திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும்
பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
பாகம் 3 (4. குணமாலையார் இலம்பகம் 851- 1165) &
5. பதுமையார் இலம்பகம் 1166- 1411)
cIvaka cintAmani - part 3 (verses 851-1411)
of tiruttakka tEvar with commentaries
of M.P. cOmacuntaranAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும் பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
பாகம் 3 (குணமாலையார் இலம்பகம் 851- 1165) &
பதுமையார் இலம்பகம் 1166- 1411)
Source:
திருத்தக்க தேவர் இயற்றிய "சீவகசிந்தாமணி" மூலமும்
புலவர் 'அரசு' பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
ஆகியோர் எழுதிய உரையும்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1961
உள்ளடக்கம்
பதிப்புரை
அணிந்துரை
நூலாசிரியர் வரலாறு
I. கடவுள் வாழ்த்து, பதிகம் 1-29 (29)
II. நூல்
1. நாமகள் இலம்பகம் 30-408 (379)
2. கோவிந்தையார் இலம்பகம் 409- 492 (84)
3. காந்தருவதத்தையார் இலம்பகம் 493- 850 (358)
4. குணமாலையார் இலம்பகம் 851- 1165 (315)
5. பதுமையார் இலம்பகம் 1166- 1411
6. கேமசரியார் இலம்பகம் 1412- 1556
7. கனகமாலையார் இலம்பகம் 1557 - 1888
8. விமலையார் இலம்பகம் 1889 - 1994
9. சுரமஞ்சரியார் இலம்பகம் 1995 - 2101
10. மண்மகள் இலம்பகம் 2102 - 2326
11. பூமகள் இலம்பகம் 2327 - 2377
12. இலக்கணையார் இலம்பகம் 2378 - 2598
13. முத்தி இலம்பகம் 2599 - 3145
செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை
அருஞ்சொற்களின் அகரவரிசை
-----------
திருத்தக்க தேவர் இயற்றிய சீவகசிந்தாமணி
மூலமும் புலவர் 'அரசு' பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
ஆகியோர் எழுதிய உரையும்
4. குணமாலையார் இலம்பகம் (851- 1165)
கதைச் சுருக்கம் :
சீவகன் காந்தருவதத்தையோடு கருத்தொருமித்து ஆதரவு பட் டின்புற்றிருக்கு நாளில், இனிய இளவேனிற் பருவம் வந்தெய்தியது. அப்பொழுது மாந்தர் எல்லாம் பொழில் விளையாட்டிற் புக்கனர். அவ்விராசமாபுரத்திலுள்ள சுரமஞ்சரி என்பாளும், குணமாலை என்பாளும் தந் தோழிமாரோடு விளையாட அப்பொழிலிற் புக்கனர். அப் பொழிலின்கண் அப்பெருமாட்டியார் இருவரும் நறுஞ்சுண்ணங் காரணமாகத் தம்முட் கலாய்த்துக் கொண்டனர். தஞ்சுண்ணங்களுள் வைத்துச் சிறந்தது யாதென அறிதற்குத் தந்தோழியரை அறிஞரிடத்தே சுண்ணத்தோடு போக்கினர். அதுகண்ட அறிஞர் பலரும், அவரைச் சீவகன்பாற் காட்டி வினவும்படி அறிவுறுத்தனர். அம்மகளிர் அவ்வாறே அவற்றைச் சீவனுக்குக் காட்டி இவற்றுள் சிறந்தது செப்புக! என்று வேண்டினர். சீவகன் அவற்றை நுண்ணிதின் ஆராய்ந்து, குணமாலை சுண்ணமே சிறப்புடையது, என்றான். அம்மகளிர் தந்தலைவியர்பாற் சென்று இதனை உணர்த்தினர். சீவகன் தன் சுண்ணத்தை மதியாமை அறிந்த சுரமஞ்சரி பெரிதும் வருந்தினள். அச் சீவகன் என்பால் வலிந்துவந்து என்னருட்கு இரந்து நிற்கும்படி யான் நோன்பியற்றுவல் என்று குறிப்பாலுணர்த்தித் தன் கன்னிமாடம் புகுந்து, சீவகன் தன்பால் வலிநதுவந்து அருள்வேண்டற் பொருட்டு நோன்பாற்றியிருந்தனள். இனி, அப் பொழிலிலே பார்ப்பனர் சோற்றுத் திரளை ஒரு நாய் தீண்டிற்றாக? அப் பார்ப்பனர் அதனைத் தடியாற் புடைத்தனர். அந் நாயைக்கண்ட சீவகன் இரக்கமுற்று, அதன் செவியில் ஐந்தெழுத்து மறைமொழியை ஓதினன். அதனால் அந்நாய் அவ்வுடல் ஒழித்துத் தேவனாயிற்று. சுதஞ்சணன் என்னும் பெயருடைய அத்தேவன் மீண்டுவந்து சீவகனை வணங்கினான். நின்னருளால் யான் இப்பொழுது இயக்கர் தலைவனாகிச் சந்திரோதயமென்னும் நகரில் இனிதே வாழும் பேறுபெற்றேன். என் பெயர் சுதஞ்சணன் என்பதாம். நினக்குக் குற்றேவல் செய்யும் கருத்துடையேன் என்றனன். அது கேட்ட சீவகன் வியந்து நண்ப! நீ எனக்குப் பகைவரால் துன்பம் நேர்ந்தபோது துணைபுரிவாயாக! இப்பொழுது நின்னூர் சென்று இன்புற்றுவதிக! எனக் கூறி விடுத்தனன்.
மாந்தரெல்லாம் பொழிலில் ஆடி மீண்டு வந்தனர். அப்பொழுது கட்டியங்காரன் பட்டத்து யானையாகிய அசனிவேகம் செருக்குற்றுப் பாகர்க்கடங்காமல் சிதைந்து ஓடிற்று. அதனெதிரே வந்த குணமாலையைச் சீறி அவளைக் கொல்லத் தொடங்கியது. அவ்வழியே வந்த சீவகன் விரைந்தோடி அதனை அச்சுறுத்தி ஓட்டிக் குணமாலையை உய்யக்கொண்டனன். இருவருளங்களும் ஒன்றுறக் கலந்தன. குணமாலை சீவகன்பாற் காதல் கொண்டுள்ள செய்தியை அவள் நற்றாயாகிய வினயமாலை குறிப்பானுணர்ந்து தந்தையாகிய குபேரமித்திரனுக் குணர்த்தினள். அவனும் பெரிதும் மகிழ்ந்து கந்துக்கடனிடத்தே தூதுவிட்டுத் தன் கருத்தை உணர்த்தினன். அவனும் மகிழ்ந்துடன்பட்டனன். அவ்வழி சீவகனுக்குங் குணமாலைக்கும் திருமணஞ் சிறப்பாக நிகழ்ந்தது. இருவரும் ஈருடற்கு ஓருயிராய் இணைந்து இன்புற்றனர். இனிச் சீவகனுக்குத் தோற்றமையால் நாணிக் கவளமறுத்து நின்ற அசனிவேகத்தைக் கண்ட கட்டியங்காரன், நிகழ்ச்சியெல்லாம் வினவி அறிந்தனன். சீவகன்பாற் சீற்றங்கொண்டான். அவனைக் கட்டி என் முன்னர்க் கொணர்க என மதனனை மறவருடன் ஏவினன். அவர்கள் சீவகன் இல்லத்தை வளைத்துக் கொண்டனர். சீவகன் சினந்து போராற்றப் புலிபோலப் புறப்பட்டனன்; தான் தன் ஆசிரியனுக்கு அளித்த உறுதிமொழியை நினைந்து அடங்கினன். இருமுதுகுரவரும் அரசன் ஆணைக்கு அடங்கி அவன்பாற் செல்லுதலே அறிவுடைமையாம் என்று செவியறிவுறுத்தினர். சீவகன் அக் கருத்திற் கிணங்கி அம்மறவர்க்கு அடங்கியவனாய் அவர் புடைசூழச் சென்றனன். நந்தட்டன் முதலியோர் மாற்றாரை வெல்லுதற்குரிய சூழ்ச்சியை ஆராய்ந்தனர். இஃதறிந்த காந்தருவதத்தை தன் மந்திர வன்மையால் சீவகனைச் சிறைவீடு செய்ய முயன்றனள். அவள் கருத்தறிந்த சீவகன் நாணினன். சுதஞ்சணனை நினைத்தான். சீவகனுக்குற்ற துன்பத்தைச் சுதஞ்சணன் தனது தெய்வ ஞானத்தால் உணர்ந்து, ஞெரேலெனக் காற்றையும் மழையையும் தோற்றுவித்து மதனன் முதலியோரை நிலைகுலைத்துப் பிறர் உணராதபடி சீவகனைத் தன் மார்போடு அணைத் தெடுத்துக் கொண்டு தன் பதியை எய்தினன். அவ்விடத்தே தமர்க்கெல்லாம் இவன் சிறப்பினை உணர்த்தினன்; இவ்வாற்றால் சீவகன் சுதஞ்சணனோடு அவன் ஊரில் இனிதே உறைவானாயினன்.
இனி, மதனன் சீவகன் எவ்வழி மறைந்தான்? என்றுணராதவனாய்த் திகைத்தனன். கட்டியங்காரன் தன்னைக் கடிவான் என்றஞ்சி ஏதிலான் ஒருவனை வாளாற் கொன்று உருத்தெரியாமல் புரட்டிவிட்டுக் கட்டியங்காரன் பாற் சென்று அரசே! மழையும் காற்றும் மிக்கமையால் சீவகனை உயிருடன் கொணர்தல் அருமையாயிற்று. ஆதலால் அவனைக் கொன்று வீழ்த்திவிட்டேன் என்றனன். அதுகேட்ட கட்டியங்காரன் மதனனைப் பாராட்டிச் சிறப்புகள் பலவும் நல்கினான்.
851. காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல
மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண ழன்னி
ஆசற நடக்கு நாளு ளைங்கணைக் கிழவன் வைகிப்
பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவஞ் செய்தான்.
பொருள் : காசு அறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல - குற்றம் அற்ற, துறவு நெறியிற் சிறப்புற்ற முனிவரின் உள்ளம்போல; வெய்யோன் மாசு அறு விசும்பின் வடதிசை அயணம் முன்னி - கதிரவன் தூய வானிலே வடதிசைச் செலவைக் கருதி; ஆசு அற நடக்கும் நாளுள் - நலம்பெறச் செல்லும் நாட்களிலே; ஐங்கணைக் கிழவன் வைகி - காமன் தான் தங்குவதற்கு; பாசறைப் பரிவு தீர்க்கும் - பாசறையிலே தங்கியிருப்போரின் வருத்தத்தை நீக்கும; பங்குனிப் பருவம் செய்தான் - இளவேனிற் காலத்தைப் பிறப்பித்தான்.
விளக்கம் : அயனம் என்னாமல் அயணம் என்று பாகதத்தாற் கூறினார் செய்யுட் சொல்லாதலின். வைகி - வைக : எச்சத் திரிபு. கூதிர்க் காலத்தே (போர்மேற் சென்றோர்) பாடி வீட்டிலிருந்து, இளவேனிற்கண் இன்பம் நுகர மனைதிரும்புவாராதலின், பாசறைப் பரிவு தீர்க்கும் என்றார். தலை வந்த திளவேனில் (சீவக, 948) என எதிர்நோக்கிக் கூறிய காலத்தே, ஈண்டு நீர்விளையாட்டு நிகழ்கின்றதென்பர், அக்காலத்தைச் சிறப்பித்துரைக்கின்றார். உலகின்கண் கார்முதலிய பருவங்கள் உண்டாதற்கு ஞாயிற்று மண்டிலத்தின் வடதிசைச் செலவும் தென்றிசைச் செலவும் காரணமாதல்பற்றி வெய்யோன் பருவம் செய்தான் என அவன் செயலாக்கிக் கூறினர். விசும்பிற்குக் கடவுளர் சிந்தை உவமை. ஐங்கணைக் கிழவன் - காமன். (1)
852. தோடணி மகளிர் போன்ற துணர்மலர்க் கொம்பர் கொம்பி
னாடவர் போல வண்டு மடைந்தன வளியிற் கொல்கி.
யூடிய மகளிர் போல வொசிந்தன வூட றீர்க்குஞ்
சேடரிற் சென்று புல்லிச் சிறுபுறந் தழீஇய தும்பி.
பொருள் : துணர்மலர்க் கொம்பர் தோடு அணி மகளிர் போன்ற - கொத்தாகிய மலர்க்கொம்புகள் மலரணிந்த மகளிரைப் போன்றன; ஆடவர்போல வண்டும் கொம்பின் அடைந்தன - மகளிரிடம் ஆடவர் அடையுமாறுபோல வண்டுகளும் மலர்க் கொம்புகளிடத்தே சேர்ந்தன; ஊடிய மகளிர்போல அளியிற்கு ஒல்கி ஒசிந்தன - ஆடவரிடத்தே ஒசிந்து ஊடிய பெண்களைப் போல அவ் வண்டுகளின் கனத்திற்கு அக் கொம்புகள் ஒரு பக்கத்தே தாழ்ந்தன; ஊடல் தீர்க்கும் சேடரின் தும்பி சென்று புல்லிச் சிறுபுறம் தழீஇய - அவர் ஊடலைத் தீர்த்து எதிர்முகம் ஆக்கும் பெரியோரைப் போலத் தும்பிகள் சென்று அங்ஙனம் உயர்ந்த சிறுபுறத்தைத் தழுவி ஒக்க நிறுத்தின.
விளக்கம் : சிறுபுறம் : பூங்கொம்பு வளைந்தபோது உயர்ந்திருந்த பக்கம். சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய (தொல். கற்பு 13) என்றலின் அறிவிற் பெரியோரைச் சேடர் என்றார். அளியிற்கு; பிறர்க்கும் இவ்வாறு அருளுளதாம் என்று புலவி நுணுக்கங் கொள்ளுதலை மகளிர்க்குக் கொள்க. அளி - அருள், வண்டு. வளியிற்கு - காற்றிற்கு. எனினுமாம். மலர்க்கொம்பர் மகளிர் போன்ற என்க. சேடர், சேடு என்னும் பண்படியாகப் பிறந்த பெயர்; பெரியோர் என்னும் பொருட்டு. தும்பி - வண்டினத்தில் ஒருவகை. (2)
வேறு
853. நான மண்ணிய நன்மண மங்கையர்
மேனி போன்றினி தாய்விரை நாறிய
கானங் காழகி லேகமழ் கண்ணிய
வேனி லாற்கு விருந்தெதிர் கொண்டதே.
பொருள் : நானம் மண்ணிய நல்மண மங்கையர் மேனி போன்று - கத்தூரி பூசப்பெற்ற, நல்ல மணஞ்செய்த மகளிரின் மேனிபோன்று; இனிதாய் விரை நாறிய கானம் - இனிமையாய் மணம் கமழ்ந்த சோலை; காழ் அகிலே கமழ் கண்ணிய வேனிலாற்கு - கரிய அகில் மணமே கமழுங் கண்ணியையுடைய காமனுக்கு; விருந்து எதிர்கொண்டது - விருந்திடுதலை மேற்கொண்டது.
விளக்கம் : கண்ணி - முடிமாலை. கண்ணிய - மாலையை உடைய. நானம் : ஆகுபெயர்; மண்ணியதனால் உண்டான நறுமணத்தையுடைய மகளிர் எனவும் பொருள் கூறலாம். வேனிலான் - காமன். (3)
854. கொம்ப ரின்குயில் கூய்க்குடை வாவியுட்
டும்பி வண்டொடு தூவழி யாழ்செய
வெம்பு வேட்கை விரும்பிய வேனில்வந்
தும்பர் நீடுறக் கத்தியல் பொத்ததே.
பொருள் : கொம்பர் இன் குயில் கூய் - கொம்பிலே இனிய குயில் கூவ; குடை வாவியுள் - எல்லோரும் நீராடும் குளத்திலே; தும்பி வண்டொடு தூவழி யாழ்செய - தும்பியும் வண்டும் தூவழி யென்னும் பண்ணையுடைய யாழ்போல இசைக்க; வெம்பு வேட்கை விரும்பிய வேனில் வந்து - எரியுங் காமத்தை விரும்புதற்குக் காரணமான வேனில் வருதலாலே; உம்பர் நீள் துறக்கத்து இயல்பு ஒத்தது - மேலாகிய பெரிய துறக்கத்தின் தன்மையைப் போன்றது.
விளக்கம் : கூய் - கூவ, வந்து - வர : எச்சத்திரிபுகள். (4)
855. நாக நாண்மலர் நாறு கடிநக
ரேக வின்பத் திராச புரத்தவர்
மாக நந்து மணங்கமழ் யாற்றயற்
போக மேவினர் பூமரக் காவினே.
பொருள் : நாகம் நாண்மலர் நாறு கடிநகர் - நாகமரத்தின் புதுமலர் மணம் கமழும் சிறந்த நகரமாகிய; ஏக இன்பத்து இராசபுரத்தவர் - ஒப்பற்ற இன்பத்தையுடைய இராசமாபுரத்தில் உள்ளோர்; மாகம் நந்தும் மணம் கமழ் யாறு அயல் - வானிற் பொருந்த மணம் வீசுகிற, யாற்றின் ஓரத்தில் உள்ள; பூ மரக்காவின் போகம் மேவினர் - மலர் நிறைந்த மரங்களையுடைய காவிலே இன்பம் நுகர விரும்பினர்.
விளக்கம் : முதலிற் பொழிலில் இன்புறுதலையும் பின்னர் நீர்விளையாட்டையும் கருதினர். பொழில் யாற்றின் அயலில் உள்ளது.
நாகம் - ஒருவகை மரம். நாள் மலர் - அன்றலர்ந்த பூ. கடி - ஈண்டு மணம் என்னும் பொருட்டு. இராசமாபுரம், இராசாராமபுரம் என நின்றது. மாகம் - விசும்பு. நந்துதல் - ஈண்டு விரிதல் என்னும் பொருட்டு. போகம் நுகர்ச்சி. (5)
856. முழவங் கண்டுயி லாத முதுநகர்
விழவு நீர்விளை யாட்டு விருப்பினாற்
றொழுவிற் றோன்றிய தோமறு கேவலக்
கிழவன் மூதெயில் போற்கிளர் வுற்றதே.
பொருள் : தொழுவில் தோன்றிய தோம்அறு கேவலக் கிழவன் மூதெயில்போல - இல்வாழ்வின் உண்டான குற்றம் அற்ற பேரின்ப மடந்தையையுடைய அருக தேவனது பொன்எயில் வட்டம்போல; முழவம் கண் துயிலாத முதுநகர் - முழவின் ஒலி மாறாத இராசமாபுரம்; நீர் விழவு விளையாட்டு விருப்பினால் - நீர் விழவாகிய விளையாட்டின் காதலால்; கிளர்வுற்றது - கிளர்ச்சி கொண்டது.
விளக்கம் : இனி, மூதெயிலுக்குத் திருநாளுக்குப் போவாரைப் போல என்றுமாம். முழவம் - ஈண்டு அதன் முழக்கத்திற்கு ஆகுபெயர். கண்துயிலாத என்றது ஈண்டு, இடையறாத என்றவாறு. முதுநகர் - பழைதாகிய நகரம். தொழு : ஆகுபெயர் ; ஈண்டுக் கட்டுண்ட இல்வாழ்க்கையைக் குறித்துநின்றது. தொழு - தளை. தோம்அறு கேவலக்கிழவன் என்றது அருகக் கடவுளை. எயில் - பொன் எயில் வட்டம். நகர் மூதெயில்போல் கிளர்வுற்ற தென்க. (6)
857. வள்ள நீரர மங்கைய ரங்கையா
லுள்ளங் கூரத் திமிர்ந்துகுத் திட்டசாந்
தள்ள லாயடி யானை யிழுக்கின
வெள்ள நீர்வளை வெள்ள முரன்றவே.
பொருள் : அர மங்கையர் அங்கையால் - வான் மகளிரைப் போன்ற மங்கையரின் அழகிய கையினால்; உள்ளம் கூர - மனக் களிப்பு மிகையால்; உகுத்திட்ட வள்ளநீர் - சிந்திய கிண்ணத்திலுள்ள பனிநீரும்; திமிர்ந்திட்ட சாந்து - திமிர்ந்திட்ட சந்தனமும்; அள்ளலாய் யானை அடி இழுக்கின - சேறாக அச் சேற்றின் கண் யானை அடி வழுக்கின; வெள்ளநீர் வளை வெள்ளம் முரன்ற-கடல் நீரிற் பிறந்த சங்குகளும் வெள்ளம் என்னும் எண்ணாக முழங்கின.
விளக்கம் : வள்ளநீர் - வள்ளத்துள்ள பனிநீர். அரமங்கையர்: உவம ஆகுபெயர். உள்ளம் - மனவெழுச்சி. கூர்தல் - மிகுதல். அள்ளல் - சேறு; சேறாக அதன்கண் யானைகளும் இழுக்கின என்க. வெள்ளம் இரண்டனுள் முன்னது கடல், ஏனையது ஒரு பேரெண். (7 )
858. நீந்து நித்தில வூர்தி நிழன்மருப்
பேந்து கஞ்சிகை வைய மிளவெயிற்
போந்து காய்பொற் சிவிகைநற் போதகங்
கூந்தன் மாலைக் குமரிப் பிடிக்குழாம்.
பொருள் : நீந்தும் நித்தில ஊர்தி - (தெருவிலே மக்களின் நெருக்கத்தைக்) கடந்து செல்லும் முத்துப் பந்தலும்; நிழல் மருப்பு ஏந்து கஞ்சிகை வையம் - ஒளிவிடும் யானைக் கொம்பினால் ஏந்திய, உருவு திரையையுடைய வண்டியும்; இளவெயில் போந்து காய் பொன் சிவிகை - இளவெயில் விட்டு ஒளிரும் பொன் சிவிகையும்; நல்போதகம் கூந்தல் மாலைக் குமரிப் பிடிக்குழாம் - அழகிய யானைகளும் கூந்தலையும் மாலையையும் உடைய இளம் பிடித்திரளும் (ஆகியவற்றை).
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். கடத்தற்கருமையின் நீந்தும் என்றார். நித்தில ஊர்தி - முத்தாலாய நடைப்பந்தர். நிழல் - ஒளி. கஞ்சிகை வையம் - உருவுதிரை வீழ்த்தப்பட்டவண்டி; இதனைக் கொல்லாவண்டி என்ப. இளவெயில் போன்று புறப்பட்டு ஒளிரும் பொன் சிவிகை எனினுமாம். போதகம் - யானை. குமரிப்பிடி - இளமையுடைய பெண் யானை. (8)
859. ஏறு வாரொலி யேற்றுமி னோவெனக்
கூறு வாரொலி தோடு குலைந்துவீழ்ந்
தாறி னார்ப்பொலி யஞ்சிலம் பின்னொலி
மாறு கொண்டதொர் மாக்கட லொத்தவே.
பொருள் : ஏறுவார் ஒலி - ஏறுகின்றவரின் ஆரவாரமும் ; தோடு குலைந்து வீழ்ந்து ஏற்றுமினோ எனக் கூறுவார் ஒலி - தம் கூட்டம் சிதறியதால் அதனையடைய விரும்பி ஏற்றிவிடுங்கள் என்று கூறுகின்றவரின் ஆரவாரமும்; ஆறின் ஆர்ப்பு ஒலி - வழியே செல்லுவாரின் ஒலியும்; அம் சிலம்பின் ஒலி - அழகிய சிலம்புகளின் ஆர்ப்பும் (கூடுவதால்); மாறு கொண்டது ஓர் மாக்கடல் ஒத்தது - கடலுடன் மாறுபட்ட மற்றொரு பெருங் கடல் போன்றது.
விளக்கம் : தோடு - கூட்டம். சிறுதலை வெள்ளைத்தோடு என்னும் குறுந்தொகைக் கண்ணும் (163) அஃதப் பொருட்டாதலறிக. ஆறு : ஆகுபெயர்; வழிப்போக்கர் என்க (9 )
860. பொன்செய் வேய்த்தலைப் பூமரு மண்டல
மின்செய் வெண்குடை பிச்ச மிடைந்தொளி
யென்செய் கோவென் றிரிந்த திழைநிலா
மன்செய் மாணகர் வட்டம்விட் டிட்டதே.
பொருள் : பொன்செய் வேய்த்தலைப் பூமரு மண்டலம் - பொன்னாற் செய்யப்பட்ட காம்பினைக் கொண்ட, பூ எழுதிய வட்டக்குடையும்; மின்செய் வெண்குடை - ஒளிரும் வெண்குடையும்; பிச்சம் - பீலிக்குடையும்; மிடைந்து - நெருங்குதலால்; ஒளி என் செய்கோ என்று இரிந்தது - (ஞாயிற்றின்) ஒளி இனி யான் என் செய்வேன் என்று கெட்டது; இழைநிலா மன்செய் மாண்நகர் வட்டம் விட்டிட்டது - (அப்போது) அணி கலன்களின் ஒளி பெருமை பொருந்திய பெருநகரம் எங்கும் வட்டமாக விளங்கி வீசியது.
விளக்கம் : மண்டலம் : ஆகுபெயர்; வட்டக்குடை என்க. பிச்சம் - ஒருவகைக் குடை, ஒளி - ஈண்டு. ஞாயிற்றொளி என்க. மாணகர் - மாட்சிமையுடைய இராசமாபுரம். (10 )
861. திருந்து சாமரை வீசுவ தெண்கடன்
முரிந்த மொய்திரை போன்ற வகிற்புகை
புரிந்த தாமங்க ளாகவப் பூந்துகள்
விரிந்து வானின் விதானித்த தொத்ததே.
பொருள் : திருந்து சாமரை வீசுவ - திருத்தமான சாமரைகள் வீசுவன; தெண்கடல் முரிந்த மொய்திரை பேன்ற - தெளிந்த கடலின் முரிந்த நெருங்கின திரைகளைப் போன்றன; அகிற்புகை புரிந்த தாமங்களாக - அகிற்புகைச் சுருள் கட்டப்பட்ட மாலைகளாக; அப் பூந்துகள் விரிந்து வானின் விதானித்தது ஒத்ததே - அப்போது தூவின் பூந்துகள் பரவி வானிலே மேற்கட்டி ஒன்றைக் கட்டியது போன்றது.
விளக்கம் : வீசுவ: பலவறிசொல்; வீசப்படுவனவாகிய சாமரை திரை போன்றன என்க. புகை தாமங்கள் ஆக என்க. தாமம் - மாலை. விதானித்தல் - மேற்கட்டியிடுதல். (11 )
862. சோலை சூழ்வரைத் தூங்கரு வித்திரண்
மாலை ஊர்திகள் வைய மிவற்றிடைச்
சீலக் கஞ்சிநற் போதகஞ் செல்வன
நீல மேக நிரைத்தன போன்றவே.
பொருள் : சோலைசூழ் வரைத்தூங்கு அருவித்திரள் - சோலை சூழ்ந்து மறைத்த மலையினின்றும் அசையும் அருவித்திரள் போலும்; மாலை ஊர்திகள் வையம் இவற்றிடை - முத்த மாலையையுடைய பீலி வேய்ந்த ஊர்திகளும் வண்டியும் ஆகிய இவற்றின் நடுவே; சீலக்கு அஞ்சி நல் போதகம் செல்வன - பாகன் கற்பித்த ஒழுக்கத்திற்கு அஞ்சி அழகிய யானைகள் செல்வன; நீலமேகம் நிரைத்த்ன போன்றவே - கரிய முகில்கள் அணிவகுத்தன போன்றன.
விளக்கம் : சீலங்கு - சீலத்திற்கு; ஒழுக்கத்திற்கு. சாரியை இன்றி உருபு புணர்ந்தது. யானை வரிசைக்கு முகில் வரிசை உவமை.(12)
863. வழங்கு வங்கக் கலிங்கக் கடகமு
மழுங்கு மாந்தர்க் கணிகலப் பேழையுந்
தழங்கு வெம்மதுத் தண்டுந் தலைத்தலைக்
குழங்கன் மாலையுங் கொண்டு விரைந்தவே
பொருள் : வங்கம் வழங்கு கலிங்கம் கடகமும் - மரக்கலத்தில் வந்த ஆடையும் கடகமும்; அழுங்கும் மாந்தர்க்கு அணிகலப் பேழையும் -(அணிகலம் இழந்து) வருந்துவார்க்குக் கொடுக்க அணிகலப் பெட்டிகளும்; தழங்கு வெம்மதுத் தண்டும் - கொடிய மதுவைப் பெய்து முழங்கும் மூங்கிற் குழாய்களும்; தலைத் தலைக் குழங்கல் மாலையும் - ஆங்காங்கே மணந்தரும் மாலையும்; கொண்டு விரைந்த - கைக்கொண்டு (மக்கள் திரள்கள்) விரைந்து சென்றன.
விளக்கம் : வங்கம் - மரக்கலம். வங்கம் வழங்கு - மரக்கலங்கள் கொண்டுவந்து வழங்கிய என்க. கலிங்கம் : ஆகுபெயர். ஆடைப்பேழை. கடகம்: ஆகுபெயர்; அணிகலப்பேழை அழுங்குமாந்தர் - நீராட்டின் கண் ஆடை அணி முதலியன பறிகொடுத்து வருந்தும் மக்கள் என்க. தழங்கும் வெம்மது-இரைகின்ற வெப்பமுடைய கள் : முதிர்ந்த கள் ஓய்யென்றிரையுமியல்புடையது. தண்டு - ஈண்டு மூங்கிற் குழாய். குழங்கல் - மணங்கமழ்தல். விரைந்த என்னும் பயனிலைக்கு (894) மாசனம் எழுவாய்.
864. வாச வெண்ணெயும் வண்டிமிர் சாந்தமும்
பூச சுண்ணமு முண்ணு மடிசிலுங்
காசில் போகக் கலப்பையுங் கொண்டவண்
மாசின் மாசனம் வாயின் மடுத்தவே.
பொருள் : வாச எண்ணெயும் - மணந்தரும் எண்ணெயும் வண்டு இமிர் சாந்தமும் - வண்டுகள் முரலும் சந்தனமும்; பூசு சுண்ணமும் - பூசிக்கொள்ளும் நறுமணப் பொடியும்; உண்ணும் அடிசிலும் - உண்ணும் உணவும்; காசுஇல் போகக் கலப்பையும் - குற்றமற்ற இன்பந் தரக்கூடிய யாழ் முதலியவை வைத்த பெட்டியும்; கொண்டு - கைக்கொண்டு; மாசுஇல் மாசனம் அவண் வாயில் மடுத்த - குற்றம் அற்ற மக்கள் திரள்கள் அந்நகரின் வாயிலில் நிறைந்தன.
விளக்கம் : சுண்ணம் - நறுமணப்பொடி. காசு - குற்றம். கலப்பை - யாழ்ப் பேழை. மாசனம் - மக்கள் கூட்டங்கள். (14)
865. பாட லோசையும் பண்ணொலி யோசையு
மாட லோசையு மார்ப்பொலி யோசையு
மோடை யானை யுரற்றொலி யோசைய
மூடு போயுயர் வானுல குற்றவே.
பொருள் : பாடல் ஓசையும் - பாட்டொலியும்; பண் ஒலி ஓசையும் - யாழ் வாசிக்கும் ஒலியும்; ஆடல் ஓசையும் - ஆட்டத்தினால் வந்த இயங்களின் ஒலியும்; ஆர்ப்பு ஒலி ஓசையும் - ஆரவாரத்தின் ஒலியும் ; ஓடை யானை உரற்று ஒலி ஓசையும் - முகபட்டம் அணிந்த களிறுகள் பிளிறும் ஒலியாற் பிறந்த ஓசையும்; ஊடுபோய் உயர் வான் உலகு உற்றவே - தம்முள் விரவிச் சென்று வானுலகை அடைந்தன.
விளக்கம் : பாடல் - மிடற்றுப் பாடல். பண் ஈண்டு ஆகுபெயர், யாழ் நரம்பென்க. ஒலியோசை: வினைத்தொகை; உரற்றொலியுமது. ஊடுபோதல் - ஒன்றனோடொன்று விரவிப்போதல். (15)
866. பூக்க ணீர்விளை யாடிய பொன்னுல
கோக்க நீள்விசும் பூடறுத் தொய்யென
வீக்க மாநகர் வீழ்ந்தது போன்றவண்
மாக்கண் மாக்கடல் வெள்ள மடுத்ததே.
பொருள் : பொன் உலகு பூக்கள் நீர் விளையாடிய - பொன்னுலகு பூக்களையுடைய நீரிலே விளையாடுவதற்கு; ஓக்கம் நீள் விசும்பு ஊடு அறுத்து - உயர்ந்த நீண்ட வானத்தை ஊடறுத்து வந்து; வீக்கம் மாநகர் ஒய்யென விரைய வீழ்ந்தது போன்று - வளமிகுந்த பெரிய நகரில் விரைய வீழ்ந்ததுபோல்; அவண் மாக்கள் மாக்கடல் வெள்ளம் மடுத்தது - அங்கே மக்கள் திரளாகிய பெருங்கடல் வெள்ளத்தை நோக்கிச் சென்றது.
விளக்கம் : பூக்கண்ணீர் - பூவாகிய கண்களையுடைய நீரெனினுமாம். விளையாடிய: செய்யியவென்னும் எச்சம்; விளையாட என்க. ஓக்கம் - உயர்ச்சி. உயர்ச்சியையுடைய நீண்ட விசும்பென்க, ஒய்யென - விரைவுக் குறிப்பு. மாக்கண், மாக்கடல் : பண்புத்தொகை. (16)
867. மின்னு வாட்டடங் கண்ணியர் வெம்முலைத்
துன்னு வாட்டந் தணித்தலிற் றூநிறத்
தன்ன வாட்டத் தணிமலர்ப் பூம்பொழி
லென்ன வாட்டமு மின்றிச்சென் றெய்தினார்.
பொருள் : மின்னு வாள்தடம் கண்ணியர் வெம்முலைத்துன்னு வாட்டம் - ஒலிசெயும் வாளனைய பெருங்கண்ணியரின் வெம்முலைகள் நெருங்குதலால் உண்டான மெய்வருத்தத்தை; தூநிறத்து அன்ன ஆட்டத்து அணிமலர்ப் பூம்பொழில் - தூய நிறமுடைய அன்னங்களின் விளையாட்டினையுடைய அழகிய மலர்ப்பொழில்; தணித்தலின் - போக்குவதனால்; என்ன வாட்டமும் இன்றிச் சென்று எய்தினார் - எத்தகைய சோர்வும் இன்றிச் சென்று அடைந்தனர்.
விளக்கம் : மின்போலும் இடையை மின் என்றார் எனக்கொண்டு, வெம்முலை நெருங்கலின் உண்டான சோர்வை இடைநீக்குதலின், அன்னங்களின் ஆட்டமுடைய பொழில் என்னுமாறு சென்று அப்பொழிலை அடைந்தார் என்பர் நச்சினார்க்கினியர். (17)
868. அள்ளு டைக்குவ ளைக்கய நீடிய
கள்ளு டைக்கழு நீர்ப்புனற் பட்டமும்
புள்ளு டைக்கனி யிற்பொலி சோலையு
முள்ளு டைப்பொலி விற்றொரு பாலெலாம்.
பொருள் : அள்உடைக் குவளைக் கயம் - அள்ளிக் கொளலாந் தன்மையை உடைய நீலமலர் நிறைந்த குளத்தையும்; கள்உடைக் கழுநீர் நீடிய புனல் பட்டமும் - தேன் பொருந்திய கழுநீர் மலர்களையுடைய நீரறாத ஓடையையும்; புள் உடைக்கனியின் பொலி சோலையும் - பறவைகளையுடைய, கனிகளாற் பொலிவுற்ற பொழிலையும்; உள் உடைப் பொலிவிற்று ஒருபால் எலாம் - உள்ளே உடைய பொலிவினையுடையது அப் பொழிலின் ஒருபக்கம் எல்லாம்.
விளக்கம் : அள்ளுடை என்புழி அள்ளல் என்பதன் கடைக்குறையாகவும் கொள்ளலாம். அள்ளல் - சேறு. குவளைக்கயம் - குவளைமலர்ந்த குளம். புனற்பட்டம் - வற்றாத நீரோடை. பொலிவிற்று - பொலிவினையுடையது. (18)
869. செம்பு றக்கனி வாழையுந் தேன்சொரி
கொம்பு றப்பழுத் திட்டன கோழரை
வம்பு றக்கனி மாத்தொடு வார்சுளைப்
பைம்பு றப்பல விற்றொரு பாலெலாம்.
பொருள் : செம்புறம் கனி வாழையும் - சிவந்த புறமுடைய கனிகளையுடைய வாழை மரங்களையும்; தேன்சொரி கொம்பு உறப் பழுத்திட்டன கோழ் அரை வம்பு உறக்கனி மா - தேனைச் சொரிந்து கொம்புகளிலுற்றே பழுத்தனவாகிய, கொழுவிய அடிமரத்தையுடைய, புதுமை பொருந்திய கனிகளையுடைய, மாமரங்களையும்; தொடு வார் சுளைப் பைம்புறப் பலவிற்று ஒருபாலெலாம் - தொடுத்த நீண்ட சுளைகளையுடைய, பசுமையான மேற்பக்கமுடைய பலாமரங்களையும் உடையது ஒருபக்கம் எல்லாம்.
விளக்கம் : கொம்புறப் பழுத்திட்டன தேன்சொரி என்னுந் தொடரைப் பலவிற்குக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். கோழரை - வழுவழுப்பான அடிமரம். வம்பு - புதுமை. மாத்தொடு. மாமரத்தினோடு. வார்சுளை - நீண்ட சுளை . பைம்புறம் - பசிய மேற்புறம். பலவிற்று - பலாமரத்தினையுடையது. (19)
870. கள்ள வானர முங்கன்னி யூகமுந்
துள்ளு மானொடு வேழத் தொகுதியும்
வெள்ளை யன்னமுந் தோகையும் வேய்ந்தவ
ணுள்ளு மாந்தரை யுள்ளம் புகற்றுமே.
பொருள் : கள்ள வானரமும் - திருட்டுப் பண்புடைய குரங்கையும்; கன்னி யூகமும் - கன்னித் தன்மையுடைய கருங்குரங்கையும்; துளளும் மானொடு வேழத் தொகுதியும் - துள்ளும் மான்களையும், யானைத் திரள்களையும்; வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து - வெள்ளைநிற அன்னத்தையும் மயிலையும் அணிந்து; அவண் உள்ளும் மாந்தரை - அவ்விடம் தம் துணையை நினைக்கும் மக்களை; உள்ளம் புகற்றும் - நெஞ்சில் விருப்பமூட்டும்.
விளக்கம் : பிறர் பொருளைக் கவர்ந்துகோடலின் கள்ள வானரம் என்றார். கன்னியூகம் - கன்னிமையுடைய பெண்குரங்கு. தோகை: ஆகுபெயர்; மயில். உள்ளும் மாந்தர் என்றது தங்காதற்றுணைவரை நினைக்கும் மாந்தர் என்பதுபட நின்றது. (20)
871. கோக்க ணங்கொதித் தேந்திய வேலென
நோக்க ணங்கனை யார்நுகர் - வேய்தலிற்
றாக்க ணங்குறை யுந்தடந் தாமரைப்
பூக்க ணம்பொழிற் பட்டது போன்றதே.
பொருள் : கோக்கணம் கொதித்து ஏந்திய வேல் என - மன்னர் குழாம் சினந்து ஏந்திய வேல்போல; நோக்கு அணங்கு அனையார் நுகர்வு ஏய்தலின் - நேர்ககுகின்ற நோக்கினையுடைய தெய்வ மகளிர் போன்றவர் தம் கணவரிடம் நுகர்ச்சியால் அவர்களின் உறுப்புக்கள் செவ்விபெறுதலின்; தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரைப் பூக்கணம் - திருமகள் தங்கும் பெரிய தாமரைப் பூக்களின் தொகுதி; பொழில் பட்டது போன்றது - (நீர் நிலையினின்றும் நீங்கி) ஒரு பொழிலிலே தோன்றினதைப் போன்றது.
விளக்கம் : நோக்குதலால் அணங்கனையாருமாம். முகம் முதலிய தாமரைக்குவமை. கோக்கணம் - அரசர் குழாம். வேலென நோக்கும் நோக்கினையுடைய அணங்கு அனையார் என்க. வேல் - கண்ணிற்குவமை. ஏய்தல் - இயைதல். தாக்கணங்கு என்றது - திருமகளை. (21)
872. கூறப் பட்டவக் கொய்ம்மலர்க் காவக
மூறித் தேன்றுளித் தொண்மது வார்மண
காரி நாண்மலர் வெண்மணற் றாய்நிழ
றேறித் தெண்கயம் புக்கது போன்றதே.
பொருள் : கூறப்பட்ட அக் கெய்ம்மலர்க் காவகம் - (இது வரை) கூறப்பட்ட அம் மலர்ப் பொழிலினுள்ளாகிய இடம்; தேன் ஊறித் துளித்து ஒண்மது ஆர் மணம் நாறி - தேன் ஊறித் துளித்து, அவ் வொள்ளிய தேனில் நிறைந்த மணம் எங்கும் கமழ்ந்து; நாள் மலர் வெண்மணல் தாய் - புதிய மலர்களும் வெண்மையான மணலும் பரவி; நிழல் தேறி - நிழல் தெளிந்து; தெண் கயம் புக்கது போன்றது - (இக் குளிர்ச்சியால்) தெளிந்த குளத்திலே சென்றாற் போன்றது.
விளக்கம் : கொய்ம்மலர் : வினைத்தொகை. காவகம் ஊறித் துளித்து நாறிமணல்தாய்த் தன்கண் புக்கவர்க்குக் குளிர்ச்சியால் கயம் போன்றது என்க. தேறி - தெளிந்து. தெண்கயம் - தெளிந்த நீரையுடைய குளம். (22)
873. காவிற் கண்டத் திரைவளைத் தாயிடை
மேவி விண்ணவர் மங்கையர் போன்றுதம்
பூவை யுங்கிளி யும்மிழற் றப்புகுந்
தாவி யந்துகி லாரமர்ந் தார்களே.
பொருள் : ஆவி அம் துகிலார் - பாலாவி போலும் துகிலையுடைய குணமாலையும் சுரமஞ்சரியும்; காவில் கண்டத் திரை வளைத்து - அப் பொழிலில், பலநிறக் கூறுபட்ட திரையை வளைத்து; ஆயிடை தம் பூவையும் கிளியும் மிழற்றப் புகுந்து - அங்கே தம்முடைய பூவையும் கிளியும் மழலை மொழியப் புகுந்து; விண்ணவர் மங்கையர் போன்று - வானவர் மகளிர் போல; மேவி அமர்ந்தார்கள் - விருப்பத்துடன் இருந்தனர்.
விளக்கம் : ஆவியத்துகிலார்: எழுவாய. அவர் குணமாலையும் சுரமஞ்சரியும் என்பது அடுத்த செய்யுளான் விளங்கும். கண்டத்திரை - பலவண்ணங்களாற் கூறுபட்டதிரை (வண்ணத் திரை) பூவை - நாகண வாய்ப்புள். (23)
874. பௌவ நீர்ப்பவ ளக்கொடி போல்பவண்
மௌவ லங்குழ லாள்சுர மஞ்சரி
கொவ்வை யங்கனி வாய்க்குண மாலையோ
டெவ்வந் தீர்ந்திருந் தாளிது கூறினாள்.
பொருள் : பௌவ நீர்ப் பவளக்கொடிபோல்பவள் - கடல் நீரிலே தோன்றிய பவளக்கொடி போன்றவளாகிய; மௌவல் அம் குழலாள் சுருமஞ்சரி - முல்லை மலரணிந்த கூந்தலையுடைய சுரமஞ்சரி; கொவ்வை அம் கனிவாய்க் குணமாலையோடு - கொவ்வைக் கனி அனைய வாயுடையாள் குணமாலையோடு; எவ்வம் தீர்ந்து இருந்தாள் இது கூறினாள் - வழிவந்த வருத்தம் தீர்ந்து இப்போது இதனைக் கூறினாள்.
விளக்கம் : பௌவநீர்ப்பவளக்கொடி - சுரமஞ்சரிக்குவமை. இஃது அவள் குலநலமும் அழகு நலனும் குறித்துவந்த உவமை என்க. மௌவல் - முல்லை. மௌவல்குழலாள் என்றது அவள் கற்புநலம் கூறிற்று. (24)
875. தூமஞ் சூடிய தூத்துகி லேந்தல்குற்
றாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினா
ணாமஞ் சூடிய நன்னுத னீட்டினாள்
காமஞ் சூடிய கண்ணொளிர் சுண்ணமே.
பொருள் : தூமம் சூடிய தூரத்துகில் ஏந்து அல்குல் - அகிற் புகை தாங்கிய தூய ஆடையைத் தாங்கிய அல்குலையும்; தாமம் சூடிய வேல் தடம் கண்ணினாள் - மாலை யணிந்த வேலனைய பெருங கண்களையும் உடையவள் ஆகிய குணமாலையின்; நாமம் சூடிய நன்னுதல் - பெயரைக் கொண்ட அழகிய நெற்றியை உடைய தோழி; காமம் சூடிய கண் ஒளிர் சுண்ணம் நீட்டினாள் - விருப்பத்தைக் கொண்ட, கண்ணுக்கு ஒளியான சுண்ணப் பொடியைக் காட்டினாள்.
விளக்கம் : நச்சினார்க்சினியா இச் செய்யுளினையும் முன் செய்யுளையும் (874 - 875) ஒரு தொடராக்கிக் கொண்டுகூட்டிக் கூறும் உரை: அங்ஙனம் இருந்த காலத்தே குணமாலை பெயரைச் சுமந்த மாலையென்னுஞ் சேடி, எல்லோரும் விரும்புந் தன்மையை மேற்கொண்ட சுண்ணத்தை நீட்டினாள்; அது கண்டு கொடிபோல் வாள் குழலாள் சுரமஞ்சரி, அவள் குணமாலையுடனே இவ் வார்த்தையைக் கூறினாள். (25 )
876. சுண்ண மென்பதோர் பேர்கொடு சோர்குழல்
வண்ண மாலை நுசுப்பு வருத்துவா
னெண்ணி வந்தன கூறிவை யோவென
நண்ணி மாலையை நக்கன ளென்பவே.
பொருள் : சோர்குழல் வண்ண மாலை - சோர் குழலையுடைய குணமாலையே!; சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு - சுண்ணம் என்பதாகிய ஒரு பேரைக் கொண்டு; நுசுப்பு வருத்துவான் எண்ணி வந்தன - (சுமப்போர்) இடையை வருத்த நினைத்து (நின் சுண்ணம்) வந்தனபோலும்!; இவையோ! - (என் சுண்ணமாகிய) இவை யாகுமோ நின் சுண்ணம்?; கூறு என - சொல்லென்று; மாலையை நண்ணி நக்கனள் - குணமாலையை நெருங்கிய நகையாடினாள்.
விளக்கம் : என்ப, ஏ : அசைகள். நச்சினார்க்கினியர். குழலையும் நுசுப்பையும் உடைய மாலாய் ! இவை சுண்ண மென்னும் பெயரை ஏறட்டுக்கொண்டு நின்னை வருத்துவான் கருதி வந்தனவோ என்றணுகி அவளைத் தான் நக்காள். நக்கு, சொல்லின், என்னுடைய சுண்ணங்களைச் சொல்லாய், எனச் சொன்னாள் என்று கொண்டு கூட்டி உரைப்பர். (26)
877. பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை
யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற்
செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக்
கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள்.
பொருள் : பைம்பொன் நீள் உலகு அன்றி - பெரிய பசும் பொன்னுலகில் அன்றி; இப் பார்மிசை இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள எனில் - இவ்வுலகிலே இவ்விடத்தே என் சுண்ணத்தை ஒப்பன உள்ளன என்றால்; செம்பொன் பாவை அன்னாய்!- செம்பொன் பாவை போன்ற சுரமஞ்சரியே!; நீ செப்பு என - நீ கூறுக என்று குணமாலை சொல்ல; கொம்பு அன்னாளும் கொதித்து இது கூறினாள் - மலர்க் கொம்பு போன்ற சுரமஞ்சரியும் சினந்து இதனைக் கூறினாள்.
விளக்கம் : இம்பர் - இவ்விடத்தே. கொம்பனாள் - பூங்கொம்பு போன்றவளாகிய சுரமஞ்சரி. (27)
878. சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல
மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென
வண்ண வார்குழ லேழையர் தம்முளே
கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே.
பொருள் : சுண்ணம் தோற்றனம் தீம்புனல் ஆடலம் - சுண்ணப் பொடியாலே தோற்றோம் எனில் நீராடுவேமல்லேம்; வென்றார்க்கு எண் இல் கோடி பொன் ஈதும் என - அருகனுக்கு மாற்றற்ற கோடி பொன்னைக் கொடுக்கக் கடவேம் என்று சொல்ல; வண்ணம் வார்குழல் ஏழையர் கமழ் சுண்ணத்தின் - அழகிய நீண்ட கூந்தலையுடைய பேதையர் மணந்தரும் சுண்ணத்தினால்; தம்முளே கண் அற்றார் - தங்களுக்குள்ளே அன்பை விட்டனர்.
விளக்கம் : சுண்ணம் தோற்றலாவது - ஒருவர் சுண்ணம் ஒருவர் சுண்ணத்திற்குத் தாழ்ந்ததாய் அதனையுடையார் தோல்வியுறுதல். ஆடலம்: தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று. வென்றான் - ஈண்டு அருகக்கடவுள். கண்ணுறுதல் - பகைமை கோடல். (28)
வேறு
879. மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற்
கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச்
சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள்
வெல்வது சூதென வேண்டி விடுத்தார்.
பொருள் : மல்லிகை மாலை மணம் கமழ் வார்குழல் கொல் இயல் வேல்நெடுங் கண்ணியர் கூடி - மல்லிகை மாலையும் மணம் வீசும் நீண்ட குழலும் உடைய, கொல்லும் தன்மையுடைய வேலனைய நீண்ட கண்ணியர் இருவரும் கூடி; சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள் - சொல்லும் புகழிலே உயர்ந்த சுண்ண மாறுபாட்டிலே; சூது வெல்வது என வேண்டி விடுத்தார் - ஐயத்தை ஒழிப்பது என்று விரும்பித் தம் பணிப் பெண்களை அவற்றைக் காட்டி வருமாறு போகவிட்டனர்.
விளக்கம் : சுண்ணத்தினது மாறுபாட்டிலே வெல்லுமது நமக்குச் சொல்லும் புகழ் மேம்படும் வெற்றியென்று அவ் வெற்றியை விரும்பிப் போகவிட்டார் என்று கொண்டு கூட்டியுரைப்பர் நச்சினார்க்கினியர். சூது - ஐயம். கொல் - கொற்றொழிலுமாம். (29 )
880. இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற்
றட்டிடை யந்துகில் மூடிய தன்பினர்
நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை
மொட்டன மென்முலை மொய்குழ லாரே.
பொருள் : தாமரை மொட்டு அன மென்முலை மொய்குழலார் - தாமரை அரும்பனைய மென்முலையுடைய செறிந்த கூந்தலார் ஆகிய கனகபதாகை, மாலை என்போர்; இடு இடையார் இரு மங்கையர் ஏந்து பொன் தட்டிடை - நுண்ணிடையாராகிய இரு பணிப்பெண்கள் ஏந்திய (சுண்ணம் வைத்த) பொன் தட்டின்மேல்; அம் துகில் மூடி - அழகிய துணிகொண்டு மூடி; அதன்பினர் - சுண்ணத்தின் பின்னர் ; நெடுஇடை நீந்துபு சென்றனர் - நெடுந்தொலைவாக (மக்கள் திரளை) நீந்திச் சென்றனர்.
விளக்கம் : கனகபதாகை - சுரமஞ்சரியின் தோழி. மாலை - குணமாலையின் தோழி. இட்டிடையார் - சுரமஞ்சரியும் குணமாலையும் எனவும். இரு மங்கையர் கனகபதாகை, மாலை எனவும், மொய்குழலார் சேடியர் எனவும் நச்சினார்க்கினியர் கூறுவர். (30)
வேறு
881. சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை மாலை சேர்ந்து
வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர்கைக் காட்ட மைந்த
ரேர்தங்கு சுண்ண மிவற்றின்நலம் வேண்டின் வெம்போர்க்
கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் காண்மி னென்றார்.
பொருள் : சீர்தங்கு செம்பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து - சீருடைய கனகபதாகையும் மாலையும் கூடி ; வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கைக்காட்ட - கட்டப்பட்ட பொற்கழலணிந்த மைந்தர்களின் கையிலே அவற்றைக் காட்ட; மைந்தர் - அம் மைந்தர்கள்; ஏர்தங்கு சுண்ணம் - இவையிரண்டுமே அழகிய சுண்ணங்கள்; இவற்றின் நலம் வேண்டின் - இவற்றின் நன்மையைச் சிறப்புற அறிய விரும்பின்; வெம்போர்க் கார் தங்கு வண்கைக் கழல் - போரில் வல்ல, முகிலனைய கொடையுறு கையை உடைய, கழலணிந்த; சீவகன் காண்மின் என்றார் - சீவகனைக் கண்டு காட்டுவீராக என்றனர்.
விளக்கம் : மாலை என்பதற்கேற்ப மல்லிகை அடை கூறினார். மைந்தர் - ஈண்டு ஏதிலராகிய சில மைந்தர் என்றவாறு. ஏர்தங்கு சுண்ணம் என்றது இவை இரண்டுமே அழகிய சுண்ணங்களாகவே எமக்குத் தோன்றுகின்றன என்பதுபட நின்றது. இவற்று இன்நலம் எனக்கண்ணழித்து இவற்றின் அழகினையன்றி இனிமையின் நன்மையை நீங்கள் அறியவிரும்பின் எனப் பொருள் விரித்திடுக. வெம்போர்க்கை, வண்கை எனத் தனித்தனி கூட்டுக. சீவகற் காண்மின் என்றது சீவகனைக் கண்டு அவனுக்குக் காட்டி வினவுவீராக என்பது படநின்றது. (31)
882. வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் கேள்வி மைந்தர்
தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் சூழ மற்றப்
பூண்மின்னு மார்பன் பொலிந்தாங்கிருந் தான்வி சும்பிற்
கோண்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே.
பொருள் : வாள்மின்னு வண்கை வடிநூல் கடல் கேள்வி மைந்தர் - வாள் மின்னற்குக் காரணமான வளவிய கையினையும், தெளிந்த கடலனைய நூற்கேள்வியையும் உடைய தோழரும் தம்பியரும்; தாள் மின்னு வீங்கு கழலான் தனைச்சூழ - காலில்மின்னுமாறு கட்டிய கழலானாகிய தன்னைச் சூழ்ந்திருக்க; அப்பூண் மின்னும் மார்பன் - சீவகனாகிய அந்த அணிகலன் ஒளிரும் மார்பன்; விசும்பில் கோள்மின்னும் மீன் சூழ் - வானில், கோண்மீனும் விண்மீனும் சூழ்ந்த; குளிர் மாமதித் தோற்றம் ஒத்து ஆங்கு இருந்தான் - தண்ணிய பெரிய திங்களின் தோற்றம் போல அவ்விடத்திருந்தான்.
விளக்கம் : வீக்கு கழல் என்பது வீங்கு கழல் என விகாரப்பட்டது. கழலான் நந்தட்டன் எனவும், மார்பன் சீவகன் எனவும் நச்சினார்க்கினியர் வேற பிரித்துக் கூறுவர். அவரே, கழலானாகிய மார்பன் என்பாரும் உளர் என்று கூறுவதனால் ஒன்றாகக் கூறுதலே சிறப்புடைத்து. ஞாயிறு போல்வான் எனினும் கலையைத் தோற்றுவிப்ப இருத்தலின் ஈண்டு மதியை உவமை கூறினார். பன்மீன் நடுவண் பால்மதி போல - இன்னகை ஆயமோ டிருந்தோற் குறுகி (சிறுபாண் 219 - 20.) என்றார் பிறரும். இராகு கேதுக்களை ஒழிந்த ஏழு கோள்களும் சூழப்பட்டதொரு மதி இல்பொருளுவமை தோழர் நால்வரும் தம்பிமார் மூவரும் கோள்மீனுக்குவமை; மின்னும் மீனுக்கு ஒழிந்த தோழருவமை. இனி, ஞாயிறுந் திங்களும் தனக்குவமையாதலின், ஒழிந்த ஏழுகோளுமாம். (32)
வேறு
883. காளை சீவகன் கட்டியங் காரனைத்
தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல்
வாளை வவ்வியி கண்ணியர் வார்கழற்
றாளை யேத்துபு தங்குறை செப்பினார்.
பொருள் : காளை சீவகன் - காளையாகிய சீவகன் ; கட்டியங்காரனைத் தோளை ஈர்ந்திடவே - கட்டியங்காரன் தோளைப் பிளக்கவே; துணிவுற்ற நல்வாளை வவ்விய கண்ணியர் - துணிவு கொண்ட நல்ல வாளின் தன்மையைக் கொண்ட கண்களையுடைய அம் மங்கயைர்; வார்கழல் தாளை யேத்துபு தம்குறை செப்பினார் - நீண்ட கழலணிந்த காலை வணங்கித் தம் குறையைக் கூறினர்.
விளக்கம் : செய்ந்நன்றியறிந்து கைம்மாறு செய்யக்கருதுதலும் பகைவர் செய்த தீங்கு குறித்து அவர்க்குத் தீங்குசெய்யக் கருதுதலும் அரசநீதி என்பது தோன்ற தோளையீர்ந்திடவே துணிவுற்ற வாள் என்றார். ஆதியாய அரும்பகை நாட்டுதல் (1920) என்றார் மேலும் என்பர் நச்சினார்க்கினியர். (33)
884. சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக்
கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங்
கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல்
வண்ண மாலையி னீரெனக் கூறினான்.
பொருள் : அண்ணல் ! நல்லன சுண்ணம் சூழ்ந்து அறிந்து - அண்ணலே ! நல்லனவாகிய சுண்ணத்தை ஆராய்ந்து பார்த்து; எங்களுக்குக் கூறு - எங்கட்குச் சொல்க; அடியேம் குறை என்றலும் - இதுவே அடியேம் வேண்டுகோள் என்று அம்மங்கையர் கூறினவுடன்; கண்ணின் கண்டு - கண்ணாலே பார்த்து; கருங்குழல் வண்ண மாலையினீர்! - கரிய குழலில் அழகிய மாலையுடையீர் !; இவை நல்ல எனக் கூறினான் - இவை நல்லவை என்று கூறினான்.
விளக்கம் : இவை நல்ல எனக் குணமாலையின் சுண்ணத்தைக் கூறினான். அவர்கள், இரண்டையும் நல்ல எனக் கூறுகிறான் என்றெண்ணினர். பலவுங் கூட்டி இடித்தலின் இவை எனச் சுண்ணத்தைச் கூறுகிறார். (34)
885. மற்றிம் மாநகர் மாந்தர்கள் யாவரு
முற்று நாயியுங் கண்டு முணர்ந்திவை
பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி
கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ.
பொருள் : இம் மாநகர் மாந்தர்கள் யாவரும் - இப்பெருநகரில் உள்ள மக்கள் எல்லோரும்; உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்து - தொட்டும் மோந்தும் பார்த்தும் ஆராய்ந்து; இவை பொற்ற சுண்ணம் எனப் புகழ்ந்தார் - (வேறுபாடு கூறாமல்) இவை நல்ல சுண்ணப் பொடி என்று புகழ்ந்தனர்; நம்பி! கற்றதும் அவர் தங்களொடே கொல்?- நம்பியே! நீ கற்றதும் அவர்களுடனேயோ?
விளக்கம் : உற்றும், என்றது கையாற்றொட்டுப் பார்த்தும் என்றவாறு. நாறியும் என்றது, மூக்கான் முகந்து பார்த்தும் என்றவாறு. பொற்றசுண்ணம் - பொலிவுடைய பொடி. நம்பி கற்றதும் அவர் தங்களொடே கொலோ என்றது, சீவகனை அம்மகளிர் அசதியாடியபடியாம். நீ நன்கு இதனை ஆராய்ந்து பாராமல் கூறுகின்றனை என்பது கருத்து. (35)
886. ஐய னேயறி யும்மென வந்தனம்
பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ
நொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதங்
கையி னாற்றொழு தார்கமழ் கோதையார்.
பொருள் : ஐயனே அறியும் என வந்தனம் - சீவகனே அறிவான் என்று பிறர்கூறக் கேட்டு நின்னிடம் வந்தோம்; நூற்கடல் ! அது பொய் அன்றிப் புலமை நுணுக்கி - நூற் கடலே! அது பொய் ஆகாமற் புலமையானே நுண்ணியதாக ஆராய்ந்து; நொய்தின் தேர்ந்து நீ உரை என்று - விரைந்து தெரிந்து நீ கூறுக என்று; கமழ் கோதையார் தம் கையினால் தொழுதார் - மணக்கும் மலர்மாலையார் தம் கையினாலே தொழுதனர்.
விளக்கம் : புலமை - நுண்மாணுழைபுலம். நுணுக்குதலாவது. அதனைப் பின்னும் கூரிதாக்கி ஆராய்ந்தல். நொய்தின் - விரைவின். நூற்கடல: அன்மொழித்தொகை ஈண்டு விளியாக நின்றது. (36)
887. நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி
தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற்
புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண
மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே.
பொருள் : இவை நல்ல சுண்ணம் - இவை தூய சுண்ணம்; இவை இவற்றின் சிறிது அல்ல சுண்ணம் - இவை இவற்றினும் சிறிது நல்லவையல்லாத சுண்ணம்; அதற்கு என்னை என்றிரேல் - அதற்குக் காரணம் என்னென்று வினவினிரேல்; பொற்பு உடைப் பூஞ்சுண்ணம் புல்லு கோடைய - நன்மையுடைய அழகிய இச் சுண்ணம் பொருந்திய கோடையில் இடித்தவை; அல்ல சீதம்செய் காலத்தின் ஆயவே - மற்றவை குளிர்ச்சியுடைய மாரி காலத்தில் இடித்தவை(என்றான்).
விளக்கம் : இவை நல்ல சுண்ணம் என்றும், இவை இவற்றிற் சிறிது அல்ல சுண்ணம் எனவும் சுட்டினை ஈரிடத்துங் கொள்க. நல்ல என்பதனை இவற்றிற் சிறிது நல்ல அல்ல என்றும் ஓட்டுக. இவை தீயசுண்ணம் என்னாது நல்ல அல்ல சுண்ணம் என்றது சீவகனுடைய மொழித் திறத்திற்கொர் சான்றாம். (37)
888. வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந்
தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா
மோரும் வையத் தியற்கையன் றோவெனா
வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள்.
பொருள் : வாரம் பட்டுழித் தீயவும் நல்ல ஆம் - ஒருவர் மேல் அன்புற்ற காலத்து அவர்செய்யும் தீங்குகளும் நல்ல ஆகும்; தீரக் காய்ந் துழி நல்லவும் தீய ஆம் - முற்றும் வெறுப்புற்ற காலத்து அவர் செய்யும் நன்மைகளும் தீய ஆகும்; வையத்து இயற்கை அன்றோ? ஓரும் என - உலக இயற்கையிஃது அன்றோ ? ஆராய்ந்து பாரும் என்று; வீரவேல் நெடுங் கண்ணி விளம்பினாள் - வீர வேலனைய நீண்ட கண்ணினளாகிய கனகபத்கை கூறினாள்.
விளக்கம் : ஓரும் என்னும் முற்றுச்சொல், பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை(தொல். வினை. 30) என்ற சூத்திரத்தில் விளக்கின நிகழ்கால உம்மீறன்றி எதிர்கால உணர்த்தும் முன்னிலைப் பன்மையாகலின். இஃது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. இச் செய்யுட் கருத்தோடு காய்வதன்கண் உற்ற குணந்தோன்றாதாகும், உவப்பதன்கண் குற்றமுந் தோன்றா கெடும் எனவரும் அறநெறிச்சாரவெண்பா (23) நினைவுகூரற்பாலது. (38)
889. உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால்
வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக்
கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற்
றெள்ளி நெஞ்சிற் றெளிகெனச் செப்பினான்.
பொருள் : வள்ளல்! - வள்ளலே !; உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் - நீ கூறிய குறைகளை என் நெஞ்சு கொள்ளத் தெளிவித்தால் அன்றி; நீங்கப் பெறாய், வளைத்தேன் என - போகப் பெறாய் ; நின்னைத் தடுத்தேன் என்று கனகபதாகை மேலும் வற்புறுத்த; கள்செய் கோதையினாய்!- தேன் துளிக்கும் மாலையினாய்!; கரிபோக்கினால் - சான்று விடுத்தால்; நெஞ்சில் தெள்ளித் தெளிக எனச் செப்பினான் - உள்ளத்தே ஆராய்ந்து தெளிக என்று சீவகனும் கூறினான்.
விளக்கம் : போக்குதல், நூலாற் போக்குதல் என்றாற்போல உணர்த்தன்மேற்று. வள்ளல் : விளி. கரி - சான்று. (39)
890. கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு
மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை
நண்ணு தீஞ்சொ னவின்றபு ளாதியா
மண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள்.
பொருள் : அண்ணல் ! - பெருந்தகையே!; எண்ணின் - எண்ணினால்; கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும் - கண்ணை உடைய மக்களினும் கண் இமையாதவர்களினும்; நின் சொல் இகந்து அறிவார் இலை - உன் சொல்லைக் கடந்தறிவார் இல்லை; நண்ணு தீஞ்சொல் நவின்றபுள் ஆதியா - (ஆதலின் அவர்களை ஒழிய) தம்மினத்தில் ஒன்றை ஒன்று அழைக்குஞ் சொல்லையறிந்து பயின்ற பறவைகள் முதலாக; நீக்கின அஃது - தெளிந்து இச் சுண்ணத்தை நீக்கின் அதனை; ஒட்டுவல் யான் என்றாள் - பொருந்துவேன் நான் என்றாள்.
விளக்கம் : கண்ணின் மாந்தர் என்றது இமைக்கும் கண்ணையுடைய மாந்தர் என்பதுபட நின்றது. இகத்தல் - கடத்தல். (40)
891. காவில் வாழ்பவர் நால்வ ருளார்கரி
போவர் பொன்னனை யாயெனக் கைதொழு
தேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள்
கோவை நித்தில மென்முலைக் கொம்பன்றாள்.
பொருள் : பொன் அனையாய்! - திருவைப் போன்றவளே!; காவில் வாழ்பவர் நால்வர் உளார் - பொழிலில் வாழ்பவர் நால்வர் (பறவை யினத்தவர்) உளார்; கரி போவர் என - அவர்கள் சான்று வருவர் என்று சொல்ல; கோவை நித்திலம் மென்முலைக் கொம்பு அனாள் - முத்துமாலை அணிந்த மென்மையான முலையை உடைய பூங்கொம்பு போன்றவள் ; கைதொழுது எம்பெருமான் சொன்னவாறு ஏவல் என்றாள் - கைகூப்பி எம்மிறையே நீ கூறியவாறே யாம் இத்தன்மை ஆம் என்றாள்.
விளக்கம் : நால்வர் என்று உயர்திணையாற் கூறுதல். ஒருவரைக் கூறும் (தொல். கிளவி. 27) என்னுஞ் சூத்திரத்து ஒன்றென முடித்தலாற் கொள்க. நால்வர் உளர் என்றது, நான்குவகைப் பறவைகள் (வண்டுகள்) உள என்றவாறு. அவை சான்றாஞ் சிறப்பு நோக்கி உயர்திணையாக ஓதினன் என்று சீவகன் கூற என வினைமுதல் விருவித்தோதுக. கொம்பனாள்: கனகபதாகை. (41)
892. மங்கை நல்லவர் கண்ணு மனமும்போன்
றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்
வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது
வுண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்.
பொருள் : மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று - மங்கையராகிய நல்லவரின் கண்ணையும் உள்ளத்தையும் போல; எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்! - எங்கும் கடிதாக ஓடித் தட்டித் திரியும் சுரும்புகளே ! ; ஒண் மிஞிற்று ஈட்டங்காள் - ஒள்ளிய மிஞிற்றின் திரள்களே!; மது உண்டு மகிழ் வண்டுகாள்!- தேனுண்டு மகிழும் வண்டுகளே!; மது உண்டு தேக்கிடும் தேனினங்கள் - தேன் உண்டு தேக்கெறியும் தேன் திரள்களே.
விளக்கம் : இஃது அடுத்த செய்யுளுடன் தொடரும். இவ்வாறு கொண்டு கூட்டுவது நச்சினார்க்கினியர் கருத்தே. அவர் கூறும் அதற்குரிய காரணமும் பறவைகட்குச் செவியறிவு உண்டா என்னும் ஆராய்ச்சியும் சீவகன் விலங்கு பறவை முதலியவற்றின் ஒலிக்குறிப்பை அறிவானென்பதும் பின்வருமாறு: கண்ணும் மனமும்போன்று எங்கும் கடிதாக ஓடித் தட்டித்திரியும் சுரும்புகாள் மிஞிறுகாள் என்க. மிஞிற்றிற் சுரும்பு சிறத்தலின் அதனை முற்கூறினார். கண் சென்றுழிச் செல்கின்ற மனத்தொடே உவமித்தலின் இது நிரனிறை; இவை எல்லா மணத்திலும் செல்லும். மதுவுண்டு மகிழ்கின்ற வண்டுகாள்! மதுவுண்டு தேக்கிடுகின்ற தேன்காள்! என்க. இவை நல்ல மணத்தே செல்லும். (சீவக. 3033, 3034) சுரும்பு முதலியன கூறும் பாஷையைச் சீவகன் உணர்ந்திருத்தலின், அதனால் அவற்றை அழைத்தான் என்று கொள்க; விக்கிரமாதித்தன் எறும்பின் மொழியை அறிந்தான் என்று கதை கூறுகின்றமையின். தாதுண்தும்பி போது முரன் றாங்கு (மதுரைக். 655) என்றும், இரங்கிசை மிஞிறொடு தும்பி தா தூத (கலி. 33) என்றும் கூறுதலின், தும்பியது கிளையாம் இந் நான்கும் என்க. நண்டுந் தும்பியும் நான்கறிவினவே - பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல். மரபு 31) என்று தும்பிக்குச் செவியின் றெனவே, இவற்றிற்குஞ் செவியின்றாம் ஆதலின், வருத்த மிகுதியான் இவற்றை நோக்கி வாளா கூறியதன்றி வேறன்று. இவை ஈண்டு வந்து கரிபோதலில்; கேள்வியில்லன வருதல் என்னை? என்பது கடா. அதற்கு விடை : ஆசிரியர் நண்டுந் தும்பியும் என்று தும்பியைப் பின் வைத்தது, மேல்வருஞ் சூத்திரத்தின், மாவும் மாக்களும் ஐயறி வென்ப (தொல். மரபு. 32) என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற் கென்றுணர்க. இதனை, வாராததனால் வந்தது முடித்தல் என்னுந் தந்திர வுத்தியாற் கொள்க வென்று ஆண்டு உரை கூறிப் போந்தாம். (இதனால் நச்சினார்க்கினியர் இந் நூலுக்கு உரை செய்வதற்கு முன்னரே தொல்காப்பிய உரை செய்தாரென்பது தெளிவு) அதுவே ஆசிரியர் கருத்தென்பது சான்றோர் உணர்ந்தன்றே, பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த - தா துண்பறவை பேதுறல் அஞ்சி, மணிநா யாத்த மாண்வினைத் தேரன் (அகநா. 4) என்று அப்பொருள் தோன்றக் கூறியதென்றுணர்க. இக் கருத்தான் இவரும் செவியுணர்வுண்டென்று கூறினார்.
இங்ஙனம் கூறாது தான்கற்ற விஞ்சையின் ஆணையாற் கேள்வியுணர்வு பிறப்பித்தான் எனின், அவை கரிபோத லாகாவாம், எண்ணின் நின்சொல் இகந்தறிவாரிலை (சீவக. 890) என்றலின். (இவ்வாறு நச்சினார்க்கினியர் வண்டுகடகுச் செவியுணர் பேற்ற முயல வேண்டுவதென்னை? காவியக் கற்பனை யெனல் சாலாதோ?) (42)
893. சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமு
மாலை யென்னு மடமயில் சுண்ணமுஞ்
சால நல்லன தம்முளு மிக்கன
கோல மாகக்கொண் டுண்மி னெனச்சொன்னான்.
பொருள் : சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமும் - பொழில் மயில் போல்வாள் சுரமஞ்சரியின் சுண்ணமும்; மாலை என்னும் மடமயில் சுண்ணமும் - குணமாலை யென்னும் இளமயில் போல்வாளின் சுண்ணமும்; சால நல்லன - மிகவும் நல்லனவே; தம்முளும் மிக்கன - அவற்றினுள்ளும் சிறந்தவற்றை; கோலம் ஆகக் கொண்டு உண்மின் எனச் சொன்னான் - நல்லன என்றறிந்து கொண்டு உண்மின் எனச் சொன்னான்.
விளக்கம் : வெறாதிருத்ததற்கு இருவரையும் மயில் என்றான். மஞ்ஞைபோல்பவளாகிய சுரமை எனக். சுரமை: சுரமஞ்சரி. மாலை: குணமாலை. கோலம் - அழகு ஈண்டு நன்மைப் பண்பின் மேனின்றது. (43)
894. வண்ண வார்சிலை வள்ளல்கொண் டாயிடை
விண்ணிற் றூவியிட் டான்வந்து வீழ்ந்தன
சுண்ண மங்கை சுரமைய மாலைய
வண்ண வண்டொடு தேன்கவர்ந் துண்டவே.
பொருள் : வண்ணம் வார்சிலை வள்ளல் கொண்டு - (இங்ஙனம் கூறிய) அழகிய நீண்ட வில்லேந்திய சீவக வள்ளல் இரண்டையும் இரண்டு கையிலும் கொண்டு; ஆயிடை விண்ணில் தூவியிட்டான் - ஆங்கே வானிலே தூவிவிட்டான்; மங்கை சுரமைய சுண்ணம் வீழ்ந்தன - மங்கை சுரமஞ்சரியின் சுண்ணம் நிலத்தே வீழ்ந்தன; மாலைய வண்ணம் வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே - குணமாலையின் சுண்ணங்களை அழகிய வண்டும் தேனும் கவர்ந்துண்டன.
விளக்கம் : இச் செய்யுளாலும் வண்டும் தேனும் சிறந்தன என்பது தெரிகிறது. தூவியிட்டான்: ஒருசொல். சுரும்பும் மிஞிறும் ஒரு பண்பினவாதலின் சேர்ந்து ஒரு கையை (சுரமை சுண்ணம்) நோக்கின. (எனினும், உண்ணவில்லை) மற்றைய ஒரு பண்புடையவாகலின், சேர்ந்து மற்றைக் கையை நோக்கின. உண்ணாமல் வந்தவற்றிற்கு வைத்திடாமல் இவை கடிதுண்டன என்பது தோன்றக், கவர்ந்து என்றார். (44)
895. தத்து நீர்ப்பவ ளத்துறை நித்திலம்
வைத்த போன்முறு வற்றுவர் வாயினீ
ரொத்த தோவென நோக்கிநுந் நங்கைமார்க்
குய்த்து ரைம்மினிவ் வண்ண மெனச்சொன்னான்.
பொருள் : தத்தும் நீர்ப்பவளத்து உறை நித்திலம் வைத்தபோல் - தத்தும் அலைநீரில் தோன்றிய பவளத்தே இருப்பன சில முத்துக்களைக் கொண்டு வந்து வைத்தாற்போலும்; முறுவல் துவர் வாயினீர் - முறுவலுடைய செவ்வாயினீர்!; ஒத்ததோ என நோக்க - (நாள் கூறிய நடுநிலை நுங்கட்குப்) பொருந்தியதோ என்று (இருவர் முகமும்) நோக்கி ; நும் நங்கைமார்க்கு இவ்வண்ணம் உய்த்து உரைமின் எனச் சொன்னான் - நும் தலைவியர்க்கு யான் தேற்றின முறையை மனம் கொள்ளுமாறு கூறுவீர் என்றனன்.
விளக்கம் : வேட்கை நிகழாத போதும் மகளிரைச் சிறப்பித்துக் கூறல் இயல்பு என்பது தோன்ற இருவரையும் சிறப்பித்துக் கூறினான். (45)
896. நீல நன்கு தெளித்து நிறங்கொளீஇக்
கோல மாக வெழுதிய போற்குலாய்
ஞாலம் விற்கும் புருவத்து நங்கைகண்
போலும் வேலவ னேபுகழ்ந் தேனென்றாள்.
பொருள் : நீலம் நன்கு தெளித்து நிறம் கொளீஇ - நீல மணியை நன்றாகக் கரைத்து நிறமும் கலந்து; கோலம் ஆக எழுதிய போல் குலாய் - அழகுற எழுதியவைபோல் வளைந்து; ஞாலம் விற்கும் புருவத்து - உலகை விற்கும் புருவத்தினையுடைய ; நங்கை கண்போலும் வேலவனே!- சுரமஞ்சரியின் கண்களைப் போலத் தப்பாத வேலவனே!; புகழ்ந்தேன் என்றாள் - நீ தேற்றின முறையை யான் உடம்பட்டுப் புகழ்ந்தேன் என்று கனகபதாகை கூறினாள்.
விளக்கம் : இவன் தெளிவித்த முறை இவற்கு வேட்கை நிகழ்வது கருத்தாகக் கூறினாள்; அது மேல், என் மனத்தின் உள்ளன (சீவக. 2006) என்பதனான் உணர்க. (46)
வேறு
897. சோலையஞ் சுரும்பிற் சுண்ணந் தேற்றிய தோன்ற றன்னை
வேலையம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி
மாலைக்கு வென்றி கூற மழையிடிப் புண்டோர் நாக
மாலையத் தழுங்கி யாங்கு மஞ்சரி யவல முற்றாள்.
பொருள் : சோலை அம் சுரும்பின் சுண்ணம் தேற்றிய தோன்றல் தன்னை - பொழிலின்கண் வாழும் அழகிய வண்டுகளாற் சுண்ணத்தைத் தெளிவித்த சீவகனை; வேல் ஐயம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி - வேலோ என்று ஐயப்படுத்தின கண்ணினர் தொழுது விரைந்து சென்று; மாலைக்கு வென்றி கூற - குணமாலைக்கு வெற்றி என்று சொல்ல; ம்ழை இடிப்புண்டு ஓர் நாகம் ஆலயத்து அழுங்கி ஆங்கு - முகிலிடியுண்டு ஒரு பாம்பு தானுறையும் இடத்தே வருந்தினாற்போல; மஞ்சரி அவலம் உற்றாள் - சுரமஞ்சரி வருத்தமடைந்தாள்.
விளக்கம் : தோன்றல் - சீவகன். தொழுதனர்- முற்றெச்சம். மாலை : குணமாலை. ஆலையம் - உறையுள். மஞ்சரி : சுரமஞ்சரி. (47)
வேறு
898. திங்க ளங்கதிர் செற்றுழக் கப்பட்ட
பங்க யப்படு வொத்துளை பாவாய்
நங்கை யென்னொடு ரையாய்நனி யொல்லே
யிங்க ணென்றடி வீழ்ந்திரந் திட்டாள்.
பொருள் : திங்கள் அம் கதிர் செற்று நங்கை உழக்கப்பட்ட - திங்களின் அழகிய கதிர் தாக்கிக் கலக்கமுற்ற; பங்கயப்படு ஒத்துஉளை பாவாய்! - தாமரை மடுவைப் போல வருந்தும் பாவையே! நங்கையே!, இங்கண் என்னொடு நனி ஒல்லே உரையாய் - இங்கு என்னொடு இனிமையாக முன்புபோல விரைந்து உரையாடுவாய்!; என்று அடி வீழ்ந்து இரந்திட்டாள் - என்று அவளடியிலே விழுந்து வேண்டினாள் குணமாலை.
விளக்கம் : ஒத்துளை - ஒத்தாய் என்றுமாம். இயற்கையிலேயே தண்மையுடைய திங்களின் கதிர் தீங்கிலதாகவும் அக்கதிர் கண்டாற்றாது வருந்துதல் தாமரைக்கியல்பு. நின் வருத்தத்திற்குக் காரணம் என் வெறறியன்று, நீ காரணமின்றியே கலங்குகின்றனை என்பாள், இங்ஙனம் உவமை தேர்ந்து கூறினாள் எனக. பங்கயப்படு ஒத்துளை பாவாய் என்றாரேனும் படுவிற்பங்கயம் ஒத்து என்றல் கருத்தாகக் கொள்க; என்னை? திங்கட் கதிர்க்கு உளைவது தாமரையேயல்லது படுவன்மையான் என்க. படு - மடு. (48)
899. மாற்ற மொன்றுரை யாண்மழை வள்ளலென்
னேற்ற சுண்ணத்தை யேற்பில வென்றசொற்
றோற்று வந்தென் சிலம்படி கைதொழ
நோற்ப னோற்றனை நீயென வேகினாள்.
பொருள் : மாற்றம் ஒன்று உரையாள் - சுரமஞ்சரி விடை ஏதும் கூறிலளாய்; மழை வள்ளல் - முகிலனைய கொடையாளியான சீவகன்; ஏற்ற என் சுண்ணத்தை - தகுதியான என்னுடைய சுண்ணத்தை; ஏற்புஇல என்ற சொல் - (நின்மேல் விருப்பினால்) தகுதியில்லாதன என்ற சொல் உட்பட; தோற்று வந்து என் சிலம்பு அடி கைதொழ - தோற்றுச் சொல்லி வந்து என் சிலம்பு புனைந்த அடிகளைக் கையாலே தொழுதற்கு; நோற்பல் - நோற்பேன்; நீ நோற்றனை என - நீ (முன்னரே) நோற்றனை என்ற குறிப்புடன் குணமாலையை நோக்கியவளாய்; ஏகினாள் - வறிதே சென்றாள்.
விளக்கம் : இஃது உட்கோள். பெருமையும் உரனும் ஆடுஉ மேன (தொல். களவு. 7) என்பதனால், தன் வேட்கை மறைத்தான். தீண்டிலேன் ஆயின் உய்யேன் - சீறடி பரவ வந்தேன் அருள்எனத் தொழுது சேர்ந்து (சீவக. 2072) என மேற்கூறுதலின், ஈண்டுச் சொற்றேற்று அடிதொழ என்று கருதினாள். இக் கருத்து அங்ஙனம் முடிக்கின்ற ஊழால் இவட்கு நிகழ்ந்தது. (49)
900. கன்னி மாநகர்க் கன்னியர் சூழ்தரக்
கன்னி மாட மடையக் கடிமலர்க்
கன்னி நீலக்கட் கன்னிநற் றாய்க்கவள்
கன்னிக் குற்றது கன்னியர் கூறினார்.
பொருள் : கன்னி நீலக் கடிமலர்க் கண்கன்னி - புதிய நீலமாகிய, மணமுற்ற மலர்போலுங் கண்களையுடைய சுரமஞ்சரி; கன்னியர் சூழதரக் கன்னிமாநகர்க் கன்னிமாடம் அடைய - கன்னிப் பெண்கள் சூழ்ந்துவர அழிவற்ற பெரிய நகரிற் கன்னிமாடத்தைச் சேர்ந்தாளாக; நற்றாய்க்கு அவள் கன்னிக்கு உற்றது - அவள் நற்றாயான சுமதி காரணங் கேட்ட பின் அவள் மகளான கன்னிப் பருவமுடைய சுரமஞ்சரிக்கு நேர்ந்ததை; கன்னியர் கூறினார் - பெண்கள் கூறினார்கள்.
விளக்கம் : கன்னி மாநகர் - அழிவில்லாத பெரிய நகரம். கன்னி நீலக்கடிமலர்க்கண் கன்னி கன்னியர் சூழ்தரக் கன்னி மாநகர்க் கன்னிமாடம் அடைய என மாறுக. கன்னி நீலம் - புதிய நீலம். கன்னியர் நற்றாய்க்குக் கன்னிக்கு உற்றது கூறினார் என மாறுக. கன்னியர் - அவள் தோழியர். கன்னிக்கு என்றது சுரமஞ்சரிக்கு என்னும் பொருட்டாய் நின்றது. (50)
901. கண்கள் கொண்ட கலப்பின வாயினும்
பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென்
றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப்
பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள்.
பொருள் : கண்கள் கொண்ட கலப்பின ஆயினும் - கண்கள் ஒன்றன் குறிப்பினை ஒன்று தப்பாமல் கொண்ட கலப்பின ஆனாலும்; பெண்கள் கொண்ட பிற செற்றம் விடா என்று - பெண்கள் தம் மனத்திற் கொண்ட தனிப்பட்ட செற்றங்களை விடமாட்டார் என்று (மனத்திற் கொணடு); ஒண்கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு - ஒளியுடைய கண்ணாளாகிய சுரமஞ்சரியின் நற்றாய், தந்தையாகிய குபேரதத்தனுக்கு; பண்கொள் தேன்மொழியால் பயக்கூறினாள் - பண்ணனைய இனிய மொழியால் மெல்ல உரைத்தாள்.
விளக்கம் : கூறியவை அடுத்த இரண்டு செய்யுளிலும் வரும். பெண்கள் என்றது பெண்ணினங்கள் என்னும் பொருட்டு ஆதலின் அஃறிணை முடிபேற்றது. பெண்கள் சாதிப்பன்மை என்பர் நச்சினார்க்கினியர். ஒண்கணாளவன் ஒண்கணாளாகிய அச்சுரமஞ்சரியின். தாய் பெயர் - சுமதி, தந்தை பெயர் - குபேரதத்தன் என்பவற்றை மேல் வரும் (2075-76 ஆம்) செய்யுள்களான் உணர்க. (51)
902. விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினா
ரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற்
கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினு
முண்ண லேனினி யென்றுரை யாடினாள்.
பொருள் : நும்மகள் எண்ணம் - நும் மகளின் நினைவு; விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார் எண்ணம் - வானில் திரியும் திங்களை நீக்க விரும்பினோர் எண்ணமாயிருந்தது; யாது எனின் - அந்த எண்ணம் யாது என்றால்; கண்ணின் ஆடவர்க் காணினும் கேட்பினும் - கண்ணாலே ஆடவரைக் கண்டாலும் ஆடவர் என்ற சொல்லைக் காதினாலே கேட்டாலும்; இனி உண்ணலேன் என்று உரையாடினாள் - இனி உண்ணமாட்டேன் என்று கூறினாள்.
விளக்கம் : மற்று : அசை. நும்மகள் எண்ணம் விண்ணின் திங்கள் விலக்குதல் மேயினார் எண்ணம் போன்று முற்றுப் பெறாததோர் எண்ணம் என்றவாறு. கண்ணின் ஆடவர் என்றதற்கேற்பக் காதின் ஆடவர் சொல்லைக் கேட்பினும் என்றும் வருவித்துக் கூறுக.(52)
903. இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை
தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா
டின்றே னாவிக்கோர் கூற்ற மெனநையா
நின்று நீலக்கண் ணித்திலஞ் சிந்தினாள்.
பொருள் : இன்று நீர் விளையாட்டினுள் - இன்று நடந்த நீர்விளையாட்டிலே; ஏந்திழை - சுரமஞ்சரிக்கு; சுண்ணத்தில் தோன்றிய தொன்று வேறுபாடு - சுண்ணங் காரணமாக உண்டாகிய ஊழாலுண்டான வேற்றுமை; இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் - இப்போது என் உயிருக்கோர் காலனாயிற்று; என நையா நின்று - என்று கூறி வருந்தி நின்று; நீலக்கண் நித்திலம் சிந்தினாள் - நீலமலரனைய கண்களாலே முத்தனைய நீரைச் சிதறினாள்.
விளக்கம் : ஏந்திழை : சுரமஞ்சரி. தொன்று - ஊழ்வினை. தொன்று வேறுபாடு எனக்கூட்டி ஊழினால் வந்த வேறுபாடு என்க. ஆவி - உயிர். நையா : செய்யாவென்னெச்சம். நீலம் - நீலமலர் : ஆகுபெயர். நித்திலம் - கண்ணீர்: உவம ஆகுபெயர். (53)
வேறு
904. பட்டதென் னங்கைக் கென்னப் பாசிழைப் பசும்பொ னல்குன்
மட்டவிழ் கோதை சுண்ண மாலையோ டிகலித் தோற்றாள்
கட்டவிழ் கண்ணி நம்பி சீவகன் றிறத்திற் காய்ந்தா
ளட்டுந்தே னலங்கன் மார்ப வதுபட்ட தறிமோ வென்றாள்.
பொருள் : என் நங்கைக்குப் பட்டது என் என்ன - (அது கேட்ட குபேரதத்தன்) என் மகளுக்கு நேர்ந்தது யாது என்று வினவ; (நற்றாய்); தேன் அட்டும் அலங்கல் மார்ப! - தேன் சிந்தும் மாலை மார்பனே!; பாசிழைப் பரவை அல்குல் மட்டு அவிழ் கோதை - புத்தணி, யணிந்த பரந்த அல்குலையும் தேன் விரியும் மாலையையும் உடைய சுரமஞ்சரி; மாலையோடு இகலிச் சுண்ணம் தோற்றாள் - குணமாலையுடன் மாறுபட்டுச் சுண்ணத்தாலே தோற்றாள்; கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்திற் காய்ந்தாள் - முறுக்குடைந்த மலர்க் கண்ணி புனைந்த நம்பியாகிய சீவகனாலே ஆடவரை வெறுத்தாள்; அது பட்டது அறிமோ என்றாள் - அதுதான் நிகழ்ந்தது; அறிவாயாக என்று சுமதி கூறினாள்.
விளக்கம் : அறிமோ : மோ : முன்னிலை அசை. மாலை : குணமாலை. இகலிச் சுண்ணந்தோற்றாள் என்க. காய்தல் - வெறுத்தல். (54)
905. பள்ளிகொள் களிறு போலப் பரிவுவிட் டுயிர்த்தென் பாவை
யுள்ளிய பொருண்மற் றஃத லோபெரி துவப்பக் கேட்டேன்
வள்ளிதழ்க் கோதை மற்று நகரொடுங் கடியு மேனும்
வெள்ளநீ ணிதியி னின்னே வேண்டிய விளைப்ப லென்றான்.
பொருள் : பள்ளிகொள் களிறுபோல - துயில் கொள்ளும் யானைபோல; பரிவுவிட்டு உயிர்த்து - (குபேரதத்தன்) வருத்தந் தோன்ற நெடுமூச் செறிந்து; என் பாவை உள்ளிய பொருள் மற்று அஃதேல் - என் மகள் நினைத்த பொருள வேறொன்று அன்றி அத்தன்மை ஆயின்; ஓ பெரிது உவப்பக் கேட்டேன் - ஓ! மிகவும் மகிழ்வாகக் கேட்டேன்; வள்இதழ்க் கோதை - வளவிய மலர்க்கோதையாள்; மற்று நகரொடும் கடியுமேனும் - (இத்தெருவிலன்றி நகர்முழுதும் உட்பட ஆடவரை நீக்க விரும்பினாளெனினும்; வெள்ளநீர் நிதியின் - வெள்ளமென்னும் எண்கொண்ட செல்வத்தினால்; வேண்டிய இன்னே விளைப்பல் என்றான் - விரும்பியவற்றை இப்போதே முடிப்பேன் என்றான்.
விளக்கம் : மற்று: இரண்டும் வினைமாற்று. ஓர் மகிழ்ச்சிக் குறிப்பு. பள்ளிகொள்யானை பெருமூச்செறிதல் இயல்பு. இதனை - பள்ளி யானையின் வெய்ய உயிரினை எனவும் (நற்றிணை. 253-2.) , பள்ளி யானையின் உயிர்த்து எனவும் (குறுந். 142.) பிறசான்றோர் கூறுமாற்றானும் உணர்க. ஓ பெரிதென்புழி ஓகாரம் வியப்பின்கண் வந்தது. நகரொடும் என்புழி உம்மை சிறப்பு. எல்லாம் பொருளில் பிறந்து விடும் என்பதுபற்றி நிதியின் இன்னே விளைப்பல் என்றான். (55)
906. இன்னதோர் காலத் தின்னா
னொருமக ளின்ன தொன்றிற்
கின்னதோ ரிடத்தி னெல்லை
யாட்கடிந் தொழுகி னாள்போ
லின்னதோர் நகரி லென்றாங்
கென்பெயர் நிற்க வேண்டு
மின்னதோ ராரந் தம்மோ
வென்றுகொண் டேகி னானே.
பொருள் : இன்னது ஓர் காலத்து - இத்தன்மைத்தான ஒரு காலத்தே; இன்னான் ஒரு மகள் - இன்ன வணிகனுடைய ஒப்பற்ற மகள்; இன்னது ஒன்றிற்கு - இன்னதொரு செயலுக்கு; இன்னது ஓர் இடத்தின் எல்லை - இத் தெருவிடத்தின் எல்லையிலே; ஆள்கடிந்து ஒழுகினாள் - ஆடவரை வெறுத்து வாழ்ந்தாள்; இன்னது ஒர் நகரின் என்று - இத் தன்மைத்தான நகரிலே என்று; என் பெயர் நிற்க வேண்டும் - என்புகழ் நிலைபெற வேண்டும்; இன்னது ஓர் ஆரம் தம்மோ - விலையில்லாத இந்த ஆரத்தைத் தருவாயாக; என்று கொண்டு ஏகினான் - என்றுரைத்து, அதனைக் கையிற்கொண்டு சென்றான்.
விளக்கம் : போல், ஆங்கு: உரையசைகள். ஆங்கு - அரசனிடத்தே என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். தம்மோ - தருவாயக. நல்லெயில் உழந்த செல்வர்த் தம்மின் (மதுரைக். 731) என்றார் பிறரும். செயற்கரிய செயலாகலின் இதனால் புகழ் உண்டாதல் ஒருதலை என்பான்என் பெயர் நிற்கவேண்டும் என்றான். (56)
907. வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச்
செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு
மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப
கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே.
பொருள் : வையகம் மூன்றும் விற்கும் மாமணி ஆரம் ஏந்தி - மூவுலகையும் விலைகொள்ளும் பெரிய மணிமாலை ஒன்றை ஏந்திச் சென்று; செய்கழல் மன்னற்கு உய்த்து - கழல் அணிந்த வேந்தனுக்குக் கையுறையாக நல்கி; தன்குறை செப்பலோடும் - தன் வேண்டுகோளை விளம்பினவுடன்; ஐ என மன்னன் ஏவ - அழகியதே என்று வேந்தன் அவ்வாறு செய்யப் பணிக்க; ஆள் வழக்கு அற்றது - தெருவிலே ஆடவர் வழங்குதல் நீங்கியது; கைபுனை பாவை எல்லாம் - அப்போது அம் மாடத்திலே (கையாற்) செய்த ஆண் பாவைகளை எல்லாம்; கதிர்முலை ஆக்கினான் - ஒளிரும் பெண்பாவை ஆக்கினான்.
விளக்கம் : வையகம் என்றது ஈண்டு உலகம் என்னும் பொருட்டு; (வையகம் என்பது சிறப்பாக மண்ணுலகம் ஒன்றனையே குறிப்பதாகும்.) மாமணி - மாணிக்கமணி. ஐயென்றது உடன்பாட்டினைக் குறிப்பான் உணர்த்தியது. கதிர்முலை : அன்மொழித் தொகை. கதிர்முலை ஆக்கினான் என்ற குறிப்பான் ஆண்பாவையை என வருவித்தோதுக. (57)
வேறு
908. சென்று காலங் குறுகினுஞ் சீவகன்
பொன்றுஞ் சாகம் பொருந்திற் பொருந்துக
வன்றி யென்னிறை யாரழிப் பாரெனா
வொன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள்.
பொருள் : காலம் சென்று குறுகினும் - வாழ்நாள் தன் எல்லையை அடைந்து குறுகியதானாலும்; சீவகன் பொன்துஞ்சு ஆகம் பொருந்தின் பொருந்துக - சீவகனுடைய திருருமகள் துயிலும் மார்பைத் தழுவுறின் கூடுவதாக; அன்றி என்நிறை யார் அழிப்பார்?- அல்லது என் நிறையை அழிப்பார் ஒருவரும் இல்லை; எனா ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள் - என்று ஒன்றிய நினைவினளாகி ஒடுங்கினாள்.
விளக்கம் : காலம் ஈண்டு வாழ்நாள் மேனின்றது. யாரழிப்பார் என்னும் வினா அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்திநின்றது.
(58)
909. இன்பக் காரண மாம்விளை யாட்டினுட்
டுன்பக் காரண மாய்த்துறப் பித்திடு
மென்ப தேநினைந் தீர்மலர் மாலை தன்
னன்பி னாலவ லித்தழு திட்டாள்.
பொருள் : இன்பக் காரணம் ஆம் விளையாட்டினுள் - இன்பத்திற்குக் காரணமாகிய விளையாட்டின்கண்; துன்பக் காரணமாய் - அவ் விளையாட்டே துன்பத்திற்குக் காரணமாய்; துறப்பித்திடும் என்பதே நினைந்து - இன்பத்தை நீக்கிடும் என்பதை எண்ணி; ஈர் மலர்மாலை - குளிர்ந்த மலர்போன்ற குணமாலை; தன் அன்பினால் அவலித்து அழுதிட்டாள் - தன் அன்பால் எண்ணித் துன்புற்று அழுதனள்.
விளக்கம் : உள் என்பதற்கு இருவர் மனமும் ஒன்றாய் நடக்கும் கடுநட்பு என்று பொருளுரைப்பர் நச்சினார்ககினியர். அவர், கடுநட்புப் பகை காட்டும் என்னும் பழமொழியை இதற்குச் சான்றாக்கிவிட்டு, மேலும், இனி, விளையாட்டினுள் அவ் விளையாட்டுத் தானே துன்பக் காரணமாய் இன்பத்தைத் துறப்பிக்கும் என்ற பழமொழியுமாம். அது, விளையாட்டே சலாமம் என்னும் பழமொழி என்றுங் கூறுவர். இன்பக் காரணமே துன்பத்திற்கும் காரணமாதலை இக் காவியத்தினும் சிலப்பதிகாரத்தினும் இராமாயணத்தினும் காணலாம். ஏன்? காவியங்களனைத்தினும் காணலாம் போலும். அவளது குணநலந் தோன்ற ஈர்மலர்மாலை என்றார். இச்செய்யுளான் குணமாலை என்னும் அவள் பெயர்க்கேற்ப அவள் குணநலந் தோன்றுதலுணர்க. (59)
910. தண்ணந் தீம்புன லாடிய தண்மலர்
வண்ண வார்தளிப் பிண்டியி னானடிக்
கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரை
வண்ண மாமல ரேற்றி வணங்கினாள்.
பொருள் : தண்அம் தீ புனல் ஆடிய - குளிர்ந்த இனிய நீர் விளையாட்டை வேண்டி; தண்மலர் வண்ணம் வார் தளிர்ப்பிண்டியினான் அடிக்கு - குளிர்ந்த மலருடன் அழகிய நீண்ட தளிரையுடைய அசோகின் நிழலில் அமர்ந்த அருகனடிக்கென; எண்ணி - நினைந்து; ஆயிரம் ஏந்து பொன்தாமரை வண்ணமாமலர் - ஆயிரம் பொற்றாமரை மலர்களையும் பிற அழகிய மலர்களையும்; ஏற்றி வணங்கினாள் - இட்டுத் தொழுதாள்.
விளக்கம் : எண்ணி - இந் நட்பினைப் பிரித்த தீவினை நீங்கும் வழி இதுவென நினைந்து. புனலாடப் போகிறவள் இப் பிரிவுக்குக் கழுவாய் கண்டாள். (60)
911. ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென
மாசை மாக்கடன் மன்னவ னாடலின்
மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோ
ரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே.
பொருள் : ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என - விரும்பிய மக்களுடன் அந்தணரும் கொள்க என்று; மாசை மாக்கடல் மன்னவன் ஆடலின் - பெரிய பொற்கடலை அரசன் கையாண்டதால்; மீசை நீள் விசும்பின் தலைச்சென்றது ஓர் ஓசையால் - மேலே உள்ள பெரிய வானிலே சென்றதான ஓர் ஒலியுடன்; சனம் ஒள்நிதி உண்டது - மக்கள் திரள் சிறந்த நிதியை வாரிச் சென்றது.
விளக்கம் : ஆடுதல் என்பதற்குப் பிறத்தல் என்று பொருள் கொண்டும் கடல் என்னாது, கடன் என்றும் கொண்டு பெரியதொரு கடனாகப் பொன்னிலே பிறத்தலின் என்றும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். பொன்னிலே பிறத்தலாவது பொன்னாலே பசு ஒன்றைச் செய்து அதன் வாயாற் புகுந்து பின்புறத்தே வெளிவருதல். பிறகு அப் பொற்பசுவைத் தானஞ்செய்திடுவர். இஃது அரசர்க்குரிய தானங்களில் ஒன்றென்பர். உண்டற்குரிய அல்லாப் பொருளை - உண்டன போலக் கூறலும் மரபே (தொல். பொருளியல்-19) என்றதனால் உண்டது என்றார்; குணனுணப் பட்டோர் (கலி. 23) என்றாற்போல. மீசை - மிசை; முதனீண்டது. மீமிசை என்பதன் கண் மி : கெட்டது எனினுமாம். (61)
912. மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய
சிகரச் செவ்வரைத் தீநிறப் பொன்னெயி
னிகரி னேமிதன் னீணகர்க் காகெனா
நகரம் நாலிரு கோடி நயந்ததே.
பொருள் : மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய - மீனக் கொடியை உடைய காமனை வென்ற; சிகரச் செவ்வரைத் தீ நிறப் பொன் எயில் - உச்சியையுடைய செம்மலை போலும் வடிவத்தையும் நெருப்பின் வண்ணத்தையும் உடைய பொன்மதிலையுடைய; நிகரில் நேமிதன் நீள்நகர்க்கு - ஒப்பற்ற நேமிநாதரின் பெரிய கோயிலுக்கு; ஆகஎனா - ஆகுக என்று; நால் இருகோடி நகரம் நயந்தது - எட்டுக்கோடி பொன்னை நகரம் நீராடுதானமாக நல்கியது.
விளக்கம் : காமனை வாட்டிய நேமிநாதர்; காமனை வாட்டிய பொன் எயிலுமாம். அளித்தது என்றும் பாடம். மகரவெல் கொடிமைந்தன் என்றது காமனை. நேமி - நேமிசுவாமி என்னும் 22 ஆம் தீர்த்தங்கரர். நகரம், கோடி என்பன ஆகுபெயர்கள். (62 )
வேறு
913. உவாமுத லிரவலர்க் குடைமை யுய்த்தவர்
கவான்முதற் கூப்பிய கனக மாழையாற்
றவாவினை யடைகரை தயங்கு சிந்தை நீ
ரவாவெனு முடை கட லடைக்கப் பட்டதே.
பொருள் : இரவலர்க்கு உவாமுதல் உடைமை உய்த்தவர் - இரவலர்க்குப் பொன்னையே யன்றி யானை முதலான உடைமைகளை (முற்படக்) கொடுத்து அவர்கள்; கவான் முதல் கூப்பிய கனக மாழையால் - (பின்னும்) அவ்விரவலரின் காலடியிலே குவித்த பொற்கட்டியால்; தவாவினை தயங்கு சிந்தைநீர் - இரவலரின் கெடாத தீவினையாலுண்டாகிய உள்ள வருத்தம் என்னும் நீரினால்; அடைகரை உடை அவாஎனும் கடல் - அடைகரை உடைந்த ஆசையென்னும் கடல்; அடைக்கப்பட்டது - அடைபட்டது.
விளக்கம் : உவா - யானை. கவான் - துடை; ஈண்டுக் கால் என்னும் பொருட்டு. கவான் முதல் என்பதற்கு மடியின்மேல் எனினுமாம். கனக மாழை - பொற்கட்டி. சிந்தை - ஈண்டுத் துனபம். உடைகடல் : வினைத்தொகை.
வேறு
914. சீரர வச்சிலம் பேந்துமென் சீறடி
யாரர வக்கழ லாடவ ரோடும்
போரர வக்களம் போன்றுபொன் னார்புன
னீரர வம்விளத் தார்நிக ரில்லார்.
பொருள் : பொன் ஆர் புனல் - பொன் நிறைந்த யாறு; போர் அரவக்களம் போன்று - போர் செய்யும் ஆரவாரமுடைய களம்போலத் தோன்ற; நிகர் இல்லார் - ஒப்பில்லாராகிய; சீர் அரவச் சிலம்பு ஏந்தும் மென்சிறு அடியார் - ஒலிதரும் சிலம் பணிந்த மெனமையான சிற்றடி மங்கயைர்; அரசக் கழல் ஆடவரோடும் - ஒலிபெறுங் கழலணிந்த ஆடவரோடும்; நீர் அரவம் விளைத்தார் - நீராரவாரத்தை உண்டாக்கினர்.
விளக்கம் : போன்று - போல : எச்சத்திரிபு. உவமவுருபு வினையெச்சமும் பெயரெச்சமுமாய் நிற்கும். புனல் - யாறு : ஆகுபெயர்.
(64)
915. கார்விளை யாடிய மின்னனை யார்கதிர்
வார்விளை யாடிய மென்முலை மைந்தர்
தார்விளை யாட்டொடு தங்குபு பொங்கிய
நீர்விளை யாட்டணி நின்றதை யன்றே.
பொருள் : கார் விளையாடி மின் அனையார் - காரிலே நுடங்கிய மின்கொடி போன்ற மகளிரின்; கதிர் வார் விளையாடிய மென்முலை - கதிர்த்த வார் பயின்ற மென்முலைகள்; மைந்தர் தார் விளையாட்டொடு தங்குபு - மைந்தரின் தாரிலே விளையாடு தலிலே நிலைபெற்று; பொங்கிய நீர் விளையாட்டு அணி நின்றது - மிக்க நீர் விளையாட்டின் அழகு இடைவிடது நிகழ்ந்தது.
விளக்கம் : நின்றதை: ஐ; சாரியை. அன்று, ஏ: அசைகள். (65)
வேறு
916. விடாக்களி வண்டுண விரிந்த கோதையர்
படாக்களி யிளமுலை பாய விண்டதர்க்
கடாக்களிற் றெறுழ்வலிக் காளை சீவக
னடாக்களி யவர்தொழில் காண வேகினான்.
பொருள் : விடாக் களிவண்டு உண - விடாமல், களிப்பையுடைய வண்டுகள் உண்ணுமாறு; விரிந்த கோதையர் படாக்களி இளமுலை பாய - மலர்ந்த மலர்மாலையரின் சாயாத களிப்பை யூட்டும் இளமுலைகள் பாய்தலால்; விண்ட தார்க்கடாக் களிற்று ஏறுழ்வலிக் காளை - அலர்ந்த தாரணிந்த, மதயானை போன்ற மிக்க வலிபடைத்த காளையாகிய; சீவகன் - சீவகன் ; அடாக் களியவர் தொழில் காண ஏகினான் - ஒழுக்கக் கேடுபண்ணாத களிப்பையுடையார் விளையாட்டைக் காணச் சென்றான்.
விளக்கம் : நச்சினார்க்கினியர் காளை என்பது நந்தட்டனை உணர்த்துவதாகக் கூறிச் சீவகன் அடாக்களியவர் தொழில் காணுமாறு, நந்தட்டன் அங்கிருந்து போயினான் என்று பொருள் கூறுவர். அவர் மேலும் கூறுவதாவது: சுண்ணந் தேற்றுகின்ற காலத்திருந்த நந்தட்டன், சீவகன் நீர் விளையாட்டின் வினோதங் காணப்போதற்குத் தானும் தனக்குக் கூடுமவர்களுமாக வேறு போயினான் என்றவாறு. இவன் போகவே, வினோதத்திற்குக் கூடும் புத்திசேனனும் ஒழிந்தோரும் சீவகனைக் கூடினாராம். இவ்வாறு நச்சினார்க்கினியர் கூறுவதற்குக் காரணம் நீர் விளையாட்டணியைச் சென்று காணுதல் சீவகனுக்குத் தகவன்று என்று கருதியதாதல் வேண்டும். இனி, இவை யின்னனவும் பிறவும என்ற (சீவக. 933) செய்யுள் வரை நீர் விளையாட்டணி காணுதல் கூறப்படும். (66)
917. ஒன்றே யுயிரை யுடையீ
ரொருவிப் போமி னிவள்க
ணன்றே கூற்ற மாகி
யருளா தாவி போழ்வ
தென்றே கலையுஞ் சிலம்பு
மிரங்க வினவண் டர்ப்பப்
பொன்றோய் கொடியி னடந்து
புனல்சேர் பவளைக் காண்மின்.
பொருள் : இவள்கண் அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது? -இவள் கண்ணல்லவோ காலனாகி இரக்கம் இன்றி உயிரைப் போக்குகின்றது?; ஒன்றே உயிரை உடையீர்! ஒருவிப் போமின் - (ஆதலால்), சேமவுயிரின்றி ஓருயிரே உடையீர் நீங்கிப் போவீராக, என்றே கலையும் சிலம்பும் இரங்க - என்று கூறுவன போலவே மேகலையும் சிலம்பும் ஒலிக்க; இன வண்டு ஆர்ப்ப - கூட்டமாகிய வண்டுகள் ஆரவாரிக்க; பொன்தோய் கொடியின் நடந்து - பொன்னுலகிற் பொருந்திய காமவல்லி போல நடந்து சென்று; புனல் சேர்பவளைக் காண்மின்! - நீரில் இறங்குகின்றவளைக் காண்மின்!
விளக்கம் : இதுமுதல் நந்தட்டனும் அவன் தோழரும் தம்மிற் கூறுவன என்றே நச்சினார்க்கினியர் கூறுகின்றனர். உயிர் ஒன்றேயுடையீர் என மாறுக. என்றது இதுபோய்விடின் மேற்கோடாற்குத் துணையுயீர் இலீர் என்பது படநின்றது. சேம உயிர் - துணையுயிர். இச் செய்யுள் தற்குறிப்பேற்றம். பொன்தோய் கொடி என்றது கற்பகத்திற் படரும் காமவல்லியை. (67)
918. அழல்செய் தடத்துண் மலர்ந்த
வலங்கன் மாலை யதனை
நிழல்செய் நீர்கொண் டீர்ப்ப
நெடுங்கண் ணினையி னோக்கிக்
குழையும் பூணு நாணுங்
கொழுந னுவப்ப வணிகென்
றிழைகொள் புனலுக் கீயு
மிளையோ ணிலைமை காண்மின்.
பொருள் : அழல்செய் தடத்துள் மலர்ந்த - நெருப்பையுடைய தடத்திலே மலர்ந்த; அலங்கல் மாலை அதனை - அசைகின்ற பொன்னரிமாலையை; நிழல்செய் நீர் கொண்டு ஈர்ப்ப - தெளிந்த நீர் தானே கெண்டு போக; நெடுங்கண் இணையின் நோக்கி - அதனை நீண்ட இரு கண்களினாலும் பார்த்து; கொழுநன் உவப்ப அணிக என்று-(இவற்றையும்) நின் கணவன் மகிழ அணிந்து கொள்க என்றுரைத்து; குழையும் பூணும் நாணும் இழைகொள் புனலுக்கு ஈயும் - குழையையும் பூணையும் நாணையும் முன்னர்த் தன் அணியைக் கொண்ட நீருக்குக் கொடுக்கும்; இளையோள் நிலைமை காண்மின் - இளைய நங்கையின் தன்மையைக் காண்மின்.
விளக்கம் : அழல் செய்தடம் என்றது பொற்கொல்லருலையினை. நாண் - பொன்நாண். இழைதலையுடைய புனலுமாம். கொழுநன் - வருணன். நிலைமை - ஈண்டு பேதைமையின் மேற்று. (68)
919. கோல நெடுங்கண் மகளிர்
கூந்தல் பரப்பி யிருப்பப்
பீலி மஞ்ஞை நோக்கிப்
பேடை மயிலென் றெண்ணி
யாலிச் சென்று புல்லி
யன்மை கண்டு நாணிச்
சோலை நோக்கி நடக்குந்
தோகை வண்ணங் காண்மின்.
பொருள் : பீலி மஞ்ஞை நோக்கி - தோகை மயிலின் ஆடலைக்கண்டு; கோலம் நெடுங்கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்ப - அழகிய நீண்ட கண்களையுடைய பெண்கள் தங்கள் கூந்தலை விரித்துக் கொண்டு ஈரம் புலர்த்தியிருக்க; பேடை மயில் என்று எண்ணி - பெண்மயில் அவர்களை ஆண்மயில் என்று நினைத்து; ஆலிச் சென்று புல்லி - அகவிச் சென்று தழுவி; அன்மை கண்டு நாணி - தோகைமயில் அல்லாமையைக் கண்டு வெள்க; சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்மின்-(அதனைக் கண்டு தன் பேடை அறியுமாறு) பொழிலை நோக்கிச் செல்லும் தோகையின் அழகைப் பார்மின்.
விளக்கம் : இனி, நாணி யெனவே கொண்டு நாணிய பெட்டை, சோலையை நோக்கி நடக்கும் . அவ்வாறிருக்கும் தோகை போல்வாரைக் காண்மின் என்றுமாம். (69)
920. மின்னொப் புடைய பைம்பூ
ணீருள் வீழக் காணா
ளன்னப் பெடையே தொழுதே
னன்னை கொடியள் கண்டா
யென்னை யடிமை வேண்டி
னாடித் தாவென் றிறைஞ்சிப்
பொன்னங் கொம்பி னின்றாள்
பொலிவின் வண்ணங் காண்மின்.
பொருள் : மின் ஒப்புஉடைய பைம்பூண் நீருள் வீழக் காணாள் - மின்போல ஒளி வீசும் பசிய அணிகலன் நீரிலே விழத் தேடி (நீரசைவினால்) காணாளாய்; அன்னப் பெடையே! தொழுதேன், அன்னை கொடியள் கண்டாய் - பெண்ணன்னமே! நின்னைத் தொழுதேன், என் அன்னை கொடியள் என்பதை அறவிய்; என்னை அடிமை வேண்டின் நாடித்தா - என் அடித்தொண்டு நினக்கு விருப்பமாயின் தேடி எடுத்துக கொடு; என்று இறைஞ்சி - என்று கூறி வணங்கி; பொன்அம் கொம்பின் நின்றாள் - பொன்னாலாகிய அழகிய கொம்புபோல நிற்பவளின்; பொலிவின் வண்ணம் காண்மின் - அழகின் தன்மையை நோக்குமின்.
விளக்கம் : இது தோழியின் மொழி என்றும், அன்னப் பெடை என்றது தலைவியை என்றும், அன்னை என்றதும் தோழியின் தாயை என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். மற்றும், என்று என்பதை, என்ன எனத் திரித்துத் தோழி கேட்ப, அதற்கு நாணி இறைஞ்சிப் பொற்கொம்பென நின்றவள் தலைவி யென்றும் கூறுவர். அன்னப்பெடை என்பதற்குப் பறவை என்று கொள்ளுதலே சிறப்பு; என்னை? அவளின் பேதைமை நன்கு புலப்பட்டு இன்பந் தருதலான் என்க. (70)
921. தூமங் கமழுங் கோதை தொடுத்த துயரி முலையாத்
தேமென் கீதம் பாலாச் சுரந்து திறத்தி னூட்டிக்
காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலு ணீங்கிப்
பூமென் பொழிலுக் கிவர்வான் புகற்சி காண்மி னினிதே.
பொருள் : தூமம் கமழும் கோதை - அகிற்புகை மணம் பயின்ற கோதை போல்வாள்; தொடுத்த துயரி முலை ஆ - வாசித்த யாழ்நரம்பு முலையாக; தேன்மென் கீதம் பால் ஆ - (அதில் தோன்றிய) இனிய மெல்லிசை பாலாக; சுரந்து திறத்தின் ஊட்டி - சுரந்து செவ்விதின் ஊட்டி; காமக்குழவி வளர்ப்ப - காமமாகிய குழவியை வளர்ப்ப; புனலுள் கணவன் நீங்கி - நீரில் ஆடிக்கொண்டிருந்த அவள் கணவன் அதுகேட்டு நீங்கிக் கூட்ட விருப்பத்தினால்; பூமென் பொழிலுக்கு இவர்வான் - மலர்களையுடைய மெல்லிய சோலைக்குப் போகின்றவனுடைய; புகற்சி இனிது காண்மின் - விருப்பத்தை இனிதே நோக்குமின்.
விளக்கம் : இதனால், அவள் முன்னே குளித்தேறிக் கூட்டம் விரும்பி யாழ் வாசித்தமை கூறினாராயிற்று. காமக் குழவி - காமத்தையுடைய இளமைச் செவ்வி; அது காமமாகிய பிள்ளையை வளர்ப்பப் பிள்ளை வாயிலாகச் சென்ற்னென்றாற்போல நின்றது. துயரி - யாழ்நரம்பு. இன்னிசை காமப் பண்பினை மிகுவித்தலான் அதனைப் பால் என்னும் காமத்தைக் குழவி என்றும் கூறினார். (71)
922. கடலம் பவளம் மணையிற் கனபொற் கயிற்றிற் காய்பொன்
மடலங் கமுகி னூசன் மடந்தை யாட நுடங்கி
நடலைந் நடுவின் மகளிர் நூக்கப் பரிந்த காசு
விடலில் விசும்பின் மின்போல் மின்னி வீழ்வகாண்மின்.
பொருள் : கடல் அம் பவளம் கன மணையின் - கடலிற் கிடைத்த அழகிய பவளத்தாலாகிய கனத்த மணையிற்கோத்த; பொன் கயிற்றின் - பொன்னலாகிய கயிற்றினால்; காய்பொன் மடல் அம் கமுகின் ஊசல் - காய்ச்சிய பொன் மடலையுடைய கமுக மரத்திற் கட்டிய ஊசலை; மடந்தை நுடங்கி ஆட - மங்கையாள் ஒசிந்து ஆடும்படி; நடலை நடுவின் மகளிர் நூக்க - பொயயான இடையினையுடைய பெண்கள் ஆட்ட; பரிந்த காசு (அவர்களின் கைதீண்டி) அற்ற் மணிகள்; விசும்பின் மின்போல் மின்னி விடலில் வீழ்வ காண்மின் - வானிலேயிருந்து வீழும் மின்னைப்போல மின்னித் தொடர்ச்சியாக வீழ்வதை நோக்குமின்.
விளக்கம் : பவளம் கன மணையின் எனமாறுக. காய்பொன் : வினைத்தொகை. நடலை - துன்பமுமாம். விசும்பின் விடல் இல்மின் என மாறுக. வீடல்இல்மின் என்றது இடையறாத மின்னல் என்றவாறு. (72)
923. நான நீரிற் கலந்து நலங்கொள் பூம்பட் டொளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட் டதற்கு நாணி
மான மகளிர் போல மணிமே கலைகள் பேசாத்
தானந் தழுவிக் கிடப்பச் செல்வோ டன்மை காண்மின்.
பொருள் : நலம்கொள் பூம்பட்டு நான நீரில் கலந்து ஒளிப்ப - அழகிய பூம்பட்டு நானத்தையுடைய குளிக்கினற நீராலே நனைந்து உடம்பிலே ஒடுங்குதலின்; தோன்ற விளங்கி மேனி வெளிப்பட்டதற்கு நாணி - நன்றாக விளக்கமுற்றுத் தம் மெய்யழகு வெளிப்பட்டதற்கு வெளகி; மான மகளிர்போல மணிமேகலைகள் பேசா - மானமுற்ற பெண்டிர்போல மணி மேகலைகள் பேசாமல்; தானம் தழுவிக்கிடப்பச் செல்வோள் தன்மை காண்மின் - அல்குலைத் தழுவிக் கிடக்குமாறு செல்கின்றவளின் நிலையை நோக்குமின்.
விளக்கம் : நானம் - புழுகு; குளித்தலுமாம். நீரான் நனைந்து பட்டோடு பொருந்துதலானே ஒலியவிந்த மேகலைகளை மேனி வெளிப்பட்டதற்கு நாணி அற்றங்காத்து வாய் வாளாகிடந்த என்னுமித் தற்குறிபபேற்றம் ஆற்றவும் இனிதாதல் உணர்க.
924. தீம்பாற் பசியி னிருந்த
செவ்வாய்ச் சிறுபைங் கிளிதன்
ஓம்பு தாய்நீர் குடைய
வொழிக்கும் வண்ண நாடிப்
பாம்பால் என்ன வெருவிப்
பைம்பொற் றோடு கழலக்
காம்பேர் தோளி நடுங்கிக்
கரைசேர் பவளைக் காண்மின்.
பொருள் : தீ பால் பசியின் இருந்த செவ்வாய் சிறு பைங்களி - இனிய பால்பருகப் பசியுடன் இருந்த சிவந்தவாயையுடைய சிறிய பச்சைக்கிளி; தன் ஓம்பு தாய் நீர்குடைய - தன்னைக் காக்கும் அன்னை தன் பசியை அறியாமல் நீர் குடைதலாலே; ஒழிக்கும் வண்ணம் நாடி - அவளை நீர்குடையாமல் தடுக்கும் வகையிதுவென எண்ணி ; பாம்பு என்ன - பாம்பு பாம் பென்று கூவ; காம்பு ஏர் தோளி வெருவி நடுங்கி - வேய்த்தோளினாள் அஞ்சி நடுங்கி; பைம்பொன் தோடு கழல் - பசிய பொற்றோடு கழலுமாறு; கரை சேர்பவளைக் காண்மின்-(வந்து) கரையை அடைகின்றவளை நோக்குமின்.
விளக்கம் : பாற்பசி - பாலுண்ணாமையால் உண்டான பசியுமாம். ஓம்புதாய் - தன்னை ஊட்டி வளர்க்கும் தாய். வண்ணம் ஈண்டு உபாயம். பாம்பால் என்புழி ஆல் அசைச்சொல்; பாம்பு பாம்பு என அடுக்கி வர வேண்டியது தனித்து வந்தது செய்யுளாகலின். காவிய உலகில் கிளிகள் உலகக் கிளிகளில் சிறந்தன என்க. (74 )
925. துணையி றோகை மஞ்ஞை யீயற் கிவரும் வகைபோன்
மணியார் வளைசோர் முன்கை வலனுமிடனும் போக்கி
யிணையி றோழி மார்க ளிறுமா லிடையென் றிரங்க
வணியார் கோதை பூம்பந் தாடு மவளைக் காண்மின்.
பொருள் : துணைஇல் தோகை மஞ்ஞை - பெடையில்லாது தனித்த தோகைமயில்; ஈயற்கு இவரும் வகைபோல் - சுற்றிப் பறக்கும் ஈயலைப் பற்ற அவற்றின்மேற் செல்லும் கூறுபாடு போல; இணை இல் தோழிமார்கள் இடை இறுமால் என்று இரங்க - ஒப்பற்ற தோழியர் நின்இடை ஒடியுமே என்று இரக்க முறுமாறு; மணிஆர் வளைசேர் முன்கை வலனும் இடனும் போக்கி - மணிபதித்த வளையல் அணிந்த முன்கையை வலமாகவும் இடமாகவும் செலுத்தி; பூம்பந்து ஆடும் அணிஆர் கோதையவளைக் காண்மின் - அழகிய பந்தை ஆடும் அணி பொருந்திய கோதையாளைப் பார்மின்.
விளக்கம் : இச் செய்யுளின்கண் பந்தாடும் ஒருத்தியைத் தன்மை நவிற்சியாகக் கூறி அவளுககு வானிலே பறக்கும் ஈயலைக் கவ்வ அணந்துதிரியும் மயிலை உவமையாக எடுத்துக் கூறிய தேவர் புலமைத் திறம் நினைந்து நினைந்து இன்புறற்பாலது. (75 )
926. திருவின் சாய லொருத்தி
சேர்ந்த கோலங் காண்பான்
குருதித் துகிலி னுறையைக்
கொழும்பொன் விரலி னீக்கி
அரவ முற்றும் விழுங்கி
யுமிழும் பொழுதின் மதிபோன்
றுருவத் தெண்கண் ணாடி
காண்மின் தோன்றும் வகையே.
பொருள் : திருவின் சாயல் ஒருத்தி - திருமகளின் மென்மையுடையாள் ஒரு மங்கை; சேர்ந்த கோலம் காண்பான் - தான் கொண்ட கோலத்தைக் காண்பதற்கு; குருதித் துகிலின் உறையைக் கொழும்பொன் விரலின் நீக்கி - (கண்ணாடிக்கிட்ட) செம்பட்டுறையை வளவிய பொன்னாழியணிந்த விரலாலே நீக்க; அரவம் முற்றும் விழுங்கி உமிழும் பொழுதின் மதிபோன்று - செம்பாம்பு தன்னை முழுதும் பற்றித் திரும்ப விடும்போது தோன்றும் திங்கைளைப் போல; உருவம் தெண்கண்ணாடி தோன்ற வகை காண்மின் - நிறமுறும் தெளிந்த கண்ணாடி காண்குறும் இயல்பை நோக்குமின்.
விளக்கம் : நீக்கி - நீக்க: எச்சத்திரிபு. காண்பான் : எதிர்கால வினையெச்சம். திரு - திருமகள். குருதித்துகிலின் உறை - செம்பட்டுறை; இது செம்பாம்புக்குவமை. அரவம்-ஈண்டுக் கேது. தோன்றும் வகை காண்மின் என மாறுக. (76)
927. பலகை செம்பொன் னாகப்
பளிங்கு நாயாப் பரப்பி
யலவ னாடும் வகைபோ
லரும்பொன் கவறங் குருளக்
குலவும் பவழ வுழக்கிற்
கோதை புரளப் பாடி
யிலவம் போதேர் செவ்வா
யிளையோர் பொருவார்க் காண்மின்.
பொருள் : செம்பொன் பலகை ஆக - செம்பொன்னாற் பலகையாக; பளிங்கு நாய் ஆப் பரப்பி - பளிங்கினாலே நாயாகச் செய்தவற்றைப் பரப்பி; அல்வன் ஆடும் வகைபோல் அரும்பொன் கவறு அங்கு உருள - நண்டு ஆடுந் தன்மைபோல அரிய பொன்னால் ஆன கவறு தன்னிடத்தே உருளுமாறு; குலவும் பவழ உழக்கில் - பண்ணின பவழ உழக்காலே; கோதை புரளப் பாடி - கோதை அசையுமாறு பாடிக்கொண்டு; இலவம்போது ஏர் செவ்வாய் - இலவ மலரனைய அழகிய செவ்வாயையுடைய; இளையோர் பொருவார்க் காண்மின் - இளமங்கையர் கவறாடுவாரை நோக்குமின்.
விளக்கம் : செம்பொன்னாலியற்றிய பலகைமிசை பளிங்காற் செய்த நாய்களைப் பரப்பிப் பொன் உழக்கில் பொன் கவறுகளையிட்டு உருட்டிப் பாடிக்கொண்டு சூதுப்போர் பொருதும் மகளிரைக் காண்மின் என்றவாறு. (77)
928. தீம்பா லடிசி லமிர்தஞ்
செம்பொன் வண்ணப் புழுக்க
லாம்பா லக்கா ரடலை
யண்பன் னீரூ றமிர்தம்
தாம்பா லவரை நாடித்
தந்தூட் டயர்வார் சொரிய
வோம்பா நறுநெய் வெள்ள
மொழுகும் வண்ணங் காண்மின்.
பொருள் : ஊட்டு அயர்வார் தாம் - உணவு இடுவோர்கள் தாம்; பாலவரை நாடித் தந்து - உண்ணும் இயல்பினரைத் தேடிக் கொணர்ந்து; தீ பால் அடிசில் - இனிய பாற்சோற்றையும் ; செம்பொன் வண்ணப் புழுக்கல் - செம்பொன் நிறமுடைய பருப்புச் சோற்றையும்; அக்கார அடலை - சருக்கரைப் பொங்கலையும்; அண்பல் நீர் ஊறு அமிர்தம் - அடிப் பல்லில் நீரூறும் புளிங்க்றியும்; அமிர்தம் - பிற சோற்றையும்; ஆம் பால் - இவற்றிற்கெல்லாம் பயன்படும் பாலையும்; சொரிய - சொரிதலின்; ஒம்பா நறுநெய் வெள்ளம் - இவற்றையுண்ண வார்த்த கட்டுப்படாத நறுநெய் வெள்ளம்போல; ஒழுகும் வண்ணம் காண்மின்!- ஒழுகும் இயல்பைக் காணுமின்!
விளக்கம் : அக்காரடலை - அக்காரத்தினை அடப்பட்டது; அக்காரையாக அடப்பட்டதுமாம். அக்காரம் - சருக்கரை. (78)
929. அள்ளற் சேற்று ளலவ
னடைந்தாங் கனைய மெய்யின்
கள்செய் கடலு ளிளமைக்
கூம்பின் கடிசெய் மாலைத்
துள்ளு தூமக் கயிற்றிற்
பாய்செய் துயரி நிதிய
முள்ளு காற்றா யுழலும்
காமக் கலனும் காண்மின்.
பொருள் : அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யின் - அள்ளலாகிய சேற்றில் அடைந்த அலவனைப் போன்ற மெயயுடன் ; கள்செய் கடலுள் - கள்ளாகிய கடலிலே; இளமைக் கூம்பின் கடிசெய் மாலைக் கயிற்றின் - இளமையாகிய பாய்மரத்திலே கட்டின மணமாலையாகிய கயிற்றுடன்; துள்ளு தூமாப்பாய் செய்து - துள்ளும் புகையாகிய பாயை விரித்து; உயரி - அதனை உயர்த்து; நிதியம் உள்ளு காற்றுஆ உழலும்-பொருளே நினைக்கப்படுங் காற்றாகத் திரிகின்ற; காமக் கலனும் காண்மின்! - காமக் கலமாகிய பரத்தையையும் பார்மின்!
விளக்கம் : கள்செய் கடல் - கள்ளுண்டார் தன்மையைச் செய்யும் நீர் விளையாட்டுத் திரள். கடல் : உவமையாகுபெயர். அடாக்களியவர் (சீவக. 916) என்றார் முன்னும். (79 )
930. தாய்தன் கையின் மெல்லத்
தண்ணென் குறங்கி னெறிய
வாய்பொன் னமளித் துஞ்சும்
மணியார் குழவி போலத்
தோயுந் திரைக ளலைப்பத்
தோடார் கமலப் பள்ளி
மேய வகையிற் றுஞ்சும்
வெள்ளை அன்னங் காண்மின்.
பொருள் : தாய் தன் கையின் குறங்கின் மெல்லத் தண் என் எறிய - தாய் தன் கையினாலே துடையிலே மெல்லத் தண் எனத் தட்ட; ஆய் பொன் அமளித் துஞ்சும் அணிஆர் குழவி போல - சிறந்த பொன் அணையிலே துயிலும் அழகிய குழந்தை போல; தோயும் திரைகள் அலைப்ப - செறியும் அலைகள் வந்து மோத; தோடு ஆர் கமலப் பள்ளி மேய வகையில் துஞ்சும் - இதழ் நிறைந்த தாமரை மலர்ப்பாயிலே தனக்குப் பொருந்தும் வகையில் துயிலும்; வெள்ளை அன்னம் காண்மின் - வெள்ளை அன்னத்தைப் பார்மின்!
விளக்கம் : கார் அன்னமும் உண்மையின் வெள்ளை அன்னம் இனஞ்சுட்டிய பண்பு. தண் என என்பது மென்மைப் பண்பின் மேனின்றது. குறங்கின் தண்ணென் எறிய என மாறுக. அமளி - படுக்கை. தோடார் கமலம் - இதழ் நிறைந்த தாமரை மலர். மேயவகை-தன்மனம் பொருந்தியபடி. (80)
931. நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள்
கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச்
சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன
வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின்.
பொருள் : நீலத் துகிலில் கிடந்த நிழல்ஆர் தழல் அம் மணிகள் - நீல ஆடையிலே கிடந்த ஒளிவிடும் தீயனைய செம்மணிகள்; கோலச் சுடர்விட்டு உமிழ - அழகிய சுடர்களை மிகுதியாகச் சொரிதலால்; சால நெருங்கிப் பூத்த தடம் தாமரைப் பூ என்ன - (உண்மையறியாமல்) மிகவும் நெருங்கி மலர்ந்த பொய்கையிலுள்ள தாமரை மலரென்றெண்ணி, குமரி அன்னம் குறுகி - இளமையான அன்னப் பறவை அருகிற் சென்று; ஆலி - அகவிக் கொண்டு; சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின் - சுடர்களைப் பற்ற (அகப்படாமையால்) வருந்தும் தன்மையை நோக்குமின்.
விளக்கம் : நீலத்துகில் - நீர்க்குவமை எனினுமாம். நிழல் - ஒளி. குமரியன்னம் - இளமையுடைய அன்னம். ஆலி - ஆரவாரித்து. அழுங்குதல் - வருந்துதல். துகிலினுக்கு இலை உவமை. (81)
932. வடிக்கண் மகளிர் வைத்த
மரக தந்நன் மணிக
ளொடிக்கச் சுடர்விட் டுமிழ
வுழையம் பிணையொன் றணுகிக்
கொடிப்புல் லென்று கறிப்பா
னாவிற் குலவி வளைப்பத்
தொடிக்கட் பூவை நோக்கி
நகுமா றெளிதோ காண்மின்.
பொருள் : வடிக்கண் மகளிர் வைத்த மரகத நன்மணிகள் - மாவடு வனைய கண்களையுடைய பெண்கள் வைத்த மாரகத மணிகள்; ஒடிக்கச் சுடர்விட்டு உமிழ - ஒடிக்கலாம் படி ஒளியினை மிகுதியாகச் சொரிய; உழை அம்பிணை ஒன்று - அழகிய பெண்மான் ஒன்று; கொடிப் புல் என்று - அறுகம் புல் என்று எண்ணி; அணுகிக் கறிப்பான் நாவின் குலவி வளைப்ப - நெருங்கிக் கறிப்பதற்கு நாவினாலே (கழுத்தை வளைத்து) வளைப்ப; தொடிக்கண் பூவை நோக்கி நகும் ஆறு ஓ எளிது காண்மின்! - வளையல் போல் வட்டமான கண்களையுடைய பூவை அக் காட்சியைப் பார்த்து நகைப்பது ஓ எளிதான காட்சி! அதனைப் பார்மின்!
விளக்கம் : ஓ : வியப்பினைத்தரும் குறிப்பிடைச்சொல். வடி - மாவடுவின் வகிர். உழை - மான். அம் உழைப்பிணை என மாறுக. அழகிய மான்பிணை என்க. கொடிப்புல் - அறுகம்புல். கறிப்பான் : வினையெச்சம். பூவை - நாகணவாய்ப்புள். இதன் கண்ணுக்கு வளையல் உவமை. (82)
933. இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன்
கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவின்
சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதா
னவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம்.
பொருள் : இன்னன இவையும் பிறவும் - இத்தன்மையான காட்சிகளும் பிற காட்சிகளும்; கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவின் - கவிகளின் புகழ்ச்சியினும் மேம்பட்டுக் காண்பதற்கு இனிய நீர்விழாவிலே; எரிபொன் ஆரம்மார்பன் - ஒளிவிடும் பொன்மாலை அணிந்த மார்பன்; சுவையின் மிகுதியுடைய சோர்வுஇல் பொருள் ஒன்று - இனிமையின் மேம்பட்ட அழிவற்ற பொருளால் ஓருயிரை; நவையின் அகல நோக்கி - குற்றத்தினின்றும் நீங்குமாறு பார்க்க; அதுதான் நயந்தவண்ணம் மொழிவாம் - அவ்வுயிர் அப் பொருளால் விரும்பின தன்மையை உரைப்போம்.
விளக்கம் : மதியின் : இன் : நீங்கற்பொருள். ஒன்று - ஓருயிர்; நவையின் அகலுதல் - நாயுடம்பினின்றும் நீங்க; நோக்கி - நோக்க. சோர்வில் பொருள் பஞ்ச நமஸ்காரமந்திரம். (83)
வேறு
934. அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை
வந்தொரு நாய்கது விற்றது கண்டவ
ருய்ந்தினிப் போதி யெனக்கனக் றோடினர்
சிந்தையி னின்றொளிர் தீயன நீரார்.
பொருள் : அந்தணர்க்கு ஆக்கிய சோற்றுக் குவாலினை - அந்தணர்கட்குக் சமைத்த சோற்றின் திரளை; வந்து ஒரு நாய் கதுவிற்று - ஒருநாய் வந்து கௌவியது; சிந்தையில் நின்று ஒளிர் தீயன நீரார் அவர் அதுகண்டு - உள்ளத்திலே விடாமல் நின்று ஒளிரும் தீப்போன்ற பண்பினராகிய அவர்கள் அந்நாயைக் கண்டு; இனி உய்ந்து போதி எனக் கனன்று ஓடினர்- இனி நீ பிழைத்துப் போவாய் என்று கூறிச் சினந்து ஓடி வந்தனர்.
விளக்கம் : அக்கினி சித்தரென அவர்களின் கொடுமை கூறினர். சோற்றுக் குவால் - சோற்றுக்குவியல். ஒரு நாய்வந்து என மாறுக. அவர் அதுகண்டு என மாறுக. உய்ந்தினிப்போதி என்றது குறிப்புச் சொல் ; இனி நீ உய்ந்துபோகவியலாது; நின்னைக் கொன்றொழிப்பேம் என்பது கருத்து. (84)
935. கல்லொடு வன்றடி கையினர் காற்றினும்
வல்விரைந் தோடி வளைத்தன ராகிக்
கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும்
வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே.
பொருள் : கல்லொடு வன்தடி கையினர் - (அவர்கள்) கல்லையும் வலிய தடியையும் கொண்ட கையினராய்; காற்றினும் வல்விரைந்து ஓடி வளைந்தனர் ஆகி - காற்றினும் கடிது விரைந்து ஓடி வளைத்துக்கொண்டவராய்; கொன்றிடு கூற்றினும் கொல்வது மேயினர் - கொல்லுமியல்புடைய கூற்றுவனினும் மேம்பட்டுக் கொல்லத் தொடங்கினர்; வல்வினையார் வலைப்பட்டது - (அதுவும்) கொடிய வினையாளர் கையில் அகப்பட்டது.
விளக்கம் : பட்டதை : ஐ : சாரியை; பகுதிப்பொருள் விகுதி என்பர் நச்சினார்க்கினியர். அன்று, ஏ : அசைநிலைகள். (85)
936. வேள்வியி லுண்டி விலக்கிய நீவிர்க
ளாளெனக் கென்ற தறைவது மோரார்
தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறை
நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும்,
பொருள் : வேள்வியில் உண்டி விலக்கிய நீவிர்கள் எனக்கு ஆள் என்று அறைவதும் ஓரார் - (நாய் கதறுவது) வேள்வியில் எனக்கு உணவின்றித் தடுத்த நீங்கள் எனக்கு மறுபிறவியில் ஆள் என்பதுபோல அறைவதையும் உணராராய்; மூர்க்கர் தாள் இற அதுக்கலின் - கொடிய அந்தணர் அதன் காலொடிய அடிக்கலுற்றதும்; அது நீள் கயம் பாய்ந்து நீந்துதலோடும் - (அடி தாங்க இயலாத) அந் நாய் பெரிய கயத்திலே பாய்ந்து நீந்தினவுடன்,
விளக்கம் : நீந்துதலோடும் ஒருவன் தோன்றினான் என அடுத்த செய்யுளில் முடியும். நச்சினார்ககினியர் (934 - 936) மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கிக் கொண்டுகூட்டிக்கூறும் முடிபு: - தீயன நீரராகிய அந்தணர்க்கு ஆக்கிய சோற்றுத்திரளை ஒரு நாய் வந்து கௌவிற்று; அவர் அதுகண்டு, இனிப் பிழைத்துப்போவை என்று கூறி ஓடி எடுத்த கல்லையும் தடியையும் கையிலே உடையராய்க் கனன்று காற்றினும் கடுக விரைந்தோடி, அது நீள்கயத்தே பாய்ந்து நீந்தின அளவிலே வளைத்தனராகி, அம்மூர்க்கர் அறைவதும் ஓராராய்த் தாளிற அடித்தலின், அது வல்வினையார் வலையிலே அகப்பட்டே விட்டது; அதனைப் பின்னரும் கொன்றிடு கூற்றிற் காட்டிற் கொல்லுந் தன்மையை மேயினர். (86)
வேறு
937. மட்குட மல்லன மதியின் வெள்ளிய
கட்குடக் கன்னிய ரிருவ ரோடுடன்
றுட்கென யாவரும் நடுங்கத் தூய்மையி
லுட்குடைக் களிமக னொருவன் றோன்றினான்.
பொருள் : மண்குடம் அல்லன மதியின் வெள்ளிய கள்குடக் கன்னியர் இருவரோடு - மண்ணாலாக்கப்படாமல் திங்களினும் வெள்ளிய வெள்ளியாற் செயப்பட்டனவாகிய கள்குடங்களைச் சுமந்த கன்னியரிருவரோடு; தூய்மையில் உட்கு உடைக் களிமகன் ஒருவன் - தூய்மையற்ற அச்சந் தரும் தோற்றமுடைய கட்குடியன் ஒருவன்; யாவரும் உடன் துட்கென நடுங்கத் தோன்றினான் - எவரும் கண்டவுடன் திடுக்கிட்டு நடுங்குமாறு தோன்றினான்.
விளக்கம் : கள்ளின் கடுமை தாங்க வெள்ளியாற் சமைத்தனர். கட்குடக்கன்னியர் - கட்குடஞ்சுமந்த கன்னியர். உடன் - கண்டவுடன், தூய்மை, புறந்தூய்மையும் அகந்தூய்மையுமாம். உட்கு - அச்சம். களிமகன் - கட்குடியன். (87)
938. தோன்றிய புண்செய்வே லவற்குத் தூமது
வான்றிகழ் கொடியனார் வெள்ளி வட்டகை
யூன்றிவாய் மடுப்பவோர் முழையுட் டீங்கதிர்
கான்றிடு கதிர்மதி யிரண்டு போன்றவே.
பொருள் : தோன்றிய புண்செய் வேலவற்கு - அங்ஙனந் தோன்றிய புண்செய்யும் வேலேந்திய அவனுக்கு; வான்திகழ் கொடியனார் - முகிலிடைத் தோன்றும் மின்னுக் கொடியனையார் இருவரும்; வெள்ளி வட்டகை வாய் ஊன்றி - வெள்ளிக் கிண்ணத்தை வாயிலே அழுத்தி ; தூமது மடுப்ப - தூய மதுவைக் கொடுப்ப; ஓர் முழையுள் தீங்கதிர் கான்றிடு கதிர்மதி இரண்டு போன்றவே - ஒரு குகையிலே இனிய கதிரைச் சொரியும் ஒளிமதி இரண்டினைப் போன்றன.
விளக்கம் : வேலவன் : முற்கூறிய கனிமகன். வான்திகழ்கொடி - மின்னற்கொடி; இஃது அக்கனியர்க்குவமை. வட்டகை - கிண்ணம். அம்மகளிர் மதுவை வார்த்து மாறிமாறிக்கொடுக்கும் வெள்ளிக் கிண்ணங்கட்கு ஒருமுழையில் மாறிமாறிக் கதிர்பொழியும் இரண்டு தங்கள் உவமை என்க. இஃது இல்பொருளுவமை. முழை-அக்களிமகன் வாய்க்குவமை. தீங்கதிர் கள்ளுக்குவமை. (88)
வேறு
939. அழலம் பூநற வார்ந்தழ லூர்தரச்
சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன்
கழலன் காழகம் வீக்கிய கச்சையன்
மழலைச் சொற்களின் வைதிவை கூறினான்.
பொருள் : அழல் அம்பூ நறவு ஆர்ந்து - அழல் போன்ற அழகிய மலரால் ஆக்கின நறவை அருந்தியதனால்; அழல் ஊர்தரச் சுழலும் கண்ணினன் - வெம்மை பரக்கச் சுழலும் கண்ணினனாய்; சோர் தரும் மாலையன் - கழலும் மாலையனாய்; கழலன் - கழலுடையவனாய்; காழகம் வீக்கிய கச்சையன் - கருமை பொருங்திய இறுக்கிய கச்சையனாய்; மழலைச் சொற்களின் வைது இவை கூறினான் - குழறுஞ் சொற்களாலே வைதபின் இவற்றைக் கூறினான்.
விளக்கம் : அழல் நறவு, அம்பூ நறவு எனத் தனித்தனி கூட்டி அழல்வதும் அழகிய பூவாற்சமைத்துமாகிய கள் எனினுமாம். அழல் - வெப்பம். காழகம் - கருமைநிறம். மழலைச் சொல், ஈண்டுக் குழறிப்பேசும் சொல். வைதுபின்னர் இவை கூறினான் என்க. (89)
940. புடைத்தென் னாயினைப் பொன்றுவித் தீருயிர்
கடுக்கப் பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறிற்
றடக்கை மீளிமை தாங்குமி னன்றெனி
னுடைப்பென் கட்குட மென்றுரை யாடினான்.
பொருள் : என் நாயினைப் புடைத்துப் பொன்றுவித்தீர் - என் நாயை அடித்துக் கொன்றுவிட்டீர்; அவ்வுயிர் கடுக்கப் பேர்த்தனிர் தம்மின்! -அவ்வுயிரை விரைய மீட்டுத் தருவீராக; கலாய்க்குறின் தடக்கை மீளிமை தாங்குமின்!- கலகம்புரியின் என் பெரிய கையின் வலிமையைப் பொறுப்பீராக!; அன்றெனின் கட்குடம் உடைப்பென என்று உரையாடினான் - அவ்விரண்டும் அல்லவாயின் கட்குடம் உடைப்பேன் என்று கூறினான்.
விளக்கம் : கட்குடம் உடைத்தல் குறிப்பு மொழி. கடுக்க : கடுக: விரித்தல் விகாரம். கலாய்க்க உறின் : கலாய்க் குறின் : அகரம் தொகுத்தல் விகாரம். (90)
வேறு
941. நல்வினை யொன்று மிலாதவ னான்மறை
வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே
செல்சுடர் வேல்வல சீவக சாமிசென்
றல்ல லகற்றி யருந்துயர் தீர்த்தான்.
பொருள் : நல்வினை ஒன்றும் இலாதவன் - நல்வினை ஒன்றும் செய்தறியாதவன்; நான்மறை வல்லவர் தம்மை வருத்தலின் - நான்மறை வல்லாளரைத் துன்புறுத்தலின்; செல்சுடர் வேல்வல சீவகசாமி வல்லே சென்று - ஒளி வீசும் வேலை யேந்த வல்ல சீவகன் விரைந்து சென்று; அல்லல் அகற்றி அருந்துயர் தீர்த்தான் - அக் களிமகன் நாயிழந்த துன்பத்தை முதற்போக்கி அந்தணர் துயரத்தையுங் களைந்தான்.
விளக்கம் : நல்வினை இலாதவன் என்றது களிமகனை. நான்மறை வல்லவர் என்றது மறைவல்லவரேயல்லது அவர்கிருக்கவேண்டிய செந்தண்மையில்லாதவர் என்பது பட நின்றது. வல்லே - விரைந்து. (91)
942. மீண்டவ ரேகுத லும்விடை யன்னவ
னீண்டிய தோழரொ டெய்தின னாகி
மாண்ட வெயிற்றெகி னம்மற மில்லது
காண்டலுங் கட்கினி யான்கலுழ்ந் திட்டான்.
பொருள் : அவர் மீண்டு ஏகுதலும் - அவ்விரு திறத்தாரும் திரும்பிச் சென்றவுடன்; விடை அன்னவன் ஈண்டிய தோழரொடு எய்தினன் ஆகி - இடபம் போன்ற சீவகன் தன்னுடன் குழுமிய தோழருடன் சென்று ; மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது காண்டலும் - இழந்த பற்களையுடைய அந்த நாய் வலிமை யிழந்ததாகக் காணப்பட்டவுடன்; கட்கு இனியான் கலுழ்ந்திட்டான் - கண்ணுக்கினியவன் அழுதிட்டான்.
விளக்கம் : நீந்திய நாய் கரையேறிச் சோர்ந்து உயிர் போகுந்தறுவாயிற் கிடந்ததைச் சீவகன் தோழருடனே சென்று கண்டான். அன்றி, நச்சினார்க்கினியர் முன்னர் (936) முடித்தவாறு கொள்ளினுங் கொள்க. நச்சினார்க்கினியர் முன்னர்த் தம்பியை விட்டுத் தனியே நின்றானென்பதற்கேற்ப, இவன் வினோதம் ஒழிந்து நிற்றலின், தோழல் வந்து திரண்டமை தோன்ற, ஈண்டிய என்றார். எனவே, தம்பியர் வந்தமையும் பெறுதும் என்றுரைத்தனர். அருளினால், இவனை விடை என்றார். இச் செய்யுள் சீவகனுடைய அருட்பண்பை விளக்கிற்று. (92)
943. நாயுடம் பிட்டிவ ணந்திய பேரொளிக்
காய்கதிர் மண்டலம் போன்றொளி கால்வதோர்
சேயுடம் பெய்துவை செல்கதி மந்திர
நீயுடம் பட்டு நினைமதி யென்றான்.
பொருள் : நாய் உடம்பு இவண் இட்டு - நாய் உடலை இங்கே விட்டு; நந்திய பேரொளிக் காய்கதிர் மண்டலம் போன்று - வளர்ந்த பேரொளியை உடைய திங்கள் மண்டிலம் போல; ஒளி கால்வது ஓர் சேய் உடம்பு செல்கதி எய்துவை - ஒளி வீசுவதாகிய ஒரு பெரிய உடம்பை நீ செல்லுங்கதியிலே அடைவாய்; மந்தரம் நீ உடம்பட்டு நினை என்றான் - (அதற்காக) யான் கூறுகின்ற மந்திரத்தை நீ ஒருமனப்பட்டு நினைவாயாக என்றான்.
விளக்கம் : நினைமதி : மதி : முன்னிலை அசை. நந்துதல் - பெருகுதல். நந்திய பேரொளிக் காய்கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வதோர் சேயுடம்பு என்றது தெய்வ உடம்பினை. காய்கதிர் மண்டலம் என்றது திங்கள் மண்டிலத்தை. (93)
944. என்றலுந் தன்செவி யோர்த்திரு கண்களுஞ்
சென்றுகு நீரொடு செம்மலை நோக்கி
யொன்றுபு வால்குழைத் துள்ளுவப் பெய்தலுங்
குன்றனை யான்பதங் கூற வலித்தான்.
பொருள் : என்றலும் - என்று கூறின அளவிலே; தன் செவி ஓர்த்து - (அது) தன் காதினாலே கேட்டுச் சிந்தித்து; இரு கண்களும் சென்று உகு நீரொடு - இரு கண்களாலும் வடிந்து வீழ்கின்ற நீருடனே; செம்மலை நோக்கி - சீவகனைப் பார்த்து; ஒன்றுபு வால்குழைத்து உள் உவப்பு எய்தலும் - ஒருமனப்பட்டு வாலைக் குழைத்து மகிழ்ந்த அளவிலே ; குன்று அனையான் பதம் கூற வலித்தான் - சலிப்பற்ற சீவகன் (இது தான் காலம் என) மறையைக் கூறத் துணிந்தான்.
விளக்கம் : செம்மல் : சீவகன். ஒன்றுபு - மனம் ஒருமைப்பட்டு. குன்றலையான் : சீவகன். வலித்தான் - துணிந்தான். (94)
வேறு
945. நற்செய்கை யொன்று மில்லார் நாளுலக் கின்ற போழ்தின்
முற்செய்த வினையி னீங்கி நல்வினை விளைக்கும் வித்து
மற்செய்து வீங்கு தோளான் மந்திர மைந்து மாதோ
குதற்செய்கை தளிர்ப்பத் தாழ்ந்தாங் கதன்செவிச் செப்பு கின்றான்.
பொருள் : நல்செய்கை ஒன்றும் இல்லார் - இம்மையில் நல்வினை ஒன்றுமில்லாதவர்; நாள் உலக்கின்ற போழ்தின் - வாழ்நாள் கழிகின்ற காலத்தே; முன்செய்த வினையின் நீங்கி - (இம்மையில்) அவர் இறக்குமுன் செய்த தீவினையிலிருந்து நீங்க; நல்வினை விளைக்கும் வித்து - (பழவினையாகிய) நல்வினையைத் தரும் வித்தாகிய; மந்திரம் ஐந்தும் - மறை ஐந்தையும்; மல் செய்து வீங்கு தோளான் - மற்போர் புரிந்து பருத்த தோளையுடைய சீவகன்; தன் செய்கை தளிர்ப்ப ஆங்கு தாழ்ந்து அதன் செவிச் செப்புகின்றான் - மறையின் செய்கை தழைக்கும் படியாக ஆங்கே தாழ்ந்து நாயின் செவியிலே செப்புவான் ஆயினான்.
விளக்கம் : நீங்கி - நீங்க : எச்சத்திரிபு. தற்செய்கை தளிர்ப்ப என்பதனை அடுத்த செய்யுளில் அகற்றினான் என்பதோடு முடிப்பர் நச்சினார்க்கினியர். நற்செய்கை - தானம் தவம் சீலம் அறிவர்ச் சிறப்பு என்பன. நாள் - வாழ்நாள். தற்செய்கை என்புழித் தன் என்றது மந்திரத்தை. (95)
946. உறுதிமுன் செய்த தின்றி யொழுகினே னென்று நெஞ்சில்
மறுகனீ பற்றொ டார்வம் விட்டிடு மரண வச்சத்
திறுகனீ யிறைவன் சொன்ன வைம்பத வமிர்தமுண்டாற்
பெறுதிநற் கதியை யென்று பெறுநவை யகற்றி னானே.
பொருள் : உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று - நன்மையாக முன்னே செய்தது ஒன்றுமில்லாமல் இருந்தேன் என்று; நீ நெஞ்சில் மறுகல் - நீ உள்ளத்திலே நினைந்து மறுகாதே; பற்றொடு ஆர்வம் விட்டிடு - பற்றையும் ஆர்வத்தையும் விடு; மரண அச்சத்து இறுகல் - இறப்பெனும் அச்சத்திலே நிலைபெறாதே; (அவ்விதம் இருந்து) ; இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தம் நீ உண்டால் - இறைவன் கூறிய ஐம்பதமாகிய அமிர்தத்தை நீ பருகினால்; நற்கதியைப் பெறுதி என்று - நல்ல கதியை அடைவாய் என்று கூறி; பெரு நவை அகற்றினான் - பெருந்துன்பத்தை நீக்கினான்.
விளக்கம் : மறுகல் - சுழலாதேகொள் : வியங்கோள். பற்று - உள்ள தன் மேலுளது. ஆர்வம் - பெறவேண்டியதன் மேலுளது. விட்டிடு: ஒரு சொல். இறுகல் - நிலைபெறாத கொள்: வியங்கொள். பெறுதி நற்கதியை என்பதன் முன் அடுத்த செய்யுளில் உள்ள, நின் கண் நின்ற நீனிற வினையின் நீங்கி என்பதைச் சேர்ப்பர் நச்சினார்க்கினியர். மற்றும் இறுகல் என்பதன்பின் பெறுநவை அகற்றினான் என்பதைச் சேர்ப்பர். (96)
947. மனத்திடைச் செறும்பு நீக்கி மறவலை யாகி யைந்து
நினைத்திடு நின்க ணின்ற நீனிற வினையி னீங்கி
யெனைப்பக றோறும் விள்ளா வின்பமே பயக்கு மென்றாற்
கனைப்பத வமிர்த நெஞ்சி னயின்றுவிட் டகன்ற தன்றே.
பொருள் : மனத்திடைச் செறும்பு நீக்கி - உள்ளத்திலுள்ள செற்றத்தை நீக்கி; மறவலை ஆகி ஐந்தும் நினைத்திடு - மறவாமல் ஐம்பதத்தையும் நினைப்பாயாக ; நின்கண் நின்ற நீல்நிற வினையின் நீங்கி - நின்னிடமுள்ள தீவினையிலிருந்து விடுபட்டு; எனைப் பகல்தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு - எப்போதும் நீங்காத பேரின்பத்தைத் தரும் என்று உபதேசித்தானுக்கு; அனைப்பத அமிர்தம் நெஞ்சின் அயின்று - அத்தகைய பதமான அமிர்தத்தை நெஞ்சாலே பருகி; விட்டு அகன்றது - நாயுடம்பை விட்டு நீங்கியது.
விளக்கம் : செறும்பு நீக்கி என்பதை முற்செய்யுளில், உறுதி முன் செய்ததின்றி ஒழுகினேன் என்று நெஞ்சில் மறுகல் என்பதன் முன் சேர்ப்பர். செறும்பு - காம வெகுளி மயக்கம். மறவலையாகி - மறத்தலிலையாகி, ஐந்தும் : ஆகுபெயர் ; என்றது ஐந்தெழுத்து மந்திரத்தை. நீல்நிறவினை என்றது தீவினையை. விள்ளா இன்பம் - நீங்காத பேரின்பம். (97)
வேறு
948. பாடு பாணி முகமெனும் பான்மையி
னோடி யாங்கொ ருயர்வரை யுச்சிமேற்
கூடிக் கோலங் குயிற்றிப் படங்களைந்
தாடு கூத்தரி னையெனத் தோன்றினான்.
பொருள் : பாடு பாணிமுகம் எனும் பான்மையின் - அருகனாகமத்திற்கு கூறப்பட்ட, உயிர் செல்லும் முகங்களிற் பாணிமுகம் என்றும் கதியாலே ; ஓடி - சென்று; ஆங்கு ஓர் உயர்வரை உச்சிமேல் கூடி - ஆங்கு உயர்ந்த ஒப்பற்ற வெள்ளி மலைமேலே பொருந்தி; கோலம் குயிற்றி - அணியெல்லாம் புனைந்து; படம் களைந்து ஆடு கூத்தரின் - திரை நீக்கிவிட்டு ஆடும் கூத்தரைய போல; ஐ எனத் தோன்றினான் - வியப்புறத் தோன்றினான்.
விளக்கம் : பாணி - கை. பாணிமுகம் - கைம்முகம் ; சுட்டு விரலும் பெருவிரலும் நீங்கின இடம். அதன் வடிவம் (ட). அதுபோல நேரே ஓடிப் பின் விலங்கி ஓடுதலாம். நாயுடம்பு நீங்கிய உயிர் வெள்ளிமலையை அடைந்த கதியே பாணிமுகம். இக்கதி தேவருக்கும் மக்களுக்கும் உரியதென்பர். தத்துவார்த்த சூத்திரம் என்னும் நூலிற்கூறப்பட்டுள்ள தென்பர் இப்பொருள். (98)
949. ஞாயில் சூடிய நன்னெடும் பொன்னகர்க்
கோயில் வட்டமெல் லாங்கொங்கு சூழ்குழல்
வேயி னன்னமென் றோளியர் தோன்றியங்
காயி னார்பரி யாள மடைந்ததே.
பொருள் : ஞாயில் சூடிய நல் நெடும் பொன் நகர் - மதிலை உடுத்த அழகிய பெரிய பொன்னகரிலே; கோயில் வட்டம் அங்கு எல்லாம் - கோயில் உள்ள இடம் எல்லாம் ; கொங்கு சூழ்குழல் வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி ஆயினார் - மணஞ் சூழுங் குழலையும் வேயனைய மெல்லிய தோளையும் உடைய மகளிர் தோன்றித் தேவியர் ஆயினார்; பரியாளம் அடைந்தது - ஒழிந்த சுற்றமும் வந்தது.
விளக்கம் : ஞாயில் - மதிலுக்கு ஆகுபெயர். கொங்கு - மணம். வேயின் அன்ன என்புழி இன்சாரியை தவிர்வழி வந்தது. வேய் அன்ன என்க. பரியாளம் - பரிவாரம். (99)
950. மிடைந்த மாமணி மேகலை யேந்தல்குற்
றடங்கொள் வெம்முலைத் தாமரை வாண்முகத்
தடைந்த சாய லரம்பையர் தம்முழை
மடங்க லேறனை யான்மகிழ் வெய்தினான்.
பொருள் : மடங்கல் ஏறு அனையான் - சிங்கவேற்றைப் போன்றவன்; மிடைந்த மாமணி மேகலை ஏந்து அல்குல் - நெருங்கிய பெரிய மணிகளாலான மேகலை தாங்கிய அல்குலையும்; தடம்கொள் வெம்முலை - பெரிய விருப்பூட்டும் முலையினையும் ; தாமரை வாள் முகத்து - தாமரை யனைய ஒளி பொருந்திய முகத்தினையும்; அடைந்த சாயல் - பொருந்திய மென்மையையும் உடையஅரம்பையர் தம் உழை - அரம்பையரிடத்தே; மகிழ்வு எய்தினான் - களிப்புற்றான்.
விளக்கம் : மடங்கல் ஏறு - ஆண் சிங்கம். அல்குலையும் முலையினையும் முகத்தினையும் சாயலையும் உடைய அரம்பையர் என்று விதந்தார். அவர்தரும் போகவின்பத்தின் சிறப்புணர்த்தற்கு. (100)
வேறு
951. கற்றவைம் பதங்க ணீராக்
கருவினை கழுவப் பட்டு
மற்றவன் றேவ னாகி
வானிடு சிலையிற் றோன்றி
யிற்றத னுடம்பு மின்னா
விடரொழித் தினிய னாகி
யுற்றத னிலையும் எல்லாம்
ஓதியின் உணர்ந்து கொண்டான்.
பொருள் : கற்ற ஐம்பதங்கள் நீர்ஆ - கற்ற பஞ்சநமக்கார மந்திரம் நீராகக் கொண்டு ; கருவினை கழுவப்பட்டு - தீவினை கழுவப்பெற்று; அவன் வான் இடு சிலையின் தேவன் ஆகித் தோன்றி - அவன் இந்திர வில்போல வானவனாகித் தோன்றி; இற்ற தன் உடம்பும் - விடப்பட்ட தன் உடம்பையும்; இன்னா இடர் ஒழித்து இனியன் ஆகி உற்றவன் நிலையும் - துன்பந்தரும் இடரைக் கெடுத்துத் தனக்கு இனியவனாகித் தன்னைச் சேர்ந்த சீவகன் நிலையும்; எல்லாம் ஓதியின் உணர்ந்து கொண்டான் - யாவற்றையும் தன் அகஅறிவினாற் கண்டுணர்ந்தான் என்க.
விளக்கம் : இற்றஅவ் வுடம்பு எனவும், உற்றவன் நிலை எனவும் பாடம். ஐம்பதங்கள் - ஐந்தெழுத்து மந்திரம். கருவினை - ஈண்டுத் தீவினை. முன்னர் நீனிறவினை என்றதும் நினைக. வானிடு சிலையிற்றோன்றி என்பதற்கு, நூல்கள் இந்திரவில் இன்னவாறு தோன்றுமென்று அது தோன்று முறைமை கூறாவாகலின் அங்ஙனம் தோன்றுகின்ற தேவர்க்கு அஃது உவமையாயிற்று. இக் கருத்தானன்றே வானிடு வில்லின் வரவறியா என்றார் பிறரும் என்று வியக்கங் கூறியுள்ளார். ஓதி - முற்பிறப்பை யுணரும் அறிவு. (101)
வேறு
952. இரும்பி னீர்மை கெடுத்தெரி தன்னிறத்
தரும்பொ னாக்கிய வாருயிர்த் தோழனை
விரும்பி விண்ணிறுத் தொய்யெனத் தோன்றினான்
சுரும்புண் கண்ணிச் சுதஞ்சண னென்பவே.
பொருள் : இரும்பின் நீர்மை கெடுத்து - இரும்பைப் போன்ற இழிநிலையைக் கெடுத்து; எரிதன் நிறத்து அரும்பொன் ஆக்கிய - தீ நிறமுடைய அரிய பொன்போல உயர் நிலையை நல்கிய; ஆருயிர்த் தோழனை விரும்பி - சிறந்த உயிரனைய தோழனைக் காண வேண்டி ; சுரும்பு உண்கண்ணிச் சுதஞ்சணன் - வண்டு தேனைப் பருகும் கண்ணியணிந்த சுதஞ்சணன் என்பவன்; விண் இறுத்து ஒய் எனத் தோன்றினான் - வானைக் கடந்து விரைந்து வந்து நிலமிசைத் தோன்றினான்.
விளக்கம் : விண்அறுத்து சுதஞ்சனன் எனவும் பாடம். இரும்பும் நரகருயிர்; பொன் வானவர் உயிர் ; உவமை. இரும்பினீர்மை கெடுத்து எரிதன்னிறத்து அரும்பொன் ஆக்கிய ஆருயிர்த் தோழன் என்னுமிதனை இந்நூல் 3107-8-ஆம் செய்யுள்களால் நன்குணரலாம். விண்ணிறுத்து - வானுலகைவிட்டு. ஒய்யென என்றது விரைவுக் குறிப்பு. இஃது அச்சுதஞ்சணன் செய்ந்நன்றியறிதலை விளக்கி நின்றது. சுதஞ்சணன் என்பது நாயாயிருந்து தேவனாகிய உயிர்க்குப் பெயரும் இஃதென்றுணர்த்தியபடியாம்.
(102)
வேறு
953. ஓசனை நறும்புகை கமழ வொண்ணிலா
வீசிய கதிர்பரந் திமைக்கு மேனியன்
மாசறு மணிமுடி மிடைந்த மாலையன்
பூசுறு பருதியின் பொலிந்து தோன்றினான்.
பொருள் : ஓசனை நறும் புகை கமழ - ஓசனையளவு நறியபுகை மணங்கமழ; ஒண் நிலா வீசிய கதிர் பரந்து இமைக்கும் மேனியன் - ஒள்ளிய நிலவைப் போல எறியும் கதிர் பரவி ஒளிரும் மெய்யினனாகவும்; மாசு அறு மணி முடி மிடைந்து மாலையன் - குற்றம் அற்ற மணிமுடியிலே நெருங்கிய மாலையனாகவும்; பூசுஉறு பருதியின் பொலிந்து தோன்றினான் - கையினாற் புனைந்த ஞாயிறு போல விளங்கித் தோன்றினான்.
விளக்கம் : நச்சினார்க்கினியர், சுதஞ்சுணன் சீவகனைக் கண்ட பொழுதே வணங்கினான் எனக்கொண்டு, மேனியனது முடிமிடைந்த சீவகன் அப்பொழுது பருதிபோலத் தோன்றினான் என்று பொருள் கூறுவர்.
அவர் கூறும் விளக்கம் :-
நறும்புகை ஓரோசனை கமழா நிற்க இமைக்கும் மேனி, நிலாவை வீசி மதிபோல விளங்கும் மேனியன் - சுதஞ்ணன். அவனுடைய முடிவந்து சேர்ந்த இயல்பினையுடையான் - சீவகன் ; என்றது, இவன் ஆசிரியன் ஆதலிற் கண்டபொழுதே முடிவணங்கினான்; மேல், எந்தை (சீவக- 955) ; அண்ணல் ஏந்தி (மேற்படி-1158); காய் கதிர் சுமந்து (மேற்படி-1168) ; உரிமை தன்னால் ஆட்டி (மேற்படி-1169) எரிபொன்நீள் முடிகவித்தனன் பவித்திரற் றொழுதே (மேற்படி-2366): தாளார ஏத்தி (மேற்படி-3937); களிப்புற்றான் (3685) என்று கூறுமவைகளான் இதுவே கருத்தாம். விளக்கத்தானும் மதியைத் தோற்றுவித்தலானும் பருதி யுவமை. இனி, மேனியனாய், மாலையனாய்ப் பருதியிடத்தே தோன்றினான் என்பாரும் உளர். (103)
வேறு
954. குன்றெனத் திரண்ட தோளான்
குறுகலுங் குமர னோக்கி
நின்றவ னெடுங்க ணொன்று
மிமைப்பில நிழலில் யாக்கை
யன்றியுங் கண்ணி வாடா
தமரனே யென்று தேறி
நன்றவன் வரவு கேட்பா
னம்பி நீயாரை யென்றான்.
பொருள் : குன்று எனத் திரண்ட தோளான் குறுகலும் - மலைபோலத் திரண்ட தோளையுடைய சுதஞ்சணன் நெருங்குதலும்; குமரன் நோக்கி - சீவகன் பார்த்து; நின்றவன் நெடுங்கண் ஒன்றும் இமைப்பில் - இங்கு நின்றவனுடைய நீண்ட கண்கள் சிறிதும் இமைப்பிலவாயின!; நிழல் இல் யாக்கை - உடம்போ நிழலில்லாதது!; அன்றியும் கண்ணி வாடாது-மேலும் கண்ணியும் வாடலிலது; அமரனே என்று தேறி - (ஆதலால்) வானவனே என்று தெளிந்து; அவன் வரவு நன்று கேட்பான் - அவன் வரவை நன்றாக அறியவேண்டி; நம்பி! நீ யார்? என்றான் - நம்பியே! நீ யார்? என்று வினவினான்.
விளக்கம் : யாரை : ஐ; அசை. அமரனே ஆதல் தேறி என்றும் பாடம். தோளான் : சுதஞ்சணன். குமரன் : சீவகன். ஒன்றும் என்றது சிறிதும் என்னும் பொருள் குறித்துநின்றது. கண்ணிமையாமையும் உடற்கு நிழல்படாமையும் கண்ணிவாடாமையும் தேவர்கட்குரிய அடையாளங்கள். இவ்வுடலை வைக்கிரீக சரீரம் என்று வழங்குப. நம்பி : அண்மை விளி. (104)
955. குங்குமக் குவட்டின் வீங்கிக்
கோலம்வீற் றிருந்த தோளா
யிங்குநின் னருளிற் போகி
யியக்கரு ளிறைவ னாகிச்
சங்கவெண் மலையின் மற்றுச்
சந்திரோ தயத்தி னுச்சி
யங்கியா னுறைவ லெந்தை
யறிகமற் றென்று சொன்னான்.
பொருள் : குங்குமக் குவட்டின் வீங்கிக் கோலம் வீற்று இருந்த தோளாய்! - குங்கும மலைபோலப் பருத்து அழகு குடி கொண்ட தோளனே ; எந்தாய்! - எந்தையே!; இங்கு நின் அருளின் போகி - இங்கிருந்து நின் அருளினாற் சென்று; இயக்கருள் இறைவன் ஆகி - இயக்கருக்குத் தலைவன் ஆகி ; சங்க வெண்மலையின் உச்சி - சங்க வெண்மலையின்மேல்; சந்திரோதயத்தின் - சந்திரோதயம் என்னும் நகரிலே ; அங்கு யான் உறைவல் - அங்கே நான் வாழ்கின்றேன் ; அறிக என்று சொன்னான் - அறிந்து கொள்க என்று சுதஞ்சணன் கூறினான்.
விளக்கம் : குவட்டின்: இன் : உவமப் பொருள். மற்று : இரண்டும் அசை. தோளாய்! யான் நின் அருளிற்போகி, இயக்கர் தலைவனாகிச் சங்கமலை உச்சியிலுள்ள சந்திரோதயம் என்னும் நகரத்திலே உறைவல் என்றான் என்க. சங்கமலை - ஒரு மலையின் பெயர்; சந்திரோதயம் - அம்மலைக்கண் உள்ளதொரு நகரத்தின் பெயர் என்க. தன் அன்புடைமை தோன்றத் தான் பெற்றுள்ள தேவவுடம்பிற்குக் காரணனாதல் பற்றி எந்தை என்றான் என்க. (105)
956. என்றவ னுரைப்பக் கேட்டே
இமயமு நிகர்க்க லாற்றாப்
பொன்றரு மாரி வண்கைப்
புரவலன் புகன்று நோக்கி
வென்றவர் உலகம் பெற்ற
வேந்துடை யின்ப மெல்லா
மின்றெனக் கெதிர்ந்த தென்றா
னெரியுமிழ்ந் திலங்கும் வேலான்.
பொருள் : என்று அவன் உரைப்பக் கேட்டு - இவ்வாறு அவன் கூறக் கேட்டு; இமயமும் நிகர்க்கல் ஆற்றா - இமயமலையும் உவமைக் கொவ்வாத; பொன் தரு மாரி வண்கைப் புரவலன் - கற்பகத் தருவையும் முகிலையும் போன்ற கொடைக்கையனான; எரி உமிழ்ந்து இலங்கும் வேலான் - அனல் சொரிந்து விளங்கும் வேலினான்; புகன்று நோக்கி - விரும்பிப் பார்த்து ; வென்றவர் உலகம் பெற்ற - சித்த மீக்ஷத்திரத்தைப் பெற்ற ; வேந்து உடை இன்பம் எல்லாம் - சித்தபரமேட்டிகளின் இன்பம் முற்றும்; இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் - இப்போது எனக்குக் கிடைத்தது என்றுரைத்தான்.
விளக்கம் : இமயமும் நிகர்க்கலாற்றாப் புரவலன், பொன் தரு மாரி வண்கைப் புரவலன் எனத் தனித்தனிக் கூட்டுக. இமயமலை உலகந் தாங்குதற்குச் சீவகனுக்குக் கூறப்பட்ட மாறுபடவந்த உவமத் தோற்றம். நச்சினார்க்கினியர் இமயமலையைப் பொன்னுக்கு அடையாக்குவர். பொன்றரு - கற்பகத்தரு. மாரி - முகில். புகன்று - விரும்பி. ஈத்துவக்கும் இன்பமே இன்பங்களுட் சிறந்தமைபற்றிச் சித்தபரமேட்டியின் இன்பத்தை உவமையாக எடுத்தான். (106)
957. சூடுறு கழலி னாற்குச் சுதஞ்சண னிதனைச் சொன்னான்
பாடல்வண் டரற்றும் பிண்டிப் பகவன திறைமை போல
மூடியிவ் வுலக மெல்லா நின்னடித் தருவ லின்னே
யாடியுட் பாவை போனீ யணங்கிய தணங்க வென்றான்.
பொருள் : சூடுறு கழலினாற்கு சுதஞ்சணன் இதனைச் சொன்னான் - அணிந்த கழலானுக்குச் சுதஞ்சணன் இதனைக் கூறினான்; பாடல் வண்டு அரற்றும் பிண்டிப் பகவனது இறைமைபோல - பாட்டையுடைய வண்டுகள் முரலும் அசோகின் நீழலில் அமர்ந்த முதல்வனுடைய தலைமை இவ்வுலகையெல்லாம் அகப்படுத்தினாற்போல; இவ்வுலகம் எல்லாம் மூடி - நின் இறைமையாலே இவ்வுலகெலாம் அகப்படுத்தி; ஆடியுள் பாவைபோல் - கண்ணாடியிடத்துப் பாவைபோல; நீ அணங்கியது அணங்க - பல்லுயிரும் நீ வருந்திய தொழிலுக்கு வருந்துமாறு; இன்னே நின் அடித்தருவல் என்றான் - இப்போதே நின் அடியிடத்தே தருவேன் என்றான்.
விளக்கம் : உள் - இடம். சூடுறுகழல் - சூடுதலுற்ற வீரக்கழல் என்க. கழலினான் : சீவகன். இதனை என்றது கீழ்வருவதனை என்றவாறு. பகவன் - அருகக் கடவுள். மூடி - அகப்படுத்தி. ஆடியுட்பாவை - கண்ணாடியிற்றோன்றும் எதிர் உருவம். அணங்கியது : பெயர்; வருந்தியதற்கு என்க. கையும் காலுந் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல என்றார் குறுந்தொகையினும் (அ). நீ அணங்கிய தணங்க என்றதற்கு மன்னுயிரெல்லாம் நின்னஞ்சுமே என்று நச்சினார்க்கினியர் காட்டிய எடுத்துக் காட்டு அவர் உரையோடு பொருந்திற்றில்லை. மன்னுயிர் எல்லாம் உடலாகவும் மன்னன் உயிராகவும் கூறப்படுதலின், உயிர் வருந்துதற்கு உடலும் வருந்துதல் போன்று நீ வருந்தியதற்கு வருந்தும் அன்புடைய உயிர்களை உடைத்தாக இவ்வுலகத்தை ஆக்கி நின்னடித் தருவல் என்பதே நூலாசிரியர் கருத்தாதல் வேண்டும் என்க. (107)
958. வாளொடு வயவ ரீண்டி வாரணத் தொழுவின் முற்றி
மீளிமை செய்யின் வெய்ய நண்பநின் னினைப்ப தல்லால்
நாளொடு பக்கம் நைந்து வீழினும் வீழ்த லில்லாக்
கோளுடைக் கிழமை யொப்பாய் குறைவிலன் பிறவி (னென்றான்.
பொருள் : நாளொடு பக்கம் நைந்து வீழினும் - நாட்களும் பக்கங்களும் கெட்டு வீழ்ந்தாலும்; வீழ்தல் இல்லாக் கோள் உடைக்கிழமை ஒப்பாய் - வீழுந்தன்மை இல்லாத கோள்களின் உரிமை போன்ற உரிமையுடையாய் !; வாளொடு வயவர் ஈண்டி - வீரர்கள் வாளுடன் குழுமி; வாரணத் தொழுவின் முற்றி - யானைத் தொழுவுடன் என்னை வளைத்து; மீளிமை செய்யின் - வன்மை செய்தாராயின்; வெய்ய நண்ப! - விருப்பம் ஊட்டும் நண்பனே!; நின் நினைப்பது அல்லால் - உன்னைச் சிந்திப்பதன்றி; பிறவின் குறைவு இலன் என்றான் - பிறவாற்றான் யாதும் குறைவிலேன் என்றுரைத்தான்.
விளக்கம் : அருமை நோக்கிச், செய்யின் என்றான். அங்ஙனம் மேல் வருகின்ற ஊழ் இக் கருத்தினைப் பிறப்பித்தது நின்றது. இங்கு நச்சினர்ர்க்கினியர், முற்றி எனவே சிறைகோடலன்றிக் கட்டுதல் இன்மை உணர்க எனத் தாம் பின்னர்க் கூறும் உரைக்கேற்ப முன்மொழிந்து கொள்கின்றனர். (108)
959. இன்னிழ லிவரும் பூணா
னிருவிசும் பிவர்த லுற்றப்
பொன்னெழு வனைய தோளாற்
புல்லிக்கொண் டினைய கூறி
நின்னிழல் போல நீங்கே
னிடவர்வரி னினைக்க வென்று
மின்னெழூஉப் பறப்ப தொத்து
விசும்பிவர்ந் தமரன் சென்றான்.
பொருள் : இன் நிழல் இவரும் பூணான் - இனிய ஒளி பரவும் கலன் அணிந்த சுதஞ்சணன் ; இரு விசும்பு இவர்தல் உற்று - பெருவானிலே செல்லக்கருதி; பொன் எழு அனைய தோளான் புல்லிக் கொண்டு - பொற்றூண் போன்ற தோளரனைத் தழுவிக்கொண்டு; நின் நிழல்போல நீங்கேன் - உன் நிழலை போல நீங்காமல் இருப்பேன்; இடர் வரின் நினைக்க என்று - நினக்குத் துன்பம்வரின் நினைந்திடுக என்று; இனைய கூறி - இவை போன்ற இனிய மொழிகளை இயம்பி; மின் எழூஉப் பறப்பது ஒத்து - மின்னல் எழுந்து பறப்பது போல; விசும்பு இவர்ந்து அமரன் சென்றான் - விண்ணிலே எழுந்து அச் சுதஞ்சணன் சென்றான்.
விளக்கம் : அமரனாகிய பூணான் என்க. பூணான்: சுதஞ்சணன்: தோளான்: சீவகன், எழூஉ - எழுந்து. (109)
960. சொல்லிய நன்மை யில்லாச் சுணங்கனிவ் வுடம்பு நீங்கி
யெல்லொளித் தேவ னாகிப் பிறக்குமோ வென்ன வேண்டா
கொல்லுலை யகத்திட் டூதிக் கூரிரும் பிரதங் குத்த
வெல்லையில் செம்பொ னாகி யெரிநிறம் பெற்ற தன்றே.
பொருள் : சொல்லிய நன்மை இல்லாச் சுணங்கன் - நன்மையென்று கூறப்பட்டவை ஒன்றும் இம்மையிற் செய்தறியாத நாய்; இவ் உடம்பு நீங்கி எல் ஒளித்தேவன் ஆகி - இம் மெய்யை விட்டு (இதற்கு முன்னர்ச் செய்த நல்வினை வந்து துணையாகி ஒருவன் கூறிய மறையினால்) பேரொளியுறும் வானவன் ஆகி; பிறக்குமோ என்ன வேண்டா - பிறக்குமோ என்று (உலகினர்) கருத வேண்டா; கொல் உலை அகத்து இட்டு ஊதி - கொல்லன் உலையிலே வைத்து ஊதி; இரதம் குத்த - (உருகின போது) இரதத்தை வார்க்க; கூர் இரும்பு எல்லை இல் செம்பொன் ஆகி. - மிக்க இரும்பு மாற்றற்ற செம்பொன் ஆகி; எரி நிறம் பெற்றது அன்றே - தீயின் நிறத்தை அடைந்தது அல்லவா? (ஆகையால்).
விளக்கம் : முன், பெருநவை அகற்றினான் (சீவக. 946) என்றது உருகு முகத்திற்குவமை. (110)
வேறு
961. எரிமாலை வேனுதியி னிறக்கிக் காம னடுகணையாற்
றிருமாலை வெம்முலைமேற் றிளைக்குந் தேவர் திருவுறுக
வருமாலை யெண்வினையு மகற்றி யின்பக் கடலாக்கித்
தருமாலை யல்ல தியான் றலையிற் றாழ்ந்து பணிவேனோ.
பொருள் : எரிமாலை வேல் நுதியின் இறக்கி - எரியொழுங்கு போலும் வேலின் முனைகளான் இரணியன் முதலானோரைக் கொன்று; காமன் அடுகணையால் - (பின் காமனுக்குத் தோற்று) அவன் எய்த கணைகளினாலே; திருமாலை வெம்முலை மேல் திளைக்கும் தேவர் திருஉறுக - திருமகளின் மாலையணிந்த விருப்பமூட்டும் முலைகளின்மேல் இன்பந் துய்க்கும் திருமால் முதலான வானவர்கள் எல்லோரும் செல்வம் எய்துக; அருமாலை எண் வினையும் நீக்கி - நீக்குதற்கரிய எண் வினைகளையும் நீக்கி; இன்பக் கடல் ஆக்கி -வீட்டின்பத்தை உண்டாக்கி; தரும் மாலை அல்லது - தரும் அருகனை அல்லாமல்; யான் தலையின் தாழ்ந்து பணி வேனோ? - நான் தலையினால் தாழ்ந்து வணங்குவேனோ ?
விளக்கம் :எண் வினைகளை, எண்மர் கவிழ்ந்தனர் (சீவக. 3076) எனத் துறவில் விரியக் கூறுவர். எரிமாலை - தீயின் ஒழுங்கு. நுதி - நுனி. இறக்கி - இறக்கச் செய்து. இரணியன் முதலிய பகைவரைப் படைக்கலனாற் கொன்றமை திருமால் முதலிய தேவர்கட்குச் சினமுண்மையைக் காட்டுதலானும் காமன்கணையால் நொந்து அத்தேவர்கட்கு மகளிர் போகமுடைய ராதலைக் காட்டுதலானும் இவ்வாற்றால் காமவெகுளி மயக்கமுடைய அத்தேவர் இறைவர் ஆகார் என்பது கருத்து. திருவுறுக என்றது இகழ்ச்சிக் குறிப்பு. எண்வினை - ஞானாவரணீயம் முதலியன. மாலை அல்லது என்புழி மால் அருகக் கடவுள். (111)
962. ஒன்றாய வூக்கவேர் பூட்டி
யாக்கைச் செறுவுழுது
நன்றாய நல்விரதச் செந்நெல்
வித்தி யொழுக்கநீர்
குன்றாமற் றாங்கொடுத்தைம் பொறியின்
வேலி காத்தோம்பின்
வென்றார் தம் வீட்டின்பம் விளைக்கும்
விண்ணோ ருலகீன்றே.
பொருள் : ஒன்றாய ஊக்க ஏர் பூட்டி - பிளவுறாத ஊக்கமாகிய ஏரைப்பூட்டி; யாக்கைச் செறுஉழுது - உடம்பாகிய செய்யைத் தவத்தாலே வருந்துவித்து; நன்று ஆய நல்விரதச் செந்நெல் வித்தி - நல்ல நோன்பாகிய செந்நெல்லை விதைத்து; ஒழுக்கம் நீர் குன்றாமல் தாம் கொடுத்து - நல்லொழுக்கமாகிய நீரை வற்றாமற் பாய்த்தி; ஐம்பொறியின் வேலி காத்து ஓம்பின் - ஐம்பொறியாகிய வேலியைப் புலனாகிய பசுக்கள் பிரியாத வண்ணம் காத்துத் தீங்கைத் தடுத்தால்; (அந்நிலை) விண்ணோர் உலகு ஈன்று - முதலில் துறக்கத்தினை நல்கி; வென்றார் தம் வீட்டு இன்பம் விளைக்கும் - புலனை வென்ற சித்த பரமேட்டிகளின் பேரின்ப வீட்டினைத் தரும்.
விளக்கம் : ஊக்கத்திற்கு ஏரும், யாக்கைக்கு வயலும், விரதத்திற்குச் செந்நெல்லும், ஒழுக்கத்திற்கு நீரும் பொறியடக்கத்திற்கு வேலியும் வீட்டின்பத்திற்கு அச்செந்நெல் விளைவும் உவமைகள். வென்றார் - சித்தபரமேட்டிகள். (960) சொல்லிய முதலிய மூன்று கவியும் சீவகன் தோழரை நோக்கிக் கூறியவை. (112)
வேறு
963. இத்தலை யிவர்க ளேக
விமயநட் டரவு சுற்றி
யத்தலை யலற முந்நீர்
கடைந்தவ ரரவ மொப்ப
மைத்தலை நெடுங்க ணாரு
மைந்தரு மறலி யாட
மொய்த்திரள வன்ன மார்க்கு
மோட்டிரும் பொய்கை புக்கார்.
பொருள் : இவர்கள் இத்தலை ஏக-சீவகனும் தோழர்களும் இங்கிருந்து செல்ல; மைத்தலை நெடுங்கணாரும் மைந்தரும் - மைதீட்டிய நெடுங்கண் மகளிரும் மைந்தரும்; அத்தலை இமயம் நட்டு அரவு சுற்றி - அக் காலத்தே இமயத்தை நட்டுப் பாம்பைச் சுற்றி; முந்நீர் அலறக் கடைந்தவர் அரவம் ஒப்ப - கடல் அலறுமாறு கடைந்தவர்களின் ஆரவாரம் போல; மறலி ஆட - மாறு பட்டு ஆடுதற்கு; இள அன்னம் மொய்த்து ஆர்க்கும் - இளமையான அன்னங்கள் மொய்த்து ஆரவாரிக்கும்; மோட்டு இரும்பொய்கை புக்கார் - மேன்மையான பெரிய பொய்கையை அடைந்தனர்.
விளக்கம் : மந்தரத்தின் தொழிலை இமயத்துக் கேற்றினார், அது மலையரையன் ஆதலின்; இமயவில் வாங்கிய (கலி. 38) என்றார் பிறரும்; (மேருவின் தொழிலை இமயத்திற் கேற்றுதல்) அத்தலை - அக்காலத்து. (113)
964. கலந்தெழு திரைநுண் ணாடைக்
கடிக்கய மடந்தை காம
ரிலங்குபொற் கலாபத் தல்கு
லிருகரைப் பரப்பு மாக
வலர்ந்ததண் கமலத் தம்போ
தணிதக்க முகத்திற் கேற்ப
நலங்கெழு குவளை வாட்க
ணன்னுத னலத்தை யுண்டார்.
பொருள் : இருகரைப் பரப்பும் - இருகரை யிடமும் ; காமர் இலங்கு பொன் கலாபத்து அல்குல் ஆக - அழகிய விளக்கமுற்ற பொன் மேகலை அணிந்த அல்குலாகவும் ; கலந்து எழுதிரை நுண் ஆடை - அதிலே கலந்து எழுகின்ற அலையாகிய நுண்ணிய ஆடையினையும்; அலர்ந்த தண்கமலத்து அம்போது அணிதக்க முகத்திற்கு ஏற்ப - மலர்ந்த தண்ணிய தாமரைப் போதாகிய அழகிய முகத்திற்குத்தக; நலம் கெழுகுவளை வாள்கண் - அழகு பொருந்திய குவளையாகிய வாட்கண்ணினையும் உடைய; கடிக்கய மடந்தை காமர் நன்னுதல் நலத்தை உண்டார் - மணமுறுங் கயமாகிய மடந்தையாகிய அழகிய நன்னுதலாளின் நலத்தைப் பருகினர்.
விளக்கம் : அணிதக்க குவளை வாட்கண் என்று கூட்டி, ஏற்ப என்னும் எச்சம் தக்க என்னும் வினைகொண்டது என்பர் நச்சினார்க்கினியர். இந் நூலாசிரியர் கலைபயிலுதல் அரசு கட்டிலேறுதல் முதலியவற்றையும் திருமணமாகக் கூறும் தம் வழக்கத்திற்கேற்பவே ஈண்டும் புனலாட்டின்பத்தையும் மகளிர் போகமாகவே கூறுகின்றார். கடிக்கய மடந்தை - மணமுடைய குளமாகிய நங்கை. கலாபம் - ஓர் அணிகலன். அணிதக்க முகம் - அழகு வீற்றிருத்தற்கு ஏற்ற முகம். நன்னுதல் : அன்மொழி. (114)
965. தண்ணுமை முழவு மொந்தை
தகுணிச்சம் பிறவு மோசை
யெண்ணிய விரலோ டங்கை
புறங்கையி னிசைய வாக்கித்
திண்ணிதிற் றெறித்து மோவார்
கொட்டியுங் குடைந்து மாடி
யொண்ணுதன் மகளிர் தம்மோ
டுயர்மிசை யவர்க ளொத்தார்.
பொருள் : தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் - தண்ணுமை முதலியவற்றின் ஓசைகளையும்; பிறவும் எண்ணிய ஓசை - மற்றும் எண்ணி கருவிகளின் ஓசைகளையும்; விரலோடு அங்கை புறங் கையின் இசைய - விரலாலும் உள்ளங்கையாலும் புறங்கையாலும் பொருந்துமாறு; திண்ணிதின் தெறித்தும் கொட்டியும் குடைந்தும் ஆக்கி - உறுதியாகத் தெறித்தும் தட்டியும் கலக்கியும் நீரிலே பிறப்பித்து; ஓவார் - ஒழிவிலராய்; ஒண் நுதல் மகளிர் தம்மோடு ஆடி - ஒள்ளிய நெற்றியையுடைய மகளிருடன் ஆடி ; உயர்மிசை யவர்கள் ஒத்தார் - வானலகத்த வரைப் போன்றனர் ஆடவர்கள்.
விளக்கம் : தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் என்பன இசைகருவிகள். உயர்மிசையவர்கள் - வானவர். இன்ப நுகர்ச்சிக்கு வானவர் உவமை. (115)
966. சிவிறியின் மாறு தூயுங்
குங்கும மெறிந்துந் தேங்கொ
ளுவறுநீ ருழக்கி யோட்டி
யுடைபுறங் கண்டு நக்குத்
தவறெனத் தாமம் பூட்டித்
தருதிறை கொண்டு மின்பத்
திவறினார் காம வெள்ளத்
தேத்தருந் தன்மை யாரே.
பொருள் : தேன் கொள் உவறு நீர் - இனிமை கொண்ட ஊற்று நீரில்; சிவிறியின் மாறு தூயும் - நெடுந்துருத்தியினால் மாறுகொண்டு தூவியும்; குங்குமம் எறிந்தும் - குங்குமத்தை மேலே வீசியும்; உழக்கி ஓட்டி உடைபுறம் கண்டு நக்கு - (நீரைக்) கலக்கி வெளியேற்றித் தோல்வி கண்டு நகைத்து; தவறு எனத்தாமம் பூட்டித் தரு திறை கொண்டும் - அஞ்சினாய் ஆகையால் தவறு செய்தாய் என்று கூறி மலர்மாலையாற் பிணித்துத் திறை பெற்றும்; ஏத்தருந் தன்மையார் - புகழ்தற்கரிய பண்பினார்; காம வெள்ளத்து இன்பத்து இவறினார் - (மேலும்) காம வெள்ள இன்பத்திலே மிகுந்தனர்.
விளக்கம் : தரு திறை : புணர்ச்சியின்பம். சிவிறி - நீர் வீசுமொரு கருவி. தூயும் - தூவியும். மாறுதூவுதல் - ஒருவர்மேல் ஒருவர் எதிர்நின்று தூவுதல். உடைபுறம் - உடைதலானே காட்டப்படும் முதுகு. உவறு நீர் - ஊறும் நீர்; உவறு நீர் உயர் எக்கர் என்றார் கலியினும் (136.) இவறுதல் - மிகுதல். (116)
967. சாந்தக நிறைந்த தோணி
தண்மலர் மாலைத் தோணி
பூந்துகி லார்ந்த தோணி
புனைகலம் பெய்த தோணி
கூந்தன்மா மகளிர் மைந்தர்
கொண்டுகொண் டெறிய வோடித்
தாந்திரைக் கலங்கள் போலத்
தாக்குபு திரியு மன்றே.
பொருள் : கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டு கொண்டு ஓடி எறிய - கூந்தலையுடைய மகளிரும் ஆடவரும் சாந்து முதலியவற்றைக் கொண்டு ஓடி எறிதலால்; சாந்தகம் நிறைந்த தோணி - சாந்தைத் தன்னிடத்தே கொண்ட தோணியும்; தண்மலர் மாலைத் தோணி - குளிர்ந்த மலர்மாலை கொண்ட தோணியும்; பூந்துகில் ஆர்ந்த தோணி - பூவேலை செய்த ஆடை நிறைந்த தோணியும்; புனைகலம் பெய்த தோணி - அணிகலம் கொண்ட தோணியும்; தாம் - ஆகிய இவைகள்; திரைக் கலங்கள் போல - கடலிற் கலங்கள் போல; தாக்குபு திரியும் - தம்மில் தாக்கித் திரியும்.
விளக்கம் : அன்று, ஏ : அசைகள். நீராட்டுவிழவிற்குவேண்டிய சாந்து முதலியவற்றை யுடையவாய் நீரிலே நின்ற பல்வேறு தோணிகளும் அவர்கள் நீராட்டின் எழுந்த அலைகளான் அலைப்புண்டு ஒன்றனோடொன்று தாக்கித் திரியும் என்றவாறு. தாக்குபு - தாக்கி. (117)
968. கலிவளர் களிறு கைந்நீர்
சொரிவபோன் முத்த மாலை
பொலிவொடு திவண்டு பொங்கிப்
பூஞ்சிகை யலமந் தாடக்
குலிகநீர் நிறைந்த பந்திற்
கொம்பனா ரோச்ச மைந்தர்
மெலிவுகண் டுவந்து மாதோ
விருப்பொடு மறலி னாரே.
பொருள் : முத்த மாலை பொலிவொடு திவண்டு பொங்கி - முத்துமாலை அழகுற அசைந்து பொங்க; பூஞ்சிகை அலமந்து ஆட - பின்னின மயிர் சுழன்று அசைய; கொம்பனார் - பெண்கள்; கலிவளர் களிறு கை நீர் சொரிவ போல் - தழைத்து நீண்ட, களிற்றின் துதிக்கை நீரைச் சொரிவனபோல ; குலிக நீர் நிறைந்த பந்தின் - செங்குலிக நீர் நிறைந்த மட்டத் துருத்தியினால்; ஓச்ச - நீரை வீசி; மைந்தர் மெலிவு கண்டு உவந்து - ஆடவரின் சோர்வு கண்டு மகிழ்ந்து; விருப்பொடு மறலினார் - (மேலும்) விருப்பத்துடன் மாறுபட்டார்.
விளக்கம் : பொங்கி - பொங்க: எச்சத்திரிபு. மாது, ஓ : அசைகள். கலிவளர் களிறு என்றதற்குச் செருக்கு மிகாநின்ற களிறு எனலுமாம். குலிகம் - சாதிலிங்கம். பந்து, இதுவுமோர் வகைத்துருத்தி ; இதனை மட்டத்துருத்தி என்பர். (118)
969. வண்ணவொண் சுண்ணம் பட்டு
மாலையுஞ் சாந்து மேந்தி
யெண்ணருந் திறத்து மைந்த
ரெதிரெதி ரெறிய வோடி
விண்ணிடை நுடங்கு மின்னு
மீன்களும் பொருவ போல
மண்ணிடை அமரர் கொண்ட
மன்றலொத் திறந்த தன்றே.
பொருள் : விண்ணிடை நுடங்கும் மின்னும் மீன்களும் போருவ போல - வானிலே அசையும் மின்கொடியும் மீன்களும் தம்மிற் பொருவன போல; வண்ண ஒண் சுண்ணம் பட்டும் மாலையும் சாந்தும் ஏந்தி - அழகிய ஒள்ளிய சுண்ணப் பொடியையும் பட்டையும் மாலையையும் சாந்தையும் ஏந்தி ; எண் அருந் திறந்து மைந்தர் - எண்ணற்கரிய ஆடவர்கள்; எதிர் எதிர் எறிய - (மகளிரின்) எதிரே எதிரே; மண் இடை அமரர் கொண்ட மன்றல் ஒத்து - நிலமிசை வானவர்கொண்ட மணம் போல; ஓடிஇறந்தது - (அவ்விரு திறத்தாரும்) சோர்ந்த பிறகு நீர்விளையாட்டுக்) கழிந்தது.
விளக்கம் : வண்ண ஒண் சுண்ணம் - நன்னிறமும் ஒளியும் உடைய நறுமணப் பொடி. மீன்கள் மைந்தர்க்கும் நுடங்குமின் மகளிர்க்கும் உவமையாகக் கொள்க. மன்றல் - திருமணம். இந்நீராட்டு விழா தேவர் திருமண விழாப் போன்றிருந்தது என்பது கருத்து. (119)
வேறு
970. உரைத்த வெண்ணெயு மொண்ணறுஞ் சுண்ணமு
மரைத்த சாந்தமு நானமு மாலையு
நுரைத்து நோன்சிறை வண்டொடு தேனின
மிரைத்து நீர்கொழித் தின்ப மிறந்ததே.
பொருள் : உரைத்த எண்ணெயும் - தேய்த்துக்கொண்ட எண்ணெயும்; ஒள் நறுஞ் சுண்ணமும் - சிறந்த சுண்ணப் பொடியும்; அரைத்த சாந்தமும் - அரைத்த சந்தனமும்; நானமும் மாலையும் - கத்தூரியும் மாலைகளுமாக; நுரைத்து - நுரை செய்து ; நோன்சிறை வண்டொடு தேன் இனம் இரைத்து - வலிய சிறகுகளையுடைய வண்டும் தேன் இனமும் முரன்று; கொழித்து - தெளிவுடையதாய்; நீர் இன்பம் இறந்தது - நீர் இனிமை மிகுந்தது.
விளக்கம் : உரைத்த முதலிய பெயரெச்சங்கள் செயப்படுபொருளன. உரைத்த - உரைக்கப்பட்ட; அரைத்த - அரைக்கப்பட்ட, நுரைத்து - நுரைக்கப்பட்டு, இரைத்து - இரைக்கப்பட்டென இவ்வெச்சங்களை செயப்பாட்டு எச்சங்ளாகக் கொள்க. இன்பம் இறந்ததே என்பதற்குத் தனது நலமிழந்தது எனலுமாம். என்னை? நீராடியபின் அந்நீர் உண்ணவும் ஆடவும் தகுதியற்றதாகும் என்பதே பரிபாடலினும் காணப்பட்டது ஆகலான் என்க.
கழுநீர மஞ்சனக் குங்குமக் கலங்கல்
வழிநீர் விழுநீர அன்று வையை
என்பது பரிபாடல். (120)
வேறு
971. கத்திகைக் கண்ணி நெற்றிக் கைதொழு கடவு ளன்ன
வித்தக விளைய ரெல்லாம் விழுமணிக் கலங்க டாங்கி
முத்தணிந் தாவி யூட்டி முகிழ் முலை கச்சின் வீக்கிப்
பித்திகைப் பிணையல் சூழ்ந்து பெண்கொடி பொலிந்த வன்றே.
பொருள் : கத்திகைக் கண்ணி நெற்றிக் கைதொழு கடவுள் அன்ன - குருக்கத்திக் கண்ணியணிந்த நெற்றியை உடைய, யாவருங் கைகுவித்துத் தொழும் முருகனைப் போன்ற; வித்தக இளையர் எல்லாம் விழுமணிக் கலங்கள் தாங்கி - திறமுடைய இளைஞர்கள் யாவரும் சிறந்த மணியணிகளைப் புனையவும்; பெண் கொடி - பெண் கொடிகள் எல்லாம்; ஆவி ஊட்டி - கூந்தலுக்கு அகிற்புகையூட்டி; முத்து அணிந்து முகிழ்முலை கச்சின் வீக்கி - முத்துமாலை அணிந்து, அரும்பனைய முலைகளைக் கச்சினால் இறுக்கி; பித்திகைப் பிணையல் சூழ்ந்து - பிச்சிமாலை புனைந்து; பொலிந்த - பொலிவுற்றன.
விளக்கம் : கத்திகை . குருக்கத்தி மலர். கண்ணி-தலையிற் சூடும் மாலை. உலகெலாங் கை தொழுதற்குரிய கடவுள் என்க. கடவுள் ஈண்டு முருகன். வித்தகம் - சதுரப்பாடு. விழுமணி - சிறந்தமணி. தாங்கி என்னும் எச்சத்தைத் தாங்க எனத் திரித்துக் கொள்க. ஆவி - நறுமணப் புகை. பித்திகைப் பிணையல் - பிச்சிமலர் மாலை. பெண் கொடிகள் பல பொலிந்த எனப் பலவின்பால் முற்றுவினையைக் கூட்டுக. (121)
972. திருந்துபொற் றேருஞ் செம்பொற்
சிவிகையு மிடைந்து தெற்றிக்
கருங்கயக் களிறு மாவுங்
காலியற் பிடியு மீண்டி
நெருங்குபு மள்ளர் தொக்கு
நெடுவரைத் தொடுத்த வெள்ளங்
கருங்கடற் கிவர்ந்த வண்ணங்
கடிநகர்க் கெழுந்த வன்றே.
பொருள் : திருந்து பொன் தேரும் - அழகிய பொற்றோரும்; செம்பொன் சிவிகையும் - செம் பொன்னாலான பல்லக்கும் ; மிடைந்து தெற்றி - நெருங்கிப் பிணங்கி; கருங்கயக் களிறும் - கரிய பெரிய களிறுகளும் ; கால்இயல் பிடியும் - காற்றெனச் செல்லும் பிடியும் ; மாவும் நெருங்குபு - புரவிகளுமாக நெருங்கி; மள்ளர் தொக்கு - வீரர் குழுமி ; நெடுவரைத் தொடுத்த வெள்ளம் - பெரிய மலையினின்றும் இடையறாது பெறுகும் வெள்ளம்; கருங்கடற்கு இவர்ந்த வண்ணம் - கரிய கடலை நோக்கிச் சென்றாற் போல; கடிநகர்க்கு எழுந்த - காவலையுடைய நகருக்குப் போயின.
விளக்கம் : தெற்றுதல் - செறிதல். கருங்கயக்களிறு என்புழி கய உரிச்சொல்; பெருமைப் பண்பு குறித்து நின்ற. மா - குதிரை. கால் - காற்று, நெருங்குபு - நெருங்கி. வெள்ளம் - நீராடிமீளும் குழுவிற் குவமை, கருங்கடல் - நகரத்திற்குவமை. (122)
வேறு
973. கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென
வுடல்சின வுருமென வூழித் தீயெனத்
தொடர்பிணி வெளின்முதன் முருக்கித் தோன்றிய
தடலருங் கடாக்களிற் றசனி வேகமே.
பொருள் : கடல் என - முழக்காற் கடல்போலவும்; காற்று என - விரைவாற் காற்றெனவும்; கடுங்கண் கூற்று என - கொடுமையால் கூற்றுவன் நிகர்ப்பவும்; உடல் சின உரும் என - வருத்தும் சினத்தால் இடி யேய்ப்பவும்; ஊழித் தீ என - ஒன்றாக அழித்தலின் ஊழித்தீ யொப்பவும்; அடல் அருங்கடாக் களிற்று அசனி வேகம் - கொல்லற்கரிய மதகளிறாகிய அசனிவேகம்; தொடர்பிணி வெளில் முதல் முருக்கி - காலிற் சங்கிலி பிணித்த மரத்தையும் கம்பத்தையும் அடியிலே முறித்து; தோன்றியது - வெளிப்பட்டது.
விளக்கம் : கடல் முதலிய உவமைகட்கு முழக்கம் முதலிய பொதுத் தன்மைகள் விரித்துக் கொள்க. உடல் சினம் : வினைத்தொகை. உடலுதல் - மாறுபடுதல். உரும் - இடி. ஊழித்தீ - ஊழிக்காலத்தே தோன்றி உலகினை அழிக்கும் நெருப்பு. தொடர் - சங்கிலி. வெளில் - தறி. அசனிவேகம் - கட்டியங்காரன் பட்டத்தியானை. களிற்றசனி வேகம் என்புழி உயிர்த்தொடர் றகரவொற்று அல்வழிக்கண் இரட்டிற்று. (123)
974. பொருதிழி யருவி போன்று
பொழிதரு கடாத்த தாகிக்
குருதிகொண் மருப்பிற் றாகிக்
குஞ்சரஞ் சிதைந்த தென்னக்
கருதிய திசைக ளெல்லாங்
கண்மிசைக் கரந்த மாந்தர்
பருதியின் முன்னர்த் தோன்றா
மறைந்தபன் மீன்க ளொத்தார்.
பொருள் : குஞ்சரம் பொருது இழி அருவி போன்று - அக்களிறு, மலையிடைப் பொருது விழும் அருவி போல; பொழி தரு கடாத்தது ஆகி - சொரியும் மதமுடையதாய்; குருதி கொள் மருப்பிற்று ஆகி - செந்நீர் பயின்ற கொம்புடையதாய்; சிதைந்தது என்ன - தன் பண்பு கெட்டது என்று அதனைக் கண்டவர் கூக்குரலிட்டாராக; கருதிய திசைகள் எல்லாம் கண்மிசைக் கரந்த மாந்தர் - அக்களிற்றின் கண்கள் நோக்குந் திக்கெல்லாம் அதன் கண்ணிடத்தே தோன்றாமல் மறைந்த மக்கள் பருதியின் முன்னர்த் தோன்றா - கதிரவன் முன்னே தோன்றாதனவாய்; மறைந்த பன்மீன்கள் ஒத்தார் - மறைந்த பல விண்மீன்களைப் போன்றனர்.
விளக்கம் : மிசை - இடம். இது போகாமல் நின்ற நிலையிலே மறைந்ததற்குவமை. மக்களைக் குத்திக்கொன்றதென்பது தோன்றக் குருதிகொள் மருப்பிற்றாகி என்றார். குஞ்சரம் - யானை. தோன்றா : பலவறிசொல் ; தோன்றாதவனவாய் என்க. (124)
975. கருந்தடங் கண்ணி தன்மேற்
காமுக ருள்ளம் போல
விருங்களி றெய்த வோடச்
சிவிகைவிட் டிளைய ரேக
வரும்பெற லவட்குத் தோழி
யாடவ ரில்லை யோஎன்
றோருங்குகை யுச்சிக் கூப்பிக்
களிற்றெதி ரிறைஞ்சி நின்றாள்.
பொருள் : கருந் தடங்கண்ணி தன்மேல் - கரிய பெரிய கண்ணாளாகிய குணமாலையின் மேல்; காமுகர் உள்ளம் போல - காமுகர் உள்ளம் செல்வது போல; இருங்களிறு எய்த ஓட - பெரிய களிறு நோக்கமுற்றோட; சிவிகை விட்டு இளையர் ஏக - பல்லக்கை விட்டுப் பணியாளரும் ஓடிவிட்டதால்; அரும் பெறல் அவட்குத் தோழி - பெறுதற்கரிய அவளுக்குத் தோழியானவள்; ஆடவர் இல்லையோ என்று - ஆடவர் யாரும் இங்கிலையோ என்று கூவி; உச்சி கை ஒருங்கு கூப்பி - உச்சியிலே கைகளை ஒன்றாகக் குவித்து; களிற்று எதிர் இறைஞ்சி நின்றாள் - யானையின் எதிரே வணங்கி நின்றாள்.
விளக்கம் : கார் விரி மின்னனார் மேற் காமுகர் நெஞ்சின் ஓடும் தேர் பரி கடாவி (சீவக. 442) என முன்னரும் இவ்வுவமை வருதல் காண்க. கண்ணி - ஈண்டுக் குணமாலை. இளையர் - சிவிகை காவுவோர். அரும்பெறலவள் - குணமாலை.(125)
976. என்னைக்கொன் றிவள்க ணோடு
மெல்லையி லொருவன் றோன்றி
யின்னுயி ரிவளைக் காக்கு
மன்றெனி லென்கண் மாய்ந்தாற்
பின்னைத்தான் ஆவ தாக
வென்றெண்ணிப் பிணைக ணோக்கி
மின்னுப்போ னுடங்கி நின்றாள்
வீததை பொற்கொம் பொப்பாள்.
பொருள் : என்னைக் கொன்று இவள்கண் ஓடும் எல்லையில் - என்னை இக்களிறு கொன்று இவளிடம் ஓடும்போது; ஒருவன் தோன்றி - ஒருவன் வந்து; இவள் இன்னுயிரைக் காக்கும் - இவளுடைய இனிய உயிரைக் காப்பான்; அன்று எனில் - இல்லையென்றால்; என்கண் மாய்ந்தாற் பின்னைத்தான் ஆவது ஆக - என்கண் இறந்தாற் பிறகு ஆவது ஆகுக; என்று எண்ணி - என நினைந்து (நிற்க); பிணைகொள் நோக்கி - மானோக்கினாள் ஆகிய; வீததை பொன் கொம்பு ஒப்பாள் - மலர்கள் செறிந்த பொற்கொடி போன்ற குணமாலை ; மின்னுப்போல் நுடங்கி நின்றாள் - மின்னைப்போல் ஒசிந்து நின்றாள்.
விளக்கம் : எண்ணி - எண்ண, ஒருவன் என்பது உட்கோளாதலின், ஆடவர் எனப் பன்மையாற் கூறினாள். நச்சினார்க்கினியர் முற்செய்யுளுடன் (975) இதனைப் பிணைத்துக், குணமாலை தன்மேற் களிறு ஓடிவருதலைக் கண்டு இறைஞ்சி மின்னுப் போல் நுடங்கி நின்றாள் என்றும், தோழி மேற்கூறியவாறு எண்ணிக் களிற்றின்முன் கைகுவித்து நின்றாள் என்றும் முன் பின்னாக மாற்றியுரைப்பர். மேல், நெடுங்கணாற் கவர்ந்தகள்வி - அஞ்சனத் துவலையாடி நடுங்கினாள் நாட்டமும் நடுக்கமும் (சீவக- 1024, 1003) என வருவதால், மின்னுப் போல் நுடங்கி நின்றாள் குணமாலையாகக் கொள்ளவேண்டியுள்ளது. அதன் பொருட்டே எண்ணி என்பதை, எண்ண எனத் திரிக்க வேண்டியுள்ளது. இது நச்சினார்க்கினியர்க்குடன்பாடேயாகும். (126)
977. மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணா
லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து
தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப்
பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான்.
பொருள் : பணிவருங் குருசில் - பிறரைப் பணிதலில்லாத சீவகன்; மணி இருதலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால் - இரு முனைகளினும் மணியைச் சேர்த்துச் சிறந்த பொன்னாற் செய்யப்பட்ட கயிற்றினால்; அணி இருங் குஞ்சி ஏறக் கட்டியிட்டு - அழகிய கரிய குஞ்சியைச் சேர்த்துக்கட்டி; அலங்கல் சூழ்ந்து - மாலையை அதன்மேற் சுற்றி ; தணிவு அருந்தோழர் சூழ - அன்பு குறைதல் அறியாத தோழர்கள் சூழ்ந்துவர தாழ்குழை திருவில் வீச - தாழ்ந்த குழை வானவில்லென ஒளி சொரிய; செல்வான் பாவையது இடரைக் கண்டான்-செல்பவன் குணமாலையின் துன்பத்தைக் கண்டான்.
விளக்கம் : கட்டியிட்டு : ஒரு சொல், குழல் , யேறக்கட்டி என்றும் பாடம். வான்பொன் - சிறந்த பொன். இருங்குஞ்சி - கரிய மயிர். தணிவரும் என்புழி அன்பு தணிதலில்லாத என வருவித்தோதுக. குழை - குண்டலம். தாழ்குழை : வினைத்தொகை. குருசில் - தலைமைத் தன்மையுடைய சீவகன். பாவை : குணமாலை. (127)
978. பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத
லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா
வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா
வண்ணலங் களிற்றை வையா ஆர்ததுமே லோடினானே.
பொருள் : பெருந்தகை பெண்ணுயிர் அவலம் நோக்கி - பெருந்தகையான சீவகன் ஒரு பெண்ணின் உயிர் இறந்துபடுதல் கண்டு ; வாழ்வின் சாதல் எண்ணினன் - வாழ்வதினும் சாதல் மேலென எண்ணினான் ; எண்ணி நொய்தா இனம் மலர்மாலை சுற்றா - எண்ணிக் கடிதாக இனமலர் மாலைகளைச் சுற்றி; வண்ணப் பொன் கடகம் ஏற்றா - அழகிய பொற்கடத்தை மேலே ஏற்றி; வார் கச்சில் தானை வீக்கா-நீண்ட கச்சினால் ஆடையை இறுக்கி; அண்ணல் அம் களிற்றை வையா - பெருமை தங்கிய களிற்றை வைது; ஆர்த்து மேல் ஓடினான் - ஆர்ப்பரித்துக் களிற்றின்பால் ஓடினான்.
விளக்கம் : வேழம் நான்கும் வெல்லும் ஆற்றலன் (சீவக. 649) ஆதலால், இக்களிறு அடர்க்க எளிதாயினும். அடர்த்தாற் கட்டியங்காரற்கும் நமக்கும் வேறுபாடு பிறக்கு மென்றெண்ணி, முதலில் அதனை அடக்காது சென்றானெனினும், பெண்ணுயிர் அவலப்படுதல் கண்டு, அவ் வேறுபாடு, இவள் இறந்து படுதல் கண்டு போதலினும் நன்றென்று கருதினான்; அக்களிற்றை அடர்ப்பதால் இறப்பு நேரினும் ஏற்கவும் எண்ணனின். (128)
979. குண்டலங் குமரன் கொண்டு
குன்றின்மேல் வீழு மின்போ
லொண்டிறற் களிற்றி னெற்றி
யெறிந்துதோ டொலித்து வீழ
மண்டில முத்துந் தாரு
மாலையுங் குழலும் பொங்க
விண்டலர் கண்ணி சிந்த
மின்னிற்சென் றெய்தி னானே.
பொருள் : குமரன் குண்டலம் கொண்டு - (ஓடிய) குமரன் (தான் செல்வதற்கு முன்னே களிறு தாழாதவாறு) காதின் குண்டலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு; குன்றின்மேல் வீழும் மின்போல் - மலையின்மேல் விழும் மின்னல்போல ; ஒண்திறல் களிற்றின் நெற்றி எறிந்து - பெருந்திறல் படைத்த யானையின் நெற்றியிலே வீசி; தோடு ஒலித்து வீழ - தோடு ஒலியுடன் வீழ; மண்டிலம் முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க - வட்டமான முத்து வடமும் தாரும் மாலையும் சிகையும் பொங்கி நிற்க; விண்டு அலர் கண்ணி சிந்த -முறுக் கவிழ்ந்து மலர்ந்த கண்ணி விழ ; மின்னின் சென்று எய்தினான் - மின்னுப் போலப் போய்ச் சேர்ந்தான்.
விளக்கம் : தோடு தானே, குண்டலம் எறிந்த விசையில் வீழ்ந்தது. தார், கண்ணி, மாலை என்பற்றின் வேறுபாடுணர்க. (129)
980. படம்விரி நாகஞ் செற்றுப்
பாய்ந்தரு கலுழன் போல
மடவர லவளைச் செற்று
மதக்களி றிறைஞ்சும் போழ்திற்
குடவரை நெற்றி பாய்ந்த
கோளரி போன்று வேழத்
துடல்சினங் கடவக் குப்புற்
றுருமென வுரறி யார்த்தான்.
பொருள் : படம் விரி நாகம் செற்றுப் பாய்தரு கலுழன் போல - படம் விரிந்த நாகத்தைச் சினந்து பாயுங் கருடனைப் போல; மடவால் அவளைச் செற்று - முன்பு நின்ற மாலையென்னும் மடவரலாகிய அவளைச் சீறி ; மதக்களிறு இறைஞ்சும் போழ்தில் - மதயானை தாழும் அளவில்; குடவரை நெற்றி பாய்ந்த கோள் அரி போன்று - மேலைமலை உச்சியிலே தாவிய கொலைவல்ல சிங்கம் போல; வேழத்து உடல் சினம் கடவக் குப்புற்று - களிற்றின் கொல்லுஞ் சீற்றம் பொங்குமாறு அதன் நெற்றியிலே குதித்து; உரும் என உரறி ஆர்த்தான் - இடி போல முழங்கி ஆர்த்தான்.
விளக்கம் : குடவரை யானை நெற்றியிலுள்ள புள்ளிக்குவமை. செற்று இரண்டும் சினந்து என்னும் பொருளன. கலுழன் - கருடன். மடவரலவளை என்றது, தோழியை. இறைஞ்சுதல் கோட்டாற் சூத்திக் கொல்லுதற்குக் குனிதல். குடவரை - யானையின் மத்தகத்திற்குவமை. கோள் அரி-கொலைத் தொழிலையுடைய சிங்கம்: இது சீவகனுக்குவமை. உடல் சினம் : வினைத்தொகை. குப்புறுதல் - குதித்தல். உரறுதல் - முழங்குதல். (130)
981. கூற்றென முழங்கிக் கையாற்
கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து
காற்றென வுரறி நாகங்
கடாம்பெய்து கனவிற் சீறி
யாற்றலங் குமரன் றன்மே
லடுகளி றோட லஞ்சான்
கோற்றொடிப் பாவை தன்னைக்
கொண்டுயப் போமின் என்றான்.
பொருள் : கூற்று என முழங்கி - (சீவகன்) காலனைப் போல ஆர்த்து; கையால் கோட்டிடைப் புடைப்ப - கையினாலே கொம்புகளின் இடையிலே தாக்கலின்; நாகம் காய்ந்து காற்று என உரறி - யானை சினந்து காற்றைப் போல முழங்கி; கடாம் பெய்து - மதம் பொழிந்து; கனலின் சீறி - நெருப்பெனப் பொங்கி; ஆற்றல் அம் குமரன் தன்மேல் - ஆற்றலையும் அழகையுமுடைய சீவகன் மேலே; அடுகளிறு ஓட அஞ்சான் - அக்கொல்யானை ஓட அதற்கு அஞ்சாதவனாய்; கோல் தொடிப் பாவைதன்னைக் கொண்டு உயப்போமின் என்றான் - திரண்ட வளையல் அணிந்த குணமாலையை உயிர் பிழைக்கக் கொண்டுபோயின் என்று (அருகிந்தோரிடம்) கூறினான்.
விளக்கம் : சேடி மேலும் குணமாலை மேலும் செல்வது கண்டு அஞ்சினவன் தன்மேல் வருவது கண்டு அச்சம் நீங்கினாள். தலைமை பற்றிக் குணமாலையைக் கொள்க. (131 )
982. மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே
பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப்
பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பெற்றார்க்
கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே.
பொருள் : மதியினுக்கு இவர்ந்த வேக மாமணி நாகம் - திங்களைப் பற்றச் சென்ற விரைவுடைய, மாணிக்கங்கொண்ட கரும்பாம்பு; வல்லே பதி அமை பருதி தன்மேல் படம் விரித்து ஓடி யாங்கு-விரைந்து, தன் இடம் விட்டுச் செல்லும் ஞாயிற்றின் மீது படத்தை விரித்துக்கொண்டு ஓடினாற்போல; பொதி அவிழ்கோதை தன்மேல் பொரு களிறு - கட்டவிழ்ந்த மலர் மாலையாள் குணமாலையின்மேற் சென்ற போர்க்களிறு; அகன்று - (அவளைக்) கைவிட்டு; பொன் தார்க் கதிஅமை தோளி னானை - தன்மேல் வந்த பொன்மாலை அணிந்த, தோளையுடைய சீவகனை கை அகப்படுத்தது - கைப் பற்றியது.
விளக்கம் : அன்று, ஏ : அசைகள், பதிய்மை பருதி : அமைதல் ; தவிர்தல், அமைந்த தினிநின் தொழில் (கலி- 82) என்றது போல - கதி அமை தேரினானை என்றும் பாடம். (132)
983. கையகப் படுத்த லோடுங்
கார்மழை மின்னி னொய்தா
மொய்கொளப் பிறழ்ந்து முத்தார்
மருப்பிடைக் குளித்துக் காற்கீ
ழையென வடங்கி வல்லா
னாடிய மண்வட் டேய்ப்பச்
செய்கழற் குருசி லாங்கே
கரந்துசே ணகற்றி னானே.
பொருள் : கை அகப்படுத்த லோடும் - கைப்பற்றியவுடன்; செய்கழல் குருசில் - கழலணிந்த சீவகன்; கார் மழை மின்னின் நொய்தா - கரிய முகிலிடை மின்னினும் விரைந்து; மொய் கொளப் பிறழ்ந்து - வலிமையுண்டாகும்படி உடம்பைப் புரட்டி; முத்துஆர் மருப்பிடைக் குளித்து - முத்தினையுடைய கொம்பிடையிலே புகுந்து; வல்லான் ஆடிய மணிவட்டு ஏய்ப்ப - வல்லவன் உருட்டிய மணிவட்டைப்போல; கால்கீழ் ஐ என அடங்கி - காலின்கீழ் வியப்புற அடங்கி; கரந்து - மறைந்து ; செண் அகற்றினான் - சேய்மையிலே நீக்கினான்.
விளக்கம் : கார் மழை - கரிய முகில். நொய்தா, நொய்து ஆக: ஈறுகெட்டது. மொய் - வலிமை. கண்டோர் ஐ என்று வியக்கும்படி என்க. யானையின் காற்கீழ்க் கரந்திருந்தே அதனைத் துன்புறுத்தி அதனை அவ்விடத்தினின்றும் ஓட்டினான் என்பது கருத்து. (133 )
984. மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட்
கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச்
செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற்
பில்கும் மும்ம தவேழம் பெயர்ந்ததே.
பொருள் : பில்கும் மும்மத வேழம் - துளிக்கும் மும்மதமுடைய அசனிவேகம்; மல்லல் நீர் மணி வண்ணனை - கடல் நீரும் நீலமணியும் போன்ற நிறமுடைய கண்ணபிரானை; பண்டு ஒர் நாள் கொல்ல ஓடிய குஞ்சாரம் போன்றது - முன்னொரு நாள் கொல்ல ஓடிய குவலயாபீடம் என்னும் யானையைப் போன்றது; சீவகன் அச் செல்வன் போன்றனன்-சீவகனும் அக் கண்ணனைப் போன்றான் ; தெய்வம்போற் பெயர்ந்தது-அக் களிறு (குவலயா பீடமாக வந்த) தெய்வத்தைப் போலவே தன்னிலையிலே திரும்பியது.
விளக்கம் : பகையன்மையின் இவன் விலங்கிற்கும் உயிர் அளித்தான். கண்ணன் தனக்குப் பகையாதலிற் கொன்றான். தெய்வம் போற் பெயர்ந்தது என்றதனாற், கண்ணன் குவலயா பீடத்தைக் கொல்லாது விட்டிருப்பின் அதுபோலுமென இல்பொருளுவமையாகக் கொள்க. குவலாய பீடத்தைக் கொல்லாது விட்டதாகவும், அதனாற் கண்ணணுக்குக் கரிவரதன் என்று பெயர் வந்ததென்றும் ஸ்ரீ புராணத்தில், 22ஆம் தீர்த்தங்கரர் புராணத்திற் கூறப்பட்டிருப்பதாகக் கூறுவாரும் உளர். கஞ்சனுக்காகத் தெய்வமே யானையாய் வருதலின், தெய்வம் என்றார். (134)
வேறு
985. ஒருகை யிருமருப்பின் மும்மதத்த
தோங்கெழிற்குன் றனைய வேழந்
திருகு கனைகழற்காற் சீவகன்வென்
றிளையாட்கு டைந்து தேனார்
முருகு கமழலங்கன் முத்திலங்கு
மார்பினனைஞ் ஞாற்று நால்வ
ரருகு கழல்பரவத் தனியேபோ
யுய்யான மடைந்தா னன்றே.
பொருள் : ஒருவகை இருமருப்பின் மும்மதத்தது - ஒரு துதிக்கையும் இரு கொம்புகளும் மும்மதமும் உடைய; ஓங்கு எழிற்குன்று அனைய வேழம்-உயர்ந்த அழகிய குன்றைப்போன்ற களிற்றினை; திருகு கனைகழல்கால் சீவகன் வென்று - முறுக்கிய ஒலியையுடைய கழலணிந்த காலையுடைய சீவகன் வெற்றி கொண்டு; இளையாட்கு உடைந்து - குணமாலைக்குத் தன் அறிவு முதலியன தோற்று; தேன் ஆர் முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கும் மார்பினன் - வண்டுகள் நிறைந்த, மணங்கமழும் அலங்கலும் முத்து வடமும் விளங்கும் மார்பினனாய்; ஐஞ்ஞாற்று நால்வர் அருகு கழல்பரவ - ஐஞ்ஞாற்று நான்கு தோழர்களும் அருகிருந்து அடியை வாழ்த்தச் சென்று (பிறகு பிரிந்து); தனியே போய் உய்யானம் அடைந்தான் - தனியே சென்று தன் அரண்மனைப் பொழிலை அடைந்தான்.
விளக்கம் : தத்தை தன் வேறுபாட்டை அறியலாகாதென்று பொழிலிற் புகுந்தான். ஒருகை இருமருப்பின் மும்மதத்தது என்புழி முரண்தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. திருகு கழல், கனைகழல் எனத் தனித்தனி கூட்டுக. இளையாள் : குணமாலை. முருகு - நறுமணம். உய்யானம் - பூம்பொழில். (135)
வேறு
986. மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய
திணிபொற் றோளினான் செல்ல னீக்கிய
வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன்
றணிவில் காதலார் தாங்கொ டேகினார்.
பொருள் : மணி செய் கந்துபோல் மருள வீங்கிய திணி பொன் தோளினான் - மாணிக்கத் தூண்போலும் என ஐயமுறப் பருத்த திண்ணிய தோளையுடைய சீவகனால்; செல்லல் நீக்கிய அணி பொன் கொம்பினை - துன்பம் நீக்கப் பெற்ற அணிகலனுடைய பொற்கொடி போன்ற குணமாலையை; தன் தணிவு இல் காதலார் - அவளுடைய நீங்காத அன்புறு தோழியர்; அழுங்கல் என்று தாம் கொடு ஏகினார் - வருந்தற்க என்று தாங்கள் அழைத்துச் சென்றனர்.
விளக்கம் : இவள் வேட்கை வருத்தத்தை யானைக்கு வருந்தினாளாக உட்கொண்டனர். மணிசெய் கந்து - மணியாற் செய்ததூண். கந்துபோலும் என மருள என விரிக்க. செல்லல் - துன்பம். பொன்கொம்பு; குணமாலை காதலார் - ஈண்டுத் தோழியர். (136 )
987. முழங்கு தெண்டிரை மூரி நீணிதி
வழங்கு நீண்டகை வணிகர்க் கேறனான்
விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய்
குழைந்த கோதையைக் கண்டு கூறினாள்.
பொருள் : முழங்கு தெண்திரை மூரி நீள்நிதி வழங்க - ஆரவாரிக்கும் தெள்ளிய அலைகளையுடைய கடல்போலப் பெருமை பெற்ற மிகுந்த செல்வத்தை வழங்கியதால்; நீண்டகை வணிகர்க்கு ஏறு அனான் - நீண்ட கைகளையுடைய வணிகர் தலைவன் குபேரமித்திரன்; விழுங்கு காதலாள் - விழுங்குமாறு போன்ற காதலையுடையாளாகிய; வேற்கண் பாவை தாய் - வேலனைய கண்ணாள் குணமாலையின் அன்னை; குழைந்த கோதையைக் கண்டு கூறினாள் - வாடிய மலர்க் கோதைபோலிருந்த குணமாலையைக் கண்டு ஒருமொழி யுரைத்தாள்.
விளக்கம் : குணமாலையின் அன்னை விநயமாமலை. அப் பெயர் தோன்ற, வேற்கட்பாவை என்றார். வருத்தந் தோன்ற குழைந்த கோதை என்றார். மூரி - பெருமை. தெண்டிரை - கடல் : அன்மொழி; கடல்போன்ற பெரிய நிதி என்க. பாவை : குணமாலை, கோதை : குணமாலை. (137)
988. நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய
கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிற
நைய வந்ததென் னங்கைக் கின்றென
வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார்.
பொருள் : நெய்பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய கைசெய் மாலைபோல் - நெய்வார்த்த மிகுநெருப்பின் முடியிலே அழுத்திய, புனைந்த மலர்மாலை போல; கரிந்து பொன்னிறம் நைய - கரிந்து பொன்நிறம் வாடுமாறு; நங்கைக்கு இன்று வந்தது என் என - குணமாலைக்கு இன்று நேர்ந்தது யாது என்று (தாய்) வினவ; உய்தல் வேட்கையால் உரைத்தல் மேயினர் - (தோழியரும் அத்த ய் இறவாமல்) வாழவேண்டும் என்னும் ஆசையால் (யானை கொல்லப் புகுந்ததென்பதை) உரையாமற் காத்தனர்.
விளக்கம் : குணமாலை பெருந்துயர்க்கிலக்காகி உய்ந்தமை தோன்ற நெய்பெய் நீளெரி என உவமையை விதந்தார்; இது துயரத்திற்குவமை. கைசெய்மாலை - கையாற் புனைந்த மாலை. உய்தல் வேட்கையால் என்பதற்கு இப் பேரிடரைக்கேட்ட அளவில் அத் தாய் இறந்துபடுவள் என்றும் அங்ஙனம் இறந்துபடாமலிருத்தற்பொருட்டு என்று கோடலே பொருந்தும். இதுவே நச்சினாக்கினியர் கருத்துமாகும். குணமாலை பிழைத்தலிலுள்ள விருப்பத்தால் என்பாரும் உளர். (138)
989. முருகு விண்டுலா முல்லைக் கத்திகை
பருகி வண்டுலாம் பல்கு ழலினாள்
வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத்
துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள்.
பொருள் : முருகு விண்டு உலாம் முல்லைக் கத்திகை - மணம் விரிந்து பரவும் முல்லைத் தொடையில்; வண்டு பருகி உலாம் பல்குழலினாள் - வண்டுகள் தேனைப் பருகி உலவும் பல் குழலாளாகிய குணமாலையை; தாய் வருக என்று வாட்கண் நீர் துடைத்து - அவர் கூறாமையான அதனை அறியாத அவள் அன்னை வருக என அழைத்து, வாளனைய கண்களிலிருந்து பெருகும் நீரைத் துடைத்து; உருகும் நுண் இடை ஒசியப் புல்லினாள் - தேயும் நுண்ணிடை வருந்தத் தழுவினாள்.
விளக்கம் : முருகு - மணம். கத்திகை - மாலை. கூந்தல் ஐம்பால் எனப்படுதலின் பல்குழலினாள் என்றார். குழலினாள் : குணமாலை. உருகும் - மெலிகின்ற. ஓசிய - வருந்த. (139)
990. கடம்பு சூடிய கன்னி மாலைபேற்
றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங்
குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையு
ளடைந்த துன்பமென் றறிவி னாடினாள்.
பொருள் : கடம்பு சூடிய கன்னி மாலைபோல் -கடம்பிலே பூத்த புதிய மாலைபோல; தொடர்ந்து கைவிடாத் தோழிமாரொடும் - தொடர்ப்பட்டுக் கைவிடாத தோழியரோடும்; குடங்கை உண்கணாள் - உள்ளங்கை யளவாகிய மையுண்ட கண்ணாள் ; கொண்ட பண்ணையுள் - ஆடிய விளையாட்டில்; அடைந்த துன்பம் என்று - மிகுதியால் வந்த வருத்தம் என்று ; அறிவின் நாடினாள் - அறிவினால் ஆராய்ந்தாள்.
விளக்கம் : சுரமஞ்சரியும் குணமாலையும் கன்னியாராதலிற் கன்னி மாலை என்றார். கண்ணி மாலை பாடம் எனின், கண்ணிகட்டினற் போலும் மாலையாம். (140)
991. கம்மப் பல்கலங் களைந்து கண்டெறூஉம்
விம்மப் பல்கலம் நொய்ய மெய்யணிந்
தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங்
கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே.
பொருள் : கொடி அனாளை - கொடியனைய குணமாலையை (க்கோலஞ் செய்யும் மகளிர்) கம்மம் பல்கலம் களைந்து - வேலைப்பாடமைந்த பல கலங்களையும் நீக்கி; கண் தெறூஉம் நொய்யப் பல்கலம் விம்ம மெய்அணிந்து - கண்ணைப் பறிக்கும் நொய்யனவாகிய பல அணிகளை மிகுதியாக அவள் உடம்பிற் பூட்டி; அம்மென் மாலையும் அடைச்சி - அழகிய மெல்லிய மலர்மாலைகளையும் அணிந்து ; கொம்மை குங்குமம் மட்டித்தார் - முலைமிசை குங்குமத்தையும் பூசினர்.
விளக்கம் : உடல் நுணுகுதலுணர்ந்து நொய்யவற்றை விம்ம அணிந்தார். புறத்தே கோலஞ்செய்ய அகத்தே சிதைவு பிறத்தலின், இது புறஞ்செயச் சிதைதல் என்னும் (தொல். மெய். 18. பேர்) மெய்ப்பாடு. மென்மாலை : கழுநீர்மலை. கொம்மை : ஆகுபெயர். கம்மம் - தொழில். நொய்யகலம் அணிந்தென்றமையால், வன்மையுடைய பலவாகிய கலன்களையும் களைந்து என்க. அடைச்சி - சூட்டி, கொம்மை - முலைக்குப் பண்பாகுபெயர். மட்டித்தல் - பூசுதல். (141)
992. அம்பொன் வள்ளத்து ளமிர்த மேந்துமெங்
கொம்பி னவ்வையைக் கொணர்மின் சென்றெனப்
பைம்பொ னல்குலைப் பயிரும் பைங்கிளி
செம்பொற் கொம்பினெம் பாவை செல்கின்றாள்.
பொருள் : அம்பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் - அழகிய பொற் கிண்ணத்திலே பாலை யெமக் கூட்டுகின்ற; எம்கொம்பின் அவ்வையைச் சென்று கொணர்க என - எம், கொம்பனைய அன்னையைப் போய் அழைத்து வருக என்று; பைம்பொன் அல்குலைப் பைங்கிளி பயிரும் - பசிய மேகலை யணிந்த அல்குலையுடைய நின்னை நின் பச்சைக்கிள்ளை கூப்பிடும்; செம்போன் கொம்பின் எம்பாவை செல்க என்றாள் - செம்போற் கொடி போன்ற எம்பாவையே! இனி நீ அங்குச் செல்க என்று விநயமாமலை கூறினாள்.
விளக்கம் : பைம்பொன் அல்குலை என்பதும் பாவை என்பதும் முன்னிலைப் புறமொழி. பயிர்தல் - அழைத்தல். (142)
வேறு
993. நிறத்தெ றிந்துப றித்தநி ணங்கொள்வேற்
றிறத்தை வெளவிய சேயரிக் கண்ணினாள்
பிறப்பு ணர்ந்தவர் போற்றமர் பேச்செலாம்
வெறுத்தி யாவையும் மேவல ளாயினாள்.
பொருள் : நிறத்து எறிந்து பறித்த நிணம்கொள் வேல் திறத்தை - மார்பில் எறிந்து (சிறிது நின்று) வாங்கிய நிணம் பொருந்திய வேலின் தன்மையை; வெளவிய சேய் அரிக் கண்ணினாள் - கவர்ந்த சிவந்த வரிபரந்த கண்ணாளாகிய குணமாலை; பிறப்பு உணர்ந்தவர்போல் - பிறப்புத் தீதெனக் கண்டு பற்றற்றாரைப் போல; தமர் பேச்சு எலாம் வெறுத்து - உறவினர் மொழியை எல்லாம் கைவிட்டு; யாவையும் மேவலள் ஆயினாள் - உணவு முதலியவற்றை யெல்லாம் விரும்பாதவளானாள்.
விளக்கம் : தமர் பேச்சு எலாம் வெறுத்து என்னுவரை, புலம்பித் தோன்றல் என்னும் மெய்ப்பாடு ; செய்த கோலந் துணையொடு கழியப் பெறாதே அழிந்து, சுற்றத்திடையும் தனியே தோற்றுதலின். மேவலள் எனவே, இன்பத்தை வெறுத்தலும், பசியட நிற்றலும் மெய்யப்பாடு; (தொல். மெய். 22-பேர்.) பிறப்புணர்ந்தவர் என்றது, பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் என்னும் உண்மையை உணர்ந்து பற்றுறுத்தோர் என்பது பட நின்றது. (143)
994. குமரி மாநகர்க் கோதையங் கொம்பனா
டமரி னீங்கிய செவ்வியுட் டாமரை
யமரர் மேவரத் தோன்றிய வண்ணல்போற்
குமர னாகிய காதலிற் கூறினாள்.
பொருள் : கோதை அம் கொம்பு அனாள் - மலர்க் கோதையையுடைய அழகிய கொம்பு போன்றவள்; குமரி மாநகர் - கன்னிமாடத்திலே; தமரின் நீங்கிய செவ்வியுள் - உறவினரை நீங்கித் தனித்த காலத்திலே; அமரர் மேவரத் தாமரை தோன்றிய அண்ணல் போல் - வானவர் வேண்டத் தாமரையிலே தோன்றிய முருகனைப் போன்ற; குமரன் ஆக்கிய காதலின் கூறினாள் - சீவகன் உண்டாக்கிய காதலாலே சில கூறினாள்.
விளக்கம் : குமரிமாநகர் என்றது கன்னி மாடத்தை. கொம்பனாள் : குணமாலை. அண்ணல் : முருகன் - முருகக் கடவுள் தாமரையிற்றோன்றியதனை,
நிவந்தோங்(கு) இமயத்து நீலப் பைஞ்சுனைப்.
பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்.
பெரும்பெயர் முருகநிற் பயந்த ஞான்றே (5: 48-50).
எனவரும் பரிபாடலானும் உணர்க. முருகன் சீவகனுக்கு உவமை. (144)
995. கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலா
முலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையா
விலக்க மென்னுயி ராவெய்து கற்குமா
லலைக்கும் வெஞ்சர மைந்துடை யானரோ.
பொருள் : வெஞ்சரம் ஐந்து உடையான் - கொடிய அம்புகள் ஐந்தினையும் உடையானாகிய காமன்; முலைத்தடத்திடை மொய் எருக் குப்பைஆ - என் முலைத்தடங்களின் நடுவிடம் நெருங்கிய எருக் குவியலாகவும்; என உயிர் இலக்கம்ஆ - என் உயிர் குறியாகவும்; எய்து அலைக்கும் - அடித்து வருத்தும்; (ஆதலால்); கல்லூரி நல் கொட்டில் - கல்லூரியையுடைய விற்பயிற்சி செய்யும் இடத்திலே; கலத்தற் காலம்ஆ கற்கும் - விற்பயிற்சி தொடங்கும் காலமாக எண்ணிக் கற்குந் தொழிலை நடத்துகின்றான்.
விளக்கம் : கற்பார் எருவிலும் இலக்கிலும் எய்து கற்பர். இது மடந்தப உரைத்தல் என்னும் மெய்ப்பாடு; அறிவு மடம் நீங்கிக் காமப் பொருட்கண்ணே அறிவு தோன்ற நிற்றலின் (தொல். மெய்ப். 19-பேர்) (145)
996. பூமி யும்பொறை யாற்றருந் தன்மையால்
வேமெ னெஞ்சமும் வேள்வி முளரிபோல்
தாம மார்பனைச் சீவக சாமியைக்
காம னைக்கடி தேதம்மின் றேவிர்காள்.
பொருள் : பூமியும் பொறை ஆற்ற அருந்தன்மையால்-புவியும் பொறுமையைச் செலுத்தற்கியலாத தன்மையாலே; வேள்வி முளரிபோல் என் நெஞ்சமும் வேம் - வேள்வித் தீயில் இட்ட தாமரை மலர்போல என் உள்ளமும் வேகும்; தாம மார்பனைச் சீவகசாமியைக் காமனை - மாலை மார்பனும்; சீவகனும் ஆகிய காமனை; தேவிர்காள்! கடிதே தம்மின்! - வானவர்களே! விரைய நல்குமின்!
விளக்கம் : வேம் என்னும் துணையும் காதல் கைம்மிகல்; (தொல். மெய்ப். 23-பேர்) காமம் கையிகந்த வழி நிகழும் ஆதலின்; உள்ளின் உள்ளம் வேமே (குறுந். 102) என்பது உதாரணம். தம்மின் என்பது தூதுழனிவின்மைப் பாற்படும் (தொல். மெய்ப். 23-பேர்) ; கானலும் கழறாது (அகநா. 170) என்பது உதாரணம். அறன் அளித்துரைத்தல் (தொல். மெய்ப். 22-பேர்) எனினும் ஆம்.
(146)
997. கையி னாற்சொலக் கண்களிற் கேட்டிடு
மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன்
செய்த வம்புரி யாச்சிறி யார்கள்போ
லுய்ய லாவதொர் வாயிலுண் டாங்கொலோ.
பொருள் : மொய்கொள் சிந்தையின் - (பிறர்க்குக் கூறலாகாத குறைகள்) செறிதல் கொண்ட உள்ளத்தினால்; செய்தவம் புரியாச் சிறியார்கள்போல் - செய்யக்கடவ தவம் புரியாத அறிவிலார்கள்போல; கையினால் சொலக் கண்களின் கேட்டிடும் - கையாற் கூறிக் கண்ணாற் கேட்கும்; மூங்கையும் ஆயினேன் - ஊமையும் ஆனேன்; உய்யல் ஆவதொர் வாயில் உண்டாம் கொலோ? - பிழைக்கலாவதாகிய ஒரு வாயிலும் உண்டாகுமோ?
விளக்கம் : மூங்கையும் ஆயினேன் என்பது சிதைவு பிறர்க்கின்மை (தொல். மெய்ப். 13-பேர்) ; புறத்தார்க்குப் புலன் ஆகாமை நெஞ்சில் நிறுத்தலின். வாயில் - கூட்டுவார்.(147)
998. கண்ணும் வாளற்ற கைவளை சோருமாற்
புண்ணும் போன்று புலம்புமென் நெஞ்சரோ
வெண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப்
பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே.
பொருள் : கண்ணும் வாள் அற்ற - கண்களும் ஒளியிழந்தன; கைவளை சோரும் - கைவளையல்கள் கழலும்; என் நெஞ்சம் புண்போன்று புலம்பும் - என் மனமும் புண்ணென வருந்தும்; எண் இல் காமம் எரிப்பினும் - எல்லையற்ற காமம் சுடினும் ; மேற்செலாப் பெண்ணின் - (மடலூர்தல் முதலியவற்றிற்கு) நடவாத பெண்ணினத்தினும்; மிக்கது பெண் அலது இல்லை - கொடுமை மிக்கது பெண்ணல்லதில்லையாயிருந்தது.
விளக்கம் : அவன் உருவெளியையே நோக்கி வேறொரு பொருளினை நோக்காமையின், காணுதல் தொழிலின்றிக், கண்ணும் வாள்அற்ற என்றாள். இஃது எதர்பெய்து பரிதல் (தொல். மெய்ப். 22-பேர்), வளை சோருதல் உடம்பு நனிசுருங்கல் (தொல். மெய்ப். 22-பேர்) நெஞ்சும் புண் போன்று புலம்பும்.. இது முதலாகக் கலக்கம் (தொல். மெய்ப். 18-பேர்); கூறத் தகாதன கூறுதலின், அது தலைவிக்காயின், பிறங்கிரு முந்நீர் வெறுமணலாகப் - புறங்காலிற் போக விறைப்பேன் (கலி. 144) என்றாற் போல்வனவும், தலைவற்காயின், மடலேறுதல் முதலிய கூறலுமாம். (148)
999. சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளிதன்
வேலை மாக்கடல் வேட்கைமிக் கூர்தர
வோலை தாழ்பெண்ணை மாமட லூர்தலைக்
கால வேற்றடங் கண்ணி கருதினாள்.
பொருள் : சோலைவேய் மருள் சூழ்வளைத் தோளி - சோலையில் மூங்கிலென மருளும் வளையணிந்த தோளியாகிய; காலவேல் தடம் கண்ணி - காலன் வேலனைய பெருங்கண்ணினாள்; தன் வேட்கை - தன் காமம்; வேலை மாக்கடல் மிக்கு ஊர்தா - கரையையுடைய பெரிய கடல்போல மிகுந்து மேற்கொளலால்; ஓலைதாழ் பெண்ணை மாமடல் ஊர்தலை - (ஆடவர் செயலாகிய) ஓலை தங்கிய பனை மாமடல் ஊர்வதை; கருதினாள் - நினைத்தாள்.
விளக்கம் : மடலூர்தல் ஆடவர்க்கே யன்றிப் பெண்டிருக்கில்லையாதலின் கருதினாள் என்றார். சோலைவேய், பசுமைக் குவமை. ஈண்டுக் கூறியது, புலனெறி வழக்கம் அல்லாத காந்தருவமாய் ஆசுரத்தின் பாற்பாடும் கைக்கிளையாதலின், மெய்ப்பாட்டுப் பொருள்களை முறையிற் கூறாது மயங்கக் கூறினாரென்று கொள்க. நச்சினார்க்கினியர் 997-முதல் 999-வரை மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கிக் கொண்டு கூட்டும் பொருள் முடிபு:-வளைத்தோளி, கண்ணி, தன் வேட்கை கடனீர்போல மிக்குப் பரத்தலின், தவஞ்செய்யாதாரைப்போல மூங்கையும் ஆயினேன்; கண்ணும் வாளற்ற; வளையும் சோரும்; நெஞ்சும் புலம்பும்; இங்ஙனம் எல்லையில்லாத காமம் முழுக்க நின்று சுட்டாலும் பெண்ணை மாமடலூர்தலை மேற்செல்லாத பேதைச் சாதியிற் காட்டின் கொடுமை மிக்கது பெண்ணல்ல தில்லையாய் இருந்தது என்று கூறி. இக் காலத்தே பிழைக்க லாவதொரு வாயிலுண்டாமோ என்று கருதினான். (149)
1000. உய்யு மாறுரை யுன்னை யலாலிலேன்
செய்ய வாய்க்கிளி யேசிறந் தாயென
நைய னங்கையிற் நாட்டகத் துண்டெனிற்
றைய லாய்சம ழாதுரை யென்றதே.
பொருள் : செய்ய வாய்க் கிளியே ! - சிவந்த வாயையுடைய கிளியே !; சிறந்தாய் ! - சிறப்புடையாய்!; உன்னை அலால் இலேன் - உன்னையொழிய வேறொரு வாயிலும் இலேன்; உய்யும் ஆறு உரையாய் என - யான் பிழைக்கும் வழியை உரைப்பாய் என்றாளாக; நங்கை - நங்கையே!; தையலாய் - தையலே!; நையல் - வருந்தற்க; இந் நாட்டகத்து உண்டு எனின் - நீ விரும்பியது இந்த நாட்டிலே யிருப்பின்; சமழாது உரை என்றது - வருந்தாமற் கூறுக என்று கிளி கூறியது.
விளக்கம் : தாய் தந்தையினுஞ் சிறந்தாய் என்றாள், அவர்க்குக் கூறலாகாதவற்றை இதனிடம் கூறுதலின். (150)
1001. தெளிக யம்மலர் மேலுறை தேவியி
னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள்
களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன்
கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே.
பொருள் : தெளி கயம் மலர்மேல் உறை தேவியின் - தெளிந்த பதுமை யென்னும் கயத்தில் தாமரை மலரில் வாழும் திருமகளினும்; ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் - ஒளியும் மென்மையும் வேறொப்புமை இல்லாத குணமாலை; களிகொள் காமத்தின் கையறவு எய்தி - மயக்கங்கொண்ட காமத்தாலே செயலறுதல் பொருந்தி; தன் கிளியைக் கிளந்து - தன் கிளியினிடம் தன் வருத்தத்தை வெளிப்படையாக எடுத்துக் கூறி; தூதுவிட்டாள் - அதனைத் தூதாக விடுத்தாள்.
விளக்கம் : கயம் - பதுமை என்னும் குளம். மலர் மேலுறைதேவி திருமகள். தேவியின் என்புழி இன் உறழ்பொருள். சாயல் - மென்மை - ஒளிக்கும் சாயலுக்கும் தேவியல்லது பிறர் ஒப்பாகாதவள் என்க. களி - மகிழ்ச்சி. கையறவு - செயலறவு. கிளந்து - கூறி. (151 )
1002. பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனா
ணாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட
வீணை வித்தகற் காணிய விண்படர்ந்
தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே.
பொருள் : பூணொடு ஏந்திய வெம்முலைப் பொன்னனாள் - பூணைச் சுமந்து நிமிர்ந்த விருப்பம் ஊட்டும் முலைகளையுடைய திருவனையாளின்; தன்நாணும் குலம் நலனும் கீழ்ப்பட-நாணமும் குலனும் நன்மை குறைய அவளுடைய வேட்கையை அறிவிக்க; வீணை வித்தகன் காணிய - சீவகனைக் காண்தற்கு; ஆணுப் பைங்கிளி - நட்புடையதான பசுங்களி; விண்படாந்து ஆண்டுப் பறந்தது - விண்ணிலே சென்று அவனிருக்கும இடம் அடையப் பறந்தது.
விளக்கம் : யாழ்வென்று கொண்ட தத்தையை விரும்பினவன் என்னுங் கருத்துப்பட வீணை வித்தகன் என்றார். பொன்னனாள் : குணமாலை. குலம் : ஆகுபெயர் ஒழுக்கம் என்க. நலம் - பெண்மை நலம். காணிய : செய்யியவென் வாய்பாட்டு வினையெச்சம். ஆணு - நட்பு. ஆண்டு - அச் சீவகனிடத்து. (152)
வேறு
1003. கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன்
றீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல்
வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர்
நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே.
பொருள் : மணிபல தெளித்துக் கூட்டினாள் - பல மணிகளையும் கரைத்துக் கூட்டினான்; கொண்டவன் கிழிமிசைத் திலகவாணுதல் - கூட்டியவன் படத்தின் மேல், திலகம் அணிந்த ஒள்ளிய நெற்றியாளை; வேட்ட மால் களிற்றிடை வெருவி நின்றது - தான் விரும்பிய, பெரிய களிற்றின் முன்னர் அஞ்சி நின்றதாகிய; ஓர் நாட்டமும் நடுக்கமும் - ஒரு நோக்கமும் நடுக்கமும் ; நங்கை வண்ணமே - குணமாலையின் இயலாகவே எழுதினான்.
விளக்கம் : நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்ளி - அஞ்சனத் துவலை ஆடி நடுங்கினாள் (சீவக. 1024) என்பன் பின்னும். இது முதல் மூன்று செய்யுட்கும் 1006 ஆம் செய்யுளின்கண் உள்ள இறைமகன் என்பதை எழுவாயாகக் கொள்க. இறைமகன்: சீவகன். தெளித்தல் ஈண்டுக் கரைத்தல் என்னும் பொருட்டு. கிழி - படாம். குணமாலை களிற்றின்முன் அஞ்சி நடுங்கி அலமந்து நோக்கிய பொழுது தோன்றிய தோற்றத்தை ஓவியமாகத் தீட்டினன் என்பது கருத்து. (153)
1004. நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியே
மகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடு
முகிழ்ந்து வீங் கிளமுலை முத்தந் தைவரும்
புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மென்பவே.
பொருள் : நெகிழ்ந்து வீழ் பூந்துகில் நோக்கி நோக்கியே - நெகிழ்ந்து விழும் அழகிய துகிலினை மனத்தாற் குறித்துப் பார்த்துக் கண்ணாலும் பார்த்து; மகிழ்ந்து - களித்து; வீழ் மணிக்குழல் மாலைகால் தொடும் - வீழும் கருங் குழலையும் மாலையையும் காலையும் திருத்தத் தொடுவான்; முகிழ்ந்து வீங்கு இளமுலை முத்தம் தைவரும் - அரும்பிப் பருத்த இளமுலைமேல் முத்துக்களைத் திருத்தமாக இடுவதற்குத் தொடுவான்; புகழ்ந்து தன் தோள்களிற் புல்லும்-அவளழகைப் புகழ்ந்து தன் தோள்களால் தழுவுவான்.
விளக்கம் : நோக்கி : நோக்கில்லாத நோக்கம் (மன நோக்கம்) நோக்கியே: இது பொறியால் நோக்கும் நோக்கம். வெருவி நின்ற நடுக்கம் எழுதலின், குலைந்தனவற்றை மயக்கத்தால் திருத்தத் தேடினான். மாலை : அவள் பெயரெனினும் ஆம். மணிக்குரல் மாலையும் பாடம். (குரல் : ஐம்பாலில் ஒன்று) (154)
1005. படைமலர் நெடுங்கணாள் பரவை யேந்தல்குன்
மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற்
புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றன
வடிமலர்த் தாமரைச் சிலம்பு நோற்றவே.
பொருள் : படைமலர் நெடுங்கணாள் பரவை ஏந்த அல்குல் - வேற்படையும் மலரும் போன்ற நீண்ட கண்ணவளின் பரவிய ஏந்திய அல்குலில்; மிடை மணிமேகலை நோற்ற - செறிந்த மணிமேகலைகள் நோற்றன; வெந்தொழில் புடைதிரள் வனமுலைப் பூணும் நோற்றன - கொடுந்தொழிலையுடைய, பக்கங்களிலே திரண்ட அழகிய முலைகளிற் பூண்களும் நோற்றன; அடிமலர்த் தாமரைச் சிலம்பு நோற்ற - அடிகளாகிய தாமரை மலரில் அணிந்த சிலம்புகளும் நோற்றன.
விளக்கம் : யானே நோற்றிலேன் என்பது குறிப்பெச்சம். படை - ஈண்டு வேல். மலர் - தாமரை மலர். பரப்புடையதாய் ஏந்திய அல்குல் என்க. வெந்தொழில் முலை புடைதிரள்முலை எனத் தனித்தனி கூட்டுக. அடித் தாமரை மலர் என மாறுக. அடிமலர் ஒருசொல் என்பர் நச்சினார்க்கினியர். (155)
1006. மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக்
கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந்
தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையை
மன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே.
பொருள் : மின் அணங்குறும் இடை மேவரு சாயலுக்கு - மின்னை வருத்தும் இடையும் விருப்பம் வரும் மென்மையுமுடைய குணமாலைக்கு; இறைமகன் இன்னணம் புலம்ப - சீவகன் இவ்வாறு வருந்தக் கண்டு; தன் அணங்குறும் மொழித் தத்தையாவதும் மகிழ்ந்து - தன் குணமாலையின் வருந்துமொழியைக் கொண்டு வந்த கிளி எல்லா வகையானும் மகிழ்ந்து; தத்தையை மன் அணங்கு உறலொடு கண்டது - காந்தருவதத்தை வருவதை மிகுதியான வருத்தத்துடன் கண்டது.
(விளக்கம்.) மேவர் : மேவரு என்பதன் விகாரம். எல்லா வழியானும் பெறுதற்குரியவன் வருந்ததுலின் இறைமகன் புலம்ப என்றார். (156)
1007. ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற்
சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகி
லோடிய வெரிவளைத் துருவ வெண்புகை
கூடிமற் றதன்புறங் குலாய கொள்கைத்தே.
பொருள் : ஆடு பாம்பு எனப் புடை அகன்ற அல்குல்மேல் - (படம் விரித்து) ஆடும் அரவம்போல அகன்ற அல்குலின் மேல்; சூடிய கலைப்புறம் சூழ்ந்த பூந்துகில் -அணிந்த மேகலையின்மேல் சுற்றிய அழகிய ஆடை; வளைத்து ஓடிய எரி - வளைய ஓடின எரியை; உருவ வெண்புகை - நிறமுடைய வெள்ளிய புகை; கூடி அதன்புறம் குலாய கொள்கைத்தே - சேர்ந்து வளைத்து அதன் புறத்திலே நிலைபெற்ற தன்மையது.
விளக்கம் : பாம்பு அல்குற்கே உவமையாதலின் அடுத்துவரல் உவமை அன்று; அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே (தொல். 34) என்றார். மற்று : அசை. மாண்குலாம் குணத்தினால் (சீவக. 2233) என்பர் பின்னும். (157)
1008. கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தன
மின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதி
ரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டன
பொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே.
பொருள் : கொன்வளர் குவிமுலைக் கோட்டில் - பெருமை வளரும் குவிந்த முலைக் கோட்டிலே; தாழ்ந்தன மின்வளர் திரள்வடம் - கிடந்தவனவாகிய ஒளிவளரும் முத்துவடங்கள்; பைங்கதிர் இன்வளர் இளம்பிறை - புதிய கதிர்களையுடைய இனிமை வளரும் இளம்பிறை; எழுதப்பட்டன பொன்வளர் செப்பின்மேல் பொலிந்த போன்றவே - எழுதப்பட்டன போன்ற பொன்னால் வளர்ந்த செப்பின்மேல் பொலிந்தன போன்றன.
விளக்கம் : கொன் - பெருமை. முலைக்கோட்டிற் கிடந்த முத்து வடம் செப்பின்மேற் பிறை பொலிந்தன போன்றன என்க. வடம் பல வாகலிற் பன்மை பிறைக்கும் கூறினர். (158)
1009. குண்டல மொருபுடை குலாவி வில்லிட
விண்டலர்ந்த தொருபுடை தோடு மின்செய
மண்டல நிறைந்ததோர் மதிய மன்னதே
யொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே.
பொருள் : குண்டலம் ஒருபுடை குலாவி வில்இட - குண்டலம் ஒரு புறத்தே வளைந்து ஒளிசெய ; தோடு ஒருபுடை விண்டு அலர்ந்து மின்செய - தோடு மற்றொரு புறத்தே வேறுபட விரிந்து ஒளிவீச; மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் - வட்டமாக நிறைவுற்ற ஒருதிங்கள் (இருப்பின்); ஒண்தொடி திருமுகத்து உருவமாட்சி அன்னது - ஒள்ளிய வளையணிந்த இம்மங்கையின் திருமுகத்தின் உருவ அழகு அத்தகையது.
விளக்கம் : இஃ தில்பொரு ளுவமை. குண்டலம் ஒரு காதினும் தோடு ஒரு காதினும் அணிந்ததிருத்தலால் இங்ஙனம் உவமை கூறினர். மண்டிலம் - வட்ட வடிவம். மதியம் - திங்கள். (159)
1010. பூணிற முலையவள் பொருவில் பூநுதன்
மாணிறக் கருங்குழன் மருங்கிற் போக்கிய
நாணிற மிகுகதிர்ப் பட்ட நல்லொளி
வானிற மின்னிருள் வளைந்த தொத்ததே.
பொருள் : பூண் நிறம் முலையவள் - பூணையும் நிறத்தையும் உடைய முலையாளின்; மாண் நிறக் கருங்குழல் மருங்கில் - சிறந்த நிறமுடைய கரிய கூந்தலின் பக்கத்திலே; பொருஇல் பூநுதல் போக்கிய - ஒப்பற்ற அழகிய நெற்றியிலே சேர்த்துள்ள ; நாள் நிறம் மிகுகதிர் பட்டம் நல்லொளி - நாடொறும் ஒளி மிகும் பிறைமதி போன்ற பட்டத்தின் நல்லொளி; வாள்நிறம் மின் இருள் வளைந்தது ஒத்தது - ஒளி பொருந்திய நிறமுடைய மின் இருளை வளைந்தது போன்றது.
விளக்கம் : நாணிற மிகுகதிர்ப் பூநுதல் என இயைத்து நாடொறும் நிறம் மிகும் பிறைபோன்ற அழகிய நுதல் என்பர் நச்சினார்க்கினியர். நெற்றிற்குப் பிறையும் கூந்தலுக்கும் இருளும் பட்டத்திற்கு மின்னலும் உவமைகள். (160)
1011. கடிகமழ் பூஞ்சிகை காமர் மல்லிகை
வடிவுடை மாலைகால் தொடர்ந்து வாய்ந்தது
நடுவொசிந் தொல்கிய நாறு மாமலர்க்
கொடியின்மேற் குயில்குனிந் திருந்த தொத்ததே.
பொருள் : காமர் மல்லிகை வடிவுடை மாலை - அழகிய மல்லிகையாலான வடிவுறு மாலை; கால் தொடர்ந்து வாய்ந்தது கடிகமழ்பூ சிகை - தன்னிடத்தே கட்டப்பட்டுப் பொருந்திய மணமிகுமலர் முடி ; நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மாமலர்க் கொடியின்மேல் - நடுவு வளைந்து நுடங்கிய மணமுறும் மலர்க்கொடியின்மேல்; குயில் குனிந்து இருந்தது ஒத்தது - குயில் வளைந்து தங்கிய தன்மையை ஒத்தது.
விளக்கம் : மாலையைக்கொண்ட பூஞ்சிகைக்குப் பூங்கொடியின் மேல் குனிந்திருந்த குயில் உவமை. (161)
1012. சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனினம்
அலங்கலுண் டியாழ்செயும் அம்பொன் பூங்கெடி
நலம்பட நன்னடை கற்ற தொக்குமிவ்
விலங்கரித் தடங்கணாள் யாவள் ஆங்கொலோ.
பொருள் : தேன் இனம் அலங்கல் உண்டு யாழ்செயும் அம்பொன் பூங்கொடி - வண்டுகளின் இனம் மாலையில் தேனைப் பருகி யாழென முரலும் அழகிய பொன்னாலான பூங்கொடி ஒன்று; சிலம்பொடு மேகலை மிழற்ற - சிலம்பும் மேகலையும் ஒலிக்க; நலம்பட நல்நடை கற்றது ஒக்கும் - நலம்பெற நல்ல நடையைக் கற்றது போன்ற; இவ் இலங்கு அரித்தடங்கணாள் யாவள்? - இந்த விளங்கும் செவ்வரி பரந்த பெருங்கண்ணாள் யாவளோ?
விளக்கம் : இல்பொருளுவமை. மிழற்ற - ஒலிப்ப. தேனினம் - வண்டினம். அலங்கல்: ஆகுபெயர்; தேன் என்க. யாழ் - இசைக்கு ஆகுபெயர். (162)
1013. யாவளே ஆயினும் ஆக மற்றிவள்
மேவிய பொருளொடு மீண்ட பின்னலால்
ஏவலாற் சேர்கலேன் என்று பைங்கிளி
பூவலர் சண்பகம் பொருந்திற் றென்பவே.
பொருள் : யாவளே ஆயினும் ஆக - (இவள்) எவளாக இருப்பினும் இருக்க; இவள் மேவிய பொருளொடு மீண்டபின் அலால் - இவள் தான் விரும்பியது முடிந்து திரும்பின பின்னர் அன்றி; ஏவலால் சேர்கலேன் என்று - குணமாலையின் ஏவலாற் செல்லக் கடவன் அல்லேன் என்றுன்னி; பைங்கிளி பூ அலர் சண்பகம் பொருந்திற்று - அப் பச்சைக்கிளி மலர்ந்த சண்பகத்தைச் சார்ந்து தங்கியது.
விளக்கம் : ஏவலான் - ஏவில் வல்லவன்(சீவகன்) எனினும் ஆம். இவள் என்றது காந்தருவதத்தையை. மேவிய பொருள் - தான் விரும்பிவந்த செயல். சேர்கலேன்: தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று. (163)
1014. மதுக்களி நெடுங்கணாள் வான்பொற் கிண்கிணி
யொதுக்கிடை மிழற்றச்சென் றெய்தி யூன்கவர்
கதக்களி வேலினாற் கண்டு காமநீர்ப்
புதுத்தளி ரனையவள் புலந்து நோக்கினாள்.
பொருள் : மதுக்களி நெடுங்கணாள் - கள்ளின் களிப்பைத் தன்னிடத்தே கொண்ட நீண்ட கண்ணினாள்; வான்பொன் கிண்கிணி ஒதுக்கிடை மிழற்றச் சென்று எய்தி - உயர்ந்த பொற்கிண்கிணி நடையிலே ஒலிப்பப் போய் நெருங்கி; ஊன்கவர் கதக்களி வேலினான் கண்டு - ஊனைக் கவரும் சீற்றத்துக்கும், வெற்றிக் களிப்புக்கும் உரிய வேலினானைக் கண்டு; காமநீர்ப் புதுத்தளிர் அனையவள் புலந்து நோக்கினாள் - காம நீரிலே தோன்றும் புதிய தளிரைப் போன்று (நடுங்கி) ஊடியவளாய் அப் படத்தைக் குறித்துப் பார்த்தாள்.
விளக்கம் : கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று (பதிற்றுப் பத்து- 52) என்பது காண்க. காமத்தாற் புலந்து என்றும் கூட்டலா மென்பர் நச்சினார்க்கினியர். (164)
1015. இதுவென வுருவென வியக்கி யென்றலும்
புதிதிது பூந்துகில் குழல்கள் சோர்தலான்
மதுவிரி கோதையம் மாலை நின்மன
மதுமுறை யியக்கலி னியக்கி யாகுமே.
பொருள் : இது என உரு என - (பார்த்தவள்) இஃது என்ன உருவம் என்று வினவ; இயக்கி என்றலும் - (சீவகன்) இயக்கியின் உருவம் என்றவுடன்; பூந்துகில் குழல்கள் சோர்தலால் புதிது இது - பூந்துகிலும் குழலும் சோர எழுதுவதால் புதியதே இப் படம் (நீ கூறியது பொய்யன்று); மதுவிரி கோதை அம்மாலை நின்மனம் அது - தேன்மிகுங் கோதையாளாகிய அக்குணமாலை நின் உள்ளமாகிய அதனை; முறை இயக்கலின் இயக்கி ஆகும் - முறையே ஆற்றாமை மிக இயக்குவதால் இயக்கி ஆவாள்.
விளக்கம் : இயக்கி தெய்வமாதலின் இது என்றாள். அம்மாலை - அக்குணமாலை. (165)
1016. முளைத்தெழு மதியமுத் தரும்பி யாங்கென
விளைத்தது திருமுகம் வியர்ப்பு வெஞ்சிலை
வளைத்தன புருவமு முரிந்த வல்லையே
கிளைக்கழு நீர்க்கணுஞ் சிவப்பிற் கேழ்த்தவே.
பொருள் : முளைத்து எழு மதியம் ஆங்கு முத்து அரும்பியது என - கிழக்கே முளைத்தெழுந்த திங்கள் ஆங்கே முத்துக்களை அரும்பிய தென்னுமாறு; திருமுகம் வியர்ப்பு விளைத்து - (அவள்) அழகிய முகம் வியர்வை பொடித்தது; வெஞ்சிலை வளைத்தஅன புருவமும் முரிந்த - கொடிய விற்களை வளைத்தால் அன்ன புருவங்களும் நெற்றியிலேறி வலலையே வளைந்தன; கிளைக் கழுநீர்க்கணும் சிவப்பின் கேழ்த்த - விரைவாகவே அலர்ந்த பூவிற்குக் கிளையாகிய கழுநீரின் (நீர்க்கீழ் அரும்பினும்) கண்கள் சிவப்புற்றன.
விளக்கம் : வல்லையே என்பதனைத் திருமுகத்தின் வியர்ப்புக்கே கூட்டுவர் நச்சினார்க்கினியர். கிளைக்கழுநீர் - நீர்க்கீழரும்பு. கணும் - கண்ணும். கண்ணும் கிளைக் கழுநீர்ச் சிவப்பிற் கேழ்த்த என மாறுக. கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு (29) என்றார் திருமுருகாற்றுப் படையினும். அலர்ந்த பூவினும் இவ்வரும்பு இதழ் மிக்குச் சிவப்புடையதாதல் பற்றி இங்ஙனம் கூறினர்.
(166)
1017. பாவைநீ புலவியி னீடல் பாவியேற்
காவியொன் றிரண்டுடம் பல்ல தூற்றுநீர்க்
கூவல்வாய் வெண்மணல் குறுகல் செல்லுமே
மேவிப்பூங் கங்கையுள் விழைந்த வன்னமே.
பொருள் : பாவை ! நீ புலவியில் நீடல் - பாவையே! நீ புலவியிலே காலம் நீட்டிக்காதே; இரண்டு உடம்பு அல்லது பாவியேற்கு ஆவி ஒன்று - நம் மிருவர்க்கும் இரண்டும் உடம்பே அல்லாமல், பாவியேனுக்கு உயிர் ஒன்றாக (நின்னுயிரே என்னுயிராக) இருக்கும். (இது நம் இயல்பு) ; பூங்கங்கையுள் மேவி விழைந்த அன்னம் - பூமலிந்த கங்கையை விரும்பி அடைந்த அன்னம் ; வெண்மணல் ஊற்றுநீர்க் கூவல் வாய்குறுகல் செல்லுமே? - வெள்ளிய மணலின்கண் ஊறும் ஊற்று நீரையுடைய கிணற்றிலே நெருங்கிச் செல்லுமோ?
விளக்கம் : கூவலிற் செல்லாதெனவே, கங்கையை நிகர்க்கும்யாற்றிலே செல்லும் என்பதாயிற்று; எனவே, குணமாலை மரபுங்கூறி அவளை வரைதலும் முறைமை யென்று கூறினானாம். (167)
1018. பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவாள்
நேர்மலர்ப் பாவையை நோக்கி நெய்சொரி
கூரழல் போல்வதோர் புலவி கூர்ந்ததே
யார்வுறு கணவன்மாட் டமிர்தின் சாயற்கே.
பொருள் : பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவாள் - வேறொரு பெண்டிரின் பேருரைப்பினும் பொறாமற் சீறும் தத்தை; மலர்ப் பாவையை நேர் நோக்கி - திருமகளைப் போன்றாளை எதிர்முகமாக நோக்கியபோது (அவள் வடிவு மிகுதி கண்டு); ஆர்வுறு கணவன்மாட்டு அமிர்தின் சாயற்கு - விருப்பம் மிகுந்த கணவனிடத்திலே அமிர்தமனைய மெல்லியலாட்கு; நெய்சொரிகூர் அழல்போல்வது ஓர் புலவி கூர்ந்தது - நெய் பெய்தலாலே மிகுந்தெரியும் அழலைப் போல்வதாகிய ஊடல் மிக்கது.
விளக்கம் : நேரமர்ப் பாவையை நோக்கி என்பது பாடமாயின், தனக்கு மாறாகிய பாவையை நேரே நோக்கி என்க. பேரினும் என்றது, வேறொரு பெண்ணின் பெயர் சொல்லுமளவிற்கே என்பதுபட நின்றது. மலர்ப்பாவை - திருமகளை ஒத்த குணமாலை என்க. என்றது அவள் உருவப் படத்தை. கூரழல் : வினைத்தொகை. ஆர்வு - ஆர்வம். அமிர்தின்சாயல் : காந்தருவதத்தை. (168)
1019. புலந்தவள் கொடியென நடுங்கிப் பொன்னரிச்
சிலம்பொடு மேகலை மிழற்றச் சென்னிமே
லலங்கல்வா யடிமல ரணிந்து குண்டல
மிலங்கப்பேர்ந் தினமலர் சிதறி யேகினாள்.
பொருள் : புலந்தவள் கொடிஎன நடுங்கி - இவ்வாறு பிணங்கினவள் மலர்க்கொடிபோல நடுங்கி : சென்னிமேல் அலங்கல் வாய் - அவன் முடிமேல் மாலையிடத்தே; பொன் அரிச் சிலம்பொடு மேகலை மிழற்ற - பொற்சிலம்பும் மேகலையும் மெல்லென ஒலிக்கும்படி; அடிமலர் அணிந்து - தன் அடியாகிய மலரைச் சூட்டி; குண்டலம் இலங்கப் பேர்ந்து - குண்டலம் ஒளிவிட அவ்விடத்தினின்றும் பெயர்ந்து; இனமலர் சிதறி ஏகினாள் - பின்னர் இனமலர்களைச் சிந்திவிட்டுத் தன் மனைக்குச் சென்றாள்.
விளக்கம் : இச் செய்யுளில் சென்னிமேல் அடிமலர் அணிந்து என்றது, அவள் புலவி தணித்தற்கு அவள் அடிகளில் வணங்கிய சீவகனுடைய சென்னிமேல் என்பதுபட நின்றது. இனமலர் - தொகுதியான மலர். (169)
1020. துனிப்புறு கிளவியாற் றுணைவி யேகலு
மினிப்பிறர்க் கிடமிலை யெழுவ லீங்கெனாக்
கனிப்புறு சொல்லளைஇப் பறந்து காளைதன்
பனிக்கதிர்ப் பகைமலர்ப் பாதஞ் சேர்ந்ததே.
பொருள் : துனிப்பு உறுகிளவியால் - அவன் கூறிய வெறுப்பூட்டும் வார்த்தையுடனே; துணைவி ஏகலும் - தத்தை போனவுடன்; இனி பிறர்க்கு இடம் இலை - (அவள் ஊடல் நீங்காது போதலின்) இனி வேறொருவர்க்கு இங்கே இடம் இல்லை; ஈங்கு எழுவல் எனா - இங்கு நின்றும் எழுவேன் என்று; கனிப்பு உறுசொல் அளைஇ-இனிமையான மொழிகளைத் தன்னிலே இயம்பிக் கொண்டு; பறந்து - பறந்து சென்று; காளைதன் பனிக்கதிர்ப் பகை மலர்ப் பாதம் சேர்ந்தது - சீவகனுடைய தண்ணிய நிலவின் பகையான தாமரை மலரனைய அடிகளை வணங்கியது.
விளக்கம் : அளைஇ: சொல்லிசை அளபெடை. துனிப்பு - வெறுப்பு. துணைவி : காந்தருவதத்தை. ஈங்குப் பிறர்க்கிடமிலை என மாறுக. கனிப்பு - இனிமை. பனிக்கதிர்ப்பகை - தாமரை மலர். (170)
1021. வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே
தோழியர் சுவாகதம் போது கீங்கெனச்
சூழ்மணி மோதிரஞ் சுடர்ந்து வில்லிட
யாழறி வித்தக னங்கை நீட்டினான்.
பொருள் : மைந்த ! நின் கழலடி வாழ்க என்ன - மைந்தனே ! நின் கழலணிந்த அடி வாழ்வதாக! என்று வணங்கிய கிளி வாழ்த்த ; யாழ் அறி வித்தகன் - யாழ் உணர்ந்த திறலோன்; தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என - எம் தோழியரின் நல்வரவே! இங்கு வருக என்று கூறி ; சூழ்மணி மோதிரம் சுடர்ந்து வில்இட அங்கை நீட்டினான் - விரலைச் சூழ்ந்த மணியாழி சுடர்விட்டு ஒளிவீச அங்கையை நீட்டினான்.
விளக்கம் : அடி வாழ்க என்றல் முறைமை. குணமாலையையும் சுரமஞ்சரியையும் குறித்துத் தோழியர் என்றான். தோழியர் சுவாகதம் எனப் பாடம் ஓதி, வியந்து தோழி சுகமே வந்ததே என்றுமாம். மைந்தன் நின் கழலடி வாழ்க என மாறுக. சுவாகதம் என்ற சொல்லிற்கு நல்வரவு என்றும் கிளி என்றும் பொருளுண்டு. (171)
1022. பொன்னிய குரும்பையிற் பொலிந்த வெம்முலைக்
கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி
முன்னமே வந்தென முறுவல் நோக்கமோ
டென்னைகொல் வரவென வினிய செப்பினான்.
பொருள் : பொன் இயல் குரும்பையின் பொலிந்த வெம்முலைக் கன்னியர் தூதொடு - பொன்னாலியன்ற குரும்பைபோல விளங்கும் வெம்முலைக் கன்னியரின் தூதாக; காமர் பைங்கிளி முன்னமே வந்தென - அழகிய பச்சைக்கிளி என் முன்னரே வந்தது என்றெண்ணி; முறுவல் நோக்கமொடு - நகைமுகப் பார்வையுடன்; வரவு என்னைகொல் என - வரவு எதனைக் கருதியோ என்று; இனிய செப்பினான் - இனிய மொழிகளை இயம்பினான்.
விளக்கம் : என் முன்னமே என்றான், பின்பும், ஆற்றாதேன் ஆற்ற, விடுந்த சிறுகிளி (சீவக. 1041) என்கின்றமையின். வந்ததென என்பது வந்தென என விகாரப்பட்டது. (172)
1023. மையலங் களிற்றொடு பொருத வண்புக
ழையனைச் செவ்விகண் டறிந்து வம்மெனப்
பையர வல்குலெம் பாவை தூதொடு
கையிலங் கெஃகினாய் காண வந்ததே.
பொருள் : கை இலங்கு எஃகினாய் - கையில் விளங்கும் வேலோனே!; மையல்அம் களிற்றொடு பொருத வண்புகழ் ஐயனை - மயக்கங்கொண்ட யானையுடன் போர்செய்த வளமிகு புகழுடைய ஐயனை; கண்டு செவ்வி அறிந்து வம்என - பார்த்து நிலை அறிந்து வருக என்று சொல்லிய; பை அரவு அல்குல் எம்பார்வை தூதொடு - படமுடைய பாம்பனைய அல்குலையுடைய எம் பாவையின் தூது மொழியுடனே; காண வந்தது - நின் செவ்விகாணவே என் வரவு நேர்ந்தது.
விளக்கம் : செவ்வி அறிதல் - வேட்கையுண்டில்லை யென்றறிதல். மையல் அங்களிறு - மயங்கிய அழகிய அசனிவேகம். வம்: ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. பாவை : குணமாலை. எம்பாவை என்றது எம்மூர் என்றாற்போன்று ஏனைக் கிளிகளையும் உளப்படுத்திக் கூறியபடியாம். என்னை கொல் வரவு என்றதற்கு விடையாகக் காணவந்தது என்று கிளி கூறிற்று. வந்தது காண்டற்கு என்றவாறு. (173)
வேறு
1024. வெஞ்சின வேழ முண்ட வெள்ளிலின் வெறிய மாக
நெஞ்சமு நிறையு நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி
அஞ்சனத் துவலை யாடி நடுங்கினா ணிலைமை யென்னை
பைஞ்சிறைத் தத்தை யென்னாப் பசுங்கிளி மொழியும்
பொருள் : பைஞ்சிறைத் தத்தை - பசுஞ் சிறகுடைய தத்தையே !; வெஞ்சின வேழட்ம உண்ட வெள்ளிலின் வெறியம் ஆக- கொடிய சினமுற்ற வேழம் என்னும் நோயால் உண்ணப்பட்ட விளாம்பழம்போல வெறுவியேம் ஆமாறு; நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணால் கவர்ந்த கள்வி - உள்ளத்தையும் நிறையையும் (பிறர் அறியாமல்) நீண்ட கருங்கண்களாற் கவர்ந்த கள்வி; அஞ்சனத் துவலை ஆடி நடுங்கினாள் - கண்ணுக்குத் தீட்டிய மைத்துளியிலே முழுகி (முன்னர் யானையைக் கண்டபோது) நடுங்கினாள் ; நிலைமை என்னை ? என்ன - அவள் நிலை எங்ஙனமுள்ளது? என்று சீவகன் வினவ; பசுங்கிளி மொழியும் - பைங்கிள்ளை மொழியும்.
விளக்கம் : வேழம், தேரை போயிற்றென்றாற் போல்வதொரு நோயென்க. இனி, யானை யுண்டது வெறுவிதாம் என்றும் உரைப்ப. ஈண்டு நாட்டமும் நடுக்கமும் (1003) வருத்தினமை கூறினான். வேழம் - விளம்பழத்திற் குண்டாகுமொரு நோய். அஃது அவ்வேழத்திற்குரிய வெஞ்சினமென்னும் அடையேற்றது. நெட்டிலை வஞ்சிக்கோ என்றாற்போன்று. வெள்ளில் - விளாம்பழம். துவலை - துளி. தத்தை - கிளி : விளியேற்று நின்றது. (174)
வேறு
1025. பூவணை யழலின்மேற் சேக்கும் பொன்செய்தூண்
பாவைதான் பொருந்துபு நிற்கும் பற்பல்கா
லாவியா வழலென வுயிர்க்கு மையென
மேவிப்பூ நிலமிசை யிருக்கு மெல்லவே.
பொருள் : பாவைதான் பூ அணை அழலின் மேல் சேக்கும் - என் தலைவி மலரணை ஆகிய நெருப்பின் மேல் தங்குவாள்; பொன் செய்தூண் பொருந்துபு நிற்கும் - பொன்னாலாகிய தூணைச் சார்ந்து நிற்பாள்; பற்பல்கால் ஆவியா அழல் என உயிர்க்கும் - பலமுறை கொட்டாவி விட்டு நெருப்புப்போல மூச்செறிவாள்!; ஐ எனப் பூ நிலமிசை மேவி மெல்ல இருக்கும் - ஐயென வருந்தித் தரையிலே சென்று மெல்ல அமர்வாள்.
விளக்கம் : ஐ : வருத்தக் குறிப்பு. பூவணை அழலிற் சேக்கும் என்றது அவட்குப் பூவணைமேலிருத்தல் தீமேல் இருப்பது போல்வதாயிற்று என்னும் கருத்துடையது. ஆவியா - ஆவித்து: செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ஆவித்தல் - கொட்டாவி விடுதல். பூநிலம் : இருபெயரொட்டு. (175)
1026. பணித்தகு கோலமும் பந்தும் பார்ப்புறாண்
மணிக்கழங் காடலண் மாமைதான் விளர்த்
தணித்தகை யாழினோ டமுதம் விட்டொழீஇத்
துணைப்பெரு மலர்க்கணிற் றுயிலு நீங்கினாள்.
பொருள் : பணித்தகு கோலமும் பந்தும் பார்ப்புறாள் - பிறரைத் தாழ்விக்கத்தக்க கோலத்தைப் புனைந்துகொள்ளாள், பந்தும விளையாடாள்; மணிக் கழங்கு ஆடலள் - மணிகளாற் செய்த கழங்கையும் ஆடாள்; மாமைதான் விளர்த்து - அவளுடைய பொன்மேனி வெளுத்து; அணித்தகை யாழினோடு அமுதம்விட்டு ஒரீஇ - அணியத்தக்க யாழையும் உணவையும் விட்டு நீங்கி; துணைப்பெரு மலர்க்கணில் துயிலும் நீங்கினாள் - பெரிய இரண்டு மலரனைய கண்களில் துயில்வதையும் விட்டாள்.
விளக்கம் : பந்தும் என்பதற்கு கேற்ப விளையாடாள் என வருவித்தோதுக. மணிக்கழங்கு - மணியாற்செய்த கழற்சிக்காய். மாமை-நிறம். அமுதம் - உணவிற்கு ஆகுபெயர். (176)
1027. திருந்துவேற் சீவக சாமி யோவெனுங்
கருங்கடல் வெள்வளை கழல்ப வோவெனும்
வருந்தினேன் மார்புறப் புல்லு வந்தெனும்
பொருந்துபூங் கொம்பன பொருவின் சாயலே.
பொருள் : பொருந்து பூங்கொம்பு அன பொருஇன் சாயல் - பொருந்திய பூங்கொம்பு போன்ற உவமை கூறற்கு இனிய மென்மையுடைய என் தலைவி; திருந்துவேல் சீவகசாமியோ ! எனும் - திருந்திய வேலேந்திய சீவகசாமியே! என விளிப்பாள் ; கருங்கடல் வெள்வளை கழல்ப ஓ எனும் - கரிய கடலிற் பிறந்த வெள்ளிய வளைகள் கழல்வவாயின்! ஓ ! என வருந்துவாள் ; வருந்தினேன் மார்புற வந்து புல்லு எனும் - (நின்னுருவெளியைத் தழுவி அகப்படாமையின்) யான் தழுவி வருந்தினேன்; இனி நீ வந்து மார்புறத் தழுவிக்கொள் என்பாள்.
விளக்கம் : யானை கொல்லாமல் உயிரைக் காத்த வருத்தம் இன்று உடம்பைக் காத்தற்கரியதோ என்று கருதி, வளை கழல்பவோ என்றாள். நச்சினார்க்கினியர் 1025 - 1027 ஆகிய மூன்று பாட்டுகளையும் ஒரு தொடர்ப்படுத்திக் கொண்டு கூட்டும் முடிபு:- பாவைதான் கோலத்தையும் பந்தையும் பாராளாய் ஆடலளாய் விளர்த்து யாழையும் உணவையும் விட்டு நீங்கி, உறக்கத்தையும் விட்டாள்; இத்தன்மையே யன்றி உயிரும் நீங்குமோ என்று கருதிப் பூம்படுக்கையாகிய நெருப்பிலே கிடந்து பார்க்கும்; அதினும் உயிர் நீங்காமையின் , தூணைப் பற்றுக்கோடாகப் பொருந்தி நின்றும் பார்க்கும்; வருந்தக் குறிப்புத் தோன்றி ஐயெனக் கூறிப்போய்ப் பல்கால் ஆவித்து நெட்டுயிர்ப்புக் கொள்ளா நிற்கும்; பின்பு அதுவுமின்றி நிலமிசை மெல்ல இருக்கும் ; அங்ஙனமிருந்து, சாயலை உடையாள், சீவகசாமி ! வளைகழல அமையுமோ எனும்; நின் உருவம் வெளிப்பட்டதனைப் பல்காலும் சென்று புல்லி, அது தன் எதிர் புல்லாமையின், யான் புல்லி வருந்தினேன்; இனி, நீ தான் வந்து மார்புறும்படி புல்லென்னும்; அது காணாமையின் ஓ என்று வருந்தும். (177)
1028. கன்னிய ருற்றநோய் கண்ண னார்க்குமஃ
தின்னதென் றுரையலர் நாணி னாதலான்
மன்னும்யா னுணரலேன் மாத ருற்றநோய்
துன்னிநீ அறிதியோ தோன்ற லென்றதே.
பொருள் : கன்னியர் உற்றநோய் இன்னதென்று கண்ணனார்க்கும் நாணின் உரையலர் ஆதலான் - கன்னிப் பெண்கள் தாம் அடைந்த காமநோய் இத்தகையதென்று கண்ணைப் போன்றவர்கட்கும் நாணத்தினால் மொழியார்; ஆகையால் (எனக்கும் உரையாள்); மன்னும் யான் உணரலேன் - யான் பறவை யானதால் நெருங்கி மிகவும் அறிகிலேன் ; தோன்றல் ! மாதர் உற்றநோய் நீ துன்னி அறிதியோ என்றது - தோன்றலே ! மாலை உற்ற நோயை நீ பொருந்தி அறிவையோ ? கூறு என்றது.
விளக்கம் : கன்னியர் உற்றநோய் கண்ணனார்க்கும் இன்ன தென்றுரையலர் என்னுமிதனை, தாமுறு காமத்தன்மை தாங்களே உரைப்பதென்ப(து) ஆமெனல் ஆவதன்றால் அருங்குல மகளிர்க்கம்மா (சூர்ப்ப - 45) எனவரும் இராமாவதாரத்தோடும் ஒப்பு நோக்குக. மன்னும் - மிகவும். மாதர் : குணமாலை. (178)
வேறு
1029. புள்ளின் வாயுரை கேட்டலும் பொன்செய்வே
லெள்ளி நீண்டகண் ணாடிறத் தின்னுரை
யுள்ளி னாருழைக் கண்டதொத் தானரோ
வள்ளன் மாத்தடிந் தானன்ன மாண்பினான்.
பொருள் : வள்ளல் மாத்தடிந்தான் அன்ன மாண்பினான் - வள்ளலாகிய மாமரங் கொன்ற முருகனனைய சிறப்பினான் ; புள்ளின் வாய்உரை கேட்டலும் - கிளியின் வாய்மொழியைக் கேட்டவுடன்; பொன் செய்வேல் எள்ளி நீண்ட கண்ணாள் திறத்து இன்உரை - பொன்னாற் செய்யப்பட்ட வேலை இகழ்ந்து நீண்ட கண்களையுடையாளிடமிருந்து வந்த இனிய மொழியை, உள்ளினாருழைக் கண்டது ஒத்தான் - தன்னால் நினைக்கத் தக்காரிடம் கண்டாற்போல மகிழ்ந்தான்.
விளக்கம் : இன்னுரை : ஆகுபெயராய் இன்னுரை அடங்கிய ஓலையைக் குறிக்கும். இனி, கண்ணாள் திறத்தின்னுரையைப் புள்ளின் வாயுரையாகக் கேட்டலும், தான் பெறற்கரியரா நினைத்தவர் தன் எதிரே வரக்கண்டார் போல மகிழ்ந்தான் என நச்சினார்க்கினியர் கூறுமாறு கொள்ளினும் கொள்க. அன்றி, இன்னுரையால் என உருவு விரித்து, உள்ளினார் உழைவரக் கண்டாற் போன்ற மகிழ்வடைந்தா னெனக் கொள்ளினும் பொருந்தும். (179)
1030. சென்ம ருந்துதந் தாய்சொல்லு நின்மனத்
தென்ன மர்ந்த துரைத்துக்கொ ணீயென
வின்னி மிர்ந்தநின் வீங்கெழிற் றோளவட்
கின்ம ருந்திவை வேண்டுவ லென்றதே.
பொருள் : சொல் மருந்து தந்தாய்நீ - குணமாலையின் மொழியாகிய மருந்தினை யான் ஆற்றுமாறு தந்த நீயே; சொல்லும் நின் மனத்து என் அமர்ந்தது - கூறுகின்ற நின் உள்ளத்திற்கு என்ன பொருந்தியதோ; உரைத்துக்கொள் என - அதனைக் கூறிக்கொள் என்றானாக; வில் நிமிர்ந்த நின் வீங்கு எழில்தோள் அவட்கு இன்மருந்து - வில் பொருந்திய, நின்னுடைய பருத்த அழகிய தோள்கள் அவளுக்கு இனிய மருந்தாகும். (அன்றி நின்னைப்போற் சொல் மருந்தால் ஆற்றாள்) ; இவை வேண்டுவல் என்றது - (ஆகவே) இத் தோள்களையே வேண்டுவேன் என்றது.
விளக்கம் : சொல் மருந்து, குணமாலை சொல்லும் சொல் : அவை, திருந்து வேற் சீவகசாமியோ.......வருந்தினேன் மார்புறப் புல்லு வந்து என்று குணமாலை கூற்றைக் கிளிகொண்டு கூறப்பட்டவை என்க. அச்சொற்களே இனி அவளை யாம் எய்துதல் ஒருதலை என்று தெளிவித்துத் துயரகற்றலின் மருந்து என்றான். இன் மருந்து இவை என்றது நின்போன்று அவள்சொன்மருந்தான் ஆற்றுகிலாள் என்பது படநின்றது. (180 )
1031. பொற்குன் றாயினும் பூம்பழ னங்கள்சூழ்
நெற்குன் றாம்பதி நேரினுந் தன்னையான்
கற்குன் றேந்திய தோளிணை கண்ணுறீ இச்
சொற்குன் றாபுணர் கேன்சொல்லு போவென்றான்.
பொருள் : பொற்குன்று ஆயினும் பூம்பழனங்கள் சூழ் நெற்குன்று ஆம்பதி நேரினும் - (அவள் சுற்றத்தார் வேண்டுவன) பொன்மலை யெனினும், அழகிய பழனங்கள் சூழ்ந்த, நெற்குன்றுகளையுடைய நகரமே எனினும்; தன்னை யான் கற்குன்று ஏந்திய தோளிணை கண் உறீஇப் புணர்கேன் - (அவற்றைக் கொடுத்து) அவளை நான் கற்குன்றுபோல் நிமிர்ந்த என் இரு தோளினும் அணைத்துத் தழுவிக்கொள்வேன்; சொல் குன்றா - இச் சொற்கள் குன்றமாட்டா; போ, சொல்லு என்றான் - போய்க் கூறு என்றான்.
விளக்கம் : கற்குன் றேந்திய தோள் கொடுஞ்சிலையான் (சீவக. 1041)என்று தன்னை வியத்தல் குற்றமெனின், கிழவி முன்னர்த்தற்புகழ் கிளவி - கிழவோன் வினைவயின் உரிய என்ப (தொல். கற்பு. 40) என்பதன் கருத்தாற் குற்றம் அன்று. வினை - செயப்படுபொருள். பொருளும் ஊரும் கெர்டுத்துப் புல்லுவேன் என்னுங் கடைப்பிடியாகிய செயப்படு பொருளும், முயற்சிக்குச் சிறப்புடைமையின், யானே புணர்வேன் என்னும் ஆள்வினைக் கருத்தால் தன்னைப் புகழ்ந்துரைக்கவே அது பற்றுக்கோடாக ஆற்றுவாள் என்பது பயனாம். இது, கைக்கிளையாதலின், முன்னிலை யன்றியும் புகழ்ந்தான்; புறத்திணை ஆயின், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் (தொல். புறத்திணை. 5) தலைவற்குரித்து. (181)
1032. சேலை வென்றகண் ணாட்கிவை செப்பரி
தோலை யொன்றெழு திப்பணி நீயென
மாலை மார்பன் கொடுப்பத் தினைக்குர
லோலை யோடுகொண் டோங்கிப் பறந்ததே.
(இதன்பொருள்.) சேலை வென்ற கண்ணாட்கு - சேல்மீனை வென்ற கண்ணையுடைய குணமாலைக்கு; இவை செப்ப அரிது - (அவள் வருத்தம் எல்லாம் நீங்குமாறு) இவற்றையெல்லாம் கூறுதல் அரிது; நீ ஓலை ஒன்று எழுதிப் பணி என - நீ ஒரு திருமுகம் எழுதிக்கொடு என்று (கிளி) சொல்ல; மாலை மார்பன் தினைக் குரல்ஓலையோடு கொடுப்ப - மாலை அணிந்த மார்பன் அவ்வாறே எழுதிப் பிறர் ஐயுறாமல் தினைக்கதிரில் வைத்த திருமுகத்தையும் தன் ஆழியையும் கொடுத்தவுடன்; கொண்டு ஓங்கிப் பறந்ததே - எடுத்துக் கொண்டு வானிடை உயர்ந்து பறந்தது.
விளக்கம் : மேல் ,நாம மோதிரந் தொட்டு (சீவக. 1040) என வருவதால் ஓலை ஒன்று என்னுமிடத்து ஒன்றென்பதற்கு ஆழி எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். சீவகன் கூற்றைத் தான் கேட்டுச் சென்று கூறும் சொற்களினும் சீவகன் கையால் எழுதிய ஓலையே அவள் துயரத்தை நன்கு தீர்ப்பதாகும் என்று கருதிக் கிளி ஓலைவேண்டிற்று என்க. (182)
1033. திருந்து கோதைச் சிகழிகைச் சீறடி
மருந்தின் சாயன் மணங்கமழ் மேனியாள்
பொருந்து பூம்பொய்கைப் போர்வையைப் போர்த்துடன்
கருங்கட் பாவை கவின்பெற வைகினாள்.
பொருள் : திருந்து கோதை சிகழிகைச் சீறடி - திருந்து கோதையையும் மயிர் முடியையும் சிற்றடியையும்; மருந்தின் சாயல் மணம் கமழ் மேனியாள் - அமுதமனைய மென்மையையும் மணம் வீசும் மேனியையும் உடைய தத்தை; பொருந்து பூம் பொய்கைப் போர்வையை உடன் போர்த்து - பொருந்திய மலர்ப் பொய்கை வடிவமாக எழுதிய போர்வையை மெய்ம்முழுதும் போர்த்து; கருங்கண் பாவை கவின்பெற வைகினாள் - கருங்கண்ணாளாகிய அவள் (சினந்து) விழித்துக் கிடந்தாள்.
விளக்கம் : மருந்து - அமுதம்; அமிர்தன்ன சாயல் (சீவக. 8) என்றதன் குறிப்பை நோக்குக. பொய்கைபோலும் கண்ணீர்ப் போர்வை எனலும் ஆம். (183)
1034. மறங்கொள் வெங்கதிர் வேலவன் வார்கழல்
கறங்க வேகித்தன் காதலி யூடலை
யுறைந்த வொண்மலர்ச் சென்னியி னீக்கினா
னிறைந்த தின்ப நெடுங்கணிக் கென்பவே.
பொருள் : மறம்கொள் வெம்கதிர் வேலவன் - போருக்குரிய வெய்ய கதிர்களையுடைய வேலவனான சீவகன்; வார்கழல் கறங்க ஏகி - (கிளி சென்ற பின்னர்) நீண்ட கழல் ஒலிக்கச் சென்று; தன் காதலி ஊடலை - தத்தையின் பிணக்கை ; ஒண்மலர் உறைந்த சென்னியின் நீக்கினான் - சிறந்த மலர்கள் அணிந்த தன் முடியாலே வணங்கி நீக்கினான்; நெடுங்கணிக்கு இன்பம் நிறைந்தது - நீண்ட கண்களையுடைய தத்தைக்கு இன்பம் நிறைவுற்றது. (184)
விளக்கம் : வேலவன் : சீவகன். காதலி - ஈண்டுக் காந்தருவதத்தை. சென்னியின் நீக்கினான் என்றது, அவளடிகளிலே வீழ்ந்து வணங்கி அவ்வூடலை நீக்கினன் என்றவாறு. நெடுங்கணி என்புழி ணகர வொற்றுக் கெட்டது: செய்யுள் விகாரம். (184 )
வேறு
1035. தன்றுணைவி கோட்டியினி னீங்கித் தனியிடம்பார்த்
தின்றுணைவற் சேர்வா னிருந்ததுகொல் போந்ததுகொல்
சென்றதுகொல் சேர்ந்ததுகொல் செவ்வி அறிந்துருகு
மென்றுணைவி மாற்றமிஃ தென்றதுகொல் பாவம்.
பொருள் : சென்றது கொல் - (கிளி) சென்றதோ?; தன் துணைவி கோட்டியினின் நீஙகி - தன் காதலியுடன் இருக்கும் இருப்பினின்றும் நீங்கி; தனி இடம் பார்த்து இன்துணைவன் சேர்வான் இருந்தது கொல் - தனியேயிருக்கும் இடத்தைப் பார்த்து என் இனிய காதலனை அடையக் (காலங்கருதி) இருந்ததோ?; போந்தது கொல்? - (கோட்டி பெறாதே) திரும்பி விட்டதோ?; சேர்ந்தது கொல்? - இடம் அறிந்து சேர்ந்ததோ?; செவ்வி அறிந்து - இடம் பெற்றபின் காலமும் அறிந்து ; உருகும் இன்துணைவி மாற்றம் இஃது என்றது கொல்? - உருகும் நின் இனிய துணைவியின் மொழியீது என்றுரைத்ததோ?; பாவம்! - இஃதொரு பாவம் இருந்தவாறு என்னே?
விளக்கம் : கிளிப்பிள்ளையும் தானும் பட்டது என் என்றாள். தன் துணைவி என்றது ஈண்டுக் காந்தருவதத்தையை. கோட்டி - கூட்டம். சேர்வான் - சேரும் பொருட்டு. கொல் அனைத்தும் ஐயப் பொருளன. செவ்வி - தகுந்த காலம். காமத்தால் வருந்தும் நெஞ்சத்தின் விதுவிதுப்பை இச் செய்யுள் நன்கு உணர்த்துதல் உணர்க. இங்ஙனமே இதனுடன் இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற் காணுங்கொல் இவ்வளவிற் காதல் இயம்புங்கொல் இவ்வளவின் மீளுங்கொல் எனவரும் நளவெண்பாவினையும் (சுயம் - 40) நினைக. (185)
வேறு
1036. செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கோ ரின்னுரைதான்
றந்தாரேற் றந்தாரென் னின்னுயிர்தாந் தாராரே
லந்தோ குணமாலைக் காதகா தென்றுலக
நொந்தாங் கழமுயன்று நோற்றானு மெய்துவனே.
பொருள் : செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கு - சிவந்து மாலையை உடைய பைங்கிளியாராகிய போனவர்க்கு; ஓர் இன்னுரைதான் தந்தாரேல் - ஓர் இனிய மொழியை அவர் கூறினாரெனின்; என் இன்உயிர் தந்தார் - எனக்கு இனிய உயிரையே அளித்தவராவார்; அந்தோ! தாம் தாராரேல் - ஐயோ! அவர்தாம் கூறாரெனின்; குணமாலைக்கு ஆ தகாது என்று - குணமாலைக்கு இத் துன்பம் வ்ரலாகாது என்று; உலகம் நொந்து அழ - உலகம் வருந்தியிரங்க; முயன்று - முயற்சி செய்து; நோற்றானும் அங்கு எய்துவனே - தவம் செய்தாயினும் அவரை அடைவேனோ? (அம் முயற்சியில் இறந்துபடுவேன்.)
விளக்கம் : செந்தார் - கழுத்தில் உள்ள கோடு. கிளியார் என உயர்திணையாற் கூறல் ஒன்றென முடித்தலாற் கொள்க. எய்துவனே: ஏ: எதிர்மறை. அந்தோ! ஆ: இரக்கக் குறிப்பிடைச் சொற்கள். நச்சினார்க்கினியர், அங்ஙனங் கூறாராயின் அவ்விடத்து யான் சுரமஞ்சரியைப் போலே முயன்று தவஞ்செய்தாயினும் பின்பு எய்து வேனோ? ஆ! குணமாலைக்கு இவ்விறந்துபாடு தகாதென்று உலகம் நொந்து அழும்படி இறந்துபாட்டை எய்துவேன் அன்றோ? என்று கருதினாள் என்று பொருள் கூறுவர். முன் நிகழ்ச்சியிற் சுரமஞ்சரி தவஞ்செய்வேன் என்று மனத்திற் கொண்டு குணமாலையுடன் மாறுபட்டுச் சென்றனளேனும், அவள் மனக்கோள் குணமாலைக்குத் தெரிந்திருக்க இடமில்லை. (186)
1037. சென்றார் வரைய கருமஞ் செருவேலான்
பொன்றாங் கணியகலம் புல்லப் பொருந்துமேற்
குன்றாது கூடுகெனக் கூறிமுத்த வார்மணன்மே
லன்றாங் கணியிழையா ளாழி யிழைத்தாளே.
பொருள் : கருமம் சென்றார் வரைய - வினையின் முடிவு வினைமேற் சென்றவரின் அறிவின் திறனளவாய் இருக்கும். (என் கிளி பேதையாதலால் எங்ஙனமோ? என்றெண்ணி) செருவேலான் ; பொன் தாங்கு அணி அகலம் புல்லப் பொருந்துமேல் - போர் வேலானுடைய அணியேந்திய அழகிய மார்பம் என்னைத் தழுவக் கூடுமாயின்; குன்றாது கூடுக எனக் கூறி - தவறாமற் கூடுவதாக என்றுரைத்து; ஆங்கு முத்த ஆர்மணல் மேல் - அவ்விடத்தே முத்துக்கள் நிறைந்த மணல்மேல்; அன்று - அதனைப் போகவிட்ட அப்போது; அணி இழையாள் ஆழி இழைத்தாள் - குணமாலை கூடற்சுழி தீட்டத் தொடங்கினாள்.
விளக்கம் : கருமம் சென்றார் வரைய என மாறுக. கருமம் சென்றார் வரைய என்றது என்பொருட்டுச் சென்ற கிளி பேதையே ஆதலின் அஃது அக்கருமத்தை முடித்துக்கொண்டு வருதல் ஒரு தலையன்றென்பதுபட நின்றது. கூடலிழைத்தலாவது - வருவரோவாராரோ என்றையுற்றவர் விரலால் வட்டமாகக் கோடு கிழித்து அக்கோட்டின் இருமுனைகளும் ஒன்று கூடியவிடத்து வருவர் என்றும் கூடாமல் விலகியவழி வாரார் என்றும் துணிதல் என்க. (187)
1038. பாகவரை வாங்கிப் பழுதாகிற் பாவியேற்
கேகுமா லாவி யெனநினைப்பப் பைங்கிளியார்
மாகமே நோக்கி மடவாளே யவ்விருந்தா
ளாகும்யான் சேர்வ லெனச்சென் றடைந்ததே.
பொருள் : பாகவரை வாங்கி - (அங்ஙன மிழைப்பவள்) பாதிவரையில் வளைத்து; பழுதாகின் பாவியேற்கு ஆவி ஏகும் - இது கூடாதாயின் பாவியேனுக்கு உயிர் நீக்கும்; என நினைப்ப - என்றெண்ணிக் (கூடற்சுழியை முடியாமலே வானிற் கிளி வரவை நோக்கி வாளா இருப்ப); மாகமே நோக்கி - வானையே நோக்கி ; அவ்விருந்தாள் யார்? மடவாளே ஆகும் - அங்கிருந்தாள் யார்? (வேறுபட்ட தோற்றத்தோடிருப்பினும் வேறொருத்தி இங்கிராள் ஆகையால்) குணமாலையே ஆவாள்; யான் சேர்வல் என - யான் இனி அவளிடஞ் செல்வேன் என எண்ணி ; பைங்கிளி சென்று அடைந்தது - பசுங்கிள்ளை போய்ச் சேர்ந்தது.
விளக்கம் : குணமாலை மாகமே நோக்கியும் கன்னிமாடத்திலும் இருந்ததால், மெய்வாடி, வேறுபட்ட தோற்றத்தோடிருப்பினும் கிளி அறிந்தது எனக் குணமாலையின் காதல் நிலை கூறியவாறு. தான் போனபின்புள்ள வேறுபாட்டால் ஐயுற்றாலும் வருத்த மிகுதி கண்டு கிளி தெளிந்தது. (188)
1039. கண்டா ணெடிதுயிர்த்தாள்
கைதொழுதாள் கையகத்தே
கொண்டா டினைக்குரறான்
சூடினாள் தாழ்குழன்மே
னுண்டார்ப் பசுங்கிளியை
நோவ அகட்டொடுக்கி
வண்டாரான் செவ்விவாய்க்
கேட்டாடன் மெய்ம்மகிழ்ந்தாள்.
பொருள் : கண்டாள் - (தன்னை அணுகின கிளியைக்) கண்டாள் ; நெடிது உயிர்த்தாள் - (இது என்னுரைக்குமோ என்று) பெருமூச் செறிந்தாள்; கைதொழுதாள் - (கிளியின் வாயில் தினைக்கதிரைக் கண்டு அதிலே ஓலையிருக்கும் என்று துணிந்து) கைகுவித்து (நல்லூழை) வணங்கினாள்; கையகத்தே தினைக்குரல் கொண்டாள் - கையிலே தினைக்கதிரை வாங்கிக் கொண்டாள்; தாழ்குழல் மேல் சூடினாள் - நீண்ட கூந்தலிலே வைத்துக் கொண்டாள் ; நுண்தார்ப் பசுங்கிளியை நோவ அகட்டு ஒடுக்கி - நுண்ணிய செவ்வரி கழுத்திற் பொருந்திய கிளியை அது வருந்துமளவு வயிற்றில் அணைத்துக்கொண்டு ; வண்தாரான் செவ்வி வாய்க் கேட்டாள் - செழுவிய மாலையான் நிலையை அதன் வாய்மொழியாலே கேட்டாள்; தன் மெய்ம் மகிழ்ந்தாள் - தன் உடல் குளிர்ந்தாள்.
விளக்கம் : அன்பினால் வயிற்றில் அணைத்தாள். தினைக்கதிரிலே மோதிரமும் ஓலையும் இருந்தனவாகையால் தனியே ஓய்வாக அமர்ந்து படிக்க எண்ணித் தன் குழலிலே வைத்துக்கொண்டாள். கையகத்தே கொண்டாள் என்பதற்குக், கையிலே ஆழியை மறையக் கொண்டாள் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். ஆழி தனியே கொண்டு வரப்பட்டதென்று அவர் கருதியிருத்தல் வேண்டும். இஃதென் கூறுமோஎன் றையுற்று உயிர்த்தாள் என்க. ஓலையிருக்கும் என்னுந் துணிவால் கைதொழுதாள் என்க. நுண்தார் -நுண்ணிய (கழுத்து) வரை. தாரான்: சீவகன். செவ்வி - ஈண்டு நிலைமை. (189)
1040. தீம்பா லமிர்தூட்டிச் செம்பொன் மணிக்கூட்டிற்
காம்பேர் பணைத்தோளி மென்பறவை கண்படுப்பித்
தாம்பான் மணிநாம மோதிரந்தொட் டையென்னத்
தேம்பா வெழுத்தோலை செவ்வனே நோக்கினாள்.
பொருள் : காம்பு ஏர் பணைத்தோளி - மூங்கிலனைய அழகிய பருத்த தோளினாள் ; மென்பறவை தீ பால் அமிர்து ஊட்டி - மென்மையான கிளியை, இனி பாலாகிய உணவை ஊட்டி ; செம்பொன் மணிக்கூட்டில் கண் படுப்பித்து - மணிகள் இழைத்த பொற்கூட்டிலே துயிலச் செய்து; ஆம் பால் மணி நாமம் மோதிரம் தொட்டு - ஆம் பகுதியையுடைய சீவகனென்னும் பெயர் பொறித்த ஆழியை எடுத்து அணிந்து கொண்டு ; ஐ என்ன - விரைவாக; தேம்பா எழுத்து ஓலை செவ்வனே நோக்கினாள் - வருந்தாத எழுத்துள்ள ஓலையைச் செவ்வனே பார்த்துப் படிக்கின்றாள்.
விளக்கம் : தேம்பாமைக்குக் காரணமான ஓலை எனினும் ஆம். காம்பு -மூங்கில். ஏர் : உவம உருபு. பணை - பருத்த. மென்பறவை : ஈண்டுக் கிளி. ஆம்பால் - ஆகும் பகுதி. நாமமோதிரம் - பெயர் பொறிக்கப்பட்ட மோதிரம். ஐஎன்ன : விரைவுக் குறிப்பு. (190 )
1041. கொடுஞ்சிலையா னோலை குணமாலை காண்க
வடுந்துயர முள்சுடவெந் தாற்றாதே னாற்ற
விடுந்த சிறுகிளியால் விம்மனோய் தீர்ந்தே
னெடுங்கணா டானு நினைவகல்வா ளாக.
பொருள் : கொடுஞ்சிலையான் ஓலை - வளைந்த வில் ஏந்திய சீவகன் விடுக்கும் ஓலை; குணமாலை காண்க - குணமாலை காண்பாளாக, அடும் துயரம் உள்சுட வெந்து ஆற்றாதேன் ஆற்ற - காமநோய் உள்ளத்தைச் சுடுதலாலே வெந்து ஆற்றாதன் நான் ஆற்றுமாறு; விடுந்த சிறுகிளியால் விம்மல் நோய் தீர்ந்தேன் - தான் வரவிட்ட சிறுகிளியினால் யான் மிக்க வருத்தத்திலிருந்து நீங்கினேன்; நெடுங்கணாள் தானும் நினைவு அகல்வாள் ஆக - நீண்ட கண்களையுடைய அவளும் வருத்தமிகா தொழிவாளாக.
விளக்கம் : கொடுஞ்சிலையான் எனத் தற்புகழ்தல் தகுமென்பதை முன்னரே (சீவக. 1031) கூறினாம். இன்னார் ஓலை இன்னார் காண்க என்றல் முறைமை. விடுந்த : விட்ட என்பதன் விகாரம். கொடுஞ்சிலையான் என்றது சீவகன் என்னும் பெயர்ப் பொருட்டாய் நின்றது. (191)
1042. ஈட்டஞ்சா னீணிதியு மீர்ங்குவளைப் பைந்தடஞ்சூழ்
மோட்டு வளஞ்சுரக்கு மூரு முழுதீந்து (மென்றோட்
வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்
பூட்டார் சிலைநுதலாட் புல்லா தொழியேனே.
பொருள் : ஈட்டம்சால் நீள்நிதியும் - அறத்திற் சேர்க்கப் பட்ட பெருஞ் செல்வத்தையும்; ஈர்ங்குவளைப் பைந்தடம் சூழ் மோட்டுவளம் சுரக்கும் ஊரும் - தண்ணிய குவளை நிறைந்த பசுந்தடங்கள் சூழ்ந்து உயரிய செல்வத்தைப் பெருக்கும் ஊரையும் ; முழுது ஈந்து- (குரவர் விரும்பியவாறு) முற்றவும் நல்கி ; பூட்டு ஆர் சிலை நுதலாள் - பூட்டப்பட்ட வில்லனைய புருவத்தாளின், வேட்டார்க்கு வேட்டனவே போன்று இனிய - விரும்பினார்க்கு விரும்பினவை போல, இனிமையான ; வேய்மென் தோள் - மூங்கில் அனைய மெல்லிய தோள்களை ; புல்லாது ஒழிவேனே - தழுவாமல் விலகுவேனோ?
விளக்கம் : சிலைநுதலாளைத் தோளைப் புல்லாதொழியேன் எனக் கூட்டி நச்சினார்க்கினியர் பொருள் கொண்டார். இங்ஙனம் இரண்டனுருபு முதலுககும் சினைக்கும் வருதல் முதன்முன் ஐவரின் என்ற சூத்திரத்தில், தெள்ளிது (தொல். வேற்றுமை மயங். 5) என்பதனாற் கொள்க. ஈட்டஞ்சால் என்றது, அறத்தால் ஈட்டமமைந்த என்பது படநின்றது. நீள்நிதி - பெருஞ்செல்வம். மோட்டுவளம் - பெருவளம்.
வேட்டபொழுதின் அவையவை போலுமே.
தோட்டார் கதுப்பினாள் தோள் (குறள்: 1105).
என்றார் திருவள்ளுவனாரும். (192)
1043. குங்குமஞ்சேர் வெம்முலைமேற்
கொய்தார் வடுப்பொறிப்பச்
செங்கயற்கண் வெம்பனியாற்
சிந்தை யெரியவித்து
மங்கை மகிழ
வுறையேனேல் வாளமருட்
பங்கப்பட் டார்மேற்
படைநினைந்தே னாகென்றான்.
பொருள் : கொய்தார் குங்குமம்சேர் வெம்முலைமேல் வடுப்பொறிப்ப - (என்) மாலை தன்னுடைய குங்குமம் அணிந்த விருப்பூட்டும் முலையின்மேல் வடுவாய் அழுந்துமாறு; செங்கயல்கண் வெம்பனியால் சிந்தை எரி அவித்து - (யான் முயங்குதலிற் பிறந்த) சிவந்த கயற்கண்ணிலிருந்து பிறந்த உவகைக் கண்ணீராற் சிறிது தணிந்த காமத் தீயை அவித்து; மங்கை மகிழ உறையேனேல் - அவள் என் அன்புடைமைக்கு மகிழுமாறு அவளுடன் உறைந்திலேன் எனின்; வாள் அமருள் பங்கப்பட்டார்மேல் படை நினைந்தேன் ஆக என்றான் - வாட் போரிலே அஞ்சினார் மேலே படைவிட எண்ணினேன் ஆகக்கடவேன் என்றொழுதியிருந்தான்
விளக்கம் : வெம்பனி என்றான், புணர்ந்தாலன்றி முயக்கத்தால் மட்டும் உண்ணிறை வெப்பம் முழுதும் தீராதென்று. பங்கப்படுதல் - இமைத்தல், திடுக்கிடல் முதலியன. ஆகென்றான் என்பதனைத் தொழிற்பெயர் (வினையாலணையும் பெயர்) எனக் கொண்டு அடுத்த செய்யுளில் நுண்வரிகள் என்பதற்கு எழுவாயாக்குவர் நச்சினார்க்கினியர். (193)
1044. நூல்புடைத்தாற் போற்கிடந்த வித்தகஞ்சேர் நுண்வரிகள்
பான்மடுத்துத் தீந்தேன் பருகுவாள் போனோக்கிச்
சேல்படுத்த கண்ணீர் சுமந்தளைஇ மெய்ம்மகிழ்ந்து
மால்படுத்தான் மார்பின் மணந்தாளே போன்மகிழ்ந்தாள்.
பொருள் : நூல்புடைத்தால் போன்று - நூல் எற்றினாற் போல; இனிய வித்தகம் சேர் நுண்வரிகள் - இனிய திறமை பொருந்திய நுண்ணிய எழுத்தின் வரிகளை; பால் மடுத்துத் தீந் தேன் பருகுவாள்போல் நோக்கி- பாலிலே கலந்து இனிய தேனைப் பருகுவாள் போல இனிமையுற்றுப் படித்து; அளைஇ சேல்படுத்த கண்ணீர் சுமந்து மெய்ம்மகிழ்ந்து - உவகை கலந்து சேலை வென்ற கண்களில் நீர் நிறைய உடம்பு குளிர்ந்து; மால்படுத்தான் மார்பில் மணந்தாளேபோல் மகிழ்ந்தாள் - மயக்கத்தை உண்டாக்கினவன் மார்பிலே கலந்தவளைப்போல இனிமையுற்றாள்.
விளக்கம் : வித்தகம் - உறுப்புமாம். மடுத்து - கலந்து. மால்படுத்தான் - தன்னைக் காம மயக்கத்துட்படுத்தவனாகிய சீவகன். (194)
1045. பாலவியும் பூவும் புகையும் படுசாந்துங்
காலவியாப் பொன்விளக்குந் தந்தும்மைக் கைதொழுவேன்
கோலவியா வெஞ்சிலையான் சொற்குன்றா னாகெனவே
நூலவையார் போனீங்க ணோக்குமினே யென்றாள்.
பொருள் : பால் அவியும் - பாற்சோறும் ; பூவும் - மலரும் ; புகையும் - மணப்புகையும்; படுசாந்தும் - அரைத்த சாந்தும் ; கால் அவியாப் பொன் விளக்கும் - காற்றில் அவியாத மாணிக்க விளக்கும்; தந்து உம்மைக் கைதொழுவேன் - படைத்து உங்களைக் கைகூப்பி வணங்குவேன் ; கோல் அவியா வெஞ்சிலையான் சொல் குன்றான் ஆக எனவே - அம்பு மாறாமல் எய்தற்குரிய கொடிய வில்லான் (நும்மை நீங்காது ஒற்றுமைப்படக் கூறிய) சொற்குன்றன் ஆகுமாறு; நூல் அவையார்போல் நீங்கள் நோக்கு மின் எனற்ள் - அறநூல் உணர்ந்த அவையோர்களை (நீங்கள் சொற்குன்றாமல் நோக்குதல்) போல அச்சொற்களுக்கு இடையூறின்றி ஆகவென்றே கருதி நோக்குங்கள் என்று வேண்டினாள்.
விளக்கம் : நீங்கள் என்றது எழுத்துக்களை ; அவற்றின் தன்மையும் வடிவும் ஆசிரியர்க்கல்லது உணரலாகாமையின், நூலில் விளங்கக் கூறிற்றிலரேனும் சமய நூல்களிற் கூறுதலின், அவ்வெழுத்துக்களைத் தெய்வம் என்றே கொள்க. (195)
வேறு
1046. மவ்வலங் குழலி னாளை மதியுடம் படுக்க லுற்றுச்
செவ்வியுட் செவிலி சொல்லுஞ் சிலையிவர் நுதலி னாய்நின்
னவ்வைக்கு மூத்த மாம னொருமகற் கின்றுன் றாதை
நவ்வியம் பிணைகொ ணோக்கி நகைமுக விருந்து செய்தான்.
பொருள் : மவ்வல் அம் குழலினாளை மதி உடம்படுக்கல் உற்று - முல்லை மலர் அணிந்த கூந்தலாளாகிய குணமாலையை, அவள் அறிவை அறிய எண்ணி ; செவ்வியுள் செவிலி சொல்லும் - அதற்கேற்பச் செவிலி செப்புவாள்; சிலை இவர் நுதலினாய்! - வில்லென விளங்கும் புருவத்தாய் ; நவ்வி அம்பிணை கொள் நோக்கி - பெண்மானின் நோக்கைக் கொண்டவளே!; நின் அவ்வைக்கு மூத்த மாமன் ஒரு மகற்கு - நின் அன்னைக்கு முன் பிறந்தவனும் நினக்கு மாமனும் ஆவானுடைய ஒப்பில்லாத மகனுக்கு ; இன்று உன் தாதை நகைமுக விருந்து செய்தான் - இன்று உன் தந்தை நகைமுகமாகிய விருந்தை யிட்டான்.
விளக்கம் : குழலினாளை - குணமாலையை. அவ்வை - தாய். அவ்வைக்கு - மூத்தவனான நின் மாமன் என்க. நகைமுகவிருந்து என்றது உடன்பாடு என்னும் பொருளின்மேனின்றது. நின்னைக் கொடுப்பதாக உடன்பட்டான் என்பது கருத்து. (196)
1047. பண்டியாற் பண்டி செம்பொன்
பல்வளை பரிய மாகக்
கொண்டுவந் தடிமை செய்வான்
குறையுறு கின்ற தன்றிக்
கண்டவர் கடக்க லாற்றாக்
கிழிமிசை யுருவ தீட்டி
வண்டிமிர் கோதை நின்னை
வழிபடு நாளு மென்றாள்.
பொருள் : பல்வளை! வண்டு இமிர் கோதை! - பல்வளைகளை உடையாய்! வண்டுகள் முரலும் கோதையாய்! ; பண்டியால் பண்டி செம்பொன் பரியமாகக் கொண்டு வந்து - நின் மைத்துனன் வண்டியாலே ஒரு வண்டி செம்பொன் பரிசமாகக் கொணர்ந்து ; அடிமை செய்வான் குறையுறுகின்றது அன்றி - நினக்குப் பணிபுரியக் குறையுற்று நிற்பதே அன்றி; கண்டவர் கடக்கல் ஆற்றா உருவு கிழிமிசை தீட்டி - பார்த்தவர் பார்வையை விட்டுக் கடந்துபோக இயலாத நின் வடிவத்தைக் கிழியிலே வனைந்து; நின்னை நாளும் வழிபடும் என்றாள் - உன்னை எப்போதும் வழிபடுவான் என்று கூறினாள்.
விளக்கம் : பல்வளை; அன்மொழித்தொகை, விளியேற்று நின்றது. கோதை : விளி. பண்டி - வண்டி. கண்டவர் கடக்கலாற்றா உருவு - என்பதனை ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ என்னும் மணிமேகலையோடு ஒப்புக்காண்க. (197)
1048. மைத்துனன் வனப்பின் மிக்கான்
வளர்நிதிக் கிழவன் காளை
யுத்தம னுனது நாம
மல்லதொன் றுரைத்த றேற்றா
னித்திறத் திவன்க ணின்னை
யெண்ணினா ரென்ன லோடுந்
தத்தையங் கிளவி கையாற்
செவிமுத லடைச்சிச் சொன்னாள்.
பொருள் : மைத்துனன் வனப்பின் மிக்கான் - மேலும் நின்மைத்துனன் அழகிற் சிறந்தவன் ; வளர்நிதிக் கிழவன் - பெருஞ் செல்வத்துக்குரியவன் ; காளை - இளைஞன்; உத்தமன் - நல்ல வன்; உனது நாமம் அல்லது ஒன்று உரைத்தல் தேற்றான் - உன் பெயரை யன்றி உரைத்தல் அறியாதவன் ; இத் திறத்து இவன்கண் - இக் கூறுபாடுகளையுடைய இவனிடத்தே ; நின்னை எண்ணினார் என்னலோடும் - நின்னைக் கொடுக்க நினைத்தனர் என்ற அளவிலே ; தத்தை அம் கிளவி - கிளிமொழியாள் ; கையால் செவிமுதல் அடைச்சிச் சொன்னாள் - கைகளினாலே செவிகளைப் புதைத்து ஒருமொழி உரைத்தாள்.
விளக்கம் : மைத்துனன் என்றது மேலும் நின்னை மணத்தற்கும் உரிமையுடையன் என்பதுபட நின்றது. இதன்கண் மணமகன்பால் பெண்ணின் தந்தை விரும்பும் வித்தையுடைமை உத்தமன் என்றதனானும், தாய் விரும்பும் தனம் வளர்நிதிக் கிழவன் காளை என்றதனானும், சுற்றம் விரும்பும் குலம் மைத்துனன் என்றதனானும், பெண் விரும்பும் அழகு வனப்பின்மிக்கான் என்றதனானும் போந்தமை உணர்க. (198)
1049. மணிமதக் களிறு வென்றான்
வருத்தச்சொற் கூலி யாக
வணிமதக் களிற னானுக்
கடிப்பணி செய்வ தல்லாற்
றுணிவதென் சுடுசொல் வாளாற்
செவிமுத லீர லென்றாள்
பணிவரும் பவளப் பாவை
பரிவுகொண் டனைய தொப்பாள்.
பொருள் : பணிவரும் பவளப்பாவை பரிவுகொண்டனையது ஒப்பாள் - பணிவித்தற்கு அரிய பவளப்பாவை வருத்தங்கொண்ட தன்மை போன்றாள் ; மணிமதக் களிறு வென்றான் வருத்தச் சொல் கூலி ஆக - கட்டுமணியையுடைய மதயானையை வென்றவன் கொண்டுய்யப் போமின் (சீவக. 981) என்ற பரிவுமொழிக்குக் கூலியாக; அணி மதக்களிறு அனானுக்கு அடிப்பணி செய்வது அல்லால் - அழகிய மதயானை போன்ற அவனுக்கு அடித்தொண்டு செய்தல் அன்றி; துணிவது என் ?- வேறு கொடுக்கத் துணிவது எதற்கு ?; சுடுசொல் வாளால் செவிமுதல் ஈரல் என்றாள் - (இவ்வாறு) சுடுசொல்லாகிய வாளாலே செவியிடத்தைப் பிளவற்க என்றுரைத்தாள்.
விளக்கம் : அடிச் செருப்பாவதல்லால் என்றும் பாடம். வருத்தச் சொல் - பரிவினைக் காட்டுஞ்சொல்; அஃதாவது கோற்றொடிப்பாவை தன்னைக் கொண்டுயப் போமின் என்று (981) தன் பொருட்டு முன்னர்ச் சீவகன் கூறிய சொல். சுடுசொல் - உள்ளத்தைச் சுடுவதுபோன்று வருத்துங் கொடுஞ்சொல் ; அது நின்னை எண்ணினார் என்ற செவிலி சொல். (199)
1050. கந்துகப் புடையிற் பொங்குங்
கலினமா வல்லன் காளைக்
கெந்தையும் யாயு நேரா
ராய்விடி னிறத்த லொன்றோ
சிந்தனை பிறிதொன் றாகிச்
செய்தவ முயற லொன்றோ
வந்ததா னாளை யென்றாள்
வடுவெனக் கிடந்த கண்ணாள்.
பொருள் : வடு எனக் கிடந்த கண்ணாள் - (மேலும்) மாவடுவைப் போன்ற கண்ணினாள்; கந்துகப் புடையில் பொங்கும் கலினமா வல்லன் காளைக்கு - பந்தின் புடைத்தல் போல விரைகின்ற புரவியைச் செலுத்த வல்லனாகிய காளைக்கு; எந்தையும் யாயும் நேரார் ஆய்விடின் - என் தந்தையும் தாயும் கொடுக்க ஒவ்வாராயின்; இறத்தல் ஒன்றோ - இறந்துபடுதலோ; சிந்தனை பிறிது ஒன்றாகிச் செய்தவம் முயறல் ஒன்றோ - வேறு நினையாமல் செய்யும் தவத்தினைக் கைக்கொள்ளுதலோ; நாளை வந்தது என்றாள் - நாளைக்கு (இவ்விரண்டில் ஒன்று) நமக்கு வந்துற்றது என்று அழுதாள்.
விளக்கம் : ஆகி - ஆக : குரவர் நினைவு வேறாய்ப்போக என்பர் நச்சினார்க்கினியர். கலினமா - குதிரை. வல்லனாகிய காளை என்க. காளை - சீவகன். வந்தது என்று இறந்த காலத்தாற் கூறினாள், வாராக் காலத்து வினைச்சொற் கிளவி, இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தேர்னறும், இயற்கையும் தெளிவும் கிளக்குங் காலை என்பதோத்தாகலான். (200)
1051. தேனெய்போன் றினிய சொல்லாள்
சிறுமுதுக் குறைமை கேட்டே
யூனைநைந் துருகிக் கைத்தா
யுண்ணிறை யுவகை பொங்க
வானெய்பாற் கிவர்ந்த தொத்த
தழேற்கவென் பாவை யென்று
தானையாற் றடங்க ணீரைத்
துடைத்துமெய் தழுவிக் கொண்டாள்.
பொருள் : கைத்தாய் - (அதனைக் கேட்ட) செவிலித்தாய்; தேன்நெய் போன்று இனிய சொல்லாள் - தேனும் நெய்யும்போல இனிய சொல்லினாளின்; சிறு முதுக்குறைமை கேட்டு - சிறு பருவத்தினும் பேரறிவுடைமை கேட்டு; ஊன் நைந்து உருகி-மெய்இளகி உருகி ; உள்நிறை உவகை பொங்க - உள்ளத்திலே நிறைந்த உவகை பொங்குவதால்; என்பாவை - என் மகளே!; ஆன்நெய் பாற்கு இவர்ந்தது ஒத்தது - உன் நினைவு பசுநெய் பாலை விரும்பியது போன்றது; அழேற்க என்று - அழாதே என்றுரைத்து; தானையால் தடம்கண் நீரைத் துடைத்து - தன் முன்றானையால் குணமாலையின் கண்ணீரைத் துடைத்து; மெய் தழுவிக்கொண்டாள் - உடல் பொருந்தத் தழுவிக்கொண்டாள்.
விளக்கம் : ஊனை : ஐ: அசை பாற் கவர்ந்தது என்றும் பாடம். தேனாகிய நெய்யெனினுமாம். சிறுமுதுக்குறைமை - இளம்பருவத்திலேயே பேரறிவுடைமை. சிறுமுதுகுறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் (சிலப். 16 - 68.) என்பது கோவலன் கூற்று. அழேற்க - அழாதே. தானை - முன்றானை. (201)
1052. துகண்மனத் தின்றி நோற்ற
தொல்வினைப் பயத்தி னன்றே
தகணிலாக் கேள்வி யான்கட்
டங்கிய தென்று பின்னு
மகண்மனங் குளிர்ப்பக் கூறி
மறுவலும் புல்லிக் கொண்டாங்
ககன்மனைத் தாய்க்குச் சொன்னா
ளவளுந்தன் கேட்குச் சொன்னாள்.
பொருள் : மனத்துத் துகள் இன்றி நோற்ற - மனத்திலே அழுக்கில்லாமல் நோற்ற; தொல் வினைபபயத்தின் அன்றே - நல்லூழின் பயனால் அன்றே; தகண் இலாக் கேள்வியான்கண் தங்கியது என்று - தட்டற்ற நூற் கேள்வியானிடத்தே நின் உள்ளம் நின்றது என்று ; பின்னும் மகள் மனம் குளிர்ப்பச் சொல்லி - மற்றும் மகளுடைய உள்ளம் குளிரக் கூறி ; மறுவலும் புல்லிக்கொண்டு - மறுமுறையும் தழுவிக்கொண்டு ; ஆங்கு அகல்மனைத் தாய்க்குச் சொன்னாள் - அங்கே நற்றாய்க்குத் தெளியக் கூறினாள்; அவளும் தன் கேட்குச் சொன்னாள் - அவளும் தன் கணவனுக்கு உரைத்தாள்.
விளக்கம் : செவிலி நற்றாய்க்குக் கூறியதும், நற்றாய் தந்தைக்குக் கூறியதும் அறத்தொடு நிற்றல் எனப்படும். குணமாலை, உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர் என்ற பழமொழிப்படி என் உயிரை மீட்ட சீவகனையேயன்றி மற்றொருவரை மணம்புரியேன் என்றலே அறத்தொடு நிற்றல் ஆம். துகள், ஈண்டு மனமாசு. தகண் - முட்டுப்பாடு. கேள்வி - நூற்கேள்வி. கேள்வியான் - ஈண்டுச் சீவகன். மறுவலும் -மீண்டும். மனைத்தாய் என்றது நற்றாயை, கேள் என்றது கணவனை. (202)
1053. வினையமா மாலை கேள்வன்
குபேரமித் திரற்குச் சொல்ல
வனையதே பட்ட தென்றா
லையனே நங்கைக் கொத்தான்
வனையவே பட்ட போலு
மணிமருண் முலையி னாளைப்
புனையவே பட்ட பொற்றார்ப்
புண்ணியற் கீது மென்றான்.
பொருள் : வினயமாமாலை கேள்வன் குபேர மித்திரற்குச் சொல்ல - வினயமாமாலை தன் கணவனாகிய குபேரமித்திரனுக்குக் கூறியவுடன்; அனையதே பட்டது என்றால் - (அவனும்) அதுவே அவள் உள்ளத்திற் கொண்டது என்றால்; ஐயனே நங்கைக்கு ஒத்தான் - அவனே நம் பெண்ணிற்கேற்றவன்; வனையவே பட்டபோலும் மணிமருள் முலையினாளை - எழுதப்பட்டனவே போன்ற மணிமருண்ட முலையாளை; புனையவே பட்ட பொன்தார்ப் புண்ணியற்கு ஈதும் என்றான் - அணிசெயப் பெற்ற பொன்மாலை அணிந்த நல்லோனுக்குக் கொடுப்போம் என்றான்.
விளக்கம் : அனையதே: ஏ : வினா என்பர் நச்சினார்க்கினியர். அனையதே - அப்படியே. வினயமாலை: என்பது, எதுகை நோக்கி வினயமாமாலை எனப் போலி ஆயிற்று; நற்றாயின் பெயர். கேள்வன் - கணவன். குபேரமித்திரன், குணமாலையின்றந்தை. அனையது என்றது, உவமை கருதாமல் சுட்டுக்பொருட்டாய் நின்றது. ஐயன் : சீவகன். நங்கை : குணமாலை: மகளிருட்சிறந்தோள் என்னும் பொருட்டு. புண்ணியம் : சீவகன். ஈதும் : தன்மைப் பன்மை. (203)
வேறு
1054. கற்றார் மற்றுங் கட்டுரை
வல்லார் கவியென்னு
நற்றேர் மேலார் நால்வரை
விட்டாற் கவர்சென்றார்
சுற்றார் வல்விற் சூடுறு
செம்பொற் கழனாய்கன்
பொற்றார் மார்பீர் போதுமி
னென்றாங் கெதிர்கொண்டான்.
பொருள் : கற்றார் மற்றும் கட்டுரை வல்லார் கவி என்னும் நால்வரை - படித்தவர் மேலும் புனைந்துரைப்பதிற் சிறந்தவர் கவிஞர் என்னும்முத்திறமுடையார் நால்வரை; நல்தேர் மேலார் விட்டாற்கு அவர் சென்றார் - நல்ல தேரின் மிசையராய்ச் செல்ல விட்டாற்கு இசைந்து அவர்களும் சென்றனர்; சுற்று ஆர் வல்வில் சூடுறு செம்பொன் கழல் நாய்கன் - (அப்போது) கட்டப்பட்ட வலிய வில்லையும் அணிந்த பொற்கழலையும் உடைய நாய்கன் ; பொன்தார் மார்பீர் ! போதுமின் என்று - பொன்மாலை மார்பினீர் ! வம்மின் என்றுரைத்து; ஆங்கு எதிர்கொண்டான் -வாயிலிற் சென்று எதிர்கொண்டான்.
விளக்கம் : இம் மூன்று கலையும் வல்லார் நால்வர் என்க. கற்றாரும் வல்லாரும் கவியும் ஆகியவர் என்னும் என வேண்டிய உம்மையும் ஆக்கச் சொல்லும் தொக்கன. கவி - கவிஞர். நால்வரைத் தேரின்மேல் ஏற்றி உய்த்தான் என்பது கருத்து. நாய்கன், ஈண்டுக் கந்துகன். விட்டாற்கு என்புழி நான்கனுருபு அதற்குடம்படுதற் பொருட்டு. போதுமின் - வம்மின். (204)
1055. சீந்தா நின்ற தீமுக வேலான் மணிச்செப்பி
னீந்தான் கொண்டா ரின்முக வாச மெரிசெம்பொன்
காந்தா நின்ற கற்பக மன்னீர் வரப்பெற்றேன்
சேர்ந்தே னின்றே வீடென நாய்கற் கவர்சொன்னார்.
பொருள் : சீந்தா நின்ற தீமுக வேலான் - சீறுகின்ற அனல் கொண்ட வேலானாகிய நாய்கன்; மணிச்செப்பின் இன்முக வாசம் ஈந்தான் - மணியிழைத்த செபபிலே இனிய முகவாசம் கொடுத்தான்; கொண்டார் - அவர்களும் எடுத்துக்கொண்டனர்; எரி செம்பொன் காந்தாநின்ற கற்பகம் அன்னீர் - எரியும் பொன்னின் ஒளியை விடுகின்ற கற்பகம் போன்றீர் ; வரப்பெற்றேன் - நீவிர் வரும் பேறு பெற்றேன் ; இன்றே வீடு சேர்ந்தேன் என - (அதனால்) இன்றே பேரின்பம் பெற்றவனானேன் என்று முகமனுரைக்க; நாய்கற்கு அவர் சொன்னார் - கந்துகனுக்கு வந்த நால்வரும் கூறினர்.
விளக்கம் : சீந்துதல் - சினத்தல். இனி, சிந்தாநின்ற என்றதன் விகாரமாகக் கொண்டு தீசிந்தாநின்ற முகவேலான் எனினுமாம். மணிச் செப்பின் இன்முகவாசம் ஈந்தான் என மாறுக. முகவாசம் - வெற்றிலை. காந்துதல் - ஒளிவிடுதல். கற்பகம் - தூதர்க்கு உவமை. இன்றே வீடு சேர்ந்தேன் என மாறுக. வீடு : ஆகுபெயர். வீட்டின்பம் என்றது, வீட்டின்பம் பெற்றேன்போல மகிழ்ந்தேன் என்றவாறு. (205)
1056. யாமக ளீது நீர்மகட் கொண்மி னெனயாருந்
தாமக ணேரா ராயினுந் தண்ணென் வரைமார்பிற்
பூமகள் வைகும் புண்ணியப் பொற்குன் றனையானுக்
கியாமக ணேர்ந்தே மின்றென நாய்கற் கவர்சொன்னார்.
பொருள் : யாம் மகள் ஈதும் - யாம் எம் மகளைத் தருகிறோம் ; நீர் மகள் கொண்மின் - நீர் அவளைக் கொண்மின் ; என யாரும் தாம் மகள் நேரார் ஆயினும் - என எவரும் தம் மகளைக் கொடுக்க இசையார் என்றாலும் (புது முறையாக) ; தண் என் வரை மார்பில் - குளிர்ந்த மலையனைய மார்பிலே; பூமகள் வைகும் புண்ணியப் பொற்குன்று அனையானுக்கு - திருமகள் தங்கும் நலம் நிறைந்த பொன்மலை போன்ற சீவகனுக்கு ; இன்று யாம் மகள் நேர்ந்தேம் என - இன்று யாம் மகட்கொடை விரும்பினேம் என்று; நாய்கற்கு அவர் சொன்னார் - குபேரமித்திரனுக்காக வந்த நால்வரும் கந்துக்கனிடம் உரைத்தனர்.
விளக்கம் : தாம்மகள் : தம்மகள் என்பதன் விகாரமும் ஆம். குபேரமித்திரனுக்கும் தமக்கும் வேற்றுமையின்றென்பது தோன்றயாம் மகள் நேர்ந்தேம் என்றார். நாய்கற்காக அத்தூதுவர் சொன்னார் என்க. குபேரமித்திரன் உரையை அவர்கொண்டு கூறினதாகக் கூறுதல் வேண்டாவுரையாகும். இதனோடு,
யாமகள் தருதும் கொள்கெனக் கூறுதல்.
ஏமவையத் தியல்பன்று (பெருங் - 4: 71-2)
எனவரும் பெருங்கதையின் ஒப்புநோக்குக. (206)
1057. சுற்றார் வல்விற் சூடுறு செம்பொற் கழலாற்குக்
குற்றேல் செய்துங் காளையும் யானுங் கொடியாளை
மற்சேர் தோளான் றன்மரு மானுக் கருள்செய்யப்
பெற்றே னென்னப் பேசினன் வாசங் கமழ்தாரான்.
பொருள் : சுற்று ஆர் வல்வில் சூடுறு செம்பொன் கழலாற்கு - கட்டப்பட்ட வலிய வில்லும், சூடிய பொற்கழலுமுடைய குபேரமித்திரனுக்கு; காளையும் யானும் குற்றேல் செய்தும் - சீவகனும் யானும் சிறுபணி புரிவோம்; மல்சேர் தோளான் கொடியாளைத் தன் மருமானுககு அருள் செய்யப் பெற்றேன் என்ன - மல்லுக்கியன்ற தேர்ளினன் தன் பூங்காடியனைய மகளைத் தன் மருமகனுக்குக் கொடுக்கும் பேறு பெற்றேன் என்று ; வாசம் கமழ்தாரான் பேசினன் - மணங்கமழ் மாலையான் பணிவுடன் கூறினன்.
விளக்கம் : குற்றேல் : குற்றேவல் என்பதன் விகாரம். அவன் தானே மகட்கொடை நேர்தலானும் கொள்வார் தாழவே வேண்டுதலானும் இங்ஙனங் கூறினான். வாசங்கமழ்தாரான் என்றது கந்துக்கடனைக் குறிப்பால் உணர்த்தியது. யானும் காலையும் குற்றேவல் செய்தும் என்பது பணிமொழி. (207)
1058. விடைசூ ழேற்றின் வேல்புக ழான்றன் மிகுதாதை
கடல்சூழ் வையங் கைப்படுத் தான் போன் றிதுகூறக்
குடர்சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும்மப்
படர்சூழ் நெஞ்சிற் பாவைதன் பண்பு மவர்சொன்னார்.
பொருள் : விடைசூழ் ஏற்றின் வெல்புகழான் தன்மிகு தாதை - விடைகள் சூழ்ந்த விடைபோலும் வெல்லும் புகழுடைய சீவகனின் தந்தை; கடல்சூழ் வையம் கைப்படுத்தான் போன்று - கடல்சூழும் உலகைக் கையகப் படுத்தான் போல; இதுகூற - இப் பணிமொழியை இயம்ப; குடர்சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும் - குடர் சூழ்ந்த கோட்டையுடைய அசனி வேகத்தைச் சீவகன் வென்றவாறும் ; அப் படர்சூழ் நெஞ்சின் பாவைதன் பண்பும் - அந்தத் துன்பம் சூழ்ந்த உள்ளமுடைய குணமாலை கொண்ட இயல்பையும்; அவர் சொன்னார் - வந்தவர்கள் உரைத்தார்கள்
விளக்கம் : பண்பு : நேராராயின் இறந்துபடுதல், தவஞ்செய்தல் என்பவை. விடை, ஏறு என்பன காளை என்னும் பொருளன. சீவகன் தோழர்கள் சூழத் திகழ்தலாற் விடைசூழ் ஏறு என்று உவமை கூறினர். கைப்படுத்தான் போன்று மகிழ்ந்து எனப் பொதுத் தன்மை விரித்தோதுக. குஞ்சாரம் - யானை ; ஈண்டு அசனிவேகம். படர் - துன்பம். (208)
1059. மறையார் வேள்வி மந்திரச்
செந்தீக் கொடியேபோற்
குறையாக் கற்பிற் சீவகன்
றாயுங் கொலைவேற்கட்
பொறையொன் றாற்றாப் போதணி
பொன் கொம்பு அனையாளை
நறையார் கோதை நன்றென
வின்புற் றெதிர்கொண்டாள்.
பொருள் : மறையார் வேள்வி மந்திரச் செந்தீக் கொடியே போல் - மறை வழிப்படும் வேள்வியிலே, மந்திரங் கூறும், செந்தீயின் கொடியைப் போன்ற; குறையாக் கற்பின் சீவகன் தாயும் - குறையாத கற்பினையுடைய சுநந்தையும்; கொலை வேல்கண் பொறை ஒன்று ஆற்றாப் போது அணி பொன் கொம்பு அனையாளை - கொலை வேலனைய கண்களையும், இல்லறப் பொறை ஒன்றுமே நடத்திப் போதணிந்த பொற்கொம்பு போன்ற குணமாலையை; நறையார் கோதை நன்று என - தேன் பொருந்திய கோதை போன்றவளை மணப்பது நன்று என்று ; இன்பு உற்று எதிர்கொண்டாள் - இன்பமுற்று விரும்பிக் கொண்டாள்.
விளக்கம் : பொற்கொம்பனையாள் வினயமாமாலை என்றும் நறையார்கோதை குணமாலை என்றும் நச்சினார்க்கினியர் கொள்வர். போதணி பொற்கொம்பு : இல்பொருளுவமை. கொடி - ஒழுங்கு. ஆற்றா - ஆற்றி : செய்யா என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம். (209)
1060. பொற்கச் சார்த்த பூணணி பொம்மன் முலையாளை
யற்கச் செய்த யாப்பின ராகி யவண்வந்தார்
பொற்பக் கூறிப் போகுது மென்றார்க் கெழுகென்றார்
வற்கம் மிட்ட வண்பரி மாவி னவர்சென்றார்.
பொருள் : அவண் வந்தார் - அங்கு வந்த நால்வரும்; பொன் கச்சு ஆர்ந்த பூண் அணி பொம்மல் முலையாளை - பொற்கச்சினாற் கட்டப்பெற்ற, அணிகலன் அணிந்த பெரிய முலையினாளை; அல்கச் செய்த யாப்பினராகி - அடையச் செய்த உறுதியுடையவராய்; பொற்பக் கூறி - (மணஞ் செய்யும் பொழுதையும்) அழகுறக் கூறி ; போகுதும் என்றார்க்கு - போவோம் என்று கூறினவர்க்கு; எழுக என்றார் - அங்ஙனமே செல்க என்றார் ; அவர் வற்கம் இட்ட வண்பரி மாவின் சென்றார் - வந்தவர்களும் பண்முற்றப் பெற்ற சிறந்த புரவி மீதிலே சென்றனர்.
விளக்கம் : திருமணம் தப்பாமல் முடித்தற்குக் கடிதிற் சென்றார். அல்க - அற்க என எதுகைநோக்கி வலித்தது. அல்குதல் - தங்குதல். யாப்பினர் - யாப்பு - தொடர்புமாம். பொற்ப - பொலிவுற. வற்கம் - குதிரையணிகலனில் ஒன்று. வண்பரிமா - வளவிய செலவினையுடைய குதிரை. (210)
வேறு
1061. மடந்தை திறத்தி னியையம்மகட் கூறி வந்தார்
விடந்தைத்த வேலாற் குரைத்தார்க்கவன் மெய்ம்மகிழ்ந்தா
னுடங்குங் கொடிப்போல் பவணூபுர மார்ப்ப வந்து
தடங்கண் ணவடா யதுகேட்டலுந் தக்க தென்றாள்
பொருள் : மடந்தை திறத்தின் இயைய மகள் பேசி வந்தார் - குணமாலையின் திறத்தாலே அவர்கள் இசைய மகளைக் கொடுப்பதாகப் பேசி வந்தவர்கள்; விடம்தைத்த வேலாற்கு உரைத்தார்க்கு - நஞ்சுபதிந்த வேலையுடைய குபேரமித்திரனுக்குக் கூறினார்க்கு; அவன் மெய்மகிழ்ந்தான் - அவனும் உண்மையான மகிழ்ச்சியடைந்தான்; நுடங்கும் கொடிபோல் பவள் நூபுரம் ஆர்ப்ப வந்து அது - அசையும் கொடிபோன்ற சுநந்தை நூபுரம் ஒலிக்க வந்து (கூறிய) அம் மொழியை ; தடம் கண்ணவள் தாய் கேட்டலும் தக்கது என்றாள் - பெருங்கண்ணினளின் அன்னையான வினயமாமாலை கேட்டவுடன் அவளுக்கு அது தக்கது என்றாள்.
விளக்கம் : மடந்தை : குணமாலை. வேலான் : குபேரமித்திரன். கொடி போல்பவள்: சுநந்தை. நூபுரம் - ஓர் அடியணிகலன். தாய் : வினயமாமாலை. அது தக்கதென்றாள் என இயைக்க. (211)
1062. திருவிற் கமைந்தான் றிசைபத்து மறிந்த தொல்சீ
ருருவிற் கமைந்தாற் கமைந்தாளென யாரு மொட்டப்
பெருகுங் கணியிற் கணிபேசிய பேதி னாளாற்
பருகற் கமைந்த வமிர்தின்படர் தீர்க்க லுற்றார்.
பொருள் : திருவிற்கு அமைந்தான் - திருவனையாளாகிய குணமாலைக்குச் சீவகன் அமைந்தான் ; திசைபத்தும் மலிந்த தொல்சீர் உருவிற்கு அமைந்தாற்கு அமைந்தாள் - பத்துத் திசையினும் நிறைந்த பழம் புகழையுடைய, அழகுக்கெனவே அமைந்த சீவகனுக்குக் குணமாலையும் அமைந்தாள்; என யாரும் ஒட்ட - என்று எல்லோரும் இசையுமாறு; பெருகும் கணியின் கணிபேசிய பேதுஇல் நாளால் - வளருங் கணித நூலை அறிந்த கணி கூறிய மயக்கம் அற்ற நாளிலே; பருகற்கு அமைந்த அமிர்தின் படர் தீர்க்கல் உற்றார் - உண்பதற்குத் தக்க அமிர்தமாகிய குணமாலையின் வருத்தத்தை நீக்கலுற்றனர்.
விளக்கம் : திரு : உவமவாகுபெயர். திருவிற்குச் சீவகன் அமைந்தான் என வருவித்துக் கூறுக. ஒட்ட - உடன்பட. கணியிற்கணி என்புழி முன்னின்ற கணி ஆகுபெயர்; நூல். ஏனையது - கணிவன். பேது இல்நாள் - மயக்கமில்லாத நல்லநாள்; குற்றமில்லாத நாளுமாம். படர்தீர்க்க லுற்றார் என்பது திருமண விழா நடத்துதற்கு முற்பட்டார் என்றவாறு. (212)
1063. கரைகொன் றிரங்குங் கடலிற்கலி கொண்டு கல்லென்
முரசங் கறங்க முழவிம்மவெண் சங்க மார்ப்பப்
பிரசங் கலங்கிற் றெனமாந்தர் பிணங்க வேட்டான்
விரைசென் றடைந்த குழலாளையவ் வேனி லானே.
பொருள் : கரை கொன்று இரங்கும் கடலின் கலிகொண்டு - கரையோடு மோதி ஆரவாரிக்கும் கடலைப்போல முழக்கங்கொண்டு ; கல் என் முரசம் கறங்க - கல்லென்று முரசு முழங்க; முழவு விம்ம - முழவு ஒலிக்க ; வெண் சங்கம் ஆர்ப்ப - வெண்மையான சங்குகள் ஒலிக்க ; பிரசம் கலங்கிற்று என மாந்தர் பிணங்க - வண்டுகளின் திரள் மயங்கியது என மக்கள் நெருங்க ; அவ் வேனிலான் - சிவனுடைய நெற்றிக் கண்ணுக்கு அழி யாத காமனான சீவகன் ; விரைசென்று அடைந்த குழலாளை - மணம் வந்து பொருந்திய கூந்தலாளை; வேட்டன் - மணந்தான்.
விளக்கம் : கலி - முழக்கம். கல்லென் : ஒலிக்குறிப்பு. கறங்க - முழங்க. முழா - முழ என ஈற்று ஆகாரம் குறுகி நின்றது. பிரசம் - வண்டு. பிணங்க - நெருங்கும்படி. குழலாள் : குணமாலை. வேனிலான் : சீவகன் : ஆகுபெயர். (213)
1064. மழைமொக்கு ளன்ன வருமென்முலை மாதர் நல்லா
ரிழைமுற் றணிந்தா ரெழுநூற்றுவர் கோடி செம்பொன்
கழைமுற்று தீந்தேன் கரும்பார்வய லைந்து மூதூர்
குழைமுற்று காதின் மணிக்கொம்பொடு நாய்க னீந்தான்.
பொருள் : மழை மொக்குகள் அன்ன வரும் மென்முலை மாதர் நல்லார் - மழைநீரின் குமிழிபோல வளரும் மென்முலைகளையுடைய இளம் பெண்கள் ; இழைமுற்றும் அணிந்தார் எழுநூற்றுவர் - எல்லோரும் அணிகலன் அணிந்தவராக எழுநூறு மகளிரும் ; கோடி செம்பொன் - கோடி பொன்னும் ; தீதேன் முற்று கரும்பின் கழை ஆர்வயல் - இனிய தேனையுடைய முற்றிய கருப்பங் கழிகளையுடைய கழனி சூழந்த ; ஐந்து மூதூர் - ஐந்து பழம்பதிகளும் ஆகிய இவற்றை ; குழைமுற்று காதின் மணிக்கொம்பொடு - குழை பொருந்திய காதினையுடைய மணிக்கொம்பான குணமாலையை நீர்வார்த்துக் கொடுக்கும்போது ; நாய்கன் ஈந்தான் - குபேரமித்திரன் கொடுத்தான்.
விளக்கம் : நல்லார் எழுநூற்றுவரும் இழையணிந்தார் எழுநூற்று வரும் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மழைமொக்குகள் முலைக்குவமை. மாதர் நல்லார் - அழகும் நன்மையும் உடைய மகளிர். வயலையுடைய ஐந்து பழைய ஊரும் என்க. மணிக்கொம்பு : குணமாலை. நாய்கன் - குபேரமித்திரன். (214)
வேறு
1065. பண்ணார் கிளவிப் பவழம் புரைசெவ்வாய்க்
கண்ணார் கதிர்மென் முலைக்காம் படுமென்றோள்
விண்ணோ ருலகின் னொடுமிந் நிலத்தில்லாப்
பெண்ணா ரமிர்தே யவன்பெற் றவமிர்தே.
பொருள் : அவன் பெற்ற அமிர்து - சீவகன் அடைந்த அமிர்து; விண்ணோர் உலகின்னொடும் இந்நிலத்து இல்லா - வானவர் உலகினும் இந்த நிலவுலகினும் இல்லாத; பண்ஆர் கிளவி - பண் நிறைந்த மொழியையும்; பவழம் புரை செவ்வாய் - பவளம் அனைய செவ்வாயையும்; கண்ஆர் கதிர்மென்முலை -கண்ணுக்கு நிறைந்த ஒளி பொருந்திய மென்முலையையும் ; காம்பு அடும் மென்தோள் - மூங்கிலை வெல்லும் மெல்லிய தோளையும் உடைய ; பெண்ஆர் அமிர்து - பெண்மை நிறைந்த அமிர்தமாகும்.
விளக்கம் : கிளவி - மொழி. புரை : உவமவுருபு. கண்ணார் - கண்ணுக்கு நிறைந்த என்க. காம்பு - மூங்கில். அவன் : சீவகன். (215)
1066. தேதா வெனவண் டொடுதேன் வரிசெய்யப்
போதார் குழலாள் புணர்மென் முலைபாயத்
தாதார் கமழ்தார் மதுவிண் டுதுளிப்ப
வீதா மவரெய் தியவின் பமதே.
பொருள் : தேதா என வண்டொடு தேன்வரி செய்ய - தேதா என்று வண்டும் தேனும் பாட்டிசைப்ப; போது ஆர் குழலாள் புணர் மென்முலை பாய - மலர்க் கூந்தலாளின் இரு மென்முலைகளும் பாய்தலினால்; தாது ஆர் கமழ்தார் மதுவிண்டு துளிப்ப - தாது நிறைந்த மணங்கமழ் (சீவகனுடைய) மாலையில் தேன் விண்டு துளிக்க; ஈது அவர் எய்திய இன்பமது ஆம் - இவர்கள் அடைந்த இன்பம் வானவர் பெற்ற இன்பம் ஆகும்.
விளக்கம் : தேதா - ஆளத்தி யென்னும் இசை. அவர் - தேவர். தேதா : ஒலிக்குறிப்பு. தேன் - வண்டு. வரி - பாட்டு. அவர் என்பதற்கு, குணமாலையும் சீவகனும் ஆகிய அவ்விருவரும் எனினுமாம். (216)
1067. முந்நீர்ப் பவளத் துறைநித் திலமுத்த
மந்நீ ரமிர்தீன் றுகொடுப் பவமர்ந்தான்
மைந்நீர் நெடுங்கண் புருவங் கண்மலங்கப்
பொன்னா ரரிக்கிண் கிணிபூ சலிடவே.
பொருள் : முந்நீர்ப் பவளத்து உறை நித்தில் முத்தம் - கடலிற் பிறந்த பவளத்தில் இருக்கின்ற முத்துப் போன்ற பற்கள்; அந்நீர் அமிர்து ஈன்று கொடுப்ப - அக் கடலிற் பிறந்த அமிர்தத்தைத் தான் பெற்றுத்தர; மைநீர் நெடுங்கண் புருவங்கள் மலங்க - மையின் தன்மை கொண்ட நீண்ட கண்களும் புருவங்களும் பிறழ; பொன் ஆர் அரி கிண்கிணி பூசல் இட - பொன்னால் ஆன பரலுடைய கிண்கிணிகள் ஒலிக்க; அமர்ந்தான் - புணர்ச்சியைப பொருந்தினான்.
விளக்கம் : அயின்றான் என்னும் பாடத்திற்குப் பானமும் புணர்ச்சியும் உடனிகழ்ச்சியாம். முந்நீர் - கடல். நித்திலமுத்தம் என்புழி முத்தம் என்பது உவமை குறியாது வாளா எயிறு என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. நித்திலம்போன்ற எயிறு என்க. அந்நீர் என்னும் சுட்டு முந்நீரைச் சுட்டியது. அமிர்து - அமிர்தம்போன்ற ஊறலை. அமர்ந்தான் என்றது இடக்கரடக்கு. அரி - பரல். (217)
1068. கம்பார் களியா னைகலக் கமலங்கி
யம்பே ரரிவா ணெடுங்கண் புதைத்தஞ்சிக்
கொம்பே குழைவா யெனக்கே குழைந்திட்டாய்
வம்பே யிதுவை யகத்தார் வழக்கன்றே.
பொருள் : கொம்பே! - கொம்பு போன்றவளே!; கம்பார் களியானை கலக்க மலங்கி - தூணிற் பொருந்தும் மதயானை கலக்கியதனாற் கலங்கி ; அம்புஏர் அரிவாள் நெடுங்கண் புதைத்து அஞ்சி - அம்பனைய அழகிய செவ்வரி படர்ந்த ஒளிமிகுங் கண்களை மூடிக்கொண்டு நடுங்கி ; குழைவாய் எனக்கே குழைந்திட்டாய் - வருந்துகின்ற நீ (பொது நோக்கினால் இவன் இறந்துபடுவான் என்று அருள் நோக்கினை அளித்தாய் ஆதலால்) எனக்கே வருந்தினை ; இது வையகத்தார் வழக்கு அன்று, வம்பு - இங்ஙனஞ் செய்தல் உலகத்தார் வழக்கன்று ; புதியதொரு வழக்கமாகும்.
விளக்கம் : இவ்வாறு கூறுதல் நயப்பு. தாம் வளைவார் பிறர்க்கு ஊற்றங்கோல் ஆகார் என்பது உலகு வழக்கு. நீல நெடுங்கணால் கவர்ந்த கள்வி (சீவக. 1024) என்பது பொதுநோக்கு. (218)
1069. பூவார் புனலாட் டினுட்பூ நறுஞ்சுண்ணம்
பாவாய் பணைத்தோட் சுரமஞ் சரிதோற்றாள்
காவா தவள்கண் ணறச்சொல் லியவெஞ்சொ
லேவோ வமிர்தோ வெனக்கின் றிதுசொல்லாய்.
பொருள் : பாவாய் - பாவையே!; பூஆர் புனல் ஆட்டினுள் - மலரையுடைய நீர் விளையாட்டில்; பணைத்தோள் சுரமஞ்சரி - பெருந்தோளையுடைய சுரமஞ்சரி; பூநறுஞ் சுண்ணம் தோற்றாள் - அழகிய நல்ல சுண்ணத்திலே தோல்வியடைந்து ; காவாது அவள் கணஅறச் செர்ல்லிய வெஞ்சொல் - வாய் காவாமல் அவள் கண்ணோட்டமின்றிக் கூறிய கொடுஞ்சொல்; இன்று எனக்கு ஏவோ அமிர்தோ சொல்லாய் - இன்று எனக்குத் துன்பமாயிற்றோ? இன்பமாயிற்றோ ? கூறுவாய்.
விளக்கம் : காவாத சொல், கூறு இவையோ? (சீவக. 876) என்று சுரமஞ்சரி கூறியது. அதனால், அவள், சுண்ணம் தோற்றனம் தீம்புனல் ஆடலம் (சீவக. 878) என்று கூறவே, வென்றவர் புனலாட வேண்டுதலின், இவள் புனலாட்டயர்ந்து வருகின்ற நேரத்துத் தான் களிற்றிடையுதவி எதிர்ப்பட்டதனால் இவ்வின்பம் பெறுதலின். தான், கண்ணின் கண்டிவை நல்ல (1884) என்றும், சால நல்லன (சீவக. 893) என்றும் , உய்த்துரைமின் (சீவக. 895) என்றுங் கூறுதலின், வாய்காவாது கூறிற்றென்பது பொருந்தாது. ஓவா அமிர்து என்றும் பாடம். (219)
1070. நற்றோ ளவள்சுண் ணநலஞ் சொலுவா
னுற்றீர் மறந்தீர் மனத்துள் ளுறைகின்றாள்
செற்றா லரிதாற் சென்மின்போ மின்றீண்டா
தெற்றே யறியாத வொரேழை யேனோயான்.
பொருள் : நல் தோளவன் சுண்ண நலம் சொலுவான் உற்றீர் - (நும்முடைய) அழகிய தோளினளின் சுண்ணத்திற்கே நன்மை கூறக் கருதினீர் ; மறந்தீர் - என் நல்வினையாலே அதனை மறந்தீர் ; மனத்துள் உறைகின்றாள் - அவள் உம்முடைய உள்ளத்திலே வாழ்கின்றாளாதலின்; செற்றால் அரிது - அவள் சினந்தாற் சினந்தீர்த்தல் அரிது; சென்மின் ! தீண்டாது போமின் ! - இவ்விடத்தினின்றும் இனிச் செல்லுமின்! என்னையருளித் தீண்டாதே போமின் ; எற்றே ! - என்னே !; யான் அறியாத ஓர் ஏழையேனோ? - யான் நுமக்கு வரும் துன்பத்திற்கு வருந்தாத அறிவிலியோ?
விளக்கம் : சென்மின் எனத் தீண்டுதலின், தீண்டாதே போமின் என்றாள். பணைத்தோள் சுரமஞ்சரி என்றதனாலும், தோற்றாள் என்பதனாலும் ஊடல் நேர்ந்தது. சீவகன் சுரமஞ்சரி தோற்றாள் என்றதுபற்றி அவள் நும் மனத்துள்ளுறைகின்றார் சென்மின் போமின் என்னும் இவ்வூடல் மிகவும் நுண்ணிதாதல் உணர்க. (220)
1071. தூமஞ் கமழ்பூந் துகில்சேரா வசையாத்
தாமம் பரிந்தாடு தண்சாந்தந் திமிர்ந்திட்
டேமன் சிலைவா ணுத லேற நெருக்காக்
காமன் கணையேர் கண்சிவந்து புலந்தாள்.
பொருள் : தூமம் கமழ் பூந்துகில் சேரா அசையா - அகிற் புகை கமழும் அழகிய ஆடையை இறுக உடுத்து ; தாமம் பரிந்து - மாலையை அறுத்து ; ஆடு தண் சாந்தம் திமிர்ந்திட்டு - பூசிய குளிர்ந்த சந்தனத்தை உதிர்த்து ; ஏமன் சிலை வாள்நுதல் ஏற நெருக்கா - அம்பிசைந்த வில்லனைய ஒளி பொருந்திய புருவத்தை நெற்றியில் ஏந நெருக்கி; காமன் கணைஏர் கண் சிவந்து புலந்தாள் - காமன் கணையனைய அழகிய கண்கள் சிவக்க ஊடினாள்.
விளக்கம் : தூமம் - நறுமணப்புகை. தாமம் - மாலை. பரிதல் - அறுத்தல். ஏ - அம்பு. சிலை - வில். காமன்கணை என்றது புருவத்தை. (221)
1072. மின்னே ரிடையா ளடிவீழ்ந் துமிரந்துஞ்
சொன்னீ ரவளற் பழலுட் சொரிந்தாற்ற
விந்நீ ரனகண் புடைவிட் டகன்றின்ப
மன்னார்ந் துமதர்ப் பொடுநோக் கினண்மாதோ.
பொருள் : மின்நேர் இடையாள் அடிவீழ்ந்தும் இரந்தும் - (அவள் புலத்தல் கண்ட சீவகன்) மின் னொக்கும் சிற்றிடையாளின் அடியிலே வீழ்ந்தும் வேண்டியும்; சொல்நீர் அவள் அனபு அழலுள் சொரிந்து ஆற்ற - சொல்லாகிய நீரை அவளுடைய அன்பாகிய தீயிலே பெய்து அவித்தானாக; இந்நீரன கண்புடை விட்டு அகன்று - இத் தன்மையவற்றைக் கண்களிலிருந்து நீக்கிவிட்டு; இன்பம் மன்ஆர்ந்து மதர்ப்பொடு கண்புடை நோக்கினள் - இன்பம் மனத்தே மிக நிறைதலின் களிப்பொடு கடைக்கணித்துப் பார்த்தாள்.
விளக்கம் : மாது, ஓ: அசைகள். கண்புடை என்பதைப் பின்னருங் கூட்டுக; கண்களே நோய் நோக்கும் மருந்துமாய் நிற்றலின். இந்நீரன விட்டு. . . . .மதர்ப்பொடு கண்புடை நோக்கினள் என்று கூட்டுவர் நச்சினார்க்கினியர். அன்பு காரணமாகப் பிறத்தலானும் கணவனுக்குத் துன்பமாயிருத்தலானும் ஊடலை அன்பழல் என்றார். அதனை அவித்தலாற் பணி மொழியை நீர் என்றார். (222)
1073. இன்னீ ரெரிமா மணிப்பூண் கிடந்தீன்ற
மின்னா ரிளமென் முலைவேய் மருண்மென்றோட்
பொன்னார் கொடியே புகழிற் புகழ்ஞால
நின்வா ணெடுங்கண் விலையா குநிகர்த்தே.
பொருள் : இன்நீர் எரிமா மணிப்பூண் கிடந்து ஈன்ற - இனிய பண்புடைய, ஒளிவிடும் மணிக்கலன் கிடந்து உண்டாக்கின; மின் ஆர் இளமென்முலை - ஒளியார்ந்த இளமையான மென்முலையையும்; வேய்மருள் மென்தோள் - மூங்கிலை மயக்கும் மென்மையான தோளினையும் உடைய ; பொன்ஆர் கொடியே !- பொற்கொடியே!; புகழின் - யான் புகழ நினைத்தால் ; புகழ் ஞாலம் நின்வாள் நெடுங்கண் நிகர்த்தே விலை ஆகும்? - புகழ் பெற்ற உலகம் உன்னுடைய வாட்கண்களுக்கு ஒப்பாகுமோ? ஆகாது. ஆதலால் புகழ்தலும் அரிது.
விளக்கம் : நிகர்த்தே : ஏ : எதிர்மறை. இன் நீர் எரி மாமணி - காட்சிக்கினிய நீர்மையையுடைய ஒளி சிறந்த மணி என்க. மின் - ஒளி. வேய் - மூங்கில். நிகர்த்தே என்பதிலுள்ள ஏகாரத்தை ஆகுமே எனக் கூட்டி ஆகாது என எதிர்மறைப் பொருள் கொள்க. (223)
1074. தோளாற் றழுவித் துவர்த்தொண் டையஞ்செவ்வாய்
மீளா மணிமே கலைமின் னின்மிளிர
வாளார் மணிப்பூ ணவன்மாதரம் பாவைதன்னை
நாளாற் பெற்றநல் லமிர்தென்ன நயந்தான்.
பொருள் : வாள்ஆர் மணிப்பூணவன் மாதர் அம் பாவை தன்னை - ஒளி பொருந்திய மணிக்கலனணிந்தவன் விருப்பூட்டும் அழகிய பாவையாளை; தோளால் தழுவி - தோள்களால் தழுவி ; மீளா மணிமேகலை மின்னின் மிளிர - நீங்காத மணிமேகலை மின்னென ஒளிவிட; துவர்த் தொண்டை அம் செய்வாய் - சிவந்த கொவ்வைக் கனியனைய இதழை ; நாளாற் பெற்ற நல் அமிர்து என்ன நயந்தான் - நாட் காலத்திலே பெற்ற இனிய அமிர்தம் என்ன நுகர்ந்தான்.
விளக்கம் : மீளா என்பதனை அமிர்துக்கு அடையாக்கி, மீளா அமிர்து - கருடன் வாங்கிவராத அமிர்து என்பர் நச்சினார்க்கினியர். நயத்தல் - பருகுதல் மேற்று. (224 )
வேறு
1075. சித்திர மணிக்குழை திளைக்கும் வாண்முகத்
தொத்தொளிர் பவளவா யோவக் கைவினைத்
தத்தரி நெடுங்கணா டன்னொ டாடுநாள்
வித்தகற் குற்றது விளம்பு கின்றதே.
பொருள் : சித்திர மணிக்குழை திளைக்கும் வாள் முகத்து - அழகிய மணிக்குழை பயிலும் ஒளியுறு முகத்தினையும்; பவளம் ஒத்து ஒளிர்வாய் - பவளத்தை யொத்து விளங்கும் வாயினையும்; ஓவக் கைவினை - ஓவியம் அனைய ஒப்பனையையும் உடைய; தத்து அரி நெடுங்கணாள் தன்னொடு - காதொடு மோதும் செவ்வரி பரவிய நீண்ட கண்ணாளான குணமாலையுடன்; ஆடும்நாள் - இங்ஙனம் கூடியாடும் நாளிலே; வித்தகற்கு உற்றது விளம்புகின்றது - திறமுடைய சீவகனுக்கு நேர்ந்த தீவினை இனி உரைக்கப்புகுவது.
விளக்கம் : ஓவக் கைவினை என்பதற்கு ஓகை வீணை என்பதும் பாடம். மணிக்குழை - ஒன்பது வகை மணிகளைப் பதித்துப் பொன்னாற் செய்யப்பட்ட காதணி. இரு செவிகளினும் புனைந்த காதணிகளின் ஒளி திளைத்தலால் விளங்கும் முகம் என்பார், குழைதிளைக்கும் வரள் முகம் என்றார். ஓவக் கைவினை - ஓவியம்போன்ற தொழிற்சிறப்பு. வித்தகன் : சீவகன். இனி யாம் விளம்புகின்றது வித்தகற்குற்றது என்க. (225)
வேறு
1076. அரும்பெறற் குருசிற் கஞ்ஞான்
றோடிய நாக நாணிக்
கரும்பெறி கடிகை யோடு
நெய்ம்மலி கவளங் கொள்ளா
திரும்புசெய் குழவித் திங்கண்
மருப்பிடைத் தடக்கை நாற்றிச்
சுரும்பொடு வண்டு பாடச்
சுளிவொடு நின்ற தன்றே.
பொருள் : அஞ்ஞான்று அரும்பெறல் குருசிற்கு ஓடிய நாகம் - நீர் விளையாட்டின்போது, பெறுதற்கரிய சீவகனுக்குத் தோற்ற யானை ; நாணி - வெட்கமுற்று; கரும்பு எறி கடிகையோடு நெய்ம்மலி கவளம் கொள்ளாது - கருப்பந் துண்டங்களையும் நெய் நிறைந்த கவளத்தினையும் கொள்ளாமல்; இரும்புசெய் குழவித் திங்கள் - கிம்புரியிட்ட பிறைத்திங்கள் போன்ற ; மருப்பிடைத் தடக்கை நாற்றி - கொம்பிலே துதிக்கையை வளைத்துத் தொங்கவிட்டு ; சுரும்பொடு வண்டு பாட - மதம் மிகுதலின் உண்ண முடியாமல் சுரும்பும் வண்டும் பாட ; சுளிவொடு நின்றது - சினத்தொடு நின்றது.
விளக்கம் : குருசில் - ஈண்டுச் சீவகன். அஞ்ஞான்று என்பது பண்டறிசுட்டு. நாகம் - யானை ; அசனிவேகம். கடிகை - துண்டம். குழவித்திங்கள் பிறை ; இது மருப்பிற்குவமை. சுளிவு - சினம் (226)
1077. பகைபுறங் கொடுத்த வேந்திற்
பரிவொடு பகடு நிற்பத்
தகைநிறக் குழைக டாழ்ந்து
சாந்தின்வாய் நக்கி மின்னப்
புகைநிறத் துகிலிற் பொன்னாண்
டுயல்வரப் போந்து வேந்தன்
மிகைநிறக் களிற்றை நோக்கி
வேழமென் னுற்ற தென்றான்.
பொருள் : பகைபுறம் கொடுத்த வேந்தின் - பகைவனுக்கு முதுகு கொடுத்த வேந்தனைப்போல; பகடு பரிவொடு நிற்ப - யானை வருத்தத்துடன் நிற்றலின்; தகைநிறக் குழைகள் தாழ்ந்து சாந்தின்வாய் நக்கி மின்ன - நன்னிறக் குழைகள் தாழ்ந்து தோளில் அணிந்த சந்தனத்தைத் தடவி ஒளிவிட ; புகைநிறத் துகிலில் பொன்நாண் துயல்வர வேந்தன் போந்து -புகையனைய நிறமுடைய ஆடையிற் பொன் அரைநாண் அசைய அரசன் வந்து; மிகைநிறக் களிற்றை நோக்கி - உயர் நிறமுடைய யானையைப் பார்த்து; வேழம் என் உற்றது என்றான் - யானை அடைந்த வருத்தம் என்னென்று பாகனை வினவினான்.
விளக்கம் : நச்சினார்க்கினியர் தாழ்ந்து என்பதனைக், களிற்றைத் தாழ்ந்து நோக்கி எனப் பின்னே கூட்டுவர். அவ்வாறு கூட்டுதலிற் போதப் பயனுண் டெனிற் கொள்க. வேந்தன் களிறுற்ற வருத்த நிலையைக் கேட்டு வந்து நோக்கினான் என்று கொள்க. (227)
1078. கொற்றவன் குறிப்பு நோக்கிக்
குஞ்சரப் பாகன் கூறு
மிற்றென வுரைத்த றேற்றே
னிறைவநின் னருளி னாங்கொல்
செற்றமிக் குடைமை யாற்கொல்
சீவக னின்ன நாளான்
மற்றிதற் குடற்சி செய்ய
மதுமிது செறித்த தென்றான்.
பொருள் : கொற்றவன் குறிப்பு நோக்கி - அரசன் மனக் கருத்தை உணர்ந்து; குஞ்சரப் பாகன் கூறும் - யானைப் பாகன் சொல்வான் ; இறைவ! - அரசே!; நின் அருளின் ஆம்கொல் - நின் உடன்பாட்டினாலோ; செற்றம் மிக்கு உடைமையால் கொல் - இதனிடத்துச் சீவகன் கொண்ட சீற்றமிகுதியாலோ ; சீவகன் இன்ன நாளால் - சீவகன் நீர்விளையாட்டன்று; இதற்கு உடற்சி செய்ய - இதற்குச் சினம் மிக உண்டாக்க ; இது மதம் செறித்தது - இது மதத்தை அடக்கியது ; இற்று என உணர்தல் தேற்றேன் - இதனைத் தவிர யான் வேறு இத்தன்மையது என விளங்கத் தெளிகிலேன் ; என்றான் - என்றுரைத்தான்.
விளக்கம் : குறிப்பு நோக்கி யென்றார், சீவகனைக் குறை கூறலாகாதெனக் கருதினும், அரசன் சினமுணர்ந்து அரசன் நினைவு மகிழக் கூறுதலின். மற்று ; வினைமாற்று. (228 )
1079. ஈண்டழற் குட்டம் போல
வெரியெழத் திருகி நோககிக்
கோண்டரு குறும்பர் வெம்போர்
கோக்குழர்ம் வென்ற துள்ளி
மாண்டதில் செய்கை சூழ்ந்த
வாணிகன் மகனை வல்லே
யாண்டிறங் களைவெ னோடிப்
பற்றுபு தம்மி னென்றான்.
பொருள் : ஈண்டு அழல் குட்டம்போல - (அதுகேட்ட அரசன்) செறிந்த நெருப்புக் குண்டம்போல ; எரி எழத் திருகி நோக்கி - அனல் எழச் சினந்து நோக்கி ; கோண்தரு குறும்பர் வெம்போர் - மாறுபடும் வேடருடன் செய்த கொடுஞ் சமரையும்; கோககுழாம் வென்றது - அரசர் கூட்டத்தை வென்றதையும்; உள்ளி - நினைத்து; மாண்டது இல் செய்கை செய்த - தகுதியற்றதாகிய செயலை (என்னுடன் மாறுபடுதலை)ச் செய்த ; வாணிகன் மகனை - செட்டி மகனை; வல்லே ஆண்திறம் களை வென் - இப்பொழுதே ஆண்மைச் செருக்கை ஒழிப்பேன் ; ஓடிப் பற்றுபு தம்மின் என்றான் - ஓடிக் கைக்கொண்டு தாரும் என்றான்.
விளக்கம் : பின்னர்த் தாம் கருதிய பொருளை நிறுவ நினைத்த நச்சினார்க்கினியர் ஈண்டு, அர்சன் ஏவல் செய்ய வேண்டுதலின், பற்றுபு தம்மின் என்று கூறவே, அவர் கட்டினாரென்றல் பொருந்தாமை உணர்க என்கின்றனர். (229)
1080. கன்றிய வெகுளி வேந்தன்
கால்வலி யிளையர் காய்ந்து
கொன்றுயிர் கொணர வோடுங்
கொழுங்குடர்க் கண்ணி மாலை
யொன்றிய வுதிரச் செச்சை
யொண்ணிண மீக்கொ டானைத்
தென்றிசைக் கிறைவன் றூதிற்
செம்மலைச் சென்று சேர்ந்தார்.
பொருள் : கன்றிய வெகுளி வேந்தன் - தழும்பேறிய சீற்றங்கொண்ட மன்னனுடைய ; கால்வலி இளையர் காய்ந்து - நடை வல்ல ஏவலர் சினந்து ; கொன்று உயிர்கொணர ஓடும் - கொன்று உயிரைக் கொண்டுவர ஓடுகின்ற; கொழுங்குடர்க் கண்ணிமாலை - கொழுவிய குடரைக் கண்ணியாகவும் மாலையாகவும் கொண்டு; ஒன்றிய உதிரச் செச்சை - பொருந்திய குருதியைச் சட்டையாக அணிந்து ; ஒள் நிணம் மீக்கொள் தானை - ஒள்ளிய நிணத்தை மேலே ஆடையாகக் கொண்ட; தென் திசைக்கு இறைவன் தூதின் - கூற்றுவனுடைய தூதரைப் போல; சென்று செம்மலைச் சேர்ந்தார் - போய்ச் சீவகனிருப்பிடத்தை அடைந்து சூழ்ந்தனர்.
விளக்கம் : கன்றுதல் - முதிர்தல்; காழ்ப்பேறுதல், கால் - காற்றுமாம். தென்றிசைக் கிறைவன்: கூற்றுவன். செம்மல் - சீவகன். கட்டியங்காரனைக் கூற்றுவனாகவும் ஏவலர்களை உயிர்கொண்டு ஓடும் கூற்றுவன் தூதராகவும் சீவகனை உயிராகவும் கொள்க. (230)
1081. சண்பக மாலை வேய்ந்து
சந்தனம் பளிதந் தீற்றி
விண்புக நாறு சாந்தின்
விழுமுலைக் காம வல்லி
கொண்டெழுந் துருவு காட்டி
முகத்திடைக் குளித்துத் தோண்மேல்
வண்டளி ரீன்று சுட்டி
வாணுதல் பூப்ப வைத்தான்.
பொருள் : சண்பக மாலை வேய்ந்து - சண்பக மாலையைச் சூட்டி ; சந்தனம் பளிதம் தீற்றி விண்புக நாறு சாந்தின் - சந்தனத்தையும் பச்சைக் கருப்பூரத்தையும் கலந்து வானளாவ மணக்கும் சந்தனக் குழம்பினாலே; காமவல்லி விழுமுலைக் கொண்டு எழுந்து - காமவல்லியானது சிறந்த முலையை அடியாகத் தொடங்கி எழுந்து; உருவு காட்டி - தனது உருவத்தைக் காட்டி; தோண்மேல் வண்தளிர் ஈன்று - தோளின்மேல் வளவிய தளிரை நல்கி ; முகத்திடைக் குளித்து - முகத்திலே மறைந்து போய் ; வாள்நுதல் சுட்டி பூ வைத்தான் - ஒள்ளிய நெற்றீயிலே சுட்டியாக மலருமாறு எழுதினான்.
விளக்கம் : பளிதம் - பச்சைக் கருப்பூரம். தீற்றுதல் - பூசுதல். விழுமுலை - சிறந்த முலை. காமவல்லி - கற்பக மரத்திற் படருமொரு பொன்னிறப் பூங்கொடி. அக்கொடியின் உருவத்தைச் சீவகன் குணமாலை முலைமேல் எழுதினன் என்க. (231)
1082. பண்ணடி வீழுந் தீஞ்சொற்
பாவைநின் வனப்பிற் கெல்லாங்
கண்ணடி கருங்க ணென்னு
மம்பறாத் தூணி தன்னாற்
புண்ணுடை மாம்பத் தோவா
தெய்தியா லெங்குப் பெற்றாய்
பெண்ணுடைப் பேதை யென்றோர்
நாண்முற்றும் பிதற்றி னானே.
பொருள் : பண்அடி வீழும் தீசொல் பாவை - பண் தோற்று அடியிலே வணங்கும் இனிய மொழிகளையுடைய பாவையே !; வனப்பிற்கு எல்லாம் கண்ணடி - அழகிற்கெல்லாம் கண்ணாடி போன்றவளே!; நின் கருங்கண் என்னும் அம்பறாத்தூணி தன்னால் - நின் கரிய கண்களாகிய அம்பறாத்தூணியில் நோக்கமாகிய அம்பினால் ; புண்உடை மார்பத்து ஓவாது எய்தி - (பழைய) புண்ணுடைய மார்பிலே ஓயாமல் எய்கின்றனை; எங்குப் பெற்றாய் - இத்தகைய அம்பறாத்தூணியை எங்குப் பெற்றனை ; பெண் உடைப் பேதை ! - பெண்மையுடைய பேதையே !; என்று ஓர் நாள் முற்றும் பிதற்றினான் - என்று ஒருநாளெல்லாம் பிதற்றிக்கொண்டிருந்தான்.
விளக்கம் : கண்ணாடி என்பது கண்ணடி என விகாரப்பட்டது. எல்லார்க்கும் அழகு இத்தன்மைத்தென்று உணர்த்துதலின் கண்ணாடி உவமை ஆயிற்று. மார்பத்துழை என அத்திற்குப் பின் ஓர் ஏழனுருபு விரிக்கவே அஃது இடப்பொருளுணர்த்தி, அவற்குச் சேர்ந்த நெஞ்சினை உணர்த்தும்; அரசனுழை யிருந்தான் போல. பிதற்றினானென்றது மயக்கத்தால். (232)
1083. திங்கள்சேர் முடியி னானுஞ்
செல்வியும் போன்று செம்பொ
னிங்குவார் கழலி னானுங்
கோதையு மிருந்த போழ்திற்
சிங்கவே றெள்ளிச் சூழ்ந்த
சிறுநரிக் குழாத்திற் சூழ்ந்தா
ரங்கது கண்ட தாதி
யையனுக் கின்ன தென்றாள்.
பொருள் : திங்கள்சேர் முடியினானும் செல்வியும் போன்று - பிறை முடியணிந்த பெருமானும் உமையம்மையும் போல; செம்போன் இங்கு வார்கழலினானும் கோதையும் - செம்பொன் தங்கிய வாரில் தங்கிய கழலினானும் குணமாலையும்; இருந்த போழ்தில் - அமர்ந்திருந்த காலத்தில்; சிங்க ஏறு எள்ளிச் சூழ்ந்த - சிங்க ஏற்றினை இகழ்ந்து அதன் குகையிலே சூழ்ந்த; சிறுநரிக் குழாத்தின் சூழ்ந்தார் - குள்ளநரிக் கூட்டம்போல மனையை வந்த வீரர்கள் சூழ்ந்தனர் ; அங்கு அது கண்ட தாதி - அங்கே அதனைக் கண்ட சேடி ; ஐயனுக்கு இன்னது என்றாள் - சீவகனுக்கு இங்ஙனம் சூழ்ந்தார் என்றனள்.
விளக்கம் : திங்கள் சேர்முடியினான் : சிவபெருமான். செல்வி : இறைவி. அன்பினால் இரண்டறக் கலந்திருந்ததற்குச் சிவபெருமானும் இறைவியும் உவமை என்க. சிங்கவேறு - ஆண் சிங்கம்; இது சீவகற் குவமை. சிறு நரிக்குழாம் - கட்டியங்காரன் ஏவிய படைஞர் குழாத்திற்குவமை. தாதி - பணிமகள். (233)
1084. என்றவ ளுரைப்பக் கேட்டே
யிடிபட முழங்கிச் செந்தீ
நின்றெரி வதனை யொத்து
நிண்முழைச் சிங்க வேறு
தன்றுணைப் பெட்டை யோடு
தான்புறப் பட்ட தொத்தான்
குன்றிரண் டிருந்த போலுங்
குங்குமக் குவவுத் தோளான்.
பொருள் : என்று அவள் உரைப்பக் கேட்டு - இவ்வாறு சேடி செப்பக் கேட்டு; குன்று இரண்டு இருந்த போலும் குங்குமக் குவவுத் தோளான் - மலைகள் இரண்டு இருந்தன போன்று, குங்குமம் அணிந்த திரண்ட தோளையுடைய சீவகன்; இடிபட முழங்கி - வெடித்தல் உண்டாக முழங்கி ; செந்தீ நின்று எரிவதனை ஒத்து - சிவந்த தீ நிலையாக எரிவதைப்போல ; நீள் முழை சிங்க ஏறு - பெருங்குகையிலிருந்த ஆண் சிங்கம் ; தன் துணைப் பெட்டையோடு - தன் துணையான பெண் சிங்கத்துடன்; தான் புறப்பட்டது ஒத்தான் - அது வெளிப்பட்டதைப் போல மண அறையினின்றும் குணமாலையுடன் வெளிப்பட்டான்.
விளக்கம் : பெட்டை யென்பதற்கு எழுந்து விண்படரும் (சீவக. 752) என்னும் செய்யுளிலே கூறப்பட்டது. இங்கும் நச்சினார்க்கினியர் பின்னர்த் தம்கோள் நிறுவ, இவ்விரண்டு கவியிலும் சீவகற்குச் சிங்க வேறு உவமையும், பகைவர்க்கு நரியுவமையுமாகக் கூறலின், அவராற் கட்டலாகாமையுணர்க என்றனர். (234)
1085. பொன்னரி மாலை தாழப்
போதணி கூந்த லேந்திப்
பன்னரு மாலை யாற்குப்
பட்டதை யெவன்கொ லென்னாப்
பின்னரு மாலை யோராள்
பெருநடுக் குற்று நின்றாண்
மன்னரு மாலை நாக
மழையிடிப் புண்ட தொத்தாள்.
பொருள் : மாலை, பொன் அரிமாலை தாழப்போது அணி கூந்தல் ஏந்தி - குணமாலை, பொன்னரி மாலை தாழுமாறு, மலர்க் கூந்தலைக் கையில் ஏந்தி; பின்னரும் ஓராள் - (முன்னர் யானையை அடக்கியபோது இவன் வலிமை அறிந்திருந்தும்) மறுமுறையும் அறியாதவளாய்; பன்னஅரு மாலையாற்குப் பட்டது எவன்கோல் என்னா - புகழ்தற்கரிய இயல்பினையுடையானுக்குப் பிறந்த துன்பந்தான் யாதோ என்று எண்ணி; பெருநடுக்கு உற்று நின்றாள் - மிகுதியும் நடுங்கி நின்றவள்; மன்அரு மாலை நாகம் மழை இடிப்புண்டது ஒத்தாள் - (மக்கள் திரளில்) நிலைபெறற் கரிய இயல்புறும் பாம்பு இடியால் தாக்குண்டது போல ஆனாள்.
விளக்கம் : பொன்னரிமாலை - ஒரு கூந்தலணி. மாலையான் : சீவகன் ; இயல்பினையுடையானாகிய சீவகன் என்னும் பொருட்டு. மாலை : குணமாலை. மாலை - இயல்பு. நாகம் - பாம்பு. (235)
1086. கடுகிய விளையர் நோக்குங்
கண்ணிய பொருளு மெண்ணி
யடுசிலை யழல வேந்தி
யாருயிர் பருகற் கொத்த
விடுகணை தெரிந்து தானை
வீக்கற விசித்து வெய்தாத்
தொடுகழ னரல வீக்கிச்
சொல்லுமின் வந்த தென்றான்.
பொருள் : கடுகிய இளையர் நோக்கும் - அரசன் ஆணையிற் கடுகி வந்த ஏவலர் நோக்கையும்; கண்ணிய பொருளும் எண்ணி - அரசன் யானையைக் கண்டு ஆண்திறம் களையக் கருதியதையும் ஒருவாறு சிந்தித்துணர்ந்து; தானை வீக்கற விசித்து - ஆடையை இனி இறுகாதென்னுமாறு இறுக்கி ; வெய்துஆ தொடுகழல் நரல வீக்கி - விரைவாகக் கழலை ஒலிக்கக் கட்டி ; அழல அடுசிலை ஏந்தி - வெம்மையாக அடுதற்குரிய வில்லை ஏந்தி; ஆருயிர் பருகற்கு ஒத்த விடுகணை தெரிந்து - உயிரைப் பருகற்குத் தக்க அம்புகளைத் தெரிந்தெடுத்துக் கொண்டு; வந்தது சொல்லுமின் என்றான் - வந்ததைக் கூறுங்கள் என்றான்.
விளக்கம் : தானை - ஆடை, விசித்து - கட்டி. வெய்தாக என்பது ஈறுகெட்டது. நரலுதல் - ஒலித்தல். வந்தது - நீயிர் வருதற்குற்ற காரணம். (236)
1087. அடிநிழற் றருக வென்றெம்
மாணைவேந் தருளிச் செய்தான்
வடிமலர்த் தாரி னாய்நீ
வருகென வானி னுச்சி
யிடியுரு மேற்றிற் சீறி
யிருநிலஞ் சுடுதற் கொத்த
கடிமதின் மூன்று மெய்த
கடவுளிற் கனன்று சொன்னான்.
பொருள் : வடிமலர்த் தாரினாய்! - தெரிந்தெடுத்த மலர் மாலையாய்!; எம் ஆணை வேந்து அடிநிழல் தருக என்று அருளிச் செய்தான் - எமக்குப் பணியிடும் வேந்தன் தன் அடிநிழலிலே கொண்டு வருக என்று அருள் செய்தான் ; நீ வருக என - நீ வந்தருள்க என்று ஏவலர் கூற ; வானின் உச்சி இடி உரும் ஏற்றின் சீறி - வான்மீதிருந்து இடிக்கும் இடியேற்றைப்போல முழங்கி ; இருநிலம் சுடுதற்கு ஒத்த கடிமதில் மூன்றும் எய்த கடவுளின் - பெருநிலத்தைப் பறந்து திரிந்து சுடுதற்குப் பொருந்தின காவலுறு மும்மதில்களையும் வீழ்த்திய சிவபெருமானைப் போல ; கனன்று சொன்னான் - வெகுண்டுரைத்தான்.
விளக்கம் : வடிமலர்த்தாரினாய் எனவும் வருக எனவும் கூறியவற்றை நச்சினார்க்கினியர்தம் பிற்கூற்றுக்கு அரணாக்கக், கட்டவந்தவ ரன்மை உணர்க என்றார். (237)
1088. வாளிழுக் குற்ற கண்ணாள்
வருமுலை நயந்து வேந்தன்
கோளிழுக் குற்ற பின்றைக்
வருகென வானி னுச்சி
னாளிழுக் குற்று வீழ்வ
தின்றுகொ னந்த திண்டேர்
தோளிழுக் குற்ற மொய்ம்ப
பண்ணெனச் சொல்லி னானே.
பொருள் : வாள் இழுக்கு உற்ற கண்ணாள் வருமுலை நயந்து - வாளை வென்ற கண்ணாள் விசயையின் இன்பத்தை விரும்பி ; வேந்தன் கோள் இழுக்கு உற்ற பின்றை - சச்சந்த மன்னன் தன் கொள்கையிற் பிழைத்த பிறகு; கோத்தொழில் நடாத்துகின்றான் - அரசுரிமை எய்தி ஆள்கின்ற கட்டியங்காரனின் ; நாள் இழுக்குற்று வீழ்வது இன்றுகொல் - வாழ்நாள் வழுவி வீழ்வது இன்றுபோலும் ; நந்த! தோள் இழுக்குற்ற மொய்ம்ப! - நந்தட்டனே! பிறர் தோள்கள் பின்னுறும் வலிமையனே!; திண்தேர் பண் எனச் சொல்லினான் - திண்ணிய தேரைப் புனைக என்றுரைத்தான்.
விளக்கம் : தோள் இழுக்குற்ற என்பதற்குக், கட்டியங்காரனின் தோள்கள் இழுக்குற்றன என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். மற்றும் அவர், வாளிழுக்குற்ற கண்ணாள் அனங்கமாலை எனக் கொண்டு அனங்கமாலையையும் விரும்பி என்னையொழியத்தர்னே அரசன் தொழிலை நடத்தி வருகின்றான். என்று கட்டியங்காரன் சீவகனைக் கூறியதாகவும் உரைப்பர். எனினும், மேற்கூறிய பொருளையும் ஒப்புவர் (238)
1089. வேந்தொடு மாறு கோடல்
விளிகுற்றார் தொழில தாகுங்
காய்ந்திடு வெகுளி நீக்கிக்
கைகட்டி யிவனை யுய்த்தா
லாய்ந்தடு மழற்சி நீங்கு
மதுபொரு ளென்று நல்ல
சாந்துடை மார்பன் றாதை
தன்மனத் திழைக்கின் றானே.
பொருள் : வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழிலது ஆகும் - அரசனொடு மாறுபடுதல் கெடுதலடைந்தார் தொழிலாகும், (ஆகையால்) ; காய்ந்திடு வெகுளி இவனை நீக்கிக் கைகட்டி உய்த்தால் - காயும் வெகுளியை இவனிடமிருந்து நீக்கிக் கையைப் போர்த்தொழில் செய்யாதவாறு கட்டி இவர்களுடன் போகவிட்டால்; ஆய்ந்து அடும் அழற்சி நீங்கும் - இவன் செய்தவற்றை ஆராய்ந்து, இவனை வருத்தும் வெகுளியை அரசன் நீங்குவான் ; அது பொருள் என்று - அதுவே செய்யத் தக்கது என்று ; நல்ல சாந்து உடை மார்பன் தாதை - நல்ல சந்தனம் அணிந்த மார்பனுக்குத் தந்தை; தன் மனத்து இழைக்கின்றான் - (சீவகன் போர்க்கோலத்தையும் நந்தட்டன் தேர்கொண்டுவரச் சென்றதையும் கண்டு) தன் உள்ளத்தே நினைக்கின்றான்.
விளக்கம் : கைகட்டி என்பதற்கு கையைத் தொடராற் பிணித்து என்று பொருள் கொள்ளலாகாது என்றும், தடைசெய்து என்றே பொருள் கொள்ளவேண்டும் என்றும் நச்சினார்க்கினியர் கருதுகிறார். அதற்கேற்பவே முன்னர்ப் பலவிடங்களிலும் (சீவக. 1079, 1084, 1087) தம் கருத்துக்கு அரண் செய்து வந்துளார்.
ஈண்டு அவர் கூறும் விளக்கம் :
கைகட்டுதலைப், பாம்பை வாயைக் கட்டிற்று என்றாற்போலக் கொள்க. துறவின் கண்ணே சீவகன் அறங்கேட்ட பின்னர், தொல்லையெம் பிறவியும் தொகுத்த பாவமும் - வல்லையே பணிமினம் அடிகள் என்று (சீவக. 2849) சாரணரைக் கேட்க, அவரும் பாவங் கூறுகின்றவர், தாமரைத் தடமுறை வீர்க்கிவை தடங்கள் அல்லவே வடமுலை யெனநடாய் வருடிப் பாலமு - துடனுறீஇ ஓம்பினார் (சீவக. 2863) என்று, முலைமேலே வளர்த்தார்கள் என்று கூறிப், பவணமா தேவன் தன் மகன் அசோதரனை நோக்கிக் கூறுகின்றானாகத் தாம் கூறுகின்ற காலத்தும், கிளைப்பிரி வருஞ்சிறை யிரண்டுங் கேட்டியேல் (சீவக. 2897) என்றும், பூவை கிளி தோகைபுணர் அன்னமொடு பன்மா - யாவை அவை தம் கிளையின் நீங்கியழ வாங்கிக் - காவல் செய்து வைத்தவர்கள் தம் கிளையின் நீங்கிப் - போவர் (சீவக. 2875) என்றும் காவல் செய்து வைத்தார் என்றும் கூறினமையானும், மன்னா பிரித்தாய் பிரிந்தாய் சிறை வைத்ததனாற் - பொன்னார மார்ப! சிறைப்பட்டனை போலும (சீவக. 2860) என்று தாம் கூறினமையானும் சாரணர் பாவங் கூறுகின்ற இடத்து, அன்னப் பார்ப்பைக் கட்டினார் என்று கூறாமையின், ஈண்டுக் கட்டுண்ண வேண்டும் பாவம் ஆண்டின்மை உணர்க. இச் சமயத்தார் பிறரும். சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா (நாலடி. 110) என்றதனாலும் உணர்க. அன்றியும் தசகுமார சரிதத்துள் அன்னப் பார்ப்பை நூலிட்டுக் காலைக் கட்டின பாவத்தாற் பின்பு, வெள்ளி விலங்கு காலிற் கிடந்தது என்று ஆசாரியதண்டி கூறிய வாற்றானும் உணர்க. அன்றியும், அரசன் கைக்கொண்டு வரச் சொன்னவனை, அவரும் அவன் கூறியவாறே கைக்கொண்டு போயினாரென்னவே வேண்டும் ஆதலானும் அவர்கள் அவனை, வடிமலர்த் தாரினாய் நீ வருக (சீவக. 1087) எனப் புகழ்ந்து இரந்து கொண்டமையானும், சிங்க வேறெள்ளிச் சூழ்ந்த சிறு நரிக் குழாத்திற் சூழ்ந்தார் (சீவக. 1083) என்றும், அடுபுலி கண்ட மான்போல் ஆறல் ஆயினாரே (சீவக. 1137) என்றும், மின்னிலங் கெயிற்று வேழம் வேழத்தாற் புடைத்து (சீவக. 1154) என்னுங் கவியில், என்னையிக் கிருமி கொன்று என்றும் கூறியிருப்பதாலும், நூபுரம் திருத்திச் சேர்ந்த நுதிவிரல் நொந்த (1111) என்ற தற்குத் தோளையன்றி, விரலைக் கட்டினாரென்றும் கூறவேண்டுதலானும், ஆசிரியன் கூற்றும் குரவர் கூற்றும் மனத்தைப் போர் செய்யாமற் பிணித்தலின், இளையர் காவல் செய்து கொண்டு போனார் என்றலே தேவர்க்குக் கருத்தென்றுணர்க. ஊன்பிறங் கொளிரும் வேலான் ஓர்த்துத் தன் உவாத்திசொல்லால் - தான் புறங்கட்டப்பட்டு (சீவக. 1090) என்றும், ஈன்ற தாய்தந்தை வேண்ட இவ்விடர் உற்றதென்றால், தோன்றலுக் காண்மை குன்றா தென்றசொல் இமிழிற் பூட்டி (சீவக. 1091) என்றும், தேவர் மனத்தை இறுகப் பிணித்தமை தோன்றக் கட்டி என்றும், பூட்டி என்றும் செய்யுள் செய்தமை பறறிக் கந்தியாரும் இடையிடையே பாடியிட்ட செய்யுட்களிலும், அப்பொருள் தரக் கட்டியென்று செய்யுள் செய்தார் என்று உணர்க. அன்றியும் சிறை செய்தல் என்னும் சொற்குக் காவலிடுதலே பொருளாமென்று. தேவர் தாமே, காவல் செய்து வைத்தவர்கள் என்று கூறியவாற்றானும் கட்டலென்னும் சொற்கு மனத்தை இறுகப் பிணித்தல் என்று பொருள் கொள்க.
நச்சினார்க்கினியர் இத்துணையானுங் கூறிய கருத்துத் தேவர்க் கிருக்குமேற், புறங்கட்டுப்பாடு (சீவக. 1090) தோளிணை கழலுடையினையவர் கச்சின் விக்கலின் (1092) என்பன போன்று திறம்படக் கட்டுதல் என்ற பொருள்படச் செய்யுள் செய்யார் என்றே கொள்ளல் வேண்டும். மேலும் இந்நூலாசிரியர் சீவகன் முன்னர்த் தன் ஆசிரியனாகிய அச்சணந்திற்கு வாய் நேர்ந்தமைக்கு இணங்க ஈண்டும் சிறு நரிக் குழாத்தாற் சிங்வேறு கட்டுண்டாற்போன்று அழச்சியின்றி அடங்கினான் என அவன் சால்புடைமையைக் காட்டவே இந்நிகழ்ச்சியினைப் படைக்கின்றாராதலானும் ஓராண்டளவும் இவ்வாறு அழலாதடங்குதலே சீவகற்குப் பெருமையாதலானும் தேவர் வெளிப்படையாகக் கூறியபடி கட்டிச் சென்றார் என்பதே சிறப்பாதலும் அறிக. இக் கருத்தினை அடுத்த செய்யுளானும் உணர்க. தருமன் பாஞ்சாலியைத் துகிலுரிந்த பொழுது அறத்திற் கடங்கி வாளாவிருந்தாற் போன்றதொரு பெருஞ் சிறப்பை இதனால் ஆசிரியர் சீவகனுக்குக் கூட்டுகின்றார். (239)
1090. ஊன்பிறங் கொளிரும் வேலா
னோர்த்துத்த னுவாத்தி சொல்லாற்
றான்புறங் கட்டப் பட்டுத்
தன்சினந் தணிந்து நிற்பத்
தேன்பிறங் கலங்கன் மாலைச்
சுநந்தையுந் துணைவன் றானுங்
கோன்புறங் காப்பச் சேறல்
குணமெனக் கூறி னாரே.
பொருள் : ஊன் பிறங்கு ஒளிரும் வேலான் - ஊன் விளங்கி ஒளிசெய் வேலானாகிய சீவகன்; ஓர்த்துத் தன் உவாத்தி சொல்லால் தான் புறம் கட்டப்பட்டு - தான் ஆசிரியனுக்கு நேர்ந்த நிலையை உணர்ந்து தன்மெய் கட்டப்பட்டு ; தன் சினம் தணிந்து நிற்ப - தன் சீற்றம் ஆறி நின்றபோது; தேன் பிறங்கு அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும் - தேன் விளங்கி அசையும் மாலையணிந்த சுநந்தையும் அவள் கணவனும்; கோன்புறம் காப்பச் சேறல் குணம் எனக் கூறினார் - அரசன் காப்பச் செல்லுதல் குடிகட்குக் குணம் என்று சொல்லினர்.
விளக்கம் : முன்னர் அகப்பொருளே நிகழ்த்தினவன் பகைவரைக் கண்டு புறப்பொருள் நிகழ்த்தக் கருதியதனை ஆசிரியன் கூற்று விலக்கிற்றென்பது தோன்ற புறம் கட்டப்பட்டு என்றார். அச் சொல் அரிய தொன்றனை விளக்கிற்று. இங்கு நச்சினார்க்கினியர், புறம் கட்டப்பட்டு என்பதற்கு வீரம் பிணிப்புண்ணப்பட்டு என்று பொருள் கூறுகின்றார். (240)
1091. ஈன்றதாய் தந்தை வேண்ட
விவ்விட ருற்ற தென்றாற்
றோன்லுக் காண்மை குன்றா
தென்றசொல் லிமிழிற் பூட்டி
மூன்றனைத் துலக மெல்லா
முட்டினு முருக்கு மாற்றல்
வான்றரு மாரி வண்கை
மதவலி பிணிக்கப் பட்டான்.
பொருள் : ஈன்ற தாய் தந்தை ஏவ இவ்இடர் உற்றது என்றால் - பெற்ற அன்னையும் தந்தையும் ஏவியதால் இத் துனபம் நேர்ந்தது என்றது உலகம் கூறின் ; தோன்றலுக்கு ஆண்மை குன்றாது - நினக்கு வீரம் மாசுறாது ; என்ற சொல் இமிழின் பூட்டி - என்று பெற்றோர் கூறிய சொல்லாலே கயிறுபோலக் கட்டப்பட்டு; மூன்று உலகனைத்தும் எல்லாம் முட்டினும் - மூன்றாகிய உலகம் அனைத்தும் அங்குள்ள எல்லாமும் தாக்கினும் ; முருக்கும் ஆற்றல் - அவற்றையெல்லாம் கெடுக்கும் ஆற்றலையுடைய; வான்தரு மாரி வண்கை மதவலி - கற்பகத் தருவையும் மாரியையும் நிகர்க்கும் வண்கையினையும் உடைய பெருவலி படைத்த சீவகன் ; பிணிக்கப்பட்டான் - கட்டப் பட்டான்.
விளக்கம் : இன் : உவமப் பொரு. இங்கு, அச் சொல் கயிற்றாற் பிணித்தாற் போல மனத்தைப் பிணித்தது. ஈண்டு, இவர் கட்டிற்றில ரெனவே இளையரான் (ஏவலரால்) மேற்கட்டலாகாமையும் உணர்க என்று உணர்க என்பர் நச்சினார்க்கினியர். (241)
வேறு
1092. குழலுடைச் சிகழிகைக் குமரன் றோளிணை
கழலுடை யிளையவர் கச்சின் வீக்கலி
னழலுடைக் கடவுளை யரவு சேர்ந்தென
விழவுடை முதுநகர் விலாவிக் கின்றதே.
பொருள் : குழலுடைச் சிகழிகைக் குமரன் தோளிணை - குழற்சியாகிய முடியினையுடைய சீவகன் தோளிணைகளை ; அழல் உடை கடவுளை அரவு சேர்ந்தென - ஞாயிற்றைப் பாம்பு சேர்ந்தாற்போல ; கழல் உடை இளையவர் கச்சின் வீக்கலின் - கழலணிந்த ஏவலர் கச்சினாற் கட்டியதால் ; விழவுடை முதுநகர் விலாவிக்கின்றது - திருவிழா மலிந்த பழம்பதி அழாநின்றது.
விளக்கம் : இங்கும் நசசினார்க்கினியர், வீக்கலின் என்பதிலுள்ள இன்: உவமப்பொரு என்றும் பாம்பு ஞாயிற்றை ஒளி குறைய மறைத்தாற்போல இவரும் இவன் ஒளி குறையுமாறு சிறையாகக் கொண்டாரென்க. மனத்தை இறுகப் பிணிக்கவே தோளைப் போர்த்தொழிலை விலக்கிற்றாம் என்றும் விளக்கங் கூறுவர். மற்றும் அவர், குமரன் தோளிணைகளைக் குரவர் அங்ஙனங் கச்சிட்டுக் கட்டினாற்போலப் போர்த்தொழில் செய்யாதபடி விலக்கினார்களாக, வந்த இளையவர் ஞாயிற்றை அரவம் சேர்ந்தென்னச் சேர்தலின் என்று பொருள் கூறுவர். (242)
வேறு
1093. தோளார் முத்துந் தொன்முலைக் கோட்டுத் துயன்முத்தும்
வாளா ருண்கண் வந்திழி முத்தும் மிவைசிந்தக்
காளாய் நம்பி சீவக சாமி யெனநற்றாய்
மீளாத் துன்ப நீள்கடன் மின்னின் மிசைவீழ்ந்தாள்.
பொருள் : தோள் ஆர் முத்தும் - தோளில் அணிந்த முத்துக்களும்; தொல்முலைக் கோட்டுத் துயல் முத்தும் - முதிய முலைச் சிகரத்திலே அசையும் வடத்திலுள்ள முத்துக்களும் ; வாள்ஆர் உண்கண் வந்து இழிமுத்தும் - வாளனைய மையுண்ட கண்களிலிருந்து வந்து சிந்தும் கண்ணீராகிய முத்துக்களும்; இவை சிந்த - (ஆகிய) இவை சிந்தும்படி ; காளாய்! நம்பி! சீவகசாமி ! என - காளையே ! நம்பியே ! சீவகசாமியே ! என்று கதறி; மீளா துன்ப நீள்கடல் மிசை - மீளமடியாத துன்பமாகிய பெருங்கடலிலே; மின்னின் - மின்போல; வீழ்ந்தாள் - விழுந்தனள்.
விளக்கம் : மகப்பெற்று முதிர்ந்தாளாதலின் தொன்முலை என்றார். தொன்மையை முத்துக்களுக்குக் கூட்டுக என்பர் நச்சினார்க்கினியர். மற்றும், மீளா என்பதற்கு மீண்டு என்று பொருள் கொண்டு காரியத்தின் மேற்சென்ற கருத்து மீண்டும் என்றும், துன்பமாகிய கடல் - அழுகின்ற மக்கட் டொகுதி என்றும் உரைப்பர். (243)
1094. பாலா ராவிப் பைந்துகி லேந்திப் படநாகம்
போலா மல்குற் பொற்றொடி பூங்கட் குணமாலை
யேலா தேலா தெம்பெரு மானுக் கிஃதென்னா
நூலார் கோதை நுங்கெரி வாய்ப்பட் டதுவொத்தாள்.
பொருள் : பால்ஆர் ஆவிப் பைந்துகில் ஏந்தி - பாலாவி போன்ற புத்தாடையை ஏந்தி ; படநாகம் போல் ஆம் அல்குல் - நாகத்தின் படம் போன்றமைந்த அல்குலையும் ; பொன்தொடி - பொன் வளையலையும்; பூகண் குணமாலை - அழகிய கண்களையும் உடைய குணமாலை ; எம்பெருமானுக்கு இஃது ஏலாது ஏலாது என்னா - எம் உயிரைக் காத்த நுமக்கு அதனால் இத் தீங்கு வருதல் தகாது தகாது என்று புலம்பி ; நூல் ஆர் கோதை நுங்கு எரிவாய்ப்பட்டது ஒத்தாள் - நூலிற் பொருந்திய மலர் மாலை விழுங்கும் தீயிலே வீழ்ந்தது போன்றாள்.
விளக்கம் : பாலாவி - பாலில் எழுந்த புகை : பானீர் நெடுங்கடற் பனிநாளெழுந்த - மேனீ ராவியின் மெல்லி தாகிய - கழுமடிக் கலிங்கம் (பெருங்கதை. 2.7 : 154-6) என்றார் பிறரும். (244)
வேறு
1095. எரிதவழ் குன்றத் துச்சி யிரும்பொறிக் கலாப மஞ்ஞை
யிரிவன போன்று மாடத் தில்லுறை தெய்வ மன்னார்
பரிவுறு மனத்தி னோடிப் பட்டதை யுணர்ந்து பொற்றா
ரரியுறழ் மொய்ம்ப வோவென் றாகுலப் பூசல் செய்தார்.
பொருள் : எரிதவழ் குன்றதது உச்சி இருஞ்சிறைக் கலாப மஞ்ஞை இரிவன போன்று - நெருப்புப் பரவிய மலையின் உச்சியிலே பெரும் புள்ளிகளையுடைய கலவங்கொண்ட மயில்கள் கெட்டோடுவன போல ; இல்உறை தெய்வம் அன்னார் - வீட்டுத் தெய்வம் போன்ற மகளிர் ; பரிவுறு மனத்தின் மாடத்து ஓடி - வருத்தம் உற்ற மனத்துடன் மாடத்திற்கு ஓடி ; பட்டதை உணர்ந்து - நிகழ்ந்ததை அறிந்து ; பொன்தார் அரி உறழ் மொய்ம்ப ! ஓ! என்று - பொன்மாலை அணிந்த சிங்கம் போன்ற வலிமிகு தோளானே! ஓ! என்று; ஆகுலப் பூசல் செய்தார் - வருத்தத்தையுடைய ஆரவாரத்தை யுண்டாக்கினர்.
விளக்கம் : இரும்பொறி - பெரிய புள்ளிகள். கலாபம் - தோகை. மஞ்ஞை - மயில். இரிவன - கெட்டோடுவன. இல்லுறை தெய்வம் - இல்லங்களிலே உறைகின்ற தெய்வம். அரி - சிங்கம் உறழ் : உவமவுருபு. ஆகுலப்பூசல் - துன்ப ஆரவாரம். (245 )
1096. கங்கையின் சுழியிற் பட்ட
காமரு பிணையின் மாழ்கி
யங்கவர்க் குற்ற துள்ளி
யவலநீ ரழுந்து கின்ற
குங்குமக் கொடியோ டேந்திக்
கோலம்வீற் றிருந்த கொம்மைப்
பொங்கிள முலையி னார்க்குப்
புலவல னிதனைச் சொன்னான்.
பொருள் : கங்கையின் சுழியில் பட்ட காமரு பிணையின் மாழ்கி - கங்கை நீர்க் சுழியிலே அகப்பட்ட அழகிய பெண்மான்களைப்போல வருந்தி; அங்கு அவர்க்கு உற்றது உள்ளி - அம்மாடத்திலே சுநந்தை முதலாயினோர்க்கு நேர்ந்த துயரத்தை எண்ணி ; அவலநீர் அழுந்துகின்ற - கவலை நீரிலே அழுந்திய; குங்குமக் கொடியோடு ஏந்தி - குங்குமத்தையும் தொய்யிற் கொடியையும் ஏந்தி ; கோலம் வீற்றிருந்த - அழகுத் தெய்வம் வீற்றிருந்த ; கொம்மை பொங்கு இளமுலையினார்க்கு - பருத்த இளமுலையாராகிய புறமகளிர்க்கு ; புரவலன் இதனைச் சொன்னான் - சீவகன் இதனைக் கூறினான்.
விளக்கம் : வந்த இளையரைக் கொல்லாது விடுதலிற் புரவலன் என்றார். கங்கை நீர்ச்சுழி - துன்பத்திற்குவமை. காமருபிணை - விரும்புதற்குக் காரணமான பெண்மான். அவலநீர் என்புழி நீர் கடல் என்னும் பொருட்டு. கோலம் - அழகுத் தெய்வம். கொம்மை - பெருமை. புரவலன் - இகழ்ச்சியுமாம். (246)
1097. கட்டுயி லனந்தர் போலக் கதிகளுட் டோன்று மாறும்
விட்டுயிர் போகு மாறும் வீடுபெற் றுயரு மாறு
முட்பட வுணர்ந்த யானே யுள்குழைந் துருகல் செல்லே
னெட்பக வனைத்து மார்வ மேதமே யிரங்கல் வேண்டா.
பொருள் : கண்துயில் அனந்தர் போலக் கதிகளுள் தோன்றும்ஆறும் - கண்ணுறக்கமும் விழிப்பும் போலப் பல பிறவிகளினும் பிறக்கும்படியும்; விட்டு உயிர்போகும் ஆறும் - உடலைவிட்டு உயிர் போகும்படியும் ; வீடுபெற்று உயரும் ஆறும் - வீடடைந்து மேம்படும்படியும்; உள்பட உணர்ந்த யானே - மனம் பொருந்த அறிந்த யானே; உள் குழைந்து உருகல் செல்லேன் - மனங்குழைந்து உருகலிற் போகேன் ; ஆர்வம் எள்பகவு அனைத்தும் ஏகமே - ஆசை எள்ளின் பிளவவ்வளவே எனினும் துன்பமே ; இரங்கல் வேண்டா - (எனவே) வருந்தல் வேண்டா.
விளக்கம் : கண்துயில் அனந்தர்போல விட்டு உயிர் போகுமாறும் என மாறிக் கண்துயிலுதற்குக் காரணமான உறக்கம்போன்று உயிர் இவ்வுடலை விட்டுப் போம்படியும் அவ்வுயிர் மீண்டு விழித்தல்போன்று பிறக்கும்படியும் என அனந்தர்போல என்றமையாட்ல விழிப்புப்போல என வருவித்துப் பொருள் கூறலே நன்று. இதே நச்சினார்க்கினியர் கருத்து. அனந்தர் - உறக்கம். இதனால் இன்ப துன்பமிரண்டினையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் சீவகன் மனநிலையினை ஆசிரியர் உணர்த்துகின்றார். மெய்த்திருப்பத மேவென்ற போதினும், இத்திருத்துறந்தேகென்ற போதினும், சித்திரத்தி னலர்ந்தசெந் தாமரை, ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள், எனக் கம்பநாடரும் இராமன்பால் இப்பெருமையைக் காட்டுதல் உணர்க.
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி.
விழிப்பது போலும் பிறப்பு (குறள் - 339).
என்னும் திருக்குறளை இதனோடு நினைக. (247)
1098. நன்மணி யிழந்த நாகர்
நல்லிளம் படியர் போல
வின்மணி யிழந்த சாம்பி
யிருநில மிவர்க ளெய்த
மின்னணி மதியங் கோள்வாய்
விசும்பிடை நடப்ப தேபோற்
கன்மணி யுமிழும் பூணான்
கடைபல கடந்து சென்றான்.
பொருள் : கல்மணி உமிழும் பூணான் - (இங்ஙனம் அறிவுரை கூறியபின்) கல்லிற் பிறந்த மணிகளின் ஒளியுமிழும் அணிகலனுடையான் ; நல்மணி இழந்த நாகர் நல்இளம்படியர் போல - அழகிய மாணிக்கத்தை இழந்த அழகிய நாகரிள மகளிரைப் போல ; இவர்கள் இல்மணி யிழந்து சாம்பி இருநிலம் எய்த - உறவு மகளிர் சீவகனையிழந்து வருந்தி நிலத்திடை மயங்கி வீழ ; மின் அணி மதியம் கோள்வாய் விசும்பிடை நடப்பதே போல்-ஒளி யணிந்த திங்கள் பாம்பாகிய கோளாற் பற்றப்பட்டு வானிடை செல்வதே போல் ; கடைபல கடந்து சென்றான் - தன் மனையின் பல வாயில்களையும் கடந்து சென்றான்.
விளக்கம் : கோள் - பிறகோள்களுமாம் ; பரிவேடிப்புமாம். வீரர்களாற் கட்டுண்டு செல்வதாற் பாம்புபற்றிய திங்களும், வீரர்கள் சூழ நடுவே செல்வதாற் கோள்கள் சூழ்ந்த திங்களும் பரிவேடிப்புடைய திங்களும் உவமை. இளம் பிடியர் என்பதூஉம் பாடம். நச்சினார்க்கினியர் உறவு மகளிர் இருநிலம் எய்தக் கண்டு அறிவுரை கூறியதாக இரு செய்யுள்களையும் தொடராக்கி மாட்டேறு செய்வர். (248)
வேறு
1099. வெந்தனம் மனம்மென வெள்ளைநோக்கின் முள்ளெயிற்
றந்துவர்ப் பவளவா யம்மழலை யின்சொலார்
பந்துபாவை பைங்கழங்கு பைம்பொன்முற்றில் சிற்றிலுண்
ணொந்துவைத்து நூபுரம்மொ லிப்பவோடி நோக்கினார்.
பொருள் : வெள்ளை நோக்கின் முள் எயிற்று அம் துவர் பவளவாய் அம் மழலை இன்சொலார் - வஞ்சம் இல்லாத நோக்கினையும் கூறிய பற்களையும் சிவந்த பவள வாயையும் மழலையான இனிய மொழியையும் உடைய பேதைப் பருவ மகளிர்; மனம் வெந்தன என - இம் மகளிரின் உள்ளங்கள் வருந்தின என்று கண்டார் கூறுமாறு; பந்து பாவை பைங்கழங்கு பைம்பொன் முற்றில் - பந்தும் பாவையும் கழங்கும் சிறு சுளகுமாகியவற்றை; நொந்து சிற்றிலுள் வைத்து - வருந்தித் தாம் கட்டிய சிற்றிலில் வைத்து விட்டு; நூபுரம் ஒலிப்ப ஓடி நோக்கினார் - நூபுரம் புலம்ப ஓடிவந்து பார்த்தனர்.
விளக்கம் : வெந்தனம் மனம்மென மகரங்கள் சந்தம் நோக்கி விரிந்தன. வெள்ளை நோக்கு : உள்ளொன்றும் கொள்ளாத நோக்கு
(249)
1100. மல்லிகை மலிந்தமாலை சோரவார்ந்த குண்டலம்
வில்விலங்க மின்னுக்கோட்ட வீணைவிட்டு வெய்துரா
யொல்லெனச் சிலம்பரற்ற வீதிமல்க வோடினார்
சில்சுணங் கிளமுலைச் செழும்மலர்த் தடங்கணார்.
பொருள் : சில் சுணங்கு இளமுலைச் செழுமலர்த் தடங்கணார் - சில தேமல்கள் பரந்த இளமுலையையும் செழுமலரனைய பெருங்கண்களையும் உடைய பெதும்பைப் பருவ மகளிர்; மல்லிகை மலிந்த மாலை சோர - மல்லிகை மலர்நிறைந்த மாலைகள் நழுவ; ஆர்ந்த குண்டலம் வில்விலங்க - பொருந்திய குண்டலம் ஒளி வீச ; மின்னுக் கோட் வீணை விட்டு - ஒளி பொருந்திய கோடு என்னும் உறுப்பினையுடைய வீணையை விட்டு ; வெய்து உராய் - விரைந்து பரவி ; ஒல் எனக் சிலம்பு அரற்ற - ஒல்லென்னும் ஒலியுடன் சிலம்புகள் ஒலிக்க ; வீதி மல்க ஓடினார் - தெரு நிறைய ஓடிவந்தனர்.
விளக்கம் : கோட்ட - கோட்டையுடைய; கோடு - தண்டு. வில் - ஒளி. சில்சுணங்கு - சிலவாகிய தேமல். (250)
1101. நெய்த்தலைக் கருங்குழ னிழன்றெருத் தலைத்தர
முத்தலைத் திளம்முலை முகஞ்சிவந் தலமரக்
கைத்தலங் கடுத்தடித்த பந்துநீக்கி வந்தவண்
மைத்தலை நெடுந்தடங்கண் மங்கையர் மயங்கினார்.
பொருள் : மைத்தலை நெடுந்தடம் கண் மங்கையர் - மை தீட்டிய நீண்ட பெரிய கண்களையுடைய மங்கைப் பருவத்தார்; நெய்த்தலைக் கருங்குழல் நிழன்று எருத்து அலைத்தர - புழுகு பூசிய கரிய குழல் பிடரிலே ஒளிவீசி அலைய ; இளமுலை முகம் சிவந்து முத்து அலைத்து அலம்வர - இளமுலை முகம் சிவக்க முத்து வடம் அலைத்து அசைய; கைத்தலம் கடுத்து அடித்த பந்து நீக்கி வந்து - கைகள் கடுக்க விரைந்தடித்த பந்தைவிட்டு வந்து; அவண் மயங்கினார் - சீவகன் வரும் நெற்றியிலே மயங்கி நின்றனர்.
விளக்கம் : சிவந்து - சிவக்க, கடுத்து - கடுக்க ; எச்சத்திரிபுகள். நெய் - புழுகு. குழல் - கூந்தல். எருத்து - பிடர். முத்தலைத்தலான் என்க. கடுத்து - கடுப்ப. அவண் - அவ்விடத்து. (251)
1102. கோதைகொண்ட பூஞ்சிகைக் கொம்மைகொண்ட வெம்முலை
மாதுகொண்ட சாயலம் மடந்தையர் மனங்கசிந்
தோதமுத் துகுப்பபோ லுண்கண்வெம் பனியுகுத்
தியாதுசெய்க மையவென் றன்புமிக் கரற்றினார்.
பொருள் : கோதை கொண்ட பூஞ்சிகை - மாலையணிந்த கூந்தலினையும் ; கொம்மை கொண்ட வெம்முலை - பருத்த விருப்பூட்டும் முலைகளையும் ; மாது கொண்ட சாயலின் - காதல் தோன்றும் மென்மையினையும் உடைய; மடந்தையர் - மடந்தைப் பருவ மகளிர் ; மனம் கசிந்து - உள்ளம் உருகி ; ஓதம் முத்து உகுப்பபோல் உண்கண் வெம்பனி உகுத்து - கடல் முத்துக்களைச் சிந்துதல் போல மையிண்ட கண்களினின்றும் வெதும்பிய பனித் துளிகளைச் சிந்தி ; யாது செய்கம் ஐய! என்று அன்பு மிக்கு அரற்றினார் - யாங்கள் யாது செய்வோம்? ஐயனே! என்று அன்பின் மிகுதியால் அழுதனர்.
விளக்கம் : பூஞ்சிகை - மயிர்முடி. கொம்மை - பெருமை. மாது - காதல். ஓதம் - கடல்; இது கண்ணுக்குவமை. முத்து - கண்ணீர்த் துளிக்குவமை. உண்கண் - மையுண்டகண். செய்கம் : தன்மைப் பன்மை. (252)
1103. செம்பொனோலை வீழவுஞ் செய்கலங்கள் சிந்தவு
மம்பொன்மாலை யோடசைந் தவிழ்ந்துகூந்தல் சோரவு
நம்பனுற்ற தென்னெனா நாடகம் மடந்தையர்
வெம்பிவீதி யோடினார் மின்னினன்ன நுண்மையார்.
பொருள் : மின்னின் அன்ன நுண்மையார் நாடக மடந்தையர் - மின் போன்ற நுண்ணியரான நாடக மடந்தையர்; செம்பொன் ஓலை வீழவும் - பொன் ஓலை (காதிலிருந்து) வீழவும்; செய்கலன்கள் சிந்தவும் - அணிகலன்கள் சிதறவும்; அம் பொன் மாலையோடு அசைந்து அவிழ்ந்து கூந்தல் சோரவும் - அழகிய பொன்னரி மாலையுடன் அவிழ்ந்து அசைந்து கூந்தலில் சோர்ந்து போகவும் ; நம்பன் உற்றது என் எனா வெம்பி - சீவகன் உற்ற துன்பம் என்னோ என்று வருந்தி ; வீதி ஓடினார் - தெருவிலே ஓடிவந்தனர்.
விளக்கம் : நம்பன் : சீவகன். நம்பு - நசை. பிறரால் விரும்பப்படுபவன் என்பது பொருள். நம்பும் மேவும் நசையாகும்மே என்பது தொல்காப்பியம் (உரி - 33). நாடகம் மடந்தையர் - விறலியர். மின்னினன்ன - மின்னலை ஒத்த. நாடகம் மடந்தையர் என்புழி மகரவொற்று வண்ணம் கருதிக் கெடாது நின்றது. (253)
1104. பூவலர்ந்த தாரினான் பொற்புவாடு மாயிடிற்
போவுடம்பு வாழுயிர் பொன்றுநீயு மின்றெனா
வீகலந்த மஞ்ஞைபோல் வேனெடுங்க ணீர்மல்க
வாகுலத் தரிவைய ரவ்வயி றதுக்கினார்.
பொருள் : வீகலந்த மஞ்ஞை போல் - கெடுதியுற்ற மயில் போல ; ஆகுலத்து அரிவையர் - வருத்தமுற்ற அரிவைப் பருவ மகளிர் ; பூ அலர்ந்த தாரினான் - மலர் மலர்ந்த மாலையான்; பொற்பு வாடும் ஆயிடின் - அழகு கெடும் எனின்; உடம்புவாழ் உயிர் ! போ - உடம்பில் வாழும் உயிரே! நீ போ ; நீயும் இன்று பொன்று - (உடம்பே!) நீயும் இப்பொழுது அழிவாயாக; எனா - என்றுரைத்து ; வேல் நெடுங்கண் நீர் மல்க - வேலனைய நெடுங்கண்கள் நீரைச் சொரிய; அவ் வயிறு அதுக்கினார் - அழகிய வயிற்றிலே அடித்துக்கொண்டனர்.
விளக்கம் : பொற்பு - அழகு. உடம்பு உயிர் என்னுமிரண்டும் விளி. உடம்பே நீ போ ; உயிரே நீயும் பொன்று என மாறுக. பொன்றுதல் - இறத்தல். வீ - துன்பம். ஆகுலம் - துன்பம். அரிவை - ஈண்டுப் பருவப்பெயர். அ வயிறு என்புழி. அ - அழகு என்னும்பொருட்டு. (254)
1105. தேன்மலிந்த கோதைமாலை செய்கலம் முகுத்துராய்க்
கான்மலிந்த காமவல்லி யென்னதன்ன ராயரோ
பான்மலிந்த வெம்முலைப் பைந்துகி லரிவையர்
நூன்மலிந்த நுண்ணுசுப்பு நோவவந்து நோக்கினார்.
பொருள் : பால் மலிந்த வெம்முலைப் பைந்துகில் அரிவையர் - பால் நிறைந்த வெவ்விய முலைகளையும் பைந்துகிலையும் உடைய அரிவைப் பருவ மகளிர்; தேன் மலிந்த கோதை மாலை செய்கலம் உகுத்து உராய் - தேன் நிறைந்த மலர்மாலை, மற்றைய மாலைகள், அணிகலன்கள் ஆகியவற்றைச் சிந்திப் பரவி; கால் மலிந்த காம வல்லி என்னது அன்னராய் - காற்று மிக்க காம வல்லி போல அசைந்து; நூல் மலிந்த நுண் நுசுப்பு நோவ வந்து நோக்கினார் - நூலைப் போன்ற மெல்லிடை வருந்த வந்து பார்த்தனர்.
விளக்கம் : கான்மலிந்த பொழுது காமவல்லி எங்ஙனம் அலமரும் அங்ஙனம் அலமந்து என்பது கருத்து. அரோ : அசை. அரிவைப் பருவமகளிர் ஆகலின் மகப்பேறுடையர் என்பது தோன்ற பான்மலிந்த வெம்முலை அரிவையர் என்றார். நுசுப்பு - இடை. (255 )
1106. மாதரார்கள் கற்பினுக்கு டைந்தமா மணிக்கலைத்
தீதிலார நூற்பெய்வார் சிதர்ந்துபோகச் சிந்துவார்
போதுலா மலங்கலான்முன் போந்துபூந் தெரிவைய
ராதகா தெனக்கலங்கி யவ்வயி றதுக்கினார்.
பொருள் : பூந்தெரிவையர் மாதரார்கள் கற்பினுக்கு உடைந்த மாமணிக்கலை - அழகிய தெரிவையராகிய பெண்டிர்கள் தம் கற்பினுக்குத் தோற்ற மாமணிக் கற்களை; தீது இல்ஆரம் நூல் பெய்வார் - குற்றம் இல்லாத மாலையாக நூலிலே கோத்துக் கொண்டிருந்தவர்கள்; சிதர்ந்துபோகச் சிந்துவார் - சிதறிப் போகச் சிந்துவாராய்; போது உலாம் அலங்கலான் முன் போந்து - மலர் கலந்த மாலையான்முன் வந்து ; ஆ தகாது எனக் கலங்கி - ஆ ! இது பொருத்தமின்று என்று கலங்கி ; அவ் வயிறு அதுக்கினார் -அழகிய வயிற்றிலே அடித்துக் கொண்டனர்.
விளக்கம் : மாமணிக்கலைக் கற்பினுக்கு உடைந்த மாதரார்கள் தீதுஇல் ஆரம் நூற்பெய்வார் தெரிவையர் என மொழிகளை மாற்றி, முத்துக் கோக்கக் கற்ற கல்விக்குத் தோற்ற மாதரார்களின் கையில் உள்ள ஆரங்களை வாங்கிக் கோப்பாளாகிய தெரிவையர் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மணியாகிய கலை என்க. கல்லை என்பது கலை என நின்றது விகாரம். கற்பின் ஒளிக்கு மணியொளி நிகராகாமையின் கற்பினுக்கு உடைந்த மணிக்கல் என்றார். இனி மாமணிக்கல் என்பதற்கு வயிரமணி என்று கொண்டு திண்மையாலே தங்கற்பினுக்குத் தோற்ற மணி என்றும் கொள்ளலாம். தொவை - ஈண்டுப் பருவப் பெயர். (256)
1107. வட்டிகை மணிப்பலகை வண்ணநுண் டுகிலிகை
யிட்டிடை நுடங்கநொந் திரியலுற்ற மஞ்ஞையிற்
கட்டழ லுயிர்ப்பின்வெந்து கண்ணிதீந்து பொன்னுக
மட்டவிழ்ந்த கோதையர்கள் வந்துவாயில் பற்றினார்.
பொருள் : மட்டு அவிழ்ந்த கோதையர்கள் - தேன் சொரியும் மாலை அணிந்த மாதர்கள்; வட்டிகை மணிப்பலகை வண்ணம் நுண் துகிலிகை இட்டு - மணிகள் இழைத்த வட்டிகைப் பலகையிலே வண்ணத்தையும் நுண்ணிய எழுதுகோலையும் போகட்டுவிட்டு; நொந்து இரியல் உற்ற மஞ்ஞையின் - வருந்திக் கெடுதலுற்ற மயில்களைப் போல ; கட்டழல் உயிர்ப்பின் வெந்து கண்ணி தீந்து பொன் உக - பெருநெருப்புப் போன்ற மூச்சிலே காய்ந்து கண்ணிகள் தீயவும் பூண்கள் சிதறவும்; இடை நுடங்க வந்து வாயில் பற்றினார் - இடை நொசிய வந்து வாயிலைப் பற்றி நின்றனர்.
விளக்கம் : வட்டிகை - ஓவியம். தீந்து - தீய : எச்சத்திரிபு. இது கற்புடைமகளிர் நிலை. (257)
வேறு
1108. வினையது விளைவு காண்மி
னென்றுகை விதிர்த்து நிற்பா
ரினையனாய்த் தெளியச் சென்றா
லிடிக்குங்கொ லிவனை யென்பார்
புனைநல மழகு கல்வி
பொன்றுமா லின்றொ டென்பார்
வனைகலத் திகிரி போல
மறுகுமெம் மனங்க ளென்பார்.
பொருள் : வினையது விளைவு காண்மின் என்று கை விதிர்த்து நிற்பார் - தீவினையின் பயனைக் காணுமின் என்றுரைத்துக் கை நடுங்கி நிற்பார்; இனையனாய்த் தெளியச் சென்றால் இவனை இடிக்கும்கொல் என்பார் - இவ்வாறு வீரர் கையில் அகப்பட்டுத் தெளிவுடன் (கலக்கமின்றி) சென்றால் இவனைக் காவலன் கொல்வானோ என்பார் ; இன்றொடு புனைநலம் அழகு கல்வி பொன்றும் என்பார் - இன்றோடு புனையும் நலனும் அழகும் கல்வியும் அழியும் என்பார் ; எம் மனங்கள் வனைகலத் திகிரிபோல மறுகும் என்பார் - எம் உள்ளங்கள் எல்லாம் குயவன் பானை வனையும் சக்கரம்போலச் சுழலும் என்பார்.
விளக்கம் : விணை - ஈண்டுத் தீவினை. வினையது விளைவு என்றது ; இம்மைச் செய்தது யாமறி நல்வினை இஃது உம்மைப் பயன்கொல் என்பது படநின்றது. (258 )
1109. நோற்றிலர் மகளி ரென்பார்
நோங்கண்டீர் தோள்க ளென்பார்
கூற்றத்தைக் கொம்மை கொட்டிக்
குலத்தொடு முடியு மென்பா
ரேற்றதொன் றன்று தந்தை
செய்தவிக் கொடுமை யென்பா
ராற்றலள் சுநந்தை யென்பா
ராதகா தறனே யென்பார்.
பொருள் : மகளிர் நோற்றிலர் என்பார் - இவன் கிடைத்தும் நெடுங்காலம் நுகர்தற்கு மனைவியரிருவரும் நோற்றிலர் என்பார் ; தோள்கள் நோம்கண்டீர் என்பார் - தோள்கள் வருந்தும் என்பார்; கூற்றத்தைக் கொம்மை கொட்டிக் குலத்தொடும் முடியும் என்பார் - கூற்றுவனைக் கைதட்டியழைத்துக் குலத்தோடும் (அரசன்) முடிவான் என்பார்; தந்தை செய்த இக் கொடுமை ஏற்றது ஒன்று அன்று என்பார் - தந்தை காட்டிக் கொடுத்த இக் கொடிய செயல் தக்கது ஆகாது என்பார் ; சுநந்தை ஆற்றலள் என்பார் - (இனி) சுநந்தை இத் துயரத்தைப் பொறுக்கமாட்டாள் என்பார்; ஆ! தகாது அறனே! என்பார் - ஆ! இது தக்கதன்று! அறக்கடவுளே! என்பார்.
விளக்கம் : யாம் உளேமாகவும் எம்மாற் பயன் கொளாது இவன் இங்ஙனம் சிறைவாய்ப் போவதே என்று தோள்களும் தம்மில் நோம் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்(கு).
ஆற்றாதார் இன்னா செயல்..
என்னுந் திருக்குறளை நினைக. மூன்றனைத் துலகமெல்லாம் முட்டினும் முருக்குமாற்றல் உடையன் என்பது பற்றி இங்ஙனம் கூறினர் (259)
1110. தூக்குமின் காளை சீறிற் றுற்றிவ னுளனோ வென்பார்
காக்குமால் வைய மெல்லாங் காவல னாகி யென்பார்
பாக்கயம் பெரிது மேகா ணிதுவுமோர் பான்மை யென்பார்
நோக்கன்மி னாணுங் கண்டீர் நுதிகொ ணாகரிக னென்பார்.
பொருள் : தூக்குமின் ! - ஆராய்ந்து பாருங்கோள் ; காளை துற்றுச் சீறின் இவன் உளனோ? என்பார் - சீவகன் நெருங்கிச் சீறின் இம் மதனன் இருப்பானோ என்பார் ; காவலன் ஆகி வையம் எல்லாம் காக்கும் என்பார் - இவன் மேலும் அரசனாகி உலகம் எல்லாம் காப்பான் என்பார் ; பாக்கியமே பெரிதுகாண் இதுவும் ஓர் பான்மை என்பார் - இவனுக்கு நல்வினையே மிக்குள்ளது, எனினும், இஃது ஒரு தீவினைப் பயன் என்பார்; நுதிகொள் நாகரிகன் நாணும் - கூரிய பலகலை வல்லோன் ஆகையால் நாணுறுவான் ; நோக்கன்மின் என்பார் - (ஆகையால்) அவனை நோக்காதீர்கள் என்பார்.
விளக்கம் : பெரிதும் : உம் இசை நிறை. பெரிதுமே என்பதிலுள்ள ஏ யைப் பாக்கியமே எனப் பிரித்துக் கூட்டுக. கண்டீர் : முன்னிலையசை. (260)
1111. பூவரம் பாய கோதைப் பொன்னனார் புலவி நீக்கி
நூபுரந் திருத்திச் சேந்த நுதிவிர னொந்த வென்பார்
யாவரும் புகழு மைய னழகுகெட் டொழியு மாயிற்
கோபுர மாட மூதூர் கூற்றுண விளிக வென்பார்.
பொருள் : பூவரம்பு ஆய கோதைப் பொன்னனார் புலவி நீக்கி - மலர்களுக்கு எல்லையான மாலையை அணிந்த திருவனை யாரின் பிணக்கை நீக்கி; நூபுரம் திருத்திச் சேந்த - சிலம்பைத் திருத்திச் சிவந்த ; விரல்நுதி நொந்தது என்பார் - விரல்நுனி (கட்டப்பட்டதனால்) வருந்திற்று என்பார் ; யாவரும் புகழும் ஐயன் அழகு கெட்டு ஒழியும் ஆயின் - எல்லோராலும் புகழப்படும் சீவகனுடைய அழகு கெட்டேவிடுமெனின் ; கோபுரம் மாடம் மூதூர் கூற்று உணவிளிக என்பார் - கோபுரமும் மாடமும் இம் மூதூர் முற்றும் காலன் கொள்ள அழிக என்பார்.
விளக்கம் : விரல்கள், வீரத்திற்கும் காமத்திற்கும் கொடை முதலியவற்றிற்கும் தோற்றிய யாம், ஈண்டு இவன் வீரஞ் செய்யாமையின் வீரத்திற்கு உதவியாயிற்றிலேம் என்று நொந்தன் என்று விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். (261)
1112. கருஞ்சிலை மறவர் கொண்ட கணநிரை விடுக்க வல்ல
விருஞ்சிலை பயின்ற திண்டோட் கிதுதகா தென்றுகுன்றிற்
கருங்கட றுளுப்பிட் டாங்குக் கல்லெனக் கலங்கிக் காம
ரருங்கடி யரண மூதூ ராகுல மயங்கிற் றன்றே.
பொருள் : கருஞ்சிலை மறவர் கொண்ட கணநிரை விடுக்க வல்ல - கொடிய வில்லேந்திய வேடர் கொண்ட திரளான ஆணிரையை மீட்கும் வலிமையுள்ள ; இருஞ்சிலை பயின்ற திண்தோட்கு இது தகாது என்று - பெரிய வில் பழகிய திண்ணிய தோள்களுக்குக் (கட்டுப்படும்) இஃது ஏற்காது என்றுரைப்பதால்; கருங்கடல் குன்றில் துளுப்பிட்டாங்கு - கரிய கடல் மலையாலே கலக்குற்றாற்போல ; கல் எனக் கலங்கி - கல்லென்னும் ஒலியுடன் கலங்கி ; காமர் அருங்கடி அரணம் மூதூர் - அழகிய, அரிய காவலான அரண்களையுடைய இராசமாபுரம் ; ஆகுலம் மயங்கிற்று - துன்பக் குரலால் மயங்கியது.
விளக்கம் : நிரை மீட்ட தோள் என்றார் ஆண்டுக் கொல்லாமலே வென்றாற்போல ஈண்டும் கொல்லாமலே வெல்ல வல்லன் என்பது கருதி. (262)
1113. இங்கன மிவர்க ளேக
வெரியகம் விளைக்கப் பட்ட
வெங்கணை விடலை தாதை
வியனக ரவல மெய்தி
யங்கவ ருகுத்த கண்ணீ
ரடித்துக ளவிப்ப நோக்கிப்
பொங்கம ருழக்கும் வேலான்
புலம்புகொண் டழேற்க வென்றான்.
பொருள் : இங்கனம் இவர்கள் ஏக - இவ்வாறு இவர்கள் துயருற்றுச் செல்ல; எரியகம் விளைக்கப்பட்ட வெங்கணை விடலை தாதை - தீயில் விளைவிக்கப்பட்ட கொடிய கணை ஏந்திய சீவகன் தந்தையினுடைய; வியன் நகர் அவலம் எய்தி - பெரிய மனையிலுள்ளார் துன்பம் அடைந்து ; அங்கு அவர் உகுத்த கண்ணீர் - அவர்கள் சிந்திய கண்ணீர் ; அடித்துகள் அவிப்ப நோக்கி - செல்கின்றவரின் அடித் துகளை அவித்தலாலே, அவர்களை நோக்கி; பொங்கு அமர் உழக்கும் வேலான் - கிளர்ந்த போரைக் கலக்கும் வேலேந்திய சீவகன் ; புலம்பு கொண்டு அழேற்க என்றான் - புலம்புதல் கொண்டு அழாதீர் என்றான்.
விளக்கம் : எரியை உள்ளே விளைத்த வெங்கணை எனினும் ஆம். இவன் குணமாலை மனையினின்றும் போந்தான் ; தந்தை மனையில் உள்ளார் புலம்புவதைப் பார்த்தான். தாதையினதுவியனகர் என ஆறாம் வேற்றுமையை விரித்துக் கொள்க. (263)
1114. மின்னினான் மலையை யீர்ந்து
வேறிரு கூறு செய்வான்
றுன்னினான் றுளங்கி னல்லாற்
றுளங்கலம் மலையிற் குண்டே
யன்னதே துணிந்த நீதி
யருநவை நமனு மாற்றா
னென்னைநேர் நின்று வாழ்த
லிருநிலத் தாவ துண்டே.
பொருள் : மின்னினால் மலையை ஈர்ந்து வேறு இரு கூறு செய்வான் துன்னினான் - மின்னைக் கொண்டு மலையைப் பிளந்து வேறாக இரு பிளவு செய்தலை மேற்கொண்டவன்; துளங்கின் அல்லால் - தான் நிலைகுலைதல் அன்றி; துளங்கல் அம் மலையிற்கு உண்டே? - நிலைகுலைதல் அம் மலைக்கு உளதோ ?; துணிந்த நீதி அன்னதே - கட்டியங்காரன் துணிந்த நீதியும் அத்தகையதே; நமனும் அருநவை ஆற்றான் - எனக்குக் காலனும் துன்பியற்ற வல்லவன் அல்லன் ; இருநிலத்து என்னை நோநின்று வாழ்தல் ஆவது உண்டே? - இப் பேருலகில் எனக்கு எதிராகப் பகைத்து நின்று வாழ்வது எவருக்கும் ஆகுமோ?
விளக்கம் : என்னை : ஐ : அசைநிலை யிடைச்சொல். அருநவை நமனும் ஆற்றான் என்பதற்கு அருநவை செய்யும் நமனும் என் எதிர் நின்று வாழ்தலை ஆற்றான் எனினும் ஆம். (264)
1115. வளைகடல் வலையிற் சூழ்ந்து
மால்வரை வேலி கோலி
யுளையரி படுக்க லுற்றான்
படுப்பினும் படுக்க மற்றென்
கிளையழ வென்னை வாள்வாய்க்
கீண்டிட லுற்று நின்றான்
றளையவிழ் கண்ணி சிந்தத்
தன்றலை நிலத்த தன்றே.
பொருள் : வளைகடல் வலையின் சூழ்ந்து மால்வரை வேலி கோலி - வளைந்த கடலை வலையாகச் சூழவிட்டும் பெரிய மலையை வேலியாகக் கோலியும் ; உளை அரி படுக்கல் உற்றான் - பிடரி மயிரையுடைய சிங்கத்தைச் சிறைப்படுத்த முயன்றவன்; படுப்பினும் படுக்க - சிறைப்படுத்தினும் படுத்துக; (அவற்றானும் என்னை அகப்படுத்தல் அரிது; அதுவும் இவனால் இயலாது) கிளை அழ என்னை வாள்வாய் கீண்டிடல் உற்று நின்றான் தன் தலை - என் உறவினர் அழ என்னை வாளின் வாயாற் பிளத்தலை மேற்கொண்டு நின்றவனுடைய தலை ; தளை அவிழ் கண்ணி சிந்த நிலத்தது - (சிலநாள் செல்லின்) முறுக்கலர்ந்த கண்ணி சிதற நிலத்ததாகும்.
விளக்கம் : சிலநாள் என்பது ஓராண்டுக் காலம். நச்சினார்க்கினியர் 1113 - முதல் மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கித் தன்னை வாள்வாய்க் கீண்டிடலுற்று நின்ற கட்டியங்காரன் தலை நிலத்ததாம் என்பதனை உட்கொண்டு, அழும் உறவினரை நோக்கித் தன்னை ஒருவரும் ஒன்றுஞ் செய்ய முடியாதென்பதை விளக்கிப் புலம்புகொண்ட ழேற்க என்றான் என முடிப்பர். (265)
1116. நீரகம் பொதிந்த மேக
நீனிற நெடுநல் யானைப்
போரகத் தழலும் வாட்கைப்
பொன்னெடுங் குன்ற மன்னா
னார்கலி யாணர் மூதூ
ரழுதுபின் செல்லச் செல்வான்
சீருறு சிலம்பி நூலாற்
சிமிழ்ப்புண்ட சிங்க மொத்தான்.
பொருள் : நீரகம் பொதிந்த மேகம் நீல்நிற நெடுநல் யானை - நீரைத் தன்னிடத்தே கொண்ட முகில் போன்ற கருநிறமுடைய பெரிய களிற்றையும் போரகத்து அழலும் வாள்கை - போரிலே கனலும் வாளேந்திய கையையுமுடைய; பொன் நெடுங்குன்றம் அன்னான் - பொன்னாலான பெரிய மலையைப் போன்ற சீவகன் ; ஆர்கலி யாணர் மூதூர் அழுதுபின் செல்லச் செல்வான் - ஆரவாரத்தையும் புதுவருவாயையுமுடைய பழம்பதியிலுள்ளார் அழுதவாறே பின்வரச் செல்கின்றவன்; சீருறு சிலம்பி நூலால் சிமிழ்ப்புண்ட சிங்கம் ஒத்தான் - சிறப்புற்ற சிலம்பியின் நூலினாற் சிக்குண்ட சிங்கம் போன்றான்.
விளக்கம் : நூல், வீரர்க்குவமை என்பர் நச்சினார்க்கினியர். மேலும் புதல் மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (குறள். 274) என்றாற்போலக் கொள்க என்று உவமையுங் கூறுவர். (266)
1117. மன்னர்தம் வெகுளி வெந்தீ
மணிமுகில் காண மின்னிப்
பொன்மழை பொழியி னந்து
மன்றெனிற் புகைந்து பொங்கித்
துன்னினார் தம்மை யெல்லாஞ்
சுட்டிடு மென்று செம்பொன்
பன்னிரு கோடி யுய்த்துக்
கந்துகன் பணிந்து சொன்னான்.
பொருள் : மன்னர்தம் வெகுளி வெந்தீ - அரசருடைய வெகுளியாகிய கொடிய நெருப்பு ; மணிமுகில் காணம் மின்னி -மணியாகிய முகில் பழங்காசு என்கிற மின்னை மின்னி; பொன்மழை பொழியின் நந்தும் - பொன்னாகிய மழையைப் பொழியின் அவியும் ; அன்று எனின் புகைந்து பொங்கி - பெய்யாதெனின் அத் தீ புகைந்து பொங்கி ; துன்னினார் தம்மை யெல்லாம் சுட்டிடும் - நெருங்கினாரை யெல்லாம் சுட்டுவிடும் ; என்று - என்றெண்ணி ; கந்துகன் பன்னிரு கோடி செம்பொன் உய்த்துப் பணிந்து சொன்னான் - கந்துகன் பன்னிருகோடி செம்பொன்னைக் குவித்துத் தாழ்ந்து சிலமொழி கூறினான்.
விளக்கம் : வெகுளி வெந்தீ - சினமாகிய வெவ்விய நெருப்பு. நந்தும் - அழியும். துன்னினார் - தன்னைச் சேர்ந்தோர். தம்மை வேந்தன் ஒறுத்திடா திருத்தற்பொருட்டுப் பன்னிருகோடி உய்த்துப் பணிந்தான் என்க. (267)
1118. மன்னவ வருளிக் கேண்மோ
மடந்தையோர் கொடியை மூதூர்
நின்மதக் களிறு கொல்ல
நினக்கது வடுவென் றெண்ணி
யென்மக னதனை நீக்கி
யின்னுயி ரவளைக் காத்தா
னின்னதே குற்ற மாயிற்
குணமினி யாது வேந்தே.
பொருள் : மன்னவ! அருளிக் கேண்மோ! - அரசே! அருள் செய்து கேட்பாயாக!; மடந்தை ஓர் கொடியை - மடந்தையாகிய ஒரு கொடியை ; மூதூர் - (பெண்கொலை பிறந்தறியா) இப் பழம்பதியிலே ; நின் மதக் களிறு கொல்ல - நின் மதயானை கொன்றால் ; நினக்கு அது வடு என்று எண்ணி - நினக்கு அது பழியாமென்று நினைத்து; அதனை என் மகன் நீக்கி - அக்கொலையை என் மகன் தடுத்து ; அவளை இன் உயிர்காத்தான் - அவள் இனிய உயிரைக் காப்பாற்றினான்; வேந்தே! இன்னதே குற்றம் ஆயின் - அரசே! இப்பழி நீக்கியதே குற்றமாக முடியின் ; இனி குணம் யாது ? - இனி நன்மை யென்பதுதான் யாது ? கூறுவாயாக.
விளக்கம் : கேண்மோ என்புழி மோ முன்னிலையசை. கொடி : உவமவாகுபெயர். கொடி என்றது குணமாலையை. நின்மதக்களிறு என்றான் நினக்கு அது வடு என்றற்கு ஏதுக்காட்டற்கு. என்மகன் நினக்குச் சிறிதும் குற்றமிழைத்திலன் நின்மூதூரில் ஒரு மடந்தையை நின்மதக் களிறு கொன்றது என்றால் அது நினக்கு வசைச்சொல் என்று நினைத்தான். ஆதலாற் காத்தருள்க என்பது கருத்து.
(268)
1119. நாண்மெய்க்கொண் டீட்டப் பட்டார்
நடுக்குறு நவையை நீக்க
லாண்மக்கள் கடனென் றெண்ணி
யறிவின்மை துணிந்த குற்றம்
பூண்மெய்க்கொண் டகன்ற மார்ப
பொறுமதி யென்று பின்னு
நீண்மைக்க ணின்று வந்த
நிதியெலாந் தருவ லென்றான்.
பொருள் : நாண் மெய்க்கொண்டு ஈட்டப்பட்டார் - நாணத்தையே மெய்ப்பொருளாகக் கொண்டு சேர்க்கப்பட்ட பெண்கள் ; நடுக்குறும் நவையை நீக்கல் - அஞ்சத்தகும் குற்றத்தை நீக்குதல் ; ஆண் மக்கள் கடன் என்று எண்ணி - ஆண்மக்களின் கடமை யென்று நினைத்து ; அறிவின்மை துணிந்த குற்றம் - அறிவின்மையால் துணிந்து செய்த பிழையை ; பூண் மெய்க்கொண்டு அகன்ற மார்ப! பொறுமதி - அணிகலன் மெய்யிற் கொண்டு விரிந்த மார்பனே! பொறுத்தருள்க; என்று - என்றுரைத்து; பின்னும் - மேலும்; நீண்மைக்கண் நின்று வந்த நிதியெலாம் தருவல் என்றான் - நெடுங்காலமாக இருந்து வரும் செல்வம் யாவும் கொடுப்பேன் என்றும் கூறினான்.
விளக்கம் : ஆண்மக்கள் என்பார் ஈண்டு அரசராவார்; உயிரைக் காத்தலும் அழித்தலும் அவர் தொழிலாதலின். (269)
1120. வாழிய ரிறைவ தேற்றான்
மாநிரை பெயர்த்த காளை
பீழைதான் பொறுக்க வென்னப்
பிறங்கிண ரலங்கன் மாலை
சூழ்கதி ராரம் வீழ்நூல்
பரிந்தற நிமிர்ந்து திண்டோ
ளூழ்பிணைந் துருமிற் சீறி
யுடல்சினங் கடவச் சொன்னான்.
பொருள் : இறைவ! வாழியர் - அரசே!. வாழ்வாயாக!- தோற்றான் மாநிரை பெயர்த்த காளை பீழை பொறுக்க என்ன - அறியாமையால் பெருநிரையை மீட்ட சீவகனின் குற்றத்தைப் பொறுத்தருள்க என்று கந்துகன் வேண்ட; பிறங்கு இணர் அலங்கல் மாலை - விளங்கும் பூங்கொத்துக்களையுடைய அசையும் மாலை; வீழ்நூல் பரிந்து - அமைந்த நூல் அறுந்து; சூழ்கதிர் ஆரம் அற - சூழ்ந்த ஒளியையுடைய முத்துமாலை அற்றுப்போக; நிமிர்ந்து - நிமிர்ந்து அமர்ந்து; திண்தோள் ஊழ்பிணைந்து - திண்ணிய தோளில் கையோடு கைமாறி ஏறத் தட்டி ; உருமின் சீறி - இடியென முழங்கி ; உடல்சினம் கடவச் சொன்னான் - மாறுபடும் சீற்றம் உந்த அரசன் கூறினான்.
விளக்கம் : பீழை: பிழையின் விகாரம். மாநிரை பெயர்த்த காளை என்றான் மாநிரை பெயர்த்தது அரசனுக்குற்ற வடுவை நீக்கலும் அறமும் ஆகி நின்றதுபோல இதுவும் ஆகும் எனக் கருதிச் செய்தான் என்பது தோன்ற. நச்சினார்க்கினியர் முற்செய்யுளுடன் இதனையும் ஒரு தொடராக்கி, இன்னதே குற்றமாயின் குணமினி யாது? என்றதற்கு முகம் ஆகாமை கண்டு, மகளிர் நடுக்கத்தை நீக்கல் ஆண்மக்கள் கடனென்று தோற்றானாய்த் தான் பெயர்த்த மாநிரையென்றெண்ணி, அறிவின்மையாலே துணிந்த குற்றத்தைப் பொறுப்பாய் என்றான் ; பின்னும் செவ்வி பெறாமையின் தொன்றுதொட்டு வ்ந்த பொருள் எலாம் தருவேன்; எனக்காகப் பொறுப்பாயாக என்றான், - எனக் கொண்டு கூட்டுவர். (270)
1121. ஆய்களிற் றசனி வேக
மதன்மருப் பூசி யாகச்
சீவக னகன்ற மார்ப
மோலையாகத் திசைகள் கேட்பக்
காய்பவன் கள்வ ரென்ன
வெழுதுவித் திடுவ லின்னே
நீபரி வொழிந்து போய்நின்
னகம்புகு நினைய லென்றான்.
பொருள் : ஆய்களிற்று அசனி வேகம் அதன் மருப்பு ஊசி ஆக - அவனாற் சோர்வுற்ற களிறாகிய அசனி வேகத்தின் கொம்பு ஊசியாகவும் ; சீவகன், அகன்ற மார்பம் ஓலைஆ - சீவகனுடைய விரிந்த மார்பு ஓலையாகவும் கொண்டு ; திசைகள் கேட்ப - திசைகள் அறியுமாறு ; கள்வர் காய்பவன் என்ன - கள்வரைக் கொல்லுவேன்போல ; இன்னே எழுதுவித்திடுவல் - இப்போதே எழுதுவிப்பேன் ; நீ பரிவு ஒழிந்துபோய் - நீ வருத்தம் நீங்கிச் சென்று ; நின் அகம்புகு - நின் மனையை அடைக ; நினையல் என்றான் - இதனை நினையாதே என்றான்.
விளக்கம் : திசைகள் கேட்ப என்றான் வெள்ளிமலைக்கும் இவனால் வெல்லப்பட்ட அரசருக்கும் அறிவிப்பேன் என்னுங் கருத்துடன். கொல்லுதலை எழுதுவிப்பேன் என்றான், அசனி வேகம் என்னும் களிற்றின் கொம்பை ஊசியாகக்கொண்டு சீவகன் மார்பினை ஓலையாக வைத்து எழுதுவேன் என்றது கொல்வேன் என்பதைக் குறித்தது. (271)
1122. நஞ்சனா னுரைப்பக் கேட்டே
நாய்கனு நடுங்கி யுள்ளம்
வெஞ்சின வேழ முண்ட
விளங்கனி போன்று நீங்கி
யெஞ்சினான் போல நின்றா
னேத்தருந் தவத்தின் மிக்க
வஞ்சமில் கொள்கை யான்சொ
லமிர்தினால் வற்புற் றானே.
பொருள் : நஞ்சு அனான் உரைப்பக் கேட்டு - நஞ்சு போன்ற கட்டியங்காரன் இவ்வாறு சொல்லக் கேட்டு; நாய்கனும் நடுங்கி - கந்துகனும் அச்சுற்று ; வெஞ்சின வேழம் உண்ட விளங்கனி போன்று உள்ளம் நீங்கி - கொடிய சினமுடைய களிறு என்னும் நோயால் உண்ணப்பட்ட விளம்பழம்போல வெறுமையாக அறிவு முதலியன நீங்கி ; எஞ்சினான் போல நின்றான் - இறந்தான் போல நின்றவன் ; ஏத்த அருந் தவத்தின் மிக்க - புகழ்தற்கரிய தவத்திற் சிறந்த ; வஞ்சம்இல் கொள்கையான் - தூய முனிவனுடைய ; சொல் அமிர்தினால் வற்பு உற்றான் - சொல்லாகிய அமிர்தத்தினால் உளவலிமை பெற்றான்.
விளக்கம் : நஞ்சனான் என்றது அவன் சச்சந்தனைக் கொன்ற கொடுமை குறித்துநின்றது. வேழம் - விளங்கனியிற்படுவதோர் நோய் அப்பெயருடைய யானைக்கியன்ற அடையோடு வந்தது. எஞ்சினான் - இறந்தோன். (272)
1123. மின்னிலங் கெஃகி னானைப்
பெறுகலான் றந்தை மீண்டு
தன்னிலங் குறுக லோடுந்
தாயழு தரற்று கின்றா
ளென்னிலை யைற் கென்ன
யாவதுங் கவல வேண்டா
பொன்னலங் கொடிய னாயோர்
பொருளுரை கேளி தென்றான்.
பொருள் : மின் இலங்கு எஃகினானைப் பெறுகலான் - ஒளி விடும் வேலேந்திய சீவகனை மீட்காமல் ; தந்தை மீண்டு தன் இலம் குறுகலோடும் - தந்தை திரும்பித் தன் மனையை அடைந்தவுடன் ; தாய் அழுது அரற்றுகின்றாள் - தாய் அழுது அரற்று கின்றவளாய் ; ஐயற்கு என் நிலை ? என்ன - நம் ஐயனுக்கு நிலை ஏது ? என்ன ; பொன்நலம் கொடியனாய் !- பொன்னாலான நலமுறுங் கொடி போன்றவளே!; யாதும் கவல வேண்டா - ஏதும் கவலையடைய வேண்டா ; இது ஓர் பொருளுரை கேள் என்றான் - இந்த ஒரு பொருளுடைய மொழியைக் கேள் என்றான்.
விளக்கம் : பழைய நிலையோ சிறையோ என்றாள். தந்தை - கந்துகன். இல்லம், இலம் என விகாரமுற்றுநின்றது. தாய் : சுநந்தை. ஐயற்கு - சீவகனுக்கு. யாவதும் - ஒருசிறிதும். பொன்னலங்கொடி என்றது காமவல்லியை ; இது சுநந்தைக்குவமை. பொருளுரை - உறுதிமொழி. (273)
1124. மதுமடை திறந்து தீந்தேன்
வார்தரு கோதை நீமுன்
செதுமகப் பலவும் பெற்றுச்
சிந்தைகூர் மனத்தை யாகி
யிதுமக வழியின் வாழே
னிறப்பல்யா னென்னு மாங்கட்
கதுமெனக் கடவு டோன்றிக்
கடைமுகங் குறுக வந்தான்.
பொருள் : தீ தேன் மதுமடை திறந்து வார்தரு கோதை - இனிய வண்டினத்திற்கு மதுவின் மடைதிறந்து ஒழுங்குங் கோதை போல்வாய் !; நீ முன் செதுமகப் பலவும் பெற்றுச் சிந்தைகூர் மனத்தையாகி - நீ முன்னர் சாப்பிள்ளை பலவற்றையும் பெற்றுச் சிந்தனையுடைய மனத்தையாய்; இது மகவு அழியின் வாழேன் - இம் மகவு இறப்பின் வாழமாட்டேன் ; யான் இறப்பல் என்னும் ஆங்கண் - நான் இறந்துபடுவேன் என்ற அளவிலே ; கதுமெனக் கடவுள் தோன்றிக் கடைமுகம் குறுக வந்தான் - விரைந்து ஒரு முனிவன் தோன்றித் தலைவாயிலை நெருங்கி வந்தான்.
விளக்கம் : கோதை - விளி. செதுமகவு - சாப்பிள்ளை. சிந்தை - துன்பம். மனத்தை : முன்னிலைஒருமை. இதுமகவு - இம்மகவு. கதுமென: விரைக் குறிப்பு. கடவுள் - துறவி. கடைமுகம் - தலைவாயில். (274)
1125. கறவைகாண் கன்றின் வெஃகிக்
கண்டடி பணிந்து காமர்
நறவயா வுயிர்க்கு மாலை
நாற்றிய விடத்து ளேற்றி
யறவியாற் காறு மூன்று
மமைந்தநா லமிர்த மேந்தப்
பறவைதா துண்ட வண்ணம்
பட்டினிப பிரிவு தீர்த்தான்.
பொருள் : கறவை காண் கன்றின் - தாய்ப்பசுவைக் காணும் கன்றுபோல ; வெஃகிக் கண்டு அடி பணிந்து - விரும்பிக் கண்டு அடிகளில் வணங்கி ; காமர் நறவு அயா உயிர்க்கும் மாலை நாற்றிய இடத்துள் ஏற்றி - அழகிய, தேனைச் சிந்துகின்ற பூமாலை தூக்கிய இடத்தில் அமர்த்தி; அறவியாற்கு ஆறும் மூன்றும் அமைந்த நால் அமிர்தம் ஏந்த - அறத் துறையாளற்கு ஒன்பது முறையும் அமைந்த நான்குவகை உணவுகளைப் படைக்க; பறவை தாது உண்ட வண்ணம் பட்டினிப் பரிவு தீர்த்தான் - வண்டு மகரந்தப் பொடியை உண்பதுபோலப் பசியின் வருத்தத்தைப் போக்கினான்.
விளக்கம் : ஒன்பது முறை : எதிர்கொளல் இடம் நனிகாட்டல் கால் கழீஇ - அதிர்பட அருச்சனை அடியின்வீழ்தரல் - மதுரநன் மொழியொடு மனம்மெய் தூயராய் - உதிர்கநம் வினையென உண்டி ஏந்தினார் (சீவக. 2828. நச்சி. மேற்) இது நவபுண்ணியக் கிரமம் எனவும்படும். நால் அமிர்து : உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன. கறவை - கறக்கும் ஆன். கறவைகாண் கன்று ஈண்டுமுகத்தான் அமர்ந்து நோக்கியதற்கு உவமை. மாலை நாற்றியவிடம் என்றது ஒப்பனை செய்யப்பட்ட மணையில் என்றவாறு. அறவியான் - துறவற மேற்கொண்டோன். பறவை - ஈண்டு அறுகாற் சிறுபறவை. (275 )
1126. ஆய்மணிப் பவளத் திண்ணை
யரும்பெறற் கரகத் தங்கட்
டூய்மணி வாச நன்னீர்
துளங்குபொற் கலத்து ளேற்று
வேய்மணித் தோளி நிற்ப
விழுத்தவ னியம முற்றி
வாய்மணி முறுவ றோன்ற
வந்தனை விதியிற் செய்தேன்.
பொருள் : ஆய்மணிப் பவளத் திண்ணை - ஆராய்ந்த மணி அழுத்தின பவளத் திண்ணையிலிருந்து ; அரும்பெறல் கரகத்து அங்கண் - அரியதாகக் கிடைத்த கரகத்தில் உள்ள ; தூய்மணி வாசம் நன்னீர் - தூய நீல மணிபோல் விளங்கும் மணமிகும் நறுநீரை ; துளங்கு பொன் கலத்துள் ஏற்று - ஒளிவிடும் பொற்கலத்திலே (தரையில் வீழாமல்) ஏற்று ; வேய்மணி தோளி நிற்ப - மூங்கிலனைய மணி அணிந்த தோளியாகிய நீ நிற்ப ; விழுத்தவன் நியமம் முற்றி - சிறந்த தவமுடையோன் தன் நியமங்ளை முடித்துக்கொண்ட பின்னர் ; வாய்மணி முறுவல் தோன்ற வந்தனை விதியின் செய்தேன் - வாயில் முத்தனைய முறுவல் தோன்றுமாறு குறையிரக்கும் நிலையுடன் வணக்கத்தை முறையாக இயற்றினேன்.
விளக்கம் : முற்றி - முற்ற : எச்சத்திரிபு. (276)
1127. ஆறெலாங் கடலுள் வைகு
மருந்தவத் திறைவ னூலுள்
வேறெலாப் பொருளும் வைகும்
விழுத்தவ வறிதி நீயே
யூறிலா வுணர்வி னோக்கி
யுரைமதி யெவன்கொன் மக்கட்
பேறிலா ளல்லள் பெற்ற
வுயிர்சென்று பிறக்கு மென்றேன்.
பொருள் : விழுத்தவ! - சிறந்த தவமுடையானே!; ஆறு எலாம் கடலுள் வைகும் - ஆறுகள் யாவும் கடலிலே தங்கும் (அதுபோல) ; அருந்தவத்து இறைவன் நூலுள் வேறு எலாப் பொருளும் வைகும் - அரிய தவத்தினையுடைய அருகன் ஆகமத்திலே வேறு வேறுபட்ட எல்லா நூல்களின் பொருளும் தங்கும் ; நீயே அறிதி - நீயே அப் பொருள்களை அறிவாய்; ஊறு இலா உணர்வின் நோக்கி உரைமதி - கெடுதியில்லா அறிவுடன் ஆராய்ந்து கூறுக; மக்கள்பேறு இலாள் அல்லள் பெற்ற உயிர் எவன்கொல் சென்று பிறக்கும் ? என்றேன் - குழந்தைப் பேறில்லாதவள் அல்லள் ஆகிய இவள் பெற்ற உயிர் எங்கே சென்று பிறக்கும் என்றேன்.
விளக்கம் : இவள் மக்கட் பேறில்லாதவளல்லள் ; பெற்ற மக்களுயிர் மற்றோரிடத்தே சென்று பிறக்கும் ; இனிப் பிள்ளை எத்தன் மைத்து? என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். அருகனாமத்துள் எல்லாம் அடங்குதலின் அதனையறிந்த நீ கணித நிலையும் அறிவாய் என்ற கருத்துடன் இங்ஙனம் வினவினான். கரகம் - கமண்டலம். தூய்நீர் மணிநீர் வாசநீர் நன்னீர் எனத் தனித்தனி கூட்டுக. தோளி : முன்னிலைப்புறமொழி ; நீ என்பது பொருள். விழுத்தவன் - சிறந்த தவத்தையுடையவன். நியமம் - ஒழுக்கமுறைமை. (277)
1128. வம்பவிழ் கோதை தந்த
வான்றுவர்க் காயை வீழ்த்தோர்
செம்பழுக் காயை வாங்கித்
திருநிலத் தெடுத்துக் கொண்டாங்
கம்பழ நீண்ட வாட்க
ணலமரு மணிசெ யம்பூங்
கொம்படு நுசுப்பி னாய்க்குத்
தந்தனென் பேணிக் கொண்டாய்.
பொருள் : வம்பு அவிழ்கோதை!- மணம் விரியும் மாலையாய்!; தந்த வான்துவர்க் காயை வீழ்த்து - நான் தந்த சிறந்த துவர்க்காய் ஒன்றை நீ வீழ்ப்ப ; ஓர் செம்பழுக்காயை வாங்கித் திருநிலத்து எடுத்துக்கொண்டு - ஒரு செம்மையான பழுக்காயை வளைந்து நீ வழிபாடு செய்த நிலத்திலிருந்து எடுத்து; ஆங்கு, அம்பு அழ நீண்ட வாள்கண் அலமரும் அணிசெய் அம்பூங் கொம்பு அடு நுசுப்பினாய்க்கு - அதனை, அம்பு வருந்த நீண்ட ஒளிமிகுங் கண்களையும், அசையும் அழகிய பூங்கொம்பை வருத்தும் இடையினையுமுடைய நினக்கு ; தந்தனென், பேணிக் கொண்டாய் - கொடுத்தேன் நீ, அதனைக் காப்பாற்றிக் கொண்டாய்.
விளக்கம் : வம்பு - மணம். கோதை - முன்னிலைப் புறமொழி. யான் தந்த என்க. வீழ்த்த - வீழ்ப்ப. வாங்கி - குனிந்து. அலமரும் நுசுப்பு, அணிசெய் நுசுப்பு அம்பூங்கொம்பு அடுநுசுப்பு எனத் தனித்தனி கூட்டுக. (278)
1129. பெற்றவந் நிமித்தத் தானும்
பிறந்தசொல் வகையி னானு
மற்றமின் மணியை யங்கைக்
கொண்டவர் கண்டு காட்டக்
கற்பகங் காம வல்லி
யனையநீர் கேண்மி னென்று
முற்றுபு கனிந்த சொல்லான்
முனிவரன் மொழியு மன்றே.
பொருள் : பெற்ற அந் நிமித்தத்தானும் - (முனிவனுக்கு நம்மாற்) கிடைத்த அந்த நிமித்தத்தாலும் ; பிறந்த சொல் வகையினானும் - என் வாயிற் பிறந்த சொல் வகையாலும் ; அற்றம் இல் மணியை அங்கைக் கொண்டவர் - அழிவற்ற இறைவனாகிய மணியை அங்கையிலே கொண்டவர் ; கண்டு காட்ட - அறிந்து நமக்குக் கூறவேண்டி ; கற்பகம் காமவல்லி அனைய நீர் கேண்மின் என்று - கற்பகத்தையும் காமவல்லியையும் போன்ற நீங்கள் கேளுங்கோள் என்று ; முற்றுபு கனிந்த சொல்லான் - முதிர்ந்து கனிந்த சொல்லாலே; முனிவரன் மொழியும் - முனிவரன் கூறுவான்.
விளக்கம் : நிமித்தம் : துவர்க்காயை வீழ்த்துப் பழுக்காயை எடுத்தது. சொல்வகை: இறக்கும் என்னாது சென்று பிறக்கும் என்றதனாற் போமதுவும் பிறக்குமதுவும் சொல்லியது. கொண்டவர், முனிவரன்: பன்மை யொருமை மயக்கம். இனி, அற்றம் இன் மணியை அங்கையிற் கொண்டோர் அம் மணியை நன்றாக அறியுமாறு போல என உவமையாகக் கூறின் பன்மையொருமை மயக்கம் இராது. (279)
1130. ஒன்றுநீர் கவலல் வேண்டா
வுலகெலா மாளுஞ் சீர்த்திப்
பொன்றிக ழுருவி னானோர்
புண்ணியற் பெறுதி ரென்ன
நின்றநீ யுவந்து நீங்க
நிகழ்பொரு ளெனக்குச் செப்பிப்
பின்றையு நிகழ்வ துண்டு
பேசுவல் கேளி தென்றான்.
பொருள் : ஒன்றும் நீர் கவலல் வேண்டா - எதற்கும் நீர் வருந்த வேண்டா ; உலகு எலாம் ஆளும் சீர்த்தி - உலகமெல்லாம் ஆளும் சிறப்பினையுடைய ; பொன்திகழ் ஒளியினான் ஓர் புண்ணியன் பெறுதிர் என்ன - பொன்போல் விளங்கும் ஒளியையுடைய நன்மகனைப் பெறுவீர் என்று கூற ; நின்ற நீ உவந்து நீங்க - (அதனைக் கேட்டு) ஆங்கு நின்ற நீ மகிழ்ந்து செல்ல, அதன்பின் ; நிகழ்பொருள் எனக்குச் செப்பி - (அம் மகனுக்குப் பிறப்பு முதல் துறவளவும்) நிகழ்பொருளை எனக்குக் கூறி ; பின்றையும் நிகழ்வதுண்டு - பின்னர் நிகழுமொரு துன்பமும் உண்டு ; பேசுவல் இது கேள் என்றான் - கூறுவேன் ; இதனைக் கேள் என்று மேற்கூறினான்.
விளக்கம் : பெறுதிர் என்றது சுநந்தைக்குப் பிள்ளை பெறுவை என்றாற் போலிருந்தது. அவன் கூறியது வளர்க்கப் பெறுவீர் என்று.
(280)
1131. நிலவுறழ் பூணி னானை
நெடுநக ரிரங்கக் கையாத்
தலபல செய்து கொல்வா
னருளிலான் கொண்ட போழ்திற்
குலவிய புகழி னானைக்
கொண்டுபோ மியக்க னஞ்சல்
சிலபகல் கழிந்து காண்டி
சிந்தியீ தென்று சொன்னான்.
பொருள் : நிலவு உறழ் பூணினானை - நிலவை மாறுபடும் ஒளியுறு பூணினையுடையவனை; நெடுநகர் இரங்கக் கையாத்து - பெருநகர் புலம்பக் கையைப் பிணித்து; அலபல செய்து கொல்வான் - தகவற்றன பல செய்து கொல்வதற்கு ; அருள் இலான் கொண்ட போழ்தில் - இரக்கமற்ற கட்டியங்காரன் கொண்ட காலத்தில் ; குலவிய புகழினானை இயக்கன் கொண்டுபோம் - பொருந்திய புகழுடையானை ஓர் இயக்கன் அழைத்துச் சென்றுவிடுவான் ; அஞ்சல் -அஞ்சற்க ; சில பகல் கழிந்து காண்டி - சில நாட்கள் கழித்துக் காண்பாய் ; ஈது சிந்தி என்று சொன்னான் - இதனை நீ சீந்திக்க என்றுரைத்தான்.
விளக்கம் : நீங்கள் அலபல செய்து பூணினானைக் கையைத் தொழில் செய்யாதவாறு பண்ணுதலாலே என்பர் நச்சினார்க்கினியர். அதனானே நீயும் வருந்தாதே என்று ஆறுதல் கூறினான் கந்துகன். (281)
1132. வசையற நிறைந்த கற்பின்
மாலையு மாமி தானுந்
தசையற வுருகி வெந்து
தம்முயிர் நீங்கு மாங்க
ணொசிதவன் சொற்க ளென்னு
நோன்புணை தழுவி நெஞ்சிற்
கசிவெனுங் கடலை நீந்திக்
கரையெனுங் காலை கண்டார்.
பொருள் : வசை அற நிமிர்ந்த கற்பின் மாலையும் மாமிதானும் - பழிப்பு நீங்க உயர்ந்த கற்பினையுடைய குணமாலையும் சுநந்தையும் ; தசை அற உருகி வெந்து தம் உயிர் நீங்கும் அங்கண் - தசையின்றி மெலிந்து வெதும்பித் தம் உயிரை விடும் நிலை வந்தபோது ; நொசி தவன் சொற்கள் என்னும் நோன்புணை தழுவி - நுண்ணிய தவத்தினனுடைய சொற்களாகிய வலிய தெப்பத்தைக் கைப்பற்றி ; நெஞ்சில் கசிவு எனும் கடலை நீந்தி - உள்ளத்தே வருத்தம் என்கிற கடலைக் கடந்து ; காலையெனும் கரை கண்டார்; (எட்டுத் திங்க்ள் என்னும்) காலையாகிய கரையைக் கண்டனர்.
விளக்கம் :எட்டுத் திங்கள் கழிந்து சீவகனைக் கண்டார். ஆதலின் எட்டுத் திங்கள் என்கிற காலை என்றார் நச்சினார்க்கினியர். (282)
1133. திருக்குழன் மகளிர் நையச்
சீவக சாமி திண்டோள்
வரிக்கச்சிற் பிணிக்கப் பட்டான்
மன்னனா லென்னக் கேட்டே
தருக்குடை வேழம் வாளார்
ஞாட்பினுட் டகைமை சான்ற
மருப்புட னிழந்த தொத்தார்
மன்னுயிர்த் தோழன் மாரே.
பொருள் : திருக்குழல் மகளிர் நைய - அழகிய குழலையுடைய மகளிர் வருந்துமாறு ; மன்னனால் சீவகசாமி திண்தோள் வரிக்கச்சின் பிணிக்கப்பட்டான் - அரசனாற் சீவகன் தன் திண்ணிய தோள்கள் வரிதலையுடைய கச்சினாற் கட்டப்பட்டான் ; என்னக் கேட்டு - என்று கேள்வியுற்று ; மன் உயிர்த் தோழன் மார் - நிலைபெற்ற உயிரனைய தோழர்கள் ; வாள்ஆர் ஞாட்பினுள் - வாளேந்திச் செய்யும் போரிலே ; தருக்கு உடைவேழம் - செருக்குற்ற களிறு ; தகைமை சான்ற மருப்பு உடன் இழந்தது ஒத்தார் - சிறப்புற்ற மருப்புகளைச் சேர இழந்தனைப் போன்றனர்.
விளக்கம் : இங்கும் நச்சினார்க்கினியர், தன் தோளை இருமுது குரவராலே கச்சினாற் கட்டினாற் போலத் தொழில் செய்யாதபடி பண்ணப்பட்டான் என்பர். (283)
1134. நட்டவற் குற்ற கேட்டே
பதுமுக னக்கு மற்றோர்
குட்டியைத் தின்ன லாமே
கோட்புலி புறத்த தாகக்
கட்டியங் கார னென்னுங்
கழுதைநம் புலியைப் பாய
வொட்டியிஃ துணர லாமே
யுரைவல்லை யறிக வென்றான்.
பொருள் : நட்டவற்கு உற்ற கேட்டு - தன் நண்பனுக்கு நேர்ந்தவற்றைக் கேட்டு ; பதுமுகன் நக்கு - பதுமுகன் நகைத்து; கோள் புலி புறத்தது ஆகக் குட்டியைத் தின்னல் ஆமே?- கொல்லவல்ல புலி காத்துக்கொண்டிருக்க (மற்றொன்றாற்) குட்டியைத் தின்ன இயலுமோ? இயலாது ; கட்டியங்காரன் என்னும் கழுதை நம் புலியைப் பாய - கட்டியங்காரன் எனப்படுங் கழுதை நம் புலியைப் பாய்வதற்கு ; ஒட்டி இஃது உணரலாமே?- நாமும் மெய்யென்று நம்பிப் பொருந்தி உணர்த்ல் ஆகாது ; உரைவல்லை அறிக என்றான் - உரைவல்லவனே! இதனை அறிந்து வருக என்று ஒற்றனிடம் கூறினான்.
விளக்கம் : தான் காத்தற் றொழிலையுடைமையின் குட்டியென்றான். மடங்கலாற்றற் பதுமுகன் காக்க (சீவக. 1896) காண்க. (284)
1135. சிலையொடு செல்வ னின்றாற்
றேவரும் வணக்க லாற்றார்
முலையுடைத் தாயோ டெண்ணித்
தந்தையிக் கொடுமை செய்தான்
கலைவல்லீ ரின்னுங் கேண்மி
னின்னதென் றுரைக்கு மாங்கண்
விரைவொடு சென்ற வொற்றாள்
விளைந்தவா பேசு கின்றான்.
பொருள் : சிலையொடு செல்வன் நின்றால் - வில்லொடு சீவகன் நின்றால்; தேவரும் வணக்கல் ஆற்றார் - வானவரும் அவனைத் தாழ்வித்தல் ஆற்றார் ; முலையுடைத்தாயோடு எண்ணி - நற்றாயொடு சூழ்ந்து ; தந்தை இக்கொடுமை செய்தான் - தந்தை இக் கொடிய செயலைச் செய்திருத்தல் வேண்டும் ; கலைவல்லீர், இன்னும் இன்னது கேண்மின் - கலைவல்ல தோழர்களே ! மற்றும் இதனையுங் கேட்பீராக ; என்று உரைக்கும் ஆங்கண் - என்று கூறும் அப்போது; விரைவொடு சென்ற ஒற்று ஆள் - அங்கே விரைந்து வந்த ஒற்றன் ; விளைந்தஆ பேசுகின்றான் - நேர்ந்த ஆறு இதுவெனச் செப்புகின்றான்.
விளக்கம் : ஆறு என்பது ஆ எனக் கடைகுறைந்து நின்றது. (285)
1136. இட்டிவேல் குந்தங் கூர்வா
ளிருஞ்சிலை யிருப்புச் சுற்றார்
நெட்டிலைச் சூலம் வெய்ய
முளைத்தண்டு நெருங்க வேந்தி
யெட்டெலாத் திசையு மீண்டி
யெழாயிரத் திரட்டி மள்ளர்
கட்டழற் கதிரை யூர்கோள்
வளைத்தவா வளைத்துக் கொண்டார்.
பொருள் : இட்டிவேல்குந்தம் கூர்வாள் இருஞ்சிலை இருப்புச் சுற்றுஆர் நெடுஇலைச் சூலம் வெய்ய முளைத்தண்டு - ஈட்டியும் வேலும் குந்தமும் வாளும் வில்லும் இருப்புப்பூண் அமைந்த நீண்ட இலையையுடைய சூலமும் கொடிய முளையையுடைய தண்டும் ; நெருங்க ஏந்தி - செறிய எடுத்துக்கொண்டு ; எட்டு எலாத் திசையும் ஈண்டி - எட்டாகிய எல்லாத் திசையினும் வந்து நிறைந்து; எழாயிரத்து இரட்டி மள்ளர் - பதினாலாயிரம் வீரர் ; கட்டு அழல் கதிரை ஊர்கோள் வளைத்தஆ -மிகுந்த வெப்பமுடைய ஞாயிற்றைப் பரிவேடிப்பு வளைந்தவாறு போல; வளைத்துக் கொண்டார் - வளைத்துக் கொண்டனர்.
விளக்கம் : ஈட்டி : இட்டியென விகாரப்பட்டது. இருப்புச் சுற்று - பூண். (286)
1137. பிடியொடு நின்ற வேழம்
பெருவளைப் புண்ட வண்ணம்
வடிமலர்க் கோதை யோடும்
வளைத்தலின் மைந்தன் சீறி
விடுகணை சிலையொ டேந்தி
வெருவரத் தோன்ற லோடு
மடுபுலி கண்ட மான்போ
லாறல வாயி னாரே.
பொருள் : பிடியொடு நின்ற வேழம் பெருவளைப்பு உண்ட வண்ணம் - பிடியுடன் நின்ற களிறு பெரிதும் வளைப்புற்றாற் போல ; வடிமலர்க் கோதையோடும் வளைத்தலின் - தெளிந்த மலர்க்கோதையாள் குணமாலையுடனே மனையிடத்தே வளைப்புறுதலின் ; மைந்தன் சீறி விடுகணை சிலையொடு ஏந்தி - சீவகன் முழங்கி ஆராய்ந்த அம்பையும் வில்லையும் ஏந்தி ; வெருவரத் தோன்றலோடும் - அஞ்சுறுமாறு வெளிப்பட்டபோது ; அடுபுலி கண்ட மான்போல் - கொல்லும் புலியைக் கண்ட மானைப்போல ; ஆறு அல ஆயினார் - வழி தெரியாமல் ஓடினர்
விளக்கம் : பிடி குணமாலைக்கும் வேழம் சீவகனுக்கும் உவமைகள். வேழம் - ஈண்டு களிறு என்பதுபட நின்றது. புலி சீவகனுக்கும் மான், படைஞர்க்கும் உவமை. ஆறு - வழி. அல : பலவறிசொல். அல்லாத வழிகள் என்னும் பொருட்டு. (287)
1138. சூழ்கழன் மள்ளர் பாறச்
சூழ்ச்சியிற் றந்தை புல்லி
வீழ்தரு கண்ண டம்மோய்
விளங்குதோள் பிணிப்ப மற்றென்
றோழரை வடுச்செய் திட்டே
னென்றுதான் றுளங்கி நின்றா
னூழ்திரைப் பாம்பு சேர்ந்த
வொளிமிகு பருதி யொத்தான்.
பொருள் : சூழ்கழல் மள்ளர் பாற - கழலணிந்த மள்ளர்கள் இங்ஙனம் கெடுதலாலே; தந்தை சூழ்ச்சியின் புல்லி - இது பொருளன்றென்றெண்ணித் தந்தை வந்து தழுவ ; வீழ்தரு கண்ணள் தம்மோய் விளங்குதோள் பிணிப்ப - நீர் வீழுங் கண்ணினளாய் நற்றாய் சீவகனது விளங்குந் தோளைக் கட்ட ; மற்று என் தோழரை வடுச் செய்திட்டேன் - இனி என் தோழர்களைப் பழியுறச் செய்தேன்; என்று தான் துளங்கி நின்றான்-என்று அவன் கலங்கி நின்றான் ; ஊழ்திரைப் பாம்பு சேர்ந்த ஒளிமிகு பருதி ஒத்தான் - (அப்போது) ஊழினாற் கடலின் முகட்டிலே பாம்பினாற் பற்றப்பட்ட ஒளியுறும் ஞாயிறு போன்றான்.
விளக்கம் : தம் ஆய் : தம் மோய் எனத் திரிந்தது. தம்மொய் விளங்கு தோள் எனவும் பாடம். அதற்குத் தம் என்பது பன்மைக் காதலாற் பன்மை யொருமை மயக்கம் எனக் கொள்க. திரைப் பரப்புச் சேர்ந்த எனவும் பாடம். இங்கும் நச்சினாக்கினியர் புல்லி என்பதற்கு நெருங்கிய என்றும், பிணிப்ப என்பதற்குத் தொழில் செய்யாதபடி செய்ய என்றும் பொருள் கூறுவர். மற்றும் அவர் ஊழ் என்பது ஊழியின் விகாரம் என்றுரைத்து, ஊழித் திரைப்பருதி என இயைத்துக் கடலிற் றோன்றிய ஞாயிறு என்று பொருள் கூறுவர்.
(288)
1139. ஒற்றன்வந்த துரைப்பக் கேட்டே
யொத்ததோ வென்சொ லென்னாச்
சுற்றினார் முகத்தை நோக்கிச
சூழிமால் யானை யன்னா
னுற்றவிவ் விடரைத் தீர்க்கு
முபாயநீ ருரைமி னென்றான்
பொற்றிரட் குன்றம் போலப்
பொலிவுகொண் டிருந்த தோளான்.
பொருள் : ஒற்றன் வந்து உரைப்பக் கேட்டு - ஒற்றன் வந்து இங்ஙனம் கூறக் கேட்டு ; சூழிமால் யானை அன்னான் - முகபடாம் அணிந்த பெரிய யானை போன்றவனும்; திரள் பொன் குன்றம் போலப் பொலிவு கொண்டிருந்த தோளான் - திரண்ட பொன்மலைபோல அழகுகொண்ட தோளானுமாகிய பதுமுகன்; சுற்றினார் முகத்தை நோக்கி - சூழ இருந்தவரின் முகத்தைப் பார்த்து ; என் சொல் ஒத்ததோ ? என்னா - என் மொழி பொருந்திற்றோ என்று வினவி; உற்ற இவ் இடரைத் தீர்க்கும் உபாயம் நீர் உரைமின் என்றான் - நேர்ந்த இவ் விடுக்கணைப் போக்கும் சூழ்ச்சியை நீவிர் மொழிமின் என்றான்.
விளக்கம் : சூழி - முகபடாம். மால் - பெரிய. யானையன்னானாகிய தோளான் என்க. திரள் பொன் குன்றம் என்பது திரண்ட பொன்னாகிய மலை என முன்னது வினைத்தொகையும் பின்னது பண்புத் தொகையுமாம். (289)
1140. நிறைத்திங்க ளொளியொ டொப்பான்
புத்திசே னினைந்து சொல்லு
மறைத்திங்க ணகரை வல்லே
சுடுதுநாஞ் சுடுத லோடு
மிறைக்குற்றேல் செய்த லின்றி
யெரியின்வாய்ச் சனங்க ணீங்கச்
சிறைக்குற்ற நீங்கச் செற்றாற்
செகுத்துக்கொண் டெழுது மென்றான்.
பொருள் : நிறைத் திங்கள் ஒளியொடு ஒப்பான் - கலை நிறைந்த திங்களின் ஒளியுடன் ஒப்பானாகிய; புத்திசேன் நினைந்து சொல்லும் - புத்திசேனன் சூழ்ந்து சொல்வான்; நாம் இங்கண் நகரை மறைத்து வல்லே சுடுதும் - நாம் இப்போதே நகரை மறைந்திருந்து எரிப்போம்; சுடுதலோடும் - எரித்தவுடன்; இறைக் குற்றேல் செய்தல் இன்றி - அரசனுக்குக் குற்றேவல் செய்தலை விடுத்து ; எரியின்வாய்ச் சனங்கள் நீங்க - தீயை அணைக்க மக்கள் நீங்கிய பின் ; செற்றான் செகுத்து - மதனனைக் கொன்று ; சிறைக்குற்றம் நீக்கிக்கொண்டு எழுதும் என்றான் - சிறையாகிய குற்றத்தை நீக்கிக் கொண்டு பேர்வோம் என்றான்.
விளக்கம் : மறைந்து என்பது விகாரப்பட்டு மறைத்து என வந்தது. புத்திசேன், குற்றேல் : விகாரங்கள் (புத்திசேனன், குற்றேவல்). இவன் அந்தணன் ஆதலின் முற்கூறினான் என்பர். இவனைத் திங்கள் விரவிய பெயரினான் (சீவக. 171) என்றார் முன்னும். (290)
1141. காலத்தீ நகரை மேயக்
கடியரண் கடிந்த வம்பிற்
சாலத்தீச் சவரர் கோலஞ்
செய்துநம் மறவ ரீண்டிக்
கோலத்தீ வேலி னானைக்
கோயிலுள் வளைப்ப விப்பர்
லாலைத்தீ யிடங்க டோறு
மாகுலஞ் செய்து மென்றான்.
பொருள் : கடி அரண் கடிந்த அம்பின் - காவலுடைய மூன்று மதிலையும் அழித்த கணையைப்போல ; காலத்தீ நகரை மேய - ஊழித்தீயைப் போன்று நாம் இடும்தீ நகரை அழிக்க ; சாலத்தீச் சவரர் கோலம் செய்து - பொருந்துமாறு கொடிய வேடர் கோலங்கொண்டு ; நம் மறவர் ஈண்டி - நம் வீரர் கூடி ; கோயிலுள் கோலத் தீ வேலினானை வளைப்ப - அரண்மனையிலே அழகிய தீயனைய வேலுடையவனைச் சூழ்ந்து கொள்ள ; இப்பால் - இப் பக்கத்தே ; ஆலைத் தீ இடங்கள்தோறும் ஆகுலம் செய்தும் என்றான் - ஆலையிற் பாகு காய்ச்சும் தீயையுடைய நாடெங்கும் துன்பத்தை உண்டாக்குவோம் என்று (பதுமுகன்) கூறினான்.
விளக்கம் : உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண் - டெய்ய வல்லானுக்கே உந்தீபற (திருவா. திருவுந்தி.4) என்றாற்போல. காலத்தீ - ஊழிமுடிவில் உலகினை அழிக்கும் நெருப்பு. ஊழித்தீப் போலும் தீ என்க. மேய்தல் - ஈண்டு அழித்தல். கடியரண் என்றது முப்புரத்தை. அம்பு - ஈண்டுச் சிவபெருமான் எய்த அம்பு. சவரர் - வேடருள் ஒருவகையினர், வேலினான் - கட்டியங்காரன், ஆலைத்தீயிடம் என்றது மருதநில ஊர்களை. (291)
1142. சிறைப்புறங் காத்துச் செல்லு
மதனனைத் தெருவில் வீழப்
பிறைத்தலை யம்பிற் சென்னி
பெருநிலத் திடுவ லிட்டான்
மறுக்குற்று மள்ளர் நீங்க
மைந்தனைக் கொண்டு போகி
யறைத்தொழி லார்க்குஞ் செல்லா
வருமிளை புகுமி னென்றான்.
பொருள் : சிறைப்புறம் காத்துச் செல்லும் மதனனை - (அப்போது) சிறையைப் பாதுகாத்துக் கொண்டு போகும் மதனனை; சென்னி தெருவில் பெருநிலத்து வீழப் பிறைத்தலை அம்பின் இடுவல் - அவன்தலை தெருவிலே தரையில் வீழுமாறு பிறை போன்ற தலையை உடைய அம்பினாலே வீழ்த்துவேன்; இட்டால் - வீழ்த்தினால் ; மறுக்குற்று மள்ளர் நீங்க - மனங்கலங்கி வீரர்கள் நீங்கினவுடன் ; மைந்தனைக் கொண்டு போகி - சீவகனைக் கொண்டு சென்று ; அறைத் தொழிலார்க்கும் செல்லா - கீழறுக்குந் தொழிலுடைய அமைச்சர்க்கும் நினைக்கவொண்ணாத ; அருமிளை என்றான் - காவற் காட்டிலே செல்லுமின் என்றான்.
விளக்கம் : மதனன் - கட்டியங்காரன் மைத்துனன். பிறைபோலும் முகத்தையுடைய அம்பு. மள்ளர் - படைமறவர். மைந்தன் : சீவகன். பதுமுகன் தன் தோழர்களை நோக்கி மதனனை ஓர் அம்பினாற் கொன்று விடுவேன். நீங்கள் சீவகனைக்கொண்டு காவற்காட்டிற் புகுமின் என்றான் என்பது கருத்து. அறைத்தொழிலார் - அமைச்சர் : கீழறுக்குந் தொழிலையுடையோர் என்பது பொருள்.
அறைபோகமைச்சர் (5 - 130).
என்பர் இளங்கோவடிகளார்.
அறைபோக்கமைச்சின் முறைபோக்கெண்ணினும் (3 - 17 : 53).
என்றார் கதையினும். (292)
1143. மாற்றவர் மலைப்பி னாங்கே
வாட்கடாக் கொண்டு நொய்தா
வேற்றுல கேற்றி நும்பின்
விரைதர்வே னுலகிற் கெல்லா
மாற்றிய நட்பு வல்லே
வலிப்புறீஇ யிடுமி னென்றான்
கூற்றங்கள் பலவுந் தொக்க
கூற்றத்திற் கூற்ற மொப்பான்.
பொருள் : கூற்றங்கள் பலவும் தொக்க கூற்றத்தில் கூற்றம் ஒப்பான் - கூற்றுக்கள் பலவுந் திரண்ட கூறுபாட்டிலே சிறந்த கூற்றத்தைப் போன்றவனான பதுமுகன் ; மாற்றவர் மலைப்பின் ஆங்கே வாள் கடாக் கொண்டு - (அவ்வாறு மிளையிற் புகுந்தால்) பகைவர்கள் மலைவதுண்டாயின், வாளாலே கடாவிட்டு; நொய்துஆ வேறு உலகு ஏற்றி நும்பின் விரைதர்வேன் - விரைவாக விண்ணுலகினேற்றி உம்முடன் விரைந்து வருவேன்; ஆற்றிய நட்பு உலகிற்கு எல்லாம் வலிப்பு உறீஇ இடுமின் என்றான் - நீங்கள் நடத்திய நட்பை உலகெல்லாம் நிலைபெறுத்தியிடுமின் என்றான்.
விளக்கம் : கூற்றத்தில் உவமை கூறுமிடத்துப் பல கூற்றங்களாலே பண்ணினதொரு கூற்றம் ஒப்பான் என்றுமாம். கடாக்கொள்ளுதலாவது எருதுகளால் வைக்கோலைத் துவைத்தல் போன்று பகைவரைப் போர்க்களத்தே துவைத்தழித்தல் என்க.
கடாவிடு களிறுபோல உச்சியும்
மருங்கும்பற்றிப் பிளந்துயிர் பருகி
என்பர் பின்னும் (1153) . விரைதருவேன் என்பது விரைதர்வேன் என உகரம் கெட்டுநின்றது. (293)
1144. காலனைச் சூழந்த நோய்போ னபுலமா விபுலர் சூழ
வேலினை யேந்தி நந்தன் வெருவரத் தோன்ற லோடு
மாலைதன் றாதை தானு மக்களும் வந்து கூடிப்
பாலவர் பிறரு மீண்டிப் பாய்புலி யினத்திற் சூழ்ந்தார்.
பொருள் : காலனைச் சூழ்ந்த நோய்போல் நபுலமா விபுலர் சூழ - காலன் ஏவினவாறு செய்ய அவனைச் சூழ்ந்த நோய்போல நபுலனும் விபுலனும் ; மாவின் மேற்சூழ ; நந்தன் வேலினை ஏந்தி - நந்தட்டன் வேலேந்தியவனாய் வெருவரத் தோன்றலோடும் - அச்சமுண்டாகத் தோன்றின அளவிலே ; மாலை தன் தாதை தானும் மக்களும் வந்து கூடி - குணமாலையின் தந்தையும் அவன் மக்களும் வந்து சேர்ந்து ; பல்லவர் பிறரும் ஈண்டி - தம் பகுதியிலுள்ள மற்றோரும் வந்து தோழருடன் தொக்கு; பாய்புலி இனத்தின் சூழ்ந்தார் - பாயும் புலியினம் போலச் சூழ்ந்தனர்.
விளக்கம் : நபுல விபுலர் கபில பரணர் போலக் கொள்க. காலன் ஆவி கவருங்கால் அவனுக்குதவியாக அவ்வுயிர் கொண்ட உடலைச் சிதைக்குமாறு சீவகன் எளிதில் வெல்லும்படி பகைவர் வலியை அழிக்கும் துணைவர் என்பது கருத்து. காலன் ஏவியவிடத்தே சேறற்கு அவனைச் சூழ்ந்த நோய்கள் என்க. அன்றியும் உயிர்களைக் கவர்தற்குக் காலன் கொண்டல், இடி, மின்னல், நீர், காற்று, தீ, மரம், கல், மண் முதலிய பல பொருள்களையும் ஏவுவன் ஆதலால் அவைகள் என்னினும் பொருந்தும். மாலை : குணமாலை. (294)
1145. மட்டுவா யவிழ்ந்த தண்டார்த்
தாமரை நாமன் சொன்ன
கட்டமை நீதி தன்மேற்
காப்பமைந் திவர்க ணிற்பப்
பட்டுலாய்க் கிடந்த செம்பொற்
கலையணி பரவை யல்கு
லிட்டிடைப் பவளச் செவ்வாய்த்
தத்தையு மிதனைக் கேட்டாள்.
பொருள் : மட்டுவாய் அவிழ்ந்த தண்தார்த் தாமரை நாமன் சொன்ன - தேனைத் தன்னிடத்தே கொண்டு அலர்ந்த தண்ணிய தாமரையின் பெயருடையான் (பதுமுகன்) கூறிய ; கட்டு அமை நீதி தன்மேல் காப்பு அமைந்து இவர்கள் நிற்ப - வகுப்பமைந்த முறையிலே காவலாகக் கூடி இவர்கள் நிற்க; பட்டு உலாய்க் கிடந்த செம்பொன் கலை அணி - பட்டுக் கலந்து கிடந்த, பொன்னாலான மேகலை அணிந்த; பரவை அல்குல் - பரப்பமைந்த அல்குலையும்; இட்டு இடை - சிற்றிடையையும்; பவளச் செவ்வாய் - பவளம் போன்ற சிவந்த வாயையும் உடைய; தத்தையும் இதனைக் கேட்டாள் - தத்தையும் சீவகனுக்குற்றதைக் கேள்வியுற்றாள்.
விளக்கம் : தாமரை நாமன் என்றது பதுமுகனை. கட்டு அமைநீதி - கட்டுப்பாடமைந்த நீதி என்க. இவர்கள்-இந்நபுல விபுலர் முதலியோர். இட்டிடை - சிறிய இடை. தத்தை : காந்தருவதத்தை (295)
1146. மணியியல் யவனச் செப்பின்
மங்கலத் துகிலை வாங்கிக்
கணைபுரை கண்ணி யேற்ப
வுடுத்தபின் செம்பொற் செப்பிற்
பிணையலு நறிய சேர்த்திப்
பெருவிலை யாரந் தாங்கித்
துணைவனுக் குற்ற துன்பஞ்
சொல்லிய தொடங்கி னாளே.
பொருள் : கணைபுரை கண்ணி - அம்பனைய கண்ணாள் ; மணி இயல் பவளச் செப்பின் மங்கலத் துகிலை வாங்கி - மணிகளாற் செய்யப்பட்ட யவனச் செப்பிலிருந்து தூய ஆடையை எடுத்து ; ஏற்ப உடுத்தபின் - (வழிபாட்டுக்குத்) தக்கவாறு உடுத்த பிறகு; செம்பொன் செப்பில் நறிய பிணையலும் சேர்த்தி - செம்பொன் செப்பிலிருந்து நல்ல மலர் மாலையையும் அணிந்து ; பெருவிலை ஆரம் தாங்கி - மிகுவிலை பெற்ற முத்து மாலை சூடி ; துணைவனுக்கு உற்ற துன்பம் சொல்லிய - கணவனுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்குதற்கு; தொடங்கினாள் - வழி படத் தொடங்கினாள்.
விளக்கம் : சொல்லிய தொடங்கினாள் என்புழிச் செர்ல்லிய என்பது நீக்க என்னும் பொருட்டு.
பண்டைச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய (புறநா- 90-7).
என்புழியும் அஃதப்பொருட்டாதல் அறிக. (296)
1147. பொன்னணி மணிசெ யோடை
நீரின்வெண் சாந்து பூசித்
தன்னுடை விஞ்ஞை யெல்லாந்
தளிரிய லோத லோடு
மின்னடு வாளும் வேலுங்
கல்லொடு தீயுங் காற்று
மன்னுட னேந்தித் தெய்வ
மாதரைச் சூழ்ந்த வன்றே.
பொருள் : பொன் அணி மணிசெய் ஓடை வெண்சாந்து - பொன்னாற் செய்து மணியிழைக்கப்பட்ட மடலிலிருந்த வெண்சாந்தை ; நீரின் பூசி - பனிநீருடனே கலந்து பூசிக்கொண்டு; தன் உடை விஞ்சை எல்லாம் - தான் கற்ற மறை யெல்லாவற்றையும் ; தளிர் இயல் ஓதலோடும் - தளிரனையாள் ஓதின அளவிலே; மின் அடு வாளும் வேலும் கல்லொடு தீயும் காற்றும் - மின்னை வென்ற ஒளியுறு வாள், வேல், கல், தீ, காற்று ஆகியவற்றை மன் உடன் ஏந்தி - மிகுதியாகத் தம்முடன் ஏந்தி ; மாதரைத் தெய்வம் சூழ்ந்த - தத்தையைத் தெய்வங்கள் சூழ்ந்தன.
விளக்கம் : இதனானும், பின், விண்ணோர்களை வாழ்த்தி (சீவக. 1160) என்றதனானும் ஈண்டு விஞ்சையர் வாராமை யுணர்க. சாந்து பூத்த என்றும், தன்னிடை விஞ்சை என்றும் பாடம். (297)
வேறு
1148. ஆரமின் னும்பணை வெம்முலை யாடமைத் தோளினாள்
வீரனுற் றதுயர் மின்னென நீக்கிய மெல்லவே
நேரமன் னும்வரு கென்றுநின் றாணினைந் தாளரோ
பாருண்மன் னும்பழி பண்பனுக் கின்று விளைந்ததே.
பொருள் : ஆரம் மின்னும் பணை வெம்முலை ஆடு அமைத் தோளினாள் - முத்துவடம் ஒளிரும் பருத்த வெம்முலைகளையும் அசையும் மூங்கிலனைய தோள்களையும் உடைய தத்தை ; வீரன் உற்ற துயர் மின் என நீக்கிய - தன் கணவன் அடைந்த துயரை மின்போலக் கடிது நீக்க ; மன்னும் நேர வருக என்று நின்றாள் - மிகவும் அணுக வருக என்று தெய்வங்களை வேண்டி நின்றவள்; பாருள் மன்னும் பழி பண்பனுக்கு இன்று விளைந்தது - உலகில் நிலைபெறும் வடுச்சொல் தன் கணவனுக்கு இன்று நேர்ந்ததை; மெல்ல நினைந்தாள் - மெல்லென எண்ணினாள்.
விளக்கம் : நினைந்தது மேற்கூறுகின்றார். ஆரம் - முத்துவடம். பணைவெம்முலை: வினைத்தொகை. தோளினாள் : காந்தருவதத்தை . வீரன் : சீவகன். மின்-ஈண்டு விரைவின் மறைதற்குவமை. மன்னும் - மிகவும். அரோ : அசை. மன்னும்பழி - நிலையுறும்பழி. பண்பன் : சீவகன்; நற்குணம் நிறைந்தவன் என்பது கருத்து. (298 )
1149. மன்னன்செய் தசிறை மாகட லுட்குளித் தாழ்வுழித்
தன்னையெய் திச்சிறை மீட்டன டன்மனை யாளெனி
னென்னையா வதிவ னாற்றலுங் கல்வியு மென்றுடன்
கொன்னும்வை யங்கொழிக் கும்பழிக் கென்செய்கோ தெய்வமே.
பொருள் : மன்னன் செய்த சிறை மாகடலுள் குளித்து ஆழ்வுழி - அரசன் செய்த சிறைப் பெருங்கடலிலே முழுகி அழுந்தும்போது ; தன் மனையாள் தன்னை எய்திச் சிறை மீட்டனள் எனின் - தன் மனைவி தன்னைச் சேர்ந்து சிறையை நீக்கினாள் என்றால் ; இவன் ஆற்றலும் கல்வியும் என் ஆவது என்று - இவன் வலிமையும் படிப்பும் என்னாகத் தகுவன என்று ; உடன் கொன்னும் வையம் கொழிக்கும் பழிக்கு - சிறை நீக்கினவுடன்! பெரிதும் உலகம் எடுத்துச் சொல்லும் பழிக்கு ; தெய்வமே என் செய்கோ ?- தெய்வமே! நான் என்ன செய்வேன்?
(விளக்கம்.) என்னை : ஐ : அசை. ஆவது : ஒருமைப் பன்மை மயக்கம். இச் செய்யுள்,
அல்லன் மாக்கள் இலங்கைய தாகுமோ.
எல்லை நீத்த உலகங்கள் யாவுமென்.
சொல்லி னாற்சுடு வேனது தூயவன்.
வில்லி னாற்றற்கு மாசென்று வீசினேன் (கம்ப- சூளாம- 18).
என்னும் சீதையின் கூற்றை நினைப்பிக்கின்றது. (299)
1150. செல்வனுற் றசிறை செய்யவ ணீக்குமென் றாற்பழி
யில்லையா யின்னவள் யானெனும் வேற்றுமை யில்லையே
சொல்லின்வெள் ளிம்மலை தோடவிழ் தாமரைப் பொன்மல
ரெல்லையா கும்பொதுப் பெண்ணவள் யான்குல மங்கையே.
பொருள் : செல்வன் உற்ற சிறை செய்யவள் நீக்கும் என்றால் - செல்வன் அடைந்த சிறையைத் திருமகள் நீக்குவாளாயின்; பழி இல்லை ஆயின் - பழியில்லை யென்றால் ; அவள் யான் எனும் வேற்றுமை இல்லையே - அவளென்றும் யானென்றும் வேறுபாடு இல்லையே, சொல்லின் - வேற்றுமை கூறின் வெள்ளிமலை தோடு அவிழ் பொன் தாமரை மலர் எல்லை ஆகும் - எனக்கு வெள்ளிமலையும் அவளுக்கு இதழ்விரிந்த பொற்றாமரை மலரும் எல்லை ஆகும் ; அவள் பொதுப்பெண் - (மற்றும்) அவளோ பொதுமகள் ; யான் குலமங்கை - யானோ குலப்பெண். (ஆகையாற் பழியில்லையாம்).
விளக்கம் : திருமகள் பார்க்கின் தீங்கு நீங்கும் என்று உலகங் கூறுதலின் இங்ஙனங் கூறினாள். செல்வன், ஈண்டுச் சீவகன். செய்யவள் - திருமகள். திருமகள் பலரிடத்தும் கைம்மாறிப் போதலின் பொதுமகள் எனப்பட்டாள். எனவே குலமகளாகிய யான் அவன் சிறை நீக்குதல் பழியாகாது எனத் துணிந்தவாறாயிற்று. (300)
1151. ஆவதா கபுக ழும்புழி யும்மெழு நாளவை
தேவர்மாட் டும்முள மக்களு ளில்வழித் தேர்கலே
னோமெனெஞ் சம்மென நோக்கிநின் றாள்சிறைப் பட்டதன்
காவற்கன் றிற்புனிற் றாவன கார்மயிற் சாயலே.
பொருள் : புகழும் பழியும் ஆவதாக - (மேலும்) ஈண்டுப் புகழும் பழியும் ஆவதாகுக; அவை எழும் நாள் தேவர்மாட்டும் உள - அவை தோன்றும்போது விண்ணவரிடத்தும் தோன்றுகின்றன ; மக்களுள் இல்வழித் தேர்கலேன் - மக்களிடம் அவை இல்லாத இடத்தைக் கண்டறியேன் ; என் நெஞ்சம் நோம்-இவற்றை யெல்லாம் எண்ணின் உள்ளம் வருந்தும், (நினைக்குங் காலமும் அன்று); என - என்றுரைத்து; சிறைப்பட்ட தன் காவல் கன்றின் - ஒரு சிறையிலகப்பட்ட தன் காப்பில் உள்ள கன்றினிடம்; புனிற்று ஆ அன - இளங்கன்றின் தாயான பசு நோக்கல் போல ; கார் மயில் சாயல் - கார்நோக்கும் மயிலின் மென்மையாள் ; நோக்கி நின்றாள் - பார்த்து நின்றாள்.
விளக்கம் : ஆ விடுவிக்க நோக்கி நின்றாற்போல நின்றாள். (301)
வேறு
1152. மாநகர் சுடுத லொன்றோ
மதனனை யழித்த லொன்றோ
வானிக ரில்லா மைந்தர்
கருதிய ததுவு நிற்க
வேய்நிக ரில்ல தோளி
விஞ்சையால் விடுத்துக்கொள்ளப்
போயுயிர் வாழ்தல் வேண்டே
னெனப்பொருள் சிந்திக் கின்றான்.
பொருள் : வான்நிகர் இல்லா மைந்தர் - வானும் நிகர் இல்லாத நம் தோழர்கள்; மாநகர் சுடுதல் ஒன்றோ, மதனனை அழித்தல் ஒன்றோ கருதியது - பெரிய நகரைச் சுடுதலாவது , மதனனைக் கொல்வதாவது நினைத்தாகும்; அதுவும் நிற்க - அதுவும் குறைவில்லை; வேய்நிகர் இல்ல தோளி - மூங்கில் ஒவ்வாத தோளி ; விஞ்சையால் விடுத்துக்கொள்ள - தன் விஞ்சைத் திறத்தால் விடுவித்துக் கொள்ள; போய் உயிர் வாழ்தல் வேண்டேன் - பிழைத்துச் சென்று உயிர் வாழ்தலை விரும்பேன்; எனப் பொருள் சிந்திக்கின்றான்-என்று கருதி மேலே செய்யவேண்டிய பொருளை நினைக்கின்றான்.
விளக்கம் : ஆய்நிகர் என்றும் பாடம். மாநகர் - அரண்மனையுமாம். வான் - முகில் : இது கைம்மாறு வேண்டாது நன்மை செய்தற்குவமை. இனி வான் - தேவருலகமுமாம். இது தன்பாலுற்றார் துன்பம் துவரத்துடைத்து இன்பமெலாந் தடையின்றித் தருதற்குவமை என்க. மைந்தர் என்றது தோழரை. தோளி - ஈண்டுக் காந்தருவத்தை. பொருள் - இனிச் செய்யக்கடவதாகிய செயல். (302)
1153. கச்சற நிமிர்ந்து மாந்தர்க் கடாவிடு களிறு போல
வுச்சியு மருங்கும் பற்றிப் பிளந்துயிர் பருகிக் கோண்மா
வச்சுற வழன்று சீறி யாட்டினம் புக்க தொப்பக்
குச்சென நிரைத்த யானைக் குழாமிரித் திடுவ லென்றான்.
பொருள் : கச்சு அற நிமிர்ந்து - என்னைக் கட்டிய கச்சு அறுமாறு நிமிர்ந்து ; கடாவிடு களிறுபோல - பற்றி எறிகின்ற களிற்றைப்போல; மாந்தர் உச்சியும் மருங்கும் பற்றிப் பிளந்து - வீரர்களின் தலையையும் இடையையும் பிடித்துப் பிளந்து ; உயிர் பருகி - உயிரைக் கொன்று ; கோள்மா அச்சு உற அழன்று சீறி ஆட்டினம் புக்கது ஒப்ப - கொல்லுதல் வல்ல புலி அச்சம் உண்டாகக் கனன்று முழங்கி, ஆட்டு மந்தையிற் புகுந்தாற் போல; குச்சென நிரைத்த யானைக்குழாம் - பாவாற்றிபோல நெருங்க வளைந்த யானைத் திரளையும்; இரித்திடுவல் என்றான் - கெடுத்திடுவேன் என்று கருதினான்
விளக்கம் : ஆசிரியற்கு நேர்ந்ததற்குத் தாழ்வாகாதென்று இத்திரளைக் கொல்லக் கருதினான். கச்சு - கச்சை. இது தன்னைக் கட்டிய கச்சை. கோள்மா - கொல்லுதல் வல்ல புலி. அச்சு - அச்சம். குச்சு - பாவாற்றி என்னுமொரு நெய்தற்றொழிற் கருவி. (303)
1154. மின்னிலங் கெயிற்று வேழம்
வேழத்தாற் புடைத்துத் திண்டேர்
பொன்னிலங் கிவுளித் தேராற்
புடைத்துவெங் குருதி பொங்க
வின்னுயி ரவனை யுண்ணு
மெல்லைநாள் வந்த தில்லை
யென்னையிக் கிருமி கொன்றென்
றோழனை நினைப்ப லென்றான்.
பொருள் : மின் இலங்கு எயிற்று வேழம் - மின்னென விளங்கும் பற்களையுடைய வேழங்களை; வேழத்தால் புடைத்து - யானைகளால் அடித்து; திண்தேர் பொன் இலங்கு இவுளித் தேரால் புடைத்து - திண்ணிய தேரைப் பொன் விளங்கும் புரவி பூட்டிய தேராலே தாக்கி ; வெம் குருதி பொங்க இவன் இன் உயிரை உண்ணும் - வெப்பமான குருதி கொப்புளிக்கப் பகைவனுடைய இனிய உயிரைப் பருகுகின்ற; இறுதிநாள் வந்தது இல்லை - எல்லைக் காலம் இன்னும் வரவில்லை; இக் கிருமி கொன்று என்னை - (பகை களைதலை விட்டு) இப் புழுக்களைக் கொல்வதால் யாது பயன்?; என் தோழனை நினைப்பல் என்றான் - என் தோழனான சுதஞ்சணனை நினைப்பேன் என்றெண்ணினான்.
விளக்கம் : எயிறு - பல். இவுளி - குதிரை. அவனை என்றது கட்டியங்காரனை. எல்லைநாள் வந்ததில்லை என்றும் பாடம். கிருமி என்றது போர் மறவரை. கிருமி - புழு. இஃது அழித்தலின் எளிமையும் பயனின்மையும் கருதிக் கூறியபடியாம். தோழன் : சுதஞ்சணன் (304)
1155. தோழனுந் தேவி மார்தங் குழாத்துளான் றுளும்பு முந்நீ
ரேழ்தரு பருதி தன்மே லிளம்பிறை கிடந்த தேபோற்
றாழ்தகை யார மார்பிற் சீவகன் குணங்க டம்மை
யாழெழீஇப் பாடக் கேட்டோ ரரம்பையைச் சேர்ந்திருந்தான்.
பொருள் : தோழனும் தேவிமார்தம் குழாத்துளான் - சுதஞ்சணனும் தன் மனைவியரின் குழாத்திலே யிருப்பவன் ; துளும்பும் முந்நீர் ஏழ்தரு பருதி தன்மேல் இளம்பிறை கிடந்ததே போல் - அலைதலையுடைய கடலில் எழுதரும் இளங்கதிரின் மேல் இளம்பிறை கிடந்தாற் போல ; தாழ்தகை ஆரம் மார்பின்-தங்கின முத்தார மார்பினையுடைய; சீவகன் குணங்கள் தம்மை - சீவகனின் பண்புகளை ; ஓர் அரம்பையைச் சார்ந்து - அரம்பை யொருத்தியைக் கொண்டு ; யாழ் எழீஇப் பாடக் கேட்டிருந்தான் - யாழிசைத்துப் பாடக் கேட்டிருந்தான்.
விளக்கம் : ஏழ்தரு : எழுதரு என்பதன் விகாரம். ஏழ்தரும் - எழுதரும்; தோன்றாநின்ற. பருதி - ஞாயிறு ; இது மார்பினுக்குவமை. பிறை - முத்தாரத்திற்குவமை. தோழனும் அவ்வமயம் பாடக்கேட்டு இருந்தான் என்க. (305)
வேறு
1156. வயிரம் வேய்ந்த மணிநீண்முடி வாலொளி வானவன்
செயிரிற் றீர்ந்த செழுந்தாமரைக் கண்ணிட னாடலு
முயிரனா னைநினைந் தானுற்ற தோதியி னோக்கினான்
மயிலனார்க் குப்படி வைத்தவன் மால்விசும் பேறினான்.
பொருள் : வயிரம் வேய்ந்த நீள் மணிமுடி - வயிரம் பதித்த நீண்ட மணிமுடியினையும்; வால் ஒளி - வெள்ளிய நிறத்தினையும் உடைய; வானவன் - சுதஞ்சணனது ; செயிரின் தீர்ந்த செழுந்தாமரைக் கண் - குற்றத்தினின்றும் நீங்கிய வளமிகு தாமரைக் கண்களில்; இடன் ஆடலும் - இடக்கண் ஆடின அளவிலே; உயிர் அனானை நினைந்தான் - (தனக்குத் தீங்குறுமோ என்று நினையாமல்) உயிரனைய சீவகனை எண்ணினான் ; உற்றது ஓதியின் நோக்கினான் - நேர்ந்ததை மனவுணர்வாலே அறிந்தான் ; மயிலனார்க்குப் படிவைத்து - மயிலனைய மனைவியர்க்குத் தன் உருவைப் புனைந்து வைத்து ; அவன் மால் விசும்பு ஏறினான் - தன் ஊர்தியாகிய பெரிய முகிலின்மிசை அமர்ந்தான்.
விளக்கம் : தான் இருந்த அவை குலைவுறாமற் படிவம் வைத்தான். படி: படிவம் என்பதன் விகாரம். (306)
1157. இடியு மின்னும் முழக்கும்மிவற் றானுல கந்நிறைந்
தொடியு மூழி யிவணின்றுறு கால்வரை கீழ்ந்தென
நடலை நோக்கிக் கதிர்நாணுவ தொப்ப மறைந்தபின்
கடலை யேந்தி நிலத்திட்டென மாரி கலந்ததே.
பொருள் : உறுகால் வரை கீழ்ந்தென - பெருங்காற்று மலையைப் பிளந்ததாக; மின்னும் இடியும் முழக்கும் இவற்றால் உலகம் நிறைந்து - மின்னாலும் இடியாலும் இடிமுழக்காலும் உலகெங்கும் அம் முகில் நிறைய; நடலை நோக்கிக் கதிர் நாணுவது ஒப்ப மறைந்த பின் - இப் பொய்த் தோற்றத்தைப் பார்த்து, நம்மையின்றியே ஊழி நிகழ்ந்ததென்று ஞாயிறு நாணுவது போல மறைந்த பிறகு ; ஒடியும் ஊழி இவண் இன்று என - உலகம் அழியும் ஊழி இங்கே இப்போது நிகழ்ந்தது என்னும் படி; கடலை ஏந்தி நிலத்து இட்டு என - கடலையெடுத்து நிலமிசை யிட்டாற்போல ; மாரி கலந்தது - மழை கலந்தது.
விளக்கம் : நிறைந்து - நிறைய ; கீழ்ந்து - கீழ்: எச்சத் திரிபு. இடியும் மின்னும் முழக்குமாகிய இவற்றான் என்க. உறுகால் - பெருங்காற்று. நடலை - பொய். கதிர் - ஞாயிறு. (307)
1158. விண்ணு மண்ணும் மறியாதுவி
லங்கொடு மாந்தர்தங்
கண்ணும் வாயும் மிழந்தாங்கடல்
கொண்டது காண்கெனப்
பெண்ணு மாணும் மிரங்கப்
பெருமான்மகன் சாமியை
யண்ண லேந்தி யகலம்புலிக்
கொண்டெழுந் தேகினான்.
பொருள் : விலங்கொடு மாந்தர் - விலங்குகளும் மக்களும்; விண்ணும் மண்ணும் அறியாது - விண்ணெனவும் மண்ணெனவும் அறியாமல் ; தம் கண்ணும் வாயும் இழந்து - கண்ணையும் வாயையும் இழக்குமாறு; ஆம் கடல் கொண்டது காண்க என - மேல் ஊழியிலே வரும் கடல் இப்போது கொண்டதைப் பார்ப்பீராக என்று கூறி; பெண்ணும் ஆணும் இரங்க - பெண்டிரும் ஆடவரும் வருந்த ; பெருமான் மகன் சாமியை - சசசந்தன் மகனான சீவகசாமியை; அண்ணல் ஏந்தி - சுதஞ்சணன் எடுத்து; அகலம் புலிக் கொண்டு - மார்பிலே தழுவிக் கொண்டு; வானில் எழுந்து ஏகினான் - வானில் உயர்ந்து சென்றான்.
விளக்கம் : விலங்குகள் மேயாமையின் வாயிழந்தன; மாமேயல் மறப்ப (நெடுநல். 2) என்றார் பிறரும். (308)
1159. குன்றுண் டோங்கு திரடோளவற்
கொண்டெழுந் தேகலு
நன்றுண் டாக வெனநன்னுதல்
வாழ்த்தினள் வாழ்த்தலு
மொன்றுண் டாயிற் றவளுள்ளழி
நோயுறு காளையை
யென்றுண் டாங்கொல் லினிக்கட்படு
நாளெனுஞ் சிந்தையே.
பொருள் : குன்று உண்டு ஓங்கு திரள் தோளவன் - மலையை அடக்கி வளர்ந்த திரண்ட தோளையுடைய சீவகனை; கொண்டு எழுந்து ஏகலும் - சுதஞ்சணன் கொண்டு போகின்ற அளவில்; நன்னுதல் நன்றுண்டாக என வாழ்த்தினள் - தத்தை நலம் வருக என்று வாழ்த்தினள் ; வாழ்த்தலும் - வாழ்த்தின அளவிலே; இனி உயர் காமனைக் கண்படும் நாள் என்று உண்டாம்கொல் - இனி உயர்ந்த சீவகனைக் கண்ணாற் காணும் காலம் எப்போது உண்டாகுமோ? எனும் சிந்தை - என்னும் நினைவாகிய ; அவள் உள்அழி நோய் ஒன்று உண்டாயிற்று - அவள் மனம் வருந்தும் நோய் ஒன்று நேர்ந்தது.
விளக்கம் : குன்று உண்டு : உண்டு : உவம வாசகம். நாளென்றது காலத்தை உணர்த்தும். (309)
1160. சந்தமா லைத்தொகை தாழ்ந்துசாந் தங்கமழ் பூமியுள்
வந்தவிண் ணோர்களை வாழ்த்தியேத் திம்மலர் மாலைதூ
யெந்தை மார்க ளெழுகென்ன வேகவிடுத் தாள்குரல்
சிந்தை செய்யுஞ் சிறகர்க்கிளி தோற்குமந் தீஞ்சொலாள்.
பொருள் : சந்த மாலைத்தொகை தாழ்ந்து சாந்தம்கமழ் பூமியுள் - நிறமிகும் மாலைத்திரள் தூங்கப்பெற்றுச் சந்தனங் கமழ்கின்ற தான் வழிபட்ட நிலத்திலே ; வந்த விண்ணோர்களை மலர்மாலைதூய் வாழ்த்தி ஏத்தி - வந்த வானவர்களை மலர்மாலை தூவி வாழ்த்திக் கொண்டாடி ; எந்தைமார்கள் எழுக என்ன - எந்தையர்காள்! போவீராக என்று ; குரள் சிந்தை செய்யும் - யாழிற் குரல் என்னும் நர்ம்பு தான் இத்தன்மை பெறவேண்டும் என்று கருதுகின்ற ; சிறகர்க்கிளி தோற்கும் - சிறகினையுடைய கிளி தோல்வியுறுகின்ற; அம் தீ சொலாள் - அழகிய இன்மொழித் தத்தை; ஏக விடுத்தாள் - போக விடுத்தாள்.
விளக்கம் : குரல் சிந்தை செய்யும் தீஞ்சொல், சிறகர்க்கிளி தோற்கும் தீஞ்சொல் எனக் கூட்டுக. தான் வழிப்பட்ட வானவர் செய்து முடிக்கும் வேலை, வேறு வகையால் முடிதலின், அவரைப் போக வென்றாள். (310)
வேறு
1161. மலைத்தொகை யானை மன்னன்
மைத்துனன் மதன னென்பான்
கொலைத்தொகை வேலி னானைக்
கொல்லிய கொண்டு போந்தா
னலத்தகை யவனைக் காணா
னஞ்சுயிர்த் தஞ்சி நோக்கிச்
சிலைத்தொழிற் றடக்கை மள்ளர்க்
கிற்றெனச் செப்பு கின்றான்.
பொருள் : மலைத்தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான் - மலைக் கூட்டம் போன்ற யானைக் கூட்டத்தையுடைய வேந்தனின் மைத்துனனாகிய மதனன் என்பவனாகிய; கொலைத் தொகை வேலினானைக் கொல்லிய கொண்டு போந்தான் - கொலைகளைக் கணக்கிடும் வேலேந்திய சீவகனை அரசன் கொல்வதற்குக் கொண்டு வந்தான்; நலத்தகையவனைக் காணான் - நலமிகும் பண்புடைய சீவகனைக் காணாமல்; நஞ்சு உயிர்த்து அஞ்சி நோக்கி - நஞ்சென மூச்சுவிட்டு அச்சத்துடன் பார்த்து ; சிலைத் தொழில் தடக்கை மள்ளர்க்கு - விற்றொழில் புரியும் பெருங்கை வீரர்கட்கு ; இற்றெனச் செப்புகின்றான் - இவ்வாறு பொருத்தமில்லை.
விளக்கம் : மன்னற்கு என்னும் பாடம் பொருட் பொருத்தமில்லை. மலைத்தொகை போன்ற யானைத்தொகையையுடைய மன்னன் என்க. தொகை - கூட்டம். மன்னன் - ஈண்டுக் கட்டியங்காரன். மைத்துனனாகிய மதனன் என்பான் என்க. கொலைத்தொகை வேலினான் - கொலைத்தொழின் மிக்க கூட்டமாகிய வேற்படையையுடையவன் என்க. வேலினான் - ஈண்டுச் சீவகன். (311)
1162. மன்னனாற் சீறப் பட்ட
மைந்தனைக் கொல்லப் போந்தா
மென்னினிச் சொல்லிச் சேறு
மென்செய்தும் யாங்க ளெல்லா
மின்னது பட்ட தென்றா
லெரிவிளக் குறுக்கு நம்மைத்
துன்னுபு சூழ்ந்து தோன்றச்
சொல்லுமின் செய்வ தென்றான்.
பொருள் : மன்னனால் சீறப்பட்ட மைந்தனைக் கொல்லப் போந்தாம் - அரசனாற் சினக்கப்பெற்ற சீவகனைக் கொல்லக் கைக்கொண்டு வந்த நாம் ; இன்னது பட்டது என்றால் நம்மை எரிவிளக்குறுக்கும் - யாம்பட்ட துன்பம் இத்தன்மைத்தென்று கூறின் நம்மை நடைவிளக்கு எரிப்பான்; யாங்கள் இனி என் சொல்லிச் சேறும் - நாம் இனி யாது கூறிச் செல்வோம்?; என் செய்தும்?- யாது புரிவோம்?; துன்னுபு சூழ்ந்து செய்வது தோன்றச் சொல்லுமின் என்றான் - எல்லோரும் ஒன்று கூடி ஆராய்ந்து செய்யக்கடவதை விளங்கச் சொல்லுங்கோள் என்றான்.
விளக்கம் : மன்னன் : கட்டியங்காரன். மைந்தன் : சீவகன். சேறும் - செல்வேம். செய்தும் - செய்வேம். தன் கையறவு தோன்ற என் சொல்லிச் சேறும் என்செய்தும் என்றான். எரி விளக்குறுத்தல் குற்றஞ் செய்தார் தலையில் விளக்கேற்றிவைத்து ஊர்வலஞ் செய்விக்குமொரு தண்டனை. துன்னுபு - கூடி . (312)
1163. வாழ்வதோ ருபாய நாடி மதியுடம் பட்டு வல்லே
சூழ்வினை யாள ராங்க ணொருவனைத் தொடர்ந்து பற்றிப்
போழ்படப் பிளந்து வாளிற் புரட்டியிட்டரியக் கண்டே
யாழ்கல மாந்தர் போல வணிநக ரழுங்கிற் றன்றே.
பொருள் : சூழ்வினையாளர் - ஆராய்ச்சி செய்தோர்; வாழ்வதோர் உபாயம் நாடி - தாம் உயிர் வாழும் ஒரு சூழ்ச்சியை எண்ணி; மதி உடம்பட்டு - அறிவு ஒன்றுபட்டு; ஆங்கண் ஒருவனை வல்லே தொடர்ந்து பற்றி - ஆங்குச் சென்ற ஒருவனை விரைந்து பின்சென்று ப்ற்றி ; வாளின் போழ்படப் பிளந்து - வாளால் வகிர்படப் பிளந்து; புரட்டியிட்டு அரிய - (வடிவு தெரியாமற்) புரட்டி யிட்டுவைத்து அரிதலைப் பார்த்து ; ஆழ்கலம் மாந்தர் போல - கடலில் அமிழும் கலத்தில் உள்ள மக்களைப் போல ; அணிநகர் அழுங்கிற்று - அழகிய நகரம் வருந்தியது.
விளக்கம் : சூழ்வினையாளர் நாடி உடம்பட்டு ஒருவனைப் பற்றிப் பிளந்து புரட்டி அரியக் கண்டு நகர் அழுங்கிற்று என்க. வாழ்வதோர் உபாயம் - தாங்கள் கட்டியங்காரன் சினத்திற் றப்பி உயிர்வாழ்தற்குரியதொரு சூழ்ச்சி. ஒருவனை என்றது ஏதிலான் ஒருவனை என்பதுபட நின்றது. அணிநகர்: ஆகுபெயர். (313)
1164. காய்சின வெகுளி வேந்தே
களிற்றொடும் பொருத காளை
மாசனம் பெரிது மொய்த்து
மழையினோ டிருளுங் காற்றும்
பேசிற்றான் பெரிதுந் தோன்றப்
பிழைத்துய்யப் போத லஞ்சி
வாசங்கொ டாரி னானை
மார்புபோழ்ந் துருட்டி யிட்டேம்.
பொருள் : காய்சின வெகுளி வேந்தே! - சுடுகின்ற சீற்றமுடைய அரசே!; களிற்றொடும் பொருத காளை - நம் பட்டக் களிற்றுடன் போர் செய்த சீவகனுடைய; மாசனம் பெரிதும் மொய்த்து - பெருஞ் சுற்றத்தார் நெருங்கி மொய்ப்ப; மழையினோடு இருளும் காற்றும் - மழையும் இருளும் காற்றுமாக; பேசின் பெரிதும் தோன்ற - கூறுமிடத்து மிக்குத் தோன்றின அளவிலே; பிழைத்து உய்யப் போதல் அஞ்சி - எங்களிடமிருந்து தப்பி அவன் உய்ந்து போதற்கு அஞ்சி; வாசம்கொள் தாரினானை - மணங்கமழ் மாலையுடைய அவனை; மார்பு போழ்ந்து உருட்டியிட்டேம் - மார்பைப் பிளந்து தள்ளி விட்டோம்.
விளக்கம் : அரசனிடம் சென்று இங்ஙனம் மதனன் முதலியோர் கூறினர் என்று கொள்க. காய்சினம் : வினைத்தொகை. காளை : சீவகன் . மாசனம் - பெரிய மாந்தர் கூட்டம், என்றது சீவகன் சுற்றத்தாரை. மொய்த்து - மொய்ப்ப. பேசிற்றான் என்புழி, தான் அசை. தாரினானை: சீவகனை. (314)
1165. அருள்வலி யாண்மைகல்வி யழகறி விளமை யூக்கந்
திருமலி யீகை போகந் திண்புகழ் நிண்பு சுற்ற
மொருவரிவ் வுலகில் யாரே சீவக னொக்கு நீரார்
பெரிதரி திவனைக் கொன்றாய் பெறுகெனச் சிறப்புச் செய்தான்.
பொருள் : அருள் வலி ஆண்மை கல்வி அழகு அறிவு இளமை ஊக்கம் திருமலி ஈகை போகம் திண்புகழ் நண்பு சுற்றம் - அருளும் மெய்வலியும் ஆளுந்தன்மையும் கல்வியும் அழகும் இயற்கை அறிவும் இளமையும் முயற்சியும் செல்வம் மிகுங் கொடையும் எல்லாவற்றையும் நுகரும் பேறும் திண்ணிய புகழும் நட்பும் உறவும் ஆகியவற்றில்; இவ்வுலகிற் சீவகன் ஒக்கும் நீரார் ஒருவர் யாரே?- இவ்வுலகிலே சீவகனைப் போன்றவர் ஒருவருமிலர் ; பெரிது அரிது இவனைக் கொன்றாய் - பெரிதும் அரியதாக இவனைக் கொன்றனை; பெறுக எனச் சிறப்புச் செய்தான் - நீ இவற்றைப் பெற்றுக் கொள்க என்று மதனனுக்குச் சிறப்புப் பல செய்தனன்.
விளக்கம் : யாரே : ஏ : எதிர்மறை இடைச்சொல். திருமலிதற்குக் காரணமான ஈகை என்க. போகம் - ஈண்டுக் காம நுகர்ச்சி. உலகுள்ள காலமெல்லாம் நிலையுதலின் திண்புகழ் என்றான். நீரார் - தன்மையுடையோர். இதனால் கட்டியங்காரன் சீவகன்பால் அழுக்காறுடையனாதற்குரிய காரணங்கள் தொகுத்துக் கூறப்பட்டன. (315)
குணமாலையார் இலம்பகம் முற்றிற்று.
---------------
5. பதுமையார் இலம்பகம்
கதைச் சுருக்கம்: இவ்வாறு சுதஞ்சணனோடிருந்த சீவகன் நாடுகள் பலவற்றினுஞ் சென்று ஆங்காங்குள்ள காட்சிகளைக் காணவிரும்பினான். இவ்விருப்பத்தைச் சுதஞ்சணனுக்குக் கூறினன். அதுகேட்ட சுதஞ்சணன் சீவகனுக்கு நெறியின் இயல்பு கூறி மேலும் காமனுங் காமுறப்படும் இன்குரல் தருவதும், பாம்பு முதலியவற்றால் உண்டாகுந் தீங்குகளையும் நோய்களையும் தீர்ப்பதும், கருதிய உடம்பினைத் தருவதுமாகிய மூன்று மறைமொழிகளைச் செவியறிவுறுத்தனன். பின்னர்ச் சீவகனை இனிதினேந்திக்கொண்டு இழிந்து, நிலவுலகில் விடுத்துச் சென்றான். சீவகன் சுதஞ்சணன் கூறிய நெறிபற்றிச் சென்றனன். வழியில் கொலைத்தொழிலை மேற்கொண்டுழன்ற வேடனொருவனைக் கண்டு அவனுக்கு உறுதிமொழிகூறி நன்னெறிப்படுத்தனன். அப்பால் செல்லுங்கால் காட்டுத் தீயால் வளைப்புண்ட யானைத்திரளைக் காப்பாற்றினன். பின்னர் அரணபாதம் என்னும் மலையை எய்தி ஆண்டு அருகக்கடவுளை வணங்கினன். சாரணர்களைக் கண்டு வணங்கினன். பின்னர்ப் பல்லவ நாட்டிலுள்ள சந்திராபம் என்னும் நகரை அடைந்தனன். அந்நகரத்தரசனாகிய தனபதியோடும், அவன் மகனான உலோக பாலனோடும் கேண்மை கொண்டனன். அவ்வரசன் மகளாகிய பதுமை என்பாளைப் பாம்பு தீண்டியதாக, அவளுற்ற விட நோய் தீர்த்து அவளை மணந்தனன். அவளோடு இரண்டு திங்கள் இன்புற்று அந்நகரத்தே வதிந்தனன். பின்னரும் நாடுகாணும் வேட்கை மிகுதலாலே நள்ளிரவிற் பதுமையைப் பிரிந்து வேற்றுருக்கொண்டு அந்நகரத்தினின்றும் புறப்பட்டுச் சென்றனன்.
சீவகன் பிரிவால் பதுமை பெரிதும் வருந்தினள். தன் தோழிமாருள் ஒருத்தி தேற்ற ஒருவாறு தேறியிருந்தாள். தனபதி மன்னன் தன் மகள் துயரம் பொறானாய்ச் சீவகனைத் தேடிக்கொணர்தற்குச் சிலரை ஏவினான். அவர்கள் சீவகனையாண்டுந் தேடி ஓரிடத்தே கண்டு நின்போன்ற இளமையும் வடிவுமுடையான் ஓர் ஏந்தலை நீ யாண்டேனும் கண்டதுண்டோ? என்று வினவினர் அதுகேட்ட சீவகன், நண்பரீர்! நீயிர் தேடா நின்ற அக்காதலனை ஒன்பதாந் திங்களிலே காண்பீர்! இவ்வுண்மையை நும் மன்னனுக்குக் கூறுமின்! என்று கூறிவிடுத்தனன். அவரும் சென்று அரசனுக்கு அந்நிகழ்ச்சியினை அறிவுறுத்தனர். சீவகன் பின்னர் அவ்விடத்தினின்றும் புறப்பட்டு ஒரு திசையே செல்லா நின்றனன்.
1166. வீட்டருஞ் சிறையிற் றேவன்
விடுத்துயக் கொள்ளப் பட்ட
கோட்டமில் குணத்தி னான்போ
யென்செய்கின் றான்கொ லென்னிற்
கூட்டரக் கெறிந்த பஞ்சிற்
கூடிய பளிங்கிற் றோன்றுந்
தீட்டரும் படிவ மன்னான்
றிறங்கிளந் துரைத்து மன்றே.
பொருள் : வீடு அருஞ் சிறையில் தேவன் விடுத்து உயக்கொள்ளப்பட்ட - எல்லா வழியானும் விடுவித்தற்கரிய சிறையிலிருந்து சுதஞ்சணனால் விடுவித்து வாழ்விக்கப் பெற்ற; கோட்டம் இல் குணத்தினான் போய் என் செய்கின்றான் என்னின் - குற்றம் அற்ற பண்புடைய சீவகன் (அவனுடன்) சென்று என்ன செய்கிறான் என்றால்; கூட்டு அரக்கு எறிந்த பஞ்சின் - செவ்வரக்கு ஊட்டிய பஞ்சினாலே; கூடிய பளிங்கில் தோன்றும் - அப் பளிங்கினிடத்தே தோன்றுகிற; தீட்ட அரும் படிவம் அன்னான் திறம் - எழுதற்கரிய படிவத்தைப் போன்ற சீவகனின் நிலையை; கிளந்து உரைத்தும் - முற்படச் சுதஞ்சணன் செயலையுரைத்துப் பின்னர் உரைப்போம்.
விளக்கம் : இந்நிலையினும் ஆசிரியனுக்குரைத்த மொழி தப்பாமையிற் சீவகனைக் கோட்டம் இல் குணத்தினான் என்றார். பிறவழிகளால் போக்குதற்கரிய சிறை என்பார் வீட்டருஞ்சிறை என்றார். விடுத்து - விடுவித்து. கோட்டம் - குற்றம், கூட்டு அரக்கெறிந்த பஞ்சு - செல்வரக்குக் கூட்டிய ஊட்டின பஞ்சு என மாற்றுக. பளிங்கைக் கூடிய பஞ்சாலே அப்பளிங்கிடத்தே தோன்றும் படிவத்தை ஒப்பான் - சீவகன். வண்தளிர் என்னும் (1225) செய்யுள்காறும் சுதஞ்சணன் செய்தி கூறப்படும். (1)
1167. விலங்கிவில் லுமிழும் பூணான்
விழுச்சிறைப் பட்ட போழ்து
மலங்கலந் தாரி னான்வந்
தருஞ்சிறை விடுத்த போழ்தும்
புலம்பலு மகிழ்வு நெஞ்சிற்
பொலிதலு மின்றிப் பொன்னார்ந்
துலங்கலந் துயர்ந்த தோளா
னூழ்வினை யென்று விட்டான்.
பொருள் : விலங்கி வில் உமிழும் பூணான் - விட்டுவிட்டொளியைச் சிந்தும் அணிகலன்களையுடைய கட்டியங்காரனின்; விழுச் சிறைப்பட்ட போழ்தும் - சீரிய சிறையிலே அகப்பட்ட காலத்தும்; அலங்கல் அம் தாரினான் வந்து - அசையும் அழகிய மாலையை யுடைய சுதஞ்சணன் போந்து; அருஞ்சிறை விடுத்த போழ்தும் - அரிய சிறையிலிருந்து விடுவித்த காலத்தும்; பொன் ஆர்ந்து உலம் கலந்து உயர்ந்த தோளான் - பொன் அணி நிறைந்து, உருண்ட கல்லென இறுகி உயர்ந்த தோள்களையுடைய சீவகன்; புலம்பலும் மகிழ்வும் நெஞ்சிற் பொலிதலும் இன்றி - வருந்தலும் மகிழ்தலும் உள்ளத்திற் பொருந்துதலுமுண்டாகாமல்; ஊழ்வினை என்று விட்டான் - (இரண்டையும்) பழவினைப் பயன் என்றே கருதி நீக்கிவிட்டான்.
விளக்கம் : அன்னத்தைச் சிறை செய்த பயனாற் கிடைத்ததாகலின் சீரிய சிறை என்றார். பொலிதலும் : உம் இழிவு சிறப்பு. சாரணரும் பின்னர், சிறைப்பட்டனை போலும் (சீவக. 2890) என்றனர். இதனானும் சீவகனுடைய இன்பத்திற்களிக்காமலும் துன்பத்திற்றுளங்காமலும் இருத்தற்குக் காரணமான மெய்யுணர்ச்சி விதந்தோதப் பட்டமையுணர்க. விழுச்சிறை - இடும்பையுடைய சிறை எனினுமாம். விழுமம் சீர்மையுஞ் சிறப்பும் இடும்பையும்“ என்பது தொல்காப்பியம் (உரி. 57.) (2)
1168. வானர முகள நாக மலர்துதைந் தொழுக வஞ்சித்
தேனிரைத் தெழுந்து திங்க ளிறாலெனச் சென்று மொய்க்குங்
கானம ரருவிக் குன்றிற் காய்கதிர் சுமந்தோர் திங்கண்
மேனிமிர்ந் தேறி யாங்குத் தேவன்வெற் பேறி னானே.
பொருள் : நாக மலர் துதைந்து ஒழுக - நாக மலர் தம்முள் நெருங்கித் தேன் வாரும்படி; வானரம் உகள - குரங்குகள் பாய்தலின்; தேன் அஞ்சி இரைத்து எழுந்து - வண்டுகள் அஞ்சி ஆரவாரித்து எழுந்து; திங்கள் இறால் எனச் சென்று மொய்க்கும் - திங்களைத் தேனடையென்று மயங்கிப் போய் மொய்க்கும் வளமுடைய; கான் அமர் அருவிக் குன்றில் - காடமைந்த, அருவி வீழும் வெள்ளி மலையிலே; காய்கதிர் சுமந்து ஓர் திங்கள் மேல் நிமிர்ந்து ஏறி யாங்கு - வெம்மையுறும் ஞாயிற்றைச் சுமந்து ஒரு திங்கள் மேலே நிமிர்ந்த ஏறினாற் போல; தேவன் வெற்பு ஏறினான் - சுதஞ்சணன் சீவகனைச் சுமந்து சந்திரோதய மலைமீது ஏறிச் சென்றான்.
விளக்கம் : ஒழுக என்பதற்குத் தேன் எனும் எழுவாயை வருவிக்க. நாகமலர் - சுரபுன்னைப்பூ. துதைந்து - நெருங்கி. இறால் - தேனடை. கான் - காடு. குன்று - ஈண்டு வெள்ளிமலை. சுதஞ்சணனுக்குத் திங்களும் சீவகனுக்கு ஞாயிறும் உவமைகள். (3 )
1169. திங்களைத் தெளித்திட் டன்ன
பாற்கடற் றிரைசெய் தெண்ணீர்
வெங்கள்விட் டலர்ந்த கண்ணி
விண்ணவ னுரிமை தன்னான்
மங்கல வகையி னாட்டி
மணியணி கலங்கள் சேர்த்திப்
பங்கய நெடுங்க ணானைப்
பவித்திர குமர னென்றான்.
பொருள் : வெம் கள் விட்டு அலர்ந்த கண்ணி விண்ணவன் - விருப்பம் தரும் தேனைச் சொரிந்து மலர்ந்த மாலையணிந்த சுதஞ்சணன்; பங்கய நெடுங்கணானை - தாமரை மலரனைய கண்களையுடைய சீவகனை; திங்களைத் தெளித்திட் டன்ன பால் திரைசெய் கடல் தெள்நீர் - திங்களைக் கரைத்தாற் போன்ற அலையுடைய பாற்கடலிலிருந்து தெளிந்த நீரைக் கொண்டு வந்து; உரிமை தன்னால் மங்கல வகையின் ஆட்டி - உரிமைமகளிரைக் கொண்டு மங்கல விதிப்படி முழுக்காட்டி; மணி அணிகலங்கள் சேர்த்தி - மணிகளிழைத்த அணிகலங்களையும் பூட்டி; பவித்திரகுமரன் என்றான் - தூய மகன் என்ற பாராட்டினான்.
விளக்கம் : சிறைப் பாவம் நீங்கினதாற் பவித்திர குமரன் என்றான். விண்ணவன் - சுதஞ்சணன். உரிமை - மனைவிமார். நெடுங்கணானை - சீவகனை. பவித்திரம் - தூய்மை. (4)
1170. பொன்னணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள் போலும்
பின்னிய முத்த மாலைப் பிணையறாழ் குடையி னீழற்
கன்னியர் கவரி வீசக் கனமணிக் குழைவில் வீச
வின்னிசைக் கூத்து நோக்கி யிருந்தனன் றிலக மன்னான்.
பொருள் : பொன் அணி காம்பு செய்த பொழி கதிர்த் திங்கள்போலும் - பொன்னால் ஆக்கிய காம் பொன்றினைச் சேர்த்த, நிலவினைச் சொரியும் திங்களைப் போன்ற; முத்தமாலைப் பின்னியப் பிணையல் தாழ் குடையின் நீழல் - சல்லியும் தூக்குமாக முத்து மாலை பின்னப்பட்ட, மலர்மாலை யணிந்த குடையின் நீழலிலே; கன்னியர் கவரி வீச - கன்னிப் பெண்கள் கவரிகொண்டு வீச; கன மணிக்குழை வில் வீச - பெரிய மணிக்குழை ஒளிவிட; இன் இசைக் கூத்து நோக்கி - இனிய இசையுடன் கூடிய ஒரு நாடகத்தைப் பார்த்து; திலகம் அன்னான் இருந்தனன் - சீவகன் வீற்றிருந்தான்.
விளக்கம் : பொன் அணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள்: இல் பொருளுவமை. சல்லி பின்னிய முத்துமாலை எனக் கொள்க. பிணையல் - ஈண்டுத் தூங்கவிடப் பட்ட முத்தமாலை. இன்னிசைக்கூத்து - இனிய இ சையோடு கூடிய கூத்து. திலகமன்னான் : சீவகன். (5)
1171. இருமலர்க் குவளை யுண்க ணிமைப்பிலாப் பயத்தைப் பெற்ற
வரிமலர்த் தாரி னான்ற னழகுகண் டளிய வென்னாத்
திருமலர்க் கோதை யைம்பாற் றேவியர் தொடர்பு கேட்ப
வெரிமணிப் பூணி னானு மின்னண மியம்பி னானே.
பொருள் : திருமலர்க் கோதை ஐம் பால் தேவியர் - அழகிய மலர்மாலை அணிந்த கூந்தலையுடைய மனைவியர்; இரு மலர்க் குவளை உண்கண் - கரிய குவளை மலரனைய எம் மைதீட்டிய கண்கள்; அரி மலர்த்தாரினான் தன் அழகு கண்டு - வண்டுகள் மொய்க்கும் மலர்மாலையினானுடைய அழகினைக் கண்டு; இமைப்பு இலாப் பயத்தைப் பெற்ற . - (இதுவரை) இமையாமல் இருந்த பயனைப் பெற்றன; அளிய என்னா - அளிக்கத் தக்கன என்று முகமன் உரைத்து; தொடர்பு கேட்ப - எங்ஙனம் நட்புண்டாயதென்று வினவ; எரி மணிப் பூணினானும் இன்னணம் இயம்பினான் - ஒளி விடும் மணிக்கலன்கள் அணிந்த சுதஞ்சணனும் இவ்வாறு கூறினான்.
விளக்கம் : இருமை. கருமை - நாய்ப் பிறப்பை மறையாமற் கூறலின் இன்னணம் என்றார். இருங்குவளைமலர் போன்ற உண்கண் என்க. வித்தியாதரர் ஆகலின் கண்ணிமையாதிருந்தன. இதுகாறும் அவை வாளா இமையாதிருந்தன. இமையாமல் நோக்கி மகிழ்தற்குரிய இவன் அழகினை அவை இப்பொழுது இடையறாது நுகர்தலின் இமையாமையின் பயனையும் இப்பொழுது எய்தின என்றவாறு. தொடர்பு - நட்பு. பூணினான் : சுதஞ்சணன். (6)
வேறு
1172. பிணிக்குலத் தகவயிற் பிறந்த நோய்கெடுத்
தணித்தகை யுடம்பெனக் கருளி நோக்கினான்
கணிப்பருங் குணத்தொகைக் காளை யென்றனன்
மணிக்கலத் தகத்தமிர் தனைய மாண்பினான்.
பொருள் : மணிக் கலத்து அகத்து அமிர்து அனைய மாண்பினான் - மாணிக்கக் கலத்தில் ஏந்திய அமிர்தம் போன்ற தகவினானான சுதஞ்சணன்; கணிப்பு அருங்குணத் தொகைக் காளை - அளவிடற்கரிய பண்பினையுடைய சீவகன்; பிணிக் குலத்து அகவையின் பிறந்த நோய் கெடுத்து - (நான்) நோய்த் திரளையுடைய விலங்குத் தொகுதியின் அகத்திலே பிறந்த நோயை நீக்கி; அணித்தகை உடம்பு எனக்கு அருளி நோக்கினான் என்றனன் - அழகினைத் தன்னிடத்தே அடக்கிய தெய்வ வுடம்பை எனக்கு நல்கி இந்நிலையிலேயே பார்த்தான் என்றனன்.
விளக்கம் : பிணிக்குலம் - நோய்த்திரள்; எனவே, விலங்காயிற்று. அந் நோய்க் கெல்லாம் அகம் என்றது நாயை; எரிநீரவே நரகம் அந்நரகத் துன்பத் - தொருநீரவே விலங்கு தாமுடைய துன்பம் (சீவக. 2777) என்பர் மேலும். மணிக்கலத்து அமிர்தென்றார், வடிவிற்குத் தக்க கலங்காத குணம் உண்டாதலின். (7)
1173. கடற்சுற வுயரிய காளை யன்னவ
னடற்கரும் பகைகெடுத் தகன்ற நீணில
மடத்தகை யவளொடும் வதுவை நாட்டிநாங்
கொடுக்குவ மெனத்தெய்வ மகளிர் கூறினார்.
பொருள் : கடல் சுறவு உயரிய காளை அன்னவன் - கடலில் வாழும் சுறாமீனைக் கொடியிற்கொண்ட காமனைப் போன்றவனுக்குற்ற; அடற்கு அரும்பகை கெடுத்து - வெல்லுதற்கரிய பகையைக் கெடுத்து; அகன்ற நீள் நிலம் மடத் தகையவளொடும் வதுவை நாட்டி - பரப்புடைய பெருநிலமாகிய மங்கையை மணம் புரிவித்து; நாம் கொடுக்குவம் என - நாம் கொடுப்போம் என்று; தெய்வ மகளிர் கூறினார் - அவன் மனைவியராகிய தெய்வ மடந்தையர் செப்பினர்.
விளக்கம் : மடத்தகையவளொடும் : ஒடு : இரண்டன் பொருளில் மூன்றன் உருபு வந்ததால் உருபு மயக்கம். உம் : அசை; நிலமகளொடு திருமகளும் என எச்சவும்மையுமாம். (8)
1174. செருநிலத் தவனுயிர் செகுத்து மற்றெனக்
கிருநில மியைவதற் கெண்ணல் வேண்டுமோ
திருநிலக் கிழமையுந் தேவர் தேயமுந்
தருநிலத் தெமக்கெனிற் றருகுந் தன்மையீர்.
பொருள் : திருநிலக் கிழமையும் தேவர் தேயமும் நிலத்து எமக்குத் தாரும் எனின் - இன்ப நிலத்துரிமையையும் வானவர் உலகையும் இந்நிலத்தே எமக்குத் தாரும் என்றால்; தருகும் தன்மையீர்! - கொடுக்கும் இயல்புடையீர்!, செருநிலத்து அவன் உயிர் செகுத்து - போர்க் களத்திலே என் எதிரியின் உயிரைப் போக்கி; எனக்கு இரு நிலம் இயைவதற்கு எண்ணல் வேண்டுமோ? - எனக்குப் பெருநிலம் பொருந்துமாறு செய்யச் சிந்தனை செய்யவும் வேண்டுமோ?
(விளக்கம்.) அவனுயிர் செகுத்தல் எளிதென்றான். செகுத்து : செகுப்பேன் என்று தன்மை யொருமை வினைமுற்றாகக் கொள்வதும் பொருந்தும். மற்று : அசை. தாரும் என்பது தரும் எனவும், தரும் என்பது தருகும் எனவும் விகாரமுற்றன. (9)
1175. மண்மிசைக் கிடந்தன மலையுங் கானமு
நண்ணுதற் கரியன நாடும் பொய்கையுங்
கண்மனங் குளிர்ப்பன வாறுங் காண்பதற்
கெண்ணமொன் றுளதெனக் கிலங்கு பூணினாய்.
பொருள் : இலங்கு பூணினாய்! - விளங்கும் அணிகலனுடையாய்!; மண்மிசைக் கிடந்தன - நிலவுலகிலே பரவிக் கிடந்தனவாகிய; நண்ணுதற்கு அரியன - நெருங்குதற்கு இயலாதனவாகிய; மலையும் கானமும் - மலைகளையும் காடுகளையும்; நாடும் பொய்கையும் - நாடுகளையும் பொய்கைகளையும்; கண் மனம் குளிர்ப்பன ஆறும் - கண்ணும் மனமும் குளிர்வனவாகிய ஆறுகளையும்; காண்பதற்கு எண்ணம் ஒன்று எனக்கு உளது - பார்ப்பதற்கு நினைவு ஒன்று எனக்கு உண்டு.
விளக்கம் : மண் - நிலவுலகம். மண்மிசைக் கிடந்தனவாகிய மலையும் கானமும் நாடும் பொய்கையும் ஆறும் என மாறுக. (10)
1176. ஊற்றுநீர்க் கூவலு ளுறையு மீனனார்
வேற்றுநாட தன்சுவை விடுத்தன் மேயினார்
போற்றுநீ போவல்யா னென்று கூறினாற்
காற்றின தமைதியங் கறியக் கூறினான்.
பொருள் : ஊற்று நீர்க் கூவலுள் உறையுள் மீன் அனார் - ஊறும் நீரையுடைய கிணற்றிலே வாழும் மீன் போன்றவர்கள்; வேற்று நாடு அதன் சுவை விடுத்தல் மேயினார் - பிறநாடுகளைக் காணும் இனிமையை விடுத்தவராவார்; நீ போற்று - இவ்விடத்தே நீ பேணி யிரு; யான் போவல் - நான் நாடுகாணச் செல்வேன்; என்று கூறினாற்கு - என்றுரைத்த சீவகனை நோக்கி; ஆற்றினது அமைதி அங்கு அறியக் கூறினான் - நெறியினது நிலைமையை அங்குத் தெரியும்படி கூறினான்.
விளக்கம் : சுதஞ்சணன் உடன்வாரா வண்ணம், போற்று என்றான். கிணற்றில் வாழும் மீன் அந்நீரினுஞ் சிறந்த வேறு நீர் இல்லையென்று அதனையே பெரிது மதித்திருப்பது போலத் தம் ஊரையே மதித்திருப்பார் என்பது. வேற்றுநாடதன்சுவை என்றது பிறநாட்டைக் காணுங்கால் உண்டாகும் இன்பத்தினை. ஆற்றினதமைதி - வழியினது இயல்பு. (11)
வேறு
1177. இம்மலைக் கிரண்டு காத மிறந்தபி னிருண்டு தோன்று
மம்மலை யரண பாத மென்பதன் றாள்வாய்த் தோன்றுந்
தம்வினை கழுவு கின்றார் சாரணர் தரணி காவல்
வெம்மையி னகன்று போந்து விழைவறத் துறந்து விட்டார்.
பொருள் : இம் மலைக்கு இரண்டு காதம் இறந்த பின் - இம் மலையிலிருந்து இரண்டு காதம் கடந்த பிறகு; இருண்டு தோன்றும் அம் மலை அரணபாதம் என்ப - இருண்டு காணப்படும் அம் மலையை அரணபாதம் என்பர்; அதன் தாள் வாய் - அதன் அடி மலையிலே; தோன்றும் தம் வினை கழுவுகின்றார் சாரணர் - பிறப்புக்குக் காரணமான தம் இருவினையையும் போக்குகின்றவராகிய சாரணர்; வெம்மையின் தரணிகாவல் அகன்று போந்து - தாம் வீட்டை விரும்புதலின் உலகக் காவலைத் துறந்து வந்து; விழைவு அறத் துறந்துவிட்டார் - பின்னர்ப் பற்றறத் துறந்துவிட்டவர்கள்.
விளக்கம் : அரண பாதம் - அருகன் கோயிலுள்ள மலை இம்மலை என்றது அவர்களிருக்கும் சந்திரோதயம் என்னு மலையை. காதம் - ஓர் அளவு. என்ப என்பதன் ஈற்றகரம் கெட்டு அதன் என்னுஞ் சுட்டோடு கூடி என்பதன் எனப் புணர்ந்து நின்றது. பிறத்தற்கு ஏதுவான தம்முடைய வினை என்க. தோன்றுகின்ற இருவினையையும் என்பர் நச்சினார்க்கினியர். தரணிகாவல் வெம்மையின் அகன்று போந்து என்பதற்கு - காவற்றொழில் வெம்மையுடைமையால் அகன்று போந்து எனினுமாம். விழைவு - அவாவுமாம். (12)
1178. சிந்தையிற் பருதி யன்னார் சேவடி யிறைஞ்ச லோடும்
வெந்திற லியக்கி தோன்றி விருந்தெதிர் கொண்டு பேணித்
தந்தவ ளமிர்த மூட்ட வுண்டவட் பிரிந்த காலைச்
சந்துடைச் சாரல் சேறி தரணிமேற் றிலக மன்னாய்.
பொருள் : தரணிமேல் திலகம் அன்னாய் - நிலவுலகில் திலகம்போலச் சிறப்புற்றோனே!; சிந்தையின் பருதி அன்னார் சேவடி இறைஞ்சலோடும் - மலங்களைப் போக்கும் மனத்தாலே ஞாயிறு போல்வாருடைய சிவந்த அடிகளை வணங்கின அளவிலே; வெம்திறல் இயக்கி தோன்றி - பேராற்றலுடைய இயக்கி எதிர்ப்பட்டு; அவள் எதிர்கொண்டு அமிர்தம் தந்து பேணி ஊட்ட உண்டு - அவள் நின்னை வரவேற்று அமிர்தத்தைத்தந்து ஓம்பி விருந்தூட்ட உண்டு; அவள் பிரிந்த காலை - அவளைப் பிரிந்த அளவிலே; சந்துடைச் சாரல் சேறி - சந்தன மரங்கள் நிறைந்த அம் மலையின் சாரலிலே செல்வாயாக.
விளக்கம் : அமிர்தந் தந்து பேணி ஊட்ட என மாறுக. அமிர்தம் - ஈண்டு உணவிற்கு ஆகுபெயர். சந்து - சந்தனமரம். (13)
வேறு
1179. அங்குநின் றகன்றபி னையைங் காவதம்.
வெங்களி விடுமத வேழப் பேரினந்
தங்கிய காடது தனிச்செல் வாரிலை
கங்கையின் கரையது கடலிற் றோன்றுமே.
பொருள் : அங்கு நின்று அகன்ற பின் - அங்கிருந்து சென்ற பின்பு; ஐ ஐங்காவதம் வெம்களி விடும் மதவேழப் பேரினம் தங்கிய காடு - இருபத்தைங்காதவழி வெவ்விய களிப்பினாலே சொரியும் மதமுடைய களிற்றுப் பெருந்திரள் தங்கிய காடு உளது; கங்கையின் கரையது கடலின் தோன்றும் - கங்கையின் கரையிலுள்ளதாகிய அது கடல்போலத் தோன்றும்; அது தனிச் செல்வார் இலை - அக் காட்டிலே தனியே செல்பவர் இலர்.
விளக்கம் : அக் காட்டிலே சிறப்பாக யானைத் திரளை மட்டுமே கூறினான் சீவகன் அறஞ் செய்தலை நோக்கி; பஞ்சவர் போல நின்ற பகட்டினப் பரிவு தீர்த்தான் (சீவக. 1237) என்பர் பின்னர். கடல்போல் தோன்றல காடு இறந்தோரே (அகநா. 1-19) என்றார் பிறரும். (14)
1180. புனலெரி தவழ்ந்தெனப் பூத்த தாமரை.
வனமது வாளென வாளை பாய்வன
மனமகிழ் பெருந்தடம் வலத்திட் டேகுதி
யினமலர்த் தாரினா யிரண்டு காதமே
பொருள் : இனம் மலர்த்தாரினாய் - இன மலர்களால் ஆன மாலையினை உடையாய்!; புனல் எரி தவழ்ந்தெனப் பூத்த தாமரை - நீரிலே எரிதவழ்ந்தாற்போல மலர்ந்த தாமரையை உடையவும்; வாள்என வாளை பாய்வன - வாள்போல வாளைகள் பாய்வனவும் ஆன; மனம் மகிழ் பெருந்தடம் - உள்ளக்களிப்பையூட்டும் பெரிய பொய்கைகளை; வலத்து இட்டு - வலப்பக்கத்தே விடுத்து; வனமது இரண்டு காவதம் ஏகுதி - அக்காட்டிலே இரு காவதம் செல்வாயாக.
விளக்கம் : எனவே அக்காட்டின்கண் வாளைபாயும் தாமரைப் பெருந்தடம் உண்மையும் கூறினனாயிற்று. வேற்று நாட்டதன் சுவையே விரும்பிப்போதலின், தாமரைத் தடத்தெழிலை விதந்தோதினான். (15)
1181. காந்திய மணியொடு வயிரம் பொன்கலந்
தேந்தனின் றோளென விரண்டு குன்றுபோய்ப்
பூந்துகின் மகளிரிற் பொலிந்து போர்த்ததோர்
பேந்தரு பேய்வனம் பெரிய காண்டியே.
(இதன்பொருள்.) காந்திய மணியொடு வயிரம் பொன் கலந்து - ஒளி செய்யும் மணிகளுடன் வயிரமும் பொன்னும் கொண்டு; ஏந்தல் நின்தோள் என இரண்டு குன்று போய் - ஏந்திய நின்தோள்களைப் போன்ற இரண்டு குன்றுகள் வளரப் பெற்று; பூந்துகில் மகளிரின் பொலிந்து போர்த்தது - பூந்துகில் அணிந்த மகளிரைப் போலப் பேய்கள் பொலிந்து மனத்தை மறைக்கு மியல்புடையதாகிய; ஓர் பெரிய பேந்தரு பேய்வனம் காண்டியே - ஒரு பேரச்சந்தரும் பேய்வனத்தைக் காண்பாயாக.
விளக்கம் : குன்றுபோய் என்புழிப் போகல் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த போய் என்னும் எச்சம் வளர்ந்து என்னும் பொருள் தந்து பின்னும் செயப்பாட்டுவினை எச்சப்பொருள் பயந்து நின்றது. பேம் - அச்சம்.
பேநாம் உரும் என வரூஉங் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள(தொல். உரி. 69) (16)
1182. இளவெயின் மணிவரை யெறித்திட் டன்னதோ
ரளவரு குங்குமத் தகன்ற மார்பினாய்
களவினி னணிநலங் கவர்ந்த கள்வவென்
றுளர்மணிக் கொம்பனா ருருகி நைபவே.
பொருள் : இளவெயில் மணிவரை எறித்திட் டன்னது - காலை வெயில் மணிவரையிலே வீசியது போன்றதாகிய; ஓர் அளவறு குங்குமத்து அகன்ற மார்பினாய்! - ஒப்பற்ற மிகுதியான குங்குமம் கலந்த பரந்த மார்பினையுடையாய்!; களவினின் அணிநலம் கவர்ந்த கள்வ என்று - களவினிலே அழகையும் நலன்களையும் கவர்ந்த கள்வனே என்று கூறி; உளர் மணிக்கொம்பனார் உருகி நைபவே - அசையும் மணிக்கொடி போன்ற அப் பேய் மகளிர் நின்னைக் கண்டு உருகி வருந்துவார்கள்.
விளக்கம் : மார்பினாய் என்னுந்துணையும் சுதஞ்சணன் சீவகனை விளித்ததாகக் கொள்ளினும் அமையும். அப்பேய்கள் அழகிய மகளிர் உருக்கொண்டு நின்னை இங்ஙனம் மயக்கும் என்பது தோன்ற மணிக் கொம்பனார் என்றான். நைப : பலர் அறிசொல். (17)
1183. பழங்குழைந் தனையதோர் மெலிவிற் பையென
முழங்கழல் வேட்கையின் முறுகி யூர்தரத்
தழும்பத மிதுவெனச் சார்ந்து புல்லலும்
பிழிந்துயி ருண்டிடும் பேய்க ளாபவே.
பொருள் : முழங்கு அழல் வேட்கையின் - பொங்கும் தீயனைய வேட்கையினாலே; பழம் குழைந்தனையதோர் மெலிவின் - பழங்குழைந்தாற் போன்ற மேனி மெலிவுடன்; பையென முறுகி ஊர்தர - மெல்ல மிகவும் அருகில் நெருங்கினவுடனே; தழும்பதம் இது எனச் சார்ந்து புல்லலும் - தழுவும் காலம் இது என எண்ணித் தழுவியவுடனே; பிழிந்து உயிர் உண்டிடும் பேய்கள் ஆப - உயிரைப் பிழிந்து பருகும் பேய்களாய் விடுவர். (ஆகையால், அப் பேய் மகளிரைத் தழுவற்க.)
விளக்கம் : முறுகி என்றற்கு மிக்கு எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர்; வேட்கையின் முறுகி என இயைத்து முதிர்ந்து எனலுமாம். தழுவும்; தழும் என ஈற்றுயிர் மெய்கெட்டு நின்றது. செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சமாகலின். (18)
வேறு
1184. கண்டபேய் நகரி னீங்கிக் காவதங் கடந்து தோன்றும்
வெண்டலைப் புணரி வீசிக் கிடந்தபொற் றீவிற் றாகிக்
கொண்டுலப் பரிய செந்நெல் கொடிக்கரும் புடுத்த வேலி
நுண்டுகி னுழைந்த வல்குற் பவளமொத் தினியதொன்றே.
பொருள் : கண்ட பேய் நகரின் நீக்கிக் காவதம் கடந்து - காணப்பட்ட அப் பேய் நகரினின்றும் நீங்கிக் காவதம் கடந்த அளவிலே; கொண்டு உலப்ப அரிய செந்நெல் கொடிக் கரும்பு உடுத்த வேலி - அறுத்துத் தொலைத்தற்கரிய செந்நெல்லை, ஒழுங்கினையுடைய கரும்பு சூழ்ந்த வேலி; அல்குல் நுண்துகில் நுழைந்த பவளம் ஒத்து - அல்குலிலே நுண்ணிய துகிலினுள் நுழைந்து கிடந்த பவள மேகலையையும் ஒப்ப; வெண்தலைப் புணரி வீசிக் கிடந்த பொன் தீவிற்று ஆகி - வெண்மையான அலைகளையுடைய கடல் சூழ்ந்த கிடந்த பொற்றீவின் தன்மையுடையதாய்; இனியது ஒன்று தோன்றும் - இனியதொரு நாடு தோன்றும்.
விளக்கம் : கடந்து - கடப்ப : எச்சத்திரிபு. கொடி - ஒழுங்கு. தீவிற்றாகி - தீவின் தன்மைத்தாய் என்க. கொண்டுலப்பரிய என் புழிக்கொண்டு என்பதனைக்கொள எனத் திரிந்துக்கொள்க. தீவிற்றாகி மேலும் அதன்கண் வேலி அல்குற் பவளம் ஒத்தலான் காண்டற்கினியதொன்று என்பது கருத்து. (19)
1185. படுமழை பருவம் பொய்யாப் பல்லவ தேய மென்னுந்
தடமலர்க் குவளைப் பட்டந் தழுவிய யாணர் நன்னாட்
டிடைநெறி யசைவு தீர விருந்தவ ணேக லுற்றாற்
கடநெறி கடத்தற் கின்னாக் கல்லத ரத்த முண்டே.
பொருள் : படுமழை பருவம் பொய்யா - பெய்யும் மழை காலம் தவறாத; பல்லவ தேயம் என்னும் - பல்லவ நாடு என்னும் பெயரையுடைய; தடம் மலர்க்குவளைப் பட்டம் தழுவியயாணர் நன்னாட்டு - பெரிய குவளை மலர்களையுடைய குளங்கள் பொருந்திய, புது வருவாயுமுடைய அழகிய நாட்டிலே; இடைநெறி அசைவு தீர இருந்து - வழி வருத்தம் நீங்க ஒரு திங்கள் தங்கி; அவண் ஏகல் உற்றால் - அங்கிருந்து மேற்செல்லத் தொடங்கினால்; கடம் நெறி கடத்தற்கு இன்னாக் கல்அதர் அத்தம் உண்டு - காட்டு வழி கடந்து போதற்குப் பொல்லாததொரு கல்வழி உண்டு.
விளக்கம் : பல்லவ தேயத்தில் அசைவு தீர இருந்து என்றதனாற் பதுமையைக் கொள்ளுதலுங் கூறினானாயிற்று. (20)
வேறு
1186. நுதிகொண்டன வெம்பர னுண்ணிலைவேல்
பதிகொண்டு பரந்தன போன்றுளவால்
விதிகண்டவ ரல்லது மீதுசெலார்
வதிகொண்டதொர் வெவ்வழல் வாய்சொலின்வேம்.
பொருள் : வதி கொண்டது ஒர் வெவ்வழல் சொலின் வாய்வேம் - அவ்வழி கொண்டதாகிய ஒப்பற்ற கொடிய அனலைக் கூறின் வாயும் வேகும்; நுதி கொண்டன வெம்பரல் - கூர்மைமையைக் கொண்டனவாகிய கொடிய பரல்கள்; நுண் இலை வேல் பதி கொண்டு பரந்தன போன்று உள - நுண்ணிய இலை முகமுடைய வேல்கள் பதித்தல் கொண்டு பரவின போன்றுள்ளன; விதி கண்டவர் அல்லது மீது செலார் - ஊழ்வினை முற்றி இறத்தற்குரியவர் அல்லது மற்றவர் அவ்வழி செலார்.
விளக்கம் : விதியைப் புறங்கண்ட தபோதனர் மேலேயெழப் பறந்து போவதல்லது வேறு போகார் என்றும் உரைக்கலாம் என்பர் நச்சினார்க்கினியர். (21)
1187. குழவிப்பிடி குஞ்சர மாழ்குமெனத்
தழுவிச்சுடு வெவ்வழ றாங்குவன
கெழுவிப்பெடை யைக்கிளர் சேவறழீஇத்
தொழுதிச்சிற கிற்றுய ராற்றுவன.
பொருள் : குழவிப்பிடி மாழ்கும் என - குழவியையுடைய பிடிகள் மயங்கும் என்றும் கருதி; குஞ்சரம் தழுவி - களிறுகள் அவற்றைத் தழுவி வெப்பத்தைத் தாங்குவன; கிளர் சேவல் பெடையைத் தழீஇ - ஊக்கமுறுஞ் சேவல்கள் தம் பெடையைத் தழுவி; தொழுதிச் சிறகால் துயர் ஆற்றுவன - தம் திரட்சியுறு சிறகினாலே காத்துத் துயரைத் தணிப்பன.
(விளக்கம்.) தழீஇ : சொல்லிசை அளபெடை. குழவி - கன்று, இளமையுமாம். பிடி - பெண்யானை. குஞ்சரம் - ஈண்டுக் களிறு என்னும் பொருட்டு; மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே என்றார் கலியினும் (11-12-13.) (22)
1188. கலையின் பிணை கன்றிடு மென்றுகசிந்
திலையின்னிழ லவ்வயி னின்மையினா
னிலையின்னிழ றானது நின்றுகொடுத்
துலையும்வெயி னின்றுரு கும்முரவோய்
பொருள் : உரவோய்! - அறிஞனே!; இலையின் நிழல் அவ்வயின் இன்மையினான் - இலையுடைய நிழல் அங்கேயில்லாததால்; இன்பிணை கன்றிடும் என்று கசிந்து - தன் இனிய பிணைமான் வருந்தும் என்று மனம் வருந்தி; அது நிலையின் நிழல் நின்று கொடுத்து - அக்கலை தான் நின்று தன்னிலையிற் பிறந்த நிழலை அதற்குக் கொடுத்து; உலையும் வெயில் நின்று உருகும் - வாட்டும் வெயிலில் நின்று உருகும்.
விளக்கம் : வெயில் நின்று உருகும் என்பதை முற்பாட்டிற் குஞ்சரத்திற்கும் சேவலுக்கும் இயைக்க. கலை - ஆண்மான். இன்பிணை - இனிய பெண்மான். கன்றுதல் - வருந்துதல். அவ்வயின் - அப்பாலையின்கண். அக்காட்டில் இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே என்றார் கலியினும் (11-16-7) (23)
1189. கடநாக மதங்கலந் துக்கநிலத்
துடைநாணென மின்னென வொண்மணியம்
படநாக மழன்று பதைத்துவரு
மடனாமய லார்மனம் வைப்பதுவே.
பொருள் : கடநாகம் மதம் கலந்து உக்க நிலத்து - மத யானைகளின் மதம் வெம்மை மிகுதியாலே சிறு நீருடனே கலந்து சொரிந்த நிலத்திலே; ஒண்மணி அம் படநாகம் - ஒளிவிடும் மணியையுடைய அழகிய படமுறும் நாகம்; உடை நாண் என மின் என - (ஈரமாக நினைத்து வந்து வீழ்ந்து) முறுக்குவிட்ட கயிறெனவும் மின்கொடி எனவும்; அழன்று பதைத்து வரும் - வெந்து பதைத்துப் போகும்; அயலார் மனம் வைப்பது மடன் ஆம் - (ஆகையால்) விதிகண்டவரல்லது மற்றவர் அந் நெறி செல்லக் கருதுதல் அறியாமையாம்.
விளக்கம் : மதங்கள் கலந்த நிலத்து என்றும் பாடம். ஆகையால், நீயும் அவ்வழி செல்லாதே என்றானாயிற்று. நச்சினார்க்கினியர் 1186 முதல் நான்கு பாட்டையும் ஒரு தொடராக்கி, விதி கண்டவரல்லது மீது செலார் என்பதை இறுதியிற் கூட்டுவர். கடநாகம் - மதயானை; காட்டியானையுமாம். உடைநாண் : வினைத்தொகை; முறுக்குடைந்த கயிறு என்க. அயலார் : விதிகாணாதார். (24)
1190. நெறியிற்றளர் வார்தம நெஞ்சுருகிப்
பொறியிற்றளர் வார்புரி வார்சடையா
ரறிமற்றவர் தாபத ரவ்வழியார்
கறைமுற்றிய காமரு வேலவனே.
பொருள் : கறை முற்றிய காமரு வேலவனே! - குருதிக்கறை முற்றிய விருப்பூட்டும் வேலவனே!; நெறியின் தளர்வார் - நன்னெறியிலிருந்து விலகியவரும்; தம் நெஞ்சு உருகிப் பொறியின் தளர்வார் - தம் உள்ளம் நெகிழ்ந்து ஐம்பொறிகளினாலே தளர்வாரும், புரிவார் சடையார் - முறுக்கின நீண்டசடையுடைய வரும் (ஆகிய); அவர் தாபதர் அவ்வழியார் - அவர் முனிவராகி அந்நெறியிலே உளர்; அவர் அறி - அவர்களைக் கண்டு அவர் தன்மையை அறிந்து செல்.
விளக்கம் : நெறி - நல்லொழுக்கம். பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவி. அறி : ஏவல் வினை : கறை - நஞ்சுமாம். வேலவன் : சீவகன். நெறியிற்றளர்வாரும், பொறியிற்றளர்வாரும், புரிவார் சடையாராகி அவரே தாபதரா யவ்வழியிருப்பார் அறி என வினை முடிவுசெய்க. (25)
1191. குலைவாழை பழுத்த கொழும்பழனு
நிலைமாத்தன தேமுறு தீங்கனியும்
பலவீன்றன முள்ளுடை யள்ளமிர்து
மலையாற்றயல் யாவு மடுத்துளவே.
பொருள் : குலைவாழை பழுத்த கொழும் பழனும் - குலையையுடைய வாழைகளிற் பழுத்த வளமிகு பழங்களும்; நிலை மாத்தன தேம் உறு தீ கனியும் - நிலையான மாவினிடமுள்ள தேன் பொருந்திய இனிய கனிகளும்; முள் உடை பலவு ஈன்றன அள் அமிர்தும் - முள்ளுடைய பலவின் கனியிலுள்ள செறிந்த அமிர்தும்; யாவும் - பிறவும்; மலை யாற்றயல் மடுத்து உள - மலைக்கும் யாற்றிற்கும் நடுவே நெருங்கியுள்ளன.
விளக்கம் : எனவே ஆண்டுள்ள தாபதர் அவற்றை உணவாகக் கொள்வர் என்க. பழன் - பழம் : மகரத்திற்கு னகரம் போலி. மாத்தன - மாமரத்திலுள்ளன. தேம் - இனிமை. தீங்கனி என்புழி தீம் வாளா பெயர் மாத்திரையாய் நின்றது. அள் - செறிவு. அமிர்து - ஈண்டுக் கனிக்கு உவமவாகுபெயர். (26)
1192. வளம்பைம்பொனும் வாளொளி நீண்மணியு
மொளிர்கின்றன வோசனை நீணிலமுந்
தளர்வொன்றிலர் தாபதர் தாம்விழையுங்
குளிர்கொண்டதொர் சித்திர கூடமதே
பொருள் : வளர் பைம்பொனும் வாள்ஒளி நீள் மணியும் - மிகுகின்ற புதிய பொன்னும் பேரொளியுறு பெருமணிகளும்; ஒளிர்கின்றன ஓசனை நீள் நிலமும் - இவற்றின் ஒளி பரவிய ஓர் யோசனை அளவான பெரும் பரப்புறு நிலமும்; தாபதர் தளர்வு ஒன்றிலர் தாம் விழையும் - தாபதர்கள் தளர்ச்சி யிலராய் விழைவு கொள்கின்ற; ஓர் குளிர் கொண்டது - ஒரே வகையான குளிர்ச்சியுடையது; அது சித்திரகூடம் - அம்மலை சித்திரகூட மெனப்படும்.
விளக்கம் : வாள் ஒளி : ஒருபொருட் பன்மொழி. நிலமும் ; உம் : முற்றும்மை. தாம் வளையும் என்பதூஉம் பாடம் சித்திர கூடத்திற்கும் யாற்றிற்கும் இடையே பலவகை யினிய கனிகள் கிடைப்பதாலும் அந்நிலம் ஓரோசனை அளவும் தண்மை நிலவுவதாலும் தாபதர் தளர்விலராய் இருப்பர். (27)
1193. முழவின்னிசை மூரி முழங்கருவி
கழையின்றிறுணி சந்தோடு கல்லெனவீர்த்
திழியும்வயி ரத்தொடி னம்மணிகொண்
டழியும்புன லஞ்சன மாநதியே
பொருள் : முழவு இன் இசை முழங்கு மூரி அருவி - முழவென இனிய இசையுடன் முழங்கும் பேரருவியானது; கழையின் துணி சந்தோடு ஈர்த்து வயிரத்தொடு இனம் மணி கொண்டு - மூங்கிலின் துண்டுகளையும் சந்தனக் கட்டைகளையும் இழுத்துக் கொண்டு, வயிரத்தையும் பல இன மணிகளையும் கொண்டு; கல்லென இழியும் புனல் - கல்லெனும் ஒலியுடன் வீழும் நீரினால்; அஞ்சன மாநதி அழியும் - அஞ்சனமாநதி யெனும் ஆறு மிகப் பெருகும்.
விளக்கம் : மூரி - பெருமை. கழையின் துணி - முங்கிற்றுண்டு. சந்து - சந்தனமரம். கல்லென : ஒலிக்குறிப்பு. அழியும் - பெருகும்.
(28)
1194. இதுபள்ளி யிடம்பனி மால்வரைதா
னதுதெள்ளறல் யாறுவை தேமரமாக்
கதிதள்ளி யிராது கடைப்பிடிநீ
மதிதள்ளி யிடும்வழை சூழ்பொழிலே
பொருள் : இது பள்ளி - இது அத்தாபதர் வாழும் பள்ளி; இடம் பனி மால்வரை - இப் பள்ளியின் இடப்பக்கம் அந்தக்குளிர்ந்த பெரிய சித்திர கூடமலை; அது தெள் அறல் யாறு - வலப்பக்கம் உள்ள அது தெளிந்த நீரையுடைய யாறு (அஞ்சன மாநதி); உவை தேமர மா - முன்னும் பின்னும் உள்ளவை இனிய மாமரமும்; வழை சூழ் பொழில் - சுரபுன்னை சூழும் பொழிலுமாகும்; மதி தள்ளியிடும் - இவை அறிவை (இன்பத்தினாலே) நீக்கிவிடும்; நீ கதி தள்ளி இராது கடைப்பிடி - நீ செலவைத் தவிர்ந்திராமல் செயலைக் கடைப்பிடித்துச் செல்.
விளக்கம் : இது பள்ளியென ஓரிடத்தைக் காட்டிக்கூறி, அது முதலாக மற்றவற்றைச் சுட்டிக் காட்டினான். உவை யென்றான் ஒழிந்த இரு பக்கத்தையும். பள்ளி : தாபதர் உறையுமிடம். (29)
வேறு
1195. வருந்து நீர்மையம் மாதவர் பள்ளியுட்
குருந்த மேறிய கூரரும் பார்முல்லை
பொருந்து கேள்வரைப் புல்லிய பொன்னனார்
மருங்கு போன்றணி மாக்கவின் கொண்டதே.
பொருள் : வருந்தும் நீர்மை அம் மாதவர் பள்ளியுள் - தவத்தால் வருந்தும் இயல்புடைய அத்தாபதர் வாழும் பள்ளியிலே; குருந்தம் ஏறிய கூர் அரும்பு ஆர் முல்லை - குருந்த மரத்தில் ஏறிய கூரிய அரும்புகள் நிறைந்த முல்லைக்கொடி; பொருந்து கேள்வரைப் புல்லிய பொன்னனார் - தம் மனம் விரும்பிய கணவரைத் தழுவிய திருவனையாரின்; மருங்கு போன்று அணி - வடிவம் போல ஒப்பித்த; மாக் கவின் கொண்டது - பேரழகினைக் கொண்டது.
விளக்கம் : அம் முல்லைவனம் மகளிர் வடிவை நினைப்பூட்டித் தாபதர் பள்ளியினின்றும் போகவிடும் என்பது குறிப்பு. (30)
1196. குரவ நீடிய கொன்றையங் கானின்வாய்
வரகு வாளிற் றொலைச்சுநர் பாடலி
னரவ வண்டொடு தேனினம் யாழ்செயும்
பரவை மாநிலம் பன்னிரு காதமே.
பொருள் : குரவம் நீடிய கொன்றை அம் கானின் வாய் - குரவ மரங்கள் நிறைந்த அழகிய கொன்றைக் காட்டினிடத்தே; வரகு வாளில் தொலைச்சுநர் பாடலின் - வரகை அரிவாளால் அறுப்பவர் பாடுதலின்; (அம் மிடற்றுப் பாடலுக் கேற்ப) அரவவண்டொடு தேனினம் யாழ் செயும் - ஒலிக்கும் வண்டும் தேனும் யாழிசைக்கின்ற; பரவை மாநிலம் பன்னிரு காதம் - பரப்பு மிகுந்த வரகு விளைநிலம் பன்னிரு காத வழியுடையது.
(விளக்கம்.) வரகு - ஒரு கூலம். வாள் - அரிவாள். தேன் - ஒருவகை வண்டு. யாழ்செயும் - யாழிசைபோல முரலும். (31)
1197. ஆங்க வெல்லை யிகந்தடு தேறலும்
பூங்கட் பொற்குட முந்நிறைத் தீண்டிய
வேங்கு கம்பலத் தின்னிசை சூழ்வயற்
றாங்கு சீர்த்தக்க நாட்டணி காண்டியே.
பொருள் : ஆங்கு அவ் எல்லை இகந்து - அந்தக் காட்டின் எல்லையைக் கடந்துபோய்; அடு தேறலும் பூங்கள் பொற்குடமும் நிறைத்து - காய்ச்சிய நறவினையும் மலரிலிருந்தெடுத்த கள்ளையும் பொற்குடங்க ளெல்லாவற்றினும் நிறைத்து; ஈண்டிய ஏங்கு கம்பலத்து இன் இசை - செறிந்த தேங்கிய ஆரவாரத்துடன் எழுப்பும் இனிய இசை; சூழ் வயல் - சூழ்ந்த வயலினையும்; தாங்கு சீர் - ஏந்திய புகழையும் உடைய; தக்க நாட்டு அணி காண்டி - தக்க நாட்டின் அழகைக் காண்பாயாக.
விளக்கம் : இன்னிசை யீண்டிய ஏங்கு கம்பலத்தைச் சூழ்வயல் என மொழிமாற்றிப் பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். கம்பலம் : கம்பலை என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. ஏங்குதல் - ஒலித்தல். ஏங்கிய மிடறு (சிலப். 3. 51) என்றார் பிறரும். (32)
வேறு
1198. பாளைவாய்க் கமுகி னெற்றிப் படுபழ முதிர விண்டு
நீள்கழைக் கரும்பி னெற்றி நெய்ம்முதிர் தொடையல் கீறி
வாளைவா யுறைப்ப நக்கி வராலொடு மறலு மென்ப
காளைநீ கடந்து செல்லுங் காமரு கவின்கொ ணாடே.
பொருள் : காளை! நீ கடந்து செல்லும் காமரு கவின் கொள் நாடு - காளையே! நீ காட்டைக் கடந்து செல்லும் விருப்பூட்டும் அழகுறு நாடு; கமுகின் நெற்றிப் பாளைவாய்ப் படுபழம் விண்டு உதிர - கமுகின் உச்சியிலே பாளையின்கண் உண்டாகிய பழம் விண்டு உதிர்தலால்; நீள் கழைக் கரும்பின் நெற்றி நெய்ம்முதிர் தொடையல் கீறி - நீண்ட கழையாகிய கரும்பின் உச்சியிலே முதிர்ந்த தேனடையைக் கீண்டு; வாளை வாய் உறைப்ப நக்கி - (குளத்திலுள்ள) வாளையின் வாயிலே தேன் துளி துளிக்க அதனை நக்கி; வராலொடு மறலும் - வராலுடன் மாறுபடும்.
விளக்கம் : நெய் - தேன். என்ப : அசை. வராலொடு வாளை தேன் துளியை நக்கி மாறுபடும் என்றுரைப்பர் நச்சினார்க்கினியர். கமுகின் நெற்றிப் பாளைவாய்ப் படுபழம் என மாற்றுக. கழைக் கரும்பு - கோலாகிய கரும்பு; ஒருவகைக் கரும்பெனலுமாம். தொடையல் - தேனிறால். உறைப்ப - துளியாக விழ. கவின் - அழகு. (33)
வேறு
1199. அங்கதன் றனதிடங் கடந்து போம்வழிப்
பொங்குபூஞ் சண்பகப் போது போர்த்துரா
யங்கநாட் டரிவையர் கூந்த னாறித்தே
னெங்குமொய்த் திழிவதோர் யாறு தோன்றுமே
பொருள் : அங்கு அதன் தனது இடம் கடந்து போம் வழி - அவ்விடத்தில் அந்த நாட்டின் இடத்தைக் கடந்து செல்லும்போது; பொங்குபூஞ் சண்பகப் போது போர்த்து உராய் - மிகுதியான அழகிய சண்பக மலரைப் போர்த்துப் பரவி; அங்கு அந்நாட்டு அரிவையர் கூந்தல் நாறி - அங்குள்ள அந்நாட்டின் மகளிருடைய கூந்தல் போல மணங் கமழ்ந்து; தேன் எங்கும் மொய்த்து இழிவது ஓர் யாறு தோன்றும் - வண்டுகள் எங்கும் மொய்க்கப்பட்டுச் செல்லும் ஒரு யாறு காணப்படும்.
விளக்கம் : அதனிடங் கடந்து எனவே கேமசரியை மணப்பதூஉங் குறிப்பித்தானாயிற்று. பொங்குதல் - மிகுதல். போது போர்த்துப் பரந்து அந்நாட்டரிவையர் கூந்தல் போன்று நாறித் தேன் மொய்க்கப்பட்டு இழிவதோர் யாறென்க. (34)
1200. மின்னுடைய மணிபல வரன்றி மேதகு
தன்னுடைய நலம்பகிர்ந் துலக மூட்டலிற்
பொன்னுடைக் கலையல்குற் கணிகைப் பூம்புனன்
மன்னுடை வேலினாய் வல்லை நீந்தினால
பொருள் : மன் உடை வேலினாய் - அரசர் கெடுதற்குக் காரணமாகிய வேலையுடையவனே!; மின்னுடை மணி பல வரன்றி - ஒளியினையுடைய மணிகள் பலவற்றையும் அரித்து; மேதகு தன்னுடை நலம் பகிர்ந்து - மேம்பட்ட தன்னுடைய நலத்தைப் பங்கிட்டு; உலகம் ஊட்டலின் - உலகினை உண்பித்தலின்; பொன்னுடைக் கலை அல்குல் கணிகைப் பூம்புனல் - பொன்னாலான மேகலை யணிந்த அல்குலையுடைய கணிகை போன்ற பூம்புனலை; வல்லை நீந்தினால் - விரைய நீந்திச் சென்றால்.
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். நலம் - இன்பம். கணிகைப்பூம்புனல் - கணிகைத் தன்மையையுடைய அழகிய நீர். மன் - மன்னர். வல்லை - விரைவில். (35)
1201. யானைவெண் மருப்பினா லியற்றி யாவது
மானமாக் கவரிவெண் மயிரின் வேய்ந்தன
தேனெயூன் கிழங்குகாய் பழங்கள் செற்றிய
கானவர் குரம்பைசூழ் காடு தோன்றுமே
பொருள் : யானை வெண் மருப்பினால் யாவதும் இயற்றி - யானையின் வெள்ளிய மருப்பினால் கால்வளை முதலிய எல்லாவற்றையும் அமைத்து; மான மாக்கவரி வெண் மயிரின் வேய்ந்தன - மானமுறும் விலங்காகிய கவரியின் வெண்மையான மயிரினால் வேய்ந்தனவாகிய; தேன் நெய் ஊன் கிழங்கு காய் பழங்கள் செற்றிய - தேன் முதலிய இவ்வுணவுப் பொருள்களைச் செறித்த; கானவர் குரம்பை சூழ்காடு தோன்றும் - வேடர் குடில்கள் சூழ்ந்த காடு தோன்றும்.
விளக்கம் : வேய்ந்த குரம்பை, செற்றிய குரம்பை எனக் கூட்டுக. மானமா - கவரிமான். மயிர்நீப்பினும் வாழ வியல்புடையதுபற்றிக் கவரிமானை மானமா என்ப. குரம்பை - சிறுகுடில். (36)
1202. கடுந்துடிக் குரலொடு கடையுங் கட்குர
னெடுங்கைமான் குரன்மணி யருவி நீள்குர
லடும்புலிக் குரலொடு மயங்கி யஞ்சிய
விடும்பைமான் குரல்விளி யெங்கு மிக்கவே.
பொருள் : கடுந் துடிக் குரலொடு கடையும் கள் குரல் - விரையும் துடி யொலியுடன், கள் அரிக்குங் குரலும்; நெடுங் கை மான்குரல் - நீண்ட கையையுடைய யானையின் குரலும்; மணி அருவி நீள் குரல் - மணி யரித்து வரும் அருவி வீழ்குரலும்; அடும் புலிக் குரலொடு அஞ்சி மயங்கிய - கொல்லும் புலி முழக்கிற்கு அஞ்சி மயங்கிய; இடும்பை மான் குரல் - துன்புற்ற மான் குரலும்; விளி - சீழ்க்கையும்; எங்கும் மிக்க - அக் காடெங்கும் மிக்கன.
விளக்கம் : கடு : கடியென்னும் உரிச்சொல்லின் திரிபு. புலிக் குரலொடு : உருபு மயக்கம். விளி : நாவின் நுனியை மடித்தெழுப்பும் ஒலி. (37)
1203. பொன்னணி திகிரியஞ் செல்வன் பொற்புடைக்
கன்னிய மகளிரிற் காண்டற் கரியன
நன்மணி புரித்தன வாவி நான்குள
கன்னவி றோளினாய் காட்டு வாயவே.
பொருள் : கல் நவில் தோளினாய் - கல்லெனக் கூறுந் தோளுடையாய்!; காட்டு வாய - அக் காட்டிடத்துள்ளன வாகிய; பொன் அணி திகிரி அம் செல்வம் பொற்பு உடைக் கன்னி மகளிரின் - பொன்னால் அணிந்த ஆழியை யுடைய மன்னர் பெருமானின் அழகுறு கன்னிப் பெண்களைப் போல; காண்டற்கு அரியன - பிறராற் காண வியலாத; நல்மணி புரித்தன - நல்ல மணிகள் நிறைத்தனவாகிய; வாவி நான்கு உள - குளங்கள் நான்கு உள்ளன.
(விளக்கம்.) காட்டு வாய வாவி என்க. கன்னிய : அ : அசை. பூரித்தன என்பது, புரித்தன என விகாரமுற்றது. (38)
1204. அருங்கலச் சேயித ழார்ந்த வாவியொன்
றிரும்பெரி பொன்செயு மிரத நீரதொன்
றொருங்குநோய் தீர்ப்பதொன் றமிர்த மல்லதொன்
றரும்பவிழ் குவளைநீர் வாவி யாகுமே.
பொருள் : அருங்கலச் சேயிதழ் ஆர்ந்த வாவி ஒன்று - அரிய சிவந்த இதழையுடைய பொற்றாமரை நிறைந்த குளம் ஒன்று; இரும்பு எரி பொன் செயும் இரத நீரது ஒன்று - இரும்பை ஒளிவிடும் பொன்னாக மாற்றும் இரத நீருடைய குளம் ஒன்று; நோய் ஒருங்கு தீர்ப்பது ஒன்று - எல்லா நோயையும் நீக்குங்குளம் ஒன்று; ஒன்று அல்லது அமிர்தம் - மற்றொரு குளம் அமிர்தம் போன்றது; அரும்பு அவிழ்குவளை நீர் வாவி ஆகும் - (அது) அரும்பு மலர்ந்த குவளையையுடைய நீர் நிறைந்த குளமாகும்.
விளக்கம் : அமிர்தம் அல்லது ஒன்று என்பதை நச்சுப் பொய்கை என்றும் உண்பதற்குரியது குவளைநீர் வாவியாகும் என்றும் ஏகாரம் எதிர்மறைப் பொருளதென்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். வாவி நான்குள என்பதனால் ஐந்தாவது குளம் ஒன்று காணுமாறில்லை. எனவே, இங்ஙனங் கொள்ளாமல், நீர் வாவி அமிர்தம் அல்லது ஒன்று எனக்கொண்டு நீர் வாவியே நச்சுப் பொய்கை எனக் கொள்வதும் பொருத்தமுடைத்து. ஏ : ஈற்றசை. (39)
1205. கையடு சிலையினர் காட்டுள் வாழ்பவர்
பையுடை யாக்கையர் பாவ மூர்த்திய
ரையெனத் தோன்றுவர் தோன்றி யாளழித்
துய்வகை யரிதென வுடலங் கொள்பவே.
பொருள் : காட்டுள் வாழ்பவர் - (அவற்றைக் காத்துக்) காட்டில் வாழ்கின்றவர்கள்; கை அடு சிலையினர் - கையிலே கொல்லும் வில்லினர்; பையுடை யாக்கையர் - பை அணிந்த மெய்யினர்; பாவமூர்த்தியர் - பாவமான உருவத்தினர்; ஐயெனத் தோன்றுவர் - விரையத் தோன்றுவர்; தோன்றி உய்வகை அரிது என - அங்ஙனந் தோன்றிப் பிழைத்தல் அரிது என்று கூறி; ஆள் அழித்து உடலம் கொள்ப - (அவ்வாவிகளை விரும்பி அணுகிய) ஆட்களை அழித்து உடலைக் கொண்டு செல்வர்.
விளக்கம் : வாவிகளை அணுகியவரைப் பாவமூர்த்தியர் எனக் கூறுவர் நச்சினார்க்கினியர். பையுள் உடை யாக்கையர் என்பது விகாரப்பட்டது எனினும் ஆம். பையுள் - துன்பம். ஐ எனத் தோன்றுவர் என்பதற்கு இவர் வடிவு அழகு என்று நினைக்கும்படி தோன்றுவர் எனவும் பொருள் கூறலாம். (40)
1206. அண்ணன்மே லரிவையர் கண்ணின் மொய்த்தவண்
மண்ணின்மேன் மாந்தர்கண் மொய்க்கும் வாவியை
யெண்ணமொன் றின்றியே யிடத்திட் டேகினாற்
றுண்ணெனச் சிலையவர் தொழுது காண்பவே
பொருள் : அண்ணல்மேல் அரிவையர் கண்ணின் மொய்த்து - அண்ணலாகிய நின்மேல் அரிவையர் கண்கள் மொய்க்குமாறு போல நெருங்கி; மண்ணின் மேல் மாந்தர்கள் அவண் மொய்க்கும் வாவியை - நிலவுலகிலுள்ள மக்கள் அவ்விடத்தை மொய்க்கும் அக் குளங்களை; இடத்து இட்டு எண்ணம் ஒன்று இன்றியே ஏகினால் - இடப்பக்கத்தே விட்டு அவற்றைக் கொள்ள வேண்டுமென்னும் நினைவு சிறிதும் இல்லாமலே போனால்; சிலையவர் துண் எனத் தொழுது காண்ப - அச் சிலைவர் துணுக்கென மொய்த்துத் தொழுது காண்பார்கள்.
விளக்கம் : நல்வினையுடையோரெனத் தொழுது காண்பர் என்பர் நச்சினார்க்கினியர். ஆகவே, அவ்வாவிகட்கு இடமே செல்க என்றான். (41)
1207. பாடல்வண் டியாழ்செயும் பசும்பொற் கிண்கிணித்
தோடலர் கோதைமின் றுளும்பு மேகலை
யாடிய கூத்தித னசைந்த சாயல்போன்
றூடுபோக் கினியதங் கோரைங் காதமே.
பொருள் : பாடல் வண்டு யாழ் செயும் அங்கு ஓர் ஐங்காதம் - பாடலையுடைய வண்டுகள் யாழென ஒலிக்கும் அவ்விடத்தே ஐங்காத வழியளவும்; பசும்பொன் கிண்கிணி - பசும்பொன்னாலான கிண்கிணியும்; தோடு அலர் கோதை - இதழ்விரிந்த மலர்க் கோதையும்; மின் துளும்பும் மேகலை - ஒளி ததும்பும் மேகலையும் உடைய; ஆடிய கூத்தி தன் அசைந்த சாயல்போல் - ஆடிய கூத்தியினுடைய இளைத்த தோற்றம் போல; ஊடுபோக்கு இனியது - இடையே செல்வதற்கு இயனிமையைத் தருவதாக இருக்கும்.
விளக்கம் : அகப்பட்டார் நீங்குதல் அரிதாய் இருக்கும் என்பர் நச்சினார்க்கினியர். (42 )
1208. கோதைவீழ்ந் ததுவென முல்லை கத்திகைப்
போதுவேய்ந் தினமலர் பொழிந்து கற்புடை
மாதரார் மனமெனக் கிடந்த செந்நெறி
தாதின்மே னடந்ததோர் தன்மைத் தென்பவே
பொருள் : கோதை வீழ்ந்தது என முல்லை கத்திகைப்போது வேய்ந்து - (மற்றும்) மாலை வீழ்ந்தது என்னும்படி முல்லை மலரும் குருக்கத்தி மலரும் அணிந்து; இனமலர் பொழிந்து - மற்றைய இனமலர்கள் தேனைப் பொழிந்து; கற்புடை மாதரார் மனம் எனக் கிடந்த செந்நெறி - கற்புடைய மகளிர் மனம் போலக் கிடந்த செவ்விய நெறி; தாதின்மேல் நடந்தது ஓர் தன்மைத்து என்ப - (நிலத்தின் அன்றி) மகரந்தப் பொடியின் மேல் நடந்ததாகிய ஒரு தன்மையுடையது என்பர்.
விளக்கம் : கோதை - மலர்மாலை. கத்திகைப்போது - குருக்கத்திமலர். கற்புடை மாதரார்மனம் நெறிக்குத் தூய்மைக்குவமை என்க. செந்நெறி - செவ்விய வழி. தாது - பூந்துகள். (43)
1209. மணியியற் பாலிகை யனைய மாச்சுனை
யணிமணி நீண்மல ரணிந்த தாயிடை
யிணைமலர்ப் படலிகை போலு மீர்ம்பொழில்
கணையுமிழ் சிலையினாய் கண்டு சேறியே.
பொருள் : மணி இயல் பாலிகை அனைய மாச்சுனை - மணிகளிழைத்த பாலிகை போன்ற பெரிய சுனையின்; அணிமணி நீள்மலர் அணிந்தது ஆயிடை - அழகிய மணிபோலும் நீண்ட மலர்களாலே அணியப்பட்டதாகிய அவ் வழியையும்; இணைமலர்ப் படலிகை போலும் ஈர்ம்பொழில் - ஒத்த மலர்களையுடைய பூந்தட்டுப் போலும் குளிர்ந்த பொழிலையும்; கணை உமிழ் சிலையினாய்! - அம்பை உமிழும் வில்லுடையாய்!; கண்டு சேறியே - பார்த்துச் செல்வாயாக!
விளக்கம் : இடை - வழி. கண்டு சேறி என்றான் ஓன்றையும் நுகரலாகாது என்பதற்கு. பாலிகை - வட்டவடிவிற்றாகியதொரு தட்டு. மா - பெருமை. அணி மணி - அழகிய மணி. படலிகை - மலரிட்டு வைக்கும் பெட்டி. ஈர்ம்பொழில் - குளிர்ந்த சோலை. (44 )
1210. இலைப்பொலி பூண்முலை யெரிபொன் மேகலைக்
குலத்தலை மகளிர்தங் கற்பிற் றிண்ணிய
வலைத்துவீ ழருவிக ளார்க்குஞ் சோலைசூழ்
வலத்தது வனகிரி மதியிற் றோன்றுமே.
பொருள் : இலைப்பொலி பூண்முலை எரி பொன் மேகலை - இலை வடிவமான அணிகளால் விளக்கமுறும் முலையினையும், ஒளிரும் பொன் மேகலையையும் உடைய; குலத்தலை மகளிர்தம் கற்பின் திண்ணிய - நற்குலப் பெண்டிரின் கற்பைப்போலத் திண்மையுடைய; அலைத்துவீழ் அருவிகள் ஆர்க்கும் சோலை சூழ் வனகிரி - பொன் மணி முதலியவற்றை அலைத்து வீழும் அருவிகள் ஒலிக்கும், சோலைகள் சூழ்ந்த வனகிரி; வலத்தது - வலப்பக்கத்தே உள்ளது; மதியின் தோன்றும் - (அருவியாலும் குளிர்ச்சியாலும்) திங்களைப்போலத் தோன்றும்.
விளக்கம் : திண்ணிய வனகிரி, அருவிகள் ஆர்க்கும் வனகிரி, சோலைசூழ் வனகிரி எனத் தனித்தனியே கூட்டுக. (45)
1211. கரியவன் றிருமுடி கவிழ்த்த சேவடிப்
பெரியவன் றிருமொழி பிறழ்த லின்றியே
மரியவ ருறைதலின் மதன கீதமே
திரிதரப் பிறந்ததோர் சிலம்பிற் றென்பவே.
பொருள் : கரியவன் திருமுடி கவிழ்த்த சேவடிப் பெரியவன் - இந்திரன் தன் திருமுடியைச் சாய்த்து வணங்கிய சிவந்த அடிகளையுடைய அருகப் பெருமான்; திருமொழி பிறழ்தல் இன்றியே - கூறிய அருகாகமத்திற் கூறியவை தவறுதல் இல்லாமலே; மரியவர் உறைதலின் - அதிலே பொருந்திய முனிவர்கள் வாழ்தலாலே; மதனகீதமே திரிதர - காமனது பாட்டொன்றுமே அவ்விடத்தில் இல்லாமல்; பிறந்தது ஓர் சிலம்பிற்று என்ப - பிற ஓசைகள் யாவும் உண்டாகிய ஒப்பற்ற பக்கமலையினை உடையது அவ்வனகிரி என்பர்.
விளக்கம் : சிலம்பு - பக்கமலை. வானோர் இறைவனும் வணங்கும் சேவடியையுடைய பெரியவன்; அவன், அருகன் என்க. திருமொழி - ஆகமம். மரியவர் என்பது மருவியர் என்பதன் விகாரம், மதனகீதம் - காமத்தைக் கிளர்ச்சியுறச் செய்யும் இசைகள். திரிதருதல் - பிறழ்தல். ஈண்டு நீங்க என்னும் பொருட்டாய் நின்றது. சிலம்பிற்று - ஓசையையுடையது. (46)
1212. ஏற்றரு மணிவரை யிறந்து போனபின்
மாற்றரு மணநெறி மகளிர் நெஞ்சமே
போற்பல கவர்களும் பட்ட தாயிடை
யாற்றல்சால் செந்நெறி யறியக் கூறுவாம்.
பொருள் : ஏற்று அரு மணிவரை இறந்து போனபின் - ஏறுமிடம் அரிய அம் மலையைக் கடந்து சென்ற பிறகு; மால்தரும் மணநெறி மகளிர் நெஞ்சமேபோல் - மயக்கந்தரும் கல்வி நெறியுடைய பரத்தையரின் உள்ளமேபோல; பல கவர்களும் பட்டது - வழியானது பல கிளைகளையும் உடையது (ஆதலின்); ஆயிடை ஆற்றல்சால் செந்நெறி அறியக் கூறுவாம் - அவ்வழியிடத்துச் செல்லுதல் அமைந்த செவ்விய வழியை அறியுமாறு கூறுவோம்.
விளக்கம் : மாற்ற அரு நெஞ்சம் எனக் கொண்டு, வசப்படுத்தமுடியாத உள்ளம் என்பர் நச்சினார்க்கினியர். கவர்ப்பு என்பது கவர் என ஆனது விகாரம். (47)
1213. சுரும்புசூழ் குவளையோர் சுனையுண் டச்சுனை
மருங்கிலோர் மணிச்சிலா வட்ட முண்டவண்
விரும்பிவண் டிமிர்வதோர் வேங்கை வேங்கையின்
மருங்கிலோர் செந்நெறி வகுக்கப் பட்டதே.
பொருள் : சுரும்புசூழ் குவளை ஓர் சுனை உண்டு - வண்டுகள் சூழும் குவளைகளையுடைய ஒரு சுனை உளது; அச் சுனை, மருங்கில் ஓர் மணிச் சிலாவட்டம் உண்டு - அச் சுனையின் அருகிலே ஒரு வட்டப் பாறை உளது; அவண் வண்டு விரும்பி இமிர்வது ஓர் வேங்கை - அங்கே வண்டுகள் விரும்பி முரல்வதாகிய ஒரு வேங்கைமரம் உளது; அவ் வேங்கையின் மருங்கில் ஓர் செந்நெறி வகுக்கப்பட்டது - அவ் வேங்கையின் அருகில் உள்ள செவ்விய நெறியே நான் முன்னர் உரைக்கப்பட்டது.
விளக்கம் : ஓர் சுரும்புசூழ் குவளைச் சுனையுண்டு என மாறுக. குவளைச்சுனை - குவளை மலரையுடைய சுனை. சிலவாட்டம் - வட்டப்பாறை. இமிர்வது - முரல்வதற்கு இடமானது. அவ்வேங்கையின் மருங்கில் என்க (48)
வேறு
1214. கைம் மலர்த்த அனைய காந்தள் கடிமலர் நாறு கானம்
மொய்ம் மலர்க் குவளைக் கண்ணி மொய்ம்ப நீ முழுதும் நீந்தி
வைம் மலர்த்து இலங்கும் வெள்வேல் மத்திம தேயம் ஆளும்
கொய்ம் மலர்த் தாரினானைக் கண்ணுறு குணம் அது என்றான்.
பொருள் : மொய்ம்மலர்க் குவளைக் கண்ணி மொய்ம்ப! - நெருங்கிய குவளை மலர்க் கண்ணியை உடைய தோளனே!; கைம்மலர்த்த அனைய காந்தள் கடிமலர் நாறு கானம் - கையை விரித்தாற் போன்ற காந்தளின் மணமுறு மலர் கமழும் கானம்; முழுதும் நீ நீந்தி - முழுவதையும் நீ கடந்து சென்று; வை மலர்த்து இலங்கு வெள்வேல் மத்திம தேயம் ஆளும் - கூர்மைமிக்கு விளங்கும் வேலையுடைய, மத்திம நாட்டைக் காக்கும்; கொய்ம்மலர்த் தாரினானை - கொய்த மலர் மாலையுடைய மன்னனை; கண்உறு! - காண்பாயாக!; அது குணம் என்றான் - அது நினக்கு ஊழால் அமையக் கூடியது என்று சுதஞ்சணன் இயம்பினான்.
விளக்கம் : கடிமலர் - மணமுடைய மலர். மொய்ம்மலர் - செறிந்த மலர். மொய்ம்ப : விளி. மொய்ம்பு - தோள்; வலிமையுமாம், கண்ணுறு என்பது ஏவல் வினை. அது குணம் என மாறுக. குணம் - பண்பு. (49)
1215. மண்ணகங் காவன் மன்னன் மாதரம் பாவை மாசி
லொண்ணுதன் மகளைத் தந்தீங் குறைகென வொழுகு நாளுள்
வெண்மதி யிழந்த மீன்போற் புல்லென வெய்தி நின்ற
வண்ணனின் றோழ ரெல்லா மவ்வழி யடைய ரென்றான்.
பொருள் : மண் அகம் காவல் மன்னன் மாதர் அம் பாவை மாசு இல் ஒண் நுதல் மகளை - (அந் நாட்டிலே) நிலவுலகின் காவலானாகிய வேந்தன், காதலை யூட்டும், அழகிய பாவை போன்ற, குற்றம் அற்ற, ஒள்ளிய நெற்றியளாகிய தன் மகளை; தந்து ஈங்கு உறைக என - நினக்குக் கொடுத்து, ஈங்கே யிருப்பாயாக என்று கூறுதலால்; ஒழுகும் நாளுள் - நீயும் அங்கே உறையும்போது; வெண்மதி இழந்த மீன்போல் - வெண் திங்களை யிழந்த விண்மீக்ளைப்போல; புல் எனவு எய்தி நின்ற - பொலிவிழந்து வருத்தம் அடைந்து நின்ற; அண்ணல் நின் தோழர் எல்லாம் - அண்ணலாகிய நின் தோழர்கள் யாவரும்; அவ்வழி அடைவர் என்றான் - அவ்விடத்தே வந்து நின்னைச் சேர்வர் என்றான்.
விளக்கம் : மன்னன் என்றது தடமித்தனை. மாதர் - காதல். பாவை : ஆகுபெயர்; கனகமாலை. வருத்தம் எய்தி நின்ற என வருவித்தோதுக. தோழர் அண்ணல், விளி. அண்ணலும் நின்தோழரும் எனக் கொண்டு நந்தட்டனும் நின் தோழரும் என்பர் நச்சினார்க்கினியர். (50)
வேறு
1216. நெட்டிடை நெறிகளு நிகரில் கானமு
முட்டுடை முடுக்கரு மொய்கொள் குன்றமு
நட்புடை யிடங்களு நாடும் பொய்கையு
முட்பட வுரைத்தன னுறுதி நோக்கினான்.
பொருள் : நெட்டிடை நெறிகளும் - நீண்ட இடத்தையுடைய வழிகளும்; நிகர் இல் கானமும் - ஒப்பற்ற காடுகளும்; முட்டு உடை முடுக்கரும் - போக்கற்ற அருவழிகளும்; மொய்கொள் குன்றமும் - நெருங்கிய குன்றுகளும்; நட்பு உடை இடங்களும் - உறவு கொள்ளும் இடங்களும்; நாடும் - நாடுகளும்; பொய்கையும் - பொய்கைகளும்; உட்பட உரைத்தனன் - பிறவும் அடங்க (முதலிற்) கூறியவனாகி; உறுதி நோக்கினான் - பின்னர் அவனுக்கு நன்மை தரும் மந்திரங்களைக் கூற நினைந்தான்.
விளக்கம் : முட்டுடை முடுக்கர் - நல்லதோரு வழிபோற்றோன்றி நடந்திடின் நன்றிதேறாப் புல்லர்தம் நட்புப்போலப் போய் அறத்தேய்வதாகிய வழியையுடைய சந்து. உறுதி - மந்திரம்; ஆகுபெயர். (51)
1217. செல்கதி மந்திரஞ் செவியிற் செப்பிய
மல்லலங் குமரனை வாழ நாட்டவே
வல்லவன் மந்திர மூன்றுங் கொள்கெனச்
சொல்லின னவற்றது தொழிலுந் தோன்றவே.
பொருள் : செல்கதி மந்திரம் செவியில் செப்பிய மல்லல் அம் குமரனை - நற்கதியிற் சேரும் மந்திரத்தைத் தன் காதில் ஓதிய, ஆற்றல் உறும் அழகிய சீவகனை; வாழ நாட்டவே வல்லவன் - வாழ நிறுத்த வன்மையுடைய சுதங்சணன்; மந்திரம் மூன்றும் கொள்க என - இம் மந்திரம் மூன்றையும் குறிக்கொள்க என்று; அவற்றது தொழிலும் தோன்றச் சொல்லினன் - அவற்றின் தந்திரமும் விளங்கக் கூறினன்.
விளக்கம் : செல்கதி மந்திரம் செவியிற் செப்பிய மல்லங்குமரனை என்றது சீவகன் சுதஞ்சணனுக்குச் செய்த உதவியைத் தேவர் நமக்கு நினைவூட்டியபடியாம். வழிநாட்டுதலாவது - இன்புற்றமர்ந்து வாழும்படி நிலைநிறுத்துதல். (52)
1218. கடுந்தொடைக் கவர்கணைக் காமன் காமுறப்
படுங்குர றருமிது பாம்பு மல்லவுங்
கடுந்திற னோய்களுங் கெடுக்கும் வேண்டிய
வுடம்பிது தருமென வுணரக் கூறினான்.
பொருள் : கடுந்தொடைக் கவர்கணைக் காமன் காம் உறப்படும் குரல் தரும் இது - விரைந்து தொடுக்கப்படுவதும் ஆண் பெண்களில் ஒருவருக்கொருவர் கவர்ச்சியை உண்டாக்குவதும் ஆகிய அம்பினையுடைய காமனும் விரும்பும் குரலைத் தருவதும் இம்மந்திரம்; பாம்பும் அல்லவும் கடுந்திறல் நோய்ளும் கெடுக்கும் (இது) - பாம்பின் நஞ்சையும், ஒழிந்த மண்டலி முதலியவற்றின் நஞ்சினையும், காற்று நீர் நெருப்பு முதலியவற்றையும், நோய்களையும் கெடுக்கும் இம் மந்திரம்; வேண்டிய உடம்பு தரும் இது - வேண்டிய உடம்பைத் தருவது இம் மந்திரம்; என உணரக் கூறினான் - என்று விளங்க அறியுமாறு உரைத்தான்.
விளக்கம் : கவர்கணை - ஒருவர் நெஞ்சினை ஒருவர் கவர்தற்குக் காரணமான மலரம்பு. காமனும் எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. இது - இம்மந்திரம். இது என்னும் சுட்டினைப் பாம்புடனேயும் ஒட்டுக. அல்லவும் - பாம்பல்லாத ஏனைய நஞ்சுடையனவும். கடுந்திறல் நோய் என்றது மனித முயற்சியாற் றடுக்கவொண்ணாத காற்று இடி முதலியவற்றால் உண்டாகும் துன்பங்களை. (53 )
வேறு
1219. கந்தடு களிறு கொல்லுங்
கருவரை யுழுவை யன்னான்
மந்திர மூன்று மோதி
வானவிற் புரையும் பைந்தா
ரிந்திரன் றன்னை நோக்கி
யியக்கியர் குழாத்தை நோக்கிச்
சிந்தையிற் செல்வ லென்றான்
றேவனுஞ் செலவு நேர்ந்தான்.
பொருள் : கந்து அடு களிறு கொல்லும் - கட்டுத் தறியை முறிக்குங் களிற்றைக் கொல்லுகின்ற; கருவரை உழுவை அன்னான் - கரிய வரிகளையுடைய புலியைப் போன்ற சீவகன்; மந்திரம் மூன்றும் ஓதி - மந்திரம் மூன்றையும் கற்றுக்கொண்டு; வானவில் புரையும் பைந்தார் இந்திரன் தன்னை நோக்கி - வானவில்லைப் போன்ற புதிய மாலையணிந்த இந்திரன் போன்ற சுதஞ்சணனைப் பார்த்து; இயக்கியர் குழாத்தை நோக்கி - (அவன் மனைவியரான) இயக்கியரின் கூட்டத்தைப் பார்த்து; சிந்தையின் செல்வன் என்றான் - என் விருப்பப்படி ஏகுவேன் என்றான்; தேவனும் செலவு நேர்ந்தான் - சுதஞ்சணனும் அவன் போவதற்கு ஒருப்பட்டான்.
விளக்கம் : தூர கமனமும் கலைகளில் ஒன்றாதலின், சிந்தையிற் செல்வன் என்பதனால் அக் கலைவல்லவனென்பது பெற்றாம். செல்வமிகுதியால் இந்திரன் உவமையானான். (54)
1220. மனைப்பெருங் கிழத்தி மாசின்
மலைமக டன்னை யான்சென்
றெனைத்தொரு மதியி னாங்கெர்
லெய்துவ தென்று நெஞ்சி
னினைத்தலுந் தோழ னக்கு
நிழலுமிழ்ந் திலங்கு செம்பொற்
பனைத்திரண் டனைய தோளாய்
பன்னிரு மதியி னென்றான்.
பொருள் : மனைப் பெருங் கிழத்தி மாசு இல் மலைமகள் தன்னை - பெருமை தங்கிய இல்லக் கிழத்தியாகிய குற்றம் அற்ற தத்தையை; எனைத்து ஒரு மதியின் யான் சென்று எய்துவது ஆம் என்று - எவ்வளவினதாகிய ஒரு திங்களிலே நான் சென்று கூடும் இயல்பு உண்டாகுமோ என்று; நெஞ்சில் நினைத்தலும் - உள்ளத்தில் எண்ணியவுடனே; தோழன் நக்கு - சுதஞ்சணன் நகைத்து; நிழில் உமிழ்ந்து இலங்கு செம்பொன் பனை திரண்டனைய தோளாய் - ஒளி வீசி விளங்கும், பொன்னணி புனைந்த, பனை திரண்டாற் போன்ற தோளனே!; பன்னிரு மதியின் என்றான் - நீ அவளைக் கூடுவது பன்னிரண்டாந் திங்களில் என்றான்.
விளக்கம் : கொல் : அசை. பன்னிரு மதியின் : இன் : சாரியை; ஏழனுருபு என்றும் புறனடையாற் கொள்கவென்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். மற்றும் அவர், வெள்ளிமலையிற் றோன்றி வந்த மனைப்பெருங்கிழத்தி தன்னை, மாசில்லாத மகள்தன்னை எனப் பிரித்துக் கூட்டித் தத்தையையும் குணமாலையையுங் கொள்க என்பர். சீவகன் பன்னிரு மதிக்குள்ளே இராசமா புரத்தே சென்று குணமாலையை எய்தினானேனும் மனக்கவற்சி யின்றி நிலைபெற இருந்து எய்தாமையின் அதனைத் தேவன் கூறானாயினான் என்றும், இனித் தத்தையையே நினைந்தானென்னிற் குணமாலையை வரைந்ததற்கு நிகழ்ந்த ஊடல் தீர்த்துப் புணராமையின், அவளையே நினைந்தான் என்க என்றும் நச்சினார்க்கினியரே கூறுவதாலும், முன்னையாள் போன்று தத்தை முகத்துளே தோன்றுகின்றாள் (1626) எனப் பின்னரும் தத்தையையே நினைந்தான் என வருவதாலும் அங்ஙனம் பிரித்துக்கூட்டி இருவராக்கிக் கூறுதலிற் பயனின் றென்க. மனைப் பெருங்கிழத்தியைக் குணமாலையெனக் கூறுவதும் பொருத்தமின்று, பெருங்கிழத்தி தத்தையே ஆதலான். (55)
1221. ஆறிரு மதியி னெய்தி யரட்டனை யடர்த்து மற்றுன்
வீறுயர் முடியுஞ் சூடி விழுநிலக் கிழமை பூண்டு
சாறயர்ந் திறைவற் பேணிச் சார்பறுத் துய்தி யென்று
கூறினன் கதிர்கள் பொங்குங் குளிர்மணி முடியினானே.
பொருள் : ஆறிரு மதியின் எய்தி - பன்னிரண்டாந் திங்களிலே இராசமாபுரமடைந்து; அரட்டனை அடர்த்து - கட்டியங்காரனைக் கொன்று; மற்ற உன் வீறுயர் முடியும் சூடி - பிறகு, உனக்குத் தொன்றுதொட்டு வந்த சிறப்புற்றுயர்ந்த முடியையும் புனைந்து; விழுநிலக் கிழமை பூண்டு - விழுமிய நிலவுரிமையைக் கொண்டு; சாறு அயர்ந்து - விழாக் கொண்டாடி; இறைவன் பேணி - அருகப் பெருமானை வழிபட்டு; சார்பு அறுத்து உய்தி என்று - பிறப்பைக் கெடுத்து வீடு பெறுவை என்று; கதிர்கள் பொங்கும் குளிர்மணி முடியினான் கூறினன் - ஒளி வீசும் தண்ணிய மணிமுடியுடைய சுதஞ்சணன் உரைத்தான்.
விளக்கம் :உரிமை மகளிர் முன் கூறினானாதலின் வெளிப்படையானவற்றை விளம்பினான். (56)
1222. சொற்றிறற் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி
விற்றிறற் குருசிற் கெல்லாம் வேறுவே றுரைப்பக் கேட்டே
சுற்றிய தோழி மாரை விடுத்தனன் றொழுது நின்றான்
கற்பக மரமுஞ் செம்பொன் மாரியுங் கடிந்த கையான்.
பொருள் : சொல் திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் - சொல்வன்மையும் சூழ்ச்சியும் மிகுந்த சுதஞ்சணன்; வில்திறல் குருசிற்கு - வில் வன்மையுடைய சீவகனுக்கு; எல்லாம் சுருங்கநாடி - வேண்டுவன யாவற்றையும் சுருக்கமாக ஆராய்ந்து; வேறு வேறு உரைப்பக் கேட்டு - தனித் தனியே தெளிவாக உரை விளம்பக் கேட்டு; கற்பக மரமும் செம்பொன் மாரியும் கடிந்த கையான் - கற்பக மரத்தையும் செம்பொன் பெய்யும் முகிலையும் மாற்றிய வண்மையுறுங் கையினனாகிய சீவகன்; சுற்றிய தோழிமாரை விடுத்தனன் தொழுது நின்றான் - சுற்றிலும் உள்ள தோழியரைப் போகவிட்டுச் சுதஞ்சணனைத் தொழுது நின்றான்.
விளக்கம் : மறைமொழி கற்பித்ததனால் ஆசானாகக்கொண்டு தொழுதான், வழிபடு தெய்வத்தைத் தொழுதான் என்றுங் கூறலாம் என்பர். நச்சினார்க்கினியர் மறைபொருளல்லாதவற்றை வேறாக நாடி அங்ஙனஞ் சுருங்கக் கூறிப் பின்பு மறைபொருளாகியவற்றை வேறாகக் கொண்டிருந்து கூற என்று மொழிமாற்றிக் கூறுவர். மற்றும், சுதஞ்சண்ணைத் தொழுது, சுற்றிலுமுள்ள தோழியரை விடுத்துநின்றான் என்றம் மாற்றிக் கூறுவர். அவ்வாறு பிரிப்பதாற் போதப் பயனின்றென்க. (57)
வேறு
1223. சேட்டிளஞ் செங்கயல் காப்பச் செய்துவிற்
பூட்டிமேல் வைத்தன புருவப் பூமக
டீட்டிருந் திருநுதற் றிலக மேயென
மோட்டிருங் கதிர்திரை முளைத்த தென்பவே.
பொருள் : சேடு இளஞ் செங்கயல் காப்பச் செய்து - பெருமையும் இளமையுமுடைய செங்கயல்களைக் காக்கச் செய்து; வில்பூட்டி மேல் வைத்த அன புருவப் பூமகள் - வில்லைப் பூட்டி மேலே வைத்தாற் போலும் புருவத்தினையுடைய நிலமகளின்; தீட்டு இருந்திருநுதல் திலகமே என - தீட்டப் பெற்ற அழகிய நெற்றியிலிட்ட திலகம்போல; மோடு இருங்கதிர் திரை முளைத்தது - பெருமையுடைய பெரிய ஞாயிறு கடலில் தோன்றியது.
விளக்கம் : சேடு - பெருமை. கயல் என்றது கண்களை. பூமகள் - நிலமகள். மோட்டிருங்கதிர் - பெருமையுடைய பெரிய ஞாயிற்றுமண்டிலம். திரை - கடல் : ஆகுபெயர். (58)
வேறு
1224. அழல்பொதிந்த நீளெஃகி னலர்தார்
மார்பற் கிம்மலைமேற்
கழல்பொதிந்த சேவடியாற் கடக்க
லாகா தெனவெண்ணிக்
குழல்பொதிந்த தீஞ்சொல்லார் குழாத்தி
னீங்கிக் கொண்டேந்தி
நிழல்பொதிந்த நீண்முடியா னினைப்பிற்
போகி நிலத்திழிந்தான்
பொருள் : நிழல் பொதிந்த நீள்முடியான் - ஒளி பதிந்த நீண்ட முடியுடைய சுதஞ்சணன்; அழல் பொதிந்த நீள் எஃகின் அலர்தார் மார்பற்கு - அழலிலே தங்கிய நீண்ட வேலேந்திய, மலர்மாலை யணிந்த மார்பனுக்கு; கழல் பொதிந்த சேவடியால் - கழல் அணிந்த சேவடியினாலே; இம் மலைமேல் கடக்கலாகாது என எண்ணி - இம் மலைமீது செல்ல வியலாது என நினைத்து; குழல் பொதிந்த தீ சொல்லார் குழாத்தின் நீங்கி - குழலின் இசை தங்கிய இனிய மொழியாரின் திரளினிற்றும் நீங்கி; ஏந்திக் கொண்டு நினைப்பின் போகி நிலத்து இழிந்தான் - சீவகனை ஏந்தியவாறு நினைவின்படி சென்று நிலமிசை இறங்கினான்.
விளக்கம் : அழல் - நஞ்சுமாம். எஃகு - வேல். மார்பற்கு - சீவகனுக்கு. கழல் பொதிந்த - வீரக்கழல் கட்டிய, குழல் : ஆகுபெயர்; இசை. நிழல் - ஒளி. முடியான் : சுதஞ்சணன். தீஞ்சொல்லார் : மங்கையர். (59)
1225. வண்டளிர்ச் சந்தனமும் வழையு
மாவும் வான்றீண்டி
விண்டொழுகு தீங்கனிகள் பலவு
மார்ந்த வியன்சோலை
மண்கருதும் வேலானை மறித்துங்
காண்க வெனப்புல்லிக்
கொண்டெழுந்தான் வானவனுங் குருசி
றானே செலவயர்ந்தான்
பொருள் : வண் தளிர்ச் சந்தனமும் வழையும் மாவும் வான் தீண்டி - வளவிய தளிரையுடைய சந்தனமும் சுரபுன்னையும் மாவும் வானைத் தொட்டு; விண்டு ஒழுகு தீ கனிகள் பலவும் ஆர்ந்த வியன் சோலை - விரிந்து தேன் ஒழுகும் இனிய பழங்கள் பலவும் நிறைந்த பெரிய பொழிலிலே; மண் கருதும் வேலானை மறித்தும் காண்க என - உலகை நினைக்கும் வேலேந்திய சீவகனைத் திரும்பவும் காண்பேனாக என்று கூறி; வானவனும் புல்லிக் கொண்டு எழுந்தான் - சுதஞ்சணன் தழுவிக்கொண்டு சென்றான்; குருசில் தானே செலவு அயர்ந்தான் - சீவகனும் தானே செல்லுதற்குப் புறப்பட்டான்.
விளக்கம் : பின்னர் முடிசூட்டவும், வீடுபெற்றபடி காண்டற்கும் வருதல் குறித்து, மறித்தும் காண்க என்றான். ஈண்டு, மண் கருதும் வேலான் என்றவாறு. பின்னும், மண்கொண்ட வேலான் (சீவக. 2353) என்பர். இதற்குமுன் சீவகன் தனியே போகாமையின், தானே செலவயர்ந்தான் என ஆசிரியர் நொந்துரைத்தார். (60)
1226. வாளுழலை பாய்ந்திளைய வளநா கிட்டி னமென்னுந்
தாளொழியப் போரேறு தனியே போந்த தெனவெண்ணி
நீளருவிக் கண்ணீர்வீழ்த் தலறி வண்ணங் கரிந்துருகிக்
கோளுழுவை யன்னாற்குக் குன்ற முந்நின் றழுதனவே.
பொருள் : இனம் என்னும் தாள் ஒழிய - தோழராகிய கால் அங்கே நிற்கவும்; வாள் உழலை பாய்ந்த - வாட்படையாகிய தடைமரத்தை நீங்கி; இளைய வளநாகு இட்டு - இளமையும் வளப்பமும் உடைய தத்தை குணமாலையென்னும் நாகுகளைப் பிரிந்து; போர் ஏறு தனியே போந்தது என எண்ணி - சீவகனாகிய போருக்குரிய ஏறு தனியே வந்தது என்று நினைந்து; நீள் அருவிக் கண்ணீர் வீழ்த்து அலறி - நீண்ட அருவியாகிய கண்ணீரை விட்டுக் கதறி; வண்ணம் கரிந்து உருகி - மேனி கருகி அசும்பு வீழ்தலின்; கோள் உழுவை அன்னாற்குக் குன்றமும் நின்று அழுதன - கொல்லும் புலியன்னானுக்கு மலைகளும் நின்றழுதன.
விளக்கம் : ஆசிரியர் தம் குறிப்பை மலைமீதேற்றினார். தோழர் நால்வரும் இவனுக்குக் கால்போறலின் தாள் என்றார். புலிக்குத் தன் காடும் பிறகாடும் ஒக்கும் என்று உழுவை யன்னான் என்றார். (61)
1227. மிக்கார்தங் கேட்டின்கண் மேன்மை
யில்லாச் சிறியார்போ
னக்காங்கே யெயிறுடைந்த நறவ
முல்லை நாள்வேங்கை
தக்கார்போற் கைம்மறித்த காந்த
ளந்தோ தகாதெனவே
தொக்கார்போற் பன்மாவு மயிலுந்
தோன்றித் துளங்கினவே.
பொருள் : மிக்கார்தம் கேட்டின்கண் மேன்மையில்லாச் சிறியார்போல் - பெரியோருக்குக் கெடுதி நேர்ந்தபோது உயர்வு கருதாத கீழ்மக்கள் நகுதல் போல; நறவம் முல்லை நாள் வேங்கை நக்கு ஆங்கே எயிறு உடைந்த - தேனுடைய முல்லைகள் அக்காலத்துக்குரிய வேங்கை மரத்தின்கண்ணே நின்று நகைத்து அப்பொழுதே எயிற்றின் தன்மை கெட்டன; தக்கார்போல் காந்தள் அந்தோ! தகாது எனவே கை மறித்த - அது கண்டு நன் மக்களைப் போலக் காந்தள், அந்தோ! இது தகாது என்று கைகவித்து விலக்கின; தொக்கார்போல் பல் மாவும் மயிலும் தோன்றித் துளங்கின - (அவ்வளவிலே) சுற்றத்தாரைப் போலே பலவகை விலங்குகளும் மயில்களும் கண்டு நடுங்கின.
(விளக்கம்.) மிக்கார் -அறிவு மிக்க சான்றோர். சிறியார் போன்று நகைத்து அப்பொழுதே அத்தீவினையின் பயனாகப் பல்லுடைபட்டன என்றும் ஒரு பொருள் தோன்றுதல் உணர்க. தக்கார் - தகவுடையோர். தொக்கார் - சுற்றத்தினர். (62)
1228. கொல்லை யகடணைந்து குறும்பு சேர்ந்து தமியாரை
முல்லை முறுவலித்து நகுதிர் போலு மினிநும்மைப்
பல்லை யுகுத்திடுவ மென்று பைம்போ தலர்சிந்தித்
தொல்லை நிறங்கருகித் தும்பி பாய்ந்து துகைத்தனவே.
பொருள் : முல்லை! கொல்லை அகடு அடைந்து - முல்லைகளே! நீங்கள் கொல்லையின் நடுவைச் சேர்ந்து; குறும்பு சேர்ந்து - வேங்கையாகிய அரணை அடைந்து; தமியாரை முறுவலித்து நகுதிர்போலும் - தனித்தவர்களை முறுவல் செய்து இகழுதிர் போலும்!; இனி நும்மைப் பல்லை உகுத்திடுவம் என்று - இங்ஙனம் இகழும் நும்மை இனிமேற் பல்லை உடைத்திடுவோம் என்றுரைத்து; பைம் போது அலர் சிந்தி - புதிய போதினும் அலரினும் உள்ள தேனைத் துளித்து; தொல்லை நிறம் கருகிப் பாய்ந்து - பழைமையான தம் நிறம் கருகி அம்முல்லை மலர்களிலே பாய்ந்து; தும்பி துகைத்தன - வண்டுகள் சிதைத்தன.
விளக்கம் : போது : அலரும் முகை. இம் மூன்று செய்யுட்களினும் இயற்கை நிகழ்ச்சிகளைச் சீவகன் நிலையுடன் குறித்துக் கூறினார் தற்குறிப்பேற்றங் கருதி. தும்பி ஆர்ந்து என்றும் பாடம். (63)
1229. தோடேந்து பூங்கோதை வேண்டேங் கூந்தறொடே லெம்மில்
பீடேந் தரிவையரிற் பெயர்கென் றூடு மடவார்போற்
கோடேந்து குஞ்சரங்க டெருட்டக் கூடா பிடிநிற்குங்
காடேந்து பூஞ்சாரல் கடந்தான் காலிற் கழலானே.
பொருள் : தோடு ஏந்து பூங்கோதை வேண்டேம் - இதழ் கொண்ட இம் மலர்க் கோதைகளை யாம் விரும்பிலேம்; கூந்தல் தொடேல் - (ஆதலின்) எங் கூந்தலைத் தொடாதே; எம் இல் - (நீ வழி தவறினை) இது எம் இல்லம்; பீடு ஏந்து அரிவையர் இல் பெயர்க - சிறப்புற்ற பரத்தையர் இல்லத்தை அடைக; என்று ஊடும் மடவார்போல் - என்றுரைத்துப் பிணங்கும் மங்கையரைப் போல; கோடு ஏந்து குஞ்சரங்கள் தெருட்ட - கொம்புகளையுடைய களிறுகள் தெளிவிக்கவும்; பிடிகூடா நிற்கும் - பிடிகள் தெளியாமற் பிணங்கி நிற்கின்ற, காடு ஏந்து பூஞ் சாரல் - காடுகள் பொருந்திய அழகிய சாரலை; கழலான் காலின் கடந்தான் - கழலணிந்த சீவகன் காலாலே கடந்தான்.
விளக்கம் : இதற்குமுன் காலால் நடந்தறியான் என்பது தோன்றக், காலிற் கடந்தான் என்றார். பூங்கோதை வேண்டேம் என்றது, கையுறைமறுத்தல் என்னும் ஓர் அகத்துறையை நினைப்பிக்கின்றது. குஞ்சரங்கள் என்னும் பொதுப்பெயர் ஈண்டுப் பெண்ணொழித்து நின்றது. கூடா : என்பது விகுதி குன்றிய எதிர்மறை வினையெச்சம் : கூடாமல் என்பது பொருள். (64)
வேறு
1230. காழக மூட்டப் பட்ட காரிருட் டுணியு மொப்பா
னாழளை யுடும்பு பற்றிப் பறித்துமார் பொடுங்கி யுள்ளான்
வாழ்மயிர்க் கரடி யொப்பான் வாய்க்கிலை யறித லில்லான்
மேழகக் குரலி னானோர் வேட்டுவன் றலைப்பட் டானே.
பொருள் : காழகம் ஊட்டப்பட்ட காரிருள் துணியும் ஒப்பான் - கருமை ஊட்டப்பட்டதோர் இருளின் துண்டமும் போன்றவன்; ஆழ் அளை உடும்பு பற்றிப் பறித்து மார்பு ஒடுங்கியுள்ளான் - ஆழமான வளையில் உள்ள உடும்பைப் பிடித்திழுத்தலால் மார்பு ஒடுங்கியவன்; வாழ் மயிர்க்கரடி ஒப்பான் - மயிர் வாழ்தலாற் கரடி போன்றவன்; வாய்க்கு இலை அறிதல் இல்லான் - வாய்க்கு வெற்றிலை கண்டறியாதவன்; மேழகக் குரலினான்- ஆட்டின் குரல்போலும் குரலினன் (ஆகிய); ஓர் வேட்டுவன் தலைப்பட்டான் - ஒரு வேடன் எதிர்ப்பட்டான்.
விளக்கம் : வாண்மயிர் எனவும், ஏழகம் எனவும் பாடம். காழகம் - கருமை. இருட்டுணி - இருளினது துண்டு. வாய்க்கிலை : வெற்றிலை. வாய்க்கு + இலை = வாய்க்கிலை. வாய்க்குத் தகுதியுடைய இலை. எனவே வெற்றிலையை யுணர்த்தியது. மேழகம் - ஆட்டுக்கிடாய். (65)
1231.கொடிமுதிர் கிழங்கு தீந்தேன்
கொழுந்தடி நறவொ டேந்திப்
பிடிமுதிர் முலையி னாடன்
றழைத்துகிற் பெண்ணி னோடுந்
தொடுமரைத் தோலன் வில்லன்
மரவுரி யுடையன் றோன்ற
வடிநுனை வேலி னான்கண்
டெம்மலை யுறைவ தென்றான்.
பொருள் : கொடிமுதிர் கிழங்கு தீந் தேன் கொழுந்தடி நறவொடு ஏந்தி - கொடியில் முற்றிய கிழங்கும் இனிய தேனும் கொழுத்த ஊனும் கள்ளும் ஏந்தி; பிடிமுதிர் முலையினாள் தழைத் துகில் தன் பெண்ணினோடும் - பிடி போன்ற நடையினாளும் முதிர்ந்த முலையினாளும் தழையாடையுடையவளும் ஆகிய தன் மனைவியுடன்; தொடு மரைத்தோலன் வில்லன் மரவுரி உடையன் தோன்ற - புனைந்த மான்தோலுடனும் வில்லுடனும் மரவுரியுடனும் காணப்பட; வடிநுனை வேலினான் கண்டு எம்மலை உறைவது என்றான் - கூரிய முனையுடைய வேலனாகிய சீவகன் கண்டு, நீ எம்மலையில் வாழ்பவன் என்று வினவினான்.
விளக்கம் : கொழுந்தடி - கொழுவிய ஊன். நறவு - கள். முதிர்முலையினாள் : வினைத்தொகை. பெண், ஈண்டு மனைவி என்னும் பொருள்பட நின்றது. தோலன் - செருப்பினன், மான் தோலால் செய்த செருப்பு என்க. மரவுரியாகிய உடையினையுடையன் என்க. வேலினான் : சீவகன். (66)
1232. மாலைவெள் ளருவி சூடி
மற்றிதா தோன்று கின்ற
சோலைசூழ் வரையி னெற்றிச்
சூழ்கிளி சுமக்க லாற்றா
மாலையந் தினைகள் காய்க்கும்
வண்புன மதற்குத் தென்மேன்
மூலையங் குவட்டுள் வாழுங்
குறவருட் டலைவ னென்றான்
பொருள் : மாலைவெள் அருவி சூடி இதா தோன்றுகின்ற - மாலைபோல வெள்ளிய அருவியை அணிந்த இதோ காண்குறுகின்ற; சோலைசூழ் வரையின் நெற்றி - சோலை சூழ்ந்த மலையின் உச்சியிலே; சூழ்கிளி சுமக்கல் ஆற்றா மாலை அம் தினைகள் காய்க்கும் வண்புனம் - சூழ்ந்து வரும் கிளிகள் சுமக்க இயலாத, மாலை போல அழகிய தினைகள் விளைந்திருக்கும், வளமுறு புனம் ஒன்று உண்டு; அதற்குத் தென்மேல் மூலை - அப் புனத்திற்குத் தென் மேலே மூலையிலே உள்ள; அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான் - அழகிய மலையுச்சியிலே வாழும் வேடர்களுக்குத் தலைவன் யான் என்று அவ் வேடன் விளம்பினான்.
விளக்கம் : மற்று : அசை. இதா : திசைச்சொல். இதா - மரூஉமுடிபுமாம். நெற்றி - உச்சி. மாலையந்தினைகள் - ஒழுங்குபட்ட தினைக்கதிர்கள் எனினுமாம். வண்புனம் - வளப்பமுடைய கொல்லை. தென்மேல் மூலை - தென்மேற்காகிய கோணம். (67)
1233. ஊழினீ ருண்ப தென்னென்
றுரைத்தலு முவந்து நோக்கி
மோழலம் பன்றி யோடு
முளவுமாக் காதி யட்ட
போழ்நிணப் புழுக்க றேனெய்
பொழிந்துகப் பெய்து மாந்தித்
தோழயாம் பெரிது முண்டுந்
தொண்டிக்க ளிதனை யென்றான்.
பொருள் : ஊழின் நீர் உண்பது என் என்று உரைத்தலும் - முறைமையால் நீர் உண்பது யாது என்று வினவினானாக; உவந்து நோக்கி - விரும்பிப் பார்த்து; தோழ! - தோழனே!; மோழல் அம் பன்றியோடு முளவுமாக் காதி அட்ட போழ் நிணப் புழுக்கல் - ஆண் பன்றியுடன் எய்ப்பன்றியையும் கொன்று சமைத்த அரிந்த ஊனாகிய புழுக்கலை; தேன் நெய் பொழிந்து உகப்பெய்து மாந்தி - தேனாகிய நெய்யை மிகவும் வார்த்துத்தின்று; தொண்டிக்கள் இதனை யாம் பெரிதும் உண்டும் என்றான் - (பின்னர்) நெல்லாற் சமைத்த கள்ளாகிய இதனையாம் மிகுதியும் பருகுவோம் என்று வேடன் விளம்பினான்.
விளக்கம் : ஊழ் - முறைமை. மோழலம் பன்னி - ஆண்பன்றி. முழவுமா - எய்ப்பன்றி : முள்ளம்பன்றி. காதி - கொன்று. போழ்நிணப்புழுக்கல் : வினைத்தொகை. உகப்பெய்து - மிகப்பெய்து. தொண்டிக்கள் - நெல்லாலாக்கிய கள். (68)
1234. ஊனொடு தேனுங் கள்ளு
முண்டுயிர் கொன்ற பாவத்
தீனராய்ப் பிறந்த திங்ங
னினியிவை யொழிமி னென்னக்
கானில்வாழ் குறவன் சொல்லுங்
தகள்ளொடூன் றேன்கை விட்டா
லேனையெம் முடம்பு வாட்ட
லெவன்பிழைத் துங்கொ லென்றான்.
பொருள் : ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து - (முற்பிறப்பில்) ஊனையும் தேனையும் கள்ளையும் உண்டு உயிரையும் கொன்ற தீவினையால்; இங்ஙன் ஈனராய்ப் பிறந்தது - இவ்விடத்திலே இழிந்த வேடராய்ப் பிறக்க நேர்ந்தது; இனி இவை ஒழிமின் என்ன - இனி இவற்றைக் கைவிடுங்கள் என்று கூற; கானில்வாழ் குறவன் சொல்லும் - காட்டு வாழ்வுடைய வேடன் விளம்புகிறான்; கள்ளொடு ஊன் கைவிட்டால் எவன் பிழைத்தும் - கள்ளையும் ஊனையும் நீக்கினால் எவ்வாறு உயிர் வாழ்வோம்; எம் உடம்பு வாட்டல் ஏனை (வாட்டுக) என்றான் - (ஆகையால்) எம் உடம்பை வாட்டற்க; மற்றோர் உடம்பை வாட்டுக என்றான்.
விளக்கம் : ஈனர் - இழித்தவர்; வேட்டுவர் என்றவாறு. இவை - ஊன் உண்ணல் தேன் கள் உண்ணல் உயிர் கொல்லல் ஆகிய இத்தீயவற்றை. ஏனை என்பதற்கு மற்று எனப் பொருள் கொள்க. அவ்வுடம்பு வாட்டத்தினின்று எவ்வாறு தப்புவோம் என்றும் பொருள் கொள்ளலாம். (69)
1235. ஊன்சுவைத் துடம்பு வீக்கி நரகத்தி லுறைத னன்றோ
வூன்றினா துடம்பு வாட்டித் தேவரா யுரைத னன்றோ
வூன்றியிவ் விரண்டினுள்ளு முறுதிநீ யுரைத்தி டென்ன
வூன்றினா தொழிந்து புத்தே ளாவதே யுறுதி யென்றான்.
பொருள் : ஊன் சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ? - ஊனைச் சுவை பார்த்து உடம்பைப் பெருக்கி நரகத்தில் வாழ்வது நல்லதோ?; ஊன் தினாது உடம்பு வாட்டித் தேவராய் உறைதல் நன்றோ? - ஊனைத் தின்னாமல் உடம்பை வருத்தி வானவராய் வாழ்வது நல்லதோ?, ஊன்றி இவ் இரண்டினுள்ளும் உறுதி நீ உரைத்திடு என்ன - ஆராய்ந்து இந்த இரண்டின் உள்ளும் நல்லதை நீ கூறுக என்று வினவ; ஊன் தினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான் - ஊனைத் தின்னாமல் நீங்கி வானவனாவதே நன்மை என்று வேடன் சொன்னான்.
விளக்கம் : வீக்கி - பருக்கச்செய்து. தினாது - தின்னாது. ஊன்றி - கூர்ந்து பார்த்து. உறுதி - நல்லது. புத்தேள் - தேவர். (70)
1236. உறுதிநீ யுணர்ந்து சொன்னா
யுயர்கதிச் சேறி யேடா
குறுகினா யின்ப வெள்ளங்
கிழங்குணக் காட்டு ளின்றே
யிறைவனூற் காட்சி கொல்லா
வொழுக்கொடூன் றுறத்தல் கண்டா
யிறுதிக்க ணின்பந் தூங்கு
மிருங்கனி யிவைகொ ளென்றான்.
பொருள் : நீ உறுதி உணர்ந்து சொன்னாய் - நீ நலம் தெரிந்து கூறினை; ஏடா, உயர்கதி சேறி - (ஆதலில்) ஏடா! நீ மேல் நிலை அடைவை: இறைவன் நூல் காட்சி கொல்லா ஒழுக்கொடு ஊன் துறத்தல் கண்டாய் - அருகன் ஆகமத்திற் காணப்படுவன கொல்லா விரதமும் ஊனை நீக்கலும் ஆகும் காண்; காட்டுள் கிழங்கு உண இன்றே இன்ப வெள்ளம் குறுகினாய் - காட்டிலே கிழங்கினை உண்பதனால் இன்றே இன்பப் பெருக்கை அடைந்தாய்; இறுதிக்கண் இன்பம் தூங்கும் இருங்கனி இவை கொள் என்றான் - நினக்கு இறுதிக் காலத்தே இன்பம் செறியும் பெருங்கனி இவையே என்று கொள்வாய் என்று சீவகன் செப்பினான்.
விளக்கம் : ஏடா : முன்னிலை ஒருமை விளி. உயர்கதி - தேவகதி. சேறி - செல்வாய். தெளிவு பற்றி, இன்ப வெள்ளங் குறுகினாய் என்ற இறந்த காலத்தாற் கூறினான். காட்டுள் கிழங்குண இன்றே இன்பவெள்ளம் குறுகினாய் என மாறுக. இறைவனூல் - அருகாகமம். (71)
1237. என்றலுந் தேனு மூனும் பிழியலு மிறுக நீக்கிச்
சென்றடி தொழுது செல்கென் றேம்பெய்நீள் குன்றமென்று
குன்றுறை குறவன் போகக் கூரெரி வளைக்கப் பட்ட
பஞ்சவர் போல நின்ற பகட்டினப் பரிவு தீர்த்தான்.
பொருள் : என்றலும் - என்றுரைத்தவுடன்; தேனும் ஊனும் பிழியலும் இறுக நீக்கி - தேனையும் ஊனையும் கள்ளையும் முற்றும் துறந்து; சென்று அடிதொழுது - போய் அவன் அடியைத் தொழுது; தேன்பெய் என் நீள்குன்றம் செல்கு என்று - தேன்சொரியும் என்னுடைய பெருமலைக்குச் செல்வேன் என்றுரைத்து; குன்று உறை குறவன் போக - மலை வாழும் வேடன் சென்ற பிறகு; கூர் எரி வளைக்கப்பட்ட பஞ்சவர்போல நின்ற - (அரக்கு மாளிகையிற்) பெருந்தீயினால் வளைக்கப் பெற்ற தருமன் முதலான ஐவரையும் போலக் காட்டுத் தீயால் வளைப்புற்று நின்ற; பகட்டு இனம் பரிவு தீர்த்தான் - யானைத் திரளின் துன்பத்தை நீக்கினான்.
விளக்கம் : சுதஞ்சணன் மலைக்கும் அரணபாதத்திற்கும் நடுவே இவ்விரண்டறமும் செய்தான். மழையைப் பெய்வித்து யானைகளின் வருத்தத்தை நீக்கினான் என்பார் நச்சினார்க்கினியர். (72)
வேறு
1238. இலங்கொளி மரகத மிடறி யின்மணி
கலந்துபொன் னசும்புகான் றொழுகி மானினஞ்
சிலம்புபாய் வருடையொ டுகளுஞ் சென்னிநீள்
விலங்கல்சென் றெய்தினான் விலங்கன் மார்பினான்.
பொருள் : இன்மணி கலந்து பொன் அசும்பு கான்று சிலம்பு ஒழுகி - இனிய மணிகள் பொன்னுடன் கலந்து ஊற்றுப் பெருகி மலைமீது பரந்து; மான் இனம் இலங்கு ஒளி மரகதம் இடறி -மான்திரள் விளங்கும் ஒளியையுடைய மரகத்தை இடறி; பாய் வருடையொடு உகளும் - பாயும் மலையாடுகளுடனே துள்ளித் திரிகின்ற; நீள் சென்னி விலங்கல் மார்பினான் சென்று எய்தினான் - நீண்ட முடியை உடைய அரணபாதம் என்னும் மலையை மலையனைய மார்பினான் சென்றடைந்தான்.
விளக்கம் : கான்று - கக்கி, பெருகி. அசும்பு - ஊற்று. மரகதம் - பச்சைமணி. இன்மணி - காட்சிக்கினிய மணி. சிலம்பு - மலை. வருடை - மலையாடு. சென்னி - உச்சி, விலங்கல் - மலை; ஈண்டு அரணபாதமலை. (73)
1239. அந்தர வகடுதொட் டணவு நீள்புகழ்
வெந்தெரி பசும்பொனின் விழையும் வெல்லொளி
மந்திர வாய் மொழி மறுவின் மாதவ
ரிந்திரர் தொழுமடி யினிதி னெய்தினான்.
பொருள் : அந்தர அகடு தொட்டு - வானின் நடுவைத் தீண்டி; அணவு நீள்புகழ் - பொருந்தும் பெரும் புகழையும்; வெந்து எரி பசும் பொனின் - தீயில் வெந்து ஒளிரும் புதிய பொன்போல; விழையும் வெல்ஒளி - விரும்பத் தகும். பிற ஒளிகளை வெல்லும் ஒளியினையும்; மந்திர வாய்மொழி - மந்திரமாகிய வாய்மொழியினையுமுடைய; மறுஇல் மாதவர் - குற்றம் அற்ற முனிவரரின்; இந்திரர் தொழுமடி - வானவர் வணங்கும் அடியினை; இனிதின் எய்தினான் - வருந்தாமல் அடைந்தான்.
விளக்கம் : இச் செய்யுளால் மலையடிவாரத்தில் முனிவர்களை முதலில் வணங்கினான் என்றறிக. அந்தரம் - வானம். அகடு - நடுவிடம். அணவுதல் - வந்தெய்துதல். விழையும் : உவமவுருபு. மந்திரவாய் மொழி - மந்திரமாகிய வாய்மொழி என்க. மாதவர் - அருக சமயத்துறவியர். (74)
வேறு
1240. முனிவரு முயன்று வான்கண்
மூப்பிகந் திரிய வின்பக்
கனிகவர் கணனு மேத்தக்
காதிகண் ணரிந்த காசி
றனிமுதிர் கடவுள் கோயி
றான்வலங் கொண்டு செல்வான்
குனிதிரை முளைத்த வெய்யோன்
குன்றுசூழ் வதனை யொத்தான்.
பொருள் : முனிவரும் வான்கண் மூப்பு இகந்து இரிய இன்பக் கனிகவர் கணனும் முயன்று ஏத்த - முனிவர்களும் வானிடத்துத் தமக்கு வரும் மூப்புக் கைவிட்டுக் கெடும்படி யாக, ஆங்கே இன்ப கனியை நுகரும் வானவரும் முயன்று வாழ்த்த; காதி கண் அரிந்த காசி இல் தனி முதிர் கடவுள் கோயில் - உபாதிகளைத் தன்னிடத்தே நில்லாதவாறு வேரறுத்த குற்றம் அற்ற அருகன் கோயிலை; வலம் கொண்டு செல்வான் - வலம் கொண்டு செல்கிற சீவகன்; குனிதிரை முளைத்த வெய்யோன் - உயர்ந்து தாழும் அலையுடைய கடலிலே தோன்றிய ஞாயிறு; குன்று சூழ்வதனை ஒத்தான் - மேருவைச் சூழுந்தன்மையை ஒத்தான்.
விளக்கம் : வான் - தேவருலகம். கணன் - கணம்; கூட்டம். காதி - ஞானாவரணீயம் முதலிய எட்டும்,. தனிமுதிர் கடவுள் - ஒப்பற்ற பழைய இறைவன் : அருகன். குன்று ஈண்டு மேரு. (75)
1241. தண் கயம் குற்ற போதும்
தாழ்சினை இளிந்த வீயும்
வண் கொடிக் கொய்த பூவும்
வார்ந்து மட்டு உயிர்ப்ப ஏந்தித்
திண் புகழ் அறிவன் பாதம்
திருந்து கைத் தலத்தின் ஏற்றிப்
பண்பு கொள் குணம் கொள்
கீதம் பாணியில் பாடுகின்றான்.
பொருள் : தண்கயம் குற்ற போதும் - குளிர்ந்த குளத்திலே பறித்த போதினையும்; தாழ்சினை இளிந்த வீயும் - தாழ்ந்த கிளைகளில் இணுங்கின மலரையும்; வண்கொடி கொய்த பூவும் - செழுவிய கொடிகளிற் பறித்த பூவையும்; மட்டு வார்ந்து உயிர்ப்ப ஏந்தி - தேன் பிலிற்றிச் சிந்த எடுத்து; திண்புகழ் அறிவன் பாதம் திருந்து கைத்தலத்தின் ஏற்றி - திணிந்த புகழையுடைய அருகன் திருவடியை அழகிய கைகளால் இட்டு வணங்கி; பண்புகொள் குணம்கொள் கீதம் - இயல்பு கொண்ட குணங்களைத் தன்னிடத்தே கொண்ட இசையை; பாணியின் பாடுகின்றான் - தாளத்தோடே பாடுகின்றான்.
விளக்கம் : குற்றபோது - பறித்த மலர். இளிந்த வீ - இணுங்கின (பறித்த) மலர். மட்டு - தேன். அறிவன் - அருகக் கடவுள். பண்பு - இயல்பு. குணம் - இனிமைத்தன்மை என்க. கீதம் - இசை. பாணி - தாளம். (76)
வேறு
1242. ஆதி வேதம் பயந்தோய்நீ யலர்பெய்ம் மாரி யமைந்தோய்நீ
நீதி நெறியை யுணர்ந்தோய்நீ நிகரில் காட்சிக் கிறையோய்நீ
நாத னென்னப் படுவோய்நீ நவைசெய் பிறவிக் கடலகத்துன்
பாத கமலந் தொழுவேங்கன் பசையாப் பவிழப் பணியாயே.
பொருள் : ஆதி வேதம் பயந்தோய் நீ! - முதல் மறையை நல்கினை நீ!; அலர்பெய் மாரி அமைந்தோய் நீ! - மலர் மாரியிலே பொருந்தினை நீ; நீதி நெறியை உணர்ந்தோய் நீ! - நன்னெறியை அறிந்தனை நீ!; நிகர்இல் காட்சிக்கு இறையோய் நீ - ஒப்பில்லாத அறிவுக்குத் தலைமையை நீ!; நாதன் என்னப்படுவோய் நீ!- தலைவனென்று கூறப்படுவோய் நீ!; உன் பாத கமலம் தொழுவேங்கள் - (இவ்வாறு) நின் திருவடித் தாமரையை வணங்குவேமுடைய; நவைசெய் பிறவிக் கடலகத்து - குற்றந்தரும் பிறவிக் கடலிலே; பசை யாப்பு அவிழப் பணியாய் - பற்றாகிய தொடர்ச்சி நீங்கும் படி திருவுள்ளம் பற்றுவாய்.
விளக்கம் : ஆதி வேதம் : கொலை முதலியன கூறாத மறை. ஆதிவேதம் என்றது, அருகாகமத்தை, வேதமுதல்வன் விளங்கொளி ஓதிய வேதத்தொளி என்றார் இளங்கோவடிகளாரும் (சிலப். 10. 189 - 90). நிகரில் காட்சி என்றது, நற் காட்சியை. நாதன் - இறைவன். நவை - துன்பம். பசையாப்பு - ஆசைத்தொடர்பு. (77)
1243. இன்னாப் பிறவி யிகந்தோய்நீ
யிணையி லின்ப முடையோய்நீ
மன்னா வுலக மறுத்தோய்நீ
வரம்பில் காட்சிக் கிறையோய்நீ
பொன்னா ரிஞ்சிப் புகழ்வேந்தே
பொறியின் வேட்கைக் கடலழுந்தி
யொன்னா வினையி னுழல்வேங்க
ளுயப்போம் வண்ண முரையாயே.
பொருள் : பொன் ஆர் இஞ்சிப் புகழ் வேந்தே! - பொன்னாற்செய்த மதில் சூழ்ந்த இருப்பிடத்தில் உள்ள புகழ்மிகும் இறையே; இன்னாப் பிறவி இகந்தோய் நீ! - துன்பப் பிறவியைக் கடந்தனை நீ!; இணைஇல் இன்பம் உடையோய் நீ! - ஒப்பற்ற இன்பம் உடையை நீ!; மன்னா உலகம் மறுத்தோய் நீ - நிலையற்ற துறக்கத்தை வெறுத்தனை நீ!; வரம்புஇல் காட்சிக்கு இறையோய் நீ! - எல்லையற்ற காட்சிக்குத் தலைமையை நீ!; பொறியின் வேட்கைக் கடல் அழுந்தி - ஐம்பொறி வேட்கையாகிய கடலிலே முழுகி; ஒன்னா வினையின் உழல்வேங்கள் - பொருந்தாத தீவினையாலே வருந்தும் யாங்கள்; உயப்போம் வண்ணம் உரையாய் - வாழ்ந்துபோம் வகையை அருளிச் செய்வாய்.
விளக்கம் : இணையில் இன்பம் - அநந்த சுகம். மறுத்தல் - இன்பத்தைத் தவிர்த்தல். இன்னாப்பிறவி - துன்பத்திற்குக் காரணமான பிறப்பு. மன்னா உலகம் - நிலையுதலில்லாத உலகம். இதற்கு நிலைபேறுடைய சுவர்க்கம் என்று பொருள் கூறுவர். என்னை? அவர் உலகம் நிலையுடையது என்னும் கொள்கையுடையராகலான். இதனை மூவா முதலா உலகம் என்ற தொடருக்கு (1) ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் உரையானும் உணர்க. (78)
1244. உலக மூன்று முடையோய்நீ
யொண்பொ னிஞ்சி யெயிலோய்நீ
திலக மாய திறலோய்நீ
தேவரேத்தப் படுவோய்நீ
யலகை யில்லாக் குணக்கடலே
யாரு மறியப் படாயாதி
கொலையி லாழி வலனுயர்த்த
குளிர்முக் குடையி னிழலோய்நீ.
பொருள் : அலகை இல்லாக் குணக் கடலே! - அளவில்லாத பண்புறு கடலே!; உலகம் மூன்றும் உடையோய் நீ! - மூவுலகையும் உடையை நீ; ஒண்பொன் இஞ்சி எயிலோய் நீ! - சிறந்த பொன்னெயிலுடையை நீ! - திலகம் ஆய திறலோய் நீ! - சிறப்புடைய வரம்பிலா ஆற்றலுடையாய் நீ!; தேவர் ஏத்தப் படுவோய் நீ! - வானவரால் வாழ்த்தப்படுவோய் நீ!; கொலைஇல் ஆழி வலன் உயர்த்த - கொலை செய்யாத அறவாழியை வெற்றிக்காக எடுத்த; குளிர்முக்குடையின் நிழலோய் நீ! - தண்ணிய முக்குடை நீழலில் உள்ளாய் நீ!; ஆரும் அறியப்படாய் ஆதி - நீ எல்லோராலும் அறியப்படுவாய் ஆகின்றாய்.
விளக்கம் : முக்குடை : சீவக. 139 அடிக்குறிப்பை நோக்குக. படாய் செய்யாய் என்னுஞ் சொல் செய்யென் கிளவியாய் நின்றது. இவை மூன்றும் தேவபாணிக் கொச்சக ஒருபோகு எனப்படும். இவற்றால் இறைவனைப் பாடினான். (79)
வேறு
1245. அடியுலக மேதிதி யலர்மாரி தூவ
முடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் யாரே
முடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் மூன்று
கடிமதிலுங் கட்டழித்த காவலனீ யன்றே.
பொருள் : அடி உலகம் ஏத்தி அலர்மாரி தூவ - அடியை உலகம் போற்றி மலர்மழை பெய்ய; முடி உலகம் மூர்த்தி உற நிமிர்ந்தோன் யார்? - முடிந்த வுலகிலே இறைவனைக் காணும்படி முத்தியை அடைந்தவன் யாவன்!; முடி உலகம் மூர்த்தி உற நிமிர்ந்தோன் - மூன்று கடிமதிலும் கட்டழித்த காவலன் நீ அன்றே ! - காவலையுடைய மதிலையும் காவல் அழித்த காவலன் நீயே அன்றே?
விளக்கம் : உலகம் : ஆகுபெயர். அலர்மாரி - பூவாகிய மழை என்க. முடியுலகம் : வினைத்தொகை. நிமிர்ந்தவன் - முத்தியை அடைந்தவன். மூன்று கடிமதில் - காமம் வெகுளி மயக்கம் என்கின்ற மூவகை மதில். இவை வீடுபேற்றிற்குத் தடையாய் நிற்றலின் மதில் என்றார். (80)
1246. முரணவிய வென்றுலக மூன்றினையு மூன்றிற்
றரணிமேற் றந்தளித்த தத்துவன்றான் யாரே
தரணிமேற் றந்தளித்தான் றண்மதிபோ னேமி
யரணுலகிற் காய வறிவரனீ யன்றே.
பொருள் : முரண் அவிய வென்று - (மூன்று மதிலையும்) மாறுபாடு கெட வென்று; மூன்றின் - உலகம் மூன்றினையும்; தரணிமேல் தந்து அளித்த - அங்கம் பூர்வம் ஆதியென்கின்ற மூன்று ஆகமத்தாலும் உலகம் மூன்றின் தன்மையையும் உலகிலே தந்து வெளிப்படக் கூறிய; தத்துவன்தான் யார்?- உண்மைப் பொருளாவான் யார்தான்!; தரணிமேல் தந்து அளித்தான் - ; தண்மதிபோல் நேமி - குளிர்ந்த திங்கள்போலும் அறவாழியையுடைய; உலகிற்கு அரண் ஆய அறிவுவரன் நீ அன்றே - உலகிற்குக் காவலாக உள்ள அறிவுக்கு வரனாகவுள்ள நீயே அன்றோ?
விளக்கம் : அங்கம் முதலியன சைனாகமங்கள். முரண் - மாறுபாடு, மூன்றின் - ஆகமம் மூன்றானும்; அவையாவன: அங்காகமம், பூர்வாகமம், பகுசுருதியாகமம் என்பன. தத்துவன் - உண்மைப் பொருளாயுள்ளவன். அறிவரன் - அறிவுக்கு வரனாயுள்ளவன். (81)
1247. தீராவினை தீர்த்துத் தீர்த்தந் தெரிந்துய்த்து
வாராக் கதியுரைத்த வாமன்றான் யாரே
வாராக் கதியுரைத்த வாமன் மலர்ததைந்த
காரார்பூம் பிண்டிக் கடவுணீ யன்றே.
பொருள் : தீரா வினைதீர்த்து - நீங்காத வினையை நீக்கி; தீர்த்தம் தெரிந்து உய்த்து - ஆகமத்தை ஆராய்ந்தருளி; வாராக்கதி உரைத்த வாமன்தான் யார்? - மேல் வருதலில்லாத வீட்டினை உரைத்த வாமன் யார்தான்?; வாராக்கதி உரைத்த வாமன் - மலர்; ததைந்த காரார் பூம்பிண்டிக் கடவுள் நீ அன்றே?- மலர்கள் நிறைந்த, கார்காலத்தில் தழைக்கும் அழகிய அசோகின் நீழலின் அமர்ந்த கடவுளாகிய நீயே அன்றோ?
விளக்கம் : பா : முற்கூறியவை. கந்தருவ மார்க்கத்தால் இடை மடங்கின. இச் செய்யுள் மூன்றும் சாரணரைப் பாடியவை. சாரணரென்பார் அக் காலத்துத் திருக்கோயிலுக்கு வந்திருந்த முனிவர் என்பர். (82)
வேறு
1248. அம்மலைச் சினகரம் வணங்கிப் பண்ணவர்
பொன்மலர்ச் சேவடி புகழ்ந்த பின்னரே
வெம்மலைத் தெய்வதம் விருந்து செய்தபின்
செம்மல்போய்ப் பல்லவ தேய நண்ணினான்.
பொருள் : அம்மலைச் சினகரம் வணங்கி - அரணபாதம் என்னும் அம் மலையிலுள்ள திருக்கோயிலை வணங்கி; பண்ணவர் பொன்மலர்ச் சேவடி புகழ்ந்த பின்னர் - ஆண்டுள்ள சாரணருடைய மலரனைய சிவந்த அடியைப் புகழ்ந்த பிறகு; வெம்மலைத் தெய்வதம் விருந்து செய்தபின் - மலைத்தெய்வமான இயக்கி விருந்தளித்த பின்னர்; செம்மல்போய்ப் பல்லவ தேயம் நண்ணினான் - சீவகன் சாரலூடே சென்று பல்லவ நாட்டை அடைந்தான்.
விளக்கம் : அம்மலை என்றது அரணபாதம் என்னும் அம்மலையை அம்மலையை என்றவாறு. சினகரம் - அருகன்கோயில். பண்ணவர் - சாரணர். மலைத்தெய்வதம் - அம்மலையில் உறையும் இயக்கி. செம்மல் : சீவகன். தேயம் - நாடு. (83)
1249. அரியலார்ந் தமர்த்தலி னனந்தர் நோக்குடைக்
கரியவாய் நெடியகட் கடைசி மங்கையர்
வரிவரால் பிறழ்வயற் குவளை கட்பவ
ரிருவரை வினாய்நகர் நெறியின் முன்னினான்.
பொருள் : அரியல் ஆர்ந்து அமர்த்தலின் - மதுவை உண்டு பொருதலின்; அனந்தர் நோக்கு உடை - மயங்கிய பார்வையுடைய; கரியவாய் நெடிய கண் கடைசி மங்கையர் - கொடிய வாயையும் நீண்ட கண்களையும் உடைய உழத்தியராகிய; வரிவரால் பிறழ்வயல் குவளை கட்பவர் இருவரை - வரியையுடைய வரால்கள் பிறழும் வயலிலே குவளையாகிய களையைப் பறிக்கும் இரு மங்கையரை; வினாய் நெறியின் நகர் முன்னினான் - வழிவினவி, அவ்வழியே சென்று பல்லவ நாட்டின் தலைநகரை நெருங்கினான்.
விளக்கம் : இருவரையும் தனித்தனியே வினவினான் கூறிய வழி சரியா என்று தெரிந்துகொள்ள. குவளையல்லது களையில்லை என்க. கட்பவர் - களைபவர். வினாய் - வினவி; கேட்டு. (84)
1250. அன்னமு மகன்றிலு மணிந்து தாமரைப்
பன்மலர்க் கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரிக்
கன்னிமூ தெயில்கட லுடுத்த காரிகை
பொன்னணிந் திருந்தெனப் பொலிந்து தோன்றுமே.
பொருள் : அன்னமும் மகன்றிலும் அணிந்து - அன்னத்தையும் மகன்றிலையும் அணியாகக் கொண்டு; தாமரைப் பன்மலர்க் கிடங்குசூழ் - தாமரை முதலிய பல மலர்களையுடைய அகழி சூழ்ந்த; பசும்பொன் பாம்பு உரிக் கன்னி மூதெயில் - பைம்பொன்னால் இயற்றப்பட்ட ஆளோடிகளையுடைய அழிவற்ற பழம்புரிசை; கடல் உடுத்த காரிகை - கடலை ஆடையாக உடுத்த நிலமகள்; பொன் அணிந்த இருந்தெனப் பொலிந்து தோன்றும் - பூண் அணிந்திருந்தாற்போல அழகுடன் காணப்படும்
விளக்கம் : மகன்றில் : ஒருவகைப் பறவை; ஆணும் பெண்ணும் பிரிவில்லாதன; மருத நிலத்திற்குரியன. பாம்புரி - மதிலின் அடியில் உள்ளவை; ஆளோடிகள் என்றும் பெயர் பெறும். பொன் : கருவியாகு பெயராகப் பூண்களை உணர்த்தியது. மூதெயில் ... தோன்றுமே என வினைமுடிவு செய்க. (85)
1251. அகிறரு கொழும்புகை மாடத் தாய்பொனின்
முகிறலை விலங்கிய மொய்கொ ணீள்கொடிப்
பகறலை விலங்குசந் திராபம் பான்மையி
னிகறலை விலங்குவேற் காளை யெய்தினான்.
பொருள் : அகில்தரு கொழும்புகை மாடத்து - அகில் உண்டாக்கின நல்ல புகையையுடைய மாடத்திலே; முகில்தலை விலங்கிய ஆய்பொனின் மொய்கொள் நீள்கொடி - முகில் அங்கு நின்றும் விலகற்குக் காரணமான, ஆய்ந்த பொன்னாலான நெருங்கிய நீண்ட கொடி; பகல்தலை விலங்கு சந்திராபம் - ஞாயிற்றையும் அதனிடத்தே சென்று விலக்கும் சந்திராபம் என்னும் நகரை; இகல்தலை விலங்கு வேல்களை பான்மையின் எய்தினான் - பகைவரைப் போரிலே விலக்கும் வேலேந்திய சீவகன் முறைப்படி அடைந்தான்.
விளக்கம் : முகில் இடத்தினின்றும் விலகுதற்குக் காரணமான நீள் கொடி என்க. பகல் - ஞாயிறு. சந்திராபம் - ஒருநகரம். காளை : சீவகன். (86)
1252. மலரணி மணிக்குட மண்ணு நீரொடு
பலர்நலம் பழிச்சுபு பரவ வேகினா
னலர்கதிர் கரும்பிளை மடுப்ப வாய்நக.
ருலகளந் தானென வுள்புக் கானரோ.
பொருள் : அலர் கதிர் கரும்பிளை மடுப்ப - எழுகின்ற கதிரையுடைய ஞாயிற்றைக் கரிய காக்கை வலமாக நெருங்க; ஆய்நகர் உலகு அளந்தான் என உள்புக்கான் - சந்திராப நகரைக் கண்டு உலகளந்தவனைப்போல உள்ளே சென்றவன்; மலர் அணி மணிக்குடம் மண்ணும் நீரொடு - மலரணிந்த, மணிகள் இழைத்த குடத்தில் உள்ள மண்ணும் நீரினால்; பலர் நலம்பழிச்சுபு பரவ ஏகினான் - பலரும் ஆட்டி இவனுடைய பண்பைப் புகழ்ந்தேத்தச் சென்றான்.
விளக்கம் : கரும்பிள்ளை - காக்கை. சீவகன் வடக்கு நோக்கிச் செல்லும்போது, மேற்கிருந்த காகம் ஞாயிற்றின் மேற்செல்லவே காகம் வலமாயிற்று. இந் நிமித்தத்தின் பயனால் மண்ணு நீரால் ஆட்டும் வரவேற்புக் கிடைத்தது. மழகளிற் றெருத்தில் தந்த மணிக்குடம் மண்ணு நீரால் - அழகனை மண்ணுப் பெய்தாங்கு (சீவக. 1345) என்பர் பின்னும். இனி நாட்டிற்கும் ஊரிற்கும் தனித்தனியே இரண்டு நிமித்தமாக்கி யுரைப்பாரும் உளர் என்பர் நச்சினார்க்கினியர். காகம் வலமாதல் நாட்டிலும், மண்ணு நீராட்டல் நகரினும் நிமித்தமெனக் கொள்ளல் வேண்டும் அவர் கருத்துப்படி. (87)
வேறு
1253. சந்தனக் காவு சூழ்ந்து சண்பக மலர்ந்த சோலை
வந்துவீழ் மாலை நாற்றி மணியரங் கணிந்து வானத்
திந்திர குமரன் போல விறைமக னிருந்து காண
வந்தர மகளி ரன்னார் நாடக மியற்று கின்றார்.
பொருள் : சந்தனக் காவு சூழ்ந்து - சந்தனக் காவினைச் சூழ; சண்பகம் மலர்ந்த சோலை - சண்பகம் பூத்த பொழிலிலே; வந்துவீழ் மாலை நாற்றி - நிலத்தில் வந்து விழும் மாலைகளைத் தூக்கி; மணி அரங்கு அணிந்து - மணிகள் இழைத்த மேடையை அணிசெய்து; வானத்து இந்திர குமரன்போல இறைமகன் இருந்து காண - வானத்திலுள்ள இந்திரன் மகனான் சயந்தன் போல அரசன் மகன் அமர்ந்து காணுமாறு; அந்தர மகளிர் அன்னார் நாடகம் இயற்றுகின்றார் - விண்ணவர் மகளிர் போன்றார் நாடகம் நடத்துகின்றனர்.
விளக்கம் : சீவகன் செல்லும்போது நகரில் நாடகம் நடைபெறுகிறதென்று கொள்க. சந்தனக்காவு - சந்தனச்சோலை. அரங்கு - கூத்தாடு மேடை. இந்திரகுமரன் - சயந்தன். இறைமகன் - உலோகபாலன். அந்தர மகளிரன்னார் - தேவமகளிரை ஒத்த கூத்தியர். காவு - சோலை. நாற்றி - தொங்கவிட்டு. இஃது பிறவினை. நான்று என்பது தன்வினை. இந்திரகுமரன் போல என்றதற்கு ஏற்ப, அந்தர மகளிரன்னார் என்றார். (88)
1254. குழலெடுத் தியாத்து மட்டார்
கோதையிற் பொலிந்து மின்னு
மழலவிர் செம்பொற் பட்டங்
குண்டல மாரந் தாங்கி
நிழலவி ரல்குற் காசு
சிலம்பொடு சிலம்ப நீடோ
ளழகிகூத் தாடு கின்றா
ளரங்கின்மே லரம்பை யன்னாள்.
பொருள் : அரம்பை அன்னாள் நீள்தோள் அழகி - வானவர் மகள் போன்றாளாகிய நீண்ட தோளையுடைய அழகியொருத்தி; குழல் எடுத்து யாத்து - கூந்தலை எடுத்துக் கட்டி; மட்டு ஆர் கோதையின் பொலிந்து - தேன் நிறைந்த மலர்மாலையாலே அழகு பெற்று; மின்னும் அழல் அவிர் செம்பொன் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி - நெருப்பென ஒளிரும் செம்பொன்னாலான பட்டமும் குண்டலமும் ஆரமும் அணிந்து; அல்குல் நிழல் அவிர்காசு சிலம்பொடு சிலம்ப - அல்குல் மேலணிந்த மேகலைக்காசுடன் சிலம்பும் ஒலிக்க; அரங்கின் மேல் கூத்து ஆடுகின்றாள் - அரங்கின் மீது கூத்தாடுகின்றாள்.
விளக்கம் : வாடிய வண்தளிர் அன்ன மேனி - ஆடியன் மகளிர் அமைதி கூறின் - நெறியின் நீங்கிய நெடிய ரல்லோர் - குறியிற் குறைந்த குறியர் அல்லோர் - பாற்கடல் இல்லாப் பருமை யில்லோர் என்னும் சூத்திரத்திற் கூறிய நிலைகளுடனே ஆசிரியன் இட்ட அழகு கிடத்தலின், அழகி யென்றார்- என்பர் நச்சினார்க்கினியர். (89)
1255. தண்ணுமை முழவம் வீணை
குழலொடு குயிலத் தண்பூங்
கண்ணொடு புருவங் கைகால்
கலையல்கு னுசுப்புக் காம
ரொண்ணுதல் கொண்ட வாடற்
றொட்டிமை யுருவ நோக்கி
வெண்ணெய்தீ யுற்ற வண்ண
மாடவர் மெலிகின் றாரே
பொருள் : தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயில - தண்ணுமையும் முழவமும் வீணையும் குழலும் ஒத்திசைக்க; தண்பூங் கண்ணொடு புருவம் கைகால் கலை அல்குல் நுசுப்புக் காமர் ஒண் நுதல் கொண்ட - தண்ணிய மலரனைய கண் முதலாக அழகிய ஒள்ளிய நுதலாள் கொண்ட; ஆடல் தொட்டிமை உருவம் நோக்கி - கூத்தின் ஒற்றுமையான வடிவைப் பார்த்து; வெண்ணெய் தீ உற்ற வண்ணம் ஆடவர் மெலிகின்றார் - வெண்ணெய் தீயிலே உற்றாற்போல ஆடவர்கள் மெலிகின்றனர்.
விளக்கம் : தண்ணுமை - குடமுழவு. முழவம் - மத்தளம். குழல் - வேய்ங்குழல். குயிலுதல் - ஈண்டு இசைத்தல். தொட்டிமை - ஒற்றுமை. (90)
1256. பாடலொ டியைந்த வாடல் பண்ணமை கருவி மூன்றுங்
கூடுபு சிவணி நின்று குழைந்திழைந் தமிர்த மூற
வோடரி நெடுங்க ணம்பா லுளங்கிழிந் துருவ வெய்யா
வீடமை பசும்பொற் சாந்த மிலயமா வாடு கின்றாள்.
பொருள் : பாடலொடு இயைந்த ஆடல் பண் அமை கருவி மூன்றும் - பாட்டுடன் பொருந்திய ஆடலும் இசைபொருந்திய வாச்சியமும் ஆகிய இம் மூன்றும்; கூடுபு சிவணி நின்று குழைந்து இழைந்து அமிர்தம் ஊற - கூடிப் பொருந்தி நின்று மெல்கிக் கலந்து இனிமை மிக; ஓடு அரி நெடுங்கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா - பரவிய செவ்வரி யுடைய நீண்ட கண்ணாகிய அம்பினால் உள்ளம் பிளந்து உருவுமாறு எய்து; ஈடு அமை பசும் பொன் சாந்தம் இலயம்ஆ ஆடுகின்றாள் - இடுதல் அமைந்த பசும்பொன் போன்ற சாந்தம் அழிய ஆடுகின்றாள்.
விளக்கம் : சாந்தம் என்பதைக் கூத்தாடுகின்றவள் பெயராக்கி அதற் கேற்பவும் உரைப்பார்கள். இலயம்ஆ - ஒன்றாக; அழிய. கூடுபு : வினையெச்சம். ஈடு : முதனிலை திரிந்த தொழிற் பெயர். (91)
1257. வாணுதற் பட்ட மின்ன வார்குழை திருவில் வீசப்
பூண்முலை பிறழப் பொற்றோ டிடவயி னுடங்க வொல்கி
மாணிழை வளைக்கை தம்மால் வட்டணை போக்கு கின்றாள்
காண்வரு குவளைக் கண்ணாற் காளைமே னோக்கி னாளே.
பொருள் : மாண் இழை - சிறந்த அணிகலனுடையாள்; வாள் நுதல் பட்டம் மின்ன - ஒள்ளிய நெற்றியிலே பட்டம் ஒளிபெற; வார் குழை திருவில் வீச - நீண்ட குழைகள் வானவில்லென ஒளிர; பொன் தோடு இடவயின் நுடங்க - இடப்பக்கத்தே பொன் தோடு அசைய; பூண் முலை பிறழ - முலை மிசைப் பூண்கள் பிறழ; ஒல்கி - அசைந்து; வளைக்கை தம்மால் - வளையணிந்த கைகளால்; வட்டணை போக்குகின்றாள் - வர்த்தனை செய்கின்றவள்; காண் வரு குவளைக் கண்ணால் - பார்த்தற்குரிய குவளையனைய கண்களால்; காளைமேல் நோக்கினாள் - சீவகனைப் பார்த்தாள்.
விளக்கம் : வர்த்தனை வட்டணை ஆயிற்று; தற்பவம். கைவட்டணையாவன : அப வேட்டிதம், உப வேட்டிதம், வியாவர்த்திதம், பரிவர்த்திதம்; இவை பிறைக்கையாம். தற்சனி முதலாப் பிடித்தல் அகம்வரின் - அத் தொழிலாகும் அப வேட்டிதமே தற்சனி முதலாக விடுத்தல் அகம்வர - உய்த்தல் ஆகும் உப வேட்டிதமே கனிட்ட முதலாப் பிடித்தல் அகம்வர - விடுத்தல் ஆகும் வியாவர்த்திதமே கனிட்ட முதலா விடுத்தல் புறம் வரப் - படுத்தல் ஆகும் பரிவர்த் திதமே ஆன்ற அபவேட் டிதமுப வேட்டிதம் - தோன்றும் வியாவர்த் திதத்தோடு மூன்றும் - பரிவர்த் திதமு மெனப்பகர்ந்தா ரித்தை - உரிமைப் பிறைக்கையா லூர். (92)
1258. நோக்கினா ணெடுங்க ணென்னுங்
குடங்கையா னொண்டு கொண்டு
வாக்கமை யுருவின் மிக்கான்
வனப்பினைப் பருக விப்பா
லாக்கிய விலய நீங்கிற்
றணங்கனா ணெடுங்கண் பில்கி
வீக்குவார் முலையி னெற்றி
வெண்முத்தஞ் சொரிந்த வன்றே.
பொருள் : நோக்கினாள் நெடுங்கண் என்னும் குடங்கையால் நொண்டு கொண்டு - பார்த்தவள் நீண்ட கண்களாகிய உள்ளங்கையாலே முகந்து கொண்டு; வாக்கு அமை உருவின் மிக்கான் வனப்பினைப் பருக - கவிகளாற் புகழ்தல் ஆகா வடிவிற் சிறந்தான் அழகினைப் பருகுதலாலே; இப்பால் ஆக்கிய இலயம் நீங்கிற்று - இவ்விடத்துக் கண் முதலியவற்றால் ஆக்கிய தாள அறுதிகள் நீங்கின; அணங்கனாள் நெடுங்கண் பில்கி - (மற்றும் இமையாமல் நோக்கியதனாற் கரித்து) தெய்வப் பெண் போன்ற அவளுடைய கண்கள் சிறு துவலையை வீசி; வார் வீக்கு முலையின் நெற்றி வெண்முத்தம் சொரிந்த - வாரினாற் கட்டப் பெற்ற முலை முகட்டிலே வெண் முத்தனைய நீர்த்துளியைச் சொரிந்தன.
விளக்கம் : இது பெருமை பற்றிய மருட்கை யென்னும் மெய்ப்பாடு. (தொல். மெய்ப் - 7.) கண்கரித்த நீர் வீழ்தலின் அழுமையென்னும் மெய்ப்பாடாகாது. (93)
1259. செருக்கய னெடுங்க ணாளத் திருமகன் காண்ட லங்சி
நெருக்கித்தன் முலையின் மின்னு நிழன்மணி வடத்தை மாதர்
பொருக்குநூல் பரிந்து சிந்தாப் பூவெலாங் கரிந்து வாடத்
தரிக்கிலாள் காமச் செந்தீத் தலைக்கொளச் சாம்பி னாளே.
பொருள் : செரு கயல் நெடுங்கணாள் - பொருகின்ற கயலனைய நீண்ட கண்ணினாள்; அத் திருமகன் காண்டல் அஞ்சி - அந்த அரசகுமரன் கண்ணீரைப் பார்த்தற்கு அஞ்சி; தன் முலையின் மின்னும் நிழல் மணிவடத்தை நெருங்கி - தன் முலைகளினாலே ஒளிவிடும் முத்து வடத்தை நெருக்கி; பொருக்கு நூல் பரிந்து சிந்தா - அக் கண்ணீருக்கு ஒப்பாக நூலை அறுத்து முத்துக்களைச் சிந்தி; மாதர் பூ எலாம் கரிந்து வாட - அம் மாதர் மலரெலாம் கரிந்து வாடும்படி; காமச் செந்தீ தரிக்கிலாள் - காமத்தீயைப் பொறுக்க இயலாதவளாய்; தலைக்கொளச் சாம்பினாள் - தலைக்கொண்டு வருந்தினாள்.
விளக்கம் : பொருவுக்கு : பொருக்கு : விகாரம். பொரு - ஒப்பு. மாதர்பூ - விரும்புதற்குக் காரணமான மலர். செருக்கயல் நெடுங்கண் - ஒன்றனோடொன்று போர்புரியும் இணைக் கயல்மீனை ஒத்த நெடிய கண்கள். திருமகன் - உலோகபாலன், நிகழ் - ஒளி (94)
1260. கன்னிமை கனிந்து முற்றிக்
காமுறக் கமழுங் காமத்
தின்னறுங் கனியைத் துய்ப்பா
னேந்தலே பிறர்க ளில்லை
பொன்னினா லுடையுங் கற்பென்
றுரைத்தவர் பொய்யைச் சொன்னா
ரின்னிசை யிவற்க லாலென்
னெஞ்சிட மில்லை யென்றாள்.
பொருள் : இன் இசை இவற்கு அலால் என் நெஞ்சு இடம் இல்லை - இனிய புகழையுடைய இவனுக்கன்றி என் உள்ளத்தில் இடம் இல்லை; கன்னிமை முற்றிக் கனிந்து காமுறக் கமழும் காமத்து - (ஆதலின்) கன்னித் தன்மையோடே முற்றிக் கனிந்து மணக்கும் காமமாகிய; இன் நறுங் கனியைத் துய்ப்பான் ஏந்தலே - இனிய பழத்தை நுகர்கின்றவன் இவ் வேந்தலே; பிறர்கள் இல்லை - வேறு இதற்கு உரியார் இல்லை; பொன்னினால் கற்பு உடையும் என்று உரைத்தவர் பொய்யைச் சொன்னார் - பொருளாற் கற்பு அழியும் என்று மொழிந்தவர் பொய்யைப் புகன்றனர்; என்றாள் - என்று நினைத்தாள்.
விளக்கம் : கன்னிமை - கன்னித்தன்மை. கனிதல் - முதிர்தல். ஏந்தலே - சீவகனே. பத்துப் பொன்னுக்குமேற் பதிவிரதை இல்லை என்பது ஒரு பழமொழி. இவற்கு - இச்சீவகனுக்கு. (95)
1261. கருஞ்சிறைப் பறவை யூர்திக் காமரு காளை தான்கொ
லிருஞ்சுற வுயர்த்த தோன்ற லேத்தருங் குருசி றான்கொ
லரும்பெறற் குமர னென்றாங் கறிவயர் வுற்று நின்றா
டிருந்திழை யணங்கு மென்றோட் டேசிகப் பாவை யன்னாள்.
பொருள் : திருந்து இழை அணங்குமென் தோள் தேசிகப் பாவை அன்னாள் - செவ்விய அணிபுனைந்த அணங்கனையாளாகிய தேசிகப் பாவையாகிய அத்தகையினாள்; அரும் பெறற் குமரன் - அருமையாகக் கிடைத்த இக்குமரன்; கருஞ் சிறைப் பறவை ஊர்திக் காமரு காளை கொல்!- பெரிய சிறகுடைய மயில் ஊர்தியாகிய விருப்பூட்டும் முருக வேளோ?; இருஞ் சுறவு உயர்த்த தோன்றல் ஏத்தருங் குருசில் கொல்? - பெரிய சுறாமீனைக் கொடியில் ஏந்திய தோன்றலாகிய புகழற்கரிய காமனோ?; என்று ஆங்கு அறிவு அயர்வுற்று நின்றாள் - என்றெண்ணி அறிவு வருத்தமுற்று நின்றாள்.
விளக்கம் : தேசிகப் பாவை : அவள் பெயர். அன்னாள் என்பது அவளுடைய கல்வி முதலியவற்றைச் சுட்டி நின்றது. பாவை யொப்பாள் என்று பாடமாயின் இவளுக்கு உவமை கூறியதாகும்; பெயராகாது. (96)
1262. போதெனக் கிடந்த வாட்கண்
புடைபெயர்ந் திமைத்தல் செல்லா
தியாதிவள் கண்ட தென்றாங்
கரசனு மமர்ந்து நோக்கி
மீதுவண் டரற்றுங் கண்ணி
விடலையைத் தானுங் கண்டான்
காதலிற் களித்த துள்ளங்
காளையைக் கொணர்மி னென்றான்.
பொருள் : போது எனக் கிடந்த வாள்கண் புடை பெயர்ந்து இமைத்தல் செல்லாது - மலர் என அமைந்த ஒளிமிகு கண் பிறழ்ந்து இமைத்தல் இல்லை; இவள் கண்டது யாது என்று - இவள் பார்த்தது எது என்றெண்ணி; ஆங்கு அரசனும் அமர்ந்து நோக்கி - அவள் நோக்கின இடத்தே அரசகுமரனும் பொருந்திப் பார்த்து; மீது வண்டு அரற்றும் கண்ணி விடலையைத் தானும் கண்டான் - மேலே வண்டுகள் முரலும் கண்ணியணிந்த சீவகனை அவனும் பார்த்தான்; உள்ளம் காதலில் களித்தது - அப்போது அவன் மனம் விருப்பத்தாலே மகிழ்ந்தது; காளையைக் கொணர்மின் என்றான் - (உடனே) அக் குமரனை இங்கே கொண்டு வருக என்று பணியாட்களைப் பணித்தான்.
விளக்கம் : போது - பூ; ஈண்டுத் தாமரைப்பூ என்க. குவளைப்பூ என்னினும் பொருந்தும். இவள் - இக்கூத்தி. அரசன் : உலோகபாலன். அமர்ந்து - பொருந்தி. விடலை : சீவகன். காளையை - சீவகனை. இமைத்தல் செல்லாது இவள் கண்டது யாது என்று ஆய்ந்து அரசனும் அமர்ந்து நோக்கி விடலையைத் தானும் கண்டான் என வினை முடிவு செய்க. கண்ணி - மாலை. விடலை : இளைஞன். கண்ணியை யணிந்தவிடலை என்க. (97 )
வேறு
1263. கைவளர் கரும்புடைக் கடவு ளாமெனி
னெய்கணை சிலையினோ டிவன்க ணில்லையான்
மெய்வகை யியக்கருள் வேந்த னாகுமென்
றையமுற் றெவர்களு மமர்ந்து நோக்கினார்.
பொருள் : கை வளர் கரும்பு உடைக் கடவுளாம் எனின் - கையிலே வளரும் கரும்புடைய காமன் என்றால்; எய் கணை சிலையினோடு இவன்கண் இல்லை - எய்யும் மலரம்பும் கரும்பு வில்லும் இவனிடம் இல்லை; மெய்வகை இயக்கருள் வேந்தன் ஆகும் என்று - வடிவின் திறனை நோக்கின் இயக்கரின் அரசனாவான் என்று; எவர்களும் ஐயம் உற்று அமர்ந்து நோக்கினார் - எல்லோரும் ஐயம் உற்றுப் பொருந்தப் பார்த்தனர்.
விளக்கம் : கை என்பதற்கு ஒழுக்கம் எனப் பொருள் கொண்டு இல்வாழ்க்கை வளர்தற்குக் காரணமான கரும்பு என்பர் நச்சினார்க்கினியர். (98)
வேறு
1264. மந்திரம் மறந்து வீழ்ந்து மா நிலத்து இயங்கு கின்ற
அந்தர குமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி
இந்திர திருவற்கு உய்த்தார்க்கு இறைவனும் எதிர் கொண்டு ஓம்பி
மைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத் தோழன் என்றான்.
பொருள் : மந்திரம் மறந்துமாநிலத்து வீழ்ந்து இயங்குகின்ற - வானிற் செல்லும் மறைமொழி மறந்து நிலமிசை விழுந்து உலவுகின்ற; அந்தரகுமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி - வானுறுகுமரன் என்று அங்குள்ள எல்லோரும் பொருந்திப் பார்த்து; இந்திர திருவற்கு உய்த்தார்க்கு - இந்திரனைப்போன்ற செல்வமுடைய அரசகுமரனிடம் சேர்த்தவர்க்கு; இறைவனும் எதிர்கொண்டு ஓம்பி - அரசகுமரனும் எதிர்கொண்டு பேணி; மைந்தனை மகிழ்வ கூறி - அவன் மகிழுமாறு பேசி; மைத்துனத் தோழன் என்றான் - நீ என் விளையாட்டுத் தோழன் என்றுரைத்தான்.
விளக்கம் : அந்தரகுமரன் : வானவரில் ஒரு பிரிவு. இளவரசாதலின் அரசன் என்றும் (1262) இறைவன் என்றும் கூறினார். மந்திரம் - வான்வழிச் செல்லுதற்குரிய மறைமொழி. அந்தரகுமரன் - தேவகுமரன். அமர்ந்து - விரும்பி. இந்திரதிருவன் - இந்திரன்போன்று செல்வமிக்க உலோகபாலன். மைந்தனை - சீவகனை. மைத்துன முறைமையினையுடைய தோழன். மகிழ்வ - மகிழத்தக்க சொற்கள். இது வினையாலணையும் பெயர். (99)
1265. போதவிழ் தெரிய லானும் பூங்கழற் காலி னானுங்
காதலி னொருவ ராகிக் கலந்துட னிருந்த போழ்தி
னூதுவண் டுடுத்த மாலை யுணர்வுபெற் றிலயந் தாங்கிப்
போதுகண் டனைய வாட்கட் புருவத்தாற் கலக்கு கின்றாள்.
பொருள் : போது அவிழ் தெரியலானும் - அரும்பு மலர்ந்த மாலையானான அவ்வரச குமரனும்; பூங் கழற் காலினானும் - அழகிய கழலணிந்த சீவகனும்; காதலின் ஒருவர் ஆகிக் கலந்து உடன் இருந்த போழ்தின் - காதலால் ஒருவரே போலாகி உளங்கலந்து ஒன்றாக அமர்ந்திருந்த போது; ஊது வண்டு உடுத்த மாலை - முரலும் வண்டுகள் மொய்த்த மாலை போல்வாளான தேசிகப் பாவை; உணர்வு பெற்று - (இனி இவனைப் பெற்றோம் என்று) தெளிவு கொண்டு; இயலம் தாங்கி - தாள அறுதிகளைத் திரும்பவும் ஒழுங்காகக் கொண்டு; போது கண்டனைய வாள்கண் புருவத்தால் கலக்குகின்றாள் - மலரைப் பார்த்தாலனைய ஒளிமிகு கண்ணாலும் புருவத்தாலும் அவையைக் கலக்கத் தொடங்கினாள்.
விளக்கம் : தெரியலான் - மாலையையுடையவன் : உலோகபாலன். காலினான் : சீவகன், அவையத்தோர் கண்கள் எல்லாம் அவள் அழகினைப் பருகலால் ஊது வண்டுடுத்த மாலை என்றார். இலயம் - தாளவறுதி. கண் புருவ முதலியவற்றாலியற்றும் அவிநயத்தழகாற் காண்போர் உளத்தைக் கலக்கினாள் என்பது கருத்து. (100)
1266. தேனுகுக் கின்ற கண்ணித்
திருமக ளாட விப்பா
லூனுகுக் கின்ற வைவே
லொருமக னுருமிற் றோன்றி
வானுகுக் கின்ற மீன்போன்
மணிபரந் திமைக்கு மார்பிற்
கானுகுக் கின்ற பைந்தார்க்
காவலற் றொழுது சொன்னான்
பொருள் : தேன் உகுக்கின்ற கண்ணித் திருமகள் ஆட - தேனைச் சொரிகின்ற கண்ணி புனைந்த திருவனையாள் இங்ஙனம் ஆட; இப்பால் - இங்கு; ஊன் உகுக்கின்ற வை வேல் ஒரு மகன் உருமின் தோன்றி - ஊனைச் சிந்தும் கூரிய வேலணிந்த ஒரு வீரன் இடியெனத் தோன்றி; வான் உகுக்கின்ற மீன்போல் மணி பரந்து இமைக்கும் மார்பில் - வானிலிருந்து சிந்திய மீன்களைப் போல மணிகள் பரவி ஒளிரும் மார்பிலே; கான் உகுக்கின்ற பைந்தார்க் காவலன் தொழுது சொன்னான் - மணங்கமழும் பைந்தாரணிந்த காவலனைத் தொழுது கூறினான்.
விளக்கம் : வந்த வீரன் கொணரும் செய்தி பதுமை யென்னும் அரசகுமரியைப் பாம்பு தீண்டிய தாதலின் உருமின் தோன்றி என்றார். இனி, உறுமிற் சொன்னான் எனக் கொண்டு கூட்டுவர் நச்சினார்க்கினியர். (101)
1267. கொய்தகைப் பொதியிற் சோலைக்
குழவிய முல்லை மௌவல்
செய்யசந் திமயச் சாரற்
கருப்புரக் கன்று தீம்பூக்
கைதரு மணியிற் றெண்ணீர்
மதுக்கலந் தூட்டி மாலை
பெய்தொளி மறைத்து நங்கை
பிறையென வளர்க்கின் றாளே.
பொருள் : கொய்தகைப் பொதியில் சோலை - கொய்யத் தகுந்த பொதியில் என்னும் சோலையிலே; குழவிய முல்லை மௌவல் செய்ய சந்து இமயச் சாரல் கருப்புரக் கன்னு தீம்பூ - குழவியாகிய முல்லையினையும், செம்முல்லையினையும், செவ்விய சந்தனக் கன்றினையும், இமயச் சாரலில் வளரும் கருப்புரக் கன்றினையும், தீம் பூவையும்; கை தரு மணியின் தெண்ணீர் மதுக் கலந்து ஊட்டி - வரிசையாகப் பதித்த சந்திரகாந்தக் கல்லினின்றுங்தோன்றிய தெளிந்த நீரைத் தேனைக் கலந்து ஊட்டி; மாலை பெய்து ஒளிமறைத்து - மாலையை மூட்டாகப் பெய்து கதிரொளியை மறைத்து; பிறை என நங்கை வளர்க்கின்றாள் - பிறை போலப் பதுமை வளர்க்கின்றனள்.
விளக்கம் : குழவிய : அ : அசை. பிள்ளை குழவி கன்றே போத்தெனக் - கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே (தொல். மரபு. 24.) இரண்டு மலையினும் இவன் ஆணை அறிவித்தற்குப் பொதியிற் சோலைக் குழவிய முல்லை எனவும் இமயச்சாரற் கருப்புக் கன்றினையுங்கூறினார். (102)
1268. பவழங்கொள் கோடு நாட்டிப்
பைம்பொனால் வேலி கோலித்
தவழ்கதிர் முத்தம் பாய்த்தித்
தன்கையாற் றீண்டி நன்னாட்
புகழ்கொடி நங்கை தன்பேர்
பொறித்ததோர் கன்னி முல்லை
யகழ்கடற் றானை வேந்தே
யணியெயி றீன்ற தன்றே.
பொருள் : அகழ் கடல் தானே வேந்தே - கடலனைய சேனையையுடை அரசே!; பவழம் கொள் கோடு நாட்டி - பவழத்தைக் கொள் கொம்பாக நட்டு; பைம் பொனால் வேலி கோலி - புதிய பொன்னால் வேலி வளைத்து; தவழ் கதிர் முத்தம் பாய்த்தி - பரவும் ஒளியையுடைய முத்துக்களை மணலாகப் பரப்பி; தன் கையால் தீண்டி - தன் கையாலே தீண்டி; நல்நாள் - நல்ல நாளிலே; புகழ் கொடி நங்கை தன் பேர் - புகழ் பெற்ற கொடி போலும் நங்கையாகிய திலோத்தமையின் பெயரை; பொறித்தது ஓர் கன்னி முல்லையாகிய முல்லை - இட்டு வளர்த்ததாகிய ஒரு கன்னியாகிய முல்லை; அணி எயிறு ஈன்றது - அழகிய முறுவல்போல அரும்பியது.
விளக்கம் : திலோத்தமை : பதுமையின் நற்றாய். கோடு - ஈண்டுக் கொள்கொம்பு. பாய்த்தி - பரப்பி. நங்கை : பதுமையின் நற்றாயாகிய திலோத்தமை. கன்னிமுல்லை - இளமையுடைய முல்லைக்கொடி. எயிறுபோல அரும்பிற்று என்க. (103)
1269. வலம்பலர் கோதை சிந்த மயிலென வொருத்தி யோடிக்
கொம்பலர் நங்கை பூத்தாள் பொலிகெனக் குனிந்த விற்கீ
ழம்பலர் கண்ணி யார நிதியறைந் தோகை போக்கிக்
கம்பலம் போர்த்த போலுங் கடிமலர்க் காவு புக்காள்.
பொருள் : வம்பு அலர் கோதை சிந்த ஒருத்தி மயில் என ஓடி - (அரும்பியது கண்டு) மணம் விரியும் மலர்மாலை சிந்த ஒரு பணிப் பெண் மயில்போல ஓடிவந்து; கொம்பு! பொலிக! அலர் நங்கை பூத்தாள் என - கொம்பனையாய்! வாழ்க! நங்கை அலர்ந்தாள் என்று சொல்ல; குனிந்த வில் கீழ் அம்பு அலர் கண்ணி - குனிந்த வில்லின்கீழ் அம்பு போல மலர்ந்த கண்களையுடைய பதுமை; நிதி ஆர அறைந்து - செல்வத் திரளை யாகும் நிறையக் கொள்ளுமாறு பறை அறைந்து; ஓகை போக்கி - மகிழ்ச்சியைப் பலரும் அறிய அறிவித்து; கம்பலம் போர்த்த போலும் கடி மலர்க் காவு புக்காள் - கம்பலத்தைப் போர்த்தாற் போலும் மணமலர் நிறைந்த பொழிலை யடைந்தாள்.
விளக்கம் : ஒகை : உவகை யென்றதன் மரூஉ. வம்பு - மணம். ஒருத்தி - ஒருபணிமகள். கொம்பு : ஆகுபெயர் : விளி. அலர் நங்கை என்றது முல்லைக்கொடியை. கண்ணி : பதுமை. கம்பலம் என்றது சித்திரைச் செய்கையுடைய வண்ணப் படாத்தை. சித்திர சய்கைப்படாம் போர்த்ததுவே ஒப்பத்தோன்றிய உவவனம் என்றார் மணிமேகலையினும் (3. 161-9) நீ வளர்த்த முல்லைக்கொடி நின்முறுவல்போல அரும்பீன்றது. என்று சொல்லக்கேட்ட பதுமை ஓகைபோக்கி காவுபுக்காள் என வினைமுடிவு செய்க. (104)
1270. நறவிரி சோலை யாடி
நாண்மலர்க் குரவம் பாவை
நிறையப்பூத் தணிந்து வண்டுந்
தேன்களு நிழன்று பாட
விறைவளைத் தோளி மற்றென்
றோழியீ தென்று சேர்ந்து
பெறலரும் பாவை கொள்வாள்
பெரியதோ ணீட்டி னாளே.
பொருள் : நறவு விரி சோலை ஆடி - (அடைந்தவள்) தேன் மலர்ந்த பொழிலிலே விளையாடி; நாள் மலர்க் குரவம் பாவை வண்டுந் தேன்களும் நிழன்று பாட நிறையப் பூத்து அணிந்து - நாள்மலரையுடைய குரவம் பாவையை வண்டும் தேனும் நிழல் செய்து பாட நிறைய மலர்ந்து அணிய; இறைவளைத் தோளி ஈது என் தோழி என்று - கீற்றுக்களையுடைய வளையணிந்த தோளினாள் இப் பாவை என் தோழி என்றுரைத்து; பெறல் அரும் பாவை கொள்வாள் சேர்ந்து - கிடைத்தற் கரிய குரா மலரைக் கொள்வதற்கு அதனைத் தழுவி; பெரிய தோள் நீட்டினாள் - பெரிய தோளை நீட்டினாள்.
விளக்கம் : பாவை - குராமரத்தின் மலர். இது பாவை போலிருக்கும். குரவத்திற்கு நாள்மலர் என்பது பெயரளவில் அடையாய் நின்றது. அணிந்து - அணிய : எச்சத்திரிபு. நிழன்று - நிழல் செய்து; ஏரோர்க்கு நிழன்ற கோலினை (சிறுபாண். 233) என்றார் பிறரும். நறா என்பது நற என நின்றது. குரா என்பது அங்ஙனம் ஈறு குறுகி அம்சாரியை பெற்று நின்றது. (105)
1271. நங்கைதன் முகத்தை நோக்கி
நகைமதி யிதுவென் றெண்ணி
யங்குறை யரவு தீண்டி
யௌவையோ வென்ற போகக்
கொங்கலர் கோதை நங்கை
யடிகளோ வென்று கொம்பேர்
செங்கயற் கண்ணி தோழி
திருமகட் சென்று சேர்ந்தாள்.
பொருள் : அங்கு உறை அரவு - (அப்போது) அக்குரா மரத்தில் வாழும் பாம் பொன்று; நங்கை தன் முகத்தை நோக்கி - பதுமையின் முகத்தைப் பார்த்து; இது நகை மதி என்று எண்ணி - இது மறுவில்லாத ஒளியுறு திங்களென்று நினைத்து; தீண்டி - (முகத்திலே தீண்டாமற் கையிலே) தீண்டியதாக; ஒளவையோ! என்று போக - (பதுமை) அம்மாவோ! என்று செல்ல; கொங்கு அலர் கோதை! நங்கை அடிகளோ என்று - மணம் விரியும் மலர்மாலையாய்! திலோத்தமையார் வந்தாரோ என்று வினவி; கொம்பு ஏர் செங் கயல் கண்ணி தோழி - பூங்கொம்பை ஒக்கும் செவ்வரி பரந்த கயலனைய கண்ணியாளான தோழி திருமகள்; சென்று சேர்ந்தாள் - பதுமையினிடம் போய்ச் சேர்ந்தாள்.
விளக்கம் : பாம்பு தீண்டியவுடன் பதுமை, அம்மாவோ! என்று அலறி ஓடினாள். முல்லை மலர்ந்ததைப் பார்க்க வந்த பதுமை தன் நற்றாயையும் வரவேற்றாள் என்று கருதிய தோழி, நங்கை அடிகளோ? என்று வினவியவாறு வந்தாள். அங்குறை யரவு என்பதை அம் குறை அரவு எனப்பிரித்துக், குறையரவு என்பது காலம் நீட்டித்தலாற் பாம்பு குறைந்து, ஒரு கோழி யளவிற்குப் பறந்து செல்லும் என்று கூறி அதனைக் குக்குட சர்ப்பம் என்ப- என்று நச்சினார்க்கினியர் கூறுவர். மற்றும், அது அரிகுரற் கோழி நாமத் தரவவட் கடித்ததாக (சீவக. 1755) என்றதனாலும் உணர்க என்பர். மேலும் தடுத்ததனை வெட்டுதல் பாம்பிற் கியல்பாகலின், முகத்தை நோக்கின பாம்பு, அணுகின கையிலே தீண்டிற்று என்பர். ஏர் - ஒக்கும். (106)
1272. அடிகளுக் கிறைஞ்சி யைய
னடிகளைத் தொழுது நங்கை
யடிகளைப் புல்லி யாரத்
தழுவிக்கொண் டௌவை மாரைத்
கொடியனா யென்னை நாளு
நினையெனத் தழுவிக் கொண்டு
மிடை மின்னி னிலத்தைச் சேர்ந்தாள்
வேந்தமற் றருளு கென்றான்.
பொருள் : கொடியனாய்! - கொடி போன்றவளே!, அடிகளுக்கு இறைஞ்சி - எந்தையாகிய தனபதி மன்னரைத் தொழுது; ஐயன் அடிகளைத் தொழுது - எம் தமையனாகிய உலோகபாலனுடைய அடிகளை வணங்கி; நங்கை அடிகளை ஆரப் புல்லி - நற்றாயை நன்றாகத் தழுவி; ஒளவைமாரைத் தழுவிக்கொண்டு - மற்றைத் தாயரையும் புல்லிக் கொண்டு; என்னை நாளும் நினை என - என்னை எப்போதும் நினைப்பாயாக என்று கூறி; தழுவிக் கொண்டு மிடை மின்னின் நிலத்தைச் சேர்ந்தாள் - மின்னொடு செறிந்த மின்னைப் போல நிலத்திலே சோர்ந்து விழுந்தாள்; வேந்த! அருளுக என்றான் - இளவரசே! அருள் செய்க என்று வந்த வீரன் கூறினான்.
விளக்கம் : பதுமை தன் தோழியை நோக்கித் தனக்காகத் தந்தை முதலியோரை வணங்கவும் தழுவவும் கேட்டுக் கொண்டு சோர்ந்து வீழ்ந்தாள். அடிகளுக்கு : உருபு மயக்கம். (107)
1273. பதுமையைப் பாம்பு தீண்டிற் றென்றலும் பையு ளெய்திக்
கொதிநுனை வேலி னாயிங் கிருக்கெனக் குருசி லேகிக்
கதுமெனச் சென்று நோக்கிக் காய்சினங் கடிதற் கொத்த
மதிமிகுத் தவல நீக்கு மந்திரம் பலவுஞ் செய்தான்.
பொருள் : பதுமையைப் பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்தி - (இங்ஙனம்) பதுமையைப் பாம்பு தீண்டிய தென்றவுடன் வருத்தமுற்று; கொதி நுனை வேலினாய் இங்கு இருக்க என - காய்ந்த கூரிய வேலினாய்! இங்கேயே இருப்பாயாக என்று கேட்டுக்கொண்டு; குருசில் ஏகி - உலோக பாலன் அரண்மனைக்குச் சென்று; கதும் எனச் சென்று நோக்கி - விரைந்து பதுமை யிருக்குமிடம் போய்ப் பார்த்து; காய் சினம் கடிதற்கு ஒத்த - நஞ்சின் கடுமையைப் போக்குதற்குரிய; மதி மிகுத்து - அறிவினால் நுனித் தறிந்து; அவலம் நீக்கும் மந்திரம் பலவும் செய்தான் - துன்பத்தை நீக்குதற்குரிய மந்திரத்தைக் கூறி மருந்துகள் பலவற்றையும் செய்தான்.
விளக்கம் : 1266 - முதல், 1273 - வரை எட்டுச் செய்யுட்களையும் ஒரு தொடராக்கிப் பதுமையைப் பாம்பு தீண்டிற்றென்றலும் பையுள் எய்திக் கொதிநுனை வேலினானை யிருக்கெனக் குருசில் ஏக (1273) என்பதனை முதற்கட் பெய்து, உலோகமா பாலன் போகின்ற போது, பாம்பு தீண்டியது எங்ஙனம்? என வினவினதற்கு, வந்தவீரன் கூறுகின்றானாகக் கொண்டு, கொய்தகைப் பொதியிற் சோலை (1267) முதலாகக் கூறும் செய்தியை அமைப்பர் நச்சினார்க்கினியர். இங்ஙனம் மாட்டுறுப்பாகக் கூறாது செவ்வனே கூறிற் பாம்பு கடித்தமை கடுகக் கூறிற்றாகாமை உணர்க என்று மேலும் அவர் காரணங் கூறுவர். நூலாசிரியர்க் கில்லாத கருத்தை இவர் புகுத்துகிறார் என்று கொள்ளுத லல்லது இது செவ்வன் உரையாகாது. கதை கூறும் முகத்தால் விரித்துக் கூறினார் என்று கூறுதலே சால்புடையதாகும். (108)
1274. வள்ளறான் வல்லவெல்லா மாட்டினன் மற்று மாங்க
ணுள்ளவ ரொன்ற லாத செயச்செய வூறு கேளா
தள்ளிலைப் பூணி னாளுக் காவியுண் டில்லை யென்ன
வெள்ளெயிற் றரவு கான்ற வேகமிக் கிட்ட தன்றே
பொருள் : வள்ளல்தான் வல்ல எல்லாம் மாட்டினன் - உலோகபாலன் தான் கற்றுத் தேர்ந்த விஞ்சைகள் யாவற்றையும் செலுத்தினான்; மற்றும் ஆங்கண் உள்ளவர் ஒன்று அலாத ஊறு செயச் செய - மேலும் ஆங்கு உள்ளவர் எல்லோரும் பல வகையாக உறுவனவற்றைச் செய்யச் செய்ய; கேளாது - (அவற்றைக்) கேளாமல்; அள் இலைப் பூணினாளுக்கு ஆவி உண்டு இல்லை என்ன - கூரிய இலை வடிவமான பூணுடையாளுக்கு உயிர் உண்டு இல்லை என்னும்படி; வெள் எயிற்று அரவு கான்ற வேகம் மிக்கிட்டது - வெண்மையான பற்களையுடைய பாம்பு உகுத்த நஞ்சின் வேகம் மிகுந்தது.
விளக்கம் : ஊறு - நஞ்சிற்கு இடையூறான மந்திரமும் மருந்தும். வள்ளல் : உலோகபாலன். அள்இலைப் பூணினாளுக்கு - நெருங்கிய இலைத்தொழிலமைந்த அணிகலனுடைய பதுமைக்கு. ஆவி - உயிர். நஞ்சின் வேகம் மிக்கது என ஒருசொல் வருவித்துக்கொள்க. (109)
1275. பைங்கதிர் மதிய மென்று பகையடு வெகுளி நாக
நங்கையைச் செற்ற தீங்குத் தீர்த்துநீர் கொண்மி னாடும்
வங்கமா நிதிய நல்கி மகட்டரு மணிசெய் மான்றே
ரெங்களுக் கிறைவ னென்றாங் கிடிமுர செருக்கி னானே.
பொருள் : பைங்கதிர் மதியம் என்று - புதிய கதிர்களையுடைய (மறுவில்லாத) திங்கள் என்று எண்ணி; பகை அடு வெகுளி நாகம் - (மறு வுற்ற திங்களாகிய) பகையைக் கெடுக்க எண்ணி வெகுண்ட நாகம்; நங்கையை ஈங்குச் செற்றது - பதுமையை இங்குக் கையிலே கடித்தது; மணி செய் மான் தேர் எங்களுக்கும் இறைவன் - மணிகளிழைத்த, குதிரை பூட்டிய தேரையுடைய எங்கள் அரசன் தனபதி; நாடும் வங்கம் ஆம் நிதியும் நல்கி மகள் தரும் - (நஞ்சைத் தீர்த்தவற்கு) நாடும் கலம் தந்த செல்வமும் கொடுத்துப் பதுமையையும் அளிப்பான்; நீர் தீர்த்துக்கொண்மின் - நஞ்சைப் போக்கும் ஆற்றலுடையீர் நீக்கி அவற்றை ஏற்றுக் கொண்மின்; என்று ஆங்கு இடிமுரசு எருக்கினான் - என்றுரைத்து அந் நகரெங்கும் இடியென முரசு அறைவித்தான்.
விளக்கம் : பைங்கதிர் மதிய மென்று பகையடு வெகுளி நாகம் நங்கையைச் செற்றது என்பதற்கு மறுச்சேர் மதியாகிய பகையை அடுகின்ற வெகுளியையுடைய நாகம் இது நாம் தீண்டுமதன்றி மறுவிலாத தொரு மதியிருந்ததென்று எண்ணுதலாலே நங்கையைக் கையிலே கடித்தது எனப்பொருள் விரித்தனர் நச்சினார்க்கினியர். (110)
1276. மண்டலி மற்றி தென்பா
ரிராசமா நாக மென்பார்
கொண்டது நாக மென்பார்
குறைவளி பித்தொ டையிற்
பிண்டித்துப் பெருகிற் றென்பார்
பெருநவை யறுக்கும் விஞ்சை
யெண்டவப் பலவுஞ் செய்தா
மெனறுகே ளாதி தென்பார்.
(இதன்பொருள்.) இது மண்டலி என்பார் - இவளைத் தீண்டிய இப் பாம்பு சீதமண்டலி என்பார்; இராசமா நாகம் என்பார் - இராசமா நாகம் என்னும் பாம்பே தீண்டியது என்பார்; கொண்டது நாகம் என்பார் - கடித்தது நாகப் பாம்பே என்பார்; குறைவளி பித்தொடு ஐயில் பிண்டித்துப் பெருகிற்று என்பார் - குறைவான வாதமும் பித்தமும் சிலேத்துமத்தைவிடத் திரண்டு பெருகியது என்பார்; பெரு நவை அறுக்கும் விஞ்சை - பெருங்குற்றத்தைத் தீர்க்கும் மந்திரங்கள்; எண்தவப் பலவும் செய்தாம் - அளவின்றிப் பலவற்றையும் இயற்றினோம்; இது என்று கேளாது என்பார் - இதனை ஏன் என்று கேளாது என்பார்.
விளக்கம் : என்று என்பதைப், பெருநவை அறுக்கும் என்று என முன்னர்க் கொண்டு கூட்டுவர். ஏன்று எனப் பாடங் கொண்டு, ஏற்றுக் கொண்டு எனப்பொருள் கூறலும் ஒன்று. இராசமா மந்தம் என்றும் பாடம். (111)
1277. சிரையைந்தும் விடுது மென்பார்
தீற்றுதுஞ் சிருங்கி யென்பார்
குரைபுன லிடுது மென்பார்
கொந்தழ லுறுத்து மென்பா
ரிரையென வருத்தக் கவ்வி
யென்புறக் கடித்த தென்பா
ருரையன்மி னுதிர நீங்கிற்
றுய்யல ணங்கை யென்பார்.
பொருள் : சிரை ஐந்தும் விடுதும் என்பார் - ஐந்து சிரைகளையும் விடுவோம் என்பார்; சிருங்கி தீற்றுதும் என்பார் - சிருங்கியைப் பூசுவோம் என்பார்; குரைபுனல் இடுதும் என்பார் - ஒலிக்கும் நீரில் இடுவோம் என்பார்; கொந்து அழல் உறுத்தும் என்பார் - அழற்றும் நெருப்பினாற் சுடுவோம் என்பார்; இரையென வருந்தக் கல்வி என்பு உறக் கடித்தது என்பார் - இரையென எண்ணி வருந்தும்படி பற்றி என்பிற்படும் படி கடித்தது என்பார்; உரையன்மின் - பேசாதீர்கள்!; உதிரம் நீங்கிற்று - இரத்தம் போய்விட்டது; நங்கை உய்யலள் என்பார் - இனி இவள் பிழையாள் என்பார்.
விளக்கம் : சிரை ஐந்து: கையிரண்டு, காலிரண்டு, நெற்றி ஒன்று. சிருங்கி - ஒரு மருந்து; சுக்குமாம், சிங்கி எனப் பாடமாயின் கற்கடக சிங்கி என்க. புனலிலிடுதல்; உயிருண்மை யறிதற்கும் நஞ்சு நீங்கற்கும். அழலுறுத்தல் உயிருண்மை யறிதற்கு. (112)
1278. கையொடு கண்டங் கோப்பார்
கனைசுட ருறுப்பின் வைப்பார்
தெய்வதம் பரவி யெல்லாத்
திசைதொறுந் தொழுது நிற்பா
ருய்வகை யின்றி யின்னே
யுலகுடன் கவிழு மென்பார்
மையலங் கோயின் மாக்கண்
மடைதிறந் திட்ட தொத்தார்.
பொருள் : கையொடு கண்டம் கோப்பார் - கையையும் கண்டத்தையும் தடைமரத்தைக் கோப்பார்; கனைசுடர் உறுப்பின் வைப்பார் - உறுப்புக்களிலே விளக்கெரிப்பார்; தெய்வதம் பரவி எல்லாத் திசைதொறும் தொழுது நிற்பார்- தெய்வங்களைப் போற்றி எல்லாத் திக்கினும் வணங்கி நிற்பார்; உய்வகை இன்றி இன்னே உலகு உடன் கவிழும் என்பார் - இதனால் அரசன் பிழைக்க வழியின்றேல் உலகும் இன்னே கவிழும் என்பார்; மையல் அம் கோயில் மாக்கள் மடைதிறந்திட்டது ஒத்தார் - (இங்ஙனம்) மயக்கத்தையுடைய அரண்மனை மக்கள் ஆரவாரத்தினாலே மடைதிறந்த தன்மையை ஒத்திருந்தனர்.
விளக்கம் : மக்கட்குரிய மனன் இன்றி அறிவு கெட்டமையின், ஐயறிவுடையரென்று, மாக்கள் என்றார். (113)
1279. வெந்தெரி செம்பொற் பூவும்
விளங்குபொன் னூலும் பெற்றார்
மந்திர மறையும் வல்லா
ரெழாயிரர் மறுவில் வாய்மை
யந்தரத் தறுவை வைப்பா
ரந்தண ரங்கை கொட்டிப்
பைந்தொடிப் பாவை யின்னே
பரிவொழிந் தெழுக வென்பார்.
பொருள் : வெந்து எரி செம்பொன் பூவும் விளங்கு பொன் நூலும் பெற்றார் - தீயில் வெந்து விளங்கும் பொன்மலரும் ஒளிரும் பொன்னூலும் பெற்றவர்களாய்; மந்திரம் மறையும் வல்லார் - மந்திரமும் மறையும் வல்லவர்களாய்; மறுஇல் வாய்மை அந்தரத்து அறுவை வைப்பார் - குற்றம் அற்ற மந்திரத்தாலே வானிலே ஆடையை நிறுவுவார்களாய் உள்ள; எழாயிரர் அந்தணர் - ஏழாயிரவராகிய அந்தணர்கள்; அங்கை கொட்டி - கையைத் தட்டி; பைந்தொடிப் பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக என்பார் - பைந்தொடி யணிந்த பாவையனையாள் இப்பொழுதே வருத்தம் நீங்கி எழுக என்பார்.
விளக்கம் : பொற்பூவும் பொற்பூணூலும் அத்தொழிற் றிறமுடையார் என்பதற்குப் பெற்ற சிறப்புக்கள் என்க. மந்திரமும் எனற்பால உம்மை தொக்கது. வாய்மை மந்திரத்திற்கு ஆகுபெயர். அறுவை - புடைவை. பாவை : பதுமை. (114)
1280. பாம்பெழப் பாம்பு கொண்டாற் பகவற்கு மரிது தீர்த்த
றேம்பிழி கோதைக் கின்று பிறந்தநா டெளிமி னென்று
காம்பழி பிச்ச மாகக் கணியெடுத் துரைப்பக் கல்லென்
றூம்பழி குளத்திற் கண்ணீர் துகணிலத் திழிந்த தன்றே.
பொருள் : பாம்பு எழப் பாம்பு கொண்டால் பகவற்கும் தீர்த்தல் அரிது - இராகு என்னும் பாம்பு ஞாயிற்றை மறைக்கும் பொழுது பாம்பு தீண்டில் இறைவனுக்கும் அதனைத் தீர்த்தல் அருமை; தேன்பிழி கோதைக்குப் பிறந்த நாள் இன்று - தேன் பிழியும் கோதையாளுக்குப் பாம்பு எழப் பாம்பு கொண்டதும் இல்லை, பாம்பு தீண்டுகின்ற காலத்துப் பிறந்த நாம் இல்லை ; காம்பு அழிபிச்சமாகத் தெளிமின் என்று - உதய ஆரூடக் கவிப்புகளிற் கவிப்பாக ஆராய்ந்து தெளியுங்கோள் என்று; கணி எடுத்து உரைப்ப - கணிநூலை யெடுத்துக் கூறக்கேட்டு; கல்லென் தூம்புஅழி குளத்தின் கண்ணீர் துகள் நிலத்து இழிந்தது - கல்லென்னும் ஒலியுடன் மடையுடைந்த குளம்போலக் கண்ணீரானது புழுதியையுடைய நிலமிசை பெருகிற்று.
விளக்கம் : இன்று : எதிர்மறை வினைக்குறிப்பு முற்று. பிச்சம் - பீலிக் குடை. காம்பு அழிபிச்சம் - காம்பு இல்லத பீலிக்குடை. ஞாயிற்றின் விமானம் பீலியாற் செய்யப்படுதலின், அதனைப் பீலியாற் செய்யப்படும் பிச்சம் என்றார். எனவே, ஞாயிறு நடுவே கவிப்பாக நின்றது என்றவாறாயிற்று. இதனாற் பயன் : அக் காலத்துத் தெய்வம் மாயோன் ஆதலின், அவன் கருடனுடனே உலகைப்பார்க்கின்றதால், அக்கருடன் பார்வையால் நஞ்சு நீங்குதலாம் என்பர் நச்சினார்க்கினியர். (115)
1281. நங்கைக்கின் றிறத்த லில்லை
நரபதி நீயுங் கேண்மோ
கொங்கலர் கோங்கி னெற்றிக்
குவிமுகிழ் முகட்டி னங்கட்
டங்குதே னரவ யாழிற்
றானிருந் தாந்தை பாடு
மிங்குநம் மிடரைத் தீர்ப்பா
னிளையவ னுளன்மற் றென்றான்.
பொருள் : கொங்கு அலர் கோங்கின் நெற்றிக் குவிமுகிழ் முகட்டின் அங்கண் - மணம் பரவும் கோங்கின் உச்சியிலே குவிந்த அரும்பின் முகட்டிலே; தேன் தங்கு அரவயாழின் தான் இருந்து ஆந்தை பாடும் - தேன்போல இனிமை பொருந்திய ஒலியையுடைய யாழினைப்போல ஆந்தை அமர்ந்து பாடும்; நரபதி! நீயும் கேண்மோ - அரசனே! நீயும் கேட்பாயாக; இங்கு நம் இடரைத் தீர்ப்பான் இளையவன் உளன் - (இந் நிமித்தத்தை நோக்கின்) இங்கே நம் துன்பத்தை நீக்கும் இளைஞன் ஒருவன் இருக்கிறான்; இன்று நங்கைக்கு இறத்தல் இல்லை - இற்றை நாளில் பதுமைக்கு இறப்புக் கிடையாது.
விளக்கம் : மிதுன ராசியிலே தேன் அரவம் தங்கும் கொங்கு அலர் கோங்கின் நெற்றியில் அரும்பின் தலையில் ஆந்தை இருந்து பாடும் என்பர் நச்சினார்க்கினியர். யாழ் - மிதுனராசி. (116)
1282. பன்மணிக் கடகஞ் சிந்தப்
பருப்புடைப் பவளத் தூண்மேன்
மன்னவன் சிறுவன் வண்கை
புடைத்துமா ழாந்து சொன்னா
னின்னுமொன் றுண்டு சூழ்ச்சி
யென்னொடங் கிருந்த நம்பி
தன்னைக்கூய்க் கொணர்மி னென்றான்
றரவந்தாங் கவனுங் கண்டான்.
பொருள் : பல்மணிக் கடகம் சிந்தப் பருப்பு உடைப்பவளத் தூண்மேல் - பல மணிகள் இழைத்த கடகம் சிந்தும்படி பருமையுடைய பவளத் தூணின்மேல்; மன்னவன் சிறுவன் வண்கை புடைத்து மாழாந்து சொன்னான் - அரசகுமரன் தன் வளமிகு கையினை மோதி மயங்கி ஒருமொழி யுரைத்தான்; இன்னும் சூழ்ச்சி ஒன்று உண்டு - இன்னும் ஒரு சூழ்ச்சியுள்ளது; என்னொடு அங்கு இருந்த நம்பி தன்னை - என்னுடன் நாடக அரங்கிலே இருந்த நம்பியை; கூய்க் கொணர்மின் என்றான் - கூவி அழைமின் என்றான்; தர அவனும் வந்து ஆங்குக் கண்டான் - அழைக்க, அவனும் வந்து அந் நிலையைக் கண்டான்.
விளக்கம் : மந்திரங்கூறுவோர் மருத்துவர் முதலியோர்பால் தனக் குண்டான சினத்தால் உலோகபாலன் தூணைப் புடைத்தான் என்பது கருத்து. பருப்பு - பருமை. மாழாந்து - கையறவானே மயங்கி என்க. சூழ்ச்சி இன்னும் ஒன்றுண்டு என மாறுக. சூழ்ச்சி - ஈண்டு நஞ்சினை அகற்றும் உபாயம். (117)
1283. பறவைமா நாகம் வீழ்ந்து
பலவுடன் பதைப்ப போன்றுஞ்
சிறகுறப் பரப்பி மஞ்ஞை
செருக்குபு கிடந்த போன்றுங்
கறவைகன் றிழந்த போன்றுங்
கிடந்தழு கின்ற கண்ணா
ரிறைவளை யவரை நோக்கி
யென்கொடி துற்ற தென்றான்.
பொருள் : பறவை மாநாகம் பல வீழ்ந்து உடன் பதைப்ப போன்றும் - கோழிப் பாம்புகள் பல விழுந்து ஒருங்கே பதைப்பன போன்றும்; மஞ்ஞை சிறகு உறப் பரப்பி செருக்குபு கிடந்த போன்றும் - மயில்கள் சிறகுகளை நன்றாகப் பரப்பி மயங்கிக் கிடந்தன போன்றும்; கறவை கன்று இழந்த போன்றும் - கறவைப் பசுக்கள் கன்றை இழந்து கிடப்பன போன்றும்; கிடந்து அழுகின்ற கண்ணார் இறைவளையவரை நோக்கி - கிடந்து அழுங்கண்ணினராகிய மங்கையரைப் பார்த்து; உற்றது என் கொடிது என்றான் - இவரடைந்தது என்னே கொடிதாயிருந்தது என்றெண்ணினான்.
விளக்கம் : பறவை மாநாகம் : ஈண்டுப் பெண்பாலாகிய கூனும் குறளும். உவமேயப் பொருள்கள் : மயில் தோழியர்க்கும், கறவை செவிலியர்க்கும் உவமை. (118)
1284. ஊறுகொள் சிங்கம் போல வுயக்கமோ டிருந்த நம்பி
கூறினான் கொற்ற வேந்தன் கொழுநிதி நிலத்து மற்றுன்
வீறுயர் புகழை வித்திக் கேண்மையை விளைத்தி யின்னே
நாறுபூங் கொம்ப னாளை நோக்கென நம்பி சொன்னான்.
பொருள் : ஊறுகொள் சிங்கம்போல உயக்கமோடு இருந்த நம்பி கூறினான் - வருத்தமுற்ற சிங்கத்தைப்போல வருந்தியிருந்த உலோக பாலன் கூறினான்; கொற்ற வேந்தன் கொழுநிதி நிலத்து - வெற்றி வேந்தனாகிய வளமிகு செல்வ நிலத்திலே; உன் வீறு உயர் புகழை வித்திக் கேண்மையை விளைத்தி - உன்னுடைய சிறப்பு மிக்க புகழை நட்டு நட்பை விளைக்க வல்லாய்; நாறு பூங்கொம்பனாளை இன்னே நோக்கு என - மணமலர்க் கொடி போன்ற பதுமையை இப்போதே காண்பாயாக என்று சொல்ல; நம்பி சொன்னான் - சீவகன் கூறினான்.
விளக்கம் : விளைத்தி : படுத்தலோசையாக்குக என்பர் நச்சினார்க்கினியர். உயக்கம் - துன்பம். நம்பி இரண்டனுள் முன்னது உலோகபாலன்; பின்னது சீவகன், வேந்தன் : தனபதி. புகழ் - ஈண்டு விச்சைக்கு ஆகுபெயர். இவனால் அவர் கேண்மை வளர்தலின் விச்சையை வித்தாகவும் கேண்மையைப் பயிராகவும் உருவகித்தார். (119)
1285. புற்றிடை வெகுளி நாகம்
போக்கறக் கொண்ட தேனு
மற்றிடை யூறு செய்வான்
வானவர் வலித்த தேனும்
பொற்றொடிக் கிறத்த லில்லை
புலம்புகொண் டழேற்க வென்றான்
கற்றடிப் படுத்த விஞ்சைக்
காமரு காம னன்னான்.
பொருள் : கற்று அடிப்படுத்த விஞ்சை காமரு காமன் அன்னான் - கற்றுப் பழகிய விஞ்சையையுடைய விருப்பம் பொருந்திய சீவகன்; புற்றிடை வெகுளி நாகம் போக்கு அறக் கொண்ட தேனும் - புற்றிலுள்ள வெகுளியையுடைய நாகம் மீளாதபடி கடித்ததானாலும்; மற்று இடையூறு செய்வான் வானவர் வலித்த தேனும் - வேறு இடையூறு செய்வதற்கு விண்ணவர் சூழ்ந்த நிலையாயினும்; பொற்றொடிக்கு இறத்தல் இல்லை - நங்கைக்கு இறப்புக் கிடையாது; புலம்பு கொண்டு அழேற்க என்றான் - நீ வருத்தம் கொண்டு அழாதேகொள் என்றான்.
விளக்கம் : காமன் அன்னான் : சீவகனுக்கு ஒரு பெயர். போக்கு - மீட்சி, பொற்றொடிக்கு என்பது சுட்டுப்பொருட்டாய் நின்றது. அழேற்க - அழாதேகொள். (120 )
1286. பொழிந்துநஞ் சுகுத்த லச்ச
மிரைபெரு வெகுளி போகங்
கழிந்துமீ தாடல் காலம்
பிழைப்பென வெட்டி னாகும்
பிழிந்துயி ருண்ணுந் தட்ட
மதட்டமாம் பிளிற்றி னும்ப
ரொழிந்தெயி றூனஞ் செய்யுங்
கோளென மற்றுஞ் சொன்னான்.
பொருள் : நஞ்சு பொழிந்து உகுத்தல் அச்சம் இரை பெரு வெகுளி போகம் கழிந்து மீதாடல் காலம் பிழைப்பு என - நஞ்சைப் பெய்து சிந்துதல், அச்சம், இரையெனக் கருதுதல், பெரிய வெகுளி, இன்பம், மனக்களி மிகுந்து நின்றாடுதல், எதிர்ப்படும் காலம், தனக்குப் பிறர் செய்த பிழையைக் கருதுதல் என்று; எட்டின் ஆகும் - எட்டுக் காரணத்தானே கடித்தல் உளதாகும்; உம்பர் தட்டம் அதட்டம் ஆம் பிளிற்றின் உயிர் பிழிந்து உண்ணும் - மேல்வாயிலே தட்டம் அதட்டம் என்னும் எயிறுகளில் உண்டான நஞ்சைக் கடித்த வாயிலே பெய்யுமாயின் உயிரைப் பிழிந்து உண்ணும்; ஒழிந்த எயிறு ஊனம் செய்யும் - மற்றை எயிறுகளிலுண்டான நஞ்சைக் கடித்த வாயிலே காலுமாயின் வருத்தம் உண்டாக்கும்; கோள் என மற்றும் சொன்னான் - அறிந்து கொள்ள வேண்டியவை என மேலும் அதனிலக் கணஞ் சில கூறினான்.
விளக்கம் : உகுத்தல் : தன்னாற் பொறுத்தல் அருமையினால், ஒன்றைக் கௌவி நஞ்சை உமிழ்தல். போகம் - பிணையுடன் இழைதல்; தட்டம் - மேல்வாய்ப்பல்; அதட்டம் - கீழ்வாய்ப்பல். கொள்ளுதல் : கோளென விகாரம். காலம் ஒழிந்த ஏழும் அகாலமாம். (121)
1287. அந்தண னாறு மான்பா லவியினை யலர்ந்த காலை
நந்தியா வட்ட நாறு நகைமுடி யரச னாயிற்
றந்தியா முரைப்பிற் றாழைத் தடமலர் வணிக னாறும்
பந்தியாப் பழுப்பு நாறிற் சூத்திரன் பால தென்றான்.
பொருள் : யாம் தந்து உரைப்பின் - நாம் சித்தராரூடம் என்னும் நூலினை ஆராய்ந்துரைத்தால்; ஆன்பால் அவியினை நாறும் அந்தணன் - ஆவின்பாலினாற் செய்த சோறுபோல நாறுமாயின் அப் பாம்பு அந்தணன்பாலதாகும்; அலர்ந்த காலை நந்தியா வட்டம் நாறுமாயின் நகைமுடி அரசன் - அலர்ந்த காலத்தில் நந்தியாவட்டத்தைப்போல நாறுமாயின், அஃது ஒளி முடி அரசன்பாலதாகும்; தாழைநாறும் தடமலர் வணிகன் - தாழை மலர்போல நாறுமாயின் அஃது பெருமலரணிந்த வணிகன்பாலதாகும்; பந்தியாப் பழுப்பு நாறின் சூத்திரன் பாலது என்றான் - மற்றொன்றுங் கூடாத அரிதாரம்போல நாறுமாயின் சூத்திரன்பாலது என்றான்.
விளக்கம் : ஆன்பால் போன்று மணமுடைய பாம்பு பார்ப்பனப் பாம்பு; நந்தியாவட்ட மலர்மணக்கும் பாம்பு அரசப்பாம்பு, தாழை மலர் மணக்கும் பாம்பு வணிகப்பாம்பு, அரிதாரம் மணக்கும் பாம்பு சூத்திரப் பாம்பு என்றான் என்க. (122)
1288. கன்னியைக் கடித்த நாகங்
கன்னியே கன்னி நோக்க
மன்னதே யரசர் சாதி
மூன்றெயி றழுந்தி யாழ்ந்த
கொன்னுமா நாகங் கொண்டாற்
கொப்புளாம் விரலிற் றேய்த்தான்
மன்னிய தெண்மட் டாயின்
மண்டலிப் பால தென்றான்.
பொருள் : விரலின் தேய்த்தால் - கடித்த வாயை விரலால் தேய்த்தால்; கொன்னும் மாநாகம் கொண்டாற் கொப்புளாம் - அச்சந்தரும் பெருநாகந் தீண்டியதாயின் கொப்புள் கொள்ளும்; மன்னிய தெள்மட்டு ஆயின் மண்டலிப்பாலது - பொருந்திய தெளிவான தேன்போல நீர் வருமாயின் மண்டலிப் பகுதியாகும்; கன்னியைக் கடித்த நாகம் கன்னியே - (இது கொப்புள் கொள்வதால்) இவளைக் கடித்த பாம்பு கன்னியே; அரசர் சாதி - சாதியும் அரசர் சாதியே; அழுந்தி ஆழ்ந்த மூன்று எயிறு - தைத்து அழுந்தி ஆழ்ந்த பற்கள் யமதூதி ஒழிந்த காளி, காளாத்திரி, இயமன் என்னும் மூன்றுமே; கன்னி நோக்கம் - உதயமும் கன்னியே; அன்னதே - ஆதலின் இஃது இறத்தலில்லை.
விளக்கம் : குக்குட சர்ப்பமாதலின், அதற்குக் கேடில்லை யென்று கருதி, கன்னியே என்றான். இது கொப்புளங் கொள்ளலின் இவளைக் கடித்த பாம்பு கன்னியே என்பது கருத்து. சாதி அரசர்சாதி என்க. காளி காளாத்திரி யமன் யமதூதி என்னும் நான்கு நஞ்சுப் பற்களுள் யமதூதி ஒழிந்த மூன்று பற்களுமே அழுந்தியுள்ளன. (123)
1289. குன்றிரண் டனைய தோளான்
கொழுமலர்க் குவளைப் போதங்
கொன்றிரண் டுருவ மோதி
யுறக்கிடை மயில னாடன்
சென்றிருண் டமைந்த கோலச்
சிகழிகை யழுத்திச் செல்வ
னின்றிரண் டுருவ மோதி
நேர்முக நோக்கி னானே.
பொருள் : குன்று இரண்டு அனைய தோளான் செல்வன் - மலைகள் இரண்டு போன்ற தோளையுடைய சீவகனான செல்வன்; கொழுமலர்க் குவளைப் போது அங்கு ஒன்று இரண்டு உருவம் ஓதி - வளமிகு மலராகிய குவளையை அங்கே மூன்று உருவம் ஓதி; உறக்கு இடை மயிலனாள் தன் சென்று இருண்டு அமைந்த கோலச் சிகழிகை அழுத்தி - உறக்கத்திலுள்ள மயில் போன்றவளின் நீண்டு இருண்டு அமைந்த அழகிய மயிர் முடியிலே அழுத்தி; நின்று இரண்டு உருவம் ஓதி நேர்முகம் நோக்கினான் - பெயர்ந்து நின்று பின்னும் இரண்டு உருவம் ஓதி முகத்தை நேரே நோக்கினான்.
விளக்கம் : மலர்க்குவளை: மலர்: அடைமொழி. ஒன்றிரண்டு உம்மைத்தொகை. உருவம் : உரு என்பதன் திரிபு. உறப்பிடை: சாரியை இன்றி உருபேற்றது. முகம் - தியானம். இவன் ஐந்து உரு ஓதினமையின் இம் மந்திரம் பஞ்ச நமஸ்காரம். (124)
1290. நெடுந்தகை நின்று நோக்க நீள்கடற் பிறந்த கோலக்
கடுங்கதிர்க் கனலி கோப்பக் காரிரு ளுடைந்த தேபோ
லுடம்பிடை நஞ்சு நீங்கிற் றொண்டொடி யுருவ மார்ந்து
குடங்கையி னெடிய கண்ணாற் குமரன்மே னோக்கி னாளே.
பொருள் : நெடுந்தகை நின்று நோக்க - சீவகன் நின்று நோக்கின அளவிலே; நீள்கடல் பிறந்த கோலக் கடுங்கதிர்க் கனலி கோப்பக் காரிருள் உடைந்ததேபோல் - பெருங் கடலிலே தோன்றிய அழகிய வெங்கதிரையுடைய ஞாயிறு எதிர்ப்படக்கரிய இருள் நீங்கியது போல; உடம்பிடை நஞ்சு நீங்கிற்று - உடம்பிலிருந்து நஞ்சு விலகியது; ஒண்தொடி உருவம் ஆர்ந்து - பின்னர் அக் கதிர் வளையாளின் உருவத்தைக் கண்ணால் அவன் நுகராநிற்க; குடங்கையின் நெடிய கண்ணால் குமரன்மேல் நோக்கினாள் - அவளும் உள்ளங்கை போன்ற நீண்ட கண்களாற் சீவகனை நோக்கினாள்.
விளக்கம் : ஆர்ந்து - ஆர; எச்சத் திரிபு. நெடுந்தகை : சீவகன்; நின்று மந்திரமோதி நோக்க என்பது கருத்து. நீள்கடற்பிறந்த கோலக்கடுங் கதிர்க்கனலி என்றது ஞாயிற்று மண்டிலத்தை. இவ்வுவமையடைகள் சீவகன் குடிப்பிறப்பு அழகு ஒளி முதலியவற்றை விளக்கி நின்றன. காரிருள், நஞ்சிற்குவமை. அப்பேரழகினை நோக்கற்கேற்ற கண்ணையுடையாள் என்பார் நெடிய கண்ணால் நோக்கினாள் என விதந்தார். (125 )
1291. நோக்கினா ணிறையு நாணு
மாமையுங் கவினு நொய்திற்
போக்கினாள் வளையும் போர்த்தாள்
பொன்னிறப் பசலை மூழ்கிற்
றாக்கினா ளநங்க னப்புத்
தூணியை யமரு ளானா
தோக்கிய முருக னெஃக
மோரிரண் டனைய கண்ணாள்.
பொருள் : நோக்கினான் நிறையும் நாணும் மாமையும் கவினும் வளையும் நொய்தில் போக்கினாள் - அவ்வாறு நோக்கியவள் தன் நிறையையும் நாணையும் நிறத்தையும் அழகையும் வளையையும் விரைவிலே போக்கினாள்; பொன்நிறப் பசலை போர்த்தாள் - பொன்னிறமான பசலையை உடம்பெலாம் போர்த்தாள்; அமருள் ஆனாது ஓக்கிய முருகன் எஃகம் ஓர் இரண்டு அனைய கண்ணாள் - போரில் அமையாமல் எறிந்த முருகன் ஒரு வேல் இரண்டு ஆனது போன்ற கண்ணினாள் ஆகிய அவள்; மூழ்கிற்று - காமன் அம்பு உடம்பிலே மூழ்கியது; அநங்கன் அப்புத் தூணியை ஆக்கினாள் - (அதனால்) காமனுடைய அம்பறாத் தூணியைத் தன் உடம்பிலே உண்டாக்கினாள்.
விளக்கம் : அஞ்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச் - செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது (சிலப். 2 : 512) என்றார் பிறரும்.
(126)
வேறு
1292. ஆட்சி யைம்பொறி யாள னுடம்பெனும்
பூட்சி நீள்கொடிப் புற்றி னகத்துறை
வாட்க ணோக்கெனும் வையெயிற் றாரழல்
வேட்கை நாகத்தின் மீட்டுங் கொளப்பட்டாள்.
பொருள் : ஆட்சி ஐம்பொறி ஆளன் உடம்பு எனும் - தாம் ஏவல் கொள்ளும் தொழிலையுடைய ஐம்பொறியை ஆளுதலையுடைய சீவகனது உடம்பு என்னும்; பூட்சி நீள்கொடிப் புற்றின் அகத்து உறை - மேற்கோளாகிய நீண்ட கொடி வளரப்பெற்ற புற்றிலே வாழ்கின்ற; வாள்கண் நோக்கு எனும் வைஎயிற்று ஆரழல் வேட்கை நாகத்தின் - ஒளி பொருந்திய கண்களின் நோக்கம் என்கிற கூரிய பற்களையுடைய வேட்கையாகிய நாகத்தின் நஞ்சாலே; மீட்டும் கொளப்பட்டாள் - திரும்பவும் பற்றப் பட்டாள்.
விளக்கம் : வாட்கண் என்பதைப் பதுமைக்கு ஆக்குவர் நச்சினார்க்கினியர். நாட்டம் இரண்டும் அறிவுடம்படுத்தற்குக் - கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும் (தொல். களவு. 5) என்பதனால், இருவரும் எதிர் நோக்கியவிடத்துக் கூட்டும் குறிப்புரை நிகழ்ந்தும் இயற்கைப் புணர்ச்சி நிகழாமையின், அவட்கு முற்செய்யுளிற் கூறிய வருத்தத்திற்கு இவன் வேட்கை நோக்கமே காரணம் என்று இக் கவியிற் கூறினார். இந் நோக்கம் இன்றேல் இவட்கு இது நிகழாதென்க; பெருமையும் உரனும் ஆடுஉ மேன (தொல். களவு. 7) என்பதனால் இவற்கு வருத்தம்புலப் படாதாயிற்று. வேட்கையை நாகமாகவும், நோக்கினைப் பற்களாகவும், உடம்பினைப் புற்றாகவும் உருவகஞ் செய்தனர். (127)
1293. மாழ்கி வெய்துயிர்த் தாண்மட வாளெனத்
தோழி மார்களுந் தாயருந் தொக்குடன்
சூழி யானையன் னாய்தொடி னஞ்சறும்
வாழி யென்றனர் வம்பலர் கோதையார்.
பொருள் : மடவாள் மாழ்கி வெய்து உயிர்த்தாள் என - பதுமை மயங்கிப் பெருமூச்செறிந்தாள், இனி, இது வேட்கையென்றறிந்து; வம்பு அலர் கோதையார் தோழிமார்களும் தாயரும் உடன்தொக்கு - மணம் விரிந்த மாலையராகிய தோழியரும் செவிலியரும் சேரத்திரண்டு; சூழி யானை அன்னாய்! வாழி! தொடின் நஞ்சு அறும் என்றனர் - முகபடாம் அணிந்த யானை போன்றவனே! வாழ்வாயாக! நீ தீண்டித் தீர்ப்பாயாயின் நஞ்சு நீங்கும் என்றனர்.
விளக்கம் : அன்னான் என்னும் பெயர் தொழிலிற் கூறும் ஆன் என் இறுதி யின் கூறாய் ஆய் ஏற்றது : (தொல். விளி. 16) (128)
1294. கண்ணிற் காணினுங் கட்டுரை கேட்பினு
நண்ணித் தீண்டினு நல்லுயிர் நிற்குமென்
றெண்ணி யேந்திழை தன்னை யுடம்பெலாந்
தண்ணென் சாந்தம்வைத் தாலொப்பத் தைவந்தான்.
பொருள் : கண்ணின் காணினும் - (தான் காதலித்தோரைக்) கண்ணாற் கண்டாலும்; கட்டுரை கேட்பினும் - அவருடைய புனைந்துரையைக் கேட்டாலும்; நண்ணித் தீண்டினும் - நெருங்கியத் தொட்டாலும்; நல்உயிர் நிற்கும் என்று எண்ணி - சிறந்த உயிர்நிலைக்கும் என்று நினைத்து; ஏந்து இழை தன்னை - பதுமையை; தண் என் சாந்தம் வைத்தால் ஒப்ப - குளிர்ந்த சந்தனம் பூசினாற்போல; உடம்பு எலாம் தைவந்தான் - உடம்பு முற்றும் தடவிக் கொடுத்தான்.
விளக்கம் : காதலித்தோரைக் காணினும் அவர் சொற்கேட்பினும் அவரைத் தீண்டினும் உயிர் நிற்கும் என்பதனை தன்னனுபவத்தாலுணர்ந்து அவள் உயிர் நிற்கும்பொருட்டும் தன்னுயிர் நிற்கும் பொருட்டும் அவளைத் தைவந்தான் என்பது கருத்து. (129)
1295. மற்ற மாதர்தன் வாட்டடங் கண்களா
லுற்ற நோக்க முறாததொர் நோக்கினிற்
சுற்றி வள்ளலைச் சோர்வின்றி யாத்திட்டா
ளற்ற மில்லமிர் தாகிய வஞ்சொலாள்.
பொருள் : அற்றம் இல் அமிர்து ஆகிய அம்சொலாள் - ஒருவன் கைப்படா அமிர்தாகிய அழகிய மொழியினாள்; மாதர் தன் வாள்தடம் கண்களால் - காதலையுடைய தன் வாளனைய பெரிய கண்களாலே; உற்ற நோக்கம் உறாதது ஓர் நோக்கினில் - தான் அவன்பாற் கொண்ட அன்புற்ற நோக்கத்தை மற்றவர் ஐயுறாத ஒரு நோக்கத்தினாலே; வள்ளலைச் சுற்றிச் சோர்வு இன்றி யாத்திட்டாள் - சீவகனைச் சூழ்ந்து தப்பாமற் கட்டினாள்.
விளக்கம் : அற்றமில் அமிர்து - ஒருவன் கைப்படா அமிழ்தம். உறாதநோக்கு, ஏதின்மைபட நோக்கும் நோக்கமுமாம். அந்நோக்கத்தால் அவன் கட்டுண்டலால் யாத்திட்டாள் என்றார். மாதர் - காதல். (130)
வேறு
1296. விஞ்சையர் வீர னென்பார்
விண்ணவர் குமர னென்பா
ரெஞ்சிய வுயிரை மீட்டா
னிவனலா லில்லை யென்பார்
மஞ்சுசூ ழிஞ்சி மூதூர்
மாமுடிக் குரிசி னாளை
நஞ்சுசூழ் வேலி னாற்கே
நங்கையைக் கொடுக்கு மென்பார்.
பொருள் : விஞ்சையர் வீரன் என்பார் - (இவன்) வித்தியாதர வீரன் என்பார்; விண்ணவர் குமரன் என்பார் - வானவர் மகன் என்பார்; எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார் - போன உயிரைத் திரும்பக் கொணர்ந்தவன் இவனல்லது வேறொருவன் இல்லை என்பார்; மஞ்சுசூழ் இஞ்சி மூதூர் மாமுடிக் குரிசில் - முகில் தவழும் மதிலையுடைய இப்பழம்பதியின் முடிமன்னன்; நஞ்சுசூழ் வேலினாற்கே நாளை நங்கையைக் கொடுக்கும் என்பார் - இந்த நஞ்சு கலந்த வேலினானுக்கே நாளைக்கு இந்த நங்கையை நல்குவான் என்பார்.
விளக்கம் : விஞ்சையர் - வித்தியாதரர். எஞ்சிய - இறந்த. மஞ்சு - முகில். இஞ்சி - மதில். மூதூர் - பழைமையான ஊர், சந்திராபம். (131)
1297. விளங்கொளி விசும்பில் வெண்கோட்
டிளம்பிறை சூழ்ந்த மின்போல்
வளங்கெழு வடத்தைச் சூழ்ந்து
வான்பொனாண் டிளைப்பச் சேந்த
விளங்கதிர் முலைக டம்மா
லிவனைமார் பெழுதி வைகிற்
றுளங்குபெண் பிறப்புந் தோழி
யினிதெனச் சொல்லி நிற்பார்.
பொருள் : தோழி! - தோழியே!; விளங்கு ஒளி விசும்பில் - விளங்கும் ஒளியையுடைய வானிலே; வெண்கோட்டு இளம்பிறை சூழ்ந்த மின்போல் - வெண்மையான நுனிகளையுடைய இளம்பிறையைச் சூழ்ந்த மின்கொடிபோல; வளம்கெழு வடத்தைச் சூழ்ந்து வான்பொன் நாண் திளைப்பச் சேந்த - வளம் பொருந்திய முத்து வடத்தைச் சூழ்ந்து பொன்நாண் அசைதலாலே சிவந்த; இளங்கதிர் முலைகள் தம்மால் - இளமை பொருந்திய ஒளியுறு முலைகளாலே; இவனை மார்பு எழுதி வைகின் - இவன் மார்பை எழுதி வாழப் பெறின்; துளங்கு பெண் பிறப்பும் இனிது எனச் சொல்லி நிற்பார் - நிலையற்ற பெண்பிறப்பும் இனிமையுடையதாம் என்று சொல்லி நிற்பார்.
விளக்கம் : நச்சினார்க்கினியர், முன்பு சீவகன், என் கொடிது (1283) என்றதனால், இவர்கள், மார்பெழுதி வைகின் இனிது என்றார் என்பர். (132)
1298. அருந்தவஞ் செய்து வந்த
வாயிழை மகளிர் யார்கொல்
பெருந்தகை மார்பிற் றுஞ்சிப்
பெண்மையாற் பிணிக்கு நீரார்
கருங்கணின் யாமுங் கண்டாங்
காமனை யென்று சொல்லித்
திருந்தொளி முறுவற் செவ்வாய்த்
தீஞ்சொலார் மயங்கி னாரே.
பொருள் : பெருந்தகை மார்பில் துஞ்சிப் பெண்மையால் பிணிக்கும் நீரார் - இப் பெருந்தகையின மார்பிலே துயின்று பெண்மையால் வசப்படுத்தும் இயல்பினாராக; அருந்தவம் செய்து வந்த ஆயிழை மகளிர் யார்கொல்? - அரிய தவம் இழைத்து வந்த அணிகலன் அணிந்த பெண்டிர் யாவரோ?; காமனை யாமுங் கருங்கணின் கண்டாம் என்று சொல்லி - காமனை நாமும் நம் கரிய கண்களாற் காண்பது மட்டும் செய்தோம் என்றுரைத்து; திருந்து ஒளி முறுவல் செவ்வாய்த் தீசொலார் மயங்கினார் - விளங்கும் ஒளியை உடைய முறுவலையுஞ் செவ்வாயையுமுடைய இனிய மொழி மகளிர் மயக்குற்றனர்.
விளக்கம் : ஆயிழை - ஆராய்ந்த அணிகலன் அணிந்த. கொல் : ஐயப் பொருட்டு, பெருந்தகை, அன்மொழி : சீவகன்,. துஞ்சுதல் - துயிலுதல். நீரார் - தன்மையுடையோர். காமன் உருவமற்றவன் என்ப; அவர் கூற்றுப் பொய் யாமும் அவனைக் கண்ணிற் கண்டாம் என்றவாறு. திருந்து - திருத்தமான. முறுவல் - பற்கள் திருத்தமான ஒளியுடைய பற்கள் எனக் கொள்வதும் ஒன்று. (133)
1299. பன்மலர்ப் படலைக் கண்ணிக்
குமரனைப் பாவை நல்லார்
மன்னவன் பணியின் வாழ்த்தி
வாசநெய் பூசி நன்னீர்
துன்னின ராட்டிச் செம்பொற்
செப்பினுட் டுகிலுஞ் சாந்து
மின்னறும் புகையும் பூவுங்
கலத்தொடு மேந்தி னாரே.
பொருள் : பன்மலர்ப் படலைக் கண்ணிக் குமரனை - பல மலர்களையும் தழைகளையும் கொண்டு தொடுத்த கண்ணியணிந்த சீவகனை; மன்னவன் பணியின் - அரசன் கட்டளைப்படி; பாவை நல்லார் - பணிப்பெண்கள்; வாழ்த்தி - வாழ்த்துக் கூறி அழைத்துச் சென்று; துன்னினர் வாசநெய் பூசி - நெருங்கி மணமிகு நெய்யைப் பூசி; நல்நீர் ஆட்டி - நல்ல நீரைக்கொண்டு முழுக்காட்டி; செம்பொன் செப்பினுள் துகிலும் சாந்தும் இன்நறும் புகையும் பூவும் கலத்தொடும் எந்தினார் - பொற்பேழையில் ஆடையையும் சந்தனத்தையும் இனிய நறிய புகையையும் மலரையும் பூணையும் ஏந்தி அணிந்து கொள்ளச் செய்தனர்.
விளக்கம் : படலைக்கண்ணி - தாமரைக்கொழுமுறியினையும் அதன் மலரினையும் குவளையையும் கழுநீர் மலரினையும் விரவித் தொடுப்ப தொரு மாலை. குமரன் : சீவகன். மன்னவன் : தனபதி. துன்னினர் : முற்றெச்சம். கலம் : அணிகலன். (134)
1300. ஏந்திய வேற்பத் தாங்கி யெரிமணிக் கொட்டை நெற்றி
வாய்ந்தபொன் குயிற்றிச் செய்த மரவடி யூர்ந்து போகி
யாயந்தநன் மாலை வேய்ந்த வரும்பெறற் கூடஞ் சேர்ந்தான்
பூந்தொடி மகளிர் போற்றிப் பொற்கலம் பரப்பி னாரே.
பொருள் : ஏந்திய ஏற்பத் தாங்கி - அவர்கள் ஏந்தியவற்றைப் பொருந்த மெய்யில் அணிந்து; எரிமணிக் கொட்டை - ஒளிரும் மாணிக்கக் கொட்டையை; நெற்றி வாய்ந்த பொன்குயிற்றிச் செய்த மரஅடி ஊர்ந்து - நெற்றியிலே அழுத்திப் பொன்னாற் செய்த மர வடியைத் தொட்டுச் சென்று; ஆய்ந்த நல்மாலை வேய்ந்த அரும்பெறல் கூடம் சேர்ந்தான் - ஆராய்ந்த நல்ல மாலைகளைப் புனைந்த பெறற்கரிய கூடத்தை அடைந்தான்; பூந்தொடி மகளிர் போற்றிப் பொற்கலம் பரப்பினார் - அழகிய வளையணிந்த மாதர்கள் வாழ்த்துக் கூறிப் பொற்கலங்களைப் பரப்பினர்.
விளக்கம் : ஏற்பத்தாங்கி - பொருந்தும்படி அணிந்து. கொட்டை - குமிழ். மரவடி - மரத்தாற் செய்த அடிக்காப்பு. பொற்கலம் - ஈண்டு உண்கலம். (135)
1301. கன்னியர் கரக நீராற் றாமரை கழீஇய தொப்பப்
பொன்னடி கழீஇய பின்றைப் புரிந்துவாய் நன்கு பூசி
யின்மலர்த் தவிசி னுச்சி யிருந்தமிர் தினிதிற் கொண்டான்
மின்விரிந் திலங்கு பைம்பூண் வேற்கணார் வேனிலானே.
பொருள் : கன்னியர் கரக நீரால் தாமரை கழீஇயது ஒப்பப் பொன் அடி கழீஇய பின்றை - கன்னிப் பெண்கள் கரகத்திலிருந்த நீராலே தாமரை மலரைக் கழுவியது போலப் பொன் போன்ற அடிகளைக் கழுவிய பிறகு; புரிந்து நன்கு வாய் பூசி - விரும்பி நன்றாக வாய் கழுவி; இன் மலர்த் தவிசின் உச்சி இருந்து - இனிய மலர்த் தவிசின்மீது அமர்ந்து; மின் விரிந்து இலங்கு பைம்பூண் வேல்கணார் வேனிலான் - ஒளி மலர்ந்து விளங்கும் பைண்பூம் அணிந்த வேலனைய கண்ணார்க்குக் காமனைப் போன்ற சீவகன்; அமிர்து இனிதின் கொண்டான் - உணவை இனிய கறியுடன் உண்டான்.
விளக்கம் : நீராடிக் கால்கழுவி வாய்பூசி (19) என்றும், கைப்பன எல்லாம் கடை தலை தித்திப்ப (26) என்றும் ஆசாரக் கோவையிற் கூறினார். (136)
1302. வாசநற் பொடியு நீருங் காட்டிடக் கொண்டு வாய்ப்பப்
பூசறுத் தங்கை நீரை மும்முறை குடித்து முக்காற்
காசறத் துடைத்த பின்றைக் கைவிர லுறுப்புத் தீட்டி
தூசினா லங்கை நீவி யிருந்தனன் றோற்ற மிக்கான்.
பொருள் : வாசம் நல் பொடியும் நீரும் காட்டிட - மணம் உறு நல்ல பொடியையும் நீரையும் மகளிர் ஏந்த; கொண்டு வாய்ப்பப் பூசு அறுத்து - அவற்றைக் கைக்கொண்டு பூசுந்தொழிலை முடித்து; அங்கை நீரை மும்முறை குடித்து - அங்கையில் ஏந்திய நீரை மூன்று முறை குடித்து; முக்கால் காசு அறத்துடைத்த பின்றை - மும்முறை குற்றம் நீங்கத் துடைத்த பிறகு; கைவிரல் உறுப்பின் தீட்டி - விரலைக் கண் முதலிய உறுப்புக்களிலே தீண்டுவித்து; தூசினால் அங்கை நீவி - மேல் ஆடையினால் அங்கையைத் துடைத்து; தோற்றம் மிக்கான் இருந்தனன் - சிறந்த தோற்றத்துடன் இருந்தான்.
விளக்கம் : முக்காற் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு - ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய் பூசல் (ஆசாரக் - 28) என்றார் பிறரும் (137)
1303. சீர்கொளச் செய்த செம்பெர்
னடைப்பையுட் பாகு செல்ல
வார்கழல் குருசிற் கொண்டு
கவுளடுத் திருந்த வாங்கட்
போர்கொள்வேன் மன்ன னெல்லாக்
கலைகளும் புகன்று கேட்டு
நீர்கொண்மாக் கடல னாற்கு
நிகரில்லை நிலத்தி லென்றான்.
பொருள் : சீர் கொளச் செய்த செம்பொன் அடைப்பையுள் பாகு செல்ல - சிறப்புக் கொள்ளச் செய்த பொன் அடைப்பையிலே பாக்கும் வெற்றிலையும் செல்ல; வார் கழல் குரிசில் கொண்டு கவுள் அடுத்து இருந்த ஆங்கண் - கட்டப்பட்ட கழலணிந்த சீவகன் அவற்றை யெடுத்து வாயிலிட்டுத் தின்றிருந்த அளவிலே; போர் கொள் வேல் மன்னன் எல்லாக் கலைகளும் புகன்று கேட்டு - போருக்குக் கொண்ட வேலேந்திய தனபதி மன்னன் சீவகன் கற்ற கலைகளையெல்லாம் விரும்பிக் கேட்டு; நீர்கொள்மாக் கடலன்னாற்கு நிகர் நிலத்தில் இல்லை என்றான் - நீர் கொண்ட பெரிய கடலன்ன கலையுடைய இவனுக்கு ஒப்பு இந்நிலவுலகில் இல்லை என்றான்.
விளக்கம் : அடைப்பை - வெற்றிலையிட்டுவைக்கும் பை. பாகு - பாக்கு. குரிசில் : சீவகன். கவுள் - கன்னம் புகன்று - விரும்பி. பல திசைகளினும் இருந்து வரும் பல்வேறு யாறுகளும் கொணரும் நீரும் மேனீரும் கீழ் நீருமாகிய நீரெல்லாம் புகுந்து நிறைந்திருத்தலான், பல்வேறு கலைகளும் நிரம்பிய சீவகனை நீர்கொள் மாக்கடல் அன்னான் என்றார். (138)
வேறு
1304. பரிதி பட்டது பன்மணி நீள்விளக்
கெரிய விட்டன ரின்னிய மார்த்தன
வரிய பொங்கணை யம்மெ னமளிமேற்
குரிசி லேறினன் கூர்ந்தது சிந்தையே.
பொருள் : பரிதி பட்டது - (அப்போது) ஞாயிறு மறைந்தது; பல் மணி நீள விளக்கு எரிய விட்டனர் - பல மணிகளையும் விளக்கையும் ஒளிபெற ஏற்றினர்; இன் இயம் ஆர்த்தன - இனிய இசைக்கருவிகளும் ஒலித்தன; அரிய பொங்கு அணை அம் மென் அமளிமேற் குரிசில் ஏறினன் - தனித்தார்க்குப் பொறுத்தற்கரிய பொங்கும் அணையாகிய அழகிய மென்மையான படுக்கையின்மேற் சீவகன் அமர்ந்தனன்; சீந்தை கூர்ந்தது - (அப்போது) அவன் உள்ளம் காம நினைவிலே மிகுந்தது.
விளக்கம் : அரிய என்றது அதன்கண் துணையின்றித் தனித்துறை வோர் பொறுத்தலரிய என்பது பட நின்றது. சிந்தை கூர்ந்தது என மாறுக. கூர் : மிகுதிப் பொருட்டு. (139)
1305. பூங்க ணவ்வயி னோக்கம் பொறாதபோல்
வீங்கி வெம்மைகொண் டேந்தின வெம்முலை
யீங்கி தென்னென விட்டிடை நைந்தது
பாங்கி லாரிற் பரந்துள தல்குலே.
பொருள் : பூங்கண் அவ்வயின் நோக்கம் பொறாதபோல் - (பதுமையின் மலர்க் கண்கள்) அவ்விடத்து யான் நோக்கிய நோக்கத்தைத் தாங்காமல் நிலத்தை நோக்கி என்னை வருத்தினாற்போலவே; வெம் முலை வீங்கி வெம்மை கொண்டு ஏந்தின - பின்னர், முலைகளும் வீங்கிக் கொடுமை கொண்டு ஏந்தி வருத்தின; ஈங்கு இது என் என இட்டிடை நைந்தது -இவ்விடத்திற் பொறாமை என்னே என்று மெல்லிடை வருந்தியது; பாங்கு இலாரின் அல்குல் பரந்துளது - அப்போது பிறரிடுக்கண் கண்டு மகிழ்வாரைப் போல அல்குல் பரந்தது.
விளக்கம் : பரந்துளது : ஒருசொல். இனிக் கண்கள் தமக்கு முற்பட்டு வருத்தியதற்குப் பொறாதன போலப் பின்பு முலைகளும் வருத்தின என்றும் ஆம். (140)
1306. முருகு வார்குழ லாண்முகிழ் மென்முலை
பெருகு நீர்மையிற் பேதுற வெய்திநின்
றுருகு நுண்ணிடை யோவியப் பாவைத
னருகு நோக்கமெ னாவி யலைக்குமே.
பொருள் : முருகு வார்குழலாள் - மணமிகு நெடிய குழலாளாகிய; ஓவியப் பாவை - ஓவியத்தில் எழுதப் பெற்ற பாவை போல்வாளின்; முகிழ் மென்முலை - முகிழ்த்த மென்முலைகளும்; பெருகும் நீர்மையின் பேதுறவு எய்தி நின்று உருகும் நுண் இடை - அவை வளரும் இயல்பாலே துன்பம் அடைந்து வருந்துகின்ற நுண்ணிய இடையும்; அருகும் நோக்கம் - குறிக் கொண்டு நோக்காத நோக்கமும்; என் ஆவி அலைக்கும் - என் உயிரைக் கெடுக்கும் அளவாகா நின்றன.
விளக்கம் : முருகு - மணம். குழலாள் : பதுமை, நீர்மை - தன்மை. முலையும் இடையும் நோக்கமும் என ஆவியலைக்கும் என்க.
(141)
1307. புகைய வாவிய பூந்துகி லேந்தல்குல்
வகைய வாமணி மேகலை வார்மது
முகைய வாவிய மொய்குழல் பாவியேன்
பகைய வாய்ப்படர் நோய்பயக் கின்றவே.
பொருள் : புகை அவாவிய பூந்துகில் ஏந்து அல்குல் - நறுமணப் புகை பொருந்திய அழகிய ஆடையும், அந்த ஆடைதாங்கிய அல்குலிலே; வகையவாம் மணிமேகலை - பலவகையான மணிகள் செறிந்த மேகலையும்; வார் மது முகை அவாவிய மொய் குழல் - வழியுந் தேனையுடைய அரும்புகள் அவாவிய செறிந்த குழலும்; பாவியேன் பகையவாய் - பாவியேனுக்குப் பகையாயினவாய்; படர்நோய் பயக்கின்ற - துன்பமாகிய நோயைச் செய்கின்றன.
விளக்கம் : குழலை அவட்குப் பெயராக்கிக் குழலையுடையாளது அல்குலை மறைத்தமையால் ஆடையும் மேகலையும் பகையாயின என்பர் நச்சினார்க்கினியர். (142)
1308. போது லாஞ்சிலை யோபொரு வேற்கணோ
மாது லாமொழி யோமட நோக்கமோ
யாது நானறி யேனணங் கன்னவள்
காத லாற்கடை கின்றது காமமே.
பொருள் : அணங்கு அன்னவள் - தெய்வப்பெண் போன்றவளின்; போது உலாம் சிலையோ? - காமன் அம்பாகிய மலர் உலாவும் வில்லோ?; பொரு வேல் கணோ? - பொருதற்குரிய வேலாகிய கண்ணோ?; மாது உலாம் மொழியோ? - காதல் உலாவும் சொல்லோ?; மடநோக்கமோ? - இளமை பொருந்திய பார்வையோ?; காதலால் கடைகின்றது காமம் - காதலினாற் காமத்தை மிகச் செய்கின்றது; யாது நான் அறியேன் - இவற்றில் இன்னதென்று யான் சிறிதும் அறிகிலேன்.
விளக்கம் : சிலை : காமன் வில் : புருவம். இதனால் உறுப்புக்கள் யாவும் ஒக்க வருத்தின என்றானாயிற்று. மொழியோ? என்றதனால் மொழியுங் கேட்டான் என்பது பெற்றாம். அன்றி, அடிகளுக் கிறைஞ்சி (சீவக. 1275) என்னும் கவியிற் கூற்றைத் தானும் பின்பு கேட்டலின், மொழியோ என்றான் என்றலும் ஒன்று. (143)
1309. அண்ண லவ்வழி யாழ்துயர் நோயுற
வண்ண மாமலர்க் கோதையு மவ்வழி
வெண்ணெய் வெங்கனன் மீமிசை வைத்ததொத்
துண்ணை யாவுரு காவுள ளாயினாள்.
பொருள் : அண்ணல் அவ்வழி ஆழ்துயர் நோய் உற - சீவகன் அங்கே அவ்வாறு ஆழுந் துயர் தரும் நோயை அடைய; வண்ணம் மாமலர்க் கோதையும் - அழகிய பெரிய மலர்க் கோதையாளும்; அவ்வழி - அங்கே; வெண்ணெய் வெங்கனல் மீமிசை வைத்தது ஒத்து - வெண்ணெயைக் கொடிய நெருப்பின் மேலே வைத்தாற் போன்று; உள் நையா உருகா உளள் ஆயினாள் - உள்ளம் நைந்து உருகி உயிருடன் இருப்பாளாயினாள்.
விளக்கம் : அவனைக் காணலாம் என்னும் நினைவால், உளள் ஆயினாள். ஆழ்துயர் நோய் - அழுந்துதல் உறுகின்ற வருத்த நோய். (144)
1310. பெயன்ம ழைப்பிற ழுங்கொடி மின்னிடைக்
கயன்ம ணிக்கணி னல்லவர் கைதொழப்
பயனி ழைத்தமென் பள்ளியுட் பைந்தொடி
மயனி ழைத்தவம் பாவையின் வைகினாள்.
பொருள் : பெயல் மழைப் பிறழும் கொடி மின் இடை - பெய்தலை யுடைய முகிலிலே பிறழும், ஒழுங்கற்ற மின் போன்ற இடையும்; கயல் மணிக் கணின் - கயலனைய நீலமணிக் கண்களையும் உடைய; நல்லவர் கை தொழ - மகளிர் கைகுவித்து வணங்க; பயன் இழைத்த மென்பள்ளியுள் - துணையுடையோர்க்குப் பயன் உண்டாகப் பண்ணின மென்மையான படுக்கையிலே; மயன் இழைத்த அம் பாவையின் - மயன் பண்ணின அழகிய பதுமை போல; பைந் தொடி வைகினாள் - பசிய வளையலுடைய பதுமை இருந்தனள்.
விளக்கம் : மழை : ஆகுபெயர்; முகில். கணின் - கண்ணின். நல்லவர் - மகளிர்; பள்ளி - படுக்கை. மயன் - அசுரத்தச்சன். அம்பாவை : அழகிய பதுமை (145)
1311. வணங்கு நோன்சிலை வார்கணைக் காமனோ
மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ
நிணந்தெ னெஞ்ச நிறைகொண்ட கள்வனை
யணங்கு காளறி யேனுரை யீர்களே.
பொருள் : அணங்குகாள்! - தெய்வங்களே!; என் நெஞ்சம் நிணந்து நிறை கொண்ட கள்வனை - என் உள்ளத்தைப் பிணித்து நிறையைக் கவர்ந்த அக் கள்வனை; வணங்கும் நோன் சிலைவார்கணைக் காமனோ? - எல்லோரும் மனங் குழைதற்குக் காரணமான வலிய வில்லையும் நீண்ட அம்புகளையும் உடைய காமனோ?; மணம் கொள் பூமிசை மைவரை மைந்தனோ? - மணமுறும் மலரிலே தோன்றிய, கரிய மலைவாழ் வுறும் முருகனோ?; அறியேன் உரையீர்களே ?- அறிந்திலேன், நீயிர் அறிந்தால் உரையீரோ?
விளக்கம் : ஏ : வினா விடைச்சொல். பெரும்பாலும் தெய்வத் தன்மை உடைமையின் மகனோ என்றிலளாம்! வணங்கு நோன்சிலை - எல்லாவுயிர்களுக்கும் மனம் குழைதற்குக் காரணமான வலிய கருப்புவில் என்க. கணை - மலரம்பு. பூமிசை -பதுமப்பாயல்மேல். மைவரை மைந்தன் - மலையிலுறைகின்ற முருகன். நிணந்து - பிணைத்து. கட்டில் நிணக்கும் இழிசினன் (புறநா. 82-3) என்புழியும் அஃதப்பொருட்டாதல் அறிக. அணங்கு - ஈண்டு இல்லுறை தெய்வம்.(146)
1312. கடைகந் தன்னதன் காமரு வீங்குதோ
ளடையப் புல்லினன் போன்றணி வெம்முலை
யுடைய வாகத் துறுதுயர் மீட்டவ
ளிடைய தாகுமெ னாருமி லாவியே.
பொருள் : ஆரும் இல் என் ஆவி - போகாமல் நிறுத்துவார் இல்லாத என் உயிர்; கடை கந்து அன்ன - கடைந்து செய்த தூண் போன்ற; தன் காமரு வீங்கு தோள் - தன் அழகிய பருத்த தோள்களால்; அடையப் புல்லினன் போன்று - என் மெய்ம் முழுதும் தழுவினவன் போல; ஆகத்து அணி வெம்முலை உறு துயர் உடைய மீட்டவன் - மார்பில் அணிந்த வெம்முலை உற்ற பசப்பு உடையும்படி தடவி மீட்டவனின்; இடையது ஆகும் - இடத்தில் உள்ளதாகும்.
விளக்கம் : கடைகந்து : வினைத்தொகை. காமரு - அழகிய; ஆகத்து அணி வெம்முலை உறுதுயர் உடைய மீட்டவன் என மாறுக. ஆருமில் ஆவி - உயக்கொள்வோர் ஒருவருமில்லாததாகிய உயிர். (147)
1313. இறுதி யில்லமிர் தெய்துந ரீண்டியன்
றறிவி னாடிய வம்மலை மத்தமா
நெறியி னின்று கடைந்திடப் பட்டநீர்
மறுகு மாக்கடல் போன்றதென் னெஞ்சமே.
பொருள் : இறுதி இல் அமிர்து எய்துநர் ஈண்டி - சாதல் இல்லாமைக்குக் காரணமான அமிர்தத்தைப் பெற விரும்பிய தேவர்கள் திரண்டு; அறிவின் நாடிய - தம் அறிவினாலே அதனை ஆராய வேண்டி; அன்று அம்மலை மத்தமா நின்று - அக் காலத்தில் மந்தரமலை மத்தாக நின்று; நெறியின் கடைந்திடப்பட்ட நீர் மறுகும் மாக்கடல் போன்றது - முறைமையாகக் கடைந்திடப்பட்ட நீர் கலங்குங் கடல் போன்றதாகும்; என் நெஞ்சம் - என் உள்ளம்.
விளக்கம் : எய்துநர் : பெயர் இறுதி - சாக்காடு. சாக்காடின்மைக்குக் காரணமான அமிர்து என்க. அம்மலை : உலகறிசுட்டு. மந்தரம் - மத்தம் : கடைகழி. (148)
1314. நகைவெண் டிங்களு நார்மட லன்றிலுந்
தகைவெள் ளேற்றணற் றாழ்மணி யோசையும்
பகைகொண் மாலையும் பையுள்செ யாம்பலும்
புகையில் பொங்கழல் போற்சுடு கின்றவே.
பொருள் : நகைவெண் திங்களும் - ஒளியுறும் வெண்மையான நிலவும்; நார்மடல் அன்றிலும் - நாரையுடைய பனைமடலில் இரு க்கும் அன்றிலும்; தகைவெள் ஏற்று அணல் தாழ்மணி ஓசையும் - பெருமைமிக்க வெள்ளேற்றின் அணலிலே தங்கிய மணியின் ஒலியும்; பகைகொள் மாலையும் - பிரிந்திருப்பவர்க்குப் பகை செய்யும் மாலைபபோதும்; பையுள்செய் ஆம்பலும் -துன்ப மூட்டும் ஆம்பற் பண்ணை யெழும்பும் குழலும்; புகைஇல் பொங்கு அழல்போல் சுடுகின்ற - புகை இல்லாது பொங்கும் நெருப்பைப்போலச் சுடுகின்றன.
விளக்கம் : புகை இல்லாத அழல் : இல்பொருளுவமை. அன்றில் பனைமடலில் உறையும் இயல்புடையதென்ப. மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத் துணைபுணர் அன்றில் (நற்றிணை, 303. 4. 5) என்றார் பிறரும். (149)
1315. பூமென் சேக்கையு ணாற்றிய பூந்திரட்
டாமம் வாட்டுந் தகைய வுயிர்ப்பளைஇக்
காமர் பேதைதன் கண்டரு காமநோ
யாமத் தெல்லையோர் யாண்டொத் திறந்ததே.
பொருள் : பூமென் சேக்கையுள் நாற்றிய பூந்திரள் தாமம் - மலரால் அமைத்த மெல்லிய அணையிலே தூக்கிய மலர்கள் திரண்ட மாலைகளை; வாட்டும் தகைய உயிர்ப்பு அளைஇ - மெலிவிக்கும் தன்மையவாகிய நெட்டுயிர்ப்பைக் கலந்து; காமர் பேதைதன் கண்தரு காமநோய் - அழகிய அப் பேதைக்குத் தன் கண் தந்த நோயாலே; யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்தது - இராப் பொழுதின் எல்லை ஓராண்டின் அளவையொத்துக் கழிந்தது.
விளக்கம் : நச்சினார்க்கினியர் (144) முதல் - (150) வரை ஒரு தொடராக்கி அண்ணல் நோயுறாநிற்கக், கோதையும் நல்லவர் தொழச்சென்று : பள்ளியிலே வைகினாள்; அங்ஙனம் வைகியவள், திங்கள் முதலியன சுடா நின்றன;அதனால் என் நெஞ்சம் மறுகுகின்றது; இங்ஙனம் நிறைகொண்ட கள்வனை யான் ஐயுற்று அறிகின்றிலேன்; தெய்வங்களே! நீவிரும் உரைத்தலீர்! உரையீராயினும் என் ஆவி துயர்மீட்டவன் இன்னும் அருளுவனோ என்று அவனிடத்தே ஆகா நின்றது, என்று தெய்வத்தை நோக்கிக் கூறி, உயிர்ப்பளைஇ உருகிப் பின்னும் அவன் நெஞ்சிடத்தேயாதலின் இறந்துபடாள் ஆயினாள். அப்பேதைக்குக் கண்தந்த நோயால் இராப்பொழுது கழிந்தது என்று முடிப்பர். (150)
1316. மாதி யாழ்மழ லைம்மொழி மாதரா
டாதி யவ்வையுந் தன்னமர் தோழியும்
போது வேய்குழற் பொன்னவிர் சாயலுக்
கியாது நாஞ்செயற் பாலதென் றெண்ணினார்.
பொருள் : மாதியாழ் மழலைமொழி மாதராள் - காதலையுடைய யாழின் இசை போலும் மழலை மொழியுறு பதுமையின்; தாதி அவ்வையும் தன் அமர் தோழியும் - தாதியாகிய செவிலியும் அவள் விரும்பிய தோழியும்; போதுவேய் குழல்பொன் அவிர் சாயலுக்கு - மலர் வேய்ந்த குழலையுடைய, பொன்னென ஓளிரும் சாயலுடையாட்கு; நாம் செயற்பாலது யாது என்று எண்ணினார் - நாம் செய்தற்குறியது யாது என்று ஆராய்ந்தனர்.
விளக்கம் : மாது - காதல். மழலைம்மொழி என்புழி மகரம் வண்ணநோக்கி விரிந்தது. மாதராள் : பதுமை. தாதியவ்வை - தாதியாகிய செவிலித்தாய். அமர்தோழி : வினைத்தொகை. வேய்குழல் : வினைத்தொகை. பொன்னவிர் சாயல்: இஃது அன்மொழியாய்ச் சாயலையுடையாளை யுணர்த்தியது. (151)
1317. அழுது நுண்ணிடை நைய வலர்முலை
முழுதுங் குங்கும முத்தொ டணிந்தபின்
றொழுது கோதையுங் கண்ணியுஞ் சூட்டினா
ரெழுது கொம்பனை யாரிளை யாளையே
பொருள் : எழுது கொம்பு அளையார் இளையாளை தொழுது - எழுதும் மலர்க்கொடி போன்றவர்கள் பதுமையை வணங்கி; நுண்இடை அழுது நைய - அவளுடைய நுண்ணிய இடை அழுது வருந்துமாறு; அலர்முலை முழுதும் குங்குமம் முத்தொடு அணிந்த பின் - அலர்ந்த முலை முழுதும் குங்குமத்தைப் பூசி முத்தை அணிந்த பிறகு; கோதையும் கண்ணியம் சூட்டினார் - மலர்மாலையும் மலர்க்கண்ணியும் அணிந்தனர்.
விளக்கம் : சுமை பொறுக்கலாற்றாமல் நுண்ணிடை அழுது நைந்தது. தன்மைபெற இவற்றை அணிந்தனர். (152)
1318. வேந்து காயினும் வெள்வளை யாயமோ
டேந்து பூம்பொழி லெய்தியங் காடுத
லாய்ந்த தென்றுகொண் டம்மயில் போற் குழீஇப்
போந்த தாயம் பொழிலும் பொலிந்ததே.
பொருள் : வேந்து காயினும் - அரசன் சினந்தாலும்; வெள்வளை ஆயமொடு - வெள்ளிய வளையணிந்த தோழியருடன்; ஏந்து பூம்பொழில் எய்தி - உயர்ந்த மலர்ப்பொழிலை அடைந்து; அங்கு ஆடுதல் ஆய்ந்தது - அங்கே விளையாடுதல் ஆராயப்பட்ட தொழில்; என்று கொண்டு - என முடிவு செய்து; அம் மயில் போல் குழீஇ - அழகிய மயில்களைப்போற் கூடி; ஆயம் போந்தது - ஆயம் அவளுடனே சென்றது; பொழிலும் பொலிந்தது மலர்ப் பொழிலும் அவர்களால் அழகுற்றது.
விளக்கம் : வேந்தன் காய்தல் முன்னர்ப் பதுமையைப் பாம்பு தீண்டிய பொழிலிலே போகவிட்டது கருதி. காயினுஞ் செல்வேம் என்று துணிந்தனர். அங்கே சீவகனைக் கண்ட இடங்கண்டு ஆறுதல் பெறக்கூடும் என்று கருதி.
நச்சினார்க்கினியர் (151) முதல் (153) வரை மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கிக் கூறும் முடிபு : நுண்ணிடையாள் அழுது நையாநிற்கத், தாயும் தோழியும் எண்ணி, அவனை எதிர்ப்பட்ட இடங்காணினும் அவனைக் கண்ட இடங்கண்டாலும் அவனை எதிர்ப்பட்டாற் போறலின், வேந்து காயினும் பொழிலிலே சென்று விளையாடுதலே காரியம் என்று கருதி, அவளைக் கொம்பனையார் அணிந்த பின்பு கோதையையுங் கண்ணியையும் சூட்டினார்; சூட்டி அப் பொழிலிலே போ என்று கூற, ஆயமும் திரண்டு தொழுது கூடப் போந்தது; பொழிலும் பொலிந்தது. அழுது என்பதற்குப் பாம்பு கடித்தவிடத்தே போகவிடா நின்றோம் என்று அழுதார் என்றும் உரைப்ப. (153)
1319. அலங்க றான்றொடுப் பாரலர் பூக்கொய்வார்
சிலம்பு சென்றெதிர் கூவுநர் செய்சுனை
கலங்கப் பாய்ந்துட னாடுநர் காதலி
னிலங்கு பாவை யிருமணஞ் சேர்த்துவார்.
பொருள் : அலங்கல் தான் தொடுப்பார் - (அவ்வாயத்தார்) மாலை தொடுப்பார்கள்; அலர்பூக் கொய்வார் - அலர்ந்த மலர்களைக் கொய்வார்கள்; சிலம்பு சென்று எதிர் கூவுநர் - செய் குன்றோரஞ்சென்று எதிரொலி பிறக்கக் கூவுவார்கள்; செய்சுனை கலங்கப் பாய்ந்து உடன் ஆடுநர் - செயற்கைச் சுனையிலே அது கலங்குமாறு பாய்ந்து ஒருங்கே ஆடுவார்கள்; காதலின் இலங்கு பாவை இருமணம் சேர்த்துவார் - காதலுடன் விளங்கும் பதுமைகளைப் பெருமையாக மணம் புரிவிப்பார்கள்.
விளக்கம் : அலங்கல் - மாலை. தான் : அசை. அலர்பூ : வினைத்தொகை. சிலம்பு - ஈண்டுச் செய்குன்று. கூவுநர் - கூவுவார் . ஆடுநர் - ஆடுவார். பாவை - விளையாட்டுப் பொம்மை. (154)
1320. தூசு லாநெடுந் தோகையி னல்லவ
ரூச லாடுந ரொண்கழங் காடுநர்
பாச மாகிய பந்துகொண் டாடுந
ராகி யெத்திசை யும்மமர்ந் தார்களே.
பொருள் : தூசு உலாம் நெடுந்தோகையின் நல்லவர் - ஆடையிலே அசைகின்ற கொய்சகத்தையுடைய அவ்வாயத்தார்; ஊசல் ஆடுநர் - ஊசல் ஆடுவர்; ஒண்கழங்கு ஆடுநர் - ஒளிரும் கழங்கு விளையாடுவர்; பாசம் ஆகிய பந்து கொண்டு ஆடுநர் - அன்புடைய பந்தைக் கொண்டு ஆடுவர்; ஆகி - ஆகி; எத்திசையும் அமர்ந்தார்கள் - எல்லாம் பக்கத்தினும் போய் அமர்ந்தனர்.
விளக்கம் : நச்சினார்க்கினியர் இவ்விரு செய்யுட்களையும் ஒரு தொடராக்குவர். தூசுலா நெடுந்தோகை என்றது, புடைவையிலே அசைகின்ற கொய் சகத்தை; தோகை போறலின் அஃதப்பெயர் பெற்றது. பாசமாகிய பந்து தம்பற்றிற்குக் காரணமாகிய பந்து என்க.
(155)
1321. முருகு விம்மிய மொய்குழ லேழைத
னுருகு நோக்க முளங்கிழித் துள்சுட
வரிவை யாடிய காவகங் காணிய
வெரிகொள் வேலவ னேகின னென்பவே.
பொருள் : முருகு விம்மிய மொய்குழல் ஏழைதன் - மணம் ததும்பிய நெருங்கிய குழலையுடைய பதுமையின்; உருகும் நோக்கம் உளம் கிழித்து உளசுட - தன் நினைவு மிக்கு வருந்திப் பார்த்த பார்வை உள்ளத்தைப் பிளந்து சுடுதலின்; அரிவை ஆடிய காவகம் காணிய - பதுமை ஆடிய பொழிலைக் காண்பதற்கு; எரிகொள் வேலவன் ஏகினன் என்ப - அனல் ததும்பிய வேலினையுடைய சீவகன் சென்றான்.
விளக்கம் : என்ப : அசை. அவளாடிய இடத்தைக் காண்டலும் அவளைக் காண்பதுபோல இருத்தலின் ஏகினன். முருகு - மணம். மொய்குழலேழை : பதுமை; பன்மொழித் தொடர். அரிவை : பதுமை. காணிய - காண : செய்யியவென் வாய்பாட்டெச்சம். வேலவன் : சீவகன். (156)
1322. மயிலி னாடலு மந்தியி னூடலுங்
குயிலின் பாடலுங் கூடி மலிந்தவண்
வெயிலி னீங்கிய வெண்மணற் றண்ணிழல்
பயிலு மாதவிப் பந்தரொன் றெய்தினான்.
பொருள் : மயிலின் ஆடலும் - மயிலின் ஆட்டமும்; மந்தியின் ஊடலும் - பெண் குரங்கின் பிணக்கும்; குயிலின் பாடலும் கூடி மலிந்து அவண் - குயிலின் பாட்டும் கூடி நிறைந்த அப்பொழிலிலே; வெயிலின் நீங்கிய வெண்மணல் தண்ணிழல் - வெயிலினின்றும் நீங்கிய வெண்மையான மணல் பரவிய தண்ணிய நிழலுறும்; மாதவிப் பந்தர் ஒன்று எய்தினான் - மாதவிப் பந்தர் ஒன்றை அடைந்தான்.
விளக்கம் : மந்தி - பெண்குரங்கு. மாதவிப்பந்தர் - குருக்கத்திக் கொடி படர்ந்து பந்தரிட்ட இடம். (157)
1323. காது சேர்ந்த கடிப்பணை கையது
தாது மல்கிய தண்கழு நீர்மல
ரோத நித்தில வட்டமொர் பொன்செய்நாண்
கோதை வெம்முலை மேற்கொண்ட கோலமே.
பொருள் : காது சேர்ந்த கடிப்பிணை - காதைச் சேர்ந்தன கடிப்பிணை என்னும் அணி; கையது தாது மல்கிய தண்கழு நீர்மலர் - கையில் உள்ளது மகரந்தம் நிறைந்த தண்ணிய கழுநீர் மலர்; வெம்முலை ஓத நித்தில வட்டம் ஓர் பொன்செய் நாண் - முலையிடத்தன கடல் முத்துமாலையும் ஒரு பொன்வடமும்; கோதைமேற்கொண்ட கோலம் - இது பதுமை மேற்கொண்ட ஒப்பனை.
விளக்கம் : காமநோயினால் ஒப்பனை சிறிதாக இருந்தது. கடிப்பிணை - ஒருவகைக் காதணி : கடிப்பு இணை எனக் கண்ணழித்தல் வேண்டும். கோலவித்தகம் குயின்ற நுட்பத்துத் தோடும் கடிப்பும் துயல்வருங் காதினர் வாலிழை மகளிர் எனப் பெருங்கதையினும் (2 : 7. 37-8) வருதல் காண்க வயிரக்கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி என்னும் பெரியாழ்வார் திருமொழியால் இவ்வணி காதினைத் தாழப் பெருக்குதற் கிடப்படுதல் உணரலாம். (158)
1324. விண்பு தைப்பன வெண்மலர் வேய்ந்துளாற்
கண்பு தைப்பன காரிரும் பூம்பொழில்
சண்ப கத்தணி கோதைநின் றாடனி
நண்ப னைந்நினை யாநறு மேனியே.
பொருள் : சண்பகத்து அணி கோதை நறுமேனி - சண்பகத்தின் கோதையை யொத்த நல்ல மெய்யினாள்; விண் புதைப்பன வெண்மலர் வேய்ந்து - வானை மறைக்கும் வெண்மையான மலர்கள் வேயப்பெற்று; உளால் கண்புதைப்பன கார் இரும்பூம்பொழில் - உள்ளிடம் கண்ணை மறைப்பனவாகிய கரிய பெரிய மலர்ப் பொழிலிலே; நண்பனை நினையா தனி நின்றாள் - நண்பனை நினைத்துப் பொழிலிலே தனியே நின்றாள்.
விளக்கம் : அப் பொழில் - அவன் சேர்ந்த மாதவிப் பொழில். விண்ணை மறைப்பனவாகிய பொழில், மலராலே வேயப்பட்டு உள்ளிடம் கண்ணை மறைப்பனவாகிய பொழில் எனத் தனித்தனிகூட்டுக. (159)
1325. கறந்த பாலினுட் காசி றிருமணி
நிறங்கி ளர்ந்துதன் னீர்மைகெட் டாங்கவண்
மறைந்த மாதவி மாமை நிழற்றலிற்
சிறந்த செல்வனுஞ் சிந்தையி னோக்கினான்.
பொருள் : கறந்த பாலினுள் காசு இல் திருமணி - கறந்து வைத்த பாலிலே குற்றமற்ற நீலமணி; நிறம் கிளர்ந்து தன் நீர்மை கெட்டாங்கு - நிறம் கிளர அது தன் இயல்பு கெட்டாற் போல; அவள் மறைந்த மாதவி மாமை நிழற்றலின் - பதுமை மறைந்து நின்ற மாதவிப் பூவின் மேலே அவளுடைய மாமை நிறம் ஒளிவிடுதலின்; சிறந்த செல்வனும் சிந்தையின் நோக்கினான் - சிறப்புற்ற செல்வனும் தன் மனம் பொருந்த நோக்கினான்.
விளக்கம் : மாமை: நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால் நாருரித் தன்ன மதனின் மாமை (நற். 6:1-2) என்பதனால் அறிக. மாதவி : மலருக்கு ஆகுபெயர். இவ்வொளி யாதென்று கருதினான். (160)
1326. வரையின் மங்கைகொல் வாங்கிருந் தூங்குநீர்த்
திரையின் செல்விகோ றேமலர்ப் பாவைகொ
லுரையின் சாய லியக்கிகொல் யார்கொலிவ்
விரைசெய் கோலத்து வெள்வளைத் தோளியே.
பொருள் : இவ் விரைசெய் கோலத்து வெள்வளைத்தோளி - இந்த மணங்கமழும் ஒப்பனையுடைய வளைத்தோளினாள்; வரையின் மங்கைகொல்? - மலையர மகளோ?; வாங்கு இருந்தூங்கு நீர்த்திரையின் செல்விகொல்? - வளைந்த பெரிய அசையும் நீரையுடைய கடலில் வாழும் அரமங்கையோ?; தேன்மலர்ப் பாவை கொல்? - தேனையுடைய தாமரையில் வாழும் திருமளோ?; உரைஇன் சாயல் இயக்கி கொல்? - புகழப்பெறும் இனிய மென்மையையுடைய இயக்கியோ?; யார்கொல் - யாவளோ?
விளக்கம் : பதுமையை முன்பு கண்டவனாயினும் வேட்கை மிகுதியால் ஐயம் நிகழ்ந்தது. வாங்குநீர் இருந்தூங்கு நீர் எனத் தனித்தனி கூட்டுக. வாங்கு - உலகினை வளைந்த. இருந்தூங்கு நீர் - பெரிய அசைகின்ற நீர். (161)
1327. மாலை வாடின வாட்க ணிமைத்தன
காலும் பூமியைத் தோய்ந்தன காரிகைப்
பாலின் தீஞ்சொற் பதுமையிந் நின்றவள்
சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளியே.
பொருள் : மாலை வாடின - மாலைகள் வாடியுள்ளன; வாள் கண் இமைத்தன - வாளனைய கண்கள் இமைக்கின்றன; காலும் பூமியைத் தோய்ந்தன - கால்களும் நிலமிசைத் தோய்கின்றன; இந் நின்றவள் பால்இன் தீசொல் - (ஆகையால்) இங்கே நின்கின்றவள் பாலனைய இனிய மொழியாளாகிய; சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளி பதுமையே - பொழிலில் உள்ள மூங்கிலை மயக்கும் வளைசூழ்ந்த தோளியாளாகிய பதுமையே.
விளக்கம் : தோளியே என்பதன் ஈற்றிலுள்ள ஏகாரத்தைப் பதுமையின் ஈற்றிற் சேர்க்க. மருள் : உவம உருபு. (162)
1328. தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை
மேவர் தென்றமிழ் மெய்ப்பொரு ளாதலிற்
கோவத் தன்னமென் சீறடிக் கொம்பனாள்
பூவர் சோலை புகுவலென் றெண்ணினான்.
பொருள் : தீ தொடைத் தேவர் பண்ணிய இன்சுவை - இனிய யாழினையுடைய கந்தருவர் அமைத்த இனியமணம்; மேவர்தென் தமிழ் மெய்ப்பொருள் ஆதலின் - பொருந்திய தமிழகப் பொருளில் முதற் கந்தருவமான உண்மை மணமாகும் ஆதலினால்; கோவத்து அன்னமென் சீறடிக் கொம்பனாள் பூவர் சோலை - இந்திரகோபம் போன்ற மென்மையான சிற்றடியுடைய மலர்க்கொம்பனாள் நிற்கின்ற மலர் பொருந்திய பொழிலிலே; புகுவல் என்று எண்ணினான் - யானும் சென்று இயற்கைப் புணர்ச்சியில் ஈடுபடுவேன் என்று எண்ணினான்.
விளக்கம் : முதற் கந்தவரும்: நாடக வழக்கானது. இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்படாமல் வருவது. ஈண்டுக் கூறியது சுட்டியொருவர் பெயர் கொள்ளப்படுவதால் இரண்டாங் கந்தருவமான உலகியல் வழக்காகும் மெய்ப்பொருள் என்றார் இதனை. இது ஐந்து நிலம் பெற்றது.தீந்தொடைத் தேவர் என்று இயைக்க. பூவர் : அர் : பகுதிப் பொருள் விகுதி என்பர் நச்சினார்க்கினியர். முதற் கந்தருவம் அன்மையின் எண்ணினான் என்றார். (163)
1329. அல்லி சேரணங் கன்னவட் காயிடைப்
புல்லி நின்றமெய்ந் நாண்புறப் பட்டது
கல்செய் தோளவன் காமரு பேருணர்
வெல்லை நீங்கிற் றியைந்தன ரென்பவே.
பொருள் : அல்லிசேர் அணங்கு அன்னவட்கு - தாமரை மலர்த் திருவனையாட்கு ; ஆயிடைப் புல்லி நின்ற மெய்ந்நாண் புறப்பட்டது - அவன் அங்ஙனம் எண்ணிச் சென்ற பொழுது பொருந்தி நின்ற மெய்ந்நாணம் நீங்கியது - கல்செய் தோளவன் காமரு பேர் உணர்வு எல்லை நீங்கிற்று; கல்செய் தோளவன் காமரு பேர் உணர்வு எல்லை நீங்கிற்று - கல்லாலாகியது போன்ற தோளையுடையானின் அழகிய பேரறிவு அவன் எல்லையைக் கடந்தது; இயைந்தனர் - அப்போது இருவரும் கூடினர்.
விளக்கம் : என்ப, ஏ : அசைகள். அல்லி - அகவிதழ்; ஈண்டுத் தாமரை மலர்க்கு ஆகுபெயர். அணங்கு ஈண்டுத் திருமகள்; பதுமைக்குவமை, தோளவன் : சீவகன். (164 )
1330. களித்த கண்ணிணை காம்பென வீங்குதோட்
டெளிர்த்த வெள்வளை சேர்ந்தது மாமையுந்
தளித்த சுண்ணஞ் சிதைந்தன குங்கும
மளித்த பூம்பட் டணிந்து திகழ்ந்ததே.
பொருள் : கண்இணை களித்த - (அப்போது) கண்களிரண்டும் களித்தன; காம்பு என வீங்குதோள் வள்வளை தெளிர்த்த - மூங்கில் எனப் பருத்த தோள்களில் வெள்வளைகள் ஒலித்தன; மாமையும் சேர்ந்தது - போன மாமைநிறம் வந்து சேர்ந்தது; தளித்த சுண்ணம் குங்குமம் சிதைந்தன - பூசிய சுண்ணப் பொடியும் குங்குமமும் அழிந்தன; அளித்த பூம்பட்டு அணிந்து திகழ்ந்தது - இவனால் அருள் பண்ணப்பட்ட பட்டும் அணியப் பெற்று விளங்கியது.
விளக்கம் : புணர்ச்சி நீங்கிப் பட்டணிந்தாளாதலின் அது திகழ்ந்தது. கண்ணிணை களித்த என மாறுக. வெள்வளை - வெள்ளிய சங்கவளையல். மாமையும் சேர்ந்தது என மாறுக. தளித்த - பூசிய. அளித்த - சீவகனால் வழங்கப்பட்ட என்க. (165)
1331. குவளை ஏய்ந்த கொடுங் குழை கூந்தலுள்
திவளும் வாழிய செம் பொறி வண்டுகாள்
இவள கூர் எயிறு ஈனும் தகையவோ
தவள மெல் இணர்த் தண் கொடி முல்லையே.
பொருள் : குவளை ஏய்ந்த கொடுங்குழை கூந்தலுள் - குவளை மலர் பொருந்திய, வளைந்த மகரக் குழையை அணிந்தவளின் கூந்தலிலே; திவளும் செம்பொறி வண்டுகாள்! - துவளும் செம்புள்ளி வண்டுகளே!; தவளமெல் இணர்த்தண் கொடிமுல்லை - வெண்மையான மெல்லிய பூங்கொத்துக்களையுடைய தண்ணிய கொடிமுல்லைகள்; இவளகூர் எயிறு ஈனும் தகையவோ? - இவளுடைய கூரிய எயிற்றை ஈனும் தகுதியுடையவோ ? கூறுமின்.
விளக்கம் : வாழிய : அசை. இவள : அ : ஆறனுருபு. ஏய்ந்த - இயைந்த. கொடுங்குழை : அன்மொழித்தொகை; பதுமை, திவள்தல் - துவளுதல். தவளமெல்லிணர் - வெள்ளிய மெல்லிய பூங்கொத்தினையுடைய. (166)
1332. பொன் துஞ்சு ஆகத்துப் பூங் கண்கள் போழ்ந்த புண்
இன்று இப் பூண் கொள் இள முலைச் சாந்து அலால்
அன்றித் தீர்ப்பன யாவையும் இல்லையே
என்று மாதர் எழில் நலம் ஏத்தினான்.
பொருள் : பொன் - பொன்னனையாய்!; துஞ்சு ஆகத்துப் பூங்கண்கள் போழ்ந்த புண் - நீ தங்கிய மார்பிலே நின் கண்களாகிய வேல்பட்டுப் பிளந்து கிடந்த பழம் புண்களை; இன்று இப் பூண்கொள் இளமுலைச் சாந்து அலால் - இன்று இந்த அணிகலன் தங்கிய இளமுலைகளில் அணிந்த சாந்தல்லது; அன்றித் தீர்ப்பன யாவையும் இல்லை - மாறுபட்டுத் தீர்ப்பன வேறொன்றும் இல்லை; என்று மாதர் எழில்நலம் ஏத்தினான் - என்று கூறிப் பதுமையின் அழகுநலத்தைப் போற்றினான்.
விளக்கம் : இவையிரண்டும் நயப்பு. பொன்: பதுமை; உவமை யாகுபெயர். இனித் தலைவியின் முன்னாதலின் திருமகள் துஞ்சும் ஆகம் எனத் தன்னைப் புகழ்தலும் ஆம். ஆகம்: நெஞ்சு; இடவாகுபெயர். (167)
1333. கண்ணி வேய்ந்து கருங்குழல் கைசெய்து
வண்ண மாலை நடுச்சிகை யுள்வளைஇச்
செண்ண வஞ்சிலம் பேறு துகளவித்
தண்ண லின்புறுத் தாற்றலி னாற்றினாள்.
பொருள் : கண்ணி வேய்ந்து - மலர்க்கண்ணியைச் சூடி; கருங்குழல் கைசெய்து - கரிய கூந்தலை ஒழுங்காக அணிந்து; வண்ணமாலை நடுச்சிகை உள் வளைஇ - அழகிய மாலையைக் கொண்டையின் நடுவே வளையமாக வைத்து; செண்ணம் அம் சிலம்பு ஏறு துகள் அவித்து - நுண்ணிய தொழிலையுடைய அழகிய சிலம்பிலேறின பூந்துகளைத் துடைத்து; அண்ணல் இன்புறுத்து ஆற்றலின் - சீவகன் இன்பம் ஊட்டி ஆறுதல் செய்தலால்; ஆற்றினாள் - ஆறுதல் கொண்டாள்.
விளக்கம் : கூட்டத்தின்போது சிலம்பிலே நிலமிசையுதிர்ந்து கிடந்த பூந்துகள் படிந்தது. கண்ணி - தலையிற் சூடும் மாலை. செண்ணம் - ஒப்பனை; நுண்டொழில் என்பார் நச்சினார்க்கினியர். அண்ணல் : சீவகன். (168)
1334. திங்க ளும்மறு வும்மெனச் சேர்ந்தது
நங்க ளன்பென நாட்டி வலிப்புறீஇ
யிங்கொ ளித்திடு வேனும ரெய்தினார்
கொங்கொ ளிக்குழ லாயெனக் கூறினான்.
பொருள் : நங்கள் அன்பு திங்களும் மறுவும் எனச் சேர்ந்தது - நம்முடைய அன்பு திங்களும் அதிற் பொருந்திய மறுவும் என்னுமாறு பொருந்தியது; என நாட்டி வலிப்பு உறீஇ - என்று கூறி நாட்டி வலியுறுத்தி; கொங்கு ஒளிக் குழலாய்!- தேன் பொருந்திய கூந்தலாய்!; நுமர் எய்தினார் - உன் ஆயத்தார் வந்து விட்டனர் (ஆதலால்); இங்கு ஒளித்திடுவேன் எனக் கூறினான் - இங்கு மறைந்திடுவேன் என்று கூறினான்.
விளக்கம் : நங்கள் : கள் : அசை. நாட்டி - பிரிவென்பதொன்றுண்டென நிலைபெறுத்தி. வலிப்பு உறீஇ - பிரிந்தும் உளத்தாற் பிரிவிலேமென்று தெளியும்படி நெஞ்சை வற்புறுத்தி. உடன் தேய்ந்து உடன் வளர்தலின் மறு உவமை. நச்சினார்க்கினியர் இவ்விரண்டு செய்யுளையும் ஒரு தொடராக்கிக் கூறும் முடிபு : அண்ணல் வேய்ந்து, கைசெய்து, துகளவித்து, இன்புறுத்தி, நம் அன்பு சேர்ந்ததென்று கூறி நாட்டி. வலிப்புறீஇ ஆற்றுவித்தலின் ஆற்றினாள். ஆற்றின பின்பு, குழலாய்! எய்தினார், ஒளிப்பேன் என்று கூறினான். (169)
1335. மழையி டைக்குளித் திட்டதோர் வாண்மினிற்
றழையி டைக்குளித் தான்றகை வேலினா
னிழையி டைக்குளித் தேந்திய வெம்முலை
வழையி டைக்குளித் தார்வந்து தோன்றினார்.
பொருள் : மழையிடைக் குளித்திட்டது ஓர் வாள்மினின் - மழையிடத்தே மறைந்திட்ட ஒரு மின்னைப்போல்; தகை வேலினான் தழையிடைக் குளித்தான் - தகுதியுற்ற வேலினான் கடிதாகத் தழையிடை மறைந்தனன்; இழையிடைக் குளித்து ஏந்திய வெம்முலை - அணிகலனிடையே மறைந்த ஏந்திய விருப்பூட்டும் முலையினாராகிய; வழையிடைக் குளித்தார் வந்து தோன்றினார் - சுரபுன்னை மரங்களினிடையே மறைந்த ஆயத்தார் வந்து தோன்றினர்.
விளக்கம் : மழை: ஆகுபெயர். மின்னல் - ஈண்டுத் தொழில் பற்றிச் சீவகனுக்கு உவமை. குளித்தான் - மறைந்தவன். வழை - சுரபுன்னைமரம். குளித்தார் - மறைந்தார்; தோழியர். (170)
1336. மின்னொர் பூம்பொழின் மேதகச் செல்வதொத்
தன்ன நாண வசைந்து சிலம்படி
மென்மெ லம்மலர் மேன்மிதித் தேகினா
ணன்ன லம்மவற் கேவைத்த நங்கையே.
பொருள் : நல்நலமே அவற்கு வைத்த நங்கை - நல்ல அன்பொன்றுமே அவனுக்குத் துணையாக வைத்த பதுமை; மின்ஒர் பூம்பொழில் மேதகச் செல்வது ஒத்து - மின்னானது ஒரு மலர்ப் பொழிலிலே சிறப்புறச் செல்வதுபோல; சிலம்பு அடி மென்மெலம் மலர்மேல் மிதித்து - சிலம்பணிந்த அடியை மெல்ல மெல்ல மலரின்மேல் எடுத்து வைத்து; அன்னம் நாண அசைந்து ஏகினாள் - அன்னமும் வெள்குற அசைந்து சென்றாள்.
(விளக்கம்.) முற்பிறப்பே தொடங்கி அன்புவைத்தவன் என்றுமாம். மின், பதுமைக்கு உவமை. மே - பெருமை. நன்னலம் - சிறந்த அன்பு. அவற்கு : சீவகனுக்கு. நங்கை : பதுமை. (171)
1337. திங்கள் சூழ்ந்தபன் மீனெனச் சென்றெய்தி
நங்கை தவ்வையுந் தோழியு நண்ணினா
ரங்க வாய மடிப்பணி செய்தபின்
றங்கள் காதலி னாற்றகை பாடினார்.
பொருள் : திங்கள் சூழ்ந்த பல்மீன் எனச் சென்று எய்தி - திங்களைச் சூழ்ந்த பல மீன்கள் என்னுமாறு போய்ச்சேர்ந்து; அங்கு அவ் ஆயம் அடிப்பணி செய்தபின் - அங்கே அந்த ஆயத்தார் குற்றேவல் புரிந்த பிறகு; நங்கை தவ்வையும் தோழியும் நண்ணினார் - பதுமையின் செவிலியும் தோழியும் அணுகினார்; தங்கள் காதலினால் தகைபாடினார் - (பின்னா) தங்கள் அன்பு மிகுதியால் அவள் நலத்தை எல்லோரும் சேர்ந்து பாராட்டினார்.
விளக்கம் : தவ்வை : செவிலிக்கு மூத்தவள். பாம்பு தீண்டின பொழிலாதலிற் காவலாக வந்தனர். திங்கள் பதுமைக்கும் மீன்கள் தோழியர்க்கும் உவமை. தவ்வை - தாய் ; ஈண்டுச் செவிலி. தகை - அழகு. பாடினார் - பாடிப்பரவினர். (172)
1338. தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும்
விழைவ சேர்த்துபு மெல்லென வேகினார்
முழையுண் மூரி முழங்கரி யேறனான்
பழைய நண்பனைப் பண்புளி யெய்தினான்.
பொருள் : தழையும் கண்ணியும் தண்நறு மாலையும் - தழை கண்ணி நல்ல மாலை ஆகியவற்றில்; விழைவ சேர்த்துபு - அவள் விரும்புவனவற்றைச் சேர்த்து; மெல்என ஏகினார் - மெல்லக் கொண்டு சென்றனர்; முழையுள் மூரி முழங்கு அரி ஏறனான் - முழையிலே பெருமையுடன் முழங்கும் சிங்கம் போன்ற சீவகனும்; பழைய நண்பனைப் பண்புஉளி எய்தினான் - பழைய நண்பனாகிய உலோகமாபாலனை, அப்பதுமையின் பண்புகளை எண்ணியவாறு அடைந்தான்.
விளக்கம் : பண்பு : கூட்டத்தின்போது கண்ட குணங்கள். விழைவ : வினையாலணையும் பெயர். துசர்த்துபு - செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சேர்த்துபு - சேர்த்தி. மழை - மலைக்குகை. மூரி - பெருமை. அரியேறு - ஆண் சிங்கம். அன்னான் என்பது அனான் என னகர மெய் குறைந்தது நின்றது. இது தொகுத்தல் விகாரம். அன்னான் - போன்றவன்; இது சீவகனையுணர்த்திற்று. பழைய நண்பன் என்றத உலோகபாலனை - உள்ளி என்பது உளி என இடை குறைந்து நின்றது. உள்ளி - நினைத்து. (173)
வேறு
1339. பூமியை யாடற் கொத்த பொறியின னாத லானு
மாமக ளுயிரை மீட்ட வலத்தின னாத லானு
நேமியான் சிறுவ னன்ன நெடுந்தகை நேரு மாயி
னாமவற் கழகி தாக நங்கையைக் கொடுத்து மென்றான்.
பொருள் : மாமகள் உயிரை மீட்ட வலத்தினன் ஆதலானும் - பதுமையின் உயிரைத் தந்த வெற்றியை உடையோன் ஆகையாலும்; பூமியை ஆள்தற்கு ஒத்த பொறியினன் ஆதலானும் - உலகினை ஆள்வதற்குரிய நல்லிலக்கணம் உடையனாதலானும்; நேமியான் சிறுவன் அன்ன நெடுந்தகை நேருமாயின் - திருமாலின் மகனான காமனை யொத்த சீவகன் உடன்படுவானாயின்; நாம் அழகிதாக அவற்கு நங்கையைக் கொடுத்தும் என்றான் - நமக்கு நன்றாக நாம் பதுமையை அவனுக்குக் கொடுக்கக் கடவேம் என்று தனபதி மன்னன் கூறினான்.
விளக்கம் : ஆடற்கு - ஆள்வதற்கு. பொறி நல்லிலக்கணம். மாமகள்: பெருமை மிக்க பதுமை. வலம் - வெற்றி. நேமியான் சிறுவன்: திருமால் மகனான காமன்; சீவகனுக்குவமை. கொடுத்தும் : தன்மைப் பன்மை வினைமுற்று. (174)
1340. மதிதர னென்னு மாசின் மந்திர சொல்லக் கேட்டே
யுதிதர வுணர்வல் யானு மொப்பினு முருவி னானும்
விதிதர வந்த தொன்றே விளங்குபூண் முலையி னாளைக்
கொதிதரு வேலி னாற்கே கொடுப்பது கரும மென்றான்.
பொருள் : சொல்லக் கேட்டு - அவ்வாறு அரசன் கூறக்கேட்டு; மதிதரன் என்னும் மாசு இல் மந்திரி - மதிதரன் எனும் பெயரை யுடைய குற்றம் அற்ற அமைச்சன்; ஒப்பினும் உருவினானும் - ஒப்பினாலும் உருவுடைமையாலும்; விதிதர வந்தது ஒன்றே - ஊழ்தர வந்தது ஒன்றாம்; விளங்குபூண் முலையினாளைக் கொதிதரு வேலினாற்கே கொடுப்பது கருமமம் - விளங்கும் அணியணிந்த முலையாளைக் கொதியிட்ட வேலினானுக்கே கொடுப்பது கடமை; யானும் உதிதர உணர்வல் என்றான் - யானும் என் உணர்வில் தோன்ற முன்னரே உணர்ந்தேன் என்றான்.
விளக்கம் : பதுமையும் சீவகனும் மணப்பதற்கு ஒப்பானும் உருவானும் ஊழ் கூட்டுவித்தது என்று மந்திரி கூறினான். உரு - அழகு. ஒப்பு : அரசகுடும்பமாதல் முதலான ஒப்புமை. பொறி என முற்செய்யுளில் வந்ததுகாண்க. இனி, உரு உட்காகும் எனக்கொண்டு, பதுமைக்குற்ற நஞ்சை நீக்கினாற்குப் பதுமையைக் கொடுப்பதாக முரசறைந்ததை மாற்றக் கூடாது என்னும் அச்சம் என்பர் நச்சினார்க்கினியர். அது பொருந்துமேற் கொள்க. ஒப்பு பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு - உருவு நிறுத்த காம வாயில் - நிறையே அருளே உணர்வொடு திருவென, முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல் - மெய்ப். 25) என்பதை மேற்கொண்டு, 25 என இவ் வொப்பில் வந்ததால்,உட்கு என இதற்குப் பொருள் கொண்டனர் போலும். (175)
1341. உள்விரித் திதனை யெல்லா
முரைக்கென மொழிந்து விட்டான்
றெள்ளிதிற் றெரியச் சென்றாங்
குரைத்தலுங் குமரன் றேறி
வெள்ளிலை யணிந்த வேலான்
வேண்டிய தாக வென்றா
னள்ளிலை வேல்கொண் மன்னற்
கமைச்சனஃ தமைந்த தென்றான்.
பொருள் : இதனை யெல்லாம் உள்விரித்து உரைக்க என மொழிந்துவிட்டான் - (அதனைக் கேட்ட மன்னன்) இந் நிலைமையெல்லாம் அவனுக்குத் தெளிவாக விளக்கியுரைப்பாயாக என்று, கூறிவிட்டான்; ஆங்குச் சென்று தெள்ளிதின் தெரிய உரைத்தலும் - மந்திரியும் ஆங்குச் சென்று தெளிவாக விளக்கிக் கூறலும்; குமரன் தேறி - சீவகன் தெளிய வுணர்ந்து; வெள் இலை அணிந்த வேலான் வேண்டியது ஆக என்றான் - வெற்றிலை போன்ற முகமுடைய வேலையுடைய மன்னன் விரும்பியவாறே ஆகுக என்றான்; அள் இலை வேல் கொள் மன்னற்கு அமைச்சன் அஃது அமைந்தது என்றான் - (அது கேட்டு) கூரிய வேலணிந்த மன்னனிடம் சென்று மந்திரி அஃது அப்படியே முடிந்த தென்றான்.
விளக்கம் : இதனை - இக்கருத்தினை. குமரன் : சீவகன். வேண்டியது - தனபதிமன்னன் விரும்பியது. வெள்ளிலை - வெற்றிலை. அணிந்த : உவமவுருபு. மன்னற்கு : தனபதிக்கு. அமைச்சன் : மதிதரன். அஃது - அக்காரியம். (176)
1342. பொன்றிய வுயிரை மீட்டான்
பூஞ்சிகைப் போது வேய்ந்தா
னன்றியு மாமெய் தீண்டி
யளித்தன னழகின் மிக்கா
னொன்றிய மகளிர் தாமே
யுற்றவர்க் குரிய ரென்னா
வென்றிகொள் வேலி னாற்கே
பான்மையும் விளைந்த தன்றே.
பொருள் : பொன்றிய உயிரை மீட்டான் - நீங்கற் கிருந்த உயிரை மீட்டான்; பூஞ்சிகைப் போது வேய்ந்தான் - அழகிய கூந்தலிலே மலரணிந்தான்; அன்றியும் மா மெய் தீண்டி அளித்தனன் - மேலும், பதுமையின் மெய்யினைத் தொட்டு அளி செய்தான்; அழகின் மிக்கான் - அழகினும் மேம்பட்டவன்; ஒன்றிய மகளிர்தாமே உற்றவர்க்குரியர் என்னா - பொருந்திய மகளிர் தாங்கள் தங்களை உற்றவர்க்கே உரியவர் என்று; வென்றி கொள் வேலினாற்கே பான்மையும் விளைந்தது அன்றே! - வெற்றியுடைய வேலினானுக்கே அத்தன்மையும் விளைந்தது அல்லவா?
விளக்கம் : உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர் (சிற்ற - 225. பேர் - மேற்.) பொன்றிய உயிர் என்றது இறத்தற்கிருந்த உயிர் என்றவாறு. சிகையிற் போது வேய்ந்தான் என்க. மாமெய்யும் எனவேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தான் தொக்கது. (177)
1343. கோப்பெருந் தேவி கொற்றக்
கோமக னிவைக ணாடி
யாப்புடைத் தையற் கின்றே
நங்கையை யமைக்க வென்னத்
தூப்புரி முத்த மாலை
தொடக்கொடு தூக்கி யெங்கும்
பூப்பரிந் தணிந்து கோயில்
புதுவது புனைந்த தன்றே.
பொருள் : இவைகள் கோப்பெருந் தேவி கொற்றக் கோமகன் நாடி - இவற்றைத் தனபதியும் திலோத்தமையும் உலோகபாலனும் தம்மிற் கூடி ஆராய்ந்து; இன்றே ஐயற்கு நங்கையை யாப்பு உடைத்து - இன்றைக்கே சீவனுக்குப் பதுமையை நல்கும் பொருத்தம் உளது; அமைக்க என்ன - (நீவிர் மணத்திற்கு வேண்டுவன) அமையுங்கோள் என்று பணியாளரை ஏவ; தூப் புரி முத்தமாலை தொடக்கொடு எங்கும் தூக்கி - தூய வடமான முத்தமாலையைச் சல்லியுந் தூக்குமாக எங்கும் நாற்றி; பூப்புரிந்து அணிந்து - பூவை விரும்பி அணிந்து; கோயில் புதுவது புனைந்தது - ஒரு கோயில் புதுவதாகப் புனையப்பட்டது.
விளக்கம் : கோ : தனபதி. பெருந்தேவி - ஈண்டுத் திலோத்தமை. கோமகன் : உலோகபாலன். கோவும் தேவியும் மகனும் என உம்மை விரிக்க. ஐயற்கு : சீவகனுக்கு. கோயில் புதுவழி புனைந்து - அரண்மனை புதியதாக அலங்கரிக்கப்பட்டது என்றும் பொருள் கொள்ளலாம். (178)
1344. கணிபுனைந் துரைத்த நாளாற் கண்ணிய கோயி றன்னுண்
மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி
யணியுடைக் கமல மன்ன வங்கைசேர் முன்கை தன்மேற்
றுணிவுடைக் காப்புக் கட்டிச் சுற்றுபு தொழுது காத்தார்.
பொருள் : கணி புனைந்து உரைத்த நாளால் - கணி ஆராய்ந்து கூறிய நாளிலே; கண்ணிய கோயில் தன்னுள் - நன்றென்று கருதிய கோயிலிலே; மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி - மணி புனைந்த மகளிராகிய நல்லார் மங்கல மரபினை உரைத்து; அணியுடைக் கமலம் அன்ன அங்கை சேர் முன்கை தன்மேல் - அழகுறு தாமரை அன்ன அங்கையினையுடைய முன் கையிலே; துணிவுடைக் காப்புக் கட்டி - (இருவர்க்கும்) உறுதியுறு காப்பினை அணிய; சுற்றுபு தொழுது காத்தார் - சுற்றித் தொழுது புறப்படாமற் காத்தார்.
விளக்கம் : கணி - கணிவன். கண்ணிய - கருதிய. கட்டி - கட்ட. சுற்றுபு - சுற்றி. (179 )
1345. மழகளிற் றெருத்திற் றந்த
மணிக்குட மண்ணு நீரா
லழகனை மண்ணுப் பெய்தாங்
கருங்கடிக் கொத்த கோலந்
தொழுதகத் தோன்றச் செய்தார்
தூமணிப் பாவை யன்னார்
விழுமணிக் கொடிய னாளும்
விண்ணவர் மடந்தை யொத்தாள்.
பொருள் : தூ மணிப் பாவை அன்னார் - தூய மாணிக்கப் பாவை போன்றவர்; மழ களிற்று எருத்தில் தந்த மணிக்குடம் மண்ணும் நீரால் - மழகளிற்றின் பிடரிலே கொண்ர்ந்த மணிக்குடத்திலிருந்து குளிக்கும் நீரினால்; அழகனை மண்ணுப் பெய்து - சீவகனைக் குளிப்பாட்டி; ஆங்கு அருங்கடிக்கு ஒத்த கோலம் - அவ்விடத்தே திருமணத்திற்குப் பொருந்திய ஒப்பனையை; தொழுதகத் தோன்றச் செய்தார் - நன்கு மதிக்கும்படி விளங்க ஒப்பித்தனர்; விழு மணிக்கொடி அனாளும் - சிறந்த மாணிக்கக்கொடி போன்ற பதுமையும்; விண்ணவர் மடந்தை ஒத்தாள் - (அவ்வொப்பனையாலே) வானவர் மகள் போன்றனள்.
விளக்கம் : மழகளிறு - இளைய யானை. எருத்து - பிடர். மண்ணுநீர் - மங்கல நீராடற்குரிய கடவுள்நீர். அழகனை : சீவகனை. மண்ணுப்பெய்து - (மங்கல) நீராட்டி. கடி - திருமணம். பாவையன்னார் - ஈண்டு வண்ணமகளிர். மணிக்கொடியனாள் : பதுமை.
(180)
வேறு
1346. கயற்க ணாளையுங் காமனன் னானையு
மியற்றி னார்மண மேத்தருந் தன்மையார்
மயற்கை யில்லவர் மன்றலின் மன்னிய
வியற்கை யன்புடை யாரியைந் தார்களே.
பொருள் : ஏத்த அருந் தன்மையார் - புகழ்தற்கரிய தன்மையுடையார் ஆகிய தனபதி முதலாயினோர்; கயற்கணாளையும் காமன் அன்னானையும் - பதுமையையிம் சீவகனையும்; மணம் இயற்றினார் - திருமணம் புரிவித்தனர்; மயற்கை இல்லவர் மன்றலின் மன்னிய - குற்றமற்ற கந்தருவரின் மணத்தைப் போல முன்பே பொருந்திய; இயற்கை அன்பு உடையார் இயைந்தார்கள் - இயற்கைப் புணர்ச்சியால் உள்ள அன்புடையார் தம்மிற் கூடினார்.
விளக்கம் : கயற்கணாள் : பதுமை. காமனன்னான் : சீவகன். ஏத்தருந்தன்மையார் என்றது தனபதி முதலாயினாரை. மயற்கை - குற்றம். மயற்கை யில்லவர் மன்றல் என்றத குற்றமற்ற தமிழச் சான்றோர் வகுத்த மணம் என்றவாறுமாம். முன்னரே கள்ளப்புணர்ச்சி யுடையாராகலின் இயற்கை யன்புடையார் என்றார். (181)
1347. வாளும் வேலு மலைந்தரி யார்ந்தகண்
ணாளும் வார்கழன் மைந்தனு மாயிடைத்
தோளுந் தாளும் பிணைந்துரு வொன்றெய்தி
நாளு நாகர் நுகர்ச்சி நலத்தரே.
பொருள் : வாளும் வேலும் மலைந்து அரியார்ந்த கண்ணாளும் - வாளையும் வேலையும் வென்று செவ்வரி பரந்த கண்ணாளும்; வார்கழல் மைந்தனும் - கட்டப் பெற்ற கழலையுடைய மைந்தனும்; ஆயிடை - பள்ளியிலே; தோளும் தாளும் பிணைந்து - தோளும் தோளும் தாளும் தாளும் பிணைதலின்; உரு ஒன்று எய்தி - ஒரு வடிவைப் பெற்று; நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தர் - நாள்தோறும் நாகர் நுகர்கின்ற நுகர்ச்சியின்பத்தை உடையராயினர்.
விளக்கம் : மலைந்து - வென்று. அரி - செவ்வரி கருவரிகள். கண்ணாள்; பதுமை. மைந்தன் : சீவகன். ஆயிடை என்றது - பள்ளிக்கட்டிலிடத்தே என்பதுபட நின்றது. தோளோடு தோளும் தாளொடு தாளும் பிணைதலானே என்க. நாகர் - பவணலோகத்தார். (182)
1348. தணிக்குந் தாமரை யாணலந் தன்னையும்
பிணிக்கும் பீடினி யென்செயும் பேதைதன்
மணிக்கண் வெம்முலை தாம்பொர வாயவிழ்ந்
தணிக்கந் தன்னவன் றாரங் குடைந்ததே.
பொருள் : தணிக்கும் தாமரையாள் நலம் தன்னையும் - (பிறரழகைக்) கீழ்ப்படுத்தும் திருமகளின் அழகையும்; பிணிக்கும் பீடு இனி என் செயும் - பிணிக்கும் இவர் தகைமை மேலும் என்ன செயும்!; பேதை தன்மணிக்கண் வெம்முலை தாம் பொர - பதுமையின் மணிக் கண்ணையுடைய முலைகள் ஆகிய யானைகள் பொருதலால்; அணிக்கந்து அன்னவன் தார் அங்கு வாய் அவிழ்ந்து உடைந்தது - அழகிய தூணனையவன் மாலை அங்கே கட்டலர்ந்து மலர்ந்தது.
விளக்கம் : வாய் அவிழ்தல் அரும்பின் வாயவிழ்தலும் அவ்விடத்தினின்றும் நிலைகுலைதலுமாம். தார் : மாலையும், தூசிப்படையும். பிணிக்கும் பீடு : இருவருக்கும் பொது. (183)
1349. பரிந்த மாலை பறைந்தன குங்குமங்
கரிந்த கண்ணி கலந்த மகிழ்ச்சியி
னரிந்த மேகலை யார்த்தன வஞ்சிலம்
பிரிந்த வண்டிளை யார்விளை யாடவே.
பொருள் : கலந்த மகிழ்ச்சியின் இளையார் விளையாட - கூடிய மகிழ்ச்சியினாலே இளைஞராகிய அவர்கள் விளையாடுதலினால்; மாலை பரிந்த - மார்பிலுள்ள முத்தமாலைகள் அற்றன; குங்குமம் பறைந்தன - குங்குமச் சாந்து அழிந்தன; கண்ணி கரிந்த - முடியில் அணிந்த கண்ணிகள் கரிந்தன; மேகலை அரிந்த - மேகலையிலுள்ள மணிகள் அற்றன; அம் சிலம்பு ஆர்த்தன - அழகிய சிலம்புகள் ஒலித்தன.
விளக்கம் : இவ்விரண்டு செய்யுட்களையும் ஒரு தொடராக்கிப் பிணிக்கும் பீடினி என் செயும்! என்பதை இறுதியிற் சேர்ப்பர் நச்சினார்க்கினியர். (184)
1350. கொழுமெ னின்னகிற் கூட்டுறு மென்புகை
கழுமு சேக்கையும் காலையு மாலையுந்
தழுவு காத றணப்பிலர் செல்பவே
யெழுமை யும்மியைந் தெய்திய வன்பினார்.
பொருள் : எழுமையும் இயைந்து எய்திய அன்பினார் - எழு பிறப்பும் பொருந்திப் பெற்ற அன்பினார்; கொழு மென் இன் அகில் கூட்டுறும் மென்புகை - கொழுவிய மெல்லிய இனிய அகிலுடன் கூட்டிடும் பொருள்கள் கலந்த மெல்லிய புகை; கழுமு சேக்கையுள் - பொருந்திய அணையிலே; காலையும் மாலையும் தழுவு காதல் தணப்பு இலர் செல்ப - காலையினும் மாலையினும் பொருந்திய காதல் நீங்கலராய்ச் சென்றனர்.
விளக்கம் : கூட்டு - நேர்கட்டி முதலிய மணப் பொருள்கள். கொழுவிய புகை இனிய புகை மெல்லிய புகை எனத் தனித்தனிக் கூட்டுக. கழுமுதல் - பொருந்துதல். காலையும் மாலையும் பிரிதற்குரிய பொழுதுகள். அப்பொழுதும் பிரிவிலராய் என்பது கருத்து. தணப்பு - பிரிவு. எழுமையும் இயைந்து எய்திய அன்பினார் என்றது, அங்ஙனம் பிரிவிலராயதற்குக் குறிப்பேதுவாகும். (185)
1351. நாறி யுஞ்சுவைத் துந்நரம் பின்னிசை
கூறி யுங்குளிர் நாடக நோக்கியு
மூறின் வெம்முலை யாலுழப் பட்டுமவ்
வேற னான்வைகும் வைகலு மென்பவே.
பொருள் : நாறியும் - நறுமணப் பொருள்கள் அணிந்தும்; சுவைத்தும் - சுவைப் பொருள்களை உண்டும்; நரம்பு இன் இசை கூறியும் - யாழிசையைக் கொண்டாடியும்; குளிர் நாடகம் நோக்கியும் - இனிய நாடகங்களைப் பார்த்தும் (காமத்தைப் பெருக்கி); ஊறு இன் வெம்முலையால் உழப்பட்டும் - ஊற்றினுக்கினிய முலையால் உழப்பட்டும்; அவ் ஏறு அனான் வைகலும் வைகும் - அந்த ஏறு போன்றவன் நாடோறும் தங்குவான்.
விளக்கம் : ஐம்பொறி நுகர்ச்சியுங் கூறினார். கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் - ஒண்டொடி கண்ணே உள. என்றார் வள்ளுவர். (186)
வேறு
1352. விரிகதிர் விளங்கு பன்மீன்
கதிரொடு மிடைந்து திங்கட்
டெரிகதிர் திரட்டி வல்லான்
றெரிந்துகோத் தணிந்த போலுஞ்
சொரிகதிர் முத்த மின்னுந்
துணைமுலைத் தடத்தில் வீழ்ந்தான்
புரிகதிர்ப் பொன்செய் மாலைப்
புகைநுதிப் புலவு வேலான்.
பொருள் : புரிகதிர் பொன் செய்மாலைப் புகைநுதிப் புலவு வேலான் - மிகு கதிரை யுடைய பொன்னொளி தரும் மாலையையுடைய, சின மிகும், நுனியிலே புலாலையுடைய வேலான்; விரி கதிர் விளங்கு பன் மீன் கதிரொடு மிடைந்து - விரிகின்ற கதிர்கள் விளங்கும் பல விண் மீன்களின் கதிர்களுடன் கலக்குமாறு; திங்கள் தெரி கதிர் திரட்டி - திங்களின் விளங்குங் கதிர்கையும் சேர்த்து; வல்லான் தெரிந்து கோத்து அணிந்த போலும் - வல்லவன் ஆராய்ந்து கோத்து அணிந்தன போன்ற; சொரி கதிர் முத்தம் மின்னும் - பெய்யும் ஒளியுடைய முத்து மாலை மின்னுகின்ற; துணைமுலைத் தடத்தில் வீழ்ந்தான் - இரு முலைகளினிடத்தே அமிழ்ந்துவிட்டான்.
விளக்கம் : மிடைந்து - மிடைய. அணிந்த : பெயர். புரிகதிர் - மிக்க கதிர். கதிர் விளங்கு மீன்களின் கதிரோடே மிடையும்படி திங்களின் கதிரைத் திரட்டி வல்லவன் கோத்தணிந்தவற்றை யொக்கும் கதிரையுடைய முத்தமின்னும் முலையென்க. (187 )
வேறு
1353. எழின்மாலை யென்னுயிரை யான்கண்டே
னித்துணையே முலையிற் றாகிக்
குழன்மாலைக் கொம்பாகிக் கூரெயிறு
நான்போழ்த லஞ்சி யஞ்சி
யுழன்மாலைத் தீங்கிளவி யொன்றிரண்டு
தான்மிழற்று மொருநாட் காறு
நிழன்மாலை வேனாண நீண்டகண்ணே
நெய்தோய்ந்த தளிரே மேனி.
பொருள் : எழில்மாலை என் உயிரை யான் கண்டேன். - அழகினை இயல்பாக வுடைய என் உயிரை யான் கண்டேன்; இத்துணையே - அது இவ் வளவினதே; முலையிற்று ஆகி - முலையினை உடைத்தாய்; நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே - ஒளியையியல்பாக வுடைய வேல் வெள்க, நீண்ட கண்களையும்; நெய் தோய்ந்த தளிர் மேனியே - நெய்ப்பை யுடைய தளிரனைய மேனியையும்; குழல் மாலைக் கொம்பு ஆகி - குழலையும் மாலையையும் உடையதொரு கொம்பாய், கூர் எயிறு நாப் போழ்தல் அஞ்சி அஞ்சி - கூரிய பற்கள் நாவைப் பிளக்குமென்று அஞ்சி அஞ்சி; உழல் மாலைத் தீ கிளவி - உழலும் இயல்புடைய நாவானது இனிய மொழியை; ஒரு நாள் காறும் ஒன்று இரண்டுதான் மிழற்றும் - ஒருநா ளெல்லாம் ஒன்றிரண்டே மொழியும்.
விளக்கம் : எழில்மாலை என் உயிர் : முதல் சினை வினையொடு முடிந்தது. இது நயப்பு. என்உயிர் யான் கண்டேன் என்றது காணாமரபிற்று உயிர் என மொழிவோர் பொய்ம்மொழிந்தனர் யான் கண்டேன் என்பது பட நின்றது. இச் செய்யுளொடு,
காணா மரபிற் றுயிரென மொழிவோர்.
நாணிலர் மன்றபொய்ம் மொழிந் தனரே
யாஅங் காண்டுமெம் அரும்பெறல் உயிரே
சொல்லு மாடும் மென்மெல இயலும்
கணைக்கா னுணுகிய நுசுப்பின்
மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே.
(தொல்.கள.10. மேற்.) எனவரும் பழம்பாட்டை ஒப்புக் காண்க. (188)
1354. மாநீர் மணிமுகிலின் மின்னுக்
கொடிநுசுப்பின் மயிலஞ் சாய
லேநீ ரிருபுருவ மேறி
யிடைமுரிந்து நுடங்கப் புல்லித்
தூநீர் மலர்மார்பன் றொன்னலந்
தான்பருகித் துளும்புந் தேறற்
றெனீர் மலர்மாலை தேன்றுளித்து
மட்டுயிர்ப்பச் சூட்டி னானே.
பொருள் : மாநீர் மணி முகிலின் மின்னுக்கொடி நுசுப்பின் மயில் அம் சாயல் - மிகு நீரையுடைய, மணிபோன்ற முகிலினிடத்து மின் கொடிபோலும் இடையினையுடைய மயில்போன்ற சாயலாளை; ஏ நீர் இரு புருவம் ஏறி - தன்னைக் கூட்டத்திற்கு ஏவும் இயல்புடைய இரு புருவமும் நெற்றியில் ஏறி; இடைமுரிந்து நுடங்க - இடை ஒசிந்து அசைய; தூநீர் மலர் மார்பன் - தூய தன்மையுற்ற மலர்ந்த மார்பனான சீவகன்; புல்லி - (அவளைத்) தழுவி; தொல் நலம் பருகி - பழமையான அழகை நுகர்ந்து; துளும்பும் தேறல் தேன் நீர் மலர் மாலை - ததும்பும் மதுவினைப் பருகும் வண்டின் இயல்பினையுடைய மலர் மாலையை; தேன் துளித்து மட்டு உயிர்ப்பச் சூட்டினான் - இனிமை துளிர்த்து மதுவைச் சிந்த அணிவித்தான்
விளக்கம் : மணி முகிலின் : இன் : சாரியை; ஏழனுருபு என்பர் நச்சினார்க்கினியர். மேலும் மட்டுத் தேறல் என மாறிக் காம பானத்தின் தெளிவைப் பருகி என்பர். உயிர்த்தல் - சுமை போக்குதல்.(189)
வேறு
1355. தேனடைந் திருந்த கண்ணித்
தென்மட்டுத் துவலை மாலை
யூனடைந் திருந்த வேற்க
ணொண்டொடி யுருவ வீணை
தானடைந் திருந்த காவிற்
பாடினா டனிமை தீர்வான்
கூனடைந் திருந்த திங்கட்
குளிர்முத்த முலையி னாளே.
பொருள் : தேன் அடைந்து இருந்த கண்ணி - வண்டுகள் பொருந்திய கண்ணியினையும்; தெள் மட்டுத் துவலை மாலை - தெளிந்த தேன் துளியையுடைய மாலையையும்; ஊன் அடைந்திருந்த வேல்கண் - ஊன் தங்கிய வேலனைய கண்களையும்; ஒண்தொடி - ஒளிரும் வளையையும்; கூன் அடைந்திருந்த திங்கள் குளிர்முத்த முலையினாள் - பிறைத் திங்கள் போலக் குளிர்ந்த முத்துமாலையணிந்த முலையையும் உடைய தேசிகப் பாவை; தான் அடைந்திருந்த காவில் - தான் தங்கிய பொழிலிலே; தனிமை தீர்வான் - தனிமையின் வெறுப்பு நீங்க; உருவ வீணை பாடினாள் - அழகிய யாழை யிசைத்துத் தன் குரலையும் இயைத்துப் பாடினாள்.
விளக்கம் : தேன் - வண்டினம். வீணை : யாழும் மிடறும் கலந்தது. தேன் - வண்டு. மட்டு - தேன். துவலை - துளி. ஒண்டொடி : தேசிகப் பாவை. உருவவீணை - அழகிய யாழ். திங்கள்போலக் குளிர் முத்த முலையினாள் என்க. (190)
1356. வார்தளிர் ததைந்து போது
மல்கிவண் டுறங்குங் காவிற்
சீர்கெழு குருசில் புக்கான்
றேசிகப் பாவை யென்னுங்
கார்கெழு மின்னு வென்ற
நுடங்கிடைக் கமழ்தண் கோதை
யேர்கெழு மயில னாளை
யிடைவயி னெதிர்ப்பட் டானே.
பொருள் : வார் தளிர் ததைந்து போது மல்கி வண்டு உறங்கும் காவில் - நீண்ட தளிர்கள் நெருங்கி மலர்கள் நிறைந்து வண்டுகள் துயிலும் பொழிலிலே; சீர்கெழு குருசில் புக்கான் - சிறப்புப் பொருந்திய சீவகன் புகுந்தான்; தேசிகப் பாவையென்னும் - தேசிகப் பாவை யென்று அழைக்கப் பெறும்; கார்கெழு மின்னு வென்ற நுடங்கு இடை - முகிலிற் பொருந்திய மின்னை வென்ற அசையும் இடையையும்; கமழ் தண் கோதை - மணங் கமழும் குளிர்ந்த மாலையையும் உடைய; ஏர் கெழு மயிலனாளை - அழகு பொருந்திய மயில் போன்றவளை; இடைவயின் எதிர்ப்பட்டான் - அவ்விடத்தே கண்டான்.
விளக்கம் : ததைந்து - நெருங்கி. குருசில் : சீவகன். மின்னு - மின்னல். ஏர்கெழு - அழகு பொருந்திய. மயிலன்ன தேசிகப்பாவையை எதிர்ப்பட்டான் என்பது கருத்து. (191)
1357. சிலம்பெனும் வண்டு பாட மேகலைத் தேன்க ளார்ப்ப
நலங்கவின் போது பூத்த பூங்கொடி நடுங்கி நாணக்
கலந்தனன் காம மாலை கலையின தியல்பிற் சூட்டப்
புலம்புபோய்ச் சாய லென்னும் புதுத்தளி ரீன்ற தன்றே.
பொருள் : சிலம்பு எனும் வண்டு பாட - சிலம்பாகிய வண்டுகள் முரல; மேகலைத் தேன்கள் ஆர்ப்ப - மேகலை யென்னும் தேனினம் ஆரவாரிக்க; நலம் கவின் போது பூத்த - உறுப்புக்களின் இயற்கை அழகும் செயற்கை அழகும் ஆகிய மலர்கள் மலர்ந்த; பூங்கொடி நடுங்கி நாண - தேசிகப் பாவை நடுங்கி வெள்க; கலந்தனன் - கூடினான்; காம மாலை கலையினது இயல்பில் சூட்ட - காமமாகிய மாலையைக் (காந்தருவ மணங் கூறிய) நூலின் இயல்பாலே அணிவித்தானாக; புலம்பு போய்ச் சாயல் என்னும் புதுத்தளிர் ஈன்றது - அக்கொடி தனிமை நீங்கி மென்மை யென்னும் புதிய தளிரை ஈன்றது.
விளக்கம் : நலம், இயற்கை அழகு என்றும் கவின் என்றது ஒப்பனை யழகென்றும்கொள்க. பூங்கொடி போல்வாளாகிய தேசிகப்பாவை என்க. கலையினதியல்பு - நூல்கூறுமுறை. என்றது, யாழோர் மணத்தை. (192)
1358. சாந்திடைக் குளித்த வெங்கட் பணைமுலைத் தாம மாலைப்
பூந்தொடி யரிவை பொய்கைப் பூமக ளனைய பொற்பின்
வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை யிவர்க ணாளு
மாய்ந்தடி பரவ வைகு மரிவையர்க் கநங்க னன்னான்.
பொருள் : அரிவையர்க்கு அநங்கன் அன்னான் - பெண்களுக்குக் காமன் போன்ற சீவகன்; சாந்திடைக் குளித்த வெங்கண் பணை முலைத்தாம மாலைப் பூந்தொடி அரிவை - சந்தனத்தின் இடையே முழுகிய விருப்பூட்டுங் கண்களையுடைய பருத்த முலைகளையும் ஒழுங்காகிய மாலையினையும் உடைய தேசிகப் பாவையும்; பொய்கைப் பூமகள் அனைய பொற்பின் - பொய்கையிலே மலர்ந்த தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்ற அழகினையும்; வேந்து அடு குருதி வேற்கண் விளங்கு இழை - பகையரசை அடுகின்ற குருதியையுடைய வேலனைய கண்களையும் உடைய, விளக்கமான அணிகலன் புனைந்த பதுமையும்; இவர்கள் - (ஆகிய) இவர்கள்; நாளும் ஆய்ந்து அடிபரவ வைகும் - எப்போதும் ஆராய்ந்து தன் அடிகளை வணங்கத் தங்கினான்.
விளக்கம் : முலையினையும் மாலையினையும் பூமகளனைய பொற்பினையும் உடைய அரிவை எனக் கூட்டிப் பதுமைக் காக்கி, வேந்து தனபதி யெனக் கொண்டு, விளங்கிழை திலோத்தமை யென்று கொண்டு, அநங்கன் அன்னான் வேந்து விளங்கிழை யென்ற இவர்கள் நாளும் ஆராய்ந்து தன்னைப் பரவுதலாலே, தான் அரிவை யடியிலே தங்கா நிற்கும் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வாறு கூறுதற்குப், பதுமையையும் பரத்தையையும் ஒக்கக் கூறலாகாமை உணர்க என்று காரணமுங் காட்டுவர். (193)
1359. இங்ஙன மிரண்டு திங்க ளேகலு மேக வேலா
னங்ஙனம் புணர்ந்த வன்பி னவண்முலைப் போக நீக்கி
யெங்ஙன மெழுந்த துள்ள மிருளிடை யேக லுற்றான்
றங்கிய பொறியி னாக்கந் தனக்கொர்தே ராக நின்றான்.
பொருள் : இங்ஙனம் இரண்டு திங்கள் ஏகலும் - இவ்வாறு இரண்டு திங்கள் கழிந்தவுடன்; ஏக வேலான் - தனி வேலானும்; தங்கிய பொறியின் ஆக்கம் தனக்கு ஒர் தேராக நின்றான் - நிலை பெற்ற நல்வினையின் ஆக்கத்தைத் தனக்கு ஒரு தேராகக் கொண்டு நின்றவனுமாகிய சீவகன்; அங்ஙனம் புணர்ந்த அன்பின் அவள் - அவ்வாறு உழுவலான் வந்த அன்பினையுடையவளின்; முலைப் போகம் நீக்கி - முலையின்பத்தை விட்டு; இருளிடை ஏகல் உற்றான் - இருளிலே செல்லத் தொடங்கினான்; எங்ஙனம் எழுந்தது உள்ளம்? - எவ்வாறு உள்ளம் அதற்கு எழுந்ததோ?
விளக்கம் : கொண்டு போதலின் நல்வினை தேர் ஆயிற்று; பிரிவிற்கு நூலாசிரியர் வருந்தினர். (194)
1360. தயங்கிணர்க் கோதை தன்மேற்
றண்ணென வைத்த மென்றோள்
வயங்கிணர் மலிந்த தாரான்
வருந்துறா வகையி னீக்கி
நயங்கிள ருடம்பு நீங்கி
நல்லுயிர் போவ தேபோ
லியங்கிடை யறுத்த கங்கு
லிருளிடை யேகி னானே.
பொருள் : வயங்கு இணர் மலிந்த தாரான் - விளங்கும் பூங்கொத்துக்கள் நிறைந்த மலர்த்தாரினான்; தயங்கு இணர்க்கோதை - விளங்கும் இணரையுடைய கோதையளான பதுமை; தன்மேல் தண் என வைத்த மென் தோள் - தன்மேல் குளிர்ச்சியாக வைத்திருந்த கையை; வருந்துறா வகையின் நீக்கி - வருந்தா வண்ணம் எடுத்து வைத்துவிட்டு; நயம் கிளர் உடம்பு நீங்கி - விருப்பம் பொருந்திய உடம்பை விட்டு; நல் உயிர் போவதே போல் - நல்ல உயிர் செல்வதைப் போல; இயங்கு இடை அறுத்த கங்குல் இருளிடை ஏகலுற்றான் - யாவரும் செல்லும் செலவை நடுவறுத்த இரவில் இருளிலே செல்லத் தொடங்கினான்.
விளக்கம் : நல் உயிர் ஆன்மா. அது கனவிடைப் போய் நுகர்ந்து மீண்டும் அவ்வுடம்பின்கண் வருமாறு போல இவனும் பல மகளிரையும் நுகர்ந்து பின்பு கூடுவன். இனி, உடம்பு நல்லுயிரை நீங்கிப் போனாற்போல் என்றும் உரைப்பர். (195 )
வேறு
1361. நீனி றக்குழ னேர்வளைத் தோளியைத்
தானு றக்கிடை நீத்தலுந் தன்பினே
வேனி றக்கண் விழித்தன ளென்பவே
பானி றத்துகிற் பையர வல்குலாள்.
பொருள் : நீல் நிறக் குழல் நேர் வளைத் தோளியை - நீல நிறக் கூந்தலையும் அழகிய வளையணிந்த தோளையும் உடையாளை; தான் உறக்கிடை நீத்தலும் - சீவகன் துயிலிடைப் பிரிந்தனனாக; தன் பினே - அவன் பிரிவிற்குப் பின்னே; பால் நிறத் துகில் வை அரவு அல்குலாள் - வெண்ணிறத் துகிலையும் பாம்பின் படமனைய அல்குலையும் உடையாள்; வேல் நிறக் கண் விழித்தனள் - வேலனைய ஒளி பொருந்திய கண்ணை விழித்தனள்.
விளக்கம் : என்ப ஏ : அசைகள். நீலநிறம் - நீல்நிறம் என அகரங்கெட்டு நின்றது. தோளி : பதுமை. உறக்கு - துயில். அல்குலாள் கண் விழித்தனள் என்க. (196)
1362. ஆக்கை யுள்ளுறை யாவி கெடுத்தவண்
யாக்கை நாடி யயர்வது போலவுஞ்
சேக்கை நாடித்தன் சேவலைக் காணிய
பூக்க ணாடுமொர் புள்ளுமொத் தாளரோ.
பொருள் : ஆக்கை யுள் உறை ஆவி கெடுத்து - உடம்பு தன் உள்ளே இருக்கும் உயிரைக் கெடுத்து; யாக்கை நாடி அயர்வது போலவும் - திரும்பவும் பிணித்தலை நினைத்து வருந்துவது உண்டாயின் அதனைப் போலவும்; தன் சேவலைக் காணிய - தன் சேவலைக் காணவேண்டி; சேக்கை நாடி - கூட்டிலே தேடி (அங்குக் காணாமையின்); பூக்கண் நாடும் - மலர்களிலே தேடுகின்ற; ஒர் புள்ளும் ஒத்தாள் - ஓர் அன்னப் பேட்டினைப் போலவும் ஆயினாள்.
விளக்கம் : ஆக்கை - உடல். யாக்கை - கட்டுதல். சேக்கை : தங்குமிடம்; உறையுள். சேவல் புள் என்பன பூக்கண் நாடும் என்றதனான் அன்னச் சேவலும் அதன் பெடையும் என்பது பெற்றாம். (197)
1363. புல்லும் போழ்தினும் பூணுறி னோமென
மல்லற் காளையை வைது மிழற்றுவா
யில்லி னீக்க முரைத்திலை நீயெனச்
செல்வப் பைங்கிளி தன்னையுஞ் சீறினாள்.
பொருள் : புல்லும் போழ்தினும் பூண் உறின் நோம் என - சீவகன் என்னைத் தழுவும் போதும் அணிகலன் உறின் வருந்தும் என்று; மல்லல் காளையை வைது மிழற்றுவாய் - வளமுறு காளையன்னானை வைது என் மென்மையை மிழற்றினையே; நீ இல்லின் நீக்கம் உரைத்திலை என - நீ அவன் இந்த மனையினின்றும் நீங்கிப் போதலை உரைத்திலையே என்று; செல்வப்பைங்கிளி தன்னையும் சீறினாள் - தன் காதற் கிளியையும் சீறினாள்.
விளக்கம் : பூண் உறின் - முயக்கம் இறுகின் என்றுமாம். சீவகன் என்னைப் புல்லும் போழ்தினும் என்க. பூண் - அணிகலன். மல்லல் - ஈண்டு ஆண்மைப் பண்புகளின் மிகுதி. இல்லினின்றும் நீங்கிய நீக்கம் என்க. (198)
1364. ஓவி யக்கொடி யொப்பருந் தன்மையெம்
பாவை பேதுறப் பாயிலி னீங்கிநீ
போவ தோபொரு ளென்றிலை நீயெனப்
பூவை யோடும் புலம்பி மிழற்றினாள்.
பொருள் : ஓவியக் கொடி ஒப்பு அருந் தன்மை - ஓவியத்தில் எழுதிய பூங்கொடி உவமை யாகாத் தன்மையுடைய; எம் பாவை பேதுற - எங்கள் பாவையாள் வருந்தும்படி; நீ பாயலின் நீங்கிப் போவதோ பொருள்? - நீ பாயலினின்றும் பிரிந்து போவதோ செய்யத் தகுவது?; என்றிலை நீ - என்று கூறிலை நீ; என - என்றுரைத்து; பூவையோடும் புலம்பி மிழற்றினாள் - பூவையுடன் வருந்திக் கூறினாள்.
விளக்கம் : பாவை யென்றது, பட்டாங்கு கூறுதற்கண் வந்தது; அம்பலம் போற் - கோலத்தினாள் பொருட்டாக (சிற் - 27) என்றாற் போல. பாயலின் நின்றும் என்பதோர் இடைச்சொல் ஐந்தாவதற்கு விரிக்க. (199)
1365. தன்னொப் பாரையில் லானைத் தலைச்சென்றெம்
பொன்னொப் பாளொடும் போகெனப் போகடாய்
துன்னித் தந்திலை நீயெனத் தூச்சிறை
யன்னப் பேடையொ டாற்றக் கழறினாள்.
பொருள் : தன் ஒப்பாரை இல்லானைத் தலைச் சென்று - தனக்கு நிகராவார் இல்லாதவனிடத்தே சென்று; என் பொன் ஒப்பாளொடும் போக என - என் திருவனையாளொடும் போவாயாக என்று; போகடாய் துன்னித் தந்திலை நீ என - அவனைச் செல்ல விடாயாய் என்னிடத்தே பொருந்தக் கொணர்ந்திலை நீ என்று; தூச் சிறை அன்னப் பேடையோடு ஆற்றக் கழறினாள் - தூய சிறகுகளையுடைய அன்னப் பேடையுடன் மிகவும் சினந்துரைத்தாள்.
விளக்கம் : போக விடாய் : போகடாய் என விகாரப்பட்டது. தன்னொப்பாரையில்லான் : சீவகன். பொன் : திருமகள். தூச்சிறை - வெள்ளை நிறமுடைய சிறகுமாம். ஆற்ற - மிகவும். கழறுதல் - இடித்துரைத்தல். (200)
1366. மையில் வாணெடுங் கண்வள ராதன
மெய்யெ லாமுடை யாய்மெய்ம்மை காண்டிநீ
யையன் சென்றுழிக் கூறுகென் றாய்மயில்
கையி னாற்றொழு தாள்கயற் கண்ணினாள்.
பொருள் : வளராதன - துயிலாதனவாகிய; மை இல்வாள் நெடுங்கண் - மைதீட்டப் பெறாத ஒளியுறும் நீண்ட கண்களை; மெய்யெலாம் உடையாய் - உடலெலாம் உடைய மயிலே!; மெய்ம்மை காண்டி நீ - உண்மை உணர்வாய் நீ; ஐயன் சென்றுழிக் கூறுக என்று - என் தலைவன் சென்ற இடத்தைக் கூறுக என்று; கயல் கண்ணினாள் - கயலனைய கண்ணினாள்; ஆய் மயில் கையினால் தொழுதாள் - ஆராய்ந்த மயிலைக் கைகளால் தொழுதாள்.
விளக்கம் : கண் : பீலிக் கண். துயிலாத கண்களையுடைமையின், அவனைக் காட்டும் என்று தொழுதாள். வாள் என அடை கூறினார் கண்ணென்பதற் கேற்ப. வளராதன மையில் வாள் நெடுங்கண் மெய்யெலாம் உடையாய் என மாறுக. கண் உடையாய் என்றது மெய்ம்மை காண்டற்குக் குறிப்பேது வாய் நின்றது. ஐயன் : சீவகன். ஆய் - அழகிய. கண்ணினாள் : பதுமை. இச்செய்யுளோடு, ஓடா நின்ற களிமயிலே ...... ஆயிரங் கண்ணுடையாய்க்கு ஒளிக்குமாறுண்டோ எனவரும் கம்பர் செய்யுளை (பம்பை - 27) ஒப்பு நோக்குக. (201)
1367. வளர்த்த செம்மையை வாலியை வான்பொருள்
விளக்கு வாய்விளக் கேவிளக் காயிவ
ணளித்த காதலொ டாடுமென் னாருயி
ரொளித்த தெங்கென வொண்சுடர் நண்ணினாள்.
பொருள் : விளக்கே! - விளக்கே!; வான் பொருள் விளக்கு வாய் - நல்ல பொருள்களை விளக்கிக் காட்டுவாய்; வளர்த்த செம்மையை - எங்களை வளர்த்த மனக் கோட்டமிலாதாய்; வாலியை - தூய தன்மையுடையாய் (ஆதலால்); இவண் அளித்த காதலொடு ஆடும் என் ஆருயிர் - இங்கே அருளிய காதலுடன் நடந்து திரியும் என் சிறந்த உயிர்; ஒளித்தது எங்கு - ஒளித்த இடம் எங்கே?; விளக்காய் - எனக்கு விளக்கிக் கூறுவாய்; என ஒண்சுடர் நண்ணினாள் - என்று வேண்டி ஒள்ளிய விளக்கினிடம் சென்றாள்.
விளக்கம் : குழந்தைகட்கு விளக்கைக் காவலாக இடுதலின், எங்களை வளர்த்த மனக்கோட்டமிலாதாய் என்றாள். செம்மையை - செப்பமுடையை, அஃதாவது மனக்கோட்ட மின்மையை உடையயை. சொற்கோட்ட மில்லது செப்பம் ஒரு தலையா உட்கோட்ட மின்மை பெறின் என்பது திருக்குறள். விளக்கிற்குச் செம்மை - செந்நிறமுடைமை என்க. வாலியை - தூயை: முன்னிலை ஒருமை. என் ஆருயிர் என்றது சீவகனை. (202)
1368. பருகிப் பாயிரு ணிற்பி னறாதெனக்
கருகி யவ்விருள் கான்றுநின் மெய்யெலா
மெரிய நின்று நடுங்குகின் றாயெனக்
குரிய தொன்றுரைக் கிற்றியென் றூடினாள்.
பொருள் : பாயிருள் பருகி - (அவாவின் மிகுதியால் அறாதென்று பாராமல்) பரவிய இருளைப் பருகி; நிற்பின் அறாது என - வயிற்றில் இருப்பின் நீங்காதென்று கருதி; கருகி அவ் இருள் கான்று - முகம் கருகி அந்த இருளை உமிழ்ந்து; நின் மெய் எலாம் எரிய நின்று நடுங்குகின்றாய் - பின்னும் தங்கி வருத்துமோ என்று உன் உடம்பெல்லாம் எரியும்படி நின்று நடுங்குகின்றனை; எனக்கு உரியது ஒன்று உரைக்கிற்றி - நீ எனக்குத் தக்கதையறிந்து உரைப்பாய்; என்று ஊடினாள் - என்று வெறுத்தாள்.
விளக்கம் : விளக்காமையின், அதனை இழித்துக் கூறுகின்றாள். உரைக்கிற்றி : இகழ்ச்சி. பாய் இருள் - பரவிய இருள். கருகி என்றது - திரி கருகுவதனை. விளக்கு அசைதல் பற்றி நடுங்குகின்றாய் என்றாள். உரைக்கிற்றி என்றது உரைப்பாய் என்னும் பொருட்டு; அஃது உரையாய் என்னும் எதிர்மறைப் பொருள் குறித்து நின்றது. (203 )
1369. கோடி நுண்டுகி லுங்குழை யுந்நினக்
காடு சாந்தமு மல்லவு நல்குவேன்
மாட மேநெடி யாய்மழை தோய்யந்துளாய்
நாடி நண்பனை நண்ணுக நன்றரோ.
பொருள் : மாடமே! நெடியாய்! மழை தோய்ந்துளாய்! - மாடமே! நீண்டுளாய்! முகில் பொருந்தியுளாய்!; கோடி நுண்துகிலும் குழையும் ஆடு சாந்தமும் அல்லவும் நினக்கு நல்குவேன் - கொடிகளிலே கோடியும் நுண்ணிய ஆடையும் கொடி நாட்டுதற்குப் பண்ணும் துளைகளும் பூசும் வெண்சுதையும் பிறவும் நினக்குத் தருவேன்; நண்பனை நாடி நண்ணுக - நம் நண்பனைத் தேடிக் கண்டு வருவாயாக; நன்று - அது நினக்கு நன்றாகும்!
விளக்கம் : அரோ : அசை. நெடியாய் என்பதனால் எப்பொருளையுங் காண வல்லாய் என்பதும், மழை என்பதனால் ஈரம் எனும் இரக்கத்தையும் உடையாய் என்ற பொருளும் தோன்ற நின்றன. மற்றும் கோடிப்புடைவையும் மகரக் குழையும் சந்தனமும் நல்குவேன் என்பதூ உம் தோன்றின. நன்று என்றாள் அவனும் பல தருவன் என்னுங் கருத்துப்பட. (204)
1370. ஆட கக்கொழும் பொன்வரை மார்பனைக்
கூடப் புல்லிவை யாக்குற்ற முண்டெனா
நீடெ ரித்திர ணீண்மணித் தூணொடு
சூட கத்திர டோளணி வாடடினாள்.
பொருள் : ஆடகக் கொழும் பொன் வரை மார்பனை - ஆடகம் எனும் வளமுறு பொன்மலை போலும் மார்பனை; கூடப்புல்லி வையாக் குற்றம் உண்டு எனா - கூடும்படி தழுவி வையாத குற்றம் நுமக்கு உண்டென உரைத்து; நீடு எரித்திரள் நீள் மணித் தூணொடு - நீண்ட நெருப்புத் திரள் போலும் நீண்ட மாணிக்கத் தூணுடன் (எற்றி); சூடகத் திரள் தோளணி வாட்டினாள் - சூடகத்தையும் திரண்ட தோளணியையும் போக்கினாள்.
விளக்கம் : சூடகம் : ஒருவகைக் கைவளையல் சூடக முன்கைச் சுடர்க்குழை மகளிரொடு (பெருங். 3 : 6 : 91) தோளணி : தொடி. எனா : இறந்தகால வினையெச்சம். (205)
1371. கொலைகொள் வேலவன் கூடல னேகினா
னிலைகொள் பூணுமனக் கென்செயு மீங்கெனா
மலைகொள் சந்தனம் வாய்மெழுக் கிட்டதன்
முலைகொள் பேரணி முற்றிழை சிந்தினாள்.
பொருள் : கொலைகொள் வேலவன் கூடலன் ஏகினான் - கொலைத் தன்மைகொண்ட வேலினன் கூடாமற் சென்றுவிட்டான்; நுமக்கு ஈங்கு இலை கொள் பூண் என் செயும் - உங்கட்கு இங்கே இலைவடிவங் கொண்ட இப்பூண்கள் என்ன பயனைச் செய்யும்?; எனா - என்றுரைத்து; மலைகொள் சந்தனம் வாய் மெழுக்கிட்ட - பொதிய மலைச் சந்தனத்தை மெழுகியிட்ட; முலை கொள் பேரணி முற்றிழை சிந்தினாள் - தன் முலைகளிற் கொண்ட பெரிய அணிகளை முற்றிழையுடையாள் சிந்தினாள்.
விளக்கம் : வேலவன் : சீவகன். கூடலன் : முற்றெச்சம். இப்பூண் எனச் சுட்டுச்சொல் வருவித்தோதுக. மலை - ஈண்டுப் பொதியின்மலை. முற்றிழை : அன்மொழித் தொகை; ஈண்டுப் பதுமை. (206)
1372. அருங்க லக்கொடி யன்னவ னேகினா
னிருந்திவ் வாகத் தெவன்செய்விர் நீரெனா
மருங்கு னோவ வளர்ந்த வனமுலைக்
கருங்கண் சேந்து கலங்க வதுக்கினாள்.
பொருள் : அருங்கலம் கொடி அன்னவன் ஏகினான் - நுமக்கு அருங்கலத்தையும் எழுது கொடியையும் போன்று நீங்காதவன் சென்று விட்டான்; நீர் இவ் ஆகத்து இருந்து எவன் செய்விர் எனா - இனி நீவிர் இம் மார்பிலே இருந்து என்ன செய்வீர் என்று; மருங்குல் நோவ வளர்ந்த வன முலைக் கருங்கண் சேந்து கலங்க அதுக்கினாள் - இடை வருந்த வளர்ந்த அழகிய முலையிற் கரிய கண் சிவந்து கலங்கும்படி அடித்துக்கொண்டாள்.
விளக்கம் : அருங்கலக் கொடி : அதுக்கினாள் என்றுமாம். அதற்கு அன்னவன் என்பதைச் சுட்டாக்குக. அருங்கலம் - பெறலரிய அணிகலன். கலமும் கொடியும் அன்னவன் என உம்மை விரித்தோதுக. கொடி - ஈண்டு முலைமேல் எழுதும் தொய்யிற் கொடி. ஆகம் - மார்பு இருந்து எவன் செய்வீர் என்றது நும்மால் இனிப் பயனில்லை என்றவாறு. (207)
1373. மஞ்சு சூழ்வரை மார்பனைக் காணிய
துஞ்ச லோம்புமி னெனவுந் துஞ்சினீ
ரஞ்ச னத்தொடு மையணி மின்னென
நெஞ்சி னீணெடுங் கண்மலர் சீறினாள்.
பொருள் : மஞ்சு சூழ் வரை மார்பனைக் காணிய - முகில் உலவும் மலையனைய மார்பனைக் காண்பதற்கு; துஞ்சல் ஓம்புமின் என்னவும் துஞ்சினீர் - துயில்வதை நீக்குமின் என்றுரைக்கவும் துயின்றீர்கள்; அஞ்சனத்தொடு மை அணிமின் என - (இனி) அஞ்சனத்தையும் மையையும் அணிந்து கொள்ளுமின் என்று; நீள் நெடுங் கண்மலர் நெஞ்சின் சீறினாள் - நீண்ட கண் மலர்களை நெஞ்சினாலே சீறினாள்.
விளக்கம் : அணிமின் : அணியாதீர் என்னுங் குறிப்பு. பின்னும் அவை காட்ட வேண்டுதலின் அவை கேளாமற் சீறினாள். (208)
1374. அரக்குண் டாமரை யன்னதன் கண்மலர்
விருத்தி மாதர் விலக்க வெரீஇக்கொலோ
வருத்த முற்றன ளென்றுகொன் மேகலை
குரற்கொ டாது குலுங்கிக் குறைந்ததே.
பொருள் : அரக்கு உண் தாமரை அன்ன தன் கண்மலர் - அரக்கின் நிறத்தைக் கொண்ட தாமரை மலர் போன்ற தன் கண் மலர்களின்; விருத்தி மாதர் விலக்க வெரீஇக் கொலோ? - அஞ்சனத்தையும் மையையும் பதுமை விலக்குதலாலே நமக்கும் துன்பம் வருமென்று அஞ்சியோ?; வருத்தம் உற்றனள் என்று கொல்? - இவள் வருந்தினாள் என்றோ?; மேகலை குலுங்கி குரல் கொடாது குறைந்தது - மேகலை அசைந்து ஆரவாரியாமல் ஓசை அடங்கியது.
விளக்கம் : விருத்தி - வாழ்வு. குலுங்கல் - அசைதல். மெய் யசையாமற் சோர்ந்ததை இங்ஙனங் கூறினார். (209)
வேறு
1375. துனிவா யினதுன் னுபுசெய் தறியேன்
றனியே னொருபெண் ணுயிரென் னொடுதா
னினியா னிஙனே யுளனே யுரையீர்
பனியார் மலர்மேற் படுவண் டினமே.
பொருள் : பனி ஆர் மலர்மேல் படு வண்டினமே! - தண்மை நிறை மலரின்மேல் மெல்லிய வண்டினமே!; துன்னுபு துனிவு ஆயின செய்து அறியேன் - நான் அவனைப் பொருந்தி நின்று அவற்கு வெறுப்பானவற்றைச் செய்தறிபேன், தனியேன், ஒரு பெண் உயிர் - நான் தனித்தறியேன்; என் உயிரே ஒரு பெண்ணுயிர்; என்னொடுதான் இனியான் - என்னிடம் இனிய னாகிய அவன்; இஙனே உளனே? உரையீர் - இவ்விடங்களிலே உளனோ? உரைப்பீர்.
விளக்கம் : அவன் எனக்கு இனிய னாகையால் உரைத்தீர் என்று முனியான் எனற்கு; இனியான் எனவும், பெண்ணுயிர் நீங்கிற் கண்டிருத்தல் பாவம் எனற்குப், பெண்ணுயிர் எனவும் கூறினார். (210)
1376. நிரைவீ ழருவிந் நிமிர்பொன் சொரியும்
வரையே புனலே வழையே தழையே
விரையார் பொழிலே விரிவெண் ணிலவே
யுரையீ ருயிர்கா வலனுள் வழியே.
பொருள் : வீழ் அருவி நிரை நிமிர் பொன் சொரியும் வரையே! - வீழும் அருவி நிரைகளையுடைய உயர்ந்த பொன் விளங்கும் செய்குன்றே!; புனலே! - நீர் நிலையே!; வழையே! - சுர புன்னையே!; தழையே! - தழையே!; விரை ஆர் பொழிலே! - மணம்நிறை மலர்க் காவே!; விரி வெண்ணிலவே! - மலர்ந்த வெண் திங்களே!; உயிர் காவலன் உள் வழி உரையீர் - என் உயிர் முதல்வன் இருக்கும் இடத்தை உரைப்பீராக!
விளக்கம் : நிரைவீழ் அருவி - வரிசையாக வீழ்கின்ற அருவி. செய்குன்றாகலின் நிரைவீழ் அருவி என்றார். நிமிர்பொன் - உயர்ந்த பொன். பொன்சொரிதல் - பொன்னொளி வீசுதல். வழை - சுரபுன்னை. விரை - மணம். காவலன் : சீவகன். (211 )
1377. எரிபொன் னுலகின் னுறைவீ ர்தனைத்
தெரிவீர் தெரிவில் சிறுமா னிடார்ற்
பரிவொன் றிலிராற் படர்நோய் மிகுமா
லரிதா லுயிர்காப் பமரீ ரருளீர்.
பொருள் : எரி பொன் உலகின் உறைவீர்! - ஒளிரும் பொன் உலகிலே வாழ்வீர்!; இதனைத் தெரிவீர் - (ஆதலின்) என் காதலன் போன வழியை அறிந்திருப்பீர்; தெரிவு இல் சிறு மானிடரின் பரிவு ஒன்றிலிர் - (தெரிந்திருப்பவும்) தெரியாத சிறு மனிதரைப்போல அருளிலிரா யிராநின்றீர்; படர்நோய் மிகும் - துன்ப நோய் மிகும்; உயிர் காப்பு அரிது - (அதனால்) உயிர்காத்தல் இனி அரிது; அமரீர்! - வானவரே!; அருளீர் - உயிரைக் காக்க அவனை அருள்வீராக.
விளக்கம் : பொன்னுலகின் னுறைவீர் என்றது இதனைத் தெரிவீர் என்றதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. தேவர் உலகினிகழ்ச்சிகள் எல்லாம் இருந்தவிடத்திருந்தே உணரவல்லார் ஆகலின் இங்ஙனம் கூறினள். தெரிவில் மானிடர் என்பது நும்போன்ற அறியமாட்டாத இயல்புடைய மானிடர் என்றவாறு. படர் - துன்பம் அமரீர் : அமரர் என்பது விளியுருபேற்று நின்றது. (212)
1378. புணார்வின் னினிய புலவிப் பொழுதுங்
கணவன் னகலின் னுயிர்கை யகற
லுணார்வீ ரமரார் மகளீ ரருளிக்
கொணார்வீர் கொடியே னுயிரைக் கொணர்வீர்.
பொருள் : அமரர் மகளீர்! - வானவர் மகளிரே!; புணர்வின் இனிய புலவிப் பொழுதும் - கூட்டத்தினும் இனிமையையுடைய புலவிக் காலத்தும்; கணவன் அகலின் உயிர் கையகல்தல் உணர்வீர் - கணவன் தழுவுதல் நீங்கின் உயிர் நீங்குதலை அறிவீராகலின்; கொடியேன் உயிரை அருளிக் கொணர்வீர்! கொணர்வீர் - கொடியவளாகிய என் உயிரை அருள் செய்து கொண்டு தருவீர்! கொண்டுதருவீர்!
விளக்கம் : நீயிரும் மகளிரே ஆதலின் கணவன் அகலின் உயிர் கையகறல் உணர்வீர் என்பது கருத்து. பிறபெண்டிர்க்கிரங்குதல் மகளிர்க்கியல்பாகலின் எனக் கிரங்கிக் கொணர்வீர் என்பது கருத்து. புணர்வின் இனிய புலவி என்றதனை, புணர்தலின் ஊடல் இனிது என்னும் வள்ளுவர் மொழியோடு ஒப்புக் காண்க. (213)
1379. நகைமா மணிமா லைநடைக் கொடிநின்
வகைமா மணிமே கலையா யினதே
லகையா தெனதா விதழைக் குமெனத்
தகைபா டவலாய் ளர்கோ தளர்கோ.
பொருள் : நகை மாமணி மாலை நடைக்கொடி! - ஒளியுறும் மணிகளாலாகிய மாலையணிந்த நடந்து திரியுங் கொடியே!; நின் வகை மாமணி மேகலை ஆயினதேல் - நின் வகைப்பட்ட பெரிய மணிமேகலை ஆயிற்றேல்; எனது ஆவி அகையாது தழைக்கும் என - என் உயிர் தாழ்தலின்றித் தளிர்க்கும் என்று; தகை பாடவலாய்! தளர்கோ! தளர்கோ!! - என் நலம் பாராட்ட வல்லாய்! தளர்வேனோ! தளர்வேனோ!!
விளக்கம் : இது முதல் எதிர் பெய்து பரிதல். எதிர் பெய்து பரிதலாவது தலைமகனையும் அவன் தேர் முதலியவற்றையும் தன் எதிர் பெய்துகொண்டு பரிந்து கையறல் : (தொல். மேய்ப். 22. பேர்.) ஓகாரம் : எதிர்மறை இறந்துபடுவேன் என்பது கருத்து. தளர்கு : தன்மையொருமை வினைமுற்று. வல்லாய் என்பது பொய்யுரைக்க வல்லவன் என்பதைக் குறிக்கின்றது. (214)
1380. புனைதார் பொராநொந் துபொதிர்ந் தவென
வினையா ரெரிபூண் முலைகண் குளிர
வுன்கண் மலரா லுழுதோம் பவலாய்
நினையா துநெடுந் தகைநீத் தனையே.
பொருள் : புனைதார் பொரா நொந்து பொதிர்ந்த என - நீ புனைந்த மாலைகள் பொருதலால் நொந்து வீங்கின என்றுகூறி; வினையார் எரிபூண் முலைகண் குளிர - தொழிலமைந்த விளங்குகின்ற பூண் அணிந்த முலைகளின் கண்குளிரும்படி; உன் கண்மலரால் உழுது ஓம்ப வலாய் - உன்னுடைய கண்மலர்களால் உழுது பொய்யை மெய்யாகப் போற்ற வல்லவனே!; நெடுந்தகை! - பெருந்தகையே!; நினையாது நீத்தனையே - பிரியின் வாழாள் என்று நினையாமல் நீத்தாயே.
விளக்கம் : கண்மலரால் உழுதலாவது இவைசாலவும் அழகுடையன என்று கூர்ந்து நெடிது நோக்கிப் பாராட்டுதல். இங்ஙனம் நோக்கிப் பாராட்டுங்கால் தன்னெஞ்சங் குளிர்ந்ததனை முலைமேலேற்றி முலை கண் குளிர என்றாள். நினையாது என்றது யாம் பிரிந்துழி இவள் நிலை என்னாம் என்று கருதாதே என்றவாறு. (215)
1381. அருடேர் வழிநின் றறனே மொழிவாய்
பொருடேர் புலனெய் தியபூங் கழலா
யிருடேர் வழிநின் றினைவேற் கருளா
யுருடே ருயர்கொற் றவன்மைத் துனனே.
பொருள் : பொருள் தேர் புலன் எய்திய பூங்கழலாய் - பொருளைத் தேடும் அறிவிலே சென்ற பூங்கழ லணிந்தவனே!; உருள் தேர் உயர் கொற்றவன் மைத்துனனே! - ஆழிபூண்ட தேரையுடைய மேம்பட்ட அரசன் உலோகமாபாலனின் மைத்துனனே!; அருள் தேர் வழிநின்று அறனே மொழிவாய் - அருளை ஆராயும் வழியிலே நின்று அறமே கூறுவாய்; (எனினும்); இருள் தேர் வழி நின்று இனைவேற்கு அருளாய் - இருள் நிறைந்த இடத்தே நின்று வருந்தும் எனக்கு அருள்கின்றிலை.
விளக்கம் : நினக்குச் சொல்லும் எளிது, சொல்லிய வண்ணஞ் செய்தல் அரிதாக இருந்தது என்று கூறுகிறாள். கொற்றவனும் மைத்துனனும் என உம்மைத் தொகையாக்கியும் எய்திய என்பதை வினையெச்சமாக்கியும் சொற்களைப் பல விடங்களினின்றும் பிரித்துக் கூட்டி நச்சினார்க்கினியர் கூறும் பொருள் : கழலாய்! தனபதியும், உலோக பாலனும் நின்னுடன் அருள் இருக்கும்படியை ஆராயுமிடத்து, அவர்கள் தத்துவத்தை ஆராயும் அறிவைப் பெறவேண்டி நின்று, அவர்கட்கு அறனே மொழிகின்ற நீ, இருள் செறிந் இடத்திலே நின்று வருந்துகின்ற எனக்கு அருளுகின்றிலை. ஆதலால், நினக்கு முற்படச் சொல்லுதல் எளிதாய்ச் சொல்லிய வண்ணஞ் செய்தல் அரிதாய் இருந்தது என்றாள். இவ்வாறு மாட்டேற்றுப் பொருள் கூறினும் கருத்து வேறுபாடில்லையாதல் காண்க. (216)
1382. மிகவா யதொர்மீ ளிமைசெய் தனனோ
வுகவா வுனதுள் ளமுவர்த் ததுவோ
விகவா விடரென் வயினீத் திடநீ
தகவா தகவல் லதுசெய் தனையே.
பொருள் : தகவா! - தக்கோனே!; இகவா இடர் என் வயின் நீ ஈத்திட - நீங்காத இடரை என்னிடத்தே நீ கொடுத்திடற்கு; மிக ஆயதொர் மீளிமை செய்தனனோ? யான்தான் அறிவின்மையான் மிகையாயதொரு வன்மை செய்தேனோ?; உனது உள்ளம் உகவா உவர்த்ததுவோ? - உன் மனந்தான் ஒரு கால் அன்பு மிக்குப் பின்பு வெறுத்ததோ?; தகவு அல்லது செய்தனையே - தகுதியல்லாத காரியத்தைச் செய்தனையே!
விளக்கம் : தகவா என்பதற்குத் தகும்படி வந்து முயங்குவாயாக என்றும் பொருள் உரைப்பர் நச்சினார்க்கினியர். யான் வன்மை செய்தேனோ? நின் உள்ளந்தான் உவர்த்ததோ? என்று உருவெளியை நோக்கி உரைத்தாளாக, அது மாற்றந் தராததால் மேலும் அதனை நோக்கித் தகவல்லது செய்தனை என்றாள். (217)
1383. குளிர்துன் னியபொன் னிலமே குதலாற்
றளரன் னநடை யவடாங் கலளா
யொளிர்பொன் னரிமா லையொசிந் திஙனே
மிளிர்மின் னெனமின் னிலமெய் தினளே.
பொருள் : ஒளிர் பொன் அரி மாலை - விளங்கும் பொன்னரி மாலை போன்றவள்; குளிர் துன்னிய பொன் நிலம் ஏகுதலால் - குளிர்ச்சி பொருந்திய பொன் நிலத்தே உலாவுதலால்; தளர் அன்ன நடையவள் தாங்கலளாய் - தளர்ந்த அன்னம்போலும் நடையையும் பொறதவளாய்; ஒசிந்து இஙனே மிளிர் மின் என மின் நிலம் எய்தினள் - துவண்டு இந்நிலத்தே பிறழும் மின் என ஒளிரும் நிலத்தே விழுந்தாள்.
விளக்கம் : மீநிலம் என்றும் பாடம். தக வா எனப் பிரித்துத் தகவுற வந்து முயங்கு என முற்செய்யுளிற் பொருள் கூறிய நச்சினார்க்கினியர் இச் செய்யுளிலும் அதற்கேற்ப, அவ்வுருவம் வந்து முயங்காது நிற்றலின் தன் மேனியிற் காமத் தீயாறிக் குளிர்ச்சி நெருங்க வேண்டி முயங்குதற்குப் பொன்னிலத்தே அவள்தான் சேறலின், அப்பொழுது அவசத்தாலே தளர்ந்த அன்னம்போலு நடையைத் தாங்கமாட்டாதவளாய், ஒசிந்து இந்நிலத்தே பிறழும் மின்னென நிலத்தே வீழ்ந்தான் என்றுரைப்பர். (218)
1384. தழுமா வலிமைந் தவெனத் தளரா
வெழுமே ழடியூக் கிநடந் துசெலா
விழுமீ நிலமெய் திமிளிர்ந் துருகா
வழுமா லவலித் தவணங் கிழையே.
பொருள் : அ அணங்கு இழை - அந்த அழகிய அணியணிந்த பதுமை; அவலித்து - வருந்தி; தளரா எழும் - தளர்ந்து எழுவாள்; ஏழடி ஊக்கி நடந்து செலா - ஏழடி வரை முயற்சித்து நடந்து சென்று; மா வலி மைந்த எனத் தழும் - மாவலியுடைய மைந்தனே! என்று (உருவெளியைத்) தழுவுவாள்; விழும் - (அவ்வுருவம் கைக்குப் பற்ற வியலாமையின்) விழுவாள்; மீநிலம் எய்தி மிளிர்ந்து உருகா அழும் - (விழுந்து) மேலாம் நிலத்தை அடைந்து புரண்டு உருகி அழுவாள்.
விளக்கம் : தளரா, உருகா, செலா : செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள். ஏழடி செல்வது மரபு. தழும், எழும், விழும், அழும் என்பன செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றுக்கள். (219)
வேறு
1385. கரப்புநீர்க் கங்கை யங்கட்
கடிமலர்க் கமலப் பள்ளித்
திருத்தகு திரைக டாக்கச்
சேப்புழிச் சேவ னீங்கப்
பரற்றலை முரம்பிற் சின்னீர்
வறுஞ்சுனைப் பற்று விட்ட
வரத்தவாய்ப் பவளச் செந்தாட்
பெடையன்ன மழுவ தொத்தாள்.
பொருள் : பரல்தலை முரம்பின் சின்னீர் வறுஞ்சுனைப் பற்றுவிட்ட - பரற்கற்கள் பொருந்திய மேட்டு நிலத்திலே சிறிதே நீரையுடைய வறிய சுனையிலே கொண்ட பற்றைவிட்ட; அரத்த வாய்ப் பவளச் செந்தாள் பெடை அன்னம் - சிவந்த வாயையும் பவளமனைய சிவந்த கால்களையும் உடைய பெட்டை அன்னம்; கரப்பு நீர்க் கங்கை அங்கண் - சிவன் சடையிற் கரத்தலையுடைய கங்கையின் அழகிய இடத்திலுள்ள; கடி மலர்க் கமலப் பள்ளி - மணமிகு மலராகிய தாமரை யணையிலே; திருத்தகு திரைகள் தாக்கச் சேப்புழி - அழகு பொருந்திய அலைகள் அலைத்துத் துயிற்றச் சேவலோடு துயிலும்போது; சேவல் நீங்க - சேவல் நீங்குதலால்; அழுவது ஒத்தாள் - முன்னிருந்த வறிய சுனையிலே இருந்து அழுவதைப் போன்றாள்.
விளக்கம் : கரப்பு நீர்க் கங்கை - பாதாள கங்கையெனினும் ஆம். அவனைக் கூடிய பின்பு தந்தையில்லம் கங்கையாய், அவன் நீங்குதலால் அச் சுனையின் தன்மைய தாயிற்று. அன்னம் சுனையில் தங்குதல் இல் பொருளுவமை. (220)
1386. மெழுகினாற் புனைந்த பாவை
வெய்துறுத் தாங்கு மோவா
தழுதுநைந் துருகு கின்ற
வாயிடைத் தோழி துன்னிக்
கெழீஇயினாள் கேள்வி நல்யாழ்க்
கிளைநரம் பனைய சொல்லாள்
கழிபெருங் கவலை நீங்கக்
காரண நீர சொன்னாள்.
பொருள் : மெழுகினால் புனைந்த பாவை வெய்துறுத் தாங்கு - மெழுகாற் செய்த பாவையைத் தீயுறுத்தாற்போல; ஓவாது அழுது நைந்து உருகுகின்ற ஆயிடை - ஓய்வின்றி அழுது நைந்து உருகுகின்ற அக்காலத்தே; கெழீஇயினாள் - நெருங்கியவளாகய; கேள்வி நல்யாழ்க் கிளை நரம்பு அனைய சொல்லாள் தோழி துன்னி - கேள்விக்குரிய நல்ல யாழின் கிளையென்னும் நரம்பினது இசையைப் போன்ற சொல்லாளாகிய தோழி ஆங்குவந்து; கழி பெருங் கவலை நீங்க - மிகப் பெருங் கவலை தவிர; காரண நீர சொன்னாள் - காரணமான தன்மையை உடைய சொற்களைக் கூறினாள்.
விளக்கம் : ஆங்கும் : உம் : இசை நிறை. காமமும், இருவினையும், நிலையாமையும் முதலியவற்றைக், காரண நீர என்றார். பிரிவுணர்த்தி ஆற்றுவித்துச்சீவகன் பிரியாமையின் தோழி ஆற்றுவிக்கின்றாள். (221)
1387. தெள்ளறல் யாறு பாய்ந்த திரைதவழ் கடலின் வெஃகி
யள்ளுற வளிந்த காம மகமுறப் பிணித்த தேனு
முள்ளுற வெந்த செம்பொ னுற்றநீர்ப் புள்ளி யற்றாற்
கள்ளுற மலர்ந்த கோதாய் காதலர் காத லென்றாள்.
பொருள் : கள் உற மலர்ந்த கோதாய் - தேன் பொருந்த மலர்ந்த மாலையாய்!; தெள் அறல் யாறு பாய்ந்த திரை தவழ் கடலின் வெஃகி - தெளிந்த நீரையுடைய ஆறுகள் பாய்ந்த அலை தவழும் கடலினும் மிகுந்து; அள் உற அளிந்த காமம் அகம் உறப் பிணித்த தேனும் - நுகரும் தன்மை உறும்படி பழுத்த காமம் உள்ளம் இறுகப் பிணித்த தாயினும்; காதலர் காதல் - காதலித்தோர் காதல்; உள்உற வெந்த செம்பொன் உற்ற நீர்ப் புள்ளி அற்று - உள்ளத்தே அடங்கிப் பிறர்க்குத் தோன்றாதிருக்க வேண்டின் வெந்த செம்பொன்னிற் பொருந்திய நீர்த்துளி போலத் தோன்றாது.
விளக்கம் : அற்று : குறிப்பு வினைமுற்று. வெஃகி - ஆசை மிகுந்து. கையால் அள்ளிக்கொள்ளலாம்படி கனிந்த காமம் எனினுமாம் அகம் - நெஞ்சம். உள்ளுறவேண்டின் என்க; நெஞ்சத்துள்ளேயே பொருந்திப் புறத்தார்க்குப் புலப்படாதிருக்க விரும்பின் என்பது கருத்து கள் - தேன். (222)
1388. ஓடரி யொழுகி நீண்ட வொளிமலர் நெடுங்க ணாரைக்
கூடரி யுழுவை போல முயக்கிடைக் குழையப் புல்லி
யாடவ ரழுந்தி வீழ்ந்தும் பிரிவிடை யழுங்கல் செல்லார்
பீடழிந் துருகும் பெண்ணிற் பேதைய ரில்லை யென்றாள்.
பொருள் : ஓடு அரி ஒழுகி நீண்ட ஒளிமலர் நெடுங்கண்ணாரை - ஓடுகின்ற செவ்வரியுடன் மிகவும் நீண்ட ஒளி பொருந்திய மலரனைய நீண்ட கண்ணாரை; கூடு அரி உழுவை போல ஆடவர் முயக்கிடைக் குழையப் புல்லி - தம் தம் பெடையுடன் கூடும் சிங்கமும் புலியும் போல ஆடவர் கூடற் காலத்தே குழையு மாறு தழுவி; அழுந்தி வீழ்ந்ததும் - இன்பத்தில் அழுந்தி வீழ்ந்தாலும்; பிரிவிடை அழுங்கல் செல்லார் - பிரிவுக் காலத்து வருந்த மாட்டார்; பீடு அழிந்து உருகும் பெண்ணின் பேதையர் இல்லை என்றாள் - (அங்ஙனமின்றிப்) பிரிவிடத்துப் பெருமை கெட்டு உருகும் பெண்களைக் காட்டினும் பேதையர் இவ்வுலகத்தில் இல்லை என்று தோழி கூறினாள்.
விளக்கம் : ஆடவர் நுகர்ச்சிக்காலத்தே மகளிரினும் மிக்கு இன்பத்திலழுந்துகின்றார், பிரிவிடை வருந்துகின்றிலர்; மகளிரோ பிரிவுக் காலத்தே துன்பத்திற் பெரிதும் அழுந்துகின்றனர். ஆதலின் மகளிரிற் காட்டிற் பேதையரில்லை என்றவாறு. (223)
1389. பேதைமை யென்னும் வித்திற்
பிறந்துபின் வினைக ளென்னும்
வேதனை மரங்க ணாறி
வேட்கைவேர் வீழ்த்து முற்றிக்
காதலுங் களிப்பு மென்னுங்
கவடுவிட் டவலம் பூத்து
மாதுய ரிடும்பை காய்த்து
மரணமே கனிந்து நிற்கும்.
பொருள் : பேதைமை யென்னும் வித்தில் - அறியாமையென்னும் வித்தினிடமாக; வினைகள் என்னும் வேதனை மரங்கள் பிறந்து பின் நாறி - தீவினைகள் என்கிற துன்பந்தரும் மரங்கள் முளைத்துப் பின் வளர்ந்து; வேட்கை வேர் வீழ்த்து முற்றி - ஆசையாகிய வேரை வீழ இறக்கி முதிர்ந்து; காதலும் களிப்பும் என்னும் கவடு விட்டு - காதல் களிப்பு என்னும் கிளைகளை விட்டு; அவலம் பூத்து - வருத்தம் மலர்ந்து; மாதுயர் இடும்பை காய்த்து - பெருந்துயரந்தரும் கவலை காய்த்து; மரணமே கனிந்து நிற்கும் - மரணந் தருகின்ற கையாற்றை இவ்வுடம்பு நுகரப் பழுத்துத் தந்து, பின்னும் அவ்வாறு காய்க்க அம் மரம் நிற்கும்.
விளக்கம் : பழுத்தல் - உடம்பு போதல். தீவினை நிற்றலின் நிற்கும் என்றார். மரணமே: ஏ: தேற்றம். பெறாததன்மேற் செல்வது காதல். பெற்றதன்மேற் செல்வது களிப்பு. வேதனை மரங்கள் பிறந்துபின் நாறி என மாறுக பிறந்து என்றது முறைத்து என்றவாறு. நாறுதல் - தோன்றுதல்; ஈண்டு வளர்ந்து என்னும் பொருள்பட நின்றது. வேதனைமரம் : பண்புத்தொகை. கவடு - கிளை. அவலம் - துன்பம். மாதுயர் இடும்பை : இருபெயரொட்டு; மிகப்பெருந் துன்பம் என்பது கருத்து. (224)
1390. தேன்சென்ற நெறியுந் தெண்ணீர்ச்
சிறுதிரைப் போர்வை போர்த்து
மீன்சென்ற நெறியும் போல
விழித்திமைப் பவர்க்குந் தோன்றா
மான்சென்ற நோக்கின் மாதே
மாய்ந்துபோ மக்கள் யாக்கை
யூன்சென்று தேயச் சிந்தித்
துகுவதோ தகுவ தென்றாள்.
பொருள் : மான் சென்ற நோக்கின் மாதே! - மான் கண் போன்று செல்லும் பார்வையுடைய மாதே!; தேன் சென்ற நெறியும் - வண்டுகள் மலரைத் தேடிச் செல்கின்ற வழியும்; சிறுதிரைப் போர்வை போர்த்து மீன் சென்ற நெறியும் போல - சிற்றலையாகிய போர்வையைப் போர்த்துக் கொண்டு மீன் செல்கின்ற வழியும் போல; மக்கள் யாக்கை - மக்களின் உடம்பு; விழித்து இமைப்பவர்க்கும் தோன்றா மாய்ந்துபோம் - விழித்து இமைப்பவர்கட்குந் தெரியாதனவாய் மடிந்து போகும்; ஊன் சென்று தேயச் சிந்தித்து உகுவதோ தகுவது? என்றாள் - மெய் சிறிது சிறிதாகத் தேயுமாறு நினைந்து கெடுதலோ தகுதியாகும்! என்றாள்.
விளக்கம் : தேன் - வண்டு. நெறி - வழி. தேனும் மீனும் போனவழி அறியமுடியாததுபோல் மக்கள் யாக்கை அழிந்துபோம் வழியும் அறிய முடியாது என்றவாறு விழித்திமைப்பவர் - மக்கள் என்றார் நச்சினார்க்கினியர். சிந்தித்துகுவதோ தகுவது என்றது சிந்தித்து உகாமையே தகுவது என்னும் பொருள் குறித்து நின்றது. (225)
1391. பிரிந்தவற் கிரங்கிப் பேதுற்
றழுதநங் கண்ணி னீர்கள்
சொரிந்தவை தொகுந்து நோக்கிற்
றொடுகடல் வெள்ள மாற்றா
முரிந்தநம் பிறவி மேனாண்
முற்றிழை யின்னு நோக்காய்
பரிந்தழு வதற்குப் பாவா
யடியிட்ட வாறு கண்டாய்.
பொருள் : முற்றிழை இன்னும் நோக்காய் - முற்றிழையே! இன்னும் மனத்தாலே நோக்குவாயாக; மேல்நாள் முரிந்த நம் பிறவி - மேல் நாட்களில் இற்ற நம் பிறவிகளிலே; பிரிந்தவற்கு இரங்கிப் பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள் - அப்பொழுது பிரிந்தவனே கணவனாக அவற்றே பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்; சொரிந்தவை தொகுத்து நோக்கின் - சொரிந்தவற்றைத் தொகுத்துப் பார்த்தால்; தொடுகடல் வெள்ளம் ஆற்றா - தொட்ட கடலின் பெருக்கும் உறையிடவும் போதாது; பாவாய்! பரிந்து அழுவதற்கு அடியிட்ட ஆறு கண்டாய் - பாவையே! பரிவுற்று மேலும் அழுதற்கு இந்நாள் அடியிட்டபடியென்றறிவாய்.
விளக்கம் : இப்பொழுது பிரிந்த இவனுக்கே என்பது படப் பிரிந்தவற்கு என ஒருமையாற் கூறினர். அன்புடைக்காதலர் பிறவிகடோறும் கணவனும் மனைவியுமாகப் பிறப்பர் என்பது ஒரு கொள்கை. இதனை,
நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉம்.
மனக்கினி யார்க்குநீ மகளாய தூஉம்.
பண்டும் பண்டும் பல்பிறப் புளவால். (மணி. 21. 29 - 31).
என வரும் மணிமேகலையானும் உணர்க. பரிந்தழுவதற்கு அடியிட்டவாறு என்றது இங்ஙனம் அழும் அழுகைக்கு முடிவில்லை என்றவாறு. (226)
1392. அன்பினி னவலித் தாற்றா
தழுவது மெளிது நங்க
ளென்பினி னாவி நீங்க
விறுவது மெளிது சேர்ந்த
துன்பத்தாற் றுகைக்கப் பட்டார்
துகைத்தவத் துன்பந் தாங்கி
யின்பமென் றிருத்தல் போலு
மரியதிவ் வுலகி லென்றாள்.
பொருள் : அன்பினின் அவலித்து ஆற்றாது அழுவதும் எளிது - நம் காதலரிடம் அன்பினாலே வருந்தி ஆற்றவியலாமல் அழுவதும் எளிது; நங்கள் என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது - நம் உடம்பிலிருந்து உயிர்போம்படி இறத்தலும் எளிது; சேர்ந்த துன்பத்தால் துகைக்கப்பப்பட்டார் - தம் காதலர் சேர்ந்து பிரிந்ததனால் பிறந்த துன்பத்தாலே வருத்தப்பட்ட மகளிர்; துகைத்த அத் துன்பம் தாங்கி - அங்ஙனம் வருத்தின அவ்வருத்தத்தைப் பொறுத்து; இன்பம் என்று இருத்தல் இவ்வுலகில் அரியது போலும் என்றாள் - இது நமக்கு இன்பம் என்று இருப்பதே இவ்வுலகில் அரியதாகும் என்றாள்.
விளக்கம் : நங்கள் : கள் : அசை. போலும் : ஒப்பில் போலி. அவலித்து - வருந்தி. எல்லோரும் செய்வதொன்றாகலின் அழுவது எளிது என்றாள். இறுவதும் - இறந்து படலும். மெய்யுணர்வுடையார்க்குத் துன்பம் வீடுபேற்றிற்குக் காரணமாதல் பற்றி இத்துன்பமே நமக்கின்பம் என்று அவலியாதிருத்தல் கூடும் ஆயின் அங்ஙனம் இருத்தல் செயற்கரிய செயலென்பாள் துகைத்த அத்துன்பந்தாங்கி இன்பம் என்றிருத்தல் போலும் அரியது இவ்வுலகில் என்றாள். (227)
1393. மயற்கையிம் மக்கள் யோனிப்
பிறத்தலும் பிறந்து வந்தீங்
கியற்கையே பிரிவு சாத
லிமைப்பிடைப் படாத தொன்றாற்
கயற்கணி னளவுங் கொள்ளார்
கவற்சியுட் கவற்சி கொண்டார்
செயற்கையம் பிறவி நச்சுக்
கடலகத் தழுந்து கின்றார்.
பொருள் : மயற்கை இம் மக்கள் யோனிப் பிறத்தலும் - குற்றமுடைய இம் மக்கட் பிறப்பிற் பிறத்தலும்; பிறந்து வந்து ஈங்குப் பிரிவு சாதல் இயற்கை - பிறந்து வந்து இவ்வுலகிற் பிரிதலும் இறத்தலும் இயற்கை; இமைப்பிடைப் படாதது ஒன்றால் - இமைப்பளவும் நடுவில் தங்காதது ஒன்று, ஆதலால்; கவற்சி கயற்கணின் அளவும் கொள்ளார் - அறிஞர் கவலை மீன்கண்ணளவாயினும் கொள்ளார்; உள் கவற்சி கொண்டார் செயற்கை அம்பிறவி நச்சுக் கடலகத்து அழுந்துகின்றார் - மனக்கவலை கொண்டவர்கள் பற்றுள்ளத்தால் உண்டாகும் பிறவியாகிய நச்சுக் கடலிலே அழுந்துகின்றவர்கள்.
விளக்கம் : (பலபிறப்பிலும்) பிறந்து வந்து இம்மக்கள் யோனியிற் பிறத்தலும் மயற்கை என்பர் நச்சினார்க்கினயர். கயற்கணின் அளவு : அளவின் சிறுமை குறிப்பது; ஒரு மாத்திரையளவு. (228)
1394. இளமையின் மூப்புஞ் செல்வத்
திடும்பையும் புணர்ச்சிப் போழ்திற்
கிளைநரிற் பிரிவு நோயில்
காலத்து நோயு நோக்கி
விளைமதுக் கமழுங் கோதை
வேலினும் வெய்ய கண்ணாய்
களைதுய ரவலம் வேண்டா
கண்ணிமைப் பளவு மென்றாள்
பொருள் : இளமையில் மூப்பும் - இளமைக் காலத்தே மூப்பு வருமென்பதையும்; செல்வத்து இடும்பையும் - செல்வமுள்ள போதே வறுமைத் துன்பம் வருமென்பதையும்; கிளைநரில் புணர்ச்சிப் போழ்தில் பிரிவும் - கணவருடன் கூடியிருக்கும் போதே பிரிவு வருமென்பதையும்; நோய்இல் காலத்து நோயும் - நலமுள்ள காலத்திலேயே நோய் வருமென்பதையும்; நோக்கி - எதிர்பார்த் துணர்ந்து; விளைமதுக் கமழும் கோதை! - விளைந்த தேன் மணக்கும் மாலையாய்!; வேலினும் வெய்ய கண்ணாய்! - வேலினும் கொடிய கண்களையுடையாய்!; துயர் களை - துயரத்தை நீக்குவாயாக; கண் இமைப்பளவும் அவலம் வேண்டா என்றாள் - கண்ணிமைக்கும் போதளவேனும் இந்த அவலம் வேண்டா என்றுரைத்தாள்.
விளக்கம் : இளமைக்காலத்தே இனி மூப்பு வரும் என்று எதிர்பார்த்திருப்போர் இளமையழி விற்கும் மூப்பிற்கும் வருந்தமாட்டார்; இங்ஙனமே செல்வக்காலத்தே வறுமையையும் புணர்ச்சிக்காலத்தே பிரிவினையும் வரும் என்று எதிர்பார்த்திருப்போர் வருந்த மாட்டார். நீயும் அங்ஙனம் இஃதுலகியல் என்றுணர்ந்து இமைப்பளவும் அவலியாதிரு என்றவாறு. வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையார் உள்ளத்தின் உள்ளக்கெடும் என்பது பற்றிக் கண்ணிமைப்பளவும் அவலம் வேண்டா என்றாள். (229)
1395. முத்திலங் காகந் தோய்ந்த
மொய்ம்மலர்த் தாரி னானங்
கைத்தலத் தகன்ற பந்திற்
கைப்படுங் கவல வேண்டா
பொத்திலத் துறையு மாந்தை
புணர்ந்திருந் துரைக்கும் பொன்னே
நித்தில முறுவ லுண்டா
னீங்கினா னல்லன் கண்டாய்.
பொருள் : பொன்னே! - திருவனையாய்!; பொத்து இலத்து உறையும் ஆந்தை புணர்ந்து இருந்து உரைக்கும் - மரப்பொந்தாகிய இல்லத்தே வாழும் ஆந்தை பேடும் சேவலுமாகக் கூடியிருந்து அவன் வரவைக் கூறும்; நித்திலம் முறுவல் உண்டான் நீங்கினான் அல்லன் - (ஆதலால்) முத்தனைய நின்பற்களின் ஊறிய நீரைப்பருகினவன் நின்னைப் பிரிந்தான் அல்லன்; முத்து இலங்கு ஆகம் தோய்ந்த மொய்ம்மலர்த் தாரினான் - முத்துக்கள் விளங்கும் நின் மார்பினைத் தழுவிய மலர்மாலையான்; நம் கைத்தலத்து அகன்ற பந்தின் கைப்படும் - நம் கையிலிருந்து நீங்கிய பந்து போலக் கைப்படுவான்; கவல வேண்டா - கவலையுறல் வேண்டா.
விளக்கம் : தாரினான் : சீவகன். கைத்தலத்து அகன்ற பந்து மீண்டும் நம் கைக்கே வருமாறுபோல என்க. பொத்து - பொந்து. இல்லம், இலம் என லகரமெய் கெட்டு நின்றது. பொன்னே : விளி. நித்தில முறுவலுண்டான் என்றது நீங்கினான் ஆகாமைக்குக் குறிப்பேதுவாகும். (230)
1396. வடிமலர்க் காவி னன்று
வண்டளிர்ப் பிண்டி நீழன்
முடிபொருள் பறவை கூற
முற்றிழை நின்னை நோக்கிக்
கடியதோர் கௌவை செய்யுங்
கட்டெயிற் றரவி னென்றேன்
கொடியனாய் பிழைப்புக் கூறேன்
குழையலென் றெடுத்துக் கொண்டாள்.
பொருள் : முற்றிழை! - முற்றிய இழைகளையுடையாய்!; அன்று வடிமலர்க் காவின் வண்தளிர்ப் பிண்டி நீழல் - அன்றைக்கு ஆராயும் மலர்ப் பொழிலிலே வளவிய தளிரையுடைய பிண்டியின் நீழலிலே; பறவை முடிபொருள் கூற - அப்பறவை முடியும் பொருளைக் கூறுதலின்; நின்னை நோக்கிக் கட்டு எயிற்று அரவின் கடியது ஓர் கௌவை செய்யும் என்றேன் - உன்னைப் பார்த்து இக் கூற்றுக் கட்டிய நஞ்சுடைய அரவினாலே கொடியதாகிய ஒரு துன்பத்தை உண்டாக்குவதைக் காட்டும் என்றேன்; கொடியனாய்! - கொடி போன்றவளே!; பிழைப்புக் கூறேன் - தவறுரையேன்; குழையல் என்று எடுத்துக்கொண்டாள் - வருந்தற்க என்று தழுவியெடுத்துக் கொண்டாள்.
விளக்கம் : வடிமலர்க்கா : வினைத்தொகை; தழைத்துத் தாழ்ந்த காவுமாம். பிண்டி - அசோகமரம். பறவை முடிபொருள் கூறக் கடியதோர் கௌவை செய்யும் என்றேன் என்றது மேலைச் செய்யுளில் தாரினான் கைப்படும் என்றதற்கு எடுத்துக்காட்டு. (231 )
1397. அலங்கலுங் குழலுந் தோழி
யங்கையி னடைச்சி யம்பூம்
பொலங்கலக் கொடிய னாடன்
கண்பொழி கலுழி யொற்றிக்
கலந்தகி னாறு மல்குற்
கவான்மிசைக் கொண்டி ருந்தாள்
புலர்ந்தது பொழுது நல்லா
ணெஞ்சமும் புலர்ந்த தன்றே.
பொருள் : தோழி - தோழியானவள்; அம் கையின் - அழகிய தன் கையினால்; அம் பொலம் கலம் பூங்கொடியன்னாள் தன் - அழகிய பொன்னாலாகிய கலம் அணிந்த பூங்கொடி போன்றவளின்; அலங்கலும் குழலும் அடைச்சி - மாலையையும் குழலையும் செருகி; கண்பொழி கலுழி ஒற்றி - கண்ணிலிருந்து வடியும் நீரையுந் துடைத்து; அகில் கலந்து நாறும் அல்குல் கவான் மிசைக்கொண்டிருந்தாள் - அகில் மணம் கலந்து கமழும் அல்குலையுடைய தன் துடையின் மேலே கொண்டிருந்தாள்; பொழுது புலர்ந்தது - அப்பொழுது இரவும் விடிந்தது; நல்லாள் நெஞ்சமும் புலர்ந்தது - பதுமையின் உள்ளமும் தெளிந்தது.
விளக்கம் : அலங்கல் - மாலை. குழல் - கூந்தல். பொலங்கலம் - பொன்னாலியற்றிய அணிகலம். கொடியனாள் : பதுமை. கவான் - துடை. (232)
1398. பண்கனிந் தினிய பாடற் படுநரம் பிளகி யாங்குக்
கண்கனிந் தினிய காமச் செவ்வியுட் காளை நீங்கத்
தெண்பனி யனைய கண்ணீர்ச் சேயிழை தாய ரெல்லாந்
தண்பனி முருக்கப் பட்ட தாமரைக் காடு போன்றார்.
பொருள் : பண் கனிந்து இனிய பாடல் படு நரம்பு இளகி யாங்கு - பண் முற்றுப்பெற்று இனிய பாட்டையுடைய ஒலிக்கின்ற நரம்பு பாடலிலே நெகிழ்ந்தாற்போலே; கண் கனிந்த இனிய காமச் செவ்வியுள் - பதுமையின் மெய்யிடங் குழைந்த இனிய காமச் செவ்வியிலே; காளை நீங்க - சீவகன் நீங்கினான் ஆதலின்; தெண் பனி அனைய கண்ணீர்ச் சேயிழை தாயர் எல்லாம் - தெளிந்த பனித்துளி போன்ற கண்ணீரையுடைய பதுமையின் தாயரெல்லாரும்; தண்பனி முருக்கப்பட்ட தாமரைக் காடு போன்றார் - குளிர்ந்த பனியினால் வெதும்பப்பெற்ற தாமரைக் காடுபோல முகம் கருகினர்.
விளக்கம் : பண்கனிந்து படுநரம்பு இனிய பாடல் படுநரம்பு எனத் தனித்தனி கூட்டுக. கண்கனிந்து என்புழி, கண் இடம் என்னும் பொருட்டு. காளை : சீவகன். சேயிழை : பதுமை. தாயர் : நற்றாயும் செவிலித்தாயரும் என்க. (233)
1399. சில்லரிச் சிலம்பு சூழ்ந்த
சீறடித் திருவி னற்றாய்
முல்லையங் குழலி னாய்நின்
முலைமுதற் கொழுநன் மேனாட்
சொல்லியு மறிவ துண்டோ
வெனக்குழைந் துருகி நைந்து
மெல்லியல் கங்குல் சொல்லிற்
றிற்றென மிழற்று கின்றாள்.
பொருள் : சில் அரிச் சிலம்பு சூழ்ந்த சீறடித்திருவின் நற்றாய் - சில பரல்களையுடைய சிலம்பு அணிந்த சிற்றடியாள் பதுமையின் நற்றாய்; முல்லை அம் குழலினாய் - முல்லைப்போது அணிந்த கூந்தலாய்!; நின்முலை முதற்கொழுநன் - நின் கொங்கையிற் றோய்ந்த கணவன்; மேல் நாள் சொல்லியும் அறிவது உண்டோ என - முன்னாளிலே தன் பிரிவு தோன்றச்சொல்லி நீ அறிந்தது உண்டோ? என்று வினவ; மெல்லியள் குழைந்து உருகி நைந்து - பதுமை அதுகேட்டு நெகிழ்ந்து உருகி வருந்தி; கங்குல் சொல்லிற்று இற்று என மிழற்றுகின்றாள் - இரவு கூறியது இஃது என்று கூறுகின்றாள்.
விளக்கம் : சில் அரி - சிலவாகிய பரல்கள். நற்றாய் : திலோத்தமை. கற்புக் கடம்பூண்டமை தோன்ற முல்லையங் குழலினாய், என்று விளித்தாள். முலைக்கு முதல்வனாகிய கொழுநன் என்க. கொழுநன் - கணவன். மெல்லியல் : பதுமை. இற்று - இத்தன்மைத்து. (234)
வேறு
1400. வினைக்குஞ் செய்பொருட் கும்வெயில் வெஞ்சுர
நினைத்து நீங்குத லாண்கட னீங்கினாற்
கனைத்து வண்டுணுங் கோதையர் தங்கடன்
மனைக்கண் வைகுதன் மாண்பொ டெனச்சொனான்.
பொருள் : நினைத்து - தன் மனைவியை நினைத்து வருத்தினாலும்; வினைக்கும் செய்பொருட்கும் - போர்த்தொழிலுக்கும் ஈட்டும் பொருட்கும்; வெயில் வெஞ்சுரம் - கோடையிலே கொடிய காட்டு நெறியிலே; நீங்குதல் ஆண் கடன் - பிரிந்து செல்லுதல் ஆடவர் தொழில்; நீங்கினால் - அவ்வாறு நீங்கினால்; கனைத்து வண்டு உணும் கோதையர் தம் கடன் - முரன்று வண்டுகள் தேனைப் பருகும் மாலையணிந்த மனைவியர் தொழில்; மாண்பொடு மனைக்கண் வைகுதல் எனச் சொனான் - இறந்து படாமல் இல்லிலே தங்கியிருந்தலாகும் என்று கூறினான்.
விளக்கம் : வினை : ஈண்டுப் போர்த்தொழில். செய்பொருள் : வினைத்தொகை. ஆண்கடன் : ஆடவனுக்குரிய கடமை. கனைத்து - முரன்று. கோதையர் - ஈண்டு மகளிர் என்னும் பொருட்டு. வைகுதல் - ஈண்டு ஆற்றியிருத்தல் என்பதுபட நின்றது. இச்செய்யுட் கருத்தோடு.
ஆண்கடன் அகறல் அதுநோன் றொழுகுதல்.
மாண்பொடு புணர்ந்த மாசறு திருநுதற்.
கற்புடை மகளிர் கடன். (பெருங். 3. 7 : 7 - 9).
எனவரும் பெருங்கதைப் பகுதியை ஒப்புக் காண்க. (235)
1401. விரைசெய் தாமரை மேல்விளை யாடிய
வரைச வன்ன மமர்ந்துள வாயினு
நிரைசெய் நீல நினைப்பில வென்றனன்
வரைசெய் கோல மணங்கமழ் மார்பினான்.
பொருள் : வரை செய் கோலம் மணங்கமழ் மார்பினான் - மலைபோன்று அழகிய மணம் பொருந்திய மார்புடையான்; விரைசெய் தாமரைமேல் விளையாடிய அரச அன்னம் - மணம் கமழும் தாமரைமேல் விளையாடி அரச அன்னங்கள்; நிரை செய் நீலம் அமர்ந்துள ஆயினும் - திரளாகிய நீல மலர்களிடையே பயின்றுளவானாலும்; நினைப்பில என்றனன் - அந்த நீலத்தை நினையா என்றும் கூறினான். (என்று பதுமை கூறினாள்)
விளக்கம் : நீலம் - பரத்தை. தாமரை - குலமகளிர். எனவே குலமகளிரையே இனி நுகர்வேனென்றான்.(236)
1402. பொன்வி ளைத்த புணர்முலை யாள்சொல
வின்ன ளிக்குரல் கேட்ட வசுணமா
வன்ன ளாய்மகிழ் வெய்துவித் தாளரோ
மின்வி ளைத்தன மேகலை யல்குலாள்.
பொருள் : பொன் விளைத்த புணர்முலையாள் சொல - தேமலைத் தோற்றுவித்த புணர்முலையுடையாள் பதுமை இங்ஙனம் கூற; மின்விளைத்தன மேகலை அல்குலாள் - ஒளியைப் பரப்பிய மேகலை அணிந்த அல்குலையுடையாள் ஆகிய நற்றாய்; இன் அளிக்குரல் கேட்ட அசுணமா அன்னளாய் - இனிய அளிக்கத்தக்க குரல் நரம்பின் இசை கேட்ட அசுணமாவைப் போன்றவளாகி; மகிழ்வு எய்துவித்தாள் - பதுமையையும் களிப்படையச் செய்தாள்.
விளக்கம் : அசுணமா : இசையறிவதொரு விலங்கு. சிலர் அசுணத்தைப் பறவை யென்பர். அசுணம் நல்லிசை கேட்டால் மகிழும், தீயவிசை கேட்டால் துன்புறும் என்பர். அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும் (நற். 304) என்றார். (237)
1403. அன்னந் தானவன் றாமரைப் போதுநீ
நின்னை நீங்கின னீங்கலன் காதலா
னின்ன தாலவன் கூறிற் றெனச்சொனாண்
மன்ன னாருயிர் மாபெருந் தேவியே.
பொருள் : மன்னன் ஆருயிர் மாபெருந் தேவி - தனபதி மன்னனின் உயிராகிய பேரரசி; அவன் அன்னந்தான் - சீவகன் அன்னமாவான்; நீ தாமரைப்போது - நீ தாமரை மலராவாய்; நின்னை நீங்கினன் - அவன் வினைமேற் செலவே இப்போது நின்னைப் பிரிந்தான்; காதலான் நீங்கலான் - காதலுடையவனாகையால் நின்னை முழுக்கப் பிரிந்தானலன்; அவன் கூறிற்று இன்னது எனச் சொனாள் - அவன் கூறியதன் கருத்து இதுவே என்று நற்றாய் நவின்றாள்.
விளக்கம் : நீலம் அமர்ந்துளவாயினும் என்பதன் கருத்தைக் கூறிற்றிலள் பதுமை கேட்பின் இறந்துபடுவள் என்று கருதி. நின்னின் நீங்கினன் என்றும் பாடம். (238)
வேறு
1404. சொரிபனி முருக்க நைந்து
சுடர்முகம் பெற்ற போதே
பரிவுறு நலத்த வன்றே
பங்கய மன்ன தேபோல்
வரிவளைத் தோளி கேள்வன்
வருமென வலித்த சொல்லாற்
றிருநலம் பிறந்து சொன்னா
டேனினு மினிய சொல்லாள்.
பொருள் : சொரி பனி முருக்க நைந்து - பெய்யும் பனி வெதுப்புதலிற் கெட்டு; சுடர்முகம் பெற்றபோதே - ஞாயிறு தோன்றும் நிலைமையை அடைந்தபொழுதே; பங்கயம் பரிவுறும் நலத்த அன்றே - தாமரை அன்புறும் பண்பினையுடையவன்றே?; அன்னதேபோல் - அதனைப் போலவே; வரிவளைத் தோளி தேனினும் இனிய சொல்லாள் - வரி வளையணிந்த தோளியாகிய தேனினும் இனிமையான சொல்லையுடையவள்; கேள்வன் வரும் என வலித்த சொல்லால் - கணவன் வருவான் என்று தாய் கூறிய உறுதிமொழியால்; திருநலம் பிறந்து சொன்னாள் - அழகிய நலத்தைப் பெற்று ஒருமொழி கூறினாள்.
விளக்கம் : சொரிபனி : வினைத்தொகை. முருக்குதல் - அழித்தல். சுடர் - ஞாயிறு. பங்கயம் - தாமரை. தோளி : பதுமை. வலித்தசொல் - துணிந்துரைத்த சொல். (239)
1405. நஞ்சினை யமுத மென்று நக்கினு மமுத மாகா
தஞ்சிறைக் கலாப மஞ்ஞை யணங்கர வட்ட தேனு
மஞ்சிறைக் கலுழ னாகு மாட்சியொன் றானு மின்றே
வஞ்சனுக் கினைய நீரேன் வாடுவ தென்னை யென்றாள்.
பொருள் : நஞ்சினை அமுதம் என்று நக்கினும் அமுதம் ஆகாது - கண்ணுக்கினிய தோற்றத்தால் நஞ்சை அமுதென்று எண்ணி நக்கினாலும் அமுதம் ஆகாது; அம்சிறைக் கலாப மஞ்ஞை அணங்கு அரவு அட்டதேனும் - அழகிய சிறகினையும் கலவத்தையும் உடைய மயில் வருத்தம் பாம்பைக் கொல்லுந் தகையதேனும்; அம் சிறைக் கலுழன் ஆகும் மாட்சி ஒன்றானும் இன்று - அழகிய சிறகினையுடைய கருடனைப்போலத் தொலைவிலிருந்தாலும் நினைப்பித்துப் பாம்பை அச்சுறுத்தும் பெருமை சிறிதும் மயிலுக்கில்லை; மஞ்சனுக்கு இனைய நீரேன் வாடுவது என்னை என்றாள் - ஆண்மையுடைய அவனுக்கு நஞ்சும் மயிலும் போலும் நீர்மையுடையேன் அமுதமும் கருடனும் போன்ற மகளிரைப்போல வருந்துவது யாது பயனுடையது என்றாள்.
விளக்கம் : அவன் கூடிய பின்பு நீங்கும் இயல்பைத் தானுடைமையால் தன்னை நஞ்சு என்றாள். நீக்கம் இல்லாத இன்பந் தருதலிற் பிறரை அமுதம் என்றாள். அட்டது என்றார் பாம்பு பல்லுயிரையும் வருத்துந் தன்மையை மயில் கொன்று அஞ்சுவித்தலை உட்கொண்டு; செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள். 110) என்றாற்போல. இதனால் தன் வீறின்மையையும் பிரிவின்கண் வருத்துந் தன்மையின்மையையும் கூறினாள். வீறு : தனியழகு. (240)
வேறு
1406. பொய்கையுட் கமலத் தங்கட்
புள்ளெனு முரச மார்ப்ப
வெய்யவன் கதிர்க ளென்னும்
விளங்கொளித் தடக்கை நீட்டி
மையிருட் போர்வை நீக்கி
மண்ணக மடந்தை கோலம்
பையவே பரந்து நோக்கிப்
பனிவரை நெற்றி சேர்ந்தான்.
பொருள் : பொய்கையுள் கமலத்தங்கண் புள் எனும் முரசம் ஆர்ப்ப - பொய்கைகளிலே தாமரை மலராகிய அழகிய இடத்திலிருந்து வண்டுகள் என்னும் பள்ளியெழுச்சி முரசம் ஆரவாரிக்க; கதிர்கள் என்னும் விளங்கு ஒளித் தடக்கை நீட்டி - கதிர்களாகிய விளக்கம் பொருந்திய ஒளியுறும் பெருங்கையினை நீட்டி; மைஇருள் போர்வை நீக்கி - காரிருளாகிய போர்வையை எடுத்துவிட்டு; மண்ணக மடந்தை கோலம் - நிலமகளின் ஒப்பனையை; பையவே பரந்து நோக்கி - மெல்ல விழிகளைப் பரப்பிப் பார்க்க; வெய்யவன் பனிவரை நெற்றி சேர்ந்தான் - ஞாயிறு குளிர்ந்த உதயகிரியின் முகட்டிலே வந்து சேர்ந்தான்.
விளக்கம் : நோக்கி - நோக்க : எச்சத்திரிபு. நிலமகள் கோலத்தைப் பையப்பரவி மனத்தாலே நோக்கி என்பர் நச்சினார்க்கினியர்.
(241)
1407. செவ்வழி யாழி னூறுந் தீஞ்சொலாட் குற்ற தெல்லா
மவ்வழி யரசற் குய்த்தார்க் கரசனு மவல மெய்தி
யெவ்வழி யானு நாடி யிமைப்பின தெல்லை யுள்ளே
யிவ்வழித் தம்மினென்றா னிவுளித்தேர்த் தானை யானே.
பொருள் : செவ்வழி யாழின் ஊறும் தீஞ்சொலாட்கு உற்றது எல்லாம் - மகர யாழைப்போல இனிமையூறும் சொல்லாளாகிய பதுமைக்கு நேர்ந்ததை யெல்லாம்; அவ்வழி அரசற்கு உய்த்தார்க்கு - அந் நிலையிலே அரசனுக்கு அறிவித்தவர்கட்டு; இவுளித்தேர்த் தானையான் அரசனும் - குதிரைகள் பூட்டிய தேர்ப் படையை உடைய அரசனும்; அவலம் எய்தி - வருந்தி; எவ்வழியானும் நாடி - எல்லா நெறியினுஞ் சென்று தேடி; இமைப்பினது எல்லையுள்ளே இவ்வழித் தம்மின் என்றான் - ஒரு நொடியளவிலே இங்குக் கொண்டு வருக என்று பணித்தான்.
விளக்கம் : செவ்வழியாழ் - செவ்வழிப்பண்ணுமாம். தீஞ்சொலாள் : பதுமை. அரசன் - ஈண்டுத் தனபதி. இமைப்பினதெல்லை - ஒரு நொடிப்பொழுதில். இவுளி - குதிரை. தானையான் : தனபதி. (242)
வேறு
1408. மின்னுளே பிறந்ததோர் மின்னின் மேதகத்
தன்னுளே பிறந்ததோர் வடிவு தாங்குபு
முன்னினான் வடதிசை முகஞ்செய் தென்பவே
பொன்னுளே பிறந்தபொன் னனைய பொற்பினான்.
பொருள் : பொன்னுளே பிறந்த பொன் அனைய பொற்பினான் - பொன்னிலே தோன்றிய பொன்னைப் போன்ற அழகினான் ஆகிய சீவகன்; மின்னுளே பிறந்தது ஓர் மின்னின் - மின் முகிலாக அதற்குள்ளே பிறந்த ஒரு மின்னைப்போல; மேதகத்தன்னுளே பிறந்தது ஓர் வடிவம் தாங்குபு - பொருந்துவதற்குத் தகுதியாகிய தன்னிடத்திலே உண்டாகியதொரு வடிவை (பிறர் அறியாமலிருக்க) தான் தாங்கி; வடதிசை முகம் செய்து முன்னினான் - வடதிசையை நோக்கிப்போகக் கருதினான்.
விளக்கம் : விரைவுக்கும் வடிவிற்கும் மின் உவமை. இஃது இல் பொருளுவமை. இதனால் தூர கமனஞ் கூறினாரென்பர் நச்சினார்க்கினியர். பொன்னுளே பிறந்தபொன் - மாசகன்ற பொன். (243)
1409. வீக்கினான் பைங்கழ னரல வெண்டுகி
லாக்கினா னிருதுணி யணிந்த பல்கல
னீக்கினா னொருமகற் கருளி நீணெறி
யூக்கினா னுவவுறு மதியி னொண்மையான்.
பொருள் : உவவு உறும் மதியின் ஒண்மையான் - முழுத் திங்களைப் போன்ற கலைகளையுடையவனும்; பைங்கழல் நரல வீக்கினான் - முன்பு புதிய கழலை ஒலிக்கக் கட்டியவனுமாகிய சீவகன்; வெண்துகில் இருதுணி ஆக்கினான் - கடிதுசெல்ல வெண்மையான ஆடையை இரண்டு துண்டாகக் கிழித்தணிந்தான்; பல்கலன் ஒருமகற்கு அருளி நீக்கினான் - பலவகைப் பூண்களையும் எதிர்ப்பட்ட ஒருவனுக்குக் கொடுத்துப் போக்கினான்; நீள்நெறி ஊக்கினான் - நீண்ட நெறியிலே செல்ல முயன்றான்.
விளக்கம் : வீக்கினான் : வினையாலணையும் பெயர். துகில் இருதுணி ஆக்கினான் என மாறுக. கடிதிற் செல்லுதற்பொருட்டு நொய்தாக என்றது எதிர்ப்பட்ட ஆடையை இரண்டாகக் கிழித்தனன் என்பது கருத்து. ஒரு மகற்கு ஓர் ஏதிலனுக்கு என்பதுபடநின்றது. ஊக்கினான் - முயன்றான். உவவுறுமதி - கலைகணிரம்பிய முழுமதி. (244)
வேறு
1410. வேந்தனால் விடுக்கப் பட்டார்
விடலையைக் கண்டு சொன்னா
ரேந்தலே பெரிது மொக்கு
மிளமையும் வடிவு மிஃதே
போந்ததும் போய கங்குல்
போம்வழிக் கண்ட துண்டேல்
யாந்தலைப் படுது மைய
வறியினீங் குரைக்க வென்றார்.
பொருள் : வேந்தனால் விடுக்கப்பட்டார் விடலையைக் கண்டு சொன்னார் - தனபதி மன்னனால் ஏவப்பட்டோர் (வடிவை மாற்றிப் போதற்கு முயன்ற) சீவகனைக் கண்டு கூறினார்; ஏந்தலே பெரிதும் ஒக்கும் - ஏந்தலாகிய நின்னையே பெரிதும் ஒப்பான்; இளமையும் வடிவும் இஃதே - அவனுடைய இளமைப் பருவமும் வடிவமும் இத் தன்மையே; போந்ததும் போய கங்குல் - அவன் வெளிவந்ததும் சென்ற இரவிலேயே; போம் வழிக் கண்டது உண்டேல் யாம் தலைப்படுதும் - நீ போந்த நெறியிலே அவனைக் கண்டிருந்தால் (அவ்விடத்தைக் கூறினால்) யாங்கள் கண்டு கொள்வோம்; ஐய! அறியின் ஈங்கு உரைக்க என்றார் - ஐயனே! அறிந்திருந்தாற் கூறுக என்று வினவினர்.
விளக்கம் : போகின்ற இடத்து யாங்கள் அவனைக் கண்டதுண்டாயின் அப் பொழுதே சென்று தலைப்படுவேம் என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர் அது வறுங்கூற்றாய் முடிதல் காண்க. அற்றேல், கண்டதுண்டேல் எனவும், அறியின் எனவும் இருமுறை ஒரு பொருளையே தருஞ்சொற்கள் வந்தனவால் எனின், கண்டிருந்தால் அவ்விடஞ் சென்று தலைப்படுகிறோம்; ஆகவே, அறியின் உரைத்திடுக என்றாராதலின் பயன் கருதியே இருமுறை வந்தன என்க. இளமையும் இஃதே வடிவும் இஃதே எனச் சுட்டுச்சொல்லை ஈரிடத்தும் ஒட்டுக. (245)
1411. நெய்கனிந் திருண்ட வைம்பா
னெடுங்கணாள் காத லானை
யையிரு திங்க ளெல்லை
யகப்படக் காண்பி ரிப்பாற்
பொய்யுரை யன்று காணீர்
போமினம் போகி நுங்கண்
மையலங் களிற்று வேந்தன்
மைந்தனுக் குரைமி னென்றான்.
பொருள் : நெய்கனிந்து இருண்ட ஐம்பால் நெடுங்கணாள் காதலானை - நெய் நிறைந்து கறுத்த ஐம்பாலையும் நெடுஞ்கண்களையும் உடையவளின் கணவனை; ஐயிரு திங்கள் எல்லை அகப்படக் காண்பிர் - பத்துத் திங்களின் அளவிலே அகப்படக் காண்பீர்; இப்பால் காணீர் - இவ் வெல்லைக்குள்ளே காணீர்; பொய் உரை அன்று - யான் கூறுவது பொய்ம்மொழி யன்று; போமின் - ஆகவே, இனித் திரும்பிச் செல்லுமின்; போகி நுங்கள் மையல்அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரைமின் என்றான் - சென்று நுங்கள், மயக்கமுற்ற களிற்றையுடைய வேந்தனுக்கும் அவன் மைந்தனுக்கும் உரைப்பீராக என்றான்.
விளக்கம் : ஏவலாளர், நும்போன்ற ஒருவன் என்றே கூறினாராக, இவன், நெடுங்கணாள் காதலானை எனவும், வேந்தனுக்கும் மைந்தனுக்கும் எனவும் கணியொருவன் கூறுவதுபோலக் கூறினான், தான்கூறும் மொழி உண்மையென அவர்களுணர்ந்துபோய்க் கூறுதற்கு. ஐயிரு திங்கள் எல்லை அகப்பட என்றது, பத்தாகிய எல்லைக்குள்ளே ஒரு திங்கள் குறைய என்றவாறு. எனவே. ஒன்பதாந் திங்களாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். போமினம் : அம் : அசை. (246)
பதுமையார் இலம்பகம் முற்றிற்று.
------------------
This file was last updated on 17 April 2019.
Feel free to send the corrections to the webmaster.