திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்கள் சரித்திரம் - இரண்டாம் பாகம், பகுதி 1
உ. வே. சாமிநாதையர் எழுதியது
tiricirapuram makAvitvAn mInATcicuntaram piLLai
carittiram, volume 2, part 1
written by u.vE. cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our thanks also go to Tamil Virtual Academy for providing a PDF copy of this work.
The e-text has been generated using Google OCR and subsequent proof-reading.
Sincere thanks go to Ms. Karthika Mukundh for her help in the proof-reading process.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - இரண்டாம் பாகம், பகுதி 1
உ. வே. சாமிநாதையர் எழுதியது
Source
திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்.
இரண்டாம் பாகம்
இது ஷை பிள்ளையவர்கள் மாணாக்கர் மகாமகோபாத்தியாய
தாக்ஷீணாத்ய கலாநிதி டாக்டர் - உ. வே. சாமிநாதையரால் எழுதப்பெற்று,
சென்னபட்டணம் கேஸரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
ஸ்ரீமுக ஆண்டு மாசி மாதம்
1934
Copyright Registered. (விலை. ரூபா 2-0-0.)
---------------
இப்புத்தகத்தில் அடங்கியவை.
இப்புத்தகத்தில் வந்துள்ள சிறப்புப்பெயர் முதலியவற்றின் முதற் குறிப்பகராதி
முகவுரை
ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - இரண்டாம் பாகம்
1. என்னை ஏற்றுக்கொண்டது
2. நான் பாடங்கேட்கத் தொடங்கியது .
3. திருவாவடுதுறை நிகழ்ச்சிகள்
4. பட்டீச்சுரம் போய்வந்தது
5. திருவாவடுதுறைக் குருபூஜை நிகழ்ச்சிகள்
6. திருவாவடுதுறை வாஸம்
7. பட்டீச்சுர நிகழ்ச்சிகள்
8. திருப்பெருந்துறைப் புராண அரங்கேற்றம்
9. பல ஊர்ப் பிரயாணம்
10. தேக அசௌக்கிய நிலை
11. குடும்பத்தின் பிற்கால நிலை
12. இயல்புகளும் புலமைத்திறனும்
அநுபந்தங்கள்
1. வேறுசில வரலாறுகள்
2. தனிச்செய்யுட்கள்
3. பிறர் வரைந்து அனுப்பிய கடிதங்கள்
4. பாராட்டு
செய்யுள் முதற்குறிப்பகராதி
சிறப்புப் பெயர் முதலியவற்றின் அகராதி
பிழையுந் திருத்தமும்.
----------------------
இப்புத்தகத்தில் வந்துள்ள சிறப்புப்பெயர் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி.
ஆறு - பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை.
கச்சி - கச்சியப்ப முனிவர்.
கம்ப - கம்பராமாயணம்.
கலெ - கலெக்டர்.
சுப் - மேலகரம் சுப்பிரமணிய தேசிகர், சுப்பையா பண்டாரம்.
தியாக - தியாகராஜ சாஸ்திரிகள், தியாகராச செட்டியார்.
திருஞா - திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்.
திருநா - திருநாவுக்கரசு நாயனார்.
திருவிளை - திருவிளையாடற் புராணம்.
தே - தேவாரம்.
நாலடி - நாலடியார்.
ப - பக்கம்.
பசு - பசுபதி பண்டாரம்.
மீ - மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள்.
-----------------
திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்.
இரண்டாம் பாகம், பகுதி 1
கணபதி துணை.
முகவுரை
தேவாரம் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்
திருச்சிற்றம்பலம்.
நன்றுடை யானைத் தீயதி லானை நரைவெள்ளே
றொன்றுடை யானை யுமையொரு பாக முடையானைச்
சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறவென் னுள்ளங் குளிரும்மே.
திருச்சிற்றம்பலம்.
உடலை வளர்த்தற்குரிய பலவகையான பொருள்களை வழங்கும் அறங்களிலும் உள்ளத்தின் உணர்வு வளர்ச்சிக்குக் காரணமான கல்வியை வழங்கும் வள்ளன்மை சிறந்ததாக ஆன்றோர்களால் எக் காலத்தும் மதிக்கப்படுகின்றது. ஒருமைக்கண் கற்றகல்வி எழுமையும் பயன் தருதலால் அதனை வழங்கும் பெரியோர்கள் உலகில் உயர்ந்தவர்களாகவும் பேருபகாரிகளாகவும் எண்ணப்படுகின்றனர். அவர்கள் செய்த பேரறத்தின் பயனாகவே கலைவளம் சிறந்து விளங்குகின்றது. மக்களுடைய மன உணர்வைப் பண்படுத்தும் அப்பெரியோர்கள் செய்த அருஞ்செயல்களும் இயற்றிய நூல்களும் எல்லோராலும் போற்றப்பட்டு வருவது யாவரும் அறிந்ததேயாகும். காலதேச வர்த்தமானங்கள் எங்ஙனம் மாறினும் அத்தகைய புலவர்களுடைய புகழ் குன்றாமல் ஒரே நிலைமையில் நிலவிவருகின்றது. சிலருடைய புகழ் வளர்ச்சியுற்றும் வருகின்றது.
இங்ஙனம் புகழ்பெற்றுத் தமிழ்நாட்டில் விளங்கியவர்களுள் திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவானும் என்னுடைய தமிழாசிரியருமாகிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களும் ஒருவராவர். இவர்கள் 19-ஆம் நூற்றாண்டில் 1815- ஆம் வருஷம் முதல் 1876- ஆம் வருஷம் வரையில் இருந்து விளங்கியவர்கள். இவர்களுடைய சரித்திரத்தை
எழுதிப் பதிப்பித்து வந்ததில் நான் பாடங்கேட்கப் போகுமுன் நிகழ்ந்த வரலாறுகள் (1815 முதல் 1870 வரையில் உள்ளவை) சில மாதங்களுக்கு முன்பு முதற் பாகமாக வெளியிடப்பெற்றன. ஏனைய வரலாறுகளே இரண்டாம் பாகமாகிய இப்புத்தகத்தில் உள்ளவை.
தமிழ்ப் புலவர்கள் வரலாற்றின் நிலைமையைப்பற்றி நான் சொல்ல வேண்டிய விஷயங்களையெல்லாம் முதற்பாகத்திற் சொல்லி விட்டமையால் அவற்றை மீட்டும் இங்கே தெரிவிக்கவில்லை.
பிரஜோற்பத்தி வருஷம் - சித்திரை மாதம் (1870 ஏப்ரில்) இப் புலவர்பிரானிடம் நான் பாடங்கேட்க வந்து சேர்ந்தேன். அது முதல் இவர்கள் சிவபதமடைந்தகாலம் வரையில், இடையே சில மாதங்கள் நீங்கலாக, இவர்களுடனே இருக்கும் பெரும் பேறுபெற்றேன்.
இச் சரித்திரத்தை எழுதி வரும்பொழுது என்னுடைய மனம். பழைய காட்சிகளை மீண்டும் கண்டு கனிந்து கொண்டேயிருந்தது. இக்கவிஞர்பிரான் என்பால் வைத்திருந்த பேரன்பு இவர்களுடைய செயல் ஒவ்வொன்றையும் என் நெஞ்சிற் பதித்துவிட்டது. அந்த நினைவே இப்பாகத்திற் காணப்படும் செய்திகளை எழுதுவதற்குத் துணையாக இருந்தது. முதற்பாகத்தின் முகவுரையிற் குறிப்பித்துள்ளபடி பல இடங்களிற் சென்று சென்று தேடிய முயற்சியினாற் கிடைத்த செய்திகளுள் சில இந்தப் பாகத்திற்கும் உதவியாக இருந்தன. இவர்கள் சொல்லச் சொல்ல என்கையினாலே எழுதிய தனிப் பாடல்கள் அளவிறந்தன; அக்காலத்தில் அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்னும் நோக்கம் இல்லாமையால் அவற்றை நான் தொகுத்து வைக்கவில்லை. என்னுடைய நினைவிலுள்ளவைகளும் வேறுவகையிற் கிடைத்தவைகளுமான செய்யுட்கள் இதன்கண் அமைந்துள்ளன. அவற்றிற்கு இன்றியமையாத இடங்களில் குறிப்புரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தால், இக்கவிஞர் கோமான் திருவாவடுதுறை யாதீனத்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரால் நன்கு மதிக்கப்பெற்று விளங்கினமையும், தம்பால் வந்து விரும்பினவர்களுக்குச் செய்யுள் இயற்றிக்கொடுத்துப் பயன்பெறும்படி செய்தமையும், யாரிடத்தும் எளிதிற் பழகி வந்தமையும், மாணாக்கர்களிடத்தில் அளவற்ற அன்பு காட்டிவந்ததும், எந்த வகையிலும் அவர்களை ஆதரித்துப் பாடஞ் சொல்வது இவர்களுடைய பெரு நோக்கமாக இருந்தமையும், இவர்கள் ஒப்புயர்வற்ற குணங்களுடன் சிறப்புற்று விளங்கினதும், இவர்களுடைய காலப்போக்கும், பல செல்வர்கள் இவர்களை அன்போடு ஆதரித்துப் போற்றிய திறமும், பலவகையான உபகாரிகளுடைய தன்மைகளும், அக்காலத்தில் தமிழ் வித்துவான்களிடத்தில் தமிழ் மக்கள் வைத்திருந்த பேரன்பும், வடமொழி தென்மொழி வித்துவான்கள் ஒருவரோடொருவர் மனங்கலந்து பழகியமையும், தமிழ்நாடு இப்புலவர் சிகாமணியால் இன்ன இன்ன வகையில் பயனுற்றதென்பதும், பிறவும் விளங்கும்.
ஸ்ரீ சிவஞான முனிவர் காஞ்சிப் புராணம் அரங்கேற்றிய வரலாறு, ஒரு போலிப் புலவருடைய வரலாறு, ஆவூர்ப் பசுபதி பண்டாரம் முதலியவர்களுக்குப் பாடல் அளித்த செய்தி, 'உடுக்கையும் பம்பையும் இல்லாததுதான் குறை', சுப்பையா பண்டாரம் மாம்பழம் வாங்கிவந்தது, சூரியனார் கோயில் அம்பலவாண தேசிகர் தொடுத்த வழக்கு, வண்டானம் முத்துசாமி ஐயரது இயற்கை முதலிய செய்திகளும், இவர்களுடைய பொதுவியல்புகளும், புலமைத்திறமும் அன்பர்களுக்கு இன்பத்தை அளிக்குமென்று நம்புகிறேன்.
இருபத்தெட்டு காப்பியங்களும் நாற்பத்தைந்து பிரபந்தங்களும் இவர்கள் இயற்றியனவாக இப்பொழுது தெரிய வருகின்றன. இவர்கள் இயற்றிய தனிப்பாடல்களோ அளவுகடந்தன. இவ்வளவு மிகுதியான நூல்களை இயற்றியவர்கள் தமிழ்ப்புலவர்களில் வேறு யாருமில்லை.
இப் பெரியாருடைய சரித்திரத்தில் அங்கங்கே எழுதப்படாமல் விடுபட்ட சில வரலாறுகளும், இவர்கள் அவ்வப்பொழுது பாடிய கடவுள் வணக்கங்கள் அன்பர்களைப் பாராட்டிய செய்யுட்கள் முதலிய தனிச் செய்யுட்களும், இவர்களுக்குப் பிறர் வரைந்து அனுப்பிய சில கடிதங்களும், சிலவற்றின் பகுதிகளும், மாணாக்கர்கள் முதலியவர்கள் இவர்களுடைய நூல்களுக்கு அளித்த சிறப்புப்பாயிரங்களின் பகுதிகளும் முறையே இப்புத்தகத்தின் அநுபந்தங்களாகச் சேர்க்கப்பெற்றுள்ளன.
இவர்களைப்பற்றிய வேறு செய்திகள் எவற்றையேனும் தெரிந்தவர்கள் அன்புகூர்ந்து தெரிவிப்பின் அவற்றை அடுத்த பதிப்பில் சேர்த்துக்கொள்வேன்.
"இம்மகாகவியினுடைய உருவப்படம் எடுக்கப்படவில்லை யென் பதை முதற்பாகத்தின் முகவுரையிலேயே தெரிவித்திருக்கிறேன். கடிதங்களில் இவர்கள் போடும் கையெழுத்தின் மாதிரியும் இவர்கள் எழுதிய ஏட்டுச்சுவடிகளுள் ஓர் ஏட்டின் ஒரு பக்கத்தின் படமும் அன்பர்கள் அறிந்துகொள்ளுமாறு இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவர்களுடைய புலமையை அறிந்து ஆதரித்தவரும் இவர்களைப் போலவே என்னிடம் அளவற்ற அன்பு பூண்டவரும் இந்தப் பாகத்தில் உள்ள வரலாறுகளிற் பல இடங்களில் கூறப்படுபவரும் திருவாவடுதுறையில் 16 - ஆம் பட்டத்தில் வீற்றிருந்தவருமாகிய மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களுடைய படம் இப்புத்தகத்தின் முதலில் சேர்க்கப்பெற்றுள்ளது.
இந்த வரலாற்றை எழுதுவதற்குக் கடிதங்கள், நூல்கள், ஏட்டுச்சுவடிகள் முதலியவற்றை அளித்தும் தமக்குத் தெரிந்த செய்திகளைச் சொல்லியும் எனக்கு உதவிபுரிந்த அன்பர்களை நான் ஒரு போதும் மறவேன்.
இச்சரித்திரத் தலைவர்களாகிய கவிஞர் கோமானைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் இவர்களுடைய தளர்ந்த வடிவமும், மாணாக்கர் கூட்டத்திற்கு இடையில் வீற்றிருந்து தமிழ்ப்பாடஞ் சொல்லுங் காட்சியும், தமிழ்ச் செய்யுட்களை எளிதிற்புனையும் தோற்றமும் என் அகத்தே தோன்றுகின்றன. இனி அத்தகைய காட்சிகளையும், இவர்களைப் போல அருங்குணமும் பெரும்புலமையும் வாய்ந்தவரையும் எங்கே பார்க்கப்போகிறோமென்ற ஆராமை மீதூருகின்றது. ‘இவர்கள்பாற் கல்விபயின்ற காலத்திலேயே இன்னும் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கலாமே!' என்றும் இரங்குகின்றேன். காலத்தின் போக்கை நோக்கும்போது இவர்களுடைய பெருமை மேன்மேலும் உயர்ந்து தோன்றிக்கொண்டே இருக்கிறது.
பெருங்கவிஞராகிய இவருடைய புலமைத்திறத்தை நாம் அறிந்து மகிழ வேண்டுமென்றால் இவர்களுடைய நூல்களைப் படிக்க வேண்டும். பழம்புலவர்களுடைய வரலாற்றை அறிந்து, “அவர்கள் பெருங் கவிஞர்கள்" என்று பாராட்டும் அளவிலே நின்றுவிடாமல் அத்தகையவர்களுடைய நூல்களைப் படித்தலும், படிப்பித்தலுமே அவர்கள் திறத்திற்செய்யும் கைம்மாறாகும். இவர்களுடைய நூல்களிற் பல அச்சிடப்படவில்லை. சில அச்சிடப்பட்டும் இப்போது கிடைக்கவில்லை. ஆதலால் அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக அச்சிட்டு வெளி வரச்செய்தல் தமிழ்மக்களின் கடமையாகும்.
தமிழ்மொழியறிவின் வளர்ச்சியைக் குறித்துப் பலவேறுவகையில் தம் உடல், பொருள், ஆவியனைத்தையும் ஈடுபடுத்திப் புகழுடம்புடன் விளங்குகின்ற இக்கவிச்சக்கரவர்த்தியின் திருநாளைத் தஞ்சையில் சில அன்பர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் முதன்முதலாக இவ்வருஷம் கொண்டாட எண்ணியிருக்கிறார்களென்று தெரிகிறது. அத்திருநாளுக்கு முன்பே இவ்விரண்டாம் பாகமும் வெளிவந்தது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
முதற்பாகத்தை எழுதும்பொழுதும் பதிப்பிக்கும்பொழுதும் உடனிருந்து எழுதுதல் முதலிய உதவிகளைப் புரிந்த சென்னை, கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி. மு. சுப்பிரமணிய ஐயரும், கலைமகள் துணையாசிரியர் சிரஞ்சீவி வித்துவான் கி.வா.ஜகந்நாதையரும் இந்தப் பாகத்திற்கும் அங்ஙனமே உதவி புரிந்தார்கள். அவர்களுக்கு எல்லா நலங்களையும் அளித்தருளும் வண்ணம் தமிழ்த் தெய்வத்தைப் பிரார்த்திக்கின்றேன்.
என்னுடைய அயர்ச்சி மறதி முதலியன காரணமாக இப்பதிப்பிற் காணப்படும் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளும்படி அறிஞர்களை வேண்டுகின்றேன்.
தமிழ்மகளின் திருவழகைச் காவியங்களாகிய ஓவியங்களில் அமைத்து மகிழ்ந்த வித்தகரும், மாணாக்கருடைய அறிவாகிய நிலத்தில் அன்பு நீர் பாய்ச்சித் தமிழாகிய வித்திட்டுத் தமிழ்ப்பெரும் பயிரைவளர்த்த சொல்லேருழவரும், காலம் இடம் நிகழ்ச்சி என்பவற்றால் வரும் துன்பங்களால் சோர்வுறாமலும் தம்முடைய மானமும் பெருமையும் குறையாமலும் நின்ற குணமலையும் ஆகிய பிள்ளையவர்களுடைய பெரும் புகழும், அரிய நூல்களும் தமிழ்மக்களால் நன்கு உணரப் பெற்று மேன்மேலும் விளக்கமுற்று வாழ்வனவாக!
சங்ககாலம் முதல் தமிழ்மொழியை வளம்படுத்திய புலவர் பெருமக்களின் வரலாறுகளை முறையாக வெளியிட வேண்டுமென்னும் எண்ணம் நெடுங்காலமாக எனக்குண்டு. இச்சரித்திரத்தை நிறைவேற்றி வைத்த இறைவன் திருவருள் அவ்வெண்ணத்தையும், நிறைவுறச் செய்யுமென்று நம்புகின்றேன்.
இங்ஙனம்,
வே. சாமிநாதையர்.
'தியாகராஜ விலாசம்'
திருவேட்டீசுவரன்பேட்டை, - 24-2-1934.
இது, பிள்ளையவர்கள் எழுதிய தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணர் உரை ஏட்டுச் சுவடியிலுள்ள ஓரேட்டின் ஒரு பக்கத்தின் படம். இதில் கிளவியாக்கம் 35-36ஆம் சூத்திரங்களும் அவற்றின் உரையும் அடங்கியுள்ளன.
கணபதி துணை
1. என்னை ஏற்றுக்கொண்டது.
எனது இளமைக் கல்வி.
என்னுடைய இளமைக் காலந்தொடங்கி எனக்குத் தமிழ் படிக்க வேண்டுமென்ற விருப்பமே மிகுதியாக இருந்து வந்தது. என் தந்தையாரே எனக்கு முதலில் தமிழாசிரியராக இருந்து நிகண்டு, சதகம் முதலிய கருவி நூல்களைக் கற்பித்து வந்தனர். பின்பு அரியிலூர்ச் சடகோபையங்கார் முதலிய சில வித்துவான்களிடத்திற் கற்றுக்கொள்ளவுஞ் செய்வித்தனர். சில தமிழ்ப் பிரபந்தங்களையும் இலக்கணங்களையும் நான் அந்த வித்துவான்கள்பால் முறையே கற்றுக்கொண்டேன். பின்பு செங்கணமென்னும் ஊரிலிருந்த விருத்தாசல ரெட்டியாரென்ற கனவானிடம் பாடங்கேட்கத் தொடங்கினேன். அவர் பல நூல்களிலிருந்து அநேக விஷயங்களை அப்பொழுதப்பொழுது சொல்லிவந்தார். அதனால் நான் தமிழ்நூல்களின் பரப்பை அறிந்துகொண்டதன்றி மேலும் மேலும் பல நூல்களிற் பயிலவேண்டுமென்னும் விருப்பத்தை அதிகமாகக் கொண்டேன். அதனைக் கண்ட அவர், "என்னாற் சொல்லக்கூடிய நூல்களையெல்லாம் நான் சொல்லிவிட்டேன். இனி என்னாற் பாடஞ்சொல்ல இயலாது; திருவாவடுதுறை யாதீன வித்துவானாக விளங்கிவரும் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் உங்கள் குமாரரை அழைத்துச் சென்றால் பல தமிழ் நூல்களை நன்றாகக் கற்று விருத்தியடைதற்கு அனுகூலமாகும்" என்று என் தகப்பனாரிடம் அடிக்கடி சொல்லி வந்தார். முன்பே பிள்ளையவர்களைப்பற்றிப் பலர் வாயிலாகக் கேள்வியுற்று, 'அப் புலவர்பிரானிடம் படிக்குங்காலம் எப்போது கிட்டுமோ!' என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய விருப்பத்தை முற்றுவித்தற்கு அவர் சொல்லிய வார்த்தை மிகவும் உபயோகமாக இருந்தது. என் பிதாவும் அவ்வாறே செய்விக்கவேண்டுமென்று எண்ணி அதற்குரிய முயற்சியுடனிருந்தார். அப்போது எனக்குப் பிராயம் 17.
நான் பிள்ளையவர்களைக் கண்டது.
இறைவன் திருவருள் கூட்டினமையால் என் தந்தையாரின் முயற்சியும் எனது விருப்பமும் பயன்பெறும் காலம் வந்து வாய்த்தது. பிரஜோற்பத்தி வருஷம் சித்திரை மாதமுதலில் (1871 ஏப்ரலில்) என்னை உடனழைத்துக்கொண்டு தந்தையார் மாயூரம் சென்று நல்ல நாளொன்றன் பிற்பகலில் பிள்ளையவர்களுடைய வீட்டிற்குப் போனார். அப்பொழுது அவ்வீட்டின் முதற் கட்டில் குற்றாலம் (திருத்துருத்தி) தியாகராச முதலியாரென்பவரும் சிவசின்னந் தரித்த வேறொருவரும் இருந்தார்கள்.
சிவசின்னந்தரித்துக் கொண்டிருந்தவரையே பிள்ளையவர்களாக என் தந்தையார் பாவித்து, "இவர்கள்தாம் மகாவித்துவான் பிள்ளையவர்களோ?" என்று அம்முதலியாரை மெல்ல வினாவினார். முதலியார், "அல்ல; இவர்கள் திருவாவடுதுறை மகாலிங்கம் பிள்ளையவர்கள்" என்றார். மகாலிங்கமென்ற சப்தத்தைக் கேட்டவுடன் என் தந்தையார் மகிழ்ச்சியுற்று, 'நாம் வந்த காரியம் நிறைவேறுவதற்குரிய நற்சகுனமாகுமிது' என்று நினைத்தனர். அப்பால், "மகாவித்துவான் பிள்ளையவர்கள் எங்கே இருக்கிறார்கள்?" என்று முதலியாரைக் கேட்கவே அவர், "இந்த வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்தில் வேலை நடப்பதால் அதைக் கவனித்துக்கொண்டு அங்கே இருக்கிறார்கள்" என்று விடையளித்தார். உடனே தந்தையார் மகாலிங்கம் பிள்ளையைப் பார்த்து, "திருவாவடுதுறைக் கந்தசாமிக் கவிராயரை உங்களுக்குத் தெரியுமா? அவர் செளக்கியமாக இருக்கிறாரா?" என்று கேட்டனர். "அவரை நான் நன்றாக அறிவேன்... சில தினங்களுக்கு முன்புதான் அவர் சிவபதம் அடைந்தார்" என்று அவர் சொன்னார். கவிராயர் தம்முடைய நண்பராதலாலும் அவரிடமாவது சிலகாலம் என்னை வைத்துப் படிப்பிக்கவேண்டுமென்று முன்னம் எண்ணியிருந்தமையாலும் என் தந்தையாருக்கு அவர் இறந்த செய்தியைக் கேட்டபோது மிக்க வருத்தமுண்டாயிற்று. சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டுப் பின்பு அவருடைய குண விசேடத்தைப்பற்றிப் பாராட்டி இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். அப்பொழுது அங்கே பிள்ளையவர்களுடைய தவசிப் பிள்ளை ஒருவர் வரவே அவரைப்பார்த்து என் தந்தையார், "எங்களுடைய வரவைப் பிள்ளையவர்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர். அவர் சென்று தெரிவித்தவுடன் பிள்ளையவர்கள் நாங்கள் இருந்த இடத்துக்கு வந்தார்கள்.
நெடுநாளாக இப் புலவர் பெருமானைக் காணவேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்து வந்தமையால் இவரைக் கண்டவுடன் என்னையறியாமலே ஒருவகை மகிழ்ச்சியும் அன்புணர்ச்சியும் உண்டாயின. இவருடைய தோற்றப் பொலிவும் முகமலர்ச்சியும் என்னுள்ளத்தைக் கவர்ந்தன. 'இவரைப் பார்த்தல் கூடுமோ கூடாதோ!' என்று ஏங்கியிருந்த எனக்கு அந்தச் சமயத்தில் உண்டான இன்பத்திற்கு எல்லையில்லை. இவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். தந்தையாரும் மகிழ்ச்சியுற்றனர்.
வந்த புலவர்பிரான் நின்றுகொண்டிருந்த எங்களையும் பிறரையும் இருக்கச் செய்து விட்டுத் தாமும் இருந்து எங்களைப் பார்த்து, "நீங்கள் யார்? வந்த காரியம் என்ன?" என்று அன்புடன் விசாரித்தனர். என் பிதா, "நாங்கள் இருப்பது பாபநாசத்தைச் சார்ந்த உத்தமதானபுரமென்பது; தங்களிடத்தில் தான் வந்தோம். இவன் என்னுடைய குமாரன்; என்னிடம் முதலில் சில காலம் ஸங்கீதத்தை, அப்பியசித்து வந்தான். அப்பால் நிகண்டு, சதகம் முதலியவற்றைக் கற்று வந்தான். தமிழ்ப் பாஷையிலேயே மிக்க பிரீதியுள்ளவனாக இருக்கிறான்; சில நூல்களை வித்துவான்கள் சிலரிடமிருந்து முறையே பாடங் கேட்டிருக்கிறான் ; அந்த வித்துவான்களுக்கும் எனக்கும் தங்களிடத்திலேயே இவனைச் சேர்ப்பித்துப் படிப்பிக்க வேண்டுமென்ற விருப்பம் மிகுதியாக இருக்கிறது. இவனுக்கும் அப்படியே இருந்து வருகிறது. ஸம்ஸ்கிருதம் இங்கிலீஷ் முதலிய பாஷைகளில் இவனுக்குச் சிறிதும் மனம் செல்லவில்லை. ஆதலால் இவனுடைய விருப்பத்தையும் என்னுடைய ஆவலையும் தயை செய்து தாங்களே தணிக்க வேண்டும். எப்பொழுதும் இவன் தங்கள் ஞாபகமாகவே இருந்து வருகிறான். தங்களிடம் இவனைக்கொண்டு வந்து சேர்ப்பித்தலையன்றி நான் செய்யக்கூடியது வேறொன்றும் இல்லை. தங்கள் சமுகத்திற் சேர்ப்பித்தமையால் இவன் விஷயமாக இருந்த என்னுடைய கவலை அடியோடு நீங்கிவிட்டது. இப்படி நேர்ந்ததற்குக் காரணம் [1]ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசருடைய திருவருளே. இவனைத் தயை செய்து அங்கீகரிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்" என்றார்.
இவர் என் தந்தையாரைப் பார்த்து, "உங்கள் பெயரென்ன?" என்று கேட்டார். அவர், "வேங்கடஸுப்பன் என்று சொல்வார்கள்" என்றார். உடனே இவர் உடனிருப்பவர்களை நோக்கி, "இப்பெயர் திருவேங்கடமலையில் முருகக்கடவுள் எழுந்தருளியிருத்தலையும் அது முருகக் கடவுளுக்குரிய ஸ்தலங்களுள் ஒன்றென்பதையும் புலப்படுத்துகின்றதன்றோ? ஸுப்பனென்பது சுப்பிரமணியனென்பதன் மரூஉத்தானே" என்று சொன்னார்; அவர்களும் "ஆம்" என்றார்கள். நான், 'சாதாரணமாகப் பேசும்பொழுதே இத்தகைய அருமையான விஷயம் இவர்கள் வாக்கிலிருந்து வருகிறதே. இனி இவர்களிடத்தில் நன்றாகப் பழகினால் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமே' என்று நினைத்தேன். அப்பால் என்னைப் பார்த்து, "முன்பு யார் யாரிடத்தில் என்ன என்ன நூல்களைப் பாடங் கேட்டிருக்கிறீர்?" என்று கேட்டார். "முதலில் தந்தையாரிடத்தும் சிறிய தகப்பனாரிடத்தும் சங்கீதத்தை முறையே கற்றுவந்தேன். அதனோடு சூடாமணி நிகண்டின் பன்னிரண்டு தொகுதியும், மணவாள நாராயண சதகமுதலிய சில சதகங்களும், இரத்தின சபாபதிமாலை முதலிய சில மாலைகளும், நன்னூல் மூலமும் மனனம் செய்து நாள்தோறும் முறையே தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன். அப்பால் பாபநாசம் பிரதம பாடசாலையில் உபாத்தியாயராக இருந்த [2]இராகவைய ரென்பவரிடம் முதலில் மகாலிங்கைய ரிலக்கணமும் பின்பு நன்னூற் காண்டிகையுரையில் முதல் இரண்டு இயல்களும் கேட்டேன்; பின்பு [3]அரியிலூர் ஜமீன் பரம்பரை வித்துவானாகிய சடகோப ஐயங்காரென்பவரிடத்துத் திருவேங்கடமாலை முதலிய சில பிரபந்தங்களுக்குப் பொருள் கேட்டேன்; அவ்வூருக்கு வடபாலுள்ள [4]குன்றம் (குன்னம்) என்னுமூரிலுள்ள சிதம்பரம் பிள்ளை யென்பவரிடத்துத் திருவிளையாடற் புராணத்திலும் நைடதத்திலும் சிலசில படலங்களுக்குப் பொருளும், அவ்வூருக்கு அப்பாலதாகிய [5]கார்குடியென்னு மூரிலுள்ள கஸ்தூரி ஐயங்காரென்பவரிடம் நன்னூற் காண்டிகையுரையில் எஞ்சிய பாகமும், அவ்வூரிலுள்ள ஸாமி ஐயங்காரிடத்துக் கம்பராமாயணத்திற் சுந்தர காண்டத்திற்குப் பொருளும் கேட்டேன்; பெரும்புலியூரைச் சார்ந்த செங்கணமென்னும் ஊரிலுள்ள சின்னப் பண்ணையாராகிய விருத்தாசல ரெட்டியாரென்பவரிடம் காரிகை தண்டியலங்காரங்களின் உரையும் நவநீதப்பாட்டியல் முதலிய பொருத்த இலக்கணங்களும் வேறு சில நூல்களும் பாடங்கேட்டதுண்டு; ரெட்டியாராலேதான் எனக்குத் தமிழில் விருப்பம் அதிகமாயிற்று. அவரிடம் காரிகைப்பாடம் மிகச் செவ்வையாக நடந்தது; இடையிடையே சந்தித்த வித்துவான்களிடத்துச் சில பிரபந்தங்களிற் சில சில பாகங்களும் பல தனிப்பாடல்களும் பொருளுடன் கேட்டுச் சிந்தித்திருக்கிறேன்" என்றேன்.
பிறகு இவர் என் தகப்பனாரைப் பார்த்து, "இசையில் எந்த மட்டும் பயிற்சி பண்ணிவைத்திருக்கிறீர்கள்?" என்றார். அதற்குத் தந்தையார், "முறையாகவே இவன் கற்றிருக்கிறான்; அதன் அடிப்படைகள் எல்லாம் செவ்வையாக இவனுக்கு ஆகியிருக்கின்றன; ஸரளி வரிசை, அலங்காரம், கீதங்கள், வர்ணங்கள் ஆகிய இவைகளில் இவன் நல்ல பயிற்சியடைந்திருப்பதுடன் கனம் கிருஷ்ணையர் முதலிய ஸங்கீத வித்துவான்களிற் சிலரியற்றிய சில கீர்த்தனங்களும் இவனுக்குப் பாடமுண்டு” என்றார். பின்பு தந்தையாரை நோக்கி இவர், "நீங்கள் யாரிடத்தே இசையைக் கற்றுக்கொண்டீர்கள்?" என்று விசாரித்தார். அவர், "உடையார்பாளையம் ஸமஸ்தானத்தில் ஸங்கீத வித்துவானாக இருந்த கனம் கிருஷ்ணையரென்பவர் என்னுடைய அம்மான் பாட்டனார்; பன்னிரண்டு வருஷம் பணிவிடை செய்து கொண்டேயிருந்து அவரிடம் ஸங்கீதத்தை முறையே கற்றுக்கொண்டதன்றி அவரும் பிறரும் இயற்றிய சில கீர்த்தனங்களையும் பாடம் பண்ணிக் கொண்டேன்" என்றார். பின்பு இவர், "இவ்வூரிலுள்ள முடிகொண்டான் கோபாலகிருஷ்ண பாரதியாரை அறிவீர்களா?" என்று வினவவே என் தந்தையார், "அவர் எனக்கு முக்கியமான நண்பர் " என்றார்.
என்னைப் பரீட்சித்தது.
அப்பால் இவர் என்னைப் பார்த்து, "நைடதத்தில் ஏதேனும் ஒரு பாடலை இசையுடன் சொல்லும்" என்றார். அவ்வாறு கேட்டவுடன் இவர் முன் எவ்வாறு சொல்வது என்று முதலில் அஞ்சினேன். பின்பு ஒருவாறு துணிந்து அந்நூலிலுள்ள விநாயகர் காப்பைக் கல்யாணி ராகத்தில் மெல்லச் சொன்னேன். சொல்லிவிட்டு இவர் நான் சொல்வதை எவ்வாறு கேட்கிறாரென்று கவனித்தேன். இவருடைய முகத்தில் வெறுப்புக் குறிப்பில்லாமையால் எனக்குக் கொஞ்சம் தைரியம் பிறந்தது. அப்பொழுது இக்கவிஞர்பிரான் , "இன்னும் ஒரு பாடலை இசையுடன் சொல்லும்" எனவே, நான் அந்நூலின் சிறப்புப்பாயிரமாகிய "நிலவுபொழி தனிக்கவிகை" என்னும் செய்யுளை ஸாவேரி ராகத்தில் மிக்க விநயத்துடன் சொன்னேன். அந்த இரண்டு செய்யுட்களையும் மறுமுறை சொல்லச் செய்ததுடன் பொருள் சொல்லும்படியும் சொன்னார். சொல்லும்பொழுது நாக்குத் தழுதழுத்தது. அதனை யறிந்து இவர், "அதைரியம் வேண்டாம்; தைரியமாகச் சொல்லலாமே" என்று சொல்லி விட்டு, "நிகண்டு முதலியவற்றில் உள்ள செய்யுட்களை இப்பொழுது பாராமற் சொல்லக்கூடுமா?" என்று கேட்டார். "கூடும்" என்றேன். ஒரு பொருட் பல்பெயர்ச் செய்யுட்களிற் சிலவற்றையும் பலபொருளொருசொற் பாடல்களிற் சிலவற்றையும் குறிப்பிட்டுக் கேட்டார். மெல்லச் சொன்னேன். பின்பு இவர், "நிகண்டு முதலியவை பாடமாக இருப்பது நல்லதே. இக்காலத்தில் அவற்றை எங்கே நெட்டுருப் பண்ணுகிறார்கள்? அந்த வழக்கமே போய்விட்டது. படிக்கும்படி சொன்னாலும் கேட்கின்றார்களில்லை" என்றார்.
இங்ஙனம் சிலநேரம் அளவளாவிக் கொண்டிருந்த பின்பு தந்தையார், "எப்போது இவன் இங்கே பாடங்கேட்க வரலாம் ?" என்று கேட்டார். அதற்கு இவர் சிறிது நேரம் வரையில் யாதொன்றும் சொல்லாமற் சும்மா இருந்தனர்; அப்பால், "படிப்பதற்கு அடிக்கடி சிலர் வந்துகொண்டேயிருக்கிறார்கள். முறையே படித்தும் வருகிறார்கள். குறிப்பறிந்து மிக்க வணக்கத்துடன் நடக்கிறார்கள். அவர்களுக்குப் பாடஞ்சொல்லி வருவதில் எனக்கும் திருப்தியாகவேயிருக்கிறது. ஆனாலும் சில மாதங்கள் இருந்து சிலவற்றைக் கேட்ட பின்பு அவர்களிற் சிலர் தாமே திருப்தியுற்று இங்கே இருப்பவர்களையும் கலைத்துவிட்டுத் திடீரென்று என்னுடைய அனுமதியின்றியே போய்விடுகிறார்கள். வேறு சிலர், ‘ஊர் போய்ச் சில தினங்களில் வருகிறோம்' என்று சொல்லிவிட்டுப்போய் அப்பால் வாராமலே இருந்து விடுகிறார்கள். அங்ஙனம் போகிறவர்கள், என்னிடம் அநேக நூல்களைப் படித்ததாக வெளியே சொல்லிக்கொண்டு அங்கங்கேயிருந்து வருகிறார்கள். அதில் எனக்குச் சிறிதும் திருப்தியில்லை. சில வருஷங்களேனும் இருந்து முறையாகப் பல நூல்களைப் பாடங்கேட்டு நல்ல பயிற்சியைப் பெற்று அப்பாற் சென்றால் அவர்களுக்கும் எனக்கும் பயனுண்டு. குறைந்த நிலையிலும் நல்ல பயிற்சியையடைகிற காலத்திலும் பிரிந்து விடுகிறார்களேயென்ற வருத்தம் எனக்கு இடைவிடாமல் இருந்து வருகிறது. நூதனமாக வருபவர்களுக்கு ஆரம்பப்பாடம் முதலியவற்றை அடிக்கடி சொல்லிவருவதனால் எனக்கு மிக்க துன்பமுண்டாகிறதென்பதை நான் சொல்ல வேண்டுவதில்லை; ஆதலால், இவர் சில வருஷங்களாவது இருந்து படித்தால் எனக்குத் திருப்திகரமாக இருக்கும்; இவரும் நல்ல பயனை அடையலாம். சமீப காலத்தில் தருமபுர மடத்திலிருந்து வந்து சில மாதங்கள் படித்துக்கொண்டிருந்து எனக்கு உவப்பை விளைவித்து வந்த ஆறுமுகத் தம்பிரானென்பவர் நல்ல சமயத்தில் என்னிடம் சொல்லாமலே போய்விட்டார். அப்படியே பின்பு இராகவாசாரி யாரென்ற ஸ்ரீ வைஷ்ணவர் ஒருவர் சில வருஷம் படித்துக்கொண்டிருந்துவிட்டு நல்ல தருணத்திற் பிரிந்து போய்விட்டார். திரிசிர புரத்திலிருந்து நான் இந்தப் பக்கத்திற்கு வந்தபின்பு சீகாழி முதலிய இடங்களிற் சில காலம் படித்துக்கொண்டேயிருந்து விட்டுப் பிரிந்து சென்றவர்கள் பலர். பின்னும் சில வருஷம் இருந்து படித்துச் சென்றால் அவர்கள் நல்ல பயனை அடையலாமே யென்று நான் அவர்கள் ஞாபகமாகவே இருந்து வருகிறேன். படிக்கவருபவர்களால் அடிக்கடி இப்படிப்பட்ட துன்பம் நேருதலால் நூதனமாக வருபவர்களுக்குப் பாடம் சொல்லுவதில் எனக்கு ஊக்கம் உண்டாகிறதில்லை. வருபவர்களை யோசித்துத் தான் அங்கீகரிக்கவேண்டியிருக்கிறது" என்று சொன்னார்.
இவர் இவ்வாறு சொல்லி வருகையில் இவருடைய சொற்களிற் காணப்படும் அன்பின் தன்மை, ‘நம்மை ஏற்றுக் கொள்வார்' என்ற நம்பிக்கையை எனக்கு உண்டாக்கினாலும் பிரிந்து போன மாணவர்களைப்பற்றிச் சொன்ன வார்த்தைகள், 'நம்மை இவர் ஏற்றுக் கொள்வாரோ மாட்டாரோ' என்ற சந்தேகத்தை எனக்கு விளைவித்தன.
என் தந்தையாரது வேண்டுகோள்.
அப்பொழுது தந்தையார், "எவ்வளவு காலம் தாங்கள் படிப்பித்தாலும் ஜாக்கிரதையாக இருந்து பாடங்கேட்க இவன் ஸித்தனாக இருக்கிறான். தங்களுக்குத் தோற்றுகிறபடி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருந்து இவனைப் படிப்பிக்கலாம். அழைத்துச் செல்லலாமென்று தாங்கள் சொன்னபின்பே இவனை அழைத்துச் செல்வேன். இதிற் சிறிதும் சந்தேகம் கொள்ள வேண்டாம். இவனைத் தங்கள் பால் அடைக்கலப் பொருளாக ஒப்பித்து விட்டேன், இவனைப்பற்றி இனி ஒன்று சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. இதற்குமுன் இவனுக்குப் பாடம் சொல்லிய ஆசிரியர்கள் எல்லோரும், 'பிள்ளையவர்களிடம் சேர்ப்பித்தால் தான் இவனுடைய குறையும் ஆசையும் தீரும்; சீக்கிரத்தில் அவர்களிடம் கொண்டுபோய் விடுங்கள். இனிச் சும்மா வைத்திருத்தல் தருமமன்று' என்று வற்புறுத்திச் சொன்னமையால்தான் இங்கே அழைத்து வந்தேன். இவ் விஷயத்திற் சிறிதும் ஆலோசனை பண்ணவேண்டாம்" என்று சொல்லிப் பின்னும் என்னை அங்கீகரித்துக்கொள்ளும்படி பலவிதமாகக் கேட்டுக் கொண்டார். அவரைப் பின்பற்றி நானும் விநயத்துடன் இயன்றவரையில் வேண்டிக்கொண்டேன்; எங்கள் கவலையை அறிந்து உடனிருந்தவர்களும் அங்கீகரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.
மீ: ஆகாராதிகள் விஷயத்தில் இவருக்கு இவ்வூரில் ஏதேனும் செளகரியமான இடமுண்டா ?
தந்தையார்: இல்லை; அதையும் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். அங்ஙனம் செய்வித்தற்கு எனக்கு இப்பொழுது சௌகரியமில்லை.
மீ : திருவாவடுதுறை, பட்டீச்சுரம் முதலிய இடங்களிலே நான் இருப்பதாயிருந்தால் இவருக்கு என்னால் சௌகரியம் செய்வித்தல் கூடும். இவ்வூரில் மட்டும் அங்ஙனம் செய்வித்தற்கு இயலாது. நீங்களே அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். சைவராயிருந்தாலும் வேறு வகையினராக இருந்தாலும் என்னுடைய வீட்டிலேயே உணவளிக்கலாம். இவர் விஷயத்தில் அங்ஙனம் செய்வித்தற்கு இயலவில்லையேயென்று வருத்தமடைகிறேன்.
தந்தையார் : இவ்வூரில் இருக்கும் வரையில் ஆகாராதிகளுடைய செலவுகளுக்கு நானே எப்படியாவது முயன்று பணம் அனுப்பிவிடுகிறேன். எப்பொழுது இவன் இங்கே பாடங்கேட்க வரலாம்? தெரிவிக்க வேண்டுகிறேன்.
மீ : ஒரு நல்ல தினம் பார்த்துக்கொண்டு வந்தால் ஆரம்பிக்கலாம்.
இங்ஙனம் இவர் கூறியது எனக்கு மிக்க ஆறுதலை அளித்தது.
-------------------
[1]. மீனாட்சி சுந்தரேசரென்பது என் தந்தையாருடைய பூஜையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கப் பெருமானது திருநாமம்.
[2]. இவர் மதுரைக் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்து பிற்காலத்தில் ஸன்னியாசம் வாங்கிக்கொண்டார்; ஆந்திரர்.
[3],[4],[5]. இவ்வூர்கள் திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ளன.
------------
2. நான் பாடங்கேட்கத் தொடங்கியது.
மறுநாட் காலையில் நாங்கள் இவரைப் பார்ப்பதற்குச் சென்றோம். அப்பொழுது கல்விமான்கள் சிலர் இவரிடம் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் ஸ்ரீ ஆறுமுக நாவலருடைய மாணாக்கர். நாவலர் சிதம்பரம் விட்டு யாழ்ப்பாணம் சென்றதையும் யாழ்ப்பாணத்துள்ள பிரபுக்களும் வித்துவான்களும் நாவலரை வரவேற்றுச் செய்த உபசாரங்கள் முதலிய நிகழ்ச்சிகளையும் அவர் விரிவாகச் சொன்னார். மற்றவர்கள் தங்கள் தங்களுக்குத் தெரிந்த வித்துவான்களுடைய செளக்கியங்களையும் அவர்கள் செய்வனவற்றையும் சொல்ல இவர் கேட்டு மகிழ்ந்தார். அப்பொழுது அநேகம் செய்திகளையறிந்தேன்.
யாப்பிலக்கணத்தில் என்னைப் பரீட்சித்தது.
அன்று பிற்பகலிற் சென்றபொழுது திருநாகைக்காரோணப் புராணத்தை வருவித்து அதை என்பால் அளித்து அதில் நாட்டுப் படலத்திலுள்ள 38 - ஆம் செய்யுளாகிய "புன்மைசால்" என்பதையும் அடுத்த செய்யுளையும் படிக்கச் சொல்லி அவ்விரண்டிற்கும் பொருள் கூறித் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டார். ஜாக்கிரதையாகச் சொன்னேன். அவற்றிலுள்ள சொல்முடிபு பொருள்முடிபுகளைக் கேட்டார்; யோசித்துச் சொன்னேன். பின்பு, "வெண்பாக்களைச் சீர்பிரித்து அலகூட்டிச் சொல்வீரா?" என்று, "நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க, நல்லார்சொற் கேட்பதுவு நன்றே - நல்லார்", "நெல்லுக் கிறைத்த நீர்வாய்க் கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாம்" என்ற பாடல்களை இவ்வண்ணமே கூறி அலகூட்டச் சொன்னார். இவர் பிரித்துச் சொன்னபடி சொன்னால் தளை கெடுமென்பதை யறிந்து ஜாக்கிரதையாகப் பிரித்துக் காட்டினேன். அதனைக் கேட்டு எனக்கு யாப்பிலக்கணம் கற்பித்த நாட்டாரைப் பாராட்டியதுடன் அவரைப்பற்றிக் கேள்வியுற்றிருப்பதாகவுஞ் சொன்னார்.
பின் ஒரு தினம் என் தந்தையார், "இவன் இலக்கண நூற் பாடம் சிறிது சிலரிடத்துக் கேட்டிருந்தாலும் திருப்தியுண்டாகாமையால் முதலில் தாங்கள் ஏதாவது இலக்கண நூலைக் கற்பித்தால் நலமாக இருக்கும். இவனுடைய கருத்து இது" என்று தெரிவித்தனர். "பதினாயிரம் பாடலுக்குக் குறையாமற் பாடங் கேட்ட பின்பே இலக்கணபாடம் தொடங்குதல் நலம். இவருக்கு இப்போது உள்ள இலக்கண அறிவே இலக்கிய பாடங் கேட்டற்குப் போதுமானது. அதைப் பின்பு கவனித்துக் கொள்ளுகிறேன்" என்று இவர் விடையளித்தார்.
நல்ல தினத்திற் பாடங்கேட்க ஆரம்பித்தது.
அப்பால் என் தந்தையார் குறிப்பிட்டுச் சொன்னபடி ஒரு நல்லதினத்திற் சென்றேன். இவர் நைடதத்தை வருவித்து அளித்துச் சில பாடல்களைப் படிக்கச் செய்து அவற்றிற்கு முறையே பொருள்களையும் செய்யுட்களில் அங்கங்கேயுள்ள விசேடக் கருத்துக்களையும் விளங்கச் சொன்னார். அதுவரையிலும் அவ்வண்ணம் கேளாதவனாகையால் இவருடைய போதனை எனக்கு மிக்க இன்பத்தை விளைவித்தது. பின்பு வினவிய பொழுது இவர் சொல்லிய வண்ணமே நான் விடை பகர்ந்தேன். அப்பால், "சில தினங்களில் விரைவாக இதை முடித்து விடலாம். இது முடிந்தவுடன் வேறு புதிய நூலொன்றை ஆரம்பிக்கலாம்" என்று சொல்லிவிட்டு எனக்குப் பாடஞ்சொல்லும்படி அங்கே வந்திருந்த பழைய மாணவரொருவருக்குக் கட்டளையிட்டார். அவ்வண்ணமே அவரிடம் அந்நூலை நாள்தோறும் கேட்டு வந்தேன்.
அப்பொழுது இக்கவிஞர் தலைவரிடம் படித்துக்கொண்டிருந்த மாணாக்கர்கள்: காரைக்காற் சவேரிநாத பிள்ளை, கூறைநாட்டுக் கனகசபை ஐயர், அவருடைய சகோதரராகிய சிவப்பிரகாசையர் (இவ்விருவரும் வீரசைவர்கள்) என்பவர்கள். திருமங்கலக்குடி சேஷையங்கார், வல்லம் கந்தசாமி பிள்ளை, மாயூரம் முத்துசாமி பிள்ளை, நாகம்பாடிச் சாமிநாத பிள்ளை, மூவலூர்ச் சாமிப் பிள்ளை, திட்டைச் சோமசுந்தரம் பிள்ளை, சீயாலம் சிதம்பரம் பிள்ளை முதலிய பழைய மாணாக்கர்கள் இவரிடம் அடிக்கடி வந்து தமக்குள்ள ஐயங்களைத் தீர்த்துக்கொண்டு போவார்கள்.
என் தந்தையார் விடைபெற்றுச் சென்றது.
மாயூரத்தில் இருப்பதற்குச் செளகரியப்படாமையால் தந்தையார் என்னுடைய உணவுச் செலவு முதலியவற்றிற்கு வேண்டியவற்றைக் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டுத் தாம் ஊருக்குப் போவதாக நிச்சயித்து ஒரு நாட்காலையிற் பிள்ளையவர்களிடம் வந்து, "நான் விடைபெற்றுக் கொள்கிறேன். என்னுடைய பூஜை முதலியவற்றிற்கு இவ்வூர் செளகரியப்படவில்லை. ஆதலால் இவனைப் பிரிந்து செல்லவேண்டியிருக்கிறது. தனியே இருந்து வேண்டியவற்றைச் செய்துகொள்ளுவதில் இவனுக்கு வழக்கமில்லை. நானும் இவன் தாயும் இதுவரையில் இவனைப் பிரிந்து இருந்ததில்லை; தயை செய்து இவனை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்" என்று சொன்னார்; சொல்லும்பொழுது அவருக்குக் கண்ணீர் பெருகியது. அதைக் கண்ட இப் புலவர் கோமான் அவருடைய அன்பின் மிகுதியையும் பிரிவாற்றாமையையும் கண்டு மனமிரங்கி, "ஐயா, இவருடைய பாதுகாப்பைக் குறித்து நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். தைரியமாக ஊருக்குப்போய் உங்களுடைய பூஜை முதலியவற்றை நடத்திக்கொண்டு சுகமாக இருங்கள். பார்க்க விரும்பியபொழுது இவரை உங்கள்பால் அனுப்பி வருவித்துக் கொள்ளுவேன். அவகாசமுள்ள காலங்களில் நீங்களும் வந்து பார்த்துவிட்டுப் போகலாம்" என்று அன்புடன் விடையளித்தார். இவர் அங்ஙனம் கூறிய வார்த்தைகள் எனக்கு அமுதம் போன்றிருந்தன. இவர் ‘பாதுகாப்பு' என்று கூறிய சொல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. அப்பால் தந்தையார் ஊருக்குப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன் ஒருநாள் என்னை மாயூரத்திலிருந்த கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் அழைத்துச் சென்று பிள்ளையவர்களிடம் தமிழ் கற்க என்னைச் சேர்ப்பித்திருத்தலைச் சொல்லி எனக்கு ஸங்கீதத்திலும் பழக்கமிருப்பதால் அவகாசமுள்ள காலங்களில் ஸங்கீதத்தில் பயில்விக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவரும் அதற்கு உடன்பட்டார்.
எனக்கிருந்த குறை.
எனக்குப் பாடஞ்சொல்லி வந்தவர் பின்பு நைடதத்தின் மேற்பகுதிகளைச் சொல்லி வந்தார். என்னுடைய ஆவலை நிறைவேற்றுந் தகுதி அவர்பாற் காணப்படவில்லை. ஆனாலும் நாள்தோறும் வேகமாகக் கேட்டு வந்தேன். அவரும் விரைவாகவே சொல்லி வந்தார். நான் அந்நூலை முன்னமே பாடங்கேட்டதன்றிப் பலமுறை படித்து ஆராய்ந்து வந்திருந்தமையால் அவர் பாடஞ் சொல்லுவதில் விசேடமொன்றையும் காணவில்லை. அதனால், 'இவ்வளவுகாலம் முயன்று பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்தும் அவர்களிடத்திலேயே பாடங்கேட்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லையே!' என்ற குறை மேன்மேலும் வளர்ச்சியடைந்து வந்தது. அக்குறையை நான் தெரிவிக்கவாவது இவரே தெரிந்து கொள்ளவாவது தக்க சமயம் வாய்க்கவில்லை. என்னுடைய கருத்தை இவரிடம் வெளிப்படுத்துவதற்கு அச்சமுற்றும் இருந்தேன். என்னைக் காணும்பொழுது இவர், "பாடம் நடந்துவருகிறதா?" என்று கேட்பார்; "நடந்து வருகிறது" என்று மட்டும் சொல்லுவேன். இவருடன் அதிகமாகப் பழகி இவரிடம் பாடங் கேட்பதற்கு நல்ல காலம் எப்பொழுது வாய்க்குமோவென்று அதனை எதிர்பார்த்துக்கொண்டேயிருந்தேன். அந்த விஷயத்தில் தக்கவாறு முயலும்படி என் மனம் என்னைத் தூண்டிக் கொண்டே வந்தது; நல்லூழும் அதற்குத் துணை செய்தது.
தளிரால் தளிர்த்த அன்பு.
கவிஞர்களுக்குப் பூஞ்சோலைகளிலும் பிற இயற்கைக் காட்சிகளிலும் ஈடுபாடு அதிகம் என்பது பலரும் அறிந்ததே. மரங்கள் பூச்செடிகள் முதலியவற்றைக் கண்டு மகிழும் வழக்கம் இவருக்கு மிகுதியாக உண்டு. இவர் புதிதாகத் தாம் வாங்கிய வீட்டின் தோட்டத்தில் அவ்வூர் வழக்கப்படியே நாரத்தை முதலியவற்றின் பெரிய செடிகளையும் பூஜைக்குரிய வில்வம் முதலியவற்றின் பெரிய செடிகளையும் வேரோடு மண் குலையாமல் தோண்டி யெடுத்து அம்மண்ணின் மேல் வைக்கோற்புரி சுற்றிக் கூறைநாட்டிலிருந்து வருவித்து ஆழ்ந்த குழிகளில் வைப்பித்து நீர் வார்த்துப் பாதுகாத்து வரும்படி செய்வித்திருந்தார். வேலைக்காரர்கள் அவற்றைப் பாதுகாத்து வந்தார்கள். சில தினங்கள் சென்றபின் நாள்தோறும் காலை மாலைகளில் இவர் சென்று பட்டுப் போகாமலிருக்கின்றனவாவென்று அவற்றைக் கவனித்து வருவதுண்டு. இவர் தனியாகவேனும் யாரையாவது உடனழைத்துக் கொண்டேனும் காலையிற் சென்று எந்தச் செடியில் எந்தக் கிளையில் தளிர் உண்டாயிருக்கிறதென்று பார்த்து, தோன்றிய தளிரைக் கண்டு திருப்தி அடைவார். இவர் இங்ஙனம் செய்துவருவதைச் சில நாள் கவனித்த நான், 'இவர்களுடைய அன்பை அதிகமாகப் பெறுவதற்கு இத்தளிர்களையே துணையாகக் கொள்வோம்' என எண்ணினேன். அது முதல் விடியற்காலையில் எழுந்திருந்து இவர் செல்லும் முன்பே நேராகத் தோட்டத்திற்குச் சென்று ஒவ்வொரு செடியிலும் ஏதாவது புதிய தளிர் உண்டாகியிருக்கிறதா என்று கவனித்து அறிந்துவந்து நிற்பேன். இவர் வரும்போது மெல்ல அருகில் போய் நான் இவரை அழைத்துச் சென்று, இன்ன செடியில் இன்ன கிளை தளிர்த்திருக்கிறது, இன்ன கிளையில் இவ்வளவு தளிர்கள் உண்டாயிருக்கின்றனவென்று காட்டுவேன். இவர் ஆவலோடு என்னுடன் வந்து அவற்றை ஊன்றிப் பார்த்து அங்கங்கே நான் தெரிவித்தபடி தளிர்களிருத்தலைக் கண்டு மகிழ்வார். இப்படிச் சில தினங்கள் செய்து வந்தேன். இவரும் ஒவ்வொருநாளும் காலையில் வந்து அங்கே நின்ற என்னை முன்னிட்டுக்கொண்டு சென்று தளிர்களைப் பார்த்து மகிழ்ந்து வருவாராயினர்.
தம்முடைய மனத்திற்கு உவப்பான இச் செயலை நான் மேற்கொண்டதை இவர் அறிந்து பின்னொரு நாள் என்னை நோக்கி, "இவற்றை முன்னதாக நீர் பார்த்து வைத்துக் கொண்டது எதனால்?" என்று வினவினார். "[1]ஐயா அவர்களுக்கு இதில் மிக்க விருப்பம் இருப்பதை அறிந்து இவ்விடத்துக்கு (தங்களுக்கு) அதிகச் சிரமம் கொடுக்கக் கூடாதென்றெண்ணி முதல் நாள் பிற்பகலிலும் மறுநாட் காலையிலும் பார்த்து வைத்துக் கொண்டேன்" என்றேன். இவர், "யாரேனும் பார்த்து வைக்கும்படி சொன்னார்களா?" என்று வினவவே நான், "ஒருவரும் சொல்லவில்லை. இவ்விடத்திற்கு உவப்பாக இருக்குமென்று இவ் வேலையை நானாகவே செய்துவருகிறேன்" என்றேன். இவர், "நாள்தோறும் இப்படியே நீர் முன்னதாகவே கவனித்து நான் வரும்போது சொன்னால் நலமாயிருக்கும்" என்று சொன்னார். அவ்வண்ணமே நாள்தோறும் செய்து வந்தேன். இவரும் பார்த்து வந்தார். இங்ஙனம் இவர் பார்த்துச் சென்ற பின்பே ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் தந்த சுத்தி முதலியவற்றைச் செய்யச் செல்வேன். இவர் அப்பொழுது பாடத்தைப்பற்றியும் விசாரிக்கத் தொடங்கினார். இங்ஙனம் நாடோறும் இவரைச் சந்தித்துப் பேச நேர்ந்ததற்கு ஒரு காரணமாக இருந்த தளிர்களை வாழ்த்தினேன்.
இவர்பால் நான் நேரே பாடங் கேட்டது.
பின்பு ஒருநாள் நான் படிக்கும் பாடங்களைப்பற்றி இவர் விசாரிக்கையில், "இவ்விடத்திலேயே பாடங் கேட்கவேண்டுமென்னும் விருப்பம் எனக்கு மிகுதியாக இருக்கின்றது" என்பதை அச்சத்துடன் தெரிவித்தேன். கேட்ட இவர், "அவ்வாறே செய்யலாம்; இப்போது நடக்கும் நைடதப் பாடம் பூர்த்தியாகட்டும்" என்று விடையளித்தார். அது சில தினங்களில் ஒருவாறு முடிந்தது. அதை இவருக்குத் தெரிவித்தேன். மறுநாட் காலையில் என்னை வலிந்தழைத்து, "இனிமேல் பிரபந்தங்களைப் படிக்கத் தொடங்கலாம்" என்று சொல்லித் திருக்குடந்தைத் திரிபந்தாதிச் சுவடியை வருவித்துக் கொடுத்துப் படிக்கும்படி சொன்னார். அந்தப்படியே நானும் மற்றவர்களும் வாசித்துப் பொருள் கேட்டு வந்தோம். அந் நூல் இரண்டு தினத்தில் முற்றுப் பெற்றது. யமகம் திரிபுகளாகிய நூல்களில் ஐந்து ஆறு பாடல்களுக்கு மேல் கேட்க முடியாமல் அதுவரையில் வருந்திக்கொண்டிருந்த எனக்கு மிகக் கடினமாகிய அந்நூல் இரண்டு தினங்களில் முற்றுப் பெற்றதும், பாடம் சொல்லுகையில் இவர் யாதொரு வருத்தமுமின்றி முகமலர்ச்சியோடு மனமுவந்து சொல்லியதும், மாணாக்கர்களுக்கு விளங்காதவை இன்னவையென்று அறிந்து அந்தப் பாகங்களுக்கு மட்டும் பொருள் சொல்லிக் கடினமான தொடர் மொழிகளைப் பிரித்துக் காட்டி விளக்கியதும், இன்றியமையாத சரித்திரங்களை விளக்கமாகக் கூறியதுடன் இலக்கணக் குறிப்புக்களைச் சுருங்கச் சொல்லித் தெரிவித்ததும் எனக்கு வியப்பையும் இன்பத்தையும் உண்டுபண்ணின. பாடம் முற்பகல் பிற்பகல் இரண்டு வேளைகளிலும் நடைபெற்றது. முற்கூறிய சவேரிநாத பிள்ளையும் கனகசபை ஐயரும் என்னோடு பாடங் கேட்டு வந்தார்கள். அவர்கள் பழக்கம் எனக்கு மிக்க உதவியாக இருந்தது.
அப்பாற் பழமலைத் திரிபந்தாதி, திருப்புகலூர்த் திரிபந்தாதி, மருதூர் யமகவந்தாதி, தில்லை யமகவந்தாதி, திருவேரகத்து யமகவந்தாதி, துறைசை யமகவந்தாதி, மறைசையந்தாதி முதலிய அந்தாதிகளும், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் முதலிய சில பிள்ளைத் தமிழ்களும், அஷ்டப்பிரபந்தத்துள் சில பிரபந்தங்களும் கேட்டு முடித்தோம். மறைசை யந்தாதி மட்டும் ஒரே நாளில் முற்றுப் பெற்றது.
இவ்வளவு நூல்களில் உள்ள பாடல்களும் இப் புலவர்சிகாமணிக்கு ஞாபகத்திலேயே இருந்தன. அதற்குக் காரணம் இடைவிடாமற் பாடஞ் சொல்லி வந்தமையே. உரிய இடங்களில் இவர் சொல்லி வரும் பதசாரங்கள் இன்பத்தை விளைவிக்கும். ஓய்வு நேரங்களில் நாங்கள் கேட்ட பாடங்களை மீட்டும் படித்துச் சிந்தனை செய்து வைத்துக்கொள்வோம். பாடங்கேட்கும் காலமன்றிச் சிந்திக்கும் காலத்திலும் இவரை விட்டுப்பிரிவதற்கு மனமில்லாமற் பக்கத்திலிருந்தே மெல்லப் படித்து வருவோம். தம்மிடம் வருகிற தக்கவர்களோடு இவர் பேசிக்கொண்டிருக்கும்போது பல அருமையான விஷயங்களை நாங்கள் எளிதில் அறிந்துகொள்ளுவோம். நாங்கள் படித்த நூல்களிலிருந்து நல்ல பாடல்களை வந்தவர்களுக்குச் சொல்லிக்காட்டிப் பொருள் சொல்லும்படியும் செய்வார். அங்ஙனம் செய்துவந்தமையால் எங்களுக்குத் தமிழ்ப்பயிற்சியும், ஊக்கமும், கூச்சமின்றிப் பேசும் வழக்கமும், நாளடைவில் அதிகரித்து வந்தன.
அச்சுப் புத்தகங்கள் அக்காலத்துப் பெரும்பாலும் அகப்படா; ஆதலாற் படிக்கும் நூல்களை ஏட்டிலேயே எழுதிப் படித்து வந்தோம். அப்படி எழுதுவதற்கு முன்பு பனையோலைகளை வருவித்து வாரித் துளையிட்டுச் சேர்த்துப் புத்தகமாக்கி எங்களிடம் கொடுத்து எழுதச் செய்வார். ஓய்வு நேரங்களில் பழைய கவிஞர்களுடைய சரித்திரங்களை விளங்கச் சொல்லி ஒவ்வொரு சமயத்தில் அவர்கள் செய்த இனிய தனிப்பாடல்களைப் பொருளுடன் கூறி எங்களை எழுதிக்கொள்ளும்படி செய்வார்.
ஒரு தவசிப் பிள்ளை.
இவரிடம் தவசிப்பிள்ளையாக உள்ள பஞ்சநதம் பிள்ளையென்பவர் இவரிடம் நெடுங்காலமாக இருந்து பணிவிடை செய்து வந்தவர். சிலவகையில் இவருடைய மனம் போல அவர் நடப்பதில்லை. அநாவசியமாக மாணவர்களைக்கூட்டி வைத்துக்கொண்டு இவர் கஷ்டப்படுகிறாரென்பது அவருடைய எண்ணம். படித்தவரிடத்திலாவது படிக்கும் மாணாக்கரிடத்திலாவது சிறிதும் அன்பே இல்லாதவர். முகந்திரிந்து நோக்கலும் கடுஞ்சொற் சொல்லுதலும் அவரிடம் இல்லாத வேளை பெரும்பாலும் இராது. நாங்கள் எல்லோரும் அவரைப் பின்பற்றித்தான் செல்லவேண்டும். இல்லாவிடின் ஏதாவது ஒரு கோளைச் சொல்லி இவர் மனத்தை வேறுபடுத்திவிடுவார். திருவாவடுதுறை மடத்துத் தவசிப்பிள்ளை யாதலாலும் பல வருடங்களாக இருந்துவருபவராதலாலும், அவரை இவர் கடிந்து பேசுவதில்லை. இவருடைய நண்பர்களிடம் அவர், "இவர் மாணாக்கர்களிடம் எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறார்? தொண்டைத் தண்ணீர் வற்றும்படி கத்துவதனால் என்ன லாபம்? இந்த மாணாக்கர்களால் ஏதாவது பயனுண்டா? ஒரு தம்படிக்குக்கூடப் பிரயோசனமில்லையே. காலத்தை வீணாகப் போக்கிக் கொண்டேயிருக்கிறார்" என்று அடிக்கடி சொல்வதுண்டு. அவர்களால் இவரும் கேள்வியுற்று மெளனமாயிருந்து விடுவது வழக்கம். அவர் எது செய்தாலும் இவர் பொறுத்துக் கொண்டேயிருப்பார். நாங்கள் இரவில் படிக்கும்பொழுது அங்கே படிப்பதற்காக வைக்கப்பெற்றுள்ள விளக்கை அவர் விரைவாக வந்து சமையற்கட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவார். இவர், "எடுக்கவேண்டாம்; படிக்கிறவர்களுக்கு இடையூறு செய்வது தவறு" என்று மென்மையாகச் சொல்லி அவருடைய வேகத்தைத் தணிப்பார். அவரைப் போகச் செய்துவிட்டுப் பின்பு தம்பால் உள்ளவர்களில் இன்னார் இன்னாரிடம் இன்ன இன்னவாறு பழக வேண்டுமென்றும், இன்ன இன்ன மாதிரி பேசவேண்டுமென்றும், இல்லையாயின் எங்களுடைய நிலைமையை அறிந்துகொள்ளாமற் சிலர் துன்புறுத்தல் கூடுமென்றும், அச்செயல் தமக்கும் எங்களுக்கும் அதிக வருத்தத்தை யுண்டுபண்ணுமென்றும், ஆதலால் அவர்களுக்குப் பிரீதியுண்டாகும்படி நடந்துகொள்ள வேண்டுமென்றும் இவர் எங்களுக்குப் புத்தி புகட்டுவார். படிக்கப்போனவுடன் தவசிப்பிள்ளைதானேயென்று எண்ணி அவரை ஒருநாள் பஞ்சநதமென்று ஒருமையாக அழைத்தேன். அதனைக் கேட்ட இவர் அவர் போன பின்பு, "பஞ்சநதம் பிள்ளையென்று அழையும். அவனை அலட்சியம் செய்தால் ஏதாவது விபரீதத்தை விளைவித்து விடுவான்; பிறரைக்கொண்டும் துன்புறுத்துவான்" என்று அவரிடத்தும் ஏனையோரிடத்தும் நடந்துகொள்ள வேண்டிய முறையைத் தனியே எனக்குச் சொன்னார்.
உள்ளன்பு.
நான் போகுங்காலங்களிலெல்லாம் கண்டவுடன், "ஆகாரம் ஆயிற்றா?" என்றும், "செளகரியமாக இருக்கிறதா?" என்றும் விசாரிப்பார். ஏதேனும் வேண்டியிருந்தால் வருவித்துக்கொடுப்பார். நான் ஆகாரம் பண்ணிக்கொண்டு வருவதற்கு நேரமானால் என்ன காரணத்தால் வரவில்லையோ வென்று கவலையுற்று நான் வரும் வழியையே நோக்கிக்கொண்டு தெருத்திண்ணையில் இருந்ததை நான் சிலமுறை கண்டிருக்கிறேன்.
திருக்குற்றால யமக அந்தாதி படித்தது.
இவராற் பார்க்கப்படாத நூல்கள் எவையேனும் கிடைக்குமாயின் அவற்றைத் தாமே வைத்துக்கொண்டு நன்கு ஆராய்ந்து படித்து வருவார். விளங்காத விஷயங்களை யார் சொன்னாலும் விருப்பத்தோடு கேட்டு அறிந்து கொள்வார்; விஷயம் தெரிய வேண்டுமென்னும் நோக்கத்தையன்றி, இன்னாரிடம் கேட்கலாம், இன்னாரிடம் கேட்கக் கூடாதென்னும் வேற்றுமை இவர்பால் இல்லை. அப்பொழுது இவர் நூதனமாகக் கிடைத்த திருக்குற்றால யமகவந்தாதிச் சுவடியைத் தாமே கையில் வைத்துப் படித்துப் பொருளாராய்ந்து வந்தார். தலசம்பந்தமாக அதிலே வந்துள்ள சண்பகக் கற்பக விநாயகர், இலஞ்சிக்குமாரர், சங்கவீதி, சங்கக் கோயில் முதலிய விஷயங்களை மாயூரத்திற்கு வந்து தங்கியிருந்த இவருடைய மாணாக்கரான திருநெல்வேலிச் சந்திரசேகரம் பிள்ளை யென்பவரிடம் வினவி அறிந்து கொண்டார். அவரும் அன்புடன் தெளிவாகச் சொல்லிவந்தனர். அந்த அந்தாதியின் நடையைக் குறித்து அடிக்கடி இவர் பாராட்டுவதுண்டு.
என் பெயரை மாற்றியது.
என்னுடைய இயற்பெயர் வேங்கடராமனென்பது; அதுவே சர்மா நாமம். இவரிடம் என் தந்தையார் சொல்லியதும் வேங்கடராமனென்பதே. அப்பெயராலேயே என்னை அழைத்துவந்த இவர் சில தினங்களுக்குப்பின் ஒருநாள் என்னை நோக்கி, "வீட்டார் உம்மை அழைப்பது இந்தப்பெயராலேயா? அன்றி உமக்கு வேறு பெயருண்டோ?" என்று கேட்டார். நான், "வேங்கடராமனென்பது மூதாதையின் பெயராதலின் தாய் தந்தையர்கள் அவ்வாறு அழையாமல் சாமிநாதனென்பதன் திரிபாகிய 'சாமா' என்று அழைப்பார்கள்" என்றேன். "சாமிநாதனென்ற பெயரே நன்றாக யிருக்கிறது. இனி அப்பெயராலேயே உம்மை அழைக்கிறேன்!” என்று கூறி அன்றுமுதல் அப்பெயராலேயே அழைத்து வருவாராயினர். இவருடைய விருப்பத்தின்படி பிறரும் அங்ஙனமே செய்துவந்தார். அப்பெயரே நிலைத்துவிட்டது.
என் இசைப்பயிற்சியை நிறுத்தியது.
நான் இவரிடம் படிக்கத்தொடங்கிய நாள் முதல் என் தந்தையாருடைய கட்டளையின்படியே ஒவ்வொரு தினத்தும் ஓய்வு நேரத்திற்சென்று அவ்வூரிலிருந்த முடிகொண்டான் கோபால கிருஷ்ண பாரதியாரிடம் ஸங்கீதம் கற்றுக்கொண்டு வந்தேன். நான் முன்னரே பயிற்சி பண்ணியிருந்த கீர்த்தனங்களை மறவாமலிருத்தற்கு இங்ஙனம் செய்தல் நலமென்று என் பிதா எண்ணினர். பாரதியாரும் அன்புடன் கற்பித்துவந்தார். அவர் இயற்றிய சில கீர்த்தனங்களும் பிற பெரியோர்கள் இயற்றிய சில பழைய உருப்படிகளும் எனக்கு அக்காலத்திற் பாடமாயின. பிள்ளையவர்களும் அவரும் அதிகப் பழக்கமுடையவர்களாகையால் எப்பொழுதேனும் சந்திக்கும்படி நேர்ந்தால் இருவரும் மனங்கலந்து சில நேரம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். ஒருநாட் காலையில் இருவரும் சந்தித்தபொழுது தம்மிடம் நான் படிக்க வந்திருப்பதாகவும் பாடல்களை இசையுடன் படிப்பதாகவும் அப்படிப் படிப்பதை ஒருநாள் வந்து கேட்கவேண்டுமென்றும் இவர் அவருக்குச் சொல்லவே அவர், "அந்தப் பையனுடைய தகப்பனார் ஸங்கீத வித்துவானாதலால் அவருக்கும் எனக்கும் பல நாளாகப்பழக்கம் உண்டு. அவனுக்கு ஸங்கீதப் பயிற்சி மேன்மேலும் பெருகும்படி கற்பிக்க வேண்டுமென்று என்னிடம் அவர் சொல்லிவிட்டுப் போனார். அவன் அந்தப்படியே என்னிடம் தினந்தோறும் வந்து சிக்ஷை சொல்லிக்கொண்டு போகிறான். சில கீர்த்தனங்கள் அவனுக்குப் பாடமாயிருக்கின்றன. தங்களிடம் பாடங்கேட்டு வருவதாகவும் சொன்னான்" என்று சொன்னதன்றி, "அந்தப் பையனைக் கவனித்துப் படிப்பிக்க வேண்டுமென்று நானும் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்" என்றனர். அப்பால் இவர் அவருடன் அதிகம் பேசாமல் அவரிடம் விடைபெற்று நேரே விரைவாக வீட்டிற்கு வந்து அங்கே படித்துக் கொண்டிருந்த என்னைப்பார்த்து, "நீர் கோபால கிருஷ்ண பாரதியாரிடம் சென்று இசைப்பயிற்சி செய்து வருவதுண்டோ?" என்று கேட்டார். கேட்ட குறிப்பையறிந்து நான் மிகவும் அஞ்சி, "என்னுடைய தகப்பனாருக்கும் அவருக்கும் அதிகப் பழக்கம் உண்டு. இவ்வூரிலிருக்கையில் பாரதியாரிடம் சென்று ஸங்கீதத்தையும் விருத்தி பண்ணிக்கொள்ளும்படி அவர் சொன்னமையால் இதுவரையிற் கற்றவற்றை மறவாமலிருத்தற் பொருட்டுச் சென்று பயின்று வருகிறேன்" என்று விநயத்துடன் சொன்னேன். இவர், "நீர் அங்ஙனம் செய்து வருவதை நான் இதுவரையில் தெரிந்து கொள்ளவில்லை. இசையில் அதிகப் பழக்கம் வைத்துக்கொண்டால் இலக்கிய இலக்கண நூல்களில் நன்றாகப் புத்தி செல்லாது. நூல்களின் கருத்தை நன்றாக ஆராய்ந்து படிப்பதையும் அது தடுத்துவிடுமே" என்று சொன்னார். இவருடைய நோக்கத்தை அறிந்து மறுநாள் முதல் அம் முயற்சியை அடியோடே நிறுத்திக்கொண்டேன். பாரதியாரிடத்து வேறொன்றும் சொல்லாமல், "இங்கே வருவதற்கு எனக்கு ஓய்வு நேரம் இல்லை" என்று சொல்லிவிட்டு நேர்ந்த காலங்களில் அவரிடம் சாதாரணமாகப் பழகி வந்தேன்.
ஒரு மாணாக்கர் எண்ணெய் வாங்கி வந்தமை.
ஒருநாள் எங்களுக்குக் காலைப் பாடமானவுடன் இவர் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதற்குச் சென்று ஒரு பலகையில் இருந்தார். எப்பொழுதும் பாடஞ் சொல்லுவது இவருக்கு வழக்கமாதலால், பாடங் கேட்பவர்கள் புஸ்தகமும் கையுமாக அருகில் வந்திருந்தார்கள். எண்ணெய் தேய்க்கும் வேலைக்காரன் உள்ளே சென்று சமையற்காரனைக் கேட்டபொழுது அவன் எண்ணெய் இல்லையென்றான். அயலில் நின்ற மாணாக்கர் ஒருவர் அதனையறிந்து விஷயம் இவருக்குத் தெரியாதபடி தம்மிடமிருந்த ரூபாயொன்றை எடுத்துக்கொண்டு காவிரியாற்றின் கரையோரத்திலிருந்த கடைத்தெருவிற்கு வேகமாக ஓடிச் சென்று எண்ணெய் வாங்கி வந்து சமையற்காரனிடம் சேர்ப்பித்துவிட்டு யாதும் அறியாதவர் போல் வந்து இருந்தனர். எண்ணெய் தேய்த்துக்கொள்ளவெண்ணி, ஆசனத்தில் இருந்தும் உடனிருந்தவர்களுக்கு வழக்கம் போலவே பாடஞ்சொல்லிக்கொண்டிருந்தமையால் எண்ணெய் வாராமையின் காரணத்தை இவர் அறிந்து கொள்ளவில்லை.
மூன்று சமஸ்யைகள்.
பின் ஒருநாள் மாலையில் அனுஷ்டானம் செய்துவிட்டு வந்து வீட்டின் மேல்புறத் திண்ணையில் இவர் இருந்தார். கனகசபை ஐயர், சவேரிநாத பிள்ளை, நான் ஆகிய மூவரும் கீழ்புறத் திண்ணையின்கீழே வரிசையாக இவரை நோக்கிய வண்ணமாக நின்றோம். அப்பொழுது எங்களை நோக்கி இவர், "உங்களுக்குச் செய்யுள் செய்யும் பழக்கமுண்டா?" என்று கேட்டார். "உண்டு" என்றோம். "வெண்பாவின் ஈற்றடியைக் கொடுத்தால் ஏனை மூன்றடிகளையும் பாடி முடிப்பீர்களா?" என்று வினாவினார். "ஏதோ உழைத்துப்பார்க்கிறோம்" என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சொன்னோம். சொன்னவுடன், "தேவா வெனக்கருளைச் செய்" என்பதைச் சவேரிநாத பிள்ளைக்கும், "சிந்தா குலந்தவிரச் செய்" என்பதைக் கனகசபை ஐயருக்கும், 'கந்தா கடம்பாகு கா" என்பதை எனக்கும் ஈற்றடிகளாக அளித்தார். நாங்கள் மூவரும் ஏனை மூன்றடிகளையும் முடித்து முறையே தெரிவித்தோம். கேட்ட இவர், "இப்படியே பாடிப் பழகுவது நல்லது. பாடப்பாட உங்களுக்கு நல்ல வாக்கு உண்டாகலாம்; 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது ஒளவையார் திருவாக்கன்றோ?" என்று கூறிவிட்டு என்னை நோக்கி, "உமக்குக் கொடுத்த இறுதி அடியை வைத்து நானும் ஒரு செய்யுள் செய்து முடித்திருக்கிறேன்" என்று,
(வெண்பா)
{2.1}
[2]"பாடப் படிக்கப் பயனா நினக்கன்பு
கூடக் கருணை கொழித்தருள்வாய் - தேடவரும்
மந்தா னிலந்தவழு மாயூர மாநகர்வாழ்
கந்தா கடம்பாகு கா"
என்ற செய்யுளைச் சொன்னார். நாங்கள் செய்த மூன்று பாட்டுக்களும் எனக்கு ஞாபகம் இல்லை. அதுமுதல் நாங்கள் செய்யுள் செய்யும் முயற்சியை மேற்கொண்டு வந்தோம்.
முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்.
தமிழில் நல்ல அறிவுண்டாகவேண்டுமென்று கருதி நாள்தோறும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை முற்றும் பாராயணம் செய்துவருவது எனக்கு வழக்கமாக இருந்தது. அதனைக் கண்ட இவர் ஒருநாள், "இப்படியே நாள்தோறும் முற்றும் பாராயணம் செய்துவந்தால் உமக்குச் சிரமமாக இருக்கும். மற்றவர்களோடு சேர்ந்து படிப்பதற்கும் இயலாது. முருகக்கடவுளை வழிபடுதல் தமிழ்ப்பயிற்சிக்கு மிகவும் நல்லதே. அப்பிள்ளைத்தமிழில் வருகைப் பருவத்தில் இரண்டு பாடல்களை மட்டும் மனனம் செய்துகொண்டு வந்தாற் போதும்" என்றார். அது தொடங்கி அவ்வண்ணமே செய்து வருவேனாயினேன்.
பெரியபுராணப் பாடம்.
சில மாதங்களுக்குப் பின் இவர்பால் விடைபெற்றுக்கொண்டு சொந்த ஊருக்குப் போனேன். அங்கே என் தகப்பனாரும் பிறரும் இவர்பால் நான் பாடம் கேட்டுவரும் முறைகளையும் இவருடைய குணவிசேஷங்களையும் நான் விவரமாகச் சொல்லக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார்கள். அங்கே சில தினமிருந்து திரும்பிவந்தேன். அதற்குள் மாயூரங்கோயிற் கட்டளைப்பணியை அப்போது நடத்தி வந்த ஸ்ரீ பாலசுப்பிரமணியத் தம்பிரானென்பவரும் வேறு சிலரும் இவரிடம் முதலிலிருந்து பெரிய புராணத்தைப் பாடங்கேட்டு வருவாராயினர். நான் திரும்பி வந்த தினத்தில் தொடங்கிய பாடம் எறிபத்த நாயனார் புராணம். என்னைக் கண்டவுடன் அவர்களுடன் சேர்ந்து அப்புராணத்தைக் கேட்டு வரும்படி இவர் சொன்னார். அங்ஙனமே செய்து வந்தேன். என் தகுதிக்கு அந்நூல் எத்தனையோ மடங்கு மேற்பட்டதாக இருந்தாலும், இவர் பாடஞ் சொல்லும் பக்குவத்தால் அந்நூற் செய்யுட்கள் எளியனவாகவே இருந்தன. அவற்றிலுள்ள நயங்களும் புலப்பட்டன.
கண்ணப்ப நாயனார் புராணம்.
இவ்வாறு பாடம் நடந்து வருகையில் ஒருநாள் திருவாவடுதுறை மடத்துக் காறுபாறாக இருந்த ஸ்ரீகண்ணப்பத் தம்பிரானென்பவர் அங்கே வந்தார். தற்செயலாக அன்றைப்பாடம் கண்ணப்ப நாயனார் புராணமாக இருந்தமையால், பெயரொற்றுமை பற்றி அதனை அவர் முன்னிலையில் படித்து அன்றைத் தினமே பூர்த்திசெய்து விடவேண்டுமென்ற எண்ணம் இவருக்கும் பிறர்க்கும் உண்டாயிற்று. அக்குறிப்பையறிந்து விரைவாகப் படித்து நாங்கள் பொருள் கேட்டுக்கொண்டு வந்தோம். கண்ணப்ப நாயனாருடைய அன்பின் மிகுதியையும் அவர்பால் தமக்குள்ள அருளின் மிகுதியையும் ஸ்ரீகாளத்திநாதர் சிவகோசரியாருடைய கனவிற் கட்டளையிடும் பகுதியாகிய செய்யுட்கள் நாங்கள் படிக்கும் அச்சுப் புத்தகங்களுள் ஒன்றிலேனும் காணப்படவில்லை. உடனே இவர், "அங்கே ஐந்து பாடல்கள் இருக்கவேண்டுமே; அவை நிரம்ப நன்றாக இருக்கும். உங்கள் புஸ்தகத்தில் அச்செய்யுட்களில்லாமை வியப்பை உண்டு பண்ணுகின்றது" என்று சொல்லித் தம்முடைய புத்தகப் பெட்டியின் திறவுகோலைக் கொடுத்து அதைத் திறந்து பெரிய புராண ஏட்டுப் பிரதியை எடுத்துக்கொண்டு வரும்படி என்னை அனுப்பினார். உடனே சென்று அதை எடுத்துவந்தேன். பிரித்து அந்த இடத்தைப் பார்க்கையில் மிக்க அருமையான ஐந்து பாடல்கள் அப்பிரதியிற் காணப்பட்டன. அவை, "பொருப்பினில்", "உருகியவன்பு", "இம்மலைவந்து", "வெய்யகனல்", "மன் பெருமா" என்ற முதற்குறிப்புடையவை. அவற்றைப் படிப்பிக்கச் செய்து கேட்பித்து எல்லாருக்கும் மகிழ்வளித்தார். கேட்டவர்கள் இவருடைய ஞாபக சக்தியை மிகவும் பாராட்டினார்கள்.
'இன்று நெய் கிடைத்தது.'
அப்புராணத்தைப் படித்து முடிக்கும்பொழுது இரவு 15 நாழிகைக்கு மேலாயிற்று. மடத்திலே ஆகாரம் பண்ணிக்கொள்ளும்படி தம்பிரான்மார்கள் சொன்னமையால் இவர் அவ்வண்ணமே செய்தார். அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தம் வீட்டிற்கு இவர் செல்லும்பொழுது நானும் உடன் சென்றேன்; இவர் என்னைப் பார்த்து, "மடத்தில் ஆகாரம் பண்ணினமையால், இன்று நெய் கிடைத்தது" என்றார்; அதற்கு முதன் மூன்று நாளும் நெய்யில்லாமல் இவர் உண்டதை நான் அறிந்தவனாதலால் என்னிடஞ் சொன்னார். இவர்பால் அன்பும் மதிப்புமுள்ளவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இருந்தும் இவருடைய குடும்பநிலைமையை ஒருவரும் கவனிக்கவில்லையே யென்ற எண்ணம் அப்பொழுது உண்டாகி என்னை மிக வருத்தியது. அந்த வறுமை நிலையை ஒருகாலத்தும் இவர் புலப்படுத்தினாரல்லர். சிறந்த கல்விமான்களுக்கு வறுமைத் துன்பமுண்டென்பதை,
(கட்டளைக் கலித்துறை)
{2.2}
"கொடுக்கச் சடைவற்ற வுன்னையும் பாடிக் குலாமர்முன்போய்
இடுக்கட் படுவ தழகல்ல வேயென்னை யீடழிக்கும்
நடுக்கத்தை யாற்றப் படாதுகண் டாயெந்த நாளுமுண்ண
உடுக்கக் குறைவருத் தாதேகுற் றாலத் துறைபவனே"
என்னும் அருமைச் செய்யுளாலறியலாகும். உடனிருந்தமையால், இதைப்போன்ற சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் அறிந்திருப்பதுண்டு.
சடகோப ஐயங்காரைப் பாராட்டியது.
ஒரு தினம் நான் உடன் படிப்பவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில், அரியிலூர்ச் சடகோபையங்கார் தம்மிடம் வருவோரிடத்துச் சமயோசிதமாகச் செய்யுட்களைக் கூறி அவற்றிற்குப் பொருள் சொல்லி உபந்யஸித்தல் நயமாக இருக்குமென் றும் அக் கேள்வியாலும் என் மனம் தமிழ்ப்பாஷையில் ஈடுபட்டதுண்டென்றும் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே வந்த இவர், "சடகோபையங்காரைப்பற்றி என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்க, உடனிருந்த ஒருவர் நிகழ்ந்ததைச் சொன்னார். அப்பொழுது இவர் என்னைப் பார்த்து, "அவர் சொல்லியவற்றுள் ஏதாவது ஒரு செய்யுளைச் சொல்லி அதற்கு அவர் சொல்லிய விசேஷ அர்த்தத்தையும் சொல்லும்" என்றார்.
{2.3}
"வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற் கேற்ப நயம்பட வுரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமுங் களத்தே போட்டு வெறுங்கையோ டிலங்கை புக்கான் "
(கம்ப. கும்பகருணன். 1)
என்ற பாடலைச் சொல்லிவிட்டு நான் அதற்கு அவர் சொல்லியபடி முதலிலிருந்தே பொருள் சொல்லத் தொடங்கினேன். இவர், மார்பு முதலியவற்றைக் களத்தில் அவன் போடாமலிருக்கையில் அவற்றை அவன் போட்டுவிட்டதாகச் சொல்லிய பகுதிகளுக்கு மட்டும் பொருளை விளக்கி இன்னவற்றைச் சொன்னாரென்பதைச் சொன்னாற் போதும்" என்றார். " இராவணன் மார்பில் தைத்திருந்த திக்குயானைகளின் கொம்புகள் அவன் மார்பில் அனுமான் குத்திய பொழுது அவன் முதுகுவழியே உதிர்ந்துபோனமையால் மார்பின் வன்மையையும், வேலால் மூர்ச்சித்து விழுந்த இலக்குவனை அவன் தூக்கிக்கொண்டு செல்வதற்கு மிக முயன்றும் எடுக்க முடியாமல் சலித்து நின்றமையால் தோள்வலியையும், 'ஊர்க்குப் போய்ப் படைகளைத் தொகுத்துக்கொண்டு யுத்தம் பண்ணுதற்கு நாளை வர எண்ணுகின்றனையா? சீதையை விட்டு விடுதற்கு எண்ணுகின்றனையா? உன் கருத்து யாது?' என்று இராமன் கேட்ட பொழுது அவன் மெளனமாகவே இருந்துவிட்டமையின் நாவின்வன்மையையும், அவன் கிரீடத்தை இராமபாணம் வீழ்த்திவிட்டமையால் கிரீடத்தையும், 'நல்ல சமயத்தில் நம்மை உபயோகியாமல் இருந்து விட்டானே; இனி இவனிடமிருப்பதில் யாதும் பயனில்லை' என்று அவனை இகழ்ந்து, ஈசன் அளித்த கொற்றவாள் அவனை நீங்கி அவரிடஞ் சென்று விட்டமையால் வாளையும் இழந்தானென்றும், மார்பு, தோள், நா என்பவை ஆகு பெயர்களென்றும் அவர் சொன்னதாக எனக்கு ஞாபகமிருக்கிறது" என்று சொன்னேன். அவர் கூறிய பொருள் பொருத்தமாக இருக்கிறதென்று இவர் பாராட்டியதோடு அவரைத் தாம் முன்னமே அறிந்திருப்பதாகவும் சொன்னார்.
ஆனிக் குருபூஜைக்குத் திருவாவடுதுறை சென்றுவந்தது.
இங்ஙனம் சில நாட்கள் சென்றன; திருவாவடுதுறையில் நடக்கும் [3]ஆனிக் குருபூஜைக்கு வரவேண்டுமென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களுடைய திருமுகம் இவருக்குக் கிடைத்தமையால் மாயூரத்திலிருந்த சில அன்பர்களுடன் இவர் திருவாவடுதுறைக்குச் சென்றார். நாங்கள் மட்டும் இவர் சொல்லியபடி மாயூரத்திலிருந்தே பழைய பாடங்களைச் சிந்தித்துக்கொண்டிருந்தோம். சில தினம் இவர் திருவாவடுதுறையில் இருந்துவிட்டு மாயூரம் வந்து வழக்கப்படியே எங்களுக்குப் பாடஞ்சொல்லி வந்தார். ஒரு நாள் பாடஞ் சொல்லிவருகையில் அங்கே வந்த ஒரு கனவானிடம் தாம் திருவாவடுதுறைக்குப் போன காலத்தில் நிகழ்ந்த செய்திகளை இவர் கூறுபவராகி, 'ஸந்நிதானம் திருவாவடுதுறையிலேயே வந்திருந்து பாடஞ் சொல்லும்படி கட்டளையிட்டது; சீக்கிரம் வரவேண்டுமென்று அங்கேயுள்ள குட்டிகளும் வற்புறுத்தியதுண்டு. அங்கே நான் போனால் இந்தப் பிள்ளைகள் பாடங் கேட்பதற்கும் பிறவற்றிற்கும் மிகுந்த செளகரியமாயிருக்கும்" என்று சொன்னார். அதைக் கேட்ட எங்களுக்கு மிக்க ஆறுதலுண்டாயிற்று. எனக்குமட்டும் ‘குட்டிகள்' என்ற சொல்லுக்குப் பொருள் சரியாக விளங்காமையால் சிறு பெண்களென்று அர்த்தம் செய்துகொண்டு, 'துறவிகளிருக்கும் மடத்தில் பெண் பாலாரிருப்பதற்கு நியாயமில்லையே. இருந்தாலும் அவர்களைப் படிப்பித்தற்கு இயலாதே' என்று என்னுள் நினைந்து பக்கத்திலிருந்தவரை மந்தணமாக வினவத் தொடங்கினேன். அப்பொழுது அதனை அறிந்த இவர், "சிறிய தம்பிரான்களைக் குட்டிகளென்று சொல்லுவது மடத்து வழக்கம்" என்று சொன்னார்.
ஆறுமுகத்தா பிள்ளை பட்டீச்சுரத்துக்கு அழைத்தது.
ஒரு நாள் பட்டீச்சுரம் ஆறுமுகத்தாபிள்ளை மாயூரம் வந்தார். இவரை அழைத்துச் சென்று தம்முடைய வீட்டில் வைத்திருந்து உபசரித்து இவருடைய உதவியால் தம்முடைய குடும்பத்திலுள்ள சில முட்டுப்பாடுகளைப் போக்கிக்கொள்ள எண்ணி அவர் வந்து அழைப்பதும் இவர் அடிக்கடி பட்டீச்சுரம் சென்று சில நாள் இருந்து வருவதும் உண்டு.
இரண்டு தினம் சென்ற பின்பு ஆறுமுகத்தா பிள்ளை பட்டீச்சுரம் வந்து சில தினம் இருக்க வேண்டுமென்று இவரைக் கேட்டுக் கொண்டார். அதற்கு இவர் இசைந்து மாணாக்கர்களில் என்னையும் தவசிப்பிள்ளை பஞ்சநதம்பிள்ளையையும் உடனழைத்துக் கொண்டு அவரோடு புறப்பட்டார்; இடையில் திருவாவடுதுறையில் தங்கி ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து விடைபெற்றுச் செல்ல எண்ணினார்.
---------
[1]. படிப்பவர்களும் ஏனையோரும் இவர்களை, 'ஐயா அவர்கள்’ என்று சொல்லுவது வழக்கம்.
[2]. இச்செய்யுளை அப்பொழுது கேட்டு மகிழ்ந்து மனனம் செய்திருந்த நான் என்ன காரணத்தாலோ மறந்துவிட்டேன். பல வருடங்களுக்குப்பின், திருவாவடுதுறையிலிருந்தவரும் இவர் மாணாக்கரும் சிறந்த கவிஞருமாகிய இராமலிங்கத் தம்பிரானென்னும் நண்பரால் அறிந்து அப்பால் நாள்தோறும் சொல்லி வருவேனாயினேன்.
[3]. இஃது அந்த மடத்தில் 15 - ஆம் பட்டத்திலிருந்து விளங்கிய ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்குரியது; குருபூஜை நடக்கும் தினம் ஆனி மாதம் பூர நட்சத்திரம்.
----------
3. திருவாவடுதுறை நிகழ்ச்சிகள்.
திருவாவடுதுறை சென்றது.
அங்ஙனமே இவர் திருவாவடுதுறை போகையில் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய பெருமையையும் வடமொழி தென்மொழிகளிலும் சைவசித்தாந்த சாஸ்திரங்களிலும் இசையிலும் அவருக்குள்ள பயிற்சி மிகுதியையும் அவற்றிற் பாண்டித்தியமுள்ளவர்களை அன்புடன் ஆதரிக்கும் அருமையையும் பாராட்டிக் கூறி என்னை நோக்கி, "உம்மைச் சில செய்யுட்கள் சொல்லும்படி ஸந்நிதானம் கட்டளையிடக் கூடும். அப்போது இன்ன இன்ன நூல்களிலிருந்து இன்ன இன்ன வகையான செய்யுட்களை இசையுடன் சொல்லும். பொருள்கேட்டாற் பொருளையும் தவறின்றிச் சொல்லும். சொல்லி உவப்பித்தால் அவர்களுடைய பேராதரவைப் பெறலாம்" என்று சொன்னதன்றிப் பின்னும் நான் அங்கே உள்ளவர்களிடத்து நடந்து கொள்ள வேண்டியதைப்பற்றியும் மனத்திற்படும்படி போதித்துக் கொண்டே சென்றார். அப்பொழுது சாலையில் எதிரே வருபவர்களும் அயலிடங்களில் நிற்பவர்களும் பிள்ளையவர்கள் செல்லுகிறார்களென்று தம்முள் நன்மதிப்போடு பேசிக்கொள்ளுதலையும் சிலர் வந்து வந்து பார்த்து, "எங்களுடைய ஞாபகமிருக்க வேண்டும்" என்று விநயத்துடன் சொல்லுதலையும் பார்த்த எனக்குப் பின்னும் இவரிடத்து நன்மதிப்பு உண்டாயிற்று. அப்பால் இவர் திருவாவடுதுறையை யடைந்து மடத்திற்குச் சென்றார். மடத்து ஓதுவார்களிற் சிலர் இவரைக்கண்ட உடனே இவர் வரவை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பம் செய்ய, இவரை அழைத்துவரும்படி அவர் சொல்லி யனுப்பினார்.
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகராற் பாராட்டப் பெற்றது.
அதைக்கேட்டு இவர் மிக விரைந்து சென்று இரண்டு கைகளையும் உச்சிமேற் குவித்து அவரைப் பணிந்தார். அவர் அப்பொழுது [1]ஒடுக்கத்தின் வடபுறத்தே தென்முகம் நோக்கி யிருந்தார். அருகில் வடமொழி தென்மொழிகளிலும் ஸங்கீதத்திலும் வல்ல வித்துவான்கள் இருந்தார்கள். வணங்கிய இவர் திருநீறு பெறுவதற்கு எழுந்து செல்லும்பொழுது தேசிகரைப்பார்ப்பதற்கு மிக்க ஆவலோடு இவர் பின்னே நின்ற யானும் சென்றேன். நெற்றியில் திருநீறு இட்டு இவரை இருக்கச்செய்துவிட்டுத் தேசிகர், "உங்களுக்குப் பின்னே வருகிற இவரோ முன்பு வந்த பொழுது பாடங்கேட்பதாகச் சொல்லிய சாமிநாதைய ரென்பவர்?" என்று விசாரித்தார். அப்பொழுது [2]'ஸ்வாமி' என்று இவர் சொல்லவே எனக்கு உண்டான உவப்பிற்கு எல்லையே இல்லை. ஒரு பொருளாக என்னை நினைந்து தாம் வந்தபொழுது நான் பாடங்கேட்டு வருவதாக இப்புலவர்பிரான் சொல்லிய அருமையையும் அதனை ஞாபகப்படுத்திக் கொண்டு விசாரித்த தேசிகருடைய பெருமையையும் எண்ணி எண்ணி இன்பம் அடைந்து கொண்டே சென்று தேசிகர் இருக்கும்படி சொல்ல இவருக்குப் பின்னே இருந்தேன்.
அப்பொழுது தேசிகர் இவரைப்பார்த்து, " இங்கே வந்திருந்த ஸ்ரீ மகாவைத்தியநாதையரவர்கள் நேற்று மாலையில் ஸ்ரீ சோமாசி மாறநாயனார் சரித்திரம் கதை பண்ணினார்கள். அதற்காக அழைக்கப்பட்டுத் திருவிடைமருதூரிலிருந்து ராஜா கனபாடிகள், சுந்தரசாஸ்திரிகள், அண்ணா வாஜபேயர் முதலிய வித்துவான்களும், திருவாலங்காட்டிலிருந்து விசுவபதி தீக்ஷிதர், அப்பா தீக்ஷிதர், பெரியசாமி சாஸ்திரிகள், சின்னசாமி சாஸ்திரிகள், ராஜு சாஸ்திரிகள் முதலிய வித்துவான்களும், திருக்கோடிகா, திருவிசைநல்லூர் முதலிய ஊர்களிலுள்ள பண்டிதர்களும், செல்வவான்களிற் பலரும் வந்திருந்தார்கள். ஸதஸ் மிக நன்றாகவே இருந்தது. மகாவைத்தியநாதையரவர்கள் அந்தச் சரித்திரத்தைக் கதை பண்ணுகையில் சுருதி ஸ்மிருதி இதிஹாஸங்களிலிருந்தும், ஸ்ரீ ஹரதத்த சிவாசாரியார் அப்பைய தீக்ஷிதர் முதலிய பரமசாம்பவர்களுடைய வாக்கிலிருந்தும், தேவார திருவாசகங்கள் முதலியவற்றிலிருந்தும் அவ்வவ்விடத்திற்கேற்ப மேற்கோள்கள் காட்டிச் சபையை மகிழ்வித்ததுடன் உங்களுடைய வாக்காகிய சூத சங்கிதையிலிருந்தும் சில ஸ்தலபுராணங்களிலிருந்தும் வாட்போக்கிக் கலம்பகம் முதலியவற்றிலிருந்தும் உசிதமான செய்யுட்களை எடுத்துக் காட்டி உபந்யஸித்தார்கள். எல்லோரும் அளவற்ற மகிழ்வடைந்தார்கள். அவற்றுள் உங்களுடைய பாடல்கள் அவர்களுடைய சாரீரத்தோடு சேர்ந்து செயற்கையழகும்பெற்று எல்லாருடைய மனத்தையும் கவர்ந்தன. அவர்கள் ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்லிவிட்டு, 'இந்த விஷயமாகப் பிள்ளையவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்' என்று சொல்லிச் செல்லும்பொழுது கேட்டவர்கள் உங்களுடைய அறிவின் வன்மையையும் ஸாஹித்யத்தின் அழகையும் அறிந்து வியந்தார்கள். அது தொடங்கி உங்கள் ஞாபகமாகவே இருந்து வருகிறோம். மற்றவர்களும் அப்படியே இருக்கிறார்கள்" என்று சொன்னார். குணக் குன்றாகிய இவர் மிக்க பணிவுடன், "அடியேனுக்கு யாது செயலுளது? எல்லாம் ஸந்நிதானத்தின் திருவருளே" என்று விண்ணப்பம் செய்தனர். அங்கே உடனிருந்த மற்றப் பெரியோர்களும் பிள்ளையவர்களுடைய வரவால் தங்களுக்குண்டான மன மகிழ்ச்சியைத் தங்கள் முகங்களாற் புலப்படுத்தினார்கள்.
சுப்பிரமணிய தேசிகர் என்னைப் பரீட்சித்தது.
அப்பால் தேசிகர் என்னை முன்னே வரச்செய்து, "படித்த நூல்களிலிருந்து ஞாபகமுள்ள எந்தப்பாடல்களையேனும் சொல்லிப் பொருளும் சொல்லும்" என்றார். நான் துறைசை யமகவந்தாதி, திருத்தில்லை யமகவந்தாதி, திருக்குற்றால யமகவந்தாதி, புகலூரந்தாதி யென்பவற்றுள் ஒவ்வொன்றிலிருந்தும் சில சில பாடல்களைச் சொல்லிப் பொருளும் சொன்னேன். பொருள் சொல்லுகையில் அச்சத்தால் நாக்குத் தழுதழுத்தது; அதனால் துன்புற்றேன். அதனையறிந்து தைரியமாகச் சொல்லும்படி பிள்ளையவர்கள் தூண்டினமையால் பின்பு அச்சமின்றிச் சொன்னேன்.
அப்போது தேசிகர் பிள்ளையவர்களைப் பார்த்து, "சாரீரமும் சங்கீத ஞானமும் இவருக்குள்ளன. தங்களிடம் படித்துக்கொண்டு வந்தால் முன்னுக்கு வருவாரென்று தோற்றுகிறது. தங்களை அடைந்தவர்களுக்கு யாதொரு குறையுமிராது" என்று சொல்ல, இவர், "அடியேனால் ஆவது ஒன்றுமில்லை; ஸந்நிதானத்தின் திருவருளே எல்லோரையும் பாதுகாத்து வருகின்றது; இனிமேலும் பாதுகாத்தற்குரியது அதுவே; இவரும் அவ்விடத்துப் பிரியத்துக்குப் பாத்திரரே" என்று விண்ணப்பஞ் செய்தார்.
பின்பு தேசிகர், "இங்கே வழங்காத திருக்குற்றால யமகவந்தாதி இவருக்கு எப்படிப் பாடமாயிற்று?" என்று கேட்க இவர், "அந்நூலை இதுவரையில் அடியேன் பார்த்ததில்லை; அடியேன் வருவித்துக் கொடுக்க வேண்டுமென்று சொன்னமையால் மேலகரம் சண்பகக் குற்றாலக் கவிராயர் அதனையும் திருக்குற்றாலப்புராண ஏட்டுப் பிரதியையும் வருவித்துக் கொடுத்தார். அந்தாதியை ஒருமுறை முற்றும் படித்துப் பொருள் வரையறை செய்துகொண்டு பாடஞ் சொன்னேன். அந்நூல் பலவகையிலும் சிறப்புற்று விளங்குகின்றது. புராணத்தையும் படிப்பித்துக் கேட்டுவருகிறேன்; அதுவும் அழகாகவே இருக்கின்றது" என்று சொன்னார். அப்பால் நெடுநேரம் வரையில் சில அரிய விஷயங்களைப் பற்றிய ஸல்லாபம் நடந்து கொண்டேயிருந்தது. "நேரமாய் விட்டது; தாங்கள் பூஜையை முடித்துக்கொண்டு இங்கே [3]பூஜையின் தரிசனத்திற்கு வரவேண்டும்" என்று தேசிகர் சொல்லவே இவர் எழுந்து மீட்டும் பணியத் தொடங்கியபொழுது இவருக்குச் சிரமம் ஏற்படக்கூடாதென்று நினைந்து, [4]"ஒருமுறை வந்தனம் செய்ததே போதும்; பிற்பாடும் செய்யவேண்டாமென்று முன்னமே நாம் சொல்லியிருக்கிறோமே? இனி அவ்வண்ணமே நடக்க வேண்டும்" என வற்புறுத்தினார்.
திருவாவடுதுறைக் காட்சிகள்.
அப்பால் இவர் ஸ்நானஞ் செய்தற்குத் தெற்குக் [5]குளப்புரைக்கு வந்தார். வருங்காலத்தில் பெரிய தம்பிரான்கள், குட்டித்தம்பிரான்கள், மடத்துக் காரியஸ்தர்கள், ஓதுவார்கள் முதலியவர்கள் நல்வரவு கூறி இவரைப் பாராட்டித் தொடர்ந்து வந்து அனுப்பினார்கள். இவர் போவதற்கு முன் குளப்புரையில் வெந்நீர் போடப்பட்டிருந்தது. ஸ்நானம் செய்துவிட்டுப் பூஜைக்குச் சென்றார். அங்கே வடபாலுள்ள பூஜை மடத்தில் தம்பிரான்களிற் சிலர் நியமத்தோடு பூஜை செய்தலையும் சிலர் பூஜையை முடித்துக் கொண்டு புறப்படுதலையும் பூஜை செய்வதற்குச் சிலர் அங்கே வருதலையும் அவரவர்களுக்குத் தக்கபடி தூய்மையோடுகூடிய [6]தவசிப் பிள்ளைகள் வேண்டிய பணிவிடை செய்து கொண்டு நிற்றலையும் படித்துறையின் மேல்பாலுள்ள பூஜை மடத்தில் வரிசையாக இருந்து சிலர் உடையவர் பூஜை செய்து கொண்டிருத்தலையும் தவசிப்பிள்ளைகள் தனித்தனியே மல்லிகை முல்லை முதலிய நறுமணங் கமழும் மலர் வகைகளையும் வில்வ முதலிய பத்திரவகைகளையும் வேறு வேறாக வெள்ளித்தட்டங்களில் தொகுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் உதவுதலையும் அங்கே வந்து செல்லும் அயலார்கள் பக்தியோடு, அவர்களுக்கு அஞ்சலிசெய்து கொண்டு ஒதுங்கிச் செல்லுதலையும் தம்பிரான்களுட் பெரியவர்களைக் காணுமிடத்து ஏனையோர் வந்தனம் செய்துவிட்டேனும் அஞ்சலி செய்துவிட்டேனும் செல்லுதலையும் நிருமாலியங்கள் கால்படாத இடங்களிற் குவியல் குவியலாகச் சேர்க்கப்பட்டிருத்தலையும் கண்டு விம்மிதமுற்று ஒன்றும் தோன்றாமல் நின்றேன்.
பின்பு அங்கே வந்த ஒருவரைக் கண்டு, "இந்தக் காட்சி ஆனந்தத்தை விளைவிக்கின்றது. இந்த மாதிரி எந்த இடத்தும் இதுவரையிற் கண்டதில்லை" என்று சொன்னேன். அதற்கு அவர், "என்ன ஆச்சரியம் இது? மேல் பக்கத்துள்ள அபிஷேகக் கட்டளை மடம், வடக்கு மடம், அதன் பின்பாலுள்ள குளப்புரை, மறைஞான தேசிகர் கோயில், காவிரியின் படித்துறை ஆகிய இடங்களைப் பார்த்தால் உமக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்குமே" என்று சொன்னார்.
அப்பால் நான் ஸ்நானம் செய்துவிட்டு நியமங்களை முடித்துக்கொண்டு ஆகாரம் செய்யவேண்டிய இடத்திற்குச் சென்றேன். சென்று பார்த்தபொழுது அங்கே ஸம்ஸ்கிருத வித்துவான்களிற் சிலரும், ஸங்கீத வித்துவான்களிற் சிலரும் தனித்தனியே இருவர் மூவராக இருந்து சுலோகங்களைச் சொல்லிக் கொண்டும் கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டும் இடையிடையே சுப்பிரமணிய தேசிகருடைய அருமையான குண விசேடங்களைப் பாராட்டிக் கொண்டும் இருந்தார்கள். ‘இங்கே வந்தமையால் இனி நமக்கு யாதொரு கவலையும் இராது' என்று நினைந்து நான் அவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டே நின்றேன். அப்போது அவர்களுள் ஒருவர் என்னை அழைத்து, "காலையில் நீர் பிள்ளையவர்களோடு ஸந்நிதானத்தைக் காண்பதற்கு வந்தபோது நாங்கள் அங்கிருந்தோம். ஸந்நிதானம் உம்மைப் பரீட்சித்த காலத்தில் நீர் உத்தரம் சொன்னதையெல்லாம் கேட்டோம். மிகவும் சந்தோஷமாக இருந்தது. பிள்ளையவர்களிடம் நீர் பாடங்கேட்டுக்கொண்டு வருவதும் ஸந்நிதானத்தை இன்று பார்த்ததும் உம்முடைய பெரும்பாக்கியமென்றே எண்ணுகிறோம். அவர்கள் நேத்திரங்களுக்கு நீர் எப்பொழுது விஷயமானீரோ அப்பொழுதே பாக்கியசாலியாக ஆனீர். அவர்களுடைய அன்புக்கு நாங்கள் பாத்திரமான காலந்தொடங்கிப் பரம ஸெளக்கியத்திலேயே இருந்து வருகிறோம். இப்பொழுது யாதொரு கவலையும் எங்களுக்கு இல்லை. பிறருடைய யோக்கியதையை அறிந்து ஸம்மானஞ் செய்தலில் அவர்களுக்குச் சமானமாக இப்பொழுது யாரிருக்கிறார்கள்?" என்று சொன்னார். அவற்றை யெல்லாம் காது குளிரக்கேட்டேன். சிலர் என்னைச் சில பாடல்கள் சொல்லிப் பொருள் சொல்லச் சொன்னார்கள். அங்ஙனமே சொல்லி ஆகாரம் செய்துவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
தம்பிரான்கள் சந்தேகங் கேட்டது.
அங்ஙனம் இருக்கையில் என்னை அழைப்பதற்கு மடத்திலிருந்து ஒருவர் வந்தார். உடனே விரைந்து சென்றேன். சென்றபொழுது ஒடுக்கத்தின் தென்பாலுள்ள மேல்மெத்தையில் மேற்கு முகமாக ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் வீற்றிருந்தார். பிள்ளையவர்களோடு [7]குமாரசாமித் தம்பிரான் முதலிய சில தம்பிரான்களும் வேறு சிலரும் அயலில் இருந்தார்கள். அவர்கள் எழுத்திலக்கணம் முதலிய ஐந்தினையும் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடங்கேட்டு முடித்தவர்கள். ஆதலால், அவற்றிலுள்ள மேற்கோள் சிலவற்றிற்கு இப்புலவர் சிகாமணிபாற் பொருள் வினாவிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதப்பொழுது இன்ன இன்ன விஷயத்தைக் கேட்க வேண்டுமென்று தேசிகர் சொல்ல அப்படியே அவை அவர்களால் கேட்கப்பட்டன. அவர்கள் வினாவுதலும் அதற்குப் பிள்ளையவர்கள் யாதொரு வருத்தமுமின்றி விடையளித்தலும் எனக்கு வியப்பை விளைவித்தன. அப்பால் தண்டியலங்காரத்துள்ள அஷ்டநாகபந்தச் செய்யுளை அடக்குவதற்கு நாகங்களைப் போட்டுக் காட்டும்படி குமாரசாமித் தம்பிரான் கேட்டபொழுது பிள்ளையவர்கள் எழுதுகோலையும் கடிதத்தையும் வருவித்துப் போடத்தொடங்குமுன் நான் ஒரு கடிதத்தில் அந்த நாகங்களைப் போட்டுக் காட்டினேன். நான் வலிந்து செய்த செய்கை பெருந் தவறாக இருந்தும் அதனைப் பொறுத்துக் கொண்டு, "நீர் இதை எங்கே கற்றுக்கொண்டீர்?" என்று இவர் கேட்டார். "செங்கணம் விருத்தாசலரெட்டியாரவர்களிடத்துத் தெரிந்து கொண்டதுண்டு. இன்னும் ரத பந்தம் முதலியவற்றையும் போடுவேன்" என்று சொன்னேன்.
சுப்பிரமணிய தேசிகர் எனக்குப் புஸ்தகங்கள் அளித்தது.
அப்பொழுது இவர் அன்பு பாராட்டியதைக்கண்டு சுப்பிரமணிய தேசிகர் என்னைப் பார்த்து, "பிள்ளையவர்களிடம் நீர் நன்றாகப் படித்துக்கொள்ளும். அவர்கள் இங்கு வரும்பொழுது உடன்வாரும். உமக்கு வேண்டிய அனுகூலங்கள் கிடைக்கும். உமக்கு வேண்டிய புஸ்தகங்களெல்லாம் கொடுப்போம்" என்று சொல்லிவிட்டு உடனே எழுந்து சென்று அங்கே மேல்பக்கத்திலிருந்த பீரோ ஒன்றைத் திறப்பித்துக் கம்பரந்தாதி, துறைசையந்தாதி, அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், கலைசைச் சிலேடை வெண்பா முதலிய பிரபந்தங்களுள் ஒவ்வொன்றிலும் நந்நான்கு அச்சுப்பிரதிகளுக்குக் குறையாமல் எனக்கு அளித்து, "இவற்றில் ஒவ்வொன்றை நீர் எடுத்துக்கொண்டு மற்றவற்றை உடன்படிக்கிற பிள்ளைகளுக்குக் கொடும்" என்றார். பின்பு என்னைச் சில பாடல்களை இசையுடன் சொல்லச் செய்து கேட்டுவிட்டு இப்புலவர்திலகரை நோக்கி, "நேர்ந்த காலங்களில் ஸங்கீதத்திலும் இவரைப் பழக்க வேண்டும்" என்று சொன்னார். அவர் அங்ஙனம் பிரீதியைப் புலப்படுத்தியது என்பால் இயல்பாகவே அன்புவைத்திருந்த என் ஆசிரியருக்கு அதனை எத்தனையோ மடங்கு அதிகமாக்கிவிட்டது. அக் குறிப்பை அந்த நிமிஷத்திலேயே அறிந்து நான் உள்ளம் குளிர்ந்தேன்.
திருவாவடுதுறையிலிருந்து பாடஞ்சொல்லும்படி கட்டளையிட்டது.
பின்பு தேசிகர் இவரை நோக்கி, "இங்கே சில தம்பிரான்களுக்கும் வேறு சிலருக்கும் பாடங்கேட்க வேண்டுமென்னும் ஆவல் அதிகமாக இருக்கிறது. பாடஞ் சொல்வதற்கு நமக்குச் சிறிதும் நேரமில்லை. வித்துவான்கள் பலரும் பிரபுக்கள் பலரும் அடிக்கடி வருதலினால் அவர்களை முறையே விசாரித்து அனுப்புவதற்குத்தான் பொழுது சரியாக இருக்கிறது. ஆதலால் வழக்கம் போலவே இங்கிருந்து அவர்களுடைய எண்ணத்தைப் பூர்த்தி பண்ணவேண்டும். அது நமக்கும் சந்தோஷத்தை விளைவிக்கும். சிரமத்தைப் பாராட்டக்கூடாது" என்றார். உடனே இவர், "ஸந்நிதானத்தின் திருவுளப்பாங்கின்படியே செய்யக் காத்திருக்கிறேன்" என்று சொல்லவே அங்கே உடன் வந்திருந்த ஆறுமுகத்தாபிள்ளை திடீரென்று எழுந்து அஞ்சலி செய்து நின்று, "ஐயா அவர்களை அழைத்துக்கொண்டு சென்று பட்டீச்சுரத்திற் சில காலம் வைத்திருந்து அடியேனுடைய குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சில குறைகளைத் தீர்த்துக்கொள்ள எண்ணியிருக்கிறேன். அதன் பொருட்டுத்தான் மாயூரம் சென்றேன். சில காலம் பட்டீச்சுரத்தில் இருந்துவரும்படி ஐயா அவர்களுக்குக் கட்டளையிட்டருள வேண்டும்" என்று வணக்கத்துடன் விண்ணப்பம் செய்து கொண்டார். தேசிகர், "அப்படியே செய்யலாம்; பட்டீச்சுரம் போய்ச் சில காலமிருந்துவிட்டு இங்கே வந்துவிட வேண்டும்" என்று கூறவே, எழுந்து பணிந்து விடைபெற்று விபூதிப்பிரஸாதம் வாங்கிக்கொண்டு இவர் புறம்போந்து வீதிக்கு வந்தார்.
திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்டது.
அப்பொழுது அங்கே படித்துக்கொண்டிருக்கும் தம்பிரான்களுட் சிலர் இக்கவிஞர்பெருமானைச் சூழ்ந்து கொண்டு [8]கோட்டுமாங்குளம் வரையில் வந்து வழியனுப்பினார்கள். அவர்களில் ஒருவர் என்னையணுகி, நான் பாடங்கேட்டிருந்த நூற்பெயர்களை வினாவி அவற்றிலுள்ள சில கடினமான பாடல்களுக்குப் பொருள் கேட்டார். கேட்டவற்றிற்குத் தெரிந்த அளவு சொல்லிவிட்டு, ‘இந்த மகானை அடுத்துச் சில மாதங்களாகப் பாடங் கேட்டதனாலல்லவோ ஒரு பொருளாக நினைந்து இவர் நம்மைக் கேட்கிறார்! காலையிற் சுப்பிரமணிய தேசிகரவர்களைப் பார்த்தோம்; அவர்களுடைய பிரீதியையும் பெற்றோம்' என்றெண்ணி மகிழ்ந்தேன். இவரிடம் பல வருடங்கள் இருந்து படித்துக் கொள்ள வேண்டுமென்று எனக்கு இருந்த எண்ணம் பின்னும் உறுதியுற்றது. உடன் வந்தவர்கள், "விரைவில் இங்கே வரவேண்டும்" என்று இவரைக் கேட்டுக்கொண்டு விடைபெற்று மீண்டு சென்றார்கள்.
----------
[1]. ஆதீனத்தலைவர்கள் ஏகாந்தமாக இருக்குமிடம்.
[2]. ஸ்வாமியென்பதற்கு இந்தச் சமயத்தில் ஆமென்பது பொருள்.
[3]. மடத்தில் நடைபெறும் சபாபதி பூஜை முதலியன.
[4]. வந்தவுடனும் விடைபெற்றுக்கொண்டு போகும்பொழுதும் பணிதல் அடியார்கள் வழக்கம்.
[5]. குளக்கரையிலுள்ள ஒரு கட்டிடம்; புரை - வீடு; இது மலைநாட்டு வழக்கு.
[6]. தவசிப்பிள்ளைகள் - தம்பிரான்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருப்பவர்கள்; தவசி - துறவி, "ஐயம் புகூஉந் தவசி" (நாலடி.) இப்பெயர் பிற்காலத்தில் மடைத்தொழில் செய்பவர்கள் முதலியோர்க்கு வழங்கலாயிற்று.
[7]. இவர் ஸ்ரீ ஆதிகுமரகுருபரஸ்வாமிகள் சரித்திரத்தை இயற்றுவித்த ஸ்ரீ இராமலிங்கத் தம்பிரானவர்களால் நியமிக்கப்பெற்று அவர்களுக்குப் பிற்காலத்தில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்துத் தலைவராக இருந்து விளங்கியவர்.
[8]. திருவாவடுதுறையின் மேற்கேயுள்ளதொரு பெரிய தாமரைக் குளம்.
---------------
4. பட்டீச்சுரம் போய் வந்தது.
திருவிடைமருதூர் சென்றது.
வண்டியில் இவர் ஏறியவுடன் இவர் உத்தரவின்படி அதில் நான் ஏறச்செல்லுகையில் பஞ்சநதம் பிள்ளை விரைந்துவந்து என் கையிலிருந்த புதிய புத்தகங்களையெல்லாம் வெடுக்கென்று பறித்தார்; "படிப்பதற்கு எனக்கு வேண்டாமா?" என்றேன். "ஒவ்வொன்றிருந்தால் உமக்குப் போதும். மற்றவைகளை வைத்துக்கொண்டு இப்போது நீர் என்ன செய்யப்போகிறீர்?" என்று சொல்லி என்னுடைய விருப்பத்தின்படி ஒவ்வொன்றைக் கொடுத்துவிட்டு மற்றவைகளைத் தாம் வைத்துக்கொண்டார்.
அப்பால் இவர் திருவிடைமருதூருக்குச் சென்றார். சென்றபொழுது வண்டியில் அநேக விஷயங்கள் இவருடைய சம்பாஷணையால் தெரியவந்தன.
திருவிடைமருதூரிலுள்ள ஓரன்பர் வீட்டிற்குச் சென்று அங்கே இவர் தங்கினார். அநுஷ்டானம் செய்துவிட்டுப் பின்பு சயனித்துக்கொண்டார். மிகவும் தளர்ந்த சரீரமுடையவராதலால், மடத்திலிருந்து பாடஞ்சொல்லும் பொழுதல்லாத சமயங்களிலெல்லாம் இவர் பெரும்பாலும் சயனித்துக்கொண்டே பாடஞ் சொல்லுதல் முதலியவற்றை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார். நான் இவர் அருகில் இருந்தேன். அப்பொழுது சில நூல்களில் உள்ள அரிய பாடல்களைச் சந்தர்ப்பத்துடன் கூறிப் பொருளும் சொன்னதன்றித் திருவாவடுதுறை மடத்தில் 14 - ஆம் பட்டத்திலிருந்த வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய இயல்புகளையும் அவரைச் சார்ந்து தாம் அடைந்த பயன்களையும் சொன்னார்; அவர்பால் தாம் தெரிந்து கொண்ட [1]சில செய்யுட்களைச் சொல்லி என்னை எழுதிக்கொள்ளும்படி செய்து அவற்றின் பொருளையும் என் மனத்திற்படும்படி அறிவுறுத்தினார். அப்பால்,
(வெண்பா)
{4.1}
"[2]பண்டுமைக்கோர் பால்கொடுத்த பண்பனைக்கோ டீச்சரத்துக்
கண்டுமயல் கொண்டவன்றாள் கண்ணுற்றாய் - ஒண்டொடியாய்
வந்திநின்றார் வந்தரக்கேண் மாலையெங்கண் மாதினுக்குத்
தந்திநின்றார் தந்திடென்று தான்"
என்பதை எழுதிக்கொள்ளச் செய்து அதற்குப் பொருள் சொல்லுமென்றார். அச்செய்யுள் முடிந்ததுபோல முடியாது நிற்றலையறிந்து நான் பொருள் சொல்லுதற்குத் தடுமாறினேன். இவர் புன்னகை கொண்டு அச்செய்யுட்குப் பொருள் கூறி, "இச் செய்யுள் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகரால் இயற்றப்பெற்றது; அவரால் நூற்றுக்கணக்கான தனிச்செய்யுட்கள் இதைப்போலவே செய்யப்பட்டுள்ளன" என்று அவருடைய கவித்துவ சக்தியையும் வரலாற்றையும் பாராட்டிக் கூறினர்.
தியாகராச செட்டியாரைப் பார்த்தது.
திருவிடைமருதூரிலிருந்து காலையிற் புறப்பட்டுச்செல்லுகையில் நான், "தியாகராச செட்டியாரவர்களைப் பார்க்கவேண்டுமென்ற விருப்பம் எனக்கு அதிகமாக இருக்கிறது. இப்பொழுது கும்பகோணத்தின் வழியாகவே பட்டீச்சுரத்திற்கு விஜயம் செய்யக்கூடுமோ?" என்று கேட்டேன். அதற்கு இவர், "தியாகராசை முன்னம் பார்த்திருப்பதுண்டா?" என்று கேட்டார். அவர்களைப் பார்த்ததில்லை; கும்பகோணத்திற்கு உத்தமதானபுரம் அருகிலுள்ளதாதலின் அவர்களுடைய புகழ் அந்தப்பக்கத்தில் மிகப் பரவியிருந்தது. தமிழிற் சிறந்த பயிற்சியுடையவர்களென்றும் நன்றாகப் பாடம் சொல்லக் கூடியவர்களென்றும் எல்லோரும் அவர்களைப்பற்றி அடிக்கடி பேசிக்கொள்ளுதலை நான் கேட்டிருக்கிறேன். தக்கவர்களிடம் பாடம் கேட்கவேண்டுமென்னும் ஆவலுடனிருந்த நான் அவர்களுடைய கீர்த்தியைக் கேட்டு அவர்களிடமே போய்ப் பாடங்கேட்க வேண்டுமென்று விரும்பினேன். அதற்குரிய செளகரியங்கள் எனக்கு வாயாமையால் வேறு சிலரிடம் படித்துக் கொண்டிருந்தேன். அப்பால் நாளாக நாளாக அவர்களையும் அவர்களைப் போன்ற பலரையும் படிப்பித்து முன்னுக்கு வரச் செய்தவர்கள் ஐயா அவர்களென்றும் இங்கே படித்தால் அடையும் பயன் அதிகமாக இருக்குமென்றும் செட்டியாரவர்கள் மாணாக்கரும் பாபநாசம் பள்ளிக்கூட உபாத்தியாயராக இருந்தவருமான இராகவையர் முதலியவர்கள் சொல்லக் கேட்டதன்றி இவ்விடத்துப் புகழை அதன் பின்பு பலரிடத்தும் கேட்டு நன்றாகத் தெரிந்துகொண்டுதான் இங்கே வந்தேன்" என்று சொன்னேன். இவர், "தியாகராசு சிறந்த புத்திமான்; நல்ல பயிற்சியும் தெளிவும் சொல்வன்மையும் உள்ளவன். இன்று அவனைப் பார்த்துவிட்டுத்தான் நான் பட்டீச்சுரம் போகக் கூடும். ஆதலால் நீரும் அவனைப் பார்க்கலாம்" என்று சொல்லிக்கொண்டே கும்பகோணம் சென்று ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் கோயிலின் தெற்கு வீதியிலுள்ள அவருடைய வீட்டுத் திண்ணையில் ஏனையவர்களோடும் இருந்தார். விசாரித்த பொழுது வீட்டில் அவர் இல்லையென்று தெரியவந்தது.
உடனே அவரிடம் படித்துக்கொண்டிருந்த திருக்கருகாவூர் மாதவிவனம் பிள்ளையென்பவர் ஓடிப்போய்ச் சொல்லச் செட்டியார் வேகமாக வந்து, "ஏன் இங்கே இருக்கிறீர்கள்? உள்ளே போய் இருக்கவேண்டாமா?" என்று சொல்லி வந்தனம் செய்து விட்டு எழுந்து பஞ்சநதம் பிள்ளையைப் பார்த்து, "சீக்கிரம் சமையலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்" என்று சொன்னார். அப்போது இவர், "பட்டீச்சுரத்திற்கு இன்று அவசியம் போக வேண்டியிருக்கிறது. (என்னைச் சுட்டி) காலையில் ஆகாரம் செய்து கொள்வது இவருக்கு வழக்கம்; ஆதலால், சீக்கிரம் ஆகாரம் பண்ணுவித்தால் நலமாக இருக்கும்" என்று சொன்னார். செட்டியார் உடனே தமக்குத் தெரிந்த ஒரு வீட்டுக்கு என்னை அனுப்பி ஆகாரம் செய்வித்தார்.
நான் ஆகாரம் செய்து கொண்டு வந்தபின்பு செட்டியார் என்னைச் சுட்டிப் பிள்ளையவர்களை நோக்கி, "இவர் யார்?" என்றார். "இவர் சில மாதங்களாக என்னிடம் படித்து வருகிறார். சில பிரபந்தங்கள் பாடங்கேட்டிருக்கிறார்" என்று சொல்லிவிட்டு உடனே இவர் புறப்பட்டார். செட்டியாரும் வேறு சிலரும் உடன் வருவாராயினர்.
தியாகராச செட்டியாரோடு சம்பாஷித்தது.
செட்டியார் என்னை நோக்கி, "என்ன பாடங்கேட்கிறீர்?” என்றனர். இவர், "எங்கேனும் ஓரிடத்திலிருந்து கேட்கலாமே" என்றார். அப்பாற் போய் ஸ்ரீகும்பேசுவரர் கோயிலில் மேற்கு வாயிற்கு நேரே உட்புறத்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியமூர்த்தி கோயிலின் முன் மண்டபத்தில் இவர் அமர்ந்தார். மற்றவர்களும் உடன் இருந்தார்கள். தியாகராச செட்டியார், "ஏதேனும் ஒரு பாடலைச் சொல்லி அதற்குப் பொருளும் சொல்லும்" என்று, - என்னைக் கேட்டார். நான் துறைசையந்தாதியிலிருந்து,
(கட்டளைக் கலித் துறை)
{4.2}
[3]அண்ணா மலையத் தனைஞானக் கோமுத்தி யண்ணலையாம்
அண்ணா மலையத் தனைவினை யாலயர்ந் தாந்தமிழை
அண்ணா மலையத் தனையாண்ட வாபல் லமரருக்கும்
அண்ணா மலையத் தனையொப்ப வாவென் றறைந்திலமே"
என்ற பாடலைச் சொல்லிப் பொருளுஞ் சொன்னேன். அப்பால் அவருடைய விருப்பத்தின்படி, வேறு நூல்களிலிருந்தும் சில பாடல்களைக்கூறிப் பொருளும் சொன்னேன். சொன்ன பின்பு செட்டியார், "துறைசை யந்தாதியைப் பாடஞ் சொல்லுவீரா?" என்று கேட்டார். அவருடைய கல்விப் பெருமையையும் புகழையும் தக்கவர்கள் சொல்ல நன்றாகக் கேட்டறிந்தவனாதலால். திடீரென்று விடை சொல்லுவதற்கு ஒன்றும் தோன்றாமல் சும்மா இருந்து விட்டேன். அப்போது இப்புலவர் கோமான், "நீ அந்த அந்தாதிக்குப் பொருள் கேட்டதில்லையோ?" என்று செட்டியாரைக் கேட்டார். அவர், "திருச்சிராப்பள்ளியிலிருந்து நான் கும்பகோணம் வரும்வரையில் நீங்கள் இயற்றிய நூல்களுக்குப் பொருள் கேட்டிருக்கிறேன். அப்பால் நீங்கள் செய்த நூல்கள் சாதாரணமானவைகளாக இருந்தால் நான் ஒருவாறு தெரிந்து கொள்ளுவேன்; பாடமுஞ் சொல்லுவேன். இந்த மாதிரியான யமகம் திரிபுகளாயிருந்தால் பெரும்பான்மையான பாகங்கள் எனக்கு விளங்கா. நீங்கள் திருவாவடுதுறை மடத்துக்குச் சென்று பழகுவதற்கு முன்பு பாடிய பாடல்களின் இயல்பு வேறு; அப்பாற் செய்த நூல்களின் இயல்பு வேறு. அவற்றுள் ஒவ்வொன்றிலும் அரிய விஷயங்களும், [4]சாஸ்திரக் கருத்துக்களும் நிரம்பியுள்ளன. ஏதேனும் ஒரு பிரபந்தத்தை எடுத்துக்கொண்டு வந்து யாரேனும் இதற்குப் பொருள் சொல்லுங்களென்று கேட்டாலும், சந்தேக நிவர்த்தி செய்யவேண்டுமென்றாலும் எனக்கு ஒன்றும் புரிவதில்லை. துறைசை யந்தாதியைப் போன்ற நூல்களைப் பாடங்கேட்டே தீரவேண்டும். திருச்சிராப்பள்ளி [5]சதாசிவம் பிள்ளை சில மாதங்களுக்கு முன்பு இதைத் தூக்கிக்கொண்டு என்னிடம் வந்து பாடஞ் சொல்ல வேண்டுமென்று சொன்னான். படித்துப் பார்த்தேன்; ஒன்றும் புரியவில்லை. ஐயா அவர்களிடத்திலேயே போய்க் கேட்டுக்கொள்ளென்று அனுப்பினேன். அவன் வந்திருக்கக் கூடுமே. அவனைப் போல் இன்னும் யாராவது இதைத் தூக்கிக்கொண்டு வந்து உபத்திரவம் செய்தால் இவரிடம் தள்ளிவிடலாமே என்று எண்ணித்தான் இப்பொழுது இவரைக் கேட்டேன்" என்று சொன்னார். அப்போது உடனிருந்த ஆறுமுகத்தா பிள்ளை, "ஐயா அவர்கள் முன்னமே பட்டீச்சுரத்திற்கு ஒரு பதிற்றுப்பத்தந்தாதி செய்திருக்கிறார்கள். அந்த நூலை நீங்கள் கேட்டதுண்டா?" என்றார். தியாகராச செட்டியார், "கேட்டதில்லை; அதில் ஒரு செய்யுள் ஞாபகமிருந்தால் சொல்லவேண்டும்" என்று ஆவலுடன் கேட்கவே ஆறுமுகத்தா பிள்ளை,
(விருத்தம்)
{4.3}
"வரைமா திருக்கு மொருகூறு மழுமா னணிந்த திருக்கரமும்
அரைசேர் வேங்கை யதளுடையும் அரவா பரணத் தகன்மார்பும்
விரைசேர் கொன்றை முடியுமரை மேவு மடியும் வெளித்தோற்றி
நரைசேர் விடையான் றிருப்பழைசை நகரி லருளப் பெற்றேனே"
என்ற செய்யுளைச் சொன்னார். சொல்லியபொழுது செட்டியார் அவரையும் பிள்ளையவர்களையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஆறுமுகத்தாபிள்ளையை நோக்கி, "இந்தப் புஸ்தகம் உங்களிடம் இருக்கின்றதா? இருந்தால் கிழித்துத் [6]திருமலைராயனாற்றிற் போட்டுவிடுங்கள்; இந்தப் பாடலையாவது இதிலுள்ள வேறு பாடலையாவது, படித்த யாரிடத்தும் ஐயா செய்ததாக இனிச் சொல்ல வேண்டாம்; சொன்னால் ஐயா செய்ததேயன்றென்று துணியைக் கீழே போட்டுத் தாண்டிப் பிரமாணம் செய்து விடுவார்கள். இப்போது ஐயாவவர்கள் செய்கிற நூல்களோ தனிப் பாடல்களோ 'தங்கந் தங்கமாக' இருக்கின்றன; அர்த்தபுஷ்டி அமைந்தனவாகவும் கம்பீர நடையுள்ளனவாக வுமிருக்கின்றன, அவைகளைக் கேட்ட காதுக்கு இந்த அந்தாதிச் செய்யுட்கள் நன்றாகவே இரா. இந்தச் சமயத்திலேயா இந்தப் பாட்டை நீங்கள் சொல்லுகிறது! இனி மறந்தே விடுங்கள். மறுபடியும் சொல்லுகிறேன்; புத்தகத்தைப் பரிகரித்துவிடுங்கள்" என்று வற்புறுத்திக் கூறினார்; பின்பு பிள்ளையவர்களை நோக்கி, " இப்படியும் ஒரு நூல் நீங்கள் பாடினதுண்டா? எதன்பொருட்டு இதைச் செய்தீர்கள்? செய்ததாக ஞாபகம் இருக்கின்றதா? சொல்லுங்கள்" என்று கேட்டார். "என்னப்பா மேலே மேலே ஓடுகிறாய்? இந்த மாதிரியான நூலை நான் செய்திருக்கக்கூடாதா? முன்பு [7]தம்பியின் தந்தையாராகிய நமச்சிவாய பிள்ளையவர்கள் காலத்தில் நான் செய்து அரங்கேற்றியதுண்டு. சாதாரணமான ஜனங்களுக்கு இப்படி இருந்தால் தானே தெரியவரும்? கடினமாக இருந்தால் அவர்கள் அறிவார்களா? மனத்திற்படுமா?" என்று பக்குவமாக விடையளித்தார். செட்டியார், "ஆனால் சரி. தங்களுக்கு அகௌரவம் உண்டாகக்கூடாதென்று சொன்னேனேயன்றி வேறொன்றுமில்லை. அது கிடக்கட்டும். நேரமாய்விட்டது. புறப்பட வேண்டும்" என்று சொன்னார்.
இங்ஙனம் சொல்லிவிட்டுச் செட்டியார் எழுந்து என்னைப் பார்த்து, "நீர் நன்றாகப் படிக்கவேண்டியவற்றைப் படித்துக் கொள்ளும். கூட இருப்பதையே பெரும்பயனாக நினைந்து சிலரைப்போல் வீணே காலங்கழித்துவிடக் கூடாது; சிலகாலம் இருந்துவிட்டுத் தெரிந்துவிட்டதாக பாவித்துக்கொண்டு சொல்லாமல் ஓடிப்போய்விடவும் கூடாது. இப்படிப் பாடம் சொல்லுபவர்கள் இக்காலத்தில் யாரும் இல்லை. உம்முடைய [8]நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன்" என்று சொல்லி இவரிடம் விடைபெற்றுத் தம் வீடு சென்றார்,
செட்டியாருடைய வார்த்தைகள் எனக்கு அமிர்த வர்ஷம் போலேயிருந்தமையால் அவற்றைக் கருத்திற் பதித்து அங்ஙனமே நடந்து வருவேனாயினேன்.
பட்டீச்சுர முதலியவற்றின் வரலாறு.
அப்பால் இவர் பட்டீச்சுரத்திற்குப் புறப்பட்டார். போகும்பொழுது இடையிலுள்ள தாராசுரமென்னும் தலத்தின் பெருமையையும் [9]சோழன் மாளிகையின் வரலாற்றையும் சத்திமுற்றம், பட்டீச்சுரம் முதலிய தலங்களின் பெருமைகளையும் சொல்லிக்கொண்டே போனார். ஊர் சேர்ந்தவுடன் ஆறுமுகத்தா பிள்ளை தம்முடைய வீட்டிற்கு எல்லோரையும் அழைத்துச் சென்றார்.
பட்டீச்சுரம் முதலியவற்றின் பெருமை.
பட்டீச்சுரம் முதலிய ஊர்களின் காட்சி என் கண்ணைக் கவர்ந்தது. பட்டீச்சுரமும் திருச்சத்திமுற்றமும் சோழவரசர்களுடைய அரண்மனையிருந்த இடத்தின் பக்கத்தன. பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றம், வடதளி அல்லது வள்ளலார்கோயில், முழையூர், பாற்குளம், [10]கோபிநாதப்பெருமாள்கோயில், திருமேற்றளி முதலிய பல தலங்களைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டிருக்கிற 'பழையாறை' என்னும் ஒரு பழைய நகரம் பண்டைக் காலத்தில் இவ்விடத்தே நல்ல நிலைமையில் இருந்ததுண்டு; அது சோழவரசர்களுடைய பழைய இராசதானி. அது தனியே கீழைப்பழையாறையென்ற சிறியதோர் ஊராக இப்பொழுது தென்பாலுள்ளது; பெரிய புராணத்தில்,
"பாரி னீடிய பெருமைசேர் பதி [11]பழை யாறை"
(அமர் நீதி. க.)
எனக்கூறி யிருப்பது இத்தலமே. இந்த நகரத்தினிடையே திருமலை ராயனென்னும் ஓராறு ஓடுகின்றது.
அது நானூறு வருடங்களுக்கு முன்பு திருமலைராயன்பட்டினத்தேயிருந்து அரசாட்சி செய்த மாலைப்பாடித் திருமலைராயனென்னும் அரசனால் வெட்டுவிக்கப்பட்டதென்பர். இதிற் பழமையான கட்டிடங்கள் இருந்ததைத் தெரிவிக்கும் பல அடையாளங்களை இப்போது காணலாம். பட்டீச்சுரத்தின் வடக்குவீதியே திருச்சத்திமுற்றத்தின் தெற்குவீதியாகவுள்ளது. மதுரையையடைந்து பாண்டிய அரசனுடைய அவைக்களத்தைச் சேரமுடியாமற் சில தினம் காத்திருந்து,
"நாராய் நாராய் செங்கானாராய்"
என்ற தொடக்கத்தையுடைய ஓர் அகவலைப்பாடி அரசனைக்கண்டு பரிசுகளைப் பெற்றுவந்த சத்திமுற்றப் புலவரென்ற சிறந்த தமிழ்க் கவிஞர் மிக்க செல்வத்தோடு இருந்து விளங்கிய இடம் இந்தச் சத்தி முற்றமே; "எம்மூர்ச்சத்திமுற்றத்து வாவியுட்டங்கி" என அச்செய்யுளிற் குறிக்கப்பட்ட வாவி (தடாகம்) இப்பொழுதும் இவ்வூர்ச் சிவாலயத்தின் தென்புறத்தே நல்ல நிலைமையிலுள்ளது.
தஞ்சைமா நகரத்திலிருந்து முன்பு அரசாண்ட அச்சுதப்ப நாயக்கரென்பவரிடம் மந்திரியாக இருந்து பல கருமங்களையும் அவரைக் கொண்டு நடத்துவித்ததன்றி வடமொழி தென்மொழிப் புலவர்களையும் ஸங்கீத வித்துவான்களையும் ஆதரித்தவரும் திருவையாறு திருநாகேச்சுரமென்னும் ஸ்தலங்களின் வட மொழிப் புராணங்களைத் தக்க கவிஞர்களைக்கொண்டு தமிழிற் செய்வித்தவருமாகிய ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதரென்னும் அந்தணர்பெருமான் வஸித்த இடம் பட்டீச்சுரம் ஸ்ரீ தேனுபுரேசர் ஆலயத்தின் தென்பாலுள்ளதாகிய அக்கிரஹாரத்தின் மேல்சிறகிலுள்ள வீடுகளில் ஒன்று. அவருடைய பூஜை மடம் திருமலைராயனாற்றின் வடகரையில் மிகப் பெரிதாக இருந்து பின்பு இடிந்து கிடந்தது; இப்போது அதுவும் இருந்த இடம் தெரியாமற் போயிற்று; கோவிந்த தீக்ஷிதருடைய பிம்பமும் அவருடைய பத்தினியார் பிம்பமும் கைகுவித்து நிற்கும் வண்ணமாகப் பட்டீச்சுரத்தின் கோயிலில் தேவியின் ஸந்நிதானத்தின் தென்புறமாக உள்ளன.
இக்கவிஞர் கோமான் பட்டீச்சுரம் சென்ற தினத்தின் மாலையில் திருமலைராயனாற்றிற்கு என்னையழைத்துச் சென்றார். இடையிலே காணப்படும் இடங்களையெல்லாம் சுட்டிக்காட்டி அவற்றின் சரித்திரங்களைச் சொல்லிக்கொண்டே போனார். கோயிலில் ஸ்ரீ ரிஷபதேவர் ஸந்நிதியினின்றும் முற்றும் விலகியிருத்தலைக் கண்டு அதற்குக் காரணம் என்னவென்று கேட்டேன். திருச்சத்திமுற்றத்திலிருந்து முத்துப்பந்தரின் கீழே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் கோபுரவாயில் வழியே எழுந்தருளும் கோலத்தைத் தாம் பார்த்தற்கு விரும்பி ஸ்ரீ தேனுபுரேசர் விலகியிருக்கும்படி கட்டளையிட அதைக் கேட்டு ரிஷபதேவர் விலகியிருந்தனரென்பது பழைய வரலாறு" என்று இவர் விடையளித்தார்.
தமிழபிமானிகள் முதலியோர் வந்துபோதல்.
பட்டீச்சுரத்திற்கு இவர் வந்திருத்தலையறிந்து அவ்வூரிலுள்ள தமிழபிமானிகளும் கும்பகோணத்திலும் அயலூர்களிலும் இருந்த வித்துவான்களும் பிரபுக்களும் அடிக்கடி வந்து இவரோடு அளவளாவி இன்புறுவதன்றிப் படித்தவற்றில் தமக்குள்ள ஐயங்களைப் போக்கிக்கொண்டும் பல அரிய நூற்பொருள்களை அறிந்து கொண்டும் செல்வார்கள். தியாகராச செட்டியாரும் தம்முடைய மாணாக்கர்களோடு விடுமுறை நாட்களில் வந்து பார்த்துவிட்டுச் செல்வார்; பழைய மாணாக்கர்களாகிய தஞ்சை காலேஜ் உபாத்தியாயர் ஐயாசாமி பிள்ளை, இராமகிருஷ்ண பிள்ளை முதலியவர்களும் சுந்தரப் பெருமாள் கோயில் அண்ணாஸாமி ஐயர், கதிர்வேற்பிள்ளை முதலியவர்களும் வந்து தெரிந்துகொள்ள வேண்டியவற்றைத் தெரிந்துகொண்டு போவார்கள். யார் வந்தாலும் தமிழ் நூல்களைப் பற்றிய சம்பாஷணைகளே நடைபெறும்.
முற்கூறிய சோழன் மாளிகையென்னும் ஊரில் மிக்க பூஸ்திதியுள்ளவரான இரத்தினம் பிள்ளை யென்னும் கனவான் அக்காலத்தில் இவருடைய ஓய்வு நேரங்களில் வந்து திருவிளையாடற் புராணம் முதலிய சில காப்பியங்களையும் சில பிரபந்தங்களையும் பாடங்கேட்டுச் செல்லுவார். சத்திமுற்றப் புலவர் மரபைச் சார்ந்த ஒருவர் அப்பொழுது வந்து நாலடியார் முதலிய நீதி நூல்களையும் அஷ்டப் பிரபந்தம் முதலிய பிரபந்தங்களையும் நாள்தோறும் முறையே இவரிடத்திற் பாடங் கேட்டுவந்தார்.
ஒரு வேளை இரண்டு வேளை இருந்து செல்பவர்களுக்கும், சில தினமிருந்து செல்பவர்களுக்கும், ஸ்திரமாக உடனிருப்பவர்களுக்கும் வேண்டிய உணவு, இடவசதி முதலியவற்றை ஆறுமுகத்தாபிள்ளை அமைத்து நன்றாகக் கவனித்துக் கொள்வார். நான் ஆறுமுகத்தா பிள்ளையின் உதவியால் அவ்வூர் அக்கிரகாரத்தில் ஒரு வீட்டில் ஆகாரம் செய்து கொண்டிருந்தேன்.
ஆறுமுகத்தா பிள்ளையின் அன்பு.
திருமலைராயனாற்றிற்குத் தென்பாலுள்ளதாகிய [12]மேலைப் பழையாறையென்னுமூர் ஆறுமுகத்தா பிள்ளைக்கே உரியதாக இருந்தது. அவ்வூர் தெற்கிலும் வடக்கிலும் இரண்டு நதிகளை எல்லையாகப் பெற்று விளங்குவது. ஊரின் நாற்பக்கத்தும் வாழைப் புதர்களடர்ந்த படுகைகளும் நடுவில் நன்செய் வயல்களும் இடையிடையே தென்னந்தோப்புக்களும் கமுகந் தோட்டங்களும் மாந்தோப்புக்களும் உண்டு. தென்னை பலா முதலிய மரங்களடர்ந்துள்ள ஒரு தோட்டத்தினிடையில் மிகவும் அழகியதான கட்டிடமொன்று இருந்தது. அதில் ஓய்வு நேரங்களிலெல்லாஞ்சென்று இவர் அன்பர்களுடன் தங்கியிருப்பார். அங்கே பாடமும் நடைபெறும். நல்ல கனிவர்க்கங்களும் இளநீர்களும் இனிய பிறபொருள்களும் ஆறுமுகத்தா பிள்ளையால் அடிக்கடி வருவித்து அங்கே இவருக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்படும். நிலவளத்தால் அவை சுவை முதிர்ந்தனவாய் உண்பவர்களுக்கு இன்பத்தை உண்டுபண்ணும்.
எந்தக்காலத்தும் எனக்குப் பாடம் நடந்து கொண்டேயிருக்கும்; பாடம் சொல்லாவிட்டால் இவருக்குப் பொழுதுபோகாது. வருகிறவர்கள், தாம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டு முடித்த பின் நான் கேட்கும் பாடங்களையும் கேட்டு மகிழ்ந்து செல்வார் கள். ஒவ்வொருநாளும் பிற்பகலில் அயலூரார் வருவார்கள். அப்பொழுதப்பொழுது தாம் கேள்வியுற்ற பலசெய்திகளை எங்களுக்கு இவர் சொல்வதுண்டு.
ஸ்ரீ சிவஞான முனிவர் காஞ்சிப்புராணம் அரங்கேற்றிய வரலாறு.
ஒருநாள் சிவஞானமுனிவரைப்பற்றிச் சொல்லுகையில் அவர் காஞ்சிப் புராணம் பாடி அரங்கேற்றியபொழுது நிகழ்ந்த ஒரு வரலாற்றை அடியில் வருமாறு கூறினார்:
மணியப்ப முதலியார் முதலிய செங்குந்தச் செல்வர்களுடைய உதவியினால் சிவஞான முனிவர் காஞ்சீபுரத்தில் இருந்துவந்தார். தாம் இயற்றி நிறைவேற்றிய காஞ்சிப் புராணத்தின் முதற்காண்டத்தை அப்போது அம்முனிவர் அரங்கேற்றத் தொடங்கினர். கச்சியப்ப முனிவரும் வேறு பல வித்துவான்களும் செல்வர்களும் வந்திருந்தனர். சிவஞான முனிவர்பால் அழுக்காறு பூண்ட சிலர், 'இவர் ஒரு நூலைப் பாடுவதும், அதனை அரங்கேற்றுவதும் அதனை நாம் பார்த்திருப்பதும் சரியா? இவரது புராணத்தில் ஏதேனும் குறைகளைக்கூறி இவருக்குள்ள மதிப்பைக் குறைக்கவேண்டும்’ என்று நினைந்து கோயில் ஓதுவார் ஒருவரை அழைத்து ஊக்கிவிட்டு ஆட்சேபனை செய்யும்படி ஏவினார்கள். அவர் கல்விப்பயிற்சி யில்லாதவர்; தேவாரம் மட்டும் ஓதுபவர்; அவர்கள் சொல்லியதற்கு உடன்பட்டுத் தைரியத்தோடு சபையில் வந்திருந்தனர்.
அரங்கேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. விநாயகர் வணக்கங்களாகிய முதல் இரண்டு செய்யுட்களைப் படித்துப் பொருள் கூறிய பின் மூன்றாவது செய்யுளாகிய ஸ்ரீ நடராஜப்பெருமான் துதியை முனிவர் படிக்க ஆரம்பித்தார்; "சங்கேந்து மலர்க்குடங்கைப் புத்தேளும்" என்று அதனைக் கூறி விட்டுப் பொருள் சொன்னார். ஓதுவார், "முதலில் [13]சங்கையா ஆரம்பித்தீர்கள்?" என்று இழிப்புத் தொனியோடு கேட்டார். உடனே சிவஞான முனிவர், "பாடலில் இருப்பது சங்கு என்னும் சொல்தான். உம்முடைய வாக்கில்தான் சங்கை உண்டாயிற்று" என்று விடை சொன்னார். ஓதுவார் மீட்டும் ஆட்சேபிக்கத் தொடங்கி, "முத்தி நகரங்கள் ஏழிலொன்றும் பிரசித்தஸ்தலமுமாகிய இந்தக் காஞ்சீபுரத்திற்குப் புராணம் பாடவந்த நீங்கள் எப்படிச் சிதம்பரம் நடராஜருக்கு முதலில் துதி கூறலாம்? ஸ்ரீ ஏகாம்பரநாதர் துதியையல்லவோ முதலில் சொல்லவேண்டும்? எல்லாத் தலபுராணங்களிலுமுள்ள அமைப்பைப் பாருங்கள்" என்றார். அப்போது சிவஞான முனிவர் ஸ்ரீ சபாபதியின் பெருமை முதலியவற்றைக் கூறித் தக்க காரணங்களை எடுத்துரைத்தும், ஓதுவார் அவற்றை அங்கீகரியாமல் மேன்மேலும் விதண்டாவாதம் செய்தார்.
இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டே அருகில் இருந்த கச்சியப்ப முனிவர் சிவஞான முனிவரை நோக்கி அஞ்சலி செய்து, "இவரை அடியேன்பால் விட்டுவிடப் பிரார்த்திக்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஓதுவாரைப் பார்த்து, "இங்கே நேரே வந்து இரும்; நீர் யார் ? படித்திருக்கிறீரா?" என்று கேட்டார்.
ஓதுவார் : நான் இத்தலத்து ஓதுவார்களுள் ஒருவன்; ஏதோ ஒருவாறு தமிழ் கற்றிருக்கிறேன்.
கச்சி : உமக்குத் தேவாரம் தெரியுமா ?
ஓதுவார் : நன்றாகத் தெரியும். என்னுடைய வேலையே தேவாரம் ஓதுவதுதானே. இதைக்கூடக் கேட்கவேண்டுமா?
கச்சி : அப்படியானால் இந்தத் தலத்துத் தேவாரத்தைச் சொல்லும் பார்க்கலாம்.
ஓதுவார் ஊக்கத்துடன் சொல்லத்தொடங்கி வழக்கம் போல் [14]‘திருச்சிற்றம்பலம்' என்றார். உடனே, கச்சியப்ப முனிவர் கம்பீரமாக, "நிறுத்தும்; உம்மைக் காஞ்சீபுரத் தேவாரம் சொல்லச் சொன்னால் திருவேகம்பமென்று சொல்லாமல் திருச்சிற்றம்பலமென்பதை ஏன் சொல்லுகின்றீர்?" என்று கேட்டார்.
ஓதுவார் : எல்லாத் தலங்கட்கும் அது பொதுவானது.
கச்சி : இங்கே கூறப்பட்ட முறைக்குக் காரணமும் அதுவே. பல சைவ நூல்களைப் படித்திருந்தால் இந்த மரபு உமக்குத் தெரிந்திருக்கும்.
உடனே ஓதுவார் தலை கவிழ்ந்து, "அடியேன் செய்த குற்றத்தை க்ஷமிக்கவேண்டும்" என்று வருந்திக் கேட்டுக்கொண்டு ஒடுக்க வணக்கத்துடன் இருப்பாராயினர்.
நான் திருநாகைக் காரோணப் புராணம் பாடங்கேட்டது.
இப்படியிருக்கையில், நான் கொண்டுபோன பிரபந்த நூல்கள் கேட்டு முற்றுப்பெற்றன. மேலே கேட்பதற்குப் பாடப் புத்தகம் என் கையில் இல்லாமையை யறிந்து ஒருநாள் ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்த திருநாகைக் காரோணப் புராணத்தை வாங்கிக் கொடுத்துப் பாடஞ் சொல்லி வந்தார். அப்படியே கேட்டு வருகையில் அந்நூலில் தினந்தோறும் முதலில் 50 - பாடல்களுக்குக் குறையாமல் 100- செய்யுள் வரையிலும், இரண்டு வாரங் கழித்த பின்பு 100 - செய்யுள் முதல் 200 வரையிலும் கேட்டு வந்தேன். கேட்குங்காலத்தில் ஒவ்வொரு செய்யுளிலுமுள்ள பொருள் நயங்களையும் சொன்முடிபு பொருள் முடிபுகளையும், மேற்கோள்களையும் அப்பொழுது அப்பொழுது சொல்லி என் மனத்திற் படும்படி செய்துவந்தார். விரைந்து நான் படித்துச் செல்லுவேனாயின் அவ்வாறு படித்தலைத் தடுத்து ஒவ்வொரு செய்யுளின் சுருக்கத்தையும் நல்ல நடையிற் சொல்லும்படி செய்து வருவார்; இச்செய்யுளால் அறிந்து மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை இன்னவையென்றும் சொல்லுவார். இங்ஙனம் இவர் பழக்கிவந்தமை கவனிப்பையும் ஆராய்ச்சி முறையையும் எனக்கு உண்டுபண்ணியது. அந்தப் புராணத்தால் அறிந்துகொண்ட காப்பியச் சுவைகள் பலவாதலின், தமிழ்ப் பாஷையின் பெருமையையும் அந்நூலை இயற்றிய இவருடைய கல்வி மேம்பாட்டையும் அறிந்து இன்புறுவேனானேன். அந்நூல் முற்றுப் பெற்றபின் இரண்டாவது முறையும் அதைக் கேட்க விரும்பினேன். அப்படியே படிக்கச் செய்து அரிய பகுதிகளை விளக்கிக்கொண்டே வந்தார். இரண்டாமுறை பாடங்கேட்டதில் பின்னும் பல புதிய விஷயங்கள் தெரியவந்தன. சிலதினங்களில் அந்நூல் முற்றுப்பெற்றது.
மாயூரப் புராணம் பாடங்கேட்டது.
அப்பால் ஆறுமுகத்தாபிள்ளையிடமிருந்த மாயூரப் புராணத்தை வாங்கிப் பாடங்கேட்டு வந்தேன். உதயகாலம் தொடங்கியே பாடம் ஆரம்பிக்கப்படும். மணி எட்டானால், காலையாகாரம் செய்துகொண்டு வரும்படி என்னை இவர் அனுப்பி விடுவார். காலை ஆகாரமானவுடன் பத்து அல்லது பதினொரு மணிவரையிற் பாடம் நடைபெறும். மாலையில் திருமலைராயனாறு சென்று அனுஷ்டானஞ் செய்துவிட்டுத் திரும்புகையில் ஆகாரஞ் செய்துகொண்டு வரும்படி அக்கிரகாரத்திலுள்ள வீட்டினுள் என்னை அனுப்பி நான் உண்டு வரும்வரையில் அவ்வீட்டுத் திண்ணையில் தனியே இருப்பார். இவரிருத்தலை வீட்டுக்காரர் தெரிந்துகொண்டு தீபங்கொணர்ந்து வைத்தாலுண்டு; இல்லாவிட்டால் இருட்டிலேதான் இவர் தனியேயிருப்பார். அங்ஙனம் அமைந்த பேரன்பை என்னவென்று சொல்லுவேன்! இப்படி ஒருவர் இருந்ததாகக் கதையிலும் கேட்டதில்லை. அப்பால் ஆறுமுகத்தா பிள்ளையின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று பாடஞ்சொல்லுவார்.
மாலையனுஷ்டானத்தை முடித்த பின்பு, ஆறுமுகத்தாபிள்ளை கந்தபுராணத்தைப் பாராயணஞ் செய்வது வழக்கம்; அதற்காகப் புத்தகமுங் கையுமாக அவர் வந்தவுடன் என் பாடம் நிறுத்தப்படும். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அப்புராணத்தை அவர் படிக்கத் தொடங்குவார். இவர் அதிலுள்ள கடினமான பாகத்திற்கு மட்டும் அவர் விரும்பும்பொழுது பொருள் சொல்லுவார். அது 9 மணிவரையில் நடைபெறும். அதுவும் எனக்குப் பேருதவியாக இருந்தது. அதற்கு மேலே இவருக்கும் ஆறுமுகத்தா பிள்ளை முதலியவர்களுக்கும் வேறு வேறிடங்களிற் படுக்கைகள் போடப்படும். முக்கியமானவர்கள் அங்கங்கே சென்று சயனித்துக் கொள்வார்கள். அப்படியே சயனம் பண்ணிக்கொள்ளும் பாவனையோடு இவர் வந்து படுத்துக்கொள்வார். இவருடைய பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் விளக்கின் அருகில் இருந்து இவருக்கு நித்திரை வரும்வரையில் நான் பாடங் கேட்டுக்கொண்டிருப்பேன். இவர் நித்திரை செய்யத் தொடங்குவாராயின் நானும் அந்தச் சமயம் பார்த்து மெல்லவெழுந்து தூங்கச் செல்வேன்.
அதன்பின்பு 12அல்லது ஒரு மணிக்குமேல் ஆறுமுகத்தா பிள்ளை விழித்து எழுவார். எழுந்தவுடன் வீட்டின் வெளிப்புறத்தே சென்று திண்ணையைப் பார்த்துவிட்டுவருவார்; திண்ணையில் யாரேனும் உண்பதற்கு வந்திருக்கிறார்களா என்று பார்த்து யாரேனும் இருந்தால் அவர்களை அழைத்துச்சென்று உண்பிப்பது பகற்காலத்திலும் இரவிலும் அவருக்கு வழக்கம். பின்பு எழுப்பி உண்ணுதற்கு இவரை அழைத்துச்செல்வார். உண்பதற்கு இவர் அமர்ந்தவுடன் யாவரும் அமர்ந்து பேச்சின்றியே ஆகாரம் செய்வார்கள். எத்தனைபேர்கள் வந்தாலும் பந்திபோசனத்துக்கு உரியவர்களை உடன்வைத்துக்கொண்டு உண்பித்தலும் புறத்தேயிருந்து உண்ணுதற்கு உரியவர்களை அங்கங்கே வைத்து உண்பித்தலும் அவ்வீட்டு வழக்கம். ஆறுமுகத்தாபிள்ளை திருவாவடுதுறை மடத்தில் உணவளிக்கும் முறையைப் பந்தியிலிருந்து நன்றாக அறிந்தவராதலால் அங்கே நடத்தும் முறைப்படி எல்லாம் விமரிசையாக நடைபெற வேண்டுமென்பது அவரது கருத்து. அந்தப்படியே தினந்தோறும் நடைபெற்றுவரும்; "வேளாள னென்பான் விருந்திருக்க உண்ணாதான்" என்னும் முதுமொழிப்
பொருள் ஆறுமுகத்தா பிள்ளையிடம் நன்றாக அமைந்திருந்தது.
ஒவ்வொரு தினத்தும் இரவில் பிள்ளையவர்கள் போய் உண்பதற்கு அமர்ந்தவுடன் நான் புத்தகமுங் கையுமாகச் சென்று பிள்ளையவர்கள் பக்கத்திலிருந்து படிக்கவேண்டியவற்றைப் படித்துப் பொருள் கேட்க வேண்டுமென்பது ஆறுமுகத்தா பிள்ளையின் கருத்து. எந்தக் காலத்தும் இவர் தடையின்றிப் பாடஞ் சொல்லுவார். என்றைக்கேனும் தூக்கத்தால் அங்ஙனம் செய்வதற்குத் தவறிவிட்டால் அன்று ஆகாரம் செய்துகொண்ட பிறகாவது மறுநாட் காலையிலாவது ஆறுமுகத்தா பிள்ளை என்னைக் கோபித்துக்கொள்வார். "இவருக்கு ஏன் பாடஞ்சொல்ல வேண்டும்? படிப்பில் சிறிதேனும் இவருக்கு ஊக்கம் இல்லையே. சமயம் பார்த்து இவர் கேட்கவேண்டாமா? அஜாக்கிரதையுடன் இருக்கின்றாரே. இப்படிப்பட்டவருக்கு நீங்கள் பாடஞ் சொல்லுவதில் எனக்கு இஷ்டமில்லை. அப்பால் உங்களுடைய சித்தம் போலே செய்யலாம்" என்று சில சமயங்களிற் பிள்ளையவர்களிடம் சொல்லுவார். அதனோடு நில்லாமல் இவர் முன்னிலையில் என்னையும் கண்டிப்பார். இந் நிகழ்ச்சிகளைக் காணும் இக் கவிஞர் பிரான் யாதொன்றும் சொல்லாமலே சும்மா இருந்துவிடுவார். இவர் குறிப்பை யறிந்து நானும் மௌனமாகவே இருப்பேன்.
இங்ஙனம் எந்தக்காலத்தும் இவரிடம் தடையின்றிப் பாடங் கேட்டு வந்தமையினாலே தான் என் அனுபவத்தை,
"........................................... அங்
கைத்தலவா மலகமென மாணவர்கள் பலர்க்குமின்ன கால மென்னா
தெத்தகைய பெருநூலு மெளிதுரைத்துப் பயனுறுத்தும் இணையி லாதோன் "
"அருத்திமிகு மெனையருகி லிருத்தியருந் தமிழ்நூல்க ளறைந்து"
(உறையூர்ப் புராணச் சிறப்புப் பாயிரச் செய்யுட்கள்)
"அருத்திகூ ரெனையரு கிருத்திநூல் பலசொற்
றல்ல லகற்றிய நல்லிசைப் புலவனும்"
(மீ. பிரபந்தத்திரட்டு, உரிமையுரை)
என்ற பாடல்களாகப் பிற்காலங்களில் வெளியிடலானேன்.
ஆறுமுகத்தாபிள்ளை என் புத்தகத்தை ஒளித்து வைத்தது.
ஒருநாளிரவில் இவர் உண்ணும்பொழுது நித்திரையின் மிகுதியாலும் ஒருவரும் எழுப்பாமையாலும் நான் சென்று பாடங் கேட்கத் தவறினேன். வழக்கப்படியே மறுநாள் விடியற்காலம் ஐந்து மணிக்கு எழுந்த பிள்ளையவர்களுடன் ஆற்றிற்குச் சென்று காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்து படித்தற்கு மாயூரப் புராணத்தைப் பார்த்தேன். வைத்த இடத்தில் அது காணப்படவில்லை. வேறொன்றையாவது எடுத்து வந்து படிக்கலாமென்றெண்ணிச் சென்று என் புத்தகக்கட்டைப் பார்த்தேன். அதுவும் வைத்த இடத்திற் காணப்படவில்லை. மிக்க கவலையோடு அச் செய்தியை இவர்பால் தெரிவித்தேன். உடனே இவர் தேடிப் பார்க்கும்படி அங்கிருந்த வேலைக்காரர்களிடம் சொன்னார். அவர்கள் மிக முயன்று தேடியும் கிடைக்கவில்லை. நான் வருத்தமடைந்து, 'பாடங் கேட்க இயலவில்லையே' என்று முகவாட்டத்தோடு நின்றேன். என்னுடைய நிலைமையை அறிந்த இவரும் வருத்தமுற்றனர். "இந்தச் செய்தியைத் தம்பியிடம் (ஆறுமுகத்தாபிள்ளை) சொல்லலாமே" என்றார்.
அவரோ ஒவ்வொரு தினத்தும் காலையில் எட்டு மணிக்கு மேற்பட்டுத்தான் துயிலுணர்வது வழக்கம். உணர்ந்தாலும் உடனே விழித்து எழுந்திருக்கமாட்டார். "துரைசாமி!" என்று தம்முடைய பிள்ளையை அழைப்பார். அச் சமயம் பார்த்துக் கொண்டே அயலில் வந்து நின்று குமாரர் ஏனென்பார். அவ்வொலியைக் கேட்ட பின்பே தம்முடைய கண்ணைத் திறந்து அவர் முகத்தைப் பார்த்துவிட்டு எழுந்து புறத்தே வருவார். ஆதலால், அந்தச் சமயத்திற் சென்றால் அவர் என்ன சொல்லுவாரோவென்று அஞ்சி நான் பிள்ளையவர்களுடைய அருகிலேயே இருந்துவிட்டேன். இவரும் அங்ஙனம் செய்தது நல்லதென்று சொன்னார்.
இப்படி யிருக்கையில் வீட்டினுள்ளே யிருந்து குறிப்பிட்ட காலத்தி லெழுந்து ஆறுமுகத்தாபிள்ளை வெளியே வந்தார். நான் பாடங் கேளாமற் சும்மா இருத்தலை அவர் பார்த்து, "ஏன் இவர் சும்மா இருக்கிறார்? சுத்த சோம்பேறி. இவருக்குப் பாடஞ் சொல்லவேண்டாம்" என்று கடிந்து சொல்லிவிட்டு அப்பாற் செல்லத் தொடங்கினார். அப்பொழுது நான் ஒன்றும் சொல்லவில்லை. இக் கவிஞர்கோமான், "இவர் வைத்த இடத்திற் புத்தகம் காணப்படவில்லையாம். அதைத் தம்பி வருவித்துக் கொடுத்தால் நல்லது" என்று சொன்னார். உடனே அவர் ஹூங்காரம் செய்து விட்டு, "படிக்கும் புத்தகத்தைக்கூடச் சரியாக வைத்துக் கொள்ளத் தெரியவில்லையே. நான் எண்ணியபடியேதான் இவர் இருக்கிறார். ஐயா அவர்கள் இவரியல்பை அறிந்து கொள்ளவில்லை" என்று சொல்லிவிட்டுச்சென்றார். அப்போது, "எப்படியாவது புத்தகத்தை வருவித்துக் கொடுக்க வேண்டும்" என்று இவர் அவரை வற்புறுத்தினார். அப்பால் மீண்டு வந்து நின்று இவரை நோக்கி அவர், "இவ்வளவு காலமாகச் சிரமப்பட்டு இரவும் பகலும் இவருக்குப் பாடம் சொல்லி வருகிறீர்களே. இவரும் படிப்பவர் போலவே பாவனை பண்ணிக்கொண்டிருக்கிறாரே. ஏதேனும் இவருக்குத் தமிழிற் பயிற்சி ஏற்பட்டிருக்கிறதா? பல நூல்களைப் பாடங்கேட்டிருக்கிறாரே; புதிதாக ஏதேனும் ஒரு செய்யுள் செய்வாரா? அந்தப் பழக்கம் இவருக்கு இருக்குமென்று நான் நம்பவில்லை. நான் வருவதற்குள் ஏதேனும் ஒரு செய்யுள் செய்து முடிப்பாராயின் புத்தகத்தை எப்படியாவது வருவித்துக் கொடுப்பேன். அது கிடைக்காவிடின் விலைக்காவது வேறொன்று வாங்கிக் கொடுப்பேன்" என்று சொல்லவே பிள்ளையவர்கள் ஒரு செய்யுள் இயற்றும்படி கட்டளையிட்டார். பிறருதவியின்றிச் செய்யுள் செய்கின்றேனா வென்பதை அறிந்து கொள்வதற்குக் காவலாக ஒருவரை வைத்துவிட்டு ஆறுமுகத்தா பிள்ளை அப்பாற் சென்றார்.
பின்பு என்னை அழைத்துக்கொண்டு இக்கவிஞர் பிரான் வேறிடம் செல்லும்பொழுது காவலாக இருந்தவரும் உடன் வந்தார். நான் ஆலோசித்து ஒரு வெண்பாவை முடித்து அதனை இவருக்குச் சொல்லிக் காட்ட நினைந்து, "சீர்மருவு மாறுமுகச் செம்மலே" என்று தொடங்கினேன். உடனே இவர் என்னை மேலே சொல்லாதபடி கையமர்த்திவிட்டு, "பூஜைக்கு இடம் பண்ணும்படி தவசிப்பிள்ளைக்குச் சொல்லி வாரும்" என்று உடனிருந்தவரை அனுப்பி என்னை நோக்கி, "நீர் சொல்லிய தொடர் ‘மாறுமுகச்செம்மலே' என்றும் பிரிக்கப்படுமே. அதை யறிந்து தம்பி கோபித்துக் கொள்வாரே. வெறுவாயை மெல்லுகிறவருக்கு அவல் கிடைத்தது போலவே யாகுமன்றோ இது? விபரீதமான அர்த்தமாகும்படி ஒருபொழுதும் பாடலாகாது. ஜாக்கிரதையாகவே செய்யுளைச் செய்து முடிக்கவேண்டும்" என்று சொல்லி நான் இயற்றியதாகவே தாம் ஒரு வெண்பாவை விரைவிற் பாடி முடித்து அதனை எனக்குச் சொல்லத் தொடங்கினர். தொடங்கிய பொழுது, பாதுகாப்பாளர் விரைந்து வருதலை யறிந்து ஒவ்வொரு வார்த்தையாகவே விரைந்து சொன்னார். அவற்றை முறையே அறிந்து அவ்வெண்பாவைப் பாடஞ்செய்து கொண்டேன். அச்செய்யுள்,
{4.4}
"ஆறுமுக பூபாலா வன்பிலார் போலென்பால்
மாறுமுகங் கொண்டான் மதிப்பவரார் - கூ றுதமிழ்
வாசிக்க வந்தவென்மேல் வன்மமென்ன யாவருமே
நேசிக்கு மாதயைசெய் நீ"
என்பது.
இதற்குள் ஆறுமுகத்தாபிள்ளையும் வந்து விட்டார். உடனே நான் சென்று இச்செய்யுளை அவரிடம் பக்குவமாகச் சொல்லிக் காட்டினேன். கேட்ட அவர் முதலிலிருந்த கோபம் தணிந்தவராய் என்னை நோக்கி, "நீர் இனி நன்றாகப் பாடங்கேட்பதுடன் செய்யுள் செய்வதிலும் பழக்கம் வைத்துக் கொள்ளும். அஜாக்கிரதையாக இருந்துவிட வேண்டாம்" என்று சொல்லிவருகையில் என்னுடைய பாடபுத்தகத்தையும் புத்தகக்கட்டையும் அங்கே ஒரு வேலைக்காரன் கொணர்ந்து வைத்தான். அவர் அந்தப் புத்தகக் கட்டை முன்னிருந்த இடத்தில் வைக்கும்படி சொல்லி அவன்பாற் கொடுத்தனுப்பிவிட்டு மாயூரப் புராணத்தை மட்டும் என்னிடம் கொடுத்தார்.
அதனை வாங்கிக்கொண்டு சென்று அதற்குள் அங்கே வந்திருந்த இவரிடம் பாடங்கேட்கத் தொடங்கினேன். தொடங்கு முன் நிகழ்ந்தவற்றை விவரமாக இவர் விசாரித்தார்; சொன்னேன். அப்பால் செய்யுள் செய்யும் முறைகளைச் சிறிது நேரம் வரையில் எனக்கு விளங்கச் சொல்லிவிட்டுப் பாடஞ்சொல்லத் தொடங்கினார். அன்றைத் தினம் தொடங்கிச் செய்யுள் செய்யும் முறைகளிற் சில எனக்குத் தெரியவந்தன. அவற்றைக் கொண்டு நாளடைவில் நான் பல விஷயங்களை ஊகித்து அறிந்து கொண்டேன்.
ஒரு போலிப் புலவர் வந்து சென்றது.
பின்பு இவருடைய கட்டளையின்படி சவேரிநாதபிள்ளையும் மாயூரத்திலிருந்து பட்டீச்சுரம் வந்து உடனிருப்பாராயினர். அவரோடு சேர்ந்தே மாயூரப்புராணத்தைப் பாடங்கேட்டு வந்தேன். ஒருநாள் இரவில் முன்வேளையில் அப்புராணத்தில் அகத்தியர் பூசைப்படலம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பாகத்திலுள்ள செய்யுட்களை முறையே படித்து வந்தோம். தமிழாசிரியராகிய அகத்தியரைப்பற்றிய செய்திகளைக் கூறும் பகுதியாதலின் இவருடைய புலமைத்திறம் அதில் நன்றாக அமைந்திருந்தது. உடனிருந்தவர்கள் கேட்டு ஆனந்த பரவசரானார்கள்.
அச் சமயத்தில் வாயிற்படிக்கு வெளியே ஒருவர் வந்து நின்றார். அவர் தலையில் பெரிய பாகையொன்றை வைத்துக் கொண்டிருந்தார். முகத்தில் நீண்ட வீசையும் [15]புஸ்தியும் அவருக்கு இருந்தன. தேகத்தில் நெடுஞ்சட்டைமட்டும் அணிந்துகொன்டு கையில் நீண்ட பிரம்பொன்றை வைத்திருந்தனர். புராணங் கேட்டுக் கொண்டிருந்தமையால் அங்ஙனம் நின்றவரை ஒருவரும் கவனிக்கவில்லை. அவரைப் போன்றவர்கள் அடிக்கடி யாசகத்திற்காக வந்து அவ்வீட்டின் புறத்தே நிற்பதுண்டு. அங்ஙனம் வந்தவர் தம்மை ஒருவரும் கவனிக்கவில்லை யென்பதை அறிந்து கனைத்தார். அவ்வொலியைக் கேட்ட எங்கள் ஆசிரியர், "யார்?" என்று கேட்கவே அவர், "நான் தஞ்சைமா நகரத்திலுள்ள தமிழ் ‘வித்துவாம்ஷன்'; என்னை ஆதரித்த சிவாசி மகாராசா இறந்து போய் விட்டமையால் என்னுடைய அருமை அறிந்து ஆதரிப்பவர் அங்கே யாருமில்லை. என்ன செய்கிறது! குடும்பத்தைக் காப்பாற்றவேண்டுமே. அதனால் இந்த நாட்டிலுள்ள பல பிரபுக்களிடம் போய் என்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டி அவர்களாற் கிடைக்கும் பொருளைக்கொண்டு காலங்கழிக்கிறேன். நான் வரகவி. அறம்வைத்துப் பாடுகிற வழக்கமும் எனக்கு உண்டு. அப்படிப் பாடிச் சிலருக்குத் தீங்கும் விளைவித்திருக்கிறேன். அதனாலே என்னைக் கண்டால் யாரும் பயப்படுவார்கள். இந்த நாட்டிலுள்ள தனவான்களுக்கெல்லாம் என்னிடத்தில் விசேஷமான மதிப்புண்டு" என்றனர். கேட்ட இவர் புன்முறுவல் செய்துகொண்டு, "அப்படியானால் இங்கே வந்து இரும்" என்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினர். அவர் அங்கே வந்து இருந்தார்.
அவருடைய அறிவின்மையைக் குறித்து மந்தணமாகப் பேசிக்கொண்டிருந்த நாங்கள் பின்பு அதை விடுத்துப் படிக்கத் தொடங்கினோம். எப்படியாவது தம்முடைய புலமையை வெளிப்படுத்தற்கு அது தான் நல்ல சமயமென்று அவர் நினைத்தார்.
அநேக இடங்களிற் சில பிரபுக்கள் பிறரை ஏதாவது படிக்கச் சொல்லித் தாம் சயனித்துக்கொண்டிருந்து கேட்பதைப் பார்த்தவராதலால் இவ்விடமும் அவற்றைப் போன்ற ஓரிடமென்றும் பிள்ளையவர்களே அவ்வீட்டுத் தலைவரென்றும் அவர் எண்ணி விட்டார். நாங்கள் படித்துக்கொண்டு செல்லும் பாடல்களுக்கு இடையிடையே பொருள் சொல்லவும் தொடங்கினார். அப் பொருள் சிறிதும் பொருத்தமுள்ளதாகவே இல்லை. நாங்கள் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் மேலே படித்துக்கொண்டு சென்றோம். அவரும் சிறிதேனும் அச்சமும் சலிப்பும் இல்லாமல் பொருத்தமில்லாத சொற்களை இடையிடையே பொழிந்து கொண்டே இருந்தார். அப்போது சவேரிநாத பிள்ளை அவரை நோக்கி, "ஏன் இடையிடையே முழக்கிக்கொண்டிருக்கிறீர்? சும்மா இரும்" என்று சொன்னார். வந்தவர் எங்களை நோக்கி, "நீங்கள் பொருள் சொல்லாமற் படித்துக்கொண்டே போவது நன்றாகவில்லை. அர்த்தம் சொல்லிக்கொண்டு சென்றாலல்லவோ எசமானவர்களுக்குத் திருப்தியாகவிருக்கும்? இப்படிப் படிப்பதனால் என்ன பயன்? பிரபுக்களிடத்திற் பழகும் முறை தெரியவில்லையே! அதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று தான் நீங்கள் படிக்கும் பாடல்களுக்குப் பொருள் சொல்ல முன்வந்தேன்" என்றார். சவேரிநாத பிள்ளை, அவர் வாயை எப்படியாவது அடக்கிவிட வேண்டுமென்று நினைந்து, "இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லும்; பார்ப்போம்" என்று ஒரு பாடலைப் படித்துக்காட்டினர். அவர் சிறிதும் அஞ்சாமல், "இந்தப் ‘பொஷ்தகத்தை' எனக்கு இனாமாகக் கொடுப்பீர்களானால் நான் சொல்லத் தடையில்லை" என்று சொல்லிவிட்டுப் பின்னும் தமது திறமையைக் காட்ட வேண்டுமென்று நினைந்து வெற்றுரைகளை வர்ஷிக்கத் தொடங்கிவிட்டார். எங்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. இவரும் மெல்லச் சிரித்துக்கொண்டே இருந்தார்.
அந்தச் சமயத்தில் தற்செயலாக அங்கே வந்த ஆறுமுகத்தா பிள்ளை இந் நிகழ்ச்சியை யறிந்து அவரைப் பார்த்து, "நீர் யார் ஐயா? இந்த இடத்தில் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறீர்! உம்மை உள்ளே விட்டவர் யார்? இந்த நிமிஷமே வெளியே போய்விடும். உமக்கு மரியாதை தெரியவில்லையே" என்று கடிந்து சொன்னார். பிள்ளையவர்களையே அந்த வீட்டின் சொந்தக்காரரென்று எண்ணியவராதலால் ஆறுமுகத்தாபிள்ளையைத் தம்மைப்போலவே யாசகத்துக்கு வந்திருப்பவரென்று தம்முள் அவர் நிச்சயித்துக் கொண்டு, "நீர் யார்காணும் என்னை வெளியே போகச்சொல்வதற்கு? உமக்கு என்ன ஐயா அதிகாரம் இந்த இடத்தில்? வீட்டு எசமானவர்களிடத்தில் நான் 'பிரஷங்கம்' செய்து கொண்டிருக்கிறேன். அவர்களோ சந்தோஷிக்கிறார்கள். இந்தச் சமயத்தில் அதைக் கெடுப்பதற்குப் 'பூஷை' வேளையிற் கரடியை விட்டோட்டுவது போல் நீர் எங்கிருந்தையா வந்து முளைத்தீர்? முதலில் நீர் வெளியிலே போய்விடும்" என்றார். அப்போது வீட்டு எசமானென்று பிள்ளையவர்களைச் சொன்னதில் உவப்புற்ற ஆறுமுகத்தா பிள்ளை கோபங்கொள்ளாமல் புன்முறுவல் செய்து திரும்பவும், "நீர் யார் ஐயா?" என்று அவரைக் கேட்டனர். அவர், "நான் தஞ்சைமா நகரத்து அரண்மனைத் தமிழ் வித்துவாம்ஷன்" என் றார். ஆறுமுகத்தாபிள்ளை, "நீரா தமிழ்வித்துவான்! நீர் இதுவரையில் இன்னாரென்று இவர்களை அறிந்து கொள்ளவில்லையே. உம்மைத் தமிழ் வித்துவானென்று யார் மதிப்பார்?" என்றார். நாங் களெல்லாம் மெளனமாக இருந்தோம். பிள்ளையவர்களும் ஒன்றும் பேசவில்லை. அதனால் வீட்டுத்தலைவர் தம் சார்பில் இருப்பதாக எண்ணிக்கொண்டு, வந்தவர், "நீர் என்னுடைய படிப்பை அறிந்து கொண்டீரா? கொண்டிருந்தால் என்னை வெளியிலே போகச் சொல்லுவீரா? நீர் என்னை அறிந்துகொள்ளாதவர். நீரே வெளியிலே போம்" என்று மீட்டும் சொன்னார். அப்பொழுது ஆறுமுகத்தாபிள்ளை அங்கே வெளியில் நின்று கொண்டிருந்த ஒரு வேலைக்காரனைப் பார்த்துக் கோபித்துக்கொண்டு, "ஏன் இந்த மனுஷனை உள்ளே விட்டாய்? வெளியே அழைத்துக்கொண்டு போய் விடு" என்றார். அவன் உடனே வந்து அதட்டிக் கீழே இறங்கச் சொன்னான். அவர், "நீ யார் என்னை வெளியே அழைத்துக்கொண்டு போகச் சொல்லுவதற்கு?" என்று கடிந்து சொன்னார். அந்த வேலைக்காரன் அவர் கையைப் பிடித்து மெல்ல அழைத்துக்கொண்டு வெளியே போய் ஓரிடத்திலிருக்கச் செய்து உள்ளே வராதபடி பாதுகாத்துக்கொண்டிருந்தான்.
அப்பால் எங்களுக்குப் பாடம் நடைபெற்றது. பாடம் பூர்த்தியானவுடன் படுக்கப்போக வேண்டியவர்கள் போய்விட்டார்கள். பின்பு வழக்கம் போலவே எல்லோரும் ஆகாரம் செய்து கொண்டார்கள். அப்பால் ஆறுமுகத்தா பிள்ளை, பிள்ளையவர்கள்
விருப்பப்படி மனமிரங்கிக் காவலிலிருந்த அப்புலவரை வருவித்துச் செவ்வையாக ஆகாரம் செய்வித்துச் செலவிற்கும் சிறிது கொடுத்து, " இனிமேல் இப்படிப்பட்ட தப்புக்காரியங்களைச் செய்ய வேண்டாம்" என்று கண்டித்துச் சொல்லி அனுப்பினார். அவரும் அந்த வீட்டுத் திண்ணையிலேயே படுத்துக்கொண்டிருந்துவிட்டுக் காலையில் எழுந்து எல்லோரிடத்தும் சொல்லிக்கொண்டு ஸந்தோஷத்துடன் கும்பகோணம் சென்றார்.
அகால போஜனம் மாறியது.
இங்ஙனம் சில தினங்கள் சென்றன. இரவில் அகாலத்திலுண்ணுதலால் மிகவருந்திய சவேரிநாத பிள்ளை ஒருநாள், "இப்படி ஆகாரம் பண்ணிக்கொண்டிருக்க என்னாலியலாது. இருக்கவும் வேண்டியிருக்கிறது. பசியோ பொறுக்க முடியவில்லை. விபரீதமான இந்த வீட்டு வழக்கத்தை இதுவரையில் நான் எங்கும் கண்டிலேன். மற்றவர்கள் எப்படிப் பொறுத்துக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. எந்த வழியாலாவது இந்தத் துன்பம் நீங்கினால் எனக்கும் பிறர்க்கும் மிகவும் சௌகரியமாக இருக்கும்" என்று சொல்லிவிட்டுச் சில தினங்களுக்கு முன்னமே தாம் செய்து வைத்திருந்த பாட்டொன்றை எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே வந்த ஆறுமுகத்தா பிள்ளை சவேரிநாத பிள்ளையின் சுவையான பேச்சை அடிக்கடி கேட்பவராதலால் அவர் என்ன பேசுகின்றாரென்பதை அறிந்துகொள்ள எங்களை யணுகினார்; "என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார். நான் ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்து விட்டேன்; பிறரும் அப்படியே இருந்து விட்டார்கள்.
சவேரிநாத பிள்ளை : பேசுவது உங்கள் சங்கதிதான். கோபித்துக்கொள்ளாமல் இருந்தாற் சொல்லுவேன்.
ஆறுமுகத்தா பிள்ளை : சும்மா சொல்லும்
சவேரிநாத பிள்ளை : நாங்கள் எவ்வளவு ஏழைகளாக இருந்தாலும் சரியான காலத்திற் கூழையாவது உண்போம். இங்கே வருவதற்கு முன் ஒருநாளாவது அகாலத்தில் உண்டதில்லை. அந்த வழக்கத்தால் இராத்திரியில் உங்கள் வீட்டில் அகாலத்தில் உண்ணும் உணவு எவ்வளவு நன்றாக இருந்தாலும் எங்களுக்குச் சிறிதேனும் செல்லவில்லை; பிடிக்கவுமில்லை. அங்ஙனம் உண்ணும் காலத்திற்கு வெகுநேரத்திற்கு முன்பே பசியும் அடியோடே குடியோடிப் போய்விடுகின்றது. இந்தக் கஷ்டத்தை நினையாதவர் இங்கே ஒருவருமில்லை. உங்கள் கோபத்திற்கு அஞ்சியே யாவரும் இத் துன்பத்தை வெளிப்படுத்தாமல் பல்லைக் கடித்துக் கொண்டு காலங்கழித்து வருகிறார்கள். உங்களிடத்தில் எப்படியாவது இந்தக் கஷ்டத்தைச் சொல்லி இந்த வழக்கத்தை முற்றிலும் மாற்ற வேண்டுமென்று வந்த நாள் முதல் எண்ணிக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தேன் ; ஒரு பாடலையுஞ் செய்தேன். நல்லவேளையாக நீங்களே கேட்டீர்கள். அதனால் உண்மையைச் சொல்லி விட்டேன். அப்பால் உங்கள் இஷ்டம்.
அந்தப்பாடல் இதுதான் :
(கட்டளைக் கலித்துறை)
{4.5}
"புரமாய வென்றரு டேனு புரேசர் புகன்றுறையும்
திரமாம் பழைசையிற் காலத்தி லூணின்றித் தீயபசி
உரமாய் வருத்த வருந்துறு வேமென் றுணர்ந்தறிவில்
மரமாப் படைத்தில னேபாவி யாய மலரயனே."
ஆறுமுகத்தா பிள்ளை : இது கும்பகோணத்திலிருந்து பல இடங்களுக்குச் செல்லும் வழியில் இருக்கும் ஊராதலின், பலர் இவ்வழியே செல்வார்கள். இரவில் நெடுநேரம் கழித்தும் சிலர் வருவார்கள். அவர்களுக்கு உணவளித்து உபசரிக்கும் வழக்கம் எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்து நடைபெற்று வருகிறது. முன்பே உண்டுவிட்டால் பின்பு வருகிறவர்களுக்குச் சில சமயம் உணவு கிடைக்காமற் போய்விடும். கிடைத்தாலும் ஆறிப் பதனழிந்து விடும். ஆதலால் யாவரும் நேரங்கழித்தே உண்ணுவதாயிருந்தால் வருபவர்கள் எல்லோரும் திருப்தியாக உண்பார்களென்ற எண்ணத்தினால் இவ்வாறு பெரியோர்கள் செய்துவந்தார்கள். அவ்வழக்கத்தைப் பின்பற்றியே நானும் நடத்தி வருகிறேன்.
சவேரிநாதபிள்ளை : அகாலத்தில் வருபவர்களுக்கு வேண்டியவற்றை யெடுத்துவைத்து விட்டு மற்றவர்கள் முன்னால் உண்டுவிடலாமே. அதனால் என்ன பிழை? பின்பு வருகிறவர்களுக்காக முன்புள்ளவர்கள் பசியோடு சோர்ந்து தூங்கிய பின்னர்ப் பசியும் கெட்டுப்போகின்றது. தூக்கத்தையும் கெடுத்து எழுப்பி உண்பித்தலில் அவர்களுக்கு என்ன சுவை தெரியப்போகிறது? வயிறாரத்தான் உண்பார்களா?
ஆறுமுகத்தா பிள்ளை இவர் சொல்லிய பக்குவத்தினால் அவற்றைக் கேட்டுச் சிறிதும் சினங்கொள்ளாமல், "உங்களுக்கெல்லாம் அசௌகரியமாக இருந்தால் அந்த வழக்கத்தை வைத்துக்கொள்வதில் எனக்குப் பிரியமில்லை; நீங்கள் சொல்லுகிறபடியே செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு அன்று முதல் 10 - மணிக்குள்ளாகவே எல்லோரும் ஆகாரம் பண்ணும்படி ஏற்பாடு செய்துவிட்டார். பழைய வழக்கம் மாறிய காரணத்தையறிந்த இக் கவிஞர் பிரான் சவேரிநாத பிள்ளையின் தைரியத்தையும் சாதுரியத்தையும் பற்றி மகிழ்ந்ததன்றி அவர் செய்த செய்யுளையும் கேட்டுப் பாராட்டினார். மற்ற யாவரும் அவரைப் புகழ்ந்து வாழ்த்தினார்கள்.
சில பிராமணர்களின் அன்பு.
அயலூர்களிலுள்ள மிராசுதார்களாகிய பிராமணர்கள் சிலரிடம் ஆறுமுகத்தா பிள்ளை கடனாகப் பெருத்த தொகைகளை வட்டிக்கு வாங்கியிருந்தார். அப்பொழுதப்பொழுது கொடுக்கப் படாமையால் வட்டிகள் அதிகரித்து விட்டன. பணங்கொடுத்தவர்கள் அடிக்கடி வந்து கேட்பாராயினர். அது தெரிந்த ஆறுமுகத்தா பிள்ளை இப்புலவர் சிகாமணியை அழைத்துச் சென்று அவர்களோடு சில நேரம் பேசிக்கொண்டிருக்கும்படி செய்துவிட்டு வட்டிகளிற் சில பாகத்தையாவது முழுவதையுமாவது தள்ளிக் கொடுத்தால் உபகாரமாக இருக்குமென்று கேட்டுக்கொண்டனர். முதலாளிகளிற் சிலர் ஆறுமுகத்தா பிள்ளை பிள்ளையவர்களுடைய அன்பரென்பதை நினைந்தும், இவர் தங்கள் வீட்டுக்கு வந்த கெளரவத்தை உட்கொண்டும் வட்டியிற் சில சில பாகத்தைத் தள்ளிக் கொடுத்துப் பத்திரத்தில் வரவு வைத்துக்கொள்ளச் செய்தார்கள். ஊற்றுக்காடென்னுமூரிலிருந்தவரும் வடமொழியிற் சிறந்த வித்துவானுமாகிய காளிராமையரென்பவர் வட்டி முழுவதையுமே தள்ளிப் பத்திரத்தில் வரவு வைத்துக் கொள்ளச் செய்தார்; அங்ஙனம் செய்ததன்றி இவரைச் சிலதினம் தம்முடைய வீட்டில் வைத்திருந்து விருந்தளித்து உபசரித்து அனுப்பினார்.
நூலுக்கும் நீருக்கும் சிலேடை.
ஒருநாள் பிள்ளையவர்களோடு ஆறுமுகத்தா பிள்ளையும் நாங்களும் ஸ்வாமிமலை சென்று முருகப்பிரானைத் தரிசனஞ் செய்துவிட்டுத் திரும்பிவருகையில் காவிரியின் கரையை அடைந்தோம். அப்பொழுது பட்டுச் சாலியர்களிற் சிலர் நெய்தற்குரிய நூல்களை அந்நதியில் கழுவிக்கொண்டிருந்தார்கள். அதைக்கண்ட ஆறுமுகத்தாபிள்ளை என்னைப் பார்த்து, "இந்த நூலுக்கும் நீருக்குமாக நீர் பத்து நிமிஷத்தில் ஒருசிலேடை வெண்பாப் பாடும் பார்ப்போம்" என்றார். "அவ்வளவு சீக்கிரத்திற் செய்ய முடியாதே; செய்யாவிட்டால் இவர் என்ன கடினமான வார்த்தைகளைச் சொல்வாரோ" என்று நான் யோசித்துக்கொண்டு நின்றேன். இவர், "இவ்வளவு கடினமான விஷயத்தைக் கொடுத்துச் சீக்கிரத்திற் பாடி முடிக்கச் சொன்னால் இவரால் ஆகுமா?" என்று சொல்லிவிட்டு உடனே முதலிரண்டடியைத் தாம் பாடி முடித்துப் பின் இரண்டடிகளைச் செய்யும்படி எனக்குச் சொன்னார்; அவ்வாறே பாடி முடித்தேன். அச்செய்யுள் வருமாறு:
(வெண்பா)
"வெள்ளைநிறத் தாற்செயற்கை மேவியே வேறு நிறம்
கொள்ளுகையாற் றோயக் குறியினால் – உள்ளவன்பிற்
றாய்நேர்ந்த வாறுமுகத் தாளாளா நீமொழிந்த
ஆய்நூலு நீருநிக ராம்."
(தோய் அக்குறி - நீரிற்றோய்க்கும் அச்செயல், தோய மென்னும் பெயர்.)
புறங்கூற்றாளர் அடங்கியது.
திருவிடைமருதூருலாவைப் பற்றிச் சிலர் [16]அங்கங்கே சென்று சென்று இடையறாமற் கூறிவரும் புறங்கூற்றுக்களைக் கேட்டு ஆறுமுகத்தா பிள்ளை மிகவும் வருத்தமுற்று அங்ஙனம் கூறுவோர்களை அடக்கவேண்டுமென்று எண்ணினார். அங்ஙனம் எண்ணியிருக்கையில் அவர் செய்தற்குரிய திதியொன்று வந்தது. அதனை வழக்கத்திற்கு அதிகமாகச் செலவு செய்து முடித்தற்கு நிச்சயித்து மேற்கூறிய புறங்கூற்றாளர்களையும் வேறு சில பெரியோர்களையும் அன்றைத் தினம் உணவிற்கு வருவித்தார். அவர்களுக்குத் திருப்தியுண்டாகும்படி ஆகாரஞ் செய்வித்துத் தக்ஷிணைகளையும் அளித்தார்.
பின்பு அவர்கள் எல்லோரையும் பகல் ஒரு மணிக்கு ஓரிடத்தில் வந்து கூடியிருக்கும்படி செய்து அவர்களை நோக்கி, "திருவிடை மருதூருலாவைப்பற்றிக் குற்றஞ் சொல்லுபவர்கள் இப்போது எடுத்துச் சொல்லலாம். அவற்றிற்கு ஐயா அவர்கள் சமாதானம் சொல்லுவார்கள்" என்று சொல்லிவிட்டுத் தாம் ஓரிடத்தே இருந்தார்; அப்பொழுது தியாகராச செட்டியார் முதலியோரும் உடனிருந்தார்கள். அச்சபையில் அப்பொழுது வந்திருந்தவர்களுடைய தொகை சற்றேறக்குறைய நூறுக்கு மேலே இருக்கும். இந்தக் கவிஞர்பிரான் அவ்வுலா எழுதப்பட்டுள்ள ஏட்டுச்சுவடி யொன்றை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். எனக்கு ஏட்டுப் பிரதியைப் பார்த்துப் படிக்கும் வழக்கம் அதிகமாக இல்லாமையாற் படிக்கும்பொழுது சில சில இடங்களில் தடுமாற்றம் அடைந்து வாசித்தேன். இவர், "இப்படி வாசித்தால் அடிப்பேன்" என்றார். உடனே அதிக ஜாக்கிரதையாகத் தவறின்றி மெல்லப் படித்து வந்தேன். புறங்கூற்றாளர் தவறென்று சொல்லிக்கொண்டிருந்தனவாகத் தாம் கேள்வியுற்ற இடங்களை எடுத்துக் காட்டித் தக்க சமாதானங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். அந்த நூல் இராத்திரி பன்னிரண்டு மணிக்கு முற்றுப் பெற்றது.
ஆதியுலா, ஏகாம்பர நாதருலா, திருவானைக்காவுலா, திருவாரூருலா, திருவெங்கையுலா முதலியவற்றிலிருந்து அப்பொழுதப்பொழுது இடத்துக்குப் பொருத்தமாக இவரால் மேற்கோள்கள் எடுத்துக் காட்டப்பட்டன. அப்பொழுது ஆவூர்ப் பசுபதி பண்டாரம், ஸ்வாமிமலை சபாபதி தேசிகர், கும்பகோணம் பேட்டைத்தெருவிலுள்ள வைத்தியநாத தேசிகர் முதலிய கல்விமான்கள் கேட்டு மிகவும் திருப்தியடைந்து, "இவ்வளவு அழகான உலாவை நாங்கள் இதுவரையில் அறிந்ததில்லை. பல ஸ்தல சரித்திரங்களும் சிவபுராணக் கதைகளும் நாயன்மார்களுடைய அருமை வரலாறுகளும் தேவார திருவாசகக் கருத்துக்களும் நிறைந்து எல்லா உலாக்களுக்கும் மேற்பட்டு நிகரின்றி இந்த உலா விளங்குகின்றது. இன்றைத் தினம் இந்த உலாமுகமாக அருமையான விஷயங்கள் பல வற்றை அறிந்து கொண்டோம். இந்த நூலில் என்ன குற்றம் இருக்கின்றது? ஒன்றுமில்லையே. யாரேனும் இதிற் குற்றம் உண்டென்று சொல்லியிருந்தால் அவர்களைக் கல்வியறிவில்லாதவர்களென்று சொல்லுவதற்கு நாங்கள் பின்னிடோம். நீங்கள் இக் காலத்தில் எழுந்தருளியிருப்பது நாங்களும் தமிழும் செய்த பெரும் புண்ணியத்தின் பயனென்றே சொல்லத்தடையில்லை" என்று உலாவையும் பிள்ளையவர்களையும் மிகப் பாராட்டினார்கள்; “அரோக திடகாத்திரத்தோடு சிரஞ்சீவியாயிருந்து தமிழ்ப் பாஷையைப் பரிபாலனம் செய்துகொண்டு வரவேண்டும்" என்று இவரை வாழ்த்தவும் செய்தார்கள்; முன்பு குறைகூறியவர்களும் பாராட்டி வாழ்த்தினார்கள்.
அப்பால் ஆறுமுகத்தாபிள்ளை புறங்கூற்றாளரைப் பார்த்து, "நீங்கள் இப்பொழுது சொன்னது உண்மைதானா? இனி எங்கேனும் உலாவைப்பற்றித் தூஷணமான வார்த்தைகள் உங்கள் வாக்கிலிருந்து வெளிப்படுமானால் நான் சும்மா விடமாட்டேன்; அறிந்து கொள்ளுங்கள்" என்றார். அதன்பிறகு அவ்வுலா சம்பந்தமான புரளிவார்த்தைகளெல்லாம் எவ்விடத்தும் அடங்கி விட்டன.
அவ்வுலாவில் ஒவ்வொரு கண்ணியையும் இரண்டுமுறை மூன்று முறை படித்துக் கொண்டே வந்தமையால் மிகுந்த சோர்வை அடைய வேண்டியவனாக இருந்தும் இடைவிடாமற் கேட்டுவந்த பல அரிய விஷயங்களால் அமுதத்தையுண்டவன் போலப் பசி தாகத்தாலுண்டாகும் களைப்பின்றியிருந்தேன். பின்பு ஆகாரம் செய்யும்படி துணை சேர்த்து என்னை அனுப்பியபொழுது இப்புலவர்பிரான் அருகில் வந்து என்னை நோக்கி, "ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டேன்" என்று சொல்லத் தொடங்கிய காலத்தில் இவருடைய குறிப்பையறிந்து நான், "சொன்னபடியே செய்திருந்தால் எனக்குச் சந்தோஷமாக இருந்திருக்கும். படித்தற்குரிய பலரிருக்கையில் என்னைப் படிக்கும்படி சொன்னது என்பாலுள்ள அன்பின் மிகுதியாலேயே என்று தெரிந்து இன்புற்றேன்" என்று ஒருவாறு தெரிவித்து விடைபெற்றுக்கொண்டு ஆகாரம் செய்யச் சென்றேன்.
எனக்கு நைடதம் அளித்தது.
அப்பால் ஸரஸ்வதி பூஜையன்று பட்டீச்சுரத்துக்கு அருகிலுள்ள என் ஊராகிய உத்தமதானபுரம் சென்றேன். பூஜையை அங்கே முடித்துக்கொண்டு மறுநாளாகிய விஜயதசமியன்று புனப்பூஜையைச் செய்துவிட்டுப் பிற்பகலில் புறப்பட்டுப் பட்டீச்சுரம் வந்து 4 மணிக்குப் பிள்ளையவர்களைக் கண்டேன். "ஏன் இவ்வளவு அவசரமாக வந்தீர்?" என்றார். "இன்று விஜயதசமியாதலால் ஐயா அவர்கள் கையால் ஏதாவது புஸ்தகம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாமென்றெண்ணி விரைந்து வந்தேன்” என்றேன். உடனே அந்த வீட்டிற் பூஜையிலிருந்த சுவடிகளுள் ஏதாவதொன்றைக் கொண்டுவரும்படி இவர் ஒருவரை அனுப்பினர். போனவர் ஓரேட்டுச்சுவடியை எடுத்துக்கொணர்ந்து கொடுத்தார். அதனை என்னிடம் அளித்த இவர், "என்ன நூலென்று பிரித்துப் பார்த்துச் சொல்லும்" என்றார். அங்ஙனமே பிரித்து, "இது நைடதத்தின் மூலம்" என்றேன். கேட்ட இவர், "நைடதத்தைப் படித்தாற் கலிபீடை நீங்குமென்று சொல்வார்கள். ஆதலால் இப்புத்தகத்தைப் பெற்ற உமக்குக் கலி இன்றோடு நீங்கிவிட்டது. இனி ஒருபோதும் அணுக மாட்டாது" என்றார். அப்பொழுது நான், "இங்கே படித்தற்கு எப்பொழுது வந்தேனோ அப்பொழுதே என்னைச் சார்ந்திருந்த அரிஷ்டமெல்லாம் நீங்கிவிட்டனவென்றே துணிந்திருக்கிறேன். அன்றியும், மாயூரத்தில் முதன்முறையாக இங்கே பெற்றுக்கொண்டதும், நைடதமே. அப்பொழுதே அவ்வாறு எண்ணினேன்" என்று சொன்னேன்.
பாடஞ்சொல்லப் பயிற்றல்.
புதிய மாணாக்கர்களுக்குப் பழைய மாணாக்கர்களைக் கொண்டு பாடஞ் சொல்லுவிப்பது இவருக்கு இயல்பு. அதற்குக் காரணம் அவர்களுக்குப் பாடஞ்சொல்லும் ஆற்றல் உண்டாக வேண்டுமென்பது தான். ஏதேனும் பிழையிருந்தால் சொன்னவரைத் தனியே அழைத்து உண்மையைத் தெரிவிப்பார்.
ஒருநாள் பட்டீச்சுரத்திலிருந்து கும்பகோணத்திற்குப் போகும்பொழுது நான் மற்றொருவருக்குக் குடந்தைத் திரிபந்தாதிக்குப் பொருள் சொல்லிக்கொண்டே சென்றேன். [17]நாட்டஞ் சிவந்தனை (14) என்னும் செய்யுளில் 'சிவந்தனை நேர்ந்தேயுறும்’ என்பதற்குச் சிவமானது தன்னை ஒத்தே அத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்றதென்று சொன்னேன். கேட்ட இவர் அவ்விடத்திலேயே நின்றுகொண்டு என்னைத் தனியே அழைத்து ‘நேர்ந்து' என்பதற்கு, 'கொடுத்து' என்பது பொருளென்றும் இனிக் கவனித்துச் சொல்ல வேண்டுமென்றும் சொல்லிவிட்டு முன்னே செல்வாராயினர்.
'தன்பெருமை தானறியாத் தன்மையன்'
கும்பகோணம் பட்டீச்சுரத்திற்குச் சமீபமாதலால் ஆறுமுகத்தா பிள்ளைக்குரிய சில காரியங்களை முடித்துக் கொடுத்தற்கும், வரவேண்டுமென்று விரும்பிய அன்பர்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றுதற்கும் நினைந்து அடிக்கடி எங்களை அழைத்துக்கொண்டு இவர் அங்கே சென்று வருவார்.
ஒருநாள் அந்த நகருக்குச் சென்று ஓரிடத்தில் பல பிரபுக்களோடு பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே இருந்த எதிராஜபிள்ளை யென்னும் கனவானொருவர் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி ஓர் இனிய செய்யுளைக் கூறினார். அங்கிருந்த யாவரும் அதனைக் கேட்டு அதன் இனிமையைப் பாராட்டினர். இவரும் அச்செய்யுளின் நயத்தை வியந்துவிட்டு, "இச் செய்யுள் எந்த நூலிலுள்ளது?" என்று கேட்டார். "தாங்கள் இயற்றிய கும்பகோண புராணத்திலுள்ளது" என்றார் அவர். அதனைக் கேட்ட யாவரும் ஆச்சரியமுற்றனர். அளவிறந்த செய்யுட்களைப் பாடியவராதலின் அது தாம் இயற்றிய செய்யுளென்பதை இவர் அறிந்திலர். இதைப்போன்ற நிகழ்ச்சிகள் சிலவற்றை யான் அறிந்திருப்பதுண்டு.
தியாகராச செட்டியார் வாதம் செய்தது.
மற்றொரு நாள் சென்று கும்பகோணத்தில் நாகேசுவரஸ்வாமி கோயிலின் வடக்கு வீதியிலிருந்த தபால் ஆபீஸ் வீட்டுத் திண்ணையில் இவர் தங்கினர். அவ்வீட்டிலிருந்த போஸ்டுமாஸ்டர் முத்தப்பிள்ளை யென்பவர் இவர் வந்திருத்தலையறிந்து உடனே ஒரு புத்தகத்தோடு வந்து வந்தனம் செய்துவிட்டு இவருடைய குறிப்பின்படி அருகில் இருந்தார். "கையிலுள்ளது என்ன புத்தகம்?" என்று இவர் கேட்டனர். அவர், "ஐயா அவர்கள் செய்த திருநாகைக்காரோணப் புராணம். இதனைச் செட்டியாரவர்களிடத்துப் பாடங் கேட்டு வருகிறேன்" எனவே இவர், "அதில் ஒரு செய்யுளைப் படித்திடுக" என்று சொன்னார். அவர் அதிலுள்ள நைமிசப்படலத்தின் முதற் செய்யுளாகிய,
(கலி நிலைத்துறை)
{4.7}
[18]" செங்கை யாட்டினா ரங்கைமா னேந்திய சிவனார்
பங்கை யோர்மகட் குதவிய பரமனார் பதத்துக்
கொங்கை யார்தனைச் சார்நரை யுய்த்திடு குணத்தாற்
கங்கை யாற்றரு கிருப்பது நைமிசக் காடு”
என்ற பாடலை மாலைக்காலமாதலாற் கல்யாணி ராகத்தில் நன்றாகப் படித்துக் காட்டினர். கேட்டு மிகவும் இன்புற்ற இவர் என்னைப் பார்த்துவிட்டு மேலேயுள்ள பாடல்களைப் படிக்கும்படி அவருக்குச் சொன்னார். இவர் படிக்கிற மாதிரி நான் படிக்க வேண்டுமென்று குறிப்பித்தாரென்பதை அப்பார்வையால் அப்பொழுது தெரிந்துகொண்டேன்.
மேற் பாகத்தை அவர் படித்துக்கொண்டே வருகையில் இவர், "பொருள் நன்றாகத் தெரிந்துகொண்டு வருகிறீரா?" என்று கேட்டனர். அவர், "செட்டியாரவர்கள் பொருள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். சில செய்யுட்களின் ஒவ்வொரு பாகத்திற்குப் பொருள் அவர்களுக்கு விளங்கவில்லை. ஆனாலும் தைரியமாகவே ஏதேனும் சொல்லுகிறார்கள். அதில் எனக்குத் திருப்தி பிறக்கவில்லை. பட்டீச்சுரம் வந்து ஐயா அவர்களால் அவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டுமென்று எண்ணியும் வேலை மிகுதியால் அங்கே வரமுடியவில்லை" என்றார். இவர் சந்தேகமுள்ள இடங்களில் ஏதாவதொன்றைக் குறிப்பிட்டுச் சொல்லும்படி கேட்டார். அப்பொழுது முத்தப்பிள்ளை,
துவஜஸ்தம்ப வருணனை
(கொச்சகக் கலிப்பா)
{4.8}
[19] "ஊறுதெரி தலுந்தவிர்ந்தோ ருடம்புதளி யுட்புகுந்து
மாறுதவிர் காரோண வள்ளலா ரெதிர்நின்று
வேறுமல ரிலைபுனைந்து வேண்டுபலன் களுமுதவிப்
பேறுதவு சிவமேயாய்ப் பிறங்கிவிடை மேற்கொளுமே"
(திருநகரப். 138)
என்ற செய்யுளைப் படித்துக்காட்டினர். இப்புலவர்பிரான், "தியாகராசு இதற்கு என்ன பொருள் சொன்னான்?" என்றனர். முத்தப்பிள்ளை, "அவர்கள் விளங்கவில்லையென்று முதலிற் சொல்லிவிட்டுச் சிறிது நேரம் யோசித்துப்பார்த்து ஏதோ சொன்னார்கள்; எனக்கு இப்பொழுது அது ஞாபகத்திலில்லை" என்றார். அவர் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில் தியாகராச செட்டியார் பாடஞ் சொல்லுதற்கு வழக்கம் போலே அங்கே வந்தார். வந்தவர் முத்தப்பிள்ளை நாகைக்காரோணப் புராணத்தைக் கையில் வைத்திருப்பதையும் இவர் அவரோடு பேசிக்கொண்டிருத்தலையும் பார்த்துவிட்டு ஆலோசித்துக்கொண்டு அருகில் வந்து நின்று இவருக்கு அஞ்சலி செய்து, "நீங்கள் எப்பொழுது இங்கே வந்தீர்கள்? வீட்டுக்கு வரலாகாதா? வருவதை முன்னதாக எனக்குத் தெரிவிக்கக்கூடாதா? தெரிவித்திருந்தால் முந்தியே இங்கு வந்திருப்பேனே" என்றார். இவர், "இருக்கட்டும்; 'ஊறு தெரிதலும்' என்ற செய்யுளுக்கு நீ இவருக்குச் சொல்லிய அர்த்தம் என்ன? சொல்லவேண்டும்" என்றார். தியாகராச செட்டியார், "எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த ஒரு பாட்டுக்காகப் பட்டீச்சுரம் வந்து கேட்பதென்றால் எனக்குச் சாத்தியப்படுமா? எனக்குள்ள வேலைகள் அதிகமென்பது உங்களுக்குத் தெரியுமே. இன்னும் இதைப்போன்ற பாடல்கள் இந்நூலிற் பல இருக்கின்றன. அவை எனக்கு மிக்க சங்கடத்தை உண்டுபண்ணுகின்றன. இப்புத்தகத்தை அச்சிடுவித்தீர்களே. கடினமான பாடல்களுக்குப் பொருள் எழுதிப் பதிப்பிக்கச் செய்திருந்தால் எவ்வளவோ அனுகூலமாயிருக்கும். பொருளெழுதாவிட்டால் இது போன்ற கடினமான பாடல்கள் யாருக்கு விளங்கும்? ஒருசமயம் உங்களுக்கே விளங்காமற் போனாலும் போகுமே. நான் உண்மையைச் சொல்லுகிறேன். கோபிக்க வேண்டாம்" என்று மேன்மேலே இதுபோன்ற விஷயங்களைப் பேசத் தொடங்கிவிட்டார்.
அப்பால் இவர், "நான் சமீபத்திலிருக்கும்பொழுது யாரையேனும் அனுப்பியாவது கேட்டுக்கொண்டு வரச்செய்து சொல்லலாமே. அது செய்ய முடியாவிட்டால் தெரியவில்லை என்றாவது சொல்லிவிடலாமே" என்றார். அப்பொழுது செட்டியார் சிறிதும் பின்வாங்காமல், "இந்த நூலில் மட்டுமல்ல; நீங்கள் செய்த வேறு நூல்களிலும் இந்த மாதிரியான இடங்கள் பல உள்ளன. அவற்றிற்கு எனக்கும் பிறர்க்கும் பொருள் விளங்கவில்லை. அவற்றில் ஒன்றை மட்டும் இப்பொழுது சொல்லுவேன்: மாயூரப் புராணத்தில் திருநாட்டுப் படலத்தில் 'அம்மையார் நீழலில்யா மமர்வோமென் றருள்செய்த, செம்மையார் வீற்றிருக்குந் திருத்தஞ்சை" (54) என்பதில் உள்ள அம்மையார் வரலாறு எனக்குச் சுத்தமாகத் தெரியவில்லை. பலரைக் கேட்டேன். ஒருவரும் சொல்லவில்லை. பின்னும் நாகைக்காரோணப் புராணத்திலே தலவிசேடப் படலத்தில்,
(விருத்தம்)
[20]"மருவொரு கொம்பு தாங்கு மார்புடை நமைப்பூ சித்துப்
பொருகரி கொம்போர் நான்கும் பெறப்பொலி தலமு முண்டால்"
[21]"பருவத்து மடந்தாய் பூமேற் பசுவன்றி வான்மேற் றங்குந்
திருவத்தோர் பசுவைக் கொண்டு சிருட்டிசெய் தலமு முண்டால்"
[22]"கொடுமைசெய் களிற்றை மாட்டிக் குலவுநீ முந்தி யீன்ற
வடுவறு களிறு போற்றி வழிபடு தலமு முண்டால்" (32, 37, 39)
என்று பாடியிருக்கிறீர்களே. இத்தலங்களின் பெயரையும் இத்தலங்களின் சரித்திரங்களையும் தெரிந்துகொள்வது எப்படி? இவற்றிற்கெல்லாம் குறிப்பு எழுதியிருந்தாலல்லவோ விளங்கும்? படிப்பவர்களுக்கு விளங்கும்படியல்லவோ பாடவேண்டும்? அங்ஙனம் செய்யப்படாத பாடல்கள் பாடல்கள் அல்லவே; நீங்கள் இப்பொழுது பாடும் நூல்களில் இம்மாதிரியான பிரயோகங்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. முன்பு நீங்கள் இப்படிப் பாடியதில்லை. உங்கள் நூல்களைப் படிப்பவர்களெல்லாம் வந்து உங்களையே கேட்டுத் தெரிந்துகொள்ள முடியுமா? நான் சொன்னபடி கடினமான பாகங்களுக்குக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்திருந்தால் எல்லாரும் தெரிந்து கொள்வார்களே. இந்தத் துன்பம் உங்களுக்குத் தெரியவில்லையே! கோபித்துக் கொள்ள வேண்டாம்; என் அனுபவத்தைச் சொல்லுகிறேன்" என்று மேலே மேலே பேசுவாராயினர்.
அருகில் இருந்த சில அன்பர்கள், "செட்டியார் என்ன இப்படிப் பேசுகிறாரே!" என்று அஞ்சினர். முன்னொரு முறை [23]துறைசையந்தாதியைக் குறித்துச் செட்டியார் பேசியதை நேரில் நான் கேட்டவனாதலால் இதில் எனக்கு வேறுபாடு தோற்றவில்லை. ஆனாலும் இம்முறை இவ்விருவருடைய சம்பாஷணையும் சற்றுக் கடுமையாகவே இருந்தது. இக் கவிஞர்பிரான், "என்னப்பா மிகுந்த கோபத்தோடே பேசுகிறாய்? இப்படிப்பட்ட இடங்களிலுள்ள அருமையை நீ பாராட்டாமற் பழிப்பதும் மிக உழைத்து அமைத்திருக்கும் அமைப்பை மதியாமலிருப்பதும் நன்றாக இல்லையே. இவைபோன்ற பிரயோகங்கள் பழைய நூல்களிற் பல உள்ளனவே. அங்ஙனம் பாடியவர்களெல்லாம் தெரியாதவர்களா? அப்படிப் பாடுவது ஓரழகன்றோ? சிலவகைப் பாடல்களைச் சிலர் விருப்பத்தின்படியே பாடவேண்டியிருக்கிறது; யோசித்துப் பேசு" என்றார். "பொருள் தெரிந்த பின்பல்லவோ கேட்பவர்களுக்கு அவற்றிலுள்ள அருமை புலப்படும்? அதற்குமுன் அவற்றின் அருமைப்பாடும் மதிப்பும் எப்படித் தெரியவரும்? உங்களோடு நெடுநாள் பழகிக்கொண்டிருக்கும் எனக்கே உங்களுடைய பாடல்களுக்குப் பொருள் விளங்காமல் இருக்குமானாற் பிறர் என்ன செய்வார்கள்? இப்படி நீங்கள் பாடுவதிற் சிறிதேனும் எனக்குத் திருப்தியில்லை. இந்த மாதிரியான பாடல்களை இனி நீங்கள் பாடக் கூடாது. நிர்ப்பந்தத்தாற் பாடும்படி ஏற்பட்டால் பதிப்பிக்குங் காலத்தில் அந்தப் பாகங்களுக்குக் குறிப்புரையெழுதியே பதிப்பிக்கும்படி செய்யவேண்டும். இன்னும் முன்பு குறிப்புரை யில்லாமற் பதிப்பித்த புத்தகங்களிலுள்ள கடினமான பாகங்களுக்கும் குறிப்புரை எழுதிப் பதிப்பித்து அவற்றோடு சேர்த்துவிடச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் உழைப்புப் பிரயோசனப்படாது. என்னுடைய ஆசிரியருக்கு ஒரு பழிப்பும் இல்லாமலிருக்க வேண்டுமென்றே இப்போது இவற்றைச் சொல்லலானேன். நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் வேறு வேறு ஊர்களுக்குச் சென்று சிலகாலம் அங்கங்கே இருந்து வருகிறீர்கள். பொருள் தெரியாத ஒவ்வொருவனும் வந்து வந்து 'அதற்குப் பொருள் சொல்; இதற்குப் பொருள் சொல்' என்று என் கழுத்தை யறுக்கிறான். ஏதாவது நான் சொல்லத்தானே வேண்டியிருக்கிறது? சொல்லாவிட்டால் வருகிறவன் விடுகிறானா? எனக்கு இதே வேலையாக இருக்கிறது. இப்படித்தானே ஒவ்வொருவரும் கஷ்டப்படுதல்கூடும்! நூல் நன்றாயிருந்தாலும் பிறருக்குக் கஷ்டத்தை உண்டுபண்ணுகின்ற தல்லவா? இதைப்பற்றிப் பல நாளாகச் சொல்லவேண்டுமென்று எண்ணியிருந்தேன். முன்பு சில சமயங்களிற் குறிப்பாகவும் சொல்லி யிருக்கிறேன். சந்தர்ப்பம் வாயாமையால் இதுவரையில் விஸ்தாரமாக நான் சொல்லவில்லை. பல தீட்டுக்கு ஒரு முழுக்கு என்றபடி இப்பொழுது எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்; அப்பால் உங்கள் இஷ்டம்" என்றார்.
இப்படியே இருவரும் ஓய்வின்றிப் பேசிக்கொண்டிருக்கையில் இரவு மணி எட்டாய்விட்டது. இருவரும் மிகப் பெரியவர்களானமையால் இடையிலே ஒருவரும் பேசமுடியவில்லை. அங்கே வந்திருந்த ஆறுமுகத்தாபிள்ளையின் ஜபமும் பலிக்கவில்லை; செட்டியாரிடத்தில் மிக்க கோபங்கொண்டவராய் இவரைப் பார்த்து, "நேரம் ஆய்விட்டபடியால் ஊருக்குப் புறப்படுவோம்” என்றார். இக்கவிதிலகர் எழுந்து நின்று, "போய்வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். சரியென்று சொல்லிச் செட்டியாரும் விடைபெற்றுக்கொண்டு தம்முடைய வீட்டிற்குச் சென்றார்; அவர் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளாமற் போனாரே யென்று நாங்கள் வருத்தமடைந்து பேசிக்கொண்டே சென்றோம்.
இங்ஙனம் கண்டிப்பாகப் பேசுவது செட்டியாருக்கு இயல்பாதலால் அதனையறிந்த பழையவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் வேறுபாடு தோற்றவில்லை; ஏனையோர்க்கு மட்டும் ஒரு பெருஞ் சண்டையாகத் தோற்றியது. பிள்ளையவர்கள்பால் செட்டியாருக்குள்ள அன்பின் மிகுதிதான் இங்ஙனம் பேசுவித்ததென்று சிலர் நினைந்தார்கள்.
மதவாரணப் பிள்ளையார் துதி.
பட்டீச்சுரத்தில் ஒருநாட் காலையில் தரிசனஞ்செய்வதற்கு ஸ்ரீ தேனுபுரேசரது ஆலயஞ்சென்று ஸ்தல விநாயகராகிய ஸ்ரீ மதவாரணப் பிள்ளையாரென்னும் விநாயக மூர்த்தியை இவர் தரிசித்துக்கொண்டு நிற்கையில் ஆறுமுகத்தாபிள்ளை, "மதவாரண மென்னும் பெயரை யமகத்திலமைத்து ஒரு செய்யுள் செய்யும்" என்று எனக்குச் சொன்னார். இது மிகக் கடினமான காரியமாயிற்றேயென்று கவலையுற்று, 'இங்கே யிருப்பது பெருந்துன்பத்திற்கு இடமாக விருக்கிறதே' என்று நினைந்து முகவாட்டத்துடன் நின்றேன்.
அந்தக் குறிப்பையறிந்த இக்கவிஞர் சிகாமணி, "தம்பி, இவ்வளவு கடினமான விஷயத்தை இவருக்குக் கொடுக்கலாமா? இனி இப்படிச் சொல்லுவது தருமமன்று" என்று சொல்லித் தரிசனஞ் செய்துவிட்டு வீடு சென்று அவர் விரும்பிய வண்ணம் ஒரு விருத்தமியற்றி அதை எழுதச்செய்து அவரிடம் படித்துக் காட்டும்படி சொன்னார். நான் அவ்வண்ணம் செய்தேன். அது,
{4.9}
[24] "நாமதவா ரணங்குறித்த படிகொடுதீ வளர்த்துமென நவிலுந் தக்க
நாமதவா ரணங்குசிவ மிகப்பினென வுங்கொள்ளான் நண்ணு மாற்றண்
ணாமதவா ரணங்குமிறுந் தடப்பட்டீச் சுரம்புகுந்து நலியச் செய்தாம்
நாமதவா ரணங்குளிர்பூந் தாளருள வின்பநலம் நண்ணி னேமால்"
என்பது.
நான் என் சொந்த ஊர் போனது.
பின், "தீபாவளிக்கு என் சொந்த ஊராகிய உத்தமதானபுரம் போவதற்கு எண்ணியிருக்கிறேன்; விடையளிக்கவேண்டும்" என்று இவரை நான் கேட்டுக் கொண்டேன். அப்படியே செய்யலாமென்று சொல்லிப் பட்டுக்கரை அங்கவஸ்திரமிரண்டை வருவித்துத் தீபாவளியில் உபயோகித்துக்கொள்ளும்படி இவர் கொடுத்தார். நான் புறப்படுதற்கு விடைபெறும்பொழுது, "தீபாவளி ஸ்நானஞ் செய்து விட்டு மாயூரத்திற்கே வந்துவிடலாம். அதற்குள் நானும் அங்கே போய்விடுவேன்" என்றார். அப்பால் ஊருக்குச் சென்றேன்; சென்றது முதல் ஜ்வர நோயால் மிகவும் பீடிக்கப்பட்டேன்; அதனால் குறிப்பிட்டபடி மாயூரஞ் செல்லுதற்கு முடியவில்லை. பின்பு இவர் மாயூரம் போய்விட்டார். குறிப்பிட்டபடி பின்பு நான் அங்கே வாராமையாற் கவலையுற்று என்னைப் பார்த்து வரும்படி ஒரு மனிதரை யனுப்பினர். "ஜ்வரத்தால் வரமுடியவில்லை; ஸெளக்கியமானவுடன் வந்து விடுவேன்" என்று அவரிடம் சொல்லி அனுப்பினேன். அடிக்கடி யாரையேனும் அனுப்பி என்னைப் பார்த்துவரச் செய்து என் தேக நிலையை அறிந்து கொண்டேயிருந்தார்; நானும் இவருடைய ஞாபகமாகவே யிருந்தேன். மார்கழி மாதத்தின் இறுதியில் எனக்கிருந்த ஜ்வரநோய் நின்றது.
------------------
[1]. இச்செய்யுட்களையும் இவற்றின் பொருள்களையும் இச்சரித்திரத்தின் முதற்பாகத்தில் 36-39-ஆம் பக்கங்களிற் காணலாம்.
[2]. பால் – இடப்பாகத்தை. கோடீச்சரம் - கொட்டையூர். கொண்டு - கொண்டேன். கண்ணுற்று - கண்டு. ஆய் ஒண்டொடியாய் - ஆராயப் படுகின்ற ஒள்ளிய வளையலையுடைய பாங்கியே. வந்தி - பணிவாயாக. நின்று ஆர்வம் தர கேள். மாலை - மயக்கத்தை. தந்தி - தந்தாய். நின் தார் தந்திடு என்று ஆர்வம் தரத் தாரைக் கேள். இச் செய்யுள் தலைவி கூற்று.
[3]. திருவண்ணாமலைக்குத் தலைவனை; ஞானக்கோ முத்தி - திருவாவடுதுறை. யாம் அண்ணாம். அலை அத்தனை வினையால் - அலைகளையுடைய கடலைப் போன்ற அவ்வளவு வினைகளால்; தமிழை அள் நா மலையத்தனை - அகத்திய முனிவரை; மலையம் - பொதியின் மலை. அண்ணா - தலைவனே. மலைய - போர் செய்தற்கு. ஆதலால் யாம் எவ்வாறு உய்வே மென்றபடி.
[4]. சாஸ்திரம் - சைவசித்தாந்த சாஸ்திரங்கள்.
[5]. இவர் ஜே.எம்.நல்லுசாமிப் பிள்ளையின் உறவினரில் ஒருவர்.
[6]. இது பட்டீச்சுரத்திற்குத் தென்பால் ஓடும் ஒரு நதி.
[7]. தம்பியென்றது ஆறுமுகத்தா பிள்ளையை.
[8]. கும்பகோணம் காலேஜ் வேலையை எனக்குச் செய்வித்ததையே நன்மையாகக் கருதுகிறேன்.
[9]. சோழனுடைய அரண்மனையிருந்த இடம் இப்பொழுது சோழன் மாளிகை என்னும் ஊராக இருக்கின்றது; பட்டீச்சுரத்துக்கு வடவெல்லையாகவுள்ளது. அங்கே இரண்டு சுவர்கள் கூடிய மூலையொன்று 11 - நிலையுள்ள ஒரு கோபுரத்தின் உயரமுடையதாக இருந்ததை இளமையிற் பார்த்திருக்கிறேன். அதனை அரண்மனைச் சுவரென்று யாவரும் சொல்வார்கள். பிற்காலத்தில் அதனை இடித்து ஏலம் போட்டுவிட்டார்கள்.
[10]. இப்பொழுது கோணப்பெருமாள் கோயிலென்று வழங்கும்; தக்ஷிணத்துவாரகையென்றும் சொல்லப்படும்.
[11]. இந்த நகரத்தின் பெருமையையும் இதன்பால் வாழ்ந்த சோழ அரசர்கள் இன்னார் இன்னாரென்பதையும் அவர்கள் புகழையும் யாப்பருங்கல விருத்தி, வீரசோழியமென்பவற்றின் உரைகளிலுள்ள மேற்கோள்களாலும் சிலாசாசனங்களாலும் அறியலாகும்.
[12]. இது பழையாறையென்னும் ஊருக்கு மேல்பால் இருத்தலால் இப்பெயர் பெற்றது.
[13]. சங்கை - ஐயம்.
[14]. தேவாரம் சொல்லும்போது முதலில் ‘திருச்சிற்றம்பலம்' என்று சொல்லிவிட்டு ஆரம்பித்தலே முறை.
[15]. வீசையின் மேலுள்ள முக ரோமம்; ஹிந்துஸ்தானிச் சொல்.
[16]. முதற்பாகம், பக்கம், 333.
[17]. {4.10}
"நாட்டஞ் சிவந்தனை யென்செய லாநம னேகுடந்தைக்
கோட்டஞ் சிவந்தனை நேர்ந்தே யுறுமங்குக் கூடிமலப்
பூட்டஞ் சிவந்தனை செய்தோங் கருணை புரிந்ததிலை
வாட்டஞ் சிவந்தனைப் பொன்சொரிந் தாலு மதிக்கலமே."
[18]. செங்கை - திருவாதிரை நட்சத்திரம். பதத்து உய்த்திடு.
[19]. ஊறு தெரிதலும் - ஸ்பரிச உணர்ச்சியையும். ஓருடம் பென்றது மரத்தை. வேறுமலர் இலை புனைந்து - தனக்குரியனவல்லாத வேறு மலர்களையும் மாவிலை முதலிய இலைகளையும் சூடி. பலன் - நற்பயன்; பழமென்பது வேறு பொருள். துவஜஸ்தம்பம் பஞ்சலிங்கத்துள் ஒன்றாதலின் 'சிவம்' எனப்பட்டது. விடைமேற் கொள்ளும் - இடபக்கொடியை மேற்கொள்ளும்; இடபவாகனத்தின் மேலெழுந்தருளியிருக்கு மென்பது வேறு பொருள்.
[20]. ஒரு கொம்பு - ஆதிவராகத்தின் கொம்பு. கரியென்றது ஐராவதத்தை. தலம் - திருவெண்காடு.
[21]. பூமேற் பசு வென்றது பிரமனை. தலம் - கருவூர்.
[22]. களிற்றை - கயமுகாசுரனை. களிறு - விநாயகர். தலம் - திருச்செங்காட்டங்குடி.
[23]. இதன் 38 - 39 - ஆம் பக்கம் முதலியவற்றைப் பார்க்க.
[24]. பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 3334. ஆரணங் குறித்தபடி நாம் அதவு கொடு தீ வளர்த்தும் என நவிலும் தக்க நாம - வேதம் குறித்தபடி நாம் அத்திக்கட்டையைக் கொண்டு யாகாக்கினியை வளர்ப்போம் என்று சொல்லும் தக்கனென்னும் பெயரை உடையாய். சிவம் இகப்பின் அணங்கு தவார் - சிவபெருமானை நீக்கி யாகம் இயற்றினால் வருத்தம் நீங்கார்; எனவும் - என்று ததீசி முனிவர் முதலியவர்கள் சொல்லவும்; கொள்ளான் நண்ணும் ஆற்று அண்ணாம் - அவ்வுரையை மேற்கொள்ளாமல் அவன் அடைந்த தீயவழியிற் சேரமாட்டோம். மதவாரணம் குமிறும் தடம் பட்டீச்சுரம் புகுந்து - வலியையுடைய சங்குகள் முழங்கும் குளங்களையுடைய பட்டீச்சுரத்தை அடைந்து. நாம் நலியச் செய்தாம் - அச்சத்தைக் கெடச் செய்தோம். மதவாரணம் குளிர் பூந்தாள் அருள் - மதவாரணப் பிள்ளையார் தம் குளிர்ந்த மலர் போன்ற திருவடிகளை அளித்தமையால். இன்ப நலம் - ஆனந்தமாகிய பயனை. நண்ணினேம் - அடைந்தோம்.
அதவென்றது, அத்திக்கட்டையாற் செய்யப்பட்ட சிருக்குச் சிருவம் முதலியவற்றை; ஆகுபெயர்.
-------------
5. திருவாவடுதுறைக் குருபூஜை நிகழ்ச்சிகள்.
திருவாவடுதுறையில் நான் இவரைப் பார்த்தது.
தை மாதத்தில் திருவாவடுதுறையில் நடக்கும் ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தியினுடைய குருபூஜைக்கு இவர் வரக்கூடுமென்று தெரிந்தமையால் நான் இவரைப்பார்த்தற்கு அன்று அவ்வூர் சென்றேன்; அவ்வூர்க் காட்சி என் மனத்தைக் கவர்ந்தது. கூட்டத்தின் மிகுதியால் முற்பகலில் இவரது இருப்பிடம் தெரிந்து சென்று இவரைப் பார்க்க முடியவில்லை. பிற்பகலிற் சென்று தேடியபொழுது தெற்கு வீதியில் ஒரு வீட்டுத் திண்ணையில் சிலரோடு பேசிக்கொண்டு இவரிருத்தலைக் கண்டேன். அங்கே சென்று பக்கத்தில் நின்றபொழுது, "எப்பொழுது வந்தீர்? தேகஸ்திதி ஸெளக்கியமாக இருக்கிறதா? ஆகாரஞ் செய்தாயிற்றா?" என்றார். "இன்று காலையில் வந்தேன். தேகஸ்திதி சௌக்கியமாக இருக்கிறது. ஆகாரம் செய்தாயிற்று" என்று சொன்னேன்; அப்பால் இருக்கச் சொன்னபடி ஓரிடத்தில் இருந்து இவர் பேசுவனவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.
உடன் இருந்தவர்கள் சென்ற பின்பு இவர், "இனிப் பாடங் கேட்க வரலாமே" என்று என்னிடம் சொன்னார்; "கேட்குங் காலத்தை எதிர்பார்த்தே ஒவ்வொரு நிமிஷமும் காத்திருக்கிறேன்" என்று சொன்னேன்; "மாயூரம் போனபின் அப்படியே செய்யலாம்" என்று சொல்லிவிட்டுப் பிற்பகலில் ஐந்து மணிக்குமேல் மடத்திற்குச் சென்றார். நானும் உடன் சென்றேன்.
தம்பிரான்கள் பாடங்கேட்டது.
அப்பொழுது அங்கேயிருந்த குமாரசாமித் தம்பிரான், பரமசிவத் தம்பிரான் முதலியோர் எழுந்து நின்று இவரை வரவேற்றார்கள். இவரை அங்கே ஓரிடத்தில் இருக்கச்செய்து அவர்களும் இருந்தார்கள். சில நேரம் சம்பாஷித்துக்கொண்டேயிருந்துவிட்டு அவர்கள், "ஏதேனும் ஒரு நூலை நாங்கள் இப்போது பாடங் கேட்கலாமோ?" என்றார்கள்; இவர் கேட்கலாமென்று சொல்லவே அவர்கள் காசிக் கலம்பகம் கேட்கத்தொடங்கினார்கள்; "[1]காசிச்சாமி (பரமசிவத் தம்பிரான்) இருக்கும்பொழுது இக்கலம்பகம் நடைபெறுவது மிகவும் பொருத்தமுடையதே" என்று சொல்லி விட்டு இவர் பாடஞ்சொன்னார்; இரவு எட்டு மணிக்குள் 10 பாடல்கள் படிக்கப்பட்டன. அப்பால் அவரவர்கள் தத்தம் இடஞ் சென்றார்கள்.
சுப்பிரமணிய தேசிகர் பரிசளித்தல்.
பத்து மணிக்குமேல் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய பட்டணப் பிரவேசமும் கொலு முதலியனவும் நடைபெற்றன. அவை வந்தவர்களுடைய கண்களையும் மனங்களையும் கவர்ந்தன.
குரு பூஜைக்காக வந்திருப்பவர்களுள் மறுநாளும் இருந்து செல்லுபவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஊருக்குச் செல்ல விரும்புகிற மற்றவர்களை வருவித்து அவரவர்களுடைய தகுதிக்கும் அவர்கள் வைத்த பாதகாணிக்கைத் தொகைக்கும் ஏற்றபடி மரியாதைகளைச் செய்து அனுப்புவது ஆதீனகர்த்தருடைய வழக்கமாதலால் அன்று அங்ஙனமே கொடை நடைபெற்றுவந்தது. இப்புலவர்பிரான் தமக்காக அமைக்கப்பட்டிருந்த வீட்டின் இடைகழியில் வந்து சயனித்துக் கொண்டார். அப்போது சுப்பிரமணிய தேசிகரிடம் விடைபெற்றுக்கொண்ட பிரபுக்களிற் சிலரும் வித்துவான்களிற் சிலரும் இவரிடம் வந்து பேசிக்கொண்டிருந்து விட்டு விடைபெற்றுச் சென்றார்கள். அதனால் இவர் நித்திரை செய்யவேயில்லை.
ஆவூர்ப் பசுபதி பண்டாரத்திற்குப் பாடல் அளித்தது.
அப்படியிருக்கையில், ஆவூர்ப் பசுபதிபண்டார மென்பவர் அங்கே வந்து இவரைப் பார்த்து நெடுநேரம் புகழ்ந்து பாராட்டிப் பேசிக்கொண்டேயிருந்தார். இவருக்கு மிகுந்த சிரமமிருந்தும் பழகியவராதலால் தமது சிரமத்தை அவர்பாற் சிறிதும் புலப்படுத்தவில்லை. அப்பால் அவர், "நீங்கள் மிகுந்த ச்ரமமடைந்திருப்பதாகத் தெரிகிறபடியால் நான் இப்போது பேசுவது ஸரியல்ல" என்றெழுந்து, "போய் வருகிறேன்" என் றார்; இவர் “சரி” என்றார். அடிக்கு ஒருதரம் திரும்பிப் பார்த்து, "போய் வருகிறேன், போய் வருகிறேன்" என்று சொன்னார். கடைசியில் இவர் அஞ்சலி செய்தார். அப்பால் அவர் சிறிது தூரம் சென்று யோசனை செய்துகொண்டே நின்று பின்பு மீண்டுவந்து இவர் சயனித்துக் கொண்டுவிட்டதைத் தெரிந்து கனைத்தார். உடனே இவர் எழுந்து, "என்ன விசேடம்? வந்த காரியத்தைச் சொல்லவேண்டும்" என்று கேட்கவே அவர், "இப்போது எழுந்தருளியிருக்கும் ஸந்நிதானத்திற்குப் படித்தவர்களிடம் மிகுந்த பிரியமிருப்பதாகவும் அவர்களுள் [2]ஸாஹித்ய சக்தி உள்ளவர்களிடத்தில் அதிக மதிப்பு இருப்பதாகவும் கேள்வியுற்றேன். அதற்குத் தாங்களே ஸாட்சி. இந்த ஆதீனத்தில் மூன்று பட்டத்திலிருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்களைப்போன்ற விதரணசாலிகள் யாருமில்லை. இங்கே குருபூஜா காலத்தில் எம்மவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் திட்டம் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். குரு பூஜையின் மறு நாட்காலையில் எங்களையெல்லாம் தனியே ஓரிடத்தில் இருக்கச்செய்து எங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டு தலைக்கு அரை ரூபாய் விழுக்காடு கொடுத்து அனுப்புவது வழக்கம். எங்களுடைய அதிர்ஷ்டம் அதற்குமேலே போவதில்லை. நான் கொஞ்சம் படித்தவனாக இருப்பதால் எனக்கு அந்தக் கூட்டத்திற் கலந்துகொள்ளப் பிரியமில்லை. மானம் போராடுகிறது. என்ன செய்வேன்! இந்த வருஷத்தில் தாங்கள் இங்கே விஜயஞ்செய்திருப்பது என்னுடைய அதிர்ஷ்டந்தான். என்னுடைய வித்வத்தின் திறமை உங்களுக்கு வெகு காலமாகத் தெரியும். என்னைப்போலவே பெரிய புராணம், திருவிளையாடல், ஸ்காந்தம் முதலிய காவ்யங்களுக்கும் பிரபந்தங்கள் பலவற்றிற்கும் அர்த்தஞ் சொல்லுதலிலும் தேவாரங்களைப் பண்ணோடு ஓதுதலிலும் ப்ரஸங்கஞ் செய்வதிலும் எங்களவர்களில் இக்காலத்தில் யாரையாவது நீங்கள் பார்த்திருப்பதுண்டா? இப்படிப்பட்ட நான் அந்தக் கோஷ்டியிற் சேரலாமா? சேர்ந்தால் என் வித்தைக்கு என்ன ந்யூனதை ஏற்படும்? தாரதம்யமறிந்து கொடுக்கிற இந்த இடத்துக்குத்தான் என்ன கெளரவம்? பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்? எல்லாவற்றையும் பற்றி யோசிக்கும்பொழுது என்னுடைய யோக்யதையை நன்றாகத் தெரிவிக்கும்படி ஒரு செய்யுள் செய்துகொண்டு இப்போதே தனியே சென்று பார்த்து விட்டுப் போகலாமென்று எனக்குத் தோற்றுகிறது. அதற்கும் ஆதீனத்து மஹாவித்வானாக விளங்கிக்கொண்டிருக்கிற தங்களுடைய உடன்பாடு வேண்டும், அவ்விதம் செய்யாவிட்டால் சோபிக்கமாட்டாது" என்றார்.
அவர் இன்ன எண்ணங்கொண்டு சொல்லுகிறாளென்பதை நன்றாக அறிந்தும் இவர், "அப்படியே செய்யலாம்" என்றார்.
பசு : அவசரத்தில் இப்போது செய்வதற்கு என்னால் முடியாது.
மீ : காலையில் இருந்து ஏதாவது பாடல் செய்து கொண்டு பார்த்துவிட்டுச் செல்லலாமே!
பசு : நாளைத் தினம் என் சிஷ்யரொருவருடைய கிரஹத்தில் ஒரு விசேஷம் நடக்கப்போகிறது. அதற்கு நானே நேரிற் போய்த் தீர வேண்டும். மற்றவர்கள் போனால் அந்தக் கிரஹஸ்தருக்கு அவ்வளவு திருப்தியாக இராது. என்ன பாருங்கள்! எங்களுடைய நிலைமை இப்படி இருக்கிறது!
மீ : ஆனால் இப்போதே ஒரு பாடல் செய்து கொண்டு ஸந்நிதானத்தினிடம் போய் வரலாமே.
பசு : எனக்கு ஸாஹித்யஞ் செய்வதிற் கொஞ்சங்கூட அப்யாஸமில்லை. இக்காலத்திலே கம்பராக விளங்குகின்றவர்களும் என்னிடத்தில் மிகுந்த ப்ரீதியுள்ளவர்களும் மஹோபகாரிகளுமாகிய தாங்களே ஒரு செய்யுள் செய்து கொடுத்தால் எனக்கு அது பரமோபகாரமாக இருக்கும்.
மீ : அப்படியிருக்கையில் ஸாஹித்ய விஷயத்தில் நீங்கள் ஏன் முயல வேண்டும்? ஸந்நிதானம் வேறுபாடாக நினைக்கக் கூடுமே.
பசுபதிபண்டாரம், " இவ்வளவு கூட்டத்தில் அவர்கள் இதை எங்கே கவனிக்கப் போகிறார்கள்? கவனிக்கவே மாட்டார்கள். அவசியம் தாங்கள் ஒரு பாடல் செய்து கொடுக்கத்தான் வேண்டும்; கொடுத்தால் ஒரு ஜோடி வஸ்திரம் கிடைக்கும். பின்பு இந்த மடத்தில் நல்ல ஸ்தானத்தில் பதிவும் ஏற்படும். தங்களோடு வெகுநாளாகப் பழகிக்கொண்டே வரும் எனக்கு அது மஹத்தான ப்ரயோஜனமாக இருக்கும். தங்களை நினைந்து கொண்டே அந்த வஸ்திரத்தைப் பலநாள் தரித்துக்கொள்வேன். தங்களை [3]முதன்முதல் பட்டீச்சுரத்தில் நமச்சிவாய பிள்ளையவர்கள் முன்னிலையில் பிரகாசப்படுத்தியவன் நான்தானே? நான் போகுமிடங்களிலெல்லாம் தங்களைப் பெருமைப்படுத்திப் பேசுவது எனக்கு வழக்கம்" என்று மிகவும் மன்றாடி வற்புறுத்திக்
கேட்டுக் கொண்டார்.
அன்பே ஓருருவமாக விளங்கும் இக்கவிநாயகர் ஒரு செய்யுளை இயற்றி அதனை ஒரு சீட்டில் எழுதுவித்து அவரிடம் கொடுத்து, “இந்தப் பாடலை நன்றாகப் பாடம் பண்ணிக்கொண்டு அங்கே சென்று சொல்லுங்கள்; பொருள் கேட்டால் தைரியமாகக் கூறுங்கள்; அதைரியம் வேண்டாம்" என்று சொல்லியனுப்பினார்.
பசுபதிபண்டாரம், "ஸங்கீதத்தில் எனக்கு அதிகமான பயிற்சியிருப்பதாலும் ஸந்நிதானத்திற்கு அதில் ப்ரியமுண்டென்று தெரிதலாலும் பாடலை ராகத்தோடு சொல்லி ஸந்நிதானத்தை ஸந்தோஷப்படுத்திவிடுவேன். அந்த விஷயத்தில் தங்களுக்குக் கவலையே வேண்டாம்" என்று சொல்லி எழுந்து ஊக்கத்தோடு விரைந்து சென்றார்.
இவர் பாடலாற் பசுபதிபண்டாரம் பரிசு பெற்றது.
செல்லும்போதே பசுபதிபண்டாரம் பாடலை நன்றாக மனனம் பண்ணிக்கொண்டு ஒடுக்கத்தின் வாயிலை யடைந்தார். அழைத்தவர்களன்றி மற்றையோர் செல்லக்கூடாத சமயம் அது; சென்றால் வாயில் காப்போன் உள்ளே விடமாட்டான். ஆனாலும் அவருடைய முதுமையையும் உத்ஸாகத்தையும் முகமலர்ச்சியையும் தோற்றப் பொலிவையும் தைரியமாக வருதலையும் பார்த்தபொழுது, 'இவர் மிகப் பழகியவராக இருக்கலாம்; ஏதோ முக்கியமான காரியமாகப் போகிறார்' என்றெண்ணி அவன் யாதொரு தடையுஞ் சொல்லாமல் உள்ளே அவரை அனுப்பிவிட்டான். அவர் உள்ளே சென்று நின்றார்.
அப்போது சுப்பிரமணிய தேசிகர், “யார்?" என்றார்.
பசு : நான் அபிஷிக்தர்களைச் சார்ந்தவன்; தரிசனஞ்செய்து விட்டு விடைபெற்றுக் கொள்வதற்கே வந்தேன்.
சுப் : உங்கள் இனத்தவர்களுக்கெல்லாம் காலையிற் பணங் கொடுக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறது. ஆதலால் இப்போது போய்விட்டு நாளைக்காலையிற் 4பன்னீர்க்கட்டிற்கு வாருங்கள்.
பசு : வித்வானாதலால் அந்தக் கூட்டத்திற் சேர எனக்குப் பிரியமில்லை.
சுப் : நீங்கள் வித்வானென்பதை நாம் இதுவரையில் அறிந்து கொள்ளவில்லையே.
பசு : அதற்கு ஸந்தர்ப்பம் வாய்க்கவில்லை. என்னிடத்தில் அன்புவைத்துச் சொல்லக்கூடியவர் யாரும் இல்லாமையால் ஸந்நிதானத்தின் ஸல்லாபம் எனக்கு இதுவரையில் நேரிற் கிடைக்காமற் போயிற்று. பரீக்ஷை செய்து பார்த்தால் என் யோக்யதை நன்றாகத் தெரியவரும்.
சுப் : உங்கள் கல்வியை அளந்தறிவதற்கு இது ஸமயமன்று. அவகாசத்தில் வந்தால் அதற்கு அனுகூலமாக இருக்கும். சொல்லிக்கொண்டு போவதற்காகப் பலர் காத்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள்.
பசு : இவ்விடத்து ஆஞ்ஞையைப் பெற்றுக்கொண்டு இப்போதே புறப்பட வேண்டியவனாக இருக்கிறேன். காலையில் என் சிஷ்யரொருவர் வீட்டில் முக்கியமான காரியமொன்றிருக்கிறது. அந்த அவஸரத்தாலேதான் இப்போது வந்தேன். நான் செய்திருக்கும் பாடலைக் கேட்டருள வேண்டும். சொல்லும்படி கட்டளையிட்டாற் சொல்லுகிறேன். எப்படியாவது ஸந்நிதானத்தின் திருச்செவிகளுக்கு என் பாடல் விஷயமாக வேண்டுமென்பதுதான் எனது பிரார்த்தனை. பிரயோஜனத்தைக்கூட நான் எதிர்பார்க்கவில்லை.
சுப் : அப்படியானால் சீக்கிரத்தில் அதனைச் சொல்லலாம்.
பசுபதி பண்டாரம்,
(விருத்தம்)
{5.1}
[5]"எந்நாடும் புகழ்துறைசை வருகுருசுப் பிரமணிய எம்மா னேமுன்
இன்னாத புலியதளை யுடுத்தியிருந் திடுபொழுதில் ஏத்தி னோர்க்குப்
பொன்னாடை களையளித்தாய் பொன்னாடை புனைந்தவிந்தப் பொழுத டைந்தால்
என்னாசை தீர்ந்திடவே யெவ்வாடை யளிப்பைகொலென் றிங்குற் றேனால்"
என்ற பாடலை இசையுடன் மிக நன்றாகச் சொல்லிக் காட்டினர்.
அச்செய்யுளைக்கேட்டு இன்புற்றுப் புன்முறுவல் செய்து சுப்பிரமணியதேசிகர், "ஐயா, இச்செய்யுளை இன்னும் ஒருமுறை சொல்ல வேண்டும்” என்று கட்டளையிடவே பசுபதி பண்டாரம் அவ்வாறே, பாடலைச் சொல்லி அதனை விரிவாக உபந்யஸிக்கும்படி உத்தரவிட்டாலும் செய்வதாகக் கூறினர்.
சுப்பிரமணிய தேசிகர், "வேண்டாம். நீங்கள் அர்த்தம் சொல்லாமலே பாடல் தன் பொருளையும் தன்னையும் நன்றாக விளக்குகின்றது" என்று சொல்லிவிட்டு உயர்ந்த வஸ்திரங்களைக் கொண்டுவரச் செய்து தாம்பூலத்துடன் வழங்கி அவரை நோக்கி, "இந்தச் செய்யுள்தான் உங்களுக்கு இந்த மரியாதையைச் செய்வித்தது" என்று சொன்னார். அதைப் பெற்று அங்கேயே அந்த ஆடைகளைப் பிரித்துப்பார்த்து மிகுதியான ஸந்தோஷத்தை யடைந்து அவர் ஆதீனகர்த்தரவர்களை எல்லையின்றி ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்தனர்.
அப்போது சுப்பிரமணிய தேசிகர், "ஐயா, வெளியில் அநேகர் காத்திருக்கிறார்கள்; அனுப்பவேண்டும். விடைபெற்றுக் கொள்க" என்றார்.
உடனே அவர் எழுந்து 'ஜன்னல்’ வழியே நிகழ்ந்தவற்றைக் கவனித்துக்கொண்டே யிருந்து அருகில் வந்த தம்மவர் யாரையும் மதியாமல் மிக்க வேகமாகப் பிள்ளையவர்கள் விடுதிக்கு வந்தார்.
இக்கவிஞர் கோமான் நித்திரை செய்வதைக் கண்டு அவர் எழுப்பத் தொடங்கியபொழுது பக்கத்தில் நின்றவர்கள், "எழுப்ப வேண்டாம்" என்று சொன்னார்கள். அவர் கனைத்தார். போன அவருடைய நிலை எவ்வாறாயிற்றோ வென்ற கவலையுடன் கண்ணை மூடிக்கொண்டு மட்டும் இருந்த இவர் விழித்தெழுந்து, "ஐயா, வருக; ஏதாவது நீங்கள் நினைத்தபடி கிடைத்ததா?" என்று கேட்டார்.
பசுபதிபண்டாரம், "ஸந்நிதானத்தின் விவேகத்தை நான் என்னவென்று சொல்வேன்! வித்வான்களுடைய தாரதம்யத்தை அறிவதில் அவர்களைப்போல் ஒருவரையும் இதுவரையில் நான் பார்த்ததில்லை. இன்றைக்குத்தான் என்னுடைய யோக்யதையை அவர்கள் அறிந்து கொண்டார்கள். ஓய்வுள்ள நேரத்திற் பேசிக்கொண்டிருந்தால் இன்னும் அதிகமாகக் கிடைக்கக்கூடும். என்னுடைய துரதிர்ஷ்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இவ்வளவு அநுகூலங்கள் உண்டானதும் தங்களாலேதான்" என்று சொல்லிவிட்டு அங்கே கிடைத்த வஸ்திரத்தை எடுத்து நீட்டி, "இதைத் தங்கள் அருமைத் திருக்கையினாலே கொடுக்க வேண்டும்" என்றார்.
மீ : (அதை வாங்கிப் பார்த்துவிட்டு மகிழ்ந்து) நீங்கள் பாடல் சொன்னீர்களா? ஸந்நிதானம் கேட்டருளியதா?
பசு : அந்தப் பாடலைச் சொன்னதனாலேதான் இவற்றை நான் பெற்றேன். இல்லாவிட்டால் இந்தச் சமயத்தில் அங்கே தலை நீட்ட முடியுமா?
மீ : ஸந்நிதானம் இன்னும் ஏதாவது கட்டளையிட்டதா?
பசுபதிபண்டாரம், "கொடுக்கும்பொழுது, 'இந்தச் செய்யுள் தான் உங்களுக்கு இந்த மரியாதையைச் செய்வித்தது' என்று ஸந்நிதானம் கட்டளையிட்டது" என்று சொல்லிவிட்டுச் சிரஞ்சீவிகளாக இருக்க வேண்டுமென்று இவரை வாழ்த்தி அந்த வஸ்திரத்தை வாங்கி விடைபெற்றுக்கொண்டு சந்தோஷத்துடன் ஊருக்குச் சென்றார்.
பலர் இவர் பாடலாற் பரிசு பெற்றது.
அவர் சென்றபின் அடுத்த நிமிஷத்தில் அவருடைய சுற்றத்தாரும் முதியவருமாகிய ஒருவர் இவரிடம் வந்தார். 'எதற்காக வந்தாரோ' என்றெண்ணி அவரை இவர் விசாரித்தார். வந்தவர், “பசுபதி பண்டாரத்துக்குக் கொடுத்தது போலவே எனக்கும் ஒரு செய்யுளியற்றித் தரவேண்டும். தந்தால் மிகவும் உபகாரமாயிருக்கும்" என்று மன்றாடினார். இவர் பலவகையாக மறுத்தும் அவர் கேட்கவில்லை. பின்பு அவர் இவரிடம் ஒரு செய்யுள் பெற்றுத் தேசிகரிடம் சென்று வஸ்திரஸம்மானம் அடைந்து சென்றார். இப்படியே உதயகாலம் வரையில் ஒருவர் பின்னாக ஒருவர் வந்து வந்து முயன்று இவர் இயற்றிக் கொடுத்த பாடல்களைப் பெற்றுத் தேசிகரிடம் சென்று சென்று அவற்றைச் சொல்லிக்காட்டி வஸ்திர ஸம்மானம் பெற்று வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் மரியாதை செய்யும்பொழுது தேசிகர், "இந்தப்பாடலே உமக்குத் தக்க ஸம்மானத்தை அளிக்கின்றது" என்று சொல்லிச் சொல்லிக் கொடுத்துவிடுத்தார். வஸ்திரங்களின் மதிப்பு பாடல்களின் நயத்தால் ஒன்றற்கு ஒன்று அதிகமாகவே இருந்துவந்தது. பிள்ளையவர்களாலேதான் அந்தப்பாடல்கள் செய்யப்பெற்றன வென்பதைத் தேசிகர் அவற்றின் நடையால் தெரிந்து கொண்டாரென்று நான் இங்கே எழுதுவது மிகை. பரிசு பெற்ற ஒவ்வொருவரும் வந்து வந்து இப்புலவர் சிகாமணியை வாழ்த்திவிட்டே செல்வாராயினர்.
பிறருடைய நன்மைக்காக இப்புலவர்திலகர் செய்யுட்களைச் செய்து கொடுப்பதும் அவற்றைப் பெற்றவர்கள் அவை தம்மாற் செய்யப்பட்டனவென்றே சொல்லித் தேசிகரிடத்து ஸம்மானம் பெற்றுச் செல்வதும் அக்காலத்தில் வழக்கமாகவே இருந்து வந்தன. இதனால் பிள்ளையவர்களிடத்தே இயல்பாக அமைந்துள்ள ஜீவகாருண்யமும் தேசிகருக்கு இவர்பாலிருந்த நன்மதிப்பும் யாவருக்கும் புலனாகும்.
இப்படி அன்றிரவில் பாடல் பெற்றுச் சென்று பரிசு பெற்றவர்கள் பலர். அவர்கள் கூறியனவாக அமைத்த செய்யுட்களில் இப்பொழுது தெரிந்தவை வருமாறு:
(விருத்தம்)
{5.2}
1. "தேமலி துறைசைச் சுப்பிர மணிய தேசிகோத் தமமுன மொருவற்
காமலி சீர்ச்சு தரிசன மளித்தாய் அஃதெவ ருக்குமின் றளிக்கும்
தூமலி நினது வள்ளன்மை யென்னைத் தூண்டிட வின்றுவந் தடைந்தேன்
பாமலி நினது புகழினை மதித்துப் பாடுவே னெனைப்புரந் தருளே."
(சுதரிசனம் - சக்கரம், நல்ல தரிசனம். ஒருவற்கு - திருமாலுக்கு )
{5.3}
2. "குருவருக்கந் தனிலுயர்சுப் பிரமணிய தேசிகசீர்க் குணக்குன் றேமா
மருவருக்கை கதலிசெறி பொழில்வீழி மிழலையிலோர் வற்க டத்தில்
இருவருக்குப் படிக்காசன் றருளியநீ யதுபலர்க்கின் றீதல் தேர்ந்தேன்
அருவருக்கு மிடியெனைவிட் டறப்படிக்கா சுடனாடை அளிப்பாய் மன்னோ."
(இருவரென்றது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரையும் திருநாவுக்கரசு நாயனாரையும்.)
{5.4}
(கட்டளைக் கலித்துறை)
3. தென்னாருஞ் சீர்ச்சுப் பிரமணி யப்பெயர்த் தேசிகவந்
தொன்னாரும் வேட்பப் பிரசங்கந் தான்பொழி யோர்முகிலே
பொன்னாரும் வீதி நவகோடி சித்த புரமுடையாய்
என்னாசை தீர நவகோடி யின்றிரண் டீந்தருளே."
(பிரசங்கம் - உபந்யாஸம், தேனாகிய தண்ணீர்; கம் - நீர். நவகோடி
சித்தபுரம் - திருவாவடுதுறை. நவகோடி - புதிய ஆடை.)
{5.5}
(வெண்பா)
4. ஒன்றளித்தாற் கோடியென வுன்னுவேற் குக்கோடி
இன்றளித்தா லென்னவென வெண்ணுவனோ - நன்றுணர்வாய்
வண்ணமா டத்துறைசை வாழ்சுப் பிரமணிய
அண்ணலே யின்னே யருள்."
(கோடி - நூறு லட்சம், புதிய ஆடை.)
{5.6}
5. ஆசையிலார்க் கேயொன் றளிப்பா யெனத்தெரிந்தும்
ஆசையுடை யாயென் றறிந்துவந்தேன் - ஆசையுடை
எங்கட்கொன் றீசுப் பிரமணிய வெம்மானே
வெங்கட் கலிநீங்க வே."
[ஒன்று - முத்தி. ஆசையுடையாய் - பொன்னாடையை யுடையாய். ஆசையுடை ஒன்று - பொன்னாடை ஒன்றை.)
{5.7}
6. "ஒன்றளிப்பா யென்றுணர்ந்து மோரிரண்டு கோடிதமை
இன்றளிப்பா யென்றெண்ணி யான்வந்தேன் - நன்றிமிகுத்
தித்தா ரணிமுழுது மெண்சுப் பிரமணிய
அத்தா வவற்றை யருள்."
(ஒன்று - முத்தி.)
{5.8}
7. "இல்லேனென் றாரு மியம்ப விருப்பேனை
வல்லே யுடையேனா வாழ்வருள் - நல்லோர்கள்
பேசும் புகழ்ச்சுப் பிரமணிய தேசிகநற்
றூசுஞ்செம் பொன்னுமளித் து."
(இல்லேன் - வீட்டிலிருப்பேன், வறியேன். உடையேன் – உடையை யுடையேன், செல்வமுடையேன். தூசு - ஆடை.)
இவ்வாறு முறையே கல்விப் பொருள், செல்வப்பொருளாகியவற்றைத் தானம் செய்யும் இரு பெருவள்ளல்களுடைய வள்ளன்மையைப் புலப்படுத்தி ஏழையர்களுடைய இரவும் அந்த நன்னாளினது இரவும் விடிந்தன.
சுப்பிரமணிய தேசிகர் பாராட்டியது.
இக் கவிஞர்பிரானுக்கு அந்த இராமுழுதும் நித்திரையே இல்லை. ‘இந்நிகழ்ச்சியால் ஸந்நிதானத்தின் திருவுளத்தில் ஏதேனும் வேறுபாடான எண்ணம் நம்மைப்பற்றி உண்டாயிருக்குமோ' என்ற கவலையை அடைந்து அவ்வாறு இருக்குமானால் எப்படியாவது அதைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று நினைந்து காலையில் அநுஷ்டானம் செய்துகொண்டு தேசிகரைத் தரிசித்தற்குச் சென்று வழக்கம்போலவே அவரை வந்தனம் செய்தெழுந்தார். அப்பொழுது தேசிகர் புன்னகை கொண்டு, "என்ன பிள்ளையவர்கள்! இராத்திரி வெகு வேடிக்கைகள் பண்ணிவிட்டீர்களே; மிகவும் சிரமமாக இருந்திருக்குமென்றும் தூக்கம் கெட்டிருக்குமென்றும் எண்ணுகிறோம்" என்று பாராட்டிக் கூறி அழைத்து நெற்றியில் திருநீறிட்டுப் பக்கத்திலிருக்கும்படி செய்தார். பின்பு அங்கேயிருந்த பிரபுக்களையும் வித்துவான்களையும் நோக்கி, "இவர்கள் இருப்பது ஆதீனத்திற்கு மிகவும் கெளரவமாகவே இருக்கின்றது. என்ன பாக்கியமிருந்தாலும் இதற்கு ஈடாகாது. குறைந்த கல்வியுடையோரையும் கெளரவிக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிற இவர்கள் குணம் யாருக்கு வரும் ! ஆதீனத்தின் அதிர்ஷ்டமென்றே சொல்லவேண்டும்" என்று முதல்நாள் நிகழ்ந்தவற்றைச் சொல்லி எல்லோரையும் மகிழ்வித்தனர். அப்பொழுது இவர்,
{5.9}
"கடிப்பிகு கண்முரசங் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படுஞ் சொல்"
(நாலடியார், 100)
{5.10}
"ஆர்த்தசபை நூற்றொருவ ராயிரத்தொன்றாம் புலவர்
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயி னுண்டென் றறு"
(ஒளவையார் பாடல்)
என்ற செய்யுட்களைக் கூறி, "எல்லாவற்றிலும் கொடை சிறந்ததென்பது யாவருக்கும் தெரிந்ததே. அதனாலேதான் வித்தைகளும் ஸாஹித்யங்களும் மேன்மேலும் பெருகிவருகின்றன. அக்கொடை இல்லையாயின் யாதும் இல்லையாய் விடும்;
{5.11}
‘பெயற்பான் மழைபெய்யாக் கண்ணு முலகம்
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடற் றண்சேர்ப்ப
என்னை யுலகுய்யு மாறு'
(நாலடியார், 97)
என்னும் ஆன்றோர் வாக்கு இதற்குப் பிரமாணமன்றோ? எல்லாம் ஸந்நிதானத்தின் வண்மையாலுண்டாகும் விசேஷங்களேயன்றி அடியேன் போல்பவரால் உண்டாவது யாது?" என்று மிக்க விநயத்துடன் சொன்னார்.
காசிக் கலம்பகம் முதலியன பாடஞ் சொன்னது.
பின்பு இவர் விடைபெற்றுக் கொண்டு உடனே கொலுமண்டபத்திற்கு விரைந்து வந்து அங்கே நின்ற மடத்துக் காரியஸ்தரொருவரை யழைத்து என்னைச் சுட்டி, "இவருக்குக் காலையாகாரம்பண்ணுவித்து அனுப்பவேண்டும்" என்றார். அவர் அழைத்துச் சென்று அப்படியே செய்வித்து அனுப்பினார். ஆகாரஞ் செய்துகொண்டபின் விரைவிற் சென்று இவரைப் பார்த்தேன். அப்பொழுது காசிக்கலம்பகத்தின் எஞ்சிய பாகத்தின் பாடம் அங்கே நடைபெற்று வந்தது. அதனைக் கேட்டுக்கொண்டே இருந்ததில் அரிய விஷயங்கள் பல எனக்குத் தெரியவந்தன. அன்று பதினொரு மணிக்குள் அந்த நூல் முற்றுப்பெற்றது.
பிற்பகலில் நெடுந்தூரத்திலிருந்து வந்த ஒருவர் சோழமண்டல சதக ஏட்டுப்பிரதி யொன்றை இவரிடம் கொடுத்தார். பெற்று அதைப்படிக்கும்படி சொன்னார். நான் அப்படியே செய்தேன். கேட்டு அரிய விஷயங்கள் சிலவற்றை எனக்குப் புலப்படுத்திக் கொண்டே வந்தார்.
"சீக்கிரத்தில் வந்து இவ்விடத்திலேயே இருந்துகொண்டு எங்களுக்குப் பாடஞ் சொல்ல வேண்டும்" என்று தம்பிரான்களிற் சிலரும் மேலகரம் சண்பகக் குற்றாலக் கவிராயர் முதலிய சிலரும் இவரைக் கேட்டுக்கொண்டார்கள். இவர் அப்படியே செய்வதாக அவர்களுக்கு வாக்களித்துவிட்டு என்னைப்பார்த்து, "நீர் ஊர் போய் வேண்டிய புத்தகங்களை எடுத்துக்கொண்டு நேரே மாயூரம் வந்து படித்துக்கொண்டிரும்; நான் இங்கே வரும்பொழுது உடன்வரலாம்" என்று விடைகொடுத்து அனுப்பினார்.
மாயூரத்திற் பாடஞ் சொன்னது.
நான் ஊர் சென்று சிலதினம் அங்கே இருந்துவிட்டு அப்பால் என் புஸ்தகங்களை யெல்லாம் எடுத்துக்கொண்டு மாயூரஞ் சென்றேன். அதற்குள் இவரும் அங்கே வந்து மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக்கொண்டிருந்தார். அங்கே நிகழ்ந்த பாடம் துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச ஸ்வாமிகள் பிரபந்தத் திரட்டில் நால்வர் நான்மணிமாலை முதலியன; நானும் உடனிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
நான் திரு அம்பர்ப்புராணம் கேட்டது.
இரண்டு தினஞ்சென்ற பின்பு அதற்கு முன்னமே பாடத் தொடங்கி முற்றுப் பெறாமலிருந்த திரு அம்பர்ப்புராணச் சுவடியை எடுத்து வரும்படி எனக்குச் சொன்னார். எடுத்துச் சென்றேன். அதை முதலிலிருந்தே படிக்கச் சொல்லிப் பொருளுஞ் சொல்லி வந்தார். சில தினத்தில் அதிலெழுதியிருந்த பாகம் முற்றுப்பெற்றது. அந் நூலை இடையிடையே திருத்தச் சொன்னபடி திருத்திக்கொண்டே படித்தேன்; "எழுதுகிறவர்களில் நான் சொன்னபடியே எழுதுவோருமுண்டு; வேறுபடத் திருத்தித் தம் மனம் போனவாறே அங்கங்கே எழுதுபவருமுண்டு. இப்புத்தகத்தை இதுவரையில் எழுதி வந்தவர் இரண்டாம் வகையைச் சேர்ந்தவராதலால், ஐயமுற்றுப் படிப்பித்து இப்பொழுது திருத்தும்படி செய்தேன்" என்று திருத்துவித்ததற்கு இவர் காரணஞ் சொன்னார்.
------------------------
[1]. இவர் காசியில் பல வருடங்கள் இருந்தவர்; அங்ஙனம் இருந்து வந்த துறவிகளைக் காசிச்சாமி யென்று அழைப்பது வழக்கம்.
[2]. இவர் பேச்சில் ஸம்ஸ்கிருதச் சொற்கள் விரவி வரும்.
[3]. இதன் முதற்பாகம், 29 - ஆம் பக்கம் பார்க்க.
[4]. இது மடத்தின் ஒரு பாகம்.
[5]. 'முன்' என்றது சிவமாக இருந்த காலத்தை யென்பர்; ஆசிரியரைச் சிவமாகப் பாவிக்க வேண்டுமென்ற முறைபற்றி இச்செய்யுள் இயற்றப் பெற்றது. இதே கருத்து பின் உள்ள பாடல்களிலும் காணப்படும்; குருபூஜையில் பட்டணப் பிரவேசகாலம் முதலியவற்றில் ஆதீனத் தலைவர்கள் பீதாம்பரம் தரிப்பது மரபு.
--------------
6. திருவாவடுதுறை வாஸம்.
அம்பர்ப்புராணம்.
அப்பால் இவர் முன்பு தாம் வாக்களித்திருந்தபடி திருவாவடுதுறை செல்ல நிச்சயித்துப் புறப்பட்டார். அம்பர்ப்புராணத்தை எடுத்துக்கொண்டு உடன்வரும்படி சொன்னமையால் அதனையும் என் புஸ்தகங்களையும் எடுத்துக்கொண்டு உடன்சென்றேன். மாயூரத்தின் மேல்பாலுள்ள கூறைநாடு செல்லும் வரையில் பொதுவாகப் பாடவகைகளைப்பற்றிப் பேசிக்கொண்டே இருந்துவிட்டு அம்பர்ப்புராணச் சுவடியை எடுத்துக்கொள்ளும்படி சொல்லி ஆன பாகத்தில் இறுதிப் பாடலைப் படிக்கச் செய்து கேட்டார். பின்பு மேலே தொடர்ச்சியாகச் செய்யுட்களை இயற்றிச் சொல்லிக்கொண்டே போனார். இவர் பாடத்தொடங்கியது அப்புராணத்தில் நந்தன்வழிபடுபடலத்தில் 54 - ஆவது பாடல். திருவாவடுதுறைத் தெற்கு வீதி செல்லும்வரையில் மேற்பாகத்தைச் சொல்லிக் கொண்டே சென்றார்; நான் எழுதிக்கொண்டே போனேன். அந்தப் பகுதி நந்தனென்னும் அரசன் தனது நகரிலிருந்து புறப்பட்டு இடையிலேயுள்ள சிவஸ்தலங்கடோறும் சென்று சென்று தரிசனம் செய்துகொண்டு திருவம்பரை அடைந்தானென்பது. அதிலுள்ள செய்யுட்களில் தலப்பெயர்களை எதுகையிலமைத்திருத்தலும் வழியெதுகைகளும் ஸ்தலங்களின் சரித்திரங்களும் இன்பத்தை உண்டுபண்ணின. இவர் விரைவாகச் செய்யுள் செய்யும் ஆற்றலையுடையவரென்று பலரும் புகழ்ந்து சொல்லுதலைக்கேட்டு அந்த நிலைமையை எப்பொழுதாவது பார்க்கும்படி நேருமாவென்று ஆவலோடு பலநாளாக எதிர்பார்த்திருந்த எனக்கு இவர் பாடல்களைச் சொல்ல அவற்றை எழுதும் பாக்கியம் அன்று கிடைத்ததைக் குறித்து மெத்தச் சந்தோஷம் அடைந்தேன். 'இனி யாரேனும் இவரைப்போலப் பாடப் போகிறார்களா?' என்ற எண்ணமும் எனக்கு அப்போது உண்டாயிற்று. ஏதேனும் ஒரு பாடலைச் செய்துவிட்டு அதைப் பிறரைக் கொண்டும் திருத்துவித்துத் தாமே கையில் எடுத்துக்கொண்டு, "இச்செய்யுள் எப்படியிருக்கிறது பாருங்கள். நான் வெகு சீக்கிரத்திற் செய்தேன். இதைப்போலவே யாராவது பாடுவார்களா?" என்று சிலர் பெருமை பாராட்டிக் கொண்டிருத்தலைப் பலவிடத்திற் கண்டிருக்கிறேன். இவரோ சிறிதேனும் பெருமிதமின்றியும் தம்முடைய கவியைப் பாராட்டாமலும் வேறு பேச்சின்றியும் மேலே மேலே செய்யுள் செய்துகொண்டு போதலைப் பார்த்த எனக்கு விம்மிதமுண்டாயிற்று.
கவிஞர்களுடைய பேராற்றல் இத்தகையதென்பதைச் சரித்திரங்களின் மூலமாக அறிந்தவனேயன்றி அன்று போல நான் நேரிற்பார்த்ததில்லை. ஆதலின் ஒரு மகாகவியின் வாக்கிலிருந்து ஆற்றொழுக்கைப் போலக் கவிதாப்பிரவாகம் பெருகிக்கொண்டிருப்ப அதனைக் காதினாற்கேட்டும் கையினாலெழுதியும் மனத்தினாலறிந்தும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதற்கரியது.
வண்டியிற் செல்லும்பொழுது உண்டான அசைவால் ஏடுகளில் நான் எழுதிய பாடல்கள் வரிகோணியும் எழுத்துக்கள் நிலைகுலைந்தும் இருத்தலை அந்தச் சுவடியில் இன்றும் காணலாம்.
அந்தப் பகுதியிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:
(விருத்தம்)
{6.1}
"வெற்றியூ ரொருமூன் றட்ட விமலனைக் கமலத் துள்ளான்
பற்றியூர் கலுழப் புள்ளான் பறந்திடந் தினுங்கா ணானைச்
சுற்றியூர் கோள்வ ளைந்த மதிநிகர் சோலை சூழ்ந்த
ஒற்றியூர் புகுந்து போற்றி யுவணின்று மெழுந்தா னன்றே."
{6.2}
"எயிலையன் றட்ட மூர்த்தி யெல்லாமா மட்ட மூர்த்தி
அயிலையங் கையிற் கொண்டா னைங்கையான் றந்தை மேய
கயிலையென் றெடுத்துப் பேசும் புன்னையங் கானல் சூழும்
மயிலையம் பதியுட் புக்கு வள்ளலை வணங்கிப் போற்றி "
{6.3}
"[1]ஒருகழு கும்ப ரேகி யுழன்றுங்கா ணரியான் பாதம்
இருகழு கென்றுங் காணூஉ விறைஞ்சொரு வரையும் போற்றி
அருண்மய மகலா தாக வழன்மய மாயி னான்செம்
பொருண்மய மவனே யென்னப் பொலிதிரு வரையும் போற்றி."
திருவாவடுதுறையிற் பாடம் ஆரம்பித்தது
திருவாவடுதுறையின் தெற்கு வீதி சென்றவுடன் இவர் தம்முடைய விடுதிக்குச் சென்று அநுஷ்டானம் செய்து கொண்டார். பின்பு ஞானாசிரியரைத் தரிசித்தற்காக மடத்திற்குச் சென்றபொழுது இவருடைய வரவை எதிர்பார்த்துக்கொண்டே இருந்த குமாரசாமித் தம்பிரான் முதலியோர் முகமலர்ச்சியோடு வரவேற்று ஒடுக்கத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இவர் தேசிகரை வழக்கம்போலவே தரிசித்து அவருடைய கட்டளையின்படி அருகிலிருந்தார். இவருடைய நல்வரவைக் குறித்துத் தேசிகர் பாராட்டியதன்றி, "படிப்பதற்குத் தம்பிரான்களும் பிறரும் மிக்க ஆவலோடிருக்கிறார்கள். நாளைக் காலையிலேயே பாடம் தொடங்கி விடலாம். பாடங்களை இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். குமாரசாமித் தம்பிரான் நல்ல பயிற்சியுள்ளவராதலால் அவருக்கு ஒரு பாடமும் மற்றவர்களுக்கு ஒரு பாடமும் வைத்துக்கொண்டால் தங்களுக்கு அதிக சிரமம் இராது. ஒன்றைக் காலையிலும் மற்றொன்றைப் பிற்பகலிலும் வைத்துக்கொள்ளலாம்” என்று சொன்னார்.
மறுநாட் காலையில் இவர் அநுஷ்டானம் செய்துவிட்டு ஒடுக்கத்திற்குச் சென்றார். தம்பிரான்களும் பிறரும் அநுஷ்டானாதிகளை முடித்துக்கொண்டு அங்கே வந்து ஸித்தமாயிருந்தார்கள். 'என்ன பாடம் இப்போது ஆரம்பிக்கவேண்டும்?' என்று யோசித்தபொழுது சுப்பிரமணிய தேசிகர், "குமாரசாமித் தம்பிரானுக்குத் திருவானைக்காப் புராணமும் ஏனையோர்க்குச் சீகாளத்திப் புராணமும் தொடங்கலாம்" என்று சொன்னார். இவ்வாறு அவர்கள் கூறுவதைக் கேட்ட நான், "நம்மை ஒருவரும் கவனிக்கவில்லையே" என்றெண்ணிச் சற்று முகவாட்டத்தோடு இருந்தேன். இப்புலவர்பிரான் என்னை நோக்கினார். பார்த்த குறிப்பை அறிந்த தேசிகர், "இவரை எந்த வகையில் சேர்க்கலாம்?" என்ற காலத்தில் இவர் என்னைப் பார்த்தார். ஆவல் மிகுதியால், "நான் இரண்டு பாடங்களையும் கேட்க ஸித்தமாயிருக்கிறேன்" என்று சொன்னேன் . "புத்தகங்கள் உள்ளனவா?" என்று தேசிகர் என்னை விசாரித்தார். இல்லையென்றேன். உடனே மடத்துப் புத்தகசாலையிலிருந்த திருவானைக்காப் புராணத்தையும், சீகாளத்திப் புராணத்தையும் வருவித்து எனக்கு அளித்தார். "இந்த இரண்டு பாடமும் நடக்கும்பொழுது செய்யுட்களை நீரே படித்து வாரும்" என்று தேசிகர் கூறினமையால் நான் அவ்வாறே படித்து வருவேனாயினேன்.
முதலில் திருவானைக்காப் புராணத்தில் ஸ்ரீ விநாயகர் துதி படிக்கப்பட்டது. அதற்குப் பொருள் சொல்லி முடித்தவுடன் மற்ற வகையாருக்குச் சீகாளத்திப் புராணப்பாடம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் விநாயகர் துதி முடிந்தவுடன் இவரைப் பார்த்து, "நாள்தோறும் பிற்பகலிற் சீகாளத்திப்புராணப் பாடத்தை வைத்துக்கொள்ளுங்கள். முற்பகலில் திருவானைக்காப் புராணம் நம் முன்னே நடக்கட்டும்" என்று தேசிகர் சொல்லவே இவர் அங்ஙனமே செய்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
எனக்கு ஆகாரம் பண்ணுவித்தது.
அப்பால் மறுநாட் காலையில் திருவானைக்காப் புராணத்தின் மேற்பாகத்தைச் சுப்பிரமணிய தேசிகர் முன் படிக்கத்தொடங்கினோம். இக் கவிநாயகர் எனக்கு மட்டும் தெரியும்படி, "ஆகாரம் பண்ணிவிட்டீரா?" என்று கேட்டார். "இல்லை" என்றேன். அதைக் கண்ட தேசிகர், "ஐயா, என்ன சொன்னீர்கள்?" என்ன, பிள்ளையவர்கள், "காலையில் ஆகாரம் பண்ணி யாயிற்றாவென்றேன்" என்று சொல்லிவிட்டு மேலே பாடஞ் சொல்லத் தொடங்குமுன், தேசிகர் அங்கே நின்ற பிராமண காரியஸ்தரொருவரை யழைத்து, "ஒவ்வொரு நாளும் காலையில் இவருக்கு ஆகாரம் பண்ணுவித்து அனுப்பவேண்டும். மற்றக் காலங்களிலும் ஆகார விஷயத்தில் நீரே இவரைக் கவனித்துக்கொள்ள வேண்டும்" என்று உத்தரவு செய்து என்னைப் போய்வரும்படி சொன்னார்.
நான் போய்வரும் வரையிற் பாடம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. சீக்கிரத்திற்சென்று வந்து படிக்கத்தொடங்கினேன். தேசிகர் கவனித்துக்கொண்டே யிருப்பவராகி இடையிடையே தோற்றிய அரிய கருத்துக்களை விளங்கச் சொன்னார். மணி பத்தானவுடன், "நீங்கள் போய்ப் பூஜையை முடித்துக்கொண்டு இங்கே பூஜையின் தரிசனத்துக்கு வரவேண்டும்" என்று தேசிகர் கட்டளையிட அங்ஙனமே இவர் சென்றார்.
நான் படித்த முறை.
படிக்கும்பொழுது ஒவ்வொரு பாடலையும் முதலில் ஒரு முறையும், பொருள் சொல்லும்பொழுது சிறுசிறு பாகமாக ஒரு முறையும், பின்பு ஒருமுறையும் நான் படிப்பது வழக்கம். பாடங் கேட்கும் காலங்களிலெல்லாம் இவ்விதமே நடைபெறும். திருவானைக்காப்புராணம் மிகவும் கடினமான நூலாதலால் இவர் எவ்வளவு தெளிவாகச் சொல்லியும் முதலில் நாளொன்றுக்கு ஐம்பது பாடல்களுக்குமேல் நடைபெறவில்லை.
உடையவர் பூஜைபெற்றது.
இப்படி நடைபெறுகையில் ஒரு வாரத்திற்கெல்லாம் மகா சிவராத்திரி புண்ணிய காலம் வந்தது. அன்றைத் தினம் பன்னிரண்டு மணிவரையிற் காலைப் பாடம் நடைபெற்றது. எல்லோரும் உபவாஸமிருக்கும் தினமாதலால் பிற்பகலிற் பாடம் நடைபெறவில்லை. அன்று உடையவர் பூஜை இவருக்குத் தேசிகரால் எழுந்தருளுவிக்கப்பட்டது. அப்பொழுது அதைக்குறித்துத் தேசிகர்மீது இவர் பின்னுள்ள பாடலை இயற்றி விண்ணப்பஞ் செய்து கொண்டனர்:
(கட்டளைக் கலித்துறை)
{6.4}
[2]"பெரும்புங் கவர்புகழ் கோமுத்தி வாழ்சுப் பிரமணிய
அரும்புங் கவன்பதம் யான்றொழ வென்கை யருட்குறியொன்
றிரும்புங் கரைய வெடுத்தளித் தானதை யேத்தல்செய்வேன்
கரும்புங் கனியு மெனவன்பு சாருங் கதியுமுண்டே"
அது தொடங்கி இவர் அபிஷேகம் அருச்சனை நைவேத்தியம் முதலியவற்றிற்குரிய பொருள்களை மிகுதியாக வருவித்து நாள்தோறும் நெடுநேரம் பூஜை செய்து வருவாராயினர். இளநீர் வழுக்கை , பஞ்சாமிர்தம், நிவேதனங்கள் முதலியவை அங்கேயுள்ளவர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
திருவானைக்காப் புராணம் உபதேசப்படலப் பாடம் நடைபெறும்பொழுது பிள்ளையவர்களும் அங்கே வந்திருந்த சைவ சாஸ்திரத்தில் நல்ல பயிற்சியுள்ள பெரியோர்களும் கேட்டு இன்புறும்படி அப்படலத்திலுள்ள சாஸ்திரக் கருத்துக்களைச் சுப்பிரமணிய தேசிகர் நன்றாக விளக்கிச் சொன்னார். அந்த அருமையைப் பிள்ளையவர்களும் ஏனையோரும் பின்பு அடிக்கடி பாராட்டிக் கொண்டே வந்தார்கள்.
நான் மல்லிகைமாலை பெற்றது.
பாடம் நடைபெறுகையில் ஒருநாட் காலையில் திருவிடைமருதூர்க் கோயிலிலிருந்து வஸந்தோத்ஸவ விசேஷத்தை முன்னதாகத் தெரிவிப்பதற்கு வந்த ஆதிசைவர் முதலியோர்களால் திருநீற்றுப்பிரஸாதம் முதலியன தேசிகரிடம் சேர்ப்பிக்கப்பெற்றன. அவற்றுள் ஒரு தாம்பாளத்தில் மல்லிகை மாலைகள் மிகுதியாக இருந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு இப்புலவர் தலைவர் என்னையும் பார்த்தார். அக் குறிப்பை யறிந்த தேசிகர் அவ்வளவு மாலைகளையும் எடுத்து நான் வாங்கிக்கொள்ளும்படி வீசினார். அவற்றைக் கையிலேந்தி வைத்துக்கொண்டு பாடல்களைப் படிக்கத் தொடங்கினேன். இவர் மீட்டும் என்னைப் பார்த்து "இம் மாலைகளைக் குடுமியிற் சுற்றிக்கொள்ளும்" என்று குறிப்பித்தார். குறிப்பித்தும் தேசிகருக்கு முன் அங்ஙனம் செய்வதற்கு அஞ்சினேன். அதனை அறிந்த அவர், "இம்மாலைகளைக் குடுமியிற் சுற்றிக் கொண்டே படியும்" என்றார். அவர் வார்த்தையை மறுத்தற்கு அஞ்சி அவ்வாறு செய்தேன். அது தொடங்கி நானிருக்கும் பொழுது சிவப்பிரஸாதங்களோடு மாலைகள் வந்தால் அவற்றைத் தேசிகர் எனக்கு அளித்து விடுவதுண்டு. அவருடைய பரிபூர்ண தசை வரையில் அவ்வழக்கம் நிகழ்ந்து வந்தது.
ஸ்ரீ அப்பா தீட்சிதர் ஆட்சேபித்தது.
காலைப் பாடத்தில் திருவானைக்காப்புராணம் முடிந்த பின்பு திருநாகைக்காரோணப் புராணம் தொடங்கப் பெற்றது. அதனைப் படித்துக்கொண்டு வருகையில் தலவிசேடப் படலத்திற் பிரளய கால வர்ணனைப் பகுதி நடைபெறும்போது திருவாலங்காட்டு அப்பாதீட்சித ரென்பவர் வந்தார். அவர் ஸ்ரீ அப்பைய தீட்சிதர் பரம்பரையினர்; வியாகரணத்திலும் சைவ சாஸ்திரங்களிலும் நல்ல பயிற்சியுடையவர். அவரிடத்தில் எத்தனையோ சிஷ்யர்கள் மடத்தின் உதவியாற் படித்துப் பெரிய வித்துவான்களாக ஆனதுண்டு. அப்பொழுதும் சிலர் படித்துக்கொண்டிருந்தார்கள்.
வந்து அங்கேயிருந்த தீட்சிதர் நாங்கள் படிக்கும் பகுதியைக் கவனித்துக் கேட்பாராயினர். அங்ஙனம் கேட்டு வருகையில் அவர் ஒவ்வொரு பாடலிலுமுள்ள விஷயத்தை என்ன காரணத்தாலோ [3]ஆக்ஷேபித்துக்கொண்டே வந்தார். பிள்ளையவர்கள் சுருக்கமாக விடை கூறியும் சமாதானம் சொல்லியும் அதனைப் பாராட்டாமல் அவர் மீட்டும் மீட்டும் ஆட்சேபம் செய்து வந்தனர். அதனால் இப்புலவர்பெருமானுக்கு அதிருப்தி உண்டாயிற்று. அதனையும் பாடம் தடைப்படுதலையும் அறிந்த சுப்பிரமணிய தேசிகர் அவர் வந்த காரியத்தை விசாரித்து முடிவுசெய்து விடைகொடுத்து விரைவில் அவரை ஊருக்கு அனுப்பிவிட்டு, "பாடம் நடக்கலாம்" என்றனர். வழக்கம்போலவே பாடம் நடைபெற்றது. இக் கவிஞர்பிரான், "திருவாலங்காட்டுத் [4]தியாகராஜ சாஸ்திரிகளிருந்தால் இந்தப் பாகத்தைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைவார்கள். இங்கே இப்போது அவர்கள் இல்லாதது ஒரு குறையே" என்று எங்களிடம் சொல்லிக் கொண்டே தம்முடைய வீடு சென்றார்.
'தர்மஸங்கடமான விஷயம்.'
மறுநாள் பாடம் நடைபெற்றபொழுது மேற்கூறிய தியாகராஜ சாஸ்திரிகள் புதுக்கோட்டையிலிருந்து திருவாலங்காட்டுக்குப் போய்விட்டு உடனே ஆதீன கர்த்தரைப் பார்ப்பதற்காக மடத்திற்குத் தம் சிஷ்யர்களுடன் தற்செயலாக வந்தார்.
அவர் உள்ளே வந்தவுடன் சுப்பிரமணிய தேசிகர் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றுச் சில நேரம் பேசிக்கொண்டிருந்தார். இக்கவிஞர் தலைவரும் சாஸ்திரிகளோடு சில நேரம் ஸம்பாஷித்தனர். அப்பால், "நேற்று நடந்த பாகத்தைச் சாஸ்திரிகளவர்களுக்குப் படித்துப் பொருள் சொல்ல வேண்டும்" என்று தேசிகர் சொன்னார். அவ்வண்ணமே நாலைந்து செய்யுட்கள் ஆயின. ஒவ்வொரு பாடலின் பொருளையுங் கேட்கும்போது சாஸ்திரிகள் ஆனந்தமடைந்து, "உங்களைப்போல் பாடுகிறவர்கள் யார் இருக்கிறார்கள்? இவ்வளவு அழகாகக் கற்பனை அமைக்கும் சக்தி உங்களுக்குத் தானிருக்கிறது. தமிழிலே பரிசயமில்லாத எனக்கே இந்தப் பாடல்களின் பொருள்கள் நன்றாக விளங்குகின்றன. ஸாஹித்ய மென்பது இதுதான். பூர்வஜன்மத்தில் நீங்கள் கம்பராக இருக்கவேண்டும்" என்று இக் கவிநாயகரைப் பாராட்டிக் கொண்டிருந்தார்.
சுப் : இந்தப் பாடல்களில் ஏதேனும் குற்றம் காணப்படுகிறதா ?
தியாக : இந்தப்பாடல்கள் ஸஞ்சரிக்கிற இடங்களிற் கூடக் குற்றம் இராதே. அப்படியானால் இவற்றில் எப்படியிருக்கும்? நிர்த்தோஷமான வாக்கு.
சுப் : இவற்றில் ஏதாவது குற்றமிருக்கிறதென்று யாராவது சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
தியாக : அவனை மஹா அயோக்யனென்றும் துஷ்டனென்றும் மூர்க்கனென்றும் மஹா அஹங்காரியென்றும் சொல்வேன். அப்படிச் சொன்னவன் யார்?
சுப் : உங்களுடைய குருவே!
தியாகராஜ சாஸ்திரிகள், "அப்படியா!" என்று நடுநடுங்கி உடனே எழுந்து இரண்டு கைகளையும் தலைமேற் குவித்துக்கொண்டு [5]வடதிசையை நோக்கிக் கண்ணை மூடிக்கொண்டு, "ஹரஹர மஹா தேவா! சிவ சிவா! என்னுடைய பதட்டமான வார்த்தைகளை க்ஷமிக்கவேண்டும். ஆசார்ய மூர்த்தே!" என்று சொல்லிக் கொண்டும் கண்ணிற் கருவிழிகளை மேலே செலுத்தித் தியானித்துக் கொண்டும் நின்றார்.
சுப் : (புன்முறுவல் கொண்டு) சாஸ்திரிகளே ! இருக்க வேண்டும். இவ்வளவு தூரம் நீங்கள் மனத்தைச் செலுத்துவீர்களென்பது நமக்குத் தெரியாது. ஏதோ நடந்ததைச் சொல்ல வேண்டியிருந்தமையால் சொல்லும்படி நேர்ந்தது. பொறுத்துக்கொள்ள வேண்டும். பிள்ளையவர்களிடத்தில் தாங்கள் மிகுந்த அபிமானமுடையவர்களாதலால் தங்களிடத்திற் படித்துக் காட்டித் தங்களுடைய ஸந்தோஷத்தைப் பெறவேண்டுமென்பதே நமது கருத்தாதலால் இங்ஙனம் செய்யலாயிற்று.
தியாகராஜ சாஸ்திரிகள், "ஸந்நிதானம் இப்படிப்பட்ட தர்மஸங்கடமான விஷயத்திற் கொண்டுவந்து விட்டதே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே! இனிமேல் இப்படிப்பட்ட ஸங்கடத்தில் என்னை இழுத்துவிடக் கூடாது" என்று சொல்லிக்கொண்டேயிருக்கையில் நேரமாய்விட்டபடியால் எல்லோரும் விடைபெற்று எழுந்து சென்றார்கள். முதல் நாள் மிகுந்த வருத்தமடைந்து கொண்டேயிருந்த எங்களுக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி பெரியதோர் ஆறுதலை விளைவித்தது. எல்லோருக்கும் விடை கொடுத்து விட்டுத் தேசிகர் ஸ்நானத்துக்குச் சென்றனர்.
ஒருபாடலின் சரியான பாடம்.
ஒரு சமயம் பல அன்பர்களிடம் துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகளுடைய புலமைத்திறத்தைப் பாராட்டிக்கொண்டிருக்கையில் அவர் பிடாரியென்னும் தெய்வத்திற்கு ஒரு சீட்டுக் கவி எழுதி விடுத்ததாகச் சொல்லிவிட்டு இவர் என்னைப் பார்த்தார். அக்குறிப்பை அறிந்து நான்,
(விருத்தம்)
{6.5}
"திருந்துதமி ழிலக்கணவைந் திணைக்கோவை விருத்தகிரிச்
செல்வர்க் கோதும்
பெருந்தகைமை யுடையம்யாம் விடுமோலை வெங்கனூர்ப்
பிடாரி காண்க
இரும்புவியி லொருமுருங்கைக் கொம்பொடியா மற்காத்திங்
கிருக்கும் நீரும்
முருங்கைதனை வேரோடுங் களைவதென்றா லீதுனக்கு
முறைநன் றாமோ"
என அந்தச் செய்யுளைச் சொன்னேன். இவர், "விருத்தகிரிச் செல்வரென்பது பாடமன்று; திருவெங்கைச்செல்வ ரென்பதே பாடம்" என்றார். ‘இவர் கூறுவது பிழையாயிருக்குமா? இவருடைய பாடமன்றோ கொள்ளற்பாலது?' என்பதை அச்சமயத்தில் உணராமல் நான் மறுத்து, "தனிப்பாடற்றிரட்டின் அச்சுப் பிரதியில் அப்படித்தான் இருக்கிறது" என்றேன். நான் அங்ஙனம் கூறியதைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் என்னைப் பார்த்தார்கள். அவர்கள் பார்வையினால்தான் நான் மறுத்துச் சொன்னது பிழையென்பது புலப்பட்டது. நான் செய்தது குற்றமெனினும் இவர் அதனைக் காட்டிக்கொள்ளாமல், "அச்சிலிருப்பதால் சரியான தென்று நினைக்கக் கூடாது. பாஷையிற் பயிற்சியில்லாதவர்கள் துணிந்து எதையும் அச்சிட்டு விடுவார்கள். விஷயம் தெரிந்தவர்கள் அச்சிட்டால் சரியாக இருக்கும்" என்று சொன்னார். பிற்காலத்தில், இவர் சொன்னதே சரியென்று என் அனுபவத்திலும் தெரியவந்தது.
மகா வைத்தியநாதையர் பெருமையை நான் அறிந்தது.
பிள்ளையவர்கள் வேறு காரியங்களைக் கவனித்துக்கொண்டிருக்கையில் நானும் சில மாணவர்களும் அவர்களுடைய நோக்கத்தின்படியே இரவில் ஆதீன கர்த்தரிடஞ் சென்று சில சமயங்களிற் பேசிக்கொண்டிருந்து விட்டு வருவதுண்டு. அக்காலங்களில் "இன்றைக்கு என்ன பாடம் நடந்தது? பாடங்களில் என்ன என்ன விசேடங்களை அறிந்தீர்கள்?" என்று அவர் கேட்பார். கேட்டவற்றிற்கு ஜாக்கிரதையாக விடை சொல்லிவிட்டு வருவோம். நாங்கள் சொல்லுவதில் ஏதேனும் குற்றமிருந்தால் அவர் அதைத் திருத்துவார்.
நாங்கள் செல்லுங்காலங்களில் [6]அவருக்கு முன் திருக்குறள் - பரிமேலழகருரை, திருக்கோவையாருரை, இலக்கண விளக்கம் முதலியவற்றுள் ஏதேனும் ஒரு பாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும். அதுவும் எங்களுக்குப் பேரூதியமே. மாணாக்கர்களோடு பழகுவதில் அவருக்கு மிகுந்த திருப்தியுண்டு; "ஏதேனும் ஆக வேண்டியதுண்டா?" என்று எங்களைக் கேட்டு நாங்கள் சொல்லுவனவற்றை அப்பொழுது அப்பொழுது முடித்துக் கொடுப்பார்.
ஒருநாள் தேசிகர் என்னை நோக்கி, "ஸங்கீதப் பழக்கத்தை விருத்தி செய்து கொண்டால் நலமாக இருக்கும்; அதனோடு சேர்ந்து தமிழ்க்கல்வியும் மிகப்பயன்படும்; மகா வைத்திய நாதையரவர்கள் ஸங்கீதப் பயிற்சியோடு தமிழிலும் நல்ல பாண்டித்யமுள்ளவர்களாக இருப்பதால் அவர்களுடைய வித்தை உலகத்தில் நன்றாக விளங்குகின்றது" என்று சொன்னார்; அன்றியும், தாம் கல்லிடைக்குறிச்சியில் இருக்கும்பொழுது அவர் தம் தமையனாருடன் அங்கே வந்ததும் அவருடைய ஒப்புயர்வற்ற கானத்தைக் கேட்டு மற்ற ஸங்கீத வித்துவான்களைக் காட்டிலும் அவர்க்கு அதன்பால் மிக்க ஆற்றல் இருத்தலையறிந்து ஒரு மகா சபை கூட்டி அவருக்கு மகா வைத்தியநாதைய ரென்ற பட்டத்தைத் தாமளித்ததும் பிறவுமாகிய வரலாறுகளை யெல்லாம் சொன்னார். சொல்லிக்கொண்டு வரும்பொழுது, "அவர்களைத் தரிசிக்க வேண்டுமென்கிற விருப்பம் எனக்கு நெடுநாளாக உண்டு; அதற்குரிய நற்காலம் இதுவரையில் எனக்குக் கிட்டவில்லை. இனிக் கிடைக்குமென்று நினைக்கிறேன்" என்று விநயத்துடன் சொல்லி விட்டு வந்தேன்.
இப்படிச் சென்று வந்தமையால், ஒவ்வொரு நாளிலும் நாங்கள் தெரிந்துகொண்ட அரிய விஷயங்கள் பலவாகும். நிகழ்ந்தவற்றை உடனுடன் பிள்ளையவர்களிடம் தெரிவித்து விடுவோம்.
ஸ்ரீ சுந்தரஸ்வாமிகள் வந்தது.
சில தினங்களுக்குப் பின்பு ஒருநாட் காலையில், கோடக நல்லூர் ஸ்ரீ சுந்தரஸ்வாமிகள் திருவையாறு முதலிய ஸ்தலங்கள் ஏழனுக்கும் திருமழபாடிக்கும் திருப்பணி செய்வித்து ஒரே தினத்தில் அந்த எட்டனுக்கும் கும்பாபிஷேகம் செய்விக்க நினைந்து அந்தச் செலவிற்காகப் பலரிடத்துஞ் சென்று பொருள் சேகரித்துக்கொண்டு அதன் பொருட்டே திருவாவடுதுறைக்கும் வந்து ஓரிடத்தில் தங்கினார். மகா வைத்தியநாதையர் முதலிய பல சாம்பவர்களும் திருநெல்வேலி ஐயாஸாமிபிள்ளையவர்கள் முதலிய வேறு பல அடியார்களும் செறிந்த கூட்டம் அவருடன் வந்திருந்தது. அவருடைய வரவைக் கேட்ட இக்கவிஞர்கோமான் அவரைத் தரிசிக்க விரும்பி வந்தார். பிள்ளையவர்களைக் கண்டவுடன் ஸ்வாமிகள் எழுந்து நிற்க இவர் வந்தனஞ் செய்தார். அப்பொழுது ஸ்வாமிகள், "நீங்கள் சிவபக்த சிரோமணிகள். உங்கள் வந்தனத்துக்கு நான் உரியவனல்லேன். ஆதலின் அதனை ஈசுவரனுக்கு அர்ப்பணஞ் செய்து விட்டேன்" என்று சொல்லிக் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டு அயலிலிருக்கச் செய்தார்; அப்பால் இருவருமிருந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அங்ஙனமிருக்கையில், ஸ்வாமிகள் எப்பொழுது பார்க்க வரலாமென்று ஸமயந்தெரிந்து வரும்படி ஆதீனகர்த்தரிடம் ஓரன்பரை அனுப்பினார்; அது தெரிந்த தேசிகர் உடனே அழைத்துக்கொண்டு வரும்படி தக்கவர் சிலரை அனுப்பினார். ஸ்வாமிகள் மடத்திற்குச் சென்றார்; முன்னே சென்று மகா வைத்தியநாதையர் ஸ்வாமிகளின் வரவைக் கூறவே தேசிகர் ஒடுக்கத்து வாயிற்புறத்தே வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று ஸ்வாமிகளுடன் இருக்க மற்றவர்களும் இருந்தார்கள். கும்பாபிஷேக விஷயமாக ஸல்லாபம் நடைபெற்றது.
மகா வைத்தியநாதையருடைய இசைப் பாட்டு.
அதன் பின்பு ஆதீனகர்த்தர் மகா வைத்தியநாதையரை நோக்கி, "உங்களைத் தரிசிக்கவேண்டும்; உங்களுடைய இனிய கானத்தைக் கேட்க வேண்டுமென்று இங்கே படித்துக்கொண்டிருக்கும் சிலர் விரும்புகிறார்கள்; ஆதலால் பிள்ளையவர்களியற்றிய நூல்களிலிருந்து சில பாடல்களைச் சொல்லிப் பொருளும் சொல்ல வேண்டும்" என்றார். அவர் சூதசங்கிதையிலிருந்து, கயிலையங்கிரியிற் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருவோலக்கக் காட்சியைப்பற்றிய சில பாடல்களை இசையோடு சொல்லிப் பொருளும் கூறி வரும்பொழுது கேட்டோரெல்லாருக்கும் உண்டான ஆனந்தத்திற்கு எல்லையில்லை. எப்பொழுதும் யாவர்க்கும் இன்பத்தை விளைவிக்கும் பிள்ளையவர்களுடைய பாடல்கள் அவருடைய திவ்ய ஸங்கீதத்தோடு கலந்து வெளிப்படும்பொழுது தம்மைத்தாமே வென்று விட்டன. அதை நினைக்கும் பொழுது,
(விருத்தம்)
{6.6}
"தென்றல் நாடன் றிருமகளைத் தேவர் பெருமான் மணம்புரிய
மன்ற லழகா லொருநகரொப் பதிக மின்றி மதுரைநகர்
அன்று தானே தனக்கொப்ப தாகும் வண்ண மணியமைத்தார்
இன்று தானே தனக்கதிக மென்னும் வண்ண மெழிலமைத்தார்"
(திருவிளை. உக்கிரகுமாரனுக்கு. 12)
என்னும் பாடற் பொருள் ஞாபகத்திற்கு வந்தது.
இப் புலவர்திலகருடைய பாடல்களைக் கேட்டவர்களின் கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் பெருகிற்று. இவருடைய கண்களிலிருந்தும் அது பெருகிவந்தது. பின்பு தேசிகர், [7]பெரிய புராணக் கீர்த்தனத்திற்குப் பிள்ளையவர்கள் கொடுத்த [8]சிறப்புப் பாயிரப்பாடல்களைச் சொல்லும்படி சொன்னார். அவர் சொல்லிக் காட்டியபொழுது அவற்றின் இறுதிப்பாடலில் ஆதீன ஸம்பிரதாயத்தை அமைத்திருந்த அருமை எல்லோருக்கும் மிக்க வியப்பை உண்டுபண்ணிற்று. அப்பால் பெரிய புராணக் கீர்த்தன அச்சுப் புத்தகங்களைத் தேசிகருக்கும் இக்கவிஞர்பிரானுக்கும் மகாவைத்தியநாதையர் சேர்ப்பித்தார். அப்பொழுது அதிலிருந்து சில கீர்த்தனங்களைப் பாடிக் காட்டும்படி தேசிகர் விரும்ப அப்படியே சில மகாவைத்தியநாதையராற் பாடிக்காட்டப்பட்டன. அவை பெரும்பாலும் பெரியபுராணக் கருத்தையும் சொற்றொடர்களையுமே தழுவி இயற்றப் பெற்றனவாதலின் கேட்ட எல்லோரும் மகிழ்ச்சியுற்றார்கள்.
அப்பால் அம்பலவாண தேசிகர் கலம்பகத்திலிருந்தும் அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழிலிருந்தும் சில பாடல்களும் அவற்றிற்குப் பொருளும் அவராற் சொல்லப்பட்டன. சுப்பிரமணிய தேசிகர் பின்பு மகாவைத்தியநாதையரைப் பார்த்து, "தங்கள் தமையனார் இயற்றியவற்றிலிருந்து வேறு ஏதாவது சொல்லவேண்டும்" என்றார். உடனே அவர் தம் தமையனார் இயற்றிய திருவையாற்றுத் திரிபந்தாதியிலிருந்தும் மயூரகிரி இரட்டைமணி மாலையிலிருந்தும் சில செய்யுட்களைச் சொல்லிக் காட்டினார். தேனும் பாலும் கலந்தாற்போல இயலும் இசையுங் கலந்து வெளிப்பட்ட அந்தச்சுவை சொல்லற்பாலதன்று. வந்த காரியத்தை ஒருவாறு முடித்துக் கொண்டு சுந்தர ஸ்வாமிகளும் மற்றவர்களும் விடைபெற்றுத் திருவையாறு சென்றார்கள்.
பட்டீச்சுரப் புராணம்.
பட்டீச்சுரத்திற்கு ஆறுமுகத்தாபிள்ளையின் வேண்டுகோளின்படி முன்னமே ஒரு புராணம் இவராற் செய்யத்தொடங்கப்பெற்று நாட்டுப் படலத்திற் சில பாகம் வரையில் ஆகியிருந்தது. அந்தப் புத்தகம் எப்படியோ கைதவறிப் போய்விட்டது. மீட்டும் முதலிலிருந்து புராணத்தைச் செய்யவேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டமையால் இவர் நல்லவேளையில் ஆரம்பித்துச் செய்து வருவாராயினர். அப்போது அத்தலத்துள்ள மதவாரணப் பிள்ளையார் மீது ஒரு துதிகவி செய்யத் தொடங்கி, 'மதவாரணப் பிள்ளையார் துதி' என்ற தலைப்பை எழுதுவித்துப் பாடலியற்ற யோசித்த பொழுது அதனையறிந்து, "முன்னமே அப்பிள்ளையார் மீது யமகமாக ஐயாவவர்கள் [9]ஒரு பாடல் செய்திருப்பதுண்டு" என்றேன்; உடனே அதைச் சொல்லச் சொன்னார்; நான் சொன்னவுடன் அதனையே எழுதிக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அடுத்த பாடலைச் செய்யத்தொடங்கி விட்டார்.
என்பால் உண்டான கோபம்.
யாரோ ஒருவருடைய கோளினால் ஒரு தினம் இவர் என் மீது கோபங்கொண்டு என்னுடன் பேசாமலே இருந்துவிட்டார். யார் மீது கோபம் வந்தாலும் சிலதினம் அவரோடு பேசாமலே இருந்து விடுவது இவருக்கு இயல்பு; எந்தச் சமயத்தும் யாரையும் கடிந்து பேசுவதேயில்லை.
அன்று மாலை அநுஷ்டானஞ் செய்துவிட்டு வந்து தம் வீட்டுத் திண்ணையில் இவர் சயனித்துக் கொண்டார். ஏடுகளுடன் சென்று இவரது தலைப்பக்கத்திலிருந்த தீபஸ்தம்பத்தின் அருகில் வழக்கப்படியே காத்திருந்தேன். சில நேரம் சென்ற பின்பு [10]"இறவி தபுத் தலையுணர்த்த" என்பது இவர் வாக்கினின்றும் எழுந்தது. உடனே அதனை எழுதிவிட்டு அச்செய்யுளின் மேற்பாகத்தையும் இவர் சொல்லச் சொல்ல எழுதி முடித்தேன். வழக்கம் போலவே படித்துக் காட்டினேன். அப்பால், 'சரி' என்று ஒரு சப்தம் இவர் வாக்கிலிருந்து உண்டாகவே அச்சொல்லுக்கு ஆகாரம் பண்ணிக்கொண்டு வரலாமென்பது பொருளென்றறிந்து சென்று போஜனம் செய்து வந்து வழக்கம் போலவேயிருந்து வந்தேன்.
பாடம் நடக்கும்போது சென்று படிப்பதும் சொல்லுவனவற்றை எழுதுவதுமே அக்காலத்து என்னால் செய்யப்பெற்று வந்தன. அந்த நிலை என் மனத்துக்கு மிகுந்த சங்கடத்தை உண்டு பண்ணிக்கொண்டேயிருந்தது; அதைப்பற்றி யாரிடத்தும் நானும் சொல்லவில்லை; இவரும் சொல்லவில்லை.
கோபமாறியது.
இங்ஙனம் சில தினங்கள் சென்றன. அப்பால் மாயூரம் வஸந்தோத்ஸவ தரிசனத்தின் பொருட்டுச் சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன் மாயூரத்திற்கு விஜயம் செய்தார். அவருடைய கட்டளையின்படி இவர் சென்றார்; நானும் மற்ற மாணாக்கர்களும் இவருடன் சென்றோம். செல்லும்பொழுது இவர் ஸ்ரீ சிவஞான முனிவரும் ஸ்ரீ கச்சியப்ப முனிவரும் காஞ்சிப் புராணமியற்றிய வரலாற்றையும் இடையிடையே நிகழ்ந்த செய்திகளையும் அந்த நூலின் சிறப்பியல்புகளையும் உடன் சென்றோரிடம் சொல்லிக் கொண்டே சென்றார். ஒன்றையும் விடாமல் நான் கேட்டுக்கொண்டே சென்றேன்.
மாயூரம் சென்ற ஆதீனகர்த்தர் ஸ்வாமி தரிசனஞ் செய்துவிட்டு அடியார்களோடு மடத்திற்குத் திரும்பிச் செல்லுகையில் ஒரு காரியஸ்தரை யழைத்து எனக்கு ஆகாரம் பண்ணுவித்து அனுப்பும்படி உத்தரவிட்டனர்; அப்படியே அவர் செய்வித்தனுப்பினர். நான் சென்று பிள்ளையவர்கள் வீட்டுத் திண்ணையில் ஒரு புறத்திலிருந்தேன். ஆதீனகர்த்தர் மடத்திற்குச் சென்றபின் [11]அத்தாளம் நடைபெற்றது. அது, "படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும், உடைப்பெருஞ் செல்வர்" என்றபடி நூற்றுக்கணக்கானவர்கள் அறுசுவையுள்ள நால்வகை யுணவுகளையும் முறையேயிருந்து மெல்ல உண்ணும் பெருமை வாய்ந்தது.
[12]அங்கே இல்லறத்தாருடைய வரிசையில் முதல் ஸ்தானம் பிள்ளையவர்களுக்குரிய இடம். அங்கே சென்று இருந்த இவர் உண்ணத் தொடங்குவதற்கு முன்பு திடீரென்று எழுந்து புறத்தே செல்லுங் குறிப்போடு சிறிது தூரம் வந்துவிட்டார். யாரும் பந்தியில் அங்ஙனம் செய்வதில்லை; செய்யவும் கூடாது; வழக்கமே கிடையாதென்பர். அதனைக் கண்ட தேசிகர், 'ஏதோ கவலைக்கிடமான செய்தி இவர்களுக்குக் கிடைத்தது போலும்' என்று நினைத்துக் கேட்பித்தபொழுது, "சாமிநாதையரை வெளியே விட்டுவிட்டு வந்தேன். அவர் ஆகாரம் செய்தாரோ இல்லையோ தெரியவில்லை. விசாரித்துவரப் போகிறேன் " என்றார். தேசிகர், "அவருக்கு ஆகாரம் செய்விக்கும்படி முன்பே ஒருவரிடம் சொல்லியாய் விட்டது. அவர் இதற்குள் ஆகாரஞ் செய்துவிட்டு வந்திருக்கலாம். நீங்கள் கவலைப்படவேண்டாம். இங்கேயிருந்து மெல்ல ஆகாரம் பண்ணிக்கொண்டு செல்லலாம்" என்று வற்புறுத்திச் சொல்லவே இவர் திரும்பிப் போய் அமர்ந்து ஏதோ ஆகாரம் பண்ணுபவர் போலவே பாவனை பண்ணிவிட்டு எல்லாரும் எழுவதற்கு முன்னரே எழுந்து கையையுஞ் சுத்திசெய்யாமல் வேகமாக அம் மடத்தின் மேல்பாலுள்ள தம்முடைய விடுதிக்கு வந்தார். இவர் வருவதைக் கண்டு எழுந்து நின்றேன். நான் நின்ற இடம் தீபம் இல்லாத இடம்; ஆகையால் என் சமீபத்தில் வந்து முகத்தை உற்று நோக்கி, நிற்பவன் நானென்று தெரிந்து கொண்டு, "ஆகாரம் செய்தாயிற்றா?" என்று கேட்டார். "ஆயிற்று" என்று சொன்னேன். உடனே இவர் கையைச் சுத்திசெய்து கொண்டு, தீபத்தைக்கொணர்ந்து வைக்கும்படி சொல்லி என்னோடு அன்புடன் முன்போலவே பேசத்தொடங்கினார். [13] “முனிவினு முளைக்கும் அன்பினர்" ஆகிய இவருடைய இயல்பை அறிந்து, முந்திய நிமிஷத்திற் கவலைக் கடலில் அழுந்திக்கிடந்த நான் அடுத்த நிமிஷத்தில் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன்.
அப்பொழுது மடத்திலிருந்து சிலர் வந்து என்னைப்பார்த்து, "உங்களிடத்தில் ஐயாவவர்களுக்கு இருக்கிற பிரியம் இன்று பந்தயில் நன்றாக வெளிப்பட்டுவிட்டது. இவ்வளவு பிரியத்தை யாரிடத்தும் இவர்கள் வைத்திருந்ததாக நாங்கள் அறிந்துகொண்டதில்லை. மடத்தில் இப்போது ஸந்நிதானம் இதைப்பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது" என்றார்கள்.
அந்தச் சமயத்திற் பிள்ளையவர்களை நோக்கி,
[14]"எளிய ரெங்குளா ரென்று தேர்ந்துதேர்ந்
தளியை யாவதுன் னருளின் வண்ணமே"
என்பதைச் சொல்லிவிட்டு ஒன்றும் பேசாமலிருந்தேன். அது முதல் பிறர் கோள் சொல்லுவதற்கு இடமில்லாதபடி கூடிய அளவு ஜாக்கிரதையாக நடந்து வருவேனாயினேன். அப்பால் இவர்கள் பிரீதியும் அதிகரித்துவிட்டது.
{6.7}
"தீயனெனும் பாம்பு செவியிலொரு வற்கவ்வ
மாயுமே மற்றைய வன்"
என்பது பெரியோர் கருத்தாக இருக்கவும் ஒருவருடைய கோள் எனக்கு அனுகூலத்தைப் பின்பு விளைவித்தமையால்,
(விருத்தம்)
{6.8}
"[15]பொன்னகரான் காலந்தாழ்த் துனையருச்சித் தயர்ச்சியோடும்
போன வாறும்
என்னெனயான் வினவியதும் வலாரியிறை கொடுத்ததுமவ்
விறைக்கு நேர்யான்
பின்னைவினா யதுமவன்சொல் வழியுன்னைச் சோதித்த
பெற்றி தானும்
முன்னவனே யுன்னருளா லென்பிணிக்கு மருந்தாகி
முடிந்த வாறே "
என்னும் அருமைச் செய்யுள் அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது.
குமாரருக்கு விவாகம் நடைபெற்றது.
அப்பால் இவர் திருவாவடுதுறை சென்று செய்யவேண்டியவற்றைச் செய்துஞ் செய்வித்தும் வந்தார். அப்படியிருக்கையில் இவருடைய குமாரர் சிதம்பரம் பிள்ளைக்கு விவாகஞ் செய்விக்கவேண்டுமென்ற முயற்சி நடைபெற்றது. சீகாழியிலிருந்தவரும் சிறந்த கல்விமானுமாகிய [16]குருசாமி பிள்ளை யென்பவருடைய குமாரி மீனாட்சியம்மையை அவருக்கு மணஞ் செய்விக்க இவர் நிச்சயித்தார். அதனை ஆதீனகர்த்தரிடம் விண்ணப்பஞ் செய்தார். சுப்பிரமணிய தேசிகர் இச்செய்தியைச் சொல்லிக் குருசாமி பிள்ளையை அழைத்து வரும்படி சில முதியோரை அனுப்பினார். அவர்கள் சென்று சொல்ல மனமுவந்து குருசாமி பிள்ளை வந்து இவரைக் கண்டபொழுது இருவரும் சம்பந்தம் செய்து கொள்ளுதலைக் குறித்து நெடுநேரம் ஸம்பாஷணை செய்து களிப்புற்றார்கள். பின்பு அவர் தரிசனஞ் செய்யப் போனபொழுது தேசிகர் பலவாற்றாலும் அவருக்கு மகிழ்வுண்டாகும்படி செய்ததன்றி அவரை நோக்கி, "ஐயா நீங்களும் குருஸாமி; நாமும் குருஸாமியே" என்று சொன்னார்; சிறந்த கல்விமானாதலால் அந்த அருமையான வார்த்தை அவருக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணியது. முகூர்த்தம் வைத்துவிட்டு அவர் சீகாழி சென்றார்.
தேசிகர் அந்த விவாகச் செலவிற்கு ரூபாய் ஆயிரம் அளித்ததல்லாமல், கல்லிடைக்குறிச்சியில் சின்னப்பட்டத்திலிருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகருக்கும் ஆதீனத்தைச் சார்ந்த பெரியகாறுபாறுதம்பிரான் முதலியோர்களுக்கும் கலியாணச் செய்தியைத் தெரிவிக்கும்படியும் கட்டளையிட்டார். அப்படியே எல்லோருக்கும் இவர் விண்ணப்பஞ் செய்து கொண்டார். அங்ஙனஞ் செய்துகொண்ட கடிதங்களில் வழக்கம் போலவே முதலில் அவரவர்கள் தகுதிக்கு ஏற்பப் பாடல்கள் வரையப்பெற்றன. அவற்றுள் ஏனையோர் விஷயமாகச் செய்த பாடல்கள் இப்போது கிடைக்கவில்லை ; ஸ்ரீ நமச்சிவாய தேசிகருக்கு எழுதிய ஐந்து பாடல்கள் மட்டும் என் கைவசமிருந்தன. அவை வருமாறு:
(விருத்தம்)
{6.9}
1. "சீர்பூத்த கயிலாய பரம்பரையில் உமாபதிதே சிகப்பி ரான்றன்
ஏர்பூத்த கண்மணியிற் சிவப்பிரகா சப்பெரியோன் என்பாற் குற்ற
பார்பூத்த கண்மணியிற் றுறைசையிற்சுப் பிரமணிய பரமற் குற்ற
வார்பூத்த கண்மணியாங் குருநமச்சி வாயனையென் மனஞ்சார்ந் தன்றே."
(ஏர்பூத்த கண்மணி - அருணமச்சிவாய தேசிகர். சிவப்பிரகாசப் பெரியோன் - சித்தர் சிவப்பிரகாசர். பார்பூத்த கண்மணி - திருவாவடுதுறை ஆதீனஸ்தாபகராகிய நமச்சிவாயமூர்த்தி.]
{6.10}
2. "அருண்மலிநின் பெயரேநின் னுருவுருவம் அருவுருவம் அருவ மென்னப்
பொருண்மலிமூன் றாமதுவந் தடைந்தார்தந் தரநோக்கிப் புகன்ற வாறே
இருண்மலிபெய் தாதவிதம் விரித்துணர்த்தி யவற்றடக்கி எல்லா மின்பத்
தெருண்மலியச் செயுந்துறைசைக் குருநமச்சி வாயாநிற் சேர்ந்து ளோமே."
{6.11}
3. "திருச்சமயத் துடனெமையும் விளக்கியநின் றிருப்பெயரே சிந்தை யுட்கொண்
டருச்சனைசெய் யினுஞ்செபித்தல் செய்யினுஞ்சொற் றிடவருளி அளவி லாத
கருச்சரிய வின்பநிலை காட்டுநினக் கியற்றுமொரு கைம்மா றுண்டோ
குருச்சமையும் புகழ்த்துறைசை வளர்நமச்சி வாயாமெய்க் குரவ ரேறே."
{6.12}
4. "தந்தைபெய ரெடுப்பானிம் மைந்தனென வொருவனைமண் சாற்றல் பொய்யே
நிந்தையிலாத் தந்தைபெயர் தோற்றும்போ தேயெடுத்தோன் நீயே நீயே
அந்தையிலா நினைப்போல்வார் நினைப்பணியு மெமைப்போல்வார் அகிலத் தியாரே
சிந்தைகளிப் புறத்திருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாய தேவே."
(இங்கே பெரிய பட்டத்தில் இருப்பவர்களுக்குரிய பொதுப் பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதைத் துறவு பூண்டவுடன் இவர் தீட்சா நாமமாகவே பெற்றமையின், 'தந்தை பெயர் தோற்றும்போதே எடுத்தோன் நீயே” என்றார். அந்தை - அகந்தை.)
{6.13}
5. "ஒன்றுடையோன் நீயேமற் றிரண்டுடையோன் யானெனினும் உயர்ந்தோ னீயே
என்றுநினக் கடிமையா தலினிரண்டு மசித்தெனப்பட் டிடலி னொன்றை
நன்றுபெற விரும்பிநினைப் புணர்தலினிப் பொருட்கிடநின் நாம மன்றோ
குன்றுபுரை மாடக்கோ முத்திநமச் சிவாயாமெய்க் குரவ ரேறே."
(ஒன்று - வகாரம்; அதற்குப் பொருள் அருள். இரண்டு - நகார மகாரம்; அவற்றிற்குப் பொருள் முறையே திரோதாயியும் ஆணவமும். அசித்து - சடம்.)
இவருடைய விண்ணப்பத்தைப் பெற்ற நமச்சிவாய தேசிகர் மகிழ்ச்சியடைந்து விடையனுப்பினார். அதில், " நீங்கள் ஐம்பதத்தால் ஆக்கிய ஐந்து பாடல்களையும் பார்த்து மகிழ்ச்சி யடைந்தோம்" என்ற வாக்கியம் வரையப்பெற்றிருந்தது. ஏனையோர்கள் தங்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள். சோழ நாட்டுப் பிரபுக்களும் அயல்நாட்டுப் பிரபுக்களும் வந்து தங்கள் தங்களாலியன்ற பொருளுதவியைச் செய்து உடனிருந்து விவாகத்தை நடத்திச் சிறப்பித்தார்கள். கலியாணம் சிறப்புடன் ஆங்கிரஸ ஆண்டு (1872) ஆனி மாதம் 7 - ஆம் தேதி புதன்கிழமை மாயூரத்தில் நடைபெற்றது.
உள்ளூர்க் கனவான்களும் அயலூரார் பலரும் வந்து வந்து விசாரித்துச் சென்றார்கள். அவரவர்களுக்குத் தக்கபடி முகமன்கள் மாணாக்கர்களாலும் திருவாவடுதுறை மடத்திலிருந்து வந்த காரியஸ்தர்களாலும் நடத்தப்பெற்றன. சிறந்த ஸங்கீத வித்துவான்களுடைய இசைப்பாட்டும் நாகசுரக்காரர்களுடைய கானமும் ஒவ்வொரு நாளும் நடந்தன.
விகடகவியும் வேதநாயகம் பிள்ளையும்.
நல்ல திறமையுள்ள விகடகவியொருவர் அப்பொழுது பல வகைப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்களைப் பேசி யாவரையும் சிரிக்கும்படி செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கே வந்திருந்த வேதநாயகம் பிள்ளை இப்புலவர்கோமானை நோக்கி, "விகடகவிகள் வித்துவான்களுக்கு நேர் விரோதிகள்; வித்துவான்கள் இழிந்தவற்றையும் உயர்ந்தனவாகக் கூறுபவர்கள்; விகடகவிகள் உயர்ந்தவற்றை இழிந்தனவாக நினைக்கும்படி பேசுபவர்கள்" என்றார். புத்திமான்கள் பேசும் எந்தப் பேச்சும் நயமாக இருக்குமென்பதை அவருடைய வார்த்தை புலப்படுத்தியது.
[17] சவராயலு நாயகர் மாலை.
எல்லோருக்கும் கலியாணபத்திரிகை அனுப்பியது போல இவர், தம் மாணவராகிய புதுவைச் சவராயலு நாயகருக்கும் அனுப்பியிருந்தார். அவர் இவரிடத்தில் அளவற்ற அன்புடையவர். புதுவையில் நல்ல நிலையில் இருந்தமையால் அவர் தக்க தொகையொன்றை இவருக்கு அனுப்பினார். தாம் விரும்பாமலிருந்தும் வலிய அவர் செய்த அந்தப் பொருளுதவியை நினைந்து மனங்கனிந்து தம் செய்ந்நன்றியறிவிற்கு அறிகுறியாக அவர் மீது இவர் ஒரு மாலை இயற்றி அனுப்பினார். அது பின்பு அவராலேயே பதிப்பிக்கப் பெற்றது.
சமாசாரப் பத்திரிகையில் வந்த செய்தி.
கலியாணத்திற்குப் பின்பு சிலதினம் இவர் மாயூரத்தில் இருந்தார். அக்காலத்தில் ஒருநாள் இவர் வேதநாயகம் பிள்ளையைப் பார்க்கச் சென்றார்; நானும் உடன் சென்றேன். அவர் ஏதோ ஒரு சமாசார பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தார். இவரைக்கண்டவுடன் அவர், "இப்பத்திரிகையில் இப்போது படித்துக்கொண்டிருப்பது உங்கள் விஷயந்தான்; 'இக்காலத்தில் தமிழ்நாட்டிற்கு இரண்டு கண்களாக விளங்குகிறவர் இருவர். அவருள் ஒருவர் வசனம் எழுதுவதில் ஆற்றலுடையவர்; மற்றொருவர் செய்யுளியற்றுவதில் ஆற்றலுடையவர். வசனம் எழுதுபவர் ஆறுமுக நாவலர்; செய்யுள் செய்பவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. நாவலர் சிதம்பரத்தில் பாடசாலை வைத்துத் தமிழைப் பரிபாலித்து வருகிறார்; மற்றொருவர் தாமே நடையாடு புத்தக சாலையாக இருந்து தம்முடைய செலவிலேயே பிள்ளைகளைப் படிப்பித்து வருகிறார்' என்பது இதிலுள்ள விஷயம்" என்றார். கேட்ட நான் ஆனந்தமடைந்தேன்.
தமிழ் மருந்து.
அப்போது தஞ்சைவாணன் கோவையைப் பாடங் கேட்டு வந்தேன். ஒருநாள் 10 - மணிக்கு மேலே இவர் பூஜை செய்வதற்குச் சென்றார். பூஜை செய்து கொண்டிருக்கையிற் கடுமையான ஜ்வரம் வந்துவிட்டமையால் விரைவில் அதனை முடித்துக்கொண்டு ஆகாரம் பண்ணாமலே வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார்; என்னைப் பார்த்து, "கையிலுள்ளது என்ன புத்தகம்?" என்றார்; "தஞ்சைவாணன் கோவை" என்றேன். படிக்கும்படி சொன்னார்; படித்துக்கொண்டு வந்தேன்; மிகுந்த அயர்ச்சி உள்ளவராக இருக்கிறாரென்று நான் நினைந்து நிறுத்தினால் இவர் கண்ணைத் திறந்து பார்த்துப் படிக்கச் சொல்வார்.
இவர் இப்படி யிருக்கும்போது பிற்பகலில் ஐந்து மணி ஆயிற்று. இவரைப் பார்க்கவந்த அன்பர்களிற் சிலர் என்னைக் கோபத்தோடு நோக்கி, " இப்போது கூடவா பாடங்கேட்டு இவர்களுக்குத் துன்பத்தை உண்டுபண்ண வேண்டும்? நிறுத்திக்கொள்ளக்கூடாதா? பாடம் எங்கே ஓடிப்போகிறது? இதனை நீர் தெரிந்துகொள்ளவில்லையே" என்று கடுமையாகச் சொன்னார்கள். கேட்ட இவர், "நிறுத்தச் சொல்லவேண்டாம்; அதுதான் இப்பொழுது எனக்கு மருந்தாக இருக்கிறது; சுரநோயின் துன்பத்தை மறந்து என் மனம் அந்நூலிலேயே ஈடுபட்டுவிட்டது" என்று சொல்லிவிட்டு அந்த நூலாசிரியருடைய பெருமையையும் வாக்கு விசேடத்தையும் அவர் முருகக்கடவுள் அருள் பெற்றவரென்பதையும் எடுத்துக் கூறினார்.
தமிழ்ச்செய்யுளில் இவருக்கு இருந்த ஈடுபாடும் அதனை இவர் நோய்க்கு மருந்தாக எண்ணிய இயல்பும் என் மனத்தை உருக்கின.
பலபட்டடைச் சொக்கநாதப்புலவருடைய செய்யுட்களைப் பாராட்டியது.
மற்றொரு நாள் இவர் ஆகாரம் செய்துவிட்டு வந்தபொழுது நான் தனிப்பாடற்றிரட்டைப் படித்துக்கொண்டிருந்தேன். "கையிலுள்ள து என்ன புத்தகம்?" என்று கேட்க, "தனிப்பாடற்றிரட்டு " என்றேன்; "அதில் இப்போது படிக்கும் பாடம் யார் வாக்கு?" என்று வினவினார். "பலபட்டடைச் சொக்கநாதப் புலவரியற்றிய பாடல்கள் " என்றேன். "அவற்றைப் படியும்" எனவே நான்,
(கட்டளைக் கலித்துறை)
{6.14}
[18] "வான்பணிந் தாலதன் என்பே யுரைக்கும் மலரிலயன்
தான்பணிந் தாலவன் றன்றலை யேசொலுந் தாரணியுண்
பான்பணிந் தாலவன் கண்ணே பரிந்து பரிந்துரைக்கும்
நான்பணிந் தாலெனக் கார்சொல்லு வார்சொக்க நாயகர்க்கே"
{6.15}
"மெய்க்கே யணியும் பணியேயென் பேமுடி மேற்கிடந்த
கொக்கேவெண் கூன்பிறை யேயரை சேர்ந்த கொடும்புலியே
அக்கே யுமக்குக் கிடைத்த வுபாயங்க ளாவெனக்கும்
சொக்கேசர் பாதத்தைக் கிட்டு முபாயத்தைச் சொல்லுங்களே"
என்பவற்றைப் படித்துக் காட்டினேன். கேட்ட இவர், "செய்யுளென்பவை இவையே; பக்திரஸம் இவற்றில் ததும்புகின்றது" என்று பாராட்டி மனமுருகினார். தாம் மகாகவியாக இருந்தும் பிறகவிஞருடைய வாக்கைக் கேட்டு அவற்றின் நடையை அறிந்து ஸந்தோஷிக்கும் அரியகுணம் இவர்பால் அமைந்திருந்தமை இதனால் வெளியாயிற்று.
என்னைத் திருவாவடுதுறைக்கு அனுப்பியது.
ஒரு தினம் நாங்கள் பாடங்கேட்டு முடித்த பொழுது இரவில் மணி 9 - ஆயிற்று. இவர் எங்களை ஆகாரம் செய்துகொண்டு வரும்படி அனுப்பிவிட்டுத் தாம் உண்ணச் சென்றார்; அப்போது மழை வந்து விட்டமையாலும் மிகவும் சிரமமாக இருந்தமையாலும் நான் படுத்து அயர்ந்து நித்திரை செய்தேன். உடன் படித்தவர்கள் தத்தம் இடங்களுக்குச் சென்றார்கள்.
ஆகாரம் செய்துவிட்டு வந்த இவர் எல்லோரும் ஆகாரம் செய்துகொண்டு வந்துவிட்டார்களாவென்று கவனிக்கையில் நான் தூங்குவதைக் கண்டார். இவர் தூங்கச் செல்லும் வரையில் நான் தூங்கச் செல்வது வழக்கமில்லை. அதனால் ஏதோ அஸெளக்கியம் ஏற்பட்டிருக்கலாமென்று எண்ணி என்னை எழுப்பச் சொன்னார்; நான் எழுந்தவுடன் "ஆகாரம் பண்ணிவிட்டீரா?" என்று இவர் கேட்டார்; இல்லையென்று நான் சொல்லவே ஆகாரம் பண்ணிவிட்டு வரும்படி என்னை யனுப்பினார். போய்ப் பார்த்தபொழுது வழக்கமாக நான் உண்ணுமிடத்திலும் பிற இடங்களிலும் கதவுகள் மூடப்பட்டுவிட்டன; சும்மா திரும்பிவந்தேன். அதுவரையில் விழித்துக்கொண்டே இருந்த இவர் நான் உண்ணாமையை அறிந்து அதிக வருத்தமடைந்து பாலும் பழமும் வருவித்துக் கொடுத்து உண்ணச் செய்தனர். மறுநாட் காலையில், "திருவாவடுதுறைக்குப் போய் மற்றவர்களுடன் பழைய பாடங்களைப் படித்துக்கொண்டிரும்; சீக்கிரத்தில் நான் வந்து விடுவேன்" என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார். அப்படியே திருவாவடுதுறை சென்று படித்து வந்தேன்.
திருப்பெருந்துறைப் புராணம் இயற்றும்படி சுப்பிரமணியத் தம்பிரானவர்கள் விரும்பியது.
சில தினங்கள் சென்ற பின்பு ஒருநாள் சுப்பிரமணிய தேசிகர் என்னை வருவித்து, "நாளைக் காலையில் நீர் மாயூரம் போய்வர வேண்டும். திருப்பெருந்துறைக்குப் புராணம் இயற்ற வேண்டியதைப்பற்றி அத்தலத்துக் கட்டளைச் சுப்பிரமணியத் தம்பிரான் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருக்கிறார். அதில் அவரால், 'திருப்பெருந்துறைப் புராணத்தைச் செய்யுள் நடையாக நாட்டுவருணனை நகரவருணனை முதலிய காப்பிய உறுப்புக்களைச் சிறப்பாக அமைத்துப் புராணம் செய்ய வேண்டுமென்று பிள்ளையவர்களுக்குக் கட்டளையிடும்படி பிரார்த்திக்கிறேன். அப்புராணத்தை அங்ஙனம் பாடிப் பூர்த்திசெய்து அரங்கேற்றி முடித்தால் அவர்களுக்குத் தக்க செளகரியம் செய்விக்கலாம். அங்ஙனம் இயற்றுவிக்கும்படி இங்கே உள்ள அன்பர்கள் பலர் தூண்டுகிறார்கள். இத்தலத்தின் வடமொழிப் புராணத்திலிருந்து மொழிபெயர்த்த தமிழ் வசன நடைப் பிரதியையும் இத்தலத்திற்கு முன்னமே செய்யப்பட்டிருந்த பழைய தமிழ்ப் புராணங்களிரண்டையும் அனுப்பியிருக்கிறேன். இவற்றைத் தழுவிப் புராணம் செய்துவிட்டால் இந்த வருஷத்து மார்கழித் திருவிழாவில் அப்புராணத்தை அரங்கேற்றத் தொடங்கலாம். இங்கே அவர்கள் இருக்கும் வரையில் அவர்களுடைய செலவை அடியேனே ஒப்புக்கொள்ளுகிறேன். புராணம் அரங்கேற்றப்பட்டவுடன் ரூ. 2,000 அடியேனுடைய சம்பளத்திலிருந்து அவர்களுக்குச் சேர்ப்பிக்கிறேன். புராணம் செய்வதற்குத் தொடங்கும்படி ஸந்நிதானம் கட்டளையிடவேண்டும்' என்று வரையப்பெற்றுள்ளது. இந்த விவரங்களைப் பிள்ளையவர்களிடம் சொல்லி இப்புத்தகங்களையும் கொடுத்து உடன்படச் செய்து அவர்களுடைய உடன்பாட்டை விரைவில் வந்து நமக்குச் சொல்ல வேண்டும்" என்று சொல்லி அப்புத்தகங்களையும் கொடுத்து என்னை அனுப்பினார்.
ஒரு செய்யுளின் ஈற்றடி.
நான் மறுநாட் காலையில் மாயூரம் போய்ப் பிள்ளையவர்களைக் கண்டு இச்செய்திகளைத் தெரிவித்துப் புத்தகங்களையும் சேர்ப்பித்தேன். அப்பொழுது இவர் சந்தோஷமடைந்து புராணத்தை இயற்ற ஒப்புக்கொண்டு திருப்பெருந்துறையின் ஸ்தலவிநாயகராகிய வெயிலுவந்த பிள்ளையாரைத் தியானித்து, "நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த மழகளிற்றை நினைந்து வாழ்வாம்" என்ற அடியைச் சொன்னார். அதனை உடனிருந்த கும்பகோணம் பேட்டைத் தெருத் தமிழ் வித்துவானாகிய ஸ்ரீ வைத்தியநாத தேசிக ரென்பவர் கேட்டு வியப்புற்றார்.
திருவாவடுதுறை சென்றது.
அப்பால் இக்கவிஞர் சிகாமணி மூன்றாவது தினத்தின் காலையில் திருவாவடுதுறைக்குப் புறப்பட்டார். நானும் உடன் சென்றேன். மாயூரத்திலிருந்து வேறு ஒரு கனவானும் வந்தார். நான் முன்னமே கேட்ட திருவேங்கட வெண்பாவைப் படித்துச் சிந்தனை செய்வதற்குக் கையில் வைத்திருந்தேன். "இப்புத்தகம் என்ன?" என்று இவர் கேட்க, "திருவேங்கடமாலை" என்றேன்; இவர் கட்டளைப்படியே நான் அதனைப் படித்துக்கொண்டே வருகையில் சிலேடையின் வேறுபாடுகளும், அதுவரையில் அறிந்துகொள்ளாத பொருள் விசேடங்களும் எனக்கு அன்றைத் தினம் இவரால் தெரிய வந்தன. திருவாவடுதுறை போவதற்குள் அது முடிந்தது. அக் காலத்திற்கு முன்பே அரியிலூர்ச் சடகோபையங்காரிடம் அந் நூலை நான் கேட்டிருந்தேன். ஆனாலும் இவர் பாடஞ் சொன்ன பொழுதுதான் அதன் உண்மையான பெருமையும் சுவையும் புலப்பட்டன. திருவாவடுதுறை போனதும் வழக்கம்போலப் பெரியவகையில் காந்தம், உபதேச காண்டம், பிரமோத்தர காண்டம், காசி காண்டம் முதலியனவும் சின்ன வகுப்பில் திருவிளையாடல், திரு நாகைக் காரோணப் புராணம், மாயூரப் புராணம் முதலியனவும் முறையே பாடங்கேட்கப்பெற்று வந்தன.
இரண்டு வகைப் பாடங்களும் நடவாத சமயங்களில் இவர் சொல்லும் நூல்களை ஏட்டில் எழுதுவதும், நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை இவர் சொல்ல எழுதி முடித்துக் கையொப்பம் வாங்கித் தபாலில் அனுப்புவதும், முன்பு கேட்டிராத எந்த நூலுக்காவது பொருள் கேட்டு வருவதும், நூதனமாக வந்த மாணாக்கர்களுக்கு இவருடைய கட்டளையின்படி பாடம் சொல்லுவதும் எனக்கு அக்காலத்தில் அமைந்த வேலைகள்.
சுப்பிரமணிய தேசிகர்க்கு இவர்பாலுள்ள பேரருள்.
காலைப்பாடம் நடந்து முடிவதற்குள் பதினொரு மணி ஆகி விடும்; சில சமயம் 12 - மணி ஆகிவிடுவதும் உண்டு. இவர் பூஜையை முடித்துக்கொண்டு வருவதற்கு நேரமானால், பந்திக்கு வரக்கூடிய திருக்கூட்டத்தார் அனைவரோடும் தேசிகர் காத்திருப்பார். அச் செய்தி தமது காதிற்கு எட்டியவுடன் தம் நியமங்களை விரைவில் முடித்துக்கொண்டு இவர் செல்லுவார்.
பந்திக்கட்டின் மேல்பக்கத்திலுள்ள வாயிலின் நிலை குறியதாயிருந்தமையின் அங்கே இவர்போகும்பொழுது சிரமத்தோடு குனிந்து விரைந்து செல்லுதலைக் கண்ட தேசிகர் அந்தப் பாகத்துத் திருப்பணி நடக்கும்பொழுது இவர் செளகரியமாகச் செல்லுதற்குத் தக்க உயரமுள்ளதாக அந்த நிலையை அமைக்கவேண்டுமென்று கட்டளையிட்டார் ; அங்ஙனமே அமைக்கப்பெற்றது. அதைக் கவனித்த பலர் இவரிடம் தேசிகருக்குள்ள பேரருளை மிகவும் பாராட்டினர்.
ஒரு மொழிபெயர்ப்புப் பாடல்.
ஒருநாள் திருவாலங்காட்டுத் தியாகராஜ சாஸ்திரிகளிடம் இவர் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் ஒரு சுலோகம் சொல்லிப் பொருளும் சொன்னார். இவர் அதனை உடனே செய்யுளாக எழுதுவித்துப் படிக்கச் செய்தனர். அவர் கேட்டு விரைவில் பொருள் விளங்கும்படி இவர் மொழிபெயர்த்ததை அறிந்து வியந்தார். அச் செய்யுள் வருமாறு:
(விருத்தம்)
{6.16}
"நெற்றியி னீறு புனைந்திடப் பராகம்
நிமிர்ந்தெழப் பல்செவி தோறும்
சுற்றிய வராக்கண் அடைவொழித் திடுவான்
துருத்திபோன் மூச்சினை யெறியப்
பற்றிய நுதற்றீ யெழமதி யுருகிப்
பாயமு துகுத்திடப் புற்றோல்
வெற்றியா ருயிர்பெற் றெழவிடை யோட
வெண்ணகை புரிபிரான் புரக்க."
(சிவபிரான் தமது திருநெற்றியில் திருநீறு புனைந்தனர்; அப்பொழுது அந்த நீறு அவர் திருச்செவியில் குண்டலமாக அணிந்திருந்த நாகங்களின் கண்களில் விழுந்தது; அதை நீக்குவதற்கு அவை பெருமூச்சு விட்டன; அக்காற்றால் நெற்றிக்கண் நெருப்பு எரிந்தது. அந்த ஜ்வாலையினால் திருமுடியிலிருந்த பிறை உருகி அமுதத்தை உகுத்தது; அவ்வமுதத் துளிபட உடையாகிய புலித்தோல் உயிர்பெற்றெழுந்தது; அது கண்டு இடபவாகனம் அஞ்சி ஓடியது; இக்காட்சியைக் கண்டு அவர் நகைத்தார்; அத்தகைய சிவபிரான் காத்தருள்க.)
இவ்வண்ணம் அப்பொழுதப்பொழுது செய்த மொழிபெயர்ப்புப் பாடல்கள் பற்பலவென்று கேள்வி.
திருப்பெருந்துறைப் புராணம் பாடத்தொடங்கியது.
இப்படி இருக்கையில் ஒரு தினத்தில் சுப்பிரமணிய தேசிகருடைய கட்டளைப்படி நல்லவேளையில் இவர் திருப்பெருந்துறைப் புராணத்தை இயற்றத் தொடங்கினார். தொடங்கியவுடன் எழுத்தாணி கையில் இல்லாமையை யறிந்து மடத்துக் காரியஸ்தரொருவரை யழைத்து ஓர் [19] எழுத்தாணியையும் ஏடுகளையும் கொணர்ந்து என்னிடம் கொடுக்கும்படி சொன்னார். அவர் அப்படியே செய்தனர். யோசித்து வைத்திருந்த ஒரு விநாயகர் காப்புச் செய்யுளை வழக்கப்படியே பொதுவாக முதலிற் சொல்லி எழுதுவித்தார்.
அப்பால் ஸ்தல விநாயகராகிய வெயிலுவந்த விநாயகரது ஸ்துதியைப் பாடுவதற்கு இவர் யோசிப்பதை அறிந்து, "முன்னமே நான் மாயூரத்திற்கு வந்து மொழிபெயர்ப்புப் புத்தகம் முதலியவற்றைக் கொடுத்தவுடன், 'நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த மழகளிற்றை நினைந்து வாழ்வாம்' என்று ஐயா அவர்கள் சொன்ன ஓரடி எனக்கு ஞாபகத்திலிருக்கின்றது" என்று குறிப்பித்தேன் ; "அப்படியா? அது நன்றாகவிருக்கிறது" என்று சற்று நேரம் யோசித்து முதல் மூன்றடியையும் சிறந்த கற்பனையுடன் முடித்து ஈற்றடியை இறுதியிலே எழுதும்படி சொல்லி மேலே பாடல்களைச் சொல்லி எழுதுவித்துக்கொண்டு போனார். அச்செய்யுள் வருமாறு :
(விருத்தம்)
{6.17}
"[20]இலவுவந்த செவ்வாயெம் பெருமாட்டி பார்வையொடும் இருக்கு முன்னூல்
சொலவுவந்த நம்பெருமான் பார்வையுமேற் றமர்சிறப்புத் தோற்றி யாங்குப்
பலவுவந்த பொழில்வளஞ்சால் குருந்துறையும் பெருந்துறையிற் பண்பு கூரும்
நிலவுவந்த முடியினொடும் வெயிலுவந்த மழகளிற்றை நினைந்து வாழ்வாம்."
இந்நிகழ்ச்சியைக் கண்ட அருகிலிருந்த அறிஞர்களுக்கு வியப் புண்டாயிற்று; "மற்றவர்களாக இருந்தால் தம்மை எவ்வளவு புகழ்ந்து கொள்வார்கள்? நம்மையும் நிர்ப்பந்தித்துப் புகழச் சொல்வார்களே!" என்று அவர்கள் தம்முட் பேசிக்கொண்டார்கள்.
'சிறவாதவற்றையும் சிறப்பிக்க வல்லவன்.'
திருப்பெருந்துறைப் புராணத்தில் நாட்டுப்படலம் பூர்த்தியாயிற்று. நடந்த பாகங்களைச் சுப்பிரமணிய தேசிகரிடம் படித்துக் காட்ட இவர் விரும்பினர்; தியாகராச செட்டியாரும் உடனிருந்தால் மிகவும் நலமாயிருக்குமென்று நினைந்து ஒருநாள் அவருக்கு என்னைக்கொண்டு ஒரு கடிதம் எழுதுவித்தனர்; "வருகிற சனிக்கிழமையின் பிற்பகலில் திருப்பெருந்துறைப் புராணத்தில் நடந்த பாகத்தை ஸ்ரீலஸ்ரீ மகா ஸந்நிதானத்தின் திருச்செவி சார்த்த எண்ணியிருக்கிறேன். அக்காலத்தில் நீயும் உடனிருந்தால் திருப்தியாக இருக்கும். ஆதலால் சனிக்கிழமை சூரியோதய காலத்தில் கோட்டுமாங்குளக்கரையில் நான் பார்க்கும்படி நீ வந்துவிடவேண்டும். சிறவாதவற்றையும் சிறப்பிக்கவல்லவன் நீயல்லவா?" என்பது அக்கடிதத்திற் கண்ட விஷயம். சனிக்கிழமை காலையில் எப்படியும் அவர் வரக்கூடுமென்று நினைந்து காலையில் அநுஷ்டானத்தை முடித்துக்கொண்டு கோட்டுமாங்குளத்து வடகரையின் கீழைக்கோடியில் அவருடைய வரவைப் பார்த்துக்கொண்டே இவர் நின்றார்.
கடிதத்தைக் கண்ட செட்டியார் வெள்ளிக்கிழமை இராப் போசனத்தை முடித்துக்கொண்டு உடனே கும்பகோணத்திலிருந்து வண்டியில் ஏறிச் சூரியோதய காலத்திற் கோட்டுமாங்குளத்தின் வடகரையின் மேலைக்கோடியில் வருகையில் இவர் கிழக்கே நிற்பதைக் கண்டு வண்டியை விட்டு இறங்கி ஆவலோடு விரைந்து வருவாராயினர். அங்ஙனம் வந்த செட்டியார் இவருக்கு அஞ்சலி செய்து விட்டு உடனே கோபக்குறிப்புடன் என்னிடம் வந்து, "ஐயா எழுதச் சொன்னாலும் நீர் எழுதலாமா? சிறவாதவற்றையும் சிறப்பிக்கவல்லவன் நானா? ஐயா அவர்கள் அவசரமாகச் சொன்னாலும் யோசித்தல்லவோ நீர் எழுதவேண்டும்?" என்று மேலே மேலே கண்டிப்பாராயினர். இக்கவியரசர் அவரைப் பார்த்து, "ஏனப்பா அவரைக் கண்டிக்கிறாய்? நானே அப்படி எழுதச் சொன்னேன். நீ இடமறிந்து சந்தோஷிப்பதை நேரே பலமுறை பார்த்திருக்கிறேனே, நீ இருந்தால் ஸந்நிதானத்திற்கும் திருப்தியாயிருக்குமன்றோ?" என்று சொன்னார்.
செட்டியார், "சுவை நிரம்பிய உங்களுடைய நூல்களிற் சிறவாத பாகம் ஏதேனும் இருந்தாலன்றோ நான் சிறப்பிக்கவேண்டுவது? அது கிடையாதே. ' நீ வந்து கேட்டு மகிழ்ச்சியடைய வேண்டும்' என்று எழுதியிருந்தால் எனக்குத் திருப்தியாக இருக்கும். போனது போகட்டும். இனிமேல் இப்படி எழுதச் சொல்லக் கூடாது" என்று கேட்டுக்கொண்டு பிள்ளையவர்களுடன் வீடு வந்து சேர்ந்தனர்.
பிற்பகலில் சுப்பிரமணிய தேசிகருக்கு முன்னே புராணம் படித்துக் காட்டப்பட்டது. கடவுள் வாழ்த்திற் சிலசில பாடல்களிற் புராணத்திலுள்ள சரித்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பற்றிச் சொல்லும்பொழுது இவர், "[21] நூனுதல் பொருளைத் தன்னகத்தடக்கி என்னும் பாயிர இலக்கணம் அமைய இவ்வாறு பாடப்பெற்றது. இங்ஙனமே காஞ்சிப் புராணம் முதலியவற்றின் கடவுள் வாழ்த்துக்களிற் காணப்படும். அவற்றைப் பின்பற்றித்தான் அடியேன் இங்ஙனம் செய்தேன்" என்றார்.
உடனிருந்த தியாகராச செட்டியார் முதலியவர்களும் வடமொழி வித்துவான்களும் பிறரும் கேட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். தேசிகர் மிகவும் பாராட்டியதுடன், "இந்நூலை விரைவில் முடித்தால் அரங்கேற்றுதற்குரிய ஏற்பாடு செய்யப்படும்" என்றும் கூறினார். அங்ஙனமே இவர் ஓய்வு நேரங்களிற் புராணச் செய்யுட்களை இயற்றி எழுதுவித்து வந்தார். செட்டியார் விடைபெற்று அடுத்த திங்கட்கிழமை காலையிற் புறப்பட்டுக் கும்பகோணம் சென்றார்.
பார்க்க வருபவர்கள்.
பல செல்வர்களும் வித்துவான்கள் பலரும் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துச் சிலதினமிருந்து ஸல்லாபஞ் செய்தற் பொருட்டுத் திருவாவடுதுறைக்கு வருவார்கள். சிலருடைய விருப்பத்தின்படி அவர்கள் செய்தனவாகப் பிறர்க்குத் தோற்றும்வண்ணம் புதிய செய்யுட்களைச் செய்து கொடுத்தும், சிலர் ஏதேனும் புதிய நூலொன்றைச் செய்து கொணர்ந்தால் அதைத் திருத்திக் கொடுத்துச் சிறப்புப்பாயிரமளித்தும், தாம் படித்த நூல்களில் உண்டான ஐயங்களை யாரேனும் வந்து வினாவினால் அவற்றைத் தீர்த்தும், இன்னும் அவர்களுக்கு ஆகவேண்டியவற்றைக் கவனித்தும் அனுப்புவது இவருக்கு அப்போது வழக்கமாக இருந்தது. பின்னும் நகரப் பள்ளிக்கூடங்களிலும் காலேஜ்களிலும் முள்ள தமிழ்ப் பண்டிதர்கள் தாங்கள் சொல்லவேண்டிய பாடங்களிற் கடினமானவற்றிற்குப் பொருள் தெரிந்து கொண்டு போவதற்கு விடுமுறை நாட்களில் வந்து வந்து கேட்டுவிட்டுத் திருப்தியுற்றுச் செல்வார்கள். அப்படியே கிராமப் பள்ளிக்கூடங்களிலுள்ள உபாத்தியாயர்களும் வந்து தமக்கு வேண்டிய நூல்களுக்குப் பொருள் கேட்டுத் தெரிந்துகொண்டு செல்வார்கள். பிள்ளையவர்களுக்கு ஓய்வில்லையென்று தெரிந்தால் சுப்பிரமணிய தேசிகர் படிக்கவேண்டியவர்களைத் தம்மிடம் வரச்செய்து தாமே பாடஞ் சொல்லித் தெளிவித்து அவர்களை அனுப்புவார்.
வருபவர்கள் பலவகையாராக இருத்தல் கூடும். அவர்களிற் பந்திபோஜனத்துக்கு உரியவர்களைப் பந்தியில் வைத்து உண்பித்தலும் ஏனையோரை அவரவருடைய பிரிவுக்குத் தக்கபடி வேறு வேறிடங்களில் தனித்தனியே வைப்பித்து ஆகாரஞ் செய்வித்தலும் இடமளித்தலும் பிறவும் ஆதீனகர்த்தருடைய ஆஞ் ஞையால் ஒழுங்காக நடைபெறும். அந்த அனுகூலத்தை உத்தேசித்தே சிலர் பாடங்கேட்பதற்கு வருவதுபோல் வந்து சில தினம் இருந்து செல்வார்கள்.
தம்மூர்களிற் பாடஞ்சொல்லுவோர் இல்லாமையாலும் திரவிய செளகரியம் இல்லாமையாலும் இவர் பாடஞ் சொல்லுதலைக் கேள்வியுற்று அடிக்கடி வந்து படிக்க வருவோர் சிலர். சில மாதங்களிருந்து வேண்டியவற்றைக் கேட்டுக்கொண்டு விடை
பெற்றுப் போவோர் சிலர்.
வன்றொண்டரது ஞாபக சக்தி.
கந்தபுராணப்பாடம் நடந்து வருகையில் அதிலுள்ள கயமுகனுற்பத்திப் படலத்தில் 70-ஆவது செய்யுளாகிய, "மாண்டவவ்வலியகலன்" என்ற செய்யுளுக்குப் பொருள் விளங்காமையால் இவர் நெடுநேரம் யோசனை செய்துவிட்டு, "வன்றொண்டர் இந்நூலை முன்பு பாடங்கேட்டதுண்டு. அவர் சிந்தித்தும் வைத்திருப்பார். அவர் வரும்பொழுது கேட்டால் விளங்கும்" என்றார். அவ்வாறே அவர் பின்பு ஒருசமயம் வந்தபொழுது, "கந்தபுராணத்திற் கயமுகனுற்பத்திப் படலத்தில் ஒரு சந்தேகம்” என்று சொல்லிவிட்டுப் பாடலின் முதலை இவர் சொல்லத் தொடங்குமுன்பே, "இன்ன செய்யுளோ?" என்று அச்செய்யுளின் முழுப்பாகத்தையும் சொல்லித் தாம் முன்பு கேட்டிருந்தபடி பொருளையும் அவர் கூறிவிட்டனர். மாணாக்கர்களெல்லாரும் அவருடைய ஞாபக சக்தியையும் பாடம் போற்றலையும் தெரிந்து வியந்தார்கள்.
என் தந்தையாருக்கு எழுதிய கடிதம்.
அப்புராணத்தை நாங்கள் பாடம் கேட்டு வந்த காலத்தில் [22]காருகுடி என்னும் ஊரில் இருந்த என் தந்தையார் முடக்கு ஜ்வரத்தால் மிகவும் துன்பம் உற்றார்; "பிள்ளையவர்களிடம் படித்துக் கொண்டிருந்த ஒரு பிராமணர் அவர்களை விட்டுப் பிரிந்துபோனார்" என்று யாரோ ஒருவர் கூறியதை அவர் கேள்வியுற்று நான்தான் அங்ஙனம் பிரிந்து விட்டேனோவென்று ஐயமுற்றார். உடனே வந்து என்னைப் பார்க்கவேண்டுமென்ற விருப்பம் அதிகமாக இருந்தும் தேக அசௌகரியத்தால் அவருக்கு வரக் கூடவில்லை. கவலையினால் அசௌகரியம் அதிகரித்துவிட்டது. அதனால் உத்தமதானபுரத்தில் இருந்த என் சிறிய தந்தையாருக்குத் தம்முடைய தேக அசெளக்கியத்தைத் தெரிவித்ததோடு என்னுடைய நிலையைப் பற்றி நன்றாக விசாரித்து உடனே எழுதவேண்டுமென்று ஒரு கடிதம் எழுதினார், அவர் அக் கடிதத்தை ஓர் ஆள் வசம் திருவாவடுதுறைக்குக் கொடுத்தனுப்பினார். அதைக் கண்டவுடன் தகப்பனாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் கவலையும் எனக்கு மிகுதியாக உண்டாயின. அவருடைய தேக அசெளக்கியத்தை நினைந்து வருந்தினேன்; எவ்வாறேனும் போய்ப் பார்க்கவேண்டு மென்றெண்ணிப் பிள்ளையவர்களை உத்தரவு கேட்டேன்.
என்னுடைய விருப்பத்தை யறிந்த இவர் துணையின்றி என்னை அனுப்பத் துணியாமல் எனக்குத் தக்க ஆறுதல் கூறி என் தந்தையாருக்கு ஒரு கடிதம் எழுதுவித்தார். அது வருமாறு:
உ
சிவமயம்.
"சாது குலோத்தம சாம்பவர்களாகிய ஐயரவர்களுக்கு அநேக தண்டம்.
" இவ்விடம் யாவரும் க்ஷேமம். சாமிநாத ஐயரும் க்ஷேமமாக இருக்கிறார். தாங்களும் குழந்தை முதலியவர்களும் க்ஷேமமாக இருக்கிற செய்திக்குக் கடிதம் வரைந்தனுப்ப வேண்டும்.
"தாங்கள் சரீர செளக்கியம் இல்லாமலிருந்து தலைக்கு ஜலம் போட்டுக்கொண்டதாகவும் அன்னம் செல்லாமலிருக்கிறதென் றும் [23]சின்னசாமி ஐயரவர்களுக்கு எழுதிய கடிதம் இவ்விடம் வந்து சேர்ந்தது; பார்வையிட்டோம். சாமிநாத ஐயர் மிகவும் கிலேசப்பட்டு, ‘இப்போதே போய் நான் பார்த்துக்கொண்டு வருவேன்' என்று தீவிரமாகப் பிரயாணப்பட்டார். அப்போது நீரும் நிழலும் இல்லாத காட்டு ராஜ்யத்தில் நிராதாரமாகப் போவது கூடாதென்று நான் தடுத்திருக்கிறேன். அப்படித் தடுத்திருந்தும் அவர் நீங்கள் என்ன சிரமப்படுகிறீர்களோவென்று சதா கவலையுள்ளவராகவே இருக்கிறார். ஆகையால் இந்தக் கடிதம் கண்டவுடனே உங்கள் தேக செளக்கியத்தைக் குறித்து ஒரு கடிதம் அனுப்புவதன்றியும் அவ்விடத்துக் காரியங்களைப் பார்த்துக் கொண்டு முன் கடிதத்தில் எழுதியபடியே வந்து சேரவேண்டும்.
"உங்கள் தேக செளக்கியத்தைக் குறித்துச் சீக்கிரம் கடிதம் அனுப்பிவிட்டால் நீங்கள் பத்து நாள் தாமதித்து வந்தாலும் வரலாம். 'சாமிநாதன் செளக்கியம் தெரிந்தால்தான் எனக்கு ஸெளக்கியமாகும்' என்று எழுதியிருக்கிறீர்களே. அவர் நிரம்பவும் செளக்கியமாக இருக்கிறார். அவரைக் குறித்து யாதொரு கவலையும் வேண்டாம். நான் இப்பொழுது திருவாவடுதுறையிலேயே இருக்கிறேன். காகிதமும் திருவாவடுதுறைக்கே அனுப்ப வேண்டுவது. [24]............. ..............
இக்கடிதம் சாமிநாதையர் கையெழுத்து. ஆகையால் சீக்கிரம் பதிலனுப்பவேண்டும்.
இங்ஙனம்
ஆங்கிரச ஆண்டு ஆவணி மாதம் 32. மீனாட்சிசுந்தரம்."
இக் கடிதத்தைப் பார்த்தவுடன் என் தந்தையார், "உங்களுடைய அருமையான கடிதம் வந்து எனக்கு மிக்க ஆறுதலை விளைவித்தது. எனக்குள்ள அஸெளக்கியம் இதனால் சீக்கிரம் நீங்கிவிடுமென்று எண்ணுகிறேன். ஸெளக்கியமானவுடன் வந்து பார்க்கிறேன்" என்று இவருக்கு ஒரு பதில் எழுதிவிட்டுச் செளகரியப்படுத்திக்கொண்டு சில வாரங்களுக்குப் பின்பு திருவாவடுதுறைக்கு வந்தார்; என்னுடன் சில தினம் இருந்து பிள்ளையவர்களோடு சம்பாஷணை செய்துவிட்டு மனமுவந்து மீட்டும் மேற்கூறிய காருகுடிக்குச் சென்றார்.
'உலகெலாம்' என்னும் செய்யுளின் உரை.
ஆங்கிரஸ வருஷம் கார்த்திகை மாதத்திற் பெரிய புராணப் பாடம் ஆரம்பிக்கப்பட்டது. தியாகராச செட்டியாரும் வந்து கேட்டு இன்புற்றனர். இயல்பாகவே மகா வைத்தியநாதையரும் அவர் தமையனார் இராமசாமி ஐயரும் மடத்திற்கு வந்திருந்தமையால் அவர்களும் சிலதினம் உடனிருந்து கேட்டு வருவாராயினர். அப்புராணத்தை நடத்தத் தொடங்கிய பொழுது மூலம் மட்டுமுள்ள சில அச்சுப் புத்தகங்களும் சில பாகத்திற்கு மட்டும் உரை எழுதப்பட்ட புத்தகம் ஒன்றும் வந்திருந்தன. "உலகெலாம்" என்ற செய்யுளுக்கு அந்த உரையாசிரியர் எங்ஙனம் பொருள் செய்திருக்கிறாரென்பதை அறிவதற்கு அதனுரையைப் படிப்பித்து இவர் கேட்டார். அச்செய்யுளின் நயத்தை அவ்வுரை நன்கு புலப்படுத்தவில்லை. 'மலர் சிலம்படி' என்பதற்கு இலக்கணப் பிழையாக மலர் போன்ற சிலம்படியென்று பொருள் எழுதப்பட்டிருந்தது. அதனை யறிந்து இவர் மனவருத்தமடைந்து, "மலர் சிலம்படி யென்றது வினைத்தொகை; அதற்கு மலர்ந்த சிலம்படி யென்பதுதான் பொருள். மலர்போன்ற சிலம்படியென்று பொருள் கொள்ள வேண்டுமானால், மலர்ச்சிலம்படி யென் றிருத்தல் வேண்டும். அப்படியிருத்தல் இங்கே பொருந்தாது" என்றார்; உலகெலாம் மலர் சிலம்படியென இயைக்க வேண்டுமென்றும் இப்பொருளுக்கு மேற்கோள் திருவாசகத்திலுள்ள, "தில்லை மூதூ ராடிய சேவடி, பல்லுயி ரெல்லாம் பயின்றன னாக" என்பதென்றும் எங்களுக்குச் சொன்னார். அந்த உரையைச் சுப்பிரமணிய தேசிகரிடத்தும் படித்துக் காட்டச் சொல்லவே கேட்டு அவரும் அதிருப்தியுற்றார். அந்த வருத்தம் மனத்தில் இருந்தே வந்தது; அதன் பொருளை யாவரும் எளிதில் அறிந்து கொள்ளச் செய்யவேண்டுமென எண்ணியே, சேக்கிழார் பிள்ளைத் தமிழை இவர் இயற்றுகையில் [25] "மாமேவு" என்னுங் காப்புச் செய்யுளில் விளக்கினர்; அச்செய்யுளிலுள்ள நான் காமடி முதலியவற்றால் இது விளங்கும்.
பெரிய புராணப் பாடத்தை நிறுத்தியது.
பெரிய புராணத்திற் கண்ணப்பநாயனார் புராணத்தைப் பாடங் கேட்டு வருகையிற் சில தினத்திற்குப் பின்பு எனக்கு முதலிற் கடுமையான ஜ்வரம் கண்டது. பின்பு பெரியம்மை (பனையேறியம்மை) பூட்டி விட்டமையால் தைமாத முதலில் என் அம்மானுடைய ஊராகிய சூரிய மூலைக்கு நான் செல்லும்படி ஏற்பட்டது. நான் சென்றதனால் மனவருத்தமுற்றிருந்த பிள்ளையவர்களுடைய நோக்கத்தை அறிந்த ஆதீனகர்த்தர், "சாமிநாதையர் செளக்கியமடைந்து வந்த பின்பே பெரிய புராணத்தில் எஞ்சிய பாகத்தைப் படிக்கலாம்" என்றார். அதனால் அப்பாடம் சில காலம் வரையில் நடைபெறவில்லை.
பல ஊர்களுக்குச் சென்றது.
அதற்குமேல் இவர் தம்முடைய மாணாக்கர்களுடன் புறப்பட்டுத் திருவாரூர், கீழ்வேளூர், நாகபட்டினம், ஆவராணி, காரைக்கால், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களுக்குச் சென்றார். தை மாதத்தில் இவர் திருவாவடுதுறைக்குத் திரும்புகையில் நீடாமங்கலத்துக்கு வரும்பொழுது இவருக்கு முடக்கு ஜ்வரம் கண்டு விட்டது. அதனால் துன்பம் உண்டானமையால் அவ்வூரிலும் அயலூர்களிலுமுள்ள சில கனவான்களின் உதவியினால் அது நீங்கும்வரையில் அங்கே தங்கியிருந்தார்.
ஒரு பாட்டிற்குப் பொருள் கூறியது.
தமிழில் நல்ல பயிற்சி இல்லாமல் நூல்களுள் அங்கங்கே ஐயத்திற்கிடமான சில செய்யுட்களை மட்டும் மனனம் செய்து கொண்டு படித்த யாரையேனும் கண்டால் அந்தப் பாடல்களைச் சொல்லிப் பொருள் கேட்பது சிலருடைய வழக்கமென்பது அறிஞர்களுக்குத் தெரிந்திருத்தல் கூடும். அத்தகைய செய்யுட்களின் பொருளைத் தெரிந்துவைத்துக் கொண்டதனாலேயே எல்லா வித்துவான்களிலும் தாம் மேற்பட்டவர்களென்ற தருக்கு அன்னோருக்கு உண்டாகிவிடும். அதனால் தம்முடைய சில வினாக்களுக்கு விடை அளியாதவர்கள் தமிழ்வித்துவான்களல்லரென்று தாமே தீர்மானித்து விடுவார்கள். அங்ஙனம் அவர்கள் சொல்லக் கூடிய செய்யுட்கள் : [26]"வந்தெதிரே தொழுதானை', "நஞ்ச மன்னவரை", ஆயமா நாகர் " , [27]"மாதுலராகி வந்த " என்பன முதலியவை.
அந்த வகையைச் சார்ந்த ஒருவர் இவருடைய வரவை அறிந்து இவர்பால் வந்து கேள்வி கேட்கத்தொடங்கினார். இவர் முகமாக எவ்வளவோ பல அரிய விஷயங்களைக் கேட்டு அறிந்து கொள்ளலா மென்ற எண்ணம் அவருக்கு உண்டாகவேயில்லை. ஏதேனும் இயற்கையாகவே படித்திருந்தாலல்லவோ அந்த எண்ணம் உண்டாகும்? அவர் கேட்ட ஒவ்வொரு வினாவிற்கும் இவர் எளிதில் விடையளித்து வந்தார். வந்தவர் தம்முடைய சரக்குக்களை ஒவ்வொன்றாக எடுத்துவிட்டார். பலசெய்யுட்களுக்கும் இவர் பொருள் கூறி வருவதைக் கேட்ட அவர், அது காறும் மிக்க ஐயத்திற்கிடமாயிருந்ததும் அவராற் பொருள் அறிந்துவைக்கப்படாததுமாகிய,
(கட்டளைக் கலித்துறை)
{6.18}
"[28]காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே "
என்னும் ஒரு செய்யுளைக்கூறிப் பொருள் வினாவினார்.
இவர் அதிலே உள்ள காணிகளைக் கூட்டி, "காலைக் காட்டு மென்பது இதன் பொருள். கழுக்குன்றத்தை யடைந்தால் அத் தலம் சிவபெருமான் திருவடியைக் காணச் செய்யுமென்பது இதன் கருத்து. இது,
{6.19} 'பிணக்கிலாத பெருந்துறைப்பெரும் பித்தனே
............... என் வினை யொத்தபின்,
கணக்கிலாத்திருக் கோலநீ வந்து காட்டினாய்கழுக் குன்றிலே'
என்பதை நினைந்து பாடப் பெற்றது" என்று விடையளித்தார். கேட்ட அவர் வியந்து, "இதுவரையிலும் யாரும் இதற்குச் சரியாகப் பொருள் சொல்லவில்லை. கடினமான செய்யுளையே பொறுக்கி எல்லோரையும் கேட்டுக் கலங்கச் செய்து கொண்டு வரும் நானே தெரிந்துகொள்ளவில்லை. யாதொரு கவலையுமின்றி இதற்குப் பொருள் கூறிய தாங்கள் தெய்வப் பிறவியே" என்று பாராட்டிக் கூறி மகிழ்ந்து சென்றார்.
அவர் சென்றபின் இவர், "இப்படி ஒரு கூட்டத்தினர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இத்தகைய பாடல்களுக்குப் பொருள் கூறுவதுதான் உண்மையான புலமை யென்ற அபிப்பிராயத்தை அவர்கள் எப்பொழுதும் விடமாட்டார்கள்" என்றார். உடனிருந்த அவ்வூராரிற் சிலர், "இந்தத் துஷ்டன் எந்தத் தமிழ் வித்துவான் வந்தாலும் இப்படியே கேள்வி கேட்பது வழக்கம். சாதுவான சிலர் இவனுடைய படாடோபத்தில் மயங்கி அடங்கி விடுவார்கள். அதனால் இவனுடைய கொழுப்பு மிகுந்து வந்தது. இன்றைக்குத் தங்கள் முன் இவனுடைய கர்வம் அடங்கிற்று. எங்களுக்கு அது சந்தோஷமாகவிருக்கிறது" என்றார்கள் .
திருவாவடுதுறைக்கு மறுபடி வந்தது.
அங்கேயுள்ளவருடைய விருப்பத்தின்படி இவர் மேனாப்பல்லக்கை உபயோகித்துக்கொண்டு திருவாவடுதுறைக்கு வருவாராயினர். உடன் சென்ற மாணாக்கர்களும் தவசிப்பிள்ளைகளும் இவரை மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொண்டு வந்தார்கள். இவருக்கு ஜ்வரம் வந்ததைக் கேள்வியுற்றுத் திருவாவடுதுறையிலிருந்து சென்றவர்களுடன் இவர் மாணாக்கராகிய சாமிநாத பண்டார மென்பவரும் வழியிற் சென்று பார்த்தனர்.
என்னைப்பற்றிய கவலை.
அவரைப் பார்த்தவுடன் இவர், "சாமிநாதா, சாமிநாதையருக்குப் பெரியம்மை எந்த மட்டிலிருக்கிறது? தலைக்கு ஜலம் விட் டாயிற்றா? செளக்கியமாக இருக்கிறாரா?" என்று கேட்டனர். பண்டாரம், "நான் பார்க்கவில்லை; அதனால் அவரைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது" என்று கூறவே இவர், "அடிக்கடி சென்று அவரைப் பார்த்து வரும்படி சொல்லி அதற்காகத்தானே உன்னைத் திருவாவடுதுறையில் வைத்து விட்டு வந்தேன்? நீ கவனியாமலிருந்தது எனக்குச் சிறிதும் திருப்தியாக இல்லை" என்று சொல்லிவிட்டுத் திருவாவடுதுறைக்கு வந்தார்; வந்தவுடனே மேற்கூறிய சாமிநாதபண்டாரத்தோடு வேறொருவரையுஞ் சேர்த்து என்னுடைய நிலையை அறிந்து வரும்படி சூரியமூலைக்கு அனுப்பினர். அவர்கள் வந்து என்னைக் கண்டு கவலை தீர்ந்து, "உங்களுடைய தேகத்தின் நிலைமையை நன்றாக அறிந்து கொண்டு விரைவில் வந்து தெரிவிக்கும்படி சொன்னதன்றி ஏதாவது உங்களுக்கு ஆகவேண்டியிருந்தால் அதையும் தெரிந்து வந்து சொல்ல வேண்டுமென்றும் ஐயா அவர்கள் சொன்னார்கள். அவர்கள் உங்கள் விஷயமான கவலையோடேயே யிருக்கிறார்கள். சீக்கிரத்தில் நாங்கள் சென்று சொல்லவேண்டும்" என்று சொன்னார்கள். உடனே நான், "இங்கே யாதொரு குறைவுமில்லை. என்னுடைய அம்மானவர்கள் என்னை நன்றாகக் கவனித்து வருகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் என் தேகநிலைமை நன்றாகச் செளக்கியமாகி விடும். ஆனவுடன் வந்து அவர்களைப் பார்த்து எனக்கு உள்ள விருப்பத்தைப் பூர்த்தி செய்துகொள்ள எண்ணியிருக்கிறேன். இதைத் தெரிவிப்பதோடு எனக்கு உள்ள இடைவிடாத ஞாபகத்தையும் தெரிவியுங்கள்" என்று சொன்னேன். அப்பால் மிகவும் அவசரமாக அவர்கள் செய்தி சொல்லுதற்குத் திருவாவடுதுறைக்குப் போய்விட்டார்கள். அவர்களால் என்னுடைய நிலையைத் தெரிந்துகொண்ட இப்புலவர் பெருமான் சில தினங்களுக்கு ஒருமுறை என்னைப்பார்த்து வரும்படி யாரையேனும் அனுப்பி வந்தார். எனக்கு அது மிகவும் ஆறுதலாக இருந்தது.
மகாமகம்.
அப்பால் ஆங்கிரஸ வருஷம் (1872) மாசி மாதம் கும்பகோணத்தில் ஸ்ரீ மகாமக புண்ணிய காலமானதால் ஸ்நானத்தின் பொருட்டுத் திருக்கூட்டத்தோடும் மற்றப் பரிவாரங்களோடும் சுப்பிரமணிய தேசிகர் அந்நகருக்கு விஜயஞ்செய்து அங்கே பேட்டைத் தெருவிலுள்ள ஆதீன மடத்தில் தங்கினார். தம்முடைய மாணாக்கர் பலரோடும் இக்கவிஞர்கோமானும் உடன் சென்று அங்கே சில தினம் இருந்து சிறப்பித்தார். தமிழ்நாட்டின் பல பாகங்களிலுள்ள ஜமீன்தார்களும் மிட்டாதார்களும் பிரபுக்களும் சிஷ்ய கோடிகளும் அங்கு வந்து தேசிகரைத் தரிசித்து மகிழ்வடைந்தார்கள்; அந்த நகரிலுள்ள சைவப் பிரபுக்களிற் பலர் மகேசுவர பூஜையும், பட்டணப் பிரவேசமும் மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் ஒரு பெரிய சபை கூட்டி வித்துவான்களுக்கெல்லாம் ஏற்றபடி ஸம்மானம் செய்தனர். வந்தவர்களில் தமிழ்ப் பாஷையில் அபிமானமுள்ள பெரும்பாலோர் இவரைப் பார்த்து இவருடைய வாக்கின் பெருமையையும் அருமையையும் பாராட்டித் தங்களுடைய இடத்திற்கு வந்து சிறப்பிக்கவேண்டுமென்று இவரைக் கேட்டுக்கொண்டு சென்றனர். சில தினங்கள் சென்றபின் தேசிகர் பரிவாரங்களுடன் திருவாவடுதுறைக்கு விஜயம் செய்தமையால் இவரும் உடன் வந்து அங்கே தங்குவாராயினர்.
சிறப்புப்பாயிரங்கள்.
கும்பகோணத்துக்கு வந்த பிரபுக்களிற் சிலரும், வித்துவான்களிற் சிலரும் உடன் வந்து திருவாவடுதுறையில் தங்கிச் சுப்பிரமணிய தேசிகரை நாள்தோறும் தரிசிப்பதுடன் பிள்ளையவர்களோடு சம்பாஷணை செய்தும் வந்தனர். அப்போது இருதிறத்தாருக்கும் உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர்களில் மதுரை இராமசாமி பிள்ளையென்பவர் செய்யுள் நடையாகத் தாம் இயற்றிய 'சிவாலய தரிசன விதி' என்னும் நூலையும் வடமொழியிலுள்ள பர்த்ருஹரி சதகங்களின் மொழிபெயர்ப்பான நூல்களையும் படித்துக்காட்டிச் செப்பம் செய்துகொண்டு சிறப்புப் பாயிரங்களும் பெற்றனர். திருநெல்வேலியைச் சார்ந்த பேட்டையிலுள்ள [29]சுப்பிரமணியபிள்ளை யென்பவர் தம் வழிபடுகடவுளாகிய சருக்கரை விநாயகர்மீது தாம் இயற்றிய ஒரு பதிகத்தையும் வேறு சில நூல்களையும் படித்துக்காட்டித் திருத்திக்கொண்டு சிறப்புப் பாயிரங்களும் பெற்றனர். அவற்றுள் எனக்குக்கிடைத்த சருக்கரை விநாயகர் பதிகச் சிறப்புப்பாயிரம் வருமாறு :-
(விருத்தம்)
{6.20}
"பூமேவு நங்கைவளர் மங்கைநக ரைங்கையுடைப் புத்தேண் மேனிப்
பாமேவு மருக்கரைநேர் சருக்கரைவி நாயகற்கோர் பதிகஞ் சொற்றான்
மாமேவு சொக்கலிங்க வள்ளன்முன்றோன் றிடத்தோன்றி வந்த செம்மல்
நாமேவு பெரும்புகழ்சார் கலையுணர்சுப் பிரமணிய நாவ லோனே."
இங்ஙனம் தாங்களியற்றிய நூல்களை இவரிடம் படித்துக் காட்டிச் சிறப்புப் பாயிரம் பெற்றுச் சென்றோர் வேறு சிலரும் உண்டு.
சேற்றூர் ஜமீன்தார்.
சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களுக்குப் பொருளுதவி செய்ய விரும்பியும், அவ்வாறு செய்தால் மடத்திலுள்ளவர்கள் மடத்துப் பணத்தை வரையறையின்றி இவருக்குத் தாம் கொடுத்துச் செலவிடுவதாகத் தம்மைக் குறைகூறக் கூடுமென்றெண்ணினார். அதனால் இவருக்கு வேறு வகையான ஆதரவை உண்டாக்கக் கருதி, யாரேனும் பிரபுக்கள் வந்தால் இவரைப் பார்க்கச் செய்தும் அவர்களைக்கொண்டு இவருக்கு உதவி செய்வித்தும் வந்தார். அவ்வப்பொழுது அந்தப் பிரபுக்களால் இவருக்குப் பொருளுதவி கிடைத்து வந்ததுண்டு.
தமிழில் நல்ல பயிற்சியுள்ளவரான சேற்றார் ஜமீன்தாராகிய முத்துச்சாமி பாண்டியரவர்கள் ஒரு சமயம் அங்கே வந்து சில தினமிருந்தனர். இவரோடு பழகவேண்டுமென்னும் விருப்பம் அவருக்கு இருந்தமையின் அவரைச் சந்தித்துச் சம்பாஷணை செய்து வந்தால் தமக்குத் திருப்தியாக இருக்குமென்று இவருக்குச் சுப்பிரமணியதேசிகர் சொல்லியனுப்பினார். அப்படியே இவர் அந்த ஜமீன்தாரைக் கண்டு நெடுநேரம் சம்பாஷித்து அவருடைய நற்குணங்களில் ஈடுபட்டு,
(விருத்தம்)
{6.21}
"திருவியலுஞ் [30]சேறைநக ரிராசதா னித்தலமாத் திங்கள் போல
உருவியலுங் கவிகைமுத்துச் சாமிபாண் டியனுயிர்கள் உவப்ப மேவி
மருவிய[31]சுந் தரமகா லிங்கவே ளமைச்சியற்ற வழிந டாத்தும்
பொருவியலா வரசுரிமைக் கொப்பதென்னென் றியாவர்களும் புகலு வாரே"
என்னும் பாடல் ஒன்றை இயற்றிப் படித்துக்காட்டும்படி செய்தார்.
ஜமீன்தார் கேட்டு இன்புற்று இவருக்குத் தக்க ஸம்மானம் செய்து பாராட்டினார்; சேற்றூருக்கு வந்து சில தினங்களிருந்து தம்மையும் மற்றவர்களையும் மகிழ்விக்க வேண்டுமென்றும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். அங்ஙனம் செய்வதாக வாக்களித்து இவர் தம்முடைய விடுதிக்கு வந்து விட்டார்.
திருவாவடுதுறைக்கு நான் திரும்பிவந்தது.
சூரியமூலைக்குச் சென்றிருந்த நான் மாசி மாதம் 17-ஆந் தேதி புதன்கிழமை (26-2-1873) மாலையில் என் தந்தையாரோடும் துறைசை சென்று மடத்திற் பல அறிஞர்களிடையே ஸல்லாபம் செய்துகொண்டு விளங்கிய இவரைக் கண்டேன். உடம்பின் அம்மை வடுக்கள் இவர் கண்ணுக்குப் புலப்படாதபடி அதிகமாக விபூதியைத் தூளனம் செய்துகொண்டிருந்தேன்; என்னைக் கண்டதும் அருகே யழைத்து இருக்கச்செய்து இவர், "அம்மை வடுக்கள் புலப்படாதபடி விபூதிக் கவசம் தரித்திருக்கிறீர்போலும்; அடையாளம் தெரியவில்லையே, உம்முடைய ஞாபகமாகவே யிருந்தேன். நீர் இல்லாமையினால் பெரிய புராணப் பாடத்தை நிறுத்திவைக்கும்படி ஸந்நிதானம் கட்டளையிட்டது. அதனால் அது நடைபெறவில்லை. இனித்தான் நடைபெற வேண்டும்" என்றனர். பின்பு அங்கே வந்திருப்பவர்களுள் ஒவ்வொருவரையும் எனக்குப் பழக்கம் செய்வித்தார். நான் பலநாளாகக் கேள்வியுற்றிருந்த அவர்களை அன்று தெரிந்துகொண்டேன்.
அதன்பின்பு பெரிய புராணத்தில் எஞ்சிய பாகமும் நன்னூல் விருத்தியுரை முதலியனவும் முறையே எங்களாற் பாடங் கேட்கப்பட்டு வந்தன. மற்றொரு வகையாருக்கு நன்னூற் காண்டிகையுரை முதலியன இவராற் பாடஞ் சொல்லப்பட்டு வந்தன.
சுப்பிரமணிய தேசிகர் விடுதி அமைத்துக் கொடுத்தது.
பிள்ளையவர்களுக்கும் படிக்கிறவர்களுக்கும் வசதியான இடங்களில்லையென்பதை அறிந்த சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைத் தெற்கு வீதியின் தென்சிறகிற் புதியனவாக மூன்று வீடுகள் கட்டுவித்து அவற்றில் நடுவீட்டை இவருக்காக அமைத்து இவர் வருத்தமில்லாதபடி சென்று வருவதற்காக முன் வாயிலின் நிலையை உயரமாக வைக்கும்படி கட்டளையிட்டார். அப்படியே அஃது அமைக்கப்பெற்றது. இப்போதும் அந்த வீடு பிள்ளையவர்கள் வீடென்றே வழங்கி வருகிறது.
அநந்தகிருஷ்ண கவிராயர்.
விக்கிரமசிங்கபுரம் ஸ்ரீ நமச்சிவாய கவிராயருடைய வழித்தோன்றலும் சின்னப்பட்டத்திலிருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரிடம் அநேக நூல்களைப் பாடங்கேட்டவருமாகிய அநந்தகிருஷ்ண கவிராயரென்பவர். மகாமகத்திற்காகக் கும்பகோணம் வந்திருந்து அப்பால் திருவாவடுதுறைக்கும் வந்து இவரிடத்திற் பாடங்கேட்டு வருவாராயினர். அவருடைய பரம்பரைப் பெருமையையும் புத்தி நுட்பத்தையும் அறிந்து அவர்பால் இவர் அதிக அன்பு செலுத்தி வந்தனர். ஒரு நல்ல தினத்தில் அவர் சுப்பிரமணிய தேசிகரிடம் தீட்சை பெற்றுக்கொண்டமையால் 'அம்பலவாணர்' என்னும் தீட்சாநாமம் தேசிகரால் அப்பொழுது அவருக்கு அளிக்கப்பட்டது. அப்பெயர் அவருக்கு அமைந்ததைப் பாராட்டிய இவர் அவர்மீது,
(கட்டளைக்கலித்துறை)
{6.22}
"நம்பல மாகுந் திருவா வடுதுறை நண்ணிவள
ரும்பலர் போற்றும்பஞ் சாக்கர தேவ னுரைத்தபடி
[32]கம்பல வான்கண்ண னென்றே தினமுங் கரைவதினும்
அம்பல வாண னெனும்பெய ரேநன் கமைந்ததுவே''
என்னும் செய்யுளை இயற்றினர்.
அப்பால் ஸ்ரீமுக வருஷத்தில் தாம்பிரபரணி நதிக்கரையிலுள்ளதாகிய பாபநாசமென்னும் ஸ்தலத்தில் நடைபெறும் ஸ்ரீகலியாண சுந்தரேசுவர மூர்த்தியின் திருவிழாவிற்கு ஒவ்வொரு தினமும் வாகனகவிகள் சொல்லுவது அவருக்குப் பரம்பரை வழக்கமாதலால் அதற்குப் போகவேண்டுமென்று விடைபெற்றுக் கொள்ளுதற்கு அவர் முயன்றனர். அப்போது இவர், ''போக வேண்டாம்; இங்கே இருப்பது எனக்குத் திருப்திகரமாயிருக்கிறது'' என்று சொன்னதுடன், "அங்கே போய்ச் சொல்ல வேண்டிய பாடல்களை நானே செய்து தருவேன். அவற்றை யனுப்பி யாரைக் கொண்டேனும் அங்கே படிக்கச் செய்க” என்று சற்றேறக்குறைய இருபதுக்குக் குறையாத [33] வாகன கவிகளை இயற்றி அவரிடம் கொடுத்து ஊருக்கு அனுப்பச் செய்தனர். அப்படியே அனுப்பிவிட்டு அவர் திருவாவடுதுறையிலிருந்தே பாடங்கேட்டு வந்தனர்.
ஸ்ரீ நமச்சிவாய கவிராயருடைய பாட்டைப் பாராட்டியது.
இவருக்குக் கச்சியப்ப ஸ்வாமிகளிடத்தில் மிக்க பக்தியுண்டென்பது [34] முதற்பாகத்தால் அன்பர்களுக்குப் புலப்பட்டிருக்கும்;
எங்களுக்குப் பாடஞ் சொல்லி வருகையில் இடையிடையே அவருடைய கல்விப் பெருமையை இவர் எடுத்துக் கூறிவருவதுமுண்டு. மேற்கூறிய அநந்த கிருஷ்ண கவிராயரைச் சந்திக்கும் காலங்களில் அவர் முன்னோர்களாகிய நமச்சிவாய கவிராயர் முதலியோர்களியற்றிய பிரபந்தங்களிலுள்ள பாடல்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டு இவர் இன்புற்று வந்தார். ஒரு சமயத்திற் சில பாடல்களைச் சொல்லி அப்பால்,
(சந்த விருத்தம்)
{6.23}
''வாழ்ந்த தென்னவி சாலத லங்களை
ஆண்ட தென்னப்ர தாபமி குந்திறு
மாந்த தென்னவ்ரு தாவின் தங்கொடு தலைகீழாய்
வீழ்ந்த தென்னவை யோபிற கங்கவர்
மாண்ட தென்னபொ யோவென விங்கினி
வேண்டி யென்னப்ர யோசன நின்பதம் அடைவேனோ
சூழ்ந்து பன்னிரு காதம ணங்கமழ்
தேன்கள் விம்மியி றால்கள்கி ழிந்திடை
தூங்கு தென்மல யாசல நின்றடி யவர்போலத்
தாழ்ந்து சன்னிதி யூடுபு குந்தலை
மோந்து தண்மலர் மாரிபொ ழிந்திடு
தாம்ப்ர பன்னிம காநதி நின்றவென் உலகாளே"
என்ற செய்யுளை அவர் சொன்னார்; இவர் கேட்டு மெய்ம்மறந்து ஆனந்த பரவசராகி, ''இப்படிப் பாடுவதற்குக் கச்சியப்பஸ்வாமிகளாலும் முடியாது'' என்று கூறினார். அருகே இருந்த நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து, "கவிஞரெல்லாரினும் கச்சியப்ப ஸ்வாமிகளிடத்து இவருக்கு உள்ள நன்மதிப்பு வெளியாகிறது'' என்று மந்தணமாகப் பேசிக்கொண்டோம்
அண்ணுசாமி முதலியார்.
திருநெல்வேலியில் நீதிபதியாக இருந்த புதுச்சேரி அண்ணுசாமி முதலியாரென்பவர் தம் ஊருக்குப் போகும்பொழுது திருவாவடுதுறையில் இறங்கிச் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து விட்டுச் செல்வது வழக்கம். ஒருமுறை அவர் வந்திருந்த பொழுது அவருடைய குண விசேடத்தையும் சுப்பிரமணிய தேசிகர்பால் அவருக்குள்ள அன்பின் மிகுதியையும் அறிந்து பிள்ளையவர்கள் சொல்லிய பாடல் வருமாறு :-
(விருத்தம்)
{6.24}
''சீர்பூத்த கல்வியுந்தக் கோர்விழையு மொழுக்கமும்வண் சீர்த்தி தானும்
ஆர்பூத்த நடுநிலையுங் கலைஞர்களு நின்பால்வந் தண்ண லானே
பேர்பூத்த புதுவையண்ண லேயண்ணு சாமியெனும் பேர்பெற் றாயால்
நீர்பூத்த பரங்கருணைக் கடவுளரு ளால்வாழி நீடு மாதோ."
குற்றாலச் சிலேடை வெண்பா.
பிறகு வன்றொண்டச் செட்டியார் வந்து சில தினங்கள் இருந்து ஓய்வு நேரங்களில் தமக்குள்ள சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டதன்றித் திருச்சிற்றம்பலக் கோவையாரை முறையே பாடங் கேட்டுக்கொண்டு வந்தனர் குற்றாலச் சிலேடை வெண்பா, சிங்கைச் சிலேடை வெண்பா என்பவற்றின் கையெழுத்துப் பிரதிகளை அவர் கொணர்ந்திருந்தார். அவற்றை நன்றாக ஆராய்ந்து பதிப்பிக்க வேண்டுமென்னும் நோக்கம் அவருக்கு இருந்தது. அதனால் மடத்திலிருந்த பிரதிகளையும் வாங்கி வைத்துப் படிப்பித்து இக் கவிஞர்பிரான் முன்னிலையிற் பொருள் வரையறை செய்து கொண்டே வந்தார். இவருடைய மற்ற மாணவர்களும் பிறரும் உடனிருந்து கேட்டுக்கொண்டும் இவருடைய கருத்தின்படி தமக்குத் தோற்றியவற்றை அப்பொழுதப்பொழுது சொல்லிக் கொண்டும் இருந்தார்கள். குற்றாலச் சிலேடை வெண்பாவை வாசித்து வருகையில்,
"வாடிய மெய்த்தவரும் வாரி மணித்திரளும்,
கோடி வரம்படைக்குங் குற்றாலம்"
என்னும் செய்யுளில் "கோடி வரம்படைக்குங் குற்றாலம்'' என்ற அடிக்குக் கோடி வரங்களை அளிக்கும் குற்றாலமென்ற ஒரு பொருள் மட்டும் விளங்கிற்று; மற்றொன்று விளங்கவில்லை. அதைப்பற்றி யாவரும் யோசித்துக்கொண்டிருக்கையில் அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் திடீரென்று, "கோடு இவர் அம்பு அடைக்கும் என்று சொல்லலாமோ?'' என்று அச்சத்தோடு அறிவித்தனர். இக்கவிநாயகரும் மற்றவர்களும் சந்தோஷித்து அவர் கூறியதை அங்கீகரித்தார்கள். வன்றொண்டச் செட்டியார் மட்டும் சிறிதும் வியவாமல், "மறுத்து'' என்று சொல்லி மேலே படிக்குமாறு குறிப்பித்தனர். அப்பால் சில பாட்டுக்கள் படிக்கப்பட்டன. தாம் சொன்ன பொருளைச் செட்டியார் சிறிதும் பாராட்டவில்லையேயென்ற வருத்தம் மேற்சொன்ன மாணவருக்கு இருந்தது. எழுந்து செல்லுகையில் அம்மாணவரை நோக்கி இவர், "செட்டியார் மதிக்கவில்லையென்ற வருத்தம் உமக்கு இருப்பதாகத் தெரிகிறது. உண்மைப் பொருளுக்கு எப்பொழுதும் மதிப்புண்டு. அவர் மதியாவிட்டால் அதற்கு இழிவொன்றுமில்லை. பிறருடைய மதிப்பையும் அவமதிப்பையும் கவனிக்கக் கூடாது'' என்று ஆறுதல் கூறினார். இக்கொள்கை பிறருக்குக் கூறப்படுவது மட்டுமன்று. பிறர் மதித்தாலும் மதியாவிட்டாலும் அதைக் கவனியாதவராகி உண்மைப் பொருளை வெளியிடலையே இவர் தமது வாழ்வின் பயனாகக்கொண்டிருந்தார்.
வீரபத்திர பிள்ளை
சுப்பிரமணிய தேசிகர் கல்லிடைக் குறிச்சியிலிருந்தபொழுது மிக்க உபகாரியும் சிறந்த கல்விமானுமாயிருந்த சிரஸ்தேதார் வீரபத்திர பிள்ளை யென்பவரைத் திருவாவடுதுறைக்கு வருவித்துச் சிலநாள் வைத்திருந்து உபசரித்து ஸல்லாபம் செய்யவேண்டுமென்றெண்ணி அவர் வரவை எதிர்பார்த்ததுண்டு. வருவதற்குப் பிரியமிருந்தும் தளர்ச்சி மிகுதியால் வீரபத்திர பிள்ளைக்கு துறைசைக்கு வர இயலவில்லை. தம்முடைய அன்பர்களிடத்திற் பிரியத்தைச் செலுத்துவதிற் சிறந்த தேசிகருக்கு அவரைப் பார்க்கவேண்டுமென்னும் ஆவல் மிகுதியாக இருந்தது; அதைத் தெரிந்து இவர் அதனைப் புலப்படுத்திக் கற்பனையுள்ள [35] 12-பாடல்களை இயற்றி அவருக்கு அனுப்பினார். அவர் அயலூருக்குச் செல்லுவதில்லையென்னும் உறுதியுடையவராக இருந்தும் அப்பாடல்களைப் பார்த்து அவற்றில் ஈடுபட்டு உடனே புறப்பட்டுத் தபால்வண்டி வழியே திருவாவடுதுறை வந்து தேசிகரைத் தரிசித்தும் இவரோடு ஸல்லாபம் செய்துகொண்டும் சிலதினம் இருந்து மகிழ்ந்து விடைபெற்றுத் தம்மூர் சென்றார்.
திருக்குற்றாலப்புராணம் படித்தது.
ஒருசமயம் திருக்குற்றாலப்புராண அச்சுப்பிரதி கிடைத்தது. அதனிடத்து நெடுங்காலமாக இருந்த பிரீதியால் இவர் அதனை படிப்பித்துக் கேட்டு முதலிலிருந்து பொருள் வரையறை பண்ணிக்கொண்டே சென்றார். அப்பொழுது மகாவைத்திய நாதையர், மேலகரம் [36] சண்பகக் குற்றாலக் கவிராயர் முதலியோர் உடனிருந்தார்கள். அப்படிக் கவனித்து வருகையில் ஸ்ரீ சண்டிகேசுவர ஸ்துதியாகிய,
(விருத்தம்)
{6.25}
''தான் பிறந்த தந்தையையும் இனிப்பிறக்கும் நிந்தையையும் தடிந்து சேயென்
றான்பிறங்கு மழவிடைமே லொருவரழைத் திடவிருவர் அயிர்ப்ப வேகிக்
கான்பொலிதா ரரிபிரமா தியர்க்குமெய்தா இருக்கையெய்திக் கடவுட் சேடம்
வான்புலவர் பெறாப்பேறு பெற்றவனை நற்றவனை வழுத்தல் செய்வாம்"
என்னுஞ் செய்யுளில், 'சேயென்று ஒருவரழைத்திட இருவர் அயிர்ப்பவேகி' என்ற பகுதியில் இருவரென்பதற்குப் பொருள் விளங்காமையால் இவர் யோசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மகாவைத்தியநாதையர், ''இருவரென்பதற்கு விநாயகர் சுப்பிரமணியரென்று சொல்லலாமோ?" என்று மெல்லச் சொன்னார். அப்பொருள் மிகவும் பொருத்தமுள்ளதாக இருந்தது; கேட்ட இக்கவிஞர் கோமான், ''ஐயா, நிரம்ப நன்றாயிருக்கின்றது. உங்களுடைய ஈசுவர பக்தியே இவ்வாறு தோற்றச் செய்கிறது'' என்று மனமுருகிக் கொண்டாடினார்.
இரண்டு புறங்கூற்றாளர் பாடங்கேட்டது.
இவர் இயற்றிய திருவிடைமருதூருலாவைப்பற்றிப் பொறாமையாற் பலவகையான புரளிகளை அங்கங்கே யுண்டாக்கி இவருக்கும் இவருடைய மாணாக்கர் முதலியவர்களுக்கும் மனவருத்தத்தை யுண்டுபண்ணி அதனாற் பலராலும் அவமதிப்பை அடைந்தவர்களில் முக்கியமானவர் இருவர். அவர்கள் எப்படியாவது தம் குறைவைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றெண்ணி, அதற்கு உபாயம் இக்கவியரசருடைய அன்பைப் பெறுவதுதானென்றும் அதனைப் பெறுவதற்கு உபாயம் பாடங்கேட்பதாக இவர்பாற் செல்வதுதானென்றும் தம்முள் நிச்சயித்துக்கொண்டு ஒரு நாட் காலையிற் கையுறையுடன் இவர்பால் வந்தனர். சாந்தமூர்த்தியாகிய இவர் வந்தவர்களுடைய இயல்பை நன்றாக அறிந்திருந்தும் விசாரித்து அவர்களுடைய நோக்கத்தையறிந்து சிறிதும் வருத்தத்தைப் புலப்படுத்தாமல் அங்கீகரித்து மற்ற மாணாக்கர்களோடு சேர்த்து அவர்களுக்குப் பாடஞ்சொல்லி வந்தார்; அப்போது மாணவர்களிற் சிலர் அவ்விருவர் முன்பு செய்துள்ள தீங்குகளையெல்லாம் நினைந்து நினைந்து மனம் பொறாதவர்களாகி அவர்களைக் கண்டிப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு சமயத்தை எதிர்பார்த்திருந்தவர்களாதலால், இடையிடையே கேள்விகளைக் கேட்டு அவ்விருவரையும் விழிக்கச்செய்து அடிக்கடி வருத்துவாராயினர். இக்கவியரசர் சும்மா இருக்கும்படி குறிப்பித்தும் அவர்கள் கேட்கவில்லை.
அதனைக்கண்ட இவர் ஒருநாள் திடீரென்று தனியே சுப்பிரமணிய தேசிகரிடம் சென்று அதனை விண்ணப்பித்தனர். அவர் உடனே பழைய மாணாக்கர்களை மட்டும் அழைப்பித்து நன்றாக விசாரித்து, "ஒருவன் தமக்குப் பரம விரோதியாக இருந்தாலும் தம்பால் வருவானாயின் அவனை ஏற்றுக்கொண்டு முன்னையிலும் நன்கு மதித்துப் பாராட்டவேண்டுமென்பது பெரியோருடைய கொள்கை. அதனை அறியாமல் நீங்கள் வழுவி ஒழுகுவீர்களாயின் உங்களை மட்டுமன்றி உங்கள் ஆசிரியரையும் உலகம் அவமதிக்கும்; நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் மடத்திற்கும் அகௌரவம் உண்டாகும்; 'இணரெரி தோய்வன்ன வின்னா செயினும், புணரின் வெகுளாமை நன்று' என்னும் திருக்குறளை யறியீர்களோ? அதற்குச் சங்கர நமச்சிவாயரெழுதிய அருமையான உரையை நோக்குங்கள்'' என்று பல நியாயங்களை எடுத்து மொழிந்தனர். அன்றியும் உடனே விருத்தியுரையில் உள்ள [37] அந்தப் பகுதியைப் படிப்பிக்கச் செய்து இடையிடையே வேண்டியவற்றையும் சொல்லி அறிவுறுத்தினார். மாணாக்கர்கள் அவர் முகமதியினின்றும் தோன்றிய வசனாமிர்தத்தையுண்டு சாந்தமுற்றுச் சென்று அவ்விருவரோடும் நட்புற்று மனங்கலந்து பழகுவாராயினர். அவ்விருவரும் பின்பு திருச்சிற்றம்பலக் கோவையார், கல்லாடம், திருநாகைக்காரோணப் புராணம் முதலிய சில நூல்களைப் பாடம் கேட்டுத் தங்கள் எண்ணத்தை முடித்துக்கொண்டு விடைபெற்றுச் சென்றார்கள்.
வேலுஸாமி பிள்ளை.
பிள்ளையவர்களோடு கூடப் படித்த ஒரு சாலை மாணாக்கராகிய சென்னை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் தம்மிடம் படித்துக்கொண்டிருந்தவரும், தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளையின் பரம்பரையினருமாகிய வேலுஸாமி பிள்ளை யென்பவரை மேலும் நன்றாகப் படிப்பிக்க நினைந்து தமக்கும் பிள்ளையவர்களுக்கும் உள்ள சிநேகபாவத்தைப் புலப்படுத்தி, 'இவரைப் படிப்பித்து முன்னுக்குவரச் செய்யவேண்டும்' என்று ஒரு கடிதமெழுதிக் கொடுத்தனுப்பினார். அவர் வந்து இவரை வணங்கி அக் கடிதத்தைக் கொடுத்தனர். அதைப் பார்த்துவிட்டு இவர் அவரை அங்கீகரித்து அப்படியே பாடஞ்சொன்னார். நாளடைவில் அவருடைய கல்வி மிகப் பெருகியது. இவரிடத்திற் படித்தமையாற் கவித்துவ சக்தியும் நன்றாக அவருக்கு உண்டாயிற்று. பெரும்பாலும் வெண்பாவே பாடுவார். பாடுவதிற் கஷ்டமென்று சொல்லப்படும் அந்தப் பாவை விரைவாகப் பாடுவதைத் தெரிந்து உடன் படிக்கும் மாணாக்கர்கள் 'வெண்பாப்புலி' என்று அவரை அழைப்பாராயினர். அதுவே பின்பு அவருக்குரிய பட்டப் பெயராக அமைந்து வழங்கலாயிற்று. அவர் பிற்காலத்திற் காஞ்சீபுரம் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக இருந்தனர்.
பு. சபாபதி முதலியாருக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது.
சென்னையைச்சார்ந்த கோமளீச்சுவரன் பேட்டையிலுள்ள திருவாதவூரடிகள் பக்தஜன சபையின் தலைவராகிய நாராயணசாமி முதலியாரென்பவர் சேக்கிழார் புராணத்திற்கும் திருமுறைகண்ட புராணத்திற்கும் உரை செய்து தரும்படி புரசப்பாக்கம் வித்துவான் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரைக் கேட்டுக் கொண்டனர். அவரும் அப்படியே இரண்டிற்கும் உரைசெய்து முடித்துவிட்டு அவற்றிற்குச் சிறப்புப்பாயிரம் அனுப்பவேண்டுமென்று பிள்ளையவர்களுக்குக் கடிதம் எழுதினர். வேலைகளின் மிகுதியால் இவரால் அது செய்யப்படவில்லை. திரும்பவும் சீக்கிரம் பாடல்கள் செய்து அனுப்பினால் தமக்கு அநுகூலமாயிருக்குமென்று அவர் ஞாபகப்படுத்திக் கடிதம் எழுதினர். ஒருநாள் பிற்பகலிற் பாடம் முடிந்தவுடன் அதனை நினைவுறுத்தினேன். அநுஷ்டானம் செய்து கொண்டு வந்து சயனித்துக் கொண்ட பொழுது என்னை நோக்கி எழுதும்படி ஐந்து பாடல்களை இடையீடின்றிச் சொல்லிக்கொண்டு வந்தார். அவற்றை நான் எழுதியவுடன் வேறொரு கடிதம் எழுதுவித்து மறுநாள் சபாபதி முதலியாருக்கு அனுப்பிவிட்டார்; அப்பாடல்கள் வருமாறு:-
(விருத்தம்)
{6.26}
(1) "சொல்லாரும் புனற்பெருக்கார் பாலாறு வளஞ்சுரக்கும் தொண்டை நாட்டில்
எல்லாரும் புகழ்சென்னைக் கோமளீச் சுரன்பேட்டை எனுமோர் தேத்தில்
நல்லாரும் பரும்போற்றுஞ் சிவானுபவச் செல்வராய் நனிவி ளங்கு
தல்லாருந் திருவாத வூரடிகள் பத்தசன சபைக்கு மாதோ."
{6.27}
(2) ''தலைவராய் நல்லொழுக்க நெறிநின்ற பெருங்குணஞ்சால் தக்கோ ராய
நிலைமைசால் புகழ்நாரா யணசாமி மான்முதலாம் நிகரி லாதார்
கலைவலார் முடிக்கொளுநஞ் [38]சேக்கிழார் புராணமொடு கருத்திற் கென்றும்
மலைவிலா முறைகண்ட புராணமும்யா வருமுணர்ந்து மதிக்கு மாறு''
{6.28}
(3) "தங்கள்கருத் திடைமதித்து யாவரைக்கொண் டுரைசெய்தால் தக்க தென்றே
திங்கண்முடி யவனடியார் முதலியயர் வருமதித்தல் செய்வா ரென்று
பொங்களவி லாராய்ச்சி கொடுதேர்ந்தே யிவனுரைத்தல் பொருந்து மென்றே
அங்களவின் மகிழ்ச்சியின்நீ உரையியற்றித் தருகவென அதுமேற் கொண்டு"
{6.29}
(4) "பாடமுத லாசிரிய வசனமீ றாகவுள பலவு மாங்காங்
கூடமைய வெழுத்துமுதன் மூன்றதிகா ரத்துமியல் உளவோ ரைந்தும்
தேடமுய லாதபடி காணிடமெ லாம்விளங்கத் திகழ்யா வோரும்
நாடவுரை யாசிரியர் முதலியோ ரினுமுரைநன் னயமாச் செய்தான்''
{6.30}
(5) ''நிலம்பூத்த நகர்க்கெல்லா மரசையுறு புரசைநகர் நீடு வாழ்வோன்
குலம்பூத்த பிறப்பொழுக்கங் கல்வியறி வியற்கைநலம் கூடப் பெற்றோன்
நலம்பூத்த வொப்புரவு முதலியநற் குணங்களெலாம் நன்கு வாய்ந்தோன்
வலம்பூத்த வட்டாவ தானச்ச பாபதிநா வலவ ரேறே.''
இடையீடின்றிச் சொன்னமையால், பாடஞ் சொல்லியதற்குப் பின்பும் எழுதச் சொல்லுவதற்கு முன்பும் நன்றாகக் சிந்தித்துப் பாடி அவற்றை ஒழுங்குபடுத்தி மனத்தில் வைத்துக் கொண்டிருந்தாரென்று அப்பொழுது எண்ணினேன்.
--------------
[1]. பிரமதேவர் கழுகு வடிவங்கொண்டு சிவபெருமானுடைய திருமுடியைத் தேடினாரென்றும் ஒரு வரலாறுண்டு.
[2]. அருட்குறி - சிவலிங்கப்பெருமான். இச் செய்யுள் பின்பு இவர் இயற்றிய திருவிடைமருதூர்த் திரிபந்தாதியிற் குருவணக்கமாகச் சேர்க்கப் பெற்றது; ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 2238.
[3]. யாரேனும் ஒன்றைச் சொன்னால் ஆட்சேபிப்பதும் ஆட்சேபிக்கப்பட்டவர்கள் ஸமாதானஞ் சொல்லுவதும் வாக்கியார்த்தமென்று வடமொழியிற் கூறப்படும்.
[4]. இவர் ஸ்ரீ அப்பைய தீட்சிதர் பரம்பரையினர். சில சாஸ்திரங்களிலும் வேதத்திலும் வல்லவர். அலங்கார சாஸ்திரத்தில் நிபுணர். ஸங்கீதத்திலும் ஸாஹித்யம் செய்தலிலும் நல்ல ஆற்றலுடையவர். வீணை வாசிப்பதில் அதிகத் தேர்ச்சி பெற்றவர். இங்கிலீஷ் முதலிய வேறு பாஷைகளிலும் இவருக்குப் பயிற்சியுண்டு. ஒவ்வொரு பாஷையிலும் செய்யுள் செய்யும் ஆற்றலுள்ளவர். இவர் உபந்யாஸம் செய்வது சுவையுடையதாயிருக்கும். சிவகதை பண்ணுகிற வழக்கமும் இவருக்கு உண்டு. சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே கேட்பவர்கள் வேறு விஷயத்தில் மனத்தைச் செலுத்தாமல் ஆனந்தித்துக் கொண்டே யிருக்கும்படி செய்வார். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் சின்னப்பட்டம் பெற்றது தொடங்கி ஸம்ஸ்கிருத பாடஞ் சொல்லிவந்ததன்றிப் பல சாஸ்திரங்களுடைய நுட்பங்களையும் பல வடமொழிக் காவியங்களின் நுட்பங்களையும் அலங்காரப் பகுதிகளையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் ஓய்வு நேரங்களில் தெரிவித்து அவரை உலகத்திற்கு மிகப் பயன்படும்படி செய்தவர். தேசிகருடைய முக்கியமான ஸம்ஸ்கிருத வித்யாகுரு இவரே. பிள்ளையவர்களிடத்துப் பேரன்புடையவர்.
[5]. இவருடைய குருவாகிய அப்பா தீட்சிதருடைய ஊர் திருவாலங்காடு; அது திருவாவடுதுறைக்கு வடக்கேயுள்ளது.
[6]. தேசிகரும் ஓய்வு நேரங்களில் சிறந்த நூல்களை யாருக்கேனும் பாடஞ் சொல்லி வருவதுண்டு.
[7]. இந்நூல் மகாவைத்தியநாதையரவர்கள் தமையனாரான இராம ஸ்வாமி ஐயரால் இயற்றப் பெற்றது.
[8]. முதற்பாகம், பக்கம், 302 -3
[9]. இந்தப் புத்தகத்தில் 69 - ஆம் பக்கம் பார்க்க.
[10]. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 3344.
[11]. இச்சொல் அற்றாலம் (அல் தாலம்) என்பதன் மரூஉ. இராப்போசனமென்பது இதற்குப் பொருள்; பகற் போசனம் முற்றாலம் (முன் தாலம்) என வழங்கும். இது மலை நாட்டு வழக்கம்.
[12]. முதற்பாகம், 204-ஆம் பக்கம் பார்க்க.
[13]. கம்ப, கிட்கிந்தைப், 61
[14]. திருவிளை. கரிக்குருவிக்கு. 15.
[15]. திருவிளை. நான் மாடக். 23.
[16]. முதற் பாகம், பக்கம், 173.
[17]. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 5050-82.
[18]. வானென்றது தேவர்களை; ஆகுபெயர்.
[19]. அந்த எழுத்தாணி இன்னும் என்பாலுள்ளது.
[20]. சந்திரன் உமாதேவியாருக்குரிய இடப்பாகத்துக் கண்ணாதலாலும், சூரியன் சிவபிரானுக்குரிய வலப்பாகத்துக் கண்ணாதலாலும் நிலவையும் வெயிலையும் அவ்விநாயகர் ஏற்றருளினமை அவ்விருவரது பார்வையையும் ஒருங்கே ஏற்றதைத் தெரிவிக்குமென்பது கருத்து.
[21]. அது முதற்கொண்டுதான் நூல் நுதல்பொருள் கடவுள் வாழ்த்தில் அமைந்திருத்தலைக் கவனித்து நாங்கள் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினோம்.
[22]. இவ்வூர், திருச்சிராப்பள்ளி ஜில்லா பெரும்புலியூர்த் தாலூகாவில் உள்ளது.
[23]. இவர் என்னுடைய சிறிய தந்தையார்.
[24]. கடிதத்தில் சிதைந்துள்ள பகுதி இது.
[25]. {6.31}
"மாமேவு வான்பிறை முடிப்பிறை யிரண்டென்ன வாய்க்கடைத் தோற்றியவிரும்-
மருப்பிரண் டென்னவங் கைக்கோ டிரண்டென்ன மார்பின்முத் தாரமென்னப், பாமேவு பேருதர பந்தமென வரைசூழ் படாமெனத் தாளின் முத்தம் – பதித்தகழ லெனவிரவ மேலோங்கு பேருருப் பண்ணவனை யஞ்சலிப்பாம், ஏமேவு ஞானசபை யிறைவர்தம் மேனியி னிணங்குற வெழுப்புலகெலாம் – என்னுமறை யாதியாக் கொண்டவ ருயிர்க்கருளும் இயல்பனைத் துந்தெரித்து, நாமேவு மம்முதலொ டொன்றவினை யுருபுதொக நான்கனடி யாதிசெய்து – நாற்சீரி னானெறி விளக்கியொளிர் சேக்கிழார் நற்றமிழ்க் கவிதழையவே." (சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.)
[26]. கம்பராமாயணம்.
[27]. திருவிளையாடற் புராணம்.
[28]. இதிலுள்ள காணிகள் இருபது; இருபது காணி கொண்டது காலென்னும் எண்; காலென்பது இங்கே பாதத்தைக் குறிக்கிறது.
[29]. இவரும் இவர் தமையனாராகிய சொக்கலிங்கம் பிள்ளை என்பவரும் திருவாவடுதுறை ஆதீனத்தில் அப்பொழுது சின்னப்பட்டத்திலிருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரின் பூர்வாச்சிரமத்து உறவினர்கள்.
[30]. சேறை சேற்றூர்.
[31]. சுந்தரமகாலிங்கம் பிள்ளை யென்பவர் அக்காலத்திற் சேற்றூர் ஸமஸ்தானத்தில் ஸ்தானாபதி உத்தியோகத்திலிருந்தவர்.
[32] கம் பலவான் - பல தலைகளையுடைய ஆதிசேடன்; அநந்தன்.
[33] இச் செய்யுட்கள் முழுவதையும் நான் எழுதினமையினாலே பிற்காலத்தில் திருநெல்வேலிப் பக்கம் சென்றபொழுது இரண்டுமுறை இவர் வீடு சென்று தேடிப் பார்த்தும் இப்பாடல்கள் கிடைக்கவில்லை.,
[34] பக்கம், 27, 73, 225
[35] அப் பாடல்கள் இப்பொழுது கிடைக்கவில்லை.
[36] இவர் திருவாவடுதுறை யாதீன கர்த்தராக விளங்கிய மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குப் பூர்வாச்சிரமத்தில் தம்பியாவார்.
[37] நன்னூல், 300-ஆம் சூத்திரவுரை
[38] இந் நூல்கள் இரண்டும் இச் சிறப்புப்பாயிரத்துடன் ஸ்ரீமுக ஆண்டு சித்திரை மாதம் பதிப்பிக்கப்பட்டன.
--------------
7. பட்டீச்சுர நிகழ்ச்சிகள்.
பட்டீச்சுரம் சென்றது
இங்ஙனம் திருவாவடுதுறையிலிருந்த காலத்தில் "திருப்பெருந்துறைப் புராணத்தைப் பாடுதற்கு ஓய்வு நேரமில்லாமையால் அதனை அரங்கேற்றச் செல்லுதற்கு இவருக்கு இயலவில்லை. அப்பொழுது அப்பொழுது இவருக்கு உண்டான செலவுகள் அதிகம். அவற்றால் கடன் அதிகரித்துக்கொண்டே வந்தது. வேறிடத்திற் சென்று வாங்கிக் கொடுப்பதற்கும் இயலவில்லை. மிகுதியான செலவுள்ளவராதலால் அடிக்கடி பலவிடங்களிற் கடன் வாங்கிச் செலவழிப்பதும் ஏதேனும் நூல் அரங்கேற்றிய பின்பு கிடைக்கும் ஊதியத்தில் எஞ்சியதைக்கொண்டு அவற்றைத் தீர்ப்பதும் இவருடைய வழக்கம்.
அதனால் இவர், "ரூபாய் ஐந்நூறு கொடுத்தால் திருப்பெருந்துறைப் புராணம் அரங்கேற்றியவுடன் முதலையும் வட்டியையும் சேர்ப்பித்துவிடுவேன்; அவசியமாக வேண்டியிருக்கின்றது" என்று குமாரசாமித் தம்பிரான் முகமாக அப்பொழுது மடத்தின் காறுபாறாக இருந்த ஒருவரிடம் தெரிவித்தார். பிள்ளையவர்களுடைய அருமையை அவர் சிறிதும் அறியாமல், "எதை நம்பி இவருக்குப் பணம் கொடுக்கிறது?" என்று குமாரசாமித் தம்பிரானிடம் மந்தணமாகச் சொன்னதுடன், "இப்பொழுது கொடுப்பதற்குச் செளகரியமில்லை என்று சொல்லிவிடுக" என்றும் சொல்லி யனுப்பிவிட்டார். அன்புடையவராதலால் குமாரசாமித் தம்பிரான் அதனை அப்படியே இவரிடம் வந்து சொன்னார். அதனைக் கேட்ட இவருடைய மனம் மிகப் புழுங்கிவிட்டது. அவ்வருத்தத்தை மனத்திலேயே வைத்துக்கொண்டு சிலகாலம் அங்கேயிருந்தார். பின்பு வேறிடஞ்சென்று சிலதினமிருந்து அவ் வருத்தத்தை ஆற்றிக்கொண்டு வரலாமென்று எண்ணிப் பட்டீச்சுரம் போய்வருவதாகச் சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பித்துக் கொண்டு புறப்பட்டார். மாணாக்கர்களெல்லாம் பிரிவாற்றாமல் வருந்தினார்கள். நான் மட்டும் உடன் சென்றேன். இன்ன காரணத்தால் இவர் பட்டீச்சுரத்துக்குப் புறப்பட்டாரென்பது தேசிகருக்குத் தெரியாது.
திருப்பெருந்துறைப் புராணம் பாடிவந்தது
சென்றவர் ஐப்பசி மாதத்தின் இறுதிவரையில் பட்டீச்சுரத்திலேயே இருந்தார். அப்பொழுது தினந்தோறும் திருப்பெருந்துறைப் புராணத்தின் செய்யுட்கள் முறையே பாடப்பெற்று வந்தன. பழைய திருப்பெருந்துறைப் புராணங்களுள் ஒன்றில் படலந்தோறும் திருவாதவூரடிகள் தோத்திரம் ஒவ்வொன்று இருந்தது. அதனைக் கண்ட நான், நாட்டுப்படலஞ் செய்ய இவர் தொடங்குகையில் படலங்கள்தோறும் முதலில் திருவாதவூரடிகள் தோத்திரம் இருந்தால் நலமாயிருக்குமென்று தெரிவித்துக் கொண்டேன். அவ்வாறே இவர் பாடி அமைத்துவந்தார். முதன்முறை பாடல்களை எழுதிப் படித்துக்காட்டி ஏதேனும் திருத்தஞ் செய்ய வேண்டியிருந்தால் இவர் சொல்ல அங்ஙனம் செய்துவிட்டு ஆன பாகங்களைத் தினந்தோறும் வேறு பிரதியில் எழுதிக்கொண்டே வருவது அக் காலத்தில் எனக்கு வழக்கமாக இருந்தது. அதனால் பாடங் கேட்பதற்கு நேரமில்லை. அந்தப் புராணத்தை எழுதி அப்பொழுதப்பொழுது பொருள் கேட்டு வந்ததே என்னுடைய பயிற்சிக்கு அனுகூலமாக இருந்தது.
ஆறுமுகத்தா பிள்ளை எழுத்தாணியை ஒளித்துவைத்தது.
அப்புராணத்தை மேலைப்பழையாற்றிலிருந்து எழுதிக்கொண்டுவருங் காலத்தில் ஒருநாட்காலையில் ஆகாரஞ் செய்துவிட்டு வரும்படி இவர் சொன்னமையால் அதற்காக ஏட்டையும் எழுத்தாணியையும் இவர் முன்னே வைத்துப் போய் ஆகாரஞ் செய்து விட்டு விரைவாக வந்தேன். வந்தவுடன் இவர் பாடல் சொல்லத் தொடங்கினார். நான் ஏட்டை எடுத்து வைத்துக்கொண்டு எழுத்தாணியைப் பார்க்கையில் வைத்திருந்த இடத்தில் அது காணப்படவில்லை. "யாரேனும் எடுத்துச் சென்றிருக்கலாம்; விசாரித்து வாங்கிக் கொண்டு வருவேன்" என்று இவரிடம் சொல்லிவிட்டு அடுத்த பக்கத்திலிருந்த கணக்குப் பிள்ளையின் எழுத்தாணியை இரவலாக வாங்கி வந்தாவது எழுதலாமென்று எண்ணிக்கொண்டு போய் அவரைக் கேட்டேன். அவர், "இன்று எழுதும் வேலை ஒன்றும் இல்லாமையால் எழுத்தாணியை வீட்டில் வைத்துவிட்டு வந்தேன்" என்றார். ஒரு வகையான எழுது கருவியும் கிடைக்கவில்லை. அதனை அசட்டை செய்துவிட்டதாக இவர் எண்ணுவாரே யென்று அஞ்சி அங்கும் இங்கும் சென்று தேடி அலைந்து பார்த்து இவரிடம் தெரிவித்தேன்.
அப்பொழுது அங்கே வந்த ஆறுமுகத்தா பிள்ளை என் காதிற் படும்படி, "ஏன் இவர் அலைகிறார்?" என்று பிள்ளையவர்களைக் கேட்டார்.
மீ : எழுத்தாணி வைத்த இடத்திற் காணப்படவில்லையாம்; பக்கத்திலுள்ளவரிடத்தும் இல்லையாம். அதனால் தான் அலைந்து தேடிக்கொண்டிருக்கிறார்.
ஆறு : இந்த மனுஷ்யர் மிகவும் அஜாக்கிரதைக்காரர். இவருடைய சோர்வைப் பலமுறை நான் அறிந்திருக்கிறேன். ஐயா அவர்களிடமும் சொல்லியிருக்கிறேன். இவரை வைத்துக்கொண்டு பாடஞ் சொல்லுவதிலும் எழுதச் சொல்லுவதிலும் யாதும் பயனில்லை.
மீ: தம்பி! சிரமப் படுத்தவேண்டாம். எங்கிருந்தாவது எழுத்தாணியை வருவித்துக் கொடுத்து விடவேண்டும். கவலையை உண்டாக்கக் கூடாது. அவர் எழுத்தாணியை இங்கே என் முன்னே தான் வைத்துவிட்டுப் போனார்; நான் பாடலைப்பற்றி யோசனை பண்ணிக்கொண்டேயிருந்தமையால், அதைக் கவனியாமற் போனேன். தம்பியினுடைய ஆளுகைக்குட்பட்ட இந்த இடத்தில் எவன் வந்து எடுத்துப் போவான்?
ஆறு : இவர் சாப்பிடப் போகும்போது கையிற்கொண்டு போய் ஜாக்கிரதையாக வைத்திருந்து கொண்டுவருவதைவிட இவருக்கு என்ன வேலை? சாப்பாட்டிலிருக்கிற பிரியத்திற் சிறிது கூட ஐயா அவர்களுடைய காரியத்தில் இல்லையென்பது எனக்குத் தெரியும். அதனாலேதான் சொல்லுகிறேன். இவ் விஷயத்தில் ஐயா அவர்கள் ஒன்றும் சமாதானம் சொல்லக்கூடாது.
மீ : ஆகாரம் செய்துகொண்டு வரும்படி நான் வற்புறுத்திச் சொன்ன பிறகேதான் இவர் போனார். இவராகப் போகவில்லை.
ஆறு : எத்தனையோ நூற்றுக்கணக்கான பாடல்களை ஐயா அவர்கள் சொல்ல இவர் எழுதிக்கொண்டு வருகிறாரே. முன்னமே நான் சொல்லியபடி செய்யுளியற்றுதலில் இவர் பழகி வருவதாகத் தெரியவில்லையே. இதைப்பற்றி முன்னம் பலமுறை இவரிடம் சொன்னேனல்லவா? இன்னும் இவர் கவனியாமலிருந்தால் இவரை யார் மதிப்பார்? ஐயா அவர்களுடைய பேருக்கும் அது குறைவல்லவா? இப்போது எழுத்தாணி வேண்டுமென்று ஒரு பாடல் செய்வாராயின் நான் அதனை வருவித்துக் கொடுப்பேன். அது கிடைக்காவிட்டால் நல்லதாக வேறோர் எழுத்தாணியையாவது விலைக்கு வாங்கிக் கொடுப்பேன்.
மீ : செய்யுள் செய்வதற்கு என்ன தடையிருக்கிறது? இந்த அவசரத்தில் ஏன் கவலைப் படுத்த வேண்டும்? அவகாசங் கொடுத்தாற் செய்வார்.
ஆறு : அவகாசமென்ன? இப்பொழுதே செய்து காட்டினால்தான் இவர் அதிற் பயிற்சியுள்ளவ ரென்பதை நான் நம்புவேன்.
உடனே இக்கவிஞர் கோமான் என்னை நோக்கி, "நீர் அக்கருத்தையமைத்து ஏதேனும் ஒரு செய்யுள் செய்யும்" என்றவுடன் நான் செய்ய நினைந்து யோசிக்கத் தொடங்கினேன். ஆறுமுகத்தா பிள்ளை என்னைக் கவனித்தபடியே அந்தத் தோட்டத்திலுள்ள கொடி செடிகளைப் பார்த்துக்கொண்டு சுற்றிவரச் சென்றார். என்ன யோசித்தும் மனக்கலக்கத்தால் எனக்கு ஒன்றும் தோற்றவில்லை. 'இந்தக் கஷ்டத்தில் வந்து அகப்பட்டுக் கொண்டோமே' என்று மிக்க கவலையோடே இருந்தேன். என் முகவாட்டத்தையறிந்த இவ்வாசிரியர் ஆறுமுகத்தா பிள்ளையும் பிறரும் அறிந்து கொள்ளாதபடி என் காதில் மட்டும் படும் வண்ணம் மெல்ல, "எழுத்தாணி ஒன்றெனக்கின் றீ" என்று சொன்னார். அது வெண்பா ஒன்றன் ஈற்றடியாகவும் நான் எதற்காகத் தடுமாறிக் கொண்டிருக்கிறேனோ அக்கருத்து அமைந்துள்ளதாகவும் இருந்ததை யறிந்து ஆறுதலடைந்து கவனித்துக் கேட்டேன். பின்பு, "அழுத்தாணிப் பொன்னால் அமைந்தவுரு விற்றாம்" என்று கூறினார். அப்பால் "மெழுகில்" எனவும், "வழுவில் புராணம் வரைய" எனவும், "தழுவுபுகழ் ஆறுமுகத் தாளாளா என்றும்" எனவும் தனித்தனியாகச் சொல்லிவந்தார். மிகவும் ஜாக்கிரதையாகக் கேட்டுவந்த நான் அவை முறையே ஒரு வெண்பாவின் மூன்றாமடி , தனிச்சொல், இரண்டாமடி, முதலடி என்பவைகளாக இருத்தலை யறிந்து ஒழுங்காகப் பொருத்திப் பார்த்தேன். அவை,
{7.1}
"தழுவுபுக ழாறுமுகத் தாளாளா வென்றும்
வழுவில் புராணம் வரைய - மெழுகில்
அழுத்தாணிப் பொன்னா லமைந்தவுரு விற்றாம்
எழுத்தாணி யொன்றெனக்கின் றீ"
என்னும் அழகிய வெண்பாவாக அமைந்தன. இதை மனனம் பண்ணி அங்கேவந்த ஆறுமுகத்தா பிள்ளையிடம் சொன்னேன். உடனே அவர் எங்கேயோ போகிறவர் போலவே போய் அந்த எழுத்தாணியைக் கொணர்ந்து கொடுத்துவிட்டு, "இனிமேல் இப்படி அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது" என்று கண்டிப்பாகச் சொல்லிப் போயினர்.
பின்பு புராணச் செய்யுட்கள் [1] பல இடங்களிலே பாடப்பட்டு வந்தன.
பால சுந்தர முதலியார்.
ஒருநாள் முற்பகலில் கும்பகோணம் நாகேசுவர ஸ்வாமி கோயில் வடக்கு வீதியில் ஒரு காரியமாக இவர் செல்லும்பொழுது, இவர் மேலே வெயில் பட்டது. அப்போது பின்னே வந்த கனவான் ஒருவர் தாம் பிடித்திருந்த குடையை இவரறியாமல் இவருக்குப் பிடித்து வருவாராயினர். சற்று நேரத்தின் பின்பு அதனை இவர் அறிந்து திரும்பிப் பார்த்தார்; "என்ன தம்பி! இப்படியும் செய்யலாமா? இப்போது எங்கே இருக்கிறீர்கள்?" என்று கேட்கவே அவர், "திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் வேலையா யிருக்கிறேன். தங்களைத் தரிசித்த இன்றைத் தினத்தைப் புண்ணிய தினமாகக் கொண்டாடுவேன். என் கை இன்றைக்குத்தான் நல்ல பயனை அடைந்தது" என்று சொல்லிச் சில நேரம் பேசிக் கொண்டே வந்தார். அப்பால் அஞ்சலி செய்து விட்டுத் தம் பரிவாரங்களுடன் விடைபெற்றுச் சென்றார். அவரை இன்னாரென்று தெரிந்துகொள்ள நாங்கள் விரும்பினோம். அதனையறிந்த இக்கவிஞர் பிரான், "இவர் பாலசுந்தர முதலியாரென்பவர்; எஞ்ஜினீயர் வேலை பார்த்து வருகிறார்; தமிழ்ப்பாஷையிற் பிரீதியும் நல்ல பயிற்சியும் உள்ளவர்; தர்மிஷ்டர்; ஏழைகள்பால் இரக்கமுடையவர்; கொள்ளிடத்துக்கு வடபால் பொன்னியாறு என்ற ஓர் ஆறு இவரால் புதியதாக வெட்டப்பட்டுள்ளது. இவருடைய பெருமையை நினைந்து பாலசுந்தரபுரமென்று ஒரூரை இவர் பெயரால் அமைத்துச் சிலர் அதில் வசித்து வருகிறார்கள்" என்றார்.
இவருடைய கெளரவம்.
இதுபோலவே தக்கவர்கள் சந்தித்த காலங்களில் இவருக்கு வலிந்து செய்த முகமன்கள் பலவற்றை நாங்கள் அவ்வப்பொழுது பார்த்திருக்கிறோம். பொருள் வருவாய் இல்லையென்ற குறைவு ஒன்றேயன்றி வேறு யாதொருவிதமான குறைவும் இவருக்கு இல்லை. தமிழ்க்கல்விமான்களுட் சக்கரவர்த்தி போலவே இவர் விளங்கினார். பெரிய செல்வவான்களும் பிரபுக்களும் வித்துவான்களும் தங்களைக்காட்டிலும் எவ்வகையிலும் உயர்ந்தவர்களுக்குச் செய்யும் மரியாதைகளை இவருக்குச் செய்துவந்தார்கள். நினைத்தால் லட்சக்கணக்கான திரவியம் இவருக்கு எளிதிற் கிடைத்து விடும். ஆனால் அதைப்பற்றி முயற்சிசெய்ய இவர் அதிகமாக நினைத்தவரல்லர்.
{7.2}
"வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில்"
என்ற அருமைத் திருக்குறளுக்கு இலக்கியமாக இவர் எல்லாச் செல்வர்களுக்கும் மேலாகவே இருந்து விளங்கினார். தமிழ்மொழியிற் பிரியமும் மதிப்பும் அன்பும் உள்ளவர்களோடு மட்டுமே பழகுவார். பெரிய சபையிற் செல்வாராயின் அங்கே உள்ள எல்லோரும் எழுந்து நிற்பார்கள். சிலர் முன்னே வந்து அழைத்துச் செல்வார்கள். அவர்கள் முதல் ஸ்தானத்தைக் கொடுப்பதன்றி முதல் மரியாதையையும் இவருக்கே செய்வார்கள்.
கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி முதலிய ஊர்களிலுள்ள ஹைஸ்கூல்களிலும் காலேஜ்களிலும் படிக்கும் தமிழ் மாணாக்கர்கள் தங்கள் தங்கள் ஆசிரியர்களால் இவருடைய பெருமையைக் கேள்வியுற்றிருப்பார்கள். எந்த ஊரிலேனும் வழியில் இவரைச் சந்தித்தால் அச்சமுற்றுத் தங்களுடைய வணக்கத்தைப் புலப்படுத்தி ஒதுங்குவதன்றி இவருடைய பெருமையைப் பற்றித் தம்முள் அவர்கள் பேசிக்கொண்டே செல்லுவார்கள். இளைப்பாறுவதற்கு ஏதேனும் ஓரிடத்தில் இவர் இருப்பாராயின் தமக்கும் இவருக்கும் பழக்கமில்லாமலிருந்தும் அவ்விடத்திற்கு உரியவர்பால் நாங்கள் இவரை இன்னாரென்று சொன்னவுடன் திடுக்கிட்டு எழுந்து அவர்கள் பெரிய தட்டங்களிற் பழம் கற்கண்டு வெற்றிலை பாக்கு முதலியவற்றைக் கொண்டு வந்து நேரே வைத்து முகமன் மொழிகளைக் கூறி உபசரிப்பார்கள்.
நெருங்கிப் பழகுகிறவர்களுக்கு மட்டும் இவர் செல்வமில்லாதவரென்று தெரியுமேயன்றி வேறு யாருக்கும் இவருடைய உண்மை நிலை தெரியாது. பழகாதவர்களும் இவருடைய இயல்பையும் தோற்றப் பொலிவையுங் கண்டு இவரைப் பெருஞ்செல்வவானாகவே மதிப்பார்கள்.
வரன்முறையாகத் தமிழ்க்கல்வியின் பெருமையை அறிந்தவர்களும் அடக்கமுடையவர்களும் அக்காலத்தில் அதிகமாக இருந்தமையால் எந்த இடத்தும் யாவராலும் மதிக்கப் பெற்று இவர் விளங்கினார். படித்தவர்களும் ஏனையோர்களும் இவரைக் கண்டுவிட்டால் காணுதற்கரிய ஒரு தெய்வத்தைக் கண்டாற்போல எண்ணி வரவேற்று உபசரிப்பார்கள். அங்ஙனம் பிறர் நினைத்தற்குரிய ஓர் ஆச்சரியசக்தி இவர்பால் அமைந்திருந்தது.
‘அத்துக் கெட்டுவிடும்.’
ஒரு சமயத்தில் ஆறுமுகத்தாபிள்ளை, தம்முடைய குடும்ப சம்பந்தமாகக் கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரமொன்று எழுதிக் கொடுக்கும்படி நேர்ந்தது. அதிற் கையெழுத்துப்போடத் தொடங்குகையில் அவர், "ஆறுமுகம் பிள்ளை யென்று போடவா? ஆறுமுகத்தா பிள்ளை யென்று போடவா?" என்று கேட்டனர். இவர், "ஆறுமுகம் பிள்ளை யென்றால் [2] அத்துக் கெட்டுவிடுமே; ஆறுமுகத்தா பிள்ளை யென்றே போடலாம்" என்றனர். கேட்டவர்கள் மகிழ்ந்தார்கள்.
‘மூன்றாவது தெரு’
அந்தப் பத்திரத்தில் ஸாட்சிபோடவந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணம் சுண்ணாம்புக்காரத் தெரு. அதை நீற்றுக்காரத் தெருவென்றும் வழங்குவார்கள். ”இந்த இரண்டில் எந்தப் பெயரை என் பெயர்க்கு முன்னே சேர்க்கலாம்?" என்று அவர் கேட்ட பொழுது இவர், "இரண்டும் வேண்டாம்; [3]மூன்றாவது தெரு என்று போட்டுவிடும்" என்று சொன்னார். அதன் சமத்காரத்தை அறிந்து யாவரும் வியப்புற்றார்கள். அப்போது காலேஜில் படித்துக்கொண்டிருந்த (தஞ்சை வக்கீல்) கே.எஸ்.ஸ்ரீனிவாஸ பிள்ளை யென்பவர் அங்கே தியாகராச செட்டியாருடன் வந்திருந்தமையின் இவற்றைக் கேட்டு இன்புற்றதன்றித் தாம் தஞ்சையிலிருக்கும்பொழுது தம்மிடத்தில் வருபவர்களிடம் இச்செய்திகளை அடிக்கடி சொல்லிப் பாராட்டி இன்புறுவார்.
ஸ்ரீ பிரமவித்தியா நாயகி பிள்ளைத்தமிழ்.
கபிஸ்தலத்தைச் சார்ந்த இராமானுசபுரமென்னும் ஊரிலுள்ள சிவப்பிரகாச பிள்ளை யென்னும் கல்விமானொருவர் பட்டீச்சுரம் வந்திருந்து இவரிடம் பாடங்கேட்டுக் கொண்டும் தாம் முன்னமே செய்து வைத்திருந்த திருவாவூர்த் திரிபந்தாதியைத் திருத்தஞ்செய்து கொண்டும் இருந்தனர்; அவர் அந்தப்பக்கத்து ஊர்களில் வியாபகராக இருப்பவர்; தாம் முன்னமே செய்து வைத்தும் அரங்கேற்றப்படாமலிருந்த [4]பிரமவித்தியாநாயகி பிள்ளைத் தமிழை இவர் மாயூரத்திலிருந்து வருவித்து அவருக்குக் காட்டி, "இதனை யாரிடமேனும் சொல்லி அரங்கேற்றுவிக்க வேண்டும். எனக்கு ரூபாய் ஐம்பது இப்பொழுது அவசரமாக வேண்டி யிருக்கின்றது. யாரிடத்தேனும் சொல்லி முடிவு செய்து பணத்தை வாங்கிக் கொண்டு வாரும். [5] தம்பிக்குமட்டும் இது தெரிய வேண்டாம்" என்று சொல்லி அப்புத்தகத்தை அவரிடம் கொடுத்தனர். அவர் தமக்குத் தெரிந்த சிலரிடம் சொல்லிப்பார்த்தனர். அவரது முயற்சி பயன்படவில்லை.
சாமிநாத தேசிகர் செய்த உதவி.
அப்பால் திருவனந்தபுரம் காலேஜில் தமிழ்ப்பண்டிதராக இருந்த ஸ்ரீ சாமிநாத தேசிகருக்கு அப்புத்தகத்தை அனுப்பி மேலே கண்ட விஷயத்தைக் குறிப்பித்து ஒரு கடிதமும் எழுதினர். வழக்கம்போல் அக்கடிதத்தின் தலைப்பில் எழுதிய பாடல் வருமாறு:
(விருத்தம்)
{7.3}
“அளிவளர் குணனு மேன்மே லருள் வளர் மனனு மோவாக்
களிவளர் செயலு மேவுங் [6] கண்வளர் நோக்குந் தீரா
ஒளிவளர் புகழும் வாய்ப்புற் றுருவளர் சிறப்பான் மிக்குத்
தெளிவளர் சாமி நாத தேசிக னினிது காண்க."
அந்தக் கடிதத்தையும் புத்தகத்தையும் பார்த்த அவர் ரூபாய் ஐம்பதைத் தபால் மூலம் உடனே அனுப்பினர். பணத்தையும் கடி தத்தையும் பெற்ற இவர் அப்போது அடைந்த மகிழ்விற்கு எல்லை இல்லை. இவர் மிகப் பாராட்டி அக்கடிதத்திற்கு விடையனுப்பினார்.
என்னுடைய தந்தையார் பூஜை செய்து வந்த சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகத்தின் பொருட்டு எங்கள் விருப்பத்திற்கு இணங்கி அந்தச் சாமிநாத தேசிகருக்கு அதன் பின்பு இவர் எழுதி ஒரு கவேசிருங்கம் வருவித்துக் கொடுத்தார். ஒரு சமயம் ஆறுமுகத்தா பிள்ளை முதலியோர் அசோகந் தளிரைப் பார்க்க விரும்பினார்கள்; அது தெரிந்து இவர் கடிதம் எழுத அத்தளிர்கள் உடனே அவரால் அடுத்த தபாலில் அனுப்பப்பட்டன.
எனக்குப் பாலபோத இலக்கணம் வாங்கித்தந்தது.
நான் பாடங்கேட்டுக்கொண்டு வந்த புத்தகம் முடிந்து விட்டமையால், பாலபோத இலக்கணத்தைப் படிக்கவேண்டுமென்று தெரிவித்துக்கொண்டேன். கும்பகோணத்திற்குச் சென்றிருந்த காலத்தில், அப்புத்தகத்தை எனக்கு இரவலாகக் கொடுக்கும்படி தியாகராச செட்டியாருக்கு இவர் சொன்னார். அவர், "நான் முதலில் வாசித்த புத்தகம் அதுதான். அதனாலேதான் எனக்கு இலக்கணத்தில் நல்ல பயிற்சியுண்டாயிற்று. அதனைப் பொன்போற் பொதிந்து வைத்திருக்கின்றேன். ஆதலால் அதை இரவலாகக் கொடுப்பதற்கு என் மனம் துணியவில்லை" என்று மறுத்து விட்டார். இவர் அதை அப்படியே மனத்தில் வைத்திருந்து மறுநாள் விடிய ஐந்து நாழிகையளவில் எனக்குத் தெரியாமல் மெல்ல எழுந்து கும்பகோணம் காலேஜில் இரண்டாம் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாராயணசாமி பிள்ளை என்பவருடைய [7]வீட்டிற்குத் தனியே சென்று அவரை யெழுப்பி அவரிடமிருந்த பாலபோத இலக்கணத்தை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு செய்ய வேண்டிய அநுஷ்டானங்களை விடியற்காலத்தில் அரிசிலாற்றிற் செய்துமுடித்துவிட்டு அவருடன் செட்டியார் வீட்டுத் திண்ணையில் வந்திருந்தனர்.
தூங்கிக்கொண்டிருந்த நான் வழக்கம் போலவே எழுந்து பார்க்கும்பொழுது படுக்கையில் இவர் காணப்படவில்லை. "முன்னரே தனியே எழுந்து சென்று விட்டார்களே! நாம் தூங்கிவிட்டோமே !" என்று நெஞ்சொடு சொல்லிக்கொண்டு அஞ்சி வாயிற்பக்கம் வந்தேன். அப்போது அங்கே யிருந்த இவர் என்னை அழைத்து, "இது பாலபோத இலக்கணம்; வைத்துக்கொண்டு படியும்" என்று கொடுத்தார். நான் திடுக்கிட்டு அதனை வாங்கிக்கொண்டேன். இவர் அநுஷ்டானம் செய்திருத்தலையும் நாராயணசாமி பிள்ளை உடன் இருத்தலையும் அறிந்து அவருடைய வீட்டிற்கு இவர் சென்று அவருடைய புத்தகத்தை வாங்கி வந்திருக்கிறாரென்பதை அறிந்து இவ்வாசிரியப் பெருமானுடைய பேரன்பை நினைந்து உருகி ஸந்தியாவந்தனஞ் செய்து கொண்டு வந்து உடனே அதைப் பாடங்கேட்கத் தொடங்கினேன்; சில நாளில் அதை இரண்டு முறை பாடங்கேட்டு முடித்தேன். அதுவரையில் அவ்விலக்கணத்தை இவர் பாராதவராதலால் அதன் பெருமையையும் விசாகப்பெருமாளையருடைய ஞானத்தையும் பாராட்டினார்.
திரு ஆவூர்த் திரிபந்தாதியின் அரங்கேற்றம்.
முன்பு கூறிய சிவப்பிரகாச பிள்ளை யென்பவர் தாம் இயற்றிய ஆவூர்த் திரிபந்தாதி முழுவதும் பிள்ளையவர்களால் திருத்தப்பட்ட பின்பு அதனை அரங்கேற்ற நிச்சயித்தார். அதனை அங்கீகரித்த ஆவூர்க்கோயில் தர்மகர்த்தா முதலியோர்கள் வந்து, “உடன்வருபவர்களையும் அழைத்துக்கொண்டு வந்து அரங்கேற்றுதலைச் சிறப்பிக்க வேண்டும்" என்று இப்புலவர் சிகாமணியைக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு இசைந்து இவர் ஆறுமுகத்தா பிள்ளை, சோழன் மாளிகை இரத்தினம் பிள்ளை முதலிய கனவான்களோடும் மாணாக்கர்களோடும் அவ்விடம் சென்றிருந்தார். இவர் வருவது தெரிந்து வேறு பலரும் அங்கே வந்திருந்தார்கள். அரங்கேற்றுவதற்கு முன்பு கோயிலாரைக்கொண்டு சிவசந்நிதியில் சிவப்பிரகாச பிள்ளைக்குப் பட்டுக்கட்டுதல் முதலிய மரியாதைகளை இவர் செய்வித்தார். அப்பால் அரங்கேற்றுதல் தொடங்கப் பெற்றது; தொடங்கிய தினத்தன்று சில பாடல்கள் படிக்கப்பட்டு இவர் மாணாக்கருள் ஒருவரால் பொருள் கூறி உபந்நியாஸம் செய்யப்பெற்றது. எஞ்சிய பாகம் படித்தலை மறுநாள் முதல் வைத்துக்கொள்ளலாமென்று நிச்சயித்து அங்கே ஆகாராதிகளை முடித்துக் கொண்டு எல்லோரும் மறுநாட் காலையிலே பட்டீச்சுரம் வந்துவிட்டார்கள். சிவப்பிரகாச பிள்ளையும் உடன்வந்தார்.
ஆறுமுகத்தா பிள்ளையின் கோபம்.
வந்தபின்பு தங்களுடைய கெளரவத்துக்குத் தக்கபடி வஸதியான இடத்தையும் ஆகார ஸெளகரியங்களையும் முன்னதாகவே கவனித்து அமைக்கவில்லையென்று சிவப்பிரகாச பிள்ளைமீது ஆறுமுகத்தா பிள்ளைக்கு மிகுதியான கோபம் உண்டாயிற்று; அவரோடு பேசவில்லை; அவரை அங்கீகரிக்கக் கூடாதென்றும் எல்லோரிடமும் சொல்லி வந்தனர்.
"அரங்கேற்றுவதற்கு இன்று மாலையில் ஆவூருக்கு யாரும் போகவேண்டாம்; ஐயாவவர்களை மதியாமல் நடத்தின அவர் பழக்கத்தை இனி யாரும் வைத்துக்கொள்ளக் கூடாது" என்று எல்லாருக்கும் ஆறுமுகத்தா பிள்ளை வற்புறுத்திச் சொல்லிவிட்டனர். அதனை யறிந்த சிவப்பிரகாச பிள்ளை பல முறை நயந்து கேட்டுக்கொண்டும் அவர் முகங்கொடுக்கவில்லை. எப்படியாவது அவருடைய கோபத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணிய சிவப்பிரகாச பிள்ளை,
(விருத்தம்)
{7.4}
"அனம்படியுந் தடப்பட்டீச் சுரமதனில் வருவாருக் கனத்தை யிட்டுக்
கனம்படியும் புகழாறு முகப்புனிதன் றனைப்போலக் காணே னென்று
மனம் படிந்து வந்தவென்னை யறியாது வந்தபிழை வழியால் வந்த
சினம்படியிற் படியில்லாப் படிக்கிணைநீ யெனப்படித்தல் திண்ண மாமே"
என்ற பாடலைச் சொல்லி, "என் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும். உங்களுடைய கோபத்திற்கு நான் பாத்திரனல்லன்; என்னால் அது தாங்கமுடியாது" என்று பலமுறை மன்றாடிக் கேட்டுக் கொண்டார்; கொண்டும் அவர் சிறிதும் தணியாமற் கோபக் குறிப்போடே முகங்கொடாமல் இருந்து விட்டார்.
ஆறுமுகத்தா பிள்ளை எதைப் பொறுத்தாலும் பிள்ளையவர்களுக்கு யாரேனும் அபசாரஞ் செய்தால் அதைப் பொறார். அது தான் அவருடைய கோபத்திற்குக் காரணம். அப்பால் இன்னது செய்வதென்று தெரியாதவராகிச் சிவப்பிரகாச பிள்ளை ஆகாரம் பண்ணாமல் மிகவும் வருந்திக்கொண்டிருக்கும் நிலைமையை இவர் கேள்வியுற்றனர்; உடனே அவரை வருவித்து,
(விருத்தம்)
{7.5}
“பரம்பரையே தமிழருமை யறிகுலத்தில் வந்துதித்த பண்பா நண்பு
நிரம்பறிஞர் குழாந்தழுவப் பொலிந்தோங்கு சுகுணதயா நிதியே வாய்மை
வரம்புநமச் சிவாயமுகின் மைந்தாநல் லாறுமுக மகிபா வென்மேல்
திரம்பெறுவெஞ் சினங்கொள்ளேல் கொள்ளுவது தருமமென்பார் செகத்தில் யாரே"
என்னும் செய்யுளைப் பாடி அவர் கையிற் கொடுத்து, "நீர் இதைத் தம்பிக்குப் படித்துக் காட்டும்" என்று சொன்னார்; சிவப்பிரகாச பிள்ளை அங்ஙனமே செய்தனர். ஆறுமுகத்தா பிள்ளை கேட்டு நடையாற் செய்யுள் இன்னாரது என்பதைத் தெரிந்து கொண்டு கோபம் தணிந்தனர்; பிறகு சிவப்பிரகாச பிள்ளைக்கு ஆகாரஞ் செய்வித்தனர்.
ஆவூர்த் திரிபந்தாதிச் சிறப்புப்பாயிரம்.
அப்பால் இவரிடம் ஆறுமுகத்தா பிள்ளை வந்து, "ஐயா வவர்கள் மட்டும் ஆவூருக்கு எழுந்தருள வேண்டாம்; மற்றவர்கள் போய்வரலாம்" என்றனர். அதனால் சிவப்பிரகாச பிள்ளையுடன் நாங்களும் வேறு சிலரும் ஒவ்வொரு தினத்திலும் மாலையில் சென்று அரங்கேற்றி விட்டு வந்தோம். அது முதற் பத்து நாள் வரையில் அரங்கேற்றுதல் நடந்தது; கடைசிநாளன்று சிவப்பிரகாச பிள்ளையின் விருப்பத்தின்படி இவர் அந்த நூல் விஷயமாக,
(கட்டளைக் கலித்துறை)
{7.6}
“தேடு மரியயற் கெட்டா திருந்துஞ்சிற் றம்பலத்தே
ஆடு மழகர்தென் னாவூர்ப் பரம ரடிக்கணன்பும்
பீடும் படைத்த சிவப்பிர காசப் பெயர்க்கவிஞன்
நாடுங் கலித்துறை யந்தாதி நூறு நவின்றனனே"
என்ற ஒரு பாடலை இயற்றிக்கொடுத்து எல்லோரையும் அனுப்பினர். முடிவில் அது படிக்கப்பெற்றது. மாணாக்கர்களும் அந் நூலுக்குச் சிறப்புப்பாயிரங்களை இயற்றி அளித்தனர்.
’இன்னும் சில வருஷம் படிக்கட்டுமே.’
குடும்ப ஸெளகரியத்தை உத்தேசித்து, "எனக்கு ஏதாவது ஒரு வேலை செய்விக்க வேண்டும்" என்று ஒருநாள் சந்தித்தபொழுது தியாகராச செட்டியாரை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்பால் ஒரு சமயம் பட்டீச்சுரத்துக்கு அவர் வந்த போது, "கும்பகோணத்தில் எனக்கு வேண்டிய அன்பர்களாகிய மூவர் நேடிவ் ஹைஸ்கூலென்று புதிதாக ஒரு கலாசாலையை ஏற்படுத்தப் போகிறார்கள்; அதில் தமிழ்ப்பண்டிதர் வேலைக்கு ஒரு தக்கவரைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்று என்னிடம் தெரிவித்தார்கள், பிரியமிருந்தால் நீர் அதனை ஒப்புக்கொள்ளலாம். இப்பொழுது சம்பளம் ரூ. 15 - கிடைக்கும்; செய்விக்கிறேன்" என்றார். அச்செய்தியை இவரிடம் தெரிவித்தேன். அருகில் நின்ற செட்டியாரைப் பார்த்து இப் பெருந்தகையார், "தியாகராசு, சாமிநாதையர் இன்னும் சில வருஷம் படிக்கட்டுமே; ஏன் அவசரப் படுகிறாய்? பின்னாலே கூடுமானால் இவரைக் கவனித்துக்கொள்" என்றார். அதனால் அம்முயற்சி நின்றது. பிற்காலத்தில் எனக்குத் தம் வேலையைச் செய்விக்க வேண்டுமென்ற எண்ணம் செட்டியாருக்கு உண்டானதற்குக் காரணம் இவர் சொல்லிய இந்த வார்த்தைதானென்றெண்ணுகிறேன்.
துரைசாமி பிள்ளைக்காகச் செய்த செய்யுட்கள்.
ஆறுமுகத்தா பிள்ளையின் குமாரராகிய துரைசாமி பிள்ளையை யாரேனும், 'நீ யார்?" என்று கேட்டால் அவர், "திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்து மஹாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய பேரனாகிய துரைஸாமி பிள்ளை" என்பார். அங்ஙனம் சொல்லும்படி ஆறுமுகத்தா பிள்ளை பழக்கியிருந்தனர்.
அவரை இவர் பட்டீச்சுரத்திலிருந்து ஒருமுறை சுப்பிரமணிய தேசிகரிடம் அழைத்துச் சென்றார். அப்பொழுது தேசிகர் அவரை, "நீ யார் அப்பா?" என்று கேட்க, அவர் மேற்கூறியவாறே விடை பகர்ந்தார். சில தினங் கழித்து மறுமுறை அவரையும் உடனழைத்துக்கொண்டு சென்றபோது,
{7.7}
"கண்ணான் மதனைக் கடிந்ததற்கேற் பப்புரப்பால்
பெண்ணா ளுறாச்சுப் பிரமணிய - அண்ணா
திருவா வடுதுறையாய் சிற்றடியே னின்ப
மருவா வடுமாற வை"
என்னும் வெண்பா வொன்றை இயற்றி அதனை அவர் சொல்லும்படி இவர் செய்வித்தனர்; அங்ஙனமே அவர் அதனைத் திருத்தமாகச் சொல்லவே தேசிகர் கேட்டு மெச்சினார்.
மற்றொருமுறை இவர் ஒரு பாடலியற்றிப் பாடம் பண்ணுவித்து அவரை அழைத்துச் சென்றபோது, "இப்போது ஏதேனும் பாடலுண்டோ ?" என்று தேசிகர் கேட்க அவர்,
(விருத்தம்)
{7.8}
"மாமேவு புகழ்த்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய வள்ள லாய
தூமேவு குரவன்பேர் சொற்றவுட னென்பிறப்புத் தொலைந்த தம்மா
பாமேவு மிதுகண்டும் பிறப்பொழிப்பா னிவனென்று பலருஞ் சொல்வார்
தேமேவு நலந்தெரியென் னாவினையே புகழாத செய்கை யென்னே"
என்ற பாடலைச் சொல்லி மகிழ்வித்தார்.
தனுக்கோடி முதலியாருக்குக் கடிதமெழுதியது.
இவர்பால் அன்புடையவரான [8] தனுக்கோடி முதலியாரென்பவர், "எனக்குச் சம்பளத்தில் 20 ரூபாய் உயர்ந்திருக்கிறது. அது தங்களுடைய திருவருளே" என்று எழுதிய கடிதமொன்று ஒரு தினம் இவருக்கு வந்தது. இவர் சந்தோஷப் பெருக்கினால் அவருக்கு உடனே,
{7.9}
"ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு"
என்றதற்கேற்ப உங்களுக்குக் கிடைத்த செல்வம் ஏனையோர்க்கும் உரிய தன்றோ?" என்ற ஒரு விடைக்கடிதம் எழுதுவித்து அனுப்பினர்.
’உடுக்கையும் பம்பையும் இல்லாதது தான் குறை.'
பிறர் பேசுங்காலத்தில் ஏதேனும் குற்றம் காணப்படின் அவர்கள் ஒப்புக்கொள்பவர்களாக இருந்தால் இவர் மெல்லச் சொல்லித் திருத்துவர். அல்லராயின் அவர்கள் எது சொன்னாலும், "சரி, சரி ; ஆம், ஆம்" என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்.
{7.10}
"காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான்
கண்டானாந் தான்கண்ட வாறு" (திருக்குறள், 215)
என்பது இவருடைய பெரும்பான்மையான கொள்கை. தாம் தடுத்துச் சொல்வதனால் யாதொரு பயனுமில்லை யென்பது இவருடைய கருத்து.
ஒரு சமயம் கும்பகோணத்திற் பெரிய உத்தியோகஸ்தராக இருந்த ஒரு கல்விமானுக்கும் இவருக்கும் மிக்க பழக்கமுண்டாயிற்று. அவர் பலமுறை வற்புறுத்தி அழைத்தமையால் இவர் ஒரு நாள் பிற்பகலில் அவருடைய வீட்டிற்குச் சென்றனர். அப்போது தியாகராச செட்டியார், ஆறுமுகத்தா பிள்ளை முதலியோர்களும் உடன் சென்றார்கள். அந்த உத்தியோகஸ்தர் மகாவித்துவானாகிய இவராலே பற்பல அரிய விஷயங்களை அறிந்து கொள்ளலாமென்று நினையாமல் தாம் பலநாளாகச் சேகரித்து வைத்திருந்த வடமொழி தென்மொழியிலுள்ள நூல்களுக்கு வரன் முறையாகவன்றி நூதன முறையாகப் பொருள் செய்துகொண்டு, "இராமாயணத்திற்கு அர்த்தம் இவ்வாறு சொல்ல வேண்டும்; பாரதத்திற்கு அர்த்தம் இதுதான். அவற்றிற்கு இதுவரையில் எல்லோரும் சொல்லி வருபவை பிழையான பொருள்கள்" என்று விபரீதமாகவே சொல்லி வந்தார். கேட்டுக் கொண்டிருந்த இவர் அவருடைய நிலைமையை அறிந்து யாதோர் ஆட்சேபமும் செய்யாமல் சில சமயத்தில், "ஆம், ஆம்" என்றும் சில சமயத்தில், "சரி, சரி" என்றும் மொழிந்து வந்தார்.
இரவில் மணி பன்னிரண்டுக்கு மேலாயிற்று. உடனிருந்த தியாகராச செட்டியாருக்கு அந்த உத்தியோகஸ்தர்மேல் கோபம் உண்டானதன்றி அகாலம் ஆய்விட்டபடியால் அப்பாற் சென்று இத்தனை பேர்களுக்கும் எப்படி ஆகாரம் செய்விப்பதென்ற கவலையும் ஏற்பட்டது. நிறுத்த வேண்டுமென்று சொல்வதற்கும் அஞ்சினவராகிக் கடுகடுத்த முகத்தோடு ஒன்றும் சொல்லாமலே இருந்தார். அந்த உத்தியோகஸ்தர் தம்மிடம் வருபவரோடு இவ்வாறே நெடுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அகாலத்தில் அனுப்பி விடுவது வழக்கம். அவர் ஒருவேளை இவர்களுடைய ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாமோ என்ற சந்தேகம் உடன்சென்ற எங்களுக்கு இருந்தது.
பின்பு அந்த உத்தியோகஸ்தர் வழக்கம்போல், ”சரி; நேரமாய்விட்டது; உங்களுக்குச் சிரமமாக இருக்கும்" என்று சொன்னார். அக்குறிப்பை யறிந்து இவர் புறப்பட்டு அந்த வீட்டின் வெளியே வந்தவுடன் செட்டியார் இவரை நோக்கி, "உங்களிருவர் கையிலும் [9]உடுக்கையும் பம்பையும் இல்லாததுதான் ஒரு குறை" என்று சொன்னார். இவர் பக்கத்தில் யாரேனும் அயலாருளரோவென்று கவனித்துவிட்டு, "என்னப்பா உபத்திரவஞ் செய்கிறாய்? அவ்வாறு சொல்லாமல் நான் வேறு என்ன செய்கிறது? அவருக்கே தெரியவேண்டுமல்லவா? சில சமயங்களில் இந்த மாதிரியான மனுஷ்யர்களிடமும் போகும்படி நேரிடுகிறது; எல்லாம் கால விசேஷமே; படிப்பை யார் கவனிக்கிறார்கள்? தங்கள் கௌரவத்தையும் தங்கள் படிப்பையுமே பெரிதும் பாராட்டுகிறார்கள்; அதை ஒட்டித் தான் நாமும் போகவேண்டியிருக்கிறது; என்ன செய்யலாம்?" என்று செட்டியாரிடம் சொன்னார்.
சுப்பையா பண்டாரம் மாம்பழம் வாங்கிவந்தது.
பிள்ளையவர்களோடு உடனிருப்பவர்களிற் சுப்பையா பண் டாரமென்பவர் ஒருவர் ; அவருடைய ஊர் திருவிடைமருதூர், ஆறுமுகத்தா பிள்ளைக்கு மைத்துனர். தமிழிற் சிறிது பயின்றவர். தமிழ்ப் பாடல்களிற் பிற்காலத்தனவாகிய சிலவற்றை மனனஞ் செய்து வைத்திருப்பவர். அப்பயிற்சியையே ஆதாரமாகக் கொண்டு தம்முடைய வறுமைத் துன்பத்தை மாற்றிக் கொள்ளுதற்குப் பல ஜமீன்தார்கள் முதலியோர்களிடம் போய் அவர்கள் நோக்கம் போலவே நடந்து அவர்களுடைய நிலைமையை அறிந்து பழைய பாடல்களை அவர்கள் பெயருக்கு மாற்றிச்சொல்லியோ வேறு பாடல்களைச் சொல்லியோ அவர்களை மகிழ்வித்துப் பரிசு பெற்றுக் காலங்கழிக்கும் இயல்பினர். தோற்றப் பொலிவுள்ளவர்; பிள்ளையவர்களையன்றி வேறு யாரையும் மதியார்; தைரியசாலி. இவருடைய காரியங்களைக் கவனித்துக்கொண்டு வருபவர். பாடம் கேட்கும் வழக்கம் மட்டுமில்லை; அதிற் பிரியமுமில்லை.
ஒருநாள் பகற்போசனத்திற்குப்பின் பிள்ளையவர்களுடன் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்பொழுது மேற்கூறிய சுப்பைய பண்டாரத்தை நோக்கி மைத்துனரென்ற முறைமையால் ஆறுமுகத்தா பிள்ளை, "சுப்பையா, நீ அநேகரிடஞ் சென்று நூதனமான பாடல்களைப் பாடிப் பரிசுகள் பெற்று வருவதாகச் சொல்லுகிறாயே; அதனை நாங்கள் தெரிந்து கொள்ளும்படி இன்று கும்பகோணம் போய்த் தியாகராச செட்டியார் மீது ஏதாவது ஒரு பாடலியற்றிப் பரிசு பெற்று ஐயாவவர்களுக்குப் பிரியமான மாம்பழங்களை விலைக்கு வாங்கிவரமுடியுமா?" என்றனர். அதனைக் கேட்ட இப்புலவர்பிரான் ஆறுமுகத்தா பிள்ளைக்குத் தெரியாதபடி, முடியுமென்று சொல்லும் வண்ணம் குறிப்பால் அவரைத் தூண்டினார். வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தாற் சொல்லவேண்டுமா? உடனே அவர் ஆறுமுகத்தா பிள்ளையை நோக்கி, "அவசியம் போய்ப் பாடல் செய்து சொல்லிக் காட்டி மகிழ்வித்துச் செட்டியாரிடம் பரிசு பெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு வந்து விடுவேன்" என்றார்.
ஆறு : ஒருநாளும் முடியாது.
சுப் : ஏன் முடியாது ?
ஆறு : உனக்குப் படிப்பில்லையே!
சுப்: எனக்குப் படிப்பில்லை யென்பதை நீர் கண்டீரா? எவ்வளவோ இடங்களுக்குப்போய்த் திரவியமுதலியவற்றைப் பெற்று வருகிறேனே; படிப்பில்லாவிட்டால் முடியுமா ?
ஆறு : படிப்பில்லாத இடமாகப் பார்த்துத்தான் நீ போய் வருகிறாய். எனக்கும் பிறர்க்கும் அது நன்றாகத்தெரியுமே.
சுப் : தோட்டத்துப் பச்சிலைக்கு வீரியம் மட்டு என்பதுபோல் என் படிப்பை நீர் மதிக்கவில்லை.
ஆறு : செட்டியாரிடம் போனால் உன்னுடைய படிப்பு நன்றாக வெளியாகும்!
சுப் : அவர் என்ன செய்வார்?
ஆறு : உன் நரம்பை எடுத்துவிடுவார்; வெளிக்கிளம்ப வொட்டார்.
சுப் : நான் தான் அவர் நரம்பை எடுத்து விடுவேன். அவரிடத்தில் எனக்குக் கொஞ்சமேனும் அச்சம் இல்லை.
ஆறு : ஏன் அச்சமிருக்கும்? சிறிதேனும் படிப்பிருந்தாலல்லவோ படித்தவர்களிடத்தில் அச்சமுண்டாகும்; மகா மூடனாக இருக்கிற உனக்கு மகாபண்டிதராகிய அவரிடத்தில் எப்படி அச்சமுண்டாகும்? நீ மாத்திரம் அவரிடம் போய் ஒரு பாடலைச் சொல்லுவாயாயின் உன் சரக்கு வெளியாகும்.
சுப் : நீர் இப்படிச் சொல்வது என்னுடைய கெளரவத்திற்குக் குறைவாக இருக்கிறது.
ஆறு : உனக்கு என்ன கெளரவமிருக்கிறது? இருந்தாலல்லவோ அது குறையுமென்று நீ கவலைப்படவேண்டும்?
சுப் : இருக்கட்டும். நீர் என்ன செய்யச் சொல்லுகிறீர்?
ஆறு : செட்டியார் மீது ஒருபாடல்செய்து பரிசு பெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு இன்று மாலைக்குள் வரவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நீ மனுஷ்யனேயல்ல.
சுப் : நீரென்ன சொல்லுகிறது? அப்படிச் செய்யாவிட்டால் நான் மனுஷ்யனல்லவென்று நானே சொல்லுகிறேன்.
இவ்வாறு சொல்லிவிட்டு அவர் புறப்படுதற்குத் தொடங்கினார்.
அதனைக் கண்ட ஆறுமுகத்தா பிள்ளை வழக்கம்போலவே சயனத்துக்குப் போய்விட்டார். அவர் நன்றாகத் தூங்கிவிட்டாரா வென்பதை அறிந்துவரச் செய்து இக்கவியரசர் தியாகராச செட்டியார் மீது புதிதாக ஒரு பாடலை இயற்றி எழுதுவித்து எழுதிய ஏட்டைச் சுப்பையா பண்டாரத்தினிடம் கொடுத்தனர். "இப்பாடலை நன்றாகப் பாடம் பண்ணிக்கொண்டு சென்று தியாகராசினிடம் நீர் செய்ததாகவே சொல்லிக் காட்டிப் பணம் பெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு இன்று மாலைக்குள்ளே வந்துவிடும். அவன் என்ன சொன்னாலும் பயப்படாமல் எதிர்மொழி கொடும்; இதன் பொருளை நன்றாகத் தெரிந்து கொண்டுபோம்" என்று சொல்லி விட்டு அங்கே நின்ற மாணாக்கராகிய சரவணபண்டார மென்பவரை அவருடன் போய் வரும்படி அனுப்பினார். அந்தப் பாடலின் பொருளை நன்றாக அவருக்குப் போதித்தனுப்பும் வண்ணம் எனக்குக் கட்டளையிட்டார். பின்பு தாம் வழக்கம் போலவே சிரம பரிகாரஞ் செய்து கொள்ளத் தொடங்கினார்.
சுப்பையா பண்டாரம் இவர் சொன்னபடி என்னிடம் அச் செய்யுளின் பொருளை நன்றாகத் தெரிந்து கொண்டு சட்டை முதலியன தரித்தவராகிக் கையிற் கோலொன்றை எடுத்துக்கொண்டு அந்தப் பாடலை நெட்டுருப்பண்ணிக் கொண்டும் பொருளைச் சிந்தித்துக் கொண்டும் சரவணபண்டாரத்துடன் தைரியமுடையவராகி ஊக்கமுற்றுக் கும்பகோணத்திற்குச் சென்று தியாகராக செட்டியாருடைய வீட்டையடைந்து விசாரித்தார். செட்டியார் இல்லை யென்பதை அறிந்து சுப்பையா பண்டாரம் அந்த வீட்டு வெளித் திண்ணையிலே இருந்தார்.
செட்டியார் 4 - மணிக்குக் காலேஜிலிருந்து வந்தனர். வந்தவர் திண்ணையிலிருந்த அவரைக் கண்டு பரபரப்புடன், "ஐயாவவர்கள் வந்திருக்கிறார்களா?" என்று வினவவே, சுப்பையா பண்டாரம், "வரவில்லை; நான் மட்டும் இங்கே ஒரு காரியமாக வந்திருக்கிறேன்" என்றார். செட்டியார் வேகந் தணிந்து, "ஆனால் இங்கே இரும்; வந்துவிடுவேன்" என்று சொல்லி உள்ளே சென்று உத்தியோக உடைகளைக் களைந்துவிட்டு வேறு மட யொன்றைத் தட்டுடையாக உடுத்திக்கொண்டு விசிறியும் கையுமாகப் புறத்தே வந்து இருந்தனர்; பின்பு, "நீர் இவ்வளவு படாடோபமாக வந்த காரியமென்ன? வேறு யாரையேனும் பார்க்க வந்தீரா? ஐயாவவர்கள் ஏதாவது சமாசாரம் சொன்னதுண்டா?" என்று கேட்டார்.
சுப் : இல்லை; நான் உங்களைத்தான் பார்க்க வந்திருக்கிறேன். வந்தது ஒரு காரியத்தை உத்தேசித்து; உங்கள் மீது ஒரு பாட லும் செய்து கொண்டு வந்தேன். தனியே எங்காவது சென்றால் இந்த வேஷத்தோடுதான் நான் போவது வழக்கம்; ஐயாவவர்களுடன் வந்தால் சாதாரணமாக வருவேன்.
தியாக : பாடல் செய்துகொண்டு வந்திருக்கிறேனென்று சொல்லுகிறீரே! உமக்குப் பாடல் செய்கிற வழக்கமுண்டோ ?
சுப் : ஏன் இல்லை? நான் செய்யுள் செய்வேனென்பது உங்களுக்கு மட்டும் தெரியாது. பல இடங்களுக்குப் போய்ப் போய்ப் பாடிப் பாடிப் பரிசு பெற்று வருவது எனக்கு வழக்கம்; என்னுடைய காலக்ஷேபத்திற்கு அதுதானே வழி. இது பலருக்கும் தெரியுமே.
தியாக : நீர் வெளியிடஞ் சென்று யாசகம் செய்துகொண்டு காலக்ஷேபம் செய்வதுண்டென்பது மட்டும் தெரியும். பாடல் செய்து கொண்டுபோய்ச் சம்பாதித்து வருவது இதுவரையில் எனக்குத் தெரியாது. பாடுவதென்றாற் படித்திருக்கவேண்டுமே!
சுப் : ஏன் படிக்கவில்லை? படித்திருக்கிறேனென்று சிலரைப் போல நான் பறையறைந்து கொண்டு திரிகிறதில்லை.
தியாக: படித்தவர்களெல்லாம் படித்திருக்கிறோமென்று சொல்லிக்கொண்டு தான் திரிகிறார்களா? நீர் சொல்வது நன்றாக இல்லையே. படித்திருந்தால் எப்படியும் பிறருக்குத் தெரியுமல்லவா? உம்மிடத்திற் புஸ்தகம் இருத்தலை நான் ஒருபொழுதும் கண்டதில்லையே. படிப்பிற்குரிய அடையாளத்தையும் உம்மிடம் இதுவரையில் நான் காணவில்லை. பிள்ளையவர்களோடு வந்து ஆகாரம் பண்ணிப் போவதை மட்டும் நான் பார்த்திருக்கிறேன். அந்த மதிப்புத்தான் உமக்கு ஏற்பட்டுள்ளது. மற்றவர்களைப் போலவே நீர் படித்துக் கொண்டிருந்ததையாவது பாடங் கேட்டதையாவது நான் இதுவரையில் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை. அந்த விஷயம் இருக்கட்டும். நீர் செய்துகொண்டு வந்ததாகச் சொன்ன பாடலைச் சொல்லும்; கேட்கிறேன்.
சுப் :
{7.11}
புண்ணியமெல் லாந்திரண்ட வடிவென்கோ குறுமுனிவன் பொதிய நீத்திங்
கண்ணியதோர் வடிவென்கோ தமிழிலுள பலகலைகள் அனைத்துங் கூடி
நண்ணியதோர் வடிவென்கோ பின்னுமெந்த வடிவமென நாட்டு கோயான்
மண்ணியமா மணியனைய தியாகரா சப்புலவன் வடிவந் தானே.
தியாக : (புன்னகைகொண்டு) : இதனை இன்னும் ஒருமுறை சொல்லும்.
சுப் : நல்லது அப்படியே. (பாடலை மறுபடியும் சொன்னார்.) எப்படியாவது என் பாடலை உங்கள் காதிற் போட்டு நன்மதிப்பைப் பெற்றுச் செல்ல வேண்டுமென்றே இங்கு வந்தேன்.
தியாக : இருக்கட்டும்; இந்தப் பாடலை நீரே செய்தீரா? வேறு யாரேனும் செய்து கொடுத்தார்களா? உமக்கு இப்படிப் பாட வருமா?
சுப் : ஏன் வாராது? நானே செய்தேன்.
தியாக : இதனை ஐயா அவர்களியற்றிய பாடலென்றே நிச்சயிக்கிறேன். எதற்காக இதை உம்மிடம் பாடிக் கொடுத்தார்கள்?
சுப் : நீங்கள் இப்படிச் சொல்வது எனக்கு மிகவும் மானக் குறைவாக இருக்கிறது.
தியாக : நீர் செய்தது தானா ? உண்மையைச் சொல்லும்.
சுப் : அதில் என்ன சந்தேகம் ?
தியாக : பொருள் சொல்லுவீரா?
சுப் : திவ்யமாச் சொல்லுவேன்.
தியாக : முழுவதற்கும் சொல்லவேண்டாம். இதிலுள்ள 'என்கோ' என்பதற்கு மட்டும் பொருள் சொன்னால் போதும். சொல்லும்; கேட்கிறேன்.
சுப் : அதற்கு, என்பேனோ வென்பது பொருள்.
தியாக: ‘என்கோ' என்னும் சொற் பிரயோகத்தை வேறு எந்த நூலில் எந்த இடத்திற் கண்டிருக்கிறீர்? சொல்லும்.
சுப் : இடம் ஞாபகமில்லை.
தியாக : இடம் தெரியாதபோது நீர் இந்தச் சொல்லை அறிந்தது எப்படி? எனக்குச் சந்தேகமாகத் தான் இருக்கிறது.
சுப் : நீங்கள் செய்யும் செய்யுட்களில் பிரயோகிக்கிற சொற்களுள்ள இடங்களெல்லாம் உங்களுடைய ஞாபகத்திலிருக்குமா? பழக்கத்தினாலே வந்துவிடுமல்லவா?
தியாக : வீண் பேச்சை இப்பொழுது நீர் பேச வேண்டாம். இந்தப் பாடலை எதற்காக அவர்கள் செய்தனுப்பினார்கள்? சொல்லும்.
சுப் : திரும்பத் திரும்பச் சொல்லுகிறீர்களே. நான் தான் பாடி வந்தேன். வந்த காரியத்தைக் கேட்டு முடித்து அனுப்பக் கூடுமானால் அனுப்புங்கள். இல்லையானால் முடியாதென்று சொல்லி விடுங்கள்.
தியாக : சரி. இதில் ' என்கோ' என்பதில் ஓகாரத்தை ஏற்ற மொழி எது? ஓகாரம் என்ன பொருளில் வந்தது? சொல்லும்.
சுப் : நீங்கள் பாடிய பாடல்களிலுள்ள சொற்களுக்கெல்லாம் இலக்கணம் சொல்லுவீர்களா?
தியாக : வீணான தைரியப் பேச்சினால் ஒரு பயனும் இல்லை காணும்! இந்தச் செய்யுள் நீர் பாடியது அன்றென்பதை நன்றாகத் தெரிந்து கொண்டுவிட்டேன். நீர் என்ன சொன்னாலும் நம்பேன். இந்த மாதிரி பாடுகிறதென்றால் எவ்வளவு படித்திருக்க வேண்டும்?
சுப் : படிக்காமலே கம்பன் காளிதாஸன் முதலியோர் பாடவில்லையோ?
தியாக : அவர்கள் படிக்கவில்லை யென்பதை நீர் கண்டீரா?
சுப் : வரகவியென்று சிலர் இப்பொழுதும் இருப்பது உங்களுக்குத் தெரியாதா? அவர்களெல்லாம் படித்துத்தானா பாடுகிறார்கள்? அருமையான வார்த்தைகளெல்லாம் அவர்கள் வாக்கிற் காணப்படவில்லையா?
தியாக : இவ்வளவு வார்த்தைகளும் நீர் படிக்கவில்லை யென்பதை நன்றாகக் காட்டுகின்றன. இருக்கட்டும். இந்தப் பாட்டை நீரே செய்ததாகச் சத்தியம் செய்வீரா?
சுப் : இதோ செய்கிறேன்; எந்த மாதிரியாகச் செய்யவேண்டும்.
தியாக : துணியைப் போட்டுத் தாண்டவேண்டும். அது செய்வீரா?
சுப்பையா பண்டாரம், ”இதோ தாண்டுகிறேன்" என்று சொல்லித் தமது அங்கவஸ்திரத்தைக் கீழே குறுக்கே போட்டு விட்டார். தியாகராச செட்டியார் நடுநடுங்கி அவர் கையைப்பிடித்துக் கொண்டு, "நீர் சத்தியஞ்செய்தாலும் இப்பாடலை நீர் செய்ததாக நான் நினையேன். துணியைத் தாண்ட வேண்டாம். நீர் வந்த காரியம் இன்னதென்று சொல்லிவிடும். உமக்கு வேண்டியவற்றைக் கொடுக்கிறேன்; வீணாக ஏன் பொய்சொல்லுகிறீர்?" என்று நயமாகக் கேட்கவே அவர் நிகழ்ந்தவற்றையெல்லாம் உள்ளபடியே சொல்லி விட்டார்.
செட்டியார் உடனே பழக்கடை சென்று மிகவும் உயர்ந்தனவாக 50-மாம்பழங்களை விலைக்கு வாங்கி இரண்டு தென்னங் குடலைகளில் அடக்கி ஒரு குடலையை அவருடன் வந்த சரவண பண்டாரத்தினிடத்தும் மற்றொன்றை ஒரு கூலியாளிடத்தும் கொடுத்து உடன் செல்லும்படி சொல்லிச் சுப்பையா பண்டாரத்தை அனுப்பி விட்டார். அந்த இருவரும் தமக்குப் பின்னே வரச் சுப்பையா பண்டாரம் அவர்களுக்கு முன்னே விரைவாகப் பட்டீச்சுரம் வருவாராயினர்.
பட்டீச்சுரத்தில் இப்புலவர்பிரான் நித்திரை கலைந்து எழுந்து, "பண்டாரம் கும்பகோணஞ் சென்றாரா?" என்று விசாரித்து விட்டுப் பாடஞ்சொல்லத் தொடங்கினர்; தொடங்கினாலும் பாடஞ் சொல்லுவதில் மனம் செல்லவில்லை; சுப்பையா பண்டாரத்தின் விஷயத்தில் இவருக்குக் கவலையுண்டாயிற்று; "தியாகராசு சுப்பையாவை என்ன செய்கிறானோ? என்ன கேள்விகள் கேட்கிறானோ? சும்மா விட மாட்டானே! சுப்பையா விழிக்கக் கூடுமே!" என்று எங்களிடம் சொல்லிக்கொண்டே யிருந்தார். சூரியாஸ்தமனத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு வழக்கப்படி அவ்வூரின் தெற்கேயுள்ள திருமலைராயனாற்றங்கரைக்குச் செல்லாமற் கும்பகோணத்திற்குச் செல்லும் வழியை நோக்கி வடக்கே சென்று அங்குள்ள ஒரு குளக்கரையில் சுப்பையா பண்டாரத்தின் வரவை எதிர்பார்த்து வடதிசையை நோக்கிக் கொண்டே நின்றார். நானும் உடன் சென்று அருகில் நின்றேன். சுப்பையா பண்டாரம் வரவில்லை. இவருக்குக் கவலை அதிகமாயிற்று; "யாராவது வருகிறதாகத் தெரிகிறதா? பாரும்" என்றார். பார்த்து நான், ”ஒன்றும் தெரியவில்லை" என்றேன். "பார்த்துக் கொண்டே நின்று யாராவது கண்ணுக்குத் தோற்றினால் உடனே சொல்லும்" என்றார். அங்ஙனமே நான் வடதிசையை நோக்கி நிற்கையில் மூன்று உருவங்கள் முதலில் கண்ணுக்குத் தோற்றின.
நான் : மூன்று உருவங்கள் தோற்றுகின்றன.
மீ : அவர்களாக இருக்குமோ? சரவண பண்டாரம் மிகவும் உயரமுள்ளவனாதலால் அதைக்கொண்டு கண்டுபிடிக்கலாமே.
நான் : மூவரில் ஒருவருடைய உருவம் மட்டும் உயரமாகவே தெரிகிறது; அவர் சரவண பண்டாரமாகவே இருக்கலாம்.
மீ : பின்னும் நன்றாகக் கவனியும். தலையில் ஏதேனும் இருப்பதாகத் தெரிகிறதா?
நான் (அவர்கள் நெருங்க நெருங்க) : ஒருவர் தலையில் ஏதோ ஒரு குடலை தெரிகிறது. வேறொருவர் தலையிலும் ஒரு குடலை காணப்படுகிறது.
மீ : சுப்பையா பண்டாரம் வருகிறாரா ?
நான் : வருகிறார்.
அவர் வருவதை நோக்கி அவரோடு பேசவேண்டுமென்ற ஆவலுடன் இவர் நிற்கையில் அவர் வேகமாக அருகில் வந்து இவரை நோக்கி, "என்ன ஐயா ? உங்களை நான் பரமஸாது வென்று எண்ணியிருந்தேன். பெரிய ஆபத்திலே கொண்டுவந்து விட்டீர்கள். என்னை அவமானத்துக்குள்ளாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே, நீங்கள் இவ்வளவு செய்வீர்களென்று இதுவரையில் நான் நினைக்கவில்லை. அந்த மனுஷ்யர் புலிபோலே என்னை உறந்துவிட்டாரே" என்றார்.
மீ : என்ன? என்ன?
சுப் : என்னவா? நீங்கள் பாடல் செய்து கொடுத்தீர்களே! அந்தப்பாடலை என்னுடைய சக்திக்கு ஏற்றபடி செய்து தர வேண்டாமா? அதில் நீங்கள் செய்ததாக நினைக்கும்படி ஏதோ அடையாளம் வைத்துப் பாடிவிட்டீர்களே. நான் பாடிக்காட்டும்பொழுது, 'என்கோ என்பதற்கு என்ன அர்த்தம்? இந்தப் பிரயோகம் எந்த நூலில் வந்துள்ளது? இலக்கணமென்ன?' என்று பல கேள்விகளைக் கேட்டு அந்த மனுஷ்யர் உபத்திரவம் செய்து என் பிராணனை வாங்கிவிட்டார். நான் சத்தியம் பண்ணிக் கொடுப்பதாகச் சொல்லியும் அவர் நம்பவில்லை.
மீ : அப்பால் நீர் எப்படி அவனிடம் தப்பி மாம்பழம் வாங்கி வந்தீர்?
சுப்: பிற்பாடு சொல்லுகிறேன். இப்பொழுது அதைச் சொல்ல எனக்கு இஷ்டமில்லை
இவ்வாறு சொல்லுகையில் அவர் முகம் கோபக்குறிப்பை மிகவும் புலப்படுத்தியது. இவர் அந்நிலையை உணர்ந்து, "சரி; வீட்டுக்குப்போம்" என்றார்.
சுப்பையா பண்டாரம் தமக்குப் பின்னே வந்த இருவருடனும் வீட்டிற்குச் சென்றார். திண்ணையிலிருந்த ஆறுமுகத்தா பிள்ளை அவரைக் கண்டு, "என்ன சுப்பையா! போய்வந்தாயா? என்ன குடலைகள் ? மாம்பழக்குடலைகளா? செட்டியாரைப் பார்த்தாயா? புதிய பாடல் சொன்ன துண்டா? அவர் பழம் வாங்கிக்கொடுத்தாரா? கௌரவத்திற்காக நீயே சொந்தப் பணத்தைக் கொண்டு வாங்கிவந்தாயா? உண்மையைச் சொல்" என்றார்.
சுப் : ஒரு பாடல் செய்து சொல்லிக்காட்டிச் செட்டியாரை மகிழ்வித்தேன். அவரே பழக்கடைக்கு வந்து பழங்கள் வாங்கிக் கொடுத்தார். அவர் அனுப்பிய ஆளே இவன்.
ஆறு : உன்னுடைய பாடலுக்காக அவர் பழம் வாங்கிக் கொடுத்திருந்தால் அவரைப்போலத் தெரியாதவர்கள் இல்லையென்று நான் உறுதியாகச் சொல்வேன்.
பின்னும் இப்படியே இருவரும் மேன்மேலும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கையில் இக்கவிஞர்சிரோமணி அங்கே வந்து, "தம்பி, இவரை விட்டு விடுங்கள்; கோபத்தோடு இருக்கிறார்" என்று சொல்ல அவர் எழுந்து வேறிடம் சென்றார். எல்லாரும் தத்தம் இடம் சென்றார்கள். பின்பு அந்த மாம்பழங்களை எல்லாரும் வாங்கி யுண்டு திருப்தியுற்றுச் சுப்பையா பண்டாரத்தை வாழ்த்தினார்கள்.
மறுநாள் செட்டியார் பாடல் பெற்ற ஸந்தோஷத்தாற் பட்டீச்சுரத்துக்கு வந்து பிள்ளையவர்களை நோக்கி, "என்ன ? நேற்றுப் பெரிய வேடிக்கை செய்து விட்டீர்களே!" என்று சொல்லிவிட்டு எல்லா விஷயங்களையும் விவரமாகச் சொன்னார்; கேட்டு யாவரும் நகைத்தார்கள் .
திருச்சிராப்பள்ளி சென்றது.
பட்டீச்சுரத்தில் இருந்து வருகையில், ஆறுமுகத்தா பிள்ளையின் குடும்பக்காரியமாக இவர் பரிவாரங்களுடன் ஒருநாள் திருச்சிராப்பள்ளிக்குப் புறப்பட்டார். நீடாமங்கலம் வரையில் சாலை வழியே வண்டியிற் சென்றார். நல்ல மரச்செறிவுள்ள சாலையைக் கண்டால் வண்டியிற் செல்லாமல் நடந்தே செல்லுவதும் பாடம் சொல்லுதல் நூலியற்றுதல் முதலியவற்றை அப்பொழுது மேற்கொள்ளுதலும் இவருக்கு இயல்பு. அப்பொழுது இவர் செய்யும் காரியம் எதுவும் நன்றாக நடைபெறும். அங்ஙனம் அச்சாலையில் செல்லும்பொழுது தான் திருப்பெருந்துறைப் புராணத்துள்ள பெருந்துறைப் படலத்தில் 31- ஆவதிலிருந்து 40-ஆவது வரையிலுள்ள பாடல்கள் இயற்றப்பட்டன. அவற்றை எழுதிக்கொண்டு நானும் உடன் சென்றேன்.
அப்பால் நீடாமங்கலத்தில் ரயில் வண்டியிலேறித் திரிசிரபுரம் சென்று கீழைச் சிந்தாமணியிலுள்ள சொர்க்கபுரமடத்தில் இவர் தங்கினார். அந்த நகரத்தில் பத்து நாட்கள் இருந்தார். இவர் அங்கே வந்திருப்பதைக் கேள்வியுற்ற பழைய மாணாக்கர்களும் முக்கியமான பிரபுக்களும் காலை மாலைகளில் வந்துவந்து அளவளாவி ஆனந்தித்துத் தாம் படித்துவந்த நூல்களில் தமக்குள்ள ஐயங்களைத் தீர்த்துக்கொண்டு சென்றனர். பலர் திருப்பெருந்துறைப் புராணத்துள்ள பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தனர். காப்பிய இலக்கணங்களைச் சுவை ததும்ப அமைத்துப்பாடும் முறை இவர் புராணங்களில் மிகுதியாகக் காணப்படுமாதலால் இவர் இயல்பை அறிந்த பலர், 'நாட்டுச் சிறப்பைக் கேட்க விரும்புகிறோம்; நகரச் சிறப்பைக் கேட்க விரும்புகிறோம்' என்று தனித் தனியே தத்தம் ஆவலை வெளியிட்டு அங்ஙனமே அவ்வப் பகுதிகளைக் கேட்டு மகிழ்ந்தனர்.
சிலர் இடையிலே இவராற் செய்யப்பட்ட வேறு புராணங்களிலும் பிரபந்தங்களிலுமுள்ள பாடல்களைக் கேட்டு அவற்றில் அமைந்திருக்கும் கற்பனை நயங்களைப் பாராட்டினர். சிலர் தாம் இயற்றிய நூல்களைப் படித்துக் காட்டித் திருத்திக்கொண்டு சிறப்புப்பாயிரம் பெற்றனர். அக்காலங்களிற் சில பாடல்களுக்குப் பொருள் சொல்லிவிட்டு இவர் பதசாரம் சொல்லுதல் மிகவும் ஆச்சரியகரமாக இருந்தது.
சதாசிவபிள்ளை பாடல்.
அங்ஙனம் வந்து செல்லும் பழைய மாணாக்கர்களிற் சிலர் அன்பின் பிகுதியால் இவர் மீது நூதனமாகப் பாடல்கள் இயற்றிப் படித்துக் காட்டிச் செல்வதுண்டு. அப்பாடல்கள் அருமையாக இருக்கும். அவற்றுள்ளே [10] சதாசிவ பிள்ளை யென்பவர் இயற்றிய துதிகவிகளில்,
(விருத்தம்)
{7.12}
"என்னகத்தி லவிச்சைகெட மெய்ஞ்ஞானக் கதிர்வீசும் இளம்பொன் றன்னைத்
தன்னகத்துச் சார்ந்தாரைத் தானாக்கு மேருவையித் தரணி தாங்கும்
பன்னகத்தின் மமதை கெடப் பாவிடியைத் தருமுகிலைப் பன்ஞா னங்கள்
மன்னகத்து மீனாட்சி சுந்தரநா வலனடியை வணக்கஞ் செய்வாம்"
[பொன் – சூரியன்]
என்ற பாடல் மட்டும் ஞாபகத்தில் இருக்கின்றது. இச்செய்யுள் இவரிடத்தில் மாணாக்கர்கள் கொண்ட அளவற்ற அன்பைப் புலப்படுத்துகின்றது. அந்தப் பத்து நாளும் ஆனந்தத்தை விளைவித்தன.
காலப்போக்கு.
ஒவ்வொருநாளும் ஏதேனும் அருகிலுள்ள ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று இவர் ஸ்வாமி தரிசனஞ் செய்துவிட்டு வருவார்; அச்சமயத்தில் அந்தத் தலசரித்திரம், அதன் சம்பந்தமான தேவாரம், நூல்கள், தனிப்பாடல் முதலியவை இன்னவை யென்று எங்களுக்கு எடுத்துரைப்பார்; அங்கே உள்ளவர்களைக் கொண்டும் எங்களுக்கு அவற்றைச் சொல்லச் செய்வார். இடையே சந்திப்பவர்களில், "நீங்கள் இவ்வூரைவிட்டுப் போன பின்பு இதற்குள்ள சோபை போய்விட்டது" என்போர் சிலர்; "உங்களால் இந்த ஊர் மிக்க கீர்த்தியை நாளுக்குநாள் அடைந்து வருகின்றது" எனப் பாராட்டுவோர் சிலர்; "உங்களுடைய அருமையான நூல்களை அடிக்கடி கேட்டு இன்புற இயலவில்லையே என்று வருந்துகின்றோம்" என்பவர் சிலர்; "இனி இந்த ஊருக்கு வந்து விடுங்கள்" என்பவர் சிலர். சிலர் தங்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விருந்து செய்வித்து உபசரித்து அனுப்பினர்.
உபதேசியார் ஆட்சேபித்தது.
ஒருநாள் வரகனேரிச் சவரிமுத்தாபிள்ளை யென்னுஞ் செல்வர் இவரை அழைத்துச் சென்று அவ்வூர் அக்கிரகாரத்திலுள்ள ஒரு வீட்டில் விருந்து செய்வித்து உபசாரத்துடன் தம்முடைய வீட்டிற்கு அழைத்துப்போனார். அவர் பெரியபுராணத்தில் அதிபத்த நாயனார் புராணத்திற்குப் பொருள் சொல்லவேண்டுமென்று இவரைக் கேட்டுக் கொண்டனர். இவர் சொல்லிவருகையில் தமிழ்க் கல்விமானாகிய கிறிஸ்தவமத உபதேசியாரொருவர் அங்கே வந்தார். இடையிடையே மனம் பொறாமல் அவர் துராட்சேபம் செய்துகொண்டேயிருந்தனர்; அப்பொழுது அப்பொழுது இவர் சமாதானஞ் சொல்லிவந்தும் மேன்மேலே அவர் இவருடைய பெருமையை அறியாமல் கேள்விகேட்டு வந்தனர். அவர் நோக்கத்தை யறிந்து, இவர்பாலுள்ள அன்பின் மிகுதியாலும் மதிப்பாலும் சவரிமுத்தாபிள்ளை பேசாமலிருக்கும்படி அவ் வுபதேசியாருக்கு முதலிற் கூறினர். அப்படியும் அவர் அடங்காமையால் அவரை எழுந்து போகும்படி கண்டித்துச் சொல்லிவிட்டார். அவர் திரும்பிப்பாராமல் விரைவாகப் போயினர். இவர் அவ் வுபதேசியாரை அன்புடன் அழைத்து, "ஐயா, ஞாபகமிருக்கட்டும்; மறவாதீர்கள்" என்றார். எங்களுக்கு அது மிகவும் வியப்பாக இருந்தது; இவருடைய பொறுமையைப் பாராட்டினோம்.
தஞ்சாவூர் சென்றது.
காரியத்தை முடித்துக்கொண்டு இவர் திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டுப் பட்டீச்சுரம் வந்துவிட்டார். அங்கே சில தினம் இருந்துவிட்டு ஆறுமுகத்தா பிள்ளையின் குடும்பக் காரியம் ஒன்றன் நிமித்தம் தஞ்சாவூருக்குப் புரட்டாசி மாதம் முதலிற் சென்றார். கரந்தையிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் இவர் ஒருமாத காலம் தங்கியிருந்தனர். இவர் மாணாக்கரும் மார்ஷல் காலேஜ் தமிழ்ப்பண்டிதருமான ஐயாசாமி பிள்ளை யென்பவரும் இலக்கணம் இராமசாமி பிள்ளை யென்பவரும் கோ. இராமகிருஷ்ண பிள்ளை யென்பவரும் வேறு சிலரும் அடிக்கடி வந்துவந்து பார்த்துப் பார்த்துத் தாங்கள் அறிந்துகொள்ள வேண்டியவற்றை அறிந்து கொண்டும் இவருக்கு ஆகவேண்டியவற்றைக் கவனித்து விட்டும் சென்றனர். அப்பொழுது ஐயாசாமி பிள்ளை கல்லாடம் முழுவதையும் பாடங்கேட்டு முடித்தனர். இவர் விஷயத்தில் அவர் காட்டிவந்த அன்புடைமையும் கவனிப்பும் அதிகம். திருவையாற்றிலிருந்த முத்துசாமி பாரதியாரென்பவர் அடிக்கடி வந்து தமக்குள்ள சந்தேகங்களைக் கேட்டுப் போக்கிக் கொண்டனர். இப்படியே வந்து சென்றவர்கள் பலர்.
சின்னத்தம்பியா பிள்ளை
தஞ்சாவூரை அடுத்த ரெட்டிபாளையமென்னும் ஊரிலுள்ள பெரிய மிராசுதாராகிய சின்னத் தம்பியாபிள்ளை யென்பவர் தஞ்சைக்கு இவர் வந்திருப்பதைக் கேள்வியுற்றுத் தாமே வந்து பார்த்து அளவளாவி இவருடைய செய்யுள் நயங்களைத் தெரிந்து பெரிதும் இன்புற்று முடிவில் தக்க திரவிய ஸஹாயம் முதலியவற்றைச் செய்துவிட்டுச் சென்றார். அப்பால் இவர் அவருடைய அன்புடைமையில் ஈடுபட்டு,
(விருத்தம்)
{7.13}
"மழைபொழியு முகிலென்கோ வானுயர்கற் பகமென்கோ மகிழ்ந்தெஞ் ஞான்றும்
தழையுமிரு நிதியென்கோ தருசிந்தா மணியென்கோ தாவா மேன்மை
விழையுமொரு சுரபியென்கோ புண்ணியமென் கோவரன்றீ விழிநே ராகாக்
கழைமதவேள் நிகர்சின்னத் தம்பிமகி பாலாநின் கையைத் தானே"
என பாடலை முதலில் அமைத்து ஒரு கடிதம் எழுதியனுப்பினர்.
முத்துக்குமார பத்தரைப் பாராட்டியது.
அந்தக்காலத்தில் தஞ்சாவூரில் இருந்தவரும் பித்தளையில் நுட்பமான சிற்ப வேலைசெய்வதில் அதிகத் திறமையுடையவரும் தமிழ் நூலறிவிற் சிறந்தவரும் சிவபக்திச் செல்வருமாகிய முத்துக்குமார பத்தரென்பவர் இவருடைய பூஜைக்கு உபயோகமாகக் கற்பூரப் பஞ்சஹாரத்தித் தீபமொன்றும் ஊதுவத்திச்செடி யொன்றும் அரிய வேலைப்பாடுள்ளனவாகச் செய்து அவற்றைப் பல அன்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இவரிடம் சேர்ப்பித்தனர். இவர் அவற்றை ஏற்று மகிழ்ந்து அவரது அன்புடைமையையும் அவற்றின் வேலைப்பாட்டையும் பாராட்டிவிட்டு,
(வெண்பா)
{7.14}
"மொய்வேலை சூழுலகில் முத்துக்கு மாரபத்தன்
கைவேலை போலநாம் கண்டதில்லை - அவ்வேலை
செய்யு மவற்குத் திறல்விச் சுவகருமன்
கையும் பொழியும்பொன் காண் "
என்ற செய்யுளை இயற்றி அளித்தனர். இவருடைய மனத்தில் எழுந்த சந்தோஷமே விரைவில் அப்பாடலாக வந்ததை உணர்ந்து அங்கிருந்தவர்கள் மகிழ்ந்தார்கள்.
பிரான்மலை ஓதுவார்.
பின்பு ஒருநாள் பிரான்மலையிலிருந்து ஓதுவார் ஒருவர் மிக்க ஆவலோடு இவரைப் பார்க்க வந்தார். அவர் தேவாரங்களைச் சாரங்கி யென்னும் வாத்தியத்தில் அமைத்துப் பண்ணோடு ஓதுதலில் வல்லவர்; பல வித்துவான்களுடைய கீர்த்தனங்கள் அவருக்குப் பாடமுண்டு; குணவான். அவருடைய ஞானத்தையும் விருப்பத்தையும் பக்தியையும் அறிந்து தம்முடைய பூஜா காலத்தில் ஒவ்வொரு நாளும் தேவாரமோதுவதுடன் நல்ல கீர்த்தனங்களையும் பாடும்படி இவர் நியமித்து மாதவேதனங் கொடுத்து வந்தார். அவர் அதனை ஏற்றுக்கொண்டு அப்பணியை நாடோறும் செய்து வருவாராயினர். திருப்பெருந்துறைப் புராணத்தை அரங்கேற்றி மீளும் வரையில் உடனிருந்து விட்டு அப்பால் விடைபெற்று அவர் தம்மூர் சென்றார்.
----------------
[1] பாடிய இடங்கள் : ஆறுமுகத்தா பிள்ளையின் வீடு, அவருடைய மேலைப் பழையாற்றுச் ‘சவுகண்டி', திருமலைராயனாற்றங்கரையின் வடபாலுள்ள அரசமரத்தின் நிழலிலுள்ள மேடை, பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றக் கோயில்களுடைய கோபுரவாயிலின் இடைகழித் திண்ணைகள், இன்னும் இவர் உலாத்தும் இடங்கள்.
[2] அத்து - ஹத்து, அதிகார எல்லை.
[3] மூன்றாவதென்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல்.
[4] முதற்பாகம், பக்கம் 314 பார்க்க.
[5] ஆறுமுகத்தா பிள்ளைக்கு.
[6] கண் - தாட்சணியம்.
[7] அது தியாகராச செட்டியார் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்துக்குமேல் இருக்கும்.
[8] முதற்பாகம் பக்கம், 195 பார்க்க.
[9] உடுக்கையடிப்பவன் சொல்லச் சொல்ல எதிரிலுள்ளவன் பம்பையை முழக்கிவிட்டு ஆமாம் ஆமாம் என்று சொல்லுவான்.
[10] பக்கம் 39.
------
continued in part 2
This file was last updated on 2 Dec. 2018
Feel free to send the corrections to the webmaster.