பாரதியும் பாரதிதாசனும்
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
"pAratiyum pAratitAcanum"
by a. ca. njAnacampantan
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our thanks also go to the U.Ve. Caminatha Iyer Library and Tamil Virtual Academy for providing a scanned PDF version of this work for the e-text preparation.
This work has been prepared using the Google Online OCR tool to generate the machine-readabletext and subsequent proof-reading.
© Project Madurai, 1998-2019.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பாரதியும் பாரதிதாசனும்
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
Source (நூல் விவரக் குறிப்பு):
பாரதியும் பாரதிதாசனும்
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
கங்கை புத்தக நிலையம்
13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை - 600 017.
முதற் பதிப்பு: மார்ச் 1995; இரண்டாம் பதிப்பு : மார்ச் 1999
விலை ரூ. 30.00
Title: Bharathiyum Bharathi Dasanum
Author : A. Sa. Gnanasambandhan
Language : Tamil
Edition : Second Edition, March, 1999
No. of pages: iv + 160 = 164
Published by : Gangai Puthakaniyalam,
13, Deenadayalu Street, Thyagaraya Nagar, Chennai - 600 017.
Price : Rs. 30.00
Printed at Mani Offset, 112, Bells Road,
Chennai-5. Ph: 8555249, 8588186..
--------------
பதிப்புரை
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் தமிழும் சமயமும் தழைத்தோங்க இடையறாது பணியாற்றி வரும் திறலினர். இவர்தம் பேச்சும் எழுத்தும் - சுவையும் பயனும் மிக்கவை. இவர் தமிழ் இலக்கியங்களில் பேரீடுபாடு கொண்டு இலக்கிய ஆராய்ச்சி செய்யும் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்.
பச்சையப்பன் கல்லூரியில் திறனாய்வுத்துறை புதுவதாக தொடங்கப்பெற்ற ஞான்று ஆய்வு மாணவர்க்காக எழுதப்பெற்றது 'இலக்கியக் கலை" என்னும் திறனாய்வு நூல். அதனாலேயே திறனாய்வுத் தந்தை என்று பாராட்டும் பெற்றவர்.
மதுரைப் பல்கலைக் கழகத்தில் 1970-ல் இவ்வாசிரியர் நிகழ்த்திய 'அன்னபூரணி இராமையா ' நினைவுச் சொற்பொழிவே பாரதியும் - பாரதிதாசனும் என்னும் இந்நூல். பாரதியைப்பற்றியும் பாரதி தாசனைப்பற்றியும் இவ்வாசிரியர் தரும் செய்திகள் படித்து இன்புறத்தக்கன.
இந்நூலில், இன்றைய இலக்கியம், சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறன் ஆகிய இரு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
இதனை எம் வெளியீடாக வெளியிட ஒப்புதல் அளித்த இப் பேராசிரியருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நூலாசிரியரின் பல நூல்களும் எம் பதிப்பக வழி வெளிவந்துள்ளன ; வாராதனவும் வர உள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கங்கை புத்தக நிலையத்தார்
-----------------------
உள்ளுறை
1 இன்றைய இலக்கியம்
2 சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறன்
3 பாரதி
4 பாரதிதாசன்
-----
பாரதியும் பாரதிதாசனும்
1. இன்றைய இலக்கியம்
இத்தகைய ஒரு தலைப்பில் பட்டி மண்டபங்களும், கருத்தரங்குகளும், சொற்பொழிவுகளும் நெடுக நடைபெறுகின்றன. ஆனால், அவற்றில் பங்கு கொள்வோர் பெரும்பாலும் இலக்கியப் படைப்பாளர்களாகவே இருக்கின்றனர். இலக்கியப் படைப்பாளர்களின் படைப்புகள், என் போன்றோர் படித்து இன்புறு வதற்காகத்தான் படைக்கப்படுகின்றன என்ற கருத்தை யாரும் மறுப்பதற்கில்லை. கலைஞன் தன்னுடைய மனத்தில் தோன்றும் கற்பனைக்கு வடிவு கொடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தினால் உந்தப் பட்டுக் கலையைப் படைக்கிறான் என்பது உண்மை யென்றாலும், அதனை அனுபவிக்கின்றவர்கள் பெரும் பங்கைப் பெறுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை. அவ்வாறானால், அனுபவிக்கின்ற ஒருவன் இலக்கியக் கலையில் எதனை விரும்புகிறான் என்பதையும் சற்றுக் காண்டல் வேண்டும்.
அனுபவிக்கின்றவனுடைய விருப்பு வெறுப்புகளை மனத்தில் கொண்டு கலைஞன் கலையைப் படைப்பது என்பது அவ்வளவு சிறப்புடையது ஆகாது என்ற வாதத்திற்கும் ஓரளவு இடமுண்டு என்றாலும், கலைஞன் இமயமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டு தனக்குத் தானே அனுபவித்துக் கொள்வதற்குக் கலையைப் படைக்கவில்லை; பிறரும் தன்னுடைய அனுபவத்தைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தால் தான் கலைஞன் கலையைத் தோற்றுவிக்கிறான். தான் எத்தகைய அனுபவத்தைத் தந்தாலும் அனுபவிப்பவன் வாயை மூடிக்கொண்டு, கிடைக்கின்ற அனுபவத்தை இயன்ற அளவு பங்கிட்டு அனுபவிக்க வேண்டுமென்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால், தன்னால் படைக்கப்பட்ட கலை, பிறரால் நன்கு அனுபவிக்கப்படாத பொழுது கலைஞன் மனம் நோக்கத்தான் செய்கிறான். பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்ற பேராற்றல் வந்துவிடுமே யானால், அத்தகைய மன நிலை பெற்ற கலைஞன் எதனை வேண்டுமானாலும் இயற்றலாம்.
ஆனால், இன்றைய நிலையில் எழுத்தாளர்கள் பலரும் தம்முடைய எழுத்தைப்பற்றி இரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் - திறனாய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆவல் கொண்டுள்ளனர். இரசிகர்கள் கூட்டம் பாராட்டும் பொழுது மகிழ்ச்சி அடைந்தும், அவர்கள் அதனை ஒதுக்கும் பொழுது மனம் மறுக்கவும் செய்கின்றார்கள். இந்த மன நிலை கலைஞனுக்கு இருக்கின்ற வரையில் ஓரளவு இரசிகர்களுடைய மன நிலையை அறிந்தேதான் படைப்பை வழங்க வேண்டும். 'அப்படி வழங்கப் புறப்பட்டால், கலையின் தரம் குறைந்து விடாதா' என்ற வினா தோன்றலாம். 'உறுதியாகக் குறையும்' என்ற விடையும் கிடைக்கும். ஆனால், கூழுக்கும் ஆசைப்பட்டு மீசைக்கும் ஆசைப்படுவதில் அர்த்த மில்லை. ஒன்று, இரசிகர்கள், திறனாய்வாளர்கள் என்பவர்கள் பற்றிக் கவலைப்படாமல் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகட்குத் தோன்றிய முறையில் வடிவு கொடுக்க முற்பட வேண்டும்; அல்லது ஓரளவு இரசிகர்களுக்கும் மன நிறைவு தருகின்ற முறையில் தன்னுடைய கலையைப் படைக்க வேண்டும். இந்த நோக்கில் கலைஞர் இருவகைப்படுவர் : முதலாவது வகையினர் உலகைப் பற்றிக் கவலைப்படாத கலைஞர்கள்; இரண்டாவது வகையினர் ஓரளவு விட்டுக் கொடுத்து வாழ்கின்ற இயல்பு படைத்த கலைஞர்கள். முதல் வகையினர் யாரைப் பற்றியும் கவலைப்படாமையின் நாமும் அது பற்றி ஒன்றுங் கூற வேண்டா. அக்கலையை அனுபவிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தடையின்றி அனுபவிக்கலாம்; ஏனையோர் அது பற்றி ஒன்றும் பேசத் தேவை இல்லை.
நாடு விடுதலையான பிறகு சென்ற கால் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் முன்னேறியுள்ளது என்பதில் ஐயமேயில்லை. சிறுகதை, புதினம், கவிதை, உரைநடை, நாடகம் என்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான். வளர்ச்சியுங் கூடச் சொல்லப்பட்ட வரிசை முறையிலேயே வளர்ந்திருக்கக் காண்கிறோம். அதாவது, சிறுகதை முதன்மையாகவும் நாடகம் கடைசியாகவும் வளர்ந்திருக்கக் காண்கிறோம்.
வளர்ச்சி என்று கூறியவுடன் அளவாலா, தரத்தாலா என்ற வினாத் தோன்றும். இலக்கியப் படைப்பாளரும் திறனாய்வாளர்களும் இந்த வினாவிற்கு என்ன விடை கூறுவார்களோ, நாம் அறியோம். இரசிகன் என்ற முறையில் இவ்வினாவிற்கு விடை சொல்ல வேண்டுமேயானால், அளவால் பெரும் பங்கு வளர்ச்சியும், தரத்தால் மிகமிகச் சுருங்கிய வளர்ச்சியும், தமிழ் இலக்கியம் பெற்றுள்ளது என்றே விடை கூறத் தோன்றுகிறது. இலக்கியத்தின் தரத்தை எப்படிக் காண்பது? அதற்கெனச் சில அளவு-கோல்கள் உண்டு. எனினும், இரசிகனுடைய மன நிலை, மன வளர்ச்சி கல்வி அறிவு, அனுபவ ஞானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலக்கியத்தின் தரத்தை அளக்க முற்படுகின்றார்கள். இந்த அளவுகோல்களைப் பயன்படுத்து முன்னர் மேலே கூறிய இயல்புகளைப் பெற்றவர் - பெறாதவர் ஆகிய இரண்டு பகுதியாரும் சேர்ந்து பயன்படுத்துகின்ற ஒரு புதிய அளவுகோல் உண்டு. அதாவது, 'தோன்றிய ஓர் இலக்கியம் காலத்தை வென்று வாழக்கூடிய தன்மை. பெற்றிருக்கிறதா' என்று கணிப்பது தான் அந்தப் புதிய அளவுகோல்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய ஒருசில பாடல்களை இன்றும் மறக்க முடியவில்லை. ஆனால், அவற்றைப் படிப்பவர் மிகச் சிலர். சென்ற ஆண்டு அனைவராலும் புகழப்பட்ட ஒரு படைப்பு இந்த ஆண்டில் மறக்கப்பட்டு விடுகிறது. இந்தக் கால் நூற்றாண்டில் தோன்றிய சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள் ஆகியவற்றுள் மக்களுடைய மனத்தில் சாகா வரம் பெற்று நிலைத்துள்ளவை. எத்தனை சிறுகதைகள் எத்தனை, புதினங்கள் எத்தனை, கவிதைகள் எத்தனை என்று காண்டல் வேண்டும். தோன்றிய ஓர் இலக்கியத்தில் எதனையும், மீறி நிலைத்து நிற்கும் ஆற்றல் இயல்பாகவே அமைந்திருக்குமானால், நிச்சயமாக அது கருத்தால் உயர்ந்தது என்று சொல்லி விடலாம். இதன் எதிராக அன்றாடப் பிரச்சினைக்கு விடையிறுப்பதற்காகவும் தம்மைச் சேர்ந்தவர்கள் கைகொட்டி ஆரவாரித்து “இதோ ஓர் அற்புதப் படைப்பு' என்று சொல்லுவதற்காகவும் தோன்றுபவை மக்களினுடைய ஈடுபாடு திசை திரும்பியவுடன் இருந்த இடம் தெரியாமல் போய்விடக் காண்கிறோம்.
மேலே கூறிய இரண்டு கருத்துகளையும் மனத்தில் வைத்துக்கொண்டு இன்றைய இலக்கியத்தை ஒரு கண்ணோட்டம் விடுவோமேயானால் அளவால் மிகுதியாகவுள்ள இவ்விலக்கியப் பகுதிகளுள் எவை எவை நின்று நிலவக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளன என்று அறிய முடியும். ஏன், அளவால் இவ்வளவு குறைந்த இலக்கியங்கள் மட்டுமே நிலை பெறும் ஆற்றலைப் பெற்றுள்ளன என்று சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கலைஞனுடைய மனத்தில் கிடந்து, பல்லாண்டுகள் ஊறி, அவனுடைய கற்பனையிலே வடிவு பெற்று வெளி வருகின்ற கருத்துகள், அவனுடைய ஆழ்ந்த அனுபவம், சிந்தனை என்பவற்றின் அடிப்படையில் பிறந்திருக்குமேயானால், காலத்தை வென்று நின்று நிலவும் வலுவைப் பெற்று விடும். இன்றைய அவசரமான வாழ்க்கையில் - வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கிய எழுத்தாளர்கள் எந்த ஒன்றைப்பற்றியும் இந்த அளவு நின்று நிதானித்து, சிந்திக்கவோ, ஆராயவோ, தெளியவோ, அங்ஙனம் தெளிந்த எண்ணங்களுக்கு வடிவு கொடுக்கவோ வாய்ப்பும் வசதியும் அவகாசமும் பெற வில்லை.
மனத்துட் தோன்றிய கருத்துகள் நன்கு தெளிவடையாமல் வெளிவருகின்றன. எனவே, அவற்றில் ஆழமோ உள்ளீடோ இருப்பதில்லை. இவை இல்லாமல் போனாலும் போகட்டும் - கருத்துகளாவது இருக்கின்றனவா என்றால், எல்லா எழுத்தாளர்களுடைய எழுத்திலும் இவை இருக்கின்றன என்று கூறவும் முடியவில்லை. அவருடைய படைப்பைப் பார்த்த பிறகு, 'இவர் என்ன கூறுகிறார்' என்றே அறிய முடிவதில்லை. காரணம் - வெறும் சொற் கோவைகளை நீக்கிப் பார்த்தால், அவர் சொல்லியது ஒன்றுமே இல்லை என்ற உண்மை புலப்படுகிறது. அப்படியானால் அவர் ஏன் எழுதினார்? அதனை ஏன் அச்சிட்டு நம்மிடம் வழங்கினார்கள்? 'ஏதோ எழுத வேண்டும்' என்று பக்கத்தை நிரப்ப அவரும் எழுதினார்; அச்சுப் பக்கத்தை நிரப்ப அது பயன்பட்டது. பெரும்பாலும் இந்நிலையில் உள்ள எழுத்துக்கள் தாம் இன்றைய நிலையில் இலக்கியம் என்ற பெயருடன் உலவுகின்றன. சிறுகதை முதல் நாடகம் வரை எந்த வடிவத்தில் உலவினாலும் இதே கதைதான்.
ஆனால், இவ்வாறு கூறுவதால் சிறந்த எழுத்துக்களே தமிழ் மொழியில் சென்ற கால் நூற்றாண்டில் தோன்றவில்லையோ என்று கருதிவிட வேண்டா. தோன்றியுள்ளன. ஆனால், அவை அளவால் குறைந்தவையேயாகும். உள்ளீடற்ற தோற்றம் மிகுதியாகவும் ஆழமுடையவை குறைவாகவும் தோன்றக் காரணம் என்ன? காரணம் பலவகைப்படும். அவற்றுள் முதன்மையானது படிப்போர் எண்ணிக்கை மிகுதிப் பட்டது. அவர்கட்கு இரை போட வேண்டி வார இதழ்கள், மாத இதழ்கள் முதலியவற்றுடன் நூல் வெளியீடுகளும் அளவால் மிகுந்துவிட்டன. கருத்துகள் முழுவடிவம் பெறுமுன்னரே அரைவேக்காட்டுடன் எடுத்து வடிக்கப்படுவதன் விளைவை இன்று காண்கிறோம்.
இனி, இரண்டாவதாக, ஒன்றை நோக்கல் வேண்டும். இன்றைய எழுத்தாளர்கள் எவ்வளவு புதுமைக் கோலங் கொண்டாலும், எவ்வளவு புதிய வழிகளை மேற்-கொண்டாலும் தமிழ்மொழி அவற்றை இரு கை ஏந்தி வரவேற்கத் தயாராகவே உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு மொழி நிலை பெற்று வாழ்கிறதென்றால், வளர்ச்சியையும் மாற்றத்தையும் ஏற்று கொண்டதால் தான் அது வாழ்கிறது; இன்றேல் அது வாழும் மொழியாக இருத்தல் இயலாது.
மாற்றமும், வளர்ச்சியும் அடிப்படை உடையனவாக இருத்தல் வேண்டும். பைசா நகரத்துக் கோபுரம் பதினைந்து பாகை சாய்ந்திருப்பதால் நிற்கவும் செய்கிறது; புதுமையாகவும் இருக்கிறது. ஆனாலும் வலுவுடைய கடை காலுடன் இருக்கிறது. ஆனால், அதே கோபுரம் என்பது, பாகை சாய்ந்தால் நிலை பெற முடியாது. மாற்றமும், வளர்ச்சியும் ஓர் அளவுக்குட்பட்டிருப்பதுடன் பழமையின் கடைகாலின் மேல் கட்டப்பட வேண்டும்.
இற்றை நாள் எழுத்துக்கள் பழமையின் தொடர் பில்லாமல் - மரபுவழி உணர்வில்லாமல் - மாற்றம், வளர்ச்சி என்ற பெயருடன் நிலைபெற முற்படும் பொழுது அடிப்படை வன்மை இன்மையின் ஆட்டங் கண்டு வீழ்ந்துவிடுகின்றன. இந்த அடிப்படையில் நிலைபேறுடைய இலக்கியங்களைப் படைக்கக்கூடிய ஆற்றலுடையவன் தமிழ் எழுத்தாளன் என்பதில் ஐயமில்லை. காலத்தை வெல்லக்கூடிய படைப்பை அவன் வழங்க வேண்டுமானால் நின்று நிதானித்து, கருத்துகளை ஊறப்போட்டு, அவை நன்கு சமைந்த வுடன் வடிவு கொடுக்க முற்படல் வேண்டும். எத்துணைப் புதுமையைப் புகுத்த விரும்பினாலும் அப்புதுமை பழமையுடன் தொடர்பு கொண்டதாய் ஆழ்ந்த கால்கோளுடையதாய் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
------------------
2. சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறன்
இற்றைக்கு நூறாண்டுகளின் முன்னர்த் தோன்றிய சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறனை ஆராயு முன்னர் அன்றைய தமிழ் இலக்கியம் எவ்வாறு இருந்தது என்பதை அறிதல் வேண்டும். பிற சமயத்தை வளர்க்கும் நோக்குடன் இத் தமிழ் நாடு நோக்கிய வேற்று மொழியாளர்கள் தமிழை வளர்க்கும் நோக்குடன் புதிய உரைநடை வகுத்த காலம் அது. இராமலிங்க வள்ளலார் போன்றவர்கள் பக்திச் சுவை நனி சொட்டப் பாடிய காலம் அது. கவிதையில் ஒரு புது வகை பிறக்கத் தேவை ஏற்பட்டது. அருணாசலக் கவி போன்றவர்கள் தமிழில் நாடகக் கீர்த்தனைகள் யாத்தனர். இங்ஙனம் கீர்த்தனைகள் தமிழில் தோன்றி இன்றைக்கு இரு நூறு ஆண்டுகளே ஆகின்றன.
மக்களுக்கு இலக்கியத்தின் மூலம் அறிவூட்ட விழைவோர் விரும்பி மேற்கொள்ளும் துறை நாடகத் துறையேயாகும். பல பாடல்கள் அல்லது பல பக்க உரை நடை மூலம் புகட்ட முடியாத ஒன்றை ஒரு சிறு நாடகக் காட்சி மூலம் புகட்டிவிட முடியும் என்பதை இத்தமிழர் என்றோ கண்டுவிட்டனர். அதனாலேயே தம் உயிரனைய தமிழ் மொழியையே முத்தமிழ் என்று கூறிட்டு அதில் ஒன்றாக நாடகத் தமிழை வைத்தனர். இந்த நுணுக்கத்தை நன்கறிந்த இப் பெரியார் நாடகத் துறையைத் தம் குறிக்கோளுக்குப் பயன்படுத்திக் கொண்டதில் வியப்பொன்றுமில்லை.
மிகப் பலவாய நாடகங்களையும் கீர்த்தனைகளையும் சுவாமிகள் எழுதியுள்ளார்கள் என்று அறிகிறோம். தமிழ் நாடகத்தின் ஆணிவேராகத் திகழ்ந்தவர்கள் பலரைச் சுவாமிகள் உருவாக்கித் தந்துள்ளார் என்பதையும் அறிகின்றோம். ஒளவை சண்முகம் போன்றோர் தமிழ் நாடக உலகின் முடி மணியாய் விளங்குமாறு செய்த பெரியார் இரண்டு துறைகளில் மேம்பட்டு விளங்கினதை அறிய முடிகிறது. சிறந்த நடிகர்களை ஆக்கிய திறன் முதலாவது; அத்தகைய சிறந்த நடிகர்கள் சிறப்பைப் பெறத்தக்க முறையில் சிறந்த நாடகங்களை ஆக்கிப் படைத்த திறன் இரண்டாவது.
ஓர் இரவில் ஒரு முழு நாடகத்தை எழுதி முடித்த சிறப்பைத் திரு. சண்முகம் அவர்கள் எழுதிய சுவாமிகளின் வரலாற்றிலிருந்து அறிகிறோம். நடிகர்கள் தாம் மேற்கொண்ட பாத்திரத்திற்கேற்ப உரையாடல் அமைய வேண்டும். உரைநடையாயினும் பாடலாயினும் இதனை மனத்துட் கொண்டு அமைக்க வேண்டும். பாத்திரத்தின் தகுதி, சிறப்பு இடம் என்பவற்றிற்கேற்ப உரையாடல் அமைப்பதில் தான் நாடகாசிரியனின் சிறப்பை அறிய முடிகிறது. உதாரணமாக ஒன்றைக் காணலாம். சுலோசனா சதி என்பது இந்திர சித்தன் பற்றிய நாடகம். முதன் முதலாக இந்திர சித்தன் ஆதிசேடன் மகளாகிய சுலோசனையைக் கண்டு அவளை விரும்பி அவளுடன் உரையாடும் இடத்தில் அடிகளின் கவிதைத் திறம், புலமை நயம், பழைய இலக்கியங்களில் அவரது புலமை ஆகிய அனைத்தையும் காண முடிகிறது.
தன்னை மணக்க விரும்பும் வீரனைக் கண்ட மாத்திரத்தில் அவனுடைய வீரம், வன்மை, கூர்த்த அறிவு, கல்வி நலம் ஆகிய அனைத்தையும் ஒரு நொடியில் அறிந்து விடுகிறாள் சுலோசனை. அப்படி இருக்கத் தன்னை விரும்பும் அவனைக் கடிய வேண்டுமானால் என்ன கூறிக் கடிவது! 'என் தந்தையார் வந்து விடுவார், உன்னை வென்று விடுவார்' என்று கூறினால் அது அசம்பாவிதம். எனவே, ஒரு தூய வீரன் எதனைக் கண்டு அஞ்சுவானோ அதனை எடுத்துக் காட்டி அச்சுறுத்துகிறாள். கலித்தொகை என்ற பழந்தமிழ் இலக்கியம் தூயவர்கள், வீரர்கள், பெரியவர்கள் ஆகிய அனைவரும் அஞ்சும் பொருள் ஒன்றை எடுத்துக் கூறுகிறது.
கழியக் காதல ராயினும் சான்றோர்
பழியொடு வரு உம் இன்பம் வெஃகார்
என்று பேசுகிறது. 'எத்துணை ஆசை இருப்பினும், இன்பத்தை விரும்பினும், அந்த இன்பத்தால் பழி வருவதாயின் பெரியோர்கள் விரும்ப மாட்டார்கள்' என்பதே இதன் பொருள். இந்த இலக்கிய நயம் அறிந்த சுவாமிகள் சுலோசனையின் கூற்றாக இதனைப் பெய்கிறார்.
நல்லோர்கள் எல்லோரும் கொள்ளாத பொல்லாத
சொல்லோதி மல்லாடி நிற்கிறீர் - தீய
சொல்லோதி மல்லாடி நிற்கிறீர்
……. ……… …………. …..
காதலினால் வரும் தீது பழிதரும்
ஆதலினால் இது கேவலம்
தன்னைப் பெரியவனாக மதிக்கும் எவனும் தீயவை பேசக்கூடாது என்று குறள் பேசுகிறதன்றோ !
ஒழுக்கம் உடையார்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
எனவே, 'நீ இங்ஙனம் பேசுவது தீது' என்று முதலில் எடுத்துக் காட்டுகிறாள் தலைவி. ஆனால், தீமையை பற்றி அஞ்சாமல் மேலும், அவன் அவளை நெருங்கியவுடன் சுலோசனை பழிவரும் என்று எடுத்துக் காட்டுகிறாள். இரண்டு அடிகளில் கலித்தொகையும் குறளும் பொதுக் காண்கிறோம்.
இன்னும் ஓரளவு சென்றவுடன் இந்திரசித்த மேலும் சுலோசனையுடன் உரையாடு-கிறான். ஆனால், அந்த இடத்தில் சுவாமிகள் அவன் பண்பு முழுவதையும் படம் பிடித்துக் காட்டுகிறார். பெண்களிடம் ஒரு குறை; இரந்து நிற்பவன் மறந்தும் செய்யக்கூடாதது ஒன்றுண்டு. அதுவே அவளுடை பிறந்த இடத்தைக் குறைத்துப் பேசுவதாகும். தன் தாய் தந்தையரைக் குறைத்துப் பேசும் யாரையுமே ஒரு பெண் மன்னிக்க மாட்டாள். அப்படியிருக்கப் புதிதாக ஒருத்தியின் அன்பை வேண்டி நிற்கும் ஒருவன் அவளுடைய தந்தையை இழித்துப் பேசினால் அவனைவிட மமதை அல்லது அகங்காரம் பிடித்த பைத்தியக்காரன் ஒருவன் இருக்க முடியாதன்றோ! என்றாலும், சுலோசனையின் அன்பை யாசிக்கும் இந்திரசித்தன் இதோ பேசுகிறான்.
ஒரு உலகத்துக்கு இறையோன் உனது தந்தை;
மூவுலகுக்கு உரிமை பூண்டு
வரும் இறையோன் எனது தந்தை நினது வாசம்
கீம்நகரம்; வனப்பு மிக்க
பெருமைபெறும் என் வாசம் மேல் நகரம்
எனைக்கட்டில் பிழைவ ராது;
திரு உருவம் உடையாளே என் பின்னே
வருவதற்குத் திடங்கொள் வாயே.
தான் விரும்பும் ஒரு பெண்ணின் முன்னர்த் தன் பெருமையைப் பேசுவதையாவது. மன்னிக்கலாம். ஆனால், அவள் பெருமையை - அவள் தந்தை பெருமையை - அவள் நாட்டின் பெருமையைப் படியிறக்கிப் பேசுபவன் எத்தகையன்? "என்னையே நோக்கி நான் இந் நெடும்பகை தேடிக் கொண்டேன்" என்று கூறும் அகங்கார வடிவினனாகிய இராவணன் மகனாகத்தான் இருக்க முடியும். இந்திரசித்தன் குணாதிசயங்களுள் தலையாய் நிற்கும் பண்பு. அகங்காரமேயாகும். கம்பராமாயணங் கற்ற யாரும் இதனை அறிவர். ஒப்பற்ற நாடகாசிரியராகிய அடிகள் இந்தச் சிறந்த பாடல் மூலம் அந்தப் பாத்திரத்தின் பண்பைச் சாறு பிழிந்து தந்து விடுகிறார்.
இத்துணை அகங்காரமுடையோரும் காமத்தால் கண்டுண்ட பொழுது தம் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டு எளியராகி விடுகின்றனர். அகங்காரத்தின் அடிப்படையில் எழும் இது காதலன்று. உண்மைக் காதலில் தலைவியின் நலத்திலேயே கண்ணோட்ட மிருக்கும். அகங்காரத்தில் விளைந்த காமத்தில் தன் வெறி தணிக்கும் ஆசை மட்டுமே எஞ்சுவதால் மானத்தை விட்டேனும் தன் ஆசையைத் தணிக்க முனைகிறான் மனிதன். எனவேதான், காமங் கொண்டவன் மான அவமானம் பற்றிச் சிந்திக்க முற்படுவதில்லை. இக்கருத்தை அடிகளார் சுலோசனையின் விடையில் நன்கு விளக்குகிறார்
ஆசை கொண்ட பேர்களுக்கு ரோசமில்லை
என்னும் மொழி அவனிமீது
பேசுகின்ற நிலைமைதன்னை இன்றறிந்தேன்;
உம்மிடத்தில் பின்யாது என்றால்
கூசுகின்ற நிலையன்றி யாசகர் போல்
எனை விரும்பல் குளிக்கச் சேறு
பூசுகின்ற நிலையன்றோ ? உமது குல
மேன்மைநல்ல புதுமை யாமே!
’குலப் பெருமை பேசுகின்ற உன்னிடம் மானம் இல்லை; ஏன் எனில் இவ்வளவு பெருமை பெற்றுள்ளதாகக் கூறும் நீ கேவலம் பெண்ணாகிய என்னிடம் மானத்தைவிட்டு யாசகர் போல் கெஞ்சுகிறாய்' என்று சுலோசனை விடை கூறுகையில் இந்திர சித்தன் அகங்காரத்திற்கு நல்ல அடி தருகின்றார்.
நாடகத்தில் உரையாடல் மூலமாக மட்டுமே பாத்திரங்களின் பண்புகளை விளக்க வேண்டும் என்ற திறனாய்வாளர் இலக்கணத்திற்குச் சுவாமிகள் எத்துணைச் சிறந்த இலக்கியமாகிறார் என்பதற்கு இந்த ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளே போதுமானவை.
அவருடைய சொல்லாட்சித் திறத்திற்குச் சிறந்த உதாரணமாய் விளங்குவது 'மா பாவியோர் கூடி வாழும் மதுரை’ என்ற வாக்கியமாகும். இவ்வாறு திடுக்கிடும் ஒரு அடியைக் கூறிவிட்டு 'மா என்றால் அலைமகள், பா என்றால் கலைமகள், வி என்றால் மலைமகள்; எனவே, இம் மூவருங் கூடி வாழும் மதுரை' எனப் பொருள் விரிப்பவரின் புலமை நயத்தை யாரே மறுக்கமுடியும்?
ஆசிரியப்பா நடையையும் அடிகள் அழகுறக் கையாண்டுள்ளார். ஒரு தாயும் மகனும் தம்முள் உரையாடும்பொழுது அது எவ்வளவு சகச பாவத்தில் நடைபெறுகிறது என்பதைக் காட்ட ஆசிரிய நடையை ஓரளவுக்கு விரிந்த மனப்பான்மையில் ஆசிரியர் இதோ கையாள்கிறார். கடோத்கஜனின் தாயும் அபிமன்யுவும் இதோ உரையாடுகின்றனர் :
.
வனவாசம் போனவர்கள் சேதிகள் அடிக்கடி
வந்து கொண் டிருக்குதா , வரவில்லையா?
.......... ………… ……….
காட்டிலும் கெளரவர் கூட்டிய படையொடு
கலகஞ் செய்தனர் என்று கேள்வியுண்டு
கடவுள் கிருபையினால் இடரொன்றும் நேரவில்லை
கவலை விடுவாயம்மா மகிழ்ச்சி கொண்டு.
கடிய சொற்களை இங்கே பெய்திருக்க மாட்டார் சிறந்த நாடகாசிரியர். அபிமன்யுவாகிய குழந்தையும் அரக்கப் பெண் ஒருத்தியும் உரையாடும் பொழுது இவ்வாறு எளிய சொற்களைப் பெய்து உரையாடல் அமைக்கும் ஒருவர் நாடக நுணுக்கம் அனைத்தும் அறிந்த நாடகாசிரியர் என்று கூறுவதில் தவறொன்றுமில்லை.
திருக்குறளைக் கரைத்துக் குடித்த இப் பெரியார் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் நன்கு தோய்ந்துள்ளார் என்பதை இவர் பாடல்கள் நன்கு வெளிப்படுத்துகின்றன. குறள் மொழிகளை அப்படியே எடுத்தாளுவதிலும் வல்லவர் என்பதைக் கீழ்வரும் பகுதிகள் விளக்கும் : -
பற்றற்றான் பற்றினைப் பற்றென்று சொன்னதும்
பாவனை உண்மையின் மார்க்கம்
சற்றும் சந்தேகமில்லை குறளாகிய
சாத்திரம் ஒன்றுமே போதும்
சர்வகலா சார ஞானம் தரும் அது
தன்னைப் படிப்பாய் எப்போதும்
அனைத்துலகிற்கும் ஏற்கக்கூடிய ஓர் ஒப்புயர்வற்ற நீதி நூலை வள்ளுவர் வழங்கினார் என்பதைச் 'சர்வகலாசார ஞானம் தரும்' என்ற அடியால் எண்பதாண்டுகட்கு முன்னரே இப் பெரியார் கண்டு கூறியது வியப்பினும் வியப்பே.
தமிழே சிறந்தது என்ற கீர்த்தனையில் அவருடைய இலக்கணப் புலமையை அறியும் வாய்ப்பு ஏற்படுகிறது.
திணை பால் காட்டும் விகுதி சிறப்புப் பொதுப் பகுதி
சேர்ந்த விதங்கள் எல்லாம் தென் மொழிக்கே தகுதி
எனப் பாடிச் செல்கிறார் பெரியார்.
பழங்கால நாடகப் பாடல் என விட்டு விடாமல் ஆழ்ந்து நோக்கினால் அவருடைய புலமை வரம்பை அறிந்து மகிழலாம்.
-----------------
3. பாரதி
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ் கலைவாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினையுடைய தமிழ்த் தாய், பல்லாயிரம் ஆண்டுகள் முன்னர்த்தொட்டு இன்றளவும் கன்னித்தன்மை குலையாமல் வளர்ந்து வரும் இயல்பினை உடையவளாவாள். இவள் காலத்தில், இவளோடு தோன்றிய எத்தனையோ, நூற்றுக் கணக்கான மொழிகள் முற்றிலும் வளர்ச்சி அடையாமலோ, அன்றி நன்கு வளர்ந்த பின்னரோ இன்றைய நிலையில், பொய்யாய்க் கனவாய்ப் பழங் கதையாய்ப் போய்விட்டன. எனவே, அன்றிலிருந்து இன்றுவரை பேச்சு வழக்கிலும், நூல் வழக்கிலும் இளமை குன்றாது வளர்ந்து வருகின்ற தனிச் சிறப்பு அகில உலக மொழிகளுள் தமிழ்த் தாய் ஒருத்திக்கே உரியதாகும். 2,000 ஆண்டுகளில் கூட மிகச் சிறிய வேறுபாடுகள் தவிர புரட்சிகரமான மாறுதல்கள் எவையும் இன்றி இருந்து வரும் சிறப்புத் தமிழ்த் தாய்க்கே உரியது.
கிறித்துவின் காலத்தையொட்டி வளர்ந்த சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் தவிர, அதனையடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம், பின்னர்த் தோன்றிய மணிமேகலை இதனையொட்டித் தோன்றிய பெருங்கதை என்பவற்றுடன் திருக்குறள் நீங்கலாக உள்ள பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பவை ஒருபுறம் மிளிர - இடைக் காலத்தில் சிந்தாமணி, கம்ப இராமாயணம், பெரிய புராணம் என்ற பிற இலக்கியங்கள் ஒருபுறம் மிளிர்ந்து நிற்கின்றன. 12-ஆம் நூற்றாண்டை அடுத்து இத்தகைய பெரும் இலக்கியங்கள் தோன்ற வில்லை என்றாலும், சாத்திர நூல்கள் தோன்றலாயின. 10 நூற்றாண்டுகளில் தோன்றிய இலக்கியங்களாகவே உள்ள மேலே கூறிய நூல்கள் ஒருபுறம் இருக்க, கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து 10 - ஆம் நூற்றாண்டுக்குள் சைவ வைணவ சமய குரவர்கள் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகிய பெருநூல்களும் யாத்துத் தந்தனர். இவற்றைச் சமய இலக்கியங்கள் என்று கூறலாம். இச் சமய இலக்கியங்களின் பின்னர்ப் பெருங்காப்பிய இலக்கியங்கள் புதிய முறையில் விருத்தப் பாவில் தோன்றின. சமய இலக்கியங்கள் பழைய சங்கப் பாடல் முறையைத் தவிர்த்து, அதாவது ஆசிரியம், கலி என்பவற்றை நீக்கி, விருத்தப்பா என்னும் புது முறையைக் கையாண்டன.
மனித உணர்ச்சியை வெளியிடும் சாதனமாக உள்ள கவிதை, ஆசிரியம், கலி ஆகிய வகைகளில் வெளிவரும் பொழுது முழு உணர்ச்சியையும் வெளிப் படுத்த இடந்தாராமையால் அதற்கேற்ற முறையில் விருத்தப் பாக்கள் அமையலாயின. இக் காரணத்தாற் போலும் பின்னர்த் தோன்றிய இலக்கியங்கள் யாவும் ஒரோவழி ஆசிரியப்பா முறையை மேற்கொண்டனவே தவிர, நூற்றுக்கு 90 விழுக்காடு விருத்தப்பா முறையையே மேற்கொண்டன.
12-ஆம் நூற்றாண்டை அடுத்துப் பேரிலக்கியங்கள் தோன்றவில்லை என்றாலும், 19 - ஆம் நூற்றாண்டு முடியச் சிற்றிலக்கியங்கள் பல தோன்றின. தமிழில் உரை நடையும் உரையாசிரியர்களால் பெரிதும் போற்றி வளர்க்கப்பட்டது. இவ் இடைக் காலத்தில் கவிதைக் கலைஞர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக நிற்பவர்கள் குமரகுருபர சுவாமிகளும் சிவப்பிரகாசரும் ஆவர். உரைநடைக்கு எடுத்துக்காட்டாக நிற்பவர் மாதவச் சிவஞான யோகிகள் ஆவார். 7-ஆம் நூற்றாண்டு முதல் 19 - ஆம் நூற்றாண்டு முடியத் தோன்றிய நூல்களுள் ஏறத்தாழ அனைத்துமே சமயச் சார்புடையனவாக அமைந்து விட்டன. 17, 18, 19 ஆகிய நூற்றாண்டு களில் தல புராணங்கள் என்னும் புதிய முறை இலக்கியமும் தோன்றி வளரலாயிற்று. இவை அனைத்தும் சமயச் சார்புடையனவே-யாயினும் ஒரு சில தல புராணங்கள் தவிர பிற அனைத்தும் கவிதைத் தன்மையை இழந்து வெறும் செய்யுள் என்ற நிலைமையை எய்தின் இந்தக் கட்டத்துள் சிறந்த கவிதை என்று சொல்லத் தகுந்த சிறப்புடன் கூடிய பாடல்களை இயற்றிய பெருமை இருவருக்கே உரியது. அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் வடலூர் இராமலிங்க வள்ளலாரும் ஆவர்.
இவ்விருவர் இடையேயும் மலை அத்தனை வேறுபாட்டைக் காணமுடியும். மகாவித்துவான் பிள்ளையவர்களுடைய பாடல்கள் நாளிகேர பாகம் (தேங்காய்) என்று சொல்லத் தகுந்த முறையில் கடுமையான சொல்லாட்சியைப் பெற்று நின்றன. இதனெதிராக வள்ளலாருடைய பாடல்கள் திராட்சா பாகம் என்று சொல்லக்கூடிய முறையில் மிக எளிய தொடர்களைக் கொண்டு சுற்றாரும் கல்லாதவரும், வல்லாரும் மாட்டாதவரும் படித்துப் பயன் அடையக் கூடிய முறையில் அமைந்தன.
வள்ளலாருடைய பாடல்களில் உள்ள எளிமைச் சிறப்பு ஒருபுறமிருக்க, அதுவரையில் நாட்டில் இல்லாத ஒரு புதுமையைப் புகுத்திய சிறப்பும் அவரைச் சார்ந்ததாகும். சமரசம் என்ற சொல்லை அவருக்கு முன்னர்த் தாயுமானவப் பெருந்தகை கையாண்டிருந்தாலும், அவருடைய பாடல்கள் கடினமாக இருக்கின்ற காரணத்தால், அதிகம் நாட்டில் செலாவணி யாகவில்லை. அந்தச் சமரசத்தையடுத்து அனைவரும் அறிந்து பயனடையக்கூடிய முறையில் மிக எளிய பாடல்களில் புகுத்தி மக்கட்கு வழங்கிய பெருமை வள்ளலாருக்கே உரியதாகும். ஒரு வகையில் பார்த்தால், கவிதை உலகிலும், சமய உலகிலும், பண்பாட்டு உலகிலும் 19-ம் நூற்றாண்டில் மாபெரும். புரட்சி செய்து தமிழ் மக்களைத் தட்டி எழுப்பிப் பக்தி வெள்ளத்தில் திளைக்குமாறு செய்த பெருமை இராமலிங்க வள்ளலாருக்கே உரியதாகும்.
19 - ஆம் நூற்றாண்டின் கடைசியில் தோன்றி 20 - ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து வாழ்ந்த மாபெரும் கவிஞர்களைத் தமிழர்கள் என்றும் மறத்தற்பாலர் அல்லர். துரதிருஷ்டவசமாக இம் மூவருமே இன்று இல்லை. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கவிச்சக்கரவர்த்தி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்ற மூவருமே 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்கள் ஆவர்.
20 -ஆம் நூற்றாண்டின் கவிஞர்கள் என்ற காரணத்தாலும், புரட்சிக் கவிஞர்கள் என்று பாரதியும் பாரதிதாசனும் பெயர் சூட்டப் பெற்ற காரணத்தாலும் புதிய புதிய கவிதைகளையும் பாடல் முறைகளையும் கையாண்ட காரணத்தாலும், இவர்கள் மூவருள்ளும் ஒரு சிறந்த ஒற்றுமை உண்டு என்பதை மறுக்க முடியாது என்றாலும், புரட்சிக் கவிஞர்கள் என்று கூறப்பெற்ற காரணத்தால், இவர்கள் மூவரும் பழமையோடு தொடர்புடையவர்கள் இல்லையோ, இவர்கள் பழைய இலக்கியங்களையே யில்லாமல் பாடினார்களோ என்று ஐயுற வேண்டியதில்லை.
இம் மூன்று பெருமக்களும் தமிழ் இலக்கியச் சுனையில் ஆழக் குளித்து முத்துக்கள் எடுத்ததுடன் அச்சுனையிலேயே ஆடி வளரும் பேறு பெற்றவர்கள். சிறந்த இலக்கிய இலக்கணப் பயிற்சியும் உடையவர்கள். எத்துணை இலக்கண அறிவு பெற்றவர்களும் இவர்கள் பாடல்களில் குறை காண முடியாது. குறிப்பாகப் பாரதிதாசனும், பாரதியும் புதியன புனைந்தார்கள் எனில், பழமையை நன்கு அறிந்து, வேண்டும் திருத்தம் செய்து, புதியன புனைந்தார்களே தவிரப் பழமையை அடியோடு வெருட்டிப் புதியன. புனையவில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
கவிச் சக்கரவர்த்தி பாரதி 1882 -ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11-ஆம் நாள் எட்டையாபுரத்தில் திரு. சின்னசாமி ஐயர் அவர்கட்கும் இலட்சுமி அம்மைக்கும் மகனாகத் தோன்றியவர். 11-ஆவது வயதிலேயே எட்டையாபுரம் சமஸ்தானப் புலவர்களால் சோதனை செய்யப் பெற்றுப் 'பாரதி' என்ற பட்டம் அளிக்கப் பெற்றவர். திருநெல்வேலி இந்துக் கல்லூரிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று, அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேச பரீட்சை யில் தேர்வு பெற்றுக் காசி இந்துப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம், இந்தி ஆகிய இரண்டும் பயின்றார். 1921- ஆம் வருடம் செப்டம்பர் 11 - ஆம் தேதியன்று 39 வயது நிரம்பும் முன்னரே இறைவன் திருவடி எய்தினார்.
இந்த 39 ஆண்டுகளுக்குள் நூற்றுக்கணக்கான பாடல்களும், ஞான ரதம், நவ தந்திரக் கதைகள், சந்திரிகையின் கதை. சின்னச் சங்கரன் கதை, வேடிக்கைக் கதைகள் ஆகிய கதைகளும், கலைகள், மாதர், சமூகம் என்பவை பற்றி நூற்றுக் கணக்கான கட்டுரைகளும் எழுதிச் சென்றுள்ளார். முறையாகப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாது போனதே. அவருடைய வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது என்று நினைக்க வேண்டியுள்ளது. பிறப்பிலேயே கவிஞனாகப் பிறந்த ஒருவனுடைய ஆற்றலைச் சாதாரண மக்களுக்குரிய நடைமுறைகளைக் கொண்டுள்ள பள்ளிக் கல்வி, வளர்ப்பதற்குப் பதிலாக அமுக்கவே பயன்படுகிறது என்று இன்றைய மனோதத்துவ வாதிகள் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகவே, பாரதியின் பள்ளிப் படிப்புத் தடைப்பட்டது ஒரு பெரிய நன்மைக்கே ஆகும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
சிறந்த கலைஞனாகப் பாரதி தோன்றிய நிலையில் பொதுவாக இந்தியாவின் நிலையையும் சிறப்பாக தமிழ்நாட்டின் நிலையையும் சற்றுக் கூர்ந்து காண்டல் வேண்டும். இந்திய நாட்டின் அரசியல் நிலைமையும், தமிழ்ச் சமுதாய வாழ்க்கை நிலைமையும், தமிழ் இலக்கிய உலகின் நிலைமையும் அவ்வளவு விரும்பத் தகுந்ததாக இல்லை என்று அறிய முடியும். அதுவரை அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டில் உரிமை வேட்கை ஏற்பட்டுத் திலகர், லஜபதி போன்ற பெரியோர்களின் தூண்டுதலால் நாடு முழுவதும் தோன்றிய கொந்தளிப்பு மகாத்மா என்ற உதய சூரியனால் திசை திருப்பப் பெற்றிருந்த காலமாகும் அது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்ற பெரும் புரட்சியாளர்கள் மக்களைத் தட்டியெழுப்பும் பணியில் முழு மூச்சாக இறங்கித் தம்மைத் தாமே தியாகம் செய்கின்ற சூழ்நிலையில் இருந்து வந்தனர். அரசியல் நிலைமையில் ஏற்பட்ட இந்தக் கொந்தளிப்பும் புரட்சியும் சமுதாயத்தையும் பற்றாமல் இல்லை. அரசியலில் விடுதலை வேண்டுமானால், அந்த விடுதலையைப் பெற்று அனுபவிக்கக்கூடிய ஆற்றல் சமுதாயத்திற்கு வேண்டுமென்றும், சமுதாயத்தில் வாழும் மக்கள் சாதி, சமயப் போராட்டங்களில் கருத்தைச் செலுத்தி ஒருவரையொருவர் அடிமைப்படுத்தி, கொடுமைப் படுத்தி வாழ்வார்களேயானால், அத்தகைய மக்கள் உரிமைக் குரல் எழுப்பத் தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் மகாத்மா போன்ற அரசியல் புரட்சி வீரர்களால் விரிவாகப் பேசப் பெற்றது.
எனவே, பன்னெடுங் காலமாக இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் ஊறியிருந்த மூடப்பழக்க வழக்கங்களைத் தகர்த்து எறியும் முறையில் சமுதாயப் புரட்சிக்கும் விதை விதைக்கப்பட்டது. கவிஞன் தான் தோன்றிய காலத்தை வென்று நின்று பாடக் கூடியவன் என்றாலும், அவன் எந்தக் காலத்தில் தோன்றுகிறானோ அந்தக் காலத்தின் சாயை அவனுடைய இலக்கியத்தில் காணப்படாமல் போகாது. தன்னுடைய கால நிலையை உணர்ந்து இலக்கியம் படைக்காமல் அறவே விட்டு விடுகின்ற கவிஞன் மக்கள் தொடர்பு இல்லாதவனாகி விடுவான். மக்கள் தொடர்பு இல்லாத கவிஞன் சிறந்த கவிதை கள் இயற்றினாலும் அக்கவிதைகள் மக்களால் போற்றி ஏற்றுக் கொள்ளப் பெறுவதில்லை. எனவே, அரசியல் வானிலும் சமுதாய உலகிலும் பெரும் புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கவிஞன் ஒருவன் தோன்றுவானேயானால், அவனுடைய கவிதை இந்த அரசியல், சமுதாயப் புரட்சிகட்கு இடந் தாராமல் இருக்க முடியாது. இந்த அடிப்படையை நன்கு உணர்ந்து கொண்டால் பாரதி, பாரதிதாசன் என்ற இருவரும் இத்தகைய கவிதைகள் இயற்றுவதற் குரிய நிலைக்களத்தை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.
இவ்விருவரில் பாரதி அரசியல் விடுதலை வேட்கை அதிகம் பெற்றவராக அதற்குரிய பாடல்களை மிகுதியும் பாடியுள்ளார். அவரின் இளையவராய் அவருடைய அன்பார்ந்த தோழராய் அமைந்த புரட்சிக் கவிஞர் சமுதாய விடுதலையில் நாட்டம் அதிகம் செலுத்தினார். எனவே, அவருடைய பாடல்களில் சமுதாயப் புரட்சி மிகுதியாக இடம் பெற்றது. பாரதியைப் பொறுத்தமட்டில் இளமையில் பெற்ற துன்பங்களும், மறுவேளைச் சோற்றுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று கலங்கிய கலக்கமும், அலாகாபாத், காசி போன்ற இடங்களில் சென்று வடமொழி , இந்தி ஆகிய மொழிகளைக் கற்ற அறிவும், வடமொழி இலக்கிய ஊற்றில் திளைத்த அனுபவமும் அவருடைய தெய்வபக்தியை வளர்ப்பதற்குக் காரணமாய் அமைந்தன.
ஒருவேளை இந்த வடநாட்டு யாத்திரையும் வட மொழிப் பயிற்சியும் இல்லாமல் இருந்திருப்பின் இவ்வளவு தூரம் பக்திப் பாடல்களை, தெய்வப் பாடல்களை அவர் பாடாமலும் இருந்திருக்கலாம். இளமையிலேயே நாடு முழுவதையும் சுற்றித் திரிந்து பார்த்த காரணத்தாலும் பிற மொழி பேசும் இந்திய நாட்டு மக்களோடு பல்லாண்டுகள் பழக நேர்ந்த காரணத்தாலும், பாரதியாரின் அறிவு, விரிந்த பரப்பும் பாங்கும் கொண்டது என்பதை மறுக்க முடியாது. இந்தியா முழுவதையும் ஒன்றாகக் காணுகின்ற ஒருமைக் கண்ணோட்டம், பரந்துபட்ட அவருடைய அனுபவத்தின் விளைவு என்று நினைக்க வேண்டியுள்ளது.
பல்வேறு வகையான சாதிகள், சமயங்கள், கடவுள் வழிபாடு, மாறுபட்ட உணவு முறை. சமுதாயப் பழக்கவழக்கங்கள் ஆகிய இவையனைத்தும் நிரம்பி இருந்தும், மனித உணர்வில், பண்பாட்டில், குறிக்கோளில் ஓர் ஒற்றுமை நிலவுவதை இந்தியா முழுவதும் சுற்றி வந்த பாரதி. இளமையிலேயே கண்டு கொண்டார். அத்துடன் அவருடைய ஆழ்ந்த இலக்கியப் பயிற்சி இந்திய மண்ணில் வாழ்கின்ற மக்கள் பல்வேறு பிரிவினராக இருப்பினும் அவர்களுள் ஓர் ஒற்றுமை என்னும் இழை அந்தரங்கத்தில் செல்வதை அறிந்து கொள்ள உதவியது. தம்முடைய மொழியின் பெருமையையும் தாய் நாட்டின் பெருமையும் அறிகிற அதே நேரத்தில், பிற மொழிகளின் சிறப்பையும் அவற்றிலும் அவற்றின் பண்பாட்டை வளர்க்கும் ஆற்றல் உண்டு என்பதையும் அவர் அறிய முடிந்தது.
”யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”, "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே, அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே” என்றும் பாடிய கலைஞர், இந்தக் குறுகிய நோக்கத்தோடு நின்றுவிடாமல், பாரத சமுதாயம் முழுவதையும் தம்முடையதாக நினைந்து. அதற்கு மேலும் ஒருபடி சென்று அகில உலகத்தையும் சகோதர பாவத்துடன் நோக்கும் பேராற்றலைப் பெற்றிருந்தார்.
தாய் மொழிமாட்டும் தாய் நாட்டின் மாட்டும் இத்துணை ஆழ்ந்த பக்தி கொண்ட ஒருவர், இவற்றை கடந்து அகில உலக சகோதரத்துவத்தைக் காண நேரிட்டதற்குக் காரணம் இந்த நாட்டின் பழைய இலக்கியத்தைப் பயின்றிருந்தமையும் பிற மொழிகளை நன்கு பயின்றமையும் ஆழ்ந்த தெய்வ பக்தி உடைமையுமே என்று நினைக்கத் தோன்றுகிறது.
வேர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞர் 'ப்ரிலூட்' (Prelude) கவிதையில் தம் சுய சரிதையைப் பேசுவது போல், பாரதியும் சுயசரிதை பாடியிருக்கின்றார். அதனைப் படிக்கும் பொழுது, 'தேச பக்திப் பாடல்களும் புதிய ஆத்திசூடியும் எழுதிய அதே கவிஞரா - இவர் ' என்ற ஐயம் தோன்றத்தான் செய்கிறது. மிக இளமையிலேயே வறுமையோடு போராடிய கவிஞருக்கு நாடு முழுவதும் அல்லலுறும் அவல நிலைமையைக் கண்டு நாளாவட்டத்தில் தம்முடைய சொந்த வறுமையை மறந்துவிடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இளமையில் அவரைத் தாக்கிய வறுமையின்பால் சினமுற்று, அந்த வறுமைக்குக் காரணமானவர்களைச் சாட வேண்டும் மென்ற நினைவு இருத்தல் கூடும். ஆனால், அதனை அடுத்துத் தோன்றிய நாட்டின் அவல நிலையைக் கண்ட பொழுது தன் வறுமையின்மாட்டுத் தோன்றிய சினம் நாட்டின் அவல நிலையை உண்டாக்கியவர்கள் மேலும் பாயத் தொடங்கியிருக்கிறது. நிகழ்கின்ற இந்துஸ்தானமும் வருகின்ற இந்துஸ்தானமும்', ’சுதந்திரப் பெருமை', 'சுதந்திரப் பயிர்', 'சுதந்திர தாகம்' என்ற பாடல்களையும் 'சத்திரபதி சிவாஜி தன் சைன்யத்திற்குக் கூறியது’ என்ற பாடலையும் பார்க்கும்பொழுது பழைய பாரதியின் சின உண்மை தெரிகின்றது. கடைசியாகக் குறிப்பிட்ட பகுதியில் வரும் இவ்வடிகள் காண்க :
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்;
வீரிய மழிந்து மேன்மையு மொழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்.
மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?
பெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து கொல் வாழ்வீர்?
மொக்குள் தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்,
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
மானமொன் றிரலது மாற்றலர் தொழும்பராய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?
தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ?
பிச்சைவாழ் வுகந்து பிறருடை யாட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்.
தம்முடைய கட்சியில் மாறுபட்ட கருத்துடையவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகின்ற பாரதியைக் ’கோகலே சாமியார்' என்ற பகுதியில் காண்கிறோம். தீவிர வாதத்தில் இத்துணைப் பற்றுக் கொண்டிருந்தால்தான் இம்மாதிரிப் பாட வரும். இத்தகை ஒருவருக்குக் ’கோகலே' போன்ற மிதவாதிகளிடம் வெறுப்புத் தோன்றியதில் புதுமை இல்லை.
களக்கமறும் மார்லி நடம் கண்டு கொண்ட தருணம்
கடைச் சிறியேன் உளம் பூத்துக் காய்த்ததொரு கனிதான்
விளக்கமுறப் பழுத்திடுமோ " வெம்பிவிழுந் திடுமோ?
வெம்பாது விழினு மென்றன் கரத்தில் கப் படுமோ?
வளர்த்த பழம் கர்சானென்ற குரங்கு கவர்ந் திடுமோ?
மற்றிங்ஙன் ஆட்சி செயும் , அணில் கடித்து விடுமோ?
துளக்க மறயான் பெற்றிங் குண்ணுவனோ, அல்லால்
தொண்டை விக்குமோ, ஏதும் , சொல்லரிய தாமோ?
”ஆங்கிலேயன் ஒரு தேச பக்தனுக்குக் கூறுவது” என்ற பாடலும், ”தேச பக்தன் ஆங்கிலேயனுக்குக் கூறும் மறுமொழி” என்ற பாடலும் "நடிப்புச் சுதேசிகள்" என்ற பாடலும் இளங் கவிஞராகிய பாரதியின் மனம் எந்தத் திசையில் சென்றது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. வெறுப்பு. சினம், மாற்சரியம், தன்னால் ஒன்றும் செய்ய முடியாமையினால் ஏற்படுகின்ற கழிவிரக்கம் ஆகிய உணர்ச்சிகளே கவிஞன் மனத்தை ஆட்கொண் டிருந்தன என்று அறிய முடிகிறது.
இத்தகைய நிலையிலிருந்து கவிஞர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிப் பண்பட்டு, உள்ளத்தில் வெறுப்பு, சினம் என்பவற்றிற்குப் பதிலாக, இரக்கமும் சகிப்புத்தன்மையும் நிரம்பப் பெறுகிறார். அத்தகைய மனோ நிலையில் தான் 'செந்தமிழ் நாடு என்னும் போதினிலே' என்ற பாடலும் "மாஜினியின் பிரதிக்ஞை", "பெல்ஜிய நாட்டு வாழ்த்து”, 'புதிய ருஷ்யா' என்ற பாடல்களும் முகிழ்க்கின்றன. மேலும், இந்த நாடுகள் பெற்ற வெற்றியைக் காணும் பொழுது தம்முடைய நாட்டிற்கும் இறுதியில் வெற்றி கிடைப்பது உறுதி என்ற எண்ணம் கவிஞர் மனத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். இந்த அமைதி தோன்றியவுடனேயே விடுதலைப் போராட்டத்தில் வெற்றி கிடைக்க வழியில்லாமல் அதனைத் தடை செய்வது எது என்ற வினாவும் அடுத்துத் தோன்றி யிருக்கும். இந்த இரண்டாவது வினாவிற்கு விடை காண முற்பட்ட கவிஞர் தமிழர் வரலாற்றையும், தமிழ் மக்கள் பண்பாட்டையும் நன்கு சிந்தித்துப் பார்த்து, வெற்றி கிடைக்காமைக்குரிய காரணம் நம்மிடமே இருக்கிறது என்ற பேருண்மையை, அறியத் தொடங்குகிறார். ’எண்ணிய எண்ணி யாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்’ என்ற குறளை நன்கு அறிந்த பாரதி நம்மிடையே உள்ள குறைகளை நினைந்து வருந்துவதுடன் எள்ளி நகையாடு முகமாகக் கிளிக் கண்ணியில் கீழ்வருமாறு பாடுகிறார்:
நெஞ்சி லுரமு மின்றி
நேர்மைத் திறமு மின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடீ.
கூட்டத்திற் கூடி நின்று
கூவிப் பிதற்ற லன்றி
நாட்டத்திற் கொள்ளாரம் - கிளியே
நாளில் மறப்பாரடீ.
ஊக்கமும் உள்வலியும்
உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர்கணமும் - கிளியே
வாழத் தகுதியுண்டோ ?
மானம் சிறிதென் றெண்ணி
வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தன்னில் - கிளியே
இருக்க நிலைமையுண்டோ ?
பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை - கிளியே
பாமர ரேதறிவார்?
பஞ்சத்தும் நோய்களிலும்
பாரதர் புழுக்கள் போலத்
துஞ் சத்தம் கண்ணாற் கண்டும் - கிளியே
சோம்பிக் கிடப்பாராடீ
பாரத சமுதாயம் முழுவதிலுமுள்ள குறைகளைப் பேசுவது கிளிக் கண்ணிப் பாடல்கள். ’தமிழ்ச் சாதி' என்ற பாடலில் அவரால் போற்றி வணங்கப்படும் தமிழும் தமிழரும் இருந்த உச்ச நிலை அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டதை நினைத்து மனம் மறுகுகிறார்.
விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைந்தா யெனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாந் தகத்தக்க மாறித்
தன்மையுந் தனது தருமமு மாயா
தென்றுமோர் நிலையா யிருந்து நின் னருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்
வள்ளுறு தருமமு முண்மையு மாறிச்
சிதைவுற் றழியும் பொருள்களிற் சேர்ப்பையோ?
'அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே, தமிழச் சாதியை யெவ்வகை
விதித்தா' யென்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்,
"சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும்
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவு மழகுங் கருதியும்
'எல்லை யொன் றின்மை' யெனும் பொரு ளதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலு
முயற்சியைக் கருதியும், முன்பு நான் தமிழச்
சாதியை யமரத் தன்மை வாய்ந்தது "வென்
றுறுதி கொண்டிருந்தேன் ஒரு பதி னாயிரஞ்
சனிவாய்ப் பட்டுந் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி யுழைத்திடு நெறிகளைக்
கண்டென துள்ளங் கலங்கிடா திருந்தேன்.
"தமிழச் சாதி” மாட்டு இத்துணை உயர்ந்த எண்ணம் கொள்வதற்குக் காரணத்தையும் 'சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும்' என்பது முதலான அடிகளில் அவரே குறிக்கிறார். அப்படிப் பட்ட தமிழ் இனம் இன்று தரையோடு தரையாகக் கிடக்கின்ற சூழ்நிலையை நினைத்து வருந்துகிறார். குறிப்பாக இந்த ஒரு பாடலில் சினம் முதலியவற்றைக் கடந்து நிற்கின்ற கவிஞன் மனம் பச்சாத்தாபம் என்ற உணர்ச்சியால் உந்தப்பெற்று அந்த உணர்ச்சி யின் சிகரத்தில் நின்று பாடுவதைக் காணமுடிகிறது.
இங்ஙனம் தமிழச் சாதியினிடத்தும் இந்தியர்களாகிய மக்களிடத்தும் உள்ள குறைகளை உள்ளங்கை நெல்லிக்கனி எனக் காண முடிந்த பிறகு அவருடைய மனத்தில் வெள்ளையர்மாட்டுக் கொண்டிருந்த வெறுப்புக் குறையத் தொடங்கியதை அறிகின்றோம். நாடு அடிமைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம் நம்முடைய அறியாமை, கல்வியின்மை, மூட நம்பிக்கைகள், பைத்தியக்காரப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கை-யின்மை, உறுதியின்மை ஆகியவையே என்பதை நன்கு உணர்ந்த பின்னர்க் கவிஞருடைய மன வளர்ச்சியில் புதியதொரு திருப்பத்தைக் காண்கின்றோம். அடிப்படையாக இந்தக் குறைகளைப் போக்கினாலொழியச் சுதந்திரம் வாராது என்பதை ஏறத்தாழ இதே காலத்தில் மகாத்மா காந்தியும் உணர்த்தத் தொடங்கினார்.
இந்த உண்மையை நன்கு அறிந்து கொண்ட பின்னர்க் கவிஞருடைய மனம் இவற்றைப் போக்குகின்ற முறையில் கவிதைகள் புனையத் தொடங்கியது. நாட்டுப் பாடல் பாடிக் கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் நாட்டின் அவல நிலையைப் போக்குவதற்கு நம்மை நாமே நம்பிக் கொண்டு இருக்கவேண்டுமென்ற எண்ணம் உறுதிப் பட்டு, அதற்கு உறுதுணையாகக் கடவுளுடைய அருளும் வேண்டுமென்று நினைக்கின்ற புதிய மனப் பான்மை தோன்றத் தொடங்கியதையும் ’என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்' என்ற பாடல் மூலம் அறிகின்றோம். உள்ளத்தை உருக்கும் இப்பாடலில்,
பஞ்சமு நோயுநின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென் றருள் செய்யுங் கடமையில் லாயோ?
ஆரிய நீயுநின் அறமறந் தாயோ?
வெஞ்செய லரக்கரை வீட்டிடு வோனே!
வீர சிகாமணி! ஆரியர் கோனே
என்ற பகுதி கவிஞன் பெற்ற புதிய மன நிலையை நமக்குக் காட்டுகிறது.
1910 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் பாரதியின் ஏற்பாட்டின்படி அரவிந்தர் புதுவை வருவதும், அவரோடு கவிஞர் நெருங்கிப் பழகுவதும் கவிஞருடைய வளர்ச்சியில் மூன்றாவது திருப்பமாகும். 1908- இல் இருந்து 1910 வரை உள்ள இரண்டு ஆண்டுகளில் "சுதேச கீதங்கள்", "ஜென்ம பூமி” என்ற இரண்டு தொகுப்புகளில் கவிஞனின் நாட்டுப் பாடல்கள் அனைத்தும் வெளிவந்து விடுகின்றன.
கீதை மொழிபெயர்ப்பும், ’கண்ணன் பாட்டு'. 'குயில் பாட்டு', 'பாஞ்சாலி சபதம்' ஆகிய அனைத்தும் 1912 என்ற ஒரே ஆண்டில் வெளிவந்தன என்றால் 1910 ஆம் ஆண்டு பாரதிக்கும் 1912 ஆம் ஆண்டு பாரதிக்கும் இடையேயுள்ள கடலனைய வேற்றுமையைக் காண முடிகிறது. இந்த வேறு பாட்டிற்குக் காரணம் 1910ல் ஏற்பட்ட அரவிந்தரின் சேர்க்கையே ஆகும் என்று நினைப்பதில் தவறில்லை. கீதை, உடநிடதங்கள், வேதங்கள் என்பவற்றில் அரவிந்தர் வந்த பிறகு மூழ்கியிருந்ததாகவும் அறிகிறோம். பக்திப் பாடல்கள் என்று சொல்லப் பெறுகின்ற "விநாயர் நான்மணி மாலை " , ’தோத்திரப் பாடல்கள்', 'வேதாந்தப் பாடல்கள்’ என்பவையும் 'குயில் பாட்டு', 'கண்ணன் பாட்டு’, ’பாஞ்சாலி சபதம்’ ஆகியவையும் 1912க்குப்பின் தோன்றின வென்றால், தேசபக்தி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பாடல்கள் பாடி, தமிழ் இனத்தைத் தட்டி எழுப்பி நிமிர்ந்து நிற்குமாறு உபதேசம் செய்த பாரதியாரை - புற நோக்கிலேயே வாழ்நாளைக் கழித்த பாரதியாரை - திசை திருப்பி அக நோக்கில் செலுத்திய பெருமை மகான் அரவிந்தரைச் சாரும் என்று தெரிகின்றது.
இந்தத் தொடர்புமட்டும் அல்லாமல் சித்தர்கள் பலருடைய தொடர்பும் பாண்டியில் கவிஞருக்கு ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டியுள்ளது. நாட்டு விடுதலைக்காக உயிரையே கொடுக்கவேண்டு மென்று பாடிய பழைய பாரதி, புதிய ஆத்தி சூடியில் ஆண்மை தவறேல் என்றும், 'கொடுமையை எதிர்த்து நில்' என்றும், 'நையப்புடை' என்றும், ’வெடிப்புறப் பேசு' என்றும் பாடிய பாரதி திடீரென்று 'மரணத்தை வெல்லும் வழியையும், பொறுமையின் பெருமையும், சினத்தின் கேட்டையும் மிக விரிவாகப் பாரதி ’அறுபத்தாறு' என்ற பகுதியில் பேசத் தொடங்கிவிடுகிறார்.
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவு மங்கே அழிந்து போகும்
மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரண மில்லை.
துச்சமெளப் பிறர் பொருளைக் கருத லாலே,
சூழ்ந்த தெலாங் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமா ஞானத்தை மறத்த லாலே,
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.
என்றும்,
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள் கொண்டு கிழித்திடுவார் மாளுவாராம்.
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சிளம்பிறர்மேற் றாங்கொண்டு கவலை யாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்;
வையகத்தி லெதற்குமினிக் கவலை வேண்டா;
சாகாம லிருப்பது நஞ் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்?
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர் நீர் கேளீரோ , படைத்தோன் காப்பான்
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேதுவந்தா லெமக்கென் னென்றே.
என்றும்,
திருத்தணிகை மலை மேலே குமாரதேவன்
திருக்கொலுவீற் றிருக்குமதன் பொருளைக் கேளீர்
திருத்தணிகை யென்பதிங்குப் பொறுமை யின்பேர்.
செந்தமிழ்கண் டீர், பகுதி 'தணி'யெ னுஞ் சொல்,
பொருத்தமுறுந் தணிகையினாற் புலமை சேரும்
பொறுத்தவரே பூமியினை ஆள்வா ரென்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்.
என்றும் பாடுகின்ற பாரதியாரின் ஆளுமையில் ஒரு. புதிய திருப்பதைக் காணுகின்றோம்.
தேச பக்திப் பாடல்களில் காட்சி தரும் பாரதியும், பாரதி அறுபத்தாறில் காட்சி தரும் பாரதியும் முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றார்கள் என்பதைக் காணும் போது. இது கவிஞன் உள்ளத்தில் காணப் பெறும் முரண்பாடு [ Inconsistency] என்று பலர் பேசக் கேட்கிறோம். கவிஞனுடைய உள்ள வளர்ச்சியை நன்கு புரிந்து கொள்ளாமையால் இப்பிழைபாட்டைச் செய்கின்றோம். இந்த வளர்ச்சி மட்டும் இல்லாமல் இருந்திருக்குமேயானால் பாரதியின் கவிதைகள் காலத்தை வென்று நின்று நிலவுமா என்பது ஆராய்ச்சிக்குரிய ஒன்றாகும். பாரதியின் நாட்டுப் பாடல்களின் கவிதைச் சிறப்பையும் உணர்ச்சிப் பெருக்கையும் குறைத்து மதிப்பிடவில்லை. எனினும், இன்னும் நூறாண்டுகள் கழித்து இப்பாடல்கள் இலக்கியம் என்ற பெயருடன் நிற்கமுடியுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த வளர்ச்சி ஏற்படுவதற்குரிய காரணத்தையும் முன்னர்ச் சுருக்கிக் கூறினோம்.
மகான் அரவிந்தர் வங்காளத்திலிருந்து வந்தவர் என்பதும், வங்காளம் சக்தி வழிபாட்டில் புகழ் பெற்றது என்பதும், அரவிந்தர், தமிழ்நாட்டில் அதிகம் நிலை கொள்ளாத அந்தச் சக்தி வழிபாட்டு முறையைப் பாரதிக்கு அறிவுறுத்தியிருக்கவேண்டும் மென்பதும் நினைக்கத் தோன்றுகிறது. இந்த ஒரு தொடர்பே பாரதியின் மனம் மாறப் போதுமானது ஆகும் என்றாலும், கவிஞனின் நல்ல காலம் சித்தர்கள் பலரைச் சந்திப்பதோடு அல்லாமல் அவர்களுடைய உண்மை வடிவை அறிந்து கொள்ளவும் அவர்களோடு பழகவும் அவர்களுடைய உபதேசத்தைப் பெறவும் வாய்ப்புக் கூட இருந்திருக்கிறது. குறிப்பாகக் குள்ளச்சாமி என்ற அழுக்கு மூட்டைச் சாமியின் நட்பு, பாரதியின் மாற்றத்திற்குப் பெருங் காரணமாய் அமைந்திருந்தது என்று அறியமுடிகிறது.
குள்ளச்சாமியின் புகழ் , யாழ்பாணத்துச்சாமி, குவளைக்கண்ணன், மாங்கொட்டைச் சாமி என்ற பெரியார்களுடைய புகழைப் பாடிக்கொண்டே வருகின்ற பாரதியார் திடீரென்று "பெண் விடுதலை", ”தாய் மாண்பு", "காதலின் புகழ்”, "விடுதலைக் காதல்” என்பவற்றை இடையே பாடி அவற்றை முடிக்காமல், அடுத்துச் ’சர்வ மத் சமரசம்' என்ற தலைப்பில் கோவிந்தசாமியோடு நிகழ்ந்த உரையாடல்களையும் அவர் தமக்குச் செய்த மெய்ஞான உபதேசம் ஆகியவற்றையும் ஒரே பாடலில் பாடியுள்ளார்.
இப்பகுதிக்குப் 'பாரதி அறுபத்தாறு' என்ற தலைப்பைப் பிற்காலத்தில்தான் தந்திருக்க வேண்டும் மென்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரே பகுதியில் கடவுள் வாழ்த்து, சித்தர் வாழ்வு, பெண்கள் விடுதலை, ஞான உபதேசம் என்பவை இடம் பெறுமேயானால், இதைவிட அக் கவிஞனுடைய மன வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடி வேறு இருத்தல் இயலாது. முன்னர்க் கூறியபடி அரவிந்தருடைய உபதேசமும் , சித்தருடைய உபதேசமும் ஒன்றாகக் கலந்து பாரதியை உருவாக்கி யிருக்கின்றன என்பதற்கு இப்பகுதியே எடுத்துக் காட்டாகும்.
சமுதாயத்தில் காணப்பெறும் மூட நம்பிக்கைகள் சாதி வெறி என்பவற்றைத் தேச பக்திப் பாடல் பகுதியைவிட வேதாந்தப் பாடல்களைப் பாடும் பொழுதும் இவர் சாடினார். 'இஃது எம்முடைய மூதாதையர் காலத்திலிருந்தே வருகின்ற சிறந்த பழக்கம்' என்ற பெயரில் நடமாடும் நம்பிக்கைகளைத் தகர்க்க நினைத்த கவிஞர், யார் மூதாதையர் என்ற வினாவை எழுப்பிக்கொண்டு நகைச்சுவை ததும்ப இதோ பேசுகிறார்:
பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு
நமதுமூ தாதையர் - (நாற்பதிற் றாண்டின்
முன்னிருந் தவரோ, முந்நூற் றாண்டிற்
கப்பால் வாழ்ந்தவர் கொல்லோ, ஆயிரம்
ஆண்டின் முன் னவரோ, ஐயா யிரமோ?
பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்
தவரோ? புராண மாக்கிய காலமோ?
சைவரோ? வைணவ சமயத் தாரோ?
இந்திரன் றானோ? தனிமுதற் கடவுள்
என்று நம் முன்னோ ரேத்திய வைதிகக்
காலத் தவரோ? கருத்திலா தவர்தாம்
எமது மூதாதைய ரென்பதிர் கெவர்கொல்?) –
நமது மூதாதையர் நயமுறக் காட்டிய
ஒழுக்கமு நடையுங் கிரியையுங் கொள்கையும்
ஆங்கவர் காட்டிய வவ்வப் படியே த
ழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு.......
இதே கருத்தைக் ’கண்ணன் என் தாய்' என்ற பாடலிலும்,
சாத்திரங் கோடி வைத்தாள்; - அவை
தம்மினு முயர்ந்ததொர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினிலே - நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே
கோத்தபொய் வேதங்களும் -- மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய்ந்நடையும் – இள
மூடர்தம் கவலையு மவள் புனைந்தாள்
என்ற முறையிற் பாடிச் செல்கிறார். பழமை என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் பைத்தியக்கார நம்பிக்கைகளை ’மூட பக்தி', 'ஜாதிக்குழப்பம்', 'ஜாதி பேத விநோதங்கள்' என்ற தலைப்புகளில் கட்டுரைகளிலும் சாடுகின்றார். ஜாதிக் குழப்பம் என்ற கட்டுரையில் கடையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சுவைபட வருணிக்கின்றார். பிராமணன் ஒருவன் தன் தொழிலை விட்டு யானைப் பாகனாக மாறிச் சங்கரநயினார் கோவில் யானையைப் பராமரிக்கும் தொழிலில் அமர்ந்திருந்தான். அவன் தன் யானையைப் பற்றிப் பேசும்போது இந்த யானை கீழ்ச்சாதி யானை ; யானைகளில் பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திர யானைகள் என்று நான்கு முக்கிய ஜாதிகளுண்டு. ஒவ்வொரு ஜாதியிலும் கிளை வகுப்புக்கள் இருக்கின்றன. அவற்றுள் இது 'சூத்திர ஜாதி யானை' என்று கூறினானாம். இதை எடுத்துக் கூறும் கவிஞர் மனிதர்கள் மனத்தில் ஆழப் பதிந்து விட்ட இந்த ஜாதிக் கொள்கை காரணமாக யானை. குதிரை, ஆகாயத்திலுள்ள கிரகங்கள், இரத்தினங்கள் என்பவற்றிற்கூட ஜாதி பிரிக்கும் அளவிற்குச் சென்று விட்டது என்று கூறி வருந்துகிறார்.
'கண்ணன் என் தந்தை' என்ற பாடலில்,
பிறந்தது மறக்கு லத்தில்; - அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்கு லத்தில்;
சிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில
செட்டிமக்களோடு மிகப் பழக்கமுண்டு;
நிறந்தனிற் கருமை கொண்டான்; - அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள் ;
துறந்த நடைகளுடையான்; - உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.
நாலு குலங்க ளமைத்தான்; - அதை
நாசமுறப் புரிந்தனர் முட மனிதர்;
சீல மறிவு கருமம் - இவை
சிறந்தவர் குலத்தினிற் சிறந்தவராம்;
மேலவர் கீழவ ரென்றே - வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை யெல்லாம் இன்று
பொசுக்கிவிட்டா லெவர்க்கும் நன்மையுண் டென்பான்
என வரும் பகுதிகள் சமுதாயத்தின் இந்த அவகேட்டைக் கண்டு நொந்து பாடியனவாம்.
சமுதாயத்தில் காணப்பெறும் குறைபாடுகளைக் கண்டு உளம் நைந்துதான் இத்தகைய பாடல்களைக் கூறியுள்ளார் என்றாலும், இவற்றைப் படிக்கும் பொழுது வெறும் சமூக சீர்திருத்தவாதியின் கூற்றுக்களாக இவை காணப்படவில்லை. அதன் மறுதலை யாக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உணர்ந்து மக்கட்கு அதனை உபதேசிக்கத் துடிக்கும் ஒரு தத்துவ ஞானியின் குரலைத்தான் இப்பாடல்களிற் கேட்க முடிகிறது.
கவிஞராய்த் தோன்றிய ஒருவர் தேச பக்தராக மாறியதையும் சமூக சீர்திருத்த நோக்கங் கொண்டவராகப் பரிணமித்ததையும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டை அறிந்த தத்துவ ஞானியாக மலர்ந்ததையும் இறைவனுடைய இலக்கணத்தை உணரும் சித்தராசு மாறினதையும் வரிசையாக ஓரளவு காண்டல் பயனுடையதாகும்.
இவற்றில் முதல் மூன்று தோற்றத்தையும் இதுவரை ஒருவாறு கண்டோம். சித்தர்களுடைய தொடர்பு பெற்ற கவிஞர் - எங்கும் ஓர் இறைவனே உள்ளான், பல்வேறு சமயங்களிலும் புகுந்து பார்க்கின் விளங்கும் பரம்பொருளின் விளையாட்டல்லால் மாறுபடும் கருத்தில்லை என்ற முடிவையும் அறிந்ததுடன் மட்டுமல்லாமல் உணரவும் செய்கிறார்.
சொல்லினுக்கு அரியனாய்ச் சூழ்ச்சிக்கு அரியனாய்
பல்லுரு வாகிப் படர்ந்த வான் பொருளை,
உள்ளுயி ராகி உலகங் காக்கும்
சத்தியே தானாம் தனிச்சுடர்ப் பொருள் (வி. நா. மாலை - 12 )
யான்எனது அற்றார் ஞானமே தானாய்
முத்தி நிலைக்கு மூலவித் தாவான் (வி. நா. மாலை -11)
என்ற முறையில் இறைப் பொருளை விளக்கிட முற்படுகின்றார் கவிஞர்.
அறிவினால் முயன்று பார்த்தாலும் காணுதற்கு எட்டாத பரம்பொருள் அருள் வடிவினனாக உள்ளான் என்ற பேருண்மையை,
அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே மிளிர்வாய் (முருகன் பாட்டு - 5}
என்றும் - அவன் யாவரினும் மேம்பட்டவன், அனைவருக்கும் அறிவு கொளுத்துபவன் என்ற உண்மையை,
யாவருக்கும் தலை யாயினான்; மறை,
அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் (முருகன் பாட்டு - 3)
என்றும் கூறுகிறார்.
இறைப் பொருள் பேராற்றல் வடிவாக இருக்கின்றது என்ற பேருண்மையினைப் பல்வேறு வகையாகப் பேசிச் செல்லும் கவிஞர், அதே நேரத்தில் அந்த ஆற்றல் தவறான வழிகளில் செலுத்தப் பெறுவதில்லை என்றும், தன் மாட்டு அன்பு கொண்டாரிடத்தும் அவ்வாற்றலை மறைத்துக் கொண்டு எளிமைத் தன்மையோடு அருள் செய்யும் இயல்புடையது என்பதையும் வேலன் பாடலி’ல் அழகாக எடுத்துக் காட்டுகிறார். இறைவன் புருவத்தை வளைத்தால், அகில உலகங்களும் தவிடு பொடியாகும் என்பதை முதல் அடியில் குறிப்பிட்டு, அடுத்த அடியில் அத்தகைய பேராற்றல் படைத்த பரம்பொருள் தன் மாட்டு அன்பு செய்யும் வள்ளியாகிய குறப் பெண் ணிடம் சொக்கிப் போய் மரம் போல் நின்றுவிட்டது என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். வில்லினை ஒத்த புருவம்" என்ற பாடலில்,
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை,
வேலவா - அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா
சொல்லினைத் தேனில் குழைத்துரைப்
பாள் சிறு வள்ளியைக் கண்டு
சொக்கி - வேங்கை மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே.
கல்லினை யொத்த வலியமனங்
கொண்ட பாதகன் - சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரையிட்ட வேலவா.
பல்லினைக் காட்டி வெண் முத்தைப்
பழித்திடும் வள்ளியை - ஒரு
முதியர் கோலந் தரித்துக்
கரந்தொட்ட வேலவா.
ஆற்றலே வடிவாகிய பொருள் தன் ஆற்றல் முழுவதையும் மறைத்துக்கொண்டு அடியாருக்கு எளியவனாகக் காட்சி தருகின்றான் என்பதில் மட்டும் பரம்பொருளில் காணப்பெறும் முரண்பாட்டைக் காட்டாமல், உலகத்தார் எவ்வெவற்றை முரண்பாடா-னவை என்று அடித்துக் கூறுகிறார்களோ அவை அனைத்துமே பரம்பொருளின் வடிவம் என்பதை 'வேள்விப் பாட்டு' என்ற பகுதியில் அழகாக இணைத்துக் காட்டுகிறார். உலகத்து மக்கள் ஒரு சிலவற்றை இயற்கை என்று கூறுவதும், ஒரு சிலவற்றைச் செயற்கை என்று கூறுவதும் இன்பம் என்று உரைப்பதும் துன்பம் என்று உரைப்பதும் உண்மைதான் என்ற பேருண்மையை மிக அழகாக. எடுத்துக் காட்டுகிறார்:
இயற்கையென் றுனையுரைப்பார் - சிலர்
இணங்குமம் பூதங்க ளென்றிசைப்பார்
செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த்
தீயென்பர், அறிவென்பர், ஈசனென்பர்
வியப்புறு தாய்நினக்கே - இங்கு
வேள்விசெய் திடுமெங்கள் 'ஓம்' என்னும்
நயப்படு மதுவுண்டே - சிவ
நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய்
அன்புறு சோதியென்பார் - சிலர்
ஆரிருட் காளியென்றுனைப் புகழ்வார்
இன்பமென் றுரைத்திடுவார் - சிலர்
எண்ணருந் துன்பமென் றுனையிசைப்பார்
புன் பலி கொண்டு வந்தோம் - அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின் படு சிவசக்தி - எங்கள்
வீரைநின் திருவடி சரண் புகுந்தோம்.
இந் நிலையில் இந்த மதுரைப் பதியில் ஏழாம் நூற்றாண்டில் வந்த திருஞான சம்பந்தப் பிள்ளையார் சொக்கனைப் பார்த்துப் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது:
குற்றம் குணங்கள் நீ கூடல் ஆல வாயிலாய்
இவ்வாறு முரண்பாட்டிலேயே முழுமுதலைக் கண்ட கவிஞர் மறுபடியும் ஒருமைப் பாட்டைக் காட்டுவார் போல இவ்வண்ட சராசரங்கள் அனைத்தும் அவற்றில் வாழ்கின்ற உயிர்களும் அவ்வுயிருக்கு உள்ளும் இருக்கின்ற உயிருமாக உறைபவன் அவனே என்ற கருத்தைக் ’கோமதி மகிமை' என்ற பகுதியில் இதோ பாடிக் காட்டுகிறார்:
வாழிய, முனிவர்களே - புகழ்
வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே,
ஊழியைச் சமைத்த பிரான் - இந்த
உலக மெலாமுருக் கொண்ட பிரான்,
ஏழிரு புவனத்திலும் - என்றும்
இயல் பெறும் உயிர்களுக் குயிராவான்,
ஆழுநல் லறிவாவான் - ஒளி
யறிவினைக் கடந்த மெய்ப் பொருளாவான்.
போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்
மாற்றிவாய், துடைப்பாய், வளர்ப்பாய், காப்பாய்
கனியிலே சுவையும் காற்றிலே யியக்கமும்
கலந்தாற் போல நீ அனைத்திலும் கலந்தாய்
உலகெலாந் தானா யொளிர்வாய், போற்றி
அன்னை போற்றி, அமுதமே போற்றி
புதியதில் புதுமையாய், முதியதில் முதுமையாய்,
உயிரிலே யுயிராய், இறப்பிலு முயிராய்
உண்டெனும் பொருளி லுண்மையாய், என்னுளே
நானெனும் பொருளாய். நானையே பெருக்கித்
தானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,
கவலை நோய் தீர்க்கு மருந்தின் கடலாய்,
பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்.
யானென தின்றி யிருக்கு நல் யோகியர்
ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய்,
செய்கையாய், ஊக்கமாய் , சித்தமாய், அறிவாய்
நின்றிடுந் தாயே, நித்தமும் போற்றி
இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி
துன்பம் வேண்டேன் , துடைப்பாய் போற்றி
அமுதங் கேட்டேன், அளிப்பாய் போற்றி
சக்தி போற்றி, தாயே போற்றி
முக்தி போற்றி, மோனமே போற்றி,
சாவினை வேண்டேன் , தவிர்ப்பாய் போற்றி.
இறைப் பொருளில் ஈடுபட்டு யான், எனது என்ற அகங்கார மகங்காரங்களை அம் மூலப் பொருளில் கரைத்துக்கொண்டு உலா வருகின்ற கவிஞர், பகலைக் கண்டாலும் இரவைக் கண்டாலும் தீயை கண்டாலும் இறைவனின் வடிவாகவே காண்பதில் வியப்பு ஒன்றுமில்லை.
காலை யிள வெயிலின் காட்சி - அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி;
நீல விசும்பினிடை யிரவிற் - சுடர்
நேமி யனைத்துமவ ளாட்சி.
இப்பாடல் காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியில் ஓர் அழகிய பாடலை நினைவூட்டுகிறது :
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு,
மாலையே போன்றிலங்கும் தாழ்சடை
இத்தகைய பெருமக்கள் தாம் காணும் இயற்கை செயற்கைக் காட்சிகளையும் மக்களையும் கூட - இறைப் பொருளாகவே காணுகின்றார்கள்.
காக்கையின் கரிய நிறத்திலும் மரத்தின் பச்சை நிறத்திலும் ஒலிக்குறிப்பிலும் இறைவனையே காணுகின்ற காட்சியைக் கவிஞர் இதோ பாடிச் செல்கிறார்:
காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;
பார்க்கு மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத இசைக்குதடா நந்தலாலா;
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா நந்தலாலா.
இதனைப் படிக்கும் பொழுது நம்மாழ்வார் அருளிய 'மண்ணையிருந்து துழாவி' என்ற பாடல் நினைவுக்கு, வருகின்றது.
மண்ணை யிருந்து துழாவி
'வாமனன் மண்ணிது' என்னும்,
விண்ணைத் தொழுதவன் மேவு
வைகுந்த மென்றுகை காட்டும்
அறியும்செந் தீயைத் தழுவி
'அச்சுதன்' என்னும் மெய் வேவாள்,
எறியும் தண் காற்றைத் தழுவி
'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,
ஒன்றிய திங்களைக் காட்டி
'ஒளிமணி வண்ணனே' என்னும்
நின்ற குன் றத்தினை நோக்கி
'நெடுமாலே வா' என்று கூவும்.
முழுமுதற் பொருளை உண்டு என்று ஏற்றுக் கொள்பவர்களுங்கூட, ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாத அப் பரம்பொருளுக்கு உருவும், நிறமும் கற்பித்து அதன் பயனாகப் பல்வேறு சமயங்களை வகுத்துக்கொண்டு தம்முள் சண்டையிட்டு மடிவதை இன்றும் காண்கிறோம். பரம்பொருளின் இலக்கணத்தை உள்ளவாறு அறிந்தவர்கள் இங்ஙனம் வேற்றுமை பாராட்ட வேண்டிய தேவையில்லை. நாம ரூபம் கடந்ததே முழுமுதற் பொருள் என்ற பேருண்மையை வேதம் அறிந்தவர்களே அறியாது போனது வருத்தம் தருவதாகும் என்ற பேருண்மையைக் கவிஞர் 'அறிவே தெய்வம்' என்ற பாடலில் இதோ பேசுகிறார்:
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? - பல
பித்த மதங்களி லே தடு மாறிப்
பெருமை யழிவீரோ?
வேடம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.
நாமம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள்ள வீரென்ற
நான்மறை கண்டிலதே.
உள்ளும் புறமுமா யுள்ளதெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே
எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள் தென்றறிஞ ரென்றுமய லெய்துவதாய்
வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்
தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகித்
தன்மையொன்றி லாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மை பலவுடைத்தாய்த் தான் பலவாய் நிற்பதுவே
எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்கு பலமதத்தோர் சாற்றுவது மிங்கிதையே.
இத்துணைத் தூரம் பரம்பொருளின் இயல்பைத் தம் அறிவாலும் அனுபவத்தாலும் கண்ட முறையில் விரிவாகப் பாடிவந்த கவிஞர் இறுதியாக கோவிந்தசாமி தமக்கு உபதேசம் செய்ததாகப் "பாரதி அறுபத்தாறி”ல் கடைசி இரண்டு பாடல்களில் தொகுத்துப் பேசுகிறார். பொருள் ஒன்று என்றும், அந்த ஒரு பொருளுக்குப் பல்வேறு நாமங்களும் வடிவங்களும் கற்பிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த நாம ரூபங்கள் அவரவர்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும் தரத்திற்கும் ஏற்ற முறையில் சமைக்கப் பெற்றுள்ளன என்றும் ஒருவர் உணர்ந்து விட்டால் சமய வேறுபாட்டைக் கடந்து, நாமரூப வேறுபாட்டைக் கடந்து பொருளைக் காண்டல் கூடும். அங்ஙனம் காண்பதற்கு அடிப்படை அருள் உள்ளம் ஒன்றேயாம் என்பதை எடுத்துக் காட்டுவார் போல, 'ஈரமில்லா நெஞ்சுடையார் சிவனைக் காணார்' என்று பேசிவிட்டு அதனை முடிக்கும் முறையில் இதோ பேசுகிறார்:
பூமியிலே கண்டமைந்து; மதங்கள் கோடி;
புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசு பதம் போற்று மார்க்கம்,
ஸநாதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,
நாமமுயர் சீனத்துத் தாவு' மார்க்கம்
நல்ல 'கண்பூசி' மதமுதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல வுளவா மன்றே;
யாவினுக்கு முட்புதைந்த கருத்திங் கொன்றே.
பூமியிலே வழங்கிவரு மதத்துக் கெல்லாம்
பொருளினைநா மிங்கெடுத்துப் புகலக் கேளாய்;
சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே; தத்வமஸி ;
தத்வமஸி; நீயே யஃதாம்;
பூமியிலே நீ கடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம்மாயை தன்னை நீக்கி
ஸதாகாலம் 'சிவோஹ' மென்று ஸாதிப்பாயே.
இத்துணைத் தூரம் அறிவு வளம், மன வளம். அனுபவ வளம் ஆகியவற்றைப் பெற்று முதிர்ந்த கவிஞராக வாழ்கின்ற ஒருவர் வாழ்க்கையில் ஒரு சிறந்த குறிக்கோளைப் பெற்றவராக இருந்திருத்தல் வேண்டுமென்பதில் ஐயமில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று, பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக வெந்ததைத் தின்று வாழ்ந்து, வேளை வந்தபொழுது சாகின்ற அற்ப மனிதா கூட்டத்தில் தாம் ஒருவர் அல்லர் என்ற உண்மையைக் கவிஞர் ' யோகசித்தி' என்ற பாடலில் பாடிக் காட்டுகிறார்:
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
அப்படியானால், இப்பெருமக்களுடைய குறிக்கோள் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது அன்றோ? அதனையும் 'நல்லதோர் வீணை செய்தே' என்ற பாடலில் எடுத்துக் காட்டுகிறார் :
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியி லெறிவதுண்டோ ?
சொல்லடி, சிவசக்தி - எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ, இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்,
நசையறு மனங் கேட்டேன், - நித்தம்
கவ்மெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடுநல் லாங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
தம் வாழ்நாள் சிறந்த குறிக்கோளுடன் மிளிர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் மென்பதையும்,
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே யெண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முனிங்கு
நசித்திடல் வேண்டு மன்னாய்
என்ற இடத்தில் பாடிக் காட்டுகிறார்.
வாழ்க்கையில் ஒருவன் சிறந்த குறிக்கோளைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு வகையான தொழிலில் ஈடுபட்டுத் தன் கடமையை நிறைவேற்று கின்றான். எத்தொழிலைச் செய்தாலும் அஃது இறைவன் பணியாகும் என்ற பேருண்மையைக் கவிஞர் அறியாதவர் அல்லர். இப்பேருண்மையைத் ’தேசமுத்துமாரி' என்ற பாடலில் 'யாதானும் தொழில் புரிவோம்; யாதும் அவள் தொழிலாம்’ என்று பேசுகிறார். இவ்வாறு கூறியிருப்பினும், பாரதியைப் பொறுத்தமட்டில் வாழ்வின் குறிக்கோளாக அவர் கொண்டது எதனை என்றால்
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
இமைப்பொழுதும் சோரா திருத்தல்
என்பதேயாகும். இக்கடமையை நன்கு நிறைவேற்றத் தமக்கு ஆற்றல் தரவேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கின்ற கவிஞர்,
பண்டைச் சிறுமைகள் போக்கியென் னாவிற் பழுத்த சுவைத்
தண்டமிழ்ப் பாட லொரு கோடி மேவிடச் செய்குவையே
என்று பாடுகிறார்.
இத்தகைய ஒரு குறிக்கோளை மனத்திற் கொண்ட கவிஞர் இறைவனை நோக்கி வேண்டும் வேண்டும்' என்று கூறுவனவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தாலும் அக்கவிஞருடைய மன நிலையை ஒருவாறு அறிய முடிகின்றது.
மனத்தில் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும்பொழுது நின் மௌன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்
அறம் பொருள் இன்பம்வீ டெனவும் முறையே
தன்னை ஆளும் சமர்த் தெனக்கு அருள்வாய்
நோவு வேண்டேன் நூறு ஆண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன்
உடைமை வேண்டேன் உன் துணை வேண்டினேன்
வேண்டாத அனைத்தையும் நீக்கி
வேண்டியது அனைத்தும் அருளுவது உன் கடனே
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன் ,
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் –
யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட னிணங்கி வாழ்ந் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா,
ஞானாகா சத்து நடுவே நின்று நான்
'பூமண் டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீங்கிச் சார்ந்த பல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க' என்பேன், இதனை நீ
திருச்செவிக் கொண்டு திருவுள மிரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே
இந்நாள், இப்பொழு தெனக்கில் வரத்தினை
அருள்வாய்.
சிறந்த குறிக்கோளுடைய கவிஞன் ஒருவனுக்கு அக்குறிக்கோளை நோக்கி முன்னேற வேண்டுமென்று நினைக்கும் பொழுதெல்லாம் 'அச்சம்' என்ற ஒன்று அவரைப் பற்றி அல்லலுறுத்துவதையனுபவிக்க நேரிடுகிறது. அவனைச் சுற்றியுள்ளவர்களாகிய உலகத்தார் சொல்லுகின்ற முறையில் அவனைவிட அறிவிலும் ஆற்றலிலும் குறைந்தவர் பலர் எல்லா வகை வளங்களையும் பெற்றுச் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்வில் குறிக்கோள் என்ற ஒன்று மருந்துக்கும் இல்லை. கவிஞனைப் பொறுத்தமட்டிலும் வானை முட்டுகின்ற குறிக்கோள் இருக்கிறது; ஆனால், வாழ்க்கை வசதிக்கு எள்ளளவும் இடமில்லை. அப்படியே வாழ்ந்தால் தன் நிலை என்ன வாகுமோ என்ற ஒரோவழி மனத்தில் அச்சமும் ஏற்படுகிறது. அத்தகைய நிலையில் மனத்தைப் பார்த்து, பாழும் மனமே நீ அஞ்சவே வேண்டாம். இறைவனுடைய தாள்களைச் சரணம் அடையவா யானால், நீ அஞ்ச வேண்டிய தேவையில்லை. இறைவன் தாளைச் சரணம் அடைவதற்கு எவ்வளவு நீ அஞ்சினாலும் அதனால் எவ்வகையான பயனும் ஏற்படப் போவதில்லை" என்று பேசுகிறார் பாரதி.
மேன்மைப் படுவாய் மனமே கேள்
விண்ணி னிடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே.
பயத்தா லேதும் பயனில்லை
யான்முன் னுரைத்தேன் கோடிமுறை,
இன்னுங் கோடி முறைசொல்வேன்,
ஆன்மா வான கணபதி
அருளுண் டச்ச மில்லையே.
இம்முறையில் மனத்தைப் பார்த்துத் தேறுதல் கூறிய வுடன், இறைவனுடைய அருள் துணைகொண்டு தான் அச்சத்தை வென்று விட்டதாகக் கவிஞன் அறிந்து கொள்கிறான். எனவே, அச்சத்தில் அமுங்குதல் இல்லை; நடுங்குதல் இல்லை; நாணுதல் இல்லை. எது நேரினும் இடர்ப்பட மாட்டோம்; அண்டம் சிதறினாலும் அஞ்ச மாட்டோம்; கடல் பொங்கி எழுந்தாலும் கலங்க மாட்டோம்; யாருக்கும் அஞ்சோம்; எங்கும் அஞ்சோம்; எப்பொழுதும் அஞ்சோம்; எதற்கும் அஞ்சோம் என்று பேசி, இறுதியில்
நெஞ்சே வாழி ; நேர்மையுடன் வாழி
வஞ்சக் கவலைக்கு இடம் கொடேல் மனமே
தஞ்சம் உண்டு சொன்னார்கள்
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கும்
என்று அமைதி காண்கிறான். ஓயாது சலிக்கின்ற இயல்புடையதாகிய மனம் என்றும் ஒரே நிலையில் எத்துணைப் பெரியவர்கட்கும் இருந்துவிடுமென்று சொல்வதற்கில்லை. ஜீவன் முக்தர்களும் இவ்விதிக்கு விலக்கு அல்லர். ஆதலால் இவ்வளவு தூரம் உறுதிப் பாட்டோடு அச்சத்தை அகற்றி வாழ முற்பட்ட நம் கவிஞருக்குக்கூட மனம் எனும் ஓர் பேய்க் குரங்கு திடீர் திடீரென்று புத்தி மாறி அல்லல் விளைவிக்கத் தொடங்குகிறது. எனவே, மற்றொரு முறை மனத்தைக் கெஞ்சி, 'ஏ மனமே; நான் சித்தி பெறுமாறு உன்னால் முடிந்த அளவு எனக்குத் துணை புரிவாயேயானால், தங்கத்தால் உனக்கு ஒரு கோயில் கட்டுவேன்" என்று பேசுகிறான்:
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய், யார்க்கு மினியனாய்
வாழ்ந்திட விரும்பினேன், மனமே, நீ யிதை
ஆழ்ந்து கருதி, யாய்ந்தாய்ந்து, பலமுறை
சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து
தேறித் தேறி, நான் சித்திபெற் றிடவே,
நின்னாலியன்ற துணை புரி வாயேல்,
பொன்னா லுனக்கொரு கோயில் புனைவேன் !
மனமே, எனைநீ வாழ்வித் திடுவாய்
வீணே யுழலுதல் வேண்டா
சக்தி குமாரன் சரண் புகழ் வாயே.
இவ்வாறு கெஞ்சிக் கேட்ட பின்னரும் அந்தப் பாழும் மனம் அவன் விருப்பப்படி நடவாமல் அஞ்சி அஞ்சிச் சாகின்றது. எனவே, நெஞ்சினிடம் சினந்து கீழ்வருமாறு பேசுகிறார்:
................................ நெஞ்(சே)
நினக்கு யானுரைத்தன நிலை நிறுத்தி (டவே)
தீயிடைக் குதிப்பேன் , கடலுள் வீழ்வேன்,
வெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன்,
ஏதுஞ் செய்துணை யிடரின்றிக் காப்பேன்;
மூட நெஞ்சே, முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன்; இன்னு மொழிவேன்;
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே;
ஏது நிகழினும் 'நமக்கேன்' என்றிரு;
பராசக்தி யுளத்தின் படியுலக நிகழும்.
இவ்வாறு மேலும் நெஞ்சோடு கூறத் தொடங்கி, காரணம் இல்லாமல் அச்சப்படுவதினாலே பயன் ஒன்றும் இல்லை என்ற கருத்தைப் பேசுகிறார்:
இன்னுமொரு முறை சொல்வேன். பேதை நெஞ்சே,
எதற்கு மினி யுளைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி யிடைநமது வசத்தி லில்லை ;
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே
வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்.
பின்னையொரு கவலையுமிங் கில்லை நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்.
ஒவ்வோர் இடத்தில் 'மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய்' என்றும், ஒவ்வோரிடத்தில் 'பேயாய் உழலும் சிறு மனமே' என்றும் பாடுகின்ற கவிஞரின் நிலையை நாம் அறிய முடிகின்றது.
இங்ஙனம் ஓயாமல் மனத்தோடு போராடிய கவிஞர், மனத்தை அடக்க வேண்டு-மென்றால் கூட இறைவனுடைய திருவருளை நாடுவது தவிர வேறு வழியில்லை என்ற பேருண்மையைக் காண்கின்றார். மாணிக்கவாசகப் பெருமான், ’அவன் அருளாலே. அவன் தாள் வணங்கி' என்று கூறியது கவிஞருடைய நினைவுக்கு வருகின்றது போலும். எனவே, மனத்தை ஓயாது அன்பு முறையாலும் சினக்கும் முறையாலும், கெஞ்சுவதைவிட இறைவனைச் சரண் அடைவதே சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்து ’வேள்விப் பாட்டு' என்ற பகுதியில் ’இறைவனே! உடல், பொருள், ஆவி என்ற மூன்றையும் உன் முன்னர் இட்டு அஞ்சலி செய்து நிற்கின்றோம்; எங்களைக் காப்பது உனது. கடன்' என்று இதோ பேசுகிறார்:
எம்முயி ராசைகளும் - எங்கள்
இசைகளுஞ் செயல்களும் துணிவுகளும்
செம்மை யுற்றிட வருவாய் - நின்றன்
சேவடி யடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும் - திரு
முன்னரிட் பஞ்சலி செய்து நிற்போம்
அம்மைநற் சிவசக்தி - எமை
அமரர்தந் நிலையி லாக்கிடுவாய்.
இதைத் தொடர்ந்து மகாசக்தி பஞ்சகத்தில் ஐந்து பாடல்களிலும் இறைவனுடைய திருவடியைச் சரண் அடைந்து விட்டதாகக் கூறிப் பெருமிதம் கொள்கின்றார். சரணம் அடைந்த பின்னரும் ஒரோ வழி மனம் பழைய வினை வயத்தால் புலன்கள் வழி செல்லுகின்ற கொடுமையைக் காண்கின்றார் கவிஞர். 'துறவு' என்ற அதிகாரத்தின் பின்னரே. 'அவா வறுத்தல்' என்ற அதிகாரத்தை வள்ளுவப் பெருந்தகை வைத்த காரணத்தை விளக்கப் புகுந்த பரிமேலழகர் 'விடாது வருகின்ற பிறவித் தொடர்பால் பழைய வினை வயத்தால் ஒரோவழிப் புலன்கள் மேல் பற்றுச் செல்லும் ; அதனையும் அறிந்து பரிகரிப்பதற்காகத் துறவு மெய்யுணர்தல் என்பவற்றின் பின்னரே 'அவா வறுத்தலை ' வைத்தார்' என்று பேசுகின்றார். அஃது எத்துணை உண்மை என்ற பேருண்மையைப் பாரதி பாடலில் காண்கின்றோம். இறைவன் மாட்டுத் தம்மை அடைக்கலமாகக் கொடுத்த கவிஞர் மறுபடியும் புலன்கள் தமக்குத் துன்பம் செய்வதைக் கண்டு உள்ளம் நைந்து இறைவனை நோக்கிக் 'கருணைக் கடல் ஆகிய உன்னிடத்தில் அற்பனாகிய நான் விரும்பும் இந்தச் சிறிய காரியங்கூடப் பெற முடியாதா' என்று மனம் உருகி, மகா சக்திக்கு விண்ணப்பம் செய்கின்றார்.
மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்
- முச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்து விடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்து விடு
யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்து விடு
ஏகத் திருந்துலகம் - இங்குள்ளன
யாவையும் செய்பவளே.
உள்ளம் குளிராதோ - பொய்யாணவ
ஊன மொழியாதோ?
கள்ள முருகாதோ - அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே - அனைத்திலும்
மேவி யிருப்பவளே.
இங்ஙனம் இறைப் பொருளைப்பற்றி ஓயாது பாடித் தன்னையும் அதன் மாட்டுக் கரைத்துக் கொள்கின்ற கவிஞரின் பாடல்களைக் கேட்டவுடன், 'அடியார்கள் போல் கவிச் சக்கரவர்த்தி பாரதி உணர்வின் துணைகொண்டு முழுமுதற்பொருளை நாடி, அதிலேயே காலங்கழித்துவிட்ட ஒரு பக்தர் போலும்' என்று நவீன உலகம் நினைந்து நையாண்டி செய்ய வேண்டிய தேவையில்லை. பாரதியின் பரந்த கல்வியறிவும், விஞ்ஞான அறிவும், பல மொழி அறிவும், ஆங்கிலப் புலமையும் நாடு அறிந்த ஒன்றாகும். மூட பக்தியும், மூடநம்பிக்கையும் நிறைந்திருந்த அவருடைய காலத்தில் பேரறிஞராகிய அவர் பல்வேறு விஞ்ஞானப் புதுமைகளையும் நன்கு அறிந்திருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. இன்றைய நாள் விஞ்ஞானம் பேசும் விரிந்து செல்லுகின்ற
அண்டத்தைப் பற்றியும் (expanding universe) அக்கவிஞரும் அறிந்திருக்கின்றார். நம்முடைய நாடு அமைந்திருக்கும் இச்சிறிய பூமி, இதனை ஒரு துணைக் கோளாகவுடைய சூரிய மண்டலம், சூரிய மண்டலத்தைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரிய மண்டலங்களையுடைய பால் வெளி, இப்பால் வெளியைப்போல் கோடி கோடி கோடியான அண்டங்களையுடைய இப்பரந்த ஆகாயத்தில் இவ்வாண்டங்கள் அனைத்தும் ஓயாது சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன என்பதும் - ஒன்றை விட்டு ஒன்று பல காத தூர வேகத்தில் ஓடிக் கொண்டுள்ளன என்பதும் - சர் ஆர்தர் எடிங்ட்டன் போன்ற மாபெரும் விஞ்ஞானிகள் கண்டு உரைத்த புதுமைகளாகும்.
இவ்வளவு பெரிய உண்மையைக் கவிஞர் மிக எளிதாக இதோ பாடிச் செல்கிறார்:
படர்வான் வெளியில் பல
கோடி கோடி கோடி பல்கோடி
இடறாது ஓடும் மண்டலங்கள்
இசைத்தாய் வாழி இறையவனே.
இதனை இவ்விடத்தில் சுருங்கக் கூறிய கவிஞன் "கோமதி மகிமை' என்ற கவிதையில் மிக விளக்கமாகத் தான் ஒரு வானூலறிஞன் என்பதை அறிவுறுத்துகின்ற முறையில் இதோ பேசுகிறார்:
இக்கதை யுரைத்திடுவேன். உளம்
இன்புறக் கேட்பீர், முனிவர்களே;
நக்ந பிரானரு ளால் - இங்கு
நடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்;
தொக்கன அண்டங்கள் - வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்
இக்கணக் கெவரறிவார்? புவி
எத்தனை யுளதென்பதி யாரறிவார்?
நக்க பிரானறிவான்; - மாற்று
நானறியேன் பிற நரரறியார்;
தொக்கபேரண்டங்கள் - கொண்ட
தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள் ; - ஒளி
தருகின்ற வானமொர் கடல்போலாம்;
அக்கட லதனுக்கே - எங்கும்
அக்கரை யிக்கரை யொன்றில் லையாம்.
இக்கட லதனகத்தே - அங்கங்
கிடையிடை தோன்றும் புன் குமிழிகள் போல்
தொக்கன உலகங்கள்: - திசைத்
தூவெளி யதனிடை விரைந்தோடும்;
மிக்கதொர் வியப்புடைத்தாம் - இந்த
வியன்பெரு வையத்தின் காட்சிகண்டீர்;
மெய்க்கலை முனிவர்களே - இதன்
மெய்ப் பொருள் பரசிவன் சக்திகண்டீர்.
பல கோடி கோடி மைல்களைக் காணக்கூடிய தொலைநோக்கி ஆடிகளைப் பெற்றுள்ள இன்றைய நாளில் கூட இவ் வண்டங்களின் கணக்கைக் கூற, கணித்திட முடியாது என்று விஞ்ஞானம் பேசுகிறது. அக் கருத்தைத் தொக்க பேரண்டங்கள் கொண்ட தொகைக்கு எல்லை இல்லை; அவற்றைக் கணக்கிட்டுச் சொல்லும் திறன் எனக்கும் இல்லை; பிற மனிதர்களுக்கும் இல்லை" என்று மனிதர்களைப் பார்த்துப் பேசும் பொழுது கவிஞர் பேசிக் காட்டுகிறார். "மகர் சக்தி வாழ்த்து” என்ற பகுதியிலும்,
விண்டுரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை,
அண்டகோடிகள் வானி லமைத்தனை,
அவற்றி லெண்ணற்ற வேகஞ் சமைத்தனை,
மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவ தெத்தனை யத்தனை யோசனை
கொண்டதூர மவற்றிடை வைத்தனை,
கோல மேநினைக் காளியென் றேத்துவேன்.
என இதே கருத்து மறுபடியும் பேசப்படுகிறது.
எனவே, விஞ்ஞான அறிவு நன்கு நிறைந்துள்ள கவிஞர் பெருமகன் அந்த அறிவின் துணை கொண்டு பொருள்களை நன்கு ஆராய்ந்து, இறுதியில், 'அறிவின் துணைகொண்டு ஆராய்வதினால் பயன் இல்லை; உணர்வின் துணைகொண்டுதான் உண்மையைக் காண வேண்டும்' என்ற பேருண்மையை அறிந்தவனராய்க் கோவிந்தசாமியின் உபதேசத்தை மேற்கொள்கிறார் என்று அறிகின்றோம்.
கவிஞர் வாழ்ந்த காலம், விஞ்ஞானத்தின் துணை தமக்கு இருந்துவிட்ட காரணத்தாலும், எல்லை யில்லாச் செல்வம் கொழித்த காரணத்தாலும் ஆங்கிலேயர்கள் தங்களால் முடியாத காரியமே ஒன்றுமில்லை என்று செருக்குக் கொண்டு தங்களுடைய மொழி அறிவையும் விஞ்ஞான அறிவையும் பெற்றாலொழிய உலகத்திற்கு உய்கதி இல்லை என்று நினைந்து இறுமாந்து பேசிய காலமாகும். இந்நிலையில் தோன்றிய கவிஞர் பிரான் 'மூன்று காதல்கள்" என்ற பகுதியில் 'சரஸ்வதி காதல்', 'லட்சுமி காதல்', 'காளி காதல்' என்று பாடிச் செல்லுகிறார். இதில் வியக்கத் தகுந்த ஓர் உண்மை இருப்பதை இப்பாடல்களைக் கற்றவர்கள் நன்கு அறிதல் கூடும். சரஸ்வதியைப் பற்றிப் பாடும் பொழுது 'அடி என்னோடு இணங்கி மணம் புரிவாய்' என்று பேசிய கவிஞர், லட்சுமி காதலில், "நெஞ்சம் ஆரத் தழுவிட வேண்டு கின்றேன்" என்று பேசிய கவிஞர் "காளி காதலி”ல் வேறுவிதமாகப் பாடத் தொடங்கி விடுகிறார். லட்சுமி - சரஸ்வதி என்ற இரண்டு காதல்களிலும் இப்பெயர்கள் குறிக்கப் பெறுகின்ற தெய்வங்களைப் பற்றிப் புலவன் பாடவில்லை என்பது தெளிவு. தெய்வங்களாகக் கருதியிருப்பாரேயானால் "ஆரத் தழுவுதல்' பற்றிய பேச்சுக்கு இடமே இல்லை. எனவே, சரஸ்வதியை அறிவின் அடையாளமாகவும், லட்சுமியைச் செல்வத்தின் அடையாளமாகவும் கொண்டு கவிஞர் பாடுகிறார் என்று அறிய முடிகிறது என்றால், இதன் கருத்தைச் சற்று ஆழச் சிந்திக்க வேண்டும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் அறிவு, செல்வம் என்ற இரண்டையும் தன் முயற்சியினாலும் இயற்கையாகவும் பெறுகின்றான் என்பது உண்மை. என்றாலும், இவ்விரண்டைப் பெறுகின்ற மனிதன் இவை தன்னால் பெறப்பட்ட பொருள்கள் என்றும் பெறுகின்ற தான் தான் தலைவன் என்றும் அறிந்து இவற்றை ஆள்வதைவிட்டு இவற்றால் தான் ஆட்கொள்ளப்பெற்று இவற்றிற்கு அடிமையாகி விடுகின்றான். அறிவுக்கு அடிமையாகித் தம் நிலையை மறக்கின்றவர்களும், செல்வத்திற்கு அடிமையாகித் தம் நிலைமை மறக்கின்றவர்களும் இவ் வுலகிடை என்றும் உளர். நம்மால் ஆட்சி செய்யப்பட வேண்டிய பொருள்கள் நம்மை அடிமைப்படுத்தினால் விளை கின்ற பேராபத்துப்பற்றி ஒன்றும் சொல்லத் தேவை யில்லை. மோட்டார் வாகனத்தை நாம் செலுத்த வேண்டுமே தவிர, நம்மை அது செலுத்தத் தொடங்கினால் முடிவு அழிவு என்று சொல்லவும் வேண்டுமோ?
இந்தப் பேருண்மையைத்தான் கவிஞர் சரஸ்வதி, லட்சுமி காதல்களில் வெளியிடு-கின்றார். அறிவும் செல்வமும் நம்மால் விரும்பிச் சம்பாதித்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவைதாம். என்றாலும், நாம் தலைவனாக இருத்தல் வேண்டுமே தவிர அவற்றிற்குத் தலைமை தந்துவிடக் கூடாது என்ற உண்மையை விளக்குகிறார். தம்முடைய 22 வயது வரையில் அறிவையே தலையாயதாகக் கருதிச் சித்தம் தளராமல் பித்துப் பிடித்தது போல் பகல் பேச்சும் இரவில் கனவும் அதனிடை வைத்து அதே நினைவாகப் பிற வாஞ்சையில்லாமல் இருந்ததாகக் கவிஞரே கூறுகிறார் என்றால், பல்வேறு மொழிகளையும் விஞ்ஞானப் புதுமைகளையும் கற்கின்ற பருவத்தில் இவற்றைத் தவிர வேறு வாழ்க்கையில் அடைய வேண்டிய பொருள் ஒன்றுமே இருத்தற் கில்லை என்ற கருத்தில் அறிவுக்கு அடிமையாகிக் கவிஞர் இருந்த வரலாற்றைக் காண முடிகின்றது. அதேபோல ஓயாது வறுமையில் உழல்கின்ற கவிஞருக்கு ஒவ்வொரு சமயம் பொருள் கையில் கிடைப்பதும் அது உடனே அழிவதும் இயல்பாக இருந்தது போலும். இதை மனத்தில் இருத்தி,
புன்னகை செய்திடுவாள் - அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்து இருப்பேன்; சற்று என்
முன் நின்று பார்த்திடுவாள் - அந்த
மோகத்திலே தலை சுற்றிடும் காண் பின்னர்
என்ன பிழைகள் கண்டோ - அவள்
என்னைப் புறக்கணித்து ஏகிடுவாள்
என்று பேசும் பொழுது ஒவ்வொரு சமயம் செல்வமே அனைத்தும் என்று கருதி வாழ்ந்த வாழ்க்கையையும் கவிஞர் நினைவுகூர்கின்றார்.
ஆனால், இறைவன் அருளால் இந்த அறியாமை விரைவில் கவிஞனை விட்டு நீங்கிவிடுகிறது. அறிவின் துணை கொண்டும் செல்வத்தின் துணை கொண்டும் பரம்பொருளைக் காண முடியாது என்ற பேருண்மையைக் ’காளி காதலில்' மிக அழகாகப் பேசுகிறார். அறிவும் செல்வமும் போல், அவை பெண்ணாகிக் கனவில் காட்சி அளித்தது போல், மூன்றாவது நாளும் கனவில் ஒரு பெண் வந்ததாகவும் இதுவும் கன்னி வடிவம் என்று அருகில் சென்று பார்த்தவுடன் இது அறிவு, செல்வம் என்ற இரண்டுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் வடிவம் என்று அறிந்ததாகவும் அழகாகப் பேசுகிறார்:
அன்னை வடிவமடா இவள்
ஆதிபரா சக்தியடா- இவள்
இன்னருள் வேண்டுமடா - பின்னர்
யாவும் உலகில் வசப்பட்டு போமடா
என்றும்,
நித்தம் தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா
என்றும் பாடுவது திருவண்ணாமலை வரலாற்றை நினைவூட்டுவது போல், அறிவும் செல்வமும் என்ற இரண்டற்கும் அப்பாற்பட்டது பரம்பொருள் என்ற பேருண்மையைக் கவிஞர் காணுமாறு செய்கிறது. செல்வத்தைக் காட்டிலும் அறிவில் அதிக ஈடுபாடும் நிறைந்த அளவும் பெற்று இருந்தாராகலின் அடிக்கடி அறிவினாலும் கல்வியினாலும் மட்டும் பயன் பெற முடியவில்லை என்ற பேருண்மையை விளக்கிக் செல்கிறார் ’முத்துமாரி' என்ற பாடலில் :
பல கற்றும் பல கேட்டும்
பயன் ஒன்றுமில்லையடி முத்துமாரியம்மா
துணி வெளுக்க மண் உண்டு
தோல் வெளுக்கச் சாம்பல் உண்டு.
மணி வெளுக்கச் சானை உண்டு முத்துமாரியம்மா
மனம் வெளுக்க வழியிலையே
என்று பாடிய கவிஞர்
நிலையெங்கும் காணவில்லை எங்கள் முத்து மாரியம்மா
எங்கள் முத்து மாரியம்மா
நின் பாதம் சரண் புகுந்தோம்
என்று முடிக்கின்றார்.
தோத்திரப் பாடல்கள் நீங்கலாகக் கவிஞரின் உத்தியையும் புலமைத் திறத்தையும் காண வாய்ப்பு அளிப்பது ’கண்ணன் பாடல்கள்' ஆகும். பழைய இலக்கிய மரபைக் கவிஞர் நன்கு அறிந்திருக்கிறார். பரம்பொருளைப் புருஷோத்தமன் என்றும், உயிர்கள் எல்லாம் தலைவிகள் என்றும் கருதி, நாயக - நாயகி பாவத்தில் பாடல்கள் எழுதுவது பண்டைய மரபு தான். இடைக்காலத்தில் பரம்பொருளைக் குழந்தையாகக் கருதிப் 'பிள்ளைத் தமிழ் பாடுகின்ற மரபும் தோன்றிற்று. இருபதாம் நூற்றாண்டு வரையில் இந்த இரண்டு முறைகள் தவிர வேறு புது வழி வகுப்பார் எவரும் இலர். ஆனால், கடவுளைத் தாயாய், தந்தையாய், தோழனாய், அரசனாய், சற்குருவாய், காதலனாய், காந்தனாய். ஆண்டானாய்ப் பாரதியார் பாடியிருக்கின்ற புதுமைகள் ஒருபுறமிருக்க - பண்டைக் கவிஞர்கள் நினைத்துப் பார்ப்பதற்கும் அஞ்சுகின்ற முறையில் கண்ணனைச் சீடனாய், சேவகனாய், காதலியாகவும் வைத்துப் பாடிய பெருமை பாரதிக்கே உரியது.
கற்பனை கடந்து நிற்கின்ற பரம்பொருளின் உயர்வற உயர்ந்திருக்கின்ற நலத்தை நன்கு அறிந்தவர்களே யாயினும் நம்முடைய முன்னோர்கள் இத்துணை உயர்ந்த பரம்பொருள், அடியவர்களைப் பொறுத்தமட்டில் எளிவந்த தன்மையுடையது என்ற கருத்தைப் பேசியும் சொல்லியும் வந்துள்ளனர். காட்டில் வாழும் யானை ஒன்றின் பொருட்டாகப் பரம்பொருள் இரங்கி இறங்கி வந்தது என்று வரலாறு வகுக்கும் பொழுது இறைவனுடைய எளிமைக்கு (செளலப்பியத்திற்கு) ஓர் எல்லை வகுப்பதாக அக் குறிப்பு அமைகிறது. இந்த அளவுக்கு எளிவந்த தன்மையைப் பேசிய பிறகு அப்படி வருகின்ற பொருளை ஏன் சீடனாக, சேவகனாக, காதலியாகக் கொள்ளக்கூடாது என்று நினைக்கத் தோன்றுகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று பார்த்தால் அகங்கார. மகங்காரங்களை விட்ட ஓர் ஆன்மா. பரம்பொருளோடு ஒன்றியிருக்கின்ற இயல்பைப் பெற்று விடுகிறது; ஆதலில் இவ்விரண்டின் இடையே சேவகன் என்றோ சீடன் என்றோ காதலி என்றோ ஓர் உறவு முறையைக் கற்பிப்பதில் தவறு ஒன்று மில்லை. பல துறைகளில் புது வழி வகுத்த கவிஞர் இத்துறையிலும் புது வழி வகுக்கின்றார். என்றாலும், பழமையை மறவாமல் பாடுகின்ற இயல்பையும் காண முடிகின்றது. 'கண்ணன் என் தோழன்' என்ற பகுதியில், வள்ளுவப் பெருந்தகை நட்பிற்குக் கூறிய இலக்கணம் அனைத்தையும் மனத்தில் கொண்ட கவிஞர் பாடலை இயற்றுகிறார்:
நெஞ்சம் ஈனக் கவலைகள் எய்திடும் போதில்
இதம் சொல்லி மாற்றிடுவான்
உழைக்கும் வழி , வினையாளும் வழி, பயன்
உண்ணும்வழி உரைப்பான்
லேகருவம் கொண்ட போதினில்
ஓங்கி அடித்திடுவான் -- நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னால் அங்குக்
காரி உமிழ்ந்திடுவான்
நட்பிற்கு இலக்கணம் கூறும் பொழுது - நட்புப் பொழுதுபோக்குவதற்கு அன்று; தவறு நிகழ்கின்ற காலத்தில் இடித்துச் சொல்வதற்கே ஆகும் என்ற கருத்தில்,
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு
என்று பொதுமறை பேசிச் செல்வதை இப் பாடலில் காண்கின்றோம். இதனையடுத்துக் ’கண்ணன் என் சீடன்' என்ற பகுதியில் கவிஞனின் சுயசரிதத்தை , அவனுடைய வளர்ச்சி முறையை ஓரளவு காண முடிகின்றது:
உளத்தினை வென்றிடேன்; உலகினை வெல்லவும்
தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும்
சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்
தன்னுளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன் இந்தச் சகத்திலே யுள்ள
மாந்தர்க் குற்ற துயரெலா மாற்றி
இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கு எனைத்
தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு
மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து
புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்,
பலவகை யால் அகப் பற்றுறச் செய்தான்.
இங்ஙனம் தன்மாட்டு உள்ள குறைகளை அறிந்து கொள்ளாத குரு ஒருவன் உலகத்தை-யெல்லாம் சீர்திருத்தி நிலை நிறுத்திவிட வேண்டுமென்ற நினைவில் ஆழ்ந்து தன் மாட்டுக் கழிவிரக்கம் கொண்டு தன்னையே திருத்திக் கொள்ள வேண்டிய ஒருவன் அவற்றையெல்லாம் மறந்து தான் ஒரு சீடனைத் தகைமை சால் கவிஞனாக ஆக்க முற்படுகின்ற அவலக் கதைதான் ’கண்ணன் என் சீடன்' என்ற பகுதியாகும். குரு சொல்லிய எந்த ஒன்றையும் சீடன் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்ற நிலை வரும்பொழுது சீடன் மாட்டு ஆசிரியனுக்குச் சினம் பிறக்கின்றது. ஆனால், அந்தச் சினத்தின் அடிப்படையைப் பார்க்கும் பொழுது உண்மை விளங்கி விடுகிறது. சீடன் திருந்தவில்லையே என்ற காரணத்தால் ஆசிரியனுக்குச் சினம் தோன்றுமேயானால், அதில் மனக் காழ்ப்புத் தோன்ற வழியில்லை. அதன் எதிராகத் தான் சொல்லியதைச் சீடன் கேட்கவில்லை என்பதனால் சினம் தோன்றினால் அச் சினத்தின் அடிப்படையில் சீடனுக்கு நன்மையில்லை. அதன் எதிராகத் தன்னுடைய அகங்காரம் அழிந்து விடுவதைக் கண்ட கவலை தான் ஆசிரியனுக்குப் பிறக்கின்றது. இக் கருத்தைத்தான் கவிஞர்,
அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுறை
யான்கடுஞ் சினமுற்று எவ்வகை யானும்
கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்
என்று பேசுகிறான். ஆசிரியரின் முயற்சிகள் அனைத்தும் தோற்று இறுதியில் தன்னைத் தான் மறக்கின்ற அளவுக்கு அகங்காரம் விசுவரூபம் எடுத்ததன் பயனாய்ச்
சீச்சீ பேயே சிறிதுபோழ் தேனும்
இனி என் முகத்தின் எதிர்நின் றிடாதே.
போபோ
என்று இடிபோல் பேச வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. மாயக் கண்ணன் ஒரு சிறிதும் கவலைப்படாமல் புறப்பட்டுப் போய்விட்டான். தன் பெருமையை அறிந்த சீடன், தான் இவ்வாறு பேசியவுடன் மீண்டு விடுவான் என்று நினைக்கின்றது, அகங்காரம். ஆசிரியன் எதிர்பாராத வகையில் சீடன் புறப்பட்டுப் போய்விட்டான் என்பதைக் கண்டவுடன் அகந்தை முற்றும் அழிந்த ஆசிரியன் கீழ்வருமாறு பேசுகிறான்:
மகனே, போகுதி, வாழ்க நீ , நின்னைத்
தேவர் காத்திடுக நின்றனைச் செம்மை
செய்திடக் கருதி ஏதெதோ செய்தேன்.
தோற்றுவிட் டேனடா சூழ்ச்சிக ளழிந்தேன்
மறித்தினி வாராய் , செலுத்தி, வாழி நீ
எனத் துயர் நீங்கி, அமைதியோ டிசைத்தேன்.
இம்முறையில் அகந்தை முற்றிலும் அழிந்தவுடன் ஆசிரியன் அமர வாழ்வு பெறுகின்றான். இப்படி யான், எனது என்பது அற்றவிடத்தில் மோன வடிவான இறைவன் தோன்றுவான் என்பதை இறுதி அடிகள் தெரிவிக்கின்றன:
சென்றனன் கண்ணன், திரும்பியோர் கணத்தே
எங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்;
காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான்
"ஐயனே, நின்வழி யனைத்தையும் கொள்வேன்.
தொழில் பல புரிவேன், துன்பமிங் கென்றும்
இனிநினக் கொன்னால் எய்திடா" தெனப்பல
நல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான்.
மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்;
'மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல்
அழித்திட லெல்லாம் நின்செய லன்று காண்;
தோற்றே னென நீ உரைத்திடு பொழுதிலே
வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெலாம்.
ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து..
வாழ்க நீ" என்றான் வாழ்கமற் றவனே
இவ் உலகம் தோன்றிய நாள் தொட்டு மக்கள் எத்தனையோ புதுமைகளைக் கண்டு மனம் மறுகுகின்றனர். அவற்றுள் ஒன்று ஆண்டவனை நம்பி யிருப்பவர்கள் அவதிப்படுவதும், 'கடவுளாவது கத்திரிக்காயாவது' என்று பேசுபவர்கள் வளமாக இருப்பதுமாகும். உலகில் என்றுமே உள்ள இந்தப் புதுமையைக் கண்டு எல்லாக் காலத்திலுமுள்ள பெரியவர், நடு வயதினர், சிறுவர் ஆகிய அனைவருமே வியப்பு அடைந்திருக்கின்றனர். மிகத் தொண்டு கிழவராகிய திருநாவுக்கரசர் இந்தப் புதுமையை நினைந்து.
"நினைந்து உருகும் அடியாரை நையவைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்"
என்று பாடுகிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இப் பெருங் கிழவரின் பின்னர் எட்டாம் நூற்றாண் டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த பச்சிளங் குழந்தை யாகிய நம்மாழ்வார்,
நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்து ஏங்க
எண்ணாராத் துயர்விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை?
என்று பாடிச் செல்கிறார். எனவே, மிகப் பெரிய கிழவருக்கும் மிகச் சிறிய குழந்தைக்கும் இப் புதுமை வியப்பை உண்டாக்குகிறது. இறைவனை முழுவதுமாக நம்பி, 'நீயே சரணம்' என்று சொல்லுகின்ற அடியார்கள் மனம் நைந்து உருகும் படியான அளவு சோதனை செய்யப்படுகிறார்கள் என்று பேசுகின்ற கருத்தைத்தான் இந்த இரண்டு பெருமக்களும் கூறியுள்ளனர். நம்முடைய காலத்தில் வாழ்ந்தவராகிய பாரதியாரும் இந்த உலகியல் நடைமுறையைக் கண்டு வியப்பு அடைகிறார். 'கண்ணன் என் தந்தை' என்ற பகுதியில் கீழ்வருமாறு பாடுகிறார்:
பல்வகை மாண்பினிடையே - கொஞ்சம்
பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு;
நல்வழி சொல்லு பவரை - மனம்
நையும்வரை சோதனை செய் நடத்தையுண்டு,
இந்த மூன்று பெருமக்களும் கூறியதைப் பார்க்கும் பொழுது நம்முடைய மனத்தில் ஒரோவழித் தோன்று கின்ற ஐயம் பெரியதாக வளர்ந்து, ஆண்டவனைச் சரண் அடைவதைக் காட்டிலும், வேண்டாமென்று ஒதுக்கியிருப்பதே மேலான வாழ்க்கை போலும் என்று நினைக்கத் தோன்றிவிடுகிறது. இத்தகைய ஐயத்தைப் போக்கும் முறையில்தான் திருநாவுக்கரசர் தம் பாடலில் முதல் அடியில் இந்த வினாவை எழுப்பி, இரண்டாவது அடியில் அதற்குரிய விடையையும் பகர்கின்றார். இத்தகைய பெருந்துயரம் ஏன் தோன்றுகிறது என்றால், அடியார்களுடைய வினை யைப் போக்குவதற்கே துன்பங்கள் தரப்படுகின்றன என்று இறைவனுடைய மறக்கருணை பற்றிப் பேசப் பெறுகிறது. இக்கருத்தையும் பாரதி நன்கு அறிந்திருக் கிறார் என்பதை அறிய முடிகிறது.
பாரதி கவிதைகளில் தனியே நின்று சிறப்புப் பெறுகின்ற பெருமையுடைய பகுதி 'பாஞ்சாலி சபதம் பெருங்காப்பியம் பாட வாய்ப்பு இல்லாத கவிஞர் 'பாஞ்சாலி சபதம்' ஆகிய காப்பியத் துணுக்கு ஒன்றைப் பாட முனைகின்றார். பெருங்காப்பியத் தில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டு பாஞ்சாலி சபதம்' என்ற பகுதியில் ஒரு காப்பியத் துணுக்கை இணைக்கின்றார்.
பாரத சமுதாயத்தில் இராமாயணம், பாரதம் என்ற இரண்டு இதிகாசங்களும் பரவலாகப் பயிலப் பட்டு இருந்தவைதாம். பழைய சங்கப் பாடல்களிலும் இந்த இரண்டு கதைகளும் ஓரளவு பேசப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் பாரதத்தைவிட இராமகாதையில் - அதிலும் கம்பனுடைய இராம காதையில் - கவிஞர் பெரிதும் ஈடுபட்டவர். 'யாம் அறிந்த புலவரிலே' என்ற பாடலில் கம்பனுக்கு ஓர் இடம் கொடுத்திருக்கிறார் என்பதையும், கம்ப ராமாயணத்தின் உட்பொருளைப் பலரும் அறியாத முறையில் அறிந்த கம்பனுடைய குறிக்கோளே மானிடத்தின் சிறப்பைப் பாடுவது தான் என்ற பெருண்மையை உணர்ந்து கம்பனுக்கு ஒரு பட்டம் கொடுக்க விரும்பிய பாரதியார் ஏனையோர் போல் கவிச் சக்கரவர்த்தி' என்று பழைய பட்டத்தைத் தாராமல் இன்றும் நாம் நினைந்து வியக்கின்ற ஓர் அற்புதப் பட்டத்தைக் கம்பனுக்கு வழங்கியிருக்கிறார் என்பதையும் அறிதல் வேண்டும். கம்பன் என்று ஒரு மானுடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் என்ற அடியில் 'மானுடன்' என்ற - சொல்லை ஒப்பற்ற முறையில் பொருள் ஆழத்துடன் பயன்படுத்திச் செல்கிறார். கவிச் சக்கரவர்த்தி கம்பம், நாடன் 'வேறு உள குழுவை யெல்லாம் மானுடம் வென்றதம்மா' என்று பாடி மனிதத் தன்மை. தெய்வத் தன்மையை அடுத்து நிற்பதாகும் என்ற பெருண்மையை விளக்கியுள்ளார். கம்பனுடைய இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்த பாரதி மானிடத்தின் பெருமை பேசிய கம்பனை 'மானுடன் என்றே அழைத்து மகிழ்கின்றார். இவ்வளவு தூரம் கம்பனில் ஈடுபட்ட பாரதியார் அந்தக் கம்பனிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு தம்முடைய காப்பியத் துணுக்கைப் பாடாமல் பாஞ்சாலி சபதத்தை எடுத்துக் கொண்டதில் அவருடைய மனப்போக்கை நாம் அறிய முடிகிறது.
பாரதியார் காலத்தில் வெள்ளையர்களாலும் சுதேச சமஸ்தான மன்னர்களாலும், அடிமைப் புத்தி படைத்த நம்மவர்களாலும் துகில் உரிந்து. மானபங்கம் செய்யப் பெறுகின்ற நிலையில் பாரதத் தாய் இருந்தாள். அவளுடைய ஆறாத் துயரத்தைப் பெருகுகின்ற கண்ணீரைத் துடைக்க யாரும் முன் வரவில்லை. முப்பது கோடிப் பிள்ளைகளைப் பெற்ற அப் பெருமாட்டியின் துயர் துடைக்க யாரும் வாராத கொடுமையை நினைக்கின்றார் கவிஞர். அவர்களுள் அறிவுடையோர். வீரம் உடையோர், மானம் உடையோர். பகையினை வெல்லும் பண்புடையோர் இல்லாமல் போய்விட்டார்களோ - இருந்தால் அவர்கள் வாய் மூடியிருப்பதன் தத்துவம் என்ன என்ற வினாக்கள் கவிஞரின் உள்ளத்தில் தீயாகச் சுடுகின்றன. இத்தகையதொரு கொடுமை இதற்கு முன்னர் எங்கேனும் நடந்தது உண்டா என்று அவர் மனம் சிந்திக்கின்றது. ஆம்; இணையற்ற வீரர்களை, உலகம் போற்றும் உத்தமர்களை, நீதி நெறி தவறாத நேர்மையாளர்களைக் கணவர்களாகப் பெற்றிருந்தும் ஒரு பெருமாட்டி இதேபோல் பண்டைய காலத்தில் அல்லலுற்றாள். இந்த ஒருமை காரணமாக இதிகாசங்களில் வரும் பாஞ்சாலியின் நினைவு கவிஞனுக்கு வருகின்றது. நாட்டு வளங்கள் அனைத்தும் நிறைந்த இந்தப் பாரத தேவி, பெண் நலம் அனைத்திற்கும் கொள்கலமாக உள்ள பாஞ்சாலியை நினைவூட்டுகிறாள். லஜபதிராய், திலகர், மகாத்மா போன்ற வீரர்கள் தாயின் துயர் துடைக்க நிற்பதைப் போலப் பாஞ்சாலியின் கணவர் களும் அவள் துயர் துடைக்க நிற்கின்றனர். துச்சாதனன் உரிகின்ற துகிலைப் போல் வெள்ளை யர்கள் இப் பாரதத் தாயின் பண்பைக் குலைத்து அவளுடைய உயிர்ச் சத்தைச் சுரண்டிக் கொண்டு இருக்கின்றார்கள். மேலே கூறிய மகாத்மா போன்ற வீரர்கள் ஒருசிலரைத் தவிர, முப்பது கோடி மக்களும் ஆட்டு மந்தைகள் போல் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இயல்பு, துரியோதனன் அவையில் கங்கை மகன் (பீஷ்மர்) போன்றவர்கள் வாய்மூடி மெளனியாக இருந்த நிலையை நினைவூட்டுகின்றன.
சுதேச மன்னர்கள் என்ற பெயரில் இருந்த சிலர் தங்களால் ஆளப் பெறுகின்றவர்கள் தங்களைப் போன்ற மனிதர்களே என்ற நினைவுகூட இல்லாமல் மக்கள் பட்டினியால் வருந்திச் சாகின்ற கொடுமை யான சூழ்நிலையில் தங்களால் வளர்க்கப்படுகின்ற நாய்களுக்குத் திருமண விழாக் கொண்டாடி அவற்றுக்காக லட்சக்கணக்கில் ரூபாய் செலவழிக் கின்ற வீணர்களைச் 'சுதேச மன்னர்களாகப் பெற்றிருந்த கொடுமையைக் கவிஞர் காண்கின்றார். அவரையும் அறியாமல் உள்ளம் கொதிக்கின்றது. அவருடைய சினம் முழுவதும் கொட்டித் தீர்ப்பதற் குரிய கொள்கலமாகப் 'பாஞ்சாலி சபதம்' அமை கின்றது. பழைய வியாசனும் புதிய வில்லிபுத்தூரா னும் ஒரு சில வரிகளில் பாடிச் சென்ற பாஞ்சாலியின் துயரம் ஒரு பெரிய காப்பியத் துணுக்காகக் கவிஞரிடம் முகிழ்கிறது. பழைய கதையைப் பாடிச் சென்றாலும் ஓர் உள்ளுறை கதையாகக் (allegory) கவிஞர் இதனை அமைக்கின்றார். காப்பியம் பாடி வருகின்ற கவிஞர் பாத்திரங்களைப் பேச விடல் வேண்டும்; நிகழ்ச்சிகளைக் கோவைப்படுத்திச் சொல்ல வேண்டும் - என்ற இரண்டு நிலை போகத் தம்முடைய கருத்தைச் சொல்லப் புகுந்து மற்றொன்றை விரித்தல் என்ற குற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்பதனைப் பாரதியார் அறியாதவர் அல்லர். என்றாலும், எத்தனையோ இடங்களில் தம்மையும் மறந்து ஆறாத்துயரில் ஆழ்ந்து பாஞ்சாலியை மறந்து பாரத தேசத்தை நினைந்து பாடத் தொடங்கி விடுகிறார். எனவே, தருமன் நாட்டை வைத்துச் சூதாடித் தோற்றான் என்று சொல்ல வந்த கவிஞர், அந்தக் கொடுமையைப் பேசிய பிறகு அவன் காலத்தில் வாழ்ந்த அரசர்களின் போக்கை இடித்துப் பேசுகிறார்:
கோயிற் பூசை செய்வோர் - சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன் - வீட்டை
வைத்திழத்தல் போலும்
ஆயிரங்க ளான - நீதி
யவையுணர்ந்த தருமன்
தேயம் வைத் திழந்தான்; - சீச்சீ
சிறியர் செய்கை செய்தான்.
நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல்
நரர்க ளென்று கருதார்;
ஆட்டு மந்தை யாமென் றுலகை
அரச ரெண்ணி விட்டார்.
காட்டு முண்மை நூல்கள் -- பல தாங்
காட்டினார்க ளேனும்,
நாட்டு ராஜ நீதி - மனிதர்
நன்கு செய்ய வில்லை.
பாரதியின் நாட்டுப் பற்று - நாட்டின் நலனைக் கவனியாதவர் மாட்டு அவர் கொண்ட அலட்சியம் - நாட்டுக்குத் தீங்கிழைப்பார்மாட்டு அவர் கொள்ளும் சீற்றம் - கடமை மறக்கும் ஆட்சியாளரை அவர் சாடுகின்ற திறம் ஆகிய அனைத்தும் சிறந்த கவிதை வடிவில் அமைந்திருப்பது பாஞ்சாலி சபதம்.
இவற்றையல்லாமல் தனிப்பாடல்கள் என்ற பெயரிலும் பல பாடல்களைப் பாரதி பாடியிருக். கிறார். நல்ல கற்பனை வளம், சொல்லாட்சி முதலிய வற்றுக்கு இவருடைய பாடல்கள் அனைத்துமே. சான்றாக நிற்பினும், தனிப்பாடல்களுள் 'கவிதா தேவி அருள் வேண்டல்', 'அந்திப் பொழுது முதலிய பகுதிகளில் மிகச் சிறந்த பாடல்களைப் பாடியிருக்கின்றார்.
”பாரதியின் கட்டுரைகள்" என்ற பெயரில் தத்துவக் கட்டுரைகள், மாதர், சமூகம் என்ற தலைப்புகளில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளும் வந்துள்ளன. பாரதியின் உரைநடை 19 - ஆம் நூற் றாண்டின் இறுதியில் தோன்றிய தமிழ் உரை நடைக்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். கவிதைகள் பாடிய பாரதியின் சொல்லோட்டம் - உரைநடையில் காணப் பெறவில்லை. சாதாரண மாகத் திண்ணையில் அமர்ந்து பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் இரண்டு பெரியவர்கள் அல்லது மூதாட்டிகள் அன்றைய நிலையில் எப்படிச் சாதாரணச் சொற்களின் மூலம் தம்முடைய உரை யாடல்களை நடத்துவார்களோ அதே போல் தான் கவிஞரின் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.
இந்தக் காரணத்தால் அவருடைய உரைநடை யைப் படிக்கும் பொழுது அவர் சொல்லுகின்ற கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறதே தவிர, உணர்ச்சியூட்டும் ஆற்றல் அதிகம் அவருடைய உரைநடைக்கு இல்லை என்றே நினைக்கத் தோன்று கிறது. ஞானரதம் ஒன்று மட்டும் இந் நிலைக்கு மாறுபட்டுள்ளது. நீளமான வாக்கியங்கள் இல்லாமல் மிகக் குறுகிய வாக்கியங்களிலேயே உரைநடையை அமைத்துள்ளார். கவிதையில் காண முடியாத அளவு அதிகமான வடசொற்கள் அவருடைய உரை நடையில் காட்சியளிக்கின்றன. மணிப்பிரவாள நடை என்று கூறக்கூடிய அளவிற்குப் பிற சொற்கள் கலந்து அமைக்கப்பெற்ற அந்தக் கட்டுரைகள் தம் கருத்தைக் கற்பார்க்கு அறிவுறுத்துகின்றனவே தவிர, வீறு நடை போடவில்லை; நொண்டுகின்றன என்றாலும் 1920 வாக்கில் சோஷலிச சமுதாயத்தைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரை இன்று நம்முடைய மனத்தில் வியப்பை உண்டாக்கு கிறது. 'செல்வம்' என்ற தலைப்பில் வெளியாகி யுள்ள அந்தக் கட்டுரை எல்லோருடைய நாவிலும் சோஷலிசம் ஆட்படும் இற்றைநாளில் கூடப் புதுமையை விளைவிப்பதாய் அமைந்துள்ளது. 1917-இல் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சிக்குப்பின் மூன்றே ஆண்டுகள் கழித்து - அந்தப் புரட்சியை ஓரளவு அறிந்த பிறகு - வன்முறையோடு கூடிய சோஷலிசம் பயன் அளிக்காது என்ற பேருண்மையை விளக்கிப் புதுவகையான சோஷலிச சமுதாயத்தை எழுதிச் செல்கிறார். "கொலையைக் கொலையால் தான் நிறுத்த முடியும். அநியாயம் செய்வோரை அநியாயத் தால்தான் அடக்கும்படி நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்கிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே யொழிய அதை நீக்க வல்லது ஆகாது. அநியாயத்தை அநியாயம் விருத்தி பண்ணுமே யொழியக் குறைக் காது" என்று எழுதிச் செல்லுகின்ற பாரதியார் "ரஷ்யாவிலும் கூட இப்பொழுது ஏற்பட்டிருக்கிற சோஷலிச ராஜ்யம் எக் காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையது என்று கருத வழியில்லை' என்ற ஒரு தீர்ப்பையும் சொல்லிவிட்டுப் போகிறார்.
இவ் உரைநடைப் பகுதி நீங்கலாக நெடுங்கதை யும், சிறுகதையும் பல எழுதியிருக்கிறார் கவிஞர். "நவ தந்திரக் கதைகள்', 'சந்திரிகையின் கதை" முதலியவை மிக அழகான படைப்புகள் என்றாலும், சிறுகதைகள், நெடுங்கதைகள் என்பவற்றிற்கு நாம் வகுக்கும் இலக்கணத்திற்கு இவை பொருந்தி வரா, எனவே, வாழ்க்கையில் அனுபவிக்க முடியாத சுக போகங்களையெல்லாம் கற்பனையில் அனுபவிக்க வேண்டுமென்று கருதிய கலைஞர் கற்பனைப் படைப்பை 'ஞானரதம்' என்ற பெயரில் படைக் கின்றார். துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மனம் அதிலிருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றுத் துயரத்தை மறந்திருப்பதற்காகப் படைக்கின்ற கலையை - Escapism Art - துயர் தப்பு நெறிக் கலை என்று மேனாட்டார் கூறுவர். பாரதியின் 'ஞான ரதம்' அத் தொகுப்பைச் சேர்ந்தது என்று கூறல் இயலாது. ஆனால், அக் கற்பனை தொடங்குகின்ற விதம் அவ்வாறு எண்ண வைக்கிறது என்று கூறினால் தவறு இல்லை.
அவல நிலையிலிருந்து சிறிது விடுதலை பெற வேண்டும் என்று நினைக்கின்ற மனம் கற்பனையில் இறங்குவது மனித இயல்பு. அப்படிக் கற்பனையில் உலாவும் பொழுது கந்தர்வ லோகத்தையும் சத்திய லோகத்தையும் பிரம லோகத்தையும் கற்பனை செய்வதில்லை. மூட நம்பிக்கை, பெண்ணடிமை, பெண்ணுக்கு மட்டும் கற்பு என்பவை நிரம்பியுள்ள இந்த உலகத்தை மாற்றியமைக்க விரும்புகிறார் கவிஞர். அவருடைய பாடல்களில் இக் கருத்துக்கள் நிரம்ப வருகின்றன. என்றாலும், இவை இவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறிக் கூறி அலுத்துப்போன கவிஞருக்குத் தாம் விரும்பும் முறையிலேயே அனைத்தும் அமைந்துள்ள ஓர் உலகத்தைப் படைக்கத் தோற்றுகிறது.
கால தத்துவத்தின் எதிரொளியாய் - காலத்துக் குரிய தேவையின் எதிரொலியாய்க் கவிஞன் தோன்றும் கின்றான் என்பர். அத்தகைய கவிஞன் தொன்னெறி யில் வேரூன்றி, புதுநெறி வகுக்கும் திறனுடையன் என்றும் கூறுவர். பாரதியாரின் கலைத்திறனை இந்நோக்கில் ஆராய்ந்து பார்த்ததன் விளைவே. இச் சொற்பொழிவு.
--------------
4. பாரதிதாசன்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ' 1891 ஆம் ஆண்டு புதுவையில் பெரும் வணிகராம் கனகசபைக்குப் புதல்வராகத் தோன்றினார். இவர் இயற்பெயர் சுப்புரத்தினம் என்றாலும், 'பாரதிதாசன்' என்ற பெயரே நிலைத்து விட்டது. புரட்சிக் கவிஞர் என்ற அடைமொழி இவர் கவிதை எழுதத் தொடங்கிய சில ஆண்டுகளுக்குள் இவருக்குத் தரப்பெற்றது. இவரு டைய கவிதைகள் மூன்று தொகுதிகளாக வெளியிடப் பெற்றுள்ளன. மேலும், இவர் குடும்ப விளக்கு' என்ற குடிமக்கள் காப்பியம் ஒன்றும், 'பாண்டியன் பரிசு. 'எதிர்பாராத முத்தம் போன்ற காப்பியத் துணுக்கு கள் சிலவும் , பிசிராந்தையார் உள்ளிட்ட நாடகங்கள் பலவும் எழுதியுள்ளார். தேசியக் கவி பாரதியார் புதுவை சென்று தங்கியிருந்ததே பாரதிதாசனை வெளிக்கொணர்வதற்குரிய வாய்ப்பை நல்கியது. மற்றொரு வகையாகக் கூறவேண்டுமானால் பாரதியால் பாரதிதாசனும், பாரதிதாசனால் பாரதியாரும் பயன் அடைந்தனர் என்றே சொல்லலாம். பாரதி தாசனிடம் இயல்பாக அமைந்திருந்த கவிதை - இயற்றும் ஆற்றலை சூழ்நிலைவசத்தால் பாரதியாரே
வெளிக் கொண்டு வந்தார் என்று அறிகிறோம்.
அற்றைச் சூழ்நிலையில் இத்தகைய ஒரு தூண்டுதல் இல்லாது போயிருப்பின் புரட்சிக் கவிஞரிடம் குடி கொண்டிருந்த பேராற்றல் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டிருக்கலாம் என்றாலும் அவ்வளவு இளம் வயதில் வெளிப்பட்டிருக்கக் காரணம் இல்லை. அப்படியே வெளிப் பட்டிருப்பினும் பழமை பாராட்டி வந்த தமிழ்ப் புலவர் உலகம் அவரைக் கவிஞராக ஏற்றுக்கொண்டிருக்க முன்வந்திராது.
பாரதிதாசனார் தமிழ் இலக்கியத்தில் பாரதி யாரைவிட ஆழ்ந்து பயின்றிருக்கின்றார். இவ்வாறு சொல்வதால் பாரதிக்குத் தமிழ் இலக்கியப் பயிற்சி இல்லையோ என்று யாரும் ஐயுற வேண்டாம். கம்பன், வள்ளுவன் ஆகிய இருவரிலும் ஈடுபட்ட பாரதி, சங்கப் பாடல்களில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிய வில்லை. அதற்குரிய வாய்ப்புகளும் அவருக்கில்லை. இதன் எதிராக வட நாட்டில் சென்று வடமொழியை யும் வேத உபநிடதங்களையும் கற்று அவற்றுள் மூழ்கி விடும்படியான வாய்ப்புப் பாரதிக்குக் கிடைத்தது. பாரதிதாசனுக்கோவெனில் புதுவையை விட்டு வெளிச் செல்ல வாய்ப்பு ஏற்படாமையின், தமிழ் இலக்கியச் சுனையில் ஆழ்ந்து மூழ்கித் திளைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இருவருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி இருவரையும் திசை திருப்பி நேர் எதிர் எதிரான பாதைகளில் செலுத்தி விட்டது. கவிதை ஆற்றலிலும், உணர்ச்சிப் பெருக்கிலும், சொல் ஆட்சியிலும், ஓசை நயத்திலும், பொருள் ஆழத்திலும் இருவரும் பேராற்றல் படைத்தவர்கள் என்றாலும், இளமையில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி ஒவ்வொருவருடைய ஆற்றலையும் வெவ்வேறு திசையில் திசை திருப்பி விட்டது என்பதில் ஐயமில்லை.
மேலை நாட்டுப் புலவர்களைப் பொறுத்தமட்டில் கூட ஐரோப்பா, இத்தாலி முதலிய இடங்களுக்குச் சென்று நேரிடையாக அவற்றில் ஈடுபாடு கொண்ட காரணத்தால் வார்டு பைரனின் கவிதைகள் பரந்து பட்ட ஒரு பண்பை அறிவிக்கின்றன. ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்கள் இத்தகைய வாய்ப்பை அதிகம் பெறாவிட்டாலும் பழைய கிரேக்க இலக்கியங்களை யும், கிரேக்க வரலாற்றையும், கிரேக்க புராண இதிகாசங்களையும் ஆர்வத்துடன் கற்றறிந்தமையின் அவர்களுடைய பாடல்களிலும் இப்பரந்த மனப் பான்மை இலங்கக் காண்கின்றோம்.
பாரதிதாசன் பிரெஞ்சு மொழி கற்றார் ; மேலை நாடுகளுக்கோ அன்றி வடநாட்டிற்கோ சென்று வடமொழி முதலியவற்றிலும் பாரதி போலப் புலமை பெற்றிருப்பின் அவருடைய கவிதைகள் எந்தத் திசை நோக்கிச் சென்றிருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பதே சுவையுடையதாக இருக்கும். பாரதி வடமொழியை ஆழ்ந்து கற்றது போல் புரட்சிக் கவிஞரும் ஓரளவு பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்தாரே, அப்படியிருக்க வெளி உலக அனுபவம் அவருக்குக் குறைந்து விட்டது என்று கூறுவது முறையா என்று சிந்திக்கத் தோன்றும். இந்த நிலையில் ஒன்றை மறவாமல் மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள வர்கள் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் கற்றது உண்மைதான். ஆனால், பெரும்பான்மை யானவர்கள் ஆங்கிலத்தைப் பிழைப்புக்கு வழி அல்லது இன்றியமையாத தேவையான ஒரு கருவி என்று கருதிக் கற்றார்களே தவிர, ஜான் ஸ்டூவர்ட் மில்லை யும், ரஸ்கினையும் அவர்கள் காட்டிய புது வழிக் காகவோ அல்லது அவர்கள் நூலில் உள்ள இலக்கிய நயம் காரணமாகவோ கற்கவில்லை என்பது தெளிவு. ஆங்கில மூலம் அரசியல் கற்றவர்களும் இந்த விதிக்கு விலக்கானவரல்லர். மேலும், ஆங்கில ஆட்சியினால் நாடு அடிமைப்பட்டிருக்கிறது என்ற உணர்வு ஒவ்வொருவருடைய மனத்திலும் ஓரளவு குறைந்த அளவிலாவது இருந்த காரணத்தால் அம் மொழியின் மாட்டு இலக்கிய நயம் கருதியோ வேறு காரணத் தாலோ பற்று உண்டாகவில்லை. அதன் எதிராக விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் - இன்றியமையாத ஒரு கருவி என்ற கருத்திலேயே கற்குமாறு செய்தது.
அதேபோலப் பாரதிதாசனும் பிரெஞ்சு மொழி கற்றார் என்றால் - அதுவும் இளம் பிராயத்தில் அப் பள்ளியில் பயின்றார் என்றால் - அது ஆழ்ந்த மாறுதல் ஒன்றைக் கவிஞருடைய மனத்தில் செய் திருக்கும் என்று கூற முடியாது. இதன் எதிராகத் தமிழ்ப் புலமைத் தேர்வு பெற்ற அவர் 18-ஆம் வயதிலேயே கல்லூரித் தமிழ் ஆசிரியராகப் பணி புரியத் தொடங்கிவிட்டார்.
பாரதிதாசனை நினைக்கும்பொழுதும் அவரோடு பழகும் பொழுதும் அவருடைய கவிதைகளைக் கற்கும் பொழுதும் அவர் ஓர் உணர்ச்சிப் பிண்டம் என்பதை அறிய முடியும். கவிஞன் என்றாலே அவன் உணர்ச்சிப் பிண்டமாகத்தான் இருத்தல் கூடும். அறிவின் துணை கொண்டு ஆயத் தொடங்கினால் அங்கே கவிதை தோன்றுவதில்லை. உணர்ச்சியில் மூழ்கி அனுபவித்து. அந்த அனுபவத்தைப் பிறருக்கு வழங்க வேண்டும் என்ற கருத்துடன் உணர்ச்சிப் பெருக்குடையோன் தன் உணர்ச்சிக்குச் சொல்லின் மூலம் கொடுக்கும் வடிவமே கவிதை எனப்படும். எனவே, கவிதை என்பதே கவிஞருடைய உணர்ச்சியைச் சொற்களின் மூலம் நமக்குத் தருகின்ற ஒரு கருவி என்பது பெறப் படும். உணர்ச்சியில் பிறந்து, உணர்ச்சியில் வளர்ந்து, உணர்ச்சி வடிவாகவே வெளிவரும் கவிதை, கற்போர் மனத்தில் உணர்ச்சியையே ஊட்டும் என்பதில் தடை ஒன்றுமில்லை.
ஒரு கவிதை எவ்வளவு தூரம் கற்பவர் மனத்தில் உணர்ச்சியை ஊட்டும் என்பதற்கு அந்தக் கவிஞனுடைய உணர்ச்சியின் ஆழமும் அந்த உணர்ச்சி ஆழத்தை வெளியிட அவன் பயன்படுத்தும் சொல் ஆற்றலுமே சிறப்பான காரணங்கள் ஆகும். சாதாரண நிகழ்ச்சிகளைக் கூடக் கவிஞன் காண்கின்ற முறையே வேறு. நம் போன்றவர்கள் ஒரு நிகழ்ச்சியில் எவ்வளவு ஈடுபட்டாலும், 'நாம்' என்ற முனைப்பை யும் ஈடுபடுகிறோம்' என்ற நினைவையும் மறப்ப தில்லை. ஆனால், கவிஞன் ஈடுபடும்போது அவன் தன்னை மறந்து உணர்ச்சியில் ஈடுபட்டுத் தான் வேறு அது வேறாக நில்லாமல், தானே அதுவாய் ஓர் அத்துவித நிலையை அடைந்து விடுகிறான். பின்னர் அதிலிருந்து வெளிப்பட்டு அந்த அனுபவத்தை மறுபடி யும் சிந்தித்துப் பார்த்து சொற்களின் உதவி கொண்டு அனுபவத்தை வடிக்கத் தொடங்குகிறான்.
அங்ஙனம் தொடங்கும் பொழுது இதுவரை அடங்கியிருந்த அறிவாற்றலின் துணையும் தேவைப் படுகிறது. இந்த அறிவாற்றலின் துணை கொண்டு அந்த உணர்ச்சியை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தித் தேவையான அளவு வெளியிடுகிறான். ஒருசில கவிஞர்கள் குடத்தில் உள்ள நீரைக் குழாய் மூலம் வெளிப்படுத்துவது போலத் தம் உணர்ச்சியை ஓரளவு கட்டுப்படுத்தி வெளியிடுகின்றனர். இன்னும் சிலர் குடத்து நீரை அப்படியே கவிழ்ப்பதுபோலக் காட்ட முற்படுகின்றனர். இரண்டுமே நீரை வெளிப் படுத்துகின்ற இயல்பைப் பெற்றிருப்பினும், குழாய் மூலம் வெளியிடுவது போல் அப்படியே கவிழ்ப்பது விரும்பிய பயனை அளிப்பதில்லை.
இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு பாரதி, பாரதிதாசன் என்ற இருவருடைய கவிதைகளையும் ஆர அமர நினைந்து பார்ப்போமேயானால், இருவருடைய உணர்ச்சிக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அறிய முடியும். இருவருடைய ஆற்றலும் பேராற்றல்கள் என்பதிலும் ஐயமில்லை. பலவிடங்களில் வாழும் மக்களிடம் பழகிய காரணத் தால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் குழாய் மூலம் நீர் சொரிவது போலப் பாரதியின் கவிதைகள் வெளிப்பட்டன. தமிழர்களை அல்லாமல் பிற மக்களோடு பழகும் வாய்ப்பைப் பெறாத காரணத் தாலும் பிற இடங்களுக்கு அதிகம் சென்று தங்கி உறவு கொள்ளாத காரணத்தாலும் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் குடத்தைக் கவிழ்த்து நீரைச் சொரிவது போல உணர்ச்சியை அப்படியே கொட்டி விடுகின்றன.
இவ்வாறு கூறுவதால் புரட்சிக் கவிஞரின் பாடல் களுக்கோ அன்றி அவற்றின் சிறப்புக்கோ இழுக்கம் கூறுவதாக அன்பு கூர்ந்து யாரும் நினைத்துவிட வேண்டா. திறன் ஆய்வாளன் நடுநிலையோடு நோக்கும் போது இக் கவிஞர் தம் உணர்ச்சியை வெளியிடக் கையாண்ட முறை எது என்பதை எடுத்துக்காட்டவும் கடப்பாடு உடையவன் ஆவான். இங்ஙனம் வெளியிடுவது பாரதிதாசனுடைய தனிச் சிறப்பு ஆகும். உணவுப் பண்டங்களுள் இரு வேறு சுவையுடைய பொருள்கள் இருப்பதனால் ஒன்றைவிட ஒன்று உயர்வு என்றோ தாழ்வு என்றோ யாரும் கருதத் தேவையில்லை. அந்தந்தச் சுவை அந்தந்தப் பண்டத்திற்குத் தனிச்சிறப்பை நல்குகிறது. அதே போல உணர்ச்சியை அப்படியே கொட்டி நம்மையும் அதில் மூழ்கடித்துத் திளைக்குமாறு செய்தது புரட்சிக் கவிஞரின் தனிச் சிறப்பாகும்.
இது அவருடைய இயல்பு என்பதை அறிந்த பிறகு, இந்த இயல்புக்குக் காரணம் யாதாக இருக்கலாம் என்ற வினாவை எழுப்பிக் கொண்டு அவருடைய வரலாற்றைப் பார்க்கும் பொழுது, முன்னர்க் கூறியபடி அதிகம் வெளியே சென்று பிறரோடு பழகாத காரணத்தால் தான் இந்நிலை. ஏற்பட்டிருக்குமோ என்று நினைக்க வேண்டியுள்ளது. தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு ஒப்பற்ற பண்பினர் புரட்சிக் கவிஞர். அவரால் ஏசப்படும் இனத்தவர் ஒருவருடன் ஒரு முறை கவிஞரைச் சென்று காண நேர்ந்தது. மூன்று மணி நேரம் உரையாடிய பின்னர் வந்திருந்தவர் யார் என்று அறிந்திருந்தும் தம் ஒப்பற்ற பண்புடைமையாலும் அன்பினாலும் வந்திருந்தவரைக் கவிஞர் கவர்ந்தே விட்டார். தனி மனிதனுடன் பழகும்பொழுதும் நண்பர்களுடன் பழகும்பொழுதும் இத்துணை அன்பும், பண்பும் காட்டுகின்ற கவிஞர், கவிதா மண்டலத்தில் நுழைந்தவுடன் உணர்ச்சியில் தம்மை மறந்து விடுகிறார். சுற்றுச் சூழ்நிலையை ஒரு சிறிதும் கவனியாமல் உணர்ச்சியில் மூழ்கி அந்த உணர்ச்சியை அப்படியே வெளியிடும் இயல்பு குழந்தைகளுடைய இயல்பாகும். புரட்சிக் கவிஞர் குழந்தை மனப் பான்மை கொண்டவர் என்பதையும் நாம் நன்கு அறிவோம். எனவே, மனத்தில் தோன்றும் வெறுப்பு விருப்புகளைத் தம் கவிதைகளில் அப்படியே கொட்டித் தீர்க்கிறார்.
உணர்ச்சிப் பெருக்கைக் கட்டுப்படுத்தாமல் வெளியிடுகின்ற இயல்பு உடையவர்களிடம் மற்றொரு குறையையும் காண்டல் கூடும். எந்த நேரத்தில் எந்த உணர்ச்சி மிகுதியாக இருக்கிறதோ அதை அப்படியே வெளியிடும் இயல்பு உடையவர்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிறிதோர் உணர்ச்சியில் ஆட்படும் பொழுது முன்னர்க் கூறியதை மறந்துவிட நேரிடும். உதாரணமாக ஒன்றைக் காணலாம்: 'தமிழ் இயக்கம்' என்ற கவிதைத் தொகுப்பில் இருபத்து நான்கு பொருள்கள் பற்றிக் கவிதைகள் யாத்துள்ளார் கவிஞர். ஒன்பதாவது தொகுதியாகிய புலவர்' என்ற பகுதியில் 44 ஆம் பாடலும், 97 ஆம் பாடலும் ஓர் உணர்ச்சியில் நின்று பாடப் பெற்றவையாகும்.
முதுமைபெறு சமயமெனும்
களர் நிலத்தில் நட்டதமிழ்ப் பெருநூல் எல்லாம்
இதுவரைக்கும் என்ன பயன்
தந்ததென எண்ணுகையில் நான்கு கோடிப்
பொதுவான தமிழரிலே
பொன்னான தமிழ் வெறுத்தார் பெரும்பாலோராம்
புதுநூற்கள் புதுக் கருத்தால்
பொது வகையால் தரவேண்டும் புலவரெல்லாம்.
சமயமெனும் சூளையிலே
தமிழ்நட்டால் முளையாதென் றறிந்திருந்தும்
சமயநூல் அல்லாது.
வழியறியாத் தமிழ்ப்புலவர் சமயம் பேசித்
தமிழ் அழிப்பார் எனினும் அவர்
தமிழ் வளர்ப்போம் என்றுரைத்துத் தமை வியப்பார்
தமிழ் வளர்ச்சி தடைப்பட்டால்
தம் வளர்ச்சி உண்டென்றும் நினைப்பார் சில்லோர்.
தமிழ் இலக்கிய வரலாற்றை ஓரளவு அறிந்தவர்கள் கூட இக்கூற்றுச் சரியான தன்று என்பதை நன்கு உணர்தல் கூடும். சங்க இலக்கியங்கள் நீங்கலாகச் சிலப்பதிகாரம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் பாரதி பாடல் வரையில் தோன்றிய அத்துணை இலக்கியங்களும் சமயத்தின் அடிப்படையில் தோன்றி யவையே என்பதை மறத்தல் இயலாது. சங்க நூல் களுங்கூடக் கடவுள் கொள்கையைப் பேசத்தான் செய்கின்றன. ஆனால், அதனையடுத்துத் தோன்றிய இலக்கியங்களை ஒப்பு நோக்கும் பொழுது அவை சமயத்தைப் பற்றிக் குறைவாகப் பேசியுள்ளன என்று கூறலாமே தவிரத் தொல்காப்பியம் தொடங்கி இன்று வரையில் உள்ள தமிழ் நூல்களில் சமய அடிப்படை இல்லாத நூலைத் தேடவேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாடல்கள் உள்பட ஒன்றுமே இல்லை என்று தான் கூற நேரிடும். அவ்வாறிருக்கச் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் ஈறாக அனைத்தையும் கரைத்துக் குடித்த புரட்சிக் கவிஞர், 'முதுமை பெரு சமயமெனும் களர் நிலத்தில் நட்ட தமிழ்ப் பெரு நூல் எல்லாம் இதுவரைக்கும் பயன் தரவில்லை' என்று பாடுவாரேயானால், ஏதோ ஓர் உணர்ச்சியில் உந்தப் பெற்றுப் பாடப் பெற்றதே தவிர அவருடைய ஆழ்ந்த மனத்தின் அடிப்படையில் தோன்றிய கருத்தன்று என்பதை அறிய முடியும்.
இஃது அவருடைய ஆழ்ந்த கருத்தன்று என்று ஏன் கூறுகிறேன் என்றால், அதே நூலில் பன்னிரண் டாவது கவிதையாக அமைந்துள்ள 'கோயிலார் என்ற தலைப்பில் 59வது பாடலாக அமைந்துள்ளதைக் காண்டல் வேண்டும்.
சொற்கோவின் நற்போற்றித்
திருஅகவல் செந்தமிழில் இருக்கும் போது
கற்கோயில் உட்புறத்தில்
கால் வைத்த தெவ்வாறு - சகத்ர நாமம்?
தெற்கோதும் தேவாரம்,
திருவாய் நன் மொழியான தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென
வேதபாராயணமேன் திருக்கோயில் பால்?
இப் பாடலில் மாணிக்கவாசகப் பெருமானுடைய 'போற்றித் திருவகவலையும், தேவாரம், திருவாய் மொழி ஆகியவற்றையும் தமிழ்த்தேன்' என்று கூறுகிறார். தமிழ்த் தேன் ஆகிய இப் பாடல்கள் இருக்கச் 'செக்கு ஆடும் பொழுது தோன்றும் இரைச்சலைப் போல வேத பாராயணம் எதற்காகச் செய்யவேண்டும்' என்று கேட்கின்றார். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதைச் சொல்ல வேண்டிய தேவையில்லை. என்றாலும் இவ் விரண்டு முரண்பட்ட கருத்துகளும் ஒரே கவிஞருடைய நாவில் முகிழ்த்தன என்றால் அதற்கு ஏதோ ஓர் அடிப்படைக் காரணம் இருத்தல் வேண்டும்.
'கம்பனுடைய இராமாயணம் நாட்டுக்குப் பெருந் தீங்கு விளைவித்தது' என்ற கருத்தைப் பல இடங்களிலும் கூறிச் சென்றுள்ளார்.
பன்னீராயிரம் பாடிய கம்பனும்
இப்பொது மக்கள் பால் இன் தமிழ் உணர்வை
எழுப்பிய துண்டோ இல்லவே இல்லை
என்பதும் அவருடைய வாக்குத்தான். 'சஞ்சீவ பர்வதத்தின் சாரல்' என்ற கவிதையில்,
இராமாயணம் என்ற நலிவு தரும் கதை
பூமியில் இருப்பதை இப்பொழுதே அறிகின்றேன்
நம்பத் தகாத வெலாம் நம்ப வைக்கும்
என்றெல்லாம் பாடியவர், கம்ப ராமாயணப் பாடல் களை ஆய்ந்து வெளியிட்ட ரசிகமணி டி. கே. சி. அவர்கள் பல பாடல்களை இடைச்செருகல்கள் என்று கூறிப் புதிய பதிப்புப் போட்டதற்காகச் சீறுகிறார்.
கம்பனார் பதினோரா
வீரம்பாட்டில் முக்காலும் கழித்துப் போட்டு
நம்பினால் நம்புங்கள்
இவைதாம் கம்பன் செய்யுள் என அச் சிட்டு
வெம்புமா றளிக்கையிலும்
மேவாத செயல் இதனைச் செய்ய இந்தக்
கொம்பன் யார் எனக் கேட்க
ஆளில்லை யா புலவர் கூட்டந் தன்னில் ?
உண்மையில் கம்ப ராமாயணத்தை வெறுப்பவர் அந்நூலின் அளவை ஒருவர் குறைத்தால் அது ஒழிந்தது' என்று மகிழ வேண்டியதற்குப் பதிலாக ஏன் சீறவேண்டும்? மேலாகப் பார்க்கும்பொழுது முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்ற இப்பாடல்களே புரட்சிக் கவிஞரின் அக மனத்தை ஆராய்வதற்கு நமக்கு வாய்ப்பு அளிக்கின்றன. முரண்பாடுடைய இப்பாடல்களை ஆர அமர இருந்து படித்தால் மற்றோர் உண்மை புலனாகும். தமிழ் என்று கூறினால், கவிஞர் தம் உயிரைவிட அதிகமாக அதை நேசிக்கின்றார் என்பது யாவரும் அறிந்த உண்மை. 'தமிழுக்கு அமுது என்று பேர் ; இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று ஏனையோரும் பாடியிருக்க லாம். ஆனால், தமிழா, அவர்கள் உயிரா என்று சோதனை ஏற்பட்டிருக்குமாயின் அவர்கள் கூற்றுக்கள் ஏட்டுச் சுரைக்காயாக நின்று இருக்குமே தவிர, அக்கூற்றில் உண்மை இராது. ஆனால், புதுவைக் கவிஞரைப் பொறுத்தமட்டில் இந்தப் பாடல் கடுகளவும் உயர்வு நவிற்சி அன்று. தமிழ் என்று கூறினால் உண்மையிலே தம் உயிருக்கு நேர் என்று கருதினார். அவருடைய காலச் சூழ்நிலை அவரால் உயிர் என நேசிக்கப்பட்ட தமிழ் ஒதுக்கப்படுகின்ற கொடுங்காட்சியை அவருக்கு நல்கியது. அங்ஙனம் ஒதுக்கப்படுவதற்குக் காரணம் என்ன என்று கவிஞர் சிந்திக்கின்றார். இந்தச் சிந்தனை இவருக்கு மட்டும் மன்று: இவருடைய ஆசானாகிய பாரதிக்கும் இதே சிந்தனை ஓடியுள்ளது. உயிருக்கு நேராகிய இன்பத் தமிழ், சாக்கடையில் கொட்டப்பட்ட தீஞ்சுவைத் தேன் போல் கேட்பாரற்றுக் கிடக்கின்ற அவல் நிலை அவர்கள் காலத்திய நிலை. இதன் காரணம் என்ன என்ற ஆராய்ச்சியை இருவருமே மேற்கொள்ளு கிறார்கள்; என்றாலும் இரண்டு கவிஞர்களும் இரு வேறு முடிவுகட்கு எடுத்துச் செல்கின்றார்கள். பாரதி யைப் பொறுத்தமட்டில் அந்நிய நாட்டினுடைய ஆட்சி, அதன் கொடுமை, அதனால் அந்நியரின் மொழியின் மேல் ஏற்பட்ட மோகம் என்பவையுமே, தமிழுக்கு ஊறு செய்தன என்ற முடிவுக்கு வருகிறார்.
'செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது ; தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன' என்று பாரதியார் பாடும் பொழுது தமிழ் மொழியின் தாழ்வுக்கு அயல் மொழி மேல் பற்றே காரணம் என்ற கருத்தை வெளி யிடுகிறார். ஒரோவழித் தமிழ் கற்றவர்களும் வெறும் எழுத்தையும் சொல்லையும் கற்றார்களே தவிரத் தமிழ்ப் பண்பை அறிந்தார்கள் இல்லை என்று பாடுகிறார் பாரதி. இத்தகைய இழிநிலைக்குத் தமிழன் வரக் காரணம் தமிழ்ப் பண்பாட்டை அறியாத தமிழர்கள் பழமையில் கொண்ட பற்றுக் காரணமாகத் தவறு செய்கின்றார்கள் என்று பாடினார். இப் பெருமைகளையெல்லாம் வரிசைப் படுத்தி,
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர் - (சுய சரிதை : 26)
என்று பாடிச் செல்கிறார், பாரதி.
தமிழும் தமிழரும் அடைந்திருந்த கீழ்நிலை, பாரதி, பாரதிதாசன் என்ற இருவருக்கும் புரிந்தது உண்மைதான் என்றாலும், அதற்குரிய காரணத்தைக் கவியரசர் பாரதியார் கண்ட அடிப்படை வேறு; புரட்சிக் கவிஞர் கண்ட அடிப்படை வேறு. புரட்சிக் கவிஞர் - பிரெஞ்சு இந்தியப் பகுதியாகிய புதுவையிலேயே பிறந்து வளர்ந்துவிட்ட காரணத்தால் ஆங்கில ஆட்சியால் ஏற்பட்ட கொடுமையை அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லாது போய்விட்டது. எனவே, தமிழின் கீழ்நிலைக்குக் காரணம் அந்நியர் ஆட்சிக் கொடுமை என்ற அடிப்படை புரட்சிக் கவிஞருக்குப் புலப்பட வில்லை. அதன் எதிராகத் தமிழர்களின் தவறான பழக்க வழக்கங்களும் சாதிக் கட்டுப்பாடுகளுமே இந் நிலைக்குக் காரணம் எனப் புரட்சிக் கவிஞர் சிந்திக்க லானார். தமிழரிடம் உள்ள இத் தவறான பழக்க வழக்கங்கள் அவர்கள் இழிந்த நிலைக்கு ஓரளவு காரணம் என்பதைப் பாரதியாரும் உணர்ந்திருந்தார். 'சிலப்பதிகாரமும் திருக்குறளும் தோன்றிய நாட்டில் தமிழச் சாதி மிக உயர்ந்த நிலையில் இருக்கும் என்று நினைத்தேனே! முன்பு நான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதிக் கொண்டிருந்தேன். ஒரு பத்தாயிரம் சனிவாய்ப்பட்டும் தமிழச் சாதி தான் உள் உடைவின்றி உழைத்திடும் நெறிகளைக் கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன். அந்நிலை மாறி இந் நிலைக்கு வந்ததே' என்று வருந்திய கவியரசர் 'விதியே; விதியே, தமிழச் சாதியை என் செயக் கருதி இருக்கின் றாயடா' என்று பாடிச் செல்கிறார். இக்குறைபாட்டின் காரணம் தமிழர்கள் ஆகிய நம்மிடத்திலேயே இருக்கிறது. என்று நினைத்துப் பாடினார் பாரதியார். ஆனால், இக்குறைபாட்டுக்கு முழுக் காரணம், என்றோ நிகழ்ந்துவிட்ட ஆரிய நாகரிகக் கலப்பு என்று முழுவதும் மாக நம்பினார் புரட்சிக் கவிஞர்.
சங்க இலக்கியத்தையும் தொல்காப்பியத்தையும் நன்கு கற்றிருந்த புரட்சிக் கவிஞர் இவ்வாறு நினைத்தது விந்தைதான். எந்தக் காலத்தில் ஆரியக் கலப்பு ஏற்பட்டது என்பதை இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் சொல்ல இயலாத நிலையில் இருக்கின்றது. என்றோ ஒரு நாள் தமிழ் நாகரிகம். தலை தூக்கியிருந்தது என்பதும் அந் நாகரிகம் ஆரிய நாகரிகத்தையும் திருத்தும் அளவிற்கு அவர் இடையே புகுந்து பல நன்மைகளை விளைத்தது என்பதும் உண்மைதான். ஆனால், இவை இரண்டும் இரண்டறக். கலந்து எது எது என்று பிரித்துக் கூற முடியாதபடி கலந்து சில ஆயிரம் ஆண்டுகள் ஆயின. பின்னர் சரித்திரத்தின் போக்கில் நிகழ்ந்துவிட்ட இக் கலப்பை இன்று நினைந்து வருந்துவதாலும் அதைக் குறை கூறுவதாலும் பயன் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. நம் பால் காணப்படும் குறையை எடுத்துச் சொல்லித். தீர்த்துவிட வேண்டுமென்ற சிறந்த நோக்கத்தில் புரட்சிக் கவிஞர் திகழ்ந்தார் என்பதில் ஐயமே இல்லை. தம் உயிரைவிட மிகுதியாக நேசித்த தமிழ் மொழிக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் இழுக்கு நேர்ந்தபோது அதைப் போக்க வேண்டுமென்று கவிஞர் விரும்பியதால் போராட்டம் தொடங்கி யிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அதற்கு அவர் மேற்கொண்ட வழிதான் ஓரளவு விந்தையானது. இன்று எங்கும் காணப்படாத ஆரிய நாகரிகம் என்ற ஒன்றைத் தன் பகை எனக் கருதிச் சாடப் புறப்படுகிறார். இராமாயணம் போன்ற இதிகாசங்கள் நாட்டை நலிவு செய்து வந்தவை. என்று கருதிவிட்டார்.
இலக்கிய உலகில் நேர்ந்த இந்த ஒரு குழப்பம் சமுதாய உலகிலும் தலை காட்டத் தொடங்கியது. தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்தும் அம் மொழி தெரியாவிட்டாலும் வடமொழியே தமக்குத் தாய் மொழி என்று பேசியும் நடந்தும் வந்த பிராமணர் களை எதிர்த்துக் கட்சி ஒன்று வலுவாகச் செயல்படத் தொடங்கியது. அற்றை நாளில் பாரதிதாசன் என்ற தனி மனிதர் இக் கட்சியின் சார்பு உடையவர் ராக முழு மூச்சாக அதன் வளர்ச்சிக்குப் பாடு பட்டதில் தவறு ஒன்றுமில்லை.
இருபதாம் நூற்றாண்டில் கவிஞர் என்று சொல்ல தகுந்தவர்கள் யார் இருப்பினும் தம்மையும் அறியாமல் ஏதோ ஒரு கட்சியில் கால் கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை அரசியல் கட்சிகள் என்று சொல்லத் தக்கவை இவ்வளவு பெரிய வளர்ச்சியையும் ஆழத்தை யும் கிளர்ச்சியையும் அடைந்திருந்தது இல்லை. பொது மக்களுடைய மனங்களைப் பற்றி ஈர்க்கின்ற அளவுக்கு அரசியல் கட்சிகள் எதுவும் அற்றை நாளில் இருந்த தில்லை. எனவே, கவிஞர்கள் என்று சொல்லப்படும் பவர்களும் பொதுமக்கள் தொடர்பு அதிகம் இல்லாமல் தாம் உண்டு தம் கவிதை உண்டு என்ற நிலையில் இருந்து விட்டனர். அவர்களால் எழுதப் பட்ட கவிதைகளும் பொதுமக்களோடு அதிகம் தொடர்பு உடையனவாக இருந்ததில்லை. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் ஒன்று மட்டுமே சாதாரணக் குடிமகனைத் தலைவனாகக் கொண்டு திகழ்ந்தது. அதற்கு முன்னரும் பின்னரும் இத்தகைய நிலை ஏற்படவில்லை. பெரிய புராணக் காப்பியம் சாதாரண குடிமக்களையே தலைவர் களாகக் கொண்டு விளங்கினும் அவர்களுடைய அரசியல் வாழ்வு, சமுதாய வாழ்வு என்பன பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் - பக்தர்களா அதுவும் சிவ பக்தர்களா என்று கேட்ட அளவிலே அதுவும் நின்று விட்டது. எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த கவிஞர்கட்கு அரசியல் பிரச்சினையோ கட்சிப் பிரச்சினையோ பற்றிச் சிந்திக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படவில்லை.
ஆனால், இந்த நூற்றாண்டின் சூழ்நிலையே வேறாக அமைந்து விட்டது. மிகப் பெருஞ் செல்வர் களிலிருந்து பட்டிதொட்டிகளில் வாழும் அன்றாடங் காய்ச்சிகள் வரையில் அரசியல் சூழ்நிலையில் சிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. அவர்கள் விரும்பி னாலும் விரும்பாவிட்டாலும் ஆங்கில ஆட்சியின் கடைசிப் பகுதியிலிருந்து இன்று வரை சாதாரணக் குடிமகனின் வாழ்விலும் அரசியல் புகுந்து விட்டது. துறவியர் கூடக் காட்டுக்கு ஓடினாலொழிய அரசியலி லிருந்து தப்பி வாழ முடியாது என்ற உண்மை நாம் அறிந்த ஒன்று. இத்தகைய ஒரு சூழ்நிலையில் உணர்ச்சிப் பெருக்குடைய கவிஞன் ஒருவன் அரசியலில் சேராமல் வாழ்ந்தான் என்று கூறினால், அஃது இயலாத காரியமே என்று சொல்லி விடலாம். முழு மூச்சாக அரசியலில் ஈடுபடாமல் கவிமணி தேசிக விநாயகம் போல் ஒரு சிலர் இருந்திருக்கலாம். என்றாலும், சமுதாயச் சூழ்நிலையை எந்தக் கவிஞனும் சந்தித்துத்தான் தீரவேண்டும். சமுதாயமே அமைதி இழந்து அரசியலில் பங்கு கொள்ளுகின்ற ஒரு நிலை இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்டு விட்டது. எனவே, அரசியலைப் பற்றிக் கவலைப்படாமல் சமுதாயத்தை மட்டுமே தொடர்பு கொள்ளுகின்றான் என்று நினைக்கின்ற கவிஞன் கூடச் சமுதாயத் தொடர்பு காரணமாக அரசியல் தொடர்பையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு புரட்சிக் கவிஞரின் வாழ்க்கையைப் பார்ப்போமேயானால் ஓர் உண்மை புலப்பட்டே தீரும். அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதாவது ஒரு கட்சியில் அவர் புகுந்திருக்க வேண்டிய சூழ்நிலை அன்று இருந்தது. நாட்டின் விடுதலையை முதன்மையாகக் கருதினார் கவி அரசர் பாரதியார். எனவே, அவர் காங்கிரசில் சார்ந்தவராய், அதற்குரிய பாடல் பாடுபவராய், மிதவாதக் கட்சியினர்களை எள்ளி நகையாடுபவராய் மாறினார். இதன் எதிராக, சமுதாயத்தையும் அதன் சீர்திருத்தங்களையுமே தம் தலையாய குறிக் கோளாகக் கொண்ட புரட்சிக் கவிஞர் நாட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை. எனவே, நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் சமுதாயச் சீர்திருத்தம் ஒன்றையே தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். ஆதலின் திராவிடக் கட்சியில் புரட்சிக் கவி ஒன்றிப் போனார். இந்த அளவு வரையில் கவி அரசரும் புரட்சிக் கவிஞரும் ஒரே நிலையில் தான் இருக் கின்றனர். இருவருடைய குறிக்கோளும் வெவ்வேறாக அமைந்து விட்டன. எனவே, அந்தந்தக் குறிக்கோளுக் குரிய கட்சிகளில் அவரவர் அமைந்துவிட்டனர்.
இதனையடுத்து இருவருடைய வளர்ச்சியும் வெவ் வேறு திசை நோக்கிச் சென்றவுடன் இருவருடைய அடிப்படையுமே ஓரளவு மாறத் தொடங்கி விட்டது. பாரதியைப் பற்றிப் பேசிய பேச்சில் அரவிந்தருடைய தொடர்பால் - சக்தி வழிபாட்டில் மனத்தைச் செலுத்தி அதன் பயனாக, இறை உணர்வு மிகுந்த கவியரசராய் ஆகிவிட்டாராகலின் அவருடைய பாடல்களும் திசை திரும்பி விட்டன என்று கூறினோம். இதன் எதிராகப் புரட்சிக் கவிஞர் தொடக்கத்திலிருந்து இறுதிவரை சமுதாயச் சீர்திருத்தம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தும் பாடியும் விட்டார். தாம் விரும்பிய சமுதாயச் சீர்திருத்தம் செய்வதற்குத் தடையாக உள்ளன எவை என்ற சிந்தனை புரட்சிக் கவிஞரின் உள்ளத்தில் கால் கொண்டவுடன் நாட்டில் நடைபெறு கின்ற நலிவுக்குக் காரணமாக இருக்கின்ற கசடர்கள், தாம் செய்கின்ற தவற்றிலிருந்து தப்பித்துக் கொள் வதற்குரிய நொண்டிச் சரக்குக் கூறுவோர், 'இவை யெல்லாம் கடவுள் செயல் ; இவையெல்லாம் விதியின் பயன்; இவையெல்லாம் சாத்திரங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன" என்பவர்கள் ஆகியோர் அவர் முன் காட்சியளிக்கின்றனர்.
இத்தகைய நொண்டிச் சமாதானங்களைக் கண்ட பாரதியார், சாத்திரங்களை ஓரளவு அறிந்தவன் ராகலின் அவற்றுக்கெல்லாம் அங்கு இடமில்லை என்பதை உணர்ந்து, 'தமிழர்களாகிய நாம் தான் இக் குறைபாடுகட்குக் காரணமே தவிரப் பழமையைச் சொல்லிப் பயனில்லை' என்று சொல்லியதுடன் நிறுத்திக் கொண்டார். ஆனால், புரட்சிக் கவிஞர் இந்த நொண்டிச் சமாதானங்களைச் சொன்னவர்கள் பொய்யர்கள், தாம் செய்கின்ற தவறுகளை மறைப் பதற்காக அவற்றைச் சொல்கிறார்கள்' என்பதை விட்டுவிட்டு, அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தவை யெல்லாம் மெய்போல் நினைத்து அவர்களுடன் அந்தச் சாத்திரங்களையும் சேர்த்துச் சாடத் தொடங்கிவிட்டார். இந்தச் சாத்திரங்களும் இராமாயணம் போன்ற கதைகளும் அவற்றை நம்பு கின்றவர்களும் நாட்டை விட்டு ஒழிந்தால், நன்மை தானே குடிபுகும் என்று நம்பிவிட்டார். இவை யனைத்தும் இல்லாமலுங் கூடத் தவறு செய்கின்ற மனப்பான்மை, பிறரை அடிமைப்படுத்துகின்ற மனப் பான்மை பிறருக்குத் தீங்கு செய்து வாழ்கின்ற மனப் பான்மை மனிதனுக்கு இயல்பாக உள்ளது என்ற முறையில் சிந்திக்காமல் பழமை என்று சொல்லப் பெற்ற எவற்றையுமே சாடி ஒழிக்க வேண்டுமென்ற முறையில் புகுந்து விட்டார் புரட்சிக் கவிஞர்.
இதற்கேற்ப ரஷ்யாவில் தோன்றிய புரட்சியும், இப் புரட்சிக்குத் தலைவனான லெனின் கொள்கை களும் பாரதிதாசன் மனத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கின்றன. புரட்சிக் கவிஞரும் புரட்சி செய்ய வேண்டுமென்று விரும்பினார். லெனினும் புரட்சி செய்தார். எனவே, புரட்சி என்ற அளவில் - அதுவும் சமுதாயத்தைச் சீர்திருத்துகின்ற அளவில் - லெனின் செய்கைகள் பாரதிதாசனுக்குப் பெரிதும் ஈடுபாட்டை நல்கின. இதில் வேடிக்கை என்ன வென்றால், லெனினுடைய புரட்சியில் பாரதியாரும் முதலில் ஈடுபட்டார். என்றாலும், வன்முறையை அடிப்படையாகக் கொண்ட அந்தப் புரட்சி நிலை பெற முடியாது என்பதை இறுதியில் கண்டு, அதனால் புதியதோர் ஆட்சி முறையை மக்களிடையே வன்மை யாகப் புகுத்தலாமே தவிர, அஃது இயல்புடையதாக அமையாது என்ற உண்மையைச் 'செல்வம்' என்ற கட்டுரைகளில் பாரதியார் எழுதியுள்ளார்.
ஆனால், பாரதிதாசனோ வெனில் லெனினுடைய புரட்சியின் அடிப்படையில் உள்ள அரசியல் கோட்பாடு பற்றிக் கவலைப்படாமல் அப்புரட்சியின் ஒரு பகுதி யாகிய சமுதாயப் புரட்சி ஒன்றையே பெரிதும் ஏற்றுக் கொண்டார். அச் சமுதாயப் புரட்சிக்கு மக்களின் பழைய நம்பிக்கைகளைத் தகர்த்தெறிய வேண்டு மென்றே லெனின் விரும்பினார். சமுதாயப் புரட்சி செய்ய விரும்புகின்ற அனைவரும் இதை ஒரு கருவி யாகக் கொள்ளுவர் என்பதில் ஐயமே இல்லை. ரூஸோ, லெனின், இன்றைய சீன நாட்டு மா - சே துங் ஆகிய அனைவரும் மக்களின் நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டுப் புதிய முறையில் சமுதாயத்தை அமைக்க வேண்டுமென்று விரும்பினர். இதற்கு இடையூறாக இருப்பது மக்களுடைய மனத்தில் ஆழப் பதிந்து அவர்கள் குருதியில் கலந்துவிட்ட சமய உணர்ச்சியே என்பதைக் கண்டனர். இந்தச் சமய உணர்ச்சியைப் போக்கினாலொழியத் தம்முடைய புதிய கருத்துகளை மக்கள் மனத்தில் ஊன்ற முடியாது என்று கருதிய லெனின், 'சமயம் மக்களுக்கு அபின் போன்ற தாகும் (Religion is the opium of the people) என்று கூறிச் சென்றார்.
சமுதாயப் புரட்சி செய்ய விரும்பிய பாரதிதாச னுக்கு, லெனினுடைய இந்தச் சொற்கள் தாரக மந்திரமாக அமைந்து விட்டன. எனவே, தமிழ் நாட்டில், தமிழரிடத்தில், தமிழர் வாழ்வில் உள்ள தவறுகளை, குறைகளைப் போக்க வேண்டுமானால் தமிழர்கள் சமய நம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டும் மென்ற முடிவுக்கு வந்தார் புரட்சிக் கவிஞர். இந்த முடிவு சரியா, தவறா என்பது இங்கு ஆராய்ச்சி அன்று. சரியோ தவறோ இந்த முடிவுக்கு ஒருவர் வந்துவிட்ட பிறகு இதனையடுத்து வருகின்ற முடிவுகள் தருக்க முறையில் நியாயமானவை.
சமயம் ஒழிய வேண்டும்; சமயத்தின் ஆணி வேராக இருக்கின்ற நம்பிக்கைகள் ஒழிய வேண்டும்; இந்த நம்பிக்கைகளை வளர்ப்பதற்குரிய சாத்திரம் புராண, இதிகாசப் பகுதிப் பாடல்கள் ஒழிய வேண்டும்; சாத்திர, புராண, இதிகாசங்கள் பெரும் பாலானவை வடமொழியில் இருக்கின்றன. எனவே, வடமொழியும் ஒழிய வேண்டும். வடமொழிக் கலப்பினால் தமிழ் மொழி பாதிக்கப்பட்டது என்ற கருத்துடையவர் ஆதலின் வடமொழியையும் எதிர்த்துச் சாடினார். வடமொழி என்றுமே எந்த நாட்டாராலும் பேசப்படுகின்ற மொழியாக இருந்த தில்லை. என்றாலும், வடமொழியையும் வட நாட்டாரையும் ஆரியம், ஆரியர் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட புரட்சிக் கவிஞர், இந்தச் செல்வாக்கும் நாட்டைவிட்டு ஒழியவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், இவையனைத்தையும் முழுமனத்தோடு கவிஞர் நம்பினார் ஆதலின், சமய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கியங்களைக் கூட வெறுத்து ஒதுக்கினார். சமய இலக்கியம் அவரால் போற்றிப் புகழப்படுபவை தமிழ் மொழியில் இருப்பினும் கூட அவையும் நாட்டிற்கு நலிவு செய்பவையே என்று கருதினார். சமயம் என்று சொல்லக்கூடிய களர் நிலத்தில் நட்ட தமிழ்ப் பெருநூல்கள் எல்லாம் இதுவரைக்கும் பயன் தரவில்லை என்று பாடினார்.
தமிழருக்கு ஊறு செய்பவை என்ற பொது நோக்கில் இதனைப் பாடினாரே தவிர, இவற்றையும் கவிஞர் நன்கு கற்றிருந்திருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை. எனவே, இவை பயனற்றவை என்று ஒரு பாடலில் பாடினாலும் மற்றொரு பாடலில் தேவாரம் திருவாய் நன் மொழியான தேன்' என்றும் பாடுகிறார்.
இதிலிருந்து கவிஞரின் மன நிலையை நாம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. தமிழில் இயற்றப்பட்ட எதுவாக இருப்பினும் - அது சமய இலக்கியமாகக்கூட இருப்பினும் - தமிழாக இருக்கின்ற காரணத்தால் கவிஞர் அதில் ஈடுபட்டிருக்கிறார். அவரையும் அறியாமல் அதனைத் 'தேன்' என்று சொல்லுகின்ற அளவுக்குச் சென்றிருக்கிறார். எனவே, அவருடைய தமிழ்ப்பற்று ஏனையோர் பற்றைப் போல் மேடைப் பற்றாக, சொற்பொழிவுப் பற்றாக பிறரை ஏமாற்றுகிற பற்றாக அமையாமல், உண்மையிலேயே உயிர்ப் பற்றாக இருந்தது என்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது. கம்பன் கவிதை முழுவதும் நாட்டிற்கு ஊறு செய்பவை என்று பாடுகிறார் ஓர் இடத்தில் ; அப்படி நாட்டிற்கு ஊறு செய்கின்ற ஒன்றில் ஒருவர் பல பாடல்களை நீக்கிவிட்டு இவைதாம் கம்பனுடைய பாடல் என்று சொன்னால், நூல் முழுவதுமே வேண்டா வென்று சொல்லுகின்ற கவிஞனுக்கு ஏன் இதில் சினம் பிறக்க வேண்டும்?... இராமன் கதை கவிஞருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், "மேவாது இதனைச் செய்ய இந்தக் கொம்பன் யார் எனக் கேட்க ஆள் இலையா புலவர் கூட்டம் தன்னில்?" என்று பேசும் பொழுது தமிழ்ப் பாடல் அவரை ஆட்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமே இல்லை.
இறுதியாக ஒன்றை நன்கு மனத்தில் இருத்த வேண்டுகிறேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் தெய்வ நம்பிக்கையோ, சமய நம்பிக்கையோ இல்லாதவர் என்று நினைப்பதைவிடப் பெருந் தவறு அவருக்கும், தமிழுக்கும், தமிழருக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் வேறு செய்ய முடியாது. உண்மை யில் அவர் கடவுள் நம்பிக்கை உடையவரே; கடவுள் நம்பிக்கை உடையவர் என்று சொன்னவுடன் ஊரிலுள்ள காளி, மூளி, காட்டேரி, சங்கிலிக் கருப்பன் ஆகிய அனைத்தையும் நம்பி, ஆடு அறுத்து பூசை போடுகிறவர்களோ அல்லது கோயிலுக்குச் சென்று பால் அபிஷேகம் செய்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்கின்றவர்களோதாம் கடவுள் பக்தி உடைய வர்கள் என்று தயவு கூர்ந்து யாரும் நினைத்துவிட வேண்டாம். இவை அனைத்தையும் செய்கின்றவர்கள், ஊர் அறியச் செய்கின்றவர்கள், மாதந்தோறும் விடாமல் செய்கின்றவர்கள் கடவுள் பக்தி என்பதைக் கனவிலும் கருதாத வெளிவேடக்காரர்களாக இருக் கலாம். இதன் எதிராக இப்படி ஒன்றையும் நம்பாத புரட்சிக் கவிஞர் இவையெல்லாம் வெளிவேடம் என்று நம்புகிற கவிஞர், மக்கட் பண்பு இல்லாமல், பிறரிடத்தில் அன்பு இல்லாமல், அவற்றையெல்லாம் செய்கின்றவர்கள் தம்மையும் பிறரையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறார்.
பாரதிதாசன் கண்ட கடவுள் நம்முடைய முன்னோர்கள் சொல்லிய அதே கடவுள் தான். கடவுள் என்ற பெயரிலேயே பாரதிதாசன் கண்ட பொருளும் அடங்கியிருக்கிறது. வாக்கு, மனம், கற்பனை ஆகிய அனைத்தையும் கடந்து நிற்கின்ற காரணத்தால்தானே அப் பொருளுக்குக் கடவுள் என்று நம் பழந்தமிழர் பெயரிட்டார்கள்? எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற பொருளுக்கு ஒரு பெயரும், ஊரும் வடிவமும் உருவமும் தந்து மனைவி என்றும் மக்கள் என்றும் சொல்வது எத்துணை அறியாமையுடையது! இவ்வாறு சொல்வதெல்லாம் அன்பினால் சொல்லப்படுகின்ற உபசார வழக்கேயன்றி வேறில்லை என்ற பேருண்மையைத்தான் மாணிக்கப் பெருமான் ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இலாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்று பாடுகிறார். வாக்கு , மனம், லயம் கடந்த பரம்பொருள்' என்று பேசுகிறார் தாயுமானவர். இத்தகைய ஒரு பரம்பொருளை, அனைத்தையும் கடந்து நிற்கின்ற முழுமுதற் பொருளை, இன்று பலரும் நாத்திகர்' என்று வாய் கூசாமல் சொல்லு கின்ற புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் இதோ பாடுகிறார்:
சீருடைய நாடு - தம்பி
திராவிட
பேருடைய நாடு - தம்பி
பெருந் திராவி டந்தான்
ஓர் கடவுள் உண்டு - தம்பி
உண்மை கண்ட நாட்டில்
பேரும் அதற் கில்லை - தம்பி
பெண்டும் அதற் கில்லை
தேரும் அதற் கில்லை - தம்பி
சேயும் அதற் கில்லை
ஆரும் அதன் மக்கள் - அது
அத்தனைக்கும் வித்து
உள்ளதொரு தெய்வம் - அதற்கு
குருவ மில்லை தம்பி. (கவிதைத் தொகுதி - 3 ஏற்றப் பாட்டு - 55)
மேலும் சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாத அத்தைப் பாட்டிக் கதைகளைச் சொல்லி, 'இவையெல்லாம் நம்புகின்றாயா, இன்றேல் நரகம் சித்திக்கும்" என்று பேசும்போது கவிஞர் சீறுகிறார். இதன் எதிராகக் கடவுள் தத்துவத்தை யாரேனும் பாடினும் அவை தமிழ்ப் பாட்டாக இருப்பின் கவிஞர் தம்மை மறந்து ஈடுபடுகிறார். மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழில் 'தொடுக்கும் கடவுட் பழம் பாடல் தொடையின் பயனே' என்று தொடங்கும் ஓர் அற்புதப் பாடல் உண்டு. அப் பாடலில் நாத்திகர் என்ற பட்டம் சூட்டப்பெற்ற பாவேந்தர் பாரதிதாசனார் ஈடுபடு கிறார், அப் பாடலின் சுவையில், பொருள் ஆழத்தில் தம்மை மறந்த கவிஞர் இதோ பாடுகிறார்:
குமரகுருபரன் பாடல்
கூறிப்பின் பொருளும் கூறி,
அமரரா தியர்வி ருப்பம்
ஆம்படி செய்தான்; மற்றோர்
அமுதப்பாட் டாரம் பித்தான்,
அப்பாட்டுக் கிப்பால் எங்கும்
சமானமொன் றிருந்த தில்லை
சாற்றுவோம் அதனைக் கேட்பீர்
என்று பாடுகிறார். இப்பாடலைக் குமரகுருபரர் பாடியவுடன் இப் பாடலில் ஈடுபட்டு மறுபடியும் ஒரு முறை இப் பாடலைப் பாடுக என்று பணித்தாளாம் குழந்தை வடிவத்தில் வந்த மீனாட்சியம்மை.
என்றந்தப் பாடல் சொன்னான்
குருபரன்! சிறுமி கேட்டு
நன்றுநன் றென இ சைத்தாள்;
நன்றெனத் தலைஅ சைத்தாள்;
இன்னொரு முறையுங் கூற
இரந்தனள், பிறரும் கேட்கப்
பின்னையும் குரு பரன் தான்
தமிழ்க்கனி பிழியுங் காலை,
பாட்டுக்குப் பொருளாய் நின்ற
பராபரச் சிறுமி, நெஞ்சக்
கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து
கொஞ்சினாள் அரங்கு தன்னில் !
ஏட்டினின் றெழுத்தோ டோடி
இதயத்துட் சென்ற தாலே,
கூட்டத்தில் இல்லை வந்த
குழந்தையாம் தொழும் மாட்டி
தமிழையே பிழிந்தெடுத்துச் சாறாக்கித் தந்த இந்தப் பாடலைக் கேட்டவுடன் பிராட்டி மறைந்துவிட்டா ளாம். 'கடவுள் நம்பிக்கை இல்லாதவர்' என்று அறியாமை உடையவர்களால் பட்டம் சூட்டப்பெற்ற பாவேந்தர் இந்த நிகழ்ச்சியை நினைந்து சிந்தித்து அனுபவித்து இதோ பாடுகிறார்:
ஏட்டினின் றெழுத்தோ டோடி இதயத்துச் சென்ற தாலே
கூட்டத்தில் இல்லை வந்த குழந்தையாம் தொழும் சீமாட்டி
கடவுள் நம்பிக்கை இல்லாதவரா 'தொழும் சீமாட்டி என்ற சொல்லைப் போட்டிருப்பார்! இந்தச் சந்தர்ப் பத்தைப் பாடுகின்ற அந்த நேரத்தில் சமயம் என்ற பெயரில் நடைபெறும் சாக்கடைப் பழக்கவழக்கங் களையெல்லாம் மறந்துவிட்டு உண்மைச் சமய நெறியை நம்புகின்ற கவிஞர் தம்மையும் மறந்து தான் 'தொழும் சீமாட்டி' என்ற சொல்லைப் போடுகிறார்.
" அப்படியானால் நூற்றுக் கணக்கான இடங்களில் சமயத்தைத் தாக்குகிறாரே, பழக்கவழக்கங்களைத் தாக்குகிறாரே என்று கேட்கப்படலாம். தாக்குவது உண்மைதான். ஆனால், எதனைத் தாக்குகிறார்? சமயம் என்ற பெயரில் சமயம் என்ற அடிப்படை உணராதவர்கள் பேசுகின்ற பைத்தியக்காரக் கதை களையும் முட்டாள்தனமான நம்பிக்கைகளையும் தாக்குகிறார் என்பது உண்மை. பெரியோர்கள் யார்தாம் இதனைத் தாக்கவில்லை? பழுத்த சமய வாதியாகிய இராமலிங்க வள்ளல்,
கலை உரைத்த கற்பனையே நிலை எனக்கொண் டாடும்
கண்மூடி வழக்க மெலாம் மண்மூடிப் போக
என்று பேசுகிறார். இவரைவிடப் பழுத்த கிழவராகிய நாவுக்கரசப் பெருமான் 'கங்கை ஆடில் என் ? காவிரி ஆடில் என்ன?' என்றும் 'சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?' என்றும் பேசுகிறார். இவர்களெல்லாரும் நாத்திகர்களா? அடிப்படையில் பெரும் நம்பிக்கைக் கொண்டுள்ள பெரியவர்கள் தாம். அந்த அடிப் படையை மூடி மறைத்து அதன் மேல் குப்பைகள் கொட்டப்படும் பொழுது உண்மையில் வருத்தப்படு வார்கள். அடிப்படையை அறியாமல் மேலே கொட்டப்பட்ட குப்பைகளையே மெய் என்று எண்ணி அடிப்படையை ஒதுக்க முற்படுகின்றவர்களைப் பார்த்து ஏசுவார்கள்.
புரட்சிக் கவிஞர் இளமையில் முதன் முதலாகக் கவியரசர் பாரதியாரைச் சந்தித்தபொழுது பாடிய முதற் பாடல் சக்தியை வியந்து பாடியதாகும். முழு முதற் பொருளை, நாம ரூபம் கடந்த பொருளை, ஆற்றலின் வடிவாகக் காண்பதே முந்தையோர் கண்ட முடிவாகும். பிற்காலத்தில் அறிவில் குறைந்த மக்களுக்கு உண்மையை ஓரளவு புலப்படுத்த வேண்டிப் பலப்பல கதைகளின் மூலம் அறிவு கொளுத்தத் தொடங்கினர். கதைகளைக் கேட்ட மக்கள், கதைகளினால் கற்பிக்கப்படுகிற உண்மை களை மறந்து கதைகளையே மெய்யென நம்ப லாயினர். இதனால் வந்த பெருங்கேடு ஒன்றுண்டு அக் கோட்டைப் போக்குவதற்காகவே சமயாசாரி களும், ஆழ்வார்களும் கதைகளைக் கூறும் பொழுது அவற்றின் உட்பொருளையும் உடன் சேர்த்துக் கூறிப் போயினர். எனவே, முழு முதற்பொருள் ஆற்றல் வடிவானது என்ற பழைய கருத்தை , நாம ரூபம் கடந்தது என்ற பழைய கருத்தைப் பாவேந்தர் பாரதிதாசனார். தமது முதற்பாடலில் பாரதியின் எதிரே பாடிக் காட்டினார். பாடல் வருமாறு :
எங்கெங்குக் காணினும் சக்தியடா - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின்கைப் பந்தென ஓடுமடா - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா.
காளை ஒருவன் கவிச் சுவையைக் - கரை
காண நினைத்த முழுநினைப்பில் -- அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வைய முழுதும் துண்டு செய்வேன் - என
நீள இடையின்றி நீ நினைத்தால் - அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!
இப்பாடலின் கருத்து ஆழத்தைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், பாரதிதாசன் என்ற இளங் கவிஞரின் அகமனம் எந்த முறையில் பயின்று, பண்பட்டு இருக்கிறது என்பதை ஒருவாறு அறிய முடியும். இளமையில் இப்படிப் பண்பட்ட ஓர் அகமனம் வேறு எக் காரணம் கொண்டும் இதனை எதிர்த்து வேறு முறையில் பாட இயலாது என்பதைக் காட்டுவதற்காகவே 'ஏற்றப்பாட்டின் பகுதியையும் 'எதிர்பாராத முத்தத்தில் வரும் குமரகுருபரரைப் போற்றிப் பாடிய பகுதியையும் காட்டினோம். எனவே, கவியரசர் தொடக்கத்திலிருந்து இறுதி வரையில் தூய்மையானதும், ஆழமானதும், பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியாததும் ஆகிய கடவுட் பற்றுக் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். புரட்சிக் கவிஞரை 'நாத்திகர்' என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்ற வாதத்திற்கு இந்த அளவுடன் ஒருவாறாக ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, இனி அவருடைய கவிதைகளில் புகுந்து மன நிலையைக் காண முற்படலாம்.
கவிதைத் தொகுதி - 1
புரட்சிக் கவிஞரின் தனிக்கவிதைகள் மூன்று தொகுப்புக்களாக வெளியிடப் பெற்றுள்ளன. இவற்றுள் முதல் தொகுப்பில் காவியம், இயற்கை காதல், தமிழ், பெண்ணுலகு முதலிய பல தலைப்பு களில் தனித் தனியாகக் கவிதைகள் தொகுக்கப் பெற்றுத் தரப் பெற்றுள்ளன. காவியம் என்ற பெயரில் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்', 'புரட்சிக் கவி', 'வீரத் தாய்' என்பன இடம் பெற்றிருப்பினும் இவையும் சிறுகதைகளைக் கவிதையாகப் புனைந்த முறையேயாகும். என்றாலும், ஒரு காவிய அடிப்படை யில் வர்ணனைகள் இடம் பெறுகின்றன. சிறுகதையில் ஒரே ஒரு நிகழ்ச்சியும் அதற்குரிய உணர்ச்சியும் இடம் பெறும். இவருடைய மேலே கூறிய மூன்று பகுதி களிலும் பல உணர்ச்சிகள், பல நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. முதலில் உள்ள 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்' கதைக் கட்டுக்கோப்பு இல்லாத ஒரு பகுதி, யாகும். இன்பச் சுவை மிகுந்து காணப்படும் இப் பகுதியில் உள்நோக்கம் கருதிச் சொல்லப்படும் கதை. களில் வரும் உள்நோக்கை மறந்து, கதையையே மெய் என்று நம்புகின்ற மக்களின் அறியாமை எள்ளி நகை யாடப்பெறுகிறது. கவிஞரின் மிக இளமைக் காலத்தி லேயே எழுதப்பெற்ற இந் நூலில் பெண் விடுதலை பேசப்படுகிறது.
பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ;
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண் இனத்தை;
பெண் அடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
மண் அடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.
இப் பகுதியில் பெண் அடிமை செய்கின்ற தமிழ் நாட்டைக் கண்டு கவிஞர் எந்த அளவு சீற்றம் கொள்கிறார் என்பதை அறிய முடிகிறது.
மேலும், இத்தாலிக்காரனும், அமெரிக்கனும், ஆங்கிலேயனும் நம் நாட்டைப்பற்றி என்ன நினைக் கின்றார்கள் என்பதையும் கவிஞர் குறிக்கிறார். சிறப்பாக ஆங்கிலேயன் பேசுவதாகக் கூறுவது. அற்றை நாளில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள் இந்தியர் களைப்பற்றிக் கூறியன யாவை எனக் கூறும்.
சாதிப் பிரிவு, சமயப் பிரிவுகளும்
நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்
மூடப் பழக்க வழக்கங்கள் எல்லாம்
முயற்சி செய்தே ஓடச் செய்தால்...
நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் என்று பேசும் பொழுது இந்நாட்டின் சமுதாயக் குறைகள் 1936 - ஆம் ஆண்டிலேயே கவிஞனை எங்ஙனம் விழிப்பு அடையச் செய்தன என்பதை அறிய முடிகிறது. இது தவிர இனிய ஓசையும் சிறந்த உவமை நயங்களும் நிறைந்து நிற்பது சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.'
பிற்காலத்தில் வடமொழியில் தோன்றிய எதனை யும் சினந்து சாடுகின்ற கவிஞர் அற்றை நாளில் வடமொழியிலுள்ள 'பில் கணீயம்' என்ற சிற்றிலக் கியத்தைக் கற்று அதன் மாட்டு அன்பு கொள் கிறார். நம் நாட்டிலுள்ள 'அம்பிகாபதி' கதை போலவே வட நாட்டில் வழங்குகின்ற கதை. 'பில் கணீயம்'. இப்பகுதியைப் புரட்சிக்கவி' என்ற தலைப்பில் பாடவந்த கவிஞர் வளமையான அகவற்பா முறையையும் பஃறொடை வெண்பா முறையையும் அதனை அடுத்துத் தோன்றிய விருத்தப்பா முறையையும் மிகச் சமீப காலத்தில் தோன்றிய நொண்டிச்சிந்து, கும்மிப்பாட்டு வகையை யும் பயன்படுத்தித் தம் கவிதைத் திறத்தை எந்தெந்தத் துறைகளில் காட்ட முடியும் என்பதை நிறுவியுள்ளார். இதிலுள்ள தனிச்சிறப்பு யாதெனில் அகவற்பா, பஃறொடை வெண்பா என்ற வகைப் பாடல்களிலும் கூட மிக எளிய சொற்களை வைத்து இப் பழைய பாவின் முறைகளைக் கையாள்கிறார். அகவல் என்பது கவிஞன் விருப்பம் போல் விரிந்து கொடுக்காத பா முறையாயினும் ஓசையால் சிறப்புப் பெற்று விளங்குவதாகும். இதனை நன்கு கையாண் டுள்ள புரட்சிக் கவிஞர் பழமை பாராட்டும் பண்பை யும் காட்டுகிறார். இலக்கண அறிவு இல்லாமலே கவிதை புனைய முடியும் என்று இக் காலத்தில் பேசுபவர்களை எள்ளி நகையாடுபவர் போல்,
என் மகள் அகத்தில் எழுந்த கவிதையைப்
புறத்தில் பிறர்க்குப் புலப்படுத்துதற்குச்
செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்
இந்த இரண்டு அடிகளில் கவிஞர் ஒரு பேருண்மை யைத் தெரிவிக்கின்றார். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகளை வெளியிடுவது தான் கவிதை எனினும் அவ் வெளியீட்டைச் சொற்களின் மூலமே செய் கின்றோம். சொல்லைப் பயன்படுத்தி உள்ளத்து உணர்வை வெளியிட வேண்டுமானால், அதற்குச் சில வரம்புகள் வேண்டும். கவிதைக்கு இலக்கணம் ஆகிய வரம்பு இல்லையானால், அது மரபு பிறழ்ந்துவிடும். மரபு பிறழ்ந்தால், தவறு என்ன என்று கேட்பவர் களை நோக்கி, மரபு பிறழ்ந்தால் பிறர் உங்களுடைய கருத்தை அறிந்து கொள்ள முடியாது என்று ஒரே வரியில் விடை கூறிவிடலாம். அரசனுடைய மகள் மனத்தில் கவிதை உணர்ச்சி வடிவாக இலங்குகிறது என்ற உண்மையையும், அந்த உணர்ச்சியை வெளியிட புறத்தில் பிறருக்குப் புலப்படுவதற்கு) மரபோடு கூடிய இலக்கண அறிவு வேண்டுமென்ற உண்மையை யும் அறிவிக்கின்றார்.
இயற்கையில் என்றும் நடைபெறும் நிகழ்ச்சிகளை நாமும் காண்கிறோம்; கவிஞனும் காண்கிறான். கதிரவன், இளமதி முதலியவற்றின் தோற்றம் நாம் அன்றாடம் காண்கின்ற காட்சிதான். என்றாலும், விடியற்கால நேரத்தில் கடல் முகட்டில் புறப்படுகின்ற கதிரவன் தன்னுடைய நெருப்புத் தன்மை தணிவதற் காகக் கடலில் குளித்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சந்திரன் என்ற வடிவில் புறப்படுகிறான் என்று நம்மில் யாரேனும் சிந்தித்தது உண்டா? மேலும், உலகில் உள்ள அழகையெல்லாம் ஒன்று திரட்டி அதற்கு ஒரு குளிர்ச்சியையும் தந்து ஆகாயத்தில் விட்டதே முழு நிலவாகும் என்று நம்மில் யாரேனும் நினைத்தது உண்டா? நம் மனத்தில் தோன்றாத இத்தகைய எண்ணங்கள் கவிஞனுடைய மனத்தில் தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றும் பொழுது அவற்றைக் கற்பனை என்று சொல்கிறாம். பாவேந்தரின் கற்பனைத் திறத்திற்கு, அதுவும் அவருடைய இளமைக் காலக் கற்பனைத் திறத்திற்குப் 'புரட்சிக்கவி' என்ற பகுதியில் வரும் இவ்விரண்டு பாடல்களும் நல்ல எடுத்துக்காட்டாகும் :
நீலவான் ஆடைக்குள் உடல் ம றைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தைக்
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இல்வுலகம் சாமோ வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்
சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ?
அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன்;
அவ்வாறே வான் கண்டேன்; திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள் தான் சிரித்த துண்டோ ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான் ?
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றே இயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ?
எந்தக் கவிஞனும் அந்தப் பெயருக்குத் தகுதி யுடையவனாக - அவன் இருத்தல் வேண்டுமெனில், அச்சத்தைப் போக்கி, சிறந்த மனத்திடம் கொண்டவனாக இருத்தல் வேண்டும். தீமையைக் கண்டு அஞ்சுபவன் நம் போன்ற சராசரி மனிதன். தீமை யைக் கண்டு அஞ்சினாலும் அதனைப் போக்க வேண்டு மென்று நினைப்பவன் நம்மைவிட ஒரு படி மேம் பட்டவன். ஆனால், அதனைக் கண்டு அதன் கொடுமையை உணர்ந்து, அதனை எதிர்த்து நின்று, பொருத்து அழிக்க வேண்டுமென்ற நெஞ்சுரத்தோடு போராடுபவன் கலைஞன். இத்தகைய கொடுமை களை எதிர்த்துப் போராடும் பொழுது பெரியோர்கள் எத்துணைத் துன்பம் வந்தாலும் எதிர்த்துப் போராடு வார்கள், அஞ்சமாட்டார்கள் என்ற பேருண்மையைக் கவிஞர் இதோ பேசுகிறார்:
நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால்
நிறைதொழி லாளர்க ளுணர்வு மறைந்து போமோ?
பாவேந்தரின் ஓசை நயம் எவ்வளவு சிறப்பு உடையதோ அவ்வளவு சிறப்புடையன அவருடைய உவமைகளும் உருவகங்களும். சங்க இலக்கியத்தில் ஆழ்ந்து பயின்றுள்ள பாவேந்தர் தொட்ட இடமெல் லாம் சங்கப் பாடல்களின் கருத்துக்களையும் உவமம் உருவகங்களையும் கையாள்கின்றார். தன்னை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற தலைவன் மழைக் காலத்தில் இருட்டில் நடந்து செல்கிறான். எனவே, அவனுடைய பாதங்கள் நோகுமே என்று வருந்துகின்ற தன் மனத்தைத் தலைவி ஒருத்தி உருவகப்படுத்தி, 'தோழி! என்னுடைய மனம் என்னிடம் இல்லை. தலைவனுடைய திருவடிகளைத் தாங்கிக்கொண்டு அவனுடைய கால் செருப்புப்போல் அவன் பின்னேயே சென்று விட்டது' என்று பேசுகிறாள். அகநானூற்றில் (128) வரும்,
மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே
கொன்றோர் அன்ன கொடுமையோ டின்றே
யாமங் கொளவரின் கனை இக் காமங்
கடலினும் உரை இக் கரைபொழி யும்மே
எவன்கொல் வாழி தோழி மயங்கி
இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்கு
இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
கான நாடன் வரும் யானைக்
கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி
மாரி வானந் தலைஇ நீர்வார்பு
இட்டருங் கண்ண படுகுழி இயலின்
இருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே
என்ற உருவகம் கவிஞர் வாக்கில்,
ஆதரவு காட்டாமல் ஐயா எனைவிடுத்தால்
பாதரட்சை போலும் உன்றன் பாதம் தொடர்வதன்
வேறு கதி அறியேன்
என்று உருப்பெறுகிறது.
அதே பாடலின் மற்றொரு பகுதியில் நாம் பேசும் உவமையை அதன் குறை அறிந்து மாற்று கிறார். சாதாரணமாக உலக இயலில் 'ஆயிரம் தேள் கொட்டியது போல என்று சொல்லுவார்கள். இவ் உவமையில் உள்ள ஒரு சிறு குறை: ஆயிரம் தேளும் கொட்டிய பிறகு ஓடி விடுமேயானால், அதனால் பெறப்போகும் துயரத்திற்கு ஓர் எல்லை யுண்டு. கொட்டியவுடன் தோன்றும் கடுப்புத் தீர்ந்தவுடன் விடுதலை கிடைக்கும். ஆனால், அவை கொட்டிக்கொண்டே இருப்பின் அதன் நிலையே வேறு. இக் குறைபாட்டை அறிந்த கவிஞர் இவ் உவமையை மாற்றி, 'ஆயிரம் தேள் மண்டையிலே மாட்டியது போல' என்று பாடுகிறார். 'மாட்டியது " என்று கூறிவிட்ட காரணத்தால் கொட்டிவிட்டுத் தேள்கள் போகவில்லை; அதே இடத்தில் இருந்து கொண்டு மறுபடியும் மறுபடியும் கொட்டிக் கொண்டே யிருக்கின்றன என்று சிறப்புபடப் பாடிச் செல்கிறார்.
புரட்சிக் கவிஞரின் பிற பகுதியிலே வருகின்ற பாடல்கள் உண்மையிலேயே பெரும் புரட்சியை அறிவிக்கின்ற பாடல்களாகும். அரசர்களாக இருப்பவர்கள் குடிமக்களை மக்கள் என்று கருதாமல் அல்லறுத்துகின்ற அவல நிலையைக் கவிதை மூலம் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.
'காதற் குற்றவாளிகள் என்ற பகுதியில், கண்ணொடு கண்ணினை நோக்கச் செய்த கிழட்டு வள்ளுவனாரின் ஓவியத்தைப் புரட்சிக் கவிஞரும் புது மெருகிட்டுக் காட்டுகிறார்.
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில.
யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்.
இவ்விரண்டு குறள்களும் கவிஞரின் வாக்கில் புதுமை யுடன் வெளியிடப்படுகின்றன.
பாடம் படித்து நிமிர்ந்த விழி - தனிற்
பட்டுத் தெறித்தது மானின் விழி
ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்றான்.
'எந்நாளோ' என்ற பகுதியில் தமிழும் தமிழ் நாடும் இருக்கின்ற அவல நிலை நீங்கி வீறு பெற்று எழுகின்ற நாள் எந்நாளோ என்ற இனிய கருத்துப் பேசப்படுகிறது.
வெள்ளம் போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம் ; அன்னார்
உள்ளத்தால் ஒருவரேமற் றுடலினால்
பலராய்க் காண்பார்
கள்ளத்தால் நெருங்கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாள் ? உள்ளம்
சொக்கும் நாள் எந்த நாளோ?
தறுக்கினார் பிரதேசத்தார்
தமிழன் பால் - எந்த நாட் டான் பால்
வெறுப்புறும் குற்றம் செய்தா
ராதலால் விரைந்தன் னாரை
நொறுக்கினார் முதுகெலும்பைத்
தமிழர்கள் என்ற சேதி
குறித்த சொல் கேட்டின் பத்திற்
குதிக்கும் நாள் எந்த நாளோ?
'புதிய உலகம்' என்ற பகுதியில் உள்ள 32 பாடல். களும் கவிஞரின் மன வளர்ச்சிக்கு நல்ல எடுத்துக் காட்டாகும். தொழிலாளர் பற்றிய பல பாடல்கள், மானிட சக்தி முதலியவை சமூகத்தில் தோன்றிய தொழிலாளர் விழிப்புக்குக் காணிக்கையாகும்.
கவிஞர் காலத்துக் கண்ட தமிழ்த் திரைப்படக் கலையைப் பற்றிப் பாடிய பாடல்கள் ஒருவேளை நேற்றுத்தான் பாடினாரோ என்று நினைக்கும் படி தமிழ்த் திரைப்பட உலகம் இன்றும் அதே நிலையில் இருப்பது கவிஞரின் தீர்க்கதரிசனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
கவிதைத் தொகுதி - 2
கவிஞரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பில் தம் ஆசானாகிய பாரதியைப்பற்றிப் புரட்சிக் கவிஞர் ஏழு பாடல்களில் அவர் பால் தாம் கொண்ட ஆர்வத்தையும் மதிப்பையும் வெளியிடுகிறார். பாரதியைப்பற்றிச் சொல்லவந்த கவிஞர் 'புது நெறி: காட்டிய புலவன்' என்ற தலைப்பில்,
உய்வகை காட்டும் உயர்தமி ழுக்குப்
புதுநெறி காட்டிய புலவன் பாரதி...
என்று பாடிவிட்டுக் கவியரசர் பாரதியார் தமிழ் நாட்டில் தோன்றிய காலம் மிகப் பொருத்தமானது என்று பேசுகிறார். மேலும்,
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில் தமிழகம்
தமிழ்க்குத் தகும் உயர்வு அளிக்கும்
தலைவனை எண்ணித் தவம்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ! அவன் ஒரு
செந்தமிழ்த் தேனீ ! சிந்துக்குத் தந்தை
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன்; புதிய
அறம் பாட வந்த அறிஞன்; நாட்டில்
படரும் சாதிப் படைக்கு மருந்து;
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பு அவன்
என்றும்,
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறு என்பதை எடுத்து உரைக்கிறேன்
என்றும் தம் ஆசானுக்குப் புகழ் மாலை சூட்டுகிறார் கவிஞர்.
இவையல்லாமல் பாரதியின் பாடல்கள் பலவற்றைத் தனித்தனியே எடுத்துப் பாராட்டுகிறார். அடுத்துள்ள 'தேன் கவிகள் தேவை' என்ற தலைப்பில் பாவேந்தரும் பாரதியும் கூடியிருந்து இன்பம் அனுபவித்த பழைய அனுபவங்களைப்
பன்னத் தகுவதுண்டோ நாங்கள் பெறும் பாக்கியத்தை?
வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்கள் எல்லாம்
போய் அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்
தாம்பூலம் தின்பார் தமிழ் ஒன்று சிந்திடுவார்
என்று படிக்கும் பொழுது நாலடியார்ப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
இகலிலர் எஃகறிவுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்து
உம்பர் உறைவார் பதி.
இக் கருத்தேதான் புரட்சிக் கவிஞரால் போற்றிப் பேசப்பெற்றது.
'பாரதி உள்ளம்' என்ற பகுதியில் கவிச் சக்கரவர்த்தி பாரதியாரின் மனத்தின் அடிப்படையில் இருந்த இரண்டு பெருங் கருத்துக்களை அவருடன் நெருங்கிப் பழகிய பாவேந்தர் பாரதிதாசனார் இதோ பேசுகிறார்:
சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்த ல்மற் றொன்று "
பாதியை நாடு மறந்தால் - மற்றப்
பாதி துலங்குவ தில்லை
என்று பாரதி தம்மிடம் பேசியதாகத் தெரிவிக்கிறார். 'அந்த இன்ப உரைகள் என்றும் என் காதில் மறைந்தோடவில்லை; நான் இன்றும் இருப்பதி னாலே' என்று பேசும் பாவேந்தர், பாரதி இதனை வெறும் வாய்ப்பறையாகச் சொல்லவில்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்காக மூன்றாவது பாடலில் அரிஜனங்கள் என்று சொல்லப்படுபவர்கள் சமைத்த உணவை நான்கு தெருக்கள் கூடும் நாற்சந்தியில் அனைவரும் தம்மைக் காணுமாறு உண்டார் என்று பேசுகிறார்.
தம்முடைய ஆசானாகிய பாரதி பாண்டிச் சேரியிலோ தமிழ் நாட்டிலோ உள்ளவர்கள் மட்டும் அறிந்து அனுபவிக்க வேண்டிய கவிஞர் அல்லர் என்ற கருத்தை 'மகாகவி' என்ற தலைப்பில் இதோ பேசுகிறார்:
பாரதியார் உலககவி அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்
ஓர் ஊருக்கு ஒரு நாட்டுக்கு உரியதான
ஒற்றைச்சாண் நினைப்புடையர் அல்லர் மற்றும்
வீரர் அவர்
என்று கூறிவிட்டு, இதனையடுத்து அமரகவியின் உள்ளத்தை விரிவுற எடுத்துக்காட்டி உணர்ச்சிப் பிழம்பான அவருடைய பாடல்கள் பிற மொழியில் மொழி பெயர்க்க முடியாத பேராற்றல் வாய்ந்தவை என்ற கருத்தைத்
தராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த
தமிழ்ப் பாட்டை மொழி பெயர்த்தால் தெரியும் சோதி
என்றும்,
ஞானரதம் போல் ஒரு நூல் எழுது தற்கு
நானிலத்தில் ஆளில்லை. கண்ணன் பாட்டுப்
போல் நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே
புதிய நெறிப் பாஞ்சாலி சபதம் போலே
தேன் இனிப்பில் தருபவர் யார்?
என்று பாடி வியக்கின்றார் கவியரசர் பாடலைப் பாவேந்தர் பாரதிதாசனார்.
கவிஞருடைய உள்ளத்தைக் கவர்ந்ததான சாதி ஒழிப்புப் பணியில் உயர் குலம் என்று சொல்லப் படுகின்ற குலத்தில் பிறந்த பாரதியார் முழுமூச்சாக இறங்கிச் சாதி ஒழிப்புப் பற்றிப் பாடியதோடு மட்டு மல்லாமல் செயலிலும் அதனைச் செய்து காட்டினார் என்பதை நினைக்கும் பொழுது பாவேந்தரின் உள்ளம் பரவசம் அடைகிறது.
தேசத்தார் நல்லுணர்வு பெறும் பொருட்டுச்
சேரியிலே நாள் முழுவதும் தங்கி உண்டார்
காசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கி அதைக் கனிவாய் உண்டார்
என்று பேசும் பொழுது பாரதியார் தம் கொள்கை யைக் கவிதையாக மட்டும் வடித்துக் கொடுக்காமல் வாழ்விலேயும் கொண்டு செலுத்திய மாபெரும் சிறப்பைப் பாவேந்தர் பாடிப் பரவசம் அடைகிறார்.
இவ்விரண்டாம் தொகுதியில் 'இசைபெறு திருக் குறள்' என்ற தலைப்பில் வள்ளுவர் தம் வாய்மொழி தமிழ்நாட்டிற்கே உரிய தனிச் சொத்து என்றும் அதன் உள்ளீட்டை உணராத உரையாசிரியர்கள் தவறாகப் பொருள் செய்துவிட்டார்கள் என்றும் சாடுகிறார். 'திராவிடன்' என்ற தலைப்பில் உள்ள பல பாடல்கள் ஒரு கவிஞருக்குத் தகுதியில்லாத சொற்களால் வரம்பு கடந்து கடவுளரையும் பிறரையும் ஏசுகின்ற அளவிற்குச் செல்கின்றன. 'கடவுள் வெறி, சமய வெறி, கன்னல் நிகர் தமிழுக்கு நோய் நோய் நோயே'. இதுவும் பாவேந்தர் வாக்கு! இங்ஙனம் பேசுகிறார் என்பதால் எதிலும் அளவு கடந்து விடாமல் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்ற ஆற்றலைக் கவிஞர் இத் தொடரில் போற்றுகிறாரே. அதனைத் தாம் பெற்றாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ்ப் பற்றுக் கொள்வது. என்பது வேறு: தேவையில்லாத முறையில் சமயம் பற்றிய இலக்கியம் என்பவற்றை வசை பாடுதல் வேறு. கவிஞரின் தமிழ்ப் பற்று, தமிழ் வெறியாக மாறி ஒரோவழி முன்னுக்குப்பின் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவிக்கவும் பேசவும் வாய்ப்பு அளித்துவிடுகிறது. 'பிரிவுப்பத்து' என்ற தலைப்பி லுள்ள பாடலைச் சற்றுக் காண்போம்.
கேரளம் என்று பிரிப்பதுவும் - நாம்
கேடுற, ஆந்திரம் பிய்ப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தழித்திடச்
செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக்
கொய்திட வேண்டும் அண்ணே.
இங்ஙனம் பாடிய அதே கவிஞர் 'படத் தொழில் பயன்' என்ற பகுதியில் இவ்வாறு பாடுகிறார்:
செந்தமிழ் நாட்டில் தெலுங்குப் படங்கள்
தெலுங்கருக் கிங்கு நடிப்பெதற் காக?
வந்திடு கேரளர் வாத்திமை பெற்றார்
வளர்ந்திடு மோகலை அண்ணே? - இங்கு
மாயும் படக்கலை அண்ணே.
இதேபோல் தெலுங்கு, மலையாளம் ஆகிய இரண்டை யும் அவை வந்து தமிழ்நாட்டில் புகுந்ததையும் சாடு கின்ற இடங்கள் பல உண்டு. இவற்றை எடுத்துக் காட்டுவதால் கவிஞர் பேரில் குறை காண்பதாக யாரும் நினைய வேண்டாம். முன்னர்க் குறிப்பிடப்பட்ட குழந்தை உள்ளம் படைத்த கவிஞர் அந்தந்த நேரத்தில் என்னென்ன உணர்ச்சியில் ஈடுபட்டாரோ அந்தந்த உணர்ச்சியை அப்படியே பாடுகின்ற இயல்பு வாய்ந்தவர் என்பதை அறிவுறுத்தவே இதனை எடுத்துக் காட்டுகிறோம்.
கவிதைத் தொகுதி - 3
மூன்றாவது கவிதைத் தொகுப்பில் கடல் மேல் குமிழிகள்', 'அமிழ்து எது?' என்ற இரண்டு பகுதிகள் பெரியனவாக அமைந்துள்ளன. 'கடல் மேல் குமிழிகள்' என்ற காப்பியத் துணுக்கு அவருக்கு மிகவும் பிடித்த மான சாதி, சமய வேற்றுமைகளால் விளைந்த தீமையை உணர்த்துவதே யாகும். இப்பாடலில் அவருடைய ஆசானாகிய பாரதியைப் பின்பற்றி ஆளப்பிறந்த சமுதாயம் ஆளப்படுகின்ற சமுதாயம் என்ற இரண்டினிடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டி இறுதியாகத் திறல் நாட்டில் குடியரசை அமைக்கிறார் கவிஞர். கவிஞர் அமைக் கின்ற அந்தக் குடியரசு நாட்டில்,
ஒரு கடவுள் உண்டு என்போம்
உரு வணக்கம் ஓப்போம்
என்று பேசுகின்றார். பார்ப்பனரும் கையில் செங்கோல் ஏந்தும் பிறரும் மக்களைச் சார்ந்தோரே என்று பாடும் பொழுது பழைய வெறியோடு கூடிய கற்பனை இல்லாமல் அமைதியடைந்த மனநிலையில் என்ன செய்ய வேண்டுமென்று சிந்தித்து இருப்ப வற்றையெல்லாம் எழுதிக் காட்ட வேண்டுமென்று நினைக்காமல் இருப்பவற்றை எங்ஙனம் செம்மை செய்து பண்படுத்திப் பயன் அடைய வேண்டுமென்ற மனநிலை நன்கு காட்சி அளிக்கிறது. அடுத்து அமிழ்து எது?' என்ற பாடலில் வள்ளுவன் மறையை அமிழ்து என்று கூறிய காரணம் விரிவாக ஆராயப்படும் கிறது. இவை இரண்டும் அல்லாமல் திராவிடர் திருப்பாடல்', 'சமத்துவப் பாட்டு' முதலியவையும் இடம் பெறுகின்றன.
குடும்ப விளக்கு
இப் பெருந்தொகுதிகளை அடுத்துக் குடும்ப விளக்கு' என்ற ஒரு நூலும், கவிஞர் படைப்புக்களுள் தலைசிறந்து நிற்கிறது. குடும்ப விளக்கு' நூல் ஐந்து பகுதிகளாகப் பல்வேறு காலங்களில் ஆக்கப் பெற்றதாக அறிகிறோம். பெருமக்களையும் வீரதீரச் செயல்களையும் வைத்துக் கவிதை பாடினால் தான் மக்கள் ஆர்வத்துடன் படிப்பார்கள் என்று பழைய நம்பிக்கையைப் புரட்சிக் கவிஞர் குடும்ப விளக்கு இயற்றியதால் தகர்த்தெறிந்திருக்கிறார். சாதாரண மளிகைக்கடைக்காரன் ஒருவனுடைய அன்றாட வாழ்வை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது, குடும்ப விளக்கு'. செயற்கரிய செயல்களோ, நம்ப முடியாதவையோ, வியப்பை விளைவிக்கின்றவையோ ஆகிய எந்த ஒரு நிகழ்ச்சியும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதனுடைய சுவையற்ற வாழ்க்கையை எடுத்துக்கொண்டு சுவை மிகுந்த காப்பியத் துணுக்காக ஆக்க முற்பட்டு, அந்த முயற்சியில் மாபெரும் வெற்றியையும் அடைந்தார் என்று சொன்னால் அதைவிடச் சிறந்த ஒரு புகழ்மாலை கவிஞருக்கு யாரும் தர இயலாது.
இத்தகைய ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு பாடவே ஏனையோர் அஞ்சியிருப்பர். அப்படியே பாடியிருப்பினும் அது நின்று நிலவும் ஆற்றலைப் பெற்றிராது. ஒரு கவிதை சிறப்படையக் கவிதையால் குறிக்கப்பெற்ற பொருளும் அப் பொருளைப் பாடும் கவிதையும் சிறப்பு உடையன் வாக இருத்தல் வேண்டும். இவை ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை; அங்ஙனம் அல்லாமல் உள்ளீடே இல்லாத ஒன்றை எடுத்துக்கொண்டு கவிதை புனைய முற்படுவது மாபெரும் துணிச்சல் தான். அதுவும் ஒன்று இரண்டு துண்டுப் பாடல்களா. யினும் சரியே. அவ்வாறு இல்லாமல் நீண்ட நெடுங் கதையாக அதனைச் செய்ய முற்படுவது புரட்சிக் கவிஞரின் புரட்சி மனப்பான்மைக்கும் அவருடைய பேராற்றலுக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாகும். அம்முயற்சியின் பயனே 'குடும்ப விளக்கு' என்ற நூல்.
'குடும்ப விளக்கு' என்ற நூல் தோன்றுவதற்குப் பல்லாண்டுகள் முன்பே இதன் கரு கவிஞர் உள்ளத்தில் தோன்றியிருக்கவேண்டுமென்று நினைக்க வேண்டி யிருக்கிறது. 1936-ல் தகுந்த குடும்பம் சர்வகலா சாலை' என்ற தலைப்பில் 34 கண்ணிகள் பாடியிருக்கிறார். அதில்,
பிள்ளைகளைக் கூட்டிப்போய்ப் பீடத்திலே யமைத்துப்
பள்ளிக்கு வேண்டிய நற் பாடங்கள் சொல்லிவிட்டு
நல்ல கதையுரைத்து ஞாலப் புதுமைகளைச்
சொல்லி மகிழ்வித்தாள் தாயன்பு நாதன் முதல்
எல்லாரும் இன்ப உணவுண்டார் மக்களெலாம்
கல்விச் சாலை செல்லக் கட்டும் உடைப் பொத்ததெல்லாம்
இல்லக் கிழத்தி எழில் தையற் காரியாய்த்
தைத்துடுத்தி விட்டாள் தனது கணவனிடம்
அத்தினத்தில் ஆன பல ஆலோ சனை பேசி
என்ற வரிகள் இடம்பெறுகின்றன. இக் கருத்தே 'குடும்ப விளக்கில்' விரிக்கப் பெறுகிறது. இவ்வழகிய நூல் தோன்றுவதற்கே கவிஞரின் அருமை மகள் திருமதி சரஸ்வதி அம்மையார்தான் காரணம் என்று நூலின் முன்னுரை பேசுகிறது. முதற் பகுதியில் நல்ல குடும்பத்தின் 'ஒரு நாள் நிகழ்ச்சி' பேசப்படுகிறது. இப் பகுதி எழுதப்பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாம் பகுதியும், அதனை அடுத்துச் சில காலங் கழித்து மூன்றாம் பகுதியும் எழுதப்பெற்றதாக அறிகிறோம். இறுதியாக உள்ள ஐந்தாம் பகுதி 'முதியோர் காதல்' என்ற தலைப்பில் கடைசியாக எழுதப்பெற்றது. இவ்வைந்து
மறது. இவ்வைந்து பகுதிகளையும் ஒருசேரப் படிக்கிறவர்கள் ஒன்றை உணராமல் போக முடியாது. முதற் பகுதியாகிய 'ஒரு நாள் நிகழ்ச்சி' பிறர் தூண்டுதல் இல்லாமல் கவிஞர் உள்ளத்தில் நிறைந்த கற்பனையின் வெளியீடாகும். ஏனைய பகுதிகள் பிறருடைய வேண்டுகோளுக்கு இணங்கிச் செய்யப்பெற்றவை என்பதை அறியமுடிகிறது. முதற் பகுதியிலுள்ள கற்பனை ஓட்டம், சொல்லாட்சி, ஓசை நயம். உவமை நயம் முதலியவை பிற பகுதி களில் தொய்வடைந்து விடுகின்றன. இவ்வாறு கூறுவதால் பிற பகுதி சிறப்புடையன அல்லவோ என்று நினைக்கவேண்டாம். இரண்டையும் ஒப்பு நோக்கும் பொழுது - ஒன்றையொன்று தரத்தால் எஞ்சி நிற்கும் அளவை நோக்கும்போது - முதற்பகுதி பிற பகுதிகளைவிடத் தரத்தால் பல மடங்கு உயர்ந்து நிற்கக் காண்கின்றோம்.
ஒரு புலவன் பல காலம் கவிதைகள் இயற்று வானேயானால் முதன் முதலில் அவன் இயற்றிய கவிதைகளுக்கும் பிற்காலத்தில் இயற்றிய கவிதை களுக்கும் உள்ள வேறுபாட்டைத் திறனாய்வாளர் ஓரளவு அறிய முடியும். 'செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் கவிஞன் மேன்மேலும் பாடப்பாட அதில் புது மெருகு ஏறிப் பலமுறை சுட்டெரித்த பொன்னைப்போல் விளங்குதல் இயல்பு. இதை விளங்கிக் கொள்ள வேண்டுமேயானால் கம்ப நாடனுடைய பால காண்டத்தையும் யுத்த காண்டத் தையும் பார்ப்பதே போதுமானது. கம்பனுடைய வளர்ச்சி பால காண்டத்தில் தொடங்கிச் சுந்தர காண்டத்தில் முற்றுப் பெறுகிறது. அதன் பின்னர் உள்ள யுத்த காண்டத்தில் அந்த வளர்ச்சியின் நளினம் வெளிப்படுகிறது. இத்தகைய ஓர் அளவுகோல் ஏறத்தாழ எல்லாக் கவிஞர்களிடத்திலும் காணக் கூடிய ஒன்றுதான்.
இந்த அளவுகோலைப் புரட்சிக் கவிஞரிடம் பயன் படுத்த முடியாது என்பதை நாம் அறிதல் வேண்டும். அவருடைய கவிதைகள் தொடக்கத்திலும் இடைக் காலத்திலும் இருந்த அளவு பின்னர் நிலைக்கவில்லை என்பதை அவர் மாட்டு அன்பு கொண்டிருந்தும் அவர் கவிதைகளைத் திறன் ஆய்வுக் கண்கொண்டு படிக் கின்றவர்கள் யாரும் அறிந்து கொள்ள முடியும். இத்தகைய ஒரு நிலை ஏற்படுவதற்கு யாது காரணம் என்ற ஆராய்ச்சியில் இப்பொழுது இறங்கத் தேவை யில்லை. இறங்கினாலும் நல்ல விடையைக் காண்பது இயலாத காரியம். தொடக்கத்திலிருந்து. இடைக் காலம் வரையில் மிகச் சிறந்த முறையில் வளர்ந்திருக் கிறார் கவிஞர். தொடக்கத்தில், ஓசை நயம் கருதி எழுந்த அவருடைய கவிதை வடசொற்கள் மிகவும் கலந்து அற்றை நாளில் கவிதைகளுக்குரிய மரபோடு விளங்கக் காண்கிறோம். நாளாக நாளாக வட சொற்களைத் தவிர்த்து அழகிய தமிழ்ச் சொற்களாக ஓசை நயத்துடன் பயன்படுத்திய முறையையும் காண முடிகிறது. 1940க்கு மேல் தோன்றிய கவிதைகள் இவ்விரண்டாம் தொகுப்பைச் சேரும். 1950க்குப் பிறகு வந்த கவிதைகள் மறுபடியும் கீழ்நோக்கி இறங்கத் தொடங்கிய நிலையையும் காண முடிகிறது. சிறந்த கவிதைகள் என்று சொல்லத்தக்கவை பலவும் ஏறத்தாழ 1935லிருந்து 1950க்குள் தோன்றி விட்டன.
இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு குடும்ப விளக்கைக் காண்டல் வேண்டும். கவிச் சக்கரவர்த்தி என்று போற்றப் பெறும் கம்பனுடைய கவிதையில் காண முடியாத ஒன்று 'குழந்தைச் செல்வத்தைப் பற்றிய பாடல்களாகும். தமிழ் இலக்கியத்தில் குழந்தை செல்வத்தைப் பாட வந்த பிள்ளைத் தமிழ் இலக்கியங் கூட மரபுக்கு அதிகம் அடிமையாகிவிட்ட காரணத் தால் ஓரளவு சுவையிழந்து நிற்கக் காண்கிறோம். இதனெதிராகக் கவிஞர் பாடலாம். குடும்ப விளக்கில் குழந்தைச் செல்வம் பாடப்படுகிறது.
குழந்தைகட்குத் தொண்டு
பிள்ளைகள் என்றனள்; கிள்ளைகள் வந்தனர்.
தூய பசும்பொன் துளிகளைப் போன்ற
சீயக் காய்த்துகள் செங்கையால் அள்ளிச்
சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும்
தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலங்காது
நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு
நன்னீராட்டி நலஞ் செய்த பின்னர்ப்.
பூவிதழ் மேற்பனி தூவிய துளிபோல் –
ஓவியக் குழந்தைகள் உடலின் நீர்த் துளிகளைத்
துடைத்து, நெஞ்சில் சுரக்கும் அன்பை
அடக்கா தவளாய் அழகுமுத் தளித்தே
பறப்பீர் பச்சைப் புறாக்களே என, அவர்
அறைக்குள் ஆடை பூண் டம்பலத் தாடினார்.
கற்றறிந்த பெரியோர் முதல் பட்டி தொட்டிகளில் வாழும் பாமரர் வரை இப்பகுதியைப் படித்தால், தம்மை மறந்து சில நிமிடங்கள் இருக்க நேரிடும். புரட்சிக் கவிஞரின் ஒப்பற்ற பாடல் திறத்திற்கு இப்பகுதி ஓர் எடுத்துக்காட்டாகும்.
'அச்சம்' என்ற மெய்ப்பாட்டைத் தொல். காப்பியர் பேசுகிறார், மெய்ப்பாட்டியலில் 'அச்சம் என்ற இச்சுவைக்குப் பொருள் கூற வந்த பேராசிரியர், குழந்தைக்கு நோய் இல்லையாயினும் உள்வாங் கொல்' என்று ஏற்படும் அச்ச உணர்ச்சி தாய்மாருக் குரியது. என்று பேசுகிறார். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் தோய்ந்தெழுந்த கவியரசர் பாரதி தாசனார் இக்கருத்தை மனத்தில் கொண்டு குடும்ப விளக்கில் வரும் தாய், தேவையில்லாமலும் பள்ளிக்குச் சென்று இருக்கும் குழந்தை பற்றி அஞ்சுகிறாள் என்ற மனோதத்துவக் கருத்தை இதோ பாடிக் காட்டுகிறார்:
பிள்ளைகள் நினைவு
பள்ளிக்குச் சென்றி ருக்கும்
பசங்களில் சிறிய பையன்,
துள்ளிக் குதித்து மான்போல்
தொடர்ந்தோடி வீழ்ந்தானோ, என்(று)
உள்ளத்தில் நினைத்தாள்; ஆனால்,
மூத்தவன் உண்டென் றெண்ணித்
தள்ளினாள் அச்சந் தன்னை
தாழ்வாரம் சென்றாள் நங்கை.
தாய் அன்பின் தனிச் சிறப்பு என்னவென்றால், தன் குழந்தைகட்கோ கணவனுக்கோ தொண்டு செய்யும் பொழுது தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடியாய் அவரவர்கள் விருப்பத்தைப் பெரிதென மதித்துப் பணி புரிவதாகும். அவரவர் கட்கு விருப்பமான கறிகளைச் சமைக்கும் பொழுது சமைக்கப்பட்ட கறி, காய்களில் கேவலம் உணவுப் பொருளைக் காணாமல் அதனை விரும்பி உண்பவர் களின் முகத்தையே அக்கறிகளில் காண்கின்றாள் என்றும், சிறிய குழந்தை சப்புக் கொட்டிக் கொண்டு அக்கறியை உண்ணுகின்ற காட்சியைக் காதில் கேட் கின்றாள் என்றும் பாடுவது தாய் மனத் தத்துவத்தை நன்கு அறிந்திருந்த கவிஞரின் ஒப்பற்ற கவிதைத் திறத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
என்ன கறி வாங்கலாம்?
கொண்டவர்க் கெதுபி டிக்கும்
குழந்தைகள் எதை விரும்பும்,
தண்டூன்றி நடக்கும் மாமன்
மாமிக்குத் தக்க தென்ன,
உண்பதில் எவரு டம்புக்(கு)
எதுவுத வாதென் றெல்லாம்
கண்டனள், கறிகள் தோறும்
உண்பவர் தம்மைக் கண்டாள்.
பிள்ளைகள் உள்ளம் எப்படி ?
பொரியலோ பூனைக் கண்போல்
பொலிந்திடும்; சுவைம ணக்கும்
அருந்துமா சிறிய பிள்ளை ?
என எண்ணும் அவளின் நெஞ்சம்
இருந்தந்தச் சிறிய பிள்ளை - இச்சென்று
சப்புக் கொட்டி அருந்தியே மகிழ்ந்த தைப்போல்,
அவள் காதில் ஒசை கேட்கும்.
மேலை நாட்டுத் திறனாய்வாளர்கள், அந்த நாட்டில் திருமணங்கள் முறிவுற்று மணநீக்கம் அதிகம் தோன்றுவதற்குக் காரணம், திருமணமான சில நாட்கள் கழித்து ஒருவரைப்பற்றி யொருவர் கவலைப் படாமல் ஒருவருக்கொருவர் இன்பம் தர வேண்டும் மென்று நினையாமல், ஏனோ தானோ என்று இருப்பது தான் மண முறிவுக்குக் காரணம் என்றும், இதனெதிராகக் கணவனும் மனைவியும் எத்துணை ஆண்டுகளாயினும் தங்கள் நடத்தைகளால் ஒருவரை யொருவர் கவரத்தக்க முறையில் புதுக் கோலம். கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறார்கள். இவ் அருமைப்பாட்டை இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னரே அறிந்த தமிழன்,
அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு
என்று கூறிப்போனான். எனவே, திருமணமாகிப் பல்லாண்டுகள் கழித்துப் பல குழந்தைகளைப் பெற்ற பின்னரும் குடும்ப விளக்கில் வரும் தலைவனும் தலைவியும் இன்றைக்கு மணம் புரிந்தோர் என்று சொல்லும்படியாக இருந்தார்களாம். இவ் அழகிய காட்சியைக் கவிஞர் இதோ பாடுகிறார்:
துணைவி சொன்ன புதுச் செய்தி
அன்றைக்கு மணம்புரிந்த
அழகியோன் வீடு வந்தான்;
இன்றைக்கு மணம்புரிந்தாள்
எனும்படி நெஞ்சில் அன்பு
குன்றாத விழியால் , அன்பன்
குளிர்விழி தன்னைக் கண்டாள் ;
'ஒன்றுண்டு சோதி' என்றாள்;
'உரை' என்றான் 'அம்மா அப்பா
வந்தார் என் றுரைத்தாள், கேட்டு
'வாழிய' என்று வாழ்த்தி
'நொந்தார்கள்' என்று கேட்டு
நோயுற்ற வகைய றிந்து
தந்தைதாய் கண்டு 'உங்கள்
தள்ளாத பருவந் தன்னில்
நைந்திடும் வண்ணம் நீங்கள்
நடந்திட லாமா?' மேலும்
அன்றன்று புதுமை
'அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும்,
ஆருக்கு வேண்டுமடி என்றன் ஆசைக்
குன்றத்திற் படர்ந்த மலர்க் கொடியே மண்ணில்
குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம்
ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்
ஒன்றொன்றும் சில நாளில் தெவிட்டிப் போகும்
அன்றன்று புதுமையடி , தெவிட்ட லுண்டோ ?
ஆருயிரே நீ கொடுக்கும் இன்பம்' என்றான்.
இப் பாடற் பகுதியிலுள்ள மற்றொரு சிறப்பையும் காண்டல் வேண்டும். கணவன் வீடு வந்தவுடன் இன் முகங் காட்டி அவனை உபசரிக்காமல் குடும்பச் செய்தி களைப் பேசுவது முறையன்று என்று மனத் தத்துவர் கூறுகிறார்கள். இதை நன்கு மனத்தில் பதித்துக் கொண்ட கவிஞர். வீட்டினுள் வந்த கணவனை அன்பு குன்றாத விழியால் வரவேற்று உபசரித்து, உடனே மாமன் மாமியார் வந்த செய்தியைக் கூறுகிறாள் என்று பாடிச் செல்வது இப் பழுத்த கவிஞனின் எல்லையற்ற பேராற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
பழந்தமிழ் நூலாகிய பத்துப்பாட்டில் பட்டினப் பாலையில் வணிகர் பற்றிப் பேசுகின்றபோது,
கொள்வதும் மிகைகொளாது கொடுப்பதும் குறை கொடாது
என்று கூறப்படுகிறது. இவ்வழகிய கருத்தை மனத்துள் வாங்கிய கவிஞர் 'குடும்ப விளக்கின் தலைவி கடை யில் வியாபாரம் செய்வதைச் சொல்லும் பொழுது எடுத்துப் பேசுகிறார்:
இளகிய நெஞ்சத் தாளை
இளகாத வெல்லம் கேட்பார்
அளவாக இலாபம் ஏற்றி
அடக்கத்தை எடுத்து ரைப்பாள்
மிளகுக்கு விலையும் கூறி
மேன்மையும் கூறிச் சற்றும்
புளுகாமல், புகன்ற வண்ணம்
புடைத்துத் தூற்றிக் கொடுப்பாள்.
இரவு நேரத்தில் மனைப் பணிகள் அனைத்தையும் முடித்து, குழந்தைகளை உறங்கவிட்டுப் பின்னர்க் கணவனுடைய படுக்கையண்டை வந்து நிற்கின்றாள் 'குடும்ப விளக்கின் தலைவி. கணவன் உறங்கி விட்டானோ என்று ஐயம் கொண்டு நிற்கின்ற தலைவிக்கு தலைவன் தான் உறங்கவில்லை என்பதை எடுத்துக்காட்டக் கையாள்கின்ற முறையைக் கவிஞர் மிக அழகாக எடுத்துக்காட்டுகிறார்:
தொண்டையினில் ஒன்றுமே அடைக்கவில்லை
துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்
அண்டையிலே மங்கைபோய் 'அத்தான்' என்றாள்
அத்தானா தூங்கிடுவான்? "உட்கார்' என்றான்.
சிறந்த கவிஞனை அறிவதற்குக் கவிஞனுடைய உவமைகளையே அளவுகோல்களாகக் கொள்ளுவர் திறனாய்வாளர். அறி ந் த தைக் கொண்டு அறியாததை விளக்கவே உவமை தோன்றிற்று எனினும், ஒரு கவிஞன் கையாள்கின்ற உவமையை வைத்து அவனுடைய மேதையை அறிய முடிகிறது. இரவு மெல்ல மறைகின்றது என்பதைச் சொல்லவந்த கவிஞர்.
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்
நல்லிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது
என்றும்,
புன்னை இலை போல் புதையடிச் செருப்புகள்
என்றும்,
பழந் தமிழ்ப் பொருளை யள்ளிப்
படித்தவர் விழுங்குதல் போல்
என்றும்,
பெரியோரின் உள்ளம் எங்கும்
பெருகல் போல் பெருகச் செய்தான்
என்றும் கூறும் உவமைகள் இணையற்றவையாய்ப் புரட்சிக் கவிஞரின் கவித் திறனுக்குக் கட்டியம் கூறும். பகுதிகளாய் அமைந்து நிற்கின்றன.
உவமையின் வளர்ச்சியாகிய உருவக அணியும், கவிஞருக்குக் கவினுறப் பணிபுரிகின்றது.
தெளி தமிழ் பவனி வந்தாள்,
செவிக்கெலாம் காட்சி தந்தாள்
என்ற உருவகமும், 'இரவுக்கு வரவேற்பு' என்ற இடத்தில்,
மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை
விருந்துண்டு, நீல ஆடை
மாற்றுடை யாய்உ டுத்து
மரகத அணிகள் பூண்டு,
கோற்கிளை ஒடுங்கும் புட்கள்
கோட்டிடும் இறகின் சந்தக்
காற்சிலம் பசையக் காதற்
கரும்பான இரவு தன்னை
என்ற பகுதியும் ஈடு இணையற்று விளங்குகின்றன. இரண்டாவது பகுதியாகவுள்ள விருந்தோம்பலில் 'மக்கட் பேறு', 'பிறர் நலம்' என்ற தலைப்புகளில் அவர் கவிதை ஊற்றின் ஆணிவேராக உள்ள திருக் குறளைச் சாறாகப் பிழிந்து தருகின்றார்.
மறுபடியும் அவருடைய உணர்ச்சியால் உந்தப் பெற்று இடைப்பிறவரலாகச் சாதி வேற்றுமையைக் கண்டிக்கத் தொடங்கித் தமிழ்நாட்டில் சமையல் முறை முன்னேற்றமின்றிப் போனதற்கும் காரணம் சாதி சமய வேறுபாடுதான் என்ற முறையில் பேசத் தொடங்கிவிடுகிறார். 'விருந்து வந்தவள் தன் நிலை கூறுவாள்' என்ற பகுதியில் இடைப்பிறவரலாக உள்ள இப் பகுதி காணப்படுகிறது. மூன்றாம் பகுதியாக உள்ள திருமணம்' என்ற பகுதியில் பழைய தமிழ் மண முறையாகிய களவு முறையையும் ஒருவாறு புகுத்தித் தமிழ்நாட்டில் உறவினர்களுக்குள் இயல்பாக ஏற்படுகின்ற குடும்பப் பகை முதலிய எல்லாவற்றையும் புகுத்திக் காட்டிக் குழந்தைகள் பொருட்டாக அவற்றை மறக்கவேண்டிய இன்றியமை யாமையும் பாடிச் செல்கிறார். உறவினருள் ஏற்படும் பகை; காரண காரியமின்றி ஏற்படும் பயித்தியக் காரத்தனமான ஒன்று என்பதையும் இப் பகுதியில் விளக்கியுள்ளார். நான்காம் பகுதியாகிய 'மக்கட் பேற்றில் தமிழ்நாட்டில் சூல் கொண்ட மகளின் தாய் தந்தையராலும், மாமன் மாமியாராலும் கணவனா லும் அதிகமாகப் போற்றப்படுகின்ற சூழ்நிலையை யும் சூல் கொண்ட மகளிரின் வளர்ச்சி முறையையும் மிக அழகாக எடுத்துக்காட்டிச் செல்கிறார்.
ஐந்தாம் பகுதியாக உள்ள முதியோர் காதல் என்ற பகுதியில் மறுபடியும் கவிஞர் மிக உயர்ந்த கவித் திறத்தை அதாவது முதல் பகுதியில் இருந்தது. போன்ற ஒரு தரத்தை எட்டிப் பிடிக்கின்றார். அன்புள்ளம் கொண்ட இரு முதியவர்களின் அன்றாட வாழ்க்கையை, மனத் தத்துவம் மாறாமல் எடுத்துப் பேசுகிறார். இவ்விரண்டு பகுதிகளிலும் கவிஞரின் நகைச்சுவை பெரிதும் இடம் பெறக் காண்கிறோம். முதல் பகுதியாகிய 'ஒருநாள்' நிகழ்ச்சியில் மாமன் மாமியார், மகன் வீட்டிற்குச் சாமான்களுடன் வந்திறங்கும் சிறப்பைச் சொல்ல விரும்புகிறார் கவிஞர். வண்டியிலிருந்து சாமான்கள் எல்லாம் இறக்கப்பட்ட பிறகு அவற்றின் அளவு கண்டு வியந்த தலைவி 'வண்டிக்குள் இவையெல்லாம் இருந்தன வென்றால் நீங்கள் இருவரும் எங்கே இருந்தீர்கள்' என்று கேட்கின்ற அழகும் அதற்கு மாமி தருகின்ற விடையும் மிக அழகாக நகைச்சுவையோடு வெளிப் படுத்தப்படுகின்றன.
மருமகள் வினா
இவையெல்லாம் வண்டிக்குள்ளே
இருந்தன என்றால், அந்த
அவைக்களம் தனிலே நீவிர்
எங்குத்தான் அமர்ந்தி ருந்தீர்?
சுவைப்புளி அடைத்து வைத்த
தோண்டியின் உட்புறத்தில்
கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும்
கால்வைக்க இடமி ராதே
மாமி விடை
என்றனள். மாமி சொல்வான் :
இவைகளின் உச்சி மீதில்
குன்றுமேல் குரங்கு போல
என்றனைக் குந்த வைத்தார்;
என் தலை நிமிர, வண்டி ,
முடிமேல் பொத்த லிட்டார்;
உன் மாமன் நடந்து வந்தார்
ஊரெல்லாம் சிரித்த தென்றாள்
இதே தலைவி ஐந்தாம் பகுதியில் கிழவியாக மாறித் தன்னுடைய இளமைக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிறாள்:
முன்னால் நடந்ததை மூதாட்டி இந்நாள் நகைமுத்திடம் இயம்புவாள்
ஒருநாள் மாலை பெருமு தாட்டி
நடந்த ஒன்றை நகைமுத் தாளிடம்
மிகுமகிழ்ச்சியுடன் விளம்ப லுற்றாள் :
செம்பில் எண்ணெயும் சீயக் காயும்
ஏந்தி மணாளரை எழுந்திரும் என்றேன்
'உனக்கேன் தொல்லை உன்றன் பணிச்சியை
எண்ணெய் தேய்க்க அனுப்புக' என்றார்.
நானே அப்பணி நடத்துவேன் என்றேன்.
'மானே, மெல் இடை வஞ்சியே, நீ போய்க்
கிளியுடன் பேசியும் ஒளியாழ் மிழற்றியும்
களியுடன் இருப்பாய் கவலை ஏன்?' என்றார்.
அறவே மறுத்ததால் அறைக்குச் சென்றேன்.
பின்னர் ஓர் பணிச்சி என்மணா ளர்க்கே
எண்ணெய் இட்டுத் தண் சீயக்காய்
தேய்த்து வெந்நீர் சாய்த்துத் தலைமுடி
சிக்கறுத் திருந்தாள். திடும் என அங்கே
என்றன் மாமியார் 'என்னன்பு மகனே.
ஏதுன் மனைவி இப்ப ணிச்சியை
உனக்கு முழுக்காட்ட ஒப்பிய 'தென்றார்.
அதற்கென் மணாளர் ஆம் அவள் என்னை
எண்ணெய் இட்டுக்கொள் எழுந்திரும் என்றாள்
ஒப்பேன் என்றேன் உடனே உட்சென்று
இப்பணிச்சியை அனுப்பினாள்' என்றார்.
அப்படி யாஎன் றன் புது மாமியார்.
இப்புறம் திரும்பி எதிரில் நோக்கி
முக்கா டிட்டே முகம்மறைத் தபடி
சிக்கறுத் திருந்த சிறிய பணிச்சியை
'தங்கத் திடத்தில் சந்தனம் கொடுத்தே
இங்கே அனுப்படி என்றார். பணிச்சி
அகலும்போது முக்கா டகன்றது.
தங்கமே பணிச்சி என்பதை
அங்கென் மாமியார், அன்பர், கண்டனரே.
இப் பகுதியில் தான் மணாளன் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து விடுவதற்குத் தன் மனைவி வேண்டா மென்றும், பணிப் பெண்தான் வேண்டுமென்றும் கேட்டதாகவும் பிறகு வீட்டுத் தலைவியே பணிப் பெண்ணாக வேடமிட்டு அப்பணியை முடித்தாள் என்றும் நகைச்சுவைபடப் பேசுகிறார்.
கவிஞருடைய கவிதை நூல்கள் அனைத்தையும் படித்து முடித்த பிறகு அவற்றை நினைவில் நிறுத்தி ஒரு கண்ணோட்டம் விட்டால், சிறந்த கவிதைக்கு ஓர் எடுத்துக்காட்டாய்ப் பல்வேறு உணர்ச்சிகளை வெளியிடுகின்ற சுவைப் பெட்டகமாய் அமைந் திருப்பது கவிஞரின் குடும்ப விளக்கு' என்ற நூலே யாகும் என்பது அறிய முடியும்.
சமுதாயத்திலுள்ள குறைபாடுகள், விருப்பு வெறுப்புக்கள் ஆகியவற்றில் மனத்தை உழலவிட்ட கவிஞர் தம் பாடல்களில் அம் மன உழற்சியை வெளி யிட்டுப் பலவிடங்களிலும் பாடியிருப்பதைக் காண்கின் றோம். இத்தகைய சூழ்நிலைக்கு எதிராக 'அழகின் சிரிப்பு' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள 16 கவிதைத் தொகுப்புகளும் 1944 - க்கு முன்னர் வெளியிடப் பெற்றது. ஆதலின் மேலே கூறிய குழப்பங்கள் எதுவுமில்லாமல் ஒப்புயர்வற்ற கவிதைகளாக விளங்கக் காண்கின்றோம். மேலும் அழகு , கடல், தென்றல், காடு, குன்றம், வான், கிளி ஆகிய இயற்கை பொருள்கள் பற்றியே இக் கவிதைகள் புனையப்பட்டு இருத்தலின் மிகச் சிறப்புடையனவாக விளங்குகின்றன. கலை நோக்கம் படைத்த ஒருவன் எல்லாப் பொருள்களிடத்தும் அழகைக் காண்கிறான். நம் போன்றவர்கள் கண்டும் காணாத பொருள்களிலும், அங்கே என்ன அழகு இருக்க முடியும் என்று எள்ளி நகையாடுகின்ற பொருள்களிலும் கவிஞர் அழகைக் காண்கிறார்.
காலை இளம் பரிதியில், கடல் பரப்பில், சோலை யில் எல்லாம் அழகைக் கண்ட அவர். நறுமலரைத் தொடுக்கின்ற மங்கை ஒருத்தியின் விரல் வளைவிலும், கலப்பையுடன் உழவன் செல்லும் புது நடையிலும் அழகுவழியக் காண்கின்றார். அழகைப்பற்றிக் கூற வந்த கவிஞர், 'பழமையினால் சாகாத இளையவள் காண்" என்று பேசிச் செல்கிறார்: "தென்றலைப்' பற்றிப் பேசும்போது,
திண் குன்றைத் தூள் தூளாகச்
செய்யினும்செய் வாய்நீ ஓர்
துண்துளி அனிச்சப் பூவும்
நோகாது நுழைந்தும் செல்வாய்
என்று பாடுகிறார். இதனைப் படிக்கும் பொழுது "இமயமும் துளக்கும் பண்பினை" என்ற குறுந் தொகைப் பாடல் நினைவுக்கு வருகிறது.
நம் போன்றவர்களும் இரவில் விண்மீன்கள் , நிறைந்த வானத்தைத் தினந்தோறும் காண் கின்றோம். ஒரோவழி திங்கள் செல்வன் ஆகாயத் தில் பவனி வருகின்ற காட்சியைக் காண்பதும் உண்டு. ஆனால், கவிஞர் கண்ட இத்தகைய ஒரு காட்சி என்றேனும் நம் மனத்தில் தோன்றியது உண்டா?
பாற்புகை முகிலைச் சீய்த்துப்
பளிச்சென்று "திங்கட் சேவல்
நாற்றிக்கும் குரல்எ டுத்து
நல்லொளி பாய்ச்சிப், பெட்டை
ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப்
பொடி விண்மீன் குஞ்சு கட்கும்
மேற்பார்வை செலுத்திப், 'பூனை
இருட்டையும்" வெளுத்துத் தள்ளும்.
கிளியின் அழகில் ஈடுபட்டுத் தம்மை மறக்கிறார் கவிஞர். அதனைப் பார்க்கும் பொழுது இயற்கை அன்னையின் ஆற்றலும் அவர் நினைவுக்கு வருகிறது. இயற்கை அன்னை ஒவ்வொரு பொருளைப் படைக்குந்தோறும் தன்பால் உள்ள அழகு என்னும் பொருளை அளவாகப் பயன்படுத்திப் படைக் கின்றாளே தவிரத் தன்பால் உள்ள அழகுப் பொருள் முழுவதையும் எந்தப் பொருளிடத்தும் கொடுத்து விடுவது இல்லையாம்; ஒரு சிறிது அழகையும் ஏனைய பொருள்களையும் கலந்தே படைக்கின்ற இயற்கைப் பெருமாட்டி கிளியை மட்டும் அன்பால், அழகு என்ற பொருள் அனைத்தும் கொட்டிப் படைத்துவிட்டாளாம்!
கொள்ளாத பொருள்க ளோடும்,
அழகினிற் சிறிது கூட்டிக்
கொள்ளவே செயும் இயற்கை
தான் கொண்ட கொள்கை மீறித்
தன்னரும் கையிருப்பாம்
அழகெனும் தலைச்ச ரக்கைக்
கிள்ளியமைத் திட்ட கிள்ளாய்
கிட்டவா சும்மா வாநீ..
ஈடு இணையற்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் புலமைத் திறத்தை வெளியிடும் உவமைகளும் உருவகங்களும் கவிதை தோறும் தாண்டவமாடும் காட்சியைக் காண முடிகிறது. கடலின் அலைகள் விளிம்பில் 'ஓஹோ' என்ற முழக்கத்தோடு குழப்பம் விளைவிக்கின்றனவே தவிர, நடுக் கடலில் அமைதி பொலிகின்ற காட்சியை நாட்டில் ஏற்படும் "புரட்சிக்கும் அமைதிக்கும்" உவமை செய்கின்றார்.
புரட்சிக்கப் பால் அமைதி
பொலியு மாம், அது போல், ஓரக்
கரையினில் அலைகள் மோதிக்
கலகங்கள் விளைவிக்கும்; ஆனால்
அருகுள்ள அலைகட் கப்பால்
கடலிடை அமைதி அன்றோ !
பெருநீரை வான்மு கக்கும்;
வான்நிறம் பெருநீர் வாங்கும்!
குன்றின் சிகரங்களின் மேல் மின்னல் பாய்வது, எருது களின் மேல் பாயும் வேங்கைக்கு உவமையாகப் பேசப் படுகிறது. ஆற்று ஓட்டத்தில் தண்ணீர் பாய்ந்து பாய்ந்து மணலால் ஆகிய கரையை உள்ளீடற்றுப் போகும்படியாக அறுத்து விடுவதால் அக்கரை எதிர்பாரா நேரத்தில் திடீரென்று உடைந்து வீழ்கிறது. அந்த அழகிய உவமை இதோ பேசப் பெறுகிறது :
பெருஞ்சிங்கம் அறைய வீழும்
யாளைபோல் பெருகிப் பாய்ந்து
வரும் வெள்ளம், மோத லாலே
மணற்கரை இடிந்து வீழும்
மருங்கினில் இருந்த ஆலும்
மல்லாந்து வீழும் ஆற்றில்
பருந்து, மேற் பறக்கும்! நீரில்
பட்டாவைச் சுழற்றும் வாளை !
"காதல் நினைவுகள்' என்ற சிறு நூலும் மிக அழகிய சுவையுடைய பாடல்களைப் பெற்று விளங்கக் காண்கிறோம். இருள் இன்னும் வரவில்லை என்று வருந்துகிறான் தலைவன். அந்த அழகிய மனநிலையை,
தங்கத்தை உருக்கிவிட்ட வான் கடலில் பரிதி
தலைமுழ்க மறந்தானோ! இருள் என்னும் யானை
செங்கதிரைச் சிங்கமென அஞ்சிவர விலையோ
என்றும்,
மேற்றிசையில் அனல் காட்டில் செம்பரிதி, வீழ்ந்தும்
வெந்துநீ றாகாமல் இருப்பதொரு வியப்பே
என்றும் வரும் உவமைகள் கவிஞர் புரட்சிக் கவிஞரே என்பதைப் பறை சாற்றுகின்றன.
ஏறத்தாழ இதே காலத்தில் எழுதப் பெற்ற "பாண்டியன் பரிசு' என்ற சிறு காப்பியம் மிகச் சிறந்த பெருமையுடையதாகும். நல்ல ஓசை நயமும், விருத்தப்பாவில் துள்ளு நடையும், கலந்து வீறுநடை போடுகின்றது பாண்டியன் பரிசு". புலவர்கள் பாடு கின்ற அணிகளில் தற்குறிப்பேற்றம் என்ற ஒன்றுண்டு. கொடி பறக்கின்ற இயற்கை நிகழ்ச்சியில், பகைவரைப் "போ போ" என்று கூறுவதாகவும், பொருளை விரும்பிப் பாடுபவர்களை 'வா வா' என்று அழைப்ப தாகவும் சொல்வது பழங்கவிதை மரபு. ஆனால், புரட்சிக் கவிஞர் "பாண்டியன் பரிசில்'.
கதிர்நாட்டின் நெடுங்கோட்டை மதிலின் மீது
கைகாட்டி “வா பகையே' என அழைக்கும்
புதுமைபோல் கொடி பறக்கக் கண்டார் மன்ளோ
என்று பேசுகிறார். மேலும்,
........ ....... ... … … சாவு
கொற்றவர்கள் இருவர்பால் மாறிமாறி நெருங்கிற்று வெற்றி மங்கை
நூறு முறை ஏமாந்தாள் ஆளைத் தேடி
என்பன போன்ற பகுதிகளில் மிகச் சிறந்த கவிதை நயத்தைக் காண்கிறோம்.
இராவணன் அடிபட்டுக் கிடக்கும் பொழுது அவ்வுடலைக் கண்ட இராமன் அவன் புறமுதுகில் புண்பட்டு விழுந்தானே என்று வருந்துவதாகவும், அதனைக் கண்ட வீடணன் 'ஐய, சீரிய அல்ல செப்பலை' என்று கூறி, இராவணன் புறமுதுகில் ஏற்பட்டு இருப்பது புண் அல்ல என்றும், திக்கு யானைகளின் தந்தங்கள் ஒடிந்து உள்ளே இருப்பதன் அடையாளமே என்றும் கூறினதாக ஒரு பகுதி வருகிறது. அதை நினைவூட்டுகின்ற முறையில் "பாண்டியன் பரிசில்' கதிர்வேல் மன்னன் இறந்த காட்சி பேசப்படுகிறது. இப் பகுதியின் உட்பொரு ளோடு மட்டுமல்லாமல் கவிதையின் நடையும், ஓசையுங்கூடக் கம்பனை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
அனைவருள்ளும் எவரேனும் பகைவன் வாளை
அருமார்பில் முன் தோளில் ஏற்ற தின்றித்
தினையளவும் திரும்பிப்பின் முதுகில் ஏற்ற
சேதியினை இவ்வையம் கேட்ட துண்டோ?
எனக்கூவித் திரும்புங்கால், எதிரில் நின்ற
இளவேழ நாட்டரசன், இரக்க மிஞ்ச ;
"மனைவிளக்கே, நின் துணைவன் கதிரை வேலன்
வாட்போரை என்னோடு நிகழ்த்துங் காலை,
முகமறைத்த ஒரு தீயன் எவனோ பின்னே
முடுகி வந்து நடு முதுகில் எறிந்தான் ஈட்டி!
திகைத்தேன் நான்! சாய்ந்தான் அம் மறவோர் மன்னன்
திகழிமய மலைபோலும் அவன் கொண்டுள்ள
புகழ்க்கென்ன? உன் குடிக்கு வாய்த்த மானம்
போனதெனப் புலம்புவதும் என்ன? பெண்ணே !
அகத்துன்பம் நீங்கியிரு! செல்க உன்றன்
அரண்மனைக்கே" என்றுரைத்தான் ; சென்றாள் பெண்ணான்
தொல்காப்பியத்தில் பேசப் பெறும் எண் சுவைக்கும் எடுத்துக்காட்டுத் தரும் முறையில், பாண்டியன் பரிசில் பல பாடல்கள் உள்ளன. 'வீரச் சுவைக்கு' 5 - ஆம் இயலின் நான்காவது பாடலையும், பெருமிதச் சுவைக்கு 29 ஆம் இயலின் முதலாவது பாடலையும், 'அவலச் சுவைக்கு 38 - ஆம் இயலின் நான்காவது பாடலையும், "அச்சச் சுவைக்கு' 49 - ஆம் இயலின் மூன்றாவது பாடலையும், "இளிவரல் சுவைக்கு 57- ஆம் இயலின் பதினொன்றாம் பாடலையும், நகைச் சுவைக்கு 87 - ஆம் இயலின்
மூன்றாம் பாடலையும் எடுத்துக்காட்டலாம்.
இனி இறுதியாகக் காணவேண்டிய பகுதி பாரதி தாசனின் நாடகங்கள் என்ற பகுதியே ஆகும். "இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற நூல் அவருடைய மிக இளமைக் காலத்தில் இயற்றப்பட்ட தாகும். இந் நாடகம் பாவேந்தர். திராவிடக் கட்சியில் சேர்ந்து, அதில் முற்றிலுமாக மூழ்கியிருந்த நிலையில் ஆரிய - திராவிடப் போராட்டத்தை வெளியிடுவதற்குக் கருவியாகக் கொண்ட ஒரு நாடகம் ஆகும். எனவே, இதனைப் பிரசார நாடகம் என்று சொல்லலாமே தவிர, நாடகப் பாணிக்குரிய சிறப்பு அதிகம் இருப்பதாகச் சொல்லமுடியாது. இதனையல்லாமல் பாரதிதாசன் நாடகங்கள் என்ற பெயரில் நான்கு சிறு நாடகங்கள் இடம் பெற்றுள்ளன. நாடகத்திற்குரிய இலக்கணமோ சூழ்நிலையோ எவையும் இந் நூல்களில் காட்சி அளிக்கவில்லை. பாவேந்தர் பொழுதுபோக்கிற்காக இவற்றை இயற்றியிருத்தல் வேண்டுமென்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. உண்மையில் நாடகம் எழுதவேண்டும் மென்று அவர் முயன்று எழுதியது 'பிசிராந்தையார் " என்ற நாடக நூலாகும். இந்த நூலும் இவர் நினைத்த வெற்றியைத் தரவில்லை. பிசிராந்தையார் என்ற சங்கப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு ஒரு கற்பனை நாடகமாக இது ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முன்னர்க் கூறிய படி நாடக இலக்கணம் - எதற்கும் அதிகம் ஒத்துவாராமல், சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கைகளையும் போராட்டங்களையும் ஓரளவு அறிவிக்கின்ற கருவி யாக அமைகின்றதே தவிர வேறு சிறப்பு ஒன்று மில்லை. நாடகத்திற்கு உயிர் நாடியாக இருக்க வேண்டிய முரண்பாடு எதுவும் இதில் இல்லை. பாத்திரப் படைப்பிலும், பாத்திரங்களின் வளர்ச்சி யிலும் எவ்விதமான தனிச் சிறப்பும் இல்லை.
ஒருவாறு அவருடைய நூல்கள் பலவற்றையும் ஒரு கண்ணோட்டம் விட்ட நிலையில், பாவேந்தரின் நிலை இன்றைய உலகில் என்ன என்ற வினாத் தோன்று கிறது. ஈடு இணையற்ற கவிஞராகிய அவர் ஒரு கவிஞனுக்குரிய கற்பனை வளம், சொல் வளம், ஓசை வளம் ஆகியவற்றை மிக மிக அதிகமான அளவு பெற்றிருக்கிறார் என்பதும், காலத்தின் போக்கில் அரசியல் சூழ்நிலையில் அகப்பட்ட காரணத்தால் ஒரு சில இடங்களில் தம் கவிதைத் திறத்தைக் குறைத்துக் கொண்டு கூடப் பிரசார நோக்கத்தில் ஒருசில கவிதைகள் இயற்றியிருக்கிறார் என்பதும், காலாந் தரத்தில் பிரசார நோக்கத்தில் எழுந்த இக்கவிதைகள் கால வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போகப்படும் நிலை ஏற்பட்டாலும், நூற்றுக்கு 85 விழுக்காடு உள்ள அவருடைய உயிர்த் துடிப்புள்ள கவிதைகள் என்றும் நின்று நிலவிப் புரட்சிக் கவிஞரின் தரத்திற்கு எடுத்துக் காட்டாக இலங்கும் என்பதில் ஐயமில்லை என்பதும் இச்சொற்பொழிவின் முடிப்பாகக் கொள்ளலாம்.
குருவும் சீடருமாக அமைந்துள்ள இவ்விரண்டு பெருமக்களும் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய் கின்ற முறையில் நாட்டுப் பாடல்களும், சமுதாயப் பாடல்களும் முறையே இயற்றினர். என்றாலும், தமிழ் இலக்கியம் உள்ளளவும் நின்று நிலவக் கூடியவை அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்த இப்பாடல் மட்டுமல்ல என்பதும், காலத்தை வென்று நிலவக் கூடிய கருத்தாழம் சொல் ஆழம் உடையவையுமான பல்வேறு ஒப்பற்ற கவிதைகள் இயற்றியுள்ளனர், இந்த இரண்டு பாவேந்தர்களும். ஆதலால், தமிழ் இலக்கிய உலகில் இருவருக்கும் அழியாத இரண்டு இடங்கள் உண்டு என்பதும் மறக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும்."
------------------------
This file was last updated on 20 May 2019.
Feel free to send the corrections to the Webmaster.