பாசவதைப் பரணி (குறிப்புரையுடன்)
உ. வே. சாமிநாதையர் (தொகுப்பு)
pAcavataip paraNi (with notes)
u.vE. cAminAta aiyar (edited)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our thanks also go to the Tamil Virtual Academy for providing a scanned PDF copy of this work.
This e-text has been generated using Google OCR online followed by proof-reading and corrections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பாசவதைப் பரணி (குறிப்புரையுடன்)
உ. வே. சாமிநாதையர் (தொகுப்பு)
Source:
பாசவதைப் பரணி (குறிப்புரையுடன்)
பதிப்பாசிரியர்: மகா மகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ. வே. சாமிநாதையர்
சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடம்
மயிலாப்பூர்.
ஸ்ரீமுக ௵ மார்கழி ௴
1933
-----------
உள்ளடக்கம்
முகவுரை
பாசவதைப் பரணி
காப்பு (1)
1. கடவுள் வாழ்த்து (2-17)
2. கடைதிறப்பு (18-58)
3. காடுபாடியது (59- 85)
4. பேய்களைப் பாடியது (86-146)
5. கோயிலைப் பாடியது (147-170)
6. தேவியைப் பாடியது (171- 224)
7. பேய் முறைப்பாடு (225- 267)
8. கூளி கூறியது (268-668) )
9. களங்காட்டல் (669-675 )
10. கூழ் (676-737)
----------
முகவுரை
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்
பண்-காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
“பாச மான களைவார் பரிவார்க்கழதம் அனையார்
ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர்போன் மிடற்றார் கடவூர் மயான மமர்ந்தார்
பேச வருவா ரொருவர் அவரெம் பெருமா னடிகளே.”
திருச்சிற்றம்பலம்
-------------
பரணியின் இலக்கணம்
தமிழில் உள்ள பிரபந்தங்கள் பெரும்பாலும் தலைவர்களுடைய வெற்றிச்சிறப்பு கொடைச்சிறப்பு முதலியவற்றைப் பாராட்டிக் கூறுவனவாகும். அவற்றுள், அகப்பொருளமைதி உள்ளவை தலைவன் புகழைச் [1]சார்த்துவகையாற் பெயரொடு சுட்டிப் புகழும். புறப்பொருளமைதி யுள்ளவற்றிற் பெரும்பாலன பாட்டுடைத் தலைவரையே நூலின் தலைவராக அமைத்துப்புகழுவதன்றித் தலைவர்களுடைய வீரத்தைப் பலபடப் பாராட்டிக் கூறும்.
அங்ஙனம் வீரத்தைச் சிறப்பித்துப் புறப்பொருளமைதி தோன்றப் பாடப்படுவனவற்றுட் சிறந்தது பரணியென்னும் பிரபந்தமாகும். புறத்திணைத்துறைகளுட் பலவற்றிற்கு இலக்கியம் பரணி நூல்களுட் காணலாம் :
“மற்றுப் பரணியுட் புறத்திணை பலவும் விராய்வருதலின்”
(தொல். செய். சூ. 149, உரை)
என்பர் பேராசிரியர்.;
பாட்டியல் நூல்களில் ‘ஆயிரம் யானையைக் கொன்ற வீரனைப் பாராட்டிக் கடவுள்வாழ்த்து, கடைதிறப்பு முதலிய உறுப்புக்கள் அமையப் பாடப்படுவது’ என்று பரணியின் இலக்கணம் சொல்லப்பட்டுள்ளதாயினும் இலக்கியங்களை ஆராயும்பொழுது, பகைவரைவென்று களவேள்வி செய்த தலைவனது வீரத்தையும் வெற்றியையும் சிறப்பித்துப் பாடப்படுவது இந்நூலென்று தோற்றுகின்றது ;
“விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப்
பெரும்பரணி கொண்ட பெருமான்” (குலோத்துங்கசோழனுலா)
என்ற ஒட்டக்கூத்தர் வாக்கில் இக்குறிப்புக் காணப்படுதல் இங்கே அறிதற்குரியது. யானைகளைக் கொல்லுதல் இணையற்ற வீரச் செயலாதலின் முற்கூறிய விதி, பரணி பெருவீரனைப் பாராட்டியே பாடப்படுவதென்பதையும், சாமானியனான வீரனைச் சிறப்பித்துப் பாடப்படுவதன்றென்பதையும் தெரிவிக்கும் கருத்துடையதென்று தோற்றுகிறது.
பரணியென்னும் பெயர்க்காரணம்
பரணியென்னும் இப்பிரபந்தப்பெயர் பரணியென்னும் நட்சத்திரம் காரணமாக எழுந்தது.
“களப்பரணிக்கூழ்”
“பண்டு மிகுமோர் பரணிக்கூழ் பார தத்தி லறியோமோ”
என்ற கலிங்கத்துப்பரணி அடிகளாலும்,
“காடுகெழு செல்விக்குப் பரணிநாளிற் கூழும் துணங்கையும்
கொடுத்து வழிபடுவதோர் வழக்கு”
(தொல். செய். சூ. 149, உரை)
என்ற பேராசிரியர் உரையாலும், போர்க்களத்தில் ஒரு தலைவன் வெற்றிகொள்ள அப்போரில் வீழ்ந்தோர் உடலுறுப்புக்களாலும் பிறவற்றாலும் பேய்கள் கூழ்சமைத்துப் பரணிநாளில் காளிக்குப் பலியிட்டு, வென்றோனை வாழ்த்தும் வழக்கினைச் சிறப்பித்தலின் இப்பெயர் வந்ததென்பது பெறப்படும். இங்கே கூறிய செய்திகள் பரணிநூல்களில் வரும் களங்காட்டல், கூழ் என்னும் உறுப்புக்களில் விரிவாகக் காணப்படும்.
பரணியில்வரும் புறத்துறைகள்
புறத்திணைத்துறைகளாகிய களவேள்வி முதலியன பரணிகளில் விரவிவரும்.
“அடுதிற லணங்கார
விடுதிறலான் களம்வேட்டன்று” (பு. வெ. 160)
என்பது களவேள்வியின் இலக்கணம் ;
‘கொல்லும் வலியினையுடைய பேய் வயிறார உண்ணப் பரந்தவலி யுடையான் களவேள்வி வேட்டது’
என்பது அதன்உரை ;
“நெற்க திரைக்கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரி திரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கடவுட்பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்துகொள்ள வரிசையின் அளிக்குமாறுபோல, அரசனும் நாற்படையையும் கொன்று களத்திற்குவித்துக் களிறு எருதாக வாண்மடலோச்சி அதரிதிரித்துப் பிணக்குவையை நிணச் சேற்றொடு உதிரப்பேருலைக்கண் ஏற்றி ஈனா வேண்மாள் இடந்துழந்துஅட்ட கூழைப் பலியாகக் கொடுத்து எஞ்சி நின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம்”
(தொல். புறத். சூ. 21, உரை)
என நச்சினார்க்கினியர் இத்துறையை விரித்துக் கூறுவர். இங்ஙனம் களவேள்வியிற் கூழுண்ட கூளிகள் மனமகிழ்ச்சியால் குரவையாடுதல் மரபு ; அச்செயல் [2]பின்றேர்க்குரவை யென்னும் துறையுள் அடங்கும
“ஒன்றிய மரபிற் பின்றேர்க் குரவையும்”
(புறத்திணை. சூ . 21)
என்ற தொல்காப்பியச் சூத்திரப்பகுதிக்கு,
‘தேரோரை வென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே
தேரின்பின்னே கூழண்ட கொற்றவை கூளிச்சுற்றம் ஆடுங்குரவை’
என நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் இது புலப்படும். அங்ஙனம் குரவையாடும் கூளிகள் வெற்றிபெற்ற தலைவனைப்புகழும் ; அச்செயல் மாணார்ச்சுட்டிய வாண்மங்கலம் என்னும் துறையின் பாற்பாடும் ;
“பகைவரைக்குறித்த வாள்வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்
சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலம்..... இது
பரணியிற் பயின்றுவரும்” (தொல். புறத். சூ. 36, உரை)
என்ற நச்சினார்க்கினியர் உரையும்,
“ஆளி மதுகை யடல்வெய்யோன் வாள்பாடிக்
கூளிகள் வம்மினோ கூத்தாடக் - காளிக்குத்
தீராத வெம்பசி தீர்த்துநாம் செங்குருதி
நீராடி யுண்டு நிணம்”
என்ற மேற்கோட்செய்யுளும் அத்துறையை விளக்கும்.
முற்கூறிய புறத்திணைச்செய்திகள் பரணிகளில் வருவதன்றி [3]மதுரைக்காஞ்சி, [4]புறநானூறு, [5]சிலப்பதிகாரம் முதலிய பழைய நூல்களிலும் காணப்படும்.
[6]பரணி யானை பிறந்த நாளாதலாலும், 7காளிக்கும் யமதருமனுக்கும் உரியதாதலாலும், [8]தன்கட்பிறந்தானைப் பெருவீரனாக்கும் தன்மைதயதாதலாலும், தலைவனொருவன் பலயானைகளைக்கொன்று, காலன் பல உயிரைக் கொள்ளச் செய்து பெருவீரத்தைப் புலப்படுத்திய களவேள்வியில் காளிக்கு உவப்புண்டாகக் கூழ்சமைப்பதற்குரிய நாளாயிற்றென்று ஊகித்தறியப் படுகின்றது.
பழைய பரணிநூல்கள்
பரணிநூல்களிற் கூறிய செய்திகள் சங்கமருவிய நூல்களிற் காணப்படுதலாலும் தொல்காப்பிய உரையிற் பலஇடங்களிற் பரணி நூல் எடுத்துக் காட்டப்படுதலாலும் இவ்வகைப் பிரபந்தமானது மிகப் பழைய காலந்தொட்டே தலைவர்களைச் சிறப்பித்துப் பாடப்பெற்று வந்ததென்பது கொள்ளக்கிடக்கின்றது. பொருநர்களுள் [9] ‘பரணிபாடும்பொருநர்’ என ஒருவகையார் இருந்தனரென்று கூறப்படுவதனால் இவ்வகைப் பிரபந்தத்தின் சிறப்பும், பழமையும், சிறப்பாக ஒருவகையார் தனியே பயின்றுபாடும் பெருமையுடைய தென்பதும் புலப்படும். அங்ஙனம் பண்டைக்காலத்திற் பாடப்பெற்ற பரணிநூல்களில் ஒன்றும் இப்பொழுது கிடைக்கவில்லை. முதற் குலோத்துங்க சோழனைத் தலைவனாக உடையதும் செயங்கொண்டாரால் இயற்றப்பெற்றதுமாகிய கலிங்கத்துப்பரணியே இப்பொழுது கிடைக்கும் பரணிகளுட் பழமையும் தலைமையும் உடையதாகும். மூவருலாக்களில் வரும் [10]சிலகண்ணிகளால் குலோத்துங்கனுடைய முன்னோர்களாகிய சோழவரசர்களைச் சிறப்பிக்கும் பரணிநூல்கள் சில வழங்கியிருத்தல் கூடுமென்று தோற்றுகின்றது. எவ்வகைப் பிரபந்தமும் புலவர்களாற் பாடப்பெற்று வரவரச் செவ்விய அமைப்புற்றுத் திகழ்வது இயல்பு. கலிங்கத்துப்பரணியின் செப்பத்தைப்பார்க்கும்பொழுது அது பலபுலவர்கள்பாடிய பரணிகளிற் பயின்றதனால் உண்டான பயனென்றே எண்ணவேண்டி யிருக்கின்றது.
கலிங்கத்துப்பரணிக்குப் பின்பு அக்கலிங்கப் போர்ச்செய்தியையே பாராட்டி முதற்குலோத்துங்கன் குமாரனாகிய விக்கிரமசோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் ஒருபரணி பாடியுள்ளார் ; [11]’தென்றமிழ்த் தெய்வப்பரணி’ என்று அவராலேயே அது சிறப்பிக்கப்பெறுகிறது. அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. இவ்விரண்டும் அரசரைப் பாடியன. பின்னர், இரண்டாம் இராசராசசோழனைச் சார்த்து வகையாற் சிறப்பித்து, தக்கன் செய்தயாகத்தை வீரபத்திரர் அழித்த வெற்றியைப் பாராட்டித் தக்கயாகப்பரணி என்னும் ஒருநூல் அந்தக் கவிச்சக்கரவர்த்தியாலேயே பாடப்பெற்றது. இம் மூன்றும் தம்மை ஆதரித்த தலைவர்கள் பாலுள்ள செய்ந்நன்றியறிவு காரணமாகப் பாடப்பெற்றன.
பிற்காலத்தில், தத்தம் வழிபடு கடவுள் பாலுள்ள அன்பினாற் புலவர்கள் அவ்வத்தெய்வங்களின் மீது பிரபந்தங்களை இயற்றும் பொழுது பரணிப்பிரபந்தங்களையும் பாடினர்.கஞ்சவதைப்பரணி, இரணிய வதைப்பரணி, சூரன்வதைப்பரணி என்பன இவ்வகையைச் சார்ந்தவை. இவை பக்திகாரணமாக எழுந்தவை. சிவபெருமானை வேண்டிக்கொள்ளும் கருத்தமைந்த சில தாழிசைகளின் தொகுதி பரணியென்னும் பெயருடன் [12]பலதலங்களில் திருவந்திக்காப்புக் காலத்தில் உரியவர்களால் தொன்றுதொட்டு ஓதப்பட்டு வருகின்றது. அவை மேற்கூறிய பிரபந்தங்களைச் சார்ந்தனவல்ல. வேறு சிலர் தம் ஞானாசிரியர்களைப் பாராட்டிப் பரணிகளை இயற்றினர். அவ்வகையில் அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப்பரணி என்பவை அடங்கும். இவை ஞானங்காரணமாக எழுந்தவை.
பரணிப்பிரபந்தம் ஏனைப்பிரபந்தங்களைப் போலப் பாட்டுடைத்தலைவன் பெயருடன் வழங்காமல் தோல்வியுற்றோருடைய பெயருடன் சார்ந்தே வழங்கும்.
பரணிக்குரிய யாப்பு
இப்பிரபந்தம் கலித்தாழிசைகளாற் பாடப்படவேண்டும். அம்மைமுதலிய வனப்பு எட்டனுள் இது விருந்தென்பதன் பாற்படும் ; புறத்திணைகளுள் பாடாண்திணையுள் அடங்கும். இதுமுழுவதும் தேவபாணி யென்பதும், இதன்கண் உள்ள தாழிசைகள் கொச்சக ஒருபோகின் வகையினவென்பதும் பின்வரும் தொல்காப்பிய உரைப் பகுதிகளால் விளங்கும் :
“தரவின்றாகித் தாழிசை பெற்றுமென்பது, தனக்கு இனமாகிய வண்ணகத்திற்கு ஓதிய தரவின்றித் தாழிசை பெற்றுமென்றவாறு. அவை பரணிப்பாட்டாகிய தேவபாணி முதலாயின எனக்கொள்க.......
“அஃதேல் இரண்டடியான் வருந்தாழிசை பேரெண்ணாகாவோவெனின், அதுவன்றே முதற்றொடைபெருகினன்றி எண்ணெனலாகாமையா னென்பது. இவை வருமாறு : ‘உளையாழி யோரேழு மொரு செலுவி னடங்குதலான், விளையாட நீர்பெறா மீனுருவம் பரவுதுமே’ என்றாற்போலப் பரணிச் செய்யுளுட் பயின்றுவருமென்பது........
“மற்றுப் பரணியுட் புறத்திணை பலவும் விராய்வருதலின் அது தேவபாணியாமென்றது என்னையெனின், அவையெல்லாம் காடுகெழு செல்விக்குப் பரணிநாட் கூழுந் துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்குப்பற்றி, அதனுட் பாட்டுடைத் தலைவனைப்பெய்து சொல்லப் படுவனவாதலான் அவையெல்லாவாற்றானுந் தேவபாணியே யாமென்பது.” (தொல். செய். சூ. 149, பேர்.)
“தாழிசைக் கொச்சகமாகிய பரணிச்செய்யுளும்
தரவுகொச்சகமாகிய தொடர்நிலைச் செய்யுளும்”
(தொல். செய். சூ. 156, பேர்.)
பரணியில் வரும் தாழிசைகளில் சந்தமும் விரவிவரும் :
“பரணியுளெல்லாம் இரண்டடியானே தாழம்பட்ட ஓசை விராய்
வருதலும் ழடுகிவருதலும் பெறுதும்”
(தொல். செய். சூ. 149, பேர்.)
என்பதனால் இது பெறப்படும்.
பரணியின் உறுப்புக்கள்
பரணியின்கண், முதலிற் கடவுள்வாழ்த்துக் கூறப்படும். பின் கடைதிறப்பு என்பது சொல்லப்படும். நூலுட் கூறப்படும் வீரச் செயலைப் பாடுதற்குப் [13]பகைவர் நாட்டிலிருந்து கொணர்ந்த மகளிரையும் [14]வேறுமகளிரையும் வாயிற்கதவைத் திறந்து வரும்வண்ணம் அழைப்பதாக இப்பகுதி அமைக்கப்படும். இங்ஙனம் அழைக்குங் காலம் நூலுட் கூறப்படும் விரச்செயல் நிகழ்ந்தகாலத்தை அடுத்ததெனச் சிலர்கொள்வர்; [15]தக்கயாகப்பரணி முதலியவற்றில் உள்ள
அமைப்பால், முன்னர் நடைபெற்ற வரலாற்றைப் பின்பு பாட அழைப்பதே மரபு என்று தெரியவருகிறது ; அன்றியும்,
“தெரிக்குஞ் சீர்த்திச் சிவஞான
தேசி கன்றாள் சிரத்தணிந்து
பரிக்கும் பாச வதைப்பரணி
பாடக் கபாடந் திறமினோ”
என்ற தாழிசையில் ‘பாசவதைப்பரணி பாடக்’ கடைதிறக்க வேண்டுமென்றிருப்பதை நோக்குகையில் கடைதிறப்பு, கடவுள்வாழ்த்தைப்போலப் புற உறுப்பென்பது பெறப்படுகிறது. கடைதிறப்பிற்குப் பின்வரும் காடுபாடியது என்னும் உறுப்பில், தேவியின் திருக்கோயிலமைந்துள்ளதும் பேய்களுக்கு வாழ்க்கை இடமும் ஆகிய புறங்காட்டைப் பற்றியவருணனை காணப்படும். [16] காடுவாழ்த்தென்னும் புறத்துறையின் வகையாக இதனைச் சொல்லலாம். பின், பேய்களைப் பாடியது என்னும் உறுப்புக் காணப்படும் ; இது கூளிநிலை எனவும் வழங்கும் ; இதன்கண் பேய்களின் இயல்பு கூறப்படும். பின்னர் வருவதாகிய கோயிலைப்பாடியது என்பதில் காளியின் திருக்கோயில் வருணனையும், தேவியைப்பாடியது என்னும் உறுப்பில் காளியின் திருமேனி, திருவருட்பெருமை முதலியனவும் சொல்லப்படும் ; பின்னது காளிநிலை எனவும் வழங்கும். பேய்முறைப்பாடு என்னும் உறுப்புப் பின் அமைக்கப்படும் ; இதன்கண் பசியால் வருந்தியபேய்கள் தங்கள் பசிக்கொடுமை முதலியவற்றைக் காளியின்பால் முறையிடுதல் கூறப்படும். [17]போர்க்களத்தே யன்றிப் பிறவிடங்களில் உணவு முதலியன பெறுதல் கூடாதென்று வைரவக்கடவுளால் ஆணை இடப்பட்டிருத்தலின் பேய்கள் போரில்லாத காலத்திற் பசியால் வாடுமென்பர். அப்பசித்துன்பத்தையும் பிறவற்றையும் காளிக்குக் கூறும் வழக்கு,
“துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்கு”
(பெரும்பாண். 459)
“பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித் தாங்கு”
(கலித். 89 : 8)
“அரற்றென்பது அழுகையன்றிப் பலவுஞ்சொல்லித் தன்குறை கூறுதல்;
அது காடுகெழ செல்விக்குப் பேய்கூறும் அல்லல்போல வழக்கினுள்ளோர் கூறுவன”
(தொல். மெய்ப். சூ. 11, பேர்.)
என்பவற்றாலும் அறியப்படும். இவ்வுறுப்பின் இறுதியில் நூலுட் கூறப்படும் போருக்குச் சென்ற பேயொன்று வந்து மகிழ்ச்சியோடு யாவரையும் உணவுகொள்ள அழைப்பதும், காளி நடந்தவரலாற்றைக் கூறும்படி கட்டளையிடுவதும் காணப்படும். பின்பு அமையும் உறுப்பாகிய காளிக்குக் கூளி கூறியது என்பதில் போர்வரலாறும் வெற்றியும் சொல்லப்படும். அதன்பின் வரும் களங்காட்டலில் காளி போர்க்களஞ் சென்று பேய்களுக்கு அங்குள்ளவற்றைக் காட்டுதலும், கூழ் என்னும் உறுப்பில் பேய்கள் பரணிக்கூழ் சமைத்து இட்டு உண்டு வாழ்த்துதலும் அமைக்கப்படும். இவ்வுறுப்புக்கள் இங்கே கூறப்பட்ட முறையாகஅன்றி முன்னும் பின்னும் பிறழ்ந்து அமைந்திருத்தலும் உண்டு. கூளி கூறியது என்னும் ஒன்றையன்றி ஏனையன எல்லாப் பரணிகட்கும் பொதுவாகிய உறுப்புக்களாகும்.
------------
[1]. “அகத்திணைக்கட் சார்த்துவகையான் வந்தன அன்றித் தலைமை வகையான் வந்தில என்பது.” தொல். அகத். சூ. 54, ந.
[2]. முன்றேர்க்குரவையென்பர் புறப்பொருள் வெண்பாமாலையுடை யார்.
[3]. “பிணக்கோட்ட களிற்றுக்குழும்பின், நிணம்வாய்ப் பெய்த பேய் மகளிர், இணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப், பிணையூபம் எழுந்தாட, அஞ்சு வந்த போர்க்களத்தான், ஆண்டலை யணங்கடுப்பின், வயவேந்த ரொண்குருதி, சினத்தீயிற் பெயர்புபொங்கத், தெறலருங் கடுந்துப்பின், விறல்விளங்கிய விழுச்சூர்ப்பின், தொடித்தோட்கை துடுப்பாக, ஆடுற்ற வூன்சோறு, நெறியறிந்த கடிவாலுவன், அடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர.” 24-38.
[4]. “முடித்தலை யடுப்பாகப், புனற்குருதி யுலைக்கொளீஇத், தொடித் தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின், அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய”, “களிற்றுக்கோட் டன்ன வாலெயி றழுத்தி, விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள், குடர்த்தலை துயல்வரச் சூடி யுணத்தின, ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து, வயங்குபன் மீனினும் வாழியர் பலவென, உருகெழு பேய்மக ளயரக், குருதித்துக ளாடிய களங்கிழ வோயே.” 26, 371.
[5]. “கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக, ஆளழி வாங்கி யதரி திரித்த, வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தி....... முன்றேர்க் குரவை முதல்வனை வாழ்த்திப், பின்றேர்க் குரவைப் பேயாடு பறந்தலை, முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித், தொடித்தோட் டுடுப்பிற் றுழைஇயவூன் சோறு, மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்டச், சிறப்பூண் கடியினஞ் செங்கோற் கொற்றத், தறக்களஞ் செய்தோ னூழி வாழ்கென.” 26 : 232-46.
[6]. “பரணிநாட்பிறந்தான்” (சீவக. 1813) என்பதற்கு, ‘பரணி யானை பிறந்த நாளாதலின் அதுபோலப் பகையை இவன் மதியான்’ என்று நச்சினார்க்கினியர் எழுதிய விசேடவுரையைப்பார்க்க.
[7]. “காடுகிழவோள்........ தருமனாள்......... எனப், பாகுபட்டது பரணிப் பெயரே” திவாகரம்.
[8]. ‘பரணி பிறந்தான் தரணியாள்வான்’ என்ற பழமொழியும், ‘பரணி யான் பாரவன்’ (நன். சூ. 150, மயிலை.) என்னும் மேற்கோளும் இங்கே அறிதற்குரியன.
[9. “பொருநரும் ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும் பரணி பாடுநருமெனப் பலராம்” தொல். புறத். சூ. 36, ந.
[10]. “கூடல, சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த, துங்கமத யானை துணித்தோனும்” (விக்கிரமசோழனுலா), “கொலையானை, பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி, கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன்-ஒப்பொருவர், பாட லரிய பரணி பகட்டணிவீழ், கூடல சங்கமத்துக் கொண்டகோன்” இராசராச சோழனுலா.
[11]. “செருத்தந் தரித்துக் கலிங்கரோடத்-தென்றமிழ்த் தெய்வப் பரணி கொண்டு, வருத்தந் தவிர்த்துல காண்டபிரான்-மைந்தர்க்கு மைந்தனை வாழ்த்தினவே” (தக்கயாகப்பரணி, 776); ‘இப்பரணிபாடினார் ஒட்டக்கூத்தரான கவிச்சக்கரவர்த்திகள். இப்பரணிப் பாட்டுண்டார் விக்கிரமசோழ தேவர்’ —. உரை
[12]. தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவரால் இயற்றப்பெற்ற ‘கலைசைச் சிதம்பரேசுவரர் பரணி’ முதலியன இவ்வகையைச் சார்ந்தவை. அப் பரணியிலுள்ள தாழிசைகளுள் ஒன்றுவருமாறு : “கவின்கைக் கமலங் குவித்து விழிக் காவி மலர்த்தி வழிபார்க்கும், அவள்பாற் கலைசைச் சிதம்பரநல் அழகரேவந் தருளுமினோ.”
[13]. “மீனம்புகு கொடிமீனவர் விழிஞம்புக வோடிக், கானம்புக வேளம்புகு மடவீர்கடை திறமின்”, “அலைநாடிய புனனாடுடை யபயற்கிடு திறையா, மலைநாடியர் துளுநாடியர் மனையிற்கடை திறமின்”, “மழலைத்திரு மொழியிற் சில வடுகுஞ்சில தமிழுங், குழறித்தரு கருநாடியர் குறுகிக்கடை திறமின்” (கலிங்கத்துப்பரணி) என்பவற்றிற் பகைவர் நாட்டுமகளிர் கூறப்படுதல் காண்க
[14]. தக்கயாகப்பரணி முதலியவற்றைப்பார்க்க
[15]. தாழிசை, 44-7.
[16]. தொல். புறத். சூ. 24.
[17]. “தற்பர வடுக னாணைத் தன்மையா லலகை யீட்டம், நற்புன னீழல் பெற்றும் நணுகருந் தன்மை யேபோல்” (கந்த. மேருப். 21) ; “தெருள்சேர் முனிவ புனன்முதல தீண்டிப் பேயி னுடனடுங்க, ஒருவா துடற்றும் வயிர வன்ற னாணை யெனத்தாழ்ந் துரைத்ததுவே” (காசிகாண்டம், அலகைதேவனாகிய. 10); “குருதி யீர்ம்புனல் கணங்களுக் களித்தனன் குடிப்புழிச் சிலவேனும், பருகு தற்குப்போ தாமைகண் டவனிமேற் பறந்தலைப் பெருவேந்தர், செருவி லேற்றுயிர் மடிந்தவர் விண்மிசைத் திகழவங் கவர்செந்நீர், இரண மண்டல வயிரவன் கணங்களுக் கினிதமைத் தருள்செய்தான்.” காஞ்சிப். வயிரவீசப். 37.
-------
பாசவதைப் பரணி
பாசவதைப்பரணி யென்பது சிவஞான பாலைய தேசிகர் சார்ந்தார் பாசத்தைப் போக்கிச் சிவஞானம் அருளிய செயலை உருவக வகையில் அமைத்துப் பாசமன்னனொடு பொருது வென்றதாகப் பாடப்பெற்றது.
“தேசம் பரித்த சிவஞான தேசி கன்பார் வந்தெமது
பாசம் பறித்த திறம்பாடப் பைம்பொற் கபாடந் திறமினோ”
(தாழிசை, 57)
என்பதில் இது குறிப்பிக்கப் பட்டிருக்கின்றது.
இந்நூல், பாசத்தைப் பாசமன்னனாகவும் புல்லறிவைத் துன்மதி யென்னும் மந்திரியாகவும், காமம், கோபம், உலோபம், மோகம், அகங்காரம், மாற்சரியம் என்னும் உட்பகை ஆறையும் பாசமன்னன
படைத்தலைவர்களாகவும், ஞானத்தைச் சிவஞானதேசிகருடைய தண்டநாயகராகவும், நிருபகம், பொறை, சந்தோடம், விவகார பராமுகம், சாந்தம், சீலம் முதலியவற்றை அந்தத் தண்டநாயகருக்கு அடங்கிய படைத்தலைவர்களாகவும், ஞானத்தால் பாசம் நீங்கியதை ஞானவிநோதன் சேனைகளால் பாசமன்னன் அழிந்ததாகவும் உருவகம்செய்து அதற்கேற்ப வரலாற்றைத் தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இங்ஙனம் குணங்களை உருவகஞ் செய்தல் வடமொழியிலும் உண்டென்பதைப் பிரபோத சந்திரோதயம் முதலிய நூல்களால் அறியலாம் ;
“அழுக்கா றெனவொரு பாவி”,
“இன்மை யெனவொரு பாவி”,
“நாணென்னு நல்லாள்”
எனத் திருக்குறளிலும் குணங்களை உருவகப்படுத்தி யிருத்தல் காண்க.
புறப்பகையை வெல்லுதலிலும் அகப்பகையை வெல்லுதல் அரிது. அப்பகையை வென்று ஞானமுடிசூடுதல் சிறப்புடையது ; அச்செயல் உயர்ந்த வீரமாகவே கருதப்படும் ;
“ஐம்புலனும் வென்றான்றன் வீரமே வீரம்”
என்னும் பழைய பாடல் இதனை வலியுறுத்தும். ஆதலின், வீரத்தைப் பாராட்டும் பரணிப்பிரபந்தங்கள் ஞானத்தின் வெற்றியையும் பாராட்டுதல் பொருத்தமுடையதேயாகும்.
பாசவதைப்பரணி, காப்பை முதலிற் பெற்றுக் கடவுள்வாழ்த்து முதலிய பத்து உறுப்புக்களையும் 737 தாழிசைகளையும் உடையது.
இந்நூலிற் சொல்லப்படும் சிவஞானதேசிகரென்பவர் அம்மவை யம்மையாரென்பவரின் திருப்புதல்வராக அவதரித்து, மயிலத்தில் எழுந்தருளியிருந்தவரும் முருகக்கடவுள் திருவருள் பெற்றவருமாகிய பாலசித்தரென்னும் சித்தபுருஷர்பால் ஞானோபதேசம் பெற்று, அவரது கட்டளையின்படியே பொம்மையபாளையமென வழங்கும் பொம்மபுரத்தில் வீரசைவஞானாசிரியராக எழுந்தருளி இருந்தவர். அவருக்குரிய மடங்கள், பொம்மபுரம், மயிலம், காஞ்சீபுரம், செய்யூர், சிதம்பரம் என்னும் இடங்களில் உள்ளன.
இந்நூலுள் அவர் அம்மவைக்குப் புதல்வராக அவதரித்தமை, 220-21-ஆம் தாழிசைகளிலும், அவருக்குரிய பொம்மபுரம் முதலியன காப்பிலும், 16-7, 300, 736-ஆம் தாழிசைகளிலும், அவர் வீரசைவமத ஆசிரியரென்பது 737-ஆம் தாழிசையிலும் சொல்லப்பட்டுள்ளன.
சிவஞானபாலைய தேசிகரெனவும் அவர் வழங்கப்பெறுவர் ; அவர்மீது துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் பாடிய தாலாட்டு, நெஞ்சுவிடுதூது, பிள்ளைத்தமிழ், திருப்பள்ளியெழுச்சி, கலம்பகம் ஆகிய பிரபந்தங்கள் உண்டு.
இந்நூலில் கடவுள்வாழ்த்தில் நிட்களசிவம், சகளசிவம் திருமால், பிரமதேவர், விநாயகர், முருகக்கடவுள், சூரியனென்பவர்கள் வாழ்த்தப்படுகின்றனர்.
கடைதிறப்பில், பலவகையான ஞானபக்குவிகள் மகளிராகச் சொல்லப்படுகின்றார்கள். ஏனைப் பரணிநூல்களில் பல நாட்டு மகளிரைக் கடைதிறக்கும்படி கூறும் மரபைத்தழுவி இப்பகுதியில் சிலநாட்டின் பெயர்கள் தொனிக்கும்படி ஆசிரியர் அமைத்திருக்கின்றனர் ; அங்கம், வங்கம், கொல்லம், சிந்து, சோனகம், சாவகம், கன்னடமென்னும் நாட்டின்பெயர்கள் அவ்வகையில் அமைந்துள்ளன. மகளிர் இயல்புக்கும் ஞான அநுபவிகள் இயல்புக்கும் ஒப்புமை அமையும்படி சிலேடையாகச் சில தாழிசைகள் இப்பகுதியில் உள்ளன.
காடுபாடியதில், அஞ்ஞானிகள் வாழும் இடமே சுடுகாடாகவும், அவர்களே விலங்குகளாகவும், கோபம் முதலியன முள் முதலியனவாகவும் சொல்லப்படுகின்றன.
பேய்களைப்பாடியதில், அறிவற்றவர்கள் பேய்களாகச் சொல்லப்படுகின்றனர். பலவகைச் சமயக்கொள்கைகள் இதிற் காணப்படும். உலகத்தில் உள்ள பலவகை வஞ்சகச்செயல்களை மிக அழகாக ஆசிரியர் இதில் அமைத்திருக்கின்றனர்.
கோயிலைப்பாடியதில், தேவியின் கோயிலுள்ள சோலை, திருக்கோயில் முதலியவற்றின் பெருமை காணப்படும்.
தேவியைப்பாடியதில், தேவியின் பெருமையும் அவள்பரிசனத்தின் இயல்பும் காணப்படுகின்றன. ஞானநிலையை உடையவர்களே
டாகினி முதலிய பரிசனங்களாக அமைக்கப்படுகின்றனர். இப் பகுதியால் ஞானியர்களுடைய நிலை நன்றாகத் தெரியவருகின்றது.
கலிங்கத்துப்பரணி முதலிய பரணிகள் சிலவற்றில் ‘இந்திர சாலம்’ என்னும் ஒருபகுதி சொல்லப்படுவதுண்டு. அதனைப் பேய் முறைப்பாட்டின் தொடக்கத்தில்,
“இறப்பதும்பிறப்புமாய இந்த்ரசால வித்தையைச்
சிறப்பொடுங்குறிக்கொளென்று தேவிமுன்பு காட்டியே”
என்னும் ஒருதாழிசையில் ஆசிரியர் அடக்கியுள்ளார்.
கூளிகூறியதில், பாசமன்னனை ஞானவிநோதர் வென்ற வரலாறு சொல்லப்படுகிறது. அதன் சுருக்கம் வருமாறு :
சங்கற்பமாகிய மதில் முதலியவைகளாற் சூழப்பெற்ற மாயாபுரத்தில் பாசனென்றும் அஞ்ஞனென்றும் வழங்கப்படும் மன்னன் ஒருவன் பலவகைத் தீய குணங்களுக்கு இருப்பிடமாகித் துன்மதியென்பவனை மந்திரியாகக் கொண்டு நீதியற்ற அரசாட்சியை நடத்தி வந்தான். அந்தப் பாசமன்னனது பழிமாசு உலகெலாம் படர்ந்து மூடும் தன்மையைச் சிவபெருமான் அறிந்து சிவஞான தேசிகராக மயிலத்தில் அவதரித்து ஞானக்கோலம் பூண்டு ஞானமுடிசூடி யோகாசனத்தில் வீற்றிருந்தருளினார்.
இங்ஙனம் அவர் வீற்றிருந்தபொழுது பாசமன்னனுடைய ஒற்றர்கள் அவன்பால் ஓடிச்சென்று அவர் அவதரித்தசெய்தியைக் கூறினர். அதனைக்கேட்டும் பிறரால் அறிந்தும் பாசமன்னன் துன்மதியென்னும் மந்திரியோடு ஆலோசித்துச் சிவஞான தேசிகரோடு பொருவதற்கு எண்ணும் பொழுது, அவனுடைய படைத்தலைவர்களுள் ஒருவனாகிய காமன் எழுந்து தன்னுடைய பெருவீரத்தை எடுத்துக் கூறினான் ; பின்பு கோபன் தனது வெற்றிச்சிறப்பைக் கூறினான். கேட்ட பாசமன்னன், “கோபன் காமனைப்போன்ற வன்மையுடையவனே” என்று பாராட்டினான். ‘காமனைப்போன்றவன்’ என்று கூறியதனால் நாணமடைந்த கோபன், மீண்டும் தான் காமனாலும் செய்யமுடியாத பல செயல்களைச் செய்ததாகத் தெரிவித்தான். பிறகு உலோபன், மோகன், அகங்காரன், மற்சரன் என்பவர்கள் தத்தம் பெருமைகளையும் வலியையும் எடுத்து உரைத்தனர்.உடனே துன்மதிமந்திரி, “நம்முடைய படையின் ஊக்கத்தை எவர் உரைக்க வல்லார்?” எனப்பாராட்டினான். பாசமன்னன் தருக்குடன் இருந்தான்.
அம்மன்னன் அங்ஙனம் இருக்க, அவனால் விளையும் துன்பங்களைச் சிவஞானதேசிகரிடம் அவருடைய தண்டநாயகராகிய ஞானவிநோதர் போய்த்தெரிவித்தார். கேட்ட சிவஞானதேசிகர் பாசமன்னனோடு பொருதுவெல்லும்படி ஞானவிநோதருக்குக் கட்டளையிட்டு அவரை விடுத்தார்.
பலவகை ஞானபக்குவங்கள் பூண்டவர்களை யெல்லாம் துணைக் கொண்டு ஞானவிநோதர் போருக்குப்புறப்பட்டனர். அப்பொழுது, அவர் தம்முடைய படைத் தலைவர்களை நோக்கி “நீங்கள் எந்த முறையை மேற்கொண்டு பாசமன்னன் படையினை அழிப்பீர்?” என்று வினாவ, அவர்களில் நிருபகன் காமனையும், பொறையன் போபனையும், சந்தோடன் உலோபனையும் விவகாரபராமுகன் மோகனையும், சாந்தன் அகங்காரனையும், அமுதசீலன் மற்சரனையும் அழிப்பதாகத் தத்தம் ஆற்றலை எடுத்துச் சொன்னார்கள்.
ஞானவிநோதருடைய படை போருக்கு எழுந்ததைப் பாச மன்னனுடைய வாயில் காவலர் அறிவிக்க அறிந்த அவன்படைவீரர்களிற்பலர் தங்கள் அரசன் அழிவானென்று அஞ்சினர் ; பின்பு அவர்கள் அச்செய்தியை அவனுக்கு அறிவித்தனர் ; அவன் மிக்க தருக்குடன், “எதிர்த்து வந்தவரை வெல்லாமல் நான் மீண்டால் என்னை அஞ்ஞனென்று சொல்லாமல் வேறுபெயரிட்டு அழையுங்கள்” என்று வஞ்சினங் கூறிப் போர்புரியும்படி தன்படையை ஏவினன். போருக்கு அஞ்சி அப்படையிற் பலர் ஓடிமறைந்தனர். அப்பொழுது ஞானவினோதர், ஓடாமல் எஞ்சிநின்றவர்களை மாய்க்கும்படி தம் படைவீரருக்குக் கட்டளையிட அவர்கள் அவரை நோக்கி, “நம்மவரென்றும் பகைஞரென்றும் வேறுபாடு காண்பது எவ்வாறு?” என வினாவினர். அதனைக்கேட்ட ஞானவிநோதர் தம்மவர்களாகிய உண்மைஞானியர் இயல்புகளை எடுத்துக்கூறி அவருக்கும் அஞ்ஞன்படைவீரராகிய அஞ்ஞானியருக்கும் பலவகையில் ஒப்புமை இருப்பதுபோலத் தோற்றினும் அவர்களிடையே உள்ள வேற்றுமைகள் இத்தகையனவென்று அறிவுறுத்தினர்.
பின்னர், போர் மூண்டது ; காமன்முதலியோர் நிருபகன் முதலியவர்களால் அழிக்கப்பட்டனர். பாசமன்னன் ஒருவனையன்றி ஏனையோரெல்லாம் மாய்ந்தபின்பு அவனை நோக்கி ஞானவிநோதர் படையிலுள்ள ஞானவீரர்கள், “ஞானவிநோதரை வணங்கு” என்று சொல்ல, அவன் அப்பொழுதும் பணியாமல் நின்றான்.
அப்பொழுது சிவஞானதேசிகருடைய பெருமையை அவனுக்கு ஞானவீரர்கள் எடுத்துக் கூறினார்கள் ; அதனைக்கேட்ட பாசன் மிகச் சீறி, “ஞானவிநோதன் என்முன்வந்தால் அப்பொழுது நான் காட்டும் வீரத்தைப் பாருங்கள்” என்று கூறினான்.
அச்சொற்களைச் செவியேற்ற ஞானவிநோதர் அவன்முன்பு வந்து அவன்தலையின்மீது தம் திருவடியை வைத்தனர். உடனே பாசன் தனது பழைய நிலைமாறி ஞானரூபம் பெற்றனன். அவனுடைய படைகளும் ஞான நிலையை அடைந்தன. அதனை அறிந்த யாவரும் ஞானவிநோதரைப் புகழ்ந்தனர்.
பின்பு ஞானவிநோதர் சிவஞானதேசிகர்பாற் சென்று பணிய, தேசிகர் அவருக்கு முடிசூட்டி, “ஞானசக்கரத்தை நீ செலுத்துவாயாக” என்று அருளினார். அவ்வாறே அவர் ஞான அரசாட்சியை நடத்திவந்தார் ; அவர் ஆட்சியில் யாவரும் இன்பத்தைப் பெற்று வாழ்ந்தனர்.
இப்பகுதியில் உண்மைஞானிகளுடைய இயல்புகளும் அறிவற்றவர்களுடைய இயல்புகளும் அங்கங்கே மிக அழகாகச் சொல்லப்படுகின்றன. காமன்முதலியவர்கள் கூற்றுக்களில் புராண இதிகாசங்களிலுள்ள செய்திகள் காணப்படுகின்றன. இருவகைப்படை வீரர்களுடைய கூற்றுக்களிலும், திருக்குறளிலுள்ள கருத்துக்களும் சொற்றொடர்களும் அமைந்திருக்கின்றன. இடையிடையே மடக்குக்கள் உள்ளன.
கூளிகூறியதற்குப்பின்பு உள்ள களங்காட்டலென்னும் பகுதியில் தேவி மோகினிகளுடன் களஞ்சென்று அஞ்ஞானிகள் ஞானம் பெற்ற வரலாற்றைக்கூறி அவர்களைக்காட்டுதல் சொல்லப்படுகிறது.
கூழென்னும் பகுதியில் சாந்திமுதலிய மோகினிகள் கூழ் சமைத்துத் தேவிக்குப்படைத்துத் தாமும் உண்டு, அங்கே உணவு பெற வந்திருக்கும் பலபேய்களுக்கு இடுதலும் அவை உண்டு ஞானவிநோதரையும் பிறரையும் வாழ்த்துதலும் காணப்படும். பல சமயத்தினர் கொள்கைகள் இப்பகுதியால் தெரியவருகின்றன.
இந்நூலமைப்பு, அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி, தமிழ்ப்பிரபோதசந்திரோதயம் என்பவற்றைப் பின்பற்றியதாகக் காணப்படுகின்றது. அவற்றுள்ளும் அஞ்ஞவதைப்பரணியிலுள்ள
சொல்லும் பொருளும் பெரும்பாலும் அப்படி அப்படியே இதில் எடுத்தாளப்பட்டுள்ளன. இவற்றை நோக்கும்பொழுது,
“முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும்
பொன்னேபோற் போற்றுவம் என்பதற்கும்-முன்னோரின்
வேறுநூல் செய்துமெனும் மேற்கோளில் என்பதற்கும்
கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்”
என்னும் பழைய இலக்கணத்தை மேற்கொண்டவர்களில் இந்நூலாசிரியரினும் சிறந்தவர் வேறொருவரிரா ரென்று தோற்றுகிறது.
இந்நூலாசிரியர் இலக்கணவிளக்கம் இயற்றியவரும்திருவாரூரில் திருக்கூட்டத்தில் தமிழுக்கு இலக்காய் விளங்கியவருமான ஸ்ரீ வைத்தியநாத தேசிகரென்றும் இதனை இயற்றியதற்காக அவர் சில மானியங்களைப் பெற்றனரென்றும் கூறுவர். இந்த விவரம் எனக்குக் கிடைத்த கையெழுத்துப் பிரதிகளாலும் வேறு வகையாலும் தெரியாமையால் இதைப்பற்றி நான் ஒன்றும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.
இந்நூலில் உள்ள சுவையுள்ள பகுதிகள் வருமாறு : தாழிசை, 3-16, 81-5, 108-138, 163, 183-200, 255, 282-95, 346-447, 469, 475-540, 571-89, 629-37, 642-52, 657-63, 670-76..
இற்றைக்குச்சற்றேறக்குறைய முப்பது வருஷங்களுக்குமுன்பு இந்நூலெழுதிய ஏட்டுச்சுவடி ஒன்று திரிசிரபுரத்தில் தென்னிந்திய ரெயில்வேயில் பெரிய உத்தியோகத்திலிருந்த ஸ்ரீமான் காஞ்சீபுரம் கங்காதர முதலியாரவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்தது. அப்பிரதியின் இறுதியில் பின்வருவன எழுதப்பட்டிருந்தன :
‘நன்றாக, குருவாழ்க, குருவேதுணை. சிவஞான தேசிகனார் திருவடிகளே சரணம். வெற்றிவேலுற்றதுணை. திருச்சிற்றம்பலம். சாலிவாகன சகாப்தம் (1744)-க்குமேலே செல்லா நின்ற சுபானுu பங்குனிt 32 ஆதிவாரம் சதுர்த்தசி திதி பதினெட்டரை, பூரநட்சத்திரம் 43 ; இந்த சுபதினத்தில் சற்குரு சிவலிங்கதேசிகேந்திர சுவாமி யாருடைய கிருபாகடாக்ஷத்தினாலே காஞ்சீபுரம் பிள்ளைபாளையம் கிருஷ்ணாராயர் தெருவிலிருக்கும் குருசாந்தையர் மடம் ஏகாம்பர அய்யர் பேரனாகிய அண்ணாமலை பாசவதைப்பரணி எழுதி நிறைவேறினது முற்றும். அண்ணாமலை சொஸ்தலிகிதம், சிவமயம்.’
வேறிடங்களிலிருந்து இந்நூலின் வேறு இரண்டு ஏட்டுப் பிரதிகள் கிடைத்தன. அவற்றை வைத்துக்கொண்டு ஆராய்ந்து இந்நூலின் நயத்தையறிந்து, இன்றியமையாத இடங்களில் சுருக்கமாகக் குறிப்புரை எழுதி இப்பொழுது வெளியிடலானேன்.
இதனை, ‘கலைமகள்’ பத்திரிகையில் வெளியிடுதற்குக் காரணமாக இருந்த அப்பத்திரிகையின் அதிபர் ஸ்ரீமான் ஆர். நாராயணசாமி ஐயரவர்களுக்கும் பத்திரிகாசிரியர்களுக்கும் என்னுடைய நன்றி உரியதாகும்.
இதனை ஆராயுங்காலத்தும் பதிப்பிக்கும் காலத்தும் உடனிருந்து உதவி செய்தவர்களாகிய, சென்னைக் கிறிஸ்டியன்காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி. மு. சுப்பிரமணிய ஐயருக்கும் ‘கலைமகள்’ உதவிப் பத்திரிகாசிரியர் சிரஞ்சீவி வித்துவான் கி. வா. ஜகந்நாத ஐயருக்கும் கலைமகளின் திருவருள் மேன்மேலும் பெருகுக.
‘தியாகரஜாவிலாசம்’ இங்ஙனம்,
திருவேட்டீசுவரன்பேட்டை, வே. சாமிநாதையர்.
15-12-33.
----------------
கணபதி துணை
பாசவதைப் பரணி - நூல்
காப்பு
வெண்பா
1. தேசுவளர் பொம்மைச் சிவஞான தேசிகன்மேற்
பாச வதைப்பரணி பன்னுதற்கு - நேசமிகும்
அம்பவளச் செஞ்சடிலத் தைந்துகரத் தெந்தையருட்
கம்பவளத் தும்பிமுகன் காப்பு.
---------
1. கடவுள் வாழ்த்து
நிட்கள சிவம்
தாழிசை
2. திருமருவு மருமன்முத லெவருந் தோன்றத்
திருவிளையாட் டொருதனியே செய்து மாற்றிப்
பொருண்மருவு மருமறையு மறையொ ணாத
பூரணதற் பதப்பொருளைப் போற்றல் செய்வாம். (1)
3. மயல்புரியும் பெரும்பிறவிப் பௌவம் வற்ற
வற்றாத பேரின்ப வாரி பொங்கச்
செயல்புரியுஞ் சிவஞான தேசி கன்பூஞ்
சேவடிசூட் டும்பனுவல் சிறக்க வென்றே. (2)
சகள சிவம்
வேறு
4. நீரேந்து சடாடவியு நெருப்பேந்து கராம்புயமும்
நெற்றிக் கண்ணும்
காரேந்து கந்தரமு முடையபிரா னடிக்கமலம்
கருத்துள் வைப்பாம். (3)
5. காரேந்து கந்தரமு நுதல்விழியும் புனற்சடையும்
கனலு மேந்தாச்
சீரேந்து சிவஞான தேசிகன்செந் தமிழ்மாலை
சிறக்க வென்றே. (4)
திருமால்
6. புவியனைத்துந் தனித்துண்டு போயுறங்கும் படியுறங்கிப்
புரியும் யாக
அவியனைத்து மமரருண வருளுதவு மொருமுதலுக்
கன்பு செய்வாம். (5)
7. சகமனைத்துந் தனித்துண்டு தகையுறங்கும் படியுறங்கித்
தற்சொ ரூபச்
சுகமனைத்து நுகரவருள் சிவஞான தேசிகன்சீர்
சொல்ல வென்றே. (6)
பிரமதேவர்
8. இருவினையு முக்குணமு நாற்கதியு மைம்புலனும்
இயற்றா நின்ற
ஒருவினையு முகநான்கு முடையவனை முப்போதும்
உளத்துள் வைப்பாம். (7)
9. புலமைந்துங் கதிநான்குங் குணமூன்றும் வினையிரண்டும்
போக வாண்டு
நிலமைந்துந் தொழவந்த சிவஞான தேசிகன்சீர்
நிலவ வென்றே. (8)
விநாயகர்
10. நால்வாயு மைங்கரமு மிருசெவியு முக்கண்ணும்
நயந்து தூய
பால்வாயு மெய்ஞ்ஞான போதனைகூர் மதகளிற்றைப்
பணிதல் செய்வாம். (9)
11. நான்மறையு மஞ்செழுத்து மிருபயனு மூவுலகும்
நயப்ப மாயை
தான்மறையும் படியுதித்த சிவஞான தேசிகன்சீர்
தழைக வென்றே. (10)
முருகக் கடவுள்
12. அயிலேறு கராம்புயமு மருளேறு முகாம்புயமும்
ஆடல் சான்ற
மயிலேறு பதாம்புயமு மருவுமொரு முருகனையாம்
வணங்கல் செய்வாம். (11)
13. விண்ணேறு நெடும்புகழும் புவியேறு தண்ணளியும்
மேவி யுள்ள
எண்ணேறு சிவஞான தேசிகன்பா மாலையரங்
கேற வென்றே. (12)
சூரியன்
14. புவிபரந்த புறவிருள்கள் புறந்தந்து போயிரியப்
புணரி வந்து
சவிபரந்த விரவிதனைப் பரவியன்பு விரவிமுன்பு
தாழ்தல் செய்வாம். (13)
வேறு
15. நனிபரந்த வகவிருள்கள் புறந்தந்து போயிரிய
ஞாலத் தெய்தித்
தனிபரந்த சிவஞான தேசிகன்செந் தமிழ்மாலை
தழைக வென்றே. (14)
வேறு
16. செயலைச் சிவஞான போதனைச் செயலுட் படவோதி யேர்தரு
மயிலைச் சிவஞான தேசிகன் வளர்மெய்ப் புகழ்வாழி வாழியே. (15)
17. கயிலைப் பதிவாழி வாழியே கனகச் சபைவாழி வாழியே
மயிலைப் பதிவாழி வாழியே வளர்கச் சியும்வாழி வாழியே. (16)
-------
குறிப்புரை
1. பொம்மை - பொம்மையபாளையம் ; இவ்வூர் விழுப்புரம் தாலூகாவில் உள்ளது. பன்னுதற்கு - ஆராய்ந்து சொல்லுதற்கு. கம்பம் - கட்டுத்தறி.
பி - ம். ‘தேசிகர்மேல்’
‘2. மருமன் - மார்பை உடையவன்.
3. பனுவல் - நூல்.
4. கந்தரம் - கழுத்து.
பி - ம். ‘கராம்புசமும்’
6. புவியனைத்தும் தனித்துண்டு : “உலகந் தனித்துண்டவன் றொழுந் தாளோன்” (திருச்சிற். 132. ) யாகம் திருமால் வடிவென்பர் ; “எச்சனாந் துளவினானை” காஞ்சிப். தக்கீசப்.
9. நிலம் ஐந்து - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து திணைகள்.
10. பால் வாயும் - பகுதி பொருந்திய.
12. ஆடல் - ஆடுதல்.
பி - ம். ‘கராம்புசமும்’ ‘முகாம்புசமும்’ ‘பதாம்புசமும்’
14. சவி - அழகு, ஒளி.
16. செயலைச் செயலுட்பட ஓதி. மயிலை - மயிலம் ; இது மயிலாசலமெனவும் வழங்கும்.
----------
2. கடை திறப்பு
18. அருவின ராகியு மலரா மருவுரு வாகியு மலராம்
உருவின ராகியு மலரா மொருவரை நாடியர் திறமின். (1)
வேறு
19. அலையு மீனமு மானமு மின்றியே
அன்றி யோடுநா வாய்க்குமெட் டாததாய்
நிலையுந் தாழ்வு மிலாததோ ரானந்த
நீள்க டற்றுறை யாடியர் திறமினோ. (2)
20. அங்க நாடியர் நீடிய வெழுபிறப்
பாழி யேழ்கடந் தப்புறஞ் சென்மறை
வங்க நாடியர் பீடிய லுளமெலா
மகத நாடியர் வருகடை திறமினோ. (3)
21. அல்ல நாடிய ரறுபகை வளர்ப்பவர்
ஆக லாலிக லப்பகை யாவையும்
கொல்ல நாடியர் பேரருட் சிந்துநற்
கோல நாடியர் குளிர்கடை திறமினோ. (4)
வேறு
22. கடல்கெழுநஞ் சோனக நாடியர்
கடியபுலந் தாழ்பொறி யாயின
அடல்கெழுநஞ் சாவக நாடியர்
அருள்பெறவந் தேகடை திறமினோ. (5)
வேறு
23. திருமணநா டியர்பிறவிச் சிறையினரா கலினமலத்
தருமணநா டியர்விழைவுற் றணிவளருங் கடைதிறமின். (6)
24. பன்னடநா டியர்சனனப் பாவையரா வருண்மன்றிற்
கன்னடநா டியர்குறுகிக் கருணையொடுங் கடைதிறமின். (7)
வேறு
25. இருளு மின்றிய வொளியு மின்றிய
இலது மின்றிய வுளது மின்றிய
மருளு மின்றிய தெருளு மின்றிய
வரமொ டொன்றியர் திறமினோ. (8)
வேறு
26. மண்ணின்மறை யாதுநிறை வாரியமி ழாது
வாடியெரி யாதெரியின் வாதமறை யாது
விண்ணின்மறை யாதுமன மாதிபொறி மேவா
மேலதனை மேவியணை வீர்கடைக டிறமின். (9)
வேறு
27. பூண்ட பணிகள் புறத்தவிழப்
புளக மெறிய விளகியுளம்
நீண்ட விழிக ணீர்ததும்ப
நேயத் தமர்வீர் திறமினோ. (10)
28. தரித்த கலையி னிலைகுலையத்
தம்மை மறந்து தலைவரொடு
தெரித்த கலவி நலனுகர்வீர்
செம்பொற் கபாடந் திறமினோ. (11)
29. தாளை யெண்ணித் தலைவரொடு
சாரா தகன்று தணந்தநெடு
நாளை யெண்ணி யிரங்கிடுவீர்
நன்பொற் கபாடந் திறமினோ. (12)
30. வென்றே புலனோ ரைந்தினையும்
விருப்பும் வெறுப்பு மேவலராய்
ஒன்றே குறித்து விழித்துறங்கும்
உபாயந் தெரிவீர் திறமினோ. (13)
வேறு
31. உலகம்விழித் ததினுறங்கி யுலகுறங்கு மதினொன்றி
இலகவிழித் துறங்கிடுவீ ரிடுகதவந் திறமினோ. (14)
வேறு
32. ஊன நாட்டம் பெற்றுடைய
உலோகா தீத மொன்றேகாண்
ஞான நாட்டம் பெற்றுடையீர்
நகுபொற் கபாடந் திறமினோ. (15)
33.
ஐயங் கழிய மெய்யருளும்
ஐய னடியிற் செய்யன்பின்
மையங் கழிய நீர் ததும்ப
மலர்ந்த விழியீர் திறமினோ. (16)
வேறு
34. உடலு முறுபொருளு முயிரு முமதுபுகல்
உணர்மி னுணர்மினென வுருகவேழ்
கடலு மலையுமென நிலவு சுகசலதி
கனிவி னருளுமவர் திறமினோ. (17)
35. வளரும் விழைவுயர மனதி னிலைதொலைய
வனச விழியினுயிர் பருகியே
தளரு மளவினிலொ ரமுத மொழியுதவு
தகைமை பெருகுமவர் திறமினோ. (18)
36. கொடிய பிறவிநிலை குலைய வுலகின்வரு
குருசி லருளுததி குறுகியே
நெடிய விழியருவி சொரிய நிரதிசய
நிமல மணையுமவர் திறமினோ. (19)
வேறு
37. இப்பொருண் மெய்ப்பொருளே யென்று குறித்துலகோர்
எழுபிற விச்சுழலா திவையல தாயொளிரும்
அப்பொருண் மெய்ப்பொருளே யறிமி னெனப்பகரும்
அருள்வள ருந்தகையீ ரணிகத வந்திறமின். (20)
38. பிறப்பு மிறப்புமறப் பேதைமை விட்டகலப்
பேச வொணாநிலைமைப் பெற்றியி னுற்றதிலே
மறப்பு நினைப்புமற வல்வினை யோலமிட
மருவி விடாதுறைவீர் வளர்கத வந்திறமின். (21)
வேறு
39. இறையி னிலையிஃ தெமது நிலையிஃ
திருளு மலமுத லுறுபிணிக்
கறையி னிலையிஃ தெனவு மறிவுறு
கலைவ லவர்கடை திறமினோ. (22)
40. உலகி னினைவற வமரர் பெறலற
உருவ மதுகொடு மருவியே
அலகி னவமதை யறிய வுரைசெய
அவச முறுமவர் திறமினோ. (23)
41. கரும மறுமுறை குறுகு மிறைகழல்
கருது தொறும்விழி யுகுபுனல்
மரும முறவுடல் புளக மெழநிலை
வழுவி விழுமவர் திறமினோ. (24)
42. உலகி னிலைமையு மளவில் சமயமும்
உலைவில் வினைகளு முணரவவ்
வலகி னிலைமையு மொழிய மொழியுமொர்
அமுத மயில்பவர் திறமினோ. (25)
வேறு
43. மனநினை வறுமிட நினையவும்
வருமிரு வினைவலி மடியவும்
தனைநினை வறவது தழுவவும்
தலையளி பெறுமவர் திறமினோ. (26)
44. நிகரறு மிறையுரு வதுகொடு
நிலமிசை யுறுமுறை நினைதொறும்
புகரறு மருணெறி பகர்தொறும்
புளகித மெறிபவர் திறமினோ. (27)
45. அத்திர விறையுரு வதுபரித்
தவனியில் வகுமொரு பவனிபோய்ச்
சித்திர நிலைமையி லும்மையும்
தெருவினி லுய்த்தவர் திறமினோ. (28)
வேறு
46. இம்மை யேகருதி வெம்மை யேபுரியும்
எம்ம னோருமரு ளெய்தவே
செம்மை யேயருளி யெம்மை யாளிறைவர்
செல்வ மேவுமவர் திறமினோ. (29)
47. நல்ல தென்றிடினு நம்மை யாளுடைய
நாய கன்றிறமி நானிலம்
அல்ல தென்றிடினு மல்ல தொன்றுகன
வதினு மேவலர்க டிறமினோ. (30)
48. அலைவி லாதபொரு ளதனொ டொன்றியது
இதுவெ னாமையறி யாதறிந்
துலைவி லாதவமு துண்டு பண்டைநினை
வொருவு வீர்கடைக டிறமினோ. (31)
வேறு
49. கருகும்படி நயனங்கொடு களவின்னும துயிரைப்
பருகும்பொழு துருகும்படி படர்வீர்கடை திறமின். (32)
வேறு
50. மருவு மநாதிப் பிறந்தையை
வஞ்சித்து நீங்கி மனாதியும்
பொருவு மிலானொடு கூடியே
பொலிவுறு வீர்கடை திறமினோ. (33)
51. ஆவது மழிவது மடைவதும்
அகல்வது மிகல்வது மருள்வதும்
போவதும் வருவது மின்றிய
பொருளை மணந்தவர் திறமினோ. (34)
52. ஈருட லோருட லாகவே
இறுக வணைத்தினி தின்புறும்
காருட லோதி மடந்தையீர்
கனக நெடுங்கடை திறமினோ. (35)
53. கூடு நெடுங்கன வதனிலே
குற்ற மிலானுட னுற்றிடா
தூடு மனந்தனொ டூடுவீர்
உமது நெடுங்கடை திறமினோ. (36)
54. ஊரு மலாலுயர் தேயமும்
உறுகுல மும்முற வின்முறை
யாரு மிலானொடு கூடியே
இன்புறு வீர்கடை திறமினோ. (37)
வேறு
55. ஊரும் படைத்ததொரு மானிடப் படிவமும்
ஒன்றியே வாழுநா டன்றியே யுயர்திருப்
பேரும் படைத்தசிவ ஞானதே சிகனருட்
பெருமைபா டக்கபா டந்திறந் திடுமினோ. (38)
வேறு
56. செறியு மலவிருள் பறிய வருசிவ
ஞான தேசிக தினகரன்
அறியு மறிவுற வருளு நெறியினை
அறைய வணிகடை திறமினோ. (39)
வேறு
57. தேசம் பரித்த சிவஞான தேசி கன்பார் வந்தெமது
பாசம் பறித்த திறம்பாடப் பைம்பொற் கபாடந் திறமினோ. (40)
58. தெரிக்குஞ் சீர்த்திச் சிவஞான தேசி கன்றாள் சிரத்தணிந்து
பரிக்கும் பாச வதைப்பரணி பாடக் கபாடந் திறமினோ. (41)
------------
குறிப்புரை
18. அருவினர் ஆகியும் அலராம்.
பி - ம். ‘அருவனர்’
19. அலையும் ஈனமும் மானமும் ; அலைகளும் மீனமும் (மீன்களும்) அளவும் என்பது மற்றொரு பொருள். நாவாய்க்கும் - நாவையுடைய வாய்க்கும், கப்பலுக்கும். “அலை தீர்வதொர் துறைநாடியர் திறமின்” அஞ்ஞவதைப் பரணி.
20. அங்க நாடியர் - சரீரத்தை ஆராய்பவர்கள். மறை - மந்திரம். அகதம் நாடியர் - அழிவற்றதை நாடுபவர்கள். கடை - வாயில்.
இதில் அங்க நாடு வங்க நாடு மகத நாடு என்னும் நாட்டின் பெயர்கள் தொனிக்கின்றன.
பி - ம். ‘ஏழ்கடலப்புறம்’ ‘உளமெலோமகத’
21. அல்லாதவற்றை நாடுபவர்கள் ஆறு பகைகளை வளர்ப்பவர்களே. ஆறு பகைகள் காமம் முதலியன. இகல் - முரணுகின்ற. சிந்து - கடல். பேரருட் சிந்துவென்றது குருவை. இதில் கொல்லம், சிந்து என்னும் நாடுகளின் பெயர்கள் தொனிக்கின்றன.
22. நஞ்சோன் - நஞ்சைக் கண்டத்தில் உடைய சிவபெருமானை. அகம் நாடியர் - உள்ளத்தில் நாடுபவர்கள். கடிய - வன்மையையுடைய. புலம்தாழ் - புலன்களிற் சென்று தங்கும். பொறியாயின நஞ்சா அகம் நாடியர் - பொறிகளை விஷமாக நெஞ்சில் எண்ணுபவர்கள்.
சோனக நாடியர், சாவக நாடியர் என்பன தொனி.
23. அமலத்து அருமணம் ; அருமணநாடு என்பது தொனி ; நன்னூல், சூ. 272, மயிலை.
24. பல் நடம் நாடியர் - பலவகை நடனங்களை நாடுவார். சனனப் பாவையரா - சனனமாகிய கூத்தில் ஆடும் பாவையராக இருப்ப. கல் - கற்கும். நடம் - தாண்டவத்தை. கன்னட நாடு என்பது தொனி.
பி - ம். ‘பாவையராலருள்’
25. இன்றிய - இல்லாத ; நல்லூர்ப்புராணம், நைமிசப். 48, அக்கினி. 57. வரம் - மேன்மை.
பி - ம். ‘இருளுமன்றிய’
26. எரியின் எரியாது. அறையாது - வீசி அடியாது. “புனலி னமி ழாது ககன மிசை யூதை புகுத வசையாத பொருளதாய், அனலி னெரியாது படையி னழியாத வறிவை யறிவார்க டிறமினோ” அஞ்ஞவதைப்.
27. பணிகள் - தொழில்கள், ஆபரணங்கள்.
28. கலை - வித்தியாதத்துவம் ஏழனுள் ஒன்று. ஆடை ; “கலைகளை விட்டெறிவீர்” (அஞ்ஞவதைப்) ; “மெய்தழுவ வுங்கணிலை யுங்கலையும் வீழ்வுற விரும்பி யிறைமுன், கைதொழுது நும்மையு மிழந்துவிடு வீர்கடை திறந்திடுமினோ” மோகவதைப்பரணி.
இந்தத் தாழிசை ஒரு பிரதியில் இல்லை.
29. தாள் - பதம், முயற்சி. “முன் பிழந்த நாளை நினைந்து போத விரங்கு வீர்கடை திறமினோ” அஞ்ஞவதைப்.
30. விழித்துறங்கும் உபாயந்தெரிவீர் : “விழித்தே யுறங்கும் விளங்கி ழையீர்” (அஞ்ஞவதைப். ) ; “விழித்த கண்குரு டாத்திரி வீரரும் பலரால்” திருவிளை. 55 : 38.
31. மேல்தாழிசையின் கருத்தை விளக்கியவாறு.
32. ஊனக்கண்ணையுடைய உலகத்திற்கு அதீதமாகிய ஒருபொருளையே காணும்.
33. மை அங்கு அழிய ; மை - காம முதலிய குற்றங்கள் ; கண் மை யென்பது வேறு பொருள் ; “ஐய மொன்றுமற வாத கோனடியி னன்பொடொன்றியக மின்புற, மையழிந்திட மலர்ந்தி லங்குவிழி மல்கு வீர்கள்கடை திறமினோ” அஞ்ஞவதைப்.
34. சுக சலதி - இன்பக் கடல்.
35. விழியின் உயிர்பருகுதல் : “அளவு கண்டிட வரிய பங்கய நயனம் வந்தும தாவியைக், களவு கொண்டிட வுருகு கின்றவர் கனக நன்கடை திறமினோ” (அஞ்ஞவதைப்) ; “கண்ணாலுயி ருண்பீர்கடை திறமின்கடை திறமின்” மோகவதைப்.
36. விழியருவி : “கருகு கலியின்வலி தொலைய வுலகின்வரு கருணை மலையினருள் பரவியே, பெருகு மதிசயமொ டுருகி யருவிசொரி பெரிய விழி யினவர் திறமினோ” அஞ்ஞவதைப்.
பி - ம். ‘நிமல மளையும்’
39. கலை - நூல்.
41. மருமம் - மார்பு. புளகம் - மயிர் சிலிர்த்தல். “வளைதரு வினைகழல் வுறவரு ளிறையடி மருவுதொ றுளனுடல் புளகம தெறியவும் மலர்தரு குவளைக ளருவிகள் சொரியவும்” அஞ்ஞவதைப்.
பி - ம். ‘கருமமுறுமுறை’
43. மனம் நினைவறும் இடம் நினைதல் : “மனனு நினைவரு மிடமது நினையவும்” அஞ்ஞவதைப்.
45. அத்திர இறை உருவது பரித்து - நிலையற்ற தங்குதலையுடைய உருவத்தைத் தாங்கி.
பி - ம். ‘அத்திறவிறை’ ‘தெரிவினி லுற்றவர்’
50. அநாதிப் பிறந்தை - அநாதிகாலமாக வரும் பிறவி. மனாதியும் பொருவும் இலான் - மனம் முதலிய காரணங்களும் ஒப்பும் இல்லாதவன்.
52. கார் உடல் ஓதி - கரிய ஆணவத்தைப் பகைக்கும் மெய்ஞ்ஞானம் ; மேகத்தைப் பகைக்கும் கூந்தல். “அழுந்த வாகம திரண்டு மொன்றுற வழிவி லானொடு தழுவி” (அஞ்ஞவதைப்) ; “ஈருருவை யோருருவா யிசைக் கின்ற தெனதம்பே” (372) என்பர் பின்.
53. மனம் தன்னொடு - மனத்தோடு.
55. வாழு நாடன்றியே உயர் - வாழும் நாட்டில் மட்டுமன்றி எங்கும் ஓங்குகின்ற.
57. தேசம் - ஒளி.
பி - ம். ‘நேசம் பரித்த சிவஞான நிகழ்தேசிகன்’
58. பரிக்கும் - தாங்கிய.
-----------
3. காடு பாடியது
59. நெடிய கானமு நிழலென வழல்வது
நெறியு ளத்து நினையினு மெரிவது
கொடிய கானமொன் றுளதத னிலையினிக்
கூறு கின்றது தேறுக தேறுக. (1)
வேறு
60. அடுவிலங் கல்லவ ரறிஞரே யாதலால்
அவரலா தவர்விலங் காதலா லவைகள்வாழ்
கடுநிலஞ் சுடுமழற் கதுவவெந் தெரிதவழ்
கதிமயங் கியநெடுங் கவலைகூர் கானமே. (2)
61. அன்னவவ் வடவியின் கொடுமையை யளவிடா
யாவரே கூறுவார் தேவரே யாயினும்
துன்னவவ் வடவிதா னெளியதோ வடவையச்
சூடுபட் டல்லவோ தொடுகடற் படிவதே. (3)
வேறு
62. தணிகிலா வருகர்தம் பிண்டியுந் தேரர்தம்
தழைகுலா மரசுமைந் தருவுமே பொருவுமே
அணுகிலா நீளிடை யடையவுஞ் சோலையாய்
அடையவே யடையவே யழலுமவ் வடவியே. (4)
63. கனவினு மருளிலா நொதுமலா ரருளுழிக்
காணினும் வேலியாய்க் கடிவன முடிவன
வினவினுங் கடியசொல் வெம்பணை வீசியே
வெகுளிமுட் சொரிகரு வேல்பல மிடையுமே. (5)
64. வன்கலா வதுகடுங் கயவர்தம் மனமதே
மரமுமற் றவர்கணே வளரும்வல் லழலவர்
நன்கலா வுரைகளே சீறுசூ றாவளி
நன்றிலா வவர்புரி நயமில்புன் றொழில்களே. (6)
வேறு
65. ஒருக்காலுங் கரையாத வுளமல்லாற் றிரைபொருநீர்ப்
பெருக்காலுங் கரைகின்ற பெருங்கல்லோ கருங்கல்லே. (7)
66. சலங்கிளருங் கொடுங்கயவர் தறுகண்ணே யவையன்றி
நலங்கிளரும் படிக்குதவு நன்மரமோ புன்மரமே. (8)
67. முருக்குகனன் மூர்க்கர்கொடு மொழியேமற் றுடலினைய
உருக்குகன லதுபோல வுயிரினையுஞ் சுடவற்றோ. (9)
68. சுழல்சூறை வளிநீசர் தொழிலேமற் றோரமயத்
துழல்சூறை வளியதுபோ லுலகுலையச் செயவற்றோ. (10)
வேறு
69. நன்கா டதனைச் சுடுகா டெனவே
நவில்வீ ரறிவின் னடைகூர் பிணவெம
புன்கா டதனைச் சுடுகா டெனவே
புதல்வீர் புநிதர் புகுதா மையினே. (11)
70. அறியுந் நெறியா லறியா வறநூல்
அறியும் மறிவோ ரறிவா னறையின்
அறியுந் நெறியா லறியா நரர்வாழ்
அவணே சுடுகா டழலும் மவையே. (12)
71. பொய்ந்நீ ரதெனத் தெளியா தணுகிப்
புணரா சையெனும் பொறிமா னுகள
மெய்ந்நீ ரதெனச் செலும்வாழ் வெனுமவ்
வெண்டே ரடவி வெளியெங் கணுமே. (13)
வேறு
72. கவர்த்த நெறியின கரக்கும் விடரின
கறுத்த புறவின மிறுத்தவே
உவர்த்த பயனின பொடித்த கிளையின
உருத்த மறநிலை பெருத்தவே. (14)
வேறு
73. ஓடியோடி வீடுதோறு முண்ணவுண்ண வெண்ணியே
நாடிநாடி வாடுகின்ற ஞமலிகோடி கோடியே. (15)
74. ஒடுங்கவே படித்தநூ லுலம்பியே விதண்டையால்
நடுங்கவே குரைத்துநின்ற ஞமலிகோடி கோடியே. (16)
75. செறிந்தவூ ழெனாதுசீறு சிறியரே சுணங்கன்மற்
றெறிந்தகல்லை விட்டெறிந்த விளையரைச் சினப்பதே. (17)
வேறு
76. வெஃகு கின்றவுயி ரென்ன முன்னணுகி
மெல்ல மெல்லவதை விட்டுவிட்
டஃகு கின்றதொடர் பற்றி றும்பலர்
அரங்க மல்கிய சுரங்களே. (18)
வேறு
77. செறிவற் றவர்தஞ் செறிவைச் சினவிச்
சிறுமைத் தொடர்பைத் தினமுற் றருளும்
அறிவற் றவர்தந் திருமற் றதுவேம்
அழலுற் றணைய நிழலற் றதுவே. (19)
வேறு
78. முழுதி யற்றுவா ரனைய ராயநன்
முனிவர் பக்கலு முரண்மி குத்துவெம்
பழுதி யற்றுவா ரிசைக ளேநெடும்
பார்ப றிந்துநீள் வேர்ப றிந்தவே. (20)
வேறு
79. எரியு மெரிபெயினு மிகலி யுடன்முழுதும்
இரிய வரிபொழுது மிசையவே
அரியு மரியுமெனு மபய முடையவரும்
அழல வழல்வதுமவ் வடவியே. (21)
வேறு
80. பிளவற்ற பேரருளைப் பிரியா தொன்றிப்
பேரானந் தப்பரவை பெரிது மூழ்கும்
அளவற்ற நீராரு மனல வெம்பி
அழல்வீசுங் காந்தார மதுவே யம்மா. (22)
------
81. இந்திரனீ ழலின்வருண னிருப்ப மற்றும்
இன்னமிர்த மிருப்பவுமிங் கெய்த வஞ்சி
ஐந்தருநீ ழலினொதுங்கி யந்நா டாள
அழல்வீசுங் காந்தார மதுவே யம்மா. (23)
82. பணநாக வட்டவணைப் பாயன் மேவிப்
பங்கயக்க ணெடுமாலும் பதைத்து நாரா
யணனாக வெந்துவெந்து கொதித்து வெம்பி
அழல்வீசுங் காந்தார மதுவே யம்மா. (24)
83. தண்ணந்தா மரைப்பொகுட்டுத் தவிசி னேறித்
தரணியிது முழுதளித்த தாதை வைகும்
வண்ணந்தா னிவ்வனத்தி னழலா லென்றால்
மற்றினியே ததன்கொடுமை வகுப்ப தம்மா. (25)
84. விண்ணவர்க ளமரரென வறிந்துந் தம்மை
வெய்யவிக்கா னகமஞ்சி மீது செல்ல
மண்ணவர்க ளடிதோயா தாகு மென்றால்
மற்றினியே ததன்கொடுமை வகுப்ப தம்மா. (26)
85. பொன்னாடிக் கானகத்தி னனலால் வெம்பிப்
பொரிந்துபொரிந் துருகிவிழும் புதுமை யாகும்
எந்நாடு மறியவிழு முற்கை யென்றால்
இதன்மேலே ததன்கொடுமை யிசைப்ப தம்மா. (27)
----
குறிப்புரை
59. கானம் - பாலைநிலம். நினையினும் எரிவது : “நினையின்வே முள்ளமும்” கம்ப. தாடகைவதைப்.
பி - ம். ‘நெறிநிறைந்து’
60. அவைகளென்றது கல்லாதவர்களாகிய விலங்குகளை ; “விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல், கற்றாரோ டேனை யவர்” என்ற குறள் இங்கே அறிதற்குரியது. கதி - தேவகதி முதலியன, வழி. கானம் கடுநில மென முடிக்க.
62. பிண்டி - அசோகு. தேரர் - புத்தர். அடையவும் - முற்றவும். “அணிகொ ளும்பர் தருவுநே ரருகர் பிண்டி மரனுநேர், கணிக பங்க ரரசு நேர் கடிய கான வனலிலே” (அஞ்ஞவதைப். ) ; “தரையினின்ற வகையெனும் பர் தருவுமில்லை சுகதர்தம், அரசுமில்லை யுரைசெயந்த வனலிலெங்கு மழியுமே”, “அழியுமிந்த வனலினெந்த வுலகுமென்ற வருகர்தம், மொழியு மந்த வருகர்பிண்டி மரமுமில்லை முடிவிலே” மோகவதைப்.
பி - ம். ‘இவ்வடவியே’
----
63. நொதுமலார் - அயலார். வேலி - முள்வேலி. பணை - கிளை. கருவேல் - ஒரு மரம் ; “வாளொத்த முட்சரித்து வறிதே காய்க்கும் வன்பாகுங் கருவேலை வளர்க்குங் கானம்” அஞ்ஞவதைப்.
64. நன்கு அல்லா உரைகள் ; பாசவதைப். 66, 68 ; “மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்” (முத்தொள்ளாயிரம்) ; “கல்லுங் கயவோர் மனமேயவர்தங் கண்ணே மரமும் மவர்தண் மையறச், சொல்லும் முரையே சுடுதீ யிடர்சேர் சூறா வளிமற் றவர்தந் தொழிலே” (அஞ்ஞவதைப். ) ; “நெஞ்சங்கல்லாங், கண்ணிணையு மரமாந்தீ வினையி னேற்கே” திருவாசகம்.
66. சலம் - வஞ்சனை.
67. இனைய - வருந்த. அது போல - அந்தக் கொடுமொழிபோல ; “உயிரைச் சுடவல் லதுவெவ் வழலோ ஓரா விவர்தம் முரையன் றியுமே” அஞ்ஞவதைப்.
68. சூறைவளி தொழில் : பாசவதைப். 64. வற்றோ - வன்மையை யுடையதோ.
69. புகல்வீர் - சொல்வீராக. “செத்தபிண மிடுகாடு சுடுகா டென்று செப்புவர்க ளறியாதார் சிலர்தன் னெஞ்சத், தொத்ததுதா னுணராதுண்டுடுத்து வாழு முயிரோடும் பிணம்பயில்கா டொழிய விட்டே” அஞ்ஞவதைப்.
பி - ம். ‘பிணம்வேம்’ ‘புகலீர்’
70. அவணே - அவ்விடமே. அவை அழலும்.
பி - ம். ‘அறியாதனவாழ்’
71. “பேராசை மான்செல்லச் செல்லப் போகும் பேய்த்தேரே யெம் மருங்கும் பெருகுங் கானம்” அஞ்ஞவதைப்.
72. விடர் - வெடிப்பு. விட புருஷர்கள். புறவினம் - புறாக் கூட்டங்கள், புறம்பான இனம். மறம் - வேடச்சாதி, பாவம் ; சிலேடை. பொடித்த - உண்டான.
73. ஞமலி - நாய் ; “தருவர் தருவதில ரெனநினையு மனமொடே தமது தலைமைகெட வவரவர்கள் கடையிலே, ஒருவர் தருமுணவு கருதியுழல் பவையில்வே றுழலு ஞமலிகளு முளவுமல வுணரிலே” அஞ்ஞவதைப்.
74. உலம்பி - முழுங்கி. விதண்டை - ஒருவகை வாதம்.
75. அரங்க - துன்பப்பட.
பி - ம். ‘அரங்கண் மல்கிய’, ‘பலரங்கண் மல்கிய’
77. செறிவு அற்றவர் - ஏகாந்திகள். செறிவை - சம்பந்தத்தை.
பி - ம். ‘அதுவே யழலுற்ற’ ‘அனைய’
78. இசைகள் - புகழ்கள்.
79. அபயம் - அஞ்சாமை.
80. நீரார் - தன்மையையுடையவர், நீரையுடையவர். காந்தாரம் - காடு.
83. தாதை - பிரமதேவர். வண்ணம் - இயல்பு. ஏறி வைகும் வண்ணமென்க.
84. அமரர் - சாவாதவர். அவர்களுடைய அடி மண்ணைத்தோயாது.
85. பொன் நாடு இக்கானகத்தின். உற்கை - விண்வீழ் கொள்ளி.
---------
4. பேய்களைப் பாடியது
86. பஞ்ச வாயிலெனும் வஞ்ச யானைவழி
பஞ்சு போன்மெலிய நெஞ்சுபோய்
அஞ்சு வாரையட நஞ்சு போலுழலும்
அஞ்சு பூதகணம் விஞ்சுமே. (1)
87. தொல்லை யேதொடரு மல்ல லூழின்வழி
தொல்லை நீள்பிறவி புல்லவே
வல்லை போகலகை யெல்லை போகியன
வல்ல வாசிறிது சொல்லுவாம். (2)
வேறு
88. கொடியவே பிறவியெனக் குறிக்கின்ற வறிவற்று
முடியவே கெடுகின்ற மூடரே முழுப்பேய்கள். (3)
89. எக்காலங் களுமறியா விழுதையரே கழுதல்லால்
முக்காலங் களுமறிந்து மொழிவனவோ முழுப்பேய்கள். (4)
வேறு
90. ஒன்றென நின்றன சிலவே யுகள முரைப்பன சிலவே
அன்றென நின்றன சிலவே யாமென நின்றன சிலவே. (5)
91. உருவுரு வென்றன சிலவே யுபய முரைப்பன சிலவே
அருவரு வென்றன சிலவே யகணித மென்றன சிலவே. (6)
92. இலதில தென்றன சிலவே யிருமை யுரைப்பன சிலவே
அலதல தென்றன சிலவே யருவினை யென்றன சிலவே. (7)
93. கூடியசிகை யினசிலவே குறுகியபறி யினசிலவே
மூடியசடை யினசிலவே முண்டிதமா வனசிலவே. (8)
94. கற்கலைதற் றுவசிலவே கந்தைபரிப் பனசிலவே
வற்கலைதற் றுவசிலவே வறிதினியங் குவசிலவே. (9)
95. கீளுடைசுற் றுவசிலவே கிளர்துவர்நீ வியசிலவே
கோளுடைசுற் றுவசிலவே கோவணவா டையசிலவே. (10)
96. வேத்திரக்கை யினசிலவே விண்டுபரிப் பனசிலவே
பாத்திரக்கை யினசிலவே பாணிவிரிப் பனசிலவே. (11)
வேறு
97. பலகற்றி யாவினையும் விலகுற்ற மூதறிஞர்
பயில்வுற்ற பேரவையி னோடியே
சிலகற்றி யாவரொடு மலகற்ற நூலறிவு
செவிமுட்ட வோதுவன கோடியே. (12)
98. அறிவற்ற நூல்பழகி யதனுக்கு ளேமுழுகி
அமைவற்ற பேய்களுட னூடியே
செறிவற்றி யாவினையு மளவிட்ட தாகமிகு
சிலுகிட்டு லாவுவன கோடியே. (13)
வேறு
99. பதறித் தாநிதி தேடுவ பலகற் றாவன நாடுவ
பணியற் றாருட னூடுவ பழியைத் தானனி சூடுவ
கதறத் தாமிக வோடுவ கடையிற் போயிசை பாடுவ
கவலைச் சாகர மாடுவ கருவிப் பேய்பல கோடியே. (14)
100. சிலுகிட் டேவிழ மோதுவ தெருள்பற் றாதன வோதுவ
தெருவிற் போய்நட மாடுவ திசைகெட் டேதடு மாறுவ
கலகத் தேமன மேவுவ கவடுற் றேயுரை பாவுவ
கலைவிற் றேயுடன் மூடுவ கருவிப் பேய்பல கோடியே. (15)
101. தளைபட் டேமனை வாழ்விலே தளர்வுற் றீரென வேகியே
தவமெய்ப் பாடுகள் பேசியே தடையற் றேமலர் வாளியால்
துளைபட் டேயுடல் யாவுமே துருவிப் பாயலின் மேவியே
சுரதச் சாகர மூழ்கிவீழ் துறவிப் பேய்பல கோடியே. (16)
102. கணையொத் தேதம வேடமே கருதத் தான்வளை யாதுமா
கடுமைத் தாய்வினை யாவுமே கரையுற் றேமறை வாகியே
துணையொத் தேவளர் சூதையே துரியத் தானமெ னாமுனோர்
தொடர்புற் றேநனி தோயவீழ் துறவிப் பேய்பல கோடியே. (17)
வேறு
103. மனுவைத் தான்விழ வோதுவ மதிகெட் டேதலை மோதுவ
வசனத் தானிலை பேசுவ வரைவற் றேபிற வேசுவ
தனுவைத் தாமென நாடுவ சகமெய்ப் பாலென நீடுவ
தலைகெட் டேதடு மாறுவ சமயப் பேய்பல கோடியே. (18)
104. சாலத் தாமறி யாதன சாதித் தேயுல கோரவர்
தாமுற் றேவிழ வோதுவ தாழ்தற் கேசில போதனை
ஞாலத் தாரெதிர் வாருமி னாடத் தானினி யேதுள
நாவிற் காவன வார்கெனு ஞானப் பேய்பல கோடியே. (19)
வேறு
105. மாணத் தாமறி யாவெறு வாதத் தான்மன மாதியை
வாதித் தால்வரு மோகதி வாய்விட் டேயிவை யோதினம்
நாணத் தார்செலு நாணுடை நாரிக் காவன போதியும்
நாடிப் பூண்முலை தோய்கெனு ஞானப் பேய்பல கோடியே (20)
வேறு
106. வெள்ளைகொண்ட மனத்தினரை மருட்டி மெல்ல
வீட்டுலகங் காட்டுநர்போல் விரகாற் செம்பொன்
கொள்ளைகொண்ட தம்பசியை நீங்க வாங்கிக்
குருக்கொடுக்கும் பேயனந்த கோடி கோடி. (21)
107. உடையார்முன் னில்லார்போ லேக்கற் றுங்கற்
றுயர்ந்திலவா யெவற்றினையு முணர்ந்த வேபோற்
கடையாகித் தலைகெட்டுத் தடுமா றுற்றுக்
கண்ணிழந்துந் தமைமதிக்குங் கழுத நேகம். (22)
வேறு
108. சுளியு மாறு பயனில கேட்பன
தோற்ற மாற்றுஞ் சுகானந்த வாரியைத்
தெளியு மாறு தெளிவிக்கு நன்னெறி
செப்புங் காலைச் செவிடுக ளாவன. (23)
109. நண்பு பெற்ற குடும்பபா ரத்தினால்
நாளிற் றூர்ந்த நயனில் பழந்துளை
பண்பு பெற்றுயர் கேள்விச் சலாகையாற்
பரிந்து தோட்கப் படாத செவியின. (24)
110. பன்ன வன்னிய மாந்திறங் கூறவாய்
பாழு டம்பெலா மாகிப் படிப்பன
முன்ன வன்சர ணாம்புயம் போற்றியே
மொழிய மற்றழி மூங்கைக ளாவன. (25)
111. வெல்லொ ணாதன வெம்பசி வீழ்த்தவே
மெலிந்து சொல்லற வீழ்ந்துடல் சோர்வன
சொல்லொ ணாதன பாவகங் காட்டவே
துடிது டித்துத்தந் தொல்வாய் பிளப்பன. (26)
112. நிலையி லாதன வாய்நிலை பெற்றபோல்
நின்ற வேதெரிக் கின்ற விழியின
தொலைவி லாத வதீத முணர்த்திடிற்
றொடர்ந்து பார்க்கத் துறுங்குரு டாவன. (27)
113. பண்டு நாளையு மின்று மனைவர்க்கும்
பாடி வீடு பயில்புறங் காடெனக்
கண்டு நீலவெங் காச மறைத்திடக்
காண்கி லாதுளே வீழ்ந்தவன் கண்ணின. (28)
114. முற்ற முற்றவுந் தம்புக ழேசொல
முகடு முட்ட வளர்ந்து முரிப்பன
குற்ற மற்றவ ருற்றவண் பெற்றிகள்
கூறுங் காலைக் குறள்களே யாவன. (29)
115. நிறைவி லாத குறைவினை யெய்தியே
நெற்றி யேற நிமிர்ந்திறு மாப்பன
குறைவி லாத நிறைவினை யெய்தியே
குலவ வென்னின்வெங் கூன்களே யாவன. (30)
116. பறையி லார்புன் படிறர் பவனிபோய்ப்
பார்க்க வோடிப் படரும் பதத்தின
கறையி லாருருத் தாங்கி யுலாவுதல்
காண்டல் வேண்டுழிக் கான்முட மாவன. (31)
117. இம்மை யன்றி மறுமையு நண்ணுமா
றியம்பு நூல்கற் றினிதியங் காமலே
செம்மை யன்றி விதண்டைக ளேபல
செப்பு நூல்கற்றுத் தெற்றி நடப்பன. (32)
118. கொல்லுங் கூற்றம் வருஞான்று காறுந்தம்
கொடிய கும்பிக் குழிக்கிரை தேடியே
கல்லுங் கானுங் கடலு மலைகளும்
கடந்து தேய்ந்த கடியவெங் காலின. (33)
119. அரிய நீந்தி யகந்தொறுஞ் சென்றுசென்
றைய மேற்றுணக் கையிரண் டுற்றன
துரிய நீந்திச் சுகானந்த வீடுபோய்ச்
சுதையெ டுத்துணச் சொத்திக ளாவன. (34)
120. வம்பை யேயுளங் கொண்டுல கத்தவர்
மருளு மாறு குருடு துழாவியே
கம்பை யேடு கயிறு கவளிகைக்
காட்சி காட்டுமோர் பொத்தகக் கையின. (35)
121. சிவனி லாத வுருவ மெடுத்தமை
தேர்ந்து பாரந் திருவடி வைத்தில
சமனி லாத விருவினைக் காவடி
தாங்கி நாளுந் தழும்புறு தோளின. (36)
122. ஓரி மைக்கு ளழிந்திடு மென்பதை
உன்ன லன்றி யுலைத்துலைந் தேதினம்
பாரி மக்க ளெனுங்குடும் பச்சுமை
பரித்துப் பங்கி பறிந்த தலையின. (37)
123. தேற்ற மென்கின்ற தொன்றுமி லாமையாற்
சினந்தி யாரையுஞ் சீறிச் சுடுங்கொடு
மாற்ற மென்கின்ற வல்லழல் புல்லியே
வளர நாளும் வறண்டிடு நாவின. (38)
124. வழியி லாதவர் சொல்லிய சொல்லற
வகுத்த வான்கரும் பெள்ளிமெய்ஞ் ஞானநல்
விழியி லாதவர் சொல்லிய சொல்லெனும்
வேம்பை நச்சி விரும்பிக் கடிப்பன. (39)
125. சோறுண் டுண்ணவங் கென்னி னவர்களைச்
சுற்றி யுற்றவர் போலத் தொடர்வன
பேறுண் டென்னினுஞ் சோறில்லை யாய்விடிற்
பிரிந்து பாரா பிறகிட்டு நிற்பன. (40)
126. வாய்க்கு மோர்வெறுங் காடியே தாயினும்
வாய்க்கு மாயின் வழுதுணை கல்லிலே
காய்க்கு மோவெனக் கொம்புதோ றாயிரங்
காய்க்கு மேயெனக் கட்டுரை செய்வன. (41)
127. பெற்றி யுற்ற சுகானந்த போனகம்
பெற்றி ருந்தும் பிரிந்தே விடுப்பன
பற்றி யுற்று வெறும்புற்கை யாயினும்
பாடி யாடித்தம் பாழ்வாய் மடுப்பன. (42)
128. வைய மெங்கு நொடி யொன்றிற் சுற்றியே
வயிறு சாணும் வளர்த்தற் பொருட்டுலைந்
தைய மெங்கு மெடுத்துண் டவாவெனும்
அம்பு ராசி யழுந்திக் கிடப்பன. (43)
129. வான முற்றும் வயிறா விலாவிற
வாரி வாரித்தம் வன்பில வாய்திறந்
தூன மற்ற வுயர்கதி யீதென
உண்டுந் தூரா வுதரக் குழியின. (44)
130. கடிய வாகி நகையு முவகையும்
காய்ந்து கொல்லுங் கடும்பகை யாயடும்
கொடிய வாகிய கோபா னலத்தினாற்
கொதித்த ழன்று கொளுந்து முகத்தின. (45)
வேறு
131. உண்ண விட்டவகை தேடி வீடுதொறும்
ஓடு மேயுருகி வாடுமே
நண்ண விருநிதிகள் கோடி நாடுதொறும்
நாடு மேமயலி னீடுமே. (46)
132. ஐந்து புலன்வழி யேகி யேநிறைய
ஆரு மேநிலைமை சோருமே
சந்து பலமுறை போகி மாயரதம்
ஊருமே கசடு சேருமே. (47)
133. கள்ள மாகவுல கெண்ணு மாறுசடை
கட்டு மேமரண மட்டுமே
வெள்ள மாகவுல கெண்ணு மாறுபடை
வெட்டுமே யரண முட்டுமே. (48)
134. ஊறி யேதுவர் பிடித்த வன்கலை
உடுக்கு மேயுடை விடுக்குமே
தூறி யேமுன் முடித்த சண்டைகள்
தொடுக்கு மேபல வடுக்குமே. (49)
135. நல்ல தென்றுலகு சொல்ல வேமிக
நடிக்கு மேசொல வடிக்குமே
வல்ல தென்றுலகு சொல்ல வேமறை
வடிக்கு மேதலை வெடிக்குமே. (50)
136. கடிய குரன்ஞமலி யென்ன வந்தெதிர்
கடிக்கு மேபல படிக்குமே
கொடிய கொலையுழுவை யென்ன வந்துயிர்
குடிக்கு மேயுரு மிடிக்குமே. (51)
137. சோறு கண்டபொழு தேயெ முந்துதுடி
துடிக்கு மேமன மடிக்குமே
பேறு கண்டபொழு தேயெ ழுந்துமடி
பிடிக்கு மேசுரை குடிக்குமே. (52)
138. பந்த மீதுவிது முத்தி யென்றுசில
பகுக்கு மேவினை தொகுக்குமே
மந்த மீதுவிது தீவ்ர மென்றுசில
வகுக்கு மேநய முகுக்குமே. (53)
உவமை
வேறு
139. மனனாலு மொழியாலு மறியா வொன்றை
வாக்காலே யறிவிக்கு மாட்சி யம்மா
புனலாலே யனல்சுடுதல் போலும் போலும்
போலாவேற் புனலிலெழுங் கனலே போலும். (54)
140. ஏகாச மிட்டிறுமாந் திருந்து நல்வீ
டினிதளிப்ப மெமக்குவீ டியற்று கென்றல்
ஆகாச கமனமுனக் குணர்த்த விவ்வாற்
றக்கரைக்கே செலுத்துகென வறைதல் போலும். (55)
141. அமலமுயிர்க் குயிராகி யகத்தில் வைக
அதையாயுஞ் திறமறியா தலைந்த லைந்து
விமலமதை வெள்ளிடையே நாடுந் தன்மை
விளக்கிருக்கத் தீத்தேடும் விரகு போலும். (56)
142. வினை தொலைக்குந் திறந்தெரியா தருத்தி முற்றும்
விளித்துப்பின் பொன்னெயிலின் மேவ நின்ற
புனைமயிற்பீ லிச்சமண்பேய் கடனீர் வற்றப்
புகுந்துமீ னருந்தநின்ற பூஞை போலும். (57)
143. வரல்புக்குச் செறிதலற்ற பொருளைத் தத்தம்
மதியளவால் வகுத்தியம்பல் மத்த யானை
உரலொக்குஞ் சுளகுபெண்ணை மார்ச்ச னைக்கோல்
உலக்கையொக்கு மெனக்குருடுற்றுரைத்தல் போலும். (58)
144. விமலவுரு வெடுத்தெய்தி யுணர்த்துந் தன்மை
விரகினொன்றுக் கொன்றிகலி விதண்டை சாதித்
தமலமது விதுவென்று தெரியக் கூறல்
அந்தகருக் கந்தர்நெறி யறைதல் போலும். (59)
145. குருமுகத்தா லன்றியுயர் ஞான நூறாம்
கொண்டகொண்ட வளவையினாற் குறித்து நோக்கி
ஒருவர்முக மொருவர்பார்த் தியம்பா நிற்றல்
ஊமைகளுக் கூமைமொழி யுரைத்தல் போலும். (60)
146. முன்னைவினை யாலன்றிப் பயன்க ளிம்மை
முயற்சியா லாகுமென மொழியும் பேய்கள்
உன்னின்மலர் வான்வருமென் றுரைக்கும் பேய்கள்
உளவாயி னவற்றினையே யொக்கு மொக்கும். (61)
-----------
குறிப்புரை
86. பஞ்சவாயில் - ஐம்பொறிவாயில். யானை யென்றது புலன்களை ; “உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்பிற்கோர் வித்து” (குறள்) ; “ஐம்புலமாந் தறுகண்மை யானையதி னானைகள்” (277) என்பர் பின்.
87. எல்லை போகியன - அளவு கடந்தன.
90. யுகளம் - இரண்டு. “ஒன்றென்று நின்றசில பலவென்று நின்ற சில வுபயத்து நின்றசிலபேய், அன்றென்று நின்றதனை யாமென்று சொல்லி யுட னலகிட்டு விட்டசிலபேய்” அஞ்ஞவதைப்.
91. அகணிதம் - கணக்கற்றது.
93. பறி - தலையைப் பறித்தல் ; “தலைபறியே சமயங்க ளென்று தத்தம், தலைபறித்துச் சிலசமண்பேய் சாற்றல் போலும்” அஞ்ஞவதைப்.
“தண்டைப் பிடித்தசில சிகையைத் தரித்தசில சடையைப் பரித்த சிலவே, முண்டித்து விட்டசில முடியைப் பறித்தசில முசுவிற் பொறித்தசில பேய்” அஞ்ஞவதைப்.
94. கற்கலை - காவியுடை. தற்றுவ - இறுக உடுப்பன ; குறள், 1023. பரிப்பன - தாங்குவன. வற்கலை - மரவுரி.
பி - ம். ‘தத்துவ’
95. கீளுடை - கீளோடு கூடிய கோவணம் ; (திருவிடை. ழம். 7. ) துவர் நீவிய - துவரில் தோய்த்த ஆடையை உடையன.
பி - ம். ‘நீடிய சிலவே’
96. வேத்திரம் - பிரம்பு. விண்டு - மூங்கில். பரணி - கை.
97. பி - ம். ‘கற்றுமாவினையும்’
98. சிலுகு - சண்டை ; 100 ; “அலைகெட்டி ராதுபல தலைகெட்ட நூல் பழகி யதுமுக்ய மாகமிகவே, கலைகற்ற பேய்களொடு சிலுகிட்டு லாவுவன கரையற்ற பேய்களுளவே” அஞ்ஞவதைப்.
99. கடை - வாசல். கவலைச் சாகரம் : “கவலைச் சாகர நீச்சுக்குளே” (திருப்புகழ்) ; “கவலைக் காகர மாவன கடைகட் கேநட மாடுவ, கலைவிற் றேயுண வாவன கருவிப் பேய்பல கோடியே” அஞ்ஞவதைப்.
பி - ம். ‘பலதெற்றாவன’
100. கவடு - கபடு, வஞ்சனை.
101. தவமெய்ப்பாடுகள் - தவத்திற்குரிய உண்மைச் சொற்கள் ; பாடு - சொல்; “செய்யுமென் பாட்டில்” (நன். சூ. 340) ; தவத்தின் அனுபவங்களுமாம்.
பி - ம். ‘தளர்வுற்றேமென’
103. மனு - மந்திரம். “தமைமெய்ப் பாலுண ராதன தனுவைத் தாமென நாடுவ” அஞ்ஞவதைப்.
106. விரகால் - தந்திரத்தால். “கவலையுற்ற தம்பசியைத் தணிப்ப வேறோர் கதியின்மை யானறந்தாங் காட்டு வார்போற், குவலயத்தோர் பொருள்விரகால் வாங்கிக் கொண்டு குருக்கொடுக்கும் பேய்களொரு கோடி கோடி” அஞ்ஞவதைப்.
107. “உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார், கடையரே கல்லா தவர்” குறள். 385.
108. “வறிய வான வுரைபல கேட்பன மாண்டு மீண்டினி வாரா வழியினைச், செறிய லான பொருள்க டெரிந்துரை செய்யு மெல்லை செவிடுகளாவன” அஞ்ஞவதைப்.
109. “கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற், றோட்கப் படாத செவி” (குறள். ) குடும்ப பாரம் : “குடும்பச் சுமை” 122.
110. பன்ன அன்னியம். உடம்பெலாம் வாயாகி. மூங்கைகள் - ஊமைகள். “வம்பு கூறி னுடம்பெ லாம்வெறும் வாய்க ளாகி வடித்தற்கு வல்லன, உம்பர் கோனடித் தாமரை போற்றிநின் றுரைக்க வென்னில்வெற் றூமைகளாவன” அஞ்ஞவதைப்.
111. பாவகம் : “பாவ கத்தொன்றி லாதமை காட்டவே படப டத்துத் தம் பாழ்வாய் திறப்பன” அஞ்ஞவதைப்.
112. “பொய்ம்மை யாகிமெய் போல விளங்கிய பொருடெ ரிக்கினற் புற்புதக் கண்ணின, மெய்ம்மையான பொருளை யுளத்தினின் மீண்டு பார்க்கின் வெறுங்குரு டாவன” அஞ்ஞவதைப்.
113. பாடி வீடு - தங்கும் இடம். புறங்காடு - சுடுகாடு. காசம் - கண்ணுக்கு வரும் ஒருவகை நோய்.
114. பி - ம். ‘உற்றவன் பெற்றி’, ‘குறட்களே யாவன’
116. பறை - புகழ் ; ஆகு பெயர் ; பறைதல் - சொல்லுதல், படிறர் - வஞ்சகர். படரும் - போகும்.
117. தெற்றி - பிணங்கி ; சீவக. 972.
118. வருஞான்று காறும் - வரும் காலம் வரையிலும். கும்பி - வயிறு ; வழக்கு ; “வயிறு சாணும் வளர்த்தற் பொருட்டந்த வானஞ் சென்று வரக்காலுடையன” அஞ்ஞவதைப்.
119. சுதை - அமுதம். சொத்திகள் - முடம்.
120. கம்பை - சுவடிகளின் மேலுள்ள பலகை ; கவளிகை - புத்தகம் இடும் உறை ; “கயிறுங் கம்பையு மேடும் பிறர்க்கொரு காட்சி போல்வரும் புத்தகக் கையின” அஞ்ஞவதைப்.
121. இலாத உருவம் சிவன் எடுத்தமை ; என்றது அவர் குரு மூர்த்தியாக எழுந்தருளியதை. சிவன், சமன் : வகரத்துக்கு மகரம் எதுகையாக வந்தது ; “சேவலங் கொடியோன் காப்ப, ஏம வைக லெய்தின்றா லுலகே” குறுந். கடவுள்.
122. பாரி - மனைவி. பங்கி - மயிர்.
பி - ம். ‘பாரின் மக்கள்’
123. தேற்றம் - தெளிவு. கொடு மாற்றம் - வன் சொல்.
124. பி - ம். ‘வெம்மை நச்சி’
125. பிறகிட்டு - பின் புறம் காட்டி ; “உண்ண லான விடந்தொறு மற்றவர்க் குற்ற நட்டவர் போலுற வாடுவ”, “பிண்ட மிட்டவர் தம்பிற கேஞஞ்ஞை பிஞ்ஞை யென்று பிதற்றித் திரிவன” அஞ்ஞவதைப்.
126. வழுதுணை - கத்தரிக்காய்.
127. புற்கை - கூழ்.
128. அம்பு ராசி - கடல். “வயிறு சாணும் வளர்த்தற் பொருட்டந்த வானஞ் சென்று வரக்கா லுடையன” அஞ்ஞவதைப்.
129. தூரா உதரக்குழி : “தூராக் குழியைத் தூர்த்து” (திருவிடை. ழம். 7); “தூராச் சலதி தூரினுந் தூராப், படுகுழி யுதரம்” மதுரை ழம் மணிக்கோவை, 19.
130. கோபானலம் - சினமாகிய தீ ; குறள், 304.
132. சந்து - தூது.
133. கள்ளமாகச் சடைகட்டு மென்க. எண்ணுமாறு - மதிக்கும்படி.
134. தூறி - ஏசி.
136. உழுவை - புலி.
137. சுரை - கள்.
138. பி - ம். ‘தீர மென்று’140. ஏகாசம் - போர்வை ; “ஆகாச மிட்ட கைகள், ஏகாச மிட்ட மெய்கள்” (அருணாசலகவி) ; பிரபு. மாயை கோலாகல. 70.
142. பொன்னெயில் - பொன்னெயில் வட்டம் ; சமவசரணமென இதனை ஜைனர் வழங்குவர்.
143. பெண்ணை - பனை. மார்ச்சனைக் கோல் - விளக்குமாறு. குருடு - குருடர்கள். “ஒளி தருநூ லோதிமுடி பொருளைக் காணா தோதியநூல் பலவுணர்ந்து பிணங்கும் பேய்கள், களிதரும்யா னையைக்குருடர் கையாற் கண்டு கண்டகண்ட வளவுகொடே கழறல் போலும்” அஞ்ஞவதைப்.
144. “அருவாய பரனுருவா யருள்வ தொன்றை யஞ்சாதே சில வளவை கொண்டு தாமும், குருவாகிச் சிலகுருப்பேய் கூறுந் தன்மை குருடர்க்குக் குருடர்நெறி கூறல் போலும்” அஞ்ஞவதைப்.
------
5. கோயிலைப் பாடியது
சோலை
147. சொற்ற பேய்கள்புகு மாறிலாத்
தூய யோகநில யந்தனில்
உற்று வாழிறைவி வாழ்தரும்
ஒளிகொள் சோலையுயர் சோலையே. (1)
148. பூமி நீரனலம் வாயுவான்
புல்கி லாதிரவி சோமரும்
தாமி லாதுபர நாதனார்
தாள்வி டாரினிதின் வாழ்வதே. (2)
வேறு
149. ஆறுகண் ஞானதி வாகர ராறுகள் வீறுத டாகமும்
ஆசைகு ரோதமிவாதிய வாறு மிலாதவ ரருளரோ
ஊறுகளாவன வேறில வோதவொ ணாதொளி யாகிய
ஊழிதொ றூழியுமேநுகர்யோகுயர் சாகையி னமுதமே. (3)
வேறு
150. உடலு மழலுற வுயிரு மழலுற
உறுதி கெடவரு மிறுதிநாட்
கடலு நிகரல வெனமு னிலவுமொர்
கருணை நிழறரு பொழிலதே. (4)
தேவி கோயில்
வேறு
151. கூறு வேதமுஞ் சூழு தற்கரும்
கோயி லுக்குநா னளவை கூறுகேன்
ஆறு நாலுதிக் குள்ள நீளமே
அம்மை கோயிலுக் களவை யாவதே. (5)
152. கமல யோனியே முதல தேவரும்
காணு தற்கருங் ககன மண்டலத்
தமலை கோயில்கண் டமைய வோதுமா
றரிய தாகுமெப் பெரிய ராலுமே. (6)
வேறு
153. உன்னு தோறு முணர்விற்கெட் டாதுயர்
உண்மை ஞான மொருங்குடன் சூழ்மதில்
மன்னு கோபுர மாமறை யுச்சியில்
மலிவுற் றோங்கு மகாவாக்கி யங்களே. (7)
154. அண்ட ரண்டநூ றாயிர கோடிகள்
அணுக்க ளாகிமற் றங்கங் குலவிட
மண்டு கின்ற பரம வியோமமே
மண்ட பம்முயர் மாளிகை சூளிகை. (8)
155. பசையி லிவ்விவ கார திசையிடைப்
பயிற்சி நீங்கியப் பார மார்த்திக
வசையி லத்திசை யுள்ளதன் வாய்மையை
வகுக்கொ ணாதது வாங்மனோ தீதமே. (9)
156. பந்தர் வானம் விதான மந்தாகினி
பத்தி வாயி லவித்தை கபாடமே
சந்த்ர சூரிய ருட்களஞ் சக்கரம்
தண்டு சூலஞ் சலியாத காவலே. (10)
கவிகை முதலியன
157. கடிதெ ழுந்தொருங் கெல்லாந்தன் னுட்படக்
கவித்து நின்ற கவிகை கருணையே
நெடிது சென்று திளைக்கும்வன் கேதனம்
நிரும லானந்த நிரதிச யம்மதே. (11)
வேறு
158. வாய்மை யாகுமே தீபம் யாவையும்
மற்றெ லாமணு குற்றி லாமிகச்
சேய்மை யாகுமே யிறைவி வாழ்தரும்
சினக ரத்தினுக் கனக ருய்க்கவே. (12)
பலிபீடம்
159. அளவி லாதன வண்ட கோடிநூ
றாயி ரங்களு மலகி லூழியும்
பிளவி லாதன வாகி நிற்பதோர்
பிண்ட மேபலி பீட மாவதே. (13)
சாதகர்கள் பலியிடுதல்
160. பிறவி யாரறத் துறவி யார்பலர்
பெரிய வன்பினிற் பரவி முன்புறும்
மறவி யார்நினை வாரு மேயற
வன்ப லீகொடுத் தின்பு றூவரே. (14)
வேறு
161. தம்முரு விறையுரு வணைதலின் மிகுபொறை
தருவது மிஃதல தொருபொரு ளிலதே
எம்முரு வுயிரென விம்முயி ரிதனையும்
இனிதயில் கெனவடி யிடுபலி பலவே. (15)
162.
உறுவது முடல்பெறு முயிருறு வினையுள
துணர்வுறி னுலகினி லொருபொருள் பிறிதிலம்
இறுமுறை யமுதுசெய் தனையெவை யெவைகளும்
இனிதயில் கெனும்பலி யிவைபல பலவே. (16)
ஆலமரம்
வேறு
163. அமலை யம்பிகை பயிரவி திரிபுரை
அபயை யந்தரி ம்ருகமத பரிமளை
அருண மங்கலை யருள்வள ரயில்விழி
அநகை சங்கரி யகிலமு முதவிய
விமலை சுந்தரி யடியவர் துயர்கெட
விருது கொண்டரு ளுமைபரை யுறைதரு
விளைவு தந்ததொர் வடமுள ததனிலை
வினவி னண்டரு மறிவுற வரியதே. (17)
164. அகில வண்டமும் வயினொரு சிறுபுரை
அடைய வுண்டுபி னளவறு புவனமும்
அடியி லொன்றினி லமைவர நமையருள்
அயனை யுந்தியின் மலர்மிசை யருளிய
முகில்க ருங்கட லறிதுயில் கொளுநெறி
முறை ப யின்றது மதில்வரு மொருசினை
முதிர்வின் மென்றளிர் நுனியினு ணுனியெனின்
மொழிவ தெங்ஙன மதன்வளர் பணையையே. (18)
165. அலகி லண்டமு மதினொரு சிறுவிதை
அளவு கண்டிட வரியது வெனினதன்
அளித ருங்கனி யளவையை யுலகினில்
அறிய நின்றவ ரெவரதை விடவதின்
உலைவி றண்சினை பொறிவிரி பணகண
உரகர் தம்பதி யெழுமையு முலவுல
துலக மெங்கணு முருவின ததன்விழு
துரையி றந்தது முணர்வினி லுணர்வதே. (19)
வேறு
166. வசையின் மூவ ரதன்மிசை மன்னு மூச லாடியே
விசையி னொன்றி னின்னமு மீள்வ ரல்லர் போவரே. (20)
167. மாய்வி லாத வருளினான் மாற்றி னன்றி வல்விசை
ஓய்வி லாத வூசன்மூவ ரூச லூச லல்லவே. (21)
வேறு
168. வீழோட்டி மேனோக்கி மென்கவடு திசையோட்டிக்
கீழோட்டி மலர்ந்தசிகை கிளர்வடமற் றவ்வடமால். (22)
169.ஆசையெனுஞ் சிறகுவிரித் தைம்புலமாங் கொடுங்கண்ணிப்
பாசவலைப் பறந்துவிழாப் பறவையதிற் படிவனவால். (23)
170. தண்ணருளே திருவுருவாய்த் தாயாய்வந் தருள்செய்த
அண்ணறிரு மேனியவ்வா லறிந்தவா றறைகுதுமால். (24)
---------
குறிப்புரை
147. சொற்ற - முன் சொன்ன. நிலயம் - கோயில். “போகாத துயர்மேவு பொல்லாத விப்பேய்கள் புகுமாறிலா, யோகால யத்துள் ளிருப்பா டிருச்சோலை யுட்சோலையே” அஞ்ஞவதைப்.
148. அனலம் - தீ. நாதனது தாளை விடாதவர். “ஆகாச நீர்பூமி யனல்கா லிரவிசோம ரவியாதுமூ, டேகாச தரநாத னடியார்கள் பயில்வார்க ளினிதாகவே” அஞ்ஞவதைப்.
149. ஆறு : ஆசை, குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பன.
151. “ஆதி நாலுமா மறைகள் சூழ்வதற் கரிய கோயிலுக் களவு கூறவோ, ஓது நாலிரண் டுடனிரண்டுதிக் குண்டமேனியக் கோயிலுள்ளதே” அஞ்ஞவதைப்.
152. கமலயோனி - பிரமதேவன்.
154. சூளிகை - உச்சியிலுள்ள மண்டபம்.
155. பசை - அன்பு. அத்திசையுள் அதன். வாங்மனோதீதம் - வாக்கிற்கும் மனத்திற்கும் அதீதமானது.
156. பி - ம். ‘பரந்த வானம்’
157. கேதனம் - கொடி.
158. வாய்மை தீபம் : “சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு” குறள்.
159. “அண்ட கோடிநூ றாயி ரங்களோர், பிண்ட மாவிடும் பெரிய பீடமே” அஞ்ஞவதைப்.
161. “தமதுரு விறைவடி வுறுதலி னிதனிகர் தருவது மொருபொரு ளிலமிது தகவில, தெமதுயி ரெனினுமி தமுதுசெய் வதுகட னெனவடி தொழுதிடு பலிபல பலவே” அஞ்ஞவதைப்.
162. பி - ம். ‘உயிருமோருறுவினை’
163. ம்ருகமதம் - கஸ்தூரி. அநகை - பாவமற்றவள். வடம் - ஆலமரம்.
164. முகில் - திருமால். பணை - கிளை. “அயனையுல கடையவரு மோருந்தி மாமலரின் அருளியறி வரியபர யோகொன்றி மாறுயில்கொள், சயனமென மொழிவதொரு தாழ்கொம்பின் மேவுசிறு தளிரினொரு தலை யினுனி யேயென்பர் சாகையையே” அஞ்ஞவதைப்.
165. “ஒருவிதையி னளவளவி லோரண்ட மாருமதி னுளகனியி னளவையினி யார்கண்டு கூறுவரே”, அஞ்ஞவதைப்.
166. “சடாதரனும், அரியுமல ரவனுமதி, லேநின்ற வூசன்மிசை அணையவரி னவர்கள்விசை போயன்றி மீள்விலரே” அஞ்ஞவதைப்.
168. “மேனோக்கி வீழோட்டி விரிதிசையே கவடோட்டிக், கீழ்நோக்கிக் கிளையோட்டிக் கிளரவளர் வடமிதுவே” அஞ்ஞவதைப்.
170. இனி அறைகுதும். பி - ம். ‘மேனியல்லால்’
----------
6. தேவியைப் பாடியது
171. வரமி குத்தன மறைகள் பற்பல வருட முற்றிலவே
பரம தற்பத வமல சிற்கன பதயு கத்தினளே. (1)
172. அணிய பற்பல பிறவி யுற்றதி னமிழு மத்துயரே
தணிய வற்புத வமுத முற்றருள் தனத டத்தினளே. (2)
வேற
173. முறுகித் துயர்வாரியின் முழுகிப் பலகாலமும்
முடலைச்சுமை யேகொடு முடிவற்றயர் வேனையுமே
குறுகிப்பணி வாயருள் குலவிப்பணி வாயொரு
குறையற்றிரெ னாநனி குழையுற்றலை காதினளே. (3)
வேறு
174. அழிவற மிகுந்த காரிருள்
அதனிடை மறைந்து நாடொறும்
அருவினை படர்ந்து மூடுற
அயர்வுட னிரங்கு வேனையுமே
ஒழிவற நிறைந்த பேரருள்
உருவொடு நடந்து வாழ்கென
உரையுணர் விகந்த மேன்மைய
ஒருமொழி பகர்ந்த வாயினளே. (4)
வேறு
175. ஈனந்தம் வசமாக வெழுபிறவிச் சுழல்வோரும்
ஆனந்தக் கடலாட வருள்பொழியும் விழியினளால். (5)
176. வாக்கினொடு மனத்தினுக்கு மருவாத பொருளதனைத்
தூக்கினொடு பொருள்படுத்திச் சொல்லுமா றெவ்வாறே. (6)
177. ஒழியாம னிறைந்தவவட் குருவமில்லை யேயென்கோ
அழியாம லாளவந்த வருட்கோலங் கண்டுமே. (7)
-------
178. அவஞான கற்பனையே யல்லதுபே ரில்லென்கோ
சிவஞான தேசிகனாந் திருநாமம் பரவியுமே. (8)
179. இணையிலா விணைப்பதத்திற் கெல்லையில்லை யேயென்கோ
புணையிலா நாயினேன் புன்றலைமீ திருப்பவுமே. (9)
வேறு
180. முடிவிலாம னின்றதம்ம முடியதென்ன மொழிவனே
ஒடிவிலாம லென்மனத்தி னுள்ளடங்க லுற்றுமே. (10)
181. திசையினீள மன்றிவேறு சேலையில்லை யென்பனே
நசையின்மேவி யென்னகத்தி னடுவணுற் றிருந்துமே. (11)
வேறு
182. தாயாகித் தாதையுமாய்த் தலையளிசெய் தெமையாண்ட
தூயாடன் றிருவுருவஞ் சொல்லுபவோ சொல்லுபவோ. (12)
அமளி முதலியன
183. போதத்தின் வழிநின்றார் புந்தியோ புறங்காடோ
வேதத்தின் மத்தகமோ விடவரவோ மெல்லமளி. (13)
184. என்பாவு மாறுகட லேழிருந்து மென்னன்னை
அன்பாளர் கண்ணருவி யாடுவது திருவுள்ளம். (14)
185. பொன்மாலை பூமாலை புறக்கணித்துத் தன்னடியார்
சொன்மாலை யெப்போதுஞ் சூடுவது திருவுள்ளம். (15)
186. கேசாதி பாதாந்த மணியணிகள் கிளரருளால்
ஏசாத ஞாதாதி யொருமூன்று மின்னமுதால். (16)
187. பண்ணேழுங் கர்ணாவ தங்கிசமோ பராபரைக்கு
மண்ணேழு மணிமுன்கை வால்வளையோ மதித்திலனால். (17)
188. மலையேழுங் கந்துகமோ மணிக்கழங்கோ வம்மனையோ
அலையேழு திருநதியு மாரமோ வறிந்திலனால். (18)
189. அண்டபகி ரண்டமெலா மவள்காதிற் குதம்பையதோ
கொண்டபடி கோத்தணியுங் கோவையோ குறித்திலனால். (19)
190. பொழிலேழும் விளையாடிப் பூக்கொய்யு மிளங்காவோ
எழிலேழு பாதலமு மெரிமணிப்பூண் பெட்டகமோ. (20)
191. புவனங்க ளோமாதி புரிந்தபிடே கிப்பவைக்கும்
தவனங்க ளோவன்னை தானடுக்கும் பழங்கலமோ. (21)
192. வேதங்க ளொருநான்கு மெல்லடிமேல் வியன்சிலம்போ
நாதங்க ளொருநான்கு நகுகதிர்வண் சதங்கைகளோ. (22)
193. மிருதிபுரா ணஞ்சடங்கம் வீறுமெண்ணெண் கலையாதி
ஒருதிசிலம் பொடுசதங்கைக் கொள்ளரியோ வுணர்ந்திலனால். (23)
194. ஊழிநெடுங் காலங்க ளோங்குசக்ர வாளமெனும்
பாழிநெடும் பொருப்பவள்காற் பாடகமோ பார்த்திலனால். (24)
195. முந்தைவே தங்களே மொழிகின்ற திருவார்த்தை
சிந்தைவே றற்றவர்தஞ் சிந்தனையே திருமேனி. (25)
196. அறம்புரியு மகவாயில் காக்கின்ற தரும்போதம்
புறம்புரியும் புறவாயில் காக்கின்ற பூதமே. (26)
197. சூர்மகளிர் கருணாதி யாகியன தூயமொழி
ஏர்மகளிர் மருநிலமங் கியன்ஞான யோகமே. (27)
198. பங்கயா சனனறியாப் பான்மைத்தா லவள்பரிசின்
றிங்கியா னிவ்வண்ண மெடுத்தியம்பத் தகுவதுவோ. (28)
199. ஏறுவணம் புள்ளாதி யெனக்கற்பித் திடுவேனோ
ஏறுவணஞ் சிறந்ததவட் கின்னருட்போ தகமாமால். (29)
200. ஆழிமழுப் படையாதி யாயுதமற் றென்கோவென்
ஏழுபிறப் பையுமெறிந்து மிளையாவன் பிலங்கவுமே. (30)
பரிசனம்
201.
தெரிசனத்தின் முறைமையருள் தேவிபணி விடைபூண்ட
பரிசனத்தின் பரிசதனைப் பகுத்தினிநாம் பகருதுமே. (31)
202. மாலாய போதமற வடிவோவ யோகமுற
மேலாய யோகினவர் வீரிபயி ரவர்களே. (32)
203. செறியுமா றிந்திரிய முதலாய பொருளுண்மை
அறியுமா றறிபவர்க ளமலையோ கினிகளே. (33)
வேறு
204. உடலெலாம் விழியதா யுறுமவர்க் கருள் செய்வார்
உதயமத் தமனமற் றொளிர்கதிர்க் குவமையார்
கடலுலா வியதிரைப் பிறவிகெட் டிலகுவார்
காளிமா காளிகங் காளியோ கினிகளே. (34)
205. நிலையிலா தனவெலா நிலையெனக் கருதிடார்
நிலையினைக் கருதிநித் திரையறத் துயில்செய்வார்
கலையெலா மடையினுங் கந்தைகோ வணவரே
காளிமா காளிகங் காளியோ கினிகளே. (35)
206. ஒட்டுவிட் டுணர்வுவிட் டுரையும்விட் டுலகுவிட்
டூசலா டுவதுவிட் டுறுபெரும் பிறவியின்
கட்டுவிட் டருணிலைக் கட்டுநிற் பவர்களே
காளிமா காளிகங் காளியோ கினிகளே. (36)
207. தகையுமா யோததிக் கரைகடந் தணையுமே
சகலவாழ் வையுமிந்த்ர சாலமென் றுணருமே
பகையுமார் வமுமிழந் துவகைபெற் றுயருமே
பரைபுரா தனிமனோன் மணிபதா கினிகளே. (37)
வேறு
208. தம்மை நாடித் தலைவனை நாடுமே
தலைவன் சீர்த்தி தலைபுனைந் தாடுமே
எம்மை யாள்கென் றிரந்திசை பாடுமே
இறைவி யைத்தொழும் டாகினி வர்க்கமே. (38)
209. அருவி யானந்த வெள்ளம் படியுமே
ஆடு கின்ற தருளும் பொடியுமே
இருமை யுந்துறந் தேமாந் திருக்குமே
இறைவி யைத்தொழும் டாகினி வர்க்கமே. (39)
210. அண்ட மோரணு வாகக் குறுகுமே
அணுவு மண்டம தாகப் பெருகுமே
எண்டி சாமுக முஞ்சென் றுலாவுமே
இறைவி யைத்தொழும் டாகினி வர்க்கமே. (40)
வேறு
211. சொல்லரிய நனவினொடு துயின்மறந் தவர்களே
தூங்குதனி நிட்டைவிடு தொழில்சிறந் தவர்களே
நல்லதொரு ஞானமுத் திரைதழைத் தவர்களே
ஞானநா யகிகருணை நாடுசா தகர்களே. (41)
வேறு
212. பிறிவி றந்தசுக வாரிதி யழுந்திடுவரே
பிரியம் வந்துபலி யங்கையி னயின்றமைவரே
அறிவி றந்துரை யிறந்திட முணர்ந்திடுவரே
அமலை யம்பிகை யணங்குடை யகம்படியரே. (42)
213. யாவ கைப்பல வுயிர்த்தொகுதி கண்டுபரவ
எழுத ரும்பழ மறைப்பொருள் குறித்தபடியே
மூவ கைப்படிவ மாகியழி யாதவொளியாம்
மூல மாகிய முதற்பொருள் பரிந்தபரிசும். (43)
214. வெண்ணி லாவொளி துளும்புகயி லைக்கிரியின்மேல்
விழிகி ழித்தநுத லுங்கரிய கந்தரமுமாய்
அண்ண லாரினித மர்ந்தருளி வாசமலரோன்
ஆதி யர்க்கற மலர்ந்தருள் சுரந்தபரிசும். (44)
215. பரிதி வானவ னுடைத்திட வுடைந்ததிமிரப்
படல மொத்திருள் பரந்திரிய வாலநிழலிற்
சரியை நேர்கிரியை யோகமொடு ஞானமுழுதும்
சனக ராதியர் தமக்கருள் சுரந்தபரிசும். (45)
216. முன்ப ராபர வுருத்தனில் விகாரமிலராய்
முற்று ணர்ந்துருகி மும்மல விரோதமகலும்
அன்ப ரானவர் நினைத்திடு முருக்கொடுபுகுந்
தவர வர்க்குள மகிழ்ந்தருள் சுரந்தபரிசும். (46)
217. காடெ லாம்வரி நெடுங்கண்மயில் பின்புதொடரக்
கைச்ச ரம்பொருத பன்றியொடு முன்புதொடரும்
வேட வேடமு னெடுத்தருளி யன்றுபொருபோர்
விசயன் மெய்த்தவ முடிப்பவருள் வைத்தவிரகும். (47)
218. வெந்தி றற்கொடிய சூலமொடு பாசம்விசிறா
மேதி யூர்திமிசை வெங்கதை சுழற்றிவெகுளா
வந்த வந்தக னடுங்கிவிழ மோதிவெருவேல்
மாம றைச்சிறுவ வென்றருள் பொழிந்தவளமும். (48)
219. வேத னாரணனொ டாரணமு மின்னமுணரா
மிக்க பாதயுக ளந்தரணி தோயவிரவிற்
றூத னாகியிரு காலொரு மடந்தையிசையத்
தொண்ட ரேவல்தலை கொண்டருள் சுரந்தபரிசும். (49)
220. முன்பு பின்பினொடி லாததொரு மூலவொளிபால்
முற்றி யுற்றழிவி லாதொரு திறத்தினுருகும்
அன்பு கொண்டக நெகிழ்ந்தணி வளர்க்கநினையும்
அம்ம வைக்கருள் தருங்குழவி யானபரிசும். (50)
221. மேன்மை யுற்றசிவ ஞானதே சிகனிவனெனும்
மிக்க நாமமொடு மேதினி தழைக்குமுறையால்
மானி டப்புதிய கஞ்சுக மணிந்துதமிழ்தேர்
மயிலை மால்வரை வளம்பெருக வந்தபரிசும். (51)
வேறு
222. ஒருமூர்த்த மெனவுணராப் பரப்பிரமந் தனினின்றும்
உபதே சிப்பக்
குருமூர்த்த மெனவெய்தி மான்மழுவுங் கரந்ததிருக்
கோலம் போற்றி. (52)
223. எண்ணாத வினைமுழுது மிரவிவர விரியுமிருள்
எனவே சாயக்
கண்ணாலே கடைக்கணித்துக் கழிபிறவி கெடுத்தபெரும்
கருணை வாழ்த்தி. (53)
224. எங்கள்பிரான் சிவஞான தேசிகனார் திருக்கருணை
என்று மேத்தி
அங்கமெலாம் புளகரும்ப வானந்தச் சலதிபடிந்
தழுந்து வாரே. (54)
------------
குறிப்புரை
* பி - ம். காளி நிலை.
172. பி - ம். ‘பிறவியுற்றதி னமிழத்துயரே’, ‘யுற்றதிகழுமத்துயரே’
173. பி - ம். ‘முலைச்’
177. “மருவுறா ததற்குரைக்கும் வடிவமில்லை யென்னவோ, கருவுறாம லாளவந்த கருணைமேனி கண்டுமே” அஞ்ஞவதைப்.
178. பி - ம். ‘பேறில்’
179. “தொல்லையாகி நின்றதுய்ய துணைமலர்ப்ப தங்களுக், கெல்லையான தில்லையோவென் னுச்சிமீ திருக்கவே” அஞ்ஞவதைப்.
180. “விளம்புமெப் பொருட்குமேன் மிகுத்தநீண் முடிப்பரப், புளம் புகுந்தி ருக்கவெல்லை யுன்னவில்லை யென்னவோ” அஞ்ஞவதைப்.
181. “அடையமா திரம்படைத்த வப்புறம் புடுப்பதோர், உடையு மில்லை யென்னவோவென் னுள்ளடங்க லுற்றுமே” அஞ்ஞவதைப்.
பி - ம். ‘செல்வ மில்லை’, ‘செலவுமில்லை’
182. தலையளி - சிறந்த அன்பு. “அன்னையாகி யத்தனாகி யஞ்சலஞ்ச லென்றுவந், தென்னையாளுங் கோலநீர்மை யென்னதா வியம்பவே” அஞ்ஞவதைப்.
183. போதம் - அறிவு. மத்தகம் - உச்சி.
“மரசுணமோ மறைத்தலையோ மயானமோ வாக்கிறந்த, தேசுணர்ந்த மெய்யடியார் சிந்தையோ திருந்தமளி” அஞ்ஞவதைப்.
184. என் - என்ன ஆச்சரியம். பாவும் - பரவிய. ஆறுகளும் ஏழு கடல்களும். “ஒன்பதுதீர்த் தமுமன்பர் தம்பாதம் விளக்கியநீர்க் கொவ்வா வென்றே, அன்பர்கடங் கண்ணீர்கொண் டம்மைக்கு மஞ்சனநீ ராட்டுவார்கள்” மோகவதைப்.
185. “சாத்தும்பூ மாலையினுந் தமையுணர்ந்த மெய்யடியார், ஏத் தும்பா மாலையிலே யெப்போதுந் திருவுளமே” அஞ்ஞவதைப்.
186. ஞாதாதி மூன்று - ஞாதா, ஞானம், ஞேயம் ; அறிபவன், அறிவு, அறியப்படுவது. “பாதாதி கேசாந்த முவந்தணியும் பணியருளே, ஞாதாதி யாமூன்று முவந்தயிலு நல்லமுதே” அஞ்ஞவதைப்.
187. கர்ணாவதங்கிசம் - செவிப்பூ ; “பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ” குலோத். உலா.
188. கந்துகம் - பந்து. மலை கந்துகம் : “காவன் மலையேழுங் கந்துகமோ” (குலோத். உலா. ) நதி ஆரம் : “ஆர்க்கு நதியேழு மாரமோ” குலோத். உலா.
191. ஓமாதி - ஹோமம் முதலியன. தவனங்கள் - ஸ்நபனகலசங்கள்.
பி - ம். ‘புவனங்களேயாதி’
192. வேதம் சிலம்பு : “அடிச் சூட்டு நூபுரமோ வாரணங்க ளனைத்துமே” தக்கயாகப்பரணி, 119.
193. மிருதி - வேதம். சடங்கம் - சாஸ்திரங்கள் ஆறு. ஒருதி - ஒருத்தி ; தொகுத்தல். அரி - சிலம்பின் உள்ளிடும் பரல்.
195. “வேதமவ டிருவாயி லோது கீதம் வேறுநினை விலர்காணு மேனி மேனி” அஞ்ஞவதைப்.
196. காக்கின்ற - காக்கின்றவை. “பூதமவ டிருவாசல் காவ லாகும், போதமவ டிருமேனி காவ றானே” அஞ்ஞவதைப்.
197. சூர்மகளிர் - யோகினிகள். கருணாதி - கருணை, முதிதை, மைத்திரி, நீதி, உபேட்சை என்பன ; “யோகினிகள் கருணாதி யான மாதர், யோக மரு நிலமாசின் ஞான யோகம்” அஞ்ஞவதைப்.
198. “கோகனக னறியாத கோயில் கோயில் கூறரிய பெருவாழ்வை யாவர் கூற” அஞ்ஞவதைப்.
199. ஏறு உவணம். ஏறு வணம் சிறந்தது - ஏறுதற்குச் சிறந்த வாகனமாக அமைந்தது ; அருட்போதகம் - அருளாகிய யானை. “கலையேறுவணங் களியன்னமெனக் கற்பித்திடவோ சொற்பித்ததுவா, மலையேறு வணங் கிளியன்புறவந் தருள்போதகமே யவள்வாகனமே” அஞ்ஞவதைப்.
200. “பஞ்சாயுதமே திரிசூலமழுப் படையே யெனவோ பகைவெம் பிறவிக், கஞ்சாமுனெழுந் தருளாவெறியு மன்பேதிருவா யுதமாவதுவே” அஞ்ஞவதைப்.
201. பணிவிடை - குற்றேவல். பரிசனம் - பரிவாரம்.
202. “புரம யோகமுறு பேதமறு போத முடனே, பரம யோகமுறு வாரிறைவி பயிரவர்களே” அஞ்ஞவதைப்.
பி - ம். ‘யோகினிவர்’
203. “புணரு மைத்ரிமுத லானபொரு ளுள்ளபரிசே, உணரு மார்க்கம் வரு மாதவர்கள் யோகினிகளே” அஞ்ஞவதைப்.
204. “அவர்களா கமுமெலாம் விழியதா மொழிவரே, எழுதன்மா றுதலிலா விரவியா முருவரே” அஞ்ஞவதைப்.
205. கலை......... கோவணவரே : “கலைபொ றாமலொரு கோவணவ ராய்விடுவரே” அஞ்ஞவதைப்.
206. ஒட்டு - பற்று.
207. தகையும் - துன்பஞ்செய்யும். மாயோததி - மாயையாகிய கடல்.
210. “அவனிவா னடையவோ ரணுவதா நெடியரே, அணுவுமே ருகிரியா யறவுநே ரியர்களே, பவனிவா னடையவோர் பவனிபோ துவர்களே” அஞ்ஞவதைப்.
211. “நித்ரை சாகரத மற்றதொரு நீர்மையினரே நிட்டை யாதுமில தானதொரு நீதியினரே, முத்ரை ஞானமெனு முத்ரையல தேதுமிலரே முத்தி நாயகர்க ளானபவ மோசகர்களே.” அஞ்ஞவதைப்.
பி - ம். ‘ஞான முற்றிசை தழைத்தவர்களே’
212. உரையிறந்திடம் - உரை இறந்த இடம்.
213. “ஆதி மூலமொரு கோலமுமி லாதவடிவில் வகில லோகமு மறிந்தடையும் வண்ணமழகார், சோதி மூவடிவு கொண்டருளி யந்தமறை முன் சொன்ன தன்மைதெரி யும்பரிசு சொன்னதுணிவும்” அஞ்ஞவதைப்.
பி - ம். ‘ஏவகை’
214. கந்தரம் - கழுத்து.
“கயிலை மாமலையின் மேலினிதி ருந்தருளியக் கமல யோனிமுத லெக் கடவு ளர்க்குமருளான், மயிலை யேறிவரு மைந்தனுட னந்திமுதலா மற்றும் வந்தடைப வர்க்குமருள் செய்தவகையும்” அஞ்ஞவதைப்.
215. பரிதிவானவன் - சூரியன். திமிரப் படலம் - இருட் பரப்பு. இருள் - அஞ்ஞானம்.
216. “தன்ப ராபரம தானதிரு மேனிநிலையிற் சனன மின்றியொரு தன்மையினி னின்றருளியே, அன்ப ரானவர்க ணெஞ்சினி லுவந்தவடிவா யங்கு வந்தவர்க ளுய்யும்வகை செய்த வருளும்” அஞ்ஞவதைப்.
217. மயில் - உமாதேவியார். விரகு - தந்திரம்.
218. மேதியூர்தி - எருமைக்கடா வாகனம். அந்தகன் - யமன். மறைச் சிறுவன் - மார்க்கண்டேயர்.
219. பாதயுகளம் - இரண்டு தாள்கள். ஒருமடந்தை - பரவையார். தொண்டர் - சுந்தரமூர்த்தி நாயனார்.
220. அம்மவை - சிவஞான பாலைய தேசிகரை வளர்த்த தாய் ; “பெருகுமம் மவைவளர்க் குங்குழவி செங்கீரை யாடியருளே.” சிவஞான. பிள்ளைத்.
221. கஞ்சுகம் - சட்டை. மயிலைமால்வரை - மயூராசலம் ; இப்பொழுது மயிலம் என்று வழங்கும் ஸ்தலம்.
223. இரியும் - நீங்கும்.
பயிரவர்கள் (202) முதலியவர்கள் (212) பரிசு (213) முதலியவைகளை (221)ப் போற்றி (222) வாழ்த்தி (223) அழுந்துவாரே (224) என இயைக்க.
-----------
7. பேய் முறைப்பாடு
225.
இறப்பதும் பிறப்புமாய விந்த்ரசால வித்தையைச்
சிறப்பொடுங் குறிக்கொளென்று தேவிமுன்பு காட்டியே. (1)
226. எங்கணாய கிக்குமுன்ன ரெய்திவாய் புதைத்துநேர்
தங்கடங்கள் குறைகள்கூளி தாமெடுத்தி யம்புமே. (2)
227. பிறந்திறந்து திரிதிரென்று பேய்களாக வெங்களை
மறந்திருந்து நெஞ்சினால் வகுத்ததென்னை யன்னையே. (3)
வேறு
228. மாயிருந்தண் கடலுலகத் துமையாள் பாகர்
மாணிக்க வாசகரே முதலாந் தொண்டர்
ஆயிரம்பேர்க் களித்தவிடத் தெங்கள் கூட்டம்
அங்கணுகப் பொறுத்தாரோ வவர்க்கே செய்தார். (4)
229. நிறைத்தபெரும் புகழ்க்காழிப் பிள்ளை யார்க்கு
நெடுந்தடத்துப் புகுந்தழுகை நீக்கி நீதான்
துறைத்தமிழு முனதுமுகிழ் முலைத்தீம் பாலும்
சுரந்தளித்தா யெங்களுக்கோர் துளிதந் தாயோ. (5)
230. பொங்கருளா ரமுதத்தை வாகீ சர்க்குப்
புனிற்றிளவான் பிறைக்கண்ணிப் புனித ரீந்தார்
எங்களையு மழைத்தாரே லன்றே யுய்வோம்
எம்மையவர் மறத்தலினா லேக்கற் றோமால். (6)
231. ஆரூரர் தமையாட்கொண் டுலவா வின்பம்
அவர்க்கருளித் தம்மருகே யடைந்து வாழப்
பாரூருந் தொழப்பணித்தா ரந்த நாளும்
பார்த்திருந்து பெரும்பசியாற் பதைத்தோ மம்மே. (7)
232. கோட்டிளந்தண் பிறைக்கண்ணிப் புனித னார்தாம்
கூடலசங் கமத்தருளுங் குருவாய் வந்தே
ஈட்டருஞ்சீர் வசவேசர்க் கமுத மீந்தார்
யாங்களே யந்நாளு மிளைத்தோ மம்மே. (8)
233. கவலையற்று நிரதிசய வமுத முண்டு
களித்திறுமாந் திருப்பமுக்கட் கடவு ளார்தாம்
குவலயத்தி லருள்செய்தா ரநேகம் பேர்க்குக்
கோமளையே யெம்மளவுங் கொடிய ரானார். (9)
வேறு
234. ஏழ்வயிற்றுப் பிறப்பெல்லா மெங்களுக்கே யுரித்தாக்கிப்
பாழ்வயிற்றுக் கிரைதேடிப் பதைபதைக்கப் படைத்தனையே. (10)
235. மையாக விருட்டறைக்குண் மாயாப்ர பஞ்சமெல்லாம்
மெய்யாக மதித்துறைய வினையேமை விதித்தனையே. (11)
236. சென்றவிடத் தைம்புலனுஞ் செலவிடுத லல்லாமல்
நின்றவிடத் தேயுன்னை நினைந்திருக்க நினைந்திலையே.. (12)
237. மண்ணாசை பொன்னாசை மழைத்தடங்கண் வலைவீசும்
பெண்ணாசைக் கடலழுந்திப் பிரியாமற் பிரித்தனையே. (13)
கனவு
238. இவ்வண்ணம் பலகூளி யெடுத்தியம்பச் சிலகூளி
மெய்வண்ணம் விளைந்தகுறி விமலைதனக் குரைசெயுமால். (14)
239. ஓரி எண்டிசைமா நிலவரைப்பி னினிதிலங்குஞ் சராசரமாய்க்
கண்டபொரு ளத்தனையுங் கனவாகக் கண்டனனே. (15)
240. ஆதியுமந் தமுமறியே னறிவதொரு குறியல்லாற்
றீதகலும் படிவந்து சேர்ந்தகுறி யொன்றுளதே. (16)
241. மாயமிது வெனவுணரா மயக்கத்திற் குடிபுக்க
காயம்விடுத் துயிர்நீங்கக் கண்டுமனங் கலங்கியதே. (17)
242. சொல்லாத பெருந்தகைமைச் சுவர்க்காதி போகமெல்லாம்
நில்லாத நிலையென்று நிச்சயமாய்த் தோன்றியதே. (18)
243. தாவாத சமதமங்கண் முதலகுணந் தலைப்படுமே
மேவாயா னெனதென்னும் வெறுஞ்செருக்கு விடைகொளுமே. (19)
244. பழிகாட்டு மிருவினைக்கும் பரிபாகம் வந்தெய்த
வழிகாட்டுங் குருவிருந்த வழிதேடி மனஞ்செலுமால். (20)
245. விழிநீரு மயிர்ப்புளகு மெய்விதிர்ப்புந் தனிதோன்றப்
பழியாத குறியிவைதாம் பலித்ததுபண் டறியேமால். (21)
246. தெருள்புகுந்த வடியர்சிலர் சிறப்பிவையென் றுரைத்தனரே
மருள்புகுந்த சிலவலகை மதியாது மயங்கினவே. (22)
247. இவ்வண்ணம் பலகூறி யிறையவடன் றிருப்பாதச்
செவ்வண்ண மலர்சூடித் தெருமரா நின்றிடலும். (23)
248. தெருள்பெருகுஞ் சிவஞான தேசிகனாம் புகழ்வேந்தன்
பொருகளங்கண் டோரலகை யவணின்றும் புகுந்ததுவே. (24)
249. புகுந்தகடி கடிதுமிகப் புடைபுடைத்து வாய்திறவா
மிகுந்தபர பரப்பினொடும் விளித்தழையா நின்றதுவே. (25)
வந்த பேயின் கூற்று
வேறு
250. அணங்கு பிறவி யொழிய
அணங்கு பிறவி யொழிய
கணங்க ளெழுக வெழுக
கணங்க ளெழுக வெழுக. (26)
251. மாய வவல மழிய
மாய வவல மழிய
பேய்க ளெழுக வெழுக
பேய்க ளெழுக வெழுக. (27)
252. மீளி வினைகள் கழிய
மீளி வினைகள் கழிய
கூளி யெழுக வெழுக
கூளி யெழுக வெழுக. (28)
வேறு
253. வல்லைபுக நீவிரெல்லா மாயாத வப்பசியை
மாற்ற வென்னாச்
சொல்லவமர் விளைந்தபடி சொல்லுகநீ யெனச்சிலபேய்
சொல்ல லோடும். (29)
வேறு
254. ஆராம லுலர்ந்தவுட றன்னை விட்டங்
கப்புறமே குப்புறவுற் றகன்றெம் மாவி
சோராம லெமையளித்துப் பார்க்கும் வண்ணம்
சொல்லெனச்சில் பேய்க்குதடு துடித்த வன்றே. (30)
வேறு
255. பணிவுபடச் சிலமுதுபேய் படபடத்துக் கூறாமற்
பையப் பையத்
துணிவுபடச் சமர்விளைந்த படியெல்லாஞ் சொல்லுகெனச்
சொல்லு மன்றே. (31)
256. இன்னந்தா னையப்பா டோகெடுவீ ரஞ்ஞனெனும்
மிகல்கூர் பாச
மன்னன்றா னழிந்ததுபார் வந்ததுதற் பதப்பொருளின்
வடிவே காணும். (32)
257. கவலைபோங் கடும்பசிபோங் கன்மம்போங் கருவழலிற்
காயுந் துன்பச்
சவலைபோம் பொருகளநீர் சார்ந்தவொரு தினைப்போதிற்
சரத மீதால். (33)
258.அலகிலாப் பல்லூழி யனந்தசத கோடியண்டத்
தவர்க ளெல்லாம்
உலைவிலா துண்டாலு முண்ணவுண்ணத் தொலையாதால்
உரைப்ப தேயோ. (34)
259. காருண்ட கண்டனுண்டெ னயனுண்டெ னுலகுண்ட
கண்ண னுண்டென்
ஆருண்டெ னாரொழிந்தெ னருகாது பெருகாதோர்
அளவைத் தாமால். (35)
வேறு
260. இன்னவாறு சொற்றலோடு மிறைவிபாத பங்கயம்
அன்னவாறு போற்றிவாழ்த்தி யலகையாவு மணுகியே. (36)
261. உளவுசொன்ன பேயின்வாயை யோடிமுத்த முண்ணுமே
களவுசொன்ன பேய்களைக் கனன்றுநின்று சீறுமே. (37)
262. துணிவுசொன்ன மறைகளைத் துதித்துநின் றுவக்குமே
தணிவுசொன்ன பேய்களைத் தகர்க்கபற்க ளென்னுமே. (38)
263. வல்லைவந்து சொன்னபேயை வருகவென் றணைக்குமே
அல்லல்சொன்ன பேயின்வாயி னனலைவையு மென்னுமே. (39)
264. கவலையின்று கெட்டதென்று கைகள்கொட்டி யாடுமே
சவலையான தாபசோப தளர்வுமற்ற தென்னுமே. (40)
265. வெள்ளைகொண்ட வுணர்வுசெல்ல மெல்லமெல்ல மெல்லவே
கொள்ளைகொண்ட பசியுலைந்து குலைகுலைந்த தென்னுமே. (41)
266. என்றுகூறி யுவகையெய்தி யினிதினாடி யாவையும்
நன்றுகூறி வந்தபேயை நணுகிநின்று வினவியே. (42)
267. அழிவிலாத வஞ்ஞனாம மழியுமா துரந்துவென்
றொழிவிலா னழித்தவண்ண மோதுகென் றுரைக்கவே. (43)
-----------
குறிப்புரை
227. “உலகிலே சனித்துநின் றுழைத்துநீர் பிழைப்பிலா, அலகையாமி னெனவகுத்த தென்கொலெம்மை யம்மையே” அஞ்ஞவதைப்.
228. “வாசகத்தா லாவியைநின் றுருக்கு ஞான மதயானை வாதவூர் வள்ள லோடு, மாசகற்றி யாயிரம்பேர்க் கீச னார்நல் லமிர்தளித்தா ரெமக்கிரங்கி யருளா ரிந்நாள்” அஞ்ஞவதைப்.
229. காழிப் பிள்ளையார் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
“தலைப்பான்மை மிகப்பெரிய காழி ஞான சம்பந்தர் தாம்பிள்ளைத் தனத்தி னாலே, முலைப்பாலைப் பகிராதே தாமே யுண்டு முத்தமிழைப் பாடியற முதிய ரானார்” அஞ்ஞவதைப்.
230. வாகீசர் - திருநாவுக்கரசு நாயனார்.
“திருநாவிற் கரசர்மிகத் தெள்ளத் தேறித் தெளிந் துதித் திக்குமருட் டேறன் முன்ன, மொருநாளிற் பெற்றெம்மை யொழியப் போயுண் டொளி யுருவா னார்யாங்க ளுலர்ந்தே போனேம்” அஞ்ஞவதைப்.
231. “அடுத்தனவே செய்துதிரிந் தற்ற நம்பி யாரூரிற் கிறைவர்திரு வருளி னாலே, தடுத்தவரை யாட்கொண்டா ரமிர்த முண்ணத் தாமளித்தா ரெம்மளவுந் தாயே காணேம்” அஞ்ஞவதைப்.
232. கோடு - பக்கம். வசவ தேவருக்குக் கூடல சங்கமேசர் குருவாக வந்து அருள் செய்தார் ; “தாடலை தந்திங் கெம்மையா ணந்தி தாயகட் டினுநின்று தரைமேல், ஏடவிழ் மலர்வாண் முகமது தோன்ற வெழுந்தரு ளுதன்முனங் குருவாய்க், கூடல சங்க மேசன்றாய்க் கொளித்துக் குறுகிநன் னுதலினி றணிந்து, வீடருள் பரம சிற்கன லிங்க மெய்யுறத் தரித்தனனம்மா?” பிரபு. அக்கமாதேவி. 25.
234. உரித்து : பன்மையில் ஒருமை வந்த வழுவமைதி ; பிறவாறும் கூறுவர்.
235. பி - ம். ‘வினையெம்மை’
236. “சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ, நன்றின்பா லுய்ப்ப தறிவு” குறள், 422.
238. குறி - நிமித்தம்.
243. சமதமங்கள் முதல குணம் - சமம், தமம், உபரதி, திதீட்சை, சமாதானம், சிரத்தை என்பன ; இவை சமாதி ஷட்சம்பத்தி எனப்படும். யான் எனது என்னும் செருக்கு - அகங்கார மமகாரங்கள் ; “யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்” குறள்.
245. விதிர்ப்பு - நடுக்கம்.
246. தெருள் - தெளிவு. அலகை - பேய்.
249. கடி - பேய்.
250. அணங்கு பிறவி - வருத்துகின்ற பிறப்பு. ஒழிய : வியங்கோள்.
251. அவலம் - துன்பம். அழிய : வியங்கோள்.
254. பி - ம். ‘அப்புறமே பெயர்பெறவுற்’
255. பையப் பைய - மெல்ல மெல்ல.
256. “ஐயப்பா டோகெடுவீ ரஞ்ஞனழிந் தமையின்னம், வையத்தே வந்ததுநான் மறைதேடும் பொருள்காணும்” அஞ்ஞவதைப்.
257. “பசியும்போ முங்கள்பெரும் பாவமும்போ மிப்பத்துத், திசையும் போய் முடிந்தபடு களத்தினொரு தினைத்துணையில்” (அஞ்ஞவதைப். ) சவலை : “சவலையான தாபசோப தளர்வு” 264.
258. “பல்லாயி ரத்தாண்டு பலகோடி யண்டத்தார், எல்லாரு முண் டாலு மித்தனையுங் குறையாதே” அஞ்ஞவதைப்.
259. “பாருண்ட மாலுண்டென் படைப்பவனோ டானுண்டென், ஆருண்டெ னாரொழிந்தெ னருகாது பெருகாது” அஞ்ஞவதைப்.
261. “மொழிந்தவாயை யோடிவந்து முத்தமுண்டு நிற்குமே” அஞ்ஞவதைப்.
262. “தொல்லையுள்ள பரிசுசொன்ன சுருதியைக்கொ டாடுமே, இல்லை யென்ற பேயின்வாயி னெரியைவையு மென்னுமே” அஞ்ஞவதைப்.
263. பி - ம். ‘வல்லல்வந்து’
264. பி - ம். ‘தாபசோக சார்வுமற்ற’
267. “மாயைநாம மஞ்ஞனாம மாளுமாறு வந்துநந், நாயனா ர்ழித்த வாறு நவிலுகென்ன நவிலுமே” அஞ்ஞவதைப்.
-----
8. கூளி கூறியது
268. அனந்த சதகோடி தேவராலும்
அனந்த சதகோடி யோகராலும்
அனந்த சதகோடி நாகராலும்
அளந்த றியொணாத நீதிகாணுமே. (1)
வேறு
269. மன்னவனு மானத்தா லனைத்துங் கூறி
வாக்கிறந்த மெய்ஞ்ஞானம் வகுக்குங் காலை
முன்னவனும் வாய்மலரா தாலி னீழல்
மோனங்கொண் டிருந்தனனான் மொழிவ தேயோ. (2)
சரத மீதால்.
270. சேய்கிடந்த பொருளதனை யணுகி நோக்கித்
தெரிந்ததுபோன் மாலயற்குந் தெரியா நீதி
பேய்கிடந்து பிதற்றுமெனக் குறிக்கொ ளாது
பெரிதாக விதுதன்னைப் பேணும் பேணும். (3)
271. சீற்றமிகு மஞ்ஞனெனு மிகல்கூர் பாசன்
சேர்ந்தமா யாபுரத்தின் றிண்மை தன்னை
மாற்றுரையார் மெய்ஞ்ஞான வேந்தை யன்றி
மற்றையதன் வலிசிறிது வகுப்பக் கேண்மின். (4)
மாயாபுரத்தின் அமைப்பு
வேறு
272. மாதாபி தாமதலை மனைவியென வீழ்வோருக்
காதாரம் போன்றேறா தாழ்விக்கு மகழினதால். (5)
273.
இன்னன்யா னின்னனிவன் யானெனதென் றெண்ணஞ்செய்
துன்னுங்காற் சங்கற்ப வுயர்புரிசை சூழந்துளதால். (6)
274. தவாமன்னு ஞானவெரி தன்னாலுந் தெறலாகா
அவாவென்னுந் தூறடர்ந்த வழுக்காற்று மிளையினதால். (7)
275. மாறுபுரி வீரர்பலர் மருங்கமைய வறிவில்லா
வேறுவமை போயவிருள் விளக்கிருள மிடைந்துளதால். (8)
276. காமனே முதலாய கடுந்தலைவ ருடன்கலந்த
நாமவேற் றானைநிலை நான்முகமும் பரந்துளதால். (9)
277. செம்புலவீ ரருமஞ்சச் சினந்தெழுந்து பாய்ந்ததிரும்
ஐம்புலமாந் தறுகண்மை யானையதி னானைகளால். (10)
278. ஏறாத நெடுவரையு மேறிநொடி வரைமீளும்
மாறாத பேராசை வாம்பரியின் மறலினதால். (11)
279. நினைத்தபொரு ளதனையொரு நிமிடத்தி னடைவிக்கும்
முனைத்தகதி விடயமெனு மூரிநெடுந் தேரினதால். (12)
280. முரணிவளை வெய்திடினு மொழியினொரு நொடிவரையிற்
றரணிமுழு துஞ்சுழலுஞ் சக்கரமன் சக்கரமால். (13)
அஞ்ஞன் இயல்பு
வேறு
281. அன்ன மாயா புரத்துக் கதிபதி
என்ன வந்த விழுதை யரசனே. (14)
வேறு
282. குற்றந் தன்வயிற் காணப் பிறர்குணம்
குறித்து நோக்கக் குருடாகித் தன்குணம்
உற்று நோக்கப் பிறர்பழி நோக்குழி
உடம்பெ லாங்கண் ணுடையவ னாவனே. (15)
283. ஒன்றி நல்ல வுரையென் றுரைப்பவும்
ஊம னாவ னுடம்பெங்கும் வாயதாய்
அன்றி வேறுங் கடன்கொடு வீணிருந்
தளப்ப ளப்பனோ ராயிர கோடியே. (16)
284. ஏற்ற வர்க்கொன் றிடுகின்ற காலையின்
இரண்டு கையு மிழந்தவ னாவனே
மாற்ற லர்க்கு நிதியிடு காலையின்
வாண னாண்மலி கையின னாவனே. (17)
285. ஈசர் வாழ்பதி யேத்தருந் தீர்த்தங்கள்
ஏகு தற்கிரு கான்முட மாவனே
நீசர் வாழ்பதி நெட்டிடை நீந்தியே
நெடிது செல்ல நெடுங்கால னாவனே. (18)
286. அல்ல லாய வறுமையு மாங்கதை
அகற்ற வெண்ணி யலைந்தலைந் தேதினம்
செல்லு மாய முயற்சி யிடும்பையும்
சிறந்த வொன்றாத் தெரிந்து திரிவனே. (19)
287. உந்து தேரி னுருளுங்கூத் தாட்டவை
உறுங்கு ழாத்தொடு சாயையு மோடுநீர்
வந்து தோன்றுங் குமிழியும் போற்கெடும்
மாய வாழ்வை நிலையாய் மதிப்பனே. (20)
288. கூளி மூத்த குரங்கெனக் கையிலோர்
கோல்பி டித்தே யிருமிக் குலைகுலைந்
தேனை யோரிக ழக்கிழ மாகின்ற
இளமை நாளு மியல்பென் றிருப்பனே. (21)
289. கோழை வாதம்பித் தென்கின்ற மூவரும்
குடியி ருக்குங் குரம்பையிற் றானுழைந்
தூழி யூழியுந் துச்சிலென் னாததில்
உறைவ னென்ன வுவந்தே யிருப்பனே. (22)
290. தவஞ்சு ருக்கிச்செய் தானஞ் சுருக்கிநற்
றரும நன்னெறி தானுஞ் சுருக்குமே
அவம்பெ ருக்கி யவலம் பெருக்கிமற்
றரிய பாதக மைந்தும் பெருக்குமே. (23)
291. விண்ணி னூடும் வெதுப்பழல் போன்றெரி
வெய்ய வன்னிரை யத்தும் விசையினால்
மண்ணி னூடும் வருவதும் போவதாய்
மாறி மாறி மணியூச லாடுமே. (24)
292. கற்ற றானுங் கருத்துறக் கற்றன
கருத றானும் பிறர்க்கவன் காதலாற்
சொற்ற றானு முணவு குறித்தலாற்
சுருப நன்னெறி தோய்வதற் கல்லவால். (25)
293. இன்ன தன்மை யிழுதை யரசனுக்
கென்று மென்று மிரும்பவ மீண்டவே
துன்னு துன்மதி மந்திரி சூழுமச்
சூழ்ச்சி யார்க்குந் துணியப் படாததால். (26)
294. தான மில்லை தவமில்லை வண்புகழ்
தானு மில்லை தருமமு மில்லையால்
மான மில்லை மடவார்தங் கற்பிலை
மற்று மொன்றில்லை மாத்தா னொழுக்கமே. (27)
295. நடலை வாழ்க்கை நிலையா நயப்புற
நாட லின்றி நலங்கொள் படிவமும்
முடலை யாக்கைய தாக வியப்புற
மூக நீதி முடிய மொழியுமால். (28)
296. நீதி யற்றமை தன்னை நினைப்புற
நெடிய மூவுல கத்து நிரல்பட
ஓதி மற்றவர்க் கித்துணை யாயினும்
உணர்த்த வல்லா ரொருவரு மில்லையால். (29)
297. வழுவி நின்று மயங்கி மயங்கிவாய்
மாறி வைகலு மாறா வரும்பவம்
தழுவி நின்று தரணியு ளோர்படும்
தாழ்வு தம்பிரான் றானே யறியுமால். (30)
சிவஞான தேசிகர் அவதரித்தல்
298. பாச வஞ்ஞன் பழிமா சுலகெலாம்
படர்ந்து மூடும் பரிசு பரானந்தத்
தேசு பெற்றுய ருங்கரு ணாலயன்
திருவு ளந்தனிற் சென்றேறி விட்டதால். (31)
வேறு
299. மற்ற வஞ்ஞன் மடியத்தன் பேரருள்
முற்று மோர்வடி வாகி முதல்வனே. (32)
300. கயிலை மால்வரை நீங்கிக் கனிவினால்
மயிலை மால்வரை வந்துதித் தோங்கியே. (33)
301. ஆன நாம மவனியு ளோர்சிவ
ஞான தேசிக னென்றேத்த நண்ணியே. (34)
சிவஞான தேசிகர் பிள்ளைப்பருவ விளையாட்டு
302. அலையெ டுத்த வுலகி னருந்தவம்
தலையெ டுப்பத் தலையெடுத் துந்தியே. (35)
303. ஒழுக்க முற்று முலகந் தவழ்ந்திட
விழுப்ப முற்றுத் தவழ்ந்து விளங்கியே. (36)
304. வேத நன்னடை மேம்பட மேம்படு
போத நன்னடை போற்றி நடந்தரோ. (37)
305. விச்சை யல்லது வேறொன்றின் மேலெமக்
கிச்சை யில்லென் றிருகா தலைத்தரோ. (38)
306..மூட நீதி முழங்குஞ் சமையப்புள்
ஓட வம்போ ருகக்கரங் கொட்டியே. (39)
ஞானக்கோலம் கொள்ளல்
307. தலைம யங்கிய தத்துவ ஞானநூல்
நிலைபெ றும்படி யாய்ந்து நிலவியே. (40)
308. பிறவி நீள்பகை பேர்ப்பா ரிவரென
அறையு ஞான வருட்கழல் வீக்கியே. (41)
309. அற்ற நீக்கி யபிமான மென்பவை
செற்ற ஞானத் திருவுடை சாத்தியே. (42)
310. இதர நூனெறி யேகாமெய்ஞ் ஞானமாம்
உதர பந்த முவப்பொடு சேர்த்தியே. (43)
311. கோதி னஞ்ஞ னுயிரைக் குடிப்பதோர்
தீதின் ஞான வுடைவாள் செருகியே. (44)
312. கமல யோனி கருத்துங் கடந்ததோர்
விமல ஞான வியன்முடி சூடியே. (45)
313. ஈன வஞ்ஞ னெனும்பாசன் பட்டிட
ஞான பட்டந்த னன்னுதற் கட்டியே. (46)
314. ஊன வஞ்ஞ னுறும்பழி கேட்கிலா
ஞான குண்டல நன்கா தணிந்தரோ. (47)
315. வளரு மஞ்ஞன் மடியத் திருப்புயம்
கிளரு ஞானவண் கேயூரந் தாங்கியே. (48)
316. தூய ஞான சுகானந்த முத்திரை
ஆய வாழி யணிவிரல் சேர்த்தியே. (49)
317. எங்கு மாமண மேறமெய்ஞ் ஞானவண்
குங்கு மாதி குளிர்சாந்து பூசியே. (50)
318. குணம றாது குலவுமெய்ஞ் ஞானமாம்
மணம றாத மலர்மாலை சாத்தியே. (51)
319. கூரு மஞ்ஞன் குலையமெய்ஞ் ஞானமாம்
வீர சங்கிலி பூண்டு விரும்பியே. (52)
320. ஆசி லாத வருள்பொழி ஞானமாம்
மாசி வார மணிவடந் தாங்கியே. (53)
321. சங்க மற்ற சதானந்த வாரிதிச்
சங்க மெங்குந் தழங்கித் தழையவே. (54)
322.,பகரி னெங்கும் பரந்தொடுங் காததாம்
நிகரின் ஞானக் கவிகை நிழற்றவே. (55)
323. முதிரு ஞானமுந் நீர்த்திரை யாகிய
எதிரில் வெண்சா மரைக ளிரட்டவே. (56)
324. இணக்க மற்ற வியன்ஞான மாகிய
பிணக்க மற்ற பதாகை பிறங்கவே. (57)
325. தூய ஞான சுதர்சனச் சக்கிரம்
மாய வஞ்ஞன் மறுகச் சுழலவே. (58)
படைகள்
326. கடக்க லாதசங் கற்பங் கடந்ததென்
படைக்கை சான்ற பதாகினி சூழவே. (59)
327. தடையொன் றின்றிச் சலியா வியன்பொறை
நடையொன் றின்மணி நற்றேர் மலியவே. (60)
328. தேசு மேவு செயறீர் குரகதம்
மாசி லாது மருங்குற மன்னவே. (61)
329. அவாவின் மூரி யசல மெனுமர
சுவாவின் மாட்சி யுலகம் வியப்பவே. (62)
சிவஞான தேசிகர் சுகாசனத் தேறல்
330. ஏறு புள்ளன மென்பவை யாதியா
ஏறு மூர்திக ளெல்லா மிரங்கவே. (63)
331. வெறுத்த செய்தி விரகில்வெங் காலனைக்
கறுத்த பாத கமலஞ் சிவப்பவே. (64)
332. உய்தி யெய்த வுலக முழுவதும்
செய்த புண்ணிய மெல்லாந் தெரியவே. (65)
333. அரணி லஞ்ஞ னவனையொன் றாவுன்னித்
தரணி தோயத்தன் றாமரைத் தாள்களே. (66)
334. இடரு ழந்தங் கிமையவர் தேடவிங்
கடர்செய் தெங்கு மடியவர் போற்றவே. (67)
335.வேதங் காணரு மேதக்க வன்செயல்
ஓது மாறெவ னென்றுல கோதவே. (68)
336. எந்தை யெம்பிரா னெங்குரு நாயகன்
வந்து பூமிசை மானிடர் வாழவே. (69)
337. இன்ன வண்ண மிகன்ஞான கேசரி
துன்னு யோக சுகாசனத் தேறியே. (70)
ஒற்றர் அஞ்ஞனிடம் சென்று தெரிவித்தல்
338. இருந்த காலையி லென்றுந் தெளிவிலா
முரிந்த பாசமன் முன்னோடி யொற்றரே. (71)
வேறு
339. முந்து நான்மறை முடியில் வைகிய
மூல காரணன் ஞால மீதினில்
வந்து தித்தனன் மனித னாவெனும்
வார்த்தை யெங்கணும் வார்த்தை யென்னவே. (72)
340. இடுக்க ணின்றியிங் கின்று காறுமே
இனிது வாழுமற் றென்னை யீசனார்
வடுக்கொண் மானிட னாகி வென்றிட
வந்து ளாரெனும் வார்த்தை வார்த்தையோ. (73)
341. இல்லை யொன்றுமே யென்னு நீருமின்
றிங்கு வேறுள போலி யம்பினீர்
சொல்லு மென்னலு மின்று சொல்லுகோம்
தொல்லை மாநிலஞ் சொல்லும் வண்ணமே. (74)
342. சமய மோதுவார் தம்மை வம்மெனத்
தாமு மங்குள தன்மை கண்டிலம்
அமைய வோதுவா ரோது கின்றவா
றறிய வோதின மரச வென்னவே. (75)
அஞ்ஞன் கூற்று
343. சொன்ன சொல்லினை மெய்ய தென்பவர்
சுற்ற முற்றவுஞ் சூறை கொள்ளென
மன்ன வன்னிகல் கொண்டு துன்மதி
மந்த்ரி தன்னொடு மலைவ தெண்ணவே. (76)
வேறு
344. காமன் முதல படைத்தலைவர்
கலங்கா வயவ ரவரிருப்பச்
சேம மில்லா தவர்போலச்
செருவுக் கயர்தல் திறனன்றால். (77)
345. என்று கூறு மமையத்தின்
எழுந்து காமன் றன்னுடைய
வென்றி கூற வறிவில்லா
வேந்தைத் தொழுது விளம்புவனால். (78)
காமன் கூற்று
346. செய்ய மேனி செம்பாகம்
கறுக்க வந்தச் சிவனாரை
எய்த வாளி யிருப்பவுமற்
றென்னைக் கறுப்பார் வெறுப்பாரே. (79)
347. கோலி யெய்யு மலர்ப்பகழி
கூசித் தொடுப்பப் பாலாழி
மாலின் மார்பின் வடுக்கண்டும்
வருவா ரமர்க்கு வெருவாரே. (80)
348. பூவி லொன்றும் புண்ணியனார்
புதல்வி பொம்மன் முலைதோய
ஏவி லொன்றில் வணக்கியநான்
ஈண்டை மனிதர்க் கெளியேனால். (81)
349. பொன்னா டாளும் யானையொரு
பூனை யாகிப் புறம்போத
அந்நா ளாண்மை செய்தாரும்
அயலா ரேமற் றியானலனால். (82)
350. அள்ளி யவுண ருயிர்குடித்த
அயிலோன் புயபூ தரமனைத்தும்
வள்ளி படர மலர்பறித்துத்
தொடுத்தே னின்று விடுத்தேனோ. (83)
351. மதியா ரான கலாதரனார்
மயங்கிக் குருவின் மனையாளைத்
துதியா ரிமையார் பலர்காணத்
தோயப் பொருதார் பிறரேயால். (84)
352. நன்று போல முன்னெய்தி
நஞ்சு போல நனிகாந்திக்
கொன்று ஞாளி யெனப்பெருமால்
கொடுப்பேன் வென்று படுப்பேனால். (85)
353.,பெற்றாள் வயினுந் தன்வயிற்றுப்
பிறந்தாள் வயினு மோருதரத்
துற்றாள் வயினு முறவுள்ளம்
ஓர்வா ளியினா லுடைப்பேனால். (86)
354. எண்ணு மாறே துணிவிப்பன்
இசையார் தமையு மிசைவிப்பன்
நண்ணு மாறே முன்னொடுபின்
நாடா வண்ண நலிவேனால் (87)
355. சாந்தங் கொண்ட தபோதனரும்
தடமென் முலையார் தம்பிறகே
காந்தங் கொண்ட விரும்பென்னக்
கவ்விச் சுழலக் கலக்குவனால். (88)
356. தண்ணென் மதியை யழலென்றும்
சாந்த மதனை விடமென்றும்
வண்ண மலரை யரமென்றும்
மயங்கத் தியங்க மலைப்பேனால். (89)
357. கொந்தார் மலர்ப்பூந் தாதளைந்து
குளிர்ந்து மெல்லக் குலவிவரு
மந்தா நிலமாந் தேர்கடவின்
மாற்ற வெனையா ராற்றுவரே. (90)
358. சித்த மெவையுந் தனைப்போலத்
தெருமந் திருள வருங்கங்குல்
மத்த யானை மேற்கொண்டால்
வாகை புனைவார் மானிடரே. (91)
359. தரங்க வுததி யெனவிண்ணிற்
றாவுஞ் செவ்வாய்ப் பசுங்கிள்ளைத்
துரங்க மேறி யுகைக்குங்காற்
றோலார் ஞான நூலாரே. (92)
360. பொன்னிற் குலவு மோரிரண்டு
பொருப்பு விருப்பி னுடன்பரித்து
மின்னிற் குலவு மென்படைக்கு
மெலியா தெவரே வலியாரே. (93)
361. மேவுந் தேமா மலர்க்காவின்
விரைத்தா தாடித் தளிர்கொழுதிக்
கூவுங் குயிற்கா களவொலியாற்
குழையார் மற்றெவ் வுழையாரே. (94)
362. ஓவா விரவா மும்மதத்த
உபய வயக்கோட் டொருத்தலின்மேற்
றாவா மதிவெண் குடைகண்டாற்
றாங்கி நிற்பா ரீங்காரே. (95)
363. காவி லன்றி லிருந்திரங்கக்
கழுநீர் மலர்ந்த கழிக்கானற்
றாவில் கடற்பே ரிகை முழங்கிற்
றரிப்பார் துறவு பரிப்பாரே. (96)
வேறு
364. பொருப்புச்சிலை யேமுதல் புன்சிலையென்
கருப்புச்சிலை யின்வலி காட்டுவதே. (97)
365. எந்நாணுள நாள்பல வெத்துணையும்
என்னாணுள பூவிடை யேறுவதே. (98)
366. அஞ்சாவலர் வெங்கணை யெங்கையவேல்
அஞ்சாவலர் வெங்கணை யங்குளதே. (99)
367. புண்வேலெறி தப்பினும் போர்ப்படையின்
கண்வேலெறி தப்பினர் காணெவரே. (100)
368. அங்கங்குமி றுந்திற மங்களமென்
சங்கங்குமி றிற்சமர் வேறுளதே. (101)
369. பொருப்புக்குடை யார்முதல் பூண்முலைமா
மருப்புக்குடை யாரெவர் மன்னவனே. (102)
370. எத்தேர்நினை வுற்றிடி னும்பொருவ
தத்தேரணி பெற்றக லல்குலதே. (103)
வேறு
371. போதுவிரி காவுமொளி பொங்குமண லாறும்
பூகவன முந்தடமு மோடைபொலி கின்ற
தாதுவிரி கானலொடு தாவிலிசை யெழுநம்
தாரணிவி டாதெனது போரணிவி டாதால். (104)
372. பாலிதுகொல் தேனிதுகொல் பாகிதுகொ லினிய
பழமிதுகொ லமுதிதுகொல் பண்ணிதுகொல் காம
நூலிதுகொ லெனமகளிர் நுவலுமொழி யுளதேல்
நுண்ணுணர்வு றாதெனது நோன்மையும றாதால். (105)
373. சேவின்மணி யோசையொடு செய்யகுழ லோசை
செவிப்புல னுழைந்தளவி லேயுருகி நைந்து
தாவின்மயல் கொண்டுவிழு மானிடர் தமக்கே
சமர்க்குடைவ னேலினிய தென்சமர் தரைப்பால். (106)
வேறு
374. மறந்தவர்க ளல்லர்மட மாதரை மனத்திற்
றுறந்தவர்கள் போல்வரவர் சொல்லுமொரு சொல்லோ. (107)
375. கனவின்மட மாதரியல் கண்டுருகு வாரே
நனவினவ ரியல்கரண நசைபெருக லாரோ. (108)
376. வள்ளவள வுள்ளமுலை வஞ்சியிடை நல்லார்
உள்ளளவு மிங்கெனையு டைப்பவரு முண்டோ. (109)
வேறு
377. கண்வலைப் பட்ட மீனம் பிழைத்தலு மொருகாற் காண்டும்
பெண்வலைப் பட்ட மாந்தர் பிழைத்ததுண் டாகிற் பேசும். (110)
378. புணர்முலைத் துரகம் பூட்டிப் புருவவில் லுருவக் கோலி
உணர்வற வல்குற் பொற்றே ரூர்வரேல் யாவ ருய்வார். (111)
வேறு
379. தொடுப்பனவு மைங்கணையே தொல்லுலக மொருமூன்றும்
படுப்பனவு மவைகொண்டே பராசயமு மெனக்கின்றே. (112)
வேறு
380. ஓருருவை யீருருவா யுடைக்கின்ற துலகம்பே
ஈருருவை யோருருவா யிசைக்கின்ற தெனதம்பே. (113)
381. பூவாளி யீதென்பார் பொருளறியார் பொருளறிவார்
பூவாளி யீதென்பார் பொருவாளி யைந்தையுமே. (114)
கோபன் கூற்று.
வேறு
382. என்று காம னிகலேற் றிருத்தலும்
துன்று கோபன் றொழுதிது சொல்லுவான். (115)
383. தெள்ளியது வெனச்சிவனார் செழுங்கமலா சனர்சென்னி
கிள்ளியது மென்னுடைய கெம்பீரம் பிறிதின்றால். (116)
384. கடல்கனலச் சிலைகோலிக் கரைகோலிப் பசுந்துளவோன்
உடல்கனலத் தசமுகனை யொறுத்ததுமென் னூற்றமதால். (117)
385. பார்த்தோர்க்குப் பழியாகப் பசுங்கதிர்கால் வெண்மதியை
வேர்த்தோனும் வேறலனென் விதிபிழையா விநாயகனால். (118)
386. சூரறுத்து மலையறுத்துத் துரிசறுத்தோ னவுணர்கிளை
வேரறுத்து நிலைநிறுத்தும் விசயமுமென் விசயமதால். (119)
387. நக்கனார் வெகுண்டேவ நனிவீர பத்திரனார்
தக்கனார் மகஞ்சாயச் சாடியதென் சதுராமால். (120)
388.குரங்குமுக வெனவயிரங் கொண்டிருபஞ் சானனனைக்
குரங்குகளினழிகவெனக் கொதித்ததுமென் கொற்றமதால்.(121)
389. சந்திரனை வைதழன்ற தக்கனோ வகல்வானத்
திந்திரனை வைதழன்ற விருந்தவனு மென்வசமால். (122)
390. சீர்முகந்த முனிவையச் சீறியெதிர் வைதழல
நீர்முகந்த நிருபனுமென் னெறிபிழைத்தா னல்லனால். (123)
391. இரக்கமின்றி யயலொருவ னிடுந்தசைகண் டிகலாசை
அரக்கனென்ற விருந்தவனென் னாணைவழி நின்றவனால். (124)
392. திருந்துமொரு மகப்பரியைத் தேடறுபா னாயிரவர்
அருந்துகளாய் விழக்காயு மவனுமென தடித்துகளால். (125)
393. அணியாக முடிசூடி யகல்விசும்பு புரப்போனைப்
பணியாகப் பணித்தவனு மென்பணியிற் பயின்றோனால். (126)
அஞ்ஞன் கோபனைப் புகழ்தல்.
394. வெங்கோபன் றானுமிள வேனில்வேள் போலுநெடும்
பொங்கோத நிலத்தென்னாப் புரவலனும் புகழ்ந்தனனால் (127)
கோபன் மீண்டும் கூறல்
395. போலுமென வறிவுற்ற புரவலனார் புகழ்தலுமே
சாலுமிது சாலுமெனச் சலனாணிச் சாற்றுவனால். (128)
396. வென்றிடினுங் காமனையே வெல்வதன்றி மற்றெனைத்தாம்
பொன்றிடினும் வெல்லவொரு பூதரையுங் கண்டிலனால். (129)
397. அடுங்காமன் பொடியாக வழல்கொழிக்கு மொருகுளத்தார்
கொடுங்கோபற் குடைந்தன்றோ கொடிமதின்மூன் றெரித்தனரால். (130)
398. வீரத்தி னெனக்குடைந்தோ வேள்கணைக்கோ வேதமுனி
தாரத்தின் சிரந்துணிப்பத் தனையனுடன் சாற்றியதால். (131)
399. வேளைவென்ற வீடுமனார் வீறுபதி னாயிரந்தேர்
ஆளைவென்று சோடவிழ்ப்ப வழன்றதுநீ ரறியீரால். (132)
400. சேர்ந்தாரை யெழிப்பதுசெந் தீயதுதா னிகரோநான்
சார்ந்தாரை யழித்தவர்தஞ் சார்பினையு மழிப்பேனால். (133)
401. நகையுமுவ கையுமழிக்கு நானொழிய வேறுசில
பகையுமட வேண்டுமோ பவங்கடியும் படிவர்க்கே. (134)
402. எனையெதிர்ந்தான் கேடுநில மிலக்காக வெடு்த்தங்கை
தனையெறிந்தான் கரமுலகிற் றப்புகினுந் தப்பாதால். (135)
உலோபன் கூற்று
வேறு
403. கோப னின்னதன் கொற்றம் புகலலும்
லோபன் வென்றி நுவலத் தொடங்குவான். (136)
404. மலையோடி மிசையேற மலைவிப்பன் மற்றும்
அலையோடி வசையேற வலைவிப்பன் யானே. (137)
405. மிகுபார சுமைகொண்டு வேசரிக ளொப்ப
உகுபார வழிசெல்ல வுலைவிப்பன் யானே. (138)
வேறு
406. தாயுண்டோ தாதையுண்டோ தாரமுண்டோ தான்பயந்த
சேயுண்டோ தானுண்டோ வெனைச்சேருந் திருவிலிக்கே. (139)
407. உடையுண்டோ வயிறார வுண்டியுண்டோ கனவினுமோர்
கொடையுண்டோ குருவுண்டோ வெனையெதிருங் குணமிலிக்கே. (140)
408. பாரோடு விண்வரினும் பற்றுள்ள முற்றுள்ளார்க்
காரோடு முறவுண்டோ வருளுண்டோ வவர்தமக்கே. (141)
409. காடில்லை யரணில்லை கடலில்லை மலையில்லை
பீடில்லை நானுளனேற் பெருமிதமு மின்றேயால். (142)
410. தாயினைவிற் றமைவர்கொண்ட தாரமும்விற் றமைவர்பெற்ற
சேயினைவிற் றமைவர்நான் சேர்ந்தமையு மமையத்தால். (143)
411. கீர்த்திதனை யகற்றுவார் கிளர்பழிக்கு நாணுறார்
ஆர்த்திதனை யகற்றுவார் நானகலா தமைவேனேல். (144)
412. துறந்தார்க்கு மாதுலர்க்குந் தொடர்பின்றித் தன்பால்வந்
திறந்தார்க்குங் களைகண்ணா வெய்துவரோ யானெய்தின். (145)
413. ஓதுதொழி னிலையவர்க்கு முயர்கான நிலையவர்க்கும்
ஏதுதொழி லெனமதிக்கு மிடர்களைய விசைவேனோ. (146)
414. தென்புலத்தா ரொடுதெய்வம் விருந்தொக்க றானென்ற
ஐம்புலத்தா றோம்புதலங் கடைவாரோ யானடையின். (147)
415. பார்த்தனையிங் கிவர்க்கொக்கும் படைக்கென்று பகர்வதுமோர்
சாத்தனையிந் திரனென்று சாற்றலுமென் சமற்காரம். (148)
416. மாலென்று முருகனென்றும் வறியவராம் பறவைக்கோர்
ஆலென்றும் புகழ்வதுமென் னாணையினா லாமன்றே. (149)
417. நவநிதிக்கு மிறையவனை நட்புற்றும் நானேவ
அவனிதிக்கு முடியவுழந் தரனுமைய மெடுத்தனனால். (150)
418. வாமனனாய் மாவலிபால் மண்ணிரந்து மால்பின்னர்
வாமனனாய் முழுதெய்த வளர்ந்ததுமென் வலியாமால். (151)
419. பொன்னுலகு புரந்தருளும் புரந்தரனு மங்கர்கோன்
தன்னுலகு புகுந்திரப்பப் பணித்ததுமென் சதுராமால். (152)
420. நொய்தாய நீர்தனிலும் நுண்ணியது நெய்யதிலும்
வெய்தாய புகையதிலு மெலிவர்நான் வெகுண்டக்கால். (153)
421. ஈயீட்டு மதுவென்ன விருநிதிக ளெத்திசையும்
போயீட்டு மதுவன்றிப் புசிக்கநான் பொருந்தேனால். (154)
422. சொல்லாத பொய்யுளதோ தொடர்ந்தனனே லுலகாளும்
சல்லாபம் பெறவன்றோ தருமனும்பொய் சாற்றியதால்.. (155)
423. கவிகையெடுத் தயலொருவன் கடும்பரிப்பின் கறங்குவராற்
சிவிகையெடுத் தயலொருவன் சேவடியும் வருடுவரால் (156)
மோகன் கூற்று.
வேறு
424. உலம்பியின்ன வண்ணமங்கு லோபனின் றுரைத்தலும்
வலம்படுந் திறத்துமோகன் வாய்திறந்து கூறுவான். (157)
425. ஈசனாம மில்லையாக வென்னையொப்ப யாவனே
நேசனாகி யெங்குமாய் நிறைந்துநிற்க வல்லனே. (158)
426. நாடநாட வென்னையோர்ந்து நல்லநல்லவென்று மேல்
ஓடவோட வவதியின்றி யோடவல்லன் யாவனே. (159)
427. நிலையில்வாழ்வு கானனீரி னீரதென்ன யாவர்தாம்
உலைவிலாம லுள்ளகாறு முணரவல்ல ருரைமினே. (160)
428. சத்தைமித்தை யாகவேறு தலைமயக்கி நிலையிலா
மித்தைசத்தை யாகவே விளைப்பதேயென் விசயமால். (161)
429. பெருவிருப்ப மன்றியே பிடித்துநா னலைப்புழி
அருவருப்பு முண்டுபோலு மங்கியொத்த வர்க்குமே. (162)
430. துக்கமீது சுகமெனச் சுத்தவெட்ட வெளியிலே
எக்கியாரும் வீழநா னிந்த்ரசாலம் வல்லனே. (163)
431. பழுதைசீறு மரவெனப் பதறியோடி யஞ்சிவீழ்ந்
திழுதையாய் மருங்கொடிந் திடவியற்ற வல்லனே. (164)
432. மலத்தின்வீழ்ந்து சூகரம் வாய்மடுப்ப மற்றதும்
நலத்ததாக வாக்குவே னானலாமல் யாவனே. (165)
433. நரம்பெலும்பு தோல்வழும்பு நாறுமூளை பீளையாம்
வரம்பிலூனை மாதராய் மயக்குவிக்க வல்லனே. (166)
அகங்காரன் கூற்று
434. என்றுகூறி மோகனங் கிருத்தலு மெனக்கெதிர்
ஒன்றுமில்லை யென்றகங் காரனின் றுரைப்பனால். (167)
வேறு
435. வம்சமதிற் பெரியேன் வடிவதனிற் பெரியேன்
வாழ்வுமிகப் பெரியேன் வாய்மைதனிற் பெரியேன்
அம்சமதிற் பெரியே னாண்மைதனிற் பெரியேன்
ஆரெனையொப் பவரெனா வமைபவன்யா னலனோ. (168)
436. சோதிமிகப் பெரியேன் றொல்புசழிற் பெரியேன்
சுற்றமதிற் பெரியேன் கொற்றமதிற் பெரியேன்
ஓதிமிகப் பெரியே னுண்மைதனிற் பெரியேன்
ஒப்பவர்யா வரெனா வுயர்பவன்யா னலனோ. (169)
437. கேள்விதனிற் பெரியேன் கேதமதிற் சிறியேன்
கேழ்மைதனிற் பெரியேன் கீழ்மைதனிற் சிறியேன்
வேள்விதனிற் பெரியேன் வீணதனிற் சிறியேன்
மிக்கவர்யா வரெனா விழைபவன்யா னலனோ. (170)
438. தானமதிற் பெரியே னூனமதிற் சிறியேன்
தவமதனிற் பெரியே னவமதனிற் சிறியேன்
மானமதிற் பெரியே னீனமதிற் சிறியேன்
மற்றெவரொப் பவரெனா மலைபவன்யா னலனோ. (171)
வேறு
439. உங்களினு மெண்மடங்கு பதின்மடங்கு நாமுயர
உயர்ந்தோ மென்னாத்
தங்களிற்றா மிகல்புரியப் புரிவதன்றோ வெனதுபெருந்
தலைமை யாதல். (172)
440. நீயடா வெனக்கொப்பாய் நில்லடா நில்லென்று
நிறுத்திப் பின்னர்
வாயெடா வகைபுரிந்து மதர்ப்பதன்றோ வெனதரச
வாகை யாதல். (173)
441. தானேநான் மறையோதுஞ் சதுமுகன்மா லவனெனக்குத்
தரமோ வொப்பான்
நானேநா னெனவுயரு நல்லாண்மை பெரிதுடையேன்
நானே யாமால். (174)
442. மாறாகத் துறக்கமொன்று மறுக்கமற வகுப்பனென
மதித்துப் போந்து
வேறாகப் படைத்தவனு மென்னேவல் பிழையாமல்
விளைத்தோ னாமால். (175)
மற்சரன் கூற்று
வேறு
443. நம்மத முற்று மிம்முறை யென்ன
நாட்டி மதத்த னீட்டி யுரைப்ப
விம்மித முற்றுத் தம்முறை முற்றும்
விற்சர நேரு மற்சர னோதும். (176)
வேறு
444. இம்மையினும் விபவங்க ளெத்துணையுங் கெடுத்தென்னை
எதிர்ந்தான் றன்னை
அம்மையினு நிரயத்தி னழுத்திலனே லெனையழுக்கா
றலனென் பீரால். (177)
445. கொடுப்பதனைக் கொடாதவகை கோட்டிவிய வெனையெதிரிற்
குபேர னேனும்
உடுப்பதுவு முண்பதுவு மின்றாகக் கிளையினொடும்
ஒறுப்ப னேயால். (178)
446. பண்போய குறளுருவாய்ப் படியிரக்கு மொருவனுக்குப்
பழுதொன் றாற்றிக்
கண்போய வவனன்றிக் கண்ணுடைய நீருமென்போர்
காணீர் போலும். (179)
447. அறிவினோ டுருவாக்கம் யார்மாட்டுக் கண்டிடினும்
அவைபொ றாது
செறிவினோ டறச்சீறிப் புழுங்குவதன் றோவெனது
செய்கை யாதல். (180)
துன்மதி கூற்று
448. அழுக்காற்றா னிவ்வண்ண மறைந்தமைய விவையனைத்தும்
அறையக் கேளா
இழுக்காற்றா னிறைவனொடு துன்மதிமந் திரியிவ்வா
றியம்பு வானால். (181)
449. ஞானமே தன்மவித்த காமமெனு மொருநான்கும்
நந்த நந்தும்
ஊனமே லொன்றுமிலா நம்படையி னூக்கமெவர்
உரைக்க வல்லார். (182)
450. அன்னவனும் வியந்துரைப்ப வஞ்ஞனெனுங் கொடும்பாச
அரச னம்மா
முன்னவனு மொருவனுண்டோ வெனவிருந்தான் சேனையுந்தான்
முழங்கி்ற் றேயால். (183)
ஞானவினோதன் கூற்று
வேறு
451. எந்தை யெங்கோன் சிவஞான தேசிகன்
இரும ருங்கினு மெங்கு மிருக்குநற்
சிந்தை யன்பாற் கனிவோரின் முன்புறச்
செய்த மாதவன் சென்றெதி ரெய்தியே. (184)
452. போற்றி போற்றிமெய்ஞ் ஞான புரந்தர
போற்றி போற்றியென் றேபுண்ட ரீகத்தை
மாற்றி யேற்றம் வழங்குசெஞ் சேவடி
மௌலி தாழ்த்து வணங்கி வணங்கியே. (185)
453. கலையொ துக்கித்தன் வாய்புதைத் தெம்பெரும்
கருணை நாயக கண்டருள் செய்கென
நிலையொ துக்கிவெம் பாசன் விளைத்தமை
நின்று விண்ணப்பஞ் செய்தய னிற்பவே. (186)
வேறு
454. பழியுற்ற பாசமன்ன னவனால் வையம்
படுந்துயரங் கேட்டருளிக் கருணை மாரி
பொழியுற்ற திருக்கடைக்கண் சாத்திப் பாத
புண்டரிக மடியர்முடி பொலிய வைத்தே. (187)
வேறு
455. வேதனா ரணனறியாப் பாதஞ் சூட்ட
மேதினிமே லெழுந்தருளும் விமல போத
நாதனார் திருக்கடைக்கண் பெற்றா ரன்றோ
நானதுவா னேனென்னு நலத்தி னாரே. (188)
456. எம்பிரா னெங்கோமா னெங்க ளையன்
எமையாளுஞ் சிவஞான குரவ னென்னும்
தம்பிரா னடிசூடப் பெற்றா ரன்றோ
தற்சொரூ பானந்தந் தனைப்பெற் றாரே. (189)
457. வன்பாசத் தளையறுத்து மயக்கந் தீர்ந்து
மாமாயா புரமழிப்பார் வானோர்க் கெய்தா
நின்பாத புண்டரிக நீங்கா ரன்றோ
நீங்குவா ரெவருலகி னீங்க வல்லார். (190)
வேறு
458. நன்மையில்லை தீமையில்லை சுசீலமு மில்லை
நாடுவதொன் றிலைபுரியு நற்றவமு மில்லை
மென்மையில்லை வன்மையில்லை விருப்புவெறுப் பில்லை
மேலோய்நின் பதகமலம் விடாதவருக் கன்றோ. (191)
459. குலமில்லை குணமில்லை குறியதுவு மில்லை
கோலமில்லை கரணமில்லை குளிர்புனலு மில்லை
நலமில்லை வழியில்லை யாச்சிரம மில்லை
நற்கருணா லயநின்றா ணயந்தவருக் கன்றோ. (192)
வேறு
460. பாலருட னுன்மத்தர் பசாச ரென்னப்
பாடியுமா டியுமவைகள் பயிலா தேயும்
சீலமுட னினிதிருந்துந் தனித்து மெங்கும்
திரிபவர்நின் றிருவடிக்கீழ்ச் செறிந்தா ரன்றோ. (193)
461. வார்பொருது பணைத்திறுமாந் தெழுந்து விம்மும்
வன்முலையின் மூழ்கிடினு மயக்கந் தீர்வார்
சீர்பெருகு சிவஞான தேசி காநின்
திருவடியே யன்றியார் தீர்க்க வல்லார். (194) (194)
சிவஞானதேசிகர் ஞானவினோதனைப் போர்புரிய விடுத்தல்
462. இவ்வண்ணம் பலவியம்ப வினிது நோக்கி
எந்தைபிரா னியன்ஞான வினோத னாரைச்
செவ்வண்ண மஞ்ஞனவ னாவி யுண்டு
திரும்புகென வருள்செய்தான் செய்த லோடும். (195)
ஞானவினோதன் அகலுதல்
463. எங்கோமா னெம்பெருமா னெங்க ளீசன்
இணையடித்தா மரைமுடிமே லினிது சூடித்
தங்கோமான் றனைவிடைகொண் டகன்றா னன்னோன்
தனித்தானை யெழுச்சியெவர் சாற்ற வல்லார். (196)
ஞானவினோதன் படைத்திறம்
வேறு
464. தேசுப டாத யோக வாசி பூணுவ
தீமைபொ றாது மாக மூடி யோடுவ
சீர்தவ றாம லேக வீதி போவன
சீலம்வி டாத மோன வீர ரூர்வன
மாசுப டாத வேத கீத வோசைய
மாலையு றாது வாச னாதி வீசுவ
வாய்மையு லாவி ஞான தீர மேபெறு
மாரத ராசி கோடி கோடி கோடியே. (197)
465. தூய்மையு றாத வாதை சாகை சாடுவ
சோதிய லாத மோக சாலம் வீசுவ
தோடமி லாத வேக போக மேவுவ
சோகமு றாத மோன வீர ரேறுவ
வாய்மையு றாத மூக யூக மோதுவ
மானமி லாத யோக வீதி போவன
மாமத மாறி ஞான தீர மேபெறு
வாரண ராசி கோடி கோடி கோடியே. (198)
466. வேரொடு மூல மாயை மாய வேறுவ
வேறறும் யோக மான வீதி போவன
மீளரு மூழி யூழி மீள மீள்வன
வீரிய மோன சீல ரேறி யாடுவ
பாரொடு கீழு மேலு மோடி நீடுவ
பாவும னாதி கூடொ ணாது தாவுவ
பாசவி ரோத ஞான தீர மேபெறு
பாய்பரி ராசி கோடி கோடி கோடியே. (199)
467. ஊனமி லாத வேத நீதி போவன
ஓகைநி டேதம் யாது மோவி லாதன
ஊறுப டாத கேள்வி வாள்வி டாதன
ஊசன்ம னாதி சாய வேக மாவன
தானத போத னாதி மேவி வீறுவ
தாழ்வுப டாத மோன வாகை சூடுவ
தானச மாதி ஞான தீர மேபெறு
தானையி ராசி கோடி கோடி கோடியே. (200)
வேறு
468. மலைய டங்கலும் பொடிபட விடிபட
மகித லங்களுந் தொலைபட வுலைபட
மகர பந்தியுஞ் சிதறிட வுதறிட
வருண சிந்துவுங் கதறிட விதறிட
நிலைய டங்கலுங் குலைபட வலைபட
நெடிது கொண்டலுஞ் சொரிதர நெரிதர
நெறிம யங்கிடும் பொழுதினு மொழிவறு
நிலையி னின்றுதம் பரிசென மகிழ்வரே. (201)
469. மலைய சந்தனம் புழுககி னறுவிரை
மணநி றைந்தகுங் குமநறை பளிதமும்
வகுள சண்பகங் கருமுகை யிவைகொடு
வழிப டுந்திற மகிழ்வினு மகிழ்விலர்
அலைகு லைந்திடும் படிமயிர் மயிர்தொறும்
அரியி னுஞ்சுடுங் கனலிடை முழுகென
அழலி லுந்தினும் பிறபிற புரியினும்
அசைவ தொன்றினுஞ் செறிவில ரமைவரே. (202)
வேறு
470. உரையிடையான் மறந்தொழிந்தே னுவகைகலுழ்ச் சியுமவருக்
குளவா லூழின்
வரையிதுநாங் கழித்தனமென் றின்புறுவர் துன்புறுவர்
வருத்தி னோர்க்கே. (203)
471. அருண்ஞான விறல்வாய வடல்வினையைச் செகுக்குநெறி
அறிய வோதின்
வருமாய வினைதுடைப்பா ருணர்வதனான் முன்னைவினை
மாந்தி மாய்ப்பார். (204)
472. அருந்தன்முதற் றொழிலொப்ப வகமொவ்வா ஞானவிற
லவரை வேறா
வருந்திமுதற் காண்பரிதான் மற்றவர்தம் மளவையெவர்
வகுக்க வல்லார். (205)
473. மேலோடு கீழினுக்கு மேலோடு கீழாகி
மேவு திக்கின்
பாலோடு சூழினுக்குஞ் சூழாகுந் தானைநிலை
பகர்வ தேயால். (206)
வேறு
474. அவ்வாறு நிறைந்தபெருஞ் சேனை நோக்கி
அஞ்ஞனவன் றன்னைநீ ரழிக்கு நீதி
எவ்வாறு கூறுகென வருள லோடும்
எய்திநிரு பகன்சரண மிறைஞ்சிச் சொல்வான். (207)
நிருபகன் கூற்று
வேறு
475. அழிந்தபுன் மலங்க ளாதி
அருவருப் பவையே யன்றி
ஒழிந்தவை யெவையோ கூற
ஒள்ளிழை யார்க ளென்றே. (208)
476. முன்பொடு பின்பெ லாமும்
மூளையும் வழும்புந் தோலும்
என்பொடு நரம்பு மாய
இறைச்சிப்போ ரதுவே யன்றோ. (209)
477. விழுக்கொடு வெண்ணஞ் சல்லா
உகிர்மயி ருமிழ்கட் பீளை
புழுப்பயில் கின்ற பொல்லாப்
புலாற்பொதி யதுவே யன்றோ. (210)
478. வாய்மையொன் றிலாத புல்லர்
மயங்குவர் துளும்பு புண்ணீர்த்
தூய்மையொன் றிலாத புன்றோற்
றுருத்திதா னதுவே யன்றோ. (211)
வேறு
479. சிக்கறாது சுருண்டுநாறிய
செறிமயிர்த்திர ளதனைநீர்
மிக்கறாது திரண்டகாரென
வினவுவார்சிலர் வீணரே. (212)
480. கறையழுக்கொடு வேர்வைதுற்றிய
கடியநெற்றியை நெடியவெண்
பிறையொழுக்கம தென்றுமால்கொடு
பேசுவார்சிலர் பேயரே. (213)
481. ஊழல்கொண்டு குறும்பிபற்றிய
ஊன்முடக்கினை யுயர்தரு
நீழல்கொண்டுல வூசலென்று
நிகழ்த்துவார்சில நீசரே. (214)
482. புல்லிதாமென் மயிர்குருத்தெழு
புருவமென்பது வெருவுபோர்
வில்லிதாமென மொழிவரேயருள்
விளைவிலார்சில வெறியரே. (215)
483. புற்புதம்மென நீர்நிறைந்தழி
பூளைநாறிய புண்களை
அற்புதம்மென வயில்களென்பவர்
அறிவிலார்சில ரவர்களே. (216)
484. பாசிபற்றிய புரையைமென்குமிழ்
பகரினொக்கும தென்பரே
வேசிபற்றிய பொழுதுமால்வழி
விட்டசிந்தையின் மெலிவரே. (217)
485. கோழையூறிய வாய்விளிம்பொரு
கொவ்வையென்று குறிப்பரே
ஏழைமானிட ராயினார்சிலர்
இருமைதானு மிழப்பரே. (218)
486. வெய்யபல்லெனும் வெள்ளெலும்பினை
மெல்லென்முல்லை யரும்பொடு
துய்யநித்தில மொக்குமென்றணி
சொல்லுவார்சில சுமடரே.. (219)
487. ஊத்தையாகிய வாயையாம்பலை
ஒக்குமென்ன வுரைப்பரே
சீத்தையாகிய வேண்மலர்க்கணை
சிந்தைநொந்து திகைப்பரே. (220)
488. புலவறாம லிடந்தொறுஞ்செறி
புரைகடுற்றமு கத்தினை
நிலவறாம லெழுந்தசந்திரன்
நிகர்க்குமென்பவர் நீசரே. (221)
489. துளைபடுங்கள மதனைமுத்தணி
சுரிமுகப்பணி லம்பசும்
கிளைபடுங்கமு கென்பர்மாய
கிலேசமேவுமி லேசரே. (222)
490. தோல்பொருந்திய தடியைநல்லதொர்
தூயவேயிணை சொல்வரே
மால்பொருந்திய நெஞ்சராகி
மயங்குவார்சிலர் மனிதரே. (223)
491. தசைநிரம்பி யெழும்புடைப்பிரு
சயிலமென்பர் சழக்கரே
நசைநிரம்பி யனங்கனுக்குளம்
நைந்துநொந்தற நலிவரே. (224)
வேறு
492. சிறுமைபுரி சேயிழையார் சிங்காரங் களுமொன்றா
மறுமைபுரி மாதவரு மதிப்பரோ மதியாரால். (225)
493. சல்லாபம் பெற்றபெருந் தனிநடையார் தடமுலையார்
உல்லாச நடையினையு மொன்றாகக் கொள்வாரோ. (226)
494. மெய்யாய வுரைபயில்வார் விளங்கிழையார் விளம்புகின்ற
பொய்யாய வுரையையுமோர் பொருளாகப் போற்றுவரோ. (227)
495. முற்றின்ப முற்றிருக்கு முனீந்திரரு மொய்குழலார்
சிற்றின்ப மற்றதுமோர் சிறப்பாகச் செறிவாரோ. (228)
496. இயலாய நோக்கினையே யெய்தினோ ரேந்திழையார்
மயலாய நோக்கினையு மற்றொன்றா மதிப்பாரோ. (229)
497. ஓங்குகொடி மதவேளுக் குறுமீனம் படைமடவார்
தாங்குகொடி வாய்மைபடை தயிரியமென் சக்கிரமால். (230)
498. தையலா ருடற்பாவை தானொன்றிற் படும்படவே
மையலார் வேளுயிரு மாளுமொரு நொடிவரையின். (231)
வேறு
499. இனைய வண்ண நிருபகன் கைதொழு
திறைவன் பாத மிறைஞ்சி யுரைத்தலும்
அனைய வண்ணம் பொறையன் முதல்வன
தடிவ ணங்கி யறிய விளம்புவான். (232)
பொறையன் கூற்று
வேறு
500. தீதுறுநா வுடையார்கள் சீறுவரே லவர்களுடன்
வாய்திறவா திருந்துவிடு மதுவன்றோ வன்பாதல். (233)
501. வன்சொல்லால் வைதாரை வாழ்த்தினர்போல் மதித்தென்றும்
இன்சொல்லா லவர்பகைதா னிடிப்பதன்றோ வெனதாண்மை. (234)
502. வறுத்தாலு மிடித்தாலும் வாளதனான் மயிர்தோறும்
அறுத்தாலு மியல்பென்னு மதுவன்றோ வவிரோதம். (235)
503. மிகைகொண்டு கடுங்கோபன் மேல்வருங்கா லவனையிள
நகைகொண்டு வென்றுவிடு மதுவன்றோ நல்லாண்மை.. (236)
504. வசையேது வசையல்லா வாழ்த்தேது வாழ்வென்னும்
நசையேது நசையல்லா நலிவேது நாடுங்கால். (237)
505. தமராவார் பிறராவார் தாமற்றா லென்னுடனே
அமராவார் பிறரேயோ வடுங்கோப னாரேயோ. (238)
506. இவ்வாறு பொறையனெடுத் தியம்புதலு மடிவணங்கிச்
செவ்வாறு செப்புவான் செப்பரிய சந்தோடன். (239)
சந்தோடன் கூற்று 507. நிலையாய பேரின்ப நிரதிசயப் பொருளுடையார்
தொலையாய வழிபொருளும் பொருளாகச் சூழ்வாரோ. (240)
508. பேய்விண்டு கேட்டாலும் பெரிதுமுவந் தருள்வதன்றி
வாய்விண்டு கேட்பாரோ மாசற்ற நாவுடையோர். (241)
509. திருந்தித்தாம் வளனெய்திச் சிறப்புறுமா றெண்ணாரோ
வருந்தித்தா முழந்தாலும் வாராது வாராதால். (242)
510. எத்துணையும் போகங்க ளெய்திடினு மாசையுண்டேல்
அத்துணையு மேன்மேலு மவாய்நிற்ப தமையாதால். (243)
511. ஆராத பேராசை யற்றவரே மற்றெவர்க்கும்
வாராத பேரின்ப வளனெய்து மாட்சியரால். (244)
512. ஏகாத நல்குரவு மின்பமெனக் கொண்டிரக்கப்
போகாத புகழன்றோ புகழினுக்கும் புகழாதல். (245)
513. சாம்போது படைத்தபொரு டானெங்கே யிவனெங்கே
போம்போது வெவ்வேறாப் போவதுமப் பொருளேயால். (246)
514. ஓதினால் வயிறுள்ள தொருசாணே யொருசாணும்
ஏதினா லமையாதா லெவன்கொலோ வெவன்கொலோ. (247)
515. நிராசையெனுஞ் சுடர்வாளா னேரெதிர்ந்த வுலோபனைநான்
பராசயமொன் றில்லாமற் பற்றியடல் புரிவேனால். (248)
வேறு
516. மாறு கொண்ட வுலோபனை வெல்வகை
வணங்கி நின்றுசந் தோடன் வகுத்தலும்
வீறு கொண்ட விவகார பராமுகன்
வெய்ய மோகனமர் வெல்வகை சொல்லுவான். (249)
விவகாரபராமுகன் கூற்று
517. அளவி லாதசன னங்க டோறுநம்
அளவி லாமல்வரு மன்னையு மத்தனும்
பிளவி லாதவரை யொப்பதை யன்றிப்
பிறிது முண்டுகொ லாமிது பொழுதினும். (250)
518. புழுவு திக்கு முடம்பின் மலத்திற்
புக்கு டன்புழுவ தொப்பதை யன்றி
வழுவு திக்கு முடம்பினை யொப்ப
வந்து தித்த புழுக்களும் வேறோ. (251)
519. இன்னு மேதிலர்கண் முன்னும தொப்பார்
இரண்டு நாளையிடை வாழ்பவ ரன்றோ
அன்னை தாதைமனை யன்புறு மைந்தர்
ஆதி யாயகிளை யாவையு மன்றே. (252)
520. சுற்ற முற்றுமொரு கொள்ளி கொளுத்தித்
தூர நின்றகல்வ ராருற வாவார்
சற்று முற்றவுட லும்முத வாதாற்
றாம லாமலுற வேது தமக்கே. (253)
521. அலைய டங்கவினி யாடுது மென்னா
ஆழி யின்கரை யணைந்தவ ரொப்பார்
நிலைய டங்கமனை வாழ்வி லிருந்தே
நீத்து நாமென நினைத்துழல் வாரே. (254)
522. ஒருங்கி யாவினையும் விட்டவர் விட்டார்
ஒன்று விட்டிலரும் விட்டில ரோடி
மருங்கு மல்கிவரு சைவல மொப்ப
வந்து மூடிவிடும் வழியது வாக. (255)
523. உறவ தாகுமிழி பந்தம தோடே
உற்ற பந்தமவை யெத்துணை யேனும்
துறவ தாகும்யம தண்டமெ டுத்தே
துகள்ப டும்படி தகர்த்தடல் வேனால். (256)
வேறு
524. பரவியெதிர் விவகார பராமுகனார் பகருதலும்
பகரொ ணாத
வரகுணனா கியசாந்தன் வாய்புதைத்துத் தனதாண்மை
வகுப்ப னேயால். (257)
சாந்தன் கூற்று
525. குலனில்லேன் வலனில்லேன் புகழில்லேன் மேலாய
குணனு மில்லேன்
புலனில்லே னலனில்லே னெனப்பணிந்து மதத்தன்வலி
போக்கு வேனால். (258)
526. அறம்புரியே னறந்திறம்பா வரும்பொருளீட் டிலன்காதல்
அமைந்த காமத்
திறம்புரியேன் வீடில்லே னெனத்தாழ்ந்து மதத்தனுரை
செகுப்ப னேயால். (259)
527. தவம்புரியே னிரப்பவர்க்கொன் றேதேனு மளித்தறியேன்
சார்பு மில்லேன்
அவம்புரிவே னலனல்லே னெனவடங்கி மதத்தனடல்
அழிப்ப னேயால். (260)
528. பொல்லாரோ டிணங்கவல்லேன் போவதுவு மாவதுவும்
புத்தி செய்யேன்
நல்லாரோ டிணங்குகிலே னெனத்தாழ மதத்தனடு
நடுங்கு வானால். (261)
529. புன்மைக்கே நனிபெரியேன் பொறிவழிபோ யறிவழிந்து
புலம்பு கூர்வேன்
நன்மைக்கே நனிசிறியே னெனத்தாழ்ந்து மதத்தன்வலி
நலிவ னேயால். (262)
530. நான்பெரியே னென்போன்முன் னான்பெரியே னென்னாது
நல்லோய் நீயே
தான்பெரிய னான்சிறியே னெனக்குழைந்து மதத்தனொடு
தாக்கு வேனால். (263)
531. புழுவிற்குங் குணநான்கே யெனக்குமஃ தென்றாலும்
புரியும் பொல்லா
வழுவிற்குப் புழுவொவ்வா யான்பெரிய னெனமதத்தன்
வலிநில் லாவால். (264)
532. வணங்குவரி சிலைவாளி தைக்குமெனும் வழக்காலிவ்
வையந் தன்னில்
வணங்குமஃ தியாவதென வணங்குவதன் றோநன்கு
மதிப்பே யாதல். (265)
533. ஆழ்வதரு மணிமிதப்ப தாழியிடைத் துரும்புதுலை
அதனிற் பெய்யத்
தாழ்வதுயர் வதுவென்னத் தாழ்வதன்றோ வெனதுபெருந்
தலைமை யாதல். (266)
534. எல்லவர்க்கு மொப்பதன்றே யென்றாலும் பணிவாதல்
இருமைத் தாய
செல்வருக்கே மேலுமொரு செல்வமெனச் செல்வதன்றோ
செல்வ மாதல். (267)
வேறு
535. சாந்தனடி பணிந்தினைய வாறு கூறத்
தம்பிரா னிருசரணந் தலைமேற் கொண்டு
போந்தமுத சீலனார் மகிழ்ந்து தாஞ்செய்
பொருபோரின் றிறமனைத்தும் புகல்கின் றாரால். (268)
அமுதசீலன் கூற்று
வேறு
536. தன்னுயிர்க்கு நலம்வேண்டு மதுபோலத் தராதலத்து
மன்னுயிர்க்கு நலம்வேண்டு மதுவன்றோ வாழ்வாதல். (269)
537. தன்னாக்கந் தனக்குவகை தலைவருமேற் பிறன்மாட்டு
மன்னாக்கந் தனக்குவகை வாராத வகையெவனால். (270)
538. அறிவாக்க முருவாதி யயலார்த மிடைக்காணிற்
பிறவாக்கம் வேண்டுவரோ வதுதமதாப் பெட்டுயர்வர். (271)
539. நான்பெற்ற பேறுலகம் பெறுகென்பார் நலனயலார்
ஏன்பெற்று வாழ்வரென விகலுமா றெவ்வாறால். (272)
540. எல்லாருந் தமைப்போல்க வென்பார்முன் னிகலேற்றுப்
பொல்லாத மாற்சரியன் போர்புரித லெவ்வாறால். (273)
வேறு
541. இன்ன தன்மையின வெந்தைபி ரான்முன்
எய்தி வம்மர்பல ரெத்தனை கோடி
அன்ன தன்மையினி லோதுத லோடும்
ஐய னும்மக மகிழ்ந்தன னன்றே. (274)
542. இந்த வண்ணமியன் ஞானவி னோதன்
ஏற்ற மிக்கபடை யாவு மிறைஞ்சித்
தந்தம் வென்றிதழு வுந்தொழி றம்மிற்
றாழ்வி லாதவகை சாற்றுத லோடும். (275)
ஞானவினோதன் போர்க் கேகல்
543. தானை கண்டருளி யின்புறு காலைத்
தலைவ ணங்கிவிடை கொண்டறி வில்லான்
சேனை யொன்றொழிய வெல்லுது மென்னாத்
திண்மை யோடுமெதிர் சென்றன னன்றே. (276)
ஞானவினோதன் படையின் செயல்
வேறு
544. மறைகளே வாசியா வாய்மையே பாகனா
மன்னு தத்வத்
துறைகளே தேர்களா வேறினர் சூடினார்
துணைவர் தாளே. (277)
545. போதகம் போதகம் தேர்வகை தேர்வகை
புன்மை யுற்ற
சாதகந் தீர்வகை வாசியே வாசியார்
தம்மை யொப்பார். (278)
546. பிறிவிலா னானைதேர் புரவிகா லாளிவை
பெரிது மெய்தி
அறிவிலா னமருமா யாபுரங் குறுகிநின்
றார்த்த வன்றே. (279)
547. வரவொடு போக்கிலா வகையினாற் சூழ்கென
மாசில் சேனை
விரைவொடு வஞ்சகன் வாழுமா யாபுரம்
விரவ முற்றும். (280)
வாயில் காவலர் அறிவித்தல்
வேறு
548. பெற்றமூரு மவனலன் பிரமனல்லன் மாலலன்
மற்றைமூவர் மூலமே வந்ததென்ன வாயிலோர். (281)
வேறு
549. அகம்புகுந் தடங்கவே யடங்கலும் மவதியே
சகம்புகுந்த வென்றுகண்டு தம்முளே யடங்கவே. (282)
550. எங்குமாய் நிறைந்துநின்ற விறைவனேயொர் வடிவெடுத்
திங்குமேவு கின்றன னென்றுசொல்லு மெல்லையே. (283)
அஞ்ஞன் படைவீரர் கூற்று
551. ஏகதேசி யாகவே யெங்குமாய் நிறைந்தவர்
போகவந்த வேதுவேது புகல்கவென்பர் சிலர்களே. (284)
552. அருவமென்ற வீசனா ரகன்புவிக்க ணெய்தவந்
துருவமெய்து மாறுநன்று நன்றெனா வுரைப்பரே. (285)
வேறு
553. அறிவி லன்புர மழிந்ததினி யென்றுமொழிவார்
அமையு நந்துழனி யென்றமைவு வந்துவிடுவார்
செறியு நந்தவ முடிந்ததினி யென்றுதெளிவார்
தெரிய வுஞ்சமய மொன்றுமிலை யென்று திரிவார். (286)
554. ஒன்றி யெங்குமுற நின்றபொரு ளின்றுபடிமேல்
உருவெ டுத்துவரு கின்றதென வுற்றுமொழிவார்
வென்றி கொண்டணைய விங்குவரு கின்றவிரகோ
மிகவு நன்றென வியந்துநகை கொண்டுதொழுவார். (287)
555. குலம டங்கலு முடிந்தது முடிந்ததெனவே
குடிகெ டும்படி புகுந்ததறி வென்று குலைவார்
சொலமு டிந்திறுவ தொன்றென மொழிந்தகணியார்
சொலவு மின்றுதலை வந்ததென நின்றுசுழல்வார். (288)
556. மொழிவ தென்கொல்பவ முழுதுமிது பொழுதுகெடுவீர்
முடிய வந்தடர்தல் காணுமினி யென்றுமொழிவார்
அழிவ தென்கொலினி யஞ்ஞனுடை நாமமறவே
அழியு மென்றயர்வர் தங்களி னடங்கவிவையே. (289)
வீரர் அஞ்ஞனுக்கு அறிவித்தல்
வேறு
557. தீமையுற்ற தானையஞ்ஞ தீரனுக்கு வீரர்போய்
வாய்மையுற்ற ஞானசேனை வந்ததென்று கூறவே. (290)
558. முன்னைவெல்ல வந்தசேனை மூவர்சேனை யாதலால்
என்னைவெல்ல வந்தசேனை யாவர்சேனை யென்னவே. (291)
559. உம்பரும்ப ரீசனென்ன வூதுசின்ன வோசையே
இம்பரெங்கு மானதே யாமறிந்த தென்னவே. (292)
அஞ்ஞன் கூற்று
வேறு
560. செப்பரிய காமன்முதல் வீரரமர் வென்றடுவர்
தேகமுள னாகிலவனை
ஒப்பரிய சோதியெனி னென்கணெதிர் நிற்பதிலை
ஒல்வதல வெல்வதுவுமே. (293)
561. உடைந்தவர்க ளன்றியெவர் மண்ணவரில் விண்ணவரில்
உற்றமறை செற்றபடியே
அடைந்தவர்கள் மாரன்முத லானபடை வீரரை
அடர்ந்துசெரு வென்றவர்களே. (294)
562. அங்கமதி லிந்திரிய மனதினொடு புந்தியுயிர்
ஆங்கார மிங்கிவைகளின்
சங்கமெனு மேழணியி லொன்றுவிடு விப்பினும்
தானையொரு தலைவனிவனே. (295)
563. மாறுகெட வாகையுட னென்னையட வந்தவனை
வந்தெதிர் கலந்தவுடனான்
வீறுகெட மீளினெனை யஞ்ஞபதி யென்றழையல்
வேறுபெய ரிட்டழையுமே. (296)
564. இன்னவகை கூறிமத னாதிபடை யத்தனையும்
ஏவியிறை வன்படையுடன்
அன்னவகை போர்புரிக வென்னவறி வன்படையொ
டஞ்ஞபதி படைபொருததே. (297)
அஞ்ஞன்படை அஞ்சுதல்
வேறு
565. கடாவிடை யாகிய தேர்வகை காண்டலும்
கடாவிடை யாகிய தேர்வகை கண்டில. (298)
566. புலனெனப் பெயரிய போதகந் தோன்றலும்
புலனெனப் பெயரிய போதகந் தோன்றில. (299)
567. கதிசேர் கரணக் கடும்பரி பாய்தலும்
கதிசேர் கரணக் கடும்பரி பாய்ந்தில. (300)
வேறு
568. அஞ்சாம லறிவன் படைத்தானை காண
அஞ்ஞன் படைத்தானை யணியாக வெழுமே
எஞ்சாம லீராறு ரவியும் புகுந்தால்
இரியாம லிருண்முற்று மெதிர்நிற்கு மன்றே. (301)
ஞானவினோதன் போர்புரியக் கட்டளையிடல்
வேறு
569. தீக்கு நின்றவம ரஞ்சி யோடுவது
செய்க லாததிறல் வீரரை
மாய்க்கு கென்றருள வீரர்வீரனை
வணங்கி மற்றிது வகுப்பரால். (302)
ஞானவினோதன் படைவீரர் அவனை வினாவுதல்
வேறு
570. பாச ராசனார் படையு நம்பெரும்
படையும் வேறறி பரிசு பான்மையிற்
பேசு வீரெனா வறிவு றுந்திறம்
பெரிய வன்பினிற் பேசு வானரோ. (303)
ஞானவினோதன் தன்படைக்கும் அஞ்ஞன் படைக்கும் உள்ள வேற்றுமை கூறல்
571. மாதர் பூண்முலை மருவி வாழிலென்
மன்னு மெய்த்தவ வடிவு பூணிலென்
கோதில் வாய்மையைக் கண்ட தூயவர்
கொண்ட கொள்கையே கொள்கை யாகுமால். (304).
572. தேறு மோனமா ஞான போதனார்
செய்த செய்கையே செய்யு மாதவம்
கூறும் வாசகம் யாவு மந்திரம்
கொண்ட கோலமே கோல மாகுமால். (305)
வேறு
573. நன்றிதுதீ திதுவென்று ணாடார்க ணவையிலோர்
நவையு ளாரும்
நன்றிதுதீ திதுவென்று ணாடார் ளாயினுந்தான்
நாடின் வேறால். (306)
574. குற்றமிது குணமிதெனக் குறியார்கள் குறியுடையார்
குறியி லாரும்
குற்றமிது குணமிதெனக் குறியார்க ளாயினுந்தான்
குறிப்பின் வேறால். (307)
575. அறம்பாவ மவையிரண்டு மறியார்க ளறிவுடையார்
அறிவி லாரும்
அறம்பாவ மவையிரண்டு மறியார்க ளாயினுந்தான்
அறியின் வேறால். (308)
576. வெறுப்பதிது விழைவதிது வெனத்தெரியார் மேலானோர்
மேலல் லாரும்
வெறுப்பதிது விழைவதிது வெனத்தெரியா ராயினுந்தான்
வேறு வேறால். (309)
577. விலக்கீது விதியீது வெனத்தெளியார் மேலானோர்
மெய்யி லாரும்
விலக்கீது விதியீது வெனத்தெளியா ராயினுந்தான்
வேறு வேறால். (310)
வேறு
578. பகைநட்பு நொதுமலிது வென்றங் கொன்றும்
பாரார்கள் பயன்றெரிவார் பயனி லாரும்
பகைநட்பு நொதுமலிது வென்றங் கொன்றும்
பாரார்க ளாயினுந்தான் பார்க்கின் வேறால். (311)
579. தேசமிது காலமிது வென்றங் கொன்றும்
தேரார்க டேர்ந்துள்ளார் தேர்வி லாரும்
தேசமிது காலமிது வென்றங் கொன்றும்
தேரார்க ளாயினுந்தான் றேரின் வேறால். (312)
580. ஆக்கமிஃ தழிவதிது வென்றங் கொன்றும்
ஆயார்க ளாய்ந்துளோ ராய்வி லாரும்
ஆக்கமிஃ தழிவதிது வென்றங் கொன்றும்
ஆயார்க ளாயினுந்தா னாயின் வேறால். (313)
581. மேன்மையிது கீழ்மையிது வென்றங் கொன்றும்
வினவார்கள் விளைவுணர்ந்தோர் விளைவி லாரும்
மேன்மையிது கீழ்மையிது வென்றங் கொன்றும்
வினவார்க ளாயினுந்தான் வினவின் வேறால். (314)
582. இழிகுலநற் குலமீதா லென்றங் கொன்றும்
எண்ணார்க ளியல்புணர்நதோ ரியல்பி லோரும்
இழிகுலநற் குலமீதா லென்றங் கொன்றும்
எண்ணார்க ளாயினுந்தா னெண்ணின் வேறால். (315)
583. செயிர்த்தவர்பா லருள்வாரு மருளி லாரும்
சிந்தனைநோந் திறமொத்துந் தெரியி னொவ்வார்
செயிர்த்தவர்பா லருளுடையா ரவர்க்கு நோவார்
தீதுதுடையார் தமதுடம்பிற் செயிர்க்கு நோவார். (316)
584. செயவேண்டுந் தவஞான வொழுக்கத் தோரும்
தீம்பருஞ்செய் யாமையினாற் சேர்ந்துஞ் சேரார்
செயவேண்டுந் தவமெல்லாஞ் செய்து தீர்ந்தார்
தீதிலார் தீத்தனாற் றீர்ந்தார் தீயோர். (317)
585. கற்றுணரத் தகுங்கல்வி மேலா னோரும்
கயவரும்விட் டொழிந்தமையா லொத்து மொவ்வார்
கற்றுணரத் தகுங்கல்வி யெல்லா நல்லோர்
கற்றொழிந்தர் கரிசதனாற் கயவர் நீத்தார். (318)
586. கனிந்துகனிந் திருந்திரங்கிச் சோரு மாற்றாற்
கற்றவரு மற்றவரு மொத்து மொவ்வார்
கனிந்துகனிந் தருணோக்கிற் சோர்வர் கற்றோர்
காரிகையார் மருணோக்கிற் சோர்வார் கல்லார். (319)
587. வேறுபகுத் தொன்றினையுங் காணா வாற்றால்
மேலோருங் கீழோரு மொத்து மொவ்வார்
வேறுபகுத் தொன்றினையுங் காணார் மேலோர்
வியாபகத்தாற் கீழோர்தம் வெளிற்றாற் காணார். (320)
588. மண்டிவரு மகவருடத் தும்பால் கொங்கை
மணாளன்வரு டக்காமம் வருமா போல
உண்டிமுதற் றொழிலொ த்து மந்த ரங்கத்
துயர்ந்தோரு மிழிந்தோரு மொவ்வா ரொவ்வார். (321)
589. அருட்படையு மருட்படையும் பகுத்து நோக்க
அறிவுறுத்தி யறிவுடையோ னறிவொன் றில்லா
மருட்படையை யடுகெனத்தன் படையை யேவ
மாயவஞ்ஞன் படைமாய்ந்த வண்ணங் கேண்மின். (322)
ஞானவினோதன் படைவீரர் அஞ்ஞன் படையை அழித்தல்
வேறு
590. போர்புரி மதன்னை நிருபகன்
பொருதடல் புரிதலும்விருதுடன்
வார்பொரு வனமுலை மடநலார்
வஞ்சமு மாலு மடிந்தவே. (323)
591. வெவ்விய கோபனை மறனொடு
மேவிய வின்சொல் விளைத்தெழு
செவ்விய பொறைய னழித்தனன்
சீறிய கொலைநலை சிந்தவே. (324)
592. கெடாதுறு கின்றசந் தோடனும்
கேள்வி யெனுஞ்சுடர் வாளினால்
விடா துறு கின்றவு லோபனை
வீட்டின் னாசையும் வீய்ந்ததே. (325)
593. ஆர்தரு சோக மகிழ்ச்சியும்
ஆற்றிட மோகனை யுற்றுவாழ்
சீர்விவ கார பராமுகன்
சீறினன் மயலு மழுங்கவே. (326)
594. கூர்தரு மாங்கரிப் பாவியைக்
குலைகுலை யும்படி கூடியே
ஏர்தரு சாந்த னழித்தனன்
யானென தென்ப திறப்பவே. (327)
595. அன்னையை யொப்ப வுயிர்த்தொகைக்
கன்புசெ யும்மவி ரோதனால்
மன்னிய வன்மை மடிந்துக
மாய்ந்தது மாற்சரன் வாகையே. (328)
596. ஞானப் பெரும்படை காண்டலும்
ஞாட்பிடை யேனைய பாசனார்
ஊனப் பெரும்படை யோடின
ஒன்றொழி யாம லுடைந்தரோ. (329)
ஞானவினோதன் படைவீரர் அஞ்ஞனிடங் கூறல்
வேறு
597. தன்னையங் கொழிய வெல்லாஞ்
சமர்க்களத் திழந்து தோற்ற
மன்னையங் கொழிவி லானை
வணங்கென வகுத்த போதே. (330)
அஞ்ஞன் விடை கூறல்
598. நந்துறா தஞ்ஞ னென்னும்
நாமமொன் றிருக்க ஞானம்
உந்துறா தெனது சேனை
உடன்றெழு மென்ன லோடும். (331)
ஞானவினோதன் படைவீரர் கூறல்
வேறு
599. கதிரெழ நிற்பது திமிரமோ வெங்கனல்
கதுவுழி நிற்பது தூலமோ கலுழனுற்
றெதிரெழ நிற்பது நாகமோ மெய்யுணர்
வெய்துழி நிற்பது தொல்வினை யேகொலோ. (332)
ஞானவினோதன் படைவீரர் அவனை வினாவுதல்
வேறு
600. மாயுமிக் காயமும் வீயுமுன் னிளமையும்
மன்னிய கிளைஞருந் துன்னிய போகமும்
சாயுமிச் செல்வமொன் றாகநீ யெண்ணியோ
தம்பிரா னடிதனைச் சார்வுறா தகல்வதே. (333)
வேறு
601. தானவரென் றிருந்தனையோ
தபோதனரென் றிகழ்ந்தனையோ
வானவரென் றிருந்தனையோ
மறைமுதலென் றறிந்திலையோ. (334)
602. வையமதில் வந்தவொரு மானிடனென் றிருந்தனையோ
உய்யுநெறி யெழுந்தருளு மொருமுதலென் றுணர்ந்திலையோ. (335)
603. இடராழி யெடுத்தருளு மேந்தலென வெண்ணிலையோ
சுடராழி செலுத்துமொரு தோன்றலெனத் துணிந்திலையோ. (336)
604. புறத்திமிர மிரித்தொளிரும் புன்கதிரென் றிருந்தனையோ
மறத்திமிர மிரித்தொளிரும் வளர்கதிரென் றறிந்திலையோ. (337)
605. பிறப்பினையு மிறப்பினையும் பெற்றவனென் றுற்றனையோ
இறப்பினையும் பிறப்பினையு மெறிந்தவனென் றறிந்திலையோ. (338)
606. சிவஞான தேசிகன்பொற் றிருவடித்தா மரைவணங்கா
தவஞான தேசிகனென் றவமதியா தயர்த்தனையோ. (339)
607. பவக்குறும்பு தனையெறியும் பரம்பரனென் றறிந்திலையோ
அவக்குறும்பு தனைமேவி யடிக்கமல மயர்த்தனையோ. (340)
608. முப்பொழுது முன்னானோன் முன்னேநின் றனையாகில்
இப்பொழுதே நினைந்தாவி யிழந்தனையே யிழந்தனையே. (341)
அஞ்ஞன் கூற்று
வேறு
609. துய்ய நாயனார் தொண்டர் சொலுந்தொறும்
வெய்ய பாசனு மிக்கெதிர் சீறியே. (342)
610. ஏவு ஞான விறைவ ரெனதெதிர்
மேவு போழ்தினிற் காண்டிரென் வீரமே. (343)
அஞ்ஞன் ஞானரூபியாதல்
611. என்னச் சொன்னசொ லெங்கோன் றிருச்செவி
துன்ன வின்னகை செய்து துனைவனே. (344)
612. வான நாடு மகிதல முந்தொழும்
ஞான வாற்ற னலத்தினைக் காட்டுவான். (345)
வேறு
613. ஆடியும் பாடியுந் தேவரும்
அருமறை தாமுமின் றளவுமே
தேடியுங் காணருஞ் சேவடி
தீயவன் சென்னி சிறப்பவே. (346)
614. இம்பர் மனிதர்க் கெளியவோ
இருந்தவர் நான்முக னாதியாம்
உம்ப ருறாவடி யறிவிலான்
உச்சியின் மீது முதைத்தனன். (347)
615. துன்பமோர் மூவகை தீர்த்தருள்
சோதி சுகோதய வாரிதி
இன்பமோர் மூவுல கேத்தவே
ஈந்தருள் வண்ண மிசைப்பதோ. (348)
616. பிறிவரு மேலவர் தஞ்செயல்
பிறரறி வாலறி வோமென
அறியும தன்றஃ தறிவதும்
அற்று முடிந்த திசையிலே. (349)
வேறு
617. எந்தைபிரான் றிருக்கடைக்கண் சாத்தி மாய
இருட்டறுத்து ஞானவிளக் கேற்றுங் காலை
அந்தமிலா வறிஞரென்று மறியா ரென்றும்
ஆய்வதுண்டோ சுதந்தரம தடைவ ரன்றே. (350)
618. தண்ணருள்சேர் குரவர்பத கமலஞ் சூடத்
தவமுடைய தகவுடையான் றனைவி டாது
நண்ணிவரு சிமிழ்ப்பெவையு மாற்றி மாற்றான்
நலம்பெற்ற திறமினிநா நவிற்று மன்றே. (351)
619. விருப்பு வெறுப் பவையிரண்டும் விட்டு வீடா
வினையூச லாடுமகத் தெழுந்த சோகப்
பரப்புமறுத் தெவற்றினையுந் திரிய நோக்கிப்
பகைநொதும னட்பெவையும் பரிந்திட் டாங்கே. (352)
620. நோக்கரிய விடத்ததனை நோக்குந் தன்மை
நோன்மையரைத் தொடுத்தெவர்க்கு நுவலொ ணாத
நீக்கரிய விருட்டதனைக் கதுவ நோக்கி
நினைப்பரிய கரியிட்டு நீக்கி யன்றே. (353)
621. நோக்குதனோக் கிறத்தலென நோக்கா வண்ணம்
நோக்கழியச் சிதைத்திட்டு நோக்க வுந்தித்
தாக்குமதைத் தவிர்த்தொழியா திறுகி யாங்குத்
தகுவதுதாம் புரிந்துலவாத் தன்மைத் தாயே. (354)
622. குவித்துவிரித் ததிற்றெருமந் துழற்றும் பொல்லாக்
கொடியவிருட் படலமது குலைகுலைய விரைவாற்
பவித்துமிட லுறுத்ததனிற் பொலியுஞ் சோதிப்
பரிசுபெறும் பிரபையிட்டுப் பரிந்திட் டாங்கே. (355)
623. உவகையுடன் கலுழ்ச்சியகத் தெளிவு மற்றை
உளக்கலக்க நிறைந்திகத்தே யுலவா தாகி
இவகைதனிற் செலுத்தலுடன் றிரித்த றானும்
இழந்தடையச் சிறுச்சுடர்விட் டெறித்துப் போந்தே. (356)
624. மாசகலுந் தண்கருணை வாரி யாகி
மற்றுவமை யற்றதனி வளரொளியாய் நிறைந்த
பேசரிய தற்பதத்தே யினிப்பிறிதற் றினிதிற்
பிறங்குகவென் றிடுக்கணது பெயர்த்திட் டாங்கே. (357)
625. ஆற்றலினான் மாமாயா விசயந் தன்னில்
அங்கமுத லோரேழு மறுவின்கா ரணமும்
மாற்றுவகண் டானந்த பூரணமாஞ் சச்சின்
மயமேதன் வடிவாகி வந்ததுமற் றன்றே. (358)
626. உவட்டாத புத்தமுத வாரி யாகி
உணர்வாகி யைங்கோச வுணர்வு மாறித்
தெவிட்டாத தீம்பாகின் சேர்வை யாகித்
திசைமாறித் தெளிகவெனத் தெளித்த போழ்தே. (359)
வேறு
627. எண்ணுமெம்பி ரானைவந் தெதிர்ந்துளா னிறாவகை
மண்ணும்விண்ணு மெய்துறாது மருவினானவ் வொளியொடே. (360)
அஞ்ஞன் படைகள் ஞானம் பெறுதல்
628. உழந்தமன்ம தாதிசேனை யொன்றுமில்ல வாகியே
இழந்துஞான ரூபமாகி யேகமா யிலங்குமே. (361)
வேறு
629. பிறப்பி றப்பொடு பிணங்கினரே
பிறப்பி றப்பொடு பிணங்கினரே. (362)
630. வரவொடு போக்கிடை மாண்டனரே
வரவொடு போக்கிடை மாண்டனரே. (363)
631. ஒளிக்கு முளத்தவ ராயினரே
ஒளிக்கு முளத்தவ ராயினரே. (364)
632. அருவினை யீட்ட மகன்றனரே
அருவினை யீட்ட மகன்றனரே. (365)
633. உணர்வுண ராமை யொழிந்தனரே
உணர்வுண ராமை யொழிந்தனரே. (366)
634. ஒன்றறி யாமை யுதித்தனரே
ஒன்றறி யாமை யுதித்தனரே. (367)
635. நினைப்பு மறப்பொடு நின்றவரே
நினைப்பு மறப்பொடு நின்றவரே. (368)
636. பொறிவழி யேமனம் போனவரே
பொறிவழி யேமனம் போனவரே. (369)
637. வெய்ய பவப்பகை வென்றவரே
வெய்ய பவப்பகை வென்றவரே. (370)
வேறு
638. கல்லிய தும்மக மாயையே
காதரந் தீர்த்தருள் காதலார்
சொல்லிய தும்மொரு வார்த்தையே
தொல்லுல கும்மொரு வார்த்தையே. (371)
639. உய்த்தரு ளுந்தினைப் போதிலே
உணர்வுரு வாகநம் முச்சிமேல்
வைத்தரு ளும்மிரு போதுமே
வாழத்துவ தும்மிரு போதுமே. (372)
ஞானவினோதன் படை மீளுதல்
வேறு
640. உளவி லானுயிர்க் குறுதி செய்தபின்
உணர்வி னாதனை யுற்று வாழ்தரும்
அளவி லாவரும் படையை மீள்கென
அரிய சேனையுந் திரிய மீளுமே. (373)
கண்டோர் ஞானவினோதனைப் புகழ்தல்
641. அங்க மாதிசேர் வஞ்ச மாபுரத்
தாண டங்கலு மடுதல் கண்டுளோர்
எங்கள் தம்பிரா னிசைகள் பாடிநின்
றினைய வண்ணமங் கேத்தி நிற்பரே. (374)
வேறு
642. மனக்கமலங் கறுப்பதுவும் புனற்கமலஞ் சிவப்பதுநீ
வையத் தெய்தி
எனக்கமலம் புரிந்தருளு மிருசரணங் காட்டாம
லிருப்பி னன்றோ. (375)
வேறு
643. பொன்று மமரர் பெருவாழ்வும்
புணர்மென் முலையார் போகமுமே
நன்றென் றிருப்ப துன்றிருத்தாள்
நயவா திருக்கு நாளன்றோ. (376)
644. வையந் தானுஞ் சிறியேங்கள்
வாழ்க்கை தானும் வாழ்நாளும்
மெய்யென் றிருப்ப தவனியினீ
மேவி யாளா விடினன்றோ. (377)
645. இந்நா டெய்தி யிருப்பதும்போய்
எரிவாய் நரகத் திரங்குவதும்
பொன்னா டெய்தி வாழ்வதுநீ
பொலன்றாள் சூட்டாப் போதன்றோ (378)
646. வந்தே புவியிற் பிறப்பதற்கும்
மாண்டு மீள மடிவதற்கும்
அந்தோ வென்றே யிரங்குதனீ
அஞ்சே லென்னா வளவன்றோ. (379)
647. உயிருக் குயிரா முனையுணரா
துலைந்து திரிந்திங் குணரவியாம்
செயிரைச் செறிவ துன்றிருத்தாள்
சேரா திருப்பார் செயலன்றோ. (380)
648. அன்ன மாதி யைங்கோசம்
அவத்தை கரண மகம்புறமாம்
பின்ன மாகிச் சுழல்வர்நின்
பெருமை யறியார் பிறரன்றோ. (381)
649. பற்றா திருக்குஞ் சமயமுமப்
பகுதி யொழுங்கும் பலநெறியும்
முற்றா திருப்ப துன்றிருவாய்
முகுள மலரா முன்னன்றோ. (382)
வேறு
650. எத்தனையு மவதிபெறா திருக்கையுன தியல்பாமெத்
தனையி லெம்மை
வைத்தனையத் தனையதனி னிற்பதெங்க ளவதிநின்சீர்
மதிப்பார் யாரே. (383)
வேறு
651. ஓம்பிடுமிவ் வுடம்பானோம் வாயி லானோம்
உடனிருந்த கரியானோ முணர்ச்சி தீர்ந்த
மேம்படுபே ருணர்வானோ மெல்லா மானோம்
வித்தகனே நீபுரிந்த விளையாட் டென்னே. (384)
652. பொய்யுணர்வங் கென்னவுமங் கதனால் வந்து
பொருந்துபவ மென்னவுமப் புன்மை தீர்ந்த
மெய்யுணர்வங் கென்னவுநின் றொருநீ தானே
விளையாடல் புரிவித்த விரகி தென்னே. (385)
வேறு
653. அல்லல்வெம்பவ வாழிவற்ற வழன்றவீரன தாண்மையைப்
பல்லவாறினி மொழிவதென்னடி பணிமினென்றவர் பணிவரால். (386)
ஞானவினோதன் சிவஞான தேசிகர்பால் ஏகல்
654. ஈறின்ஞான விநோதராண்மை யியம்புவார்க ளியம்பவவ்
வீறினார்தமை யாளுநாதர் விரைம லர்ப்பத மேவவே. (387)
சிவஞானதேசிகர் ஞானவினோதனுக்கு முடிசூட்டல்
வேறு
655. தீதின்ஞான சக்ரநீ செலுத்துகென்று செய்யதாட்
சோதிரத்ன மகுடநின்று சூட்டினானத் தோன்றலே. (388)
656. வீறுபெற்ற ஞானதீரன் வெண்கவிகை நீழல்வாழ்
பேறுபெற்ற நாயன்மார்கள் பெருமையாவர் பேசுவார். (350)
ஞான வினோதன் குடிகள்செயல்
வேறு
657. நிகரற்ற தன்சோதி யுருவத்தை யங்கை
நெல்லிப் பழம்போல நினையாம னினையப்
பகருற்ற விரகே யெனாநின்று பகர்வார்
பழையோன் மலர்த்தாள் பணிந்தே துதிப்பார். (390)
658. செவ்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மேதன்
திருமேனி யஃதன்றோர் செகமொன்றி லாதே
எவ்வண்ண நின்றானி தென்னென்று மொழிவார்
என்னேயி தென்னேயி தென்னேயி தென்பார். (391)
659. ஞானங்கி டீர்செய்ய திருமேனி யென்பார்
நமையாள வருகின்ற தருளென்று நவில்வார்
ஈனங்கி டீர்வேறு முளதென்ப தென்பார்
இவரேயிவ் வகைதேர்வ தென்னேயி தென்பார். (392)
660. நந்தோட மறுமாறு புவனிக்க ணெய்தா
நன்றோடு தீதற்ற நாதர்க்கு மிதுவும்
அந்தோவ ரோவாவ தேயென்று மொழிவார்
அருளோவி தருளோவி தருளோவி தென்பார். (393)
661. ஒழியாத பெருவாழ்வெ மக்காய பரனார்
ஒளியாய திருமேனி யதுகாண வந்தோ
விழியான தின்றா முடம்பெங்கு மென்பார்
விழியற்ற நமதங்கம் வீணென்று மெலிவார். (394)
662. மூவாத பெருவாழ்வு தந்தானை யந்தோ
முருடோநம் முடலெங்கு முகமா யநந்த
நாவாய் வழுத்தா திராநின்ற தென்பார்
நன்றோ வதற்கீது நன்றோவி தென்பார். (395)
663. தொழுகோ மெனச்செல்லு வார்செந் துணைத்தாள்
தொழுமாறெவ் வாறென்று சோகித்து மோகித்
தெழுகோடி கையில்லை யேயென்று நிற்பார்
இரண்டாயி தமைகின்ற தேயென் றிசைப்பார். (396)
வேறு
664. ஒழிவற்ற செய்கையினார் செய்தி யென்னால்
உரைப்பதுவோ கண்டங்கே யுணரி னல்லால்
இழிவற்ற காலங்கள் குறையு மின்னே
இருக்கின்றா ரன்னேயென் றிறைஞ்ச லோடும். (397)
665. அருள்புரிந்த நெறிக்கிதுவு மன்றே தீர்த்தல்
ஆரியனுக் கொருபொருளோ வம்பொற் பாதம்
தெருள்புரிந்த மனத்தோடும் வணங்கித் தேகம்
சேர்ந்தபயன் பெற்றதன்றோ தெளியி னன்றே. (398)
தேவி கூளிக்கு வரிசைசெய்தல்
666. அவஞானம் போயகல விமையோர் தேட
அடியார்கள் புடைசூழ வகில முய்யச்
சிவஞான தேசிகனார் கருணை மல்கித்
திருத்தகவீற் றிருந்தநெறி செல்வி கேட்டே. (399)
667. வழுத்தரிய விறைவர்செயல் வகுத்துக் கூறும்
மாசற்ற வலகைமுக மகிழ்ந்து நோக்கி
முழுத்தகனி வுடனன்னை யுச்சி மோந்து
முன்னவனார் செயனன்று மொழிந்தாயென்றே. (400)
668. எடுத்தணைத்துக் காதலுடன் கண்டா னந்த
இறையவனார் புவியின்வடி வெய்தி யெய்தும்
வடுத்தகையுஞ் செய்திசொல்ல வல்லா யெல்லா
வளமுநீ பெறுகவென வரிசை செய்தே. (401)
-----------
குறிப்புரை
269. மன்ன - நிலைபெற. அனுமானத்தால் - அனுமானப் பிரமாணத்தால். முன்னவன் - தட்சிணாமூர்த்தி. “ஞான மலாதபாத முரையாடி ஞான முரையாடுகாலை யரனார், மோனம லாதுகூற முடியாமல் யாது மொழி யாரி தியாவர் மொழிவார்” அஞ்ஞவதைப்.
270. “பேயுரை யாடுகின்ற தெனநீர் கொளாது பெரிதாக வுன்னு மிதுவே” அஞ்ஞவதைப்.
271. பி- ம். ‘குறிகளோது’
272. ”மாதா பிதாமாது லன்றார மகவென், றாயாவ ருஞ்சுற்றம் வீழ் வோர்க ளேறற் காதார மேபோல வமிழ்விக்கு மன்றே” அஞ்ஞவதைப்.
273. “சங்கற்ப மாமென்பர் சலியாத மதிளே” அஞ்ஞவதைப்.
277. செம்புலவீரர் - செம்மையாகிய அறிவையுடைய வீரர்கள் ; என்றது ஞானியரை ; போர்க்களத்திலுள்ள வீரர் என்பது ஒரு பொருள். ஐம்புலமாம் யானை : பாசவதைப், 85.
278. நொடிவரை - நொடிப்பொழுதில்.
279. நிமிடம் : “அரைநிமிட நேரமட்டில்” (திருப்புகழ்) “கருதுமொரு பொருளையொரு கணமளவி லடையவிகல் கடவுமவன் விடயரதமே” அஞ்ஞவதைப்.
280. சக்கரம் - ஆணை.
281. “இந்திர னாகும் பிறரொருவ ரேதங் காணு மிடத்திலே” அஞ்ஞவதைப்.
283. அளப்பன் - பலமுறை சொல்வான் ; “அளந்தென் றலையி லெழுத்தெனுங் கூழை யரும்பொருளே” சங்கர நயினார் கோயிலந்தாதி, 9.
284. நாண் - நாணுகின்ற. “எவ்வத் தேற்பவர்க் கீயக்கை யில்லனே” அஞ்ஞவதைப்
285. நெட்டிடை - நீண்ட இடம்.
287. தேரினுருள் : “சகடக்கால் போல வரும்” (நாலடி. ) கூத்தாட்டவை உறுங்குழாம் : “கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம், போக்கு மதுலிளிந் தற்று” (குறள். ) நீர்க்குமிழி : “நீரிற் குமிழி யிளமை” (நீதிநெறி விளக்கம். ) “சாயை போலுஞ் சகட்டுருள் போலுமா, மாய வாழ்க்கை நிலையாய் மதிக்குமே” அஞ்ஞவதைப்.
289. “புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட், டுச்சி லிருந்த வுயிர்க்கு” (குறள், 340) என்பதும், ‘வாத முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு’ (பரிமேல். ) என்ற உரையும் இங்கே அறிதற்குரியன.
290. “அறஞ்சுருக்கு மவலம் பெருக்குமே” அஞ்ஞவதைப்.
291. “நிரையத் தோடு நெடுவான் முகட்டொடுந், தரையத் தோடுந் தனியூச லாடுமே” (அஞ்ஞவதைப். ), “உருமாறிப் பவக்கடல்வீழ்ந் தூசலெனத் தடுமாறி யுழலு மாக்கள்” திருவிளை.
293. பவம் - பிறவி. ஈண்ட - அடைய. “இந்த மன்னனுக் கென்றும் பவங்கொள, வந்த துன்மதி மந்திரி யாகுமே” அஞ்ஞவதைப்.
294. வண் புகழ் - கொடுத்தலால் உண்டாகும் புகழ். மா - விலங்கு. “அற்பு மில்லை யருந்தவ மாதரார், கற்பு மில்லை கழிந்தா னொழுக்கமே” அஞ்ஞவதைப்.
295. நடலை வாழ்க்கை : “நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்” (திருநா. தே. ) மூக நீதி : “மூகநீதி முடிய மொழிவதே” அஞ்ஞவதைப்.
296. “முறையை யற்றமை மூவுல கத்தினும், இறைய வர்க்கறி விப்பாரு மில்லையே” அஞ்ஞவதைப்.
பி - ம். ‘நிரம்பட’
299. “தன்பே ரருண்முற்றுந் தானோர் வடிவாயே” அஞ்ஞவதைப்.
302. அலை - அல்லை ; அஞ்ஞானத்தை.
307. நிலவி - நின்று.
308. “பிறவிப் பகைவெல்வார் பிறிதற் றொருதானா, அறிவுற் றவ ரென்றே யறையுங் கழலிட்டே” அஞ்ஞவதைப்.
311. ஞானவாள் : “என்னவிரோத ஞானச் சுடர் வடிவாள்” கந்தரலங்காரம்.
பி - ம். ‘கோத வஞ்ஞன்’
312. கமலயோனி - பிரமன்.
313. கேயூரம் - வாகுவலயம்.
316. ஆழி - மோதிரம்.
324. பதாகை - பெருங் கொடி.
326. என் - என்று சொல்லப்படுகின்ற. பதாகினி - கொடிப் படை.
328. தேசுமேவு குரகதம், செயல்தீர் குரகதம்.
பி - ம். ‘செயிர்தீர் குரகதம்’
329. பி - ம். ‘உலக மதிப்பவே’
333. “உம்ப ரானவர்க் கரிய தாணுவிவ் வுணர்வி லானையொன் றாக வுன்னியே, தம்பி ரானருட் கருணை யாலையன் தானும் வந்தனன் றரணி தன்னிலே” அஞ்ஞவதைப்.
340. “இனிதினால் வாழு மென்னை யீசனென் றொருவன் வெல்ல, மனிதனாய் வந்தா னென்னும் வார்த்தையும் வார்த்தை யாமோ” அஞ்ஞவதைப்.
பி - ம். ‘வந்தனரெனும்’
341. “ஒன்றில்லை யெனுநீரு மொன்றுண்டு போலே யுரைத்தீர்க ளென வொற்றர்தாம், இன்றில்லை யென்னாதி ரேமிந்த வுலகத்தி னியல்கூறி னேமென்னவே” அஞ்ஞவதைப்.
342. தாமுமென்றது சமய மோதுவார்களை.
பி - ம். ‘ஓதினமமர்க வென்னவே’
343. “சொன்னார்கள் சொன்னத்தை மெய்யென் றிருந்தார்கள் சுற்றஞ் சிறைச்செய்கவே” அஞ்ஞவதைப்.
பி - ம். ‘சொல்வினை மெய்ய தென்பவர்’ ‘மலைவ தென்னவே’
346. கறுப்பார் - கோபிப்பார். வெறுப்பாரே : ஏகாரம் எதிர்மறை. “பண்டொர் நாண்மலர் பட்டின்று மக்கறைக், கண்டன் மேனிசெம் பாகங் கறுத்ததே” (அஞ்ஞவதைப். ), “விடைவல் லோனும், பாதாதி கேசாந்தம் பாதியுடல் கறுத்து” பிரபோதசந்த்ரோதயம், 26 : 6.
347. மார்பின் வடுவென்றது திருமகள் இருக்கும் இடத்தைக் குறித்தது. “வேலை ஞாலத் தவரென்னை மீறவோ, மாலின் மார்பின் வடுக்கண்டு வைத்துமே” அஞ்ஞவதைப்.
348. புண்ணியனார் - பிரமதேவர். புதல்வி யென்றது திலோத்தமையை. வணக்கிய - வளைத்த. “விதியு மென்றன் விதியினை வெல்லுமோ, மதிய ழிந்து மகட்கு மயங்குமே” அஞ்ஞவதைப்.
350. அயிலோன் - முருகக் கடவுள்.
359. தரங்க உததி - அலைகளையுடைய கடல்.
360. பரித்து - தாங்கி. படை யென்றது பெண்களை.
361. ஒருத்தல் - யானை. தாங்கி - தடுத்து.
364. பொருப்புச் சிலை - மேருமலையாகிய வில்.
365. பி - ம். ‘என்னாணுள நாள்பல’
368. அம் களம் என் சங்கம் - அழகிய கழுத்தென்னும் சங்கு.
369. பொருப்புக் குடையார் - திருமால்.
371. “தேனிலவு பூகவன முந்தடமு மியாறுஞ் செய்யவிசை யேழுமுயி ருய்யவரு காலும், வானிலவு மாளிகையும் வாணிலவு மென்கை மாமலரு முள்ளளவும் வந்துணர்வு றாதே” (அஞ்ஞவதைப். ), “மேவுமென் னுதவி யாம் வீணையு மேடையும், காவுநன் னதிகளுங் கலவையும் புதுமணற், பாவுதண் குன்றமும் பஞ்சவா சமுநறும், பூவுமுள் ளளவுமார் போதமுள் ளார்களே” பிரபோத. 26 : 16.
371. பூகவனம் - கமுகந் தோட்டம்.
பி - ம். ‘யேழும்’
372. நோன்மை - வன்மை.
373. சேவின் மணி - காளையின் கழுத்திற் கட்டப்படும் மணி.
377. கண் என்றது வலையின் இடை வெளியை.
379. பராசயம் - தோல்வி.
380. 52-ம் தாழிசையைப் பார்க்க.
383. கெம்பீரமென்பது இங்கே ஆழமென்னும் பொருளையுடைய தன்று. “ஓதிமனையோர், சிரமறச் செய்ததார் தேர்வுறாதார்களே”
பிரபோத. காமனாதியர் வீர. 26.
384. “மறுக வுக்கிரத் தொழில ரக்கர்தம் மனமும் வாரியு மதிளிலங் கையுந், தெறுகனற் கொளச் சிலைவ ளைத்ததும் சிரமு திர்த்ததுஞ் சினமிகுத்தவே” அஞ்ஞவதைப்.
386. விசயம் - வெற்றி.
388. இருபஞ்சானனன் - இராவணன். கொதித்தவன் நந்தி.
350. இருந்தவன் - தூர்வாசர்; கௌதமமுனிவரெனினுமாம்.
390. முனி - வசிட்டர். நிருபன் - கல்மாஷபாதன் என்னும் அரசன்.
391. இருந்தவன் - வசிட்டர்.
392. அறுபானாயிரவர் - சகரர். அவன் - கபிலமுனிவர்.
பி - ம். ‘மகத்துவரத் திகழுமாக வாயிரமு மருந்துகளாய்’ அரக்கன் என்ற - அரக்கனாகக் கடவாயென்று சபித்த.
393. புரப்போன் - நகுஷன். பணியாக - பாம்பாகும்படி. பணித்தவன் - அகத்திய முனிவர்.
395. சலன் - கோபன்.
397. குளத்தார் - நெற்றியையுடையவர். அழல் கொழிக்கும் குளத்தார் என்றது ஒரு நயம்.
398. வேத முனி - ஜமதக்கினி. தனையன் - பரசுராமர்.
400. “சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும், ஏமப்புணையைச் சுடும்” (குறள். 306) சார்பென்றது முற்றத் துறந்து தவஞானங்களாற் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை.
401. பவம் - பிறப்பு. படிவர் - துறவிகள். “நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற், பகையு முளவோ பிற” (குறள். 304) என்பதும், ‘துறவாற் புறப்பகையிலராயினும் உட்பகையாய் நின்று அருண் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமுமெய்து வித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகையில்லையாயிற்று’ என்ற அதன் விசேட உரையும் இங்கே அறிதற்குரியன.
402. எதிர்ந்தான் - ஏற்றுக் கொண்டவன். “சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு, நிலத்தறைந்தான் கைபிழையா தற்று” குறள். 307.
404. “அடலோப னெழிலேவ ரமைவார்க ளடையக், கடலோடு மலையோடு தடுமாறல் காணே” (அஞ்ஞ. ) , “தங்குபுவி மாந்தரெவர் தாமுமுணர்வின்றிப், பொங்கிரவு நண்பகலொர் போதுமொழி யாதே, அங்கடவி நாடுமலை யாழ்கட லிவற்றோ, டெங்குமுலை கின்றதுமெ னிச்சையிய லன்றோ பிரபோத. காமனாதியா. 37.
405. பி - ம். ‘வேசரிக்கொப்ப’
408. “பேரோத நேரான பேராசை கூர்போ, தாரோடு முண்டோ வொரன்பென்ப தங்கே” அஞ்ஞ.
411. ஆர்த்தி - துன்பம். அகற்றுவார் - பெருகச் செய்வார்.
412. “துறந்தார்க்குந் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும்,
இல்வாழ்வானென்பான் துணை” குறள். 42.
414. “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங், கைம்புலத் றோம்ப றலை” குறள். 43.
415. பார்த்தனை - அருச்சுனனை ; “மிடுக்கிலாதனை வீமனேவிறல் விசயனேவில்லுக் கிவனென்று....... கூறினுங்கொடுப் பாரிலை” தே. சுந்தர. சாத்தனை இந்திரனுக்கு ஒப்பாகச் சொல்லுதல் இறப்ப உயர்ந்த ஆனந்த வுவமையாகும் ; யா. கா. ஒழிபு. சூ. 9, உரை. சமற்காரம் - சாதுரியம்.
417. இறையவன் - குபேரன். அவனிதிக்கு முடிய - அவனியிலுள்ள திசைகள் முழுவதும்.
418. வாம் மனனாய் முழுது எய்த - தாவுகின்ற மனத்தையுடைய வனாகி மூன்றடி முழுமையையும் அடைய.
417 - 8 “ஆலஞ்சேர் மிடற்றானு மையத்திற் குழந்திலனோ, மாலும் போய் மாவலிபான் மண்வேண்டி நின்றிலனோ” (அஞ்ஞ), “பலியீசனு மெடுத்தான், மாவலியை மூவடிமண் மாயனுமிரந்தான்” பிரபோத. காமனாதியர். 36.
419. அங்கர்கோன் - கன்னன். உலகு - தேயம்.
420. “நீரினு நுண்ணிது நெய்யென்பர்” (நாலடி) என்ற செய்யுளைப் பின் பற்றி வந்தது.
421. “உடாஅது முண்ணாதும்” (நாலடியார்) என்ற செய்யுளைப்பின் பற்றி வந்தது.
422. “உரையாத பொய்யுண்டோ வுலோபனே யுற்றக்கால், தரை யாளும் பொருட்டன்றோ தருமனும்பொய் சாற்றினனே” அஞ்ஞ.
423. பரிப்பின் - குதிரைக்குப் பின்னே.
424. உலம்பி - முழங்கி.
425. “ஈசனொளி யோரிடத்து நிகழா வண்ண மெவ்வுருவுந் தன்னுருவா யெங்குந்தானாம், ஆசையவன்” அஞ்ஞ.
பி - ம். ‘என்னை யொத்து’.
427. நீரின் நீரது - நீரினது தன்மையை உடையது.
429. அங்கி - நெருப்பு. ஒத்தவர் - தூய்மையை உடையவர் ; என்றது ஞானிகளை.
433. பி - ம். ‘பூளையாம்’.
435. வம்சமதிற் பெரியேன் : “உங்களினெண் மடியான் வம்சமதிற் பெரியேன்” அஞ்ஞ.
436. ஓதி - ஞானம்
437. கேதம் - துயர்.
442. படைத்தவன் - விசுவாமித்திர முனிவர்.
444. விபவங்கள் - ஆக்கங்கள். எதிர்ந்தான் - ஏற்றுக்கொண்டவன். அம்மை - மறுமை. “அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்து விடும்” குறள். 168.
445. வியவு - ஏவுகின்ற ; “கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்ப தூஉம், உண்பதூஉ மின்றிக் கெடும்.” குறள், 166.
பி - ம். ‘கொட்டிவிய. ’
446. குறளுரு - வாமனாவதாரம். கண்போய அவன் - சுக்கிராச் சாரியார்.
447. “அன்னியற் கறிவுரு வாக்கங் கண்டுகே, டுன்னியுட் பொறாமையா முருவி னேனுடன், தன்னிலுட் புழுங்குமத் தன்மை யேவடி, வென்னுமென் னசூயையை யாவர் வெல்வரே.” பிரபோத. காமனாதியர் வீரலாபச். 64.
449. வித்தம் - பொருள். “ஞான மாசில் தன்மவித்த காமநாம சாலையும், ஈனமாக்கு நம்படைக்கொ ரெல்லைசொல்வ தெங்ஙனே.” அஞ்ஞ.
451. மாதவன் - ஞான வினோதன்.
455 - 6. இவை படர்க்கைப் பரவல்.
457. “வருபாசக் கட்டறுத்து மாமாயா புரமழித்து மயக்கந் தீர்வார், சொருபானந் தாநினக்குத் தொழில்செய்வார் பிறராலும் தொலைக்கலாமோ.” அஞ்ஞ.
461. “கச்சொருவுங் கனதனத்தார் கலவியினும் புலவியினும் கலக்கந் தீர்வார், மெய்ச்சொருபா னந்தநினை மெய்ப்படத்தாம் பெற்றவரே வேறார் வல்லார்.” அஞ்ஞ.
457-61. இவை முன்னிலைப் பரவல்.
468. மகரபந்தி - மகரமீன் வரிசை. வருணசிந்து - கடல்.
469. புழுகு, அகில், நறுவிரை. பளிதம் - பச்சைக் கற்பூரம். வகுளம் - மகிழ். “சந்தன குங்குமங்கள் புழுககில் தண்பளி தஞ்சொரிந்து மகிழ்விலர், நொந்தன கொண்டரிந்து நுகரென நொந்திலர் முந்தையென்று நகுவரே.” அஞ்ஞ.
470. வருத்தினோர்க்கு - வருத்தினோர் பொருட்டு. “தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற், றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தா - லும்மை, யெரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று, பரிவதூஉஞ் சான்றோர் கடன்.” நாலடி.
471. வரும் மாயவினை - ஆகாமியம். முன்னைவினை - பிராரத்தம். மாந்தி - அனுபவித்து.
472. “எண்ணி லாதவியல் ஞான வீரர்தமை யெண்ண லாகுமள வெங்ஙனே, கண்ணில் வேறுபட வின்மை யானொருவர் காணு மாறரியர் காணுமே.” அஞ்ஞ.
473. “கீழி லாதபடி கீழு மேலுமதின் மேலி லந்தபடி கெழுமியே, சூழி லாதபடி சூழு தானைநிலை சொல்ல லாகுமள வல்லவே” அஞ்ஞ.
475. “தேராதா ரல்லரோ சேயிழையா ரெனத்திகைப்பார், ஆராயு மறி வுடையார்க் கருவருப்பே யல்லவோ.” அஞ்ஞ.
477. சீவக. 1584.
481. ஊன் முடக்கு என்றது காதினை.
483. புற்புதம் - நீர்க்குமிழி. புண்களென்றது கண்களை.
484. புரை என்றது மூக்கை. மால் - மயக்கம்.
485. வாய்விளிம்பென்றது இதழை ; “எச்சிறங்கு வாய்விளிம்பு பவளமென்பர்.” பிரபோத. நிருபகாதியர். 11.
486. “தரளமென்ப...... பழுதுறும்பல் லென்பை யின்ன பகர்வதென்ன பாவமே. ’ பிரபோத. நிருபகாதியர். 10.
497. மதவேளுக்குக் கொடி மீனம் என்க.
498. படும் - அழியும். “பூவைமார்பொடி யாகவேபொடி யாகி வேளு யிர் போகுமே” அஞ்ஞ.
500. “மாசாய நாவுடையார் வாய்திறந்தா லவர்களுடன், பேசாம லிருந்துவிடு மஃதன்றோ பெருந்தகைமை” (அஞ்ஞ. ), “காய்தறு கண்ணராங் கயவர் கைமிகத், தீதுறும் வாசகஞ் செப்பி னாலெதிர், வாய்திற வாமையா மௌன மன்றிவே, றேததை வெல்வதற் கியன்ற செய்கையே” பிரபோத. நிருபகாதியர் வீர. 28.
501. “வைததனை யின்சொல்லாக் கொள்வானும்” (திரிகடுகம், 48); “வைதாரை வாழ்த்தினர்போன் மதித்தென்று மறக்கொடுமை, செய்தாரை யறியாத செயலன்றோ செயலாதல்” அஞ்ஞ.
503. “முனிவெனுங் கொடுந்தழல் மூண்ட போததிற், பனிவருந் தண் புனல் பரவி னாலென, நனிமுக மலர்ந்துமா நகைபு ரிந்துநல், இனியசொல் லவர்க்கெதி ரியம்பல் செய்வனே” பிரிபோத. நிருபகாதியர். 29.
505. “இகழாவ தேது புகழேது தேரி லிவையாவு மாவதுரையே, அகழ்வார்க ளியாவ ரருள்வார்க ளியாவ ரநுபோக மாகு மவையே” அஞ்ஞ.
507. தொலைஆய-தொலைதலாகிய. அழிபொருள்-அழிகின்ற பொருள்; மிக்கபொருளுமாம். “நன்றுந்திய நெஞ்சத்திடை நாடித்தெளி வுற்றே, என்றுந்தனி நிலைபெற்றிடு மின்பப்பொரு ளுடையார், துன்றும்பெரு வெள் ளத்திடை தோன்றுங்குமி ழியைப்போற், பொன்றும்பொரு ளையுமேயொரு பொருளாய்நினை வாரோ” (பிரபோத. நிருபகாதியர். 58); “என்றும் பொருவரிய வின்பப் பொருளுடையார், பொன்றும் பொருளும் பொருளாகப் போற்றுவரோ” அஞ்ஞ.
508. “புன்பாவி வாணாள் புலர்ந்தாலு மெய்வெள், ளென்பா யுகுந்தாலு மில்லாமை யென்னும், வன்பாடு நல்லோர்கள் வாய்விண்டு தம்மேல், அன்பாளர் தம்பாலும் அறியச்சொ லாரே” பிரபோத. நிருப. 43.
509. “வருந்தி யழைத்தாலும் வாராத வாரா” (வாக்குண்டாம்); “வருந்தினும் வாராது வாராது தானே” (அஞ்ஞ. ) ; “வாராத தார்தாம் வருந்தினும் வராதே” பிரபோத. நிருப. 41.
512. “இல்லாத பொழுதின்ப மிஃதென்று பிறர்பாற், செல்லாத செல் வென்ப செல்வாய செல்வே” அஞ்ஞ.
514. “வாதாகி நுகர்கின்ற வயிறுள்ள தொறுசாண், ஏதாலி தமை யாதி தென்னேயி தென்னே” (அஞ்ஞ. ); “அண்டாத பேராவ லமையாத தென்னே, விண்டாவு மலைபோல வேண்டுங்கொல் வெண்சோ, றுண்டாலும் வயிறுள்ள தொருசா ணிதற்கோ, கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே” பிரபோத. நிருப. 44.
517. “அத்தனொ டன்னைக் கன்புசெய் கின்றா ரளவில் பிறப்புற் றவையவை தோறும், எத்தனை தாயுந் தந்தையு முற்றா ரித்தனை யன்றோ விவர்களு மிங்கே”(அஞ்ஞ. ) ; “அன்புற்று மாதாபி தாவென்னு மவர்தாம், முன்பெற்ற சென்மங்கள் முடிவில்லை யவைதோ, றின்புற்ற தாய் தந்தை யெங்கேய தன்றோ, பின்பெற்ற பேரும் பெறத்தக்க பேறே” பிரபோத. நிருப. 48.
518. புழுக்களென்றது குழந்தைகளை; “சால வுதிக்கும் புழுவுட றன்னில் தகவின் மலத்தோ டொழுகு முடம்பே, போல வுதிக்கும் புழுவினை யென்னே புத்திர னென்றே புந்திசெய் வாரே” (அஞ்ஞ. ); “சடமீது கிருமிப்பை தானென்றன் மலமோ, டிடர்மேவு புண்ணோ டெழக்கண்ட துண்டே, உடன்மீதிவ் வுடல்போ லுதிக்கின்ற புழுவைத், திடமான மகவென்று சீராட்ட லென்னே” பிரபோத. நிருப. 50.
520. “தம்முற வாவார் தாமல தின்றே” (அஞ்ஞ. ); “தாமேயல் லாதெவர் தமக்குரியர் தாமே” பிரபோத. நிருப. 49.
521. நீத்தும் - துறப்போம். நாலடி. 332.
522. சைவலம் - நீர்ப்பாசி.
525. வலன் - வெற்றி. புலன் - அறிவு.
527. சார்பு - பெரியார் துணை.
பி - ம். ‘அவம்புரியேன்’
529. புலம்பு - வருத்தம்.
530. பி - ம். ‘என்போர்முன்’.
531. வழுவிற்கு யான் பெரியன் என்க, “புழுவுக்குங் குணநான் கெனக் கும்மதே, புழுவிற்கிங் கெனக்குள்ள பொல்லாங் கில்லை, புழுவினுங் கடையேன் புனிதன்றமர், குழுவுக் கெவ்விடத்தேன் சென்று கூடவே” தே.
532. வணங்கு - வளையும்.
533. ஆழியிடை அருமணி ஆழ்வது; துரும்பு மிதப்பது. “வலி தன்றோ தாழுந் துலைக்கு” நீதிநெறி.
534. “எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளும், செல்வர்க்கே செல்வந் தகைத்து” குறள்.
536. “எல்லாரு மின்புற் றிருக்க நினைப்பதுவே, அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே” தாயுமானவர் பாடல்.
538. பெட்டு - விரும்பி.
539. “நான் பெற்ற வின்பம் பெறுகவிவ் வையகம்” திருமந்திரம்.
540. இகல் ஏற்று - பகையை மேற்கொண்டு. மாற்சரியன் - பொறாமை. “எவ்வுயிரு மென்னுயிர்போ லெண்ணி யிரங்கவுநின், தெய்வ வருட்கருணை செய்யாய் பராபரமே” தாயுமானவர் பாடல்.
541. பி - ம். ‘மகிழ்ந்தன னன்றோ’
543. அறிவில்லான் - அஞ்ஞனது.
544. வாசி - குதிரை. “வித்தக வேதங்க ளேவாசி யாவே மெய்த்திற னேநின்ற வோர்பாக னாவே, தத்துவ மாகின்ற தேரேறி னாரே தற்சொரு பானந்தர் தாள்சூடி னாரே” அஞ்ஞ.
545. போதகம் - ஞானம், யானை. தேர்வகை - விசாரம். தேரினது வகைகள். வாசி - வாசியோகம், குதிரை. தம்மை யார் ஒப்பாரென்க. “வாசியி லாவாசி யேவாசி தானாம், போதமே போதக மாந்தேர்வு தேர்தாம் போல்பவ ரேவீர ரேதோது மாறே” அஞ்ஞ.
551. பி - ம். ‘போகம் வந்த’
553. துழனி - ஆரவாரம். “சமய மென்பனவு மொன்றுமில தென்று மொழிவார் தவமுடிந்தது முடிந்ததென நின்றுசமைவார், அமையு நந்துழனி யென்றமைவு வந்துவிடுவார் அறிவி லன்புர மழிந்ததினி யென்றயருவார்” அஞ்ஞ.
554. விரகு - தந்திரம். “மருவி யெங்குமுற நின்றபொரு ளின்றுபுவி மேல் வடிவு கொண்டுவரு கின்றதென நின்றுமொழிவார், அருவ மென்று மொழி கின்றபொரு ளிங்குவருதற் கடிமை யென்றுசிலர் நின்றுநகை கொண்டுவிடுவார். “ அஞ்ஞ.
555. “குடிகெ டும்படி புகுந்ததுணர் வென்றுதளர்வார் குலம டங்கலு முடிந்ததென நின்றுகுலைவார், முடிவில் வந்துறுவ தொன்றென மொழிந்தகணியார் மொழியு மின்றுதலை வந்ததென நின்றுகுலைவார்” அஞ்ஞ.
558. “மூவர்சேனை யென்கண்முன்பு நிற்கவில்லை மொய்ம்பினோ, டியாவர்சேனை யென்னைவெல்ல விங்குவந்த தென்னவே” அஞ்ஞ.
559. “யாவர்சேனை யென்னயா மறிந்ததில்லை யெங்கணும், தேவதேவ தேவனென்ற சின்னவோசை யென்னவே” அஞ்ஞ.
560. “ஏகமுத லோனருவ னாகினமர் செய்யவவ னென்கணெதிர் நிற்கவலனே, தேகமுள னேலவனை மாரன்முதல் வீரர்படை சிந்துவர்கள் சிந்திவிடவே” அஞ்ஞ.
பி - ம். ‘வெல்வதவமே’
562. “ஓதுமுத லிந்திரிய முள்ளுமனம் புந்தியுயி ரோங்கியவ கங் கரமுமிங், கியாதுமுள சங்கமெனு மேழணியி லொன்றுவிடு விக்கினவ னிங் கிறைவனே” அஞ்ஞ.
563. “ஆண்டகைய னாகினெனை யஞ்சுத லொழித்துவரு மவனை யெதிர் கண்டளவில்யான், மீண்டிடுவ னாகினெனை யஞ்ஞவர சென்றழையல் வேறுபெய ரிட்டழையுமே” அஞ்ஞ.
565. கடாவிடையாகிய தேர்வகை - கடாவும் விடையுமாகிய விசார வகைகள், கடாவுகின்ற நடுவிலுள்ளனனவாகிய தேர்களின் வகைகள்.
566. புலன் - அறிவு, தன்மாத்திரை. போதகம் - ஞானம், யானை.
567. கதி - நற்கதி, நடை. கரணம் - யோககரணங்கள், ஆடல் வகை.
568. “அறிவின் பெருஞ்சேனை கண்காண வெதிரே அஞ்ஞன் கொடுஞ்சேனை யஞ்சாம லெழவோ, எறிவெங் கதிர்ச்செல்வ ரெத்திக்கு மெழவே இரியாம லிருணிற்கி னிதுநிற்கு மெதிரே” அஞ்ஞ.
570. பி - ம். ‘பெய்யு மன்பினில்’
571. “விண்டிருந்தென்மெய் கண்டுளோர்தவ வேடமேவியென் கோடி மாதரைக், கொண்டிருந்தெனவர் செய்ததேதவங் கொண்டகொண்டதே கோல மாகுமால்” அஞ்ஞ.
573. தான் : அசைநிலை
581. பி - ம். ‘வினையுணர்ந்தோர் வினையிலாரும்’
583. "தம்மை யிகழ்வன தாம்பொறுப்ப தன்றிமற், றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தான் - உம்மை, எரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று, பரிவதூஉஞ் சான்றோர் கடன்" (நாலடி. ); "கற்றவரு மற்றவரு மொருவர் செய்யுங் கடுமையினிற் கலுழும்வகை யொத்து மொவ்வார், செற்றவர்மே லுறுஞ்செயிர்க்கு நோவர் நல்லார் தீயுடன்மே லுறுஞ்செயிர்க்கு நோவர் தீயார் அஞ்ஞ.
585 நல்லோர் கற்றொழிந்தார்: "கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்' திருவா.
586. "உள்ளமழிந் துகுமன்பர்க் கன்றி யோரா வுலகர்திறத் தினு முண்டங் கொல்வார் மாதா, கள்ளவிழிக் கழிந்துகுவா ரறியா ரீசன் கலந்த விழிக் கழிந்துகுவார் கவலை யற்றோர்" அஞ்ஞ.
587. வெளிறு - அறிவின்மை.
588. "மக்களே போல்வர் கயவ ரவரன்ன, ஒப்பாரி யாங்கண்ட தில்" (குறள்); 'மகவருடப் பால்பயக்குங் கொங்கை யின்ப மயக்கமுயக் குறுங் கணவன் வருடும் போது, மிகவுணர்ந்தோர்க் கும்பிறர்க்குஞ் செயல்கள் பார்க்கின் வேறறினும் பாவகந்தான் வேறு வேறு" அஞ்ஞ.
590. நிருபகன் மதன்னை அழிக்கம் ஆற்றலுடையவனென்பதை 475-ஆம தாழிசை முதலியவற்றாலறியலாகும். "உருபக மகளிர்திறத்தினை மறமொ டிழிப்பொடு, நிருபகன் மதனை யழித்தன னிலவிய ரதியு மிறப்பவே" அஞ்ஞ.
591. கோபனை மறனொடும் அழித்தனன் என்க. கோபனை அடக்கும் ஆற்றல் பொறையனுக்குண்மை 500 - 505 - ஆந் தாழிசைகளாற் புலப்படும். 'பாவனு மிகலு மிரங்கலில் பாடுறு கொலையு மெரிந்தெழு, கோவனு மடைய நலம்பல கூறிய பொறையி னழிந்ததே" அஞ்ஞ.
592. 507-575 - அத் தாழிசைகளைப் பார்க்க.
593. 587 - 23- ஆம் தாழிசைகளைப் பார்க்க.
594. ஆங்கரி - அகங்காரன்; “ஆங்கரிப் பரிய சாந்தியினழிந்தது” (அஞ்ஞ. ) 525 - 34 - ஆம் தாழிசைகளைப் பார்க்க.
595. 535 - 40 - ஆம் தாழிசைகளைப் பார்க்க. “உயிர்கட் கன்னை போலுமவி ரோதமெழ வாருயிரையும், தீங்கரு த்தியிடு மச்ச ரனழிந்தயரவே” அஞ்ஞ.
596. ஞாட்பு - போர்க்களம்.
599. திமிரம் - இருள். “இருடுணிந் திரவிமுன் னிற்குமோ பஞ்சுதா னெரியின்முன் னிற்குமோ வெங்ஙனே யரவமுங், கருடன்முன் னிற்குமோ ஞானமே வந்துறுங் கண்ணின்முன் னிற்குமோ வெண்ணுறுங் கன்மமே” அஞ்ஞ.
600. “அழியுமிக் காயமுங் கழியுமுன் னிளமையும் அன்புறுங் கிளைஞரு மின்புறும் போகமும், ஒழியுமிச் செல்வமொன் றாகநீ யுன்னியோ உடையநா யகனைநெஞ் சுணர்வுறா தொழிவதே” அஞ்ஞ.
602. “இந்தவுல கத்தினிடர் கெடும்பரிசிங் கெழுந்தருளி, வந்தவனென் றறிந்திலையோ மானிடனென் றறிந்தனையோ” அஞ்ஞ.
603. இடராழி - துன்பக்கடல்.
606. அயர்த்தனையோ - மறந்தனையோ.
611. பி - ம். ‘செய்து துணைவனே’
614. “வெருவரு நான்முக னாதியாம் விண்ணவர் மண்ணவர் வேறுளோர், ஒருவர் பெறாவடி யுணர்விலா னுச்சியின் மீது முதைத்ததே” அஞ்ஞவதைப்.
616. “பெரியவர் தஞ்செய லாவதும் பிறரறி வாலறி வோமெனத், தெரியும தன்றது தெரிவதுஞ் செய்து முடிந்திடு திசையிலே” அஞ்ஞவதைப்.
617. “செறிதரும்பிறவி முறியவந்திறைவர் திருவிளங்குகழ லருளுநாள், அறிஞரென்றுமில ரவலரென்றுமில ரவர்சுதந்தரம தடையவே” அஞ்ஞவதைப்.
618. சிமிழ்ப்பு - கட்டு.
620. கரி - சாட்சி.
623. “கலுழ்ச்சிகளிப் பகத்தெளிவுட் கலக்கமிகுத திகத்தே, செலுத் தல்திரித் தலற்றடையச் சிவச்சுடர்விட் டெறித்தே” அஞ்ஞ.
625. “காயாதிக ளேழு மாயாவிட யத்தே கையற்றறி வின்கா ரண மாதிகளேழும், மாயாவிட யத்தே மாயச்சுக சற்சின் மயபூரண மேதன் வடிவானது வந்தே” அஞ்ஞ.
626. “கோதற் றமிர்தாகிக் கூறற் றுணர்வாகிக் கூறற் கரிதாகிக் கோசப் புலன்மாறித், தீதற் றவர்காணத் தேனொத் தினிதாகித் தேசத் திசைமாறித் தேறித் தெளிவாயே” அஞ்ஞ.
629. பிறப்பினாலும் இறப்பினாலும் துன்புற்றவர், பிறப்போடும் இறப்போடும் பகைத்தனர்; பிறப்பிறப் பிலராயினா ரென்றபடி.
630. மாண்டனர் - மாட்சியையுற்றவர், இறந்தனர்.
631. தம்மை ஒளித்த உள்ளத்தையுடையவர் தானே ஒளிந்த உள்ளத்தரானார்; மனம் அற்ற தென்றபடி. “கரக்கு முளத்தவ ராயினரே, கரக்கு முளத்தவ ராயினரே” அஞ்ஞ.
632. அகன்றனர் - அகற்சியையுடையராயினவர், நீங்கினார்.
635. நினைப்பு மறப்பு என்பவற்றோடு இருந்தவர் நினைப்பையே மறந்தனர்.
636. பொறிகளின் வழியே மனம் போனவர்கள், பொறிகளும் அவற்றோடு மனமும் ஒருங்கே போகப் பெற்றனர்.
637. வென்றவர் - வெல்லப்பட்டவர், வெற்றிபெற்றவர்.
638. காதரம் அச்சம். வார்த்தை - உபதேசம், புகழ். “அழிந்தற மாயை யிருட்டெலா மறிவுரு வாகநம் மண்ணலார், மொழிந்தது மிங்கொரு வார்த்தையே மூவுல கும்மொரு வார்த்தையே” அஞ்ஞ.
640. உளவிலான் - அன்பர்களுடைய உள்ளமாகிய இல்லத்தை உடையவன்.
642. “அடியே முள்ளங் கறுப்பதுநல் லம்போ ருகங்கள் சிவப் பதுமிப், படியே வந்த பரனேநின் பாதங் காட்டாப் பண்டன்றோ” அஞ்ஞ.
644. பி - ம். ‘வையந் தனையும்’, ‘வாழ்க்கை தனையும்’.
645. “போக்கும் வரவும் பொன்னோடும் புழுவார் நரகும் புசிப்பனவும், ஆக்க மழிவுந் திருக்கடைக்க ணணுகா திருக்கு மளவன்றோ” அஞ்ஞ.
646. “சாவா கின்ற பெரும்பிணிக்குஞ் சனிக்கும் பிணிக்குந் தடு மாற்றம், ஆவாவென்றுன் றிருக்கரத்தா லஞ்சே லென்னா வளவன்றோ” அஞ்ஞ.
649. “சமையா வெந்தச் சமயமுமெச் சடங்குஞ் சவலைத் தனமு மெலாம், அமையா ததுநின் றிருப்பவள மலரா திருக்கு மளவன்றோ” அஞ்ஞ.
650. எத்தனையும் அவதி - எவ்வளவும் எல்லை; “எவ்வளவு மளவு படா திருக்கை யுன்ற னியல்பாகு மெங்களையெவ் வளவின் வைத்தாய், அவ்வளவே யளவாகி யிருக்கை யெங்க ளளவாகு நின்பெருமை யறிவார் யாரே” அஞ்ஞ.
651. கரி - சாட்சி. “கடம்படுமிவ் வுடம்பானோங் கரண மானோங் கண்டிருக்குங் கரியானோங் காட்சி தீர்ந்த, திடம்படுபே ருணர்வானோ மெல்லா மானோந் திருவிளையாட் டிருக்கின்ற செயலீ தென்னே” அஞ்ஞ.
652. பவம் - பிறவி. விரகு - உபாயம். “அஞ்ஞான மென்னவுமங் கதனா னாய வனேகபவ மென்னவுமவ் வயர்வு தீர்ந்த, மெய்ஞ்ஞான மென்னவு நின் றொருநீ தானே விளையாட றோற்றுவித்த விரகீ தென்னே” அஞ்ஞ.
657. விரகு - தந்திரம். “ஒழிவற்ற தன்சோதி யுருவத்தை நம்பா லுள்ளங்கை நெல்லிப் பழம்போல வுடையான், மொழிவற்ற விரகேயெ னாநின்று மொழிவார் முன்னோன் மலர்ப்பாத முடிமீது கொள்வார்” அஞ்ஞ.
658. “ஞானசக்ர மெங்குநீர் நடாத்துகென்று நல்லதாள், ஆனரத்ந முடிகவிப்ப வருளினானெம் மண்ணலே” அஞ்ஞ.
659. “பேதங் கிடீர் செய்ய பொன்மேனி யென்பார்” அஞ்ஞ.
பி - ம். ‘ஞானங்கடீர்’, ‘ஈனங்கடீர்’
660. “பொய்யோடு மெய்யேது மில்லாத பெருமான் புவனிக்க ணெம் மைப் புகுந்தாள விதுவும், ஐயோவொ ரளவாவ தேயென்று மொழிவா ரருளோவி தருளோவி தருளோவி தென்பார்” அஞ்ஞ.
661. “எண்ணாத பெருவாழ் வெமக்காய பெருமா னெழுதப் படா மேனி யிதுகாண வெங்கும், கண்ணான திலையே யெமக்கென்று மொழிவார் கண்ணல்ல காணாத கண்ணென் றுரைப்பார்” அஞ்ஞ.
662. “ஏயாத வெமையாளும் பெருமானை யென்னே யிரும்போநம் முடல்கொண்டெவ் விடமெங்கு மெங்கும், வாயாய் வழுத்தாதி ராநின்ற தென்பார் மலர்ப்பாத மீதுள்ள மாலாகி வாழ்வார்” அஞ்ஞ.
666. பி - ம். ‘தேசிகனார் தருணமல்கி’
----------
9. களங்காட்டல்.
669. களங்காட்டு மஞ்ஞன்கட் டழித்துத் தூய
கருணைநா யகன்பொருது கடந்த வென்றிக்
களங்காட்டு கேனென்னா விறைவி போதக்
காதலின்மோ கினிகளும்போய்க் கலந்து கண்டார். (1)
670. தானாக மதித்திருக்கு முடம்பு வேறாய்த்
தணந்தொழியத் தணந்தொழியுந் தற்சூழ் சுற்றம்
ஆனாத பெருந்துயரம் பிணங்கண் டேற
அகன்றதுபோ லகன்றிடுமா காண்மின் காண்மின். (2)
671. ஒறுப்பமனந் தனைப்புலன்க ளைந்து மோய்ந்த
துரகத்தி னடிக்கழுத்தை யுடன்று சீறி
அறுப்பவழல் விடமுமிழ்வா யஞ்சுங் கூட
அயர்ந்தழிந்த போலுமா காண்மின் காண்மின். (3)
672. வெப்புடைய மகமாயை மாய மாயும்
விரிசகமற் றெரிகதுவ வேரிற்றாருக்
கொப்புடனு மிலையினொடுங் கிளைக ளோடும்
கொளுந்தியெரிந் தமையொத்தல் காண்மின் காண்மின். (4)
673. விடிந்தொழிந்தே மினியென்று மாதர் தம்பால்
வேட்கையிகந் தைம்புலன்சேர் விடய மெல்லாம்
கடிந்தொழிந்தார் நிரதிசயா னந்த போகக்
காமுகராய் முடிந்தபடி காண்மின் காண்மின். (5)
674. சவலையுறு மறிவினரா யிகந்தார் மாட்டும்
சந்தோடம் விளைத்தென்றுஞ் சலிப்பி லாதார்
கவலையுறும் பெரும்பிறவிப் பௌவ முற்றும்
காய்ந்தெரித்த கடுங்கோபங் காண்மின் காண்மின். (6)
வேறு
675. வாராத பெருவாழ்வு பெற்றா மெனச்சொல்லி
மாய்கின்ற பொருண்மீது மால்விட்டுளார்
பேராத வானந்த மயபூ ரணத்தோடு
பிரியாமை காண்மின்கள் காண்மின்களே. (7)
676. புல்லாக மேநங்கள் வடிவென்றிருந்தார்கள்
பொன்றாத பரிபூ ரணச்சோதியாம்
நல்லாக மாயெய்த வவர்செய்த செயலின்று
நன்றாதல் காண்மின்கள் காண்மின்களே. (8)
675. “பழிப்பாகி யொருகாலு மிதுகொண்டு கௌவுற்ற பயனற்ற பொருள்விட்டெலாம், அழித்தாலு மழியாத பொருள்பேணி யிவருற்ற வாராமை காண்மின்களோ.” அஞ்ஞ.
-------
குறிப்புரை
669. கள்ளத்தைக் காட்டும் அஞ்ஞன்.
671. “தொத்தறவே மனந்துஞ்சப் புலன்க ளைந்துந் துஞ்சியவா நஞ்சு மிழ்வா யஞ்சுஞ் சேரக், கத்தறவே யடிக்கழுத்தை யரிய மாய்ந்த கறை யணற்கட் செவியொத்தல் காண்மின் காண்மின்” அஞ்ஞ.
672. தாரு - மரம். கொப்பு - சிறுகிளை.
“மைப்படியு நறுங்குஞ்சி மாயை மாய மாய்ந்தபடி யகிலமெரி மருவ வேரிற், கப்புடனுங் கிளையுடனு மரநே ராகக் கரிசறப்பட் டமையொத்தல் காண்மின் காண்மின்” அஞ்ஞ.
673. “நெய்விட்ட கருங்குழலார் தம்பால் வைத்த நெஞ்சொழிந்தா ரைம்புலன்சே ரின்ப நேராக், கைவிட்டா ரொழியாவா னந்த போகக் காமுகராய் முடிந்தபடி காண்மின் காண்மின்” அஞ்ஞ.
-------
10. கூழ்.
677. ஒப்பொன்று மில்லாத விந்தக் களங்கண் டுவந்தாடுவீர்
வெப்பொன்று மில்லா தருங்கூழ் சமைப்பாரை விளிமின்களே. (1)
வேறு
678. காந்தி தன்னொடு பிரியாத
கண்ணி யெண்ணரு கதிநல்கும்
சாந்தி யன்புறு காந்திநீர்
தாமே கூழட வாரீரே. (2)
679. சான்ற வருளெனு மினிதாய
தகையார் குழவி தனைநன்றா
ஈன்ற வன்பெனு மாதாவே
இனிய கூழட வாராயே. (3)
வேறு
680. மெய்யே யொழிதரு பொறையே யெனுமியல்
விரகி னிறைதரு மின்னேவீழ்
பொய்யே யொழிதரு புகழே பெருகிய
பொன்னீ கூழட வாராயே. (4)
681. இன்ன திதுவென வெவரே யாகிலும்
இன்றும் மறிவுற வெய்தாத
அன்ன ததுவெனு மதனை யறிவதொர்
அறிவீ கூழட வாராயே. (5)
682. சித்தீ தேடிய பத்தீ கூடிய
செல்வீ யாடிய சிங்காரி
முத்தீ யற்புத வித்தீ வித்தக
முன்னீ கூழட வாராயே. (6)
வேறு
683. உலகமெனு முரலையமைத் துலகர்பழு வெனுமுலக்கை
ஓச்சி யோச்சி
உலகரெயி றெனுமரிசி யூழ்முறைகுற் றினிச்சமைக்க
ஒருங்கு வாரீர். (7)
வள்ளைப் பாட்டு
வேறு
684. ஆதியையா யிரகோடி யருமறைகண் டறியாத
சோதியையாங் கண்டனமே சும்மேலோ சும்முலக்காய். (8)
685. மங்கநெடு மாயையா மலிகடற்பட் டாழ்வேற்குத்
துங்கவடி சூட்டினன்காண் சும்மேலோ சும்முலக்காய். (9)
686. இற்றது மகாமாயை யெத்தனையு மெங்கோமான்
சொற்றதுமோர் சொல்லேகாண் சும்மேலோ சும்முலக்காய். (10)
687. கரிசறவே நாம்போகிக் கண்டுணரா நாமாதித்
துரிசறவே யிருந்தனங்காண் சும்மேலோ சும்முலக்காய். (11)
688. இணைபோய சராசரங்க ளெவைக்குமா கரமாகித்
துணைபோய தொன்றேகாண் சும்மேலோ சும்முலக்காய். (12)
689. மதிப்பதுவு மெங்கோமான் மலர்ப்பதமே வாயாரத்
துதிப்பதுவு மதுவேகாண் சும்மேலோ சும்முலக்காய். (13)
690. முழுவதுவுந் தானான முன்னவன்சே வடியன்றித்
தொழுவதுவும் பிறிதுண்டோ சும்மேலோ சும்முலக்காய். (14)
691. பாடுவது மெம்பெருமான் பதயுகமே தலைமீது
சூடுவது மவையேகாண் சும்மேலோ சும்முலக்காய். (15)
692. தகாநந்தந் தலைமீது தன்னடித்தா மரைசூட்டிச்
சுகாநந்தந் தந்தனன்காண் சும்மேலோ சும்முலக்காய். (16)
693. ஊன்றுவது மஞ்ஞான மூன்றுமத னாலுதித்துத்
தோன்றுவதுந் துடைத்தனன்காண் சும்மேலோ சும்முலக்காய். (17)
கூழடுதல்
வேறு
694. பவவினை யுடைய பற்கள்
பண்பிலா ருடைய பற்கள்
எவைகளு மிடித்தீ ராகில்
யாவையு முலையுட் பெய்யீர். (18)
695. இருவினை விறகெ ரித்தங்
கென்பெலா முருக்கு மன்பாம்
திருவினை யுள்ள வண்ணம்
சீர்பெறக் குழைக்கச் சொல்லீர். (19)
696. எற்பத பதார்த்தஞ் செல்லா
திருப்பதா யின்ப முற்றும்
தற்பத பதார்த்தம் பார்க்கச்
சாந்தியை யிருத்திக் கொள்ளீர். (20)
கூழடுதல்
வேறு
697. தழைத்த சுதையுந் தீம்பாலும்
தண்ணென் கனியுந் தாமாக
இழைத்த வடிசி லதைமெல்ல
இறக்கும் பசியு மிறக்குமால். (21)
698. பெருமை யுடைய பெருமானார்
பிறவி யறுக்குந் திருவடிக்கீழ்
ஒருமை யுடைய வடியவர்கள்
உள்ளக் கலங்கள் விளக்குமால். (22)
699. தேவி யடங்க வுளக்கலங்கள்
செப்புங் கடங்க ளொடுமுள்ள
ஆவி யடங்க வமுதுசெய்க
என்ன வவளு மருந்தினளால். (23)
700. நாடுந் தேவி பிரசாதம்
நாளு மயில்வீ ரயலாகி
வாடுங் கூளி தமக்குங்கூழ்
வாரீர் நிறைய வாரீரே. (24)
701. கூடித் திரியு முடல்போகக்
குறித்து வீடு புகுமாறு
தேடித் திரியும் பேய்களுக்குத்
திகைப்புத் தீர வாரீரே. (25)
702. நிலையா விதனை நிலையென்று
நின்று பசித்தே நிலைகாண
அலையா வமுது தருகென்னும்
அப்பேய் தனக்கும் வாரீரே. (26)
703. இல்லா ததனை யுளதென்றே
இருந்திங் கழிந்தே னிளைப்பாறச்
சொல்லா ரமுதந் தருகென்னும்
தூங்கற் பேய்க்கும் வாரீரே. (27)
704. இற்பேய் பிடித்துப் பெறலரிய
இன்பப் பொருளைக் குறியாத
பொற்பேய் தனக்கு வயிறாரப்
போத வாரீர் வாரீரே. (28)
705. ஆயா சொற்ற சொலுங்கிளிபோல்
அலறிப் பயனை யறியாத
மாயா வாதப் பேய்தனக்கும்
வாரீர் நிறைய வாரீரே. (29)
706. சுருதி யிறையா கமஞ்சொன்ன
துணிவை யறிந்தார் போன்றிருந்து
கருதிப் பேதா பேதங்கள்
காட்டும் பேய்க்கும் வாரீரே. (30)
707. உலவா நிற்குந் தனிப்பிரமம்
ஓட்டைச் செவியி னுணர்வாகி
நிலவா நிற்குஞ் சத்தமெனு
நெட்டைப் பேய்க்கும் வாரீரே. (31)
708. ஏதஞ் செய்து வரும்பிறவி
இரிக்கு முபாய மறியாது
வாதஞ் செய்து கலகலென
வரும்பேய் தனக்கும் வாரீரே. (32)
709. உள்ளப் படுவா ருள்ளிருக்கும்
உலப்பி லொளியை யுணராதே
கள்ளத் தொழும்பு செய்துழலும்
கருமப் பேய்க்கும் வாரீரே. (33)
710. தொகுக்கும் பதியே முதன்மூன்றும்
தொடரு முத்தி தனிலுமே
வகுக்குஞ் சைவப் பேயுளதேல்
வாரீ ரதற்கும் வாரீரே. (34)
711. உண்டா லொழிய வில்லையெனா
உலவா வினைக ளுண்டுண்டு
தண்டா முத்தி சாதிக்கும்
சமணப் பேய்க்கும் வாரீரே. (35)
712. எழுதும் பிடகம் பலபிதற்றி
இன்ப முத்தி கந்தமைந்தும்
முழுதுங் கெட்டுப் பெறவி்ருக்கும்
முழுப்பேய் தனக்கும் வாரீரே. (36)
713. தெளியு முறைமை யுணராது
தீது நன்றுந் தெரியாது
விளியு முடலை நானென்னும்
வெறும்பேய் தனக்கும் வாரீரே. (37)
714. ஒளிக்கு மொளியார் காணுமிடத்
துணரும் பழியாந் திறமுணர்ந்தும்
களிக்கும் வாமப் பேய்வந்தாற்
கதறக் கதற வடியீரே. (38)
715. இன்னு மின்ன நிலையெய்தி
இளைத்தே னென்ன விரங்கிவரு
மன்னு நிலைகண் டெவற்றினுக்கும்
வயிறு நிறைய வாரீரே. (39)
வேறு
716. ஆரணன்பரவு மாதிதன்கருணை
யாலடங்கலு மறிந்தபின்
பூரணன்பத யுகங்கள்வந்தனை
புரிந்துசொல்வர்பல புகழ்களே. (40)
பேய்கள் கூழுண்டு பாடுதல்
வேறு
717. ஒருவடி வைத்தம தேயாக
உற்றுல கெய்தியெ முச்சிமிசை
திருவடி வைத்தமை பாடீரே
தெவிட்டாக் கருணையைப் பாடீரே. (41)
718. திரித்த சதுரினைப் பாடீரே
செப்பிய தொன்றெனப் பாடீரே
விரித்த வருளினைப் பாடீரே
மேலுக்கு மேலினைப் பாடீரே. (42)
719. ஞான வினோதனைப் பாடீரே
நாட்ட வருளினைப் பாடீரே
ஈனமி லாநெறி பாடீரே
இன்பச் சலதியைப் பாடீரே. (43)
720. கொண்டா னெனையென்று பாடீரே
கொடுத்தான் றனையென்று பாடீரே
உண்டா னுயிரென்று பாடீரே
உவட்டாக் கருணையைப் பாடீரே. (44)
721. புரவெனக் காக வெழுந்தருளிப்
பொன்னடி சூட்டப் புவிகள்கயிற்
றரவெனப் போனமை பாடீரே
ஆனந்த ரூபனைப் பாடீரே. (45)
722. தேரி னடந்திட னிற்றலிவை
தீர்ந்து நிறைந்த செழுஞ்சுடரிப்
பாரி னடந்தமை பாடீரே
பாச விமோசனைப் பாடீரே. (46)
723. புற்புதம் போன்றழி யாக்கைதனைப்
பொருளென் றுணர்ந்த பொறியிலிக்கும்
அற்புதந் தந்துவந் தாண்டருளும்
ஐயனைப் பாடீர் பாடீரே. (47)
724. வானந்த மண்முத னாமேயாய்
மற்றொன் றிலாவகை யுற்றென்றும்
ஆனந்த மாகின்ற வாபாடி
ஆர்த்தெழுந் தார்த்தெழுந் தாடீரே. (48)
725. விரவியிவ் வண்ணங்கள் பாடிப்பாடி
விழுந்து மெழுந்தும் வியந்துமாடிப்
பரவி வருங்கண மானவெல்லாம்
பல்வகை யாக நடஞ்செயுமே. (49)
வேறு
726. பொய்யகல மெய்யருளும் பூரணசின் மயமான
ஐயனடி யடித்தொழும்பு மாயிரநூ றாயிரமே. (50)
727. கமலனார் முதலிமையோர் காணாதிங் கெழுந்தருளும்
அமலனா ரதிசயமு மாயிரநூ றாயிரமே. (51)
728. என்புருக மயிர்பொடிப்ப விருவிழியும் புனல்சோர
அன்புருவிற் றுதிப்பனவு மாயிரநூ றாயிரமே. (52)
729. தெருள்பெருகுஞ் சிவஞான தேசிகனார் திருவடிக்கீழ்
அருள்பெருகும் பத்திமையு மாயிரநூ றாயிரமே. (53)
730. மண்ணுலகத் தெழுந்தருளி மானிடனா யெமையாண்ட்
அண்ணல்திரு நோக்கருளு மாயிரநூ றாயிரமே. (54)
731. செழிக்கின்ற கழிபாசஞ் சிதைந்தொழியத் திருவருளால்
அழிக்கின்ற வாற்றலுந்தா மாயிரநூ றாயிரமே. (55)
732. தஞ்சமென வருமடியார் தம்பிறவி தீர்த்தருளி
அஞ்சலென வருள்வனவு மாயிரநூ றாயிரமே. (56)
வாழ்த்து
வேறு
733. சந்ததமு முலகுய்யத் தமதடியார் தழைத்தோங்கத்
தரணி மீது
வந்தருளுஞ் சிவஞான தேசிகனார் பதகமலம்
வாழி வாழி. (56)
734. ஆற்றுகின்ற விருவினையை யாதியவெம் பாசங்கள்
அனைத்துந் தீர
மாற்றுமெங்கள் சிவஞான தேசிகனார் திருக்கருணை
வாழி வாழி. (58)
735. எல்லையிலா வானந்த மெமக்கருள வெழுந்தருளி
இடர்தீர்த் தாள
வல்லபிரான் சிவஞான தேசிகனார் திருத்தொண்டர்
வாழி வாழி. (59)
736. உளம்பெருகுந் திருக்கருணைச் சிவஞான தேசிகனார்
உவந்து வாழும்
வளம்பெருகுந் திருக்காஞ்சி மயிலைசெய்கை யுடன்பொம்மை
வாழி வாழி. (60)
737. துதித்தருளு மிமையவரு மானிடரு முனிவரரும்
தொழுது போற்றி
மதித்தருளுஞ் சிவஞான தேசிகனார் வீரசைவம்
வாழி வாழி. (61)
-------------
குறிப்புரை
679. “அருளென்னு மன்பீன் குழவி” குறள்.
680. “பொறையே மிகவரு நிறைவீ புகழ்புனை பொன்னீ யருளினை யுன்னீயக், குறையா நிறைவுறு திருவீ கூடிய வாரீர் கூழட வாரீரே”
682. “பணியே சூடிய வணியே பாடிய பத்தீ கூடய சித்தீநிர்க், குணியே கோமள மொழியே கூழட வாரீர் கூழட வாரீரே” அஞ்ஞ.
683. பழு - பழுவெலும்பு. ஊழ்முறை குற்று : “உன்னேனென் றூழுலக்கை பற்றினேற்கு” (பழம்பாடல். ) “உலகவுரலை யமைத்து லக்கை யாகவிவ் வுலகர் பழுவை யொடித்தொ டித்து நீளெயி றுதிர்செய் தரிசி புடைத்திடித்து” அஞ்ஞ.
684. “அருவரையா யிரஞ்சிரங்கொண் டருமறைக ளறியாத, சொரு பரையாங் கண்டனமே சும்மேலோ சும்முலக்காய்” அஞ்ஞ.
686. “பின்னமொழி வகைபுகுந்தென் பெருங்கருணைப் பெருமானார், சொன்னமொழி யொன்றேகாண் சும்மேலோ சும்முலக்காய்” அஞ்ஞ.
687. நாமாதித்துரிசு - நாமம் முதலிய குற்றங்கள்.
694. “மிடையிரு வினைகொள் பற்கள் மேவரு மறியார் பற்கள், அடையவ மிடித்தீ ராயி னடங்கலு முலையுட் பெய்யீர்” அஞ்ஞ.
695. “இழைக்கும்வல் வினையெரித்திங் கென்பெலா முருக்கி யுள்ளங், குழைக்குமெய்ப் பத்தி வந்து குறைவறக் குழைக்கச் சொல்லீர்” அஞ்ஞ.
696. பி - ம். ‘தற்பரபதார்த்தம்’
698. கலங்கள் - பாத்திரங்கள். “தண்மை யாரும்வகை மீளு மாளுடைய தம்பிரானரிய தாள்கடாம், உண்மை யானுரிய வன்பரின்புறு முளக்கலங்களை விளக்கியே” அஞ்ஞ.
699. கடங்கள் - பானைகள்.
700. பி - ம். ‘ப்ரசாதநீர்’
705. ஆயா - ஆயாதனவாய்.
707. இதிற் குறிப்பிக்கப்பட்டவர்கள் சப்தப்பிரமவாதிகள்.
708. இவர்கள் தார்க்கிகர்கள்.
712. இதிற் குறிப்பிக்கப்பட்டவர்கள் புத்தர்கள்.
714. களிக்கும் - கள்ளைக் குடித்து மகிழும்.
717. பி - ம். ‘எழுச்சிமேல்’
718-9. “மீட்ட விரகினைப் பாடீரே விளம்பிய தொன்றென்று பாடீரே, நாட்ட வருளினைப் பாடீரே ஞான வினோதனைப் பாடீரே” அஞ்ஞ.
720. “தந்ததன் றுன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா வார் கொலோ சதுரர்” (திருவா. ), “என்னை யொழித்தமை பாடீரே யென்னுயி ருண்டமை பாடீரே, தன்னை யளித்தமை பாடீரே தத்துவ நாதனைப்பாடீரே” அஞ்ஞ.
721. புரவு - காப்பாற்றுதல்.
722. தேரின் - ஆராய்ந்தால்.
723. புற்புதம் - நீர்க்குமிழி. அற்புதம் - ஞானம்.
725. கணம் - பேய்.
733. பி - ம். ‘தேசிகனார் திருக்கருணை வாழி வாழி’
736. மயிலை - மயிலம். செய்கை - செய்யூர். பொம்மை - பொம்மைய பாளையம்.
-----
பாசவதைப் பரணி முற்றிற்று.
This file was last updated on 31 Dec. 2018.
Feel free to send the corrections to the webmaster.