திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள்
அருளிச் செய்த "வைராக்கிய சதகம்"
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உரையுடன்
vairAkkiya catakam of cAntalingka cuvAmikaL
with commentaries of citampara cuvAmikaL
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the International Institute of Tamil Studies and Tamil Virtual Academy for
providing a scanned image version of this work for the etext preparation.
This work has been prepared using the Google Online OCR tool to generate the machine-readable
text and subsequent proof-reading.
We thank Mr. Anbu Jaya of Sydney, Australia for his assistance in the proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள்
அருளிச் செய்த "வைராக்கிய சதகம்"
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உரையுடன்.
Source:
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள்
அருளிச் செய்த "வைராக்கிய சதகம்"
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
அருளிச்செய்த உரையுடன்.
மூன்றாம் பதிப்பு.
ஊ. புஷ்பாத செட்டி அண்டு கம்பெனியாரால் "கலாரத்நாகரம்"
என்னும் தமது அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
சென்னை.
1908.
-------------------
உ
கணபதி துணை.
வைராக்கிய சதகம்.
கணபதி வணக்கம்.
முக்கணிறை தருகரியை முன்னடத்திப் பின்னதன்றாட்
பக்கமறைந் தேகுநர்வெம் பாசவிக னாசமுற
மிக்கவமர் விளைத்திளையா வீரரெனப் பூரணவூர்ப்
புக்கிணையில் பரானந்தப் பூவையையு மேவுவரால்.
சபாபதி.
அம்பல வாண னடியிணை தொழுவார்க்
கின்பமும் வீடு மெளிதினில் வருமே.
விநாயகர்.
நிம்ப நிழற்களி,றம்பொன் மலர்த்தாள்
நம்புது முத்திந, லின்பம் வரற்கே.
சுப்பிரமணியர்.
சமர புரிக்குகன், விமல மலர்த்தாள்
எமதுளம் வைக்குது, முமல மறற்கே.
குருபரம்பரை.
மறைமுடி யதனில் விளங்கிடு மொளியே
மனிதரைப் போல் வந்த தெனுமென்
சிறைதவிர்த் தாண்ட சிவப்பிரகாச
தேசிகன் றன்னைமற் றவன்ற
னறைமல ரடியைப் போற்றிடுஞ் சாந்த
நாயகன் றன்னைமற் றவன்ற
னிறையருள் பெற்ற பழனிமா முனியை
நெஞ்சினு ளிருத்தியே பணிவாம்.
நூலாசிரியர்.
போந்தெ முயிர்க்குயி - ராந்துணை யொத்த
சாந்தையர் தம்பத - மேந்து கருத்தே.
பஞ்சபூத காரியமாகிய உடம்பினையும் ஞானேந்திரிய கருமேந்திரியங்களையும் நியதி களைந்து, அதன்பின்னர் அந்தக்கரணங்களையும் நியதிகளையத் தொடங்கும் போது, அவைகளுக்கு பிரதானமான மனத்தை எதிரிட்டு நோக்கி, நீக்குந்தோறும் அம்மனம் அந்த விவேகத்திற்கு மிகவும் ஒற்றுமையாகலின் நீங்காது முன்னைப் பழக்கம் போல் விவேகத்தைத் தன் வயப்படுத்தித் தனக்குப் பற்றுக்களா யுள்ளவற்றில் இழுத்துச் செல்ல, அஃது அங்ஙனம் இழுத்துச் செல்லுதலை விவேகம் அறிந்து தனது வலியினால் எதிரிட்டு நின்று, இஃது எவற்றைப்பற்றி நின்று எழாநின்றதென்று நோக்கி, அது பற்றிய பற்றுக்களியாவையும் இவை இவையென்று அறிந்து அதற்கு அப்பற்றுக்களை யெல்லாம் விடுவித்து, அதனைத் தன்வய மாக்குதற்பொருட்டு மனத்தை முன்னிலையாக்கி விவேகங் கூறிற்றென்று விவேகத்தின் மேல் வைத்து இந்நூல் கூறுகின்றார்:-
வாழி நெஞ்சமே சென்றிடே னின்றிதோர்
வார்த்தை யெற் குரைசெய்வாய்
கீழி யாமியற் றுயர்தவத் திவ்வுடல்
கிடைத்தன் றோமற்றீ
தூழி காலமிங் கிருக்குமோ நீயுமோர்ந்
துளையெனினுள் போழ்தே
சூழு மேழ்பவந் துடைத்தல்செய் யாயிதென்
றொழுதரன் றுணைத்தாளே. (1)
வாழிநெஞ்சமே என்பது, - பகைவனாற் காரியங்கொள் வோன் அவனைத் தன் துவய மாக்குதற்பொருட்டு அவனுக்கு இனிமை கூறுதல் போல் நீ வாழக்கடவாய் நெஞ்சமே என்று விவேகங்கூற, அதற்கு எண்ணில் காலம் உடலுமுயிரும் போலும் சேறு நீரும் போலும் உம்மோடு பிரிவின்றியிருந்த என்னை இப்போது பிரித்து நின்று நீர் தோத்திரம் பண்ணியது என்னை ? என்று மனங் கேட்ப,
சென்றிடே னின்றிதோர் வார்த்தை யெற்குரை செய்வாய் எ - து, -அதற்கு நீ ஓர் கணப்போ தாயினும் நில்லாது விஷயங்களிற் செல்லா நின்றனை, அங்ஙனஞ் செல்லாது நின்று இஃதோர் சொல் எனக்குச் சொல்லுக என்று விவேகங் கூற, அதற்கியான் சொல்ல வேண்டிய சொல் என்னையுள? நீர் சொல்லுக யான் கேட்கின்றேன் என்று மனங்கூற,
கீழியா மியற் றுயர் தவத் திவ்வுடல் கிடைத்ததன்றோ எ - து, - அதற்குக் கீழ்ப்போன அநந்த சனனங்களில் யாஞ் செய்திரா நின்ற மேலான தபோபலத்தினாலன்றோ இந்த அரிதாகிய மானுட தேகம் கிடைத்தது என்று விவேகங் கூற, அதற்கு ஈதுண்மையா மென்று மனஞ் சம்மதிப்ப, அதற்கு அங்ஙனம் அரிதாகக் கிடைத்த தேகத்தைப் பெற்றும் சீக்கிரத்திலே திருவடியை அடைதற்கு ஏது பண்ணாமல் வீணாள் கழிப்பது என்னை? என்று விவேகங் கூற, அதற்கு இந்தத் தேகம் பெற்ற நாம் இனித் திருவடியை அடையாது விடுகின்றோமோ, நீர் சீக்கிரம் பண்ணியது என்னை? சில நாள்களின் பின்னர் அதனை அடைக்குதுமென்று மனங்கூற,
மற்றீ தூழிகால மிங்கிருக்குமோ எ-து, - அதற்கு இந்த தேகம் கற்பகாலம் இவ்விடத்து இருப்பதோ ? இதற்கு அளவு கூறிய நூறாண்டுகளுள் இடையிடையே கணந்தோறும் அநித்தியமிருத்தலின் எந்தக்கணம் இருக்குமோ எந்தக்கணம் போமோ தெரியாதென்று விவேகங் கூற, அதற்கு அங்ஙனம் அநித்தியமாமெனின் இதனை யொழித்து இனிவருங் காயத்து அந்தத் திருவடியை அடைகுது மென்று மனங் கூற, அதற்கு இனியோர் காயத்தின் கண் அதனை அடைத்து மென்னிற் பெறுதற் கரியபிறவி யென்றும் சிலநாள்களின் பின்னர் அடைகுதுமென்னின் அறிதற்கரிய அவதியென்றும் விவேகங் கூற, அதற்கு நீர் இங்ஙனங் கூறியது உண்மையென்று மனஞ் சம்மதிப்ப,
நீயுமோர்ந்துளை யெனின் எ - து, - அதற்கு இந்தக்காயங் கிடைத்தற்கு அரிதென்பதையும் இதனது நிலையாமையினையும் நீயும் விசாரித்து அறிந்தனை யாயின்,
உளபோழ்தே சூழு மேழ்பவந் துடைத்தல் செய்யா யிதென் றொழுதரன்றுணைத்தாளே எ - து, - இக்காயமிருக்கும் போதே சிவனது உபய பாதங்களையும் தொழுது எம்மை வளைந்து கொள்ளாநின்ற எழுவகைப் பிறவிகளையும் நீக்கிக் கொள்ளுதல் செய்யாய், இது என்னை நின்கருத்திருந்ததென்று விவேகங் கூறிற்று, எ - று. மற்றென்பது அசைநிலை,
உயர்தவத் திவ்வுடல் கிடைத்த தென்பதற்கு உதாரணம் : ஞானவாசிட்டம். "எறியுங்கடலினுகத்தொளையி னியாமைக் கழுத்துப் புகுவது போற், பொறிவெம்பிறவி யநேகத்தாற் புருடன் விவேகி யெனப்பிறந்து, முறியும் பிறவிப் பயனிலவிம் மோக மமையுஞ் செய்தொழிலாற், செறிவதென்னே யிவற்றாலே தினங்களெல்லாஞ் சென்றிடுமால்.''ஊழிகாலப் பங்கிருக்குமோ வென்பதற்கு உதாரணம். திருவள்ளுவ நாயனார். "உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி, விழிப்பது போலும் பிறப்பு, பெறுதற்கரிய பிறவிக்கும் அறிதற்கரிய வவதிக்கும் உதாரணம் : ஆனந்தத்திரட்டு. "பெறுதற்கரிய பிறப்பீ திதன் போக், கறிதற் கரிய வவதி - பிறிதொன்றை,நாடுதற்கு நேரமுண்டோ நன்னெஞ்சே முத்திநெறி, கூடுதற் கல்லாது குறித்து.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (1)
---------------
இங்ஙனம் நீர் கூறியது உண்மையாகலின் இனித் திருவடியை அடையக் கடவமென்று மனஞ் சம்மதிப்ப, மேற்கூறுகின்றது :-
தாளை யேதர மறிகிலா தெமக்கெளி
தருசிவப் பிரகாசம்
காளி யாமெனத் திரிந்தவன் பணிபுரிந்
தரியவீடடைகில்லாய்
கேளை யோமனை யாதிய வளற்றிலே
கிடந்துழைத் தனைநெஞ்சே
நாளை யோலையுந் தூதரும் வரினிவர்
துணைகொலோ நவில்வாயே. (2)
தாளையே தரமறிகிலாது எ - து, - சுரர் முதலாகத் தாவரமீறாகச் சொல்லப்படாநின்ற எழுவகைப் பிறவித் துன்பங்களையும் துடைத்தல் செய்யும் அரிய திருவடிகளைக் கொடுத்தற்குப் பக்குவனென்றும் அபக்குவனென்றும் பாராது,
எமக்கெளிதரு சிவப்பிரகாசற்கு எ - து, - அருமைப் படுத்தாது எமக்கு எளிதிலே தந்த சிவப்பிரகாசரென்னு நாமதேயத்தை யுடைய ஆசாரியருக்கு,
ஆளியாமெனத் திரிந்தவன் பணிபுரிந் தரியவீடடைகில்லாய் எ - து, அவர தடிமையாமென் றியாவருங்கூற அவரது திருவுளத்திற்குப் பாங்காக நடந்துகொண்டு அவரது ஏவற்பணிவிடைகளைச் செய்து யாவருக்கும் அரிய வீட்டினை அடைந்தாயில்லை,
கேளையோ எ - து, - ஐயோ நீ கேட்பாயாக,
மனையாதிக வளற்றிலே கிடந்துழைத்தனை நெஞ்சே எ - து, - பெண்டீர் முதலிய குடும்பச் சேற்றின்கண் வீழ்ந்து உழைத்துக்கொண்டனை நெஞ்சமே நீ யென்ன காரியஞ் செய்து கொண்டாய்,
நாளை யோலையுந் தூதரும் வரி னிவர் துணை கொலோ நவில்வாயே எ - து, - இனி நாளைக்கு இயமனது தூதரும் ஓலையும் வருங்காலத்து இந்தப் பெண்டீராதிய சீவர்கள் துணையாவரோவென்று விவேகங் கூறிற்று, எ - று.
மிகுந்த சேற்றில் விழுந்தோன் கிடந்து உழைத்தல் போல் மிகுந்த செல்வம் பெற்றோனுக்கும் அதில் மூழ்கி மயங்கி மறுமை குறிக்கக் கூடாமையிற் கிடந்துழைத்தனையென்று கூறப்பட்டது. தாளையே தரமறிகிலாது என்பதற்கு உதாரணம் : ஞானவாசிட்டம். "இயற்கை குணஞ் சோதித்து முன்னே பின்னே யாவையுமாம் பிரமநீ யென்னல் வேண்டும், வியப்புறவாசையிலுழவார்க் கிவ்வா றோதின் மீளாத் தீநரகில் வீழ்த்ததாகும், தியக்குறுபோகத்தாரை தீர்ந்து புத்தி தெளிந்தவனைப் போல்வார்க்கே திகழத் தோன்று, மயக்கமற வுணர்த்த வல்ல குருவைக் கிட்டா வருந்தி யுந்தன் பிறப்பறுக்கு மகனுமாங்கே.'' பணிபுரிந் தரிய வீடடைகில்லாய் என்பதற்கு உதாரணம் : வீராகமம். "அடுத்ததின் றன்மை யான்மா வாகுமென் றறிந்து நல்லோர்,நடித்திடுஞ் சமய வாத நற்றவஞ் செபந் தியானம், படிற்றுல கியற்கை யாவும் பரகதி விலக்கா மென்றே, விடுத்தருட் குரவன் பாத மேவிமெய்ப் பணிசெய் வாரே.'' மனையாதிய வளற்றிலே கிடந்துழைத்தனை என்பதற்கு உதாரணம் : ஞான வாசிட்டம். 'தாரதன் மிகுமென்னிற் றளையாகு மப்பாசந் தளைத்துக் கொண்டா, லாரதனை யறுத்தாலும் விரகுடையாரறிவிலா ராசை விஞ்சிக்,கூரிய மப்போகத் துழன்றுழக்குங் கொடுந்துயரைக் குறித்த போதே, தீரதையா மறிஞருக்கு விரத்தியுள தாய்ச்சித்தம் தெளியு மன்றே .'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (2)
--------------
நீர் கூறியது உண்மை ; திருவடியே துணை, மனைவியாதிய சீவர்கள் துணையலர் ; ஆனால் இவர்களை விடுத்தார் பரிதவிப்பரென்றும் இவரை வைத்துப் பாதுகாப்பதற்கு ஓர் துணை இன்றென்பதுங் குறித்து இவரோடுங் கூடி நின்றேனென்று மனங்கூற, அதற்குமேற் கூறுகின்றது :
நவிலி னிம்மனை மக்களுக் கொருதுணை
நாமல திலையென்றே
கவலை யுற்றரன் றாண்மறந் தனையுனைக்
காலனார் கொடுபோயிற்
குவல யத்தடைந் திவரைநா டொறும் புரந்
திடுவையோ குறிக்குங்காற்
சவலை நெஞ்சமே சிவனலா துயிர்க்குயிர்
தானுமோர் துணையாமே. (3)
நவிலி னிம்மனை மக்களுக் கொருதுணை நாமல திலை யென்றே கவலை-யுற்றரன்றாண் மறந்தனை எ - து, - சொல்லுமிடத்துப் பெண்டீர் புத்திரர் முதலியோர்க்கு ஒப்பற்றதுணை நாமன்றி வேறு இன்றென்று சிவனது திருவடியை மறந்தனையாகலின் திருவடியே துணையென்றும் மனைவியாதிய சீவர்கள் துணை யலரென்றும் நீ முன் கூறியவற்றிற்கு ஏதுவென்னை யென்று விவேகங் கேட்ப, அதற்கு இந்த மனைவியாதிய சீவர்களை யாவர் காப்பரென விடுப்பேனென்று மனங்கூற,
உனைக்காலனார் கொடுபோயிற்குவலயத்தடைந் திவரை நாடொறும் புரந்திடுவையோ எ - து, - உன்னை யமன் கொண்டு போமிடத்து மீண்டு இப்பூமிக்கண் வந்து இச்சீவர்களை எக்காலத்தும் காப்பையோ, அஃதன்றி ஒரு கணப் போதாயினும் வந்து இவரை நீர் நன்றிருக்கிறீரோ வென்று கேட்கத்தான் கூடுமோவென்று விவேகங்கூற, அதற்கு அவரை யான் இருக்குமளவாயினுங் காக்குவலென்று மனங்கூற, அதற்கு நீயிருக்கும், போதாயினும் நிருபர் முதலானோர் உன்னைக் கொண்டு போயினா ராயினும் அன்றி அவரைக் கொண்டுபோயினா ராயினும் அப்போது உன்னாற் காக்கப்பட்டார் யாவரென்று விவேகங் கூற, அதற்கு நீர் கூறியது உண்மையென்று மனஞ் சம்மதிப்ப,
குறிக்குங்காற் சவலைநெஞ்சமே சிவன்லா துயிர்க்குயிர் தானுமோர் துணையாமே எ - து, - உண்மையாகப் பார்க்குமிடத்துப் பேதைமையுடைய நெஞ்சமே சீவர்களுக்குச் சிவனே துணையன்றிச் சீவர்களுக்குச் சீவர்கள் துணையாவரோ வென்று விவேகங் கூறிற்று, எ - று.
"இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி, பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே.'' என்பதனாற் காலனென்னு மியற்பெயர் முன்னர் ஆரென்பது வந்தது. நவிலினிம்மனை மக்களுக்கொரு துணை யென்பதற்கு உதாரணம் : ஆனந்தத்திரட்டு. "உடலையொண்பொருளினை யுலகியல்பினை யுயர்குல நெறிதன்னை, யுடையு மைந்தர் தாய் தந்தைநன் மனையென வறைதரு மவர் தம்மை, விடவி கந்திறை கழலிணை மேவிய விமலர்தங் களை யெல்லா, முடைய நன்குறு மொழிமறை முனிவர்கள் ளுரைப்பராத் தர்களென்றே.'' சிவனலா துயிர்க்குயி ரென்பதற்கு உதாரணம் : திருவருட்பயன் . " அகர வுயிர்போலறிவாகி யெங்கு, நிகரிலிறை நிற்கு நிறைந்து.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (3)
-------
நீர் இங்ஙனங் கூறியது உண்மை,இனித்துணையாவது யாது? பகையாவது யாது? மனைவியாதிய சீவர்கள் வந்தவாறு எங்ஙனம்? நீர் கூறுகவென்று மனங் கேட்ப, அதற்கு மேற் கூறுகின்றது :
துணைய தாயெமைத் தொடர்தரு தொடர்பரன்
றொல்கழ றுணையல்லா
துணைவு செய்தடு மிகலதஞ் ஞானமென்
றுள்ளவா றுணராய்மற்
றிணையி னெஞ்சமே பகையிவ ருறவிவ
ரென வினை வழியே வந்
தணைவ சீவரை யுனி முனி வாதிய
வடுத்தெனைக் கெடுத்தாயே. (4)
துணையாதா யெமைத் தொடர்தரு தொடர்பரன் றொல் கழறுணை எ - று, -- சிருட்டி தொடங்கி வீட்டைவிக்கு மளவும் துணையாகி எம்மைவிட்டு நீங்காதிருக்கின்ற உயிர்க்கு உறவாகிய சிவனது தொன்மைப் பாதங்களே துணை யென்றும், அல்லா துணைவு செய்தடு மிகல தஞ்ஞான மென் றுள்ளவா றுணராய் எ - து, - அஃதன்றி உள்ளத்தை மெலி வுசெய்து நாசம்பண்ணாநின்ற பகையாவது அஞ்ஞான மென்றும் உள்ளபடியே யறிந்தனை யில்லை,
இணையி னெஞ்சமே எ - து, - இழிவினா லுனக்கு வேறு ஒப்பு இன்றிய நெஞ்சமே,
பகையிவ ருறவிவ ரெனவினை வழியே வந் தணைவ சீவரை யுனி எ - து, இருவினையின் வழியராய் வந்து பொருந்திய சீவர்களை இவர் பகைவரெனவும் இவர் உற வரெனவுங் கருதி,
முனிவாதிய வடுத்தெனைக் கெடுத்தாயே எ - து, - பகை யென்று வெகுளியும் உறவென்று விழைவும் அடைந்து உன்னோடு கூடிய என்னையுங் கெடுத்தாய் நீ யென்று விவேகங் கூறிற்று, எ - று.
ஆணவத்தால் மறைப்புண்டு கிடந்த வுயிரைச் சிவன் தனது காருணியத்தினால் எடுத்து மாயைக்கண்ணே தனுவாதிகளைக் கொடுத்து முன்னர் விடயஞானத்தை விளக்கிப் பின்னர்ச் சுருதி குரு சுவானுபவங்களினால் சொரூப ஞானத்தை விளக்கி ஆனந்தானுபவத்தைக் கொடுத்தலின் உயிர்க்கு உறவு சிவனென்றும் உயிரினது இரண்டு ஞானத்தையும் அநாதியே மறைத்து வீடடையுமளவும் துன்பத்தைச் செய்தலின் ஆணவம் உயிர்க்குப் பகையென்றும் நல்வினை அனுபவிக்குமிடத்துப் பகைவரும் உறவராகலாலும் தீவினை அனுபவிக்குமிடத்து மனைவியாதி யுறவரே பகைவராய்த் தேகநாசஞ் செய்தலினாலும், இச்சீவர்கள் வினைவழியராய் வந்தவரன்றிப் பகைவரும் உறவ ரும் அலரென்று கூறப்பட்டது. மற்றென்பது அசை நிலை. பகையிவ ருறவிவ ரென்பதற்கு உதாரணம் : சிவ போகசாரம். "ஆர் பெரிய ரார்சிறிய ராருறவ ரார்பகைவர், சீர்பெரிய ரானந்த சிற்சொருபர் - பேர்பெரிய, ரெங்கெங்கும் தாமா யிருந்து சட சித்தனைத்து, மங்கங்கியற் றுவதானால்.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (4)
--------------
கெடுத்தாயே யென்று என்னை நீர் வெறுப்பதென்னை? பயனின்றி உறவைப்பற்றுதலால் என்னையுள? நீர்கூறியவாறே விடுத்தேனென்று உறவினை விடுத்துப் பொருளினைக் கருதிய மனத்தைப் பார்த்து மேற்கூறுகின்றது :
கெடுவ தாம் பொருள் செல்வமே பல்வகைக்
கிலேசமற் றது தன்னை
விடுவ தேசுக மெனவுமோர்ந் திலைமுனம்
விடுத்துளோர்க் குனைப்போலு
நெடிய யூகம் தில்லையோ சொல்லுதி
நெஞ்சமே யினிப்பற்றற்
றடைது மேலர னருளையே பொருளென
வருஞ் செல்வ மதுதானே. (5)
கெடுவதாம் பொருள் செல்வமே பல்வகைக் கிலேசம் எ - து, - அழிந்து போவதாகிய பொருள் செல்வமோ பல வேறுவகைப்பட்ட துன்பமென்று விவேகங்கூற, அதற்கு முன்னர் மனைவியாதிய உறவுகளை நீர் விடுக்கச் சொன்னபடி விடுத்தேன், இப்போது இந்தப் பொருளையாயினும் அருந்துதலைக் குறித்து வைத்துக்கொண்டு தவத்தினைப் பண்ணுவ லென்றால் இதனையும் நாசமென்றுந் துன்பமென்றுங் கூறினீர், இனி இன்பமாவது யாதென்றுமனங்கேட்ப,
அது தன்னை விடுவதே சுகமெனவு மோர்ந்திலை எ - து, - அதற்கு அந்தப் பொருளைக் கைவிடுவதே சுகமெனவும் அதனைப் பிடித்தலே துன்பமெனவும் உண்மையாக அறிந்தாயில்லை நீயென்று விவேகங்கூற, அதற்கு நன்று கூறினீர் இப்பொருளையும் விடுத்து இரக்கச் சொல்லுகிறீரோ வென்று மனங்கேட்ப,
முனம் விடுத்துளோர்க் குனைப்போலு நெடிய யூகமதில்லையோ சொல்லுதி எ - து, - அதற்கு முன்னர்ப் பற்றுக்களா யுள்ள யாவும் துன்பமென்று அறிந்து துறந்தோர்க்கு உன்னைப்போலுங் கூர்ந்த புத்தியின்றோ நீ சொல்வா யென்று விவேகங்கூற, அதற்குச் சம்மதித்து இங்ஙனஞ் சொல்லப்பட்ட பொருளுக்கு மேலாய பொருள் யாதென்று மனங்கேட்ப,
நெஞ்சமே யினிப்பற்றற் றடைதுமே லரனருளையே பொருளென வருஞ் செல்வ மதுதானே எ - து, - நெஞ்சமே! இனி இப்பொருண் மேல் வைத்த பற்றினீங்கி மேலாய சிவனது அருளையே பொருளென அடைவோம், அதனை அடைந்தால் அவ்வருடானே அரிய செல்வமும் எமக்கு கென்று விவேகங் கூறிற்று, எ - று.
இப்பொருளால் இவ்வின்பம் வருதல் போல அவ்வருளால் இவ்வின்பம் வருதலின் அருஞ் செல்வமது தானே யென்று கூறப்பட்டது. செல்வமே பல்வகைக் கிலேச மென்பதற்கு உதாரணம் : நீதி வெண்பா. ''இன்னறரும் பொருளை மீட்டுதலும் துன்பமே, பின்னதனைப் பேணுதலுந் துன்பமே - யன்ன, தழித்தலுந் துன்பமே யந்தோ பிறர்பா,லிழத்தலுந் துன்பமே யாம்.'' விடுவதே சுக மென்பதற்கு உதாரணம் : திருவள்ளுவநாயனார். "யாதனின் யாதனி னீங்கியா னோத,லதனி னதனி னிலன்.'' அருஞ்செல்வமதுதானே என்பதற்கு உதாரணம் : திருக் கடைக்காப்பு. "செல்வநெடுமாடஞ் சென்று சேணோங்கிச், செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற, செல்வா வாழ் தில்லைச் சிற்றம்பலமேய, செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (5)
--------------
இங்ஙனங் கூறிய ஏதுவினால் பொருள் துன்பமென்று விடுத்துக் கண்டசுகத்தை விழைகின்ற மனத்தைப் பார்த்து மேற் கூறுகின்றது :
தானை சூழமண் ணுலகையாண் டழிபவர்
தங்கள் வாழ் வினிதென்றே
நீ நினைத்தியோ நெஞ்சமே யெஞ்சுறா
நிமலஞா னமதுற்றால்
வானும் வையமும் வந்துதாள் வணங்குமெய்
வாழ்வுகாண் டலும்வீண்முற்
போன நாட்கிரங் கவும்வரு மெனநலோர்
புகன்றதோர்ந் திலைகாணே. (6)
தானை சூழ மண்ணுலகை யாண்டழிபவர் தங்கள் வாழ்வினிதென்றே நீ நினைத்தியோ நெஞ்சமே எ - து, - இரத கச துரக பதாதிகளாகிய நால்வகைச்சேனையும் தம்மைச் சூழ்ந்துவர இப்பூவுல கரசாண்டு அவ்வாழ்வோடும் அழிந்துபோகாநின்ற அரசர்களுடைய பொய் வாழ்வினை இனிது இதென்று கருதினை கொல்லோ நெஞ்சமே என்று விவேகங் கேட்ப, அதற்கு நீர் மேற் கூறியவாறே உறவையும் பொருளையும் விடுத்தேன், இப்போது இவ்வரசரது செல்வத்தையும் இவரை யாவரும் வணங்கும் இவரது பெருமையினையுங் கண்டு அதிசயித்தமாத்திரமே யன்றி வேறில்லை, அதற்கு நீர் இச்செல்வமும் பெருமையும் பொய்யென்றும் இவற்றை நீ விரும்பாதே யென்றுங் கூறினீர், ஆனால் இச்செல்வப் பெருமைகளுக்கு மேலாய் மெய்ம்மையாகிய செல்வமும் பெருமையும் எவையென்று மனங்கேட்ப,
எஞ்சுறா நிமல ஞானம் துற்றால் வானும் வையமும் வந்து தாள் வணங்கும் எ - து, - அணுவளவாயினுங் குறைவுபடாத பரிபூரணமாய் நின்மலமாயுள்ள சிவஞானச் செல்வத்தை ஒருவன் அடைந்தால் அவனது பாதத்தை வானகத்தோரும் வையகத்தோரும் வந்து வணங்கா நிற்பர்கள், ஆதலின் மெய்ச் செல்வமும் பெருமையும் இவை யென்று அறிதி,
மெய்வாழ்வு காண்டலும் வீண் முற்போனநாட் கிரங்வும் வருமென நலோர் புகன்ற தோர்ந்திலை காணே எ - து, - இஃதன்றி இந்த மெய்வாழ்வு கண்டவுடனே முன்னர்ப் பொய்வாழ்வில் வீணாளாய்க் கழிந்த காலங்களை நினைத்து இந்நெடுங்காலம் இவ்வின்பத்தைவிட்டு இருந்தோமென்று இரங்குதலும் வருமென்று ஆப்தர் உரைத்த வாக்கியங்களை அறிந்திலைபோலும், நீ அவரது வாக்கியங்களைப்பார்த்து அறிவாயாக வென்று விவேகங் கூறிற்று,எ - று.
தானை சூழ மண்ணுலகை யாண்டழிபவர் என்பதற்கு, உதாரணம் : நாலடியார். ''யானை யெருத்தம் பொலியக் குடை நிழற்கீழ்ச், சேனைத் தலைவராய்ச் சென்றோரு - மேனை, வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாங் கொண்ட, மனையாளை மாற்றார் கொள.'' வானும் வையமும் வந்து தாள் வணங்கும் என்பதற்கு உதாரணம் : ஞானவாசிட்டம். 'மெத்தென்ற சரித்திரத்தி னவர்தன்மை யுலகெல்லாம் விரும்புந் தன்மை, கொத்தொன்று வனமூங்கிற் குழலிசையான் மகிழ்விலங்கின் கூட்டம்போலு, மித்தன்மை யாவருக்கும் பொதுமையினா லியம்பியதா மிதனின் வேறாச், சத்தென்ற வழியிரண்டேழ் பவந்தீர்ப்ப வவர்க்கவற்றைச் சாற்றக் கேண் மோ.'' போன நாட் கிரங்கவும் வரும் என்பதற்கு உதாரணம் : பட்டணத்துப் பிள்ளையார் பாடல். " அண்ணறன் வீதி யரசிருப் பாகு மணி படையோர், நண்ணொரு நாலொன்ப தாமவரேவலு நண்ணுமிவ்வூர்,துண்ணென் பசிக்கு மடைப்பள்ளி யான சுகமுமெல்லா, மெண்ணிலி கால மவமே விடுத்தன மெண்ணரிதே.'' மற்றும் வருவனவற்றாற் காண்க.(6)
------------
இங்ஙனம் கூறிய ஏதுவாற் சுகப்பற்றை விடுத்து இடப்பற்றைக் கருதிய மனத்தைப் பார்த்து மேற் கூறுகின்றது.
காணி யீதெம் திடமிது வெனமணைக்
கருதிமண் ணாகின்றாய்
நாணி லாய்மட நெஞ்சமே யுடலிது
நமதிட மலவென்றாற்
பேண வும்படு மேயிதற் கிடமதாம்
பிருதிவி தனை நாகப்
பூணி னான்றிருச் சரணமே யுயிர்க்கெலாம்
புகலிட மதுதேரே. (7)
காணியீ தெமட மிதுவென மணைக்கருதி மண்ணாகின்றாய் நாணிலாய் மட நெஞ்சமே எ - து, - இது எமது காணியெனவும் இது எமது வீடு எனவும் மண்ணை எனதென்று கருதி மண்ணாய் மடிந்து போகின்றாய், இங்ஙனம் எண்ணில் காலம் யாதொன்றை யாதொன்றை நீ விழைந்து கருதினால், அந்த அந்த மயமாய் நின்றே இறந்தனை, இங்ஙனம் இறந்தும் பிறந்தும் இத்துன்பங்களில் மொத்துண்டு இன்னும் பற்றாநின்றாய், நீ வெட்க மில்லாய் போலும், பேதமைதானே நிறைந்த நெஞ்சமே என்று விவேகங்கூற, அதற்கு நீர் விடல் வேண்டும் என்றவற்றை யெல்லாம் விடுத்தேன், இனி ஓரிடமாயினும் பிடித்துக்கொண்டிருந்து தவத்தைப் பண்ணுவே னென்றால் நீர் இவ்விடமும் ஆகாதென்று கூறினீர், இவ்விடம் வேண்டுமெனப் பிடித்ததனால் குற்றம் என்னை யென்று மனங்கேட்ப,
உடலிது நமதிட மலவென்றாற் பேணவும் படுமே இதற்கிடமதாம் பிருதிவிதனை எ - து, - வாத பித்த சிலேஷ்மங்களினாலாகிய வியாதிகளுக்கு இடமாயுள்ள உடம்பு சடமாகலின் யாம் அறிவாகலின் இவ்வுடம்பே நமக்கு இடம் அன்றென்றால் இதனுக்கு இடமாயுள்ள மண்ணினை இடமென்று பிடிக்கவும் தகுமோ நீ சொல்லுதி யென்று விவேகங் கூற, அதற்கு நீர் கூறியது உண்மையாம், அறிவுருவமாய் எமக்கு இடமாவது யாதென்று மனங்கேட்ப,
நாகப்பூணினான் றிருச் சரணமே யுயிர்க்கெலாம் புகலிட மது தேரே எ - து, - சர்ப்பாபரணனாகிய சிவனது திருவடிகளே உயிர்களுக்கெல்லாம் அடையுமிடமாகலின் அதுவே நமது இடமென்று நீ அறிதி என்று விவேகங் கூறிற்று,எ - று.
இதற்கு உதாரணம் : சிவதருமோத்தரம். "மண்ணினுந் தனத்தினு மனைக்கு வாய்த்தநற், பெண்ணினு மகவினும் பெரிய பேரினுந் துண்ணென விழைவினைத் துறந்த தூயரே, விண்ணினு மின்புடன் விளங்கி மேவுவார். திருவள்ளுவநாயனார். "புக்கிலமைந்தின்று கொல்லோ வுடம்பினுட், டுச்சி லிருந்த வுயிர்க்கு.'' மற் றும் வருவனவற்றாற் காண்க. (7)
----------
இங்ஙனங் கூறியவற்றால் இடப்பற்றை விடுத்துப் புகழை விரும்பிய மனத்தினைப்-பார்த்து மேற்கூறுகின்றது.
தேர்கி லாயிவண் புகழ்விழைந் தனையினித்
தேகம்வே றடைந்தாயேற்
சாரு மோவதி லிதிற் புக ழலதுநீ
தானுணர்ந் திடுவாயோ
பேரி யாதியா மார்கொன்முற் பவத்திகழ்
பெறினுமத் துணைநெஞ்சே
யோரி னேரில்வீ டுறுதலே புகழிக
ழுறல்பிறப் பெனவுன்னே . (8)
தேர்கிலா யிவண் புகழ் விழைந்தனை இனித் தேகம் வேறடைந்தாயேற் சாருமோ அதி லிதிற் புகழலது நீதானுணர்ந்திடுவாயோ எ - து, - புகழினது உண்மையை நீ நன்றாக விசாரித்து அறிந்தாயில்லை, இவ்விடத்துப்புகழை விரும்பா நின்றனை, இக் காயத்தை விட்டு இனி வேறோர் காயத்தை யடைந்தாயேல் இதன்கண் வந்த புகழ் அதன் கண் வந்து பொருந்துமோ ; அஃதன்றி முற்பவத்து இன்ன புகழை யுடையான் இவனென்று பிறராலறிந்து சொல்லத்தான் படுமோ ; அஃதன்றி நீதான் முற்பவத்திலே நற்புகழை-யுடையோன் யானென்று அறிதியோ வென்று விவேகங் கேட்ப, அதற்கு இஃதாயினும் எனக்குத் தெரியாதோ வென்று மனங்கூற,
பேரியாதி யாமார்கொன் முற்பவத்து எ - து, - அதற்கு இனிமேல் வரும் பிறப்பு விவகாரம் நினக்குத் தெரியுமாயின் முற்பிறப்பின் விவகாரமும் நினக்குத் தெரியுமாகலின் முற்பிறப்பின்கண் எமக்குப் பேர் யாது? யாம் யாவர்? எமது விவகாரம் என்னை? நீ சொல்லுதி யென்று விவேகங் கேட்ப, அதற்கு மாறுத்தரங் கூறுதலின்றி மனஞ்சும்மா விருப்ப,
இகழ்பெறினு மத்துணை நெஞ்சே எ - து, - இதற்கு உனக்கு வெறுப்பாகிய இகழ்ச்சி வருமாயினும் அது இந் தப் புகழ்ச்சி போலவே யாகும் நெஞ்சமேயென்று விவே கங்கூற, அதற்கு நீர் இங்ஙனம் கூறியவாற்றால் யாவருங் கூறுகின்ற புக ழிகழ்வுகள் இல்லையென்பதாயிற்று, ஆகலின் இவைகள் இல்லையோவென்று மனங்கேட்ப,
ஓரினேரில் வீடுறுதலே புகழிகழுறல் பிறப்பென வுன்னே எ - து, - உண்மையாக விசாரிக்குமிடத்து ஒப்பற்ற வீட்டினை அடைதலே புகழெனவும் பிறப்பினை அடைதலே இகழெனவும் நீ அறிதி யென்று விவேகங் கூறிற்று,எ - று.
வீட்டினை யடைந்தோரும் நித்தியம், ஒன்றனையும் விரும்பாது அவ்வீட்டினையே விரும்பி அடைந்த அவரது புகழும் நித்தியம், பிறப்பினை யடைந்தோரும் அநித்தியம், இவரது புகழும் அநித்தியம், ஆகலின், அது புகழென்றும் இது இகழென்றுங் கூறப்பட்டன. இதற்கு உதாரணம் : ஒழிவிலொடுக்கம். "நாயேறி வீழ்ந்தென் னடாத்துகிலென் ஞானிக்குப், பேயாஞ் சகம்பழித்தென் பேணுகிலென் - றோயார், பெருமை சிறுமையிலை பின்னுமுன்னுமில்லை, வரைவற்று வேண்டிய செய்வார்.'' உறவு முதல் புகழீறாய ஐந்திற்கும் உதாரணம் : பிரபுலிங்கலீலை. "ஓடும் பொன்னு முறவும் பசையுமோர், கேடுஞ் செல்வமுங் கீர்த்தியும் நிந்தையும், வீடுங் கானமும் வேறற நோக்குதல், கூடுந் தன்மை கொளும நன்மனம்.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (8)
------------
தாளையே தரமறிகிலா தென்னும் பாட்டு முதல் இவ்வேழு பாட்டாலும் மனத்திற்குப் புறப்பற்றுக்களாயுள்ள உறவு பொருள் சுகம் இடம் புகழ் என்கிற இவ்வைந்தையும் விடுவித்து இந்த வுறவு முதலாகிய வைந்துஞ் சிவனது திருவடியேயென்று அறிவித்து இனி உட்பற்றை நீக்கி அத்திருவடியை அடைதற்கு ஏதுவாய் தவத்தைச் செய்யும்படி மனத்தைச் சம்மதிக்கப் பண்ண, அது சம்மதித்துத் தவஞ்செய்யத் தொடங்கும்போது அத்தவத்தால் தன்னைப் பிறர் பெரியனென்று கூற, அப்பெருமை கருதிய மனத்தைப்பார்த்து மேற்கூறுகின்றது.
உன்னு கின்றனை யுனைமணோர் பெரியனென்
றுணருமா செயவுன்பான்
மன்னு மீசனே பந்தம்வீ டளிப்பவன்
மற்றைய ரறிந்தென்னா
மன்னவன்றிருப் பொன்னடி கரியதா
வருந்தவஞ் செய்நெஞ்சே
பின்னை முன்னவ னுலகறிந்திறைஞ்சுமா
பெருமை செய் குவனோரே. (9)
உன்னு கின்றனை யுனை மணோர் பெரியனென் றுணரு மாசெய எ - து, - உன்னை இவ்வுலகத்திலுள்ளார் தவத்தாற் பெரியனென்று அறியுமாறு செய்ய நீ கருதுகின்றனை,
உன்பான் மன்னு மீசனே பந்தம் வீடளிப்பவன் மற்றையரறிந்தென்னாம் எ - து, - உன்னிடத்துவிட்டு நீங்காது நிலைபெற்றிருக்கின்ற பரமசிவனே நீ செய்த அவத்தினைய்யும் தவத்தினையும் அறிந்து அவத்திற்குப் பயனாய பந்தமும் தவத்திற்குப் பயனாய வீடும் தருபவன், அச்சிவனையன்றி ஒழிந்த சீவர்கள் உன்னைப் பெரியனென்று அறியும்படி அவர் சாக்ஷியாக நீ செய்யும் தவத்தால் உனக்கு என்ன பயன் உண்டாமென்று விவேகங்கூற, அதற்கு அச்சிவனது திருவுளத்துக்குப் பாங்காக நடக்கின்ற நன் னெறி யாதென்று மனங்கேட்ப,
அன்னவன் றிருப்பொன்னடிகரிய தாவருந் தவஞ்செய் நெஞ்சே எ - து, - சீவசாக்ஷி குறியாமல் சிவனது திருவடி சாக்ஷியாக அரிய தவத்தினை நெஞ்சமே நீ செய்தியென்று விவேகங்கூற, அதற்கு அத்திருவடி சாக்ஷியாகச் செய்யும் தவத்தால் வரும் பெருமை யாதென்று மனங்கேட்ப,
பின்னை முன்னவ னுலகறிந் திறைஞ்சுமா பெருமை செய்குவ னோரே எ - து, - அதற்கு இங்ஙனம் நீ தவஞ் செய்த பின்னர் யாவர்க்கும் முதல்வனாகிய சிவன் இவ்வுலகத்திலுள்ளார் யாவரும் நின்னைப் பெரியனென்று அறிந்து வணங்கும்படி பெருமையைச் செய்வான், இதனை நீ அறிதியென்று விவேகங் கூறிற்று, எ - று.
இதற்கு உதாரணம் : சிவபோகசாரம். ' நாம் பெரிய ரென்னுமதை நாடா தடக்குமவர், தாம்பெரிய ரென்று மறை சாற்றியிடு - நாம் பெரிய,ரென்பார் சிறிய ரிவரலா திவ்வுலகிற், றுன்பார் சுமப்பார்கள் சொல்.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (9)
------------
இங்ஙனந் திருவடி சாக்ஷியாகத் தவஞ் செய்கின்ற மனம் சுவர்க்க வின்பத்தைக் கருதியவாறு நோக்கி மேற் கூறுகின்றது.
ஓரி னுள்ளமே பாரின்மா னுடர் முத
லுளவறு பிறப்பூடுஞ்
சேரு மின்பமொன் றில்லையென்பதுபிரத்
தியக்கமா நீவல்லாய்
போர்க ளாதிதுன் பிமையவரடைவதும்
புகலநூ லுணர்ந்தாயே
நேரி லாவரன் கழலலான் மிகுசுக
நிலைபிறி திலையன்றே . (10)
ஓரி னுள்ளமே பாரின் மானுடர் முதலுள் வறு பிறப்பூடுஞ் சேரு மின்பமொன்றில்லை யென்பது பிரத்தியக்கமா நீ வல்லாய் எ - து, - நெஞ்சமே உண்மையாக விசாரிக்குமிடத்து இப் பூமிக்கண் மக்கண்முதல் தாவரமீறா யுள்ள அறுவகைப் பிறப்பினுள்ளும் பொருந்தாநின்ற சுகம் ஓரணுவளவாயினும் இன்றென்பது காட்சிப் பிரமாணமாக நீயே அறியவல்லாய்,
போர்களாதிதுன் பிமையவரடைவதும் புகல நூலுணர்ந்தாயே எ - து, - அஃதன்றிச் சத்துருக்களோடு அமர் செய்தல் முதலியவற்றால் வரும் துன்பங்களைத் தேவர்கள் பொருந்துவதும் வேதாகம சாஸ்திரங்கள் கூற அதைச் சத்தப் பிரமாணத்தால் அறிந்தனை யென்று விவேகங்கூற, அதற்கு மக்கண் முதலிய அறுவகைப் பிறப்பிற்கும் மேலாய தேவப் பிறப்பின் கண்ணும் இன்பம் இன்றென்றீர், இனித்தான் சுகமாவது யாதென்று மனங்கேட்ப,
நேரிலா அரன்கழலலான் மிகுசுகநிலைபிறிதிலையன்றே எ - து, - அதற்கு ஒருவாற்றானும் உவமை கூறற்கரிய சிவனது திருவடியேயல்லது மிகுந்த பேரின்ப நிலை வேறு இன்றென்று விவேகங் கூறிற்று, எ - று.
பிறப்பும் இறப்பும் காமமும் நோயும் பயமும் முதலிய துன்பங்களைத் தேவர்களடைதலிற் போர்களாதி துன்பென்று கூறப்பட்டது. அன்றென்றது - அசை நிலை. இதற்கு உதாரணம் : பெருந்திரட்டு. "தீய வசுரர் பகையுண்டு செற்ற மார்வ மிகவுண்டு, நோயுண் டநங்கனாருண்டு நோய்கட் கெல்லாந் தாயான, காய முண்டு கைதொழ வேண்டினரு முண்டு கற்பத்தே, மாயுந் தன்மை யுண்டானால் வானோர்க் கென்னை வளனுண்டே.'' ஆனந்தத் திரட்டு. 'தேவின்மானுடத்திற் றுன்பந் திகழ்வதிப்பரி சேயென்றா, லாவகீழ் விலங்கு பக்கி யாதிதா வரமற்றெல்லா, மோவிய துன்ப வெள்ளத் துழைத்தலோ ரளவு முண்டோ,பாவமா நிரயந் தன்னிற் படு துயர் பகரல் வேண்டா .'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (10)
------------
இங்ஙனங் கூறிய உபதேச மொழிகளை அர்த்தாங்கீகாரமாக உட்கொண்டு பிரபஞ்சத்தில் மிகவும் உவர்ப்புப் பிறவாமல் நின்ற மனத்தைப் பார்த்து மேற்கூறுகின்றது.
அன்றெனக்கு நீ யொருதுணை பிறப்பிறப்
பதிற்றுயரமுங்கேடுந்
தின்ற லொன்றலால் வியாதியாதிகளினாற்
செறிதுயரமுமோர்ந்தோர்
தென்று மேழ்பவக் கஞ்சிலை நெஞ்சமே
யின்பவீ டெது வென்றே
நின்று நின்றழு திலை தொழு திலை சிவ
னேசர்தாள் பூசித்தே. (11)
அன்றெனக்கு நீயொருதுணை எ - து, - பிறப்புத் துன்ப மென்றும் வீடு இன்பமென்றும் உனக்கு நானா வுபாயங்களினாலும் யாம் அறிவித்தும் நீ அப்பிறப்பினை நீக்கி வீட்டினை அடைதற்கு ஏதுவாய தவத்தினை விரைந்து செய்யாது தாமசம் பண்ணுகின்றனை யாகலின் எனக்கு நீ ஒப்பற்ற துணையன்றென்று விவேகங்கூற, அதற்கு நீர் விடுக்கச் சொன்ன பற்றுக்கள் யாவும் விடுத்தேன், தவமுஞ் செய்கின்றேன், நீர் இன்னுங் கூறியவாறுங் கேட்க நிற்கின்றேன். இங்ஙனம் இருந்த என்னை அங்ஙனங் கூறியது என்னை யென்று மனங்கேட்ப,
பிறப்பிறப்பதிற் றுயரமுங்கேடுந் தின்ற லொன்றலால் வியாதியாதிகளினாற் செறிதுயரமு மோர்ந்தோர்ந்தென்று மேழ்பவக் கஞ்சிலை நெஞ்சமே எ - து, - பிறப்பிற் கருப்பாசயப்பை உறுத்தல் முதலிய வைந்தினால் வருகின்ற துன்பத்தையும், இறப்பில் அத்துன்பத்தி னெண் மடங்காகிய துன்பத்தோடு வருகிற நாசத்தையும், இவற்றிற்கு இடையாயுள்ள ஸ்திதிக்கண் அருந்தல் பொருந்தல்களாலும் நோய் முதலியவற்றாலும் அடையாநின்றதுன் பங்களையும் இடைவிடாது எக்காலமும் ஆராய்ந்து அவ்வெழுவகைப் பிறப்பிற்கும் நெஞ்சமே நீ பயந்தாயில்லை,
இன்பவீ டெதுவென்றே நின்று நின்றழுதிலை தொழுதிலை சிவனேசர்தாள் பூசித்தே எ - து. - அஃதன்றி அப்பிறப்புத் துன்பங்களை நீக்குதல் செய்யுஞ் சிவனது திருவடிக்கு நேயராகிய அடியாரது திருவடிகளை அருச்சித்து வணங்கினையில்லை, இன்ப வீடாவது யாதென்று அவர்கள்ளைக் கேட்டு நின்று நின்று அழுதாயில்லை, ஆகலின் யாம் கூறியவாறு நீகேட்டது என்னை யென்று விவேகங் கூறிற்று,எ - று.
வியாதிகளினாற் செறிதுயரம் என்றமையால் அருந்தல் பொருந்தற்கு ஏதுவாகிய திரவியந் தேடுதல் அதனைப் பாதுகாத்தல் நரை திரை மூப்பு முதலியவற்றால் வருந்துன்பமும் கொள்க. கருப்பாசயப்பை யுறுத்தல் முதலிய வைந்து துன்பமென்றது - கருப்பாசயப்பை யுறுத்தல், அதிற் சலம் பூரித்தல், உதராக்கினியால்வேவுதல், பிரசூதவாயு முரித்துத் தள்ளுதல், யோனித்து வாரத்தில் நெருக்குண்டல் ஆகிய இவ்வைந்து மென்றறிக. இவற்றிற்கு உதாரணம்: சிவதருமோத்தரம். " என்றென்றெண்ணி யிருக்குமுயி ரிடர்ப்பட் டழியு மெழில் வரைக்கீ, ழொன்று மொருவன் றனைப்போலக் கருப்பா சயப்பை யுறுத்துதலான். மன்ற வுததி மறிந்தாழ்வான் வருத்த மென்ன வருந்தியிடு, நின்ற கருப்பா சயவுதக வெள்ளங் கொள்ளநிறையழிந்தே.'' என்றும், " அங்கியதனிற் றங்கியிடு மயோமயத்த கும்பத்திற், றங்குமொருவன் றபனம் போற் றபன மெய்துந் தாயுதரத், தங்கிசுடவே யழலனைய சூசியதனாலாகத்தைப்,பங்கித்திடவே படுமிடரி னிருநாற் குணிதம் பட்டழுங்கும்.'' என்றும், "கருப்பாசயமே கட்டமதா மதனிலதிகங் கடுங்காலு, முரிக்க மிகவுமோகமுற முன்னை யுணர்வு மந்நிலையே, மரிக்க வாலைக் கரும்பெனவே யோனி வழியின் வலிதொலைய, நெருக்கப்பட்டு நிலமிசையே தோன்று முயிரு னிலையுடனே.'' என்றும், இப்பிறப்பி னெண்மடங்காய துன்பத்தோடுவரு நாசத்திற்கு உதாரணம் : பெருந்திரட்டு. "பரண மாகிய பெண்டிருஞ் சுற்றமும் பண்டு தங்கையிற்றந்த, விரண மானவை கொண்டிட விவரைவிட்டி யம்பிட திவணேகு, மரண வேதனை யாவரா லறியலா மயங்கியைம் புலனந்தக், கரண மியாவையுங் கலங்கிட வருந்துயர் கடவுளே யறிகிற்பான்.'' என்றும், ''வந்திடு மரணத் துன்ப மறித்துரை செய்யப் போமோ, வுந்தி மேலையும் பித்து முணர்வொடு பொறி கலங்கி, நந்திடா விருளே மூடி நாவுலர்ந்தலமந் தென்னே,யிந்தமா விறப்பிற் றுன்பம் பவத்துன்பத் தெண்மடங்கே.', என்றும், ஆனந்தத்திரட்டு. "கருவிடை வழுந்துந் துன்பமு நிலத்தின் கண்ணுறிற் கொடிய வெந் நோயான், மருவுவெந் துயரு நரைதிரை யெய்தி வருந்திடுந் துன்பமுங் கூற்றா, லுருவினை யொருவுந் துன்பமு மீட்டுங் கருக்குழி யொன்றுறு துயரும், வெருவர வெண்ணி யின்பவீடதனை மேவ நன் குணர்தலே வேண்டும்.'' என்றும், நின்று நின்றழுதிலை யென்பதற்கு உதாரணம் : திருவாசகம். 'ஆடுகின் றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை யென்புருகிப், பாடுகின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை பணிகிலை பாதமலர்,சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை, துணையிலி பிணநெஞ்சே, தேடுகின்றிலை தெருவுதோறலறிலை செய்வதொன் றறியேனே.'' என்றும் மற்றும் வருவனவுறாற் காண்க. (11)
------------
நீர் கூறியவாறே பிறவித் துன்பத்திற்குப் பயமும் இதனை நீக்கிவிட்டு இன்பத்தினை அடைவித்தற்கு ஏதுவாகிய அடியவரிடத்து அன்பும் எனக்கின்றாயது உண்மை, இனிப் பயபத்திகளோடுங் கூடி வீட்டினை அடைதற்கு ஏது செய்கின்றாயென்று மனங்கூற, அதற்கு நீ என்னை அங்ஙனஞ் செய்கின்றா யென்று பின்னும் அதனை வெறுத்து மேற்கூறுகின்றது.
பூசை செய்துதோத்திரஞ்சொலித் தனைநினை
புண்ணியர் பானண்ணற்
காசை செய்திடு மம்பலக் கூத்தனை
யடைகிலை யடைந்தாரிற்
பேசு கின்றனை யறவரின் விளங்கினை
பிறர்மனை நயக்கின்றாய்
சீசி யிங்கிருந் தென்செய்தாய் நெஞ்சமே
செத்திலாய் கெடுவாயே. (12)
பூசைசெய்து தோத்திரஞ் சொலித் தனை நினை புண்ணியர்பா னண்ணற் காசை செய்திடு மம்பலக் கூத்தனை யடைகிலை எ - து, - தனது திருவடியைக் காயத்தால் அருச்சித்து வணங்கி வாக்கால் தோத்திரம் பண்ணி மனத்தால் தியானித்து இங்ஙனம் வழிபடும் பத்தி புண்ணியங்களையுடைய அடியாரிடத்து எழுந்தருளுவதற்குத் திருவுளத்து இச்சை செய்யாநின்ற கனகசபைக்கண் நடம் புரிவோனை மனமொழி மெய்களால் வணங்கி அடைந்தாயில்லை,
அடைந்தாரிற் பேசுகின்றனை யறவரின் விளங்கினை பிறர்மனை நயக்கின்றாய் எ-து,- அவனது திருவடியை யடைந்த அடியார்போல் வார்த்தை மாத்திரஞ் சொல்லு கின்றனை, பசுபுலித்தோல் போர்த்தது போல் உள்ளத்தில் வஞ்சகம் வைத்துக்கொண்டு புறத்துத் துறவறத்தோர் போல் அவரது வேடத்தால் விளங்காநின்றனை, எனக்கு உரிய மனைவியைத் துறந்து தவஞ் செய்கின்றேனென்று தொடங்கிப் பிறர்க்குரிய மனைவியை இச்சிக்கின்றாய்,
சீசி யிங்கிருந் தென் செய்தாய் நெஞ்சமே செத்திலாய் கெடுவாயே எ - து, - சீசீ முன்னிருந்த இல்லறமு மன்றி அதனை விட்டுப் பின்னர் அடைந்த துறவறமு மன்றி இவற்றி னடுவன்று கூடாவொழுக்கஞ்செய்கின்றனை, நெஞ்சமே நீ இவ்விடத்தில் இருந்து என்ன காரியஞ் செய்து கொண்டனை, இனி நீ இருந்தால் இக்கூடாவொழுக்கத்தால் என்னைப்பவத்துன்பத்திலே தள்ளுவாயாகலின் நீ சாவாய் கெடுவாய் என்று விவேகங் கூறிற்று, எ-று.
தனை நினை புண்ணியர் பானண்ணற் காசைசெய்திடும் என்பதற்கு உதாரணம்: திருவாசகம். ''முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப், பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ்,சித்தனே செல்வத் திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ, ரத்தனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே." பிறர்மனை நயக்கின்றாய் என்பதற்கு உதாரணம் : திருவள்ளுவநாயனார். "வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம், புலியின் றோல் போர்த்து மேய்ந் தற்று.'' மற் றும் வருவனவற்றாற் காண்க. (12)
------------
நீர் கூறிய முறையே செய்கின்றதன்றி என் மேலே தவறொன்றும் கண்டிலேன், இங்ஙன மிருப்பச் செத்தி லாய்கெடுவா யென்று என்னை வெறுத்துக் கூறினீர், என்பால் தவறுதான் யாதென்று மனங்கேட்ப அதற்கு மேற்கூறுகின்றது.
வாயினாற்பல நூல்படித் துணர்ந்து நல்
வழிபிறர்க் குரைசெய்து
நீயு லோகவா சாரமோ ரணுத்துணை
யானுநீங் கிலைநெஞ்சே
தூய தாமிவண் பிறர்கொளக் குங்குமஞ்
சுமந்துசெல் கரமுன்னிற்
காய மானுடத் தின்றதற் கன்றியுட்
களவுமின் மையினாலே. (13)
வாயினாற் பலநூல்படித் துணர்ந்து நல்வழி பிறர்க் குரைசெய்து நீ யுலோகவாசார மோரணுத்துணை யானு நீங்கிலை நெஞ்சே எ - து, - பல ஞான சாஸ்திரங்களை வாயினாற் படித்தும் அவற்றினது பொருள்களை ஆராய்ந்தறிந்தும் பிறர்க்கு நன்னெறியாவும் அவர் சம்மதிப்பச் சொல்லியும் நீ முன்னிருந்த உலோகாசார வழக்கத்தில் ஓரணு வளவாயினும் உள்ளே துறந்தனையில்லை' இங்ஙனம் பிறப்புபிற் கேதுவாய உலோகாசாரம் துறத்த லின்மையால் வீட்டிற் கேதுவாய ஞானாசாரம் பற்றியதின் றென்பது நன்றறிந்தேன் நெஞ்சமே,
தூயதா மிவண் பிறர் கொளக் குங்குமஞ்சுமந்து செல்கரமுன்னில் எ - து, - குங்குமப்பொதி சுமந்து செல்கின்ற கர்த்தபம் உன்னிலும் நின்மலமாமென்று விவேகங்கூற, அதற்குப் பல நூல்களைக் கற்றறிந்து பிறர்க்கு உரைக்கச் சிவபூசை தோத்திரம் பண்ண இவற்றா லியாவரும் மதிப்பவிருந்த என்னை மிருகசண்டாளமாகிய கர்த்தபத்திற்குக் கீழ்ப்படுத்திக் கூறினீர், இஃதென்னை யென்று மனங்கேட்ப,
காய மானுடத்தின் றதற் கன்றி யுட்களவு மின்மையி னாலே எ - து, அதற்கு நீமக்களியாக்கையைப் பெற்று நூற்பொருளுணர்ந்தும் அந்நூற்பொருளால் வீட்டின்பமாய பயனைப் பெறாது அப்பயன் பெற்றோன் போல் நெஞ்சில் வஞ்சம் வைத்துக்கொண்டு அந்நூற் பொருளைப் பிறர் பயன்கொளக் கூறுகின்றாய், கர்த்தபத்திற்கு மக்களிடத்தாக்கையு மின்று, அஃதன்றியும் யான் சுமந்த
குங்குமம் பிறர் பயன்கொளக் கொடுத்தேனென்று வஞ்சமும் உளத்தின்றாகலின் உன்னை அதனினுங் கீழ்ப்படுத் திக் கூறியதால் தோஷம் என்னை யென்று விவேகங்
கூறிற்று,எ - று.
உலோகாசார நீங்கிலை யென்றமையால் ஞானாசாரம், பற்றியதின் றென்பது வருவிக்கப்பட்டது. குங்குமம் - ஆகுபெயர். வாயினாற் பல நூல்படித் தென்பதற்கு உதாரணம் : திருவள்ளுவநாயனார். "ஓதி யுணர்ந்தும் பிறர்க் குரைத்துங் தானடங்காப்,பேதையிற் பேதையா ரில்.'' பிறர்கொளக் குங்குமஞ் சுமந்து செல் என்பதற்கு உதா ரணம் :- அறிவானந்த சித்தியார். ''விரிந்தநல் வேத புராணங்க ளாகம மிக்ககலை, தெரிந்து படித்துப் பொருள் செப்பித் தாநிலை சேர்ந்து நில்லா, திருந்தசண்டாளரி னேற்றங் கழுதை யெழிற்குங்குமம், பரிந்து சுமந்தும் பின் வஞ்சம் பண் ணாத பயனெழிலே.'' மற்றும் வருவனவற் றாற் காண்க. (13)
------------
என்னுளத்தின்கண் வஞ்சம் இருந்தமையால் நீர் இகழ்ந்து கூறினீர். பற்றுக்களியாவும் விடுத்த எனக்கு இதுவிடுதல் அரிதோ இதனையும் விடுத்தேன், இனியொரு மார்க்கத்திலே நின்று தவத்தைப் பண்ணி வீட்டை அடைதற்கு அறுவகைச் சமயங்களுள் ஒர் மேலாய சமயம் எனக்கு நீர் கூறுகவென்று மனங் கேட்ப, அதற்கு மேற்கூறுகின்றது.
நாலு வேதமு மொருசம நிலைசொல
நவைசெயீ ரவத்தைப்பாற்
கோலு மூவிரு சமயமா கியபடு
குழியினூ டிழிகின்றாய்
வேலை யாவுனக் குடறாரு விதியுற
வையுமதை விடுவிக்குங்
கால னார்தொடர் பையுமினந் தொடருதி
போலுநீ கடை நெஞ்சே. (14)
நாலுவேதமு மொரு சமநிலை சொல நவைசெயீ ரவத்தைப் பாற்கோலு மூவிரு சமயமாகிய படுகுழியினூ டிழிகின்றாய் எ - து, - இருக்கு முதலிய நான்கு வேதங்களும் சகல கேவலங்களுக்கு மத்தியமாகிய சுத்தாவஸ்தையே வீடடைதற்கு ஏதுவென்று சொல்லக் காம வெகுளி மயக்கமென்னு முக்குற்றங்களையும் உண்டாக்குதல் செய்கிற சகல கேவலங்களென்கிற இரண்டவஸ்தைகளின் பகுதியாகச் சமயிகள் தங்கள் சித்த விகற்பத்தாற் கோலிய அறுவகைச் சமயமாகிய பிறவிப் படுகுழியிலே நீ இரங்காநின்றா யென்று விவேகங்கூற, அதற்கு இவ் வறுசம யங்களையும் படுகுழியென்றீர் இது என்னை யென்று மனங் கேட்ப, அதற்கு இங்ஙனம் கேட்டமையாற் சமயங்களின் மேலே பற்றுக்கள் நீ இன்னம் விடுத்திலையாகலின்,
வேலையா வுனக் குடறரு விதியுறவையு மதைவிடுவிக்குங் காலனார் தொடர்பையு மினந் தொடருதி போலு நீ கடைநெஞ்சே எ - து, - இதுவே வேலையாக உனக்கு உடல் கொடுக்கின்ற பிரமனாகிய உறவினையும் அவனாற் கொடுக்கப்பட்ட உடல்களை விடுவித்தலே வேலையாக விடுவிக்கிற கூற்றனாகிய நட்பினையும் எவ்வகைப்பட்ட பற்றுக்களையும் விடுத்துப் பிறப்பிறப்பை நீக்குதற்கு ஏதுவாய் வந்தும் இன்னமும் தொடர்கின்றனை போலும் நீ யாவைக்குங் கீழாய் நெஞ்சமே யென்று விவேகங் கூறிற்று,எ - று.
வேதாகமங்கள் கூறிய நெறி செல்வோர்க்குப் பிறப்பிறப்பு நீங்குதலேயன்றி மற்றைச் சமய நூல்கள் கூறிய நெறி செல்வோர்க்கு அவை நீங்காவென்பது இதனாற் காண்க . நாலு வேதமு மொரு சமநிலை யென்பதற்கு உதாரணம் : பட்டணத்துப்பிள்ளை நாயனார். "சினந்தனை யற்றுப் பிரியமுந் தானற்றுச் செய்கையற்று, நினைந்தது மற்று நினையா ததுமற்று நின்மலமாய்த்,தனந்தனியேயிருந் தானந்தநித்திரை தங்குகின்ற, வனந்தலி லென்றிருப் பேனத்த னேகயி லாயத்தனே.'' சமயமாகிய படுகுழியின் என்பதற்கு உதாரணம் : தேவிகாலோத்தரம். "சமயா சாரசங் கற்ப விகற்பமு, மமையா தாங்குல வாசார மானது, மிமையா தாரும் விடாதவில் வாழ்க்கையு, மமையார் தோளாய் விடுதலா சாரமே.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (14)
------------
இனி இந்த வுயிரைக் கொண்டுபோகின்ற காலனுக் குத் தப்பிச் செல்லு நெறி எனக்கு நீர் கூறுக வென்று மனங்கேட்ப, அதற்கு மேற் கூறுகின்றது.
நெஞ்ச மேயுட லந்தமா தியைவிடார்
நிற்கமற்றையர்க்கெல்லாம்
வெஞ்ச மற்குதிப் பரிதிவைக் கொருமிரு
கண்டுபுத்திரன் சான்றா
லஞ்ச லிவ்வுடற் கிறுதியிப் பொழுதென
வறியொணா மையினாளுந்
தஞ்ச மென்றரன் சரண்விடே லியாமுமச்
சமன்வலி தடுப்பாமே. (15)
நெஞ்சமே யுடலந்த மாதியை விடார் நிற்க மற்ற யார்க்கெல்லாம் வெஞ்சமற் குதிப்பரிது எ - து, - நெஞ்சமே தேகாந்தத்தில் யாவருக்கு முதல்வனாகிய சிவனது திருவடியை மறவாதபெரியோர்கள் நிற்க மற்றைச் சரியை கிரியைகளைச் செய்கின்ற சீவர்கட்கெல்லாம் கொடிதாகிய கூற்றைக் கடந்து போதல் அரிது என்று விவேகங்கூற, அதற்கு அவ்வடியை மனமொழி மெய்களினால் வழிபடுவோர்க்கும் கூற்றைக் கடத்தல் அரிது என்று கூறினீர், இதற்குப் பிரமாண முண்டோவென்று மனங்கேட்ப,
இவைக்கொரு மிருகண்டு புத்திரன் சான்றால்எ - து, - அதற்குச் சிவனது திருவடியைத் தேகாந்தத்தின் மறவாது பிடித்துக் கூற்றைக் கடப்பதற்கும் அத்திருவடியை மனமாதியால் வழிபட்டும் அவனைக் கடத்தல் அரிதென்பதற்கும் ஒப்பற்ற மிருகண்டு மாமுனி புதல்வராகிய மார்க்கண்டேயரே சாக்ஷியென்று விவேகங் கூற, அது எங்ஙனமென்று மனங்கேட்ப,அதற்கு அவர் மனமாதிகளால் வழிபட்டும் கூற்றன் வந்து பிடித்தான் அங்ஙனம் அவன் பிடித்த போது பயத்தால் மறவாது சிவனது திருவடியை அவர் பிடித்தமையால் அந்தக் கூற்றனையும் கடந்தா ராதலின் அவரே சாக்ஷியென்பது அறிதியென்று விவேகங்கூற, அதற்குத் திருவடியை வழிபடுதலால் யான் கூற்றைக் கடக்கலாமென்று இருந்தேன், நீர் கூறியவாற்றால் அவனை இவ்வழிபாட்டாற் கடக்கக் கூடாதென்பது அறிந்து அச்சமுற்றேன், இனி அவனைக் கடத்தற்கு ஏதுவாகிய திருவடியைப் பிடித்தற்கு உபாயம் நீர் கூறுகவென்று மனங்கேட்ப,
அஞ்ச லிவ்வுடற் கிருதி யிப்பொழுதென வறியொணாமையி னாளுந் தஞ்சமென் றரன் சரண்விடே லியாமு மச்சமன்வலி தடுப்பாமே, எ - து, - அதற்கு நீ அஞ்சற்க, இத்தேகத்திற்கு அந்தம் இந்தக் கணப்போதேன்று நம்மால் அறியக் கூடாமையால் எந்நாளும் மற்றை நினைவெல்லா மொழித்துச் சிவனது திருவடி தஞ்சமென்று அதனையே விடாது பற்றுதி, இங்ஙனஞ் செய்தியெனின் அந்தக் கூற்றன் நம்மைப் பிடிக்கவருஞ் சாமர்த்தியத்தை நாமும் தடுத்துக் கொள்வாமென்று விவேகங் கூறிற்று,எ-று.
தஞ்சம் - பற்றுக்கோடு. இதற்கு உதாரணம் : பெருந்திரட்டு. "வில்வி ளங்கிய விண்ணவர் மிகுந்த வாழ் நாளு, மல்ல ரும்பக லென்னுமீர் வாளினாலரிந்து, கொல்லும் வெங்கொடுங் கூற்றையார் குலைவுறார் குறுகி, னல் விருந்தென வுவந்தெதிர் கொள்ளுவான் ஞானி'' என் றும், திருவள்ளுவர். '' வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க், கியாண்டு மிடும்பை யில" என்றும், மற்றும் வருவனவற்றாற் காண்க. (15)
------------
இப்போது பெற்ற இக்காயத்தின்கண் நின்று ஒரு தலையாகத் திருவடியை மறவாது பிடிக்க வேண்டும் மென்று இன்னும் வற்புறுத்துதல் மேற்கூறுகின்றது.
தடுத்து மேலுமிவ் வுருவமா யினும் பெறல்
சற்றல மறைநாகத்
திடத்தின் மாதவ ரிருவர்கங் கெனவடைந்
திருத்தல்சான் றரிதாகிக்
கிடைத்த தேகமும் விவேகமு மிருக்குஞான்
றேகிரீசனைநெஞ்சே
யடுத்தி லாய்பல் கவலை மாய்த் தோருணர்
வாகிநின் றகலாதே. (16)
தடுத்து மேலு மிவ்வுருவ மாயினும் பெறல் சற்றல எ - து, - இத்தேகத்தை விட்டு இனிமேல் இம்மானுட தேகமாயினும் பெறல் எளிதன்றென்று விவேகங் கூற, அதற்கு இம்மானுட தேகமாயினும் பெறுதல் அரிதென்று மிகவும் அருமைப்படுத்திக் கூறுகின்றீர், இது கிடைப்பது அரிதென்பதற்கு ஓர் காட்சிப் பிரமாண முண்டோவென்று மனங்கேட்ப,
மறை நாகத்திடத்தின் மாதவரிருவர் கங்கென வடைந்திருத்தல் சான்று எ - து, - அதற்குச் சம்பரன் சம்பாதி யென்னு மிரண்டு முனிவரும் புத்தியை விரும்பி மேலாகிய தவத்தினைப்பண்ண அதனாற் சிவன் வந்து தோன்றி உமக்கு என்னை வேண்டியதென்று கேட்ப, அதற்குத் தாம் கருதிய அதனை மறைத்து முத்தி வேண்டுமென்று கேட்ப, அதற்கு நீர் கருதிய தொன்றும் நம்மைக் கேட்பது மற்றொன்றுமோ வென்று திருவுளத்தின் முனிவு செய்து சாபங்கொடுத்தருள, அதனால் அவ்விரு வோரும் வேதகிரியின் கண்ணே கழுகெனக் கிருதயுகமுதல் இந்தக் கலியுகமளவும் இத்தேகங் கிடையாது இன்றும் இருத்தலே சாக்ஷியென்று விவேகங்கூற, அதற்கு வினா வேறு இன்றி மனஞ் சும்மா விருப்ப,
அரிதாகிக் கிடைத்த தேகமும் விவேகமு மிருக்கு ஞான்றே கிரீசனை நெஞ்சே யடுத்திலாய் பல கவலை மாய்த் தோருணர்வாகி நின்றகலாதே எ - து, - ஆகலின் மிகவும் அரிதாகக் கிடைத்த இந்த மானுட தேகமும் இதனில் தன்னைத் தலைவனை அறிய வருகிற அரிதாகிய விவேகமு மிருக்கிற இக்காலத்திற்றானே தேக போகங் களைக் கருதுகின்ற பல்வேறு வகைப்பட்ட கவலைகளையுங் கெடுத்து ஏகவறிவாய் நின்று கைலையங்கிரி வாசனாகிய சிவனது திருவடியை விட்டு நீங்காது நீ அடைந்தாயில்லை, நெஞ்சமே நின் கருத்திருந்தது என்னை யென்று விவேகங் கூறிற்று, எ - று.
அரிதாகி யென்பது விவேகத்தோடும் பிரித்துக் கூட் டப்பட்டது. தடுத்து மேலு மிவ்வுருவமாயினும் என்ப தற்கு உதாரணம் : ஆனந்தத்திரட்டு. "மந்திரவாட் பெற்றும் பகைவெல்லான் மற்ற துகொண், டந்தோ தன் மெய்யை யறிந்தான் போன் - றிந்தவுடல், கொண்டு முத்தி செல்லுங் குறிப்பின்றிச் சிற்றின்பங்,கண்டுவினைக் காளாங் கணக்கு.'' விவேகமு மிருக்கு ஞான்றே என்பதற்கு உதாரணம் : ஞானவாசிட்டம். "கையினா லறை யுண்ணும் பந்துபோலக் காலனா லறையுண்டு கணக்கில்லாத, மெய்யிலே புகுந்திளைத்து விவேகம் பெற்றும் விரகிலார் சிலர் பிறப்பின் மீண்டும் வீழ்ந்தார்,மையினான் மூன்றுலகாம் பணதிசெய்து வருநிற்கும் போமாகி வளர்ந்து வாளா, பொய்யினான் மிகவிரியும் வேலையூடே பொருதிரைபோற் பரபதத்தே புரிந்த மாயை.'' மற்றும் வரும் வனவற்றாற்சாண்க. (16)
------------
இங்ஙனஞ் சத்தப் பிரமாணத்தாலுங் காட்சிப் பிரமா ணத்தாலும் இக்காயங் கிடைத்தற்கு அரிதென்று அறிவிக்க அறிந்து மனஞ் சம்மதிப்ப, இனித்திருவடியைத் தாமதம் பண்ணாமல் விரைந்து நினைத்தற்கு மேற்கூறுகின்றது.
அகலு மிவ்வுடன் மினின்விரைந்தெனின் விரைந்
தரற்றொழீ தலத்திங்கே
சகல முஞ்செய் நினைகுத றனையினித்
தடப்புன லிதுவென்றே
பகலினால்விரி கானலை நெஞ்சமே
கருதிநெற் பயிராதி
யிகலி னாற்செய நினைபவர், நினைவையொத்
திடுமென விடுவாயே. (17)
அகலு மிவ்வுடன் மினின் விரைந்தெனின் விரைந் தரற்றொழு எ - து, - மேகத்தின்கண் தோன்றி நின்று அழியும் மின்னல் போல் மாயையின்கண் தோன்றிக் கணகாலத்து அழியும் இந்த வுடலமென்றால் இஃது உள்ளபோதே அதிசீக்கிரமாகச் சிவனது திருவடியை வணங்குதி,
ஈதல திங்கே சகலமுஞ் செய்ய நினைக்குதறனை எ - து, - இத்திருவடியை இடைவிடாது வணங்குதலன்றிப்பொய் யாகிய பிரபஞ்சத்தை மெய்யாகக் கருதிக்கொண்டு இப்பிரபஞ்சத்துள்ள அறுவகைத் தொழிலையுஞ் செய்யத் தொடங்குவதை,
இனித் தடப்புன லிதுவென்றே பகலினால் விரிகானலை நெஞ்சமே கருதி நெற்பயிராதி யிகலினாற் செய்ய நினைபவர் நினைவை யொத்திடுமென விடுவாயே எ - து, - சூரியகிரணத்தாற் பொய்யாய் விரிகின்ற கானற்சலத்தை மெய்யான தடாகசலம் ஈதென்று கருதி நெற்பயிர் முதலிய பைங்கூழினைத் தமது சாமர்த்தியத்தால் உண்டாக்குதல் செய்ய அறியாமையாற் கருதுவாரது கருத்தைப் போலும் என் கருத்துமென அறிந்து நெஞ்சமே இனி விடுப்பாயாக வென்று விவேகங் கூறிற்று, எ-று.
சூரியகிரணத்தாற் பொய்யாய்த் தோன்றுங் கானற்சலம் போலச் சிவத்தை விட்டு நீங்காத அபின்னாசத்தியாற் பின்னாசத்தி பொய்யாய்த் தோன்றுதலின் இப்பின்னாசத்தி காரியமாகிய பிரபஞ்சம் கானற்சலத்தி னிழல்போலப் பொய்யெனக் கூறப்பட்டது. கானற் சலத்தைப் பொய்யென்று அறிந்தவன் பைங்கூழ் செய்ய நினையாமைபோலப் பிரபஞ்சத்தைப் பொய்யென்று அறிந்தவன் இப்பிரபஞ்சத் தொழில்களின் முயலான் என்பது அறிக. அகலு மிவ்வுடல் என்பதற்கு உதாரணம் குறுந்திரட்டு" காயநீர்க்குமிழியதிலுறு மின்பங்கானலிற் புனலிது தனக்கிங், காயவித் துயர மளவிலை யிதை நீ யாய்வுறா மையிலழிந் தற்றாய், நீயினிக் கவலை நினைவெலா மொழித்து நெஞ்சமே வந்தெனக் குடன்பட், டாயநற் சொரூபர்க் கன்பதே யிசைந்தா லரியதே தார்நமக் கெதிரே.'' பிரபஞ்சம் பொய்யென்பதற்கு உதாரணம்: திருவாசகம். ''பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே யெனக்கருதிப்,பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே,தீர்த்தாய் திகழ்தில்லை யம்பலத்தே திருநடஞ் செய், கூத்தாவுன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம்.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (17)
------------
பிரபஞ்சம் பொய்யென்பதுந் திருவடி மெய்யென்பதும் இங்ஙனம் நீர் அறிவிக்க ஐயமின்றி நன்றுணர்ந்தேன் உமது கிருபையை என்னென்று உரைப்பே னென்று மனங்கூற, அதற்கு ஞானசமாதி கூடுதற்கு மனத்தை உடன் படுத்தி மேற்கூறுகின்றது.
வாய்மை யீதுணர்ந் திடுதிநன் னெஞ்சமே
வருகணத் தேதேனு
நீநினைந்திடே லவ்வள வுடலுற
னிச்சயிப் பரிதத்தாற்
போய தோர்கணச் செயலுனேல் பயனிலை
புகனிகழ் கணத்தேனுந்
தீமை நன்மைநீ நினைவதென் வினைவழிச்
சிவன்றரு குதலாலே. (18)
வாய்மை யீதுணர்ந் திடுதி நன்னெஞ்சமே எ - து, - யான் கூறிய நன்மார்க்க நெறியே சென்று எனக்கு நன்மை தருகின்ற நல்ல நெஞ்சமே உண்மையாகிய இதனையும் நீ அறிவாய்,
வருகணத் தேதேனு நீ நினைந்திடே லவ்வளவுடலுற னிச்சயிப் பரிதத்தால் . எ - து, - நீ ஞானநிட்டை கூடு மிடத்து ஓர் கணப்போதாயினும் அந்நிட்டையின் நீங்காது இருக்க வேண்டு மாகலின் வருங்காலங்களிற் கணப்போதாயினும் யாதொன்றனையுங் கருதிச் செல்லற்க,அக்கணப்போதளவும் இவ்வுடல் இருத்தற்கு நிச்சயம் பண்ணக்கூடாது அதனால்,
போய தோர்கணச் செயலுனேல் பயனிலை எ - து, - சென்ற காலத்து ஓர்கணப் போதாயினும் இன்னது செய்யாது விடுத்தேன் என்று கருதற்க, அதனாற்பயன் ஒன்று மில்லையென்று விவேகங்கூற, அதற்கு வருங்காலஞ் சென்றகாலங்களில் ஒன்றையும் நினையேலென்று கூறினீர், இஃதுண்மை ; நிகழ்காலத்து அன்னபானாதிகளைக் குறித்தாயினும் நினைக்கலாகாதோ வென்று மனங்கேட்ப,
புகனிகழ் கணத்தேனுந் தீமை நன்மை நீ நினைவதென் வினைவழிச்சிவன் றருகுதலாலே எ - து, - அதற்குச் சொல்லப்பட்ட நிகழ்காலத்திற் கணப்போதாயினும் நீ சுகதுக்கங்களை நினைவது என்னை,நமது நல்வினை தீவினைகளின் படியே சிவன் அறிந்து சுகதுக்கங்களை நமக்கு அருத்துத்லால் என்று விவேகங் கூறிற்று. எ - று.
இதற்கு உதாரணம் : திருவள்ளுவநாயனார். 'ஒரு பொழுதும் வாழ்வதறியார் கருதுப, கோடியுமல்ல பல.'' என்றும் ஒளவையார் நல்வழி "உண்பது நாழியுடுப்பது நான்குமுழ,மெண்பது கோடி நினைந் தெண்ணுவன - கண்புதைந்த, மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம் போலச்,சாந்துணையுஞ் சஞ்சலமே தான்'' என்றும், மற்றும் வருவனவற்றாற் காண்க. (18)
------------
பிரிய விடயங்கள் வரவேண்டு மென்று கருதாது இருத்தற்கும் வந்த விடயங்களின் மேல் ஆசை செல்லாது திருவடியை மறவாது இருத்தற்கும் மேல் உபாயங் கூறுகின்றது.
தருவ தீமையி னன்மையு மூழடுத்
ததையுயர் கழைமேனின்
றுரைக ளாதிசெய் கூத்தரிற்,பிறனை நச்
சொருமக டவனேவல்
புரித றன்னினைம் பொறிகளாற் பற்றினும்
புகனிராசையைநீயுற்
றிரவி னும்பக லினும்விடே னெஞ்சமே
யின்பவீ டெளிதாமே. (19)
தருவ தீமையி னன்மையு மூழடுத்ததை எ - து, - உனக்கு வெறுப்பாகிய துன்பத்தை நீ விரும்பாதிருக்கவும் பழவினை தானே கொடுப்பது போல் உனக்கு விருப்பமாகிய சுகத்தையும் நீ விரும்பாதிருக்க அவ்வினை தானே கொடுக்கும், உனக்கு எக்காலத்து எவ்வினைப் பயன் அனுபவிக்கப் பொருந்தியது அதனை யாகலிற் பழவினைப் படியே வருமென்று அறிந்து எதிர்காலத்து ஒன்றையும் கருதாது விடுத்து,
உயர் கழைமேனின் றுரைகளாதிசெய்கூத்தரிற்பிறனை நச்சொருமகடவனேவல் புரிதறன்னின் எ - து, - உயர்ந்த கம்பத்தின்க ணின்று அந்நிலைக்குத் தவறு வாராது அதன்கட் கருத்தை வைத்துத் தியாகியைப் புகழ்தன் முதலிய நோக்கு வித்தைகளைப் பழக்கத்தாற் காயத்திற் காட்டுதல் செய்யுங் கூத்தரைப்போலவும், பரபுருஷனை நச்சிய ஓர்நாரி அவன்மேற் கருத்தை வைத்துத் தன் புருஷனுக்குப் பழக்கத்தால் இவனது ஏவற்றொழில்களைச் செய்தல் போலவும்,
ஐம்பொறிகளாற் பற்றினும் புகனிராசையை நீ யுற்றிரவினும் பகலினும் விடேனெஞ்சமே யின்ப வீடெளி தாமே எ - து, - ஐந்திந்திரியங்களாலும் ஐந்து விஷயங்களைப் பிடித்தாலுஞ் சொல்லாநின்ற அவ்விஷயங்களை இன்பமென்று கருதி அவற்றின்கண் ஆசையுறாது திருவடிக்கண் ஆசையைவைத்து இதனை இராக்காலத்திலும் பகற்காலத்திலும் விட்டு நீங்காதே யாவர்க்கும் அரிதாகிய வீட்டின்பம் உனக்கு எளிதில் உண்டாமென்று விவேகங் கூறிற்று, எ - று.
தவன் - புருஷன். இதற்கு உதாரணம் : பெருந்திரட்டு - "இல்லின் மிகழ்ந்து பேரின்பம் வேண்டி யெழிற்குரு வருடனின் மேலா, நல்லுணர் வதனைப் பெற்றொரே காந்த நண்ணியே சமாதியிற் றொடங்கி, யல்பாக னோக்க னரவமாட்டிடுவோ னறைதரு பணிக்கன்மீகாமன்,வல்கரிப் பாகன் போல நோக்குவர்க்கு மனையின் மீட்டிச்சையு மெழுமோ." மற்றும் வருவனவற்றாற் காண்க. (19)
------------
எக்காலமும் இடைவிடாது திருவடியை மறவாதிருத்தல் பிரதானம், ஈதன்றி நிராசையுடனும் இருக்க வேண்டுமென்று கூறினீர் இது என்னை யென்று மனங்கேட்ப, அதற்கு மேற் கூறுகின்றது.
ஆமு னிச்சையே மேலுமே லும்பிறப்
பளிக்கும்வித் தெனநெஞ்சே
நீமறித்திடா சைக்கடல் சுவறுமே
நினைவெனுந் திரைமாயும்
போமி றந்தெலா நினைவுமெப் பொழுதிலப்
பொழுது பூரணமாய்
சோமசேகரத் தெந்தைபொற் கழலையுந்
தொழலைய மிலைநாமே (20)
ஆமுனிச்சையே மேலுமேலும் பிறப்பளிக்கும் வித்தென நெஞ்சே நீ மறித்திடு எ - து, - உனது அவாவே மேன்மேலும் பல பிறப்பினை உண்டாக்கும் ஓர் வித்தென்று நெஞ்சமே நீ கருதி அந்த அவா மனத்தின்கண் முளைக்குந்தோறும் விவேகத்தாலே பார்த்துத் தடுக்குதல் செய்,
ஆசைக்கடல் சுவறுமே நினைவெனுந் திரைமாயும் எ - து, - அங்ஙனஞ் செய்தியேற்கண்ட விடயங்களை இச்சிக்கும் ஆசையாகிய கடல் வற்றும், அக்கடல் வற்றவே புறவிஷயங்களிற் செல்ல நினைவாகிய திரை நாசமாம்,
போமிறந் தெலா நினைவும் எ - து, - அந்நினைவெனுந் திரை நாசமாகவே முன்னர் இந்திரியங்களாற் கண்டு மனத்தின்கண் ஏறியிருந்த விஷயவாசனை நினைவெல்லாம் ஒருங்கே இறந்து போகும்,
எப்பொழுதி லப்பொழுது பூரணமாய சோமசேகரத் தெந்தை பொற் கழலையுந் தொழ லையமிலை நாமே எ - து, - அந்நினைவெல்லாம் எப்பொழுது இறந்தது அப்பொழுது தானே சந்திரசூடனாகிய எமது தந்தையினது பரிபூரணமாகிய திருவடியையுந் தொழுதற்கு ஐயமின் றென்று விவேகங் கூறிற்று, எ - று.
உடல்விட்டு உயிர் நீங்குங்கால் யாதோர் அவாத் தோன்றிற்று அவ்வவாவின் வழித்தாய்ச் சென்று உயிர் பிறத்தலின் அவாப் பிறப்பிற்கு வித்தெனப்பட்டது.
இதற்கு உதாரணம் : திருவள்ளுவநாயனார். "அவாவென்ப வெல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றுந், தவாஅப் பிறப்பீனும் வித்து." ஆசைக்கடல் சுவறுமே நினைவெனுந் திரைமாயும் என்பதற்கு உதாரணம்: ஞானவாசிட்டம். "இச்சையாம் விறகு மாண்டா லெண்ணமாம் வன்னி மாயு, நிச்சயந் தத்துவத்தி னாக்கையா நெடுந்தே ரேறி,மெச்சிய வுதாரக் கண்ணால் வேட்கையான் மிகவும் வாடுங், கொச்சைஞாலத்தை நோக்கிக் குறைவற விருப்பாய் தீரா.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (20)
------------
நினைவுகள் யாவு மிறந்து போகவேண்டு மென்று கூறினீர், சிவபூசை முதலிய சற்கருமங்களாயினுஞ் செய்ய வேண்டாவோ வென்று மனங்கேட்ப,அதற்கு மேற்கூறுகின்றது.
நாம ரற்கருச் சனைமுத லியகொடு
நலஞ்செய்தே மவையின்றித்
தீமை செய்துளே மெனவுமுன் னிலையொரு
சிறிதசை வடைந்தாலும்
யாமி யற்றப ராதமென் னினைவுமற்
றசைகிலை யெனினெஞ்சே
யேம மிக்குறச் செய்யுநன் கிறைகழற்
கெனத்துணிந் திடுநீயே. (21)
நாமரற் கருச்சனை முதலிய கொடுநலஞ் செய்தே மவையின்றித் தீமை செய்துளே மெனவுமுன்னிலையொரு சிறிதசை வடைந்தாலும் யாமியற்றபராதம்,எ - து, - யாம் இன்றைக்குச் சிவனது திருவடிக்குத் திருமஞ்சன பத்திர புஷ்பங்களாற் செய்யும் அருச்சனை முதலிய உபசாரங்களைக் கொண்டு நன்மை செய்தே மெனவும், இன்றைக்கு அவைசெய்குதல் யின்மையால் தீமை செய்தே மெனவும், இங்ஙனங் கருதுதலைப்பற்றி உனது நிலை சிறிதோரசைவு பொருந்திற்றாயினும் அத்திருவடிக்குச் செய்யும் அபராதம் அதுவேயாமென்று விவேகங் கூற,
என் எ - து, - அதற்குப் பூசை செய்தேன் செய்கின்றிலேனென்னு நினைவு சிவனுக்கு அபராதஞ் செய்தல் என்னையென்று மனங்கேட்ப,அதற்கு ஈதென்று சுட்டி யறியக்கூடாத சிவத்தைச் சுட்டியறிதலே அபராதஞ் செய்தல் என்று விவேகங் கூற, அதற்கு அங்ஙனஞ் சுட்டாமற் சிவத்தையறிதற்கு உபாயம் எங்ஙனமென்று மனங் கேட்ப,
நினைவுமற் றசைகிலை யெனினெஞ்சே யேமமிக்குறச் செய்யுநன் கிறைகழற் கெனத்துணிந்திடு நீயே எ - து, - அதற்கு ஓரணுவளவாயினும் ஒன்றைச்சுட்டி யெழுந்து அசையாது நிற்றியெனின் இதுவே திருவடிக்கு இன்ப மிகுந்துறச் செய்யும் பூசையென நீ நெஞ்சமே நிச்சயித்து அறிதியென்று விவேகங் கூறிற்று, எ - று.
தானு முருவமா யிருந்து கொண்டு சிவனையும் ஓருரு வாகக்கண்டு அருச்சனை பண்ணுதல் கற்பனை யாகலின் இது அபராதமென்றும், தான் அறிவாய் நின்று அறிவிற்கு அறிவாகிய சிவத்தின்கண் அசைவறநிற்றல் உண்மையாகலின் இதுவே பூசையென்றுங் கூறப்பட்டன. இதற்கு உதாரணம் : ஆனந்தத்திரட்டு. "எப்பொருள் களுந்தானாகி யிலங்கிடப் படுவானீச, னப்படி விளங்குகின்ற தறிதலே பரன்றனக்கு, மெய்ப்படு பூசை வேறோர் செயலினா லன்று மெய்யே, யிப்படிஞானந் தன்னாலிறைஞ் சிடப்படுவானீசன்.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (21)
------------
இங்ஙனம் அசைவற நிற்றல் எனக்குக் கூடாது, சிவன் இங்ஙன மிருப்பானென்று தியானஞ் செய்கின்றேன் என்று கூறிய மனத்தைப் பார்த்து மேற் கூறுகின்றது.
நீ மெய்ஞ் ஞானநன் னிட்டைசா ருதலரி
தெனவுநெஞ் சகமேசற்
றோய்வி லாதுசெய் தியானமா திகளெளி
தெனவுமுன் னாநின்றாய்
சேய்க டம்மினத் தாய்கொல்சும் மாவிருக்
குதல்செயற் கரிதாகிப்
போயு ழைப்புனக் கெளியதா யிருந்தவிப்
புதுமையென் புகனின்றே. (22)
நீ மெஞ்ஞான நன்னிட்டை சாருத லரிதெனவு நெஞ்சகமே சற்றோய்விலாது செய் தியானமாதிக ளெளி தெனவு முன்னாநின்றாய் எ - து, - நெஞ்சமே நீ அதுவென்றும் இதுவென்றும் ஒன்றனையுஞ் சுட்டி நினையாது சும்மா விருக்கின்ற உண்மை ஞானமாகிய நல்ல நிஷ்டை கூடுதல் அரியதெனவும், ஓரணுவளவாயினும் நினைவு ஒழியாது செய்யாநின்ற தியான செப சிவபூசை முதலிய செய்குதல் எளியதெனவும் கருதாநின்றனை,
சேய்க டம்மினத்தாய்கொல் எ-து- ஆகலின் அன்னை நீராட்டல் முதலிய உபசாரங்களைச் செய்து மலரணையில் இருத்தவும் அவ்விடத்திற் சுகத்திற் சும்மா விராது புறத்து எழுந்து ஓடி வருந்துஞ் சிறுபிள்ளைகளது கூட்டத்தினை யுடையையோ நீயும்,
சும்மா விருக்குதல் செயற்கரிதாகிப் போயுழைப் புனக்கெளியதாயிருந்தவிப்புதுமையென் புகனின்றே எ - து, - தியானமாதிகளை மனமொழி மெய்களினாற் செய்யாது சும்மாவிரு நீ யென்று யான் கூற அங்ஙனம் இருக்குதல் செய்தற்கு அரிதாய் அவற்றைச் செய்குவலென்று சென்று வருந்தும் வருத்தம் உனக்கு எளியதாயிருந்த இப்புதுமை யென்னையோ யாவர்க்குஞ் சும்மா விருத்தல் எளிது ஓடித்திரிதல் அரிது அவர்களுக்கு அங்ஙனமிருப்ப உனக்கு இங்ஙனம் இருந்த இதனை நீ நின்று எனக்குச் சொல்லுகவென்று விவேகங் கூறிற்று, எ-று.
மனமாதி முக்கரணங்களும் அசையாது நின்றவிடம் மெய்ஞ்ஞான நிஷ்டை யென்பதும் அவையசைந்து செய்யுந் தியான சமாதிகள் அந்நிஷ்டை வருதற்கு ஏதுவென்பதும் அறிக. மெய்ஞ்ஞான நிஷ்டை யென்பதற்கு உதாரணம் : கந்தரனுபூதி. "செம்மான் மகளைத் திருடுந் திருடன், பெம்மான் முருகன் பிறவானிறவான், சும்மா விரு சொல்லறவென் றலுமற், றம்மா பொருளொன்று மறிந் திலனே.'' சேய்கடம்மினத்தாய் கொல் என்பதற்கு உதாரணம் : ஞானவாசிட்டம், "மிகமுயன்று வருந்தா மற்சமமாகின்ற வேண்டுகோளான் முயல்வால் வினோதந்தன்னாற்,பகர்மனமாஞ் சிறுமகவை நிறுத்தல் வேண்டும் பல பிறப்பிற் பரிசயங்களகலப்பண்ணி, யகல் சுபவா தனையுதித்தான் முத்திப் பேறாமையுறினுஞ் சுகமடைவை யது தீ தன்று, திகழ்மனம் போய்த் தற்பதத்தைத் தெளியு மட்டும் தேசிகனூல் சொல்வழியிற் செல்லுவாயே.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (22)
------------
அசைவற நிற்றல் நேரே வீட்டை அடைதற்கு ஏதுவாகலின் அதனையே இன்னும் வற்புறுத்தி மேற்கூறுகின்றது.
நின்று றாதலை குதல்விருப் புனக்கதை
நீத்திருக் குதனெஞ்சே
யென்ற னக்குநல் விருப்புவா ளாவிவ
ணிருத்தறீ துயர்வீடு
சென்று காண்குவ லெனநினைந் தலைதியோ,
சிவன்றிரி சயமன்றா
லொன்று நீயுனா திருப்பதே யதைத்தொட
ருபாயமென் றறிகண்டாய். (23)
நின்றுறா தலைகுதல் விருப்புனக் கதை நீத்திருக்குத் னெஞ்சே யென்றனக்கு நல்விருப்பு எ - து, - அசைவற நில்லாது தியானமாதிகளைக் கருதி அசைகுதல் உனக்கு நல்விருப்பம் அவ்வசைவைவிட்டுச் சும்மா விருக்குதல் நெஞ்சமே எனக்கு நல்லிருப்பமென்று விவேகங் கூற, அதற்கு இங்ஙனஞ் சும்மா விருந்தால் எங்ஙனம் வீடு அடைகுது மென்று மனங்கேட்ப,
வாளா விவணிருத்தறீ துயர்வீடு சென்று காண்குவ லெனநினைந் தலைதியோ,எ - து, - சும்மா விவ்விடத்தில் இருக்குதல் குற்றம், மேலாகிய வீட்டினைத் தியான முதலிய நன்மார்க்கத்திற் சென்று அறிவே னென்று கருதி அலைகின்றனையோ நீயென்று விவேகங் கேட்ப, அதற்கு யான் அங்ஙனந்தான் கருதுகின்றேனென்று மனங்கூற, அதற்கு நம்மிருவர்க்கும் வீட்டை அடைகுவதே கருத்தாகலின் நீ செல்லு நெறியால் அதனை அடையலாமெனின் நீ கூறியவாறு யான் கேட்கின்றேன், யான் செல்லு நெறியால் அதனை அடையலா மெனின் யான் கூறியவாறு நீ கேட்குதியா வென்று விவேகங் கூற, அதற்கு நன்று கூறினீரென்று மனஞ் சம்மதிப்ப,
சிவன் றிரிசய மன்றால், எ - து, - அதற்கு நீ கருதிய தியானாதிகளால் வீட்டினை அடையலா மெனின் அவ்வீடு மனாதிகளால் அறியுங் காட்சிப்பொருள் அன்றென்று விவேகங் கூற, அதற்கு நீர் இங்ஙனம் கூறியவற்றால் எனது உபாயத்தால் அதனை அடைதற்கு அரிது, அதனை அடைதற்கு எனக்கு ஓருபாயம் நீர் கூறுகவென்று மனம் கேட்ப,
ஒன்று நீ யுனா திருப்பதே யதைத்தொட ருபாய மென்றறிகண்டாய் எ - து, - அதற்கு அணுவளவேனும் ஒன்றையும் நினையாது அசைவறவிருத்தலே அவ்வீட்டை அடைதற்கு நேரே உபாயமாமென்று அறிவாயாக வென்று விவேகங் கூறிற்று, எ - று.
சிவமென்பது வீடு. இதற்கு உதாரணம் : ஆனந்தத் திரட்டு. " வாங்கி யைம்பொறி நின்ற மனந்தனை, நீங்கிடாவகை நெஞ்சு ளிருத்தியே, தீங்கி யாவையுஞ் சிந்தை செயாவணம், பாங்கி யாதது வேடயில் வாயரோ" - என் றும், தேவிகாலோத்தரம். ''மந்திரஞ் செபந்தி யானம் பூசனை வணக்கம் வேண்டா,வந்தமி லாதமுத்திக் குபா யமே யறியல் வேண்டுஞ்,சிந்தனை புறனே செல்லிற் றுயரமே திரிய மீட்கிற், பந்தமாந் துன்பம் நீங்கிப் பரமான வின்பஞ் சேர்வார்'' என்றும் மற்றும் வருவன வற்றாற் காண்க. (23).
------------
வீட்டை அடைதற்கு உபாயம் அசைவற நிற்றலென்று கூறினீர், இனி அசைவற நிற்றற்கு உபாயமும் அங்ஙன நின்றால் வீடு வருமாறும் எங்ஙனமென்று மனங்கேட்ப, மேற் கூறுகின்றது.
கண்ட வைம்புலக் காட்சிபோய்க் காட்சியாற்
கலந்தவா தனையாவும்
விண்டு, மூடமற்றலையிலாக் கடலென
விளங்கினை யெனினெஞ்னே,
யுண்டு கொன்னமக் கொருதுய ராங்குவீர்
டுளங்கையிற் கனியேயாம்
பண்டை மேவிய பயமெலா மறுங்குரு
பதத்திலும் புகலாமே. (24)
கண்ட வைம்புலக் காட்சிபோய்க் காட்சியாற் கலந்த வாதனையாவும் விண்டு மூடமற் றலையிலாக் கடலென விளங்கினை யெனி னெஞ்சே எ - து, - ஐம்பொறிகளாற் காணப்பட்ட சத்தாதி விஷயக் காட்சிகளும் போய் அவ்விஷயக்காட்சியாற் கரணத்தில் ஏறியிருந்த வாசனைகள் அனைத்தும் விட்டு நீங்கி இவ்வாசனை முடிவில் தோன்று மறைப்பும் அற்று நிர்த்தரங்க சமுத்திரம்போல விளங் காநின்றனை யானால் நெஞ்சமே,
உண்டுகொன் னமக்கொருதுய ராங்குவீ டுளங்கையிற் கனியேயாம் எ - து, - பிறவித் துன்பங்களுள் ஒரு துன்பமாயினும் நமக்கு உண்டாமோ அவ்விடத்து வீடு உள்ளங்கை நெல்லிப்பழம் போல் வுண்டாம்,
பண்டை மேவிய பயமெலா மறுங் குரு பதத்திலும் புகலாமே எ - து, - முன்னர்ப் பொருந்தியிருந்த பிறவித் துன்பத்திற்குப் பயந்த பயமனைத்தும் நீங்கும் குருதுரி யத்தையும் யாம் அடையலா மென்று விவேகம் கூறிற்று,எ - று.
கேவல சகலங்களி னன்றிச் சுத்தநிலையில் துன்பம் இன்மையால் ஒரு துயருண்டுகொன் னமக்கென்றும் அச்சுத்த நிலை பெற்றோர் குருதுரியமும் அடைவராகலிற் குருபதத்திலும் புகலாமே யென்றும் கூறப்பட்டன. இதற்கு உதாரணம்: சசிவன்னபோதம். "வினவிற் பரத்தையறி வுறுதற் கவத்தைபுலன் வினைமாறியே, நனவிற் சுழுத்தி நிலை வரினப் பொருட்டிகழு நலனா கவே." மற்றும் வருவனவற்றாற் காண்க. (24)
------------
அசைவற நிற்றற்கு உபாயம் ஐம்புலக் காட்சியுங் கரணவாசனையும் மறைப்பும் நீங்குதலென்று கூறினீர், அக்கரண வாசனையும் மறைப்பும் நீங்குதற்கு முன்னர் ஐம்புலக்காட்சி நீங்க வேண்டுமாகலின் இக்காட்சி நீங்குதற்கு உபாயம் எங்ஙனமென்று மனங்கேட்ப மேற்கூறுகின்றது.
புகல ரும்பரப் பிரமமாங் கடறனிற்
புணர்பரைத் திரையீசன்
சகமொ டாருயி ரெனுநுரை யாதிக
டந்துமாற் றிடுமென்றே.
கரு நான்மறை யெனினதி லெதையெதைப்
பற்றுவாம் விடுகிற்பாஞ்
சுகசொ ரூபமே யனைத்துமென்றகற்றுதி
துவிதபா வனைநெஞ்சே. (25)
புகலரும் பரப்பிரமமாங் கடறனிற் புணர்பரைத் திரையீசன் சகமொ டாருயிரெனு நுரையாதி கடந்து மாற்றிடு மென்றே பகரு நான்மறை யெனின் எ - து, - வாக்கு மனோதீதமா யிருக்கின்ற பரப்பிரமமாகிய கட லின்கண் விட்டு நீங்காத பரையாகிய திரையானது ஈசுரனும் நாத் தத்துவமுதற் பிருதிவி தத்துவம் ஈறாகிய சகங்களுஞ் சராசரங்களா யுள்ள உயிர்களு மென்று சொல்லப்பட்ட நுரை திவலை குமிழிகளைத் தோன்றச் செய்து ஒடுக்கு மென்று நான்கு வேதங்களுஞ் சொல்லு மெனின்,
அதி லெதை யெதைப் பற்றுவாம் விடுகிற்பாம் எது, - அக்கடற்றிரையில் தோன்றிய இப்பிரபஞ்சத்தினுள் எதனை யெமதென்று பிடிப்பம், எதனை எமது அன்றென்று விடுப்பம், இங்ஙனம் பற்றுதற்கும் விடுப்பதற்கும் அப்பிரமத்தைவிட வேறின்மையால்,
சுகசொரூபமே யனைத்து மென் றகற்றுதி துவிதபாவனை நெஞ்சே எ-து, - எல்லாவற்றையும் ஆனந்த சொரூ பமென்று இந்நிச்சய ஞானத்தால் நெஞ்சமே அது இது வென்று பகுக்குந் துவிதபாவனையை நீ நீக்குதியென்று விவேகங் கூறிற்று, எ - று.
பிரமத்திற்கு அபின்னமா யிருக்கின்ற பரை யசைவான மாயையிற் பிரபஞ்சம் தோன்றி யொடுங்குதலின் அப்பரை திரை யென்று கூறப்பட்டது. உயிரென்பது - தானியாகு பெயர். ஆகம நெறி கூறி வேதநெறி கூறுதன் மற்றொன்று விரித்தலென்னுங் குற்றமாகாதோ வெனின் இந்நூல் சமரச நெறியாகலாலும் ஆகமத்திற் சோகம் பாவனை கூறலாலுங் குற்றமாகாதென்பது அறிக. இதற்கு உதாரணம் : திருவம்மானை . " பார்த்த விட மெல்லாம் பரமன்கா ணம்மானை, பாராம லிந்நாளும் பாழ்பட்டேனம்மானை.'' என்றும், சிவானந்தமாலை. ''எங்குஞ் சிவமொழிய வில்லையவன் றன்னாணை,யங்கந் திரள்கருவி யாணவமாம் - பொங்குமிருண், மைசெய்த மாமாயை மாயைவினை மற்றனைத்தும், பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பொய்.'' என்றும் மற்றும் வருவனவற்றாற் காண்க. (25)
------------
ஐம்புலக்காட்சி நீங்குதற்கு உபாயங் கூறினீர். இனி நினைப்பும் மறப்பும் அற்றுச் சமநிலையி னிற்றற்கு நானா வுபாயமும் நீர் கூறல் வேண்டு மென்று மனங்கேட்ப : அதற்கு மேற் கூறுகின்றது.
நெஞ்ச மேயினிப் பாவனா தீதமாய்
நின்றிடின் றெனினிற்பா
யெஞ்சு றாதகல் புரண்பா வனையையோர்ந்
திலையெனினுலகெல்லா
மஞ்சனக்களன் மேனியென் றோர்ந்திலை
யெனினருள் சுரந்தெம்பால்
வஞ்ச மற்றிடும் படிக்கிவ ணடைந்ததோர்
வடிவையோர்ந் துய்வாயே. (26)
நெஞ்சமே யினிப் பாவனா தீதமாய் நின்றிடு எ - து, - நெஞ்சமே இனி ஒன்றையும் சுட்டிப்பாவியாது பாவனா தீதமாகி நிற்குதலைச் செய்,
இன்றெனி னிற்பா யெஞ்சுறா தகல் புரணபாவனையை யோர்ந்து எ - து, - அங்ஙனம் நிற்றற்கு வலியில்லையெனின் அணுதிரண காஷ்ட முதலியவற்றினுங் குறைவுபடாது விரிந்த பரிபூரண பாவனையாயினுங் கருதிநிற்பாய்,
இலையெனினுலகெல்லா மஞ் சனக்களன் மேனியென் றோர்ந்து ஏ - து, - அஃதும் இன்றெனின் சடசித்தாய் விளங்காநின்ற இப்பிரபஞ்சமெல்லாம் காளகண்டத்தினை யுடைய சிவனது அஷ்டமூர்த்தமென்று ஏகபாவனை பண்ணி நிற்றி,
இலையெனி னருள்சுரந் தெம்பால் வஞ்சமற்றிடும் படிக்கிவ ணடைந்ததோர் வடிவையோர்ந் துய்வாயே எ - து, - அஃதும் இன்றெனின் அச்சிவந்தானே கிருபை நிரம்பி எம்மிடத்துள்ள மும்மலங்களும் அறும்படிக்கு இந்நிலத்தின்கண் மானுடச்சட்டை சாத்தி எழுந்தருளி வந்த ஒப்பற்ற குருமூர்த்தத்தை இடைவிடாது தியானித்து நிற்றி பிழைப்பையென்று விவேகங் கூறிற்று, எ - று.
நிற்பா யென்பதனை மற்றிரண்டிடத்திலுங் கூட்டிக் கொள்க. உய்வா யென்பதனைக் கடைநிலைத் தீபமாகக் கொண்டு எல்லாவற்றோடுங் கூட்டுக. தன்னைக் காட்டாது உயிரைமறைத்து நின்று வஞ்சித்தலின் ஆணவம் வஞ்சம் எனப்பட்டது. பாவனாதீதமாய் என்பதற்கு உதாரணம் : ஞானவாசிட்டம். ''அறிவெனும் விதைசங் கற்பமா முளையா மனையசங் கற்பமாந் தன்னைப், பிறிவுறத்தானே செய்துதான் பிறக்கும் பெரிதுற வளர்ந்திருந்தானே, செறிதுய ரொழிய வின்பமொன்றில்லை யாதலாற் செப்பு சங்கற்ப, நெறியுற நினையே னிற்புறு நிலையி னிமிடமும் பாவனை நினையேல்" பூரண பாவனை யென்பதற்கு உதாரணம் : குறுந்திரட்டு. ''அண்டமெண்டிக்கெங் கண்ணு மடங்கச்சூனியமதாகக், கண்டுகொண் டிருக்கக் கண்ட கருத்தையு மறவே விட்டா, லண்டமெண்டிக் கெங் கண்ணுமாய் நின்ற வானந்தத்தைக், கண்டுகொண்டிருக்கும் வண்ணங் கணத்தில்வந் துதிக்குமன்றே.'' உலகெல்லா மஞ்சனக்களன்மேனி யென்பதற்கு உதாரணம் : திருவாசகம். "நில நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாயமைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றா, னுலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே, பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ.'' வஞ்சமற்றிடும்படிக் கிவணடைந்த தோர்வடிவை யோர்ந்து என்பதற்கு உதாரணம் : தத்துவராயர். ''உள்ளத் திருந்து மொளித்தான் பரன் குரவன், கள்ளந் தனைத் தவிர்த்துக் காட்டினான் - வள்ள, லருவான கோலமோ வக்கோலங் காட்டும், குருவான கோலமோ கூறு. மற்றும் வருவனவற்றாற் காண்க. (26)
------------
உன்னுகின்றனை யென்னும் பாட்டு முதலிய பதினெண் பாட்டாலும் ஞானத்திற்கு விலக்காயுள்ள துர்க்குணங்க ளெல்லாம் விடுவித்து மெஞ்ஞானங்கூறி நிஷ்டை கூட்டி மேல் ஞானாசாரங் கூறுகின்றது.
உய்து நெஞ்சமே வாக்கினை மெளனமாக்
கிலையெனி னுள்தேசொன்,
மெய்த ருஞ்சொலும் பொய்நயம் பயக்கிலா
விடத்தின் துடைத்தேனும்
பொய்த ருஞ்சொலி யான்செய்தேன் பிறர்செய்தா
ரெனினவை போனாலும்
மெய்த ருஞ்சிவ மன்றிதென் றொன்றை நீ
யிசைத்தல் பொய் யெனத்தேரே. (27)
உய்து நெஞ்சமே வாக்கினை மெளனமாக்கு எ - து, - நெஞ்சமே ஞான நிஷ்டையை இடைவிடாது கூடி அஞ்ஞானத்தின் வசப்படாது திருவடியை அடைந்து யாம் பிழைப்போம் நீ ஒருரையும் கூறாது வாக்கினை மெளனம் பண்ணுதல் செய்,
இலையெனி னுளதே சொல் எ - து, - அஃது இன்றெனினும் வினோதத்தாலாயினும் ஒரு பொய்மையுங் கூறாது உண்மையே சொல்லுக,
மெய்தருஞ் சொலும் பொய் எ - து, - அங்ஙனம் மெய் மையாயுள்ள சொல்லும் பொய்மையென்று விவேகம் கூற, அதற்கு வினோதத்தாலாயினும் ஒரு பொய்மையும் கூறற்க வென்று முன்னர்க் கூறினீர்; இப்போது அம்மெய்மை கூறலும் பொய்மை யென்றீர், இது என்னை யென்று மனங்கேட்ப,
நயம் பயக்கிலா விடத்தின் எ - து, - அதற்கு அம்மெய்ம்மையாற் சீவகருணையாய நன்மை உண்டாகாத விடத்து அது பொய்மையாமென்று விவேகங் கூற, அதற்கு இது உண்மை யென்று மனஞ் சம்மதிப்ப,
அதுடைத்தேனும் பொய்தருஞ் சொல் எ - து, - அதற்குச் சீவகருணையைக் குறித்துப் பொய்மை போன்ற மெய்மை கூறுவது உளதாயினும் அம்மெய்மையும் பொய்மையுடைய சொல்லென்று விவேகங் கூற, அதற்கு முன்னே மெய்மை கூறினுஞ் சீவகருணை யின்றியவிடத்துப் பொய்மை யென்றீர்; இப்போது பொய்மை போன்ற மெய்மை கூறுவது உளதாயினு இஃதும் பொய்மை யென்றீர்; இது என்னையென்று மனங்கேட்ப,
யான் செய்தேன் பிறர் செய்தா ரெனின் எ - து, - அதற்கு இருவினைக் கீடாகத் திருவுள நடத்துதலை மறந்து உன்னால் ஓருயிர் காக்கப்பட்டவிடத்து அதனைப் பிறர் கொலை செய்ய வந்தார் யான் காத்தேனென்று இங்ஙனம் யான் செய்தேன் பிறர் செய்தா ரென்று சொல்லுவா யெனி னென்று விவேகங்கூற, அதற்கு இதுவும் உண்மை யென்று மனஞ் சம்மதிப்ப,
அவைபோனாலு மெய்தருஞ் சிவமன் றிதென் றொன் றைநீ யிசைத்தல் பொய்யெனத் தேரே எ - து, - நீயான் செய்தேன் பிறர் செய்தார் என்று சொல்லும் இப்பொய்மைகள் சொல்லாதொழியிலும் பெறுதற்கரிய சிவமென்று ஈதென்று ஓரணு திரணங்களையாயினும் வேறு பிரித்துச் சொல்லுதலும் பொய்மையென அறிதியென்று விவேகங் கூறிற்று, எ - று.
மெய்மை கூறுதல் - பாசவைராக்கியம் ; சீவர்களைப் பாதுகாத்தற் பொருட்டுப் பொய்மை கூறல் - சீவகருணையான் செய்தேன் பிறர் செய்தாரென்று சொல்லாதொழிதல் - ஈசுரபத்தி; எல்லாஞ் சிவமெனச் சொல்லுதல் - பிரமஞானம் ; ஆகிய விந்நான்கும் இதனுட் காண்க. வாக்கினை மெளனமாக்கு என்பதற்கு உதாரணம் : திருவள் ளுவநாயனார். 'யாகாவா ராயினு நாகாக்க காவாக்கால், சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு." உளதே சொல் லென்பதற்கு உதாரணம் : திருக்குறள். "புறந்தூய்மை நீரானமையு மகந்தூய்மை, வாய்மையாற் காணப்படும்.'' மெய்தருஞ்சொலும் பொய்மை என்பதற்கு உதாரணம் : திருக்குறள். ''பொய்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த, நன்மை பயக்கு மெனின்.'' யான் செய்தேன் பிறர் செய்தார் என்பதற்கு உதாரணம் : சிவஞானதீபம். ''விரும்புற்ற தவம்விரதஞ் சீல மெல்லா மேல் விளை வென்றறிந்தெவையும் விமலன் கூத்தென், றிரும்புற்ற மன மழலின் மெழுகா யென்று மியான் செய்தேன் பிறர் செய்தா ரெனுங்கோ ணீக்கி, யரும்புற்றங்கெண்ணுதியா னென்னும் பாசத் தவாமருவும் புறப்பற்றோடகப் பற்றான, பெரும்பற்றை யகன்றருளைப் பெறுவோர் ஞானப் பெரும்பற்றப் புலியூரைப் பிரியார் தாமே." எய்தருஞ் சிவமன்றிதென் றொன்றை நீ என்பதற்கு உதாரணம் : சிவானுபூதிவிளக்கம். "விருப்பு வெறுப் பென்று வேறு பொருள் கோடலிறை, யுறுப்பிற் குறை யாதோ வுணர்வுடையோர் சொல்லுவரோ.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. இப்பாட்டான் வாக்காற்றீமை அடையாது அடக்குதற்கு உபாயங் கூறியவாறு காண்க.
------------
தேரினிவ்வுடல் சமாதியி லசைவறச்
சித்திர தீபம்போற்
சார வைத்திடஃ தில்லையேற் குருபரன்
றனதரும் பணிமேற்கொண்,
ணேரு மூழ்வழி தொழில்பிறி தடையினு
நெஞ்சமே யுயிர்க்கெல்லாம்
பேரி தஞ்செய்வித் திடுமுடை கெழுமலப்
பிணக்கிதஞ் செய்யேலே. (28)
தேரினிவ்வுடல் சமாதியி லசைவறச் சித்திர தீபம் போற் சார வைத்திடு எ - து, - செய்தொழிலை விசாரிக்கு மிடத்து இவ்வுடம்பினைச் சித்திரத்தில் எழுதிவைக்கப்பட்ட தீபம் போல ஞான சமாதியில் அசைவின்றி ஆதனங்கட்டு மிலக்கணத்தோடும் பொருந்த வைக்குதலைச் செய்.
அஃதில்லையேற் குருபரன் றனதரும் பணி மேற்கொள் எ - து, - அஃது இன்றாயிற் குருவாகிய ஞானபரனது அரிய வேவற் பணிவிடைகளைச் சிரசில் வகித்துக்கொள்ளுதி,
நேரு மூழ்வழி தொழில் பிறி தடையினு நெஞ்சமே யுயிர்க்கெல்லாம் பேரிதஞ் செய்வித்திடு எ - து, - அஃதின்றி வந்து பொருந்துகின்ற பழவினைப்படியே உனக்கு இன்றியமையாத வேறு சத்கருமங்களைச் செய்தியெனினும் நெஞ்சமே அக்கருமங்களாற் கொலைவாராது சராசரமாயுள்ள உயிர்களுக்கெல்லாம் பெரிதாய் இனிமையை இவ்வுடம்பாற் செய்விக்குதலைச் செய்,
முடைகெழு மலப்பிணக் கிதஞ் செய்யேலே எ - து, - அங்ஙனம் செய்தலன்றி முடைநாற்றம் பொருந்திய மலங்கள் நிறைந்துள்ள இவ்வுடம்பாகிய பிணத்திற்கு இனிமை செய்யற்க நீ யென்று விவேகம் கூறிற்று, எ -து.
ஏவற்பணிவிடையைச் சிரசிற்கொள்ளுதல் பணிவிடை அருமை தோன்றக் கூறியது. உயிர்க்கெல்லா மென்ற பொதுமையால் அசரவுயிருஞ் சொல்லப்பட்டது. சமாதியில் அசைவற விருக்குதல் = பிரமஞானம், குருபரன் பணி செய்தல் - ஈசுரபத்தி, சீவர்களுக்கு இதஞ்செய் வித்தல் - சீவகருணை, உடம்பிற்கு இதஞ்செய்யாதொழிதல் - பாசவைராக்கியம், ஆய இந்நான்கும் இதனுட் காண்க. இவ்வுடல் சமாதியி லசைவற என்பதற்கு உதாரணம் : தத்துவராயர். "செவ்வே யுடலுஞ் சிரமுங் கழுத்துமுற, வெவ்வா தனத்தி லிருந்தவர்க்குங் - கைவந்தால், வாத முதனோய் நலியா மதியுடையோ, ராதன மென்பதது." குருபரன் றன தரும் பணிசெய் என்பதற்கு உதாரணம் : ஒழிவிலொடுக்கம். ''உடற்குயிர்போற் கட்கிமைபோ லூசிநூ லொத்து, விடிற்புலிதீ பாம்பினில் வீழ்வார்க்காஞ் - சுடர்ச்சுடினும், வாழைக்கா காவேதி மட்கலத்துக் காகாவா, றேழைக்கா காத திது.'' உயிர்க்கெல்லாம் பெரிதஞ் செய் என்பதற்கு உதாரணம் : திருவள்ளுவநாயனார். "அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய், தன்னோய்போற் போற்றாக் கடை.'' முடை கெழுமலப் பிணக்கிதஞ் செய்யேல் என்பதற்கு உதாரணம் : திருவாசகம். ''பொத்தை யூன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை, யித்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை, முத்து மாமணி மாணிக்க வைரத்த பவளத்தின் முழுச்சோதி,யத்த னாண்டுதன் னடியரிற் கூட்டியவதி சயங் கண்டாமே.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (28)
------------
செய்யு நந்தொழிலைந்தொழி லியாமுமச்
சிவனது வடிவென்றே
யைய மற்றுண ராதியா னெனுஞ்செருக்
கடைந்துநா டொறு நெஞ்சே
நைவ தென்னைநீ பஞ்சகோ சங்களு
நாமல வெனாவுண்மை
கையி லாமல கம்மென வுனக்கியான்
கழறியுந் தெளியாயே. (29)
செய்யு நந் தொழிலைந்தொழில் எ - து, - செய்யாநின்ற நமது தொழில்க ளியாவும் சிவனது சிருஷ்டி முதலிய வைந்தொழில்களே யாமென்று விவேகங்கூற, அதற்கியாஞ் செய்யும் தொழில்கள் அவன் செய்யுந் தொழில்கள் எங்ஙனமா மென்று மனங்கேட்ப,
யாமு மச்சிவனது வடிவென்றே யையமற் றுணரா தியானெ னுஞ் செருக்கடைந்து நாடொறுநெஞ்சே நைவ தென்னை நீ எ - து, - அதற்குச் சிவனது அஷ்ட மூர்த்தத்தில் யாம் ஒன்றாகலின் யாமும் அச்சிவனது அங்கந்தானே யென்று ஐயந் திரிவுகளின்றி நிச்சயம் பண்ணி கொள்ளாது அச்சிவனைவிட வேறியானென்று உணரு மயக்கத்தை அடைந்து எப்போதும் நெஞ்சமே நீ மெலிவது என்னை,
பஞ்ச கோசங்களு நாமல்லவெனா வுண்மை கையிலாமலகம் மென வுனக்கியான் கழறியுந் தெளியாயே எ - து, - மாயா காரியமாகிய அன்னமய முதல் ஆனந்தமயம் ஈறாகச் சொல்லப்பட்ட பஞ்ச கோசங்களும் இவற்றைக் கடந்திருந்த அறிவாகிய யாம் அன்றென்று உண்மையாகிய உபதேச மொழிகளால் உள்ளங்கை நெல்லிப்பழம் போலப் பிரத்தியக்ஷமாக உனக்கு யான் தெளியக்கூறியுந் தெளிந்திலாய், இது என்னை யென்று விவேகம் கூறிற்று,எ - று.
உயிர் சிவனது வடிவாகலின் இதனது தொழிலுஞ்சிவனது தொழி லென்பது அறிக. பஞ்ச கோசங்களாவன, - அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பவை யாமெனக் கொள்க. உண்மையென்பது உண்மையா - கக் கூறிய வுபதேச மொழிகண்மே னின்றது. இதற்கு உதாரணம் : அறிவானந்தசித்தியார். ''அன்னமயங்கொ ண்டெடுத்த வுடல்களு மாயிழையும், பின்ன முடன்வரு பிள்ளையுஞ் சுற்றமும் பேருலகின், மன்னு நரைதிரை மூப்பினு நோயினு மாளக்கண்டுந், துன்னு மறிவிலரான்மா விதுவென்று சொல்லுவரே.'' எ - ம், ஊசுமுடலி னுழல்கின்ற காற்றை யுணர்வென்பரே, யேசுமுறக்கத் தியங்கியு மிங்கறி வேதுமற்று, வீசும் பிராணனை யான்மாவலவென்று வேதஞ் சொல்லும், பேசுமனிதர் பொருளறியாமற் பிதற்றுவரே.'' எ-ம், "தனக்கு மனது சலித்ததென்றே சொல்லித் தானிருந்து, முனக்கு விசாரமுண்டாயிற்சொல்லென்றிங்கு வந்து நின்று, மெனக்கிங்கறிய வொண்ணா தென்று சொல்லுகின்ற வேழைகடா, நினைக்கத் தனக்கறி வில்லா மனத்தை நிலையென்பதே." எ - ம், ''இணங்கு நவகுண மெய்துமிப் புத்தியை இன்று புத்தர், வணங்கும் விஞ்ஞான மயம்பொருளென்றமதியின்மை போற், பிணங்கு நிலைவிட்டுக் கேளாய் மறையின்று பின்னமறக், குணங்குறி யின்றியிருக்குமான் மாவென்று கூறிடுமே.'' எ-ம், "சேருஞ் சுகம்பொரு ளென்றனை துக்கஞ் செறியும்பொழு, தாருஞ் சுகதுக்கி யாகி யிடுநிலை யன்றிமறை, தேரு நிரதி சயானந்த மேசிதை வற்ற பொருள், கூரு நிலையை யறியா ரழிசுகங் கொள்ளு வதே." எ - ம், மற்றும் வருவனவற்றாற் காண்க. (29)
------------
தெளிவு யிர்க்கரன் விளக்குதல், மயக்கவன்
றிரோபவிக் குதறேகம்
விளிவை யுற்றல்சங் காரமிங் கிதாகித
மேவுதறிதிதோற்ற
முளசி ருட்டியே லம்பைநோ தலினுனை
யும்பிறரையுநாடித்
தளர்வ தும்மகிழ் வதுமடைந் துள்ளமே
சம்புவை மறந்தாயே. (30)
தெளிவுயிர்க்கரன் விளக்குதன் மயக்க வன்றிரோப விக்குதல் எ - து, - உயிர்களுக் கியாதோர் முன்னிலையால் தெளிவு வருமாயினும் அஃதுசிவன் அனுக்கிரகம் பண்ணுதல், அவைகளுக்கு யாதோர் முன்னிலையால் மயக்கம் வருமாயினும் அஃது அவன் திரோபாவஞ் செய்குதல்,
தேகம் விளிவை யுற்றல் சங்காரம் எ - து, - தேகநாசத்தை யடைதல் யாதோர் முன்னிலையால் வருமாயினும் அஃது அவனது சங்காரம்,
இங்கிதாகித மேவுத றிதி எ - து, - சுகதுக்கங்களைப் பொருந்த இவ்விடத்து யாதோர் முன்னிலையால் வரும் மாயினும் அஃது அவனது திதி,
தோற்றமுள சிருட்டியேல் எ - து, - உற்பத்தி யாதோர் முன்னிலையால் வருமாயினும் அஃது அவனுக்குள்ள சிருஷ்டி, இங்ஙனங் கூறிய முறையே சடசித்துக்க ளெல்லாம் இருவினைக்கீடாக நடத்தும் அவனது பஞ்சகிருத்தி யத்தின்படியே நடக்குமானால்,
அம்பை நோதலி னுனையும் பிறரையு நாடித் தளர்வதும் மகிழ்வது மடைந்துள்ளமே சம்புவை மறந்தாயே எ - து, - அவன் செய்யும் பஞ்சகிருத்தியங்களை நாடாது எய்தவனிருக்க அம்பை நோவதுபோல் யான் செய்தேன் பிறர் செய்தாரென்று உன்னையும் பிறரையுங் கருதிக் கொண்டு துன்பம் வந்ததென்று வாட்டமுஞ் சுகம் வந்த தென்று பூரிப்பும் அடைந்து நெஞ்சமே சிவனது திருவடியை மறந்தாய் அஃது என்னை யென்று விவேகங் கூறிற்று,எ - று.
அம்பை நோதலி னெனவே எய்தவனென்பது வருவிக்கப்பட்டது. அவன் அவள் அது வென்னும் மூன்றும் பிறர் என்பதனுள் அடங்குமாதலிற் பிறர் எனப்பட்டது. கடற்றிரைபோற் சுகதுக்கம் ஓய்வின்றி வருதலால் அவற்றைச் சம்பாவனை பண்ணாது வேறு பிரித்துப் பாவிப்போர்க்கு அவைமய மாதலே யன்றித் திருவடியை நினைக்கக்கூடா மையிற் சம்புவை மறந்தாயே யென்று கூறப்பட்டது இப்பஞ்ச கிருத்தியங்களுள் உயிரிடத்து அநுக்கிரகமும் திரோபாவமும், உடம்பினிடத்துச் சங்காரமுந் திதியுஞ் சிருஷ்டியும், வருமாறும், அநுக்கிரகத்திலும் இந்தத் திதியிலுஞ் சிருஷ்டியிலும் இன்பமும், திரோபாவத்திலுஞ் சங்காரத்திலும் அகிதத் திதியிலுந் துன்பமும், வருமாறும் காண்க. இதற்கு உதாரணம் : திருவாசகம். "நாயிற் கடையா நாயேனை நயந்து நீயே யாட்கொண் டாய், மாயப் பிறவியுன் வசமே வைத்திட்டிருக்கு மதுவன்றி, யாயக் கடவேனானோதா னென்னதோவிங் கதிகாரங், காயத் திடுவா யுன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. இப்பாட்டாற் சிவனது பஞ்சகிருத்தியத்தை நாடி இருவினையும் நீங்குதற்கு உபாயங் கூறியவாறு காண்க. (30)
------------
மறைத்த லுந்நினைத்தலுஞ்செயு மாணவ
மாயைநின் றவைதம்மைத்
துறத்த லேயிராப் பகலகல் வீடெனச்
சொல்வரத் துறவெய்தக்
குறித்து டிற்பர பத்திஞா னத்தினாற்
கூடுமற்றவை நெஞ்சே
நிறத்த பத்திநஞ் செயலறி னாமறி
னின்றமற் றொன்றாமே. (31)
மறைத்தலுந் நினைத்தலுஞ் செயு மாணவமாயை நின்றவை தம்மைத் துறத்தலே யிராப்பகலகல் வீடெனச் சொல்வர் எ - து, - நமதுள்ளே எக்காலமும் நின்று கேவலமாய் மறைத்தலையுஞ் சகலமாய் நினைத்தலையுஞ் செய்யா நிற்கும் அவைகளுக்குக் காரணமாகிய ஆணவமும் மாயையும், அவ்விரண்டையும் நீத்தலே இரவும் பகலும் நீங்கிய வீடென்று பெரியோர்கள் சொல்லுவார்களென்று விவேகங்கூற, அதற்கு இவ்வாணவமும் மாயையுந் துறத்தற்கு உபாயம் எங்ஙனமென்று மனங்கேட்ப,
அத்துறவெய்தக் குறித்திடிற் பரபத்தி ஞானத்தினாற் கூடும் எ - து, - அதற்கு அத்துறவினை நீ அடையக் கருதினையாயிற் பரபத்தி பரஞானத்தினால் அத்துறவு கை
கூடும்,
மற்றவை நெஞ்சே நிறத்த பத்தி நஞ்செயலறி னாமறி னின்ற மற்றொன்றாமே எ - து, - நெஞ்சமே அந்தப் பரபத்தி பரஞானங்கள் யாவையெனின் சிவன் செயலை நாடி நமதுசெயல் அறுமாயின் அதுவே விளங்கா நின்ற பரபத்தி; இப்பரபத்தியினாற் நமது செயலற்றோமென்று கருதும் போதம் அறுமாயின் மேற் சொல்லப்பட்ட பரஞானமா மென்று விவேகங் கூறிற்று, எ - று.
தற்செயல் அதற்கு மேற் பத்தி யில்லாமையாலும் தற்போது மறுதற்குமேல் ஞானமில்லாமையாலும் பரபத்தி யென்றும் பரஞான மென்றுங் கூறப்பட்டன. இதற்கு உதாரணம் : கந்தரலங்காரம். "அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த வன்பாற், குராப்புனை தண்டையந் தாடொழல் வேண்டுங்கொடிய வைவர், பராக் கறல்வேண்டு மனமும் பதைப்பறல் வேண்டுமென்றா, லிராப்பக லற்ற விடத்தே யிருக்கை யெளிதல்லவே.'' எ - ம், திருவாசகம். "பத்திவலையிற் படுவோன் காண்க.'' எ-ம், திருவம்மானை. ''தற்போது மற்றிடந் தற்பர மம்மானை ." எ - ம்,மற்றும் வருவனவற்றாற் காண்க. இப்பாட்டால் ஆணவமும் மாயையும் நீங்குதற்கு உபாயங் கூறியவாறு காண்க. (31)
------------
ஒன்று நஞ்செய லில்லை நெஞ் சேயிவ
ணோர்மய லதனாலே
சென்று சென்றுவெம் பவக்கடன் மூழ்கினஞ்
செறிமய லேதென்ன
நன்று நீவினா வினையிரு வினையையு
நான்செய்தே னெனுமான
மென்றறிந்திடீ தொன்றையும் மாற்றினை
யெனினுனக் கிணையாரே. (32)
ஒன்று நஞ்செயலில்லை நெஞ்சே எ - து, -- நெஞ்சமே உண்மையாகப் பார்க்குமிடத்துச் சிவன் செயலே யன்றி நமது செயலொன்றாயினும் இன்றென்று விவேகங்கூற, அதற்கு நமக்குச் செயலின்றென்பதற்கு ஏதுவென்னை யென்று மனங்கேட்ப, நமக்கு ஆணவ மறைப்பாற் சுதந்தர வறிவு இன்மையாலும் கருவிகள் சடமாகையாலும் நம்மையுங் கருவிகளையுங் கூட்டித் தற்சுதந்தர வறிவினை யுடைய சிவன் தனது அருளால் இயக்க யாம் இயங்குதலின் எமக்குச் செயலின்றென்று விவேகங்கூற, அதற்கு இங்ஙனஞ் செயலற்றிருப்ப எழுவகைப் பிறவிகளும் எமக்கு வந்தது என்னை என்று மனங்கேட்ப,
இவ ணோர் மய லதனாலே சென்று சென்று வெம்பக் கடன் மூழ்கினம் எ - து, அதற்கு இவ்விடத்து ஓர் மயக்கத்தினாலே போய்ப் போய்க் கொடிய பிறவியாகிய துக்க சாகரத்தில் மூழ்கினேம் யாமென்று விவேகங்கூற,
செறி மய லேதென்ன எ - து, - அதற்கு ஓர் மயக்கத்தாலே பிறவிச்சாகரத்தில் மூழ்கினோமென்று கூறினீர்; இங்ஙனம் பொருந்திய மயக்கமாவ தியாதென்று மனங் கேட்ப,
நன்று நீ வினாவினை யிருவினையையு நான் செய்தே னெனு மானமென் றறிந்திடு எ - து, - அதற்கு நீ நன்று வினாவினை; நன்று தீதாகிய விருவினைகளையும் நான் செய்தேன் பிறர் செய்தாரென்று கருதும் உனது அபிமானமே அம்மயக்கமென்று அறிந்திடுதி யென்று விவேகங் கூற அதற்கு அந்த அபிமானந்தான் யாதென்று மனங்கேட்ப, அதற்கு நீ பிறர்க்கு நன்று தீது செய்தவிடத்தும் பிறருனக்கு அவைகளைச் செய்தவிடத்தும் நீ செய்த தீதினையும் பிறர் செய்த நன்கினையுஞ் சிவன் செய்வித்தானென்று கூறி நீ செய்த நான்கினையும் பிறர் செய்த தீதினையும் நான் செய்தேன் பிறர் செய்தாரென்று அபிமானித்து விருப்பு வெறுப்பு அடைந்தனை யாகலின் நீ செய்த தீதும் பிறர் செய்த நன்கும் முன்னர்ச் சிவன் செயலென்று கூறியதும் உமது அபிமானமே யாயிற்று,
ஈதொன்றையு மாற்றினை யெனி னுனக் கிணையாரே எ - து, - உனது அபுத்தி பூர்வகமாய் வந்த தீதினையும் புத்தி பூர்வகமாய் வந்த நன்கினையும் பிறரால் உனக்கு வந்த நான்கு தீதினையும் சிவன் செயலாய் நாடி நான் பிறர் என்று கருதுகிற அபிமானமாகிய இது ஒன்றையும் நீக்கினை யானால் உனக்கு உவமை யாவரென்று விவேகங் கூறிற்று,எ - று.
நான் செய்தேன் என்பதனாலே பிறர் செய்தாரென்பது வருவிக்கப்பட்டது. இதற்கு உதாரணம் : குறுந்திரட்டு. "தானலா தொன்று தன்னைத் தானெனக் கருதிக் கொண்டே, யானெலாஞ் செய்தே னென்னு ஞானமஞ்ஞான மத்தா, லீனமாம் வினையிரண்டா மிருவினையாலுடம்பா மூனமா முடம்பா லூழா மூழினா லாகா துண்டோ ." மற்றும் வருவனவற்றாற் காண்க. இப்பாட்டால் நாம் பிறர் என்று கருதும் அபிமானம் ஈதென்று அறிவித்தவாறு காண்க. (32)
------------
அபுத்தி பூர்வகமாய்ச் செய்த தீதினையும் புத்தி பூர்வகமாய்ச் செய்த நான்கினையும் பிறர் செய்த நன்கினையும் சிவன் செயலாகக் காண்கின்றேன்; பிறர் செய்த தீதினை இங்ஙனங் காணக்கூடாதென்ற மனத்தைப் பார்த்து மேற்கூறுகின்றது. -
இணையின் ஞானபூரணன்முழு துணர்ந்தமைத்
திட்டவாறலதிங்கே
யணைவு றாதொரு தீதெமக் கவன்றரி
னார்தடுப்பவர்நெஞ்சே
பணைகொ டாவர மானமின்மையினுருப்
பற்றிநின் றிலகொலலோ
வுணைவு றாதுடற் காவல்கை விடுதியூ
ழுள்ளவா விடாதென்றே. (33)
இணையின் ஞானபூரணன் முழு துணர்ந் தமைத்திட்டவாறல திங்கே யணைவுறா தொருதீ தெமக்கு எ - து, - சமானமின்மையினையும் இயற்கை ஞானத்தினையும் உடைய பரிபூரணனாகிய சிவன் நான் செய்த வினைக ளெல்லாவற்றையும் ஒருங்குணர்ந்து அவ்வினைகளுள் இன்ன காலத்தில் இன்ன வினையை அனுபவிக்கப் பண்ணுவதென்று வகுத்துத் தந்தவாறல்லது இவ்விடத்துப் பிறரொருவரால் நமக்கு ஓர்தீது வந்தடையாதென்று விவேகங்கூற, அதற்குச் சிருஷ்டி முதலிய செய்யும் பிரமன் முதலிய கடவுளராற்றான் எமக்கு ஓர் தீது உறாதோ வென்று மனங்கேட்ப, அச்சிவ னியாவர்க்கு மிக்கானாகலின் அவனையன்றி இவரால் ஒருதீது செய்யக்கூடாது, அங்ஙனம் மிக்கானாயினும் அவனறியாது இவரால் தீது செய்யக்கூடாதோ வென்னின் இயற்கை ஞானத்தை யுடையனாகலின் அச்சிவன் அறியாது இவராற் செய்யக் கூடாது; அவனறியாது இவரால் செய்யக்கூடாதாயினும் இவர் தீது செய்யுமிடத்து அவன் வந்து தடுப்பானோவென்னிற் பரிபூரணனாகலின் அவனைவிட இவ ரிருத்தற்குஞ் செய்தற்கும் இடமேயில்லை, ஆனால் அச்சிவனையே யுபாசனை பண்ணித் தீதுறாது தடுத்துக்கொள்வேனெனின் சிருஷ்டி தொடங்கி வீடு அடைவிக்கு மளவும் வினைகளை யெல்லாம் ஒருங்குணர்ந்து அமைத்ததாகலின் அவனை உபாசித்தாலும் அதனைத் தடுக்கக்கூடாது,
அவன் தரி னார் தடுப்பவர் நெஞ்சே எ - து, - ஆகலின் இணையின் ஞான பூரணனாகிய சிவனே தீவினைக் கீடாக எமக்கு ஒரு தீது தருவானெனின் அதனை யாவர் நீக்கிக் கொள்வார் நீ சொல்லுதி நெஞ்சமே யென்று விவேகங் கூற, அதற்கு நீர் கூறியது உண்மை,இங்ஙனம் அறிந்தாலும் தேகத்தோடு ஒற்றுமையா யிருத்தலின் இதன்கண் அபிமானத்தை விடுத்தல் எங்ஙனமென்று மனங் கேட்ப,
பணை கொடாவர மான மின்மையி னுருப்பற்றி நின்றில கொல்லோ எ - து, - கோடுகள் தாங்காநின்ற தாவரவுயிர்கள் தமது உடம்புகள்மேல் அபிமானமின்றி இருக்கவும் பழவினைப் படியே அவ்வுடம்புகளோடும் கூடி நின்றிலவோ,
உணைவுறா துடற் காவல் கைவிடுதி ரூழுள்ளவா விடா தென்றே எ - து, - அதுபோல நீயும் உள்ளம் மெலிவுறாது உள்ளபடியே பழவினை வருதலன்றி விடாதென்று அறிந்து உடம்பினைப் பாதுகாத்தல் கைவிடுவாயென்று விவேகம் கூறிற்று,எ - று.
இணையிலென்பதை யாவர்க்கு மிக்கானென்று கொள்க : முழுதுணர்ந் தமைத்திட்டவா றென்பதற்கு உதாரணம். சிவபோகசாரம் "அமைத்த வினைக்கீடா வனுதினமுஞ் செய்வ, திமைப்பொழுதும் வீண்செயலொன் றில்லை - யுமைக்குரியோ, னெல்லாமறிந்தே யியற்றுவதுந் தன்னடிமை, வல்லார் தமக்குணர்த்து வான்." உடற்காவல் கைவிட்டிருப்பா யென்பதற்கு உதாரணம் : தேவாரம். தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந் தாராய், வானைக் காவல் கொண்டு நின்றா ரறியா நெறி யானே, யானைக் காவி லரனே பரனே யண்ணாமலை யானே, யூனைக் காவல் கைவிட் டுன்னை யுகப்பா ருணர் வாரே.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (33)
------------
இன்னு மனத்தினை யுடன்படுத்தித் தேகாபிமானம் விடல் வேண்டு மென்று மேற் கூறுகின்றது.
என்றும் வீடடைந் தவரிறு மாக்கயா
னிறப்பைவிட் டகலாம
னின்று தான்றலை சாய்க்கவோ நெஞ்சமே
நினைத்துணை யாக்கொண்டு
நன்று நீயிதற் கென்செய்கேன் சாவனோ
நானென லிலையானா
லொன்று செய்மலக் குடிலிதி லவாவை நீக்
குமாபதி தரும்வீடே. (34)
என்றும் வீடடைந்தவரிறுமாக்க யானிறப்பைவிட்ட கலாம னின்று தான் றலைசாய்க்கவோ நெஞ்சமே நினைத் துணையாக் கொண்டும் எ - து, - வீட்டினை அடைந்தவர் எக்காலமும் இறுமாந்துகொண் டிருக்க யான் எக்கால ம் இந்த இறப்பினை விட்டு நீங்காது நின்று தலைவளைக்கவோ, யாதோர் காரியம் நினைத்தாலும் அதனை எனக்குக் கைவசமாக்குகின்ற நெஞ்சமே நின்னைத் துணையாகப் பெற்றுமென்று விவேகங்கூற, அதற்கு நின்னைத் துணையாகக் கொண்டும் யான் றலைசாய்க்கவோ வென்று நியாய நிஷ்டூரங் கூறினீர், உமக்கு என்னாலாங் காரியம் யாதென்று உள்வெறுப்போடு மனங்கூற,
நன்று நீ யிதற்கென் செய்கேன் சாவனோ நானெனல் எ - து, - நல்லது நீர் இங்ஙனஞ் சொல்லும் இதற்கு என்னை செய்கேன் யான்றான் சாவனோவென்று நீ சொல்லற்க,
இலையானா லொன்று செய் எ - து, - உடம்பின் மேல் அபிமானம் ஒருங்கே கைவிடுதல் கூடாதாயினும் ஓர் காரியஞ் செய்குதி நீ யென்று விவேகங்கூற, அதற்கு அக்காரியம் யாதென்று மனங்கேட்ப,
மலக்குடிலிதி லவாவை நீக்குமாபதி தரும்வீடே எ - து, - அதற்கு மலநிறைந்த குடிசையாகிய இவ்வுடம்பின்கண் வைத்த ஆசையை விட்டு நீங்குதி, இது செய்தியேல் உமைக்குப்பதியாகிய சிவன் எமக்கு வீட்டினைத் தானே தருவானென்று விவேகங் கூறிற்று, எ - று.
வீடு ஊர்த்துவ முகமும் பிறப்பு அதோமுகமும் ஆகலின் இறுமாக்க வென்றும் தலைசாய்க்க வென்றும் கூறப்பட்டன. உடம்பின் மேல் அவா நீங்கின அறிவு திருவடியை நாடும், அங்ஙனம் நாடும் போது சிவன் வீடு கொடுத்தல் சித்தமாகலின், உமாபதி தரும் வீடென்று கூறப்பட்டது. வீடடைந்தவ ரிறுமாக்க வென்பதற்கு உதாரணம் : திருநாவுக்கரையர். ''இறுமாந் திருப்பன் கொலோ வீசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்,சிறுமா னேந்திதன் சேவடிக்கீழ்ச் சென்றங் கிறுமாந் திருப்பன்கொலோ.''குடி லிதிலவாவை நீக்கென்பதற்கு உதாரணம் : திருவள்ளுவநாயனார். 'மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க, லுற்றார்க் குடம்பு மிகை ." மற்றும் வருவனவற்றாற் காண்க. (34)
------------
தேக போகங்களில் அவாவின் றி யிருத்தற்கு உபாயம் மேற் கூறுகின்றது.
வீடு கூட்டுவான் குறித்ததினிமித்தமா
விமலனீ தலினம்பாற்
கூடுமாயையை யெனதியா னெனவெணிக்
கொள்வதென் பயமாசை
நாடு போழ்திவை சுழுத்தியிற் புரந்தவ
னெவனவனனவாதி
யூடு மூழ்வழி புரப்பனென் றுள்ளமே
யுடல்கைவிட் டிருப்பாயே. (35)
வீடு கூட்டுவான் குறித்ததி னிமித்தமா விமலனீதலி னம்பாற் கூடு மாயையை ஏ - து, - ஆணவத்தான் மறை பட்டிருந்த எம்மை எமக்கு இவ்விருளை நீக்கி வீட்டின்பத்தைத் தரல் வேண்டுமென் றியாங் கேளாதிருக்கவும் தனது காருணியத்தால் எடுத்து வீட்டினை அடைவித்தற் பொருட்டுத் திருவுளத்தடைத்து அவ்வீடு அடைதற்கு ஏதுவாக நிருமலனாகிய சிவன் மாயையில் தனு கரண புவன போகங்களைக் கொடுத்தலின் அதனால் நம்மிடத்து வந்து பொருந்து மாயா காரியங்களை,
என தியானென வெணிக் கொள்வதென் பயமாசை எ - து, - தனுகரணங்களை யான் எனவும் புவன போகங்களை எனது எனவும் கருதிக்கொண்டு இத்தேக போகங்கள் நீங்குமென்று பயமும் இவை யிருக்கவேண்டுமென்று ஆசையும் நீ உட்கொள்வது என்னை,
நாடுபோழ் திவை சுழுத்தியிற் புரந்தவனெவனவனன வாதியூடு மூழ்வழி புரப்பனென் றுள்ளமே யுடல்கைவிட் டிருப்பாயே எ - து, - உண்மையாக விசாரிக்குங்காலையில் இத்தேக போகங்களை நீ அபிமானியாதிருக்கவுஞ் சுழுத்திக்கண் இவற்றைப் பாதுகாத்த விறைவனெவன் அவ்விறைவனே யான் எனது என்று உன்னால் அபிமானிக்கப்பட்ட நனவு கனவுகளுள்ளும் ஊழ்வினைப்படியே பாதுகாப்பனென்று அறிந்து நெஞ்சமே உடலைப் பாதுகாத்தல் கைவிட்டிருத்தியென்று விவேகங்கூறிற்று, எ - று.
மாயை என்பது காரணவாகு பெயர். மனம் அபிமானியாத சுழுத்தியில் இறைவன் காத்தல் இயல்பாதலினாலும் தனுவாதிகளை மாயையிற் காரியப்படுத்தித் தந்ததுனாலும், இவை நான்கும் அவ்விறைவனது உடைமை யென்று அறிக, இதற்கு உதாரணம் : திருநாவுக்கரையர். " நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன், றென்க டம்பைத் திருக்கரக் கோயிலான், றன்க டன்னடி யேனையுந் தாங்குத, லென்கடன்பணி செய்து கிடப்பதே.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (35)
------------
தேகபோகங்களை இறைவன் காத்தல் இயல்பாதலின் யான் அவற்றை அபிமானியாது இருக்கின்றே னென்று கூறிய மனத்தைப் பார்த்து நீ இங்ஙனஞ் சொல்வதன்றிச் சொன்னபடி நில்லாயென்று மேற்கூறுகின்றது.
இருப்பை நாடொறு நெஞ்சமே சுகாசுக
மெதுவரு மதுவேயாய்ப்
பொருப்புவில்லிதாள் விருப்பமெவ்வினையினைப்
புசிக்குஞான் றடைவாயோ
கருப்பை யுற்றுதித் தறக்குமி ழியினழி
காயமீ துளபோழ்தே
குருப்பி ரான்றிருக் கழற் மெய் யன்புநீ
கொள்ளறெள் ளிமையாமே. (36)
இருப்பை நாடொறு நெஞ்சமே சுகாசுக மெதுவரு மதுவேயாய்ப் பொருப்பு வில்லிதாள் விருப்ப மெவ்வினை யினைப் புசிக்கு ஞான் றடைவாயோ எ - து, - எக்காலமும் நெஞ்சமே நீ சுகதுக்கங்களுள் எதுவொன்று வந்தடுக்குமோ அதுதானே வடிவாகி யிருக்கின்றாய்; இத்தேகம் இருக்குமளவும் அவ்விருவினைகளும் வாராதநாள் இன்றாதலின் இவ்வினைகளை அருந்து நாளின்றி இனி எந்தவினையை அருந்துநாளிற் குன்றவில்லியாகிய சிவனது திருவடிக்கண் விருப்பத்தை அடைவாயோ,
கருப்பையுற் றுதித்தறற் குமிழியி னழிகாய மீதுளபோழ்தே குருப்பிரான் திருக்கழற்கு மெய்யன்பு நீ கொள்ள றெள்ளிமையாமே எ - து, - மாதாவினது கருப்பாசயத்தின்கண் வினைக்கீடாய் வந்து பொருந்தி அதன்கட் பத்துத் திங்களிருந்து பூமிக்கண்ணே தோன்றி நீர்க்குமிழி போன்று விரைவில் அழியும் இந்தக்காயம் இருக்கும்போதுதானே மிகவிரைந்து நமது ஆசாரியனாகிய கருத்தனது திருவடிக்கு மெய்ப்பத்தி மனதுட்கொள்ளுதல் மயக்கமறத் தெளிந்த தன்மையாமென்று விவேகங் கூறிற்று . எ - று.
சமுத்திரஸ்நானம் பண்ணத் தொடங்கினோன் அலைகளை நாடாது மூழ்கித் தனது விரத முடித்தல் போலத் திருவடியை அடையத் தொடங்கினோன் இருவினைகளை நாடாது அத்திருவடியை அடைதலையே விரதமாகக் கொள்ளல் வேண்டுமென்றற்கு எவ்வினையைப் புசிக்கும் ஞான்றடைவாயோ வென்றும், குருபத்தியுடையோர்க்கு வீடு எளிதிற் கூடுமாகலின் மெய்யன்புகொள்ள றெள்ளிமை யென்றும் கூறப்பட்டன. இதற்கு உதாரணம் : பொன்வண்ணத்தந்தாதி. "தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே, யடங்கிய வேட்கை யரன்பா லிலரறு காற்பறவை, முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கன்றி யிங்குமன்றிக்,கிடங்கினுட் பட்ட கராவனை யார்பல கேவலரே.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (36)
------------
ஆமை யாருறுப் பைந்தையு மோர்மெயு
ளடக்கலிற் புலனைந்துந்
தீமை சேர்விட யங்களிற் செலாதமைத்
துள்ளமே சிவைபாக
சோம சேகரன் சரணமே சரணெனத்
தொழுதுநின் றழுதன்னோ
னாம நாவினாற் செபித்திலை யவத்திலே
நாளெலாங் கழித்தாயே. (37)
ஆமை யாருறுப் பைந்தையு மோர்மெயு ளடக்கலிற் புலனைந்துந் தீமைசேர் விடயங்களிற் செலாதமைத்து எ - து, - ஆமையானது தனது அரிய ஐந்து அங்கத்தினையும் தீமை வருமிடத்துத் தனது ஓருடம்பின் கண் அடக்கிக் கொள்ளுதல் போலப் பஞ்சேந்திரியங்களையும் பாவங்களுக்கு ஏதுவாய் வருகின்ற விஷயங்களிற் போகவொட்டாது விவேகத்தால் உள்ளடக்கி,
உள்ளமே சிவைபாக சோமசேகரன் சரணமே சரணெனத் தொழுது நின் றழுதன்னோ னாம நாவினாற் செபித்திலை யவத்திலே நாளெலாங் கழித்தாயே எ - து, - நெஞ்சமே கெளரியைப் பாகத்திலேவைத்த சந்திர சூடனாகிய சிவனது திருவடிகளே அடைக்கலமென வணங்கி நின்று அத்திருவடிகளை அன்பால் நினைந்து உருகி அழுது அவனது திருநாமமாகிய ஐந்தெழுத்தினையும் நாவினால் இடைவிடாது செபித்தாயில்லை; மித்தையாகிய தேகபோகங்களைக் கருதி அவத்தொழிலாலே வாழ்நாளெல்லாம் வீணாளாகக் கழித்தனை இது என்னை யென்று விவேகங் கூறிற்று,எ - று.
அவமென்பது தொழிலின் மேல் நின்றது. ஆமையாருறுப் பைந்தையு மென்பதற்கு உதாரணம் : திருவருட்பயன். ''புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவார் போதார், தலநடக்கு மாமை தக.'' நாவினாற் செபித்திலை என்பதற்கு உதாரணம் : அருணகிரியந்தாதி. "பரகதிக்கு வித்தாமுன் பஞ்சாக் கரத்தைப் பரப்பரப்ப வெண்ணாத பாவ- நரகப், பிறப்பிற்கு மீடாப் பிறந்தருணை யீசா,விறப்பிற்கு யீடாயி னேன்." மற்றும் வருவனவற்றாற் காண்க. (37)
------------
தாயு மாகியென் றந்தையாய் வந்துதா
டருசிவப் பிரகாசன்
றூய பொன்னருள் வேண்டிலை யீண்டுநின்
றுணிவிருந் தமையென்னோ
காய மாயமென் றறிந்துமா தர்கடரு
கலவிவேண் டினையென்றாற்
றீயை நீமிக நெஞ்சமே இதற்கியான்
செய்வதொன் றறியேனே. (38)
தாயுமாகி யென் றந்தையாய் வந்து தாடரு சிவப்பிரகாசன் றூய பொன்னருள் வேண்டிலை யீண்டுநின் றுணி விருந்தமை யென்னோ எ - து, - மாதாவுமாகிப் பிதாவுமாகி எழுந்தருளிவந்து திருவடிகளை எளிதிலே தந்த சிவப்பிரகாச னென்னும் நாமதேயத்தையுடைய ஆசாரியனது நிர்மலமாகிய பொன் போன்ற கிருபையை விரும்புகின்றிலை; இவ்விடத்து நின் கருத்து இருந்த தன்மை யென் கொலோ யான் அறிகிலேன்,
காயமாய மென்றறிந்து மாதர்க டருகலவி வேண்டினை யென்றாற் றீயை நீ மிக நெஞ்சமே யிதற்கி யான் செய்வதொன் றறியேனே எ - து, - தேகம் அநித்திய மென்று அறிந்தும் மாதர்களால் உண்டாகிய கூட்டுறவினை விரும்பினை யென்றால் நெஞ்சமே நீ மிகவும் பாவியாயினை ; யான் என்ன கூறினுங் கேட்டிலையாகலின் இதற்கியான்
செய்வது ஓருபாயமும் அறியே னென்று விவேகங் கூறிற்று,எ-று.
தாடருதல் - திருவடி தீக்ஷை . தாயுமாகி யென்பதற்கு உதாரணம்: தத்துவராயர். "தந்தைதா யாவானுஞ் சார்கதியிங் காவானு, மந்தமிலா வின்பநமக் காவானு - மெந்தமுயிர, தானாகு வானுஞ் சரணாகு வானுமருட், கோனாகுவானுங் குரு.'' செய்வதொன் றறியேனே யென்பதற்கு உதாரணம் : திருவாசகம். ''ஆடு கின்றிலை கூத்து டையான்கழற் கன்பிலை யென்புருகிப், பாடு கின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை பணிகிலை பாதமலர்,சூடு கின்றிலை சூட்டுகின்றதுமிலை துணையிலி பிணநெஞ்சே,தேடுகின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. ( 38 )
------------
ஏனை நூல் பல வோதினை யோதவற்
றிறையருளடையாதார்க்
கூனவெம்பவ மொழிப்பதற் குள்ளமே
யுபாயம்வே றிலையானா
லானை யீருரி போர்த்தவென் றம்பிரா
னருள் விரைந் தடையாதே
தானி நாண்மினார் போதநீ வியந்தது
தப்பலாற் சதுரன்றே. (39)
ஏனை நூல்பல வோதினை எ - து, - ஞான சாத்திரங்க ளன்றிப் பல சமய சாத்திரங்களையும் கற்றுணர்ந்தாய்,
ஓதவற் றிறையருளடையாதார்க் கூனவெம்பவ மொழிப்பதற் குள்ளமே யுபாயம் வேறிலையானால் எ - து, - நீ கற்றறிந்த அந்நூல்களின் கருத்தெல்லாம் இறைவனது திருவருளைப் பெறாதார்க்கு இழிவு பொருந்திய கொடிய பிறவியை நீங்குதற்கு உபாயம் வேறொன்றும் இல்லையென நெஞ்சமே ஓதுமானால்,
ஆனையீருரி போர்த்த வென்றம்பிரா னருள் விரைந் தடையாதேதா னிநாண் மினார் போக நீவியந்தது தப்பலாற் சதுரன்றே எ - து, - யானையினது குளிர்ச்சி பொருந்திய உரியைப் போர்த்த எனது கருத்தனாகிய சிவனது திருவருளைச் சீக்கிரத்தில் அடைதற்கு ஏதுவாயவற்றைச் செய்து அடையாது இந்நெடுங்காலமும் மின்போலும் இடையினையுடையார் போகத்தை நீ இன்ப மென்று அதிசயித்தது தவறேயன்றி நன்மையன்றென்று விவேகங் கூறிற்று. எ - று.
இலை யென்பதனோடு ஓதென்பதனைக் கூட்டிமுடிக்க. எனவென்பது எஞ்சி நின்றது. தான் என்பது அசைநிலை. இதற்கு உதாரணம் : கந்தரனுபூதி. "ஆதா ரமிலே னரு ளைப் பெறவே, நீதா னொருசற்றுநினைந் திலையே, வேதா கமஞா னவினோ தமனோ,தீதா சுரலோ கசிகா மணி யே," என்றும், திருவள்ளுவநாயனார்: 'பிறவிப் பெருங் கடனீந்துவர் நீந்தா, ரிறைவ னடிசேரா தார்.'' என்றும் மற்றும் வருவனவற்றாற் காண்க.
(39)
------------
சதுர்ம றைப்பொருளாகிய வொருசிவ
சங்கரற் றொழுதன்பாய்
விதிர்விதிர்த்துமெய் பொடித்தலை நடித்திலை
விரைந்துசென் றவனாடும்
பொதுவை யுற்றிலை, நிற்றிலை மாதர்பாற்
போகுத றவிர்ந்தாவா
வெதுபடக்கட வாய்மட நெஞ்சமே
யினியுட லகன்றாலே . (40)
சதுர்மறைப் பொருளாகிய வொரு சிவசங்கரற் றொழு தன்பாய் விதிர்விதிர்த்து மெய்பொடித்தலை நடித்திலை விரைந்துசென் றவனாடும் பொதுவையுற்றிலை எ - து, - இருக்கு முதலிய நான்கு வேதங்களினது முடிக்கணிருக்கு மெய்ப்பொருளாகிய சிவசங்கரனது திருவடியை வணங்கி அதற்கு அன்பாகித் தேக நடுநடுங்கிலை ; உரோமஞ் சிலிர்ப்புற்றிலை; ஆனந்தநடனம் புரிந்தாயில்லை; அதிசீக்கிரமாய்ச் சென்று அவன் நடனம் புரியாநின்ற கனகசபை அடைந்தா யில்லை,
நிற்றிலை மாதர்பாற் போகுத றவிர்ந் தாவாவெதுப டக்கடவாய் மடநெஞ்சமே யினி யுடலகன்றாலே எ - து, - மகளிரைவிழைந்து அவர்பாற் செல்லுதலைத் தவிர்ந்து நின்றாயில்லை; ஆவா ! நெஞ்சமே இனி இந்தத் தேகம் நீங்கினால் என்ன பாடுபடக் கடவையோ? யான் அறியகிலே னென்று விவேகங் கூறிற்று. எ-று.
ஆவா வென்பது இரக்கக் குறிப்பின்கண் வந்தது. பொதுவை யுற்றிலை யென்பது எல்லாவுயிர்க்கும் பொதுவாய் நடிக்கும் அவனது பஞ்ச கிருத்தியங்களைப் பார்த்திலை யென்றுமாம். இதற்கு உதாரணம் : திருவாசகம் "மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற் கென், கைதான் றலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி யுள்ளம், பொய்தான் ற்றவிர்ந் துன்னைப் போற்றி சயசய போற்றி யென்னுங், கைதா னெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (40) ------------
ஆலநீழலி லன்றொரு நால்வருக்
கருநெறி யுரைத்தானைக்
கால காலனைச் சிவப்பிரகாசவென்
கண்மணி தனையுன்னா
தேல வார்குழ லார்மயல் கொண்டு நீ
யிங்குழ லுவதெல்லாஞ்
சால வேபிழை யாகுநெஞ்சேசொனேன்
றவறிலை யென்மேலே. (41)
ஆலநீழலி லன்றொரு நால்வருக் கருநெறி யுரைத்தானை எ - து, - கல்லால நிழற்கண் எழுந்தருளி யிருந்த காலத்தில் ஒப்பற்ற சனகர் முதலிய நான்கு முனிவருக்கு யாவர்க்கும் அரிய ஞானமார்க்கத்தினை உபதேசித்தருளிய அநுக்கிரக கர்த்தனை,
கால காலனை எ - து, - எல்லா வுயிர்களையும் நாசம்பண்ணுகின்ற காலனுக்குக் காலனாகி அவனை நாசம்பண்ணிய நிக்கிரக கர்த்தனை,
சிவப்பிரகாச வென்கண்மணிதனை யுன்னாது எ - து, - அக்கருத்தன்றானே அருளே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளி வந்து சிவப்பிரகாச னென்னும் நாமதேயத்தைக் கொண்ட என் கண்ணின் கண்மணி யாடுபாவை போன்ற ஆசாரியனை வீட்டின்பத்தை அடையும் பொருட்டு இடையறாது அன்போடுங்கூடி நினையாது.
ஏலவார் குழலார் மயல் கொண்டு நீ யிங்குழலுவ தெல்லாஞ் சாலவே பிழையாகு நெஞ்சே சொனேன் றவறிலை யென் மேலே எ - து, - தகரமூட்டிய நீண்ட அளகபாரத்தினையுடைய மகளிர் மேல் மயக்கம் பூண்டு நீ இப்பிரபஞ்சத்திற் சுழலுவதெல்லாம் மிகவும் குற்றமாகும் நெஞ்சமே யான் நானா வுபாயங்களாலும் இதனைத் துன்பமென்று அறிவித்தும் அறிந்தாயில்லையாதலின் உன்மேற் குற்றமேயன்றி என்மேற் குற்றமின் றென்று விவேகங் கூறிற்று,எ - று.
கண்மணி தீது இது நன்று இது என்று அறிவித்தல் போலப் பிறப்புத் துன்பமென்றும் வீடு இன்பமென்றும் அறிவித்தலிற் கண்மணியென்று கூறப்பட்டது. இதற்கு உதாரணம் : திருவாசகம். ''வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட், டாழ்கின்றா யாழாமற் காப்பானை யேத்தாதே, சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும், வீழ்கின்றாய் நீ யவலக் கடலாய வெள்ளத்தே.'' என்றும், சிவானந்தமாலை. "வீடொழியப் பேறில்லை யென்றென்றும் வேதங்க, ணாடியறையும் பொருளை ஞானகுரு - நீடுமருட், கண்ணாலே சொன்ன கருணைப் பிரான்றனை நா, னெண்ணாதே யுண்டிருப்ப தென்." என் றும், மற்றும் வருவனவற்றாற் காண்க. (41)
------------
என்னை கண்டுநீ மாதரார் வடிவம்
திச்சைவைத் துழல்கின்றாய்
பொன்னை யுந்துகிலையும்பிரித் திடின்வெறும்
புழுமலக் கூடல்லாற்
பின்னை யுண்டுகொல் கண்டுநீ மயங்குதல்
பிராந்திசங்கரன்பாதந்
தன்னை நாடுதி நெஞ்சமே பரசுகோ
ததியுறப் பெறலாமே. (42)
என்னை கண்டு நீ மாதரார் வடிவமீ திச்சைவைத்துழல்கின்றாய் எ - து, - யாது சுத்தமிருக்கிறதென்று குறித்து மகளிர் உடலின்கண் ஆசைவைத்து மயங்கிச் சுழலா நின்றனை,
பொன்னையுந் துகிலையும் பிரித்திடின் வெறும் புழுமலக் கூடல்லாற் பின்னை யுண்டுகொல் கண்டு நீ மயங்குதல் பிராந்தி எ - து, - செயற்கையால் மினுக்கிய பொன்னாலாகிய அணியினையுங் கூறையினையும் வேறு பிரித்து அதனது இயற்கையைப் பார்க்குமிடத்து வெறுங்கிருமிகளும் மலம் சலம் குடர் மூளை உதிரம் தசை கோழை முதலிய மலங்களும் நிறைந்துள்ள ஒருடம்பல்லது பின்னை அதன் கண்ணே யாதாயினும் ஒரு சுத்தவஸ்து உளதோ அதனது இயற்கை வடிவம் அங்ஙனமிருப்பச் செயற்கை வடிவத்தைப் பார்த்து நீ மயக்கமுறுதல் உனது மனப்பிரமையாகும்,
சங்கரன் பாதந்தன்னை நாடுதி நெஞ்சமே பரசுகோ ததியுறப் பெறலாமே எ - து, - இனி அதன்மே லாசையை விட்டு நீங்கிச் சங்கரனது திருவடியை மறவாது நினைப்பாய் நெஞ்சமே மேலாகிய இன்ப சாகரத்தை மிகவும் யாம் அடையலாமென்று விவேகங் கூறிற்று. எ - று.
பொன் என்பது ஆகுபெயர். இதற்கு உதாரணம் : நாலடியார். ''குடருங் கொழுவுங் குருதியு மென்பு, தொடரு நரம்பொடு தோலு - மிடையிடையே, வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்று, ளெத்திறத்தா ளீர்ங்கோதை யாள்.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (42)
------------
பெறுவ தென்னைகொல் சுக்கிலங் கலித்தலாற்
பெருந்தவ வலிகுன்று
முறுவ தவ்வளவோபினை நீ விரும்
புடற்குமா னியதுண்டா
லறிவி யாமறி யாமைதோய்ந் து டற்றின்
வதைச்சுக மெனாநின்றாய்
செறிது நெஞ்சமே நமதுசிற் சுகமினிச்
சிவனையா தரிப்பாயே. (43)
பெறுவ தென்னை கொல் சுக்கிலங் கலித்தலாற் பெருந்தவவலி குன்றும் எ - து, - மகளிர் கூட்டுறவாற் பயன் அடைவது யாது? இந்திரியம் கழிந்து போதலால் வீட்டையடையும் பொருட்டு நீ நெடுநாள் வருந்திச்செய்த தபோ பலமெல்லாங் குறையும்,
உறுவ தவ்வளவோ பினை நீ விரும்புடற்கு மானிய துண்டால் எ - து, - அதனால் உனக்குக் கேடுவருவது அவ்வளவு தானோ பின்னர் நீ யானென்று விழைந்துள்ள உடம்பிற்கும் அடங்கியிருந்த நோய்கண் மேலிட்டு அதனால் நாசமுள்ளதா மென்று விவேகங்கூற, அதற்கு யாந் தாம் யாவர் எமது சுகமாவது யாதென்று மனங்கேட்ப,
அறிவியா மறியாமைதோய்ந் துடற் றினவதைச் சுகமெனா நின்றாய் எ - து, - இவ்வுடம்பு சடமாகலின் இதன்கணின்ற சைதன்னியம் யாம்; நீ இதனை அறியாது அஞ்ஞானத்தோடுங்கூடி உடம்பினது தினவைச் சுகமென்று கருதா நின்றனை, இவை சுகமல்ல வென்று விவேகங் கூற, மேற்சுகமாவதுதான் யாதென்று மனங்கேட்ப,
செறிது நெஞ்சமே நமது சிற்சுக மினிச் சிவனை யாத ரிப்பாயே எ - து, - இவ்வின்பத்தினியற்கை யீதென்று அறிந்து விடுத்து நமது அறிவிற்கு அறிவாய் நின்ற சிவனது திருவடியை ஆதரிப்பாய் நெஞ்சமே, நமது ஞானானந்தத்தைப் பெறுவாமென்று விவேகங் கூறிற்று . எ - று.
ஆல் என்பது அசைநிலை. இதற்கு உதாரணம் : திருக்கடைக்காப்பு. "அருப்புப் போன் முலை யாரல்லல் வாழ்க்கைமேல், விருப்புச் சேர்நிலை விட்டுநல் லிட்டமாய்த்,திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக், கருப்புச் சாற்றினு மண்ணிக்குங் காண்மினோ.'' மற்றும் வருவனவற் றாற் காண்க. தாயுமாகி யென்னும் பாட்டுமுதலிவ்வாறு பாட்டாலும் பொருந்தலை விழைதலாகாதென்று மறுத்த வாறு காண்க. (43)
------------
ஆதரித்தனை குளகிரு தாதிய
வடிசிலைக் கூழ்காடி
யேது பெற்றிடினும்புசித் தாற்பசி
யேகலுஞ் சமித்தற்றாற்
பேத மற்றெலா மலமதா தலுஞ்சரி
யென்றிடிற் பினைநெஞ்சே
நீத ரித்திலா தவைவிழைந் துழல்வதென்
னிமலனை நினையாதே. (44)
ஆதரித்தனை குளகிரு தாதிய வடிசிலை எ - து, - கிருத குளபாயச முதலிய அறுசுவை யடிசில்களையும் நீ விரும்பினை, இதனால் என்ன பயனை அடைதி,
கூழ்காடி யேது பெற்றிடினும் புசித்தாற் பசியேகலுஞ் சமித்தற்றாற் பேத மற்றெலா மலமதாதலுஞ் சரியென்றிடின் எ - து, - சோறு கொடி புற்கை முதலிய யாது வந்த தாயினும் அருந்தினாற் பசிபோதலும் அவை சீரணித்தடங்கினால் நானாவேறுபாடெல்லாம் அற்றுத் துர்க்கந்த மலமாதலுஞ் சரியென்றால்,
பினை நெஞ்சே நீ தரித்திலா தவைவிழைந் துழல்வதென் னிமலனை நினையாதே எ - து, இங்ஙனம் அறிந்து பின்னரும் நெஞ்சமே நீ தரித்து நில்லாது அச்சுவையடிசில்களை விரும்பிச் சுழலுவதென்னை நிர்மலனாகிய சிவனை இடைவிடாது கருதலின்றி யென்று விவேகங் கூறிற்று. எ - று.
மலமதாதலு மென்பதில் அதுவென்பது பகுதிப்பொருள் விகுதி. சரியென்பது விசேடமின்றென்ப தறிவித்தது, இதற்கு உதாரணம் : சிவானந்தமாலை. ''நல்ல வறுசுவையு நாவினுனி மாத்திரமே, மெல்ல விருவிரலாம் வேறில்லை - மெல்ல, விருவிரலைத் தான்கடக்க மாட்டாத நெஞ்சே, பொருகடலைத் தான் கடப்பாய் போய்.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. இதனுள் அருந்தலுட் சுவைவிழைத லாகாதென்று மறுத்தவாறு காண்க. (44)
------------
நினைப்பினுங்குறி காட்டிடுங் கோசநா
விவற்றுணே ரிழையாரை
யினிப்பை நல்குமுக் கனிமுத லியவுண
வினையெனி னிவைபோலு
முனைப்பல் வாதைசெய் பகைபிறிதிலையுணர்ந்
துள்ளமே யொழித்தாயேற்
பினைப்பராபரன் றிருவடி நீழலியாம்
பெறற்கிடை யூறின்றே. (45)
நினைப்பினுங் குறி காட்டிடுங் கோசநா விவற்று ணேரிழையாரை யினிப்பைநல்கு முக்கனி முதலிய வுணவினையெனின் எ - து, - விஷயங்களாகிய வெல்லாவற்றுள்ளும் மகளிரையும் சுவையினைத் தருகின்ற முப்பழமுதலிய புசிப்பினையும் மனத்தால் நினைப்பினும், ஆண்குறியும் நாவும் இலேபனமும் நீரூறலும் ஆகிய அடையாளங்களைக் காட்டுமானால்,
இவைபோலு முனைப் பல்வாதை செய் பகை பிறிதிலை யுணர்ந்துள்ளமே யொழித்தாயேல் எ - து, - இவற்றைப் போலும் உனக்குப் பல பிறவித்துன்பங்களைத் தருகின்ற சத்துரு வேறொன்றில்லையாகலின் இப்பொருந்தல் அருந்தல்களைச் சத்துருவென்று அறிந்து நெஞ்சமே விடுத்தனையானால்,
பினைப் பராபரன் றிருவடி நீழ லியாம் பெறற் கிடையூறின்றே எ - து, - பின்னர் யாவருக்கும் மேலாகிய பரமசிவனது திருவடியாகிய நிழலை யாம் அடைதற்கு விக்கினம் வேறின்றென்று விவேகங் கூறிற்று. எ-று.
நினைப்பினு மெனவே கேட்பினும் பரிசிப்பினும் பார்க்கினும் என்று இந்திரியங்களுக்கும் கொள்க. அருந்தல் பொருந்தல்களில் மனமுதலிய ஆறு இந்திரியங்களும் பிரவிருத்தியாகலின் திருவடியை அடைதற்கு இவை நிவிருத்தியாக வேண்டுமாகலின், பகைபிறிதிலையென்று கூறப்பட்டது. இதற்கு உதாரணம் : சிவானந்தமாலை. "ஊணு முரையுமன் றூதுவர்கா ணுள்ளமே, வாணுதலார் நேரே மறலிகாண் - பேணியிவ, ருற்றார் போல் வந்திடுவர் வந்தாலு மோட்டியர,னற்றா மரைப்பதமே நாடு' மற்றும் வருவனவற்றாற் காண்க. (45)
------------
இன்று சூழ்தரு வனிதைய ராதி பாற்
போகமு மித்தேகத்
தொன்று நோயெனிற் றோடமாய் நீங்குமாங்
குயிர்பெய ரினுநீற்றை
நன்றெ னாவணிந் துறவின ரிறைபெயர்
நவிலுவ ரெனினெஞ்சே
பொன்று நாட்டுணை யாகநீ றாதிய
போற்றவை போற்றேலே. (46)
இன்று சூழ்தரு வனிதைய ராதிபாற் போகமு மித்தே கத்தொன்று நோயெனிற் றோடமாய் நீங்கும் எ - து, - இந்தக் காயத்திற்கு ஒரு வியாதி வந்து பொருந்துமாயின் இதனால் அனுபவித்தற்குக் கருத்தில்வைத்த மனைவியாதிய பலபோகங்களும் இக்காலத்துத்தானே புசித்தற்கு அன்னியமாய்ப் போகுமாகலின்,
ஆங்குயிர் பெயரினு நீற்றை நன்றெனா வணிந் துறவின ரிறைபெயர் நவிலுவ ரெனின் எ - து. - இவ்வுடம்பினை விட்டு உயிர் நீங்கிய காலத்தும் சுற்றத்தாராயுள்ளார் திருவெண்ணீற்றை அவ்வுயிர்க்கு நன்றென்று கருதித்தரித்து நீங்குந் தருணத்தில் சிவனது திருநாமமாகிய பஞ்சாக்ஷரத்தையும் உபதேசிப்பார்களானால்,
நெஞ்சே பொன்று நாட்டுணையாக நீறாதிய போற்றவை போற்றேலே எ - து, - இனி நெஞ்சமே உயிர் நீங்குங்காலத்துத் துணையாகலின் அத்திருவெண்ணீறு முதலிய எண் வகையினையும் அது நீங்காமுன்னரே பேணிக்கொள்ளுதி, மனைவி முதலிய எண்வகைப் பொருள்களும் இருக்கும் போதும் புசித்தற்கு அன்னியமாகலின் நீ அவைகளைப் பேணாதொழிதியென்று விவேகங் கூறிற்று . எ - று.
உயிர்பெயரினு மென்ற இழிவுசிறப்பும்மையால் அது பெயராமுன்னரே அணிவது உயிர்க்கு மிகவும் பயனென்பதாயிற்று. வனிதையராதியெனவே வனிதை பஞ்சணை செளக்கியபோசனம் கந்தம் வஸ்திரம் ஆபரணம் தைலம் தாம்பூலம் ஆக எண்வகையுமென அறிந்துகொள்க. நீறாதியெனவே விபூதி ருத்திராக்ஷம் பஞ்சாக்ஷரம் தீர்த்தம் பிரசாதம் குரு லிங்கம் சங்கமம் எனவறிக. இதற்கு உதாரணம் சித்தாந்த சிகாமணியுட் காண்க. தவத்தோர்க்கு அவ்வெண்வகையும் நீங்கி இவ்வெண்வகையும் அங்கீகரிக்க வேண்டுமென்பது இதனுட்காண்க. (46)
------------
போற்றி நீறணிந் துருத்திர சாதனம்
பூண்டிடைந் தெழுத்துள்ளே
சாற்று நீகுருவாதிமூ வுருவையுந்
தாழ்ந்திறைஞ் சிவைசெய்தான்
மாற்ற லாம்பிறப் பிறப்பினை நெஞ்சமே
மன்றுளா டியதாளுந்
தோற்று முள்ளொளிக் குள்ளொளி யாயதைத்
தொழுதுவாழ் தலுமாமே. (47)
போற்றி நீறணிந் துருத்திர சாதனம்பூண்டி டைந் தெழுத் துள்ளே சாற்று நீகுருவாதி மூவுருவையுந் தாழ்ந்திறைஞ் சிவை செய்தால் எ - து, - மெய்ப்பொருளாகப் பேணி விபூதியை நிறையப் புனைந்து உருத்திராக்ஷங்களைச் சிரசாதி ஸ்தானங்களில் தரித்துப் பஞ்சாக்ஷரத்தை மானதமா யுச்சரி; குரு லிங்க சங்கமமாகிய மூன்று வடிவையும் தாழ்ந்து வணங்கு; இங்ஙனம் இவற்றை நாடோறும் நீ மறவாது செய்தியானால்,
மாற்றலாம் பிறப்பிறப்பினை நெஞ்சமே எ - து, - நெஞ்சமே பிறப்பினையும் இறப்பினையும் மாற்றிக் கொள்ளலாம்,
மன்றுளாடிய தாளுந் தோற்று முள்ளொளிக்குள் ளொளியா யதைத்தொழுது வாழ்தலு மாமே எ - து, - அஃதன்றிக் கனகசபைக்கண் நடிக்கின்ற சிவனது திருவடியும் உயிராகிய உள்ளொளிக்கு உள்ளொளியாய்த் தோன்றும், அத்திருவடியைத் தொழுது அவ்விடத்து எக்காலமும் அழிவின்றி வாழவுங்கூடும் எமக்கென்று விவேகங் கூறிற்று, எ - று.
உயிர்களினது மும்மலங்களும் நீக்கும் பொருட்டுச் சிவன் தனது அருளால் குருலிங்க சங்கமமாய் வடிவு கொள்ளுதலின் மூவுருவையும் தாழ்ந்து இறைஞ்சென்று கூறப்பட்டது. தாழ்ந்திறைஞ்சுதல் மனத்தி லன்பும் வாக்கில் இன்சொல்லுமாகக் காயத்தால் வணங்குதல். வீடடைவோர்க்குச் சிவமுன்னாக அருளே நாவாகப் பஞ்சாக்ஷரத்தைச் செபியாமற் செபிக்கவேண்டு மாகலின் ஐந்தெழுத்துள்ளே சாற்றென்று கூறப்பட்டது. இங்ஙனம் பஞ்சாக்ஷரம் உச்சரித்தால் சகலகேவலம் அறுமாகலிற் பிறப்பிறப்பினை மாற்றலாமென்றும் சகல கேவலங்கள் அறவே புடம்போட்ட பொன் போல் உயிர் ஒளிவிடுமாகலின் உயிரை யுள்ளொளி யென்றும் இவ்வுயிர்க்கும் உள்ளொளியாய்த் திருவருள் தோன்றலின் மன்றுளாடிய தாளும் உள்ளொளிக்குள்ளொளியாய்த் தோன்று மென்றுங் கூறப்பட்டன. அதைத் தொழுதலாவது தற்போதஞ் சீவியாது நிற்றல். அங்ஙனம் நிற்கவே பேரின்பந்தோன்று மாகலின் வாழ்தலுமாமென்று கூறப்பட்டது.(47)
------------
வாழ லாமரன் புகழின மலர்கவி
மாலைசெய்தவன்றாளில்
வீழு மாறுபொன்னிதழிசேர் தோள்களின்
மீதணிந் தினிநெஞ்சே
தாழு வாயரி தேடுபொற் சரணமே
சரணமென் றிதுவன்றிப்
பாழி லேகருங் காக்கை போற் கதறிநாள்
பலகழித் தொழியேலே. (48)
வாழலா மரன் புகழினமலர் கவிமாலைசெய் தவன்றாளில் வீழுமாறு பொன்னிதழிசேர் தோள்களின் மீ தணிந்தினி நெஞ்சே தாழுவா யரி தேடுபொற் சரணமே சரணமென்று எ - து, - நெஞ்சமே அத்திருவடியை அடைந்து வாழலாம்; சிவனது புகழினமாகிய மலர்களாலே பாவாகிய மாலைகளை வனைந்து திருவடிமீதிற் பொருந்துமாறு பொன் போன்ற கொன்றைமாலை பொருந்திய புயங்களின் மீது தரித்து வணங்குவாய் அரியாலுந் தேடப்பட்ட பொன்போன்ற திருவடியே புகலென்று,
இதுவன்றிப் பாழிலே கருங்காக்கைபோற் கதறி நாள் பல கழித்தொழியேலே எ - து, - இங்ஙனஞ் செய்வதன்றிப் பாழிலே கருங்காக்கைபோல் உலக நூல்களைக் கற்றுக் கதறிப் பலநாள்களை வீணிலே கழித்து நாசமாகாதே யென்று விவேகங்கூறிற்று. எ-று.
புகழ்பலவாகலிற் புகழின்மென்றும் அதனைப்பாவிற் சேர்த்துக் கூறுதலின் மலரென்றுங் கூறப்பட்டது. துஷ்டநிக்கிரகம் பண்ணுகின்ற புயத்தையும் சிஷ்டபரிபாலம் பண்ணுகின்ற பாதத்தையும் புகழ்தலின், தாளின்
வீழுமாறு பொன்னிதழிசேர் தோள்களின் மீ தணிந்தென்ன்று கூறப்பட்டது. மலசங்காரம் பண்ணுகின்ற வெற்றியையும் இன்பத்தைக் கொடுக்கின்ற கிருபையையு மென்றுமாம். பொன்னிதழிசேர் தோள்களின் மீது அணிந்து என்பதற்கு உதாரணம் : கந்தரனுபூதி. ''இல்லை யெனுமாயையி லிட்டனை நீ, பொல்லே னறியா மைபொறுத் திலையே,மல்லே புரிபன் னிருவா குவிலென், சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.'' மற்றும் வருவனவற்றாற் காண்க. (48)
------------
ஒழித்திடும்பவப் பகைவிரைந் துள்ளமே
யோதுமூ துணர்வோர்முற்
பழிச்சு பாடலை யரற்கவை விடர்க்கிளம்
பாவையருரைபோலுங்
கழித்தி டேலு சாரமென் றிதனைநீ
கட்டுரை யெனக்கொள்வாய்
விழித்து மாரனை யெரித்ததே வருள்பெறும்
விருப்பினர் விருப்பீதே . (49)
ஒழித்திடும் பவப்பகை விரைந் துள்ளமே யோது மூதுணர்வோர் முற் பழிச்சுபாடலை எ - து, - பிறவியாகிய பகை அதிக சீக்கிரமாக வொழிந்துபோம், மூவர் மாணிக்கவாசகர் முதலிய பேரறிவினை யுடையோர் முன்னாளிலே தோத்திரம் பண்ணியபாடலை நெஞ்சமே நீ தோத்திரம் பண்ணுதி,
அரற்கவை விடர்க்கிளம் பாவைய ருரைபோலும் எ - து, - காமுகர்க்கு இளமைத்தன்மையினை யுடைய பாவைபோல்வார் கொஞ்சிக் கூறும் வசனம்போல அத்தோத்திரங்கள் சிவனுக்குப் பிரீதியாயிருக்கும்,
கழித்திடே லுபசாரமென் றிதனை நீ கட்டுரையெனக் கொள்வாய் எ - து, - இங்ஙனம் கூறிய மொழியை உபசாரமொழியென்று கருதி நீ விடாதே உறுதிமொழி யென்று அறிந்து கொள்வாய்,
விழித்து மாரனை யெரித்த தேவருள் பெறும் விருப்பினர் விருப்பீதே எ - து, - நெற்றிக்கண் விழித்து மன்மதனை யெரித்த கடவுளது திருவருளைப்பெறும் விருப்பத்தினை யுடைய மெய்யடியாரது விருப்பமும் இத்தோத்திரங்களே யென்று விவேகங் கூறிற்று, எ - று.
ஒழிந்திடுமென்பது ஒழித்திடு மென்று வந்தது. பவத்திற்குக் காரணமாகிய இருவினைகளையும் பவமென்று காரணத்தைக் காரியமாக வுபசரித்துக் கூறினார். இதற்கு உதாரணம் : திருவள்ளுவநாயனார் ''இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு." மற்றும் வருவனவற்றாற் காண்க. (49)
------------
விருப்ப மாயிது கேட்டிநன் னெஞ்சமே
விமலனுக் காளல்லார்
பொருப்பை நேர்தனஞ் சொரியினுமவர்கணோர்
புன்னுனித் துணையன்பு
திருப்பி டேலரன் றொழும்பர்தந் தொழும்பனா
ய்த் திரிந்தவர் பணிசெய்தீண்
டிருப்பை யேன்மிக நல்லையிச் சொல்லைநம்
பில்லையேற் பொல்லாயே. (50)
விருப்பமா யிது கேட்டி நன்னெஞ்சமே எ - து, - நல்ல நெஞ்சமே இந்த வார்த்தையைச் சந்தோஷமாகக் கேட்பாயாக,
விமலனுக் காளல்லார் பொருப்பைநேர் தனஞ் சொரியினு மவர்க ணோர்புன்னுனித் துணையன்புந் திருப்பிடேல் எ - து, - நிர்மலனாகிய சிவனுக்கு அடிமையல்லாதவர் பொன் மேருவைப்போலும் தனங்களைச் சொரிந்தாராயினும் அவர்களிடத்துப் புல்லினது நுனிமாத்திரமாயினும் அன்பு வைத்திடேல்,
அரன் றொழும்பர்தந் தொழும்பனாய்த் திரிந்தவர் பணிசெய் தீண்டிருப்பையேன் மிகநல்லை எ - து, - சிவனது அடியாருக்கு அடியானாகித் திரிந்து அவரது பணிவிடைகளைச் செய்து இவ்விடத்து இருப்பாயாகில் எமக்கு மிகவும் நன்மையினை யுடையை நீ,
இச்சொல்லை நம் பில்லையேற் பொல்லாயே, எ - து, - யான் இங்ஙனம் கூறிய சொற்களை உண்மையாக நம்பு; இவைகளை நம்பாது ஒழியேல் எனக்கு நீ பொல்லா யென்று விவேகங் கூறிற்று. எ - று.
இதற்கு உதாரணம் : திருநாவுக்கரையர் . " சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து தரணியொடு வானாளத் தருவரேனு, மங்குவா ரவர்செல்வ மதிப்பே மல்லே மாதேவர்க் கேகாந்த ரல்ல ராகி, லங்க மெலாங் குறைந்தழுகு தொழுநோயோரா யாவுரித்துத் தின்றுழலும் புலையரேனுங், கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகி லவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே.'' மற்றும் வருவன வற்றாற் காண்க. (50)
------
வைராக்கிய சதகத்தின் முற்பாதியாகிய சாத்திர முற்றிற்று.
--------------------
மனம் தானுமன்று தன்வயமுமன்று என்று அறிந்து அதனை விடுத்துத் தன்னையும் அதனையும் கூட்டவும் பிரிக்கவும் வல்ல சிவத்தை நோக்கி மேல் விவேகம் கூறுகின்றது.
-----------------
உ
கணபதி துணை.
வைராக்கிய சதகம்: தோத்திரம்.
மூலபாடம்.
பொல்லாதவெனெஞ்சமோரைந்துதலன் கடம்பா
லல்லாதரைமாத்திரையும் நின்னடிக்கணன்பாய்
நில்லாதி தற்கென்னை செய்கேனிதைநின் றிடென்றே
சொல்லாய்திருத்தில்லையுண் மேவியசோதி நீயே. (1)
நீயே யருள் செய்யினல்லாது பொய் நெஞ்சவஞ்சத்
தீயேனுனை வந்தடைதற்கொரு செய்கைகாணேன்
பேயேனுமுனைத்தொடரும்படி பேசுதில்லைத்
தூயோயொருபாயம் விடாதினிச் சூழ்ந்து நின்றே. (2)
நின்றாய் திருத்தில்லையுளாயென்றனெஞ்சினுள்ளே
யென்றாலுமெனக்கதிதூரமதாயிருந்தா
யொன்றாலுமுனைத்தொடர்கிற்கு முபாயங்காணேன்
மின்னாழ்சடையாய் தமியேற்கு விளங்கிடாயே. (3)
விளங்கும் மெழிற்பேதையர்காதல் விடாதயானக்
களங்கம் மறுவோர் தொழுநின்கழல்காணுமாறென்
றுளங்கும் மொளித்தூமதிசூடிய தோன்றலே யென்
னுளங்கொண்டிடு நீயினிக்கோயிலதாவுவந்தே. (4)
வந்தித்திடுவார்பவநோய்க்கு மருந்தனோயைச்
சந்தித்திடுவான் மறித்தான் மனந்தப்பியப்பா
லிந்தப்புவியுங்கடலுங்கடந்தேகுமென்றா
லெந்தப்படியுய்வதியான் றில்லையெம்பிரானே. (5)
பிரானே திருத்தில்லையுளாயன்றிப்பேதையேன் மு
னொரானேறிவர்ந் தம்பிகையோடெளிதோடி வந்தாய்
வரானோவினமெம்மிறையென்றுனை நாடி வாடி
யிரா நாயடியேற் கெதிர்தோன் றிலையின்றி தென்னே . (6)
என்னாயகனே யிமையோர் தொழுமீசனேசெம்
பொன்னார் திருவம்பலத்தாடிய பூத நாதா
வுன்னாரருளாலினி வீட்டிடையுய்த்தியின்றேற்
பின்னாருயக்கொள்ளவலாரென் பிழைகடீர்த்தே. (7)
தீராதவோரைம்புலச் சேட்டையுந் தீர்ந்துபோய் வெங்
கூரார்மழுவாளிநின்பாதங்குழைந்து போற்றி
நீராயுருகித் தொழுதுன்னெதிர்நிற்கும் வண்ண
மோர் நாளுளதோ தமியேற்குமுரைத்திடாயே. (8)
உரையேனனிவாய்திறந்துன்புகழ் தன்னை நாளும்
விரையார்மலரிட்டருச்சிக்கவிருப்புமில்லேன்
கரையேனுளநின்னினைந்தெத்திறத்தாற்கடப்பேன்
றிரையார்வினையார் பிறவிக்கடறிலில்லையானே. (9)
ஆனேறி வந்தென் னெதிரே விரைந்தன்றுவந்தோய்க்
கேனோவெறுப்பிப் பொழுதோர்சற்றிரங்கு கில்லாய்
நானோ வறிவேனுன் பெருமையை நம்பனே நீ
தானே பொறுத்தாளுகண்டாயென்றவறெலாமே. (10)
எல்லாமறிவோயறிந்தே வகுத்திட்டவாறே
யல்லாற்றமியேனும் புரிவதொன் றில்லையானாற்
பொல்லாமைசெய்வித்தவனீ பொறுப்பானு நீகல்
வில்லாயிளைத்தேனைப்பவத்தினிவிட்டிடேலே. (11)
ஏலக்குழலார நுராகமதென்னுமாயா
சாலக்குணைந்தேற்குனதின்னருடந்து காப்பாய்
நீலக்களமாலயனோடுமுன் னேடிவாடு
மூலக்கனலேகனலேந்துகைம் முக்கணானே. (12 )
கண்ணார் நுதலோய்கடையேனையுமொன்றதாயே
யெண்ணாவருளன்று சுரந்துளைக்கின்றிலாதென்
விண்ணோரிறையோய்க்குமுண்டோசொல் வெறுப்பினோடு
தண்ணார் விருப்புங்கரிப்போர்வைய சாற்றிடாயே. (13)
சாற்றாய் திருத்தில்லையுள்ளாய் சிவசங்கராவெண்
ணீற்றாய்கடையேனுயுமாறென்றனெஞ்சுளஞ்சிப்
போற்றாதிருந்தேன் வருந்தாமலென் புத்தி தன்னைத்
தேற்றாயொரு நீயினியன் பினைச் செய்யுமாறே. (14)
மாறாயவோரைந்து புலன் வலிமாய்த்து நெஞ்சை
நீறார் திருமேனியவுன் கணிறுத்தமாட்டே
னேறாத பவக்கடலேறவுமெண்ணிநைந்தேன்
கூறாயெனதெண்ணமெவ்வண்ணங்கைகூடுமன்றே. (15)
அன்றே தமியேற்கெளிமானுடனாகி நீவந்
துன்றாள்களளித்தனை பெற்றுமொன்றும் பெறாரி
னின்றேன்லதைம்புலனென்வசநின்றதில்லை
யின்றோதவற்றைக் கொலுபாயமொன்றீசவெற்கே. (16)
எற்கோவுனதன்புமனத்திலையென்றனெஞ்சங்
கற்கேநிகராயதிக்கல்லை நீகல்லைவில்லா
முற்கால்வளைத் தாங்குவளைத்தன் பின் மூழ்குவிப்பாய்
சிற்கோலசிதம்பரநாயகதேவதேவே. (17)
தேவேயுனையன்பினிற் பூசை செய்தேனுமல்லே
னாவான்மிகப் பாடிநின்றாடி நயக்குகில்லே
னோவாதுழறீமனத்தோடிவணுற்றுளேன் மற்
றாவாவினியென்வருமென்பதறிந்திலேனே. (18)
அறியாமையிற்கீழவர்பல் பிழையாற்றினாலுங்
குறியா தருள் செய்வது மேலவர் கொள்கையன்றோ
மறியார்கரத்தோய்சிறியேன்வினை மாற்றியாளப்
பொறியேலுனக்கென் முகமன்சொலப்பொய்யனேனே. (19)
பொய்யற்றவர் வந்தடையும்பரிபூரணாவிம்
மெய்யற்ற வெற்குநினலானிலைவேறுமுண்டோ
தையற்கிடமேயிடமாவருடாணுவேயென்
மையற்றவிர்ப்பானுன்கடாக்ஷம் வழங்கிடாயே. (20)
வழங்கெற்கிணேது செய்தாலெதுவாகுமென்றென்
றெழுங்கற்பனையாவுமிறந்துணர்வேகமேயா
யொழுங்கிற்புலனாதியுபாதியொழித்தொருன்னைச்
செழுங்கைக்கனியொத்துணரும் படித்தில்லையானே. (21)
தில்லைப்பதிமேய சிவப்பிரகாசனேயோ
தொல்லைப்பிறவா நெறிமேவிய தோன்றலேயோ
வல்லற் பிறவிக்கிளைத்தேன்றனையஞ்சலென்றோர்
சொல்லைப்பகராய்விடைமீதினந்தோன்றி நின்றே. (22)
தோன்றாத் துணையே புணையே பவத் தொல்கடற்கென்
போன்றார்க்குமிரங்குமருட்பெரும் போதமேயிங்
கீன்றார் மனையாதியமோகமெலாம் விடுத்துட்
சான்றாமுனையே வினையேனினிச்சாரவெண்ணே. (23)
சார்ந்தாய் குருவாதியவாய்விடைதன்னில் வந்தாய்
கூர்ந்தாயருளிற் பிறவா நெறி கூட்டுவித்தா
யோர்ந்தேன் குறையின் றெனினுங்குறையுண்டு கண்டாய்
பேர்ந்தோடுமெனெஞ்சுளுன்னன்பு பிறக்குமட்டே. (24)
பிறவா நெறியாகியதோர் திருப்பேரையாவெம்
முறவேயறவே தவிர்ந் தென்மனமோடிவாடிப்
புறவாதனை பற்றி வளர்ந்திடு புன்மையாலின்
றிறவேதனைப் புரிவாளைத்தெண்ணுவாயே. (25)
எண்ணும் வடிவேதினி நீ புனைந்தெய்தினாலும்
திண்ணம்மென வாவகலாவச் சிதம்பரத்தே
நண்ணும் முன துண்மையைக்காண நயந்துளேனென்
னுண்ணின்றதைக்காட்டுதற்கீச சற்றுன்னுவாயே. (26)
உன்னும் முணர்வுக்குணர்வா யெனக்குண்மை தந்தாய்
மன்னுஞ் சுருதிப்பொருளாய்வழிகாட்டி நின்றாய்
பின்னுங்குருவாயடைந்துன்னருள் பேணவைத்தா
யென்னென்றுரைப்பேனின் கருணையிருந்தவாறே. (27 )
இருந்தோருமிடத்துணர்வில்லைமாயைக்கிதன்பாற்
பொருந்தாவிடத்தில்லையுயிர்க்கொருபோதமேனுந்
திருந்தாவிவைகொண்டிறையைந்தொழில் செய்தியென்றே
வருந்தா வருண் முன்னிலை தன்னை மதித்தியானே. (28)
மதித்தென்பருவத்தளவிற்குருவாதியாகி
யுதித்துள்ளறிவோங்கும் வகைக்கு பாயஞ் செய்தோயை
யெதிர்த்திங்ஙனஞ்சற்குரு சற்குருவென்றுநைந்துந்
துதித்துந்திரியாவெனக்கின்னருடந்து தோன்றே. (29)
தோன்றாமன் முனிந்தொரு தாய் வயிற்றோன்று பால
ரீன்றாடனைத் தம்மின் வேறாக்கொடிகழ்ந்தவா போற்
பூன்றாவொரு நீயருளாற்புனை மேனியெல்லாம்
யான்றான் பல தெய்வமெனக்கொடிகழ்ந்தவாறே. (30)
இகழும் பொருளொன்றிலைமண் முதலெட்டுமெந்தாய்
நிகழுன்வடிவேயெனத் தேர்ந்துள நெக்குநின்றாள்
புகழும்படியேயினியீசவென் புத்தி தன்னைத்
திகழும்படி செய்தி திரோபவஞ்செய்திடேலே. (31)
செய்யாய்கரியான்றொழும் வெள்ளிளஞ்சேவையூர்வோய்
வையார்மழுவோய் திருவுள்ளமிவ்வஞ்ச னேனு
மையாவிழி பெய்வுற நீர் பெரிதன்பினோடு
கையாற் றொழுதேத்தி நின் கூத்தினைக் காணுமாறே. (32)
காணாதப வக்கடலுன்கரைகாணவெற்குக்
கோணாகணிமார்பமெய்யன்பு கொடுத்தியென்றே
நாணாதிசைத்தேன்றிருக்காளத்திநாதவுன்றாள் .
பேணாதவலக்கடன் மூழ்கியபேதையேனே. (33)
பேதைக்கொருபாகமளித்திடுபேரையாவெங்
கோதைக்கு நின்றோளுறு கோதைகொடென்றுநின்பா
லோதற்கெனுளத்தை விடுத்தனனோடி மாதர்
காதற்களையுண்டமையாலுனைக்கண்டதின்றே. (34 )
கண்டேன் களிகூர்ந்து சிவப்பிரகாச நாமங்
கொண்டோங்குருவோடிவணுற்றெனை யாண்ட கோவே
பண்டேயொரு நீ வகுத்திட்ட படிக்கியானுன்
றொண்டாகிவந்தின்றுனைப்பாடத்தொடங்கினேனே. (35)
தொடக்காயெனைச் சூழ்ந்துள் வைம்புலத்தோற்றமெல்லாங்
கெடக்கூறுதிநீயொரு சூட்சிகிளக்கிலாயே
லடக்காவவையென்றனகத்துளடங்குகாறுங்
கடக்கேன்பவவேலையெவ்வண்ண முக்கண்ணினானே. (36)
கண்ணான்மதனைப்பொடியாம்வகைகண்ட வெண்டோ
ளண்ணாவுயிர்யாவுமளித்திடுமப்பனேயோ
தண்ணார்பொழிற்றில்லையுளா யெனக்கீது தாராய்
மண்ணாதியவாசைகளற்றுனை வாழ்த்துமாறே. (37 )
வாழ்த்தேனுனை நாடொறும் வாழ்த்த வல்லோர்கடாளிற்
றாழ்த்தேன்றலையாங்கவரேவறலைக் கொள்கில்லேன்
வீழ்த்தேனெடுங்காலமவத்திலொண்மேருவில்லோய்
பாழ்த்தேன் கிளிபோற்பல நூல்கள் படித்து மியானே. (38)
யானாருடற்கின்ப துன்பங்களை யெண்ணவெண்ணித்
தானேசிறுபாலரினென் மனஞ்சஞ்சலிக்கு
மீனாயினன்பாலலதென்கண் விடுத்திகொல்லோ
வானேறுடையாய்திதியாமதிகார நீயே. (39)
காரார் மிடற்றாயளிசூழ்தரு பொற்கடுக்கைத்
தாரார்புயனே சிவகாமசவுந்தரிக்கோர்
சீரார் மணவாளவென்றன் குலதெய்வமே நீ
பாராய் கடைக்கண்ணென தெண்ணம் பலிக்கவின்றே. (40)
இன்றென்னை செய்கேனென நாடியிருந்த தீயேற்
கொன்றெய்தினெவ்வண்ணமறும்மதையோ துவேனோ
வன்றன்னமுமேனமுமோர் வருமைய நின்றா
ளொன்றன்பர் குழாத்துற வீதருளாயுவந்தே. (41)
உவந்தாயென்னதைம்புலனும்மிரிந்தோடவோர் நாட்
டவந்தான் சிறிதும் மிலிபால்விடை தன்னின் மின்னோ
டிவர்ந்தே வரநாளும் விளங்கிலையென்னை கொல்லோ
வவந்தான் மிகு பாவியுன் லீலையறிந்திலேனே. (42)
அறியாமையிற்கட்டுணலுற்றதென்னாண்மையைத்தைப்
பிறியா துவிடேனெனலெந்தைபிரானுனாண்மை
குறியீதிருவர்க்குமென்றாலெனைக்கோபியேலே
செறிவாய்மலமேயிறையோடிகல் செய்ததன்றே. (43)
செய்விப்பன் வினைத்தொகை வெம்பவஞ்சேர்ப்பனுன்னை
யுய்விப்பனேலச்சிவனாண்மையுமோர்வனென்றோ
ரைவர்க்கெதிரேயெனை நோக்கியறைந்ததையா
மைவெற்பனவாண வநீயதை மாற்றிடாயே. (44)
மாற்றாயெனக்காணவமாயையில் வந்து வந்தே
தோற்றாவுளகேவலமாதிய சுத்தமொன்றூ
டேற்றாயவணேற்றியிரண்டறுத்தெங்குமாகிக்
கூற்றாவிகொள் பதத்தென்னாவியுங்கொள்ளுவாயே. (45 )
கொள்ளேனெனினுமெழுத்தைந்து முட்கோதியாதுந்
தள்ளேனெனினுமுனைச் சார்ந்தவஞ் சார்ந்திலாரை
விள்ளேனெனினுமெனை நீகைவிடேல்விடேல்கா
ணள்ளாறுடையாயவிநாசி நயந்து ளானே. (46)
நயவா துதில்லாபுரியோயுனை நாடி நாளும்
வியவாதுடலோடுறவென்றும் விடாதென்னுள்ளங்
கயவா துறு போகமெலாமிவை கண்டு வீடும்
பயவாதிதென்றே பயந்தேன் மிகப்பாவியேனே. (47)
பாவாற் பெரியோர் புகழ்சிற்றம்பலத்துளோயை
நாவாற் சிறியேன்றுதிசெய்யுமிந்நன்கில் சொல்லு
மோவாதிரையோருழைதாவியவன் செவிக்கே
மேவாதல் வென்று துணிந்து விளம்பினேனே. (48)
விளம்பற் கருஞ்சோதி யென்கோ விடையோ னென் கோவென்,
னுளம்புக்க சிவப்பிரகாசனென் கோவென்னங்கைத்,
தளம் பற்றிய சாந்தனென்கோ நின்றனது நாம,
வளம் பெற்ற திருக்கயிலாய சொல்வாயெனக்கே. (49)
எனக்கீந்தினியாண்டிடல் வேண்டுமெம் மீசனேமற்
றுனக்கே சரணஞ் சரணம் புலனோடுமென்றன்
மனக்கோ தனைத்துமிறந்தோங்கறிவாகியாங்கே
பினைக் காண்பவன் காட்சியுமற்றவபேத வாழ்வே. (50)
திருச்சிற்றம்பலம்.
வைராக்கிய சதகத்தின் பிற்பாதியாகிய தோத்திர முற்றிற்று.
-------------------
சாத்திரம் 50, தோத்திரம் 50, ஆக பாடல் 100.
வைராக்கிய சதக முற்றிற்று.
---------------------------
கணபதி துணை .
வைராக்கியசதகத்தில் குறிக்கப்பட்டிருக்கும் உதாரண சாத்திரங்கள்.
ஞானவாசிட்டம் | அறிவானந்தசித்தியார் |
திருவள்ளுவர் குறள் | தேவிகாலோத்தரம் |
ஆனந்தத்திரட்டு | குறுந்திரட்டு |
வீராகமம் | நல்வழி |
திருவருட்பயன் | கந்தரநுபூதி |
சிவபோகசாரம் | சசிவன்னபோதம் |
நீதிவெண்பா | திருவம்மானை |
திருக்கடைக்காப்பு | சிவானந்தமாலை |
நாலடியார் | தத்துவராயர் |
பட்டணத்தார் பாடல் | சிவஞான தீபம் |
சிவதருமோத்தரம் | சிவாநுபூதி விளக்கம் |
ஒழிவிலொடுக்கம் | கந்தரலங்காரம் |
பிரபுலிங்கலீலை | தேவாரம் |
பெருந்திரட்டு | பொன்வண்ணத்தந்தாதி |
ஆனந்தத்திரட்டு | அருணகிரியந்தாதி |
திருவாசகம் | சித்தாந்த சிகாமணி |
-------------------------------
This file was last updated on 20 March 2019.
Feel free to send the corrections to the Webmaster.