாசாலை விட்டதும், இருவரும் நேரே கடற்கரைக்கு வந்து சந்திப்பது என்று ஏற்படுத்திக் கொண்டோ ம். நாங்களிருவரும் கடற்கரையோரத்தில் மணலின் மேல் துணியை விரித்துப் படுத்துக் கொண்டு, உலக நினைவுகளை அடியோடு மறந்தவர்களாய் அளவாளாவிப் பேசிக் கொண்டும், பாரதியின் கவிச்சுவை சொட்டும் காதல் பாட்டுக்களைப் பாடிக் கொண்டும், ஆகாயக் கோட்டை கட்டிக் கொண்டும், ஆனந்தமாகக் கழிந்த மாலை நேரங்களை நினைக்கும் போதெல்லாம், என் உள்ளத்தில் பொங்கி எழும் உணர்ச்சிகளை விவரிக்க வல்லேனல்லன்.
நாட்கள் மாதங்களாயின, மாதங்கள் வருஷங்களாயின. எங்கள் நட்பும் வளர்ந்தது. தினந்தோறும் புதிய புதிய சுவைகலையும், புதிய புதிய இன்பங்களையும் தந்து கொண்டு வந்தது. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான 1924-ஆம் ஆண்டு பிறந்தது. நான் பி.ஏ. (ஆனர்ஸ்) பரீட்சையில், தேறிவிட்டேன். சட்டக் கலாசாலையில் சேருவதாக உத்தேசித்திருந்தேன். இராஜகோபாலன் எம்.பி.பி.எஸ். பரீட்சைக்குக் கடைசி வருஷம் படிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் மாலை வழக்கம்போல் கடற்கரைக்குச் சென்று, இராணி மேரி கலாசாலைக் கெதிரில் அலைகள் வந்து மோதும் இடத்துக்கருகில் உட்கார்ந்து, இராஜகோபாலன் வரவை எதிர் நோக்கியிருந்தேன். அன்று அவன் கொஞ்சம் தாமதமாக வந்தான். அன்றியும் அவன் முகமும் வாட்டமுற்றிருந்தது. எப்போதும் கடற்கரைக்கு வந்ததும்.
மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே
வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
மூலைக்கடலையவ் வான வளையம்
முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்
என்றாவது,
மாலை இளவெயிலின் மாட்சி - அன்னை
கண்ணெரி காட்டுகின்ற காட்சி
என்று சிறிதளவு பாரதியின் பாட்டை மாற்றியாவது பாட ஆரம்பித்துவிடுவான். இன்றோ, பாட்டுமில்லை, கூத்துமில்லை. அவன் முகக் குறியைக் கண்டு என் மனதிலும் சிறிது கவலை தோன்றியதாயினும், விளையாட்டுத்தனமாக "என்ன ராஜு? இன்றைக்கேன் 'குஷி' இல்லை? உபவாச விரதம் ஏதேனும் உண்டோ ?" என்று கேட்டேன்.
"சாப்பாடு இல்லாதது ஒன்றே உற்சாகக் குறைவுக்குக் காரணமாகக் கூடும் என்று நினைக்கிறாயா?" என்று அவன் வினவினான்.
"எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை."
"அப்படியானால் நீ பாக்கியசாலிதான்."
அப்பொழுது, அவன் கண்களில் நீர் ததும்பியதைக் கண்டேன். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "அது போகட்டும், விஷயம் என்னவென்று சொல்லமாட்டாயா?" என்றேன்.
இராஜகோபாலன் பதில் சொல்லாமல், தன் சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். அது அவன் தகப்பனார் அவனுக்கு எழுதியிருந்த கடிதம். நான்கு மூலையிலும் மஞ்சள் தடவியிருந்தது. உள்ளே, இராஜகோபாலன் தங்கை சுபத்திரையை அவ்வூர் வேம்பு ஐயர் குமாரர் கணபதி ஐயருக்கு மணஞ் செய்து கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகவும், முகூர்த்தம் அடுத்த புதன்கிழமை நடப்பதால் உடனே புறப்பட்டு வரும்படியும் எழுதியிருந்தது. அதைப் படித்தபோது, என் ஹிருதயம் படக்கென்று வெடித்து விடும்போல் தோன்றிற்று. முன் பின் தெரியாத கணபதி ஐயர் மீது ஏனோ கோபமும் பொறாமையும் ஏற்பட்டன. "காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோனான்" என்னும் அசட்டுப் பழமொழி என்னையறியாமல் என் வாயினின்றும் புறப்பட்டுவிட்டது.
"சை, எப்போதும் விளையாட்டுப் பேச்சுத்தானா, தியாகு?" என்று நண்பன் கூறினான். அவன் கண்களினின்றும் கலகலவென்று நீர் பொழிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை! கணபதி ஐயர் யாராயிருப்பினும் அவர் மீது நான் பொறாமை கொள்வதும் நியாயம். ஆனால், தங்கையின் கல்யாணச் செய்தியைக் கேட்டு அவன் கண்ணீர் விடுவதன் கருத்தென்ன? அவன் கண்ணீரை என் அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் துடைத்து, "ராஜு, என் பிதற்றலை மன்னித்துவிடு. ஆனால் நீ ஏன் கண்ணீர் பெறுக்குகிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!" என்றேன்.
அவன் சற்றுநேரம் மௌனமாயிருந்துவிட்டு, பின்னர் "என் அருமைச் சகோதரியைப் பாழுங்கிணற்றில் தள்ளப் போகிறார்கள். நான் கண்ணீர் விடாமல் என்ன செய்வேன்?" என்றான்.
நான் பல முறையும் வற்புறுத்திக் கேட்டதன்மேல் அவன் பின்னுஞ் சொல்வான்:- "எங்கள் கிராமத்துப் பெரிய குடித்தனக்காரர்களில் வேம்பு ஐயரும் ஒருவர். அவருக்கு இருபது வேலி நன்செய் நிலமும் ரூ.30,000 ரொக்கமும் உண்டு. கணபதி ஐயர் அவருடைய ஏகப் புதல்வர். அவருக்கு இப்போது 45 வயதுக்கு மேலிருக்கும். ஏற்கனவே அவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். ஆனால் குழந்தைகள் இல்லை. ஒருத்திக்குக் குழந்தையே பிறக்கவில்லை. மற்றொருத்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து போய்விட்டது. அப்புறம் வேறு பிறக்கவில்லை. வம்சத்துக்குச் சந்ததியில்லாமல் சொத்து வீணாகப் போகக்கூடாதென்ற எண்ணத்தினால் பிள்ளைக்கு இன்னொரு கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்று கிழவர் உத்தேசித்திருப்பதாக முன்னமே பிரஸ்தாபமுண்டு. நாங்கள் எல்லாரும் கேலி செய்துகொண்டிருந்தோம். ஆனால், இந்தக் கதி என் தங்கைக்கே நேரிடுமென்று நான் கனவிலும் கருதியதில்லை. கணபதி ஐயர் பார்வைக்கு மிக அவலட்சணமாயிருப்பார். வயிறு பெறுத்தவர். ஆதலால் சாதாரணமாகத் 'தொந்திக்கணபதி' என்று அவரை எல்லாரும் கூப்பிடுவார்கள். 'குள்ளநரி' என்ற பட்டப்பெயரொன்றும் அவருக்குண்டு. ஒரு சமயம் அவர், புதர் ஒன்றில் ஒளிந்திருந்து குடியானவன் களத்திலிருந்து நெற்கதிர் திருடிக் கொண்டு போனதைக் கண்டு பிடித்து விட்டாராம். அது முதல் குடியானவர்கள் 'குள்ளநரி ஐயர்' என்று அவரை அழைக்கத் தொடங்கினார்கள். அந்தப் பெயர் நிலைத்து விட்டது. அவ்வளவு ஏன்? போன வருஷங்கூடக் கணபதி ஐயர் வயலில் போகும் போது 'தொந்திக்கணபதி' 'குள்ளநரி' என்று சுபத்திரை கூறிவிட்டுச் சிரித்துக் கொண்டு உள்ளே ஓடி ஒளிந்து கொண்டாள். ஐயையோ! அவளுக்கா இந்த விதி வரவேண்டும்?" என்று நண்பன் கதறினான்.
நான் உள்ளமுருகி விட்டேன் என்று கூறவும் வேண்டுமா? "உன் தந்தை என்ன, அவ்வளவு மோசமானவரா? தந்தைதான் இப்படிச் செய்தாரென்றால், உன் தாயார் எப்படிச் சம்மதித்தாள்?" என்று நான் கேட்டேன்.
"என் அன்னை இந்தக் கல்யாணத்துக்கு ஒரு காலும் சம்மதித்திருக்க மாட்டாள் என்பது நிச்சயம். அந்தோ! அவள் என்னென்ன எண்ணியிருந்தாள்? என் தந்தை மீது தான் குற்றம் சொல்வதில் என்ன பயன்? இரண்டு வருஷமாக அவர் அலையாத இடமில்லை. ஒன்று பொருந்தியிருந்தால் மற்றொன்று பொருந்துவதில்லை. வரன் பிடித்திருந்தால், ஜாதகம் சரியாயிராது. இரண்டும் ஒற்றுமை பட்டிருந்தால், ஜாதகம் சரியாயிராது. இரண்டும் ஒற்றுமை பட்டிருந்தால், வரதட்சனை 2000, 3000 என்று கேட்கிறார்கள். அவர் என்ன செய்வார். பார்க்கப் போனால் நான் தான் ஒரு வழியில் இந்தப் பாதகத்துக்குக் காரணமாகிறேன். எங்கள் ஏழைக் குடும்பத்தில் ஏதேனும் கொஞ்சம் மீதியாவதை என்னுடைய படிப்புக்காக அவர் தொலைத்து வந்தார். இல்லாவிடில் இப்பொழுது பணச் செலவுக்காகப் பயப்பட வேண்டியிராது. ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கடன் இருக்கையில், இன்னும் 2000, 3000 எப்படி கடன் வாங்குவது, யார் கொடுப்பார்கள்? பாவி, நானாவது அவர் சொற்படி கேட்டு வரதட்சனை வாங்கிக் கல்யாணம் செய்து கொள்ள இசைந்தேனா? அவர் என்னையேயன்றோ நம்பியிருந்தார்?" இராஜகோபாலன் கூறினான்.
இது முழு உண்மையன்றென்பது எனக்குத் தெரியும். இராஜகோபாலன் வரதட்சனை வாங்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தானாயினும், தகப்பனார் முடிவாக வற்புறுத்தும் போது மறுத்திருக்க மாட்டான். மற்ற அம்சங்களில் எத்தகைய சிறந்த குணங்கள் உடையவனாயினும், தந்தையை எதிர்ப்பதற்கு வேண்டிய தைரியம் அவனுக்கு உள்ளபடியே இல்லை. ஒத்துழையாமை இயக்கத்தில் ஆரம்பத்தில் அவன் கொஞ்சம் நாள் கலாசாலைப் பகிஷ்காரம் செய்ததும், பின்னர் தந்தையின் வார்த்தையைத் தட்ட மாட்டாமல் திரும்பப் போய்ச் சேர்ந்ததும், சிலநாள் வரை அவமானத்தில் மனமுடைந்து நின்றதும், நான் நேரில் அறிந்த விஷயங்கள். உண்மையென்னவெனில், இராஜகோபாலன் தந்தை 3000, 4000 என்று அவனை ஏலங் கூறி வந்தார். இன்னும் ஏலத்தொகை உயருமென்று அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். எம்.பி.பி.எஸ். பரீட்சைக்குப் படித்த இராஜகோபாலன் இன்னும் பிரமச்சாரியாயிருந்த பேரதிசயத்துக்குக் காரணம் இதுதான். இவை எனக்குத் தெரிந்திருந்தும், நான் அப்பொழுது இராஜகோபாலனை மறுத்துக் கூறவில்லை. அற்ப விஷயங்களைப் பற்றி வாதிப்பதற்கு அது தருணமன்றல்லவா?
என் நண்பன் மீண்டும், "தியாகு, நீ என் உயிர்த் தோழனாதலால் என் மனத்தைத் திறந்து சொல்கிறேன். ஒரு வேளை என் தந்தை பணத்தாசையால் பீடிக்கப்பட்டிருக்கலாமோவென்று எனக்குத் சந்தேக முண்டாகிறது. சுபத்திரைக்கு ஒரு குழந்தை மட்டும் பிறந்துவிட்டால், இரண்டு லட்ச ரூபாய் சொத்தும் அடையுமன்றோ? சை, சை! இப்பாழும் பணத்தாசையால் விளையுங் கேடுகள் எத்தனை! உலகில் பணக்காரன், ஏழை என்ற வேற்றுமை அற்றுப் போகக் கூடாதா?" என்று இரங்கினான்.
"ராஜு, நான் சொல்வதைக் கேள். இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு. என் கருத்து உனக்கு விளங்குகிறதா?" என்று நான் கேட்டேன்.
அவன் சற்று நேரம் சிந்தனையுடனிருந்து பின்னர் கூறினான்:- "உன் கருத்து விளங்குகிறது. ஆனால் அது இயலாத காரியம். முகூர்த்தம் புதன்கிழமை. நானெப்படி அதை நிறுத்த முடியும்? பிரம்மதேவன் எங்களுக்குத் துக்கத்தை விதித்துவிட்டான். நீ இப்போது இவ்வாறு தெரிவிப்பது என் துக்கத்தை மிகுதிப் படுத்துகிறதேயன்றி வேறில்லை. சுபத்திரையின் அதிர்ஷ்டம் எப்படியிருந்திருக்க கூடுமென்பதை நினைத்தால்! - தியாகு, நீ உண்மையிலேயே இந்நோக்கங் கொண்டிருந்தால், உன் உயிர் நண்பனாகிய என்னிடம் கூட ஏன் முன்னமே சொல்லவில்லை?"
"அது பெருங்குற்றந்தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். உண்மையில், இதுவரை என் மனமே திடப்படவில்லை. சென்ற வருஷம் கோடை விடுமுறையில் நீ என்னை உன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தபோது, உன் தங்கையைப் பார்த்தேன். அவளிடம் எனக்குப் பிரியம் உண்டாயிற்று. அவளுடைய மோகன வடிவமும் இன்ப மொழிகளும் என் மனத்தைக் கவர்ந்தன. போதாதற்கு நீ அவளைப் பாடும்படியும் சொன்னாய். குயிலுனுமினிய குரலில் அவள் பாடியது, என் ஆன்மாவைப் பரவசப் படுத்தியது. ஆனால் சுபத்திரையிடம் எனக்குண்டான ஆசை எத்தகையது என்று எனக்கே விளங்கவில்லை. பன்னிரண்டு வயதுக் குழந்தையுடன் காதல் என்னும் பதத்தைச் சம்பந்தப்படுத்துவதே பைத்தியக்காரத்தனம் என்று தோன்றிற்று. வேறு யாரேனுமாயிருந்தால், உன்னிடம் யோசனை கேட்டிருப்பேன். ஆனால் சுபத்திரையின் சகோதரனான உன்னிடம் இதைப்பற்றி எப்படிச் சொல்வேன்? நீ என்ன எண்ணி கொள்வாயோவென்று அஞ்சினேன். ஆனால், இவ்விஷயமாகத் தனிமையில் அடிக்கடிச் சிந்தித்து வந்தேன். நமது சமூக வாழ்வு உள்ள நிலைமையில் பரஸ்பரம் காதல்கொண்டு கல்யாணம் செய்து கொள்வதென்பது இயலாத காரியமாதலின், சுபத்திரையின் மீது எனக்குண்டான பிரியம் எத்தகையதாயினும், அவளை மணம் புரிந்து கொண்டால் இன்ப வாழ்க்கை நடத்தலாமெனத் தோன்றிற்று. ஆனால், ராஜு நான் ஒரு கோழை என்பது உனக்குத் தெரியுமே! என் தந்தையின் எதிர்ப்புக்கும், என் சிற்றன்னையின் சீற்றத்துக்கும் அஞ்சினேன். ஆயினும், அவர்கள் பேசிமுடித்த கல்யாண ஏற்பாடுகளையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன். சுபத்திரைக்கு வரன் தேட வேண்டுமென்று நீ சொல்லிய போதெல்லாம் என் இருதயம் படபடவென்று அடித்துக் கொள்ளும் உன்னிடம் என் கருத்தை தெரிவிப்பதற்குத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் நான் மோசம் போவேனென்று எதிர்பார்த்தேனில்லையே?"
இராஜகோபாலன் பெருமூச்சுவிட்டான். "தலைவிதி தலைவிதி" என்று முணுமுணுத்தான். "நீ கொடுத்த கல்யாணக் கடிதத்தைப் பார்த்தபோதுதான் என் மனோ நிலையை நான் நன்கு கண்டறிந்தேன். முதலில் அந்தக் கணபதி ஐயர் மீது எனக்குப் பொறாமையுண்டாயிற்று. ஆனால் நீ கூறிய விவரங்களைக் கேட்ட பின்னர், அவர் மீது கடுங்கோபம் உண்டாகிறது. அவ்வாறே உன் தந்தை மீதும் உன் மீதும் கூட எனக்கு கோபம் வருகிறாது. சுபத்திரையை வேறொருவன் கல்யாணம் செய்து கொள்வது என்னும் எண்ணமே என்னால் சகிக்கக் கூடாததாயிருக்கிறது. அவளில்லாமல் இவ்வுலகில் நான் வாழ்க்கை நடத்த முடியாதெனத் தோன்றுகிறது. என் வாழ்க்கையை இன்பமயமாக்குவதும் துன்பமயமாக்குவதும் இப்போது உன் கையிலிருக்கின்றன" என்று கூறி முடித்தேன்.
"இவ்விஷயம் மட்டும் என் அன்னைக்குத் தெரிந்தால் அவள் இருதயம் பிளந்தே போய்விடும் தியாகு. அவள் என்னிடம் ஒரு நாள் என்ன கூறினாள் தெரியுமா? 'குழந்தாய், சுபத்திரைக்கு உன் நண்பனைப் போல் ஒரு கணவனைத் தேடிவர மாட்டாயா?' என்றாள் அப்போது அருகிலிருந்த சுபத்திரை புன்னகையுடன் வெட்கித் தலை குனிந்ததும், பின்னர் நான் தாயாரிடம் சுபத்திரை அருகிலிருக்கும்போது கல்யாணத்தைப் பற்றிப் பேச வேண்டாமென்று தனிமையில் கேட்டுக் கொண்டதும் நன்கு நினைவில் இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு மட்டும் இதைச் சொல்லியிருந்தாயானால் என் அன்னை எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாள்! இப்போது அவளுக்குத் துக்கமே அதிகமாகும்" என்று இராஜகோபாலன் கூறியபோது, எனக்கு மயிர்க்கூச்சம் உண்டாயிற்று. மனங் கசிந்து கண்ணீர் பெருகிற்று.
"ஏன் இப்படிப் பேசுகிறாய் ராஜு? இன்னும் முழுகிப் போகவில்லையே? இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு."
காற்றிலேறி அவ் விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடாக்கண் பணியிலே
என்றும்,
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே
என்றும் பாடுவாயே? அதற்குத் தருணம் வந்திருக்கும் இப்போது ஏன் தயங்குகிறாய்?" என்று வினவினேன்.
"வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது. இனி அதைப் பற்றிப் பேசுவதால் கவலை அதிகமாகுமேயன்றி வேறில்லை. சுபத்திரையைப் பாழுங் கிணற்றில் தள்ளுவது முடிந்து போன விஷயம்" என்றான் இராஜகோபாலன்.
"உன் தந்தை உன்னை வளர்த்துப் படிக்க வைத்ததனால்தான் என்ன? அவருக்கு அடிமையாகிவிட வேண்டுமா? உனக்கு மனச்சான்று என்பது தனியாக இல்லையா? உன் சகோதரிக்கும் எனக்கும் உன் தாய்க்கும் துரோகம் செய்யப் போகிறாயா?"
"தலைவிதி தலைவிதி!"
1.2. சந்திரமண்டலப் பிரயாணம்
அன்றிரவு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டியில் இராஜகோபாலன் ஊருக்குப் பிரயாணமானான். அவனை ரயில் ஏற்றிவிட்டு வருவதற்காக நானும் எழும்பூர் புகை வண்டி நிலையத்திற்குச் சென்றேன். வண்டி புறம்படுந்தறுவாயில் கடைசியாக அவன் என் கையைப் பிடித்துக் கொண்டு "தியாகு, மனிதர்கள் விதியை எதிர்த்துப் போராட நினைத்தல் மதியீனம். இது எனது கொள்கை. நீ மணஞ் செய்து கொள்வதற்கு இதுவரை இருந்த தடை இப்போது நீங்கிவிட்டப்படியால், நான் திரும்பி வந்ததும் இங்கே இன்னொரு கல்யாணச் சாப்பாடு கிடைக்குமென நம்புகிறேன்" என்று கூறிப் புன்னகை புரிந்தான். இயற்கையான மகிழ்ச்சியினின்றெழாமல் முயன்று வருவித்துக் கொண்ட அந்தப் புன்னகையிலே எல்லையற்ற துக்கம் குடி கொண்டிருந்தது. இதற்குமுன் எப்போதும் குதூகலமும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்த என் நண்பனின் சுந்தரவதனத்தில், அன்றைக்குப் பிறகு நகை யென்பதையே காணமாட்டேன் என்று பாவியேன் அப்போது அறிந்தேனில்லையே!
புகை வண்டி நிலையத்திலிருந்து வீடு திரும்பியதும் உணவும் அருந்தாமல் படுக்கச் சென்றேன். நீண்ட நேரம் வரை தூக்கம் வரவில்லை. இராஜ கோபாலன் கூறிய விவரங்கள் என் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தன. அவனுடைய துயரத்தைப் பற்றி நினைத்து நினைத்து வருந்தினேன். என்னுடைய ஆசை நிராசையாய்ப் போனது குறித்துப் பெருமூச்சு விட்டேன். என்னுடைய வருங்கால வாழ்க்கையை முடிவற்ற ஒரு பாலைவனம் போல் உருவகப் படுத்திப் பார்த்தேன். இடையிடையே, சுபத்திரையின்,
அமுதூற்றினை யொத்த இதழ்களும் - அறி
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப் பொன்னொத்த (நின்) மேனியும்
என் மனக் கண்ணின் முன்பு தோன்றிக் கொண்டிருந்தன. அப்பாட்டை அவள் பாடியதும் இன்றுதான் பாடியது போல் என் செவிகளில் வந்து ஒலித்தது. நெடு நேரத்துக்குப் பின்னர் என் கண்ணிமைகள் சோர்வுற்று மூடிக் கொண்டன. எண்ணங்கள் பொருத்தமின்றிக் குழப்பமுற்றன.
இதென்ன அதிசயம்? நான் எங்கே இருக்கிறேன். வீட்டில் படுத்துக்கொண்டிருந்தவன் இங்கெப்படி வந்தேன்? ஆச்சரியம்! ஆச்சரியம்! மேலும் கீழும் சுற்று முற்றும் பார்த்தேன். அழகிய சிறு படகு ஒன்றில் நான் உட்கார்ந்திருந்தேன். அதன் ஒரு மூலையில் ஏதேதோ விசைகள் வேலை செய்து கொண்டிருந்தன. அப்படகு தரையில் கிடந்ததோ? நீரில் மிதந்ததோ? இல்லை, இல்லை ஆகாய வெளியில் அதிவேகமாகப் பறந்து மேலே மேலே சென்று கொண்டிருந்தது! சந்திரன், அது சந்திரன் தானா? ஆயின், அதற்கு அவ்வளவு பிரமாண்டமான வடிவம் எங்கிருந்து வந்தது! சாதாரண சந்திரனைவிடச் சுமார் நூறு மடங்கு பெரிய ஒரு கோளம் வானத்தில் ஒளிமயமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் ஒளி, பௌர்ணமியின் நிலவைவிடப் பன்மடங்கு பிரகாசமாயிருந்ததாயினும், வெயிலைப் போல் வெறுப்பளிப்பதாயில்லை. எல்லையற்ற இனிமையும் குளிர்ச்சியும் அவ்வொளியில் குடிகொண்டு, உடம்புக்கும் உயிருக்கும் உற்சாகமளித்தன. கீழே அதல பாதாள மென்னக்கூடிய தூரத்தில் பூமியின் மலைச்சிகரங்களும், நீர்ப் பரப்புகளும் காணப்பட்டன. கண்களை ஒரு முறை உற்றுப் பார்த்தேன். அந்தோ! அந்த விசைகளுக்கு அருகில் உட்கார்ந்து அவற்றை முடுக்கிக் கொண்டிருப்பவன் யார்? அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பது யார்? வேறு யாருமில்லை! அவர்கள் என் ஆருயிர் நண்பன் இராஜகோபாலனும் என்னுயிரைக் கொள்ளை கொண்ட இன்பச் சிறுமி சுபத்திரையுமே. படகு செல்லும் வேகம் ஒருபுறம்; இவர்களைக் கண்ட ஆச்சரியம் ஒருபுறம் என் தலை கிறுகிறுவென்று சுழல ஆரம்பித்தது. சிறிது முயன்று சமாளித்துக் கொண்டேன்.
இராஜகோபாலன் பேசினான்:- "நண்பா, உறக்கம் தெளிந்து எழுந்தாயா?" என்றான்.
"ஆம். ராஜு, நாம் எங்கே போகிறோம்?"
"இன்னும் தெரியவில்லை? சந்திரமண்டலத்துக்குப் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். ஜெர்மனிய ஆசிரியர் கொடார்ட் கண்டுபிடித்துள்ள புதிய விமானம் இது."
சமீபத்தில் இதைப்பற்றிப் பத்திரிகைகளில் படித்தது எனக்கு நினைவு வந்தது. ஆனால், படித்த விவரத்துக்கும் இந்தப் பறக்கும் படகுக்கும் அவ்வளவு பொருத்தமிருப்பதாகத் தோன்றவில்லை.
"சரிதான், ஆனால் சந்திர மண்டலத்துக்கு நாம் ஏன் போகிறோம்?" என்று வினவினேன்.
"அதென்ன புதிதாகக் கேட்கிறாய், ராஜு, நேற்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேனே? இதோ இருக்கும் உன் இன்னுயிர் காதலியைக் குள்ளநரி கொண்டு போகாமல் காப்பாற்றும் பொருட்டுதான்."
அப்போது, அந்த நள்ளிரவிலே, ஆகாய வெளியிலே சோதிமயமான நிலவொளியிலே, வானம்பாடியின் இனிய கீதத்தினும் பன்மடங்கு இனியதாய், கல்லையும் மரத்தையும் கனியச் செய்யும் குரலில்,
பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்
என்ற பாட்டு எழுந்தது. பாடியவள் சுபத்திரை. நான் புளகாங்கிதமடைந்தேன்.
திடீரென்று பயங்கரமான புயற்காற்று தோன்றிற்று. படகு மேலும் போகாமல் கீழும் போகாமல், அந்தரத்தில் அப்படியும் இப்படியும் ஆடிக் கொண்டு நின்றது. பிரமாண்ட கழுகு போன்ற ஒரு பறவை நெடுந்தூரத்திலிருந்து எங்கள் படகை நோக்கிப் பறந்து வருவதைக் கண்டேன். சில நிமிஷங்களில் அது எங்கள் படகை அணுகி விட்டது. அப்போது அதை உற்றுப் பார்த்தேன். அதன் முகம் மட்டும் குள்ளநரியின் முகம் போலிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். அப்போது இராஜகோபாலன் சுபத்திரையை அவசரமாக அழைத்துக் கொண்டு வந்து அவளுடைய ஒரு கையை என் கையில் வைத்து, "நண்பா, இதோ என் தங்கையை உன்னடைக்கலமாக ஒப்புவிக்கின்றேன். அவளைப் பாதுகாப்பாய்!" இதற்குள், நரி முகங்கொண்ட அந்தப் பயங்கரப் பறவை படகுக்கு வந்து விட்டது. இராஜகோபாலன் அது படகில் வராமல் தடுக்கத் தொடங்கினான். பறவை, இராஜகோபாலனை லட்சியஞ் செய்யாமல் சுபத்திரையை அணுகமுயன்றது. அவன் அதை ஒரு தடியினால் அடித்து உள்ளே வரவொட்டாமல் செய்து கொண்டிருந்தான். சில நிமிஷங்கள் ஆனதும், அவன் திடீரென்று திரும்பி, "தியாகு இந்த விமானத்தின் விசை கெட்டுப் போய் விட்டது. இனிப் பயன்படாது. உடனே சுபத்திரையை அழைத்துக் கொண்டு இறங்கிவிடு" என்றான். சுபத்திரை நடுநடுங்கியவளாய்த் தன் இரு கரங்களாலும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அப்படியே இருவரும் படகை விட்டிறங்கி, ஆகாய வெளியில் எவ்வகை ஆதரவுமின்றி நின்று கொண்டு இராஜ கோபாலனையே பார்த்துக் கொண்டிருந்தோம். அவன் சிறிது நேரம் அந்தப் பறவையுடன் சண்டையிட்ட பிறகு, கையிலிருந்த தடியால் ஓங்கி ஒருமுறை அடித்தான். அது பயங்கரமாக ஒருமுறை கூவி விட்டுக் கிழே அதிவேகமாய் விழத் தொடங்கியது.
என்ன ஆச்சரியம்! இராஜகோபாலன், அப்போது புதியதோர் ஒளி வடிவமும் விசாலமான சிறகுகளும் பெற்றவனாய், அப்படகிலிருந்து மேலே கிளம்பிச் செல்லத் தொடங்கினான். "குழந்தைகளே, நான் சந்திர மண்டலத்துக்குச் செல்கிறேன். நீங்கள் நெடுங்காலம் பூமியில் வாழ்ந்துவிட்டு வந்து சேர்வீர்கள்" என்று கூறிவிட்டு அவன் மேலே மேலே பறந்து சென்று சிறிது நேரத்துக்கெல்லாம் மறைந்து போனான்.
ஆகாய வெளியில் அந்தரமாகத் தொங்கிக் கொண்டிருந்த என் கழுத்தைக் கட்டிக் கொண்டு நின்றாள் சுபத்திரை. அவள் முகம் என் மார்புக்கு நேராக இருந்தது. இப்போதுதான் குனிந்து அவள் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய அழகிய கண்களும் என்னை நோக்கின. ஓ! அந்தக் கண்கள்!
"சுபத்திரா! நஞ்சு தடவிய அம்புகள் போல் உன் கண்கள் என் இதயத்தில் பாய்கின்றனவே! என் செய்வேன்!" என்றேன்.
சுபத்திரை தன் பவழச் செவ்வாய் திறந்து, முத்தன்ன பற்கள் சிறிது வெளித்தோன்ற, தேனினுமினிய குரலில் "நாதா! தாங்கள் ஏன் கவலையுறவேண்டும்? அவற்றிற் கருகிலேயே அமுதூற்றிருக்கின்றதே?" என்று கூறிப் புன்னகை செய்தாள். நான் பரவசமடைந்தேன். பின்னர் - சொல்ல வெட்கமாயிருக்கிறது - அமுதூற்றென்று அவள் வருணித்த இதழ்களில் முத்தமிட்டேன். அந்தக் கணத்தில் என் தலை சுழல ஆரம்பித்தது. மயக்கங் கொண்டேன். கீழே இறங்குவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. வரவரக் கீழிறங்கும் வேகம் அதிகப்பட்டது. அளவிடப்படாத நெடுந்தூரத்துக்கு, மனதினாலும் எண்ணமுடியாத வேகத்துடன், கீழே கீழே கீழே போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று. கடைசியாகத் தொப்பென்று பூமியில் வீழ்ந்தேன்.
திடீரென்று கண் விழித்துப் பார்த்தேன். கட்டிலிருந்து புரண்டு கீழே தரையில் வீழ்ந்திருப்பதைக் கண்டேன். விழுந்த அதிர்ச்சியினால், முதுகு வலித்துக் கொண்டிருந்தது. எழுந்து மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டேன். நான் கண்ட அதிசயக் கனவை நினைத்தபோது என் உடல் நடுங்கிற்று. அன்றிரவு நான் தூங்கவேயில்லை.
ஒரு வாரம் சென்றது. சுபத்திரைக்கு மணம் நடந்திருக்க வேண்டிய தினத்துக்கு இரண்டு நாளைக்குப் பின்னர் எனக்கு ஒரு கடிதம் வந்தது. உறையின் மீது விலாசம் இராஜகோபாலனுடைய கையெழுத்திலிருப்பதைக் கண்டேன். அதை ஆவலுடன் பிரித்துப் படித்தேன் என்று சொல்லவும் வேண்டுமா? ஆனால் அதனுள்ளே அவ்வளவு ஆச்சரியமும் துயரமும் எனக்குக் காத்திருக்கின்றனவென ஒரு கணமும் நினைத்தேனில்லை. அக்கடிதம் வருமாறு:-
1.3 என் ஆருயிர் நண்பனே!
என் சிந்தை கலங்கியிருக்கிறது. தலை சுழல்கிறது. மதிமயங்குகிறாது. கரைகாணாத துயரக்கடலில் மூழ்கியிருக்கிறேன். உன்னிடம் கூறி ஆறுதல் பெறலாமென்றால் நீயும் இங்கில்லை. என் செய்வேன்! கடிதத்தில் எழுதியாவது ஓரளவு மனச்சாந்தி பெறலாமென்று இதை எழுதத் தொடங்கினேன்.
நண்ப, இங்கே நான் கல்யாண தடபுடலில் களித்திருப்பேனென நீ எண்ணியிருப்பாய். இங்கே நேர்ந்தவைகளையும், என் மனம் படும் பாட்டையும் அறிந்தாயானால்! - அன்று நாம் கடற்கரையில் பேசிக் கொண்டிருந்த போது, இப்படியெல்லாம் நேரிடுமென்று எண்ணினோமா, தியாகு? 'இக்கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு' என்று கூறினாய். தெய்வம் உன் கோரிக்கையை நிறைவேற்றி விட்டது. ஆனால், அதே சமயத்தில் என் தலையில் பெரிய பாறாங்கல்லைப் போட்டுவிட்டது.
அந்தோ! என் தாய்! பாவிக் கைகளால் அவள் உடலுக்குத் தீ மூட்டிவிட்டேன். இன்று அவள் எலும்புகளைப் பொறுக்கியும் புதைத்துவிட்டு வந்தேன். ஐயோ! அன்பு கனிந்த அவள் திருமுக மண்டலத்தை நினைக்கும் போதெல்லாம் என் உடம்பு ஏன் இப்படித் துடிக்கிறது? உயிர்விடப் போகுந்தறுவாயில், அவள் என்னைப் பார்த்த பார்வை என் மனக் கண்ணின் முன்பு எப்போதும் நின்று கொண்டிருக்கிறது. மறவேன் மறவேன்! அன்பும் இரக்கமும் கருணையும் கனிவும் நிறைந்த அப்பார்வையை என் உயிருள்ளளவும் மறவேன்.
துயரக் கடலில் மூழ்கியிருக்கிறேன் என்று சொன்னேன்? தவறு. என்னை மன்னித்துவிடு. ஆனந்த சாகரத்திலன்றோ மிதக்கிறேன். நான்! என் கண்களினின்றும் அருவிபோல் பெருகி, இதோ இந்தக் கடிதத்தையும் நனைத்து எழுத்துக்களை நாசமாக்குகிறதே. அது துயரக் கண்ணீர் அன்று அது ஆனந்தக் கண்ணீர். ஆம் நான் பெருமை கொள்கிறேன். "என் தாயார் வீரத் தாயார்" என்றெண்ணி இறுமாப்படைகிறேன். வீரத் தாய்மார்களைப் பற்றி நாம் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் என் அன்னைக்கு முன்னால் அவர்கள் எல்லாரும் எம்மாத்திரம்? அவள் வயிற்றிலே இந்தப் பாவி, இந்தக் கோழை எப்படிப் பிறந்தேன்? அதுதான் தெரியவில்லை.
நண்ப! அளவு கடந்த துக்கத்தினால் நான் தான் பைத்தியம் பிடித்தவன் போலாகி விட்டேனென்றால், பொருத்தமில்லாமல் பிதற்றி உன்னையும் ஏன் பைத்தியமாக்க வேண்டும்? தயவு செய்து மன்னித்துவிடு. நடந்த விஷயங்களைத் தொடர்ச்சியாகக் கூற முயல்கிறேன். பின்னர், உன்னால் கூடுமானால், உனக்குத் தைரியமிருந்தால், எனக்கு ஆறுதல் சொல்லு.
சனிக்கிழமை இரவு சென்னையை விட்டுப் புறப்பட்டேனல்லவா? மறுநாள் மாலை இங்கு வந்து சேர்ந்தேன். ஊருக்குள் அடி வைத்ததும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஓடி வந்து, "மாமா மாமா, தொந்திக் கணபதிக்கும் சுபத்திரைக்கும் கல்யாணம், தெரியுமா உனக்கு?" என்று கூவின. எனக்கோ வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. வீடு சென்றதும் என் அருமைத் தங்கை வழக்கம்போல் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். ஆனால் அவள் வாயினின்றும் ஒரு வார்த்தையேனும் கிளம்பவில்லை. அவள் வதனத்தில் எப்போதும் குடி கொண்டிருந்த முல்லைச் சிரிப்பையும் காணோம். முன்னெல்லாம் நான் போனதும் எவ்வளவு கேள்விகள் கேட்பாள்? எப்படியெல்லாம் கொஞ்சுவாள்? எனக்கும் அவளுடன் பேசுவதற்கு நாவெழவில்லை. தாயார் நான் வந்த சத்தம் கேட்டு வெளியே வந்தாள். "ராஜு, வா அப்பா" என்றாள். அவள் கண்களில் நீர் ததும்புவதையும் மிகுந்த பிரயாசையுடன் அவள் கண்ணீரை அடக்கிக் கொள்வதையும் கண்டேன்.
பின்னர், சற்று நேரத்துக்கெல்லாம் என் தாயார் தனியாகச் சமையலறையில் இருக்கும் சமயம் பார்த்து அங்கே போனேன். இப்போது அவள் தங்கு தடையின்றித் தாராளமாகக் கண்ணீர் பெருக்கினாள். "அம்மா, இதென்ன அநியாயம்? அப்பாவுக்கு ஏன் இப்படிப் புத்திப் போயிற்று?" என்றேன். "குழந்தாய் அதைப் பற்றி இனிப் பேசுவதில் பயன் என்ன?" என்று பெருமூச்சு விட்டாள். நான் வற்புறுத்திக் கேட்டதின் மேல், இந்தக் கல்யாணம் ஏற்பாடானதைப் பற்றி அவள் ஆதியோடந்தமாகக் கூறினாள். நண்ப! நீயல்லாமல் வேறு யாராவதாயிருப்பின் எனக்கு அவ்விவரங்களைக் கூறவும் வெட்கமாக இருக்கும். நான் எதிர்பார்த்ததுபோல் பண ஆசையே முதன்மையான காரணம் என்று அன்னை தெரிவித்தாள். வேறு தகுந்த வரன்களும் அமையவில்லை. இவ்வருஷம் கல்யாணம் கட்டாயம் செய்துவிடவேண்டும் என்று ஊரிலுள்ளவர்கள் சொல்லி விட்டார்களாம். இந்த அநியாயம் வேறெங்கேனும் உண்டா தியாகு? அம்மா மட்டும் கூடாதென்று சொல்லி வந்தாளாம். ஆனால் வீட்டிலுள்ள கிழவிகள் - அத்தையும் பாட்டியும் அப்பாவும் அனுசரணையாம். இரண்டு மூன்று முறை வீட்டில் சண்டை ஏற்பட்டு அம்மா அப்பாவின் கையில் அடிபட்டாளாம். ஆனால், என் தாயார் கூறிய விவரங்களுள் எல்லாவற்றையும் விட ஒன்று என் உள்ளத்தை உருக்கிவிட்டது. இந்தக் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் சுபத்திரை அடுத்த வீட்டில் இந்த விவரத்தை கேள்விப்பட்டு ஓட்டமாக ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு, "அம்மா குள்ளநரிக்கு என்னைக் கொடுக்கப் போகிறீர்களாமே! நிஜந்தானா?" என்று கதறினாளாம். "குழந்தாய் நான் உயிரோடிருக்கும்வரை அப்படி ஒன்றும் நேராது" என்று அன்னை பதில் சொன்னாளாம். இதைக் கேட்டதும் நான் சலசலவென்று கண்ணீர் பெருக்கிக் கோவென்று அழுது விட்டேன். "குழந்தைக்கு அப்படி வாக்குறுதி கொடுத்தேனே ராஜு இப்போது என்ன செய்வேன்?" என்று அம்மா என்னைக் கேட்டாள். நான் என்ன பதில் சொல்வேன்? ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவளுடைய வாக்குறுதியை இப்படி நிறைவேற்றி வைக்கப் போகிறாள் என்று நினைத்தேனோ?
"அம்மா கல்யாணத்தை நிறுத்திவிடத்தான் வேண்டுமென்று சண்டைபிடித்துப் பார்க்கட்டுமா?' என்று கேட்டேன். "ஐயோ! வேண்டாம். அவர் பிடிவாதத்தை மாற்ற முடியாது. நான் ஒருத்தி கேட்டுக் கொண்ட வசவுகள் போதும், அப்பா" என்றாள்.
மறுநாள் நான் என் கைப்பெட்டியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டிருக்கும்போது, அம்மா அங்கு வந்து "எப்போதும் மருந்துகள் கொண்டு வருவாயே, ராஜு இம்முறை கொண்டு வந்திருக்கிறாயா?" என்று கேட்டாள். பெண்களின் உள்ளத்தைக் கண்டு பிடிக்க முடியாது என்று சொல்கிறார்களே, அது எவ்வளவு உண்மை! என் அன்னைதான்; ஆனால் அவள் என்ன கருத்துடன் கேட்கிறாள் என்பதை அப்போது அணுவளவும் அறிந்தேனில்லையே! நான் ஊருக்குப் போனால் 'டாக்டர் வந்துவிட்டார்' என்று எல்லோரும் வைத்தியத்துக்கு வந்துவிடுவார்களென்பதும், அதற்காக நான் எப்போதும் சிற்சில மருந்துகள் எடுத்துப் போவது வழக்கமென்பதும் உனக்குத் தெரியுமே! அவ்வாறே இம்முறை எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றை இன்னின்ன மருந்து என்றும், இந்த இந்த நோய்க்கு உபயோகமென்றும் அம்மாவுக்குக் காட்டினேன். அப்போது, விஷமருந்து இருந்த ஒரு புட்டியையும் பாவி ஏன் அவளுக்குக் காட்டி விட்டேன். மறுநாள் அதாவது கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில் என்னுடைய பெட்டிச் சாவியைக் கேட்டாள். "ஜாக்கிரதையாகச் சில நகைகள் உன் பெட்டியில் வைத்திருக்க வேண்டும், ராஜு! அந்தச் சாவி என்னிடமே இருக்கட்டும்" என்றாள். நான் நம்பிக் கொடுத்தேன். நம்பிய பிள்ளையைத் தாயே மோசம் செய்து விட்டாளே!
அன்றிரவுதான், தியாகு, மகா பயங்கரமான பேரிடி என் தலையில் விழுந்தது. நிச்சயதார்த்தத்துக்கு மாப்பிள்ளையை ஊர்வலத்துடன் அழைத்து வருவதற்காக எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிருந்தோம். வெற்றிலை பாக்கு வழங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் வேகமாக வந்து என் காதோடு அம்மா அவசரமாகக் கூப்பிடுவதாகத் தெரிவித்தார். என் அன்னை மற்ற பெண்களுடன் மாப்பிள்ளை வீட்டுக்கு வரவில்லையென்பதை அப்போதுதான் கவனித்தேன். ஏதோ முக்கிய விஷயமாகவே இருக்குமென்று எண்ணி உடனே வீட்டுக்கு விரைவாகச் சென்றேன். வீட்டில் சமையற்காரனையும் சுபத்திரையையும் தவிர வேறு யாருமில்லை. "அம்மா சாமான் அறையில் இருக்கிறாள் அண்ணா! உன்னை உடனே கூப்பிடுகிறாள்" என்றாள் சுபத்திரை. சாமான் அறையில் நான் கண்ட காட்சியை என்னவென்று சொல்வேன்? அம்மா படுத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் என் பெட்டியின் மேலிருந்த விஷமருந்துப் புட்டியில் பாதி காலியாய் இருந்தது. எனக்கு வயிற்றைப் பகீர் என்றது. அம்மா அருகில் ஓடிப் போய் பார்த்தேன். அவள் புன்னகை புரிந்தாள். ஆனால் விஷம் நன்கேறி விட்டதென்றும் இனி உயிர் பிழைக்க வழியில்லையென்றும் அறிந்தேன். அப்போது ஒரே எண்ணந்தான் தோன்றிற்று. அந்த விஷப் புட்டியைத் தாவி எடுக்கப் போனேன். அப்போது அன்னை சட்டென்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு, மிகுந்த பிரயாசையுடன் எழுந்து உட்கார்ந்தாள். "என்ன செய்யப் போகிறாய் குழந்தாய்?" என்று ஈனசுரத்தில் கேட்டாள். நான் பதில் சொல்லவில்லை.
"விஷத்துக்கு மாற்று மருந்து எடுக்கவா, இப்போது எழுந்தாய்?"
"இல்லை மாற்று மருந்து இனிப் பயன்படாது. அந்தப் புட்டியில் பாக்கியுள்ளதை நான் குடிக்கப் போகிறேன்.
"அது தெரிந்தே கையைப் பிடித்துக் கொண்டேன். நல்லது, ராஜு, நீ உயிரை விட விரும்பினால் நான் குறுக்கே நிற்கவில்லை. துன்பம் நிறைந்த இந்தப் பாழும் உலகில் இருந்து ஆவதென்ன? ஆனால் குழந்தாய் அவசரப்படாதே. நான் இன்னும் சற்று நேரந்தானே உயிரோடிருப்பேன்? அதற்குள் நான் சொல்ல விரும்புவதைக் கேட்டுவிட மாட்டாயா?"
"சரி, சொல்லு; கேட்கிறேன்."
"என் கண்மணி சுபத்திரைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். நான் உயிரோடிருக்கும்போது இந்தக் கல்யாணம் நடைபெறாது. நீ என்ன செய்யப் போகிறாய் உன் தங்கைக்காக?"
"நீ செய்ததையே நானும் செய்கிறேன்."
"குழந்தாய் நீ சொல்வது நன்றாயில்லை. நான் பெண். உயிர் விடுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது. நீ ஆண் பிள்ளையாயிற்றே?"
"இனிச் செய்ய என்னவிருக்கிறது அம்மா?"
"நான் உயிர் துறந்தது வீண் போக வேண்டுமென்றா சொல்கிறாய்? இன்னமும் என் குழந்தையைப் பாழுங்கிணற்றிலேயா தள்ளப் போகிறீர்கள்?"
"அம்மா நான் என்ன செய்யவேண்டுமென்று சொல். செய்து முடிப்பதாக இதோ ஆணையிடுகிறேன்."
"குழந்தாய், ஆணை வேண்டாம் நீ சொன்னால் போதாதா? நான் இறந்தால் நாளை முகூர்த்தம் நின்றுவிடும். அபசகுனம் என்று சொல்லி இந்தக் கல்யாண ஏற்பாட்டையே மாற்றிவிடுவார்கள் அல்லது நீ கொஞ்சம் பிடிவாதம் செய்தால் முடிந்துவிடும். பின்னர், சுபத்திரைக்குத் தக்க வரன் தேடிக் கல்யாணம் செய்து வைப்பது உன் பொறுப்பு. ராஜு பிச்சை வாங்கிப் பிழைக்கும் பிரம்மசாரி பையன் ஒருவன் உனக்குக் கிடையாமலா போகிறான்? யாருக்கு வேண்டுமானாலும் கொடு. என் கண்மணியை இந்தக் கொடுமைக்கு மட்டும் ஆளாக்காதே. ஆகால மரணமடைந்தவர்களின் ஆவி பூமியின் மீதே சுற்றிக் கொண்டிருக்கும் என்பார்கள். மீண்டும் இந்த மாப்பிள்ளைக்கே சுபத்திரையைக் கொடுக்கும் பட்சத்தில், இவ்வுடலை நீத்த பிறகும் என் உயிர் ஒருக்காலும் அமைதியடையாது"
"அம்மா சத்தியமாகச் சொல்கிறேன். நான் உயிர் விடுவதாயிருந்தால் சுபத்திரைக்குத் தகுந்த கணவனை நிச்சயம் செய்துவிட்டே உயிர்விடுவேன். அதுவரை என் உயிர் நீங்காது" என்றேன்.
அப்போது அம்மாவின் முகம் மலர்ந்தது. பின்னர், நண்ப, அவளுக்கு இவ்விஷயமாக உன்னுடைய விருப்பத்தைப் பற்றியும் சொன்னேன். அவள் இணையற்ற மகிழ்ச்சியடைந்தாள் என்பதை அவள் முகக் குறியால் அறிந்தேன். சற்று நேரத்துக்கெல்லாம் என் ஆருயிர் அன்னை இப்பாவ உலக வாழ்வை நீத்துப் பரகதிக்குச் சென்றாள். அதுவரை கண்ணீர் ஒரு துளியும் பெருக்காமல் பிரமை கொண்டவன் போல் பேசி வந்த நான், கோவென்று கதறிப் புரண்டழுதேன். அப்போதும் ஆண்டவன் அருளால் கொஞ்சம் சுயபுத்தியிருந்தது. புட்டியைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினேன். பின்னர் என் வீட்டில் நேர்ந்த அலங்கோலத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
நண்ப, கடைசியாக ஒன்று கூறி, உனக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மனக் கவலையை நீக்கிவிட விரும்புகிறேன். சுபத்திரையைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றி உன் விருப்பத்தை என் அன்னையிடம் கூறியதனால் அவள் மன நிம்மதியுடன் மரணமடைந்தாள். ஆனால், இது சம்பந்தமாக உன்னை நான் வற்புறுத்துவேனென்று நீ பயப்பட வேண்டாம். எனக்கு நேர்ந்த துயரத்தைக் கேட்டு மனங்கசிந்திருந்த போது கூறிய மொழியை ஆதாரமாகக் கொண்டு உன் வாக்குறுதியை நிறைவேற்றி வைக்கும்படி கேட்கமாட்டேன். ஆனால் சுபத்திரைக்குத் தக்க வரன் தேடிக் கல்யாணம் செய்து வைக்கும் முயற்சியில் உதவி செய்ய வேண்டுமென்று கேட்க எனக்குரிமை யுண்டென எண்ணுகிறேன். ஏனெனில் நண்ப, அம்மா இறந்தாலும், வேறு என்ன துயரம் நேர்ந்தாலும் சுபத்திரையின் கல்யாணத்தை என்னவோ இவ்வருஷமே நடத்தியாக வேண்டும். நமது சமூகக் கட்டுப்பாடுகளின் கொடுமையை என்னவென்பேன்?
இங்ஙனம்,
அபாக்கியனான நின் நண்பன்
இராஜகோபாலன்.
மேற்கண்ட கடிதத்தைப் படித்து வரும்போது என் மனதிலெழுந்த பலவகை உணர்ச்சிகளை இங்கே எழுதி வாசகர்களின் காலத்தை வீண்போக்க நான் விரும்பவில்லை. கல்யாணம் நின்று போயிற்றென்பதைப் படித்ததும், அளவு கடந்த மகிழ்ச்சியுண்டாயிற்று. இராஜகோபாலன் அன்னை மரணமடைந்த செய்தியை படித்ததும், இடி விழுந்தது போல் திடுக்கிட்டேன். கடிதத்தின் பிற்பகுதியை அழுதுகொண்டே படித்தேன். கடைசிப் பகுதி, இராஜகோபாலன் மீது ஓரளவு கோபத்தை உண்டாக்கிற்று. நீண்ட பதில் எழுதினேன். அதில் முதலில் ஏதேதோ ஆறுதல் கூறியிருந்தேன். கடைசியில், சுபத்திரையும் நானும் மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்பது ஆண்டவன் விருப்பமென்று குறிப்பிட்டு என் உறுதியைச் சந்தேகித்தது குறித்த அவனைச் சிறிது கடிந்து கொண்டேன்.
--------
1.4. கல்யாணம்
அவ்வாண்டில் கடைசி முகூர்த்த நாளாகிய ஆனி மாதம் 30 ஆம் நாளன்று எனக்கும் சுபத்திரைக்கும் மணம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இராஜகோபாலன் அன்னையின் பிரிவை ஓரளவு மறந்திருந்தான். இறுதிச் சடங்குகள் செய்து விட்டுச் சென்னைக்கு வந்து விட்டான். நானும் அவனும் சேர்ந்தே கல்யாணத்துக்கு முதல் நாள் ஊருக்குப் போவதென்று தீர்மானித்திருந்தோம்.
என் வீட்டில் யாருக்கும் இந்த விவாகம் சம்மதமில்லை. எதிர்ப்பு பலமாக இருந்தது. தந்தையும் இளைய தாயாரும் எவ்வளவோ சொன்னார்கள். அத்தனைப் பிடிவாதமும் மன உறுதியும், எனக்கு அப்போது எங்கிருந்து வந்தன என்பதை நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. கடைசியாக, 'எப்படியாவது கெட்டலையட்டும்' என்று விட்டு விட்டார்கள்.
ஆனி மாதம் 28ஆம் நாள் இரவு வண்டியில் புறப்பட்டோ ம். தந்தையும் தாயும் கல்யாணத்துக்கு வரவில்லை. தந்தை வேலை அதிகமென்று சொல்லிவிட்டார். இளைய தாயார் உடம்பு அசௌக்கியமென்றாள். என் சொந்தத் தாயின் சகோதரர் மட்டும் குடும்பத்துடன் வந்தார். என் தம்பிமார் இருவரும் இரண்டொரு நண்பர்களும் கூட வந்தார்கள். ஆனால் அப்போது எனக்கிருந்த மனமகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் தாய் தந்தையர் வராததைக் கூட நான் பொருட்படுத்தவில்லை. எல்லாரும் எழும்பூரில் ரயில் ஏறினோம்.
வண்டி புறப்பட்டதும், நண்பர்களில் ஒருவர் வாங்கிக் கொண்டு வந்திருந்த பத்திரிகையைப் பிரித்து புரட்டினேன். 'தென்னாட்டில் வெள்ளம்' 'கொள்ளிடம் பாலத்துக்கு அபாயம்' என்ற தலைப்புகளைப் பார்த்ததும், 'சொரேல்' என்றது. கீழே படித்துப் பார்த்தேன். காவேரியிலும் கொள்ளிடத்திலும் பெருவெள்ளம் வந்து பலவிடங்களில் உடைப்பெடுத்திருப்பதாகவும், ரயில் பாதை சிலவிடங்களில் உடைந்து போனதாய்த் தெரிவதாகவும், கொள்ளிடத்தின் ரயில் பாலத்தில் ஓரிடத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும், அன்றிரவு வண்டிகள் பாலத்தைத் தாண்டிவிடப்படுமா என்பது ஐயத்துக்கிடமான விஷயமென்றும் செய்திகள் காணப்பட்டன. உடனே இராஜகோபாலனிடம் காட்டினேன். அவன் படித்துவிட்டு பெருமூச்சு விட்டான். "ஆண்டவனே நமக்கு விரோதமாயிருக்கிறானா என்ன தியாகு?" என்றான். இதற்குள் மற்றவர்களும் அச்செய்திகளைப் படித்தனர். எங்கள் உற்சாகம் அடியோடு போயிற்று. எல்லோரும் மனக்குழப்பமுற்றனர். நானும் இராஜகோபாலனும் தனியாக யோசனை செய்தோம். என்ன இடையூறு நேர்ந்தாலும் நாங்கள் இருவருமாவது போய்ச் சேர்ந்து விடுவதென்று தீர்மானித்தோம்.
காலை 3 மணிக்கு வண்டி சிதம்பரத்தை அடைந்தது. அதற்குமேல் போகாதென்று பிரயாணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. ஒருவாறு இதை எதிர்பார்த்தோமாயினும் எங்கள் ஏமாற்றம் அளவிடற்பாலதாயில்லை. ரயிலிலிருந்து இறங்கி விசாரித்தோம். கொள்ளிடம் பாலத்தில் ஓரிடத்திலே பிளவு ஏற்பட்டிருப்பதோடல்லாமல், சீர்காழிக்கும் மாயவரத்துக்குமிடையே பயங்கரமான வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறதென்றும், பல மைல் நீளம் ரயில்பாதை அடித்துக் கொண்டு போகப்பட்டதென்றும், ரயில் போவது அசாத்தியம் என்பது மட்டும் அன்றி, மனிதர்கள் அப்பிரவாகத்தைக் கடந்து செல்வது இயலாத காரியம் என்றும் தெரிய வந்தன. இந்த விவரங்களை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படியிருக்குமென்பதை வாசகர்கள் கற்பனா சக்தியினால் பாவித்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல், என்னால் விவரிக்க இயலாது.
எல்லாரும் கலந்து ஆலோசனை செய்தோம். நானும் இராஜகோபாலனும் மட்டும் கால் நடையாகப் புறப்பட்டு மாயவரம் வரையில் போய், அங்கு மீண்டும் ரயிலேறிச் செல்வதென்றும், மற்றவர்கள் அங்கேயே தங்கியிருந்து இரண்டொரு தினங்களில் ரயில் விட்டால் வருவதென்றும், இல்லாவிடில் சென்னைக்குத் திரும்ப வேண்டுவதேயென்றும் தீர்மானித்தோம். இவ்வாறு, என் கல்யாணத்துக்கு வந்த சிலரையும் விட்டுப் பிரிந்து, கவலை நிறைந்த உள்ளத்துடன் காலை நாலு மணிக்கு ரயில் பாதையோடு நடக்கலானோம். ராஜகோபாலனோ ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்களில் யார் எவருக்குத் தேறுதலோ தைரியமோ கூறமுடியும்? பொழுது விடிந்தால் யாரேனும் தடை செய்யப் போகிறார்களோ என அஞ்சி உதயத்துக்கு முன்பாகவே கொள்ளிடம் பாலத்தைக் கடக்கலானோம். 'ஹோ' வென்ற கோஷத்துடனும், பயங்கரமான அலைகளுடனும், முட்டி மோதிக் கொண்டு ஓடிய அப்பெருவெள்ளம், என் உள்ளத்தின் நிலைமையை அப்போது நன்கு பிரதிபலிப்பதாயிற்று.
பாலத்தைத் தாண்டியாயிற்று. பொழுதும் விடிந்தது. வழி நெடுக விசாரித்துக் கொண்டே விரைவாக நடந்தோம். விசாரித்ததில் தெரிந்த செய்திகள் நம்பிக்கையூட்டுவனவாயில்லை. கடைசியில் சீர்காழியைத் தாண்டி அப்பால் இரண்டொரு மைல் தூரம் போனதும், மகா சமுத்திரம் போல் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு ஒரே பிரவாகமாக வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது கண்டு திக்பிரமை கொண்டவர்கள் போல் உட்கார்ந்து விட்டோம்.
ஆனால், இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்துவிடவில்லை. என் காதலும், இராஜகோபாலன் அன்பும், எங்களை மேலும் முயன்று பார்க்கச் செய்தன. சீர்காழிக்குத் திரும்பி வந்து கொஞ்சம் உணவு அருந்தி விட்டுப் படகுக்காக விசாரித்தோம். பிரவாகத்தில் அகப்பட்ட கிராமங்களின் ஜனங்களை மீட்பதற்கென்று இரண்டொரு படகுகள் வந்தனவென்றும், ஆனால் வெள்ளத்தை மேற்பார்வை பார்ப்பதற்காக வந்த பெரிய துரையும் அவரது சகாக்களும் வெள்ளக் காட்சிகளைப் புகைப்படம் பிடிப்பதற்காக அப் படகுகளில் சென்றிருக்கின்றனர் என்றும், இன்னும் திரும்பி வரவில்லையென்றும், தெரிய வந்தது. எப்படியாவது இந்த வெள்ளத்தைத் தாண்டி எங்களைக் கொண்டு போய் விடுவோர்க்குக் கேட்ட பணம் தருவதாக அறிவித்தோம். அதன் மீது ஒரு சிலர் மரக்கட்டைகளைக் கட்டித் தெப்பமாக்கி அதில் எங்களை ஏற்றிக் கொண்டுபோய்ச் சேர்ப்பதாக முன் வந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, நாங்கள் பிரவாகத்தை அடைந்தபோது, எங்கேயோ பிரவாகத்தின் வேகத்தால் கட்டிலிருந்து அவிழ்த்துக் கொண்ட படகு ஒன்று வெள்ளத்தில் மிதந்து வந்து கொண்டிருந்தது. அம் மனிதர்கள் அதைப் பிடித்திழுத்துக் கொண்டு வந்தார்கள். மாலை சுமார் நான்கு மணிக்கு நாங்கள் அப்படகில் ஏறியபோது உயிருடன் பிரவாகத்தைக் கடந்து அக்கரை செல்வோம் என்னும் நம்பிக்கை எனக்கில்லை. எவ்வளவோ இடத்தில் படகு தலை கீழாய்க் கவிழ்ந்துவிடும் போல் இருந்தது. சிலவிடங்களில் கோலுக்கு அண்டாத ஆழம். கரையென்பதே கிடையாது. சற்று நேரத்துக்கெல்லாம் இருளும் வந்து சூழ்ந்தது. கடைசியாக எப்படியோ தட்டுத் தடுமாறி இரவு எட்டு மணிக்கு அக்கரை போய்ச் சேர்ந்தோம். பின்னர் மீண்டும் நடந்து மாயவரம் ஸ்டேஷனையடைந்த போது இரவு பத்து மணியிருக்கும். அங்கிருந்து கடைசி வண்டி போய் ஒரு மணி நேரம் ஆயிற்று என்கிறார்கள்.
அன்றிரவு ஸ்டேஷனில் படுத்திருந்துவிட்டு, மறுநாள் அதிகாலையில் மாயவரத்திலிருந்து புறப்படும் வண்டியில் ஏறி சுமார் பதினொரு மணிக்கு மன்னார்குடி போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து இராஜகோபாலன் கிராமம் ஆறு மைல் தூரம். ஒரு குதிரை வண்டி அமர்த்திக் கொண்டு 2 மணி சுமாருக்கு ஊரையணுகினோம். முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டிருந்தது 10.30 மணிக்கு. ஊரினருகில் சென்றபோது மேளச் சத்தம் கேட்டது. அப்போது என் இருதயம் அடித்துக் கொண்ட சத்தம் பக்கத்தில் யாராவது இருந்திருந்தால் நன்றாகக் கேட்டிருக்கும். இராஜகோபாலன் முகத்தை நான் பார்க்கவேயில்லை. நேரே வீட்டுக்குச் செல்லாமல், தெருவின் கோடியிலேயே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினோம். கண்ணில் அகப்பட்ட முதல் பேர்வழியை விசாரித்தோம். குறிப்பிட்ட முகூர்த்தத்தில் சுபத்திரைக்கும், கணபதி ஐயருக்கும் கல்யாணம் நடந்து விட்டதென்றும் திருமாங்கல்யதாரணம் ஆகி அரைமணி நேரம் ஆயிற்றென்றும், அவர் அறிவித்தார்; அப்படியே ஸ்தம்பித்து மரம் போலானோம்.
---------
1.5. கொலை
"ராஜு, நீ தலைவிதி தலைவிதி என்ற போது நான் உன்னை மறுத்துப் பேசினேன். நீ கூறியதே சரி என்று இப்போது எனக்குப் புலனாகிறது. நாம் எவ்வளவோ முயற்சி செய்தோம். பயனென்ன? தலைவிதி வேறு விதமாயிருக்கிறது" என்றேன்.
ஊருக்குப் பக்கத்திலிருந்த ஆற்றங் கரையில் ஒரு தனிமையான இடத்தில் உட்கார்ந்திருந்தோம். மேற்குப் புறத்தில் சற்று தூரத்திலிருந்த அடர்த்தியான தென்னந் தோப்புகளுக்கு பின்னால் செம்பொற் கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். ஆற்றில் அப்போதுதான் புதிய வெள்ளம் வந்திருந்தது. நீரில் எங்கே பார்த்தாலும் நுரையும், இலையும், பூவும் மிதந்தன. புள்ளினங்களின் இன்னிசையையன்றி வேறு சத்தம் எதுவுமில்லை.
இராஜகோபாலன் கலகலவென்று சிரித்தான்; அந்தச் சிரிப்பு எனக்கு அச்சத்தை விளைவித்தது. அது மனிதர்களுடைய மகிழ்ச்சிச் சிரிப்பாயில்லை. ஏதோ பேயின் சிரிப்பாகத் தோன்றிற்று.
"நல்லது தலைவிதியை ஏற்றுக் கொண்டாய், நானோ உன் பழைய அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். தலைவிதி என்பது இல்லை. எல்லாம் மனிதப் பிரயத்தனமே" என்றான் இராஜகோபாலன்.
பாவம்! மனம் கசிந்துபோய் இப்படிப் பேசுகிறான் என்று நினைத்தேன். அவன் தலையை என் மடி மீது வைத்துப் படுக்கச் செய்தேன். "சுபத்திரையுடன் பேசினாயா?" என்று வினவினேன்.
"இல்லை, இல்லை, அவள் முகத்தைப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. உன்னை விட்டுப் பிரிந்து வீட்டுக்குச் சென்றேனல்லவா? நான் உள்ளே நுழைந்தபோது எல்லாம் முடிந்து ஆலாத்தி சுற்றிக் கொண்டிருந்தார்கள். என் வருகையை உள்ளுணர்வால் அறிந்து கொண்டாளோ என்னவோ, சுபத்திரை நிமிர்ந்து பார்த்தாள், என்னைக் கண்டுவிட்டாள். கலகலவென்று அவள் கண்களினின்றும் நீர் பொழிந்தது, ஆலாத்தியைச் சட்டென்று முடித்து, அவளை உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். பிறகு அவளை நான் பார்க்கவே இல்லை" என்றான் என் நண்பன். மறுபடியும் முன் போல் சிரித்தான். அவன் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. இன்னதென்று தெரியாத ஒருவகை அச்சம் எனக்கு உண்டாயிற்று.
"உனக்கு யாரும் சமாதானம் சொல்ல வில்லையா?" என்று கேட்டேன்.
"அதற்குக் குறைவில்லை. ஒவ்வொருவராக என்னிடம் துக்கம் கேட்க வந்தார்கள் - "பிராப்தம் இப்படி இருக்கும் போது வேறு விதமாய் நடக்குமா?" என்றார் ஒருவர். "ஒருவர் மனைவியை இன்னொருவர் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா?" என்றார் இன்னொருவர். நேற்றிரவு முழுதும் உறக்கமில்லாமல் நமக்காகக் காத்துக் கொண்டிருந்தார்களாம். இன்று காலை எட்டு மணிக்குத்தான் வெள்ளத்தினால் ரயில் போக்குவரவு நின்றுவிட்டதென்று தெரியவந்ததாம். இனிமேல் வரமாட்டோ ம் என்று நிச்சயம் செய்து கொண்டார்களாம். அதற்கு மேல் ஊரிலுள்ள பிரமுகர்கள் எல்லாம் கூடியோசித்து, இந்த வருஷத்தில் இதுவே கடைசி முகூர்த்த நாள் ஆனபடியால், குறித்த முகூர்த்தத்தில் கணபதி ஐயருக்கே மணம் செய்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லையென்று தீர்ப்புச் சொல்லிவிட்டார்களாம்."
திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்தான். என் தோள்களைப் பிடித்துக் கொண்டு கண்களுக்கு நேரே உற்றுப் பார்த்து, "இதோ பார், தியாகு! ஆண்டவன் ஆணையாகச் சொல். இத்தகைய கொடுமைகளை இந்நாட்டிலிருந்து ஒழிக்க ஏதேனும் செய்யப் போகிறாயா, இல்லையா?" என்றான்.
"தலைவிதி தலைவிதி என்றிருப்பது பேதமை. என் அன்னையின் மரணத்துக்குப் பின்னர் அவ்வெண்ணம் எனக்கு அடியோடு மாறிவிட்டது" என்று தொடர்ந்து கூறினான்.
"உன் அன்னை உயிர் விட்டதால் என்ன பயன் விளைந்தது ராஜு? கடவுளுடைய சித்தம்..."
"வேண்டாம், இந்தக் கொலை பாதகத்துக்குக் கடவுளுடைய பெயரை ஏன் இழுக்கிறாய்? இது கடவுளுடைய சித்தமானால் உலகில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் கடவுளுடைய சித்தமே. பொய்யும் புலையும், கொலையும் களவும், விபசாரமும் இன்னும் மகாபாதகங்களும் கடவுளுடைய சித்தமே. பின்னர், அவற்றையெல்லாம் ஏன் எதிர்க்க வேண்டும்?"
"நான் என்ன செய்யவேண்டுமென்கிறாய்?"
"நமது சமூகத்தில் இரண்டு கொலை பாதகங்கள் இருக்கின்றன. கன்னி வயதில் கட்டாயமாகக் கல்யாணம் செய்துவிட வேண்டுமென்பது ஒன்று; இளம் வயதில், குழந்தைப் பருவம் நீங்கா முன்னர் கணவனையிழந்த பெண்களுங்கூடத் தங்கள் வாழ்நாள் முழுதும் கைம்பெண்ணாயிருந்து, வாழ்க்கையில் எவ்வித இன்பமுமின்றி, இடிபட்டுக் காலத்தைத் தள்ள வேண்டுமென்பது மற்றொன்று. பேச்சில் பயனில்லை. பருவமடைந்த மங்கையோ, இளம் கைம் பெண்ணையோ கல்யாணம் செய்து கொள்வதாக நீ பிரதிக்ஞை செய்வாயா?"
சற்று யோசனை செய்தேன். பின்னர், "ராஜு இந்த வாழ்க்கையில் இனிக் கல்யாணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. சுபத்திரையை நினைத்த மனம் வேறு பெண்ணைக் கருதுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், என் மனம் எப்போதேனும் மாறுதலடைந்து கல்யாணம் செய்துகொள்ளத் தீர்மானித்தால், பருவமடைந்த மங்கையையாவது, கன்னி வயதிலேயே கைம்பெண்ணானவளையாவது மணம் செய்து கொள்வதாகப் பிரதிக்ஞை செய்கிறேன்" என்று பதிலளித்தேன். மாலை வேளைப் பூசைக்காகக் கோயிலில் ஆலாட்சிமணி அடிக்கும் சத்தம் "ஓம் ஓம் ஓம்" என்று ஒலித்துக் கொண்டு மேலக் காற்றில் வந்தது.
அன்றிரவு இராஜகோபாலனுடைய நண்பர் ஒருவருடைய வீட்டில் உணவருந்திவிட்டு அவர் வீட்டுத் திண்ணையிலேயே படுத்துக் கொண்டேன். மறுநாள் அதிகாலையில் எழுந்து சென்னைக்குப் புறப்பட்டுவிட உத்தேசித்தேன். உறக்கம் பிடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேனென்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா? வீதி வழியாகப் போவோர் வருவோர் எல்லாம், என்னைச் சுட்டி ஏதேதோ பேசிக் கொண்டு போனார்கள். ஆனால், எனக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலை உண்டாகவில்லை. கண்ணீர் ததும்பி ஓடும் சுபத்திரையின் வதனமும் அச்சத்தை ஊட்டும் இராஜகோபாலனின் சிரிப்பும் என் மனக்கண் முன்பு மாறி மாறி வந்து கொண்டிருந்தன. சென்னையில் இராஜகோபாலனை விட்டுப் பிரிந்த அன்று கண்ட கனவு அப்போது நினைவிற்கு வந்தது. என் உடம்பு நடுங்கிற்று. அந்தக் கனவு பொய்யாகிவிட்டதே என்று எண்ணினேன். ஆனால் அடுத்த கணத்தில்...ஓ! எத்தகைய பயங்கரமான உண்மையாயிற்று?
கலகலவென்ற சிரிப்புச் சத்தம் கேட்டுத் திடுக்கென்று எழுந்து உட்கார்ந்தேன். இராஜகோபாலன் திண்ணையின் ஓரமாக நின்று கொண்டிருந்தான். "தியாகு, செய்தி கேட்டாயா?" என்றான். அவன் குரலில் ஏன் அந்த மாறுதல்? "என்ன செய்தி?" என்று கேட்டேன். "என் தாயார் வந்து என்னைக் கூப்பிடுகிறாள், அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பாதியளவே நிறைவேற்றி வைத்திருக்கிறேன் என்றும், பாக்கிப் பாதியையும் நிறைவேற்றிவிட்டுச் சரியாக இன்னும் ஒரு வருஷத்தில் வருகிறேன் என்றும் பதில் சொல்லுகிறேன். நீ கொஞ்சம் சிபார்சு செய்யேன்" என்றான். மறுபடியும் அந்த அச்சம் தரும் சிரிப்பு. மங்கலான நிலவின் ஒளியில், அவன் முகத்தை உற்றுப் பார்த்தேன். கண்கள் "திரு திரு"வென்று விழித்தன. அப்போது சட்டென்று உண்மை புலனாயிற்று. கொடிய நாகப்பாம்பு ஒன்று என் நெஞ்சைத் துளைத்து ஊடுருவிச் செல்வது போல் இருந்தது. என் ஆருயிர் நண்பன் 'அருமைத் தோழன்' பித்தனாகிவிட்டான்!
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணைகாட்டில் அனலை விழுங்குவோம்
என்று அவன் உரக்கப் பாடினான். பின்னர் சட்டென்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "தியாகு, உன் நண்பனுக்கு நீ அளித்த பிரதிக்ஞையை நிறைவேற்றி வைப்பாயல்லவா?" என்றான். நான் பதில் சொல்வதற்குள் மீண்டும் "குள்ளநரியைப் பலி கொடுத்தாய்விட்டது உனக்குத் தெரியாதா?" என்று கேட்டான். இவ்வளவுடன் திண்ணையின் தூணில் சாய்ந்து கொண்டு விம்மி விம்மி அழலானான். நான் திகைத்துப் போய் உட்கார்ந்திருக்கையில் சற்று நேரத்துக்கெல்லாம் ஐந்தாறு பேர் நாங்களிருந்த திண்ணைக்கு வந்தார்கள். அவர்களுடைய சம்பாஷணையிலிருந்து கல்யாண மாப்பிள்ளை கணபதிஐயர் மரணாவஸ்தையிலிருப்பதாகவும், டாக்டர்களையும் போலீஸ்காரர்களையும் அழைத்து வருவதற்கு மன்னார்குடிக்கு ஆட்கள் போயிருப்பதாகவும் தெரிந்து கொண்டேன். அன்றிரவு, மாப்பிள்ளை சாப்பிட்டானது கொஞ்சம் தலைவலிக்கிறது என்று சொல்ல, இராஜகோபாலன் உடனே ஏதோ மருந்து கொண்டு வந்து கொடுத்தானென்றும் அதை மாப்பிள்ளை சாப்பிட்டதும் இராஜகோபாலன் பித்தன் போல் கூறிய மொழிகளிலிருந்து அருகிலிருந்தவர்களுக்குச் சந்தேக முண்டாயிற்றென்றும், சில நிமிஷங்களுக்கெல்லாம் மாப்பிள்ளைக்கு உடம்பு அதிகமாகிவிட்டதென்றும் அறிந்தேன். இப்போது எனக்கு எல்லாம் தெளிவாக விளங்கிவிட்டன. சாயங்காலம் என் நண்பன் "தலைவிதி கிடையாது" என்று சொன்னபோது இத்தகைய தீர்மானத்தை மனதில் வைத்துக் கொண்டே சொல்லியிருக்க வேண்டும். அன்னை உட்கொண்டு பாக்கியிருந்த விஷத்தை இப்போது இராஜகோபாலன் உபயோகப்படுத்திவிட்டான். அன்னையைப் போலவே அவனும் தன் உயிரைக் கொடுத்திருப்பான். ஆனால், திருமாங்கல்ய தாரணம் எப்போது ஆகி விட்டதோ, 'இனி, அவன் உயிரை விடுவதால் என்ன நடக்கும்? எனவே, பின்னால் சுபத்திரையின் கதி எப்படியானாலும், இப்போது அவளை விடுதலை செய்து விட வேண்டுமென்று தீர்மானித்தான் போலும்! என்னிடம் அவன் வாங்கிக் கொண்ட வாக்குறுதியின் கருத்தும் இப்போது எனக்குத் தெளிவாயிற்று.
அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம், கனவில் கண்டன போலவே எனக்கு இன்னமும் தோன்றுகின்றன. அப்போது நான் திக்பிரமை கொண்டவன் போல் காணப்பட்டேனென்றும், எனக்கும் எங்கே பித்துப் பிடித்துவிடப் போகிறதோ என்று என் தந்தை பயந்தாரென்றும் பின்னால் தெரியவந்தன. ஆகவே அந் நிகழ்ச்சிகளைப் பற்றி விவரமாக என்னால் கூற முடியாது. அன்றிரவு போலீஸ்காரன் வந்ததும் என்னையும் இராஜகோபாலனையும் கைது செய்து மன்னார்குடிக்கும், பிறகு தஞ்சாவூருக்கும் கொண்டு போனதும், என் தந்தைக்கு தந்தி அடித்து வரவழைத்ததும், கணபதி ஐயரை விஷங் கொடுத்துக் கொலை செய்த குற்றத்திற்காக இராஜகோபாலன் மீதும், அவனுக்கு உடந்தையாயிருந்த குற்றத்துக்காக என்மீதும், வழக்குத் தொடர்ந்து, விசாரணை சுமார் ஒரு மாதம் நடந்ததும், கடைசியில் இராஜகோபாலன் பித்தன் என்ற காரணத்தால் அவனுக்குத் தூக்குத் தண்டனையில்லாமல் ஆயுள் பரியந்தம் சிறைவாசத் தண்டனை விதித்ததும், நான் குற்றமற்றவன் என்று விடுவிக்கப்பட்டதும், எல்லாம் முற்பிறப்பில் நடந்த நிகழ்ச்சிகளோவென்று சந்தேகிக்கும் வண்ணம் என் உள்ளத்தில் தெளிவின்றித் தோன்றுகின்றன. எனவே அவற்றைப் பற்றி விரிவாகக் கூறாமல் விட்டுப் போவது குறித்து மன்னிப்பீர்களாக.
-----------
1.6. சந்திப்பு
ஓராண்டு சென்றது. ஆந்திர நாட்டுக் கலாசாலையொன்றில் நான் ஆசிரியனாக அமர்ந்திருந்தேன். இந்த ஒரு வருஷத்திய எனது வாழ்க்கை விவரத்தைச் சில மொழிகளில் கூறிவிடலாம். வழக்கு முடிந்ததும், நான் சென்னைக்குச் செல்ல விரும்பவில்லை. சட்டக் கலாசாலையில் தொடர்ந்து படிக்கும் நினைவையும் விட்டுவிட்டேன். சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த பயங்கரமான அனுபவங்களை மறந்திருக்க ஸ்தலயாத்திரை செய்வதே நல்ல உபாயம் என்று தீர்மானித்தேன். என் தந்தை என் மீது இரக்கங் கொண்டிருந்தார். எனவே, வேண்டிய போதெல்லாம் பணம் தவறாது அனுப்பி வந்தார். தமிழ்நாடு முழுதும் சுற்றி விட்டுப் பின்னர் வடநாட்டுக்குச் சென்றேன். இதற்கிடையில், உத்தியோகத்துக்கு விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்தேன். யாத்திரை தொடங்கி எட்டு ஒன்பது மாதம் ஆனபோது மேற்சொன்ன கலாசாலையில் மாதம் எழுபது ரூபாய் சம்பளத்தில் சரித்திராசிரியர் வேலை கிடைத்தது. என் அதிர்ஷ்டத்தை வியந்தவனாய் உடனே சென்று அதை ஏற்றுக் கொண்டேன். இராஜகோபான் என்றும், சுபத்திரையென்றும் இருவர் இருந்தனர் என்பதை அடியோடு மறந்துவிடப் பிரயத்தனம் செய்து வந்தேன்.
ஆம், அவர்களைப் பற்றி இந்த ஓராண்டில் நான் எதுவும் கேள்விப்படவில்லை. கொலை வழக்கு நடந்து கொண்டிருக்கையில் கணபதி ஐயர் மரணமடைந்த அன்றிரவே சுபத்திரைக்குச் சுரம் கண்டதாகவும், ஒவ்வொரு சமயம் பிழைப்பது அரிது என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் சுபத்திரையின் தந்தை நிலத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு, அந்த ஊரைவிட்டே போய்விடத் தீர்மானித்திருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தேன். பின்னர், அவர்களைப் பற்றி எனக்கு எத்தகைய விவரமும் தெரியவில்லை. ஆனால், எவ்வளவோ முயன்றும் சுபத்திரையும் இராஜகோபாலனையும் மறத்தல் எனக்கு இயலாத காரியமாயிருந்தது. இரவில் என் அறையில் தன்னந்தனியே உட்கார்ந்து அவர்களை நினைத்துக் கண்ணீர் பெருக்குவேன்.
முன்னமே சொன்னதுபோல் இவ்வாறு ஒரு வருஷம் சென்றது. ஒரு நாள் கலாசாலியில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொண்டிருக்கையில், தந்திச் செய்தியொன்று எனக்கு வந்தது. யார் தந்தியனுப்பியிருக்கக் கூடுமென்று ஆச்சரியத்துடன் பிரித்துப் பார்த்தேன். "இராஜகோபாலன் மரணத் தருவாயிலிருக்கிறார். உம்மைப் பார்க்க விரும்புகிறார். உடனே புறப்படவும்" என்று எழுதியிருந்தது. திருச்சிராப்பள்ளி பெரிய சிறைக்கூடத் தலைவர் அச்செய்தியை அனுப்பியிருந்தார். அதைப் படித்தபோது என் கண்களில் நீர் ததும்பியது. உடனே தலைமை ஆசிரியரிடம் சென்று, விடுமுறை பெற்றுக் கொண்டேன். அடுத்த வண்டியில் புறப்பட்டேன்.
திருச்சிராப்பள்ளி சேர்ந்ததும், நேரே சிறைக்கூடத்துக்குச் சென்று, சிறைக்கூடத் தலைவரைப் பார்த்தேன். "நல்ல வேளை! இன்னும் ஒரு மணி நேரங்கழித்து வந்திருந்தால் அவரை உயிருடன் பார்த்திருக்க மாட்டீர்கள்" என்றார். அவர் ஓர் ஐரிஷ்காரர். நிரம்ப அனுதாபத்துடன் பேசினார். இராஜகோபாலனைப் பற்றிய விவரங்கள் அறிந்து நிரம்பப் பரிதாபப்பட்டதாகவும், ஒரு மாதமாக அவன் சிறைக்கூட வைத்தியசாலையில் படுத்த படுக்கையாயிருக்கிறானென்றும், ஒரு வாரத்துக்கு முன்புதான் அவன் அறிவு தெளிவடைந்து எனக்குத் தந்திச் செய்தியனுப்பச் சொன்னதாகவும், முதலில் விலாசம் தெரிந்து கொண்டு எனக்கு தந்தியடித்ததாகவும் கூறினார். உடனே என்னை இராஜகோபாலனிடம் அழைத்துப் போகும்படி சிறைக் காவலன் ஒருவனை அனுப்பினார்.
அங்கே எனக்கு இன்னும் ஆச்சரியம் காத்திருந்தது. படுக்கையில் இராஜகோபாலனருகில் உட்கார்ந்திருந்தவர் யார் என நினைக்கிறீர்கள்? சுபத்திரையும், அவள் தந்தையுமே. ஆனால், இந்த வியப்பு ஒரு கணங்கூட என் மனதில் நிலைத்திருக்கவில்லை. எலும்புந் தோலுமாய் அப்படுக்கையில் கிடந்த இராஜகோபாலனைக் கட்டிக் கொண்டு 'கோ' வென்று கதறி அழுதேன். ஐயோ! கட்டழகனாய்ச் சுந்தரவடிவனாய்க் காண்போர் கண்களைக் கவர்ந்து உலாவிய இராஜகோபாலன் இவன் தானோ?
"தியாகு அழாதே" என்று ஈன சுரத்தில் அவன் கூறியது யாரோ கிணற்றுக்குள் இருந்து பேசியது போல் கேட்டது. அருவிபோல் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.
"எங்கு நீ வருவதற்குள் போய்விடுவேனோவென்று இவ்வளவு நேரம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்! பகவான் இந்தப் பாவியை முற்றிலும் கைவிட்டுவிடவில்லை..."
அப்போது மீண்டும் எனக்கு அழுகை வந்து விட்டது. சுபத்திரையும் அவள் தந்தையும் விம்மி அழலானார்கள்.
"வேண்டாம், ஏன் அழுகிறீர்கள்? அதற்குப் பதிலாக இந்தப் பாவியை மன்னிக்கும்படி ஆண்டவனிடம் முறையிட்டுக் கொள்ளுங்கள். கொலைஞன் என்று பகவான் என்னை அருவருக்கமாட்டாரா?"
நான் ஏதோ பதில் சொல்லப் போனேன். அவன் கையமர்த்தி மீண்டும் சொன்னான்:- "என் உயிரையும் விட மேலாக என் அன்னையை நேசித்தேன். அவள் காலஞ்சென்றாள். மரணத்தறுவாயில், அவளுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தேன். அதை இன்னமும் முற்றும் நிறைவேற்றி வைக்கவில்லை. இந்நிலைமையில் நான் இறந்தால் என் ஆன்மா சாந்தியுறுமா? இப்போது இவ்வுலகில் என் அன்புக்குரியவர்கள் நீங்கள் மூவருமே. நான் நிம்மதியாக உயிர்விடுவதற்கு நீங்கள் உதவி செய்யமாட்டீர்களா? அப்பா, உங்கள் மனம் இப்போதேனும் இரங்குமா?"
அப்போதுதான், இராஜகோபாலனுடைய தந்தையையும் சுபத்திரையையும் நான் கவனித்தேன். அவர், இளைத்து மெலிந்து பாதி உடம்பாயிருந்தார். சுபத்திரை துக்கமே உருவெடுத்ததுபோல் உட்கார்ந்திருந்தாள். விதவைக்குரிய கொடுமைகள் அவளுக்குச் செய்யப்படவில்லையென்பதையும் கண்டேன். "குழந்தாய், இன்னமும் எனக்குப் புத்தி வரவேண்டுமா? உன் விருப்பத்தின்படியே செய்கிறேன். கவலைப்படாதே" என்று தந்தை கண்ணீர் விட்டுக் கொண்டே சொன்னார்.
பின்னர் இராஜகோபாலன் என்னைப் பார்த்தான். அந்தப் பார்வையில் நான் எல்லாம் அறிந்து கொண்டேன். "உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நானும் மறக்கவில்லை ராஜு! ஆனால், வாக்குறுதி மட்டுமன்று. இவ்விஷயத்தில் நம்மிருவர் விருப்பமும் ஒத்தே இருக்கிறது. சுபத்திரையில்லாத வாழ்வு பாலைவனம்போல் எனக்குக் காணப்படுகிறது" என்றேன். அப்போது இராஜகோபாலனின் முகம் எவ்வாறு மலர்ச்சியுற்றது? அந்த ஒரு கணத்தில் அவன் பழைய இராஜகோபாலனாகக் காணப்பட்டான். மெலிந்து சுருண்ட தனது கையால் சுபத்திரையின் தாமரைக் கரங்களைப் பிடித்து என்னுடைய கையில் வைத்தான். அவன் கண்களில் ஆனந்த பாஷ்யம் துளிர்ப்பதைக் கண்டேன். என்னுடைய உணர்ச்சியைப் பற்றியோ யென்றால் - துன்ப சாகரத்தில் முழுகிப் போகும் தருவாயிலிருந்த என்னைத் திடீரென்று சுவர்க்க போகங்களுக்கிடையே போட்டுவிட்டது போலிருந்தது; மன்னியுங்கள். அப்போது என் மனோநிலையை வருணிக்கப் புகுதல் வீண் முயற்சியேயாகும். சற்று நேரத்துக்கெல்லாம் இராஜகோபாலன் நிம்மதியாக ஸ்ரீராம நாமத்தை உச்சரித்த வண்ணம் இப்பூவுலக வாழ்வை நீத்துச் சென்றான்.
"நேயர்களே! உங்களில் பலருக்கு இராஜகோபாலன் சரித்திரம் ஏமாற்றமளித்திருக்கலாம். முன்னுரையில் அவனைப்பற்றிக் காணப்பட்ட புகழுரைகளுக்கு அவன் தகுதியற்றவன் என்று நீங்கள் கருதலாம், கொலைஞன் என்று நீங்கள் அவனை வெறுக்கலாம். எப்படியும் அவன் என் ஆருயிர் நண்பன்; என் அருமைச் சுபத்திரையின் சகோதரன். ஈ எறும்பு முதலிய ஜந்துக்களும் துன்பப்படச் சகியாத இளகிய மனம் படைத்த என் நண்பன், சுபத்திரையின் சுகவாழ்வை முன்னிட்டன்றோ கொலை செய்யத் துணிந்தான்? அவன் பாவத்தை மன்னித்தருளும்படி ஆண்டவனிடம் மன்றாடுங்கள்."
-----------
2. ஒற்றை ரோஜா
முதல் அத்தியாயம்
ஒரு சமயம் நான் பாபநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கேட்டால் நீங்கள் ஒரு வேளை சிரிப்பீர்கள்; சிலர் அநுதாபப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறிவிட்டேன். இதனால் வாழ்க்கை கசந்து போயிருந்தது. ஒரு மாதிரி பிராணத் தியாகம் செய்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். திடீர் திடீர் என்று நமக்குத் தெரிந்தவர்கள் யார் யாரோ இறந்து போய்விட்டதாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் நாம் அவர்களைப் பின்பற்றலாம் என்றால், அதற்கு வழிவகை தெரிவதில்லை. யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பாபநாசத்தில் கல்யாணி தீர்த்தம் என்பதாக ஓர் இடம் இருக்கிறதென்றும், அதிலேதான் ஆசிரியர் வ.வே.சு. ஐயர் விழுந்து உயிரை இழந்தார் என்றும் கேள்விப்பட்டிருந்தேன். அந்தப் பெரியாரைப் பின்பற்றலாம் என்று எண்ணிக்கொண்டுதான் பாபநாசம் போனேன்.
இரண்டு காரணங்களினால் நான் உத்தேசித்த காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை. முதலாவது, அந்தக் கல்யாணி தீர்த்தம் இருக்கிறதே, அது பார்க்க மிகப் பயங்கரமாயிருந்தது. தென்னைமர உயரத்திலிருந்து மூன்று தண்ணீர்த் தாரைகள் 'சோ' என்ற சத்தத்துடன் கீழேயுள்ள அகண்ட பள்ளத்தில் விழுந்து கொண்டிருந்தன. அந்தப் பள்ளத்தில் தண்ணீர் நிறைந்து ததும்பி அலை மோதிக்கொண்டிருந்தது. சிறிய மரக்கிளை ஒன்று அத்தடாகத்தில் விழுந்து அங்குமிங்கும் சுழன்று அலைக்கப்படுவதைப் பார்த்தேன். இதிலே விழுந்தால் நம்முடைய தேகமும் இப்படித்தானே அலைக்கப்படும் என்று நினைத்தபோது என் தைரியம் குலைந்துவிட்டது. அன்னை பெற்றெடுத்த நாளிலிருந்து எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்த உடம்பு இது! இதற்கு எத்தனை எண்ணெய், எத்தனை சோப்பு! எத்தனை ஆடை அலங்காரம், எத்தனை வகை வகையான அன்னபானம்-அடடா! இதைப் புகைப்படம் பிடிப்பதற்காக மட்டும் எத்தனை செலவு! இவ்வாறெல்லாம் பேணி வளர்த்த உடம்பு அந்தப் பயங்கரமான தடாகத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது என்னும் எண்ணத்தை என்னால் கொஞ்சங்கூடச் சகிக்கவே முடியவில்லை.
அங்கிருந்து இறங்கி வந்து கீழே பாபநாசம் கோவிலுக்குப் பக்கத்தில் பளிங்கு போன்று தெளிந்த நீரோடும் நதியின் கரையில் உட்கார்ந்து யோசித்தபோது, எதற்காக உயிரை விடவேண்டும் என்றே தோன்றிவிட்டது. நதியின் வெள்ளத்தில் மந்தை மந்தையாகத் தங்கநிற மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. அவை மேலே வரும்போதும் புரண்டு விழும்போதும் என்னமாக ஜொலித்தன! இந்த மீன்கள் இவ்வளவு குதூகலமாக விளையாடிக் கொண்டு திரிகின்றனவே, பி.ஏ. பரீட்சையில் தேறாததனாலே இவற்றுக்கு என்ன குறைவு வந்துவிட்டது! இதோ இந்த மரங்களில் எத்தனை விதமான பட்சிகள் எவ்வளவு ஆனந்தமாகப் பாடிக்கொண்டு வாழ்கின்றன! இவை பி.ஏ. பரீட்சையில் தேறவில்லையே! இதோ இந்தக் குரங்குகளைத் தான் பார்க்கலாமே! பி.ஏ. பட்டம் பெறவில்லையே! என்று அவை கொஞ்சமாவது கவலைப்படுகின்றனவா? ஆணும் பெண்ணும் எவ்வளவு உல்லாசமாக மரங்களின் மீது ஏறியும் இறங்கியும் கிளைக்குக் கிளை பாய்ந்தும் வாழ்கின்றன! தாய்க்குரங்கு அந்தக் குட்டிக்குரங்கையும் சேர்ந்து அணைத்துக் கொண்டு மரத்துக்கு மரம் தாவுகிற அழகை என்னவென்று சொல்வது!
அறிவில்லாத பிராணிகளும் பட்சிகளும் இவ்வளவு உல்லாசமாக வாழ்க்கை நடத்தும்போது நாம் மட்டும் பி.ஏ. பரீட்சை தேறவில்லை என்பதற்காக ஏன் உயிரை விட முயல வேண்டும்?
இத்தகைய முடிவுக்கு வந்து திரும்பித் திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன். சென்னைக்கு இரண்டாம் வகுப்பு டிக்கட் எடுத்துக்கொண்டு ரயில் வண்டியில் ஏறினேன்.
ரயில் என்னமோ வேகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், என் மனம் அதைவிட வேகமாக எங்கெங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது! ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது கஷ்டமாயிருந்தது. அன்றைக்குப் பாருங்கள், என்ன காரணத்தினாலோ அந்த வண்டியில் கூட்டமே இல்லை. உயர்ந்த வகுப்பு வண்டிகளை வழக்கத்தைவிட அதிகமாகவே கோத்திருந்தார்கள், போலிருக்கிறது. நான் ஏறி இருந்த இரண்டாம் வகுப்பு வண்டியில் நான் ஒருவனேதான். ஆகையால், உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போய் விட்டது. ரயில் நின்ற ஒவ்வொரு நிலையத்திலும் வண்டியிலிருந்து கீழே இறங்கிப் பிளாட்பாரத்தில் சிறிது நேரம் உலாவிவிட்டு ரயில் புறப்படும் சமயத்தில் மறுபடியும் ஏறிக் கொண்டேன். ரயில் நிலையங்களில் சாதாரணமாய் நடமாடும் பலதரப்பட்ட ஜனங்களைப் பார்ப்பதில் ஒருவித உற்சாகம் ஏற்பட்டது.
விருதுநகர் சந்திப்பில் அந்த உற்சாகம் சிகரத்தை அடைந்தது. ஆம்; முதலில் நான் பார்த்தது-என் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது-ஓர் ஒற்றை ரோஜாப்பூ தான்! அந்த ஒற்றை ரோஜாப்பூ ஒரு பெண்மணியின் எடுத்துக் கட்டிய கூந்தல் மீது வீற்றிருந்தது. 'கொலு வீற்றிருந்தது' என்றும் சொல்லலாம். அவ்வளவு இலட்சணமாயிருந்தது. தலைநிறைய ஒரு சுமைப் பூவைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அலையும் சென்னை நகர்ப் பெண்மணிகள் பலரை நான் பார்த்திருக்கிறேன். "என்ன அநாகரிகம்! தலையில் புல்லுக் கட்டைச் சுமப்பதுபோல் சுமக்கிறார்களே!" என்று எண்ணியிருக்கிறேன். அதற்கெல்லாம் மாறாக இவ்வளவு நாஸுக்காகவும் நாகரிகமாகவும் கூந்தலில் ஒற்றை ரோஜாப்பூ அணிந்திருக்கும் பெண்மணி யாரோ? என்று அறிய ஆவல் உண்டாயிற்று. ரயிலில் நான் இருந்த வண்டிக்கு இரண்டு வண்டிக்கு அப்பால் அவள் இருந்தாள். அவள் தலை வெளியில் நீட்டப்பட்டிருந்தது. ஆனால், முகம் எனக்கு நேர் எதிர்ப்புறமாகத் திரும்பியிருந்தது. அந்தப் பெண்மணியின் முகம் எப்படியிருக்குமோ, கூந்தலில் சூடிய ஒற்றை ரோஜாப்பூவினால் ஏற்பட்ட நல்ல அபிப்பிராயம் முகத்தைப் பார்த்ததும் மாறிவிடுமோ என்ற ஐயத்துடனேயே அந்தப் பக்கம் போனேன். ஏதோ ஒரு கதையில் படித்திருக்கிறேன். ஒருவன் ஒரு பெண்ணின் கரத்தைப் பார்த்து அதன் அழகில் சொக்கிப் போனான்! அவள் முகத்தைப் பார்த்ததும் பயங்கரமும் அருவருப்பும் அடைந்தான். இம்மாதிரி கதி எனக்கும் ஏற்பட்டுவிடுமோ?
அருகில் சென்றபோது சட்டென்று அவள் முகம் என் பக்கம் திரும்பியது. ஆகா! நான் பயந்தது என்ன முட்டாள்தனம்! பார்க்கிறவர்களின் கண்ணில் வந்து தாக்கி வேதனை உண்டாக்கும் சௌந்தரியமும் உண்டோ ! அத்தகைய அபூர்வ சௌந்தரியமுள்ள முகத்தை அவள் என் பக்கம் திருப்பினாள். ஒரு புன்னகையும் புரிந்தாள். நிலா வெளிச்சத்தில் முல்லை பளீரென்று மலர்ந்தது போலிருந்தது. நான் எப்போதும் சங்கோசமோ கூச்சமோ அதிகம் இல்லாதவன் தான். ஆயினும், அவளிடம் அப்போது நானாக ஒரு வார்த்தை பேச முயன்றிருந்தால் என் பிராணனே போயிருக்கும். பாபநாசத்தில் நடந்திருக்க வேண்டியது விருதுநகர் ரயில்வே நிலையத்தில் நடந்திருக்கும். அந்த மாதரசி அதற்கு இடம் வையாமல் என்னிடம் அவளாகவே பேசிவிட்டாள். "தயவு செய்து சிற்றுண்டிச் சாலைக்காரனை எனக்கு ஒரு கப் டீ கொண்டுவரும்படி சொல்ல முடியுமா?" என்றாள். "பேஷாகச் சொல்கிறேன்!" என்று சொல்லி விட்டு, வேகமாக நடந்து போய் ஸ்பென்ஸர் ஆள் ஒருவனைப் பிடித்து, பிஸ்கோத்தும் டீயும் கொண்டுபோய்க் கொடுக்கும்படி சொன்னேன். அப்புறம் ஏதோ சந்தேகம் தோன்றவே இந்தியச் சிற்றுண்டிச் சாலைக்கும் போய்ச் சிற்றுண்டி காப்பி கொண்டு போய்க் கொடுக்கும்படியும் சொன்னேன். பிறகு சற்றுத் தூரம் பிளாட்பாரத்தில் நடந்துவிட்டுத் திரும்பினேன். திரும்புகையில் அந்தப் பெண்ணின் வண்டிக்கருகில் நின்று, "டீ வந்ததா?" என்று கேட்டேன். அவள் திரும்பிப் பார்த்து முகமலர்ச்சியுடன், "ஓ! ஒன்றுக்கு இரண்டு மடங்காக வந்தது. நீங்கள் கூட வந்து சாப்பிடலாம்!" என்றாள்.
ஒரு கணம் அந்த வண்டியில் ஏறிக்கொள்ளலாமா என்ற பைத்தியக்கார எண்ணம் உண்டாயிற்று. நல்ல வேளையாக, வண்டியின் வெளிப்புறத்தில் 'பெண்களுக்கு மட்டும்' என்று போட்டிருப்பதை பார்த்திருந்தேன். ஆகையால், "இல்லை! நான் சாப்பிட்டாயிற்று!" என்று சொல்லிவிட்டு என் வண்டியில் போய் ஏறிக்கொள்வதற்கு நகர்ந்தேன். அந்தப் பெண் மறுபடியும், "இன்னும் ஓர் உதவி எனக்காகச் செய்யமுடியுமா? இந்த ரயிலில் காக்கி புஷ்கோட் அணிந்த மூன்று மனிதர்கள் எந்த வண்டியிலாவது இருக்கிறார்களா? அவர்களில் ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர் மாதிரி தொப்பி அணிந்திருப்பார்! ஆனால்... ஒரு வேளை, வண்டி புறப்படும் சமயம் ஆகிவிட்டதோ, என்னவோ?" என்றாள்.
"வண்டி புறப்படப் போகிறது! அதனால் பாதகமில்லை. நீங்கள் சொல்வது போன்ற மூன்று ஆசாமிகள் இந்த வண்டியில் இருக்கிறார்கள். என்ஜினுக்குப் பக்கத்து வண்டியில் அவர்கள் இருப்பதைச் சற்று முன்னால் பார்த்தேன்!" என்றேன். நான் சொன்னது உண்மையேதான். அதைக் கேட்ட அந்தப் பெண்ணின் புருவங்கள் வெகு இலேசாக நெரிந்தன. "சரி, ரொம்ப வந்தனம்" என்றாள். நான் போய் என் வண்டியில் ஏறிக்கொண்டேன்.
விருதுநகரிலிருந்து மதுரைக்கு ரயில்போனதே எனக்குத் தெரியவில்லை. அப்படியாக என் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. என்ன சிந்தனை என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? அந்தப் பெண் யார்? எங்கிருந்து எங்கே போகிறாள்? தனியாகப் பிரயாணம் செய்வதன் காரணம் என்ன? பார்த்தால் நாகரிகமான, படித்த பெண்ணாகத் தோன்றுகிறாளே! 'புஷ்கோட்' அணிந்த மூன்று மனிதர்களைப் பற்றி எதற்காக விசாரித்தாள்?-என்றெல்லாம் எனக்கு நானே கேள்விகளைப் போட்டுக் கொண்டேன். ஆனால் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. எனினும், பொழுது மட்டும் சிறிதும் நில்லாமல் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.
மதுரைச் சந்திப்பு வந்தது. நாட்டில் எத்தனையோ ரயில் நிலையங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி உருவமும் இருக்கிறது. மதுரை நிலையம் ஒரு தனி ரகம். நிலையத்துக்குள் ரயில் வரும்போது ஜனங்கள் சுவர் வைத்த மாதிரி வரிசை வரிசையாக நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். என்னத்தைத்தான் பார்ப்பார்களோ தெரியாது. வந்த ரயிலில் ஏறுவோர் இறங்குவோர் அதிகம் உண்டா என்றால், அதுவும் இல்லை. மாலை நேரத்தில் பொழுது போகாமல் ரயில் நிலையத்துக்கு வந்து, வருகிற போகிற வண்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்களைப் போலத் தோன்றும். சிறுபிள்ளைகள் சிலர் கையில் கையெழுத்து வாங்கும் சிறிய புத்தகங்களை வைத்துக் கொண்டு, ரயிலில் யாராவது பிரமுகர்கள் வருகிறார்களா என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டு போவார்கள். பத்திரிக்கை விற்பவர்கள், ஒரு நகரும் பெட்டியில் ஆபாசமான படங்கள் போட்ட மஞ்சள் இலக்கியங்களை வைத்துக்கொண்டு பிரயாணிகள் எதிரே நின்றுவிடுவார்கள். "பிச்சர் போஸ்டு வேண்டுமா?" "இல்லஸ்ட்ரேடட் வீக்லி வேண்டுமோ?" என்று கேட்டுக் கொண்டு நிற்பார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் போகமாட்டார்கள். பெட்டியிலுள்ள ஆபாச புத்தகங்களின் மேலட்டையைப் பிரயாணிகள் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு அட்டையில் மேல் அவர்களுக்கு ஆசை விழாதா என்ற நோக்கம்.
என் முன்னால் அப்படி ஒரு பெட்டி வந்து நின்றதும் "இதேதடா தொல்லை?" என்று நான் கீழே இறங்கினேன். கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் உலாவத் தொடங்கினேன். 'பெண்கள் வண்டி'யில் அந்தப் பெண்ணைக் காணவில்லை. சிறிது ஏமாற்றத்துடன் மேலே நடந்தேன். என்ஜினுக்கு அருகில் பிளாட்பாரத்தில் ஒரு சிறிய கும்பல் நின்றது. யாருக்கோ மாலை போட்டு வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள். 'ஹிப் ஹிப் ஹுரே!' என்ற கோஷமிட்டார்கள். அதில் என் கவனம் செல்லவில்லை. அந்தக் கும்பலுக்குச் சற்று அப்பால் நாலு பேர் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தில் என் கவனம் சென்றது. அவர்களில் மூன்று பேர் காக்கி 'புஷ்கோட்' ஆசாமிகள். நாலாவது நபர், என்னையறியாமல் என் கண்கள் தேடிக்கொண்டிருந்த பெண். அப்போது அவள் என்பக்கம் பார்க்கவில்லை. தலையில் அணிந்த ஒற்றை ரோஜாவிலிருந்துதான் அவள் என்று தெரிந்துகொண்டேன். அவள் ஏதோ வேடிக்கையாகப் பேசியிருக்கவேண்டும். மற்ற மூன்று பேரும் நகைத்தார்கள். எனக்கு ஒரே எரிச்சலாயிருந்தது. அவர்களிடையே போவதற்கும் தைரியமில்லை. அங்கிருந்து நகருவதற்கும் மனம் வரவில்லை. அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஆவல் உண்டாயிற்று. நிற்கலாமா நகரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் திரும்பினாள். என்னைப் பார்த்துவிட்டாள். உடனே பழையபடி ஒரு முல்லைப்புன்னகை அவள் முகத்தில் பூத்தது. மறுபடி திரும்பி அவர்களுடன் பேசத் தொடங்கினாள். அங்கிருந்து அகல்வதே நலம் என்று தீர்மானித்தேன். திரும்பிப்போய் என் வண்டியில் ஏறிக்கொண்டேன். என்ஜின் இருந்த திக்கையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதற்காக என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா!
வண்டி புறப்படும் நேரம் ஆகிவிட்டது. இன்னும் அவள் ஏன் திரும்பி வரவில்லை? அந்த 'புஷ்கோட்' மனிதர்களுடன் அவர்களுடைய வண்டியில் ஏறி விட்டாளா என்ன?... இல்லை, அதோ அவள் வருகிறாள். வேகமாகவே நடந்து வருகிறாள். என்ன அழகான நடை! அவள் நடப்பதாகவே தோன்றவில்லை; மிதப்பதாகத் தோன்றியது. என் வண்டிக்கு அருகில் வந்ததும் என்னைப் பார்த்தாள். சற்றுத் தயங்கி நின்றாள். "வண்டி புறப்படப் போகிறதே!" என்றேன். என்னத்தைச் சொல்ல. அவள் சட்டென்று வண்டிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். வந்தவள் எனக்கு எதிரில் உட்கார்ந்து, என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.
என் நெஞ்சு அபார வேகமுள்ள விமான என்ஜினைப் போல் அடித்துக் கொண்டது.
"பாருங்கள்! இப்போதெல்லாம் ரயிலில் தனியாகப் பிரயாணம் செய்வது அபாயம் என்று சொல்கிறார்களே! பெண்கள் வண்டியில் இன்னும் யாராவது பெண்கள் ஏறுவார்கள் என்று பார்த்தேன். ஒருவரும் ஏறவில்லை. ரயிலில் கொலைகூட நடக்கிறது என்று சொல்லுகிறார்கள். நானும் இந்த வண்டிக்கே வந்துவிடலாமா என்று பார்க்கிறேன். நீங்கள் மதராசுக்குத் தானே போகிறீர்கள்!" என்று கேட்டாள்.
எல்லையில்லாத உற்சாகத்துடன் நான், "ஆமாம்; மதராஸுக்குத்தான் போகிறேன். நீங்கள் பேஷாக இந்த வண்டிக்கே வரலாம். சாமான்களை கொண்டுவரச் சொல்லட்டுமா? ஏ, போர்ட்டர்!" என்றேன்.
"இப்போது வேண்டாம்; அடுத்த ஸ்டேஷனில் பார்த்துக்கொள்ளலாம்!" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் இறங்கிச் சென்றாள்.
அவள் இறங்கிய உடனே, யாரோ ஒருவர் சடக்கென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். கையில் ஒரு பிரயாணப் பெட்டியும் வைத்துக்கொண்டிருந்தார். பெட்டியைப் பலகையில் வைத்து விட்டு என்னையும் போய் கொண்டிருந்த பெண்ணையும் இரண்டு மூன்று தடவை மாற்றி மாற்றிப் பார்த்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு "மன்னிக்க வேண்டும்! ஒரு வேளை இந்த வண்டி ரிஸர்வ் ஆகியிருக்கிறதோ?" என்றார்.
"ஆமாம்" என்று ஒரு பொய் சொல்லி அவரை இறங்கிப் போகச் சொல்லலாமா என்று என் மனத்தில் ஒரு கெட்ட எண்ணம் உதித்தது.
இதற்குள், கார்டு குழல் ஊதும் சத்தம் கேட்டது. ரயில் புறப்படுவதற்குள் அவள் வண்டியில் ஏறிவிடுகிறாளா என்று எட்டிப் பார்த்தேன். அந்த அழகிய ஒற்றை ரோஜாப்பூ கண்ணைக் கவர்ந்தது. அந்தப் பூவை அணிந்தவள் வண்டியில் ஏறியதும், ரயிலும் நகர்ந்தது.
-----------
இரண்டாம் அத்தியாயம்
என் வண்டியில் ஏறிய மனிதர் "அப்பா! பயங்கரம்!" என்றார். அவரை ஏறிட்டுப் பார்த்தேன். படித்த நாகரிக மனிதராகக் காணப்பட்டார். வயது நாற்பது இருக்கும். ஐரோப்பிய உடை தரித்திருந்தார். அவருடைய கண்கள் ரயிலின் அபாய அறிவிப்பு விளக்கைப் போல் சிவப்பாக ஜொலித்தன.
சட்டைப் பையிலிருந்து ஒரு புட்டியை எடுத்து அதிலிருந்த பானத்தைக் கடகடவென்று வாயில் விட்டுக் கொண்டு குடித்தார்.
"ஐயோ! என்ன வெப்பம்! மரண தாகம் எடுத்துவிட்டது!" என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார்.
பிறகு, என்னை நோக்கி, "அந்த அற்புதத்தைப் பார்த்தீரா?" என்றார்.
"எந்த அற்புதத்தை?" என்று கேட்டேன்.
"இந்த ஒற்றை ரோஜாப் பூவைத்தான்!" என்றார்.
"அதில் அற்புதம் என்ன?" என்று சிறிது கோபமான குரலில் கேட்டேன்.
"அற்புதம் என்னவா! ஆம், உமக்குத் தெரியாது. தெரிகிறதற்கு நியாயம் இல்லை. அந்த ஒற்றை ரோஜாப் பூவிலேதான் என் உயிர் இருக்கிறது?" என்று சொல்லிவிட்டு, ஒரு விகாரமான புன்னகை புரிந்தார்.
அவர் ஏதோ அநுசிதமான பரிகாசம் செய்யப் போகிறார் என்று எண்ணினேன். ஆகையால் ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.
"இன்னமும் எனக்குப் புரியவில்லை!" என்று கடுமையான குரலில் கூறினேன்.
"ஆமாம்; அந்த ஒற்றை ரோஜாப்பூவில்தான் என் உயிர் இருக்கிறது. ஆகையினாலே மூன்று நாளாகியும் அது வாடாமலிருக்கிறது!" என்றார்.
நான் சிறு பிள்ளையாக இருந்த போது, ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு தடவை எங்கேயோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். வாத்தியார் பிரம்பினால் சுளீர் என்று முதுகில் அடித்தார். அச்சமயம் என் தலையிலிருந்து ஆயிரம் மின்னல்கள் கிளம்பி வெளியில் சென்றது போலத் தோன்றியது. அத்தகைய உணர்ச்சி இப்போதும் உண்டாயிற்று. அந்த ஒற்றை ரோஜாப்பூ சிறிதும் வாடாமலிருப்பதின் அதிசயத்தை அதுவரையில் நான் எண்ணிப் பார்க்கவில்லை. அது நிஜ ரோஜாப் பூவாயிருக்க முடியாது; நிஜ ரோஜாவைப் போல் அபூர்வ வேலைப்பாட்டுடன் செய்த செயற்கை ரோஜாப் பூவாகத்தான் இருக்க வேண்டும். அதனால் என்ன! நிஜ ரோஜாப் பூவுக்குப் பதில் செயற்கை ரோஜாப் பூவை வைத்துக் கொள்வதில் என்ன தவறு? உடனே அவளுடைய தந்த வர்ணக் கழுத்தில் அணிந்திருந்த இரட்டை வட முத்துமாலை என் கவனத்துக்கு வந்தது. அதுவும் செயற்கை முத்துமாலைதான். அதானால் என்ன? அவர்களுடைய கையில் அணிந்திருந்த இரண்டு அழகிய சங்கு வளையல்களும் என் நினைவுக்கு வந்தன. தங்கத்தினாலும் வைரத்தினாலும் மற்றும் விலை உயர்ந்த ரத்தினங்களினாலும் ஆபரணங்களைச் செய்து சில ஸ்திரீகள் போட்டுக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுடைய அழகு அதிகமாகி விடுகிறதா? அவலட்சணந்தான் அதிகமாகிறது!...
இம்மாதிரிச் சிந்தனையில் நான் ஆழ்ந்திருந்தபோது அந்த மனிதர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "இது இரண்டாம் வகுப்பு வண்டியா?" என்று கேட்டார்.
"ஆமாம்!" என்றேன்.
"அதுதானே பார்த்தேன்! என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறது. திண்டுக்கல்லில் முதல் வகுப்பு வண்டிக்குப் போய்விடுகின்றேன்" என்றார்.
உடனே எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று. அதை அவரும் தெரிந்துகொண்டார். "அதற்குள் உமக்கு ஒரு எச்சரிக்கை செய்துவிட விரும்புகிறேன்."
"என்ன எச்சரிக்கை?" என்று கேட்டேன்.
"அந்த ஒற்றை ரோஜாப் பூக்காரிப் பற்றித்தான். அவளுடைய ஊர், பெயர் உமக்குத் தெரியுமா?" என்றார்.
"தெரியாது. தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை!" என்றேன்.
ஆனாலும் அந்த மனிதர் விடவில்லை. "அவள் பெயர் மனோகரி; அவளுடைய ஊர் கொழும்பு!" என்றார்.
மனோகரி என்ற பெயரைக் கேட்டதும் என் உள்ளம் பூரித்தது. என்ன அழகான பெயர்! 'மனோகரி', 'மனோகரி' என்று இரண்டு மூன்று தடவை வாய்க்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
கொழும்பு நகரைப் பற்றி நான் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பார்த்ததில்லை. நவநாகரிகத்தில் சிறந்த அந்த நகரத்திலேதான் இத்தகைய பெண் பிறந்து வளர்ந்திருக்கக்கூடும். அதில் ஆச்சரியம் என்ன?
அந்த மனிதருடைய பேச்சைக் கேட்பதில் எனக்கு ஏற்பட்டிருந்த அருவருப்பு மாறிவிட்டது. திண்டுக்கள் ஸ்டேஷன் வருவதற்குள் அவரிடமிருந்து அந்தப் பெண்ணைப் பற்றிக் கூடிய வரையில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் உண்டாகிவிட்டது.
அடடா! அந்த ஆசையின் விளைவு என்ன கோரபயங்கரம்! முதலில் நினைத்தபடியே அவருடன் நான் பேச்சுக் கொடுக்காமல் இருந்திருக்கக் கூடாதா?
"உங்களுக்கும் கொழும்புதான் போலிருக்கிறது. அந்தப் பெண் கொழும்பில் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவளோ?" என்று கேட்டு விட்டேன்.
உடனே அவர் தம்முடைய கதையை ஆரம்பித்தார். பயங்கரமான விஷயங்களைப் படிக்க விருப்ப மில்லாத வாசகர்கள் இந்தப் பகுதியை இங்கேயே விட்டுவிட்டு, அடுத்த பகுதியிலிருந்து படிக்கத் தொடங்குவது நலம்.
அவர் கூறியதாவது:
"அவளும் நானும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அல்ல. கொழும்பு நகரம் மிகப்பெரியது. அதில் நான் ஒரு பக்கத்திலும் அவள் ஒரு பக்கத்திலும் இருக்கிறோம். கண்டியிலிருந்து கொழும்புக்கு வரும் ரயிலில்தான் அவளை முதலில் சந்தித்தேன். அந்தப் பாதையில் வரும் போது இரு பக்கத்திலும் உள்ள அழகிய காட்சிகளைப் பற்றிப் பேசாவிட்டால் நெஞ்சு வெடித்துவிடும்! நீர் இலங்கைக்கு வந்ததில்லை. வந்திருந்தால், கண்டி-கொழும்புப் பாதையில் பிரயாணம் செய்திருந்தால், உமக்கு நான் சொல்வது விளங்கும். அவ்வளவு அழகான இயற்கைக் காட்சிகளை உலகில் வேறு எங்கும் காணமுடியாது."
"நாங்கள் ஏறியிருந்த வண்டியில் எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஆகையால், அவளுடனே நான் பேச வேண்டியதாயிற்று. அவளும் உற்சாகமாகவே பேசிக்கொண்டு வந்தாள். கொழும்பு ஸ்டேஷன் சமீபத்ததும் ஒருவருடைய விலாசத்தை ஒருவர் கேட்டுத் தெரிந்துகொண்டோ ம். அவளுடைய வாசம் வெள்ளவத்தை என்று தெரிந்துகொண்டேன். மதராஸுக்கு மாம்பலம் எப்படியோ, அப்படி கொழும்புக்கு வெள்ளவத்தை. தன்னுடைய வீட்டுக்கு ஒரு நாள் வரும்படி கேட்டுக்கொண்டாள். 'அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருகிறேன்,' என்று ஒப்புக்கொண்டேன். அந்தப்படியே மறு ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தை சென்று, அவளுடைய வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தேன். நான் போனபோது அவள் வீட்டில் இல்லை. வேலைக்காரன் ஒருவன் இருந்தான். 'இப்போது வந்து விடுவார்கள்; உட்காருங்கள்!' என்றான். வீட்டுத் தாழ்வாரத்தில் போட்டிருந்த சாய்மான நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன். கடற்காற்று சுகமாக வந்து கொண்டிருந்தது. வீட்டு வாசலில் இருந்த சிறிய தோட்டத்தில் புஷ்பச் செடிகளும் அலங்கார குரோட்டன்ஸ் செடிகளும் கொழு கொழுவென்று வளர்ந்திருந்தன! அவற்றில் ஒரே ஒரு ரோஜாச் செடியும் இருந்தது. அந்தச் செடியில் ஒற்றை ரோஜா ஒன்று மலர்ந்தது. 'நான் தான் புஷ்பங்களின் ராஜா' என்று பறையறைந்து கொண்டிருந்தது."
"நேரமாக ஆக என் மனத்தில் ஒரு பதை பதைப்பு ஏற்பட்டது. 'இது யார் வீடோ , என்னவோ? அந்தப் பெண்ணுக்குச் சொந்தக்காரர்கள் எப்படிப் பட்டவர்களோ? அவள் அழைத்தாள் என்று நாம் வந்துவிட்டோ மே! இது சரியான காரியமா?' என்ற எண்ணங்கள் தோன்றி என் உள்ளத்தைக் குழப்பின."
"சிறிது நேரத்துக்கெல்லாம் மனோகரி வந்தாள்! என்னைப் பார்த்ததும் அவள் "வாருங்கள்! வாருங்கள், நீங்கள் வருவதாகச் சொன்னதை மறந்து விட்டேன்" என்றாள். பிறகு, அவளுடன் வந்தவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள். பிறகு, என்னை உள்ளே அழைத்துப்போய், விருந்தினரை வரவேற்பதற்குரிய விசாலமான முன் அறையில் உட்கார வைத்தாள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவளும் வந்து எதிரில் உட்கார்ந்து கொண்டாள். வேலைக்காரன் டீ கொண்டு வந்து கொடுத்தான். நான் டீ சாப்பிட்டுக் கொண்டேயிருக்கையில் என் பின்னால் வந்து யாரோ நிற்பதை உணர்ந்தேன். உடனே என் மண்டையில் 'படீர்' என்று ஒரு அடி விழுந்தது. அவ்வளவுதான்; செத்து விழுந்துவிட்டேன்.... ஆமாம், ஐயா, ஆமாம்! செத்துதான் விழுந்தேன். உமக்கு நம்பிக்கைப்படாதுதான். கதையைப் பூராவும் கேட்டுவிடும். செத்து விழுந்த என்பேரில் ஒரு கம்பளத்தைப் போட்டு மூடினார்கள். நான் செத்துப் போய்விட்டேன் என்று எனக்கு நன்றாகத் தெரிந்தது. ஆனால், என் உயிர் மட்டும் அங்கேயே சுற்றி வந்து கொண்டிருந்தது. என் உடம்பை இவர்கள் என்ன தான் செய்யப்போகிறார்கள் என்று அறிந்து கொள்ள விரும்பினேன். அதனால் தான் அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அன்று நள்ளிரவில் இந்தப் பெண்ணும் அவளோடு வந்த ஆடவனும் என் உடலைத் தூக்கிக் கொண்டு போனார்கள். தோட்டத்தில் ஒரு பெரிய குழி வெட்டப்பட்டிருந்தது. அதில் என் உடம்பைப் போட்டுப் புதைத்தார்கள். எல்லாம் முடிந்ததும் மனோகரி ஒரு பெரு மூச்சு விட்டு "ஐயோ! பாவம்!" என்றாள்; அவள் கண்களில் கண்ணீர் துளிகளும் வந்தன. எனக்கு என்னவோ பரமதிருப்தி ஆகிவிட்டது. பிறகு, அவர்கள் கொஞ்ச தூரத்தில் பூச்சட்டியில் இருந்த ஒரு ரோஜாச் செடியைப் பெயர்த்து எடுத்து, என்னைப் புதைத்த இடத்தின் மேல் அதை நட்டுவிட்டார்கள். மனோகரி ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றினாள். அந்தத் தண்ணீரோடு அவளுடைய கண்ணீர் துளிகளும் கலந்ததாக எனக்குத் தோன்றியது."
"என் உயிருக்கு இன்னமும் அவ்விடத்தை விட்டுப் போக மனமில்லை. அந்தக் குழியையும் அதன் மேலிருந்த செடியையும் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. கொஞ்ச நாளைக்கெல்லாம் அந்த ரோஜா செடியில் ஒரு மொட்டு விட்டது. அந்த மொட்டுக்குள் போய் என் உயிர் புகுந்து கொண்டது. மொட்டு மலர்ந்து பூவாயிற்று. நானும் அதிலேயே காத்திருந்தேன். மனோகரி அந்த ரோஜாவைப் பறித்துத் தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்ற ஆசையோடு காத்திருந்தேன். அம்மம்மா! அப்படி காத்திருக்கும்போது ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக இருந்தது. கடைசியில், அவள் வந்து, தன் தங்கக் கரத்தினால் அந்த ரோஜாவைப் பறித்துத் தன் தலையிலே சூடிக்கொண்டாள். அப்புறந்தான் என் ஆத்மா சாந்தி அடைந்தது."
"தம்பி! உன்னைப் பார்த்தால் நல்ல அறிவாளியாகத் தோன்றுகிறது. ஆகையால், நீயே ஒருவேளை ஊகித்துக் கொண்டிருப்பாய். அவர்கள் வீட்டுத் தாழ்வாரத்தில், சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டு சிறிது நேரம் தூங்கிவிட்டேன். அப்போது நான் கண்ட கனவையே இத்தனை நேரம் சொன்னேன். மனோகரி திரும்பி வந்த பிறகு அப்படியெல்லாம் என்னை ஒன்றும் செய்துவிடவில்லை. மரியாதையாகப் பேசித் திருப்பி அனுப்பினாள். அதன் பிறகு அடிக்கடி நாங்கள் சந்திப்பதுண்டு. இருந்தபோதிலும், அவளுடைய கூந்தலில் ஒற்றை ரோஜாப்பூவைக் கண்டால் மாத்திரம் எனக்கு ஒரு திகில் உண்டாகி விடுகிறது. அன்று கண்ட கனவு நினைவுக்கு வந்துவிடுகிறது..."
அம்மனிதர் பாதிக் கதை சொல்லிக் கொண்டு வந்த போது, அவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து தப்பி வந்தவராயிருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன். அவரிடம் இவ்வண்டியில் தனியாக மாட்டிக் கொண்டோ மே என்று கொஞ்சம் கவலையாகவும் இருந்தது. அவ்வளவும் கனவு என்று அவர் கதையை முடித்தபோது என்னையறியாமலே பெருமூச்சு விட்டேன். இவர் ஒரு விளையாட்டு மனிதர் என்று முடிவு செய்து கொண்டேன். ஆயினும், இப்படியெல்லாம் பயங்கரமாக ஏன் கற்பனை செய்ய வேண்டும்? அவருடைய மூளையில் ஏதேனும் கொஞ்சம் கோளாறு இருந்தாலும் இருக்கலாம்.
ரயில் வண்டி தண்டவாளம் மாறும் கடபுட சத்தம் கேட்கலாயிற்று. திண்டுக்கல் ஸ்டேஷனுக்குள் வண்டி போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.
"இதோ பாரும்! நான் திண்டுக்கல்லில் இறங்கி, முதல் வகுப்பு வண்டி ஏதாவது காலியிருக்கிறதா என்று பார்த்து வருகிறேன். அது வரையில் இந்தப் பெட்டி இங்கேயே இருக்கட்டும். ஒரு விஷயம்; அந்தப் பெண் உம்முடன் பேச மறுபடியும் வருவாள் என்று தோன்றுகிறது. அவள் கூந்தலில் உள்ள ஒற்றை ரோஜாப் பூவை எப்படியாவது நீர் எடுத்து வைத்திருந்து என்னிடம் ஒப்பித்தால், ஆயிரம் ரூபாய் உமக்குக் கொடுக்கிறேன். இல்லை; ஆயிரம் ரொம்பக் குறைவு, இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன். சரிதானே! ஆனால் அவளுக்கு மட்டும் தெரியக் கூடாது. தெரிந்தால் உயிருக்கே ஆபத்து தெரிந்ததா?"
இந்த மனிதருக்கு மூளைக் கோளாறு தான்! சந்தேகமில்லை, பெட்டியையும் எடுத்துக் கொண்டு தொலைந்து போகக் கூடாதோ! மறுபடியும் இவர் இங்கேயே வருவதாயிருந்தால் நாம் இறங்கி வேறு வண்டி பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று தீர்மானித்தேன். -------------
மூன்றாம் அத்தியாயம்
திண்டுக்கல் ஸ்டேஷனில் வண்டி நின்றது. "சிறுமலை வாழைப்பழம்", "சாம்பார் சாதம்" "பிரியாணி" என்னும் கூக்குரல்கள் காதைத் துளைத்தன. அந்த மனிதர் இறங்கி அவசரமாகப் போனார். பெட்டியை வைத்து தொலைத்து விட்டுதான் போனார். அந்தப் பெண் ஒரு வேளை இந்த வண்டியில் ஏறிக் கொள்ளலாம் என்று வந்தால், இந்தப் பெட்டி ஒரு தடையாயிருக்கலாமல்லாவா? அவர் கூறியவற்றில் ஏதேனும் கொஞ்சமாவது உண்மையிருக்குமா? அந்தப் பெண்ணின் ஊர் கொழும்பு, அவள் பெயர் மனோகரி என்பவையேனும் நிஜமாயிருக்குமோ?
அதிக நேரம் நான் யோசிக்க முடியவில்லை. அவளே வந்து விட்டாள். என் வண்டியின் அருகில் வந்து நின்றாள். நானும் மரியாதைக்காகக் கீழே இறங்கினேன்.
"இங்கே ரயில் எத்தனை நேரம் நிற்கும்?" என்று கேட்டாள்.
"ஐந்து நிமிஷந்தான் நிற்கும்."
"அப்படியானால் என் சாமான்கள் இங்கே ஏற்ற முடியாது. திருச்சினாப்பள்ளியில் தான் மாற்ற வேண்டும். இந்த வண்டியில் வந்து ஒருவர் ஏறினாரே, அவர் இறங்கிப்போவதைப் பார்த்தேன். அவர் என்னைப் பற்றி ஏதாவது சொன்னாரா?" என்றாள்.
"ஆம் ஏதேதோ சொன்னார். அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை."
"அவர் என்னதான் சொன்னார்?" என்று கேட்டாள்.
"உங்கள் ஊர் கொழும்பு என்றும், பெயர் மனோகரி என்றும் சொன்னார். உங்களை அவருக்குப் பழக்கம் உண்டு என்றும் கூறினார்."
"அவ்வளவு வரை அவர் கூறியவை உண்மைதான். வேறு ஒன்றும் சொல்லவில்லையா?"
"இன்னும் ஏதோ உளறினார்! அதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்?"
"ஆம், என்னைப் பற்றி ஏதாவது அவதூறு சொல்லியிருப்பார். அதையெல்லாம் நீங்கள் நம்பாததற்கு ரொம்ப வந்தனம்! நான் பயந்தது உண்மை ஆயிற்று. அங்கே புஷ்கோட் மனிதர்கள் மூன்று பேர்; இங்கே ஸுட் போட்ட ஒருவர். ஆக, நாலு பேர் என்னைத் தொடர்ந்து இந்த வண்டியில் வருகிறார்கள். நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்!"
"எதற்காக உங்களைத் தொடர்ந்து வருகிறார்கள்? எதற்காக நீங்கள் பயப்பட வேண்டும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! உண்மையில் அபாயம் ஏற்படுவதாயிருந்தால், சும்மா இருந்து என்ன பயன்? ரயில்வே போலீஸாரிடம் சொல்லலாமே!" என்றேன்.
"வேண்டாம், வேண்டாம்! போலீஸாரிடம் மட்டும் சொல்ல வேண்டாம். அதைக் காட்டிலும்..."
இவ்விதம் கூறிய மனோகரி, பேச்சை நடுவில் நிறுத்தி, என் வண்டிக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே வைத்திருந்த பெட்டி அவளுடைய கவனத்தை அடியோடு கவர்ந்துவிட்டதாகத் தெரிந்தது. அதை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றாள். அப்போது அந்த அழகிய பால் வடியும் முகத்தில் பீதியின் சாயை பரவியதைப் பார்த்தேன். எனக்கு அவளிடம் பரிதாபமும் உண்டாயிற்று; ஒரு வித வியப்பும் உண்டாயிற்று.
"ஆமாம்; அது அந்த மனிதருடைய பெட்டிதான். பிற்பாடு வந்து எடுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டுப் போனார்!" என்றேன்.
"திருச்சியில் உங்கள் வண்டியில் வந்து ஏறிக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன். அதுவும் முடியாது போலிருக்கிறது!" என்றாள்.
"ஏன் முடியாது? அந்த ஆசாமி மறுபடி வந்தால் அவரை விரட்டியடித்து விடுகிறேன். அல்லது இரண்டு பேரும் வேறொரு வண்டியைப் பார்த்து ஏறுவோம். மூன்றாம் வகுப்பில் வேண்டுமானாலும் ஏறிக்கொண்டு போவோம். நீங்கள் கொஞ்சங்கூட பயப்பட வேண்டாம். நான் இருக்கும்போது உங்களுக்கு ஒருவித அபாயமும் வருவதற்கு விடமாட்டேன்!" என்றேன்.
"சரி, எல்லாவற்றுக்கும் திருச்சி ஜங்ஷனில் யோசித்துக் கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு, மனோகரி திரும்பி அவள் வண்டிக்குப் போனாள்.
அவள் தலையிலிருந்த ஒற்றை ரோஜாப்பூ மீண்டும் என் கண்ணில் பட்டது. இந்தத் தடவை அது ஏதோ மர்மம் நிறைந்த பொருளாக எனக்குத் தோன்றியது.
பெட்டியை எடுத்துக்கொண்டு போக அந்த மனிதர் வரவேயில்லை. ரயில் புறப்பட்டுவிட்டது. கொந்தளிக்கும் கடலில் அலைகள் எழுந்து விழுவது போல், என் மனத்தில் எண்ண அலைகள் வந்து மோதின.
மனோகரியும் அவளைத் தொடர்ந்து அதே ரயிலில் வருவதாக அவள் கூறிய நான்குபேரும் அந்த அலைகளில் புரண்டு புரண்டு எழுந்தார்கள்.
ஏதோ ஒரு மர்மச் சுழலில் நான் சிக்கிக் கொண்டு விட்டதாகத் தோன்றியது. அது என்னவாயிருக்குமென்று எவ்வளவோ யோசித்தும் தலைகால் ஒன்றும் புரியவில்லை.
அந்தப் பெண் ஏதோ ஒரு சங்கடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் நிச்சயம். எது எப்படியிருந்தாலும் அவளுக்கு ஆதரவாக நின்று, உதவி செய்ய வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். அந்த முயற்சியில் உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும் சரிதான். பாபநாசம் அருவியில் விழுந்து உயிர் துறந்து அநாதைப் பிணமாவதைக் காட்டிலும் இப்படிப்பட்ட ஒரு நிராதரவான பெண்ணுக்கு உதவி செய்து உயிரை விடுவது மேல் அல்லவா? ஒரு வேளை, அதற்காகவே தான் கடவுள் பாபநாசத்தில் நம்முடைய புத்தியை மாற்றி அருளினாரோ என்னவோ? ஆனால் மனோகரி கொஞ்சம் நம்மிடம் அதிக நம்பிக்கை வைத்து எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னால், நம்முடைய அறிவைப் பூரணமாகப் பயன்படுத்தி அவளுக்கு உதவி செய்யப் பார்க்கலாம். எல்லாவற்றுக்கும் திருச்சினாப்பள்ளி வரட்டும்; பார்ப்போம். கேட்டால் சொல்லாமலா போகிறாள்? இப்படியெல்லாம் நான் எண்ணிக்கொண்டிருக்கையில் அந்த ஒற்றை ரோஜாப்பூ மட்டும் என் மனக்கண் முன்னால் இடைவிடாமல் தோன்றிக் கொண்டே இருந்தது.
திருச்சி ஜங்ஷன் வந்தது. ஐந்தாம் நம்பர் பிளாட்பாரத்தில் இன்ன வண்டி வந்திருக்கிறது என்றும், ஆறாம் நம்பர் பிளாட்பாரத்திலிருந்து இன்ன வண்டி புறப்படப்போகிறது என்றும் ஒலிப்பெருக்கி அலறிக்கொண்டிருந்தது.
வண்டியிலிருந்து இறங்கி நின்றேன். என் கண்கள் இரண்டு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தன. பெட்டிக்கு உடைய மனிதர் வருகிறாரோ என்று ஒரு பக்கம் பார்த்தன; ஒற்றை ரோஜாப் பூவை இன்னொரு பக்கம் ஆவலுடன் எதிர் பார்த்தன.
முதல் வகுப்புப் பெண்கள் வண்டியிலிருந்து அவளுடைய முகம் எட்டிப் பார்த்தது.
பிறகு அவள் வண்டியிலிருந்து இறங்கினாள். பிளாட்பாரத்தில் அதிக வெளிச்சமில்லாதிருந்த ஓர் இடத்துக்குப் போய் நின்றாள். அப்படியும் இப்படியும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
சற்று நேரம் நான் பொறுத்துப் பார்த்துவிட்டு இறங்கிப் போனேன். அவளருகில் சென்று "என்ன தீர்மானம் செய்தீர்கள்?" என்று கேட்டேன்.
"இன்னமும் யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன். ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை."
"எனக்கு என்னவோ, நீங்கள் அநாவசியமாகப் பயப்படுகிறீர்கள் என்று தோன்றுகிறது."
"அப்படித்தான் எனக்கும் ஒரு சமயம் தோன்றுகிறது. இன்னொரு சமயம், ... அந்த மூன்று புஷ்கோட் ஆசாமிகளை நினைத்தால் பயமாயிருக்கிறது."
"எதுவாயிருந்தாலும் இருக்கட்டும். உங்களுக்கு அப்படிப் பயமாயிருந்தால் என் வண்டியில் வந்து ஏறிக் கொள்ளுங்கள்..."
"வந்துவிடலாம். ஆனால், அந்தப் பெட்டிக்காரர் வந்து, பெட்டியை எடுத்துக்கொண்டு போய் விட்டாரா?"
"இன்னுமில்லை!"
"அதனால்தான் யோசிக்கிறேன். வண்டி புறப்படும் சமயத்தில் அவர் திடீரென்று வந்து ஏறிக் கொண்டால்?"
"ஏறிக்கொண்டால் என்ன, நான் இருக்கும்போது?"
"அதைவிடப் பெண்கள் வண்டியில் நான் தனியாக இருப்பதே நல்லது."
"உங்களுக்கு என்னதான் தோன்றுகிறது? எதற்காக இவர்கள் எல்லோரும் உங்களைத் தொடர்கிறார்கள்? ஒரு காரணமும் ஊகிக்க முடியவில்லையா?"
"மதுரை ஜங்ஷனில் அவர்களுடைய பேச்சில் இரண்டொரு வார்த்தை என்காதில் விழுந்தது."
"ஆ! அதிலிருந்து ஏதாவது ஊகிக்க முடிந்ததா?"
"ஏதோ விலை உயர்ந்த வைரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். அவர்கள் சுங்க இலாகா அதிகாரிகள் என்று தோன்றுகிறது. நான் ஏதோ வைரங்களை ஒளித்து எடுத்துப் போகிறேன் என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள் போலிருக்கிறது" என்றாள் மனோகரி.
இதைக் கேட்டு நான் சிரித்து விட்டேன்.
மனோகரியும் சிரித்தாள்; அவள் சிரித்த அந்தச் சிரிப்பு என் காதில் கிண்கிணி நாதமாக ஒலித்தது.
"என்ன முட்டாள் தனம்! நீங்கள் தான் அது விஷயத்தில் மிகப் பரிசுத்தமாக இருக்கிறீர்களே! ஒரு குன்றிமணி எடை தங்கமோ ஒரு சிறிய மூக்குத் திருகு வைரமோ உங்கள் உடம்பில் இல்லையே! அதனாலேயே உங்களை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. மதராஸில் சில பணக்கார வீட்டு ஸ்திரீகள் உடம்பெல்லாம் வைரமாக வருகிறார்கள். அந்த அவலட்சணத்தைப் பார்த்துக்கூசிய என் கண்களுக்கு உங்களைப் பார்த்தால்...சேச்சே! என்னமோ சொல்லிக் கொண்டு போகிறேனே!"
"எல்லாம் சரியாகத்தான் சொல்கிறீர்கள். பாக்கியையும் சொல்லி முடியுங்கள்? ஆ! அதோ!-"
திரும்பிப் பார்த்தேன். என் வண்டிக்குப் பக்கத்தில் இருவர் வந்து நின்றார்கள். ஒருவர் பெட்டியை வைத்துவிட்டுப் போனவர். இன்னொருவர், புது மனிதர்.
பெட்டிக்குரியவர் இன்னொருவரிடம் ஏதோ சொன்னார்.
இருவரும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள்! பிறகு அங்கிருந்து அகன்றார்கள்.
பெட்டி, வண்டிக்குள்ளேயே இருந்தது.
ஆர்வத்துடன் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மனோகரி, "நான்கு பேருடன் இன்னொருவரும் சேர்ந்தாயிற்று!" என்றாள்.
அவளுடைய, அழகியமுகத்தில் பீதி ததும்ப அங்குமிங்கும் அவள் மிரண்டு பார்த்தபோது நான்கு புறமும் வேடுவர்களால் சூழப்பட்ட மானின் மருண்ட பார்வை என் நினைவுக்கு வந்தது. சுற்றிலும் வலைகள் நெருங்கி வருவதை உணர்ந்த மீன் துவண்டு துடிப்பதைப் போல் அவளுடைய நயனங்கள் துடித்துக் கொண்டிருந்தன.
எனக்கும் சிறிது கலக்கமாகத் தானிருந்தது. ஆயினும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவளுக்குத் தைரியம் கூறவும், கூடுமான உதவி செய்யவும் விரும்பினேன்.
"ரயில்வே ஜங்ஷனில் எத்தனையோ பேர் வருவார்கள், போவார்கள், எல்லாரும் உங்களைத் தேடுவதாக ஏன் எண்ணிக்கொள்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
"காரணமில்லாமல் பயப்படும்படியான அவ்வளவு பெரிய அசடு என்று என்னைப் பார்த்தால் தோன்றுகிறதாக்கும்."
"மன்னிக்க வேண்டும். அப்படி நான் சொல்லவில்லை. அவர்கள் - தங்களைத் தேடி வருகிறவர்கள் - மூடர்களாக இருக்கலாம் அல்லவா?"
"அவர்கள் எல்லாரையுமே மூடர்கள் என்று நான் ஒத்துக் கொள்ள முடியாது."
"ஏன்?"
"அவர்களில் ஒருவர் என் தகப்பனார்!"
"என்ன! என்ன!"
"ஆமாம் கடைசியாக வந்தவர் என் தகப்பனார். அவர் பெயர் எழுதிய பெட்டிதான் தங்கள் வண்டியில் இருந்தது. திண்டுக்கல்லில் இறங்கியவர் என் தகப்பனாரின் உதவிக்கு வந்தவராயிருக்க வேண்டும்."
"எனக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போலிருக்கிறது. தங்கள் தகப்பனார் தங்களை எதற்காகத் தேடி வரவேண்டும்?" என்றேன்.
"மகளிடம் தகப்பனாருக்கு இருக்கக்கூடிய வாஞ்சையினால்தான். 'நான் என் காதலனுடன் இந்தியாவுக்குப் போகிறேன். கவலைப்பட வேண்டாம்' என்று அப்பாவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு வந்தேன். உடனே புறப்பட்டு ஓடி வந்திருக்கிறார். இவ்வளவு சீக்கிரம் வந்துவிடுவார் என்று நான் நினைக்கவில்லை. ஆகாய விமானம் ஒன்று இருக்கிறது என்பதையே மறந்துவிட்டேன்."
ஆகாயம் இடிந்து என் தலையில் விழுந்தது போலிருந்தது. ஆனாலும் அதில் என்ன வியப்பு? இப்படிப்பட்ட அழகிக்கு ஒரு காதலன் இருப்பதில் வியப்பில்லைதான்! கொம்புத் தேனுக்கு முடவன் ஆசைப்பட்டு ஆவதென்ன?
"அப்படியானால், நான் விடைபெற்றுக் கொள்ளட்டுமா?" என்றேன். அப்பொழுது என்னை அறியாமலே என் குரலில் ஒருவித ஏக்கம் தொனித்தது.
"நீங்கள் உதவி செய்வீர்கள் என்று நினைத்தேன். என்னைக் கைவிட்டுவிடப் போகிறீர்களா?"
"நான் என்ன உதவி செய்ய முடியும், உங்கள் தந்தையே வந்திருக்கும் போது?"
"ஓர் உதவி உங்களால் செய்ய முடியும்."
"முடிந்தால் அவசியம் செய்கிறேன்."
"சிறிது நேரத்துக்கு என் காதலனாக நடிக்க வேண்டும். அதாவது, என் தந்தையின் முன்னிலையில்..."
இதெல்லாம் நிஜமாக நடக்கிறதா, அல்லது ஆங்கில நாவல் ஆசிரியர் வோட் ஹவுஸின் கதை படித்துக் கொண்டிருக்கிறேனா என்று எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது.
"முன் பின் காதலனாக நடித்து எனக்குப் பழக்கம் இல்லை. முயன்று பார்க்கிறேன். ஆனால், இதெல்லாம் எதற்காக? உங்கள் அசல் காதலன் எங்கே?"
"அசல் காதலனுமில்லை; அப்பீல் காதலனுமில்லை. அப்பாவுக்காக அப்படி வெறுமனே எழுதி வைத்துவிட்டு வந்தேன். இப்போது அதை உண்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. தங்களைத்தான் நம்பியிருக்கிறேன்."
"நம்பினவர்களை நான் கைவிடுவதில்லை. என்னாலியன்ற உதவி செய்கிறேன், பரிசு என்ன தருவீர்கள்?"
"பரிசா? என்னிடம் என்ன இருக்கிறது கொடுப்பதற்கு?" என்றாள் மனோகரி.
"தங்கள் தலையில் சூடியிருக்கும் ரோஜாப்பூவைக் கொடுத்தால் போதும். இன்றைய சம்பவத்தின் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வேன்..."
மனோகரியின் பால்வடியும் முகத்தில் அப்போது ஒரு இலேசான நிழல் சாயை படர்ந்ததைக் கவனித்தேன். அப்போது என் உள்ள நிறைவிலும் ஒரு கள்ளம் புகுந்தது. இவள் உண்மையாக அபாயத்தில் சிக்கிக்கொண்டிருப்பவள்தானா? அல்லது எல்லாம் வெறும் நடிப்பா? ஒரு பெரிய கபட நாடகத்தின் அங்கமா?...
மனோகரி அந்த ஒற்றை ரோஜாவைத் தன் கூந்தலிலிருந்து எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, "இது வெறும் வர்ணக் காகிதம். தங்களுடைய உதவிக்கு இதையா பரிசாகக் கொடுப்பது? தயவு செய்து மன்னியுங்கள். நான் மட்டும் பத்திரமாகச் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தால் புத்தம் புதிய மணமுள்ள ரோஜா மலர்களை வாங்கி மாலையாகத் தொடுத்துத் தருகிறேன்!" என்றாள்.
எனக்கு மெய் சிலிர்த்தது. அவள் தன் தங்கள் கையினால் என் கழுத்தில் ரோஜாமாலை சூட்டுவதாகவே கற்பனை செய்துகொண்டு மகிழ்ந்தேன். உண்மையாகச் செய்யட்டும், செய்யாமற் போகட்டும். இவ்வளவு ரசனையுடன் பேசும் பெண்ணுக்காக என்னதான் செய்யக்கூடாது?
"தங்களைப் பத்திரமாகச் சென்னை கொண்டு போய்ச் சேர்ப்பது என் பொறுப்பு. சிறிதும் அதைப் பற்றிக் கவலை வேண்டாம்" என்றேன்.
இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏழெடுப் பேர் எங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்படி வருபவர்களில் இரண்டு பேர் போலீஸ்காரர்கள் என்பதும் தெரிந்தது.
எனக்குத் திக், திக் என்று அடித்துக் கொண்டது. ஆயினும் பக்கத்தில் மனோகரியிருப்பதை முன்னிட்டு மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டேன்.
அவர்கள் எங்கள் அருகில் வருவதைப் பார்த்ததும் மனோகரி அவர்களை எதிர்கொள்பவளைப் போல் முன் நோக்கி நடந்தாள். நானும் சென்றேன். இருவரும் தூண் ஓரத்து நிழலிலிருந்து நல்ல வெளிச்சத்துக்கு வந்து விட்டோம்.
கைப்பெட்டிக்காரர் என்னைப் போலீஸ்காரர்களுக்குச் சுட்டிக் காட்டினார். "இந்த ஆள்தான்; இவனைக் கைது செய்யுங்கள்!" என்றார்.
"எதற்காக?" என்று மனோகரி, பெண் சிங்கத்தைப்போல் கம்பீரமாக முன்னால் நின்று கேட்டாள்.
"உன்னை உன் தகப்பனாருக்குத் தெரியாமல் ஏமாற்றி அழைத்து வந்ததற்காகத்தான்!"
"அது பொய்! நான் என் இஷ்டத்தினால் வந்தேன்!"
இப்படி அவர்கள் வாதமிட்டுக் கொண்டிருக்கும் போதே போலீஸார் இருவரும் என் இருபக்கத்திலும் வந்து நின்று, "மரியாதையாக வந்துவிடு!" என்றார்கள்.
நானும் மரியாதையாக அவர்களுடன் நடந்தேன். போலீஸ் விவகாரங்களில் சிக்கி வழக்கமில்லாதவனாதலால், ஒரு பக்கம் திகிலாயிருந்தது. மற்றொரு பக்கத்தில், மனோகரிக்காக இதைச் செய்கிறோம் என்ற திருப்தியும் ஏற்பட்டது. சீக்கிரத்தில் இந்தக் குழப்பம் நீங்கிவிடும்; நம்மைப் போலீஸார் ஒன்றும் செய்துவிட முடியாது என்று திடப்படுத்திக் கொண்டு நடந்தேன்.
-------------
நான்காம் அத்தியாயம்
ரயில்வே போலீஸ் ஸ்டேசனுக்கு என்னைக் கொண்டு போனார்கள். என்னுடைய பெட்டி படுக்கையும் கொண்டுவரப்பட்டன. 'புஷ்கோட்' மனிதர்கள் மூவரும் வந்து பெட்டி, படுக்கைகளைச் சோதனைப் போட்டார்கள். என்னையும் சோதித்தார்கள். துணிகளைக் கிழித்து மட்டும் பார்க்கவில்லை. மற்றபடி சாங்கோபாங்கமாகத் தேடினார்கள். என்னிடமிருந்து ஒன்றும் அகப்படவில்லை! அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாகத் தெரிந்தது.
அன்றிரவு நான் தூங்கவில்லையென்று சொல்லவும் வேண்டுமா? என் எண்ணமெல்லாம் மனோகரியின் பேரிலேயே இருந்தது. அந்த ஒற்றை ரோஜாப்பூவின் ஞாபகமும் அடிக்கடி வந்தது.
காலை மூன்று மணி சுமாருக்கு என்னை விடுதலை செய்துவிட்டார்கள். பெரிய போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து, "தவறுதல் நடந்துவிட்டது. உம்மைப் பிடித்து வைப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. அந்த முட்டாள்கள் உம்மைப் பிடித்து அடைத்தார்கள். அதற்காக ரொம்பவும் வருந்துகிறேன்!" என்றார்.
"அதனால் பாதகமில்லை; இது எனக்கு ஒரு நல்ல அநுபவம்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். காலை நாலு மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும் பாஸஞ்சர் வண்டியில் ஏறிச் செல்லத் தீர்மானித்தேன். மறுபடியும் அதே பிளாட்பாரத்துக்குப் போனேன். மனோகரியும் நானும் நின்று பேசிக்கொண்டிருந்த அதே தூண் மறைவுக்கு மறுபடியும் சென்றேன். நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. தூண் ஓரத்தில் அந்த ஒற்றை ரோஜாப்பூ - காகிதப்பூ - கிடந்தது. மனோகரி அதைக் கையில் எடுத்து எனக்கு காட்டிவிட்டு மறுபடியும் தலையில் வைத்துக் கொண்டாள் அல்லவா? சரியாக வைத்துக்கொள்ளவில்லை. ஆகையால், அது கீழே விழுந்து விட்டது. விழுந்ததை அவள் கவனிக்கவில்லை! ஆனால் நான் கவனித்தேன். இதற்குள் போலீஸார் நெருங்கிவிட்டபடியால் நாங்கள் இருவரும் முன்னோக்கிச் சென்றுவிட்டோம்....
அந்த ஒற்றை ரோஜாப் பூவை இப்போது ஆவலுடன் எடுத்து, என் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டேன். சிறிது நேரத்துக்கெல்லாம் ரயிலும் வந்தது. அதில் ஏறிக்கொண்டேன். மனோகரி முதலியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆவல் இல்லாமற்போகவில்லை. அது எப்படியும் பின்னால் தெரியும் என்று நிச்சயப்படுத்திக் கொண்டேன்.
ரயில் புறப்படும் சமயத்தில் அந்தக் கைப்பெட்டிக்காரர் பிளாட்பாரத்திற்கு ஓடி வந்து, அங்குமிங்கும் அலைந்தார். நான் அவரைக் கையைத் தட்டி அழைத்தேன். அவர் என்னைப் பார்த்ததும் ஆர்வத்துடன் அருகில் வந்தார். "பெரிய பிசகு நேர்ந்து விட்டது. மன்னிக்க வேணும். சென்னையில் தங்கள் விலாசம் என்ன? அங்கே வந்து எல்லாம் விவரமாகச் சொல்கிறேன்!" என்றார். என் விலாசத்தை அவருக்குத் தெரிவித்துவிட்டு, "எனக்குக் கொஞ்சங்கூட வருத்தம் இல்லையென்று மனோகரியிடம் சொல்லுங்கள்!" என்றேன்.
சென்னைக்குத் திரும்பி வந்து இரண்டு நாள் வரையில் என் அறையை விட்டு வெளிக் கிளம்பவில்லை. பத்திரிக்கைகளை மட்டும் ஆவலுடன் பார்த்தேன். ஒரு பிரபல சுதேச சமஸ்தான மகாராஜாவின் பிரசித்திப் பெற்ற-விலை உயர்ந்த வைரம் காணாமற் போய் விட்ட தென்றும், இலங்கைப் போலீஸார், சுங்க அதிகாரிகள் முதலியோர் அதைத்தேடி வருகிறார்கள் என்றும் பத்திரிக்கையின் ஒரு மூலையில் சிறிய செய்தி ஒன்று காணப்பட்டது.
அன்றிரவு என் அறைக் கதவை இறுகத் தாளிட்டுக் கொண்டு அந்த ஒற்றை ரோஜாப் பூவை எடுத்தேன். அதைக் கோத்திருந்த நூலைப் பிரித்து விட்டுக் கையினால் தட்டினேன், மேஜை மீது டணார் என்று விழுந்தது.
'கண்ணைப் பறித்தது' என்று ஆசிரியர்கள் எழுதுவார்களே, என் வாழ்க்கையில் அன்றைக்குத்தான் அது உண்மையாயிற்று. அந்த மாதிரி விடிவெள்ளி, அவ்வளவு பெரிய வைரத்தை, கண்ணைப் பறிக்கும்படி ஒளி வீசிய வைரத்தை, நான் அன்று வரை பார்த்ததேயில்லை. அந்த வைரத்திலிருந்து வெளியான விதவிதமான வர்ண கிரணங்களைத்தான் என்னவென்று வர்ணிப்பது! பாபநாசத்தில் அருவி விழும் இடத்தில் நான் பார்த்த வான வில்லின் அதிசய வர்ண ஜாலங்களெல்லாம் இந்த அற்புத வைரத்தின் முன்னால் மண்டி போட்டு ஒளிப் பிச்சை கேட்க வேண்டியதுதான் என்று தோன்றியது.
வெகு நேரம் அந்த வைரத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மறுபடியும் முன்போல் அந்தக் காகித ரோஜாப் பூவுக்குள்ளேயே வைத்துத் தைத்தேன். பெட்டிக்குள் பத்திரப் படுத்தினேன்.
மறுநாள் நான் எதிர்பார்த்திருந்த மனிதர் வந்தார். தவறு நேர்ந்ததன் காரணங்களை விளக்கினார். அந்தப் பெண், "நான் என் காதலனோடு இந்தியாவுக்குப் போகிறேன்; என்னைத் தேட வேண்டாம்" என்று தகப்பனாருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவருக்குத் தெரியாமல் வந்து விட்டாளாம். தகப்பனார் வைர வியாபாரியாம். "ஒரே ஒரு வைரம் மட்டும் எடுத்துப் போகிறேன். அது எனக்கு உங்கள் ஸ்ரீதனமாக இருக்கட்டும்" என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தாளாம். அந்த வைரம் ஒரு மகாராஜாவுக்குச் சொந்தமான விலையுயர்ந்த வைரம் என்றும், ஒன்றரை லட்சம் பெறுமானமானது என்றும் கூறினார். தகப்பனார் பெண்ணையும் வைரத்தையும் தேடிக் கொண்டு புறப்பட்டார். அவள் ரயிலில் பிரயாணம் செய்கிறாள் என்று அறிந்து முன்னதாக விமானத்தில் திருச்சிக்கு வந்து விட்டாராம். இந்த மனிதரையும் தன்னுடைய ஒத்தாசைக்கு அழைத்து வந்தாராம். இதெல்லாம் சுங்க அதிகாரிகள் காதில் அரைகுறையாக விழுந்ததில், அவர்கள் வைரத்தைச் சுங்க வரி கொடுக்காமல் கொண்டு போவதைத் தடுக்க முயற்சி எடுத்தார்களாம். மனோகரி தன் கடிதத்தில் குறிப்பிட்ட காதலன் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று தவறாக எண்ணி, என்னைக் கைது செய்ய இவர் ஏற்பாடு பண்ணினாராம்.
என்னுடைய வாயைப் பிடுங்கி, அந்த ஒற்றை ரோஜாப்பூவில் வைரம் இருக்கிற விஷயம் எனக்குத் தெரியுமா என்று அறிந்து கொள்வதற்காக அம்மாதிரி பயங்கர கதையை அவர் கற்பனை செய்து கூறினாராம்.
என்னை விட அவள் பெரிய கற்பனைக்காரி. ஒரு காதலனையே சிருஷ்டி செய்துவிட்டாள் என்பது எனக்கு என்னமாய்த் தெரியும்? ஆனால், சில சமயம் கற்பனையைக் காட்டிலும் உண்மையில் நடப்பது அதிசயமாயிருக்கிறது. "உன்னை நினைத்து நினைத்து அந்தப் பெண் உருகிக் கொண்டிருக்கிறாள். ஸர்தார் பவன் ஹோட்டலில் தகப்பனும் மகளும் தங்கியிருக்கிறார்கள். அவர்களைப் போய்ப் பார்!" என்றார் அந்த மனிதர்.
-----------
ஐந்தாம் அத்தியாயம்
மறுநாள் ஸர்தார்பவன் ஹோட்டலுக்குப் போனேன். மனோகரி மட்டும் அறையில் தனியாக இருந்தாள். அவள் தகப்பனார் என்னைப் பார்ப்பதற்காகத்தான் போயிருப்பதாகச் சொன்னாள். அன்றிரவு தன்னால் எனக்கு நேர்ந்த கஷ்டத்தைப் பற்றி வருத்தம் தெரிவித்தாள்.
"இது என்ன பிரமாதம்? சில நிமிஷ நேரம் உன் காதலனாக நடிக்கும் பேறு பெற்றேன் அல்லவா? அதற்கும் சில மணி நேரச் சிறை வாசத்துக்கும் சரியாய்ப் போயிற்று" என்றேன்.
பிறகு அந்த ஒற்றை ரோஜாப் பூவை எடுத்து அவளிடம் கொடுத்தேன். அவள் அளவிலா அதிசயத்துடன் அதை வாங்கிக் கொண்டாள். தன் அழகிய கர மலரில் அந்தச் செயற்கை மலரை வைத்துக்கொண்டு அதை உற்றுப் பார்த்தாள்.
"உள்ளே வைரம் பத்திரமாயிருக்கிறது!" என்றேன்.
"வைரம் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று மேலும் வியப்புடன் கேட்டாள்.
"பிரித்துப் பார்த்தேன்; தெரிந்தது?" என்றேன்.
"எப்படி இது உங்கள் கைக்கு வந்தது?"
"தூண் நிழலில் நின்று 'இந்தக் காகிதப்பூ எதற்கு? நிஜ ரோஜாப் பூ மாலை வாங்கித் தருகிறேன்' என்றாயே, அந்த இடத்திலேயே கிடந்தது. இதைக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னது நியாயந்தான், ஒன்றரை லட்ச ரூபாய் வைரத்தை யார்தான், ஒரு அந்நியனுக்குக் கொடுப்பார்கள்?"
"விலை மதிப்பை முன்னிட்டுக் கொடுக்க மறுக்கவில்லை. அவ்வளவு பெறுமானமுள்ளது என்பது அப்போது எனக்குத் தெரியவே தெரியாது. இதற்கு ஒரு உபயோகம் இருந்தது; அதனால் தான் கொடுக்க மாட்டேன் என்றேன். அந்த உபயோகம் இனி இல்லாமற் போய்விட்டது!"
"எனக்கு விளங்கவில்லை. உபயோகமில்லாமல் ஏன் போக வேண்டும்? இதில் உள்ள வைரம் உன் கழுத்தில் அழகாகத்தான் ஜொலிக்கும். ஆனால், சுங்க வரி மட்டும் கட்டிவிடவேண்டும்!" என்றேன்.
அவள் என்னை ஏறிட்டுப் பார்த்து, "எதற்காகச் சுங்க வரி கொடுக்கவேண்டும்? எனக்கும் கொஞ்சம் சட்டம் தெரியும். பெண்கள் அணிந்திருக்கும் நகைக்குச் சுங்க வரி கிடையாது!" என்றாள்.
"அப்படியானால், ஏன் அதை ஒளித்துக் கொண்டு வரவேண்டும்?" என்று முணுமுணுத்தேன்.
"என் தந்தை வைர வியாபாரி. என்னை வைர நகை போட்டுக்கொள்ளும்படி எத்தனையோ தடவை நிர்ப்பந்தித்திருக்கிறார். நான் மறுத்துவிட்டேன். இந்த ஒற்றை வைரத்தை மட்டும் எடுத்து வந்தேன். இவ்வளவு பெறுமானமுள்ளது என்று தெரியாது. நூறு ரூபாய் வைரமே என் காரியத்துக்குப் போதுமானதாயிருந்திருக்கும்!"
"அது என்ன அபூர்வமான காரியம்? இன்னும் அந்த மர்மம் எனக்கு விளங்கவில்லையே!" என்று கேட்டேன்.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மனோகரி என்னுடைய நிலைமையைப் பற்றி விசாரிக்கலானாள்.
"நான் கதாநாயகனாகத் தகுதியுள்ளவன் அல்ல; பி.ஏ. பரீட்சையில் 'கோட்' அடித்தவன்!" என்றேன்.
"நிஜமாகவா? நீங்கள் பி.ஏ. பரீட்சை எழுதித் தோல்வி அடைந்தீர்களா?" என்று கேட்டாள்.
"ஒரு தடவை மட்டுமல்ல; மூன்று தடவை பரீட்சைக்குப் போய்த் தோல்வியடைந்தவன்."
"மூன்று தடவையா தோல்வியடைந்தீர்கள்?" என்று கேட்டுவிட்டு, மனோகரி விழுந்து விழுந்து சிரித்தாள். அதில் என்ன அவளுக்கு அவ்வளவு சந்தோஷம் என்பது எனக்கு விளங்கவில்லை.
"சரி! சரி! நீ சிரித்து முடி. இன்னொரு நாள் வந்து பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
அவள், போகவேண்டாம் என்று தடுத்தும் நான் நிற்கவில்லை. ஆண்பிள்ளை அல்லவா ரோசமாயிராதா? திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்விட்டேன்.
----------
ஆறாம் அத்தியாயம்
என் ஜாகைக்குத் திரும்பியபோது அங்கே மனோகரியின் தகப்பனார் காத்திருந்தார். அவரும் ஒரு அத்தியாயம் தெரிவித்தார்.
பேச்சின் நடுவில் "என் மகளுக்கு நீங்கள் மிகவும் ஒத்தாசையாயிருந்தீர்களாம். டீ வாங்கிக் கொடுத்தீர்களாம். அவள் எனக்கு ஒரே பெண். அதனால்தான், ஒன்றரை லட்சம் ரூபாய் வைரம் போனாலும் போகிறது. பெண் உயிரோடு பிழைத்தாளே, அதுவே போதும் என்று திருப்தி அடைந்திருக்கிறேன்!" என்றார்.
"அவள் உயிருக்கு என்ன ஆபத்து வந்தது?" என்று கவலையுடன் கேட்டேன்.
"தெரியாதா? இதோ பாருங்கள்!" என்று சொல்லி ஒரு கடிதத்தை நீட்டினார். அது மனோகரி அவளுடைய தோழி ஒருத்திக்கு எழுதிய கடிதம். மனோகரி இலங்கையில் ஏதோ ஒரு பரீட்சைக்குப் போனதாகவும், அதில் அவள் தேறவில்லையென்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
"பரீட்சை தேறாத அவமானத்தை என்னால் சகிக்க முடியாது. உயிரை விட்டுவிடத் துணிந்து விட்டேன். இங்கேயே இருந்து அப்பாவுக்குத் துயரம் கொடுக்க விரும்பவில்லை. வைரத்தைப் பொடி பண்ணிச் சாப்பிட்டால் உடனே உயிர் போய்விடும் என்று சொல்கிறார்கள் அல்லவா? அப்பாவின் வைரம் ஒன்றை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்குப் போய் உயிரை விடுவது என்று தீர்மானித்துவிட்டேன். என் உண்மையான சிநேகிதி நீ ஒருத்திதான். ஆகையால் உனக்கு மட்டும்...."
கடிதத்தை இதற்குமேல் நான் படிக்கவில்லை.
"ஐயையோ! என்ன காரியம் செய்துவிட்டேன்!" என்று பதறி எழுந்தேன்.
"என்ன? என்ன?" என்று மனோகரியின் தந்தையும் பதறிக்கொண்டு எழுந்தார்.
"வைரம் என்னிடந்தான் இருந்தது. இப்போதுதான் தங்கள் மகளிடம் போய்க் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தேன்" என்றேன்.
"அடப்பாவி! என்ன காரியம் செய்தாய்! என் குடியைக் கெடுத்துவிட்டாயே!" என்றார் அந்தப் பெரியவர்.
அவர்கொண்டு வந்திருந்த 'டாக்ஸி'யில் ஏறிக் கொண்டு இருவரும் பறந்து சென்றோம்.
என் நெஞ்சு அந்தச் சில நிமிஷங்களில் எப்படித் துடித்தது என்று சொல்லவே முடியாது.
அந்த அழகிய பொன் மேனியைப் பிணமாகத் தான் காணப்போகிறோம் என்று எண்ணிப் பதை பதைத்தேன்.
ஆனால் என்ன சந்தோஷமான ஏமாற்றம்! ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சமீபமாகச் சென்றபோது, அறைக்குள்ளிருந்து குதூகலமாகப் பாடும் குரல் கேட்டது.
உள்ளே நாங்கள் இருவரும் சென்று விழுந்தோம். எங்களுக்குத்தான் உயிர் போய்விடும் போலிருந்தது.
"வைரம் எங்கே?" என்று இருவரும் ஒரே காலத்தில் கேட்டோம்.
மேஜையை அவள் சுட்டிக் காட்டினாள். அங்கே அது வானத்தில் ஒளிரும் நட்சத்திரத்தைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
"எதற்காக இந்தப் பரபரப்பு" என்று கேட்டாள்.
"எங்கே இந்தக் கடிதத்தில் எழுதியிருப்பது போல் செய்துவிடுவாயோ என்றுதான்."
"அதற்கு இனி அவசியம் இல்லையென்று தான் இவரிடம் சொன்னேனே! இந்த மனிதர் மூன்று தடவை பி.ஏ. பரீட்சையில் தோல்வி அடைந்துவிட்டு இவ்வளவு உற்சாகமாக இருக்கிறார். ஒரு தடவை தோற்றதற்காக நான் ஏன் உயிரை விடவேண்டும்?" என்றாள் மனோகரி.
ஆரம்ப அதிர்ச்சி, மகிழ்ச்சி எல்லாம் ஒருவாறு அடங்கிய பிறகு மனோகரியின் தகப்பனார், "இந்தப் பெண்ணைச் சமாளிக்க இனி என்னால் முடியாது; நீர்தான் இவள் உயிரைக் காப்பாற்றினீர். இனியும் இவளை நிர்வகிக்கும் பொறுப்பை நீர் தான் ஏற்க வேண்டும்?" என்றார்.
"கடவுளே! என்னால் எப்படி அது முடியும்? இந்நாளில் பசிக்கு அரிசி கிடைப்பதே துர்லபமாயிருக்கிறது. நானோ ஏழை. இவளுடைய பசிக்கு வைரம் எப்படி வாங்கிக் கொடுப்பேன்! அதுவும் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் வைரமா? ஒன்றரை லட்சம் ரூபாய் வைரங்களுக்கு நான் எங்கே போவேன்?" என்றேன்.
மனோகரியின் தகப்பனார் இப்போது தான் முதல் தடவையாகக் கடகடவென்று சிரித்தார். "நான் கூட வைர வியாபாரத்தை விட்டுவிடப் போகிறேன். இந்தப் பெண் இருக்குமிடத்திலேயே வைரம் வைத்திருக்கப்படாது!" என்றார்.
எங்கள் திருமணத்தின்போது மனோகரி தன் வாக்குறுதியை நிறைவேற்றினாள். மணமுள்ள புது ரோஜா மலர்களால் கட்டிய மாலையை என் கழுத்தில் சூட்டினாள்.
மனோகரி வைர நகை மட்டும் அணிவதில்லை. எங்கள் வீட்டிலேயே வைரம் வைத்துக்கொள்வதில்லை. எதற்காக அத்தகைய விஷப்பரீட்சை பார்க்க வேண்டும்?
என்ன கேட்கிறீர்கள்? "பி.ஏ. பரீட்சை என்ன ஆயிற்று?" என்று கேட்கிறீர்களா? - எங்கள் திருமணம் நடந்தவுடனே முதற்காரியமாக பாபநாசத்துக்கு மறுபடியும் போனோம். அங்குள்ள இனிய நதி வெள்ளத்தில் இருவரும் கைகோத்துக் கொண்டு இறங்கி எல்லாப் பரீட்சைகளுக்கும் சேர்த்து முழுக்கும் போட்டோம்.
நதிக்கரை மரங்களில் வாழ்ந்த பட்சிகள் எங்கள் செயலை ஆமோதித்து மங்கள கீதம் பாடின.
---------------------
3. தீப்பிடித்த குடிசைகள்
1929-ம் வருஷத்தில் சட்டசபைத் தேர்தல்கள் இல்லை என்று இர்வின் மகாப் பிரபு தீர்மானித்து விட்டதில் என்னைப்போல் வருத்தமடைந்தவர்கல் யாரும் இருக்கமுடியாதென்று நினைக்கிறேன். என் துக்கத்தின் காரணங்களைச் சொல்கிறேன், கேளுங்கள். (1) இந்த வருஷத்தில் தேர்தல் நடந்து நான் இந்திய சட்டசபைப் பதவிக்கு நின்றிருக்கும் பட்சத்தில், என் எதிரி யாராயிருப்பினும் அவர் தேர்தலுக்கு முதல் நாள் யமலோகத்துக்கு வோட்டு கேட்கப் போய்விடுவாரென்றும், நான் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவேனென்றும், ஜோசியர் சொல்லியிருந்தார். அது இல்லாமற்போயிற்று. (2) தேர்தல் விநோதங்களைப் பற்றிச் சிற்சில கட்டுரைகள் எழுதியிருக்கலாம். அதற்கும் இடமில்லை.
புதுத் தேர்தலைப்பற்றி எழுத இடமில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, பழைய தேர்தலில் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. பல்லில்லாத கிழவன் பாலிய பருவத்தில் வெல்லச் சீடை தின்றதை எண்ணிச் சந்தோஷப் படுவதுபோல், அந்தப் பழைய தேர்தல் சம்பவத்தைப்பற்றியாவது எழுதலாமென்று தீர்மானித்தேன்.
1626-ம் வருஷத்தில், சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில் பல அதிசயமான முடிவுகள் ஏற்பட்டன. வெற்றி நிச்சயமென்று எண்ணியிருந்தவர்கள் பலர் தோல்வி அடைந்தார்கள். நம்பிக்கையெல்லாம் இழந்து சர்வ நாடியும் ஒடுங்கிப் போயிருந்த பலர், பெரும் வெற்றியடைந்தார்கள். இந்த அதிசயமான முடிவுகளுக்குள்ளே மிகவும் அதிசயமானது ஸ்ரீமான் காவடி கோவிந்தப்பிள்ளையின் வெற்றியேயாகும். இவர் தமது ஜில்லாவில் முதன்மையாக வெற்றி பெறுவார் என்று அரசியல் ஜோதிடத்தில் வல்ல பத்திரிக்கை நிருபர்கள் கூட எதிர் பார்க்கவில்லையென்றால், நீங்களும் நானும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியமடைந்ததில் வியப்பில்லையன்றோ?
ஆம், இப்போது நினைத்தாலும் அந்தக் காட்சி என் கண் முன்னே நிற்கின்றது. தேர்தல் முடிவுகள் பெருவாரியாக வெளியாகிக்கொண்டிருந்த அன்று, சென்னையில் தினசரிப் பத்திரிகாலயங்களின் வாயில்களில் கும்பல் கும்பலாய் ஜனங்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். வெற்றிப் பெற்றவர்களின் பெயர்கள் வர வர, வாசலில் ஒரு கருப்புப் பலகையில் எழுதப்பட்டு வந்தன. பிரபல ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஒருவர் தோற்றுப்போனார் என்று தெரிந்ததும், காங்கிரஸ் அபிமானி ஒருவர் அவசரமாகப் பக்கத்துக் கடைக்குச் சென்று ஒரு டஜன் சுருட்டுக் கட்டுகள் வாங்கி வந்து, எல்லாருக்கும் வழங்கினார். (யாராவது இறந்துபோனால் புகையிலை வழங்குவது சென்னையில் வழக்கம்) இந்த வினோதத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கையில்....ஜில்லாத் தேர்தல் முடிவுகள் கருப்புப் பலகையில் எழுதப்பட்டன. வெற்றி பெற்ற மூவரில் ஸ்ரீமான் காவடி கோவிந்தப்பிள்ளை முதன்மையாக நின்றார். அவருக்கடுத்தபடியாக வந்தவருக்கும் அவருக்கும் 5000 வாக்கு வித்தியாசம்!
ஒரு துள்ளுத் துள்ளி மூன்று முழ உயரம் மேலெழும்பிக் குதித்தேன். உடனே எனக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. சுற்று முற்றும் பார்த்தேன். மற்றவர்கள் என்னைவிட மோசம் என்று தெரிந்த பிறகுதான் கொஞ்சம் சமாதனமாயிற்று. என்னைப் போலவே ஆகாயத்தில் கிளம்பிய பலர் அப்போதுதான் தரையிலிறங்கினார்கள். அவர்களிலொருவர் கீழே கிடந்த சுருட்டு நெருப்பில் காலை வைத்துவிட்டு மறுபடியும் மேலெழும்புவதையும் கண்டேன். வேறு சிலரோ, ஆச்சரியத்தினால் திகைத்துப் போய்ப் பிளந்த வாய் மூடாமல் நின்றார்கள். ஆனால், இப்படி ஆச்சரியப்பட்டவர்களில் எவரும் துக்கமோ மகிழ்ச்சியோ காட்டவில்லை. ஏனெனில், ஸ்ரீமான் காவடிப்பிள்ளை காங்கிரஸ் கட்சியையோ, ஜஸ்டிஸ் கட்சியையோ சேர்ந்தவரல்லர். அவர் சுயேச்சைவாதி.
அதுதான், சுவாமிகளே! இதில் பெரிய அதிசயம். ஸ்ரீமான் காவடி கோவிந்தப்பிள்ளை எந்தக் கட்சியையும் சேர்ந்தவரல்லர். அவரை ஆதரிக்கப் பத்திரிக்கைகள் இல்லை. பிரசாரகர்கள் இல்லை. அவர் பெரிய வக்கீல் அல்ல; ஜில்லா போர்டு தலைவர் அல்ல; பெரும் பணக்காரருமல்ல. அந்த ஜில்லாவுக்கு வெளியே அவர் பெயரை யாரும் கேட்டது கிடையாது. பின் எப்படி அவர் இம்மாதிரி ஒரேயடியாகத் தாண்டிக் குதித்தார்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கூடியவர் சென்னைப் பட்டணத்தில் யாரும் இல்லை. கூளிப்பட்டி ஜமீந்தாரைப் பிடித்தால் ஒருவேளை இந்த மர்மம் விளங்கலாமென்று நினைத்தேன்.
கூளிப்பட்டி ஜமீந்தாரைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அவர் எனது பழைய நண்பர். இது குறித்து நீங்கள் என் மீது பொறாமைப்படவேண்டாம். மேலும், அது என்னுடைய தப்புமன்று; ரயில்காரனுடைய தவறு. நாங்களிருவரும் ஒரு தடவை ஒரே ரயில்வே ஸ்டேஷனில் ரயிலேறும்படி நேர்ந்தது. இல்லை ரயிலேறாதிருக்க நேர்ந்தது. நாங்கள் கையில் மூட்டையை வைத்துக் கொண்டு தயாராய்க் காத்துக்கொண்டுதானிருந்தோம். நான் நின்ற இடத்துக்கு நேரே இரண்டாம் வகுப்பு வண்டி வந்து நின்றது. அந்த மனிதருக்கு நேரே மூன்றாம் வகுப்பு ஸ்திரீகளின் வண்டி நின்றது. நான் மூன்றாம் வகுப்பையும் அவர் இரண்டாம் வகுப்பையும் தேடிக் கொண்டு போனோம். நான் என் வண்டியை விரைவில் கண்டு பிடித்து விட்டேன்.
"ஸார்! ஸார்!! ஸார்!!! கதவைக் கொஞ்சம் திறவுங்கள்" என்றேன்.
"ஸார்! ஸார்!! ஸார்!!! தயவு செய்து கொஞ்சம் அடுத்த வண்டிக்குப் போங்கள்" என்று உள்ளிருந்து பதில் வந்தது.
மீறி ஏறுவதற்கு முயன்றேன். உடனே என்னை நோக்கி ஒரு டஜன் கைகள் முன் வந்தன. எனவே, நான் பின்வாங்க வேண்டியதாயிற்று. இந்த மாதிரி இரண்டு வண்டி பரிசோதிப்பதற்குள் ரயில் கிளம்பிவிட்டது. கொஞ்சம் தூரம் ரயிலுடன் நானும் ஓடினேன். பின்னர், "சை! சை! இந்த ரயிலுக்கு நம்முடன் கூட ஓடும் சக்தி உண்டா?" என்று தீர்மானித்து நின்று விட்டேன். திரும்பிப் பார்த்தபோது கூளிப்பட்டி ஜமீன்தாரும் கையில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்பில் தம்பதி சமேதராய் எழுந்தருளியிருந்த ஒரு வெள்ளைக்காரன் அவரை "நரகத்துக்குப் போகும்படி" ஆக்ஞாபித்ததாய் எனக்குப் பின்னால் தெரியவந்தது. ரயில் போனதும் நாங்கள் இருவரும் சந்தித்தோம்.
"இந்த ரயில் நாசமாய்ப் போனாலென்ன?" என்று நான் கேட்டேன்.
"ரயில் கம்பெனி பாதாள லோகத்துக்குப் போனாலென்ன?" என்று ஜமீன்தார் திருப்பிக் கேட்டார்.
"கொஞ்சமும் ஆட்சேபமில்லை" என்றேன்.
இவ்வாறுதான் நாங்கள் நண்பர்களானோம்.
கூளிப்பட்டி ஜமீன்தார் மிக்க செல்வாக்குள்ளவர். அந்த ஜில்லாவில் 4000 வாக்குகள் அவர் கைக்குள் அடக்கம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஏழை எளியவர்களிடம் அவர் மிக்க கருணையுள்ளவர் என்பதும் பிரசித்தியான விஷயம்....ஆனால், அவர் அரசியல் விஷயங்களில் மட்டும் தலையிட்டுக்கொள்வது கிடையாது. தலையை மட்டுமன்று; கால், கை, காது முதலிய எந்த அவயத்தையுமே அவர் அரசியலில் இடுவது கிடையாது. சட்டசபை அபேக்ஷகர்களாக நின்ற ஒவ்வொருவரும் ஜமீன்தாரின் ஆதரவைப் பெறப் பிரயத்தனம் செய்தார்கள். எல்லோருக்கும் "ஆகட்டும், பார்ப்போம்" என்ற பதிலே அவர் சொல்லி வந்தார். ஆகவே, இப்பொழுது காவடி கோவிந்தப்பிள்ளையின் மகத்தான வெற்றியைப் பற்றி தெரிய வந்ததும், ஒருக்கால் நமது நண்பரின் கைவேலை இதில் இருக்குமோவென்று நான் சந்தேகித்தது இயல்பேயல்லவா?
கூளிப்பட்டிக்குப் போனேன். ஆனால் ஏமாற்றமடைந்தேன். ஜமீன்தார், "எனக்கு ஒன்றுமே தெரியாது" என்று ஒரேயடியாகச் சாதித்துவிட்டார். எவ்வளவோ சாமர்த்தியமாகவெல்லாம் கேட்டும் பயன்படவில்லை. ஆனால், கூளிப்பட்டிக்குப் போனதில், லாபமில்லாமலும் போகவில்லை. தேர்தலுக்கு நாலு தினங்களுக்கு முன்பு அங்கு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி தெரிந்துகொண்டேன். அதை இங்கே சொல்லிவிடுகிறேன். அதற்கும் கோவிந்தப் பிள்ளையின் வெற்றிக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டாவென்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். தேர்தலுக்கு நாலு நாளைக்கு முன்பு, கூளிப்பட்டிக்குத் தெற்கே எட்டு மைல் தூரத்திலுள்ள கிராமத்தில் பெரிய சமூக மாநாடு ஒன்று நடந்ததாம். ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் அங்கே கூடுவதை முன்னிட்டுச் சட்டசபை அபேட்சகர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் மகா நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார்கள். ஜமீன்தாரும் போயிருந்தார். திரும்பிப் போகும்போது அபேட்சகர்கள் எல்லாரும் கூளிப்பட்டி வழியாகத்தான் போக வேண்டியிருந்தது. மாலை ஐந்து மணிக்கு மாநாடு "பலமான கரகோஷங்களுக்கிடையே இனிது நிறைவேறிய" பின்னர், அபேட்சகர்களின் மோட்டார் வண்டிகள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டன.
இப்பொழுது வாசகர்கள் என்னுடன் கிளம்பி மோட்டார் வண்டிகளைவிட வேகமாய்ப் பிரயாணம் செய்து, கூளிப்பட்டிக்கு வடக்கே ஒரு மைல் தூரத்திலிருந்த 'சேரி'க்கு வந்துவிட வேண்டும். ஆஹா! என்ன பயங்கரமான காட்சி! சேரியிலுள்ள குடிசைகளில் சில தீப்பற்றி எரிகின்றன. தீ வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. காற்று பலமாக அடிக்கிறது. ஐயோ! குடிசையிலிருந்து பக்கத்திலுள்ள வைக்கோற் போரிலும் தீப்பிடித்துக் கொண்டது. "வானை நோக்கிக் கைகள் தூக்கி வளரும் தீயின் காட்சி" என்ன பயங்கரம்! தீயை அணைப்பதற்கு எவ்வித முயற்சியும் காணப்படவில்லை. மக்களையே அதிகமாய் அங்கே காணோம். ஸ்திரிகளும் குழந்தைகளுந்தான் சுற்றிச் சுற்றி வந்து அழுது கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்த இரண்டோ ர் ஆண் மக்கள் அந்த ஸ்திரீகளையும் தீ விபத்துக்காளாகமல் தப்புவித்துக் கொண்டிருக்கிறார்கள். எரியும் குடிசைகளுக்கருகே அவர்கள் போகாவண்ணம் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜில்லா போர்டு பெரியசாலை இந்தச் சேரியைப் பிளந்துகொண்டு போகிறது. சாலைக்கு இடது புறத்திலிருந்த குடிசைகள் எல்லாம் ஏறக்குறைய எரிந்து போயின. வலது புறத்திலுள்ள குடிசைகளுக்கு இன்னும் நெருப்பு வரவில்லை. ஐயோ! காற்று இப்படிச் சுழன்றடிக்கின்றதே! ஒரு ஜுவாலை பறந்து சென்று வலது புறத்துக் குடிசைகளில் ஒன்றின்மீது விழுகின்றது! ஆகா! சட்டென்று சென்று, அந்த ஒரு கீற்றை இழுத்தெறிந்து ஒரு குடம் தண்ணீரைக் கொட்டினால் நெருப்பு பரவாமல் தடுக்கலாம். யாரேனும் அப்படிச் செய்யப் போகிறார்களா? ஒருவரையும் காணோம். பெண்களும், சிறுவர் சிறுமிகளும் சுற்றிச் சுற்றி வந்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள். அங்கிருந்த இரண்டோ ர் பெரிய ஆட்களுக்கு இவர்களை வெளியே பத்திரமாய்க் கொண்டு வந்து சேர்ப்பதே பெரிய காரியமாயிருக்கிறது. அது வரையில் புத்திசாலிகள்தான். அப்படியும் ஒரு சிறுவன்மீது நெருப்புப்பட்டு முதுகு வெந்து போயிற்று. அவனைச் சாலையில் கொண்டுவந்து போட்டார்கள்.
பூம்! பூம்! பூம்! ஒரு மோட்டார் வண்டி அதிவேகமாய் வருகிறது. சமூக மகாநாட்டுக்குச் சென்றிருந்த திவான் பகதூர் வீரண்ணப்பிள்ளையும் திருவாளர் பெரியசாமித் தேவரும் அதிலே வருகிறார்கள். தீப்பிடித்த குடிசைகளுக்கருகே மோட்டார் வண்டி நிற்குமா? ஏழை ஆதித்திராவிடர் மீது இப்பெரிய மனிதர்கள் கண்ணோட்டம் செலுத்துவார்களா? இல்லை; இல்லை; கண்மூடித்திறக்கும் நேரத்தில் மோட்டார் பறந்து போகிறது. அன்றிரவு ஜில்லா கலெக்டர் விருந்துக் கச்சேரி. அவர்களெப்படி இங்கே நிற்க முடியும்?
ஒரு நிமிஷத்திற்கெல்லாம் மீண்டும் பூம், பூம் என்ற சத்தம், ராவ்பகதூர் சடையப்ப முதலியாரின் மோட்டார் அதிவேகமாய் வருகிறது; இதுவும் இங்கு நில்லாமலே போய்விடுகின்றது; அடுத்தாற்போல் ஸ்ரீமான் வராகவதாரமையங்காரின் வண்டி. ஆகா இவரல்லவோ புண்ணியவான்! ஏழைகளின் நண்பர்! வண்டி மெதுவாக நிற்கிறது. உடனே பலர் ஓடிவந்து, மோட்டாரைச் சூழ்கிறார்கள்.
ஐயங்கார்:- தீ எப்படிப் பிடித்தது?
கூட்டத்தில் பலர்:- சாமி! தெரியவில்லை. (கூச்சலும் அழுகையும்).
ஐயங்கார்:- அட, சனியனே! சும்மாயிருங்கள். வெறும் மூடத்தனம், தீப்பிடித்தவுடன் ஏன் அணைக்கக் கூடாது? இப்படி வெறுங்கூச்சல் போட்டால் என்ன பிரயோசனம்?
ஒருவன்:- ஐயா, சாமி! இந்தப் பையன் முதுகு எரிந்து போய்விட்டது.
ஐயங்கார்:- டிரைவர்! பலமான காயமா, பார்.
டிரைவர்:- அதெல்லாம் இல்லை. சொற்பக் காயந்தான்.
ஐயங்கார்:- சரி, தேங்காய் எண்ணெய் தடவு, தெரிகிறதா? சீக்கிரம் வண்டியை விடு.
அடுத்த கணத்தில் மோட்டார் மாயமாய்ப் பறந்து போகிறது.
மேற்கூறியவையெல்லாம் ஐந்து நிமிஷத்திற்குள் நடந்தனவென்பதை நேயர்கள் நினைவில் வைக்க வேண்டும். கடைசியாகக் காவடி கோவிந்தப்பிள்ளையின் மோட்டார் வந்து குடிசைகளுக்கருகில் நின்றது. பிள்ளை சட்டென்று மோட்டாரிலிருந்து வெளியே குதித்தார். வலது புறத்துக் குடிசைகளில் ஒன்றில் இப்பொழுதுதான் தீப்பிடித்துக் கொண்டிருப்பதை அவர் உடனே கவனித்தார். "டிரைவர்! ஓடி வா! ஓடி வா!" என்று கூவிக் கொண்டே அவர் அந்தக் குடிசையை நோக்கி ஓடினார். டிரைவரும் பின்னால் சென்றான். இருவரும் அக்குடிசையின் கூரையில் தீப்பிடித்திருந்த கீற்றை இழுத்துக் கீழே போட்டார்கள். "குடம்! குடம்!" என்று காவடிப்பிள்ளை கத்தினார், சில பெண்கள் மண்குடம் கொண்டு வந்தார்கள்! அவற்றுள் ஒன்றைப் பிள்ளை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு போய்ப் பக்கத்திலிருந்த வாய்க்காலிலிருந்து ஜலம் கொண்டு வந்தார். அவரைப் பின் தொடர்ந்து இன்னும் பலரும் ஜலங்கொண்டு வந்து கொட்டினார்கள். தீ அணைந்தது. சாலைக்கு வலது புறத்திலிருந்த இருபது குடிசைகள் தப்பிப் பிழைத்தன.
காவடிப் பிள்ளையும், டிரைவரும் திரும்பி வந்து மோட்டாரில் உட்கார்ந்தார்கள்.
டிரைவர்: சுத்த மூட ஜனங்கள்! சுலபமாய்த் தீயை அணைத்திருக்கலாம். பக்கத்திலே வாய்க்கால்.
காவடிப் பிள்ளை: பாவம்! அவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? அவர்களை மூடர்களாய் வைத்திருப்பது யார்? மேலும் ஆண்பிள்ளைகளெல்லாம் வயல்வெளிக்குப் போய்விட்டார்கள். குழந்தைகளும் ஸ்திரீகளும் என்ன செய்வார்கள்?
டிரைவர்: சுமார் ஐம்பது குடிசை போயிருக்கும்.
காவடிப் பிள்ளை: பட்ட காலிலே படும். எல்லாம் ஏழைகளுக்குத்தான் வருகிறது. இரவு தங்க என்ன செய்வார்களோ?
கூட்டத்தில் ஒருவன்: சாமி! இந்தப் பையன் முதுகு வெந்து போய் விட்டது.
காவடிப் பிள்ளை: எங்கே? எங்கே? கொண்டு வா!
பையனைக் கொண்டு வந்தார்கள். பிள்ளையை பார்த்துவிட்டு உடனே அவனை மோட்டாரில் தூக்கிப் போடச் செய்தார். பின்னர் வண்டி கிளம்பிற்று.
மறுநாள் காவடிப் பிள்ளையிடமிருந்து கூளிப்பட்டி ஜமீன்தாருக்கு ஒரு கடிதமும், 50 ரூபாய் பணமும் கிடைத்தன. "இந்த சிறு தொகையைப் புதிய குடிசைகள் போட்டுத்தர உபயோகப்படுத்துங்கள். பையன் வைத்தியசாலையில் குணமடைந்து வருகிறான் என்று அவன் பெற்றோர்களுக்குத் தெரியப் படுத்துங்கள்" என்று பிள்ளை எழுதியிருந்தார்.
மேற்கண்ட சம்பவத்துக்கும் காவடிப் பிள்ளையின் வெற்றிக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா வென்று நான் ஜமீன்தாரை ஆனமட்டும் கேட்டுப் பார்த்தேன். அவர் வாயிலிருந்து பதில் வருவிக்க முடியவில்லை. ஆயினும் பின்வரும் விஷயங்களைக் கோவை செய்து நேயர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்:- (1) அந்த நேரத்தில் அந்த ஏழைகளின் குடிசைகள் தீப்பிடிக்கக் காரணமே இல்லை. ஒரு வீட்டிலும் அப்போது அடுப்புக் கூட மூட்டவில்லையென்றும் எல்லாரும் சத்தியம் செய்கிறார்கள். (2) ஒருவர் இருவரைத் தவிர பெரிய ஆட்கள் யாருமில்லாமல் அச்சமயம் மாயமாய்ப் போனார்கள்.
-------------------
4. புது ஓவர்சியர்
1. ஹிதோபதேசம்
சம்பந்தம் பிள்ளை, ஹைஸ்கூலிலும் காலேஜிலும் மாணாக்கராயிருந்தபோது அவருக்கும் மற்ற மாணாக்கர்களுக்கும் வித்தியாசம் ஏதேனுமிருப்பதாக எவருக்கும் தோன்றவில்லை. பின்னர், அவர் கிண்டி என்ஜினியரிங் கலாச்சாலையில் பயிற்சி பெற்ற காலத்திலும் முதல் இரண்டு, மூன்று வருஷங்கள் சாதாரணமாய் மற்ற மாணாக்கர்களைப் போலவே வாழ்க்கை நடத்திவந்தார். பாடம் படித்தல், பரீட்சையில் தேறுதல், உத்தியோகம் பார்த்தல், பணந்தேடுதல் - இவையே அவர் வாழ்க்கை இலட்சியங்கள். சீட்டாட்டம், சினிமா, சிகரெட், சிறுகதை, சில் விஷமம்-இவைதாம் அவர் சந்தோஷானுபவங்கள். ஆனால், என்ஜினியரிங் கலாசாலையில் அவர் படித்த கடைசி வருஷத்தில் அவரிடம் சிற்சில மாறுதல்களை அவருடைய தோழர்கள் கண்டார்கள். காந்தி, டால்ஸ்டாய், ரஸ்கின் முதலியோருடைய புத்தகங்களை அவர் அதிகமாகப் படிக்க ஆரம்பித்தார். அக்கலாசாலைக் கோட்டைக்குள் முதல் முதல் தைரியமாகக் கதர்க்கொடியை நாட்டியவர் அவர்தான். சீட்டாட்டம் முதலியவற்றில் அவருக்குச் சுவைகுறையத் தொடங்கிற்று. அடிக்கடி தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்துவிடும் பழக்கத்தைக் கைக்கொண்டார்.
பரீட்சை முடிந்ததும் சம்பந்தம் பிள்ளை தமது மாமாவும், மாமனாருமான அம்பலவாணம் பிள்ளையிடம் யோசனை கேட்கச் சென்றார். ஸ்ரீமான் அம்பலவாணம் பிள்ளை மயிலாப்பூரில் மத்தியதரமான வருவாயுள்ள வக்கீல்களில் ஒருவர். அவரிடம் சம்பந்தம் கூறியதாவது:- "மாமா! உத்தியோக வாழ்க்கை என் இயல்புக்கு ஒத்து வராதென்று தோன்றுகிறது. டால்ஸ்டாய் முதலியவர்களின் நூல்களைப் படித்ததினால் எனக்குச் சில வாழ்க்கை இலட்சியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பகவானருளால் எனக்குக் கொஞ்சம் பூமி காணி இருக்கிறது. ஆதலின் என் சொந்த கிராமத்துக்கே சென்று நிலத்தைப் புதிய சாஸ்திரீய முறையில் சாகுபடி செய்து அமைதியான வாழ்க்கை நடத்தலாமென்று எண்ணுகிறேன். எனக்கிருக்கும் என்ஜினியரிங் அறிவைக் கொண்டு மற்றக் கிராமவாசிகளுக்கும் பல வழிகளில் நன்மை செய்வதற்குச் சில திட்டங்கள் போட்டிருக்கிறேன். இதைப்பற்றித் தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?"
அம்பலவாணர் புன்னகை புரிந்தார். "இதென்ன பைத்தியம்" என்றார். அவர் மருமகனுக்குச் சிறிது கோபம் வந்துவிட்டது. ஆனால், வக்கீல் மகா புத்திசாலி; அத்துடன் உலகானுபவம் நிரம்ப உள்ளவர். இல்லாவிடில் மயிலாப்பூரிலிருந்து வக்கீல் தொழிலில் பேர் சொல்ல முடியுமா? வெறுமே பரிகாசம் பண்ணினால் மருமகனுக்குப் பிடிவாதமே அதிகமாகுமென்று அவருக்குத் தெரியும். ஆதலின், "கோபித்துக் கொள்ளாதே தம்பி! என்னைப் போன்ற கர்நாடகப் பேர்வழிகளுக்கு இதெல்லாம் பைத்தியக்காரக் கொள்கைகளாகத் தோன்றுகின்றன" என்று சொல்லிப் பின்னர் பின்வருமாறு ஹிதோபதேசம் செய்தார்.
"நீ புத்திசாலி, சிறிது சிந்தித்துப் பார்ப்பாயானால், இதெல்லாம் நடவாத காரியம் என்று, நீயே சொல்வாய். டால்ஸ்டாய் நூற்றுக்கணக்காகப் புத்தகங்கள் எழுதினாரே! அவருடைய கொள்கைகளை அவரே அனுஷ்டிக்க முடியவில்லையென்பது உனக்குத் தெரியாதா? காந்தியுங்கூட அல்லவா தமது இலட்சியங்கள் எல்லாவற்றையும் வாழ்க்கையில் நிறைவேற்றக்கூடவில்லையென்று சொல்கிறார். அவர்களாலெல்லாம் முடியாதது உன்னால் முடியுமென்று நினைக்கிறாயா?"
"மேலும், அவசரம் என்ன? இப்போதுதான் நீ வாழ்க்கை தொடங்கப் போகிறாய். புதிய துறையில் இறங்கிக் கொஞ்ச காலத்திற்கெல்லாம் அதிருப்தி கொள்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். அதற்குள் 25 வயது கடந்துவிட்டால் அப்புறம் உத்தியோகம் 'வா' என்றால் வருமா? உத்தியோக வாழ்க்கையில் அதிருப்தி கொண்டால் அப்புறம் நீ உன் புதிய கொள்கைகளை நடத்திப் பார்ப்பதற்கு எதுவும் குறுக்கே நில்லாது."
"இருக்கட்டும், உன்னுடைய குடும்ப நிலைமை என்ன? வீட்டிலே உட்கார்ந்து சாப்பிட்டால் உன்னுடைய இரண்டு வேலி நிலம் எத்தனை நாளைக்குக் காணும் என நினைக்கிறாய்? பத்து வேலி, இருபது வேலி மிராசுதாரர்கள் எத்தனையோ பேர் ஆண்டியாய்ப் போகிறார்களென்பது எனக்குத் தெரியும். வேறு வருவாய்க்கு வழியில்லாத மிராசுதாரர் இக்காலத்தில் உருப்படவே முடியாது. இந்தக் காலத்தில் விவசாயம் செய்து முன்னுக்கு வந்தவன் உண்டா? உன் தம்பிமார்கள் இருவரையும் படிக்க வைத்தாகவேண்டும். தங்கைக்கும் கலியாணம் செய்து கொடுக்கவேண்டும். உனக்கும் இனிமேல் இரண்டு குஞ்சு குழந்தைகள் உண்டாகிவிடும். இவர்களுடைய கதியெல்லாம் என்ன?"
"இத்தனை காலம் ஏதோ அவ்வப்போது உனக்குப் பண உதவி செய்து வந்தேன். எனக்கும் இப்போது கை சளைத்துவிட்டது. வக்கீல் தொழிலில் போட்டி சொல்ல முடியாது. 300 ரூபா ஆடம்பரத்தில் செலவழித்தால்தான் 500 ரூபா வருமானம் வருகிறது. மயிலாப்பூரில் எத்தனையோ பெரிய பெரிய வக்கீல்கள் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் வாதிகளாகட்டும், மிதவாதிகளாகட்டும், ஜஸ்டிஸ் வாதிகளாகட்டும், எந்த வாதிகளாகட்டும் தங்கள் பிள்ளைகளுக்கும், பேரன்களுக்கும், மருமகன்களுக்கும், மாப்பிள்ளைகளுக்கும், மற்ற இஷ்டமித்ரபந்துக்களுக்கும் அரசாங்க உத்தியோகம் தேடிக் கொடாதவர்கள் உண்டா? அரசாங்க உத்தியோகத்துக்குச் சமானம் வேறெதுவுமில்லை. நாற்பது ரூபா சம்பளத்துக்குப் போனாலும் பிறகு வருஷம் ஆறு ஆறு ரூபாய் நிச்சயமாய் ஏறிக்கொண்டு போகிறது. சாகும்வரையில் பென்ஷன். அதிர்ஷ்டமும் சிபாரிசும் இருந்து நல்ல உத்தியோகம் கிடைத்துவிட்டாலோ சொல்ல வேண்டியதில்லை. உதாரணமாக, அக்கவுண்டண்ட் ஜெனரல் ஆபீஸில் உத்தியோகம் கிடைக்கிறதென்று வைத்துக்கொள். செட்டிமார் கடையில் கணக்கெழுதும் குமாஸ்தாக்களுக்குக் கொஞ்சம் பயிற்சியளித்துவிட்டால் அந்த வேலையைச் செய்து விடுவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் அவ்வேலைக்கு ஆரம்பத்தில் ரூ.300 சம்பளம். பின்னர் வருஷந்தோறும் 50, 50 ரூபா உயர்வு 1500 வரையிலும், அதிர்ஷ்டமிருந்தால் அதற்கு மேலும் போகலாம்.
"ஆனால், எல்லா உத்தியோகங்களும் உத்தியோகமாகா. மேல் வருமானம் உள்ள உத்தியோகந்தான் உத்தியோகம். சம்பளம் உயர உயர, வாழ்க்கை அந்தஸ்தும் உயர்ந்து கொண்டே போவதால் மாதச் சம்பளம் எவ்வளவு வந்தாலும் செலவழிந்து போகும். மேல் வருமானமிருந்தால் தான் மீதி செய்ய முடியும். இக்காலத்தில் பொதுவாக எல்லா உத்தியோகங்களிலுமே மேல்வருவாய்க்கு இடமிருக்கிறதாயினும், முக்கியமாகச் சில இலாக்காக்கள் இருக்கின்றன. உன்னுடைய இலாக்கா அவற்றில் ஒன்று. புத்திசாலித்தனமாயும் சாமர்த்தியமாயும் நடந்துகொண்டால் கொஞ்ச நாளில் குடும்பக் கவலையே இல்லாமல் பண்ணிவிட்டு அப்புறம் நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..."
இத்தனை நேரம் பொறுமையாகவும் மரியாதையுடனும் கேட்டுக் கொண்டிருந்த சம்பந்தப்பிள்ளைக்கு இப்போது பொறுக்க முடியாமலே போய் விட்டது. அவர் இடைமறித்துச் சொன்னதாவது:-
"ஒருகால் நான் உத்தியோகத்துக்கே போனாலும் நீங்கள் சொல்லும் வழிக்குப் போகவே மாட்டேன். மகா பாவமான காரியத்தை நீங்கள் சொல்கிறீர்கள். உத்தியோகம் பார்ப்பது போதாதென்று லஞ்சம் வாங்கியும் பிழைக்கவேண்டுமா?"
வக்கீல் பிள்ளையின் மனம் மகிழ்ந்தது. தன் ஹிதோபதேசம், முக்கால்வாசி பலிதமாகி விட்டதென்றும், பையனுக்குப் பைத்தியம் நீங்கிற்று என்றும் கருதினார்.
"நல்லது தம்பி, வாழ்க்கை தொடங்கும் போது எல்லாரும் இத்தகைய நல்ல தீர்மானங்களுடனேதான் தொடங்குகிறார்கள். ஆனால், வாழ்க்கையில் அநுபவம் ஏற்பட ஏற்பட அத்தீர்மானங்கள் எல்லாம் பறந்துபோகின்றன. ஏதேனும் சாக்குப் போக்கினால் அவர்கள் ஆன்ம திருப்தி செய்து கொள்கிறார்கள். உதாரணமாக, என்னுடைய கலாசாலைத் தோழர் ஒருவர் தற்போது டெபுடி கலெக்டராயிருக்கிறார். அவர் நெறி தவறாதவரென்று பிரசித்தி பெற்றவர். ஆயினும், அவர் 'வள்ளல்' எனக்குத் தெரியும்; கிராமக் கணக்குப்பிள்ளை, மணியக்காரர்களுக்கும் தெரியும். ஒரு கிராமத்தில் போய் அவர் மூன்று நாள் முகாம் போட்டாரானால், முகாம் முடிந்ததும் மணியக்காரரைச் செலவுப் பட்டியல் கேட்கிறார். மணியக்காரர் 31/2 ரூபாய்க்குப் பட்டியல் போட்டுக் கொடுக்கிறார். டெபுடி கலெக்டர் 3 நாளில் முட்டை மட்டும் 31/2 ரூபாய்க்குத் தின்றிருக்கிறார். ஆயினும் அவர் பட்டியல்படி 31/2 ரூபாயை எண்ணிக் கொடுத்து விட்டு ரசீது வாங்கிக்கொண்டு தம் மனச் சான்றைத் திருப்தி செய்துகொள்கிறார். ஆரஞ்சுப் பழம் பட்டணத்தில் டஜன் 11/2 ரூபாய். அது அங்கிருந்து டெபுடி கலெக்டருக்கென்று கிராமத்துக்கு வாங்கிக் கொண்டு போகப்படுகிறது. அவருக்கு அளிக்கப்படும் பட்டியலில் அதன் விலை டஜன் 4 அணா ஆகிவிடுகிறது."
"ஆயிரக்கணக்கான தொகைகள் சம்பந்தமான அரசாங்கக் கணக்குகளைப் பரிசீலனை செய்து தப்புக் கண்டுபிடிக்கும் டெபுடி கலெக்டருக்குத் தமது பட்டியலில் காணப்படும் இச்சிறு தவறு புலனாவதேயில்லை? தம்பி! அவரும் உன்னைப்போல் எவ்வளவோ நல்ல தீர்மானங்கள் எல்லாம் செய்து கொண்டவர்தான். இவ்வுலகம் அப்படிப்பட்டது" என்றார் வக்கீல்.
"மாமா, தங்கள் புத்திமதிக்காக வந்தனம். என்ன செய்வதென்று நான் தீர்மானித்துவிட்டேன். என்னுடைய உயரிய வாழ்க்கை லட்சியங்களையெல்லாம் இப்போதைக்கு ஒரு மூலையில் கட்டி வைக்க வேண்டியதுதான். ஆனால், இது என்னுடைய சுயநலத்தை முன்னிட்டோ என் இலட்சியங்களில் எனக்கு நம்பிக்கைக் குறைவினாலோ அன்று. என் தம்பிமார்களையும், தங்கையையும் உத்தேசித்தே இம்முடிவுக்கு வந்தேன். எனக்காகிறது அவர்களுக்குமாகட்டும் என்னும் தைரியம் எனக்கு வரவில்லை. ஆனால், ஒன்று கூறுகிறேன், தாங்கள் சற்றுமுன் கூறியது போல் பணம் சேர்ப்பதற்கு நான் குறுக்கு வழி கடைப்பிடிக்கப் போவது மட்டும் இல்லவே இல்லை, அதை உங்களுக்குச் சத்தியமாகச் சொல்கிறேன். யோக்கியன் எங்கும், எந்த நிலைமையிலும் யோக்கியனாயிருக்க முடியுமென உங்களுக்கு நிரூபித்துக் காட்டுகிறேன்" என்றார் சம்பந்தம் பிள்ளை.
காரிய சித்தியினால் மகிழ்ச்சியடைந்த அம்பலவாணம் பிள்ளை சொல்கிறார்:- "நான் விரும்புவதும் அதுதான், சம்பந்தம். நான் கூறியதைத் தப்பர்த்தம் செய்துகொள்ளாதே. நான் உலகத்துக்குச் சொன்னேனேயொழிய உனக்குச் சொல்லவில்லை. எப்போதும் கண்யமாயிருந்தால் அபாயம் இல்லை. அயோக்கியன் தான் பயப்பட வேண்டும். நாளடைவில் கண்யமே லாபம் தரும். நீ உத்தியோகத்தில் நெறி தவறாதவனாய் நின்று, மேன்மேலும் முன்னுக்கு வர வேண்டுமென்பது தான் என் பிரார்த்தனை."
-----
2. 'கண்டிராக்டு' உடையார்
கோவிந்தராஜ உடையாரின் தந்தை அவருக்குப் பத்து வேலி நன்செய் நிலமும், மற்றும் வீடு, வாசல், தோட்டம்-துறவு, மாடு கன்றுகளும் வைத்து விட்டுக் காலஞ்சென்றார். அப்போது உடையார் பாலிய வயதினர். தந்தை இறந்த இரண்டு வருஷத்தில், மைனர் விளையாட்டுக்களில் பதினையாயிரம் வரையில் கடன்பட்ட பின்னர் திடீரென்று விழித்துக் கொண்டார். சொத்தில் பற்று அவர் தந்தையிடமிருந்து அடைந்த பிதிரார்ஜிதங்களில் ஒன்று. தந்தை வைத்துப் போன நிலத்தில் ஒரு குழியேனும் விற்கக் கூடாதென்று அவர் தீர்மானஞ் செய்துகொண்டார். மகசூல் வருமானத்தைக் கொண்டு வீட்டுச் செலவு செய்து நிலவரியும் வட்டியும் கொடுத்துக் கடனையும் அடைப்பது இயலாத காரியமென்று தோன்றிற்று. உத்தியோகத்துக்குப் போவதற்கு வேண்டிய ஆங்கிலப் படிப்பு கிடையாது. என்னவெல்லாமோ யோசனை செய்துவிட்டுக் கடைசியில் 'கண்டிராக்ட்' தொழிலை மேற்கொண்டார். நல்ல வாசாலகர்; ஆட்களை வைத்து நடத்துவதில் சமர்த்தர். எனவே அந்தத் தொழிலில் அவர் வெற்றி பெற்றார். அந்தப் பக்கத்திலேயே சாலை, 'லயன்கரை', மதகு வேலை எதுவாயிருந்தாலும் அவரைத் தப்பிப் போகாது. சில "கண்டிராக்டு"களைத் தம் பெயருக்கே எடுத்துக்கொள்வார். சிலவற்றைத் தமக்கு வேண்டியவர்கள் பெயரால் எடுத்துக் கொள்வார். ஆயிரம் ரூபாய் கண்டிராக்டுக்கு ஒரு வேலை ஒப்புக் கொண்டால் இருநூறு ரூபாய் வேலைக்குச் செலவு செய்வார். 500 ரூபாய் தாம் எடுத்துக் கொள்வார். 300 ரூபாய் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துச் சரிப்படுத்திவிடுவது வழக்கம். ஆதலின், தற்போது, அதாவது தமது நாற்பதாவது வயதில் அவர் அறுபது வேலி நிலத்துக்கும், 50,000 ரூபாய் ரொக்கத்துக்கும் எஜமானனாயிருந்ததில் ஆச்சரியமில்லையல்லவா?
இன்றைய தினம் உடையார் தமது சவுக்கண்டியில் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு சிந்தனை தேங்கிய முகத்தினராயிருந்தார். அவரை இரண்டு கவலைகள் பிடுங்கித் தின்றன. ஒன்று மேட்டூர் மைனரின் 40 வேலி நிலத்தை வாங்கித் தம் நிலத்தை முழுசாக 100 வேலியாக்கி விட வேண்டுமென்பது. அதற்கு இரண்டு லட்சம் ரூபாய் வேண்டும். ரூ.50,000 கையில் இருந்தது. இன்னும் 11/2 லட்சத்துக்கு என்ன செய்வது? கடன் வாங்குவதில்லையென்பது உடையார் பாலியத்தில் செய்து கொண்ட உறுதி. அதிலும் இருபதாயிரம், ஐம்பதாயிரம் என்றாலும் யோசிக்கலாம். ஒன்றரை லட்சம் கடனா! பின்னர் என்ன உபாயம்?
மற்றொரு கவலை, கீழண்டைக் கிராமத்துப் பெரிய மிராசுதாரை எப்படிப் பழி வாங்குவதென்பது. அவர்களுக்குள் மனஸ்தாபம் தாலூகா போர்டு தேர்தல் சம்பந்தமாக எழுந்தது. உடையார் தேர்தலுக்கு நின்றாரென நினைக்கிறீர்களோ? அத்தகைய அசட்டுக் காரியம் எதுவும் அவர் செய்வதில்லை. ஆனால் அந்தப் பக்கத்தைச் சேர்ந்த தாலூகா போர்டு, ஜில்லாபோர்டு அங்கத்தினர்கள் எல்லாரும் 'கண்டிராக்ட்' உடையார் கைக்குள் அடக்கம் என்பது பிரசித்தம். கண்டிராக்டருக்கு அவர்களுடைய உதவி தேவை என்று சொல்லவேண்டுவதில்லை. அந்தப் பக்கத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் உடையாரின் ஆதரவு பெற்றோருக்குத்தான் வெற்றி. சென்ற வருஷம் வரை இந்தத் திருப்திகரமான பரஸ்பர ஒத்துழைப்பு நிலைமை இருந்து வந்தது. இவ்வருஷத்துத் தேர்தலில் கீழண்டைக் கிராமத்து மிராசுதார் தமது உறவினரான போட்டி அபேட்சகரை ஆதரித்தார். அந்த அபேட்சகருக்குச் சில அதிக வாக்குகளால் வெற்றி கிடைத்து விட்டது. இதை உடையார் எப்படிச் சகித்துக் கொண்டு இருப்பார்? அது முதல் அவரைப் பழி வாங்குவது எப்படி என்பதே உடையாரின் ஓயாக் கவலையாயிற்று. மனஸ்தாபம் முற்றுவதற்குப் புதிய புதிய காரணங்களும் ஏற்பட்டு வந்தன.
இன்றைய தினம் மேற்சொன்ன இரு விஷயங்களையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று உடையார் முகம் விளக்கமுற்றது. ஓர் அற்புதமான யோசனை அவர் உள்ளத்தில் உதயமாயிற்று. நதியிலே புது வெள்ளம் பெருக்கெடுத்தோடுவதைக் காலையில் போய்ப் பார்த்து வந்திருந்தார். 'லயன் கரை' மீது ஜலம் வழிந்தோட இன்னும் ஒரு முழமே பாக்கியிருந்தது. கையெழுத்து மறையும் நேரத்தில் அய்யனார் மூலைக்குச் சென்று மண் வெட்டியினால் ஒரு கோடுமட்டும் கிழித்து விட்டு வந்தால்? பகைவனுடைய நிலங்கள் அம்மூலைக்கு நேரே இருக்கின்றன. முப்பது வேலியும் ஓர் ஆள் உயரத்திற்குக் குறையாமல் மணலடித்து விடும். அத்துடன் அவன் அழிந்தான். நமக்கோ ஒரு நஷ்டமுமில்லை. ஜலம் மேற்கே முட்டிக் கொண்டு வந்தாலும் வண்டல் படிந்து நிலம் இரு மடங்கு விளையுமேயன்றி வேறில்லை. பின்னர், உடைப்பு அடைத்தல் சம்பந்தமாக ஏராளமான 'கண்டிராக்ட்' வேலைகள் இருபதினாயிரம் முப்பதினாயிரம் கிடைத்தாலும் கிடைக்கலாம். அப்போது மேட்டூர் மைனர் நிலம் வாங்குவதும் சாத்தியமாகிவிடும். தர்மம், அதர்மம் என்னும் எண்ணங்கள் உடையாருக்குத் தோன்றவே இல்லை. அவற்றையெல்லாம் அவர் மறந்து நீண்ட நாளாயிற்று.
சூரியன் அஸ்தமிக்கும் சமயத்துக்கு உடையார் கேசவனை ஒரு மண்வெட்டி எடுத்துக்கொண்டு வரச் சொல்லிவிட்டுக் கொல்லைப்புறத்தால் கிளம்பிச் சென்றார். அவர்கள் சில நிமிஷங்களுக்கெல்லாம் நதிக்கரையை அடைந்து, அதிவேகமாகக் கிழக்கு நோக்கிச் சென்றார்கள். நதியில் பூரணப்பிரவாகம் ஓடிக்கொண்டிருந்தது. நீர் ஓட்டத்தின் 'ஹோ' என்ற இரைச்சலும், படுகையிலிருந்த மூங்கில் மரங்கள் உராயும் சத்தமும், மேலக் காற்றின் கோஷமும், தூரத்தில் நரியின் ஊளையும், நாயின் குலைப்பும் கலந்து பயங்கரமாகத் தொனித்தன. கண்ணுக்கெட்டியதூரம் தண்ணீர் மயமாய் இருந்த பிரவாகத்தின் காட்சியும், மேன்மேலும் வந்து கலந்த இருளும், மேற்குத் திக்கில் ஓடி ஒளிந்து கொண்டிருந்த மங்கிய ஒளியும், மரங்களின் நிழலும் பயங்கரத்தை மிகைப்படுத்தின. உடையாரும், கேசவனும் நதி வளைந்து செல்லும் ஒரு முடுக்குக்கு வந்து சேர்ந்தார்கள். உடையார், அங்கு வந்து நின்று "சரி வெட்டு" என்றார். இருபது வருஷ காலமாய் எதிர்த்துப் பதில் சொல்லியறியாத கேசவன் இன்று தயங்கி நின்றான். "சீ, மடையா, இங்கே கொடு" என்று கூறி, உடையார் மண்வெட்டியை வாங்கி, மளமளவென்று கரையை வெட்டினார். சுமார் பதினைந்து நிமிஷம் மூச்சு வாங்கும்படி வெட்டிய பின்னர், ஜலம் ஒரு சிறு மடையளவாக நகர்ந்து வந்து லயன் கரையின் மறுபுறத்தில் விழுந்தது. "இன்னும் ஒரு மணி நேரத்தில் பாதி ஆறு இம்மடை வழியாகப் பாயும்" என்று உடையார் எண்ணிக் கொண்டே தலை நிமிர்ந்தார். தமக்கு இரண்டு கஜதூரத்தில் இரண்டு மனிதர்கள் சைக்கிள் வண்டிகளில் வந்திறங்குவதைக் கண்டார். "யார் அது?" என்று சத்தம் வந்தது. உடையாருக்குப் "பகீர்" என்றது. மின்னொளி போல் ஓர் எண்ணம் தோன்றிற்று. மண் 'வெட்டியை' வீசி ஆற்றில் எறிந்தார். கொடக் என்ற சத்தத்துடன் பிரவாகமானது உடையார் குற்றத்தின் சாட்சியத்தை விழுங்கி ஏப்பம் விட்டது. ----------
3. நதி உடைப்பில்
சைக்கிளில் வந்து இறங்கிய இருவரில் ஒருவர் புது ஓவர்சியர் ஸ்ரீமான் சம்பந்தம் பிள்ளை என்று நேயர்கள் ஊகித்திருக்கலாம். மற்றொருவர் லயன் கரை மேஸ்திரி. நதியில் பிரவாகம் அதிகமாயிருப்பதை முன்னிட்டு, அவர்கள் லயன்கரையில் பந்தோபஸ்துக்காகப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். சம்பந்தம் பிள்ளைக்கு முதலில் ஒரு நிமிஷம் தெளிவாக விளங்கவில்லை. உடையார் மண் வெட்டியை ஆற்றில் எறிந்ததுமே விஷயம் வெட்ட வெளிச்சமாய்ப் புலப்பட்டது. அப்போது சம்பந்தம் பிள்ளைக்கு உண்டான ஆத்திரம் அவ்வாற்றின் பிரவாகத்தைப்போல் அளவிட முடியாததாயிற்று. அவர் ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து வந்து, உடையாரின் கழுத்துத் துணியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு "அடே பாதகா! துரோகி! என்ன கொலை பாதகம் செய்தாய்!" என்றார். அவர் உடல் நடுங்கிற்று. தலையைக் கையினால் பிடித்துக் கொண்டு ஒரு கண நேரம் யோசித்தார். பின்னர், உடனே திரும்பி மேஸ்திரியைப் பார்த்து "ஓடும் ஓடும்! கிராமத்துக்கு ஓடிப்போய் வைக்கோல், மண்வெட்டிச் சாமான்களுடன் ஆள் திரட்டிக் கொண்டு வாரும்" என்றார். மேஸ்திரி சைக்கிளில் ஏறிக் குறுக்கு வழியில் அதி வேகமாகச் சென்றார்.
உடையார் சிந்தித்தார். அவர் உள்ளத்தில் ஒரு கொடும் யோசனை உதித்தது. 'செய்வன திருந்தச் செய்' என்றபடி, இந்த அதிகப்பிரசங்கியை வெட்டி ஆற்றில் விட்டு விட்டாலென்ன? அவன் ஒருவன்; நாம் இருவர். ஆனால், அடுத்த கணத்தில் இது உசிதமானதெனத் தோன்றவில்லை. ஆள் திரட்டச் சென்ற மேஸ்திரி சிறிது நேரத்தில் திரும்பி விடுவான். அவனும் ஊராரும் சாட்சி சொல்வார்கள். ஆயுதமும் இல்லை, மேலும் நதி மண்வெட்டியை விழுங்கேமேயல்லாமல் பிணத்தை விழுங்காது, எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு தடை குறுக்கிட்டது. பக்கத்திலிருந்த கேசவனைக் காணோம். ஏதோ பெருந்தொல்லை இருக்கிறதென்றறிந்த அவன் சவாரி விட்டுவிட்டான்.
எனவே, அந்த யோசனையை உடையார் தள்ளி வழக்கமான உபாயத்தையே கைக்கொள்ளத் தீர்மானித்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "ஏன் ஸார், புது ஓவர்ஸியர் வந்திருப்பதகாச் சொன்னார்களே, தாங்கள்தானோ?" என்று வினாவினார்.
சம்பந்தம் பிள்ளை, உடையாரின் கழுத்தில் மாலையாகப் போட்டிருந்த அங்க வஸ்திரத்தின் இரு முனைகளையும் சேர்த்து இறுகப் பிடித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் கண் உடைப்பின் மீதே பதிந்து கிடந்தது. ஒவ்வொரு கணமும் கரை இடிந்து விழுந்து உடைப்புப் பெரிதாகிக் கொண்டிருந்தது. நீரின் வேகம் கீழ்மண்ணையும் அறுத்துக் கொண்டு வந்ததென்று கரைக்கு மறு புறத்தில் விழும் தண்ணீரின் அளவினால் நன்கு தெரிந்தது. சம்பந்தம் பிள்ளையின் உள்ளம் பதைத்தது. உடைப்புப் பெரிதாகமல் தடுக்க எதுவும் செய்ய முடியாதிருந்த காரணத்தினால், அவர் துன்பம் அதிகமாயிற்று. பாதகன் மண்வெட்டியைக்கூட அல்லவா ஆற்றில் எறிந்துவிட்டான்.
இத்தருணத்தில் உடையார் மேற்கண்டவாறு கேட்கவே, சம்பந்தம் பிள்ளையின் கண் அவர்மீது சென்றது. பார்வைக்கு மட்டும் மனிதனை எரிக்கும் சக்தியிருந்தால் சம்பந்தம் பிள்ளை அப்பார்வையினாலேயே உடையாரை எரித்திருப்பார். அது சாத்தியமில்லாமல் போகவே அவர் பதிலும் சொல்லவில்லை.
"தங்களைப் பார்க்க நேர்ந்தது குறித்து நிரம்ப சந்தோஷம். தங்களுக்கு முன்னாலிருந்த ஓவர்ஸியர் எனக்கு நிரம்பப் பழக்கமானவர். இந்தப் பக்கம் வந்தால் நம்முடைய பங்களாவில்தான் தங்குவார். ஏன், ஸப் டிவிஷனல் ஆபீஸர், அஸிஸ்டெண்ட் என்ஜினீயர் முதலியோர்கூட நமக்கு அதிகப் பழக்கமானவர்கள்தான். என் பெயரைக் கூடத் தாங்கள் கேள்விப்பட்டிருக்கலாமே! நான் தான் கோவிந்தராஜ உடையார் என்பது" என்று கூறி, உடையார் குறுநகை புரிந்தார்.
இந்த மனிதருடைய துணிவும், அகம்பாவமும் சம்பந்தம் பிள்ளைக்கு அளவிலா ஆச்சரியமளித்தன. இந்த நிலையில் இப்படிப் பேசக்கூடிய ஒருவர் இருப்பாரென அவர் கனவிலும் கருதியிருக்க முடியாது. எனவே, அவர் ஸ்தம்பித்துப் போனார்.
உடையார் தன் கை விரலில் அணிந்திருந்த வைரக்கல் மோதிரத்தைக் கழற்றி, அதை நட்சத்திர ஒளியில் சிறிது காட்டி ஓவர்ஸியர் கண்முன் 'டால்' வீசச் செய்து, பின்னர்ப் புன்னகையுடன் "என்னுடைய ஞாபகார்த்தமாக இருக்கட்டும்" என்று சொல்லிக்கொண்டே அதை அவர் விரலில் மாட்டப் போனார்.
இப்போது சம்பந்தம் பிள்ளையின் ஆத்திரம் கரை கடந்தாயிற்று. அந்த மோதிரத்தை அவர் உடையார் கையிலிருந்து பிடுங்கி வீசி எறிந்தார்? மோதிரம் ஆற்று மத்திக்குச்சென்று, விழுந்த இடந்தெரியாமல் மறைந்தது.
"நல்லது, ஸார்! இவ்வளவு கோபம் எதற்காக? நாமெல்லாரும் பரஸ்பரம் உதவி செய்து கொள்ள வேண்டியவர்கள். ஆனாலும், இது கொஞ்சம் பெரிய விஷயந்தான். நம்முடைய வீட்டுக்கு வாருங்கள். ஒரு நோட்டு தந்துவிடுகிறேன்" என்றார் உடையார்.
"உம்முடைய நோட்டைக் கிழித்து இந்த உடைப்பில் கொண்டு வந்து போடும்! உமக்கு இவ்வுலகத்துக் கோர்ட்டுக்களில் அளிக்கப்படும் தண்டனை போதவே போதாது. கடவுளே உம்மைத் தண்டிக்க வேண்டும்" என்றார் சம்பந்தம் பிள்ளை. அவர் கண்ணில் தீப்பொறி பறந்தது. உடையார் சிந்தித்தார். தண்டனை என்றதும் அவருக்குத் தம் செயலினால் விளையக் கூடியவையெல்லாம் சட்டென்று மனதில் தோன்றின. பணச்செலவு, அவமானம், போலிஸ், கோர்ட், சிறை-எல்லாம் நினைவுக்கு வந்தன. முடிவில் ஆயுள் பரியந்தம் சிட்சை விதித்தாலும் விதிக்கலாம். உடையார் சிறிது அச்சமடைந்தார்.
"சரிதான் ஐயா! உமக்கு என்னதான் வேண்டும்? சொல்லிவிடும்" என்றார்.
"உமது தலையில் இடி விழ வேண்டும்; இந்த வெள்ளம் உம்மை விழுங்க வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும்."
"ஐயாயிரம் ரூபாய் தந்துவிடுகிறேன், உமக்கு நம்பிக்கையில்லாவிடில் காகிதம் பேனா கொடும். இங்கேயே கைசீட்டு எழுதித் தருகிறேன்."
"இப்போது நீர் எழுத வேண்டுவது வாக்கு மூலந்தான். ஆனால் இங்கே வேண்டாம். மாஜிஸ்டிரேட் முன்பு எழுதலாம்."
"இதற்கு முன் நான் எவருக்கும் பதினாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்ததில்லை. ஒரே ஒரு முறை ஒரு முக்கியமான வாய்க்கால் தகராறில் மட்டுமே பதினாயிரம் கொடுத்திருக்கிறேன். இப்போது அந்தப் பதினாயிரம் உமக்குத் தருகிறேன். இதைத் தவிர, உடைப்பு சம்பந்தமான கண்டிராக்டுகளில் உமக்குரிய விகிதம் கொடுத்துவிடுகிறேன்."
"சும்மா வாயை மூடிக்கொண்டிரும், சர்க்கார் உத்தியோகஸ்தருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றம் வேறு உம்மீது சாரும். ஜாக்கிரதை!"
"புது ஓவர்சியர் கலியுக அரிச்சந்திரன் என்று சொன்னார்கள். இருந்தாலும், நீர் இவ்வளவு மோசமாயிருப்பீர் என்று நினைக்கவில்லை. நன்றாக சிந்தித்துப் பாரும். பதினாயிரம் ரூபாய் உம்முடைய பத்து வருஷச் சம்பளம். வட்டிக்குப் போட்டால் வட்டியே சம்பளத்துக்கீடாகும். வலிய வரும் லக்ஷ்மியை யாரேனும் உதைப்பார்களா? உமக்கு முன்னிருந்த ஓவர்சியர் பத்து ரூபா, ஐந்து ரூபாய்கூட வாங்குவார். நீர் பதினாயிரம் ரூபா வேண்டாமென்கிறீர். என்ன அநியாயம்!"
"அநியாயம்" என்ற வார்த்தையைக் கேட்டதும் சம்பந்தம் பிள்ளைக்குத் தம்மையறியாமல் சிறிது சிரிப்பு வந்தது. ஆனால், திரும்பி உடைப்பைப் பார்த்ததும் சிரிப்பெல்லாம் பறந்து போயிற்று. உடைப்பு இதற்குள் சுமார் பத்து கஜ அகலமுள்ளதாகிவிட்டது. 'ஹோ' என்ற இரைச்சலுடன் ஜலம் மோதிக்கொண்டு பாய்ந்தது. ஆயினும் என்ன பயன்? இனி வெள்ளம் வடிந்தாலொழிய உடைப்பு அடைபடுவது சந்தேகந்தான்!
ஆட்கள் தூரத்தில் வருவதை உடையாரும் பார்த்தார். இப்போதுதான் அவருக்கும் பதைப்பு உண்டாயிற்று. அவர், "ஐயா, இங்கே பாரும். கடைசியாக ஒரு வார்த்தை. உம்முடைய ஆயுளில் இத்தகைய அதிர்ஷ்டம் உமக்கு வரப்போவதில்லை. எனக்குச் சொந்தமான பூஸ்திதி முதலியவற்றைத் தவிர இன்றைய தினம் ரொக்கமாக என்னிடமுள்ள ஐம்பதினாயிரம் ரூபாய். அந்த ஐம்பதினாயிரத்தையும் உமக்குக் கொடுத்து விடுகிறேன். கொஞ்ச நஞ்சமன்று; அரை லட்சம். இதற்காக நீர் செய்ய வேண்டுவதோ ஒன்றுமில்லை. என்னையும் உடைப்படைக்க வந்தவனாகப் பாவித்துக்கொள்ளும். அல்லது நான் இங்கிருந்ததாகவே தெரிய வேண்டாம். மேஸ்திரியையும் நான் கவனித்துக் கொள்கிறேன். என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்.
"முடியாது, முடியாது" என்று அழுத்தமாகக் கூறினார் சம்பந்தம் பிள்ளை. அவர் இதயத்தில் இன்ப வெள்ளம் பாய்ந்தது. அம்பலவாணம் பிள்ளையிடம் தாம் கூறிய சபதத்தை நினைவு கூர்ந்தார். அதை நிறைவேற்றி வைப்பதற்கு மன உறுதி அளித்ததன் பொருட்டு ஆண்டவனுக்கு நன்றி செலுத்தினார். நூறா? ஆயிரமா? அரை லட்சம் ஒரு பெரிய ஆஸ்தி! தம் சபதத்தை இவ்வளவு விரைவில் நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி அவர் அகமகிழ்ந்தார்.
---------
4. வெற்றி
தெய்வாதீனமாக மறுநாளே வெள்ளம் வடிய ஆரம்பித்தது. ஒரு வாரத்திற்குள் உடைப்பு அடைபட்டது. வழக்கத்துக்கு மாறாக உடைப்பு இவ்வளவு விரைவில் அடைபட்டதற்குப் புது ஓவர்ஸியரின் ஊக்கமும் முயற்சியுமே காரணங்கள் என்று ஜனங்கள் பிரசித்தியாகப் பேசிக் கொண்டார்கள். எனினும், ஐந்தாறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. முக்கியமாக, உடையாரின் பகைவரான மிராசுதாரின் நிலத்தில் ஏறக்குறையப் பாதி மணலடித்துச் சாகுபடிக்கே லாயக்கில்லாமல் போயிற்று.
கோவிந்தராஜ உடையார் கைது செய்யப்பட்டுப் பின்னர் பெருந்தொகை ஜாமீன்களின் மீது விடப்பட்டார். வழக்கு ஏழெட்டுமாத காலம் நடந்தது. உடையாரின் சார்பாகச் சென்னை வக்கீல்கள் ஏழு பேரையல்லாமல் கல்கத்தாவிலிருந்து குற்ற வழக்குகளில் பெயர்போன பாரிஸ்டர் ஒருவரும் வந்து பேசினார். வழக்கின் நடைமுறை விவரங்களைத் தெரிவித்து, இச்சிறுகதையைப் பெருங்கதையாக்க நாம் விரும்பவில்லை. முடிவை மட்டும் கூறிவிடுகிறோம். சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் மூவர் அமர்ந்து, விசாரணை செய்து, கோவிந்த ராஜ உடையார் நிரபராதி என்று விடுதலை செய்தனர்.
உடையாருக்கு விரோதமாக ஓவர்ஸியரின் சாட்சியம் ஒன்றுதானிருந்தது. மேஸ்திரி, விசாரணையில் இருட்டிவிட்டபடியால் அங்கிருந்து உடையார்தானாவென்று நிச்சயமாகச் சொல்ல முடியாதென்றும், அங்கிருந்தவர் யாராயினும் தான் பார்த்தபோது அவர் மண்வெட்டியால் வெட்டிக் கொண்டிருக்கவில்லையென்றும், மண்வெட்டியை எறிந்ததையும் தான் பார்க்கவில்லையென்றும், "ஐயோ! உடைப்பெடுத்துவிட்டதே" என்பது போன்ற கூக்குரல்தான் காதில் விழுந்ததென்றும், தான் உடனே கிராமத்துக்குச் சென்றதாகவும், வேறு விபரம் ஒன்றும் தெரியாதென்றும் சாட்சி சொன்னான். கேசவன் கோர்ட்டுக்கு வரவேயில்லை. உடையாரின் எதிரி மிராசுதார், உடையார் தம் பகைவர் என்று சாட்சி சொன்னாராயினும் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு அது உதவி செய்யவில்லை. ஆகவே, போதிய சாட்சியம் இல்லையென்று வழக்குத் தள்ளப்பட்டது.
இதற்குச் சில தினங்களுக்கெல்லாம், ஓவர்ஸியர் சம்பந்தம் பிள்ளைக்கு மேலதிகாரிகளிடமிருந்து ஓர் உத்தரவு வந்தது. அதில் ஸ்ரீமான் சம்பந்தம் பிள்ளை உடைப்பெடுத்த காலத்தில் தமது கடமையைச் சரிவரச் செய்யவில்லையென்றும், உடைப்பை அடைக்கத் தீவிர முயற்சி செய்திருக்க வேண்டிய சமயத்தில், ஒரு கண்யமுள்ள கனவான் மீது, அவருடைய எதிரியின் தூண்டுதலால் அபாண்டமான குற்றத்தைச் சாட்டித் தொந்தரவு கொடுப்பதில் ஈடுபட்டிருந்ததாகவும், அதனால் இலாகாவுக்கே அபகீர்த்தி ஏற்படுத்தியிருப்பதாகவும், இக்காரணங்களினால் அவர் வேலையினின்று தள்ளப்பட்டிருப்பதாகவும் எழுதியிருந்தது.
---------
5. முடிவு
சம்பந்தம் பிள்ளை தம் சொந்தக் கிராமத்துக்குத் திரும்புவதற்கு முன்னால், தமது வாழ்க்கையின் பெருஞ்சோதனையில் தாம் வெற்றி பெற்ற இடத்துக்கு ஒரு முறை செல்ல வேண்டுமென விரும்பினார். அவ்வாறே, வேலையைத் தமக்குப் பதிலாக வந்தவரிடம் ஒப்புவித்த அன்று காலை, நதிக்கரைக்குச் சென்று, உடைப்பெடுத்த இடத்தில் வந்து அமர்ந்தார். சென்ற ஆண்டில், ஏறக்குறைய இதே காலத்தில்தான் அச்சோதனை நிகழ்ந்தது. இவ்வருஷம் நதியில் சென்ற வருஷத்தைப் போன்ற வெள்ளம் வரவில்லையாயினும் சுமாரான பிரவாகம் ஓடிக் கொண்டிருந்தது. சம்பந்தம் பிள்ளை அன்றைய தினம் மாலை நிகழ்ந்ததெல்லாவற்றையும் ஒரு முறை நினைத்தார். நதியின் வெள்ளத்தில் மேலக் காற்றின் வேகத்தினால் எழுந்த அலைகளே போல், அவர் உள்ளத்தில் எத்தனையெத்தனையோ எண்ணங்கள் எழுந்து மறைந்தன. அம்பலவாணம் பிள்ளையின் ஹிதோபதேசமும் அவர் ஞாபகத்துக்கு வந்தது. "ஆம், மாமாவின் புத்திமதியை ஏற்றுக் கொண்டது நல்லதேயாயிற்று. 'பின்னால் உத்தியோகம் வா' என்றால் வருமா? உத்தியோக வாழ்வில் அதிருப்தி ஏற்பட்டால் அதைவிட்டு வேறு துறையில் இறங்குவதற்கு எதுவும் குறுக்கே நில்லாது' என்று அவர் கூறினாரன்றோ? இப்போது உத்தியோக வாழ்வைப் பார்த்தாய்விட்டது. இனி அதைப்பற்றி சபலம் சிறிதும் இன்றி, தமது வாழ்க்கை இலட்சியங்களைப் பின்பற்றலாம்" என்று சம்பந்தம்பிள்ளை எண்ணமிட்டார்.
கதிரவன், மேல் வான வட்டத்தின் அடிவாரத்தில், சுழலும் தங்கத் தகடெனத் திகழ்ந்தான். அவனுடைய பொன்னிறச் செங்கதிர்கள் நதியின் நீரில் படிந்தபோது, அலைகள் மெருகுகொடுத்தாற் போல் தகதகவென்று பிரகாசித்தன. ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து நிமிஷம் சென்றது. கதிரவன் இருந்த இடத்தில் அவனது பொற்கிரணங்களைப் போர்வையாகப் போர்த்த சில முகில் திட்டுக்களே காணப்பட்டன. இந்தக் காட்சியில் உள்ளத்தைப் பறிகொடுத்திருந்த சம்பந்தம் பிள்ளை, தமக்கருகில் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். கோவிந்தராஜ உடையாரைக் கண்டு திடுக்கிட்டார். உடனே எழுந்து சைக்கிள் பிடியில் கைவைத்து ஏறப் போனார். "தம்பி, உன்னைத் தேடிக் கொண்டு தான் வந்தேன். சற்று உட்கார், போகலாம். உன் ஜாகைக்குப் போய் விசாரித்தேன். நதிக்கரைக்குப் போனதாகச் சொன்னார்கள். இங்கே தான் வந்திருப்பாய் என்று ஊகித்தேன்" என்று உடையார் கூறினார்.
சம்பந்தம் பிள்ளை தம் காதுகளையும் கண்களையும் நம்பவில்லை. பிரமித்துப் போய் நின்றார்.
"ஆம், அப்பா! நான் உன்னைத் தேடிவந்தது உனக்கு அதிசயமாயிருக்கலாம். ஒரு காரியத்தைப் பற்றிப் பேசவந்தேன். தயவு செய்து உட்கார மாட்டாயா?" என்று கூறிக்கொண்டே உடையார் கீழே மல் துணியை விரித்துப் போட்டு உட்கார்ந்தார்.
அவருடைய பரிதாபகரமான குரல் சம்பந்தம் பிள்ளையின் மனத்தை உருக்கிற்று. இந்த அதிசயத்தையும் பார்த்துவிட வேண்டுமென எண்ணி, அருகில் கிடந்தகட்டையின்மீது சம்பந்தம் பிள்ளை அமர்ந்தார்.
"என்ன சொல்லப்போகிறீர்கள்? தங்களுடைய வெற்றியைப் பற்றிச் சொல்லிக்காட்டப் போகிறீர்களா? அப்படியானால் வேண்டாம். ஏனெனில், நான் தான் வெற்றியடைந்ததாக என்னுடைய எண்ணம். அல்லது, என்னுடைய நிலைக்காக இரக்கம் காட்டப்போகிறீர்களா? அதுவும் தேவையில்லை. பகவான் எனக்குக் கொஞ்சம் பூமியையும் அதை உழுத பயிரிட உடம்பில் வலிவையும் அளித்திருக்கிறார்" என்று சம்பந்தம் கூறினார்.
அப்போது உடையார், "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தம்பி! வேறு காரியம். நான் உங்களையெல்லாம் போல் படித்தவனல்லன். ஆகையால், சாமர்த்தியமாகப் பேசத் தெரியாது. இருந்தாலும் மனத்திலுள்ளதை விட்டுச் சொல்கிறேன். போன வருஷத்தில், இதே இடத்தில் நீ சந்தித்தாயே, அந்த கோவிந்தராஜ உடையார் இப்போதில்லை. இந்த வழக்கினால் நான் முற்றும் புதிய மனிதனாகிவிட்டேன். என் உடம்பும் உள்ளமும் நிரம்பத் தளர்ந்து போய்விட்டன. என்னால் இனி குடும்ப விவகாரங்களைப் பார்க்கவும் முடியாது. எனக்கு 60 வேலி நிலமும் மற்றும் வரவு செலவுகளும் உண்டு. இவற்றையெல்லாம் கவனிக்க நம்பிக்கையான காரியஸ்தன் ஒருவன் வேண்டும். உன்னைவிட உண்மையான மனிதன் எனக்கு எங்கே கிடைப்பான்? அதற்காகத் தான் உன்னைத் தேடி வந்தேன்" என்றார்.
சம்பந்தம் பிள்ளைக்குத் தூக்கி வாரிப் போட்டது. அசாத்தியமான கோபம் வந்தது. 'இந்தப் பொல்லாத மனிதனின் தைரியத்தைப் பார்த்தாயா? எனினும், அவர் முகத்தோற்றமும் குரலும் நம் மனத்தை இளக்குவதன் இரகசியம் என்ன? ஒரு வேளை, உண்மையிலேயே வேறு மனிதராகிவிட்டாரோ!' என எண்ணினான். உடையார் பின்னர் கூறிய மொழிகள் சந்தேகத்தை நிவர்த்தி செய்தன.
"தம்பி! உனக்கு ஆச்சரியமாயிருக்கலாம். என் துணிவைக் கண்டு நீ வியப்புறலாம். ஆயினும் உண்மை அதுதான். என் விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள உண்மையான மனிதன் தேவை. இது மட்டுமன்று, இவ்வளவு காலமும் நான் செய்த பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடவேண்டும். இதற்கு எனக்கு வழிகாட்ட ஓர் உத்தமத்தோழன் தேவை. அத்தகைய உத்தமன் உன்னையல்லாமல் எனக்கு வேறு யார் கிடைக்கப் போகிறார்கள்? என் வாழ்நாளிலே நான் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்களிலே யோக்கியர்களும் அயோக்கியர்களும் என்னைப் போன்ற பாதகர்களும் உண்டு..."
இச்சமயத்தில் சம்பந்தரின் கண்களில் நீர் ததும்பிற்று. உடையாரின் தொண்டை கம்மலுற்றது. அவர் மெதுவாக எழுந்து வந்து சம்பந்தம் பிள்ளையின் அருகில் நின்று, அவர் தலையைத் தம் கையினால் தொட்டுக் கொண்டு, "....அத்தனை பேரிலும் உன்னைப்போன்ற உத்தமன் ஒருவனைச் சந்தித்ததில்லை. மற்றும் இன்னொரு செய்தி உனக்குத் தெரியுமா? எனக்குப் பிள்ளை குட்டிகள் ஒருவரும் இல்லை. நான் இன்று இறந்தால் ஒரு துளிக் கண்ணீர் விடுவோர் கிடையாது. அப்போது, நான் எத்தனையோ அக்கிரமங்கள் செய்து சேர்த்த இந்தச் சொத்து முழுதும் என்னவாகும்? நேற்றைய தினம் இதையெல்லாம் பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். உன்னைப் போன்ற ஒரு சத்புத்ரன் மட்டும் இருந்தால் நான் எவ்வளவு பெருமையடைவேன்? அப்போது, இந்த அக்கிரமச் சொத்து முழுவதையும் நல்வழியில் பயன்படுத்தி, என் பாவங்களுக்குக் கழுவாய் தேடிவிடுவாயல்லவா!.... போகட்டும், அதைப்பற்றி நினைத்து என்ன பயன்? தம்பி, என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்குவாயா? மாதம் ரூ.100 சம்பளத்தில் என் காரியஸ்தனாக வேலை பார்ப்பாயா?" என்று கேட்டார்.
இவ்வாறு கூறி உடையார் கண்ணீர் உகுத்தார். அக் கண்ணீர் சம்பந்தம் பிள்ளையின் முகத்திலும் மார்பிலும் விழுந்து அவருடைய கண்ணீருடன் கலந்தது. பின்னர், அவ்விரு கண்ணீர் அருவிகளும் சேர்ந்து ஓடி, நதி ஜலத்தில் விழுந்தன. இவ்வாறு அன்றைய தினத்திலே அந்தப் புண்ணிய நதி, கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் மூன்று நதிகள் கூடும் பிரயாகையைக் காட்டிலும் விசேஷ மகிமையுடையதாயிற்று.
----------------------
5. வஸ்தாது வேணு
"ஏய்! இப்படி உள்ளே வா! வேடிக்கை பார்த்தது போதும்" என்றான் வேணு நாயக்கன். அவனுக்கு எதிரில் பீங்கான் தட்டில் சோறு வட்டித்திருந்தது. மோர் கலந்து பிசைந்து கொண்டு ஊறுகாய்க்காகக் காத்திருந்தான். அவர் மனைவி வீட்டு வாசற்படியில் நின்று, ஏதோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஏஹே! காது கேட்கவில்லையா? போலீஸ்காரன் குடி வருவதைப் பார்க்கக்கூடாது. சட்டத்துக்கு விரோதம்; ஜெயிலில் போட்டுவிடுவார்கள்" என்று சொல்லி வேணு நாயக்கன் பலமாகச் சிரித்தான்.
ஆனால் மங்கம்மாளுக்கு இந்தப் பரிகாசம் புரியவில்லை. அவள் திரும்பி வந்து, "ஜெயிலில் போட்டு விடுவார்களா? விளக்குமாற்றால் அடிப்பேன், இந்த உதவாக்கரைப் போலீஸ் வேலைக்கு எவ்வளவு ஜம்பம்! இரண்டு வண்டி சாமான்! கட்டில் மெத்தை, நாற்காலி, டிரங்குப்பெட்டி, வாத்தியப்பெட்டி-ஒன்றிலும் குறைவில்லை! குட்டிகளுக்கெல்லாம் துரைசாணி மாதிரி ஜாக்கெட். ஐயோ! என்ன ஜம்பம்" என்று சொல்லிக் கையால் தன் கன்னத்தில் ஒரு இடி இடித்துக் கொண்டாள்.
"நீ சும்மாயிரு. அவர்கள் ரொம்பக்காலம் இங்கே இருந்து வாழப் போகிறார்களோ? பார்த்து விடுகிறேன்" என்றான் வேணு நாயக்கன்.
"வாழாமல் என்ன? அவர்களுக்கு என்ன கேடு? மாதம் முதல் தேதி சர்க்கார் சம்பளம் வருகிறது" என்றாள் மங்கம்மாள்.
"எல்லா சர்க்கார் சம்பளத்தையும் நான் பார்த்துவிடுகிறேன். வேணு நாயக்கன் கிட்டவா அந்த ஜம்பமெல்லாம் பலிக்கும்?"
"வந்தால் வரட்டுமே, நமக்கென்ன பயம்?" என்றாள் மங்கு.
"என்ன சொன்னாய்? வாயை அலம்பிக்கிட்டுப் பேசு. நானா பயப்படுகிறவன்? இவனைப் போல் ஆயிரம் சிவப்புத் தலைப்பாகையைப் பார்த்திருக்கிறேன்" என்று அதட்டிப் பேசினான் வேணு.
வஸ்தாது வேணு நாயக்கனைத் தெரியாதவர்கள் நெல்லிப்பாக்கத்தில் ஒருவரும் கிடையாது. ஏன்? சென்னைப் பட்டினத்திலேயே ஒருவரும் கிடையாதென்றுகூடச் சொல்லலாம். முக்கியமாக சாயங்கால வேளைகளில் கள்ளு, சாராயக் கடைகளில் அவனுடைய ஆர்ப்பாட்டம் அதிகமாயிருக்கும். அவனைக் காணாத இடங்களில் ஜனங்கள் "போவன்னா நாயக்கன்" என்று அவனைப் பற்றிப் பேசுவார்கள். எதிரில் கண்டால், "என்ன வஸ்தாது நாயக்கரே!" என்பார்கள்.
அவனுடைய ஜீவனோபாயம் எப்படியென்பது யாருக்கும் நிச்சயமாய்த் தெரியாது. ஆனால் சென்னை நகரில் எந்தவிதத் தேர்தல் நடந்தாலும் சரி, வேணு நாயக்கனை அங்கே பார்க்கலாம். யாராவது ஒரு கட்சியார் அவன் உதவியை நாடுவது நிச்சயம். மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு கையில் தடியுடன் நின்றானானால் எதிர்க் கட்சியாருக்குக் கொஞ்சம் கதி கலங்கத்தான் செய்யும்.
இவ்வளவு பிரபல மனிதன் மீது நெல்லிப்பாக்கம் போலீஸார் 'நிகா' வைத்திருந்ததில் வியப்பில்லையல்லவா? சுற்றுப்பக்கத்தில் எங்கே கலகம் அடிதடி நடந்தாலும் அதில் வேணு நாயக்கன் சம்பந்தப்பட்டிருப்பான் என்பது அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். ஆனால், அவனைப் பிடித்து மாட்டுவதற்கு மட்டும் இதுவரை அவர்களுக்குத் தக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எவ்வளவு பலமான வழக்கு அவன்மீது கொண்டு வந்தாலும், தேர்தலில் அவன் உதவி பெற்ற பிரபல வக்கீல்கள் ஆஜராகிக் 'கேஸை' உடைத்து வந்தார்கள். ஒரே ஒரு தடவை அவனிடம் ஒரு வருஷத்துக்கு நன்னடத்தை வாங்க முடிந்தது. மற்றொரு முறை முப்பது ரூபாய் அபராதம் போட்டார்கள். அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லை.
இந்த நிலைமையில், வேணு நாயக்கனுக்குப் போலீஸ்காரனென்றால் "பூனைக்குட்டி விசுவாசம்" ஏற்படுவது இயல்பேயல்லவா? ஆகவே, அடுத்த வீட்டிற்கு ஹெட்கான்ஸ்டேபிள் ஒருவன் குடி வருகின்றான் என்று அறிந்தது முதல் அவன் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. சாராயக் கடையில் யாரோ இதைப்பற்றிப் பிரஸ்தாபித்த போது "அடே! சும்மா பார்த்துக் கொண்டிரு. மூன்று நாளில் அந்த நெருப்புக்குச்சியைக் கிளப்பாவிட்டால் என் பெயர், வஸ்தாது வேணு நாயக்கன் அல்ல!" என்று சொல்லிக் கொண்டு அவன் மீசையை முறுக்கினான்.
ஆனால் மாதம் மூன்று ஆகியும் அந்த நெருப்புக் குச்சி புறப்படுகிற வழியாயில்லை. இவ்வளவு நாளும் வேணு நாயக்கன் சும்மாயிருந்தானென்று நினைக்க வேண்டாம். தன்னாலியன்ற முயற்சியெல்லாம் செய்துதான் வந்தான். அவன் உத்தரவுப்படி மங்கம்மாள் தினம் காலையில் வாசலைக் கூட்டிக் குப்பையை அடுத்த வீட்டு வாசலில் தள்ளிவிட்டு வருவாள். ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் அவ்வளவு குப்பையும் வட்டியும் முதலுமாக, வேணு நாயக்கன் வாசலுக்கே திரும்பி வந்துவிடும்.
வேணு ஒரு நாள் சாராயக் கடையிலிருந்து ஏராளமான கண்ணாடிப் புட்டிகள் கொண்டுவந்தான். கதவைச் சாத்திவிட்டு அவைகளைத் துண்டு துண்டாய் உடைத்தான். நடு நிசிக்கு எழுந்து போய் அந்தத் துண்டுகளைப் போலீஸ்காரன் வீட்டுக் கொல்லையில் வீசிக் கொட்டி விட்டு வந்தான். இந்த நொறுக்கல் தொண்டு செய்தபோது அவன் கையில் இரண்டு மூன்று இடத்தில் காயம் உண்டாகி இரத்தம் வடிந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.
ஆனால் மறுநாள் சாயங்காலம் அவன் குடிமயக்கத்துடன் வீடு திரும்பிக் கொல்லைப்புறம் போகையில் இரண்டு காலிலும் இரண்டு பெரிய கண்ணாடித் துண்டுகள் குத்திக் காலை கிழித்தபோது கட்டாயம் பொருட் படுத்த வேண்டியதாயிற்று. "ஐயோடி! அப்பாடி" என்று முனக ஆரம்பித்தான். "என்ன ஓய்! தேள் கொட்டிவிட்டதா?" என்று அடுத்த வீட்டுக் கொல்லையிலிருந்து ஒரு சத்தம் வந்தது. "பீங்கான் தட்டு வேண்டாம்; ஆசாரக் குறைவு; இனிமேல் இலை போட்டுத்தான் சாப்பிடவேண்டும்" என்றான் வேணு. இந்த ஊதாரிச் செலவின் இரகசியம் முதலில் மங்கம்மாளுக்கு விளங்கவில்லை. வேணு சாப்பிட்டு எழுந்ததும் "ஓய் இலையை மேலண்டைப் பக்கமாய்ப் போடு, தெரிகிறதா?" என்று சொன்னபோதுதான் அவளுக்கு விஷயம் விளங்கிற்று. மங்கம்மாள் அப்படியே செய்துவிட்டு வந்தாள்.
சிலநாள் வரையில் வேணு சந்தோஷமாக இருந்தான். ஆனால் ஒரு நாள் இராத்திரி கொல்லைப்புறம் போனபோது அவன் சந்தோஷம் மாறிவிட்டது. என்னவோ சந்தேகப்பட்டு அவன் கொல்லைச் சுவர் வழியாகப் பக்கத்துக் கொல்லையை எட்டிப் பார்த்தான். போலீஸ்காரன் புதிதாய் வாங்கியிருந்த பசு மாடுதான், மூன்று தம்பிடி கொடுத்து வாங்கிய வாழை இலையை ஆனந்தமாய் மென்று தின்று கொண்டிருப்பதை அவன் கண்டான். குப்பை, கண்ணாடித்துண்டு முதலிய சாமான்கள் உடனுக்குடன் திரும்பி வந்து கொண்டிருக்க, எச்சில் இலை மட்டும் வராத காரணம் இப்போதுதான் வேணுவுக்கு புலனாயிற்று.
பிறகு, ஒரு நாள் வேணு நாயக்கன் தன் வீட்டிலிருந்த ஓட்டைத் தகரங்களையெல்லாம் சேகரித்தான். கொல்லைப்புறம் கொண்டுபோய் ஒரு பெரிய தகரத்தை வீசி எறிந்தான். அடுத்த கொல்லையிலிருந்த போலீஸ்காரன், "இந்தா இந்தத் தகரத்தை எடுத்து வை. மாட்டுக்குத் தீனி வைக்க உதவும்" என்று தன் பெண்சாதியிடம் அருமையாய்ச் சொன்னான். வேணுவுக்குப் பலத்த கோபம் வந்து விட்டது. "ஓய்! அப்படி ஊர்சொத்தைச் சுரண்டித்தான் நீர் காலட்சேபம் செய்கிறதோ?" என்று கத்தினான். "ஓஹோ இது உம்முடைய தகரமா?" என்று அடுத்த கொல்லையிலிருந்து போலீஸ்காரன் சொன்னான். மறுநிமிடத்தில் அந்த ஓட்டைத்தகரம் வந்து வேணு நாயக்கன் தலைமேல் நேராய் இறங்கிற்று. பிறகு, அவன் முதுகைத் தடவிக் கொடுத்துக்கொண்டு தரையில் விழுந்து ஒரு குதி குதித்தது. "என்ன ஓய்! தலைமேல் விழுந்து விட்டதா என்ன?" என்றான் போலீஸ்காரன்.
"நாசமாய்ப் போக! ஒரு நாளைக்கு உன் மண்டையை உடைக்காமல் விடப்போகிறேனா?" என்று வஸ்தாது நாயக்கன் முணு முணுத்துக் கொண்டான்.
*******
வேணுநாயக்கனுக்கு ஒரு மாத காலம் நல்ல தூக்கம் கிடையாது. இரவு பகல் இதே யோசனைதான். கள்ளு, சாராயக் கடைகளில் அவன் பல மந்திராலோசனைகள் நடத்தினான். அந்தப் போலீஸ்காரனைக் கசக்கி சாறு பிழிந்துவிட வேண்டுமென்று அவன் நண்பர்கள் எல்லோரும் ஒரு முகமாய் அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால், அதற்கு வழியும் சாதனமும் சொல்லுவார் யாருமில்லை. "வலிய அழைத்தாலும் சண்டைக்கு வராதவனை என்ன செய்யமுடியும்? எப்படியும் அவனை ஒரு கை பார்க்காமல் விடாதே" என்று மட்டும் ஊக்கப்படுத்தி வந்தார்கள். ஒரு நாள் மாலை மிக்க முகமலர்ச்சியுடன் வேணு வீடு திரும்பினான். "என்ன விசேஷம்?" என்று அவன் மனைவி கேட்டாள்.
"விசேஷம் இருக்கிறது" என்றான் வேணு. அவன் மனைவியின் ஆவல் பதின்மடங்கு அதிகமாயிற்று. "என்ன? என்ன?", என்று கேட்டாள்.
"இன்றைக்கு வக்கீல் ஐயாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கிறார். இதற்குத்தான் படித்தவர்கள் சினேகம் வேண்டுமென்பது" என்றான்.
"என்ன யோசனை? சொல்லு, சொல்லு."
"போலீஸ்காரன் பிறத்தியான் வீட்டுக்குள் நுழையக்கூடாது. வாரண்டு வைத்துக்கொண்டு தான் நுழையலாம். அப்படியில்லாமல் நுழைந்தால் அவனை மாட்டிவிடலாம்."
"அதற்கென்ன இப்போது?"
"என்னவா? அதுதான் சட்டம். அடுத்த வீட்டுச் சிவப்புத் தலைப்பாகையை ஒழிக்க வழி."
"எப்படி ஒழிக்கிறது?"
"இன்னும் புரியவில்லையா? அடுத்த வீட்டுப் போலீஸ்காரனை நம் வீட்டில் நுழையும்படி செய்ய இரண்டு சாக்ஷிகள் வைத்துவிட வேண்டியது. அப்புறம் வக்கீல் ஐயன் பார்த்துக் கொள்ளுகிறான்."
"எப்ப நுழையும்படிச் செய்கிறது?"
"ஆ! அதுதான் இரகசியம், இதோ பார். இந்தத் தடியினால் உன்னை இன்று நொறுக்கப் போகிறேன்" என்றான்.
"ஐயோ! உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா, என்ன?"
உடனே வேணு நாயக்கன் விழுந்து விழுந்து சிரித்தான். "பைத்தியமில்லை; யுக்தி" என்றான்.
"இதோ பார்! நன்றாய் கேட்டுக்கொள். பரண் மேல் பழைய மெத்தை கிடக்கிறதல்லவா? அதை எடுத்துப் போடு. இந்தத் தடியினால் அதைப் போட்டு அடிக்கப் போகிறேன்! ஆனால், நீ உன்னைத்தான் அடிப்பதாகப் பாசாங்கு செய்ய வேண்டும். கூகூவென்றுகத்து. என்மேல் உனக்கிருக்கும் ஆத்திரத்தையெல்லாம் கொட்டித் திட்டு. 'கொல்கிறானே, கொல்கிறானே' என்று கூச்சல் போடு. வாசல் கதவைத் தாளிடாமல் இவ்வளவும் செய்யப் போகிறேன். அந்தச் சிவப்புத் தலைப்பாகை கட்டாயம் உள்ளே நுழையும். நான் வாசலில் ஓடிப்போய் எதிர் வீட்டுக் காரர்களைக் கூப்பிட்டு சாட்சி வைத்து விடுகிறேன்" என்றான்.
முதலில் மங்கம்மாளுக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. மெத்தையில் அடிப்பதற்குச் சம்மதியாவிட்டால் முதுகின்மேல் அடி விழுமென்று தோன்றிற்று. ஆகவே, "சரி" யென்று ஒப்புக் கொண்டாள்.
சாப்பாடு முடிந்தது. அடுத்த வீட்டில் போலீஸ்காரனும் அவன் மனைவியும் படுத்துக்கொண்டார்கள் என்ற தெரிந்தபின், அந்தச் சுவர் ஓரமாக மெத்தையைக் கொண்டுபோய் போட்டான். "முதலில் கொஞ்சம் வாய்ச் சண்டை போட வேண்டும். உன் மனத்தில் என் மேலுள்ளதையெல்லாம் சொல்லித் தீர்த்துவிடு. பக்கத்து வீட்டுக்குக் கேட்கும்படி உரக்கப் பேசு" என்றான்.
மங்கம்மாள் பயந்துகொண்டே ஆரம்பித்தாள். ஆனால், இதற்கு முன்னெல்லாம் அவள் ஒரு வார்த்தைப் பேசியதும் வேணு வாயில் போடுவது வழக்கம். இப்பொழுது அவன் பேசாமலிருக்கவே அவளுக்கு உற்சாகம் பிறந்தது. எட்டு வருஷ காலமாய் அவள் மனதில் குமுறிக்கொண்டிருந்தவைகள் அனைத்தையும் எடுத்து வெளியே விடத் தொடங்கினாள். கால் மணியாயிற்று. அரை மணியும் ஆயிற்று. வேணு காரியம் என்னவென்பதை மறந்து போனான். உண்மையிலேயே தானும் தன் மனைவியும் சண்டையிடுவதாகவே கருதினான். "இவ்வளவுதானா? இன்னும் உண்டா?" என்று சொல்லிக் கொண்டு எழுந்தான்.
"இன்னும் இருக்கிறது" என்று கூறி மங்கம்மாள், மேலும் ஆரம்பித்தாள் புராணத்தை. ஆனால் வேணுநாயக்கன் உண்மையாகவே தடியைத் தூக்கிக்கொண்டு வருகிறான் என்று தெரிந்ததும் "வீர்" என்று ஒரு பெரிய கூச்சல் போட்டுக் கொண்டு சமயலறைக்குள் ஓடிக் கதவைச் சாத்தித் தாழ்ப்பாளிட்டுக் கொண்டாள். உள்ளிருந்தபடியே அவள், வேணு நாயக்கன், அவனுடைய அப்பன், பாட்டன், இன்னும் இஷ்டமித்திர பந்து ஜனங்கள் எல்லாருடைய குணாதிசயங்களையும் வர்ணித்து அவர்களை ஆசீர்வாதஞ் செய்யலானாள். அவள் வேணுநாயக்கனையும் விடவில்லை.
இந்தச் சமயத்தில் அடுத்த வீட்டிலிருந்து போலீஸ்காரன் குரல் கேட்டது. "என்ன ஓய் காட்டு பூனையை ஓட்டித் தொலையும். தூக்கத்தைக் கெடுக்கிறது" என்றான் அந்தப் பொல்லாத குள்ள நரி. உடனே வேணு நாயக்கனுக்குப் பழைய ஞாபகம் வந்தது. தொப்பு தொப்பென்று பழைய மெத்தையைப் போட்டு அடிக்கத் தொடங்கினான் பாவம்! மூன்று தலைமுறையாக வேணு நாய்க்கன் குடும்பத்தைத் தாங்கி வந்த அந்த மெத்தை அன்று படாத பாடு பட்டது. துணி, சுக்கு சுக்காய்க் கிழிந்தது, பஞ்சு தூள் தூளாகப் பறந்தது.
போலீஸ்காரன்மேல் கோபம் ஒரு பக்கம், பெண்சாதி மேல் ஆத்திரம் ஒரு பக்கம்; அரை மணி நேரத்துக்கு மேலாகியும் வேணுநாய்க்கன் ஓயவில்லை. திடீர் என்று வாசற்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. "ஆஹா! ஜயித்தோம்" என்று அளவிலாத குதூகலத்துடன் முன்னைவிட ஓங்கி அடித்தான். திடு திடுவென்று யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது. "மாட்டிக் கொண்டாயா நெருப்புக்குச்சிப் பயலே!" என்று எண்ணுவதற்குள் திடுதிடுவென்று முதுகில் ஐந்தாறு அடி விழுந்துவிட்டது. "ஆஹா பயலே!" என்று சத்தமிட்டுக்கொண்டு வேணு குதித்து எழுந்தான். முதுகிலும் தலையிலும் தோளிலும் மாறி மாறி அடி விழுந்தது. திரும்பிப் பார்த்ததும் வேணுவுக்குத் திகைப்பு உண்டாகிவிட்டது. ஏனென்றால் அவ்வளவு தைரியமாய் உள்ளே நுழைந்து தன்னை அடித்தவன் போலீஸ்காரனல்ல; தன் மைத்துனன் முத்துநாயக்கன். மங்கம்மாளின் அண்ணன் - என்பதை அவன் கண்டான். "சங்கதி என்னடா? கழுதை மகனே! உன் கை வரிசையைக் கடைசியில் என்னிடமே காட்டுகிறாயா? முத்துநாயக்கன் தங்கையை ஒருவன் அடிப்பதற்காயிற்றா?" என்று மேலும் சாத்தினான் முத்துநாயக்கன்.
அன்று வஸ்தாது நாயக்கன் வைகுண்டத்துக்கே போயிருப்பான். ஆனால், நல்ல வேளையாக மங்கம்மாளுக்கு விஷயம் தெரிந்து போயிற்று. அவள் கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்து அண்ணன் கையைப் பிடித்துக் கொண்டாள். மேலே ஒரு காயம் இல்லாமல் அவள் கொழுக்கட்டைபோல் இருப்பதைக் கண்டதும் முத்து நாயக்கனுக்குக் கோபம் தணிந்தது. பிறகு, சுற்றுமுற்றும் பார்த்தான். பழைய மெத்தையின் பதினாயிரம் துண்டு துணுக்குகளைக் கண்டான்.
"என்ன சமாசாரம்?" என்று கேட்டான். எல்லா விவரமும் மங்கம்மாள் சொன்னாள். முத்து நாயக்கன் ஒரு நிமிஷம் திகைத்து நின்றான். பின்னர் வேணுநாயக்கன் மீது காறி உமிழ்ந்து விட்டு ஓட்டம் பிடித்தான். மங்கம்மாள் வாசல் கதவைத் தாளிடப் போனாள். அந்த நிசி வேளையில் தெருவிலிருந்த அத்தனை வீட்டு வாசலிலும் ஜனங்கள் வந்து நிற்கக் கண்டாள். மிக்க வெட்கத்துடன் திரும்பி வந்து படுத்துக்கொண்டாள்.
மறுநாள் காலையில் வஸ்தாது வேணுநாயக்கன் எழுந்து, வழக்கம்போல் வெளியே வந்தான். தன் முதுகு, தோள், முகம், எல்லாம் வீங்கியிருந்ததை அவன் கவனிக்கவில்லை. அடுத்த வீட்டு வாசலில் தயாராய்க் காத்திருந்த போலீஸ்காரன் அவனைப் பார்த்து, "இதென்ன நாயக்கரே! நீரல்லவோ உம் பெண்சாதியை அடித்ததாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருக்கிறது? பாவம்? உம்மையா அந்த அம்மாள் அப்படி அடித்துவிட்டாள்? உடம்பெல்லாம் தடித்துப் போயிருக்கிறதே!" என்றான். பிறகு, அன்று முழுதும் வேணு வெளிக்கிளம்பவேயில்லை.
ஹெட்கான்ஸ்டேபிள் வீராசாமிப் பிள்ளைக்குத் தோட்ட வேலையில் கொஞ்சம் பைத்தியமுண்டு. அவன் அந்த வீட்டுக்கு வந்து ஆறு மாதந்தான் ஆயிற்று. இதற்குள் கொல்லையைக் கிளிகொஞ்சும்படி வைத்திருந்தான். ஆள் உயரம் வளர்ந்திருந்த கொத்தவரைச் செடிகளில் கொத்துக்கொத்தாய்க் காய்த்திருந்தது. ஒரு பக்கம் மல்லிகைச் செடிகள் செழிப்பாகக் கிளம்பி அப்போதுதான் மொட்டுவிட்டிருந்தன. ஒரு பந்தலில் புடலங்காய்கள் பிஞ்சும் பழமுமாய்த் தொங்கின. மற்றொரு பந்தலில் அவரைக் கொடி பச்சைப்பசேல் என்று அடர்த்தியாய்ப் படர்ந்திருந்தது. புதிய இங்கிலீஷ் குரோட்டன்ஸ்களும் வாடாமல்லிகைச் செடிகளும் மற்றொரு பக்கம் காணப்பட்டன. இரண்டு மூன்று வாழைக் கன்றுகளும் வளர்ந்திருந்தன. வீராசாமிப் பிள்ளை வீட்டில் தங்கும் நேரத்தில் முக்கால் பங்கு நேரம் புழக்கடைத் தோட்டத்திலேயே கழிப்பது வழக்கம். ஒரு செடியில் ஒரு இலைக்கு ஏதாவது ஆபத்து வந்து விட்டால் அவனுக்கு அன்றிரவு தூக்கம் வராது.
வஸ்தாது வேணு நாயக்கன் பழைய மெத்தையுடன் யுத்தம் புரிந்து ஒரு மாதமாயிற்று. ஒரு நாள் காலையில் ஹெட்கான்ஸ்டேபிள் படுக்கையை விட்டு எழுந்ததும் வழக்கம் போல் புழக்கடைக்குச் சென்றான். அவன் அடிவயிற்றில் பகீர் என்றது. "ஐயோ" என்று ரொம்பவும் தீனமான குரலில் ஒரு பெரிய கூச்சல் போட்டான். திடீரென்று கீழே விழுந்து மூர்ச்சையடைந்தான்.
அவன் மனைவி படுக்கையிலிருந்து குதித்தெழுந்து ஒரே ஓட்டமாய் ஓடி வந்தாள். நேற்று மாலை கிளி கொஞ்சிக் கொண்டிருந்த தோட்டம் இன்று, அனுமான் அழித்த அசோகவனம் போல் இருப்பதைக் கண்டாள். ஒரு செடி, ஒரு கொடி, ஒரு புல் பூண்டு உருப்படியாயிருக்க வேண்டுமே! கிடையாது. அவரைக் கொடிகள் அறுபட்டுக் கிடந்தன. கீரைப்பாத்திகள் மிதிபட்டு கிடந்தன. மல்லிகைச் செடிகள் வேறோடு பிடுங்கப்பட்டிருந்தன. வாழைக் கன்றுகள் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தன. கொத்தவரை, வெண்டைச் செடிகள் நிர்மூலமாய்க் கிடந்தன. ஒரே துவம்ஸம், ஒரே நாசம்.
ஹெட்கான்ஸ்டேபிள் மனைவி மகா உத்தமி. சாதாரணமாய் அதிர்ந்து பேசும் வழக்கம் அவளிடம் கிடையாது. ஆனால் இந்த மகா பாதகத்தை யாரால்தான் சகித்துக்கொண்டிருக்க முடியும்? "அடபாவி, நீ நாசமாய்ப் போகமாட்டாயா! உன்னைத் தெய்வம் கேட்காதா!" என்று கத்திக் கொண்டு இரண்டு கை மண்ணை வாரி வேணு நாயக்கன் கொல்லைப்பக்கம் இறைத்தாள். உடனே ஓடி வந்து கணவனுக்கு சைத்தியோபசாரம் செய்யத் தொடங்கினாள். அவனுக்கு ஸ்மரணை வந்ததும் இன்னொரு தடவை தோட்டத்தைப் பார்த்தான். அவ்வளவுதான், எழுந்து உள்ளே ஓடிப்போய்க் கூடத்தில் குப்புறப் படுத்துக்கொண்டான். அப்போது அவன் கண்ணிலிருந்து பெருகியது கண்ணீரா இல்லை, அதை இரத்தம் என்று சொல்ல வேண்டும்.
மணி பத்தடித்தது. "எத்தனை நேரம் இப்படிப் படுத்திருப்பது? எழுந்திருங்கள். வெளியே போய் விட்டு வாருங்கள். வேறு வீடு இருந்தால் பார்க்கக் கூடாதா? இந்தப் பாழும் வீட்டை விட்டுப் போகலாம்" என்றாள் போலீஸ்காரன் மனைவி. வீராசாமிப்பிள்ளை எழுந்து, உடுப்புத் தரித்துக் கொண்டு 'டியூடி' பார்க்கச் சென்றான்.
ஒரு குறுகலான சந்து. இரண்டு பக்கமும் மதில் சுவர். ஜன நடமாட்டம் கிடையாது. மின்சார விளக்குகள் அழுது வடிந்தன. இரவு பதினொரு மணிக்கு ஹெட்கான்ஸ்டேபிள் வீராசாமிப்பிள்ளை தனியாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்தான். அந்தச் சந்தின் நடுவில் மற்றொரு சந்து சேருமிடத்தில் அதன் வழியாக வேறொரு மனிதன் வந்தான். இந்த முச்சந்தியில் ஒரு மின்சார விளக்கு இருந்தபோதிலும் பக்கத்தில் மரங்கள் அதிகமிருந்தபடியால் சாலையின் பெரும் பகுதியில் நிழல் வீழ்ந்திருந்தது. தற்செயலாக அம்மனிதன் முகத்தை வீராசாமிப்பிள்ளை பார்த்த நேரமும் அவன் மீது வெளிச்சம் விழுந்த நேரமும் ஒத்துக்கொண்டன. வந்தவன் வஸ்தாது வேணு நாயக்கன்.
போலீஸ்காரன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த துக்கம் அவ்வளவும் அந்நேரத்தில் குரோதமாக மாறிற்று. இருவரும் நேருக்கு நேர் நின்று ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள். வேணுவுக்குக் குடி மயக்கம். எனவே, ஆள் இன்னார் என்று அறிந்து கொள்ள ஒரு நிமிஷம் பிடித்தது. உடனே பல்லை இளித்துக்கொண்டு, "என்ன சிவப்புத்தலைப்பா? தோட்டம் எப்படி இருக்கிறது?" என்றான்.
அதற்கு மேல் வீராச்சாமியால் தாங்க முடியவில்லை. கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான். ஆனால், வஸ்தாது வேணுநாயக்கனா இதற்கெல்லாம் பயப்படுகிறவன்? இத்தகைய சந்தர்ப்பத்தைத்தான் அவன் வெகு காலமாகத் தேடிக் கொண்டிருந்தது. ஐந்து நிமிஷத்தில் போலீஸ்காரன் கீழே விழுந்து மண்ணை கவ்வினான். கொஞ்ச நேரத்தில் அவன் பிண்டப் பிரதானமாகியிருப்பான். ஆனால், அந்தச் சமயத்தில் அவனுடைய அதிர்ஷ்டம் வந்து குறுக்கிட்டது.
இவர்கள் கட்டிப் புரண்டது அடர்ந்த மர நிழலுள்ள இடம். இரண்டு கையிலும் இரண்டு பெட்டி தூக்கிக்கொண்டு அவ்வழியே ஓடிவந்த மூன்றாவது மனிதன் ஒருவன், இவர்கள் மீது கால் இடறித் தொப்பென்று விழுந்தான். அவன் வைத்திருந்த பெட்டியொன்று வஸ்தாது நாயக்கன் தோள்மீது விழுந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்திருந்தான். இதுதான் சமயமென்று போலீஸ்காரன் சட்டென்று நழுவிச் சத்தம் போடாமல் மரத்தடியில் ஒளிந்து கொண்டான். குடி மயக்கத்திலிருந்த வேணுவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஓடி வந்தவன் இருட்டில் விழுந்து கிடப்பதுதான் தெரிந்தது. அவன் தான் போலீஸ்காரன் என்று நினைத்து ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவனை பிடித்துக் குத்தத் தொடங்கினான். அவன் பேசுவதற்கும் இடம் கொடுக்கவில்லை. மேலும் மேலும் விழுந்த அடி பொறுக்காமல் அந்த மனிதன் மூர்ச்சையடைந்தே போனான். வஸ்தாது இரண்டு மூன்று தடவை அவனைப் புரட்டிப் பார்த்துவிட்டு வேகமாய் வீடு நொக்கி நடந்தான். "இவ்வளவு தடியனா அந்தப் போலீஸ்காரன்? ஒருவேளை, உடம்பு வீங்கிப்போயிற்றா?" என்று நினைத்துக் கொண்டான்.
வேணு சந்து திரும்பிப் போன பிறகு ஹெட்கான்ஸ்டேபிள் வீராசாமி மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான். கீழே கிடந்தவனை உற்றுப் பார்த்தான். கீழே கிடந்த பெட்டிகளையும் பார்த்தான். கொஞ்சம் சந்தேகம் உதித்தது. தூரத்தில் ஏதோ 'கோல்மால்' நடக்கும் சத்தம் கேட்டது. சந்தேகம் உறுதிப்பட்டது. பெட்டிகளை எடுத்துக் கொண்டு சத்தம் கேட்ட திசையை நோக்கி விரைவாக நடந்தான். ஒரு பங்களாவின் வாசலில் ஏக தடபுடலாய்க் கிடந்தது. பலர் கூடி இரைந்து கொண்டிருந்தார்கள். இரண்டு போலீஸ்காரர்களும் ஒரு சப்-இன்ஸ்பெக்டருங்கூட நின்றார்கள். கையில் பெட்டிகளுடன் உடம்பெல்லாம் இரத்தம் சொட்ட உடுப்பெல்லாம் கிழிந்து அலங்கோலமாய் வந்த வீராசாமியைக் கண்டதும் அங்கே பெருங் கிளர்ச்சி உண்டாயிற்று.
"என்ன?"
"ஏது?"
"அகப்பட்டானா?"
"ஓடிப் போனானா?"
"ஐயோ, பாவம்! நன்றாய் அடிபட்டிருக்கிறான்!"
"எத்தனை பேர்?"
"திருட்டுப் பசங்கள்?"
இவ்வாறு ஏக காலத்தில் பலர் கூச்சல் போட்டார்கள். வீராசாமிக்குக் கொஞ்சம் விஷயம் விளங்கிற்று. தன் அதிர்ஷ்டத்தைத் தானே வியந்து கொண்டான்.
இதற்குள் வீட்டு எஜமான் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடி வந்தான். வீராசாமி கையில் பெட்டிகளைக் கண்டதும் அவனுக்குக் கரை காணாத சந்தோஷம் உண்டாயிற்று. "ஐயோ! பிழைத்தேன். உயிர் வந்தது. நீ மகாராஜனாய் இருக்க வேண்டும்" என்று வீராசாமியைக் கட்டிக் கொண்டான். பெட்டிக்குள் ரூபாய் 20,000 பெறுமான நகைகளல்லவா இருந்தன!
சப் இன்ஸ்பெக்டர் இப்போது குறுக்கிட்டு, "அதெல்லாம் இருக்கட்டும். என்ன சமாசாரம்? சீக்கிரம் சொல்லு. திருடனை எங்கே கண்டாய்? என்ன நடந்தது? சீக்கிரம் சொல்லு" என்றார்.
வீராசாமிப் பிள்ளையின் மூளை வரும்போதே வேலை செய்துகொண்டிருந்தது. எனவே, அவன் தயங்காமல் சொல்லலுற்றான்:- "வட பக்கத்து சந்து வழியாய் வந்து கொண்டிருந்தபோது மூன்றுத் தடிப்பசங்கள் குறுக்குச் சந்து வழியாய் ஓடி வந்தார்கள்! என்னைக் கண்டதும் திடுக்கிட்டு நின்றார்கள். உடனே எனக்கு சந்தேகம் தட்டிற்று. 'அடே திருட்டுப் பயல்களே!' என்று சும்மா ஒரு அதட்டல் அதட்டினேன். உடனே மூன்று பேரும் என் மேல் வந்து விழுந்தார்கள். அப்பா! என்ன பாடுபட்டு போனேன்! தப்பிப் பிழைப்பது இனி மேல் இல்லையென்றே நினைத்துவிட்டேன். இருந்தாலும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சண்டை போட்டேன். கையில் கத்தி, துப்பாக்கியும் ஒன்றுமில்லை. அந்த மூன்று பேரிலும் ஒருவன் தான் நல்ல தடியன், ஒரு திமிறு திமிறிக்கொண்டு அவன் நெற்றியைப் பார்த்து ஒரு குத்து விட்டேன். அப்படியே அவன் சுருண்டு விழுந்தான். மற்ற இரண்டு பேரும் ஓடியே போனார்கள். கீழே விழுந்தவன் மறுபடியும் எழுந்து தாக்கினான். மூன்று பேரையே ஒரு கை பார்த்தவன் ஒருவனுக்குப் பயப்படுவேனா? அடித்துப் போட்டேன். அந்த மரத்தடியிலேயே இப்போது கிடக்கிறான். உயிர் இருக்கிறதோ செத்துப் போனானோ, தெரியாது. பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஓடி வந்தேன்."
எல்லோரும் கையில் லாந்தர்களுடன் கிளம்பிச் சென்றார்கள். முச்சந்தியில் கீழே விழுந்து கிடந்த பிரம்மாண்ட மனிதனைப் பார்த்ததும் அவர்களுக்குப் பிரமையுண்டாகிவிட்டது. வீராசாமியையும் கீழே கிடந்தவனையும் மாறி மாறிப் பார்த்தார்கள். 'இத்தனை பெரிய ஆளை இவன் எப்படி அடித்தான்?' என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நல்ல வேளையாக அவன் மூக்கில் மூச்சு வந்துகொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணைத் திறந்தான். கையிலும் காலிலும் விலங்கு பூட்டிப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோனார்கள்.
*******
ஹெட் கான்ஸ்டேபிள் வீராசாமிப்பிள்ளை ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து வஸ்தாது வேணு நாயக்கன் அடித்த அடியினால் உண்டான காயங்களை ஆற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வேணுவும் அந்த ஒரு வாரமாக வெளியில் கிளம்பவில்லை. ஆனால், அடுத்த வீட்டுப் போலீஸ்காரன் ஆஸ்பத்திரியில் இருப்பதைமட்டும் தன் மனைவி மூலம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, "வஸ்தாது வேணு நாயக்கனிடமா இவன் கைவரிசை காட்டினான்?" என்று உறுமிக்கொண்டே இருந்தான்.
"என்னவோ திருடனைப் பிடித்தான், என்று சொல்லிக்கொள்கிறார்கள்" என்றாள் மங்கம்மாள்.
"திருடனா, திருடன்! இந்தக் கையினால் எண்ணி 99 குத்து அல்லவா விட்டேன்?" என்றான்.
"ஐயோ இரையாதேயுங்கள்!" என்று மங்கம்மாள் அவன் வாயைப் பொத்தினாள்.
எட்டாம் நாள் காலையில் வீராசாமிப்பிள்ளை எழுந்து வீட்டுக்கு வெளியில் வந்தான். அவன் தலையில் இன்னும் கட்டுப் போட்டிருந்தது. வேணுவும் அச்சமயம் வெளியே வந்தான். அவனால் சும்மாயிருக்க முடியவில்லை. "என்ன ஓய்! காயம் இன்னும் ஆறவில்லையா?" என்றான். வீராசாமி சும்மாயிருந்தான். வேணு மறுபடியும் "என்ன ஓய், பேசக்காணும்? பயப்படாதே. இனிமேல் குத்தவில்லை" என்றான்.
வீராசாமி, "என்னாங்காணும் உளறுகிறீர்!" என்றான்.
"நானா உளறுகிறேன்? அதற்குள் முதுகு 99 குத்தையுமா மறந்துவிட்டது?" என்று சொல்லிச் சிரித்தான் வேணு.
"என்ன? நீயா அன்று என்னை அடித்தாய்?"
"பின்னே யார்! உன் அப்பனா?"
"இரு, இரு. எதிர் வீட்டுக்காரர்களைக் கூப்பிடுகிறேன். இரண்டு பேரை வைத்துக் கொண்டு இதைச் சொல்லு."
"சொன்னால் தலை போய் விடுமோ?"
"தலை போகாது. பன்னிரண்டு வருஷம் கடுங்காவல்; அவ்வளவுதான். மூன்று திருடர்களில் ஒருவனைப் பிடித்தாகி விட்டது. இரண்டு பேர் ஓடிப் போனார்கள். ஓடிப்போனவர்களில் நீ ஒருவனா? ரொம்ப சந்தோஷம்" என்றான் போலீஸ்காரன்.
நடையிலிருந்து இந்த சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த வேணுவின் மனைவிக்குப் பாதி பிராணன் போய்விட்டது. வேணுவுக்கு நன்றாக விளங்கவில்லை. இருந்தாலும் கொஞ்சம் பயமுண்டாயிற்று. உடனே அவன் தட்டுத் தடுமாறிக் கொண்டு "போனதெல்லாம் போகட்டும் அண்ணே? நாம் அண்டை வீட்டுக்காரர்கள். ஏன் மனத்தாங்கல், - இனி சிநேகமாயிருப்போம்" என்றான். "அந்தப் பாக்கியம் எனக்கில்லை, நாயக்கரே! நான் நாளையே இந்த வீட்டை விட்டுப் போகிறேன்" என்றான் வீராசாமி. வேணுவுக்கு மிக்க சந்தோஷம் உண்டாயிற்று. 'தொலைந்தான் சனியன்' என்று மனத்தில் நினைத்துக் கொண்டான். "அதேன் அண்ணே? வந்து ஆறுமாதங்கூட ஆகவில்லையே. ஏன் போகவேண்டும்" என்று கேட்டான்.
வீராசாமிப் பிள்ளை, "அதை ஏன் கேட்கிறாய், தம்பி! 'யானைக்குட்டி முதலி!' என்னும் பெயர் பெற்ற திருடனை நான் பிடித்துக் கொடுத்தேன். அவனோடு சண்டை போட்டுத்தான் காயமாயிற்று. இதற்காக சர்க்கார் என்னை சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு உயர்த்தி இருக்கிறார்கள். அதோடு திருட்டுப்போன நகையை மீட்டுக் கொடுத்ததற்காக ஆத்தூர் ஜமீன்தார் ஆயிரம் ரூபாய் வெகுமதி கொடுத்தார். இனிமேல் நான் ஏன் இந்த எட்டு ரூபாய் வீட்டில் குடியிருக்க வேண்டும்? முப்பது ரூபாய்க்கு ஒரு மச்சு வீடு பார்த்திருக்கிறேன்!" என்றான்.
வேணு நாயக்கனுக்கு இன்னும் விளங்கவில்லை. மனக்குழப்பமே அதிகமாயிற்று. "என்னடா அதிசயம்! குற்றுயிராகும் வரையில் தலையிலும் முதுகிலும் மாறி மாறிக் குத்தியவன் நான். என்னவோ திருடன் திருடன் என்கிறானே?' என்று திகைத்தான். அன்று சாயங்காலம் சாராயக் கடைக்குப் போனான். அங்கே விசாரித்து விஷயங்களையெல்லாம் நன்றாகத் தெரிந்துகொண்டான். அன்றிரவு வந்து வீட்டில் சுரமாகப் படுத்தவன் அப்புறம் ஒரு மாதம் வரை எழுந்திருக்கவில்லை.
---------------
6. அமர வாழ்வு
முன்னுரை
பர்மாவிலிருந்து தாய்நாட்டிற்குத் திரும்பி வந்த பிறகு என் உள்ளம் அமைதி இழந்து அலைப்புண்டிருந்தது. ஓரிடத்தில் நிலையாக இருப்பது சாத்திய்மில்லாமல் போயிற்று. என் மனோநிலையை வியாஜ்யமாகக் கொண்டு தேச யாத்திரை செய்யத் தொடங்கினேன். அந்த தேச யாத்திரையைப் பெரும்பாலும் வட இந்தியாவிலேயே செய்யும்படி தூண்டிய காரணம் ஒன்று இருந்தது.
வீர ராஜபுத்திரர்களின் நாட்டில் அதிசயமான வீரச் செயல்கள் நிகழ்ந்த புராதனமான கோட்டை கொத்தளங்களையும், பாழடைந்த பழைய ஊர்களையும் அழகு குடி கொண்ட புதிய பட்டணங்களையும் அந்தப் பட்டணங்களிலே லீலா விநோதங்களுக்குப் பெயர் போன சிருங்கார அரண்மனைகளையும் சுற்றிப் பார்த்துச் சலித்த பிறகு, கடைசியாக, அஜ்மீர் ஸ்டேஷனிலிருந்து பம்பாய்க்குப் போவதற்கு டிக்கட் வாங்கினேன். ஆஜ்மீரில் டிக்கட் கொடுத்த ஸ்டேஷன் குமாஸ்தா ஒரு எச்சரிக்கை செய்தார். "வழியில் ரட்லம் சமஸ்தானத்தில் ஏதோ கலாட்டா நடப்பதாகத் தெரிகிறது. கால திட்டப்படி ரயில் போய்ச் சேர்வது நிச்சயமில்லை. நீங்கள் வேறு மார்க்கமாய்ப் போவது நல்லது!" என்று அவர் சொன்னார்.
அதற்கு நான், "எத்தனையோ கலாட்டாக்களை நான் பார்த்திருக்கிறேன் ஐயா! பரவாயில்லை. டிக்கட் கொடுங்கள்" என்றேன்.
ஆஜ்மீர் ஸ்டேஷனில் ஜனங்கள் அங்கங்கே கும்பல் கூடிப் பரபரப்புடன் பேசிக் கொண்டிருந்த விஷயம் என்னவென்பது மேற்படி டிக்கட் குமாஸ்தாவின் எச்சரிக்கையின் மூலம் எனக்குத் தெரிய வந்தது.
ரயில் புறப்பட்டபோது அதில் வழக்கத்துக்கு மாறாகக் கூட்டம் ரொம்பக் குறைவாக இருந்தது. ஏறியிருந்தவர்களில் போலீஸ்காரர்கள், இந்திய சிப்பாய்கள், இங்கிலீஷ் டாம்மிகள் ஆகியவர்கள் தான் அதிகமிருந்தார்கள்.
இத்தனை நாளும் ரயில் பிரயாணத்தில் கூட்டத்திலேயே கிடந்து அவஸ்தைப்பட்ட எனக்கு இது பெரிதும் உற்சாகத்திற்குக் காரணமாயிருந்தது. ஒருவருமே ஏறியிராத ஒரு இரண்டாம் வகுப்பு வண்டியைக் கண்டுபிடித்து அதில் ஏறிக் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டேன். பிரயாணத்துக்கான உடையைக் களைந்து விட்டுக் கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஹாய்யாகக் காலை நீட்டிக் கொண்டு படுத்தேன். ரயிலும் கிளம்பிற்று.
--------
1. ரட்லம் ஜங்ஷன்
நான் நிம்மதியான நினைவற்ற தூக்கம் தூங்கி எத்தனையோ காலம் ஆயிற்று. என்றாலும், ஓடும் ரயிலின் ஓசையும் சுழலும் சக்கரங்களின் சத்தமும் பெரும்பாலும் என்னைக் கண்ணயரச் செய்வது வழக்கம். எத்தனை நேரம் அன்று நான் தூங்கினேனோ தெரியாது. பழைய வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றிய கனவு கொண்டு திடீரென்று தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்தேன். ரயில் ஓடாமல் நிற்கிறது என்று தெரிந்தது. நிற்கிற இடம் ஸ்டேஷன் இல்லை என்று என் உள்ளுணர்வு சொல்லிற்று. ஸ்டேஷன் என்றால் அதற்கென்று தனி உரிமையுள்ள சில சப்தங்கள் கேட்கும். வண்டியில் இடம் பிடிக்க ஓடுகிறவர்களின் நடமாட்டம், ஏறி இறங்குகிறவர்களுடைய ஆர்ப்பாட்டம், 'கரம் சா' 'கரம் தூத்' கூப்பாடு, போர்ட்டர்களின் ஆரவாரம் - இவற்றிலிருந்து ரயில் பெரிய ஜங்ஷனிலோ சிறிய ஸ்டேஷனிலோ நிற்கிறதென்பதைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், இங்கே அம்மாதிரி சப்தங்கள் இல்லை. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து இனந்தெரியாத சப்தங்கள் கேட்டன. வண்டியின் பலகணி ஒன்றைத் திறந்து உள்ளே குப் என்று புகுந்த குளிர்ந்த பனிக் காற்றைப் பொருட்படுத்தாமல் வெளியே தலையை நீட்டினேன். என்னைப் போலவே பல தலைகள் வண்டிக்கு வெளியே நீட்டப்பட்டிருந்தன. ஒரு சிலர் கீழே இறங்கி ரயிலோரமாக நடந்து கொண்டிருந்தார்கள். எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு பட்டணம் இருப்பது தெரிந்தது. எப்படித் தெரிந்தது என்றால், அந்தப் பட்டணத்தில் ஆங்காங்கே சில வீடுகள் தீப்பிடித்து எரிய, மேற்படி தீயின் வெளிச்சத்தில் பட்டணம் தெரிந்தது! பட்டணம் தெரிந்த திசையிலிருந்து படார், படார் என்று துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் சத்தம் வந்து கொண்டிருந்தது.
அடுத்த வண்டியிலிருந்து தலையை நீட்டியவரைப் பார்த்து, "என்ன ஸார், விசேஷம்! ரயில் எங்கே வந்திருக்கிறது?" என்று கேட்டேன். "ரட்லம் ஸ்டேஷனுக்கு அருகில் வந்திருக்கிறது; டவுனில் ஏதோ கலாட்டா நடப்பது போல் காண்கிறது!" என்றார்.
ஆஜ்மீர் ஸ்டேஷனில் டிக்கட் குமாஸ்தா சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டேன்.
சில நிமிஷத்துக்கெல்லாம் ரயில் கார்டின் விஸில் சப்தம் கேட்டது; ரயிலும் புறப்பட்டது. மெதுவாக நகர்ந்து சென்று கை காட்டி மரத்தைத் தாண்டி ரட்லம் ஸ்டேஷனுக்குள் போய் நின்றது. வண்டியிலிருந்த சிப்பாய்கள் முதலியோர் மளமளவென்று கீழே இறங்கினார்கள். பிளாட்பாரத்தில் அங்குமிங்கும் ஜனங்கள் கும்பல் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கம் போன ஸ்டேஷன் அதிகாரி ஒருவரை நிறுத்தி, "என்ன ஐயா விசேஷம்? வண்டி இதற்கு மேல் போகுமா? போகாதா?" என்று கேட்டேன். அவர் தமது வாயிலிருந்த சிகரெட்டை எனக்குப் பதில் சொல்வதற்காக எடுக்கலாமா, வேண்டாமா என்று சிறிது யோசனை செய்துவிட்டுப் பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய், "கொஞ்ச தூரத்துக்கப்பால் ரயில் பாதை சேதமாயிருக்கிறது. செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் பொழுது விடிந்தபிறகுதான் ரயில் புறப்படும்" என்றார்.
உடனே நான் படுக்கையை சுற்றிக் கட்டினேன். களைந்து வைத்த உடுப்பைப் போட்டுக் கொண்டேன். கஷ்டப்பட்டு ஒரு போர்ட்டரைக் கண்டுபிடித்துப் பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொள்ளச் செய்தேன். மேற்பாலத்தில் ஏறி இறங்கி முதல் நம்பர் பிளாட்பாரத்தில் இருந்த வெயிட்டிங் ரூமுக்குப் போய்ச் சேர்ந்தேன்.
வெயிட்டிங் ரூமில் விளக்கு எரியவில்லை. வெளியில் பிளாட்பாரத்து விளக்கிலேயிருந்து மங்கலான வெளிச்சம் வந்தது. அறை அடியோடு காலி என்று முதலில் தோன்றியது. அப்புறம் சுற்றும் முற்றும் நன்றாய்ப் பார்த்ததில் அந்த எண்ணம் தவறு என்று தெரிந்தது. சுவர் ஓரமாகக் கிடந்த தாழ்ந்த பிரம்புக் கட்டிலில் ஒரு மனிதர் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய முகம் சுவரின் பக்கமாகத் திரும்பியிருந்தபடியால் அவர் யார், இன்ன மாதிரி மனிதர் என்று இனம் தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு வட்ட மேஜையும், அதன் இரண்டு பக்கங்களில் இரண்டு நாற்காலிகளும் கிடந்தன. சாமான்களைக் கீழே வைக்கச் சொல்லிவிட்டு ஒரு நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். போர்ட்டரிடம் மறுபடியும் ரயில் கிளம்பும் போது வந்து கூப்பிடும்படி சொன்னேன்.
போர்ட்டர் போன பிறகு சிறிது நேரம் வட்ட மேஜை மீது கைகளை ஊன்றிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். என் பிறப்பு வளர்ப்பைப் பற்றியும், வாழ்க்கையில் நான் அடைந்த அனுபவங்களைப் பற்றியும் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இந்த மாதிரி முன் பின் தெரியாத ஒரு வடநாட்டு ரயில்வே ஸ்டேஷனில் ஒரு நாள் நள்ளிரவில், நான் தன்னந் தனியாக உட்கார்ந்திருப்பேன் என்று நாலைந்து வருஷங்களுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், சொல்லியவருக்குப் பைத்தியக்காரப் பட்டம் சூட்டியிருப்பேன்.
என்ன அர்த்தமற்ற காரியம் இது? என் வாழ்க்கையையே இப்படி அர்த்தமற்றதாகத்தான் போய் விடுமோ?
'டப் டப் டப்பார்' என்று துப்பாக்கி வெடிச் சத்தம் மறுபடியும் கேட்டது. சுவருக்கருகில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த மனிதர் ஒரு தடவை புரண்டு படுத்தார். மறுபடியும் ஒரு நொடிப் பொழுதில் அவருடைய முகம் சுவரின் பக்கமாகத் திரும்பி விட்டது.
-------------
2. ஜே ஹிந்த்!
என்னுடைய கண்ணிமைகளும் லேசாக வளைந்து கொடுக்கத் தொடங்கின. படுக்கையைத் தரையில் விரித்துக் கொண்டு படுக்கலாமென்று எண்ணி நாற்காலியிலிருந்தபடியே குனிந்து படுக்கையைப் பிரித்தேன். அப்போது யாரோ ஒருவர் அந்த அறைக்குள்ளே வருவது தெரிந்தது. குனிந்தபடியே கடைக்கண்ணால் வருவது யார் என்று கவனித்தேன். அவ்வளவுதான்; என் கைகள் வெட வெட என்று நடுங்கத் தொடங்கின. படுக்கையைக் கட்டியிருந்த தோல் வாரைக் கழற்ற முடியவில்லை. வெளியே எங்கேயோ தூரத்தில் கேட்ட துப்பாக்கி வெடியின் சத்தம் இப்போது என் நெஞ்சுக்குள்ளே வெடிப்பது போல் கேட்டது. சட்டென்று ஒரு பெரு முயற்சி செய்து மனதை திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். உள்ளே வந்த மனிதர் சுவர் ஓரமாகப் பெட்டி படுக்கையை வைத்து விட்டு வந்து எனக்கெதிரே வட்ட மேஜைக் கருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
முதலில் அவர் என்னைப் பார்க்கவில்லை. வெயிட்டிங் ரூமில் வாசல் வழியாகப் பிளாட்பாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு, நான் அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததை உணர்ந்ததினால் தானோ என்னமோ, என் பக்கமாகப் பார்த்தார். முதலில் அசட்டையாகப் பார்த்தார்; பிறகு உற்றுப் பார்த்தார்.
"ஜே ஹிந்த்!" என்றார்.
அந்தக் குரலும் வார்த்தைகளும் என் உள்ளத்தில் அடங்கிக் கிடந்த எத்தனையோ உணர்ச்சிகளைப் பொங்கும்படிச் செய்தன. மிகவும் பிரயத்தனப்பட்டு உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சிகளையும் கண்களிலே துளிக்கப் பார்த்த கண்ணீரையும் அடக்கிக் கொண்டு கம்மிய குரலில் நானும் "ஜே ஹிந்த்!" என்று வாழ்த்தினேன்.
"தமிழர் போலிருக்கிறது" என்றார்.
"ஆமாம்!" என்றேன்.
"நாம் எங்கேயாவது சந்தித்திருக்கிறோமா? உமது முகம் பார்த்த முகமாய்த் தோன்றுகிறது; ஆனால் எங்கே பார்த்தோமென்று ஞாபகம் வரவில்லை" என்றார்.
அவருக்கு ஞாபகம் வராததற்கு மங்கலான வெளிச்சத்தைத் தவிர வேறு காரணமும் உண்டு என்பதை நான் அறிந்திருந்தேன். பேச்சைத் திருப்ப விரும்பினேன்.
"பர்மா அல்லது மலாயில் பார்த்திருக்கலாம். அந்த குழப்பமான காலத்தில் பார்த்த பதினாயிரம் முகங்களில் எதையென்று ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும்?" என்று சொல்லி, மேலே அவர் பேச இடங்கொடாமல், "இந்த இருளடைந்த ஸ்டேஷனிலிருந்து ரயில் எப்போது கிளம்பும், ஏதாவது தெரியுமா?" என்று கேட்டேன்.
"அதுதானே தெரியவில்லை. நீங்கள் எந்தப் பக்கம் போக வேண்டுமோ?"
"பம்பாய்ப் பக்கம் போகிறேன்."
"நான் டில்லிக்குப் போக வேண்டும்."
"டில்லிக்கா? நீங்கள் டில்லி செங்கோட்டையில் நடந்த விசாரணையில்..." என்று தயங்கினேன்.
"இல்லை; நான் செங்கோட்டைக் கைதியில்லை. பர்மாவிலிருந்து நேரே வந்தவன், செங்கோட்டையிலிருந்து விடுதலையான ஒரு மனிதரைத் தேடிக் கொண்டு பம்பாய்க்குப் போனேன். அதற்குள்ளே அவர் பம்பாயிலிருந்து கிளம்பிப் போய்விட்டதாகத் தெரிந்தது... உங்களுக்கு மேஜர் ஜெனரல் குமரப்பாவைத் தெரியுமா!" என்று அவர் திடீரெனக் கேட்டார்.
"குமரப்பாவைத் தெரியாமலிருக்க முடியுமா? நேதாஜிக்கு அடுத்தபடியாக ஐ.என்.ஏ. வீரர்களின் பக்தியைக் கவர்ந்த மகாபுருஷர் அல்லவா?"
"ஆமாம்; அந்த மகா புருஷரைத் தேடிக் கொண்டுதான் போகிறேன். எதற்காகத் தெரியுமா?"
"தெரியவில்லையே?" என்று தயங்கிக் கூறினேன்.
அவர் தம்முடைய கால் சட்டையின் பைக்குள்ளே கையை விட்டு ஒரு ரிவால்வரை எடுத்து என் முகத்துக்கு நேரே அதைப் பிடித்தார்.
"இதிலே ஆறு குண்டுகள் இருக்கின்றன. ஆறில் ஐந்து குண்டுகளையாவது குமரப்பாவின் மார்பில் செலுத்துவதற்காகத்தான். ஒன்று, இரண்டு, மூன்று..."
என்னுடைய உள்ளத்தில் அப்போது குமுறி எழுந்த அலைகளை அடக்கிக் கொண்டு, "இது என்ன பேச்சு பேசுகிறீர்கள்? தயவுசெய்து ரிவால்வரைச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள்!" என்றேன்.
அவர் அப்படியே செய்தார். பிறகு இரண்டு கைகளாலும் சிறிது நேரம் முகத்தை மூடிக் கொண்டிருந்தார்.
"ஏதோ ரொம்பவும் மன வேதனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்!" என்றேன்.
அவர் தமது முகத்தை மூடியிருந்த கைகளை எடுத்துவிட்டு, "இந்தப் பிரயாணம் தடைப்பட்டதினால் ரொம்பவும் மனத்தளர்ச்சியடைந்து விட்டேன். தயவு செய்து மன்னியுங்கள்" என்றார்.
"ரயில் இன்று இரவு கிளம்பப் போவதில்லை. நம் இருவருக்கும் தூக்கம் வரவும் இல்லை. நீங்கள் உங்கள் அநுபவங்களைச் சொன்னால், நானும் பிற்பாடு என் கதையைச் சொல்கிறேன். இராத்திரி பொழுது போகும்" என்றேன்.
"நீரும் ஐ.என்.ஏ. சகோதரர்; அதிலும் தமிழ் நாட்டாராயிருக்கிறீர். உம்மிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வது? ஆனால் கதையை எந்த இடத்தில் ஆரம்பிக்கிறது என்று தான் யோசிக்கிறேன்!"
"சுதந்திரப் படையில் தாங்கள் சேர்ந்ததிலிருந்து ஆரம்பிக்கலாமே?" என்றேன்.
"இல்லை, இல்லை; கதையைச் சொல்வதாயிருந்தால் முதலிலிருந்தே தொடங்குவதுதான் சரி!" என்று சொல்லிவிட்டு, சுவர் ஓரமாகக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த மனிதரைத் திரும்பிப் பார்த்தார்.
"அவர் அசந்து தூங்குகிறார். மேலும் யாரோ வடக்கத்தி மனுஷர் என்று தோன்றுகிறது. நாம் தமிழில் பேசினால் அவருக்கு என்ன தெரியப் போகிறது?" என்றேன்.
இன்னும் கொஞ்சம் தாஜா பண்ணிய பிறகு அவர் தமது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
-------------
3. கர்னல் குமரப்பா
கதாநாயகனுடைய பெயர் டாக்டர் ராகவன். செல்வக் குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய தகப்பனார் ஒரு பிரபல டாக்டர். தமது புதல்வனும் தம்மைப் போல் வைத்தியத் தொழிலில் பிரபலமாக வேண்டுமென்று அவர் விரும்பினார். தந்தையின் விருப்பத்தைப் புதல்வன் வெகு நன்றாக நிறைவேற்றி வைப்பான் என்று தோன்றியது. வைத்தியக் கல்லூரியில் படித்து மிகச் சிறப்பாகத் தேறினான். பிறகு அவன் தமக்கு உதவியாகப் 'பிராக்டிஸ்' செய்ய வேண்டுமென்று தந்தை விரும்பினார். ஆனால் பையனுக்கு வைத்திய சாஸ்திரத்தில் ஏற்பட்டிருந்த அபார மோகமானது அதற்கு குறுக்கே நின்றது. "நமது மெடிகல் காலேஜில் இப்போது சொல்லிக் கொடுப்பதெல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னாலிருந்த வைத்திய சாஸ்திரம். சென்ற பத்து வருஷத்தில் எத்தனையோ அதிசயங்களை மேனாட்டு வைத்திய நிபுணர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். நான் அமெரிக்காவுக்குப் போய் அவற்றைக் கற்றுக் கொண்டு வருகிறேன்" என்றான். பிள்ளையின் பிடிவாதமான கோரிக்கைக்குத் தகப்பனாரும் சம்மதிக்க வேண்டியிருந்தது.
ராகவன் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகும் அவன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கக் கூடவில்லை; பெரிய கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சம்பளமில்லாத உதவி ஸர்ஜனாகச் சேர்ந்தான். அவ்விதம் ஆஸ்பத்திரியில் வேலை செய்தால் தான் தன்னுடைய வைத்திய சாஸ்திர அறிவு விசாலித்துப் பரிபூரணம் அடையும் என்று சொன்னான்.
மகனுடைய நோக்கத்தை அறிந்து தகப்பனார் பெருமையடைந்தார். இவன் வெறுமே பணம் சம்பாதிப்பதற்காக வைத்தியம் செய்யப் பிறந்தவன் அல்ல. வைத்திய சாஸ்திரத்தையே விரிவுபடுத்தி மனித வர்க்கத்துக்கு நன்மை செய்யப் பிறந்தவன் என்று தீர்மானித்து அப்படியே செய்ய அனுமதி கொடுத்தார். அனுமதி கொடுத்துச் சில காலத்துக்கெல்லாம் அவர் வைத்தியம் என்பதே தேவையில்லாத மேல் உலகத்துக்குச் சென்றார்.
தந்தையினுடைய சரமக்கிரியைகளைச் சரிவரச் செய்வதற்குக் கூட டாக்டர் ராகவனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. அவ்வளவுதூரம் அவன் வைத்தியக்கலை அறிவின் வளர்ச்சியில் முழுகிப் போயிருந்தான். அவன் வேலை செய்த பெரிய ஆஸ்பத்திரியில் அவனுடைய இலாகாவுக்குத் தலைவராயிருந்தவர் கர்னல் குமரப்பா என்பவர். அவர் ஐ.எம்.எஸ். வர்க்கத்தைச் சேர்ந்தவர். சென்ற யுத்தத்தின் போது, போர்க்களத்துக்குப் போய் வந்தவர். பிற்பாடு ஐரோப்பாவுக்குச் சென்று வியன்னா நகரிலும் பெர்லின் நகரிலும் இருந்த பிரபலமான வைத்திய சாலைகளில் கொஞ்ச காலம் இருந்து தமது வைத்தியக் கலை ஞானத்தை வளர்த்துக் கொண்டு திரும்பியிருந்தார். எனவே வைத்திய உலகத்தில் அவருக்கு மிகவும் பிரசித்தமான பெயர் ஏற்பட்டிருந்தது. "யமதர்ம ராஜனுக்கு ஏதாவது ஆப்ரேஷன் பண்ணிக் கொள்ள நேர்ந்தால் அவன் கூடக் கர்னல் குமரப்பாவிடம் வந்துதான் ஆக வேண்டும்" என்று சொல்வார்கள்.
அத்தகையவர்களின் கீழே வேலை செய்வதால் தன்னுடைய வைத்திய ஞானத்தையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொள்ளலாம் என்று டாக்டர் ராகவன் எண்ணியிருந்தான். ஆனால் இது விஷயத்திலும் சீக்கிரத்திலே ஏமாற்றம் அடைந்தான். கர்னல் குமரப்பா இரண சிகிச்சையில் பெரிய நிபுணராயிருக்கலாம்; ஆனால் அவருக்கு வைத்தியக் கலையில் அவ்வளவு சிரத்தையில்லை என்று தோன்றியது. பல முக்கியமான ரண சிகிச்சை கேஸுகளை அவர் தமக்கு உதவியாக அமர்ந்த டாக்டர்களிடம் விட்டு வந்தார். ஏதாவது சந்தேகம் கேட்டால் சரியாகப் பதில் சொல்வதில்லை. கேள்வியை மனதில் சரியாக வாங்கிக் கொள்ளாமலே எதையோ கேட்பதற்கு எதையோ பதில் சொல்வது வழக்கமாயிருந்தது.
கரனல் குமரப்பா இப்படி மெய்ம்மறந்து எதிலும் சிரத்தையில்லாமல் ஏனோதானோ என்றிருப்பதற்கு ஒரு கெடுதலான காரணத்தைச் சிலர் கற்பித்துச் சமிக்ஞையாகப் பேசினார்கள். முதலில் அதை டாக்டர் ராகவன் கொஞ்சங் கூட நம்பாததோடு அப்படிப் பேசினவர்களைக் கடுமையாகக் கண்டித்தான்.
அந்த விஷயம் பின்வருமாறு: மெடிகல் காலேஜில் படித்துத் தேறியிருந்த டாக்டர் ரேவதி என்ற பெண் சென்ற வருஷத்தில் அந்த ஆஸ்பத்திரியில் ஒரு வருஷப் பயிற்சி பெரும் பொருட்டு, 'ஹவுஸ் ஸர்ஜனாக' வந்திருந்தாள். அவள் தேசத் தொண்டில் பிரசித்தி பெற்றிருந்த காலமான ஒரு தேச பக்தரின் மகள். கர்னல் குமரப்பா அந்தப் பெண்ணிடம் அளவுக்கு அதிகமான அபிமானம் காட்டுகிறார் என்று பொறாமைக்காரர்கள் சிலர் புகார் செய்தார்கள். இதைக் குறித்து ஆஸ்பத்திரிக்குள்ளேயும் வெளியேயும் சிலர் ஜாடைமாடையாகப் பேசினார்கள். இந்த மாதிரிப் பேச்சு காதில் விழுந்தபோதெல்லாம் டாக்டர் ராகவன் பளிச்சென்று, "இந்த தேசத்தில் மனதில் அசுத்தம் உள்ளவர்கள் யாரைப் பற்றியாவது ஏதேனும் அவதூறு சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். தங்களுடைய மனதிலுள்ள அசிங்கத்தைப் பிறர் மேல் ஏற்றி வைத்துப் பேசுவார்கள்" என்று வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடுவான்.
----------
4. காதல் யாத்திரை
எனினும் டாக்டர் ரேவதியின் மேல் கர்னல் குமரப்பாவின் விசேஷ அபிமானத்தைப் பற்றிக் கேட்ட பிறகு அவனுடைய கவனம் டாக்டர் ரேவதியின் மீது அதிகமாகச் செல்ல ஆரம்பித்தது. இது ரேவதியின் கவனத்தையும் கவர்ந்தது. முதல் தடவை பேசின உடனேயே ரேவதிக்கும் ராகவனுக்கும் சிநேகப் பான்மை ஏற்பட்டுவிட்டது. இதைக் 'காதல்' என்று யாராவது சொல்லியிருந்தால் சுத்த பைத்தியக்காரத்தனம் என்றுதான் டாக்டர் ராகவன் சொல்லியிருப்பான். ஆயினும் வரவர, காவியங்களிலே காதல் என்பதற்கு என்னென்ன இலட்சணங்கள் கூறப்பட்டிருக்கின்றனவோ, அவையெல்லாம் ராகவன் - ரேவதியினுடைய நடவடிக்கைகளில் காணப்படலாயின. ஏதாவது ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு ஒருவரையொருவர் அடிக்கடி சந்திக்கப் பிரயத்தனப் பட்டார்கள். ஒருவருடைய பேச்சு இன்னொருவருடைய காதுக்கு மிகவும் இனிமையளித்தது. தங்களை அறியாமலேயே ஒருவருடைய கண்கள் இன்னொருவருடைய கண்களை நாடிச் சென்றன்.
அதோடு நின்றுவிடவில்லை. சில நாளைக்கெல்லாம் டாக்டர் ராகவனுடைய மனதில் பொறாமை என்னும் தீ பற்றி எரியத் தொடங்கியது. டாக்டர் ரேவதி வேறு எந்த ஆண் டாக்டரோடாவது நெருங்கிப் பேசுவதைப் பார்த்தால் ராகவனுக்குக் கோபம் வந்தது. எந்த ஆண் நோயாளியிடமாவது ரேவதி சிரத்தை எடுத்துக் கவனித்தாலும் கூட ராகவனுக்குப் பொறுக்க முடியவில்லை.
இந்த நிலையில் டாக்டர் குமரப்பாவையும், ரேவதியையும் பற்றிய வம்புகள் பேச்சுக்கள் ராகவனுடைய நினைவுக்கு அடிக்கடி வந்து உறுத்தத் தொடங்கின. அவற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கலாமென்று அவன் மனம் யோசனை செய்யத் தொடங்கியது. டாக்டர் குமரப்பாவைத் தனிமையாக அவருடைய அறையில் பார்த்துவிட்டு ரேவதி திரும்பும் போது, ராகவன் அவளைக் கவனமாகப் பார்க்கத் தொடங்கினான். அப்போதெல்லாம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக படபடப்புடன் அவள் வருவதையும் சில சமயம் அவளுடைய கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிர்த்திருப்பதையும் பார்த்த போது அவனுடைய உள்ளம் கொதித்தது. ரேவதியை இதைப் பற்றிக் கேட்டே விடுவது என்று அவன் முடிவாகத் தீர்மானித்திருந்த சமயத்தில் ஒரு நாள் அவனிடம் வந்து, "டாக்டர், நான் பெரிய அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தங்களுடைய யோசனையும் உதவியும் எனக்கு வேண்டும்" என்று பரபரப்புடன் கூறினாள். அன்று மாலை ஆஸ்பத்திரி வேலை முடிந்தவுடன் தன்னுடைய வீட்டுக்கு வந்து சந்திக்கும்படி சொன்னான் ராகவன்.
அப்படியே அன்றிரவு ரேவதி ராகவனுடைய வீட்டுக்குச் சென்று தன் வாழ்க்கை வரலாற்றைக் கூறினாள். வாழ்நாளெல்லாம் தேசத் தொண்டு செய்த தன் தந்தை எப்படி பூர்வீக பிதிரார்ஜித சொத்தையெல்லாம் செலவழித்து விட்டுக் குடும்பத்தை நிராதரவாய் விட்டு விட்டுக் காலமானார் என்பதையும், தன்னைத் தக்க இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்கத் தன் தாயார் செய்த பிரயத்தனங்கள் எப்படிப் பலனளிக்காமல் போயின என்பதையும், தன்னுடைய சொந்த முயற்சியால் அநாதைப் பெண்கள் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து தேறி மெடிகல் காலேஜிலும் சேர்ந்து படித்து டாக்டர் ஆனதையும் பற்றித் தெரிவித்தாள். கர்னல் குமரப்பா முதலில் தன்னிடம் காட்டிய அன்பைக் குறித்துப் பெருமையடைந்து வந்ததையும், மற்றவர்களின் அவதூறான ஜாடைமாடைப் பேச்சுக்களை அலட்சியம் செய்து வந்தது பற்றியும் குறிப்பிட்டாள். கடைசியாக ரேவதி சொன்னாள்: "டாக்டர் ராகவன்! கொஞ்ச நாளாக எனக்கே இது விஷயத்தில் சந்தேகம் உண்டாயிருந்தது. கர்னலின் நடை உடை பாவனைகள் அவ்வளவு நன்றாயில்லை. அவரை நான் தனியாக அவருடைய அறையில் சந்திக்க நேரும் போதெல்லாம் என் முதுகில் தட்டிக் கொடுத்தும் கன்னங்களைத் தொட்டும் முகவாய்க் கட்டையைப் பிடித்துக் கொண்டும் "ரேவதி! உன்னைத் தான் நான் முழுக்க முழுக்க நம்பியிருக்கிறேன். ஒரு சமயம் வரும்; அப்போது என்னை நீ நம்பி நான் சொன்னபடி கேட்க வேண்டும்; கேட்பாயல்லவா?" என்று இவ்விதமெல்லாம் சொல்கிறார். இன்றைக்கு அவர், 'ரேவதி நான் மறுபடியும் வெளிநாட்டுப் பிரயாணம் செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன், என்னோடு நீ கிளம்பி வருகிறாயா?' என்று கேட்டபோது எனக்கு ஆத்திரம் உண்டாகி என் கண்களில் கண்ணீரும் வந்துவிட்டது. அதைப் பார்த்த கர்னல், 'ஆ! நீ ரொம்ப நல்ல பெண்ணாயிருந்தாய்! உன்னிடம் நான் எவ்வளவோ எதிர்பார்த்தேன். என்னுடைய காரியத்துக்குக் கைகொடுப்பாய் என்று நம்பியிருந்தேன்; அந்த மூடன் ராகவன் உன் மனதைக் கெடுத்து விட்டான்!' என்றார். பிறகு அங்கே நிற்க முடியாமல் விரைந்து வந்துவிட்டேன்!"
இவ்விதம் ரேவதி கூறியதைக் கேட்டு கொண்டிருந்த ராகவன் சிறிதுநேரம் மௌனமாக ஆலோசனையில் இருந்தான். பிறகு, "என் அருமை ரேவதி! ஒரு விஷயம் கேட்கிறேன். அதற்குச் சங்கோசப்படாமல் பதில் சொல்ல வேண்டும். கர்னல் குமரப்பா மனைவியை இழந்தவர் என்பது உனக்குத் தெரியும். ஒரு வேளை உன்னை இரண்டாந்தாரமாக கல்யாணம் செய்துகொள்ள அவர் விரும்பலாம் அல்லவா?" என்றேன்.
"அந்தச் சந்தேகம் என் மனதிலும் சில சமயம் தோன்றியதுண்டு" என்று ரேவதி சொன்னாள்.
"அப்படியானால் அதைப்பற்றி உனக்கு என்ன ஆட்சேபம்? கர்னல் குமரப்பாவை மணந்து கொள்ளும் பாக்கியம் தள்ளக்கூடியதல்லவே?" என்ற கூறி, ரேவதியின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தான் ராகவன்.
"ஒருவேளை மூன்று மாதத்துக்கு முன்னால் அவர் கேட்டிருந்தால் அதில் எனக்கு ஆட்சேபமிருந்திராது. இப்போது ஆட்சேபமிருக்கிறது" என்றாள் ரேவதி.
"அது ஏன்? மூன்று மாதத்திற்குள் அதற்கு விரோதமாக என்ன காரணம் ஏற்பட்டிருக்கிறது?"
"தங்களுடன் சிநேகம் செய்து கொண்டது தான்!" என்று ரேவதி கூறியபோது, என்னதான் அவள் கல்வியும் நாகரிகமும் படைத்த நவயுகப் பெண் ஆனாலும் கொஞ்சம் தலை குனியத்தான் செய்தாள்.
ரேவதி இவ்விதம் தன் மனோநிலையை ஒருவாறு குறிப்பிட்ட பிறகு, பரஸ்பரம் இருவரும் தத்தம் இருதயத்தை நன்றாய்த் திறந்து காட்டுவதற்கு வழி ஏற்பட்டது. ராகவனுடையை வாழ்க்கையோடு தன்னுடைய வாழ்க்கையை என்றென்றைக்கும் பிணைத்துக் கொள்ளவும், அவனுக்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யவும் ரேவதி சித்தமாயிருந்தாள் என்று ஏற்பட்டது. ராகவனோ ரேவதியின் கடைக்கண் பார்வைக்காக, பாரதியார் வாக்கின் பிரகாரம் நூற்றிரண்டு மலைகளைப் பொடிப் பொடியாக்கவும் காற்றிலேறி விண்ணைப் பிளக்கவும் தயாராயிருந்தான்.
கடைசியில் ராகவன் சொன்னான்:-"என் கண்ணே! பொறாமையும், பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்த இந்த தேசமே எனக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும் வழியில் நான் மலாய் நாட்டில் இறங்கிச் சில நாள் தங்கியிருந்தேன். பூலோகத்தில் சொர்க்கம் உண்டு என்று சொன்னால் அது மலாய் நாடுதான். அந்த நாட்டுக்கு நாம் போய் விடலாம், வருகிறாயா?"
மேற்படி யோசனையை மறு பேச்சின்றி ரேவதி ஒப்புக் கொண்டாள். தீர்மானம் செய்த ஒரு மாதத்துக்கெல்லாம் இருவரும் கப்பலேறி மலாய் நாட்டை அடைந்தார்கள். கோலாலம்பூரில் ஜாகை ஏற்படுத்திக் கொண்டு வைத்தியத் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். ஒன்றரை வருஷ காலம் அவர்களுடைய வாழ்க்கை உண்மையில் சொர்க்க வாழ்க்கையாகவே இருந்து வந்தது.
-----------
5. நேதாஜி விஜயம்
நிர்மலமான நீல வானத்திலிருந்து திடீரென்று இடி விழுந்தது போல், ஒரு நாள் ஜப்பான் அமெரிக்காவைத் தாக்கி யுத்தம் தொடங்கிய செய்தி வந்தது. அதன் பலனாகப் பிரிட்டன் ஜப்பான் மீது போர் தொடங்கியது. சிங்கப்பூரில் இரண்டு பிரமாண்டமான பிரிட்டிஷ் யுத்தக் கப்பல்கள் ஜப்பான் ஆகாச விமானிகளால் தாக்குண்டு கடலுக்கடியில் சென்றன. சில நாளைக்கெல்லாம் மலாய் நாட்டின் மீது ஜப்பானின் படையெடுப்புத் தொடர்ந்தது. சரித்திரத்திலேயே இல்லாத மிகவும் சொற்ப காலத்தில் மலாய் நாடு ஜப்பானுடைய வசமாயிற்று. அப்போதெல்லாம் ராகவனும் ரேவதியும் ஒரே பீதியிலும், கவலையிலும் ஆழ்ந்திருந்தார்கள். ஜப்பானியக் கொலைகாரர்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் பயங்கர விபரீதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தலைவெட்டி ராஜாங்கத்தில் எந்த நிமிஷம் யாருடைய தலைக்கு ஆபத்துவருமோ, யார் கண்டது? சாக நேர்ந்தால் இருவரும் கை கோர்த்துக் கொண்டு சாக வேண்டுமென்று அவர்கள் திட சங்கல்பம் செய்து கொண்டிருந்தார்கள். இப்படிச் சில மாத காலம் சென்றது. பிறகு அந்த மகத்தான சம்பவம் உலக சரித்திரத்தையே மாற்றியமைக்கக் கூடிய சம்பவம் ஏற்பட்டது. ஸ்ரீ சுபாஷ் சந்திரபோஸ் மலாய் நாட்டுக்கு வந்து சுதந்திர இந்திய அரசாங்கத்தை ஸ்தாபித்தார். அவருடைய அரசாங்கம் ஆட்சி புரிவதற்கு அப்போது ஒரு சாண் அகல பூமி இல்லாவிட்டாலும், மலாய் நாட்டிலுள்ள இந்தியர்கள் எல்லோரும் தாங்கள் சுதந்திர இந்திய அரசாங்கத்தின் கீழ் வாழ்கிறோம் என்ற உணர்ச்சி பெற்றார்கள். அவர்களுடைய தோள்கள் பூரித்து உயர்ந்தன. அவர்கள் மார்புகள் விசாலித்து நிமிர்ந்தன. இதற்கு முன் எக்காலத்திலும் அறிந்திராத பெருமித உற்சாகமும் குதூகலமும் அவர்களுடைய உள்ளத்தில் பொங்கித் ததும்பின.
நேதாஜியின் சுதந்திர இந்திய அரசாங்கத்தைப் பல தேசத்து அரசாங்கங்கள் அங்கீகரித்தன. அதற்கு முன்னால் இந்தியர்களைப் புழுக்களைப் போல் மதித்து நடத்திய ஜப்பானியர், நேதாஜியின் வருகைக்குப் பிறகு இந்தியரிடம் மிக்க மரியாதை காட்டத் தொடங்கினார்கள். இந்தியரின் உயிருக்கும், சொத்து சுதந்திரங்களுக்கும் தக்க பாதுகாப்பு ஏற்பட்டது.
நேதாஜியின் நோக்கம் என்னவென்பது சீக்கிரத்திலேயே தெரிய வந்தது. இந்திய சுதந்திர சைன்யம் ஒன்றை அமைத்துக் கொண்டு இந்தியாவுக்குப் படையெடுத்துச் சென்று பிரிட்டிஷாரைத் துரத்தி விட்டு புது தில்லியில் பூரண சுதந்திரக் கொடியை உயர்த்துவது தான் அவருடைய உத்தேசம் என்று தெரிந்தது. இந்த எண்ணத்துடன் நேதாஜி இந்திய சுதந்திரப் படை திரட்டத் தொடங்கினார். அதுவரையில் எச்சிற் கையினால் காக்கை ஓட்டாத லோபிகளாயிருந்தவர்கள் உள்பட மலாயிலும் பர்மாவிலும் வாழ்ந்த இந்தியர்கள் பதினாயிரம், லட்சம் என்ற கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள். கனவிலே கூடப் போர்க்களம் செல்வது பற்றி எண்ணி அறியாதவர்கள் நேதாஜியின் சுதந்திரப் படையில் சேரத் தொடங்கினார்கள். அப்படி சுதந்திரப் படையில் முதன் முதலில் சேர்ந்தவர்களில் டாக்டர் ராகவனும், டாக்டர் ரேவதியும் இருந்தனர். தங்கள் மூலமாகப் பாரதத் தாயின் விடுதலை நடைபெற வேண்டியிருக்கிறதென்றும், அதனாலேதான் தங்களைக் கடவுள் மலாய் நாட்டில் கொண்டு வந்து சேர்த்தார் என்றும் இப்போது அந்தத் தம்பதிகள் பூரணமாக நம்பினார்கள். மலாயிலிருந்து பர்மாவுக்குப் போன முதல் கோஷ்டியோடு புறப்பட்டுச் சென்றார்கள்.
சில தினங்களுக்கெல்லாம் ரங்கூனிலிருந்து இந்திய சுதந்திரப் படையானது 'ஜே ஹிந்த்!' 'டில்லி சலோ!' என்று வானளாவக் கோஷமிட்டுக் கொண்டும்,
"கதம் கதம் படாயே ஜா
குஷீகே கீத காயே ஜா"
என்னும் சுதந்திரப் போர் கீதத்துடனும் அஸ்ஸாம் எல்லைப் புறத்தை நோக்கிக் கிளம்பியது. கிளம்பிய போது அந்தப் படையைச் சேர்ந்தவர்களின் உற்சாகத்துக்கு அளவே கிடையாது. நேதாஜி நேரில் வந்திருந்து அவர்கள் புறப்படும் போது பேசிய பேச்சு மரக்கட்டைக்குக் கூடச் சுதந்திர வீர உணர்ச்சியை ஊட்டக் கூடியதாயிருந்தது. அப்படியிருக்க, ஏற்கனவே தாய் நாட்டின் விடுதலைக்காக உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்யச் சித்தமாயிருந்தவர்களைப் பற்றிக் கேட்பானேன்? புது டில்லியில் சுதந்திரக் கொடியை உயர்த்தி நேதாஜியை இந்தியக் குடியரசின் முதல் அக்கிராசனராகச் செய்யும் வகையில் முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லையென்று பிரக்ஞை செய்து கொண்டு அவ்வீரர்கள் கிளம்பினார்கள். அத்தகைய சுதந்திர ஆவேச வெறி டாக்டர் ராகவனையும் கொள்ளை கொண்டிருந்தது. ஆயினும் அவனுடைய உற்சாகத்தை ஓரளவு குறைப்பதற்குரிய இரு காரணங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று ரேவதியைப் பிரிந்து போக வேண்டியிருக்கிறதே என்பது. ஏனெனில் ரேவதி சேர்ந்திருந்த பெண்கள் படை போர் முனைக்கு உடனே அனுப்பப்படவில்லை.
இவ்விதம் ஒருவரையொருவர் பிரிய நேர்ந்தது அவர்கள் இருவருக்குமே மனவேதனையை அளித்தது. என்றாலும், அவர்கள் ஈடுபட்டிருந்த மகத்தான இலட்சியத்தை முன்னிட்டு ஒருவாறு மனதைத் திடப்படுத்திக் கொண்டு பிரியத் தயார் ஆனார்கள். மறுபடியும் சந்தித்தால் சுதந்திரப் பாரத தேசத்தில் சந்திப்பது, இல்லாவிடில் வீர சொர்க்கத்தில் சந்திப்பது என்று ஒருவருக்கொருவர் வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பிரிந்தார்கள்.
ரேவதியின் பிரிவினால் ஏற்பட்ட மனச் சோர்வை ஒருவாறு ராகவன் சமாளித்துக் கொண்டான். ஆனால் வேறொரு காரணத்தினால் மனதில் ஏற்பட்ட சங்கடம் அவ்வளவு சுலபமாக சமாளிக்கக் கூடியதாயில்லை. அந்தக் காரணம் ராகவன் சேர்ந்திருந்த சுதந்திரப் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் குமரப்பா என்பதுதான்!
முதலில் இந்த உண்மை தெரிந்ததும் ராகவன் ஆச்சரியத்தினால் திகைத்துப் போனான். விசாரித்து அவர் எப்படி இந்திய சுதந்திரப் படையில் மேஜர் ஜெனரல் ஆனார் என்பதைத் தெரிந்து கொண்டான். பர்மாவை ஜப்பானியரிடமிருந்து பாதுகாப்பதற்காக முதன் முதலில் ரங்கூனுக்கு வந்த மதராஸிப் படையில் ஐ.எம்.எஸ்.டாக்டர் என்ற முறையில் அவர் வந்து சேர்ந்த சில நாளைக்குள்ளே ஜப்பானியரால் நாற்புறமும் சூழப்பட்டு சரணாகதி அடைய நேர்ந்தது. சரணாகதி அடைந்தவர்கள் எல்லோரும் முதலில் சிறையில் வைக்கப் பட்டிருந்தார்கள். பிறகு, அவர்களிலே நேதாஜியின் சுதந்திரப் படையில் சேர இசைந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அப்படி விடுதலையானவர்களில் கர்னல் குமரப்பாவும் ஒருவர். நேதாஜியின், விசேஷ அபிமானத்துக்கு அவர் சீக்கிரத்தில் பாத்திரராகி சைன்யத்தின் டாக்டராக இருப்பதற்குப் பதிலாக மேஜர் ஜெனரல் என்ற பட்டத்துடனே ஒரு பெரிய சைன்யப் பகுதிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதையெல்லாம் அறிந்த பிறகு ராகவனுடைய ஆச்சரியம் நீங்கிற்று. ஆனால் மனதில் ஒருவித திகில் மட்டும் இருந்து கொண்டிருந்தது. மேலும் ஜெனரல் குமரப்பா நமது கதாநாயகன் ராகவனை ஏற்கனவே தெரிந்தவர் என்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை. இது ராகவனுடைய மன அமைதி குலைவதற்கு பெரிதும் காரணமாயிருந்தது.
-----------
6. கிராதகன் உள்ளம்
வழிப் பிரயாணத்தில் நேர்ந்த சகிக்க முடியாத கஷ்டங்களையெல்லாம் உள்ளத்தின் உறுதியினால் சகித்துக் கொண்டு ராகவனுடைய படை காட்டுப் பாதைகளிலும், மலை வழிகளிலும் பல நூறு மைல் தூரம் பிரயாணம் செய்து கிட்டத்தட்ட அஸ்ஸாமின் எல்லைப் புறத்தை அடைந்தது. அந்த வீர சுதந்திரப் படைக்கு அங்கே ஒரு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அந்தப் படையைச் சேர்ந்த ஒவ்வொரு வீரனும் அதற்குள்ளாக புது டில்லியை அடையப் போகிறோம் என்ற எண்ணத்தை விட்டு விட்டான். இந்தியாவின் எல்லைக்குள்ளே அடியெடுத்து வைத்து இந்தியாவின் சுதந்திரத்துக்காகவும் நேதாஜிக்காகவும் ஒரு துப்பாக்கி வேட்டாவது தீர்த்து விட்டு சாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டான். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது கூட முடியாத காரியம் என்று தெரிய வந்தது.
அவர்களுக்கு முன்னால் வந்திருந்த இந்திய சுதந்திர சேனையின் வீரர்கள் ஏற்கெனவே இந்தியாவின் எல்லைக்குள்ளே பிரவேசித்து இம்பால் போர் முனையில் மகத்தான வீரப் போர் புரிந்தார்கள். அவர்களுக்குள்ளே எத்தனையோ அரவான்களும் அபிமன்யுக்களும் இணையில்லாத தீரத்தைக் காட்டினார்கள். உயிரைத் திரணமாக எண்ணிப் பத்து பிரிட்டிஷ் வீரருக்கு ஒரு சுதந்திர வீரர் வீதம் சில இடங்களில் நின்று சண்டையிட்டார்கள். ஆனாலும் என்ன பிரயோஜனம்? காந்தி மகானின் அஹிம்ஸா மார்க்கத்திலேயே பாரததேசம் சாத்வீக சுதந்திரத்தை அடைய வேண்டும் என்று இருக்கும் போது, அவர்களுடைய முயற்சி எவ்விதம் பலிதமடையும்?
பிரிட்டிஷ் ஆட்சிக்குத் துணையாக அமெரிக்க ஆகாச விமானங்கள் ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்தன. இந்திய சுதந்திர வீரர்களுக்கும், ஜப்பானிய வீரர்களுக்கும் துணையாகப் போதிய ஜப்பானிய ஆகாச விமானங்கள் வந்து சேரவில்லை. சின்னஞ்சிறு ஜப்பான் தன்னுடைய சக்திக்கு மேலே காலை அகட்டி வைத்துவிட்டது! நாலாபுறமும் சூழ்ந்து தாக்கிய எதிரிகளுக்கு ஈடு கொடுக்க அதனால் முடியவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் பிரவேசித்த ஜப்பானிய வீரர்களும் சுதந்திர இந்திய வீரர்களும் பெரும்பாலும் அங்கேயே உயிர் துறக்க நேர்ந்தது. ஒரு சிலர் இந்தியாவின் எல்லையை மறுபடியும் பின்புறமாகக் கடந்து பர்மாவில் பிரவேசிக்க வேண்டியதாயிற்று.
இப்படியாக முன்னணியில் சென்றிருந்த படையில் இறந்தவர்கள் போக மற்றவர்கள் பின் வாங்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் காப்டன் ராகவனுடைய படை இந்தியாவின் எல்லைக்குச் சமீபத்தில் வந்து தங்கியது. சைனியம் தங்கிய இடம் காட்டுப் பிரதேசம்; கையோடு கொண்டு வந்திருந்த உணவுப் பொருள் வெகு சீக்கிரம் கரைந்து போய்க் கொண்டிருந்தது. அந்தச் சைனியத்திலிருந்த வீரர்கள் ஒவ்வொருவரும் முன்னால் போகப் போகிறோமா, பின்னால் போகப் போகிறோமோ என்று தெரியாமல் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
டாக்டர் ராகவனும் அதே மனோநிலையிலேதான் இருந்தான்.
ரங்கூன் வீதிகளில் இந்திய சுதந்திரப் படை அணிவகுத்துச் சென்ற போது இரு புறமும் சமுத்திரம் போல் நின்ற ஜனங்கள் - பர்மியர்களும் இந்தியர்களும் - எவ்வளவு உற்சாகம் காட்டினார்கள்! எப்படி பூமாரி பொழிந்து வாழ்த்துக் கூறி வழி அனுப்பினார்கள்!
புது டில்லிக்குப் போய்க் கொடி ஏற்றுவதற்குப் பதிலாகத் திரும்பவும் ரங்கூனுக்கே போய்ச் சேர்ந்தால், அந்த ஜனங்கள் எப்படி நம்மை வரவேற்பார்கள்?
நல்லது; ரேவதிதான் என்ன சொல்வாள்?... ஆகா! சுதந்திர முழக்கத்துடன் கிளம்பிய இந்திய சுதந்திர படை இத்தகைய முடிவுக்கு ஆளானதைக் கேட்டால் அவள் மனம் எப்படித் துடிக்கும்? அவள் இப்போது எங்கே இருக்கிறாளோ? நேற்றுப் புதிதாக வந்திருப்பதாகச் சொன்னார்களே, அந்தப் பெண்கள் படையில் ஒருவேளை அவள் இருப்பாளோ? அவளையாவது சந்திக்க முடிந்தால் இந்த மனோ வேதனைக்கு ஒரு மாற்றாக இருக்கும்.
இப்படிப்பட்ட சிந்தனைகளில் காப்டன் ராகவன் ஆழ்ந்திருந்த சமயம், மேஜர் ஜெனரல் அவனைக் கூப்பிடுவதாகச் செய்தி வந்தது. "எதற்காகக் கூப்பிடுகிறார்?" என்ற அதிசயத்துடன் ராகவன் குமரப்பாவிடம் சென்றான்.
காப்டன் ராகவனை அவர் ஏற இறங்கப் பார்த்தார். பிறகு, "காப்டன்! உம்மிடம் மிக முக்கியமான ஒரு வேலையை ஒப்புவிக்கப் போகிறேன்" என்றார்.
ராகவன் கம்பீரமாக "மிக்க வந்தனம், ஜெனரல்! என் உயிரைக் கொடுத்தாவது கட்டளையை நிறைவேற்றுவேன்!" என்று சொன்னான். ஆனால், அவன் மனதிற்குள் ஏனோ திக்திக் என்றது.
"உயிரைக் கொடுக்கிறேன் என்று சொல்வதில் பயனில்லை. இந்தியாவின் வருங்காலத்தையே உம்மிடம் ஒப்புவிக்கப் போகிறேன். ஒரு கடிதம் கொடுப்பேன். அதைக் கொண்டு போய் பத்திரமாய்ச் சேர்க்க வேண்டும். வழியில் உயிருக்கு அபாயத்தைத் தேடிக் கொள்வது துரோகம் செய்வதாகும்."
"கடிதம் யாருக்கு?" என்று ராகவன் கேட்டபோது அவனுடைய குரல் தழதழத்தது.
"வேறு யாருக்கு? நமது மகோந்நத தலைவருக்குத்தான். தற்சமயம் நேதாஜி அந்தமான் தீவில் இருக்கிறார். ஆகாச விமானத்தில் போய்க் கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் பதிலும் வாங்கிவரவேண்டும்.
சற்று முன்னால் ராகவன் மனதில் குடிகொண்டிருந்த பயமெல்லாம் பறந்தது. குமரப்பாவிடம் சொல்ல முடியாத நன்றி அவனுடைய உள்ளத்தில் ததும்பியது.
"ரொம்ப வந்தனம்! இதோ புறப்படத் தயார்!" என்று எக்களிப்புடன் சொன்னான்.
"ஆனால் இந்த முக்கியமான கடிதத்தை அவ்வளவு சுலபமாக உம்மிடம் ஒப்புவிக்க முடியாது. அதற்கு முன்னால் உமக்கு ஒரு சோதனை இருக்கிறது. அதில் நீர் தேறியாக வேண்டும்."
சிறிது நேரம் ராகவனுடைய மனதைவிட்டு அகன்றிருந்த சந்தேகங்கள், பயங்கள் எல்லாம் திரும்பவும் அதி விரைவாக வந்து புகுந்தன. "என்ன சோதனை?" என்று ஈனஸ்வரத்தில் கேட்டான்.
"நாலு நாளைக்கு முன்பு இங்கு வந்து சேர்ந்த படையில் ஒருவர் மீது பிரிட்டிஷ் ஒற்றர் என்ற சந்தேகம் ஏற்பட்டது. விசாரித்ததில் அது நிச்சயமாயிற்று. நமக்குள்ளேயிருந்து கொண்டு ஒற்று வேலை பார்ப்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமல்லவா?"
"தெரியும்! மரணதண்டனை!"
"அந்த தண்டனையை நீர் நிறைவேற்ற வேண்டும்."
ராகவன் மனதில் பெரும் திகில் உண்டாயிற்று. மேலே எதுவும் பேச முடியாமல் நின்றான்.
"ஒற்று வேலை பார்த்தது ஒரு பெண்; அவள் உமக்கு அறிமுகமுள்ள பெண்தான்!"
ராகவனுக்கு இப்போது எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அவள் ரேவதியாகத்தான் இருக்க வேண்டும்; சந்தேகமில்லை. ஆ! இந்தக் கொடிய கிராதகன் இந்த முறையில் இருவர் மேலும் பழி தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறான். இத்தனை நாள் ஒன்றுமே வெளியில் காட்டிக் கொள்ளாமல் வேஷம் போட்டதெல்லாம் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத்தான்.
ராகவன் ஒரு நிமிஷ நேரம் யோசனை செய்தான். படைத் தலைவர்களின் கட்டளைகளை மறுவார்த்தை பேசாமல் நிறைவேற்றுவதாகச் செய்து கொடுத்த பிரதிக்ஞையை ஞாபகப் படுத்திக் கொண்டான். அதை நிறைவேற்றிவிட்டு, நேதாஜியையும் கடைசி முறையாகத் தரிசித்துவிட்டுப் பிறகு தன் சொந்தப் பழியைத் தீர்த்துக் கொள்வதென்று முடிவு செய்தான்.
"என்ன யோசனை செய்கிறீர்? ஒப்புக் கொள்கிறீரா இல்லையா?" என்று அதிகாரக் குரலில் கேள்வி வந்தது.
"கட்டளையை நிறைவேற்றுகிறேன்!" என்று ராகவன் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.
"ரொம்ப சரி! இதோ துப்பாக்கி! இதில் ஐந்து குண்டு இருக்கிறது; ஐந்தையும் தீர்த்து விட வேண்டும்; ஒரு வேளை கை நடுக்கத்தினால் குறி தவற இடமிருக்கக் கூடாதல்லவா?"
இவ்விதம் சொல்லிக் கொண்டே குமரப்பா மேஜை மேல் கிடந்த துப்பாக்கியை எடுத்து நீட்டினார். ராகவன் அதற்குள் மனதைத் திடப்படுத்திக் கொண்டிருந்தான். சிறிதும் கை நடுக்கமின்றித் துப்பாக்கியை வாங்கிக் கொண்டான்.
காப்டன் ரேவதியின் கண்ணைக் கட்டி ஒரு பாறையின் பக்கத்தில் நிறுத்தியிருந்தார்கள்.
ராகவனும் அவளுக்கு எதிரில் முப்பது அடி தூரத்தில் நின்று கொண்டான். துப்பாக்கியை குறி பார்த்துவிட்டுக் கண்ணை மூடிக் கொண்டான். விசையை இழுத்தான்.
ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து!
ஐந்து வெடியும் ராகவனுடைய தலையின் உச்சியில் ஐந்து இடி விழுந்தது போல் வெடித்தன.
அவனுடைய தலை சுழன்றது. மறுபடியும் ஒரு பெரு முயற்சி செய்து சமாளித்துக் கொண்டான். கண்ணைத் திறந்து பார்த்த போது ஏற்கெனவே ரேவதி நின்ற பாறை ஓரத்தில் புகை சூழ்ந்திருப்பதைக் கண்டான். அந்தப் புகையினிடையே தரையில் ஓர் உருவம் கிடந்தது!
அங்கிருந்து காப்டன் ராகவனை மிக அவசரமாக விமானக் கூடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
அதன்பிறகு அவன் குமரப்பாவைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கடிதம் அவனிடம் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. விமானம் தயாராய் நின்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அதில் ஏறுவதற்கு யத்தனித்த சமயத்தில் ராகவனுடைய நண்பன் ஒருவன் வந்து அவன் காதோடு ஒரு செய்தியைச் சொன்னான். அதை அவனால் நம்ப முடியவில்லை. "ஆஹா! ஏன் பொய் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்? ஏன் புண்பட்ட நெஞ்சில் வேலை எடுத்துக் குத்துகிறாய்?" என்று கேட்டான். "இல்லை, ராகவன்! நான் உன்னை ஏமாற்றவில்லை. நான் சொன்னது சத்தியம்" என்றான் நண்பன். மேலே பேசுவதற்கு அவகாசம் இல்லை. விமானத்தின் காற்றாடிச் சிறகுகள் சுழலத் தொடங்கின.
---------
7. விமானம் மறைந்தது
அந்தமான் தீவில் சென்று விமானம் இறங்கியதும் நேதாஜியைத் தேடிக் கொண்டு ராகவன் அதிக தூரம் போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் அவன் இறங்கிய விமானகூடத்தின் பக்கத்திலேயே நேதாஜியும் இருந்தார். அவரைச் சுற்றி இந்திய சுதந்திர சர்க்காரின் மந்திரிகள் சிலரும், மற்றவர்களும் இருந்தார்கள்.
அவர்களைப் பார்த்தால் ஏதோ ஒரு மிக முக்கியமான முடிவுக்கு வந்தவர்களைப் போலத் தோன்றியது. எல்லோருடைய முகத்திலும் சோகக் குறி காணப்பட்டது.
சில மாதத்துக்கு முன்பு வீரலக்ஷ்மி தாண்டவமாடிய நேதாஜியின் பூரண சந்திரனையொத்த முகத்தை சோகக் கிரகணம் பிடித்திருந்தது.
காப்டன் ராகவன் தான் கொண்டு வந்த கடிதத்தை நேதாஜியிடம் கொடுத்தான். நேதாஜி அதைப் படித்தபோது அவருடைய சோகச் சாயை படர்ந்த சௌந்தர்ய வதனத்தில் புன்சிரிப்பின் ரேகை காணப்பட்டது.
படித்து முடித்ததும் அவர் சொன்னார்..."ஆகா! எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள். 'நாங்கள் உயிரை விட்டு விடுகிறோம்; நீ மட்டும் எப்படியாவது தப்பிப் பிழைத்து உயிரோடிருக்க வேண்டும்' என்கிறார்கள். 'பாரதத் தாயின் விடுதலைக்காக' என்று சேர்த்துக் கொண்டு சொல்கிறார்கள்... காப்டன் ராகவன்! நீ திரும்பிப் போக வேண்டிய அவசியமில்லை. உன்னுடைய ஜெனரலுக்கு முன்னமே நான் கடிதம் அனுப்பி விட்டேன். உன்னைப் பற்றி குமரப்பா ரொம்பப் பாராட்டியிருக்கிறார். அவருடைய சிபாரிசின் படி உனக்கு லெப்டினென்ட் கர்னல் பதவி அளிக்கிறேன், ஜே ஹிந்த்!" என்றார்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் "ஜே ஹிந்த்!" என்று முழங்கினார்கள்.
"நண்பர்களே! சுதந்திர இந்தியாவின் சேனாதிபதி பதவியிலிருந்து நான் செய்த கடைசி காரியம் இதுவாக இருக்கலாம்." என்று நேதாஜி சொன்னபோது சுற்றி இருந்தவர்களில் ஒருவர் குறுக்கிட்டு, "இல்லை, நேதாஜி இல்லை; ஒரு நாளும் இல்லை, பாரத பூமியில் புது டில்லியில் தாங்கள் சுதந்திர இந்திய சைதன்யத்தின் மாபெரும் சேனாதிபதியாக விளங்கும் காலம் கட்டாயம் வரும்!" என்றார்.
"உங்களுடைய வாக்கு பலிக்கட்டும்! நண்பர்களே! இப்போதைக்கு நான் விடைபெற்றுக் கொள்கிறேன். நான் எங்கே போனாலும் என்ன செய்தாலும் உங்களையெல்லாம் மறக்க மாட்டேன். வருங்கால வேலையைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்ததும் ரேடியோ மூலம் தெரிவிப்பேன். பாங்காங்கிலிருந்தோ, டோ க்கியோவிலிருந்தோ, வேறிடத்திலிருந்தோ பேசுவேன். எல்லோரும் அந்தச் செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருங்கள், அதன்படி செய்யுங்கள்."
"அப்படியே செய்வோம் நேதாஜி! ரேடியோவில் தங்களுடைய வீர கர்ஜனைக் குரல் எப்போது கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்."
நேதாஜி கம்பீரமாக நடந்து சென்று தயாராய்க் காத்திருந்த ஆகாச விமானத்தில் ஏறிக் கொண்டார். விமானத்தின் இறகுகள் சடசடவென்று சுழன்றன. விமானம் முதலில் விர்ரென்று ஏறத் தொடங்கியது. சுற்றிச் சுற்றி வந்து மேலே மேலே மேலே சென்றது.
விமானம் வானத்தில் ஒரு சிறிய கரும்புள்ளியைப் போல் ஆகும் வரையில் எல்லோரும் மேலேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கர்னல் ராகவனும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். கடிதத்தை நேதாஜியிடம் ஒப்புவித்ததும் தன்னுடைய சொந்த விஷயத்தை அவரிடம் சொல்லி மேஜர் ஜெனரல் குமரப்பாவைப் பழிவாங்க அனுமதி கேட்க வேண்டுமென்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். அதற்குச் சந்தர்ப்பம் சரியாக இல்லை என்பதைக் கண்டான். நேதாஜியும் அவருடைய துணைவர்களும் கண்ட ஒரு மகத்தான கனவு - பாரத சுதந்திரக் கனவு - துகள் துகளாகப் போய்க் கொண்டிருந்த சமயம் அது. எல்லோரும் அவ்வளவு மகத்தான விஷயத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய சொந்த விஷயம் அற்பத்திலும் அற்பமானதாக அவனுக்குத் தோன்றியது. ஏற்கனவே அவன் நேதாஜியைப் பார்த்திருந்த போதிலும் இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில்லை. எடுத்த காரியத்தில் அத்தகைய பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருந்த சமயத்தில் அவருடைய தீரமும் கம்பீரமும் அவனுடைய உள்ளத்தை முழுக்க முழுக்கக் கவர்ந்து ஜன்ம ஜன்மங்களிலேயும் அப்பேர்ப்பட்ட தலைவரின் கீழ் அடிமைத் தொண்டு செய்யலாம் என்று உறுதி கொள்ளச் செய்தது. அவர் ஏறிய ஆகாச விமானம் உயரக் கிளம்பிய போது அவனுடைய உயிரானது உடலை மட்டும் இந்த பூமியில் விட்டு விட்டு மேலேறிச் செல்வது போலத் தோன்றியது. விமானத்தின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாகச் சின்னதாகி, சிறிய கரும்புள்ளியாகி, கடைசியில் அவனுடைய பார்வையிலிருந்து மறைந்தபோது, கர்னல் ராகவன் சற்று நேரம் ஸ்ம்ரனையற்று ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தான். எல்லாரையும் போல் 'ஜேய் ஹிந்த்' கோஷம் செய்வதற்குக் கூட அவனுடைய நா எழவில்லை. அவனுடைய கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. கண்ணீரைத் துடைத்துக் கொள்ள கையை உபயோகிக்கும் சக்தியைக் கூட அவன் இழந்து விட்டிருந்தான்.
நங்கூரம் இல்லாமல், சுக்கான் இல்லாமல், மாலுமிகளும் இல்லாமல் நடுக் கடலில் அலைகளால் மோதப் பட்டு காற்று அடித்த திசையில் அங்கு மிங்கும் அலைந்து மிதந்து கொண்டிருக்கும் கப்பலைப் போல் சில காலம் லெப்டினென்ட் கர்னல் ராகவன் பர்மாவில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். மேஜர் ஜெனரல் குமரப்பாவும் அவர் தலைமையிலிருந்த சுதந்திர சேனையின் வீரர்களும் பிரிட்டிஷாரால் சிறை பிடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. கேப்டன் ரேவதியைப் பற்றி யாதொரு தகவலும் தெரியவில்லை. பாறை ஓரத்துப் பயங்கர சம்பவத்துக்குப் பிறகு ஆகாய விமானத்தில் ஏறும் சமயத்தில் அவனுடைய நண்பன் ஒருவன் வந்து காதோடு சொன்ன செய்தி உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ளவும் அவனால் முடியவில்லை. குழப்பமும் ஏமாற்றமும் துயரமும் குடி கொண்டு அலைப்புண்ட உள்ளத்தோடு லெப்டினென்ட் கர்னல் ராகவன் தாய் நாட்டுக்கு வந்து சேர்ந்தான். ஒருவித நோக்கமும் இலட்சியமும் இன்றி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தபோது, டில்லி செங்கோட்டையிலிருந்து மேஜர் ஜெனரல் குமரப்பா விடுதலையானார் என்று ஒரு நாள் பத்திரிகையில் படித்தான். பின்னர் அவரைத் தேடிக் கொண்டு அலைந்தான். அந்தத் தேடல் முற்றுப் பெறாத நிலையிலேதான் ரட்லம் ஜங்ஷனில் அன்றிரவைக் கழிக்கும்படி நேர்ந்தது.
--------------
8. வேஷம் கலைந்தது
லெப்டினென்ட் கர்னல் ராகவன் சொன்ன கதையை முழுதுமே கேட்டுக் கொண்டிருந்தபிறகு, "தாங்கள் கூறிய வரலாறு மிகவும் பரிதாபகரமாயிருக்கிறது; மேலே என்ன செய்வதாக உத்தேசம்?" என்று கேட்டேன்.
"தற்சமயம் என்னுடைய வாழ்க்கையின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். மேஜர் ஜெனரல் குமரப்பாவை நான் சந்தித்தாக வேண்டும். அதற்குப் பிற்பாடுதான் வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் என்னால் யோசிக்க முடியும்" என்றார் கர்னல் ராகவன்.
"குமரப்பாவை நீங்கள் சந்திக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. உங்கள் பிடிவாதத்தை விட்டு விடுவதே நல்லது" என்று சொன்னேன்.
"அது மட்டும் முடியாது. குமரப்பா யமனுலகத்துக்கே போயிருந்தாலும் அங்கேயும் போய் அவரைக் கண்டுபிடித்தே தீருவேன்!" என்றார் ராகவன்.
"கண்டுபிடித்து என்ன செய்வீர்கள்?"
"கண்டுபிடித்து, 'அட பாதகா! என் ரேவதி எங்கே? அவளை என்ன செய்தாய்?' என்று கேட்பேன். சரியான பதில் சொன்னால் விட்டு விடுவேன். இல்லாவிடில் இதோ இந்தக் கைத்துப்பாக்கியிலுள்ள ஆறு குண்டுகளையும் ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து என்று எண்ணி அவர் மார்பில் செலுத்துவேன்!"
"கர்னல் இது என்ன பைத்தியக்காரத்தனம்!"
"ஆம்; இங்கே உட்கார்ந்து நான் உம்மிடம் பேசிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனந்தான். இத்தனை நேரம் உம்மிடம் பேசி வியர்த்தமாக்கினேனே?" என்று சொல்லிக் கொண்டே கர்னல் ராகவன் எழுந்தார்.
அவரை நான் "அவசரப்பட வேண்டாம்; உட்காருங்கள்" என்று சொல்ல வாயெடுத்தேன். ஆனால் நெஞ்சில் எண்ணியது வாயில் வரவில்லை; அப்படி என்னைப் பேச முடியாமல் செய்த சம்பவம் ஒன்று அப்போது நேர்ந்தது.
சுவர் ஓரத்தில் இத்தனை நேரமும் படுத்திருந்த மனிதர் சட்டென்று எழுந்தார். நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்து வந்தார். வெளியிலேயிருந்து வந்த மங்கிய விளக்கின் ஒளி அவர் முகத்தில் பட்ட போது, என்னைத் தூக்கிவாரிப் போட்டுத் திகைப்படையச் செய்தது.
ஏனெனில், அந்த மனிதரை எனக்கு நன்றாய்த் தெரியும்; அவர் மேஜர் ஜெனரல் குமரப்பாதான்!
'என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை' என்று சாதாரணமாய் கதைகளில் எழுதுகிறார்களே அது இப்போது என் விஷயத்தில் முற்றிலும் உண்மையாயிற்று. நிஜமாக அவர் குமரப்பாதானா? இத்தனை நேரமும் அந்த மூலையில் படுத்திருந்தவர் அவர்தானா?
குமரப்பாவின் குரல் எப்போதுமே கனமாகவும் கம்பீரமாகவும் இருக்கும். இப்போது வழக்கத்தை விட அதிக கனமும் கம்பீரமும் பொருந்திய குரலில் அவர் "கர்னல் ராகவன், உம்முடைய நண்பர் கூறியது தவறு, இதோ நானே, சாஷாத் மேஜர் ஜெனரல் குமரப்பாவே ஆஜராயிருக்கிறேன். உம்மை மிகக் கடுமையான சோதனைக்கு நான் உட்படுத்தியது வாஸ்தவம்தான். அதற்கு பரிகாரம் செய்யவே இதோ வந்திருக்கிறேன். உம்முடைய கைத்துப்பாக்கியிலுள்ள குண்டுகளை என் மார்பிலே செலுத்த நீர் விரும்பினால் அப்படியே செய்யலாம். அவை நிஜக்குண்டுகள்தானே? புகைக் குண்டுகள் அல்லவே?" என்று கூறிவிட்டு நகைத்தார். அந்த நகைப்பு ஏனோ எனக்குப் பயங்கரத்தை உண்டாக்கிற்று.
ராகவனுடைய முகத்தைப் பார்த்தேன். அந்த முகத்தில் குரோதமும், அசூயையும், ஆங்காரமும் கோர தாண்டவம் ஆடின. கண்கள் நெருப்புத் தணலைப் போல் ஜொலித்தன. ஏதோ பேசுவதற்கு முயன்றார். ஆனால் உதடுகள் துடித்தனவே தவிர வார்த்தைகள் வெளிவரவில்லை. துப்பாக்கியை எடுத்துக் குமரப்பாவின் மார்பிற்கு எதிரே நீட்டிய போது அவர் கைகள் சிறிது நடுங்கின.
சட்டென்று நான் குதித்து எழுந்து, "ராகவன்! ஒரு நிமிஷம் பொறுங்கள்!" என்று கூவிய வண்ணம் அவர் கையைப் பிடித்துக் கொண்டேன். என் கை பட்டதும் ராகவனுக்கு ரோமாஞ்சனம் உண்டானதை உணர்ந்தேன். எனக்கும் அதேவிதமான அநுபவம் ஏற்பட்டது.
குமரப்பா ராகவனைப் பார்த்து, "ரேவதி எங்கே என்று என்னைக் கேட்கிறீரே? உம்முடைய சிநேகிதரைக் கேட்பது தானே?" என்றார்.
நான் பதட்டத்துடன், "ஆம்! நான் சொல்கிறேன். கர்னல் ராகவன் ஒரு நிமிஷம் பொறுப்பதாக வாக்களித்தால் சொல்கிறேன்" என்றேன்.
பிறகு என் முகத்தை ஒரு நிமிஷம் வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு, (சொல்வதற்குக் கூச்சமாயிருக்கிறது) அது வரையில் என் மேலுதட்டில் மேற்புறத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த 'ஹிட்லர்' மீசையை எடுத்து எறிந்தேன். தலையை நன்றாக மூடியிருந்த 'மப்ளரை'யும் கையில் எடுத்துக் கொண்டேன். (எங்கும் குழப்பமாயிருந்த அந்த நாட்களில் தொந்தரவுக்குள்ளாகாமல் பிரயாணம் செய்வதற்காகச் சில சமயம் நான் அப்படி வேஷம் தரிப்பது வழக்கம்)
வேஷம் நீங்கிய என் முகத்தைப் பார்த்ததும் "ஆஹா! ரேவதியா?" என்று ராகவன் கூச்சலிட்டார்.
"ஆம்! ரேவதிதான்!" என்றேன்.
"இத்தனை நேரம் என்னை ஏமாற்றி என் வாயைப் பிடுங்கி என் மனத்திலிருந்ததையெல்லாம் கொட்டும்படி செய்தாயல்லவா? உன்னை என்ன செய்கிறேன் பார்!"
"இருந்தாலும் இந்தப் புருஷர்களுக்குக் கொஞ்சமாவது கூச்சம், சங்கோசம் என்பது கிடையாது! எனக்குந்தான் மனதிற்குள் எவ்வளவோ ஆர்வம் இருந்தது. அதையெல்லாம் நான் கட்டுப்படுத்திக் கொண்டு இத்தனை நேரம் சும்மா இருக்கவில்லையா?"
ஆனால் புருஷர்கள் எல்லாரையும் நான் குறை சொல்லக்கூடாது. சமய சந்தர்ப்பத்தைப் பார்த்து ரஸக் குறைவு ஏற்படாமல் நடந்து கொள்கிறவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். மேஜர் ஜெனரல் குமரப்பா அப்படித்தான் நடந்து கொண்டார். ஒரு நிமிஷங்கூட அங்கே நிற்காமல் சுவர் அருகே சென்று சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு புறப்பட்டார். அவர் வாசற்படியைக் கடக்கும் போது தான் இவருக்குச் சுய அறிவு வந்தது! நானும் என்னை விடுவித்துக் கொண்டு அப்பால் நகர்ந்தேன்.
"ஜெனரல்! ஜெனரல்! எங்களை மன்னிக்க வேண்டும்!" என்று ராகவன் அலறினார்.
மேஜர் ஜெனரல் திரும்பிப் பார்த்து, "உங்களை நான் மன்னிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? நீங்கள்தான், என்னை மன்னிக்க வேண்டும்!" என்றார்.
"ஜெனரல்! ஒரு விஷயம் தயவு செய்து சொல்ல வேண்டும். நம் அருமைத் தலைவர் நேதாஜி மரணமடைந்தது உண்மையா?" என்று ராகவன் பரபரப்போடு கேட்டார்.
குமரப்பாவின் முகத்தில் அப்போது அதி விசித்திரமான ஒரு புன்னகை தவழ்ந்தது.
"ராகவன்! நீரா இப்படிப்பட்ட கேள்வி கேட்பது? இந்திய சுதந்திரப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு மரணம் என்பது உண்டா? அமர வாழ்வு பெற்றவர்கள் அல்லவா நாம்? அதிலும் நம் நேதாஜிக்கு மரணம் ஏது?"
இவ்விதம் சொல்லிவிட்டு மேஜர் ஜெனரல் குமரப்பா வெயிட்டிங் ரூமின் வாசற்படியைக் கடந்து சென்றார்.
அவரைப் பின் தொடர்வதற்காக அடி எடுத்து வைத்த ராகவனை நான் கையைப் பற்றி நிறுத்தினேன்.
முடிவுரை
லெப்டினென்ட் கர்னல் ராகவனும், நானும் மதராஸ் மெயில் வண்டியில் சென்னையை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது குமரப்பாவைப் பற்றியே நாங்கள் அதிகமாகப் பேசும்படி இருந்தது. சென்னை ஆஸ்பத்திரியில் அவர் கீழ் வேலை பார்த்தபோது அவரைப் பற்றி நான் எண்ணியது பெருந்தவறு என்று பின்னால் தெரிந்து கொண்டேன். குமரப்பா ஐரோப்பாவுக்குப் போயிருந்த போது வியன்னாவில் ஸ்ரீ சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்து அவரிடம் பக்தி கொண்டாராம். சுபாஷ் பாபு இந்தியாவிலிருந்து மறைந்த பிறகும் அவருடைய காரியங்களைப் பற்றிக் குமரப்பாவுக்குச் செய்தி வந்து கொண்டிருந்ததாம். நான் ஒரு பெரிய தேசபக்தருடைய மகளாதலால் என்னையும் நேதாஜியின் சேவைக்குப் பயன்படுத்தலாம் என்று குமரப்பா நினைத்தாராம். அதைத்தான் நான் தவறாக அர்த்தம் செய்து கொண்டு அவஸ்தைப் பட்டேன். என்னைப் பாறையடியில் நிறுத்தி ராகவனைச் சுடும்படிச் செய்தது உண்மையில் ஒரு சோதனைதான். அந்த துப்பாக்கியில் வெடி குண்டு கிடையாது; புகைக் குண்டுகள் இருந்தது. இதைப் பற்றியெல்லாம் திரும்பத் திரும்ப அலுப்பில்லாத அதிசயத்துடன் நாங்கள் பேசிக் கொண்டு போனோம்.
"நமது வாழ்க்கையின் அதிசய சம்பவங்களுக்குள்ளே மிகவும் அதிசயமானது, ரட்லம் ஜங்ஷனில் அன்றிரவு நாம் குமரப்பாவைச் சந்தித்ததுதான்" என்று ஒருமுறை நான் சொன்னேன்.
"அதே இடத்தில் நாம் இருவரும் சந்தித்ததைக் காட்டிலுமா?" என்றார் என் அருமைக் காதலர்.
"ஆமாம்; அதைவிடக் கூட அதிசயந்தான்!"
கர்னல் ராகவன் சிறிது கோபத்தோடு, "அது எப்படி?" என்று கேட்டார்.
என்னுடைய பெட்டிக்குள்ளே சில நாளாகப் பத்திரப் படுத்தி வைத்திருந்த ஒரு தினசரிப் பத்திரிகையை எடுத்துக் கொடுத்தேன். அதில் வெளியாகியிருந்த ஒரு செய்தியைச் சுட்டிக் காட்டினேன். அதைப் படித்ததும் ராகவனுக்கு எல்லையற்ற வியப்பு ஏற்பட்டதென்பதை அவருடைய முகக்குறி உணர்த்திற்று. மேற்படி பத்திரிகைச் செய்தி வருமாறு...
"இந்திய சுதந்திரப் படையில் மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவி வகித்தவரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பூரண நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆப்தருமான மேஜர் ஜெனரல் குமரப்பா சென்னை... ஆஸ்பத்திரியில் நேற்று சேர்க்கப்பட்டார். சிகிச்சை எதுவும் பயன்படாமல் இன்று மாலை அவர் மரணமடைந்த செய்தியை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்..."
லெப்டினென்ட் கர்னல் ராகவன் திரும்பத் திரும்பத் திரும்ப மேற்படி செய்தியைப் படித்துப் பெருமூச்சு விட்டார்.
"தேதியைப் பார்த்தீர்களா?" என்று கேட்டேன்.
"ஆம்; ரட்லம் ஜங்ஷனில் நாம் சந்தித்ததற்கு மூன்று தினங்களுக்கு முன்னால்!" என்றார் ராகவன்.
"அன்றிரவு அவரைப் பார்த்தபோதே எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது!" என்று நான் சொன்னேன்.
"அமர வாழ்வைப் பற்றி ஜெனரல் குமரப்பா கூறியதின் உண்மைப் பொருள் இப்போதுதான் எனக்கு நன்றாய் விளங்குகிறது!" என்றார் என் உயிர்த்துணைவர்.
--------------
7. சுண்டுவின் சந்நியாசம்
நம்ம சுண்டுவை உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ? தெரியும் என்று ஒப்புக் கொண்டு விடுங்கள்! தெரியாது என்று நீங்கள் சொன்னால் அவன் உங்களை விட்டு விடப் போகிறானா என்ன? முதுகு வலிக்கு ஆளாவதுதான் பலனாக முடியும்.
முதன் முதலில் சுண்டுவை நான் சந்தித்தபோது அப்படித்தான் ஜால்ஜாப்பு சொல்லிப் பார்த்தேன். திடீரென்று முதுகில் ஒரு பலமான தட்டு விழவே, திடுக்கிட்டுத் திரும்பினேன். சுண்டு உட்கார்ந்து கொண்டிருந்தான். "என்ன, அப்பனே! ஏன் முழிக்கிறாய்? சுண்டுவை அடையாளம் தெரியவில்லையோ?" என்று என் இரண்டு தோள்களையும் பிடித்துக் குலுக்கினான். பள்ளிக்கூட ஆசிரியர்களின் கூட்டம் ஒன்றில் நான் பின் வரிசையில் உட்கார்ந்து சொற்பொழிவுகளைச் செவிமடுத்துக் கொண்டிருந்தபோது இந்த மகத்தான சம்பவம் நடந்தது.
"ஆமாம், தெரியத்தான் இல்லை!" என்றேன்.
"ஓஹோ!" என்று சுண்டு சிரித்து விட்டு, "அந்தக் காலத்தில் எப்படி இருந்தாயோ, அப்படியேதான் இன்னமும் இருக்கிறாய். கொஞ்சங்கூட உருவத்திலோ குணத்திலோ மாறுதல் இல்லை!" என்றான்.
"எந்தக் காலத்தில்?" என்று கேட்டேன்.
"என்னப்பா பெரிய ஆளாயிருக்கிறாயே? சிதம்பரத்திலே படித்துக் கொண்டிருந்த காலத்திலேதான்."
நான் சிதம்பரத்துக்கு அதுவரையில் போனதே கிடையாது. ஆனால் மேலும் மறுதலித்தால் முதுகுக்கு அபாயம் வரும் என்று பயந்து, "சரிதான்!" என்றேன்!
"ஏனப்பா, கிருஷ்ணசாமி, என்னை ஏமாற்றலாமென்றா பார்த்தாய்?" என்று சொல்லி மறுபடியும் முதுகிலே ஒரு தட்டு தட்டினான்.
"எனது நாமதேயம் கிருஷ்ணஸ்வாமி இல்லை நாராயண ஸ்வாமி!" என்றேன்.
"ஆகா! வந்துட்டாயா வழிக்கு! அப்படிச் சொல்லு. எங்கே கிருஷ்ணசாமி என்றதும், உன் பெயர் கிருஷ்ணசாமிதான் என்று சொல்லி டிமிக்கி கொடுக்கப் பார்க்கிறாயோ என்று சோதித்தேன். அப்பனே, நாராயணசாமி! உன் பெயர் எனக்குத் தெரியாதென்றா நினைத்துக் கொண்டாய்!"
உண்மையில் என் பெயர் நாராயணசாமியும் இல்லை! ஆனால் அதைச் சொல்லி என்ன பிரயோஜனம்?
இப்பேர்ப்பட்ட ஆளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து, "சுண்டு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டேன்.
"என்னத்தை செய்கிறது? உன் முதுகுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு பள்ளிக்கூட உபாத்தியாயர்களின் துயரங்களைப் பற்றிய அழுகையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்! இப்படி எத்தனையோ நாளாகத்தான் பேசுகிறார்கள். யாருக்கு என்ன பிரயோஜனம்? புதுடில்லி வரையில் போய் வைஸ்ராயின் தாடியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கத் தயாராயிருந்தால் அல்லவா வழி பிறக்கும்! சுத்த டாணா டாவன்னாக்கள்!"
"கொஞ்சம் மெதுவாய் பேசு!" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டபிறகு, "நான் கேட்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதே! அப்படியானால், நீ உபாத்தியார் இல்லையா?" என்றேன்.
"நல்ல கேள்வி கேட்டாய், அப்பா! டிபுடி கலெக்டருக்குப் பிள்ளையாகப் பிறந்துட்டு, அந்தப் பாழும் பரீட்சையிலே ஒரு மார்க்குக் குறைந்து போனதினாலே ஐ.சி.எஸ்.ஸுக்குப் போக முடியாமல் உட்கார்ந்திருக்கேன் நான். என்னைப் பார்த்து வாத்தியார் வேலையிலிருக்கிறாயா என்று நீ கேட்கிறாயே! உன்னைப் போன்ற ஆசாமிகள் இருக்கிறது வரையில் இந்த உலகம் உருப்படப் போகிறதில்லை! ஒரு நாளும் உருப்படப் போகிறதில்லை! நான் சொல்லுகிறது தெரிந்ததோ, இல்லையோ!" என்று என் முதுகின் மூலம் அதை அழுத்தமாய்த் தெரியப்படுத்த முயன்றான்.
"தெரிந்தது அப்பனே! தெரிந்து விட்டது!" என்று கதறினேன்.
இம்மாதிரியாக எனக்கும் சுண்டுவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அப்புறம் சுண்டுவும் நானும் எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத விதமாக வெல்லாம் சந்தித்து நாளொரு முதுகும் பொழுதொரு தட்டுமாக எங்கள் நட்பை வளர்த்துக் கொண்டு வந்தோம்.
ஒரு நாள் சுண்டுவைச் சந்தித்தபோது, "இப்போது என்ன செய்கிறாய்?" என்று கேட்டேன்.
"அப்படிக் கேள் சொல்கிறேன். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று தானே கேட்கிறாய்? இந்த உலகத்துக்குப் புத்தி புகட்ட வழி தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த உலகம் இருக்கிறதே; மகா முட்டாள் உலகம். பணம் உள்ளவனுக்குத்தான் இந்த உலகத்தில் மதிப்பு. பணக்காரன் என்னத்தை உளறிக் கொட்டினாலும் வாயைப் பிளந்து கொண்டு கேட்கிறார்கள். பணமில்லாதவன் எவ்வளவு அறிவாளியா யிருந்தாலும் அவன் பேச்சு அம்பலத்தில் ஏறுகிறதில்லை."
"உலகம் அப்படித்தான் இருக்கிறது. என்ன செய்கிறது?" என்று சுண்டுவை ஆமோதித்தேன்.
"ஆனால் உலகம் என்ன செய்யும்? உலகத்தைக் குறை கூறி என்ன பயன்? உலகத்தைப் படைத்த கடவுளைச் சொல்ல வேண்டும். நான் மட்டும் கடவுளாயிருந்தால் என்ன செய்வேன் தெரியுமா? நமது அளுகுண்ணி புளுகுண்ணி செட்டியார், அண்ணா மலேரியா முதலியார், அப்பண்ணா அபக்கண்ணா அய்யங்கார், கிருபணாஜி தசல்பாஜி ஐயர், டபிள் நிமோனியாடிலாமியா, திஜோடியா டிமிக்கிலால் டிங்கர்லால், பயானதாஸ் மயானதாஸ் பயங்கர்லால் ஆகிய எவ்வளவு பணக்காரப் பேர்வழிகளையும் கூப்பிட்டு வரிசையாக நிறுத்துவேன். நிறுத்தி, "உங்கள் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் இருக்கிறது? உண்மையைச் சொல்லுங்கள்!" என்று காதைப் பிடித்துத் திருகுவேன். அவர்கள் உண்மையைச் சொல்லியாக வேண்டும். சொல்லாவிட்டால் யார் விடுகிறார்கள்! பிறகு, "இவ்வளவு பணத்தையும் என்ன மாதிரி செலவு செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்பேன். அவர்கள் திருதிருவென்று முழிப்பார்கள்! "செலவு செய்ய வழி தெரிந்த பேர்வழி இதோ ஒருவன் இருக்கிறான். ஒவ்வொருவரும் உங்கள் பணத்தில் சரிபாதியை நமது சுண்டுவிடம் உடனே ஒப்புவித்து விட்டு மறுகாரியம் பாருங்கள்!" என்பேன். அவர்கள் அப்படியே செய்வார்கள். செய்யாவிட்டால் யார் விடுகிறார்கள்? தானே கதறிக் கொண்டு பணத்தைக் கொண்டு வந்து கலகலவென்று கொட்ட வேண்டாமா?
ஆனால் சுண்டுவின் இஷ்டப்படி கடவுள் நடப்பதாகத் தெரியவில்லை. எனவே என்னிடம் ஒரு ஐந்து ரூபாய் நோட்டும், டிராம் செலவுக்கென்று தனியாக நாலு அணாவும் வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தான்.
*****
அடுத்த தடவை நான் சுண்டுவைப் பார்த்தபோது, "பணமா! சீ! பணம் இங்கே யாருக்கு வேண்டும்? பணத்தைக் கொண்டு போய் உடைப்பிலே போடு!" என்றான். நான் திடுக்கிட்டு நிற்கையில், "பணத்தினால் மனித வர்க்கமே நாசமடைந்து வருகிறது! பணக்காரர்கள்தான் உலகத்தைப் பாழ் பண்ணி வருகிறார்கள்! பணம் சம்பாதிக்கிற எண்ணத்தை நான் விட்டு விட்டேன்!" என்றான்.
"பின்னே என்ன உத்தேசம் செய்திருக்கிறாய்?" என்று கேட்டேன்.
"உலகத்தை உத்தாரணம் செய்யப் போகிறேன். மனித வர்க்கத்தை மகோந்நத நிலைமைக்குக் கொண்டு வரப்போகிறேன்! ஆமாம்; தீர்மானம் செய்துவிட்டேன்!" என்றான்.
"எப்படி!" என்று கேட்டேன்.
"எப்படியா! சொல்கிறேன், கேள். நான் எழுத்தாளன் ஆகப் போகிறேன். அச்சடித்த எழுத்துக்கு உள்ள சக்தி உலகத்தில் எதற்கும் இல்லை. ஒரு விஷயம் அச்சில் வந்து விட்டதானால், முட்டாள் ஜனங்கள் அது எவ்வளவு அபத்தமானாலும் அப்படியே விழுங்கி விடுகிறார்கள்! இந்த உலகத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கு எழுத்தாளனாவது ஒன்றுதான் சரியான வழி!" என்றான்.
"ரொம்ப சந்தோஷம்!" என்றேன்.
"ஆனால் உன்னை மறந்து விடுவேன் என்று பயப்படாதே! உலகத்தை முன்னுக்குக் கொண்டு வந்தவுடனே உன்னையும் கவனித்துக் கொள்கிறேன்!" என்று அபயம் அளித்தான்.
*****
மறுபடியும் சுண்டுவைப் பார்த்தபோது, "எழுத்தாளன் ஆகும் முயற்சியில் எவ்வளவு தூரம் வெற்றியடைந்திருக்கிறாய்?" என்று கேட்டேன்.
"அப்பனே! உலகத்திலே வேறு எந்த தொழில் வேணுமானாலும் செய்யலாம். தெருக் கூட்டலாம்; ஹோட்டல் வைக்கலாம்; மந்திரி வேலை வேணுமானாலும் பார்க்கலாம். ஆனால் எழுத்தாளனாக மட்டும் ஆகக் கூடாது. அதிலும் நமது நாட்டில் இப்போது உள்ள பத்திரிகையாசிரியர்கள் இருக்கும் வரையில் எழுத்தாளனாகவே ஆகக் கூடாது. பத்திரிகாசிரியர்களா இவர்கள்? சுத்தத் திருடர்கள்!"
"என்னப்பா இப்படி ஒரேயடியாக வெளுத்து வாங்குகிறாய்?"
"பின்னே என்ன என்று கேட்கிறேன்! ஓரணா இரண்டனா ஸ்டாம்புகளை திருடிக் கொள்கிறார்கள். அனுப்பிய கட்டுரைகளைத் திருப்பி அனுப்புவதும் கிடையாது!"
"ஆமாம், அப்பா, ஆமாம்! அநேகப் பத்திரிகாசிரியர்கள் அப்படித்தான் செய்கிறார்கள்!" என்றேன்.
"ஓஹோ நீ மட்டும் தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயோ? நீயும் அதே வர்க்கந்தானே!"
"ஆம்; வாஸ்தவந்தான்! மன்னித்துக் கொள்!"
"மன்னிக்கிறதாவது, மண்ணாங்கட்டியாவது? நீங்கள் பத்திரிகாசிரியர்கள் இருக்கிறீர்களே, மகா கிராதகர்கள்! எழுத்தாளர்கள் உயிரோடிருக்கும் போது அவர்களைப் பட்டினி போட்டுக் கொல்லுவீர்கள். செத்துப் போன பிறகு நிதி வசூல் செய்து ஞாபகச் சின்னம் கட்டுவீர்கள்!"
"போகட்டும்! அது ஒரு திருப்தியாவது இருக்கிறதோ இல்லையோ?"
"நல்ல திருப்தி!"
"சரி, மேலே என்ன செய்யப் போகிறாய்?" என்றேன்.
"இனிமேல் ஒருவரை நம்பி ஒரு காரியம் செய்வதில்லை என்று தீர்மானித்து விட்டேன். நானே ஒரு பத்திரிகை வெளியிடுகிறதென்று நேற்று இரவு பன்னிரண்டரை மணிக்கு முடிவு செய்து விட்டேன்."
"ரொம்ப சந்தோஷம்."
"அதெல்லாம் வெறுமனே வாயால் சந்தோஷம் என்று சொன்னால் மட்டும் போதாது, சந்தோஷத்தைக் காரியத்திலே காட்ட வேணும்."
"எப்படிக் காட்டுகிறது?"
"ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செக் எழுதிக் கொடுத்துக் காட்டுகிறது. எழுத்தாளனுக்கு எழுத்தாளனும் பத்திரிகைக்காரனுக்குப் பத்திரிகைக்காரனும் உதவி செய்யாவிட்டால், வேறு யார் உதவி செய்வார்கள்?"
என்னிடம் ஆயிரம் ரூபாய் இல்லை என்று சத்தியம் செய்ததன் பேரில், "சரி, ஒரு பூஜ்யத்தைக் குறைத்துக் கொள்!" என்று சொல்லி, அப்புறம் இன்னொரு பூஜ்யத்தையும் குறைத்துக் கொண்டு கடைசியில் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு போனான்.
*****
மறுமுறை சுண்டுவைப் பார்த்தபோது, "என்னப்பா! சொந்தப் பத்திரிகை ஆரம்பித்து விட்டாயா?" என்று கேட்டேன். "பத்திரிகையைக் கொண்டு குப்பையிலே போடு! இந்தப் பத்திரிகைகளைப் போல் உலகத்துக்குக் கெடுதல் செய்வது ஒன்றுமே கிடையாது!" என்றான்.
"அந்த உண்மையை எப்படித் தெரிந்து கொண்டாய்?" என்றேன்.
"குட்டிச் சுவரிலே முட்டிக் கொள்வதற்கு அப்படி என்ன வந்தது? தினந்தினந்தான் பத்திரிகைகள் படிக்கிறோமே? ஒரு நாளாவது ஒரு பத்திரிகையிலாவது ஆயிரம் பொய்க்குக் குறைவாக வந்திருக்கிறதா? மார்பிலே கையை வைத்துக் கொண்டு சொல்லு!" என்றான்.
"எங்கள் குட்டை ரொம்ப உடைச்சு விட்டு விடாதே! பின்னே இப்போது என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்?" என்றதும், ஓர் அச்சடித்த துண்டுக் காகிதத்தை எடுத்துக் காட்டினான்; அதில், "மிஸ்டர் சுண்டு, ஸ்டாக் அண்டு ஷேர் புரோக்கர்" என்று அச்சிட்டிருந்தது.
மூக்கின் மேல் சுண்டு விரலை வைத்துக் கொண்டு அதிசயப்பட்டேன்.
"நாராயணசாமி! நான் சொல்கிறேன் கேள்! கடைசியாகப் பணம் சம்பாதிப்பதற்கு வழி கண்டு பிடித்து விட்டேன். பணம் என்றால், இந்த லயனிலே இருக்கிற பணம் வேறே எதிலும் இல்லை! உன்னுடைய டால்மியா டீல்மியா, பிர்லா கிர்லா, டாடா கீடா எல்லாரும் எப்படிக் கோடீசுவரர்கள் ஆனார்கள்? எல்லாம் இந்த ஷேர் மார்க்கெட்டிலே பணம் பண்ணித்தான்! ஆனால் ஒன்று சொல்கிறேன் கேள்! இந்த ஷேர் மார்க்கெட் உலகத்திலே உள்ள முட்டாள்களைப் போல் வேறே எந்த உலகத்திலும் கிடையாது. வாங்க வேண்டிய சமயத்திலே குடுகுடு என்று ஓடிப் போய் விற்பார்கள். விற்க வேண்டிய சமயத்தில் இறுக்கிப் பூட்டி வைத்துக் கொள்வார்கள். தங்களுக்காகத் தெரியாவிட்டாலும், ஏதடா, நம்ப சுண்டு ஒருத்தன் இதற்கென்று தலையைச் க்ஷவரம் பண்ணிக் கொண்டு உட்கார்ந்திருக்கானே, அவனைக் கேட்டுக் கொண்டு செய்வோம் என்று செய்வார்களோ? அதுதான் கிடையாது. போனால் போகட்டும். நீ என்ன சொல்றே? இப்போது ஷேர் மார்க்கெட்டிலே பணம் பண்ணுகிறதற்குச் சரியான சந்தர்ப்பம். மைசூர் நிலக்கரி இருக்கே, அப்படியே தங்கம்! இன்னிக்கு 23 ரூபாயாயிருக்கு. இன்னும் பத்து நாளிலே 29 வரை போகாவிட்டால் என்னை ஏன் என்று கேளு; ஓர் ஆயிரம் ஷேர் இதிலே நீ வாங்கலாம். பத்து நாளைக்குள்ளே ஆறாயிரம் ரூபாய் கை மேல் வந்து விழும்! அப்புறம், குடகு காப்பிக் கொட்டை இருக்கிறதே, 'ஏ ஒன்' ரகத்தில் சேர்க்கவேண்டியது."
"வீசை என்ன விலை?" என்று நடுவிலே கேட்டு வைத்தேன்.
"அட நாராயணசாமி! நான் வெறும் காப்பிக் கொட்டையைச் சொல்லவில்லை! குடகு குண்டுக் காப்பிக் கொட்டை கம்பெனி ஷேரையாக்கும் சொல்கிறேன். உனக்கு அதிலே அவ்வளவு திருப்தி இல்லாவிட்டால் திருவாங்கூர் கடலைப் பிண்ணாக்கு இருக்கிறது! அது வெறும் கடலைப் பிண்ணாக்கு இல்லை! அவ்வளவும் கோட்டைப் பவுன் என்று வைத்துக் கொள். அதிலே ஓர் இரண்டாயிரம் ஷேர் நீ வாங்கிப் போடலாம்."
மிஸ்டர் சுண்டுவின் வாய் மொழியாக அன்று சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரையில் நான் சம்பாதித்து விட்டேன். அவ்வளவோடு அன்றைக்குப் போதும் என்று சொல்லி அவனைப் போகச் சொன்னேன்.
*****
ஒரு மாதம் கழித்து மிஸ்டர் சுண்டுவை நான் பார்த்த போது, "நாராயணசாமி! நல்ல வேளை நீ பிழைத்தாய்! நான் சொன்னதைக் கேட்காமல் நீ பாட்டுக்குப் போய்த் திருவாங்கூர் கடலைப் பிண்ணாக்கையும், மைசூர் நிலக்கரியையும், கொச்சி காப்பிக் கொட்டையையும் வாங்கியிருந்தாயானால் அடியோடு தொலைந்து போயிருப்பாய்!... அதற்காக எனக்குத் தாங்க்ஸ் ஒன்றும் சொல்ல வேண்டாம். நமக்குள்ளே என்னத்திற்காக உபசாரம்?" என்றான்.
"சரி, இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்றேன்.
"இந்த உலகமானது ஏன் இப்படி மூடத் தனத்திலே ஆழ்ந்து கிடக்கிறது என்று அடிக்கடி உன்னைக் கேட்டுக் கொண்டிருந்தேனல்லவா? அந்த இரகசியத்தைக் கடைசியாகக் கண்டு பிடித்து விட்டேன்."
"அது என்ன?"
"உலகத்திலே சரியான படிப்பு இல்லை; இருக்கிற படிப்பும் மோசம். இதுதான் காரணம். முதலிலே நமது சட்டசபையின் அங்கத்தினர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேணும். அப்புறம் பள்ளிக்கூட வாத்தியார்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேணும். அதற்கப்புறம் பிள்ளைகளுக்குச் சரியான முறையில் கல்விப் பயிற்சி கொடுக்க வேணும். நீ என்ன சொல்கிறாய்?" என்று கேட்டான்.
"அவசியம் உடனே செய்ய வேண்டிய காரியந்தான்!" என்றேன்.
"அப்படியானால் முதலிலே சட்டசபை அங்கத்தினருக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கென்று ஒரு பள்ளிக் கூடம் வைக்கிறேன். அதற்கு உன்னாலான கைங்கர்யத்தைச் செய்!" என்று ரசீது புத்தகத்தை நீட்டினான். சுண்டு இந்தத் தடவை போனால் திரும்பி வரமாட்டான் என்ற தைரியத்துடன் சக்தியானுசாரம் நன்கொடை கொடுத்து அனுப்பினேன்.
*****
என் நம்பிக்கை வீணாயிற்று. சுண்டு சீக்கிரமே திரும்பி வந்து, "அப்பனே! நல்ல வேலை பார்த்து என்னை ஏவி அனுப்பினாய். அதைக் காட்டிலும் கொட்டைப் பாக்கைப் பிழிந்து பாதாம் கீர் பண்ணு என்று ஏவியிருக்கலாம்!" என்றான்.
"ஏன்? நமது சட்டசபை அங்கத்தினர்களை உன்னால் படிப்பிக்க முடியவில்லையோ?" என்றேன்.
"அவர்கள் முதலில் பள்ளிக் கூடத்துக்கு வந்தால் தானே படிப்பிக்கலாம்? எங்களுக்குப் படிப்பு வேண்டாம்; இருக்கிற படிப்பு போதும் என்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் கொண்டு போய் இராஜ்ஜியத்தை ஒப்பித்தால் அது ஏன் உருப்படப் போகிறது?" என்றான் சுண்டு.
"அப்படியானால் உலகத்தை முன்னுக்குக் கொண்டு வருகிற காரியம் 'ஹோப்லெஸ்' என்று விட்டு விட வேண்டியதுதான், இல்லையா?" என்றேன்.
"நன்றாயிருக்கிறது. அப்படியெல்லாம் விட்டு விடலாமா? உலகத்தின் தலையிலே ஒரு குட்டுக் குட்டி அதை முன்னுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டாமா? உலகத்தைப் படிப்பிக்கிறதற்கு வேறு வழி ஒன்று கண்டுபிடித்து விட்டேன். இத்தனை நாள் அந்த யோசனை ஏன் தோன்றவில்லையென்பதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. ஆம்; சில சமயம் நாம் தூரத்தில் மலை உச்சியில் உள்ள விளக்கைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறோம். காலடியிலுள்ள சூரியன் கண்ணில் படுவதில்லை! சினிமா டாக்கி என்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறாயோ இல்லையோ?"
"கேள்விப்பட்டிருக்கிறேன்."
"இந்த சினிமா ஒன்று மட்டும் என் கையில் இருந்தால் போதும், அதைக் கொண்டு நமது யுனிவர்ஸிடி வைஸ் சான்ஸலர்களையும், பாடப் புத்தகக் கமிட்டி அங்கத்தினர்களையும் கூடப் புதுப்பித்து விடலாம்! ஆனால் இப்போது இந்த சினிமா உலகம் கெட்டுப் போயிருக்கிறது போல் வேறெதுவும் கெட்டுப் போயிருக்கவில்லை. ஒண்ணாம் நம்பர் நிரட்சர குட்சிகள் எல்லாரும் டைரக்டர்கள் என்று வந்துவிடுகிறார்கள். சினிமாவுக்குக் கதை எழுதுகிறவர்களைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. நடிகர்கள் மகாமகாமகாமகா மோசம். எல்லாரையும் ஒரே 'ஸ்வீப்'பா 'ஸ்வீப்' பண்ணி வங்காளக்குடாக் கடலிலே எறிந்து விட்டு மறுபடி புதிதாக ஆரம்பிக்க வேண்டும்."
"அப்படியே செய்துவிட்டால் போகிறது" என்றேன்.
"அதற்கு உன்னுடைய ஒத்தாசையும் கொஞ்சம் தேவை."
"என்ன செய்ய வேணும்?"
"பத்து லட்சம் ரூபாய் கண்ணை மூடிக் கொண்டு போடுகிற முதலாளி ஒருவரை நீ பிடித்துக் கொடுக்க வேண்டும். அந்த மனிதர் பணத்தை என்கையில் கொடுத்துவிட்டு அப்புறம் என்ன ஏது என்று கேட்கக் கூடாது. என்னைப் பூராவும் நம்பி விட்டுவிட வேணும்! அப்போது பாரேன் சினிமா உலகம் எப்படி தலை கீழாக ஆகிறதென்று!"
"ஆகட்டும் சுண்டு, அவசியம் பார்க்கிறேன்" என்றேன்.
அடுத்த தடவை நான் மிஸ்டர் சுண்டுவைச் சந்தித்த போது அவனுடைய தோற்றம் அடியோடு மாறிப் போய் இருந்தது.
"என்ன பண்ணுகிறாய்?" என்று கேட்டதற்கு "டாக்கி உலகத்திலே பிரவேசித்து விட்டேன். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திரு!" என்றான்.
"கொஞ்ச நாள் என்ன? ரொம்ப நாள் வேண்டுமானாலும் பொறுத்திருக்கிறேன்" என்றேன்.
"அவசியமில்லை. கொஞ்ச நாள் பொறுத்தாலே போதும். இப்போது ஒரு தமிழ் டாக்கியின் டைரக்டருக்குக் காரியதரிசியாக அமர்ந்திருக்கிறேன். டாக்கி விஷயமாய் ஆனா, ஆவன்னா தெரியாதவர்கள் எல்லாம் படத்தைக் குட்டிச்சுவர் ஆக்குவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அடுத்த வருஷம் இந்த நாளில் சினிமா உலகத்தில் ஒரு பெரிய புரட்சி நடக்கப் போகிறது. அதை எதிர்பார்த்துக் கொண்டிரு! நீ பாட்டுக்குத் தூங்கிப் போய் விடாதே!" என்று முதுகிலே தட்டிக் கொடுத்து எச்சரிக்கை செய்துவிட்டுப் போனான்.
அந்தப் படியே நான் தூங்காமல் சினிமா உலகப் புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். சில காலம் வரையில் ஒன்றுமே நடக்கவில்லை. ஒரு வேளை சுண்டு தான் தூங்கிப் போய்விட்டானோ என்று தோன்றியது.
*****
இரண்டு வருஷத்துக்குப் பிறகு சுண்டு திடீரென்று ஒரு நாள் என் எதிரே முளைத்தான். என் தோள்களும் முதுகும் வெகு பாடுபட்டன.
"நான் உன்னைக் கடைசியாக பார்த்தபோது என்ன சொன்னேன்?" என்று கேட்டான்.
"தூங்கிப் போய் விடாதே என்று சொன்னாய். இப்போது தூக்க மருந்து சாப்பிட்டாலும் எனக்குத் தூக்கம் வரமாட்டேனென்கிறது!" என்றேன்.
"சினிமா உலகில் பெரிய புரட்சியை எதிர்பார்த்துக் கொண்டிரு என்று சொன்னேனோ, இல்லையோ? அது நடக்கப் போகிறது!"
"பேஷ்!"
"என்ன பேஷ்! பேஷாவது பேஷ்? உன்னைப் போன்ற உற்சாகமில்லாத பிரகிருதியை நான் பார்த்ததேயில்லை! உலகத்திலே இல்லாத மகா அதிசயம் நடக்கப் போகிறது என்றேன்; நீ பேஷ் என்கிறாய்?"
"பின்னே என்ன சொல்ல வேணும், அப்பா?"
"ஒன்றும் சொல்ல வேண்டாம்; எழுந்திருந்து கூத்தாடணும்"
"ஆகட்டும், சினிமாப் புரட்சி எந்த மட்டும் இருக்கிறது?"
"பாதி நடந்தாற்போலத்தான், கதையும் ஸீனோரியோவும் தயாராகிவிட்டது. 'டயலாக்'கும் முக்கால்வாசி எழுதியாகிவிட்டது. கொஞ்சம் கேட்கிறாயா?"
"காதலி! கரிய மேகங்களும் கண்டு வெட்கும்படியான ஜாஜ்வல்யமான கன்னங்களிலே குமிழ் விட்டுக் கொப்பளிக்கும் அழகு வெள்ளத்தின் ஆழத்திலே ஆழத்திலே ஆழத்திலே..."
"சுண்டு உனக்கு எப்போது தெத்துவாய் ஏற்பட்டது?" என்று கேட்டேன்.
"என்ன கேட்டாய்?" என்று வேறு உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு வந்தவனைப் போல் சுண்டு கேட்டான்.
"ஆழத்திலே, ஆழத்திலே, ஆழத்திலே என்றுசொல்லிக் கொண்டே போனாயே? ஒரு வேளை தெத்துவாய் வந்து விட்டதோ என்று கேட்டேன்."
"உன்னிடம் இதைப்பற்றியெல்லாம் பேசிப் பிரயோஜனமில்லை என்று தெரியும். தெரிந்தும் பேசினேனே? என் புத்தியை... அடித்துக் கொள்ள வேணும். அடாடா! மணி ஐந்தாகிவிட்டதே! லுல்லு அங்கே காத்துக் கொண்டிருப்பாளே?"
"லுல்லு என்பது யார் அப்பா?"
"அட நாராயணா! லுல்லுவைத் தெரியாதா? அடுத்த வருஷம் இந்த நாள் எல்லாம் லுல்லுவின் பெயர் உலகப் பிரசித்தியடையப் போகிறது. சினிமா உலகத்திலேதான் சொல்கிறேன். நீ செவிடாய்ப் போனாலும் கூட உன் காதில் அந்தப் பெயர் விழத்தான் விழும்!"
"லுல்லு என்பது யார் அப்பா?"
"சினிமா உலகத்தில் பாதிப் புரட்சியை நான் நிறைவேற்றி விட்டேன்; பாக்கிப் பாதிப் புரட்சியை லுல்லு நிறைவேற்றப் போகிறாள்! அவளைக் கதாநாயகியாக வைத்துத்தான் நான் கதையும், ஸினோரியோவும் எழுதியிருக்கிறேன். இன்னும் ஐந்தாறு மாதம் மட்டும் தூங்காமலிரு; அப்புறம் பார் அற்புதத்தை!" என்று சொல்லி விட்டுச் சுண்டு நடையைக் கட்டினான்.
என் முதுகைத் தட்டக் கூட அவன் மறந்து விட்டுப் போனது எனக்கு அளவில்லாத, அளவில்லாத, அளவில்லாத... அட சுண்டு! அளவில்லாத ஆச்சரியத்தை அளித்தது.
*****
பிற்பாடும் சில மாதம் காலம் சுண்டு அடிக்கடி என்னைச் சந்தித்ததோடு 'லுல்லு' 'லுல்லு' என்று சொல்லி என் பிராணனை வாங்கிவிட்டான். காது செவிடாய்ப் போய் விட்டாலே தேவலை என்று தோன்றியது. லுல்லுவின் அசல் பெயர் லீலா மனோகரி என்று அறிந்தேன்; சுப்பிரமணியன் என்னும் பெயர் சுண்டு என்று திரிந்திருக்கும் போது லீலா மனோகரி லுல்லு ஆகக் கூடாதா?
லுல்லுவும் அவள் தாயாரும் அநாதைகள் என்றும் ஏதோ சினிமாவில் சில்லறைப் பாத்திரங்களாக நடித்தும் குரூப் டான்ஸுகளில் ஆடியும் ஜீவனம் நடத்துகிறார்கள் என்றும் தெரிந்தது.
அத்தகைய லுல்லுவிடம் சுண்டு தன் உள்ளத்தை முழுதும் பறிகொடுத்திருந்ததோடு, அவளை உலகம் மெச்சும் சினிமா நட்சத்திரமாகச் செய்து விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்ததையும் அறிந்தேன்.
சுண்டுவின் சுபாவம் எனக்குத் தெரியுமாதலால் லுல்லுவிடமும் அவள் தாயாரிடமும் 'ஐயோ! பாவம்' என்று இருந்தது. இவனுடைய வெறும் வாய் புரடாக்களைக் கேட்டு அவர்கள் ஏமாந்து போய்விடப் போகிறார்களே என்று இரக்கப்பட்டேன். அவர்களை ஒரு நாள் நேரில் பார்த்து எச்சரிக்கலாமா என்று கூடத் தோன்றியது.
நல்ல வேளையாக, அந்த எச்சரிக்கைக்கு அவசியமில்லாமல் போயிற்று.
ஒரு நாள் சுண்டு தலைவிரி கோலமாய் அதாவது கிராப்புத் தலையை வாராமல் ஓடி வந்து, "அப்பனே! இந்த உலகம் இருக்கிறதே, மகா சண்டாள உலகம்; மகா மோசமான உலகம்! அயோக்கிய உலகம்; அக்கிரம உலகம்; மோச உலகம்; நாச உலகம்; இந்த உலகத்திலே இனி ஒரு நிமிஷங் கூட என்னால் வாழ்க்கை நடத்த முடியாது. இதை ஒரே அடியாக விட்டொழித்து தலை முழுகிவிடப் போகிறேன்" என்றான்.
"சரி" என்றேன்.
"சரி என்று ஒரு தடவை சொன்னால் போதாது. நூறு தடவை சொல்ல வேணும்!" என்றான்.
"நூறு தடவை சரி!" என்றேன்.
"இந்த மோச உலகத்தைத் துறந்து சந்நியாசம் வாங்கிக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டேன். யார் தடுத்தாலும் கேட்க மாட்டேன்" என்றான்.
"அடடா! லுல்லுவின் கதி என்ன ஆகிறது?" என்றேன்.
"லுல்லு! லுல்லு! நல்ல லுல்லு! அவளாலேதான் அப்பா, நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ளப் போகிறேன். லுல்லு செய்த மோசடியினால்தான்!"
கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்து ஒருவாறு விஷயம் இன்னதென்று தெரிந்து கொண்டேன்.
லுல்லுவுக்காகச் சுண்டு கதையும் 'டயலாக்'கும் எழுதி ஒரு டாக்கி முதலாளியிடம் எடுத்துக் கொண்டு போனான். தன்னை டைரக்டராகவும், லுல்லுவைக் கதாநாயகியாகவும் எடுத்துக் கொண்டால் அந்த அற்புதமான கதையைக் கொடுப்பேன் என்றான். இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடந்தபோது, லுல்லு மேற்படி டாக்கி முதலாளியைச் சந்திக்க நேர்ந்தது. சில தினங்கள் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்தன. கடைசியில் மேற்படி டாக்கி முதலாளி லுல்லுவைக் கதாநாயகியாக எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக தம்முடைய சொந்த நாயகியாகவே ஏற்றுக் கொள்ள முன் வந்தார்! லுல்லுவுக்கும் மேற்படி முதலாளிக்கும் கலியாணம் நிச்சயமாகி விட்டது. சுண்டு உலகத்தைத் துறந்து சந்நியாச ஆசிரமத்தை மேற்கொள்ள எண்ணியதற்குக் கொஞ்சம் காரணம் இருக்கத்தான் செய்தது!
ஆனால் சுண்டுவாவது, சந்நியாசம் வாங்கிக் கொள்வதாவது! நாலைந்து நாளில் லுல்லுவை மறந்துவிட்டு இன்னோர் உல்லுவைப் பிடித்துக் கொண்டு திரிவான் என்று நான் எண்ணினேன். அவனிடமும் சொன்னேன். சுண்டு வெகு கோபத்துடன் என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போய் விட்டான்.
*****
ஒரு மாதத்துக்கெல்லாம் சுண்டுவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. "என் பேச்சை நீ நம்பவில்லையல்லவா? இத்தனாந் தேதி இன்ன மணிக்கு இந்த இடத்துக்கு வந்து பார்" என்று எழுதியிருந்தான்.
என்னதான் செய்யப் போகிறான் என்று பார்ப்பதற்காக நான் குறிப்பிட்ட இடத்துக்குப் போயிருந்தேன்.
சுண்டு தன் அழகான கிராப்புத்தலையை மழுங்க மொட்டையடித்துக் கொண்டு காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு கையில் கமண்டலத்துடன் காட்சியளித்தான்.
"அடபாவி! சொன்ன வாக்கை நிறைவேற்றி விட்டாயா?" என்று சத்தமிட்டேன்.
உடனே 'சைலன்ஸ்' என்று ஓர் இடி முழக்கக் குரல் கேட்டது.
"போ! அப்பால் போ!" என்று பல குரல்கள் கட்டளையிட்டன.
யாரோ ஒருவன் ஓடி வந்து என்னை அப்பால் இழுத்துப் போனான்.
"ஷுட்" என்றது மறுபடியும் அந்த இடிமுழக்கக் குரல்.
லுல்லுவினால் நிராகரிக்கப்பட்ட சுண்டு வாழ்க்கையில் வெறுப்படைந்து "மாய உலகம்" என்னும் படத்தில் கபட சந்நியாசி வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கிறான் என்று அறிந்த பிறகுதான் என் மனம் ஒருவாறு நிம்மதி அடைந்தது.
போகட்டும்! சுண்டு எந்த வழியிலாவது நாலு பணம் சம்பாதித்து யோக்கியமாக வாழ்க்கை நடத்தினால் சரி!
ஆம்; நூறு தடவை சரி!
சுபம்.
--------------------
8. திருடன் மகன் திருடன்
1
பழைய தகரப் பெட்டிக்குள் வைத்திருந்த பட்டாசுக் கட்டுகளையும் மத்தாப்புப் பெட்டிகளையும் பாலன் எண்ணி வைத்து ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தான். இந்த மாதிரி அவன் எண்ணி வைத்து ஒழுங்கு படுத்தியது, இது முப்பத்திரண்டாவது முறை. பட்டாசு, மத்தாப்பு முதலியவற்றை தொடுவதிலேயே அவனுக்கு ஓர் ஆனந்தம். பெட்டிக்குள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்தில் நகர்த்தி வைத்து ஒழுங்குபடுத்துவதிலே அளவில்லாத சந்தோஷம். தம்பி சீனுவுக்கும், தங்கை அம்புலுவுக்கும் எது எதைக் கொடுக்கலாம் என்பது பற்றிப் பிரமாதமான யோசனை. "சீனுவுக்குப் படபடா, அம்புலுவுக்குப் புஸ்வானம்!" என்று அவனுடைய வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
இந்தச் சமயத்தில் வீட்டு வாசலில் ஒரு வண்டி வந்து நின்ற சத்தம் கேட்டது.
"பெரிய மாமா வந்துவிட்டார்!" என்று சொல்லிக் கொண்டே, பாலன் தகரப் பெட்டியை அவசர அவசரமாகப் பூட்டிக் கொண்டு விழுந்தடித்து வாசற் பக்கம் ஓடினான். குதிரை வண்டியிலிருந்து கறுப்புக் கோட்டும், சரிகைத் தலைப்பாகையும், கையில் ஓர் அட்டைப் பெட்டியுமாகப் பெரிய மாமா இறங்கிக் கொண்டிருந்தார். பெரிய மாமா கல்யாணசுந்தரம், அந்த ஊரில் பிரபல வக்கீல், கோர்ட்டுக்குப் போய் விட்டு அவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார்.
பாலனுடைய கவனமெல்லாம் பெரிய மாமாவின் கையில் இருந்த அட்டைப் பெட்டியில் இருந்தது. அவர் வண்டியிலிருந்து இறங்கியதும், இறங்காததுமாகப் பாலன், "மாமா! ஏரோபிளேன் வாணம் வாங்கிக் கொண்டு வந்தேளா?" என்று கேட்டான்.
பெரிய மாமா புன்னகையுடன் வீட்டு வாசற்படிகளில் ஏறினார்.
பெரிய மாமாவின் பிள்ளைகளான துரையும், சங்கரனும் வீட்டுக்குள்ளேயிருந்து அச்சமயம் வெளியே வந்தார்கள். பாலனுடைய கேள்வி அவர்களுடைய காதில் விழுந்தது. துரை சங்கரனிடம் மெல்லிய குரலில், "பையனுக்கு என்ன பரபரப்பு?" என்றான். அதுவும் பாலனுடைய காதில் விழுந்தது. இதனால் பாலன் உற்சாகம் குன்றாமல் பெரிய மாமாவைப் பார்த்துக் கையை நீட்டினான்.
"அவசரப்படாதே, உள்ளே வா! தருகிறேன்!" என்றார் மாமா. பிறகு, "உன் அம்மாவும் சின்ன மாமாவும் வந்து விட்டார்களா?" என்று கேட்டார். "இல்லை!" என்றான் பாலன்.
கல்யாணசுந்தரம் ஆபீஸ் அறைக்குச் சென்று மேஜை மீது அட்டைப் பெட்டியை வைத்தார். அதற்குள்ளே இருந்த ஏரோபிளேன் வாணங்களை எடுத்துப் பாலனுடைய கையில் இரண்டு கொடுத்தார். மற்றவற்றைத் துரையிடம் கொடுத்து, 'எடுத்துக் கொண்டு போங்கள்!' என்றார்.
பாலன் ஏரோபிளேன் வாணங்களை வாங்கிக் கொண்டதும் அங்கிருந்து குதித்தோடினான்.
துரையும், சங்கரனும் அப்பாவின் ஆபீஸ் அறையிலேயே நின்றார்கள். பாலனை விட அவர்கள் வயசில் மூத்தவர்கள். துரை சங்கரனைப் பார்த்தான். சங்கரன் தகப்பனாரைப் பார்த்து "அப்பா, பாலன் திருடுகிறான் என்று தோன்றுகிறது!" என்றான்.
அட்வகேட் கல்யாணசுந்தரம் அவனைக் கோபமாகப் பார்த்தார். அப்போது துரை, "ஆமாம், அப்பா! நேற்றைக்கு அவன் தகரப் பெட்டியைத் திறந்தபோது தற்செயலாகப் பார்த்தேன், நிறையப் பணம் வைத்திருக்கிறான்!" என்றான்.
சங்கரன், "அவனுக்கு அவ்வளவு பணம் எப்படிக் கிடைத்திருக்கும்? திருடித்தானே இருக்க வேண்டும்? அம்மா கூட அடிக்கடி 'நாலணாவைக் காணோம். எட்டணாவைக் காணோம்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். இவன் தான் எடுத்திருக்க வேண்டும்" என்றான்.
துரை, "அப்பாவின் திருட்டுக் குணம், பையனுக்கும் உண்டு போலிருக்கிறது!" என்றான்.
"சீ! பேசாதிரு!" என்று அதட்டினார் கல்யாணசுந்தரம். அவருடைய மனம் புண்ணாயிற்று என்று முகத்திலிருந்து தெரிந்தது.
பிறகு கொஞ்சம் சாவதானமான குரலில் "துரை! சங்கர்! நீங்கள் இப்படியெல்லாம் பேசக் கூடாது. பாலனுடைய அப்பா, அம்மாவுக்கு இப்போது கஷ்ட காலம். ஏற்கனவே அந்தப் பையன் மனம் நொந்திருக்கிறான். அவனைப் பற்றி நீங்கள் இப்படி பேசுவது காதில் விழுந்தால், அவன் மனசு என்ன பாடுபடும்? யாரைப் பற்றியும் அநாவசியமாகச் சந்தேகப்படக் கூடாது. சந்தேகப்பட்டுப் பழி சொல்வது பாவம்! மாதம் மாதம் உங்களுக்குக் கொடுக்கிறது போல அவனுக்கும் பாக்கெட் மணி கொடுக்கிறேன் அல்லவா? அதில் அவன் மிச்சம் பிடித்து சேர்த்து வைத்துக் கொண்டிருக்கலாம். எதற்காக அவனுக்குத் திருட்டுப் பட்டம் சூட்டுகிறீர்கள்?" என்றார்.
இந்தப் பேச்செல்லாம் பாலனுடைய காதில் விழத்தான் செய்தது. அவன் வாங்கிக் கொண்டு போன ஏரோபிளேன் வாணங்களில் ஒன்றில் தீ வைக்கும் திரி இல்லை. அதைப் பெரிய மாமாவிடம் கொடுத்து வேறொன்று வாங்கிக் கொள்வதற்காக அவன் வந்து கொண்டிருந்தான். மாமா சொன்னது காதில் விழவே, ஆபீஸ் அறைக்குள் நுழையாமல் திரும்பிப் போனான். போய்த் தன்னுடைய பழைய தகரப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு தலையைப் பெட்டியின் மேல் வைத்துக் கொண்டு விம்மினான்.
-------
2
"ஏண்டா குழந்தை, என்னடா செய்கிறாய்? உட்கார்ந்து கொண்டே தூங்குகிறாயா என்ன? ராத்திரியில் அதிக நேரம் கண் விழித்துப் படிக்கிறாய் போலிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே பாலனின் தாய் அவன் அருகில் வந்தாள்.
பாலன் தலை நிமிர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டான்.
"ஏண்டா, அழுகிறாயா என்ன?" என்று பதைபதைப்புடன் ஜானகி அருகில் வந்து உட்கார்ந்தாள்!
"இல்லை, அம்மா, அழவும் இல்லை, ஒன்றும் இல்லை!" என்றான் பாலன்.
"சீ! பொய் சொல்லாதே! அழுது, அழுது முகமெல்லாம் வீங்கி இருக்கிறதேடா!" என்றாள் ஜானகி.
"வீங்கவும் இல்லை, ஒன்றுமில்லை" என்றான் பாலன்.
"ஏண்டா அழுதாய்? யாராவது ஏதாவது சொன்னார்களா?" என்று கேட்டாள் ஜானகி.
"ஒருத்தரும் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு தான் தீபாவளிக்கு ஊருக்கு வர வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. அம்புலுவையும் சீனுவையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. நானும் உன்னுடன் வரட்டுமா?" என்று கேட்டான்.
"வேண்டாம், வேண்டாம்! அசடு மாதிரி பேசாதே. நம்ம வீட்டில் இந்த வருஷம் தீபாவளி கிடையாது! இங்கே இருந்தால் மாமா உனக்குப் புது வேஷ்டி, புதுச் சொக்காய் எல்லாம் வாங்கித் தருவார்!" என்றாள் ஜானகி.
"அம்புலுவுக்கும் சீனுவுக்கும்?" என்று பாலன் கேட்டான்.
"அவர்களுக்கு என்ன? பச்சைக் குழந்தைகள்! அப்பா அடுத்த வருஷம் வெளியில் வந்தால் வாங்கிக் கொடுக்கட்டும்" என்றாள் ஜானகி.
பாலன் சற்று நேரம் சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அப்பா எப்படி அம்மா இருக்கிறார்? எப்போது வெளியில் வருவார்?"
"நன்றாய்த்தான் இருக்கிறார், அவருக்கு என்ன? 'பி' கிளாஸில் வைத்திருக்கிறார்களாம்! மூன்று மாத காலந்தானே ஆயிற்று! விடுதலைக்கு இன்னும் ஒன்பது மாதம் இருக்கிறது!" என்றாள் ஜானகி.
"உன் பேரில் ரொம்பக் கோபமாய் இருக்கிறாரா?" என்று கேட்டான் பாலன்.
"என் பேரில் எதற்காகக் கோபமாயிருக்கிறார்? நானா இப்படியெல்லாம் கெட்டலையச் சொன்னேன்?" என்றாள் ஜானகி.
பிறகு, "நான் ரெயிலுக்குக் கிளம்ப வேண்டும். நீ சமர்த்தாய் இருக்கிறாயா? யாராவது ஏதாவது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. தெரியுமா? பட்டாசுக் கட்டு, மத்தாப்பு எல்லாம் நிறைய இருக்கிறது என்று சொன்னாயே! சீனுவுக்கும் அம்புலுவுக்கும் கொஞ்சம் கொடேன்" என்றாள்.
"ஆகட்டும், அம்மா தருகிறேன்" என்றான் பாலன். பிறகு நீண்ட யோசனை செய்து தயங்கித் தயங்கிப் பெட்டியிலிருந்து ஒரு பட்டாசுக் கட்டை எடுத்தான். எடுத்ததை வைத்துவிட்டு, இன்னொன்றை எடுத்தான். கடைசியில் இரண்டு பட்டாசுக் கட்டும், இரண்டு படபடாவும், இரண்டு மத்தாப்புப் பெட்டியும் எடுத்து அம்மாவிடம் கொடுத்தான்.
"ஏண்டா பெட்டி நிறைய வைத்திருக்கிறாய், இரண்டே இரண்டு கொடுக்கிறாயே?" என்றாள் ஜானகி.
"இந்த வீட்டில் துரை, சங்கரன் எல்லாரும் நிறைய வாணம் விடுவார்கள். அம்மா! அவர்களைப் போல் நானும் வாணம் விட வேண்டும் அல்லவா?" என்றான் பாலன்.
"அதுவும் சரிதான். நீயே இவற்றையும் வைத்துக் கொள். சீனுவுக்கும் அம்புலுவுக்கும் பட்டாசுக் கட்டு சுடக் கூடத் தெரியாது!" என்றாள் ஜானகி.
"எல்லாம் தெரியும், அம்மா! கட்டாயம் எடுத்துக் கொண்டு போ. நான் கொடுத்தேன் என்று சொல்லு!" என்று பாலன் கூறி, இன்னொரு மத்தாப்புப் பெட்டி அதிகமாகவே எடுத்துக் கொடுத்தான்.
-----------
3
ஜானகியின் புருஷன் ஜோக்கர் ராமுடுவின் பெயர் போக்கிரிகளின் உலகத்தில் நீண்ட காலமாகப் பிரசித்தி பெற்றிருந்தது. ராமுடுவைப் பிடித்துக் கையில் விலங்கு மாட்டி, இரும்புக் கதவுக்குள் தள்ளி, இழுத்துப் பூட்ட வேண்டும் என்று போலீஸார் வெகு நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் ராமுடு எப்படியோ போலீஸார் கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டு வந்தான். கடைசியாக, அவனுடைய அருமை மனைவி, பதி பக்தியுள்ள பெண்மணி, ஸ்ரீமதி ஜானகியின் மூலமாக அவன் போலீஸ் கையில் சிக்கிக் கொள்ளும்படி நேர்ந்து விட்டது.
ராமுடு பார்த்து வந்த உத்தியோகம் போனதிலிருந்து, அவன் அதிகமாகக் குடும்பத்தைக் கவனிப்பது கிடையாது. மாதத்தில் சில நாள் வீட்டுக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் மனைவி மக்களிடம் வெகு பிரியமாய் இருப்பான். அவர்களுக்கு அதைப் பண்ண வேணும், இதைப் பண்ண வேணும் என்றெல்லாம் ஆசையுடன் பேசுவான். பெரிய 'பிரைஸ்' அடிக்கப் போவதாகவும், அதற்குப் பிறகு வீடு உண்டு தான் உண்டு என்று இருக்கப் போவதாகவும் சொல்லுவான். ஆனால் இந்தப் பேச்சிலேயெல்லாம் ஜானகி அதிகமாக நம்பிக்கை வைக்கவில்லை. இரண்டு எருமை மாடு வைத்துக் கொண்டு, தமையன் தம்பிமாரிடமிருந்து கிடைத்த உதவியைக் கொண்டு காலட்சேபம் செய்துவந்தாள். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு அளவில்லாத பொறுமையையும் கஷ்டத்தைச் சகிக்கும் தன்மையையும் அளித்து வந்தது.
பாலனை அவனுடைய மாமா படிக்க வைப்பதாகச் சொல்லி அழைத்துப் போனதிலிருந்து ஜானகிக்குத் தெம்பு அதிகமாயிற்று. அம்புலுவின் கல்யாணத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. எருமைமாட்டுத் தயிரும், நெய்யும் விற்றுக் கிடைத்த பணத்தில் மிச்சம் பிடிக்கத் தொடங்கினாள். அந்தப் பணத்தைப் பதுக்கி வைக்கவும் தொடங்கினாள். ராமுடுவின் கண்ணில் பட்டால் அவன் எப்படியாவது நையப் பாட்டுப் பாடி வாங்கிக் கொண்டு போய்விடுவான் என்று அவளுக்குப் பயம். இம்மாதிரி பல சமயம் அவளிடம் இருந்த ஐந்து ரூபாய், பத்து ரூபாய் அவன் கடனாக வாங்கிக் கொண்டு போனதுண்டு. ஒரு முறையாவது திரும்பக் கொடுத்தது கிடையாது.
மிச்சம் பிடித்த பணத்தை ஜானகி, தான் தினந்தோறும் இரவில் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக் கொள்ளும் தலையணைக்குள்ளே செருகி வைத்து வந்தாள். ஒரு நாள் ராமுடு அந்தத் தலையணையை வைத்துக் கொண்டபோது, 'தலைகாணி என்ன இப்படிக் கனக்கிறதே!' என்றான். ஜானகிக்குப் பயமாய்ப் போய்விட்டது. மறுநாளே பணத்தை எடுத்து ஒரு பழந்துணியில் முடிந்து அரிசிப் பானைக்குள் வைத்தாள். அதுவும் மனச்சாந்தியை அளிக்கவில்லை. அண்ணன் வீட்டுக்குப் போகும் போது அதை அங்கே கொண்டு போய்ப் பாங்கியிலே போட்டு விட்டு வர வேண்டும் என்று எண்ணினாள். ஒரு நாள் சில்லறையாயிருந்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு போய் மளிகைக் கடையில் கொடுத்து நோட்டாக மாற்றிக் கொண்டு வந்தாள். கிருஷ்ண பகவானுடைய படத்துக்குப் பின்னால் ஒளித்து வைத்தாள். அதிலும் பயம் வந்துவிட்டது. ஒரு தகர டப்பாவில் நோட்டும், ரூபாயுமாக நூற்றெட்டு ரூபாய் போட்டு மூடிப் பழந்துணி ஒன்றைச் சுற்றிக் கட்டி ஒரு நாள் நடுநிசியில் வீட்டுக் கூடத்தில் ஒரு மூலையைத் தோண்டிப் புதைத்து விட்டாள். புதைத்த இடத்தின் மேலே சுவர் ஓரமாகத் தவிட்டு மூட்டையைப் போட்டு வைத்தாள்.
ஒரு தடவை ராமுடு வந்து வீட்டில் இரண்டு நாள் தங்கியிருந்தான். "ஜானகி உன்னிடம் பணம் இருந்தால் இருபது ரூபாய் கொடு, ஒரு மாதத்தில் கொடுத்து விடுகிறேன்" என்றான்.
ஜானகி தலையை ஒரே ஆட்டாக ஆட்டி, "இல்லை" என்று சொன்னாள். பெட்டியில் சட்டியில் எல்லாம் ராமுடு கையை விட்டுத் தேடினான். ஒன்றும் கிடைக்கவில்லை. ஜானகி தன் மனதிற்குள் பணத்தைப் பூமியில் புதைத்து வைத்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று என்று எண்ணிக் கொண்டாள்.
ராமுடு போனதற்கு மறுநாள் ஜானகி மாட்டுக்குத் தவிடு எடுக்கும் போது கீழே சிந்தியதையும் எடுத்துக் கொள்வதற்காக மூட்டையைப் புரட்டினாள். அவளுடைய வயிறு பகீர் என்றது! தலை சுழன்றது. ஏனென்றால் சுவர் மூலையில் தரையில் ஒரு துவாரம் காணப்பட்டது. அலறிப் புடைத்துக் கொண்டு கையை விட்டுத் தோண்டிப் பார்த்தாள். பணம் வைத்திருந்த டப்பாவைக் காணவில்லை. அவள் அப்போது போட்ட கூச்சலில் அண்டை அயலார் எல்லோரும் வந்து கூடி விட்டார்கள். ஜானகி விஷயத்தைச் சொன்னதும் அவர்களில் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிப் போய்ச் சொன்னார். போலீஸ்காரர்களும் வந்தார்கள். ஜானகியிடம் என்ன விஷயம் என்று கேட்டார்கள். போன பணத்தைக் கண்டுபிடித்துப் போலீஸார் கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரில் ஜானகி தான் பணத்தைப் புதைத்து வைத்திருந்த விவரத்தைக் கூறினாள். யாரோ திருடியிருக்கிறார்கள் என்றும் கண்டு பிடித்துத் தரவேண்டும் என்றும் கதறினாள். பாவம்! ஜானகியுடைய பிரலாபம் போலீஸாரின் மனத்தைக் கூட இளகச் செய்துவிட்டது. வந்திருந்த ஹெட் கான்ஸ்டபிள் "எப்படியும் திருட்டைக் கண்டுபிடித்து விடுகிறோம், நீ சும்மா இரு!" என்று ஆறுதல் சொன்னார்.
அன்று மாலையே போலீஸார் திரும்பி வந்து ஜானகியிடம் அவள் புருஷனுடைய போக்கு வரவைப் பற்றி விசாரித்தார்கள். ஜானகிக்கு 'சொரேல்' என்றது. ஏற்கனவே அவள் மனத்தில் ராமுடுவைப் பற்றிக் கொஞ்சம் சந்தேகம் ஜனித்ததுண்டு. உடனே, 'அப்படி இராது!' என்று தீர்மானித்துக் கொண்டாள். ஆயினும் இப்போது போலீஸார் விசாரித்ததும் மறுபடியும் பீதி உண்டாகிவிட்டது. தன் புருஷன் வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆயிற்று என்று பொய் சொன்னாள். 'இரண்டு நாளைக்கு முன்பு வந்திருந்தானாமே?' என்று கேட்டதற்கு, "இல்லவே இல்லை!" என்று சொல்லி விட்டாள் ஜானகி. "இல்லை" என்று சொல்லி விட்டால் புருஷனைக் காப்பாற்றியதாகி விடுமா? அதனால் போலீஸாரின் சந்தேகம் அதிகமே ஆயிற்று. எப்பேர்ப்பட்ட சிக்கலான மர்மமான குற்றங்களையெல்லாம் கண்டுபிடிப்பவர்களுக்கு இந்தத் திருட்டு ஒரு பிரமாதமா? கடைசியில் அவர்கள் ராமுடுவையும் அவனுடைய கூட்டாளிகளில் மூன்று பேரையும் கைது செய்து விட்டார்கள். அந்த நாலு பேர் மீதும், பணம் வைத்துச் சீட்டு விளையாடியதாக வழக்குத் தொடர்ந்தார்கள். ராமுடுவின் பேரில் அதிகப்படியாகத் திருட்டு வழக்கும் தொடர்ந்தார்கள்.
ஜானகி தன்னுடைய ஆத்திரத்தினால் நேர்ந்த விபரீதத்தைப் பார்த்ததும், முட்டி மோதிக் கொண்டு அழுதாள். தமையன், வக்கீல் கல்யாணசுந்தரத்தின் யோசனைப்படி கோர்ட் விசாரணையில், பணம் திருட்டுப் போனதே உண்மை இல்லை என்று சாதித்தாள். மளிகைக் கடைப் பாக்கி கொடுக்க முடியாதபடியால் மளிகை வியாபாரிக்குச் சால்ஜாப்புச் சொல்வதற்காக அப்படி ஒரு கற்பனை செய்ததாகக் கூறினாள். அதெல்லாம் ஒன்றும் பயன்படவில்லை. அவளுடைய முதல் வாக்குமூலத்தையே கோர்ட்டில் ஆதாரமாகக் கொண்டார்கள். அத்துடன் மற்றச் சாட்சியங்களும் சேரவே, ராமுடுவை ஒரு வருஷம் தண்டித்துவிட்டார்கள்.
மேற்படி வழக்கு விசாரணையின் போது ராமுடு அவளிடம் நடந்து கொண்ட முறை கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. அவன் ஜானகியின் பேரில் கோபம் காட்டவே இல்லை. அவனுடைய மனப்போக்கே மாறிப் போய் இருந்தது.
"நீ என்ன செய்வாய் ஜானகி? வேண்டுமென்றே என்னைச் சிறைக்கு அனுப்புவதற்காகவா சொன்னாய்? என் தலையெழுத்து அப்படி. உன் வாய்மூலம் இந்தக் கஷ்டம் எனக்கு சேர்ந்தது. நீ வீணாக வருத்தப்படாதே!" என்று தேறுதல் கூறினான். இதெல்லாம் ஜானகியின் காதில் ஏறுமா? அவள் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை.
எனினும், எந்த மாதிரித் துயரமும் நாளடைவில் காய்ச்சித்தான் போகிறது. அதனுடைய வேகம் தணிந்து விடுகிறது. கடவுள் மனிதர்களுக்கு அத்தகைய ஒரு சக்தியைக் கொடுத்திருக்கிறார்.
ராமுடு சிறைக்குப் போய் மூன்று மாதத்துக்குப் பிறகு ஜானகி அவனைச் சிறையில் 'இண்டர்வியூ' பார்ப்பதற்காகச் சென்றாள். அவளுடைய அண்ணன் தம்பிமார் வசித்த நகரத்தில் சிறை இருந்தது.
ஜானகியின் தம்பி கைலாசம் அவளைச் சிறைக்கு அழைத்துப் போனான். இரும்புக் கம்பிக் கூண்டுக்குள்ளே தன் கணவனைப் பார்த்ததும், ஜானகிக்கு வயிறு பற்றி எரிந்தது; உள்ளம் வெதும்பிற்று. ஆயினும் சற்று நேரம் அவனுடன் பேசி, அவன் சிறையில் சௌக்கியமாகவே இருக்கிறான் என்று தெரிந்ததால் கொஞ்சம் மன நிம்மதி ஏற்பட்டது.
"ஜானகி, எத்தனையோ பெரிய மனிதர்கள் எல்லாம் காந்திக் கட்சியில் சேர்ந்து சிறைக்கு வரவில்லையா? அந்த மாதிரி நானும் சிறைப்பட்டதாக நினைத்துக் கொள். விடுதலையாகி வெளியே வந்ததும் என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியிருக்கும் பார்" என்று ராமுடு சொன்னான்.
தான் கஷ்டப்பட்டுச் சேர்த்துப் புதைத்து வைத்திருந்த பணத்தைத் திருடியவன் ராமுடு என்பதில் ஜானகிக்குச் சந்தேகம் எதுவும் இல்லை. தன் புருஷன் யோக்கியதை தெரிந்திருந்தும், தான் பதற்றப்பட்டுப் போலீஸுக்குச் சொன்னதைப் பற்றி அவள் வருந்தினாள். எனினும் இந்தச் சிறைவாசத்தின் பயனாக அவனுடைய நடவடிக்கை அடியோடு மாறிவிடலாம் என்ற எண்ணம் "எல்லாம் ஒரு நன்மைக்குத்தான்" என்ற முதுமொழியில் அவளுடைய நம்பிக்கையை வலுப்படுத்திற்று. இதைப் பற்றி நினைத்து ஒரு வகையாக மனத்தை தேற்றிக் கொண்டே ஜானகி ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போனாள்.
ஜானகியின் தம்பி கைலாசம் அவளை ரெயில் ஏற்றி அனுப்புவதற்காக வந்தான். "பாலன் இங்கே சமர்த்தாயிருக்கிறான் அக்கா! நன்றாகப் படித்து வருகிறான்! அவனைப் பற்றி நீ கவலைப்படாதே" என்று ஆறுதல் கூறினான்.
"அந்த குழந்தையைத்தான் நான் நம்பியிருக்கிறேன்; அவன் தலை எடுத்துச் சம்பாதிக்க ஆரம்பித்தால்தான் எனக்கு விடியும்!" என்றாள் ஜானகி.
குப் குப் என்ற சத்தத்துடன் தூரத்தில் ரெயில் வந்து கொண்டிருந்தது.
--------
4
அம்மாவும் சின்ன மாமாவும் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்படும் வரையில் பாலன் காத்துக் கொண்டிருந்தான். ஒற்றை மாட்டு வண்டி வீட்டு வாசலிலிருந்து நகர்ந்ததும், சட்டென்று உள்ளே ஓடினான். தகரப் பெட்டியைத் திறந்து அதற்குள் வைத்திருந்த பணத்தை எடுத்துத் தன்னுடைய டிராயர் (கால் சட்டை) பைக்குள் ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டான். பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் ஒரு துணியில் கட்டிக் கொண்டான். வீட்டின் வலது பக்கத்திலிருந்த வாசற்படி வழியாக யாரும் கவனியாத போது வெளியே கிளம்பினான். ஓட்டமும் நடையுமாகச் சென்று, பட்டாசு மத்தாப்பு மார்க்கெட்டை அடைந்தான்.
"தம்பி! என்ன வேணும்" என்று கடைக்காரன் கேட்டான்.
"எனக்கு ஒன்றும் வேண்டாம். என்னிடம் உள்ள பட்டாசுகளையும், மத்தாப்பு வாணங்களையும் எடுத்துக் கொண்டு பணம் கொடுக்க முடியுமா?" என்று பாலன் கேட்டான்.
கடைக்காரனுக்கு கொஞ்சம் அதிசயமாய் இருந்தது. ஆயினும் தீபாவளிக்கு முதல் நாளாகையால் பட்டாசும் மத்தாப்பும் அசாத்திய கிராக்கியான விலைக்கு விற்றது. ஆகையால் பேரம் பேசி எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்தான் கடைக்காரன்.
பணத்தைப் பெற்றுக் கொண்டானோ இல்லையோ பாலன் ஒரே ஓட்டமாக ஸ்டேஷனை நோக்கி ஓடினான். பத்து நிமிஷத்தில் ஸ்டேஷனை அடைந்தான்.
ரெயில் வண்டி பிளாட்பாரத்தில் வந்து நின்று கொண்டிருந்தது. திறந்திருந்த 'கேட்' வழியாகப் பாலன் பாய்ந்தோடினான். டிக்கெட் கலெக்டரால் அவனைத் தடுக்க முடியவில்லை.
ரெயில் புறப்படுகிற சமயம். ஊதியும் ஆயிற்று. ஜானகி அம்மாள் வண்டிக்குள்ளிருந்து தலையை வெளியில் நீட்டித் தன் தம்பியிடம் "குழந்தையைக் கவனித்துக் கொள்!" என்று சொல்லிக் கொண்டிருந்தது, பாலன் காதில் விழுந்தது. பாலன் ஒரே ஓட்டமாக அந்த வண்டியை நோக்கி ஓடினான். நல்ல வேளையாக வண்டிக் கதவு திறந்திருந்தது. பாய்ந்து உள்ளே ஏறித் தடால் என்று கீழே விழுந்தான். விழுந்ததைச் சிறிதும் பொருட்படுத்தாமல் "அம்மா! நான் வந்துவிட்டேன்!" என்றான்.
"அடே! என் கண்ணே!" என்று ஜானகி அவனை அலறி எடுத்தாள்.
பாலன் அவளைத் திமிறிக் கொண்டு ஜன்னல் ஓரம் வந்து சின்ன மாமா கைலாசத்தைப் பார்த்து, "நான் தீபாவளிக்கு ஊருக்குப் போகிறேன் மாமா, எல்லோரிடமும் சொல்லி விடுங்கள்" என்றான்.
கைலாசம் அதிசயத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ரெயில் நகர்ந்தது.
"ஏண்டா பாலு! 'மாமா வீட்டில் சமர்த்தாயிருக்கிறேன்' என்று சொன்னாயே! ஏண்டா இப்படி ஓடி வந்தாய்?" என்று கேட்டாள் ஜானகி. அவன் வந்ததில் அவளுக்குச் சந்தோஷந்தான் என்று குரலிலிருந்தே தெரிந்தது.
"தீபாவளியில் உங்களோடயெல்லாம் இருக்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அதனால் தான் வந்துவிட்டேன்."
பிறகு எதையோ நினைத்துக் கொண்டவன் போல், "ஐயையோ! அடடா!" என்று கூச்சல் போட்டான்.
"என்னடா பாலு!" என்று கேட்டாள் ஜானகி.
"அவசரத்தில் மறந்து போய் மாமா வாங்கித் தந்த பட்டாசு மத்தாப்பு ஒன்றையும் எடுத்துக் கொள்ளாமல் வந்து விட்டேன். ரெயில்காரனைக் கொஞ்சம் திரும்பிப் போகச் சொல்லு அம்மா! எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்" என்றான்.
ஜானகி புன்னகையுடன் "நல்ல வேடிக்கை! ரெயில் திரும்புமா?" என்றாள்.
"திரும்பாதா? போனால் போகட்டும்! நான் சீனுவுக்கும், அம்புலுவுக்கும் கொடுத்த வாணங்களைப் பத்திரமாய் வைத்திருக்கிறாய் அல்லவா? அதுவே போதும்!" என்றான் பாலன்.
---------
5
தீபாவளிக்கு முதல் நாள் ராத்திரி ஒரே கொண்டாட்டமாயிருந்தது. பாலனும், சீனுவும், அம்புலுவும் வீட்டுக்குள்ளே வளைய வளைய வந்து கூத்தாடினார்கள். அம்மாவுக்குக் காரியம் செய்ய முடியாமல் அடித்தார்கள். பட்டாசுக் கட்டையும், மத்தாப்பு பெட்டியையும் சுட்டு விடாமல் தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள். ஜானகி செய்த பணியாரங்களைக் கூடக் கொஞ்சம் ருசி பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்! தீபாவளிப் பட்சணங்களைத் தீபாவளியன்று காலையிலேதானே சாப்பிட வேண்டும்.
குழந்தைகள் படுத்துக் கொள்ளும் போது மணிபத்து அடித்து விட்டது. அதற்கு அரை மணிக்குப் பிறகு ஜானகியும் வந்து படுத்துக் கொண்டாள். தூங்கும் குழந்தைகளின் பால்வடியும் முகங்களை ஒரு தடவை பார்த்துவிட்டு, விளக்கைச் சிறிதாக்கி ஒரு மூலையில் மறைத்து வைத்தாள். காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பதற்காக இப்போது சீக்கிரமாக தூங்க விரும்பினாள். ஆனால் தூக்கம் என்னவோ வரவில்லை. இவ்வளவு சமர்த்தான குழந்தைகளைப் பெற்ற தகப்பன் சீர்கெட்டுப் போய்ச் சிறையில் இருப்பதை நினைத்து மனம் உடைந்தாள்.
பாலன் எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான். மனவேதனையில் ஆழ்ந்திருந்த ஜானகிக்கு அவனிடம் 'என்ன!' என்று கேட்கச் சட்டென்று நா எழவில்லை.
பாலன் இரண்டு பக்கமும் உற்றுப் பார்த்து விட்டு எழுந்து நின்றான். கூடத்து மூலையில் சுவரில் சாத்தியிருந்த ஏணியைச் சத்தம் செய்யாமல் எடுத்துக் கொஞ்ச தூரம் தள்ளி வைத்தான். பிறகு அதன் மேல் மெள்ள மெள்ள ஏறினான்.
பாலனுடைய செயலை ஜானகி அதிசயத்துடன் அரைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலும் ஏதாவது கேட்டாலும், குழந்தை திடுக்கிட்டு ஏணியிலிருந்து விழுந்துவிடப் போகிறானே என்ற பயத்தினால் பேசாமலிருந்தாள். மூச்சுகூட மெதுவாக விட முயன்றாள்.
ஏணி உச்சியில் ஏறிய பாலன் அங்கே சுவரில் பொருத்தியிருந்த உத்திரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான். அங்குமிங்கும் கையை வைத்துத் தடவினான். பிறகு அவன் அணிந்திருந்த முழங்கால் சட்டைப் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தான். அதைச் சுவரிலோ உத்திரத்திலோ வைத்தான். பிறகு சத்தம் செய்யாமல் கீழே இறங்கிப் படுக்கையில் வந்து படுத்துக் கொண்டான்.
ஜானகிக்கு என்னவெல்லாமோ தோன்றியது. தகப்பனைப்போல் பிள்ளையும் ஏதேனும் திருட்டுக் காரியம் செய்கிறானோ என்று எண்ணியபோது அவளுக்குச் சொல்ல முடியாத வேதனை உண்டாயிற்று. மாமா வீட்டிலிருந்து எதையாவது திருடிக் கொண்டு வந்திருப்பானோ என்று நினைத்தாள். அப்படியெல்லாம் இராது. அம்புலுவுக்கும் சீனுவுக்கும் தெரியாமல் பட்டாசுக் கட்டை ஒளித்து வைக்கிறான் போலிருக்கிறது என்று ஆறுதல் செய்து கொண்டாள். அசட்டுப் பிள்ளை! ஒன்று கிடக்க ஒன்று ஆகப் போகிறதே! பட்டாசு வெடிக்கும் சாமான் ஆயிற்றே. இந்த ஓட்டை வீட்டிலும் நம் அதிர்ஷ்டம் தீப்பிடித்துக் கொண்டால்? இதைப் பற்றிப் பாலனிடம் இப்போதே கேட்டு விட வேண்டியதுதான். ஆனால் என்னவென்று கேட்பது? எப்படி ஆரம்பிப்பது?
ஜானகி இவ்விதம் யோசித்துக் கொண்டிருந்தபோது பாலன் மறுபடியும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டான். இது என்ன? குழந்தை விம்மி அழுகிறான் போலிருக்கிறது! விம்மலுக்கிடையில் 'அம்மா!' என்று கூப்பிடுகிறானே?
கூரைமேட்டில் கைவைத்த போது, அவனைத் தேள் கீள் கொட்டி விட்டதோ என்று பீதியுடன் ஜானகி திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து, "பாலு, என்னடா? ஏண்டா அழுகிறாய்?" என்றாள்.
"சொப்பனம் கண்டேன் அம்மா!" என்றான் பாலன்.
"அது என்ன சொப்பனம்?" என்று அம்மா வற்புறுத்திக் கேட்டதன் பேரில், பாலன் சொன்னான்: "ஏதோ ஒரு தேவதை வந்ததுபோல் இருந்தது. அந்த தேவதை என்னைப் பார்த்து "பாலு! உங்கப்பா பேரிலே எல்லோரும் பொய்க் குற்றம் சாட்டினார்கள். அவர் பேரிலே ஒரு குற்றமும் இல்லை, உங்கள் அம்மா வைத்திருந்த பணம் உச்சி மேட்டில் உத்தரத்துப் பொந்தில் இருக்கிறது! என்று சொல்லிற்று. நான் அதை நம்பவில்லை அந்தத் தேவதை என்னைக் கையைப் பிடித்து ஏணியில் ஏற்றி அழைத்துக் கொண்டு போய் காட்டிற்று. உத்தரத்துப் பொந்தில் நிஜமாப் பணம் இருந்தது அம்மா!" என்று பாலன் சொல்லிவிட்டு மேலும் விம்மி அழுதான்.
ஜானகிக்கு எல்லாம் இப்போது விளங்கி விட்டது. பாலனுடைய தகப்பனாரைப் பற்றி அவன் மாமா வீட்டில் பேசிக் கொண்டிருந்தது குழந்தையின் காதில் விழுந்திருக்க வேண்டும். அப்பாவைக் காட்டிக் கொடுத்தது அம்மா என்கிற செய்தியும் தெரிந்திருக்க வேண்டும். அப்பா திருடவில்லை என்று ருசுப்படுத்துவதற்காக குழந்தை இப்படியெல்லாம் செய்திருக்கிறான்!
ஜானகிக்கு ஒரே பிரமிப்பாய் இருந்தது. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று. குழந்தைக்குப் பதில் சொல்ல அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவனுடன் பேசுவதற்கு வெட்கமாகக் கூட இருந்தது. ஆனால் பாலன் விடவில்லை. "அம்மா! நீ ஏணி வைத்து ஏறிப் பார்க்கிறாயா?" என்றான்.
"ஆகட்டும் பாலு! காலையில் பார்க்கிறேன்!" என்றாள் ஜானகி.
"இல்லை அம்மா! இப்போதே பார்! இல்லாவிட்டால் எனக்குத் தூக்கம் வராது!" என்றான் பாலன்.
குழந்தையைத் திருப்தி செய்வதற்காக ஜானகி எழுந்து ஹரிகேன் லாந்தர் விளக்கைப் பெரிது செய்தாள். பாலனை ஏணியின் அடிப்புறத்தைப் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட்டு, அதன் மேல் ஏறினாள். உச்சியை அடைந்ததும் உத்தரத்தின் பொந்தில் கையை விட்டாள். அவள் எதிர்பார்த்தது போலவே ஒரு சிறிய பணப்பை இருந்தது. அதைத்தான் பாலன் அந்த உத்தரத்துப் பொந்துக்குள் வைத்திருக்கிறான்.
பணப்பையை எடுத்தபோது அதன் கீழ் வேறு ஏதோ கையில் மெதுவாகத் தட்டுப்பட்டது. துணி மாதிரி இருந்தது. இன்னும் ஏதேனும் வைத்திருக்கிறானோ என்று பார்க்க மறுபடி கையை விட்டுத் துழாவினாள். ஒரு சிறு துணி மூட்டை அகப்பட்டது. அதை எடுத்துப் பார்த்ததும் ஜானகி திக்பிரமை அடைந்தாள்!
ஏணியிலிருந்து அப்படியே விழுந்துவிடாமல் அவள் கீழே இறங்கி வந்ததே ஓர் ஆச்சரியமான விஷயந்தான்!
பொந்திலிருந்து அகப்பட்ட இரண்டு பொருள்களையும் ஹரிகேன் லாந்தர் வெளிச்சத்தில் வைத்துக் கொண்டு ஜானகி பிரித்துப் பார்த்தாள். பாலனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். பாலனுடைய பணப் பையைப் பிரித்த போது, ஒரு நூறு ரூபாய் நோட்டும், எட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
எலி கடித்து கொஞ்சம் பொத்தலாகி இருந்த சிறிய துணி மூட்டைக்குள்ளே தகர டப்பா இருப்பது தெரிந்தது. ஜானகி ஆவலுடன் துணியை எடுத்து எறிந்து விட்டு தகர டப்பாவை திறந்து பார்த்தாள். அதற்குள் ஜானகி சேமித்து வைத்திருந்த பத்து பத்து ரூபாய் நோட்டுகளும், எட்டு ரூபாய் வெள்ளிப் பணமும் அப்படியே இருந்தன!
ஜானகி அந்த நோட்டுகளையும் வெள்ளி ரூபாய்களையும் கையினால் துழாவிக் கொண்டு பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.
-----------------------
9. இமயமலை எங்கள் மலை
புது டில்லியில் இந்திய சர்க்காரின் காரியாலயம் ஒரு பெரிய சமுத்திரம். அந்தச் சமுத்திரத்தில் ஒரு பெரிய திமிங்கிலம் போன்றவர் ஸ்ரீயக்ஞசாமிஐயர். மாதச் சம்பளம் அவருக்கு இரண்டாயிரம் ரூபாய். பெரிய பங்களாவில் வசித்தார். பெரிய கார் வைத்திருந்தார். அந்தக் காரின் ஹாரன் போடும் பெரிய சத்தம், "இதோ, ராவ் பகதூர் யக்ஞசாமி வருகிறார் பராக்! பராக்!" என்று அலறுவது போலத் தொனிக்கும்.
யக்ஞசாமி ஐயரின் குமாரி ஹேமாவதி அறிவில் கலைமகளையும், திருவில் லக்ஷ்மியையும் நிகர்த்திருந்தாள். எஸ்.பி.சிவனுடைய கண்களுக்கு அவள், சௌந்தரிய தேவதையாக விளங்கினாள்.
எஸ்.பி.சிவன் மேற்படி இந்திய சர்க்கார் காரியாலயமாகிய சாகரத்தில் ஒரு சிறு மீனை நிகர்த்தவன். அதாவது டைப் அடிக்கும் குமாஸ்தா. சம்பளம் மாதம் ரூபாய் எண்பது. பஞ்சப்படி ரூபாய் பதினாறு. ஆனாலும் அவனுடைய வாழ்க்கை உற்சாகத்தைப் பார்த்தால் ஏதோ சமஸ்தானத்தின் பட்டத்துக்குரிய இளவரசன் என்று தோன்றும்.
சங்கீதம், நடனம், நாடகம், முதலிய கலைகளில் அவனுக்கிருந்த ஆர்வமே அத்தகைய வாழ்க்கை உற்சாகத்தை அளித்தது. புதுடில்லி அகில இந்திய ரேடியோவில் நடைபெறும் நாடகங்களில் அவன் அடிக்கடி ஏதாவது ஒரு பாத்திரமாக நடிப்பதுண்டு. வேறு எந்தப் பாத்திரமாகவும் நடிக்க முடியாவிட்டால் பல பேர் சேர்ந்து சிரித்தல், கை தட்டுதல் ஆகியவற்றிலாவது அவன் அவசியம் சேர்ந்து கொள்வான்.
யக்ஞசாமி ஐயரின் புதல்வி ஹேமாவுக்குச் சங்கீதம் வரும். புதுடில்லி ரேடியோவில் கர்நாடக சங்கீதத்தைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் நேரும் போதெல்லாம் ஹேமாவதியை அவசியம் அழைத்து விடுவார்கள். யக்ஞசாமி ஐயருக்கே, தம்முடைய மோட்டார் ஹாரனின் சத்தத்துக்கு அடுத்தபடியாக ஹேமாவின் குரல்தான் அதிகம் பிடிக்கும். தம் குமாரியின் சங்கீதக் கலைத் திறமையைப் பற்றி அவருக்கு அசாத்தியப் பெருமை. எனவே, ரேடியோக்காரர்கள் ஹேமாவைப் பாடுவதற்கோ, ஏதாவது கதம்ப நிகழ்ச்சியில் ஈடுபடுவதற்கோ அழைக்கும் போதெல்லாம் யக்ஞசாமி ஐயர் தாமே பெருமித மகிழ்ச்சியுடன் ஹேமாவதியை ரேடியோ நிலையத்துக்கு கொண்டு போய் விடுவார்.
ரேடியோவில் ஹேமாவதிக்குக் கச்சேரி என்றால் ஒரு வாரம் முன்னாலிருந்து வீட்டில் ஒரே ரகளையாயிருக்கும். ஹேமாவதி காலில் 'ஸிலிப்பர்' போடாமல் வெறுந்தரையில் நடக்கக் கூடாது; குளிர்ந்த நீர் சாப்பிடக் கூடாது; கொஞ்சம் தொண்டையைக் கனைத்துவிட்டால் போதும், உடனே டாக்டரை அழைத்துவரக் கார் பறக்கும். கழுத்தில் ஓயாமல் கம்பளி மப்ளரைச் சுற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். தப்பித் தவறி தும்மி விட்டால், "ஐயோ குழந்தை தும்முகிறாளே, ரேடியோக் கச்சேரி இருக்கிறதே!" என்று வீட்டில் எல்லோரும் தவித்துப் போவார்கள்.
இவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக ஹேமாவின் குரலைக் கவனித்துக் கொண்டு வந்த யக்ஞசாமி ஐயர், அவளுடைய உள்ளத்தைப் பற்றிக் கொஞ்சம் அலட்சியமாயிருந்து விட்டார்.
ரேடியோ நிலையத்தில் அடிக்கடி ஹேமாவதியும் எஸ்.பி.சிவனும் சந்திக்க நேரிட்டது. இந்தச் சந்திப்புகளின் காரணமாக, ஒருவருடைய இருதயத்தில் ஒருவர் இடம் பெற்றுவிட்டார்கள். விஷயம் முற்றி வளர்ந்து ஒருவரையொருவர் கலியாணம் செய்து கொள்வது என்று தீர்மானித்து விட்டார்கள்.
இந்தச் செய்தி புதுடில்லியிலிருந்த தென்னிந்திய சமூகம் முழுவதற்கும் தெரிந்த பிறகு, யக்ஞசாமி ஐயருக்கும் தெரிந்து விட்டது. உடனே அவர் ரௌத்ராகாரம் அடைந்து, "புதுடில்லி ரேடியோவும் கர்நாடக சங்கீதமும் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்; ஹேமாவதியை இனி அங்கு அனுப்புவதில்லை!" என்று முடிவு செய்து விட்டார்.
ஸ்ரீ எஸ்.பி.சிவனுக்கு இந்த விவரம் தெரிந்த போது அவன் வெந்நீரில் விழுந்த மீனைப் போல் துடிதுடித்தான். கடைசியாக ஒருவாறு ஐயரிடம் நேரிலேயே வந்து ஹேமாதியைத் தன் வாழ்க்கைத் துணைவியாக அருளும்படி கோரினான்.
யக்ஞசாமி ஐயர் அவனைப் பார்த்து, "நீ என்ன படித்திருக்கிறாய்?" என்று கேட்டார்.
"ஷேக்ஸ்பியர், மில்டன், கோல்ட்ஸ்மித், ஷெல்லி, காளிதாசன், கம்பன், டாகூர், பாரதி இவர்களுடைய கவிதைகளையெல்லாம் படித்திருக்கிறேன்" என்றான் சிவன்.
"அதைக் கேட்கவில்லை. எந்தப் பரீட்சை பாஸ் செய்திருக்கிறாய்?" என்று கேட்டார்.
"எஸ்.எஸ்.எல்.சி., இண்டர்மீடியட், பி.ஏ.யில் முதல் பார்ட், ஷார்ட் ஹாண்ட், டைப்ரைட்டிங் பரீட்சைகளில் பாஸ் செய்திருக்கிறேன்" என்றான் சிவன்.
"வெறும் அரட்டைக் கல்லியாயிருக்கிறாய்; சொத்து, சுதந்திரம், நிலம், புலம் ஏதாவது உண்டா?" என்று கேட்டார்.
"நிலம் புலன் ஏராளமாய் உண்டு. ஆயிரம் மைல் அகலம், இரண்டாயிரம் மைல் நீளம் உள்ள இமயமலை என்னுடையதுதான்!" என்று ஒரே போடாய்ப் போட்டான் சிவன்.
"என்னப்பா உளறுகிறாய்? இமயமலை உன்னுடையதா?"
"ஆம் ஐயா! மகாகவி பாரதியார் அப்படிப் பாடியிருக்கிறாரே, தெரியாதா? 'மன்னும் இமயமலை எங்கள் மலையே!' என்னும் வரகவி வாக்கு பொய்யாகுமா?"
"ஆமாம், 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று பாடிய அதே பாரதியார், 'இன்னறு நீர்க் கங்கை ஆறெங்கள் ஆறே' என்றும் பாடியிருக்கிறார். ஆகையால் கங்கை ஆற்றுக்கு நேரே போய் அதில் விழுந்து விடு!" என்றார் யக்ஞசாமி ஐயர்.
இதையெல்லாம் கதவுக்குப் பின்னாலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஹேமாவதி விம்மி விம்மி அழுதாள்.
அவள் தன்னுடைய மை தீட்டிய கண்களைத் துடைத்துத் துடைத்துப் பன்னிரெண்டு கைக்குட்டைகள் பாழாய்ப் போயின. ஆனாலும் என்ன பயன்! சிவன் கங்கையில் விழுவதை அவளால் தடுக்க முடியுமா? அல்லது அப்படி விழுந்தவனைக் காப்பாற்றத் தான் முடியுமா? அவளுக்கு நீந்தத் தெரியாதே! மேலும் கங்கை நீர் மிக்க குளிர்ச்சியாக ஜில்லென்று இருக்கும் என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அப்படிப்பட்ட குளிர்ந்த நீரில் கால் பட்டால் குரல் என்னத்துக்கு ஆகும்? கர்நாடக சங்கீதம் என்ன கதி ஆவது?
ஹேமாவதி தனக்குக் கிட்ட மாட்டாள் என்று நிச்சயமானதும், எஸ்.பி.சிவனுக்கு உண்மையிலேயே வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு விட்டது. யக்ஞசாமி ஐயர் சொன்னபடி செய்து விடுவது என்று அவன் தீர்மானித்தான். உத்தியோகத்தை சம்பளம், பஞ்சப்படி உள்பட ராஜினாமா செய்துவிட்டுப் புறப்பட்டான். கங்கையின் உற்பத்தி ஸ்தானமாகிய கங்கோத்ரிக்கே போய் விழுந்து உயிரை விடுவதென்று யாத்திரை தொடங்கினான்.
கங்கோத்ரிக்குப் போகும் வழியில் இமயமலைச் சாரலில் அவன் பிரயாணம் செய்யும்படி நேரிட்டது. வெள்ளிப் பனிமூடிய இமயமலையின் ஆயிரமாயிரம் சிகரங்களைப் பார்க்கப் பார்க்க, அவனுக்குக் கங்கையில் விழுந்து உயிரை விடுவதில் அவ்வளவு உற்சாகம் ஏற்படவில்லை. மேலும் கங்கோத்ரியில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடியதாலும் அதுவும் பனிக்கட்டியைப் போல் சில்லென்று இருந்த படியாலும் அங்கே கங்கையில் விழுவதற்கு அவன் இஷ்டப்படவில்லை.
"மன்னும் இமயமலை எங்கள் மலையே!" என்று பாரதியார் நமக்கெல்லாம் பட்டயம் எழுதி வைத்திருக்கிறார். அத்தகைய அற்புத மலைப் பிரதேசத்தை இன்னும் கொஞ்ச நேரம் சுற்றிப் பார்க்க விரும்பினான். அப்படிப் பார்த்துக் கொண்டே சில காலத்துக்கெல்லாம் அழகுக்குப் பெயர் போன காஷ்மீர தேசத்துக்குப் போய்ச் சேர்ந்தான்.
காஷ்மீரத்தைப் பார்த்த பிறகு உயிரை விடும் எண்ணம் அவனுடைய உள்ளத்தை விட்டு அடியோடு அகன்றது. இந்த உலகத்தில் பார்த்து அனுபவிக்க இவ்வளவு சௌந்தர்யங்கள் இருக்கும்போது, எதற்காக உயிரை விட வேண்டும்? ஹேமாவதியும் இந்தச் சௌந்தர்யங்களையெல்லாம் பார்த்து அனுபவிக்கத் தன்னுடன் இருந்தால் நன்றாய்த்தானிருக்கும்! அவளுக்குக் கொடுத்துவைக்கவில்லை; அவ்வளவுதான்! போயும் போயும் யக்ஞசாமி ஐயரின் பெண்ணாகப் போய்ப் பிறந்தாளே! என்ன துரதிர்ஷ்டசாலி!
ஆனால் அங்கே புது டில்லியில் ஸ்ரீ யக்ஞசாமி ஐயருக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிருஷ்டமாக அடித்துக் கொண்டிருந்தது. எல்லைப்புற மாகாணத்தின் வரவுசெலவுக் கணக்கு மிக்க மோசமாயிருந்தபடியால், அதைப் பரிசீலனை செய்து ஒழுங்கு படுத்துவதற்காக ஸ்ரீ யக்ஞசாமி ஐயரை மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் விசேஷ உத்தியோகஸ்தராக இந்திய சர்க்கார் நியமித்தார்கள். ஸ்ரீ யக்ஞசாமி ஐயர் குடும்பத்துடன் ராவல்பிண்டிக்குப் போய்ச் சேர்ந்தார்.
மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளம், ஐந்து மாதம் வாங்கிய பிறகு, எல்லைப்புறமெங்கும் கலகம் மூண்டது. ஹிந்துக்களைப் பூண்டோ டு ஒழிக்கக் கங்கணங் கட்டிக் கொண்டு மலைச் சாதியார் துராக்கிரஹப் போர் துவங்கினார்கள்.
"உயிர் போனாலும் பாதகமில்லை; சம்பளம் பென்ஷன் எல்லாம் போய் விடுமே" என்று யக்ஞசாமி ஐயர் கவலை அடைந்தார். அதிக நாள் கவலைப்படுவதற்குள்ளே ராவல்பிண்டியை நோக்கிக் காட்டுமிராண்டிகள் படையெடுத்து வருவதாகத் தெரிந்தது. தன் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு ஸ்ரீ யக்ஞசாமி ஐயர் தம்முடைய சொந்தக் காரில் அவசரமாகப் புறப்பட்டார். வழி தெரியாமல் தட்டுத் தடுமாறி, பல அபாயங்களுக்குத் தப்பித்துக் கடைசியில் பெட்ரோல் இன்றி வண்டியை ஓரிடத்தில் நிறுத்த வேண்டியதாயிற்று. நல்ல வேளையாக வண்டி நின்ற இடத்துக்குப் பக்கத்தில் காஷ்மீரத்தின் எல்லையிருந்தது. எவ்வளவோ கஷ்டங்களுக்கு உள்ளாகிப் பல மலைத்தொடர்கள் கால் நடையாக ஏறிக் கடந்து, காஷ்மீர் நாட்டில் புகுந்தார். இதற்குள் கையில் கொண்டு வந்திருந்த பணம், குடும்பத்தார் அணிந்திருந்த நகைகள் எல்லாம் தீர்ந்து விட்டன.
கடைசியாக, இவர்களைப் போல் ஆயிரக்கணக்கில் காஷ்மீரத்துக்குள் புகுந்த அகதிகளின் கோஷ்டியில் சேர்ந்து ஸ்ரீ நகரை நோக்கிப் பிரயாணமானார்கள்.
ஸ்ரீநகருக்குச் சமீபமாக இந்தக் கூட்டம் வந்து சேர்ந்தபோது, அகதிகளுக்கு தொண்டு செய்யும் படையில் சேர்ந்திருந்த எஸ்.பி.சிவன், ஸ்ரீயக்ஞசாமி ஐயரையும், அவர் குடும்பத்தாரையும் சந்தித்தான். முதலில் அவர்களை அவன் இனம் கண்டு கொள்ளவில்லை. அவ்வளவாக அவர்கள் இளைத்து 'மெலிந்து' அழுக்கடைந்த கந்தல் துணிகளை அணிந்து காட்சி அளித்தார்கள்.
"மிஸ்டர் சிவன்! எங்களைத் தெரியவில்லையா?" என்று ஸ்ரீயக்ஞசாமி ஐயர் ஈனஸ்வரத்தில் கேட்ட பிறகுதான் அவனுக்கு அவர்களை அடையாளம் தெரிந்தது.
"அப்பனே! நாங்கள் எல்லோரும் உயிரோடு திரும்பி ஊருக்குப் போகப் போவதில்லை. ஹேமாவதி ஒருத்தியையாவது நீ காப்பாற்றி அழைத்துக் கொண்டு போ!" என்றார் யக்ஞசாமி ஐயர். மேலும் அவர், "புதுடில்லி போனதும், ஒரு நல்ல நாள் பார்த்துக் கலியாணம் செய்து கொள்ளுங்கள்! தீர்க்காயுளுடன் சௌக்கியமாயிருங்கள்!" என்றும் சொன்னார்.
எலும்புந் தோலுமாயிருந்த உடம்பைக் கந்தல் துணியினால் மறைக்கப் பிரயத்தனம் செய்து கொண்டு பல நாள் எண்ணெய் காணாத கூந்தலுடன் தலை குனிந்து நின்ற ஹேமாவதியைப் பார்த்துச் சிவன் திடுக்கிட்டான். அவனுடைய உள்ளம் ஆயிரம் சுக்கலாக உடைந்தது. உடைந்த சுக்கல்களை ஒன்று சேர்த்துச் சரிப்படுத்திக் கொண்டு, நிலைமை எப்படி தலைகீழாக மாறிவிட்டது என்பதைப் பற்றி ஒரு கனம் சிந்தித்துப் பார்த்தான்.
முன்னொரு காலத்தில் தக்ஷன் பரமசிவனுக்குப் பார்வதியைக் கலியாணம் செய்துகொடுக்க மறுத்ததற்காகத் தவம் செய்ததும், அப்போது எஸ்.பரமசிவனுக்கு நினைவு வந்தது.
அதே சமயத்தில் காலதேச வர்த்தமானங்களைத் தெரிந்து கொண்டு, உருவிலியான மன்மதனும் சில புஷ்ப பாணங்களைப் போட்டு வைத்தான்.
ஆனால் எஸ்.பரமசிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரிக்கவில்லை. ஒரு தடவை எரிந்து போன மன்மதனை மறுபடியும் எரிக்க முடியாதல்லவா?
யக்ஞசாமி ஐயரைப் பார்த்து, "ஐயர்வாள்! புதுடில்லி போகும் வரையில் காத்திருப்பானேன்? எங்களுக்குச் சொந்தமான இமயமலைப் பிரதேசத்திலேயே கலியாணத்தை நடத்தி விடுவோமே! சாக்ஷாத் பரமசிவனுக்கும், இமவானுடைய குமாரிக்கும் அந்தக் காலத்தில் இமயமலைச் சாரலிலேதானே திருமணம் நடந்தது" என்றான் சிவன்.
அவன் விருப்பப்படியே சௌந்தரியலக்ஷ்மி குடி கொண்ட ஸ்ரீநகரில் அவர்களுடைய திருமணம் நூறு ரூபாய் செலவில் நடந்தேறியது.
எத்தனையோ பொருள் நஷ்டம் தமக்கு நேர்ந்திருந்த போதிலும், ஹேமாவதியின் கலியாணத்துக்காகத் தாம் செலவழிக்க எண்ணியிருந்த ரூபாய் நாற்பதயிரம் மிச்சந்தானே என்று எண்ணி யக்ஞசாமி ஐயரும் சந்தோஷப்பட்டார். மேற்படி சம்பவங்கள் எல்லாம் ஆறு மாதத்துக்கு முந்தி நடந்தவை. எனவே சென்ற வாரத்துத் தினப் பத்திரிகைகளில் வெளியானபின் வரும் செய்தி எனக்கு வியப்பை அளிக்கவில்லை.
"காஷ்மீர் மீது படையெடுத்து வந்த எதிரிகளோடு போராடுவதற்காக முதலில் சென்ற படையின் தலைவர் கமாண்டர் எஸ்.பி.சிவன், தீரச் செயல்கள் பல புரிந்து பிறகு காயமடைந்து விழுந்தார். இப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்!"
தன்னுடைய குலதனமான இமயமலையை எதிரிகள் வந்தடையாமல் பாதுகாப்பதற்கு ஸ்ரீ எஸ்.பி.சிவன் தீவிரமாகப் போராடியதில் வியப்பில்லைதானே? ஆண்டவன் அருளினாலும், ஹேமாவதியின் மாங்கல்ய பலத்தினாலும் கமாண்டர் பரமசிவன் சிக்கிரம் குணமடைந்து ஹேமாதியுடன் நெடுங்காலம் வாழ்வாராக!
-------------
10. பொங்குமாங்கடல்
1
"கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம்" என்று சம்பந்த சுவாமிகள் வர்ணித்தார். குற்றாலத்தைச் சாரல் காலத்தில் பார்த்துவிட்டுத்தான் அந்தப் பால கவி அவ்விதம் பரவசமடைந்திருக்க வேண்டும். ஆனால் குற்றாலத்துச் சாரல் காலத்தை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. காரணம் 'சாரல்' 'சாரல்' என்று சார்ந்திருக்கும் ஊர்களிலேயிருந்தெல்லாம் ஜனங்கள் கூடிவிடுவதுதான். இது காரணமாகச் சாரல் காலத்தில் குற்றாலம் பெரிதும் சுகாதாரக் குறைவு அடைந்து விடுகிறது. கோடைக்கானலுக்கும், உதக மண்டலத்துக்கும் வெள்ளைக்கார ஆட்சியில் எவ்வளவு பணம் செலவழித்தார்களோ, அதில் நூற்றில் ஒரு பங்கு குற்றாலத்துக்குச் செலவு செய்திருந்தால்...
அடடா! கடைசியில் எழுதிய மேற்படி வாக்கியத்தை எங்கே கேட்டேன்? நினைவுக்கு வருகிறது.
சாரல் காலத்தில் குற்றாலத்துக்கு நான் அதிகம் போவதில்லையென்று சொன்னேனல்லவா? அதற்கு மாறாக நல்ல வேனிற்காலத்திலேதான் போவது வழக்கம். வேனிற் காலத்தில் குற்றாலத்தில் ஜனக் கூட்டம் அதிகம் இராது. ஊரெல்லாம் நசநசவென்று ஈரமாயிராது. மலைமேல் தாராளமாய் ஏறிப் போகலாம். பொங்குமாங்கடலுக்குப் போகலாம்; அதற்கு மேலே மரப் பாலத்துக்குப் போகலாம்; இன்னும் மேலே செண்பகாதேவிக்கும், அதற்கும் அப்பால் உள்ள தேனருவிக்கும் கூடப் போகலாம்.
அப்படி மலை மீது ஏறிப் போவதிலுள்ள ஆனந்தம் வேறு எதிலும் கிடையாது.
அதிலும் குளிர்ந்த காலை நேரத்தில் மலைமேல் ஏறிப் போவதில் தனித்ததோர் மகிழ்ச்சி உண்டு. கிழக்கே உதிக்கும் சூரியன் மலையில் அங்கங்கே இடம் கொடுக்கும் சந்துகளின் வழியாகத் தன் பொற்கிரணங்களை அனுப்பி நம்மை உபசரணை செய்யும். ஒரு மலையிலிருந்து இன்னொரு மலை மீது ஏறும் போது பதினாயிரம் விதவிதமான பச்சை நிறப் போர்வையுடன் மரங்கள் வரிசை வரிசையாகக் காட்சி அளிக்கும். அருவி விழும் சலசலத்த ஓசையும் பறவைகளின் கலகலவென்னும் கீதங்களும் சேர்ந்து நம்மை புதியதொரு நாதப் பிரபஞ்சத்துக்குக் கொண்டு போய்விடும்.
ஒருநாள் காலையில் மேலே கூறிய ஆனந்தங் களையெல்லாம் அநுபவித்துக் கொண்டு மலைமேலே ஏறிக் கொண்டிருந்தேன். சிற்றருவிக்குப் போகலாமென்று புறப்பட்டவனைக் குற்றாலக் குன்றின் இயற்கை இன்பம் மேலே மேலே கவர்ந்து இழுத்துச் சென்றது. கடைசியாக, செண்பகாதேவிக்கே போய்ச் சேர்ந்து விட்டேன். செண்பகாதேவி அருவி விழும் இடத்திற்கு கிழக்கே செங்குத்தான பாறையையும், அதன் மேலே உயரமான விருட்சங்களும் ஆகாயத்தைத் தொடுவன போல் ஓங்கி நிற்கின்றன. காலை நேரத்தில் அங்கே வெயில் என்பதே கிடையாது. மனிதர்களும் வர மாட்டார்கள். தனிமையும், தானுமாக இருக்க விரும்புகிறவனுக்குத் தகுதியான ஏகாந்தப் பிரதேசம்.
'இனிது இனிது ஏகாந்தம் இனிது'
என்று தமிழ் மூதாட்டி பாடியதாகக் கூறுவார்களே, அது அந்த இடத்தின் ஏகாந்தத்துக்குப் பொருந்தும்.
இப்படியாக எண்ணமிட்டுக் கொண்டு செண்பகாதேவி ஆலயத்தைத் தாண்டி அப்பால் சென்றதும், எதிரே வெள்ளை வெளேரென்று பாலருவி விழும் அற்புதத் தோற்றம் காணப்பட்டது. இரு பக்கமும் உயர்ந்து நின்ற பாறைகளும், மரங்களும் இயற்கைத் தேவிக்கு இறைவன் கட்டிய கோயில் எனத் தோன்றியது.
அடடா! என்ன ஆனந்தம்! என்ன ஏகாந்தம்! தனிமையில் இனிமையைக் காண்பது என்றால், இங்கேயல்லவா காண வேண்டும்!"
இப்படி நான் எண்ணிய ஒரு கணத்திற்குள்ளே என் எண்ணம் தவறு என்று தெரிய வந்தது.
"ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ சீதலாம்" என்னும் வந்தேமாதர கீதத்தின் முதல் அடி புருஷக் குரலில் கேட்டது. புருஷக் குரலிலும், கிழக்குரலாய்த் தொனித்தது. குரல் வந்த இடத்தைப் பார்த்தேன். அருவி விழும் இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் கீழேயிருந்த பள்ளத்தாக்கில் மொட்டைப் பாறை ஒன்றில் ஒரு சாது உட்கார்ந்திருந்தார்.
பெரிய தாடியோடும், சடா மகுடத்தோடும் விளங்கிய போதிலும், உடுத்தியிருந்த துணி மட்டும் வெளுப்பாயிருந்தது. ஆம்; துணி மட்டுந்தான் வெளுப்பாயிருந்தது. தாடியும் சடாமகுடமும் நல்ல கருநிறமாயிருந்தன! குரல் கிழக்குரல்; தாடியும் சடையும் யௌவனப் பருவத்துக்குரியவை. இது என்ன விந்தை?
இப்படி ஒரு நிமிஷம் நான் யோசித்துக் கொண்டிருக்கையில் அந்தப் பரதேசி என்னைப் பார்த்துவிட்டார். சற்று நேரம் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு கையினால் தாம் மேலே வரப் போவதாகச் சமிக்ஞை செய்து விட்டு அவ்விதமே மேலேறி வந்தார். நான் நின்ற இடத்துக்கு எதிரில் தாம் உட்கார்ந்து கொண்டு என்னையும் உட்காரச் சொன்னார். தாடியையும் சடையையும் சாவதானமாக எடுத்துக் கீழே வைத்தார். அவற்றை நீக்கியவுடன் தும்பைப் பூவைப் போல் நரைத்த தலையுடன் எழுபது வயதுக்கு மேலான கிழவர் என் முன் காட்சி அளித்தார். ஆழ்ந்து குழி விழுந்த கண்களினால் என்னை உற்றுப் பார்த்து, "இந்த இடமெல்லாம் எவ்வளவு மோசமாயிருக்கிறது பார்த்தீரா? கோடைக்கானலுக்கும், உதகமண்டலத்துக்கும் வெள்ளைக்காரர் ஆட்சியில் எவ்வளவு பணம் செலவழித்தார்களோ, அதில் நூற்றில் ஒரு பங்கு குற்றாலத்துக்குச் செலவு செய்திருந்தால் இப்படியிருக்குமா?" என்றார் கிழவர்.
"பெரியவரே! தாங்கள் யார்?" என்று கேட்டேன்.
"நான் யாராயிருந்தால் என்ன? நான் கூறிய விஷயம் உண்மையா, இல்லையா?"
"உண்மைதான்!"
"பின்னே விடுங்கள்!"
அப்படியே நான் விட்டுவிட்டு, அதாவது பேச்சை விட்டுவிட்டுச் சும்மாயிருந்தேன். ஆனால் அவர் சும்மா இல்லை. "நீர் கதை எழுதுகிறவர் என்று கேள்விப்பட்டேன். உண்மைதானா?" என்றார். நான் சொன்ன பதில் என் காதிலேயே விழவில்லை. ஆனால் அவர் மறுபடியும் சொன்னது மட்டும் கணீர் என்று என் காதில் விழுந்தது. "அப்படியானால் என்னுடைய கதையையும் எழுதுவீரா?" என்றார். அவருக்குக் கொடுத்த வாக்குறுதியை இதோ நிறைவேற்றப் போகிறேன்.
------------
2
தலையில் தும்பைப் பூவையொத்த, நரைத்த ரோமம் அடர்ந்து, குறுக்குக் கோடுகள் மிகுந்த விசாலமான நெற்றியுடனும், அறிவொளி வீசிய ஆழ்ந்த கண்களுடனும் கூரிய வளைந்த மூக்குடனும் செந்நிற மேனியுடனும் விளங்கிய அக்கிழவர் கூறினார்:
முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் நான் முதன் முதலில் இந்தக் குற்றாலத்துக்கு வந்தேன். அதாவது 1911 ஆம் வருஷம், மே மாதம். அதற்கு முன் மூன்று மாதம் திருநெல்வேலி ஜில்லாவிலும், திருவனந்தபுரம் சமஸ்தானத்திலும் சுற்றி அலைந்தேன். எந்த நோக்கத்துடன் வந்தேனோ, அது ஒன்றும் நிறைவேறவில்லை. வந்தபோது இருந்த உற்சாகம் ரொம்பவும் குறைந்து போயிருந்தது. 'குற்றால நாதரே துணை' என்று கடைசியாக இங்கு வந்து சேர்ந்தேன். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இராமபத்திர சர்மா என்பவர் அப்போது இங்கே ஒரு பங்களாவில் குடியிருந்தார். அவரைச் சந்தித்துச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததில் கொஞ்சம் உபயோகம் ஏற்பட்டதாகத் தோன்றியது.
இந்த செண்பகாதேவி அருவியின் அழகைப் பற்றியும் அந்த இராமபத்திர சர்மாதான் சொன்னார். தெரியாத ஜனங்கள் 'செண்பகாதேவி' என்று சொல்வதாகவும், உண்மையில் இது 'செண்பகாடவி' என்றும் சொன்னார். "இங்கே அம்மன் கோயில் ஒன்று இருப்பது உண்மைதானே?" என்று கேட்டேன். "ஆம்; இருக்கிறது. அதனால் என்ன? செண்பகாடவியைச் செண்பகாதேவி என்று சொல்லிக் கடைசியில் ஒரு கோயிலும் கட்டி விட்டார்கள்" என்றார்.
இராமபத்திராசர்மா ஒரு மிதவாதி. அப்படியென்றால் தெரியுமா? கோபாலகிருஷ்ண கோகலே, ராஷ் விஹாரி கோஷ் கும்பலைச் சேர்ந்தவர். வெள்ளைக்காரர்களை அண்டிக் காலில் விழுந்து கெஞ்சி சுயராஜ்ஜியம் வாங்கி விடலாம் என்று நம்பியவர். இந்தப் பிரதேசத்தில் இப்போதெல்லாம் இரத்தக் கொதிப்புள்ள சில வாலிபர்கள் இருந்தார்கள். அவர்கள் "பாலகங்காதரதிலகருக்காகப் பழி வாங்குவோம்", "வ.உ.சிதம்பரம் பிள்ளைக்காகப் பழிவாங்குவோம்" "வெள்ளைக்காரர்களைப் பூண்டோ டு அழித்துக் கூண்டோ டு யமலோகம் அனுப்புவோம்" என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மிதவாத இதோபதேசம் செய்வது இந்த ராமபத்திர சர்மாவின் வேலை. எனக்கோ அந்த மானமுள்ள வீர இளைஞர்கள் யாரையாவது சந்திக்க வேண்டுமென்று ஒரே துடிப்பாயிருந்தது. நான் இந்தப் பிரதேசத்துக்கு வந்த காரணமே அதுதான். அந்த இளைஞர்களைப் பற்றி சர்மா அடிக்கடி பேசுவதுண்டு. ஆனால் அவர்களில் யாரையாவது பற்றிச் சர்மாவிடம் தகவல் தெரிந்து கொள்ளலாமென்றால் அது ஒன்றும் தனக்குத் தெரியாது என்று அவர் கையை விரித்துவிட்டார். திடீரென்று ஒரு நாள் புறப்பட்டு ஊருக்குப் போய்விட்டார்.
ஏதோ குற்றாலத்துக்கு வந்தது தான் வந்தோம், செண்பகாதேவி அருவியிலாவது ஒரு தடவை தலையைக் கொடுத்து விட்டுப் போவோம் என்று ஒரு நாள் காலை சுமார் ஒன்பது மணிக்கு மலை மேல் ஏற ஆரம்பித்தேன்.
கொஞ்ச தூரம் விரைவாகவே நடந்து போனேன். நீர்தான் பார்த்திருப்பீரே? மலைப் பாதைகளே எப்போதும் திரும்பித் திரும்பி வளைந்து வளைந்து போகும். முன்னால் போகிறவர்கள் பின்னால் வருகிறவர்களின் தலைக்கு மேலே சில இடங்களில் நடந்து போகும்படி நேரிடும். ஆசாமிகள், கண்ணுக்குத் தெரியமாட்டார்கள். ஆனால் மேலே போகிறவர்களின் பேச்சு கீழே வருகிறவர்களுக்கும் கீழே வருகிறவர்களின் பேச்சு மேலே நடப்பவர்களுக்கும் நன்றாய்க் காது கேட்கும்.
ஓரிடத்தில் என் தலைக்கு மேலே போகிறவர்களின் பேச்சு என் காதில் விழுந்தது. அவர்களில் ஒருத்தி இளம் வயதுப் பெண்ணாயிருக்க வேண்டும். அவளுடைய குரல் சொல்லிற்று: "நான் உலகமறியாப் பெண்ணாயிருந்த போதும் என்னை எங்க சின்னாயியும் சித்தப்பனும் இவருக்குக் கட்டிக் கொடுத்தாக! இவகளும் அப்போவெல்லாம் என்னிடம் எத்தனையோ அன்பும் ஆசையுமாய்த்தானிருந்தாக! ஒரு காணி நிலம் எங்களுக்குப் பூர்வீகச் சொத்து. அதிலே வருசாந்தரத்துக்கு வேண்டிய நெல்லு கிடைத்து விடும். சாரற் காலத்திலே பெரிய பிரபுக்கள் குற்றாலத்து அருவியிலே குளிக்க வருவாக. நாங்க இருவருமாய் யாராவது ஒரு வீட்டிலே வேலை செய்வோம். நல்ல மனுஷாள் என்று தெரிந்து கொண்டு தான் போவோம். நல்லாச் சாப்பிடுவோம். இருபது முப்பது பணமும் மிச்சம் பிடிப்போம். வேனிற் காலத்திலே எங்களுக்கு வேலையிராது. தேர் திருவிழா, திருச்செந்தூர் உற்சவம் எல்லாம் பார்க்கப் போவோம். இப்படி எவ்வளவோ கண்யமாகத்தான் இருந்து வந்தோம்..."
'ஆகா! இந்தத் திருநெல்வேலி ஜில்லாவில் குடியானவர்களும் குடியானவப் பெண்களும் கூட எவ்வளவு அழகான செந்தமிழ் பேசுகிறார்கள்' என்று எண்ணி நான் ஆச்சரியமடைந்தேன். ஆனால் அடுத்தபடியாக அந்தப் பெண் சொன்னது என்னைத் தூக்கிவாரிப் போட்டு, அவளுடைய செந்தமிழ் நடையை மறக்கும்படி செய்துவிட்டது.
"இந்தச் சுதேசிக்கார ஆளுக வந்தாலும் வந்தாக, குடும்பம் பாழாய்ப் போச்சு. இவக வேலை வெட்டி ஒன்றும் பார்க்கறதில்லை. தூத்துக்குடி எங்கே, திருநெல்வேலி எங்கே, எட்டயபுரம் எங்கே, ஆலப்புழை எங்கே என்று அலைகிறதே இவர்களுக்குத் தொழிலாய்ப் போச்சு! அதுவும் போனாப் போகிறதென்று ஏதோ என் சாமர்த்தியத்தினாலே குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தேன். ஆனால் இந்த ஆறுமாதமா இவக நடத்தை எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. யார் யாரோ திருடங்க மாதிரி இராத்திரிக்கி இராத்திரி வந்து கூட்டிக்கிட்டுப் போறாக, பொழுது விடிஞ்ச பிறகு கொண்டு விடுறாக, நெத்தியிலே பெரிய குங்குமப் பொட்டைப் போட்டுகறாக, கண்ணைப் பார்த்தாக் கோவைப்பழம் மாதிரி செவந்து கெடக்கு. பேச்சைக் கேட்டா, ஒரு மாதிரியாயிருக்கு. பலி என்கிறாக; இரத்தம் என்கிறாக! மலையாள மாந்திரிகம் என்று சொல்றாகளே, அதிலே ஏதாவது இவக அகப்பட்டுக்கிட்டாகளோ என்று எனக்குப் பயமாயிருக்கு. ஐயா! செண்பகாதேவி அம்மனைத்தான் நான் நம்பியிருக்கேன்; வெள்ளிக்கு வெள்ளி பூசை போடறேன். செண்பகாதேவி அம்மாதான் என் புருஷனை எனக்கு காப்பாத்திக் கொடுக்க வேணும்."
------------
3
இந்தப் பேச்சு எனக்கு எவ்வளவு பரபரப்பை உண்டாக்கியது என்று உமக்குச் சொன்னால் கூடத் தெரியாது. அந்தப் பெண்பிள்ளை யார், அவள் யாரிடம் இதையெல்லாம் சொல்லிக் கொண்டு போகிறாள் என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆவல் ஏற்பட்டது. ஆகவே விரைவாக நடையைக் கட்டினேன். முன்னால் சென்றவர்களை நெருங்கினேன். சுமார் இருபத்தைந்து வயதுள்ள பெண்ணும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெரியவரும் போய்க் கொண்டிருந்தார்கள். பெரியவர் செண்பகாதேவி கோயிலின் பூசாரி என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள் மெதுவாக நடந்தாலும், நான் வெகு விரைவாக நடந்ததாலும் மலைப்பாதையில் அவர்களைத் தாண்டிச் சென்றேன். தாண்டி ஐந்தாறு அடி தூரம் சென்றதும் அந்தப் பெண் எப்படிப்பட்டவள் என்று தெரிந்து கொள்ளுவதற்காகத் திரும்பிப் பார்த்தேன். பாண்டிய நாட்டுக் குடியானப் பெண்களைப் போல ஒல்லியாகவும், உயரமாயும் இருந்தாள். முகத்தில் நல்ல களை இருந்தது. கூந்தலை அழகாக எடுத்துக் கட்டிச் செருகியிருந்தாள். இதையெல்லாம் கவனிக்க எனக்கு ஒரு கண நேரந்தான் பிடித்தது. உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டு விடுவிடுவென்று மேலே நடந்தேன்.
இப்போது நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேனே, இதே இடத்தில், முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்பு சடாமகுடதாரியான ஒரு சாமியார், ஒரு வெள்ளிக்கிழமை நடுப்பகலில் உட்கார்ந்திருந்தார். செண்பகாதேவி அம்மனுக்கு அபிஷேகம் செய்யத் தண்ணீர் கொண்டு போவதற்காக ஓர் இளம் பெண் இங்கே வந்தாள். அவள் முதலில் சாமியாரைக் கவனிக்க வில்லை. அவள் குனிந்து குடத்திலே தண்ணீர் மொண்ட போது, சாமியார் கனைத்தார். அதைக் கேட்டு அப்பெண் சாமியாரைப் பார்த்தாள். அருகில் வந்து கும்பிட்டாள். "பெண்ணே! உன் மனதில் ஏதோ கவலை இருக்கிறது!" என்றார் சாமியார். "ஆமாஞ்சாமி! தங்களைப் போன்ற பெரியவர்தான் தீர்த்து வைக்க வேணும்!" என்றாள் அந்தப் பெண். "அப்படியே தீர்த்துவைப்போம்! என்ன கவலை, சொல்!" என்று சாமியார் கேட்டார்.
"தங்களுக்குத் தெரியாதா சாமி, இந்தப் பொன்னியம்மா சொல்லித்தானா தெரிஞ்சுக்க வேணும்!"
நம்பிக்கையும் சந்தேகமும் பொன்னியம்மாள் மனதை குழப்புவதாகச் சாமியார் ஊகித்துக் கொண்டார்.
"ஆகட்டும்; நாமே சொல்கிறோம்; உன் புருஷன் விஷயமாகக் கவலைப்படுகிறாய். அவனுடைய நடத்தை ஓர் ஆறு மாத காலமாகச் சரியாக இல்லை. வேளா வேளையில், காலாகாலத்தில் வீட்டுக்கு வருவதில்லை. இரவு நேரங்களில் வெளியே போகிறான். ஊர் விட்டு ஊர் போகிறான். காரணம் சொல்ல மாட்டேனென்கிறான். சில சமயம் நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு வைச்சுக்கிறான். இதெல்லாம் உண்மையா, இல்லையா?" என்றார் சாமியார்.
"ஆமாஞ்சாமி! தங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே, சாமிதான் என் புருஷனை காப்பாத்த வேணும். என்னைக் குடியும் குடித்தனமுமாய் வைக்க வேணும்" என்று பொன்னியம்மாள் கண்ணீருடன் கூறினாள்.
"ஆகட்டும், காப்பாத்துகிறேன். ஆனால் நீ என்னிடம் நம்பிக்கை வைக்க வேணும். ஒரு விஷயத்தில் நிஜத்தைச் சொல் பார்க்கலாம். இந்த இரண்டு மூன்று நாளிலே உன் வீட்டைத் தேடி யாராவது அசலூர்காரர்கள் வந்ததுண்டா? உன் புருஷனுக்கு ஏதாவது செய்தி சொன்னதுண்டா?"
"உண்டு, சாமி! முந்தாநாள் செங்கோட்டை ஆள் ஒருத்தர் வந்தாரு. நாளை ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் தூத்துக்குடி கடற்கரையிலே கூட வேணும் என்றும், கையிலே அடையாளத்துக்கு ஒரு கிளிஞ்சல் வச்சிருக்க வேணும் என்றும் சொன்னாரு. எதுக்கு, என்னத்துக்கு என்று எனக்கு ஒண்ணும் தெரியாது! அசலூர்க்காரங்க வந்தாலே எனக்குச் சந்தேகம். சாமி! ஒளிஞ்சிருந்து கேட்டதை உங்களிடம் சொன்னேன்."
"நல்ல காரியம் செய்தாய். நீ கொஞ்சமும் கவலைப்படாதே. உன் புருஷன் ஒரு மலையாளத்து மந்திரவாதியிடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறான். அவனை நான் காப்பாத்திக் கொடுக்கிறேன். அடுத்த வெள்ளிக்கிழமை இந்த இடத்திலேயே என்னை வந்து பாரு! இன்னும் சில செய்தி சொல்லுகிறேன்!" என்றார் சாமியார்.
இதற்குள் கோயிலுக்குள்ளேயிருந்து "பொன்னியம்மா!" என்று பூசாரி கூப்பிடும் சத்தம் கேட்டது.
"இதோ வந்துவிட்டேன்" என்று பொன்னியம்மாவும் உரத்த குரலில் கூறினாள்.
சாமியார் அவளை உற்றுப் பார்த்து, "ஜாக்கிரதை! என்னிடம் பேசிய விஷயம் யாருக்கும் சொல்லப்படாது. பூசாரிகிட்டக் கூடச் சொல்லக்கூடாது. சொன்னால் காரியம் கெட்டுப் போய்விடும். உன் புருஷன் உனக்குக் கிட்ட மாட்டான்!" என்று எச்சரித்தார்.
-----------
4
அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகலில் தூத்துக்குடி கடற்கரை மணலில் நான் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தேன். குறுக்கு நெடுக்கே போகிறவர்களைப் பார்க்காதது போல, பார்த்துக் கொண்டு அலைந்தேன். படகுகள், கட்டு மரங்கள், செம்படவர்களின் வலைகள் இவற்றில் தடுக்கி விழாமலும், மோதிக் கொள்ளாமலும் ஜாக்கிரதையாக நடக்க வேண்டியிருந்தது. ஒரு சமயம் ஒரு மனிதன் குனிந்து ஒரு கிளிஞ்சலைப் பொறுக்கியதைப் பார்த்தேன். அப்போது மணலில் தோண்டியிருந்த பள்ளத்தில் நான் விழுந்து விட்டேன். நல்ல வேளையாக யாரும் பார்க்கவில்லையென்பதைத் தெரிந்து கொண்டு நானும் ஒரு கிளிஞ்சலைக் கையில் எடுத்துக் கொண்டு உலாவினேன். இன்னொரு கிளிஞ்சல் பேர்வழியைக் கண்டதும் என் கையில் உள்ள கிளிஞ்சல் தெரியும் படியாகப் பிடித்துக் கொண்டேன். அந்த மனிதர் 'வந்தேமாதரம்' என்று சொன்னார். நானும் திரும்பி 'வந்தேமாதரம்' என்றேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு அப்பாற் போய்விட்டார்.
மறுபடியும் சுற்றி அலைந்தேன். இரண்டு கிளிஞ்சல் பேர்வழிகள் ஒருவரையொருவர் சந்தித்தார்கள். அவர்களில் ஒருவர் 'வந்தேமாதரம்' என்றார். இன்னொருவர் 'வ.உ.சி.வாழ்க!' என்றார். 'ஓஹோ! இப்படியா மாற்றுக் கோஷம்' என்று மனதில் எண்ணிக் கொண்டு அவர்கள் அண்டை சென்று 'வந்தேமாதரம்' என்றேன். அவர்களில் ஒருவர் 'வ.உ.சி. வாழ்க!' என்றார். இன்னொருவர் "வெள்ளைக்காரன் வீழ்க" என்றார். 'சரியாப் போச்சு! மூன்று பேர் சேர்ந்தால் இப்படிச் சொல்ல வேண்டுமாக்கும்' என்று நினைத்துக் கொண்டேன். "மற்றவர்கள் எல்லாரும் எங்கே?" என்று கேட்டேன். "இருக்கிற இடத்தில் இருப்பார்கள்" என்று ஒருவர் பதில் சொல்லிக் கொண்டே மேலே நடந்தார். நானும் அவர்களைத் தொடர்ந்து போனேன். கடைசியாக, கடல் மணலில் கொஞ்சம் பள்ளத்தாக்கான ஓரிடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். ஏற்கனவே ஏழெட்டுப் பேர் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நாங்கள் வந்த அதே சமயத்தில் இன்னும் இருவர் வேறு பக்கத்திலிருந்து வந்தார்கள். ஆக மொத்தம் பதினைந்து பேர் இருக்கும்.
என்னை முதலில் சந்தித்துச் சந்தேகப்பட்ட மனிதரும் அவர்களில் இருந்தார். என்னைப் பார்த்தவுடனே அவர் பதினைந்து பேரில் நடுநாயகமாக வீற்றிருந்த மனிதரைப் பார்த்து, "சுவாமி! இதோ இந்த மனிதர் புதியவர். இவருக்குப் பதில் கோஷம் தெரியவில்லை. யார் என்று விசாரிக்க வேண்டும்" என்றார். அவரால் "சுவாமி!" என்று அழைக்கப்பட்டவர் என் பக்கம் தம் திருஷ்டியைத் திருப்பினார். யௌவன பிராயம்; இயற்கையில் எழில் வாய்ந்த முகம்; அதோடு யோக சாதனத்தினால் ஏற்பட்ட தேஜஸும் சேர்ந்திருந்தது. அவர் என்னை ஏறிட்டுப் பார்த்தபோது என் கண்கள் கூசின. "அப்பனே நீ யார்?" என்று கேட்டார். அவரை விட நான் வயதானவனாயிருந்தும் என்னை ஏகவசனத்தில் அவர் அழைத்தது சிறிது கோபம் அளித்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு, "நான் கோயம்புத்தூரிலிருந்து வருகிறேன். இந்த ஊர்க்காரர் அங்கே இருக்கிறார் அல்லவா. அவர் செய்தி சொல்லி அனுப்பினார்!" என்றேன். உடனே அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பைப் பார்க்க வேண்டுமே! தலைக்குத் தலை "அப்படியா? என்ன சொன்னார்? எப்பொழுது சொன்னார்?" என்று பல கேள்விகளை ஏக காலத்தில் போட்டார்கள். தலைவர் அவர்களைக் கையமர்த்தி அடக்கி விட்டு "ஐயா! விவரமாகச் சொல்ல வேணும், இந்த ஊர்க்காரர் எத்தனையோ பேர் கோயம்புத்தூரில் இருக்கலாம். நீர் யாரைச் சொல்கிறீர்? அவர் சொல்லி அனுப்பியது என்ன?" என்று அதிகாரப் பூர்வமான குரலில் கேட்டார். இவர்தான் புதுச்சேரியிலிருந்து வந்திருக்கும் யோகி நீலகண்ட பிரம்மச்சாரியாயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டேன்.
இதற்குள் கூட்டத்தில் ஒருவர் "வெறும் வாய்ப் பேச்சுச் செய்தியா? அத்தாட்சி ஏதேனும் உண்டா என்று கேட்டுவிடுங்கள்" என்று படபடத்தகுரலில் கூறினார். அவர் பக்கத்திலிருந்தவர், "வாஞ்சி! நீ சும்மா இரு!" என்றார். இதிலிருந்து படபடத்த ஆசாமி செங்கோட்டை வாஞ்சி ஐயர் என்று தெரிந்து கொண்டு, அவரிடம் கொஞ்ச ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.
"நான் கேட்ட கேள்விக்குப் பதில் வேணும்!" என்று தலைவர் மறுபடியும் கூறினார்.
நான் உடனே அக்கூட்டத்திலிருந்த அனைவரையும் ஒரு தடவைகண்களைச் சுழற்றி நன்றாகப் பார்த்துவிட்டு உறுதியான குரலில் கூறினேன்:
"வெள்ளைக்காரனுக்குப் போட்டியாகக் கப்பல் ஓட்டிய வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையைத்தான் சொல்கிறேன். வேறு யாரைச் சொல்வேன்? ஒரு வருஷ காலம் அந்த மகானுக்குப் பணிவிடை செய்யும்படியான பாக்கியம் இந்த ஏழைக்குக் கிடைத்தது. பொய்யாக 'போர்ஜரி' குற்றம் சாட்டி எனக்குத் தண்டனை விதித்திருக்கிறார்கள். அப்படிப் பொய்க் குற்றம் சாட்டிய புண்ணியவான்களை நான் என்றென்றைக்கும் வாழ்த்தி அவர்கள் நன்றாயிருக்க வேணுமென்று கடவுளைப் பிரார்த்தித்து வருவேன். ஏனெனில் அம்மாதிரிப் பொய்க் குற்றம் சாட்டி, என்னைச் சிறைக்கு அனுப்பியதால்தானே பாரதமாதாவின் தவப் புதல்வரை நான் சந்திக்க நேர்ந்தது? அவருக்கு அவசியமாயிருந்தபோது பணிவிடைகள் செய்ய முடிந்தது? ஆகா! நானும் என் அற்ப வாணாளில் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். இவரைப் போல் ஒரு வீரரை, ஒரு தீரரை, ஒரு தியாகியை, ஒரு குணவானை, ஓர் உத்தமனைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை, ஐயா! மாடு இழுக்க வேண்டிய செக்கை அந்த மகாபுருஷர் தம் திருக்கரங்களினால் இழுத்தார். அதை இந்தப் பாவியின் கண்கள் பார்த்தன...!" என்று சொல்லி வந்து போது எனக்கு அழுகை வந்து விட்டது. சற்று நேரம் விம்மி அழுதேன். அங்கே கூடியிருந்தவர்களில் மற்றும் சிலரும் அழுதார்கள். வாஞ்சி ஐயர் 'ஓ' வென்று அழுது தீர்த்து விட்டார். மடத்துக்கடைச் சிதம்பரம் பிள்ளை முகத்தில் துணியைப் போட்டுக் கொண்டு தேம்பினார். வந்தேமாதரம் சுப்பிரமணிய ஐயர் குப்புறப் படுத்துக் கொண்டு விம்மினார்.
கல் நெஞ்சர் என்று அனைவரும் எண்ணியிருந்த நீலகண்ட பிரம்மசாரியின் கண்களும் கலங்கிவிட்டன.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எல்லா விவரங்களையும் கூறி முடித்தேன். வ.உ.சிதம்பரம் பிள்ளை சொல்லி அனுப்பிய செய்தியையும் கடைசியாகச் சொன்னேன்.
"என்னுடைய கஷ்டங்களை ஒருவரும் பொருட்படுத்த வேண்டாம். இம்மாதிரி இன்னும் நூறு மடங்கு கஷ்டங்களை வேணுமானாலும் பாரதத் தாயின் விடுதலைக்காக நான் அனுபவிக்கத் தயார். ஆனால் 'சிதம்பரம் பிள்ளையை உள்ளே தள்ளினோம்; எல்லாம் அடங்கிப் போய் விட்டது' என்று வெள்ளைக்காரன் கொட்டமடிப்பானே என்று நினைத்தால்தான் என் உள்ளம் கொதிக்கிறது. திருநெல்வேலி ஜில்லாவில் தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை தவிர வேறு ஆண் மகனே இல்லை என்று சரித்திரம் சொல்ல இடம் கொடாதீர்கள்! 'சிதம்பரம் பிள்ளையையும் சுப்பிரமணிய சிவத்தையும் பிடித்துப் போட்டதும் சுதேசி இயக்கம் செத்து விட்டது' என்று சரித்திரம் எழுத இடம் கொடாதீர்கள்."
இவ்வாறு சிறைக்குள்ளிருந்து ஸ்ரீ வ.உ.சிதம்பரம் பிள்ளை அனுப்பிய செய்தியை அந்தக் கூட்டத்தாருக்குத் தெரிவித்து விட்டு, மடியிலிருந்து ஒரு கசங்கிய கடுதாசியை எடுத்தேன். "இங்கே யாருக்காவது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கையெழுத்துத் தெரியுமா?" என்று கேட்டேன். இரண்டு பேர் ஏக காலத்தில் "தெரியும்" என்று கையை நீட்டினார்கள். அவர்களில் ஒருவர் தூத்துக்குடி முத்துக்குமாரசாமிப் பிள்ளை; இன்னொருவர் கடையநல்லூர் சங்கரகிருஷ்ணய்யர். இருவரும் கடிதத்தைப் படித்து விட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். மற்றவர்களும் ஒவ்வொருவராய் பார்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு அடுத்தவர்களிடம் கொடுத்தார்கள்.
நீலகண்ட பிரம்மச்சாரி ஒரு சிம்ம கர்ஜனை செய்ததும் எல்லோருடைய கண்களும் அவர்பால் சென்றன.
"தோழர்களே! நம்மையெல்லாம் ஆண் பிள்ளைகள் என்றும், வீர சிம்மங்கள் என்றும் எண்ணிக் கொண்டு தேச பக்தர் சிதம்பரம் பிள்ளை செய்தி அனுப்பியிருக்கிறார். நாமோ சற்று முன்பு நெஞ்சி திடமில்லாத கோழைகளைப் போலவும் பெண் பிள்ளைகளைப் போலவும் நடந்து கொண்டோ ம். எல்லாரும் கண்ணீர் விட்டுத்தேம்பி அழுதோம். ஒப்பாரி வைப்பது ஒன்றுதான் மிச்சம். அதையும் வேணுமானாலும் இப்போது எல்லோரும் சேர்ந்து செய்து விடுவோம்!" என்று நீலகண்ட பிரம்மச்சாரி கூறிய மொழிகள் எல்லாரையும் வெட்கமடையும்படி செய்தன.
"தலைவராகிய தாங்களுங் கூடத்தான்..." என்று கூட்டத்தில் ஒருவர் சொல்லுவதற்குள்ளே பிரம்மச்சாரி, "என்னையும் சேர்த்துத்தான். உங்களை மட்டும் நான் சொல்லவில்லை. எல்லோருமே சற்று முன்பு கோழைகளாகி விட்டோ ம். உண்மையில் நாம் புரட்சி வீரர்களாயிருக்கும் பட்சத்தில், சிதம்பரம் பிள்ளை சிறையில் பட்ட கஷ்டங்களைக் கேட்டு நாம் களிப்படைய வேண்டும். நமது நெஞ்சுகள் இரும்பாக மாற வேண்டும். ஈவிரக்கம், பச்சாத்தாபம், எல்லாவற்றையும் மனத்திலிருந்து துடைத்துவிட வேண்டும். எதிரிகள் விஷயம் ஒரு புறம் இருக்கட்டும். நம்மிலே யாராவது ஒருவன் துரோகியாகி விட்டதாகத் தெரிந்தால், அவனைக் கண்டதுண்டம் செய்யவும் தயாராயிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் பாரதத் தாயின் உண்மையான புதல்வர்களாவோம்!"
தலைவர் இப்படிச் சொன்னபோது, அந்தக் கூட்டத்தில் பூரண நிசப்தம் நிலவியது. ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டுப் பாராமல் எல்லாரும் தலைகுனிந்தவண்ணம் இருந்தார்கள். நானும் அப்படித்தான் இருந்தேன். நிமிர்ந்து பார்த்தாலும் ஏதேனும் சந்தேகத்துக்கு இடமாகும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனத்திலும் இருந்தது. உள்ளக் கொதிப்பைப் பிரதிபலிப்பது போலச் சற்றுத் தூரத்தில் கடல் அலைகள் கரையில் மோதும் சத்தம் கேட்டது. அத்தனை நேரமும் கேட்காத அலைச் சத்தம் அப்போது ஏற்பட்ட நிசப்தத்தினால் காதிலே வந்து தாக்கிற்று.
"தோழர்களே! ஒரு சில நிமிஷம் உணர்ச்சிக்கு இடங் கொடுத்து விட்டதற்காக நிரந்தரமான சோகக் கடலில் நாம் மூழ்கி விடக் கூடாது. இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்ததும் நன்மைக்குத்தான்! இனிமேல் தவறு செய்யாமலிருக்க உதவியாயிருக்கும். இந்தக் கடற்கரையிலே ஒரு காலத்தில் இரண்டு தேச பக்தச் சிம்மங்கள் கர்ஜனை புரிந்தன. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமண்ய சிவம் இந்த இரண்டு வீரர்கள் இங்கே வேலை செய்து ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணினார்கள். திருநெல்வேலி ஜில்லா முழுவதும் புரட்சித் தீ எரிந்தது. இந்தத் தூத்துக்குடி நகரத்தில் சுதேசி இயக்கத்துக்கு விரோதமாயிருந்தவர்களுக்கு நாவிதன் க்ஷவரம் செய்ய மறுத்தான்; வண்ணான் துணி வெளுக்க மறுத்தான். சிதம்பரம் பிள்ளை சொன்னாரென்றால், கடைக்காரர்கள் கடையைத் திறக்க மறுத்தார்கள். தொழிலாளிகள் ஆலைக்குப் போக மறுத்தார்கள். கலெக்டர் விஞ்சு ஓடி வந்து ஆன மட்டும் கெஞ்சிப் பார்த்தான்; முக்கிப் பார்த்தான்; தோப்புக்கரணம் போட்டுப் பார்த்தான்; பயன்படவில்லை. சிதம்பரம் பிள்ளையின் வாக்கு சர்க்கார் உத்தரவை விடச் செல்வாக்குப் பெற்றிருந்தது. அதைக் கண்ட விஞ்சு துரை மனங் கொதித்தான்; துள்ளிக் குதித்தான். "சிதம்பரம் பிள்ளையைக் கொண்டு வா" என்றான். யமகிங்கரர்கள் போன்ற போலீஸ் ஜவான்கள் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அப்போது நடந்த சம்பாஷணையை இன்று புதுச்சேரியில் வீற்றிருக்கும் நமது தேச மகாகவி அற்புதமாய்ப் பாடியிருக்கிறார், கேளுங்கள்!
"கூட்டங்கூடி வந்தே மாதர மென்று
கோஷித்தாய் - எமைத் - தூஷித்தாய்
ஓட்டம் நாங்கள் எடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய் - பொருள் ஈட்டினாய்!"
என்று கலெக்டர் விஞ்சு துரை குற்றம் சாட்டினானாம். அதற்கு நம் வீரர் சிதம்பரம் பிள்ளை,
"வந்தேமாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் - முடி - தாழ்த்துவோம்
எந்தமாருயிர் அன்னையைப் போற்றுதல்
ஈனமோ - அவமானமோ!"
என்று பதில் சொன்னாராம். உடனே கலெக்டர் விஞ்சு துரை கோபத்தால் துடி துடித்தானாம்.
"சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லுவேன் - குத்திக் - கொல்லுவேன்
தட்டிப் பேசுவாருண்டோ - சிறைக்குள்ளே
தள்ளுவேன் - பழி - கொள்ளுவேன்!"
என்று பயமுறுத்தினானாம். அதற்கு நம் தேச பக்த வீரர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
"சதையைத் துண்டு துண்டாக்கினாலும் உன் எண்ணம்
சாயுமோ - ஜீவன் - ஓயுமோ
இதயத்துள்ளே இலங்கு மகாபக்தி
ஏகுமோ - நெஞ்சம் - வேகுமோ?"
என்று சிறிதும் அஞ்சாமலும், நெஞ்சம் கலங்காமலும் பதில் கூறினார். அத்தகைய வீர புருஷர் வாழ்ந்த இந்தத் தூத்துக்குடி நகரமும், இந்தத் திருநெல்வேலி ஜில்லாவும் இப்போது ஒரே தூக்கமாகத் தூங்குகின்றன...!"
"ஒன்றும் தூங்கவில்லை! யாராவது தப்பித் தவறித் தூங்கினால் அவன் ஜேபியிலிருப்பதைச் சுரண்டுவதற்கு இந்த ஜில்லாவில் எல்லாரும் தயாராயிருக்கிறார்கள்!" என்று கூட்டத்தில் ஒருவர் இலேசாகச் சொன்னார். அவர் பெயர் சாவடி அருணாசலம் பிள்ளை என்றும் தெரிந்து கொண்டேன்.
"இப்போது யார் என்ன சொன்னார்கள்?" என்று நீலகண்ட பிரம்மச்சாரி அதட்டிக் கேட்ட போது, சாவடிப் பிள்ளை, "தூங்குகிறவர்களையாவது எழுப்பலாம்! தூங்குகிறதாகப் பாசாங்கு செய்கிறபடியால் எழுப்பவும் முடியாது என்று சொன்னேன்!" என்றார்.
"இல்லை; அப்படி நினையாதீர்கள், கட்டாயம் எழுப்பலாம்! ஒரு வேட்டுச் சத்தம் கேட்க வேண்டியதுதான்; எல்லாரும் எழுந்து விடுவார்கள். தோழர்களே! வெறுமனே பேசிக் கொண்டிருக்கிற காலம் போய் விட்டது. காரியத்தில் இறங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. உங்களில் எவ்வளவு பேர் காரியத்தில் இறங்கத் தயாராயிருக்கிறீர்கள்? தயாராய் இருப்பவர்கள் கையைத் தூக்குங்கள்!" என்றதும் அவ்வளவு பேரும் கையைத் தூக்கினார்கள். நானும் தூக்கினேன். வாஞ்சி ஐயர் இரண்டு கையையும் தூக்கினார்.
"ஆறு மாதமாக நாங்கள் காரியத்துக்குத் தயாராகத்தான் இருக்கிறோம். நீங்கள்தான் 'இன்னும் காலம் வரவில்லை', 'காலம் வரவில்லை' என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஊர் கூடிச் செக்குத் தள்ளுதல் நடக்கிற காரியமா?" என்று வாஞ்சி ஐயர் மீண்டும் படப்படப்பாய்ப் பேசினார்.
"வாஞ்சி! நீ சற்று சும்மா இரு. பேச்சிலே வீரனாயிருப்பவன் காரியத்திலே கோழையாயிருப்பான். 'ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியாது' என்றா சொல்கிறாய்? முடியும் என்று நான் சொல்லுகிறேன். தமிழ் நாட்டில் நூறு இடத்தில் ஒரே தேதியில் சேர்ந்தாற்போல் புரட்சி நடக்கப் போகிறது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் நடந்திருக்கின்றன. ஆயுதங்கள், ஆட்கள் எல்லாம் தயார். தேதி குறிப்பிட வேண்டியது ஒன்றுதான் பாக்கி. குறிப்பிட்ட தேதியில் இந்த மாகாணத்திலுள்ள அவ்வளவு வெள்ளைக்காரர்களும் சுட்டுத் தள்ளப்படுவார்கள். ஜார்ஜ் பெஞ்சமனுடைய ஆட்சி முடிவடையும். மறுநாள் நமது சிதம்பரம் பிள்ளைதான் தமிழ்நாட்டுக்கு மகாராஜா. இப்படியே ஒவ்வொரு மாகாணத்திலும் நடக்கப் போகிறது."
இதைக் கேட்டதும் எல்லோருக்கும் ரோமம் சிலிர்த்தது. என்னுடைய நெஞ்சு பட், பட் என்று அடித்துக் கொண்டது. அவ்வளவு சீக்கிரமாகக் காரியங்கள் நடக்கப் போகின்றன என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆகா! தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை இட்ட தீ பெரிய தீதான்.
கூட்டத்தில் சிலர் "தேதி எப்போது சொல்லப் போகிறீர்கள்?" என்று கேட்டார்கள். "அன்றைக்கு என்ன செய்ய வேண்டும்? என்ன மாதிரி செய்ய வேண்டும்?" என்று இன்னும் சிலர் கேட்டார்கள்.
நீலகண்ட பிரம்மச்சாரி கூறினார்: "இன்ன தேதி என்பதையும் அன்றைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் அடுத்தக் கூட்டத்தில் சொல்வேன். இதுவரையில் வெறுமனே பேசிக் கொண்டிருந்தோம். ஆகையால் எங்கே வேணுமானாலும் கூட்டம் போட்டோ ம். காரியத்தில் இறங்க வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டதால், இடம் பொருள் ஏவல் அதற்குத் தக்கபடி இருக்க வேண்டும். தோழர்களே! நம்முடைய அடுத்த கூட்டத்தைக் குற்றாலத்தில் கூட்டப் போகிறேன். அடுத்த பௌர்ணமியன்று கூட்டம். குற்றாலத்தில் கூட்டம் எங்கே கூடும், எந்த நேரத்தில் கூடும் என்பதைக் காசி மேஜர்புரத்திலுள்ள நமது முருகையனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்... என்ன, முருகையா? சரிதானே?"
முருகையன் - பொன்னியம்மாவின் கணவன் - யார் என்பதை அப்போது ஐயமறத் தெரிந்து கொண்டேன்.
"சுவாமி! நான் இப்போது காசிமேஜர் புரத்தில் இல்லை. குற்றாலத்தில் சர்மா பங்களாவில் இருக்கிறேன்! என்றான் முருகையன்.
"அப்படியானால் விசாரிக்க வருகிறவர்களுக்கு இன்னும் சௌகரியமாய்ப் போச்சு. ஆனால் பங்களாவில் சர்மா இருக்காகளா?"
"இல்லை ஐயா! நல்ல வேளையாகத் திருவிதாங்கூருக்குப் போனாக, திரும்பி வருவதற்கு இரண்டு மாதம் பிடிக்குமாம்!"
"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆச்சு! இராமபத்ர சர்மா நல்ல மனுஷர்தான். ஆனால் பழுத்த மிதவாதி. அவரோடு விவாதம் செய்வதைக் காட்டிலும் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளலாம். ஆனாலும் அவரோடு நான் செய்த விவாதத்தைக் கேட்டுத்தானே நீ நம்ம கோஷ்டியில் சேர்ந்தாய், முருகையா! சர்மா நன்றாயிருக்க வேணும்!" என்றார் பிரம்மச்சாரி. பிறகு இரண்டு இரண்டு பேராயும், மூன்று மூன்று பேராயும் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றார்கள் வாஞ்சி ஐயரையும் தர்மராஜா ஐயரையும் பிடித்துக் கொண்டு நான் சென்றேன். அந்த இரண்டு மனிதர்களையும் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
-----------
5
இரண்டு வார காலம் ரொம்பச் சாவகாசமாகவே சென்றது. பௌர்ணமிக்கு மூன்று நாளைக்கு முன்பு நீலகண்ட பிரம்மச்சாரி வந்து இராமபத்திர சர்மாவின் பங்களாவில் உட்கார்ந்து கொண்டார். பலர் அவரை வந்து பார்ப்பதும் போவதுமாயிருந்தார்கள். நானும் இரண்டொரு தடவை சென்று பார்த்தேன். பேசினேன். அபாரமான படிப்பும் கூரிய அறிவும் உள்ளவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் இவர் சொல்கிறபடியெல்லாம் நடக்கப் போகிறதா, ஒரே நாளில் பிரிட்டிஷ் ராஜ்யம் கவிழ்ந்து விடப் போகிறதா என்று நினைத்துப் பார்த்த போது கொஞ்சம் வியப்பாகத்தானிருந்தது. அது எப்படியானால் என்ன? நம்முடைய கடமையை நாம் செய்து விட வேண்டியது என்று உறுதி கொண்டேன். நீலகண்ட பிரம்மச்சாரியைப் பார்க்கப் போன சமயத்தில் அந்தப் பங்களாவின் தோட்ட வீட்டிலே குடியிருந்த முருகையனும் பொன்னியம்மாவும் எவ்வளவு அன்புமயமான வாழ்க்கை நடத்தினார்கள் என்பதையும் கவனித்தேன். பாவம்! அவர்களுடைய வாழ்க்கையின் இன்பத்தைக் கெடுப்பதற்கு இந்தப் பிரம்மச்சாரி வந்து சேர்ந்தார். பொன்னியம்மாவின் முகத்தில் கவலைக்குறி முன்னைவிட அதிகமாயிருந்ததை நான் கவனியாமல் இல்லை.
பௌர்ணமியன்று மாலை, செண்பகாதேவியில் பொன்னியம்மாவுக்குத் தைரியம் கூறிய சாமியார், சர்மாவின் பங்களாவுக்கு வந்து சேர்ந்தார். தோட்டக் கதவைத் திறந்து கொண்டே உள்ளே பிரவேசித்தார். பங்களாவில் ஒருவரும் இல்லை. தோட்டத்திலும் ஒருவருமில்லை. விசாரிக்க வேண்டியவர்கள் எல்லாரும் வந்து விசாரித்துக் கொண்டு மலைமேல் ஏறிவிட்டார்கள். தோட்டக் குடிசையில் பொன்னியம்மா மட்டும் தன்னுடைய ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
சாமியாரைப் பார்த்ததும் அவள் குடிசைக்குள்ளேயிருந்து விரைந்து வந்தாள்.
"சாமி! இது என்ன இந்த நேரத்தில் வந்தீர்கள்? இங்கே ஆண் பிள்ளைகள் ஒருவரும் இல்லையே!" என்றாள்.
"பொன்னியம்மா! இராத்திரி இங்கே தங்குவதற்காக நான் வரவில்லை. மலைமேல் இராத்திரி எனக்கு வேலையிருக்கிறது. இதோ திரும்பிப் போகிறேன். ஆனால் உனக்கு வாக்கு கொடுத்தேனே, அதை நிறைவேற்றி விட்டுப் போகத்தான் அவசரமாக வந்தேன்!"
"என்ன வாக்கு, சாமி?"
"உன்னுடைய புருஷனைப் பற்றித்தான்! மறந்து விட்டாயா, என்ன? அல்லது அபாயம் நீங்கி விட்டது என்று நினைத்தாயா?"
"அவருக்கு ஓர் அபாயமும் இல்லை சாமி, நான் தான் பெண் புத்தியினால் வீணாகப் பயப்பட்டேன்."
"பொன்னியம்மா! நீ சுத்த அசடு! உன்னை யாரோ ஏமாற்றி விட்டிருக்கிறார்கள். உண்மையில் உன் புருஷனுக்கு இன்று இரவு பெரிய அபாயம் வரப் போகிறது. இங்கே மூன்று நாளாயிருந்தேனே, ஒரு பிரம்மச்சாரித் தடியன், அவனும் உன் புருஷனும் இப்போது எங்கே போயிருக்கிறார்கள் தெரியுமா? மலைமேலே செண்பகாதேவியம்மன் கோயிலுக்குத்தான் போயிருக்கிறார்கள். மொத்தம் இருபது பேருக்கு மேல் இன்று இரவு அங்கே வரப் போகிறார்கள். எல்லாருமாகச் சேர்ந்து உன் புருஷனை அம்மனுக்கு பலி கொடுக்கப் போகிறார்கள்!"
"ஐயோ!" என்று அலறினாள் பொன்னி.
"மலையாள மந்திரவாதிகள் என்றால், பின்னே என்னவென்று நினைத்துக் கொண்டாய்? நான் சொல்கிறபடி கேட்டால் உன்புருஷனைக் காப்பாற்றிக் கொள்ளலாம், கேட்பாயா?"
"கேட்கிறேன், ஸ்வாமி!"
"இதோ இந்தக் கடிதத்தில் எல்லாம் விவரமாக எழுதியிருக்கிறேன். உடனே இதை எடுத்துச் சென்று தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்க வேணும். கொடுத்தால் போலீஸார் வந்து பலியைத் தடுத்து, உன் புருஷனைக் காப்பாற்றுவார்கள்."
"போலீஸ் என்னத்துக்கு சாமி! நானே போய் என் புருஷனைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்."
"அசட்டுப் பெண்ணே! அவர்கள் இருபது பேர், நீ ஒருத்தி என்ன செய்வாய்? உன்னையும் சேர்த்துப் பலிகொடுத்து விடுவார்கள்."
பொன்னியம்மாள் யோசித்தாள்.
"என்ன சொல்கிறாய்? நீ போகிறாயா, அல்லது நான் போகட்டுமா? மலைமேலே நான் இப்போதே போனால் போலீஸார் வரும் வரையில் எப்படியாவது உன் புருஷனை காப்பாற்றி வைப்பேன்!"
"நான் போகிறேன், சாமி!" என்று சொல்லிப் பொன்னியம்மா கடிதத்தை வாங்கிக் கொண்டாள்.
"போகாவிட்டால் உன் புருஷன் உயிர் உன் தலைமேலே!" என்று சொல்லி விட்டுச் சாமியார் விடுவிடு என்று நடையைக் கட்டினார்.
அன்று சாயங்காலம் அந்தி மயங்கி அஸ்தமன இருள் சூழ்ந்து வந்த நேரத்தில் நான் குற்றாலத்துமலை மீது ஏறிக் கொண்டிருந்தேன். இன்னும் சிறிது நேரத்தில் பூரண சந்திரன் உதயமாகி விடுவான். ஆயினும் மலைப்பாதை வழியில் மலைகளும் மரங்களும் நிலாவைத் தடுத்து இருளை நிலை நாட்டிக் கொண்டுதானிருக்கும். அதைப் பற்றி அன்றைக்கு என்ன கவலை? மலைமேல் இருபது பேருக்கு மேல் போயிருக்கிறார்கள். செண்பகாதேவிக்கு அருகில் காய்ந்த மரக்கட்டைகளைப் பிடுங்கிப் போட்டு பெரிய தீ வளர்ப்பார்கள். கூட்டம், பிரசங்கம், விவாதம், சபதம் - எல்லாம் இரவு வெகு நேரம் வரையில் நடக்கும். அப்புறம்... ஆகா! அப்புறம் என்ன நடக்குமோ யாருக்குத் தெரியும்? எனக்கே பிறகு நடக்கப் போவதைப் பற்றி நினைக்க மனமில்லை. ஏதோ செய்ய வேண்டிய கடமையை நாம் செய்தாகிவிட்டது. இனிமேல் நடக்கிறது நடக்கட்டும் என்று மன நிம்மதியோடு இருப்பதுதான் சரி.
இம்மாதிரி எண்ணத்துடன் மேலே ஏறிக் கொண்டிருந்த போது பின்னால் இன்னும் யாரோ ஒருவர் வருகிற மாதிரி தோன்றியது. ஒருவர் அல்ல; இருவர் வருகிறார்கள் என்று பேச்சிலிருந்து தெரிந்தது. ஆகா! வாஞ்சியும் தர்மராஜனும் போல் அல்லவா தோன்றுகிறது? நமக்கும் பின்னால் இவர்கள் வருகிறார்களே?
அவர்களைச் சந்திப்பதற்கு முன்னால் நான் அவசியம் செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருந்தது. நன்றாய் இருட்டட்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அதை முடிப்பதற்குள் இவர்கள் விரைந்து நடந்து நம்மைப் பிடித்துவிட்டால் ஆபத்தாய்ப் போய்விடும்.
எனவே, சட்டென்று மலைப் பாதையில் ஒரு முடுக்குத் திரும்பியதும் காட்டுக்குள் புகுந்து சிறிது தூரம் சென்று ஒரு பாறைக்குப் பின்னால் மறைந்து கொண்டேன். வேஷத்தைக் களைந்தேன், தாடியையும் சடையையும் ஒரு கைக்குட்டைக்குள் வைத்துச் சுற்றிக் கைக்குட்டையை முடிச்சுப் போட்டேன். அடையாளமாக ஒரு மரப் பொந்துக்குள் வைத்தேன். இதற்குள், பின்னால் வந்தவர்கள் முன்னால் போயிருக்க வேண்டும் என்று எண்ணிப் பாதைக்கு வந்தேன். முன்னால் கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஆட்களைக் காணவில்லை. பின்னாலும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. சரி; முன்னால் ரொம்ப விரைந்து போய் இன்னொரு வளைவில், அவர்கள் திரும்பியிருக்க வேண்டும் இவ்வாறு எண்ணிக் கொண்டு நானும் விரைந்து நடந்தேன்.
மரப்பாலத்துக்கு அருகில் சென்றபோது பின்னால் ஆள் வரும் சத்தம் மறுபடி கேட்டது. நின்று அவர்கள் வரட்டும் என்று காத்திருந்தேன். அதே வாஞ்சி ஐயரும் தர்மராஜனுந்தான். "அடே! இவர்கள் வழியில் எப்படி மாயமாய் மறைந்தார்கள்?" என்று மனதில் ஏற்பட்ட, அதிசயத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. வாஞ்சி வழக்கம் போல் கையில் ஒரு சிறு தோல் பெட்டி வைத்திருந்தார். அதோடு இப்போது ஒரு சின்னத் துணி மூட்டையும் காணப்பட்டது. தோல் பெட்டி நடக்கும் போது 'கிலுக்' 'கிலுக்' என்ற சத்தம் கேட்டது. துணி மூட்டை சத்தம் போடவில்லை. இரண்டுக்குள்ளும் என்ன இருக்கும்?
"என்ன வாஞ்சி! என்ன தர்மராஜா! இப்பத்தான் வருகிறீர்களா?" என்று கேட்டேன்.
"என்ன ராகவாச்சாரி! நீங்களும் இப்போதுதான் போகிறீர்களா, என்ன?"
மூன்று பேரும் கலகலவென்று குதூகலமாகப் பேசிக் கொண்டு மேலே ஏறினோம்.
------------
6
இரவு சுமார் பத்துமணி ஆயிற்று. செண்பகாதேவி அருவிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தட்டையான பாறையில் இருபத்தைந்து ஆட்கள் வட்டமாய் உட்கார்ந்திருந்தார்கள். நடுவில் மரக்கட்டைகள் சடசடவென்று சத்தத்துடன் எரிந்து வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. ஜுன் மாதத்துக் கடுங் கோடையானாலும் அருவிக்குப் பக்கமான படியால் கொஞ்சம் குளிர் இருந்தது. நெருப்பு அதற்கு இதமாயிருந்தது.
முன் போலவே நீலகண்ட பிரம்மச்சாரி அக்கிரஸ்தானத்தை வகித்து ஆவேசமான பிரசங்கம் செய்தார்:
"தோழர்களே! ஸ்ரீ வேதவியாச முனிவர் பிரம்மவைவர்த்த புராணத்தில் சொல்லியிருக்கும் காலம் நெருங்கி விட்டது. நந்தன வருஷத்துக்கும் ஆனந்த வருஷத்துக்கும் மத்தியில் வெள்ளைக்காரனுடைய சாம்ராஜ்யம் அழிந்துபோகும் என்று வியாச பகவான் எழுதி வைத்திருக்கிறார். ஐயாயிரம் வருஷங்களுக்கு முன்பே ஞான திருஷ்டியால் உணர்ந்து சொல்லியிருக்கிறார். அந்த மகானுடைய வாக்குப் பொய்யாகுமா? ஒருநாளும் பொய்யாகாது. ஆகையால் இன்னும் மூன்று வருஷத்துக்குள் வெள்ளைக்காரன் பூண்டோ டு அழிந்து கூண்டோ டு யமலோகம் போகப் போகிறான்."
இவ்வாறு பிரம்மச்சாரி வெறி கொண்டவர் போல் பேசிக் கொண்டே போனார். வெள்ளைக்காரனுடைய ராஜ்யம் பாரத புண்ணிய பூமியில் ஏற்பட்டதிலிருந்து தேசம் அடைந்து வரும் கஷ்ட நஷ்டங்களையெல்லாம் சரமாரியாக எடுத்துச் சொன்னார்.
"நமது தர்மத்தை அழித்தார்கள்; நமது தொழில்களை அழித்தார்கள்; நமது தங்கத்தையெல்லாம் கொள்ளை கொண்டு போனார்கள்; செல்வம் கொழித்த நாட்டில் பஞ்சத்தை உண்டு பண்ணினார்கள். தோழர்களே! இந்தமாதிரி அக்கிரமங்களைத் துஷ்ட நிக்ரஹசிஷ்ட பரிபாலனம் செய்யும் விஷ்ணு பகவான் பொறுப்பாரா? ஒரு நாளும் பொறுக்க மாட்டார். அக்கிரமத்தை அழித்துத் தர்மத்தை நிலை நாட்ட பாலகங்காதர திலகர் என்ன, அரவிந்தகோஷ் என்ன, லாலா லஜபதிராய் என்ன, விபின் சந்திரபாலர் என்ன, அசுவினி குமார தத்தர் என்ன இப்பேர்ப்பட்டவர்களை அனுப்பி வைத்தார். நமது செந்தமிழ் நாட்டுக்கும் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவம், சுப்பிரமணிய பாரதி முதலிய வீரர்களை அனுப்பி வைத்தார். இந்த வீரர்களில் பலர் இப்போது சிறையில் இருக்கிறார்கள்; சிலர் தேசப் பிரஷ்டர்களாகயிருக்கிறார்கள். அதனால் என்ன? கிருஷ்ண பகவான் சிறைச் சாலையில் இல்லையா? இராமபிரான் வனவாசம் செய்யவில்லையா? ஒரு காலம் வரும். அப்போது சிறைக் கதவுகள் உடைத்துத் திறக்கப்படும், என்று சொல்லிக் கொண்டிருந்தேன், தோழர்களே! அந்தக் காலம் இப்போது வந்து விட்டது. நீங்கள் தயாரா?"
"தயார்! தயார்!" என்று எல்லோரும் கூறினார்கள். என் எதிரே இருந்த வாஞ்சி ஐயர் மட்டும், "இந்த மாதிரி நூறு தரம் கேட்டு நூறு தடவை பதில் சொல்லியாகி விட்டது!" என்று முணுமுணுத்தார்.
அருகிலிருந்த தர்மராஜய்யர் வாஞ்சி ஐயரை அடக்கிப் 'பேசாமலிரு' என்றார்.
"வாஞ்சி ஐயர் என்ன முணுமுணுக்கிறார்?" என்று சுப்பையாப் பிள்ளை கேட்டார்.
"பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று பாரதியார் பாடியாகி விட்டது. இன்னமும் ஐயர் பட்டம் என்ன? 'வாஞ்சி' என்று சொன்னால் போதும்" என்றார் வந்தேமாதரம் சுப்பிரமணிய ஐயர்.
நீலகண்ட பிரம்மச்சாரி குறுக்கிட்டு, "வாஞ்சி காரியத்தில் இறங்க வேண்டும், பேசியது போதும் என்று துடியாயிருக்கிறார். அது நியாயந்தான். ஏற்கனவே சபதம் செய்தவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் உடனே சபதம் எடுத்துக் கொள்ளட்டும்!" என்றார்.
அன்றைக்கு அங்கே வந்திருந்த இருபத்தைந்து பேரில் இருபது பேர் ஏற்கனவே பிரதிக்ஞை எடுத்துக் கொண்டவர்கள் என்றும், ஐந்து பேர் புதிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஏற்பட்டது. அந்த ஐவரில் நான் ஒருவன்.
மடத்துக் கடைச் சிதம்பரம்பிள்ளை பிரதிக்ஞா பத்திரத்தை எடுத்துப் படித்தார். அதன் வாசகம் கேட்கவே பயங்கரமாயிருந்தது. "பாரதத் தாயின் விடுதலைக்காக உயிரையும் கொடுப்பேன்; தலைவர் கட்டளையை நிறைவேற்றுவேன்; துரோகம் செய்ததாக ஏற்பட்டால் காளிக்கும் பலியாவேன்" என்பவை அதன் முக்கியமான அம்சங்கள். கை விரலைக் கத்தியால் வெட்டி அந்த இரத்தத்தில் பெரு விரலை நனைத்துப் பத்திரத்தின் அடியில் கைநாட்டுச் செய்ய வேணும். காளியின் படத்துக்கு முன்னால் குங்குமம் கலந்த செந்நீரைக் குடிக்க வேணும். இதுதான் பிரதிக்ஞை முறை என்று தெரிந்தது.
ஐந்து பேரும் இந்த முறைப்படியே பிரதிக்ஞை செய்தோம். பிறகு நீலகண்ட பிரம்மச்சாரி கூறினார், "தோழர்களே! இனிமேல் நான் தேதியைச் சொல்லலாம். அடுத்த அமாவாசை தினம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சபதம் செய்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெள்ளைக்காரனைக் குறிப்பிட்டு வைத்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்து வரவேண்டும். அமாவாசையன்று ஆளைத் தீர்த்துவிட வேண்டும். முடிந்தால் ஓடித் தப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் தன்னையும் திருப்பிச் சுட்டுக் கொண்டு வீர சொர்க்கம் அடைய வேண்டும். இதுதான் திட்டம். புதுச்சேரியில் வேண்டிய ஆயுதங்கள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆயுதம் இல்லாதவர்கள் புதுச்சேரிக்குப் போய் வாங்கிக் கொள்ளலாம். தோழர்களே, அதற்கு முன்னால் இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது! அதையும் சொல்லி விடுகிறேன். எந்தக் காரியத்தையும் சரிவரச் செய்து முடிப்பதற்கு இடம் பொருள் ஏவல் மூன்றும் வேண்டும். நமக்கு இடம் ஏவல் இரண்டும் இருக்கிறது! பொருள்தான் இல்லை. 1857 ஆம் வருஷத்தில் நடந்த இந்திய சுதந்திர யுத்தம் ஏன் தோல்வி அடைந்தது தெரியுமா? பணம் இல்லாதபடியால்தான். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்த அமாவாசைக்குள் தலைக்கு ஆயிரம் ரூபாயாவது சேர்த்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுக்க வேண்டும்."
இந்தச் சமயத்தில் வாஞ்சி எழுந்து நின்றார். தலைவரைப் பார்த்து, "ஐயா! பத்திரிகைகளிலே ஒரு செய்தி வந்திருக்கிறதே, அதைப் பற்றிய உண்மை என்ன?" என்று கேட்டார்.
"எந்தச் செய்தியை, எந்த உண்மையைக் கேட்கிறாய்?" என்று பிரம்மச்சாரி கர்ஜித்தார்.
"அரவிந்த கோஷ் ஆசிரமத்தார் விடுத்திருக்கும் அறிக்கையைப் பற்றித்தான் கேட்கிறேன். அதில் உங்களுடைய பெயரைக் குறிப்பிட்டு, ஆசிரமத்துக்கும் உங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதாகச் சொல்லியிருக்கிறதே? அதன் உண்மை என்னவென்று தான் கேட்கிறேன்."
பிரம்மச்சாரி ஒரு பயங்கரச் சிரிப்புச் சிரித்தார். "வாஞ்சி! என்ன கேள்வி கேட்டாய்! உன் தலைவனையே சந்தேகிக்கலாமா? அரவிந்த கோஷ் ஆசிரமத்தார் அப்படி அறிக்கை விடாமல் வேறு என்ன செய்வார்கள்? என்னுடைய காரியங்களுக்கு அவர்கள் பொறுப்பாளிகள் என்று ஒப்புக் கொள்வார்களா? அப்படியானால் அவர்கள் புதுச்சேரியில் இருக்க முடியுமா? மேலும் வேலை செய்ய முடியுமா? மூடாத்மா! இதுகூட உன் புத்திக்கு எட்டவில்லையா? நாளைக்கு உன்னைப் போலீஸார் கைது செய்து விசாரித்தால், எங்கள் பெயர்களையெல்லாம் எழுதிக் கொடுத்து விடுவாயா?" என்று பிரம்மச்சாரி கர்ஜித்தார்.
அதற்கு வாஞ்சி சாவதானமாக, "ஐயா! உங்கள் பெயர்களையெல்லாம் நான் எழுதிக் கொடுக்க வேண்டியதில்லை. ஏற்கனவே நம் எல்லோருடைய பெயர்களும் இரண்டொரு பெயரைத் தவிர தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் இருக்கின்றன. இன்று சாயங்காலம் தென்காசியில் என் மருமகன் சொன்னான். அவன் போலீஸ் ஸ்டேஷனில் குமாஸ்தா. நம் எல்லாருடைய பெயர்களையும் குறிப்பிட்டு ஒரு மொட்டை கடிதம் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறதாம்! என்னை ஜாக்கிரதையாயிருக்கும்படி சொன்னான்!" என்றார்.
"அப்படியானால் இந்தக் கூட்டத்திலேதான் யாரோ ஒரு துரோகி இருக்க வேண்டும். அவன் யார்? காளி மாதாவின் மேல் ஆணை! உண்மையை ஒப்புக் கொண்டு விடுங்கள்!" என்று பிரம்மச்சாரி கர்ஜித்தார்.
"அதோ காளி மாதா!" என்று அச்சமயம் ஒரு கூச்சல் எழுந்தது. கூச்சல் போட்டவர் சுப்பையா பிள்ளை. அவர் நோக்கிய திக்கை எல்லாரும் நோக்கினோம். சற்று தூரத்தில் ஒரு பாறை முனையில் விரித்த கூந்தலுடன் பயங்கரத்தினால் அகன்ற விழிகளுடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு ஒரு பெண் உருவம் நின்றது. காளிமாதா என்று நினைக்கக் கூடியதாகத் தான் இருந்தது. ஆனாலும் அவள் காளி இல்லை. பொன்னியம்மா என்று எனக்குத் தெரிந்துவிட்டது.
முருகையனும் அதைத் தெரிந்து கொண்டு தலைவரைநோக்கி, "ஐயா, அந்தப் பெண் காளிமாதா அல்ல; என்னுடைய மனைவி பொன்னி. எதற்கு இங்கே வந்தாள் என்று இதோ போய் விசாரித்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனான்.
அவன் போன உடனே வாஞ்சி, "நான் சொன்னதின் உண்மை இப்போது தெரிந்து விட்டதல்லவா? யார் யாருக்கோ இந்தக் கூட்டத்தின் விஷயம் தெரிந்து போயிருக்கிறது. அந்தப் பெண் இன்று மாலை ஒரு கடிதம் வைத்திருந்தாள். அது தென்காசி போலீஸுக்கு எழுதப்பட்ட கடிதம். இன்று இரவு இங்கே நடக்கும் கூட்டத்தைப் பற்றி அதில் எழுதியிருந்தது!" என்றார்.
"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?" என்று சங்கர கிருஷ்ணயர் கோபக் குரலில் முழங்கினார்.
"சாயங்காலம் இங்கே நான் வந்து கொண்டிருந்த போது அந்தப் பெண் வழிமறித்துக் கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்கச் சொன்னாள். கடிதத்தில் ஏதோ மர்மமான விஷயம் எழுதியிருக்கிறதென்றும், போலீஸுக்குக் கொண்டு போக வேண்டாமென்றும் அவளுடைய புருஷனிடம் கொடுக்கும்படியும் நான் சொல்லி விட்டு வந்தேன். அந்த கடிதத்தில் ரொம்ப அதிசயமான விஷயம் என்னவென்றால்..."
இதற்குள்ளே முருகையனும் பொன்னியம்மாளும் அங்கே வந்து விட்டார்கள். முருகையன் பொன்னியம்மாளிடம் இருந்த கடிதத்தை வாங்கித் தலைவரிடம் கொடுத்தான்.
தலைவர் படித்து விட்டு "ஆஹா! கடிதம் ரொம்ப விசித்திரமானதுதான்! இதை யார் அம்மா உன்னிடம் கொடுத்தது?" என்று கேட்டார். "தாடிச் சாமியார் ஒருவர் கொடுத்தார். ஐயா! இந்தச் செண்பகாதேவியில் அவரை அடிக்கடி நான் பார்த்திருக்கிறேன்" என்றாள் பொன்னியம்மா.
"அப்படியா சேதி! துரோகி யாராயிருப்பான் என்று உங்களில் யாராவது ஊகித்துச் சொல்ல முடியுமா?" என்று தலைவர் கேட்டார்.
உடனே நான் எழுந்து நின்று, "நான் சொல்ல முடியும்!" என்றேன்.
"யார்? தெரிந்தால் பயப்படாமல் சொல்லு!"
"அதோ, அந்தப் படபடத்த மனுஷர்தான்! அவர் கையிலுள்ள மூட்டையை அவிழ்க்கச் சொல்லுங்கள்"
"சுப்பையாப்பிள்ளை! வாஞ்சியின் மூட்டையை எடுத்து அவிழ்த்துப் பார்!" என்றார் பிரம்மச்சாரி.
சுப்பையாப்பிள்ளை அப்படியே பாய்ந்து வாஞ்சியின் துணி மூட்டையை எடுத்து அவிழ்த்தார். அதற்குள்ளேயிருந்து தாடியும் சடையும் விழுந்தன.
"தோழர்களே! சந்தேகமில்லை; வாஞ்சிநாதன் துரோகி. இந்தக் கடிதத்தின் கையெழுத்தும் அவனுடைய கையெழுத்துத்தான்!" என்று நீலகண்ட பிரம்மச்சாரி கூறினார்.
எல்லாரும் வியப்போடும் பயங்கரத்தோடும் வாஞ்சி ஐயரைப் பார்த்தார்கள்.
இதெல்லாம் நடந்து கொண்டிருந்தபோது வாஞ்சி சும்மா இல்லை; ஒரு காரியம் செய்து கொண்டிருந்தார். அதாவது கையிலிருந்த தோல் பெட்டியைத் திறந்து கொண்டிருந்தார். எதற்கு என்று யாரும் ஊகிக்க முடியவில்லை. கையில் பளபளவென்று மின்னிய ரிவால்வருடன் அவர் குதித்து எழுந்து நின்றபோதுதான் தெரிந்தது.
ரிவால்வரை ஒருமுறை எங்கள் எல்லாரையும் பார்த்துச் சுழற்றி விட்டு வாஞ்சி கூறினார்: "தோழர்களே! இந்த ரிவால்வரில் ஆறு குண்டுகள் இருக்கின்றன. வேறு முக்கிய காரியத்துக்காக இதை வைத்திருக்கிறேன். சிதம்பரம் பிள்ளையைச் செக்கு இழுக்கச் செய்ததற்குப் பழி வாங்குவதற்காக வைத்திருக்கிறேன். கலெக்டர் ஆஷ் துரைக்குப் பரிசு அளிப்பதற்காக வைத்திருக்கிறேன். ஆனால் யாராவது அருகில் நெருங்கினீர்களோ, அப்புறம் என் பெயரில் பழி சொல்ல வேண்டாம். மறுபடியும் எச்சரிக்கை செய்கிறேன். துரோகி நான் அல்ல! யார் என்று ஒருவாறு ஊகித்திருக்கிறேன். ஆனாலும் காட்டிக் கொடுக்க விருப்பமில்லை. எல்லாரும் ஓடித் தப்பிப் பிழையுங்கள். கடவுள் அருளால் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் மொட்டைக் கடிதத்தை நம்பவில்லை. யாரோ பைத்தியக்காரன் எழுதியது என்று சொல்லி சும்மா இருந்து விட்டார். ஆனால் இரண்டு நாளில் அப்படிச் சும்மா இருக்க மாட்டார்கள். உங்கள் எல்லோரையும் தேடிப் பிடிக்க முயலுவார்கள். ஆகையால் ஓடிப் போய் பிழையுங்கள். உயிரை இப்போது காப்பாற்றிக் கொண்டால் பிற்பாடு உங்கள் சபதத்தை நிறைவேற்றலாம். ஓ! வாய்ப் பேச்சில் வீர தலைவரே! எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியே ஊருக்குப் போய்க் கல்யாணம் செய்துகொண்டு சுகமாயிரும். புரட்சி இயக்கத்தை நடத்த உம்மால் முடியாது. உம்மால் பேச்சுப் புரட்சிதான் செய்ய முடியும். முருகையா! உன் சம்சாரத்தைக் கேள், சொல்வாள்!" இவ்விதம் எரிமலை நெருப்பைக் கக்குவது போல் கக்கி விட்டு வாஞ்சி ஐயர் அங்கிருந்து ஒரே ஓட்டம் பிடித்தார். அவருடன் தொடர்ந்து தர்மராஜய்யரும் ஓடினார்.
மற்றவர்கள் எல்லோரும் சிறிது நேரம் திகைத்து நின்று விட்டுப் பிறகு அவர்களும் நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். நானும் முருகையனும் பொன்னியம்மாவும் மட்டும் மீதமிருந்தோம். "ஐயா! பைத்தியங்கள் எல்லாரும் ஓடிப் போய் விட்டன. நீங்கள் வரப் போகிறீர்களா, அல்லது செண்பகாதேவியிலேயே இருந்து நிஷ்டை செய்யப் போகிறீர்களா?" என்று முருகையன் கேட்டான். "இல்லை; நானும் உங்களுடன் வருகிறேன்!" என்றான். மூன்று பேருமாகப் புறப்பட்டுச் சாவதானமாய்ப் பேசிக் கொண்டு சென்றோம். "பொன்னியம்மா! துரோகி யாராயிருக்கும்? ஏதோ உன்னைக் கேட்டால் தெரியும் என்று அந்த வாஞ்சி ஐயர் உளறி விட்டுப் போனாரே?" என்றான் முருகையன்.
"அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் பிடிபடவில்லை. ஏங்கறேன், அந்தத் தாடியும் சடையும் என்ன ஆச்சு?" என்று பொன்னி கேட்டபோது எனக்குக் கொஞ்சம் திடுக்கிட்டது.
"எது? என்னத்துக்கு அந்தச் சனியன்! எங்கே யானும் போவட்டும்" என்றான் முருகையன்.
குறுக்கு வழியாக அருவியைப் பிடித்துக் கொண்டு நாங்கள் இறங்கிச் சென்றோம். பெரிய அருவி விழும் மலை உச்சியை அடைந்தோம். "அப்பா! இங்கேயிருந்து உருண்டு கீழே விழுந்தால் எப்படியிருக்கும்!" என்றான் முருகையன். "இது என்ன கேள்வி?" என்றாள் பொன்னியம்மா.
மெதுவாகப் பாதி வழி இறங்கினோம், பொங்குமாங்கடலுக்கு அருகில் வந்து சேர்ந்தோம்.
வெண்ணிலாவில் பொங்குமாங்கடல் அலை மோதிக் கொண்டு அழகாகக் காட்சி அளித்தது. அருவியில் தண்ணீர் கொஞ்சம் என்றாலும் பொங்குமாங்கடல் பொங்கி வழிந்து கொண்டுதானிருந்தது.
ஐயோ! இது என்ன? ஒரு நொடியில் அலைமோதிய அந்தப் பொங்குமாங்கடலில் நான் விழுந்துவிட்டேன்! எப்படி விழுந்தேன் என்று தெரியவில்லை. கடலுக்கு அருகில் வந்து நின்ற போது முதுகில் யாரோ கை வைத்தது போலிருந்தது. ஒருவேளை, முருகையன் - சே! அவன் ஏன் நம்மைத் தள்ளப் போகிறான்! இதோ அவனும் அவன் சம்சாரமும் கரையிலே உட்கார்ந்து எவ்வளவு கவலையுடன் நம்மைக் கரை சேர்ப்பதற்காகக் காத்திருக்கிறார்கள்?
கரை அருகில் நான் வந்ததும் முருகையன் கை கொடுத்தான் - ஆனால் இதென்ன? பிடித்து இழுப்பதற்குப் பதிலாக நம்மை ஏன் திருப்பித் தள்ளுகிறான்?
புருஷனும் பெண்சாதியும் ஏன் சிரிக்கிறார்கள்? பௌர்ணமி நிலவினால் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன?
கடவுளே! அன்று இரவு அனுபவத்தை இன்றைக்கு நினைத்தாலும் எனக்குக் குடல் நடுங்குகிறது. வேண்டாம் ஆண்டவனே, வேண்டாம்! ஈரேழு பதினாலு ஜன்மங்களுக்கும் வேண்டாம்!
என் கைகளும் கால்களும் களைத்துத் தண்ணீரில் மூழ்கி இரண்டு வாய்த் தண்ணீரும் குடித்து இனிச் செத்தாற் போலத்தான் என்று எண்ணிய பிறகு என்னைக் கரையில் இழுத்துக் குற்றுயிரும் குலை உயிருமாகப் போட்டு விட்டு அந்தப் புண்ணியசாலிகள் போய்ச் சேர்ந்தார்கள். இந்த மட்டும் உயிர் கொடுத்தார்களே, அவர்கள் பிள்ளை குட்டிகள் தலைமுறை தலைமுறையாக நன்றாயிருக்க வேணும்.
--------
7
தும்பைப் பூப் போல் நரைத்த தலைமயிரையுடைய கிழவர் மேற்கண்டவாறு கதையைச் சொல்லி நிறுத்தினார். ஆனால் கதை பூர்த்தியாகி விட்டதாக எனக்குத் தோன்றவில்லை.
"அப்புறம் என்ன்?"
"அப்புறம் என்ன? எல்லாருக்கும் தெரிந்த விஷயந்தானே? மறுநாள் மணியாச்சி ஜங்ஷனில் கலெக்டர் ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் சுட்டுக் கொன்று விட்டுத் தானும் சுட்டுக் கொண்டு செத்தார். நீலகண்ட பிரம்மச்சாரி முதலிய பதினாலு ஆட்கள் மீது சதியாலோசனைக் குற்றம் சாட்டி வழக்கு நடத்தினார்கள் - தண்டனையும் கொடுத்தார்கள்!"
"அவர்களில் முருகையன் மட்டும் இல்லை போலிருக்கிறது."
"இல்லை; ஏனென்றால் அவன் பெயர் போலீஸுக்கு முதலில் போன ஜாபிதாவில் இல்லை. அவன் அதிர்ஷ்டக்காரன்; பொன்னியும் அதிர்ஷ்டக்காரி."
"ஆமாம்; முருகையனும் அவன் மனைவியும் உங்களை ஏன் அப்படிப் பொங்குமாங்கடலில் தள்ளி வதைத்தார்கள்! என்ன காரணம்?" என்று கேட்டேன்.
"அந்த முட்டாள்கள் நான் துரோகி என்றும், போலீஸுக்கு எழுதியது நான் தான் என்றும் எண்ணினார்கள். அதற்காக என்னை அப்படி தண்டித்தார்கள்."
"எப்பேர்ப்பட்ட முட்டாள்கள்? அதற்குத்தான் படிப்பு அவசியம் வேண்டும் என்று சொல்கிறது."
"ஆம்; ஆம்; இதற்குத்தான் படிப்பு வேண்டும் என்கிறது. இதில் ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், படிப்பில்லாத அந்த முட்டாள்களுக்கு எப்படியோ உண்மை தெரிந்துவிட்டது."
"என்ன? அப்படியானால் தாங்கள்தான்..."
"இல்லாவிட்டால் ஏன் இத்தனை வருஷமாக இப்படி அமைதியின்றி அலைகிறேன்."
"கடிதங்கள் - வாஞ்சி ஐயரின் கையெழுத்து?"
"ஓ! கதை ஆசிரியரே! இன்னும் உமக்குப் புரியவில்லையா? நீர் என்ன கதை எழுதப் போகிறீர்? 'போர்ஜரி' கேஸில் ஏழு வருஷம் சிட்சைப் பெற்றவனாயிற்றே நான்! சிதம்பரம் பிள்ளை கையெழுத்தினையும் போர்ஜரி செய்தேன். வாஞ்சி ஐயர் கையெழுத்தையும் போர்ஜரி செய்தேன். எதற்காக என்று கேட்கிறீரா? நீர் எதற்காக கதை எழுதுகிறீர்! யாருக்கு எந்தக் கலை மேல் பிரியமோ அந்தக் கலையில் ஈடுபடுவது இயல்புதானே? அதோடு சர்க்காரிடமிருந்து ஒரு பெரிய சன்மானம் பெறலாம் என்ற ஆசையும் கொஞ்சம் இருந்தது..."
இப்படி அந்த மனிதர் சொல்லிக் கொண்டிருந்த போது, கலகலவென்று குழந்தைகள் சிரிக்கும் சத்தம் கேட்டது. செண்பகாதேவி கோயில் முடுக்கைத் தாண்டி ஐந்தாறு குழந்தைகள், ஒரு யௌவன புருஷன், ஓர் இளம் பெண், ஒரு கிழவன், கிழவி இவ்வளவு பேரும் வந்து கொண்டிருந்தார்கள்.
உடனே திரும்பிப் பார்த்தேன். எதிரேயிருந்த கிழவனைக் காணோம்; மாயமாய் மறைந்துவிட்டார். அவர் வைத்திருந்த தாடியும், சடையும் தண்ணீரில் கீழே போய்க் கொண்டிருந்தன.
வந்தவர்களில் கிழவி என்னிடம் வந்து, "ஏன், இங்கே இப்போது இன்னோர் ஆள் உட்கார்ந்திருந்தார் அல்லவா?" என்றாள்.
"இல்லையே, அம்மா! நான் மட்டுந்தான் உட்கார்ந்திருந்தேன்" என்று ஒரு கற்பனையைச் சொல்லி, "உன்பெயர் என்ன பாட்டியம்மா?" என்று கேட்டேன்.
"என் பெயர் பொன்னியம்மா!" என்றேன்.
"கிழவனாரின் பெயர்?"
"நான் சொல்லலாமா? சுப்பிரமணிய சுவாமியின் இன்னொரு பெயர்."
"முருகையனா?"
"ஆமாம்."
"குழந்தைகள் உங்கள் பேரன் பேத்திகளா?"
"ஆம் ஐயா! குழந்தைகள் நல்லாயிருக்க வேணுமென்று அம்மனை வேண்டிக்குங்க..."
"அப்படியே, தாயே!" என்றேன்.
அருவியில் அரைமணி நேரம் நின்று குளித்து விட்டுக் கீழே இறங்கத் தொடங்கினேன்.
பலாத்கார பயங்கரங்கள் எல்லாம் இல்லாமல் அஹிம்சா முறையில் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மாவை வாழ்த்திக் கொண்டே இறங்கினேன். அதனால்தானே தமிழ்நாட்டுக் குழந்தைகள் இவ்வளவு சந்தோஷமாகச் சிரித்து விளையாடிக் கொம்மாளம் அடிக்க முடிகிறது.
--------------
11. மாஸ்டர் மெதுவடை
1
அவருடைய உண்மைப் பெயர் அப்பாஸாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம்,
"மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி..."
என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது ஷுட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின் பூர்வாங்க விளம்பரங்களிலும் அதே பெயர் தான் காணப்பட்டது. ஒரு விளம்பரம் "மெதுவடை சுடப்படுகிறது!" என்று மணிபிரவாள சிலேடையில் ஆரம்பமாயிற்று. இந்த சிலேடைக்கு வியாக்யானம் தேவை என்று தோன்றுகிறது. சாதாரணமாய், இங்கிலீஷில் டாக்கி படம் பிடிப்பதைக் குறிப்பிடும்போது, 'ஷுட் ஆகிறது', 'ஷாட் எடுக்கிறார்கள்' என்று குறிப்பிடுவது உண்டு. 'ஷுட்' என்பதற்கு 'சுடு' என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறதல்லவா? அந்தத் துப்பாக்கி சுடுகையை வடைசுடுவதற்கு உபயோகப்படுத்தி மேற்படி சிலேடையைப் போட்டவர், அந்த டாக்கி கம்பெனியார் மாதம் 371/2 ரூபாய் சம்பளத்தில் அமர்த்தியிருந்த கலியுகக் காளமேகக் கவிச் சக்கரவர்த்தி, பழனி பிரஸாதராவ். (அந்தப் பழைய காளமேகன் திரேதாயுகத்தைச் சேர்ந்தவனென்பது அவர் எண்ணம்.)
மாஸ்டர் மெதுவடை நெடுங்காலமாகத் தென்னிந்திய நாடக மேடைகளில் தமது விகட சக்ராதிபத்தியத்தை நிலைநிறுத்தி வந்தவர். பச்சை சிருங்காரப் பேச்சினால்தான் அவர் அவ்வளவு பிரசித்தியடைந்தது. மேடையில் வந்து நிற்பார்; இரண்டு தடவை கண்ணைச் சிமிட்டுவார். சபையில் கிளுகிளு வென்று சிரிப்பு அலை பரவும்.
"மாடி மேல் மாடி!" என்பார். பின்னால் வரப் போவதை அறிந்து சபையோர், 'கலீர்' என்று சிரிக்கத் தொடங்குவார்கள்.
"அதன் மேலே ஒரு லேடி!" என்பார். பிறகு, சபையோரின் குதூகலத்தை யாரால் கட்டிப் பிடிக்க முடியும்? "அவளும் நானும் ஜோடி!" என்றாரோ இல்லையோ, கொட்டகைச் சொந்தக்காரன் வயிற்றில் நெருப்புத்தான். கொட்டகை இடிந்து விழும் படியான சிரிப்பும் ஆரவாரமும் ஏற்படும்.
அவருடைய ஹாஸ்யத்தில் நான் ஒரு கோடிதான் காண்பித்திருக்கிறேன். இன்னும் வாடி, மோடி, கூடி என்று மேலே மேலே போய்க் கொண்டிருப்பார். அவருடன் தொடர்ந்து போவது என்னால் முடியாத காரியமாகையால், அவருக்கு "மெதுவடை" என்று பெயர்வந்த காரணத்தைப் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். ஒரு தடவை அவர் நாடக மேடையில், முழுசு முழுசாக இருபத்தெட்டு மெதுவடைகளை வாயசைக்காமல் விழுங்கினாராம்! அப்புறம் ஆறு மாத காலம் அவர் ஒவ்வொரு நாடகத்திலும் இருபத்தேழுவடைகள் தின்னவேண்டியிருந்ததாம். அந்தக் காட்சியை நடத்திக் காட்டினாலொழிய, ஜனங்கள் கலவரம் செய்யவும், டிக்கெட் பணத்தை வாபஸ் கேட்கவும் ஆரம்பித்து விட்டார்களாம். இதிலிருந்து அவருக்கு "மாஸ்டர் மெதுவடை" என்ற பெயர் ஏற்பட்டு நிலைத்து விட்டது.
இப்பேர்ப்பட்ட ஹாஸ்ய நடிக சக்கரவர்த்தி இந்தியாவின் சார்லி சாப்ளின் - தமிழ் நாட்டு ஹாரல்ட்லாயிட் தமிழ் டாக்கி முதலாளிகளின் வலையில் விழாமல் வெகு காலம் தப்ப முடியுமா? ஒரு நாள் தலை குப்புற விழுந்தார்; விழுந்ததோடில்லாமல் கழுத்தையும் முறித்துக் கொள்ளும்படியான நிலைமை ஏற்பட்டது.
------------
2
சென்னைப் பட்டணத்திலுள்ள ஜாலிவுட் ஸ்டூடியோவைப் பற்றித் தெரியாதவர்கள் டாக்கி உலகத்தில் யாரும் இருக்க முடியாது. அந்த ஜாலிவுட் ஸ்டூடியோவில் பிடிக்கும் படங்களுக்கு ஹாலிவுட் டிம்பன் என்பவர் பிரபல டைரக்டராக இருந்தார். ஹாலிவுட்டைப் பற்றியும் அங்குள்ள நடிகர்கள் டைரக்டர்கள் பற்றியும் மிஸ்டர் டிம்பன் அநேக அபூர்வமான விவரங்களைச் சொல்வார். இந்த விவரங்கள் எல்லாம் மேற்படி நடிகர்களுக்கும் டைரக்டர்களுக்குமே தெரியாதன வென்றால், அவை எவ்வளவு அபூர்வமாயிருக்க வேண்டுமென்று நான் சொல்ல வேண்டியதில்லை.
மிஸ்டர் டிம்பனுக்குத் தமிழ் டாக்கி உலகத்தில் ரொம்பவும் பிரசித்தி ஏற்பட்டிருந்தது. அவருக்குத் தமிழ் தெரியாது; சங்கீதம் தெரியாது; கண்பார்வை கொஞ்சம் கம்மி; காது சிறிது மந்தம் - ஆகவே, தமிழ் டாக்கி டைரக்டராவதற்கு வேண்டிய எல்லா அம்சங்களும் அவரிடம் பொருந்தியிருந்தன வென்று சொல்ல வேண்டாமல்லவா? அப்பேர்ப்பட்டவரின் மேற்பார்வையில் இப்போது ஜாலிவுட் ஸ்டூடியோவில் இரண்டு படங்கள் 'ஷுட்' செய்யப்பட்டு வந்தன. அவற்றில் ஒன்று சமூகப் படம். இன்னொன்று புராணப் படம்.
இந்த இரண்டு படங்களிலும் நடிக்கும் பாக்கியம் வாய்ந்த ஒரு 'நட்சத்திரம்' அங்கே பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் பெயர் மிஸ் டி.கே.ஹம்ஸா. புராணக் கதையில் ஹம்ஸாவுக்கு அருந்ததி வேஷம்; சமூகக் கதையில் தாஸி வேஷம்.
தாஸி வேஷத்தில் மிஸ் ஹம்ஸா நடிக்கும் அதே காட்சியில் அப்பாஸாமியும் நடித்தான். சந்தர்ப்பம் என்ன வென்பதை நேயர்கள் ஊகித்து அறிந்திருக்கலாம். வேறென்ன தான் இருக்கப் போகிறது? ஹம்ஸாவின் வீட்டுக்கு வழக்கமாக வருகிற கிழ ஜமீந்தார் ஒருவன் இருக்கிறான். அவளுக்குக் கள்ளக் காதலன் ஒருவனும் இருக்கிறான். ஒரு சமயம் இரண்டு பேரும் சேர்ந்தார்ப்போல் வந்து விடுகிறார்கள். கள்ளக் காதலனை ஒளித்து வைக்க ஹம்ஸா முயல்கிறாள். முடியவில்லை. இருவரும் சந்திக்கிறார்கள்; குஸ்தி போடுகிறார்கள். இவன் ஒரு தடவையும் அவன் ஒரு தடவையுமாக ஹம்ஸாவின் மேல் விழுகிறார்கள்...
திரும்பித் திரும்பி இந்த ஆபாஸந்தானா என்று நீங்கள் நினைக்கக் கூடாது. இதெல்லாம் ஜனங்களுக்கு நீதி கற்பிக்கத்தானே யன்றி வேறில்லை. "தாஸிகளை நம்பக் கூடாது" என்பது நீதி.
இந்த நீதியை ஜனங்களுடைய மனத்தில் நன்கு பதியச் செய்வதற்காக நடிகர்கள் மூவர், டைரக்டர் ஒருவர், போட்டோ பிடிப்பவர் ஒருவர், சில்லறைச் சிப்பந்திகள் ஐந்து பேர், பட முதலாளிகள் மூன்று பேர், அவர்களுடைய சிநேகிதர்கள் பதினைந்து பேர் - ஆக இவ்வளவு பேரும் வெகு பாடுபட்டார்கள். பாமரஜனங்களிடமிருந்து பணம் வருவதற்கு இந்தக் காட்சியைத்தான் நம்பியிருந்தார்களாதலால் அவ்வளவு விசேஷ கவனம் செலுத்தப்பட்டது. இதே காட்சி ஐந்தாறு நாள் திருப்பித் திருப்பி எடுக்கப்பட்டது.
இப்படி இந்த 'ஷுட்டிங்' வளர்த்தப்படுவதை விரும்பாத பிராணி ஒருவன் இருந்தான். அவன் தான் அந்தக் காட்சியில் கிழ ஜமீந்தாராக நடித்தவன். அவனுக்கு அதில் அவ்வளவு வெறுப்பு ஏற்படக் காரணமாக இருந்தவன் அப்பாஸாமி தான். அந்த ஹாஸ்ய நடிகனுக்கு அவனுடைய வாழ்நாளில் இதுவரையில் கனவிலும் அறியாத அனுபவம் ஏற்பட்டிருந்தது. அவன் உண்மையிலேயே ஹம்ஸாவுக்குத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டான். சென்ற ஒரு மாதமாக அவன் மாறி மாறி சொர்க்கத்திலும் நரகத்திலுமாக வாழ்ந்து வந்தான். ஹம்ஸா தன்னைப் பார்த்துப் புன்னகை புரியும் போதெல்லாம் அவன் ஏழாவது சொர்க்கத்துக்கே போய் விடுவான்; அவள் வேறு யாரையாவது பார்த்துப் புன்னகை புரியும் போது கொதிக்கும் எண்ணெயில் போட்டது போல் துடிதுடித்தான். கடைசி காதல் காட்சியின் 'ஷுட்டிங்' நடக்கும் போது முதலில் அவனுக்கு இன்பக் கடலில் மிதப்பது போலிருந்தது; பிறகு வரவரச் சுற்றி நின்று பார்ப்பவர்கள் மேல் கோபம் கோபமாய் வந்தது. "இந்தச் சனியன்கள் எல்லாம் ஏன் இங்கே சுற்றி நிற்கின்றன?" என்று எண்ணிக் கொதித்தான். தன்னுடைய கோபத்தை யெல்லாம் பாவம், அந்தக் கிழஜமீந்தார் வேஷம் போட்டவன் மேல் காட்டினான். அவன் மேல் விழுந்த அடி உதைகளெல்லாம் வெறும் போலியாயிராமல் நிஜமான அடி உதைகளாகவே விழுந்தன; இந்தக் காட்சி வளர்த்தப்படுவதை அவன் விரும்பாததில் ஆச்சரியமில்லை யல்லவா?
"இன்றோடு முடியா விட்டால், நாளை தினம் நான் நிச்சயமாய் வரமாட்டேன்; ஓடியே போய்விடுவேன்" என்று அந்த ஜமீந்தார் வேஷக்காரன் அன்று காலையே டைரக்டரிடம் சொல்லியிருந்தான். 'ஷுட்டிங்' முடிந்ததும், "தீர்ந்ததா, இல்லையா?" என்று கேட்டான். "டன்" என்றார் டைரக்டர் டிம்பன். ஜமீந்தார் வேஷக்காரன் அப்பாஸாமியைப் பார்த்து "ஒருநாள் உன் முதுகுத் தோலை உரிக்கிறேனா, இல்லையா, பார்" என்று சொல்லி விட்டு விரைவாக நகர்ந்தான். அப்பாஸாமி "தூ" என்று காரித்துப்பினான்.
----------
3
மாஸ்டர் மெதுவடை சொப்பன லோகத்திலிருந்து பூமியில் இறங்கினான். "டன்!" எல்லாம் முடிந்தது. மிஸ் ஹம்ஸா நாளை முதல் அருந்ததியாகி விடுகிறாள்; அவளருகில் இனிமேல் நெருங்க முடியாது. 'ஸ்டூடியோ'வுக்குள் இது விஷயமாக வெகு கண்டிப்பான சட்டம் இருந்தது! காட்சிகள் நடிக்கப் படுகையில் தவிர மற்ற வேளைகளில் ஸ்திரீபுருஷர்கள் நெருங்கிப் பேசக்கூடாது. இத்தகைய சட்டம் இருந்தால் தான், அந்தந்த நட்சத்திரங்களுக்குரிய முதலாளி செட்டியார்கள், அவர்கள் டாக்கியில் நடிப்பதற்குச் சம்மதிப்பார்கள்.
ஒரு மாதத்திற்கு முன்னால் 'ஸ்டூடியோ'வில் ஒரு சம்பவம் நடந்தது. ராமனும் சூர்ப்பனகையும் காமராவுக்கு முன் ஒரு தினுசாகக் காதல் ஸீனை நடித்த பிறகு, தூண்மறைவில் அதை மாற்றி நடித்து 'பிராக்டீஸ்' செய்து கொண்டார்கள். அதாவது, ராமபிரான் சூர்ப்பனகை மேல் காதல் செய்யத் தொடங்கவே அவள் "சீ! போ!" என்று புறக்கணித்தாள். இந்தத் தூண் மறைவுக் காட்சியை வேறு சிலர் பார்த்து விடவே, அவர்கள் இரண்டு பேருக்கும் தலைக்கு ஐம்பது ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் போர்டிலும் போட்டு விட்டார்கள்.
அப்பாசாமிக்கு இது தெரிந்ததுதான். ஸ்டூடியோவுக்கு வெளியில் ஹம்ஸாவைச் சந்திக்கலா மென்றாலோ, அதற்கும் ஒரு இடையூறு இருந்தது. மிஸ் ஹம்ஸா மற்ற நடிகைகளைப் போல், ஸ்டூடியோவிலேயே ஏற்படுத்தப் பட்டிருக்கும் ஜாகையில் வசிப்பவள் அல்ல; தினம் வேலை முடிந்ததும் அவள் தன் வீட்டுக்குப் போய்விடுவாள். அவளுடைய புருஷனைப் பற்றிச் சிலர் ஒரு விதமாய்ச் சொன்னார்கள். ஆனால் எல்லாரும் 'புருஷன்' ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொண்டார்கள். அவன் எப்படிப்பட்டவனோ, என்னமோ?
மேலும் அவளை அப்படிப் பின் தொடர்வதற்கும் அவள் சம்மதிக்க வேண்டாமா? அவளுடைய மனோபாவத்தையோ சிறிதும் கண்டறிய முடியவில்லை. சில சமயம் அப்பாசாமியுடன் காதல் காட்சியில் நடிக்கும் பொழுது 'இது நடிப்பன்று, உண்மைக்காதல்' என்றே தோன்றும். அவள் ஒரு மோகனச் சிரிப்பு சிரித்துக் கொண்டு இவனுடைய கன்னங்களைப் பரிகாசமாகக் கிள்ளும் போது 'ஒரு நாளும் இது பொய்க் காதலாக - வேஷக்காதலாக - இருக்க முடியாது' என்று நமது விதூஷக சக்ரவர்த்தி நினைத்ததுண்டு. ஆனால் அந்தக் கிழ ஜமீந்தாருடன் அவள் காதல் செய்யும் போதும் அவ்வளவு உண்மையாகத் தானே தோன்றுகிறது!
அப்பாசாமி 'ஷுட்டிங்' நடந்த இடத்திலிருந்து, வேஷத்தைக் கலைக்கும் இடத்துக்கு மிக்க மனச் சோர்வுடன் போய்க் கொண்டிருந்தான். வழியில் ராமர், லக்ஷ்மணர், விசுவாமித்திரர், ஜனகர், சீதை முதலியவர்களை அவன் பார்த்தான். இராமர் சிகரெட் புகை விட்டுக் கொண்டிருந்தார்; சீதை பீங்கான் கிண்ணத்தில் டீ குடித்துக் கொண்டிருந்தாள்; லக்ஷ்மணன் ஒரு பெரிய கொட்டாவி விட்டு தன்னை மீறி வந்த தூக்கத்தைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு சிமிட்டா பொடி உறிஞ்சினான். விசுவாமித்திரர் காதிலே பூணூலை மாட்டிக் கொண்டு அவசரமாய் எங்கேயோ போனார். இதையெல்லாம் பார்த்த அப்பாசாமிக்கு "இந்த வேஷமெல்லாம் எப்படிப் பொய்யோ, அதுபோல் உலக வாழ்க்கையே பொய்" என்ற எண்ணம் உதித்தது. இந்த உயிர் வாழ்விலே தான் என்ன ரஸம் இருக்கிறது? எதற்காக இந்த ஜீவனை வைத்துக் கொண்டு வாழவேண்டும்?...
---------
4
சாயங்காலம் ஆறரை மணிக்கு ஜார்ஜ் டவுன் துங்கப்ப நாய்க்கன் வீதியில் அப்பாசாமி போய்க் கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு துணியிலே சுற்றப்பெற்ற ஒரு சிறு மூட்டை இருந்தது. அதற்குள் ஒரு டார்ச் லைட்டும், சுமார் பத்து அடி நீளம் மணிக்கயிறும் இருந்தனவென்பதை உங்களுக்கு நான் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது - மேலே கதையில் சுவாரஸ்யம் உண்டு பண்ணும் பொருட்டு.
மேற்படி துங்கப்ப நாய்க்கன் வீதியிலிருந்து கேவல்தாஸ் சந்து பிரியும் இடத்தில் 'ஐரீஸ் மாளிகை' என்று ஒரு பிரம்மாண்டமான கட்டடம் கட்டப் பெற்று வந்தது. இரண்டு மச்சு ஏற்கெனவே கட்டியாகிவிட்டது. இன்னும் நாலைந்து மச்சுக்களாவது கட்டுவார்களென்று அங்கே வானுறவோங்கி நின்ற விட்டங்கள், சாரங்களிலிருந்து தெரிய வந்தது.
இந்தக் கட்டடத்திற்குள், அப்புறம் இப்புறம் தன்னை ஒருவரும் கவனிக்கவில்லையா என்று பார்த்துக் கொண்டு அப்பாசாமி சரேலென்று நுழைந்தான். சில அடி தூரம் சென்றதும், நல்ல இருள் சூழ்ந்திருந்தது. காலால் தடவித் தடவி நடந்து நாலைந்து வாசற்படியைத் தாண்டி வெகு தூரம் உள்ளே சென்ற பிறகு மூட்டையை அவிழ்த்து உள்ளேயிருந்த டார்ச்லைட்டை எடுத்துப் பொத்தானை அமுக்கினான். வெளிச்சம் எதிரே பளிச்சென்று அடித்தது. அந்த வெளிச்சத்தில், அவன் என்ன பார்த்தான் என்று நினைக்கிறீர்கள்? பயங்கரம்! பயங்கரம்!! கயிற்றிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு மனித தேகம் தெரிந்தது.
எந்தக் கணத்தில் வெளிச்சம் அந்தத் தேகத்தின் மேல்பட்டதோ, அதே கணத்தில் அதன் தொண்டையிலிருந்து ஒரு உறுமல் சத்தம் வந்தது. இத்தகைய நிலைமையில் நீங்களும் நானுமாயிருந்தால், விழுந்தடித்து ஓடி, இருட்டில் எங்கேயாவது முட்டிக்கொண்டு திண்டாடுவோம்.
ஆனால் அப்பாசாமி சாமான்ய மனிதன் அல்ல; நாடக மேடையில் இது மாதிரி சந்தர்ப்பங்களை எத்தனைமுறை பார்த்திருப்பவன்! அவன் ஒரு நொடியில் சட்டைப்பையிலிருந்த கத்தியை எடுத்துத் திறந்து கொண்டு அந்த மனிதன் உபயோகித்த அதே ஏணியில் ஏறி சட்டென்று கயிற்றை அறுத்து எறிந்தான்.
கீழே விழுந்த தேகம் சிறிது நேரம் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தது. டார்ச் லைட்டை முகத்துக்கு நேரே பிடித்துப் பதை பதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் நமது ஹாஸ்ய நடிகன்! மெதுவாக மூச்சு வரத் தொடங்கியது. பிதுங்கிய விழிகள் உள் அமுங்கின. இன்னும் சில நிமிஷத்துக்கெல்லாம் அந்தத் தேகம் எழுந்து உட்கார்ந்து கம்மிய குரலுடன் "மாச்சுப் பெட்டி இருக்கிறதா?" என்று கேட்டது.
"மாச்சுப் பெட்டி எதற்கு? டார்ச்லைட் இருக்கிறதே?"
"டார்ச் லைட் என்ன பிரயோசனம் பீடி பத்தவைப்பதற்கு?"
அப்பாசாமிக்கு வெகு கோபம் வந்தது, "அடே முட்டாள், இத்தனை பெரிய காரியம் செய்து விட்டு, சாவதானமாய் பீடி பத்த வைக்க வேண்டுமென்கிறாயே, என்ன துணிச்சல் உனக்கு" என்றான்.
"அதற்காக என்ன பண்ணவேண்டுமென்கிறாய்?"
"என்ன பண்ணுகிறதா! என் காலிலே விழுந்து கெஞ்சு, மன்னிப்புக் கேட்டுக் கொள். இல்லாவிடில் போலீஸ்காரனிடம் ஒப்புவித்து விடுவேன்."
"அப்படியா? உன் சமாசாரம் என்ன? நீ எதற்காக இங்கே வந்தாய்? கையிலே வைத்திருக்கும் கயிறு எதற்காகவோ?"
அப்பாசாமிக்குச் சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டு "இதோ பார். நாம் இருவரும் ஒரே இடத்திற்கு, ஒரே காரியத்திற்காக வந்தது நல்லதுதான். நீ, எதற்காக இந்தக் காரியம் செய்யத் துணிந்தாய் என்று சொல்லு. அது சரியான காரியமாக இருந்தால், இந்தப் புதுக் கயிற்றை உனக்கே கொடுத்து விடுகிறேன். நான் வேறு கயிறு வாங்கிக் கொள்கிறேன்" என்றான்.
"அதெல்லாம் முடியாது"
"என்ன முடியாது?"
"இன்னொரு தடவை நான் தூக்குப் போட்டுக் கொள்வது முடியாத காரியம். நீ போட்டு விட்டுப் போவதாயிருந்தால் சொல்கிறேன்."
"அந்தப் பாவத்தையும் நான் சுமக்க வேண்டுமா? சரி சொல்லித் தொலை!"
------------
5
கயிற்றில் தொங்கிய மனிதன் சொல்லுகிறான்:-
"ஐந்து வருஷத்துக்கு முன்னால் வரையில் நான் சந்தோஷமாயிருந்தேன். வன்னியத் தேனாம்பேட்டையில் எனக்குச் சொந்த வீடு இருக்கிறது. மௌண்ட் ரோடில் பழக்கடை வைத்திருந்தேன். மாதம் 30, 40 ரூபாய் வரும். வீட்டில் ஒரு பாதியை வாடகைக்கு விட்டிருந்ததிலும் பத்து ரூபாய் வந்தது. கவலை, கஷ்டம் இன்னதென்றே தெரியாமல் குஷியாக இருந்தேன்."
"ஒரு நாள் இரவு நான் கடையை மூடிக்கொண்டு வீடு நோக்கிப் போன போது, எங்கள் வீதி மூலையில் ஓர் இளம் பெண் நின்று அழுது கொண்டிருந்தாள். அவளிடம் நெருங்கி, 'ஏனம்மா அழுகிறாய்?' என்று கேட்டேன். அவள், தானும் இன்னும் நாலைந்து ஸ்திரீகளும் ஒரு தனி வீட்டில் குடியிருந்ததாகவும் போலீஸ்காரர்கள் எல்லோரையும் அன்று விரட்டி விட்டதாகவும், அந்த ஸ்திரீகளைத் தனக்குப் பிடிக்காதபடியால் அவர்களோடு போகாமல் பின் தங்கியதாகவும் சொன்னாள். பத்திரிகையில் இது சம்பந்தமான சில விவரங்களை நான் படித்திருந்தேன். புதிய போலீஸ் சட்டம் அமுலுக்கு வந்திருப்பதாயும், அதன்படி சென்னைப் பட்டணத்தில் துன்மார்க்கத்தைத் தொழிலாகக் கொண்ட ஸ்திரீகள் எல்லோரும் அந்தந்த விடுதிகளிலிருந்து விரட்டி விடப்படுவதாகவும் பத்திரிகையில் போட்டிருந்தார்கள். இந்தச் சட்டத்தினால் எத்தனையோ பெண்கள் அநாதைகளாகத் தெருவில் நிற்க நேரிடுமென்றும், அவர்களை ஆதரிக்கப் பண உதவி செய்ய வேண்டுமென்றும், சில புண்யவதிகளும், புண்யவான்களும் பத்திரிகையில் விண்ணப்பம் செய்திருந்ததையும் படித்திருந்தேன். இதனாலெல்லாம் ஏற்கனவே கலக்க முற்றிருந்த எனக்குத் திக்கற்றுத் தெருவில் நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்ததும் 'இவளை ஏன் நாம் ஆதரிக்கக்கூடாது?' என்று தோன்றிற்று. அதன் பலன் தான் இப்போது என்னை இந்தக் காரியம் செய்யத் தூண்டிற்று..."
"சரி, வீட்டுக்கு அழைத்துப் போனாய்; அப்புறம் என்ன நடந்தது."
"அப்புறம் என்ன? இரண்டு நாளைக்குள் வீட்டில் குடியிருந்தவர்கள் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள். பிறகு யாரும் குடி வரவேயில்லை. பழக்கடையும் நஷ்டமாகி வந்தது. தினம் ஒரு ரூபாய் பழம் - ஆரஞ்சும் ஆப்பிளும் அவளே தின்று விடுவாள்! வியாபாரத்தில் லாபம் எப்படி வரும்? இருந்த போதிலும் ஒரு மாதிரி சந்தோஷமாய்த் தானே இரண்டு மூன்று வருஷம் வாழ்க்கை நடத்தி வந்தோம். அவள் டாக்கியில் சேரும் வரையில்..."
"என்ன, டாக்கியில் சேர்ந்தாளா?"
"ஆமாம், டாக்கியில் சேர்ந்த பிறகு..."
"பெயர் என்ன? அவள் பெயர் என்ன?"
"குப்பம்மாள்..."
"நல்ல வேளை. மேலே சொல்லு."
"டாக்கியில் அவள் சேர்ந்த பிறகு என்னுடைய வாழ்க்கை நரகமாயிற்று. அவளை தினம் நான் ஸ்டூடியோவுக்குக் கொண்டு போய் விடவேண்டும்; திருப்பி சாயங்காலம் அழைத்து வரவேண்டும். வீட்டில் சமையல் செய்து தயாராய் வைத்திருக்க வேண்டும். வெந்நீர் போட்டுக் கூட வைக்க வேண்டும். இதெல்லாமாவது போகட்டும். டாக்கி நடிப்புக்கு வீட்டில் ஒத்திகை பார்க்கத் தொடங்கி விடுவாள். நான் கோபித்துக் கொண்டால் இடி, இடியென்று சிரிப்பாள். இதெல்லாமிருக்கட்டும். நேற்றைக்கு என்ன செய்தாள் தெரியுமா? ஸ்டூடியோவில் ஒரு காட்சியில் தேள்கள் வரவேண்டியிருந்ததாம். இவள் அந்தத் தேள்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு வந்து என் படுக்கையில் வேண்டு மென்றுவிட்டு விட்டாள். நான் உளறி அடித்துக் கொண்டு எழுந்தோடியதைப் பார்த்துச் சிரிக்கிறாள்..."
"அடி பாவி!" என்றான் அப்பா சாமி. அவனுக்கு அந்த மனிதன் மேல் உண்மையாகவே இரக்கம் உண்டாயிற்று. "நீ உயிரை விடத் துணிந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் எங்கேயாவது ஓடிப் போய் விடுவதுதானே, பினாங்கு, சிங்கப்பூரைப் பார்க்க?" என்றான்.
"பணமிருந்தால் அப்படிச் செய்யலாம். என் கையில் தம்படி இல்லை. அவள் சம்பாதிப்பதையெல்லாம் தன் பேரிலேயே பாங்கியில் போட்டிருக்கிறாள். பணமில்லாமல் எப்படிக் கப்பல் ஏறுவது? நீ வாக்குக் கொடுத்தபடி என்னை மாட்டுவிட்டுத் தான் போக வேண்டும். இருக்கட்டும்; ஆனால் நீ எதற்காக வந்தாய்? என் மாதிரி காரணந்தானோ?"
"இல்லவே, இல்லை!" என்று அப்பாசாமி அழுத்தமாய்ச் சொன்னான். "அதற்கு நேர் விரோதமான காரணம். ஒரு பெண்ணின் மீது நான் காதல் கொண்டேன். அவளைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. அவள் இணங்கமாட்டாள் என்றுதான் உயிர் மேல் வெறுப்பு வந்தது."
"அந்தப் பெண் யாரோ?"
"அவளும் ஒரு டாக்கி ஸ்டார்தான், ஆனால்..."
"அவள் பெயர் என்னவோ?"
"நாம் தான் இருவரும் சாகப் போகிறோமே? சொன்னால் மோசம் என்ன? அவள் பெயர் மிஸ் ஹம்ஸா"
உட்கார்ந்திருந்த மனிதன் எழுந்து ஒரு குதி குதித்தான். "பேஷ்! பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அவள்தான் நம்பபேர்வழி" என்றான்.
"என்ன உளறுகிறாய்?"
"உளறல் இல்லை; அவளே அவள்தான்."
"வேறு பெயரல்லவா சொன்னாய்?"
"ஆமாம், குப்பம்மாள் என்று சொன்னேன். அந்தப் பெயர் டாக்கிக்கு சுகப்படாது என்று மிஸ் ஹம்ஸா என்று வைத்துக் கொண்டாள்."
"என்ன" என்று சத்தம் போட்டுக் கொண்டு அப்பாஸாமி எழுந்திருந்தான். டார்ச் லைட்டையும் கயிற்றையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
மற்றவன் "ஆமாம்; ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. அவளுடன் வாழ முடியாமல் நான் தூக்குப் போட்டுக் கொள்ள வந்தேன். அவள் கிட்டவில்லையே என்று நீ சாக நினைத்தாய். இரண்டு பேரும் சாக வேண்டாம். எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விடு. நாளையே நான் கப்பலேறிக் கண் காணாத சீமைக்குப் போய் விடுகிறேன்."
"எவ்வளவு? ஆயிரம் ரூபாயா?"
"ஆமாம்; ஆயிரம் ரூபாய்தான். பிரமாதமில்லை. இருக்கட்டும், உன் பெயர் என்ன? ஒரு வேளை மாஸ்டர் மெதுவடை என்பது நீதானோ?"
"ஆமாம், நான் தான். உனக்கு எப்படித் தெரிந்தது?"
"அடாடா! நான் என்னத்தைச் சொல்ல? உன் பேரில் அவளுக்கு இருக்கும் அபிமானத்துக்கு அளவில்லை. இதோ பார்! (கன்னத்தைக் காட்டி) கிள்ளுக் காயம் தெரிகிறதா? நேற்று அவள் கிள்ளியதுதான். நான் அழுதேன். அப்போது அவள் 'சீ! இந்த ஒரு கிள்ளுக்கு அழுகிறாயே? மெதுவடையை மொத்தம் 27 தடவை கிள்ளியிருக்கிறேன். இன்னும் அவருக்கு அலுக்கவில்லை. உனக்குப் பதில் அவர் இந்த வீட்டில் இருந்தால் எவ்வளவு சௌகரியமாயிருக்கும்?' என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். ஐயையோ! அட பாவி! துரோகி! எங்கே ஓடுகிறாய்? ஐயோ கயிற்றைக் கூடக் கொடுக்காமல் போகிறாயே? என் கயிற்றையும் அறுத்து விட்டாயே! என்ன செய்வேன்! ஏ, மெதுவடை! நில்லு! நில்லு!..."
இதற்குள் ஒரே ஓட்டமாய் ஓடி வெளி வாசற்படி வரையில் சென்று விட்ட மாஸ்டர் மெதுவடை அங்கே நின்று திரும்பிப் பார்த்து, "அதெல்லாம் பலிக்காது அப்பனே! நேரே வீட்டுக்குப் போய்ச் சேர். இதோ போலீஸ் ஸ்டேஷனில் உன்னைப்பற்றி எழுதி வைக்கப் போகிறேன். நீ பாட்டுக்குச் செத்துப் போய் விட்டால், அப்புறம் என் கதி என்ன ஆவது? மெதுவாக அவளை என் கழுத்தில் கட்டிவிடலாமென்று பார்க்கிறாயோ?" என்று சொல்லிவிட்டு இரண்டே தாண்டலில் வீதியை அடைந்து ஓடினான்.
கதை முடிந்தது. இந்தக் கதையை படமெடுத்து விடலாமென்று நினைக்கும் டாக்கி முதலாளிகளுக்கு மட்டும் ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறேன். என்னுடைய அனுமதியில்லாமல் இதைப் படம் பிடிப்பவர்கள் கட்டாயம் கஷ்டத்திற்குள்ளாவார்கள். அவர்களில் யாராவது "மாஸ்டர் மெதுவடை" என்ற சமூகப் படம் பிடிக்கத் தொடங்குவார்களானால், அவர்கள் அதை முடிப்பதற்குள் "மிஸ்டர் ஆமைவடை" என்ற படம் வெளிவந்து விடுவது நிச்சயம்.
ஆனந்த விகடன் 3-5-36
---------------
12. புஷ்பப் பல்லக்கு
புஷ்பப் பல்லக்கு வீராசாமி நாயுடு ஒரு பெரிய ஒப்பாரி வைத்தான். "காலங்கெட்டுப் போச்சுங்க. இந்தப் பாழும் மோட்டார் வண்டி வந்தாலும் வந்தது; எங்கள் பிழைப்பில் மண் விழுந்து விட்டது" என்றான்.
சமீபத்தில் கிராமத்துக்குப் போயிருந்தேன். வாய்க்கால்களில் புதுஜலம் ஆனந்தமாக ஓடிக் கொண்டிருந்தது. விதை தெளிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்கே பார்த்தாலும் பிரகிருதி தேவி நித்யோத்ஸவம் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். ஆனால் வாழ்க்கை மட்டும் ஒரே மயான காண்டமாயிருக்கிறது. "சோக ரஸத்தைத் தேடி இந்நாளில் நாடகங்களுக்குப் போவது எவ்வளவு அறிவீனம்; அசல் சரக்கு கிராமங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் இலவசமாய்க் கிடைக்கிறதே" என்று எண்ணினேன்.
அக்காலத்தில் - இருபது வருஷங்களுக்கு முன்னால் - வீராசாமி நாயுடு நல்ல நிலைமையில் இருந்தான். கோயில் திருவிழாக்களிலும், கல்யாண ஊர்வலங்களிலும், அப்போதெல்லாம் புஷ்பப் பல்லக்குக்கு அதிக கிராக்கியிருந்தது. தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய, சுமார் முப்பது ஊர்வலங்களுக்காவது புஷ்பப் பல்லக்குக் கட்டுவான். ரூபாய் முந்நூறுக்குக் குறையாமல் சம்பாதித்து விடுவான்.
அந்த நாள் போய் விட்டது. இப்போது இரண்டு வருஷமாக ஒரு கிராக்கி கூட அவனுக்குக் கிடைக்கவில்லை.
"போன வருஷத்தில் ஒரு கிராக்கி வந்தது. அச்சாரங்கூட வாங்கி விட்டேன். ஆனால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்டது" என்றான்.
"ஓகோ! அதென்ன விஷயம்?" என்று கேட்டேன்.
நாயுடு விவரமாகச் சொன்னான். அவன் சொன்னதிலிருந்தும் இன்னும் கிராம முனிசீப் கிண்டாமணி முதலியாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதிலிருந்தும் வெளியான விவரங்களைக் கீழே தருகிறேன். அவ்விவரங்களில் சிலவற்றை நேயர்கள் அநுசிதம் என்று கருதக் கூடும். ஆகவே கொஞ்ச நேரத்துக்கு நேயர்கள் எல்லாரும் அன்னப் பக்ஷிகளாக மாறக் கடவீர்களாக. நீரையும் பாலையும் கலந்து வைத்தால் எப்படி அன்னப் பக்ஷியானது நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்துமோ, அதுபோல நீங்களும் உசிதமான பகுதிகளை விட்டு விட்டு, அநுசித விசயங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வீர்களாக.
கோவிந்தகுடி கிராமத்து 'முஸாபரி' பங்களா எழவுபட்ட பாடுபட்டது. கர்ணங்களும், கிராம முனிசீப்புகளும், வெட்டி தலையாரிகளும் தரையில் கால் பாவாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். வாசலில் பந்தல் போட்டுத் தோரணங் கட்டிக் கொண்டிருந்தனர் சிலர். உள்ளே துடைப்பம் தேயும்படி தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தனர் சிலர். உக்கிராண அறையில் ஒருவர் கறிகாய், உப்பு, புளி சாமான்களையெல்லாம் எடுத்து ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார். அவர்தான் கிராம முனிசீப் கிண்டாமணி முதலியார். பால்ய வயது கறிகாய்களில் இருந்த ஒரு சின்ன முட்டைக்கோஸானது அவருடைய இருதயத்தைக் கொள்ளை கொண்டிருந்ததாகத் தெரிய வந்தது. அதை அவர் அப்படியும் இப்படியும் திருப்பித் திருப்பிப் பார்த்தார். முகர்ந்து பார்த்தார். வாயைச் சப்புக் கொட்டினார். அப்புறம் பெருமூச்சு விட்டார்.
"இனியே தெமக்குன் அருள்வரு
மோவெனக் கருதி
ஏங்குதே நெஞ்சமையோ!"
என்று வாய்க்குள்ளே பாடத் தொடங்கினார். இதற்குள் கணக்கப்பிள்ளை காளமேக ராவ் கையில் செம்புடன் அங்கு வந்து சேர்ந்தார்.
"ஓ மணியக்காரரே! நானும் நீரும் இந்த உத்தியோகம் பார்க்கிறதை விட க்ஷவரம் பண்ணலாம்!" என்றார்.
"க்ஷவரம் பண்ணுகிறதென்றால் இலேசு என்று நினைக்கிறீர் போலிருக்கிறது. ராயரே! சென்னைப் பட்டணத்தில் ஒரு ஸலூன் இருக்கிறதாம். அதிலே ஒரு க்ஷவரத்துக்கு மூன்று ரூபாயாம்!" என்றார் முனிசீப். பிறகு, "சரிதான், போன காரியம் என்ன?" என்று கேட்டார். "ஊரெல்லாம் சுற்றி ஒன்றரைச் சேர் பால் தான் அகப்பட்டது?" என்றார் கர்ணம்.
இவ்வளவு தடபுடல்களுக்கும் காரணம் என்னவென்று கேட்டால், தாசில்தார் பிரம்மஸ்ரீ லஞ்சநாத சாஸ்திரி அன்று தமது தர்மபத்தினி சமேதராக அங்கு எழுந்தருள்வாரென்று செய்தி வந்திருந்ததுதான்.
வழக்கத்தைவிட அதிக ஜரூராக இந்தத் தடவை தாசில்தார் விஜயத்துக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஏனென்றால், சென்ற வருஷத்து ஜமாபந்தியின் போது நேர்ந்த ஒரு முக்கிய சம்பவம் கிராம உத்தியோகஸ்தர்களின் மனத்தையெல்லாம் கலக்கியிருந்ததுதான். அப்போதிருந்த தாசில்தார் திருவாளர் பெத்த பேராசைப் பிள்ளை என்பவர் தம் கையினால் சில்லறை வாங்குவதில்லையென்ற தீவிர விரதம் கொண்டவர். வாங்கினால் நோட்டுக்களாகத் தான் வாங்குவார். ஜமாபந்தியின் போது அவர் கிராம உத்தியோகஸ்தர்களைப் பட்ச பாதமில்லாமல் நடத்தினார். தலைக்குப் பத்து ரூபாய் தட்சிணை வைக்க வேண்டுமென்றார். ஒரு கணக்குப்பிள்ளைக்குப் போதாத காலம் இருந்தது. பத்திரிகைகள் படித்து வந்ததன் பலன் அது. தாசில்தாருடைய குணாதிசயங்களை ஓர் அழகான ஹாஸ்யக் கட்டுரை போல எழுதினார். இவ்வளவு ரசமான கட்டுரை எழுதி விட்டுத் தம்முடைய பெயரை மறைக்கவோ, புனை பெயர் வைத்துக் கொள்ளவோ அவருக்கு விருப்பமில்லை.
அந்த வருஷம் பெரிய கலெக்டர் ஜமாபந்தி. பெரிய கலெக்டர் பல்டன் துரை 'நெறி தவறாத நேர்மையாளர்' 'இந்திய ஜனங்களிடம் மிக்க அபிமானமுள்ளவர்' என்றெல்லாம் பெயர் பெற்றவர். இதை நம்பி மேற்படி கர்ணம் தாம் எழுதிய ஹாஸ்யக் கட்டுரையை ஜமாபந்தியின் போது கலெக்டர் முன்பு சமர்ப்பித்தார். அவ்வளவுதான்! கொஞ்ச நாளைக்கு அந்தத் தாலுக்கா எமலோகம் படும்பாடு பட்டது. விசாரணையில் கணக்குப் பிள்ளையின் புகாரை ஆதரித்துச் சாட்சி சொல்ல ஒரு கிராம உத்தியோகஸ்தர் கூட முன் வரவில்லை. கர்ணத்திற்குக் கர்ணம் வேலை போயிற்று. ஸ்ரீமான் பெத்த பேராசைப் பிள்ளைக்கும் தாசில் உத்தியோகம் போயிற்று. (ஆனால் 'ஆக்டிங் டிபுடி கலெக்டர்' உத்தியோகம் கிடைத்தது.)
மேற்படி சம்பவம் சமீபத்திலேதான் நடந்திருந்ததாகையால் திருவாளர் பெத்த பேராசைப் பிள்ளையின் ஸ்தானத்துக்கு இப்போது வந்திருந்த பிரம்ம ஸ்ரீ லஞ்சநாத சாஸ்திரியை வரவேற்பதில் கிராம உத்தியோகஸ்தர்கள் தீவிர கவனம் செலுத்தி வந்தார்கள்.
சற்று நேரத்துக்கெல்லாம் ரிவினியூ இன்ஸ்பெக்டர் தீராத்துயரமய்யங்காரும், தாசில்தாரின் காம்ப் கிளார்க் விகாரம் பிள்ளையும் வந்து சேர்ந்தனர். சுற்றுப் பக்கத்திலிருந்து எல்லாக் கர்ணம் கிராம முனிசீப்புகளும் வந்திருக்கிறார்களா என்று அவர்கள் சோதனை செய்தபின், உக்கிராண அறைக்குச் சென்று போஜன பதார்த்தங்களைப் பார்வையிட்டனர். ஒரு பெரிய செம்பின் அடிவாரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பாலைக் கண்டதும் விகாரம் பிள்ளைக்குப் பெருங் கோபம் வந்தது. அவர் கிராம முனிசீப்பை ஓட விடவே, அவர் வெட்டி தலையாரிகளை ஓட விட்டார். விகாரம் பிள்ளை அப்பால் போனதும், ரிவினியூ இன்ஸ்பெக்டர் கிராம முனிசீப்பின் காதோடு, "ஓய்! சுத்த மோசமாயிருக்கிறீரே! பாலைத் தீர்த்தமாட்டி வைக்கிறதானேங்காணும்! வருகிறவர் சாஸ்திரிகளாச்சே!" என்றார்.
சுபதின, சுபயோக, சுப முகூர்த்தத்தில் தாசில்தார் லஞ்சநாத சாஸ்திரியும், அவருடைய தர்மபத்தினி ஸ்ரீமதி கற்பகாம்பாளம்மாளும், மைத்துனி சௌபாக்கியவதி செல்லக் கிளியும், குழந்தைகள் அரை டஜனும் மேற்கத்தி மாடு கட்டிய இரண்டு வில் வண்டிகளில் ஜாம் ஜாமென்று வந்து இறங்கினார்கள். வந்த களைப்பு நீங்கியதும், அம்மாள் உக்கிராண அறையைப் பார்வையிடச் சென்றாள். கணக்கப்பிள்ளை ராயர் பயபக்தியுடன் முன் வந்து "டிபன் என்ன போடச் சொல்கிறது?" என்று கேட்டார்.
"நீர் யார்?"
"நான் தான் உள்ளூர் கர்ணம்"
"பரிசாரகன் எங்கே?"
அம்மாளைக் கண்டதும் கதவிடுக்கில் ஒளிந்து கொண்ட பரிசாரக முத்துவையர் இப்போது வெளியே வந்தார். "இதோ இருக்கேன்" என்றார்.
"நீதானா? உன் துணியைப் பார்த்தாலே சாப்பாடு வேண்டியிராது போலிருக்கே! இருக்கட்டும், சேமியா கேஸரி போடத் தெரியுமா?"
"தெரியும்" என்றார் முத்துவையர். ஆனால் ராயருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஏனென்றால், சேகரித்திருந்த சாமான்களில் சேமியா இல்லை. 'இந்த அம்மாள் வெகு கெட்டிக்காரி; எது இல்லையோ அதைப் பார்த்துக் கேட்கிறாள், பார்த்தாயா?' என்று நினைத்துக் கொண்டு, "இதோ வாங்கி வரச் சொல்லுகிறேன்" என்றார்.
"ரொம்ப பேஷ்! சேமியா கூட வாங்கவில்லையா?" என்று அம்மாள் உதட்டை ஒரு மடிப்பு மடித்தாள். ராயர் "இதோ வந்து விட்டது" என்று ஓட்டம் பிடித்தார்.
மறுநாள் ஸ்ரீமதி தாசில்தாரிணி அவர்கள், தீராத்துயரமய்யங்காரையும், விகாரம் பிள்ளையையும் கூப்பிட்டனுப்பிய போது, அவர்கள் அஸ்தியில் சுரத்துடன் தான் போனார்கள். ஆனால் அம்மாள் வழக்கத்தை விட அதிக முக மலர்ச்சியுடன் இருந்ததைக் கண்டதும் கொஞ்சம் மனம் தேறினார்கள்.
"அய்யங்காரே! நம்மாத்திலே கல்யாணம் வந்திருக்கு" என்றாள் அம்மாள்.
இவர்களுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் "சந்தோஷம்" என்றார்கள்.
"ஆனால் கொஞ்சம் தர்மசங்கடமாய்ப் போய் விட்டது. இருந்தாலும் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்களே? பார்த்துக் கொள்கிறீர்கள்."
"அதற்கென்ன சந்தேகம்? பேஷா பார்த்துக் கொள்கிறோம்" என்றார்கள். எதைப் பார்த்துக் கொள்வது என்று மட்டும் அவர்களுக்கு விளங்கவில்லை.
"செல்லக்கிளியைப் பெரிய இடத்தில் கொடுத்திருக்கு. உங்களுக்குத் தான் தெரியுமே, சம்பந்தி சப்ஜட்ஜ். ஒருவேளை அவர்கள் வந்தாலும் வருவார்கள். கல்யாணம் ஜெரப்பா நடத்த வேண்டும்."
இப்பொழுது கொஞ்ச விளங்க ஆரம்பித்தது. ஆனால் இவர்களுடைய ஆச்சரியமும் திகைப்பும் அதிகமாயின. இந்த ஸ்திரீயின் துணிச்சல்தான் என்ன? காம்ப்புக்கு வந்த இடத்தில் தங்கைக்கு ருது ஸ்நானக் கல்யாணம் நடத்த வேண்டுமென்று சொல்கிறாளே?
இந்தச் சமயத்தில் தாசில்தார் உள்ளே வந்தார். "என்ன, ஆர்.ஐ.! (ரெவின்யூ இன்ஸ்பெக்டர்) சமாசாரம் கேட்டீர்களல்லவா? எக்கச்சக்கமாய் வந்து கல்யாணம் ஏற்பட்டிருக்கிறதே? இரண்டு வண்டி வைத்து இவர்களை ஊருக்கு அனுப்பி விடலாமென்று தோன்றுகிறது; நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
"அவர்கள் நினைக்கிறது என்ன? அதெல்லாம் பேஷாய் 'நாங்கள் இருக்கிறோம், பார்த்துக் கொள்கிறோம்' என்று சொல்லி விட்டார்கள். இனி மேல் கிளம்பி ஊருக்குப் போய் எல்லா ஏற்பாடுகளும் பண்ணுகிறதென்றால் முடியுமோ? நீங்களும் காம்ப்பிலிருந்து வர முடியாது. நான் தனியாய் ஒண்டிக்காரி என்ன செய்வது? என்ன, விகாரம்பிள்ளை, என்ன சொல்கிறீர்கள்?"
"அம்மா சொல்கிறதும் வாஸ்தவந்தானே?" என்றார் விகாரம் பிள்ளை.
தாசில்தார், ரிவின்யூ இன்ஸ்பெக்டர் முகத்தைப் பார்த்தார்.
"எல்லாம் இங்கேயே பேஷாய் நடத்தி விடலாம்னா!" என்றார் ஆர்.ஐ.அய்யங்கார்.
சற்று நேரத்துக்கெல்லாம் அங்கே கூடியிருந்த கிராம முனிசீப், கணக்கப்பிள்ளைகள் எல்லாரும் மேளக்காரன், பூக்காரன் முதலியவர்களைத் தேடிச் சென்றார்கள்.
அன்றிரவு கணக்கப் பிள்ளை ராயர் தமது மனைவியிடம் பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தார்:- "நீங்களும் பதினெட்டு முழம் புடைவை கட்டிக் கொண்டு பொம்மனாட்டிகள் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே! தாசில்தார் சம்சாரம் வந்திருக்கிறாள். என்ன சாமார்த்தியம்! என்ன சாமர்த்தியம்! அவளுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. இன்றைக்குக் குஞ்சாலாடு பிடிப்பதற்கான சாமான் வேண்டியிருந்தது. பரிசாரகன் பாட்டுக்குக் கண்ணை மூடிக்கொண்டு ஜாபிதா போட்டிருந்தான். 'ஏண்டா, முந்நூறு குஞ்சாலாடுக்கு மூன்றே முக்கால் வீசை சர்க்கரைதானே திட்டம்? எப்படி நாலு வீசை போட்டிருக்கிறாய்?' என்று தாசில்தார் சம்சாரம் கேட்டாள். பரிசாரகன் விழித்துப் போய் விட்டான். பொம்மனாட்டி என்றால் அப்படியல்லவா நாலும் தெரிந்திருக்க வேண்டும்?"
"இவ்வளவு தெரிந்தவன் என்கிறீர்களே! நம்பாத்திலும் இரண்டு குழந்தைகள் இருக்கே! 'ராயரே, இந்தாரும் இரண்டு குஞ்சாலாடு. எடுத்துக் கொண்டு போய்க் குழந்தைகளிடம் கொடும்' என்று சொல்லத் தெரிந்ததா? என்னமோ காணாதது கண்டது போல் ஆகாசத்தில் தூக்கி வைக்கிறீர்களே?" என்றாள் ராயர் மனைவி.
ராயருக்கும் இந்த விஷயத்தில் கொஞ்சம் தாசில்தார் மனைவி மேல் தாங்கல் இருந்தது. அந்த அம்மாள் அந்தண்டை, இந்தண்டை போனால் மெதுவாக ஒரு குஞ்சாலாடு சாப்பிட்டு விடலாமென்று அவர் சமையலறைப் பக்கம் அடிக்கடி போய்க் கொண்டிருந்தார். ஆனால், அது பலிக்கவில்லை. குஞ்சாலாடு பூராவும் பிடித்துக் கூடையில் அடுக்கிச் சாமான் அறையில் வைத்துப் பூட்டிய பிறகுதான் அம்மாள் நகர்ந்தாள்.
ஆயினும் அது கூட ராயருக்கு அந்த அம்மாளிடம் ஒரு விதத்தில் பக்தி விசுவாசத்தையே உண்டாக்கிற்று. "நம்ப வீட்டுப் பசங்களாயிருந்தால், எங்கேயாவது போய், யார் வாயையாவது பார்த்துக் கொண்டு நிற்கும். வந்தவர்கள், போனவர்கள் எல்லோரும் தலைக்கு ஒன்று எடுத்துக் கொண்டு போவார்கள். இந்த அம்மாளிடம் நடக்குமா, அது?" என்று எண்ணி வியந்தார்.
ஸ்நான தினத்தன்று ஊர்வலம் நடத்த வேண்டிய விஷயமாக யோசிப்பதற்கு ஓர் ஆலோசனை சபை கூடிற்று. மோட்டார் கிடைக்காது என்று தெரிந்த போது தாசில்தாரிணிக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவில்லை. "இது தெரிந்திருந்தால் டவுனுக்கே போயிருக்கலாமே?" என்று கூடச் சொன்னாள். முயற்சியில் ஒன்றும் குறைவில்லை. சுற்றுப் பக்கம் பத்து மைல் தூரத்தில் உள்ள பெரிய மிராசுதார்களின் மோட்டார்களுக்கெல்லாம் ஆள் விடப்பட்டது. இவர்களெல்லாம், நெல் கலம் கால் ரூபாய் விற்றபோது மோட்டார் வாங்கினார்கள். இப்போது அவை கொட்டகைகளில் தூங்கின. ஒன்றுக்கு டயர் இல்லை. ஒன்றுக்கு கியர் இல்லை. மற்றொன்றின் எஞ்சின் பழுது. எல்லாம் சரியாயிருந்தாலும் டிரைவர் கிடையாது. இப்படியாக மோட்டார் இல்லையென்று தீர்ந்து போன பிறகு, ஒருவர் "பழைய நாளைப் போல் புஷ்பப் பல்லக்கு வைத்தால் என்ன?" என்று கேட்டார். "பேஷ்! சரியான யோசனை" என்றாள் அம்மாள். உடனே, வீராசாமி நாயுடுக்கு ஆள் விட்டார்கள். நாயுடு வந்து அச்சாரம் வாங்கிக் கொண்டு சென்றார்.
புதன்கிழமை ஸ்நானம், ஊர்வலம் எல்லாம் நடைபெற வேண்டும். கிராமவாசிகள் எல்லோரும் இந்த வைபவத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். புஷ்பப் பல்லக்குக் காட்சி அவர்கள் பார்த்து இன்றைக்குப் பதினைந்து வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வீராசாமி நாயுடுவின் உற்சாகத்தையோ சொல்ல வேண்டியதில்லை. புஷ்பத்துக்கு அவன் அச்சாரம் கொடுக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டான். ஆகவே, செவ்வாய்க்கிழமை இரவு திண்ணையில் படுத்துக் கொண்டு அவன் மானஸீகமாய்ப் புஷ்பப் பல்லக்கு ஜோடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று கிராம முனிசீப் கிண்டாமணி முதலியார் வந்து, "ஓய், வீராசாமி நாயுடு! பல்லக்கும் வேண்டாம்; பாடையும் வேண்டாம்" என்று சொன்னதும், நாயுடுவுக்கு எவ்வளவு ஏமாற்றம் ஏற்பட்டிருக்குமென்று நீங்களே யோசியுங்கள்.
மறுநாள் அதிகாலையில் தாசில்தார் தமது பரிவார தேவதைகள் சமேதராய் வில் வண்டிகளில் பிரயாணமானார். ஊரார் எல்லோரும் வியப்பும் ஏமாற்றமும் அடைந்தார்கள். விசாரித்ததில் விஷயம் பின்வருமாறு என்று தெரிய வந்தது:-
ஜில்லா கலெக்டர் பல்டன் துரை அணைக்கட்டைப் பார்வையிடுவதற்காக வருவதாகவும், வழியில் கோவிந்தகுடி முஸாபரி பங்களாவில் புதன்கிழமை மத்தியானம் ஜாகை போடுவாரென்றும், முதல் நாள் சாயங்காலம் செய்தி வந்ததாம். ஆகவே, தாசில்தாரிணி தன்னுடைய உத்தேசத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. சௌபாக்கியவதி செல்லக்கிளியின் ஜாதகத்தில் புஷ்பப் பல்லக்கு ஊர்வலம் செல்லும் பாக்கியம் விதிக்கப்பட்டிருக்கவில்லை.
புதன்கிழமை அதிகாலையில் தாசில்தாரையும், அவருடைய பரிவாரங்களையும் மூட்டை கட்டி அனுப்பியதும், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஏதோ கணக்கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து ரூபாய் அணா பைசாக்களுடன் மல்லுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதற்குக் காரணம், லஞ்ச நாத சாஸ்திரியார் தம்முடைய காம்ப்புக்காக மொத்தம் கிராமாதிகாரிகளிடமிருந்து வசூலான தொகை, செலவான தொகை இவைகளுக்குக் கணக்கும், பாக்கித் தொகையும் தம்மிடம் அடுத்த காம்ப்பில் கொண்டு வந்து ஒப்புவிக்க வேண்டுமென்று அவருக்குக் கட்டளையிட்டிருந்ததுதான். மிச்சப் பணத்திலிருந்து ஒரு நிலைக் கண்ணாடி, ஒரு ஷேவிங் செட், ஒரு செண்ட் பாட்டில், இரண்டு பவுண்ட் சாக்லேட், ஒரு செட் பிரெஞ்சுப் படுக்கையறைப் படங்கள் வாங்கிக் கொண்டு வரவேண்டுமென்று தாசில்தார் சொல்லியிருந்தார்.
உபயவே தீராத்துயரமய்யங்கார் இவ்வாறு
கணக்குப் போட்டுக் கொண்டிருக்கையில் கர்ணங்களும், கிராம முனிசீப்புகளும் மூலைகொருவராய் ஓடிக் கொண்டிருந்தார்கள். இந்தத் தடவை அவர்கள் பெரிய கலெக்டர் பல்டன் துரையின் திருக்குஷ்டியை நிரப்புவதற்காகக் கோழி முட்டைகளையும், குள்ள வாத்துகளையும் தேடிச் சென்றார்கள். அவர்களுடைய அவசரத்தில், அன்னங்களைக் கூட வாத்துக்கள் என்று அவர்கள் நினைத்து விடக் கூடுமாதலால், நேயர்களே! சீக்கிரம் எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்.
ஆனந்தவிகடன் 22.7.1934
--------------------
13. பிரபல நட்சத்திரம்
முன்னுரை
நுரையும் நொங்குமாகப் போகும் வேகவதி ஆறு 'வா வா' என்று என்னை அழைத்துக் கொண்டிருக்கிறது. நதியில் அடைக்கலம் புகுவதற்கு அமாவாசை இரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதுவரையில் காலத்தைப் போக்கியாக வேண்டும். அதுவரை என் அறிவையும் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். வேலையில்லாமல் சும்மா இருந்தால் மனம் அதிகமாகக் குழம்புகிறது. தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பயங்கரமான அந்தகாரம் வந்து சூழ்கிறது. ஆகா! அமைதியான நல்ல தூக்கம் தூங்கி எத்தனை காலமாயிற்று.
ஆம், ஏதாவது வேலையில் மனத்தைச் செலுத்த வேண்டுமென்பதற்காகத்தான் என் கதையை எழுதத் தொடங்குகிறேன். ஒரு வருஷத்துக்கு முன்பு நான் 'பிரபல நட்சத்திர'மாயிருந்த காலத்தில் பத்திரிகையில் என்னைப் பற்றி அடிக்கடி ஏதாவது செய்தி பிரசுரித்துக் கொண்டிருப்பார்கள். நான் எந்த தெருவில் எந்த வீட்டில் இருக்கிறேன்; அது சொந்த வீடா, வாடகை வீடா, எத்தனை ரூபாய் வாடகை, தினம் எவ்வளவு தடவை நான் காப்பி சாப்பிடுகிறேன், என்றெல்லாம் கேள்விகளும் பதில்களும் வெளியாகிக் கொண்டிருக்கும். அதெல்லாம் அந்தக் காலம்.
இப்போது 'பிரபல நட்சத்திர'ப் பதவியிலிருந்து நான் விழுந்து ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. என் உண்மையான வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதில் இப்போது யாருக்காவது சிரத்தை இருக்குமா என்பதை நான் அறியேன். இந்த எனது துயர சரித்திரத்தை, சினிமா நட்சத்திரமாக விரும்பும் எந்தக் குடும்ப ஸ்திரீகளாவது படிக்க நேர்ந்தால், அவர்களுக்கு நிச்சயமாய் இது உபயோகமாயிருக்குமென்று நம்புகிறேன். இதை எழுதி முடிக்கும் வரையில் பகவான் என்னுடைய அறிவை மட்டும் தெளிவாக வைத்திருக்க வேண்டும்.
------------
1. கல்யாணம்
கதையை எங்கே, எப்படி ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை. நான் பிறந்தது, வளர்ந்தது இதிலெல்லாம் விசேஷம் ஒன்றும் கிடையாது. என் தகப்பனார் வக்கீல். அவருக்கு நான் நாலாவது பெண். என் தமக்கைமார்களுக்கெல்லாம் நல்ல வரன்களைத் தேடிக் கலியாணம் செய்து கொடுத்து விட்டார். அப்போதெல்லாம் அவருக்குச் சம்பாத்தியமும் அதிகமாக வந்து கொண்டிருந்தது. அப்பாவுக்குத் தள்ளாமை அதிகமாக ஆக ஆக வருமானமும் குறைந்தது. வீட்டில் தரித்திரம் தாண்டவமாடத் தொடங்கிற்று. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, எல்லாரும் இந்தத் துக்கிரி பிறந்த அதிர்ஷ்டம் என்று என்னைத் தூற்றுவார்கள். நான் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. 'எனக்குத் தான் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது' என்று மனத்துக்குள் சொல்லிக் கொள்வேன். சில சமயம் வெளியிலும் சொல்வேன். என் தாயார் மட்டும் என் கட்சியில் இருந்து, 'ஆமாண்டி கண்ணே! உனக்குத்தான் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது; உன் அக்காமார்கள் எல்லோரையும் காட்டிலும் நீதான் நல்ல இடத்தில் வாழ்க்கைப் படப் போகிறாய். உன்னால் தான் எங்கள் தரித்திரம் தீரப் போகிறது" என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.
பள்ளிக் கூடத்தில் நான் இரண்டாவது பாரம் வரையில் தான் படித்தேன். ஆனால் படிப்பதில் எனக்கு அந்த நாளிலேயே ஆர்வம் அதிகம். விக்ரமாதித்யன் கதை முதற்கொண்டு, பத்திரிகைகளில் அந்த வாரம் வெளியான தொடர்கதை வரையில் எல்லாவற்றையும் படித்து வந்தேன். இதனாலெல்லாம் என்னென்னமோ பகற் கனவுகள் காண ஆரம்பித்தேன். கதைகளில் வருவது போல் 'சகல லட்சணங்களும் பொருந்திய இளங்குமரன் எனக்காக எங்கேயோ பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறான். திடீரென்று ஒரு நாள் அவன் எங்கிருந்தோ வந்து, என் மேல் காதல் கொண்டு சகலரும் அறிய என்னைக் கரம் பிடித்துக் கல்யாணம் செய்து கொண்டு போகப் போகிறான்; நாடு நகரமெல்லாம் அதைப் பார்த்து அதிசயிக்கப் போகிறது' என்று அடிக்கடி எண்ணமிடுவேன். தகுந்த வரன் கிடைக்காத காரணத்தினால் என் கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. கற்பனா லோகத்தில் நான் கண்டு வந்த இராஜகுமாரன் வரும் பொருட்டாகவே, என் கல்யாணம் நிச்சயிக்கப்படாமல் தட்டிப் போய் வருகிறது என்று நான் நம்பினேன். அவன் எப்போது வருவான், எந்த ரூபத்தில் வருவான் என்றெல்லாம் சிந்தனை செய்தேன். நாளாக ஆக, என்னுடைய உள்ளத்தின் தாபமும் வளர்ந்து வந்தது. பொறுமைகுன்றியது. "ஏன் இன்னும் வரவில்லை?" என்று ஊர் பெயர் தெரியாத என் கற்பனை மணாளனிடம் கோபம் கொள்ள ஆரம்பித்தேன். இன்னும் எங்கள் வீட்டு வாசலிலே நின்று தெரு வீதியில் அவர் வரவை எதிர் நோக்கலானேன்.
நான் பார்ப்பதற்கு நன்றாயிருப்பேனென்று அந்த நாளிலேயே எல்லோரும் சொல்வார்கள். "உன் அழகுக்காகவே உன்னை யாராவது வந்து கொத்திக் கொண்டு போய்விடுவான்" என்று என் பாட்டி சொல்வதுண்டு. இதைப் பற்றி நான் உள்ளுக்குள் ரொம்பவும் கர்வம் கொண்டிருந்தேன். நாலு பேர் உள்ள இடத்தில் இருக்கும் போதெல்லாம் எல்லோரும் என் அழகையே பார்த்துப் பிரமித்துப் போய் நிற்பதாக நான் எண்ணிக் கொள்வேன். என் வீட்டு வாசலிலே நிற்கும் போதும் இந்த அழகு கர்வம் என் உள்ளத்தில் பொங்கிக் கொண்டு தானிருக்கும். அதற்குத் தகுந்தாற்போல், போவோர் வருவோர் எல்லோரும் என்னை உற்றுப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள். இவ்விதம் பார்த்தவர்களில் நல்ல தோற்றமும் நாகரிகமும் வாய்ந்த இளைஞன் யாராவது இருந்தால், "என்னை மணந்து அழைத்துப் போக வரும் கந்தர்வ குமாரன் இவன் தானோ?" என்று எண்ணமிடுவேன்.
அந்த இளைஞர்களில் பலர் நான் நிமிர்ந்து பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டு போய்விடுவார்கள்; இன்னும் சிலரைப் பார்த்ததும் எனக்கே வெறுப்பு உண்டாகிவிடும். ஒரு சிலர் மட்டும் சமிக்ஞைகளினாலும் நேரிலேயும் என்னிடம் காதல் பாஷை பேசத் தொடங்கினார்கள். ஆனால், அவர்களுடைய நிலைமை இன்னதென்று அறிந்ததும் எனக்குண்டான ஏமாற்றத்துக்கு அளவேயில்லை. ஒருவனுக்குக் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள்; இன்னொருவன் வக்கீல் குமாஸ்தா; வேறொருவன் பெயில் ஆன பி.ஏ. - ஆகா நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கந்தர்வ குமாரன் இவர்களிலே ஒருவனாக இருக்க முடியுமா? எல்லாம் மனோராஜ்யமா? வெறும் ஆகாசக் கோட்டையா? இவ்வளவு அழகையும் வைத்துக் கொண்டு, கேவலம் கன்னிகையாகவே, அப்பா அம்மாவுக்குப் பாரமாகவே இருக்கப் போகிறேனா! பகவானே! இதற்காகவா, எனக்கு இவ்வளவு அழகையும் அறிவையும் கொடுத்தாய்?
அழகிலே மட்டுமல்ல? அறிவிலும் நான் நிகரில்லாதவள் என்று தான் அப்போதெல்லாம் எண்ணியிருந்தேன்! உண்மையிலேயே நான் எவ்வளவு மந்த அறிவு படைத்தவள் என்பதைப் பகவான் எனக்கு விரைவிலேயே காட்டிக் கொடுத்து விட்டார்.
நான் என் வீட்டு வாசலில் நின்று ஸ்வயம்வரம் நடத்திய காலத்தில் ஒருநாள் கலாசாலை ஆசிரியர் ஒருவர் அந்த வழியே போவதைக் கண்டேன். அவருக்கு வயது சுமார் முப்பது தானிருக்கும். ஆனால், அவருடைய தலைப்பாகையும், நீளமாய்த் தொங்கிய கறுப்புச் சட்டையும், மூக்குக் கண்ணாடியும் அவருடைய வயதை அதிகப் படுத்திக் காட்டின. அவரைப் பார்த்தவுடனே எனக்கு ஒருவிதமான பயபக்தி உண்டாயிற்று. அவர் என்னைப் பார்த்த பார்வையோ என்னுடைய பயத்தை அதிகமாக்கியது. "ஏன் இப்படித் தெரு வீதியில் நின்று போவோர் வருவோரைப் பார்த்துப் பல்லை இளித்துக் கொண்டிருக்கிறாய்? நல்ல குடும்பத்துப் பெண்ணுக்கு இது அழகா?" என்று அவர் என்னைக் கேட்பது போலிருந்தது. ஆனால் என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன். "இவர் என்ன மகாப் பெரியவர். இவருக்கு எதற்காக நாம் பயப்பட வேண்டும்?" என்று நினைத்து நினைத்து அசட்டுத் தைரியத்தை அதிகமாக்கிக் கொண்டேன். அவர் வீதி வழியாகப் போகும் சமயம் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே வாசலில் போய் நிற்கவும், அவரை விழித்துப் பார்க்கவும் ஆரம்பித்தேன். இதெல்லாம் எனக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அந்த வேடிக்கை விரைவில் வினையாக முடிந்தது.
ஒரு நாள் என் தாயார் திடீரென்று கூப்பிட்டுப் பரவசமாகக் கட்டி அணைத்துக் கொண்டு, "அடி அம்பு! கடைசியில் உனக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டதடி, உன் கலி தீர்ந்து விட்டதடி! 'எப்போ வருவாரோ? எப்போ வருவாரோ?' என்று பாடிக் கொண்டிருப்பாயே? அவர் வந்துவிட்டாரடி!" என்றாள். அப்போது எனக்கு உடம்பெல்லாம் புளகாங்கிதம் ஏற்பட்டது. என் உள்ளத்திலே 'அவர் வந்து விட்டாரா? அவர் யார்? எப்படி இருப்பார்?' என்ற கேள்விகள் பொங்கின. ஆனால், வாயில் ஒரு வார்த்தையும் வரவில்லை. அம்மா அவளாகவே சொன்னாள்: "ஆமாண்டி கண்ணே! நிஜந்தாண்டி. இந்த ஊர் காலேஜிலே புரொபஸராம்! 250 ரூபாய் சம்பளமாம். ரொம்பப் படிப்பாளியாம். பிரின்ஸிபால் வேலை கூட ஆகுமாம். கல்யாணமே வேண்டாம் என்று இதுவரையில் சொல்லிக் கொண்டிருந்தாராம். உன் அதிர்ஷ்டம் அப்பேர்ப்பட்டவருடைய மனது மாறி விட்டது."
இதற்குள் பாட்டி "அதுதான் நான் சொல்லிக் கொண்டிருந்தேன். நம்ம அம்புவின் அழகுக்காகவே அவளை யாராவது வந்து கொத்திக் கொண்டு போய் விடுவான் என்று அப்போதெல்லாம் என் வார்த்தையில் உங்களுக்கு நம்பிக்கைப் படவில்லை" என்றார்.
காலேஜ் புரொபஸர் என்று அம்மா சொன்னதுமே என் மனது பதைத்தது. சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக "பாரடி அம்மா, பாட்டியை! என் அழகுக்காகவே யாரோ வந்து விட்டார்களாம்! நீ சொல்லுகிறவர் இன்னும் என்னை வந்து பார்க்கக் கூட இல்லை. அதற்குள்ளே பாட்டிக்கு அவசரம்!" என்றேன்.
அப்போது அம்மா, புன்னகையுடன், "இல்லேடி கண்ணே; பாட்டி அவசரப்படவில்லை. கல்யாணம் நிச்சயமான மாதிரிதான். அவர் தினம் இந்த வீதி வழியாக காலேஜுக்குப் போகிற போது உன்னைப் பார்த்திருக்கிறாராம். அவரே அப்பாவைக் கூப்பிட்டனுப்பி, 'எனக்கு உங்கள் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க இஷ்டமா?' என்று கேட்டாராம். பணம் காசு என்று ஒன்றும் பேசப்படாது என்று சொல்லிவிட்டாராம். எல்லாம் தீர்மானமாகி விட்டது. முகூர்த்தத் தேதி வைக்க வேண்டியதுதான் பாக்கி. அதற்காகத்தான் அப்பா ஜோசியரண்டை போயிருக்கார்" என்று சொல்லி, ஆசையோடு என் நெற்றியில் கையை வைத்து திருஷ்டி கழித்தாள். நான் அவளிடமிருந்து திமிறிக் கொண்டு ஓடினேன். காமரா உள்ளுக்குள் சென்று கதவைத் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு தரையில் படுத்தேன். என் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகிற்று. ஏன் என்று எனக்கே தெரியவில்லை.
"அவரையா கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறோம்?" என்று எண்ணியபோது, ஒரு பக்கம் திகிலாயிருந்தது. இன்னொரு பக்கம் பெருமையாகவும் இருந்தது; அப்பேர்ப்பட்ட படிப்பாளி என் அழகு வலையில் விழுந்துவிட்டாரல்லவா? ஆனால் அந்த மனிதருடனா வாழ்க்கை முழுவதும் கழிக்கப் போகிறோம் என்று நினைத்தபோது, என்னமோ செய்தது.
சற்று நேரத்துக்கெல்லாம் அம்மா கதவை இடித்தாள். "அம்பு! கதவைச் சாத்திக் கொண்டு என்ன செய்கிறாய்? அப்பா வந்துவிட்டார். முகூர்த்தம் வைத்துக் கொண்டு வந்திருக்கிறார். உன்னைக் கூப்பிடுகிறார்!" என்று குதூகலமான குரலில் சொன்னாள். நான் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அம்மா என் முகத்தைப் பார்த்து விட்டு, "அடி அசடே! அழுதாயா, என்ன?" என்று கேட்டாள். நல்ல வேளையாகப் பாட்டி, "அழுகையாவதடி; குழந்தைக்கு ஆனந்தக் கண்ணீர் வந்திருக்கடி!" என்றாள். அம்மா, "என் கண்ணே!" என்று என்னைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
சாதாரணமாய்க் குடும்பங்களில் அடியும் வசவும் பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்குக் கூடக் கல்யாணம் என்று ஏற்பட்டு விட்டால் தனி மகிமை உண்டாகி விடுகிறது. எல்லாரும் கல்யாணப் பெண்ணை அருமை பாராட்டவும் கொஞ்சவும் ஆரம்பித்து விடுகிறார்கள். ஏற்கனவே நான் செல்லப் பெண்; அதிலும் இப்போது எனக்கு 'அதிர்ஷ்டம்' வேறே வந்திருந்தது. ஆகவே எல்லாரும் என்னைப் படுத்தி வைத்த பாட்டைச் சொல்லவா வேண்டும்?
கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. அம்மா அப்பா முதலியவர்களுக்குத் தலைகால் தெரியவில்லை. 'தடபுடல் ஒன்றும் வேண்டாம்' என்று மாப்பிள்ளை சொன்ன போதிலும் 'கிடைக்காத சம்பந்தம் கிடைத்திருக்கிறது' என்ற பெருமையினால் அப்பா ஆடம்பரமாகவே கல்யாண ஏற்பாடுகளைச் செய்தார்.
குறிப்பிட்ட முகூர்த்தத்தில் கல்யாணம் நடந்தது. எல்லோருக்கும் ஒரே சந்தோஷம். மாப்பிள்ளை நலங்கிடுவதற்கு வரவில்லை என்ற ஏமாற்றம் அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் உண்டு. இதை மறைப்பதற்காக அம்மா, "அவர் என்ன சாமான்யப்பட்டவரா? எல்லாரையும் போல் நலங்கிட உட்காருவாரா?" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்! இன்னும் என்னை அடிக்கொரு தடவை கட்டிக் கொண்டு உச்சி முகர்ந்து, "நீ அதிர்ஷ்டக்காரி அம்பு! கொடுத்து வைத்தவள்" என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அந்த நம்பிக்கையுடனேயே அம்மா என் கல்யாணமாகிச் சில காலத்துக்கெல்லாம் கண்ணை மூடினாள்.
நானும் இன்றைக்கு இந்தச் சந்தோஷமான இடத்திலேயே நிறுத்திவிட்டு கண்ணை மூடித் தூங்குவதற்குப் பிரயத்தனம் செய்கிறேன்.
---------
2. இல்லறம்
நேற்று இரவு நான் நிம்மதியாகத் தூங்கினது போல் சென்ற ஆறு மாதத்தில் தூங்கினதில்லை. ஆற்றில் அடைக்கலம் புகுவது என்று தீர்மானித்ததின் பலனோ, அல்லது என் கதையை எழுதத் தொடங்கி இளம் வயதின் ஞாபகங்களை எழுதியதனால் தானோ தெரியவில்லை.
கல்யாணம் ஆன உடனேயே நானும் என் கணவரும் எங்கள் இல்வாழ்க்கையைத் தொடங்கினோம். இல்வாழ்க்கையைக் குறித்து நான் என்னவெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தேனோ, அதற்கெல்லாம் நேர்மாறுதலாக எங்கள் வாழ்க்கை நடந்தது.
புருஷர்கள் மனைவிகளை ஆடுமாடுகளைப் போல் நடத்துவதையும், அடிப்பதையும், துன்புறுத்துவதையும் நான் பார்த்திருக்கிறேன். அவ்விதமாக என்னை அவர் கொடுமைப் படுத்தவில்லை. என்னை வைதோ, கோபமாகப் பேசியதோ கூடக் கிடையாது. வெகு மரியாதையுடன் என்னை நடத்தினார். பேசும்போதெல்லாம் இனிய வார்த்தைகளையே பேசினார். இதனாலெல்லாம் எனக்கு மனநிம்மதி ஏற்படவில்லை. ஏனோ, துக்கம் துக்கமாக வந்தது.
என் அழகையோ, அலங்காரத்தையோ அவர் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை.
சில சமயம் அவர் என்னை ஆவலுடன் உற்றுப் பார்ப்பார். ஏதோ சொல்லப் பிரயத்தனப்படுகிறவர் போல் தோன்றும். ஆனால் ஒன்றும் சொல்ல மாட்டார். வர வர, என் அழகை நான் வெறுக்க ஆரம்பித்தேன். அலங்காரம் செய்து கொள்வதில் என் ஆசை போய் விட்டது. சில நாள் குளிக்காமலும், நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமலும் தலை வாரிக் கொள்ளாமலும் இருப்பேன். அப்போதும் அவர் வாய் திறந்து ஒன்றும் சொல்ல மாட்டார்.
அவருக்குச் சதா அவர் வேலையே சரியாயிருந்தது. காலேஜுக்குப் போகும் நேரம் போக அவருடைய புத்தக அறைக்குள்ளேதான் இருப்பார். அப்படி ஓயாமல் படிப்பதற்கு எழுதுவதற்கும் என்னதான் இருக்குமோ, எனக்குத் தெரியாது. அதாவது, அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என் கணவர் காலேஜில் சரித்திரப் புரொபஸர் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். இந்தியாவின் பழைய சரித்திரத்தைப் பற்றி அவர் ஏதோ முக்கியமான ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாராம். நமது இந்திய தேசத்துக்கும் சீனா தேசத்துக்கும் பழைய காலத்தில் ஏற்பட்டிருந்த உறவைப் பற்றி சில மிகவும் முக்கியமான உண்மைகளை அவர் கண்டுபிடித்தாராம். எங்கள் கல்யாணமான புதிதில் அவர் தம் ஆராய்ச்சியைப் பற்றிச் சில சமயம் என்னுடனே பேச ஆரம்பிப்பதுண்டு. ஆனால் அவர் சொல்வது ஒன்றுமே எனக்கு விளங்காது. அதிலே எனக்குச் சிரத்தையும் இல்லை. எனவே, அவர் பேசிக் கொண்டேயிருக்கும் போது, நான் நடுவில் "மெஜஸ்டிக் சினிமாவில் மேனகா படம் வந்திருக்காமே?" என்று சொல்லி வைப்பேன். அவருக்குச் சீ என்று போய்விடும். புத்தக அறைக்குப் போய் ஏதாவது எழுத ஆரம்பித்து விடுவார். எனக்கோ, அவர் சீன தேசத்தின் மேல் செலுத்தும் கவனத்தில் நூறில் ஒன்று என் மீது செலுத்தக் கூடாதா என்று தோன்றும்.
இப்படி நாளாக ஆக, அவரும் நானும் எட்டி விலகிப் போய்க் கொண்டிருந்தோம். ஒரே வீட்டுக்குள் இருந்த போதிலும், சில தினங்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாத நிலைமை ஏற்பட்டு விட்டது. நாளுக்கு நாள் என்னுடைய மன நிம்மதி குலைந்து வந்தது. அவர் மேல் வெறுப்பும் கோபமும் வளர்ந்தன. என்னுடைய தாபத்தையும் கோபத்தையும் பன்மடங்கு அதிகமாக்கும்படியான ஒரு சம்பவம் இப்போது நேர்ந்தது.
என் கணவருக்கு ஒரு தங்கை உண்டு. அவருடைய புருஷனுக்கு டில்லியில் வேலை. எனக்குக் கல்யாணமாகி மூன்று வருஷத்துக்குப் பிறகு ஒரு தடவை அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். ராஜம் முதலில் வந்துவிட்டாள். அவள் புருஷன் தம் சொந்த ஊருக்குப் போய் விட்டு ஒரு வாரத்துக்குப் பிறகு வந்தார். அவர் வருவதற்கு முன் அந்த ஒரு வார காலமும் எனக்குச் சிறிது உற்சாகமாயிருந்தது. ராஜம் எங்கள் கல்யாணத்தின் போது கூட பரிகாசம் செய்து மானத்தை வாங்கினாள். "அண்ணா நித்திய பிரம்மச்சாரி என்று சொல்லிக் கொண்டிருந்தான்; பிள்ளையாருக்குக் கல்யாணம் ஆகும் போது தான் தனக்கும் கல்யாணம் என்று வீம்பு பிடித்துக் கொண்டிருந்தான். பொம்மனாட்டி என்றாலே தலையைக் குனிந்து கொள்வான். அப்படிப்பட்டவனை உன் மாய வலையில் சிக்க வைத்து விட்டாயேடி! என்ன பொடி போட்டு மயக்கினாயடி?" என்றெல்லாம் கேலி செய்தாள். என் மேனி நிறம், முகவெட்டு, கண்ணின் அழகு இதையெல்லாம் பற்றி அவள் வர்ணித்து, "அண்ணா காத்திருந்தாலும் காத்திருந்தான், முதல் நம்பர் அழகியாகப் பார்த்துப் பிடித்தான்" என்று அவள் சொன்ன போதெல்லாம் நான் வெட்கப்பட்டுத் தலை குனிந்து கொண்டாலும் மனத்திற்குள் எவ்வளவோ சந்தோஷமும் கர்வமும் அடைந்தேன்.
ஆகவே, ராஜம் இப்போது வந்ததும் எனக்கு உற்சாகமாயிருந்தது. அவளும் முன்போலவே சிரிப்பும் பரிகாசமுமாய் இருந்தாள். அவளுடைய பரிகாசங்கள் எனக்கு முன்போல் சந்தோஷத்தை உண்டாக்கவில்லையானாலும், நான் என் மனோநிலையை வெளிக்குக் காட்டவில்லை. கூடிய வரையில் நானும் குதூகலமாயிருப்பதற்கு முயன்றேன். எங்களுடைய பரிகாசப் பேச்சுக்களில் சில சமயம் என் கணவரும் வந்து சேர்ந்து கொண்டார். என்னுடைய வாழ்க்கையிலே ஒரு மாறுதல் ஏற்படப் போவது போல் தோன்றியது.
ஆம்; என் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படத்தான் செய்தது. ஆனால் நான் எதிர்பார்த்த முறையில் அன்று.
ராஜம் வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு அவளுடைய கணவர் வந்து சேர்ந்தார். அவர் வண்டியிலிருந்து இறங்கியதும் அவர்கள் சந்தித்த காட்சியைப் பார்த்த போதே என் மனத்தில் முள் தைத்தது போலிருந்தது. ராஜமும் நானும் சந்தோஷமாகச் சிரித்து விளையாடிப் பேசிக் கொண்டிருந்ததற்கும் முடிவு ஏற்பட்டது. அவள் அவருடனேயே அதிக நேரத்தைச் செலவழிக்க ஆரம்பித்தாள். அவர்களுக்குப் பேசுவதற்கு என்ன தான் இருக்குமோ என்று எனக்கு வியப்பாயிருந்தது. ஒருவரையொருவர் கேலி செய்து கொள்வதையும், கொஞ்சிக் குலாவுவதையும் பார்க்கப் பார்க்க என்னுடைய மனக் கசப்பு அதிகமாக வளர்ந்தது. சாயங்காலம் ஆனதும் அவர்கள் பாட்டுக்கு வெளியே கிளம்பி விடுவார்கள். கடைத்தெருவுக்கோ, கோயில் குளத்துக்கோ, சினிமா டிராமாவுக்கோ போய் விட்டு உல்லாசமாக இராத்திரி திரும்பி வருவார்கள். அப்போது என்னை என்னமோ செய்யும். வீட்டிலேயே இருப்பு கொள்ளாது. உள்ளுக்கும் வாசலுக்கும், மாடிக்கும் கீழுக்குமாக ஒரு காரியமும் இல்லாமல் போய் வந்து கொண்டிருப்பேன். அப்போது இவர் காலேஜிலிருந்து வருவார்; "எங்கே அவர்கள் இல்லையா?" என்று கேட்பார். எனக்குத் தொண்டை அடைக்கும். "சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள்" என்பேன். மேலே நான் ஏதாவது சொல்லுவதற்குள், அவர் தம் அறைக்குப் போய்ப் புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்து விடுவார்.
ஒரு நாளைக்கு ராஜமும் அவள் கணவரும் மாடி அறையில் இருந்தார்கள். அது எனக்குத் தெரியாமல் அந்த அறையின் கதவைத் திறந்து விட்டேன். அப்போது நான் கண்ட காட்சி என் நெஞ்சில் ஈட்டியைச் செலுத்துவது போலிருந்தது. ராஜத்தின் கணவர் தரையில் உட்கார்ந்திருந்தார். ராஜம் அவருடைய மடியிலே தலையை வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அவள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க, அவர் குனிந்த வண்ணம் அவளுடைய கன்னங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் அவசரமாக படீரென்று கதவைச் சாத்திவிட்டுக் கீழே இறங்கிப் போனேன். எதனாலோ எனக்கு அழுகை அழுகையாக வந்தது. கீழே ஓர் அறைக்குள் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டேன். தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினேன்.
அத்தனை காலமும் அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் இப்போது பொங்கிக் கொண்டு வந்தது. வெகு நேரம் வரையில் அழுது கொண்டிருந்தேன். கண்கள் வீங்கிப் போயின. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ராஜம் வந்து கதவை இடித்தாள். நான் கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்து விட்டு, "ஐயையோ! இதென்னடி மன்னி" என்று அலறிவிட்டாள். "அசடே! பைத்தியமே! மாடிக்கு வந்து கதவைத் திறந்ததற்காகவா இப்படி அழுகிறாய்? என்னடி மோசம் முழுகிப் போயிற்று? இவர் அப்படியெல்லாம் சங்கோஜப்படுகிறவர் அல்ல. நீ வேணுமானால் பார்! நாளைக்கு நீ இருக்கிறபோதே என்னை மடியில் தூக்கி வைத்துக் கொள்ளச் சொல்கிறேன். இதற்காக அழுவார்களா?" என்று இப்படிப் பேசிக் கொண்டே போனாள். அவளுடைய பேச்சு இன்னமும் என் நெஞ்சை அதிகமாகப் பிளந்தது என்பதை அவள் என்ன கண்டாள்?
நான் மெதுவாகச் சமாளித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு, "அதற்காக இல்லை அக்கா! தலைவலி மண்டையைப் பிளக்கிறது!" என்றேன். உண்மையாகவே தலையையும் வலிக்கத்தான் செய்தது. கண்ணில் நீர் வரவேண்டியது தான். "இதோ நானும் வருகிறேன்" என்று எனக்குத் தலைவலியும் வந்து விடுவது வழக்கம்.
அதற்கப்புறம் எனக்கு அடிக்கடி கண்ணீரும் தலைவலியும் சேர்ந்து வந்து கொண்டிருந்தன. ராஜம் இதனால் கவலையடைந்தாள். ஒரு நாள் அவள் அண்ணாவிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது என் காதிலே விழுந்தது. "ஏன் அண்ணா, மன்னி இப்படி இருக்கிறாள்?"
"எப்படி இருக்கிறாள்?" என்றார் அவர்.
"உனக்குக் கண்ணே இல்லையா, அண்ணா! ஓயாமல் அழுது அழுது மன்னிக்குக் கண் வீங்கிப் போகிறதே? தெரியவில்லையா?"
"எல்லாம் தெரிகிறது! ராஜம்! ஆனால் நான் என்ன செய்யட்டும்? நான் உன் மன்னியைக் கல்யாணம் செய்து கொண்டது பெரிய பிசகு. புத்தி அப்போது கொஞ்சம் சபலித்துவிட்டது. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன்" என்றார்.
"ரொம்ப அழகாயிருக்கிறது. இப்படியெல்லாம் பேசாதே, அண்ணா! வீட்டுக்கு வீடு வாசற்படி. அங்கங்கே அப்படித்தான் இருக்கும். எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகப் போய்விடும்!" என்றாள் ராஜம்.
சில நாளைக்கெல்லாம் ராஜம் ஊருக்குப் போய் விட்டாள். ஆனால், ஒன்றும் சரியாகப் போகவில்லை. நாளாக ஆக, என் மனக்கசப்பு வளர்ந்து கொண்டிருந்தது. நான் கண்ணீர் விடுவதையும் குப்புறப் படுத்துக் கொண்டு விம்முவதையும் அவர் சில சமயம் பார்ப்பார். அவருடைய மெல்லிய காலடி சத்தத்திலிருந்து அவர்தான் வருகிறார் என்று நான் தெரிந்து கொள்வேன். ஒரு வேளை அவர் என் பக்கத்தில் உட்காரமாட்டாரா, உட்கார்ந்து என்னைச் சமாதானப் படுத்த மாட்டாரா என்று சில சமயம் மனத்திற்குள் எண்ணுவேன். ஆனால், அவர் தலையில் அடித்துக் கொண்டு, "சனியன், பீடை!" என்று சொல்லி விட்டுப் போய்விடுவார். வேறு சில சமயம், "ஐயோ! என் புத்தி இப்படியா கெட்டுப் போக வேணும்?" என்று சொல்லிக் கொண்டே போவார்.
நானோ, 'என்னத்துக்காகப் பகவான் நம்மைப் படைத்தார்?' என்று எண்ணமிடத் தொடங்கினேன். அவர் படைத்ததினாலேதான் என்ன? நல்ல வேளையாக, செத்துப் போவதை அந்தப் பகவானால் கூடத் தடுக்க முடியாதல்லவா?"
"சாவு", "மரணம்" என்ற மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினேன்.
எனக்குக் கல்யாணம் ஆனவுடனேயே என் தாயார் காலமாகி விட்டாள் என்று சொன்னேனல்லவா? என் தகப்பனார் பிறகு வேலையிலிருந்து விலகிக் கொண்டார். என் மூத்த தமக்கை ஹைதராபாத்தில் இருந்தாள். அவளுக்குப் பெரிய குடும்பம். அப்பா, பேரன் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டு ஹைதராபாத்திலேயே இருந்தார். அவருக்கு என் தீர்மானத்தைக் குறித்துக் கடிதம் எழுத முயன்றேன். அப்போதெல்லாம் எனக்கு அவ்வளவு நன்றாக எழுதத் தெரியாது. விஷயத்தைச் சொல்ல முடியாமல் திண்டாடினேன். ஆகவே, நாலைந்து தடவை கடிதத்தைப் பாதி வரையில் எழுதிக் கிழித்துப் போட்டு விட்டேன்.
இப்படி நான் பாதி எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் மட்டும் நான் கிழித்துப் போடாமலே காணாமல் போய் விட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை! அவர் ஒரு வேளை எடுத்திருப்பாரோ என்று ஒரு கணம் சந்தேகம் உதித்தது. ஆனால் அவருக்கு அப்படிப்பட்ட சுபாவம் கிடையாது. என்னுடைய அறைக்குள்ளேயே அவர் வருவதில்லை. ஆனாலும், பின்னால் நடந்ததை எண்ணிப் பார்க்கும் போது, முதலில் நான் சந்தேகப்பட்டது தான் உண்மையோ என்றும் தோன்றுகிறது.
கடைசியில், நான் என் தகப்பனாருக்குக் கடிதம் போடவேயில்லை. அதற்குள்ளேயே நான் எதிர்பாராத அந்த விபரீதச் சம்பவம் - என் வாழ்க்கையை அடியோடு மாற்றிய நிகழ்ச்சி நடந்து விட்டது.
இரவு நேரங்களில் என் கணவர் வெகு நேரம் புத்தக அறையில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பார். நான் படுக்கை அறையில் கட்டிலில் படுத்துப் புரண்டு கொண்டிருப்பேன். சில சமயம் அழுது கொண்டே தூங்கி விடுவேன். அவர் வரும் போது விழித்துக் கொண்டிருந்தாலும், தூங்குவதுபோல் ஜாடை செய்வேன். அவர் வந்து படுத்து ஐந்து நிமிஷத்தில் காடாந்த நித்திரையில் ஆழ்ந்து விடுவார்.
அன்று இரவு வரும் போது அந்த மாதிரி தான் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன். அவர் என் தலைமாட்டில் வந்து நின்ற போது எனக்குச் சற்று வியப்பாயிருந்தது. இதென்ன ஒரு நாளும் இல்லாத திருநாள்? எதற்காக இங்கே வந்து நிற்கிறார்? அடுத்த விநாடி, அவருடைய கரம் என்னுடைய நெற்றியை தொட்டது. இன்னும் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க மூச்சை அடக்கிக் கொண்டிருந்தேன். ஆச்சரியம்! ஆச்சரியம்! அவர் குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டார்! கல்யாணம் ஆனதிலிருந்து, ஒரு தடவையாவது இம்மாதிரி அவர் செய்ததை நான் அறியேன்.
பிறகு அவருடைய காலடிச் சத்தம் கேட்கவே கண்ணைச் சிறிது திறந்து பார்த்தேன். அவர் கதவை மெதுவாய்த் திறந்து கொண்டு வெளியே போனார். எனக்கு என்னமோ வயிற்றில் பகீர் என்றது. இன்னதென்று தெரியாத பீதி உண்டாயிற்று. சற்று உற்றுக் கேட்டேன். வாசற் கதவு திறக்கும் சத்தம் வெகு இலேசாகக் கேட்டது.
உடனே பரபரப்புடன் எழுந்திருந்தேன். அவருடைய அறைக்கு ஓடினேன். அவர் மேஜை மீது ஒரு கடிதம் எழுதி வைத்து, அதன் மேல் பாரமும் வைத்திருந்தது. பிரித்துப் பார்த்தேன். நான் பயந்தபடியே தான் அதில் எழுதியிருந்தது. இரண்டே இரண்டு வரிதான்!
"அன்பார்ந்த அம்முலுவுக்கு,
உனக்குப் பரிபூரண விடுதலை கொடுத்து விட்டு நான் போகிறேன். நீ சௌக்கியமாக இருப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்திருக்கிறேன்!
இப்படிக்கு
...."
கடிதத்தை அப்படியே போட்டு விட்டு, நான் வாசற்பக்கம் ஓடினேன். தெரு முனையில் அவருடைய வெள்ளை வேஷ்டி நட்சத்திர வெளிச்சத்தில் இலேசாகத் தெரிந்தது. அந்தத் திசையை நோக்கி ஓடினேன். அப்போது மேற்காற்று நாள்; ஹோ என்ற இறைச்சலுடன் காற்று 'விர் விர்' என்று அடித்துக் கொண்டிருந்தது. புழுதியை வாரி மேலே அடித்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் தலைவிரி கோலமாக ஓடினேன். தெருவில் ஒரு பிராணி கிடையாது. அந்தக் காற்றுக்கும் புழுதிக்கும் பயந்து தெரு நாய்கள் கூட வீட்டுத் திண்ணையில் பதுங்கிக் கிடந்தன போலும்! நான் நினைத்தபடியே அவர் தெரு முனையில் இருந்த சந்தில் திரும்பினார்.
வேகவதி நதிக்குப் போகும் சந்து தான் அது. நானும் அந்தச் சமயத்தில் திரும்பப் போனேன். அவர் நதிக்கரையை அடைந்தார். நேரே நதியில் இறங்கி விட்டார்; நதியில் பிரவாகம் பூரணமாய்ப் போய்க் கொண்டிருந்தது. காற்றின் வேகத்தினால் பிரம்மாண்டமான அலைகள் கிளம்பிக் கரையை மோதிக் கொண்டிருந்தன. நான் நதிக்கரையை அடைந்த போது அவர் வெள்ளத்தில் மார்பு அளவு ஜலத்துக்குப் போய் விட்டார். எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிற்று. கூச்சல் போட வரவில்லை. ஒரு கணம் மங்கிய இருட்டில் அவர் தலை மட்டும் வெள்ளத்தின் மேல் தெரிவது போலிருந்தது! அடுத்த கணம் தலையும் வெள்ளத்துக்குள்ளே போய்விட்டது. அப்புறம் ஒரே அந்தகாரந்தான்!
சொல்ல முடியாத பீதி என்னைப் பற்றிக் கொண்டது. திரும்பி வீட்டை நோக்கி ஓடினேன்; கண் தெரியாமல் குருட்டாம் போக்காய் ஓடினேன். வழியில் பலமுறை தடுக்கி விழுந்தேன்! வீட்டுக்கு எப்படிப் போய்ச் சேர்ந்தேனோ தெரியாது. அறைக்குள் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டு தரையில் விழுந்தேன். மனத்தினால் ஒன்றுமே சிந்திக்க முடியவில்லை. தூக்கமும் இல்லாமல், விழிப்பும் இல்லாமல் உணர்ச்சியேயில்லாமல் மரக்கட்டையைப் போல் கிடந்தேன். ஆனால், மார்பு மட்டும் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. அந்த அடிப்பானது, 'விடுதலை விடுதலை விடுதலை' என்ற பல்லவிக்குத் தாளம் போடுவது போலிருந்தது.
------------
3. வெள்ளித்திரை
நாளைய தினம் அமாவாசை!
சென்ற மூன்று இரவுகளில் நான் எழுதியதையெல்லாம் இன்று மத்தியானம் படித்துப் பார்த்தேன். இடையிடையே சில சம்பந்தமில்லாத சொற்களும், அர்த்தமில்லாத வாக்கியங்களும், குழப்பமான எழுத்துக்களும் காணப்பட்டன. அவற்றையெல்லாம் அடித்துச் சரிப்படுத்தினேன்.
பகவானே! நாளைய இராத்திரி வரையில் எனக்கு நல்ல நினைவு இருக்க வேண்டும். பிறகு வேகவதியில் அடைக்கலம் புகுந்து உன் பாதாரவிந்தத்தை வந்து அடைவேன்.
மேலே கூறிய விபரீத சம்பவம் நடந்த போது, அப்பா சென்னைப் பட்டணத்தில் என் இன்னொரு அக்கா வீட்டில் இருந்தார். என் தந்தியைப் பார்த்துவிட்டு, அவர் ஓடி வந்தார்; நல்லவேளையாக, என் கணவர் எழுதி வைத்த சீட்டைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதை அவரிடம் கொடுத்தேன். அன்றிரவு நான் கண்டதை அப்பாவிடம் கூடச் சொல்லவில்லை.
அப்பா அந்தக் கடிதத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று விஷயத்தைத் தெரிவித்தார். போலீஸ்காரர்கள் ஏதேதோ முயற்சி செய்து பார்த்ததாகவும் தகவல் ஒன்றும் தெரியவில்லையென்றும் சொன்னார்கள்.
சில சமயம் வெள்ளத்தில் போனவர்களின் உடல்கள் கரையில் ஒதுங்குவது வழக்கமல்லவா? அந்த மாதிரி அவருடைய உடல் ஒதுங்குமோ என்று சில சமயம் நான் எண்ணி நடுங்குவேன். ஒரு வாரம் வரையில் அம்மாதிரி எதுவும் செய்தி வராமலிருக்கவே, இந்தப் பாவி உள்ளத்தில் ஒருவித அமைதி உண்டாயிற்று. ஏனெனில், அவர் நிச்சயமாக இறந்த செய்தி தெரிந்தால் என்னை இல்லாத அலங்கோலங்கள் எல்லாம் செய்து விடுவார்கள் அல்லவா? அதற்காகத்தான் பயந்தேன்.
சில நாளைக்குப் பிறகு அப்பா என்னைச் சென்னைப் பட்டணத்துக்கு அழைத்துப் போனார். அங்கே மீனா அக்கா வீட்டில் தங்கினோம். மீனா அக்காவின் புக்ககத்தில் எல்லோரும் குஷிப் பேர்வழிகள். நாகரிக வாழ்க்கையில் பற்று உடையவர்கள். அதோடு சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஓயாமல் சங்கீதம், நாட்டியம், நாடகம், சினிமா இவைகளைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருக்கும். இப்படிப் பட்ட இடத்திலே இருந்தால், நான் என்னுடைய துக்கத்தை மறந்திருக்க முடியும் என்று என் தகப்பனார் எண்ணினார். அதோடு பெண்களின் கல்வி ஸ்தாபனம் ஒன்றில் என்னைச் சேர்ந்து படிக்கச் செய்யலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது.
மீனா அக்கா வீட்டில், முதலில் சில நாள் என்னிடம் எல்லாரும் அனுதாபத்துடன் நடந்து கொண்டார்கள்; துக்க முகத்துடனே பேசினார்கள். வீட்டிலேயே சில நாள் கலகலப்புக் குறைவாயிருந்தது. நாளடைவில் நிலைமை மாறிப் பழையபடியே சிரிப்பும் விளையாட்டுமாயிருக்கத் தொடங்கினார்கள். எல்லாரும் சந்தோஷமாயிருக்கும் இடத்தில் நான் மட்டும் முகத்தைத் தூக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. என்னுடைய இளம் பிராயத்துக் குதூகல சுபாவம் மறுபடியும் மேலோங்கியது. எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகவும், சிரிக்கவும் தொடங்கினேன். அதோடு இல்லை; பாடவும் தொடங்கினேன்.
மீனு அக்காவின் வீட்டுக்கு ஒரு சிநேகிதர் அடிக்கடி வருவார். அவர் பெயர் பட்சிராஜன். மீனு அக்காவின் மைத்துனருடன் அவர் காலேஜில் ஒன்றாய்ப் படித்தவராம். தமிழ் டாக்கிகள் ரொம்பக் கேவலமாயிருப்பது பற்றியும் அவற்றைச் சீர்திருத்த வேண்டியதைப் பற்றியுமே அவர் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார். பாட்டில் அவருக்கு ரொம்பப் பிரியம். ஒருநாள் நான் பாடுவதைக் கேட்டு விட்டு அவர், "இது யார் இவ்வளவு அற்புதமாய்ப் பாடுகிறது? என்ன மதுரமான சாரீரம்? மைக்குக்கு எவ்வளவு பொருத்தமான குரல்" என்று சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. எனக்குப் புளகாங்கிதம் உண்டாயிற்று. நாளடைவில் என்னுடைய கூச்சத்தை விட்டு, புருஷர்களுக்கு முன்னால் பாட ஆரம்பித்தேன். நான் பாடும் போது அவர் அப்படியே மெய் மறந்து கேட்பார். அவருக்குப் புகைப்படமெடுக்கத் தெரியும். ஒரு நாள் கேமரா எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் எல்லோரையும் படம் எடுத்தார். "உங்களையும் ஒன்று எடுத்து வைக்கட்டுமா?" என்றார்; முதலில் நான் மறுத்தேன். எல்லோரும் வற்புறுத்தியதின் பேரில் சம்மதித்தேன்! மறுநாள் அவர் படத்தை எடுத்துக் கொண்டு வந்து, "உங்களுடைய குரல்தான் 'மைக்'குக்கு ஏற்றது என்று நினைத்தேன், முகமும் திரைக்காகவே ஏற்பட்டது போலிருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே கொடுத்தார். அதற்கு முன்னால் என்னை நன்றாகப் படம் எடுத்ததேயில்லை! அவர் எடுத்த படத்தைப் பார்த்ததும் எனக்கே கர்வமாயிருந்தது; "நாம இவ்வளவு அழகாகவாயிருக்கிறோம்?" என்று அதிசயித்தேன். "இந்த அழகினால் என்ன பிரயோஜனம்?" என்ற ஏக்கமும் மனத்தில் உண்டாயிற்று.
"அதற்குப் பிறகு அவர் இன்னும் பல தடவை என்னைப் படம் பிடித்தார்; அதோடு, "உங்களைப் போன்றவர்கள் சினிமாவில் சேர்ந்தால் தான், தமிழ் சினிமாவுக்கு விமோசனம்" என்று அடிக்கடி சொல்லி வந்தார். நானும் என் மனதில், "பிரபல நட்சத்திரம் ஆவதற்கே நான் பிறந்திருக்கிறேன்" என்று தீர்மானித்துக் கொண்டேன். டாக்கியில் நடிப்பதைப் பற்றியே கனவு காண ஆரம்பித்தேன்.
இம்மாதிரி என் மனம் சபலப்பட்டிருப்பதை என் அக்கா எப்படியோ தெரிந்து கொண்டாள். சில சமயம் நானும் பட்சிராஜனும் பேசிக் கொண்டிருப்பதை அவள் ஒட்டுக் கேட்டதாகத் தெரிகிறது. அவள் என்னைத் திட்ட ஆரம்பித்தாள். எனக்குக் கோபமாய் வந்தது. "உனக்கு என்ன? குழந்தை குட்டிகளுடனும் ஆசைக் கணவனுடனும் சௌக்கியமாயிருக்கிறாய். எனக்கு மட்டும் வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டாமா? என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டேன். ஒரு நாள் விஷயம் முற்றி விட்டது. அக்கா பட்சிராஜனிடம் "சினிமா, சினிமா என்று சொல்லி ஏன் அவள் மனத்தைக் கெடுக்கிறீர்கள்? இப்படியெல்லாம் பேசுவதாயிருந்தால், நீங்கள் இந்த வீட்டுக்கு வரவேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே நான், "அவர் இந்த வீட்டுக்கு வரக் கூடாதென்றால் நானும் போய்விடுகிறேன்" என்றேன். அக்கா திகைத்துப் போனாள். கடைசியில், "உங்கப்பா வரட்டும்; அவரைக் கேட்டுக் கொண்டு எது வேணுமானாலும் செய்" என்றாள். அச்சமயம் ஹைதராபாத்துக்குப் போயிருந்த அப்பாவுக்குக் கடிதம் எழுதினாள்.
அப்பா வந்த பிறகு சில நாள் அவருக்கும் எனக்கும் ஒரே போராட்டமாயிருந்தது. "நம் குலத்தில் உண்டா? கோத்திரத்தில் உண்டா? சினிமாவில் நடிக்கவாவது? கூடவே கூடாது!" என்று சொன்னார். "எந்த விதத்திலாவது பெயர் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையே எனக்கு வேண்டியதில்லை" என்றேன் நான். கடைசியில் நான் தான் வெற்றி பெற்றேன். என்னுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாயிருந்தவர் பட்சிராஜன் தான். அவரை எப்படியோ அப்பாவுக்குப் பிடித்து விட்டது. ஒரு நாள் பட்சிராஜன் வந்து, குடும்ப ஸ்திரீகளையே பெரும்பாலும் நடிகைகளாகத் தேர்ந்தெடுத்து ஒரு டாக்கி எடுக்கப் போவதாகவும், எங்களுக்குச் சம்மதமானால் என்னைக் கதாநாயகியாகத் தேர்ந்தெடுப்பதாகவும் சொன்னபோது, அப்பா தம் சம்மதத்தைக் கொடுத்துவிட்டார். அன்றிரவு அளவிறந்த சந்தோஷத்தினால் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.
பின்னால் நான் எவ்வளவோ ஏமாற்றத்துக்கும் மனத்துயருக்கும் ஆளாக வேண்டியிருந்தது. கதாநாயகி வேஷம் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு மட்டமான வேஷந்தான் கிடைத்தது. இந்தத் தடவை அந்த வேஷத்தில் நடித்து நல்ல பெயர் வாங்கி விட்டால், அடுத்த தடவை கதாநாயகி வேஷம் கிடைக்குமென்று பட்சிராஜன் தேறுதல் கூறினார். எதனாலோ அவர் பேச்சில் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டாயிற்று. உண்மையில் அவர் சொன்னபடியே நடக்கவும் நடந்தது. முதல் டாக்கியில் மட்டமான வேஷத்திலேயே நான் நல்ல பெயர் சம்பாதித்தேன். அது வெளியான சில நாளைக்குள்ளேயே, இன்னொரு டாக்கிக்குக் கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தார்கள். பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக ஒப்பந்தம் நடந்தது. பட்சிராஜனிடம் எனக்கு அளவிறந்த நன்றியுண்டாயிற்று. "உங்களால் அல்லவா எனக்கு இவ்வளவு பெருமையும் வந்தது?" என்று ஆயிரம் தடவை சொன்னேன். என்னால் ஒன்றுமே நடக்கவில்லை உங்களுடைய முகவெட்டுத்தான் காரணம்; உங்களுடைய சாரீரந்தான் காரணம்" என்று சொல்வார்.
இரண்டாவது டாக்கி எடுப்பதற்காக நாங்கள் கல்கத்தா போனோம். அங்கே ஐந்து மாத காலம் தங்க வேண்டியதாக ஏற்பட்டது. இந்தப் படம் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில், நடந்த ஒரு சம்பவம் என் மனத்தில் எப்படியோ மிக ஆழமாய்ப் பதிந்தது. "இது என்ன பிரமாத விஷயம்?" என்று நானே பல தடவை எண்ணமிட்டிருக்கிறேன். என்றாலும் எதனாலோ அச்சம்பவம் என் மனத்தில் மிகவும் முக்கியத்தை அடைந்துவிட்டது.
ஒரு நாளைக்கு ஸ்டுடியோவில், "இன்றைக்கு யாரோ ஒரு பிரமுகர் ஷுட்டிங் பார்க்க வரப் போகிறார்" என்று பிரஸ்தாபம் வந்தது. அவரை வரவேற்பதற்காக ஏற்பாடுகள் நடந்தன. வரப்போகிறவர்களின் பெயர் 'பாபு சம்பு பிரஸாத்' என்று சொன்னார்கள். "அவர் என்ன அவ்வளவு பெரிய மனிதரா? எதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம்!" என்று விசாரித்தேன். பாபு சம்பு பிரஸாத் மகா மேதாவி என்றும் அவருடைய ஆராய்ச்சிகள் அவரை உலகப் பிரசித்தமாக்கியிருக்கின்றன வென்றும், சமீபத்தில் அவருக்குச் சர்வகலாசாலையார் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என்றும் சொன்னார்கள். பட்சிராஜனே அவரைப் பற்றிப் பிரமாதமாகப் பேசினார். "ஒருவேளை இங்கே ஸெட்டுக்கு வந்தாலும் வருவார். அப்போது உன்னை அறிமுகப்படுத்தப் போகிறேன். நீ அவரிடம் தைரியமாகப் பேச வேண்டும்" என்றார். "அவர் என்ன பாஷையில் பேசுவார்?" என்று கேட்டேன். "இந்த வங்காளிகளே சுய பாஷையில் அபிமானம் கொண்டவர்கள். எப்போதும் வங்காளியில் தான் பேசுவார்கள். ஆனால் நாம் தென்னிந்தியர்கள் என்று தெரிந்தால் இங்கிலீஷில் பேசலாம். உனக்குத் தான் தெரியுமே? ஏதாவது கேட்டால் பளிச்சென்று பதில் சொல்லு" என்றார்.
அவ்வளவு பெரிய உலகப் பிரசித்தமான மேதாவியைப் பார்க்க நானும் ஆவலுடன் இருந்தேன். கடைசியாக அவர் மத்தியானம் வந்தார். வங்காளிகளில் பெரும்பாலாரைப் போல் அவரும் நீண்ட தாடி வளர்த்துக் கொண்டிருந்தார். அவருடன் ஒரு பெரிய கும்பலே வந்தது. ஸ்டுடியோ நிர்வாகிகள் அவருக்கு ரொம்பவும் மரியாதை செய்து எல்லாவற்றையும் காட்டிக் கொண்டு வந்தார்கள். எங்களுடைய ஸெட்டுக்கு அவர் வந்ததும், பட்சிராஜன் அவரை வரவேற்று, என்னையும் அறிமுகப்படுத்தி வைத்தார். "இவர் உயர் குடும்பத்துப் பெண். கலையின் மேல் உள்ள ஆர்வத்தினாலேயே சினிமாவில் நடிக்க முன்வந்திருக்கிறார்" என்று அவர் கூறிய போது எனக்கு மிகவும் பெருமையாயிருந்தது. அவருக்கு மனத்திற்குள் நன்றி செலுத்தினேன். அப்போது அந்தப் பிரமுகர், என்னைப் பார்த்து, "நீங்கள் உயர் குடும்பத்துப் பெண்ணாயிருந்து இம்மாதிரி நடிப்புக் கலையில் சிரத்தை கொண்டது மிகவும் சந்தோஷிக்க வேண்டிய காரியம். உங்களைப் போன்றவர்களால் தான் சினிமா உத்தாரணம் ஆக வேண்டும். ஆனால், சினிமா தொழில் ஒழுக்கம் கெட்டுப் போகிறதென்று சாதாரணமாய் ஓர் அபிப்பிராயம் இருந்து வருகிறது. உங்களைப் போன்றவர்கள் அதைப் பொய்யாக்க வேண்டும்" என்றார். இதையெல்லாம் இங்கிலீஷில்தான் சொன்னார். என்னை என்னவோ செய்தது. அவருக்கு பதில் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், நா எழவில்லை. பட்சிராஜன் என்னைப் பார்த்து, "ஏதாவது பதில் சொல்லுங்கள்" என்றார். "எனக்காக நீங்களே சொல்லுங்கள்" என்றேன் நான். உங்களுடைய புத்திமதிக்காக மாலதி ரொம்பவும் வந்தனம் செலுத்துகிறாள்" என்றார் பட்சிராஜன். அப்போது பாபு சம்பு பிரஸாத் அவருடைய கூரிய கழுகுக் கண்களால் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டுப் போய்விட்டார். அந்த மேதாவிக்கு நான் அச்சமயம் வந்தனம் செலுத்தாவிட்டாலும் இப்போது செலுத்துகிறேன். அவருடைய புத்திமதி என் விஷயத்தில் அநாவசியமென்றாலும், எவ்விதக் காரணமும் இல்லாமல், முன்பின் தெரியாத என்னிடம் அவர் சிரத்தை எடுத்துக் கொண்டாரல்லவா? அவருடைய பார்வையையோ, பேச்சையோ என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை.
என் இரண்டாவது டாக்கியினால் என் புகழ் பிரமாதமாக வளர்ந்து 'ஓஹோ' என்று ஆகிவிட்டது. மாலதியின் படம் வராத பத்திரிகையே கிடையாது ('மாலதி' என்னுடைய வெள்ளித்திரைப் பெயர்; பட்சிராஜன் அளித்த பெயர்) தமிழ்நாட்டுப் பட்டணங்களின் சுவர்களில் எல்லாம் மாலதியின் புன்னகை வதனம் காட்சி தந்தது. இப்படி நான் புகழின் சிகரத்தையடைந்திருந்த சமயத்திலே தான், என் தந்தை என்னை இவ்வுலகில் அநாதையாக விட்டு விட்டுக் காலமானார். வெகு நாளாக எங்கள் குடும்பத்திலிருந்த சமையற்காரியைத் தவிர, நான் வேறு துணையில்லாதவளானேன்.
ஆனால் அதிக நாள் துணையின்றி இருக்கவில்லை. இரண்டாவது டாக்கியில் என் புகழ் பெருகியதிலிருந்து அதுவரை என்னைப் பகிஷ்காரம் செய்திருந்த உறவினர்கள் எல்லாம் என்னைத் தேடி வந்து உறவு கொண்டாடத் தொடங்கினார்கள். வெகு தூரத்து பந்துக்களெல்லாம் வந்தார்கள். சிலர் வேலைக்காக வந்தார்கள். சிலர், டாக்கியில் சேர்வதற்குச் சிபாரிசுக்காக வந்தார்கள். வேறு சிலர் பொருளுதவி தேடி வந்தார்கள். சிலர், பிரபல நட்சத்திரத்தின் பந்து என்ற பெருமையை நிலை நாட்டிக் கொள்வதற்காகவே வந்தார்கள். "அபலைப் பெண்ணாச்சே?" என்று இரக்கப்பட்டு வரவு செலவுக் கணக்கைக் கவனித்து ஒழுங்குபடுத்துவதற்கு அநேகர் சித்தமாயிருக்கிறார்கள்!
இதனாலெல்லாம் நான் அடைந்த தொல்லைகளைச் சொல்லி முடியாது. அவர்களை எல்லாம் வைத்துச் சமாளிப்பது பெருங் கஷ்டமாயிருந்தது. இவ்வளவு தொல்லைகளுக்கிடையில், எனக்கு உண்மையில் உற்ற சிநேகிதராக நடந்து கொண்டவர் பட்சிராஜன் ஒருவர் தான்.
அவரால் எனக்கு ஒரு விதமான கஷ்டமும் கிடையாது! எல்லாவிதத்திலும் ஒத்தாசையாகத்தான் இருந்தார். அப்பா காலமான பிறகு அவரிடம் தான் என் பணம் வரவு செலவுகளை ஒப்புவித்திருந்தேன். அவரும் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டு அடிக்கடி என்னிடம் கணக்கு ஒப்புவித்து வந்தார்.
எனக்கும் அவருக்கும் இருந்த உறவைப் பற்றி ஊரில் பல வகையாகப் பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவரோ என்னுடைய மனப் போக்கை அறிந்து, என்னை மிகவும் மரியாதையாக நடத்தி வந்தார். ஒரு தடவையாவது அவர் வரம்பு மீறி நடந்ததில்லை. என் மனத்தில் மட்டும் சில காலமாக ஒரு சஞ்சலம் தோன்றியிருந்தது. 'எத்தனை நாளைக்கு இம்மாதிரி நாதனற்றவளாக இருப்பது? இவ்வளவு தூரம் நமக்கு உதவி செய்திருப்பவரை ஏன் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது?' என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று.
இப்படியிருக்கையில் ஒருநாள் பட்சிராஜன் அந்த ஆச்சரியமான - என்னை ஒரேயடியாகப் பெருமையின் சிகரத்துக்குக் கொண்டு போன செய்தியுடன் வந்தார். "மாலதி! இன்று தான் என் உள்ளம் குளிர்ந்தது. உன்னுடைய அடுத்த காண்டிராக்ட் ஒரு லட்சத்திற்குக் குறையக் கூடாது என்று தீர்மானித்தேன். இதோ ஒரு லட்சத்துப் பத்தாயிரத்துக்குக் காண்டிராக்ட்!" என்றார். நான் பிரமை பிடித்தவள் போலானேன். பத்து நிமிஷம் வரையில் என்னால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. பிறகு "இது கனவில்லையே? டாக்கியில் ஒரு காட்சி இல்லையே?" என்று கேட்டேன். "இதோ பார்!" என்று ஒரு நகல் ஒப்பந்தத்தில் எண்ணாலும் எழுத்தாலும் 'ஒரு லட்சத்துப் பத்தாயிரம்' என்று போட்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டினார். "நல்ல நாள் பார்த்து கையெழுத்துப் போட வேண்டியது தான் பாக்கி" என்றார். நான் அவருடைய கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணில் நீர் ததும்ப, நாத் தழுதழுக்க, "என் உயிர் உள்ளவரையில் நான் உங்களை மறக்க மாட்டேன்" என்றேன். ஆம்; அவரை என் உயிர் உள்ளவரையில் - நாளை நள்ளிரவு வரையில் - என்னால் மறக்க முடியாது! ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் செய்த அற்புதமான காரியத்தையும் நான் மறக்க முடியாது தான்!
சீக்கிரத்திலேயே மேற்படி ஒப்பந்தம் முடிந்தது. கையெழுத்து ஆயிற்று. தென்னிந்தியாவின் டாக்கித் தொழிலை முழுவதும் கைப்பற்றுவதென்று இலங்கையிலிருந்து ஒரு முதலாளி ஏராளமான பணத்துடன் வந்திருந்தார். தென்னிந்தியாவிலுள்ள பிரபல நட்சத்திரங்களையெல்லாம் அவர் ஒப்பந்தம் செய்து கொண்டு வந்தார். அவர் தான் என்னையும் மேற்படி பெருந் தொகைக்கு ஒப்பந்தம் செய்தார். நாற்பதினாயிரம் ரூபாய் அட்வான்சும் கொடுத்தார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு - டாக்கி எடுப்பதற்குப் பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அந்த இடி போன்ற செய்தி வந்தது. என் ஆகாசக் கோட்டை இடிந்து தூள் தூளாயிற்று.
பட்சிராஜன் திடீரென்று காணாமற் போய்விட்டார்!
சினிமா உலகில் 'எக்ஸ்ட்ரா' பெண்கள் என்று ஓர் இனம் உண்டு. தோழிப் பெண்கள் முதலிய சில்லறை வேஷங்களில் நடிப்பதற்கு அவர்களை அன்றாடம் சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்வார்கள். அப்படிப்பட்ட 'எக்ஸ்ட்ரா' பெண் ஒருத்தியுடன் பட்சிராஜன் அந்தர்த்தியானமாகி விட்டார்!
அவர் மட்டும் அந்தர்த்தியானமாகவில்லை. பாங்கியில் இருந்த என் பணம் ரூ.40,000மும் அவரோடு அந்தர்த்தியானமாகி விட்டது.
பட்சிராஜனை நான் பரிபூரணமாய் நம்பி, அவரிடமே என் வரவு செலவை ஒப்புவித்திருந்தேன் என்று சொன்னேனல்லவா? புதிய ஒப்பந்தப்படி வந்த அட்வான்ஸ் தொகையை அவர் தம் பேரிலேயே பாங்கில் போட்டுக் கொண்டிருந்தார். அவரே அதை வாங்கிக் கொண்டும் போய் விட்டார்.
"ஆகா! இந்தப் பட்சிராஜன் எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனிதர்? வேறொரு மனிதனாயிருந்தால், நாம் இப்படித் தன்னந்தனியாய் அவரையே நம்பி இருப்பதற்கு இவ்வளவு நேர்மையாய் இருப்பானா? நம்மிடம் ஒன்றையுமே கோராமல் இப்படி அன்புடன் இருக்கிறாரே? இவர் தெய்வப் பிறவிதான்!" என்று பலமுறை நான் எண்ணியது உண்டு.
பட்சிராஜன் என்னத்தைக் கோரி என்னிடம் அவ்வளவு அன்பாயிருந்தார் என்பது இப்போதுதான் தெரிந்தது.
------------
4. வீழ்ச்சி
பட்சிராஜன் பறந்து போய் ஏறக்குறைய இப்போது ஒன்றரை வருஷமாகிறது. இந்த ஒன்றரை வருஷத்தில் என்னுடைய வாழ்க்கையை நினைத்தாலே எனக்குப் பயங்கரம் உண்டாகிறது; மூளை குழம்புகிறது.
இலங்கை முதலாளிக்கு எழுதிக் கொடுத்த ஒப்பந்தத்தின்படி டாக்கியில் நடித்தேன். இந்த டாக்கி எடுத்து முடிவதற்குள் ஒரு வருஷத்திற்கு மேலாயிற்று. இந்தக் காலத்தில் முதலாளி, டைரக்டர், ஸ்டூடியோ மானேஜர், பிரதான ஆண் நடிகர் எல்லோருமாகச் சேர்ந்து என்னைப் படுத்தி வைத்த பாட்டைச் சொல்ல முடியாது. ஆண் துணையில்லாமல் ஒரு அபலை ஸ்திரீ அகப்பட்டுக் கொண்டால், உலகத்தில் - அதுவும் சினிமா உலகத்தில் - அவளை என்ன பாடுபடுத்தி வைப்பார்கள் என்னும் பாடத்தை நன்றாக அறிந்து கொண்டேன். என்னுடைய பரம விரோதிக்குக் கூட அப்பேர்ப்பட்ட கதி வரவேண்டாமென்று பகவானைப் பிரார்த்திக்கிறேன்.
தொல்லை பொறுக்க முடியாமல், பல தடவை "என்னால் முடியாது" என்று நின்று விடத் தோன்றியது. ஆனாலும், பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்தேன். டாக்கி முடிந்ததும், அட்வான்ஸு தொகை போகப் பாக்கி பணம் வந்துவிடுமல்லவா? அப்புறம் சினிமாவுக்குத் தலை முழுகி விட்டு 'ராமா கிருஷ்ணா' என்று பகவானைத் தியானித்துக் கொண்டு காலங் கழிக்கலாம். அந்த எண்ணத்திலேதான் பட்சிராஜன் ரூ.40,000 கொண்டு போனதைப் பற்றிக் கூட நான் அதிகம் கவலைப்படவில்லை.
டாக்கியின் முடிவு நெருங்க, எனக்குச் சேர வேண்டிய பாக்கி பணத்தைச் சரியாகக் கொடுப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு வந்தது. எனவே, டாக்கி முடிவதற்குள் இன்னும் ஒரு பகுதியாவது வாங்கி விட வேண்டுமென்று நினைத்து ஒரு நாள் முதலாளியின் ஆபீஸுக்குப் போய்ப் பணம் வேண்டுமென்று கேட்டேன். அவர் ஒரு பேய்ச் சிரிப்பு சிரித்து விட்டு, "இந்த டாக்கி முடிந்து அடுத்த டாக்கியும் முடியும் வரை பணம் என்ற பேச்சைப் பேசாதே!" என்றார். எனக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. "என் உயிர் போனாலும் நான் இன்னொரு டாக்கியில் நடிக்க மாட்டேன்" என்றேன். "அப்படியானால் ஒப்பந்தப்படிஅட்வான்ஸு தொகை ரூ.40,000த்தையும் கக்கிவிட வேண்டும்!" என்றார். அப்போதுதான் எனக்கு விஷயம் தெரிந்தது. அந்தப் பாதகன் பட்சிராஜன் என்னை எப்பேர்ப்பட்ட படுகுழியில் தள்ளிவிட்டுப் போய்விட்டான் என்று புரிந்தது. ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் ஒரு டாக்கிக்கு அல்ல, நாலு டாக்கிக்கு என்று தெரிந்தது.
இந்த செய்தியினால் திகைத்துப் போய் நான் வீடு திரும்பினேன். முதலில் நான் நம்பவே இல்லை. வீடு திரும்பியதும், ஒப்பந்தத்தை எடுத்து வாசித்துப் பார்த்தேன். அதில் நாலு படங்களுக்கு என்று தான் கண்டிருந்தது. என் கொஞ்சப் பிராணனும் போய் விட்டது. நாலு படங்களில் நடிப்பதா? அதுவும் இந்தப் பாவிகளிடம்? ஒரு நாளும் இல்லை; உயிர் போனாலும் இல்லை.
இன்னொரு நாள் முதலாளியிடம் பேசினேன். நல்ல வார்த்தையாக என்னை ஒப்பந்தத்திலிருந்து விடுதலை செய்து விடும்படி கேட்டேன். அவர் பிடிவாதமாக 'முடியாது' என்றார். மேலும் நான் வற்புறுத்தியபோது, "அட்வான்ஸு தொகை ரூ.40,000த்தையும் கொண்டுவை! விடுதலை செய்கிறேன்" என்றார். அதற்கு "நான் எங்கே போவேன்? பட்சிராஜன் கொண்டுபோய் விட்டாரே?" என்றேன். "எனக்குத் தெரியும், உங்கள் மோசடியெல்லாம்! நீங்கள் இரண்டு பேரும் கலந்து பேசிக் கொண்டு, இப்படித் தகிடுதத்தம் செய்யப் பார்க்கிறீர்கள்!" என்றார்.
அப்போது எனக்கு ஆவேசம் வந்துவிட்டது. அந்த ஆவேசத்தில் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் இரைந்து கத்தினேன். மேலே பேச்சு முற்ற முற்ற என்னவெல்லாமோ சொல்லி விட்டேன். "எல்லோரையும் குத்திக் கொன்று விடுவேன்." "ஸ்டுடியோவைக் கொளுத்தி விடுவேன்" என்று சொன்னதெல்லாம் சொப்பனத்திலே சொன்னது போல் எனக்குப் பிற்பாடு ஞாபகம் வந்தது. இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
அதுமுதல் நான் ஸ்டூடியோவுக்கு வர மறுத்து விட்டேன். ஒரு நாளைக்கு ஸ்டூடியோ மானேஜர் வந்து என்னை நல்ல வார்த்தை சொல்லி அழைத்துப் போனார். முதலாளியின் ஆபீஸில் போய் நான் உட்கார்ந்ததும் என்னுடைய குரல் அடுத்த அறையிலிருந்து வருவதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன். முன்னொரு நாள் முதலாளியிடம் இதே ஆபீஸில் பேசியதெல்லாம் தெளிவாகக் கேட்டது. "எல்லோரையும் குத்திக் கொன்று விடுவேன்" "ஸ்டூடியோவைக் கொளுத்தி விடுவேன்" என்று நான் கத்தியதெல்லாம், திரும்பக் கேட்டது!
எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் எடுத்து விட்டது. அப்போது அந்த முதலாளி யமன் சொன்னான். 'உனக்கு இருபது வருஷங் கடுங்காவல் தண்டனை விதிப்பதற்கு இதோ சாட்சியம் இருக்கிறது. என்ன சொல்கிறாய்? சொன்னபடி கேட்டுக் கொண்டு நாலு படங்களில் நடிக்கிறாயா? அல்லது இன்றைக்கே அரஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கட்டுமா?
நான் பதில் ஒன்றும் சொல்லாமல் பாதிப் பிராணனுடன் வீடு போய்ச் சேர்ந்தேன். ஆனால், என் மனது மட்டும் இரும்பாயிற்று. அன்று வேண்டுமென்றே எனக்கு ஆத்திரமுண்டாக்கிக் கண்டபடி பேசும்படி செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் ஒலிப்பதிவு செய்ய முன் கூட்டியே ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். தாங்கள் பேசியதையெல்லாம் வெட்டியெறிந்து விட்டு, என் பேச்சை மட்டும் வைத்துக் கொண்டு என்னைப் பலவந்தப் படுத்தப் பார்க்கிறார்கள். என்ன கேவலமான சூழ்ச்சி. என்ன இரக்கமற்ற அக்கிரமம்!
"நமக்காச்சு; இவர்களுக்காச்சு. என்ன ஆனாலும் இனிமேல் படத்தில் மட்டும் நடிப்பதில்லை" என்று உறுதி செய்து கொண்டேன். இதை எப்படிச் சாதிக்கலாம் என்று அன்றிரவெல்லாம் ஒரு விநாடி கூடக் கண்ணை மூடாமல் சிந்தனை செய்தேன். கடைசியில், ஒரு யுக்தியைக் கண்டு பிடித்தேன்!
வேறொன்றுமில்லை. பல கதைகளில் கதாநாயகிகள் கையாண்டிருக்கும் யுக்திதான். ஆனால் அந்த யுக்தி என் விஷயத்தில் என்ன விபரீதமான பலனைக் கொடுத்திருக்கிறது? ஸ்வாமி! பகவானே!
நல்ல வேளையாக, இன்னும் ஒரு மணி நேரந்தான் பாக்கியிருக்கிறது. இந்த ஒரு மணி நேரம் என் அறிவைத் தெளிவாக வைப்பாய், ஸ்வாமி!
யுக்தி இன்னதென்று சொல்லவும் வேண்டுமா! பைத்தியம் மாதிரி நடிக்கும் யுக்திதான். மறுநாளே அதைக் கையாள ஆரம்பித்தேன். சமையற்கார அம்மாளிடம் மட்டும் விஷயத்தை அந்தரங்கமாகச் சொல்லி விட்டு மற்றபடி யார் வந்து கேட்டாலும் "ஆமாம்; பட்சிராஜன் பறந்து போய் விட்டார்" என்று பதில் சொல்ல, ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தேன்.
டாக்கி முதலாளி என்னவெல்லாமோ பிரயத்தனம் செய்தார். யார் யாரோ டாக்டர்களையெல்லாம் பிடித்து அனுப்பினார். எல்லோருக்கும் நான் பல்லவியைப் படித்தேன். ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இவ்விதம் நாள் போய்க் கொண்டிருந்தது. என்னைப் போல் கிட்டத்தட்ட உருவமுள்ள ஒருத்தியைப் பிடித்துப் பாக்கிப் படத்தை எப்படியோ முடித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால், முதலாளி மட்டும் என்னை விடுவதாகக் காணவில்லை. மறுபடியும் மறுபடியும் என் உடம்பு எப்படியிருக்கிறதென்று பார்க்க யாரையாவது அனுப்பிக் கொண்டேயிருந்தார்.
என் உடம்பு நன்றாய்த்தானிருந்தது. ஆனால் நாளாக ஆக, என் அறிவுக்குத் தான் ஏதோ ஏற்பட்டு வந்தது. இரவில் தூக்கம் என்பது அடியோடு போய் விட்டது. திடீரென்று இருள் சூழ்ந்தது போல் அறிவு சூனியமாகி விடும். அப்போது என் வாய் மட்டும் ஏதோ பிதற்றிக் கொண்டிருக்கும். நான் பைத்தியம் என்று நடித்தது போக, உண்மையாகவே எனக்குச் சித்தப் பிரமை ஏற்பட்டு வருகிறது என்பதை உணரலானேன். சமையற்கார அம்மாள் என் விஷயத்தில் காட்டிய கவலையிலிருந்து இதைத் தெளிவாக அறிந்து கொண்டேன்!
ஒரு பெரிய பீதி என்னைப் பிடித்துக் கொண்டது. பைத்தியம் முற்றிய ஸ்திரீகள் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் பயங்கர அலங்கோல நிலைமையை நானும் அடைந்து விடுவேனோ? ஒரு நாளும் இல்லை. இப்படிப்பட்ட கதி நேர்வதற்கு முன்னால், அறிவுத் தெளிவு சிறிதேனும் இருக்கும் போதே, என் துயர வாழ்க்கையை முடித்துவிட வேண்டும். இந்த தீர்மானத்துடனே தான் இவ்வூருக்கு வந்து சேர்ந்தேன்.
கதை முடிந்து விட்டது. யாராவது இதைப் பார்ப்பார்களோ? பார்த்து எப்போதாவது பிரசுரிப்பார்களோ, நான் அறியேன். என்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டேன்... இதோ மணி பன்னிரண்டு அடிக்கிறது! கிளம்ப வேண்டியதுதான்.
ஏழு வருஷங்களுக்கு முன்னால் ஓர் அமாவாசை இரவில் இப்படித்தான் இருள் சூழ்ந்திருந்தது! இன்று போலவே தான் அன்றும் மேல் காற்று 'விர் விர்' என்று வீசி வீட்டையே கிடுகிடுக்கச் செய்தது. வேகவதி நதியும் அன்று போலவே இன்றும் நொங்கும் நுரையுமாக அலையெறிந்து போய்க் கொண்டிருந்தது.
"மறு உலகம் என்பது உண்டானால், அங்கே என் கணவரை நான் அவசியம் சந்திப்பேன். அவருடைய பாதங்களில் விழுந்து இந்தப் பாவியை மன்னியுங்கள்" என்று கேட்டுக் கொள்வேன். இதுதான் என் வாழ்க்கையில் கடைசி மனோரதம். இதற்காகத்தான் அதே வேகவதியாற்றுக்கு, அதே நள்ளிரவு நேரத்தில் கிளம்பிச் செல்கிறேன்!
வேகவதித் தாயே! இதோ வந்து விட்டேன். மறு ஜன்மத்தில் உன்னிடம் அடைக்கலம் புகுந்து அமைதி பெறுகிறேன்.
-----------
முடிவு
கனவிலும் நினையாத காரியம் நடந்துவிட்டது. கதைகளிலே கேட்டறியாத சம்பவம் நடந்துவிட்டது. என் வாழ்க்கை புனிதமாகி விட்டது. நான் புத்துயிர் பெற்றேன். என் குருட்டுத் தனத்தினால், நான் இழந்த பாக்கியத்தை மீண்டும் பெற்றேன்.
வாழ்க்கை சோகமயமாயிருந்தபோது, என் கதையை எழுத வேண்டுமென்று தோன்றிற்று; இப்போது அந்த விருப்பம் கொஞ்சமும் எனக்கு இல்லை. ஆனாலும் அவருடைய வற்புறுத்தலுக்காகவே இதை இப்போது எழுதுகிறேன். மேலே நான் எழுதியிருப்பதையெல்லாம் அவர் படித்தார். "பாக்கியையும் எழுதிவிடு; பெயரையும் ஊரையும் மட்டும் மாற்றிப் பிரசுரித்தால் எவ்வளவோ பேருக்கு உபயோகமாயிருக்கலாம்" என்றார்! உபயோகமோ, இல்லையோ, அவர் சொல்லியதற்காக எழுதி விடுகிறேன்.
அன்றிரவு சரியாகப் பன்னிரண்டாவது மணிக்குப் புறப்பட்டு வாசற் கதவைச் சத்தமின்றித் திறந்து கொண்டு வெளியே வந்தேன். என் மனத்தில் ஓர் அதிசயமான அமைதி அப்போதே ஏற்பட்டு விட்டது. தெருவில் அந்த வேளையில் யாராவது வந்து தொலைக்கப் போகிறார்களே என்று சிறு கவலை மட்டும் இருந்தது; ஆனால் ஒரு பிராணியைக் கூடச் சந்திக்கவில்லை.
நதிக்கரையை அடைந்ததும், பின்னால் காலடிச் சத்தம் கேட்டதுபோல் தோன்ற, நெஞ்சில் துணுக்கம் ஏற்பட்டது. "யாராவது வந்து தடுத்து விட்டால்?" என்று நினைத்ததும் கதிகலங்கிற்று. அவசரமாகவே ஜலத்தில் இறங்கினேன். வெள்ளம் பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது. அவ்வளவு நேரமும் மனத்தில் இருந்த தைரியம், துணிச்சல் எல்லாம் எப்படியோ போய், இன்னதென்று சொல்ல முடியாத பீதி ஏற்பட்டது. குளிரினால் நடுங்கிய உடம்பு, பீதியினால் அதிகம் நடுங்கிற்று. என்னையறியாமல் பற்களை நரநரவென்று கடித்துக் கொண்டேன். இவ்வளவுடன் தண்ணீரில் மேலும் மேலும் இறங்கிக் கொண்டுதானிருந்தேன்! ஜலம் இடுப்பளவுக்கு வந்தது. வெள்ளத்தின் வேகம் இழுக்கத் தொடங்கியது. ஜலம் மார்பளவுக்கு வந்தது. இழுப்பின் வேகம் அதிகமாயிற்று. இனிமேல் நாம் விரும்பினாலும் கரையேற முடியாது என்று தோன்றிய அதே சமயத்தில், பின்னால் யாரோ தண்ணீரில் இறங்குவதுபோல் சலசலவென்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அந்த இருட்டில் ஓர் உருவம் - மனித உருவந்தான் - விரைவாக என்னை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்ததாக மங்கலாகத் தெரிந்தது. என் வாழ்க்கையில் அதுவரையில் அறியாத பயங்கர பீதியை அந்தக் கணத்தில் நான் அடைந்தேன். ஒரே ஒரு கணந்தான். அடுத்த கணத்தில் அந்த உருவம் ஏழு வருஷங்களுக்கு முன்னால் அதே இடத்தில் மூழ்கி மறைந்த என் நாதரின் உருவம் தான் என்பதை அறிந்தேன். "கிறீச்" என்ற ஒரு சத்தம் என் வாயிலிருந்து வந்து, அந்த நதிப் பிரதேசமெல்லாம் எதிரொலிக்கச் செய்தது. அடுத்த கணம் நான் நீரில் மூழ்கினேன். ஒரு நொடிப் பொழுது, என் அறிவில் ஒரு பிரகாசம் ஏற்பட்டது. பின்னர், அறிவைப் பேரந்தகாரம் வந்து சூழ்ந்தது.
மறுபடியும் நான் கண்ணை விழித்தபோது அவருடைய மடியில் என் தலை இருப்பதையும், அளவிலாத பரிவுடனே அவர் என்னைக் குனிந்து நோக்கிக் கொண்டிருப்பதையும் கண்டேன். உலக வாழ்க்கையில் நான் அடையாத பாக்கியத்தை மறு உலகில் அடைந்திருப்பதாக முதலில் எனக்குத் தோன்றியது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம். இது இந்த உலகம் தான் என்று தெரிந்தது. சற்று நேரம் பேச முடியவில்லை. மனம் மட்டும் ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தது.
பேசும் சக்தி வந்ததும், "தாடி மீசையெல்லாம் எப்போது எடுத்தீர்கள்?" என்று கேட்டேன். அவர் ஆச்சரியத்தினால் பிரமித்து, "உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றார். அதற்குப் பதில் சொல்லாமல் "தங்களுடைய புத்திமதியை நான் மறக்கவில்லை. அதை நிறைவேற்றினேன்" என்றேன். மீண்டும் அவர், "உனக்கு எப்படித் தெரிந்தது? எப்போது தெரிந்தது?" என்று கேட்டார்.
"தண்ணீரில் மூழ்கியவுடனே பளிச்சென்று தெரிந்தது. அடுத்த நிமிஷம் நினைவு தப்பி விட்டது" என்றேன்.
ஆம்; கல்கத்தா ஸ்டுடியோவில் என்னைப் பார்த்துப் புத்திமதி சொன்ன பாபு சம்பு பிரஸாத் என்னுடைய கணவர்தான். அப்போது அது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவருடைய கூரிய கண்களின் பார்வை என் மனத்திற்குள்ளேயே பதிந்து கிடந்தது. நாங்கள் இல்லறம் நடத்திய போதெல்லாம், அம்மாதிரி அவர் என்னைப் பார்த்தது கிடையாது. மறுபடியும் அன்றிரவு கழுத்தளவு தண்ணீரில் நான் நின்று தத்தளித்தபோது, நட்சத்திர வெளிச்சத்தில் அதே பார்வையைக் கண்டேன். தண்ணீரில் மூழ்கிய தருணத்தில், "அந்த வங்காளிப் பிரமுகர் உண்மையில் என் கணவர்தான்" என்னும் உள்ளுணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய உள்ளுணர்வு உண்மையை சொல்லிற்று என்பதை அவரே இப்போது உறுதிப்படுத்தினார்.
அவர் வீட்டை விட்டுக் கிளம்பிய போது நதியில் விழுந்து உயிரை விடுகிற எண்ணமே அவருக்கு இருக்கவில்லையாம். எங்கேயாவது கண்காணாத தேசத்துக்குப் போய்விடுவதென்று கிளம்பினாராம். நான் பின்னால் தொடர்ந்து வருவேன் என்று தெரிந்து கொண்டு நதியில் மூழ்கி விட்டதாக என்னை நம்பும்படி செய்துவிட்டால், நான் நிம்மதியாயிருப்பேன் என்றெண்ணி அவ்விதம் ஆற்றில் இறங்கி மூழ்கினாராம். கொஞ்ச தூரம் தண்ணீரிலேயே மூழ்கிச் சென்று பிறகு சத்தம் செய்யாமல் நீந்திக் கரையேறினாராம்.
முன்னாலேயே அவர் உத்தேசித்து வைத்திருந்தபடி, கல்கத்தாவுக்குச் சென்று, மாறு பெயர் வைத்துக் கொண்டு ஆராய்ச்சிகளை நடத்தி வந்த போதிலும், என்னுடைய ஞாபகம் மட்டும் அவருக்குப் போகவேயில்லையாம். சீக்கிரத்தில் நான் 'பிரபல நட்சத்திர'மாகி விட்டபடியால், என்னுடைய வாழ்க்கையையும் நடவடிக்கைகளையும் அவரால் பத்திரிகைகளின் மூலம் கவனித்து வர முடிந்ததாம்.
கடைசியில், எனக்கு ஏதோ பெரிய சங்கடம் நேர்ந்துவிட்டதென்பதை ஒருவாறு தெரிந்து கொண்டு என்னைத் தேடி இந்த ஊருக்கு வந்து சேர்ந்தாராம். அதே தெருவில் ஒரு வீட்டில் இருந்து கொண்டு, என்னை எப்படிச் சந்திப்பது என்ற தயக்கத்துடன், இரவும் பகலும் எங்கள் வீட்டின் மேலேயே கண்ணாயிருந்தாராம். கடைசியில் சரியான சமயத்தில் என் உயிரையும் காப்பாற்றி, எனக்குப் புது வாழ்வையும் அளிப்பதற்கு வந்து சேர்ந்தார்.
கல்கத்தாவில் வங்காளிப் பெயர் வைத்துக் கொண்டு வேலை பார்த்ததில், அவருக்கு இன்னொரு பெரிய அநுகூலம் ஏற்பட்டதென்று சற்றே குதூகலத்துடன் அவர் சொன்னார். சென்னை மாகானத்தில் இருந்த வரையில், அவருடைய சரித்திர ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றி ஏனென்று கேட்பார் இல்லையாம்! கல்கத்தாவுக்குப் போய் வங்காளிப் பெயருடன் அதே முடிவுகளை வெளியிட்டதும், இந்தியா தேசம் முழுவதும் அவருடைய பெயர் பிரபலமாகி விட்டதாம்! அப்புறம் சென்னைப் பத்திரிகைகள் கூட அவரைப் பற்றிப் பிரமாதமாய் எழுதினவாம்! சென்ற ஏழு வருஷ காலத்தில் இந்த வேடிக்கை ஒன்றுதான் அவருக்கு நினைக்கும் போதெல்லாம் சிரிப்பை உண்டாக்கி வாழ்க்கை கசந்து போகாமல் செய்து வந்ததாம்!
"ஏழு வருஷம் நான் சுதந்திர வாழ்க்கை நடத்தியாயிற்று; நீயும் ஏழு வருஷம் சுதந்திரமாக வாழ்ந்தாய்; சுதந்திர வாழ்க்கை எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது. உனக்கு எப்படி அம்பு?" என்று கேட்டார். அவருடைய குனிந்த முகத்தையும், கனிந்த கண்களையும் ஏறிட்டுப் பார்த்த வண்ணம் நான் சொன்னேன்:
"தங்களுடைய மடியில் தலை வைத்துப் படுக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக நான் ஏழரை வருஷம் நரக வாழ்வு நடத்த வேண்டியிருந்தது! இனிமேல் என்னத்திற்கு?"
-----------------
14. பித்தளை ஒட்டியாணம்
1
தங்கம்மாள் நடுநிசியில் திடுக்கென்று கண் விழித்துக் கொண்டாள். கதவு திறக்கும் ஓசையைப் போல் கேட்டது. படுத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள். ஸௌந்தரம் கதவைத் திறந்து கொண்டிருந்தான். வெளியே சென்று மெதுவாய்க் கதவைச் சாத்தினான்.
மாடிப் படிகளில் அவன் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் அவன் கீழே ஆபீஸ் அறையைத் திறந்தான்; உள்ளே போய் விளக்குப் போட்டுக் கொண்டான்.
தங்கத்துக்கு இருதயம் பதை பதைத்துக் கொண்டிருந்தது. இந்தப் பாதி நிசியில் இவர் எங்கே, எதற்காக இறங்கிப் போகிறார்? ஆபீஸ் அறையில் இப்போது என்ன செய்கிறார்? இவ்வளவு இரகசியம் என்ன? தான் எழுந்திருக்கக்கூடாது என்பதற்காகத் தானே ஓசைப்படாமல் அவ்வளவு ஜாக்கிரதையாய்க் கதவைத் திறந்து கொண்டு நிதானமாய் நடந்து போனார்? இதெல்லாம் எதற்காக? தன்னிடம் என்னத்தை ஒளிப்பதற்கு முயல்கிறார்?
சென்ற ஐந்தாறு நாளாகவே ஸௌந்தரம் ஒரு மாதிரியாயிருப்பது பற்றித் தங்கத்தின் உள்ளம் ரொம்பவும் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. அவர் பழைய மனுஷராகவே இல்லை; அடியோடு மாறிப் போய் விட்டார். எப்போதும் சிரிப்பும் விளையாட்டு மாயிருப்பவருடைய முகத்தில் ஐந்தாறு நாளாய் மலர்ச்சி என்பதையே காணவில்லை. சுய ஞாபகமே கிடையாது. என்ன சாப்பிடுகிறோம், என்ன பேசுகிறோம் என்பது கூட நினைவிருப்பதைல்லை. இராத்திரியில் சரியாக தூங்குவதுமில்லை. புரளுகிறார்; பிதற்றுகிறார். தூங்கும்போது உடம்பு திடீரென்று நடுங்குகிறது. கேட்டால், சொல்ல மாட்டேனென்கிறார். "ஒன்றுமேயில்லை" என்று சாதிக்கிறார். பொய், பொய், பொய்! ஒன்றுமேயில்லாததற்கா இவ்வளவு கவலை, இவ்வளவு குழப்பம், இவ்வளவு மெய்ம்மறதி?
என்னமோ சமாசாரம் இருக்கிறது. சந்தேகமில்லை. அது என்னவாயிருக்கும்? தங்கம் போன மாதத்தில் பார்த்திருந்த ஒரு தமிழ் டாக்கி ஞாபகம் வந்தது. அதில் கதாநாயகன் ஒரு தாஸியின் மோக வலையில் வீழ்ந்து விடுகிறான். அது முதல் அவனுடைய நடை உடை பாவனைகளில் மாறுதல் ஏற்பட்டு விடுகிறது. அடிக்கடி மெய்ம்மறதி உண்டாகிறது. மனைவியிடம் "ஒன்றுமில்லை" என்றுதான் அவனும் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
அப்படி ஏதாவது இருக்குமோ என்று தங்கம் ஒரு நிமிஷம் எண்ணியபோது, அவளுக்கு உயிரே போய் விடும் போலிருந்தது. "ச்சீ! ச்சீ! ஒரு நாளு மிராது! பத்து நாளைக்கு முன்புதானே அவர் என்னிடம் வைத்திருக்கும் அளவிலாத அன்பை ருசுப்படுத்தினார்? தங்க ஒட்டியாணம் போட்டுக் கொள்ள எனக்கு என்ன யோக்யதை இருக்கிறது? இத்தனை நாளும் எனக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்திருந்து, பிறந்த நாள் பரிசாக அளித்தாரே?" என்று எண்ணி, ஒரு நாளும் அவர் தனக்கு துரோகம் செய்ய மாட்டார் என்று தீர்மானித்தாள். ஆனால் வேறு என்னதான் இருக்கும்? ஆபீஸ் அறையில் அவர் என்ன செய்கிறார் என்று பார்க்க அவளுக்கு ஆவல் உண்டாயிற்று. எப்படியும் இன்று ராத்திரி உண்மையைத் தெரிந்து கொண்டு விட வேண்டும். மனதில் இந்த பாரத்துடன் இனிமேல் தூங்க முடியாது.
தங்கம் எழுந்திருந்தாள். அடிமேல் அடி வைத்துக் கீழே இறங்கிச் சென்றாள். ஜன்னல் வழியாக ஆபீஸ் அறைக்குள் பார்த்தாள். ஸௌந்தரம் மேஜை மேல் காகிதம் வைத்துக் கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். சற்று நேரம் தங்கம் சும்மா நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஸௌந்தரம் எழுதி முடித்துவிட்டுத் தலையை நிமிர்ந்தான். அவனுடைய கண்களில் நீர்த் துளிகள் ததும்பின.
தங்கத்துக்குக் கதி கலங்கிற்று. ஒன்றும் செய்யத் தோன்றாமல் பிரமை பிடித்தவள் போல் நின்றாள்.
ஸௌந்தரம் ஒரு கவர் எடுத்து அதன் மீது விலாசம் எழுதினான். பிறகு அதை ஒட்டுவதற்காகப் பிசின் கொட்டாங்கச்சியை எடுத்தான். பிசினில் தண்ணீரே விடாமல் காய்ந்து போயிருந்தது. கொட்டாங்கச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு தண்ணீருக்காகச் சமையலறைக்குச் சென்றான். போகும்போது, வெளியில் ஜன்னல் கதவுக்குப் பின்னால் நின்ற தங்கத்தை அவன் பார்க்கவில்லை.
அவன் சமையலறைக்குள் நுழைந்ததும், தங்கம் மின்னல் வேகத்தில் ஆபீஸ் அறைக்குள் சென்றாள். மேஜை மேல் கிடந்த உறையை எடுத்துப் பார்த்தாள். அதன் மேல் இவள் பெயர் தான் எழுதியிருந்தது. பதை பதைப்புடன் கடிதத்தை உறையிலிருந்து எடுத்துப் படிக்கத் தொடங்கினாள்:-
சௌ. தங்கத்துக்கு அநேக ஆசீர்வாதம்,
உனக்கு இந்தக் கடிதம் மிகவும் ஆச்சரியத்தை அளிக்கலாம். நீ இதைப் படிக்கும் போது நான் வெகு தூரம் போய்விடுவேன். உன்னை பிரியும்படியான காரணம் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு பெரிய விபத்தில் அகப்பட்டுக் கொண்டு விட்டேன். நான் இங்கிருந்தால் உன் மனது ரொம்பவும் கஷ்டமடையும். ஆகையால்தான் போகிறேன். நீ உன் தாயார் வீட்டுக்குச் சென்று சௌக்யமாயிரு. உன் பேரில் எனக்கு ஒரு கோபமும் இல்லை.
கடவுள் கிருபை இருந்தால் மறுபடியும் சந்திப்போம். என்னைப் பற்றி ஏதாவது அபவாதம் கேள்விப்பட்டால் உன் பேரில் நான் வைத்த பிரியத்தினால் தான் செய்தேன் என்று நீயே தெரிந்து கொள்வாய்.
இப்படிக்கு
உன்னை ஒரு நாளும் மறவாத
ஸௌந்தரராஜன்
மேற்படி கடிதத்தைத தங்கம் ஒரு தரம், இரண்டு தரம் படித்தாள். அவளுடைய தலை சுழன்றது. கீழே விழுந்து விடாமல் மேஜையைப் பிடித்துக் கொண்டாள். இதற்குள் சமையலறைக்குச் சென்றிருந்த ஸௌந்தரம் திரும்பி வந்தான். தங்கம் கையில் கடிதத்துடன் நிற்பதைக் கண்டு அவன் திடுக்கிட்டு நின்றான்.
பிரமை கொண்டவள் போல் நின்ற தங்கத்துக்குப் பளிச்சென்று உயிர் வந்தது. அவள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து வந்து, அந்த அறையின் கதவைச் சாத்தினாள். சாத்திய கதவின் மேல் சாய்ந்து கொண்டு, 'எங்கே நீங்கள் போவதைப் பார்க்கலாம்' என்று சொல்லும் பாவனையில் நின்றாள்.
அவள் கடிதத்தைப் படித்து விட்டாள் என்பதை ஸௌந்தரம் தெரிந்து கொண்டான். தட்டுத் தடுமாறி, "தங்கம்! நான் சொல்கிறதைக் கேள்..." என்று ஆரம்பித்தான்.
"கேட்க மாட்டேன்; கேட்க மாட்டேன்" என்று அலறினாள் தங்கம். உடனே கோவென்று அழத் தொடங்கினாள். விம்மலுக்கு இடையிடையே, "என்னை நிர்க்கதியாய் விட்டுப் போகப் பார்த்தீர்களே? நீங்கள் போய் நான் ஸௌக்யமாயிருக்க வேணுமா?" என்பது போன்ற ஆத்திரமான சொற்கள் உளறிக் கொண்டு அவள் வாயிலிருந்து வெளிவந்தன.
------------
2
ஸௌந்தரராஜனுக்குக் 'குபேரா பாங்கி'யில் குமாஸ்தா வேலை. பள்ளிக்கூடத்தில் படித்த காலத்திலிருந்து ரொம்ப யோக்யன் என்று பெயர் வாங்கினவன். அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்த உபாத்தியாயர்கள் எல்லாரும் அவனுடைய கல்வித் திறமையையும், புத்திசாலித்தனத்தையும் விட அவனுடைய நற்குணத்தையே அதிகமாக சிலாகித்திருந்தார்கள். உண்மையிலேயே அவன் தெய்வ நம்பிக்கையுள்ள பிள்ளை. பாப புண்ணியத்துக்கு அஞ்சியவன். அப்படிப்பட்டவன், அவன் வேலை செய்த பாங்கியின் பணத்தில் ஆயிரத்தைந்நூறு ரூபாய் திருடினான் என்று சொன்னால், அவனை அறிந்தவர்கள் யாரும் அதை நம்பவே மாட்டார்கள். "ஒரு நாளும் இராது" என்று தான் சொல்வார்கள். ஆனாலும், அத்தகைய நம்பத் தகாத காரியத்தை அவன் செய்துதானிருந்தான். அப்படி அவன் செய்ததற்குக் காரணம், கடிதத்தில் அவன் எழுதியிருந்தது போல் தங்கத்தின் பேரில் அவன் வைத்திருந்த அளவிலாத பிரியமே யாகும்.
தங்கம் டிபுடி கலெக்டர் ஸதாசிவய்யரின் பெண். ஸதாசிவய்யர் உயிரோடு இருந்து, உத்தியோகமும் பார்த்திருந்தாரானால், தங்கத்துக்கும் ஸௌந்தரத்துக்கும் கல்யாணமே ஆகியிராது. அவர் தம்முடைய மூத்த பெண்கள் இருவரையும் பெரிய இடத்தில் கொடுத்தது போல், தங்கத்தையும் கொடுத்திருப்பார். ஒரு ஐ.சி.எஸ்., ஒரு எப்.சி.எஸ்., அல்லது கேவலம் ஒரு எம்.பி.பி.எஸ்.ஸுக்காவது தங்கம் வாழ்க்கைப் பட்டிருப்பாள். ஆனால், தங்கத்துக்கு அவ்வளவு பாக்கியம் கிட்டவில்லை. யமன் திடீரென்று ஒரு நாள் வந்து டிபுடி கலெக்டராச்சே என்று கூடப் பார்க்காமல், ஸதாசிவய்யரைக் கொண்டு போனான். அவர் மாரடைப்பினால் இறந்து போனதாக ஜனங்கள் சொன்னார்கள்.
போனவர், நிறையப் பணமாவது வைத்துவிட்டுப் போனாரா? பெரிய தொகைக்கு இன்ஷியூரன்ஸாவது செய்திருந்தாரா? ஒன்றுமில்லை. இன்ஷியூரன்ஸ் ஏஜெண்டுகள், தங்களுடைய பிரசாரத்துக்கு அநுகூலமாக அவருடைய பெயரை உபயோகிக்கும்படியாகக் குடும்பத்தை விட்டு விட்டுப் போனார். "டிபுடி கலெக்டர் ஸதாசிவய்யரைப் பாருங்கள். இப்படித்தான் 'இன்ஷியூரன்ஸில் எனக்கு நம்பிக்கையில்லை' என்று சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாளைக்கு கண்ணை மூடினார். இதோ அவருடைய பெண்டாட்டி பிள்ளைகள் திண்டாடுவார்கள்" என்று இன்ஷியூரன்ஸ் ஏஜெண்டுகள் சொல்வது சர்வ சகஜமாயிற்று.
தங்கத்துக்கும் ஸௌந்தரத்துக்கும் முடிச்சுப் போட்டிருந்த படியால்தான், ஸதாசிவய்யர் அப்படி இறந்து போனாரோ, என்னமோ. அது தான் யாருக்குத் தெரியும்? சில பேர்கள், "பெரிய இடமாக இளையளாய்ப் பார்த்துத் தங்கத்தைக் கொடுத்து விடலாம்" என்று யோசனை சொன்னார்கள். அதற்குத் தங்கத்தின் தாயார் சம்மதிக்கவில்லை. இரண்டு பெண்களைப் பணக்கார இடத்தில் கொடுத்து அநுபவம் பெற்றிருந்த அந்த அம்மாள், "வேண்டவே வேண்டாம் ஏழையாயிருந்தால் இருக்கட்டும். நல்ல பிள்ளையாய், கண்ணுக்கும் சுமாராயிருந்தால் போதும். தங்கத்துக்கு அதிர்ஷ்டம் இருந்தால், பணங் காசெல்லாம் தானே வந்துவிடுகிறது" என்றாள். ஸதாசிவய்யருக்கு தன்னைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகுதான் அதிர்ஷ்டம் அடித்தது, பெரிய உத்தியோகம் ஆயிற்று என்று அந்த நாளில் எல்லாரும் சொன்னதை நினைத்துக் கொண்டு தங்கத்தின் தாயார் அவ்விதம் சொன்னாள்.
தங்கத்தின் தமக்கைமார்களில் ஒருத்தி ஐ.சி.எஸ்.ஸுக்கும், இன்னொருத்தி பெரிய வருமானமுள்ள வக்கீலுக்கும் வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் தங்கத்தை அவ்வளவு சின்ன இடத்தில் கொடுப்பதில் திருப்தியில்லை. தங்களுடைய கௌரவத்துக்கு அது குறைவு என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் பணங்கொடுத்து ஒத்தாசை செய்யுவும் தயாராயில்லை. அம்மாவிடம் மட்டும் தங்கைக்குப் பரிந்தவர்கள்போல் பேசினார்கள். தாயாரோ, "நான் என்னடி அம்மா, செய்வேன்? மூன்று பிள்ளைகளைப் படிக்க வைத்தாக வேண்டும். கையில் இருக்கிற அற்ப சொற்பத்தையும் தொலைத்து விட்டால், அப்புறம் என்ன கதியாகிறது? ஏதோ நீங்கள் இரண்டு பேரும் பெரிய இடத்தில் வாழ்க்கைப்பட்டு ஒசத்தியாயிருக்கிறது போதும். அவளுக்கும் அதிர்ஷ்டம் இருந்தால், தானே பணங்காசெல்லாம் வருகிறது" என்று சமாதானம் சொன்னாள்.
கடைசியில், ஸௌந்தரத்துக்கும் தங்கத்துக்கும் நல்ல சுபலக்னத்தில் கல்யாணம் ஆயிற்று.
தாயாரின் வாக்குப் பலிக்கும் போலவேயிருந்தது. பெண் அதிர்ஷ்டசாலியாகக் காணப்பட்டாள். கல்யாணம் ஆனதும், பையனுக்கு பாங்கியில் உத்தியோகம் ஆயிற்று. சம்பளம் இரண்டு வருஷத்தில் உயர்ந்து அறுபது ரூபாய்க்கு வந்தது.
இதுவரையில் ஒண்டுக் குடியிருந்ததில் தங்கத்துக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. "அரை வயிற்றுச் சாப்பாடு கிடைத்தாலும் போதும்; தனி வீட்டில் தானிருக்க வேண்டும்" என்று தீர்மானித்து, "இருபத்தைந்து ரூபாய்க்கு ஒரு சின்ன வீடு எடுத்துக்கொண்டு அதில் குடித்தனம் செய்தார்கள். அவர்களுடன், மைத்துனன் ஒருவனும் இருந்து படித்துக் கொண்டிருந்தான். அவர்களுடைய வாழ்க்கை சந்தோஷ மயமாக இருந்தது. ஒரு குறைவும் இருக்கவில்லை. தங்கத்தின் தாயார் அவர்களை வந்து பார்த்துவிட்டுப் போன போதெல்லாம் "பணக்கார இடத்தில் கொடுத்த பெண்களை விட என் தங்கந்தான் சந்தோஷமாயிருக்கிறாள்" என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இப்படியிருக்கும்போதுதான் ஒரு பித்தளை ஒட்டியாணம் வந்து அவர்களுடைய வாழ்க்கையே குலைந்து போகும்படியான பெரும் விபத்துக்குக் காரணமாயிற்று.
ஒரு நாள் ஸௌந்தரம் ஆபீஸிலிருந்து வீடு திரும்பிய போது, தங்கம் இடுப்பில் பள பளவென்று ஜொலித்த ஒட்டியாணம் தரித்துக் கொண்டிருந்தாள்.
"பலே! ரொம்ப ஜோராயிருக்கிறதே!" என்றான் ஸௌந்தரம்.
"ஆயிரத்திருநூறு ரூபாய்தான் விலை. வாங்கித் தருகிறீர்களா?" என்று தங்கம் கேட்டாள்.
"உன் பிறந்தகத்துக்கு எழுதினால் உடனே தந்தி மணியார்டர் கதறிக் கொண்டு வருகிறது" என்றான் ஸௌந்தரம்.
இம்மாதிரி சிறிது நேரம் வேடிக்கைப் பேச்சு நடந்த பிறகு, அந்தப் பித்தளை ஒட்டியாணத்தின் விலை ஏழு ரூபாய் என்றும், இரண்டு வருஷத்துக்கு மெருகு 'காரண்டி' என்றும், அடுத்த வீட்டு அம்மாள் வாங்கியிருந்ததைப் பார்த்துத் தானும் ஒன்று வாங்கிக் கொண்டிருப்பதாகவும் தங்கம் தெரிவித்தாள்.
-----------
3
கொஞ்ச நாளைக்கெல்லாம் தங்கத்தின் மூத்த தமக்கை மிஸஸ் கமலா ராமச்சந்திரனின் வீட்டில், அவளுடைய மூன்றாம் குழந்தைக்கு ஆண்டு நிறைவுக் கல்யாணம் நடந்தது. அதற்குத் தங்கமும் ஸௌந்தரமும் போயிருந்தார்கள். தங்கம் அந்த ஏழு ரூபாய்ப் பித்தளை ஒட்டியாணத்தைப் போட்டுக் கொண்டு கிளம்பியபோது ஸௌந்தரத்துக்கு அவ்வளவு திருப்தியில்லை. "இது என்னத்திற்கு?" என்று கேட்டான். "பித்தளை ஒட்டியாணம் என்று ஜாதியை விட்டுத் தள்ளி விடுவார்களோ? அப்படித் தள்ளினால் தள்ளிக் கொண்டு போகட்டும்" என்றாள் தங்கம்.
"நன்றாயிருக்கிறது. நீயே தான் பத்தரை மாத்துத் தங்கமாயிற்றே. உன்னை உருக்கினால் நூறு ஒட்டியாணம் செய்யலாமே?" என்றான் ஸௌந்தரம்.
"நானே தங்கம். அதிலும் அழகைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கேன்! எனக்கு என்ன குறைச்சல்?" என்றாள் தங்கம்.
இந்தக் குதூகலமெல்லாம் கல்யாண வீட்டிற்குப் போகும் வரையில்தான் இருந்தது. அங்கே சென்று சற்று நேரம் ஆனதும், தங்கம் தன்னுடைய ஒட்டியாணம் மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்திருப்பதைக் கண்டாள். ஸ்திரீகள் ஒருவருக்கொருவர் அந்த ஒட்டியாணத்தைச் சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டார்கள். "இதுதான் இப்போது புதிசா வந்திருக்காம். ஒன்பது ரூபாயாம்" என்றாள் ஒருத்தி. "இல்லை, ஏழு ரூபாய்தான்" என்றாள் இன்னொருத்தி. "இவ்வளவு சுலபமாயிருக்கும் போது என்னத்திற்காக ஆயிரமும் ஆயிரத்தைந்நூறும் கொடுத்து வாங்க வேண்டும்?" என்றாள் வேறொரு ஸ்திரீ. "பத்து நாளைக்கெல்லாம் பல்லை இளித்து விடுமே? அப்போது என்ன பண்ணுகிறது?" என்றாள் மற்றொருத்தி.
இந்தப் பேச்செல்லாம் தங்கத்தின் காதில் நாராசமாக விழுந்தன. அங்கு வந்திருந்தவர்கள் எல்லாரும் தேகமெல்லாம் ஒரே வைரமாய் வைத்து இழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஒரு பத்து லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதற்குப் போதுமான வைரம் அவர்கள் மேல் இருந்தது! பாவம் இவர்களுக்கு மத்தியில், பித்தளை ஒட்டியாணம் போட்டுக் கொண்டு வந்த தங்கம், அவமானத்தினால் மனங்குன்றி நின்றாள். கொஞ்சங்கூட அவளுக்கு உற்சாகம் ஏற்படவில்லை. எப்போது வீட்டுக்குக் கிளம்பப் போகிறோம் என்று தவித்துக் கொண்டிருந்தாள். கடைசியில், வீட்டுக்குக் கிளம்பும் நேரம் வந்தது. வாசலில் குதிரை வண்டியில் அவள் ஏறத் தயாராயிருந்தபோது, கையில் பட்சணப் பொட்டணத்துடன் அவளுடைய தமக்கை வந்தாள். தங்கத்தின் காதோடு இரகசியமாக, "ஏண்டி அசடே! இந்தப் பித்தளை ஒட்டியாணத்தை ஏன் போட்டுக் கொண்டு வந்தாய்? ஆசையாயிருந்தால், என்னைக் கேட்டால், நான் கொஞ்ச நாழி போட்டுக் கொள்ளக் கொடுக்க மாட்டேனா? இந்த மாதிரியெல்லாம் இனிமேல் செய்யாதே. அற்பம் என்று எண்ணிக்கொள்ளப் போகிறார்கள்" என்று சொன்னாள். இதையெல்லாம் இரகசியமாய்ச் சொல்வதாக அவள் எண்ணியிருந்த போதிலும், ஏற்கெனவே வண்டிக்குள் ஏறியிருந்த ஸௌந்தரத்தின் காதில் அவ்வளவும் ஸ்பஷ்டமாக விழுந்தது.
வீடு போய்ச் சேரும் வரையில் தங்கமும் ஸௌந்தரமும் பேசவேயில்லை. தங்கம் பொங்கிக் கொண்டு வந்த அழுகையை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தாள். வண்டியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் போனாளோ இல்லையோ, ஒட்டியாணத்தைக் கழட்டி எறிந்துவிட்டு விசித்து அழ ஆரம்பித்தாள். வண்டிக்காரனுக்குச் சத்தம் கொடுத்து விட்டு உள்ளே வந்த ஸௌந்தரம் அவள் விசிப்பதைப் பார்த்துவிட்டு, "இந்தச் சனியன் பிடித்த ஒட்டியாணம் என்னத்திற்கு, அந்த தரித்திரங்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளும் என்று அப்போதே சொன்னேனோ இல்லையோ; கேட்காமல் போட்டுக் கொண்டு வந்தாய். இப்போது அழுது என்ன பிரயோஜனம்?" என்றான்.
இதைக் கேட்ட தங்கம், விம்மிக் கொண்டே, "எங்க அப்பா மட்டும் இருந்திருந்தால், இப்படி அவர்களிடம் பேச்சுக் கேட்கும்படி விட்டிருப்பாரா? இவர்களைப்போல் நானும் தங்க ஒட்டியாணம் பூட்டிக்கொண்டிருக்க மாட்டேனா?" என்று சொல்லிவிட்டு, கோவென்று கதறி அழ ஆரம்பித்தாள்.
அவளுடைய சொல்லும், அழுகையும் ஸௌந்தரத்தின் நெஞ்சைப் பிளப்பது போலிருந்தான். 'நம்மைக் கல்யாணம் செய்து கொண்டதால்தானே இவளுக்கு இந்த கதி நேர்ந்தது? இவளுக்கு ஒரு ஒட்டியாணம் வாங்கிக் கொடுக்க நமக்கு சக்தியில்லையே?' என்ற எண்ணம் அவனுடைய உள்ளத்தைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியது.
"ஆமாம்; உங்க அப்பா இருந்திருந்தால் உன்னையும் பணக்கார இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருப்பார். இந்த ஏழையைக் கட்டிக் கொண்டு திண்டாடும் கதி உனக்கு நேர்ந்திராது" என்றான்.
இப்படிச் சொன்னானோ, இல்லையோ, தங்கத்தின் அழுகை பளிச்சென்று நின்றது. அவள் ஓடி வந்து, ஸௌந்தரத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, "உங்களுடைய அன்பு ஒன்றே எனக்குப் போதும். நகையும் வேண்டாம், நட்டும் வேண்டாம்" என்றாள்.
அந்த நிமிஷத்தில், ஸௌந்தரம் தன் மனதிற்குள்ளே, "எப்படியாவது இவளுக்குத் தங்க ஒட்டியாணம் பண்ணிக் கொடுத்து விட்டு மறு காரியம் பார்க்க வேணும்; இல்லாவிட்டால் நான் மனுஷன் இல்லை" என்று தீர்மானம் செய்து கொண்டான்.
கொஞ்ச நாளாகக் 'குபேரா பாங்கி'யைப் பற்றி ஊரில் வதந்திகள் உலாவிக் கொண்டிருந்தன. அந்த பாங்கியில் பணம் போட்டிருந்தவர்கள் அவசர அவசரமாகப் பணத்தை வாபஸ் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த நெருக்கடியில் தினந்தோறும் மானேஜிங் டைரக்டரே பாங்கிக்கு வந்து, காரியங்களை நேரில் நடத்திக் கொண்டு வந்தார். "ஒன்றும் பயம் இல்லை; இம்மாதிரி நெருக்கடி இதற்கு முன்பும் நமது பாங்கிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதையெல்லாம் சமாளித்தது போல் இதையும் சமாளித்துக் கொள்வோம்" என்று அவர் பாங்கியின் சிப்பந்திகளுக்குத் தைரியம் சொல்லிக் கொண்டு வந்தார்.
பாங்கியின் மேல் நம்பிக்கையை ஸ்திரப்படுத்துவதற்காக, மானேஜிங் டைரக்டர், பணம் போட்டிருந்தவர்கள் பணத்தைக் கேட்டவுடனே கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். 'பிக்ஸட் டெபாஸிட்டுகளை நியாயப்படி கொடுக்க வேண்டியதில்லை யானாலும், அநேகம் பேருக்கு 'பிக்ஸட் டெபாஸிட்'களையும் திருப்பிக் கொடுத்து வந்தார். இது மட்டுமல்ல; சிலபேருக்கு 'ஓவர் டிராப்டு' தாராளமாய் அனுமதித்து வந்தார். சில பேருக்குப் புதிய கடன்கள் கூட 'ஸாங்ஷன்' செய்தார். இப்படி யெல்லாம் செய்தால், பாங்கியைப் பற்றி ஜனங்களின் சந்தேகங்கள் தீர்ந்து, மறுபடியும் அவர்கள் பணம் போட ஆரம்பிப்பார்கள் என்பது அவர் அபிப்பிராயமெனத் தெரிந்தது.
இவ்விதம் குபேரா பாங்கி சம்பந்தமாக ஊரில் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலைமையில்தான், ஒரு நாள் சாயங்காலம் ஸௌந்தரம் வெகு குதூகலமாக வீட்டுக்கு வந்தான். "தங்கம்! இன்றைக்கு உனக்குப் பிறந்த நாள் ஆயிற்றே! கடைத் தெருவுக்குப் போகலாம், வருகிறாயா?" என்று கேட்டான்.
"கடைத் தெருவுக்குப் போய்ப் பிறந்த நாள் பரிசு என்ன வாங்கித் தரப் போகிறீர்கள்? வரைத் தோடும் தங்க ஒட்டியாணமும் வாங்கித் தரப் போகிறீர்களா?" என்று கேட்டாள் தங்கம்.
"ஆமாம்!" என்றான் ஸௌந்தரம்.
"பரிகாசம் பண்ணாதீர்கள்! அப்படி ஒன்றும் நான் நகை ஆசை பிடித்துக் கிடக்கவில்லை" என்றாள் தங்கம்.
"உனக்கு ஆசையில்லாதபடியினால்தான் நான் பண்ணிக் கொடுக்கப் போகிறேன்" என்று ஸௌந்தரம் சொல்லி, சட்டைப் பையிலிருந்து ஒரு கட்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துப் போட்டான். ஒரு நிமிஷம் தங்கம் அப்படியே ஸ்தம்பமாய் நின்று விட்டாள். பிறகு, அந்த நோட்டுக்களைக் கையில் எடுத்துக்கொண்டு எண்ணினாள். பதினைந்து நோட்டு இருந்தது. ஆயிரத்தைந்நூறு ரூபாய்!
"ஏது இந்தப் பணம்? நிஜமாக நகை வாங்கப் போகிறீர்களா?" என்று தங்கம் நாத் தழுதழுக்கக் கேட்டாள்.
"ஆமாண்டி, அசடே! உன்னை ஏமாற்றுவேனா? மாதம் கொஞ்சமாகச் சம்பளத்தில் மீத்து பாங்கியில் போட்டுக் கொண்டு வந்தேன். இரண்டாயிரம் ரூபாய் ஆனதும் உனக்குச் சொல்ல வேணும் என்றிருந்தேன். அது வரையில் பொறுமையில்லை. இன்றைக்கு உன் பிறந்த நாளாயிருக்கிறதே என்று கொண்டு வந்து விட்டேன். கிளம்பு, போகலாம்!" என்றான் ஸௌந்தரம்.
பத்து நாளைக்குள் தங்கம் இரண்டாவது தடவையாக ஸௌந்தரத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்ணீர் பெருக்கினாள். இந்தத் தடவை அவள் கண்ணில் பெருகியது ஆனந்தக் கண்ணீர் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா?
இரண்டு பேரும் கடைத் தெருவுக்குப்போய் பல கடைகளில் பார்த்து, தங்க ஒட்டியாணம் ஒன்று ஆயிரத்து நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு, வைரத் தோடு செய்வதற்கும் ஆர்டர் கொடுத்து விட்டு வந்தார்கள்.
---------
4
அந்த இரண்டு மூன்று தினங்கள் ஸௌந்தரம் சந்தோஷமாயிருந்ததைப் போல் அவனுடைய வாழ்நாளில் வேறெந்த நாளிலும் இருந்ததில்லை. தங்கத்தின் இடுப்பில் தங்க ஒட்டியாணத்தைப் பார்த்துப் பார்த்து அவன் மகிழ்ந்தான். தங்கத்தின் முக மலர்ச்சியைக் கண்டு அவன் உளம் பூரித்தான்.
காரியம் எவ்வளவு சுலபமாக முடிந்து விட்டது என்பதை நினைக்கும் போது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது. நல்ல வேளை, அவ்வளவு மனோ தைரியம் தனக்கு இருந்ததே என்று எண்ணி எண்ணிப் பெருமையடைந்தான். அந்த ஒரு நிமிஷம் தப்ப விட்டிருந்தால், போனதுதான். சம்பளத்தில் பணம் மீத்து எந்தக் காலத்தில் தங்க ஒட்டியாணம் செய்து கொடுத்திருக்க முடியும்? மாதம் பத்து ரூபாய் பல்லைக் கடித்துக் கொண்டு மீத்து வந்தாலும், வருஷத்துக்கு 120 ரூபாய்தான் சேரும். ஆயிரத்தைந்நூறு ரூபாய் சேருவதற்கு 12 வருஷம் - ஒரு மாமாங்கம் ஆகிவிடும்! சிவ சிவா! அதற்குள்ளே எந்த ராஜா எந்தப் பட்டணம் போய் விடுவானோ, யார் கண்டது? அதிலும், இரண்டொரு குழந்தை குட்டிகளும் உண்டாகி விட்டால், அப்புறம் தங்கம் அவளுடைய வாழ்நாளில் பித்தளை ஒட்டியாணத்துடனே திருப்தியடைந்திருக்க வேண்டியதுதான்!
ஒவ்வொரு சமயம் "விஷயம் ஒரு வேளை வெளியாகி விட்டால்?" என்ற நினைவு வந்து அவனைத் திடுக்கிடச் செய்தது. ஆனால் அந்த நினைவுக்கு அவன் அதிகம் இடம் கொடுக்கவில்லை. விஷயம் வெளியாவதற்கு வழியே கிடையாது. அன்று நடந்தது எல்லாவற்றையும் அவன் ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தான். பகல் பன்னிரண்டு மணிக்கு, பணம் வாங்க வந்தவர்களின் கூட்டம் பாங்கியில் அசாத்தியமாயிருந்தது. ஸௌந்தரத்தின் பெட்டியில் இருந்த பணமெல்லாம் ஆகி விட்டது. இன்னும் ஐந்து நிமிஷம் போனால், கேட்பவர்களுக்குக் கையை விரிக்க வேண்டியதுதான். இந்த சமயத்தில் மானேஜிங் டைரக்டரின் அறையிலிருந்து, "ரிஸர்வ் பாங்கியிலிருந்து பணம் வந்து விட்டது; ஒவ்வொரு குமாஸ்தாவாக வந்து பணம் வாங்கிக் கொண்டு போக வேண்டியது" என்று தகவல் வந்தது. ஸௌந்தரத்தின் முறை வந்தபோது, அவனும் பணத்துக்காகப் போனான். நூறு ரூபாய், ஐம்பது ரூபாய், பத்து, ஐந்து ரூபாய் நோட்டுகளாக ஐயாயிரம் ரூபாய் அவன் எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது, டெலிபோனில் மணி அடிக்கவே மானேஜிங் டைரக்டர், டெலிபோன் குழாயை எடுத்துப் பேசத் தொடங்கினார். யார் என்ன சொன்னார்களோ தெரியாது. மானேஜிங் டைரக்டர் ராவ் சாகிப் ஸகஸ்ரநாமத்தின் முகம் கவலையால் வாடியது. அந்த சமயத்தில், அதாவது ஸகஸ்ரநாமம் டெலிபோனில் கவனமாயிருந்தபோது, ஸௌந்தரம் அதிகப்படியாக இரண்டு கட்டுகளை எடுத்துப் போட்டுக் கொண்டான். பிறகு ஐயாயிரம் ரூபாய்க்குக் கையெழுத்துப் போட்டுவிட்டு, கீழே பணம் வாங்க வந்தவர்கள் காத்துக் கொண்டிருந்தபடியால் அவசரமாக இறங்கிச் சென்றான். மாடிப்படி இறங்கும் போதே, அந்த அதிகப்படி நோட்டுக்கள் அவனுடைய பெரிய கோட்டுப் பைகளில் சென்று விட்டன. கோட்டுப் பை பெரியதாயிருப்பது சில சமயத்தில் எவ்வளவு சௌகரியமாயிருக்கிறது?
அன்று மாலை பாங்கி சாத்தும் நேரம் வரையில் ஸௌந்தரத்துக்கு திக்கு திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. "யாரிடமாவது அதிகப்படி பணம் இருக்கிறதா?" என்று மானேஜிங் டைரக்டர் கேட்டனுப்பினால், உடனே பையிலிருந்த நோட்டுக்களைப் பெட்டியில் போட்டுவிட்டு, "ஆமாம்; அதிகம் இருக்கிறது" என்று ஒப்புக்கொண்டு விட அவன் தயாராயிருந்தான். சோதனை, கீதனை என்று பேச்சு ஏற்பட்டாலும் அப்படிச் செய்வதற்கு அவன் சித்தமாயிருந்தான். ஆனால் தங்கத்திற்கு அதிர்ஷ்டம் இருக்கும்போது அப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? கேள்வி முறையே ஏற்படவில்லை.
மறுநாளும் அதற்கடுத்த நாளும் பாங்கியில் ஏதாவது 'கசமுசா' ஏற்படுகிறதா என்று ஆவலுடன் கவனித்தான். ஒன்றுமே கிடையாது. கிணற்றிலே கல்லைப் போட்டது போலிருந்தது. பணங் கேட்பவர்களின் கூட்டங் கூடக் குறைந்து போயிற்று. கேட்பவர்களுக்கெல்லாம் வட்டியின்றி பணம் கொடுத்து வந்ததிலிருந்து, ஜனங்களுக்கு பாங்கியில் நம்பிக்கை வந்து விட்டதாகத் தோன்றியது. சிலர், வாங்கிய பணத்தைத் திருப்பிப் போடுவதற்குக்கூட வந்தார்கள்.
ஸௌந்தரத்தின் மனம் நிம்மதியடைந்தது. அந்த நிம்மதியின் மத்தியில் ஒரு விநோத குறையும் உண்டாயிற்று. "எடுத்ததுதான் எடுத்தோம்; இன்னும் இரண்டு கட்டு சேர்த்து எடுத்திருக்கக் கூடாதா?" என்று விசாரப்பட்டான். தங்கத்துக்கு ஒட்டியாணமும் வைரத்தோடும் வாங்கிக் கொடுத்த பிறகு, கையிலும் ஒரு ஆயிரம் ரூபாய் மிச்சமிருந்தால், வருங்காலத்தில் ஆபத்து சம்பத்துக்கு உதவுமல்லவா? மறுபடியும் அந்த மாதிரி சந்தர்ப்பம் தன் வாழ்நாளில் எங்கே வரப் போகிறது?
-------------
5
குபேரா பாங்கிக்கு எதிர்ப் புறத்தில் இருந்த பெரிய கட்டிடத்தில் ஒரு பிரசித்தமான ஹோட்டல் இருந்தது. இந்த நவ நாகரிக ஹோட்டலில் சாப்பாடு போட்டதுடன் தங்குவதற்கு இடமும் கொடுத்தார்கள். மேல் மாடியில் இருந்த சிறு சிறு அறைகள், தினசரியிலும் மாதவாரியிலும் வாடகைக்கு விடப்பட்டன. அந்த மேல் மாடி அறைகளையும் தாழ்வாரத்தையும் ஸௌந்தரம் வேலை செய்யும் 'கவுண்ட'ரிலிருந்து நன்றாய்ப் பார்க்கலாம். பாங்கியில் அதிக கூட்டமில்லாதபோது, ஸௌந்தரம் அந்த ஹோட்டல் அறைகளுக்கு அன்றாடம் புதிது புதிதாக வரும் மனிதர்களைப் பார்த்தும், அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனித்தும் பொழுது போக்குவது வழக்கம். அருகிலுள்ள மற்ற பாங்கி குமாஸ்தாக்களிடம், "அவனுடைய ஹிட்லர் மீசையைப் பார்!" "இவன் யாழ்பாணத்து மனிதன் போலிருக்கிறது!" "அடே அப்பா! எவ்வளவு உயரம்! நம்முடைய புது கவர்னரை விட உயரமாய் இருப்பான் போலிருக்கிறதே!" என்றெல்லாம் வம்பு பேசி சந்தோஷப்படுவதுண்டு.
தங்க ஒட்டியாணம் வாங்கிக் கொடுத்த நாலாம் நாள், ஸௌந்தரம் வழக்கம் போல் அந்த மாடி அறைகளின் பக்கம் பார்த்தான். அந்த அறைகளில் ஒன்றில் கையில் புத்தகத்துடன் உட்கார்ந்திருந்த ஓர் ஆசாமி தன்னையே கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், ஸௌந்தரத்துக்குத் துணுக்கென்றது. அந்த முகம் எங்கேயோ பார்த்த முகமாய்த் தோன்றியபடியால், அவனுடைய துணுக்கம் அதிகமாயிற்று. அப்புறம் இன்னும் சில தடவை ஸௌந்தரம் அந்தப் பக்கம் நோக்கினான். ஒவ்வொரு சமயம் அந்த ஆசாமி நேரடியாக இவனைப் பார்ப்பது போலவும், இன்னும் சில சமயம் புத்தகத்தில் கவனமாய் இருப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு கடைக் கண்ணால் இவனைப் பார்ப்பது போலவும் தோன்றியது.
ஸௌந்தரத்துக்கு இன்னதென்று சொல்வதற்கில்லாத பயம் உண்டாயிற்று. "இவன் யார், இந்த முகத்தை எங்கே பார்த்திருக்கிறோம்?" என்று யோசனை செய்தான். பளிச்சென்று ஞாபகம் வந்தது. உடனே அவனுக்குக் கதிகலங்கிற்று.
ஆம்; ஸௌந்தரத்தின் மைத்துனி குழந்தை ஆண்டு நிறைவுக் கல்யாணத்திற்கு இந்த ஆசாமி வந்திருந்தான். அவனைப் பற்றி வேறு இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். "ராமாநுஜம் இப்போது ஸி.ஐ.டி.யில் இருக்கிறான் என்று தெரியுமோ, இல்லையோ? டிபார்ட்மெண்டில் அவனுக்கு ரொம்ப நல்ல பெயர்! சீக்கிரம் பிரமோஷன் ஆகும் என்று சொல்கிறார்கள்" என்று ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார். அது ஸௌந்திரத்தின் காதில் விழவும், அவர்கள் சுட்டிக் காட்டிப் பேசிய ஆசாமியை இவனும் பார்த்தான். அதே ஆசாமிதான் இவன் என்பதில் சந்தேகமில்லை.
ஸௌந்தரத்துக்குப் பெரும் திகில் உண்டாயிற்று. உடம்பெல்லாம் சொட்ட வியர்த்தது. "வெய்யில் சகிக்கவில்லை" என்று முணுமுணுத்துக் கொண்டு, கைக்குட்டையினால் வியர்வையைத் துடைத்துக் கொண்டான். நீண்ட நாள் வழக்கத்தினால் இயந்திரத்தைப் போல் வேலை செய்தானே தவிர, அவனுக்கு வேலையில் கவனமே இருக்கவில்லை.
இந்த ஸி.ஐ.டி. போலீஸ்காரன் இங்கே எதற்காக வந்திருக்கிறான்? இத்தனை நாளும் இல்லாமல் இப்போது வரக் காரணம் என்ன? பணம் குறைந்த விஷயமாகத் தன் பேரில் சந்தேகம் தோன்றியிருக்க வேண்டும். வேறெதற்காக அங்கே வந்து உட்கார்ந்திருக்கிறான்? எதற்காகத் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்?...
அன்று சாயங்காலம் வீடு சேர்ந்ததும் தங்கம் அவனைப் பார்த்து, "ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறீர்கள்! முகம் வாடியிருக்கிறதே?" என்று கேட்டாள். "வேலை அதிகம்; வேறொன்றுமில்லை" என்று பதில் சொன்னான்.
மறுநாள் ஸௌந்தரம் பாங்கிக்குச் சென்றபோது, "இன்றைக்கு அந்த ஸி.ஐ.டி. காரன் அங்கே இல்லாவிட்டால் ஒரு ஆபத்தும் இல்லை" என்று எண்ணிக் கொண்டு போனான். "இன்றைக்கு அவன் இருக்கமாட்டான்; நம்முடைய பயம் வீண் பயம்" என்று மனதை தைரியப்படுத்திக் கொண்டான். "அங்கே அவன் இருந்தால்தான் என்ன? வேறு காரியமாய் வந்திருக்கக்கூடாதா? பட்டணத்துக்கு வெளியூரிலிருந்து வரும் எத்தனையோ உத்தியோகஸ்தர்கள் அந்த ஹோட்டலில் தங்குகிறார்கள். அந்த மாதிரி இவனும் வந்து தங்கியிருப்பான். நாம் எதற்காகப் பயப்பட வேண்டும்?" என்று தேறுதல் சொல்லிக் கொண்டான். "இன்றைக்கு அந்த மாடிப் பக்கம் பார்க்கவே கூடாது. பார்த்தால் நம் பேரில் சந்தேகம் உண்டானாலும் உண்டாகும்" என்று உறுதி செய்துகொண்டான்.
ஆனால், பாங்கியில் அவனுடைய வழக்கமான இடத்தில் போய் உட்கார்ந்ததும், அவனையறியாமலே கண்கள் எதிர்ப்பக்கம் நோக்கின. அங்கே ஸி.ஐ.டி. காரன் இல்லை. அப்பா! பிழைத்தோம்! என்ன வீண் பயம்? என்ன வீண் பீதி? குற்றமுள்ள நெஞ்சு என்பது சரியாய்ப் போய் விட்டதே! இந்த ஒரு தடவையோடு போதும்; இனிமேல் நம் வாழ்நாளில் இம்மாதிரி காரியம் செய்யவே கூடாது!
வாசலில் அப்போது மானேஷிங் டைரக்டரின் கார் வந்து நின்றது. அவர் பாங்கிக்குள்ளே வந்து பத்து நிமிஷத்துக்கெல்லாம், ஸௌந்தரம் தற்செயலாக மறுபடியும் எதிர்மாடிபக்கம் பார்த்தான்.
அங்கே அந்த ஸி.ஐ.டி. கழுகு உட்கார்ந்து தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். ஸௌந்தரத்தின் உடம்பு ஒரு குலுங்குக் குலுங்கிற்று.
மானேஜிங் டைரக்டரும் இவனும் ஒத்துப் பேசிக் கொண்டு வந்திருக்க வேண்டும். இவன் தன்னுடைய சந்தேகத்தைத் தெரியப்படுத்தியிருப்பான். மானேஜிங் டைரக்டர் என்ன சொன்னாரோ, என்னமோ? ஒருவேளை 'அரெஸ்டு' செய்து விடுவதென்று தீர்மானித்திருப்பார்களோ?
போலீஸ்காரர்கள் வந்து தன்னுடைய கையில் விலங்கு மாட்டித் தெரு வீதி வழியாக அழைத்துப் போகும் காட்சியை ஸௌந்தரம் தன் மனதில் கற்பனை செய்து பார்த்துக் கொண்டான். அந்தக் காட்சியை மட்டும் தங்கம் பார்த்துவிட்டால்? அவன் தேகத்திலிருந்த ரோமங்கள் எல்லாம் குத்திட்டு நின்றன.
போலீஸ்காரர்கள் விலங்குடன் வருவதை ஒவ்வொரு நிமிஷமும் ஸௌந்தரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஹோட்டல் மாடிப் பக்கம் பார்க்கக் கூடாதென்று அவன் பல்லைக் கடித்துக் கொண்டு சிரமப்பட்டான். ஆனால், அந்த ஸி.ஐ.டி.காரனின் கண்கள் தன் பேரிலேயே இருப்பதாக அவனுக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. கழுகு மூக்கும், வெறித்த கண்களும் உள்ள அந்தக் குரூரமான முகம் அவன் மனக்கண்ணின் முன்னால் அடிக்கடி வந்து கொண்டிருந்தது.
சாயங்காலம் பாங்கி சாத்துகிற வரையில் ஒன்றும் நடக்கவில்லை. "நம் பேரில் வெறும் சந்தேகம் மட்டும் தோன்றியிருக்கும்; ருசு ஒன்றும் அகப்பட்டிராது. அதனால்தான் அரெஸ்ட் வாரண்ட் எடுக்கவில்லை" என்று எண்ணிக் கொண்டான். ஆனால், அவர்களுக்கு என்ன ருசு அகப்படக்கூடும்? ருசு என்ன தான் இருக்கிறது? - ஓ! ஒரு வேளை தங்க ஒட்டியாணம் வாங்கிய செய்தி தெரிந்து போய்விட்டால்?
அன்று சாயங்காலம் ஸௌந்தரம் தங்கத்தைப் பார்த்து, சாதாரணமாய்க் கேட்பது போல், "ஆமாம்; ஒட்டியாணம் வாங்கிக் கொண்ட சமாசாரம் அடுத்த வீடு, அண்டை வீடுகளுக்கெல்லாம் இதற்குள் தெரிந்திருக்குமே, அப்படித்தானே?" என்று கேட்டான்.
"நன்றாயிருக்கிறது; வீடு வீடாகப் போய்ச் சொல்லி வருவேன் என்று நினைத்தீர்களா? நேற்றைக்கு அடுத்த வீட்டு அம்மாமி பார்த்துவிட்டு 'அசல் தங்க ஒட்டியாணம் மாதிரியேயிருக்கிறது' என்றாள். அப்போது கூட நான் நிஜத்தைச் சொல்லவில்லை. என்ன அவசரம், தானே தெரிகிறது என்று இருந்து விட்டேன். எதற்காக கேட்கிறீர்கள்?" என்றேன்.
"விசேஷம் ஒன்றுமில்லை. ஆனால் இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம். இந்தக் காலத்திலேதான் அசூயை அசாத்தியமாயிருக்கிறதே?" என்றான் ஸௌந்தரம்.
அதற்கப்புறம், இன்னும் நாலு தினங்கள் சென்றன. ஸௌந்தரம் வழக்கம் போல் பாங்கிக்குப் போய் வேலை செய்து வந்தான். ஒவ்வொரு நாளும், "இன்றைக்கு அந்த ஸி.ஐ.டி. காரன் இருக்கமாட்டான்" என்று எண்ணிக் கொண்டு போவான். அங்கே அந்த கழுகு மூஞ்சியைக் கண்டதும் ஏமாற்றமடைவான். நாளுக்கு நாள் அவனுடைய பீதியும் பதைபதைப்பும் அதிகமாகி கொண்டிருந்தன. இரண்டில் ஒன்று சீக்கிரம் தீர்ந்துவிட்டால் தேவலையென்று தோன்றிற்று. இந்த நாட்களில் இரவில் தூங்கும்போது அவனுடைய உடம்பு தூக்கிப் போடுவதையும், ஏதேதோ பிதற்றுவதையும் கண்டு தங்கத்தின் கவலையும் அதிகமாகிக் கொண்டு வந்தது.
ஒரு நாள் பாங்கியில் இரண்டு குமாஸ்தாக்கள் கூடி இரகசியம் பேசிக் கொண்டிருந்ததை ஸௌந்தரம் பார்த்து விட்டு, அவர்கள் அருகில் தானும் போய், "என்ன சமாசாரம்?" என்று கேட்டான். "உனக்குத் தெரியாதா, என்ன? பாங்கியில் ஏதோ பணம் காணாமற் போயிருக்கிறது. ஏற்கெனவே ஊரில் இருக்கிற காபராவில் அதை வெளியில் விடக்கூடாதென்று மானேஜிங் டைரக்டர் மூடி வைத்திருக்கிறாராம். திருட்டுப் போன தொகை எவ்வளவென்று தெரியவில்லை. அது டைரக்டருக்கும் காஷியருக்கும் தான் தெரியுமாம்" என்று குமாஸ்தாக்களில் ஒருவர் சொன்னார்.
பின்னர், இதற்கு முன்னால் நடந்திருக்கும் பெரிய பாங்கி மோசடி வழக்குகளைப் பற்றியும், அதிலெல்லாம் எப்படி எப்படித் திருடினார்கள், எப்படி எப்படி அகப்பட்டுக் கொண்டார்கள் என்பது பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டார்கள். மேற்படி குற்றவாளிகளுக்குக் கிடைத்த கடுந் தண்டனைகளைக் கேட்ட போது, ஸௌந்தரத்துக்கு ஸப்த நாடியும் ஒடுங்கி விட்டது. ஒரு கேஸில் 'அப்ரூவர்' ஆனவன் மன்னிக்கப்பட்டதை அறிந்தபோது "நாமும் ஒருவேளை ஒப்புக் கொண்டு விட்டால் மன்னித்து விடுவார்களோ?" என்று எண்ணினான். ஆனால், அது எப்படி முடியும். குற்றத்தை ஒப்புக் கொள்வதென்றால், தங்கத்தினிடமும் சொல்லியாக வேண்டும்? அவளிடம் எப்படி இந்த வெட்கக் கேட்டைச் சொல்வது? அதைவிடப் பிராணனை மாய்த்துக் கொள்ளலாம்!
தற்கொலை செய்வதற்குரிய வழிகளைப் பற்றி அவனுடைய மனம் சிந்திக்கத் தொடங்கியது. இடையிடையே, "எதற்காக இந்தப் பைத்தியக்கார எண்ணங்கள் எல்லாம்? வெறும் சந்தேகத்தின் பேரில் சிறைக்கு அனுப்ப முடியுமா? தடையம் கிடைத்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும்? தடையம் என்ன இருக்கிறது? தங்கம் வாயை மூடிக் கொண்டிருக்கிற வரையில் யார் என்ன செய்ய முடியும்" என்றும் எண்ணமிட்டான்.
நகைக் கடையில் ஒட்டியாணம் வாங்கியதும், வைரத் தோட்டுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதும் அவனுக்கு ஞாபகம் வந்தது. ஆர்டர் புத்தகத்தில் இவனுடைய கையெழுத்துக் கூட இருக்கிறது. ஒரு வேளை அங்கே போய் விசாரித்திருப்பார்களோ? - இந்த ஒரு வழியில் தான் விஷயம் வெளியானால் வெளியாக வேண்டும்.
அன்று மாலை பாங்கி மூடிய பிறகு, ஸௌந்தரம் நேரே வீட்டுக்குப் போகாமல் கடைத் தெருவுக்குச் சென்றான். வைரத்தோடு தயாராகி விட்டதா என்று கேட்டுக் கொண்டு, அத்துடன் யாராவது தன்னைப் பற்றி விசாரித்தார்களா என்றும் தெரிந்து கொண்டு வரலாமென்று ஒட்டியாணம் வாங்கிய கடையை நோக்கிப் போனான். கடைக்குக் கொஞ்ச தூரத்தில் அவன் வந்து கொண்டிருந்தபோது, மேற்படி கடை வாசலில் மானேஜிங் டைரக்டர் ஸகஸ்ரநாமத்தின் மோட்டார் வண்டி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டான். அங்கேயே ஒரு சந்தில் ஒதுங்கி நின்றான். சற்று நேரத்துக்கெல்லாம் வண்டி சாலையோடு போயிற்று. அதற்குள் ஸகஸ்ரநாமம் இருந்தார். சரி, நம்மைப் பற்றித்தான் விசாரித்திருக்கிறார் என்று அவனுக்கு நிச்சயம் ஆயிற்று. பயத்தினால் அவனுடைய நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. கடைக்குப் போகலாமா, வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தான். போய்த்தான் பார்த்து விடலாம் என்று துணிந்து போனான். கடை வாசலில் போனதும் மறுபடியும் ஒரு கணம் தயங்கி நின்று, உள்ளே நோக்கினான். அவனுடைய நெஞ்சு ஒரு நிமிஷம் அடித்துக் கொள்ளாமல் நின்று விட்டது. ஏனெனில் அங்கே கடை முதலாளிக்கு அருகில் அந்த ஸி.ஐ.டி. கழுகு உட்கார்ந்து அவருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தது!
கடைக்குள் நுழையாமலே ஸௌந்தரம் விரைவாகத் திரும்பினான். வீட்டுக்கு எப்படித்தான் வந்து சேர்ந்தானோ, தெரியாது. தான் செய்த காரியம் தெரிந்து போய்விட்டது என்பதைப் பற்றி அவனுக்கு இப்போது சந்தேகமே இருக்கவில்லை. எப்படியும் நாளைக்குக் கட்டாயம் கைது செய்து விடுவார்கள். அந்த அவமானத்தை சகித்துக் கொண்டிருக்க முடியாது. தங்கம் என்ன நினைப்பாள்? அவளுடைய தமக்கைமார்கள் என்ன நினைப்பார்கள்? ஏழைக்குக் கொடுத்த என்னுடைய கடைசிப் பெண்தான் சந்தோஷமாயிருக்கிறாள்" என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த மாமியார் என்ன நினைப்பாள்?
உயிரைவிடுவதா, அல்லது ஓடிப் போவதா என்பதுதான் இப்போது கேள்வி, உயிரை விடுவதற்கு வழி என்ன என்று யோசிப்பதற்குக்கூட அவனுக்கு இப்போது சக்தியில்லை. மனது அவ்வளவு கலக்கமாயிருந்தது. கடைசியில், "இப்போதைக்கு எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிப் போகலாம். பிறகு நிலைமைக்குத் தகுந்தாற்போல் பார்த்துக் கொள்ளலாம்" என்று தீர்மானித்தான்.
அன்று இரவு தான் ஸௌந்தரம் தங்கத்துக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு அவளுக்குத் தெரியாமல் வெளியேற முயன்றான்.
---------
6
தங்கத்தினிடம் ஸௌந்தரம் இலேசில் உண்மையைச் சொல்லி விடவில்லை. கேள்வி கேட்டும், கண்ணீர் விட்டும், ஆணை வைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அப்படியுங்கூட, ஒரு விஷயம் ஸௌந்தரம் அதிகப்படியாகக் கற்பனை செய்துதான் சொன்னான். ஒரு சிநேகிதன் 2000 ரூபாய் கடன் கொடுப்பதாகச் சொல்லியிருந்தாகவும், அது மறுநாள் வந்து விடுமென்று நம்பி பாங்கி பணத்தைப் போட்டு ஒட்டியாணம் வாங்கியதாகவும், அந்தப் பாவி பிறகு கையை விரித்து விட்டான் என்றும் கூறினான். தன்னுடைய குற்றத்தைக் குறைத்துக் கொள்ளும் எண்ணத்துடனேதான் ஸௌந்தரம் இப்படிக் கற்பனை செய்து சொன்னான். ஆனால் இது தங்கத்துக்குப் பெரிய ஆறுதல் அளித்தது! கவலையினாலும் கண்ணீரினாலும் பயத்தினாலும் வாடி வதங்கிப் போயிருந்த அவளுடைய முகம் ஒரு நிமிஷம் பிரகாசம் அடைந்தது. "அப்படியானால், எடுத்தது தெரியாமல் இப்போது கூடப் பணத்தைப் போட்டு விடலாமோ?" என்று கேட்டாள்.
"இப்போது ரொம்ப நாளாகி விட்டதே!" என்றான் ஸௌந்தரம்.
"அதனால் என்ன மோசம்? நான் பெண் பேதை, ஒன்றும் தெரியாதவள்தான். இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் நான் சொல்கிறதைக் கேளுங்கள். இந்த ஒட்டியாணத்தை நாளைக்குக் காலையில் கொண்டுபோய் விற்று விடுங்கள். நல்ல வேளையாகத் தங்க நகையாக வாங்கினோமே? வைரமாயிருந்தால், பாதிப் பணம் கூட வராது. விற்றுவிட்டால், கையில் பாக்கியுள்ளதையும் எடுத்துக் கொண்டு நேரே மேனேஜரிடம் போய் நடந்தது நடந்தபடி சொல்லி விடுங்கள். பகவான் இருக்கிறார். நமக்கு ஒன்றும் கெடுதி வராது" என்றாள் தங்கம்.
ஒரு விதத்தில் அது சரியான யோசனை என்று ஸௌந்தரத்துக்கும் தோன்றியது. இப்போதுள்ள பாங்கி நெருக்கடி காபராவில், மானேஜிங் டைரக்டர் கேஸ் நடத்துவதற்கு விரும்ப மாட்டார். பணம் வந்தால் போதுமென்று விட்டு விடுவார். உண்மையைச் சொல்லி, மன்னிப்பைக் கேட்டுக் கொண்டால், அதற்குப் பலன் இல்லாமலா போகும்? ஆனாலும், எவ்வளவோ ஆசையுடன் தங்கத்துக்கு வாங்கிக் கொடுத்த ஒட்டியாணத்தை உடனே விற்கிறதா? இப்போது அவள் சம்மதித்தாலும், பிறகு வாழ்நாளெல்லாம் சொல்லிக் காட்ட மாட்டாளா?
"என்ன யோசிக்கிறீர்கள்? நான் சொன்னபடி செய்கிறாதாக சத்தியம் செய்து கொடுங்கள். இல்லாவிட்டால் விடமாட்டேன்" என்றாள் தங்கம். அந்தப்படியே அவன் சத்தியம் செய்து கொடுக்கிற வரையில் அவள் விடவில்லை.
அடுத்த நாள் காலையில் ஸௌந்தரம் ஒட்டியாணத்தைக் கடைத் தெருவுக்கு எடுத்துக் கொண்டு போய் வேறொரு நகைக் கடையில் அதை விற்றான். வழக்கம்போல் கூலியைக் குறைத்துக் கொண்டு தங்க விலைக்கு எடுத்துக் கொண்டார்கள். அதிர்ஷ்டவசமாக அந்தப் பத்து நாளில் பவுன் விலை மூன்று ரூபாய்க்கு மேல் உயர்ந்திருந்தது. ஆகையால், ஒட்டியாணத்துக்குக் கொடுத்த பணம் அப்படியே திரும்பி வந்து விட்டது!
மானேஜிங் டைரக்டரிடம் கொண்டு போய் ஆயிரத்தைந்நூறு ரூபாயையும் வைத்து ஸௌந்தரம் விஷயங்களைச் சொன்னபோது, அவர் ஆச்சரியத்தினால் பிரமித்துப் போனார், "நல்ல வேளை; இன்றைக்கே கொண்டு வந்து கொடுத்தாய்; நாளைக்கு 'டூ லேட்' ஆகிப் போயிருக்கும்" என்றார். அவனை மன்னித்து விடுவதாகவும், அவன் மேல் வழக்குத் தொடுப்பதில்லையென்றும் வாக்குக் கொடுத்தார்.
இவ்வளவு சுலபமாகக் காரியம் நடந்து விடுமென்று ஸௌந்தரம் எதிர்பார்க்கவேயில்லை. ஆகவே, கொஞ்சம் தைரியமடைந்து, "ஸார்! தயவு செய்து அந்த ஸி.ஐ.டி. காரனை உடனே போகச் சொல்லுவிடுங்கள். அவன் முழித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தால், ஒரு வேலையும் ஓட மாட்டேன்கிறது" என்றான்.
மானேஜிங் டைரக்டரின் புருவங்கள் மறுபடியும் ஆச்சரியத்தினால் நெறிந்தன.
"எந்த ஸி.ஐ.டி. யைச் சொல்கிறாய்?" என்று ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார்.
"எதிர் ஹோட்டல் மாடியில் இருக்கிறவனைத் தான், ஸார்! அவன் முகத்தை நினைத்துக் கொண்டால் இராத்திரியில் தூக்கம் வரமாட்டேன்கிறது" என்றான் ஸௌந்தரம்.
மானேஜிங் டைரக்டர் மூக்கிலே விரலை வைத்து, தம்முடைய ஆச்சரியத்தைத் தெரியப்படுத்தினார்.
"பலே கெட்டிக்காரன் நீ! ஸி.ஐ.டி. போட்டிருக்கிறதைக் கூட கண்டு பிடித்து விட்டாயே? இன்றைக்கு ஒருநாள் தான் அவன் இருப்பான்; நாளைக்கு வரமாட்டான்" என்றார்.
"ரொம்ப வந்தனம். 'கவுண்டருக்குப் போகிறேன், ஸார்!" என்றான் ஸௌந்தரம்.
"இவ்வளவு புத்திசாலி இந்தச் சின்ன வேலையில் இருக்கக்கூடாது. கூடிய சீக்கிரம் உன்னை ஒரு கிளை ஆபீஸ் ஏஜெண்டாகப் போடுகிறேன்" என்றார் ராவ் சாகிப் ஸகஸ்ரநாமம்.
ஸௌந்தரம் மிக்க உற்சாகத்துடன் கீழே சென்றான். அன்று நிம்மதியாக வேலை பார்த்தான். ஸி.ஐ.டி. காரனையோ அவனுடைய கழுகுப் பார்வையையோ கொஞ்சங்கூட இலட்சியமே செய்யவில்லை.
சாயங்காலம் வீட்டுக்குப் போனதும் தங்கத்தினிடம் எல்லா விபரங்களையும் சொன்னான். அந்த சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காக இரண்டு பேரும் ஒரு ஹிந்தி டாக்கிக்குப் போய் விட்டு வந்தார்கள். ஹிந்தி டாக்கியில் ஒரு சௌகரியம் உண்டு. திரையில் பேசுகிறது என்னமோ இவர்களுக்குத் தெரியாது. இவர்கள் பாட்டுக்குத் தங்கள் சமாசாரம் பேசிக் கொண்டிருக்கலாமல்லவா?
இராத்திரி இரண்டு பேரும் வெகு நேரம் வரையில் பேசிக் கொண்டிருந்தாலும் பிறகு நிம்மதியாக தூங்கினார்கள்.
*****
மறுதினம் காலையில், அடுத்த வீட்டு அய்யாசாமி ஐயர் கையில் காலை தினசரிப் பத்திரிகையுடன் அவசரமாய் வந்தார்.
"என்ன மிஸ்டர் ஸௌந்தரம்! கடைசியில் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டீர்களே!" என்று கேட்டுக் கொண்டு வந்தார்.
ஸௌந்தரம் ஒன்றும் புரியாமல் "என்ன? என்ன?" என்று பரபரப்புடன் கேட்டான்.
"உங்களுக்குத் தெரியாதா, என்ன? 'குபேரா பாங்கி' கோவிந்தா ஆகிவிட்டதாமே? ஸகஸ்ரநாமம் எல்லோருக்கும் பெரிய நாமத்தைப் போட்டு விட்டுப் போய் விட்டானாமே?" என்று சொல்லிப் பத்திரிக்கையைக் கொடுத்தார். ஸௌந்தரம் அளவில்லாத திகைப்புடன் பத்திரிகையை வாங்கிப் படித்தான். அதில் பின்வரும் செய்தி, கட்டம் கட்டி, பெரிய எழுத்தில் போட்டிருந்தது.
"குபேரா பாங்கியில் சில நாளைக்கு முன் பரபரப்பு ஏற்பட்டிருந்தது நேயர்களுக்கு தெரியும். அந்தப் பரபரப்பு ஒரு வாரமாக அடங்கியிருந்தது. பாங்கிக்கு நெருக்கடி தீர்ந்து விட்டது என்று எல்லாரும் எண்ணியிருந்த சமயத்தில், திடுக்கிடும்படியான சம்பவங்கள் நேற்று இரவு நடந்திருந்தன. குபேரா பாங்கியின் மானேஜிங் டைரக்டர் ராவ் சாகிப் ஸகஸ்ரநாமம் நேற்று இரவு எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டார். பாங்கியின் கையிருப்பிலிருந்து அவர் ஏராளமான தொகைகளைக் கையாடியிருப்பதாகத் தெரிந்தது. சில நாளாக இரகசியப் போலிஸார் அவரைக் கண்காணித்து வந்தனர். நேற்று இரவு கைது செய்யப்பட்டபோது அவர் வசம் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமான சவரன்களும் தங்க நகைகளும் இருந்தன என்று தெரிகிறது. முந்தைய இரண்டு தினங்களில் அவர் மார்க்கெட்டில் ஏராளமாக சவரன்கள் வாங்கிச் சேகரித்திருந்தாராம். அவர் மதுரைக்கு டிக்கட் வாங்கியிருந்த போதிலும், உண்மையில் புதுச்சேரிக்குப் போக உத்தேசித்திருந்தாரென்று தெரிகிறது. அவரை நல்ல சமயத்தில் கைது செய்த ஸி.ஐ.டி. போலீஸாரின் சாமார்த்தியம் பெரிதும் பாராட்டப்படுகிறது."
இதைப் படித்ததும் சுமார் கால் மணி நேரம் வரையில் ஸௌந்தரம் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான். யோசிக்க யோசிக்க அவனுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாகத் தெரிய வந்தன. ஸி.ஐ.டி. காரன் பாங்கியைக் காவல் புரிந்ததெல்லாம் தனக்காக அல்ல; மானேஜிங் டைரக்டருக்காகத்தான். தான் ஒட்டியாணம் வாங்கிய நகைக் கடையில் மானேஜிங் டைரக்டர் ஸவரன் வாங்கியிருக்க வேண்டும்; அவர் அங்கே என்ன செய்தார் என்றுதான் ஸி.ஐ.டி.காரன் விசாரித்திருக்க வேண்டும்! தனக்கு ஒரு ஆபத்தும் ஏற்பட்டிருக்கவில்லை; பணம் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டியதேயில்லை. வீண் பயம்! வீண் நஷ்டம்!
அவனுடைய மனம் ஒருவாறு தெளிவடைந்ததும், உள்ளே போய், தங்கத்தைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான். அவளும் ரொம்ப ஆச்சரியப்பட்டாள்.
"நாம் பயப்பட்டது எல்லாம் வீண்!" என்று ஸௌந்தரம் சொன்னபோது, அவனுடைய மனதில் இருந்ததைத் தெரிந்து கொண்ட தங்கம், "நல்ல வேளை நேற்றைக்கே ஒட்டியாணத்தை விற்றுப் பணத்தைக் கொடுத்துத் தொலைத்தீர்களே! இல்லாமற் போனால், அது நம் தலையில் எப்போதும் ஒரு பெரிய பாரமாயிருக்கும்" என்றான்.
இதற்கு என்ன பதில் சொல்வதென்று ஸௌந்தரத்துக்குத் தெரியவில்லை. சற்று நேரம் கழித்து, திடீரென்று, "தங்கம்! இதில் இன்னொரு சங்கடம் இருக்கிறதே! பாங்கியை மூடி விட்ட படியால் எனக்கு வேலை போய் விட்டதே!" என்று கவலையுடன் கூறினான்.
"வேலைதானே போச்சு? போனால் போகட்டும். நீங்கள் போகாமல் இருக்கிறீர்களே. அதுவே எனக்குப் போதும்" என்றாள் தங்கம்.
ஸௌந்தரம் வேறொன்றும் சொல்லத் தோன்றாமல், "என் தங்கமே!" என்றான்.
ஆனந்த விகடன் 28.7.40
--------------------
15. அருணாசலத்தின் அலுவல்
1
இது ஒரு கதை. இந்தச் செய்தியை ஆரம்பத்திலேயே நான் வற்புறுத்திச் சொல்லாமற் போனால், ஒரு வேளை இதை ஒரு கட்டுரை என்றோ, பிரசங்கம் என்றோ நினைத்துக் கொள்வீர்கள். மற்றோர் அபாயமும் உண்டு. இதில் வரும் சம்பவம் உண்மையாகவே நடந்தது என்று எண்ணிவிடலாம். அவ்வளவு நிஜம் போல் இருக்கும். பிறகு ஆஸாமி யார் என்று தேடப் புறப்படுவீர்கள். தன்னுடைய விஷயம் அவ்வளவு விளம்பரமாவதை என் நண்பன் அருணாசலம் ஒருவேளை விரும்ப மாட்டான்.
இந்தப் பரந்த பூமண்டலத்திலே தற்போது தனி மனிதர்கள் முதல் அரசாங்கங்கள் வரையில் எல்லாரையும் திக்குமுக்காடச் செய்துவரும் பெரிய பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம் அல்லவா? நமது தேசத்திலும் இதுதான் பெரிய திண்டாட்டமாக இருக்கிறது. காந்தி மகான் முதல் நவ நாகரிகத்திற் சிறந்த ஸர். எம். விஸ்வேஸ்வரையா வரையில் இந்தியப் பிரமுகர்கள் அநேகர் இந்தப் பிரச்னையைப் பற்றிச் சிந்தித்து இதைத் தீர்த்து வைக்க வழி தேடுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்திலும், மத்திய வகுப்பார் அதாவது படித்த ஜனங்களுடைய திண்டாட்டந்தான் மிகக் கொடியது. ஏழைக் குடியானவர்கள், தொழிலாளிகள் முதலியவர்களின் திண்டாட்டம் அவ்வளவு பெரிதல்ல; ஏனென்றால் அவர்களுக்கு பட்டினி கிடக்கும் வித்தை நன்றாய்த் தெரியவரும். 'சித்திரமும் கைப்பழக்கம்' அல்லவா? பட்டினியும், வயிற்றுப் பழக்கந்தான். ஒரு நாளைக்கு ஒரேவேளை அரை வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டுச் சந்தோஷமாய்க் காலங்கழிக்கக் கிராமத்துக் குடியானவர்களுக்குத் தெரியும். இத்தகைய மனப்பான்மைதான் தேச முன்னேற்றத்திற்கே தடையாயிருக்கிறதென்பது சிலர் கொள்கை. பட்டணங்களில் உள்ள படித்த ஜனங்களின் விஷயம் இப்படியல்ல. ஒரு வேளைக் காப்பி கிடைக்காவிட்டால் போதும்; அவர்களுடைய வாழ்க்கை சோகமயமாகி விடுகிறது.
இந்த வேலையில்லாத் திண்டாட்டத்திலிருந்து விடுதலையடைய அநேகர் அநேக வழிகளில் முயற்சி செய்கிறார்கள். இவைகளில் சர்வ சாதாரணமாக 100-க்கு 90 பேர் முயன்று பார்க்கும் வழி ஒன்று இருக்கிறது. அதுதான் பத்திரிகைக்கு எழுதுவது. தினசரிப் பத்திரிகையில் ஒரு விசேஷக் கட்டுரையைப் படிப்பார்கள் அல்லது மாதப் பத்திரிகையில் ஒரு சிறுகதையை வாசிப்பார்கள். "என்ன பிரமாதம்? இதைப் போல் நாம் ஒன்று எழுதக் கூடாதா?" என்று தோன்றும். உடனே பத்திரிகைத் தொழிலில் பெர்னார்ட்ஷாவையும் செஸ்டர்ட்டனையும் போல் பணம் சம்பாதிப்பதாகப் பகற் கனவுகள்!
"என்ன எழுதுவது?" என்பது அவர்கள் மனத்தில் தோன்றும் அடுத்த கேள்வி. "என்ன எழுதுவது?" என்பதையே தலைப்பாகப் போட்டுக் கொண்டு சிலர் எழுதத் தொடங்குவார்கள். "ஒன்றுமில்லை" என்ற தலைப்புடன் ஒரு வெள்ளைக்காரர் பெரிய புத்தகம் ஒன்று எழுதிவிடவில்லையா? வேறு சிலர் வேலையில்லாத் திண்டாட்டத்தையே விஷயமாகக் கொண்டு, "உத்தியோக வேட்டை" என்பது போன்ற தலைப்புக்களுடன் கட்டுரையோ, கதையோ எழுதுவார்கள். தங்களுடைய சொந்த அனுபவங்களுடன் கொஞ்சம் கைச்சரக்கும் சேர்ந்தால் நல்ல கதையாகி விடுமென்று நம்பிக்கை.
இத்தகைய கதை ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு, ஒரு நாள் அருணாசலம் என்னிடம் வந்தான். அவன் என்னுடைய பாலிய நண்பன். ஆனால் இடையில் பல வருஷங்களாக நாங்கள் சந்திக்கவில்லை. அவனுடைய க்ஷேம லாபங்களைப் பற்றிக் கேட்டேன். மூன்று வருஷங்களாக முயன்று பி.ஏ. பரிக்ஷையில் தேறியவரையில் க்ஷேமந்தான் என்றும், அதனால் லாபந்தான் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறினான். வயது இருபத்தைந்து ஆகிவிட்டபடியால் சர்க்கார் உத்தியோகம் பெறும் ஆசையை விட்டு விட்டானாம். மற்றபடி தன்னுடைய அனுபவங்களை என் கையில் கொடுத்த கட்டுரையில் காணலாம் என்று தெரிவித்தான்.
அதை வாசித்துப் பார்த்தேன். சில அனுபவங்கள் மிகவும் ருசிகரமாகவே இருந்தன. உதாரணமாக ஒன்றை இங்கே குறிப்பிடுகிறேன். ஒரு முறை அருணாசலம் ஆங்கிலப் பத்திரிகைகளில் பின்வருமாறு ஒரு விளம்பரஞ் செய்தான்.
தேவை
பி.ஏ. பட்டதாரிக்கு ரூ.100 சம்பளத்தில் ஓர் உத்தியோகம் தேவை. ரூ.1000 ரொக்க ஜாமீன் கட்டக்கூடும்.
பெட்டி நெம்பர் 7032
விளம்பரம் வெளியான மூன்றாம் நாள் கடிதங்கள் வரத் தொடங்கின. அக்கடிதங்களில் பல, பெட்டி நம்பர் 7032-ஐ வாயார மனமார வாழ்த்திவிட்டு ரூ.1000 தந்தி மணியார்டரில் அனுப்பத் தயாராயிருப்பதாகவும் எப்பொழுது வந்து உத்தியோகம் ஏற்றுக் கொள்ளலாமென்றும் விசாரித்திருந்தன. இப்படி எழுதியவர்கள் வெறும் பி.ஏ.க்கள் மட்டுமல்ல. அவர்களில் சிலர் 'லிடரேசர் ஆனர்ஸ்' பட்டம் பெற்றவர்கள். வேறு சிலர் டைப்ரைட்டிங், ஷார்ட்ஹாண்டு, புக் கீபிங் முதலியவைகளும் கற்றுத் தேர்ந்தவர்கள்.
உண்மையென்னவென்றால் இங்கிலீஷ் என்னமோ சுலபந்தான். ஆனால் விளம்பரத்தைக் கண்டதும் அவர்களுக்கேற்பட்ட பரபரப்பினால் விஷயத்தை நன்கு கிரஹிக்க முடியாமல் போயிற்று. அவர்களுடைய கண்கள் விளம்பரம் முழுவதையும் பார்த்தன. அவர்களுடைய வாய்கள் விளம்பரம் முழுவதையும் படித்தன; ஆனால் அவர்களுடைய மனத்தில் மட்டும் பின்வரும் வார்த்தைகள்தான் பதிந்தன! "பி.ஏ.ரூ.100 சம்பளம்; ரூ.1000 ரொக்க ஜாமீன் - பெட்டி நெம்பர் 7032."
இன்னும் சிலர், விளம்பரத்தைச் சரியாக அர்த்தம் செய்து கொண்டு பதில் எழுதியிருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவரைத் தவிர, மற்ற எவரும் மாதம் 30 ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்கத் தயாராயில்லை. அந்த விலக்கான ஒருவர் மட்டும் கேட்டதற்கு மேலேயே, அதாவது மாதம் ரூ.125 சம்பளம் கொடுப்பதாக எழுதியிருந்தார். இந்த தவறுதலினால், அவருக்கு ரூ.1000 நஷ்டமாயிற்று. மாதம் 80 ரூபாய் அல்லது 90 ரூபாய் சம்பளம் கொடுப்பதாக அவர் எழுதியிருந்தால், அருணாசலம் வலையில் விழுந்திருப்பான். கேட்டதற்குமேல், கொடுப்பதாகச் சொன்னபடியால் சந்தேகம் தோன்றி நேரில் போய் விசாரிக்கப் போனான். வால்டாக்ஸ் சாலையில் கரிமூட்டைகள் அடுக்கியிருந்த ஓர் அறைக்குப் பக்கத்து அறையில் மேற்படி கனவானைச் சந்தித்தான். தமது "கர்ரி பவுடர் ஏற்றுமதிக் கம்பெனி"யின் மானேஜர் உத்தியோகத்தை அவர் அருணாசலத்துக்குத் தருவதாகக் கூறினார்.
கர்ரி பவுடர் எனப்படும் இந்தியக் குழம்புப் பொடியை வாங்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய தேசங்களிலுள்ள துரைசானிமார், ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்களென்றும், இப்போதுதான் கம்பெனி ஆரம்ப நிலையில் இருக்கிறதென்றும், போகப் போகச் சம்பளம் அதிகம் தருவதாகவும், ஆனால் ரூ.2000 ரொக்க ஜாமீன் கட்டினால் இப்போதே ரூ.250 சம்பளம் தருவதாகவும் சொன்னார். "யோசித்துக் கொண்டு வருகிறேன்" என்று திரும்பி வந்துவிட்டான்.
"கதை எப்படியிருக்கிறது?" என்று அருணாசலம் கேட்டான்.
"நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் கதை முடிவு சுகமில்லை" என்றேன்.
"அதில் என்ன குற்றம்?" என்று கேட்டேன்.
"மங்களகரமாக முடியும் கதைகள் எப்போதும் இரண்டாந்தரந்தான். இங்கிலீஷ் கதைகள் படித்திருக்கும் உனக்கு இது தெரிந்திருக்க வேண்டும். 'கலியாணம் செய்து கொண்டு சுகமாக இருந்தார்கள்' என்று முடிப்பது நம்முடைய தேசத்துக் கர்நாடக முறை. புதிய முறைக் கதைகளில் கதாநாயகனோ, நாயகியோ அகால மரணமடைய வேண்டியது மரபு. எதிரியைக் கொண்டு கொல்விக்க முடியாவிட்டால், விஷம் குடித்தோ, தூக்குப் போட்டுக் கொண்டோ தற்கொலை செய்விக்க வேண்டும். அல்லது கதாபாத்திரங்களை உயிரோடு விட்டாலும் அவர்களைத் தீராத துக்கத்திலாவது ஆழ்த்திவிட்டுக் கதையை முடிக்க வேண்டும்" என்று பிரசங்கம் செய்தேன்.
"வாழ்க்கையில்தான் வேண்டிய துக்கம் இருக்கிறதே! கதைகளாவது சந்தோஷமாய் முடியக்கூடாதா?" என்று கேட்டான் அருணாசலம்.
"வாழ்க்கையில் வேண்டிய துக்கம் அதிகமாயிருப்பதால் தான் கதைக்கும் துக்கமாய் முடிவுவேண்டும். அப்போதுதானே உண்மைக்குப் பொருத்தமாயிருக்கும்!"
"சரிதான், ஆனால் இந்தக் கதையைப் பொருத்த வரையில் அது பொருத்தமில்லை. ஏனென்றால் இதில் வரும் கதாநாயகன் நானே. விஷங் குடித்தோ, தூக்குப் போட்டுக் கொண்டோ உயிர் விட எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை. படிப்பிலும், அழகிலும், குணத்திலும் சிறந்த மனைவியை விட்டுவிட்டு, உயிரைவிட யாருக்குத்தான் மனது வரும்?"
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் பெருமையுண்டு. அருணாசலத்துக்கு அவன் மனைவி விஷயத்தில் பெருமை. இப்போது ஸ்ரீமதி சம்பங்கி எல்.டி பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தாள்.
"அப்படிக் கதையைச் சந்தோஷமாய் முடிப்பதாயிருந்தாலும், நீ முடித்திருக்கும் முறை சரியல்ல. ஒரு வேலையும் கிடைக்காமல் கடைசியில் தமிழ்ப் பத்திரிகைகளுக்குக் கதை எழுதத் தொடங்குகிறானென்றும், வெகு சீக்கிரத்தில் பிரசித்த பத்திரிகாசிரியனாகவும், நூலாசிரியனாகவும் ஆகி மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலானானென்றும் முடித்திருக்கிறாய். இது உண்மைக்கு நேர் மாறு பாடாயிருக்கிறது. நல்ல கதையின் இலட்சணம், அது நிஜம்போல் தோன்ற வேண்டும்."
"கதை இருக்கட்டும். நான் பத்திரிகைகளுக்கு எழுதிப் பணம் சம்பாதிப்பதைப் பற்றி என்ன சொல்கிறாய்?"
"பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. சோப்பு விற்றுப் பணம் சம்பாதிக்கலாம். மூக்குப் பொடி வியாபாரம் செய்து லட்சாதிபதியாகலாம். காமகேசரி லேகியம் விற்றுக் குபேரனாகலாம்; வெற்றிலை பாக்குக் கடை லாபத்தில் மோட்டார் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பத்திரிகைக்கு எழுதிப் பிழைக்கும் ஆசையிருந்தால் பட்டினி கிடப்பதில் காந்தி மகானுடன் போட்டி போடத் தயாராயிருக்க வேண்டும்."
"வேண்டாம், என்னிடம் ரூ. 2000 இருக்கிறது. அதைக் கொண்டு நானே ஒரு தமிழ்ப் பத்திரிகை நடத்தினாலென்ன?" என்று வினவி, தமிழ்நாட்டில் வெற்றியடைந்த இரண்டு, மூன்று பத்திரிகைகளின் பெயரையும் கூறினான்.
சென்ற பத்து வருஷத்துக்குள் தமிழ் நாட்டில் பிறந்து இறந்த தமிழ்ப் பத்திரிகைகளின் ஜாபிதா ஒன்று வைத்திருந்தேன். அதை அவனுக்குப் படித்துக் காட்டி, "இதில் 99 பெயர்கள் இருக்கின்றன. சதம் பூர்த்தியாவதற்கு இன்னும் ஒன்று பாக்கி, வேண்டுமானால் நீ ஆரம்பி" என்றேன்.
---------
2
ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், அருணாச்சலம் மறுபடியும் வந்தான். அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு சோகமயமாயிருந்தது. "உன்னிடம் ஏதாவது வைரம் இருக்கிறதா?" என்று கேட்டான்.
"வைரமா? என்னிடம் ஏது? விதேசிப் பொருள்களில் எனக்குச் சிரத்தை கிடையாது என்று தெரியாதா?" என்றேன்.
"வேண்டாம்! சுதேசிக் கயிறாவது, நீளமான கயிறாக ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டான்.
எனக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது. "கயிறு எதற்காக?" என்றேன்.
"இன்றைய தினம் என் உயிரை விட்டு விட்டு மறுகாரியம் பார்க்கப் போகிறேன்" என்றான்.
அவனைச் சமாதானப்படுத்தி விசாரித்ததில் விஷயம் என்னவென்று தெரிய வந்தது. அவன் துணைவி ஸ்ரீமதி சம்பங்கி அம்மாள் எல்.டி. பரீட்சையில் தேறி, உபாத்தியாயினி வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தாளாம். திருச்சிராப்பள்ளியிலுள்ள பெண்களின் ஹைஸ்கூல் ஒன்றில் மாதம் ரூ.120 சம்பளத்தில் உபாத்தியாயினியாக நியமிக்கப் பட்டிருப்பதாய் அன்றைய தினம் உத்தரவு வந்ததாம். 'உத்தியோகம் புருஷ லட்சணம்' என்று பெரியோர் சொல்லியிருக்க, மனைவிக்கு உத்தியோகம் ஆன பிறகு, தான் உத்தியோகம் இல்லாமல் எப்படியிருப்பது என்று அருணாசலம் கவலைப்பட்டான். மனைவி சம்பாதித்துப் போட்டுத் தான் சாப்பிட்டுக் கொண்டு மானங்கெட்ட வாழ்வு வாழ்வதை விட ஏன் இப்போதே பிராணத் தியாகம் செய்துவிடக் கூடாது என்பதற்கு நான் ஏதேனும் தக்க காரணம் எடுத்துக் காட்ட முடியுமா என்று வினவினான்.
'உயிர் உள்ளவரை நம்பிக்கைக்கு இடமுண்டு' என்ற மொழியை அவனுக்கு எடுத்துக்காட்டி ஆறுதல் கூறினேன். அவன் இவ்வளவு வைராக்கிய புருஷன் என்பது எனக்குத் தெரியாதென்றும், இனிமேல் கண்ணுங்கருத்துமாயிருந்து ஏதாவது ஒரு வேலை அவனுக்குத் தேடிக் கொடுப்பதாகவும் உறுதி கூறினேன். இப்போதைக்கு நீ உன் மனைவியுடன் திருச்சிக்குப் போ. என்ன படித்திருந்தாலும் ஸ்திரீதானே? அங்கே திக்குத்திசை தெரியாமல் தவிப்பாள். கொஞ்ச நாளைக்கு நீ அவளுடன் இருக்க வேண்டியது அவசியம்" என்றேன்.
"அப்படியே செய்கிறேன். ஆனால் நீ உன்னுடைய வாக்குறுதியை மறந்து விடக்கூடாது. 30 ரூபாய் சம்பளம் கிடைத்தாலும் போதும். ஆனால் உத்தியோகமின்றி இனி அதிக காலம் நான் உயிர் வாழ மாட்டேன்" என்று சொல்லி விட்டுப் போனான்.
ஐந்தாறு மாதத்துக்குப் பிறகு எனக்குத் தெரிந்த முதலாளி ஒருவர் ஒரு தமிழ் வாரப் பத்திரிகை ஆரம்பிப்பதாகச் சொன்னார். உதவி ஆசிரியர் ஒருவர் வேண்டுமென்று தெரிவித்தார். உடனே அருணாசலத்துக்குக் கடிதம் எழுதினேன். அவனுடைய பதில் எனக்கு ஆச்சரியம் உண்டு பண்ணிற்று. மாதம் 65 ரூபாய் சம்பளத்தில் தனக்கு முன்பே உத்தியோகம் ஆகிவிட்டதாகவும், சம்பள உயர்வுக்கு இடமுண்டு என்றும் தெரிவித்திருந்தான். என்னுடைய முயற்சிக்காக நன்றி செலுத்திவிட்டு, திருச்சிக்கு வந்தால் தன் வீட்டுக்கு வராமல் போகக் கூடாதென்று வற்புறுத்தியிருந்தான். அலுவல் என்ன என்று மட்டும் சொல்லவில்லை.
------------
3
சமீபத்தில் ஒரு காரியமாக நான் திருச்சிக்குப் போக நேர்ந்தபோது, அருணாசலத்தை அவசியம் பார்த்துவிட்டு வருவது என்று தீர்மானித்தேன். அவனைப் பார்ப்பதில் இருந்த ஆவலைவிட, அவனுடைய அலுவல் என்னவென்பதை அறிவதில் அதிக ஆவல் இருந்தது. அவனுடைய கடிதங்களில் அதைப் பற்றி அவ்வளவு மூடுமந்திரம் செய்திருந்தான்.
மாலை ஆறரை மணிக்குமேல் வீட்டில் வந்து பார்க்கும்படி எழுதியிருந்தான். அன்று மாலை எனக்கு வேலையொன்றும் இல்லாமையால் நாலு மணிக்கே புறப்பட்டு அவன் வீட்டைத் தேடிக்கொண்டு போனேன். வெளிச்சத்திலேயே வீட்டை அடையாளங் கண்டுபிடித்து விட்டால், பிறகு இரவில் சுலபமாகப் போகலாம் என்று எண்ணம்.
ஐந்து மணிக்கு அவன் வீட்டைக் கண்டுபிடித்தேன். கதவு உட்புறம் தாளிட்டிருந்தது. தட்டினேன். உள்ளிருந்து, "யார் அது?" என்ற சத்தம் கேட்டது. அது அருணாசலத்தின் குரலாய் இருக்கவே, 'நல்லவேளை, மறுபடியும் போய்விட்டு வரவேண்டியதில்லை' என்று எண்ணி, "நான் தான் அருணாசலம், கதவைத் திற!" என்றேன்.
அருணாசலம் உள்ளிருந்து, "ஊ! ஊ!" என்று ஒரு விநோதமான சத்தம் இட்டான். அடுத்த நிமிஷம் வந்து கதவைத் திறந்தான். அவனுடைய கோலத்தைக் கண்டதும் திகைத்துப் போனேன். கலாசாலையில், "டம்பாச்சாரி" என்று பெயர் பெற்ற அருணாசலம் இடுப்பில் ஒரு முழத் துண்டை மூலக்கச்சம் கட்டிக் கொண்டு வந்து எதிரில் நின்றால் திகைக்காமல் என் செய்வது? போதாததற்கு அவனுடைய ஒரு கை ஏதோ மாவில் அளைந்த அடையாளத்துடன் இருந்தது. அச்சமயம் அவன் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தான் என்பதைக் கண்டு பிடிப்பதற்குப் புத்திக்கூர்மை அதிகம் வேண்டியதில்லை. என்னை மளமளவென்று அழைத்துச் சென்று கூடத்திலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, "சற்று உட்கார்ந்திரு. இதோ குக்கரை இறக்கிக் குழம்புக்குத் தாளித்துக் கொட்டிவிட்டு வந்துவிடுகிறேன்" என்றான். அப்போது அங்கே தொங்கிய தொட்டிலில் கிடந்த ஒரு குழந்தை 'வீல்' என்று கத்தியது.
"இந்தப் பயல் அழுதால் கொஞ்சம் தொட்டிலை ஆட்டு, ரொம்ப துஷ்டன்" என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டான்.
தலையெழுத்தை நினைத்துக் கொண்டு தொட்டிலை ஆட்டினேன். அப்போது என்னவெல்லாமோ எண்ணம் தோன்றிற்று. அருணாசலத்தின் மேல் அளவில்லாத இரக்கம் உண்டாயிற்று. படித்த பெண்களைக் கலியாணம் செய்து கொண்டால் இந்தக் கதிதான். அவளுந்தான் உத்தியோகம் பார்க்கிறாள். இவனுந்தான் உத்தியோகம் செய்கிறான். ஆனால் அவளுக்குச் சம்பளம் அதிகமாயிருப்பதால், வீட்டு வேலைகளையெல்லாம் இவன் செய்ய வேண்டியிருக்கிறது போலும்! அருணாசலத்தின் ரோஷமெல்லாம் எங்கே போயிற்று?
சற்று நேரத்திற்கெல்லாம் சம்பங்கி அம்மாள் வந்தாள். என்னைப் பார்த்ததும், "ஓ! நீங்கள் ஆறரை மணிக்கல்லவா வருவீர்களென்று நினைத்தேன்?" என்றாள். அவள் முகத்தில் ஒரு சிறிது அதிருப்தி தோன்றியது. ஆனால் அதை உடனே மறைத்துப் புன்னகையுடன், "முன்னால் வந்ததற்குத் தண்டனை தொட்டில் ஆட்டும் வேலை கிடைத்ததாக்கும்" என்று கூறினாள். அப்போது எனக்கேற்பட்ட மனக்குழப்பத்தில் இன்ன பதில் சொன்னேன் என்பதே எனக்கே இப்போது ஞாபகம் இல்லை. ஏதோ உளறியிருக்க வேண்டும்.
இதற்குள் அருணாசலம் சமையலை முடித்து விட்டு, வேஷ்டி சொக்காய் முதலியவை போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தான். பேச்சினிடையில், "இவர் இப்போது உயிரோடிருப்பதற்காக உங்களுக்கு நான் நன்றி செலுத்த வேண்டும் அல்லவா? தூக்குப் போட்டுக் கொள்ளக் கயிறு கொடுக்க மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டீர்களாமே!" என்று சம்பங்கி சொன்னாள்.
"ஆமாம். வைரங்கூட கிடையாது என்று சொல்லி விட்டேன்" என்று நானும் சிரித்துக் கொண்டே கூறினேன்.
"இங்கு வந்த பிறகு கூடக் கொஞ்ச நாள் அப்படித்தான் பயமுறுத்திக் கொண்டிருந்தார். நான் பதிலுக்கு ஒன்று சொல்லிப் பயமுறுத்திய பிறகுதான் அந்தப் பேச்சு நின்றது. சொல்லி விடட்டுமா?" என்று சம்பங்கி அருணாசலத்தைப் பார்த்தாள்:
"தாராளமாகச் சொல். எனக்கு ஆட்சேபணையில்லை" என்றான் அருணாசலம்.
"இவர் அப்படி ஏதாவது தற்கொலை செய்துகொண்டு இறந்தால், நான் மறுநாளே, பத்திரிகைகளில், 'படித்து உத்தியோகம் பார்க்கும் இளம் விதவைக்குப் புருஷன் தேவை' என்று விளம்பரம் செய்து கொள்வேனென்று கூறினேன். அது முதல் செத்துப் போவதைப் பற்றி வாய் திறப்பதில்லை."
"ஒரு வேளை உத்தியோகம் கிடைத்ததும் அந்தப் பேச்சை மறந்ததற்கு ஒரு காரணமாயிருக்கலாம் அல்லவா?" என்றேன். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தின் மேல் கண் என்பது போல், அவனுடைய அலுவல் என்னவென்று தெரிந்து கொள்வதிலேயே என் நோக்கம் இருந்தது.
"அதுவும் ஒரு காரணந்தான்" என்றான் அருணாசலம்.
"எந்த ஆபிசில் அப்பா, உனக்கு வேலை? அதை நீ சொல்லவேயில்லையே" என்றேன்.
அருணாசலம் சிரித்துக் கொண்டே, "ஆமாம், நேரில் தான் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். என்னுடைய ஆபீஸ் இந்த வீடுதான். நீ வந்த போது செய்து கொண்டிருந்தேனே அதுதான் என்னுடைய வேலை" என்றான்.
முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்புறம் நன்றாக விசாரித்ததில் பின்வரும் ஆச்சரியமான விவரங்கள் தெரியவந்தன.
சம்பங்கி அம்மாளுக்குக் கிடைத்த ரூ.120 சம்பளத்தில், அருணாசலத்துக்கு மாதம் ரூ.65 சம்பளம் கொடுப்பாளாம். வீட்டுச் செலவுகளுக்குத் தலைக்குச் சரிபாதி போட்ட பின்னர், பாக்கி மிகுந்ததை அவரவர்கள் இஷ்டம்போல் செலவு செய்வார்களாம்; அல்லது சேர்த்து வைத்துக் கொள்வார்களாம்; மேற்படி சம்பளம் வாங்குவதற்காக அருணாசலம் சமையல், குழந்தையைப் பார்த்துக் கொள்வது உட்பட எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டியது. ஒருவர் வேலையில் மற்றவர் உதவி செய்வது அவரவர்களுடைய இஷ்டத்தைப் பொறுத்தது.
"ஆமாம் ஸார்! இவர் மாதம் 30, 40 சம்பளத்துக்கு எங்கேயாவது போய் உழைப்பதில் என்ன சாதகம்? இவர் இல்லாமற்போனால் நான் சமையற்காரியும் குழந்தைக்கு நர்ஸும் வைத்தாக வேண்டும். இவரும் வேறெங்கேயோ போய்ச் சேவகம் செய்து, நானும் இங்கே பணம் செலவழிப்பதில் என்ன நன்மை? இப்போது நாங்கள் சேர்ந்து இருப்பதற்கும் வசதியிருக்கிறதல்லவா?" எனச் சம்பங்கியம்மாள் கூறினாள்.
நான் எங்கு ஏதாவது அநுசிதமாய்ப் பேசி அருணாசலத்தின் மனத்தை மாற்றி, அவர்களுடைய குடும்ப வாழ்க்கைக்குச் சனியனாய் விடப் போகிறேனோ என்று அந்த அம்மாள் பயந்ததாகத் தோன்றியது. ஆனால் அந்தப் பயம் அநாவசியமேயாகும். ஏனெனில், அருணாசலம் தன்னுடைய நிலைமையில் முற்றும் திருப்தியுள்ளவனாயிருந்தான். அவனுடைய மனத்தை மாற்றுவதற்கு யாராலும் முடியாது.
"ஆனால் ஒரு தகராறு இருக்கிறது, அப்பா! அதை நீதான் பஞ்சாயத்துச் செய்து தீர்த்து வைத்துவிட்டுப் போகவேண்டும்" என்றான்.
"முடியுமானால் செய்கிறேன். அது என்ன?" என்று கேட்டேன்.
"நான் வேலை ஒப்புக்கொண்டு ஒரு வருஷம் ஆகிறது. அவ்வப்போது சம்பளம் உயர்த்த வேண்டுமென்று அப்போது பேச்சு. இந்த வருஷம் பள்ளிக்கூடத்தில் இவளுக்குச் சம்பளம் உயர்த்தாதபடியால் எனக்கும் சம்பளம் உயர்வு கிடையாது என்கிறாள். இது நியாயமா? இவளுடைய சம்பளத்துக்கும் என்னுடைய சம்பளத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்றான்.
"ஆமாம், ஸார்! உலகமெல்லாம் 100க்கு 10 சம்பளம் குறைத்திருக்கிறார்கள். இவருக்கு எப்படி ஸார் உயர்த்த முடியும்?" என்றாள் சம்பங்கி.
நான் யோசித்தேன். என்னுடைய அநுதாபமெல்லாம் அருணாசலத்தின் பக்கந்தான் இருந்தது. ஆனால் அவன் பக்கம் பேசுவதில் ஓர் அபாயம் இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய வீட்டில் என் மனைவி குடும்ப வேலை பார்ப்பதற்கு இந்த மாதிரி சம்பளம் கேட்கத் தொடங்கினால் நான் தாராளமாய் இருக்க முடியுமா? நீங்கள்தான் இருக்க முடியுமா? ஆகவே இப்போது அருணாசலம் பக்கம் பேசினால் ஆண் குலம் முழுவதற்கும் ஒரு பிரதிகூலத்தைச் செய்தவர்களாவோம் என்று தோன்றியது. தீர ஆலோசித்துப் பின்வருமாறு தீர்ப்புக் கூறினேன்.
"அம்மாளுடைய சம்பளத்துக்கும் உன் சம்பளத்துக்கும் சம்பந்தம் இல்லை. இதைக் காரணமாய்க் காட்டி உனக்குச் சம்பள உயர்வு இல்லையென்று சொல்வது தவறுதான். ஆனால் நீயும் காரணமின்றிச் சம்பள உயர்வு கேட்கக் கூடாது. உன் உத்தியோகத்துக்கு வருஷா வருஷம் சம்பள உயர்வு சரியன்று. ஒரு குழந்தை அதிகமானால் ஓர் ஐந்து ரூபாய் சம்பளம் அதிகமென்று ஏற்படுத்திக் கொள்வது நியாயமாயிருக்கும்."
இந்தத் தீர்ப்பு சம்பங்கி அம்மாளுக்கு மிகவும் திருப்தியளித்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஏனெனில், அவள் எங்கள் இருவரையும் உட்கார வைத்துச் சாப்பாடு பரிமாறினாள். அருணாசலத்தின் வேலையில் உதவி செய்யத் தனக்கு அன்று இஷ்டம் என்று தெரிவித்தாள்.
அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வாசற்படியைத் தாண்டும் போது, 'இந்த ஏற்பாட்டின் கீழ் அந்தத் தம்பதிகள் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்த முடியுமா? அவர்களிடையில் அன்பு இருக்குமா?' என்ற எண்ணம் மனத்தில் தோன்றியது. அப்போது என்னையறியாமல் நான் விட்டுப் பிரிந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன்.
வெட்கங் கெட்டவர்கள்! நான் அப்பால் போகிற வரையில் தாமதிக்கக் கூடாதா?
கலைமகள் செப்டம்பர் 1932
----------------
This file was last updated on 26 Sept. 2018
Feel free to send the corrections to the webmaster.