திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும்
பொ. வே. சோமசுந்தரனார் உரையும் - part 1
cIvaka cintAmani - part 1
of tiruttakka tEvar with commentaries
of M.P. cOmacuntaranAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a digital version of this work for the etext preparation.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும்
பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
Source:
திருத்தக்க தேவர் இயற்றிய "சீவகசிந்தாமணி" மூலமும்
புலவர் 'அரசு' பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
ஆகியோர் எழுதிய உரையும்
மதராஸ் : கழகம், 1994
---------------------
உள்ளடக்கம்
பதிப்புரை
அணிந்துரை
நூலாசிரியர் வரலாறு
I. கடவுள் வாழ்த்து, பதிகம் 1-29 (29)
II. நூல்
1. நாமகள் இலம்பகம் 30-408 (379)
2. கோவிந்தையார் இலம்பகம் 409- 492 (84)
3. காந்தருவதத்தையார் இலம்பகம் 493- 850 (358)
4. குணமாலையார் இலம்பகம் 851- 1165 (315)
5. பதுமையார் இலம்பகம் 1166- 1411
6. கேமசரியார் இலம்பகம் 1412- 1556
7. கனகமாலையார் இலம்பகம் 1557 - 1888
8. விமலையார் இலம்பகம் 1889 - 1994
9. சுரமஞ்சரியார் இலம்பகம் 1995 - 2101
10. மண்மகள் இலம்பகம் 2102 - 2326
11. பூமகள் இலம்பகம் 2327 - 2377
12. இலக்கணையார் இலம்பகம் 2378 - 2598
13. முத்தி இலம்பகம் 2599 - 3145
செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை
அருஞ்சொற்களின் அகரவரிசை
-----------
பதிப்புரை
சிந்தாமணி என்பது தேவருலகத்துள்ள பொருள்களில் ஒன்று. அது தன்பால் வந்து இரப்பார்க்கு
வேண்டும் பொருள்களை யாண்டும் வழங்கும் இயல்புடையது. காமதேனு, கற்பகதரு,
சங்கநிதி, பதுமநிதி இவையும் அப் பண்புடையன என இலக்கியம் கூறும். பொன்னுலகத்துப்
புவேண்டும் கல்விப் பொருள்களை இரவாமல் வேண்டியபோது கண்டு எடுத்துக்
கொள்லவர்க்கு வேண்டும் பொருள்களை வழங்குவதற்கு மேற்காட்டிய ஐந்து பொருள்களும்
ஆங்கு உள்ளன. மண்ணுலகத்துப் புலவர்க்கு வதற்கு ஐம்பெருங்காப்பியங்கள் ஈங்கு
உள்ளன. வளையாபதியும் குண்டலகேசியும் இன்னும் வெளிப்பட்டில. சிந்தாமணி,
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய மூன்றும் டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள்
பெரு முயற்சியால் வெளிவந்துள்ளன. மூன்றினும் முதன்மையுடையது சிந்தாமணியே.
முன்வைத் தெண்ணப்படுவதும் அதுவே. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சிறந்தன
எனினும் இத்துணை விரிந்த நூல்கள் அல்ல. பெருங்காப்பியச் சுவை நிறைந்த நூலாகப்
புலவர் பலராலும் போற்றப்படுவது சிந்தாமணி யென்னும் சிறந்த நூலேயாகும் என்பது
தெளிவு. சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு மணி. இப்பெயர் இந்நூலிற்கு அமைந்ததற்குப்
பல காரணம் இருப்பினும் ஒளிகெடாத ஒரு மணி போன்றது என்ற காரணமே இந்நூலுக்குப்
பொருத்தமாகும். இந்நூல் தோன்றிய காலமுதல் புகழ் குன்றாதுநின்று நிலவுவதே
அதனை யுணர்த்தத் தக்க பெருஞ் சான்றாம்.
இந்நூல் நாமகள் இலம்பகத்தை மட்டும் முதலில் கி.பி. 1868 இல் ரெவரெண்ட். எச். பவர்
என்பவர் பதித்து வெளியிட்டனர். பின்னர் நாமகள் இலம்பகம், கோவிந்தையார் இலம்பகம்,
காந்தருவதத்தையார் இலம்பகம் என்ற மூன்றும் நச்சினார்க்கினியர் உரை, பதவுரையுடன்
சோடசாவதனம் தி. க. சுப்பராய செட்டியார் அவர்களாற் பதித்து வெளியிடப் பட்டன.
அதன்பின் முதல் ஐந்து இலம்பகம் மூலம் மட்டும் ப.அரங்கசாமி பிள்ளை அவர்களால்
கி.பி.1883 இல் பதித்து வெளியிடப்பட்டது. கி.பி. 1887 இல் டாக்டர் உ. வே. சாமிநாத
ஐயரவர்கள் நூல் முழுவதும் நச்சினார்க்கினியர் உரையுடன் பதித்து வெளியிட்டனர்.
அப் பதிப்பு மிகவும் சிறந்ததாக விளங்குகின்றது. கி.பி. 1941 இல் சைவசித்தாந்த மகா
சமாசம் இந்நூல் மூலம் மட்டும் பதித்து வெளியிட்டுள்ளது.
இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் நல்லுரை கண்டார் முதலில். அன்றுமுதல் இன்றுவரை
அவ்வுரையே புலவர்கள் ஆய்ந்து பொருள்கண்டு வந்தனர் - வருகின்றனர் - வருவார்.
நச்சினார்க்கினியர் உரை சிறந்தது; தெளிவுடையது; நூலாசிரியர் கருத்தை நுணுக்கமாக
எடுத்துக்காட்டுவது; புலவர்கள் எவரும் போற்றத் தக்கது என்பது மறுக்கமுடியாத
உண்மையாம். ஆயினும் அஃது இன்ன சொல்லுக்கு இன்ன பொருள் என்பது காண
இயலாத பொழிப்புரை; முறையான பொழிப்புரையும் அன்று; சுருக்கமாக உரை வரைந்து
செல்லும் இடங்களும் உள்ளன. இரு பாடல்களையும் இணைத்து மேல் கீழாக மாற்றி யுரை
வரைந்திருப்பதும் காணலாம். பல பாடல்களைச் சேர்த்து மாட்டேற்றாக ஒரு பாடலில்
இருக்கும் சொல்லை மற்றொரு பாடலுக்குக் கொண்டு கூட்டி யுரை வரைந்திருக்கும்
இடங்களும் பல இருக்கின்றன. எவ்வாறு சொற்குப் பொருள்காண இயலும்? இவ்வுரை
சிறந்த புலவர்கட்கே பொருத்தமானது. புலவர்களும் ஆய்ந்து காணும் அருமையுடையது;
இளமை மாணவர் எளிதிற் பொருள் காண இயலாத தொன்று. நச்சினார்க்கினியர்
உரையின் அருமை நாவலர்க்கெல்லாம் நன்கு தெரியும். அதனை எளிய புலவர் எங்ஙனம்
பயில்வார்? இளைஞர்க்கு ஏற்ற வுரையும் அன்று.
இக்காலத்து இளைஞர்கள் எல்லா நூல்களுக்கும் எளிதிற் பொருள் காண முயல்கின்றார்கள்
என்பதும், நச்சினார்க்கினியருரை நயத்தைக் கூறக்கேட்டு மெச்சுவாரேயன்றிக் கற்க
நச்சுவார் எவரும் இலர் என்பதும் நாம் அறிந்தோம். சொற்பொருளும் விளக்கவுரையும்
இந்நூலுக்கு எழுதிப் பதித்தால் எளியபுலவரும் இளைஞரும் கற்று நற்பயனடைவர்
என ஆய்ந்தோம். எளிய உரைநடையிற் பொருளும் விளக்கமும் எழுதிக் தரும்படி
இயம்பினோம். உயர்திரு. புலவர், "அரசு" அவர்கள் சொற்பொருளும் விளக்கவுரையும் எழுதி
உதவினார்கள். பெருமழைப் புலவர் உயர்திரு. பொ. வே. சோமசுந்தரனார் அவர்கள் ஒவ்வோர்
இலம்பகத்திற்கு முதலிற் கதைச் சுருக்கம் தெளிவாக வரைந்துதவினர். அன்றியும் பல
பாடல்கட்குக் குறிப்புரையும் கொடுத்து உதவினார்கள். அவ்விருவர் உரைகளையும் ஆய்ந்து
நன்முறையில் தொகுத்து இந்நாள் வெளியிடுகின்றோம்.
சீவக சிந்தாமணியிலுள்ள பாடல்கள் மூவாயிரத்திற்கு மேற்பட்டன. அவற்றுடன்
சொற்பொருளும் விளக்கவுரையும் கூடும்போது பெரும் புத்தகமாகும். எடுத்துப் படிப்பார்க்குப்
பெரும் பாரமாய்க் கைகளை வருத்தும். பலகையில் வைத்துப் படிப்பார்க்கே தகுதியுடையது.
இரு கையில் வைத்துப் படிப்பார்க்கு ஏற்றதன்று என ஆய்ந்து எல்லாரும் எடுத்துப்
படிக்கத்தக்க முறையில் இரு பகுதியாகப் பிரித்து அச்சிட எண்ணி, அம்முறையில்
முதற் பாகம் இப்போது வெளி வந்துள்ளது. இரண்டாம் பாகமும் இனி வெளிவரும்.
இப் புத்தகத்திற் கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பதிகம் ஆகிய மூன்றும், நாமகளிலம்பகம்
முதல் கேமசரியாரிலம்பகம் வரை யுள்ள ஆறு இலம்பகங்களும் அடங்கியுள்ளன.
பாடல்கள் மொத்தம் 1555 ஆகும். பாடல்கள் எல்லாம் புணர்ச்சி விதிப்படி வரைந்து
சீர்மட்டும் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. பாக்களில் உள்ள சொற்களைத் தனித்தனி
பிரித்துக் காட்டி ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் விளங்க நல்லுரை வரைந்திருப்பதனால்
பாட்டிற் சொற்பிரிப்பது பயனற்றதென விடுத்தோம்.
செய்யுளைப் பிரித்தாற் சீரும் தளையும் எதுகையும் மோனையும் சந்தமும் புணர்ச்சியிலக்கணமும்
கெடும் என்பதைப் புலவர்கள் உய்த்துணரவேண்டும். செய்யுள் புணர்ச்சியிலக்கணப் படி
பொருந்த நிற்பதுதான் சிறந்தது என்பது எமது கருத்து.
சொற்பொருளும் விளக்கமும் வரைந்த உயர்திரு. புலவர் "அரசு" அவர்கள் நச்சினார்க்கினியர்
உரையைத் தழுவியே வரைந்திருக்கின்றனர். நச்சினார்க்கினியர் மாட்டேற்றாகப்
பொருத்தமின்றி உரைவரைந்த இடங்களை எடுத்துக்காட்டி நூலாசிரியர் கருத்தோடு முரண்படு
மாற்றையும் நுணுகி யாய்ந்து விளக்கியிருப்பது பெரும் பயன் விளைக்கத்தக்கது. உயர்திரு.
புலவர் பொ. வே. சோமசுந்தரனார் அவர்கள் வரைந்த கதைச் சுருக்கம் கற்பவர்க்கு
வழிகாட்டியாகத் துணைபுரிகின்றது. வேண்டும் இடங்கட்குக் குறிப்புரை எழுதி வேண்டா
இடங்களை விடுத்துச் செல்வது மிகவும் நலம்பயப்பதாம். இலக்கணக் குறிப்பும், மேற்கோளும்
எடுத்துக் காட்டியிருப்பது வித்துவான் புலவர் வகுப்புக்கட்குச் செல்லும் மாணவர்க்குப்
பெரிதும் துணைபுரியும் என்பதிற் சிறிதும் ஐயமின்று. செய்யுளும் உரையும் பிழையின்றிச்
சீர்திருத்தமாகத் தொகுத்துப் பதித்திருக்கும் முறையும் புத்தகம் கட்டப்பட்டிருக்கும்
முறையும் கண்டோர் இதன் அருமை பெருமையையுணர்வார். இக்கால மாணவர்கட்கு
ஏற்றவாறு ஆக்கியது இது.
புலவர் வகுப்பு, வித்துவான் வகுப்பு ஆகிய தேர்வுகட்குச் சிந்தாமணி பாடமாக இருந்தால்
தனியே படித்துத் தேர்வுக்குச் செல்லத்தக்க துணையாகும் இது. நச்சினார்க்கினிய ருரையை
எளிதில் அறிந்துகொள்ள உதவும். இன்ன சொல்லுக்கு இன்ன பொருள் என்பதை எடுத்துக்
காட்டும் இவ்வுரை. இடர்ப்பாடின்றிப் பொருளை எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.
செய்யுளைப் படித்து மனப்பாடஞ் செய்வோர்க்குச் சீர் பிரித்துக் காட்டியிருப்பது பெரிதும்
உதவியாம். பெரும்புலவராக வருங் குறிக்கோள் உடையவர் எவரும் சிந்தாமணியைச்
சிறப்பாகக் கற்றுப் பின் மற்றை நூல்களைக் கற்பதே நன்முறையாகும்.
சிந்தாமணி என்ற இந்நூலின் பொருளை எல்லாரும் உணர்ந்து உலகவாழ்வின் உண்மை
தெரிந்து அறநெறியும் மறநெறியும் கண்டு நல்வாழ் வாழவேண்டும் என்பதே எமது
குறிக்கோளாகும். அந் நோக்கத்தால் இதற்கு முன்னும் சிந்தாமணி வசனம், சிந்தாமணிச்
சுருக்கம், சிந்தாமணி யாராய்ச்சி என்ற நூல்களைப் பதித்து வெளியிட்டனர். இன்றும்
இந்நூற்கு எளிய இனிய உரைநடையில் சொற்பொருள், விளக்கம், குறிப்புரை வரைந்து
பெரும் புத்தகமாக வெளியிடுகின்றோம்.
தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் இந்நூலை வாங்கிக் கற்றும் கற்பித்தும் நற்பயன் எய்துவார்கள்
என நம்புகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்
-----------
அணிந்துரை
சீவக சிந்தாமணி என்பது செந்தமிழ் மொழியிற் சிறந்து திகழும் பழம்பெருங் காப்பியங்களுள்
ஒன்று. பழைய காப்பியங்களிலே சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி,
குண்டலகேசி என்னும் இந்த ஐந்து காப்பியங்களையும் ஒருங்கே எண்ணி இவை ஐம்பெருங்
காப்பியங்கள் என்று கூறுவாரும் உளர். ஐம்பெருங் காப்பியங்களுள்ளும் சிந்தாமணியையே
முன்னிறுத்தி எண்ணியதன் நோக்கம் இவற்றுள்ளும் சிந்தாமணி தலைசிறந்ததாம் என்னும்
கருத்தேயாதல் வேண்டும். காலத்தானோக்கின் சிலப்பதிகாரத்தையே முற்பட வைத்தல்
வேண்டும்.
சிந்தாமணி என்பது இந்நூற்குத் தன்மையால் வந்த பெயர் என்பர் இலக்கண நூலோர்.
சிந்தாமணி என்பது நெஞ்சின்கண் பொதிந்து வைத்தற்குரிய சிறப்புடையவொரு மணி
போல்வது என்னும் பொருட்டு. புலனுழுதுண்போராகிய நல்லிசைப் புலவர்கட்கு வேண்டும்
அறிவுப் பொருள் அனைத்தும் ஒருங்கே வழங்கும் பெற்றியுடையதாதலின் இப் பெருங்
காப்பியத்தைச் சிந்தாமணி என்று போற்றுவது மிகவும் பொருத்தமே. இந்நூலின்
கதைத்தலைவனாகிய சீவகனுக்கு அவனுடைய நற்றாயாகிய விசயமா தேவியார் முதன்
முதலாக இட்டுவிளித்த பெயர் சிந்தாமணி என்பதேயாம். சீவகன் என்னும் பெயர் பின்னர்
வானொலியாகத் தோன்றிய 'சீவ' என்னும் சொற்கொண்டு கந்துக்கடன் என்னும் வணிகனால்
இடப்பட்ட பெயராகும். எனவே சிந்தாமணி என்னும் பெயரை ஆசிரியர் முதன்மையாகக்
கருதி இந் நூற்குச் சிந்தாமணியின் சரிதம் என்றே பெயர் வழங்குவாராயினர்.
"செந்தா மரைக்குச் செழுநாற்றங் கொடுத்த தேங்கொள
அந்தா மரையா ளகலத்தவன் பாத மேத்திச்
சிந்தா மணியின் சரிதம்சிதர்ந் தேன்றே ருண்டார்
நந்தா விளக்குச் சுடர்நன்மணி நாட்டப் பெற்றே"
என்பது திருத்தக்கதேவர் திருமொழி
இனி இந்நூலின்கண் சீவகன் மணந்து கொண்ட மகளிரின் வரலாறு கூறும் பகுதிகளை
அவ்வவர் பெயரோடு கூட்டிக் காந்தருவதத்தையார் இலம்பகம் என்பன போன்று பெயர்
கூறினாற் போன்றே சீவகன் சிறப்பிற்குக் காரணமான கலைசெல்வம் நிலம் வீடுபேறு
முதலிய நலங்களையும் மகளிராகவே உருவகஞ் செய்து நாமகள் முதலிய மகளிர்களையும்
சீவகன் மணந்துகொண்டதாகத் தேவர் யாண்டும் இந்நூல் திருமணகதிருமொழி
காட்சியே காணும்படி நூல் செய்திருத்தலின் இந்நூலை, 'மணநூல்' என்றும் வழங்குவது முண்டு.
இனி இன்னோரன்ன நூல்களைக் காப்பியம் என்று வழங்கும் வழக்குத் தமிழ்வழக்கன்று.
இவ்வழக்கு வடமொழியாளருடைய வழக்கேயாகும். பண்டைத் தமிழிலக்கண நூலோர்
இன்னோரன்ன நூல்களை வனப்பு நூல்கள் என்றே வழங்கினர். ஒரு நூல் ஒரு செய்யுளாலேயே
முடிவதும் உண்டு. திருமுருகாற்றுப்படை முதலிய பத்துப் பாட்டுக்களும், தனித்தனியே
ஒவ்வொரு செய்யுளாலேயே இயன்ற தனி நூல்களேயாகும். இனி நம் சங்க விலக்கியங்களிலே
எஞ்சிய எட்டுத்தொகையும் பதினெண்கீழ்க்கணக்கும் பலப்பல செய்யுள்களாற்
றொடர்புபட்ட வனப்பு நூல்களே என்றுணர்தல் வேண்டும். இந்த வனப்பியல் நூல்கள்
எட்டுவகை வனப்புகளுள் தத்தமக்கு ஏற்கும் வனப்புகளை ஏற்பனவாம். அவ்வனப்புகள்,
"அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபு"
என வரும் இவ்வெட்டுமே யாம்.
இவற்றுள் நமது சிந்தாமணி தொன்மை என்னும் வனப்புப் பற்றி எழுந்த நூலாகும். தொன்மை
என்பது பழையதொரு கதையைப் பொருளாகக் கொண்டு இயற்றப்படும் தொடர்நிலைச்
செய்யுள் நூல் என்பர். பழைய கதை பொருளாகக் கொண்டு இயற்றப்பட்ட இவ்வகை வனப்பு
நூல்கள் தொல்காப்பியத்திற்கு முன்னர்த் தமிழகத்திலே இருந்தன என்பது இந்த
இலக்கணமிருத்தலாலே ஊகிக்கப்படுகின்றது. ஆனால் இந்தத் தொன்மை என்னும்
இலக்கணத்திற்கு இலக்கியமாக இற்றைநாள் நமக்குக் கிடைத்துள்ள இச் சிந்தாமணி
முதலிய வனப்புக்கள் எல்லாம் அவ்விலக்கணந் தோன்றியபின்னர்த் தோன்றிய நூல்களேயாம்.
இனி, இந்த எண்வகை வனப்புக்களில் சீவக சிந்தாமணி தொன்மை என்னும் வனப்பை
அடிப்படையாகக்கொண்டு வேறு சில வனப்புக்களையும் உறுப்பாகக் கொண்டு திகழ்கின்றது.
அவையாவன : அம்மை, அழகு, தோல் என்னும் இம்மூன்றுமாம். என்னை ? இந்நூல், சின்மென்
மொழியாலே ஐந்தடியின் ஏறாது அமைதிப்பட்டு நிற்கும் செய்யுட்களை உறுப்பாகக் கொண்டு
அற முதலியவற்றிற்கும் இடையிடையே இலக்கணங் காட்டித் தாவிநடத்தலாலே 'அம்மை'
என்னும் வனப்பையும் , செய்யுண் மொழியாலே இரண்டு முதலிய சொற்களை இணைத்துக்
கற்போர் உளத்தே என்றென்றும் நின்று நிலவும் மாண்புடைய இனிய சொற்றொடர்களை
யாண்டும் தன்னகத்தே தாங்கி நிற்றலின், 'அழகு' என்னும் வனப்பையும், 'இழு' மென்னும்
இனிய ஓசையமைந்த மொழியாலே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு விழுமிய
பொருள்களையும் உணர்த்திச் செல்லுதலின் 'தோல்' என்னும் வனப்பையும் தன்கண்
உடையதாகும் என்றுணர்க.
இந்த வனப்பினுள் வைத்தும், 'அழகு' என்னும் வனப்பிற்கு இச் சிந்தாமணிக்கு நிகர்
சிந்தாமணியே யாகும். அழகு என்பது "செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய
தீஞ்சொல்" எனப்படும் செய்யுண்மொழி தேர்ந்து சீர்புனைந்து தொடை செய்யும் ஒரு
செயற்றிறமேயாகும். 'செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல்'
என்று சொல்லுக்கு அடைதேர்ந்து தொடுத்த கம்பநாடரும் சிந்தாமணியின் செஞ்சொற்றொடை
நினைந்தே இங்ஙனம் இனிதே மொழிந்தனர் என்று கருத இடனிருக்கிறது. கம்பநாடர்
இயற்றிய பெருங்காவியம் ஏனைக் காவியங்களினும் சிறந்திருத்தற்குக் காரணம்
சிந்தாமணியிற் கண்ட இத் தீஞ்சொற் காவியநடை அவர்க்கும் கைவந்தமையே தான்.
எனினும் கம்பநாடர் புனையும் செஞ்சொற்றொடையின்பஙகூட இந்தச் சிந்தாமணியின்
செஞ்சொற்றொடையின்பம் அளவு உயர்ந்து விடவில்லை. இவ்வகையிலே சிந்தாமணி
தரும் செஞ்சொற் றமிழ்நடை யின்பத்தை வேறு எந்தக் காப்பியத்தினும் கண்டு நுகர்தல்
இயலாது. அத்தகைய பேரின்பந் தருவன தேவருடைய செய்யுணடை. இவ்விடத்தில்
எடுத்துக் காட்டாக இன்பமே ததும்பி வழியும் தேவர் செய்யுணடையிலே ஒரு சில
எடுத்துக்காட்டி மேற்செல்வாம். சிந்தாமணியின் சிறப்பிற்குத் தலைசிறந்த காரணமும்
இதுவேயாகும். உலகம் 'மூவா முதலாவுலகம்,' மழைத்தாரை 'வெள்ளிவெண் கோனிரைத்
தனபோற் கொழுந் தாரைகள்,' மாந்தர் 'தேர்ந்தநூற் கல்வி சேர் மாந்தர்,' துகில், 'ஆவியன்ன
பூந்துகில்,' 'நுரைகிழித்தனைய நொய்மை நுண்டுகில்,' 'பாலாராவிப் பைந்துகில், பீடு
பெண்வலைப்படாதவர் பீடின் ஓங்கிய அண்ணல்,' காமம் 'வாய்ப்பறையறைந்து தூற்றி
யிடுவதே யன்றிப் பின்னும் இழுக்குடைத் தம்ம காமம், ‘மெய்பெறா எழுத்துயிர்க்கும்
மழலை‘ குன்றிலிட்ட விளக்கு, ‘குன்றில் கார்த்திகை விளக்கிட்டன்ன’ சொல்வன்மை
‘நாவினுள் உலகம் நடக்கும்,' போர்வை, 'சிலம்பி வலந்ததுபோற போர்வை,’ கறவை
'கன்றொளித்தகல வைத்த கறவை,' நடைவல்லார், ‘பயங்கெழுபனுவல் நுண்ணூல்
நடையுளார் சொல்லிற் றெல்லாம்’. கல்வி, ‘வாமனார் வடித்த நுண்ணூல் உண்டு
வைத்தனையநீ' சிறிது ‘ஆலம் வித்தனையது,' வாய்மை, ‘தப்பில் வாய்மொழி, 'நுண்பொருள்,
‘நூற்படு புலவன் சொன்ன நுண்பொருள்,' உவமை, ‘ஒளிநல வுப்புக் குன்றம்
ஊர்புனற் குடைந்ததே போல்; ஆடியுட் பாவைபோல்; சீருறு சிலம்பி நூலாற் சிமிழ்ப்புண்ட
சிங்கம்' என்றின்னோரன்ன தீஞ்சொற் றொடைகள் இடந்தொறும் இடந்தொறுங்
காணப்பட்டுக் கற்போர்க்குக் கழிபேரின்பம் நல்குவனவாம்.
இனி, சீவகசிந்தாமணியின்கண் சங்க இலக்கியங்களின் நலமெல்லாம் தகுந்த தகுந்த
இடங்களிலே பொருத்தி அழகு செய்யப்பட்டிருக்கின்றது. தமிழருடைய ஒப்பற்ற நூலாகிய
திருக்குறளைத் தகுந்த இடமறிந்து வித்தகம்படக் கையாண்டுள்ள திறத்திலே இச் சீவக
சிந்தாமணியே தலைசிறந்து திகழ்கின்றது. தேவர் தமது இலக்கியத்திற்குத் திருக்குறளையே
உயிராக அமைத்திருக்கின்றனர். மற்றும் பாட்டும் தொகையுமாகிய ஏனைய சங்க
நூல்களினின்றும் எடுக்கப்பட்ட பொருளும் சொல்லும் சிந்தாமணியில் மிக நயமாகப்
பொருத்தப்பட்டிருக்கின்றன. இன்னும் சிந்தாமணியின்கண் பண்டைக்காலத்து இலக்கிய
நெறியாகிய அகப்புறப் பொருள் நெறிகள் பெரிதும் போற்றப்பட்டிருக்கின்றன.
இக்காரணத்தால் பண்டைய உரையாசிரியன்மார்க்கெல்லாம் சிந்தாமணி ஒரு சிறந்த
எடுத்துக் காட்டு நூலாகவும் திகழ்வதாயிற்று.
இனி, கவிவரர் சுப்பிரமணிய பாரதியார் "திறமுடைய புலமை எனிற் பிற நாட்டார் அதை
வணக்கஞ் செய்தல் வேண்டும்" என்று பாடியதற்கிணங்க நமது சிந்தாமணியை ஓதியுணர்ந்த
பிறநாட்டறிஞர் அதுபற்றிக் கூறும் பாராட்டுரை ஒரு சில காட்டுதும் ; காண்மின்.
"திருத்தக்கத்தேவர் தமிழ்க் கவிஞருள் சிற்றரசர்."
:- வீரமாமுனிவர்
இத்தாலியப் பேராசிரியர்
-----------
"சீவகசிந்தாமணி இப்பொழுதுள்ள தலைசிறந்த தமிழிலக்கியச் சின்னமாகும்; தமிழ்ப்பொருள்
காதற் காப்பியம் ; உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று."
டாக்டர் ஜி. யூ. போப்பு
----------
"சிந்தாமணி எல்லாத் தமிழ் இலக்கியங்களுள்ளும் பழைமையானது. சமணத்தை
விளக்குவதற்காக இயற்றப்பட்டது. அஃது இலக்கியச் சிறப்பு மிக்கது; இச் சிறப்பின்றேல் இது
பண்டே மறைந்து போயிருக்கக்கூடும். அதன் ஆசிரியர் நடை, ஒரு தனி நடையாகும். அஃது ஓர்
உயரிய இலக்கிய நூலாக அமைந்துளது."
சூலியேன். வேன்சோன்.
பிரஞ்சுப் பன்மொழி யாராய்ச்சியாளர்.
---------
சிந்தாமணி ஒரு சமணக் காப்பியமட்டுமன்று ; தமிழ்ப் பெருங்காப்பியமட்டும் அன்று. அஃது
உலகப் பெருங் காப்பியங்களிலே ஒன்று என்று பிற நாட்டாரானும் பாராட்டப்பட்டது நமது
சீவக சிந்தாமணி என்க.
சீவக சிந்தாமணியின் கதைப்போக்கினைக் கூர்ந்துணரின் அது திருமால் சமயத்தவர் கதைகளில்
ஒன்றாகிய கண்ணன் கதையையே பெரும்பாலும் ஒத்திருத்தல் காணலாம். சீவகனைக்
கண்ணனாகவும் விசயையைத் தேவகியாகவும் சுநந்தையை யசோதையாகவும் சச்சந்தனை
வசுதேவனாகவும் கந்துகனை நந்தகோனாகவும் கட்டியங்காரனைக் கஞ்சனாகவும் கொண்டு
கதை நிகழ்ச்சிகளையும் நோக்கின் சீவகன் கதை கண்ணன் கதையையே அடியொற்றி
நடத்தல் காணலாம்.
உலகத்திலே பற்றின்றியே எல்லாத் தொழிலினும் ஈடுபட்டு நல்வாழ்க்கை வாழலாம்
என்பதற்குக் கண்ணன் கதை ஓர் எடுத்துக்காட்டாகும். கண்ணன் ஆயமகளிரோடு காம
விளையாட்டுப் பல நிகழ்த்தினன் ; போர் செய்தான் ; அரசாட்சி செய்தான் ; அன்பர்க்கு
உதவினான் ; மன்னுயிர் ஓம்பினான். இத்தனை தொழில்களும் செய்துகொண்டே அவன்
பற்றின்றி மெய்வாழ்க்கை நடத்தினன் என்பதுதான் கண்ணன்பால் யாம் காணும்
பெருந்தகைமை. இப்படிப்பட்டதொரு கதைத் தலைவனையுடைய கதை நமது சமயச்சார்பாக
இருத்தல் நன்றென்று கருதிய ஆருகதச்சான்றோர் ஒருவரே அந்தக் கதையை அடியொற்றிச்
சீவகன் கதையைப் படைத்திருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது. முதன் முதலாக
இந்தக் கதையைப் படைத்தவர் யார் ? எக்காலத்தவர்? என்றெல்லாம் தெரிந்துகொள்ள
முடியவில்லை. மிகப் பழைய காலந்தொட்டே ஆருகத சமயச்சார்பாக இந்தக் கதை
வழங்கிவந்துள்ளது என்றுமட்டும் தெரிகிறது. இந்தக் கதையைப் பொருளாகக் கொண்டு
திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியை இயற்றியருளினர். சீவக சிந்தாமணி தோன்றிய பின்னர்,
வடமொழியிலும் இந்தக் கதை நூல்வடிவத்திலே தோன்றிற்று. வடமொழியிலே சீவகன்
கதை பொருளாகத் தோன்றிய நூல்கள் சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, சீவந்தர
நாடகம், சீவந்தரசம்பு என்பனவாம். மகாபுராணத்திலும், சீபுராணத்திலும் (மணிப் பிரவாள
நடையில்) இக்கதை கூறப்பட்டிருக்கின்றது.
ஆராய்ச்சியாளர் சிலர் சீவக சிந்தாமணி கத்திய சிந்தாமணியின் வழிவந்தது என்று கருதி,
கத்திய சிந்தாமணியின் காலமாகிய ஒன்பதாம் நூற்றாண்டை யடுத்து இந்நூல் தோன்றியிருத்தல்
வேண்டும் என்று கூறுகின்றனர். சீவகசிந்தாமணியின் தகுதியாகாது. ஆருகத சமயத்தின்
பொற்காலம் கடைச்சங்க காலத்தின் இறுதியாகிய கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்குப்
பின்னும் தேவாரகாலமாகிய ஏழாம் நூற்றாண்டின் முன்னும் ஆகிய ஏறக்குறைய நானூறு
ஐந்நூறு ஆணடுகளேயாகும். இந்தக் காலத்தைக் காவியக்காலம் என்றும் கூறலாம்.
பெருங்கதையும் ஒப்பற்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிந்தாமணியும் பிறவுமாகிய
மிகச் சிறந்த பெருங்காப்பியங்கள் இந்தக் காலத்திலே தான் தோன்றின. சமணசமயச்
சான்றோராகிய கொங்குவேளிரே முதன்முதலாகக் காவியங்கட்குக் கால்கோள் விழாச்
செய்தவர் ஆவர். கொங்குவேளிரும் இளங்கோவடிகளும் சீத்தலைச்சாத்தனாரும்
பண்டைய அகப்புற நெறித் தமிழிலக்கிய மரபினின்றும் காவிய நெறியைக் காட்டி
ஒரு புரட்சி அல்லது புதுமையைத் தோற்றுவித்தனர். இம் மூவரும் செய்யுள்நடைத்
திறத்தில் பண்டைய மரபினையே பின்பற்றிக் காவியம் செய்தனர். திருத்தக்கதேவர்
அந்தப் புதுமையின் மேலும் ஒரு புதுமை செய்தனர். பழைய செய்யுட் போக்கையும்
மாற்றிப் புதியதொரு நெறியைப் படைத்துக் கொண்டுவிட்டனர். தேவர்க்குப் பின்
இற்றைநாள்காறும் நந்தமிழன்னை தேவர் காட்டிய அப்புது நெறி பற்றியே இனிதின்
நடப்பாளாயினள்.
தேவர்க்குப் பின்னர், காலப்போக்கிலே தோன்றிய நல்லிசைப் புலவர் பலரும் தேவருடைய
அடிச்சுவடுபற்றியே பெரிய - சிறிய - வனப்பு நூல்களைப் படைத்தளிப்பாராயினர்;
சிந்தாமணிக்குப்பின் தோன்றித் தமிழகத்திலே சிறப்புற்றுத் திகழும் இலக்கியமனைத்தினும்
சீவக சிந்தாமணியின் நறுந் தமிழ்மணம் விரவியிருத்தலைக் காணலாம். தேவர் நெறிபற்றிக்
காப்பியமியற்றிய நல்லிசைப் புலவர்களில் கம்பநாடரே தலைசிறந்தவர் என்னலாம்.
கம்பநாடரின் பெரும் புகழுக்குத் திருத்தக்கதேவர் செய்தருளிய சீவக சிந்தாமணியும் ஒரு
காரணம் என்பது மிகையன்று.
இனி, திருத்தக்கதேவர் தாம் மேற்கொண்டிருந்த துறவு நெறிக்குத் தகத் தமது இளமையிலேயே
இயற்றிய சிறு நூலாகிய நரிவிருத்தம் தன்னகத்தே அரிய மணிகள் பலவற்றைக்கொண்டு
திகழ்கின்றது. நரி விருத்தத்திலே ஒரு பாட்டு நந்தேவர் சீவக சிந்தாமணியைச்
செய்தருளியதற்குரிய காரணத்தைக் குறிப்பாகத் திறம்பட வுணர்த்துகின்றது. அது,
"பற்றுளம் அகல நீக்கிப் பாசிழைப் பரவை யல்குற்
பொற்றொடி மகளிர் தங்கள் புணர்முலைக் குவட்டின் வைகிச்
சுற்றத்தார் சுற்ற வாழ்தலன்றெனின் துறந்து போகி
நற்றவம் புரிவில் லாதார் நடலை நோய்க் கடலுள் ஆழ்ந்தார்."
(நரி விருத்தம் : 38)
என்பதாம். தேவர் காட்டும் ஆருகத சமயநெறி, பிற்காலத்தே காணப்பட்ட வறட்டுச் சமணநெறி
போன்றதன்று, அருளுடைய திருக்குறள் நெறியையே பெரிதும் தழுவியதென்று தெரிகின்றது.
பற்றுளம் அகலநீக்குதல் ஒன்றே குறிக்கோள். மனிதன் அரசனாயிருக்கலாம் ; அறநெறி
பிறழாமல் போரிடலாம் ; மகளிரை மணக்கலாம் ; குறிக்கோளைமட்டும் மறந்துவிடாமே
இருத்தல் வேண்டும் ; காமஞ்சான்ற கடைக்கோட்காலைத் துறந்துபோய் நற்றவம்புரிதல்
சாலும் என்பது தேவர் கொள்கை என்று தெரிகிறது. இந்தக் கொள்கையையே தேவர்
இம் மாபெருங் காப்பியத்திலே உலகினர்க்கு விரித்து விளம்பியிருக்கின்றனர்.
ஆயர்பாடியிலே கண்ணன் பற்றின்றியே மகளிர் பலரை மணந்து மெய்வாழ்க்கை காட்டினாற்
போன்று சீவக சாமியும் எண்மர் மகளிரை மணந்தும் பகையை வென்றும் அருளாட்சி
நடத்துகின்றான். கூர்த்த உணர்வுடையோன் ஆகலின் மிக விரைவிலேயே அவன்
மெய்யுணர்ந்து விடுகின்றான். தவத்தின் முன்னர் இப் பேருலகம் ஒரு சிறு ஐயவித்துணையும்
ஈடாகாது என்றுணர்ந்து விடுகின்றான். உணர்ந்தவுடன் படநாகம் தோலுரித்தாற் போன்று
உலகத்தை உதறித்தள்ளி வீடுபேறடைகின்றனன். ஒவ்வொரு மனிதனும் இந்தச் சீவக
சாமியைப் போலவே வாழ்ந்து கடைத்தேற வேண்டும் என்பதே அடிகளார் இந்தக்
காப்பியத்தாலே உலகினர்க்குச் செய்யும் செவியறிவுறூஉ ஆகும் என்க.
ஒரு காப்பியம் மக்கள் உள்ளத்தை எதனாலே அள்ளிக் கொள்ள வல்லதாகின்றது என்னும்
உண்மை ஒன்றனைத் திருத்தக்கதேவர். நன்குணர்ந்தவர், காவியங்களிலே அவலச்
சுவைமட்டுமே மாந்தர் நெஞ்சத்தை உருக்கி வார்த்துவிடும் பண்புடையதாகும். மற்றொரு
தேவராகிய தோலாமொழித் தேவருந்தாம் பெருங்காப்பியம் செய்திருக்கின்றனர். இந்த
நுணுக்கத்தை அவர் சிறிதும் அறிந்திலர் என்றே தோன்றுகின்றது. சூளாமணி முழுவதையும்
படித்தாலும் ஒரு துளி கண்ணீர் சுரவாது. இஃது என்னநுபவம். சிந்தாமணியிலோ தேவர்
முதலிலம்பகத்திலேயே அவலச் சுவையினாலே கற்போர் நெஞ்சத்தைப் பாகாக
உருக்கிவிடுகின்றார். பாவம் ! முடிமன்னன் பெருந்தேவியாருந் துணையின்றி
"உண்டென வுரையிற் கேட்பார் உயிருறு பாவ மெல்லாம் கண்டினித் தெளிக" வென்று
காட்டுவாள்போல ஆகி, நெருநல் வரையில் , அரண்மனையிலே தேவர் மகளிர் என
மகிழ்ந்திருந்தவள் வெண்டலை பயின்ற சுடுகாட்டிலே தமியளாகிச் சீவக சாமியை
ஈன்றெடுக்கும் நிகழ்ச்சிபோன்ற அவலச்சுவைக்கு உறைவிடமான பகுதியை நான் வேறெந்தக்
காப்பியத்தினும் கண்டதில்லை. இந்தப் பகுதியை நினைத்தாலே என் கண்ணில் தொடுமணற்
கேணியிற் சுரந்து நீர்பாய்வது அநுபவத்தாற் கண்ட வுண்மை. இந்தச் சுவையே
கற்போருளத்தே காலூன்றி நின்று இந்தக் காவிய முழுதிற்கும் சுவை பயந்து நிற்கின்றது.
பின்னர் யாண்டும் பெரும்பாலும் காமச்சுவையே பேசிக் களிப்பூட்டக் கருதிய தேவர்
இந்த நூலின் முதலிலம்பகத்திலேயே ஒப்பற்ற அவலச் சுவையைத் தேக்கி வைத்திருப்பது
அவருடைய தெய்வத்தன்மையுடைய புலமைத் திறத்தை நன்கு விளக்குகின்றது.
இனி இந்த நூலிலே காமநெறி படர்ந்து கேடுறுவார்க்கு எடுத்துக்காட்டாகக் கதைத் தலைவன்
தந்தையாகிய சச்சந்தனே அமைகின்றனன். மற்றுச் சுடுகாட்டிலே பிறந்த நம்பியோ பல்வேறு
மகளிர்களை மணந்தும் பற்றுள்ளம் அகல நீக்கியே வாழும் திறத்திற்கு ஓர் ஒப்பற்ற எடுத்துக்
காட்டாகத் திகழ்கின்றான். சீவகன் வரலாற்றிலே அவன் செயல் பலவற்றினும் அவனுடைய
இந்த மேதகவு விளங்குவதை அங்கங்கே காணலாம்.
சீவகனுடைய நல்லாசிரியராகிய அச்சணந்தி அவனுடைய மனப்பரிபாகத்தை நன்குணர்ந்தே
அவனுடைய இளமைப் பருவத்திலேயே காஞ்சிப் பொருளாகிய நிலையாமையை உணர்த்தி
விடுகின்றனர். மேலும், அவன் பகைவனாகிய கட்டியங்காரன்பால் ஓராண்டு முடியுந்துணையும்
வெகுளல் கூடாது என்றும் வேண்டிக் கொள்கின்றனர். ஆசிரியரின் வேண்டுகோட்கிணங்கிய
சீவகன் சிங்கத்தைக் குறுநரிக்குழாம் வளைந்தாற்போன்று தன்னைச் சூழ்ந்துகொண்ட
கட்டியங்காரன் ஏவலர்க்கடங்கிச் செல்கின்றனன். இந் நிகழ்ச்சியால் சீவகன் வெகுளியைத்
தன் அறிவின் ஆட்சிக்குள்ளே அடக்கியவன் என்பது புலனாம். மற்றும் சீவகன் ஊழ்தர
உழுவலன்போடு வந்த குலமகளிர் பாலன்றி யாண்டும் காமத்தாலே நெஞ்சு நெகிழ்ந்திலன்
என்பதையும் இந்நூலில் யாண்டுங் காணலாம். அவன் மிக்க இளமைப் பருவத்திலேயே
தனக்குப் பரிசிலாக நந்தகோனால் வழங்கப்பட்ட பேரழகியாகிய கோவிந்தையாரை
மனைவியாக ஏற்றுக்கொள்ளாமை அவன் காமத்தையும் தன் அறிவின் ஆட்சிக்குட்படுத்தியவன்
என்பதை நன்கு விளக்கும். காட்டகத்தே தன்னைக் கண்டு காமுற்றுக் குறிஞ்சிப்பூங்
கோதைபோலும் குங்கும முலையினாளாகிய அநங்கமாவீணை என்பாள், காமனம்பு
வீசுமுன்பே கண்ணம்பை வீசியகாலத்தே அவளை நோக்கவும் நடுங்கினான் சீவகன்.
இஃது அவன் ஒழுக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. சீவகன் மன்னுயிரையும் தன்னுயிரென
எண்ணும் அருட்கடல் என்பதற்குக் காட்டுத்தீயால் வளைப்புண்ட யானைகளைக்
காப்பாற்றினதும் நாய்க்கு மறைமொழி செவியுறுத்தி நற்கதியுய்த்ததும், கட்டியங்காரன்
பரிசனங்கட்குப் பரிந்து விருத்தி நல்கியதும், இன்னோரன்ன பற்பல சான்றுகள் உள்ளன.
சீவகனுடைய மொழிகள் பற்பல விடங்களிலே மெய்க்காட்சிகளின் விளக்கமாக விருக்கின்றன.
இவ்வாறு இச் சிந்தாமணி, பல்லாற்றானும் ஒப்புயர்வற்ற தலைவனைத் தலைவனாகக்
கொண்டு கற்போருக்குக் கழிபேரின்பமும் சிறந்த உறுதிப் பொருளும் வழங்கும் ஒரு சிறந்த
வனப்பு நூலாகவே திகழ்கின்றது.
இனி, இச் சீவக சிந்தாமணி தொடக்கத்திலே மழையின்றி மாநிலத்ததார்க்கில்லை என்பதுபற்றி
மழைவளம் பேசத் தொடங்குகின்றது. சிந்தாமணியிலே காணப்படுகின்ற ஏமாங்கத நாடு
நன்னாட்டிற்கெல்லாம் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. வளமிக்க உழவர் ஆரவாரம்
எங்கெங்கும் கேட்கப்படுகிறது. "காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகினெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து, தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள்
சிந்தும் ஏமாங்கதப் பெருநாட்டின் புகழ்" திசை யெலாம் பரவுகின்றது. அந்நாட்டு மன்னனோ
நாவீற்றிருந்த புலமாமகளோடு நன்பொற் பூவீற்றிருந்த திருமகள் புல்ல நாளும் பாவீற்றிருந்த
கலை பாரறச்சென்ற கேள்விக் கோவாகத் திகழ்கின்றான். ‘தள்ளா விளையுளு தக்காரும்
தாழ்விலாச், செல்வருஞ் சேர்வது நாடு’ என்னுந் திருக்குறட்கு எடுத்துக் காட்டாகத்
திகழ்கின்றது ஏமாங்கதநாடு. இந்த நாடு தரும் இன்பம் எல்லையற்றதாகும். சிந்தாமணிக்குப்
பின்னர்க் காப்பியஞ் செய்த நல்லிசைப்புலவர் நாட்டுகின்ற நாடுகள் எல்லாம் இந்த
ஏமாங்கதத்தின் வழிவழித் தோன்றிய நாடுகளேயாம்.
நல்வாழ்க்கைக்குக் கல்வியும் செல்வமும் இன்றியமையாதன. இவற்றோடு குடிதழீஇக்
கோலோச்சும் கொற்றவனும் வேண்டும் என்னும் உண்மையைச் சீவகசிந்தாமணி தொடக்கச்
செய்யுள் ஒன்றிலேயே அறுதியிட்டுக் கூறுகின்றது. நாவீற்றிருந்த புலமாமகள் என்பது
அறிவுச் செல்வத்தை உணர்த்துகின்றது. பொற்பூ வீற்றிருந்த திருமாமகள் என்பது
செல்வத்தை உணர்த்தும். கேள்விக்கோ என்றது செங்கோன் மன்னனைக் குறிக்கும்.
இவ்வாறு சிந்தாமணியிலே மாந்தர் வாழ்க்கைக்குச் சிறந்த நன்னாடு மிக அழகாகப்
படைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் அரசியல் நெறியும் போர்நெறியும் பிறவும் நன்கு
விளக்கப்பட்டிருக்கின்றன. காதல் வாழ்க்கையின் மாண்பு விரித்தோதப்பட்டிருக்கின்றது.
சுருங்கக் கூறுமிடத்து நல்வாழ்க்கை வாழவேண்டும் என்று விரும்புவோர்க்கெல்லாம்
இன்றியமையாத உறுதிப் பொருள் பலவற்றையும் சிந்தாமணி வழங்கும் மாண்புடையது
என்னலாம். அழகாலே பன்னிற மலர்களும் மலர்ந்துள்ளதோர் அழகிய பூம்பொழிலை
யொப்பது. பயனாலே பல்வேறு தீஞ்சுவைக் கனிகளும் நல்கும் பழுமரமங்கள் செறிந்ததொரு
பழத்தோட்டமே இப் பெருங் காப்பியம் என்போம்.
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக ஆட்சியாளர் திருவாளர் வ. சுப்பையா பிள்ளை
யவர்கள், இந்தப் பெருங் காப்பியமும் இதற்கமைந்த நச்சினார்க்கினியர் நல்லுரையும்
கற்று வல்லார்க்கன்றி ஏனையோர் அறிவதற் கரியனவாயிருத்தல் கருதி நச்சினார்க்கினியர்
நல்லுரையையே தழுவி யாவர்க்கும் எளிதிற் பொருள் விளங்கும்படி இப்பொழுது ஒரு
புத்துரை வரைவித்து விளக்கவுரையும் கூட்டி வெளியிடுகின்றார்கள். இதற்கு ஒரு முன்னுரை
வரைந்து தரும்படி எனக்குப் பணித்தார்கள். சிந்தாமணியினைப் போற்றிப் பயிலுமவர்களுள்
யானும் ஒருவனே யாயினும் அஃது எனக்குத் தரும் இன்பத்தினை எழுதிக்காட்ட வல்லேன்
அல்லேன். காவியவின்பம் பெரும்பாலும் காதலின்பத்தையே ஒத்திருக்கின்றது. கருத்தொத்து
ஆதரவுபட்ட காதலரை நோக்கி ‘நீயிர் நுகர்ந்த இன்பம் எத்தகையது' என்று வினவினால்
அவர் எங்ஙனம் சொல்லிக்காட்ட வியலும் ? சீவக சிந்தாமணியின் இலக்கிய வின்பமும்
அப்படிப்பட்டதே என்பதில் ஐயமில்லை. விளங்கவில்லை என்று குறை கூறுவதற்கு
இடமில்லாமல் திருவாளர் பிள்ளையவர்கள் இப்பொழுது இப்புதியவுரையினாலே
செய்துவிட்டார்கள். இந்த அருமுயற்சிக்குத் தமிழுலகம் பிள்ளையவர்கட்குப் பெரிதும்
கடமைப்பட்டிருக்கிறது. இனி நாம் செய்யவேண்டியது அந்த நூலை நன்கு பயின்று
அது தரும் பேரின்பத்தை நுகர வேண்டும்; அத்துணையே . அந்தப் பயிற்சி நம்மை
இம்மையிலேயே வானவராக்கிவிடும்.;
வாழ்க சிந்தாமணி ! வாழ்க திருத்தக்க மாமுனி !
வாழ்க செந்தமிழ் !
மேலப்பெருமழை இங்ஙனம்,
24.11.1958 பொ. வே. சோமசுந்தரன்
-----------
நூலாசிரியர் வரலாறு
சீவக சிந்தாமணி என்னும் இந்த ஒப்பற்ற வனப்பு நூலைச் செய்தருளியவர் திருத்தக்கதேவர்
என்ப. இவர் திருத்தகுமுனிவர், திருத்தகு மகாமுனிவர், திருத்தக்க மகாமுனிகள் என்னும்
பெயர்களாலும் வழங்கப்படுவர். நமது செந்தமிழ்ப் புலவர்களிலே தேவர் என்னும் பெயர்
மூன்று புலவர்களைக் குறிக்கும். அவர் திருவள்ளுவனார், திருத்தக்கதேவர், தோலாமொழி
ஆகிய மூவருமாம். ஆயினும் தேவர் என்னும் இந்தப் பெயர் திருத்தக்க தேவர்க்கே
சிறந்துரிமையுடையதாகும்.
திருத்தக்கதேவர் சோழர்குலத் தோன்றல் என்று கூறப்படுகின்றார். இவர் காலம் கி. பி.
இரண்டாம நூற்றாண்டிற்கும் ஏழாம் நூற்றாண்டிற்கும் இடைநிகழ்ந்த காலத்தில் ஒரு
பகுதியாக விருக்கக்கூடும் என்று தெரிகிறது. இவர் அந்தக் காலத்திலே தமிழகத்திலே
பெரிதும் செல்வாக்குற்றிருந்த ஆருகத சமயத்தைச் சார்ந்தவராவார். மேலும் இளமையிலேயே
இவர் துறவியாகி யிருந்தவர். பல கலையும் கற்றுத் தேர்ந்து அறிவுக்கடலாகத் திகழ்ந்தவர்.
திருத்தக்கதேவர் சான்றோரிணக்கம் கருதி மதுரை மூதூரை யடைந்து ஆங்குச் சங்கப்
புலவர்களோடு கூடி அளவளாவி யிருந்தனர் என்றும், அப்பொழுது ஆங்கிருந்த தமிழ்ப்புலவருட்
சிலர் ஆருகத சமயத்தவர் துறவு முதலியவற்றைப் பாடுவரேயன்றிக் காமச்சுவை கெழுமிய
காப்பியம் பாடவறியார் என்று கூறினர் என்றும், அது கேட்ட தேவர் தாம் அக் குறையை
யகற்றக்கருதிக் காமச்சுவை மிக்க இச் சீவக சிந்தாமணியை இயற்றிப் பெரும்புகழ் எய்தினர்
என்றும் ஒரு வரலாறு கேட்கப்படுகின்றது.
இன்னும் காப்பியம் செய்யக் கருதிய தேவர் தங் கருத்தினைத் தம் ஆசிரியர்க்குக் கூறியபொழுது
அந்த ஆசிரியர் தேவருடைய புலமையாற்றலை அளத்தற் பொருட்டு அப்பொழுது ஆங்கே
ஓடிய ஒரு நரியைச் சுட்டிக்காட்டி ‘நீர் காவியம் பாடு முன்னர் இந்த நரியைப் பொருளாகவைத்து
ஒரு சிறு நூல் இயற்றிக் காட்டுக' என்று பணித்தனர் என்றும், தேவரும் அப்பொழுதே
ஆசுகவியாக விரைந்தொரு சிறு நூல் பாடி அதற்கு நரி விருத்தம் என்று பெயரிட்டு
ஆசிரியர்க்குக் காட்டினர் என்றும், அந்நூலின் அருமையுணர்ந்த ஆசிரியர் ‘இனி நீயிர்
நினைந்தபடியே பெருங்காப்பியஞ் செய்க ! ’ என்று பணித்தனர் என்றும், அப்பணி
தலைமேற்கொண்டு தேவர் அப் பெருங்காப்பியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் பாடி வழங்கும்படி
ஆசிரியரை வேண்ட அவரும் ‘செம்பொன் வரைமேற் பசும்பொன்‘ என்று தொடங்கும் பாட்டைப்
பாடிக் கொடுத்தனர் என்றும் ; பின்னர், தேவர் "மூவா முதலா உலகம்" என்னும் கடவுள்
வாழ்த்தைப் பாடிக் காப்பியந் தொடங்கினராக இந்தச் செய்யுள் தம்முடைய செய்யுளினுங்
காட்டிற் சிறந்திருத்தல் கண்ட ஆசிரியர், இதனையே முதற் செய்யுளாக அமைத்துக்கொள்ளும்படி
பணித்தனர் என்றும் ஆசிரியர் பணியாகலின் அதனை மறுக்கமாட்டாராய் அங்ஙனமே தம்
செய்யுளையே முதலாக வைத்துப் பாடினர் என்றுங் கூறுவர்.
இன்னும் இளமையிலேயே துறவியாகிய இவர் காமச்சுவை ததும்ப இவ்வாறு எங்ஙனம்
பாடவியலும் என்று சிலர் ஐயுற்ற பொழுது தேவர் தீயிற் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பின்
துண்டினைக் கையிலேந்தித் தம்முடைய நல்லொழுக்கத்தைப் பலரும் அறியச் செய்தனர் என்றும்
கூறுவர். இவை யெல்லாம் தேவரைப்பற்றிக் கன்னபரம்பரையாக வழங்கிவருஞ் செய்திகளேயாம்.
இவற்றிற்குச் சான்றுகள் இல்லை.
திருத்தக்க தேவருடைய ஒப்பற்ற நல்லிசைப் புலமையை என்றென்றும் உலகத்தார்க்கு நன்கு
விளக்கிக்கொண்டு நின்று நிலவும் நற்சான்று அப்பெரியார் இயற்றிய சீவக சிந்தாமணி என்னும்
இந்த வனப்பு நூலேயாகும். இவர் இயற்றிய இந்த நூலைக் கல்லாதார், ஒருதலையாகக்
கல்லாதவரேயாவர். சிந்தாமணியின் தீஞ்சுவை தேறாதார் செந்தமிழின் தீஞ்சுவை தெரியாப்
பதடிகளே.
திருத்தக்கதேவர் பொதுவாகத் தமக்கு முந்திய செந்தமிழிலக்கியங்களிலே கண்ட அறிவுச்
செல்வம் பலவற்றையும் திரட்டித் தமது சிந்தாமணியிலே பொதிந்து வைத்துள்ளனர். சிறப்பாக
இவர் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கினும் ஆசிரியர்
திருவள்ளுவனாரையே பின்பற்றித் தமது காப்பியத்தைப் படைத்தருளி யிருக்கின்றார்.
இவருடைய செய்யுள் சில திருக்குறட் செய்யுள் சிலவற்றிற்கு அரிய விளக்கமாகவே
அமைந்திருக்கின்றன. இறைவனைப் போன்று என்றென்றும் கட்டிளமை திகழும்
கன்னிமையோடு நின்று நிலவும் நம் தமிழ்த் தெய்வத்திற்கு இவர் இயற்றி யளித்த சிந்தாமணி
அழகின்மேல் அழகு செய்யும் ஓர் அருங்கலம் ஆகும் என்பதில் ஐயமில்லை.
வாழ்க ! திருத்தக்க தேவர் மலரடிகள்!
மேலப்பெருமழை இங்ஙனம்,
24.11.1958 பொ. வே. சோமசுந்தரன்
---------------
சீவக சிந்தாமணி - பாகம் 1 (பாடல்கள் )
1. கடவுள் வாழ்த்து
சித்தர் வணக்கம்
மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே.
பொருள் : தேவாதி தேவன் - வானவர்கட்கு முதலான வானவன் என்பான்; மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த - முடிவும் தோற்றமும் இல்லாத மூன்றுலகமும் போற்ற; தாவாத இன்பம் தலையாயது - கெடாத இன்பம் தனக்கு ஒப்பற்றதனை, தன்னின் எய்தி ஓவாதுநின்ற - தன்னாற் பெறுவதனால் தன்னைவிட்டு நீங்காது நின்ற; குணத்து ஒள்நிதிச் செல்வன் என்ப - பண்புகளை உடையவனாகிய சிறந்த நிதியை உடைய செல்வன் என்று பெரியோர் கூறுவர்; (ஆகையால்) அவன் சேஅடி சேர்தும் - (யாமும் இவ்விலக்கியம் இனிது முடிய) அவன் செவ்விய திருவடிகளை வணங்குவோம்.
விளக்கம் : ஒண்ணிதிச் செல்வன் - வீடாகிய விளங்கிய நிதியை உடைய செல்வன். குணம்: எண் குணங்கள். அவை: தாவாத இன்பம் என்பதனாற் பெறப்பட்ட வரம்பிலா இன்பம் நீங்கலாக உள்ள வரம் பிலாஅறிவு, வரம்பிலா ஆற்றல், வரம்பிலாக் காட்சி, பெயரின்மை, மரபின்மை, ஆயுவின்மை, அழியா இயல்பு என்பனவாம். இஃது அருகசரணம் சித்தசரணம் சாதுசரணம் தன்மசரணம் என்னும் நான்கனுட் சித்தசரணம். சித்த சரணம்-சித்தனை வணங்கும் வணக்கம். சித்தன்: காதி அகாதி என்னும் இருவகைக் கருமங்களையும் வென்று, அக்கினி யிந்திரனால் உடம்பைத் துறந்து, பரிநிர்வாணம் பெற்று மூவுலகத்து உச்சியில் இருப்பவன். இத் தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்து நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் ஆதலானும், முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி (தொல்-சிறப்பு) என்றதனால், அகத்தியத்தின் வழி நூல் தொல்காப்பிய மாதலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையானும், அந்நூலிற் கூறிய இலக்கணமே இதற்கிலக்கண மென்றுணர்க.
அவ்விலக்கணத்திற் செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பா நான் கென்றும், அவற்றை அறம் பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணம் என்று கூறுகின்றுழி, இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் (தொல்.செய்.238) என்பதனால், மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்பப் பழையதொரு கதைமேற் கொச்சகத்தாற் கூறின், அதுதோல் என்று கூறினமையின், இச் செய்யுள் அங்ஙனங் கூறிய தோலா மென்றுணர்க. இச் செய்யுள் முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதியாம்; (தொல்-புறத்-27). இதனானே, யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது (தொல்-செய்.641) என்பதற்குத் தேவபாணியும் காமமுமே யன்றி வீடும் பொருளாமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று.
முந்து நூல்களிற் காப்பியம் என்னும் வடமொழியால் தொடர்நிலைக்குச் செய்யுட்குப் பெயரின்மையும் இதற்குப் பிறகு கூறிய நூல்கள் இதற்கு விதியன்மையும் உணர்க. இனி, இத் தொடர்நிலைச் செய்யுளை இனம் என்ப. அந் நூல்கள் இனம் என்று சுட்டிய உதாரணங்கள்தாம் அவர் சேர்த்த அவ்வப் பாக்கட்கே இனமாகாது, ஒழிந்த பாக்கட்கும் இனமாதற்கு ஏற்றலானும், துறையை விருத்தமாகவும் தாழிசையை விருத்தமாகவும் ஓதுதற்கு அவை ஏற்றமையானும், மூவா முதலா என்னும் கவி முதலியன தாழம்பட்ட (தாழ்தல் பொருந்திய) ஓசையான் விருத்தமாயும் சீர்வரை யறையானும் மிகத்துள்ளிய ஓசையானும் துறையாயும் கிடத்தலின், இதனை விருத்தக் கலித்துறை யெனல் வேண்டும்; அது கூறவே, துறையும் விருத்தமும் எனப் பகுத்தோதிய இலக்கணம் நிரம்பாதாம் ஆகலானும் இன மென்றல் பொருத்தமின்று. இச் செய்யுட்களின் ஓசை வேற்றுமையும் மிக்கும் குறைந்தும் வருவனவும் கலிக்கே ஏற்றலிற் கொச்சகமென்றடங்கின.
யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது என்பதனால், இக்கவியும் மேலிற் கவியும் முன்னிலையன்றியும் தேவர்ப் பராயினவாம். இனி அளவியற் சந்தம், அளவழிச் சந்தம், அளவியற்றாண்டகம், அளவழித் தாண்டகம், சமசந்தத் தாண்டகம், சந்தத் தாண்டகம், தாண்டகச் சந்தமென அடக்குவார்க்கு அவற்றுள்ளும் சிலவன்றி முழுதும் அடங்காமை உணர்க. மூவா முதலா என்பது, மூத்த முதலிய என்னும் பெயரெச்சங்களின் எதிர்மறை அடுக்கு; எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா (தொல்-வினை.39) என்பதனால், உலகம் என்னும் வினைமுதற் பொருளோடு முடிந்தது; முதலா ஏன தம் பெயர் முதலும், (தொல்-மொழி-33) என்பதனான், முதலும் என்பதொரு வினை உடன்பாட்டிற்கு உளதாம். ஆசிரியர், காலம் உலகம் (தொல்-கிளவி-58) என்றும் பிறாண்டும் சூத்திரம் செய்தலின் அது வடமொழி அன்று. ஈண்டு உலகம் என்றது உயிர்க்கிழவனை, உலகம் உவப்ப (முருக-1) என்பது போல. ஒன்று+மூன்றும்: ஒரு முன்றும். ஒன்று என்பதில் உள்ள குற்றியலுகரம் மெய்யொடுங்கெட்டு, முதலீ ரெண்ணின் ஒற்று ரகரம் ஆகும், உகரம் வருதல் ஆவயினான (தொல் - குற்றியலுகரப்-33) என்னும் விதியும் பெற்று, அளந்தறி கிளவியும் (தொல் - குற்றியலுகரப்-41 என்னும் சூத்திரத்துத், தோன்றுங்காலை என்ற இலேசான் முடிந்தது. ஒரு மூன்றும் ஏத்த எய்தி என்க. உம்மை, இனைத்தென அறிந்த சினை முதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் (தொல்-கிளவி-33) வந்தது, உலகம் என்னும் பெயர் மூன்றென்னும் பெயர்ப் பயனிலை கொண்டு, அதுதான் ஏத்த என்னும் வினைப் பயனிலை கொண்டது.
வருத்தமாகிய குறிப்புணர்த்திய தா என்னும் உரிச்சொல் வினைக்கு முதனிலையாய்த், தாவாத எனப் பெயரெச்ச மறையாய் இன்பம் என்னும் பெயரொடு முடிந்தது. ஏத்தத் தாவாத என்பது, வினையெஞ்சு கிளவியும்... வல்லெழுத்து மிகுமே (தொல். உயிர்மயங்கு-2) என்பதனால் ஒற்று மிக்கது. தாவாத வின்பம் என்பது உடம்படுமெய்யாயிற்று; இன்பம் என்னும்பெயர் தலையாய தென்னும் குறிப்புப் பெயரைக் கொண்டது; இன்பந்தலையாயது என்புழி அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும் (தொல்-புள்ளி-19) என்பதனான் மகரம் நகரம் ஆயிற்று. தன்னின் எய்தி என்ற இன் காரக ஏதுப் பொருட்கண் ஐந்தாம் உருபு. தன்னில் எய்தி என்று பாடமாயின், மணியினது ஒளியும் மலரினது நாற்றமும் போலத் தன்னுள்ளே பெற்று என்க. எய்தி என நின்ற செய்தெனெச்சம் காரணகாரியப் பொருட்டாய், நின்ற என்னும் பெயரெச்ச வினையொடு முடிந்து, அது குணம் என்னும் பொருட்பெயரோடு முடிந்தது.
ஓவாது என்னும் எதிர்மறை யெச்சமும் நின்ற என்பதனோடு முடியும். குணத்து: அத்து: இரண்டா முருபின்கண் வந்த சாரியை. அத்தே வற்றே ஆயிருமொழி மேல் - ஒற்றுமெய் கெடுதல் தெற்றென்றற்றே (தொல்-புணரியல்-31) என்பதனால் மகரங்கெட்டு, அத்தின் அகரம் அகர முனையில்லை (þ-þ-23) என்பதனால் அகரம் கெட்டு முடிந்தது. குணத்தொண்ணிதி என்பதில், குற்றியலுகரமும் அற்று (þ-þ-3) என்பதனால் வருமொழியின் ஒகரம் ஏறிற்று. ஒண்ணிதி: பண்புத்தொகை. ஒண்ணிதிச் செல்வன்: இகர வீற்று வேற்றுமைச் சொல்லாதலின் வல்லெழுத்து மிக்கது. செல்வன் என்றார், அழியாத இன்பத்தை நுகர்தலின். என்ப என்னும் முற்றுச் சொல் பெரியார் என்னும் தோன்றா எழுவாய்க்குப் பயனிலையாயிற்று. தேவும் தெய்வத்துக்கு ஒரு பெயர். தேவுக்கு ஆதிதேவன் என நான்கன் உருபு விரிக்க. ஆதியாகிய தேவன் என்க. செம்மை+அடி: சேவடி, பண்பு மாத்திரையாய்க் குறைந்த சொல்லாதலின் மருவின் பாத்தியதாய் (தொல் குற்றியலுகரப்-77) நின்றது. சேவடி சேர்தும் ஒற்று இரட்டாது நின்றது இரண்டாவதற் கோதிய திரிபில் அன்னபிறவரல் (தொல்-தொகை-15). சேர்தும்: தும் ஈற்றுப் பன்மைத் தன்மை; ஈண்டு ஒருவரைக் கூறும் பன்மை. அன்று: அசை. ஏகாரம்:ஈற்றசை.
இனி, தான் மூவா முதலாக வேண்டி யென்றும், நாம் மூவா முதலாக வேண்டி யென்றும் வினையெச்சமாக்குவாருமுளர்: அதற்கு எய்தி என்பதனோடு முடிக்க. மேல்வரும் செய்யுட்களுக்கும் இவ்வாறுரைப்பின் உரை பெருகும் ஆதலின், இனி நல்லறிவுடையோர் உய்த்துணருமாறு சுருங்கவுரைப்பாம். செம்பொன் (சீவக-2) என்னுங் கவியாற் குருக்கள் அருகனை வணங்குதலின் தாம் சித்தனை வணங்கினார். குருக்கள் கூறுதலானும் அருகனை வணங்குதலானும் அதனை முன்வைக்க எனின், குருக்களே, இது நன்று; இதனை முன்னே வைக்க என்றலின் முன் வைத்தார். குருக்கள்; திருத்தக்க தேவரின் ஆசிரியர். யாமும் அவன் சேவடி சேரின் ஓவாது நின்ற குணத் தொண்ணிதிச் செல்வராய்த் தாவாத இன்பந் தலைப்படுவம் ஆதலானும், அவன் சேவடி சேர்தும் என்றார் என்றும் கொள்க. கல்விப்பயனும் அவ் வாலறிவன் நற்றாள் தொழுதலே ஆகலின் இவ்விலக்கியத்தினை ஓதுவோர்க்கு இந்நூற்பயனைக் குறிப்பாகக் கூறியவாறுமாயிற்று. இறைவர் பற்பலர் உளர் என்பாரேனும் அவ்விறைவர்க்கெல்லாம் இறைவனாயுள்ள கடவுள் ஒருவனே என்பார் தேவாதிதேவன் என்றார். அவன் திருவடி நினைத்தற்குஞ் சேர்தற்கும் இனிதாயிருக்கும் என்பார். தாவாத இன்பந்தன்னின் எய்தி ஓவாது நின்ற செல்வன் சேவடி என்றார். இச் செய்யுளில் உலகம், தலையாய இன்பம், குணத்தொண்ணிதி, செல்வன், தேவாதிதேவன், என்னும் மங்கலச் சொற்கள் வந்துள்ளன.
-----------
2. அருகர் வணக்கம்
செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல்
அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து
வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர்
அம் பொன் முடி மேல் அடித்தாமரை சென்னி வைப்பாம்.
பொருள் : செம்பொன் வரைமேல்-சிறந்த பொன்மலையின் மேல்; பசும்பொன் எழுத்து இட்டதேபோல் - புதிய பொன் எழுத்தை எழுதியதே போலும்; அம்பொன் பிதிர்வின்-அழகிய பொற் பிதிரைப் போலும்; ஆயிரத்தெட்டு மறு அணிந்து-ஆயிரத்தெட்டு மறுவை அணிந்து; வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி - வெப்பந்தரும் இளஞாயிற்றின் ஒளியினும் மேம்பட்டு விளங்கும் உருவினையுடைய அருகப்பெருமானின்; விண்ணோர் அம்பொன்முடிமேல் - வானவரின் அழகிய பொன்முடியின்மேல் (வைத்த); அடித்தாமரை சென்னி வைப்பாம் - திருவடித் தாமரைமலர்களை யாமும் நம் முடிமேல் அணிவோம்.
விளக்கம் : பிதிர்வின், இன்: ஐந்தன் உருபு; உவமப்பொரு. உவமப்பொரு -ஒப்புமையுறக் கூறுதல். எழுத்திட்ட தென்றது ஒற்றுமையாகக் கிடந்தற்கும் பிதிர்வென்றது சிறியவும் பெரியவுமாகிய வடிவிற்கும் உவமை. அருகனுக்கு இரேகை நூற்றெட்டும், அடையாளங்கள் ஆயிரமும் உண்டென வடநூல்கள் கூறும். காலை யிளஞாயிறு வெப்பந் தராதேனும் நண்பகலில் வெப்பந்தரும் ஆகையால், வெம்புஞ்சுடர் என்றார். யாவரும் விரும்பும் சுடரென்று கொண்டு இளஞாயிறு என்றலுமாம். சுடரின், இன்: உறழ் பொரு-ஒன்றனால் ஒன்றை மிகுத்துக் கூறுதல். முடிமேல் என்பதன்பின் வைத்த என வருவித்து முடிமேல் வைத்த என்க.
செம் பொன்-பசும் பொன்: தொடைமுரண்: வண்ண வேறுபாடு இன்று. இஃது அருகசரணம்: திருத்தக்க தேவரின் ஆசிரியர் அளித்தது.
மாண்பமைந்த குழுவினருக்கு வணக்கம்
---------
3.
பல் மாண் குணங்கட்கு இடனாய்ப் பகை நண்பொடு இல்லான்
தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற
சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க
நல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன்.
பொருள் : பல்மாண் குணங்கட்கு இடன்ஆய்-பலவகையானும் சிறப்புற்ற நற்பண்புகளுக்கு இடம் ஆக; பகை நண்பொடு இல்லான் - பகையும் நட்பும் இல்லாத இறைவன் (கூறிய); தொல்மாண்பு அமைந்த புனை நல்லறம்-பழைய மாட்சிமை பெற்ற அறத்தினையும்; சொல்மாண்பு அமைந்த குழுவின்- (அதனைப் பொருந்தி நின்ற) புகழ் சிறந்த சாதுக்களின் குழு வினையும்; சரண்சென்று தொக்க நல்மாண்பு பெற்றேன் - புகலாகச் சென்று சேர்ந்த நல்வினையுடையேன் (ஆதலின்;) இது நாட்டுதல் மாண்பு பெற்றேன் - இக் கதையை உலகில் நிலை பெறுத்துதற்குரிய நல்வினையுடையேனானேன்.
விளக்கம் : புனை நல்லறத்தையும் குழுவினையும் சரண் சென்று தொக்கநல்வினை உடையேன் என்றலின் சாதுசரணமும் தன்மசரணமும் கூறியதாகும் இச் செய்யுள். சாதுக்கள்: திருத்தக்க தேவரின் ஆசிரியர்களாகிய சாதுக்கள். இவர்கள் பஞ்ச பரமேட்டிகளைச் சார்ந்தவர்கள். சொல்-புகழ். ஆய்-ஆக: வினையெச்சத்திரிபு. பன்மாண்குணங்கட் கிடனாகப் புனைநல்லறம் என்று கூட்டுக. பகை நண்பொ டில்லான் (கூறிய) பன்மாண் குணங்கட்கிடனாய் என மொழிமாற்றிப் பொருள் கொள்வர் நச்சினார்க்கினியர். இல்லா என்பது பாடமாயின், இல்லா அறம் எனக் கூட்டுக. இறைவன் நண்பிலனாயினும் அருஞ்சுரத்தின்கண் மரம்போல அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு.
4. அவை அடக்கம்
கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்
நற்பால் அழியும் நகை வெண்மதி போல் நிறைந்த
சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவிப்
பொற்பா இழைத்துக் கொளல்பாலர் புலமை மிக்கார்.
பொருள் : கற்பால் உமிழ்ந்த மணியும் - கல்லின் பகுதியீன்ற மணியும்; கழுவாது விட்டால் நற்பால் அழியும் - கழுவாமல் விட்டால் நன்மை கெடும்; (அதுபோல); நகை வெண்மதி போல் நிறைந்த - ஒளிவிடும் வெள்ளிய முழு மதிபோல் கலை நிறைந்த; சொற்பால் உமிழ்ந்த மறுவும் - சொல்லின் பகுதி ஈன்ற வழுக்களும் (கழுவாது விட்டாற் சொல் நலம் கெடும். ஆதலின்); புலமை மிக்கார் - அறிவால் நிறைந்த சான்றோர்; மதியால் கழுவி - தம் அறிவினாலே களைந்து; பொற்புஆ இழைத்துக் கொளற்பாலர் - அழகாக அமைத்துக் கொள்ளத் தக்காராயினர்.
விளக்கம் : எனவே, யான் அத் தன்மையன் அல்லன் என்பது சொல்லெச்சம்: சொல்லொடுங் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை, புல்லிய கிளவி எச்சமாகும் (தொல் -செய்-206) என்றாராதலின். மறு இல்லாத மதிக்கு மறு அடுத்தாற்போலக் கலை நிறைந்த சொற்கு அடுத்த மறுவாவது வழுவமைக்குஞ் சொல். அதனைச் சங்கத்தார் ஆராய்ந்தமை கூறவே, அவை அடக்கம் உணர்த்தியதாயிற்று. மதி போல் நிறைந்தமதி யெனவும் ஆம்.
மணியும்: உம், உயர்வு சிறப்பும்மை. கழூஉவி: இன்னிசை யளபெடை.
---------
5.
முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும்
அந் நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார்
இந் நீர என் சொல் பழுது ஆயினும் கொள்ப அன்றே
பொய்ந் நீர அல்லாப் பொருளால் விண் புகுதும் என்பார்.
பொருள் : பவளத்தொடு சங்கும் முத்தும் முந்நீர்ப் பிறந்த பவளமும் சங்கும் முத்தும் கடலிலே பிறந்தன. அந்நீர் உவர்க்கும் எனின் - (அவை பிறந்த) அக் கடல் நீர் உவர்ப்பாக இருக்கும் என்றாலும்; அவை நீக்குகிற்பார் யார்? - அப் பொருள்களைக் கை விடுவார் எவர்? (ஒருவருமிலர்), (அதுபோல்); பொய்ந்நீர அல்லாப் பொருளால் - மெய்யான பழம் பொருளாலே; விண் புகுதும் என்பார் - வீடு பெறுவோம் என்று நினைப்பவர்; இந்நீர என்சொல் பழுது ஆயினும் கொள்ப -உவர்க்கும் என்னுடைய இம் மொழிகள் தீய ஆயினும் (அச் சொற்களிற் பொதிந்த பொருள்களின் பயன் நோக்கி) இச் சொற்களைக் கொள்வார்கள்.
விளக்கம் : முந்நீர்: பண்பாகு பெயராய்க் கடலை உணர்த்தியது. நீர்-தன்மை. முந்நீர்: ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்னும் முத்தன்மையும் உடையது. ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் என்னும் மூவகை நீர்க் கலப்புடையது என்றுங் கூறுவர்.
பிறந்த: பலவின்பால் வினைமுற்று. எனினும் என உம்மை விரிக்க. கொள்ப : பலர்பால் வினைமுற்று. அன்று, ஏ: அசைகள்.
----------
6. பதிகம்
மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில்
ஆனேறு அனையான் உளன் சீவகசாமி என்பான்
வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னைத்
தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன்.
பொருள் : மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பின் - மீன் ஏற்றை மேம்படுத்தின கொடியை உடைய காமனை வென்ற அழகையுடைய; ஏறு அனையான் தான் உளன்-ஆண் சிங்கம் போன்றவன்தான் ஒருவன் உளன்; சீவக சாமி என்பான் - (அவன் யாரெனின்) சீவகசாமி யெனப்படுவான்; வான் ஏற நீண்ட புகழான் சரிதம் - வானிலே எழப் பரவிய புகழையுடைய அவன் ஒழுக்கம்; நின்று தேன் ஊற - கேட்டோர் நெஞ்சிலே நின்று இனிமை மிகும்படி; தெருண்டார் அவை இதனைச் செப்பல் உற்றேன் - தெளிந்தோர் அவையிலே இத்தொடர்நிலைச் செய்யுளைக் கூறலுற்றேன்.
விளக்கம் : மீன் ஏறு; சுறவு. கடல் வாழ் சுறவும் ஏறெனப் படுமே (தொல்-மரபு-40) உயர்த்த - மேம்படுத்தின. சாமி : பாகதம் (வடமொழிச் சிதைவு).
-----------
புகழான் என்னும் பெயர் சொல்லுவான் குறிப்பான் அவன் என்னுஞ் சுட்டுப் பெயர் மாத்திரையாக வந்தது. நாணி நின்றோள் அணங்கருங் கடவுளன்னோள் (அகநா-16) என்று அகத்திற் கூறினாற் போல. இது, பொருளோடு புணராச் சுட்டுப் பெயராயினும் (தொல்-கிளவி-37) என்னுஞ் சூத்திர விதி. மேல் இங்ஙனம் வருவனவற்றிற்கெல்லாம் ஒக்கும். கதைக்கு நாயகன் ஆதலிற் சீவகனை முற்கூறினார். (இவ்வாறே சிலப்பதிகார ஆசிரியரும் கோவலனை முற்கூறாமற் கண்ணகியை முற்கூறினார்.) இதன்னை : இதனை: விரித்தல் என்னும் செய்யுள் விகாரம்.
இச் செய்யுளின்கண் இப் பெருங்காப்பியத் தலைவனுடைய அழகு மெய்வலிமை கொடை என்னும் மூன்று பண்புகளும் குறிப்பாற் பெற வைத்துள்ளமை காண்க. மீனேறுயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பினையுடையான் என்றது ஒப்பற்ற அவன் அழகுடைமையை உணர்த்தியவாறு. இந்நூலின்கண் சீவகனுடைய திருமணங்கள் சிறப்புறுதற்கும் இப்பண்பு காரணமாதலுணர்க. இனி ஏறனையான் என்றது அவனது பேராற்றலுடைமையை உணர்த்தியவாறு. இஃது அவன் கட்டியங்காரன் முதலிய பகைவரை வென்றுயர்தற்குக் காரணமாதல் உணர்க. வானேற நீண்டபுகழான் என்றது அவன் வள்ளன்மையை உணர்த்தியவாறு. என்னை? புகழ் என்பது கொடையானே உண்டாவதொன்றாகலான் என்க. இதனைச் சொல்லும்போது சொல்லும் எனக்கே இஃது இனிதாயிருக்கின்றது; எனவே இதனை இவ்வுலகமும் எய்துக என்னும் கருத்தால் இதனை ஓதாநின்றேன் என்பார், இதனைத் தேனூற நின்று செப்பலுற்றேன் என்றும், உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று என்பது பற்றித் தெருண்டாரவை செப்பலுற்றேன் என்றும் ஓதினர்.
-----------
7.
கோடாத செங்கோல் குளிர் வெண்குடைக் கோதை வெள்வேல்
ஓடாத தானை உருமுக் குரல் ஓடை யானை
வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன்
வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள்.
பொருள் : கோடாத செங் கோல் - மாறுபடாத செங்கோலையும்; குளிர் வெண்குடை - தண்ணிய வெண்குடையையும்; கோதை வெள்வேல்-மாலையணிந்த வெள்ளிய வேலையும்; ஓடாத தானை - புறங்கொடாத நால்வகைப் படைகளையும்; உருமுக்குரல் - இடிபோலப் பிளிறும், ஓடை யானை-முகபடாம் அணிந்த யானையையும் (உடைய); மன்னன் - அரசன்; வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப-குறையாத வெற்றியினால் மேம்பட்ட சச்சந்தன் என்றுரைப்பர், அவன் தேவி வீடாத கற்பின் விசயை என்பாள் - அவனுக்குத் தேவி நீங்காத கற்பினையுடைய விசயை என்று பெயர் கூறப்படுவாள்.
விளக்கம் : செங்கோல் பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம் (அடைமொழி) ஆயினும் கோடாத என்று அடை அடுத்தலிற் கோல் என்னும் அளவில் நின்றது. வெண்குடை : இயைபின்மை மாத்திரை நீக்கிய விசேடணம், உருமுக்குரல் போலுங் குரலையுடைய யானை. வீடாத விகாரம் (விடாத என்பது வீடாத என விகாரப்பட்டது) (2)
-----------
8
சேந்து ஒத்து அலர்ந்த செழுந்தாமரை அன்ன வாள் கண்
பூந்தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின்
ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல்
வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே.
பொருள் : சேந்து ஒத்து அலர்ந்த - சிவந்து தம்மில் இணையொத்து மலர்ந்த; செழுந்தாமரை அன்ன வாட்கண் - வளமிகு தாமரை மலர்போன்ற ஒளியுடைய கண்களையும்; பூந்தொத்து அலர்ந்த பசும் பொற்கொடி அன்ன பொற்பின் மலர்க் கொத்துத் தன்னிடத்தே மலர்ந்த புதிய பொற்கொடி அனைய அழகினையும்; ஒத்து அலர்ந்த ஏந்து முலையின் - தம்மில் ஒத்து அடிபரந்த ஏந்தும் முலைகளையும் உடைய; அமிர்து அன்ன சாயல் - அமுதம் போன்ற மென்மையும் உடையாள்; வேந்தற்கு அமுதாய் - அரசனுக்கு அமுதமாகி, விளையாடுதற்கு ஏது ஆம் - கூட்டத்திற்குக் காரணம் ஆவாள்.
விளக்கம் : அமிர்தம் கண்ணுக்கினிதாகிய மென்மையும் தன்னை நுகர்ந்தார் பிறிது நுகராமல் தடுக்கும் மென்மையும் உடைமையின் அமிர்தன்ன சாயல் என்றார். சாயல் மென்மை (தொல்-உரி-27) எனப் பொதுப்படச் சூத்திரஞ் செய்தது ஐம்பொறியானும் நுகரும் மென்மையெல்லாம் அடங்குதற்கு. மயில் அன்ன சாயல் (ஏலாதி-17), சாயல் மார்பு (கலி - 65) என ஒளிக்கும் ஊற்றிற்கும் (பரிசத்திற்கும்) வந்தன. பிறவும் காண்க. சாயல்: (பண்பு) ஆகுபெயர். மறுமையிற் சென்றுபெறும் அமுதமும் இவளெனக் கொண்டு மயங்கினமை தோன்ற மீட்டும் அமுதாய் என்றார். வாட்கண் என்புழி வாள் கண் என்பதற்கு வாளா அடைமொழியாக வந்தது எனவுங் கூறலாம்.
------------
9
கல்லார் மணிப் பூண் அவன் காமம் கனைந்து கன்றிச்
சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும்
புல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச்
செல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும்,
பொருள் : மணிக்கல் ஆர் பூணவன் காமம் கனைந்து கன்றி- மாணிக்கக் கற்கள் பொருந்திய அணிகலனுடைய சச்சந்தன் வேட்கை செறிந்து அதிலே அடிபட்டு; சொல் ஆறு கேளான் - அமைச்சர் சொல்வழியைக் கேளாதவனாய்; புல்லார் புகழச் சூழ்ச்சியில் நனிதோற்ற ஆறும் - பகைவர் மனம் மகிழ எண்ணத்திலே மிகவும் தோற்றபடியும், தேவி மஞ்ஞைப் பொறியில் போகி-விசயை மயிற் பொறியிலே சென்று; செல் ஆறு இழுக்கி அவன் சுடுகாடு சேர்ந்த ஆறும் - (வெற்றி முரசு கேட்டு) செல்லும் வழியிலே கலங்கி அவள் சுடுகாட்டினைச் சேர்ந்த படியும்.
விளக்கம் : நனி: விசேடித்து வரும் உரிச்சொல். செல் ஆறு இழுக்குதல்: வெற்றி முரசு கேட்டுக் கலங்குதல். தேவி போகி இழுக்கிச் சேர்ந்தாள் என முடிவுழி அவள் என்று கூறவேண்டாமையின், அது தேவியைச் சுட்டாமல், அங்ஙனம் அமுதாயவள் இங்ஙனம் ஆயினாள் எனத் தேவர் இரங்குதலின், முன்னைய கவியை நோக்கித் தகுதிபற்றி வந்தது. இனி, சாத்தியவள் வந்தாள் என்றாற்போலத், தேவியவள் என வினைக்கு ஒருங்கு இயன்றது என்பாரும் உளர். அது வழக்கிலது என்று மறுக்க.
------------
10
நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்தத்
தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய்த் துயர் தீர்த்த வாறும்
கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்த வாறும்
வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற வாறும்,
பொருள் : நம்பி நாள் உற்றுத் திசை பத்தும் நந்தப் பிறந்தான் - சீவகன் ஒன்பது திங்களும் நிறைந்து, பத்துத் திக்கினும் உள்ள வல்லுயிர்களும் வளர்தற்காகப் பிறந்தானாக; ஓர் தெய்வம் தோள் உற்றுத் துணையாய்த்துயர் தீர்த்த ஆறும் - ஒரு தெய்வம் கூனியின் உருவாய்த் தன்கை தனக்கு உதவுதல் போலத் தேவிக்கு உதவித்துயர் தீர்த்தபடியும்; கோள் உற்ற கோன்போல் அவன் கொண்டு வளர்த்த ஆறும் -கொலையுண்ட சச்சந்தன் வளர்த்தல்போலக் கந்துக்கடன் உளம்கொண்டு வளர்த்தபடியும்; வாள்உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற ஆறும் - வாளனைய கண்ணாளாம் விசயை தன் மகன் வாழ்க என்று நோற்றபடியும்;
விளக்கம் : நாள் உற்று என்பதற்கு நல்ல நாள் உற்று என்றும் பொருள் கொள்ளலாம். தோள் - கை. உற்று: உவம வாசகம் (உவம உருபு). செப்புற்ற கொங்கை (சிற் -354) என்றார் பிறரும். ஒழியாது (தொல்-தொகை-15) என்னும் இலேசால் கோனை என்னும்(இரண்டன்) உருபு தொக்கது. கதையை உட்கொண்டு அவன் என்பது கந்துக்கடனைச் சுட்டியது. அரசன் இறத்தற்கு ஏதுவாகலின் ஈண்டும் வாளுற்ற கண் என்றார். வாழ்க: வியங்கோள்: இறுதி அகரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. கூனி: விசயையின் தோழியான சண்பகமாலை. நோன்பு : வேட்கையுள்ளது.
---------
11. நெஞ்சம் புணையாக் கலை மாக் கடல் நீந்தி ஆங்கே
வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்த வாறும்
விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற வாறும்
நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்த வாறும்,
பொருள் : வள்ளல் நெஞ்சம் புணையாக் கலை மாக்கடல் நீந்தி - சீவகன் தன் நெஞ்சு தெப்பமாகக் கலைகளாகிய கடலைக் கடந்தும்; ஆங்கே வஞ்சம் மறவர் நிரை விடுத்த ஆறும் - அப்பொழுதே வஞ்சமுடைய வேடர்கொண்ட ஆனிரையை மீட்டபடியும்; விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற ஆறும் - கலுழவேகன் மகளாகிய தத்தை யாழ்ப்பாடலிலே தோற்ற படியும்; நஞ்சு உற்ற காமம் நாகரின் நனிதுய்த்த ஆறும் - உளம் நைந்து இருதலையும் ஒத்த காமத்தை நாகைரப் போலச் சாலவும் நுகர்ந்த படியும்;
விளக்கம் : கற்றபொழுதே பயன் கொள்ளுதல் அருமையாதலின் ஆங்கே என்றார், மறவரைக் கொல்லாது உயிர்வழங்குதலின் வள்ளல் என்றார். விஞ்சை: குணப்பண்பு. அது பண்பாகு பெயராக விஞ்சையரை உணர்த்தியது. விஞ்சையர்க்கு இறைவன் கலுழவேகன், ஒரு மகளை வென்றான் என்பது இவன் தலைமைக்கு இழிவென உன்னி அவள் செயலாகக் கூறினார். நாகர் : யவணதேவர் என அருக நூல்கள் கூறும். ஓருடம்பாதலும் நீங்கல் வன்மையும்பற்றி உவமையாயினர். நஞ்சு-நைந்து : போலி.
---------
12. முந்நீர்ப் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்ச்
செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் தேங்கொள் சுண்ணம்
மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் தம்முள் மாறாய்
இந்நீர்ப் படியேம் இவை தோற்றனம் என்ற வாறும்,
பொருள் : முந்நீர்ப்படு சங்கு அலற முரசு ஆர்ப்ப - கடலில் தோன்றிய சங்கு ஒலிக்கவும் முரசு முழங்கவும்; மூதூர்ச் செந்நீர்க் கடியின் விழவு ஆட்டினுள் - இராசமாபுரத்திற் புது நீர் மிகுதியால் உண்டான விழாவின்கண் ஆடும் விளையாட்டினில்; மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் - மைதீட்டிய தன்மையுள்ள நெடுங்கணார் இரு மங்கையர்கள்; தம்முள் மாறாய் இவை தோற்றனம் இந்நீர்ப் படியேம் என்ற ஆறும் - சுண்ணத்தாலே தமக்குள் மாறுபட்டு இவற்றில் தோற்றால் இப்புதுநீரில் ஆடோம் என்ற படியும்;
விளக்கம் : அலற ஆர்ப்ப விளையாடும் விளையாட்டென்க. கடி - மிகுதி (உரிச்சொல்). தேன் கொள் சுண்ணம்: ஒளியாலும் நாற்றத்தாலும் ஊற்றாலும் இனிமைகொண்ட சுண்ணம் (வாசனைப்பொடி.) தோற்றனம் மோயினள் உயிர்த்த காலை (அகநா-5) என்றாற்போல வினையெச்சம் முற்றாய்த் திரிந்தது. செந்நீர் : சிவப்பாகிய நீர்: புதுநீர். இருமங்கையர்: குணமாலை, சுரமஞ்சரி.
---------
13. சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி
வண்ணம் நெடுங் கண் குண மாலையை வைது மாறிப்
புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள்
கண் நோக்கு உடைந்து கடிமாடம் அடைந்த வாறும்,
பொருள் : சுரமஞ்சரி சுண்ணம் உடைந்து சோர்ந்து - சுரமஞ்சரி யென்பவள் சுண்ணம் தோற்றலாலே சோர்வுற்று; வண்ணம் நெடுங்கண் தோழி குணமாலையை மாறி வைது-அழகிய நெடுங்கண்ணாளாகிய தோழி குணமாலையைக் கண்ணற்றுச் சீவகனை மழை வள்ளல் என்று வைது; புண்மேல் புடையில் புகைந்து கண்நோக்கு உடைந்து - புண்ணின் மேல் புடையுண்டானாற்போல நெஞ்சம் அழன்று அழகுகெட்டு; ஆண் உருயாதும் நோக்காள் கடிமாடம் அடைந்த ஆறும் - ஆண்மக்கள் வடிவை ஓவியத்தும் பாராமற் கன்னியாமாடத்தை அடைந்த படியும்;
விளக்கம் : மாறி வைது என மாறிற்று. திங்களங்கதிர் (சீவக-868) மாற்றம் ஒன்று (சீவக-866) என்னுஞ் செய்யுட்களை நோக்கி புடை-துவாரம். கண்நோக்கு : அழகு. மழை வள்ளல்: மழை இடமறிந்து பெய்யாதது போலச் சீவகனும் குணமாலையின்பாற் காதல் கொண்டான் என்று சுரமஞ்சரி கருதினாள். யாதும் என்பதனால் ஓவியமும் எனப்பட்டது. கடி - காவல்.
---------
14. பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடைப் புன்கண் எய்தி
நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்த வாறும்
அன்றைப் பகலே குண மாலையை அச்சுறுத்த
வென்றிக் களிற்றை விரிதார் அவன் வென்ற வாறும்,
பொருள் : பொன் துஞ்சும் மார்பன் - திருமகள் தங்கும் மார்பன; புனல் ஆட்டிடை எஞ்சுகின்ற ஞமலிக்குப் புன்கண் எய்தி நின்று அமிர்து ஈந்த ஆறும் - நீர்விளையாட்டிலே உயிர் போகின்ற நாய்க்குத் தானும் வருத்தமுற்று நின்று பஞ்ச நமஸ்காரமாகிய மந்திரத்தைக் கொடுத்தபடியும்; அன்றைப் பகலே குணமாலையை அச்சுறுத்த வென்றிக் களிற்றை - அறம் புரிந்த அப் பகலே குணமாலையை அச்சம் ஊட்டிய (முன்பு) வென்றியுடைய களிற்றை; விரிதாரவன் வென்ற ஆறும் - (மார்பின் சிறப்பால் உலகு) புகழ்ந்த தாரணிந்த சீவகன் வென்ற படியும்;
விளக்கம் : அச்சம் உறுத்த : அச்சுறுத்த: விகாரம். சீவகன் மார்பிலே தங்கிய சிறப்பினாலே அத்தார் உலகாற் புகழ்ப் பெற்றது. வென்றி-வெற்றி.
---------
15. தேன் ஊறு தீம் சொல் குண மாலையைச் சேர்ந்த வாறும்
கோன் ஊறு செய்வான் கருதிச் சிறை கொண்ட வாறும்
வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன்
ஊன் நாறு ஒளத வேல் உரவோன் கொண்டு எழுந்த வாறும்,
பொருள் : தேன் ஊறு தீ சொல் குணமாலையைச் சேர்ந்த ஆறும் - தேனின் இனிமை நீங்காத இனிய சொல்லையுடைய குணமாலையைச் சேர்ந்தபடியும்; கோன் ஊறு செய்வான் கருதி - கட்டியங்காரன் கொல்வதற்குக் கருதி எனவே கொண்டு சிறை கொண்டதைக் கட்டியங்காரனுக்கு ஆக்கலே அடுத்த செய்யுளுக்கும் ஏற்புடைத்தாக இருக்கிறது. சிறை கொண்ட ஆறும் - முற்பிறப்பின் தீவினையாகிய சிறை வந்து சீவகனைக் கைக்கொண்ட படியும்; ஒர் தேவன் மழைமின் என வான் ஆறு வந்து இழிந்து - ஒரு தேவன் மழைமீது ஏறி மின்போல வான வழியாக வந்து; ஊன் நாறு ஒளிவேல் உரவோன் கொண்டு எழுந்த ஆறும் - ஊன் கமழும் ஒளி தரு வேலேந்திய சீவகனைக் கைக்கொண்டு போனபடியும்;
விளக்கம் : செய்வான் : எதிர்கால வினையெச்சம். கருதி யென்பது கருத என நின்றது. உரற்கால்யானை ஒடித்துண்டு (குறுந்-282) என்னுஞ் செய்தென் எச்சம் பிறவினை கொண்டாற் போல. சிறை-அன்னப் பார்ப்பை (இவன் முற்பிறப்பிற்) சிறை செய்தது. ஒரு தேவன் என்பது ஓர் தேவன் என விகாரப்பட்டது; இவன் சுதஞ்சணன். மழை: சுதஞ்சணன் ஊர்தி. ஆசிரியன் மொழியை உட்கொண்டு நடத்தலின் உரவோன் என்பது அறிவுடையோன் என்னும் பொருளது.
---------
16. தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த
பூங் கச்சு நீக்கிப் பொறி மாண்கலம் நல்ல சேர்த்தி
நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும்
பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த வாறும்,
பொருள் : பூங்கச்சு யாத்த தேங்காத திரள் தோளிணை மள்ளர் - பூவேலை செய்த கச்சினை உடையின்மேல் இறுகக் கட்டிய கெடாத, திரண்ட இரு தோள்களை உடைய வீரர்; சிக்க-(சீவகனை) அகப்பட வளைக்க; நீக்கி - (அச்சிறையை) நீக்கி; பொறிமாண் நல்ல கலம் சேர்த்தி - வேலைப்பாடமைந்த சிறந்த அழகிய அணிகலன் பூட்டி; நீங்காத காதல் உடையாய்! பின்னும் நினைக்க என்று - இடையறாத அன்புடையாய்! இனியும் என்னை நினைத்திடுக என்று கூறி; பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த ஆறும் - தனக்குரிய மறைகளை அவனுக்கு நிலையாக்கி அங்கிருந்து விடுத்தபடியும்;
விளக்கம் : பூங்கச்சு யாத்த கெடாத வீரர், தோளிணையையுடைய வீரர்; இவை இகழ்ச்சி (வீரர் அல்லாதவரை வீரர் என்றதனால் இகழ்ச்சி) கச்சு - சேலையின்மேற் கட்டினது. சிக்க - அகப்படக் கோல; திசைச்சொல் (குடநாட்டுச் சொல்). நீக்கி - அச்சிறையை நீக்கி. பின்னும் நினைக்க என்றது இடர்வரின் என்றதன்றி இன்ப முறுங்காலும் நினைக்க என்றவாறு. இது முற்கூறிய கவியிற் சிறைப்பாவத்தைத் தொடர்புபடுத்து எடுத்து விரியக் கூறிப் பின்பு அவற்குச் செய்த சிறப்புக்களும் கூறிற்று தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த பூங்கச்சு நீக்கி - கெடாத வீரர் (சீவகனுடைய) திரண்ட இரு தோள்களையும் அகப்படக் கட்டிய பூவேலை மிக்கதான கச்சினை நீக்கி பின்னே உணர்க.
---------
17. பைந் நாகப் பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு
கைந் நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி
மைந் நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணிக்
கொய்ந் நாகச் சோலைக் கொடி அந் நகர் புக்க வாறும்,
பொருள் : பை நாகப்பள்ளி மணிவண்ணனின் - படமுடைய அரவணையிலே நீல நிறமுடைய திருமால் துயிலுமாறு போல; கைநாகம் கமழ் காந்தள் பாயல்கொண்டு துஞ்சும் அம்சாரல் போகி - யானைகள் மணமிகு காந்தள் மலரைப் படுக்கையாகக் கொண்டு துயிலும் அழகிய சாரலைக் கடந்து; மை நாகவேலி மணிபல்லவ தேயம் நண்ணி - முகில் உறங்கும் மலையை வேலியாக உடைய வளமிகு பல்லவ நாட்டை அடைந்து; கொய் நாகச்சோலை கொடி அந்நகர் புக்க ஆறும் - மலர்களைக் கொய்யும் புன்னைமரச் சோலையையும் கொடியையுமுடைய அதன் தலை நகராகிய சந்திராபம் என்னும் நகரிலே புகுந்தபடியும்;
விளக்கம் : மை-முகில். கொய்ந்நாகம் - புன்னை. கொடிமாநகரும் பாடம். காந்தள் வடிவிற்கும் நிறத்திற்கும் உவமம்.
---------
18. அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை
முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளைப்
பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்டச்
சித்தம் குழையற்க எனத் தீர்த்து அவள் சேர்ந்த வாறும்,
பொருள் : அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை - அத்தகிரி போன்ற யானையையுடைய, அந்த நகர் மன்னனின் மகளாகிய; முத்தம் உரிஞ்சும் முகிழ் மென்முலை மின் அன்னாளை - முத்துமாலை அசையும் அரும்பனைய மெல்லிய முலையையுடைய மின்னுக்கொடி போன்ற பதுமையை; அங்கு ஓர் நாகம் பைத்து பனி மா மதி என்று தீண்ட - அப் பொழிலிடத்தே ஓர் அரவு படம் விரித்துக் குளிர்ந்த பெரிய திங்களென்று (அவள் முகத்தைக் கருதி, அது மறுவுடைய திங்களன்மையின் கையிலே) தீண்டுதலால்; சித்தம் குழையற்க எனத் தீர்த்து அவள் சேர்ந்த ஆறும் - உளம் (வருந்திய உலோக பாலனை) வருந்தற்க என்று கூறி, (அவளுக்குறற் நஞ்சினை) நீக்கி, அவளை மணந்தபடியும்;
விளக்கம் : அத்தகிரி என்னும் வடமொழிச் சிதைவு விகாரமாயிற்று. அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு (பாண்டிக்கோவை) என்றார் பிறரும். அங்கு (பைத்து அங்கு ஓர் நாகம்) எனக் கதையை உட் கொண்டு சுட்டினார். குழையற்க: விகாரம் (குழையற்க என: குழையற் கென: அகரம் ; தொகுத்தல் விகாரம்).
---------
19. பொன் பூண் சுமந்த புணர் மெல் முலைக் கோடு போழ
நல் பூங் கழலான் இரு திங்கள் நயந்த வாறும்
கல் பாடு அழித்த கன மா மணித் தூண் செய் தோளான்
வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறிக் கொண்ட வாறும்.
பொருள் : நல்பூங் கழலான் - அழகிய பூவேலை செய்த வீரக்கழல் அணிந்த சீவகன்; பொன்பூண் சுமந்த புணர் மென் முலைக்கோடு போழ - பொற்கலன் ஆகிய கிம்புரியைச் சுமந்த முலையாகிய இரு கொம்புகளும் உழ; இரு திங்கள் நயந்த ஆறும் - இரண்டு திங்கள் விரும்பி இருந்தபடியும்; கல்பாடு அழித்த கனம் மாமணித் தூண்செய் தோளான் - உலக்கல்லின் பெருமையைக் கெடுத்த கனத்த மணித்தூணைப் போன்ற தோளையுடைய அவன்; விரைவின் வெற்பு ஊடு அறுத்து நெறிக் கொண்ட ஆறும்-காரியத்தின் விரைவாலே மலையின் இடையிலே புகுந்து வழிக்கொண்டபடியும்;
விளக்கம் : உலகத்தின் பெருமையைக் கெடுத்த கனத்த மணித் தூணைப் போன்ற தோளான்.
---------
20. தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி
விள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம்
உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்த வாறும்
கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய வாறும்,
பொருள் : தள்ளாத சும்மைமிகு நல்தக்க நாடு நண்ணி-இன்ன ஒலியென்று நீக்கமுடியாத ஆரவாரம் மிகுந்த அழகிய தக்க நாட்டை அணைந்து; விள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம் உள் ஆவி வாட்ட - நீங்காத சிறந்த புகழையுடைய ஒரு வணிகன் மகளின் வேலனைய கண்களின் பார்வை உயிரை மனத்துள்ளே நின்று வருத்தலால்; உயிர் ஒன்று ஒத்து உறைந்த ஆறும் -(இருவர்) உயிரும் ஓருயிரைப்போல வாழ்ந்த படியும்; கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய ஆறும் - தேன் மணம் கமழும் அவளைப் பிரிந்து போனபடியும்;
விளக்கம் : விள்ளா - நீங்காத: உள் - மனம். ஆவி - மணம். (கள் ஆவி) இன் : நீக்கம், (கோதை: சினையாகு பெயர்) கோதையின்: இன்: நீக்கம். தக்கநாடு: வடமொழிச் சிதைவு.
---------
21. இன்னீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்பப்
பொன் ஊர் கழலான் பொழி மா மழைக் காடு போகி
மின்னீர் வெள் வேலவன் மத்திம தேய மன்னன்
கொன்னூர் கொடு வெம் சிலை கண்டு எதிர் கொண்ட வாறும்,
பொருள் : இன்நீர் அமிர்து அன்னவள் கண்இணை மாரி கற்ப - இனிய பண்புறும் அமுதம்போன்ற கேமசரியின் இரு கண்களும் மாறாது நீர்சொரியப் பழகும்படி; பொன் ஊர் கழலான் மாமழை பொழி காடு போகி-பொன் நெகிழும் வீரக் கழலான் பெருமழை பெய்யுங் காட்டிடைப் போதலாலே; மின் நீர வெள் வேலவன் மத்திய தேய மன்னன் - மின்னின் தன்மையையுடைய தூய வேலேந்திய மத்திம நாட்டரசன் தடமித்த னென்பான்; கொன் ஊர் கொடு வெஞ்சிலை கண்டு எதிர்கொண்ட ஆறும் - அச்சம் பரந்த வளைந்த வில்லின் றழும்பைக் கண்டு எதிர்கொண்டபடியும்;
விளக்கம் : கண்ணினையும் என்னும் உம்மை (செய்யுள்) விகாரத்தால் தொக்கது. உருக்கிய பொன் காலின்மேற் கிடக்கும்போது நெகிழுமாதலின் ஊரும் என்றார். (கேமசரியின்) கண்ணும் (தான் செல்லும்) காடும் மழை பொழியப் போனான் என்றதனாற் காலம் கார் ஆயிற்று. மன் நீர வெள்வேல் எனவும் பாடம். சிலை: (கருவி) ஆகுபெயர், (சிலைத் தழும்பை உணர்த்தியது).
---------
22. திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும்
கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று
கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளைப்
புண் தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த வாறும்,
பொருள் : திண்தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும் கண்டு ஆங்கு உவந்து - (தடமித்தன்) வலிய தேரையுடைய அரசர்களாகிய யானைகட்குச் சிங்கங்கள் போன்ற தன் மக்களின் விற்பயிற்சியையும் வாட்பயிற்சியையும் (சீவகன் கற்பித்து அரங்கேற்றியபோது) பார்த்து அப்பொழுதே மகிழ்ந்து; இவண் கடிபெய்து காத்தும் என்று - இவ்விடத்தே சீவகனைக் காவலிட்டுக் காப்போம் என்று; கொண்டார் குடங்கை அளவேயுள கண்ணினாளை - இரப்போரின் குவிந்த கை அளவே உள்ள கண்ணையுடைய கனகமாலையை: புண்தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த ஆறும் - (பகைவருடைய) புண்ணைச் சுமந்த ஒளி வீசும் வேலேந்திய சீவகனுக்கு மணம்புரிவித்தபடியும்;
விளக்கம் : கொண்டார் - ஏற்றார் (இரப்பவர்.) பகைவர் புண்ணைத் தாங்குதற்குக் காரணமான வேல். (தாங்கு வேல்): வினைத்தொகை; ஏதுப்பொருள் கருவிக்கண் அடங்கும்; மற்றிந்நோய் தீரும் மருந்து (கலித்தொகை: 60) என்றாற்போல. அரசன் திறலும் என்றும் பாடம்.
அரசர் திறற் சிங்கங்கள் : ஏகதேச உருவக அணி. சீவகன் தடமித்தன் புதல்வர் ஐவருக்கும் வில்லும் வாளும் கற்பித்தான். குடங்கை அளவு கண். பெரிய கண்கள் என்பதைக் குறிக்கின்றன.
---------
23. மதியம் கெடுத்த வய மீன் எனத் தம்பி மாழாந்து
உதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆய வாறும்
நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த வாறும்
பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த வாறும்,
பொருள் : தம்பி மதியம் கெடுத்த வயமீன் என மாழாந்து-சீவகன் தம்பியான நந்தட்டன் திங்களைப் பிரிந்த உரோகிணி போல மயங்கி; உதிதற்கு உரியாள் பணியாள் உடன் ஆயஆறும் (உலகு விளங்கத்) தோன்றினவனுக்குரிய தத்தையின் ஏவலால் அவனைக் கண்டபடியும்; நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த ஆறும் - பொருள் தேடவேண்டும் என்னும் வழியாலே அவன் தோழர் அவனைத் தேடினபடியும்; பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த ஆறும் - தன் கணவனைப் பிரிந்து சென்று, தன்னைப் பெற்ற அன்னையாகிய விசயையைச் (சீவகன் கண்டு) வணங்கினபடியும்;
விளக்கம் : வயமீன்களெனத் தோழர் நிரந்த படியும் என்றும் ஆம். பதியினின்றும் நீங்கிப் பிள்ளையைப் பெற்றாளெனவே விசயையாம். பதி-இராசமாபுரமும் ஆம்; ஏமமாபுரமும் ஆம். பதி: ஏமமாபுரம் எனக்கொண்டு சீவகன் தன் தோழருடன் ஏமமாபுரத்தை விட்டுச் சென்று அன்னையை வணங்கினான் என்பதே சிறப்புடையது, தொடர்ச்சியாக வருவதால், பதி : இராசமாபுரம் என்றும் கணவன் என்றும் பொருள் கொண்டால் அகன்றவள் விசயை ஆவாள். உதிதன் : தோன்றியவன். உரோகிணி என்னும் விண்மீன் திங்களை விட்டு நீங்காமல் இருக்கும். நந்தட்டனும் தோழர்களும் பிரியாமல் இருந்தவர்கள். நந்தட்டன்: கந்துக்கடன் மகன்.
---------
24. கண் வாள் அறுக்கும் கமழ்தார் அவன் தாயொடு எண்ணி
விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்த வாறும்
மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஒர் கன்னிப்
பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்ட வாறும்,
பொருள் : கண்வாள் அறுக்கும் கமழ்தாரவன் தாயொடு எண்ணி-கண்ணின் ஒளியைத் தடுக்கும் மணமிகு மாலையான் தன் அன்னையொடும் ஆராய்ந்து; விண் வாள் அறுக்கும் நகர்வீதி புகுந்த ஆறும் - விண்ணிடத்தை வாள்போலப் பிரிக்கும் இராசமாபுரத்தின் தெருவிலே சென்றபடியும்; மண்மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் - மண்ணுலகுக்கு விளக்கென வரத்தினாற் பிறந்தவளாகிய; ஓர் கன்னிப்பெண் ஆர் அமிர்தின் - ஒரு கன்னிப் பெண்ணாகிய சிறந்த அமுதத்தின்; பெருவாரியுள்பட்ட ஆறும் - பெரிய இன்பக்கடலிலே அகப்பட்டபடியும்;
விளக்கம் : மாலையைக் கண்ட கண் பிறிதொன்றிற் செல்லாமையின் கண்வாள் அறுக்கும் என்றார். விண் - தேவருலகு. மண்மேல் : (மண்ணுக்கு என நான்காம் வேற்றுமைப் பொருளில் வந்ததால்) உருபு மயக்கம். கன்னிப் பெண்ணாரமிர்தின் கன்னிப் பெண்ணாரமிர்து என்னுந் தொடர் ஒரு சொல்லாகவும் பெருவாரி என்னுந் தொடர் ஒரு சொல்லாகவும் கொண்டு இரு சொல் தொகை யென்றார். கற்சுனை ஒரு சொல் போலவும், குவளையிதழ் ஒரு சொல்லாகவும் நின்றன. பல சொற்றொகையாயினும், கற்சுனைக் குவளையிதழ் போல (தொல்-எச்ச.24. இளம் பூரணர், நச்சினார்க்கினியர் மேற்கோள்) இருசொல் தொகையாய் நின்றது.
கன்னிப்பெண் : விமலை. கண்வாள்: கண்ணொளி.
---------
25. துஞ்சா மணிப் பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து
அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல்
எஞ்சாத இன்பக் கொடி தாழ்த்ததும் பன்றி எய்து
நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அறக் கொன்ற வாறும்,
பொருள் : துஞ்சா மணிப்பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து - ஒளிமாறாத மாணிக்கப் பூணினையும் சுரமஞ்சரி என்னும் பெயரினையும், அம் சாயல் அகில்ஆர் துகில் ஆய்பொன் அல்குல்-அழகிய சாயலையும் அகில்மணம் நிறைந்த ஆடையும் பொன்னணிகலனும் உடைய அல்குலையும்; பூத்த எஞ்சாத இன்பக்கொடி தாழ்த்ததும் - மலர்ந்த, குறையாத இன்பந்தருங் கொடியை வளைத்தபடியும்; நஞ்சூறு வேலான் பன்றி எய்து பகை நாம் அறக் கொன்ற ஆறும் - நஞ்சு தோயும் வேலணிந்த சீவகன் பன்றியை வீழ்த்திப் பகைவனை அச்சம் நீங்கிக் கொன்றபடியும்.
விளக்கம் : துகிலையும் மேகலையையும் உடைத்தாகிய அல்குலையுடைய கொடி; இன்பமாகிய கொடி. பொன் : (கருவி) ஆகுபெயர். கொடி யென்றலானும் (ஆடவரை நோக்காமை மேற்கொண்ட) விரதத்தை நீக்குதலானும் தாழ்த்தது என்றார். நாம் - அச்சம்: உரிச்சொல். நாமம் ஆயின் விகாரமாம்.
---------
26. புண் தோய்த்து எடுத்த பொரு வேல் எனச் சேந்து நீண்ட
கண் போன்ற மாமன் மகள் கண் மணிப் பாவை அன்ன
பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும், பொற்பச் செங்கோல்
தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாய வாறும்,
பொருள் : மாமன் கண்போன்ற மகள் - தன் மாமன் கோவிந்தனுக்குக் கண்போன்ற மனைவி புதவியின், புண்தோய்த்து எடுத்த பொருவேல் எனச் சேர்துநீண்ட - புண்ணில் தோய்த்து எடுத்த, போருக்குரிய வேல்போலச் சிவந்த நீண்ட; கண்மணிப் பாவை அன்ன பெண்பால் அமிர்து இன்நலம் பெற்றதும் - கண் மணியிற் பாவைபோன்ற பெண்ணாகிய இலக்கணையிடத்து அமிர்தத்தைப் போன்ற இனிய நலத்தைப் பெற்றபடியும்; செங்கோல் பொற்பத் தண்பால் மதிதோய் குடை தண்நிழல் பாய ஆறும்-செங்கோல் பொலிவு பெற்றிருப்பக் குளிர்ந்த பாலனைய திங்களைப் போன்ற குடை குளிர்ந்த நிழலைப் பரப்பினபடியும்;
விளக்கம் : தன் மாமனுடைய மகள், அவன் கண்போன்ற மகள் அவன் தேவி புதவியுடைய வேலெனச் சேந்து நீண்ட கண்மணியிற் பாவை அன்ன பெண்; உண்கண், மணிவாழ் பாவை (நற்றிணை-184) என்றார் பிறரும். வேல்படும்பொழுதே புண்ணும் உடனே நிகழ்தலின் புண்தோய்த் தென்றார். (மதி தோய்) தோய்: உவம உருபு. குடை: எழுவாய். குடைத் தண்ணிழலும் பாடம். மாமன் மகள் என்பதற்கு மாமன் மனைவி யென்று பொருள் கொள்ளுதலே சிறப்பாகுமென்று தோன்றுகிறது. இன்றேல் அவன் தேவி என்ற சொற்களை வருவித்து அவளுக்குப் பெண் என முடித்தல் வேண்டும். மகள் என்பதற்கு மனைவியெனச் சங்க நூல்களில் வருவதுண்டு. மனக் கினியாற்கு நீ மகளாயதூஉம் (மணி-பதி-21) என வருதல் காண்க. புதவி என்பது பிரிதிவி சுந்தரி என்பதன் சிதைவு என்பர்.
---------
27. திறை மன்னர் உய்ப்பத் திரு நிற்பச் செங்கோல் நடப்பக்
குறைவு இன்றிக் கொற்றம் உயரத் தெவ்வர் தேர் பணிய
உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின்
அறிவன் அடிக் கீழ் அரசு அஞ்சித் துறந்த வாறும்,
பொருள் : குறைவு இன்றி மன்னர் திறை உய்ப்ப - குறைவு இல்லாமல் அரசர்கள் கப்பம் செலுத்தவும்; திருநிற்ப - செல்வம் நிலைபெற்றிருக்கவும்; செங்கோல் நடப்ப - நல்லாட்சி நடைபெறவும்; கொற்றம் உயர-வெற்றி மேம்படுமாறு; தெவ்வர் தேர் பணிய - பகைவருடைய தேர் வணங்க; உறைகின்ற காலத்து - வீற்றிருக்குங் காலத்திலே, அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின் அரசு அஞ்சி - அறத்தைக் கேட்டு இடியேற்றின் ஒலிகேட்ட பாம்பைப்போல அரசாட்சியினிடம் அச்சங்கொண்டு; அறிவன் அடிக்கீழ் துறந்த ஆறும் - அறிவன் திருவடியிலே துறவு மேற்கொண்டபடியும்;
விளக்கம் : உய்ப்ப - செலுத்த. நிற்ப-கெடாது நிற்ப. குறைவின்றி: மத்திம தீபம் (இடையிலிருந்த இச்சொல் முன்னுள்ள சொற்களுக்கும் விளக்கமாக இருந்தது. எனவே, குறைவு இன்றி என்பதை யாவற்றிற்குங் கூட்டுக. மத்திமதீபம் என்பது இடைநிலை விளக்கு என்னும் அணி.) இவனது துறவு கூறவே எல்லார் துறவும் உணர்த்தியதாயிற்று. எல்லோரும் என்பது சீவகனுடைய தம்பியருந் தோழரும் தேவியரும் ஆகிய எல்லோரையுங் குறிக்கின்றது. அறிவன் - அருகப் பெருமான்.
---------
28. கோணைக் களிற்றுக் கொடித் தேர் இவுளிக் கடல் சூழ்
வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன் மாரும்
பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப
வீணைக் கிழவன் விருந்து ஆர் கதிச் சென்ற வாறும்,
பொருள் : கோணைக் களிற்றுக் கொடித்தேர் இவுளிக் கடல்சூழ் வாள் மொய்த்த தானையவன் - மாறுபாடுடைய களிற்றையும் கொடித் தேரையும் குதிரைக் கடலையும் சூழ்ந்த வாளேந்திய காலாட் படையையுமுடைய சீவகனின்; தம்பியும் தோழன்மாரும் பூண்மொய்த்த பொம்மல் முலையாரும் புலம்துறப்ப -தம்பியும் தோழர் நால்வரும் பூண் அணிந்த விம்மிய முலைகளையுடைய தேவியர் எண்மரும் இந்நிலத்தை விட்டுத் துறக்கத்தை அடைய; வீணைக் கிழவன் விருந்து ஆர்கதிச் சென்ற ஆறும்-சீவகன் புதுமை பொருந்திய வீட்டினை அடைந்தபடியும்.
விளக்கம் : கோணை : ஐ : அசை.
இவனை ஒழிந்தோர்க்கு வீடுபெற நல்வினையின்று. தென்புல மருங்கின் விண்டுநிறைய (மதுரைக்.202) என்றாற்போலப் புலம்நிலம் ஆம்; ஏசு பெண்ணொழித் திந்திரர்களாய்த் - தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார். (சீவக. 3121) என்று தேவியரை முற்கூறி, ஐவருந், திருவின் தோற்றம்போல் தேவராயினார் (சீவக. 3134) என்று பிற்கூறுவாராகலின், முலையாருந் தம்பியுந் தோழன்மாரும் எனல்வேண்டும். ஆயினும், ஆண்பாற்சிறப்புடைமையின் முற்கூறினார். பாட்டுக் காமத்தை விளைத்தலின் அதிற் பற்றற்று விரைய வீடு பெற்றமை தோன்ற வீணைக் கிழவன் விருந்தார்கதிச் சென்றவாறும் என்றார்.
---------
29. தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன்
வான் வாய் வணக்கும் நலத்தார் முலை போகம் வேண்டான்
ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம்
ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்ற வாறே,
பொருள் : செல்வன் தேன்வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று - அழியாத செல்வத்தை உடையவன் தேனை உமிழ்தற்குக் காரணமான அமிர்தத்தை உண்டவனைப்போல; வான்வாய் வணக்கும் நலத்தார் முலைப்போகம் வேண்டான்-வானிடத்து மகளிரை அழகால் வணக்கும் நலமுடைய நில மகளிரின் இன்பத்தை வேண்டாதவனாய்; ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம் - எல்லோரும் போற்ற அவன் அவ்வீட்டிலே கேவல மடந்தையை நுகர்ந்த பேரின்பத்தையும்; பதிகத்துள் இயன்ற ஆறே ஈனோர்க்கு உரைப்பாம் - பதிகத்தில் அமைத்த வழியிலே இவ்வுலகில் உள்ளோர்க்கு உரைப்பாம்.
விளக்கம் : உமிழ்ந்த அமிர்து, நிலம் பூத்த மரம் (கலி.27) போல நின்றது. இன்ப வெள்ளத்தையும் என்று உம்மையும் உருபும் விரித்து, கல்லார் மணி (சீவக-9) என்னும் கவி முதலியவற்றின் உம்மைகளுக்கும் இரண்டாவது (வேற்றுமை உருபு) விரித்து, உரைப்பாம் என்பதனோடு முடிக்க. முற்கூறிய வீட்டை (விருந்தார் கதி, சீவக.28) உட்கொண்டு கூறி, அதிற் பயனும் கொண்டு கூறினார். வான் : இடவாகு பெயர். நலத்தார்சீவகன் மனைவியர். கேவல மடந்தை: பேரின்பமாகிய மடந்தை. ஏனோரும்-எல்லோரும். ஈனோர் - இங்குள்ளோர்.
------------
1. நாமகள் இலம்பகம் - நாட்டுவளம் (30-408)
கதைச் சுருக்கம்:
இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் நிரம்பிய இவ் வேமாங்கத நன்னாட்டை இராசமாபுரம் என்னும் சிறந்த நகரத்தின்கண்ணிருந்து சச்சந்தன் என்பான் செங்கோலோச்சினன். இம் மன்னர் மன்னன் கட்டிளமையும், பேரழகும், பேராற்றலும், நுண்ணறிவும், வண்மையும், பிறவும் ஒருங்கேயுடையனாய் விளங்கினான். இவன் அருட்குடைத் தண்ணிழலில் வையகம் மகிழ்ந்து வைகியது. இம் மன்னன் தன் மாமனாகிய விதையநாட்டரசன் மகள் விசயை என்பவளை இனிதின் மணந்தான். விசயை ஒப்பற்ற பேரழகுடையவள்; நற்குணங்கட்கு உறையுள் போன்றவள். கலங்காக் கற்புடைய காரிகை. சச்சந்தன் இவள் பெண்மை நலத்திற் பெரிதும் ஈடுபாடுடையனாய் அவளை இமைப்பொழுதும் பிரியவியலாதவனாயினன். அவளோடு உடனுறைதற்குத் தன் அரசியற் கடமைகள் இடையூறாதல் கண்டு தன் அமைச்சருள் ஒருவனாகிய கட்டியங்காரனை அழைத்து அரசாட்சியை அவன்பால் ஒப்புவித்துத் தான் உவளகத்தே விசயையோடு நொடிப் பொழுதும் பிரிவிலனாய் உறைந்தின்புற்றனன். இஃதிங்ஙனமாக, ஒருசில திங்களிலேயே விசயை கருவுற்றனள். ஒருநாள் விசயை மூன்று கனாக்கண்டு அவற்றைச் சச்சந்தனுக்குணர்த்தி அவற்றின் பயன்களைத் தனக்குணர்த்தும்டி வேண்டினாள். அக் கனவுகளுள் ஒன்று தனக்கு வரும் கேட்டினைக் குறிப்பதுணர்ந்த சச்சந்தன், தன் உள்ளுணர்வின் தூண்டுதலாலே ஒரு தச்சனை யழைத்து வான்வழிப் பறந்து செல்லுமொரு மயிற்பொறி செய்வித்தனன். அம் மயிற் பொறியினை வானத்தே செலுத்தவும் கீழிறக்கவும் விசயைக்குக் கற்பித்தனன்.
பெறலருந்திருப் பெற்றபின் யாவர்க்குஞ் சிந்தனை பிறிதாதல் இயல்பன்றோ? அரசாட்சிப் பொறுப்பனைத்தும் தன்பால் எய்தியிருக்கும் இச்செவ்வி இதனைத் தன்னுடையதாகவே ஆக்கிக்கொள்ளத் தகுந்ததொரு செவ்வியாகும் என்று கருதிய கட்டியங்காரன் அமைச்சரோடு ஆராய்ந்தனன்; அவருட் சிலர் இக் கருத்தினை எதிர்த்துக் கட்டியங்காரனைத் திருத்த முயன்றனர். கட்டியங்காரன் அவர் நல்லுரை கேளானாய்த் தான் கருதியதே முடிப்பத் துணிந்து ஆவன செய்து அரசனை அந்தப் புரத்தில் வைத்தே நால்வகைப் படைகளுடன் முற்றுகையிட்டனன். இத் தீச்செயல் உணர்ந்த சச்சந்த மன்னன் சீறினன்; என் செய்வான்! மகவின் நலங்கருதி விசயையை மயிற்பொறியிலேற்றி வானத்தின் வழியே புறம்போக்கினன். தான் ஒருவனே போர்க்கோலம் பூண்டு ஒப்பற்ற தன் தறுகண்மையாலே அப் பெரும் படைகளை ஒருங்கே எதிர்த்து நீண்டபொழுது போர்செய்து இறுதியில் கட்டியங்காரனாற் கொல்லப்பட்டனன். வெற்றி முரசொலி நங்கை விசயையின் செவியை எட்டியது. சச்சந்தன் முடிந்தமை உணர்ந்தாள்; மயங்கினள்; மயிற் பொறியைச் செலுத்த மறந்தாள்; திகைத்தாள்; மெய்ம்மறந்தாள். பாவம்; பிறிதென்செய்வாள் பேதை!
முறுக்குடைந்த மயிற்பொறி மெல்ல மெல்ல வீழ்ந்து அந்நகரத்துப் புறங்காட்டிலிறங்கிக் கால் குவித்திருந்தது. அப்பொழுதே விசயை அவ்விடத்திலேயே கருவுயிர்த்தாள்; குண கடலில் தோன்றும் இளஞாயிறுபோன்றதோர் ஆண்மகவு அவள் வயிற்றினின்றும் தோன்றியது. ஒருவாறு மயக்கந் தீர்ந்த விசயை, அவ்வருமந்த மகவின் நிலைமையையும், மன்னனுக்குற்ற கேட்டினையும், கருதிப் பெரிதும் வருந்தினள். திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்பதற்கிணங்க அம் மயானத்துறையும் தெய்வமொன்று விசயையின் தோழி சண்பகமாலை என்பாளின் வடிவங்கொண்டு அவள்முன் வந்து தோன்றித் துணைசெய்வதாயிற்று. கோப்பெருந் தேவி ! இப்பொழுது இக்குழவியை எடுத்துப்போய்ப் புரப்பான் ஒருவன் ஈண்டு வருவன். ஆதலால் இதனை இங்குக் கிடத்தி யாம் சிறிது பொழுது மறைந்திருத்தல் வேண்டும் என்று விசயைக்குணர்த்த இருவரும் அயலிலே சென்று மறைந்திருந்தனர்.
அப்பொழுது அந்நகரத்திலுள்ள கந்துக்கடன் என்னும் வணிகன் ஒருவன் இறந்துபட்ட தன் மகவைப் புதைத்தற்கு அங்கு வந்தனன். விசயை மகவினைக் கண்டு வியந்தான். தன் மகவைப் புதைத்துவிட்டு இம் மகவினை ஆர்வத்துடன் எடுத்துப் போய்த் தன் மனைவி சுநந்தைக்குக் காட்டி இறந்ததாகக் கருதிய தம்மகவே உயிர்பெற்றதொகை கூறிக் கொடுத்தான். அவளும் அதனை ஏற்று உவகையுடன் வளர்த்தனள். கந்துக்கடன் மயானத்தே இக்குழவியை எடுத்தபொழுது அது தும்மிற்றாக; ஆண்டு மறைந்திருந்த தெய்வம் சீவ என்று வாழ்த்தியது. அது அவன் காதிற் பட்டபடியால் அக்குழந்தைக்குச் சீவகன் என்று பெயரிட்டனன். சுநந்தை பின்னர் நந்தட்டன் என்னும் ஒரு மகவினை ஈன்றாள்.
இனி, விசயையை முன்கூறப்பட்ட தெய்வம் அழைத்துப் போய்த் தண்டகாரணியத்தே சென்று ஆண்டு உறையும் துறவோருடன் கூட்டிய பின்னர் மறைந்தது. விசயை அவணிருந்து தன் மகவின் நலங்கருதி நோன்பு செய்திருந்தனள். கந்துக்கடன் சீவகன் நந்தட்டன் முதலியோரை நல்லாசிரியரிடத்துக் கலைகள் பலவும் பயிற்றுவித்தான். அச்சணந்தி என்னும் அப்பேராசிரியர் சீவகனுடைய நுண்மாணுழைபுலனை உணர்ந்து மகிழ்ந்தனர். சீவகனைத் தனியிடத்தே அழைத்துச் சென்று ஒரு கதை கூறுவார்போன்று அவனது வரலாற்றை உணர்த்தினர். பின்னரும், ஓராண்டு முடியுமளவும் நீ நின்னை வெளிப்படுத்தாதே இருத்தல்வேண்டும், என்றும் வற்புறுத்தி வரங்கொண்டனர். அச்சணந்தியாசிரியர் தம் வரலாற்றையும் சீவகனுக்குணர்த்தி அவன்பால் விடைபெற்றுப் போய்த் தவம் செய்து வீடுபெற்றுயர்ந்தனர். இராசமாபுரத்தில் சீவகன், நந்தட்டன் முதலியவரோடு வைகுவானாயினன்.
---------
30. நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன்
பூ வீற்று இருந்த திருமாமகள் புல்ல நாளும்
பா வீற்று இருந்த கலை பார் அறச் சென்ற கேள்விக்
கோ வீற்று இருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன்.
பொருள் : பா வீற்றிருந்த கலை பாரறச் சென்ற கேள்விக் கோ - பாக்களில் வீற்றிருந்த கலைகள் தடையின்றி நடந்த கேள்வியையுடைய அரசன்; நா வீற்றிருந்த புலமாமகளோடு - தன் நாவிலே வீற்றிருந்த அறிவைத் தரும் நாமகளோடு; நன் பொன் பூ வீற்றிருந்த திருமாமகள் நாளும் புல்ல - அழகிய பொற்றாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளும் வெறுப்பின்றி நாள்தோறும் தழுவ; வீற்றிருந்த குடி நாட்டணி கூறல் உற்றேன் - தான் வீற்றிருந்த குடிகள் நிறைந்த நாட்டின் அழகைக் கூறத் தொடங்குகின்றேன்.
விளக்கம் : கேள்விக்கோ எனவே, கல்வியும் செல்வமும் பெற்றன வேனும், அவை நாடோறும் புதியவாக நிகழ்கின்றமை தோன்றப் பின்னும் புல்ல என்றார். இனி, அவர்கள் (நாமகளும் திருமகளும்) நாட்டிலே புல்ல என்றும் ஆம். வீற்றிருத்தல் - சிறப்புடனிருத்தல். வீறு - சிறப்பு. புலம் - அறிவு. பார்-தடை. கேள்வி-கற்றறிந்த பெரியோர் கூறுவதைக் கேட்டல். கற்றலிற் கேட்டலே நன்று என்பர்.
---------
31. காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப்
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து
தேமாங் கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே
பொருள் : காய்மாண்ட தெங்கின் பழம்வீழ-நன்றாகக் காய்த்த தென்னைநெற்று வீழ; கமுகின் நெற்றிப்பூ மாண்ட தீந்தேன் தொடை கீறி - கமுகின் உச்சியிற் பொலிவிற் சிறந்த இனிய தேன்போல இனிய நீரையுடைய குலையைக் கீறி; வருக்கை போழ்ந்து - பலாப் பழங்களைப் பிளந்து; தேமாங்கனி சிதறி - தேமாவின் பழங்களைச் சிதறி; வாழைப்பழங்கள் சிந்தும் - வாழைப் பழங்களைச் சிதறும்; ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டு - ஏமாங்கதம் என்று பெயர் கூறப்பட்டு இசையாலே திசையெல்லாம் பரவியதாகிய ஒரு நாடு உண்டு.
விளக்கம் : வீழ என்னும் (வினை) எச்சம் காரணகாரியப் பொருட்கண் இறந்தகாலம் உணர்த்திற்று. கீறி, போழ்ந்து, சிதறி, சிந்தும் என்னும் தொழில்கள் முறையே தொடை, வருக்கை, மாங்கனி, வாழைப்பழங்கள் என்னும் செய்வதன் தொழில்கள் (தன் வினைகள்) அன்றித் தெங்கின் பழத்தின் வினையாக்கிச் செய்விப்பதன் தொழில் என்றுங் கூறலாம். ஒழிந்த எச்சம் ஈண்டுச் செய்வதன் தொழில்மேலன. பூமாண்ட தீந்தேன் தொடை - பொலிவு மாட்சிமைப்பட்ட தேன்போல இனிய நீரையுடைய தாறு; தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய் (மதுரைக்-40) என்றார் பிறரும். இனித்தேனும் தொடையும் என உம்மை விரித்தலுமாம்.வருக்கை - பொருள் ஆகுபெயர்.
இனி, வீழ அப்புறம் கீறிப்போழ்ந்து சிதறிச் சிந்தும் எனச் செய்விப்பதன் தொழிலுமாம். விண்டு (சிற்-24) என்பதுபோல. (விண்டு : சங்குத் தன்வினைக்கும் பிறவினைக்கும் பொது).
இஃது உயர்வு நவிற்சி யணி.
வேறு
---------
32. இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல்
கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை
பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே
பொருள் : இலங்கல் ஆழியினான் களிறு ஈட்டம்போல்-விளங்கும் ஆழியையுடைய பரதேசுவரர் என்னும் சக்கரவர்த்தியினுடைய களிற்றுக் கூட்டம்போலே; கணமழை கலங்கு தெண் திரை மேய்ந்து - கூட்டமாகிய முகில்கள் மறுகும் தெள்ளிய திரையை உடைய கடலில் (நீரைப்) பருகி; விலங்கல் சேர்ந்து விண்ஏறி-சூல் முதிரும் அளவும் மலையைச் சூழ்ந்திருந்து, பிறகு, வானிலே ஏறி; பொலம்கொள் கொன்றையினான் சடைபோல் மின்னி - பொன்னின் நிறத்தைக் கொண்ட கொன்றை மலர் அணிந்த சிவபிரானின் சடையைப்போல் மின்னி; விட்டு ஆர்த்த-வாய்விட்டு முழங்கின.
விளக்கம் : கலங்கு தெண்டிரை - மறுகுகின்ற தெண்டிரை; ஆகுபெயர்; (அலையாகிய சினையின் பெயர் கடலுக்கு ஆயினமையின் சினையாகு பெயர்.) பரதேசுவர சக்கரவர்த்தி ஆதி தீர்த்தங்கரரான விருஷப சுவாமியின் மகனாரென்பர். இவருக்கு எண்பத்து நான்கிலட்சம் யானைகளுண்டென்பர்; இவர் பன்னிரண்டு மகாசக்கரவர்த்திகளில் முதல்வர் என்றுங் கூறுவர்.
---------
33. தேன் நிரைத்து உயர் மொய்வரைச் சென்னியின்
மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்
கோல் நிரைத்தன போல் கொழுந் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே
பொருள் : வான்மேல் நிரைத்து - முகில்கள் ஒன்றின்மேல் ஒன்றாக மேலே வரிசையாகத் தம்மிற் கூடி; தேன் நிரைத்து உயிர் மொய்வரைச் சென்னியின் - தேன் இறால் நிரைத்து உயர்ந்த மலையின் நெருங்கிய உச்சியில்; வெள்ளி வெண்கோல் விசும்புஉற நிரைத்தன போல் - வெள்ளியாற் செய்த வெள்ளிய கோல்களை வானெங்கும் நிரைத்தாற்போல; கொழுந் தாரைகள் நிரைத்து மணந்து சொரிந்த - வளமான நீர்த்தாரைகளை நிரைத்து மணங்கொண்டு சொரிந்தன.
விளக்கம் : வான் முகிலை யுணர்த்துவது இடவாகுபெயரால். மணந்து: நீர்த்துளி மண்ணிற் பட்டவுடன் எழும் மணத்தைப் பெற்று. சொரிந்த : பலவின்பால் வினைமுற்று. தேன் இறால் - தேன்கூடு.
---------
34. குழவி வெண் மதிக் கோடு உழக் கீண்டு தேன்
முழவின் நின்று அதிர் மொய் வரைச் சென்னியின்
இழியும் வெள் அருவித் திரள் யாவையும்
குழுவின் மாடத் துகில் கொடி போன்றவே.
பொருள் : மொய்வரைச் சென்னியின் இழியும், முழவின் நின்று அதிர்வெள் அருவித்திரள் யாவையும் - மலையின் நெருங்கிய முடிகளில் நின்று இழியும் முழவென நிலைபெற்று முழங்கும் வெண்மையான அருவிக் கூட்டங்கள் எல்லாமும்; குழவி வெண் மதிக்கோடு உழக்கீண்டு இழியும், (முழவின் நின்று அதிர்) தேன் (திரள் யாவையும்) - வெள்ளிய பிறைத்திங்களின் நுனி உழுதலால் இறால் கிழிந்து இழியும் முழவென நிலைபெற்று முழங்கும் தேன்கூட்டங்கள் எல்லாமும்; குழுவின்மாடத் துகில்கொடி போன்ற கூட்டமான மாடங்களில் துகிற்கொடியை ஒத்தன.
விளக்கம் : முழவு போல அதிர்தல் இரண்டிற்கும் ஏற்றுக. வெண்டுகில் (பரி-10-80) என்றும், கோபத்தன்ன தோயாப் பூந்துகில் (முருகு-15) என்றும் கூறலின் துகில் வெண்மை செம்மை இரண்டிற்கும் பொது. தேனருவிக்குச் செந்துகில் உவமை. குழவி வெண்மதிக்கோடு உழுதலும் தேனருவி முழவென முழங்கி இழிதலும் உயர்வு நவிற்சி.
---------
35. இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல்
விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை
நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்
கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே.
பொருள் : (அவை) இலங்கு நீள்முடி இந்திரன் மார்பின் மேல் விளங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்று - அவ்வருவிகள் தாமே விழும்பொழுது விளங்கும் நீண்ட முடியையுடைய இந்திரனுடைய மார்பின்மேலே பிணைத்து வீழ்ந்த முத்துமாலையையும் போன்று; அவை நலம்கொள் பொன்னொடு நன்மணி சிந்தலால் - அவை நலந்தரும் பொன்னையும் அழகிய மணிகளையும் சிதறுவதால்; கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்ற - (இந்திரனுடைய) அணிகலப் பெட்டியைக் கவிழ்த்துக் காட்டப்பெற்ற அணிகலன்களையும் ஒத்தன.
விளக்கம் : விலங்கி வீழ்தல் - பிணைத்திட்ட மாலைபோலே வீழ்தல். (விலங்கல் - குறுக்கிடல்) கவிழ்த்த: வினையாலணையும் பெயர் என்றாலே பொருத்தமுடைத்து. சிந்துதல் - உள் நிறைதலின் தெறித்தல்.
இது நீரிற்கு உவமை கூறிற்று. முற்செய்யுளில் தேனருவி நீரருவி என இருவகை அருவிகள் கூறப்பட்டன. அவற்றில் நீரருவிக்குமட்டும் ஈண்டு உவமை கூறிற்று என்கிறார் நச்சினார்க்கினியர். இனி முற்செய்யுளில் நீரருவியை மட்டுமே கொண்டு, குழவி வெண்மதிக்கோடு உழுவதால் தேன் இறால் கீண்டு, வண்டுகள் ஆரவாரிப்பது முழவென அதிர்கின்ற தென்றும் அத்தகைய மலை முடியினின்றும் இழியும் நீரருவித்திரள் யாவையும் மாடத்தின் துகிற் கொடிபோல் விளங்குகின்றன என்றும் கூறுவதே பொருத்தமாகக் காண்கிறது. தேன் - வண்டுகளில் ஒருவகை. அவ்வாறு கொள்வது ஆற்றொழுக்காகப் பொருள்படுவதையும் தேனருவி கொள்ள வேண்டின் கொண்டு கூட்டுப்பொருள் கோள் கொள்ள வேண்டி வருவதையுங் காண்க.
---------
36. வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக்
கொள்ளை கொண்ட கொழு நிதிக் குப்பையை
உள்ளம் இல்லவர்க்கு ஊர் தொறும் உய்த்து உராய்
வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே.
பொருள் : வள்ளல் கைத்தல மாந்தரின் - வண்மையையுடைய கையினைத் தம்மிடத்தே உடைய நன்மக்களைப்போல மால்வரைக் கொள்ளைகொண்ட கொழுநிதிக் குப்பையை - பெரிய மலையிலிருந்து வாரிக்கொண்டு வந்த வளமிகு செல்வத்திரளை; ஊர்தொறும் உள்ளம் இல்லவர்க்கு - ஊர்தொறும் சோம்பியிருப்போர்க்கு; மடுத்து உய்த்து நாடுஉராய் வெள்ளம் விரைந்தது-கொண்டு கொடுப்பதாக நாட்டிலே தோன்றி விரைந்து சென்றது.
விளக்கம் : உய்த்து - உய்ப்ப. உராய் - பெயர்ந்து. (உள்ளம் - ஊக்கம். மாந்தரின்: இன்: ஐந்தனுருபு; ஒப்புப்பொருள்.)
---------
37. மையல் யானையின் மும் மதம் ஆர்ந்து தேன்
ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்ச்
செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா
நைய வாரி நடந்தது நன்று அரோ.
பொருள் : மையல் யானையின் மும்மதம் ஆர்ந்து - மயங்கிய யானையின் மும்மதத்தையும் உள்ளே நிறைத்து; தேன் ஆடி ஐய பொன் அசும்பு அளைந்து உராய்-தேனைப் பூசி வியப்பையுடைய பொன் துளியைக் கலந்து பெயர்ந்து, செய்ய சந்தனம் தீம்பழம் ஆதியா-நல்ல சந்தனம் இனிய பழம் என்பவை முதலாகப் பிறவற்றையும்; நைய வாரி நன்று நடந்தது - காடு வருந்துமாறு வாரிக்கொண்டு பெரிதாக வெள்ளம் நடந்தது.
விளக்கம் : உண்டு பூசி அளைந்து செருக்கி நாட்டை, நோக்கி நடந்ததென்றார்; குறிப்பு (மக்கள் செய்கையை வெள்ளத்தின் செயலாக்கினமையின் குறிப்பு) ஐய: உரிச்சொல் ஈறு திரிந்தது (ஐ என்னும் உரிச்சொல் ஐய எனத் திரிந்தது, ஐ வியப்பாகும் தொல் - உரி. 87) நன்று பெரிதாகும் (தொல் - உரி-45). (அரோ:அசை).
---------
38. வீடு இல் பட்டினம் வவ்விய வேந்து எனக்
காடு கையரிக் கொண்டு கவர்ந்து போய்
மோடு கொள் புனல் மூரி நெடுங் கடல்
நாடு முற்றியதோ என நண்ணிற்றே.
பொருள் : வீடு இல் பட்டினம் வவுவிய வேந்து என - குடி நீங்குதல் இல்லாத பட்டினத்தைக் கொள்ளைகொண்ட அரசனைப் போல; காடு கை அரிக்கொண்டு கவர்ந்துபோய் - காட்டைத் திரைகளாகிய கைகளாலே அரித்தல் செய்து அப்பொருள்களை உள்ளடக்கிக்கொண்டுபோய்; மூரி நெடுங்கடல் நாடு முற்றியதோ என - பெரிய நெடிய கடல் நாட்டை வளைத்ததோ என்று மக்கள் வருந்துமாறு; மோடு கொள்புனல் நண்ணிற்று - பெரிய வெள்ளம் அந்நாட்டை அணுகியது.
விளக்கம் : வீடு: விகாரம்: விடுதல் என்னும் தொழிற்பெயர் தல் விகுதி கெட்டு முதல்நீண்டு வீடு எனத்திரிந்தது; முதனிலை திரிந்த தொழிற்பெயர். அரி: அரித்தல், முதனிலைத் தொழிற்பெயர். மூரி, மோடு: பெருமை என்னும் பொருளன.
---------
39. திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல்
நுரை எனும் மாலையை நுகரச் சூட்டுவான்
சரை எனும் பெயர் உடைத் தடம் கொள் வெம் முலைக்
குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே.
பொருள் : திரைபொரு கனைகடற் செல்வன் நுகரக்கொள் - அலைமோதும் ஆரவாரம் மிகும் கடலாகிய தன் கணவன் துய்ப்பதற்குத் தன்னிடத்தே முற்கூறிய பொருள்களைக்கொண்ட; சரை எனும் பெயருடைத் தடம்வெம்முலைக் குரைபுனல் கன்னி - சரை என்னும் பெயரினையும் மணல்மேடாகிய விரும்பிய முலையினையும் உடைய ஒலிக்கும் புனலாகிய கன்னி; சூட்டுவான் நுரையெனும் மாலையைச் சென்னிமேல் கொண்டு இழிந்தது - அவனுக்குச் சூட்டுவதற்கு நுரையாகிய மாலையைத் தன் தலைமேல் கொண்டுவந்தது.
விளக்கம் : சரை யென்னும் பெயரினையும் தடமாகிய விரும்பிய முலையினையும் உடைய புனலாகிய கன்னி; தடம் முலைபோற் சுரத்தலின் முலையாம். கொள் கன்னி: வினைத்தொகை. கன்னி என்னும் விசேடிக்கப்படுஞ் சொல்லை நீர் விசேடித்து அஃறிணையாக்குதலின், இழிந்ததென்றார். என்ப : அசை; இது புறனடையாற் கொள்க. (தொல் - இடை - 48.) இவ்விதி மேலும் கொள்க.
சூட்டுவான் : எதிர்கால வினையெச்சம். தடம்கொள் என்னுந் தொடரிலுள்ள கொள் என்னுஞ் சொல்லைக் கன்னியுடன் இயைத்துக் கொள்கன்னி சரவெனும் எனக்கூட்டிக்கொள் என்பதற்குச் செயப்படுபொருளாக முற்செய்யுளிற் கூறிய காட்டுப்பொருள்களை வருவித்துக் கூறினார். செல்வன் சென்னிமேல் சூட்டுவான் என அமைந்த தொடரிலிருந்த சென்னிமேல் என்பதைக் குரைபுனற் கன்னி சென்னிமேல் என மாற்றிக் கூறினார். இவ்வாறு கூறாமற் செல்வன் சென்னிமேற் சூட்டுவான் நுரையெனும் மாலையைக் கொண்டு சென்றதாகக் கூறினும் பொருள் கெடுமாறில்லை.
---------
40. பழம் கொள் தெங்கு இலை எனப் பரந்து பாய் புனல்
வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய்த் தலை
தழம் குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம்
முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே.
பொருள் : முழங்கு தீம்புனல் அகம் முரிய - ஆரவாரிக்கும் இனிய புனலாலே உட்கரை முரிதலால்; தழங்கு குரல் பம்பையின் நாடெலாம் சாற்றி - ஒலிக்கும் ஒலியையுடைய பறையினாலே நாடெங்கும் உள்ளார் அறிவித்து; பழம்கொள் தெங்கு இலையெனப் பாய்புனல் பரந்து வழங்க - காய்த்த தென்னை ஓலையென நெருங்கிப் பாய்புனல் பரவி வழங்குமாறு; முன் இயற்றிய சுதை செய் வாய்த்தலை மொய்த்தது - நீர் வரவறிந்து முன்னர் இயற்றிய சுண்ணாம்பினாற் கட்டப்பட்ட வாய்க்காலினிடத்துப் (படலிடக்) கூடினர்.
விளக்கம் : பழம் கொள் தெங்கு - காய்ந்த தெங்கு. இலை நெருக்கத்திற்கு (உவமை). தெங்கோலை எனற்பாலது தெங்கிலை எனப்படுதல் மரபு வழுவமைதியாகக் கொள்க. இலையெனப் பாய்புனல் பரந்து வழங்கும்படி நீர் வரத்தறிந்து முன்னே படுத்த வாய்த்தலை. தழங்கு குரல் (தழங்குரல் என ஆனது) விகாரம்.
---------
41. வெலற்கு அரும் குஞ்சரம் வேட்டம் பட்டு எனத்
தலைத் தலை அவர் கதம் தவிர்ப்பத் தாழ்ந்து போய்க்
குலத் தலை மகளிர் தம் கற்பின் கோட்டகம்
நிலைப் படா நிறைந்தன பிறவும் என்பவே.
பொருள் : வெலற்கு அருங் குஞ்சரம் வேட்டம் பட்டு என - முன்பே வெல்வதற்கு அரிய களிறு பின்பு வேட்டையிலே அகப்பட்டால், அதனைக் குத்துக்கோற்காரர் குத்தி அதன் மதத்தை விலக்குமாறுபோல; தலைத்தலை அவர் கதம் தவிர்ப்பத் தாழ்ந்து போய் -வாய்க்கால்களின் இடந்தொறும் இடந்தொறும் நாட்டிலுள்ளார் படலிட்டு விரைவை அடக்க, அவை தணிந்து போதலால்; குலத்தலை மகளிர்தம் கற்பின் - நற்குடிப்பிறந்த மகளிருடைய கற்பைப்போல; கோட்டகம் பிறவும் நிலைப்படா நிறைந்தன-பயிருடைய நீர்நிலையும் ஏரி முதலியனவும் நிலை கொள்ளாமல் நிறைந்தன.
விளக்கம் : குஞ்சரத்திற்கு வாய்க்கால் உவமிக்கும் பொருள். கோட்டகம் - பயிருடைத்தான நீர் நிலை. பிற - ஏரி முதலாயின.
---------
42. கவ்வையும் கடும் புனல் ஒலியும் காப்பவர்
செவ்வன் நூறு ஆயிரம் சிலைக்கும் பம்பையும்
எவ் எலாத் திசைகளும் ஈண்டிக் காரொடு
பவ்வம் நின்று இயம்புவது ஒத்த என்பவே.
பொருள் : கடும்புனல் ஒலியும் - படலிட்டதினின்றும் குதித்து வழிந்துசெல்லும் நீரின் ஒலியும்; காப்பவர் கவ்வையும் - கரை காப்பாருடைய ஆரவாரமும்; நூறாயிரம் சிலைக்கும் பம்பையும் - நூறாயிரக்கணக்காக ஒலிக்கும் பறையொலியும்; எவ்எலாத் திசைகளும் ஈண்டி-எல்லா எல்லாத் திசைகளிலும் கூடி; காரொடு பவ்வம் நின்று இயம்புவது ஒத்த - காரும் கடலும் மாறாமல் முழங்குதலை ஒத்தன.
விளக்கம் : செவ்வன் - நேரே. காப்பவர் கவ்வையும் எனக்கூட்டுக. கவ்வை, சிலை, இயம்பல் என்பவை பல வேறுவகை ஒலிகள். கடும்புனல் - விரையும் புனல். கடி என்னும் உரிச்சொல் திரிந்தது.
---------
43. மாமனும் மருகனும் போலும் அன்பின
காமனும் சாமனும் கலந்த காட்சிய;
பூமனும் அரிசிப் புல் ஆர்ந்த மோட்டின
தாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே.
பொருள் : தம் தொழிலின் மிக்க - தம் உழவுத்தொழிலிலே சிறந்து நின்றனவாகிய எருமை முதலியன; மாமனும் மருகனும் போலும் அன்பின் - மாமனையும் மருகனையும் போலும் அன்பின; காமனும் சாமனும் கலந்த காட்சிய-காமனும் அவன் தம்பி சாமனும் கலந்து நின்றாலன்ன தோற்றத்தின; பூமனும் அரிசிப்புல் ஆர்ந்த மோட்டின - பூக்களையும் அரிசிப் புல்லையும் தின்ற வயிற்றினவாகி; இனம் அமைந்து (நின்றன) - திரளமைந்து நின்றன.
விளக்கம் : இதற்கு நின்றன என ஒருசொல் வருவிக்க. ஒன்றுக்கொன்று பிற்படின் வருந்தும் என்று அன்புகூறினார். சாமன்-காமன் தம்பி. ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே (தொல்.எச் - 36) என்பதனால் மோட்டின என்பதன் பின் ஆக்கம் வருவிக்க.
மோடு - வயிறு.
---------
44. நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம்
செறி மருப்பு ஏற்று இனம் சிலம்பப் பண்உறீஇப்
பொறி வரி வராலினம் இரியப் புக்கு உடன்
வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே.
பொருள் : நெறிமருப்பு எருமையின் ஒருத்தல் நீள்இனம் - (அவ்வாறு நின்ற) அறல்பட்ட கொம்பினையுடைய எருமைகளிற் கடாக்களின் பெருந்திரளையும்; செறி மருப்பு ஏற்றினம் - திண்ணிய கொம்புகளையுடைய எருத்தின் திரளையும்; சிலம்பப் பண்உறீஇ - முழங்குமாறு ஏரிற் பூட்டி; பொறிவரி வரால் இனம் இரிய உடன்புக்கு - புள்ளிகளையும் வரிகளையும் உடையவராலின் திரள் ஓட அவற்றுடன் புகுந்து; வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளம் - மணங்கமழும் கழனியில் உழுகின்றவர் வெள்ளம் என்னும் எண்ணிக்கை உடையவர் ஆயினர்.
விளக்கம் : சிலம்ப - முழங்க. பொறி - விளக்கம்.
ஏற்புடைத் தென்ப எருமைக் கண்ணும் (தொல் - மரபு. 37) என்பதனால் ஒருத்தல் என்றார்.
---------
45. சேறு அமை செறுவினுள் செந்நெல் வால் முளை
வீறொடு விளைக எனத் தொழுது வித்துவார்;
நாறு இது பதம் எனப் பறித்து நாள் செய்வார்;
கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார்.
பொருள் : வீறொடு விளைக எனத் தொழுது - (உழவர்கள்) சிறப்புற விளைக என்று நிலமகளைத் தொழுது; சேறுஅமை செருவினுள் செந்நெல் வால்முளை வித்துவார் - சேறாக அமைந்த வயலிலே செந்நெல்லின் வெள்ளிய முளையை விதைப்பர்; இது நாறு பதம் என பறித்து நாள் செய்வார் - இந் நாற்றுச் செவ்வி பெற்றது என்று பறித்து நாள் கொண்டு வைப்பர்; கூறிய கடைசியர் குழாம்கொண்டு ஏகுவர் - முதல் நாளிலேயே கூறி அமர்த்தப்பட்ட உழத்தியர் திரளை அழைத்துச் செல்வர்.
விளக்கம் : இத்துணை நிலத்திற்கு இத்துணைக் கடைசியர் என்று கூறிய என்றும் ஆம்.
---------
46. முலைத் தடம் சேதகம் பொறிப்ப மற்று அவர்
குலைத்து உடன் பதித்தலின் குதித்த வாள் கயல்
புலத்து இடைக் கவரி கன்று ஊட்டப் போந்த பால்
நிலத்து இடைப் பாய்ந்து அவை பிறழும் நீரவே.
பொருள் : முலைத்தடம் சேதகம் பொறிப்ப - தங்கள் முலைப்பரப்பிலே சேறு தெறிக்க; அவர் குலைத்து உடன்பதித்தலின் - அக்கடைசியர் நாற்றின் முடியைப் பிரித்து எல்லோரும் நடுதலின்; குதித்த வாள்கயல் - வெருவி நடாத இடத்தே குதித்த ஒளிமிகுங் கயல் மீன்கள்; புலத்திடைக் கவரி கன்று ஊட்டப்போந்த பால் நிலத்திடைப் பாய்ந்து - (அக்கடைசியர் நெருங்குதலின்) குறிஞ்சி நிலத்திலே கவரி தன் கன்றை யூட்டி மிகுந்து சொரிந்த பால் மறைத்த நிலத்திலே பாய்ந்து; அவை பிறழும் நீர-அவை அந்நிலத்திலே கிடந்து பிறழும் இயல்பின அந்நிலம்.
விளக்கம் : மற்று: வினைமாற்று. குறிஞ்சி நிலத்தே கவரி தன் கன்றை ஊட்டுதலான் அதற்கு மிக்குச் சொரிந்த பால் மறைந்த நிலத்திடை என்க. (மருதநிலத்துக் கயல் குறிஞ்சி நிலத்திலே வீழ்தலின் திணைமயக்கம் கூறியவாறு) கவரியும் கராமும் நிகரவற் றுள்ளே (தொல்.மரபு-17) என்றதனால், கன்று என்றார்.
---------
47. பால் சுவை அறிந்து அவை பழனத் தாமரை
மேல் செலப் பாய்தலின் வெரீஇய வண்டு இனம்
கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்
ஏற்றிய மாலைத் தேன் இரியப் பாய்ந்தவே.
பொருள் : அவை பாற்சுவை அறிந்த பழனத் தாமரைமேல் செலப் பாய்தலின் - அக்கயல்கள் அப்பாலின் சுவையை அறிந்து (நீரல்லாமையால்) கழனியில் உள்ள தாமரை மேலே செல்லப் பாய்தலின்; வெரீஇய வண்டினம் - (அதற்கு) அஞ்சியெழுந்த வண்டின் திரள்; முத்தம் கோப்பவர் கோல்தொடி நுளைச்சியர் - முத்தைக் கோப்பவராகிய திரண்ட வளையலணிந்த நுளைச்சியர்; ஏற்றிய மாலை தேன் இரியப் பாய்ந்த - சூடிய மாலையில் வண்டினம் ஓடப்பாய்ந்தன.
விளக்கம் : பாற்சுவை தெரிந்தன எனவும் பாடம்.
இச் செய்யுளும் குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் மூவகை நிலங்களும் மயங்கக் கூறலின் திணைமயக்கம் கூறியபடியாம். நுளைச்சியர் : நெய்தல் நிலமகளிர்.
---------
48. இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர
முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின்
அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம்
விருந்து எதிர் கொண்ம் எனத் தழுவி வீழ்ந்தவே.
பொருள் : முல்லையின் அரும்புபோது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் - முல்லையின் அரும்பு போதாக விரிந்து தேனைச் சொரியப்படும்; குவளையின் நெற்றி இரிந்த தேன் சேர்ந்து - குவளை மலரின் நெற்றியிலே முன்பு இரிந்த தேனினம் சேர்தலால்; அணிஞிமிறு முரிந்து ஆர்ப்ப - அதிலிருந்த ஞிமிறுகள் முரிந்து ஆரவாரிக்க; ஆய் பதம் விருந்து எதிர்கொணம் எனத் தைவர- (அத்தேனினம்) இவ் அழகிய உணவை நுமக்கு விருந்திடுகின்றேம், இதனை ஏற்றுக்கொண்மின் என்று கூறினாற்போல அவற்றைத் தடவிக்கொடுக்க; தழுவி வீழ்ந்த - அந்த ஞிமிறுகள் அத்தேனினத்தைத் தழுவி அதிலே வீழ்ந்தன.
விளக்கம் : கொண்மின் : (கொண்ம் என) விகாரம். இவற்றால் நில மயக்கங் கூறினார். இச் செய்யுளிற் கொண்டு கூட்டுப் பொருள் கோள் மிகுதி கொங்கு - தேன். ஞிமிறு, தேன் : வண்டின் இனங்கள்.
---------
49. வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலை
இள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின்
அளமரு குயிலினம் அழுங்கிப் பூம் பொழில்
உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே.
பொருள் : வளம்முடி நடுபவர் வரம்புஇல் கம்பலை-செழித்த நாற்றின் முடியை நடும் உழத்தியரின் எல்லையற்ற ஆரவாரத்தை; இளமழை முழக்குஎன மஞ்ஞை ஏங்கலின் - கார்காலத் தொடக்கத்திலே முகிலின் முழக்கமென்று நினைத்து மயில்கள் ஆரவாரித்தலின்; அளமரு குயில்இனம் அழுங்கி - உளஞ்சுழலும் குயிலின் திரள் (உண்மையென்று கருதி) வருந்தி; உளம்மெலி மகளிரின் பூம்பொழில் ஒடுங்கும் - (கணவரைப் பிரிந்து) உள்ளம் வருந்திய மகளிரைப்போலப், பூஞ்சோலையிலே பதுங்கும்.
விளக்கம் : கம்பலை - ஆரவாரம். ஏங்கல் - ஆரவாரித்தல்.
அளமரு : அலமரு : ளகர லகரப் போலி. குயில்: கார்காலத்தில் ஒடுங்கியிருக்கும்; வேனிலே இதற்குரியது. மயிலுக்குக் கார்காலமே விருப்பமூட்டும்.
---------
50. வளைக் கையால் கடைசியர் மட்டு வாக்கலின்
திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக்
களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையைத்
திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே.
பொருள் : கடைசியர் வளைக்கையால் மட்டு வாக்கலின் - உழத்தியர் வளையணிந்த கையினால் மதுவை வார்த்தலால்; திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழி - தொழிலிலே இடைவிடாமல் பயின்றவர் உண்ட மது தேங்கிய இடத்திலே; இள அனம் களிப்ப உண்டு - காம இன்பம் அறிந்த அன்னம் அதனை மயங்க உண்டு; கன்னி நாரையைத் திளைத்தலின் - காம இன்பம் அறியாத நாரையைக் கூடுதலின்; பெடைமயில் தெருட்டும் செம்மற்று - (அதனைக் கண்டு) மயிற்பெடை தன் மயிலைத் தெளிவிக்குந் தலைமைத்து.
விளக்கம் : மீண்டும் நடவுத்தொழில் முதலாகக் கூறுகிறார் (45-ஆம் செய்யுளில் முன் கூறினார்.) திளையா வரும் அருவி (சிற் - 294) என்றார் பிறரும். பெடையென்றும் மயிலென்றும் பிரிக்க. நீர் கள்ளுண்டு இதுபோல மயங்கன் மின் என்று தெருட்டிற்று. இனி, மயிலைக் கண்டாற் கள்ளின் களிப்புத் தீரும் என்றலின் அது தெருட்டிற் றென்றுமாம். தேங்கு உழி-தேங்கிய இடம். களித்தல் - கள்ளுண்டு மயங்குதல்.
---------
51. கண் எனக் குவளையும் கட்டல் ஓம்பினார்
வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார்
பண் எழுத்து இயல் படப் பரப்பி இட்டனர்
தண் வயல் உழவர் தம் தன்மை இன்னதே.
பொருள் : வண்ண வாள்முகம் என மரையின் உள்புகார் - காதல் மகளிரின் அழகிய ஒளிமிகும் முகம் என்று நினைத்துத் தாமரையாகிய களையின் அருகு செல்லாத உழவர்; கண் எனக் குவளையும் கட்டல் ஓம்பினார் - அவர்களுடைய கண்ணென்றே நினைத்துச் சூடுதற்குப் பறிக்குங் குவளையையும் களையாகப் பறிப்பதை நீக்கி; பண் எழுத்து இயல்படப் பரப்பியிட்டனர் - பண்ணினை எழுத்தின் வடிவு தோன்றப் பாடினர்; தண்வயல் உழவர்தம் தன்மை இன்னது - குளிர்ந்த வயலில் உழவரின் தன்மை இவ்வாறு இருந்தது.
விளக்கம் : குவளையும்: உம்மை (இழிவு) சிறப்பும்மை. ஓம்பினார்: வினையெச்சமுற்று (வினை முற்று வினையெச்சப் பொருளில் வந்தது) உள் புகார்: தொழிற்பெயர் (வினையாலணையும் பெயர்) தாமரையைக், கடவு ளொண்பூ அடைத லோம்பி (பெரும்பாண்-290) எனக் கூறுதலானும் அவர் பறியாரயிற்று. மரையினுள், என்னும் மரை என இருப்பின் செஞ்சொல் ஆகும். உருபும் இருப்பதாற் செஞ்சொலன்று. எஞ்சு பொருட் கிளவியான செஞ்சொல் அன்மை உணர்க; (தொல்-இடை-36) முகமும் கண்ணும் காதன்மையைத் தோற்றுவித்தலின் அதற்கேற்கப் பாடினாரென்க.
---------
52. நித்திலப் பந்துடன் ஈன்று பாதிரி
ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால்
தத்து நீர் நாரை மேல் எறியத் தண் கடல்
பைத்து எழு திரை எனப் பறவை ஆலுமே.
பொருள் : நித்திலப் பந்துஉடன் ஈன்று - முத்துப் பந்து போலும் முட்டையைச் சேர ஈன்று; ஒத்த பாதிரிப்பூ உடற்றிய நாவின் நாகினால் - தன் நாவிற்கு ஒத்த பாதிரியினது பூவைக் கெடுத்த நாவினையுடைய நத்தையாலே, நாரைமேல் தத்துநீர் எறிய-நாரையின்மேல், தத்தும் நீர் எறிய; தண்கடல் பைத்து எழுதிரை எனப் பறவை ஆலும் - குளிர்ந்த கடலில் விரிந்தெழும் அலைபோல அந்த நாரை மெல்ல எழுந்து ஒலிக்கும்.
விளக்கம் : நித்திலப் பந்து உவமத்தொகையில் வந்த ஆகுபெயர்; கந்தருவ வழக்கம் (இறை-1) என்றாற்போல. ஈன்று (நாவினை) உடைய என்க. இது வேண்டிய அளவிலே நீர் பாய்கின்றமை கூறிற்று.
---------
53. சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார்
செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல்
கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.
பொருள் : சொல் அருஞ்சூல் பசும்பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கரு இருந்து ஈன்று - நெல்லானது சூலுண்டென்று சொல்லற்கரிய பச்சைப் பாம்பின் தோற்றம்போல் மெல்லக் கருத்தங்கி ஈன்று; மேலலார் செல்வமேபோல் தலை நிறுவி - குடிப்பிறவாதார் செல்வத்தைப்போலத் தலையை நேரே நிறுத்தி; தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்த மெய்ப்பொருளை ஆராய்ந்த நூற்கல்வி பொருந்திய மக்களைப் போல மிகவும் வளைந்து விளைந்தன.
விளக்கம் : சொல்-நெல். அரு- சூலுண்டென்று சொல்லுதற்கரிய. மெல்ல-ஒழுக. தேர்ந்த -மெய்ப்பொருளை ஆராய்ந்த. தாறுபடுநெல் என்றார்போல, காய்த்த என்றார். செல்வமுடைய மேலலார்போல் தலைநிறுவி என்னவேண்டிய உவமையை மேலலார் செல்வமேபோல் தலைநிறுவி என்றது, உடையார் தொழில் உடைமைமேல் ஏற்றப்பட்டதோர் உபசார வழக்கு என்க.
---------
54. மீன் கணின் அளவும் வெற்று இடங்கள் இன்மையால்
தேன் கணக் கரும்பு இயல் காடும் செந் நெலின்
வான் புகழ் களிறு மாய் கழனி ஆக்கமும்
ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே.
பொருள் : மீன்கணின் அளவும் வெற்றிடங்கள் இன்மையால் - மீனினது கண்ணளவேனும் பாழ்நிலம் இன்மையால்; ஊன்கணார்க்கு உரைப்பரிது - மக்கட்குப் புகழ்தல் அரியதாய்; வான்புகழ் கழனி - வானவர் புகழும் கழனியில்; தேன்கணக் கரும்பியல் காடும் - தேன் இறாலின் திரட்சியை உடைய கரும்பு வளர்ந்த வயலும்; களிறுமாய் செந்நெலின் ஆக்கமும் - யானை நின்றால் மறையும் செந்நெல்லினது முதிர்ச்சியும்; உடைத்தாய் ஒல்என் சும்மைத்து - ஒல்லென்னும் ஓசையை உடைத்தாயிற்று.
விளக்கம் : முன் விளைவு கூறி, இதனால் முற்றினபடி கூறினார். மீன்கண் மிகவும் உருட்சியுடைமையின் இடங்குறித்தல் அரிது. (காடு-கழனி. 55ஆம் செய்யுளை நோக்குக.)
இதன்கண் களிறுமாய் கழனி என்றதனோடு களிறு மாய்க்கும் கதிர்க்கழனி எனவரும் மதுரைக்காஞ்சியினை (247)யும் நினைக. இத் தொடர்க் கருத்தை களிறு மாய்க்குஞ் செந்நெல் அங்குலை என்றும் (நைடதம்: சுயம்வர -138), யானை மறையக் கதிர்த்தலைச் சாலிநீடி என்றும் (பிரபுலிங். மாயையுற்-11) களிறுமாய்ப்பக் கதழ்ந்தெழு பூம் பயிர் என்றும் (தணிகை. நாட்-114) பிற்றைநாட் புலவர் பலரும் எடுத்தாள்வாராயினர்.
---------
55. ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன்
வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்
தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர்
ஆய் செந் நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே.
பொருள் : மள்ளர்கள் ஆய்பிழி விருந்து வண்டு அயிற்றி உண்டு - உழவர்கள் சிறந்த கள்ளை விருந்தாக வந்த வண்டினை ஊட்டிப் பிறகு தாமும் உண்டு; தேன் வாய்பொழி குவளைகள் சூடி - தேனைச் சொரியும் குவளைமலரை அணிந்து; தேய்பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினார் - தேய்ந்த பிறைமதி அனைய இரும்பைத் தம் வலக்கையில் ஏந்தினார்; ஆய் செந்நெல் அகன்ற காடு அரிகுற்றார்கள் - தேர்ந்த அகன்ற செந்நெற் காட்டை அரியலுற்றார்கள்.
விளக்கம் : குவளையை ஈண்டுக் களிப்பாற் பறித்துச் சூடினார். காடு பெருமை கூறிற்று. எறிகுற்றாரும் பாடம். விருத்துவண்டு, வன்றொடர் மொழியும் (தொல். எழுத்-குற்றியலுகரப்,9) என்னுஞ் சூத்திரத்தில், வல்லெழுத்திடை மிகும் என்னாது, ஒற்று என்ற மிகுதியான் இயல்பு கணத்துக்கண்ணும் மெல்லொற்றுத் திரிந்தது.
இச் செய்யுளின்கண் தேவர் உழவர்க்கியல்பாக அமைந்த விருந்தோம்பற் பண்பினை நினைந்து ஆய்பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு என்ற நுணுக்கம் உணர்க. விருந்தூட்டியுண்டல் சிறந்த தமிழர் பண்பு. அப் பண்பு உழவர்க்கே உரியதுமாம். இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் என்ற வள்ளுவர் பொன் மொழியும் (குறள். 1035) நினைக.
---------
56. வலியுடைக் கைகளால் மலர்ந்த தாமரை
மெலிவு எய்தக் குவளைகள் வாடக்கம் பலம்
பொலிவு எய்தப் பூம் பொய்கை சிலம்பிப் பார்ப்பு எழ
மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார்.
பொருள் : வலியுடைக் கைகளால் - அந்நெல்லை அரிதற்குத் தக்க ஆற்றலுடைய கைகளினால்; மலர்ந்த தாமரை மெலிவு எய்த - அக்கழனிகளில் மலர்ந்துள்ள தாமரைமலர்கள் வருந்தவும்; குவளைகள் வாட-குவளை மலர்கள் வாடவும்; கம்பலம் பொலிவு எய்த - ஆரவாரம் மிக்கெழுதலால்; பூம்பொய்கை பார்ப்பு சிலம்பி எழ - மலர்ந்த பொய்கையிலிருந்து குஞ்சுகளுட்படப் பறவைகள் ஒலியுடன் எழ; மலைபட அரிந்து கூன்குயம் கை மாற்றினார் - மலைபோலக் குவிய நெல்லை அரிந்துவிட்டு வளைந்த அரிவாளைக் கையிலிருந்து மாற்றினார்.
விளக்கம் : கம்பலம் : உரிச்சொல் திரிவு (கம்பலை). பொய்கை. பார்ப்பெழ என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. பட:உவமவுருபு.
முன்களை பறியாதவற்றை ஈண்டுக் களிப்பினால் அரிந்தார். உழவர் கையே உலகெலாந் தாங்கும் கை என்பது கருதி வலியுடைக்கைகளான் என்று தேவர் அடைபுணர்த்தனர் என்றல் சிறப்பு. என்னை? உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம், விட்டே மென்பார்க்கு நிலை என்பது பொய்யாமொழியன்றோ?
---------
57. வாளையின் இனம் தலை இரிய வண்டு அலர்
தாள் உடைத் தாமரை கிழிய வண் சுமை
கோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலில்
பாளை வாய் கமுகு இனம் பழங்கள் சிந்துமே.
பொருள் : கோளுடை இளையவர் குழாம் - தொழில் ஆற்றலுடைய இளைஞர் திரள்; வாளையின் இனம் தலை இரிய - வாளையின் குழு தம் இடத்திலிருந்து ஓடவும்; வண்டு அலர் தாளுடைத் தாமரை கிழிய - வண்டுகள் துகைத்து அலர்ந்த, நாளங்களையுடைய தாமரை மலர்கள் கிழியவும்; வண்சுமை கொண்டு ஏகலின்-வளவிய நெற்சூட்டைச் சுமந்து செல்வதால்; பாளை வாய் கமுகினம் பழங்கள் சிந்தும் - அச்சுமை பட்டு மடற்கமுகுகள் பழங்களைச் சிந்தும்.
விளக்கம் : தலை - இடம் வண்டு அலர் - வண்டு துகைத்து அலர்ந்த பாளைவாய் கமுகு - மடற் கமுகு. கோள் - ஆற்றல். இச் செய்யுளின்கண்,
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு
என்பதுபற்றி அந்நாட்டின்கண் மக்கள் வருந்தாமற் பெறாநின்ற வளம் கூறப்படுகின்றது. மேல்வரும் 58-60-61. 62-63-ஆம் செய்யுள்களும் இன்ன.
---------
58. சோர் புயல் முகில் தலை விலங்கித் தூ நிலம்
மார்பு கொண்டு ஆர்ந்து அது நரல வண் சுளை
ஆர்புறு பலாப் பழம் அழிந்த நீள் களம்
போர்பினால் மலிந்து உடன் பொலிந்த நீரவே.
பொருள் : புயல்சோர் முகில் தலைவிலங்கி - நீரைப் பொழியும் முகிலைத் தலைச்சென்று தடுக்குமாறு; தூநிலம் மார்புகொண்டு ஆர்ந்து - தூய நிலத்தின் மார்பையெல்லாம் தமக்கு இடமாகக் கொண்டு நிற்பதனால்; அது நரல - அந்நிலம் பொறுக்கமாட்டேன் என்று வாய்விடும்படி; வண்சுளை ஆர்புஉறு பலாப்பழம் அழிந்த நீள்களம் - செழுவிய சுளைகள் நிறைந்த பலாப்பழங்கள் அழிந்துகிடந்த நீண்ட களங்கள்; போர்வினால் உடன்மலிந்து பொலிந்த நீர - போர்களால் மிக்குப் பொலிந்த இயல்பின.
விளக்கம் : புயல் - நீர். விலங்கி: விகாரம்; விலங்க என்க. பழம்: களத்திற்கு அடை. நிலத்திற்குக் களம் சினையாம்.
இனி, நிலத்திலே முகிலை விலக்கிப் பழைய கூடுகள் நிறைந்திருப்பதனால் அங்ஙனம் அவை நிறைந்த நிலம் இப்பொழுது இடுகின்ற போரைப் பொறேன் என்று வாய்விடும்படி என்றுமாம். ஆர்பு கொண்டெனவே கூடுகள் பெற்றாம். முதலில் கூறிய பொருளுக்கு மார்பு எனவும், இரண்டாம் பொருளுக்கு ஆர்பு எனவும் பிரிக்க. ஆர்பு கொண்டு என்பதற்குக் கூடுகள் தோன்றா எழுவாய்.
59. ஈடு சால் போர் பழித்து எருமைப் போத்தினால்
மாடு உறத் தெளித்து வை களைந்து கால் உறீஇச்
சேடு உறக் கூப்பிய செந்நெல் குப்பைகள்
கோடு உயர் கொழும் பொனின் குன்றம் ஒத்தவே.
பொருள் : ஈடுசொல் போர் அழித்து - பெருமை நிறைந்த போரைத் தலையைத் தள்ளி; எருமைப் போத்தினால் மாடுஉறத்தெழித்து - எருமைக் கடாக்களினாற் பக்கத்தே உற உரப்பி; வை களைந்து-வைக்கோலைக் களைந்து; கால்உறீ இச் சேடுஉறக் கூப்பிய செந்நெற் குப்பைகள் - காற்றில் தூற்றி உயரமாகக் குவித்த செந்நெற் பொலிகள்;கோடு உயர் கொழும்பொனின் குன்றம் ஒத்த - முடிஉயர்ந்த வளமிகு பொன்மலை போன்றன.
விளக்கம் : ஈடு-இடுதலுமாம். பெற்றம் எருமை புலி மரை புல்வாய் - மற்றிவை யெல்லாம் போத்தெனப் படுமே (தொல்.மரபு-41.) (30)
60. கரும்பு கண் உடைப்பவர் ஆலை தோறெலாம்
விரும்பி வந்து அடைந்தவர் பருகி விஞ்சிய
திருந்து சாறு அடுவுழிப் பிறந்த தீம் புகை
பரந்து விண் புகுதலின் பருதி சேந்ததே.
பொருள் : கரும்பு கண் உடைப்பவர் ஆலைதோறும் விரும்பி வந்து அடைந்தவர் எலாம் பருகி - கரும்பைச் சாறு கொள்வாருடைய ஆலைதோறும் விரும்பி வந்து சேர்ந்தவரெல்லோரும் பருகி; விஞ்சிய திருந்து சாறு அடுவுழிப் பிறந்த தீம்புகை-மிக்க சாற்றைப் பாகுசெலுத்தக் காய்ச்சும்போது உண்டான இனிய புகை; விண்பரந்து புகுதலின் பருதி சேந்தது - வானத்திற் பரவிச் செல்வதால் ஞாயிறு சிவந்தது.
விளக்கம் : இனிக், கரும்பின் செய்தி கூறுகின்றார். எல்லாம் என்பது இருதிணைக்கும் பொது. பருகுதலின் திருந்திற்று. இனி இங்ஙனம் ஒன்று சேர்த்த பண்டங்களைக் கொண்டுபோகின்றமை கூறுகின்றார். (கண்-கணு.)
61. கிணை நிலைப் பொருநர் தம் செல்லல் கீழ்ப் படப்
பணை நிலையாய் செந்நெல் பகரும் பண்டியும்
கணை நிலைக் கரும்பினில் கவரும் பண்டியும்
மண நிலை மலர் பெய்து மறுகும் பண்டியும்.
பொருள் : கிணைநிலைப் பொருநர்தம் செல்லல் கீழ்ப்படப் பணைநிலை ஆய் செந்நெல் பகரும் பண்டியும் - (உழவர்) கிணைப் பொருநருடைய வறுமை நீங்கக் கொடுத்து, மிக்க நெல்லைப் பண்ணையிலிருந்து விற்றற்குக் காரணமான பண்டியும்; கணை நிலைக் கரும்பினில் கவரும் பண்டியும் - திரட்சியைப்பெற்ற கரும்பிலிருந்து பாகு முதலியன கொண்டுபோகும் பண்டியும்; மணம்நிலை மலர்பெய்து மறுகும் பண்டியும் - மணம் நிலைபெற்ற மலர்களை யிட்டுக்கொண்டு போகும் பண்டியும்;
விளக்கம் : இதுமுதல் மூன்று கவியும் ஒரு தொடர். பண்ணை-பணை என ஆனது விகாரம். நிலை - நிலைபெறுதல். கணை- திரட்சி. செல்லல் - துன்பம். கிணைப்பொருநர் : வேளாளரைப் புகழ்ந்து பாடுவோர். கிணை: தடாரி என்னும் ஒருவகைப் பறை. இவர்கள் ஏர்க்களம் பாடும் பொருநர். கவரும் - ஏற்கும். பண்டி - வண்டி.
62. மல்லல் அம் தெங்கு இள நீர் பெய் பண்டியும்
மெல் இலைப் பண்டியும் கமுகின் மேதகு
பல் பழுக்காய்க் குலை பெய்த பண்டியும்
ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும்.
பொருள் : மல்லல் அம் தெங்கு இளநீர் பெய் பண்டியும் - வளமிகும் அழகிய இளநீரைப் பெய்த பண்டியும்; மெல்இலைப் பண்டியும் - வெற்றிலை பெய்த பண்டியும்; கமுகின் மேதகு பல் பழுக்காய்க்குலை பெய்த பண்டியும் - கமுகிலிருந்து கிடைத்த சிறப்புமிகும் பல பழுக்காய்களை இட்ட பண்டியும்; ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும் - குழைந்த இனிய பண்டத்தை யேற்றி இடைவிடாது போகும் பண்டியும்;
விளக்கம் : மெல்லிலை: வினைத்தொகை. பழுக்காய் - பாக்கு.
63. கருங் கடல் வளம் தரக் கரையும் பண்டியும்
நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும்
பெருங் கலிப் பண்டிகள் பிறவும் செற்றுபு
திருந்தி எத் திசைகளும் செறிந்த என்பவே.
பொருள் : கருங்கடல் வளம்தரக் கரையும் பண்டியும் - கரிய கடலின் வளத்தை நகர்க்குத் தருதற்கு முழங்கும் பண்டியும்; நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும் - நெருங்க முதிரையால் நிறைந்த பண்டியும்; பிற செற்றுபு பெருங்கலிப் பண்டிகளும் ஒழிந்த பண்டங்கள் நிறைத்துப் பேரொலியையுடைய வரும் பண்டிகளும்; திருந்தி எத்திசைகளும் செறிந்த - ஒழுங்காக எல்லாத் திசைகளினும் நெருங்கின.
விளக்கம் : கடல்வளமாவன: ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம் - நீர்ப்படும் உப்பினோ டைந்து. நெருங்குபு: நிகழ்காலம் உணர்த்தும். பிறவும்: உம்மை (பண்டிகளும் என) மாறுக. செற்றுபு என்னும் எச்சம் ஒலியை உடைய என்னும் விரியொடு கூடும்.
நகர்க் கரையும் பாடமாயின், கரைதல் திசைச் சொல்லாய்க், கொண்டுபோம் என்னும் பொருள் பயக்கும். முதிரை - அவரை துவரை முதலியன.
64. கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலா
வள வயல் வைகலும் இன்னது என்ப தேன்
துளியொடு மதுத் துளி அறாத சோலை சூழ்
ஒளி அமை இருக்கை ஊர் உரைக்க நின்றவே.
பொருள் : கிளிவளர் பூமருது அணிந்து - கிளி வாழும் மலர்ந்த மருதினால் அணியப்பட்டு; கேடிலா வளவயல் வைகலும் இன்னது - கெடுதியில்லாத வளமுற்ற வயல் நாடொறும் இத்தன்மைத்து; உரைக்க நின்ற - இனி, யான் உரைப்பதற் கிருப்பவை; தேன் துளியொடு மதுத்துளி அறாத - தேன்துளியும் மதுவின் துளியும் நீங்காத; சோலைசூழ் ஒளி அமை இருக்கை ஊர் - பொழில்கள் சூழ்ந்த, ஒளிபொருந்திய குடியிருப்பையுடைய (நாட்டில் உள்ள) ஊர்கள்.
விளக்கம் : கேடு, விட்டில் கிளி நால்வாய் வேற்றரசு தன்னரசு; நட்டம் பெரும்பெயல் கால் எட்டு. என்ப:அசை. தேன். (தேனீக்கள் கொண்டுவந்து) வைத்த தேன். மது- பூவின் மது. மிக்க பெயலோடு, பெய லின்மையெலி விட்டில்கிளி - அக்கணர சண்மையோ டாறு என்பர் பரிமேலழகர்; (திருக்குறள் : 732-பரிமேலழகர்).
65. சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்விப் பூக்
காவில் கூடு எடுக்கிய கவ்விக் கொண்டு இருந்தன
தாவில் பொன் விளக்கமாத் தண் குயில் முழவமாத்
தூவி மஞ்ஞை நன் மணம் புகுத்தும் தும்பிக் கொம்பரோ.
பொருள் : சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்விப்பூ - அன்னச் சேவல்கள் இதழ்விரிந்த அழகையுடைய தாமரைப் பூவை; காவில் கூடு எடுக்கிய கவ்விக்கொண்டிருந்தன- பொழிலிற் கூடு எடுத்தற்பொருட்டுக் கவ்விக்கொண்டிருந்தன; தா இல் பொன்விளக்கம் ஆ - (அவ்வன்னச் சேவல்கள்) குற்றம் இல்லாத விளக்காகவும்; தண்குயில் முழவம் ஆ - தண்ணிய குயிலோசை முழவமாகவும்; தூவி மஞ்ஞை - பீலியையுடைய மயிலை; தும்பிக் கொம்பர் நன்மணம் புகுத்தும் - வண்டுகளையுடைய மலர்க் கொம்புகள் நன்மணத்தே புகுத்திவிடும்.
விளக்கம் : எடுக்கிய - எடுத்தற்கு: (எதிர்கால வினையெச்சம்). தா-வலி. தூவி-பீலி. மணம் - பூவின் மணமும் கலியாணமும்.
தாமரையானும் குயிலோசையானும் இளவேனில் என்று கருதி மயில் பூம்பொதுபரின் மறைதலின் கொம்பு புகுத்தும் என்றார்; பேடும் தோகை மயிலும் சேரஇருந்தன (மணம் புகுத்தற்கு) என்றார். இனி, மயில் அன்னம் விளக்காகக் குயில் முழவமாகத் தும்பியைக் கொம்பிடத்தே மணம் புகுத்தும் என்றுமாம். கொம்பு லுலாவுமயில், விளக்காலும் முழவாலும் அக்கொம்பினின்றும் போந்து ஆடுதலின், அம் கொம்பிற் பூவின் மணத்தே தும்பியைப் புகுதவிட்டதாயிற்று. மெல்லிய ஓசையன்மையின் குயிலோசையை முழவமாகக் கருதிற்று. இதற்கு இக்கருத்து நிகழ்தல் ஆடமைக் குயின்ற (82) என்னும் அகப்பாட்டிற் காண்க.
66. கூடினார் கண் அம்மலர்க் குவளை அம் குழி இடை
வாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏறப் பாய்வன
பாடு சால் கயிற்றில் பாய்ந்து பல் கலன் ஒலிப்பப் போந்து
ஆடு கூத்தி ஆடல் போன்ற நாரை காண்ப ஒத்தவே.
பொருள் : கூடினார்கண் அம்குவளை மலர் அம் குழியிடை - தம் கணவருடன் கூடின மகளிரின் கண் போன்ற அழகிய குவளை மலரையுடைய அழகிய ஓடையில்; வாடு வள்ளை மேலெலாம் வாளை ஏறப் பாய்வன - (நீர் குறைதலின்) சிறிது வாடின வள்ளையின் மேலே செல்ல வாளை மீன்களெல்லாம் பாய்கின்றவை; பாடு சால் கயிற்றிற் பாய்ந்து பல்கலன் ஒலிப்பப் போந்து ஆடு கூத்தி ஆடல்போன்ற - (கழாயினின்றும் இழிந்து) பக்கத்தில் அமைந்த கயிற்றிலே குதித்துப் பலவகை அணிகலன்களும் ஒலிப்ப ஆடுங் கூத்தியின் கூத்தைப் போன்றன; நாரை காண்ப ஒத்த - (கரையில் இருந்த) நாரைகள் காண்பன போன்றன.
விளக்கம் : குவளைக் குழியில் (வள்ளைக் கொடிபடர) நாட்டின கழையும் அதிற்படர்ந்த கொடியும், அதிற் பாய்கின்ற மீனும், கழாயும் அதன்கீழ் இழிந்து ஆடுங் கயிறும் கூத்தியும் போன்றன; வடிவும் தொழிலும் உவமம். காண்ப: அகரவீற்றுப் பலவறி சொல்: தொழிற் பெயராய் (வினையாலணையும் பெயராய்) நின்றது. (கழாய், கழை; மூங்கில். பாடு-பக்கம். ஒத்த; பலவின்பால் வினைமுற்று).
வள்ளைக் கொடியின்மேல் வாளைமீன் பாய்தல் கயிற்றிற் பாய்ந்து ஆடாநின்ற கூத்தியின் கூத்துப் போன்றிருந்தது; கரைக்கண் கூடியிருந்த நாரைக் குழாம் கூத்தாடல் காண்பாரை ஒத்திருந்தது என்பதாம்.
67. காவி அன்ன கண்ணினார் கயம் தலைக் குடைதலின்
ஆவி அன்ன பூந்துகில் அணிந்த அல்குல் பல் கலை
கோவை அற்று உதிர்ந்தன கொள்ளும் நீரர் இன்மையின்
வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்தவே.
பொருள் : காவி அன்ன கண்ணினார் கயம்தலைக் குடைதலின் - காவியனைய கண்களையுடைய மகளிர் வாவியிடத்தே விளையாடுதலின்; ஆவி அன்ன பூந்துகில் அல்குல் அணிந்த பல்கலை கோவை அற்று உதிர்ந்தன - பாலாவியன்ன பூவேலை செய்த ஆடையையுடைய அல்குலின் மேலணிந்த பல கலைகள் வடமற்று உதிர்ந்தன; கொள்ளும் நீரர் இன்மையின் - அவற்றை எடுப்பார் இல்லாமையால்; வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்த - வாவிகள் எல்லாம் மேகலையை அணிந்து, வானம் மீனைப் பூத்த தன்மையை ஒத்தன.
விளக்கம் : கயந்தலை : விகாரம் (கயத்தலை எனல் வேண்டும்.) பொன் : (கருவி) ஆகுபெயர். மேகலைக்கு உறுப்பானவை அற்று வீழ்ந்தன. கலை-மேகலை என்னும் அணிகலன். கொள்ளுநீரர் இன்மையின் என்றது பிறர் வீழ்த்த பொருளைத் தானும் எடுத்துக்கொள்ளாத நற்பண்புடையோர் அந்நாட்டு மக்கள் என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. எனவே, அந்நாட்டிற் கள்வாரிலாமை கூற வேண்டாதாயிற்று என்றபடி. இதனோடு.
மண்ணு நீராட்டின் மலைந்தன ராகி
வண்ண மணியும் வயிரமும் முத்தும்
இட்டன கொள்ளும் முட்டின ராதலின்
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
எனவரும் பெருங்கதையினையும் (2-5:54-6) நினைக.
68. பாசவல் இடிப்பவர் உலக்கை வாழைப் பல் பழம்
ஆசினி வருக்கை மா தடிந்து தேம் கனி உதிர்த்து
ஊசல் ஆடும் பைங் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ
வாசத் தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே.
பொருள் : பாசவல் இடிப்பவர் உலக்கை - புதிய அவலை இடிப்பவரின் உலக்கை; வாழைப் பல்பழம் ஆசினி வருக்கை மா தடிந்து தேன்கனி உதிர்த்து - பல வாழைப் பழங்களை (உதிர்த்து) ஆசினி வருக்கை மா ஆகியவற்றை முறித்து, அவற்றின் பழங்களையும் உதிர்த்து; ஊசல் ஆடு பைங்கமுகு தெங்கின் ஒண்பழம் பரீஇ- அசைகின்ற கமுகின் பழத்தையும் தெங்கின் பழத்தையும் நழுவச் செய்து; வாசம் தாழை சண்பகத்தின் வான்மலர்கள் நக்கும் மணமுறும் தாழை மலரையும் சண்பக மலரையும் தடவும்.
விளக்கம் : எனவே, ஏனையவும் பயன்தரும் என நிலநன்மை கூறினார். இத்துணையும் சோலைகளும் அவற்றிற்கு அங்கமான வாவிகளும் கூறினார். பசுமை+அவல்: பாசவல். பசுமை-புதுமை. ஆசினியும் வருக்கையும் பலாவின் வகைகள் இச் செய்யுள் உயர்வு நவிற்சியணி.
69. மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மா முலை சுரந்த பால்
நின்ற தாரையால் நிலம் நனைப்ப ஏகி நீள் மனைக்
கன்று அருத்தி மங்கையர் கலம் நிறை பொழிதர
நின்ற மேதியால் பொலிந்த நீர மாட மாலையே.
பொருள் : மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மாமுலை சுரந்த பால் - மணங்கமழும் மடுவின் மலர்களை மேய்தலாற் பெரிய மடிசுரந்த பால்; நிலம் நனைப்ப நின்ற தாரையால் - நிலத்தை நனைக்குமாறு மாறாது பெய்த தாரையாலே; ஏகி நீள்மனைக் கன்று அருத்தி - கன்றை நினைத்துப் பெரிய மனைக்குச் சென்று அதனை ஊட்டி; மங்கையர் கலம்நிறை பொழிதர நின்ற மேதியால் - மங்கையர் கொணர்ந்த கலமும் சாலும் நிறையுமாறு பொழிய நின்ற எருமைகளால்; மாடமாலை பொலிந்த நீர - மாட வொழுங்குகள் பொலிந்த தன்மையின.
விளக்கம் : இலஞ்சி - மடு: இடவாகு பெயர். நிறை -சால்; பீரிவர்வு பரந்தநீரறு நிறைமுதல் (பதிற்-15) என்றார் பிறரும். மாலை-ஒழுங்கு. அந்நாட்டில் கன்றுயிர் ஓய்ந்துகக் கறந்துபாலுண்ணும் கொடுமையில்லை என்பார், கன்றருத்தி மேதி கலம்நிறை பொழிதரும் என்றார். இக்கருத்தினைக் கறவை கன்றார்த்திக் கலநிறைபொழியும் எனவரும் மணிமேகலையினுங் (12:93) காண்க.
இலஞ்சி மேய்ந்து என்றது அங்ஙனம் அம்மேதிகள் பால்மிக்கனவாதற்குக் குறிப்பேது என்க.
70. வெள்ளிப் போழ் விலங்க வைத்து அனைய வாய் மணித் தலை
கொள் பவளம் கோத்த அனைய கால குன்றிச் செங்கண
ஒள் அகில் புகை திரண்டது ஒக்கும் மா மணிப் புறாக்
கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே.
பொருள் : வெள்ளிப்போழ் விலங்க வைத்தனைய வாய் மணித்தலை - (அம்மாடத்திலே) வெள்ளித்தகட்டை விலங்குதலாக வைத்தன்ன வாயினையும் அழகிய தலையினையும்; ஒள் அகிற்புகை திரண்டது ஒக்கும் மா மணிப்புறா - ஒள்ளிய அகிலின் புகை திரண்டதைப் போன்ற கரிய நிறத்தினையும் உடைய பெரிய மணிப்புறாக்கள்; கொள்பவனம் கோத்தனைய கால குன்றிச் செங்கண் கேடுஇல் பூவை பாட - அறுத்துக்கொண்ட பவளத்தைக் கோலத்தாலனைய கால்களையும் குன்றிமணியனைய சிவந்த கண்களையும் உடைய கெடுதியில்லாத பூவைகள் பாடா நிற்க; கிள்ளையோடு பால் உணும் - கிளிகளுடன் பால் பருகும்.
விளக்கம் : மா - கருமை நிறம். மணி - அழகு.
கொள்ளுதல்-அறுத்துக் கொள்ளுதல். நடுவு பல வரை உண்மையின், கோத்தனைய என்றார். ஒள்ளகில்; ஒண்மை, அகிற்கு அடை. சிலர் பாடப் பிள்ளைகள் பாலுண்டார் என்பதும் (தொனிப் பொருளாகத்) தோன்றிற்று. இச்செய்யுளின்கண் சொற்கிடந்தவாறே உவமைகளைப் புறவிற்கே கொள்ளுதலே சிறப்பாம். ஆசிரியர் நச்சினார்க்கினியர் அவையிற்றில் சிலவற்றை வாளா பூவைக் கேற்றுகின்றார். புறவினுக்கே ஏற்றுங்கால் அஃதொரு சொல்லோவியமாகும் அருமை உணர்க.
71. காடி உண்ட பூந் துகில் கழும ஊட்டும் பூம் புகை
மாட மாலை மேல் நலார் மணிக் குழலின் மூழ்கலின்
கோடு உயர்ந்த குன்றின் மேல் குழீஇய மஞ்ஞைதம் சிறகு
ஆடும் மஞ்சினுள் விரித்து இருந்த வண்ணம் அன்னரே.
பொருள் : காடி உண்ட பூந்துகில் ஊட்டும் பூம்புகை கழும-கஞ்சி யூட்டப்பெற்ற பூவேலை செய்த ஆடை அகிற்புகையிலே மயங்குதலால்; மாலை மாடம் மேல்நலார் மணிக்குழலின் மூழ்கலின் - ஒழுங்கான மாடங்களின்மேல் இருக்கின்ற நல்லாருடைய குழலில் ஊட்டும் புகையில் அக்குழல் மறைதலின்; கோடு உயர்ந்த குன்றின்மேல் குழீஇய மஞ்ஞை - உயர்ந்த முடியை உடைய குன்றின்மேல் திரண்ட மயில்கள்; தம் சிறகு ஆடும் மஞ்சினுள் விரித்து இருந்தவண்ணம் அன்னர் - தம் சிறகை அவ்விடத்து உலாவும் முகிலினுள்ளே விரித்திருந்த தன்மையை அம் மங்கையர் ஒத்தனர்.
விளக்கம் : காடி - கஞ்சி, சுட்டு (அக்குழல்) வருவிக்க. அன்னது என்ற பாடத்திற்கு மூழ்குதல் வண்ணம் என்னது அன்னது என்க. மங்கையர் கூந்தலுக்கும் காடி உண்டபூந்துகிலினுக்கும் அகிற்புகை ஊட்டுகின்றனர். கூந்தலுக்குக் கலாபம் உவமை.
72. கண் உளார் நும் காதலர் ஒழிக காமம் ஈங்கு என
உள் நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர்
வண்ண மேகலைகளைப் பற்ற அற்று உதிர்ந்தன
எண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே.
பொருள் : நும் காதலர் கண்ணுளார் - உம்மாற் காதலிக்கப்பட்ட மகளிர் உம் கண்களின் உள்ளனர்; ஈங்குக் காமம் ஒழிக என - ஈங்குக் காமத்தை ஒழிக என்று கூறி; உள்நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர் - உள்ளே நிலவுகின்ற விருப்பத்தாலே ஊடிப் போகின்றவரை அவர்களின் கணவர்கள்; வண்ணம் மேகலைகளைப் பற்ற அற்று உதிர்ந்தன - அழகிய மேகலைகளைப் பிடிக்க அவை அற்றுச் சிந்தினவை (கிடந்த இடம்) எண்இல் பொன் சுடுநெருப்பு உக்க முற்றம் ஒத்த - மாற்று அற்ற பொன்னைச் சுடும் நெருப்பைச் சிந்தின முற்றங்களைப் போன்றன.
விளக்கம் : இமையாது நோக்கலின் இங்ஙனம் ஊடினார். யாவை யீங்களிப்பன தேவர்கோன் (மணி. 14-48) என்னுமிடத்தும் ஈங்கு தன்மையிடத்தை உணர்த்தியது. தன்மையை உணர்த்துதல், செலவினும் வரவினும் (தொல்.கிளவி. 28) சூத்திரத்திற் கூறினாம். பொன்னுக்கும் நீலமணிக்கும் தழலும் கரியும் உவமை. இச்செய்யுள் வள்ளுவர் ஊடல் நுணுக்கத்தே கூறுவனபோன்றதோர் ஊடல் நுணுக்கமாதலுணர்க. மகளிர் தம்மை இமையாது நோக்கும் ஆடவர் கண்ணிலே தம்முருவந் தோன்றக்கண்டு நுங்காதலர் நுங்கண்ணுள்ளே உள்ளனர் என்று ஊடினர் என்பது கருத்து.
73. கோட்டு இளந் தகர்களும் கொய் மலர தோன்றி போல்
சூட்டு உடைய சேவலும் தோணிக் கோழி ஆதியா
வேட்டவற்றின் ஊறு உளார் வெருளி மாந்தர் போர்க் கொளீஇக்
காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே.
பொருள் : வெருளி மாந்தர் - செல்வச் செருக்கினையுடைய மாந்தர்கள், அவற்றின் ஊறு உளார் - அவற்றினுடைய புண்ணைக் கருத்தாதவராய்; வேட்டு - மேலும் போரை விரும்பி; கோட்டு இளந் தகர்களும் - கொம்புகளையுடைய இளமையான ஆட்டுக் கடாக்களையும்; கொய்தோன்றி மலரபோல் - கொய்யத் தகுந்த தோன்றி மலர்களைப்போன்ற; சூட்டு உடைய - சூட்டினையுடைய; தோணிக் கோழி ஆதியா - தோணியில் வந்த கோழி முதலாகக் கோழிகளையும்; சேவலும் - காடை முதலான சேவல்களையும்; காட்டிப் போர் கொளீஇ - காட்டிப் போரிற் பொருத்தி; ஆர்க்கும் கவ்வையும் - ஆரவாரிக்கும் ஒலியும்; கடியும் கவ்வை - கவ்வையே - விலக்கும் ஒலியுமே ஒலியாக (அங்குள்ளன).
விளக்கம் : இங்ஙனமாகிய ஆரவாரமேயன்றித் துன்ப முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரம் இல்லை என்பது குறிப்பு. கடியும் கவ்வையும் என்னல் வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.
74. இறு நுசுப்பின் அம் நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய
நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன
சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம்
இறை கொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே.
பொருள் : இறும் நுசுப்பின் அம்நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய நறவம் கொப்புளித்தலின் - இட்டிடையுடைய அழகிய மகளிர் மணிக் கிண்ணத்திலே எடுத்த மதுவைக் கொப்புளித்தலால்; நாகு புன்னை சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடெலாம் இறைகொள் வானின் மீன்எனப் பூத்தன - இளைய புன்னை மரங்கள் சிறகையுடைய வண்டுகள் செவ்வழி பாடுமாறு மாடங்களில் எல்லாம் தங்கிய விண்மீன்போல மலர்ந்தன; (நறவம் கொப்புளித்தலின்) அரம்பை முலையின் இருந்த - அவர்கள் மதுவைக் கொப்புளித்ததால் வாழை முகை முலைபோல இருந்தன.
விளக்கம் : நாகுபுன்னை வேற்றுமைத்தொகையாய், ஒற்றிடையின் மிகாமொழியும் (தொல்.குற்றியலுகரப் - 7) என்னுஞ் சூத்திரத்தான், ஒற்று அடாது நின்றது. சொல்லிய மரபின் (தொல்மரபு - 26) என்னுஞ் சூத்திரத்தில், சொல்லுங்காலை என்றதனால், நாகு பெண்மையேயன்றி, இளமையும் உணர்த்திற்று. நாகுமுதிர் நுணவம் (சிறுபாண்.51) என்றார் பிறரும். இறை -தங்குதல்.
மகளிரின் உதைத்தல் முதலிய செயல்களால் மலரும் மரங்களைச் சேர்ந்தவை புன்னையும் வாழையும் எனவே, அவர் கொப்புளித்தலால் அவை மலர்ந்தன என்றவாறு.
75. விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் முப் பழச் சுனைத்
தலைத் தணீர் மலர் அணிந்து சந்தனம் செய் பந்தரும்
கொலைத் தலைய வேல் கணார் கூத்தும் அன்றி ஐம் பொறி
நிலத் தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே.
பொருள் : ஊர்கள் -(நாட்டில் உள்ள) ஊர்கள்; யாவர்க்கும் விலக்கு இல் சாலை-யாவர்க்கும் விலங்குதல் இல்லாத உணவுச்சாலை முதலியனவும்; வெப்பு இல் முப்பழச் சுனைத்தலைத் தணீர்- வெப்பத்தை நீக்கும் கடுநெல்லி தான்றி சூழ இருக்கும் சுனையிலிருந்து காலையில் எடுத்த தண்ணீரிலே; மலர் அணிந்து சந்தனம்செய் பந்தரும் - பூவுமிட்டுச் சந்தனமும் இட்ட தண்ணீர்ப் பந்தரும்; கொலைத்தலைய வேற்கணார் கூத்தும் அன்றி - கொலைக்குரிய வேலனைய கண்ணையுடைய மகளிர் கூத்தாடும் இடமும் அல்லாமல்; ஐம்பொறி நிலத்தலைய துப்பு எலாம் நிறைதுளும்பும் - ஐம்பொறியும் நுகர்தற்கிடமான பொருள்கள் எல்லாம் நிறைந்து ததும்பும்.
விளக்கம் : நோயறுத்தற்கு கடுநெல்லி தான்றி சூழ வளர்ப்பார்கள். தலைய: இரண்டிடத்தும் வினைக்குறிப்பு. இவை அரசன் அறம்.
76. அடிசில் வைகல் ஆயிரம் அறப் புறமும் ஆயிரம்
கொடி அனார் செய் கோலமும் வைகல் தோறும் ஆயிரம்
மடிவு இல் கம்மியர்களோடு மங்கலமும் ஆயிரம்
ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பவே.
பொருள் : வைகல்தோறும் வைகல் அடிசில் ஆயிரம் -(அவ்வூர்களில்) நாடோறும் காணப்பட்ட வைகுதலையுடைய அடிசிற் சாலையும் ஆயிரம்; அறப்புறமும் ஆயிரம் - அறத்திற்கு விட்ட இறையிலி நிலங்களும் ஆயிரம்; கொடியனார் செய் கோலமும் ஆயிரம் - மகளிர் கோலஞ் செய்துகொள்ளும் இடங்களும் ஆயிரம்; மடிவுஇல் கம்மியர்களோடு மங்கலமும் ஆயிரம் - தொழிலிற் சோம்பியிராத கம்மியர்களும் ஆயிரவர்; திருமணமும் ஆயிரம்; வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்ப ஒடிவு இலை - வெவ்வேறாகிய ஆயிரம் பாதுகாப்பாராற் காக்கப்படுதலின் தவிர்தல் இல்லை.
விளக்கம் : இல்லையும் வேறாயிரமும் (இலை, வெறாயிரம் என வந்தன.) விகாரம். அறப்புறம் என்பதற்கு ஓதுவிக்குஞ் சாலையென்பதும் ஒன்று. ஒடிவு-தவிர்வு: ஒடியா விழவு (அகநா.149) என்றார் பிறரும். இறையிலி - வரியில்லாத நிலங்கள். இவை முற்றூட்டெனவும் படும்.
77. நல்தவம் செய்வார்க்கு இடம் தவம் செய்வார்க்கும் அஃது இடம்
நல் பொருள் செய்வார்க்கு இடம் பொருள் செய்வார்க்கும் அஃது இடம்
பெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்து என
மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு அரோ.
பொருள் : அந்நாடு வெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்தது என - அவ் ஏமாங்கத நாடு வெற்றியையுடைய தன தின்பத்தை உலகை விரும்பப் பண்ணுதற்கு வான்நாடு மகிழ்ந்து வீழ்ந்தது என்னும்படி; மற்ற நாடு வட்டம் ஆக வைகும்-தன்னை யொழிந்த நாடுகள் தனக்கு எல்லையாக நிலைபெறும்; அது நல்தவம் செய்வார்க்கு இடம் - அது வீடு பெற நல்ல தவம் புரிவார்க்கும் இடம்; தவம் செய்வார்க்கும் இடம் - மறுமை நினைந்து இல்லறம் நடத்துவார்க்கும் இடம்; நற்பொருள் செய்வார்க்கு இடம்-நல்ல பொருளைத் தருங் கல்வியைப் பயில்வார்க்கும் இடம்; அது பொருள் செய்வார்க்கும் இடம் - அதுவே நிலையில்லாத பொருளைத் தேடுவார்க்கும் இடம்.
விளக்கம் : உம்மை இரண்டும் (தவஞ் செய்வார்க்கும் பொருள் செய்வார்க்கும் என்பவற்றிலுள்ளவை) இழிவு சிறப்பு. வெற்றம் - வெற்றி. வீழ்ந்ததென: விகாரம். ஊருரைக்க நின்ற (சீவக. 64) என்ற கவி முதலாக முடித்த வினைகளைச் சேர்த்து, அவற்றையுடைய நாடு விண் வீழ்ந்தெனவைகும்; அஃது இவை செய்வார்க்கிடம் என்க. விழைவிப்பான் : எதிர்கால வினையெச்சம். துறவியாகையால் வீடு பெறுந் தவத்தை நற்றவம் என்றார். அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று என்று திருவள்ளுவர் உரைப்பது காண்க. நற்றவம் என்றும் தவம் என்றும் அடையடுத்தும் அடாதும் வந்த சொற்களுக்கு முன்னையது வீடுபெறுதற்குரியது என்றும், பின்னையது இல்லறம் என்றும், நற்பொருள் பொருள் என்று வருவனவற்றில் முன்னது கல்வி என்றும், பின்னது நென்மணி முதலிய பொருள் என்றும் நுண்ணிதின் உரை வகுக்கும் நச்சினார்க்கினியர் உரைநயம் உணர்ந்தின்புறற்பாற்று.
நகர் வளம் - புடை நகர்
வேறு
78. கண் வலைக் காமுகர் என்னும் மாபடுத்து
ஒள் நிதித் தசை தழீஇ உடலம் விட்டிடும்
பெண் வலைப் படாதவர் பீடின் ஓங்கிய
அண்ணல் அம் கடிநகர் அமைதி செப்புவாம்.
பொருள் : கண்வலை காமுகர் என்னும் மா படுத்து -கண்ணாகிய வலையாலே காமுகராகிய விலங்கை அகப்படுத்து; ஒள் நிதித் தசை தழீஇ உடலம் விட்டிடும் - ஒளிபெறும் செல்வமாகிய தசையைக் கைக்கொண்டு உடலைக் கைவிடும்; பெண்வலைப் படாதவர் பீடின் ஓங்கிய - பெண்ணின் சூழ்ச்சியில் அகப்படாத முனிவருடைய தவப்பயன் போலச் செல்வம் ஓங்கிய; அண்ணல் கடிநகர் அமைதி செப்புவாம் - பெருமைமிகும் காவலையுடைய இராசமா புரத்தின் நிறைவு கூறுமாம்.
விளக்கம் : அம் : சாரியை. மா-விலங்கு. தழீஇ : சொல்லிசை அளபெடை. பீடின் : இன்: ஐந்தனுருபு. கடி : உரிச்சொல். இனி, இச்செய்யுளைப் பெண்வலைப்படாத சான்றோர் பெருமையோடு மிக்குள்ள அண்ணலங் கடிநகர் எனக் கோடலுமாம். என்னை? ஒரு நாட்டின் சிறப்பிற்கு அதன்கண் சான்றோர் நிரம்பியிருத்தலே சிறந்த சான்றாம் என்ப. இக்கருத்தை எவ்வழி நல்லவர் ஆடவர், அவ் வழி நல்லை வாழிய நிலனே எனவரும் அவ்வை மெய்ம்மொழியினும், பொதியிலாயினும் இமயமாயினும் ....... புகாரேயாயினும் நடுக்கின்றி நிலைஇய என்பதல்லதை ஒடுக்கங்கூறார் உயர்ந்தோர் உண்மையின் எனவரும் இளங்கோவடிகளார் கூற்றினும் காண்க. இனி, இச் சிந்தாமணிச் செய்யுட்கு இப்பொருளே கொண்டு கம்ப நாடர் தமது காப்பியத்தின்கண் தொடக்கத்திலேயே இக் கருத்தினை,
ஆசலம்புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு முலையவர் கண்ணெனும்
பூசலம்பும் நெறியின் புறஞ்செலாக்
கோசலம்புனை யாற்றணி கூறுவாம்.
என்று மேலும் அழகுற அமைத்துள்ளனர். உடலம் விட்டிடும் என்புழி உடலம் வறிய உடலம் என்பது பட நின்றது. அண்ணலங் கடிநகர் என்றது தலைநகரம் என்பதுபட நின்றது.
79. விண்புகு வியன் சினை மெலியப் பூத்தன
சண்பகத்து அணிமலர் குடைந்து தாது உக
வண் சிறைக் குயிலொடு மயில்கண் மாறு கூஉய்க்
கண் சிறைப் படுநிழல் காவு சூழ்ந்தவே.
பொருள் : விண்புகு வியன்சினை மெலியப் பூத்தன - வானளாவிய பெரிய கிளைகள் வளையுமாறு பூத்தனவாகிய; சண்பகத்து அணிமலர் தாதுகக் குடைந்து - சண்பகத்தின் அழகிய மலரை மகரந்தப்பொடி சிந்தக் குடைந்து; மயில்களொடு குயில்மாறு கூய்-மயில்களுடன் குயில்கள் மாறாகக் கூவி; கண் சிறைப்படும் நிழல் காவு சூழ்ந்த - நோக்கினார் கண்கள் மீளாத நிழலையுடைய பொழில்கள் அந்நகரைச் சூழ்ந்தன.
விளக்கம் : மெலிய - வளைய. கார்காலத்து மயிலின் களிப்பைத் தான் உட்கோடலின் மாறு என்றார். மயிலொடென மாறுக. செய்தென் எச்ச அடுக்கு, அம்முக்கிளவியும் (தொல்.வினை-34) என்னுஞ் சூத்திரத்திற் பிறவினை கொள்ளும் என்றதனால், பிறவினையாகிய உடைய (நிழலையுடைய) என்னுங் குறிப்பினைக் கொண்டது. (கூவி என்னும்) இகர ஈறு (கூய் எனத்) திரிந்தது. இனி மேலிற் கவிக்கும் (கண்வலை) பொருந்த மயிலை உவமையாகு பெயர் வந்த ஆகுபெயரென்று மகளிராக்கி மகளிர் குயிலொடு மாறு கூவினார் என்றுரைப்பதும் ஒரு பொருள். இனிச், சண்பகத்தின் தேன் துளித்தலின் காரென்று இப்பொருளே சிறப்புடையது. மயிலொடு மயிலும், வேனிலாதலிற் குயிலொடு குயிலும் கூவிற்றென்றுமாம். சிறுபான்மையில் கூவிற்றென்றலும் மரபு.
80. கை புனை சாந்தமும் கடி செய் மாலையும்
மெய் புனை சுண்ணமும் புகையும் மேவிய
நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினால்
பொய்கைகள் பூம் படாம் போர்த்த போன்றவே.
பொருள் : கைபுனை சாந்தமும் - கையிற் புனைந்த சந்தனமும்; கடிசெய் மாலையும் - மணமிகு மாலையும்; மெய்புனை சுண்ணமும் - மெய்யில் அணிந்த சுண்ணப்பொடியும்; புகையும் - கூந்தலுக் கூட்டிய நறுமணப் புகையும்; மேவிய நெய்யோடு குங்குமம்-மெய்யிற் பூசிய புழுகுடன் குங்குமமும்; நிறைந்த பொய் கைகள் நிறைந்த வாவிகள்; நாணினால் பூம்படாம் போர்த்த போன்ற - நாணத்தினாற் பொலிவு மிகும் ஆடையைப் போர்த்த தன்மையை ஒத்தன.
விளக்கம் : மேவிய நெய்-பூசின புழுகு. குங்குமம் - குங்குமமும். இவை குளிப்பார் அணிந்தன. இனிப், பிறர் மாசுபட்டதென்னும் நாணினாலே பூவாகிய படாம் போர்த்ததுவுமாம்.
81. கடி நலக் கரும்பொடு காய் நெல் கற்றையின்
பிடி நலம் தழீஇ வரும் பெருங் கைக் குஞ்சரம்
அடி நிலை இருப்பு எழு அமைந்த கல் மதில்
புடை நிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே.
பொருள் : கடிநலக் கரும்பொடு காய்நெற் கற்றை - விளக்கமான நலந்தரும் கரும்பும் முற்றிய நெல் தொகுதியும் ஆகிய; இன்பிடி நலம் தழீஇ வரும் பெருங்கைக் குஞ்சரம் - இனிய கவளத்தின் நலத்தை விரும்பி வரும் நீண்ட துதிக்கையை யுடைய களிறுகள் நிற்றலையுடைய; அடிநிலை இருப்பு எழு அமைந்த - அடியிளகாமல் நிற்றலையுடைய கணையமரம் அமைந்த, நன்மதிள் புடைநிலை வாரிகள்-நல்ல மதிலின் உட்புறத்திலே நிலைபெற்ற யானைக் கூடங்கள்; பொலிந்த சூழ்ந்த - பொலிவுடன் சூழ்ந்துள்ளன.
விளக்கம் : பெருங்கையாவது : நிலந்தோய் துதிக்கை. வாரி - யானைக்கூடம். இவை மதிலின் உட்புறத்தே அமைந்துள்ளன. எழு-கணைய மரம். யானையுண்ணும் உணவு கவளம். மதிள்: மதில் என்பதன் போலி.
82. சல சல மும் மதம் சொரியத் தம் தம்முள்
கொலை மருப்பு இரட்டைகள் குளிப்பப் பாய்ந்து இரு
மலை திளைப்பன என நாகம் ஆன்ற போர்
குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்தவே.
பொருள் : இரு மலை திளைப்பன என - இரண்டு மலைகள் தம்மிற் போர் செய்வனபோல; சலசல மும்மதம் சொரிய -சலசல என்று மும்மதங்களும் பெய்ய; கொலை மருப்பு இரட்டைகள் குளிப்பப் பாய்ந்து - கொலைபுரியும் இரு கொம்புகளும் தைத்து மறையத் தாக்கி; நாகம் தத்தமுள் ஆன்ற போர் - களிறுகள் தமக்குள் பெரும்போர் புரிய; குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்த - வளைத்த நிலைபெற்ற களங்களும் அழகு நிறைந்தன
83. முத்து உடை வெண் மருப்பு ஈர்ந்து மொய் கொளப்
பத்தியில் குயிற்றிய மருங்கில் பல்வினைச்
சித்திரக் கிம்புரி வைரம் சேர்த்துநர்
ஒத்துஇயல் இடங்களும் ஒழுங்கு நீண்டவே.
பொருள் : முத்துஉடை வெண் மருப்பு ஈர்ந்து - முத்துக்களையுடைய வெள்ளிய கொம்புகளை அறுத்துக் (கூர்மையிட்டு); மொய்கொள - அவை வலிமை கொள்ளுமாறு இடும்; பத்தி மருங்கில் பல்வினைக் குயிற்றிய சித்திரக் கிம்புரி - பத்தி மருங்கிலே பல தொழில்களைச் செய்த அழகிய தந்தப்பூணில்; வைரம் சேர்த்துநர் ஒத்துஇயல் இடங்களும் ஒழுங்கு நீண்ட -வைரம் இடுவோர் தம்மிற் பொருந்தி வாழுந் தெருக்களும் ஒழுங்குடன் நீண்டிருந்தன.
விளக்கம் : (பத்தியின்): இன்: அசை. இனி, கிம்புரி வைரம்-கோளகையுமாம்: ஆகுபெயர். கோளகை - யானைத் தந்தப்பூண்.
84. ஓடு தேர்ச் சாரிகை உகு பொன் பூமியும்
ஆடகம் ஆற்றும் தார்ப் புரவி வட்டமும்
கேடக வாள் தொழில் இடமும் கேடு இலாக்
கோடு வெம் சிலைத் தொழில் இடமும் கூடின்றே.
பொருள் : ஓடு தேர் சாரிகை உகுபொன் பூமியும் - ஓடும் தேரின் விரைவினாலே சிந்தும் பொன்னையுடைய தேரேறும் இடங்களும்; ஆடகம் மற்றும் தார்ப்புரவி வட்டமும் - பொன்னாலான தாரினையுடைய குதிரையேறும் இடங்களும்; கேடக வாள் தொழில் இடமும் - கேடகத்துடன் வாட்பயிற்சி செய்யும் இடங்களும்; கேடுஇலாக் கோடு வெஞ்சிலைத் தொழில் இடமும் கூடின்று - பயில்வதிற் குறையில்லாத வளைந்த விருப்பம் ஊட்டும் விற் பயிற்சி செய்யும் இடமும் கூடிற்று.
விளக்கம் : ஆடகத்தார்: வேற்றுமைத்தொகை. கோடு சிலை: வினைத்தொகை. கூடின்று: ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று.
இடைநகர்
85. புடை நகர்த் தொழில் இடம் கடந்து புக்க பின்
இடை நகர்ப் புறம் பணை இயம்பும் ஓசை ஓர்
கடல் உடைந்தது எனக் கலந்தது அக் கடல்
மடை அடைத்து அனையது அம் மாக்கள் ஈட்டமே.
பொருள் : புடைநகர்த் தொழில் இடம் கடந்து புக்கபின் - புறநகரில் தொழில் செய்வாரிடத்தை யான் ஒருவாற்றாற் கூறி இடை நகரினது தன்மைகூறத் தொடங்கினபின்; புறம்பணை இசைக்கும் இடைநகர் ஓசை-புடைநகர்ப் புறமாகிய மருத நிலத்தே சென்றொலிக்கும் இடைநகரின் ஓசை; கடல் உடைந்தது எனக் கலந்தது - கடல் உடைந்தாற்போல ஆங்குப் பொருந்தியது; அம்மாக்கள் ஈட்டம் - அவ்வோசை பிறத்தற்குக் காரணமான மாக்களின் தொகுதி; அக் கடல்மடை அடைத்தனையது - அதன் உடைப்பை உலகு குவிந்தடைக்குந் தன்மையை ஒத்தது.
விளக்கம் : ஆதலால் என்னாற் கூறுதல் அரிது. கடந்து என்றார் கூறுதல் அருமை பற்றி. புகுதல் - சொல்லப்புகுதல். அடைத்தனையது: (அடைக்குந் தன்மையது என்று பொருள்படுவதால்) கால மயக்கம். இனி, புடைநகரிலே தொழில் செய்யும் இடத்தைக் கடந்து உள்ளே சென்றால்... அடைத்தனையது என அந்நகரைக் காண் போருக்குக் கூறுதல்போலப் பொருள்கொள்வதே சிறப்புடையதாதலைக் காண்க.
86. சிந்துரப் பொடிகளும் செம் பொன் சுண்ணமும்
சந்தன நீரோடு கலந்து தையலார்
பந்தொடு சிவிறியில் சிதறப் பார் மிசை
இந்திர வில் எனக் கிடந்த வீதியே
பொருள் : சிந்துரப் பொடிகளும் செம்பொன் சுண்ணமும் சந்தன நீரொடு கலந்து - சிவப்புநிறப் பொடிகளையும் பொற் சுண்ணங்களையும் சந்தனத்தையும் பனிநீரிலே கலந்து; பந்தொடு சிவிறியில் தையலார் சிதற - மட்டத்துருத்தியாலும் நெடுந்துருத்தியாலும் மங்கையர் சிதற; பார்மிசை இந்திரவில் என வீதி கிடந்த - (அவை) பாரிலே கிடந்த இந்திர வில்போலத் தெருவிலே கிடந்தன.
87. பாத்தரும் பசும் பொன்னின் மாடத்து உச்சி மேல்
தூத் திரள் மணிக் குடம் நிரைத்துத் தோன்றுவ
பூத்தன வேங்கை மேல் பொலிந்து கார் நினைந்து
ஏத்தரும் மயில் குழாம் இருந்த போன்றவே.
பொருள் : பாத்து அரும் பசும்பொனின் மாடத்து உச்சி மேல் - மாற்றற்ற அரிய புதிய பொன்மயமான மாடங்களின் உச்சியில்; தூத்திரள் மணிக்குடம் நிரைத்துத் தோன்றுவ - தூய திரண்ட நீல மணிக்குடம் நிரையாகத் தோன்றுவன; பூத்தன வேங்கைமேற் கார்நினைந்து - மலர்ந்த வேங்கை மரங்களின்மேல் முகிலை நினைத்தலால்; ஏத்தரு மயில் குழாம் பொலிந்து இருந்த போன்ற - மேனோக்கிய மயிலின் திரள் பொலிவுடன் இருந்தன போன்றன.
விளக்கம் : ஏக்கழுத்தம் (சீவக.496) என்றார் பின்னும். பூத்தன வேங்கை : பூத்தன : வினைமுற்றுப் பெயரெச்சமாயிற்று பூத்த வேங்கை வியன்சினையேறி மயிலினம் அகவும் நாடன் (யாப் பருங்கலவிருத்தி, 50 உரை மேற்கோள்.)
88. நெடுங் கொடி நிழல் மதி நெற்றி தைவர
உடம்பு வேர்த்து இன மழை உரறி நோக்கலின்
நடுங்குபு நல் வரை மாடத்து உச்சியில்
அடங்கி வீழ்ந்து அருவியின் அழுவ போன்றவே.
பொருள் : நெடுங்கொடி நிழல்மதி நெற்றி தைவர - நீண்ட கொடி மிக்குச்சென்று ஒளிவிடும் திங்களின் நெற்றியைத் தடவுதலின்; இனமழை உடம்பு வேர்த்து உரறி நோக்கலின் - திரண்ட மேகங்கள் மெய்புழுங்கி வேர்த்து இடித்து நோக்கிப் பெய்தலின்; அருவியின் நடுங்குபு - உள்ள அருவித் திரளால் நடுங்கியவாறு; நல்வரை மாடத்து உச்சியில் அடங்கி வீழ்ந்து அழுவ போன்ற - அழகிய மலையனைய மாடங்களின் உச்சியிலே குவிந்து வீழ்ந்து அழுவனபோலே யிருந்தன.
விளக்கம் : சிலர் கோபத்திற்கஞ்சிச் செருக்கடங்கி அழுதனர் என்பது போதரும் (குறிப்புப் பொருள்).
89. பொன் சிறு தேர் மிசைப் பைம் பொன் போதகம்
நல் சிறார் ஊர்தலின் நங்கைமார் விரீஇ
உற்றவர் கோழி மேல் எறிந்த ஒண் குழை
மற்று அத் தேர் உருள் கொடா வளமை சான்றவே.
பொருள் : விரீஇ உற்றவர் நங்கைமார் கோழிமேல் எறிந்த ஒண்குழை - நெல்லுப் பார்த்திருக்கும் பெண்கள் கோழிமேல் எறிந்த ஒளிமிகுங் காதணி; பொன் சிறு தேர்மிசைப் பொலிந்த போதகம் நல்சிறார் ஊர்தலின் - பொன்னாலான சிறு தேரில் விளங்கும் யானையின்மேல் அழகிய சிறுவர்கள் ஊர்ந்து செல்கையில்; அத்தேர் உருள்கொடா வளமை சான்ற - அத்தேரை உருளாவண்ணம் புரியும் வளங்கள் நிறைந்தன.
விளக்கம் : விரீகி என்பது விரீஇ என ஆயிற்று. மற்று: அசை. விரீஇ - நெல். குழைகொண்டு கோழி யெறியும் வாழ்க்கையர் (தொல். சொல்.452. இளம் - உரை மேற்கொள்.) இச் செய்யுளோடு,
நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்கால் புதல்வர் புரவியின் றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்.
எனவரும் பட்டினப்பாலையை (22-6) நினைக. இஃது அந்நகரக் குடிமக்களின் செல்வ மிகுதியைக் குறிப்பான் உணர்த்தியவாறாம்.
90. மாலையும் பசும் பொ(ன்)னும் மயங்கி வார் கணைக்
கோல் எயும் குனி சிலை நுதலினாரொடு
வேல் இயல் ஆடவர் விரவி விண்ணவர்
ஆலயம் இது என ஐயம் செய்யுமே.
பொருள் : மாலையும் பசு பொனும் மயங்கி - மாலையும் புதிய பொற்பூணும் கலக்கப்பட்டு; வார் கணைக்கோல் எய்யும் குனிசிலை நுதலினாரொடு - நீண்ட அலகினையுடைய அம்பை எறியும் வளைந்த வில்லைப்போன்ற புருவ மங்கையருடன்; வேல் இயல் ஆடவர் விரவி - வேல் பயிலும் ஆடவர்கள் கலக்கப்பட்டு; இது விண்ணவர் ஆலயம் என ஐயம் செய்யும் - இது வானவரின் இருப்பிடம்போலும் என்ற ஐயத்தை அந்நகர் உண்டாக்கும்.
விளக்கம் : கணை-அலகு. பசும்பொன், கருவியாகு பெயராகப் பூண்களை உணர்த்தியது.
91. கல் சுணம் செய்த தோள் மைந்தர் காதலால்
நல் சுணப் பட்டு உடை பற்ற நாணினால்
பொன் சுணத்தால் விளக்கு அவிப்பப் பொங்கிய
பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே.
பொருள் : கல் சுணம் செய்த தோள் மைந்தர் - கல் தூணைப் பொடிசெய்த தோளையுடைய ஆடவர்; காதலால் நல் சுணப்பட்டு உடைபற்ற -(மகளிர் புலந்து செல்லும்போது) தம் காதலால் அவர்களுடைய அழகிய சுண்ணம் கலந்த பட்டுடையைப் பற்ற; நாணினால் பொற்சுணத்தால் விளக்கு அவிப்ப-அது நெகிழ்ந்த நாணத்தால் அம்மகளிர் அழகிய சுண்ணப் பொடியைக் கொண்டு விளக்கை அவிப்ப; பொங்கிய பொற்சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்று - மிகுந்த சிதறிய சுண்ணப் பொடி புறத்தே உள்ள மருதநிலத்தே பரவும் பொலிவினது அந்நகர்.
விளக்கம் : கல்-உலம் (தூண்). சுண்ணப்பட்டு-சுண்ணம் அளைந்த பட்டு. காதலார் என்றும் பாடம். நான்கிடத்தும் சுண்ணம் சுணம் என நின்றது. இது தொகுக்கும் வழித்தொகுத்தலாம். பொற்சுணத்தால் என்புழி ஆலுருபு ஐயுருபாகவும் அதன்பொருள் ஆகிய கருவி செயப்படுபொருளாயும் வந்தன. இதற்கு விதி உருபினும் பொருளினும் மெய்தடுமாறி இருவயின் நிலையும் வேற்றுமை எல்லாம் திரிபிடன் இலவே தெரியு மோர்க்கே (தொல். வேற்றுமை மயங்கியல், 18) என்பதாம்.
92. நலத்தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர்
உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம்
நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்க்
கலத்து உயர் கூம்பின் மேல் ஆடும் கௌவைத்தே.
பொருள் : நலம் தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர் - விரும்பத் தகுகின்ற சுண்ணத்தை நின்று இடிக்கும் மகளிரின்; உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண்பழம் - உலக்கையால் கழன்றனவாகிய சிறந்த தெங்கின் பழங்களை; அவை நிலத்துச் சொரிதலின்-அம்மரங்கள் மடலில் தாங்கி நிலத்தில் விடுதலின்; வெரீஇய மஞ்ஞை போய்- அஞ்சிய மயில் ஓடிச்சென்று; கலத்து உயர் கூம்பின்மேல் ஆடும் கௌவைத்து -(அச்சம் நீங்கி) மரக்கலத்திலே உயரமான பாய்மரத்தின்மேல் ஆடும் ஆரவாரமுடையது அந்நகர்.
விளக்கம் : நலத்தகு : வியத்தகு என்றாற்போல நின்றது. நானம்: ஆகுபெயர், அதிலே நனைத்திடித்தலின். (நானம்-புழுகு. இதன் பெயர் இதனில் நனைத்து இடிக்குஞ் சுண்ணத்திற்கு ஆயினமையின் சினையாகுபெயர்.) புகாரினது ஆழத்தால் நகரளவும் கலம் வந்தது; அரசன் விளையாடுதற்குச் சமைத்தனவும் ஆம். புகார் : துறைமுகம்.
93. இட்ட எள் நிலம்படா வகையில் ஈண்டிய
முட்டு இலா மூவறு பாடை மாக்களால்
புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகிய
மட்டு இலா வள நகர் வண்ணம் இன்னதே.
பொருள் : இட்டஎள் நிலம்படா வகையின் ஈண்டிய - போகட்ட எள் நிலத்திலே வீழாதவாறு திரண்ட; முட்டிலா மூவறு பாடை மாக்களால் - குறைவற்ற பதினெட்டு மொழி பேசும் மாக்களாலே; புள்பயில் பழுமரம் பொலிவிற்று ஆகிய - பறவைகள் வாழும் பழுத்த மரத்தின் இயல்பினையுடைய; மட்டு இலா வளம்நகர் வண்ணம் இன்னது - அளவற்ற வளந்தரும் நகரின் இயல்பு இதுவரை கூறியவாறாகும்.
விளக்கம் : மிலேச்சராதலின் ஐயறிவிற்குரிய மாக்கள் என்னும் பெயராற் கூறினர். இதனானே நெருக்கமும் ஓசை வேறுபாடும் பயன்கோடலும் கூறினர். கடிநகர் அமைதி செப்புவாம் (சீவக.78) என்றது முதலாக நடுவுகூறிய வினைகளைப், புடைநகர்த் தொழிலிடங் கடந்து (சீவக.85) என்பதனோடு முடித்து, அதுமுதல் இடைகளிற் கூறிய வினைகளை, இன்னது என்பதனோடு முடிக்க.
அகழியின் தோற்றம்
94. தங்கு ஒளி நித்திலத் தாமம் சூடிய
வெம் களி இள முலை வேல் கண் மாதரார்
பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும்
கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம்.
பொருள் : தங்குஒளி நித்திலத் தாமம் சூடிய - நிலைபெற்ற ஒளியையுடைய முத்துமாலையை அணிந்த; வெங்களி இளமுலை வேற்கண் மாதரார் - விருப்பமும் மகிழ்ச்சியுந் தரும் இளமுலைகளையும் வேலனைய கண்களையும் உடைய மங்கையர்; பைங்கிளி முன்கைமேல் கொண்டு பார்ப்பு எணும் - பசுங்கிள்ளையை முன் கையிலேந்தி அன்னப் பார்ப்புகளை அக்கிளிக்கு எண்ணிக் காட்டுதற்குரிய; கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம் - தேன் கமழும் தாமரை மலர் நிறைந்த அகழிகளைக் கூறுவோம்.
விளக்கம் : சூடிய என்றார், முலைமுடி சூடிற்று என்றாற்போல. வெம்மை - விருப்பம். மேல், தாமரை கூறுதலின் பார்ப்பு அன்னப் பார்ப்பு. (பார்ப்பு - பறவைக் குஞ்சு).
95. கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள்
ஆள் பெறா திரிதர அஞ்சிப் பாய்வன
மோட்டு இறா பனிக் கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து
ஈட்டறாப் புள் இனம் இரற்றும் என்பவே.
பொருள் : கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள் - ஆற்றல்மிகும் சுறாவின் இனத்துடன் முதலைத் திரள்கள்; ஆள் பெறா திரிதர-கரையிலே ஆட்களை எதிர்ப்படப் பெறாமல் உள்ளே திரிதலால், அஞ்சிப் பாய்வன மோட்டு இறா- அவற்றிற் கஞ்சி விரைந்து பாயும் பெரிய இறா மீன்கள்; பனிக்கிடங்கு உழக்க-குளிர்ந்த அகழியைக் கலக்குதலால்; ஈட்டு அறாப் புள்ளினம் எழுந்து இரற்றும் - கூட்டம் பிரியாத பறவைத்தொகுதி எழுந்து ஆரவாரிக்கும்.
விளக்கம் : முன்னே கழியணைந்தமை (92-ஆஞ் செய்யுள்) பெறுதலின் சுறவு கூறினார். (கழி :உப்பங்கழி.) கரையில் அஞ்சி ஆழத்திற் சென்றால் ஆளைக் கொல்லுதல் அவற்றிற்குத் தொழில்.
96. சிறை அனப் பெடையினோடு ஊடிச் சேவல் போய்
அறு பத வண்டு இனம் ஆர்ப்பத் தாமரை
உறைவது குழுவின் நீங்கி யோகொடு
கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே.
பொருள் : சிறை அனம் பெடையினோடு சேவல் ஊடிப் போய் -சிறகினையுடைய அன்னப் பறவையோடு சேவல் பிணங்கிச் சென்று; அறுபத வண்டினம் ஆர்ப்பத் தாமரை உறைவது - ஆறு கால்களையுடைய வண்டின் கூட்டம் முரலத் தாமரை மலரிலே குவிந்திருப்பது; குழுவினின் நீங்கி - சுற்றத்தினின்றும் நீங்கி; கறைஅற யோகொடு முயல்வதோர் கடவுள் ஒத்தது - குற்றம் நீங்கத் (தீயிடை நின்று) யோகத்தோடு தவஞ்செய்யும் ஒரு கடவுளைப் போன்றது.
விளக்கம் : யோகம்: யோகு எனத் திரிந்தது. கறை - மும்மலம், எழுந்த வண்டு புகைக்கும், பூ நெருப்பிற்கும் உவமம். மும்மலம்: காமம், வெகுளி, மயக்கம். இதன்கண் வண்டினம் ஆர்ப்பத் தாமரை என்று வந்தமையால் தீயிடைநின்று என்று பொருள் கூறி, மேலும் வண்டு புகைக்கும் பூ நெருப்பிற்கும் உவமம் என்று விளக்குதல் போற்றத்தக்கதாம்.
97. அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது
கருங் கலம் தோய்விலாக் காமர் பூந் துறை
குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம்
விருந்து செய்திட வெறி மேனி சேந்ததே.
பொருள் : அரும்பொனும் வெள்ளியும் மணியும் அல்லது - அரிய பொன்னாலும் வெள்ளியாலும் மணியாலும் ஆன குடங்களல்லாமல்; கருங்கலம் தோய்வு இலாக் காமர் பூந்துறை -மட்குடம் முகவாத அழகிய மலர்நிறைந்த நீர்த்துறை; குரும்பை மென்முலையின்மேல் குலாய குங்குமம் - (அங்கே குளிக்கும் மகளிரின்) தென்னங் குரும்பை அனைய மெல்லிய கொங்கைகளின்மேற் பூசிய குங்குமம் ; விருந்து செய்திட வெறி மேனி சேந்தது -(தன்னைப்) புதுமை செய்தலால் மணத்துடன் மெய் சிவந்தது.
விளக்கம் : பொன் முதலிய காரணப் பெயர் அவற்றான் இயன்ற காரியத்தின்மேல் நின்ற (காரண) ஆகுபெயர். வெறி - மணம். காமம் மரு என்னும் சொல் காமர் எனக் குறைந்தது. கருங்கலம் வனைந்து சுடப்படுதலாற் கருநிறமுடைய மட்கலம் என்பதுபட நின்றது.
98. பட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல்
அட்டு ஒளி அரத்தம்வாய்க் கணிகை அல்லது
மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால்
கட்டு உடைக் காவலின் காமர் கன்னியே.
பொருள் : பட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல் அட்டுஒளி அரத்தம் வாய்க் கணிகை - அகப்பட்டவரைக் கரை ஏறவிடாமற் கொல்வதனாற் கடலனைய ஏந்திய அல்குலையும், உருக்கிய ஒளிமிகும் அரக்கனைய வாயையும் உடைய பரத்தையை ஒக்கும்; அல்லது மலர்ந்த பூவினாற் காமபானத்தை உடைய மணஞ் செய்த மகளை ஒக்கும்; காவலின் கட்டு உடைக் காமர் கன்னி - காவலால் கற்பித்த வழிநிற்கும் அழகிய கன்னிப்பெண்ணை ஒக்கும்.
விளக்கம் : அட்டு ஒளி அரத்தம் - உருக்கி ஒளியையுடைய அரக்கு. மட்டு-காம பானம். கட்டு-கற்பித்தல் (பெற்றோரால்). அகழி தப்பலானே கணிகையை ஒக்கும், மலர்களையுடைமையால் புது மணமகளை ஒக்கும்; காவலில் கன்னியை ஒக்கும் என்க. தப்புதல்-கொல்லுதல்.
99. நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல்
விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும்
குரை மதுக் குவளைகள் கிடங்கில் பூத்தவும்
உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே.
பொருள் : நிரைகதிர் நித்திலம் கோத்து வைத்தபோல் - ஒழுங்காக ஒளிவிடும் முத்துக்களைக் கோத்து வைத்தாற்போல்; கமுகின்மேல் விரிந்த விரைகமழ் பாளையும் - கமுகின்மேல் மலர்ந்த மணங்கமழும் பாளையும்; கிடங்கிற் பூத்த குரைமதுக் குவளைகள் - அகழியிற் பூத்த ஒலிக்கும் தேனையுடைய குவளைகளும்; உரையின் உலாவி ஓரோசனை நாறும் - புகழுற எங்கும் பரவி ஓரோசனையளவு கமழும்.
விளக்கம் : குரைமது: வினைத்தொகை. உரை - புகழ். புகழால் எங்கும் உலாவி. யோசனை : சைனர் கொள்கைப்படி நாற்காதம்.
மதிலின் தோற்றம்
100. தாய் முலை தழுவிய குழவி போலவும்
மா மலை தழுவிய மஞ்சு போலவும்
ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய
சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே.
பொருள் : ஆய்முகில் தழீஇ குழவி தழுவிய தாய்முலை போலவும் - நீர்சுமந் திளைத்த மேகத்தைத் தன்னிடத்தே அணைத்தலாலே குழவியை அணைத்த தாயின் முலைபோலவும்; மஞ்சு தழுவிய மாமலைபோலவும் - முகிலைத் தன்னிடத்தே அணைத்த பெரிய மலைபோலவும்; அசும்பு அறாத நெற்றிய - நீர்த் துளி நீங்காத தலையையுடைய; சே உயர் மதில்வகை செப்புகின்றதே - மிகவுயர்ந்த மதிலின் கூறுபாடு இனிக் கூறப்படுகின்றது.
விளக்கம் : குழவி தழுவிய தாய்முலை போலவும், மஞ்சு தழுவிய மாமலை போலவும் என மாறிக் கூட்டுக. ஆய்முகில் - இளைத்த மேகம். அசும்பு - நீர்த்துளி.
வேறு
101. மாற்றவர் மறப் படை மலைந்து மதில் பற்றின்
நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும்
தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்
கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா
பொருள் : மாற்றவர் மறப்படை மலைந்து மதில் பற்றின் - பகைவர் மறமிகும் படைகளால் பொருது அகழைக் கடந்து மதிலைப் பற்றினால்; நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியும் - நூறுபேரை ஒருமுறையிற் கொல்லும் சதக்கினி என்னும் பொறியும் தள்ளி அடிக்கும் பொறியும்; தோற்றம் உறு பேய் - காணப்படுவதொரு பேய்போன்ற பொறியும்; களிறு துற்று பெரும்பாம்பும் - களிற்றுப் பொறியும் விழுங்கும் பெரிய பாம்புப் பொறியும்; கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா - காலனைப்போன்ற கழுகும் கட்டியிழுக்கும் சங்கிலியும் விட்டேறு என்னும் படையும் கொல்லும் புலி முதலிய விலங்குகளும் ஆகிய பொறிகளும்;
விளக்கம் : பற்றின் என்பதைத் தெவ்வர் தலைபனிப்பத் திருந்தும் என (104ஆம் செய்யுளில் உள்ள தொடருடன்) முடிக்க. இதுமுதல் நான்கு பாட்டுகள் குளகம். நூற்றுவரைக் கொல்லி - சதக்கினி; நூறுபேரை ஒருகாற் கொல்வதொரு பொறி. நூக்குதல் - தள்ளுதல். எறிதல் - அடித்தல். பேய் - ஒரு பொறி. துற்றுதல்-விழுங்குதல். கோண்மா - கொலை செய்யும் விலங்குகள்.
102. வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள்
கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செந் தீக்
கொல் புனை செய் கொள்ளி பெருங் கொக்கு எழில் செய் கூகை
நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே
பொருள் : விற்பொறிகள் - விற்பொறிகளும்; வெய்யவிடு குதிரை -கொடிய, பகைவர்மேலே விடுங் குதிரைப் பொறிகளும்; தொடர் அயில்வாள் - தானே தொடர்ந்து செல்லுங் கூரிய வாட் பொறிகளும்; கற்பொறிகள் - வந்தவர்மேல் தாமே கற்களை வீசும் இடங்கணி முதலிய பொறிகளும்; பாவை அனம் மாடம் அடு செந்தீ-பாவையும் அன்னமும் ஆகிய பொறிகளும் நாடகசாலைகளும் அடப்படும் செந்தீயும் கொல் புனை செய் கொள்ளி - கொல்லராற் புனையப்பட்ட இரும்புக் கொள்ளியும்; பெருங் கொக்கு -பெரிய கொக்குப் பொறிகளும்; எழில்செய் கூகை - அழகிய கூகைப் பொறிகளும்; நல்தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மரநிலை - அழகிய தலைகளைத் திருகிக்கொள்ளும் வலியுடனே நெருக்கும் மரமான ஐயவித் துலாமும்;
விளக்கம் : எழில்செய் கூகை: இகழ்ச்சிக் குறிப்பு. விற்பொறி - தானே அம்பெய்யும் இயந்திர வில். குதிரை - ஒரு பொறி. கற்பொறி-கல்லை வீசும் பொறி. இதனை இடங்கணி என்றும் கூறுப. பாவை முதலியனவும் பொறிகள். மாடம் - நாடகசாலைபோன்று தோன்றித் தன்பாற் புக்காரைக் கொல்லுமொரு பொறி. நெருக்கு மரம் - ஐயவித்துலாம்.
103. செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்
வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெந் நெய் முகத்து உமிழ்வ
அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித்
தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறியே.
பொருள் : எங்கும் திரிந்து செம்பு உருகு வெங்களிகள் உமிழ்வ - எவ்விடத்துந் திரிந்து செம்புருகின நீரை உமிழ்வனவும்; வெம்பு உருகு வட்டு உமிழ்வ - பகைவர் வேதற்குக் காரணமான உருகு வட்டை உமிழ்வனவும்; வெம் நெய் முகந்து உமிழ்வ- வெப்பமான நெய்யை அள்ளிச் சொரிவனவும்; அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகி - அம்புகளையும் வேல்களையும் கற்களையும் உமிழ்வனவாக; யவனர் தம் புலங்களால் தாள்படுத்த பொறி-யவனர்கள் தங்கள் அறிவின் திறங்களால் அமைத்த பொறிகளும்;
விளக்கம் : ஆகி - ஆக. புலம் - அறிவு. யவனர் - யவனநாட்டிலிருந்து வந்துள்ள தச்சர். இவர்கள் பொறிகள் இயற்றுவதில் திறமுடையோர்கள். பெருங்கதையின்கண் யவனத் தச்சன் ஒருவன் யூகிக்குப் பொறித்தேர் கொடுத்தமை இலாவாண காண்டத்துக்குக் காணப்படுகின்றது.
104. கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம்
குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண்நூல்
பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும்
திருந்து மதி தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்றே
பொருள் : கரும்பொன் இயல் பன்றி - இரும்பாற் செய்யப்பட்ட பன்றிப் பொறிகளும்; கத நாகம் - சினமிகும் நச்சரவுப் பொறிகளும்; விடு சகடம் - விடப்பெறும் ஆழிப்பொறிகளும்; குரங்கு பொரு தகரினொடு - குரங்கும் பொரும் ஆட்டுக்கடாவும் ஆகிய பொறிகளும்; கூர்ந்து அரிவ நுண்ணூல் - கூர்ந்து அரியும் நுண்ணிய அரிகயிறுகளும்; பரந்த பசும்பொற் கொடி பதாகையொடு - பரவிய பசும்பொன்னாலான கொடிகளும் பெருங் கொடிகளும் (கொண்டு); கொழிக்கும் திருந்தும் மதில் - மிகுந்துள்ள அழகிய மதில்; தெவ்வர் தலைபனிப்பத் திருந்தின்று - பகைவரின் தலை நடுங்கத் திருந்தியது.
விளக்கம் : மதில் இன்னதும் இன்னதும் திருந்திற்றெனச் சினைவினை முதலொடு முடிந்தது. பற்றிற் பனிப்ப என்க. இத் தொடர்நிலையில் சொற்களைத் துணித்துப் பலவிடத்தினும் எடுத்துக் கூட்டியது. (பற்றிப் பனிப்ப என்பனபோல) செய்யுளுறுப்பு இருபத்தாறினும் மாட்டென்பது ஓருறுப்பாதலின்; அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் -இயன்று பொருள் முடியத் தந்தனருரைத்தல்-மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் (தொல்.செய்.210) என்றும், மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி - உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே (தொல்.செய்.211) என்றும் தொல்காப்பியனார் கூறினார். இதனால் நாடு முதலிய கவிகளில் மாட்டின்றி வந்தனவுங் கொள்க. இவ்விதி மேல்வருவனவற்றிற்குங் கொள்க என்பர் நச்சினார்க்கினியர்.
105. வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும்
வயிர மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆக
வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல்
வயிரக் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே
பொருள் : வயிரம் அணி ஞாயில் முலை - வயிரப்பூண் அணிந்த ஞாயிலாகிய முலையினையும்; வான் பொன் கொடிக் கூந்தல் - வானளாவும் பொற்கொடியாகிய கூந்தலினையும்; கிடங்கு வயிர ஆடை - அகழியாகிய வயிரம்போன்ற வெளிளிய ஆடையினையும் உடைய; மதிற் கன்னியது கவின்- மதிலாகிய கன்னியின் அழகு; வயிரவரை கண்விழிப்ப போன்று மழை உகளும் வயிரமணித் தாழ்க்கதவு வாயில் முகமாக - வயிர மலைகள் கண் விழிப்பன போன்ற, முகில் புரளும், வயிரமணிகள் இழைத்த தாழ்பொருந்திய கதவுகளையுடைய நாலு வாயிலும் நாலு முகமாக (அமைந்தது)
விளக்கம் : வரைகள் கண்விழிப்பன போன்று கதவையுடைய என வினைக்குறிப்பொடு முடிந்தது. மழை உகளும் வாயில் எனவே கோபுரமாம். ஞாயில்: புழையின் வழியே பகைவர்மேல் அம்பை எய்து மறையும் சூட்டு என்னும் உறுப்பு. (கன்னி கவினது என மாறுக; அஃது இடப்பொருளுணர்த்திற்று என்பர் நச்சினார்க்கினியர்.) இனி, ஆக என்பதை எங்குங் கூட்டி, மதில் இன்னது இன்னதாகக் கவினிடத்தது என்றும் ஆம். மதிலில் இன்னது ஆகையினாலே அம்மதிற் கன்னியதாயிருக்கும் அழகு என்றுமாம்.
அகநகர்த் தோற்றம்
106. செம் பொன் மழை போன்று அடிதொறு ஆயிரங்கள் சிந்திப்
பைம் பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி
அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அது தான்
உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம்
பொருள் : பைம்பொன்விளை தீவில் நிதி தடிந்து - புதிய பொன் விளையுந் தீவில் நிதியை வெட்டி; செம்பொன் மழை போன்று அடிதொறு - செம்பொன்னை மழைபோன்று அடிக்கடி சிந்தி; பலர்க்கு ஆயிரங்கள் ஆர்த்தி - பலர்க்கும் பல ஆயிரங்களைக் கொடுத்து நிறைவித்தலாலே; அம் பொன் நிலத்து ஏகுகுடி அகநகரம் அது - மறுமையில் வானுலகத்திலே செல்லுங் குடியையுடைய உள்நகரமான அது; உம்பர் உலகு ஒப்பது - (நுகர்ச்சியினால்) வானுலகைப் போன்றது; அதன் தன்மை சிறிது உரைப்பாம் - அதன் தன்மை (முற்றும் உரைத்தற் கரிதாயினும்) சிறிது கூறுவாம்.
விளக்கம் : ஆர்த்தி : ஆர்த்ததால் எனத் திரிக்க. இச் செய்யுள் மிக மிக ஆழ்ந்த கருத்துடையது. தாம் வருந்தி ஈட்டிப் பிறர்க்கு ஊட்டுவோராகிய அறக்குடிகளே நிறைந்த நகரம் என்பார், தீவின்நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி என்றார். இம்மைச் செய்தது மறுமைக்காமெனும் நினைவோடு ஆர்த்துவார் அல்லர் ஆயினும் காரணம் காரியத்தைப் பயந்தேவிடுதல் ஒரு தலையாகலின், அம்பொனிலத்தே ஏகு குடி நகரம் என்றார். அந்நகரத்தே உறைவோர் உம்பருலகத்தை விரும்பவும் வேண்டா என்பார், அதுதான் உம்பருல கொப்பது என்றார். வள்ளன்மையான் உம்பர் உலகிதனை ஒவ்வாது இந்நகர் நுகர்ச்சியால் அதனை ஒக்கும் என்பது கருத்து. அத்தகையதாகலின் முற்றக்கூறவியலாது என்பார் சிறிதுரைப்பாம் என்றார்.
பரத்தையர் சேரியின் தோற்றம்
107. துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின்
ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறாச்
செப்பித் தம் செம்பொன் அல்குல் நலம் வரைவின்றி விற்கும்
உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே
பொருள் : துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின் - பவளம் அனைய தொண்டைச் செவ்வாயராகிய தோழியரென்னும் காமத்தை விளைவிக்குந் தூதினாலே; செம்பொன் ஒன்று ஆதியாக ஆயிரத்தெட்டு ஈறாஒப்பச் செப்பி - செம்பொன் ஒன்றுமுதல் ஆயிரத்தெட்டு இறுதியாக வந்தவனுக்கு ஒப்ப விலை கூறி; தம் அல்குல் வரைவின்றி விற்கும் - தம் அல்குலை அன்பு வேறுபாடின்றி விற்கும்; உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் - உவர்ப்பில்லாத காமநுகர்ச்சியையுடைய பரத்தையரின் இருப்பிடத்தைக் கூறுவோம்.
விளக்கம் : தொண்டை : வாய்க்கு அடை. நலம் வரைவு இன்றி - அன்பு நிலைபெறுதல் இன்றி, உப்புடைய முந்நீர் (சீவக.280) என்றார் உவர்ப்பிற்கு. உப்பு இனிமையும் ஆம். இனி உவமைத் தொகையாக்கி, இதற்கு இஃது அளவென்று உப்பிடுமாறுபோலக் கொடுக்கும் பொருளளவான அன்பென்றும் உரைப்ப. துப்பை யொக்கும் தொண்டை போலும் செவ்வாய் என இரண்டு உவமையும் செவ்வாயை நோக்குதலின், அடுத்து வரலுவமையன்று.
உப்பமை காமம் உவர்ப்பில்லாத காமம் என்ற பொருளுக்கு அமைதல் நீங்கி நிற்றல். துப்பு - நுகர்ச்சி. கணிகையர்க்குக் கொடுக்கும் பொருளின் அளவினை ஒன்று முதலாக ஓரெட்டிறுத்த ஆயிரங்காறும் என ஆத்த பரிசம் (பெருங். 135: 83-4) என்றும், நூறுபத்தடுக்கி யெட்டுக் கடைநிறுத்த வீறுயர் பசும்பொன் (சிலப்.3-164) என்றும் பிற சான்றோரும் கூறுதல் அறிக.
108. குங்குமம் மெழுகிச் சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால்
தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி
எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி ஏற்பப்
பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே
பொருள் : சார்வும் திண்ணையும் குயிற்றிக் குங்குமம் மெழுகி - சார்ந்திருக்கும் இடத்தையும் திண்ணையையும் இயற்றிக் குங்குமத்தாலே மெழுகி; உள்ளால் தங்கும மென சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி - உட்புறமெல்லாம் மெழுகின சந்தனத்திலே மாலையையும் தாழுமாறு தூக்கி; எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி - அழகிய சுவர்களெங்கும் காமக்குறிப்புப்பட நாடகம் எழுதி; ஏறபப் பொங்கும் மென்மலர் பெய்சேக்கை பொலிந்து - தகுதியாக மிக்க மெல்லிய மலர்பெய்த அணை பொலிந்து; விண் புகற்சி உண்டு - விண்ணை விரும்பச் செய்யும் இயலுடையது அச்சேரி.
விளக்கம் : விண் ஆகுபெயரால் தேவரைக் குறித்து நின்றது. தேவமகளிரை நுகரும் தேவரும் அவரை வெறுத்து இவரை விரும்பப் பண்ணும் இடம் என்றவாறு. அவிநயத்தானும் மெய்ப்பாட்டானும் காமக்குறிப்புத் தோன்ற வரையப்பட்ட நாடகம் என்க. நாடகம் எழுதி என்றதனால் ஓவியம் என்பது பெற்றாம்.
109. தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த
காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம்
வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம்
ஆசைப் பட்டு அரசு வைக அருங் கடி கமழும் அன்றே
பொருள் : தூசுசூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன -ஆடை சூழ்ந்த பரந்த அல்குல் சுமக்கமாட்டாது என்று; சூழ் கோவை வீழ்த்த காசு முத்தம் - அவ்வல்குலைச் சூழ்ந்த கோவை சிந்திய மணிகளும் முத்துக்களும்; கதிர்முலை திமிர்ந்த சாந்தம் - ஒளிவிடும் முலையிற் பூசிய சந்தனமும்; வாசநற் பொடிகள் - மணமிகு சுண்ணப்பொடியும்; மாலை - மாலையும் ஆகிய இவைகள்; வண்டு உண வீழ்ந்த முற்றம் - வண்டுகள் உண்ணுமாறு வீழ்ந்து கிடக்கும் முற்றங்கள்; அரசு ஆசைப்பட்டு வைகும அருங்கடி கமழும் - அரசும் விரும்பித் தங்குமாறு நன்மணம் பரப்பும்.
110. அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன்கைப்
பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழச் செவ்வாய்
அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை
துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்க லாதே
பொருள் : அம் சிலம்பு ஒலியோடு - அழகிய சிலம்பொலியுடன்; அல்குல் கலையொலி - அல்குலில் அணிந்த மேகலையின் ஒலியும்; முன்கை அணிந்த பஞ்சி மெல்விரலில் பாணி-முன்பு சேடியர் கையினால் செம்பஞ்சணிந்த மெல்லிய விரலால் எழுப்பும் யாழொழியும்; பவழச் செவ்வாய் பண்ஒலி - பவழமனைய சிவந்த வாயினால் எழுப்பும் பாட்டொலியும்; பவழச் செவ்வாய் அஞ்சி நேர்ந்து, உயிர்க்கும் தேன்சேர் குழல்ஒலி - பவழச் செவ்வாய் பொருந்துதற்கு முதலில் அஞ்சினும் பொருந்தியபின் நேர்ந்து ஊதும் தேனனைய இனிமை பொருந்திய குழல் ஒலியும்; முழவின் ஓசை துஞ்சல்இல் ஓசை தம்மால் - முழவின் ஒலியும் ஆகிய நீங்கா ஒலிகளாலே துறக்கமும் நிகர்க்கலாது - (இச்சேரிக்கு) வானுலகும் ஒவ்வாது.
விளக்கம் : செவ்வாயை முன்னும் பின்னும் பண் என்பதனோடும் குழல் என்பதனோடும் கூட்டுக.
111. தேன் உலாம் மதுச் செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட
வான் உலாம் சுடர்கண் மூடி மா நகர் இரவு செய்யப்
பால் நிலாச் சொரிந்து நல்லார் அணிகலம் பகலைச் செய்ய
வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே
பொருள் : தேன்உலாகம் மதுச்செய் கோதை தேம்புகை கமழ ஊட்ட -வண்டுகள் உலவும் தேன்பொருந்திய மாலைகள் நறும்புகையைக் கமழுமாறு ஊட்டுதலால், வான்உலாம் சுடர்க்கு மூடி மாநகர் இரவு செய்ய - வானில் உலவும் ஞாயிற்றின் கதிர்களை மறைத்து மாநகரிற் பகலிலேயே இரவை உண்டாக்கவும்; நல்லார் அணிகலம் பால்நிலாச் சொரிந்து பகலைச் செய்ய - நல்லார் அணிகலத்தின் மணிகள் பாலனைய நிலவைச் சொரிந்து இரவிலும் பகற்பொழுதை உண்டாக்கவும்; வேனிலான் விழைந்த சேரி மேலுலகு அனையது ஒன்றே - காமன் விரும்பிய அச்சேரி வானுலகு போன்ற தொன்றேயாயிற்று.
விளக்கம் : ஏகாரம்: தேற்றம். இரவும் பகலும் இன்மையின் துறக்கம் ஒத்தது, இனி பால்-பகுதி, நிலா-ஒளி என்றும் உரைப்ப; நிலாத்தலைத் திகழும் பைம்பூண் (சீவக.195.) பணிநிலா வீசும் பைம்பொற்கொடி (சீவக.2531) என்றாற்போல.
கடை வீதிகள்
112. இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு
மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மைப்
பட்டமும் பசும் பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன்
அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் விளக்கல் உற்றேன்.
பொருள் : இட்டநூல் வழாமை ஓடி - பிடித்த நூலின் ஒழுங்கு தவறாமல் கிடந்து; யோசனை எல்லை நீண்டு - யோசனை அளவு நீண்டு; மட்டுவார் மாலை வேய்ந்து - தேன்சொரியும் மாலைகள் வேயப்பட்டு; சதுக்கங்கள் மலிந்த சும்மை - நாற்சந்திகளிலே மிக்க ஒலியினை உடைய; பட்டமும் பசும்பொன் பூணும் பரந்து ஒளிநிழற்றும் தீந்தேன் அட்டும் தார் அணிந்த மார்பர் - தம் தரத்திற்குத் தகப் பட்டமும் புதிய பொற்கலனும் எங்கும் பரவி ஒளி செய்தற்குக் காரணமான; இனிய தேன்சொரியும் (முல்லை) மாலையும் அணிந்த மார்பரான வணிகர் முதலாயினோர் வாழும்; ஆவணம் கிளக்கல் உற்றேன் - அங்காடித் தெருவைக் கூறத் தொடங்கினேன்.
விளக்கம் : பண்டைக்காலத்தே நகரங்களில் தெருக்களை நூல் பிடித்து ஒழுங்குற அமைக்கும் வழக்க முண்மை உணர்க. ஆவணம் அங்காடி; கடைத்தெரு.
113. மணி புனை செம் பொன் கொட்டை வம்பு அணி முத்த மாலைக்
கணி புனை பவழத் திண் காழ் கம்பலக் கிடுகின் ஊன்றி
அணி நிலம் மெழுகிச் சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்
திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே.
பொருள் : மணிபுனை செம்பொன் கொட்டை வம்புஅணி கணிபுனை பவழம் திண்காழ் - மணி அழுத்தின செம்பொன்னாற் செய்யப்பட்ட கடைமணியை உடைய, கச்சுத் தூக்கின, நூலறிந்த கணிபுனைந்த திண்ணிய பவழக்காம்பை; முத்தமாலைக் கம்பலக் கிடுகின் ஊன்றி - முத்துமாலை புனைந்த கம்பலம் வேய்ந்த சட்டத்திலே பொருத்தி ஊன்றி; அணிநிலம் சாந்தின் மெழுகி - அழகிய இடத்தைச் சாந்தினாலே மெழுகி - அகில் புகைத்து - அகிற்புகை ஊட்டி, திணிநிலம் அம்பொன் போதின் அணிந்து - கற்படுத்த நிலத்தைப் பொன்மலரால் அணிந்து; தேம்கொள் ஐயவி சிதறினார் - தெய்வம் இனிதாகக்கொண்ட வெண்சிறு நடுகைத் தூவினர்.
விளக்கம் : கணி - நூல் தேர்ந்தவன். அவன் புனைந்த காழ். திணி நிலம் - உறுதி செய்த நிலம். தேம்கொள் ஐயவி - தெய்வங்கள் இனிதாகக்கொண்ட வெண்சிறு கடுகு. வம்ப-கச்சு. கொட்டை - உருண்டை வடிவமானது. காழ் - காம்பு. கிடுகு - சட்டம். முத்தமாலை புனைந்த கிடுகு எனக் கூட்டுக.
114. பொன் சொரி கதவு தாழில் திறந்து பொன் யவனப் பேழை
மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்துப் பின்னும்
மன் பெரும் பவழக் குப்பை வால் அணிகலம் செய் குப்பை
நண் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே.
பொருள் : பொன் சொரி கதவு தாளின் திறந்து - பொன் தானே சொரிதற்குக் காரணமான கதவைத் தாழ்க்கோலால் திறந்து; பொன் யவன பேழை- யவனர் செய்த பொய்பேழையிலிருந்து; மின்சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்து - ஒளி விடும் மணிமுத்து வயிரம் ஆகியவற்றைக் குவித்து; பின்னும் - மேலும்; மன்பெரும் பவழக் குப்பை - மிகப் பெரிய பவளத் திரள்களையும்; வால் அணிகலம் செய்குப்பை - (முற்றுறாத) தூய அணிகலக் குவியல்களையும்; நன்பகல் இரவு செய்யும் நன்கலம் கூப்பினார் - நல்ல பகற்போதை இரவாக்கும் நீலமணிக்கலன்களையும் குவித்தனர்.
விளக்கம் : நன்பகல் - நடும்பகல்.
115. விழுக் கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா
ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்பரிது ஒழிக வேண்டா
பழக் குலைக் கமுகும் தெங்கும் வாழையும் பசும் பொன்னாலும்
எழில் பொலி மணியினாலும் கடை தொறும் இயற்றினாரே.
பொருள் : விழுக்கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா ஒழுக்கினர் - சிறந்த அணிகலன்களைச் சொரியும் போது சிதறி விழுந்தவற்றை எடுத்துக்கொள்ளாத வாழ்வினர்; பழுக்குலைக் கமுகும் தெங்கும் வாழையும் - பழுத்த குலைகளையுடைய கமுகையும் தென்னையையும் வாழையையும்; பசும்பொன்னாலும் எழில்பொலி மணியினாலும் - புதிய பொன்னாலும் அழகு மிக்க மணிகளாலும்; கடைதொறும் இயற்றினார் - கடைகளை யெல்லாம் அணிசெய்வித்தனர் (ஆதலால்); அவர்கள் செல்வம் உரைப்பரிது; வேண்டா ஒழிக - அவர்களுடைய செல்வச் சிறப்பு என்னால் உரைத்தலரிது, நீவிரும் கேட்க விரும்பவேண்டா ஒழிக.
116. மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும்
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகாப்
பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி
மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே.
பொருள் : மா சனம் இடம் பெறாது - மிகுதியான மக்கள் திரள் போக்கிடம் பெறாமல்; பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி - நன்கு இயற்றிய சந்தனம் ஒருவர் மார்பிற் பூசியது எழுவர் மார்பிலே பூசுமாறு; இறால் மூசு தேனின் மூச - தேன்கூட்டில் மொய்க்கும் வண்டுகளைப்போல நெருங்க; மொய்திரை இயம்பி யாங்கும் - (ஆங்குப் பிறந்த ஓசையும்) நெருங்கிய கடலலைபோலவும் ஒலித்து; ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்தல் ஆகா - ஒலியென்று உணர்தலன்றி எழுத்தின் உருவம் உணர இயலாமல், வண்கடை மலிந்தது -வளமிகுங் கடைத்தெரு மலிவுற்றது.
விளக்கம் : யாங்கும் : உம்; சிறப்பு. ஓரோசையும் பாடம். பூசி-பூச. நான்கு சாதியும் அநுலோமப் பிரதிலோமரும் சங்கர சாதியும் பற்றி எழுவர் என்றார் என்பர் நச்சினார்க்னியர். எழுவர் என்றது பன்மை பற்றி வந்ததென்பதே தக்கது.
117. மெய்யணி பசும் பொன் சுண்ணம் மேதகு நான நீரின்
ஐது பட்டு ஒழுகி யானை அழிமதம் கலந்து சேறாய்ச்
செய் அணி கலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி
வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன்.
பொருள் : மெய்அணி பசும்பொன் சுண்ணம் - மெய்யில் அணிந்து மிகுந்த புதிய நல்ல சுண்ணப்பொடி; மேதகு நானம் நீரின் ஐதுபட்டு ஒழுகி - உயர்ந்த புழுகாலும் பனிநீராலும் இளகுதலுற்றுத் தெருவில் ஒழுகுவதால், யானை அழிமதம் கலந்து - (அதனுடன்) யானையின் மிகுமத நீருங் கலந்து; மாலையும் மதுவும் மல்கி - மாலையும் தேனும் நிறைந்து; சேறாய் - சேறாகி; செய் அணிகலன்கள் சிந்தி - அருமையாகச் செய்த அணிகலன்களும் சிந்தி; வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் - விரைய அடி யிடுதற்கு முடியாத தெருக்களைப்பற்றி; விளம்பலுற்றேன் - கூறத் தொடங்குகின்றேன்.
விளக்கம் : அணி சுண்ணம்: உண்ட (பின் மிகுந்த) சோறு போல் நின்றது; மிச்சில் கவிழ்த்தல் மரபு மாலையினும் கலத்தினும் தீண்டுதற்கு அடி நாணிற்று, தமது நலத்தான். இவை பீடிகைத் தெருவொழிந்தன.
தெருக்களின் தோற்றம்
118. முழவு அணி முது நகர் முரசொடு வளை விம
விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை
இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை
மழை என மறையின பொலிவினது ஒருபால்.
பொருள் : முழவு அணி முதுநகர் முரசொடு வளைவிய - முழவொலி மிகுந்த கோயில்களில் முரசும் சங்கும் ஒலிப்பதால்; விழவு அணி மகளிர்தம் விரைகமழ் இளமுலை - அவ் விழவிற்கு அணிந்துகொண்ட மகளிரின் மணங்கமழும் இளமுலையில்; அணி இழை ஒளிஇள வெயில்செய - அணிந்த பூண்களின் ஒளி இன வெயிலை உண்டாக்கும்படி; இடுபுகை மழைஎன மறையின் பொலிவினது ஒருபால் -(கோயில்களில்) இடுகின்ற புகை முகிலென ஞாயிற்றை மறைத்த பொலிவினையுடையது ஒரு பக்கம்.
விளக்கம் : கதிரவன் ஒளியிருப்பின் இழைஒளி தோன்றாது. விம- வீம்ம; ஒலிப்ப. இச் செய்யுளின்கண் முகில் மின்னலோடு இடியும் உடையதாய் வந்து ஞாயிற்றை மறைப்பதுபோல புகை முழவு முதலியவற்றின் ஒலியோடு அணிகலன் மின்ன ஞாயிற்றை மறைத்த தென்றமையுணர்க.
119. குடையொடு குடை பல களிறொடு நெரி தர
உடை கடல் ஒலியினொடு உறுவார் பலி செல
முடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர்
கொடியுடை மழை மினின் குலவியது ஒரு பால்.
பொருள் : பல குடையொடு குடை களிறொடு (களிறு) நெரிதர-பல குடையுங் குடையும் களிறுங் களிறும் நெருங்கி; உடைகடல் ஒலியினொடு உறுவரர் பரிசெல - உடைகடல் ஒலிபோலும் ஒலியினுடன் தேவர்களின் பூசனை நடத்தலால், முடியொடு முடியுற மிடைதலின் விடுசுடர் -(அதனைச் சேவிக்கும் அரசரின்) முடியும் முடியும் நெருங்குதலால் எழும் ஒளி; மழை கொடியுடை மனின் குலவியது ஒருபால் - முகிலிடை யெழும் கொடிபோன்ற மின்போற் குலவியது ஒரு பக்கம்.
விளக்கம் : இது செல்வமுண்டாதற்குப் பலி நடக்கும் என்றார். இனிப், பலி நடத்தலிற் குடை முதலியன நெரிதர முடிநெருங்கிற்றென்றுமாம்.
120. பூத்தலை வாரணப் போர்த் தொழில் இளையவர்
நாத் தலை மடி விளிக் கூத்தொடு குயில் தரக்
காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ்
பூத்துகள் கழுமிய பொலிவினது ஒரு பால்.
பொருள் : பூத்தலை வாரணம் போர்த்தொழில் இளையவர் - தோன்றிப் பூவனைய சூட்டையுடைய கோழிப்போரின் வெற்றியைத் தமதாகவுடைய இளைஞர்கள்; நாத்தலை மடிவிளிக் கூத்தொடு குயில்தர - நாவினை மடித்து ஒலிக்கும் சீழ்க்கைக் கூத்தொடு நெருங்குதலால், காய்த்துறு தமனியத் துகளொடு -(அப்பொழுது சிந்துகின்ற) பொற்றுகளோடு; கடிகமழ் பூத்துகள் கழுமிய பொலிவினது ஒருபால் - மணங்கமழும் மலர்த்துகளும் கலந்த பொலிவுடையது ஒரு பக்கம்.
விளக்கம் : விளியெனினும் சீழ்க்கையெனினும் வீளையெனினும் ஒக்கும். காய்த்துறு - காய்ச்சலுற்ற.
121. மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர்
அம் துகில் பற்றலின் காசரிந்து அணி கிளர்
சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின் அணிந்து
இந்திர திருவிலின் எழிலினது ஒருபால்.
பொருள் : மைந்தரொடு ஊடிய மகளிரை இளையவர் அம்துகில் பற்றலின் - கணவருடன் பிணங்கிய மகளிரின் அழகிய துகிலை அக்கணவர் பற்றும்போது; காசு அரிந்து அணிகிளர் சுந்தர நிலமிசைச் சொரிதலின் - காசு கோவையற்று அழகிய நலம் நிறைந்த நிலத்தில் சிந்துதலின்; மின் அணிந்து இந்திர திருவிலின் எழிலினது ஒருபால் - ஒளிகொண்டு வானவில்லின் அழகினையுடையது ஒரு பக்கம்.
விளக்கம் : நிலமிசை என்பதனை நிலம் விசை என்று நச்சினார்க்கினியர் பாடம் கொண்டனர் என்பது அவருரையான் விளங்கும்.
122. வளை அறுத்து அனையன வால் அரி அமை பதம்
அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவை
விளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையுமின்
உள அணி கலம் எனும் உரையினது ஒருபால்.
பொருள் : வளை அறுத் தளையன வால்அரி அமைபதம் - சங்கை நுண்ணிதாக அறுத்தாற்போன்று வெள்ளிய அரிசியால் அமைத்த சோற்றையும்; அளவறு நறுநெயொடு அடுகறி - அளவற்ற நல்ல நெய்யாற் சமைத்த கறியையும்; விளைவு அமைதயிரொடு அமைதுவை - முற்றிய தயிரால் அமைத்த துவையினையும்; மிசைகுவிர் விரையுமின்- உண்பதற்கு விரைந்து செல்லுமின்; அணிகலம் உள எனும் உரையினது ஒருபால் - (உண்டபின் தருதற்கு) அணிகலன்களும் உள்ளன என்னும் மொழியினையுடையது ஒரு பக்கம்.
விளக்கம் : தயிரொடு: ஓடு; எண்ணுப்பொருளில் வந்த ஓடுவும் ஆம். வாலவிழும் என்றும் பாடம். அந்நகரத்து மக்கள் தம்மனையில் விருந்துண்போர்க்குக் கூலியும் கொடுக்கும் மாண்பினர் என்பது போதர உள அணிகலனும் என்றார்.
123. வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன
புரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர்
விரை நிரை இவுளியொடு இளையவர் விரவுபு
குரை நிரை குளிர் புனல் ஆற்றினது ஒருபால்.
பொருள் : வரைநிரை அருவியின் மதம்மிசை சொரிவன்-மலையிலிருந்து வீழும் ஒழுங்கான அருவியைத் தம்மேலே சொரிந்து கொள்வனபோல மதத்தை மேலே சொரிவனவாகிய; புரைநிரை களிறொடு - உயர்ச்சியுறுங் களிற்றோடும்; புனைமணி இயல்தேர் விரைநிரை இவுளியொடு - மணிபுனைந்த தேரிற் பூட்டினால் விரைந்து செல்லும் குதிரைகளோடும்; இளையவர் விரவுபு-இளைஞர்கள் கலந்து; குரைநிரை குளிர்புனல் யாற்றினது ஒரு பால் - ஒலியுடன் நிரைத்த குளிர்ந்த நீர்செல்லும் யாறுடையது ஒரு பக்கம்.
விளக்கம் : அருவிபோல் வீழ்கின்ற மதமென்பாரும் உளர். மிசை என்றும் பாடம்.
124. வரி வளை அரவமும் மணி முழவு அரவமும்
அரி வளர் கண்ணியர் அணிகல அரவமும்
புரி வளர் குழலொடு பொலி மலி கவினிய
திரு விழை கடி மனை திறவிதின் மொழிவாம்.
பொருள் : வரிவளை அரவமும் - சங்கொலியும்; மணிமுழவு அரவமும் - முழவொலியும்; அரிவளர் கண்ணியர் அணிகல அரவமும் - செவ்வரி பரவிய கண்ணினருடைய பூண்களின் ஒலியும்; புரிவளர் குழலொடு நரம்பிடத்து இசைவளர்தற்குக் காரணமான குழலொலியொடு; பொலிமலி கவினிய திருவிழை கடிமனை திறவிதின் மொழிவாம் - பொலிவுமிக்க அழகுடைய செல்வம் நிறைந்த மனைகளைப் பற்றிச் செவ்விதாகக் கூறுவோம்.
விளக்கம் : புரிவளர் குழல் - நரம்பிடத்து இசை வளர்தற்குக் காரணமாகிய குழல்வழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர் - முழவியம்பலாமந் திரிகை (கூத்தநூல்) புரி - விருப்பமுமாம். இஃது அரசற்குரியவர் இருப்பு.
தெருக்களிலுள்ள மனைகளைப் பற்றிக் கூறுதல்
125. பாவை அன்னவர் பந்து புடைத்தலில்
தூவி அன்னம் வெரீஇத் துணை என்று போய்க்
கோவை நித்தில மாடக் குழாம் மிசை
மேவி வெண் மதி தன்னொடு இருக்குமே.
பொருள் : பாவை அன்னவர் பந்து புடைத்தலின் - பாவையனைய மகளிர் பந்தடித்தலின்; தூவி அன்னம் வெரீஇப்போய்-தூவியையுடைய அன்னப்பறவை அஞ்சி யோடி; கோவை நித்திலம் மாடம் குழாமிசை - முத்துமாலை புனைந்த மாடத்திரளின் மேலே; வெண்மதி தன்னொடு துணையென்று மேவி யிருக்கும் -வெள்ளிய திங்களைத் துணையென்று கருதி அதனுடன் இருக்கும்.
விளக்கம் : (மதி இயங்குந்தோறும் தானும் இயங்கிற்று என்பது குறிப்பு.)
126. திருவ நீள் நகர்ச் செம் பொனின் நீடிய
உருவ ஒண்கொடி ஊழின் நுடங்குவ
பரவை வெம் கதிர்ச் செல்வன பன்மயிர்ப்
புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்றவே.
பொருள் : திருவ நீள்நகர் செம்பொனின் நீடிய உருவ ஒண் கொடி ஊழின் நுடங்குவ - அத்தகைய செல்வம் நிறைந்த நீண்ட மனைகளில், செம்பொன்னாலாகிய நீண்ட அழகிய ஒளிமிகுங் கொடிகள் முறையால் அசைவன; பரவை வெங்கதிர்ச் செல்வன் பன்மயிர்ப் புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்ற - பரவிய வெப்பமான கதிர்களையுடைய ஞாயிற்றினுடைய குதிரைகளின் வெப்பந் தவிர்ப்பன போன்றன.
விளக்கம் : பரவை - பரத்தல். இதனால் அந்நகரத்து மாந்தர்போன்று அந்நகரமும் தன்பால் வந்த விருந்தினை உபசரிக்கும் பண்பு உடைத்தாதல் கூறப்பட்டது. இது தற்குறிப்பேற்றம்.
127. இழை கொள் வெம் முலை ஈரம் உலர்த்துவார்
விழைய ஊட்டிய மேதகு தீம் புகை
குழை கொள் வாண் முகம் சூழ் குளிர் அம் கதிர்
மழையுள் மா மதி போன்ம் எனத் தோன்றுமே.
பொருள் : விழைய இழைகொள் வெம்முலை ஈரம் உலர்த்துவார் - கணவர் விழைய இழையணிந்த விருப்பமூட்டும் முலைகளிலே கணவர் பூசிய சந்தனம் முதலியவற்றின் ஈரத்தை உலர்த்தும் மகளிர்; ஊட்டிய மேதகு தீம்புகை சூழ் - ஊட்டிய மேம்பட்ட இனிய புகை சூழ்ந்த; குழைகொள் வாள்முகம் - குழை யணிந்த ஒளிமிகு முகம்; மழையுள் குளிர் அம்கதிர் மாமதி போன்ம் எனத் தோன்றும்-முகிலுட் குளிர்ந்த அழகிய கதிரையுடைய முழுமதி போலும் எனக் காணப்படும்.
விளக்கம் : உலர்த்துவார்: தொழிற்பெயர் (வினையாலணையும் பெயர்.) புகைசூழ் முகம் மழையுள் மாமதிபோலத் தோன்றும் என்க.
128. செம் பொன் கண்ணி சிறார் களைந்திட்டவும்
அம் பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும்
தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும்
வம்பு உண் கோதையர் மாற்றும் அயல் அரோ
பொருள் : தம் அம்பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும் (மகளிர்) தம் அழகிய பொன்மாலை கூல்தலவிழ்ந்து சோர்வதினால் வீழ்ந்தவும்; பொன்மேனி திமிர்ந்த தண் சாந்தமும் - அழகிய மெய்யிலே திமிர்ந்த குளிர்ந்த சந்தனமும்; செம்பொன் கண்ணி சிறார் களைந் திட்டவும் - சிறுவர் களைந்திட்ட செம்பொன் கண்ணியும்; வம்புஉண் கோதையர் மாற்றும் மயல் - சேடியர் மாற்றும் குப்பைகள்.
விளக்கம் : ஏவற் சிலதியர் என்பது தோன்ற வம்புஉண்கோதையர் என்றார். வம்பு -புதுமை. புதுமையை நுகர்ந்து கழித்த மாலையையுடையவர் என்பது கருத்து. எனவே, சிலதியர் என்பதாயிற்று. இதனோடு, கொடுப்போர் வீழ்த்த குங்குமக் குழையலும், தொடுப்போர் வீழ்த்த தூவெள்ளலரும், .... வேள்விச் சமிதையும்.... வாசச்சுண்ணமும் .... கலவைச் சாந்தமும்.... புதுப் பூமாலையும்..... சிறாஅர்வீழ்த்த செம்பொற் கண்ணியும்... காட்டு (மயல்) எனக் கமர்ந்து கூட்டுநர் (2 2: 92-102) எனவரும் பெருங்கதைப் பகுதியை ஒப்புக் காண்க. கண்டுகை விட்ட மயல் (நாலடி.43) என்றார் பிறரும்.
129. வேரிஇன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்து
ஆரி ஆக அம் சாந்தம் தளித்தபின்
வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடு
சேரி தோறு இது செல்வத்து இயற்கையே.
பொருள் : இன்மெழுக்கு ஆர்ந்த வேரி - நாற்றமும் தோற்றமும் இனியவற்றால் மெழுகிய மெழுக்கு ஆர்ந்தமணத்தையுடையது; மென்பூ நிலத்து - மென்மையான பூநிலத்திலே; ஆரிஆக அம் சாந்தம் தளித்தபின் - அழகாகத் தொழில்படச் சாந்தைப் பூசிய பின்பு; பொன் பூவொடு வாரி நித்திலம் வைப்ப - பொற்பூவுடன் கடல் முத்தையும் வைப்பார்கள்; சேரிதோறு இது செல்வத்து இயற்கை - சேரிதோறும் செல்வத்தின் இயற்கை, இத்தன்மைத்து,
விளக்கம் : அரி - ஐம்மை; அரி ஆரி என்றாயது விகாரம். ஆரி - அழகென்றுமாம். ஆரியாக - மேலாக என்றுமாம். மேலும், தளித்த சுண்ணம் (சீவக.1330) என்ப. வேரி - இருவேரி; வெட்டிவேர்.
130. கருனை வாசமும் கார் இருள் கூந்தலார்
அருமை சான்ற அகில் புகை வாசமும்
செருமிச் சேர்ந்து கண்ணீர் வரத் தேம் பொழில்
உரிமை கொண்டன ஒண்புறவு என்பவே.
பொருள் : கருனை வாசமும் கார்இருங் கூந்தலார் அருமை சான்ற அகிற்புகை வாசமும் - பொரிக் கறியினது மணமிகு புகையும், கரிய நீண்ட கூந்தலில் ஆர்ந்த அருமைமிகும் அகிலின் மணப்புகையும்; செருமிச் சேந்து கண்ணீர்வர - நெருங்கிச் சிவந்து கண்ணீர் வருதலாலே; ஒண்புறவு தேம்பொழில் உரிமை கொண்ட - சிறந்த புறாக்கள் பொழிலைத் தம் இருக்கையாகக் கொண்டன.
விளக்கம் : கூந்தலில் ஆர்புகை: வினைத்தொகை. கூந்தலார்: பெயருமாம். கருனை - பொரிக்கறி வாசம் மணம். இஃது ஆகுபெயராய் மணமுடைய புகையைக் குறித்தது. அகிற்புகை வாசமும் என்புழி அகில் வாசப்புகையும் என மாறுக. மாடத்தைவிட்டுத் தேம்பொழில் உரிமை கொண்டன என்பது கருத்து.
131. நறையும் நானமும் நாறும் நறும் புகை
விறகின் வெள்ளி அடுப்பின் அம் பொன் கலம்
நிறைய ஆக்கிய நெய் பயில் இன் அமுது
உறையும் மாந்தர் விருந்தொடும் உண்பவே.
பொருள் : வெள்ளி அடுப்பின் - வெள்ளி அடுப்பிலே; நறையும் நானமும் நாறும் நறும்புகை விறகின் - நறைக்கொடியும் தூவி யெரிக்கும் புழுகும் மணக்கும் நல்ல மணமுறு விறகினாலே; அம் பொன்கலம் நிறைய ஆக்கிய நெய் பயில் இன்னமுது - அழகிய பொற்கலத்திலே நிறையச் சமைத்த நெய்கலந்த இனிய சோற்றை; உறையும் மாந்தர் விருந்தொடும் உண்ப - அங்கு வாழும் மக்கள் விருந்தொடும் உண்பார்கள்.
விளக்கம் : விறகு - சந்தனம் முதலியன. விருந்தோடுண்டலே அழகு ஆதலின் மாந்தர் விருந்தொடும் உண்பவே என்றார். எனவே, தம்மில்லிருந்து தாமே உண்டு தம் விலாப் புடைக்கும் புன்செல்வர் ஆண்டிலர் என்பது குறிப்பு ஆயிற்று.
132. பாளை மென் கமுகின் பழம் மெல் இலை
நீள் வெண் மாடத்து நின்று கொண்டு அம்நலார்
ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம்
நாள் செய் மாலை நகை முடிப் பெய்பவே.
அம்நலார் நீள்வெண் மாடத்து நின்றுகொண்டு அழகிய மகளிர் நீண்ட வெண்மையான மாடத்திலே நின்று கொண்டு; மென்கமுகின் பாளைப்பழம் - மெல்லிய கமுகம் பாளையிலிருந்த பாக்கையும்; மெல்லிலை - வெற்றிலையையும்; ஆளி மொய்ம்பர்க்கு அளித்து - (பறித்துக்கொண்டு) ஆளியனைய வலிய ஆடவர்கட்குக் கொடுத்து; அணி சண்பகம் நாள்செய் மாலை நகைமுடிப் பெய்ப -(அவர்கள்) அணிந்த சண்பகத்தின் புதிய மலர் மாலையை வாங்கித் தம் முத்துமாலை சூடிய முடியிலே பெய்வார்கள்.
விளக்கம் : ஆளி மொய்ம்பர் அணிந்திருந்த சண்பயமாலையை வாங்கி நாட்கால மன்றாயினும் வேட்கை மிகுதியால் தமது முடியிலே பெய்வர். இனி, நாட்காலத்தே செய்த சண்பகமாலை அணிந்த முடியிலே அக்காலத்திற்குரிய பூக்களைப் பெய்வர் என்றுமாம் என்று கூறுவர் நச்சினார்க்கினியர். மணம் மெல்லிய பாளை. வெள்ளிலை பாடமாயின், கொம்பிலே வெளுத்ததாம். நகைமுடி - முத்தமாலை சூடிய முடி.
133. எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார்
மெழுகு குங்கும மார்பு இடை வெம் முலை
உழுது கோதையும் சாந்தும் உவந்து அவை
முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே.
பொருள் : எழுதுவாள் நெடுங் கண்இணை அம்நலார் - மை எழுதிய வாளனைய நெடுங் கண்களையுடைய மகளிர்; குங்குமம் மெழுகும் மார்பிடை - கணவருடைய குங்குமம் மெழுகிய மார்பிலே; வெம்முலை உழுது கோதையும் சாந்தும் வித்தித் திளைப்ப - வெம்முலையாலே உழுது கோதையையும் சாந்தையும் விதைத்துத் திளைப்பனவற்றில்; உவந்தவை முழுதும் விளைப்பர் - தாம் விரும்பியவற்றையெல்லாம் விளைப்பார்கள்.
விளக்கம் : திளைப்பன : (கலவிக்) கரணங்கள்.
134. குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டு உணும்
அஞ்சில் ஓதியர் அம் மலர்ச் சீறடி
மஞ்சு தோய் மணி மாடத்து மல்கு பூம்
பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே.
பொருள் : அனிச்சம் மலர் கூட்டுணும் அம்சில் ஓதியர் அம்மலர்ச் சீறடி - அனிச்ச மலரின் மென்மையைக் கொள்ளை கொண்ட அழகிய சிலவகையான கூந்தலையுடைய மகளிரின் அழகிய மலரனைய சிற்றடி; மஞ்சுதோய் மணிமாடத்து - முகில் தவழும் மணிகளிழைத்த மாடங்களிலே; குஞ்சிமேல் பனிக்கும் - கணவருடைய சிகையின்மேலும் நடுங்கும்; மல்கும் பூம்பஞ்சி மேலும் பனிக்கும் - நிறைந்த அழகிய பஞ்சிமேலும் நடுங்கும்.
விளக்கம் : கோபத்தாலும் கரணத்தாலும் நடுங்கிற்றென ஊடலும் கூடலும் உணர்த்திற்று; கொல்புனல் தளரின் நடுங்குவனள் நின்று (பதிற்.52) என்றார் பிறரும். நகராதலின் ஊடற்குக் காரணங் கூறாராயினார் -(நகரிற் பரத்தையர் சேரி உளதாதலின் ஊடல் தோன்றியது. மருத நிலத்தின் உரிப்பொருள் ஊடல்.) எஞ்சு பொருட்கிளவி செஞ்சொல் ஆயின் - பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல் (தொல்.இடை-36) என்பதனாற் குஞ்சிமேலும் என உம்மை கொடாராயினார்.
135. தூமமே கமழும் துகில் சேக்கை மேல்
காமமே நுகர்வார் தம் காதலால்
யாமமும் பகலும் அறியாமையால்
பூமி மா நகர் பொன் உலகு ஒத்ததே.
பொருள் : தூமமே கமழும் துகில் சேக்கைமேல் காமமே நுகர்வார் - அகிற்புகை மணக்கும் வெள்ளிய துகிலிடப்பட்ட அணையின்மேற் காமத்தையே துய்ப்பவர்கள்; தம் காதலால் யாமமும் பகலும் அறியாமையால் - தங்கள் காதலாலே இரவும் பகலும் அறியாததால்; பூமி மாநகர் பொன்னுலகு ஒத்தது - உலகிடை அந்நகர் பொன்னுலகைப் போன்றது.
விளக்கம் : தூமமே: ஏகாரம். தேற்றம். காமமே: ஏகாரம், பிரிநிலை. யாமத்தும் எல்லையும் (கலி.139) என்றார் பிறரும். பூமியின் பூமென்மாநகர் என்றும் பாடம். பூ-வடமொழி.
136. அரவு கான்றிட்ட அம்கதிர் மா மணி
உரவு நீர் முத்தும் உள் உறுத்து உள்ளன
இரவல் மாந்தர்க்கும் இன்னவை ஈவது ஓர்
புரவு பூண்டனர் பொன் நகர் மாந்தரே.
பொருள் : அரவு கான்றிட்ட அம்கதிர் மாமணி - அரவம் உமிழ்ந்த அழகிய ஒளிதரும் மாணிக்கமும்; உரவுநீர் முத்தும் உள்ளுறுத்து - கடலின் முத்தும் ஆகியவை உட்பட; இரவல் மாந்தர்க்கும் இன்னவை உள்ளன - இரக்கும் மக்களுக்கும் இவை உள்ளவாயின. (ஆதலால்) பொன்னகர் மாந்தரே ஈவதோர்புரவு பூண்டனர் - செல்வமிகும் அந்நகர மக்கள் கொடுக்கும் கொடையை மேற்கொண்டனர்.
விளக்கம் : இரவலரும் இல்லை; கொடுப்பவரும் இல்லை என்பது குறிப்பு. இஃது இகழ்ச்சி. ஏகாரம்: எதிர்மறை. இனி, இன்னவை இரவல் மாந்தர்க்கும் உள்ளனவாய் இருத்தலிற் பின் மாந்தரே புரவு பூண்டார் என்றது உயிர் உறுப்பு முதலியன கொடுத்தற்குத் துணிந்தார் இவரே என்றுமாம்; ஏகாரம் தேற்றம். இச் செய்யுட்கு, பொருள்களுள் வைத்துக் கிடைத்தற்கரிய அரவு மணியையும் மிக வருந்திக் கொள்வதாகிய நீர்முத்தினையும்கூட இந்நகர மாந்தர் இரவலர்க்கு வழங்குவர் என்பது கருத்தாகக்கோடல் அமைவதாம்.
137. முல்லை அம் குழலார் முலைச் செல்வமும்
மல்லல் மா நகர்ச் செல்வமும் வார் கழல்
செல்வர் செல்வமும் காணிய என்பர் போல்
எல்லியும் இமையார் இமையாததே.
பொருள் : இமையார் எல்லியும் இமையாதது - வானவர் இரவிலும் இமையாதது; முல்லை அம் குழலார் முலைச்செல்வமும்-முல்லையணிந்த அழகிய கூந்தலாரின் முலைச்செல்வமும் (இன்பமும்), மல்லல் மாநகர்ச் செல்வமும் - வளமிகும் மாநகரின் செல்வமும் (பொருளும்); வார்கழல் செல்வர் செல்வமும் - கழல் அணிந்த வீரரின் செல்வமும் (வீரமும்) காணிய என்பர்போல் - விடாமற் காண்பதற்கு யாம் விழித்திருந்தேம் என்று தம் கண்ணை நோக்கிக் கூறுவார்போல் இருந்தது.
விளக்கம் : என்பவே என்பது பாடமாயின், இமையார், நீயிர் இவை காண்டற்கு யாங்கள் இமையாதிருந்தது என்று கண்ணிற்குக் கூறுவாரென்க. ஏகாரம்: ஈற்றசை. (இமையாதிருத்தல் இமையவர்க்கியல்பு.) மூலைச்செல்வம் என்றதனைப் போகம் என்றும் நகர்ச்செல்வம் என்றதனை நென்மணி முதலிய பொருள் என்றும், கழற்செல்வம் என்றதனை வீரமும் என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுவது இனிமை பயக்கின்றது.
138. முழவும் சங்கமும் முன்றில் முழங்குவ
விழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால்
புகழலாம் படித்து அன்று இது பொன்னகர்
அகழ்தல் மாக் கடல் அன்னது ஓர் சும்மைத்தே.
பொருள் : விழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால் - விழவினும் வேள்வியினும் ஒன்றைக் கைவிடுதல் இல்லாமையால்; முன்றில் முழவும் சங்கமும் முழங்குவ - வாயிலில் முழவும் சங்கும் முழங்குவன; அகழ்தல் மாக்கடல் அன்னது ஓர் சும்மைத்து - தோண்டப்படும் பெரிய கடலனையதாகிய ஆரவாரமொன்றுடைது; இது பொன்னகர் புகழ்தலாம் படித்தன்று - இப் பொன்னகர் புகழத்தகுந் தன்மையதன்று.
விளக்கம் : வேள்வி - சிறப்புறு நாட்களிலே நிகழ்வன. வேள்வி என்பது வேள்வு என ஈறு திரிந்தது.
139. திங்கள் முக்குடையான் திரு மாநகர்
எங்கும் எங்கும் இடம் தொறும் உண்மையால்
அம் கண் மா நகர்க்கு ஆக்கம் அறாதது ஓர்
சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே.
பொருள் : திங்கள் முக்குடையான் திருமாநகர் - திங்களனைய முக்குடையானாகிய அருகப்பெருமானின் திருக்கோயில்; எங்கும் எங்கும் இடந்தொறும் உண்மையால் - தெருவிடம் எங்கும் இடந்தோறும் உண்டாகையினாலே; அம்கண் மாநகர்க்கு அறாததோர் ஆக்கம் - அழகிய இடமுடைய பெரிய இராசமாபுரத்திற்கு நீங்காததொரு செல்வம்; சங்கம் நீள்நிதியால் தழைக்கின்றது - சங்கம் என்னும் பேரெண்ணையுடைய நிதியால் தழையா நின்றது.
விளக்கம் : இனி, மாநகருண்மையால் நகர்க்கு ஆக்கம் அறாது; அவ் வாக்கம் ஒரு சங்க நிதியாலே தளிர்க்கின்றது என்றுமாம். சங்கநிதி - அரசன்.
140. தேன்தலைத் துவலை மாலை பைந்துகில் செம் பொன் பூத்து
ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்த மாலை
கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பகச் சோலை யார்க்கும்
ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமா புரம் அதாமே.
பொருள் : தேன்தலைத் துவலைமாலை பைந்துகில் செம்பொன் பூத்து - தேனைத் தலையிலே துளியாகவுடைய மலர்மாலையும் பைந்துகிலும் செம்பொன்னும் மலர்ந்து; ஞான்றன வயிரமாலை நகுகதிர் முத்துமாலை கான்று - தூக்கப்பெற்ற வயிரமாலையும் ஒளிமிகும் முத்தமாலையும் தோற்றுவித்து; அமிர்து ஏந்தி நின்ற கற்பகச்சோலை - அமிர்தத்தை ஏந்திநின்ற கற்பகச்சோலை; யார்க்கும் அருள் ஈன்று செல்வம் சுரந்த இராசமாபுரமது - யாவருக்கும் அருளை யீன்று செல்வத்தைச் சுரந்த இராசமாபுரம் என்னும் பெயரையுடையது.
விளக்கம் : இனி, தான் சுரந்த அருளாலே யாவர்க்கும் மறுமையிற் கற்பகச்சோலையை யீன்று, அச்சோலையிற் செல்வத்தைத் தன்னிடத்தேயுடையது இராசமாபுரம் என்றுமாம்; என்றது, இதில் வாழ் வாரருளைக் கண்டு பிறர்க்கும் அருள்பிறந்து, சுவர்க்கம் எய்துவர் என்றவாறு. இத்துணையும் நகரின் சிறப்புக் கூறினார்.
அரண்மனையின் சிறப்பு
141. வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல்
மாகம் நீள் மணிமுடி மாரி வண்கை மாசு இல் சீர்
ஏக ஆணை வெண் குடை இந் நகர்க்கு மன்னவன்
நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம்.
பொருள் : வேகயானை மீளிவேல் வெய்யதானை ஐயகோல் மாகம்நீள் மணிமுடி - விரைந்து செல்லும் யானையும், சிறந்த வேலேந்திய பிற கொடிய படைகளும், வியக்கத்தக்க செங்கோலும், வானம் புகழும் நீண்ட மணிமுடியும்; மாரி வண்கை மாசு இல் சீர்ஏக ஆணை வெண்குடை - முகிலனைய கொடைதருங்கையும் குற்றமற்ற மிகுபுகழும் தனியாட்சியும் வெண்குடையும் உடைய; இந்நகர்க்கு மன்னவன் - இந் நகரத்தரசனது; நாகம் நீர நல்நகர் நன்மை தன்னம் செப்புவாம் - வானுலகனைய அழகிய அரண்மனையினது நன்மையைச் சிறிது கூறுவோம்.
விளக்கம் : தானை என்றது ஒழிந்த மூன்று படையை, தேவர் புகழும் முடி என்று குலநன்மை கூறினார். சீர்-மிக்க புகழ், ஏக ஆணை பொதுவற ஆளுதல். இதன்கண் அரசற்குரிய அளியும் தெறலும் நிரலே ஐயகோல், மாரிவண்கை, வெண்குடை என்பவற்றானும், வேகயானை, மீளிவேல், வெய்யதானை, ஏகவாணை என்பவற்றானும் உணர்த்தப்பட்டன. நாகம் - வானுலகு, நாகருலகுமாம். நகர் என்றது அரண்மனையை
142. நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதரச்
சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கை சேர்
கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுறத் தடம் கிடங்கு
பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே.
பொருள் : நீர்சுரந்து வந்து இழிதர-நீர் ஒழுங்காக வந்து இழியுமாறு; நீள்நிலம் வகுத்து - நீள் நிலத்தை வெட்டி; சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கைசேர் - நகரத்தின் வெளியிலுள்ள அகழ தொடங்கிப் படுத்த அழகிய மறைவான கற்படை சேர்ந்த; கோள்நிலத்து வெய்யஆம் கொடுஞ்சுறத் தடம்கிடங்கு - வந்தோரை அகப்படுத்திக் கொல்லுதற்குரிய ஆழமான நீரில் கொடிய சுறாமீன் வாழும் பெரிய அகழி; நிலத்துப் பூண் வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்தது - நிலமங்கைக்குப் பூணிட்டது போன்ற ஒப்பற்ற அழகினாற் பொலிவுற்றது.
விளக்கம் : சுறவு என்பது ஈறு கெட்டுச் சுற என வருதல் புறனடையால் (தொல் உயிர்மயங்கு-82) கொள்க. சுருங்கை - கரந்த கற்படை; நகரத்தின் வெளியகழிக்கும் அரசன் அரண்மனை சூழ்ந்த அகழிக்கும் உள்ள வழி.
143. இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின்
மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும்
அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன்
குஞ்சி மாண் கொடிக் கையால் கூவி விட்டது ஒத்ததே.
பொருள் : இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின் - மதிலானது வான நடுவைப் பிளந்து வானுலகின் எல்லையைக் காணச் சென்றதால், மஞ்சு சூழ்ந்துகொண்டு அணிந்து - முகில் அதனைப் (போகாமல் தடுத்துக்) காலைக் கட்டிக் கொண்டு; மாகம் நீண்ட நாகமும் நின்னை அஞ்சும் - வானத்திலே உயர்ந்த வானுலகும் நினக்கு அஞ்சுகின்றது. என்றலின் - என்பதனால்; ஆண்டு நின்று - தான் முகில் மண்டலத்தளவிலே நின்று; தன் குஞ்சி நீண்ட மாண் கொடிக்கையால் கூவிவிட்டது ஒத்ததே - தன் தலையில் நீண்ட கொடிக்கையாலே, நம்மை வந்து காண்க என்று கூப்பிட்டுவிட்ட தன்மையை ஒத்தது (கொடிகள் அசையுந்தன்மை.)
விளக்கம் : குஞ்சி - கொடிநாட்டுங் குழி; மூங்கிலுமாம். இதன்கண் இந்திரனுடைய முகில் அவன் நாட்டிற் புகும் மதில், ஆகிய பகைவனைச் சந்து செய்வித்தது என்றலும், அப்பகைவனாகிய மதில் தன்னை வந்து காணும்படி இந்திரனைப்பணித்தது என்றலும் இனிய கற்பனையாதல் உணர்க.
144. முத்து மாலை முப்புரி மூரி மா மணிக் கதவு
ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன
சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன்
தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே.
பொருள் : மூரிமா மணிக்கதவு ஒத்த நான்கு கோபுரம் - மிகப் பெரிய மணிகள் பதித்த கதவையுடைய தம்மில் ஒத்த நான்கு கோபுரங்களிலும்; ஓங்கி நின்று ஒளிர்வன சத்தி நெற்றி சூட்டிய -ஓங்கி நின்று ஒளிசெய்வனவாகிய சூலத்தின் தலையிலே அணிந்த; முப்புரி முத்தமாலை - முப்புரியாகவுள்ள முத்துமாலை தாமம்நீள் மணிவணன் தத்துஒளி மணிமுடி - ஒளிமிகும் நெடியோனாகிய திருமாலின் பரவும் ஒளியையுடைய மணிமுடியில்; தாமம் நால்வ போலும் - மாலைகள் தொங்குவன போலும்.
விளக்கம் : போன்றவும் பாடம். முப்புரியாகிய முத்தமாலையை யுடைய கதவுமாம்.
145. சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலைக்
கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து
இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம்
செங் கண் இந்திரன் நகர்ச் செல்வம் என்னது அன்னதே.
பொருள் : சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலை - சங்கு சூல்முற்றி யீன்ற முத்துமாலையைச் சந்தனத்துடன் தாங்காநின்ற அணிகலன் பிறவும் அணிந்த முலையினையும்; கொங்கு விம்மு கோதை தாழ்கூந்தல் ஏந்து சாயலார் - மணம் மிகும் மாலை பொருந்திய கூந்தலினையும் உடைய மென்மையுறும் மகளிர்; இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம்பொழில் - காமக் குறிப்புடன் கூடிய களிப்புடன் சென்று ஆடும் மலர்க்கா; செங்கண் இந்திரன் நகர்ச்செல்வம் என்னது அன்னது - செங்கண்ணனான இந்திரன் நகரிற் கற்பகச்சோலை எத்தகையதோ அத்தகையதாகும்.
விளக்கம் : செல்வம்: ஆகுபெயர்; சோலையை உணர்த்தியதால்
146. வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம் பொனால்
துள்ளும் மான் ஒருத்தலும் செம் பொன் அம் பொன் மான்பிணை
உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர்
பள்ளி மாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே.
பொருள் : வெள்ளி யானை மின்இலங்கு பைம்பொனால் மென்பிடி-வெள்ளியாற் செய்த களிறும் ஒளிவிடும் புதிய பொன்னாற் செய்த பிடியும்; செம்பொன் துள்ளும் மான் ஒருத்தலும் - செம்பொன்னாற் செய்த துள்ளும் கலைமானும்; அம்பொன் மான்பிணை - அழகிய பொன்னாற் செய்த பிணைமானும்; உள்ளு காமம் உள்சுட வேந்தன் ஆங்கு உறைவது - ஒன்றை மற்றொன்று நோக்குங் காமநோக்கு வேந்தன் மனத்திலே வேட்கைத்தீயை எழுப்ப அவன் அச்சோலையில் தங்குவதாகிய; ஓர் மண்டபம் பள்ளிமாடம் பசுங்கதிர்ப் பவணம் - ஒரு மண்டபத்தில் உள்ள பள்ளிமாடம் புத்தொளி வீசும் நாகருலகை ஒக்கும்.
விளக்கம் : இனி வெள்ளியாலே யானையும் பிடியும் செய்த என்றுமாம். இப்பொருள் ஆற்றொழுக்கானது.
147. கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய
மாழையம் திரள் கனி மா மணி மரகதம்
சூழ் குலைப் பசுங்கமுகு சூலு பாளை வெண் பொனால்
ஊழ் திரள் மணிக் கயிறு ஊசல் ஆட விட்டதே.
பொருள் : மாழைதிரள் அம்கனி - பொன்னாற் செய்த அழகிய திரண்ட பழத்தையும்; மாமரகத மணி சூழ்குலை - பெருமை மிகும் மரகத மணியாற் செய்யப்பெற்ற குழையையும்; வெண் பொன்னால் சூலுபாளை - வெள்ளியாற் செய்த சூலுடைய பாளையையும்; ஏந்திய கோழ் அரை - ஏந்திய கொழுவிய அடிப்பாகத்தினையும்; மணிமடல் பசுங்கூந்தல் கமுகு நெற்றி -நீலமணியாற் செய்த மடலினையும் உடைய பசிய கூந்தற் கமுகின் நெற்றியிலே; ஊசல் ஆட இட்டது ஊழ்திரள் மணிக்கயிறு - ஊசல் ஆட இட்ட கயிறு ஒழுங்காகத் திரண்ட முத்துவடம்.
விளக்கம் : கூந்தற் கமுகு: கூந்தற் பனைபோலக் கமுகில் ஒருவகை: கோழ் - கொழுவிய. மணிமடல்: மணி-நீலமணி. மணிக்கயிறு: மணி: ஈண்டு முத்து.
148. மென் தினைப் பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும்
குன்று அயல் மணிச் சுனைக் குவளை கண் விழிப்பவும்
நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன்
கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே.
பொருள் : நீலயானை மன்னவன் கன்று காமம் வெஃகிய காமர் காமபூமி - கரிய யானையையுடைய வேந்தன் தழும்பேறிய காமத்தாலே விரும்பிய, காமனும் விரும்பும் நிலத்தில் ; பிறங்கல் குன்று மென்தினையும் - திரண்ட செய்குன்றிலே மெல்லிய தினையையும், மிளிர்ந்து வீழ் அருவியும் - குதித்து விழும் அருவியையும்; மான்பிணை அயல் மணிச்சுனைக் குவளை கண்விழிப்பவும் - மானும் பிணையும் அயலில் உள்ள சுனையிற் குவளை காப்பார் கண் போல விழித்து நோக்கவும்; நின்று நோக்கும் - உண்பனவாக நின்று நோக்கும்.
விளக்கம் : காமர் காமபூமி - காமனுக்கு விருப்பஞ் செய்யும் பூமி, காமரை வென்ற கண்ணோன் (சிற். 164) போல. பிறங்கல் - திரள். இவற்றைச் சித்திரம் எனிற் கோயிற்கு அங்கமாகிய செய்குன்று கூறிற்றிலராவர்.
149. தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே.
பொருள் : தீங்குயில் மணந்து, தேன்துஞ்ச, வண்டு பாண் செய - குயிலாகிய இனிய காளங் கூடித், தேனாகிய யாழ் தங்க, வண்டுகள் பாட, வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த - அவற்றிற்குப் பரிசிலாக வேங்கை நின்று பொன்னைச் சொரியும், முற்கூறிய செய்குன்றைச் சூழ்ந்தவை. சந்தனம் ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறும் நாகமும் - சந்தனமும் உயர்ந்த ஆசோகும் சம்பகமும் முறைமைப்பட மணங்கமழும் சுரபுன்னையும் ஆகும். நீங்க இன்னுயிர். நீங்கும் நினைப்பின் நின்று இளகும் - கதளிர்கள்.
விளக்கம் : ஊழ் : ஊழியெனத் திரிந்தது ; முறைமைப்பட அலர்ந்து நாறும், இளஃகும்; இளகும். செய்யுள் விகாரம்.
150. முத்தம் வாய் புரித்தன மொய் கதிர்ப் பசும் பொனால்
சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணி
பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன
இத்திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே.
பொருள் : இளையர் பந்து எறிந்து ஆடு பூமி இளநங்கையர் பந்து வீசி ஆடும் இடங்கள்; முத்தம் வாய் புரித்தன - முத்தை விளிம்பிலே அழுத்தப்பெற்றன. மொய்கதிர்ப் பசும்பொன்னால் சித்திரத்து இயற்றிய - பேரொளியுடைய புதிய பொன்னால் அழகுறச் செய்யப்பட்டன. செல்வம் மல்கு பன்மணி பத்தியின் குயிற்றி - செல்வம் நிறைந்த பலவகை மணிகள் பத்தியாகப் பதிக்கப்பெற்று; வான் பதித்துவைத்த போல்வன இத்திறத்த - வானுலகை இவ்வுலகிலே இருத்தினாற் போன்றனவாகிய இவ்வகையின.
151. வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும்
கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும்
பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும்
இத்திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே.
பொருள் : வைத்த பந்து எடுத்தலும் - நிலத்தில் வைத்த பந்தைக் கையால் தொடாமல் காலாட் தட்டி யெடுத்தலும்; மாலையுட் கரத்தலும் -மாலையில் மறைத்தலும்; கைத்தலத்தின் ஓட்டலும்-கையிற் கொள்ளலும் செல்ல ஓட்டுதலும்; கண்ணி நெற்றி தீட்டலும்-கண்ணியையுடைய நெற்றியிலே தீட்டலும்; பத்தியின் புடைத்தலும் - ஒரு முறைக்கு ஒருமுறை உயரப் பத்தியாக அடித்தலும்; பைஅரவின் ஆடலும் - தாம் நிலையிலே நின்று படமெடுத்த பாம்புபோலப் பரந்து உலாவுமாறு அடித்தலும் ஆகிய; இத்திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லை - இவ்வகையினவாகிய அப்பந்தினோடு உண்டான இன்பம் முடிவில்லை.
152. கூற்றம் அன்ன கூர் நுதிக் குருதி வான் மருப்பு இடைச்
சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன
ஊற்று இருந்த மும் மதத்து ஓடை யானை பீடுசால்
காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே.
பொருள் : கூற்றம் அன்ன கூர்நுதிக் குருதிவான் மருப்பிடை - கூற்றுவனைப் போன்றனவாகிய, கூரிய நுனியையுடைய குருதி தோய்ந்த கொம்புகளிலே, சீற்றம் உற்ற மன்னர்தம் சென்னி பந்து அடிப்பன - அரசன் வெகுண்ட பகைமன்னரின் தலையைப் பந்தாடுவனவாகிய; ஊற்று இருந்த மும்மதத்து ஓடை யானை - ஊற்றெடுக்கும் மும்மதத்தையும் முகபடாத்தையும் உடையனவாகிய யானைகளும்; பீடுசால் காற்று இயல் புரவி தேர் கலந்து - காற்றைப்போல ஓடும் புரவியுந் தேரும் கூடி; கவ்வை மல்கின்று - ஒலிமிக்கது அவ்விடம்.
விளக்கம் : கூற்றம் யானைக்குவமை. முற்செய்யுளில் மகளிர் பந்தாடுதலின்பம் கூறிய ஆசிரியர் அந்நினைவினாலே இதன்கண்ணும் ஊற்றிருந்த மும்மதத் தோடையானை கூற்றமன்ன கூர்நுதிக் குருதிவான் மருப்பிடைச் சீற்றமுற்ற மன்னர்தஞ்சென்னி பந்தடிப்பன என்றார். இவை அரசன் ஏறுவன ஆதலின் உள்நிற்றல் இயல்பு.
153. கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும்
தெவ்வர் தந்த நீள் நிதி செம் பொன் மாடமும்
மவ்வல் அம் குழலினார் மணிக்கலம் பெய் மாடமும்
இவ் வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே.
பொருள் : கவ்வை அம்கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும் -(மனச் செருக்கால்) ஆரவாரமுடைய வீரர் திரள், அரசன் பகையை மனத்தால் நோக்கி, யாமந்தோறுங் காத்துத் துயில் கொள்ளும் மாடமும்; தெவ்வர் தந்த நீள்நிதி சேர்ந்த செம்பொன் மாடமும் - பகைவர் கொடுத்த பெருஞ்செல்வம் இருக்கும் பொன்மாடமும்; மவ்வல் அம் குழலினார் மணிக்கலம் பெய்மாடமும்-முல்லையங் குழலினார் தம் அணிகலன்களை இட்டிருக்கும் மாடமும்; இவ் வலந்த அல்லவும் - ஆகிய இங்குக் கூறப்பட்ட இடங்களும் பிற படைக்கலம் வைக்கும் இடம் முதலியனவும்; இடங்கள் எல்லை இல்லை - ஆகிய இடங்கள் அளவற்றவை.
விளக்கம் : கருவி -தொகுதி; ஈண்டு ஆகுபெயர்; வீரர்களை உணர்த்தியதால். இனி, பகைவர்க்குக் கவ்வையைச் செய்தலையுடைய ஆயுதங்கள் சூழ்ந்து நோக்கினார் கண்ணை அகப்படுத்தும் ஆயுதசாலை என்னும் இப்பொருளே சிறப்புடையது. கவ்வை - துன்பம்.
154. பூத் கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும்
காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார்
கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர்
ஏத்தல் சான்ற கோயிலும் இடைப் படுத்து இயன்றவே.
பொருள் : காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார் கூத்து அறாத பள்ளியும் - தம் கண்கள் இளைஞர் மெய்யைக் காய்ந்து அவர் நெஞ்சிலே சுடும், அழகிய கொடியனைய மகளிரின் கூத்து நீங்காத அரங்கும்; கொற்றம் மன்ன மங்கையர் ஏத்தல் சான்ற கோயிலும் - வெற்றியாற் கொண்டுவரப்பட்ட பகைமன்னரின் மனைவியராய்க் காவலில் இருக்கும் மங்கையர் இறைவனை வழிபடும் திருக்கோயிலும்; பூத்த கோங்கும் வேங்கையும் பொன்இணர்செய் கொன்றையும் இடைப்படுத்து இயன்ற -மலர்ந்த கோங்கு, வேங்கை, பொன்போன்று கொத்தாக மலர்ந்த கொன்றை ஆகியவற்றை இடையிலே கொண்டு இயற்றப்பட்டிருந்தன.
விளக்கம் : தமது கண்ணானது இளையோர் மெய்யை வெவ்விதாக்கி அவர் நெஞ்சிலே சுடும் மாதரார் எனச் சினைவினை முதலொடு முடிந்ததென்க. இதனால் (கூத்தறாத பள்ளியும் கோயிலும் ஆகிய) இரண்டும் தம்மில் இடைவிட்டிருக்கு மென்றார்; மேலே வண்புகழ் மாலடி வந்தனை செய்தாள் (சீவக.220) என்ப. ஈண்டு மன்ன மங்கையர் என்பதற்கு நச்சினார்க்கினியர் காவன்மகளிர் என்றார். அங்ஙனம் கூறியதன் கருத்தினை அவர் பட்டினப் பாலையில் கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலர்அணி மெழுக்கம், என்பதற்குப் பகைவர் மனையோராய்ப் பிடித்து வந்த மகளிர் பலரும் நீருண்ணுந் துறையிலே சென்று முழுகி மெழுகும் மெழுக்கம் என்று வரைந்த வுரையான் நன்கு விளங்கும். இதனால் பண்டைக்காலத்து மன்னர் பகைமன்னர் மகளிர்பால் நடந்துகொண்ட பெருந்தன்மை இனிது விளங்கும். காய்த்து : காய்ந்து; வலித்தல் விகாரம்.
155. கந்து மா மணித்திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச்
சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால்
இந்திரன் திரு நகர் உரிமையோடு இவ்வழி
வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே.
பொருள் : மாமணித் திரள் கந்து கடைந்து - மாமணித்திரளைத் தூணாகக் கடைதலானும்; செம்பொன் நீள்சுவர் சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வெண்பொனால் வேய்ந்து - பொன்னாலான சுவரிலே சந்தனத்தை அறுத்துச் செய்துவைத்த நெடுங்கையை வெள்ளியாலே வேய்தலானும்; அண்ணல் கோயில் வண்ணம் - இறைவன் கோயிலின் தன்மை; இந்திரன் திருநகர் உரிமையோடும் இவ்வழி வந்திருந்த வண்ணமே - இந்திரன் அரண்மனை உரிமை மகளிருடன் இவ்வழி வந்திருந்த தன்மையேயாய் இருந்தது.
விளக்கம் : ஏகாரம் : தேற்றம்.
156. ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உணப்
பாடலின் அரவமும் பணை முழவு அரவமும்
கூடு கோலத் தீம் சுவைக் கோல யாழ் அரவமும்
வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே.
பொருள் : ஆடலின் அரவமும் - கூத்தின் ஒலியும்; அங்கை கொட்டி நெஞ்சுஉணப் பாடலின் அரவமும் - கைகொட்டிக் கேட்போர் நெஞ்சைப் பருகுமாறு பாடும் பாடலின் ஒலியும்; பணைமுழவு அரவமும் - பெரிய முழவின் ஒலியும்; கூடு கோலம் தீஞ்சுவைக் கோலயாழ் அரவமும் -(பிற கருவிகளோடு) கூடும் அழகும் சுவையும் பொருந்திய நரம்பையுடைய யாழின் ஒலியும்; வாடல்இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகின்று - (ஆகிய) குறைதல் இல்லாத ஓசையாலே (அண்ணலுக்கு) நாள்கள்தோறும் நாள்கழியா நின்றது.
விளக்கம் : கொட்டி - ஒக்கடித்து (சேரக் கொட்டி.) இனி, வைகவாயின், ஓசையோடு செல்ல நாளும் கழியா நின்றது என்க. (அண்ணல் என்ற சொல் முன்பாட்டிலிருந்து வருவிக்கப்பட்டது.) கோயிலின் சிறப்புக் கூறினார்.
சச்சந்தன் வரலாறு
157. நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன்
அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன்
கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய
சச்சந்தன் எனும் தாமரைச் செங் கணான்.
பொருள் : கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய சச்சந்தன் எனும் தாமரைச் செங்கணான் - கச்சுப் பொருந்திய முலையார்க்கு ஆசையை உண்டாக்கும் சச்சந்தன் எனப் பெயரிய தாமரை மலரனைய செங்கண்ணான்; அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்தன்னவன் - அச்சத்துடன் புகலடைந்தவர்க்கு அமிர்தம் போன்றவன்; நாகத்தின் நஞ்சு ஆர் அழல் சீற்றத்தன்-அடையாதார்க்குப் பாம்பின் நஞ்சைப்போல நிறைந்த தீயனைய சீற்றமுடையவன்.
விளக்கம் : (பாம்பின் சீற்றம் நஞ்சு உயிரைப் போக்கும் அளவும் இருந்து பிறகு நீங்கும்). இச் செய்யுளினும் வேந்தற்குரிய அளியும் தெறலும் கூறப்பட்டன. அளியினும் வேந்தற்குத் தெறலே சிறத்தலின் முதற்கண் நச்சு நாகத்தின் ஆரழற் சீற்றத்தன் என்றார். அச்சம் உற்றடைந்தார்க்கு என்றமையான் செருக்குற்றுப் பகைத்தார்க்கு நாகச் சீற்றத்தன் என்று வருவித்தோதுக. ஆரழற்சீற்றத்தன் என்றதனால் அவன் பேராண்மை விதந்தோதப்பட்டது. அடைந்தார்க் கமிர்தன்னவன் என்றதனால் அதன் எஃகாகிய ஊராண்மை விதந்தோதப்பட்டது. என்னை?
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு
என்பவாகலான் என்க.
158. வண் கையால் கலி மாற்றி வை வேலினால்
திண் திறல் தெவ்வர் தேர்த் தொகை மாற்றினான்
நுண் கலைக்கு இடனாய்த் திரு மா மகள்
கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே.
பொருள் : திருமாமகள் கண்களுக்கு இடன்ஆம் கடி மார்பன் - திருமகள் கண்கள் வேறிடம் நோக்காமல் நோக்கும் இடமாகிய புதுமை நிறைந்த மார்பனாகிய அவன்; நுண்கலைக்கு இடன் ஆய்-நுண்ணிய கலைகளுக்கு இருப்பிடமாகி; வண்கையால் கலி மாற்றி - வண்மையுடைய கையினால் வறுமையை நீக்கி; வைவேலினால் திண்திறல் தெவ்வர் தேர்த்தொகை மாற்றினான்- கூரிய வேலினால் திண்ணிய திறலையுடைய பகைவரின் தேர்த்திரளை நீக்கினான்.
நுண்கலை என்றது, இயல், இசை, நாடகம், சிற்பம், ஓவியம் என்னும் ஐந்தனையும். இவை கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணர்வனவாகலின் நுண்கலை எனப்பட்டன.
159. கோதை நித்திலம் சூழ் குளிர் வெண் குடை
ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால்
தாதையே அவன் தாள் நிழல் தங்கிய
காதலால் களிக்கின்றது இவ் வையமே.
பொருள் : கோதை நித்திலம் சூழ்குளிர் வெண்குடை - பூமாலையும் முத்துமாலையும் சூழ்ந்த குளிர்ந்த வெண்குடையால்; ஓதம்நீர் உலகுஒப்ப நிழற்றலால் - கடல்சூழ்ந்த உலகை ஒப்ப நிழற்படுத்தலால்; தாதையே (அவ்வரசன்) உலகிற்குத் தந்தையே ஆயினான்; அவன்தாள் நிழல்தங்கிய - அவன் தாளின் நிழலிலே வாழ்வதற்கு; இவ் வையம் காதலாற் களிக்கின்றது - இவ்வுலகம் அவன் மேல் வைத்த அன்பினாற் களிப்புறுகின்றது.
விளக்கம் : கோதை நித்திலம்: உம்மைத் தொகை. ஒப்ப - எல்லார்க்கும் ஒப்ப. தங்கிய: செய்யிய என்னும் எதிர்கால வினையெச்சம். இனி, தாணிழற்றங்கிய வையம், அவன் உலகில் வைத்த காதலாலே களிக்கின்ற தென்றுமாம். இவற்றால் (மூன்று செய்யுட்களாலும்) தெறலும் அளியும் அழகும் கொடையும் வீரமும் கல்வியும் முறை செய்தலும் கூறினார். ஈண்டுத் தேவர் தாதையே எனச் சச்சந்தனுக் கோதியதனையே கம்பநாடர் சிறிது மாற்றித் தயரதன் தாயொக்கும் அன்பின் (4.அரசிய-4) என்று தங்காப்பியத்து அமைத்துக் கொண்டார்.
160. தருமன் தண் அளியால் தனது ஈகையால்
வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே
அருமையால் அழகின் கணை ஐந்து உடைத்
திருமகன் திரு மா நில மன்னனே.
பொருள் : திரு மாநிலம் மன்னன் - திருவையுடைய மாநிலத்தின் மன்னனான சச்சந்தன்; தண் அளியால் தருமன் - (அமிர்தத்தை யொத்தலும் உலகை நிழற்றலும் ஆகிய) தண்ணிய அருளினால் அறக்கடவுளைப் போன்றவன்; தனது ஈகையால் வருணன் - (கலிமாற்றின) கொடையால் வருணனைப் போன்றவன்; உயிர் மாற்றலின் கூற்று - (தேர்த்தொகை மாற்றுமிடத்தால் அழற் சீற்றத்தனாய்) உயிரைப் போக்குதலாற் கூற்றுவனைப் போன்றவன்; அருமையால் வாமன் -(கலைக்கிடனாம்) அருமையால் வாமனைப் போன்றவன்; அழகின் கணை ஐந்துஉடை திருமகன் (மகளிர்க்கு அணங்காகிய) அழகால் ஐங்கணை யேந்திய திருமகள் மகனான காமனைப் போன்றவன்.
விளக்கம் : இங்ஙனம் உவமை கூறுதற்குக் கொண்டு கூறினார். எனவே, கூறியது கூறல் அன்றென்க.
161. ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல்
தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான்
தேனை மாரி அன்னான் திசை காவலன்
வானம் தோய் புகழான் மலிவு எய்தினான்.
பொருள் : ஏனை மன்னர்தம் இன்னுயிர் செற்ற வேல் தானை மன்னரில் தான்இமில் ஏறனான் - மற்றைய (பகை) மன்னரின் இனிய உயிரைப் போக்கிய வேற்படையையுடைய தன் மரபு மன்னர்களில் தான் செருக்கினால் இமிலையுடைய ஏறு போன்றவன்; தேன்மாரி அன்னான் திசை காவலன் - மொழியால் தேன் மழையனையவனாகிய எட்டுத் திக்கிற்கும் அரசனாகிய அவன்; வானம் தோய் புகழால் மலிவு எய்தினான் - வானிற் பொருந்திய புகழாலே மிகுதல் பெற்றான்.
விளக்கம் : தேனை : ஐ : அசை.
விசயையின் தோற்றம்
162. செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல்
மல்கு நீர் விதையத்து அரசன் மகள்
அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள்
வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள்.
பொருள் : செல்வற்கு இன்னணம் சேறலின் - அரசனுக்கு இவ்வாறு நல்வினை நடத்தலாலே; தீம்புனல் மல்குநீர் விதையத்து அரசன் மகள் -(இதற்குத்தக) இனிய நீர்வளம்மிக்க இயல்பையுடைய விதையத்து மன்னன் மகள்; அல்லிசேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள் - தாமரையில் வாழும் திருமகளுக்கு ஒரு திருமகள் போன்றவள்; வில்லின் நீள் புருவத்து எறி வேற்கணாள் - வில்லனைய நீண்ட புருவத்தினையும் எறியும் வேலனைய கண்ணையும் உடையவள்;
விளக்கம் : அல்லி : அகவிதழ்; சினையாகு பெயராகத் தாமரை மலரை உணர்த்தியது. புனலினது வளப்பம் பொருந்திய நீர்மையையுடைய விதையம்; தண்ணீரும் விளைவிக்கும் நீருமாம். திருவிற்கு ஒரு திருவன்னவள்; இல்பொருள் (உவமை.) சச்சந்தன் உயிர்நீத்தமைக்குக் காரணமாதல்பற்றி வில்லின் நீள்புருவத்து எறிவேற் கணாள் என்று கொல்படைகளை உவமை ஓதினர்.
163. உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு
அரிய ஆயினும் அவ் வளைத் தோளிகண்
பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு
அரிய தேவரும் ஏத்து அரு நீரளே.
பொருள் : பெண் அணங்கு அரிய தேவரும் ஏத்து அருநீரள் - (அவள்) இவ்வுலகிற் பெண்ணால் வருத்துதற்கரிய தேவரும் புகழ்தற்கரிய பண்பினாள்; உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு அரிய ஆயினும் - (அவளுடைய) வடிவும் மென்மையும் இத்தன்மையவெனப் பொருந்த உவமை கூறுதற்கு அரிய எனினும்; அவ் வளைத்தோளிகண் பெருகு காரிகை பேசுவல் - அழகிய வளைத்தோளியின் அழகைச் சிறிது கூறுவேன்.
விளக்கம் : அதுமேற் கூறுகின்றார். உருவுஞ் சாயலுமாகிய காரிகை என்க. அவை கண்ணானும் மனத்தானும் நுகரப்படுவனவேயன்றிச் சொல்லாற் கூறும் எளிமையுடையனவல்ல வென்பார் உரைப்பதற்கு அரிய வாயினும் என்றும், அங்ஙனமாயினும் எம்மாலியன்ற வளவிற் கூறுவேம் என்பார் பேசுவல் என்றும் கூறினார். அக்குறை மக்கட் பிறப்பினையுடைய எமக்கே உரியது மன்றென்பார் தேவரும் ஏத்தரும் நீரள் என்றார்.
164. எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு
ஒண்ணறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல்
கண் இருண்டு நெறி மல்கிக் கடைகுழன்ற கருங் குழல்கள்
வண்ணப் போது அருச்சித்து மகிழ்வு ஆனாத் தகையவே.
பொருள் : எண்ணெயும் நானமும் இவை மூழ்கி - எண்ணெயும் புழுகும் என்னும் இவற்றிலே முழுகி; கடை குழன்ற கருங்குழல்கள் - நுனி சுருண்ட கரிய கூந்தல்கள்; இருள் திருக்கிட்டு - இருளைப் பிடித்து நீள முறுக்கி (அறல்படப் பிடித்து); ஒள் நறுந்துகில் கிழிபொதிந்து உறை கழித்தனபோல் - ஒளி பொருந்திய நல்ல துகிலாகிய உறையிலே பொதிந்து வைத்துப் பிறகு அதனை வாங்கப்பட்டவைபோல்; கண் இருண்டு நெறி மல்கி - (பார்ப்பவர்) கண்கள் இருள நெளிவு மிகுந்து; வண்ணப் போது அருச்சித்து -சேடியர் மலரைக்கொண்டு வழிபட்டாலும்; மகிழ்வு ஆனாத் தகைய - வருந்துந் தன்மைய.
விளக்கம் : இருண்டு - இருள. குழல், மயிர் மாத்திரையாய் ஐவகையையும் உணர்த்தலிற் பன்மை கூறினார். கண் - இடமாக்கி, கருங்குழல் - கொடிய குழல் என்றும் ஆம். குழன்றும் பாடம்.
165. குழவிக் கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்
அழகுகொள் சிறுநுதலும் அணி வட்ட மதி முகமும்
தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய்த் தூமுறுவல்
ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே.
பொருள் : குழவிக்கோட்டு இளம்பிறையும் குளிர்மதியும் கூடினபோல் - குழவிப் பருவத்து ஒரு கலையை உடையதாய்ப் பின்பு இளம்பருவத்தே நின்ற பிறையும் குளிர்ந்த திங்களும் கூடினபோல; அழகுகொள் சிறு நுதலும் அணிவட்ட மதிமுகமும் - அழகிய சிறிய நெற்றியும் அணிமிகும் வட்டமான மதிப்புறும் முகமும்; ஒழுகுபொற் கொடிமூக்கும் - வளருகின்ற பொலிவினையுடைய நீண்ட மூக்கும்; தொழுதாற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய் - தொழுத கணவனுக்கு வரம் கொடுக்கும் கொவ்வைக் கனியனைய வாயும்; தூமுறுவல் - தூய பற்களும்; உருப்பசியை உருக்கும் - உருப்பசியையும் மயக்கும்.
விளக்கம் : இளமை - ஈண்டுக் குழவிப்பருவம் ஒழிந்ததன் மேற்று. இளமையுந் தருவதோ? (கலி.15) மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் - பசுவெண்டிங்கள் தோன்றி யாங்குக் - கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் (குறுந். 129) என்றார் பிறரும். உருக்குதல் : நுகர்தற்கு அவளும் ஆண்பாலாக விரும்புதல். தொழுதாற்கு என்றதற்கு நச்சினார்க்கினியர் தான் தொழப்பட்ட கணவனுக்கு என வேண்டாது உரைவிரித்தார். ஊடிய காலத்தே தன்னைத் தொழுகின்ற கணவன் வேண்டுகின்ற கூடலைத் தூமுறுவலே உடன்பாடுணர்த்துமாற்றான் அளித்தலின் தொழுதாற்கு வரங்கொடுக்குந் தூமுறுவல் என்றார். தொழுவோன் வேண்டுவதெல்லாம் வரமே ஆகலின் வரம் என்றார்.
166. வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா
நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்க்
கண் கூடா கடை புடைத்துக் கைவல்லான் எழுதிய போல்
பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனாப் படியவே.
பொருள் : கடை புடைத்துக் கைவல்லான் எழுதியபோற் பண்பு ஆர்ந்த கொடும் புருவம் -(எழுத்து ஒருமைப்படத் துகிலிகைக் கோலை) உதறிக் கைதேர்ந்த ஓவியன் எழுதியவற்றைப் போலத் தமக்குரிய பண்பு நிறைந்த கொடிய புருவங்கள்; வண்சிலையை வனப்பு அழித்து - வளமிகும் வில்லின் அழகைக் கெடுத்து; வார்ந்து ஒழுகு நிலம்பெறா - தமக்கு இயன்ற அளவு நீண்டு மேற்செல்லாவாகி; நுண்கருமை கொண்டு ஒசிந்து - கூரிய கருமைகொண்டு வளைந்து; நுதல் இவர்ந்து போந்து உலாய்க் கண் கூடா - நெற்றியில் தாம் செல்லுதற்குரிய அளவுஞ் சென்று போந்து பரந்து தம்மிற்கூடா (ஆதலின்), பழிச்சு ஆனாப் படிய -புகழல் அமையாத தன்மையவாயின.
விளக்கம் : வனப்பிகந்து வார்ந்தொழுக என்பதூஉம் பாடம்.
167. சேல் அனைய சில்லரிய கடை சிவந்து கரு மணி அம்
பால் அகத்துப் பதித்து அன்ன படியவாய் முனிவரையும்
மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமே
போல் குணத்த பொரு கயல் கண் செவி உறப் போந்து அகன்றனவே.
பொருள் : சில்அரிய - சில இரேகைகளையுடையவாய்; கடை சிவந்து - கடைப்புறம் சிவந்து; கருமணி அம் பாலகத்துப் பதித்த அன்ன படியவாம் - மாயோனையும் அழகிய பாற்கடலையும் முகத்தே அமைத்தாற் போன்ற தன்மையவாய்; முனிவரையும் மால்உறுப்ப - முனிவர்களையும் மயக்கூட்டுவனவாய்; மகிழ்செய்வ - களிப்பூட்டுவனவாய்; மாண்புஇல் நஞ்சும் அமிர்தமுமே போல் குணத்த - துன்பத்தால் நலம் இல்லாத நஞ்சும், இன்பத்தால் நலம் தரும் அமிர்தமும் போன்ற பண்பினவாய்; சேல்அனைய பொரு கயற்கண் - சேல்மீனைப் போன்று செவியுடன் பொருங் கண்கள்; செவிஉறப் போந்து அகன்றன - செவியுற நீண்டு, அதற்கேற்ப அகன்றிருந்தன.
விளக்கம் : (சேல் உவமையாகவும் கயல் அடைமொழியளவேயாகவும் நின்றன. கருமணி, பால்: உவமையாகு பெயர்கள்.) கன்னியாதலின் மாலுறுப்ப என்றார், மகிழ்செய்வ-கணவனுக்கு மகிழ்செய்வ. இச் செய்யுளில் கருமணி அம்பாலகத்துப் பதித்தன்ன படியவாய் என்ற தொடர்க்கு நீலமணியைப் பாலின் அகத்தே பதித்துவைத்தாற் போன்ற தன்மையவாய் என்று உரைகூறல் எளிதாயிருப்பவும் தாம் அங்ஙனம் கூறாமைக்குக் காரணம் கூறுவார். கருமணியைப் பாலிற் பதித்தால் பால்நிறங் கெடுமென் றுணர்க என்று கூறினர். இதனால் அவ்வுரையாசிரியரின் நுண்மாணுழைபுலம் உணரப்படும். பத்தினிப் பெண்டிர் பிறர்நெஞ்சு புகார் என்பது கருதி கன்னியாதலின் மாலுறுப்ப என்றார் என்று கூறும் நயமும் உணர்க.
168. மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு
உயிர் செகுத்து முன் ஒன்றிப் பின் பேராது உரு அமைந்த
செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும்
வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே.
பொருள் : மயிர்எறி கத்தரிகை அனையவாய் - மயிரை வெட்டும் கத்தரிகை போன்றனவாய்; வாடு வள்ளை உயிர் செகுத்து - வாடிய வள்ளைக் கொடியின் அழகைக் கெடுத்து; பின் பேராது முன் ஒன்றி - பின்னே மறியாமல் முன்னே பொருந்தி; உரு அமைந்த செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார்காதும் - அழகு பொருந்திய மகரமீன் வடிவமான குண்டலமும் தோடும் அசைதல் அமையாத காதும்; வயிரவில் முகம்சூடி வண்ணம்வீற்றிருந்தன - வயிரத்தின் ஒளியைத் தம்மிடத்தே கொண்டு அழகு வீற்றிருந்தன.
விளக்கம் : வாட்டு ஆயின், வாட்டின காது என்க. காதும் என்ற உம்மை இறந்தது தழீஇயிற்று.
குண்டலமும் என்ற உம்மையால் தோடு கொள்ளப்பட்டது.
செகுத்து என்னும் வினைக்கேற்ப அழகினை உயிர் என்றார்.
169. ஈனாத இளங் கமுகின் மரகத மணிக் கண்ணும்
ஆனாதே இருள் பருகும் அருமணி கடைந்ததூஉம்
தான் ஆகி இருளொடு ஓர் தாமரைப் பூச் சுமந்து அன்ன
கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின் சிறை கொண்டு இருந்ததே.
பொருள் : ஈனாத இளங்கமுகின் மரகத மணிக்கண்ணும் - குலையிடாத இளங்கமுகின் மரகத மணிபோலும் கணுவும்; ஆனாதே இருள் பருகும் அருமணி கடைந்ததும் - இருளை முற்றும் கெடுக்கும் அரிய மாணிக்கத்தைக் கடைந்ததுவும், தான் ஆகி - அதுவாகி; இருளொடு ஓர் தாமரைப்பூச் சுமந்த அன்ன-இருளையும் ஒரு தாமரை மலரையும் சுமந்தாற் போன்ற; கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின்சிறை கொண்டிருந்தது - மணம் நிறைந்த திரண்ட கழுத்து அழகு குடிகொண்டிருந்தது.
விளக்கம் : கோட்புகாத (குலையீனாத) கன்னிக் கமுகுவரையிற்கும் நெய்ப்பிற்கும், மணி திரட்சிக்கும், நிறத்திற்கும் உவமம். உதயகிரியிற் சிந்துர அருவி வீழ்ந்த சிந்தூராகரத்திற் பதினாறு சதுர்யுகம் சிவப்பேறின முழு மாணிக்கம் இருளைக் கெடுத்தலின், இருள்பருகு மணி என்றார். இருளும் தாமரையும் மயிர்க்கும் முகத்திற்கும் உவமம். கான் - மணம்.
170. மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு
அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமைத் தோள்
துணிகதிர் வளை முன் கைத் தொகுவிரல் செங் காந்தள்
மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே.
பொருள் : ஆடுஅமைத் தோள் - அசையும் மூங்கிலனைய தோள்கள்; மணிமகரம் வாய்போழ்ந்து ஆங்கு வாழ்முத்த வடம் சூழ்ந்து - அழகிய சுறாமீன் வாய்திறத்தலாலே ஆங்கு வாழும் முத்துமாலை சூழப்பட்டு; அணி அரக்கு ஆர் செம்பஞ்சி அணை அனைய - அழகிய செந்நிறம் பொருந்திய செம்பஞ்சணையைப் போன்றன; துணிகதிர் வளை முன்கைத் தொகுவிரல் - தெளிந்த கதிர் சொரியும் வளையணிந்த முன்கையிற் குவிந்த விரல்கள்; செங்காந்தள் மணிஅரும்பு - செங்காந்தளின் அழகையுடைய அரும்பை அனைய; அங்கை மலர் குலிகம் ஆர்வனப்பின - அகங்கைகள் தாமரை மலரனைய; அக் கைகள் குலிகம் பொருந்திய அழகின.
விளக்கம் : பஞ்சணை மென்மைக்கும் நிறத்திற்கும் உவமம். அமை திரட்சிக்கும் நெய்ப்பிற்கும் உவமம். துணிதல் - தெளிதல். போழ்ந்தவும் வான் முத்தமும் பாடம்.
171. தாமச் செப்பு இணை முகட்டுத் தண் கதிர் விடு நீல
மா மணி தாபித்தன போல் மனம் பருகு கருங் கண்ண
ஏம் உற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி
ஆம் அணங்கு குடி இருந்து அஞ் சுணங்கு பரந்தனவே.
பொருள் : தாமச்செப்பு இணை - மாலையணிந்த செப்புகளனைய இரு முலைகளும்; முகட்டுத் தண்கதிர்விடு நீலமாமணி தாபித்தனபோல் - தம் உச்சியிலே குளிர்ந்த கதிரைச் சொரியும் நீலமணியை அழுத்தப்பட்டனபோல; மனம்பருகு கருங்கண்ண - நோக்கினார் மனத்தை யுண்ணும் கரிய கண்களையுடையவாய்; ஏம்உற அடிபரந்து - கண்டார் மயக்கமடைய அடிபரந்து; இளம் பிறை வடம்சூடி - இளம்பிறை வடிவமான வடத்தை அணிந்து; ஆம்அணங்கு குடியிருந்து - தம்மேல் இருக்கும் அழகைச் செய்யும் வீற்றுத் தெய்வம் குடிகொள்ளப்பட்டு; அருஞ்சுணங்கு பரந்தன - அரிய தேமல் பரவியிருந்தன.
விளக்கம் : தாமச் செப்பிணை எனவே முலையாம். இனி, பூஞ் செப்பாக்கின் சினையிற் கூறும் முதலறி கிளவியும் ஆம் (சினையாகு பெயர்; பூமாலைக்கு ஆயினதால்) ஆம்அணங்கு - மேல் ஆகக்கடவ வருத்தமுமாம், (கதையை யுட்கொண்டு)
172. அங் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்
கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை
உண்டு எனத் தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்
உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே.
பொருள் : அங்கைபோல் வயிறு அணிந்த - அகங்கை போலும் வயிற்றை அழகுசெய்த; வலஞ்சுழி அமை கொப்பூழ் கங்கையின்சுழி அலைக்கும் - வலஞ்சுழியாக அமைந்த கொப்பூழ் கங்கையின் சுழியை வருத்தும்; கண்கொளா நுடங்கிடையைத் தமர்உண்டு என மதிப்பர் - கண்ணுக்குத் தோன்றாத அசையும் இடையை உறவினர் பயிற்சியால் உண்டு என்று கருதுவர்; நோக்கினார் பிறர் எல்லாம் - (மற்று) நோக்கிய மற்றையர் யாவரும்; உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிது - பிற உறுப்புக்கள் உண்மையான் உண்டு என்றும், கட்புலனாகாமையின் இல்லை என்றும் ஐயுறுதல் அல்லது இரண்டில் ஒன்று துணிதல் அரிது.
விளக்கம் : கங்கை - குலந்தூய்மைக்குக் கூறினார்.
இவ்வழகிய செய்யுளின் கருத்தைக் கம்பநாடர் தங்காவியத்தே,
பல்லியல் நெறியிற் பார்க்கும் பரம்பொரு ளென்ன யார்க்கும்
இல்லையுண் டென்ன நின்ற இடையினுக் கிடுக்கண் செய்தார் (கம்ப.கோலங்.12)
173. மன்நாக இணைப் படமும் தேர்த் தட்டு மதி மயக்கிப்
பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல்
கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று
இன் அரத்தப் பட்டசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே.
பொருள் : மன்நாக இணைப்படமும் தேர்த்தட்டும் பொன் ஆலவட்டமும்போல்- பெருமை பொருந்திய அரவின் இருபுறமும் ஒத்த படமும் தேரின் தட்டும் பொன்னாலாகிய ஆலவட்டமும் போல; கலை இமைக்கும் அகல்அல்குல் - மேகலை ஒளிரும் வட்டம் அகன்ற அல்குல்; கொன்இளம் பருதியும் குறுமுயலின் குருதியும் போன்று இன் அரத்தப்பட்டு அசைத்து - காலையில் தோன்றும் இளஞாயிறும் சிறு முயலின் இரத்தமும்போலே கண்ணுக்கினிய செம்பட்டுடுக்கப்பட்டு; மதிமயக்கி இந்திரற்கும் புகழ்வு அரிது - எல்லோரையும் மதிமயக்குதலின் இந்திரனுக்கும் புகழ்தல் இயலாது.
விளக்கம் : கொன் - விடியற்காலம். கொன்வரல் வாழ்க்கை (புறநா.379-11) போல. இந்திரற்கும்: உம்: உயர்வு சிறப்பு.
174. வேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளங் கன்னி
வாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம்பஞ்சி
தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து
மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே.
பொருள் : வேழவெண் திரள் தடக்கை வெருட்டி -(ஒழுங்காகக் காணப்படுதலின்) வெள்ளை யானையின் திரண்ட துதிக்கையை அஞ்சுவித்த துடை; இளங்கன்னி வாழைத் தண்டெனத் திரண்டு - இளமை பொருந்திய குலை தள்ளாத வாழையின் தண்டு போலத், திரண்டு; வால்அரக்கு உண் செம்பஞ்சி தோழமை கொண்டு என - தூய செந்நிறப் பஞ்சியின் நட்பைக் கொண்டாற் போல; மென்மை யுடையவாய் - மென்மை பெற்றனவாய்; ஒளி திகழ்ந்து - ஒளிபெற்று; மாழைகொள் மணிமகரம் கவ்வி வீற்றிருந்தன - பொன்னிற் பதித்த மணிகளாலான மகரவடிவான குறங்குசெறி என்னும் அணி கவ்வி மேலாயிருந்தன.
விளக்கம் : வெருட்டி: (துடைகளை உணர்த்தியதாற்) பெயர். மற்று: வினைமாற்று. செம்பஞ்சி: பஞ்சி மாத்திரை; அரக்கு உண் என நிறங்கூறினதால். பொன் தன்னிடத்தே அடக்கின மணி. மகரம்: உவமையாகுபெயர். (குறங்கு செறி: ஓர் அணிகலன்.) திரண்ட என்பது பாடமாயின் பெயராம்.
175. பக்கத்தால் கவிழிய வாய் மேல் பிறங்காப் பாண்டிலா
ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்
நெக்குப் பின் கூடாது நிகர் அமைந்த முழந் தாளும்
மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே.
பொருள் : மேல் பக்கத்தால் கவிழியவாய் - மேற்பக்கத்திலே கவிழ்ச்சியை உடையனவாய்; பிறங்காப் பாண்டில்ஆ - பேராத வட்டம் ஆமாறு; ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய் - நன்மை இதற்கு ஒப்ப வேறு ஒன்றில் உணராதவாறு உள்ளே பொருந்திய சந்துகளை உடையனவாய்; நெக்குப் பின் கூடாது நிகர்அமைந்த முழந்தாளும் - நெகிழ்ந்து பின் போகாமல் இரண்டும் சமமாக உள்ள முழந்தாட்களும்; மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தன - மற்ற மக்களுக்கு அமையாத சிறப்பினால் மிக்கன.
விளக்கம் : (நிகர் அமைந்த என்பதற்கு உவமையில்லாத என்பது வலிந்துகொள்ளும் பொருளாகும்.)
176. ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று
நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்ச்
சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய்
வாடாத காம்பே போல் கணைக் காலின் வனப்பினவே.
பொருள் : ஆடுதசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று - ஆடுதசை பெயராமலும் வற்றாமலும் மயிர்பெருகி; நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய் - நீடாமலுங் குறுகாமலும் (இரண்டும்) சமமான அளவினவாய்; சேடுஆவ நாழிகையின் புடைதிரண்டு - பெருமைமிக்க அம்பறாத்தூணி போலத் திரண்டு; தேன் நெய்பெய் வாடாத காம்பேபோல் - தேனும் நெய்யும் பெய்து வைக்கும் வாடாத மூங்கிலே போல்; கணைக்கால் இன் வனப்பின - கணைக்கால்கள் இனிய வனப்பின.
விளக்கம் : தேவி நிறத்திற்கு உவமை பதுமராகமாயினும், மயிர்கள் பெருகியதனால், காம்பு உவமையாயிற்று. இனி, கணைக்காலின் வனப்பு இன்ன என்றுமாம் (இன்னஎன வருவித்தல் வேண்டும்). அகன்று - பெருகி. நிகரமைந்த - சமமாகவுள்ள. சேடு - பெருமை. ஆவநாழிகை - அம்புக்கூடு (அம்பறாத்தூணி) வாடாத காம்பு - பச்சை மூங்கில்.
177. பசும் பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப
நயந்து எரி பொன் சிலம்பு முத்தரி பெய்து அகம் நக
இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல்
அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே.
பொருள் : பசும்பொன்செய் கிண்கிணியும் பாடகமும் முத்து அரிபெய்து - புதிய பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணியும் பாடகமும் முத்துக்களால் ஆகிய அரிபெய்யப்பெற்று; பாடு அலைப்ப - தாங்கிக் கிடக்கும் இடத்தை வருத்துவதாலே; எரி பொன் சிலம்பு நயந்து அகம்நக - ஒளிவிடும் பொற்சிலம்பு விரும்பிச் சிறிதே நகைப்ப; எழில்ஆர் மணிஆமை இளம்பார்ப்பின் கூன்புறம்போல் அடியிணை - அழகு பொருந்திய யாமையின் இளம்பார்ப்பின் வளைந்த முதுகைப் போலும் அடியிணையை; இயைந்து புகழ்வார்க்கு உணர்வு அசைந்து மடிந்து ஒழியும் - புகழ விரும்பிப் புகழ்வார்க்கு உணர்வு துளங்கிக் கெட்டுப்போம்.
விளக்கம் : பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை, தவழ்பவை தாமும் அவற்றுஓ ரன்ன (தொல்.மரபு.4.5.) என்றார். பாடலைப்ப என்பதனைப் பரடலைப்ப என்று கோடலே பொருந்தும். கிண்கிணியும் பாடகமும் அழகுக்கிட்டனவாகவும் அலைத்தல் கண்டு நயந்தெரி சிலம்பு (அவற்றை இகழ்ந்து) அகநக என்றமை உணர்ந்தின்புறுக.
178. அரக்கு இயல் செங் கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடிப்
பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அறத் திரண்டு நீண்டு
ஒருக்கு உற நெருங்கிப் பொன் ஒளி ஆழி அகம் கௌவித்
திருக் கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே.
பொருள் : திருக்கவின்கொள் மெல்விரல்கள் - திருவின் விரலழகைக் கொண்ட மெல்லிய விரல்கள்; நுதி பரப்பின்றி உயர்ந்து பழிப்பு அறத்திரண்டு நீண்டு ஒருக்குஉற நெருங்கி - நுனி பரப்பின்றிக் காணலுற்றுத் திரண்டு நீண்டு சேர நெருங்கி; ஒளிபொன் ஆழி அகம்கவ்வி அகஇதழ்போல் உகிர்சூடி - ஒளியுடைய பொன் மோதிரம் கவ்வப்பட்டு, அகஇதழ் போலும் (செம்பஞ்சூட்டிய) உகிரை யணிந்து; தேன் ஆர்க்கும் தகைய - (மலரென்று) தேன்வண்டுகள் ஆரவாரிக்கும் இயல்பின.
விளக்கம் : குலிகம் ஊட்டின அகவிதழ் செம்பஞ் சூட்டியதற்கு உவமம்.
179. என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி
இன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உறப் புல்லி
ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும்
மென் பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவினவே.
பொருள் : என்பொடு நரம்புஇன்றி இலவம்பூ அடர் அனுக்கி - என்பும் நரம்பும் இன்றி இலவின் இதழைக் கெடுத்து; இன்புற வரம்பு உயர்ந்து இருநிலம் உறப்புல்லி - கண்ணுக்கினிய புறஎல்லை உயர்ந்து நிலத்தைப் பொருந்தத் தழுவி; ஒன்பதின் சாண் நடப்பினும் ஒருகாதம் என்று அஞ்சும் - ஏழடி நடந்தாலும் ஒருகாதம் என்று அஞ்சும்; மென்பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவின - மெல்லிய பஞ்சனைய சிற்றடியும் பெருமைதக்க விருப்பின.
விளக்கம் : ஏழடியென்றல் மரபாயிருக்க ஒன்பதின்சாண் என்றது ஒரு காதம் என்னும் (மோனை) எழுத்தை நோக்கி. தம்மிடம் வந்த பெரியோர்க்கு வழிவிடுதற்குச் செல்லுங் குறைந்த தொலைவுஏழடி யென்பர். இதனால் சப்தபரமஸ்தானம்பெறுவரென்பது சைன நூற்கொள்கை.
சச்சந்தன் விசயையை மணத்தல்
180. இவ் உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து
அவ் உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்துக்
கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்துக் காதல் நீர்
செவ்விதில் தெளித்து ஆனாக் காமப் பூச் சிதறினான்.
பொருள் : இவ்வுருபு இருந்து நெஞ்சு என்னும் கிழியின் மேல் இலக்கித்து (கூறிய) இவ்வடிவை ஒருப்பட்டிருந்து நெஞ்சு என்னும் படத்திலே குறித்து; அவ்வுருபு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்து - அதனை நினைவு என்னும் எழுது கோலால் உறுப்பு விளங்க எழுதி; கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்து - தான் கைக்கொண்ட தியானத்தாலே அதன் கண்ணைத் திறந்து; காதல்நீர் செவ்விதின் தெளித்து - (மாமன் மகளாகையால்) அன்பு என்னும் நீரைச் சொரிந்து; ஆனாக் காமப்பூச் சிதறினான் - புணர்ச்சி வேட்கையாகிய குறைவில்லாத மலர்களைச் சிதறினான்.
விளக்கம் : இவன் எழுதிப் பிரதிட்டித்தான். இலக்கு - குறித்துப் பார்த்தல். இருந்து இலேகித்து என்றும் பாடம். இலேகித்து - எழுதி. இத்தகைய அழகியாகிய விசயையை (162) (நல்லூழ் நடத்தலாலே) சச்சந்தன் நெஞ்சு பொருந்தக் காதலிப்பானாயினன் என்பது கருத்து.
181. மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல்
தையலாள் நெடுந் தடங்கண் வலைப்பட்டுச் சச்சந்தன்
ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கிச் செல்கின்றான்
மொய் அறாக் களியானை முழங்கித் தேன் இமிர் தாரான்.
பொருள் : மொய்அறாக் களியானை முழங்கித் தேன்இமிர் தாரான் - போரில் நீங்காத மதயானைபோல் முழங்கி; வண்டுகள் ஒலிக்குந் தாரானாகிய சச்சந்தன்; எழுத்து மெய்பெறா உயிர்க்கும் மழலைவாய் இன்முறுவல் தையலாள் - எழுத்து வடிவு பெற்றுத் தோன்றும் இளைய மொழியையும் இனிய முறுவலையும் உடைய அம் மங்கையின்; நெடுந் தடங்கண் வலைப்பட்டு - நீண்ட அகன்ற கண்வலையிலே சிக்கி; ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கிச் செல்கின்றான் - கால்நிலம் தோய்தல் கண் இமைத்தல் மாலை வாடுதல் போன்ற நிலமகளிரின் இயல் கண்டும் ஐயுறாமல் தெய்வ மகளெனவே உட்கொண்டு ஒழுகினான்.
விளக்கம் : மழலை - எக்காலத்திற்குங் கூறுப.
182. வண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம்
உண்டு உகுத்திடு களிற்று உழவன் தன் மகள்
பெண்டிர் தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர்
விண்டலர் கோதைக்கு விசயை என்பவே.
பொருள் : வண்டுஇனம் முகபடாம் அணிந்து - வண்டின் திரளாகிய முகபடாத்தை அணிந்து; வார்மதம் உண்டு உகுத்திடு களிற்று உழவன் தன் மகள் விசயை என்ப - ஒழுகும் மதத்தைத் தானே உண்டு சிந்தும் களிற்றையுடையவன் மகள் பெயர் விசயை என்பர்; விண்டு அலர் கோதைக்குப் பெண்டிர்தம் பெரு நலம் கடந்து பெற்றபேர் - அரும்பு நெகிழ்ந்து மலரும் கோதையாட்கு அப்பெயர் பிற மங்கையரின் அழகினை வென்று பெற்ற காரணப் பெயராகும்.
விளக்கம் : பெயர் பேரென மருவிற்று (களிற்றுழவன் - களிற்றால் (போர்த்) தொழில் செய்வோன்.) விசயை - வெற்றியுடையோள். பெண்மையானும் அழகானும் உலகிலுள்ள மகளிரை எல்லாம் வென்றவள் என்பதுபற்றி விசயை என்னும் பெயர் பெற்றனள் என்பது கருத்து.
183. அரு மணி மரகதத்து அங் கண் நாறிய
எரி நிறப் பொன் இதழ் ஏந்து தாமரைத்
திருமகள் இவள் எனத் திலக வெண் குடைப்
பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே.
பொருள் : அருமணி மரகதத்து அங்கண் நாறிய - அரிய மணியாகிய மரகதப் பாறையிற் பதுமையென்னம் பொய்கையில் தோற்றிய; எரிநிறம் பொன்இதழ் ஏந்து தாமரைத் திருமகள் இவள்என - நெருப்பின் நிறத்தையுடைய பொன்னிதழ்களையுடைய தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் இவளென்னுமாறு; திலகம் வெண்குடைப் பெருமகன் கோயிலுள் - மேலான வெண்குடையையுடைய விதைய மன்னன் அரண்மனையிலே; பேதை வைகும் - விசயை இருந்தாள்.
விளக்கம் : திலகம் - மேலாதல். திருஉவமம், வடிவிற்கும் நல்வினையுடையோனிடத்து ஏகுந்துணையும் பொதுவாய் இருத்தற்கும். இமவானில் மரகதப் பாறையில் பதுமை என்னும் கயத்தில் பொற்றாமரை மலரின்கண் திருமகள் தோன்றினள் என்பது ஆருகதர் கொள்கை. அங்கண்: உலகறி சுட்டு, நாறுதல் - தோன்றுதல். பெருமகன் என்றது விதைய மன்னனை.
184. கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர்
சிலம்புரி திருந்து அடி பரவச் செல்பவள்
வலம்புரி சலஞ்சலம் வளை இயது ஒத்தனள்
குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள்.
பொருள் : குலம் புரிந்தனையது ஓர் கொடியின் நீர்மையள் - குலம் கொடியின் இயல்பை விரும்பியது போன்ற இயல்பினாள்; கலம்புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர் - மேகலை விரும்பின அகன்ற அல்குலையுடைய ஐவகைத் தாயரும் அவர்கள் மக்களாய்த் தனக்கு மூத்தவர்களும்; சிலம்புபுரி திருந்தடி பரவச் செல்பவள் - சிலம்பு விரும்பின அழகிய அடியைப் போற்ற வாழ்பவள்; வலம்புரி சலஞ்சலம் வளைஇயது ஒத்தனள் - வலம்புரிச் சங்குகள் சலஞ்சலத்தைச் சூழ்ந்திருப்பதைப் போன்றனள்.
விளக்கம் : சிலம்பு புரி என்பது சிலம்புரி என விகாரப்பட்டது. (சலஞ்சலம்: ஆயிரம் வலம்புரிச்சங்குகள் சூழ இருக்கும் சங்கு.) கலம் - ஈண்டு மேகலை. தவ்வையர் என்றது - செவிலியர் மக்களாகிய தமக்கைமார்களை. இவர்க்கு வலம்புரிச் சங்கங்கள் உவமை. சலஞ்சலம்: விசயைக்கு உவமை.
185. இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ங் குழல்
மென் மலர்க் கோதை தன் முலைகள் வீங்கலின்
மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே
கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே.
பொருள் : இன் அகில் கொழும்புகை உயிர்க்கும் ஈர்ங்குழல் மென்மலர்க் கோதை தன் முலைகள் - இனிய அகிலின் சிறந்த புகை யூட்டப்பெற்ற குளிர்ந்த குழலையும் மெல்லிய மலர்க்கோதையையும் உடைய விசயையின் முலைகள்; மின் உருக்குறும் இடை மெலிய வீங்கலின் - மின்னின் வடிவத்தைக் கெடுக்கும் இடை மெலியப் பருத்தலால்; கன்னிதன் திருநலம் மெல்லக் கனிந்தது - கன்னியாகிய அவள் அழகின் நலம் மெல்ல முதிர்ந்தது.
விளக்கம் : மின் நடுக்குறும் என்றும் பாடம். என்ப : அசை.
186. முந்து நாம் கூறிய மூரித் தானை அக்
கந்து கொல் கடாக் களி யானை மன்னவன்
பைந்தொடிப் பாசிழைப் பரவை ஏந்து அல்குல்
தந்தை மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே.
பொருள் : நாம் முந்து கூறிய மூரித்தானை கந்துகொல் கடாக்களி யானை அம் மன்னவன் - நாம் முன்னர்க் கூறிய பெரும் படையையும் கட்டுத்தறியை முறிக்கும் மதயானையையும் உடைய அச்சச்சந்தன்; பைந்தொடிப் பாசிழைப் பரவை ஏந்து அல்குல் தந்தை மாட்டு - பைந்தொடியினையும் புதிய அணிகலன்களையும் பரவிய ஏந்திய அல்குலினையும் உடையாளின் தந்தையினிடம்; தனது மாற்றம் இசைத்தனன் - தான் விசயையை மணக்கவேண்டிய மொழியைக் கூறிவிடுத்தான்.
187. மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும்
அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய
கருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில்
பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே.
பொருள் : மருமகன் வலந்ததும் மங்கை ஆக்கமும் - மருமகன் கூறியதனையும் மகள் அவனிடம் அன்பை அமைத்துக் கொள்ளுதலையும்; அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய கருமமும் -கூர்ந்த அறிவினையும் சூழ்ச்சியையும் உடைய அமைச்சர்கள் ஆராய்ந்த கருமத்தையும்; கண்டவர் - கண்ட தந்தையும் தாயும்; கலத்தற் பான்மையால் - மைத்துன முறைமையாலும்; பிணை அனாளை பெருமகன் சேர்த்தினார் - மான்பிணை போன்றவளைப் பெருமகனிடம் சேர்த்தனர்.
விளக்கம் : ஆக்கம் கிளவியாக்கம் என்புழிப்போல (அமைத்துக் கொள்ளுதல் என்னும் பொருளில்) நின்றது; அவள் முதிர்ச்சியும் ஆம். கருமம் - விசயையின் தமையனாகிய கோவிந்தனுக்குச் சச்சந்தன் துணையாதல். பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே (தொல் களவு-14) என்பதனான் ஒப்பும் பெருந்திணைப் பாற்படும் கந்தருவமாமாறு பெரும்பொருளான் உணர்க (பெரும்பொருள் என்பது நூலாக இருக்கலாம்.)
சச்சந்தனும் விசயையும் இன்பந்துய்த்தல்
188. பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடுங் குன்று அனானும்
அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார்
இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண்
சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே.
பொருள் : பொன் நெடுங்குன்று அனானும் பொன்அம் கொடி அமிர்து அனாளும் - நெடிய பொற்குன்றம் போன்றவனும் அழகிய பொற்கொடியாகிய அமிர்து போன்றவளும்; அம்பு கொண்டு அழுத்த அனங்கனுக்கு இலக்கம்ஆகி - மணத்திற்கு முன்னர்க் காமன் அம்பினால் அழுத்துதற்கு உரிய இலக்கங்களாக இருந்து; முக்கண் சினம்திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்து - சீற்றம் விளங்கும் விடையினையுடைய முக்கட் பெருமானும் உமையம்மையும் சேர்ந்ததைப்போல; விள்ளார் - மணம் நிகழ்ந்த பின்னர் நீங்காதவராய்; தமக்கு இனம் எங்கும் இல்லார் - தங்கட்கு உவமை எங்கும் இல்லாதவராய்; இயைந்தனர் - ஓருடம்பாயினர்.
விளக்கம் : கொடி என்றார், குன்று மறையப் படர்ந்து கேடுபிறப்பித்தலின், அழுத்த இலக்கமாய். காட்சியும் நிலையும் முயக்கமும் கூறி அவற்றிற்கு உவமை மேற் கூறுகின்றார். (அமிர்தனாளும் குன்றனானும் என்றது காட்சி: அனங்கனுக்கிலக்கமாகி என்றது நிலை; இயைந்தனர் என்றது முயக்கம்.) இலக்கம் - வில்வித்தை கற்கும் மாணவர் அம்பைக் குறிபார்த்துத் தைத்தற்பொருட்டு நடப்படுவதொரு நார்மரம். அவர்கள் மணம்நிகழ்வதற்கு முன்னர் மிகமிகக் காமவேகத்தாலே துன்புற்றனர் என்பது அனங்கனுக்கு அம்புகொண்டழுத்த இலக்கமாகி என்றதன் கருத்தென்க.
189. காதலால் காம பூமிக் கதிர் ஒளி அவரும் ஒத்தார்
மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல்
ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும்
தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார்.
பொருள் : மாதரும் களிறு அனானும் மகிழ்ச்சி மன்றல் மாசுணம் (ஒத்தும்) - விசயையும் சச்சந்தனும் மகிழ்வையுடைய முயக்கத்தால் பாம்பு போன்றும்; ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும் - மேலும் மேலும் பெருகுகின்ற அன்பின் மென்மையால் அன்னத்தை ஒத்தும்; திளைப்பின் ஆமான் (ஒத்தும்)- கண் முதலிய உறுப்புக்களின் துய்ப்பினால் ஆமானை ஒத்தும்; தீதிலார் காமபூமிச் செல்வமே பெரிதும் ஒத்தார் - குற்றமற்ற அவர்கள் இப் புணர்ச்சிக்குக் முன்னர்ப் போகபூமியில் உள்ளாரின் செல்வத்தையே பெரும்பாலும் ஒத்திருந்தனர்; காதலால் கதிரொளியவரும் ஒத்தார் - இப்போது வேட்கையினாற் கதிரொளியவராகிய போகபூமியிலுள்ளாரின் தன்மையையும் ஒத்தனர்.
விளக்கம் : காதல் - எல்லாப் பொருளையும் நுகர்தற்குச் செல்லும் வேட்கை. காமபூமிதானப்பயனாற்பெறும் போகபூமி, உம்மை (உயர்வு) சிறப்பு. ஆதரம் பெருகும் அன்பாவது புணர்வதன் முன்னும் பின்னும் ஒருதன்மைத்தாய்ச் செயற்கையால் மிகும் அன்பு, அன்னம்: புணர்ச்சியால் மெய்யுருகும் மென்மைக்கு உவமம். பலரும், துணைபுணர் அன்னத்தின்தூவி (கலி. 72,சிலப்.3-66) என்று, புணர்ச்சியால் தூவிக்கு மென்மை பிறக்கும் என்றார். ஒத்தும் என்பதனை முன்னும் பின்னும் கூட்டுக. இவ்வெச்சத்தைத் தீதிலாரில் தீதின்மையோடு முடிக்க. தீதிலாத் திளைப்பிற் பாடமாயின் ஆமானை யொத்தும் தீதிலா மாதராரும் களிறனானும் என்க. ஆமான் நக்குங்காற் பிறக்கும் இனிமையே ஈண்டு உவமம். ஏகாரம் (செல்வமே) தேற்றம். ஆமான் செல்வம் என்பதற்கு ஆமானின் திளைப்புச் செல்வம் எனப்பொருள் கொண்டு ஆற்றொழுக்காகப் பொருள்கோடலாலும் இங்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருள் கிடைத்தலை உணர்க.
190. தன் அமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில்
பொன் அனாள் அமிர்தம் ஆகப் புகழ் வெய்யோன் பருகியிட்டான்
மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப் பட்ட
மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள்.
பொருள் : தன் அமர் காதலானும் தையலும் மணந்தபோழ்தில் - தன்னால் விரும்பப்பட்ட காதலனும் அவளும் கூடியபோது; புகழ்வெய்யோன் பொன் அனாள் அமிர்தம் ஆகப் பருகியிட்டான் - புகழை விரும்பிய அவன் திருவையனையாளை அமுதமாகப் பருகினான்; மாதரும் மின் அவிர் பூணினானை வேல்கணார்க்கு இயற்றப்பட்ட மன்னிய மதுவின் வாங்கிப் பருகியிட்டாள் - விசயையும் ஒளிவிளங்கும் பூணினானை மங்கையர்க்குச் சமைத்த மதுவைப் போல ஏற்று (அவன் பருகின தன்மையை அவளும் கண்டு) பருகினாள்.
விளக்கம் : வாங்கிப்பருகல் - அவன் காட்டக்கண்டு பருகியிடுதல்: ஒருசொல். இதனால் அதர பானமும் அல்குற் பானமும் கூறி மேல் இவற்றிற்கு உவமை கூறுகின்றார்.
191. பவழவாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான்
கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள்
தவழ் மதுக் கோதை மாதர் தாமரைப் பூ அது ஆக
உமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான்.
பொருள் : பவழவாய் பரவை அல்குல் இவை என்று - பவழம் அனைய சிவந்த இதழையும் பரப்புடைய அல்குலையும் கரும்பும் தாமரைப்பூவும் என்று மனத்திற்கொண்டு; பருகும் வேலான் - நுகரும் சச்சந்தன்; கவழம்ஆர் களிறு போன்றான் - (பவழவாயைப் பருகும்போது) கவளத்தை யுண்ணும் களிற்றைப் போன்றான்; காதலி கரும்பை ஒத்தாள் - விசயை கரும்பைப் போன்றாள்; தவழ்மதுக் கோதை மாதர் தாமரைப் பூவதாக - தேன்தவழும் மாலையை அணிந்த விசயை(யின் அல்குலைப் பருகும்போது அவள்) செவ்வி குலையாத தாமரைப் பூவாகவே எப்போதும் இருக்க; உமிழ்நகை வேலினானும் ஒண்சிறை மணிவண்டொத்தான் - ஒளிவிடும் வேலினான் ஒள்ளிய சிறகுகளையுடைய நீலநிற வண்டைப் போன்றான்.
விளக்கம் : இவை என்றது கரும்பையும் தாமரைப் பூவையும்; கரும்புவமை நெருக்கி நீர் நுகர்தற்கு. பூவதாக - பூவினது தன்மை எக்காலமும் உண்டாக - இது வேறுபாடின்மையின் வேறுபடவந்த உவமமாயிற்று; எனவே சீவக. 218. உரை. வேலினானும் என்றது களிறுபோல வன்மையுடையோனும் என்றவாறு. உம்மை: உயர்வு சிறப்பு. செவ்வி குலையாதிருக்க நுகர்வதொரு வண்டு: இல்பொருளுவமை.
192. பளிக்கு அறைப் பவழப் பாவை பரிசு எனத் திகழும் சாயல்
களிக் கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள்
ஒளிக் கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள்
அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறைப் பறவை ஒத்தான்.
பொருள் : பளிக்கு அறை பவழப்பாவைப் பரிசு எனத் திகழும் சாயல் -பளிங்குப் பாறையை அடுத்த பவழப்பாவை இவளது தன்மை என விளங்கும். மென்மையையும்; களிக்கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள் - களிப்பையுடைய கயல்கள் தம்மிற் பொருவன போன்று பொருது கடை சிவந்து அகன்ற கண்களையும் உடைய விசயை; ஒளிக்கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள் - ஒளியையும் அழகையுங் கொண்ட, விருப்பம் ஊட்டும் முதிர்ந்த கனியைப் போன்றாள்; அளித்து அயில்கின்ற வேலான் அம்சிறைப் பறவை ஒத்தான் - அவளுக்கு மேன்மேலும் விருப்பத்தையூட்டி நுகரும் சச்சந்தன் அழகிய சிறகையுடைய வாவலைப் போன்றான்.
விளக்கம் : பளிக்குப் பாறையை அடுத்த பவழப்பாவை இவளது தன்மை யெனத் திகழும் சாயல். ஈண்டு ஒளியது மென்மை; இது செயற்கை நலம். இதற்கு அடுத்தது காட்டும் பளிங்கைப் (குறள்,70) பவழம் தன் தன்மையாக்கினாற்போல, அடுத்த மகளிர் தன்மையனாம் அரசனை இவளும் தன் தன்மையே ஆக்கிக்கொண்டாளெனக் கதை கருதிய நயமுமுண்டு.பொருவபோன்று பொருவதென விரிக்க. கொண்ட கனி. அயிறல் - உண்டல். உண்டற்குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலும் மரபே (தொல்.பொருளியல் 19) தோணலமுண்டு துறக்கப்பட்டோர் (கலி.23) என்றார் பிறரும். பழமும் வாவலும் வடுப்பட நுகர்தற்குவமை.
193. துறு மலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும்
நறுமலர்க் கண்ணியும் நாறு சாந்தமும்
அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும்
பெறு நிலம் பிணித்திடப் பெரியர் வைகினார்.
பொருள் : துறுமலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும் - மலர் நெருங்கும் மார்பின் மாலையும் நெற்றிக்கட்டும் சுண்ணப்பொடியும்; நறுமலர்க் கண்ணியும் நாறு சாந்தமும் - நல்ல மலரால் ஆன முடிமாலையும் மணமுறு சந்தனமும்; அறுநிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும் - அறுசுவை உண்டி முதலியனவும் அகிலும் புழுகும் ஆகிய இவைகள்; பெறுநிலம் பிணித்திட - தம்மை நுகரும் ஐம்பொறிகளைப் பிணிப்ப உயர்ந்த இவர்கள் இன்பமுற்றிருந்தனர்.
விளக்கம் : அமிர்தம் - அடிசிலும் பானமும் முதலியன. இனி, அறு நிலத்தமிர்தம் - அறுசுவையுமாம்; ஆறுகாலத்திற்கு (இளவேனில் முதலியன) உரிய பானமும் ஆம்.
194. துடித்தலைக் கருங் குழல் சுரும்பு உண் கோதை தன்
அடித்தலைச் சிலம்பினோடு அரவ மேகலை
வடித்தலைக் கண் மலர் வளர்த்த நோக்கமோடு
அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே.
பொருள் : அவர் ஊறுஇல் இன்பம் - அவர்களுடைய இடையூறில்லாத இன்பம்; துடித்தலைக் கருங்குழல் சுரும்புஉண் கோதை தன் - ஏலம் என்னும் மயிர்ச் சாந்தணிந்த சுருங்குழலையும் வண்டு நுகரும் மாலையையும் உடைய விசயையின்; வடித்தலைக் கண்மலர் வளர்த்த நோக்கமோடு - மாவடு வனைய கண்மலர்கள் ஊடலையுங் கூடலையும் விளைவித்த நோக்கத்தாலே; அடித்தலைச் சிலம்புனோடு மேகலை அரவம் அடுத்து - (அவள் ஊடினபோது) அடி அவன் தலையிற் படுதலிற் பிறந்த சிலம்பின் ஒலியோடும்; (கூடின காலத்துப் பிறந்த மேகலையின் ஒலியோடும்) உலப்பு அரிது - முடிதல் அரிதாயிருந்தது.
விளக்கம் : அவன் ஊறில் இன்பம் என்றும் பாடம். துடி - ஏலம். வடித்தலைக்கண் - ஒப்பினால் வடுவகிரிடத்தே நிற்குங் கண்.
195. இழை கிளர் இள முலை எழுது நுண் இடைத்
தழை வளர் மது மலர் தயங்கு பூஞ்சிகைக்
குழை முகக் கொடியொடு குருதி வேலினான்
மழை முகில் மாரியின் வைகும் என்பவே.
பொருள் : இழைகிளர் இளமுலை எழுதும் நுண்இடைத் தழைவளர் மதுமலர் தயங்கு பூஞ்சிகைக் குழைமுகக் கொடியொடு - பூண் விளங்குதற்குக் காரணமான இளமுலையும், ஓவியம் எழுதுவார் இதன் தன்மை கருதி எழுதுதற்குக் காரணமான நுண்ணிடையும், தழையிலே வளர்ந்த தேன்பொருந்திய மலர் விளங்கும் அழகிய கூந்தலும், குழைபொருந்திய முகமும் உடைய கொடியுடன்; குருதி வேலினான் மழைமுகில் மாரியின் வைகும் - குருதி தங்கிய வேலையுடைய சச்சந்தன் மாரிக்காலத்து மழை முகில்போல அருள் பொழிந்து தங்கும்.
விளக்கம் : முலை முதலியவற்றையுடைய கொடி: இல்பொருளுவமை.
196. படுதிரைப் பவழவாய் அமுதம் மாந்தியும்
கொடிவளர் குவி முலைத் தடத்துள் வைகியும்
இடியினும் கொடியினும் மயங்கி யாவதும்
கடி மணக் கிழமை ஓர் கடலின் மிக்கதே.
பொருள் : படுதிரைப் பவழவாய் அமுதம் மாந்தியும் - கடலிற் பவழம்போலும் வாயின் அமுதத்தை உண்டும்; கொடி வளர் குவிமுலைத் தடத்துள் வைகியும் - கொடியில் வளரும் குவிந்த முலையில் தங்கியும்; இடியினும் கொடியினும் யாவதும் மயங்கி - இடிக்கப்படும் மாவைப் போலவும் நூழிற் கொடி போலவும் உணர்வும் உடம்பும் எல்லாம் மயங்கி; கடிமணக் கிழமை ஓர்கடலின் மிக்கது - அவர்களுடைய மிக்கதான கூட்டத்தின் உரிமை ஒரு கடலினும் மிகுந்தது.
விளக்கம் : மாந்துதல் - பருகுதல். இடி - கூலங்களை இடித்த மா. கொடியினும் என்புழி கொடி நூலிற்கொடி. மணக்கிழமை என்றது, புணர்ச்சியின்பப்பேற்றினை.
197. கப்புரப் பசுந்திரை கதிர் செய் மா மணிச்
செப்பொடு சிலதியர் ஏந்தத் தீவிய
துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும்
ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே.
பொருள் : கப்புரப் பசுந்திரை கதிர்செய் மாமணிச் செப்பொடு சிலதியர் ஏந்த - கருப்பூரத்தையும் பச்சை வெற்றிலையையும் ஒளிவிடும் மாணிக்கச் செப்பிலே சேடியர் ஏந்த; தீவிய துப்பு உமிழ்ந்து - ஐம்பொறிக்கும் இனிய நுகரும் பொருள்களைத் தானும் கணவனுமாக நுகர்ந்து; அலமரும் காமவல்லியும் - புணர்ச்சிக்கு அலமரும் காமவல்லி போன்ற விசயையும்; ஒப்பு அரும் பாவை போன்று உறையும் - உவமையற்ற பாவைபோலத் தங்கினாள்.
விளக்கம் : கப்புரம் : பாகதம் (கருப்பூரம் என்னும் வடமொழிச் சிதைவு.) காமவல்லியும்: உம்: உயர்வு சிறப்பு. வேறு கருத்துச் செல்லாமல் தன்னையே கருதுவித்தலின் பாவை என்றார். இதற்கு முன்பு உலகியல் மணங் கூறிக் காமமிகுதியாற் கெடுகின்றமை மேற்கூறுகின்றார். பசுந்திரை - பசிய வெற்றிலைச் சுருள். சுருட்டப்படுதலால் (திரைக்கப் படுதலால்) திரை என்பது அதற்குப் பெயராயிற்று. சிலதியர் - பணி மகளிர். தீவிய-இனிய, துப்பு - நுகர்வன. கற்பகமரத்தே படர்தற்கு அலமருகின்ற காமவல்லி போல்வாள் என்பது கருத்து. பாவை - கொல்லிப்பாவை. இது தன்னைக் கண்டாரை அப்பாற் போகவிடாமல் கவர்ந்து மயக்குதல்பற்றி உவமையாக எடுத்தார் என்பார் நச்சினார்க்கினியர். வேறு கருத்துட் செல்லாமல் தன்னையே கருதுவித்தலின் பாவையென்றார் என்றார்.
198. மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன்
பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள்
விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதி
ஒளி நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே.
பொருள் : மன்னவன் மண்ணகம் (இருள்கொளக்) காவலின் வழுக்கி -சச்சந்தன் நிலவுலகம் இருளுறக் காவலிற் பிழை செய்து; பெண் அருங்கலத்தொடு பிணைந்த பேரருள் - பெண்களுக்கு அருங்கலமானவளுடன் கூடிய அளவிறந்த கண்ணோட்டம்; விளங்கு வெண்மதி விண்ணகம் இருள்கொள - விளக்கமான திங்கள் வானகம் இருளடைய; ஒண்ணிற உரோணியோடு ஒளித்தது ஒத்தது - ஒளிமிகும் உரோகிணியுடன் மறைந்தது போன்றது.
விளக்கம் : காவலின்: இன்: (ஐந்தனுருபு) நீக்கப்பொருட்டு. உரோணி: உரோகிணி: விகாரம்: அவ்வுரோகிணி காரணத்தின் இருடி சபிக்க மதிதேய்ந்ததொரு கதை. பேரருள் என்றது அளவிறந்த கண்ணோட்டத்தை. உவமைக்குக் கூறிய இருள்கொள என்பதை மண்ணகம் இருள் கொள என்றுங் கூட்டுக.
199. குங்குமத் தோளினானும் கொழும் கயல் கண்ணி னாளும்
தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகும் நாளுள்
திங்கள் வெண் குடையினாற்குத் திரு இழுக்குற்ற வண்ணம்
பைங் கதிர் மதியில் தெள்ளிப் பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே.
பொருள் : குங்குமத் தோளினானும் கொழுங்கயற் கண்ணினாளும் - குங்குமம் அணிந்த தோளானும் மதர்த்த கயலனைய கண்ணாளும்; தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகும் நாளுள் - நிலைபெற்ற காதற் பெருக்கை நீக்கமின்றி நுகரும் காலத்தில்; திங்கள் வெண்குடையினாற்குப் பைங்கதிர் மதியில் திரு இழுக்குஉற்ற வண்ணம் - திங்களனைய வெண்குடையினையுடைய அவனுக்குப் பசிய நிலவினையுடைய மதிபோலச் செல்வம் நாளடைவிற் குறைந்த தன்மையை; தெள்ளிப் பகர்ந்து - தெரிந்து கூறி; எடுத்து உரைத்தும் -(பின்னர்) சீவகன் சரிதம் எடுத்துரைக்கத் தொடங்குகிறோம்.
விளக்கம் : இதன் கருத்து: இச்செய்யுட்கு அங்கமாகிய (நாடு, நகர் கோயிற் சிறப்பு முதலிய) வருணனைகள் கூறி அதற்குரிய தலைவனை நாட்டுகின்றார், இத்துணையும் அவன் தோன்றற்குக் காரணங் கூறி அவற்கு முற்பிறப்பில் அன்னப் பார்ப்பைப் பிரித்த தீவினை வந்து குரவரைப் பிரித்தலுங் கூறவேண்டுதலின், திரு இழுக்குற்றமை முற்கூறுகின்றாரென்றுணர்க. திருஇழுக்குறுதலாவது கட்டியங்காரற்கு அரசளித்தலும் அமைச்சர்சொற் கேளாமையும். (சீவகன் முற்பிறப்பு வரலாறு இந்நூலின் 1856 ஆஞ்செய்யுள் முதலியவற்றால் உணர்க). பைங்கதிர் மதியின் திருவிழுக் குற்ற என மாறுக. மதி - தேய் பருவத்துத் திங்கள். இனி, பைங்கதிர் மதிஎன்பதற்கு அறிவுஎன்றே பொருள் கோடல் அமையும். ஆசிரியர் பரிமேலழகர் இப்பொருளே கொண்டனர். இதனை அவர் ஒளிதிகழ் உத்தி உருகெழுநாகம் (12-4) எனவரும் பரிபாடல் அடிக்கு வாளா நாகம் மரம் என்றே பொருள் கூறி, நெட்டிலை வஞ்சிக்கோ பழம் பாடல் என்புழியும் புல்லிலைவஞ்சிப் புறமதில் அலைக்கும் கல்லென் பொருநை (புறநா.387) என்புழியும் மரவிசேடத்திற்குள்ளன அதன் பெயர்த்தாய ஊரின்கண்ணும் திங்கள் வெண்குடையினாற்குத் திருவிழுக்குற்ற வண்ணம்பைங்கதிர்மதியிற் றெள்ளிப்பகர்ந்தெடுத்துரைத்தும் என்புழிச் சந்திரற்குள்ளது அவன் பெயர்த்தாய அறிவின்கண்ணும் ஏற்றப்பட்டாற் போல் என்று கூறுதலான் உணர்க.
சச்சந்தன், கட்டியங்காரனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு விசயையோடு இன்புறல்
200. களிறு அனான் அமைச்சர் தம்முள் கட்டியங் காரன் என்பான்
ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள்
பிளிறு வார் முரசின் சாற்றிப் பெரும் சிறப்பு இயற்றி வேந்தன்
வெளிறு இலாக் கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான்.
பொருள் : களிறனான் அமைச்சர் தம்முள் கட்டியங்காரன் என்பான் - களிறு போன்ற சச்சந்தனுக்கு அமைச்சர்களாக வுள்ளவர்களிற் கட்டியங்காரன் என்பவன்; ஒளிறுவாள் தடக்கையானுக்கு உயிரென ஒழுகும் நாளுள் - விளங்கும் வாளேந்திய கையையுடைய மன்னனுக்கு உயிர்போலப் பழகிவரும் நாட்களில்; வேந்தன் வெளிறு இலாக் கேள்வியானைப் பிளிறுவார் முரசின் சாற்றிப் பெருஞ் சிறப்பு இயற்றி - அரசன் வெள்ளைத் தன்மையில்லாத கேள்வியையுடைய அவனுக்கு, ஒலிக்கும் முரசினால் நாட்டுக்கறிவித்துப் பெருஞ் சிறப்புகளை நல்கி; வேறு கொண்டிருந்து சொன்னான் - தனியே அழைத்து இருத்திக் கொண்டு கூறுகிறான்.
விளக்கம் : (நச்சினார்க்கினியர் ஒளிறுவாள் தடக்கையான் கட்டியங்காரனாகவும், வெளிறிலாக் கேள்வியான் நிமித்தகன்என்னும் அமைச்சனாகவுங் கொண்டு மாட்டேற்றிப் பொருள் கூறுவர்.) அவர் கூறுவது: கோதனான் (சீவக 240) என்றும் கரிமாலை நெஞ்சினான் (சீவக 294) என்றும் கல்லா மந்திரி (சீவக. 345) என்றும் மேற்கூறலின், கட்டியங்காரனை, வெளிறிலாக் கேள்வியான் எனலாகாது; இனி இகழ்ச்சிக்குறிப்பு என்பாருமுளர் என்பது. இக்கூற்றால் வெளிறிலாக் கேள்வியானைக் கட்டியங்காரன் எனவே இவருக்கு முந்திய உரையாசிரியர்கள் கூறினர் என்றும் அது இகழ்ச்சிக் குறிப்பு என்று கருதினர் என்றும் அறியலாம். நிமித்திகன் என்ற பெயருடைய மந்திரி யொருவனைப் பின்னர் ஓர் நிமித்திகன் (சீவக 204) எனக் கூறுதலானும், இங்குப்பெயர்கூறாமையானும், ஆற்றொழுக்காகப் பொருள் கோடற் கியலாவழியே மாட்டேறுவேண்டுமாதலானும் கட்டியங்காரனெனக் கோடலே தக்கது.) மதச்செருக்காற் பாகன்தோட்டியை நீவுமாறு போலக்காமக்களிப் பால்தன் அமைச்சர் கூற்றைக் கடத்தல்நோக்கிக், களிறனான் என்றார். நிமித்திகன் கருமமே கூறுதலும் கட்டியங்காரன் அரசன் கருத்திற்கேற்ப ஒழுகுதலும் இரண்டற்குங் காரணம்.
201. அசைவு இலாப் புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி
வசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள்
விசையையைப் பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம்
இசை படக் காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான்.
பொருள் : இலங்குபூண் மார்ப! - விளங்கும் பூண் அணிந்த மார்பனே! அசைவுஇலாப் புரவி வேள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி; தோலாத புரவிப்பெருக்கையுடைய அரிஞ்சயன் மரபிலே தோன்றி; வசையிலாள் வரத்தின் வந்தாள் - குற்றமற்றவளாய், என் முற்பிறவியில் வேண்டுகோளாலே பிறந்தவளும்; வான்சுவை அமிர்தம் அன்னாள் விசயையை - சுவைமிகும் வானுலக அமிர்தம் போன்றவளும் ஆகிய விசயையை; பிரிதல் ஆற்றேன் - பிரியும் ஆற்றல் இலேன்; நீ வேந்தன் ஆகி வையம் இசைபடக் காத்தல் வேண்டும் என்றான் -(ஆகையால்) நீ அரசனாகி உலகைப் புகழ்பெறக் காப்பாயாக என்று கூறினான்.
விளக்கம் : அரிஞ்சயன்: விசயை பாட்டன். வசையிலாள்: வினையெச்சமுற்று. வேண்டும் என்பது உம்மீற்றான் வந்ததோர் ஏவல் கண்ணிய வியங்கோள்: வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் (புறநா.367) என்றார் பிறரும்.
202. அண்ணல் தான் உரைப்பக் கேட்டே அடுகளிற்று எருத்தின் இட்ட
வண்ணப் பூந் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும்
கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு எனக் கமழும் கண்ணி
மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான்.
பொருள் : அண்ணல்தான் உரைப்பக் கேட்டு - (கட்டியங்காரன்) தான் கருதியிருந்ததனை அரசனே கூறக் கேட்டு (மகிழ்ந்து); எனக்குக் கண்அகல் ஞாலம் காத்தல் - என் நிலையில் இடமகன்ற உலகை ஆளுவது; அடுகளிற்று எருத்தின் இட்ட வண்ணப் பூந்தவிசு தன்னை ஞமலிமேல் இட்டது ஒக்கும் - அடுகளிற்றின் கழுத்தில் இட்ட அழகிய கழுத்து மெத்தையை நாயின் மேல் இட்டது போலாகும்; என - என்று கூறி மறுப்ப; கண்ணி கமழும் மண்ணகம் வளரும் தோளான் - மாலை மணக்கும் நில உலகம் வாழும் தோளையுடைய மன்னன்; நீ மறுத்து மொழியல் என்றான் - என்பொருட்டாக நீ மறுத்துக் கூறாதே என்றான்.
விளக்கம் : தவிசு - கழுத்து மெத்தை. மண் எழுவனைய தோள் பாடமாயின், மண்ணிய எழு ஆம்; ஆவுதி மண்ணி (மதுரைக். 494) என்றாற்போல, தோளாய் என்பதும் பாடம். இச் செய்யுட்குநச்சினார்க்கினியர், தன் தலைவன்பால் ஒப்பற்ற அன்புடையதாய் அவனால் செயப்படுந் துன்பத்தையும் பொருட்படுத்தாமல் எறிந்த வேல் மெய்யதா வால்குழைக்கும் நாயினையே தனக்கு உவமை கூறிக்கொண்டான் கட்டியங்காரன்; சச்சந்தன் தன்னை ஐயுறாமைப் பொருட்டென்பது பட வேறோரூர்தி கூறாது ஞமலியைக் கூறினான். அவன் அயிராது தருதற்கு என்று கூறியது ஆற்றவும் இன்பமுடைத்து.
203. எழுதரு பருதி மார்பன் இற்றென இசைத்த லோடும்
தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர்த் தொலைத்த வேலோய்
கழி பெரும் காதலாள்கண் கழி நலம் பெறுக வையம்
பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான்.
பொருள் : எழுதரு பருதிமார்பன் இற்றுஎன இசைத்தலோடும் - காலை யிளஞாயிறு போலும் மார்பனான சச்சந்தன் என்னிலைமை இத்தன்மைத்து என்று கூறிய அளவிலே; தொழுது அடிபணிந்து - அடியைத் தொழுது கும்பிட்டு; சொல்லும் துன்னலர்த் தொலைத்த வேலோய் - கூறப்படும் பகைவரை அழித்த வேலவனே!; கழிபெருங் காதலாள்கண் கழிநலம் பெறுக - நீ மிகப்பெருங் காதலியினிடத்திலே மிகவும் இன்பம் அடைக; பழிபடா வகையில் வையம் காக்கும் படுநுகம் பூண்பல் என்றான் (யான்) பழிவரா வகையில் நிலவுலகைக் காக்கும் பெரிய சுமையைப் பூண்பேன் என்று கட்டியங்காரன் கூறினான்.
விளக்கம் : தன் நினைவை அவன் காரியம்போற் கூறினான். மார்பன்: சச்சந்தன். இற்று - இத்தன்மைத்து. வையம் இசைபடக் காத்தல் வேண்டும் (201) என்ற மன்னனுக்கு வையம் பழிபடா வகையிற் காக்கும் படுநுகம் பூண்பல் என்றதன்கண் கட்டியங்காரன் தன்னடக்கமும் நின்பெருட்டே இச் சுமையைப் பூண யான் இசையா நின்றேன் என்பதுந் தோன்றுதல் உணர்க.
204. வலம் புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப ஏகிக்
கலந்தனன் சேனை காவல் கட்டியங் காரன் என்ன
உலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்
நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான்.
பொருள் : வலம்புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப ஏகி - வலம்புரி தீட்டிய வண்கையினாலே, மதவலியாகிய சச்சந்தன் காட்டி விடுப்பச் சென்று; சேனை காவல் கட்டியங்காரன் கலந்தனன் என்ன - சேனையைக் காப்பதிற் கட்டியங்காரன் சேர்ந்தான் என்று கூறக்கேட்டு; உலம்தரு தோளினாய் நீ ஒருவன் மேற் கொற்றம் வைப்பின் - கற்றூண் போன்ற தோளினாய்! நீ ஒருவனிடம் உன் ஆட்சியைச் சுமத்தினால்; நிலம்திரு நீங்கும் என்று - நிலமும் திருவும் நின்னைவிட்டுப் போய்விடும் என்று; ஓர் நிமித்திகன் நெறியிற் சொன்னான் - ஒப்பற்ற நிமித்திகன் என்னும் அமைச்சன் நெறியுறக் கூறினான்.
விளக்கம் : (நச்சினார்க்கினியர் ஓர் என்பதற்கு நீயே ஆராய்ந்து பார் என்று பொருள் கூறுவர். அதற்கு முடிபு, என்று ஓர் என்பதனை ஓர் என்று என மாற்ற வேண்டும். பொறித்த எனப் பிறவினையாற் கூறினார், அயன் படைத்தல் நோக்கி. மத: (வலியை) விசேடித்த உரிச்சொல். உலம் வளர்க்குந் தோள். அரசற்குரிய அங்கம் ஆறனுள் படையே தலைசிறந்தது ஆதல்பற்றி அரசன் ஏவல் பெற்றவுடன் கட்டியங்காரன் படைஞரை வயப்படுத்து தற்றொழிலையே முதற்கண் மேற்கொண்டான் என்பது போதரத்தேவர் மதவலி விடுப்ப ஏகிக் கலந்தனன் சேனை காவல் கட்டியங்காரன் என்றோதுதல் உணர்க. மதவலி: அன்மொழித்தொகை; சச்சந்தன். நீ என்றது அரசுரிமையுடைய நீ என்பதும் ஒருவன் என்றது ஏதிலான் ஒருவன் என்பதும்பட நின்றமை நினைக.
205. எனக்கு உயிர் என்னப் பட்டான் என் அலால் பிறரை இல்லான்
முனைத் திறம் உருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான்
தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும்
மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான்.
பொருள் : எனக்கு உயிர் என்னப் பட்டான் - என் உயிர் போன்றவன்; என் அலால் பிறரை இல்லான் - என்னையன்றித் தனக்கு ஆதரவாகக்கொண்டு மற்றவரை அடையாதவன்; முன்னே முனைத்திறம் முருக்கி மொய் அமர் பலவும் வென்றான் - இச் சிறப்பை அவன் பெறுவதற்கு முன்னேயே போர்க்களங்களின் அணிவகுப்பு முதலிய கூறுபாடுகளை அழித்துச் சிறந்த போர் பலவினும் வெற்றியுற்றான்; தனக்கு யான் செய்வ செய்தேன் - (ஆகையால்) அவனுக்கு நான் செய்யுங் கடமைகளைச் செய்தேன்; தான் செய்வ செய்க - அவன் தனக்கு விருப்பமானவற்றைச் செய்துகொள்க; ஒன்றும் மனக்கு இனாமொழிய வேண்டா - நீ சிறிதும் மனத்திற்குத் தீமை தரும் பொறாமைச் சொற்களைச் சொல்லவேண்டா; வாழியர் - நீயும் நின்னிலையிலே நில்; ஒழிக என்றான் - இனி இம்மொழியைத் தவிர்க என்றுரைத்தான்.
விளக்கம் : என்னலாற் பிறரை யில்லான்: இன்மை உடைமைக்கு மறுதலை. வென்றான் எனவே நடத்துதற்குரியவன் என்றான். நன்மையுந் தீமையும் கருதிச் செய்வ எனப் பன்மையாற் கூறினார்.
206. காவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளிக் கேண்மோ
நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா
பூ அலர் கொடியனார் கண் போகமே கழுமி மேலும்
பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான்.
பொருள் : காவல! நாவலர் சொற் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா - அரசே! அமைச்சர் சொற்கேட்டவர்க்கு நன்மையே அல்லாமல் தீமைகள் வாரா; குறிப்பு அன்றேனும் அருளிக் கேண்மோ - திருவுளம் இன்றேனும் அருள்கூர்ந்து கேட்க; ஈது கருமம் - ஒருவன்பால் அரசுரிமையை நல்காதிருப்பது காரியம்; (என்றான். அதற்கு உடம்படாமையின்) பூஅலர் கொடியனார்கண் போகமே கழுமிப் பாவமும் பழியும் உற்றார் மேலும் பற்பலர் இதுகேள் என்றான் - மலர் மலர்ந்த கொடியனைய மங்கையர்பால் இன்பமே கொண்டு மயங்கிப் பாவமும் பழியும் அடைந்தோர் நின்னை ஒழிய முன்னும் பற்பலர் உளராயினர்; இதனைக் கேள் என்றான்.
விளக்கம் : நாவலர் - அமைச்சர்; கழுமி - மயங்கி. அமைச்சர் சொற்கேட்டால் அரசனுக்குத் தீங்கு வாராதென்பது. இஃது உலகியலாற் கூறினான். மேற்கூறுவன வெல்லாம் போகத்தையே நோக்குதலின், இதுவென ஒருமையாற் கூறினான்.
207. பெரும் பெயர்ப் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான்
அரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்ற
விரும்பி ஆங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றித்
திருந்தினாற்கு இன்று காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே.
பொருள் : பெரும்பெயர்ப் பிரமன் என்னும் பீடினாற் பெரிய நீரான் - பெரும்புகழ் பெற்ற பிரமன் என்னும் தவத்தாற் பேரியல்பு பெற்றவன்; அரும்பிய முலையினாளுக்கு - அரும்பனைய முலைகளையுடைய திலோத்தமையின் பொருட்டு; அணிமுகம் நான்கு தோன்ற விரும்பிஆங்கு அவளை எய்தான் -அழகிய முகங்கள் (முன்னிருந்த முகமன்றி) நான்கு தோன்ற விரும்பி நோக்கியும் அவளை ஆங்கு அடைய முடியாமல்; விண் அகம் இழந்தது அன்றி - வானுலகை இழந்ததோடு நில்லாமல்; திருந்தினாற்கு இன்றுகாறும் சிறுசொல்லாய் நின்றது - தவத்தால் திருந்திய அவனுக்கு அது இன்றுவரையிற் பழிச்சொல்லாய் நின்றதல்லவோ?
விளக்கம் : பெயர் - புகழ். அன்றே; ஏவினா. முறைசெய்யாமையின் தன்னிலை யிழந்தான். தோற்றி என்றும் பாடம். நான்முகம் தோன்றியது. பிரமனுக்கு அரம்பையரிடத்துக் காமம் உண்டாயிற்று. அவர்கள் இணங்காமையால், அவர்களை அடைதற்குரிய இந்திர பதவியை வேட்டுத் தவம் புரிந்தான். மூன்றரைக் கோடி ஆண்டுகள் கடந்தன. இந்திரன் தன் பதவிக்கு வேறொருவன் வர விருப்ப மில்லாமையாற் பிரமன் தவத்தை அழிக்கத் திலோத்தமை என்னும் அரம்பையை அனுப்பினான். அவள் பிரமன் எதிரில் வந்து ஆடல் பாடலால் ஒருபுறம் நின்று மயக்கினாள். பிரமன் விழித்துப் பார்த்தான். இவள் மற்றொரு புறம் சென்று ஆடினாள். அப்புறம் திரும்பினாற் பிறதவமுனிவர்கள் இகழ்வார்கள் என்று நினைத்துத் தன் ஒரு கோடி ஆண்டின் தவச்சிறப்பால் அவளிருந்த பக்கம் ஒரு முகம் உண்டாக்கி நோக்கினான். அவள் மறுபுறம் சென்றாள். அங்கும், மற்றொரு புறத்திலும் அவ்வாறே மற்றும் இரண்டு கோடி ஆண்டின் தவச்சிறப்பால் இரு முகமும் உண்டாக்கிக்கொண்டு இயற்கையான ஒரு முகத்துடன் நான் முகனாகி அவள் சென்ற திசையெலாம் நோக்கினான். அவள் வானிலே நின்று ஆடினாள். அரைக்கோடி ஆண்டின் தவச்சிறப்பால் மேனோக்கிய முகமொன்றும் அமைத்துக்கொண்டான். அவள் மறைந்தாள். காமத்தை அடக்கவியலாத பிரமன் ஐம்முகங்களுடன் வானவழியே செல்லும் தெய்வ மங்கையரை வலிதிற் பற்றித் துன்புறுத்தினான். வானவர் வேண்டுகோளாற் சதாசிவமூர்த்தி பிரமனுடைய மேனோக்கிய தலையைக் கிள்ளியெறிய, நான்முகனாகிய அவன் எல்லோராலும் பழிக்கப்பட்டுத் தன் பதவியையும் இழந்தான். இவ்வாறு தர்ம பரீட்சை என்னும் சைன நூலில் மூன்றாம் படலத்திற் கூறப்படுவதாக டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களின் பதிப்பிற் கூறப்படுகிறது. சைவ நூல்களில் இதற்கு வேறான கதைகள் கூறப்படுகின்றன.
208. கைம் மலர்க் காந்தள் வேலிக் கண மலை அரையன் மங்கை
மைம் மலர்க் கோதை பாகம் கொண்டதே மறுவது ஆகக்
கொய்ம் மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்குப்
பெய்ம் மலர் அலங்கல் மார்ப பெரும் பழி ஆயிற்று அன்றே.
பொருள் : பெய்ம்மலர் அலங்கல் மார்ப - மலரால் தொடுத்த மாலை மார்பனே!; கைம்மலர்க் காந்தள்வேலிக் கணமலை அரையன் மங்கை மைம்மலர்க் கோதை - கைபோல மலரும் காந்தள் வேலியையுடைய, தொகுதியாகவுள்ள மலைகளுக்கரசன் மனைவி மேனை பெற்ற, நீலமலராற் செய்த கோதையணிந்த இறைவியை; பாகம் கொண்டதே மறுவதுஆக - இடப்பக்கத்தில் வைத்ததே மறுவுடைய தொன்றாக, கொய்ம்மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்கு - கொய்த மலராலாகிய கொன்ற மாலையையும் குளிர்ந்த பிறைக்கண்ணியையும் உடைய இறைவனுக்கு; பெரும்பழி ஆயிற்று அன்றே - பெரிய பழியாக முடிந்தது அல்லவோ?
விளக்கம் : மைம்மலர்க் கோதை - நீலமலராற் செய்த கோதை; இறைவி: ஆகுபெயர். மாலை - அடையாளப்பூ. கண்ணி - சூடும்பூ. கண்ணி கார்நறுங் கொன்றை காமர்-வண்ண மார்பிற் றாருங் கொன்றை (புறநா.கடவுள் வாழ்த்து.) கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே (தொல். மரபு.79) என்றார். மலையரையன் மங்கை: மேனை. மலர்க்கோதை: பார்ப்பதி. மதிக்கண்ணியான்: சிவன்
209. நீல் நிற வண்ணன் அன்று நெடுந் துகில் கவர்ந்து தம் முன்
பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய்
வேல் நிறத் தானை வேந்தே விரிபுனல் தொழுனை ஆற்றுள்
கோல் நிற வளையினார்க்குக் குருந்து அவன் ஒசித்தது என்றான்.
பொருள் : வேல் நிறம் தானை வேந்தே - வேலின் விளக்க முறு படையையுடைய மன்னனே!; அன்று நீல்நிறம் வண்ணன் நெடுந்துகில் கவர்ந்து - முற்காலத்தில் நீலநிறமுடைய கண்ணன் பல துகில்களைக் கவர்ந்து, தம்முன் பால்நிறம் வண்ணன் நோக்கிற் பழியுடைத்து என்று - தன் முன்னவனாகிய பலதேவன் பார்த்தாற் பழிவரும் என்று எண்ணி; விரிபுனல் தொழுனை ஆற்றுள் கோல்நிற வளையினார்க்கு அவன் குருந்து ஒசித்தது என்றான் - பரவிய நீரையுடைய யமுனையாற்றிலே நீராடிய, திரண்ட ஒளி மிகும் வளையினை யணிந்த ஆய்ச்சியருக்குக் கண்ணன் குருந்தை ஒடித்தது என்றான்.
விளக்கம் : வேனிறம் - வேலினது விளக்கம். கோல் - திரட்சி. ஒசித்தது: மறைந்தது என்றுங் கூறுவர். நீலநிறம் - நீல்நிறம் என நின்றது. நீனிறவண்ணன்: கண்ணன். பானிறவண்ணன் - பலதேவன்.
210. காமமே கன்றி நின்ற கழுதை கண்டு அருளினாலே
வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து
ஈமம் சேர் மாலை போல இழித்திடப் பட்டது அன்றே
நாம வேல் தடக்கை வேந்தே நாம் இது தெரியின் என்றான்.
பொருள் : நாமவேல் தடக்கை வேந்தே! அச்சந்தரும் வேலேந்திய பெரிய கையையுடைய அரசே! காமமே கன்றிநின்ற கழுதை கண்டு - காமத்திலேயே அடிப்பட்டு நின்ற ஆண் கழுதையைப் பார்த்து; அருளினாலே வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று - அருளாலே புத்தனார் பெண் கழுதையாய்ச் சென்று கூடி, இக்காமத்தாலே வருந்தினீரே என்ன; நாம் இது தெரியின் - நாம் (அவ்வாறு நிகழ்ந்த) இக்காமத்தை ஆராயின்; வையத்து ஈமம்சேர் மாலைபோல இழித்திடப்பட்டது - உலகிலே சுடுகாட்டில் விழுந்த மாலைபோல இழித்துக் கூறப்பட்டது; அல்லவோ? என்றான் - என்று கூறினான்.
விளக்கம் : காமமே: ஏகாரம், பிரிநிலை. என்று - என்ன. வாமனார்: புத்தன். ஆர் விகுதி, இகழ்ச்சிக் குறிப்பு. வருந்தினீர் - வினா. ஈமம் - சுடுகாடு. நாமம் - அச்சம்.
211. படு பழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்ற
வடுவுரை யாவர் பேர்ப்பார் வாய்ப் பறை அறைந்து தூற்றி
இடுவதே அன்றிப் பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம்
நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான்.
பொருள் : படுபழி மறைக்கலாமோ? - காமத்தாற் பிறந்த பழியை மறக்க முடியுமோ?; பஞ்சவர் அன்று பெற்ற வடுவுரையாவர் பேர்ப்பார்? - அக்காலத்திற் பாண்டவர் ஐவரும் ஒருத்தியையே மனைவியாக்கலிற் பெற்ற பழியுரையை நீக்குவார் யார்?; காமம் வாய்ப்பறை அறைந்து தூற்றி இடுவதே அன்றிப் பின்னும் இழுக்கு உடைத்து - காமம் வாய்ப்பாறையாலே பரப்பித் தூற்றியிடுதல் அன்றி மறுமையினும் நரகம் முதலியவற்றைத் தரும் வழுவுடையது; நடுவுநின்று உலகம் ஓம்பலே நல்லது போலும் என்றான் - (ஆதலால்) நடுவுநிலையிலே நின்று உலகைக் காத்தலே நல்லது என்றான்.
விளக்கம் : போலும்: ஒப்பில் போலி. (ஓம்பலே நல்லது என மாறுக.) பஞ்சவர்: ஐவர், பாண்டவர். அன்று: பண்டறி சுட்டு.
212. ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செங் கணனானும்
கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும்
பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும்
ஓர் அறிவு உடையை என்றான் உருத்திர தத்தன் என்பான்.
பொருள் : ஆரறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செங்கணானும் - பேரறிவை மற்றோர் இகழ்தல் இயலாத ஆயிரங் கண்ணனான இந்திரனும்; கூர்அறிவு உடைய நீரார் சொற்பொருள் கொண்டு செல்லும் - கூரிய அறிவுடைய பண்பினராம் அமைச்சர் சொல்லின் பொருளைக் குறிக்கொண்டு நடப்பான்; நீயும் பேரறிவு உடையை - இந்திரனைப்போல நீயும் பேரறிவு உடையாய்; பிணை அனாட்கு அவலம் செய்யும் ஓர் அறிவுடையை என்றான் உருத்திரதத்தன் என்பான் - எனினும் இப்போது பிணைபோன்ற விசயைக்குத் துன்பம் உண்டாக்கும் ஓரறிவு உடையை ஆனாய் என்று உருத்திரதத்தன் உரைத்தான்.
விளக்கம் : அவலம் : அரசன் கொலை செய்யப்படல். (நிமித்திகன் கூறியவற்றை அரசன் கேளாமையின் உருத்திரதத்தன் இங்ஙனம் உரைத்தான்.) ஆர் அறிவு - நிரம்பிய அறிவு. கூர்அறிவு - கூர்த்த அறிவு. நீயும் என்புழி உம்மை சிறப்பு. பிணையனாள் - பெண்மான் போன்ற விசயை. ஓர் அறிவு என்றது காமமே கன்றிநின்ற இவ்வோரறிவே என்பதுபட நின்றது.
213. அளந்து தாம் கொண்டு காத்த அருந் தவம் உடைய நீரார்க்கு
அளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே
அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான்
விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான்.
பொருள் : விளங்கு ஒளிமணிகள் வேய்ந்து விடுசுடர் இமைக்கும் பூணான் - ஒளிவீசும் மணிகள் பதித்து ஒளிவிடும் பூண்களையுடைய சச்சந்தன்; தாம் அளந்துகொண்டு காத்த அருந்தவம் உடையார்க்கு - தாம் அளவாகக்கொண்டு போற்றிய அரிய தவத்தினர்க்கு; அற்றைநாளே போகம் எல்லாம் அளந்தன - கருவில் அமைந்தபோதே நுகர்ச்சியெல்லாம் அளவிடப்பட்டுள்ளன; அவரவர்க்கு வாழும் நாளும் அளந்தன - அவரவர்க்கு அப்போது வாழ்நாட்களும் அளவிடப்பட்டுள்ளன; அது எனக்கு உரையல் என்றான் -(ஆகவே) நிலையாமையைப் பற்றி நீ எனக்கு உரையல் என்றான் -(ஆகவே) நிலையாமையைப் பற்றி நீ எனக்கு உரைத்தல் வேண்டா என்று கூறினான்.
விளக்கம் : போகமும் என்னும் உம்மை கூறிற்றிலர், செஞ்சொலாய் முற்படக் கிடத்தலின். நிலம்திரு நீங்கும் (204) என நிமித்திகன் கூறிய செல்வ நிலையாமையையும், உருத்திரதத்தன் கூறிய யாக்கை நிலையாமையையும் நிலையாமை என ஒருமையாக்கி, அது என ஒருமையாற் கூறினான். உரையல் என்றான் நிமித்திகனை நோக்கி, அவன் உரியன் ஆதலின்.
214. மூரித் தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கிப்
பாரித்தேன் தரும நுண்நூல் வழக்கு அது ஆதல் கண்டே
வேரித் தேம் கோதை மாதர் விருந்து உனக்காக இன்பம்
பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான்.
பொருள் : மூரித்தேன் தாரினாய் - பெருமையுடைய தேன் பொருந்திய மாலையினாய்; தரும நுண்ணூல் வழக்குஅது ஆதல் கண்டு உறுதி நோக்கிப் பாரித்தேன் - நுண்ணிய அறநூலின் ஆணை இடித்துக் கூறல் அமைச்சர்க்கு இயல்பு என்பதை உணர்ந்து, நின்நலத்தை நோக்கி இதுவரை பரக்கக் கூறினேன்; வேரித்தேன் கோதை மாதர் பூரித்து ஏந்து இளைய கொங்கை விருந்து இன்பம் உனக்காகப் புணர் - மணமுறு தேன் பொருந்திய மாலையணிந்த மாதரின் பூரித்து ஏந்திய இளைய கொங்கையின் புதிய இன்பம் உனக்குக் கிடைக்குமாறு புணர்க, நீ முனியினும் யான் போவல் என்றான் - நீ என்னை வெறுத்தாலும் (நின் தவறு காணாமல்) யான் துறவிடத்தே செல்வேன் என்று நிமித்திகன் கூறினான்.
விளக்கம் : மூரி பண்பு மாத்திரம் உணர்த்தாது பெயராதலின், வேற்றுமைத் தொகை. முனியினும் என்பது எதிர்காலம் உணர்த்தும் எச்சம்; உம்மை ஐயம். இளைய கொங்கை என்று இளமை நிலையாமை கூறினான். அரசன் போவென்னாமல் தானே போவேன் என்றல் நீதியன்மையின், துறவு உட்கோள் ஆயிற்று. இதனால் வெளிறிலாக் கேள்வியான் நிமித்திகனென நச்சினார்க்கினியர் கருதியது முற்கூறப்பட்டது. களிறனான் (சீவக.27) முதல் இத்துணையும் ஒரு தொடர். பாரித்தல் - மிக மிக விரித்துப் பேசுதல். தரும நுண்ணூல் என்றது திருக்குறளை. அதன்கண் கூறப்படுவது,
அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்
என்பது.
215. இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான்
முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால்
புனமா மலர் வேய் நறும் பூங் குழலாள்
மனமாம் நெறி ஓடிய மன்னவனே.
பொருள் : புனமாமலர் வேய் நறும் பூங்குழலாள் மனம் ஆம் நெறிஓடிய மன்னவன் - முல்லை மலர்சூடிய மணமிகும் அழகிய குழலாள்பால் மனங்கொண்ட, அரச நெறிகெட்ட அரசன்; முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால் - முற்பிறப்பின் தீவினை முளைத்துத் தோன்றுதலாலே; இனம் ஆம் என்று உரைப்பினும் ஏதம் எணான் - நின் வேட்கை முற்கூறிய தேவர்களின் வேட்கைக்கு இனமானது என்று பின்னும் கூறினும் தனக்கு வரும் தீங்கை எண்ணாதவன் ஆனான்.
விளக்கம் : குழலாள் மனமாம் மன்னவன், நெறியோடிய மன்னவன் என இயைக்க. இனம் என்றது யான் முற்கூறிய தேவர் காமத்திற்கு இனம் என்றவாறு. எணான் - எண்ணான். பான்மை - ஊழ். ஈண்டுப் போகூழ். இச்செய்யுள் நூலாசிரியர் சச்சந்தனுக்கு இரங்கிக் கூறியது.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
என்றிரங்கினவாறு. நெறி - தனக்குரிய அரசியனெறி.
216. கலையார் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ்
முலையார் தடமும் முனியாது படிந்து
உலையாத் திருவின் அமிர்து உண்டு ஒளிசேர்
மலையார் மணி மார்பன் மகிழ்ந்தனனே.
பொருள் : திருவின் கலைஆர் துகில் ஏந்து அல்குலும் - விசயையின் மேகலையும் துகிலும் அணிந்த அல்குலையும்; கதிர் சூழ் முலைஆர் தடமும் - ஒளிவிடும் முலைத்தடத்தையும்; முனியாது படிந்து - வெறாது தோய்ந்து; உலையா அமிர்து உண்டு - கெடாத இளமைச் செவ்வியை நுகர்ந்து; ஒளிசேர்; மணிமலைஆர் மார்பன் மகிழ்ந்தனன் - ஒளிபொருந்திய மலையனைய மார்பன் (வேறு மனக்கவலையின்றி) மகிழ்ந்தான்.
விளக்கம் : மலையார் : ஆர் : ஒத்த.
217. விரி மா மணி மாலை விளங்கு முடித்
திரு மா மணி சிந்து திளைப்பினர் ஆய்
எரி மா மணி மார்பனும் ஏந்திழையும்
அரு மா மணி நாகரின் ஆயினரே.
பொருள் : எரிமாமணி மார்பனும் ஏந்து இழையும் - ஒளி விடும் மணிமார்பனும் விளங்கும் பூணினளும்; விரிமா மணிமாலை விளங்குமுடித் திருமாமணி சிந்து திளைப்பினராய் - மார்பிற் கிடந்த விரிந்த மாமணி மாலையும் நீல மணிபோலும் மயிர்முடியிற் கிடந்த தெய்வ வுத்தியும் சிதறும் முயக்கத்தினராய்; அருமாமணி நாகரின் ஆயினர் - அரிய பெரிய மாணிக்கத்தையுடைய நாகரைப்போல் ஒன்றாயினர்.
விளக்கம் : காமவின்ப நுகர்ச்சியில் நாகர் சிறந்தவர் என்பதுபற்றி நாகரின் ஆயினர் என்றார். நாகநீள் நகரொடு போகம் மன்னும் புகார் (1.21-22) என்றார் இளங்கோவடிகளாரும்.
கருவுறுதலும், கனவு காணுதலும்
218. நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய்
உற வீழ்ந்தது ஓர் ஒண் மணி போன்று உரவோன்
அறவு ஆக்கிய இன்பம் அமர்ந்த இருள்
கறை வேல் கணினாள் கனவு உற்றனளே.
பொருள் : அமர்ந்த இருள் - அவ்வாறு நாகரைப்போல இன்பம் அமர்ந்த இருளிலே; நறவு ஆர்ந்தது ஒர்நாகு இளந்தாமரைவாய் - தேன் நிறைந்த மிக்க இளமை பொருந்திய தாமரையில், வீழ்ந்ததுஒர் ஒண்மணி போன்று உரவோன் உற - வீழ்ந்த ஒரு முத்தைப்போன்று சீவகன் விசயையின் கருவில் உற; இன்பம் அறவு ஆக்கிய கனவு கறைவேல் கணினாள் உற்றனள் - அப்பொழுதே இன்பம் அறுதலை ஆக்கிய கனவைக் குருதிக்கறை பொருந்திய வேலனைய கண்ணினாள் கண்டாள்.
விளக்கம் : தேன் நிறைதலும் மிக்க இளமையும் மாறாத தாமரை எனவே பதுமயோனியாம். உறவோன் உற - பிள்ளையார் (சீவகன்) அவதரிக்க. அறவு : தொழிற்பெயர். நாகிளந் தாமரை : ஒருபொருட் பன்மொழி. கணினாள் - கண்ணினாள். இருள் : இரவிற்கு ஆகுபெயர். கனா - குறியதன்கீழ் ஆக்குறுகி உகரமேற்றுக் கனவு என்றாயிற்று.
219. பஞ்சி அடிப் பவளத் துவர் வாய் அவள்
துஞ்சும் இடைக் கனவு மூன்று அவை தோன்றலின்
அஞ்சி நடுங்கினள் ஆய் இழை ஆயிடை
வெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே.
பொருள் : பஞ்சிஅடிப் பவளத் துவர்வாயவள் - பஞ்சியனைய அடியும் பவளமனைய சிவந்த வாயையுமுடையவளாகிய விசயை; துஞ்சும் இடைக் கனமூன்று துயிலிடைக் கண்ட கனவு மூன்று; அவை தோன்றலின் - அவை பின்பு மனத்தே தோன்றலின்; ஆயிழை அஞ்சி நடுங்கினள் - ஆயிழையாள் அச்சமுற்று மெய்விதிர்ப்புற்றனள்; ஆயிடை வெஞ்சுடர் தோன்றி விடிந்தது - அக்காலத்தே வெங்கதிரவன் தோன்றி விடிவுற்றது.
விளக்கம் : எனவே (வைகறையிற் கண்டதால்) கடிதிற் பயக்குமாறாயின. இவை பிற்பயக்கும் கனவாதலின் பின்னும் நெஞ்சில் தோன்றின. கனா - ஈற்றாகாரம் குறுகிக் கன என நின்றது. விடிந்ததை: ஐ: சாரியை; வினைத்திரி சொல் என்பர் நச்சினார்க்கினியர் (சீவக. 223) ஆயிடை: சுட்டு நீண்டது.
விசயை, அருகப் பெருமானை வணங்குதல்
220. பண் கெழு மெல் விரலால் பணைத் தோளி தன்
கண் கழூஉச் செய்து கலை நலந் தாங்கி
விண் பொழி பூ மழை வெல் கதிர் நேமிய
வண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள்.
பொருள் : பணைத்தோளி - மூங்கிலனைய தோளி; பண்கெழு மெல்விரலால் கண்கழூஉச் செய்து - யாழொடு பழகிய தன் மெல்லிய விரலாற் கண்களைக் கழுவி; கலைநல தாங்கி - நல்ல ஆடையணிந்து; விண்பொழி பூமழை வெல்கதிர் நேமிய வண்புகழ் மால் அடி வந்தனை செய்தாள் - வானவர் பெய்யும் பூமழையையும் தீவினையை வெல்லும் அறவாழியையும் வளவிய புகழையும் உடைய அருகப்பெருமானடியை வணங்கினாள்.
விளக்கம் : பண்: (யாழ் நரம்புக்கு) காரிய ஆகுபெயர்; யாழொடு பயின்ற விரலும் (வந்தனை செய்தாள் என வருதலாற் கையை உணர்த்தியது கொண்டு) சினை ஆகுபெயர்.கழூஉச் செய்து, நல்ல, மரூஉச் செய்து (நாலடி. 246) என்பதுபோல நின்றது. விண்: (இட) ஆகுபெயர். தீவினையை வெல்லும் அறவாழி. தெய்வம் அஞ்சல் (தொல்-மெய்ப்.24) என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரம், தன்குல தெய்வத்தை வணங்குதற்கு விதியாமாறு உணர்க. (தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழு தெழுவாள் என்பது தமிழ் மறையாதலின் இவ்வாறு நச்சினார்க்கினியர் விளங்கக் கூறினார்.)
விசயை சச்சந்தனை வணங்கி, தான் கண்ட மூன்று கனவுகளைக் கூறுதல்
221. இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு
எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி
வெம் பரி மான் நெடுந் தேர் மிகு தானை அத்
தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே.
பொருள் : இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு - இவ்வுலகில் நிகர் இல்லாத நறிய மலரையும் சந்தனத்தையுங் கொண்டு; எம்பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி - எம் பெருமானே! நின் அடிக்கு இவை பொருந்துவன ஆகுக என்று பரவி; வெம்பரிமான் நெடுந்தேர் மிகுதானை அத் தம்பெருமான் அடிசார்ந்தனள் - வெம்மையுறுங்குதிரையும் நெடுந்தேரும் மிகுந்த படையையுடைய தன் கணவன் அடியை வணங்கினாள்.
விளக்கம் : எய்துக என்று: எய்து கென்று: அகரம் தொகுத்தல் விகாரம். பரிமான் - குதிரை. மான்: ன்: சாரியை. அ: உலகறி பொருண் மேற்று (உலகறி சுட்டு)
222. தான் அமர் காதலி தன்னொடு மா வலி
வானவர் போல் மகிழ்வு உற்ற பின் வார் நறும்
தேன் எனப் பால் எனச் சில் அமிர்து ஊற்று எனக்
கான் அமர் கோதை கனா மொழிகின்றாள்.
பொருள் : மாவலி தான் அமர் காதலி தன்னொடு வானவர் போல் மகிழ்வு உற்றபின் - மாவலிமையுடைய சச்சந்தன் தன்னால் விரும்பப்பட்ட காதலியுடன் வானவர் தம் நோக்கத்தால் நுகர்வது போல இவனும் மகிழ்வுற்ற பிறகு; தேன்எனப் பால் எனச் சில்அமிர்து ஊற்றுஎன - தேனும் பாலும் அமிர்தின் ஊற்றும் போல; கான்அமர் கோதை கனா மொழிகின்றாள் - மணம் பொருந்திய கோதையாள் தான் கண்ட கனவைக் கூறுகின்றாள்.
விளக்கம் : கனவு மூன்றுக்கும் தேன் முதலிய மூன்றும் உவமம்: பிண்டி.....வீழ்ந்தது (சீவக. 223) என்னும் மொழி, இவள் கூறுதலின் இனிதாய்ப் பின் தீங்கு விளைத்தலின் தேனுவமம்; ஆர்ந்தோர் வாயிற் றேனும் புளிக்கும் (குறுந்.354) என்றார் பிறரும். எண், முத்தணி மாலை (சீவக.223) என்ற சொல் குலந்தூய்மை கூறுதலிற் பாலுவமம். இவன் (சீவகன்) ஆக்கத்திற்கு ஊறும் அமிர்து உவமம்; இவன் ஆக்கம் அமுதுபோல் உயிர்களைக் காத்தலின்.
223. தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்
முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக
ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு
வைத்தது போல வளர்ந்ததை அன்றே.
பொருள் : பிண்டிஅணி தொகுத்துஅறத் தொலைந்து வீழ்ந்தது - ஓர் அசோகு, தான் அணிந்த கொத்துக்கள் முற்றுங்கெட்டுப் பின்பு தானும் நேராக வீழ்ந்தது; அதன் தாள்வழியே முளைஒத்து - அதன் வழியிலே ஒரு முளை அதனை ஒத்து; எண் முத்து அணிமாலை முடிக்கு இடன்ஆக - எட்டு அழகிய முத்துமாலையை ஒத்த மாலைகளையுடைய ஒரு முடிக்கு இடம்ஆக; வைத்ததுபோல் ஓங்குபு வளர்ந்தது - நட்டு வைத்தாற்போல ஓங்கி வளர்ந்தது (என்று விசையை கூறினாள்.)
விளக்கம் : முத்தணி மாலை - மாலையொத்த மாலை; அணி; மின்னணி நுண்ணிடை (சிற்.342) என்றாற்போல் உவமவுருபு, என்றது வெள்ளிய மாலையை, இது குலந்தூய்மை கூறிற்று; வெண்டாமரை மலர்த் தடங்கள் போலு, நங்குடி (சீவக.547) என்பர் மேலும்; முத்தமாலை யெனின், மேல், நறுமாலை (சீவக. 225), எண் கோதைத் தொகை (சீவக. 2607) என்றல் பொருந்தாது. வளர்ந்ததை: வினைத்திரி சொல்; உரைத்ததை (கலி.76) போல. மேலே, துளும்பு நலத்தாரோடு, (சீவக. 2889) என்றலின், முத்தணி மாலையைக் கனவிற் கண்டாள்; அது காரணம். இதனாற் சுற்றங் கெட்டபடியும் அரசன் கெட்டபடியுங் கூறினார். அது கதையிற் காண்க.
சச்சந்தன் கனவின் பயனைக் கூறத் தொடங்குதல்
224. வார் குழை வில் இட மா முடி தூக்குபு
கார் கெழு குன்று அனையான் கனவின் இயல்
பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து
ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான்.
பொருள் : கார்கெழு குன்றனையான் - முகில் தவழும் மலைபோலச் சலிப்பில்லாத சச்சந்தன்; கனவின் இயல் பார்கெழு நூல் விதியால்தான் பயன் தெரிந்து - கனவின் தன்மையை உலகிற் பொருந்திய கனா நூலின் விதியாலே தான் பயனைத் தெரிந்து; வார் குழை வில்இட மாமுடி தூக்குபு - நீண்ட குழை ஒளிவிட முடியை அசைத்து; ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான் (அவற்றில் நல்லவற்றை எடுத்து) அவள் அழகு கெடாமற் கூறுகின்றான்.
விளக்கம் : அஃது அசோகு முறிந்தது கூறாமல் மாலையையும் முடியையும் இரண்டு கனவாகப் பிரித்தது.
225. நன்முடி நின் மகனாம் நறு மாலைகள்
அன்னவனால் அமரப்படும் தேவியர்
நல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் எனப்
பின்னதனால் பயன் பேசலன் விட்டான்.
பொருள் : நன்முடி நின்மகன் ஆம் - அழகிய முடி உன் மகனாகும்; நறுமாலைகள் அன்னவனால் அமரப்படும் தேவியர் - மணமிகு மாலைகள் அவனால் விரும்பப்படும் தேவியர்; நன்முளை நின்மகன் ஆக்கமது ஆம் என - அழகிய முளை நின் மகனின் மேம்பாடு ஆகும் என; மூன்றாக்கிக் கூறிய பிறகு, பின்னதனாற் பயன் பேசலன் விட்டான் - இற்றதனால் உள்ள பயனைக் கூறாமல்விட்டான்.
விளக்கம் : குருதிக் கோட்டுக் குஞ்சர நகரம் (சீவக. 2182) (அத்தினபுரம்) போல், முத்த மாலையை மாலையென்னும் பெயர் கருதி நறுமாலை என்றல் ஆகாமை யுணர்க; மாலையென்னும் பெயர் பொதுவாகலின்.
அசோகமரம் வீழ்ந்ததன் பயனைச் சச்சந்தன் கூற, விசயை துன்பம் கொள்ள, சச்சந்தன் ஆறுதல் கூறுதல்
226. இற்று அதனால் பயன் என் என ஏந்திழை
உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும்
மற்று உரையாடலளாய் மணி மா நிலத்து
அற்றது ஓர் கோதையின் பொன் தொடி சோர்ந்தாள்.
பொருள் : இற்றதனால் பயன் என்என - பிண்டி இற்று வீழ்ந்ததனாற் பயன்என் என்று விசையை வினவ; ஏந்திழை இன்னே எனக்கு இடையூறு உற்றது என்றலும் - ஏந்திழையே! இங்ஙனே எனக்கு ஓர் இடையூறு நேர்ந்தது என்றுரைத்ததும்; பொற்றொடி மற்று உரையாடலளாய் - பொன்னாலான தொடியுடையாள் வேறு ஒன்றும் மொழியாதவளாய்; மணி மாநிலத்து அற்றது ஓர் கோதையிற் சோர்ந்தாள் - மணிநிலத்தே அற்று வீழ்ந்ததொரு கோதைபோல வீழ்ந்தாள்.
விளக்கம் : உற்றதென இறந்த காலத்தாற் கூறினான், தெளிவு பற்றி; இல்லை, கனா முந்துறாத வினை (பழ.2) என்றலின், இன்னே, உதாசீனம் போல (விருப்பு வெறுப்பின்றிக் கூறியதுபோல) நின்றது.
227. காவி கடந்த கண்ணீரொடு காரிகை
ஆவி நடந்தது போன்று அணி மாழ்கப்
பாவி என் ஆவி வருத்துதியோ எனத்
தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான்.
பொருள் : காரிகை காவி நடந்த கண்ணீரொடு - விசையை காவியனைய கண்ணீருடனே; ஆவி நடந்ததுபோன்று அணி மாழ்க - உயிர் நீங்கினாற்போல அழகு கெடுதலாலே, ஆண்டகை சென்று - ஆடவரிற் சிறந்தவன் சென்று; பாவி என் ஆவி வருத்துதியோ எனத் தேவி மெய்யைச் சார்ந்தான் - பாவியேனுடைய ஆவியை வருத்துகின்றனையோ என்று கூறி அவளை மெய்யைத் தழுவினான்.
விளக்கம் : தேவியை மெய்யை என இரண்டடித்தும் ஐயுருபு வருதல் (தொல் - வேற்றுமை மயங்-5) தெள்ளிது என்றதனான் முடியும்.
228. தண் மலர் மார்பு உறவே தழீஇயினான் அவள்
கண் மலர்த் தாள் கனவின் இயல் மெய் எனும்
பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு எனப்
பண் உரையால் பரவித் துயர் தீர்த்தான்.
பொருள் : தண்மலர் மார்பு உறவே தழீஇயினான் - குளிர்ந்த அகன்ற மார்பிலே பொருந்தத் தழுவினான்; அவள் கண் மலர்ந்தாள் - (அதனால்) அவள் கண்விழித்தாள்; கனவின் இயல்மெய் எனும் பெண்மயம் ஓ மடவாய்க்குப் பெரிது என - (அப்போது) மடவாய் நினக்குக் கனவின் தன்மையை மெய்யெனக் கருதும் பெண்ணியல்பு ஓ பெரிதாக இருந்தது என்று; பண் உரையாற் பரவித் துயர் தீர்த்தான் - புனைந்துரையாற் புகழ்ந்து துயர் நீக்கினான்.
விளக்கம் : ஏகாரம் : ஈற்றசை. ஓ : வியப்பு. (பண் உரை - கற்பனை மொழி.) மார்புறவே என்பதும் பாடம்.
229. காதலன் காதலினால் களித்து ஆய் மலர்க்
கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழத்
தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய
போது உகு மெல் அணைப் பூ மகள் சேர்ந்தாள்.
பொருள் : காதலன் காதலினால் களித்து - காதலன் கொண்டாட்டத்தாலே களித்து; ஆய்மலர்க் கோதைஅம் கொம்பனையார் தம் குழாம் தொழ - ஆய்ந்த மலர்மாலையணிந்த அழகிய பூங்கொடியனைய சேடியர் திரள் வணங்க; தாதுஉகு தாமம் அணிந்து அகில் விம்மிய போதுஉகு மெல்லணைப் பூமகள் சேர்ந்தாள் - மகரந்தப்பொடி சிந்தும் மாலை சூழ்ந்து, அகிற்புகை யூட்டப் பெற்று, மலர்கள் பரப்பிய மெல்லிய அணையைப் பூமகள் போன்ற விசையை அடைந்தாள்.
விசயை தாய்மையுறுதல்
230. பண் கனியப் பருகிப் பயன் நாடகம்
கண் கனியக் கவர்ந்து உண்டு சின்னாள் செல
விண் கனியக் கவின் வித்திய வேல் கணி
மண் கனிப்பான் வளரத் தளர் கின்றாள்.
பொருள் : பண்கனியப் பருகி - இசையினைப் பழுக்கக் கேட்டும்; பயன் நாடகம் கண்கனியக் கவர்ந்து உண்டு -பயன்தரும் நாடகங்களைக் கண்ணுருக முகந்து நுகர்ந்தும்; சில்நாள் செல - (இருவர்க்கும் இங்ஙனம்) சிலநாட்கள் சென்ற அளவிலே; விண் கனியக் கவின் வித்திய வேல்கணி - விண்ணவர் உருக அழகைப் பரப்பிய வேற்கண்ணாள்; மண் கனிப்பான் வளரத் தளர்கின்றாள் - நிலவுலகை உருக்குமவன் வளர்தலாலே தளர்ச்சி உறுகின்றாள்.
விளக்கம் : விண்: ஆகுபெயர். வித்திய - பரவிய. குழவிப் பருவத்தாலும் அரசியலாலும் வீடுபேற்றாலும் மண்ணை உருக்குமவன்.
231. கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ்வாய் விளர்த்துக்
கண் பசலை பூத்த காமம்
விரும்பு ஆர் முலைக் கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள்
பெய்து இருந்த பொன் செப்பே போல்
அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று
ஆய்ந்த அனிச்ச மாலை
பெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல்
நங்கை நலம் தொலைந்ததே.
பொருள் : கரும்புஆர் தோள் முத்தம் கழன்று - (வயாவிற்கு) கரும்பனைய தோள் முத்தம் கழல மெலிந்து; செவ்வாய் விளர்த்துக் கண் பசலைபூத்த - செவ்வாய் வெளுத்துக் கண்கள் பசலை பூத்தன; காமம் விரும்பு ஆர்முலைக்கண் கரிந்து -(பின்பு சூல் முதிரும் அளவிற்குக்) காமத்தை விரும்புதற்குக் காரணமான முலைக்கண் கருகி; திங்கள் வெண்கதிர்கள் பெய்திருந்த பொன் செப்பேபோல் அரும்பால் பரந்து - திங்களின் வெண்கதிர்களைப் பெய்துவைத்த பொற் செப்பினைப்போல் அரிய பால் நிறைந்து; நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று - இடையுங் கண்களுக்குக் காட்சியாயிற்று; ஆய்ந்த அனிச்சமாலை பெரும் பாரமாய் - சுருங்கிய அனிச்ச மாலையும் பெரும் பாரமாகி; நற்சூல் சலஞ்சலம்போல் பெரிதும் நைந்து நங்கை நலம் தொலைந்தது - நல்ல சூலையுடைய சலஞ்சலம்போல மிகவும் நைந்து விசயையின் அழகு தொலைந்தது.
விளக்கம் : நுசுப்பு : உம் : சிறப்பும்மை.
சச்சந்தன் கவலையுறுதல்
232. தூம்பு உடை நெடுங் கை வேழம்
துற்றிய வெள்ளிலே போல்
தேம்புடை அலங்கல் மார்பில்
திருமகன் தமியன் ஆக
ஓம்படை ஒன்றும் செப்பாள்
திருமகள் ஒளித்து நீங்க
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு
அறிவு எனும் அமைச்சன் சொன்னான்.
பொருள் : தேம்புஉடை அலங்கல் மார்பின் திருமகன் - கெடுதலுடைய, மாலைமார்பனான திருமகன்; தூம்பு உடை நெடுங்கை வேழம் துற்றிய வெள்ளிலேபோல் - துளைபொருந்திய நீண்ட கையுடைய யானையின் பெயரையுடைய நோயால் உண்ணப்பட்ட விளம் பழம்போல, தமியன்ஆக - அரசுரிமையிழந்து தனித்துப் போமாறு; ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க - பரிகாரம் சிறிதும் கூறாளாய்த் திருமகள் மறைந்து போக; ஆம்புடை தெரிந்து அறிவு எனும் அமைச்சன் வேந்தற்குச் சொன்னான் - ஆகவேண்டிய (சீவகன் பிழைப்பதாகிய) ஒரு கூறுபாட்டைத் தெரிந்து அறிவு என்கிற அமைச்சன் வேந்தனுக்குரைத்தான்.
விளக்கம் : வேழம் : விளவிற்கு வருவதொரு நோய்; குருதிக் கோட்டுக் குஞ்சர நகரம் (சீவக. 2182) போல வேழத்திற்குக் கை அடை. தேம்புதலுடைய திருமகன்; தேம்புதல் - கெடுதல்; தேம்பு - முதல் நிலைத்தொழிற் பெயர். புள்தேம்பப் புயல்மாறி (பட்.4) என்றார் பிறரும். தமியனாக - அரச வுரிமையை நீங்க. ஓம்படை ஒன்றும் செப்பாள். தான் பரிகாரம் சிறிதும் கூறாளாய். ஒளித்து நீங்க என்றார். ஆம்புடை: பிள்ளையார் (சீவகன்) பிழைப்பதொரு கூறுபாடு.
எந்திர ஊர்தியைச் செய்க என அறிவு என்னும் அமைச்சன் கூறல்
233. காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப் பட்ட
நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்து
கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்.
பொருள் : வேல்மன்னர் காதித் தங்கள் கண்என வைக்கப்பட்ட நீதிமேல் சேறல் தேற்றாய் - வேலேந்திய வேந்தர்கள் ஊனாகிய கண்ணைக் கண்ணென்பாருடனே பொருது, தங்கள் கண்ணென்று துணிந்து வைத்த நெறியிற் செல்லாயாய்; நெறி அலா நெறியைச் சேர்ந்து - தீய நெறியிலே சென்று; கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே - குற்றம் பொருந்திய காமம் என்கிற கள்ளில் அழுந்தின அப்போதே; ஓதிய பொறி அற்றாய் - கூறிய நல்வினையை இழந்தாய்; ஓர் அரும் பொறி புனைவி என்றான் - (ஆதலால்,) இனி நல்ல பொறி யொன்றைப் புனைந்திடுக என்று (அறிவெனும் அமைச்சன்) கூறினான்.
விளக்கம் : இவ்விரண்டு செய்யுளும் தேவிக்கும் அவள் கருவிற்கும் உய்தியை அளிக்கும் காரணமாக அவர்களின் ஊழ் சச்சந்தன் உள்ளத்தினூடே தூண்டி எழுப்பிய அவனுடைய நினைவுகள். இவற்றை ஆசிரியர் அவன் அறிவினை அமைச்சனாக உருவகித்துக் கூறும் அழகு ஆற்றவும் இனிது.
சச்சந்தன் தொழில் திறமிக்க ஒருவனை விசைப் பொறி ஒன்றைச் செய்க என அவனும் செய்தல்
234. அந்தரத்தார் மயனே என ஐயுறும்
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன்
வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர்
எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான்.
பொருள் : தந்திரத்தால் அந்தரத்தார் மயனே என ஐயுறும் தமநூல் கரைகண்டவன் - தொழிலால் வானவர் தச்சனாகிய மயனேயென்று துணிந்து வடிவால் ஐயமுறும், சிற்ப நூலைக் கரைகண்டவனாகிய, வெந்திறலான் பெருந் தச்சனைக் கூவி- சிறந்த ஆற்றலுடையவனாகிய பெரிய தச்சன் ஒருவனைக் கூப்பிட்டு; ஓர் எந்திர வூர்தி இயற்றுமின் என்றான் - ஒரு பொறியூர்தியைப் பண்ணுமின் என்று மன்னன் கூறினான்.
விளக்கம் : இயற்றுமின் : ஒருமை பன்மை மயக்கம். ஊர்தி - ஏறப்படுவது. அந்தரத்தார் - தேவர். தந்திரம் - தொழில். தம: ஆறாவதன் பன்மையுருபு. நூல் - ஈண்டுச் சிற்ப நூல். வெந்திறலான் என்பதனைச் சச்சந்தன் எனினுமாம்.
235. பல் கிழியும் பயினும் துகில் நூலொடு
நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச்
செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே.
பொருள் : நலஞ்சான்றன பல்கிழியும் பயினும் துகில் நூலொடு நல்லரக்கும் மெழுகும் அல்லனவும் அமைத்து - நலஞ் சிறந்தனவாகிய பல சீலைகளும் பயிலும் வெள்ளிய நூலும் நல்ல அரக்கும் மெழுகும் ஒழிந்தனவும் பொருந்தக் கொணர்ந்து சேர்த்து; ஆங்கு எழுநாளிடைச் செல்வதோர் மாமயில் செய்தனன் - அரசன் கூறியவாறே, ஏழுநாட்களில் செல்வதொரு மயிலைச் செய்தான்.
விளக்கம் : கிழி - சீலை. பயின் - பற்றுதற்குரியன. துகில்நூல் - வெள்ளை நூல்.
236. பீலி நல் மாமயிலும் பிறிது ஆக்கிய
கோல நல் மாமயிலும் கொடு சென்றவன்
ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது
ஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான்.
பொருள் : பீலிநன் மாமயிலும் பிறிது ஆக்கிய கோலம் பீலிநன் மாமயிலும் - தோகையையுடைய அழகிய உண்மை மயிலையும், செய்யப்பட்ட அழகிய வேறு தோகை மயிலையும்; அவன் கொடுசென்று - அத் தச்சன் கொண்டுபோய்; ஞாலம் எல்லாம் உடையான் அடி கை தொழுது - நிலவுலகு முழுதும் உடைய சச்சந்தன் அடியைக் கையால் வணங்கி; ஆலும் இம் மஞ்ஞை அறிந்தருள் என்றான் - (இம் மயில்களில்) அசையும் உண்மை மயில் அறிந்தருள்க என்றனன்.
விளக்கம் : மயிற்பொறி என்பது தோன்ற ஆக்கிய கோல நன்மயில் என்றார். பீலியை இரண்டற்கும் ஏற்றுக.
237. நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது
கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என
மின் நெறி பல்கலம் மேதகப் பெய்தது ஓர்
பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன்.
பொருள் : இது நல்நெறி நூல் நயந்தான் நன்று நன்று - இம் மயில் நல்ல நெறியுடைய நூலின் நயத்தினைத் தான் உடையதாக இருந்தது, மிக நன்று; கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என - கொல்லுத் தொழிலிற் சிறந்தவனே இதனை ஏற்றுக்கொள்க என்று; மின் எறி பல்கலம் மேதகப் பெய்தது ஒர்பொன் அறை புகழ் வெய்யோன் தான் கொடுத்தான் - மின்னைக் கெடுக்கும் பல கலன்களை நன்குறச் சேர்த்துள்ள ஒரு பொன் அறையைப் புகழை விரும்பும் அரசன் நல்கினான்.
விளக்கம் : மின்எறி - ஒளி வீசும் என்றும் ஆம். நன்று நன்றென்னும் அடுக்கு வியப்பாற் றோன்றியது. இது நன்னெறி நூல்நயம் தான் என மாறுக. கொல்நெறி - கொல்லுத் தொழில்.
மயிலாகிய வானவூர்தியை இயக்க சச்சந்தன் கற்றுத்தர விசயை கற்றுக் கொள்ளுதல்
238. ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப்
பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து
ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள்.
பொருள் : ஆடுஇயல் மாமயில் ஊர்தியைத் தான் பாடலின் பயப்பய மேன்மேல் துரந்து - ஆடுதல் பொருந்திய மயிலாகிய அவ் வூர்தியை விசயைதான் பாட்டுப்போலே மெல்ல மெல்ல மேலும் மேலும் செலுத்தி; மாடமும் காவும் மடுத்துச் சில்நாள் செல - மாடத்தினும் பொழிலினும் ஆகக் கொண்டுசென்று சில நாட்கள் சென்ற பிறகு; ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள் - (ஒருநாள்) கற்பித்தவன் விசையுடன் ஓடுமாறு முறுக்கி உணர்த்த அவளும் உணர்ந்தாள்.
விளக்கம் : பாட்டு ஆரோசையாலே மெல்ல மெல்ல உயர்ந்து செல்லுமாறுபோல என்க. இதனால் அமரோசைபோல மெல்ல இறக்கி என்பதும் கொள்க.
239. பண் தவழ் விரலின் பாவை பொறிவலம் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய
புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை
கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே.
பொருள் : கண்டவர் மருளப் பாவை பண்தவழ் விரலின் பொறிவலம் திரிப்ப - பார்த்தவர் மயங்குமாறு விசயை யாழ் நரம்பில் தவழும் தன் விரல்களாற் பொறியை வலத்தே திரிப்ப; பொங்கி விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பறக்கும் - எழும்பி வானில் உலவும் முகிலைப் பிளந்து வானிலே பறக்கும்; புண்தவழ் வெய்ய வேற்கண் பாவை பொறிஇடம் திரிப்ப - பகைவர்க்குப் புண்ணுண்டாதற்குக் காரணமான வேலனைய கண்ணாள் பொறியை இடத்தே திரிப்ப; தோகை வீழ்ந்து கால் குவித்திருக்கும் - அம் மயில் வீழ்ந்து காலைக் குவித்திருக்கும்.
விளக்கம் : கால் பரப்பிற் கெடும். பண் : யாழ் நரம்பிற்கு ஆகுபெயர். பாவை : விசயை.
சச்சந்தனைக் கொல்லக் கட்டியக்காரன் எண்ணிக் கூறுதல்
240. காதி வேல் வல கட்டியங் காரனும்
நீதியால் நிலம் கொண்டபின் நீதி நூல்
ஓதினார் தமை வேறு கொண்டு ஓதினான்
கோது செய் குணக் கோதினுள் கோது அனான்.
பொருள் : காதி வேல்வல கட்டியங்காரனும் நீதியால் நிலம்கொண்ட பின் - பொருது வேலை எறிவதில் வல்ல கட்டியங்காரனும் முறையால் அரசன் கொடுப்பத் தான் நிலத்தை அடிப்படுத்திய பிறகு; நீதிநூல் ஓதினார்தமை வேறுகொண்டு - அறநூல் உணர்ந்தோரை யெல்லாம் தனக்கு வேறாகக்கொண்டு; கோதுசெய் குணக் கோதினுட் கோதனான் ஓதினான் - பயனின்றென நூல்களிற் கூறிய குணங்களிலேயும் பயனிலதாகிய செய்ந்நன்றி மறக்கும் குணத்தில் நிற்கின்ற பயனிலாதவன் ஒருமொழி யுரைத்தான்.
விளக்கம் : (கட்டிங்காரனும்) : உம்மை இழிவு சிறப்பு. கோது செய் குணக்கோது - நூல்கள் பயனின்றாகக் கூறிய குணங்களிற்கோது; அஃதாவது செய்ந்நன்றிக்கேடு; உட்கோதனான் - அதிலே நிற்கின்ற பயனிலாதோன்; இனிப் பயனின்மை செய்கின்ற குணத்துக்கு ஓதின் தீக்குணங்கட் குள்ளாகிய செய்ந்நன்றிக்கேடு தன்னை ஒப்பான் என்றுமாம்.
241. மன்னவன் பகை ஆயது ஓர் மாதெய்வம்
என்னை வந்து இடம் கொண்ட அஃது இராப் பகல்
துன்னி நின்று செகுத்திடு நீ எனும்
என்னை யான் செய்வ கூறுமின் என்னவே.
பொருள் : மன்னவன் பகையாயது ஒர் மா தெய்வம் என்னை இடம் கொண்டுவந்து - வேந்தனுக்குப் பகையாயதொரு பெரிய தெய்வம் என்னை நிலையமாகக் கொண்டுவந்து, அஃது இராப் பகல் துன்னி நின்று நீ செகுத்திடு எனும் - அஃது இரவும் பகலும் என்னை நெருங்கி யிருந்து நீ அரசனை ஒழித்திடு என்று கூறும்; யான் செய்வ என்னை கூறுமின் என்ன - அதற்கு யான் செய்யாத் தகுவன யாவை? கூறுவீராக என்று வினவ;
விளக்கம் : என்ன என்பதனை, உட்கினரா (சீவக. 242) என மேல் வருகின்றதனோடு முடிக்க. (இப் பாட்டும் அடுத்ததும் குளகம்.)
தருமதத்தன் அறிவுரை கூறுதல்
242. அருமை மா மணி நாகம் அழுங்க ஓர்
உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்
கருமம் காழ்த்தமை கண்டவர் தம் உளான்
தரும தத்தன் என்பான் இது சாற்றினான்.
பொருள் : அருமை மாமணி அழுங்க நாகம் ஓர் உருமு வீழ்ந்தென உட்கினர் ஆ - அரிய பெருமைமிக்க மாணிக்கம் கெட நாகத்தின் மேலே ஓர் இடி வீழ்ந்தாற்போல அமைச்சர்கள் அஞ்சினராக; அவன் கருமம் காழ்த்தமை - கட்டியங்காரன் அரசனைக் கொல்லத் துணிந்ததை; அவர் தம்முளான் தரும தத்தன் என்பான் கண்டு இது சாற்றினான் - அவர்களில் ஒருவனாகிய தருமதத்தன் என்கின்றவன் உணர்ந்து இதனைப் பலரறியக் கூறினான்.
விளக்கம் : மணி அரசனுக்கும் நாகம் அமைச்சருக்கும் செகுத்திடு என்ற சொல் இடிக்கும் உவமை. காழ்த்தமை - கொல்லத்துணிந்தமை. ஆயவன் என்ற பாடத்திற்கு அரசனால் ஆயவன் என்க.
243. தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்
குவளையே அளவுள்ள கொழுங் கணாள்
அவளையே அமிர்தாக அவ் அண்ணலும்
உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான்.
பொருள் : தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக் குவளையே அளவு உள்ள கொழுங்கணாள் அவளையே அமிர்தாக - தவளையின் குரல்போலும் ஒலியையுடைய கிண்கிணியையும் தாமரையனைய சிற்றடியையும் குவளையே அனைய மதர்த்த கண்களையும் உடைய அவளையே அமுதாகக் கொண்டு; உவளகம் தனது ஆக அவ் அண்ணலும் ஒடுங்கினான் - அந்தப்புரம் ஒன்றுமே தனக்குரியதாக ஒழிந்தவற்றில் வேட்கையின்றி அப் பெரியான் சுருங்கினான்.
விளக்கம் : ஏகாரம் இரண்டும் தேற்றம். உம்மை: சிறப்பு: உவளகம் - ஒரு பக்கமும் ஆம். தவளையின் வாய்போன்ற வாயையுடைய கிண்கிணியுமாம். அவளையே என்புழி, சுட்டு உலகறிசுட்டு. அவ்வண்ணல் என்றது இகழ்ச்சி.
244. விண்ணி னோடு அமிர்தம் விலைச் செல்வது
பெண்ணின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்து அவன்
எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம்
தண் அம் தாமரை யாளொடும் தாழ்ந்ததே.
பொருள் : விண்ணினோடு அமுதம் விலைச் செல்வது பெண் - விண்ணும் அமுதும் விலைபெறுவ தொன்றாகும் பெண்மை; நின் இன்பம் பெரிது என - அதிலும் நின்று அரசியலின்பம் பெரிதுகாண் என்று காரியங் கூறுதலின்; தாழ்ந்தவன் எண்ணம் இன்றி இறங்கி - நின்னினும் தாழ்ந்த நிமித்திகன் செல்வம் வேண்டுதலின்றித் துறவிலே வீழ்தலாலே; இவ் வையகம் தண்அம் தாமரையாளொடும் தாழ்ந்தது - இவ்வுலகம் குளிர்ந்த அழகிய தாமரையாளுடனே நின்னிடத்தே தங்கிற்று, (இனி நினக்கு வேறொரு மனக்கவற்சியின்று).
விளக்கம் : நின்இன்பம் என்பது அரசனை நோக்கி நிமித்திகன் கூறியது. (அதனை உட்கொண்டு தருமதத்தன் கூறினான்.) பெண்ணினின்பம் எனப் பெரிதாழ்ந்தவன் என்பதும் பாடம். (இனி, பெண்ணினுடைய இன்பம் விண்ணும் அமுதும் விலை பெறக் கூடியதாகும். அத்துணைப் பெரிது என, அவ்வின்பத்திலே தங்கிய அரசனின் எண்ணம் ஆட்சியிலே இல்லாமையால் இவ்வையகம் இறங்கி நின்னிடத்தே தாமரையாளொடுந் தங்கியது என்று பொருள் கொள்வதும் பொருந்தும்.) இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருள் சிறிது வலிந்து கூறுவதாயினும் இன்பமுடைத்தாதலுணர்க.
245. தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப்
பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள்
அன்னவன் வழிச் செல்லின் இம் மண்மிசைப்
பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே.
பொருள் : தன்னை ஆக்கிய தார்ப்பொலி வேந்தனைப் பின்னை வவுவின் - தன்னை மேம்படுத்திய, தாரினாற் பொலிவுற்ற அரசனைப் பின்னர் அழித்தால்; பூமகள் பிறழ்ந்திடும் - தன் குலமும் திருவும் மண்மிசையினின்றும் பிறழும்; அன்னவன் வழிச் செல்லின் இம் மண்மிசை பின்னைத் தன்குலம் பேர்க்குநர் இல்லை - ஆக்கிய அரசன் வழியே சென்றால் இவ் வுலகினின்றும் தன் குலத்தையும் திருவையும் பெயர்ப்பார் இல்லை.
விளக்கம் : பூமகள் - திரு. இஃது உலகியலாற் கூறினாள். தார் கெழு வேந்தன் என்பதும் பாடம். முன்னிலைப் புறமொழி எனினுமாம்.
246. திலக நீள் முடித் தேவரும் வேந்தரும்
உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப
குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்
பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர்.
பொருள் : திலகம் நீள்முடித் தேவரும் வேந்தரும் ஒப்ப என்று உலக மாந்தர்கள் ஓதுப - முடிகளுக்கு மேலான முடியையுடைய வானவரும் அரசரும் ஒப்பார் என்று உலகிலுள்ள மக்கள் கூறுவர்; (அவர் அறியார்) தேவரின் பார்த்திபர் பலவும் மிக்கனர் - தேவரினும் அரசர் பலவகைக் குணங்களாலும் மேம்பட்டவர்; குலவுதார் மன்னர்க்கு இது யான் கூறுவன் - விளங்கும் மாலையணிந்த அரசர்கட்கு உள்ளதொரு சிறப்பை யான் கூறுவேன் (அதனைக் கேள்).
விளக்கம் : கூறலென் என்று பாடமாயின் ஒப்புக் கூறேன் என்றான் என்க. இதுமுதல், மன்னவன் பகையாயதொர் மாதெய்வம் (சீவக. 241) என்றதனைக் குறித்துக் கூறுகின்றான்.
247. அருளுமேல் அரசு ஆக்குமன் காயுமேல்
வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்
மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்
அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ.
பொருள் : வேந்து எனும் மா தெய்வம் - அரசன் என்னும் பெரிய தெய்வம்; அருளுமேல் அரசு ஆக்கும் - அருளினால் அரசிலே ஆக்கமுறச் செய்யும்; காயுமேல் மன்வெருளச் சுட்டிடும் - சீறுமேல் மிகுதியும் அஞ்சுமாறு தீய்த்துவிடும்; மற்று மருளி அவை - இனி, மயக்கத்தையுடைய அத் தெய்வங்கள் வாழ்த்தின் அருளி ஆக்கலும் - தம்மை ஒருவன் வாழ்த்தின் அருள்செய்து ஆக்குதலும்; வையின் அழித்தலும் அங்கு ஆபவோ? - பழித்தால் அவனை அருளாமல் அழித்தலும் அவைகட்கு அப்பொழுதே ஆகாவே.
விளக்கம் : மன் -மிகுதி. மருளி : இ : பகுதிப்பொருள் விகுதி. மற்று: வினைமாற்று. தாமினி நோயும் (புறப். வெண். 187) என்றாற் போல (வாழ்த்தினும் வையினும் என்பவற்றிலுள்ள) உம்மை மாற்றுக. ஆக்கல், அழித்தல், காலந் தோற்றாத வினைப்பெயர் (தொழிற்பெயர்). ஆப: எதிர்காலத்திற்குரிய பகரத்தோடு அன்பெறாது வந்த அகரவிற்றுப் பலவறி சொல். (ஆபவோ): ஓகாரம் : எதிர்மறை.
248. உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி
கறங்கு தெண் திரை வையகம் காக்குமால்
இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து
அறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார்.
பொருள் : மன்னவன் உறங்கும் ஆயினும் தன்ஒளி கறங்கு தெண்திரை வையகம் காக்கும் - அரசன் உறங்குவானாயினும் அவன் ஒளி ஒலிமிகும் தெளிந்த அலைகடல் சூழ்ந்த உலகைக் காத்திருக்கும்; இறங்குகண் இமையார் விழித்தே யிருந்தும் அறங்கள் வவுவ அதன் புறம் காக்கலார் - தெய்வத்தன்மை குலையுந் தேவர்கள் விழித்தவாறே யிருந்தும் உலகினர் செய்யும் அறங்களை அசுரர் கைப்பற்ற, அவ்வுலகின் சார்பிற் காக்கமுடியாதவரானார்.
விளக்கம் : இறங்குகண் இமையார் - தெய்வத்தன்மை குலையுந் தேவர், என்றது, மேலே, எல்லை மூவைந்து நாள்கள் உளவென இமைக்குங்கண்ணும் (சீவக.2810) என்பராதலின், கண்ணிமையார், தேவர்க்கு ஒருபெயர்.
249. யாவர் ஆயினும் நால்வரைப் பின்னிடின்
தேவர் என்பது தேறும் இவ் வையகம்
காவல் மன்னவர் காய்வன சிந்தியார்
நாவினும் உரையார் நவை அஞ்சுவார்.
பொருள் : யாவர் ஆயினும் நால்வரைப் பின்னிடின் - இழிந்தோராயினும் அவர் பின்னே நால்வரைத் திரியவிட்டால்; தேவர் என்பது இவ்வையகம் தேறும் - அவரை ஊழ் வகுக்கும் தெய்வம் என்னுந் தன்மையை இவ்வுலகம் தெளியும்; (ஆதலால்) நவைஅஞ்சுவார் - அரசரால் வரும் தீங்கை அஞ்சுவோர், காவல் மன்னவர் காய்வன நாவினும் உரையார், சிந்தியார் - காவலையுடைய வேந்தர்கள் வெறுப்பவற்றை நாவினால் உவமை கூறும் இடத்தும் கூறார், நினைப்பதுஞ் செய்யார்.
250. தீண்டினார் தமைத் தீச் சுடும் மன்னர் தீ
ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும்
வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்
மாண்டது அன்று நின் வாய் மொழித் தெய்வமே.
பொருள் : தீ தீண்டினாரைச் சுடும் - தீயானது தொட்ட வரையே சுடும்; மன்னர் தீ ஈண்டு தம் கிளையோடும் எரித்திடும் - (அங்ஙனமின்றி) அரசருடைய சீற்றத்தீ தீங்கு செய்தவரைத் திரண்ட சுற்றத்தோடும் சுட்டிடும்; வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலால் - அவரை விரும்பினார்க்கு அவரது அருள் அமிர்துபோல் நலந்தரும், வெறுத்தார்க்கு நஞ்சுபோல் மறைந்து நின்று கொல்லும், ஆதலால்; நின் வாய்மொழித் தெய்வம் மாண்டதன்று- நீ கூறிய தெய்வம் என் தெய்வம்போலச் சிறப்புடையதன்று.
விளக்கம் : இதனால் பகைவரையும் நட்டாரையும் தீநட்பையுங் கூறினான். வேண்டில்இன் அமிர்தும் (வேண்டாது பகைப்பின்) நஞ்சும் ஆதலால் என வருவித்துக்கொள்க. நினக்கு ஒரு தெய்வம் இங்ஙனம் கூறிற்றென்றல் பொய். நீயே இத் தீங்கினை நினைக்கின்றனை என்பான் நின் வாய்மொழித் தெய்வம் என்றான்.
251. வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ்
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல்
வாலிது அன்று எனக் கூறினன் வாள் ஞமற்கு
ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான்.
பொருள் : வாள்ஞமற்கு ஓலை வைத்த அன்ன ஒண்திறல் ஆற்றலான் - வாள் வலியாலே நமனுக்கு வல்லவனாயின் வந்து பார்க்க என்று ஓலை வைத்தாற்போன்ற திறலை நடத்துதலுடைய தருமதத்தன்: வேலின் மன்னனை விண்அகம் காட்டி - வேலினால் அரசனை விண்ணுலகுக்குச் செலுத்தி; இஞ்ஞாலம் ஆள்வது எனக்கு நன்று என்றியேல் - இவ்வுலகை ஆள்வது எனக்கு நலம் என்றனையேல்; வாலிது அன்று எனக் கூறினன் -அது நினக்கு நன்றன்று என்றுரைத்தனன்.
விளக்கம் : இவன் முன்னின்று கூறிய அருமை நோக்கி, ஆற்றலான் என்றார். இஞ்ஞாலம் என்றது இகழ்ச்சி. வாலிது - தூயதுமாம். ஞமன் - யமன்.
252. குழல் சிகை கோதை சூட்டிக்
கொண்டவன் இருப்ப மற்று ஓர்
நிழல் திகழ் வேலினானை
நேடிய நெடும் கணாளும்
பிழைப்பிலான் புறம் தந்தானும்
குரவரைப் பேணல் செய்யா
இழுக்கினார் இவர்கள் கண்டாய்
இடும்பை நோய்க்கு இரைகளாவார்.
பொருள் : குழல்சிகைக் கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப - தன் குழலிலே அவன் சிகையிலுள்ள மாலையைச் சூட்டிக் கைப்பற்றியவன் இருப்பவும்; மற்றுஓர் நிழல்திகழ் வேலினானை நேடிய நெடுங்கணாளும் - வேறோர் ஒளிதரும் வேலுடையவனைத் தேடிய நீண்ட கண்ணினை யுடையாளும்; பிழைப்பு இலாள் புறம் தந்தானும் - குற்றம் அற்ற மனைவியை மனத்தாற் கொள்ளாது விட்டவனும்; குரவரைப் பேணல் செய்யாது இழுக்கினார் - ஐங்குரவரையும் வழிபட்டால் தவறியவர்களும் ஆகிய; இவர்கள் இடும்பை நோய்க்கு இரைகள் ஆவார்கண்டாய் துன்பந்தரும் நோய்களுக்கு இரையாவார்கள் காண்.
விளக்கம் : (குழற்சிகை : மயிர் முடியும் ஆம்.) (தந்தானும் என்பதிலுள்ள) தரவு, செலவினும் வரவினும் (தொல்.கிளவி.28) என்னும் பொதுச் சூத்திரத்தால் முடிக்க. குரவர் - அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன் (தமையன்) என ஐவர்.
253. நட்பு இடைக் குய்யம் வைத்தான்
பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான்
கட்டு அழல் காமத் தீயில்
கன்னியைக் கலக்கினானும்
அட்டு உயிர் உடலம் தின்றான்
அமைச்சனாய் அரசு கொன்றான்
குட்ட நோய் நரகம் தம்முள்
குளிப்பவர் இவர்கள் கண்டாய்.
பொருள் : நட்பிடைக் குய்யம் வைத்தான் - நட்பிலே வஞ்சித்தவனும்; பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான் - பிறர் மனைவியின் இன்பத்தை நுகர்ந்தவனும்; கட்டுஅழல் காமத்தீயின் கன்னியைக் கலக்கினானும் - மிக்க அழல்போலும் காமத் தீயினாற் கன்னியைக் கெடுத்து, மணவாதவனும்; உயிர் அட்டு உடலம் தின்றான் - உயிரைக் கொன்று உடலைப் புசித்தவனும்; அமைச்சனாய் அரசு கொன்றான் - அமைச்சனாக இருந்து அரசனை ஒழித்தவனும் ஆகிய; இவர்கள் குட்டநோய் நரகந் தம்முள் குளிப்பவர் கண்டாய் - இவர்கள் (இம்மையிற்) பெருநோயிலும் (மறுமையில்) நரகத்தினும் அழுந்துவோர்காண்.
விளக்கம் : கலக்குதல் கைக்கிளை வகையாகிய இராக்கதமென்னும் மணத்தில் தப்பியதாம். குய்யம் - வஞ்சகம். நலம் - இன்பம். உயிர் அட்டு உடலந் தின்றான் என மாறுக. குட்ட நோயும் நரகமும் ஆகிய இவற்றுள் என்க.
254. பிறை அது வளரத் தானும்
வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள்
குறைபடு மதியம் தேயக்
குறுமுயல் தேய்வதே போல்
இறைவனாத் தன்னை ஆக்கி
அவன் வழி ஒழுகின் என்றும்
நிறை மதி இருளைப் போழும்
நெடும் புகழ் விளைக்கும் என்றான்.
பொருள் : பிறைவளர அது தானும் வளர்ந்து உடன்பெருகி - பிறை வளரும்போது குறுமுயலும் வளர்ந்து பெருத்து; பின் நாள் குறைபடும் மதியம்தேயக் குறுமுயல் தேய்வதேபோல் - பின்னர்க் குறைதலுண்டான திங்கள் தேய அதனுடன் அச் சிறு முயலும் தேய்வதைப்போல; தன்னை இறைவன்ஆ ஆக்கியவன் வழிஒழுகின் - தன்னை அரசனாக ஆக்கியவன் வழியிலே அவனொடும் பெருகி அவனொடுந் தேய்ந்து நடப்பானானால்; என்றும் நிறைமதி யிருளைப் போழும் நெடும்புகழ் விளைக்கும் என்றான் - எப்போதும் முழுமதி இருளை நீக்குவதைப் போலப் பழியை நீக்கிப் புகழை விளைவிக்கும் என்றான்.
விளக்கம் : பிறை வளர அதுதானும் வளர்ந்து என மாறுக. அது என்றது குறுமுயலை. செய்யுளாகலின் சுட்டு முன்வந்தது. பிறை வளர்பக்கத்துத் திங்கள். மதி - தேய்பக்கத்துத் திங்கள், இவ்வேற்றுமை தோன்ற பிறைவளர என்றும் மதிதேய என்றும் ஓதினார். இறைவனா என்புழி ஆக்கச் சொல்லின் ஈற்றுக் ககரம் கெட்டது.
255. கோள் நிலை திரிந்து நாழி
குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீள் நிலம் மாரி இன்றி
விளைவு அஃகிப் பசியும் நீடிப்
பூண் முலை மகளிர் பொற்பில்
கற்பு அழிந்து அறங்கள் மாறி
ஆணை இவ் உலகு கேடாம்
அரசு கோல் கோடின் என்றான்.
பொருள் : அரசுகோல் கோடின் - அரசன் முறைமை கெடுவானானால்; கோள்நிலை திரிந்து - கோள் நிற்கும் நிலைகுலைந்து; நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி -(இரவு) நாழிகை குறையப் பகற்பொழுது மிகுந்து; மாரிஇன்றி நீள்நிலம் விளைவுஆக்கி - மழையில்லாமற் பெருநிலமும் விளைவு குறைந்து; பசியும் நீடி - பசியும் நீட்டித்து; பொற்பின் பூண்முலை மகளிர் கற்பு அழிந்து - அழகிய பூணணிந்த முலையையுடைய பெண்களின் கற்புக்கெட்டு; அறங்கள் மாறி இவ்வுலகு கேடாம் - அறச்சாலைகளும் இன்றி இவ்வுலகுகெடும்; ஆணை என்றான் - இஃது அரசனுடைய ஆணையே ஆகும் என்றான்.
விளக்கம் : கட்டியங்காரன் கொலை குறித்ததும் அரசன் அவற்கு அரசளித்ததும் உட்கொண்டு இவ்விரண்டு கவியும் பொதுவாகக் கூறினான். எச்சங்கள், செயப்படுபொருளன. கோள் - ஞாயிறு முதலியன. நிலை என்பது நன்னிலை என்பது பட நின்றது. இச் செய்யுளின்கண் கொடுங்கோலால் விளையும் தீமை நன்கு விளக்கப்படுதல் காண்க. இதனுடன்,
கோனிலை திரிந்திடின் கோணிலை திரியும்
கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை
எனவரும் மணிமேகலைப் பகுதியையும் நினைக.
தருமதத்தன் கூறிய அறிவுரைகளைக் கேட்ட கட்டியங்காரன் மைத்துனன் வெகுண்டு கூறுதல்
256. தார்ப் பொலி தரும தத்தன்
தக்கவாறு உரப்பக் குன்றில்
கார்த்திகை விளக்கு இட்டு அன்ன
கடி கமழ் குவளப் பந்தார்
போர்த்த தன் அகலம் எல்லாம்
பொள் என வியர்த்துப் பொங்கி
நீர்க் கடல் மகரப் பேழ்வாய்
மதனன் மற்று இதனைச் சொன்னான்.
பொருள் : தார்ப்பொலி தருமதத்தன் தக்கவாறு உரைப்ப - வாகைமாலையாற் பொலிவுற்ற தருமதத்தன் அமைச்சர்க்கும் அரசர்க்கும் தக்க நிலையைக் கூறினானாக; குன்றில் கார்த்திகை விளக்கிட்ட அன்ன கடிகமழ் குவளைப் பைந்தார் போர்த்த தன் அகலம் எல்லாம் - குன்றிலே கார்த்திகை விளக்கிட்டாற்போல மணங்கமழும் குவளைமாலை போர்த்த மார்பு முழுதும்; பொள்ளென வியர்த்துப் பொங்கி - விரைய வியர்த்துக் கொதித்து; நீர்க்கடல் மகரப் பேழ்வாய் மதனன் இதனைச் சொன்னான் - நீர் நிறைந்த கடலில் உள்ள மகரமீனின் வாய்போலும் பெரிய வாயையுடைய மதனன் இதனைக் கூறினான்.
விளக்கம் : அறிவு குன்றியவன் என்பது தோன்ற மகரப் பேழ்வாய் மதனன் என அவன் வாயை விதந்தோதினார். மேலும், பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளியவர் என்னும் திருக்குறட்கு மாறாக இவன் அறிவில்லாதவன் என்பது தோன்ற அக்குறள் சொல்லையும் இதன்கண் அமைத்தனர். இச்செய்யுளான் கார்த்திகைத் திங்கள் கார்த்திகையின்கண் குன்றின்மேல் விளக்கிடும் வழக்கம் அக்காலத்தும் இருந்தமை உணர்க.
257. தோளினால் வலியர் ஆகித்
தொக்கவர் தலைகள் பாற
வாளினால் பேசல் அல்லால்
வாயினால் பேசல் தேற்றேன்
காள மேகங்கள் சொல்லிக்
கருனையால் குழைக்கும் கைகள்
வாள் அமர் நீந்தும் போழ்தின்
வழு வழுத்து ஒழியும் என்றான்.
பொருள் : தோளினால் வலியர் ஆகித் தொக்கவர் தலைகள் பாற வாளினால் பேசல் அல்லால் வாயினாற் பேசல் தேற்றேன் - தோள் வலியுடையராகிக் கூடி எதிர்த்த பகைவர்களின் தலைகள் சிதற வாளினால் வஞ்சினம் முடித்தல் அல்லது வாயினாற் பேசுதலை அறியேன்; காளமேகங்கள் சொல்லி - தாங்கள் கரிய முகில் போல இங்ஙனம் முழங்கக் கூறுதலால்; கருனையால் குழைக்கும் கைகள் வாள் அமர் நீந்தும் போழ்தின் - பொரிக்கறியுடன் சோற்றைத் திரட்டும் கைகள் வாளேந்திப் போர்க்கடலை நீந்தும் போழ்து; வழுவழுத்து ஒழியும் என்றான் - (மிக வேர்த்து) வாள்வழுக்கித் தொலையும் என்றான்.
விளக்கம் : தேற்றேன என்பது, தேற்றாய் பெரும பொய்யே (புறநா.59) என்றாற்போல நின்றது. இக்கவி முன்னிலைப் புறமொழி.
கட்டியங்காரன் சினந்து கூறுதல்
258. நுண் முத்தம் ஏற்றி ஆங்கு
மெய் எல்லாம் வியர்த்து நொய்தின்
வண் முத்தம் நிரை கொள் நெற்றி
வார் முரி புருவம் ஆக்கிக்
கண் எரி தவழ வண்கை
மணி நகு கடகம் எற்றா
வெண் நகை வெகுண்டு நக்குக்
கட்டியங் காரன் சொன்னான்.
பொருள் : நுண்முத்தம் ஏற்றியாங்கு மெய்எலாம் நொய்தின் வியர்த்து -நுண்ணிய முத்துக்களைப் பதித்தாற்போல உடலெங்கும் விரைவிலே வியர்த்து; வண்முத்தம் நிரைகொள் நெற்றி வார்முரி புருவம் ஆக்கி - அந்த வியர்வை நிறைந்த நெற்றியிலே நீண்ட வளைந்த புருவத்தை ஏற்றி; கண்எரி தவழ - கண்களில் அனல் பரவ; வண்மை மணிநகு கடகம் ஏற்றா - வளமிகு கையிலே மணிகள் ஒளிரும் கடகத்தை உடைத்து; வெள்நகை வெகுண்டு நக்கு -வெடி நகைப்பாக வெகுண்டு நகைத்து - கட்டியங்காரன் சொன்னான் - கட்டியங்காரன் உரைத்தான்.
விளக்கம் : இதன்கண்ணும் கட்டியங்காரன் வெகுளுதற்கும் நகைத்தற்கும் வேண்டிய காரணமில்லாதவிடத்தும் கடுஞ்சினமும் பெருஞ்சிரிப்பும் உடையன் என அவன் பேதைமையை விளக்குதல் அறிக. வெண்ணகை - வெண்மை காரணமாகப் பிறக்கும் நகை. வெண்மையை வெகுளிக்கும் ஏற்றுக.
259. என் அலால் பிறர்கள் யாரே
இன்னவை பொறுக்கும் நீரார்
உன்னலால் பிறர்கள் யாரே
உற்றவற்கு உறாத சூழ்வார்
மன்னன் போய்த் துறக்கம் ஆண்டு
வானவர்க்கு இறைவன் ஆக
பொன் எலாம் விளைந்து பூமி
பொலிய யான் காப்பல் என்றான்.
பொருள் : இன்னவை பொறுக்கும் நீரார் என் அலால் பிறர்கள் யார்? - நீ கூறிய இக்கடிய சொற்களைப் பொறுக்கும் இயல்பினார் என்னை அல்லாமல் வேறு யார்? உற்றவர்க்கு உறாத சூழ்வார் உன்னலால் பிறர்கள் யார்? - தம்மைச் சார்ந்தவனுக்கு ஒவ்வாத செயல்களைச் சூழ்கின்றவர் உன்னை யொழிய வேறு யார்? (இனி அமைக); மன்னன் துறக்கம் போய் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக - வேந்தன் வானுலகு சென்று ஆண்டு வானவர்களுக்குத் தலைவன் ஆக; பூமிஎலாம் விளைந்து பொன் பொலிய யான் காப்பல் என்றான் - நிலமெங்கும் விளைந்து பொன் சிறக்க யான் காப்பேன் என்றான்.
விளக்கம் : உற்றவன் - சச்சந்தன் என்றும், உறாத பொன்னுலகாளாமல் மண்ணுலகாளுதல் என்றும் நச்சினார்க்கினியர் கூறியவை மிகவும் நுணுக்கமுடையன. இனி, உற்றவன் கட்டியங்காரனுமாம். விளைந்த பூமி என்றும் பாடம்.
தருமதத்தன் வெறுத்துக் கூறுதல்
260. விளைக பொலிக அஃதே
உரைத்திலம் வெகுள வேண்டா
களைகம் எழுகம் இன்னே
காவலன் கூற்றம் கொல்லும்
வளை கய மடந்தை கொல்லும்
தான் செய்த பிழைப்புக் கொல்லும்
அளவு அறு நிதியம் கொல்லும்
அருள் கொல்லும் அமைக என்றான்.
பொருள் : விளைக பொலிக அஃதே உரைத்திலம் - நீ கூறியவாறே நிலமெல்லாம் விளைக! பொன்னும் விளங்குக! நினது நினைவையே கூறிலேம்; வெகுள வேண்டா - அதற்கு நீ சீற்றமுற வேண்டா; இன்னே களைகம் எழுகம் - இப்போதே களைவதற்கு எழுவோம்; காவலன் கொல்லும் கூற்றம் - அரசனைக் கொல்லுங் கூற்றம்; வளைகயம் மடந்தை கொல்லும் - வளைகள் நிறைந்த பொய்கையுடைய நிலமகளாய்க் கொல்லும்; தான் செய்த பிழைப்புக் கொல்லும் - அரசன் செய்த தவறாகிக் கொல்லும்; அளவு அறுநிதியம் கொல்லும்- எல்லையற்ற செல்வமாய்க்; அளவு அறுநிதியம் கொல்லும் - அருளாய்க் கொல்லும்; (ஆதலால்); அமைக என்றான் - அரசனுக்கு அக்கொலை பொருந்துவதாக என்றான்.
விளக்கம் : இனி, அஃதேல் உரைக்கிலம் என்பது பாடமாயின், நின் கருத்து அதுவாயின், வேறு கூறுகின்றிலேம் என்க. இனி, கூற்றமும் கயமடந்தை முதலியனவும் காவலனாகிய கட்டியங்காரனைக் கொல்லுமென்று உட்கொண்டு (மனத்தில் அமைத்து) இனி வார்த்தை யமைக என்றான் என்பாருமுளர். விளைக பொலிக ஒரு வழக்கென்பாருமுளர்.
கட்டியங்காரன் தன்படைகளைக் கொண்டு அரண்மனையை வளைத்தல்
261. நிலத் தலைத் திருவனாள் தன்
நீப்பரும் காதல் கூர
முலைத் தலைப் போகம் மூழ்கி
முகிழ் நிலா முடிகொள் சென்னி
வெலற்கு அரும் தானை நீத்த
வேந்தனை வெறுமை நோக்கிக்
குலத்தொடும் கோறல் எண்ணிக்
கொடியவன் கடிய சூழ்ந்தான்.
பொருள் : நிலத்தலைத் திருவனாள் தன் நீப்பருங் காதல்கூர - நிலவுலகிலே திருமகளனையாள்பால் நீக்கவியலாத தன் காதல் மிகுதலின்; முலைத்தலைப் போகம் மூழ்கி - அவளது முலை யின்பத்தே அழுந்தி; வெலற்கு அருந்தானை நீத்த - வெல்ல வியலாத படைவீரரை இழந்த; முகில்நிலா முடிகொள் சென்னி வேந்தனை - அரும்பும் ஒளியையுடைய முடியணிந்த சென்னியுடைய வேந்தனை; வெறுமை நோக்கிக் குலத்தொடுங் கோறல் எண்ணி - தனிமை அறிந்து மகவுடனே கொல்ல நினைத்து; கொடியவன் கடிய சூழ்ந்தான் - கொடியவனான அவன் அதற்கு வேண்டும் கடிய தொழில்களைச் சிந்தித்தான்.
விளக்கம் : நிலத்தலைத்திரு : இல்பொருளுவமை. அரசுரிமையை இகழ்ந்து வறிய முடியொன்றையே உடையன் என்றிரங்குவார் போகமூழ்கி முடிகொள் சென்னி வேந்தன் என்றார். வேந்தன்: சச்சந்தன். குலம் என்றது கருவுற்றிருக்கும் தேவியை. கொடியவன் : கட்டியங்காரன்.
262. கோன் தமர் நிகளம் மூழ்கிக்
கோட்டத்துக் குரங்கத் தன் கீழ்
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம்
இரு நிதி முகந்து நல்கி
ஊன்றிய நாட்டை எல்லாம்
ஒரு குடை நீழல் செய்து
தோன்றினான் குன்றத்து உச்சிச்
சுடர்ப் பழி விளக்கு இட்ட அன்றே.
பொருள் : கோன்தமர் நிகளம் மூழ்கிக் கோட்டத்துக் குரங்க - அரசனைச் சார்ந்தோர் விலங்கிலே அழுந்திச் சிறையிலே தாழ; தன்கீழ் ஏன்ற நல்மாந்தர்க் கெல்லாம் இருநிதி முகந்து நல்கி - தன் கீழ்மையை ஒப்பிய நல்ல மாந்தருக்கெல்லாம் பெருஞ் செல்வத்தை அள்ளிக் கொடுத்து; நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து ஊன்றிய - நாட்டையெல்லாம் தன் ஒரு குடையால் நிழல் பரப்பி ஊன்றுவதற்கு; குன்றத்து உச்சி இட்ட சுடர்ப்பழி விளக்கு இட்டுத் தோன்றினான் - குன்றின் உச்சியில் இட்ட விளக்குப்போலப் பழியாகிய விளக்கையிட்டுத் தோன்றினான்.
விளக்கம் : (தன் கீழ்) : கீழ்: இடமுமாம். நன்மாந்தர்: இகழ்ச்சி. ஊன்றிய: பெயரெச்சமும் ஆம். கோன் : சச்சந்தன். நிகளம் - தளை; விலங்கு. கோட்டம் - ஈண்டுச் சிறைக்கோட்டம். குரங்குதல் - தாழ்தல்.
263. பருமித்த களிறும் மாவும்
பரந்தியல் தேரும் பண்ணித்
திருமிக்க சேனை மூதூர்த்
தெருவுதொறும் எங்கும் ஈண்டி
எரி மொய்த்த வாளும் வில்லும்
இலங்கு இலை வேலும் ஏந்திச்
செரு மிக்க வேலினான் தன்
திருநகர் வளைந்தது அன்றே.
பொருள் : பருமித்த களிறும் மாவும் பரந்துஇயல் தேரும் பண்ணி - அணிபுரிந்த களிறும் குதிரையும் பரவிய இயலையுடைய தேரும் தகுதியாக அமைத்துக்கொண்டு; திருமிக்க சேனை - செல்வம்மிக்க படைத்திரள்; எரிமொய்த்த வாளும் வில்லும் இலங்குஇலை வேலும் ஏந்தி - நெருப்பிலே முழுகிய வாளும் வில்லும் விளங்கு இலைமுகமுடைய வேலும் ஏந்திக் கொண்டு; மூதுர் தெருவுதொறும் எங்கும் ஈண்டி - பழைமையான நகரின் தெருக்களிலும் பிற இடங்களிலும் திரண்டு; செருமிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது - போர்த்தொழிலிற் சிறந்த வேலேந்திய சச்சந்த மன்னனின் அழகிய அரண்மனையைச் சூழ்ந்தது.
விளக்கம் : உள்நிற்கும் ஊர்திகளும் உட்பட வளைந்து அந்தப்புரத்தினுட் புகுதாது நின்றது கண்டு வாயிலோன் உணர்த்துகின்றமை மேலே கூறுகின்றார்.
கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்
264. நீள் நில மன்ன போற்றி!
நெடு முடிக் குருசில் போற்றி!
பூண் அணி மார்ப போற்றி!
புண்ணிய வேந்தே போற்றி!
கோள் நிலைக் குறித்து வந்தான்
கட்டியங் காரன் என்று
சேண் நிலத்து இறைஞ்சிச் சொன்னான்
செய்ய கோல் வெய்ய சொல்லான்.
பொருள் : செய்யகோல் வெய்யசொல்லான் - சிவந்த கோலையும் வெஞ்சொல்லையும் உடைய வாயிலோன்; நீள்நில மன்ன போற்றி - பெருநிலத்துக்கு வேந்தனே! காத்தருள்க!; நெடுமுடிக் குருசில் போற்றி! - நீண்ட முடியணிந்த அரசனே! காத்தருள்க! பூண் அணி மார்ப போற்றி - பகைவர் கவசம் பூண்பதற்குக் காரணமான மார்பனே! காத்தருள்க! புண்ணிய வேந்தே போற்றி - நலம்புரியும் மன்னனே! காத்தருள்க! கட்டியங்காரன் நினைக்கோள் குறித்து வந்தான் - கட்டியங்காரன் உன்னைக் கொல்வது கருதி வந்துளான்; என்று சேண்நிலத்து இறைஞ்சிச் சொன்னான் - என்று தொலைவான தரையிலே (வீழ்ந்து) வணங்கிக் கூறினான்.
விளக்கம் : போற்றி: பரிகாரம். அரும்பூண் அற எறிந்தாங்கு என்பர் மேலும். போற்றி நான்கு கூறியது நிலத்திற்கும் குலத்திற்கும் வீரத்திற்கும் தருமத்திற்கும் நின்னையொழிய இல்லையென்று இரங்கினான். கோண் எனினும் மாறுபாடாம்.
265. திண் நிலைக் கதவம் எல்லாம்
திருந்து தாழ் உறுக்க வல்லே
பண்ணுக பசும் பொன் தேரும்
படு மதக் களிறும் மாவும்
கண் அகன் புரிசை காக்கும்
காவலர் அடைக என்றான்
விண் உரும் ஏறு போன்று
வெடிபட முழங்கும் சொல்லான்.
பொருள் : விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான் - வானத்தின்கண் பேரிடிபோல அதிர்ச்சியுண்டாக முழங்கும் சொல்லினான்; திண்நிலைக் கதவம் எல்லாம் வல்லேதிருந்து தாழுறுக்க - அசைவில்லாத (அரண்மனை மதிலின்) நிலைக்கதவுகளை யெல்லாஞ் செப்பமாகத் தாழிடுக; பசும்பொன் தேரும் மதம்படு களிறும் மாவும் (வல்லே) பண்ணுக - புதிய பொற்றோர்களையும் மதம்மிகுங் களிறுகளையும் குதிரைகளையும் அணிசெய்க; கண்அகன் புரிசை காக்கும் காவலர் (வல்லே) அடைக என்றான் - இடம் அகன்ற (அரண்மனை) மதிலைக் காக்கும் வீரர்கள் விரைந்து வருக என்றான்.
விளக்கம் : வல்லே என்றது, எவ்விடத்துங் கூட்டுக. வெடிபட- வெடித்தல் உண்டாக. இஃது இராசதத்தாற் கூறினான். (இராசதம் - அரசனுக்குரிய இயல்பு; துணையில்லாத தனிமையிலும் எழுந்தது.)
266. புலிப் பொறிப் போர்வை நீக்கிப்
பொன் அணிந்து இலங்குகின்ற
ஒலிக் கழல் மன்னர் உட்கும்
உருச் சுடர் வாளை நோக்கிக்
கலிக்கு இறை ஆய நெஞ்சினி
கட்டியங் காரன் நம்மேல்
வலித்தது காண்டும் என்று
வாள் எயிறு இலங்க நக்கான்.
பொருள் : புலிப்பொறிப் போர்வை நீக்கி - புலியின் தோலாற் செய்யப்பட்ட உறையை நீக்கி; ஒலிக்கழல் மன்னர் உட்கும் பொன் அணிந்து இலங்குகின்ற உருச்சுடர் வாளை நோக்கி - ஒலிசெயுங் கழல் அணிந்த வேந்தர்கள் அஞ்சும், பொன்னால் அணிசெய்யப்பெற்று விளங்கும் ஒளிமிகும் அழகிய வாளைப் பார்த்து; கலிக்கு இறைஆய நெஞ்சின் கட்டியங்காரன் நம்மேல் வலித்தது காண்டும் என்று - தீமைக்கு நிலைமையான உள்ளமுடைய கட்டியங்காரன் நம்மேல் வலிமை காட்ட வந்ததைக் காண்போம் என்று; வாள் எயிறு இலங்க நக்கான் - ஒளிமிகும் பற்கள் தோன்ற நகைத்தான்.
விளக்கம் : இது வீரத்தின் கண் எள்ளுதலாற் பிறந்த நகை. (புலிப்பொறிப் போர்வை கவசம் எனவும், ஊர்திகள் இன்மையின் கவசம் நீக்கினான் எனவும் போர்வை உறையும் என்ப எனவும் நச்சினார்க்கினியர் நவில்வர்.)
விசயை துன்புறுதல்
267. நங்கை நீ நடக்கல் வேண்டும்
நன் பொருட்கு இரங்கல் வேண்டா
கங்குல் நீ அன்று கண்ட
கனவு எல்லாம் விளைந்த என்னக்
கொங்கு அலர் கோதை மாழ்கிக்
குழை முகம் புடைத்து வீழ்ந்து
செங் கயல் கண்ணி வெய்ய
திருமகற்கு அவலம் செய்தாள்.
பொருள் : நங்கை நீ நன்பொருட்கு நடக்கல் வேண்டும் - நங்கையே! நீ நம் நல்ல பொருளைக் காப்பதற்குச் செல்லுதல் வேண்டும்; இரங்கல் வேண்டா - இங்கிருந்து வருந்தாதே; (ஏன் எனின்); நீ அன்று கங்குல் கண்ட கனவு எலாம் விளைந்த என்ன - நீ அன்றைய இரவு கண்ட கனவுகள் எல்லாம் பயன்பட்டன என்று (மன்னன் விசயையை அணுகிக்) கூற, செங்கயற்கண்ணி கொங்கு அலர்கோதை மாழ்கி - செவ்வரி பரந்த கயற் கண்ணாள் மணம்விரியும் மலர்மாலைபோலே வருந்தி; குழைமுகம் புடைத்து வீழ்ந்து - குழையணிந்த முகத்தி லறைந்துகொண்டு வீழ்ந்து; வெய்ய திருமகற்கு அவலம் செய்தான் - (வயிற்றில் இருக்கும்) விருப்பம்மிகும் திருமகனுக்கு வருத்தம் உண்டாக்கினாள் (வயிற்றில் அடித்துக்கொண்டாள்).
விளக்கம் : வேண்டும் என்பது ஒரு வியங்கோள்; ஓஒதல் வேண்டும் (குறள், 958) என்றாற்போல. நன்பொருள்: பிள்ளை. எல்லாம் என்றான் பிள்ளையார் ஆக்கங் கருதி (விசயையின்) உயிர் நிற்றற்கு. தெளிவுபற்றி, விளைந்த என இறந்த காலத்தாற் கூறினான்.
நன்பொருள் - மகவு.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும் (குறள்.63)
268. மல் அலைத்து எழுந்து வீங்கி
மலை திரண்டு அனைய தோளான்
அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த
அமிர்தம் அன்னாளை எய்திப்
புல்லிக் கொண்டு அவலம் நீக்கிப்
பொம்மல் வெம் முலையினாட்குச்
சொல்லுவான் இவைகள் சொன்னான்
சூழ் கழல் காலினானே.
பொருள் : மல்அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டனைய தோளான் - மல்தொழிலை வருத்தி வளர்ந்து பருத்து மலைதிரண்டாற் போன்ற தோள்களையும்; கழல்சூழ் காலினான் - கழல்சூழ்ந்த கால்களையும் உடைய சச்சந்தன்; அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்தி - துன்பம் உற்றுக் கெட்டு வீழ்ந்த அமிர்தம்போன்ற விசயையை நெருங்கி; புல்லிக்கொண்டு அவலம் நீக்கி - தழுவிக்கொண்டு சோர்வைப் போக்கி; பொம்மல் வெம்முலையினாட்குச் சொல்லுவான் இவைகள் சொன்னான் - பருத்த விருப்பமூட்டும் முலையினாட்கு ஆறுதல் கூறத் தொடங்கிப் பிரிவை யுணர்த்தும் இம்மொழிகளைக் கூறினான்.
விளக்கம் : அமுதயின்றார்க்கு நாள் கெட்டால் அது வேறுபாடு தோற்றுவிக்குமாறுபோல இவற்கும் வேறுபாடு தோற்றுவித்தலின், அமிர்தம் அன்னாள் என்றார். இவை இருந்தும் பயன்என்கொல் என்றிரங்குவார் மல்லலைத் தெழுந்து வீங்கி மலைதிரண் டனைய தோளான் என்றார்.
269. சாதலும் பிறத்தல் தானும்
தம் வினைப் பயத்தின் ஆகும்
ஆதலும் அழிவும் எல்லாம்
அவை பொருட்கு இயல்பு கண்டாய்
நோதலும் பரிவும் எல்லாம் நுண்
உணர்வு இன்மை அன்றே
பேதை நீ பெரிதும் பொல்லாய்
பெய் வளைத் தோளி என்றான்.
பொருள் : பெய்வளைத் தோளி பேதை - வளையணிந்த தோள்களையுடைய பேதையே!; தம் வினைப்பயத்தின் ஆகும் சாதலும் பிறத்தல்தானும் ஆதலும் அழிவும் அவை எல்லாம் - தம் வினையின் பயனால் நேரும் இறப்பும் பிறப்பும் ஆக்கமும் அழிவும் ஆகிய அவை யாவும்; பொருட்கு இயல்பு கண்டாய் - பொருள்களுக்கு இயற்கைகாண்; நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுணர்வு இன்மை அன்றே - இவையிற்றுட் சாதல் முதலியவற்றிற்குத் துன்புறுதலும் பிறத்தல் முதலியவற்றிற்கு அன்புறுதலும் ஆகிய இச்செயற்கெல்லாம் காரணம் அறிவின்மையே அல்லவோ; நீ பெரிதும் பொல்லாய் -(இதை உணராத) நீ மிகவும் பொல்லாதவளாகிறாய்.
விளக்கம் : சாதலும் பிறத்தல் தானும் ஆதலும் அழிவும் எல்லாம் தம் வினைப்பயத்தின் ஆகும். அவற்றுள், சாதற்கும் அழிதற்கும் நோதலும், பிறத்தற்கும் ஆதற்கும் பரிதலும் நுண்ணுணர்வின்மையாம். அவை பொருட்கு இயல்பு, என்றவாறு. பரிதல் - அன்புறுதல். இவற்றை யுணராமையால் நீ பெரிதும் பொல்லாய் என்றான் என்க.
270. தொல்லை நம் பிறவி எண்ணில்
தொடு கடல் மணலும் ஆற்றா
எல்லைய அவற்றுள் எல்லாம்
ஏதிலம் பிறந்து நீங்கிச்
செல்லும் அக் கதிகள் தம்முள்
சேரலம் சேர்ந்து நின்ற
இல்லினுள் இரண்டு நாளைச்
சுற்றமே இரங்கல் வேண்டா.
பொருள் : தொல்லை நம் பிறவி எண்ணின் - பழைமையான நம் பிறப்புக்களை ஆராய்ந்தால்; தொடுகடல் மணலும் ஆற்றா எல்லைய - தோண்டப்பெற்ற கடலின் மணலும் ஒப்பிடப்பற்றாத அளவினையுடையன; அவற்றுள் எல்லாம் பிறந்தும் ஏதிலம் - அப் பிறப்புக்களிலெல்லாம் பிறந்தும் வேறுபட்டிருந்தோம்; நீங்கிச் செல்லும் அக்கதிகள் தம்முள் சேரலம் - இனியும் பிரிந்து செல்லும் அத்தகைய பிறப்புக்களினும் ஒன்றுபடோம்; சேர்ந்து நின்ற இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே - (ஆகையால்,) இப்போது இவ்வில்லத்துட் கூடியிருந்த இரண்டு நாளைய உறவே உடையோம், இரங்கல் வேண்டா - (இவ்வுறவைப் பெரிய உறவாக எண்ணி) வருந்தல் வேண்டா.
விளக்கம் : கடல் மணல் அளவிடப்படாமைக்கு ஒன்று கூறியபடி. இரண்டுநாள் என்றது சிறுமைக்கு ஒன்று கூறியபடியாம். பத்தெட்டு நாட்பயனில்லா வாழ்க்கை என்றாற்போல.
271. வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி
வாமனால் வடித்த நுண் நூல்
உண்டு வைத்து அனைய நீயும்
உணர்வு இலா நீரை ஆகி
விண்டு கண் அருவி சோர
விம் உயிர்த்து இனையை ஆதல்
ஒண் தொடி தகுவது அன்றால்
ஒழிக நின் கவலை என்றான்.
பொருள் : வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண்ணூல் உண்டு வைத்து அனைய நீயும் - வண்டுகள் மொய்த்து முரலும் அசோகின் நீழலில் எழுந்தருளிய அருகனார் கூறிய நுண்ணிய நூல்களின் பொருளைத் தேக்கி வைத்துள்ள நீயும்; உணர்வுஇலா நீரை ஆகி - உணர்வு இல்லாத தன்மையை ஆகி; கண்அருவி விண்டுசோர விம்மு உயிர்த்து - கண்அருவி மிகுந்து பொழிய அழுது பெருமூச்சுவிட்டு; இனையை ஆதல் தகுவது அன்று - இத்தன்மையை அடைவது நன்றன்று; ஒண்தொடி நின்கவலை ஒழிக - ஒளிமிகும் வளையணிந்தவளே! நின் வருத்தத்தை நீங்குக.
விளக்கம் : தெய்வங்கட்குரிய மலரில் வண்டு மொய்யாதாயினும் அருகன் அருளால் வண்டு மொய்த்தது. நூல் : ஆகுபெயர். அனைய: நெஞ்சறி பொருளைச் சுட்டிய சுட்டு. வாமன் - அருகக்கடவுள், வேதமுதல்வன் ஓதிய வேதத்தொளி என்பதுபற்றி, வாமனால் வடித்த நுண்ணூல் என்றார். அவை, அங்காகமம், பூர்வாகமம், பகூசுருதியாகமம் என்னும் மூன்றுமாம்.
272. உரிமை முன் போக்கி அல்லால்
ஒளி உடை மன்னர் போகார்
கருமம் ஈது எனக்கும் ஊர்தி
சமைந்தது கவல வேண்டாம்
புரி நரம்பு இரங்கும் சொல்லாய்
போவதே பொருள் மற்று என்றான்
எரி முயங்கு இலங்கு வாள் கை
ஏற்று இளஞ் சிங்கம் அன்னான்.
பொருள் : எரிமுயங்கு இலங்கு வாள்கை இளஞ்சிங்க ஏறு அன்னான் - எரியில் தோய்ந்து விளங்கும் வாளேந்திய கையனான, ஆணிளஞ்சிங்கம் போன்றவன்; புரிநரம்பு இரங்கும் சொல்லாய் - முறுக்கப்பெற்ற நரம்பிலெழும் பண்ணும் வருந்தும் இனிய சொல்லினாய்; ஒளிஉடை மன்னர் உரிமைமுன் போக்கி அல்லால் போகார் - புகழுறும் வேந்தர்கள் தம் உரிமை மகளிரை முன்னே போக்கியல்லது தாம் போகார்; எனக்கும் கருமம் ஈது - (ஆகவே) எனக்கும் இப்பொழுது இசைந்த காரியம் இதுவே, ஊர்தி சமைந்தது - ஆகூழானே ஓர் ஊர்தியும் அமைந்துவிட்டது; கவல வேண்டா - இனி வருந்தவேண்டா; போவதே பொருள் என்றான் - (ஆகையால்) நீ முன்னர் ஏகுவது செய்யத்தக்கது என்றான்.
விளக்கம் : பிள்ளையாற் கதி பெறுதலும் பகை வெல்லுங் கருதி. இருவர்க்கும் கருமம் என்றான். கவலுதல்: இருதலைக் கொள்ளி எறும்பு போற் கணவனையும் மகனையும் எண்ணி வருந்துதல். கவலை: இருபாற்பட்டது. எனக்கும் கருமம் ஈது என மாறுக. ஊர்தியும் சமைந்தது எனல் வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ஆகூழ் உண்மையால் ஊர்தியும் சமைந்துளது என்றவாறு. ஊர்தி என்றது மயிற்பொறியை. எனக்கும் கருமம் ஈது என்றது நின்னைப் போக்குவதே என்றவாறு. நினக்கும் போவதே கருமம் என்க.
விசயையை சச்சந்தன் ம்அயில் பொறியில் அமர்த்தல்
273. என்பு நெக்கு உருகி உள்ளம்
ஒழுகுபு சோர யாத்த
அன்பு மிக்கு அவலித்து ஆற்றா
ஆர் உயிர்க் கிழத்தி தன்னை
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி
இறைவனது ஆணை கூறித்
துன்பம் இல் பறவை ஊர்தி
சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்.
பொருள் : என்பு நெருக்உருகி உள்ளம் ஒழுகுபு சோரயாத்த அன்புமிக்கு -என்பு நெகிழ்ந்துருகுமாறு உள்ளம் கலங்கிச் சோர்வுறப் பிணித்த அன்பு மிகுதலால்; அவலித்து ஆற்றா ஆருயிர்க் கிழத்தி தன்னை - அழுதல் அமையாத சிறந்த உயிர்போலும் காதலியை, இன்பமிக்கு உடைய சீர்த்தி இறைவனது ஆணை கூறி - அளவற்ற இன்பம் மிகுதலாலே புகழைப் பெற்ற அருகப் பெருமானது ஆணைமொழியாகிய ஓம் நமோ அரஹந்தாணம் என்னும் பஞ்ச நமஸ்கார மந்திரம் ஒன்றனைக் கூறி; துணைவி தன்னைத் துன்பம் இல் பறவைஊர்திசேர்த்தினன் - துணைவியைத் துன்பமில்லாது செல்லுதற்குரிய மயிற்பொறியாகிய ஊர்தியிலே அமர்த்தினான்.
விளக்கம் : (கூறி என்பதனைக் கூறஎனத் திரித்து, ஆணை கூறியதை விசயைக்கு ஆக்குவர் நச்சினார்க்கினியர்.
சச்சந்தன் கோபங்கொள்ளல்
274. நீர் உடைக் குவளையின்
நெடுங் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம்
நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடைக் குருசிலும்
சிவந்து அழன்று ஓர் தீத் திரள்
பார் உடைப் பனிக்கடல்
சுடுவது ஒத்து உலம்பினான்.
பொருள் : நீருடைக் குவளையின் நெடுங்கண் நின்ற வெம் பனி - நீர் நீங்காத குவளைபோல, நீண்ட கண்களில் இருந்து வடியும் வெப்பமிகும் நீர் (மாறாது); வார்உடை முலைமுகம் நனைப்ப மாதர் சென்றபின் - கச்சை அறுக்கும் முலைமுகத்தை நனைத்திட விசயை நீங்கின பிறகு; சீர்உடை குருசிலும் சிவந்து அழன்று-சிறப்புற்ற வேந்தனும் உள்ளம் வெதும்பிச் சீற்றங் கொண்டு; ஓர் தீத்திரள் பார்உடை பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான் - ஒப்பற்ற வடவைத்தீ, உலகை அகத்தில் அடக்கிப் பொங்கிய குளிர்ந்த கடலைச் சுடுவதுபோல முழங்கினான்.
விளக்கம் : உடைம் முலை: மகர ஒற்றுவண்ணத்தால் வந்தது. பாரை அகத்து அடக்கின கடல் என்றது ஊழிக்காலத்து நீரை. தான் அமைத்த படையைத் தானே அழிப்பதை யுன்னி நெருப்பும் நீரும் உவமை கூறினார்.
சச்சந்தன் போரிட்டு வீரமரணம் அடைதல்
275. முழை முகத்து இடி அரி
வளைத்த அன்ன மள்ளரில்
குழை முகப் புரிசையுள்
குருசில் தான் அகப்பட
இழை முகத்து எறி படை
இலங்கு வாள் கடல் இடை
மழை முகத்த குஞ்சரம்
வாரிஉள் வளைத்தவே.
பொருள் : முழைமுகத்து இடிஅரி வளைத்த அன்ன - மலையின் குகையிலுள்ள இடியென முழங்கும் சிங்கத்தை வளைத்த யானைத் திரள்போன்ற; மள்ளரில் குழைமுகப் புரிசையுள் குரு சில்தான் அகப்பட - வீரர்களிடையே, மகளிர் காக்கும் மதிலில் அரசன் அகப்படுமாறு; இழைமுகத்து எறிபடை இலங்கு வாள் கடலிடை - நூல் பிளக்க எறியும் வேற்படை விளங்கும் வாள் வீரராகிய கடலின் நடுவே, மறைமுகத்த குஞ்சரம் லாரியுள் வளைந்த - முகில்போல மதம் ஒழுகும் களிறுகள் (யானை குதிரைகளின் மேல் அமர்ந்து பந்து விளையாடும்) செண்டுவெளியிலே வளைந்தன.
விளக்கம் : குழைமுக மகளிர் காக்கும் புரிசையெனவே அந்தப்புரம் ஆயிற்று. ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் (நெடுநல்.107) என்றார் பிறரும். மழை - மதம். அரியை யானை வளைத்தல் இல் பொருளுவமம்.
276. அயிலினில் புனைந்த வாள்
அழன்று உருத்து உரீஇ உடன்
பயில் கதிர்ப் பருமணிப்
பன் மயிர்ச் செய் கேடகம்
வெயில் எனத் திரித்து விண்
வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்
கயில் அணிக் கதிர் நகைக்
கடவுள் ஒத்து உலம்பினான்.
பொருள் : அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உரீஇ - கூர்மையாக அமைத்த வாளை நெஞ்சு புகைந்து சினந்து (உறையினின்றும்) உருவி; உடன்பயில், கதிர்ப் பருமணிப் பன் மயிர்செய் கேடகம் வெயில் எனத் திரித்து - அதனுடன் ஒளி தவழும் பெரிய மணிகளிழைத்துக் கரடித் தோலாற் செய்யப் பெற்ற கேடகத்தை ஞாயிறெனச் சுழற்றி; விண்வழுக்கி வந்து வீழ்ந்தது கயில்அணிக் கதிர்நகை ஓர் கடவுள் ஒத்து உலம்பினான் - வானிலிருந்து வழுக்கிவந்து வீழ்ந்ததாகிய கதிராகிய மூட்டுவாய் அமைந்த முத்துமாலையையுடைய ஒரு கடவுளைப் போல முழங்கினான்.
விளக்கம் : நல்வினை கெட்டு வீழ்ந்ததொரு கடவுள் (ஞாயிறு) உவமையாயிற்று, இவனும் துணையும் படையுமின்றி நிற்றலின். கயில் - மூட்டுவாய். நகை - முத்துவடம்.
277. மாரியின் கடுங் கணை
சொரிந்து மள்ளர் ஆர்த்த பின்
வீரியக் குரிசிலும்
விலக்கி வெம் கணை மழை
வாரியில் கடிந்து உடன்
அகற்ற மற்ற வன்படைப்
பேர் இயல் பெருங் களிறு
பின்னி வந்து அடைந்தவே.
பொருள் : மள்ளர் மாரியின் கடுங்கணை சொரிந்து ஆர்த்த பின் - வீரர்கள் மழையெனக் கொடிய அம்புகளைப் பொழிந்து ஆரவாரித்த பிறகு; வீரியக் குருசிலும் வெங்கணை மழைவிலக்கி - வீரம் மிகுந்த அரசனும் கொடிய அக் கணைமழையை நீக்கி; வாரியில் உடன் கடிந்து அகற்ற - செண்டு வெளியில் நின்று அப்படைகளைச் சேரக் கெடுத்துப் போக்க; மற்றவன் படைப்பேர் இயல் பெருங்களிறு பின்னி வந்து அடைந்த - வேறாக நின்ற வலிய படையிலுள்ள புகழ்பெற்ற பெரிய களிறுகள் நெருங்கி வந்து குழுமின.
விளக்கம் : பேர்இயல் பெருங்களிறு - தம்பேர் உலகில் இயலுதலையுடைய பெரிய களிறுகள்.
278. சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல்
கூற்றரும் குருதிவாள் கோடு உற அழுத்தலின்
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என
மாற்று அரும் மதக் களிறு மத்தகம் பிளந்தவே.
பொருள் : சீற்றம்மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல் - சீற்றம் மிகுந்த சச்சந்தன் தன்னை எதிர்ந்த யானைகளின் நெற்றியிலே; கூற்று அருங் குருதிவாள் கோடுஉற அழுத்தலின் - சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய குருதி படிந்த வாளைத் தந்தங்களிற்பட அழுத்தியதுபோது; ஊற்றுஉடை நெடுவரை உருமு உடன்று இடித்தென - ஊற்றினையுடைய பெரிய மலையிலே இடிசினந்து தாக்கினாற்போல ஆகி; மாற்றுஅரு மதக் களிறு மத்தகம் பிளந்த - நீங்காத மதமுடைய களிறுகளின் நெற்றிகள் பிளந்தன.
விளக்கம் : கோடுறவ் வழுத்தலின் : வகரம் வண்ணம் நோக்கி விரிந்தது. ஊற்றறாத மலை மதமறாத களிறுகட்குவமை.
279. வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை
வான் மயிர்ச் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து
ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரி தரத்
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே.
பொருள் : வேல் மிடைந்த வேலியும் பிளந்து - வேல் நெருங்கிய (வீரர்) வேலியையும் பிளந்து; வெங்கண் வீரரை வால் மயிர்செய் கேடகத்து இடித்து - (தடுத்த) கொடிய வீரர்களை ஒளிவிடும் மயிராற் செய்த கேடகத்தால் இடித்து; வாள்வலை அரிந்து வாள் வலையையும் அறுத்து; ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரிதர - ஊனை உடைய குருதி வெள்ளத்திலே உழக்கித் திரிதலால்; தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்தது - வண்டுகள் மொய்க்கும் மாலையினனான சச்சந்தனின் போர்க்களம் பொலிவுற்றது.
விளக்கம் : வேலி ஆகுபெயராதலின் பிரித்தென்னாது பிளந்தென்றார். வளையென்றார் தப்பாமற் சூழ்தலின். இத்துணையும் இவன் வென்றியாதலின் இவன் களம் என்றார்.
280. உப்பு உடைய முந் நீர் உடன்று கரை கொல்வது
ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி
இப்படி இறை மகன் இரும் களிறு நூற
அப் படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி.
பொருள் : உப்புஉடைய முந்நீர் உடன்று கரை கொல்வது ஒப்பு உடைய - உப்பினையுடைய கடல் மாறுபட்டுக் கரையை இடிப்பதை உவமையாகக் கொண்ட; தானையுள் ஒரு தனியன் ஆகி - படையிலே உவமையின்றித் தனித்த ஒருவனாகி; இப்படி இறைமகன் இருங்களிறு நூற - இவ்வாறு சச்சந்தன் பெரிய களிற்றுத் திரளைப் பிளக்கும்போது; அப்படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி - எதிர்ப்படையின் தலைவனாகிய கட்டியங்காரனுஞ் சினந்து களிற்றைச் செலுத்தி;
விளக்கம் : அண்ணல் : இகழ்ச்சிக் குறிப்பு. இப்பாட்டுக் குளகம். தன் காவலனையே அழிக்கத் தொடங்கிய படைக்கு முந்நீர் உடன்று கரைகொல்வது ஒப்புடைய தானை என்ற நயம் உணர்க. அப் படையுள் அண்ணல் என்றது கட்டியங்காரனை.
281. நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்திக்
கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பிக்
காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான்.
பொருள் : நீடுஅகம் இருந்த நிழல்நேமி வலன் ஏந்தி - நீண்ட நாள் (பகையின்மையால்) உள்ளிருந்த ஒளிமிகும் ஆழியை வலக்கையில் எடுத்து; அரவு சேர்ந்து நடுஅற்று ஆங்குஓடு கதிர்வட்டம் என -பாம்பு சேர்தலாற் பாதி மறைந்து வானில் ஓடுகின்ற ஞாயிற்றின் வட்டம் என ; கேடகம் அறுப்ப - கேடகத்தை அறுத்தலின்; ஒய்யென உலம்பி - ஒய்யென்று சச்சந்தன் முழங்கி; மிகைசீறுபு - கட்டியங்காரனின் வரம்பு மீறிய செயலுக்குச் செற்றங்கொண்டு; காடுகவர் தீயின் வெகுண்டான் - காட்டைப் பற்றிய தீயைப்போலச் சினந்தான்.
விளக்கம் : சீறுபு : இறந்தகால வினையெச்சம். ஒய்யென : ஒலிக் குறிப்பு.
282. நெய்ம் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி
வைம் முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி
மைம் முகம் அணிந்த மதயானை தவ நூறிக்
கைம் முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான்.
பொருள் : அழல்பொங்கி நெய்முகம் அணிந்து நிழல்தங்கி வைமுகம் அணிந்த நுதிவாள் அழல வீசி - அனலிலே முழுகி நெய் பூசப்பெற்று ஒளியமைந்த கூர்மைதங்கிய நுனியையுடைய வாளைச் சினந்து வீசி; மைமுகம் அணிந்த மதயானை தவநூறி - கருமை பொருந்திய முகத்தே பட்டம் அணிந்த மதயானையை நன்றாக வெட்டுதலால்; களிறு கைமுதல் துணிந்துஆழ அது நோனான் - அம் மதயானை துதிக்கையின் அடி வெட்டுண்டு வீழா நிற்க, அதனைக் (கட்டியங்காரன்) பொறானாகி;
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். நுதி - முனை. தவ - மிக. முதல் - அடி.
283. மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும்
வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழியச்
சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும்
கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான்.
பொருள் : நுதிமாலை கொண்டு மழை மின்என இமைக்கும் வேலை வலன்ஏந்தி - நுனியில் மாலையணிந்து முகிலிடை மின் என்று ஒளிரும் வேலை வலக்கையில் எடுத்து; சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும் கோலவரை மார்பின் - பொழிலிடையே மயில்போன்ற மகளிரின் விருப்பமூட்டும் துணைமுலைகள் துயிலும் அழகிய மலையனைய மார்பில்; விரிதாமம் அழகு அழிய-மலர்ந்த வாகைமாலை அழகுகெட; உறுகூற்று என எறிந்தான் - தாக்கும் கூற்று என எறிந்தான்.
விளக்கம் : மயிலின் தன்மையார் என்ற பன்மையால் தேவியர் பலராயினார். (சச்சந்தனுக்குத் தேவியர் பலருண்டென்றும் காமக் கிழத்தியர் ஐந்நூற்றுவர் என்றும், க்ஷத்திர சூளாமணி என்ற நூல் கூறும்) முலைகள் துஞ்சும் மார்பு எனவே முன் தனக்கு நிகராக எறிவாரின்மை பெறப்பட்டது. மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் - மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறநா.10) என்றார் பிறரும். யானை ஆழ எறிந்தான் என முடிக்க.
284. புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல்
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே.
பொருள் : புண்இடங் கொண்ட எஃகம் பறித்தலின் - மார்பிலே தைத்து நின்ற வேலைப் பறித்ததால்; பொன்னனார்தம் கண் இடம்கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல் - திருவனைய மகளிரின் கண்களுக்கு இடமான மார்பிலே தாக்கி வளைந்த அவ்வேலை; மண்இடம் கொண்ட யானை மணி மருப்பிடை இட்டு - நிலமிசை பட்டுவீழ்ந்த யானையின் மணிபொதிந்த கொம்பிடை வைத்து; விண்இடம் மள்ளர்கொள்ள மிறைக்கொளி திருத்தினான் - வீரர்கள் வானிலே இடம்பெற அவ்வளைவுக்கு உண்டான இளக்கத்தைப் போக்கினான்.
விளக்கம் : தடாயின வேல் என்க. தடாயின: தட என்னும் உரிச்சொல் அடியிற் பிறந்த பெயரெச்சம். அம்ம. அசை. மிறைக்கொளி - வளைவு கொண்டது.
285. ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி
நாந்தக உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர்
சாய்ந்த பின் தறுகண் ஆண்மைக் கட்டியங் காரன் வேழம்
காய்ந்தனன் கடுக உந்திக் கப்பணம் சிதறினானே.
பொருள் : ஏந்தல் வேல் திருத்த - சச்சந்தன் வேலைத் திருத்தியதால்; யானை இரிந்தன - யானைகள் ஓடின; எரிபொன் கண்ணி நாந்தக உழவர் நண்ணார் - ஒளிவிடும் பொற்கண்ணி அணிந்த வாள்வீரர் அணுகாராய்; கூற்று என நடுங்கி மள்ளர் சாய்ந்தபின்; கூற்றுவனாகச் சச்சந்தனை எண்ணி அஞ்சி அவ்வீரர் ஓடிய பிறகு - தறுகண் ஆண்மைக் கட்டியங்காரன் காய்ந்தனன் வேழம் கடுக உந்தி - அஞ்சாத வீரனான கட்டியங்காரன் அவர்களைச் சினந்து, (மற்றொரு) யானையை விரையத் தூண்டி; கப்பணம் சிதறினான் - கப்பணம் என்னும் படையை வீசினான்.
விளக்கம் : கப்பணம்: இரும்பால் ஆன ஆனைநெருஞ்சிமுள் போன்ற படை. முன் இவன் ஊர்ந்த யானை துதிக்கை வெட்டுண்டு வீழ்ந்ததால் இப்போது கடுகவுந்திய வேழம் வேறொன்று என உணர்க. நண்ணார், காய்ந்தனன்: முற்றெச்சங்கள் (நச்சினார்க்கினியர் மள்ளரை யானைகளைச் செலுத்துவோர் எனக்கொண்டு. மள்ளர் சாய்ந்தபின் யானை இரிந்தன என மாட்டேறு செய்வர், நண்ணார் : வினைமுற்று என்பர்.)
286. குன்றம் மார்பு அரிந்து வெள் வேல்
குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து
நின்ற மால் புருவம் போல
நெரி முறி புருவம் ஆக்கிக்
கொன்று அவன் வேழம் வீழ்ப்ப
மற்ற போர் களிற்றில் பாய்ந்து
நின்ற மா மள்ளர்க்கு எல்லாம்
நீள் முடி இலக்கம் ஆனான்.
பொருள் : வெள்வேல் குன்றம் மார்பு அரிந்து - வெள்ளிய வேலாலே கிரவுஞ்சம் என்னும் குன்றின் மார்பைப் பிளந்து; குடுமி மாமஞ்ஞை ஊர்ந்துநின்ற - உச்சிக்கொண்டையையுடைய பெரிய மயிலைச் செலுத்தி நின்ற; மால் புருவம்போல நெரிமுரி புருவம் ஆக்கி - முருகன் புருவம்போல நெரித்து வளைந்த புருவமுடையவனாய்; அவன் வேழம் கொன்று வீழ்ப்ப - கட்டியங்காரனின் வேழத்தைக் கொன்று வீழ்த்த; மற்றும்ஓர் களிற்றில் பாய்ந்து - அவன் வேறொரு யானையின்மேற் பாய்தலாலே; நின்ற மாமள்ளர்க்கு எல்லாம் நீள்முடி இலக்கம் ஆனான் - நிலைபெற்ற பெரிய வீரர்க்கெல்லாம் நீண்ட முடியையுடைய சச்சந்தன் குறிக்கோளானான்.
விளக்கம் : ஊர்தல் : போதல்; வானூர் மதியம் (நாலடி. 125) போல. மால் - முருகன். நீள்முடி : சினையாகுபெயர். (சச்சந்தன் ஊர்தியின்றி நின்றதால் மயிலூர் தலாகிய உவமையை மட்டும் நீக்குக.)
287. நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன்
நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும்
மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள்
குஞ்சரங்கள் நூறிக் கொலை வாள் ஒடித்து நின்றான்.
பொருள் : நஞ்சுபதி கொண்டவளம் நாகஅணையி னான் தன் - நஞ்சு பதிதலையுடைய வளமிகும் பாம்பணையினான் ஆகிய சச்சந்தனின்; நெஞ்சு பதிகொண்டு படைமூழ்க - மார்பை இடமாகக்கொண்டு (வீரர்) படை மூழ்கவும்; நிலம்வீசும் மஞ்சுதவழ் குன்றுஅனைய தோள்ஒசிந்து -நிலத்திலுள்ளார்க்குப் பொருள்களை வழங்கும், முகில்தவழும் குன்றம் அனைய தோள்ஒடிய; மாத்தாள் குஞ்சரங்கள் நூறி - பருத்த கால்களையுடைய யானைகளை வெட்டி; கொலைவாள் ஒடிந்து நின்றான் - அதனாற் கொலைக்குரிய வாளை முரித்து நின்றான்.
விளக்கம் : நாக+அணை: நாகணை: அகரம் தொக்கது. நாகணையினான் : திருமால்; ஈண்டுச்சந்தனுக்காயிற்று. ஒசிந்து: வினையெச்சத்திரிபு. நிலம் : இடவாகுபெயர். தன் தோளில்வலிமையுள்ளவரை யானைகளை வெட்டினான். வெட்டியதால் வாளும் ஒடிந்தது. நஞ்சு மதி கொண்ட என்பது பாடமாயின் திருமால் உட்கொண்டசக்கரம் என்க. (மதியனைய சக்கரம்.) தோளசைந்து என்றும் பாடம்.
288. ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும்
வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்ப்
பேர் அமருள் அன்று பெருந் தாதையொடும் பேராப்
போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான்.
பொருள் : ஆண்டகையும் ஆர்அமருள் அன்னவகை வீழும் வீரர்எறி வெம்படைகள் - ஆடவரிற் சிறப்புற்ற சச்சந்தனும் நிறைந்த போரில் முற்கூறியவாறு விரும்பும் வீரர் எறிகின்ற வெவ்விய படைகள்; வீழ இமையானாய் - வீழும்போதும் இமையாதவனாகி; அன்று பேர்அமருள் பெருந்தாதையொடும் பேரா- முற்காலத்திலே பெரும் போராகிய பாரதப் போரிலே தன் பெரிய தந்தையான கன்னனுடனே மாறுபட்டுப் புறங்கொடாமல்; போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான் - பொரும் போரிலே நிலைத்துநின்ற அபிமன்னனைப்போலப் பொலிவு பெற்றான்.
விளக்கம் : வீழும் - விரும்பும். இனி நீடும் போரமருள் பாடமாயின் நெடும் பொழுதாம்; நீடு நின்றனன் என்றார் பிறரும். ஆண்டகை - சச்சந்தன். விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு (குறள், 775) என்பது பற்றி இமையானாய் என்றார். பேரமர் என்றது பாரதப் போரினை. அன்று என்றது உலகறி சுட்டு. பெருந்தாதை - கன்னன். இளையோன் - அபிமன்.
சச்சந்தன் வீழ்தல்
289. போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்தத்
தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியா
வீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்க
ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான்.
பொருள் : கதிர் நேமியோடு வேல்பொருது போழ்ந்து அழுந்த - ஒளிவிடும் ஆழியும் வேலும் தாக்கிப் பிளந்து அழுந்துதலாலே; தாழ்ந்து - மெய்வலி குறைந்து; தறுகண் இணைகள் தீஅழல விழியா வீழ்ந்து - அஞ்சாத இரு கண்களும் தீயைச் சொரிய விழித்தவாறு வீழ்ந்து; மாநில மகள்தன் வெம்முலை ஞெமுங்க ஆழ்ந்து - பெருநில மகளின் விருப்பமூட்டும் முலைகள் அழுந்த அழுந்தி; படுவெஞ்சுடரின் ஆண்தகை அவிந்தான் - மறையும் வெவ்விய கதிரவன்போல ஆண்தகைமை குறைந்தான்.
விளக்கம் : ஆண்டகைமை: குணப்பண்பு; ஆண்டகைக் குரவிர் (சீவக. 363) போல. அவிதல் - குறைதல். திரைபாடவிய (அகநா. 260) என்றாற்போல. ஆண்டகையைப் பண்பியாக்கிச் சச்சந்தன் பட்டான் எனின், பாலருவி (சீவக.291) என்னுங் கவி வேண்டாவாம். இவன் பகைவர் முகம் நோக்கி வீழ்தலின், பிள்ளையார் பின்பு பகை வென்றார். இச் செய்யுளின்கண் நச்சினார்க்கினியர் ஆண்டகை என்பதற்குச் சச்சந்தன் என்னாது ஆண்தகைமை என்று பொருள்கூறி அதற்குக் கூறும் விளக்கம் கற்றோரை இன்பத்தில் ஆழ்த்துவதாம். நிலமாமகள் வெம்முலை ஞெமுங்க என்றது, நூலாசிரியர் சச்சந்தன் கழிகாமத்தாற் கெட்டமை கருதிக் கூறியதாம்.
290. தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது
புலம்பு எய்தி மைந்தர் மாழ்க
ஏந்து முலையார் இனைந்து இரங்கக் கொடுங் கோல்
இருள் பரப்பவே ஏ பாவம்
ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த
அறச் செங்கோலாய் கதிரினை
வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி மா
நாகமுடன் விழுங்கிற்று அன்றே.
பொருள் : தோய்ந்த விசும்பு என்னும் தொன்னாட்டகம் - மக்கள் பொருந்திய விண்ணுலகம் என்று பாராட்டப்பட்ட ஏமாங்கதத்திலே; மைந்தர் தொழுது புலம்பி எய்தி மாழ்க - சான்றோர் கைகூப்பித் தனிமையுற்று வருந்த; ஏந்தும் முலையார் இனைந்து இரங்க - மகளிர் துன்புற்றழ; கொடுங்கோல் இருள் பரப்ப-கொடுங்கோல் தன் இருளைப் பரப்ப; வேந்தர் பெருமானை - மன்னர் மன்னனை; சச்சந்தனை; ஆய்ந்த குருகுலம் ஆம் ஆழ்கடலினுள் முளைத்த அறச்செங்கோல் ஆய்கதிரினை - நல்லதென்று தேர்ந்த குருகுலம் என்னும் ஆழமாகிய கடலில் தோன்றிய அறமாகிய செங்கோலைக்கொண்ட ஆராய்ந்த ஞாயிற்றை; மந்திரி மாநாகம் உடன் விழுங்கிற்று - அமைச்சனாகிய பெரும் பாம்பு அரசுரிமை யெல்லாஞ்சேர விழுங்கியது; ஏஎ பாவம்! - ஐயோ பாவம்!
விளக்கம் : கடலாங் குருகுலம் சிறப்பு நிலைக்களமாக முதலொடு முதலேவந்த மெய்யுவமம் (தொல்.உவம.4) மந்திரி மாநாகம் கீழான பொருள் நிலைக்களமாக முதலொடு முதலே வந்த வினையுவமம் (தொல். உவம-5.) தொல்காப்பியனார் சொல்லும் பொருளும் உடன் ஆராய்தலின் உருவகவுவமை யென்றே கூறினார். செங்கோலையுடைய கதிர் : இல்பொருளுவமம். ஏஎ: குறிப்புமொழி. இதனால், அவன் ஆண்டகைமை குறைந்ததற்கு இரங்கினார்.
291. பால் அருவித் திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின்
நெடுங் குடைக் கீழ்ப் பாய் பரிமான் தேர்க்
கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணிக்
கேடகமும் மறமும் ஆற்றி
வால் அருவி வாமன் அடித் தாமரை மலர் சூடி
மந்திர மென் சாந்து பூசி
வேல் அருவிக் கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய்
விண்ணோர்க்கு விருந்து ஆயினானே.
பொருள் : பால்அருவித் திங்கள்தோய் முத்தம்மாலைப் பழிப்புஇல் நெடுங்குடைக்கீழ் - பால்போலுங் கதிர்களையுடைய திங்களைப்போல, முத்துமாலை அணிந்த குற்றமற்ற பெருங்குடையின் நீழலிலே; பாய்பரி மான்தேர் - தாவும் புரவிகள் பூட்டிய தேரில் அமர்ந்து; கோல்அருவி வெஞ்சிலையான் - அம்புகளை அருவிபோல வீசும் கொடிய சிலையினான் (இப்போது அவைகளின்றி); கூர்வாளொடு மணிக்கேடகமும் மறமும் ஆற்றி - கூரிய வாளும் கேடகமும் வீரமும் துணையாகப் பொருது; வால் அருவி மந்திரமென் சாந்துபூசி வாமன் அடித்தாமரை மலர்சூடி - அருகனை நினைப்பதாகிய சுக்கிலத் தியானத்திலே முழுகி அருக மந்திரமாகிய சாந்தைப் பூசி அவன் அடிகளாகிய தாமரை மலர்களை அணிந்து; வேல்அருவிக் கண்ணினார் மெய்காப்பு ஓம்ப- வேலனைய கண்ணினையுடைய அரம்பையர் மெய்யைச் சூழ்ந்து காவல் செய்ய; போய் விண்ணோர்க்கு விருந்தாயினான் வேந்தன் - சென்று வானவர் வழிபடுதற்குப் புதியனாயினான் அரசன்.
விளக்கம் : தோய்: உவமையுருபு. வேலருவி -வேலொழுங்கு. உயிர் நீங்குகின்றபொழுது தியானம் வந்துதவுதலின், வீடு பெற்றான் என்க; சுவர்க்கமுமாம். இடையறாமையானும் மூழ்கினார்க்கு உலகியற்றுன்பம் மறைந்து குளிர்ந்திருத்தலானும் சுக்கிலத்தியானத்தை வாலருவி என்றார். வாலருவியின்கண் ஆடி என்க. ஓதுங்கால் உள்ளமும் உடலும் குளிர்தலின் வாமன் மந்திரத்தை மென்சாந்தம் என்றார்.
சச்சந்தன் உடலை ஈமப்படுகையில் கிடத்தல்
292. செந் தீக் கருந் துளைய தீம் குழல் யாழ்
தேம் தேம் என்னும் மணி முழவமும்
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்டத்
தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும்
அம தீம் கிளவியார் ஐஞ்ஞாற்றுவர் அவை துறை
போய் ஆடல் அரம்பை அன்னார்
எந்தாய் வெறு நிலத்துச் சேர்தியோ என்று இனைந்து
இரங்கிப் பள்ளி படுத்தார்களே.
பொருள் : செந்தீக் கருந்துளைய தீங்குழல் யாழ் - செந்தீயாற் கருந்துளையவான இனிய குழலும் யாழும்; தேம்தேம் என்னும் மணிமுழவமும் - தேம்தேம் என்றொலிக்கும் முழவங்களும்; தாம்தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும் - தாம்தாம் என்று முழங்கும் தண்ணுமைகளும்; தந்துஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்ட - ஆங்கே கொண்டுவந்து இசைக்கும் நாடகத்திற்கும் வாச்சியத்திற்குமுரிய மகளிர் மெல்விரல்களால் தீண்டி வாசிக்க; அம்தீங் கிளவியார் ஐந்நூற்றுவர் - அழகிய இனிய மொழியார் ஐந்நூற்றுவராகிய அகப்பரிவார மகளிரும்; அவை துறைபோய ஆடல்அரம்பை அன்னார் - தமக்குரிய துறையிலே முற்றுங் கற்று அவையினில் ஆடுதல்புரியும் அரம்பையரைப் போன்ற நாடக மகளிரும்; எந்தாய் வெறுநிலத்துச் சேர்தியோ! என்று இனைந்து இரங்கிப் பள்ளி படுத்தார்கள் - எந்தையே! வெறுநிலத்துக் கிடத்தியோ; என்று துன்புற்று அழுது ஈமத்திலே படுக்கை யமைத்துக் கிடத்தினர்.
விளக்கம் : தேந்தேம், தாந்தாம்: அநுகரணம். கிளவியார் ஐந்நூற்றுவர் என்றார் அகப்பரிவாரம் ஐந்நூற்றுவரே என்றற்கு. மேலும் நால்வரை ஒழிந்த தோழர் ஐந்நூற்றுவரும் அகப்பரிவாரம் என்று உணர்க. கோன்றமர் நிகளம் மூழ்கி (சீவக.262) எனவே ஆடவர் இன்மை உணர்க.
சச்சந்தனுக்கு நேர்ந்த கதியை நினைத்து அனைவரும் வருந்தி புலம்புதல்
293. மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணிச்
செப்பகம் கடைகின்றவே போல்
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின்
உள் அரங்கி மூழ்கக் காமன்
படை அவிழ்ந்த கண் பனிநீர் பாய விம்மாப்
பருமுத்த நா மழலைக் கிண் கிணியினார்
புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத் தோயப் பொழி மழையுள்
மின்னுப் போல் புலம்பினாரே.
பொருள் : பருமுத்தம் நாமழலைக் கிண்கிணியினார் - பெரிய முத்துக்களாகிய நாவினாலே மழலை மொழியும் கிண்கிணியணிந்த மகளிர்; மணிச் செப்பு அகம் கடைகின்றவே போல் - மாணிக்கச் செப்பின் உள்வாயைக் கடைகின்றவை அதனுள் அழுந்து மாறுபோல; மடைஅவிழ்ந்த வெள்ளிலைவேல் அம்புபாய - மூட்டுக் கழன்ற வெண்மையான இலைமுகமுடைய வேலும் அம்பும் என அங்கே பரவிக் கிடப்பவை; தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணைமுலையின் உள் அரங்கி மூழ்க - முறுக்கவிழ்ந்த மாலையும் முத்தும் பயின்ற துணைமுலைகளின் உள்ளே தைத்து அழுந்தும்படி; காமன்படை அவிழ்ந்த கண்பனிநீர் பாய விம்மா -காமன் படைகளை வென்ற கண்களிலிருந்து நீர் பெருக விம்மிப் புரண்டழுது, (பிறகு); புடைஅவிழ்ந்த கூந்தல் புலவுதோய - பக்கத்தே அவிழ்ந்து நிலத்திலே படிந்து மெய்யை மறைத்துத் தொங்குங் கூந்தலிற் குருதி படிய; பொழிமழையுள் மின்னுப்போல் புலம்பினார் - நீர்பொழியும் முகிலினூடே மின்னுப்போல இருந்து அழுதனர்.
விளக்கம் : புலவு - குருதி; பண்பாகுபெயர். (புலால் கமழ்வது குருதி) இனிக் குருதிபடிந்த நிலத்திற்கெனின் தானியாகு பெயர்.) (விம்மா : செய்யா என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம்.) விம்மிப் புலம்பினார் என்க.
294. அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்து ஆங்கு
வேந்தன் கிடந்தானைத் தான்
கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான்
கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின்
எரிமாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும்
ஏற்பச் சொரிந்து அலறி எம்
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னாப்
பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார்.
பொருள் : அரிமான் ஓர்மெல் அணைமேல் மஞ்ஞைசூழக் கிடந்தாங்கு வேந்தன் கிடந்தானை - சிங்கவேறு ஒரு மெல்லிய பள்ளியின்மேல் மயில்கள்சூழக் கிடந்தாற்போலக் கிடந்த வேந்தனை; கரிமாலை நெஞ்சினான்தான் கண்டான் - இருண்ட இயல்புடைய உள்ளத்தினனாங் கட்டியங்காரன் பார்த்தான்; கண்டே கைதொழுதான் - பார்த்தவுடனே கைகூப்பி வணங்கினான்; கலுழ்ந்து கண்ணீர் உகுத்தபின் - (பிறகு) அழுது கண்ணீர் சிந்தினான்; அதற்குப்பின், எரிமாலை ஈமத்து இழுது ஆர் குடம் ஏனைநூறும் ஏற்பச் சொரிந்து அலறி - எரியும் இயல்புடைய ஈம விறகிலே குடங்கள் நிறைந்த நெய்யும் சந்தனம் முதலியவற்றையும் தகவுறப் பெய்து அலறி; எம்பெருமானே! எம்மை ஒளித்தியோ என்னாப் பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார் - எம் இறைவனே எம்மை மறந்து மறைந்தனையோ என்று பெருங் கண்களிலிருந்து நீரைப் பொழிந்து அலறுவாராயினர்.
விளக்கம் : கட்டியங்காரன் மனம் வழிபாட்டிற்படுதலின் தன் வயத்ததின்றிக் கலங்கியது என்பார், கலுழ்ந்து என்றார். கண்ணீர் உகுத்தது இன்பத்தினால், இதனை, உவகைக் கலுழ்ச்சி என்பர். விளிவில் கொள்கை (தொல்.மெய்ப்-5) என்றதனால் இதுவும் அழுகைப்பாற்படும். அரசன் மெய்யை எரி விழுங்குவதனால், ஒளித்தியோ, என்றனர். என்னா - என்று. இச் செய்யுளும் பின்வரும் இரண்டு செய்யுட்களும் ஒரு தொடர்.
295. கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலைமேல்
ஆரம் பரிந்து அலறுவார்
நெய்யார் கருங் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார்
நின்று திருவில் வீசும்
மையார் கடிப் பிணையும் வார் குழையும் களைந்திடுவார்
கையால் வயிறு அதுக்குவார்
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது
என்பார் கோல் வளையினார்.
பொருள் : கோல் வளையினார் - திரண்ட வளையலையணிந்த அம் மகளிர்; கைஆர் வளைகள் புடைத்து இரங்குவார் - கையிலுள்ள வலையல்களை உடைத்துக்கொண்டு அலறுவார்; முலைமேல் கதிர் ஆரம் பரிந்து அலறுவார் - முலைமேலுள்ள ஒளிவிடும் முத்து மாலைகளை அறுத்து அலறுவார்; நெய் ஆர்கருங்குழல்மேல்மாலை சிந்தி நிலத்து இடுவார் - நெய்ப்பையுடைய கரிய குழல்மேல் உள்ள மாலையைச் சிதறி நிலத்திலே வீசுவார் ; திருவில் நின்று வீசும் வார்குழையும் மைஆர் கடிப்பிணையும் களைந்திடுவார் - இரந்திரவில்லின் ஒளியை நிலையாக வீசும் நீண்ட குழையையும் நீலநிறம் பொருந்திய கடிப்பிணையையும் கழற்றிப் போடுவார்; கையால் வயிறு அதுக்குவார் - கைகளால் வயிற்றில் அடித்துக் கொள்வார்; ஐயா! ஓ! என்று அழுவார் - ஐயா! ஓ ! என்று அழுவார்! வேந்தன் செய் கொடுமை கொடிது என்பார் - அரசன் செய்த கொடுமை அறவுங் கொடியது என்பார்.
விளக்கம் : கடிப்பிணை : குதம்பைபோன்ற ஒரு காதணி. ஓ: இரக்கக் குறிப்பு. கொடிதென்றனர் - அரசற்குச் செய்யும் நீர்க்கடன் முறை செய்யாமை யெண்ணி.
296. பானாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் பகுவாய்
ஓர் பை அணல் மாநாகம் வீழ்ப்பத்
தேன் ஆர் மலர்ச் சோலைச் செவ்வரையின் மேல் சிறு
பிடிகள் போலத் துயர் உழந்து தாம்
ஆனாது அடியேம் வந்து அவ் உலகினில் நின் அடி
அடைதும் என்று அழுது போயினார் எம்
கோனார் பறிப்ப நலம் பூத்த இக் கொடி
இனிப் பூவா பிறர் பறிப்பவே.
பொருள் : தேன்ஆர் மலர்ச்சோலைச் செவ்வரையின்மேல்; தேன் நிறைந்த மலர்ச்சோலையையுடைய செவ்விய மலையின்மேல்-பகுவாய் பைஅணல் ஓர்மா நாகம் - பெரிய வாயையும் படத்தையும் கீழ்வாயையும் உடையதொரு பெரும் பாம்பு; பால்நாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் வீழ்ப்ப - அரைத்திங்களனைய மருப்பினையும் பசிய கண்ணையும் உடைய களிற்றை வீழ்த்தியதால்; சிறு பிடிகள்போலத் தாம் துயர்உழந்து -(அக்களிறு காத்தற்குரிய) சிறுபிடிகள் அக்காவலை யிழந்து வருந்துமாறு போலத் தாங்கள் வருந்தி; எம்கோனார் பறிப்ப நலம்பூத்த இக்கொடி பிறர் பறிப்பப் பூவா - எம் இறைவர் பறிப்பதற்காக அழகினை மலர்ந்த இக்கொடிகள் இனியும் பிறர் பறிக்குமாறு மலரா; அடியேம் வந்து அவ்வுலகில் நின்அடி அடைதும் - (ஆகவே) அடியேங்கள் அவ்வுலகிற்கு வந்து நின் திருவடிகளை அடைவோம்; என்று ஆனாது அழுது போயினார் - என்று கூறி அமைதியின்றி அழுது நீங்கினர்.
விளக்கம் : சிறுபிடிகள் எனவே அக்களிறு கூடுதற்குரிய குலத்திற் பிறந்த கொடிகள் அல்ல என்பது பெற்றாம். இக்கொடி என்றார் தம்மைப் பிறர்போல. இவர்கள் அரசற்குக் காமம் ஒழிந்த நுகர்ச்சி கொடுத்தற்குரிய (பணி) மகளிர்.
அவலங்களுக்கிடையே கட்டியங்காரன் மன்னன் ஆதல்
297. செங் கண் குறு நரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு
அதன் இடத்தைச் சேர்ந்தால் ஒப்ப
வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல்
எரியின் வாய்ப் பெய்து அவன் பெயர்ந்து போய்ப்
பைங் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை
அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப
எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான்
பூமகளை எய்தினானே.
பொருள் : செங்கண் சிறுநரி ஓர்சிங்க ஏற்றைச் செகுத்து - சிவந்த கண்களையுடைய சிறுநரி ஒன்று, ஓர் ஆண் சிங்கத்தைக் கொன்று; ஆங்கு அதன் இடத்தைச் சேர்ந்தால் ஒப்ப - அங்கே அச் சிங்கத்தின் இடத்தை அடைந்தாற்போல; வெங்கண் களியானை வேல்வேந்தனை விறல் எரியின்வாய்ப் பெய்தவன் - கொடுமையுடைய மதயானையும் வேலுங் கொண்ட சச்சந்த மன்னனை ஆற்றலையுடைய எரியில் இட்ட கட்டியங்காரன்; பெயர்ந்து போய்ப் பைங்கண் களிற்றின்மேல் தன் பெயரினால் பறையறைந்தான் - நீங்கிச் சென்று பசிய கண்களையுடைய களிற்றின்மேல் தான் அரசன் என அறிவித்துப் பறையறைவித்தான்; வேல்மாரி பெய்தால் ஒப்ப எங்கணவரும் இனைந்து இரங்கினார் - வேல்மழை பெய்தாற்போல எங்குள்ளவரும் அப்பறையொலி கேட்டு வருந்தி யழுதனர்; இருள் மனத்தான் பூமகளை எய்தினான் - இவ்வாறு கரிய மனமுடைய கட்டியங்காரன் நிலமகளை அடைந்தான்.
விளக்கம் : நரி சிங்கத்தின் இடத்தை அடைந்தாற் சிங்கம்போலத் தொழில் நடத்தாது; தன் இழிதொழிலையே நடத்தும். கட்டியங்காரன் கருத்தால் மகளிர் சச்சந்தனை எரியிற் பெய்தலின் அதனை அவன் தொழிலாக்கினார். (நச்சினார்க்கினியர் விறலெரி என்பதிலுள்ள விறல் என்னுஞ் சொல்லையும், பெய்து அவன் என்பதிலுள்ள அவன் என்னுஞ்சொல்லையும் இணைத்து விறலவன் எனக் கட்டியங்காரனுக் காக்கி இஃது இகழ்ச்சி என்பர்.)
சீவகன் பிறப்பு
298. களிமுகச் சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர
வளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால்
சுளிமுகக் களிறு அனான்தன் சொல் நய நெறியில் போய
கிளி முகக் கிளவிக்கு உற்றது இற்று எனக் கிளக்கல் உற்றேன்.
பொருள் : களிமுகச் சுரும்புஉண் கோதை கயில் எருத்து அசைந்து சோர - களிக்கும் நெறியினையுடைய சுரும்புகள் தேனைப் பருகும் மலர்மாலை அணிகலன் அணிந்த கழுத்திலே குலைந்து வீழ; வளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி - காற்றின் எதிரில் நில்லாத விளக்குப்போல நிலையற்ற உள்ளத்தோடு மயக்கமுற்று; சுளிமுகக் களிறனான்தன் சொல்நய நெறியில் போய - சுளித்த முகமுடைய களிறுபோன்ற சச்சந்தன் கூறிய சொல்லின் பயனை உட்கொண்டு சென்ற; கிளிமுகக் கிளவிக்கு இப்பால் உற்றது இற்றுஎனக் கிளக்கல் உற்றேன் - கிளியனைய மொழியாட்கு இப்பால் நேர்ந்தது இத்தன்மைத்தென்று கூறத் தொடங்கினேன்.
விளக்கம் : களிமுகம் - களிக்கின்ற நெறி. கயில் - மூட்டுவாய் ஆகுபெயரால் அணிகலனை உணர்த்தியது.
299. எஃகு என விளங்கும் வாள்
கண் எறி கடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால்
ஆய் மயில் ஊரும் ஆங்கண்
வெஃகிய புகழினான் தன்
வென்றி வெம் முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பிணையின் மாழ்கி
இறுகி மெய்ம் மறந்து சோர்ந்தாள்.
பொருள் : எஃகுஎன விளங்கு வாள்கண் எறிகடல் அமிர்தம் அன்னாள் - கூர்மையே இதன் வடிவம் என்று விளங்கும் வாளனைய கண்களையுடைய, அலைகடலில் எழுந்த அமிர்தம் அன்னாள் ஆகிய விசயை; அஃகிய மதுகை தன்னால் ஆயமயில் ஊரும் ஆங்கண் -(கணவனை நீங்குதலால்) குறைந்த ஆற்றலுடன் விசை குறைந்த மயிலைச் செலுத்தும் அவ்வானிலே; வெஃகிய புகழினான்தன் வென்றி வெம்முரசம் ஆர்ப்ப- (அரசனாக) விரும்பிய புகழினானது கொடிய வெற்றி முரசு ஒலிக்க; எஃகு எறிபிணையின் மாழ்கி இறுகி மெய்ம்மறந்து சோர்ந்தாள் - (அது கேட்டு) வேலால் அடியுண்ட பெண்மானென மனம் மயங்கி மூர்ச்சித்துத் தன்னை மறந்து சோர்ந்தாள்.
விளக்கம் : இது கையாறாதலிற் பொறியை இடத்தே திரித்தல் இயலாமை நேர்ந்தது. (கையாறு - செயலறுதல்.) எஃகென விளங்கு வாட்கண் என்பதற்கு வேலென விளங்கா நின்ற ஒளியுடைய கண் எனினுமாம். அஃகிய மதுகை - குறைந்த வலிமை. ஆய்மயில் - வேகம் சுருங்கிய மயிற்பொறி. ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (உரி-32.) என்பர் தொல்காப்பியனார். வெஃகிய புகழினான் -வேந்தன் அல்லனாகவும் அவ் வேந்தற்குரிய புகழைக் கவர்ந்தவன்; என்றது கட்டியங்காரனை. வெஃகுதல் - பிறர் பொருளைக் கவர்தல். வென்றிவெம் முரசம் என்றது இகழ்ச்சி. எஃகு - வேல்.
300. மோடு உடை நகரின் நீங்கி
முது மரம் துவன்றி உள்ளம்
பீடு உடையவரும் உட்கப்
பிணம்பல பிறங்கி எங்கும்
காடு உடை அளவை எல்லாம்
கழுகு இருந்து உறங்கும் நீழல்
பாடு உடை மயில் அம் தோகை
பைபய வீழ்ந்தது அன்றே.
பொருள் : பாடுஉடை அம் தோகை மயில் - (அங்ஙனம் அவள் மூர்ச்சித்ததால் தானே) இடப்பக்கம் விசை குறைதலால் இறங்கும் மயில்; மோடுஉடை நகரின் நீங்கி - பெருமைமிகும் நகரிலிருந்து நீங்கி; முதுமரம் துவன்றி உள்ளம் பீடு உடையவரும் உட்கப் பிணம்பல பிறங்கி - முதிய மரங்கள் நெருங்கி, மனவுறுதி யுடையோரும் அஞ்சுமாறு பிணங்கள் பலவாக மிகுத்து; காடுஉடை அளவைஎல்லாம் எங்கும் கழுகு இருந்து உறங்கும் நீழல் - காடிருக்கும் இடம் எல்லாம் எங்கும் கழுகு அமர்ந்து துயிலும் நீழலிலே (சுடுகாட்டில்); பைபய வீழ்ந்தது - மெல்ல மெல்ல விழுந்தது.
விளக்கம் : பாடு - ஈண்டு இடப்பக்கம். உடைமையில்: உடைகின்ற மயில் என வினைத்தொகை. பொறிக்கு, ஓடமுறுக்கி (சீவக.238) என்னும் வாசகம் முன்னர் உளது, ஆதலின், அதற்கேற்ப, உடைகின்றது என்றார். கையால் இடந்திரித்தாற் கடிதின் வீழ்கின்றது, ஈண்டுத் தானே இடந்திரிதலிற் பையப்பைய நிலத்திற்கு அண்ணிதாக வீழ்ந்த தென்றார். வீழ்ந்தது, நிகழ்காலத்தில் தோன்றிய இறப்பு.
301. மஞ்சு சூழ்வதனை ஒத்துப்
பிணப்புகை மலிந்து பேயும்
அஞ்சும் அம் மயானம் தன்னுள்
அகில் வயிறு ஆர்ந்த கோதை
பஞ்சிமேல் வீழ்வதே போல்
பல் பொறிக் குடுமி நெற்றிக்
குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து
கால் குவித்து இருந்தது அன்றே.
பொருள் : மஞ்சு சூழ்வதனை ஒத்துப் பிணப்புகை மலிந்து - முகில் சூழ்வதுபோலப் பிணப்புகை நிறைந்து பேயும் அஞ்சும் அம் மயானந் தன்னுள் - பேயும் நடுங்கும் அச் சுடுகாட்டிலே; அகில் வயிறு ஆர்ந்த கோதை பஞ்சிமேல் வீழ்வதேபோல் - அகில் மணத்தைத் தன்னிடத்தே கொண்ட மலர்மாலை பஞ்சியின்மேல் வீழ்வதைப்போல; பல்பொறிக் குடுமிநெற்றிக் குஞ்சி மாமஞ்ஞை - பல புள்ளிகளையும் உச்சியிலே கொண்டையையும் மயிரையும் உடைய பெரிய மயில்; வீழ்ந்து கால்குவித்து இருந்தது - மெல்லென விழுந்து காலைக் குவித்திருந்தது.
விளக்கம் : பேயும்: உம்: உயர்வு சிறப்பு. அகில் : அதன் மணத்திற்கு ஆகுபெயர். இருக்கும் என்றும் பாடம். இம் மயிற்பொறியைக் கூனியது உருவங்கொண்ட தெய்வம் மறைத்துக் கட்டியங்காரனும் கோவிந்தனும் தேவியைத் தேடாமற் காத்ததென்று கொள்க. அது பின்பு, கனியார் மொழியாட்கும் மயிற்குங் காமர்பதி நல்கி (சீவக.2603) எனச் சேரக் கூறியவாற்றானும் உணர்க.
302. வார் தரு தடம் கண் நீர் தன்
வன முலை நனைப்ப ஏல் பெற்று
ஊர் கடல் அனைய காட்டுள்
அச்சம் ஒன்றானும் உள்ளாள்
ஏர் தரு மயில் அம் சாயல்
இறைவனுக்கு இரங்கி ஏங்கிச்
சோர் துகில் திருத்தல் தேற்றாள்
துணை பிரி மகன்றில் ஒத்தாள்.
பொருள் : ஏர்தரும் மயில்அம் சாயல் - எழுச்சிபெறும் அழகிய மயிலனைய மென்மையுடையாள்; தடம்கண் வார்தரும் நீர்தன் வனமுலை நனைப்ப - பெரிய கண்களிலிருந்து வழிதரும் நீர் தன் அழகிய முலைகளை நனைக்க; ஏல்பெற்று - மனவெழுச்சி மிக்கு; ஊர்கடல் அனைய காட்டுள் - பரவிய கடல்போன்ற அக்காட்டிலே; அச்சம் ஒன்றானும் உள்ளாள்- பேய் முதலிய ஒரு வகையானும் அச்சங்கொள்ளாதவளாய்; இறைவனுக்கு இரங்கி ஏங்கி - அரசன் நிலைக்கு யாது செய்வேன் என்று வருந்தி யழுது; சோர்துகில் திருத்தல் தேற்றாள் - சோரும் ஆடையையுந் திருத்துங் தெளிவில்லாதவளாய்; துணைபிரி மகன்றில் ஒத்தாள் - துணையைப் பிரிந்த மகன்றிலைப் போன்றாள்.
விளக்கம் : உள்ளாள், தேற்றாள்; முற்றெச்சங்கள். அன்பு மிகுதியாற் கையாறு முற்படுதலின், இறுகி (சீவக.299) எனக் கையாறு கூறி, இரங்கி எனக் கவலை கூறி, ஏங்கி என அரற்றுக் கூறி, அச்சம் உள்ளாள் என அவலங் கூறினார். வருத்தம்தோன்றி நிற்றல், அவலம் வாய்விட்டழுதல், அரற்று. யாது செய்வல் என்றல், கவலை. மூர்ச்சித்தல், கையாறு. ஏல் -மனவெழுச்சி. தான் நிற்கின்ற நிலையிலே கலக்கத்தாலே பேய் முதலியவற்றிற்குச் சிறிதும் அஞ்சினாளிலள்.
303. உண்டு என உரையில் கேட்பார்
உயிர் உறு பாவம் எல்லாம்
கண்டு இனித் தெளிக என்று
காட்டுவாள் போல ஆகி
விண்தொட நிவந்த கோயில்
விண்ணவர் மகளின் சென்றாள்
வெண்தலை பயின்ற காட்டுள்
விளங்கு இழை தமியள் ஆனாள்.
பொருள் : விளங்குஇழை விண்தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள் - விளக்கமான அணிகளை அணிந்த விசயை, வானளாவ உயர்ந்த அரண்மனையிலே வானவர் மகளைப் போல நல்வினை வடிவாய் உலவினள்; உயிர்உறு பாவம் எல்லாம் உண்டுஎன உரையில் கேட்பார் - பல உயிர்களும் உறும் பாவங்களெல்லாம் இவை என்று நூல்களிலே உரையளவிலே உள்ளன என்று கேட்பவர்கள்; கண்டு இனித் தெளிக என்று காட்டுவாள் போல ஆகி - நேரிற் பார்த்து இனித் தெளிவுறுக என்று உலகிற்குக் காட்டுகின்றவள் போலவாகி; வெண்தலை பயின்ற காட்டுள் தமியள் ஆனாள் - மண்டையோடுகள் பழகிய சுடுகாட்டிலே தீவினையின் வடிவாய்த் தனித்தவளானாள்.
விளக்கம் : மகப்பெறுங் காலத்துத் துணையின்றி வருந்துதலின், காட்டுவாள்போல ஆகி என்றார். உரை - அகம அளவை. கண்டினித் தெளிக என்றது காட்சி யளவையானும் கண்டு உணர்வீராக என்றவாறு. இவள் நெருநல் விண்டொட நிவந்த கோயில் விண்ணவர் மகளிற் சென்றாள் இன்று தமியளானாள் என்க.
304. இருள் கெட இகலி எங்கும்
மணிவிளக்கு எரிய ஏந்தி
அருள் உடை மனத்த வாகி
அணங்கு எலாம் வணங்கி நிற்பப்
பொரு கடல் பருதி போலப்
பொன் அனான் பிறந்த போழ்தே
மருள் உடை மாதர் உற்ற
மம்மர் நோய் மறைந்தது அன்றே.
பொருள் : எங்கும் இருள்கெட இகலி மணிவிளக்கு ஏந்தி எரிய - எவ்விடத்தும் இருள்இன்றி ஓட்டி மணிவிளக்குகள் மிக்குச் சுடர்வீச; அணங்கு எலாம் அருள்உடை மனத்த ஆகி வணங்கி நிற்ப-ஆண்டுறையும் தெய்வமெல்லாம் (இவன் பின்னர் வீடு பெறுவான் என்று கருதி) இரக்கமுற்ற வுள்ளத்துடன் வணங்கி நிற்க; பொருகடல் பருதிபோலப் பொன்னனான் பிறந்த போதே - அலைகடலிடை ஞாயிறுபோலப் பெறுதற்கரியவன் பிறந்தபொழுதே; மருள்உடை மாதர்உற்ற மம்மர் நோய் மறைந்தது - மயக்கம் உற்ற விசயை கொண்ட வருத்த நோய் மறைந்தது.
விளக்கம் : ஏந்தி - மிக்கு. இகலி -விளக்கொடு மாறுபட்டு எனினும் ஆம். இவன் வீடு பெறுவன் என்று கருதித் தெய்வம் வணங்கிற்று. கவாஅன் மகற்கண்டு தாய் மறந்தாங்கு (நாலடி.201) என்றார் பிறரும். முன் வெஞ்சுடரின் ஆண்டகை அவிந்தான் (சீவக.289) என்று கூறி, அச்சுடர் குழவியாய்த் தோன்றினமை (ஈண்டுக்) கூறினார். ஞாயிறு தோற்றத்தில் இருளைப் போக்கிப் பின்னர் மதியத்தைக் கெடுக்குமாறு போல, இவனும் பிறந்தபோதே தேவியின் இருளைப் போக்கிப் பின்பு பகைவெல்வான் என்பது கருத்து. இக்கருத்தாற், செய்யோன் செழும் பொற்சரம் என்றும், மதிவீழ்வதுபோல வீழ்ந்தான் (சீவக.2322) என்றும் கூறினார். இச் செய்யுளுக்கு நச்சினார்க்கினியர் கூறும் விளக்கங்கள் மிக்க நுணுக்கமுடையன. அவற்றிற் கியல்பன்மை தோன்ற அருளுடை மனத்தவாகி என்றார். அணங்கு - பேய், பொன்னனான் என்றது பொன் போன்று பெறுதற்கரியவன் என்றவாறு.
305. பூங்கழல் குருசில் தந்த
புதல்வனைப் புகன்று நோக்கித்
தேம் கமழ் ஓதி திங்கள்
வெண் கதிர் பொழிவதே போல்
வீங்கு இள முலைகள் விம்மித்
திறந்து பால் பிலிற்ற ஆற்றாள்
வாங்குபு திலகம் சேர்த்தித்
திலகனைத் திருந்த வைத்தாள்.
பொருள் : தேன்கமழ் ஓதி - தேன் மணக்குங் கூந்தலை யுடையாள்; பூங்கழல் குருசில் தந்த புதல்வனைப் புகன்று நோக்கி - அழகிய கலழணிந்த சச்சந்தன் அளித்த மகனை விருப்புடன் நோக்கி; வீங்கு இளமுலைகள் விம்மித் திங்கள் வெண்கதிர் பொழிவதேபோல் திறந்து பால்பிலிற்ற ஆற்றாள் - பருத்த இளமுலைகள் தாமே விம்மி நிலவின் வெள்ளிய கதிரைப் பெய்வதுபோல் திறந்து பால்சொரியும்வரை ஆற்றாளாய்; வாங்குபு திலகம் சேர்த்தி - தானே பாலை வலியக்கொண்டு திலகமிட்டு; திலகனைத் திருந்த வைத்தாள் - சிறந்த மகனைச் செவ்வையாகக் கிடத்தினாள்.
விளக்கம் : புதல்வன் பொருட்டு இவளைப் போக்குதலின், குருசில் தந்த புதல்வனை என்றார். மகப் பயந்தோர்க்குப் பயந்தபொழுதே பால் சுரவாதாகையால் ஆற்றாள் வாங்குபு என்றார்.
விசயை புலம்புதல்
306. கறை பன்னீர் ஆண்டு உடன் விடுமின்
காமர்சாலை தளி நிறுமின்
சிறை செய் சிங்கம் போல் மடங்கிச்
சேரா மன்னர் சினம் மழுங்க
உறையும் கோட்டம் உடன் சீமின்
ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று
ஏற்பார்க்கு ஊர்தோறு உய்த்து ஈமின்.
பொருள் : பன்னீராண்டு உடன்கறை விடுமின் - பன்னீராண்டுவரை சேர இறைப்பொருளை நீக்குமின்; காமர்சாலை தளி நிறுமின் - அழகிய அறச்சாலைகளையும் கோவில்களையும் இயற்று மின்; சேராமன்னர் சிறைசெய் சிங்கம்போல் சினம் மழுங்க மடங்கி - பகையரசர் சிறைப்பட்ட சிங்கங்களைப்போற் சினம் மழுங்குமாறு மடங்கி; உறையும் கோட்டம் உடன்சீமின் - இருக்கும் சிறைச்சாலைகளையெல்லாம் இடித்துத் தூய்மை செய்மின்; ஒண்பொன் குன்றம் தலைதிறந்திட்டு - ஒளிமிகும் பொற்குவியலைத் திறந்துவிட்டு; ஊர்தோறு உய்த்து - ஒவ்வோரூருக்குங் கொண்டு சென்று; இறைவன் சிறுவன் பிறந்தான் என்று - வேந்தனுக்கு மகன் பிறந்தான் என்று; ஏற்பார்க்கு ஈமின் - (மகிழ்வுடன்) கேட்போருக்குக் கொடுமின்.
விளக்கம் : (இதுமுதல் விசயை தானே இரங்கிக் கூறுவன.) பாலக்கிரகாரிட்டம் பன்னீராண்டளவும் உண்டு என்றும் அதற்குச் சாந்தியாகப் பன்னீராண்டு கறைவிடுதல் அரசியல்பு என்றும் கொண்டு, பன்னீராண்டு என்றாள். இனி, அரசர்க்குப் பதினோராவதாண்டிலே உபநயனம் பண்ணிப் பன்னீராவதாண்டிலே இல்லறக்கிழமை பூண்டு அரசுரிமை எய்துதல் இயல்பெனக் கொண்டு பன்னீராண்டும் உலகினர்க்குத் தானமாகவிடுதல் இயல்பெனலுமாம். மகவுபெற்றாற் சிறை வீடு செய்தல் தென்புலத்தார் கடனை நீக்குதலென்பர். கறை- குடிகள் வேந்தற்கிறுக்குங் கடமைப் பொருள். ஒருசேர நீக்குமின் என்பார் உடன்விடுமின் என்றார்.. சீமின் - இடித்தொழிமின். திறந்திட்டு - திறந்துபோகட்டு. காமர்சாலை என்றது அறக்கோட்டத்தை. தளி - திருக்கோயில். நிறுமின் - நிறுவுமின். ஈமின் - வழங்குமின் மக்களைப் பெற்றுழிச் சிறை வீடு செய்தால் தென்புலத்தார் கடன் தீரும் என்பதொரு கொள்கை என்க.
307. மாடம் ஓங்கும் வள நகருள்
வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டு
ஆடை செம் பொன் அணிகலங்கள்
யாவும் யாரும் கவர்ந்து எழு நாள்
வீடல் இன்றிக் கொளப் பெறுவார்
விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக்
கோடி மூன்றோடு அரைச் செம் பொன்
கோமான் நல்கும் என அறைமின்.
பொருள் : மாடம் ஓங்கும் வளநகருள் - மாடம் உயர்ந்த வளமிகும் அரண்மனையில்; வரம்புஇல் பண்டம் தலைதிறந்திட்டு - அளவற்ற பொருள்களைக் காப்பு நீக்கிவிட்டு; ஆடை செம்பொன் அணிகலங்கள் யாவும் - ஆடையும் பொன்னும் பணிகளும் என இவற்றையெல்லாம்; எழுநாள் வீடல்இன்றி யாரும் கவர்ந்து கொளப்பெறுவார் - ஏழுநாள்வரை தடையின்றி எல்லோரும் கவர்ந்துசெல்லும் உரிமை பெறுவார்; விலக்கல் வேண்டா - அவர்களைத் தடைசெய்ய வேண்டா; வீழ்ந்தீர்க்குக் கோமான் கோடி மூன்றோடு அரைச் செம்பொன் நல்கும்என அறைமின் - விரும்பினீர்க்கு மன்னன் மூன்றரைக்கோடி செம்பொன் தானமாக அளிப்பான் என்று முரசறைமின்.
விளக்கம் : எழுபிறப்புத் தீவினை நீங்க எழுநாள் கொளப்பெறுவார். எழுபிறப்பு : மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, மலை, தாவரம் என்பன; இவற்றுள் மலையை நீக்கித் தேவரைக் கூட்டி யுரைப் பாரும் உளர். வீடல்: விடல் என்பதன் விகாரம் ஆம். விடல் - நீக்கல். உடம்பிற்கு மூன்றரைக் கோடி மயிர் உளவாகலின் மூன்றரைக்கோடி நல்குமென்றாள். வளநகர் - வளப்பமுடைய அரண்மனை. பண்டம் என்றது - உணவுப் பொருள்களை. விடுதல் - வீடல் என நின்றது. வீழ்ந்தீர்க்கு - விரும்பினீர்க்கு.
308. அரும் பொன் பூணும் ஆரமும்
இமைப்பக் கணிகள் அகன் கோயில்
ஒருங்கு கூடிச் சாதகம் செய்து
ஒகை அரசர்க்கு உடன் போக்கிக்
கரும் கைக் களிறும் கம்பலமும்
காசும் கவிகள் கொள வீசி
விரும்பப் பிறப்பாய் வினை செய்தேன்
காண இஃதோஒ பிறக்குமா.
பொருள் : அகன்கோயில் -பெரிய அரண்மனையில்; அரும்பொன் பூணும் ஆரமும் இமைப்பக் கணிகள் ஒருங்குகூடி - அரிய பொன்னும் அணியும் மாலையும் ஒளிவிடக் கணிகள் எல்லோருங் கூடி - சாதகம் செய்து - பிறப்புநாள் கணிக்க; அரசர்க்கு உடன் ஓகை போக்கி - எல்லா அரசர்க்கும் நீ பிறந்த மகிழ்ச்சியை உடனே அறிவித்து; கவிகள்கொளக் கருங்கைக் களிறும் கம்பலமும் காசும் வீசி - பாவலர் கொள்ளுமாறு பெரிய கையையுடைய களிறும் கம்பலமும் காசும் கொடுத்து; விரும்பப் பிறப்பாய் - (யாவரும்) விரும்புமாறு பிறக்கும் நீ ; வினைசெய்தேன் காணப் பிறக்கும்ஆ இஃது - தீவினையேன் காணும்படி பிறக்கும் தன்மை இத்தன்மைத்து.
விளக்கம் : ஓஒ: இரக்கக் குறிப்பு. பிறக்கும் ஆறு என்பது பிறக்கும்ஆ என விகாரப்பட்டது. செய்து - செய்ய: வினையெச்சத்திரிபு. பிறப்பாய் : வினையாலணையும் பெயர். கவிகள் : பெருமங்கலம் பாடுவோர். கணிகள் - கணித நூல் வல்லோர். சாதகம் - பிறப்புக் கணிதம். ஓகை - உவகை: இஃது ஆகுபெயராய் உவகைச் செய்தியை உணர்த்தும்.
309. வெவ் வாய் ஓரி முழவு ஆக
விளிந்தார் ஈமம் விளக்கு ஆக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில்
நிழல் போல் நுடங்கிப் பேய் ஆட
எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக்
கூகை குழறிப் பாராட்ட
இவ்வாறு ஆகிப் பிறப்பதோ
இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே.
பொருள் : வெவ்வாய் ஓரி முழவுஆக - கொடிய வாயையுடைய ஓரியின் குரல் முழவு ஆகவும்; விளிந்தார் ஈமம் விளக்கு ஆக - இறந்தவரைச் சுடும் ஈமத்தீ விளக்கு எனவும் (கொண்டு); ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில் - தகுதியற்ற சுடுகாடாகிய உயர்ந்த மேடையிலே; பேய் நிழல்போல் நுடங்கி ஆட - பேய் நிழல்போல அசைந்து ஆட ; கூகை எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக் குழறிப் பாராட்ட - (அதனைக் கண்டு) கூகைகள் எப்பக்கத்தினும் அமர்ந்து இரக்கத்துடன் குழறும் ஒலியிற் பாராட்ட; இவ்வாறாகிப் பிறப்பதோ! - இந்த இரங்கத்தக்க நிலையிற் பிறப்பதன் தீவினை தான் என்னே! வேந்தே! இதுவோ மன்னர்க்கு இயல்? - அரசே! இதுவோ அரசர்க்குரிய தன்மை? (கூறுவாய்).
விளக்கம் : வேந்தே? என்றாள் அரசிளங்குமரனாதலின். (நச்சினார்க்கினியர், இவ்வாறென்றது, தந்தை விரும்பும்படி நல்வினையுடைய தன்மையை. இதுவென்றது செயலின்றித் தாய் வருந்தும்படி தீவினையுடைய தன்மையை. ஓகாரமிரண்டும் வினா எனப்பொருள் கூறுவர். மற்றும் அவர் 306 முதல் 309 வரை உள்ள நான்கு செய்யுட்களையும் ஒரு தொடராக்கி மாட்டேற்று முடிபு கூறுவார். அவர் கூறும் முடிபு: தேவி புதல்வனை நோக்கிக், கோமானானவன் கணிகள் சாதகஞ் செய்ய ஓகை போக்கி, வீசிக், கறைவிடுமின், நிறுமின், சீமின், ஈமின், விலக்கல் வேண்டா என அறைமின், வீழ்ந்தீர்க்கு நல்கும் என அறைமின் என்று விரும்பப் பிறக்கும் நீ ஓஒ தீவினைசெய்தேன் காண்டற்காகப் பிறக்கும்படி இத்தன்மைத்தாயிருந்தது; வேந்தே! இவ்விரண்டிலும் இவ்வாறாகிப் பிறப்பது மன்னர்க்கியல்போ? பேயாடக் கூகை பாராட்ட இதுவாகிப் பிறப்பது மன்னர்க்கியல்போ? கூறாய் என்றாள் என்க. (இவ்வாறு மொழிகளை எங்கிருந்தும் எடுத்து மாட்டேற்றுவது நூலாசிரியர் கருத்தாகாது.)
ஓரி - நரி, கேள்விக்கின்னாவாக ஊளையிடும் நரி என்பார் வெவ்வாய் ஓரி என்றார். விளிந்தார் - இறந்தோர். ஈமம் - சுடுகாடு. ஒவ்வாச் சுடுகாடு என்றாள், இறப்போர்க்கே பொருந்துவதன்றிப் பிறப்போர்க்குப் பொருந்தாத இடம் என்பது தோன்ற, உயர் அரங்கின் என்றது இகழ்ச்சி. பேய் வறிய ஆவியே ஆகலின் நிழல்போனுடங்கி என்றாள். முழவம் முழங்க, மணிவிளக்கம் நின்றொளிர, அரண்மனை அரங்கில் மகளிராட, மாந்தர் மகிழ, புலவர் போற்றெடுப்பப் பிறக்க வேண்டிய நீ இவ்வாறாகிப் பிறப்பதோ என்றிரங்கியவாறு.
----------------
310. பற்றா மன்னன் நகர்ப் புறமால்
பாயல் பிணம் சூழ் சுடு காடால்
உற்றார் இல்லாத் தமியேனால்
ஒதுங்கல் ஆகாத் தூங்கு இருளால்
மற்று இஞ் ஞாலம் உடையாய்! நீ
வளரும் ஆறும் அறியேனால்
எற்றே இது கண்டு ஏகாதே
இருத்தியால் என் இன் உயிரே.
பொருள் : இஞ்ஞாலம் உடையாய் - இவ்வுலகுடைய மன்னனே; பற்றாமன்னன் நகர்ப்புறம் - நீ கிடக்கும் இடம் பகை வேந்தனின் நகரில் உள்ள இடமாயிற்று; பாயல் பிணம்சூழ சுடுகாடு - நின் படுக்கை பிணங்கள் சூழ்ந்த சுடுகாடாகவிருந்தது; உற்றார் இல்லாத் தமியேன் - யானோ உரையாடற்கும் எவருமில்லாத தனிமையேன் ஆயினேன்; ஒதுங்கல் ஆகாத் தூங்கு இருள் - (இதைவிட்டு வெளியேற எண்ணின்) விலக இயலாத பேரிருள் சூழ்ந்துளது; மற்றுநீ வளரும் ஆறும் அறியேன் - மேலும், நீவளர்வதற்குரிய நெறியையும் யான் அறிகின்றிலேன்; என் இன் உயிரே - என் இனிய உயிரே!; இது கண்டு ஏகாது இருத்தி - (நீ) இந்நிலை கண்டும் இவ்வுடலைவிட்டு நீங்காமல் இருக்கின்றாய்!; எற்று! - இஃது எவ்வளவு கொடிது!
விளக்கம் : மகனையும் உயிரையும் தனித்தனியே முன்னிலைப்படுத்திக் கூறினாள். மற்று : வினைமாற்று. பற்றாமன்னன் - பகைமன்னன். ஆல்: அசைகள். எற்று - எத்தகைய கொடுமைத்து.
311. பிறந்த நீயும் பூம் பிண்டிப்
பெருமான் அடிகள் பேர் அறமும்
புறந்தந்து என்பால் துயர்க் கடலை
நீந்தும் புணை மற்று ஆகாக்கால்
சிறந்தார் உளரேல் உரையாயால்
சிந்தா மணியே! கிடத்தியால்
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன்
மம்மர் நோயின் வருந்துகோ.
பொருள் : சிந்தாமணியே! - சிந்தாமணியே!; கிடத்தி - (நீ ஒன்றும் உரையாமற்) கிடக்கின்றனை; பிறந்த நீயும் - (என் வருத்தம் நீக்கப்) பிறந்த நீயும்; பூம்பிண்டிப் பெருமான் அடிகள் பேரறமும் - மலர்ந்த அசோகின் நிழலில் அமர்ந்த அருகனார் அருளிய பெரிய அறமும்; புறந்தந்து - ஆதரவு செய்து; என் பால் துயர்க்கடலை நீந்தும் புனை ஆகாக்கால் -என்னிடந் தோன்றிய துயரக்கடலை யான் கடக்கும் தெப்பம் ஆகாவிட்டால்; சிறந்தார் உளரேல் உரையாய் -நின்னினும் அப்பெருமானினும் சிறந்தவர் இருப்பரேல் உரைத்திடாய்; மறம்கூர் நும்கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ? - வீரம்மிக்க நும் இறைவன் கூறியதைச் செய்த நான் மயக்க நோயினால் வருந்துவேனோ?
விளக்கம் : சொல்: கருவியாகுபெயர். வருந்துகு : வருந்துவேன், தனித்தன்மை வினைமுற்று. பேரறப் பூம்பிண்டிப் பெருமானடிகள் என மாறுவர் நச்சினார்க்கினியர்.
விசயையின் துன்ப நிலையைக் கண்டு அஃறிணைப் பொருள்கள் இரங்குதல்
312. அந்தோ! விசயை பட்டன கொண்டு
அகங்கை புறங்கை ஆனால் போல்
கந்தார் களிற்றுத் தம் கோமான்
கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து
வந்தாள் போலப் புறம் காட்டுள்
வந்தாள் தமியே என மரங்கள்
சிந்தித்து இரங்கி அழுவன போல்
பனி சேர் கண்ணீர் சொரிந்தனவே.
பொருள் : அந்தோ! - ஐயோ! அகங்கை புறங்கை ஆனாற் போல் -உள்ளங்கை புறங்கையாக மாறிய அத்துணை விரைவில்; விசயை பட்டனகொண்டு - விசயை அடைந்த துன்பங்களை உட்கொண்டு; கந்துஆர் களிற்றுத் தம் கோமான் கழிய - தூணிற் கட்டப்பெற்ற களிறுகளையுடைய தம் இறைவன் இறக்க; மயில் ஓர் மயில் ஊர்ந்து வந்தாற்போல; புறங்காட்டுள் தமியே வந்தாள்என - சுடுகாட்டிலே தனியே வந்து சேர்ந்தாள் என்று; சிந்தித்து இரங்கி அழுவனபோல் - எண்ணி வருந்தி அழுவனபோல; மரங்கள் பனிசேர் கள்நீர் சொரிந்தன - மரங்கள் குளிர்ந்த மதுநீரைச் சொரிந்தன.
விளக்கம் : (அந்தோ: ஆசிரியருக்குத் தோன்றிய இரக்கத்தைக் குறிப்பது. நச்சினார்க்கினியர், வந்தாள் தமியே என என்பதிலுள்ள என என்னுஞ் சொல்லுடன், அந்தோ எனக் கூட்டி மரங்கள் கூறியதாக ஆக்குவர்.)
313. அடர் பொன் பைம் பூண் அரசு அழிய
அரும் பொன் புதல்வன் பெற்று இருந்த
இடர் கொள் நெஞ்சத்து இறைவியும்
இருங் கண் ஞாலத்து இருள் பருகிச்
சுடர் போய் மறையத் துளங்கு ஒளிய
குழவி மதிபெற்று அகம் குளிர்ந்த
படர் தீர் அந்தி அது ஒத்தாள்
பணை செய் கோட்டுப் படா முலையாள்.
பொருள் : அடர்பொன் பைம்பூண் அரசு அழிய - மிகுதியான பொன்னாலான புதிய கலன்களை அணிந்த அரசன் அழிய; அரும்பொன் புதல்வன் பெற்றிருந்த - அரிய பொன்னயனை மகனைப் பெற்றிருந்த; இடர்கொள் நெஞ்சத்து - துயர்கொண்ட உள்ளமுடைய; பணைசெய் கோட்டுப் படாமுலையாள் இறைவியும் - பருத்த முகட்டினைக்கொண்ட சாயாத கொங்கைகளை யுடைய விசயையும் (சிறிது துயர்நீங்கி); இருங்கண் ஞாலத்து இருள் பருகிச் சுடர்போய் மறைய - பேரிடமுடைய உலகின் இருளை நீக்கிய ஞாயிறு சென்று மறைய; துளங்கு ஒளிய குழவி மதிபெற்று அகம் குளிர்ந்த - விளங்கும் ஒளியையுடைய பிறை மதியைப்பெற்று மனம் அமைந்த; படர்தீர் அந்தியது ஒத்தாள் - துன்பம் நீங்கிய அந்த அந்திமங்கையைப் போன்றாள்.
விளக்கம் : அடர் - தகடுமாம். பொன்அடர் என்க. (துன்பத்தை அடர் அரசு - துன்பத்தை நீக்கிய அரசன் என்பர் நச்சினார்க்கினியர். இறைவியும்: உம்: உயர்வு சிறப்பு. பணைசெய் - பிழைத்தலைச் செய்த) என்பர் நச்சினார்க்கினியர். இதன்கண் இறந்துபட்ட சச்சந்தனுக்கு ஞாயிறும், இடர்கொள் நெஞ்சத்து விசயைக்கு அந்திப் பொழுதும், சீவகனுக்குப் பிறையும் உவமைகள். இவ்வுவமைகள் நினைந்து நினைந்து இன்புறற்பாலன.
சுடுகாட்டில் தெய்வம் ஒன்று உதவி செய்தல்
314. தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள்
யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த போழ்தில்
தான் அமர்ந்து உழையின் நீங்காச் சண்பக மாலை என்னும்
கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே.
பொருள் : தேன்அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள் - தேன்பொருந்திய மாலையணிந்த விசயை தன் அருமை மகனின் நல்வினையை அறியாமல்; யான் எவன் செய்வல் என்று அவலியா இருந்த போழ்தில் - நான் யாது செய்வேன் என்று வருந்தியிருந்த அளவில்; தான் அமர்ந்து உழையின் நீங்காச் சண்பகமாலையென்னும் கூனியது உருவம்கொண்டு - தான் எப்போதும் அருகிலே யிருக்கும் இயல்பினளான சண்பகமாலையென்னும் பெயரையுடைய கூனியின் வடிவங்கொண்டு; ஓர் தெய்வதம் குறுகிற்று - ஒரு தெய்வம் விசையையை அடைந்தது.
விளக்கம் : இவன் அரசன் மகனாதலின், அச் சுடுகாட்டில் உறையும் தெய்வம் வந்தது. தெய்வதம் தைவதமென்னும் வடமொழிச் சிதைவு.
315. விம்முறு விழும வெந் நோய் அவண் உறை தெய்வம் சேரக்
கொம் என உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க
எம் அனை தமியை ஆகி இவ் இடர் உற்றது எல்லாம்
செம் மலர்த் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள்.
பொருள் : அவண்உறை விம்முறு விழும வெந்நோய் தெய்வம் சேர - அங்கு வாழ்கின்ற, விசயை கொண்ட விம்மலுக்குரிய துன்பத்திற் கிரங்கித் துயர்கொண்ட தெய்வம் வந்தவுடன், கொம் என உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க - விரைவில் பெரு மூச்சுவிட்டு உள்ளத்திற் சுழன்ற கவலை நீங்குதலால்; எம்அனை செம்மலர்த் திருவின் பாவாய்! - எம் அன்னையே! சிவந்த தாமரைத் தவிசுடைய திருவனைய பாவையே! தமியை ஆகி இவ்இடர் உற்றது எல்லாம் யான் செய்த பாவம் என்றாள் - நீ தனித்து இத்துன்பம் அடைந்ததெல்லாம் நான் செய்த பாவம் என்று கூனி ஆதரவு கூறினாள்.
விளக்கம் : திருவின்: இன்: அசை (ஐந்தனுருபு என்பதே பொருத்தமுடையது.) தெய்வம் கூனியாய் நிற்றலின் உயர்திணையாற் கூறினர். விழுமம் - துன்பம். கொம்மென : விரைவுக் குறிப்பு. கொட்புறுதல் - சுழலுதல். எம்மன்னை எனற்பாலது எம்மனை என நின்றது. அன்பிற்குரியோர் துன்புறக் காண்புழிக் கண்டோர் இது யான் செய்த பாவம் என்று கூறியிரங்குதல் பண்டைக்காலத்தொரு வழக்கு. இதனைப் பெருங்கதையில் துன்ப நிலையிலிருந்த உதயணனைக் கண்ட சாங்கியத்தாய் மாபெருந்தேவி திருவயிற்றியன்ற பெருவிறற் பொலிவே, இனையை யாவது எம்மனோர் வினை என்றிரங்குதலானும் உணர்க. இந்நூலாசிரியரே இனையைநீ யாய வெல்லாம் எம்மனோர் செய்த பாவம் (391) எனப் பிறாண்டும் ஓதுதல் காண்க.
316. பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி
நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற
கோவினை அடர்க்க வந்து கொண்டு போம் ஒருவன் இன்னே
காவி அம் கண்ணினாய்! யாம் மறைவது கருமம் என்றாள்.
பொருள் : காவிஅம் கண்ணினாய்! - நீல மலரனைய அழகிய கண்ணினாய்! பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி - தாமரையில் தோன்றிய தலைமையுற்ற முருகனைப்போன்ற இந்த நம்பியின்; நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் - சொல்லினாலே உலக முழுதும் நடக்கும்; ஒன்றாது நின்ற கோவினை அடர்க்க - பகைத்துநின்ற அரசனைக் கொல்ல; ஒருவன் இன்னே வந்து கொண்டுபோம் - ஒருவன் இப்போதே வந்து இந்நம்பியைக் கொண்டு போவான்; யாம் மறைவது கருமம் என்றாள் - (ஆகையால்) யாம் மறைந்து நிற்பது செய்யத்தக்கதாகும் என்றாள்.
விளக்கம் : பூவினுட் பிறந்த தோன்றற் புண்ணியன் என்றது முருகக்கடவுளை. நிவந்தோங்கு இமயத்து நீலப்பைஞ்சுனைப், பயந்தோர் என்பதுமத்துப் பாயல், பெரும்பெயர் முருக (5-48-50) என்றார் பரிபாடலினும். நா. மொழிக்கு ஆகுபெயர். ஒன்றாது நின்றகோ என்றது கட்டியங்காரனை விசயை நெஞ்சம் நன்கு தேறியிருத்தற் பொருட்டுக் கோவினையடர்க்க வந்து கொண்டுபோம் ஒருவன் இன்னே என்றது தெய்வம் என்க. இது முன்னம் நீ வளருமாறும் அறியேன் என்று வருந்தியதற்குத் தேற்றுரை என்றுணர்க.
317. சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
பன் மணி விளக்கின் நீழல் நம்பியைப் பள்ளி சேர்த்தி
மின் மணி மிளிரத் தேவி மெல்லவே ஒதுங்கு கின்றாள்
நன் மணி ஈன்று முந்நீர்ச் சலஞ்சலம் புகுவது ஒத்தாள்.
பொருள் : மழலை சின்மணி நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க - மழலைபோல ஒலிக்கும் சில மணிகளாகிய நாவினையுடைய கிண்கிணியும் சிலம்பும் ஏங்குதல் செய்ய; பன்மணி விளக்கின் நீழற் பள்ளி நம்பியைச் சேர்த்தி - பல மணிகளாகிய விளக்கின் நிழலிலே அமைத்த பள்ளியில் நம்பியைக் கிடத்தி; மின்மணி மிளிர மெல்ல ஒதுங்குகின்றாள் தேவி - ஒளிவிடும் மணிகள் ஒளி செய மெதுவாக விலகும் விசயை; சலஞ்சலம் நன்மணி யீன்று முந்நீர் புகுவது ஒத்தாள் - சலஞ்சலம் மாணிக்கத்தை யீன்று கடலிற் புகுவது போன்றாள்.
விளக்கம் : மணியாகிய நா. பன்மணி - உயிர்நீத்தவர் பூண்ட மணி. நீழல் : விகாரம். தெய்வம் ஒரு பள்ளியைத் தேவி அறியாதவாறு அமைத்தது. அது பின்பு ஆசிரியன், பூந்தவிசின் உச்சி (சீவக.386) என்பதனாலும் பெற்றாம்.
318. ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம்
தீது இல ஆக என்று திரு முலைப் பால் மடுத்துக்
காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்திக்
கோதை தாழ் குழலினாளைக் கொண்டு போய் மறைய நின்றாள்.
பொருள் : ஏதிலார் பல்நூறு இடர் செய்யினும் - அயலார் பலநூறு துன்பங்கள் செய்தாலும்; செய்த எல்லாம் தீதுஇல ஆகஎன்று - செய்த அவைகளெல்லாம் நன்றாகுக என்று கூறி; திருமுலைப்பால் மடுத்து - தானே விசயை முலையைப்பற்றிப் பாலூட்டி; காதலான் பெயர் சுமந்த கதிர்மணி ஆழி சேர்த்தி - சச்சந்தன் பெயரெழுதிய ஒளிவிடும் மணியாழியைக் குழவியின் மீது வைத்து; கோதைதாழ் குழலினாளைக் கொண்டுபோய் மறைய நின்றாள் - பூமாலையணிந்த குழலையுடைய விசயையை அழைத்துக்கொண்டு சென்று மறைய நின்றாள் கூனி.
விளக்கம் : முற்செய்யுளில் விசயை ஒதுங்குகின்றாள் என்றார். இச் செய்யுளில் அவ்வாறு ஒதுங்கும் விசயையைக் கூனி மறைய அழைத்துச் சென்றாள் என்றார். ஆழிசேர்த்தது அறிந்து வளர்த்தற்கு. (நச்சினார்க்கினியர், முற்செய்யுளையும் இதனையும் ஒரு தொடராக்கி கூனியே நம்பியைப் பள்ளிசேர்த்துத் திருமுலைப்பால் மடுத்து ஆழி சேர்த்தினாள் என்று மாட்டேற்றுவர். அவ்வாறு மாட்டேற்றச் சேர்த்தி என்பதைச் சேர்த்த என்று திரிப்பர்.
319. நல் வினை செய்து இலாதேன் நம்பி நீ தமியை ஆகிக்
கொல் வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மாப்
புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல்
ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள்.
பொருள் : நல்வினை செய்திலாதேன் நம்பி - பெற நல்வினை செய்திருந்தும் வளர்க்க நல்வினை செய்திலாத நான்பெற்ற நம்பியே! நீ தமியை ஆகிக் கொல்வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மா - நீ தனித்தாயாகிக் கொடிய விலங்குகள் சூழக் கிடத்தியோ என்று அழுது; கொம்பு புல்லிய ஓர் கருவிளை தான் பூத்ததேபோல் - கொம்பைத் தழுவிய ஒரு கருவிளை தான் மலரொன்று மலர்ந்ததேபோல்; ஓர் கொம்புபற்றி ஒல்கி ஒரு கணால் நோக்கி நின்றாள் - ஒரு கொம்பைப்பற்றி ஒதுங்கி ஒரு கண்ணாலே பார்த்தவாறு நின்றாள்.
விளக்கம் : ஒருகணால் என்றதனால் ஒரு கருவிளைமலர் கூறப்பட்டது. நின்னைப் பெறுதற்குரிய நல்வினை செய்திருந்தும் நின்னை வளர்த்தற்கு நல்வினை செய்திலாதேன் என விரிக்க. மாக்கள் - விலங்குகள்; கரி முதலியன. விம்மா - விம்மி; அழுது.
கந்துக் கடன் குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்தல்
320. நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர்
கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து எனக்
காளக உடையினன் கந்து நாமனும்
வாளொடு கனை இருள் வந்து தோன்றினான்.
பொருள் : குளிர்மதி நாளொடு நடப்பது வழுக்கி தண்ணிய திங்கள் நாண்மீன்களொடு செல்லும் நிலைதவறி; மின்னொடு ஊர்கோளொடு வந்து வீழ்ந்தென - மின்னொடு செல்லும் முகிலுடன் வந்து நிலத்தே விழுந்தாற்போல; கந்துநாமனும் காளக உடையினன் கனையிருள் வாளொடு வந்து தோன்றினான் - கந்துக்கடன் என்னும் பெயருடைய வணிகனும் கரிய உடையினனாய் மிக்க இருளிலே வாளொடு வந்து சேர்ந்தான்.
விளக்கம் : நடப்பது : தொழிற்பெயர். ஊர் கோள் : வினைத்தொகை. கோள் - பாம்புமாம். இதற்குக், கோளொடும் என உம்மை விரிக்க. நாமனும்: உம்மை: சிறப்பு. உடையினன்: முற்றெச்சம். நாள் - அசுவனி முதலிய மீன். ஊர்கோள் - முகில். காளகம் - கருமை. கந்துநாமன் - கந்துக்கடன் என்னும் பெயரையுடையோன். கனை - மிகுதி.
321. வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம்
தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள்
நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான்
ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே.
பொருள் : வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம் - வாளைக் கடைந்து பதித்தாற்போன்ற கண்ணையுடைய மங்கையரின்; தோள் கடைந்து அழுத்திய மார்பன் - தோள்கள் கடைந்து அழுந்தத் தழுவிய மார்பையுடைய அவ் வணிகன்; ஆள்கடிந்து அணங்கு அணங்கிய காட்டுள் - ஆட்களைக் கடிந்து அணங்குகள் வருந்திய காட்டில்; தூங்கு இருள் நீள்சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான் - மிகுந்த இருட்டினைச் சிறந்த ஒளியைத் தரும் மணி ஒன்று பிளத்தலால் அவ்வொளி வந்த சார்பிலே நோக்கினான்.
விளக்கம் : தோள் கடைதல் - தழுவுதல் வகை. அணங்குகள் ஆளைக் கடிந்து அணங்கிய காட்டிற்கு அடை. அணங்குகள் = பேய்கள். (இங்குக் கூறிய நிழல்மணி நம்பியின்பால் விசையை வைத்த ஆழியிலிருந்தது.)
322. அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய
மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர்
பரப்புபு கிடந்து எனக் கிடந்த நம்பியை
விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான்.
பொருள் : மருப்புஇளம் பிறைநுதல் அரும்புஇள முலையவர்க்கு அனங்கன் ஆகிய - இரு முனைகளையுடைய இளம்பிறை அனைய நெற்றியையும் அரும்பனைய இளமுலைகளையும் உடைய மங்கையர்க்குக் காமனாதற்காக; மதர்வை வெங்கதிர் பரப்புபு கிடந்தென - மயக்கத்தைத் தரும் இளஞாயிறு தன் கதிர்களைப் பரப்பிக் கிடந்தாற்போல; கிடந்த நம்பியை - கிடந்த குழந்தையை; விரும்புஉளம் மிகுதியின் விரைவின் எய்தினான் - விருப்பம் உள்ளத்திலே மிகுந்ததனாற் கடிதின் எய்தினான்.
விளக்கம் : அருப்பு : அரும்பு என வலித்தது செய்யுள் விகாரம். கிடந்ததென என்பதும் கிடந்தென ஆனது விகாரம். பரப்புபு - பரப்பாநிற்க; வினையெச்சம்.
323. புனை கதிர்த் திருமணிப் பொன் செய் மோதிரம்
வனை மலர்த் தாரினான் மறைத்து வண் கையால்
துனை கதிர் முகந்து என முகப்பத் தும்மினான்
சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே.
பொருள் : வனைமலர்த் தாரினான் - மலரால் வனையப்பெற்ற மாலையினான்; புனைகதிர்த் திருமணிப் பொன்செய் மோதிரம் மறைத்து - அழகிய ஒளிவிடும் மணியையுடைய பொன்னாழியை (ப் பிறரறியாதிருக்க) மறைத்து; வண்கையால் துனைகதிர் முகந்துஎன முகப்ப - வண்மையுடைய கையால் விரையுங்கதிரை முகப்பதுபோல வாரியெடுக்க; தும்மினான் - (நம்பி) தும்மினான்; ஒருகுரல் சினை மறைந்து சீவ என்றது - (அப்போது) ஒரு குரல் மரக்கிளை மறைவிலிருந்து (தெய்வத்தால்) சீவிப்பாயாக என்று கூறப்பட்டது.
விளக்கம் : விசையை அச்சத்தால் தன் மனத்திலேயே வாழ்த்திக் கொண்டாள் என்பது தோன்ற ஒரு குரல் என்றார். வனைதல் - கட்டுதல். துனைகதிர் - இருளை நீக்க விரையுங் கதிர், எல்லாப் புலன்களுக்கும் விருப்பமுண்டாவதால், முகப்ப என்றார், மன்னெயின் முகவை (புறநா. 373) என்றார் பிறரும். தும்முதல் நன்னிமித்தம். சீவ : வியங்கோட் பொருளில் வந்த வடசொல். சீவகசாமியை எடுத்து வளர்த்தற்குரிய அறமுடைய கைஎன்பார் வண்கை என்றார். துணைகதிர் : வினைத்தொகை.
324. என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய
அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை
நுன் பழம் பகை தவ நூறுவாய் என
இன்பழக் கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள்.
பொருள் : என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய அன்பு எழுந்து - (கந்துகன் மகனையெடுத்தது கண்ட விசயை) என்புக்குள்ளே தோன்றி மெய்யுருகித் தன்னை மறக்குமாறு கூடிய அன்பு வளர்ந்து; அரசனுக்கு அவலித்து - அரசன் மகனைக் காணாதிறந்தமை நினைந்து வருந்தி; நுன்பழம் பகைதவ நூறு வாய்என - நின் பழம்பகையைக் கிளையற அறுப்பாய் என்று; இன்பழக் கிளவியின் இறைஞ்சி ஐயனை ஏத்தினாள் - இனிய கனி மொழியால் இறைவனை வணங்கி நம்பியை வாழ்த்தினாள்.
விளக்கம் : நுன் : திசைச்சொல். தவ - மிக. கிளையற நூறுவாயென்பது கருத்து. அரசன் : சச்சந்தன். அவலித்தல்-வருந்துதல். ஐயன் - (சீவகன்) என்றது குழவியை. நூறுதல் - அழித்தல். இறைஞ்சி என்றதனால் இறைவனை என்பது பெற்றாம். இன்பழக் கிளவி - இனிய கற்பகக்கனி போன்ற மொழி.
325. ஒழுக்கியல் அரும் தவத்து உடம்பு நீங்கினார்
அழிப்பரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே
வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மாமணி
விழுத் தகு மகனொடும் விரைவின் ஏகினான்.
பொருள் : ஒழுக்குஇயல் அருந்தவத்து உடம்பு நீங்கினார் - ஒழுக்கத்தாலே அமைந்த தவத்தே நின்று ஊனுடம்பை விட்டவர்; அழிப்ப அரும்பொன் உடம்பு அடைந்தது ஒப்ப - அழித்தற்கியலாத உயர்ந்த தெய்வவுடம்பைப் பெற்றதுபோல; வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய - தவறிய தன் மகன் சுடுகாட்டிலே கழியவிட்டு; மாமணி விழுத்தகு மகனொடும் விரைவில் ஏகினான் - உயர்ந்த மணியனைய சிறந்த மகனொடும் விரைந்து சென்றான்.
விளக்கம் : கந்துக்கடனுக்கு மக்கள் பிறந்தவுடனே இறந்து கொண்டே வருதலின் அந்நில மாறிக் குழவியாகவே இறவாது நீண்ட நாள்வரை யிருக்கும் மகனை எடுத்துச் செல்வதால், அழிப்பரும் பொன்னுடம்பு உவமையாயிற்று. நச்சினார்க்கினியர் அழிப்பரு விழுத்தவமெனக் கூட்டுவர். தவவுடம்பை இவன் மகனுக் குவமை கூறினார் அவனாலே சீவகனைப் பெறுதலின்.
326. மின் அடு கனை இருள் நீந்தி மேதகு
பொன் உடை வள நகர் பொலியப் புக்கபின்
தன் உடை மதிசுடத் தளரும் தையலுக்கு
இன் உடை அருள் மொழி இனிய செப்பினான்.
பொருள் : மின்அடு கனையிருள் நீந்தி - ஒளியையும் விழுங்கும் செறிந்த இருளை நீந்திச் சென்று; பொன்உடை வளநகர் பொலியப் புக்கபின் - தன் செல்வமுடைய வளமிகும் மனை பொலிவுற நுழைந்த பிறகு; தன்உடை மதிசுடத் தளரும் தையலுக்கு - தன் அறிவை (மகவின் பிரிவு) சுடுதலாலே தளர்ச்சியுறும் மனைவிக்கு; இன்உடை அருள்மொழி இனிய செப்பினான் - முனிவன் கூறிய அருள்மிகும் இருமொழிகளில் இனிய மொழியைக் கூறினான்.
விளக்கம் : பொலிய - துன்பம் நீங்கி இன்பம் நிகழ. இன்மொழி : புண்ணியற் பெறுதிர் (சீவக. 1130) என்று முன்னர் முனிவன் கூறியது. முனிவன் கூறியவற்றைப் பின்னர் (சீவக) 1122, 1130 ஆம் பாடல்கள் அறிவிக்கும்.
327. பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய
அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய்
திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான்
வருந்தல் நீ எம் மனை வருக என்னவே.
பொருள் : உலகினுள் பொருந்திய புகழ்கண் கூடிய - உலகில் உள்ள புகழெல்லாம் ஈண்டிய; அருந்ததி அகற்றிய ஆசு இல்கற்பினாய் - அருந்ததியை வென்ற குற்றமற்ற கற்புடையாய்; எம்மனை - எம் இல்லாளே! திருந்திய நின்மகன் தீதில் நீங்கினான் - நல்வினையாலே திருத்தமுற்ற நின்மகன் சாதலினின்று தப்பினான்; நீ வருந்தல் வருக என்ன - நீ வருந்தாமல் இங்கு வருக என்று கூற,
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். வருந்தல் : எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. திருந்திய நின்மகன் என்றது தீதின் நீங்கினான் என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. தீது - சாக்காடு. மனை - மனைவி.
328. கள் அலைத்து இழி தரும் களி கொள் கோதை தன்
உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர
வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை
வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான்.
பொருள் : கள் அலைத்து இழிதரும் களிகொள் கோதை - தேன் மலரிதழை அலைத்து வடிதற்குக் காரணமான களிப்பையுடைய மாலையாள்; தன்உள் அலைத்து எழுதரும் உவகை ஊர் தர - தன் மனத்திலே அலை பாய்ந்து உண்டாகும் களிப்பு மிகுதலால்; வள்ளலை வல்விரைந்து எய்த - தன் கணவனை மிகவும் கடிது சென்று நெருங்க; வெள்இலை வேலினான் நம்பியை விரகின் நீட்டினான் - வெள்ளிய இலைமுகமுடைய வேலினான் நம்பியைச் சூழ்ச்சி செய்து கொடுத்தான்.
விளக்கம் : இது மக வழியின் வாழேன் (சீவக. 1124) என்றவள் உயிரையும் மேற்பொருளையுங் கொடுத்தலின் வள்ளல் என்றார். விரகு: விசயை அணிந்ததிலகத்தை மாற்றியும் மோதிரத்தை மறைத்தும் தன் மகனென நம்பும் வகையிற் கொடுத்தல்.
329. சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம்
விரிமுக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன
எரிமுக நித்திலம் ஏந்திச் சேந்த போல்
கரிமுக முலையினார் காய் பொன் சிந்தினார்.
பொருள் : சுரிமுக வலம்புரி துவைத்த - (அப்போது) சுரித்த முகமுடைய வலம்புரிகள் முழங்கின; தூரியம் விரிமுக விசும்புஉற வாய்விட்டு ஆர்த்தன - நால்வகை இசைக்கருவிகளும் விரிவான வான்நிறைய ஆரவாரித்தன; எரிமுக நித்திலம் ஏந்திச் சேந்தபோல் - ஒளிவிடும் முத்துக்கள் அணிந்ததாற் கறுத்தது போன்ற; கரிமுக முலையினார் காய்பொன் சிந்தினார் - கரிய கண்களையுடைய முலையினார் மாசற்ற பொன்னை வறியவர் கொள்ள வழங்கினர்.
விளக்கம் : சுரிமுகம் - சுருளுடைய வாய். துவைத்த : பலவறி சொல். கரிமுகம் - கரிந்தமுகம். மிகுதியாக வழங்கினார் என்பார், சிந்தினார் என்றார். காய்பொன் : வினைத்தொகை.
330. அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து
எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான்
கழிபெரும் காதலான் கந்து நாமன் என்று
உழிதரு பெருநிதி உவப்ப நல்கினான்.
பொருள் : அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து - (அரசன் இறந்ததால்) அழுகுரல் கலந்தொலித்த துன்பக் காட்சியை உடைய கடைத்தெருவிலே; கந்துநாமன் கழிபெருங் காதலான் - கந்துக்கடன் (எம்மிடம் கொண்ட) நனிமிகு காதலினால்; எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான் என்று - வளரும் உறவாக எம்மை விரும்பி எம் அரசை விரும்பினான் என்று எண்ணி; உவப்ப உழிதரு பெருநிதி நல்கினான் - அவன் மனம் நிறைய நிலையற்றுச் சுழலும் பெருஞ் செல்வத்தை வழங்கினான்.
விளக்கம் : எழுகிளை மகிழ்ந்து - எழுபிறப்பும் எம்மைக் கிளையாக விரும்பி என்றுமாம்.
331. திருமகன் பெற்று எனச் செம் பொன் குன்று எனப்
பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை
இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம்
செருநிலம் பயப்பு உறச் செல்வன் செல்லுமே.
பொருள் : திருமகன் பெற்றென - திருமகனை (வளர்க்கும் பேறு) பெற்றதனால்; செம்பொன் குன்று எனப் பெருநல நிதி தலைதிறந்து - பொன்மலையென இருந்த பெருகிய நல்ல நிதியறையைத் திறந்து; பீடுஉடை இருநிலத்து இரவலர்க்கு ஆர்த்தி - பெருமையுடைய நிலவுலகில் இரவலர்க்கு நிறைய நல்கி; இன்னணம் செருநிலம் பயப்புறச் செல்வன் செல்லும் - இவ்வாறு, அம்மகன் போரிலே தன் பகையை வெல்லும் பயன்பெறக் கந்துக்கடன் கொடைக்கடன் பூண்டு ஒழுகினான்.
விளக்கம் : பெற்றென ஆர்த்தி: எனவென் எச்சம் காரணகாரியப் பொருட்டு; மருந்து தின்றெனப் பிணிநீங்கிற்று என்றாற்பொல. செருநிலம் பயப்பு உற - அரசர் பொருத இந்நகரிலேயே சீவகனும் போர்செய்து பிறந்த பயன் உறவேண்டி. ஆழியாற் குலனுணர்தலின் அதற்குரிய தொழிலே கருதினான் கந்துகனும்.
விசயை துறவு நிலையைப் பூணுதல்
332. நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர்
புல் உயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர்
கல் உயிர் காட்டில் கரப்பக் கலம் கவிழ்த்து
அல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம்.
பொருள் : நல்உயிர் நீங்கலும் - நல்லுயிராகிய சச்சந்தன் நீங்கலாலே; நல்மாண்பு உடையது ஓர் புல்உயிர் தன்னொடு நின்றுழி - நல்ல மாட்சிமையுடைய ஒரு சிற்றுயிரோடு நின்ற போது; கல்உயிர் காட்டில் புல்உயிர் கரப்ப - கல்லையுயிர்த்த சுடுகாட்டிலே அப் புல்லுயிரையும் ஊழ்வினை மறைத்தலால்; கலம் கவிழ்த்த அல்லல் - கடலில் மரக்கலத்தைக் கவிழ்த்தவன் உற்ற துன்பம்போல; உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம் - அங்ஙனம் துன்பமடைந்தவள் மேலும் அடைந்ததை முற்றும் கூறுவோம்.
விளக்கம் : கரப்ப: செய்விப்பதன் தொழில். கவிழ்த்தல்: காரணம்; அல்லல்: காரியம். காரணம் கருவியில் அடங்கும். உண்ட எச்சில் போல உற்றது என்று இறந்தகாலத்தாற் கூறினார், கதையை உட்கொண்டு. நல்லுயிர் என்றது சச்சந்தனை. புல்லுயிர் என்றது மகவினை. கல்லுயிர் காடு - கல்லை உயிர்த்த சுடுகாடு. கவிழ்த்தவல்லல் எனற்பாலது கவிழ்த்தல்லல் என நின்றது கெடுதல் விகாரம்.
333. பொறி அறு பாவையின் பொம் என விம்மி
வெறி உறு கோதை வெறு நிலம் எய்த
இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம்
நெறிமையில் கூற நினைவின் அகன்றாள்.
பொருள் : வெறிஉறு கோதை - மணங்கமழ் கோதையாள்; பொறிஅறு பாவையின் - இயந்திரம் அற்ற பதுமைபோல; விம்மிப் பொம்என வெறுநிலம் எய்த - அழுது கடுக வெறுநிலத்திலே வீழ்தலால்; எழுச்சியின் இறுமுறை எய்துவது எல்லாம் - தொடக்கத்தினும் முடிவினும் வரக்கடவதெல்லாம்; நெறிமையின் கூற - (கூனி) ஒழுங்காகக் கூறியதனாலும்; நினைவின் அகன்றாள் -(கனவின் பயனை) நினைத்தலாலும் கவலை நீங்கினாள்.
விளக்கம் : பொம்மென : விரைவுக் குறிப்பு. எய்துவது எல்லாம் என்றார், ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி, பன்மைக் காகும் இடனுமாருண்டே (தொல். எச்ச - 65) என்றதனால், நெறிமை: மை : பகுதிப் பொருள் விகுதி. கனவால் ஆக்கமும் உளதென்று கருதியே தேவியின் மனங்கொள்ளுமாறு கூனி தன் தெய்வத்தன்மையால் மேல்வருவன கூறுதலின் அதனை உட்கொண்டு நினைவின் அகன்றாள் என்க.
334. பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றிக் கேட்டே
திரு மகள் தான் இனிச் செய்வதை எல்லாம்
ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும்
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே.
பொருள் : பெருமகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றிக் கேட்டு - மாண்புறு மகனுக்கு வரும் நலனைத் திரிபின்றிக் கேட்டு; திருமகள் தான் இனிச் செய்வதை எல்லாம் - விசயை தான் இனிமேல் செய்யுங் காரியம் எல்லாம் ; ஒருமனத்து அன்னாய்! உரை எனலோடும் - ஒன்றுபட்ட உள்ளமுடைய அன்னனையே! கூறுக என்றவுடன்; தெருமரு தெய்வதம் செப்பியது - (விசயை நிலைக்குக்) கலங்கிய தெய்வம் கூறத் தொடங்கியது.
விளக்கம் : செய்வதை: வினைத்திரிசொல். கேட்டே: ஏ: ஈற்றசை. இருவர்க்கும் ஒருமனம். ஓடு: உடனிகழ்ச்சி. தெருமரு தெய்வம்: புதல்வன் அன்னப் பார்ப்பை முற்பிறப்பிற் பிரித்த தீவினையை உறுகின்ற தன்மையைத் தான் ஆராய்ந்து, அதற்கு அவனை வேறோரிடத்துப் பிரித்து விசயையைத் தனியே கொண்டுபோதற்கு வருந்துகின்ற தெய்வம். செப்பியது: கணவனை யிழந்தார்க்கு நோன்பு கடனாதலின் இயைவதொரு கருமம் விசயைக்குக் கூறியது. அது மேல்வருவது.
335. மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால்
பணி வரும் கற்பின் படை மலர்க் கண்ணாய்
துணி இருள் போர்வையில் துன்னுபு போகி
அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம்.
பொருள் : மணிவரி அறல் அறைந்த அன்ன ஐம்பால் - நீல மணியிலே வரிவரியான கருமணலைப் பதித்தாற்போன்ற ஐம்பாலையும்; பணிவரும் கற்பின் - உலகெலாம் ஏவலில் நிற்க வரும் கற்பினையும்; படைமலர்க் கண்ணாய் - படைபோலும் பூப்போலுங் கண்களையும் உடையாய்! இருட்போர்வையில் துன்னுபு போகி - இருளாகிய போர்வையிலே மறைந்து சென்று; அணிமணல் பேர்யாறு அமரிகை சொர்வாம் - அழகிய மணலையுடைய பேராறாகிய அமரிகையை அடைவோம், துணி - இதனை உறுதிகொள்.
விளக்கம் : பகை நிலத்தை இருளிலேயே கடந்து எல்லைக்கப்பாலுள்ள அமரிகையை அடைவதற்குத் துணிவுகொள் என்றாள், கடத்தற்குரிய விரைவை உட்கொண்டு. ஐம்பால்: ஐந்து வகையாக முடிக்குங் கூந்தல். படை = ஆயுதம். நீலமணியின்கண் பதித்தாற்போன்ற வரியாகிய அறலையுடைய ஐம்பால் என்பதே பொருந்தும். அறல் - அற்றற்றுக் கிடக்கும் வரிகள் என்க. வரியறல்: பண்புத்தொகை. பணிவரும் என்றற்குப் பலரும் தொழுதல் வருதற்குக் காரணமான கற்பெனினுமாம். என்னை? பத்தினிப் பெண்டிரை யாரும் தொழுதல் உண்மையின் என்க. துணி: ஏவல் வினை. அமரிகைப் பேர்யாற்றணி மணல் என மாறுக.
336. அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால்
குமரிக் கொடி மதில் கோபுர மூதூர்
தமர் இயல் ஓம்பும் தரணி திலகம்
நமர் அது மற்றது நண்ணலம் ஆகி.
பொருள் : அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால் - அந்த அமரிகையிலிருந்து ஐம்பது யோசனை தொலைவு சென்றால்; கொடிக்குமரி மதில் கோபுரம் மூதூர் தமர்இயல் ஓம்பும் தரணி திலகம் நமரது - கொடியையுடைய அழியா மதிலையுங் கோபுரத்தையுமுடைய பழம்பதியாகிய, உலகினை யெல்லாம் தமராம் தன்மையாற் காக்கின்ற தரணி திலகமென்பது நம்மவர் ஊர்; அது நண்ணலம் ஆகி - அந்நகரை அடையேமாகி,
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். ஓசனை : வடசொற் சிதைவு. விசயை நோற்பதற்குத் தாபதப் பள்ளி வேண்டுதலானும், அரசனை அமரில் நீத்துப் புதல்வனைப் புறங்காட்டில் விட்டுத் தமரிடஞ் சேரல் ஆகாமையானும், கூனி, நண்ணலமாகி என்றாள். குமரிமதில் கொடிக்கோபுரம் என நிரல் நிரலாக்கினுமாம். குமரி - கன்னிமை; அஃதாவது அழியாமை. தமரியலான் ஓம்பும் என்க. தமரியல் - கேண்மை. நண்ணலம் : தன்மைப் பன்மை.
337. வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்
கண்டார் மனம் கவர் காவும் கஞலிய
தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி ஒன்று
உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள்.
பொருள் : வண்டுஆர் குவளைய வாவியும் பொய்கையும் கண்டார் மனம்கவர் காகவும் கஞலிய - வண்டுகள் நிறைந்த குவளை மலர்களையுடைய ஓடையும் பொய்கையும் கண்டவர் உளத்தைக் கவரும் பொழிலும் நெருங்கிய; தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி ஒன்று உண்டு - தண்டகாரணியம் என்கிற வனத்திலே ஒரு தாபதப்பள்ளி உளது; ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள் - அவ்வனத்தே அப் பள்ளியில் (அத் தாபதருடன்) உறைவோம் என்று கூறினாள்.
விளக்கம் : வாவி - யாற்றில் உள்ள ஓடை. பொய்கை- மானிடர் ஆக்காத நீர்நிலை. (ஆங்கு: உவம வுருபு என்றும், அத்தாபதர் உறைவதுபோல என அதற்குப் பொருளும் (நச்சினார்க்கினியர்கூறுவர்.) தண்டாரணியம்: தண்டகாரணியம் என்பதன் மரூஉ. தண்டகர் என்னும் ஒரு சாதியினர் உறைதலான் அப்பெயர் பெற்றதென்ப. உறைகுவம்: தன்மைப்பன்மை.
338. பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற
மருள் உடை மாதர் மதித்தனள் ஆகி
அருள் உடை மாதவர் அத்திசை முன்னி
இருள் இடை மின்னின் இலங்கு இழை சென்றாள்.
பொருள் : பொருள் உடை வாய்மொழி போற்றினள் கூற - (கூனி) பொருளுற்ற உண்மை மொழியை விருப்பத்துடன் கூற; மருள்உடை மாதர் மதித்தனள் ஆகி - மயக்கம் நீங்கிய விசயை அம்மொழியைத் தன் கருத்துக்குத் தக்கது என ஒப்பியவளாய், அருளுடை மாதவர் அத்திசை முன்னி - அருளுடைய மாதவர் வாழும் அத்திசையினைக் குறிப்பிட்டு; இருளிடை மின்னின் இலங்கிழை சென்றாள் - இருளின்ஊடே மின்னுக் கொடிபோல விளங்கும் அணிகலனையுடையாள் சென்றாள்.
விளக்கம் : கேளிரைக் கண்டால் துன்பம் மிகும் என்றும் நோற்பது கருதியதாலும் யான் கருதியதையே கூறினாள் என்னாது அவளே கூறினாளாகக் கொண்டமை தோன்ற, மதித்தனளாகி என்றார். (மகப் பெற்ற புனிறு தீராது (மணி.7,75) இரவிற் சேற லரிதென்று கருதித் தெய்வதம் தன் தெய்வத்தன்மையாற் கொண்டு போகின்ற விரைவு தோன்ற, மின்னின் என்றார் என்பர் நச்சினார்க்கினியர்.) விசையையியல்புக்கு மிகவும் பொருத்தமான மொழியாகலின் பொருளுடை மொழி என்றும், அவட்குப் பெரிதும் நன்மை விளைப்பதாகலின் வாய்மொழி என்றும் கூறினர். உடைமாதர்: வினைத்தொகை. மாதவர் உறையும் அத்திசை என்றொரு சொல் வருவித்துக்கொள்க.
339. உருவ மா மதி வாள் முகத்து ஓடிய
இருவிலும் எறி மா மகரக் குழைத்
திருவிலும் இவை தேமொழி மாதரைப்
பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே.
பொருள் : உருவமாமதி வாண்முகத்து ஓடிய இருவிலும் - (முன்னர்) அழகிய நிறைமதி போலும் ஒளிதந்த முகத்தில் இப்பொழுது அது நீங்கியதால் வருத்தம் நிறைந்த கரிய ஒளியும்; மாமகரக் குழைஎறி திருவிலும் - பெரிய மகரக்குழை வீசும் பல்நிற ஒளியும்; இவை தேன்மொழி மாதரைப் பொருஇல் நீள் அதர் போக்குவ போன்ற -(ஆகிய) இவைகள் இன்மொழி விசயையை வெம்மையில் ஒப்பு இல்லாத வழியிலே செலுத்துவ போன்றன.
விளக்கம் : இரு வில் - கரிய வொளி இருங்கண் யானை (பதிற்) என்பது போல. அதர் போக்குவ: விளக்கு (இதனை ஆகுபெயரென்பர் நச்சி.) உருவமாமதி - அழகிய முழுத்திங்கள். திருவிலும் ஆகிய இவை என்க. பொருவில் என்பதற்கு நெடுமையால் ஒப்பற்ற என்பது சிறப்பு. என்னை? இரவில் போவார்க்கு வெப்பங் கூறவேண்டாமையின் என்க. போக்குவ: பலவறி சொல்; இது காரிய ஆகுபெயர். விளக்கு என்னும் பொருட்டென்க.
340. சிலம்பு இரங்கிப் போற்று இசைப்பத்
திருவில் கை போய் மெய் காப்ப
இலங்கு பொன் கிண்கிணியும் கலையும்
ஓங்க எறிவேல் கண்
மலங்க மணி மலர்ந்த பவளக்
கொம்பு முழு மெய்யும்
சிலம்பி வலந்தது போல்
போர்வை போர்த்துச் செல்லுற்றாள்.
பொருள் : சிலம்பு இரங்கிப் போற்று இசைப்ப - (விசையை அணிந்த) சிலம்புகள் இரங்கி ஓம்படை கூற; திருவில் கைபோய் மெய்காப்ப - (குழை வீசிய) அழகிய ஒளி பக்கத்தே சென்று மெய் காக்க; இலங்குபொன் கிண்கிணியும் கலையும் ஏங்க - விளங்கும் பொன்னாலான கிண்கிணியும் மேகலையும் ஏங்க; எறி வேல் கண்மலங்க - எறியும் வேலனைய கண்கள் அஞ்சிச் சுழல; மணிமலர்ந்த பவளக்கொம்பு - மணியை மலர்ந்த பவளக்கொடி; முழுமெய்யும் சிலம்பி வலந்ததுபோல் - உடம்பெல்லாம் சிலம்பி நூலாற் சூழ்ந்தபோல்; போர்வை போர்த்துச் செல்லுற்றாள் - போர்வையாற் போர்த்துக்கொண்டு செல்லலுற்றாள்.
விளக்கம் : வலம்புரி சலஞ்சலம் வளைஇய தொத்தவளாதலின் (சீவக - 184) மணியைப் பூத்ததொரு பவளக் கொம்பைச் சிலம்பி சூழ்ந்தது போல மெய்ம் முழுதும் போர்வையாலே மறைத்துச் செல்லலுற்றாள். தானுங் கூனியுமே செல்வதால் அஞ்சி மலங்கினாள்.
341. பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று
அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்ட அன்ன அரும் காட்டுள்
குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா
வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே.
பொருள் : பஞ்சிஅடர் அனிச்சம் நெருஞ்சியீன்ற பழம் என்று - பஞ்சித்திரளையும் அனிச்ச மலரையும் நெருஞ்சிப்பழம் என்று; அஞ்சும் மலர் அடிகள் - அஞ்சும் மலரனைய அடிகள்; அரம்கண்ட அன்ன அருங்காட்டுள் - வாளரம் அனைய (பரல்கள் நிறைந்த) அரிய காட்டின் வழியில்; குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா - குந்திக் குந்தி இளைத் திளைத்துக் கால்கள் குருதி காலப் பெருமூச்செறிந்து; வஞ்சி இடைநுடங்க - வஞ்சிக் கொடியனைய இடை வாட; மயில் கைவீசி நடந்தது - விசையையாகிய மயில் கையை வீசி நடந்தது.
விளக்கம் : ஏ: ஈற்றசை: (நச்சினார்க்கினியர் தேற்றம் என்பர்.) மற்றும் அவர், குருதிகான்று குஞ்சித்து அசைந்தசைந்து செல்வதைப் பஞ்சியடரையும் அனிச்சத்தையுங் கண்டே என்று மாட்டேற்றுவர். மற்றும் நடந்ததே என்பதற்கு நடந்த தன்மையே என்று பொருள் கூறுவர்.) அடர் - நெருக்கம். மயில் என்றதற்கேற்ப நடந்தது என்றார்.
342. தடங் கொள் தாமரைத் தாது உறை தேவியும்
குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல்
கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல்
இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே.
பொருள் : தடம்கொள் தாமரைத் தாதுஉறை தேவியும் - அகன்ற தாமரை மலரில் இருக்கும் திருவனைய விசயையும்; குடங்கைபோல் உண்கண் கூனியும் - உள்ளங்கை போன்ற மை தீட்டிய கண்களையுடைய கூனியும்; கூர்பரல் கடங்களும் மலையும் கடந்து - கூரிய பருக்கைக் கற்கள் நிறைந்த காட்டு நெறியையும் மலையையுங் கடந்து; ஆர்புனல் இடம்கொள் யாற்றகம் எய்தினர் - நிறைந்த நீர்அறாத அமரிகை யாற்றின் இடைக்குறையை அடைந்தனர்.
விளக்கம் : என்ப, ஏ: அசைகள். (நச்சினார்க்கினியர், 338-முதல் 342-வரை ஐந்து செய்யுட்களையும் ஒரு தொடராக்கி மாட்டேற்றிக் கூறும் முடிபு: கூனி மொழிகளை விரும்பினளாய்க் கூற, அதனை மாதர் மதித்தனளாய், மாதவரிருக்கின்ற அத்திசையைக் கருதிப் போர்வை போர்த்து அருங்காட்டிலே இடை நுடங்கக்கையைவீசி, நடைக்கு வருந்தாததொரு மயில் நடந்த தன்மையே மலரடிகளாலே செல்லலுற்றாள்; அப்பொழுது, இருவிலும் திருவிலும் மாதரை இரவிடை வழிபோக்கும் விளக்குப் போன்றன. அவ்விளக்கிலே கூனியொழிய வேறோருவ ரின்மையின், கண் அலமருதலாற் சிலம்பு இசைப்பத் திருவிற் காப்பக் கிண்கிணியும் கலையும் ஏங்கக் கடங்களும் மலையுங் கடந்து, அந்த இலங்கிழை மின்போலச் சென்றாள்; இங்ஙனஞ் சென்ற தாமரைத் தாதுறை தேவியும் அவளுக்கு ஏற்பச் சென்ற கூனியும் பின்னர் யாற்றிடைக் குறையைச் சேர்ந்தார் என்க.
343. எல்லை எய்திய ஆயிரச் செங்கதிர்
மல்லல் மாக் கடல் தோன்றலும் வைகிருள்
தொல்லை நல்வினை முற்படத் தோன்றிய
அல்லல் வெவ்வினை போல அகன்றதே.
பொருள் : எல்லை எய்திய ஆயிரச் செங்கதிர் - (இரவின்) முடிவில் தோன்றிய ஞாயிற்றின் எண்ணற்ற செங்கதிர்கள்; மல்லல் மாக்கடல் தோன்றலும் - வளமிகும் பெருங்கடலில் காண் குற்றதும்; வைகுஇருள் -(அதுவரை) குடியிருந்த இருள்; தொல்லை நல்வினை முற்படத் தோன்றிய அல்லல் வெவ்வினை போல பழைமையான நல்வினை வந்த அளவிலே முன்தோன்றியிருந்த துன்பந்தருந் தீவினை போமாறுபோல; அகன்றது - நீங்கியது.
விளக்கம் : மல்லல்: மணி முதலியன. (எய்திய எல்லை என்று மாற்றி அவர்கள் ஆங்குச் சென்ற அளவிலே என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.) எல்லை எய்திய என்றற்கு உலகம் பகற்பொழுதை எய்துதற்பொருட்டெனினுமாம். தொல்லை நல்வினை - பழைய நல்வினை. விசயையின் தீவினை நுகர்ச்சிக்கு இரக்கமுடையராய் இதுகாறும் ஓதிவந்த நூலாசிரியர் இவ்விடியல் அவள் தீவினைக்கும் ஒரு விடியலாதல் கருதி அத் தீவினையையே இருட்கும் இனி அவட்கெய்தும் நல்வினையையே ஞாயிற்றொளிக்கும் உவமையாக எடுத்தமை நினைந் தின்புறற்பாற்று.
344. நுணங்கு நுண்கொடி மின் ஓர் மழை மிசை
மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து
அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள் அரோ
நிணம் கொள் வைந்நுதி வேல் நெடும் கண்ணினாள்.
பொருள் : நிணம்கொள் வைநுதிவேல் நெடுங் கண்ணினாள் - ஊன்பொதிந்த கூரிய நுனியையுடைய வேலனைய நீண்ட கண்ணாள்; மணம்கொள் வார்பொழில் - (ஆங்கு) மணமுறும் பெரிய பொழில் ஒன்றில்; நுணங்குநுண் கொடிமின் ஓர் மழைமிசை வந்து கிடந்தது ஒத்து - மிகவும் நுண்ணிய ஒழுங்குற்ற மின் ஒரு முகிலின்மேல் வந்து கிடந்தாற்போல; அணங்கும் நுண் துகில்மேல் அசைந்தாள் - இழை தெரியாமல் வருந்தும் மெல்லிய ஆடையின்மேற் கிடந்தாள்.
விளக்கம் : நுணங்கு நுண்கொடிமின் - மிக மிக நுணங்கிய கொடி மின்னல். இது விசயைக்குவமை. பொழில் அல்லது அப்பொழிலிடத்து மணற்பரப்பு முகிலுக்கு உவமை என்க. அணங்கு நுண்டுகில் - காண்போர் கண்ணை வருத்தும் நுண்ணிழையையுடைய துகில் என்க. வைந்நுதி - கூர்த்த நுனி.
345. வைகிற்று எம் அனை வாழிய போழ்து எனக்
கையினால் அடி தைவரக் கண் மலர்ந்து
ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி
மொய் கொள் பூமி முளைப்பது போலவே.
பொருள் : எம்அனை வாழிய போழ்து வைகிற்று என - (அப்போது) எம்அன்னாய்! வாழ்க! இரவு கழிந்தது என்று கூறி; கையினான் அடி தைவர - கையினால் அவள் அடியைக் கூனி தடவ; ஐயவோ என்று கண் மலர்ந்து - ஐயவோ! எனக் கூறியவாறு கண் விழித்து; ஆய்மதி மொய்கொள் பூமி முளைப்பது போல- (ஒளி) சுருங்கிய மதி அணுச்செறிவு கொண்ட நிலமிசைத் தோன்றுவதுபோல; எழுந்தனள் - எழுந்தாள்.
விளக்கம் : தெய்வம் கூனி வடிவாய் நிற்றலின் தன் தொழிலுக்குத் தக்கவாறு அடி தைவந்தது. தனக்குத் துன்பம் நேர்ந்த பிறகு இப்போதுதான் துயின்றாளாதலின், துயிலும்போது கனவில் தன் வாழ்வின் அலங்கோலத்தைக் கண்டிருப்பாளாதலின் ஐயவோ என இரங்கினாள். மற்றும் அரசனைக் கனவிற் கண்டு விழித்துப் பார்க்கையில் நனவாகாமையின் ஐயவோ என்றாள் எனலுமாம். ஐய! என்பது அரசனை விளிப்பதும், ஓ: இரக்கக் குறிப்பும் ஆகும். ஆய்மதி - ஒளியற்ற மதி. அதுவும் விடியலில் தோன்றும். மொய்-செறிவு. ஆய்மதி தோன்றல் முகமெடுத்தற்கு உவமை. அன்னை, ஈண்டு முறைப் பெயரன்மையின். அன்னை யென்னை (தொல் -பொருளியல்-52) என்பதாற் கொள்க.
346. தூவி அம்சிறை அன்னமும் தோகையும்
மேவி மென் புனம் மான் இனம் ஆதியா
நாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டு
ஆவித்து ஆற்று கிலாது அழுதிட்டவே.
பொருள் : தூவி அம்சிறை அன்னமும் தோகையும் -(அப்போது) தூவி பொருந்திய அழகிய சிறகினையுடைய அன்னமும் மயிலும்; புனம்மென் மாளினம் ஆதியா - காட்டில் உள்ள மென்மைப் பண்புடைய மான்குழு ஆதியா - காட்டில் உள்ள மென்மைப் பண்புடைய மான்குழு முதலாக; மேவி நாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டு - ஆங்கு வந்து புழுகு கமழும் அழகிய (விசயையின்) மெய்யைப் பார்த்துப் பார்த்து; ஆவித்து ஆற்றுகிலாது அழுதிட்டவே-கொட்டாவிவிட்டு (இவள் நிலைக்கு) ஆற்றாமல் அழுதிட்டனவே.
விளக்கம் : ஏ: தேற்றம். மயில் முதலிய பறவைகளும் மானினமும் தமக்கியல்பாக நிகழ்த்தியகொட்டாவி கொள்ளுதலையும் ஆரவாரித்தலையும் விசயையின் நிலைக்கு இரங்கியனவாகத் தம் குறிப்பை ஏற்றினார். அன்னம் முதலியவை காலையிற் கொட்டாவி கோடல் இயல்பு எனத் தெரிகிறது. நச்சினார்க்கினியர், தமக்கு இவை இயல்பாகக் காலையிற் செய்தன அல்ல என்க என்பர்.
347. கொம்மை வெம்முலைப் போதின் கொடி அனாள்
உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால்
இம்மை இவ் இடர் உற்றனள் எய்தினாள்
செம்மை மாதவர் செய் தவப் பள்ளியே.
பொருள் : கொம்மை வெம்முலைப் போதின் கொடிஅனாள் - பருத்த பால்சுரக்க வெவ்விதாகிய முலைகளையுடைய மலர் நிறைந்த கொடிபோன்ற விசயை; உம்மை நின்றதொர் ஊழ்வினை உண்மையால் - முற்பிறப்பிற் செய்த தீவினை ஒன்று இருந்ததால்; இம்மை இவ்இடர் உற்றனள் - இப்பிறப்பிலே இத்தகைய துயருற்றனள்; செம்மை மாதவர் செய்தவப் பள்ளி எய்தினாள் - (இனி, அது நீங்குதலால்) செவ்வையான மாதவர் தவம்புரியும் பள்ளியைச் சேர்ந்தாள்.
விளக்கம் : போதிற்கொடி : திருமகள். உம்மை - முற்பிறப்பு. எய்தினாள் என்றது நல்வினை வந்து தலைப்படுதலானே எய்தினாள் என்பதுபட நின்றது.
348. வாள் உறை நெடுங் கணாளை
மாதவ மகளிர் எல்லாம்
தோள் உறப் புல்லுவார் போல்
தொக்கு எதிர் கொண்டு புக்குத்
தாள் உறு வருத்தம் ஓம்பித்
தவ நெறிப் படுக்கல் உற்று
நாள் உறத் திங்கள் ஊர
நல் அணி நீக்குகின்றார்.
பொருள் : மாதவ மகளிரெல்லாம் தொக்கு - மாதவம் புரியும் பெண்டிரெல்லோரும் (விசயை வருவது கண்டு) ஒன்று படக் குழுமி; வாள்உறை நெடுங்கணாளைத் தோளுறப் புல்லுவார் போல் எதிர்கொண்டு புக்கு -(முன்) வாளின் தன்மை தங்கிய கண்ணாளைத் தோளுறத் தழுவுவார்போல் எதிர்கொண்டு சென்று; தாள்உறு வருத்தம் ஓம்பி -(நடையினால்) அடிகள் அடைந்த வருத்தத்தை நீக்கி; தவநெறிப் படுக்கல் உற்று -(அவள் கருத்து உணர்ந்து) தவநெறியிலே செலுத்தத் தொடங்கி; திங்கள் ஊரநாள் உற நல்லணி நீக்குகின்றார் - நாள்தொறும் திங்கள் ஒரு கலை மேற்கொள்ளும் வளர்பிறையிலே நல்லநாள் வந்தபோது அழகிய அணிகளை நீக்குவாராயினர்.
விளக்கம் : முன்னர் ஊடலால் தன் கணவனுக்கு வருத்த மூட்டிய கண்கள் என்பதற்கு, வாளுறை நெடுங்கணாள் என்றார். அங்ஙனமின்றித் தவநெறி விழைந்து வரும் இவள் கண்களைப் பிறர்க்கு வருத்த மூட்டுங் கண்கள் என்றல் பொருந்தாமை உணர்க. மாதவஞ் செய்வார் பிறரைத் தழுவலாகாமையின் புல்லுவார் போல் என்றார். விசயை கொண்ட தவநெறி கணவனை யிழந்ததற்கும் மகன் ஆக்கத்திற்கும் பொருந்தியதாகும். விசயை நீக்குவதை, ஏவினாரைக் கருத்தாவாகக் கொண்டு அவர்மேல் ஏற்றினார். அரசரெடுத்த தேவகுலம் போல.
349. திருந்து தகரச் செந் நெருப்பில்
தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும்
கருங் காழ் அகிலின் நறும் புகையில்
கழுமிக் கோதை கண் படுக்கும்
திருந்து நானக் குழல் புலம்பத்
தேனும் வண்டும் இசைப் புலம்ப
அரும் பொன் மாலை அலங்கலோடு
ஆரம் புலம்ப அகற்றினாள்.
பொருள் : திருந்து தகரச் செந்நெருப்பில் தேன்தோய்த்து அமிர்தம்கொள் உயிர்க்கும் கருங்காழ் அகிலின் நறும்புகையில் கழுமி - நல்ல தகர விறகால் ஆக்கிய செந்தீயில் தேனில் தோய்ப்பதால் இனிய மணம்கமழும் கரிய அகிற்கட்டையால் எழுந்த இனிய புகையில் மயங்கி; கோதை கண்படுக்கும் திருந்து நானக்குழல் புலம்ப - மலர்மாலை துயிலும் நல்ல புகுகுகலந்த கூந்தல் வருந்துமாறும்; தேனும் வண்டும் இசைப் புலம்ப - தேனினமும் வண்டினமும் மலரின்மையின் இசைக்கு வருந்தவும்; அரும்பொன்மாலை அலங்கலோடு ஆரம்புலம்ப - அரிய பொன்அரி மாலையும் நெற்றி மாலையும் தலைக்கோலமாகிய முத்துமாலையும் வருந்த (இவற்றைக் குழலிலிருந்து) நீக்கினாள்.
விளக்கம் : புலம்ப -தனிப்ப என்றுமாம். தகரம்: ஒருவகை மணமரம். கண்படுத்தலாவது பொருந்தியிருத்தல். தேனும் வண்டும் இனங்கள். பொன்னரிமாலை - பொன்னை அரிந்து தொடுத்த மாலை.
350. திங்கள் உகிரில் சொலிப்பது போல்
திலகம் விரலில் தான் நீக்கிப்
பைம்பொன் மகர குண்டலமும்
பாவை கழுத்தின் அணிகலமும்
வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி
வேல் கண் பாவை பகை ஆய
அம் கண் முலையின் அணி முத்தும்
அரும்பொன் பூணும் அகற்றினாள்.
பொருள் : திங்கள் உகிரின் சொலிப்பதுபோல் திலகம் விரலின் தான்நீக்கி - திங்களை நகத்தால் உரிப்பதுபோல நெற்றித் திலகத்தை விரலினாலே போக்கி; பைம்பொன் மகரகுண்டலமும் - பசிய பொன்னாலான மகர குண்டலத்தையும்; கழுத்தின் அணி கலமும் - கழுத்தணிகளையும்; வெங்கண் வேந்தற்கு அமிர்தாகி வேற்கண் பாவை பகையாய அங்கண் முலையின் அணிமுத்தும் - விருப்பம் ஊட்டும் கண்களையுடைய வேந்தனுக்கு அமிர்தமாகி, வேற்கண்ணாளாகிய பாவை போல்வாளுக்குப் பகையாக அமைந்த அழகிய கருங்கண்களையுடைய முலைகளின்மேல் அணிந்த முத்துக்களையும்; அரும்பொன் பூணும் - அரிய பொற்கலன்களையும்; பாவை அகற்றினாள் - விசயை நீக்கினாள்.
விளக்கம் : இன்பத்தால் அவனைக் கெடுத்தலின் தனக்குப் பகையாயின முலைகள். உகிரிற் சிதைப்பது போல் என்றும்பாடம். திங்கள்: திலகத்திற்கு உவமை. உகிர் - நகம். சொலித்தல் - உரித்தல்; மாசில் காம்பு சொலித்தன்ன எனவரும் சிறுபாணாற்றுப்படையினும் அஃது அப் பொருட்டாதல் உணர்க.
351. பஞ்சி அனைய வேய் மென் தோள்
பகுவாய் மகரம் கான்றிட்ட
துஞ்சாக் கதிர் கொள் துணை முத்தம்
தொழுதேன் உம்மை எனத் துறந்து
அஞ்சி வருத்து நுசுப்பினாள்
வளை கை உடைத்து மணிக் காந்தள்
அஞ்சச் சிவந்த மெல் விரல் சூழ்
அரும் பொன் ஆழி அகற்றினாள்.
பொருள் : அஞ்சி வருந்தும் நுசுப்பினாள் - (மேலுள்ள பொறையைச் சுமக்க) அச்சமுற்று வருந்தும் இடையினாள்; பஞ்சிஅனைய வேய் மென்தோள் - பஞ்சிபோன்ற மென்மை பொருந்திய வேயனைய தோள்களில் உள்ள; பகுவாய் மகரம் கான்றிட்ட துஞ்சாக் கதிர்கொள் துணைமுத்தம் - திறந்த வாயினையுடைய மகரமீன் உமிழ்ந்த மாறாத கதிர்களையுடைய பலவடம் சேர்ந்த முத்துக்களை; உம்மைத் தொழுதேன் எனத் துறந்து - உங்களை வணங்கினேன் என்று கூறி நீக்கி; வளை கை உடைத்து -வளையல்களைக் கையினின்றும் உடைத்து; மணிக்காந்தள் அஞ்சச் சிவந்த மெல்விரல்சூழ் அரும்பொன் ஆழி அகற்றினாள் - அழகிய காந்தளும் அஞ்சுமாறு சிவந்த மெல்லிய விரல்களிற் சூழ்ந்திருந்த அரிய பொன் மோதிரத்தை நீக்கினாள்.
விளக்கம் : மகரமீன் முத்தை உமிழ்வது போற் செய்திருப்பது தோளணி. அரசன் நீங்காமல் தழுவுதற்குக் காரணமாய்த் தன்னைக் கெடுத்தலின், தொழுதேன் என்று இகழ்ந்தாள். வளை கழற்றலரி தாகையால் உடைத்தாள். மணி - அழகு. முத்தம்: அண்மைவிளியுமாம்.
352. பூப் பெய் செம் பொன் கோடிகமும்
பொன் ஆர் ஆல வட்டமும்
ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும்
அரவின் பையும் அடும் அல்குல்
வீக்கி மின்னும் கலை எல்லாம்
வேந்தன் போகி அரம்பையரை
நோக்கி நும்மை நோக்கான் நீர்
நோவது ஒழிமின் எனத் துறந்தாள்.
பொருள் : வேந்தன்போகி அரம்பையரை நோக்கி நும்மை நோக்கான் - அரசன் வானுலகு சென்றதால் இனி வான்மகளிரை நோக்குதலன்றி நும்மாலாய பயனைக் கொள்ளான்; நீர் நோவாது ஒழிமின்என - நீர் இனி வருந்தாமல் நீங்குமின் என்று கூறி; பூபெய் செம்பொன் கோடிகமும் - பூவை வைக்கும் பொன்னாலான பூந்தட்டையும்; பொன்ஆர் ஆலவட்டமும் - பொன்னாலான ஆலவட்டத்தையும்; ஆக்கும் மணிசெய் தேர்த்தட்டும் - மணியாலாக்கி அமைத்த தேர்த்தட்டையும்; அரவின் பையும் - பாம்பின் படத்தையும்; அடும் அல்குல் வீக்கி மின்னும் கலையெல்லாம் துறந்தாள் - வென்ற அல்குலிலே அணிந்து மின்னும் மேகலைகளெல்லாவற்றையும் நீக்கினாள்.
விளக்கம் : அரம்பையரை மெய்யுறு புணர்ச்சியின்றி நோக்கால் நுகர்தல் இயல்பாதலால், நோக்கி என்றார். எனினும் நும்மை நோக்கான் என்பதற்கு, நும்மாலான பயனைக் கொள்ளான் என்றே பொருள் கொள்க. இது கண்ணால் நோக்காமல் மனத்தால் நோக்கும், நோக்கல் நோக்கம் (தொல் - வேற்றுமை மயங்கு - 10) எனப்படும்.
353. பிடிக்கை போலும் திரள் குறங்கின்
அணியும் நீக்கிப் பிணை அன்னாள்
அடிக் கிண்கிணியும் அம் சிலம்பும்
விரல் மோதிரத்தோடு அகற்றிய பின்
கொடிப் பூத்து உதிர்ந்த தோற்றம் போல்
கொள்ளத் தோன்றி அணங்கு அலற
உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம்
உரவோன் சிறுவன் உயர்க எனவே.
பொருள் : பிணை அன்னாள் - மார்பிணை போன்ற விசயை; பிடி கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கி - பிடியின் பைபோலத் திரண்ட துடையின்மேல் அணிந்த குறங்குசெறி என்னும் அணியையும் நீக்கி; அடி கிண் கிணியும் அம்சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றியபின் - அடியில் அணிந்த கிண் கிணியையும் சிலம்பையும் காலாழியையும் நீக்கிய பிறகு; கொடி பூந்து உதிர்ந்த தோற்றம்போல் கொள்ளத் தோன்றி - கொடியொன்று மலர்ந்து உதிர்ந்த காட்சியைப்போல் தோன்றி; அணங்கு அலற -(தன்னுடன் வந்த) தெய்வம் வாய்விட்டழ; உரவோன் சிறுவன் உயர்கஎன - அறிவுடையோனாகிய மகன் மேம்படுக என்று; கல்தோய் நுண்கலிங்கம் உடுத்தாள் - காவி தோய்த்த நுண்ணிய ஆடையை உடுத்தாள்.
விளக்கம் : கொடிப்பூத்து உதிர்ந்த : ஒற்றுமையாற் சினைவினை முதன்மேல் ஏற்றினார். கல் - காவிக்கல். உயர்க என்றார் நோன்பின் பயன் அதுவாகலின். உரவோன் சிறுவன் என்றாள், பகையை வெல்லப் பிறந்ததால்.
354. பால் உடை அமிர்தம் பைம் பொன்
கலத்திடைப் பாவை அன்ன
நூல் அடு நுசுப்பின் நல்லார்
ஏந்தவும் நேர்ந்து நோக்காச்
சேல் அடு கண்ணி காந்தள்
திருமணித் துடுப்பு முன் கை
வால் அடகு அருளிச் செய்ய
வனத்து உறை தெய்வம் ஆனாள்.
பொருள் : பாவைஅன்ன நூல்அடும் நுசுப்பின் நல்லார் - பாவை யனையரான, நூலனைய நுண்ணிடை மகளிர்; பால்உடை அமிர்தம் பைம்பொன் கலத்திடை ஏந்தவும் - பால்கலந்த சோற்றைப் புதிய பொற்கலத்திலே எடுத்து நிற்பினும்; நேர்ந்து நோக்காச் சேல்அடு கண்ணி - விரும்பி நோக்காத சேலினை வென்ற கண்ணாள்; திருமணிக் காந்தள் துடுப்பு முன்கை வால் அடகு அருளிச்செய்ய - முன்பு அழகிய மணிபுனைந்த காந்தளின் துடுப்புப்போன்ற தன் முன்கையே தூய இலைக்கறியை இரங்கி நல்க; வனத்துஉறை தெய்வம் ஆனாள் (முன்னர் இல்லுறை தெய்வமானவள்) காட்டில் வாழும் தெய்வமாக ஆயினாள்.
விளக்கம் : பைம்பொற் கலத்திடைப் பாலடிசிலைப் பணிமகளிர் ஏந்தவும் நேர்ந்து நோக்கா நிலை செல்வச் சிறப்பைக் காட்டுகிறது. இப்போது தன் கையே இலைக்கறியை அருளிச் செய்ய இருத்தல் வறுமைக் கொடுமையைக் காட்டுகிறது. எனவே, செல்வம் நிலையாமை ஈங்குக் கூறப்படுகிறது. ஆனால், நச்சினார்க்கினியர், உணவு ஒழிந்து நுகர்ச்சியே நிகழ்ந்தமையின் நோக்கிலள் என்பர். நுகர்ச்சியினால் மெய்சோர்ந்தால் உணவு முதலியன கொண்டு சோர்வைப் போக்க வேண்டுதலின் உணவு ஒழிந்து நுகர்ச்சி நிகழ்தல் இயல்பன்று. அமிர்தம் - அடிசிலுக்கு உவமவாகுபெயர். பாவை - கொல்லிப் பாவை. காந்தளினது திருமணித் துடுப்புப்போன்ற முன்கை என்க. அருளிச்செய்ய என்றது அருள என்னும் ஒருசொன்னீர்மைத்து. இதனை, அருளி என்றும், செய்ய என்றும் பிரித்து நச்சினார்க்கினியர் அருளி என்பதனை அருள என்று திரித்தும், செய்ய என்பதனைத் தெய்வத்திற்கு அடையாக்குவர். இங்ஙனம் செய்தலிற் போதப்பயனின்மை காண்க.
விசயையுடன் வந்த தெய்வம் விடைபெற்றுச் செல்லுதல்
355. மெல் விரல் மெலியக் கொய்த
குள நெல்லும் விளைந்த ஆம்பல்
அல்லியும் உணங்கும் முன்றில்
அணில் விளித்து இரிய ஆமான்
புல்லிய குழவித் திங்கள்
பொழி கதிர்க் குப்பை போலும்
நல் எழில் கவரி ஊட்ட
நம்பியை நினைக்கும் அன்றே.
பொருள் : மெல்விரல் மெலியக் கொய்த குள நெல்லும் - (தவமகளிர்) மென்மையான விரல்கள் வருந்தப் பறித்த குள நெல்லும்; விளைந்த ஆம்பல் அல்லியும் - முற்றிய ஆம்பலல்லியின் அரிசியும்; உணங்கும் முன்றில் - உலரும் வாயிலில்; அணில் விளித்து இரியப் புல்லிய ஆமான் குழவி - அணில் கத்திக்கொண்டோட வந்து அணைந்த காட்டுப் பசுவின் கன்றை; திங்கள் பொழி கதிர்க் குப்பை போலும் நல் எழில் கவரி ஊட்ட - திங்கள் பெய்யும் கதிர்த்திரள் போலும் நல் எழில் கவரி ஊட்ட - திங்கள் பெய்யும் கதிர்த்திரள் போலும் அழகிய மயிர்த்திரளையுடைய கவரிமான் பாலூட்ட; நம்பியை நினைக்கும் - நம்பி பிறர் பாலை உண்டு வளர்வதை விசயை நினைப்பாள்.
விளக்கம் : கவரி - கவரிமான்: சினையாகு பெயர். ஆம்பலல்லி: இரு பெயரொட்டு. அல்லி : அரிசியை உணர்த்தியதால் பொருளாகு பெயர். குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க் கொடை (தொல் - மரபு- 19) என்றதனுள், கொடை என்றதனால், ஆமான் குழவியுங் கொண்டவாறு உணர்க. (நச்சினார்க்கினியர் ஆமான் குழவியைப் புல்லிய கவரி என்று கொண்டு கூட்டுவார்.) இச்செய்யுள் திருத்தக்கமுனிவரின் தலைசிறந்த நல்லிசைப் புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும் பெருமையுடைத்தாதலுணர்க. இக்கருத்தின் அழகினைக் கண்ட கம்பநாடர் தங்காவியத்தே,
ஏர்குலா முகத்தினாளை இறைமுக மெடுத்து நோக்கித்
தார்குலா மலங்கன் மார்பன் தாயரை நினைந்து நைந்தான் (கிட்கிந்தை - 51)
என்று அழகுற அமைத்துக்கொண்டனர்.
356. பெண்மை நாண் வனப்புச் சாயல்
பெரு மட மாது பேசின்
ஒண்மையின் ஒருங்கு கூடி
உருவு கொண்ட அனைய நங்கை
நண்ணிய நுங்கட்கு எல்லாம்
அடைக்கலம் என்று நாடும்
கண்ணிய குலனும் தெய்வம்
கரந்து உரைத்து எழுந்தது அன்றே.
பொருள் : பெண்மை நாண் வனப்பு சாயல் பெருமடம் மாது பேசின் - அமைதித் தன்மையும் நாணும் அழகும் மென்மைத் தன்மையும் பெருமைமிக்க மடனும் காதலும் ஆகியவற்றை ஆராயின்; ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை - அவை தாம் விளக்கமுற ஒன்று கூடி ஒரு வடிவு கொண்டாற் போலும் நங்கையாகிய இவள்; நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று - நற்பண்பெலாம் பொருந்திய நுங்கட்கு எவ்வகையானும் அடைக்கலமாயினள் என்று கூறி; நாடும் கண்ணிய குலனும் கரந்து உரைத்து - விசயையின் நாட்டையும் கருதற்குரிய குலத்தையும் மறைத்துக் கூறி; தெய்வம் எழுந்தது - கூனி வடிவான தெய்வம் போதற்கு ஒருப்பட்டது.
விளக்கம் : பெண்மை - அமைதித் தன்மை. மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. மாது - காதல்: மாதர் என்னும் உரிச் சொல் ஈறு திரிந்தது.
357. உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆய் இடை
மறுவில் வெண் குடை மன்னவன் காதல் அம்
சிறுவன் தன்மையைச் சேர்ந்து அறிந்து இவ்வழிக்
குறுக வம் எனக் கூனியைப் போக்கினாள்.
பொருள் : உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் - விசயைக்கு வேண்டும் நலன்களை ஆராய்ந்தவாறு தன் இருப்பிடத்திற்குப் போகத் தெய்வம் ஒருப்பட்டதால்; மறுஇல் வெண்குடை மன்னவன் காதல் அம் சிறுவன் தன்மையை - குற்றமற்ற வெண்குடை வேந்தனின் அன்புக்குரிய நம்பியின் நிலைமையை; ஆயிடைச் சேர்ந்து அறிந்து - இராசமாபுரத்தைச் சார்ந்து அறிந்து; இவ்வழி குறுக வம் என - இங்கே குறுகிய காலத்திலே வம்மின் என்று; கூனியைப் போக்கினாள் - கூனி யுருவத் தெய்வத்தை விசயை வேண்டி விடுத்தாள்.
விளக்கம் : ஆயிடை : சுட்டு நீண்டதால் யகரந் தோன்றியது; அவ்விடம் என்று பொருள். ஓடல் : எண்ணம் ஓடுதல். சேடியை வம் மென உயர்த்துக் கூறினாள் தான் நிற்குந் தவநிலைக் கேற்ப. (தெய்வம் தன் தெய்வத் தன்மையால் விசயைக்கும் தன் மகனைக் காக்கக் கூனி செல்ல வேண்டு மென்ற எண்ணத்தை உண்டாக்கியது என்பர் நச்சினார்க்கினியர்.)
358. நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால்
வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள்
பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்பச் சென்று
இஞ்சி மா நகர்த் தன் இடம் எய்தினாள்.
பொருள் : வஞ்சி அம் கொம்பனாள் - அழகிய வஞ்சிக் கொடி போன்ற அணங்கினாள்; இனியாளை நெஞ்சின் ஒத்து என் நீர்மையால் வஞ்சித்தேன் என - இனிய பண்புடைய விசயையை மனம் ஒத்து என் தெய்வத் தன்மையால் (சிறுவன் நிலையறிந்து வருவேன் என்று) வஞ்சித்தேன் என்று வருந்தியவாறு; பஞ்சி மெல் அடிப் பல்கலன் ஆர்ப்பச் சென்று - பஞ்சனைய மெல்லிய அடிகளாற் பல கலன்களும் ஒலிக்கச் சென்று, இஞ்சி மாநகர் தன் இடம் எய்தினாள் - மதிலையுடைய இராசமாபுரத்தின் புறத்தே உள்ள சுடுகாட்டை அடைந்தாள்.
விளக்கம் : தெய்வம் தன்னெஞ்சின் அங்ஙனமே வருகுவன் என்று ஒப்புக்கொண்டு அங்ஙனம் ஒப்புக்கொண்டமை நெஞ்சறிந்த வஞ்சகமாதற்கு வருந்திற்றென்க. இஃது அத்தெய்வத்தின் மாசற்ற உளத்தினை நன்கு காட்டுகின்றது. வஞ்சியங் கொம்பனாள் என்றது தெய்வத்தை. தன்னிடம் : சுடுகாடு.
359. தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும்
மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று
ஆனியம் பல ஆசையில் செல்லுமே
தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே.
பொருள் : மானின் நோக்கி - மானனைய நோக்கினையுடைய விசயை; தானும் தன் உணர்வின் ஆற்றவும் தளர்ந்து - தானும் அக் கூனியைத் தெய்வம் என்று அறியாத தன் பெண்மை யுணர்வினாலே மிகவும் சோர்வுற்று; வரும் வழி நோக்கி நின்று - வரும் நெறியைப் பார்த்தவாறு நின்று; ஆசையின் பல ஆனியம் இன்னும் வருவாள் வருவாள் என்ற ஆசையினாலே பல நாட்கள் (இரவும் பகலுமாக); தேன் இயம்பும் ஓர் தேன் பொழில் பள்ளி செல்லும் - வண்டுகள் முரலும் தேன் பொதிந்த மலர்க்காவில் உள்ள ஒரு பள்ளியிலே தவ வாழ்க்கையை நடத்துவாளாயினள்.
விளக்கம் : மானின் : இன் : சாரியை. இச்செய்யுள் அவலச் சுவைக்கு ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாகும். தன்னுணர்வின் என்றது தனக்குரிய பெண்மையுணர்வினால் என்றவாறு. ஆற்றவும் - மிகவும். ஆனியம் - (ஆநியம்) நாள்; பகலுமாம்; பயங்கெழு வெள்ளிய ஆநிய நிற்ப எனவரும் பதிற்றுப் பத்தானும் அஃது அப்பொருட்டாதலறிக.
360. மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள்
கட்டு அழல் எவ்வம் கைம் மிக நீக்கிக் களிகூர
விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப் பால்
பட்டதை எல்லாம் பல்லவர் கேட்கப் பகர்கு உற்றேன்.
பொருள் : மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள் - தேன்விரியும் மலர்மாலையும் வாளனைய மை தீட்டிய கண்களும் மயிலனைய மென்மையும் உடையாளாகிய சுநந்தையின்; கட்டு அழல் எவ்வம் கைம்மிக நீக்கிக் களிகூர - மகனை யிழந்த பெரு நெருப்பனைய துன்பத்தைச் சிறிதுமின்றிப் போக்கிக் களிப்பு மிகுதலால்; விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும்பொழுது இப்பால் - சுநந்தையே யன்றி மற்றோரும் நம்பியை விட்டு நீங்குதலை விரும்பாத காதலுடன் கழிந்த அவ்விராப் பொழுதுக்குப் பிறகு; பட்டதை எல்லாம் பல்லவர் கேட்கப் பகர்கு உற்றேன் - நம்பிக்கு நேர்ந்ததை யெல்லாம் எல்லோரும் கேட்குமாறு கூறுவேனாகத் தொடங்கினேன்.
விளக்கம் : அகல்வு - அகற்சி. வேட்கையின் : இன் : சாரியை. பகர்கு : தன்மை யொருமை வினைமுற்று. (என்றது தம்மால் சரிதம் கூறுதல் அரிதாகலின், இனி வேட்கையால் கடுகக் கழியும் பொழுது என்றுமாம் என்று கூறுகிறார் நச்சினார்க்கினியர்.) ஈண்டு என்றது ..... பொழுதென்றுமாம் என்றுள்ள நச்சினார்க்கினியர் விளக்கம் நன்கு தெளியத் தோன்றவில்லை. அது என்றது தம்மாற் சரிதம் கூறுதல் அரிதாகவும் வேட்கையினாலே (ஓடும் பொழுதிப்பால்) கடுகக் கழியாநின்ற அப்பொழுதிற்கு இப்பால் பட்டதை எல்லாம் பகர்குற்றேன்என்றார் என்னும் கருத்துடையதாக இருத்தல் வேண்டும் என்று தோன்றுகின்றது.
361. கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும்
மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்
போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச்
சீற்றத் துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார்.
பொருள் : கூற்றம் அஞ்சும் கொல்நுனை எஃகின் இளையானும் - கூற்றுவனும் நடுங்கும் கொல்லும் முனையுடைய வேலேந்திய கந்துக் கடனும்; மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும் - கணவன் மொழிக்கு மறுத்துக் கூற அஞ்சும் பொருந்திய கற்பினையுடைய சுநந்தையும்; போற்றித் தந்த புண்ணியர் கூடி - விரும்பி அழைத்துவந்த சான்றோர் கூடி; சீற்றத்துப்பின் புகழோனை - சினவலிமையுடைய புகழோனை, சீவகன் என்றே பெயரிட்டார்- (தெய்வம் கூறியவாறு) சீவகன் என்றே பெயரிட்டழைத்தனர்.
விளக்கம் : கொல்நுனை : வினைத்தொகை. (மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பு என்பதற்குச் சொல்லப்புகின், சொலும் அஞ்சும்கற்பு என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.) சீவகன் சீவித்தலையுடையவனென்று தெய்வம் வாழ்த்தினமையின் அப்பெயரே ஆயிற்று. மாற்றம் அஞ்சும் கற்பு என்பதற்கு, கற்பெனப்படுவது சொற்றிறம்பாமையேயாகலின், கணவன் சொற்றிறம்புதற்கு அஞ்சும் கற்பு என்றலே நேரிதாம்.
362. மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண்
ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்தப்
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல்
மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான்.
பொருள் : மேகம் ஈன்ற மின் அணையாள் தன் மிளிர் பைம்பூண் ஆகம் ஈன்ற -முகிலிடத்துத் தோன்றிய மின் போன்ற சுநந்தையின் விளங்கும் புத்தணி புனைந்த மார்பிடத்துத் தோன்றிய; அம் முலை இன்பால் அமிர்து ஏந்த - அழகிய முலைகள் இனிய பாலாகிய அமுதத்தைக் கொடுக்க; போகம் ஈன்ற புண்ணியன் - தான் சத்தியுஞ் சிவமுமாக இருந்து உலகிற்கு இன்பத்தை நல்கிய அருளாளன்; எய்த கணையேபோல் - விட்ட அம்பான திருமால் ஆய்ப்பாடியில் நந்தகோன் மகனாக மறைய வளர்ந்ததுபோல; மாகம் ஈன்றமாமதி அன்னான் வளர்கின்றான் - விண்ணிலே தோன்றிய அழகுமிக்க பிறை போன்ற சீவகன் கந்துக்கடன் மகனாக வணிகர் இல்லத்திலே வளர்கின்றான்.
விளக்கம் : புண்ணியன் என்றார் திரிபுரத்தை அழித்தும் நஞ்சுண்டும் பல்லுயிர்களையுங் காத்தலின். மா - ஈண்டு அழகு. மதி - பிறை. போகம் ஈன்ற புண்ணியன் என்றது திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளை. அவன் உலகிற்குப் போகமளித்தலை, போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார் எனவும், இடப்பாக மாதராளோடியைத் துயிர்க்கின்பம் அடைப்பானாம் எனவும் வரும் சிவஞானசித்தியாரானும் (சுபக்.701-74) உணர்க. கணை - திருமால். விரிசடைக் கடவுள் திரிபுரம் எரித்தகாலைத் திருமால் கணையாக விருந்தான் என்பது புராணம்.
363. அம் பொன் கொம்பின் ஆயிழை ஐவர் நலன் ஓம்பப்
பைம் பொன் பூமிப் பல் கதிர் முத்தார் சகடமும்
செம் பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி
நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே.
பொருள் : அம் பொன் கொம்பின் ஆயிழை ஐவர் நலன் ஓம்ப - அழகிய பொற்கொடி யனைய அணிகலன் அணிந்த ஐவகைச் செவிலியரும் எல்லா நலத்தையும் போற்றிக் காக்க; பைம் பொன் பூமி - புதிய பொன்னாலமைந்த நிலத்திலே; பலகதிர் முத்து ஆர் சகடமும் - பல ஒளிவிடும் முத்துக்களால் ஆன வண்டியையும்; செம்பொன் தேரும் - செம்பொன்னாலான தேரினையும்; வேழமும் - பொன்னாற் செய்த யானையையும்; ஊர்ந்து - செலுத்தி; நிதி சிந்தி - பொன்னை நல்கி; நாள் நாளும்; நாடோறும்; நலம்மிக்கு - அழகு மிகுந்து; நம்பன் செல்லும் - சீவகன் வளர்வானானான்.
விளக்கம் : ஐவர் : பாராட்டுவாள், பாலூட்டுவாள், தாலாட்டுவாள், சொல் கற்பிப்பவள், கையில் ஏந்தி வளர்ப்பவள். குழவிப் பருவத்தும் கொடை யியல்பாகையால், நிதி சிந்தி என்றார். நாளின் : இன்: சாரியை.
364. பல் பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனி வானத்து
எல்லார் கண்ணும் இன்பு உற ஊரும் மதி போன்றும்
கொல்லும் சிங்கக் குட்டியும் போன்று இவ் உலகு ஏத்தச்
செல்லும் மன்னோ சீவகன் தெய்வப் பகை வென்றே.
பொருள் : பல்பூம் பொய்கைத் தாமரை போன்றும் - பல மலர்கள் நிறைந்த பொய்கையிலே தாமரை மலர் போன்றும்; பனிவானத்து எல்லார் கண்ணும் இன்பு உற ஊரும் மதி போன்றும் குளிர்ந்த வானிலே யாவர் கண்களுங் களிப்புற இயங்கும் திங்கள் போன்றும்; கொல்லும் சிங்கக்குட்டி போன்றும் - கொல்லும் சிங்கக் குருளை போன்றும்; இவ்வுலகு ஏத்த - இவ்வுலகம் புகழ; தெய்வப்பகை வென்று - தெய்வங்களாற் குழந்தைகட்குண்டாகுந் தீங்கில்லாமல்; சீவகன் செல்லும் - சீவகன் வளர்கின்றான்.
விளக்கம் : சீவகனுடன் வளரும் பல தோழமைச் சிறுவர்களிற் சிறந்தமையின் தாமரை மலர் உவமம். உடன் வளர்வோர் சீதத்தன், புத்திசேனன், பதுமுகன், தேவதத்தன் எனும் நால்வரும் சச்சந்தனுடைய அகப்பரிவார மகளிராகிய ஐந்நூற்றுவர் மக்கள் ஐந்நூற்றுவரும் ஆகியோர். கட்டியங்காரன் வருத்துவதால் அஞ்சிய இவர்களின் பெற்றோர்கள் இவர்களைக் கந்துக்கடனிடம் விடுத்து வளர்க்க வேண்டினர் என்பர். இவர்களிற் சச்சந்தன் அமைச்சரில் ஒருவனான சாகரனுக்கும் குருதத்தைக்கும் மகன் சீதத்தன். சச்சந்தன் படைத்தலைவன் அசலனுக்கும் திலோத்தமைக்கும் பிறந்தவன் புத்திசேனன். சச்சந்தன் நண்பனான தனபாலன் என்னும் வணிகனுக்கும் பவித்திரைக்கும் பிறந்தவன் பதுமுகன். சச்சந்தனின் மற்றொரு நண்பன் விசயதத்தனுக்கும் பிரீதிமதிக்கும் தோன்றியவன் தேவதத்தன். (வானிடத்துத் தேவர் முதலாயினாரிடத்தும் இன்பமுறப் பரக்கின்ற மதியாவது அறிவு; அது ஒரு வடிவு கொண்டாற் போன்றும் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார் (தொல் -மரபு - 10) என்றதனாள், கூற்று என்றதனாற், புலி முதலியவற்றிற்குக் கூறிய இளமைப் பெயர் சிங்கத்திற்குங் கொண்டார். தெய்வப்பகை - வால சிகிச்சை யென்னும் நூலிற் கூறிய தெய்வப் பகை.
365. மணியும் முத்தும் மாசு அறு பொன்னும் பவளமும்
அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கிக்
கணிதம் இல்லாக் கற்பகம் கந்துக் கடன் ஒத்தான்
இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்பக் கொடி ஒத்தாள்.
பொருள் : மணியும் முத்தும் மாசுஅறு பொன்னும் பவளமும் அணியும் அவை - மணி முதலியவைகளை; பெய்யும் மாரியின் -பெய்கின்ற முகில் போல; ஏற்பார்க்கு நல்கி - இரப்பவர்க்குக் கொடுத்து; கந்துக்கடன் கணிதம் இல்லாக் கற்பகம் ஒத்தான் - கந்துக்கடன் அளவில் அடங்காத கற்பகத்தைப் போன்றான்; இணைவேல் உண்கண்நந்தையும் இன்பக் கொடி ஒத்தாள் - இணையாகிய வேலனைய, மை தீட்டிய கண்களையுடைய சுநந்தையும் அக் கற்பகத்திற் படரும் காமவல்லி போன்றாள்.
விளக்கம் : கற்பகம் வேண்டின பிறகே நல்கும்; மாரி வேண்டாமலே நல்கும். கந்துக்கடன் இரண்டையும் இவ் விருவகைக் கொடையாலும் ஒத்தான். (கணிதம் இல்லாக் கந்துக்கடன் எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.) சுநந்தை: தலைக்குறையாக நந்தை என வந்தது. இது குடுமி வைத்தற்கு முன்புள்ள கருமங்களிலும் நாடொறும் நடத்துங் கருமங்களிலும் கொடைக்கடன் அமர்ந்தமை கூறினார்.
366. சாதிப் பைம் பொன் தன் ஒளி வௌவித் தகை குன்றா
நீதிச் செல்வம் மேல் மேல் நீந்தி நிறைவு எய்திப்
போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால்
ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான்.
பொருள் : சாதிப் பைம்பொன் தன் ஒளி வெளவி - உயர்ந்த புதிய பொன்னின் ஒளியைக் கவர்ந்து; நீதிச் செல்வம் மேன்மேல் நீந்தி - ஒழுங்காகிய செல்வத்தை மேலும் மேலும் அறிந்து; நிறைவு எய்தி - கல்விக்குரிய பருவம் நிறைந்து; போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால் - அறிவாகிய செல்வத்தை அடைந்தவர் போற்றும் மேம்பாட்டினால்; ஆதிக்காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான் - முதற்காலத்து நான்முகனுக்குக் காதல் மகனான சுவாயம்பு மனுவைப் போன்றான்.
விளக்கம் : சாதிப் பைம்பொன் தன்னொளி வெளவி என்றதனால் மெய்யொளியும் நிறமும் உண்டாயினதைக் கூறினார். அந்தணன் மகன்: இயல்பான அறிவிற்கு உவமை. இனித், தீர்த்தங்கரரில் ரிஷபஸ்வாமி மகன் பரதராச சக்கரவர்த்தி யென்றும் உரைப்பர். நிறைவு எய்தி (கல்விகற்கும் பருவம் நிறைந்து.) என்றதனாற் கற்பதற்குமுன் ஒழுக்கமும் இயற்கை யறிவும் அமைய வேண்டுமென்பது கருத்தாயிற்று. நீதிச் செல்வம் நீந்தி மேன்மேல் நிறை வெய்தி என்று மொழி மாற்றி, சௌளச்சடங்கு கடந்து நாமகளைப் புணரும் பருவம் முறையே நிறைந்து என்று பொருள் கூறி, க்ஷத்திரியனுக்கு வைதிகம் வேண்டுதலின் சௌளத்திற்கு முன்புள்ள கன்மமும் சௌளமுங் கூறினமையான், மேலும் உபநயனம் முதலியனவும் விரியக் கூறாராயினும் அவ் விடங்களிலே குறிப்பான் உணர்க என்று விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். நாமகளைப் புணரும் பருவம் - கல்வி கற்கும் பருவம்.
367. நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள்
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள்.
பொருள் : அனங்கனுக்கு அவலம் செய்யும் - காமனுக்குத் துன்பமூட்டும்; அண்ணல் நற்றாய் பொன்அம் கொடி இறைஞ்சி நின்று - சீவகனின் நற்றாய் (சுநந்தை) பொற்கொடி போல வணங்கி நின்று; நனம்தலை உலகில் மிக்க நன்னுதல் மகளிர் - பரவிய இடமுடைய உலகிலே மேம்பட்ட விறல் மடந்தையும் புகழ் மடந்தையும்; தங்கள் மனம் தளை பரிய -(இவனை அடையாமையால்) தங்கள் மனத்திற் குவிந்திருக்கும் வருத்தம் நீங்க; நின்ற மதலை மை ஆடுக என்று - இனி முறையே இருக்கின்ற மையோலை பிடிக்க என்று; பூமகள் புலம்பி வைக உரைத்தாள் - திருமகள் தனித்திருக்கக் கூறினாள்.
விளக்கம் : இது சுநந்தையின் தொழிலாதலின் அவள் சான்றோரிடம் கூறினாள். செல்வச் செருக்கின்றிக் கலை கற்கவேண்டுமாதலின், பூமகள் புலம்பி வைக என்றார். பல நூல்களைக் கற்கவே வெற்றியும் புகழுமுண்டாம் என்று, தளைபரிய மையாடுக என்றனள். இனி, இச்செய்யுளில் பூமகள் என்பதனை நிலமகள் என்று கொண்டு நோற்றும் பெற்றிலேன் என்று புலம்பிக்கிடப்ப எனினுமாம். மையாடல் - மையோலை பிடித்தல்; கற்கத் தொடங்குங்காற் செய்வதொரு சடங்கு. இதனை இக்காலத்தார் சுவடி தூக்கல் என்பர்.
368. முழவு எனத் திரண்ட திண் தோள்
மூரி வெம் சிலையினானும்
அழல் எனக் கனலும் வாள் கண்
அவ் வளைத் தோளி னாளும்
மழலை யாழ் மருட்டும் தீம் சொல்
மதலையை மயில் அம் சாயல்
குழை முக ஞானம் என்னும்
குமரியைப் புணர்க்கல் உற்றார்.
பொருள் : முழவு எனத் திரண்ட திண்தோள் மூரி வெஞ்சிலையினானும் - முழவு போலத் திரண்ட திண்ணிய தோளையும் பெரிய கொடிய வில்லையும் உடைய கந்துகனும்; அழல் எனக் கனலும் வாள்கண் அவ்வனைத் தோளினாளும் - நெருப்பெனக் கனலைச் சொரியும் வாளனைய கண்களையும் அழகிய வளைத்தோள்களையும் உடைய சுநந்தையும்; யாழ் மருட்டும் மழலைத் தீஞ்சொல் மதலையை - யாழையும் மருட்டும் இனிய மழலைச் சொற்களையுடைய சீவகஞ் சிறுவனுக்கு; மயில் அம் சாயல் குழைமுகஞானம் என்னும் - மயிலனைய மென்மைத் தன்மையையும் குழையணிந்த முகத்தையுமுடைய லைக என்னும்; குமரியைப் புணர்க்கல் உற்றார் - கன்னியை மணமுடிக்கத் தொடங்கினர்.
விளக்கம் : குழைமுக ஞானமென்னுங் குமரி என்பது குழையப் பண்ணுகின்றமுடையஞானமென்னுங்குமரி என்னும் பொருளையுந் தோற்றுவித்தது. குழைவு - அருள். கலை எப்போதும் அழிவற்றதாகலின், குமரி என்றார். (நச்சினார்க்கினியரோ, வேறு தன் கருத்தறிவார், இன்றி இவனே தன் கருத்தறியத் தான் அழியா திருத்தலின் குமரி என்றார் என்பர்.) மதலையைக் குமரியைப் புணர்க்கலுற்றார் என்பது, சாத்தனை நூலைக் கற்பிக்கலுற்றார் என்றாற் போல நின்றது.
சீவக நம்பியும் அச்சணந்தி அடிகளும்
369. அரும் பொனும் மணியும் முத்தும்
காணமும் குறுணி ஆகப்
பரந்து எலாப் பிரப்பும் வைத்துப்
பைம் பொன் செய் தவிசின் உச்சி
இருந்து பொன் ஓலை செம் பொன்
ஊசியால் எழுதி ஏற்பத்
திருந்து பொன் கண்ணியாற்குச்
செல்வியைச் சேர்த்தினாரே.
பொருள் : அரும்பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆகப் பரந்த - அரிய பொன்னும் மணியும் முத்தும் பொற்காசும் குறுணி என்னும் அளவாகப் பரப்பிய; எலாப்பிரப்பும் வைத்து - எல்லாப் பிரப்பரிசிகளையும் வைத்து; பைம்பொன் செய் தவிசின் உச்சி இருந்து - புதிய பொன்னாலான இருக்கையின் மேலே ஆசிரியன் மாணவன் முதலியோர் அமர்ந்து; திருந்து பொன் கண்ணியாற்கு - அழகிய பொன்மாலை அணிந்த சீவகனுக்கு; பொன் ஓலை செம் பொன் ஊசியால் எழுதி - பொன் ஓலையிலே பொன் ஊசியால் எழுதி; செல்வியை ஏற்பச் சேர்த்தினார் - நாமகளை அவன் ஏற்குமாறு புணர்த்தனர்.
விளக்கம் : பிரப்பு - தெய்வத்திற்குப் படைத்தற்பொருட்டு ஒவ்வொன்றும் குறுணியளவிற்றாக் கூடையிலிட்டு வைக்கும் பொன் அரிசி முதலியன. சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ (234) என்றார், திருமுருகாற்றுப்படையினும். ஆசிரியன் முதலியோர் என எழுவாய் வருவித்தோதுக. மனங்கொள்ளும்வகை என்பார் ஏற்ப என்றார். கண்ணியான் : சீவகன். செல்வி : நாமகள்.
370. நாமகள் நலத்தை எல்லாம்
நயந்து உடன் பருகி நல் நூல்
ஏ முதல் ஆய எல்லாப்
படைக் கலத் தொழிலும் முற்றிக்
காமனும் கனிய வைத்த
புலம் கரை கண்டு கண் ஆர்
பூ மகள் பொலிந்த மார்பன்
புவிமிசைத் திலம் ஒத்தான்.
பொருள் : கண் ஆர் பூமகள் பொலிந்த மார்பன் - கண்ணுக்கு நிறைந்த, திருமகள் தங்கிய மார்பனான சீவகன்; நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன்பருகி - நாமகளின் அழகை யெல்லாம் விரும்பிச் சேரக் கற்று; நல்நூல் ஏ முதலாய எல்லாப் படைக்கலத் தொழிலும் முற்றி - நல்ல படைக்கல நூல்களிற் கூறியவாறு அம்பு முதலாகிய எல்லாப் படைக்கலப் பயிற்சிகளையும் முற்றக் கற்று; காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு - காமனும் உளமுறுகுமாறு அமைத்த இசையையும் கரைகண்டு; புவிமிசைத் திலகம் ஒத்தான் - நிலமகள் நெற்றியில் திலகம் போன்றான்.
விளக்கம் : சொல்லாற் கூறுவன எல்லாம் அடங்குதற்கு, எல்லாம் என்றார். (பருகி எனவே தன் குலத்திற்குரிய வேதமும் அதிகரிக்க வேண்டுதலின் ஈண்டே உபநயனமுங் கூறினார், இது, சாம கீத மற்றுமொன்று சாமி நன்கு பாடினான் (சீவக-2038) என்பதனானும் பிறவற்றானும் உணர்க, - நச்சி.) புலம் - அறிவு. அது நூலுக்கானதால் காரிய ஆகுபெயர். இசை கூறவே கூத்தும் அடங்கும். முன் நூல்களைக் கற்றதற்கேற்பத் தொழில்களைக் கற்றானென்றார். நாமகணலம் - கலையழகு. நயந்துடன் பருகி என்றதனால் பருகுவார் அன்ன ஆர்வமுடையராய்க் கற்கும் தலைமாணாக்கர் தன்மை யுடையனாய் என்பது போதரும். கலை உணர்ச்சியால் நுகர்வதாகலின் பருகி என்றார். காமனுங் கனியவைத்த புலம் என்றது இசையையும் நாடகத்தையும். பூமகள் பொலிந்த மார்பன் நாமகள் பொலிந்த உளத்தனாய்த் திலகம் ஒத்தான் என்க.
371. மின் தெளித்து எழுதி அன்ன
விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார்
பொன் தெளித்து எழுதி அன்ன
பூம் புறப் பசலை மூழ்கிக்
குன்று ஒளித்து ஒழிய நின்ற
குங்குமத் தோளினாற்குக்
கன்று ஒளித்து அகல வைத்த
கறவையில் கனிந்து நின்றார்.
பொருள் : மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார் - மின்னை நிலைபெற நிற்கத் தெளிவித்து அதனிடத்தே மகளிர் உறுப்புக்களை எழுதிவைத்தாற் போல விளங்கும் நுண்ணிடை மகளிர்; பொன் தெளித்து எழுதி அன்ன பூம்புறப் பசலை மூழ்கி - பொன்னைத் தெளித்து எழுதினாற் போன்ற தம் பொலிவுடைய மெய்யிலே தோன்றிய பசலையில் முழுகி; குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்குமத் தோளினாற்கு - மலைமறைந்து நீங்க நின்ற, குங்குமம் அணிந்த தோளையுடைய சீவகனை எண்ணி; கன்று ஒளித்து அகல வைத்த கறவையின் கனிந்து நின்றார் - கன்றை மறைத்துப் பாலுண்ணாமல் வைக்கப்பட்ட பசுவைப் போல அன்பிலே கனிந்து நின்றார்.
விளக்கம் : மின் தெளித்து எழுதி அன்ன நுசுப்பின் நல்லார் என்பது, தெளித்த சொல் தேறியார்க்கு (குறள் - 1154) என்றாற் போல வந்தது. இனி மின்னைக் கரைத்தெழுதி அன்ன நல்லாருமாம். புறம் - தம் மெய்யிடம். இதனாற் குலக் கன்னியரைக் கூறினார். குன்று ஒளித்தொழிய நின்ற தோள் - இவற்றை ஒவ்வேமென்று மலைகள் மறைந்துபோதற்குக் காரணமான திண்மையும் பெருமையுமுடைய தோள் என்க. கறவை - கற்றா.
372. விலை பகர்ந்து அல்குல் விற்கும்
வேலினும் வெய்ய கண்ணார்
முலை முகந்து இளையர் மார்பம்
முரிவிலர் எழுதி வாழும்
கலை இகந்து இனிய சொல்லார்
கங்குலும் பகலும் எல்லாம்
சிலை இகந்து உயர்ந்த திண் தோள்
சீவகற்கு அரற்றி ஆற்றார்.
பொருள் : அல்குல் விலை பகர்ந்து விற்கும் வேலினும் வெய்ய கண்ணார் - அல்குலை விலை கூறி விற்றற் குரிய வேலினுங் கொடிய களவுறு கண்ணினரும், இளையர் மார்பம் முகந்து முரிவிலர் எழுதி வாழும் கலை யிகந்த இனிய சொல்லார் - இளையருடைய மார்பினை முலையினால் முகந்து நீங்காமல் எழுதி வாழும், கலையினைக் கற்ற இனமொழியாரும்; கங்குலும் பகலும் எல்லாம் சிலையிகந்து உயர்ந்த திண்டோள் சீவகற்கு அரற்றி ஆற்றார் - இரவும் பகலுமாகிய எல்லாக் காலங்களிலும், விற்கலையைக் கற்று உயர்ந்த திண்ணிய தோளான் சீவகனை நினைத்து அழுது ஆற்றாராயினர்.
விளக்கம் : அல்குல் விற்குங் கண்ணார் - அல்குலை விற்றற்குக் காரணமான கண்ணார் : இவர்கள் பரத்தையரிற் கன்னியர். இனிய சொல்லார் : போகம் நுகரும் பரத்தையர். இவர்கள் இற்பரத்தையரும் சேரிப்பரத்தையரும். இற்பரத்தையர் மட்டும் ஒருவனுக்கே உரியர்; காமக்கிழத்தியர் என்றுங் கூறப்படுவர். மற்றவர் (சேரிப்பரத்தையர்) யாரையும் விரும்புவோர்; வரைவின் மகளிர். வேலினும் வெய்யகன் என்றது அல்குல். விற்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. களவு குடிகொள்ளும் கண் என்ற நச்சினார்க்கினியர் விளக்கத்திற்குரிய சொற்கண்டிலேம். முரிவிலர் : முற்றெச்சம். கலையிகந்து என்புழி இகந்து என்பதனை இகந்த எனத் திரித்துக்கொள்க.
சீவகன் வளர்தல்
373. வான் சுவை அமிர்த வெள்ளம்
வந்து இவண் தொக்கது என்னத்
தான் சுவைக் கொண்டது எல்லாம்
தணப்பு அறக் கொடுத்த பின்றைத்
தேன் சுவைத்து அரற்றும் பைந்தார்ச்
சீவக குமரன் என்ற
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு
உறுதி ஒன்று உரைக்கல் உற்றான்.
பொருள் : வான் சுவை அமிர்தம் எல்லாம் வந்து இவண்தொக்கது என்ன - வானவருண்ணும் சுவைதரும் அமிர்தம் எல்லாம் இங்கு வந்து குவிந்தாற் போன்று; தான் சுவைக்கொண்டது எல்லாம் - தான் சுவைத்துக் கொண்டதை யெல்லாம்; தேன் சுவைத்து அரற்றும் பைந்தார்ச் சீவக குமரன் என்ற - வண்டுகள் தேனைச் சுவைத்து முரலும் புதிய தாரணிந்த சீவகன் என்னும்; ஊன் சுவைத்து ஒளிரும் வேலாற்கு - ஊனைச் சுவை பார்த்து விளங்கும் வேலேந்தியவனுக்கு; தணப்பு அறக்கொடுத்த பின்றை - தடையின்றிக் கொடுத்தபிறகு; உறுதி ஒன்று உரைக்கலுற்றான் - நலமொன்றைக் கூறத் தொடங்கினான் ஆசிரியன்.
விளக்கம் : கொண்ட தெல்லாம் ; ஒருமைப் பன்மை மயக்கம். (வான்சுவை அமிர்தவெள்ளம் வந்து இவண் தொக்கதென்ன உறுதியொன்றுரைக்க லுற்றான் என்றுங் கூட்டலாம் என்பர் நச்சினார்க்கினியர்.) இச்செய்யுள் கலையின்பத்திற்கு அழகான உவமை எடுத்துக் கூறுகின்றது. கலையைச் சுவையமிர்தம் எனவே அதனை நுகர்வோர் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் எனவும், தான் சுவைக்கொண்ட தெல்லாம் எனவே, தாமின்புறுவது எனவும் வரும் வள்ளுவர் அருள்வாக்கு நினைவில் முகிழ்க்கின்றன.
374. நூல் நெறி வகையின் நோக்கி
நுண்ணிதின் நுழைந்து தீமைப்
பால் நெறி பலவும் நீக்கிப்
பருதி அம் கடவுள் அன்ன
கோன் நெறி தழுவி நின்ற
குணத்தொடு புணரின் மாதோ
நால் நெறி வகையில் நின்ற
நல் உயிர்க்கு அமிர்தம் என்றான்.
பொருள் : நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து - ஆகமங் கூறிய வழியினால் நன்மை தீமையை ஆராய்ந்து கூறிய பொருளினிடம் நெஞ்சு சென்று; தீமைப் பால் நெறி பலவும் நீக்கி - தீய பகுதியான வழியெல்லாம் நீக்கி; பருதி அம் கடவுள் அன்ன கோன் நெறி - ஞாயிறன்ன அருகப் பெருமானது நெறியை; தழுவி நின்ற குணத்தொடு புணரின் - பொருந்தி நின்ற பண்புடன் கூடினால்; நால்நெறி வகையில் நின்ற நல்லுயிர்க்கு அமிர்தம் என்றான் - நால்வகை நெறியிலே அமைந்த நல்ல உயிர்கட்கு ஆக்கம் என்றான்.
விளக்கம் : நிறத்தாலும் இருள் நீக்கத்தாலும் ஞாயிறு உவமை. குணம்: இரத்தினத்திரயம். அவை: நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம். நானெறி : நரகர், விலங்கு, மக்கள், தேவர் ஆகிய உயிர்கள் செல்லும்நெறி. நல்லுயிர் - வீடு பேறு விழையும் உயிர். இதனைப் பவ்விய சீவன் என்பர் வடநூலார். நூல்நெறி - இறைவன் ஓதிய ஆகமவழி. இச்செய்யுள்,
சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு
என்னுமருமைத் திருக்குறளை நினைப்பிக்கின்றது.
375. அறிவினால் பெரிய நீரார்
அருவினை கழிய நின்ற
நெறியினைக் குறுகி இன்ப
நிறை கடல் அகத்து நின்றார்
பொறி எனும் பெயர ஐ வாய்ப்
பொங்கு அழல் அரவின் கண்ணே
வெறி புலம் கன்றி நின்றார்
வேதனைக் கடலுள் நின்றார்.
பொருள் : அறிவினால் பெரிய நீரார் அருவினை கழியநின்ற நெறியினைக் குறுகி - அறிவினால் உயர்ந்த பண்பினர் தீவினை நீங்கி நின்ற நன்னெறியினைக் கூடி; இன்ப நிறை கடல் அகத்து நின்றார் - இன்பம் நிறைந்த கடலிலே நின்றாராவர், பொறி எனும் பெயர ஐவாய்ப் பொங்கு அழல் அரவின் கண்ணே - ஐம்பொறிகள் என்னும் பெயரையுடைய ஐவாயினும் பொங்கும் நஞ்சினையுடைய பாம்பினிடத்தே; வெறிபுலம் கன்றி நின்றார் வேதனைக் கடலுள் நின்றார் - களிப்பை ஊட்டும் புலன்களிலே அடிப்பட்டு நின்றவர்கள் துன்பக் கடலிலே நின்றாராவர்.
விளக்கம் : தீவினை கழிய நின்ற நெறியைச் சன்மார்க்கம் என்றும், இன்ப நிறைகடலை, அனந்தசுகம் என்றும் வடநூல்கள் கூறும். நிறைக்கடல் என்று பாடமாயின் இன்பப் பெருக்கினையுடைய கடல் என்க. பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. புலம் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன. அழல் - நஞ்சு; உவமையாகு பெயர்.
376. கூற்றுவன் கொடியன் ஆகிக்
கொலைத் தொழில் கருவி சூழ்ந்து
மாற்ற அரும் வலையை வைத்தான்
வைத்ததை அறிந்து நாமும்
நோற்று அவன் வலையை நீங்கி
நுகர்ச்சியில் உலகம் நோக்கி
ஆற்று உறப் போதல் தேற்றாம்
அளியமோ? பெரியமே காண்.
பொருள் : கூற்றுவன் கொடியன் ஆகிக் கொலைத்தொழில் கருவி சூழ்ந்து - கூற்றுவன் கொடுமையுடையவனாகிக் கொலைத் தொழிலுக்குரிய கருவிகளை ஆராய்ந்து; மாற்ற அரும் வலையை வைத்தான் - நீக்க முடியாத வலையை வைத்துள்ளான்; வைத்ததை நாமும் அறிந்து நோற்று - அதனை அறிவுடைய நாமும் அறிந்து தவம்புரிந்து; அவன் வலையை நீங்கி - அவன் வலைக்குத் தப்பி; நுகர்ச்சிஇல் உலகம் நோக்கி - இதற்குமுன் துய்த்தறியாத உலகமான வீட்டை நோக்கி; ஆறு உறப்போதல் தேற்றாம் - வழிக்கொண்டு செல்லுதலைத் தெளியோம்; அளியம் ஓஒ பெரியம் காண் - இரங்கத் தக்க நாம் பெரியோம் காண்.
விளக்கம் : கருவி : ஐயும் பித்தும் வளியும் ஆகிய (வலைகட்டும்)வார்கள். வலை : வாழ்நாளைத் தரும் வினை. ஓஒ பெரியம் : இகழ்ச்சி.
377. பேர் அஞர் இடும்பை எல்லாம்
பிளந்திடும் பிறப்பு நீக்கும்
ஆர் அமிர்து அரிதில் பெற்றாம்
அதன் பயன் கோடல் தேற்றாம்
ஓரும் ஐம் பொறியும் ஓம்பி
உள பகல் கழிந்த பின்றைக்
கூர் எரி கவரும் போழ்தில்
கூடுமோ குறித்த எல்லாம்.
பொருள் : பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும்ஆர் அமிர்து அரிதின் பெற்றாம் - பெரும் துன்பங்களை யெல்லாம் நீக்கற்குக் காரணமான, பிறப்பினைப் போக்குகின்ற நிறைந்த அமிர்தமான மக்கள் யாக்கையை அருமையாக அடைந்தோம்; அதன் பயன் கோடல் தேற்றாம் - எனினும் அவ்வுடம்பின் பயனைக் கொள்ள அறிகின்றிலேம்; ஓரும் ஐம்பொறியும் ஓம்பி உளபகல் கழிந்த பின்றை - ஆராய்கின்ற ஐம்பொறிகளையும் ஐம் புலன்களாலே பேணி நமக்குரிய நாளெல்லாம் கழிந்த பிறகு; கூர் எரி கவரும் போழ்தின் குறித்த எல்லாம் கூடுமோ? மிக்க நெருப்பு நம் யாக்கையைப் பற்றும் பொழுது நினைத்த அறம் யாவும் செய்யக் கூடுமோ?
விளக்கம் : அமிர்து : ஆகுபெயர்; பிறவிப்பிணி போக்கலான் மக்கள் யாக்கையை அமிர்து என்றார். பிளந்திடும் அமிர்து, நீக்கும் அமிர்து எனத் தனித்தனி கூட்டுக. ஓரும் என்னும் செய்யும் என்முற்று முன்னிலைக்கண் வாராமையான் ஓரும் எனப் பிரித்து ஓர்ந்து பாரும் என்று பொருள் கோடல் நேரிதன்று.
378. தழங்கு குரல் முரசின் சாற்றித்
தத்துவம் தழுவல் வேண்டிச்
செழுங் களியாளர் முன்னர்
இருள் அறச் செப்பினாலும்
முழங்கு அழல் நரகின் மூழ்கும்
முயற்சியர் ஆகி நின்ற
கொழுங் களி உணர்வினாரைக்
குணவதம் கொளுத்தல் ஆமோ.
பொருள் : தத்துவம் தழுவல்வேண்டி - எல்லோரும் உண்மையைப் பற்றல் வேண்டி; செழுங்களியாளர் முன்னர் தழங்குகுரல் முரசின் சாற்றி இருள் அறச் செப்பினாலும் - முழங்கும் ஒலியுறு முரசினைப் போலத் தெளிவாக மயக்கம் நீங்கச் செப்பினாலும்; முழங்கு அழல் நரகின் மூழ்கும் முயற்சியர் ஆகிநின்ற - முழங்கும் அழலையுடைய நரகிலே முழுகும் முயற்சியுள்ளவராகி நிற்கின்ற; கொழுங்களி உணர்வினாரை - மிகுந்த மயக்க வுணர்வினரை; குணவதம் கொளுத்தலாமோ? பண்பாகிய விரதத்திலே ஈடுபடுத்த முடியுமோ? (முடியாது)
விளக்கம் : தழங்கு குரல் : தழங்குரல் என விகாரப்பட்டது. செழுங்களி : தரிசன மோகனீயப் பிரகிருதிகள் ஏழும். அவை : அநந்தானுபந்திக் குரோதம், அநந்தானு பந்திமானம், அநந்தானுபந்தி மாயை, அநந்தானுபந்தி லோபம், மித்தியாத்துவம், ஸம்மியக்மித்தியாத்துவம், ஸம்மியக்துவப் பிரகிருதி என்பன. இவை நகர கதியிற் செலுத்தும். குணவதம் : வதம் - விரதம்; பகுதிப் பொருள் விகுதி.
379. பவழவாய்ச் செறுவு தன்னுள்
நித்திலம் பயில வித்திக்
குழவிநாறு எழுந்து காளைக்
கொழும் கதிர் ஈன்று பின்னாக்
கிழவு தான் விளைக்கும் பைங் கூழ்
கேட்டிரேல் பிணி செய் பன்மா
உழவிர்காள்! மேயும் சீல
வேலி உய்த்திடுமின் என்றான்.
பொருள் : உழவிர்காள் - வாழ்க்கை உழவர்களே!; பவழவாய்ச் செறுவு தன்னுள் - பவழவாய் என்னும் கழனியிலே; நித்திலம் பயில வித்தி - முத்தினைப் பொருந்த வித்துதலால்; குழவி நாறு எழுந்து - குழவியாகிய நாற்றுத் தோன்றி; காளைக் கொழுங்கதிர் ஈன்று - காளைப் பருவமாகிய வளமிகு கதிரை நல்கி; பின்ஆ கிழவுதான் விளைக்கும் பைங்கூழ் கேட்டிரேல் - பின்னாக முதுமையை விளைவிக்கும் பயிரைப்பற்றிக் கேட்டீராயின்; பிணி செய் பன்மா மேயும் - நோயைச் செய்யுந் தீவினைகளாகிய பல விலங்குகள் அப்பயிரை மேய்ந்திடும்; சீல வேலி உய்த்திடுமின் என்றான் - அவை மேயாதவாறு ஒழுக்கமாகிய வேலியைக் கொண்டு சென்று அமைப்பீர்களாக என்று கூறினான்.
விளக்கம் : பவழவாய் : கருத்தங்கும் பை : நித்திலம் : முத்துப் போன்ற விந்து. செறுவு - கழனி. நித்திலம் போன்ற வித்தினை வித்தி என்க. பயனீனும் பருவமாதலால் காளைக் கொழுங்கதிர் என்றார். சீலம் - தீந்தேனும் தெண்மட்டும் உயிர்க்குழாம் ஈண்டி நிற்றற்கு இடனாகும் ஊனும் இவை துறத்தல். ஊன்சுவைத்து ஒளிறும் வேலாற்கு உரைக்கலுற்றான் (373) என்று தொடங்கினர் ஆயினும் சீவகனோடிருந்த ஏனை மாணவரையும் உளப்படுத்தி உழவிர்காள் என்று விளித்தமைக்கு ஏற்ப உய்த்திடுமின் எனப் பன்மை கூறினர். இளையவர் குழாத்தினீங்கி (383) என்பர் பின்னரும்.
380. சூழ் கதிர் மதியம் அன்ன
சுடர் மணிப் பூணினானும்
வீழ் தரு கதியின் நீங்கி
விளங்கு பொன் உலகத்து உய்க்கும்
ஊழ் வினை துரத்தலானும்
உணர்வு சென்று எறித்தலானும்
ஆழ் கடல் புணையின் அன்ன
அறிவரன் சரண் அடைந்தான்.
பொருள் : வீழ்தரு கதியின் நீங்கி விளங்கு பொன் உலகத்து உய்க்கும் ஊழ்வினை துரத்தலானும் - நரகிடை விழுதற்குக் காரணமான தீவழியிலிருந்து விலகி, விளங்குகின்ற பொன்மதிலையுடைய சமவசரணம் என்னும் அருகன் கோயிலிலே செலுத்தும் ஊழ்வினை தூண்டுவதாலும்; உணர்வு சென்று எறித்தலானும் - உணர்ச்சி சென்று திரும்பவும் அதன் மேற்பரவுதலானும்; ஆழ்கடல்புணையின் அன்ன அறிவரன் சரணடைந்தான் - ஆழமாகிய கடலுக்குத் தெப்பம் போன்ற அறிவனைச் சரண் என்று சேர்ந்தான்.
விளக்கம் : கலைகள் நிறைதலிற் சீவகனுக்கு மதியுவமை. பூணினானும்: உம்: உயர்வு சிறப்பு. பொன்னுலகு : பொன்னெயில் வட்டம்; (சமவ சரணம் என்னும் சினாலயம்.) ஊழ்வினை : சாது சரண் ஆவதற்கு முன் செய்த நல்லினை. அத் தவத்தே பயின்றமையால், உணர்வு மீண்டும் அதன் மேற் சென்று பரவியது.
381. காட்சி நல் நிலையில் ஞானக்
கதிர் மணிக் கதவு சேர்த்திப்
பூட்சி சால் ஒழுக்கம் என்னும்
வயிரத் தாழ் கொளுவிப் பொல்லா
மாட்சியில் கதிகள் எல்லாம்
அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து
ஆட்சியில் உலகம் ஏறத்
திறந்தனன் அலர்ந்த தாரான்.
பொருள் : அலர்ந்த தாரான் - மலர்ந்த மாலையான்; காட்சி நன்னிலையில் - காட்சியாகிய நிலையிலே; கதிர்மணிக் கதவு சேர்த்தி - அறிவாகிய கதவைச் சேர்த்து - பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிரத்தாழ் கொளுவி - மேற்கொண்டிருக்கும் ஒழுக்கமாகிய வயிரத்தாழைப் பொருத்தி; பொல்லா மாட்சிஇல் கதிகள் எல்லாம் அடைத்தபின் - தீய இழிந்த நெறிகளையெல்லாம் அடைத்தபிறகு; ஆட்சி இல் வரம்பு இல் இன்பத்து உலகம் ஏறத் திறந்தனன் - இதற்குமுன் ஆண்டிராத, எல்லையற்ற இன்பத்தையுடைய வீட்டுலகிற்குச் செல்ல வழி திறந்தான்.
விளக்கம் : நிலையாக இருப்பதால் நிலை. பொருள்களைக் காத்தற்கு உலாவுதலிற் கதவு. காட்சியையும் ஞானத்தையும் விட்டு நீங்காமல் தகைத்தலின் தாழ். அலர்ந்த - புகழாற் பரந்த என்றுமாம். காட்சி - நற்காட்சி. ஞானம் - நன்ஞானம். பூட்சி - மேற்கோள். ஒழுக்கம் - நல்லொழுக்கம். எனவே இரத்தினத்திரயம் ஆயிற்று. துன்பமல்லது தொழுதகவின்மையின் பிறப்பினை மாட்சியில்கதி என்றார்.
382. நல் அறத்து இறைவன் ஆகி
நால்வகைச் சரணம் எய்தித்
தொல் அறக் கிழமை பூண்ட
தொடு கழல் காலினாற்குப்
புல் அற நெறிக் கண் நின்று
பொருள் வயிற் பிழைத்த வாறும்
இல்லறத்து இயல்பும் எல்லாம்
இருள் அறக் கூறி இட்டான்.
பொருள் : நல் அறத்து இறைவன் ஆகி - நல்லஅறத்திற்கு உரியவனாகி; நால்வகைச் சரணம் எய்தி - நால்வகைச் சரணங்களையும் அடைந்து; தொல் அறக்கிழமை பூண்ட தொடுகழற் காலினாற்கு - பழமையான தன் குலத்திற்குரிய அறத்திற்கு உரிமை யேற்ற கழலணிந்த காலினானுக்கு; புல் அற நெறிக்கண் நின்று பொருள்வயின் பிழைத்தவாறும் - தீநெறி செல்வோர் தாம் நடத்திய இழிந்த இல்லற நெறியாலே வீடுபேற்றை இழந்த படியும்; இல்லறத்து இயல்பும் - வீடுபேறு தப்பாமல் இல்லறம் நடத்தும் இயல்பும்; எல்லாம் இருள் அறக் கூறியிட்டான் - பிறவற்றையும் மயக்கம் நீங்க விளம்பினான்.
விளக்கம் : நால்வகைச் சரணம் : அருக சரணம், சித்த சரணம், சாது சரணம், தன்ம சரணம். இதனால், தேவர் இல்லறத்திலிருந்தே வீடுபேறெய்துதல் கூடும் என்னும் கொள்கையுடையராதல் உணரலாம். இக்கொள்கை,
சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற்
சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின்
பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ
ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள்அரி வையரோடு
அநுபவித்தங் கிருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர்
நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும்
நுழைவர்பிறப் பினின்வினைகள் நுங்கி டாவே (சிவ.சித்.சுப. 287)
எனவரும் சைவசமயக் கொள்கையையே ஒத்திருத்தல் உணர்க.
அச்சணந்தி அடிகள், சீவகனது பிறப்பின் இரகசியத்தை அவனுக்கு உணர்த்துதல்
383. எரி முயங்கு இலங்கு வை வேல்
இளையவர் குழாத்தின் நீங்கித்
திரு முயங்கு அலங்கல் மார்பின்
சீவகன் கொண்டு வேறா
விரி மலர்க் கண்ணி கட்டி
விழைதக வேய்ந்த போலும்
தெரி மலர்க் காவு சேர்ந்து
பிறப்பினைத் தெருட்டல் உற்றான்.
பொருள் : எரி முயங்கு இலங்கு வைவேல் இளையவர் குழாத்தின் நீங்கி - அனல் தழுவி விளங்கும் கூரிய வேலணிந்த இளைஞர்களின் குழுவிலிருந்து நீங்கி; திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் வேறா கொண்டு - திருமகள் தழுவும், மாலை யணிந்த மார்பினையுடைய சீவகனைத் தனியே அழைத்துச் சென்று; விரி மலர்க்கண்ணி கட்டி விழைதக வேய்ந்தபோலும் - மலர்ந்த மலர்களைக் கண்ணியாகக் கட்டி விருப்பமுண்டாமாறு வேய்ந்தாற் போன்றமைந்த; தெரிமலர்க்காவு சேர்ந்து - விளங்கும் மலர்ப்பொழிலை அடைந்து; பிறப்பினைத் தெருட்டல் உற்றான் - (சீவகன்) பிறப்பினை (ஆசிரியன்) தெளிவிக்கத் தொடங்கினான்.
விளக்கம் : இளையவர்: நபுல விபுலராகிய (சச்சந்தன் காமக்கிழத்தியர் மக்களாகிய) இருவரும், கந்துக்கடனுக்குச் சீவகன் கிடைத்த பின்னர்ச் சுநந்தை வயிற்றிற் பிறந்த நந்தட்டனும் ஆகிய தம்பியரும், முற்கூறிய நால்வரும் ஐந்நூற்றுவரும் ஆகிய தோழரும் ஆவர். வேறாக்கொண்டு என மாறுக. ஆசிரியன் என்னும் எழுவாய் வருவித்தோதுக.
384. பூவையும் கிளியும் மன்னர்
ஒற்றென புணர்க்கும் சாதி
யாவையும் இன்மை ஆராய்ந்து
அம் தளிர்ப் பிண்டி நீழல்
பூ இயல் தவிசின் உச்சிப்
பொலிவினோடு இருந்த போழ்தில்
ஏ இயல் சிலையினானை
இப் பொருள் கேண்மோ என்றான்.
பொருள் : பூவையும் கிளியும் மன்னர் ஒற்று எனப் புணர்க்கும் சாதி யாவையும் இன்மை ஆராய்ந்து - பூவை கிளி போன்ற அரசர்கள் ஒற்றாக விடும் சாதிகளெல்லாம் அக்காவின் கண் இல்லாத படியே ஆராய்ந்து; அம் தளிர்ப்பிண்டி நீழல் பூ இயல் தவிசின் உச்சி பொலிவினோடு இருந்த போழ்தில் - அழகிய தளிரையுடைய அசோகின் நீழலில் பூவால் அமைத்த இருக்கையின்மேல் ஆசிரியன் சிறப்புற அமர்ந்த பிறகு; ஏ இயல் சிலையினானை இப்பொருள் கேண்மோ என்றான் - அம்பு பயிலும் வில்லினானை இக் கதையைக் கேட்பாயாக என்று கூறத் தொடங்கினான்.
விளக்கம் : பூவை - நாகண வாய்ப்புள். இன்னோரன்ன சாதி என்க. சிலையினான் : சீவகன்.
385. வையகம் உடைய மன்னன்
சச்சந்தன் அவற்குத் தேவி
பை விரி பசும்பொன் அல்குல்
பைந்தொடி விசையை என்பாள்
செய் கழல் மன்னன் தேர்ந்து
தேவியைப் பொறியில் போக்கி
மையல் கொள் நெஞ்சில் கல்லா
மந்திரி விழுங்கப் பட்டான்.
பொருள் : வையகம் உடைய மன்னன் சச்சந்தன் - இவ்வுலகுடை மன்னன் சச்சந்தனென்பான்; அவற்குத் தேவி பைவிரி பசும்பொன் அல்குல் பைந்தொடி விசயை என்பாள் - அவனுக்குத் தேவி பாம்பின் படம் என விரிந்த, பசும்பொன் மேகலை சூழ்ந்த அல்குலையும் பைந்தொடியையும் உடைய விசயை எனப்படுவாள்; செய்கழல் மன்னன் தேர்ந்து - கழலணிந்த சச்சந்தன் தன் அமைச்சன் கட்டியங்காரனின் சூழ்ச்சியை அறிந்து; தேவியைப் பொறியில் போக்கி - தன் காதலியை மயிற் பொறியிலே தப்பிப் போகவிட்டு; மையல் கொள் நெஞ்சின் - மயக்கமுற்ற நெஞ்சினனான; கல்லா மந்திரி விழுங்கப்பட்டான் - அறிவற்ற மந்திரியினாற் கொல்லப்பட்டான்.
விளக்கம் : பொன் - மேகலை (கருவியாகுபெயர்.) தேர்ந்து - கனவிற்குப் பிறகு விசயையைப் போக விடஎண்ணி. மையல் - தன்னை ஆக்கியதார்ப் பொலி வேந்தனைக் கொல்லுதல். சீவகன் கடைபோகக் கேட்கும்பொருட்டு இச்செய்தியைப் பழங்கதையொன்றனைக் கூறுமாறுபோலக் கூறினன் என்பது கருத்து. இக்கருத்தால் நின்தந்தை தாய் என்னாமல் சச்சந்தன் என்னும் அவற்குத் தேவி என்றும் ஏதிலார்போலக் கூறினன். கல்லா மந்திரி என்றது கட்டியங்காரனை. விழுங்கப்பட்டான் என்பதற்கேற்ப மந்திரிமாநாகத்தால் என்க.
386. புலம்பொடு தேவி போகிப்
புகற்கு அருங் காடு நண்ணி
வலம்புரி உலகம் விற்கும்
மா மணி ஈன்றது என்ன
இலங்கு இழை சிறுவன் தன்னைப்
பயந்து பூந் தவிசின் உச்சி
நலம் புரி நங்கை வைத்து
நல் அறம் காக்க என்றாள்.
பொருள் : தேவி புலம்பொடு போகிப் புகற்கு அருங்காடு நண்ணி - விசயை வருத்தத்துடன் சென்று மக்களாற் புகுதற் கரிய சுடுகாட்டை அடைந்து; வலம்புரி உலகம் விற்கும் மாமணி ஈன்றது என்ன - வலம்புரிச் சங்கு உலகை விலைகொள்ளும் பெரிய முத்தினைப் பெற்றாற் போல; இலங்கு இழை சிறுவன் தன்னைப் பயந்து - விளங்கும் அணிகலனுடைய மகனைப் பெற; நலம்புரி நங்கை பூந்தவிசின் உச்சி வைத்து - அறம் விரும்பிய கூனியாகிய தெய்வம் அம் மகனை அழகிய தவிசின் மேல் வைக்க; நல் அறம் காக்க என்றாள் - விசயை நான் மேற்செய்யும் நோன்பு என் மகனைக் காப்பதாக என்று மனங்கொண்டாள்.
விளக்கம் : வலம்புரி உவமை கூறவே தேவி மறைந்தமையும் உணர்த்தினார். விசயை நோன்பிலே யிருந்தமை ஆசிரியனாற் சீவகன் ஈண்டுணர்ந்தும் மேல் அடிகளும் உளரோ? (சீவக-1884) என்று இவன் கூறியது இதற்குப் பின்னரும் தீங்கின்றி யிருந்தமை கருதிப் போலும்.
387. வானத்தின் வழுக்கித் திங்கள்
கொழுந்து மீன் குழாங்கள் சூழக்
கானத்தில் கிடந்ததே போல்
கடல் அகம் உடைய நம்பி
தானத்து மணியும் தானும்
இரட்டுறத் தோன்றி னானே
ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி
உத்திரட்டாதி யானே.
பொருள் : திங்கள் கொழுந்து வானத்தின் வழுக்கி - திங்களின் கொழுந்தாகிய பிறை வானத்திலிருந்து தவறி; மீன் குழாங்கள் சூழ - மீன் கூட்டங்கள் கூழ; கானத்தில் கிடந்ததே போல் - காட்டிற் கிடந்ததைப் போல; கடம் அகம் உடைய நம்பி - கடல் சூழ்ந்த வுலகத்தையுடைய நம்பி; ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதியான் - குற்றமற்ற சிறப்புடைய உத்திரட்டாதியிற் பிறந்தவன்; தானத்து மணியும் தானும் இரட்டுஉற - அந்த இடமாகிய சுடுகாட்டில் உள்ள மணிகளும் தானும் வேறுபட்டு விளக்க; தோன்றினான் - காண்குற்றான்.
விளக்கம் : கொழுந்தென்றார் நாடோறும் வளர்தலின். ஊனம் - நாட்களுக்குள்ள தீங்கு. தானம், இடம். அஃதாவது சுடுகாடு. மணிகளின் ஒளி மழுங்கத் தன்மேனி மிக்கு மிளிர என்பார் மணியும் தானும் இரட்டுற என்றார். உத்திரட்டாதியான் - உத்திரட்டாதிநாளிற்றோன்றியவன்.
388. அருந் தவன் முந்து கூற
அலங்கல் வேல் நாய்கன் சென்று
பொருந்துபு சிறுவன் கொண்டு
பொலிவொடு புகன்று போகத்
திருந்திய நம்பி ஆரத்
தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று
அரும் பொனாய் கேண்மோ என்றான்
அலை கடல் விருப்பில் கொண்டாள்.
பொருள் : அருந்தவன் முந்து கூற - அரிய தவமுனி ஒருவன் முன்னர்க் கூறியதனால்; அலங்கல் வேல் நாய்கன் சென்று பொருந்துபு சிறுவற் கொண்டு - மாலை அணிந்த வேலையுடைய வணிகன் ஒருவன் இறந்த மகனொடு அங்கே சென்று தன் மகனைக் கிடத்திவிட்டு அச் சிறுவனைப் பொருந்தி எடுக்க; திருந்திய நம்பி ஆரத் தும்மினன் - விளக்கமுடைய அச் சிறுவன் நன்றாகத் தும்மினான்; தெய்வம் வாழ்த்திற்று - அச் சிறுவனைக் காத்திருந்த சுடுகாட்டுத் தெய்வம் வாழ்த்தியது; பொலிவொடு புகன்று போக - கேட்ட வணிகன் விளக்கமுற விருப்பமொடு எடுத்துச் சென்று; அரும்பொனாய்! இதனைக் கொள்க என்றான்; அலைகடல் விருப்பிற் கொண்டாள் - அவளும் கடலைப் போன்ற விருப்பத்துடன் வாங்கிக் கொண்டாள்.
விளக்கம் : கொண்டு - கொள்ள; போக - போய்: வினையெச்சத் திரிபுகள். நாய்கன் என்றது கந்துக்கடனை.
389. கரியவன் கன்னற்கு அன்று
பிறப்பினைத் தேற்றி ஆங்கு அப்
பெரியவன் யாவன் என்ன
நீ எனப் பேசலோடும்
சொரி மலர்த் தாரும் பூணும்
ஆரமும் குழையும் சோரத்
திரு மலர்க் கண்ணி சிந்தத்
தெருமந்து மயங்கி வீழ்ந்தான்.
பொருள் : கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினைத் தேற்றி யாங்கு -(இவ்வாறு) கண்ணன் கன்னனுக்கு முற்காலத்திற் பிறப்பினைத் தெளிவித்தாற் போல (ஒரு கதை முகத்தால் உணர்த்தியவுடன்); அப் பெரியவன் யாவன் என்ன - சீவகன் தங்களாற் கூறப்பட்டவன் யாவன்? என்று வினவ, (ஆசிரியனும்); நீ எனப் பேசலோடும் - நீ யென்று கூறினானாக; சொரி மலர்த் தாரும் பூணும் ஆரமும் குழையச் சோர - தேன் சொரியும் மாலையும் அணிகலனும் முத்துமாலையும் குழைந்து சோர; திரு மலர்க்கண்ணி சிந்த - அழகிய மலர்க்கண்ணி சிதற; தெருமந்து மயங்கி வீழ்ந்தான் - உள்ளங் கலங்கி மூர்ச்சித்து வீழ்ந்தான்.
விளக்கம் : கண்ணி : முடிமாலை. பெரியவன் : அறிவினாற்பெரியவன், சீவகன். பேசலோடும் : ஓடு : உடனிகழ்ச்சி. இவ்வாறு எனவும் உணர்த்தியவுடன் எனவும் வருவிக்க. அன்பு மிகுதியான் மூர்ச்சை முந்திற்று. மூர்ச்சை - கையாறு. கரியவன் - கண்ணன். அன்று - பண்டைக்காலத்திலே. தேற்றியாங்கு - தேற்ற என ஒருசொல் வருவித்துக்கொள்க. தெருமந்து - சுழன்று.
390. கற்பகம் கலங்கி வீழ்ந்த
வண்ணம் போல் காளை வீழச்
சொல் பகர் புலவன் வல்லே
தோன்றலைச் சார்ந்து புல்லி
நல் பல குழீஇய தம்மால்
நவை அறத் தேற்றத் தேறிக்
கல் புனை திணி திண் தோளான்
கவலை நீர்க் கடலுள் பட்டான்.
பொருள் : கற்பகம் கலங்கி வீழ்ந்த வண்ணம் போல் காளை வீழ - கற்பகம் நிலைகுலைந்து வீழ்ந்த தன்மை போலச் சீவகன் விழுதலாலே; சொல் பகர் புலவன் வல்லே தோன்றலைச் சார்ந்து புல்லி - சொலல் வல்ல ஆசிரியன் விரைந்து சீவகனைச் சேர்ந்து தழுவி; நல்பல குழீஇய தம்மால் நவை அறத் தேற்ற - சந்தனம் முதலிய கூட்டுப் பொருள்களாற் செய்த குழம்பினாற் சோர்வு நீங்கத் தேற்றியவுடன்; கல்புனை திணிதிண் தோளான் தேறி - கற்றூண் போன்ற அணி செய்யப்பட்ட திண்ணிய தோளினான் தெளிந்து; கவலை நீர்க்கடலுள் பட்டான் - கவலைக் கடலிலே வீழ்ந்தான்.
விளக்கம் : சீவகன் வண்மையிற் சிறந்தவன் ஆதலின் அவன் நிலை குலைந்து வீழ்ந்ததற்குக் கற்பகத்தை உவமையாகக் காட்டினார்.
391. இனையை நீ ஆயது எல்லாம்
எம்மனோர் செய்த பாவம்
நினையல் நீ நம்பி என்று
நெடுங் கண் நீர் துடைத்து நீவிப்
புனை இழை மகளிர் போலப்
புலம்பல் நின் பகைவன் நின்றான்
நினைவு எலாம் நீங்குக என்ன
நெடும் தகை தேறினானே.
பொருள் : நம்பி நீ இனையை ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம் - நம்பியே நீ இந்நிலையினை ஆனதெல்லாம் எம் போல்வார் செய்த தீவினை; நீ நினையல் என்று - நீ (சென்றதை) நினையாதே என்று; நெடுங்கண் நீர் துடைத்து நீவி - நீண்ட கண்களினின்று வடியும் நீரைத் துடைத்து, மெய்யைத் தடவிக் கொடுத்து; நின் பகைவன் நின்றான் - நின் பகைவன் இருக்கிறான் (ஆதலின்); புனை இழை மகளிர் போலப் புலம்பல் - அணிகலன் அணிந்த பெண்களைப் போல வருந்தாதே; நினைவு எலாம் நீங்குக என்ன - எல்லாக் கவலைகளையும் விடுக என்று (ஆசிரியன் தேற்ற); நெடுந்தகை தேறினான் - சீவகன் தெளிந்தான்.
விளக்கம் : நீர்துடைத்து என்றது அரற்று. (யாது செய்வேனென்றல்.) நினைவெலாம் என்றது அவலம் (வருத்தம்) இங்ஙனம் அவலம், கவலை, அரற்று, கையாறு என்னும் நான்கு மெய்ப்பாடும் கூறப்பட்டமை தெளிக. எம்மனோர் செய்த பாவம் நீங்குகை காரணமாக நினையல் என்றும் ஆம்.
392. மலை பக இடிக்கும் சிங்கம்
மடங்கலின் மூழங்கி மாநீர்
அலை கடல் திரையின் சீறி
அவன் உயிர் பருகல் உற்றுச்
சிலையொடு பகழி ஏந்திக்
கூற்று எனச் சிவந்து தோன்றும்
இலை உடைக் கண்ணியானை
இன்னணம் விலக்கினானே.
பொருள் : அவன் உயிர் பருகல் உற்று - கட்டியங்காரன் உயிரை உண்ண விரும்பி; மலைபக இடிக்கும் சிங்க மடங்கலின் முழங்கி - மலை பிளக்கத் தகர்க்கும் சிங்கக்குட்டி போல முழங்கி; மாநீர் அலைகடல் திரையின் சீறி - பெரிய நீர்ப்பரப்பான கடலலை போல ஆர்த்து, சிலையொடு பகழி ஏந்தி - வில்லையும் கணையையும் எடுத்துக் கொண்டு; கூற்று எனச்சிவந்து தோன்றும் இலையுடைக் கண்ணியானை - கூற்றுவன் போல முகஞ்சிவந்து நின்ற இலை மிடைந்த மலர்க்கண்ணியானை; இன்னணம் விலக்கினான் - இவ்வாறு கூறித் தடுத்தான்.
விளக்கம் : தந்தையைக் கொன்றவனைக் கொல்லாமை விலக்கல் அருமையின் மேற்கூறுகின்ற கூற்றான் விலக்கினமை தோன்ற, இன்னணம் என்றார். (நச்சினார்க்கினியர் சிங்கமடங்கலிற் சீறி எனவும் திரையின் முழங்கி எனவும் மாற்றிக் கூட்டுவர்.)
393. வேண்டுவல் நம்பி யான் ஓர்
விழுப் பொருள் என்று சொல்ல
ஆண் தகைக் குரவீர் கொண்மின்
யாது நீர் கருதிற்று என்ன
யாண்டு நேர் எல்லை ஆக
அவன் திறத்து அழற்சி இன்மை
வேண்டுவல் என்று சொன்னான்
வில் வலான் அதனை நேர்ந்தான்.
பொருள் : நம்பி யான் ஓர் விழுப்பொருள் வேண்டுவல் என்று சொல்ல -நம்பியே! யான் ஒரு துன்பந்தரும் பொருளை விரும்புகிறேன் என்று கூற; ஆண் தகைக் குரவிர்! நீர் கருதிற்று யாது? கொண்மின் என்ன - பெருந்தகை ஆசிரியரே! நீவிர் கருதியது யாது? அதனைக் கொள்ளுக என்று சீவகன் வினவ; அவன் திறத்து யாண்டு நேர் எல்லை ஆக அழற்சியின்மை வேண்டுவல் - கட்டியங்காரன் குலத்தளவில் ஓர் யாண்டின் அளவாக சீற்றமின்மையை விரும்புவேன்; என்று சொன்னான் - என்று விலக்கிக் கூறினான்; வில்வலான் அதனை நேர்ந்தான் - சீவகன் உடன்படற்கரிய அதனை ஒப்பினான்.
விளக்கம் : என்று கூற எனவும் பாடம். வேண்டுவல்: அல் ஈற்றுத் தன்மைச் சொல்; சந்தியால் னகரம் வந்தது. இர் ஈறு, கேளிர் வாழியோ (குறுந் - 280) என்றாற் போல இயல்பாய் நின்று விளியேற்றது ஆண்டகையை கூறிற்று, கொலையை விலக்குவரோ என்று அஞ்சிக் கற்பித்த முகத்தான்; இதனால் அரசனென்று ஆசிரியனைச் சீவகன் உணர்ந்தானாயிற்று. திறம் - குலம். வல்லான் ; எதிர்மறை யாகாது உலக வழக்காய் உடன்பாடு உணர்த்திற்று. இது மேலும் கொள்க. கொள் + மின் = கொண்மின் என ளகரம் ணகரமாகத் திரிந்தது. இது மின் விகுதி பெற்ற முன்னிலையேவலொருமை வினைமுற்று.
394. வெவ் வினை வெகுண்டு சாரா விழுநிதி அமிர்தம் இன்னீர்
கவ்விய எஃகின் நின்ற கயக்கமில் நிலைமை நோக்கி
அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி
இவ் இயல் ஒருவற்கு உற்றது இற்றெனக் கிளக்கல் உற்றான்.
பொருள் : அழல் படு வெகுளி நீக்கி - சீவகனுக்கு வந்த வெய்ய சினத்தை இங்ஙனம் மாற்றி; அவ்வியம் அகன்று - மனக் கோட்டம் இன்றி; வெவ்வினை வெகுண்டு சாரா விழுநிதி அமிர்தம் - தீவினையை வெகுண்டதனால் அது சாராத சிறந்த நிதியாகிய அமிர்தம்; எஃகு கவ்விய இன்னீரின் நின்ற - இரும்பு உண்ட இனிய நீரைப்போல நின்ற; கயக்கம் இல் நிலைமை நோக்கி - கலக்கம் அற்ற நிலைமையைப் பார்த்து; ஒருவற்கு உற்றது இவ்வியல் இற்று எனக் கிளக்கல் உற்றான் - ஒருவனுக்கு நேர்ந்ததான இத் துன்பம் இத்தன்மையானது என்று இயம்பலுற்றான்.
விளக்கம் : அமிர்தம்: இரத்தினத்திரயம். இவ்வியல் ஒருவன், என்று தன்னைப் பிறன்போல் கூறினான், தன்மேல் அன்பால் வருந்துவன் என்று கருதி, மற்றும், சீவகன் மெய்யுணர்தலின் தன்னை விலக்கானென்று இக்கதை கூறுகிறான்.
அச்சணந்தி அடிகள் தன் வரலாறு கூறுதல்
395. வான் உறை வெள்ளி வெற்பின்
வாரணவாசி மன்னன்
ஊன் உறை பருதி வெள் வேல்
உலோகமா பாலன் என்பான்
தேன் உறை திருந்து கண்ணிச்
சிறுவனுக்கு அரசு நாட்டிப்
பால் நிறக் குருகின் ஆய்ந்து
பண்ணவர் படிவம் கொண்டான்.
பொருள் : வான் உறை வெள்ளி வெற்பின் வாரணவாசி மன்னன் - வானுலகில் உள்ள வெள்ளிமலையில் வாரணவாசி யென்னும் ஊரின் மன்னனாகிய; ஊன் உறை பருதி வெள்வேல் உலோக மாபாலன் என்பான் - ஊன் தங்கிய, ஞாயிறு போன்ற வெள்ளிய வேலேந்திய உலோக மாபாலன் என்பவன்; தேன் உறை திருந்து கண்ணிச் சிறுவனுக்கு அரசு நல்கி - தேன் பொருந்திய அழகிய கண்ணியை உடைய மகனுக்கு அரசினைக் கொடுத்துவிட்டு; பால்நிறக் குருகின் ஆய்ந்து - வெண்ணிற அன்னம் போல ஆராய்ந்து (தீமையை விலக்கி நன்மையைக் கொண்டு); பண்ணவர் படிவம் கொண்டான் - தவத்தினர் வடிவம் கொண்டான்.
விளக்கம் : பருதிபோற் பகையாகிய இருளைக் கெடுக்கும் வேல். உலோகமா பாலன்: மா: வியங்கோளசையன்றி இசை நிறைத்து நின்றது; புறனடையான் வந்தது. (தொல். இடை. 48); ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே (புறநா - 193) என்றாற்போல.
396. வெம் சினம் குறைந்து நீங்க
விழுத் தவம் தொடங்கி நோற்கும்
வஞ்சம் இல் கொள்கையாற்குப்
பாவம் வந்து அடைந்தது ஆகக்
குஞ்சரம் முழங்கு தீயில்
கொள்கையின் மெலிந்து இம் மூதூர்
மஞ்சு தோய் குன்றம் அன்ன
மாட வீட்டு அகம் புகுந்தான்.
பொருள் : வெம் சினம் குறைந்து நீங்க - கொடுஞ் சினம் குறைந்து நீங்கும்படி; விழுத்தவம் தொடங்கி நோற்கும் வஞ்சம் இல் கொள்கையாற்கு - சிறந்த தவத்தைத் தொடங்கி நோற்கும் தூய கொள்கையையுடைய அவனுக்கு; பாவம் வந்து அடைந்ததாக - தீவினைப்பயன் வந்துசேர்ந்ததாக; முழங்கு குஞ்சரத் தீயின் - தணிவற்ற யானைத்தீ என்னும் நோயால்; கொள்கையின் மெலிந்து - தவம்புரிய இயலாமற் பசியினால் வாடி; இம் மூதூர் - இப் பழம் பதியிலே; மஞ்சுதோய் குன்றம் அன்ன மாடவீட்டகம் புகுந்தான் - முகில் தவழும் மலையனைய மாடங்களின் இடையே நுழைந்தான்.
397. உரை விளையாமை மைந்தன்
கேட்கிய உவந்து நோக்கி
வரை விளையாடு மார்பன்
யார் அவன் வாழி என்ன
விரை விளையாடும் தாரோய்
யான் என விரும்பித் தீம்பால்
திரை விளை அமிர்தம் அன்ன
கட்டுரை செல்க என்றான்.
பொருள் : உரை விளையாமை மைந்தன் உவந்து கேட்கிய நோக்கி - கதைமுடிவதற்கு முன்னரே சீவகன் மகிழ்வுடன் (ஐயம் நீங்க) கேட்பதற்கு நோக்கி; வரை விளையாடும் மார்பன் யார் அவன் வாழி என்ன - மலை தனக்கு நிகராகக் கருதி விளையாடும் மார்பினனாகிய அவன் யார்? அவன் வாழ்க! என்று வினவ; விரை விளையாடும் தாரோய்! யான் என - மணம் உலவும் தாரினனே! அவன் யானே என்று ஆசிரியன் கூற விரும்பி - மேலே கேட்க விழைந்து; திரை விளை அமிர்தம்; அன்ன கட்டுரை செல்க என்றான் - கடலில் விளைந்த அமிர்தம் போன்ற கதைமேலும் செல்வதாக என்று சீவகன் வேண்டினான்.
விளக்கம் : விளையாமை - முற்றுமுன்னர். கேட்கிய: செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். வரைவிளையாடும் மார்பன் என்றது மலையே தனக்கு நிகரென்று கருதி அதனோடு விளையாடுதற்குக் காரணமான மார்பையுடையன் என்றவாறு. விரை - நறுமணம். தீம்பால் திரை - பாற்கடல்.
398. பூத் தின்று புகன்று சேதாப்
புணர் முலை பொழிந்த தீம்பால்
நீத்து அறச் செல்ல வேவித்து
அட்ட இன் அமிர்தம் உண்பான்
பாத்தரும் பசும் பொன் தாலம்
பரப்பிய பைம் பொன் பூமி
ஏத்த அரும் தவிசின் நம்பி
தோழரொடு ஏறினானே.
பொருள் : சேதா பூத்தின்று புகன்று புணர்முலை பொழிந்த தீம்பால் - சிவப்புப் பசு மலர்களைத் தின்று விருப்பத்துடன் முலைகளில் இருந்து பெய்த இனிய பால்; நீத்து அறச் செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான் - முற்றும் வற்றிக் கலக்க வேகவைத்துச் சமைத்த இனிய அடிசிலை உண்பதற்கு; பாத்தரும் பசும்பொன் தாலம் பரப்பிய பைம்பொன் பூமி - தூய பசும்பொன் கலங்கள் பரப்பிய பொன் நிலத்திலே; ஏத்தருந்தவிசின் - புகழ்தற்கரிய இருக்கையிலே; நம்பி தோழரொடு ஏறினான் - கந்துகன் தோழரொடு அமர்ந்தான்.
விளக்கம் : சேதா : பண்புத்தொகை. பாத்தல் அரும்பசும் பொன் (இனியும் குற்றமின்மையால்) பிரிக்கவியலாத பசும்பொன்: ஓட்டற்றபொன்.
399. புடை இரு குழையும் மின்னப்
பூந்துகில் செறிந்த அல்குல்
நடை அறி மகளிர் ஏந்த
நல் அமிர்து உண்ணும் போழ்தின்
இடை கழி நின்ற என்னை
நோக்கிப் போந்து ஏறுக என்றான்
கடல் கெழு பருதி அன்ன
பொன் கலத்து எனக்கும் இட்டார்.
பொருள் : பூந்துகில் செறிந்த அல்குல் நடை அறி மகளிர் - அழகிய ஆடையணிந்த அல்குலையுடைய, உணவு படைக்கும் முறை யறிந்த பெண்கள்; புடைஇரு குழையும் மின்ன ஏந்த - இருபுறத்தினும் குழைகள் ஒளிவிடக் கைகளில் ஏந்தி நிற்க; நல் அமிர்து உண்ணும் போழ்தின் - நல்ல உணவை உண்ணும்போது; இடைகழி நின்ற என்னை நோக்கி - இடைகழியிலே நின்ற என்னைக் (கந்துகன்) பார்த்து; போந்து ஏறுக என்றான் - வந்து அமர்க என்று கூறினான்; கடல்கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார் - கடலில் தோன்றும் காலை ஞாயிறு போன்ற பொன்வட்டிலில் எனக்கும் உணவு படைத்தனர்.
விளக்கம் : நடை என்றது சோறிடு முறைமையினை. இடைகழி - இல்லத்தில் ஓருறுப்பு; ரேழி என இக்காலத்தார் கூறுவதுமிது.
400. கை கவி நறு நெய் பெய்து
கன்னல் அம் குடங்கள் கூட்டிப்
பெய் பெய் என்று உரைப்ப யானும்
பெருங் கடல் வெள்ளிக் குன்றம்
பெய்து தூர்க்கின்ற வண்ணம்
விலாப் புடை பெரிதும் வீங்க
ஐயன் அது அருளினால் யான்
அந்தணர் தொழிலன் ஆனேன்.
பொருள் : கைகவி நறு நெய்பெய்து - (உணவிலே) போது மென்னும் அளவும் நல்ல நெய்யை வார்த்து; கன்னல் அம் குடங்கள் கூட்டிப் பெய் பெய் என்று உரைப்ப - சருக்கரைக் குடங்களைச் சேர்த்துப் பெய் பெய் என்று கந்துகன் (பணி மகளிர்க்குக்) கூற; (அவர்கள் சொரிதலின்) யானும் பெருங் கடல் வெள்ளிக்குன்றம் பெய்து தூர்க்கின்ற வண்ணம் - நானும் பெரிய கடலிலே வெள்ளி மலைகளைப் பெய்து தூர்ப்பதைப்போல; விலாப்புடை பெரிதும் வீங்க - விலாவின் பக்கம் பெரிதும் பருக்கத் (தூர்த்து); ஐயனது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன் - கந்துகன் அருளால் யான் அந்தணர் போல உண்டு அமைந்தேன்.
விளக்கம் : (ஐயன் - சீவகன் என்பர் நச்சினார்க்கினியர். ஐயனாகிய நின் அருளால் என்பர்.) விரைவினால் பெய் பெய் என்று அடுக்கி வந்தன. இஃது இக்கால வழக்கு. விரைசொல் அடுக்கே மூன்றுவரம் பாகும் (தொல் - எச்ச -28) அந்தணர் - அறவோர். இவர் தொழில் அமைதி அடைதல். கைகவி நறுநெய் - உண்போர் போதும் போதும் என்றுகைகவித்து மறுக்குமளவும் பெய்யப்பட்ட நறிய நெய் என்றவாறு. பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர வைகல் கைகவி பருகி (157-8) என்றார் பொருநராற்றுப்படையினும். ஐயன் என்பது சீவகனைக் குறிப்பதாகக் கோடலே காப்பியத்திற்குச் சிறப்பாகும். ஐயன் : முன்னிலைப் புறமொழி.
401. சுரும்பு உடை அலங்கல் மாலைச்
சுநந்தையும் துணைவன் தானும்
விரும்பினர் எதிர் கொண்டு ஓம்ப
வேழ வெந்தீயின் நீங்கி
இருந்தனன் ஏம முந் நீர்
எறி சுறவு உயர்த்த தோன்றல்
கரும்பு உடைக் காளை அன்ன
காளை நின் வலைப் பட்டு என்றான்.
பொருள் : சுரும்பு உடை அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும் - வண்டுகளையுடைய அசைதலையுடைய மாலை அணிந்த சுநந்தையும் கந்துக்கடனும்; விரும்பினர் எதிர்கொண்டு ஓம்ப - விரும்பி வரவேற்றுப் பேண; ஏமம் முந்நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல் கரும்புடைக் காளை அன்ன - காவலாகிய கடலில் துள்ளும் சுறாமீனை மேம்படுத்திய கொடியையுடைய தோன்றலாகிய, கரும்பை வில்லெனக் கொண்ட காளையைப் போன்ற; காளை நின் வலைப்பட்டு - காளையாகிய உன் தொடர்பிலே அகப்பட்டு; வேழ வெந்தீயின் நீங்கி இருந்தனன் என்றான் - கொடிய யானைத் தீயிலிருந்து நீங்கித் தங்கினேன் என்றான்.
விளக்கம் : காளையின் வலையிற் பட்டதையும் யானைத் தீயினின்றும் நீங்கியதையும் மேல் வருவனவற்றால் அறியலாம். இவற்றை விளக்கிப் போகக்கருதியதனால், வலைப்பட்டு என்றான். விரும்பினர்: முற்றெச்சம். வேழவெந்தீ - யானைத்தீ என்னும் நோய். ஏமமுந்நீர் - உலகிற்குப் பாதுகாவலாகிய கடல். எறிசுறவு: வினைத்தொகை. கரும்புடைக்காளை - காமன். காளை: அண்மைகிளி.
402. நிலம் பொறுக்கலாத செம் பொன்
நீள் நிதி நுந்தை இல்லம்
நலம் பொறுக்கலாத பிண்டி
நான் முகன் தமர்கட்கு எல்லாம்
உலம் பொறுக்கலாத தோளாய்
ஆதலால் ஊடு புக்கேன்
கலம் பொறுக்கலாத சாயல்
அவர் உழை நின்னைக் கண்டேன்.
பொருள் : நிலம் பொறுக்கலாத செம்பொன் நீள் நிதி நுந்தை இல்லம் - நிலத்தினாற் கொள்ள வியலாத மிகுதியான செம் பொன் நிதியை உடைய நின் தந்தையின் இல்லம்; பொறுக்கலாத நலம் பிண்டி நான்முகன் தமர்கட்கு எல்லாம் - அளவற்ற நலந்தரும் அசோகின் நீழலில் அமர்ந்த அருகன் அடியவர்கட்கு எல்லாம் இல்லம்; ஆதலால், ஊடு புக்கேன் - ஆகையால், (தடையின்றி) உள்ளே சென்றேன்; உலம் பொறுக்கலாத தோளாய் - கற்றூணும் தாங்காத திண்ணிய தோளனே! கலம் பொறுக்கலாத சாயலவருழை நின்னைக் கண்டேன் - அணியைத் தாங்க வியலாத மென்மையுடைய மகளிரிடையே நின்னைப் பார்த்தேன்.
விளக்கம் : நிதி - திரள். எல்லா மூர்த்தமும் இவனாதலின், நான்முகன் என்றார். மேலும், ஆதிவேதம் பயந்தோய் நீ (சீவக 1242) மலரேந்து சேவடிய மாலென்ப (சீவக. 1610) என்பர். இல்லம் என்பதனைத் தமர்கட்கெல்லாம் என்பதன் பின்னரும் கூட்டுக.
403. ஐயனைக் கண்ணில் காண
யானைத்தீ அதகம் கண்ட
பை அணல் நாகம் போல
வட்க யான் பெரிதும் உட்கித்
தெய்வம் கொல் என்று தேர்வேற்கு
அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல்
மொய் குரல் முரசம் நாணும்
தழங்கு குரல் முழங்கக் கேட்டேன்.
பொருள் : ஐயனைக் கண்ணின் காண - நின்னைக் கண்ணாற் கண்டேனாக; அதகம் கண்ட பை அணல் நாகம் போல யானைத்தீ வட்க - மருந்தினைக் கண்ட படத்தையும் அணலையுமுடைய பாம்பின் நஞ்சு நீங்குதல் போல யானைத்தீ கெடுதலாலே; யான் பெரிதும் உட்கித் தெய்வங்கொல் என்று தேர்வேற்கு - யான் மிகவும் அஞ்சித் தெய்வமோ என்று ஆராய்வேற்கு; அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல் - அமிர்து நிமிர்ந்து உலாவியதுபோல்; மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குழல் முழங்கக் கேட்டேன் - செறிந்த ஒலியுடைய முரசம் நாணுமாறு ஒலிக்கும் மொழி முழங்கக் கேட்டேன்.
விளக்கம் : ஐய நிண்கண்ணின் என்றும் பாடம் (இப் பாடமே தக்கது.) தெய்வமோ என்று ஐயுற்றபோது, மகனே யென்று தெளியக் குரல்முழங்கக் கேட்டேன் என்றான். அதகம் - மருந்து. இஃது அகதம் என்றும் வழங்கும் எனத் தெரிகிறது. எரிதழல் விடத்தை - மலைமறை அதகம் மாற்றியாங்கு (கல் - நிணமுயிருண்ட - 6) தழங்குரல்: தழங்குகுரல் என்பதன் விகாரம். வேழவெந்தீயின்நீங்கி என்றும், (401) யானைத் தீவட்க என்றும் (403) இருமுறை வருதலால், இவனிருக்கின்ற மனையாதலின் இவனைக் காண்பதற்கு முன்னே குறைந்து, இவனைக் கண்டபின் பொன்றக்கெட்டது என்பர் நச்சினார்க்கினியர்.
404. கோட்டு இளந் திங்கள் சூழ்ந்து
குலவிய திருவில் போல
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து
முருகு கொப்பளிக்கும் தாரோய்
கேட்டு அளப் பரிய சொல்லும்
கிளர் ஒளி வனப்பும் நின்னைச்
சேட்டு இளஞ் சிங்கம் அன்னாய்
சாதகம் செய்த என்றான்.
பொருள் : கோடு இளந் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல - இரு முனைகளையுடைய பிறைமதியைச் சூழ்ந்து விளங்கும் வானவில்லைப் போல; மோடு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்புளிக்கும் தாரோய் - பெருமைமிக்க ஒளிரும் முத்த மாலையைச் சூழ்ந்து தேனை உமிழும் மலர் மாலையாய்! சேடு இளஞ்சிங்கம் அன்னாய் - பெருமையுடைய இளஞ் சிங்கம் போன்றவனே! கேட்டு அளப்ப அரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் - கேட்டு அளவிடற்கியலாத சொல்லழகும் விளங்கும் மேனியழகும்; நின்னைச் சாதகம் செய்த என்றான் - நின் பிறப்பை அறிவித்தன என்று கூறினான்.
விளக்கம் : கோடு - நுனி. திருவில் - வானவில். மோடு - பெருமை. முருகு - தேன். சேடு - பெருமை. சாதகம் - பிறப்பு.
அச்சணந்தி அடிகள் தவம் மேற்கொள்ளல்
405. கோள் இயங்கு உழுவை அன்ன
கொடும் சிலை உழவன் கேட்டே
தாள் இயல் தவங்கள் தாயாத்
தந்தை நீ ஆகி என்னை
வாள் இயங்கு உருவப் பூணோய்
படைத்தனை வாழி என்ன
மீளி அம் களிறு அனாய் யான்
மெய்ந்நெறி நிற்பல் என்றான்.
பொருள் : கோள் இயங்கு உழுவை அன்ன கொடுஞ்சிலை உழவன் கேட்டு - கொலைத்தொழிலிலே பயிலும் புலியனைய, கொடிய வில் ஏந்திய உழவனான சீவகன் அதனைக் கேட்டு; வாள் இயங்கு உருவப் பூணோய் - ஒளிவிடும் அழகு அணிகளையுடையாய்! தாள் இயல் தவங்கள் தாய்ஆ தந்தைநீ ஆகி- முயற்சியால் பிறந்த தவங்கள் தாயாக, நீ தந்தையாகி; என்னைப் படைத்தனை வாழி என்ன - என்னை ஆக்கினை, வாழ்வாயாக என்று கூற, மீளி அம் களிறு அனாய்! யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான் - பெருமையுடைய அழகிய களிறு போன்றவனே! யான் உண்மையான தவநெறியிலே நிற்பேன் என்று ஆசிரியன் கூறினான்.
விளக்கம் : நல்வினையால், இக் கலைகளைக் கற்றுத் தான் வேறொரு பிறப்பானமை கூறினான். தாயாக என்பது ஈறுகெட்டது. உழுவை - புலி. தாள் - முயற்சி. மெய்ந்நெறி - தவநெறி. நிற்பல் : தன்மை ஒருமை.
406. மறு அற மனையின் நீங்கி
மா தவம் செய்வல் என்றால்
பிற அறம் அல்ல பேசார்
பேர் அறிவு உடைய நீரார்
துறவறம் புணர்க என்றே
தோன்றல் தாள் தொழுது நின்றான்
நறவு அற மலர்ந்த கண்ணி
நல் மணி வண்ணன் அன்னான்.
பொருள் : நறவு அற மலர்ந்த கண்ணி நல் மணிவண்ணன் அன்னான் - நன்மணம் தன்னிடத்தே தங்க மலர்ந்த கண்ணியையுடைய நீல வண்ணனான கண்ணனைப் போன்ற சீவகன்; மறு அறமனையின் நீங்கி மாதவம் செய்வல் என்றால் - குற்றம் நீங்க மனையிலிருந்து நீங்கிப் பெருந்தவம் செய்வேன் என்றால்; பேரறிவு உடைய தன்மையோர் விலக்குஞ் சொற்களாகிய அறமல்லாதவற்றைக் கூறார்; துறவறம் புணர்க என்று தோன்றல் தாள் தொழுது நின்றான் - துறவறத்திலே செல்க என்று ஆசிரியன் தாளை வணங்கி நின்றான்.
விளக்கம் : ஒருவன் துறப்பேன் என்றால் அறிவுடையோர் விலக்கார் ஆதலின், இவனும் அதற்கு உடன்பட்டானெனக் கவியின் கூற்றாகவும் ஆக்கலாம். (பேரறிவுடைய நீரார் மாதவஞ் செய்வல் என்றால் என்று கொண்டு கூட்டுவர் நச்சினார்க்கினியர்)
407. கை வரை அன்றி நில்லாக்
கடுஞ் சின மடங்கல் அன்னான்
தெவ்வரைச் செகுக்கும் நீதி
மனத்து அகத்து எழுதிச் செம்பொன்
பை விரி அல்குலாட்கும்
படுகடல் நிதியின் வைகும்
மை வரை மார்பினாற்கும்
மனம் உறத் தேற்றி இட்டான்.
பொருள் : கைவரை அன்றி நில்லாக் கடுஞ்சின மடங்கல் அன்னான் - ஒழுக்கத்தின் எல்லை கடவாத, கொடிய சீற்றமுடைய சிங்கம் போன்றவன், தெவ்வரைச் செகுக்கும் நீதி மனத்தகத்து எழுதி - தன் பகைவரை அழிக்கும் முறைமையை அவன் மனத்திலே கொள்ளுமாறு உருவாக்கி; செம்பொன் பைவிரி அல்குலாட்கும் படுகடல் நிதியின் வைகும் மைவரை மார்பினாற்கும் - மேகலை அணிந்த அல்குலையுடைய சுநந்தைக்கும் கடல்போற் கிடக்கும் செல்வத்திலே தங்கிய, முகில் தங்கிய மலையனைய மார்பினான் கந்துகனுக்கும்; மனம் உறத் தேற்றி யிட்டான் - உள்ளத்திற் பொருந்துமாறு (தன் துறவைத்) தெளிவித்திட்டான்.
408. அழல் உறு வெண்ணெய் போல
அகம் குழைந்து உருகி ஆற்றாள்
குழல் உறு கிளவி சோர்ந்து
குமரனைத் தமியன் ஆக
நிழல் உறு மதியம் அன்னாய்
நீத்தியோ எனவும் நில்லான்
பழவினை பரிய நோற்பான்
விஞ்சையர் வேந்தன் சென்றான்.
பொருள் : குழல் உறு கிளவி அழல்உறு வெண்ணெய் போல அகம் குழைந்து உருகி ஆற்றாள் சோர்ந்து - குழலனைய இனிய மொழியாள் (அவன் மொழி கேட்டு) தீயிற்பட்ட வெண்ணெய் போல உள்ளம் குழைவுற்று உருகிப் பொறாதவளாய்ச் சோர்வுற்று; நிழல் உறும் மதியம் அன்னாய் - ஒளி விடுந் திங்களைப் போன்றவனே! குமரனைத் தமியன் ஆக நீத்தியோ எனவும் - சிறுவனைத் தனியனாம்படி துறந்தனையோ என்று வேண்டவும்; விஞ்ஞையர் வேந்தன் நில்லான் பழவினை பரிய நோற்பான் சென்றான் - விஞ்ஞையர் மன்னன் நில்லாதவனாகிப் பழைய வினை தீருமாறு தவஞ் செய்வதற்குச் சென்றான்.
நாமகள் இலம்பகம் (பாடல்கள் 379) முற்றியது.
This file was last updated on 12 Jan. 2019.
Feel free to send any corrections to the webmaster .