திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும்
பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
பாகம் 4 (6. கேமசரியார் இலம்பகம் (1412-1556) &
(7. கனகமாலையார் இலம்பகம் 1557 - 1888)
cIvaka cintAmani - part 4 (verses 1412 -1888)
of tiruttakka tEvar with commentaries
of M.P. cOmacuntaranAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும் பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
பாகம் 4 (கேமசரியார் இலம்பகம் 1412- 1556) &
(கனகமாலையார் இலம்பகம் 1557 - 1888)
Source:
திருத்தக்க தேவர் இயற்றிய "சீவகசிந்தாமணி" மூலமும்
புலவர் 'அரசு' பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
ஆகியோர் எழுதிய உரையும்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1961
உள்ளடக்கம்
பதிப்புரை
அணிந்துரை
நூலாசிரியர் வரலாறு
I. கடவுள் வாழ்த்து, பதிகம் 1-29 (29)
II. நூல்
1. நாமகள் இலம்பகம் 30-408 (379)
2. கோவிந்தையார் இலம்பகம் 409- 492 (84)
3. காந்தருவதத்தையார் இலம்பகம் 493- 850 (358)
4. குணமாலையார் இலம்பகம் 851- 1165 (315)
5. பதுமையார் இலம்பகம் 1166- 1411
6. கேமசரியார் இலம்பகம் 1412- 1556
7. கனகமாலையார் இலம்பகம் 1557 - 1888
8. விமலையார் இலம்பகம் 1889 - 1994
9. சுரமஞ்சரியார் இலம்பகம் 1995 - 2101
10. மண்மகள் இலம்பகம் 2102 - 2326
11. பூமகள் இலம்பகம் 2327 - 2377
12. இலக்கணையார் இலம்பகம் 2378 - 2598
13. முத்தி இலம்பகம் 2599 - 3145
செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை
அருஞ்சொற்களின் அகரவரிசை
-----------
திருத்தக்க தேவர் இயற்றிய சீவகசிந்தாமணி
மூலமும் புலவர் 'அரசு' பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
ஆகியோர் எழுதிய உரையும்
6. கேமசரியார் இலம்பகம் (1412-1556)
கதைச் சுருக்கம்: சுதஞ்சணன் கூறிய நெறி பற்றிச்சென்ற சீவகன் சித்திர கூடம் என்னும் சிறந்ததொரு தவப்பள்ளியை எய்தினன். ஆண்டுள்ள தாபதர்களோடு அளவளாவி அவர்க்கு அறவுரை பல கூறித் திருத்தினன். அப்பள்ளியினின்றும் புறப்பட்டுத் தக்க நாட்டிற் புகுந்தனன். அந்நாட்டின் தலைநகராகிய கேமமாபுரத்தை எய்தினன். இனி அந்நகரத்தில் வாழும் சுபத்திரன் என்னும் வணிகனுக்குக் கேமசரி என்னும் ஓர் அழகிய மகளிருந்தனள். அம்மகள் பிறந்தபொழுது சுபத்திரன் கணிகளை அழைத்து இவட்குக் கணவன் யாவன்? என வினவினன். அக் கணிகள், நின்மகள் எவனைக் கண்டு நாணுகின்றனளோ! அவ்வாடவனே இவட்குக் கணவன் ஆகுவன். இவட்குப் பிற ஆடவரைக் காணுங்கால் நாணந் தோன்றமாட்டாது, என உணர்த்தியிருந்தனர். இக் காரணத்தால் அவ்வணிகன் நாடொறுந் தன் கடைக்குவரும் அழகிய இளைஞரைத் தன்மனைக்கழைத்துச்சென்று விருந்தூட்டுவன், அத்தகையோருள் ஒருவரையும் கேமசரி கண்டு நாணமுற்றிலள். மணப்பருவம் கழிந்து விடுமோ என்று சுபத்திரன் வருந்தியிருந்தான்.
சீவகன் ஊழ்வலியுண்மையால் சுபத்திரன் கடைக்குச் சென்றனன். இவனது எழிலும் இளமையும் கண்ட சுபத்திரன் வியப்புற்றனன். இவனையும் சுபத்திரன் தன்னில்லத்திற்கழைத்துச்சென்று விருந்தூட்டினன். சீவகனைக் கண்ட கேமசரி பெரிதும் நாணமுற்றனள். அவன்பாற் காதன்மிக்கு வருந்தா நின்றனள். அவ்வழி சுபத்திரன் சீவகனுக்குக் கேமசரியை மணம் செய்வித்தனன். அம்மங்கை நல்லாளுடன் சீவக நம்பி இரண்டு திங்கள் இன்புற்றிருந்தனன். பின்னர்க் கேமசரி யறியாதபடி, அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்றான். வழியில் ஒருவனுக்கு அறவுரை பகர்ந்து தன் அணிகலன்களை அவனுக்கு வழங்கினன்; வழங்கி அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்றான். கேமசரி பிரிவாற்றாது பெரும் பேதுற்றனள். அவள் தாயாகிய நிப்புதி அவளை அரிதில் தேற்ற ஒருவாறு தேறியிருந்தனள்.
1412. வானின் வழங்கும் வண்கை மணிசெய் யார மார்பிற்
றேனும் வழங்கும் பைந்தார் விசையை சிறுவன்றேங்கொ
ணானம் வழங்குங் கோதை நைய வெய்ய வாய
கானம் வழங்கன் மேவிக் காலின் னேகி னானே.
பொருள் : வானின் வழங்கும் வண்கை - முகிலெனக் கொடுக்கும் கொடைக்கையினையும்; மணிசெய் ஆரம் மார்பின் - முத்துக்களால் ஆகிய மாலையணிந்த மார்பினையும்; தேனும் வழங்கும் பைந்தார் - மணமேயன்றித் தேனையும் நல்கும் பசிய தாரினையும் உடைய; விசையை சிறுவன் - விசையையின் மகன்; தேம்கொள் நானம் வழங்கும் கோதை நைய - வண்டுகள் தங்கும் புழுகு கமழும் மாலையாள் பதுமை வருந்த; வெய்ய ஆய கானம் வழங்கல்மேவி - கொடியன ஆகிய காடுகளிலே செல்லுதலை மேற்கொண்டு; காலின் ஏகினான் - காலால் நடந்து சென்றான்.
விளக்கம் : கை மார்பு தார் என்னும் மூன்றும் சிறுவனுக்கு அடை மொழிகள். கை முதலியவற்றையுடைய சிறுவன்; விசையை சிறுவன் எனத் தனித்தனி கூட்டுக. தேம் - தேன். காலின் ஏகினான் என்றது ஊர்திகளின்றி என்பதுபட நின்றது. நானம் - புழுகு. கோதை : ஆகுபெயர்; பதுமை. விசையை சிறுவன், காலின் ஏகினான் என்பன சீவகன் நிலைக்கு இரங்கிய நூலாசிரியரின் இரக்கமொழிகள். தேனும் : உம் : இசைநிறை. காலின் - காற்றைப்போல என்றலுமாம். ( 1 )
1413. சிலைகொ ணாணிற் றீராத் திருந்து கற்பின் னவர்த
மிலைகொள் பூந்தா ருழுத வின்ப வருத்த நீங்க
முலைகொள் கண்கள் கண்ணின் னெழுதி முள்கு மொய்ம்பன்
மலைகொள் கானம் முன்னி மகிழ்வோ டேகு கின்றான்.
பொருள் : சிலைகொள் நாணின் தீராத் திருந்து கற்பினவர் தம் - வில் தன்பாற் கொண்டுள்ள நாண் தான் கெடுமளவும் முறுக்குடையாததைப்போல இறுமளவும் கெடாத திருந்திய கற்பினையுடைய மகளிர்பால்; இலைகொள் பூந்தார் உழுத - (தன் மார்பிலணிந்த) இலைமிடைந்த மலர்மாலை உழுததால் உண்டான; இன்ப வருததம் நீங்க -இன்பச் சோர்வு தவிர; முலைகொள் கண்கள் கண்ணின் எழுதி முள்கும் மொய்ம்பன் - அவர்களுடைய முலை தம்மிடத்தே கொண்டுள்ள கண்களைத் தன் கண்களால் எழுதி முயங்கும் தோள்களையுடையவன்; மலைகொள் கானம் முன்னி - மலைகளையுடைய காட்டைப் பொருந்தி; மகிழ்வோடு ஏகுகின்றான் - களிப்புடன் செல்கின்றான்.
விளக்கம் : வில்நாண் பசையிட்டு முறுக்கப்படுதலால் தான் அழியுந் துணையும் முறுக்குடைதலின்று; அதுபோல அன்பாற் பிணைக்கப் படுதலின் இறுமளவும் பிறழ்தலில்லாக் கற்பினையுடையோர் என்பார் நாணிற் றீராக் கற்பின்னவர் என்றார். முலைக் கண்களின் எழிலைக் கூர்ந்து நோக்கித் தன்னுள்ளக் கிழியின் எழுதிப் பின் முயங்குபவன் என்றவாறு. இதனால் காட்சியின்பமும் உற்றின்பமும் ஒருங்கே கூறப்பட்டன. முள்குதல் - முயங்குதல். மலையும் கானமு முதலியவற்றின் எழில் கண்டு மகிழ்வதென் நோக்கம் என்று சீவகன் சுதஞ்சணனுக்குக் கூறியதற்கிணங்க (1175) ஈண்டு மகிழ்வோடேகுகின்றான் என்ற நயம் உணர்ந்து மகிழ்க.
இச் செய்யுளும் நூலாசிரியரின் இரக்கத்தைக் காட்டுகின்றது. ( 2 )
1414. கனிகொள் வாழைக் காட்டுட்
கருமை மெழுகி யவைபோன்
றினிய வல்லா முகத்த
முசுவுங் குரங்கு மிரியத்
துனிவு தீர நோக்கித்
தோன்றல் செல்லு முன்னாற்
பனிவெண் டிரைசூழ் கடல்போற்
பழுவந் தோன்றிற் றவணே.
பொருள் : கனிகொள் வாழைக்காட்டுள் - பழமுடைய வாழைக்காட்டிலே; கரு மை மெழுகியவைபோன்று இனிய அல்லா முகத்த - கரிய மையை மெழுகிவைத்தவை போலும் அழகில்லாத முகத்தையுடையனவாகிய; முசுவும் குரங்கும் இரியத் துணிவுதீர நோக்கி - முசுவும் குரங்கும் தன்னைக் கண்டு அஞ்சி ஓடுதலின், அவற்றின் அச்சம் நீங்குமாறு அருளுடன் நோக்கி; தோன்றல் செல்லும் முன்னால் - தலைவன் போகும் அவ்விடத்தின் முன்னே; பனி வெண் திரைசூழ் கடல்போல் - குளிர்ந்த வெள்ளிய அலைசூழ் கடல்போல; பழுவம் தோன்றிற்று - ஒரு காடு தோன்றியது; அவண் - அவ்விடத்தே.
விளக்கம் : முசு - கருங்குரங்கு. இரிதல் - கெட்டோடுதல், துனிவு - துன்பம். நோக்கி என்றது அவற்றின் அச்சந்தீர்தற்குக் காரணமான அருட்பார்வையாலே நோக்கி என்பதுபட நின்றது, இதனால் சீவக நம்பியின் பேரருளுடைமை கூறப்பட்டது. கடத்தற் கின்னாக் கல்லதர் அத்தம் இதுவே என்றுணர்த்தற்குப் பணி வெண்திரைசூழ் கடல் போற் பழுவம் என்றார். பழுவம் - காடு. ( 3 )
1415. பருகு வாரிற் புல்லிப்
பயங்கண் மாறத் துறக்கு
முருகு விம்மு குழலார்
போல மொய்கொ டும்பி
யுருவப் பூங்கொம் பொசியப்
புல்லித் தீந்தேன் பருகி
யருகு வாய்விட் டார்ப்ப
வண்ணன் மெல்லச் சென்றான்.
பொருள் : பருகுவாரின் புல்லி -நீரைப் பருகுவாரைப் போல ஆர்வமுறத் தழுவி; பயம் கண்மாறத் துறக்கும் - பொருள் மாறினவுடனே தம்மை அடைந்த ஆடவரை விட்டுப் பிரிகின்ற; முருகு விம்மு குழலார் போல -மணம் பொங்கும் கூந்தலையுடைய பரத்தயரைப்போல; மொய்கொள் தும்பி - செறிவுகொண்ட வண்டுகள்; உருவப் பூங்கொம்பு ஒசியப் புல்லித் தீம் தேன் பருகி - அழகிய மலர்க்கொடி சாயத் தழுவி இனிய தேனை நுகர்ந்து; வாய்விட்டு அருகு ஆர்ப்ப - தேன் வற்றியவுடனே மலர்க்கொடியை விட்டு அருகிலேயே தூற்றுவனபோல ஆரவாரிப்ப; அண்ணல் மெல்லச் சென்றான் - சீவகன் அதனைக் கண்டு மெல்லச் சென்றான்.
விளக்கம் : பருகுவார் என்னும் வினைக்குத்தகுதி பற்றி நீர் என்னும் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது. பயம் - பொருள்: ஆகுபெயர். பயங்கண் மாறத் துறக்குங் குழலார் எனவே அவர் புல்லுவது பொருள் உளவாயபொழுதே என்பது பெற்றாம். அகத்தே அன்பில்லார் என்பது பட முருகுவிம்மு குழலார் என்றார். எனவே பொருட் பெண்டிர் என்றாராயிற்று. பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிர் என்றார் பிறரும் (மணி.18 108-9.) அப் பழுவத்துட் புகாமல் சித்திரகூட நோக்கிச் சென்றான் என்பது தோன்றபுக்கான் என்னாது சென்றான் என்றார். ( 4 )
1416. செல்வர் மனத்தி னோங்கித் திருவின் மாந்தர் நெஞ்சி
னெல்லை யிருளிற் றாகிப் பூந்தா தினிதி னொழுகிக்
கொல்லும் மரவின் மயங்கிச் சிறியார் கொண்ட தொடர்பிற்
செல்லச் செல்ல வஃகு நெறிசேர் சிலம்பு சேர்ந்தான்.
பொருள் : செல்வர் மனத்தின் ஓங்கி - திருவுடையார் உள்ளம்போல மேல்நோக்கி; திரு இல் மாந்தர் நெஞ்சின் எல்லை இருளிற்று ஆகி - செல்வம் இல்லாதார் நெஞ்சுபோலப் பகலினும் இருளையுடையதாய்; பூந்தாது இனிதின் ஒழுகி - மரகந்தம் இனியதுபோல ஒழுகி; கொல்லும் அரவின் மயங்கி - கொல்லும் பாம்புபோலத் தலைமறைந்து; சிறியார் கொண்ட தொடர்பின் - கீழ்மக்கள் கொண்ட நட்பைப்போல; செல்லச் செல்ல அஃகும் நெறிசேர் - செல்லச்செல்லக் குறையும் வழிபொருந்திய ; சிலம்பு சேர்ந்தான் - மலையைச் சென்றடைத்தான்.
விளக்கம் : செல்வர் மனத்தின் என்புழி ஆகூழால் திருவுடையராய கீழ்மக்களின் நெஞ்சம்போல என்று கொள்க. என்னை? மேலலார் செல்வமேபோல் தலைநிறுவி என இவரே முன்னருங் கூறுதல் காண்க. ஓங்குதல் மனதிற் செருக்குற்று நிமிர்தல். நெறிக்கு ஏறுதற்கரிய தாய்ச் செல்லச் செல்ல உயர்ந்துபோதல் எனக் கொள்க. இனிதின் என்புழி இன் ஐந்தாவதன் உருபு; ஒப்புப் பொருளில் வந்தது. இனிது போல எனவே காட்சிமாத்திரையான் இனிதுபோலத் தோன்றிப் பின் துயர்தருவது என்பது பெற்றாம். பூந்தாது துன்பந் தருவதாதலை : மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச் - சண்பகம் நிறைத்த தாதுசேர் பொங்கர் - பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் - கையறு துன்பங்காட்டினுங் காட்டும் (சிலப், 10-68-71 ) என்றார் பிறரும். இனி மாவின் மயங்கி என்று பாடம் ஓதிப் புலி முதலியவற்றால் மயங்கி யென்றும் உரைப்பர். ( 5 )
1417. சுனைகள் கண்க ளாகச் சூழ்ந்த குவளை விழியா
வனைய லாகா வுருவ நோக்கி மைந்தற் கிரங்கி
இனைவ போலும் வரையின் னருவி யினிதி னாடி
நனைகொள் போது வேய்ந்து நாதற் பாடு கின்றான்.
பொருள் : வரை சூழ்ந்த சுனைகள் குவளை கண்களாக விழியா - மலைகள் தம்மிடத்திற் சூழ்ந்துள்ள சுனைகளில் உள்ள குவளை மலர்கள் கண்களாக விழித்துப் பார்த்து; மைந்தற்கு வனையல் ஆகா உருவம் நோக்கி இரங்கி - சீவகனுக்குரிய எழுத வியலாத உருவத்தைக் கண்டு வருந்தி; இனைவபோலும் அருவி - அழுவனபோலும் தோற்றமுள்ள அவ்வருவியிலே; இனிதின் ஆடி - மகிழ்வுடன் குளித்து; நனைகொள் போது வேய்ந்து - தேன் பொருந்திய சுனைமலராலே இறைவன் திருவடிகளை மறைத்து; நாதன் பாடுகின்றான் - இறைவனைப் பாடத்தொடங்கினான்.
விளக்கம் : வரைகள் தம்மைச் சூழ்ந்த சுனைகள் கண்களாக அவற்றின் மலர்ந்த குவளை மலர்கள் கருவிழிகளாகக் கொண்டு நோக்கிக் கண்ணீர் வீழ்ந்து அழுவன போலத் தோன்றுதற்குக் காரணமான இனிய அருவியின் ஆடி என்று இயைத்தல் வேண்டும். நச்சினார்க்கினியர் உரையில் தன்னைச் சூழ்ந்த என்றிருத்தல், தம்மைச் சூழ்ந்த என்றிருத்தல் வேண்டும், திருத்தாத வழி, ஒருமை பன்மைகள் எழுவாய் முதலியன தலைதடுமாறுதலுணர்க. நாதன் - இறைவன். நச்சினார்க்கினியர் சுனைகளை எழுவாயாக்குதல் சிறப்பாகத் தோன்றவில்லை. ( 6 )
வேறு
1418. செய்தா னிருவினையின்
பயத்தைச்சேருஞ் சென்றென்றி
யெய்தா னதன்பயத்தைப்
பிறனேதுய்த்த லியல்பென்றி
கொய்தாமந் தாழ்ந்தொசிந்த
குளிர்பூம்பிண்டிக் கோமானே
யிஃதேநின்சொ லியல்பென்றா
லடியேனின்னைத் தொழுதேனே.
பொருள் : செய்தான் இருவினையின் பயத்தைச் சென்று சேரும் என்றி - இருவினையையுஞ் செய்த ஒருவன் அவ் வினையின் பயனைச் சென்று நுகரும் என்று கூறுகின்றாய் (அவ்வாறு கூறிய நீயே); அதன் பயத்தை எய்தான் பிறனே துய்த்தல் இயல்பு என்றி - இருவினைப் பயனைச் செய்தவனே அடையான், மற்றவன் நுகர்தலே இயற்கை என்றாய்; கொய்தாமம் தாழ்ந்து ஒசிந்த குளிர்பூம்பிண்டிக் கோமானே - கொய்து தொடுத்த மாலை தங்கி நுடங்கும் தண்ணிய மலர்ப்பிண்டியின் நீழலில் எழுந்தருளிய இறைவனே!; இஃதே நின்சொல் இயல்பு என்றால் - இவ்வாறு இரண்டுபட்டிருக்கும் இதுவே நீ மொழியும் மொழிகளின் தன்மையென்றால்; அடியேன் நின்னைத் தொழுதேனே - அடியேன் அஞ்சி நின்னை வணங்குகின்றேன்.
விளக்கம் : இருவினை - நல்வினையுந் திவினையும். பயம் - பயன். அவையாவன - இன்பமுந் துன்பமும். இஃதே என்னுஞ் சுட்டு இங்ஙனம் இரண்டுபட்டிருக்குமிதோ என்பதுபட நின்றது. உயிர் ஒன்றாதலின் செய்தவனே வினைப்பயனைத் துய்த்தல் இயல்பு என்றும், உயிர் ஒன்றாயினும் பல பிறப்பு எடுத்துப் பல உடம்புகளினாலும் அவ் வினைப்பயனைத் துய்த்தலின் பிறனே துய்த்தல் இயல்பு என்றும் கூறினார் என்க. என்றி : நிகழ்கால முன்னிலை ஒருமை முற்று. ( 7 )
1419. உண்டே தனதியல்பி
னுணருங்காலை யுயிரென்றி
யுண்டாய வ்வவுயிரே
பிறிதினில்லை யெனவுரைத்தி
வண்டார்த்து நாற்காதம்
வண்ணமாலை சுமந்தொசிந்து
கொண்டேந்து பூம்பிண்டிக்
கோமானின்னைத் தொழுதேனே.
பொருள் : உயிர் தனது இயல்பின் உணருங்காலை உண்டே என்றி - உயிர் தனது இயல்பால் உணர்ந்தால் உண்டே என்று கூறுகின்றாய்; உண்டாய அவ்வுயிரே பிறிதின் இல்லை என உரைத்தி - இருக்கின்றதாக உணரப்பட்ட அவ்வுயிரே மற்றொன்றின் இயல்பால் இல்லையென்று கூறுகின்றாய்; வண்டு ஆர்த்து நாற்காதம் வண்ணமாலை சுமந்து ஒசிந்துகொண்டு ஏந்து பூம்பிண்டிக் கோமான் - வண்டுகள் முரன்று நாற்காதம் பரவி அழகிய மாலைகளைச் சுமந்து நுடங்கிக்கொண்டு ஏந்து மலர்ப் பிண்டிக்கோமானே!; நின்னைத் தொழுதேன் - (ஆதலால், ஒரு பொருளிலே உண்டும் இல்லையுங் கூறிய) நின்னை அஞ்சி வணங்கினேன்.
விளக்கம் : உயிர் தனதியல்பின் உணர்தலாவது, மெய்ப்பொருளாந்தனது இயல்பில் வைத்து ஆராய்ந்துணர்தல். பிறிதின் இயல்பால் ஆராய்தலாவது, உடல் முதலிய பொய்ப் பொருளின்கண் வைத்து ஆராய்தல். இதனாற் கூறியது மெய்யுணர்வார்க்கு உயிர் உள்பொருள்; அஃதுணரமாட்டார்க்கு அஃதில் பொருள் என்பதாம். பூம்பிண்டிக் கோமான் : விளி : அருகன். இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் : உயிர் ஒருவனிடத்துண்டு; தூணில் இல்லை. ஆதலால், உயிர் தனக்கே உண்டும் இல்லையும் தங்கின. இத் தன்மை வேறுபாட்டால் அங்கில்லை என்பர். ( 8 )
1420. காதலா லெண்வினையுங்
கழிபவென்றி யக்காத
லாதலா லெண்வினையுங்
கழியாவென்று மறைதியாற்
போதுலாய்த் தேன்றுளித்துப்
பொழிந்துவண்டு திவண்டுலாங்
கோதைதாழ் பூம்பிண்டிக்
கோமானின்னைத் தொழுதேனே.
பொருள் : காதலால் எண் வினையும் கழிப என்றி - காதலினால் எண்வகை வினையும் கழிகின்றன என்கிறாய்; அக் காதல் ஆதலால் எண்வினையும் கழியா என்றும் அறைதி - அக் காதலே மற்றொன்றின் ஆகும்போது எண்வினையும் கழியா என்றும் அறைகின்றாய்; போது உலாய்த் தேன்துளித்துப் பொழிந்து வண்டு திவண்டு உலாம் கோதை தாழ் பூம்பிண்டிக் கோமான் - மலர்கள் சூழ்ந்து தேன்துளிகொண்டு பெய்து வண்டுகள் அசைந்து உலவும் மாலை தங்கிய மலர்ப்பிண்டிக் கோமானே!; நின்னைத் தொழுதேன் - இவ் வேறுபட்ட மொழியால் அஞ்சி நின்னை வணங்கினேன்.
விளக்கம் : எண்வினையாவன : அப்பிரத்தியாக்கியானக் குரோதம், அப்பிரத்தியாக்கியான மானம் அப்பிரத்தியாக்கியான மாயை, அப்பிரத்தியாக்கியானலோபம், பிரத்தியாக்கியான குரோதம், பிரத்தியாக்கியான மானம், பிரத்தியாக்கியான மாயை, பிரத்தியாக்கியான லோபம் என்னுமிவ் வெட்டுமாம். இவற்றின் விளக்கம் முத்தியிலம்பகத்தில் (3076) கூறப்படும், ஆண்டுக் காண்க. இச் செய்யுள்,
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள். 350)
என்றும்,
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு (குறள். 347)
என்றும் வரும் இரண்டு திருக்குறட் கருத்தினையுந் தன்பாற் கொண்டுளது.
கழிப : பலவறிசொல்.
இவை இருபுறவாழ்த்து; தேவபாணித் தாழிசைக்கொச்சக ஒருபோகு. இவற்றின் இடையிடையே நாலசைச்சீர்களும் வந்துள்ளன.
( 9 )
வேறு
1421. இனிதி னிங்ஙன மேத்தி வலங்கொண்டு
முனிவர் சித்திர கூடமு னாதெனத்
தனிதி னேகுபு தாபதர் வாழ்வதோர்
பனிகொள் பூம்பொழிற் பள்ளிகண் டானரோ.
பொருள் : இங்ஙனம் இனிதின் ஏத்தி வலம்கொண்டு - இவ்வாறு குரலின் இனிமையோடு வாழ்த்தி வலம்புரிந்துவிட்டு; முனிவர் சித்திரகூடம் முனாது என - முனிவருடைய சித்திரகூடம் முன்னுள்ளதென்று சுதஞ்சணன் கூறியதால்; தனிதின் ஏகுபு - (அதனைக் காண எண்ணித்) தனியே சென்று; தாபதர் வாழ்வது ஓர் பனிகொள் பூம்பொழில் பள்ளிகண்டான் - தாபதர்கள் வாழ்வதாகிய ஒரு குளிர்ச்சி தங்கிய மலர்ப்பொழிலில் உள்ள பள்ளியைக் கண்டான்.
விளக்கம் : சித்திரகூடம், பள்ளியின் பெயர். தனித்து என்பது தனிது என விகாரப்பட்டது. தனிதின் : இன் : அசை. அரோ : அசை. இனிதின் என்புழி இன் அசைச்சொல். என - என்று சுதஞ்சணன் முற்கூறியிருந்தமையால் (1190). ( 10 )
1422. புல்லு மல்லியும் போகுயர் நீள்கழை
நெல்லு நீர்விளை கேழலுந் தோரையு
மல்ல தீம்பழங் காய்கிழங் காதியா
நல்ல வேநுகர் வார்பள்ளி நண்ணினான்.
பொருள் : புல்லும் அல்லியும் போகுஉயர் நீள்கழை நெல்லும் நீர்விளை கேழலும் தோரையும் - (ஊனை நுகராமல்) புல்லும் அல்லியும் மிக உயர்ந்த மூங்கிலரிசியும் நீரில்விளை குளநெல்லும் தோரை என்னும் நெல்லும்; அல்ல தீம் பழம் காய்கிழங்கு ஆதி ஆ - ஆகிய இவையல்லாமலும் இனிய பழமும் காயும் கிழங்கும் முதலாக; நல்லவே நுகர்வார் பள்ளி நண்ணினான் - நல்லவற்றையே நுகர்வாராகிய தாபதர் வாழும் பள்ளியைச் சேர்ந்தான்.
விளக்கம் : புல், அல்லி, நெல், கேழல், தோரை என்பன இவற்றின் அரிசிகட்கு ஆகுபெயர். போகுயர் : ஒரு பொருட் பன்மொழி; மிக வளர்ந்த என்க. கேழல் - குளநெல். தோரை - மூங்கிலரிசி. அல்ல என்றது இவையல்லாதவிடத்து என்றவாறு. நல்லவே என்புழி ஏகாரம் - பிரிநிலை; என்னை? தீயவாகிய ஊன் உணவைப் பிரித்து நிற்றலின் என்க. ( 11 )
1423. அரிய கொள்கைய ராரழ லைந்தினுண்
மருவி வீடு வளைக்குறு மாட்சியர்
விரிய வேதம் விளம்பிய நாவினர்
தெரிவி றீத்தொழிற் சிந்தையின் மேயினார்.
பொருள் : அரிய கொள்கையர் - அரியவான கோட்பாடுகளையுடையவர்; ஆர் அழல் ஐந்தினுள் மருவி வீடு வளைக்குறும் மாட்சியர் - நிறைந்த ஐந்தழலின் நடுவே பொருந்தி வீட்டுலகை வளைத்திடும் பெருமையினர்; விரிய வேதம் விளம்பிய நாவினர் - விளக்கமாக நான்மறை பயின்ற நாவினர்; தெரிவு இல் தீத்தொழில் சிந்தையின் மேயினார் - விளக்கமற்ற தீய தொழிலான காமத்தொழிலைச் சிந்தையிற் கொண்டவர்.
விளக்கம் : ஆர் அழல் ஐந்திடை மருவி என்றது, நான்கு திசைகளினும் வளர்க்கப்பட்ட ஓமகுண்டத் தீயும் உச்சியிற் கதிரவனுமாகிய ஐந்து தீயின் நடுவண் நின்று என்றவாறு. தெரிவுஇல் தீத்தொழில் என்றது, காம வேட்கையாலியற்றும் தீவினைகளை. அரிய கொள்கையாவன : நாலிரு வழக்கில் தாபதப் பக்கம்; நீர்பில கால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் - சோர்நடை தாழச் சுடரோம்பி - ஊரடையார் - கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் - வானகத் துய்க்கும் வழி. (பு. வெ. 168) என்பனவும் பிறவுமாம். ( 12 )
1424. வள்ளி யின்னமு தும்வரை வாழையின்
றெள்ளு தீங்கனி யுஞ்சில தந்தபின்
வெள்ள மாரிய னாய்விருந் தார்கென
வுள்ள மாட்சியி னாருவந் தோம்பினார்.
பொருள் : வள்ளி இன் அமுதும் - வள்ளிக்கிழங்காகிய சுவையுடைய உணவும், வரை வாழையின் - மலையிலுண்டாம் வாழையினது; தெள்ளு தீ கனியும் - ஆராய்ந்தெடுத்த இனிய பழமும் ஆகிய; சில தந்தபின் - இவற்றுள் சிலவற்றைக் கொடுத்த பின்னர்; வெள்ள மாரி அனாய் - நீர் பொழிகின்ற மேகத்தையொத்தவனே; விருந்து ஆர்க என - விருந்துண்பாயாகவென்று கூறி; உள்ள மாட்சியினார் - மனமாண்புடைய முனிவர்கள்; உவந்து ஓம்பினார் - மகிழ்ந்து பேணினார்.
விளக்கம் : அமுது : ஆகுபெயர். வெள்ளமாரியனாய் என்றது பலர்க்கும் பயன்படுபவனே என்றவாறு. ( 13 )
1425. பாங்கின் மாதவர் பான்மதி போன்றிவன்
வீங்கு கல்வியன் மெய்ப்பொருட் கேள்விய
னாங்கு நாமு மளக்குவ மென்றுதம்
மோங்கு கட்டுரை யொன்றிரண் டோதினார்.
பொருள் : பாங்கின் மாதவர் - நல்ல இடத்தில் உள்ள முனிவர்; இவன் பால்மதி போன்று வீங்கு கல்வியன் - இவன் முழுத் திங்கள் போலே எல்லாக் கலைகளும் நிறைந்த கல்வியன்; மெய்ப்பொருள் கேள்வியன் - உண்மைப் பொருளைக் கேட்டறிந்தவன்; ஆங்கு நாமும் அளக்குவம் என்று - இவனிடத்துள்ள அக் கல்வி கேள்விகளை நாமும் அளந்தறிவேம் என்று எண்ணி; தம் ஓங்கு கட்டுரை ஒன்று இரண்டு ஓதினார் - தம் உயர்ந்த கட்டுரைகளில் ஒன்றிரண்டுரைத்தனர்.
விளக்கம் : பால்மதி - பால் போன்ற ஒளியையுடைய முழுத்திங்கள். ஒவ்வொரு கலையாக நாடோறும் வளர்ந்து நிரம்பிய திங்கள் ஒவ்வொரு கலையாகப் பயின்று நிரம்பிய சீவகனுக்க உவமை. மெய்ப்பொருள் - காரண காரியங்களிரண்டுமின்றி முடிவாய் நிற்கும் பொருள். அளக்குவம் : தன்மைப் பன்மை. கட்டுரை - பொருள் பொதிந்த மொழி.
ஒன்றிரண் டென்பதொரு வழக்கு; ஒருசில என்பது கருத்து.
பாங்கு - நல்லிடம்; பாங்கர்ப் பல்லி (அகம் : 9) என்ப. ( 14 )
1426. ஐயர் கூறலு மண்ணலுங் கூறுவான்
சையம் பூண்டு சமுத்திர நீந்துவா
னுய்யு மேற்றொடர்ப் பாட்டினிங் கியாவையு
மெய்தி னார்களு முய்பவென் றோதினான்.
பொருள் : ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான் - அவர்கள் கூறுகின்ற அளவிலே சீவகனும் கூறுகின்றான்; சையம் பூண்டு சமுத்திரம் நீந்துவான் உய்யுமேல் - கல்லைக் கழுத்திலே கட்டிக் கொண்டு கடலிடை நீந்துவோன் பிழைப்பான் என்றால்; இங்குத் தொடர்ப்பாட்டின் யாவையும் எய்தினார்களும் - இவ்வுலகிற் காமநுகர்ச்சியோடே விரதங்களைக் கொண்டவர்களும்; உய்ப என்று ஓதினான் - பிழைப்பரென்று நூல்களை எடுத்துக் காட்டி விளக்கினான்.
விளக்கம் : ஐயர் - தலைவர்; என்றது அம் முனிவரை. சையம் - கல். இச் செய்யுளோடு,
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து (குறள். 344)
என்னுந் திருக்குறளை நினைக. எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாத வழியும், அது சார்பாக விட்டனவெல்லாம் மீண்டு வந்து தவத்திற்கு இடையூறாய் வந்து மனக்கலக்கம் செய்யும் என்பான், தொடர்ப்பாட்டின் இங்கு யாவையும் உய்ப என்றோதினான் என்க. இச் செய்யுள் மனைவிமக்களோடிருந்தும் வீடெய்துதல் கூடும் என்னும் ஏனைச் சமயிகளைப் பழித்தபடியாம். அவர்கள் மனைவியருடன் இருத்தலின் தொடர்ப்பாடு என்றான். ( 15 )
1427. வீடு வேண்டி விழுச்சடை நீட்டன்மெய்ம்
மூடு கூறையின் மூடுதல் வெண்டலை
யோடுகோட லுடுத்தலென் றின்னவை
பீடி லாப்பிற விக்குவித் தென்பவே.
பொருள் : வீடு வேண்டி விழுச்சடை நீட்டல் - வீடு பெற விரும்பிச் சிறப்புறச் சடையை நீட்டுதல்; மெய்ம் மூடு கூறையின் மூடுதல் - உடம்பை மறைக்கும் துவர் ஊட்டின ஆடையினாலே போர்த்துக் கொள்ளுதல்; வெண்டலை ஓடு கோடல் - மண்டையோடு கைக்கொள்ளுதல்; உடுத்தல் - தனியே இருத்தல்; என்று இன்னவை - என்று கூறப்படும் இத்தன்மையவை; பீடு இலாப் பிறவிக்கு வித்து என்ப - சிறப்பிலாத பிறப்புக்கு வித்து என்று உண்மையுணர்ந்தோர் கூறுவர்.
விளக்கம் : இச் செய்யுள்,
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்
என்னுந் திருக்குறளின் விளக்கமாக அமைந்துள்ளமை உணர்க. துன்பமல்லது தொழுதகவு இல்லாப் பிறப்பென்பான், பீடிலாப் பிறவி என்றான். ( 16 )
1428. ஏம நன்னெறி யெந்நெறி யன்னெறி
தூய்மை யின்னெறி யாமுந்து ணிகுவங்
காமன் றாதை நெறியின்கட் காளைநீ
தீமை யுண்டெனிற் செப்பெனச் செப்பினான்.
பொருள் : எம் நெறி ஏமம் நல்நெறி - யாங்கள் நிற்கின்ற வழி நல்வழி; அல்நெறி தூய்மை இல்நெறி - இஃது ஒழிந்தன நீ கூறியவாறே தூய்மை இல்லாத வழி; யாமும் துணிகுவம் - அதனை நாங்களும் தெரிந்திருப்போம்; காமன் தாதை நெறியின் கண் - திருமால் கூறிய இவ்வழியிடத்தில்; தீமை உண்டு எனில் - தீங்கு உண்டாயின்; காளை நீ செப்பு எனச் செப்பினான் - காளையே! நீ கூறுக என்று அவர்கள் வினவ, அவனும் சொன்னான்.
விளக்கம் : ஏமம் - இன்பம். காளைபோல்வானைக் காளையென்றது ஆகுபெயர். அல்நெறி - இந் நெறியல்லாத பிற நெறிகள். காமன் தாதை - திருமால். காளை : விளி. ( 17 )
வேறு
1429. தூங்குறிக் கிடந்து காயும்
பழங்களுந் துய்ப்ப நில்லா
பாங்கலா வினைக ளென்றார்
பகவனா ரெங்கட் கென்னி
னோங்குநீண் மரத்திற் றூங்கு
மொண்சிறை யொடுங்கல் வாவல்
பாங்கரிற் பழங்க டுய்ப்பப்
பழவினை பரியு மன்றே.
பொருள் : பகவனார் எங்கட்கு - திருமால் எங்களுக்கு; தூங்கு உறிக்கிடந்து காயும் பழங்களும் துய்யப்ப - தூக்கப்பட்ட உறிகளிலே இருந்து காயும் கனிகளும் உண்பதனால்; பாங்கு அலாவினைகள் நில்லா என்றார் என்னின் - நல்லவை அல்லாத வினைகள் நில்லா என்றுரைத்தார் என்றால்; ஒங்கும் நீள் மரத்தில் தூங்கும் ஒண் சிறை ஒடுங்கல் வாவல் - உயர்ந்து நீண்ட மரங்களிலே தொங்குகின்ற சிறந்த சிறகுகளையுடைய, ஒடுங்குமியல்புள்ள வெளவால்கள்; பாங்கரில் பழங்கள் துய்ப்பப் பழவினை பரியும் அன்றே - அருகில் உள்ள பழங்களைத் துய்ப்பதனால் அவற்றின் பழவினைகள் நீங்கும் அல்லவா?
விளக்கம் : சமயங்கள் கூறிய புற ஒழுக்கமாத்திரையானே பழவினைகள் கழியா என்பது இச் செய்யுளின் கருத்து. பழங்களையே உண்டு மரத்திலே தலைகீழாய்த் தொங்குதலானே வெளவால்களின் பழவினை தீர்தல் இல்லையானாற் போன்று இவ்வொழுக்கமாத்திரையாற் பிறப்பறாது என்றபடியாம். இது மாறுபட வந்த உவமத்தோற்றம். ( 18 )
1430. அல்லியும் புல்லு முண்டாங்
காரழ லைந்து ணின்று
சொல்லிய வகையி னோற்பத்
துணியும்வெவ் வினைக ளென்னிற்
கல்லுண்டு கடிய வெம்புங்
கானுறை புறவ மெல்லாம்
புல்லிய வினையை வென்று
புறக்கொடை காணு மன்றே.
பொருள் : அல்லியும் புல்லும் உண்டு - அல்லிக் காயில் உள்ள அரிசியையும் புல்லரிசியையும் சாப்பிட்டு; ஆங்கு ஆர் அழல் ஐந்துள் நின்று - அங்கே நிறைந்த ஐந்தழலின் நடுவே நின்று; சொல்லிய வகையின் நோற்ப - பகவனார் கூறிய நெறியிலே நோற்பதனால்; வெவ்வினைகள் துணியும் என்னின் - தீவினைகள் அறும் என்றால்; கடிய வெம்பும் கான் கல் உண்டு உறையும் புறவம் எல்லாம் - கொடிய வெப்பமுடைய கானிலே கற்களை உண்டு வாழும் புறாக்கள் யாவும; புல்லிய வினையை வென்று புறக்கொடை காணும் அன்றே - தம்மைத் தொடர்ந்த இருவினையையும் வென்று புறங்காணும் அல்லவா?
விளக்கம் : வெப்பமிக்க பாலையின்கண் கல் முதலியவற்றை உண்டு வாழும் புறாவின் பிறப்பறாமைபோல நல்லனவே உண்டு அழல் நடுவில் நின்று தவமியற்றன் மாத்திரையானே பிறப்பொழியா தென்பது கருத்து. இதுவும் மாறுபடவந்த உவமத் தோற்றமே.
( 19 )
1431. நீட்டிய சடைய மாகி
நீர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து
வாட்டிய வுடம்பின் யாங்கள்
வரகதி விளைத்து மென்னிற்
காட்டிடைக் கரடி போகிக்
கயமூழ்கிக் காட்டி னின்று
வீட்டினை விளைக்க வேண்டும்
வெளிற்றுரை விடுமி னென்றான்.
பொருள் : நீட்டிய சடையம் ஆகி - நீண்ட சடையினேம் ஆகி; நீர் மூழ்கி - நீரிலே குளித்து; நிலத்திற் சேர்ந்து - தரையிலே தங்கி; வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி வளைத்தும் என்னின் - வாட்டிய உடம்பினாலே நாங்கள் மேலோன வீட்டை அடைவோம் என்றால்; காட்டிடைக் கரடி போகிக் கயம் மூழ்கி -காட்டில் உறையும் கரடி சென்று குளத்திலே குளித்து; காட்டில் நின்று வீட்டினை விளைக்கவேண்டும் - (அதனால்) காட்டிலிருந்து வீட்டை அடையவேண்டும்; வெளிற்றுரை விடுமின் என்றான் - பொருளற்ற மொழியை விடுங்கோள் என்றான்.
விளக்கம் : சடையுடைமை கருதிக் கரடியை உவமை கூறினான். சடை வளர்த்தலும் காட்டிடை வாழ்தலும் கயமூழ்கலும் உடைமையாற் கரடி பிறப்பொழியாமை போல இவ்வொழுக்கமாத்திரையானும் பிறப்பறாது என்பது கருத்து. இதுவும் அவ்வுவமமே. ( 20 )
1432. கலைவளர் கிளவி யார்தங் காமர்மென் சேக்கை நீங்கி
யிலைவளர் குரம்பை யங்க ணிருநிலஞ் சேக்கை யாக
முலைவள ராகந் தோய முழுவினை முரியு மாயின்
மலைவளர் குறவர்க் கம்மா வினைகளு மாயு மன்றே.
பொருள் : கலைவளர் கிளவியார் தம் காமர் மென் சேக்கை நீங்கி - கலை வளர்தற்குரிய மொழியாரான மகளிருடன் துயிலும் அழகிய மெல்லிய அணையை விட்டு; இலைவளர் குரம்பை அங்கண் - இலைகளால் மூடிய குடிசையிலே; இருநிலம் சேக்கை ஆக முலைவளர் ஆகம் தோய - பெருநிலமே அணையாக அக் கிளவியாரின் முலைவளர் மார்பைத் தழுவ; முழுவினை முரியும் ஆயின் - வினைகள் யாவும் கெடுமென்றால்; மலைவளர் குறவர்க்கு அம் மா வினைகளும் மாயும் அன்றே - மலைவாழ்வினையுடைய குறவர்கட்கு அக்கொடிய வினைகளெல்லாம் கெடும் அல்லவா?
விளக்கம் : இஃது வானப்பிரத்த நிலையினைப் பழித்தபடியாம். அந்நிலையின்கண் உளதாம் பேதைமையை விளக்குவான், காமர் மென் சேக்கையை நீங்கி இருநிலஞ் சேக்கையாக என்று விதந்தோதினான். இயல்பாகவே குறவர்களுக்கு இவ்வானப்பிரத்த நிலை எய்தியதாகவும் அவர் பிறப்பறாமைபோல இதனாற் பிறப்பறாது என்பது கருத்து. கலை - ஈண்டு இசைக்கலை. காமர் மென்சேக்கை என்றதனால், கற்கள் உறுத்தும் புன்னிலச் சேக்கை எனவும், இலைவளர் குரம்பை என்றதனால் மணிமாடத்து நிலாமுற்றத்திலமைந்த காமர்மென்சேக்கை எனவும் விரித்தோதுக. ( 21 )
1433. வெண்ணிறத் துகிலி னாங்கண் வீழ்ந்துமா சாகிநின்ற
வொண்ணிற வுதிரந் தன்னை யுதிரத்தா லொழிக்க லாமே
பண்ணிறக் கிளவி யார்தம் பசையினாற் பிறந்த பாவங்
கண்ணிற முலையி னார்தங் கலவியாற் கழிக்க லாமே.
பொருள் : வெள் நிறத் துகிலின் ஆங்கண் வீழ்ந்து மாசு ஆகி நின்ற - வெண்ணிற ஆடையிலே வீழ்ந்து கறையாகி நின்ற; ஒள் நிற உதிரந்தன்னை உதிரத்தால் ஒழிக்கலாமே - ஒளிரும் நிறமுடைய குருதியைக் குருதியாலே போக்க முடியுமோ? முடியா தன்றே (அதுபோல); பண் நிறக் கிளவியார் தம் பசையினால் பிறந்த பாவம் - பண்ணின் இயல்புற்ற மொழியாராகிய மகளிரின் ஆசையினால் உண்டான பாவத்தை; கண் நிற முலையினார் தம் கலவியால் கழிக்கலாமே - கண்களையுடைய ஒளிபொருந்திய முலையார்களின் சேர்கையினாலே போக்க முடியுமோ? (முடியாது.)
விளக்கம் : துகிலின் கட்பட்ட குருதிக்கறையைக் குருதியாலே மாற்றல் கூடாமைபோலப் பிறவிக்குக் காரணமாகிய பற்றாலேயே பிறவியை அறுக்க இயலாது என்பதாம். பிறப்பறுக்கலுற்றார் முலையினார் கலவியைத் தவிர்தல் வேண்டும் என்பது கருத்து. ( 22 )
1434. நுண்டுகில் வேத லஞ்சி
நெருப்பகம் பொதிந்து நோக்கிக்
கொண்டுபோய் மறைய வைத்தாற்
கொந்தழல் சுடாது மாமே
கண்டத்தி னாவி யார்தங்
கடிமனை துறந்து காட்டுட்
பண்டைச்செய் தொழிலிற் பாவம்
பறைக்குற்றாற் பறைக்க லாமே.
பொருள் : நுண் துகில் வேதல் அஞ்சி - நுண்ணிய ஆடைவேதற்கு அஞ்சி; நெருப்பு அகம் நோக்கிப் பொதிந்து - நெருப்பை ஆடையினுள்ளே பார்த்துவைத்து மூடி; கொண்டுபோய் மறைய வைத்தால் - கொண்டு சென்று மறைவான இடத்திலே வைத்தால், கொந்து அழல் சுடாதும் ஆமே - அப் பொங்கும் நெருப்புச் சுடாதும் விடுமோ?; கண்டத்தின் நாவியார் தம் கடிமனை துறந்து - கழுத்திலே புழுகை அணிந்த மகளிரின் காவலுறும் மனையை விட்டு நீங்கி; காட்டுள் பண்டைச் செய் தொழிலின் - காட்டிலே சென்று முன் செய்த கலவித் தொழிலையே கொண்டு; பாவம் பறைக்குற்றால் பறைக்கலாமே - பாவத்தைப் போக்க நினைத்தாற் போக்கமுடியுமோ?
விளக்கம் : தொன்று தொட்டுப் பிறப்புக்கடோறுந் தொடர்ந்து வரும் செயல் என்பார், பண்டைச் செய்தொழில் என்றான். பறைக்கல் - தேய்த்தல். பறைதல் - தேய்தல். பார்வையாத்த பறைதாள் விளவின் என்னும் பெரும்பாணாற்றுப்படையினும் (95) அஃதப்பொருட்டாதல் காண்க. சுடாதும் என்புழி, உம்மை, இசை நின்ற. மகளிரின் மனையைத் துறந்தகல (அவரை நெஞ்சாலே நோக்கிக்) காட்டிலே கொண்டுபோய் வைத்து, முன்பு செய்த தொழிலிற் பிறந்த பாவத்தைப் போக்கலுற்றாற், போக்க ஒண்ணாது என்பர் நச்சினார்க்கினியர். ( 23 )
1435. நோய்முதிர் குரங்கு போல
நுகர்ச்சிநீர் நோக்கல் வேண்டா
காய்முதிர் கனியி னூழ்த்து
வீழுமிவ் வியாக்கை யின்னே
வேய்முதிர் வனத்தின் வென்றா
னுருவொடு விளங்க நோற்றுப்
போய்முதிர் துறக்கத் தின்பம்
பருகுவ புரிமி னென்றான்.
பொருள் : நோய்முதிர் குரங்குபோல நுகர்ச்சி நீர் நோக்கல் வேண்டா - காமநோயினால் முதிர்ந்த குரங்கைப்போல நீவிர் காம நுகர்ச்சியை நோக்குதல் வேண்டா; காய் முதிர் கனியின் ஊழ்த்து இவ் யாக்கை வீழும் - காய் முற்றிப் பழமாகி விழுவதைப் போல, முதிர்ச்சி அடைந்து இவ்வுடம்பு விழுந்து விடும்; வேய் முதிர் வனத்தின் - மூங்கில் முற்றிய காட்டிலே; வென்றான் உருவொடு விளங்க இன்னே நோற்றுப்போய் - காமனை வென்ற அருகப்பெருமான் உருவத்துடன் நின்று விளக்கமுற இப்பொழுதே நோற்றுச் சென்று; முதிர் துறக்கத்து இன்பம் பருகுதலைப் புரிமின் என்றான் - முற்றிய துறக்க வின்பத்தை நுகர்தலை விரும்புமின் என்று சீவகன் செப்பினான்.
விளக்கம் : கொண்டது விடாமையானும் குரங்கு உவமையாயிற்று. வேண்டின் உண்டாகத் துறக்க என்பான் இன்னே என்றான். இன்னே என்பதனை நோற்றுப்போய் என்பதனோடு கூட்டுக. வென்றான் : பெயர். ( 24 )
1436. மெய்வகை தெரிதன் ஞானம்
விளங்கிய பொருள்க டம்மைப்
பொய்வகை யின்றித் தேறல்
காட்சியைம் பொறியும் வாட்டி
யுய்வகை யுயிரைத் தேயா
தொழுகுத லொழுக்க மூன்று
மிவ்வகை நிறைந்த போழ்தே
யிருவினை கழியு மென்றான்.
பொருள் : ஞானம் மெய்வகை தெரிதல் - ஞானமாவது உண்மை அறிதல்; காட்சி விளங்கிய பொருள்கள் தம்மைப் பொய்வகை இன்றித் தேறல் - காட்சியாவது அவ்வாறு அறிந்த பொருள்களைப் பொய்யின்றாகத் தெளிதல்; ஒழுக்கம் ஐம்பொறியும் வாட்டி உய்வகை உயிரைத் தேயாது ஒழுகுதல் - ஒழுக்கமாவது ஐம்பொறிகளையும் ஐம்புலன்களிற் செல்லாமற் கெடுத்து உயிரைக் கெடாமல் அவ்வுயிர் உய்யும் வகையிலே நடத்தல்; மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான் - இம் மூன்றொழுக்கமும் இப்படி நிறைந்த பொழுதே இருவினையும் கெடும் என்றான்.
விளக்கம் : இச் செய்யுளில் நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்னும் மூன்றன் இயல்பும் கூறுகின்றார். இவற்றை, இரத்தினத்திரயம் என்றும் பரத்திரயம் என்றும் வழங்குப. இவற்றுள் நன்ஞானம் - எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தாகிய அறிவு, நற்காட்சி ஐயமின்மை அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கமின்மை, அறப்பழி நீக்கல், அழிந்தாரைத் தாங்கல், அறத்துக்கு அளவளவு, அறத்தை விளக்கல் என்னும் எண்வகை உறுப்பிற்று. நல்லொழுக்கம் அணுவிரதம் மாவிரதம் என இருவகைப்படும். ( 25 )
1437. குன்ற னானுரைப்பக் கேட்டே
பாகத்தார் குடும்ப நீக்கி
யின்றுகண் விடுக்கப் பட்டேம்
யாமென வெழுந்து போகி
வென்றவன் பாதஞ் சேர்ந்து
வீட்டுநன் னெறியைப் பெற்றார்
சென்றது பருதி வட்டஞ்
செம்மலு மசைவு தீர்ந்தான்.
பொருள் : குன்று அனான் உரைப்பக் கேட்டு - சலிப்பற்ற சீவகன் இவ்வாறு கூறக்கேட்டு; பாகத்தார் குடும்பம் நீங்கி - நல்வினை வந்தடையும் நிலையுடையார் மனைவியரைத் துறந்து; யாம் இன்று கண் விடுக்கப் பட்டேம் என எழுந்து போகி - யாங்கள் இன்று நின்னாலே அறிவுண்டாக்கப் பட்டேம் என்று கூறி எழுந்து சென்று; வென்றவன் பாதம் சேர்ந்து வீட்டு நன்னெறியைப் பெற்றார் - காமனை வென்றவனுடைய திருவடியை அடைந்து வீட்டிற்குச் செல்லும் நல்ல வழியைப் பெற்றார்; பருதி வட்டம் சென்றது - அவ்வளவிலே ஞாயிறு மறைந்தது ; செம்மலும் அசைவு தீர்ந்தான் - சீவகனும் இளைப்புத் தீர்ந்தான்;
விளக்கம் : குன்றம் சீவகனுக்குச் சலியாமை என்னும் பண்பு பற்றி வந்த பெருமித வுவமை. பாகத்தார் என்றது இத்தகைய ஞானக்கேள்வியைக் கேட்டற்குரிய அதிகாரிகள் என்பதுபட நின்றது. குடும்பம் என்றது மனைவி முதலிய தொடர்ப்பாட்டினை. கண் : ஈண்டு அறிவுக்கண். கண் திறப்பிக்கப்பட்டேம் என்றவாறு. முன்னர் (24) இன்னே என்றதற்கேற்ப ஈண்டும் எழுந்து போய் என்றார்.
எழுந்து போய் என்றது, அப்பொழுதே எழுந்துபோய் என்பதுபட நின்றது. வட்டம் என்றது, ஞாயிறு நாடோறும் வட்டமாய் மாமேரு வருதலை என்பர் நச்சினார்க்கினியர். (26 )
வேறு
1438. அசைவு தீர்ந்திரு ளஃகிய காலையே
வசையி னீங்கியி னார்வழி காட்டலிற்
றிசையும் யாறுந் தெரிந்துகொண் டேகினான்
மிசையு மில்லதோர் மெய்ப்பொறி யாக்கையான்.
பொருள் : அசைவு தீர்ந்து இருள் அஃகிய காலையே - அங்ஙனம் இளைப்பாறி இருள்புலர்ந்த வைகறையிலே; வசையின் நீங்கினார் வழி காட்டலின் - குற்றத்திலிருந்து நீங்கினவர்கள் வழிகாட்டியதால்; மிசையும் இல்லது ஓர் மெய்ப்பொறி யாக்கையான் - மேலுலகினும் இல்லாததாகிய ஒப்பற்ற உண்மை இலக்கணம் அமைந்த உடம்பினான்; திசையும் யாறும் தெரிந்து கொண்டு ஏகினான் - திக்கும் யாறும் விளங்கிக்கொண்டு சென்றான்.
விளக்கம் : வசை - காமவெகுளி மயக்கமென்னும் குற்றம். இனி 9 - ஆம் செய்யுளிற் கூறப்பட்ட அப்பிரத்தியாக்கியான, பிரத்தியாக்கியான குரோதம் மானம் மாயை லோபம் என்பனவுமாம். மிசை : தேவருலகிற்கு ஆகுபெயர். மெய்ப்பொறி - உடலுக்குக் கூறும் நல்லிலக்கணம். நீங்கியினார் : இன் : அசை. ( 27 )
வேறு
1439. படம்புனைந் தெழுதிய வடிவிற் பங்கயத்
தடம்பல தழீ இயது தக்க நாடது
வடங்கெழு வருமுலை மகளிர் மாமைபோன்
றிடம்பெரி தினிதத னெல்லை யெய்தினான்.
பொருள் : புனைந்து எழுதிய படம் வடிவில் - ஒப்பனை செய்து வரைந்த படத்தின் வடிவுபோல; பங்கயத் தடம் பல தழீ இயது - தாமரைக்குளம் பல சூழ்ந்தது; வடம்கெழு வருமுலை மகளிர் மாமைபோன்று இடம் பெரிது இனிது - முத்து வடம் முதலிய பொருந்திய வளரும் முலையுடைய மங்கையரின் அழகு போல நுகர்வார்க்குப் பெரிதும் இனியது; அது தக்க நாடு - அது தக்க நாடென்னும் பெயருடையது; அதன் எல்லை எய்தினான் - அதன் எல்லையைச் சீவகன் அடைந்தான்.
விளக்கம் : ஓவியப்புலவன் கிழியின்கண் தன் கலையுணர்ச்சியினாற்புனைந்து வரையப்பட்ட ஓவியம் போலத்தோன்றும் தாமரைத் தடம்பல தன்பால் அமைந்தது என்னும் இச்சொல்லோவியம் மிகவும் இனிதாதல் உணர்க. மாமை - அழகு. ஈண்டு அந்நாடு தெவிட்டாத காட்சியின் பமுடைத்தாதற்கு உவமை. ( 28 )
1440. தேங்கயத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும்
பூங்குழன் மடந்தையர் புனைந்த சாந்தமு
மாங்கெலா மகிற்புகை யளாய வாசமுந்
தாங்கலா றக்கநா டாய தென்பவே.
பொருள் : தேம் கயத்து அணிமலர் தெகிழ்ந்த நாற்றமும் - இனிய கயத்தின் அழகிய மலர் வாய்விட்ட மணமும்; பூங்குழல் மடந்தையர் புனைந்த சாந்தமும் - மலர்க் கூந்தலையுடைய மாதர்கள் அணிந்த சந்தனமும்; அகில் புகை அளாய வாசமும் - அகிற்புகை கலந்த மணமும்; ஆங்குஎலாம் தாங்கலால் தக்கநாடு ஆயது என்ப - அங்கெல்லாம் தரித்தலின் தக்கநாடு என்னும் பெயர்த்தாயிற்றென்பர்.
விளக்கம் : தெகிழ்ந்த - நெகிழ்ந்த; மலர்ந்த என்றவாறு. தக்க நாடு - தகுதியுடைய நாடு; தகுதி -தாங்குதல். எனவே தக்க நாடென்பது அதற்குக் காரணப் பெயர் என்றவாறு. என்ப - என்று சான்றோர் கூறுவர். ( 29 )
1441. சண்பக நறுமலர் மாலை நாறுசாந்
தொண்பழுக் காயினோ டுருவ மெல்லிலை
யுண்பத மியாவர்க்கு மூன மில்லது
வண்புகழ் நாட்டது வண்ண மின்னதே.
பொருள் : சண்பக நறுமலர் மாலை - சண்பகமலர்களாகிய மணமிகு மாலையும்; நாறு சாந்து - மணக்கும் சந்தனமும்; ஒண்பழுக்காயினோடு - சிறந்த பழுக்காயுடன்; உருவம் மெல்இலை - அழகிய வெற்றிலையும்; உண்பதம் - உண்ணும் உணவும் என இவை; யாவர்க்கும் ஊனம் இல்லது - எவருக்கும் குறைவின்றி அமைந்தது; வண்புகழ் நாட்டது வண்ணம் இன்னது - வளமிகும் புகழுற்ற தக்கநாட்டின் இயல்பு இத்தகையதே.
விளக்கம் : பழுக்காய் - பாக்கு. உருவம் - அழகு. மெல்லிலே : வினைத்தொகை; வெற்றிலை. உண்பதம் : வினைத்தொகை. நாறுசாந்து என்பதும் அது. ஒண்பழுக்காய், வண்புகழ் : பண்புத்தொகைகள். மலர் முதலிய இன்னோரன்னவற்றால் ஊனம் இல்லது என்க. ஊனம் - குறைவு. வண்ணம் - இயல்பு. ( 30 )
1442. கரும்பணி வளவயற் காமர் தாமரை
வரம்பணைந் ததனுதற் கிடந்த வார்செநெ
லரங்கணி நாடக மகளி ராய்நுதற்
சுரும்புசூ ழிலம்பகத் தோற்ற மொத்ததே.
பொருள் : கரும்பு அணி வளவயல் - கரும்பை அணிந்த வளத்தையுடைய கழனியில்; காமர் தாமரை வரம்பு அணைந்து - அழகிய தாமரைமலர் சாய்ந்து வரம்பைச் சேர (இருக்க); அதன் நுதல்கிடந்த வார் செநெல் - அத் தாமரையின் நெற்றியிலே கிடந்த நீண்ட செந்நெற் கதிர்; அரங்கு அணி நாடகமகளிர் ஆய்நுதல் - அரங்கிலே அணிந்துவந்த நாடக மகளிரின் அழகிய நெற்றியிலே; சுரும்புசூழ் இலம்பகத் தோற்றம் ஒத்தது - வண்டுகள் சூழ்ந்த தலைக்கோலம் என்னும் அணியின் தோற்றம் போன்றது.
விளக்கம் : அதன் - அத்தாமரை மலரினது. இலம்பகம் - தலைக்கோலம் என்னும் ஓரணிகலம். வார்செநெல் - என்புழி நகரமெய் விகாரத்தாற் கெட்டது. அணைந்து - அணைய : எச்சத்திரிபு. சுரும்பு தாமரைமலரைச் சூழ இருக்கும். அவ்வாறே தலைக்கோலத்தை சூழக் கூந்தல் இருக்கும். வரம்புக்கு அரங்கு உவமை. ( 31 )
1443. வண்டுவாழ் கொடுந்துறைக் கன்னி வாளைமே
னண்டுகி ருற்றென நடுங்கி நாணினால்
விண்டொளித் தூண்டுறந் தொடுக்கும் வீழ்புனல்
கொண்டபூங் கிடங்கணி நகரம் கூறுவாம்.
பொருள் : வண்டுவாழ் கொடுந்துறைக் கன்னி வாளைமேல் - வண்டுகள் உறையும் வளைந்த துறையிலே கன்னியாகிய வாளையின் மேல்; நண்டு உகிர் உற்றென நடுங்கி - நண்டின் நகம்பட்டதாக, அதனால் நடுக்கமுற்று; நாணினால் விண்டு ஒளித்து ஊண்துறந்து ஒடுங்கம் வீழ்புனல் - நாணத்தினால் அவ்விடத்தைவிட்டு உணவே வெறுத்து ஒடுங்கியிருக்கும் ஆழ்ந்த நீரை; கொண்ட பூங்கிடங்கு அணி நகரம் கூறுவாம் - தன்னிடத்தே கொண்ட அகழிசூழ்ந்த நகரத்தை இனி இயம்புவோம்.
விளக்கம் : ஒரு கன்னி தன்மேலே உகிர் உற்றதனால் நாணத்தினால் நடுங்கி, அவ்விடத்தினின்றும் நீங்கிச் சென்று ஒளித்து ஊணைத்துறந்து ஓடுங்குமாறு போல என வாளைக்கு உவமை கொள்க. வரியகட் டலவன் வள்ளுகிர் உற்றெனக் கன்னிவாளை உண்ணா தொடுங்கும் தண்பணை என்றார் கதையினும் (1 - 89 : 100 - 2.) ( 32 )
1444. அகழ்கிடங் கந்துகி லார்ந்த பாம்புரி
புகழ்தகு மேகலை நாயில் பூண்முலை
திகழ்மணிக் கோபுரந் திங்கள் வாண்முகஞ்
சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்பவே.
பொருள் : செல்விக்கு - மதிலாகிய செல்விக்கு; அகழ்கிடங்கு அம்துகில் - அகழ்ந்த கிடங்கு அழகிய துகில்; ஆர்ந்த பாம்புரி புகழ்தகு மேகலை - பொருந்திய பாம்புரி புகழத்தக்க மேகலை; நாயில் பூண்முலை - ஞாயில் பூணணிந்த முலை; திகழ் மணிக்கோபுரம் திங்கள் வாண்முகம் - விளங்கும் மணிக்கோபுரம் திங்களனைய ஒளிரும் முகம்; நெடுங்கொடி சிகழிகை - நீண்ட கோடி மயிர்முடி; என்ப - என்று சொல்வார்.
விளக்கம் : பத்திரப் பாம்புரி அத்தகக் கலாஅய் என்றார் கதையினும் (3 - 3 : 17) பாம்புரி : மதிலின் அடியே உள்ள ஆளோடிகள் (சீவக. 1250; அடிக்குறிப்பு) நாயில் : ஞாயில்: போலி. ஞாயில் - மதிலின் ஓர் உறுப்பு; மதிலில் இருப்போர் வெளியார்மேல் அம்பெய்து மறையும் சூட்டு. ( 33 )
1445. நாட்டிய மணிவரை கடைந்து நல்லமிர்
தூட்டினு மதனைவிட் டுறைந ரின்மையா
லீட்டிய வளநிதி யிறைகொண் மாநகர்ச்
சூட்டுவைத் தனையதச் சுடர்ப்பொ னிஞ்சியே.
பொருள் : அச் சுடர்ப்பொன் இஞ்சி - அந்த ஒளியுறும் பொன்மதில்; நாட்டிய மணிவரை கடைந்து நல் அமிர்து ஊட்டினும் - மந்தரம் என்று பெயர் நாட்டிய மலையாலே கடலைக் கடைந்து அமிர்தத்தை ஊட்டினும்; அதனை விட்டு உறைநர் இன்மையால் - அந் நகரை விட்டுப் போய்த் தங்கவாரில்லாமையால்; ஈட்டிய வளநிதி இறைகொள் மாநகர் - ஈட்டப்பட்ட வளமுறு செல்வம் தங்கிய அப் பெருநகரம்; சூட்டு வைத்தனையது - நகரங்கட்கெல்லாம் தலையென்று சூட்டு வைத்தால் ஒத்தது என்க.
விளக்கம் : இனி, அ மணிவரை நாட்டி - எனப் பிரித்துக் கூட்டுக் கண்ணழித்து அம்மணி மலையாகிய மந்தரத்தை நட்டு எனினுமாம். இதற்கு அகரச்சுட்டுப் பண்டறி சுட்டு ஆகும். இதற்கு நிதி, ஆகுபெயர். சூட்டு என்றது சிறப்புப் பட்டத்திற்கு அடையாளமாகிய ஓரணிகலனை. ( 34 )
1446. எறிசுற விளையவ ரேந்து பூங்கொடி
மறிதிரை வரைபுரை மாட மாக்கலம்
பெறலருந் திருவனா ரமுதம் பேரொலி
யறைகடல் வளநக ராய தென்பவே.
பொருள் : பேரொலி வளநகர் - பேரொலியை உடைய அவ்வளமிகு நகரம்; இளையவர் எறிசுறவு - வீரர் எறியும் சுறா மீனாகவும்; ஏந்து பூங்கொடி மறிதிரை - ஏந்திய பூங்கொடி மறி திரையாகவும்; மாடம் மாக்கலம் - மாடங்கள் பெரிய மரக்கலமாகவும்; பெறல் அருந் திருவனார் அமுதம் - கிடைத்தற்கரிய திருவைப் போன்ற மகளிர் அமுதமாகவும்; அறைகடல் ஆயது என்ப - ஆரவாரமுடைய கடலாயிற் றென்ப. நகர், சுறவையும் திரையையும் மரக்கலங்களையும் அமுதத்தையும் உடையதாய்ப் பாற்கடலை ஒத்தது என்றவாறு. வீரர் எதிர்வாரை எறிதலின் சுறவினையும் கொடி காற்றால் அசைதலின் திரையினையும் மாடம் மாந்தரையும் சரக்குக்களையும் கொண்டிருத்தலின் கலத்தினையும் மகளிர் தங்காதலர் உயிர் தளிர்ப்ப முயங்கலின் அமிழ்தத்தினையும் உவமையாகக் கூறினார். இத் தொடர் வேறுபட வந்த உவமவிசேடமாம் என்பர் நச்சினார்க்கினியர்.(தொல். உவ. 32) ( 35 )
வேறு
1447. மதியக டுரிஞ்சுஞ் சென்னி
மாடநீண் மறுகு தோறும்
பொதியவிழ் மாலை வீழ்ந்து
பொன்செய்நன் கலன்கள் சிந்தி
நிதியறை திறந்து நோக்கி
யன்னதோர் நீர்மை யெய்திப்
புதியவர்க் கியங்க லாகாப்
பொற்பொடு பொலிந்த தன்றே.
பொருள் : மதி அகடு உரிஞ்சும் சென்னி மாடம்நீள் மறுகு தோறும் - திங்களின் நடுவைத் தேய்க்கும் உச்சியையுடைய மாடங்களையுடைய நீண்ட தெருக்கள்தோறும்; பொதி அவிழ் மாலை வீழ்ந்து - மயிர்முடி குலைதலின் முத்துமாலை வீழந்து; பொன்செய் நன்கலன்கள் சிந்தி - பொன்னால் இயற்றிய பேரணிகளும் சிந்துதலாலே; நிதி அறை திறந்து நோக்கி அன்னது ஓர் நீர்மை எய்தி - நிதியறையைத் திறந்து பார்த்தால் ஒத்ததொரு தன்மை பெற்று; புதியவர்க்கு இயங்கல் ஆகாப் பொற்பொடு பொலிந்தது - அச்சமுண்டாக்குதலின் புதியவர்க்குச் செல்லலாகாத அழகொடு விளக்கம் உற்றது.
விளக்கம் : உரிஞ்சும் - தேய்க்கும். மறுகு - தெரு. நிதியறை - கருவூலம். புதியவர் பொருள் கிடக்குமிடத்தே புகுதற்கு அஞ்சுதல் இயல்பாகலின் புதியவர்க்கு இயங்கலாகாப் பொற்பு என்றார். இதனால் அந்நகரத்துத் திருவுடைமை உணர்த்தப்பட்டது. ( 36 )
வேறு
1448. கேமமா புரமெனுங் கேடி னல்லிசைப்
பூமிமேற் றிலகம்வைத் தனைய பொன்னகர்த்
தாமம்நீ ணெடுங்குடைத் தரணி காவல
னாமம்வே னரபதி தேவ னென்பவே.
பொருள் : பூமிமேல் திகலம் வைத்தனைய - உலகிற்குத் திலகம் இட்டால் ஒத்த; கேமமாபுரம் எனும் கேடுஇல் நல் இசைப் பொன்நகர் - கேமமாபுரம் எனும் பெயரிய கெடுதல் இல்லாத நல்ல புகழையுடைய பொன்னகரிலே; தாமம்நீள் நெடுங்குடைத் தரணி காவலன் - மாலையணிந்த நீண்ட குடையை உடைய உலக காவலன்; நாமம் வேல் நரபதிதேவன் என்ப - அச்சமூட்டும் வேலேந்திய நரபதிதேவன் என்னும் பெயரையுடையோன் என்பார்கள்.
விளக்கம் : நல்லிசையை நரபதி தேவனுக்கு ஆக்குவர் நச்சினார்க்கினியர். ( 37 )
1449. அந்நகர்க் கரசனே யனைய வாண்டகை
மெய்ந்நிக ரிலாதவன் வேத வாணிகன்
கைந்நிக ரமைந்தவேற் கமழுந் தாரினான்
மைந்நிகர் மழைக்கணார் மருட்ட வைகுவான்.
பொருள் : அந் நகர்க்கு அரசனே அனைய ஆண்தகை - அந்த நகரத்திற்கு அரசனே போலும் ஆண்தகையினான்; மெய் நிகர் இலாதவன் - வடிவம் ஒப்பிலாதவன்; வேதவாணிகன் - மறைவழி ஒழுகும் வணிகன்; கைந்நிகர் அமைந்த வேல் கமழும் தாரினான் - கைக்கு நிகராக அமைந்த வேலும் மணஞ்செயும் மாலையும் உடையான்; மைந்நிகர் மழைக்கணார் மருட்ட வைகுவான் - மைதீட்டிய தம்முள் நிகர்த்த குளிர்ந்த கண்களையுடைய மகளிர் மயக்க அவர்களின்பத்தே தங்குவான்.
விளக்கம் : இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர். அரசன் : நரபதிதேவன். ஆண்மைத் தன்மையில் அரசனையே ஒத்தவன் என்றவாறு. ஆற்றலுடைய கையும், அதற்குத் தகுந்த வேலும் இவற்றால் எய்திய வெற்றி மாலையினையும் உடையோன் என்றவாறு. மழைக்கணார் மருட்ட வைகுவான் என்றது அவனுடைய வாழ்க்கைச் சிறப்பினை விதந் தோதியபடியாம். ( 38 )
வேறு
1450. வார்சிலை வடிப்ப வீங்கி
வரையெனத் திரண்ட தோளான்
சோர்புய றொலைத்த வண்கைச்
சுபத்திரன் மனைவி பெற்ற
சீர்நலம் கடந்த கேம
சரியெனத் திசைக ளெல்லாம்
பேர்நலம் பொறித்த பெண்மைப்
பெருவிளக் காகி நின்றாள்.
பொருள் : வார்சிலை வடிப்ப வீங்கி வரையெனத் திரண்ட தோளான் - நீண்ட வில்லைப் பயிற்றுதலாற் பருத்து மலைபோலத் திரண்ட தோளையுடையான்; சோர் புயல் தொலைத்த வண்கைச் சுபத்திரன் - மழைபெய்யும் முகிலை ஓட்டிய வண்மையுடைய கையினான் ஆன சுபத்திரன் என்னும் பெயரினானுக்கு; மனைவி பெற்ற - அவன் மனைவி நிப்புதியென்பாள் ஈன்ற, சீர் நலம் கடந்த கேமசரியென (ஒரு பெண்) - பிறமகளிரின் சிறந்த அழகை வென்ற கேமசரி என்று; திசைகள் எல்லாம் பேர்நலம் பொறித்த பெண்மைப் பெருவிளக்கு ஆகி நின்றாள் - திசைகளில் எல்லாம் பெயரின் நலத்தை எழுதிய பெண்மையையுடைய பெரு விளக்கு என ஆகி இருந்தாள்.
விளக்கம் : ஆகி யெனவே மங்கைப்பருவமுடையாளென்பது பெற்றாம். கேமசரி என (ஒரு பெண்) என ஒரு மொழி சேர்க்க. (39)
1451. மாசிலாள் பிறந்த ஞான்றே
மதிவலான் விதியி னெண்ணிக்
காசிலாள் கண்ட போழ்தே
கதுமென நாணப் பட்டான்
றூசுலா மல்கு லாட்குத்
துணைவனாம் புணர்மி னென்று
பேசினா னன்று கொண்டு
பெருவிருந் தோம்பு கின்றான்.
பொருள் : மாசு இலாள் பிறந்த ஞான்றே - குற்றமிலாத அவள் பிறந்தபொழுதே; மதிவலான் விதியின் எண்ணி - அறிவில் வல்லவனான கணி நூல் முறையானே ஆராய்ந்து; காசு இலாள் கண்டபோழ்தே கதும் என நாணப்பட்டான் - இவள் கண்ட பொழுதே நாணமுறப்பட்டவன்; தூசு உலாம் அல்குலாட்குத் துணைவன் ஆம் - ஆடையணிந்த அல்குலையுடையாட்குக் கணவனாவான்; புணர்மின் என்று பேசினான் - அவனுக்குக் கொடுங்கோள் என்று கூறினான்; அன்று கொண்டு பெருவிருந்து ஓம்புகின்றான் - அன்று தொட்டுச் சுபத்திரன் தன் மகள் அத்தகையானைக் காண்டற்குப் பெருவிருந்து இடுதலைக் கைக்கொண்டுள்ளான்.
விளக்கம் : தன் கணவனைத் தவிர மற்றோர் அவட்கு ஆடவராய்த் தோன்றாரென்பது தோன்றப் பலரையும் நோக்கும் அவளை, மாசிலாள் என்றும், காசிலாள் என்றும் கூறினார். மதிவல்லான் என்றது கணிவனை. விதி - நூல் கூறும் முறை. காசிலாள் - குற்றமற்றவள் என்னும் பொருட்டு; இது வாளா அவள் என்னுஞ் சுட்டு மாத்திரையாய் நின்றது. பெருவிருந்தோம்புகின்றான் என்றது, அத்தகையானைக் காணும் பொருட்டு என்பதுபட நின்றது. ( 40 )
1452. தாழ்தரு பைம்பொன் மாலை தடமலர்த் தாம மாலை
வீழ்தரு மணிசெய் மாலை யிவற்றிடை மின்னி னின்று
சூழ்வளைத் தோளி செம்பொற் றூணையே சார்ந்து நோக்கு
மூழ்படு காத லானை யொருபிடி நுசுப்பி னாளே.
பொருள் : ஒருபிடி நுசுப்பினாள் சூழ்வளைத் தோளி - ஒரு பிடியில் அடங்கும் இடையினாளாகிய, வளைசூழ்ந்த தோளினாள்; தாழ்தரு பைம்பொன்மாலை - தூங்கப்பட்ட பைம்பொன்னாலான மாலை; தடமலர்த் தாமம் மாலை - பெரிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை; வீழ்தரு மணிசெய் மாலை - விருப்பம் ஊட்டும் மணிகளாற் செய்யப்பட்ட மாலை; இவற்றிடை - ஆகிய இவற்றின் இடையிலே; மின்னின் நின்று - மின்போல நின்று; செம்பொன் தூணையே சார்ந்து - பொன்னாலான தூணைப் பொருந்திநின்று, ஊழ்படு காதலானை நோக்கும் - ஊழ்தருகின்ற கணவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.
விளக்கம் : தான் நோக்குழிச் சிறிது தோன்றித் தன்னைப் பிறர் நோக்குழிக் கணத்திலே தூணின் மறைந்து விடுதல் பற்றி, மின்னின், தூணையே சார்ந்து நோக்கும் என்றார். தந்தை செய்யுள் விருந்திடையே இவள் ஒரு தூணைச் சார்ந்து நின்று தனக்கு ஊழினால் தரப்படுஞ் காதலனை நோக்குவாள் என்க. ( 41 )
1453. சேயிழை கணவ னாகுந் திருமகன் றிறத்து நாளு
மாயிரத் தெட்டு நேர்ந்த வாரமு தடிசி லூட்டி
யேயின வகையி னாலே யாறிரண் டெல்லை யாண்டு
போயின வென்ப மற்றப் பூங்கொடிச் சாய லாட்கே.
பொருள் : சேயிழை கணவன் ஆகும் திருமகன் திறத்து - கேமசரியின் கணவனாகிய திருமகனைக் காணுதற்கு; நாளும் ஆயிரத்தெட்டு நேர்ந்த ஆரமுது அடிசில் ஊட்டி - வைகலும் ஆயிரத்தெண்மருக்கு ஆக்கிய ஆரமுது போலும் சோற்றை ஊட்ட; ஏயின வகையினாலே அப் பூங்கொடிச் சாயலாட்கு - பொருந்திய வகையாலே அப் பூங்கொடிபோலும் மென்மையாட்கு; ஆறிரண்டு எல்லை ஆண்டு போயின என்ப - பன்னிரண்டு ஆகிய எல்லையையுடைய ஆண்டுகள் கழிந்தன என்க.
விளக்கம் : சேயிழை : அன்மொழித் தொகை. அமுதடிசில் : உவமத்தொகை. திருமகன் திறத்து என்பது, என்றிறத்து அவலங்கொள்ளல் என்பதுபோல (புறநா. 253) பொருட்டு என்னும் பொருளில் வந்தது. ஊட்டி - ஊட்ட : எச்சத்திரிபு. ( 42 )
1454. முருக்கிதழ் குலிக மூட்டி
வைத்தன முறுவற் செவ்வாய்த்
திருக்கவி னிறைந்த வெங்கட்
பணைமுலைத் தேம்பெய் கோதைப்
புரிக்குழற் பொன்செய் பைம்பூட்
புனையிழை கோல நோக்கித்
தரிக்கிலா துருகி நையுந்
தடமலர்க் கோதை நற்றாய்.
பொருள் : முருக்கிதழ் குலிகம் ஊட்டி வைத்த அனமுறுவல் செவ்வாய் - முருக்கமலரின் இதழை இங்குலிகத்தையும் ஊட்டி வைத்தாற்போன்ற, முறுவலையுடைய சிவந்த வாயையும்; திருக்கவின் நிறைந்த வெம்கண் பணைமுலை - திருமகளின் அழகு நிறைந்த விருப்பம் ஊட்டுங் கண்களையுடைய பருத்த முலைகளையும்; தேன் பெய் கோதை - தேன் பொருந்திய மலர்மாலையையும்; புரிக்குழல் - நெறித்த கூந்தலையும்; பொன்செய் பைம்பூண் - பொன்னாலான புத்தணியையும் உடைய; புனையிழை கோலம் நோக்கி - கேமசரியின் கோல முதிர்ச்சியைப் பார்த்து; தடமலர்க் கோதை நற்றாய் - பெரிய மலராலான மாலையினாளின அன்னை; தரிக்கிலாது உருகி நையும் - பொறாமல் வருந்துவாள்.
விளக்கம் : இயல்பாகவே சிவந்த முருக்க மலரின்மேல் இங்குலிகத்தையும் ஊட்டி வைத்தாற்போன்று நனிசிவந்த வாய் என்பார், முருக்கிதழ் குலிகம் ஊட்டிவைத்தன செவ்வாய் என்றார். புனையிழை : அன்மொழித் தொகை; கேமசரி. இத்தகைய அழகினாட்கு இன்னும் கணவன் வாய்த்திலனே என்று நற்றாய் நோக்குந்தோறும் நைந்துருகினாள் என்பது கருத்து. ( 43 )
1455. மாவடு மருட்டு நோக்கின் மதிமுக மழைக்கண் மாசில்
பூவொடு புரையுஞ் சாயல் புனைநலந் தனித்து வைக
வேவடு பிணையி னோக்கி யிறைவளை கழல நின்ற
தாய்படுந் துயர மெல்லாந் தாரவ னீக்கி னானே.
பொருள் : மதிமுகம் மாஅடு மருட்டும் நோக்கின் மழைக்கண் - திங்கள் போலும் முகத்திலே மானை வென்று, கண்டாரை மயக்கும் பார்வையையுடைய குளிர்ந்த கண்களையும்; பூவொடு புரையும் சாயல் - மலரொடு பொருந்தும் மென்மையினையும் உடைய கேமசரி; புனைநலம் தனித்து வைக - ஒப்பனை செய்த இத்தகைய அழகுடன் தனியே தங்குதலால்; ஏ அடு பிணையின் நோக்கி - அம்பால் ஏறுண்ட மான்பிணைபோலப் பார்த்து; இறைவளை கழல நின்ற - மன்கைவளை கழலுமாறு மெலிந்து நின்ற; தாய்படு துயரம் எல்லாம் - (கேமசரியின்) அன்னையுறுந் துயரத்தையெல்லாம்; தாரவன் நீக்கினான் - சுபத்திரன் போக்கினான்.
விளக்கம் : மாவடுப் பிளவினை ஒத்த கண் எனினுமாம். தாரவன் : சுபத்திரன். நீக்கினான் என்றது பின்விருமாறு கூறி நீக்கினான் என்பது பட நின்றது. ஏ - அம்பு. பிணை - பெண்மான். இறை - முன்கை. தாய் : நிப்புதி. ( 44 )
1456. போதுவாய் திறந்த போதே
பூம்பொறி வண்டு சேர்ந்தாங்
கூதுமே மகளிர்க் கொத்த
போகமு மன்ன தொன்றே
யாதுநீ கவல வேண்டா
வாரழ குடைய நம்பி
காதலான் றவத்தின் மிக்கான்
கண்ணுறு நாளை யென்றான்.
பொருள் : போது வாய் திறந்தபோதே - மலரின் வாய் நெகிழ்ந்த அளவிலே; பூம் பொறி வண்டு சேர்ந்து ஆங்கு ஊதுமே - அழகிய புள்ளிகளையுடைய வண்டு பொருந்தி நுகருமன்றோ?; மகளிர்க்கு ஒத்த போகமும் அன்னது ஒன்றே ஆகும் - பெண்களுக்குப் பொருந்தின நுகர்ச்சியும் அத்தகையதாகிய ஒன்றேயாம்; (ஆதலின்); ஆர் அழகு உடைய நம்பி காதலான் தவத்தின் மிக்கான் - சிறந்த அழகுடைய நம்பியும் இவளாற் காதலிக்கப்படுவானும் ஆகிய தவத்திற் சிறந்தவன்; நாளை கண்ணுறும் - நாளைக்கே வந்து எதிர்ப்படுவான்; நீ கவல வேண்டா - இனி நீ சிறிதும் வருந்தல் வேண்டா (என்று ஆற்றுவித்தான்).
விளக்கம் : இவளை நுகர்தற்குரியோன் தவத்தின் மிக்கோனும் ஆரழகுடையோனும் காதலானும் நம்பியுமாக இருத்தல் ஒருதலை என்பான், ஆரழகுடைய நம்பி காதலான் தவத்தின் மிக்கான் என்றான். அத்தகைய தவம் வீண்போகாது என்பான் நாளைக் கண்ணுறும் என்றான். ஆங்கு : அசைச்சொல். ஊதுமே : ஏ : வினா. ஒன்றே : ஏ : தேற்றம். ( 45 )
வேறு
1457. பொன்னிலத் தெழுந்ததோர் பொருவில் பூங்கொடி
மின்னுவிட் டெரிவதோர் நலத்தள் வீங்கிருள்
பின்னிவிட் டனகுழற் பெருங்கட் பேதையூர்
துன்னினன் றொடுகழற் குருசி லென்பவே.
பொருள் : தொடுகழல் குரிசில் - தொடுத்த கழலையுடைய சீவகன்; பொன் நிலத்து எழுந்தது ஓர் பொருஇல் பூங்கொடி - பொன்னாகிய நிலத்திலே தோன்றியதான ஓர் ஒப்பற்ற காமவல்லியைப் போல்; மின்னுவிட்டு எரிவது ஓர் நலத்தள் - ஒளிவிட்டு விளங்குவதொரு நலத்தினளாகிய; வீங்கு இருள் பின்னி விட்ட அன குழல் பெருங்கண் பேதையூர் - மிக்க இருளைப் பின்னிவிட்டாற் போன்ற குழலையுடைய பெருங்கண்ணாளாம் பேதையின் ஊரை; துன்னினன் - (சுபத்திரன் தன் மனைவியைத் தேற்றுவித்துக் கொண்டிருக்கும் அவ்வளவிலே) அடைந்தனன்.
விளக்கம் : பொன்னிலம் - வானுலகம். காமவல்லி - கற்பகமரத்திற்படர்வதொரு பொன்னிறப் பூங்கொடி. பேதை : கேமசரி. குருசில் - தலைவன் : ஈண்டுச் சீவகன். ( 46 )
1458. மல்லிகை மணங்கமழ் மாலை வார்குழற்
சில்சுணங் கிளமுலைச் சிறுமி தந்தையுஞ்
செல்வனைத் திருநகர்ச் சேட்பட் டானரோ
பல்கதிர் மணியொளி பரந்த பூணினான்.
பொருள் : பல்கதிர் மணியொளி பரந்த பூணினான் - பல கதிரையுடைய மணிகள் ஒளிரும் பரவிய பூணினான் ஆகிய; மல்லிகை மணம் கமம் மாலை வார்குழல் சில் சுணங்கு இளமுலைச் சிறுமி தந்தையும் - மல்லிகை மணம் வீசும் மாலையினையும் நீண்ட கூந்தலையும் சிலவாகிய தேமல் பரவிய இளமுலையினையும் உடைய கேமசரியின் தந்தையும்; செல்வனை - சீவகனை; திருநகர்ச் சேண் பட்டான் - கேமமா புரத்திலே எதிர்ப்பட்டான்.
விளக்கம் : சிறுமி தந்தையும் பூணினானுமாகிய சுபத்திரன் என்க. செல்வன் : சீவகன். திருநகர்ச் சேட்பட்டான் என்றது, அவன் வருகையை உணர்ந்து தன்னகரத்தினின்றும் தொலைவிடத்திலேயே எதிர் சென்று கண்டு அழைத்து வந்தனன் என்பதுபட நின்றது.
( 47 )
1459. தென்றிசை முளைத்ததோர் கோலச் செஞ்சுட
ரொன்றிமற் றுத்தரம் வருவ தொத்தவண்
மன்றல்கொண் மார்பினான் வந்தொ ரானிழ
னன்றுவந் திருந்தன னாதற் சிந்தியா.
பொருள் : தென்திசை முளைத்தது ஓர் கோலம் செஞ்சுடர் - தென் திசையிலே முளைத்ததாகிய ஓர் ஒப்பனையுறுஞ் சிவந்த ஞாயிறு; உத்தரம் ஒன்றி வருவது ஒத்து - வடதிசை நோக்கி நிலத்தே பொருந்தி வருவது போல; மன்றல் கொள் மார்பினான் வந்து - மணம் கொண்ட மார்பினானாகிய சீவகன் வந்து; ஒர் ஆல் நிழல் - ஓர் ஆலமரத்தின் நிழலிலே; நாதன் சிந்தியா நன்று உவந்து இருந்தனன் - அருகனைத் தியானித்தவாறு மிகவும் மகிழ்ந்திருந்தனன்.
விளக்கம் : இச் செய்யுளின்கண் சுபத்திரன் சீவகனை எதிர்ப்பட்ட இடமும் அவன் அவ்விடத்து இறைவணக்கஞ் செய்திருந்ததும் கூறுகின்றார். நாதன் - இறைவன். சிந்தியா - சிந்தித்து. நன்று - பெரிதும். தியானித்தல் : நமோ அரஹந்தாணம் என்றுகூறி மந்திரத்தியானஞ் செய்தல். வேற்று நாட்டின் சுவைகளை அறிந்து நுகரவேண்டும் என்று சீவகன் கூறியதற் கிசைந்த சுதஞ்சணன் இவனுக்கு ஊழ் வகையான் உறவு கொண்டு நுகர்ச்சி எய்தும் இடங்களை நாடி ஆண்டுச் சேறற்கு வழி கூறலின், வடதிசையிற் போதல் உளதாயிற்று. விசயமாதேவியைக் கண்டாற் பின்பு இராசமாபுரம் நோக்குவான். ( 48 )
1460. குடைகவித் தனையது கோல மாமுடி
யடியிணை யாமையின் வடிவு கொண்டன
புடைதிரள் விலாவும்வில் வளைந்த பொற்பின
கடிகமழ் தாமரை கண்ணின் வண்ணமே.
பொருள் : கோலமாமுடி குடைகவித்தனையது - இவனுக்கு அழகிய பெருமைமிக்க தலையும் உச்சி சிறிது உயர்ந்து முறைமையுறத் தாழ்ந்து சுற்றொத்தலின் குடைப்புறத்தை யொக்கும்; அடியிணை ஆமையின் வடிவு கொண்டன - இரண்டு புறவடிகளும் ஆமையின் உருவத்தைக் கொண்டுள்ளன; புடை திரள் விலாவும் வில் வளைந்த பொற்பின - பக்கந்திரண்ட விலாக்களும் வில் வளைந்தாற் போன்ற அழகின; கண்ணின் வண்ணம் கடிகமழ் தாமரை - கண்ணின் தன்மை மணங்கமழும் தாமரை மலரின் தன்மை.
விளக்கம் : இது முதல் ஆறுபாட்டுக்கள் சீவகன் உருவச் சிறப்புக் கூறுகின்றன. ஆலமர நீழலில் இருந்த சீவகனைச் சுபத்திரன் கண்டு மனத்திடை இவ்வாறு சிந்திக்கிறான். கண்ணின் வண்ணம் தாமரை வண்ணம் என வண்ணத்தைத் தாமரையோடுங் கூட்டுக. ( 49 )
1461. குறங்கணி மயிலொடு கோல மார்ந்தன
பிறங்கிய வுறுப்பின்மேற் பெரிய நோக்கின
கறங்கிசை மணிமுழா வெருத்தங் காண்டகு
மறங்கெழு பெரும்புலி வாயின் வண்ணமே.
பொருள் : குறங்கு அணி மணிரொடு கோலம் ஆர்ந்தன - துடைகள் அழகிய மயிருடன் அழகு பொருந்தினவாகி; பிறங்கிய உறுப்பின் மேல் பெரிய நோக்கின - பருத்த உறுப்புக்களைக் காட்டிலும் சிறப்புறும் அழகுடையன; எருத்தம் கறங்கு இசை மணி முழா - பிடரி ஒலிக்கும் இசையையுடைய அழகிய முழவை ஒக்கும்; வாயின் வண்ணம் மறம் கெழு பெரும்புலி - வாயின் அழகு வீரம் பொருந்திய பெரிய புலியின் வாயை ஒக்கும்.
விளக்கம் : கோலம் - அழகு, நோக்கு - அழகு; நோய் இகந்து நோக்கு விளங்க எனவரும் மதுரைக்காஞ்சியினும் அஃதப்பொருட்டாதல் உணர்க. பிறங்குதல் - பருத்தல். கறங்கிசை: வினைத்தொகை. மணி முழா என்றது குடமுழவினை. புலியின் வாய் சிறுகி வளைந்திருத்தலின் உவமையாக எடுத்தோதினர். வாயின் வண்ணம் புலிவாய் வண்ணம் என்க. ( 50 )
1462. வரையகன் மார்பிடை வரியு மூன்றுள
புரைதபு பொன்புரை நாவு முள்ளுடைத்
தருவரைத் தோள்களு மமரர் கோன்களிற்
றுருவுகொ டடக்கையி னுருவு கொண்டவே.
பொருள் : வரை அகல் மார்பிடை வரியும் மூன்று உள - மலையைப் போன்று அகன்ற மார்பிலே வரிகளும் மூன்றுள்ளன; புரைதபு பொன்புரை நாவும் முள் உடைத்து - குற்றம் அற்ற பொன்னைப் போன்ற நாவும் சருச்சரையுடையதாயிருக்கும்; அருவரைத் தோள்களும் அமரர் கோன் களிற்று உருவுகொள் தடக்கையின் உருவு கொண்ட - அரிய வரையனைய தோள்களும் வானவர் கோனுடைய ஐராவதத்தின் அழகு கொண்ட துதிக்கையின் உருவத்தைக் கொண்டன.
விளக்கம் : அகல் மார்புவரை அம்மார்பிடை என விரித்தோதி அகன்ற மார்பும் மலையை ஒக்கும் அம்மார்பினிடத்தே என்க.வரி - கோடு. அம்பகட்டு மார்பிற் செம்பொறி வாங்கிய மொய்ப்பின் என்றார் திருமுருகாற்றுப்படையினும். இங்ஙனம் மூன்று கோடமைதல் உத்தம விலக்கணம் என்ப. அமரர்கோன் : இந்திரன். உருவிரண்டனுள் முன்னது அழகு, ஏனையது வடிவம். ( 51 )
1463. இலங்குபொன் னிறுவரை யனைய வேந்தலுக்
கலங்கிதழ்த் தாமரைக் கொட்டை யன்ன தாய்
வலஞ்சுழிந் தமைவரக் குழிந்த வாய்ப்பொடு
நலங்கிளர் நாபியு மினிது நாறுமே.
பொருள் : இலங்கு பொன் இறுவரை அனைய ஏந்தலுக்கு - விளங்கும் பொன்னாகிய பெரிய மலையை ஒத்த தலைவனுக்கு; அலங்கு இதழ்த் தாமரைக் கொட்டை அன்னதாய் - விளங்கும் இதழையுடைய தாமரைப் பொகுட்டுப் போன்றதாய்; வலம் சுழிந்து அமைவரக் குழிந்த வாய்ப்பொடு - வலமாகச் சுழிந்து பொருந்துதல் வரக் குழிந்த இயல்போடு; நலம் கிளர் நாபியும் இனிது நாறும் - அழகு விளங்கும் நாபியும் நன்றாகத் தோன்றும்.
விளக்கம் : இறுவரை - பெரிய மலை. பொன் இறுவரை என்றது, மேருமலையினை. நாபி - உந்தி. நாறுதல் - தோன்றதல். இனிது என்புழி இனிமைப் பண்பு கட்கினிமையைக் குறித்து நின்றது. ( 52 )
1464. தடித்திறை திரண்டுதம் மளவிற் கேற்றசூழ்
கெடிற்றழ கழிப்பன கிளர்பொற் றோரைய
கடிப்பகை நுழைவறக் கதிர்த்த கைவிர
லடுத்தமூக் கருமணி வயிரத் தோட்டியே.
பொருள் : தடித்து இறை திரண்டு கிளர் தோரையதடித்து வரிகள் திரண்டு விளங்கும் பொன்னிற மூங்கிலரிசி அனையவாய்; கடிப்பகை நுழைவு அறக் கதிர்த்த கைவிரல் - வெண்சிறு கடுகும் நுழைய இயலாதவாறு ஒளிசெயும் கைவிரல்கள்; தம் அளவிற்கு ஏற்ற - தம் அளவிற்குத் தகவான; சூல் கெடிற்று அழகு அழிப்பன - சூல் கொண்ட கெளிற்று மீனின் அழகைக் கெடுப்பன; அடுத்த மூக்கு அருமணி வயிரத் தோட்டி - முகத்திற்குப் பொருந்திய மூக்கும் வயிரத் தோட்டியை ஒக்கும்.
விளக்கம் : இறை - விரலிலுள்ள கோடுகள். இலக்கண நூலிற் கூறப்பட்ட அளவிற்கு என்க. கெடிறு - கெளிறு; ஒருவகை மீன். பொன் தோரை - பொன்னிறமுடைய மூங்கில் நெல்; கடிப்பகை: ஐயவி - வெண் சிறு கடுகு. கடிப்பகையும் நுழைதற் கியலாதபடி இடைவெளியற இணைந்த என்பது கருத்து. கதிர்த்தல் - ஒளிவிடுதல். வயிரத்தோட்டி - வயிர மணியாற் செய்த தோட்டி (அங்குசம்.) தோரைய என்னும் குறிப்பு வினைமுற்று வினையெச்சமாய், கதிர்த்த என்னும் பெயரெச்சத்தைக் கொண்டு அது கை விரல் என்பதைக் கொண்டது. ( 53 )
1465. வார்ந்திலங் கெயிறணி பவழ மாண்டவா
யார்ந்தபூ வங்கையு மடியுந் தாமரை
தேர்ந்தனன் றிருமகள் கணவ னாமெனத்
தீர்ந்தனன் சொல்லளைஇத் தேர்க்கொண் டேறினான்.
பொருள் : வார்ந்து இலங்கு எயிறு அணிவாய் பவழம் - நீண்டு விளங்குகின்ற, பற்களையுடைய வாய் பவழத்தை ஒக்கும்; அங்கையும் அடியும் ஆர்ந்த தாமரைப்பூ - அகங்கையும் உள்ளடியும் பொருந்திய தாமரைப் பூவை ஒக்கும்; (ஆதலால்) திருமகள் கணவன் ஆம் எனத் தேர்ந்தனன் - இவன் திருமாலாவான் என்று தன்னிலே ஆராய்ந்தான்; சொல் அளை இத் தீர்ந்தனன் - சீவகனோடு கலந்து உரையாடித் திருமால் அல்லன் என்ற தெளிந்தான்; தேர் கொண்டு ஏளினான் - பின்னர்த் தேரிலே அவனை அமர்த்திக் கொண்டு தானும் ஏறினான்.
விளக்கம் : மாண்ட வாய் - மாட்சிமையுடைய வாய். பற்களால் அணியப்பட்ட வாய் என்க. அளைஇ - கலந்து அளைஇ என்பது தீர்ந்தனன் என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. இவனே என் திருமகள் கணவனாம் என்றும் ஒரு பொருள் தோற்றி நின்றது.சீவகனுடைய தோற்றம் இந்த ஆறு செய்யுட்களிலும் தலைதடுமாறக் கூறிற்றாயினும் தலைமுதல் அடிவரை முறையே கொள்க. (54)
1466. தேரிவ ரூர்ந்தனர் செல்ல விற்றலைக்
கூருகிர் விடுத்ததோர் கோல மாலையைப்
பேரிசை வீணையிற் சூட்டிப் பெண்கொடிக்
காரிகை யுலகுணர் கடவுட் பாடுமே.
பொருள் : இவர் தேர் ஊர்ந்தனர் செல்ல - இவர்கள் தேரூர்ந்து சென்று கொண்டிருக்கும்போது; இல்தலை - சுபத்திரன் வீட்டிலே; கூர் உகிர் விடுத்தது ஓர் கோலம் மாலையை - கூரிய நகத்தால் வலிய மலர்த்திப் புனைந்த ஒரு செங்கழுநீர் மாலையை; பேர் இசை வீணையில் சூட்டி - நல்லிசையை எழுப்பும் வீணையிலே சூட்டி; உலகு உணர் கடவுள் - உலகு உணர்ந்த கடவுளை; பெண் கொடிக் காரிகை பாடும் - பெண் கொடியாகிய காரிகை பாடுவாள்.
விளக்கம் : ஊர்ந்தனர்: முற்றெச்சம். தண்கயத் தமன்ற ஒண்பூங்குவளை அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி என்றும் (அகநா. 180) காலமன்றியும் கையினெரித்த கழுநீர்க் குவளை (பெருங். 1-35 : 1834) என்றும் பிறசான்றோர் கூறுதல் நோக்கி மாலை என்றது செங்கழுநீர் மாலை எனப்பட்டது. காரிகை : கேமசரி; ஆகுபெயர். உலகு - உயர்ந்தோர்.( 55 )
வேறு
1467. வீங்கோத வண்ணன் விரைததும்பு பூம்பிண்டித்
தேங்கோத முக்குடைக்கீழ்த் தேவர் பெருமானைத்
தேவர் பெருமானைத் தேனார் மலர்சிதறி
நாவி னவிற்றாதார் வீட்டுலக நண்ணாரே.
பொருள் : வீங்கு ஓத வண்ணன் - பொங்கும் கடல் நிறத்தவனாகிய; விரை ததும்பு பூம்பிண்டித் தேங்கு ஓதம் முக்குடைக்கீழ்த் தேவர் பெருமானை - மணம் கமழும் மலர்ப்பிண்டியின் அடியிலே தங்கிய குளிர்ச்சியை உடைய முக்குடையின் கீழ் எழுந்தருளிய வானவர் தலைவனை; தேவர் பெருமானை -; தேன் ஆர் மலர் சிதறி - வண்டுகள் பொருந்திய மலர்களை யிட்டு; நாவின் நவிற்றாதார் வீட்டு உலகம் நண்ணார் - நாவினாற் கூறாதார் வீட்டுலகை அடையார்.
விளக்கம் : எனவே, நவிற்றுவோர் வீட்டுலகம் நண்ணுவர் என்பதாயிற்று.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள். 8)
என்றார் வள்ளுவனாரும். முக்குடை : சந்திராதித்தம், நித்திய வினோதம், சகலபாசனம் என்பன. ஓதவண்ணம் : நேமிநாதர். ( 56 )
1468. அடல்வண்ண வைம்பொறியு மட்டுயர்ந்தோர் கோமான்
கடல் வண்ணன் முக்குடைக்கீழ்க் காசின் றுணர்ந்தான்
காசின் றுணர்ந்தான் கமல மலரடியை
மாசின்றிப் பாடாதார் வானுலக நண்ணாரே.
பொருள் : அடல் வண்ண ஐம்பொறியும் அட்டு உயர்ந்தார் கோமான் - உயிரை வருத்தும் இயல்பையுடைய ஐம்பொறிகளையும் வென்று மேம்பட்ட முனிவர்கள் தலைவன்; கடல் வண்ணன் - கடல் நிறத்தான்; முக்குடைக் கீழ்க் காசு இன்று உணர்ந்தான் - முக்குடையின் கீழ் அமர்ந்த குற்றமில்லாது உணர்ந்தவன்; காசின்றுணர்ந்தான் கமல மலரடியை - அப்பெருமானுடைய தாமரை மலர்போலும் அடியை; மாசு இன்றிப் பாடாதார் வான் உலகம் நண்ணாரே - குற்றமின்றிப் பாடாதவர் விண்ணுலகை அடையமாட்டார்.
விளக்கம் : காசு - ஐயந்திரிபு. மாசு - காமவெகுளி மயக்கம். வானுலகம் - வீடு. பொறிவாயிலைந்தவிந்தான் என்பது பற்றி ஐம்பொறியும் அட்டு உயர்ந்தோர் கோமான் என்றார். பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவி என்பன. அவற்றை அடலாவது தத்தமக்குரிய புலன்களில் செல்லாது அடக்குதல். ( 57 )
1469. பூத்தொழியாப் பிண்டிக்கீழ்ப் பொங்கோத வண்ணனை
நாத்தழும்ப வேத்தாதார் வீட்டுலக நண்ணாரே
வீட்டுலக நண்ணார் வினைக்கள்வ ராறலைப்ப
வோட்டிடுப வெண்குணனுங் கோட்பட் டுயிராவே.
பொருள் : பூத்து ஒழியாப் பிண்டிக் கீழ்ப் பொங்கு ஓதவண்ணனை - மலர்ந்து மாறாத பிண்டியின் கீழ் எழுந்தருளிய பொங்குங் கடல் வண்ணனை; நாத்தழும்ப ஏத்தாதார் வீட்டுலகம் நண்ணார் - நாவானது தழும்பு உறப்போற்றாதார் வீட்டையடையார்; வீட்டுலகம் நண்ணார் - அவ்வாறு வீட்டையார்; வினைக் கள்வர் ஆறு அலைப்ப - தீவினையாகிய கள்வர் வழிபறித்தலாலே; எண் குணனும் கோட்பட்டு உயிரா ஓட்டிடுப - எண் குணங்களும் கள்வராற் பற்றப்பட்டுப் பெருமூச்செறிந்து ஓடிடுவர்.
விளக்கம் : ஓடிடுப என்பது ஓட்டிடுப என விகாரப்பட்டது. எண்குணம், வரம்பிலா அறிவு முதலிய பண்புகள். அருகனை வணங்காதார்க்கு நுகரப் பெறாமையால் உளதாம் பற்று ஒழிவின்றாய் வருவதன்றி, நுகர்ச்சி எய்திப் பற்றற்று வீடு பெறுதல் கூடாதாய் இருந்த தென்பது கருத்து. முன்னர் வணங்காமையின் தானும் இவ்வருத்தம் உற்றேன் என்றாள். இவை படர்க்கையாதலிற் பொருள் வேறுபட்டு வந்த தேவபாணிக் கொச்சக ஒருபோகு. ( 58 )
வேறு
1470. முத்துமிழு முந்நீர் மணிவண்ணன் மூன்றுலகும்
பத்திமையாற் பாடப் படுவான்றாள் பாடக்கேட்
டொத்தரம்பை யன்னா ளுவந்திவளொ டொப்பானோர்
வித்தகனை யின்னே பெறுக வெனவுரைத்தாள்.
பொருள் : முத்து உமிழும் முந்நீர் மணிவண்ணன் - முத்துக்களைக் கொழிக்கும் கடல் நீர் போன்ற நீலவண்ணனும்; மூன்று உலகும் பத்திமையால் பாடப்படுவான் தாள் பாடக் கேட்டு - மூன்றுலகும் அன்பினாற் பாடப்படுவோனுமாகிய அருகன் தாளைக் கேமசரி பாடக் கேட்டு; அரம்பை அன்னாள் ஒத்து உவந்து - அரம்பையைப் போன்ற நிப்புதி தன் கருத்தும் தன் மகள் கருத்தும் ஒத்தலின் மகிழ்ந்து; இவளொடு ஒப்பான் ஓர் வித்தகனை - இவளழகுக்கு ஏற்றவனாகிய ஒரு வித்தகனை; இன்னே பெறுக என உரைத்தாள் - இப்போதே இவள் அடையவேண்டும் என்று இறைவனை பரவினாள்.
விளக்கம் : முந்நீர் வண்ணன் மணிவண்ணன் எனத் தனித்தனி கூட்டுக முந்நீர் - மூன்று நீரையுடையது அல்லது மூன்று தொழிலையுடையது என்னும் பொருள்பட்டுக் கடலுக்காயிற்று. வித்தகன் - சதுரப்பாடுடையவன். இன்னே - இப்பொழுதே. உரைத்தாள் என்பது வேண்டிப்பரவினள் என்பதுபட நின்றது. ( 59 )
வேறு
1471. நிலந்தினக் கிடந்தன நிதியந் நீணகர்ப்
புலம்பறப் பொலிவொடு புக்க காலையே
யிலங்குபூங் கொடியன வேழை நோக்கமு
முலங்கொடோ ளுறுவலி நோக்கு மொத்தவே.
பொருள் : நிலம் தினக் கிடந்த அன நிதி - மண் தின்னுமாறு கிடந்த செல்வத்தையுடைய; அந்நீள் நகர் - அப் பெரிய மனையிலே; புலம்பு அறப் பொலிவொடு புக்க காலை - அம் மனையிலுள்ளோரின் வருத்தம் நீங்க அழகுறச் சீவகன் புகுந்தபோது; உலம்கொள் தோள் உறுவலி நோக்கும் - கற்றூண் போன்ற தோளையுடைய மிகுவலியுடைய சீவகன் பார்வையும்; இலங்கு பூங்கொடி அன ஏழை நோக்கமும் - விளங்கும் பூங்கொடி போன்ற கேமசரியின் பார்வையும்; ஒத்த - ஒன்றுபடப் பொருந்தின.
விளக்கம் : நிலத்தினக் கிடந்தன நிதியம் என்றது அழிவின்றி மிக்குக் கிடக்கும் நிதியம் என்பதுபட நின்றது. அஃகா வியல்பிற்றாய செல்வம் தங்கிக் கிடத்தற்குக் காரணங் கூறுவார் நச்சினார்க்கினியர் அறத்தால் தேடின பொருள் என்று நுண்ணிதின் உரைத்தனர். நிதியந் நீள்நகர் என்புழி மகரவீறு கெடாமல் நகர வீறாய்த் திரிந்து நின்றது. பெண்டிரின் மென்மைப் பண்பு குறித்த ஏழை என்னும் சொல்லால் கேமசரியையும் ஆடவரின் வன்மையைக் குறித்த உறுவலி என்னுஞ் சொல்லால் சீவகனையுங் கூறிய நயமுணர்க. அவளைப் பூங்கொடி என்றும் அவனை உலங்கொள்தோள் உடையன் என்றலும் உணர்க. உறுவலி : அன்மொழித்தொகை : சீவகன். ( 60 )
வேறு
1472. கண்ணுறக் காளையைக் காண்டலுங் கைவளை
மண்ணுறத் தோய்ந்தடி வீழ்ந்தன மாமையு
முண்ணிறை நாணு முடைந்தன வேட்கையு
மொண்ணிறத் தீவிளைத் தாளுருக் குற்றாள்.
பொருள் : காளையைக் கண்உறக் காண்டலும் - காளையை அங்ஙனம் அவள் எதிர்ப்படக் கண்டாளாக; கைவளை மண்உறத்தோய்ந்து அடி வீழ்ந்தன - கையில் இருந்த வளைகள் மண்உறப் பொருந்திக் காலடியிலே வீழ்ந்தன; மாமையும் உள்நிறை நாணும் உடைந்தன - மாமையும் உள்ளிருந்த நிறையும் நாணும் கேட்டன; வேட்கையும் ஒள்நிறத் தீ வினைத்தாள் உருக்கு உற்றாள் - அவாவையும் ஒளிரும் தீயென விளைவித்துக் கொண்டாள்; தானும் அத் தீயாலே உருக்குண்டாள்.
விளக்கம் : உண்ணிறையும் நாணம் : வினைத்தொகை.( 61 )
1473. வாக்கணங் கார்மணி வீணைவல் லாற்கவ
ணோக்கணங் காய்மன நோய்செய நொந்தவன்
வீக்கணங் கார்முலை வேய்நெடுந் தோளியொர்
தாக்கணங் கோமக ளோனெத் தாழ்ந்தான்.
பொருள் : வாக்கு அணங்கு ஆர் மணி வீணை வல்லாற்கு - திருத்தமுற்ற தெய்வத்தன்மை நிறைந்த அழகிய யாழ் வல்ல சீவகனுக்கு; அவள் நோக்கு அணங்காய் மனநோய் செய - அவள் நோக்கம் வருத்தமாய் மனத்தை நோய் செய்தலாலே; அவன் நொந்து - அவன் வருந்தி; வீக்கு அணங்கு ஆர் முலை வேய் நெடுந்தோளி - கச்சினால் இறுக்கப்பட்டு வருத்தம் நிறைந்த முலையினையும் வேய் போன்ற நீண்ட தோளினையும் உடையாள்; ஓர் தாக்கு அணங்கோ மகளோ எனத் தாழ்ந்தான் - தாக்கி வருத்தும் ஒரு தெய்வ மகளோ மானிட மகளோ என ஐயுற்றுக் குறைந்தான்.
விளக்கம் : வாக்கு - திருத்தம். வாக்கணங்கு என்று கொண்டு நாமகள் எனினுமாம். இனி, அணங்கு என்றற்கு வீணைக்குரிய மாதங்கி என்னும் தெய்வம் எனினுமாம். இது நச்சினார்க்கினியர் கொள்கை. சீவக 550 ஆம் செய்யுளையும் உரையையும் காண்க. தாக்கு அணங்கு : திருமகள் என்பர் நச்சினார்க்கினியர். ( 62 )
1474. நல்வளத் தாமரை நாணிய வாண்முகக்
கொல்வளர் வேற்கணி னாள்குழைந் தாளெனச்
சொல்வளர்த் தாரவ டோழியர் சோர்குழன்
மல்வளர் மார்பனை வந்து வளைந்தார்.
பொருள் : நல்வளம் தாமரை நாணிய வாண்முகம் - நல்ல வளமிகும் தாமரை மலர் வெள்கிய ஒளியுறும் முகத்திலே; கொல்வளர் வேற்கணினாள் குழைந்தாள் என - கொல்லுந் தொழிலிற்கிடந்த வேலைப்போன்ற கண்ணாள் வருந்தினாள் என்று; சோர்குழல் அவள் தோழியர் சொல் வளர்த்தார் - சோர்ந்த குழலையுடைய கேமசரியின் தோழிகள் சொல்லைப் பரப்பியவராய்; மல்வளர் மார்பனை வந்து வளைந்தார் - மல்லிலே மேம்பட்ட மார்பின்னாம் சீவகனை வந்து சூழ்ந்தனர்.
விளக்கம் : சோர்குழல் அவள் எனக் கூட்டுக. ( 63 )
1475. நினைப்பரு நீணிறை நிப்புதி சேர்ந்தாங்
கினத்திடை யேறனை யானெழி னோக்கிப்
புனக்கொடி பொற்பொடு புண்ணிய நம்பி
வனப்பினை யேகண்டு வாட்க ணகன்றாள்.
பொருள் : நினைப்ப அரு நீள் நிறை நிப்புதி ஆங்கு சேர்ந்து - நினைப்பில் அடங்காத பெருங் கற்பினளாகிய நிப்புதி ஆங்கு வந்து; இனத்திடை ஏறனையான் எழில் நோக்கி - ஆவின் திரளிடையே நிற்கின்ற ஏறுபோன்ற சீவகனின் அழகைப் பார்த்து; புனக்கொடி பொற்பொடு புண்ணிய நம்பி வனப்பினையே கண்டு - புனத்திற் கொடிபோன்ற கேமசரியின் அழகுடன் சீவகனின் அழகையுமே ஒப்பிட்டுப் பார்த்து; வாள்கண் அகன்றாள் - வாளனைய கண்கள் உடம்பெல்லாம் பெற்றாற் போலானாள்.
விளக்கம் : ஏறனையான் எழில் புனக்கொடி பொற்பொடு நோக்கி என முன்னர்க் கூட்டிப், பின்னர், புண்ணிய நம்பி வனப்பினையே பார்த்து வாட்கண் அகன்றாள் என்பர் நச்சினார்க்கினியர். நிப்புதி : நிஸ்ப்ருதி என்பதன் திரிபு என்பர். வாட்கண்ணாள் மீண்டுபோனாள் என்றும் உரைக்கலாம். மகளிர் கூட்டத்தினிடையே நின்றமை கருதி இனத்திடை ஏறனையான் என்றார். ( 64 )
1476. வள்ளலை வாசநெய் பூசி மணிக்குடத்
தெள்ள னீர்சொரிந் தாட்டினர் தேம்புகை
யுள்ளுற வுண்ட கலிங்க முடுத்தபின்
கள்ளவிழ் கண்ணி கலத்தொ டணிந்தார்.
பொருள் : வள்ளலை வாச நெய்பூசி - சீவகனை மணமுறும் நெய்யைப் பூசி. மணிக்குடம் தெள் அறல் நீர் சொரிந்து ஆட்டினர் - மணிக்குடத்திலிருந்து தெள்ளிய அறலையுடைய நீரைப் பெய்து ஆட்டினர்; தேம் புகை உள்உற உண்ட கலிங்கம் உடுத்த பின் - பிறகு, இனிய புகையைத் தன்னிடம் கொண்ட ஆடையை அவன் உடுத்திய பின்னர்; கள் அவிழ் கண்ணி கலத்தொடு அணிந்தார் - (மகளிர் அவனுக்குத்) தேன் சொரியும் கண்ணியையும் பூண்களையும் அணிவித்தனர்.
விளக்கம் : தானே வலியவந்து கேமசரிக்குத் தன்னையே வழங்கினமை கருதி வள்ளலை என்றார். கலிங்கம் - கலிங்க நாட்டில் நெய்யப்பட்டதோர் ஆடையைக் குறித்துப் பின்னர் ஏனைய ஆடைக்கும் பொதுவாய் நின்றதொரு சொல். கண்ணி - தலையிற் சூட்டுமாலை. கலத்தொடு - ஆபரணத்துடன். ( 65 )
1477. மங்கல வெள்ளை வழித்துமுத் தீர்த்தபின்
கொங்கலர் கோதையர் கொண்டக மெய்தி
யங்கதிர்ப் பொற்கலத் தாரமிர் தேந்தினர்
செங்கயற் கண்ணியர் சீரி னயின்றான்.
பொருள் : மங்கல வெள்ளை வழித்து முத்து ஈர்த்தபின் - (உண்ணுமிடத்தைச்) சந்தனத்தால் மெழுகி முத்தாலே கோலம் இட்டபிறகு; கொங்கு அலர் கோதையர் செங்கயற் கண்ணியர் கொண்டு அகம் எய்தி - தேனையுடைய மலர்க் கோதையராகிய கயற்கண்ணியர் அவனை அழைத்துச் சென்று உட்புகுந்து; அம்கதிர்ப் பொற்கலத்து ஆர் அமிர்து ஏந்தினர் - அழகிய ஒளிமிகும் பொற்கலத்திலே சிறந்த அடிசிலை ஏந்தினர்; சீரின் அயின்றான் - அவனும் அவர் புகழ்ச்சியுடன் உண்டான்.
விளக்கம் : வெள்ளை - சந்தனத்தில் ஒருவகை. இது வெண்ணிறமுடைமையின் மங்கலப் பொருளாகவும் மதிக்கப்படும். முத்தும் மங்கலங்கருதிக் கூறப்பட்டது. ( 66 )
1478. பத்தியிற் குயிற்றிய பைம்பொற் றிண்ணைமேற்
சித்திரத் தவிசினுட் செல்வன் சீர்பெற
நித்தில மணியுறழ் கரக நீரினா
லத்துறை விடுத்தன னலர்ந்த தாரினான்.
பொருள் : பத்தியில் குயிற்றிய பைம்பொன் திண்ணைமேல் சித்திரத் தவிசினுள் - பத்தியாகச் செய்யப்பட்ட பசும்பொன் திண்ணையின் மேல் ஓவியத் தொழில் கொண்ட இருக்கையிலே; அலர்ந்த தாரினான் செல்வன் - மலர்ந்த மாலையான் ஆகிய சீவகன் (அமர்ந்து); நித்தில மணி உறழ் கரக நீரினால் - முத்தாகிய மணியைப்போன்ற கரகத்திலிருந்து வார்த்த நீரைக்கொண்டு; சீர்பெற அத்துறை விடுத்தனன் - ஒழுங்காகப் பூசுதற்குரிய தொழில்களையெல்லாம் முடித்துவிட்டான்.
விளக்கம் : திண்ணைமேல் இடப்பட்ட தவிசினுள் இருந்து என்க. அத்துறை - உண்ணுதலாகிய அத்துறை என்க. கரகம் : கெண்டிகை. ( 67 )
1479. இளிந்தகாய் கமழ்திரை வாச மீண்டியோர்
பளிங்குபோழ்ந் தருகுபொன் பதித்த பத்தியின்
விளிம்புமுத் தழுத்திய யவனக் கைவினைத்
தெளிந்தபொன் னடைப்பையுட் பாகு சென்றவே.
பொருள் : ஓர் பளிங்கு போழ்ந்து - ஒரு முழுப் பளிங்கை அறுத்து; அருகு பொன் பதித்த பத்தியின் - அதன் பக்கத்தே பொன்னிடப்பட்ட பத்தியிலே; விளிம்பு முத்து அழுத்திய - விளிம்பில் முத்துக்களை அழுத்திய; யவனக் கைவினைத் தெளிந்த பொன் அடைப்பையுள் - யவனத் தச்சர் கைவினையுடைய தெளிந்த பொன் அடைப்பையிலே; இளிந்த காய் கமழ் திரைவாசம் பாகு ஈண்டிச் சென்ற - இணுங்கின காயும் மணங்கமழ் வெற்றிலையும் முகவாசமும் தனிப்பாகும் சென்றன.
விளக்கம் : இணுங்குதல் - பறித்தல். காய் - பாக்கு. திரை - வெற்றிலை. பவனம் - அந்நாட்டுக் கம்மியர்க்கு ஆகுபெயர். அடைப்பை - வெற்றிலை முதலியன இட்டுவைக்கும் பை. ஒரு பளிங்கையறுத்தப் பொன்னை விளிம்பிற் பதித்த அடைப்பையில் இணுங்கின காயும் வெற்றிலையும் பார்வைக்குச் சென்றன என்றும், யவனக் கைவினைபெற்ற முத்தழுத்திய பொன்னடைப்பையிலே பாக்கும் வெற்றிலையும் முகவாசமும் ஈண்டித் தின்றற்குச் சென்றன என்றும் நச்சினார்க்கினியர் உரைப்பார். ஒன்றாக உரைப்பாருமுளரென்றார். ( 68 )
1480. பாசிலை சுருட்டுபு கறித்துப் பல்லினைத்
தேசிகம் படத்துடைத் துமிழ்ந்து தேங்கமழ்
வாசம்வாய்க் கொண்டனன் மணிசெய் குண்டலம்
வீசிவில் விலங்கிவிட் டுமிழ வென்பவே.
பொருள் : மணிசெய் குண்டலம் வீசி வில் விலங்கி விட்டு உமிழ - மணியாற் செய்த குண்டலம் ஒளியைக் குறுக்கிட்டு உமிழும்படி; பாசிலை சுருட்டுபு கறித்து - வெற்றிலையைச் சுருட்டிக் கறித்து; பல்லினைத் தேசிகம் படத்துடைத்து உமிழ்ந்து - (அதன் குறையாலே) ஒளியுண்டாகப் பல்லைத்துடைத்து அதனை உமிழ்ந்து; தேன்கமழ் வாசம் வாய்க்கொண்டனன் - இனிமை கமழும் வெற்றிலை முதலிய முகவாசத்தை உட்கொண்டான்.
விளக்கம் : வெற்றிலையை முன்னிட்டுப் பின் பிளவை மெல்லுதல் வேண்டும் என்பது ஒரு விதி. கறித்து - மென்று; இக்காலத்தே கடித்து என வழங்குவர். மெல்லுங்காற் குண்டலம் அசைதல் இயல்பாதலுணர்க. தேசு - தேசிகம் எனத் திரிந்தது. ( 69 )
1481. பண்ணுலாங் கிளவிதன் பரவை யேந்தல்குல்
வண்ணமே கலையிவை வாய்ந்த பூந்துகி
லுண்ணிலாய்ப் பசுங்கதி ருமிழ்வ பாவியேன்
கண்ணையு மனத்தையுங் களங்கொண் டிட்டவே.
பொருள் : பண்உலாம் கிளவிதன் பரவை ஏந்து அல்குல் வண்ணமேகலை இவை - பண்ணொத்த கிளவியாளுடைய பரப்புடைய ஏந்திய அல்குலும் வண்ணமுறும் மேகலையும் ஆகிய இவை; வாய்ந்த பூந்துகில் உள் நிலாய்ப் பசுங்கதிர் உமிழ்வ - பொருந்திய அழகிய துகிலின் உள்ளே நிலைபெற்று நின்று புத்தொளி உமிழ்வன; பாவியேன் கண்ணையும் மனத்தையும் களம் கொண்டிட்ட - பாவியேனுடைய கண்ணையும் மனத்தையும் தமக்கு இருப்பிடமாகக் கொண்டுவிட்டன.
விளக்கம் : உலாம் : உவமப்பொருட்டு. கிளவி : கேமசரி. பரப்புடையதாய் ஏந்திய அல்குல் என்க. அல்குல் முதலியன பூந்துகிலுள் இருப்பனவாகவும் என் கண்ணினும் மனத்தினும் இருந்தன, இஃதொரு புதுமை என்று வியந்தபடியாம்.இது முதல் கலைத்தொகை (சீவக - 1488) வரை சீவகன் கேமசரியை நினைத்து வருந்துதல் கூறப்படும். ( 70 )
1482. கடிகமழ் குழலினாற் கட்டி மெய்யெலா
நடுவொசி நோன்சிலைப் புருவத் தாற்புடைத்
தடுமலர் நெடுங்கணா லாவி போழ்ந்திடாக்
கொடியவ ளிளமுலை கொல்லுந் கொல்லுமே.
பொருள் : மெய்யெலாம் கடிகமழ் குழலினால் கட்டி - என் மெய்யையெல்லாம் மணம்கமழும் தன் குழலினாலே கட்டி; நடு ஒசி நோன்சிலைப் புருவத்தால் புடைத்து - நடு வளைந்த வலியவில்லாகிய தன் புருவததாலே அடித்து; அடும் மலர் நெடுங்கணால் ஆவி போழ்ந்திடா - வருத்தும் மலரனைய நீண்ட கண்களால் உயிரைப் பிளந்திட்டு; கொடியவள் இளமுலை கொல்லும் - கொடியவளுடைய இளமுலைகளாகிய யானை என்னைக் கொல்லும் கொல்லும்.
விளக்கம் : முலை தான் வருத்தலுடைமையின் தானும் வினைமுதலாம். புருவத்தாற் புடைத்துக் கண்ணால் ஆவிபோழ்ந்திடாத கொடியவள் தன் குழலாலே கட்ட முலைகொல்லும்என முடிப்பர் நச்சினார்க்கினியர். இவையெலாம் வருத்துகின்றனவே யாதலின் புருவத்தையுங் கண்ணையுந் தீங்கு செய்யாதனவாகக் குறிப்பிடுதலிற் போதிய பயனின்றாம். போழ்ந்திடா - போழ்ந்திட்டு : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ( 71 )
1483. கடியன கச்சினாற் கட்டப் பட்டன
கொடியன குங்குமங் கொட்டப் பட்டன
வடிநிலம் பரந்துமுத் தணிந்த வெம்முலை
யிடைநிலஞ் செகுப்பன வென்னை யென்செயா.
பொருள் : கடியன - இயல்பாக மணமுடையனவாய்; கச்சினால் கட்டப்பட்டன - கச்சினாற் கட்டப்பட்டனவாய்; கொடியன - எழுது கொடி உடையனவாய்; குங்குமம் கொட்டப்பட்டன - குங்குமம் இடப்பட்டனவாய்; அடிநிலம் பரந்து முத்து அணிந்த வெம்முலை - அடியிடம் பரந்து முத்துக்களை அணிந்த விருப்பூட்டும் முலைகள்; இடை நிலம் செகுப்பன - தம்மைச் சுமந்திருக்கின்ற இடையாகிய இடத்தைக் கெடுப்பன; என்னை என் செயா - யான் அகப்பட்டால் எத்துன்பத்தையும் செய்யும் அல்லவோ!
விளக்கம் : உலகில் தொழிலாற் கடியவர்கள் கட்டுண்ணப்படுவரென்றும், மனம் கொடியவர்கள் ஒன்றாற் புடையுண்ணப் படுவரென்றும் ஒரு பொருள் தோன்றிற்று என்பார் நச்சினார்க்கினியர்.தம்மைத் தாங்குவதாகிய இடையினையே செகுப்பன; ஏதிலனாகிய என்னை என் செயா! எதுவுஞ்செய்யும் என்பது கருத்து. ( 72 )
1484. கரியவுள் வெறியன கட்டப் பட்டன
புரிவொடு புறத்திடப் பட்ட பூங்குழல்
தெரியின்மற் றென்செயா செய்ய நீண்டன
பெரியகண் போலவும் பேது செய்யுமே.
பொருள் : கரிய - கருநிறமுடையனவாய்; உள் வெறியன - உள்ளே மணமுடையனவாய்; கட்டப்பட்டன - கட்டி முடிக்கப்பட்டனவாய்; புரிவொடு புறத்து இடப்பட்ட பூங்குழல் - கடை குழைதலுடன் எருத்தத்தே கிடத்தப்பட்ட பூங்குழல்கள்; செய்ய நீண்டன - செய்யனவாய் நீண்டிருக்கின்றனவாகிய; பெரிய கண்போலவும் பேது செய்யும் - பெரிய கண்களைப்போலவும் வருத்தம் புரிகின்றன; தெரியின் என் செயா - ஆராயின் எல்லாஞ் செய்ய வல்லன.
விளக்கம் : செய்யனவும் நீண்டனவும் பெரியனவும் ஆகிய கண்கள் தம் நல்லியல்பிற்கு மாறாகத் தீங்கு செய்கின்றன; இங்ஙனமாகக் கரியனவும் வெறியனவும் புறத்தே தள்ளப்பட்டனவுமாகிய தீயவியல்புடைய ஐம்பால் அக்கண்போற் றீங்கு செய்தல் வியப்போ? ஆராயின் அவை எதுவும் அஞ்சாமற் செய்யும் என்பது கருத்து. இதன்கண் சிறப்புப் பொருளையே உவமையாக்கி இரண்டன் தீமையையும் விளக்குதல் உணர்க. கொடியனவாய், உள்ளே கள்ளின் மயக்குடையனவாய்க் கட்டுண்ணப்பட்டனவாய் எப்போதும் திருகுதலுடனே தம்மிடத்தினின்றும் கீழ்ப்போந்து கிடக்கும்படி புறத்திடப்பட்டனவாய் என்றும் ஒரு பொருள் தோன்றிற்று. உள்வெறியன - உள்ளே ஒன்றுமில்லதனவாய் எனினும் ஆம். ( 73 )
1485. காதன்மை கண்ணுளே யடக்கிக் கண்ணெனுந்
தூதினாற் றுணிபொரு ளுணர்த்தித் தான்றமர்க்
கேதின்மை படக்கரந் திட்ட வாட்கணோக்
கோதநீ ரமுதமு முலகும் விற்குமே.
பொருள் : காதன்மை கண்ணுளே அடக்கி - தன் வேட்கையையெல்லாம் தன் கண்ணுள்ளே கிடத்தி; கண் எனும் தூதினால் துணிபொருள் உணர்த்தி - அக் கண்ணென்கின்ற தூதாலே தான் எண்ணிய பொருளை எனக்கு அறிவித்து; தான் தமர்க்கு ஏதின்மைபடக் கரந்திட்ட - தான் தன் சுற்றத்தார்க்கு வேட்கை யாகிய காரணம் தோன்றாதவாறு மறைத்திட்ட; வாள் கண் நோக்கு - கேமசரியின் நோக்கம்; ஓதநீர் அமுதமும் உலகும் விற்கும் - கடலில் தோன்றிய அமுதத்தையும் உலகையும் தனக்கு விலையாகக் கொள்ளும்.
விளக்கம் : காதன்மை : காதற்றன்மை. கண்ணென்னும் தூது என்றது தானோக்காக்காற் றன்னை நோக்கும் களவு நோக்கத்தை. இஃதவள் உடம்பாட்டைத் தனக்குணர்த்துதலின் தூது எனப்பட்டது. தமர் அறியாமைப் பொருட்டு என்னை ஏதின்மைபடவும் நோக்கும். நோக்கு என்க.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. (குறள். 1099)
இச்செய்யுள் தேவரின் ஒப்பற்ற புலமைக்கோர் எடுத்துக்காட்டாகும். கண்ணுளே என்பதற்குத் தன்னுளே என்பதூஉம் பாடம். (74)
வேறு
1486. மிகுகொடா முத்தஞ் சூட்டி மீளிமை தீர்த்து மின்னு
நகுகொடா மணிக ணல்ல தெளித்துக்கொண் டெழுதி நன்பொன்
முகபடாம் வைப்ப வாட்செற் றழன்றுகண் கரிந்த முல்லைத்
தொகுகடாங் கோதை வெய்ய துணைமணி முலைக டாமே.
பொருள் : முல்லைத் தொகு கள்தாம் கோதை வெய்ய துணைமணி முலைகள் தாம் - முல்லைமலரின் திரண்ட தேன்பரக்கும் மாலையையுடைய இணையாகிய, மணியணிந்த வெய்யனவாகிய முலைகள்தாம்; கொடா மிகு மீளிமை தீர்த்து - ஒழிந்தவற்றிற்குக் கொடாத மிகுகின்ற வலிமையைத் தீர்த்து; முத்தம் சூட்டி - முத்துக்களை அணிந்து; மின்னும் நகுகொடா மணிகள் நல்ல தெளித்துக் கொண்டு எழுதி - மின்னும் தம்மை யிகழாத மணிகளில் நல்லனவற்றைக் கரைத்துக்கொண்டெழுதி; நன்பொன் முகபடாம் வைப்ப - நல்ல பொற்கச்சாகிய முகபடாத்தையும் வைப்ப; (இவ்விடையீட்டாலே வெளியே நின்று கொல்லமுடியாமல், உள்ளே நின்று); ஆள் செற்று - ஆளைச் செறுத்து; அழன்று - நோக்கி உள்ளம் அழன்று; கண் கரிந்த - கண் கருகின.
விளக்கம் : ஒழிந்தவை - இம்முலைகள் ஒழிந்த ஏனையுறுப்புகள். ஏனையுறுப்புக்களினும் மிக்கு வருத்துகின்றமையால் கொடா மிகு - மீளிமை என்றார். நகுகொடா - நகுதற்கு இடங்கொடாத எனினுமாம். சூட்டுதலாலும் எழுதுதலாலும் முகபடாம் வைத்தலாலும் மீளிமை தீர்த்து மறைத்தலான் வெளியே நின்று கொல்லமாட்டாமல் உள்ளேயிருந்தே அழன்று கண்கரிந்தன என்பது கருத்து. மீளிமை - கொங்கையின் வலி : பன்னீராண்டும் சென்று முலை முதிர்தலின் கண் கருகின என்றார். ( 75 )
1487. தேன்கறி கற்ற கூழைச் செண்பக மாலை வேற்க
ணூன்கறி கற்ற கால
னொண்மணித் தடக்கை வைவேல்
கூன்பிறை நுதலோர் கூற்றங் குவிமுலை நமன்கைப் பாசம்
யான்பிற னளியன் வாழ்வா னாசைப்பட் டிருக்கின் றேனே.
பொருள் : தேன்கறி கற்ற கூழைச் செண்பகமாலை வேற்கண் - வண்டுகள் உண்ணக் கற்ற கூந்தலையுடைய கேமசரியின் கண்கள்; ஊன்கறி கற்ற காலன் தடக்கை ஒண்மணி வைவேல் - ஊனைத் தின்னக் கற்ற, காலனுடைய பெரிய கையிலுள்ள ஒள்ளிய மணியிழைத்த கூரிய வேலாகும்; கூன் பிறை நுதல் ஓர் கூற்றம் - வளைந்த பிறை அனைய புருவம் ஒப்பற்ற காலனேயாகும்; குவிமுலை நமன்கைப் பாசம் - குவிந்த முலைகள் நமன் கையில் உள்ள பாசம்; வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேனே - (இங்ஙனமாகவும்) உயிர் வாழ ஆசைகொண்டுள்ளேனே ஆதலின்; யான் பிறன் அளியன் - யான் மக்களிடையுள்ளே னல்லேன்; இரங்கத்தக்கேன்.
விளக்கம் : செண்பகமாலை என்றது கேமசரி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. வேற்கண் என்புழி அடை மொழி உவமங்குறியாமல் வாளா நின்றது. இனிக் குவிமுலை என்பதனைப் பெயராக்கிக் குவிமுலையின் கூழைச் செண்பகமாலை கைப்பாசம், கண் கை வேல் எனினுமாம். இருக்கின்றேனே : ஏ : தேற்றம். கூற்றம், நமன் என்பன சுட்டுப்பெயர். இனி, காலன் கூற்றத்திற்கு ஏவல் செய்பவனுமாம். ( 76 )
வேறு
1488. திருவிற்குங் கற்பகத் தெரியன் மாலையா
ருருவிற்கோர் விளக்கமா மொண்பொற் பூங்கொடி
முருகற்கு மநங்கற்கு மெனக்கு மொய்சடை
யொருவற்கும் பகைத்தியா லொருத்தி வண்ணமே.
பொருள் : கற்பகத்தெரியல் மாலையார் உருவிற்கு ஓர் விளக்கமாம் ஒண்பொன் பூங்கொடி - கற்பத்தில் தெரிதலையுடைய மாலை பொருந்தியதோர் உருவிற்கு விளக்கமாம் பொற்பூங்கொடி; திருவிற்கும் முருகற்கும் அநங்கற்கும் எனக்கும் மொய்சடை ஒருவற்கும் - திருமகளுக்கும் முருகனுக்கும் காமனுக்கும் எனக்கும் நெருங்கிய சடையையுடைய இறைவனுக்கும்; பகைத்தி - பகையாக இருக்கின்றாள்; ஒருத்தி வண்ணம் - ஒருத்தியின் வடிவிருந்தபடி என்னை!
விளக்கம் : திருமகளின் அழகையும், முருகன் வேலையும், காமன் வில்லையும், சீவகன் அறிவையும், இறைவன் பிறையையும் வாங்கியதாற்பகை யென்றான். வேல் கண்ணுக்கும், வில் புருவத்திற்கும், பிறை நெற்றிக்கும் உவமையாயின. திருவிற்கோர் என்பதூஉம் பாடம். இனி பூங்கொடி ஒருத்தி திரு. முருகன், காமன், இறைவன் ஆகியோற்கு வடிவினாலேயே பகைத்தியாயினாள்; எனக்கு உயிர்க்கே பகைத்தியாயினாள் என்றுமாம். திருவிற்கும் கற்பகத்தெரியலாகிய மாலையணியும் இந்திராணி முதலிய வானவ மகளிர்க்கும் அழகிற்கொரு விளக்கமாக அமைந்த கேமசரி எனினும் பொருந்தும். பூங்கொடி : கேமசரி. இறைவன் - சிவபெருமான். பகைத்தி - பகைமை யுடைவள். ( 77 )
1489. கலைத்தொகை நலம்பல கடந்த காளைதா
னலத்தகை யவணல நினைப்ப நாய்கனு
மலைத்தொகை மதந்தவழ் யானை மன்னவ
னிலத்தவர்க் கறிவுற நெறியிற் செப்பினான்.
பொருள் : கலைத்தொகை நலம்பல கடந்த காளைதான் - கலைத்தொகுதிகளின் நலம் பலவற்றையும் அறிந்த சீவகன் தான்; நலத்தகையவள் நலம் நினைப்ப - தன்மேல் அன்பின் தகைமையையுடையவள் அழகினை இவ்வாறு நினைத்திருப்ப; நாய்கனும் - சுபத்திரனும்; மலைத்தொகை மதம் தவழ் யானை மன்னவன் நிலத்தவர்க்கு - மலைகளின் திரள் போன்ற மதம்பொருந்திய யானைகளையுடைய அரசனுக்கும் தன் சுற்றத்தவர்க்கும்; அறிவுற நெறியிற் செப்பினான் - தெரியுமாறு முறைப்படி அறிவித்தான்.
விளக்கம் : அரசன் செறிந்திருத்தலின் அவனுக்கு மணத்தினை அறிவித்தான். கேமசரி வருத்தம் கண்ணுற நல்வள (சீவக. 1472, 1474) என்பனவற்றிற் கூறினார். அரசனுந் தானும் நெருங்கிய கேண்மையுடையர் ஆதலின் அவனுக்கும் ஏனையோக்கும் அறிவித்தான் என்பது கருத்து. மன்னவன் என்புழி நான்கனுருபோடு உம்மையும் நிலத்தவர்க்கு என்புழி உம்மையும் செய்யுள் விகாரத்தாற் றொக்கன. ( 78 )
1490. இடியுமி ழெறிதிரை முழக்கிற் பல்லியங்
கொடியணி வியனகர்க் குழுமி யார்த்தெழக்
கடிமண மியற்றினார் கடவு ணாளினால்
வடிமலர்க் கோதையை மைந்தற் கென்பவே.
பொருள் : கொடி அணி வியன் நகர் - கொடி அணிந்த பெரு நகரில்; கடவுள் நாளினால் - நல்லநாளிலே; மைந்தற்கு வடிமலர்க் கோதையை - சீவகனுக்குக் கேமசரியை; இடி உமிழ் எறி திரை முழக்கில் - இடியுமிழ் ஒலியும் வீசும் அலைகடல் முழக்கும்போல; பல்இயம் குழுமி ஆர்த்து எழ - பல திருமண இயங்கள் திரண்டொலிக்க; கடிமணம் இயற்றினார் - திருமணம் புரிவித்தனர்.
விளக்கம் : இடியுமிழ் முழக்குப்போலவும் திரைமுழக்குப் போலவும் பல்லியம் ஆர்த்தெழ என்க. பல்லியம் - பலவாகிய இசைக்கருவிகள். கடவுள் நாள் - கடவுட்டன்மையுடைய நன்னாள். ( 79 )
1491. மணிக்குட மழுத்திவைத் தனைய தோளினான்
கணிக்கிடங் கொடாநலங் கதிர்த்த காரிகை
யணிக்கிட னாயி வரிவை தன்னொடும்
பிணித்திடை விடாதவன் பெற்ற வின்பமே.
பொருள் : மணிக்குடம் அழுத்திவைத்த அனைய தோளினான் - மணியாற் செய்த குடத்தை அழுத்திவைத்தாற் போன்ற தோளையுடைய சீவகனின்; கணிக்கு இடம் கொடாநலம் - வடிவிற்குக் கூறிய நூல் வல்லாற்கும் புகழ இடங்கொடாத நலத்தை; அணிக்கு இடன் ஆகிய அரிவை கதிர்த்த காரிகை தன்னொடும் - அணிகட்கு இடம்பெற்ற கேமசரியின் ஒளிரும் அழகுடனே ; பிணித்து - அவர்கள் பிணித்தலால்; அவன் பெற்ற இன்பம் இடைவிடாது - அவன் நுகர்ந்த இன்பம் நீங்காதாயிற்று.
விளக்கம் : கணி - கணிவன், கதிர்த்தல் - ஒளிர்தல். காரிகை - அழகு. பிணித்து என்ற செய்தெனெச்சத்தை பிணிப்ப எனச் செயவெனெச்சமாக்கி ஏதுப்பொருட்டாக்குக. ( 80 )
1492. பூந்துகில் பொருதிரை பொம்மல் வெம்முலை
யேந்திய மணிவரை யிரக்க நீர்த்தரங்
காய்ந்தவன் றோளிணை நாக மாகவைத்
தீந்ததக் கடலவற் கமுத மென்பவே.
பொருள் : பூந்துகில் பொருதிரை - அழகிய ஆடை மறி தரும் அலையாக; பொம்மல் வெம்முலை ஏந்திய மணிவரை - பெரிய விருப்பூட்டும் முலை ஏந்திய மலையாக; இரக்கம் நீர்த்தரங்கு - தன் அருள் நீரின் அசைவாக; ஆய்ந்த வன்தோள் இணை நாகம் ஆக - ஆராய்ந்த வலிய இரு தோள்களும் பாம்பாக; வைத்து - வைத்து; அக்கடல் அவற்கு அமுதம் ஈந்தது - அக்காமக்கடல் அவனுக்கு அமுதத்தைக் கொடுத்தது.
விளக்கம் : வரை - மந்தரம். அருள் நெகிழ்தலுண்மையின் நீரின் அசைவு என்றார். நாகம் - வாசுகி. கடல் - பாற்கடல். அவன் கடைதலின் என ஒரு சொல் வருவித்துக்கொள்க. இவற்றால் முயக்கமும் இதழ்பருகலும் கூறினார். அவன் காட்ட அவள் காண்டலின் அவற்கு என அவன்மேல் ஏற்றினார். ( 81 )
1493. சந்தனச் சேற்றிடைத் தாம வார்குழற்
பைந்தொடி படாமுலை குளிப்பப் பாய்தலின்
மைந்தன தார்குலைந் துடைய வாய்திறந்
தஞ்சிலம் பணியல்குற் கலையொ டார்த்தவே.
பொருள் : மைந்தன தார் சந்தனச் சேற்றிடைக் குழைந்து உடைய - சீவகனுடைய தார் அவன் மார்பிலே சந்தனச் சேற்றின் இடையே குழைந்து உடையும்படி; தாமவார்குழல் பைந்தொடி படாமுலை குளிப்பப் பாய்தலின் - மலர்மாலையணிந்த நெடிய கூந்தலையும் பசிய தொடியையும் உடைய கேமசரியின் தளராத முலைகள் முழுகுமாறு பாய்தலால்; வாய்திறந்து அம்சிலம்பு அல்குல் அணி கலையொடு ஆர்த்த - வாய்விட்டு அழகிய சிலம்பும், அல்குலில் அணிந்த மேகலையும் ஆர்த்தன.
விளக்கம் : இச்செய்யுள் கேமசரியின் முயக்கங் கூறிற்று. தார் குழைந்துடைய என்பதற்குத் தூசிப்படை உடைய என்றும் ஒரு பொருள் தோன்றிற்று; யானை பாய்தலின் தூசிப்படை சேற்றிலே உடைந்தது என்றும், அதற்குச் சிலர் ஆர்த்தனரென்னும் ஒரு பொருள் தோன்றிற்று என்றும் நச்சினார்க்கினியர் நுண்ணிதிற் கூறினர். காமக்கடல், அழகிய உடையாகிய அலைமோதவும், கேமசரியின் முலையாகிய மலையிற் சீவகன் தோள்களாகிய பாம்புக் கயிறு பூட்டியிழுத்துக் கடையும்போது அவனுக்கு இன்பமாகிய அமுதத்தைக் கொடுத்தது என்க. தார் - தூசிப்படை. ( 82 )
வேறு
1494. கோதையுங் குழலும் பொங்கக் குவிமுலைக் குழங்கன் மாலைப்
போதுகப் பொருது பூணும் பொருகடன் முத்து மூழ்கக்
காதலுங் களிப்பு மிக்குக் கங்குலும் பகலும் விள்ளார்
சாதலும் பிறப்பு மில்லாத் தன்மைபெற் றவர்க ளொத்தார்.
பொருள் : கோதையும் குழலும் பொங்க - அவள் தன்னுடைய மலர் மாலையும் கூந்தலும் பொங்க; குவிமுலைக் குழங்கல் மாலைப்போது உக - குவிந்த முலைமேல் அணிந்த மணமுறு மாலையிற் பூக்கள் சிந்த; பூணும் பொருகடல் முத்தும் பொருது மூழ்க - அணிகலனும் கடல் முத்தும் பிணங்கி ஒன்றில் ஒன்று மூழ்கப் (புணர்தலின்), காதலும் களிப்பும் மிக்குக் கங்குலும் பகலும் விள்ளார் - காதலையும் களிப்பையும் மிகக்கொண்டு இரவும் பகலும் பிரியாராய்; சாதலும் பிறப்பும் இல்லாத் தன்மை பெற்றவர்கள் ஒத்தார் - இறப்பும் பிறப்பும் அற்ற தன்மையுடையவானவரைப் போன்றனர்.
விளக்கம் : முன்னர் (80) அக்கடல் அமுதம் ஈந்ததென்றார் ஈண்டும் அவ்வமுதினை நுகர்ந்து மூவாமையுஞ் சாவாமையும் பெற்ற அத்தேவர்களை ஒத்தார் என்றமை உணர்க. குழங்கல் : மணம். ( 83 )
1495. புனைமலர்த் தாரி னானும் போதணி கொம்ப னாளு
நனைமலர்க் காவு மந்தண் வாலியு நல்ல வாடிச்
சுனைமலர்க் குவளை குற்றுச் சூழ்மலர்க் கண்ணி சூட்டி
வினைநல நுகர்ந்து செல்வார் விதியினான் மிக்க நீரார்.
பொருள் : விதியினால் மிக்க நீரார் - ஊழினால் அன்பு மிக்காராகிய ; புனை மலர்த் தாரினானும் போது அணி கொம்பு அனாளும் - ஒப்பனை செய்த மலர்மாலையானும் மலரணிந்த கொம்பு போன்றவளும்; நல்ல நனை மலர்க்காவும் அம் தண்வாவியும் ஆடி - அழகிய குளிர்ந்த மலர்ப்பொழிலிலும் அழகிய குளிர்ந்த குளத்திலும் ஆடி; சுனைமலர்க் குவளை குற்று - சுனையிலுள்ள குவளை மலர்களைப் பறித்து; சூழ் மலர்க் கண்ணி சூட்டி - மலர் சூழ்ந்த கண்ணி புனைந்து; வினைநலம் நுகர்ந்து செல்வார் - புணர்ச்சித் தொழிலின் அழகை நுகர்ந்து போந்தனர்.
விளக்கம் : தாரினானும் கொம்பனாளும் ஆடியும் குற்றும் சூட்டியும் நுகர்ந்து செல்வார் என உம்மை விரித்தோதுக. இங்ஙனம் மாந்தர் நுகர்தற்குக்காரணம் முற்பிறப்பிலே செய்தநல் வினையே என்பார் விதியினான் மிக்கார் என்றும் வினைநலம் நுகர்ந்து செல்வார் என்றும் விதந்தோதினார். ( 84 )
1496. பொழிந்துகு காதல் பூண்டு புல்லுகை விடாது செல்லக்
கழிந்தன விரண்டு திங்கள் காளையு மற்றோர் நாளாற்
பிழிந்துகொள் வனைய பெண்மைப் பெய்வளைத் தோளி தன்னோ
டழிந்துவீ ழருவிக் குன்றி லாய்மலர்க் காவு புக்கான்.
பொருள் : பொழிந்து உகு காதல் பூண்டு - நிறைந்து புறந்தோன்றுகின்ற காதலைப் பூண்டு; புல்லுகை விடாது செல்ல - இவ்வாறு முயங்கலைக் கைவிடாது போதர; இரண்டு திங்கள் கழிந்தன - இரண்டு திங்கள் கடந்தன; மற்றோர் நாளால் - பிறிதொரு நாளிலே; பிழிந்து கொள்வு அனைய பெண்மைப் பெய்வளைத்தோளி தன்னோடு காளையும் - வடித்துக்கொண்டாற் போலும் பெண்மையினையுடைய, வளையலணிந்த தோளியுடன் சீவகனும்; அழிந்து வீழ் அருவிக் குன்றில் ஆய் மலர்க் காவு புக்கான் - பெருகி வீழ்கின்ற அருவியையுடைய அழகிய மலர் நிறைந்த பொழிலிற் புகுந்தான்.
விளக்கம் : உவகை அகத்தே நிரம்பியவழி மெய்ப்பாடாகப் புறத்தார்க்கம் புலப்படுதலுண்மையின் பொழிந்துகு காதல் என்றார். பூண்டு - மேற்கொண்டு. புல்லுகை - தழுவுதல். நாளால் - நாளில். சிறந்த பெண்மை நலத்தினும் பிழிந்தெடுத்துக்கொண்ட பெண்மை நலத்தையுடையாள் என்க. தோளி : கேமசரி. ( 85 )
1497. காஞ்சனக் கமுகு காய்பொற் கனிக்குலை வாழை சூழ்ந்து
பூஞ்சினை நாகந் தீம்பூ மரக்கருப் பூரச் சோலை
மாஞ்சினை மயில்க ளாடச் சண்பக மலர்கள் சிந்துந்
தீஞ்சுனை யருவிக் குன்றஞ் சீர்பெற வேறி னானே.
பொருள் : காஞ்சனக் காய்க் கமுகு - பொன்னிறக் காய்களையுடைய கமுகும்; பொன் கனிக்குலை வாழை - பொன் போலும் கனிகளையுடைய குலை பொருந்திய வாழையும்; சூழ்ந்து - சூழப்பெற்று; பூஞ்சினை நாகம் தீம்பூ மரம் கருப்பூரச் சோலை - தன்னிடத்தே மலர்க் கிளைகளையுடைய சுர புன்னை மரமும் தீம்பூ மரமும் பொருந்திய கருப்பூரச் சோலையிலே; மாஞ்சினை மயில்கள் ஆட - மாமரக் கிளைகளிலே மயில்கள் ஆட; சண்பக மலர்கள் சிந்தும் - சண்பகப் பூக்கள் சிந்துகின்ற; தீஞ்சுனை அருவிக் குன்றம் - இனிய சுனையையுடைய குன்றிலே; சீர்பெற ஏறினான் - சிறப்புற ஏறினான்.
விளக்கம் : காஞ்சனம் - பொன்; கமுகங்காய்க்கு நிறம் பற்றி வந்தது. பொன்கனி - பொன்போலும் நிறமுடைய பழம். தீம்பூ மரம் : ஒருவகை மரம் (சீவக. 1267, 1901). ( 86 )
1498. தினைவிளை சாரற் செவ்வாய்ச் சிறுகிளி மாத ரோப்பப்
புனைவளைத் தோளி சொல்லைக் கிளியெனக் கிள்ளை போகா
நனைவினை கோதை நாணிப் பொன்னரி மாலை யோச்சக்
கனைகழற் குருசி னண்ணிக் கவர்கிளி யோப்பி னானே.
பொருள் : தினைவிளை சாரல் - (அம்மலையில்) தினை விளைந்த புனத்திலே; செவ்வாய்ச் சிறு கிளி மாதர் ஒப்ப - சிவந்த வாயையுடைய சிறிய கிள்ளைகளைக் கேமசரி ஓட்ட; புனை வளைத்தோளி சொல்லைக் கிளியெனக் கிள்ளை போகா - அழகிய வளைத்தோளியின் மொழியைக் கிளிமொழியென உட்கொண்டு கிள்ளை போகாவாக; நனைவிளை கோதை நாணிப் பொன்னரிமாலை ஓச்ச - (அதற்கு) தேன்விளையும் கோதையாள் நாணுற்றுப் பொன்னரி மாலையால் துரப்பப் (பின்னும் போகாவாக); கனைகழற் குருசில் நண்ணிக் கவர்கிளி ஓப்பினான் - (அவள் கருத்தை முடித்தற்கு) ஒலிக்குங் கழலணிந்த சீவகன் சென்று தினையைக் கவரும் அக்கிளிகளை ஓட்டினான்.
விளக்கம் : அப்புனைவளைத் தோளியின் சொல்லை என்க. கோதை : கேமசரி. குரிசில் : சீவகன். கவர்கிளி : வினைத்தொகை; தினைக் கதிரைக் கவர்கின்ற கிளி என்க. ஒப்புதல் - ஒட்டுதல். கேமசரி சொற்கேட்டுக் கிளி போகாதது கண்டு சீவகனே அக் கிளிகளை யோட்டினான் என்பது. ( 87 )
1499. கொந்தழல் வேற்க ணாலென்னாவிகூட் டுண்ட கொம்பே
செந்தழை யலங்க லேந்திச் சீறடி பரவ வந்தே
னுய்ந்தினிப் பணிசெய் வேனோ வுடம் பொழித் தேகு வேனோ
பைந்தழை யல்குற் பாவாய் பணியெனப் பரவி னானே.
பொருள் : கொந்து அழல்வேற்கணால் என் ஆவி கூட்டுண்ட கொம்பே - எரியும் அழலையுடைய வேலனைய கண்களினால் என் உயிரைக் கொள்ளை கொண்ட மலர்க்கொம்பே!; செந்தழை அலங்கல் ஏந்திச் சீறடி பரவ வந்தேன்- செவ்விய தழையையும் மாலையையும் ஏந்தி நின் சிற்றடிகளை வணங்க வந்தேன்; இனி உய்ந்து பணிசெய்வேனோ - இனி உயிருடன் இருந்து நின் ஏவல் செய்யக்கடவேனோ?; உடம்பு ஒழித்து ஏகுவேனோ - இறந்து படக் கடவேனோ?; பைந்தழை அல்குல் பாவாய் - பசிய தழைகளை யுடுத்த அல்குலையுடைய பாவையே!; பணியெனப் பரவினான் - (இரண்டில் ஒன்றினை) அருளிச்செய்க என்று புகழ்ந்தான்.
விளக்கம் : துகிலும் மேகலையுஞ் சீர்பெறப் புனையுங் காலத்தும் பைந்தழை புனைதல் பழைமையின் குறப்புப்போலும். சீவகன் கிளியை ஒட்டப் பிரிந்தானாக, அவள் அப்பிரிவைப் பொறாது ஊடினாள். எனவே, புலவி தீர்க்கவேண்டியதாயிற்று. கொம்பு : ஆகுபெயர்; விளியேற்றது. நின்னுடைய வாயுடைய தென்னுடைய வாழ்வென்பான் பணி என்றான். ( 88 )
1500. வீணையுஞ் குழலும் பாலு மமுதமுங் கரும்புந் தேனும்
பாணியாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீஞ்சொல்
வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்ல ரென்னாப்
பூண்முலை பொதிர்ப்பப் புல்லிப் புனைநலம் பருகி னானே.
பொருள் : வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்புந்தேனும் பாணி யாழ் கனியும் வென்ற - வீணை குழல் யாழ் பால் அமுதம் கரும்பு தேன் இசையுறும் யாழ் கனி ஆகிய இவற்றையெலாம் வென்ற; பைங்கிளி மழலைத் தீஞ்சொல் - கிளியின் மழலையனைய இன்மொழியுடைய; வாணிக மகளிர் தாம் வாணிகம் வல்லர் என்னா - வணிகப் பெண்கள் முதல் கெட ஊதியஞ் செய்யார் என்று வியந்து; பூண்முலை பொதிர்ப்பப் புல்லிப் புனைநலம் பருகினான் - அவளுடைய பூணணிந்த முலைகள் விம்மத் தழுவிப் புனைவுற்ற அழகினைப் பருகினான்.
விளக்கம் : இவன் இறந்து படுவேனோ என்றதனைக் கேட்டுக் குறுமுறுவல்கொண்டு ஒரு மொழி கொடுப்பவே. ஊடல் நீங்கியதாகலின், அச் சொல்லை மழலைத் தீஞ்சொல் என்று மகிழ்ந்தான். அம் மொழி கூறலாகாமையின் ஆசிரியர் கூறிற்றிலர் என்ப. முதல் - தன் உயிர். ஊதியம் - ஊடல். வீணையும் யாழும் என வேறு கொண்டுரைப்பதும் உண்டு என்பதைக், குழலும் வீணையும் யாழுமென்றினையன குழைய (கம்ப. ஊர் தேடு.6) என்பதனாலும் அறிக. ( 89 )
1501. திங்களங் குழவி செவ்வா
னிடைக்கிடந் திமைப்ப தேபோற்
குங்கும மார்பிற் பூண்ட
மங்கையோ டிருந்த போழ்தோர்
வாளொளித் தடங்க ணீலம்
மணிவண்டு கண்டு சொன்னான்
கங்குறா னீங்க லுற்றுக்
கமழ்மல ரணிந்த தாரான்.
பொருள் : திங்கள் அம் குழவி செவ்வானிடைக் கிடந்து இமைப்பதே போல் - பிறைத் திங்கள் செவ்வானிலே கிடந்து விளங்குவதுபோல; குங்குமம் மார்பில் பூண்ட குளிர்கதிர் ஆரம்மின்ன - தனது குங்குமம் அணிந்த மார்பிலே பூண்ட தண்ணிய கதிர் வீசும் முத்துமாலை மின்னும்படி; மங்கையோடு இருந்த போழ்து - தனித்துக் கேமசரியுடன் இருந்த பொழுதில்; கமழ் மலர் அணிந்த தாரான் - மணமலர் புனைந்த தொடையினான்; ஓர் மணி வண்டு கண்டு - ஒரு கரிய வண்டைப் பார்த்து; கங்குல் தான் நீங்கல் உற்று - இரவு பிரியக் கருதி; சொன்னான் - ஒரு மொழி கூறினான்.
விளக்கம் : இதன்கண் சீவகன் கேமசரிக்குத் தான் பிரியக் கருதியிருப்பதனைக் குறிப்பால் உணர்த்துகின்றான். ( 90 )
1502. மணிவண்டிம் மாதர் கோதை
மதுவுண வந்த போழ்தங்
கிணைவண்டங் கிறந்து பாடின்
றிருக்குமே யிரங்க லின்றாய்த்
துணைவண்டு துஞ்சி னீயுந்
துஞ்சுவை யென்று நின்கட்
பணிகொண்ட தின்மை யாற்றான்
பரிவொடு மிருக்கு மன்றே.
பொருள் : மணி வண்டு - கரிய வண்டே!; இம் மாதர் கோதை மதுஉண வந்த போழ்து - நீ இம் மாதரின் மலர்மாலையிலே தேனைப் பருக வந்தபோது; அங்கு இணை வண்டு அங்கு இறந்துபாடு இன்று இரங்கல் இன்றாய் இருக்குமே - அங்குள்ள நின் பெடை வண்டு அங்கேயே இறவாமலும் வருத்தம் இன்றியும் இருக்குமோ?; துணை வண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை என்று - நின் பெடை இறப்பின் நீயும் இறந்துபடுவாயென்று உட்கொண்டு; நின்கண் பணிகொண்டது இன்மையால் தான் - உன்னிடத்து உரியதொரு தொழிலை முதலிலேயே தன்னிடத்துக் கொள்ளாமையால்; பரிவொடும் தான் இருக்கும் அன்றே - இறந்துபடாமல் அன்புடனே தான் ஆற்றியிருக்கும் அல்லவோ? (என்றான்)
விளக்கம் : துணைவண்டு துஞ்சின் நீயுந் துஞ்சுவை என்று என்றது என் பொருட்டே நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என்னும் குறிப்புடையது. மணிவண்டு : அண்மைவிளி. இருக்குமே : ஏ : வினா. பணி யென்றது, மகளிர் இருந்து இல்லறத்தை நிகழ்த்துதற்கு வேண்டுவன தேடிவருதல் ஆடவர்க்குப் பணியாதலை.( 91 )
1503. குழவியாய்ப் பிறந்து வெய்யோன்
குமரனாய் குறுகி யிப்பால்
விழைவுதீர் கிழவ னாகி
விழுக்கதி ருலந்து வீழ
மழலைவண் டுழல நக்க
மல்லிகை யலங்கல் சூட்டிக்
குழல்புரை கிளவி யோடுங்
கொழும்புகை யமளி சேர்ந்தான்.
பொருள் : வெய்யோன் குழவியாய்ப் பிறந்து - கதிரவன் காலையிற் குழவியாகத் தோன்றி; குமரனாய் முறுகி - நண்பகலிற் குமரனாகிய வெம்மை மிகுந்து; இப்பால் விழைவு தீர் கிழவன் ஆகி - மாலையில் ஆசை நீங்கிய முதியவனாகி; விழுக்கதிர் உலந்து வீழ - சிறந்த கதிர்கள் கெட்டு மேற்றிசையிலே விழுதலின்; மழலை வண்டு உழல நக்க மல்லிகை அலங்கல் சூட்டி - (சீவகன்) முரலும் வண்டு உழலும்படி அலர்ந்த மல்லிகை மாலையைச் சூட்டி; குழல் புரை கிளவியோடு கொழும் புகை அமளி சேர்ந்தான் - குழலிசை போன்ற மொழியாளோடு வளவிய அகிற்புகை யூட்டப்பட்ட அமளியை அடைந்தான்.
விளக்கம் : மேலைச் செய்யுளில் இன்பநிலையாமையைக்கண்ட திருத்தக்கமுனிவர் இனம்பற்றித் தம் மனத்தே முகிழ்த்த யாக்கை நிலையாமையினை ஞாயிற்றின்பால் வைத்து உலகோர்க்கு நுண்ணிதின் உணர்த்துதல் உணர்க. கிளவியோடும் : உம் இசை நிறை.
( 92 )
1504. திருத்துயில் பெற்ற மார்பன்
றிருந்துதா ருழக்க வின்ப
வருத்தமுற் றசைந்த கோதை
வாளொளித் தடங்க ணீலம்
பொருத்தலும் பொன்ன னாளைப்
புறக்கணித் தெழுந்து போகிப்
பருச்சுடர்ப் பவழ நோன்றாழ்ப்
பன்மணிக் கதவு சேர்ந்தான்.
பொருள் : திருத் துயில் பெற்ற மார்பன் - திருமகள் துஞ்சும் மார்பனான சீவகனது; திருந்து தார் உழக்க - அழகிய தார் கலக்குதலாலே; இன்ப வருத்தம் உற்று அசைந்த கோதை - இன்பத்தாற் பிறந்த வருத்தத்தை உற்று இளைத்த கோதையாள்; வாள் ஒளித் தடங்கண் நீலம் பொருத்தலும் - சிறந்த ஒளியுறும் பெருங்கண்களாகிய நீலத்தைக் குவித்த அளவிலே; பொன்னனாளைப் புறக்கணித்து எழுந்துபோகி - அவன் திருவனையாளை நீங்கக் கருதி எழுந்து சென்று ; பருச் சுடர்ப் பவழம் நோன் தாழ் - பேரொளி யுறும் பவழத்தாலாகிய வலிய தாழையுடைய; பல் மணிக் கதவு சேர்ந்தான் - பலவகை மணிகளிழைத்த கதவை அடைந்தான்.
விளக்கம் : திருமகள் எப்பொழுதும் தங்கும் மார்பன் என்பார் திருத்துயில் மார்பன் என்றார். நிலம் பொருத்தல் என்றது இமை கூடுதலை. பொன் : திருமகள். ( 93 )
1505. அல்லியுட் பாவை யன்னா ளறிவுறா வகையி னொற்றி
மெல்லவே திறந்து நீக்கி மின்னுவிட் டிலங்கு பைம்பூட்
கொல்சின மடங்க லன்னான் கொழுநிதி மாட நீந்திப்
பல்கதிர்ப் பரிதி போலப் பாயிரு ளேகி னானே.
பொருள் : அல்லியுள் பாவை அன்னாள் அறிவுறா வகையின் ஒற்றி - தாமரை மலரில் திருவைப் போன்றவள் தான் கதவைத்திறப்பதை அறியா வகையிலே கதவைத் தள்ளி; மெல்லவே திறந்து நீக்கி - மெல்லத் தாழ் திறந்து பின்னர் முற்றுந் திறந்து; கொழுநிதி மாடம் நீந்தி - வளமிகு செல்வமுடைய மாடத்தைக் கடந்து; பல்கதிர்ப் பரிதிபோல - பல கதிர்களையுடைய ஞாயிறு போல; மின்னுவிட்டு இலங்கு பைம்பூண் கொல் சின மடங்கல் அன்னான் - ஒளிவீசி விளங்கும் புத்தணியையுடைய கொல்லும் சீற்றமுறும் சிங்கம் போன்றவனான சீவகன்; பாய் இருள் ஏகினான் - பரவிய இருளிலே சென்றான்.
விளக்கம் : அல்லியுட்பாவை : திருமகள். அல்லி : தாமரை மலர்க்கு ஆகுபெயர். ஒற்றுதல் - தள்ளுதல். ( 94 )
1506. தாளுடைத் தடங்கொள் செவ்வித்
தாமரைப் போது போலும்
வாளுடை முகத்தி னாடன்
வருமுலைத் தடத்தின் வைகி
நாளினும் பெருகு கின்ற
நகைமதி யனைய காதற்
கேள்வனைக் கனவிற் காணாள்
கிளர்மணிப் பூணி னாளே.
பொருள் : கிளர்மணிப் பூணினாள் - விளங்கும் மணிகள் இழைத்த கலனணிந்தவளாகிய; தடம்கொள் செவ்வித் தாளுடைத் தாமரைப் போது போலும் வாளுடை முகத்தினாள் - குளத்திலே தங்கிய செவ்வியுடைய, தண்டையுடைய தாமரை மலர்போல விளங்கும் முகத்தினாள்; தன் வருமுலைத் தடத்தின் வைகி - தன் வளரும் முலைகளின்மேல் தங்கி; நாளினும் பெருகுகின்ற நகைமதி அனைய காதல் கேள்வனை - நாடோறும் வளர்கின்ற பிறைமதி போன்ற காதலையுடைய கணவனை; கனவில் காணாள் - கனவிலே காணாதவளானாள்.
விளக்கம் : இச்செய்யுட்கு நச்சினார்க்கினியர் கனாக் காண்கின்றவள் அவன் போகக் கண்டாள் என்று கூறியுள்ள குறிப்பு நன்கு விளங்கவில்லை. துயில்கின்றபொழுது நாள்தோறுங் கனவிலே தன்றோள் மேல் கேள்வனைக் காணுமியல்புடைய கேமசரி அன்று கனவின் கண் அவ்வாறு காணாதவளாயினள் என்பது நூலாசிரியர் கருத்தாதல் கூடும் என்று தோன்றுகின்றது. அவ்வாறு காணாதவள் எனவே கனவில் அவன் போகக் கண்டாள் என்பது குறிப்பாகும் என்று நச்சினார்க்கினியர் கொண்டனர் போலும். நகை - ஒளி. மதி - சந்திரன். மதி என்பது ஈண்டுப் பிறையையுணர்த்திற்று, பிறையானது நாளுக்குநாள் வளர்வது போல வளர்கின்ற காதல் என உவமைக்குப் பொருத்தம் கூறவேண்டியிருப்பதால். ( 95 )
1507. அரந்தினப் பிறந்த பைம்பொ
னரும்பிய முலையி னாளைக்
கரந்தவன் கங்கு னீங்கக்
கதிர்வளை யணங்கு மென்றோள்
வரந்தரு தெய்வ மன்னாள்
வைகிரு ளனந்த றேறிப்
பரந்தெலாத் திசையு நோக்கிப்
பையவே பரிவு கொண்டாள்.
பொருள் : அரம் தினப் பிறந்த பைம்பொன் அரும்பிய முலையினாளை - அரத்தால் அராவுதலால் உண்டான புதிய பொன்னெனச் சுணங்கு பொருந்திய முலையாளை; கரந்தவன் கங்குல் நீங்க - நீங்கிய சீவகன் அங்ஙனம் இருளிலே போகாநிற்க; கதிர்வளை அணங்கும் மென்தோள் வரம்தரு தெய்வம் அன்னாள் - ஒளிரும் வளையணிவதால் மெலியும் மென்மையான தோளையுடைய, வரமளிக்குந் தெய்வத்தைப் போன்றவள்; வைகு இருள் அனந்தல் தேறி - தங்கிய இருளிலே தான் கண்ட கனவாலே துயில் மயக்கம் நீங்கி விழித்து; பரந்து எலாத்திசையும் நோக்கி - எல்லாத் திசையினும் பரவிப் பார்த்து; பையவே பரிவு கொண்டாள் - முறைபட வருத்தம் கொண்டாள்.
விளக்கம் : ஈண்டும் தன்கேள்வனைக் கனவினும் காணப் பெறாமையானே விழித்து என்னலும் பொருந்தும். பொன் என்றது அராவப்பட்ட பொற்சுண்ணத்தை; இது தேமலுக்கு உவமை. கணவற்கு நினைத்தன கொடுத்தலின் வரந்தரு தெய்வம். ( 96 )
1508. திருமணி குயின்ற செம்பொற்
றிருந்துபூங் கொம்ப னாடன்
கருமணிப் பாவை யன்னான்
கரந்துழிக் காண்டல் செல்லா
ளெரிமணி விளக்க மாடத்
திருளறு காறு மோடி
யருமணி யிழந்தோர் நாக
மலமரு கின்ற தொத்தாள்.
பொருள் : திருமணி குயின்ற செம்பொன் திருந்து பூங்கொம்பனாள் - அழகிய மணிகளைப் பதித்த திருந்திய பொற்பூங்கொம்பு போன்றவள்; தன் கருமணிப் பாவை அன்னான் - தன் விழியிலுள்ள கருமணியின் பாவைபோன்ற கணவன்; கரந்துழிக் காண்டல் செல்லாள் - மறைந்த இடத்தைக் காணாளாய்; எரிமணிவிளக்கம் மாடத்து இருள் அறுகாறும் ஓடி - எரியும் மணி விளக்கின் ஒளி மாடத்தில் உள்ளவரையில் ஓடி; அருமணியிழந்து ஓர் நாகம் அலமருகின்றது ஒத்தாள் - ஒரு நாகப்பாம்பு தன் படத்திலுள்ள கண்ணாகிய அரிய மணியை இழந்து வருந்துவதனை ஒத்தாள்.
விளக்கம் : விளக்கத்தால் மாடத்தில் இருள் அற்ற இடமளவும் என்க. எனவே ஒளிபரவிய அளவில் என்பதாயிற்று. ஓடி என்றது, அவள் மனநிலையைக் காட்டுகின்றது. மணி சீவகனுக்கு உவமை. அலமருதல் - மனச்சுழற்றி எய்துதல். ( 97 )
வேறு
1509. யாண்டை யாயைய வஞ்சினெ னாருயி
ரீண்டு டம்பொழித் தேக வலிக்குமா
னீண்ட தோளவ னேநிறை யானிலேன்
றீண்டு வந்தெனத் தேனின் மிழற்றினாள்.
பொருள் : ஐய - ஐயனே!; யாண்டையாய் - நீ எங்கு இருக்கின்றாய்?; அஞ்சினென் - யான் தனித்திருக்க அஞ்சுகிறேன்; நீண்ட தோளவனே - நீண்ட தோள்களையுடையவனே!; ஈண்டு உடம்பு ஒழித்து ஆருயிர் ஏக வலிக்கும் - இப்போதே உடம்பைவிட்டுச் சிறந்த உயிர் நீங்கத் துணிகின்றது; யான் நிறை இலேன் - (ஆதலின்) நிறையழிந்தேன்; தீண்டு வந்து என - (இனி) தீண்டுக வந்து என்று; தேனின் மிழற்றினாள் - தேனைப் போல மிழற்றினாள்.
விளக்கம் : முன்பும் ஒளிந்து விளையாடும் வழக்கமிருத்தலின், இப்போது அதுவாக எண்ணி, யாண்டையாய் என்றும், அஞ்சினேன் என்றும் கூறினாள். நீண்டதோள் : உத்தம இலக்கணம். தீண்டு வந்து என்பது , கண்டேன் சீதையை என்பதுபோல நின்றது. (98)
1510. கனிகொள் காமங் கலந்துயி ரொன்றலி
னினியர் மங்கைய ரென்பது கூறுவாய்
பனிகொண் மாமதி போற்பசப் பூரயான்
றனிய ளாவது தக்கது வோசொலாய்.
பொருள் : கனிகொள் காமம் கலந்து உயிர் ஒன்றலின் - கனிவுடைய காமம் தம்மிற் பொருந்தி உயிர் ஒன்றுபடும்போது; மங்கையர் இனியர் என்பது கூறுவாய் - மங்கையர் இனியராயிருப்பர் (அல்லாத இடத்து இனியரல்லர்) என்று முன்னர் நீ கூறுவாய்; பனிகொள் மாமதிபோல் யான் பசப்பு ஊர - பனி மூடிய முழுமதிபோல யான் பசப்புமிகும்படி; தனியள் ஆவதுதக்கதுவோ சொலாய் - (நாம் ஒன்றி வாழும் இந்நாளிலே) தனியளாவது நினக்குத் தகுதியோ? கூறுவாய்.
விளக்கம் : கனிகொள் காமம் - முதிர்ந்த காமம். எம்மியல்பினை நன்கு அறிந்துவைத்தும் இங்ஙனம் எம்மைத் தனிக்க விடுவது நினக்குத்தகுமோ என்றவாறு. ( 99 )
1511. கழலு நெஞ்சொடு கைவளை சோருமாற்
சுழலுங் கண்களுஞ் சூடுறு பொன்னென
வழலு மேனியு மாற்றலெ னையவோ
நிழலி னீப்பருங் காதலு நீத்தியோ.
பொருள் : ஐயவோ - ஐயனே!; கழலும் நெஞ்சொடு கைவளை சோரும் - போகின்ற நெஞ்சுடன் கைவளையும் போகா நின்றது; கண்களும் சுழலும் - கண்களும் பரவிப் பரவி நோக்கும்; சூடு உறு பொன் என மேனியும் அழலும் - உருகும் பொன்போல மெய்யும் அழல்கின்றது; ஆற்றலென் - ஆதலின் ஆற்றகில்லேன்; நிழலின் நீப்பருங் காதலும் நீத்தியோ - நிழலைப்போல நீத்தற்கரிய காதலையும் நீத்தனையோ?
விளக்கம் : ஐயவோ : ஓ : இரக்கம். நீத்தியோ : ஓ : வினா. ( 100 )
1512. திருந்து மல்லிகைத் தேங்கமழ் மாலையான்
புரிந்து சூடினும் பூங்கொடி நுண்ணிடை
வருந்து மான்மட வாயெனும் வஞ்சநீ
கரிந்தி யானையக் காண்டலும் வல்லையோ.
பொருள் : திருந்தும் மல்லிகைத் தேம்கமழ் மாலை யான் புரிந்து சூடினும் - திருந்திய மல்லிகை மலர்களாலாகிய மணங்கமழும் மாலையை நான் விரும்பியணிந்தாலும்; மடவாய் பூங்கொடி நுண் இடை வருந்தும் எனும் வஞ்ச - பேதையே! மலர்க்கொடி யனைய நின் மெல்லிடை வருந்தும் என்கிற வஞ்சனே!; யான் கரிந்து நையக் காண்டலும் வல்லையோ - யான் கருகி வருந்தக் கண்டிருத்தற்கும் நீ வல்லையோ?
விளக்கம் : வல்லையோ : ஓ : வினா. யான் கரிந்து நைதற்கு ஏதுவாகிற செயலைச் செய்யத் துணிந்த நீ முன்னர் மடவாய் நுண்ணிடை வருந்தும் என்றது வஞ்சகமொழியே என்பது அறிந்தேன் என்றவாறு. வல்லையோ - வன்மையுடையையோ. ( 101 )
1513. தொண்டை வாயிவ டொய்யில் வனமுலை
கண்டு தேவர் கனிபவென் றேத்துவாய்
வண்டு கூறிய வண்ண மறிந்திலேன்
விண்டு தேன்றுளிக் கும்விரைத் தாரினாய்.
பொருள் : தேன்விண்டு துளிக்கும் விரைத் தாரினாய் - தேன் பிதிர்வுற்றுத் துளிக்கும் மணமாலையாய்!; இவள் தொண்டைவாய் தொய்யில் வனமுலை கண்டு - இவளுடைய தொண்டைவாயையும் தொய்யில் எழுதிய அழகிய முலையையும் கண்டு; தேவர் கனிப என்று ஏத்துவாய் - வானவரும் உளம் நெகிழ்வர் என்று முன்னிலைப் புறமொழியாகப் புகழ்மொழி கூறுகின்றவனே!; வண்டு கூறியவண்ணம் அறிந்திலேன் - நீ வண்டைப் பார்த்துக் கூறிய தன்மையை யான் அறிகிலேன்; (அறிந்திருந்தால் நின்னைப் பிரியவிடேன்.)
விளக்கம் : தேவர் என்பதற்கு அயனார் என்றும், அவர், உலகைப் படைக்கும் நாமே உலகை அழிக்கும் ஓருருவையும் படைத்தோமே என்று வருந்துவர் என்றும், தேவர் ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி என்றும், தெய்வமகளிர் என்று கொண்டு வாயையும் முலையையுங்கண்டு அவர்கள் வருந்துவார் எனினும் ஆம் என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். தேவர் என்புழி, சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. வண்டு - வண்டிற்கு. பெண்ணாகலின் என்பேதைமையால் அதனையான் அறிந்திலேன் என்றிரங்கியவாறு. வண்டு கூறியவண்ணம் என்றது வண்டிற்குக் கூறுமாற்றால் குறிப்பாகப் பிரிவுணர்த்தியதனை. அறிந்திலேன் என்றது அறிவனேல் நின்னைப் பிரியவிட்டிரேன் என்பதுபட நின்றது. ( 102 )
வேறு
1514. முலைவைத் ததடத் திடைமுள் கலுறிற்
றலைவைத் துநிலத் தடிதை வருவாய்
சிலைவித் தகனே தெருளே னருளா
யுலைவித் தனையென் னுயிர்கா வலனே.
பொருள் : சிலை வித்தகனே - வில் வல்லோனே!; உயிர் காவலனே - என் உயிருக்குக் காவலனே!; முலைவைத்த தடத்திடை முள்கலுறின் - என் முலைகளிடையே நீ ஊடல் தீர்த்துக் கூட நினைப்பின்; நிலத்துத் தலைவைத்து அடி தைவருவாய் - நிலத்திலே நின் தலையைப் பொருத்தி என் அடிகளைத் தடவுவாய்; உலைவித்தனை என் தெருளேன் - இப்போது சலிப்பித்தனை ஏனோ? காரணம் தெளிகின்றிலேன்; அருளாய் - தெளியக் கூறுவாய்.
விளக்கம் : வேலியே பயிரை மேய்ந்தாற் போன்று உயிர்காவலனாகிய நீயே உலைவித்தனை என்னும் நயம் உணர்க. வைத்த நிலம் என்பது பாடமாயின் காலை வாங்கினால் அந் நிலத்தில் அடிச்சுவட்டைத் தடவுவாய் என்க. முள்கல் - முயங்குதல். முலை வைத்த தடம் : யாம் பிறந்த இடமும் சிறிது கிடக்கவேண்டுமென்று முலைதான் அருள் பண்ணிவைத்த தடம். இது சீவகன் கூறிய கூற்றை இவள்கொண்டு கூறியது. எஞ்சுற்றம் என்றிரங்கா தாகமெல்லாங் கவர்ந்திருந்து (சீவக. 2502) என்பர் மேலும். இருவரும் முன்னர் உறாதிருத்தல் இன்மையின், உறின் எனவே முன்பு ஊடல் தீர்த்துக் கூடநினைக்கின் என்பது பெற்றாம். நின் வணக்கம் எல்லாம் வில்வணக்கம் போலத் தீங்கு தருவன வாயிற்றென்பது தோன்ற சிலைவித்தகனே என்றாள். எவன் என்னும் வினா என் என நின்றது. ( 103 )
1515. கடனித் திலம்வைத் தகதிர்ம் முலையி
னிடனெத் துணையத் துணையும் மெழுதி
யுடனொத் துறைவா னுழைவா ரலனேன்
மடனொத் துளதென் னுயிர்வாழ் வதுவே.
பொருள் : கடல் நித்திலம் வைத்த கதிர்ம் முலையின் - கடல் முத்துமாலை புனைந்த ஒளிரும் முலைகளினாலே; இடன் எத்துணை அத்துணையும் எழுதி -தன் மார்பின் இடம் எவ்வளவு உண்டோ அவ்வளவும் யான் எழுத; உடன் ஒத்து உறைவான் உழைவாரலனேல் - என்னுடன் ஒத்து உறைகின்றவன் இனி என்னிடத்திலே வாரானாயின்; என் உயிர் வாழ்வது மடன் ஒத்து உளது - என் உயிர் வாழும் நிலைமை முற்பட்ட அறியாமையை ஒக்கும்
விளக்கம் : எழுதி - எழுத. இனி, முலையெங்கும் தொய்யில் எழுதி உறைவான் என்றுமாம். முற்பட்ட அறியாமை - வண்டிற்குக் கூறியதை அறியாதிருந்தமை. ஒத்துளது: ஒரு சொல். கதிர்ம்முலை; விரிக்கும் வழி விரித்தல். இடன், மடன், என்பவற்றில் மகரத்திற்கு னகரம் போலி. ( 104 )
1516. பெறுமன் பினளென் பதுபே சினலா
லறுமன் பினளென் றறைவா ரிலையா
லிறுமென் பொடினைந் துநைவேற் கருளி
நறுமென் கமழ்தா ரவனே நணுகாய்.
பொருள் : நறு மென்கமழ் தாரவனே - நறிய மெல்லிய மணங்கமழும் தாரினனே!; பெறும் அன்பினள் என்பது பேசின் அலால் -(நீ என்னுடன் உறைந்த நிலைகண்டு) இவள் நாடோறும் பெறும் அன்புடையாள் என்று (என் சுற்றத்தார்) பேசினதன்றி; அறும் அன்பினள் என்று அறைவார் இலை - தேயும் அன்பினள் என்று செப்பினாரில்லை; இறும் என்பொடு இனைந்து நைவேற்கு அருளி நணுகாய் - உருகும் என்போடு வருந்தி நையும் எனக்கு இன்னும் அருளி வருவாய்.
விளக்கம் : பெறும் அன்பினள் அறும் அன்பினள் இத்தொடர்களை அன்பு பெற்றவள், அன்பு அற்றவள் என்று விகுதி பிரித்துக்கூட்டுக. நைவேன் + கு = நைவேற்கு இது தன்மையொருமை வினையாலணையும் பெயர். கு உருபு ஏற்றது. ( 105 )
1517. நுனசீ றடிநோ வநடந் துசெலே
லெனதா வியகத் துறைவா யெனுநீ
புனைதா ரவனே பொயுரைத் தனையால்
வினையே னொழியத் தனியே கினையே.
பொருள் : புனை தாரவனே - அணிந்த மாலையாய்!; வினையேன் ஒழியத் தனி ஏகினை - தீவினையேன் இங்கிருப்ப நீ தனியே ஏகினாய் (ஆதலின); நுன சீறடி நோவ நடந்து செலேல் - நின்னுடைய சிற்றடி நோவ நடந்து செல்லாதே; எனது ஆவி அகத்து உறைவாய் - என்னுடைய உயிரகத்தே வாழ்வாய்!; எனும் நீ பொய் உரைத்தனை - என்று கூறும் நீ பொய்யுரைத்தனை.
விளக்கம் : அடிநோவப் பொறாத நீ யான் இவ்வளவும் நோதலைப் பொறுப்பாயோ. பொறாயன்றே; எனவே, நீ கூறியது பொய்யே என்பது கருத்து. ( 106 )
1518. பருமுத் துறையும் பணைவெம் முலைநின்
றிருமுத் தகலந் திளையா தமையா
வெரிமொய்த் தனலு மிகல்வே லெரிபுண்
மருமத் தனலும் வகைசெய் தனையே.
பொருள் : பருமுத்து உறையும் பணை வெம்முலை - (ஐய, முன்னர் நீ இவை பரிய முத்துவடம் தங்குதற்கு இடமான பருத்தமுலை என்று பாராட்டினை அன்றோ) அம்முலைகளே இப்போதும் பரிய முத்துக்களை ஒத்த கண்ணீர்த் துளிகள் உறைதற் கிடமான வெப்பமுடையன ஆயின கண்டாய்; நின் திருமுத்து அகலம் திளையாது அமையா - இனி அவைதானும் அழகிய முத்தணிந்த நினது மார்பிடத்தில் முயங்கினால் உய்வனவல்லது முயங்காவிடின் உய்யா; எரிமொய்த்து அனலும் இகல் வேல் - இவ்வாற்றால் நீ தீ மொய்த்ததனால் காய்ந்ததொரு வேல்; எரிபுண் மருமத்து அனலும் வகை செய்தனை - தீப்பட்ட பழம் புண்ணையுடைய மார்பிலே புகுந்து சுடுவதனை ஒத்த ஒரு துன்பத்தினை உண்டாக்கிவிட்டனை.
விளக்கம் : பருமுத்து உறையும் பணைவெம்முலை என அவன் முன் கூறியதை அவள் இப்போது கொண்டு கூறுகிறாள். முத்து - முத்துவடம்: கண்ணீர், பணை - பருமை; வெம்மை - விருப்பம்; காமத்தீயால் வெதும்புதல். முன்னர் முயங்கிப் பிரிந்த பிரிவு புண்ணிற்கும், இப்போது முன்னின்று முயக்கங்கொடாத நிலை வேலிற்கும் உவமை. இத்துணையும் எதிர்பெய்து பரிதல் உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் (தொல். பொருளியல்- 9) என்னும் சூத்திர விதியால் முலையை இங்ஙனம் கூறினாள். ( 107 )
1519. புனமா மயிலே பொழிலே புனலே
வனமார் வழையே வரையே திரையே
யினமா மணிசூ ழெரிபூ ணவனைத்
துனயான் பெறுகோ தொழுதே னுரையீர்.
பொருள் : புன மாமயிலே - தினைப்புனத்தில் வாழும் மயிலே!; பொழிலே - காவே!; புனலே - நீர் நிலையே!; வனம் ஆர் வழையே - அழகு பொருந்திய சுரபுன்னையே!; வரையே - மலையே! திரையே - கடலே!; தொழுதேன் - யான் நும்மை வணங்கினேன்; இன மாமணி சூழ் எரி பூணவனை யான் துனப் பெறுகோ - பலவகை மணிகள் சூழ்ந்த ஒளிவிடும் பூணவனான என் கணவனை யான் சேரப் பெறுவேனோ? உரையீர் - (பெறுவேனெனில்) அவனிருக்குமிடத்தைக் கூறுவீராக.
விளக்கம் : மயில் ஆயிரங் கண்ணுடைத்துப் பொழில் நிழலுடைத்து புனல் தண்மையுடைத்து வழை நிழலுடைத்து வரை தன்மையுடைத்து திரை தண்மையுடைத்து ஆதலால் அருட்பண்புடையீர் தொழு தேன் உரையீர் என்றாள் என்க. துன - துன்ன. (108)
1520. கொடுவெஞ் சிலைவாய்க் கணையிற் கொடிதாய்
நடுநா ளிரவின் னவைதான் மிகுமா
னெடுவெண் ணிலவின் னிமிர்தேர் பரியா
தடுமால் வழிநின் றறனே யருளாய்.
பொருள் : கொடு வெஞ்சிலை வாய்க் கணையிற் கொடிதாய் - வளைந்த கொடிய வில்லிலிருந்து வரும் அம்பினுங் கொடியதாய்; இரவின் நடுநாள் நவைதான் மிகும் - நள்ளிரவு செய்யும் வருத்தந்தான் மிகா நின்றது; நெடு வெண்ணிலவின் நிமிர்தேர் பரியாது அடும் -நெடிய வெள்ளிய நிலவினையுடைய திங்கள் இரங்காமல் வருத்தும்; அறனே வழிநின்று அருளாய் - அறக்கடவுளே! இத்துணைத் துன்பத்திற்கும் எனக்குத் துணையாக நின்று அருள்வாயாக.
விளக்கம் : நிலவின் நிமிர்தேர் என்றார், வட்டத்தால் தேருருள்போலிருத்தலின். இரவின் நவை கணையின் நவையினுங் கொடிதாய் மிகும் என்க. தேர் : ஆகுபெயர். தேர்உருள்; இது திங்கள் வட்டத்திற்கு உவம ஆகுபெயர். திங்கள் உருவங் குளிர்ந்திருந்தும் உள்ளத்தில் அருளின்றி அடும் என்றவாறு. இனி இவ்வாறு அடுதல் அறனோ என்றும் இவ்வழி நின்று தலைவனே நீயும் அருள்கின்றிலை என்றும் கூறினள் எனினுமாம். ( 109 )
1521. கயலா லிவையென் றுகவிழ்ந் துகிடந்
தயலே னறியா மையுரைத் ததெலா
மியலா ததுவோ வினியேற் கினியீ
ருயலா வதுகண் மலர்கா ளுரையீர்.
பொருள் : கண் மலர்காள் - கண்மலர்களே!; இவை கயல் என்று - (அவன்) இக்கண்கள் கயலாயிருந்தன என்று நும்மைப் புகழும்போது; கவிழ்ந்து கிடந்து - (அதற்கு நீர்) அன்புற்றுக்கிடக்க; அயலேன் அறியாமை உரைத்ததெலாம் இயலாததுவோ - அயலேனாகிய நான் அறியாமல் நுமக்கு அவன் கூறியதெல்லாம் பிரிவையோ?; இனியேற்கு இனியீர் - இனியேனாகிய எனக்கு இனியராயிருந்தீர்!; உயலாவது உரையீர் - இனி உய்யலாம் வழியை உரைப்பீராக!
விளக்கம் : கிடந்து - கிடக்க : எச்சத்திரிபு; மெய்ம்மறக்கச் செய்து தன்னுடன் கூடியிராமையின், அயலேன் என்றாள். உரைத்ததனை அவன் செய்த தொழில் என்று கொள்க; பொன்னுரைத்தது என்றாற்போல. அது சொல்லிற்றெல்லாம் என்றாற் போலவும் நின்றது. இனியீர் இகழ்ச்சிக் குறிப்பு. கண்ணிற் சிறந்த உறுப்பில்லை யென்று நும்மிடம் நான் இனியேனாக இருந்தேன் என்னுங்கருத்துடன், இனியேற்கு என்றாள். நும்மை அவன் புலால் நாறுகின்ற கய லெனப் புகழப் போக்கு உடன்பட்டீர், யான், கண்மலர்காள்! எனப் புகழாநின்றேன். உய்யும்வழி உரைப்பீர் என்னுங் கருத்துடன், கண்மலர்காள்! என்றாள். ( 110 )
1522. நெறிநீர் வளையு நிழனித் திலமும்
பொறிநீ ரபுனைந் தெழுதிப் புகழும்
வெறிதா ரவனெவ் வழியே கினனீ
ரறிவீ ருரையீ ரமர்தோ ளிணைகாள்.
பொருள் : அமர் தோளிணைகாள் - அவன் நினைவை அமர்ந்த தோளிணைகளே!; நெறிநீர் வளையும் நிழல் நித்திலமும் - கடற் சங்கவளையையும் ஒளியையுடைய முத்துக்களையும்; பொறிநீரபுனைந்து - பொறித்தாற்போலும் தன்மையவாகப் புனைந்து; எழுதி - தோளிற் கரும்பையும் முலைகளில் தொய்யிற்கொடி முதலியவற்றையும் வரைந்து; புகழும் வெறிதாரவன் எவ்வழியேகினன் - நும்மைப் புகழ்ந்துரைக்கும் மணங்கமழ் மாலையான் எவ்வழிச் சென்றனன்?; நீர் அறிவீர் உரையீர் - (முயக்கத்தை நெகிழ்ந்து போகவிட்ட) நீர் அவன் போன இடமும் அறிவீர்; நும்மை யின்னும் யான் புகழ்தற்கு அவ் வழியைக் கூறுவீராக.
விளக்கம் : என்னிடத்தினுங் காட்டில் நும்பாற் பேரன்புடையன் என்பாள் எழுதிப் புகழும் தாரவன் என்றும், அங்ஙனமாகலின் அவன் நுமக்குணர்த்தாமல் பிரியான் ஆதலின் நீர் அறிவீர் என்றும் கூறினள் என்க. ( 111 )
1523. இழுதார் சுடர்வே லிளையா னகலத்
துழுதீ ருடன்வெம் முலைகாள் வயிரத்
தொழுவாய் விடையைத் தொடர்கிற் றிலிரென்
றழுதா டடமா கவணங் கிழையே.
பொருள் : வெம் முலைகாள் - கொடிய கொங்கைகளே!; இழுது ஆர் சுடர் வேல் இளையான் அகலத்து உழுதீர் - நெய்பூசிய ஒளி வேலவன் மார்பிலே உழுத நீர்; உடன் வயிரத் தொழுவாய் விடையைத் தொடர்கிற்றிலிர் என்று - அவ் வுழவின் பயனை முற்றப்பெற்று விடுமளவும் போகாதபடி அவனை வயிரத் தொழுவாய்ப் பிணித்திலீர், (நுமக்கும் அஃது அரிதாயிற்று; இனியான் செய்வது என்) என்று; அணங்கு இழை தடமாக அழுதாள் - அழகிய அணியாள் கண்ணீர் ஒரு குளமாகும்படி அழுதாள்.
விளக்கம் : உழுதீர் விடையைத் தொடர்கிற்றிலீர் என்றும் ஒருபொருள் தோன்றிற்று. விடை, காளை : சீவகன்; உவம ஆகுபெயர். விடை - விடுதல் (என்று ஒரு பொருள்,) தொழு - மாட்டுக்கொட்டில். கண்ணீர் தடமாக என ஒருசொல் பெய்க. அணங்கிழை : அன்மொழி; கேமசரி. ஓரிடத்தும் பற்றின்றி யிருத்தலின் விடை; முறித்தற்காகாமையின் வயிரத்தொழு என்றாள். ( 112 )
1524. தகைவா டியதன் னிழல்கண் ணுகுநீர்
வகைவா டிவருந் தியழு வதுகண்
டகையே லமர்தோ ழியழே லவரோ
பகையா பவரென் றனள்பான் மொழியே.
பொருள் : பால்மொழி - இனிய மொழியாளாகிய கேமசரி; கண் உகுநீர் தகைவாடிய தன் நிழல் - தான் அழுத கண்ணீரிலே தோற்றிய தன் அழகு கெட்ட நிழல்; வகை வாடி வருந்தி அழுவது கண்டு - வகை வாடி வருந்தி அழுவதனைப் பார்த்து; அமர் தோழி அகையேல் அழேல் - எனக்கு அன்பமர்ந்த தோழியே! நீ வருந்தாதே! அழுவதுஞ் செய்யாதே!; அவர் பகையாபவரோ என்றனள் - அவர் இறுதியில் நமக்குப் பகை யாவரோ? என்று ஆற்றிவித்தனள்.
விளக்கம் : அவரோ : ஓ : எதிர்மறை. நிழல், பளிங்கிற்றோன்றிய நிழலென்றலுமாம். பான்மொழி : அன்மொழி; கேமசரி. தகை - அழகு, வகை - தான் வருந்துமாறு. அகைதல் - வருந்துதல். ( 113 )
1525. வெறிமா லைகள்வீழ்ந் துநிலம் புதையப்
பொறிமா லைபுனை நிழல்கா ணலளாய்
நெறிநா டியபோ யினணீ டினள்கண்
டெறிவால் வளைகொண் டுவரும் மினியே.
பொருள் : வெறிமாலைகள் வீழ்ந்து நிலம் புதைய - தன் முடியில் அணிந்த மணமுறும் மாலைகள் வீழ்ந்து கண்ணீரையுடைய நிலம் மறைதலின்; பொறி மாலைபுனை நிழல் காணலளாய் - ஊழை இயல்பாகவுடைய கேமசரி, அந் நிழலாகிய தோழியைக் காணதவளாய், எறி வால் வளை - ஒளிவீசும் வெள்வளையாள்; நெறி நாடிய போயினள் நீடினள் - அவன் போனவழியைத் தேடுதற்குப் போயினாள், நீட்டிக்கவுஞ் செய்தாள்; இனி கொண்டுவரும் - இனி அவனைக் கண்டு அழைத்து வருவாள்.
விளக்கம் : எறி வால் வளை என்பதற்கு அறுக்கப்படும் வெள்வளை என்றும் உரைக்கலாம். அவள் அவனைக் கண்டு வளை கொண்டுவருவாள் என்றும் எனவே அவனைத்தான் கொண்டு வரும் என்றாளாம் என்றும் உரைப்பர் நச்சினார்க்கினியர். ( 114 )
1526. மடமா மயிலே குயிலே மழலை
நடைமா ணனமே நலமார் கிளியே
யுடனா டுமெனை யனையென் றுருகாத்
தொடையாழ் மழலை மொழிசோர்ந் தனளே.
பொருள் : தொடை யாழ் மழலை மொழி - இனிய நரம்பினையுடைய யாழ்போலும் மழலைமொழியான்; மடமா மயிலே - இளமை பொருந்திய மயிலே!; குயிலே - குயிலே!; மழலை நடை மாண் அனமே - இளமைபொருந்திய நடையினால் மேம்பட்ட அன்னமே!; நலம் ஆர் கிளியே - அழகு பொருந்திய கிளியே!; உடன் ஆடும் என் ஐயனை என்று - என்னுடன் விளையாடும் என் தலைவனை என்றுரைத்து, (அவ்வளவிலே); உருகாச் சோர்ந்தனள் - உருகி அவற்றிற்குக் கூறுங் காரியத்தை மறந்தாள்.
விளக்கம் : ஐயனை என்பதற்குத் தேடுமின் என்னும் வினை வருவிக்க என்பர் நச்சினார்க்கினியர். மயில் சாயலானும் குயில் இசையானும் அன்னம் நடையானும் கிளி சொல்லானும் தன்னோடு உறவுடையனவாதலால் ஐயனை உடனே சென்று தேடுமின் என்று கூறிச் சோர்ந்தாள் எனினுமாம். இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை மாறுபட்டது எனினும் மிகவும் இனிமையுடையதாம். முதலடியில் மழலை என்பது இளமையை யுணர்த்தியது. கடையடியில் உள்ள மழலை என்பது திருந்தாத என்னும் பொருளையுணர்த்திற்று. உருகா என்பது செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். உருகி என்று பொருள்படும். தொடை -தொடுக்கப்பட்டது நரம்பு. ( 115 )
வேறு
1527. மல்லுறை யலங்கன் மார்பன்
பிரிவெனு மெரியுள் வீழ்ந்து
கல்லுறை நாகு வேய்த்தோட்
கதிர்மணி முறுவற் செவ்வாய்
வில்லுறை புருவ மாதர்
வெந்தனள் கிடப்ப மின்றோ
யில்லுறை தெய்வ நோக்கி
யிரங்கிநின் றுரைக்கு மன்றே.
பொருள் : கல்உறை நாகு வேய்த்தோள் - மலையிடத்தே நின்ற இளைய வேய்போலும் தோளையும்; கதிர்மணி முறுவல் செவ்வாய் - ஒளிபொருந்திய முத்தனைய பற்களையுடைய செவ்வாயையும்; வில்உறை புருவம் மாதர் - வில்லைப்போன்ற புருவத்தையும் உடைய கேமசரி; மல் உறை அலங்கல் மார்பன் பிரிவு எனும் எரியுள் வீழ்ந்து - மற்றொழில் பொருந்திய, மாலையணிந்த சீவகனுடைய பிரிவாகிய தீயில் வீழ்ந்து; வெந்தனள் கிடப்ப - வெந்து கிடக்கும்போது; மின் தோய் இல் உறை தெய்வம் நோக்கி - ஒளிபொருந்திய அவ் வீட்டில் வாழும் தெய்வம் பார்த்து; இரங்கி நின்று உரைக்கும் - இரக்கத்துடன் நின்று கூறும்.
விளக்கம் : இதுமுதல் மூன்று செய்யுள் இல்லுறை தெய்வங் கூறிய இரக்க மொழிகள். மல் - ஒருவகைப் போர்த்தொழில். இஃது அத்தொழில் வன்மையைக் குறித்து நின்றது. நாகுவேய் - இளமையுடைய மூங்கில். கதிர் மணி என்றது ஈண்டு முத்தினை. வெந்தனள் : முற்றெச்சம். ( 116 )
1528. புண்ணவாம் புலவு வாட்கைப்
பொலன்கழற் புனைந்த பைந்தார்
கண்ணவாம் வனப்பி னானைக்
காமனே கண்ட போழ்தும்
பண்ணவாம் பவளச் செவ்வாய்ப்
படாமுலைப் பரவை யல்குற்
பெண்ணவா நிற்கு மென்றாற்
பிணையனாட் குய்த லுண்டோ.
பொருள் : புண் அவாம் புலவு வாள் கை - புண்ணை விரும்பும் புலால் கமழும் வாளேந்திய கையையும்; பொலன் கழல் - பொற்கழலையும்; புனைந்த பைந்தார் - தொடுத்த புதிய மாலையையும் உடைய; கண் அவாம் வனப்பினானை - கண் விரும்பும் அழகுடையானை; காமனே கண்ட போழ்தும் - காமனே பார்த்திட்டாலும் அக்காமனுக்கு; பண் அவாம் பவளச் செவ்வாய் - பண் விரும்பும் மொழியையுடைய பவளம் அனைய செவ்வாயையும்; படாமுலை - தளராத முலையையும்; பரவை அல்குல் - பரவிய அல்குலையும் உடைய; பெண் அவா நிற்கும் என்றால் - பெண்மையை அடைய விரும்பும் ஆசை உள்ளத்துலே நிற்கும் என்றால்; பிணை அனாட்கு உய்தல் உண்டோ - இவட்கும் பிழைத்தலுளதோ?
விளக்கம் : பெண்ணவாய் என்பதூஉம் பாடம். காமனே : ஏ : பிரிநிலை. அக்காமன் பெண்மைத்தன்மை எய்தி இவனை நுகர்தற்கு விரும்புவன்; அத்தகைய பேரழகினோனை எய்திய இவள் பிரிவினை எங்ஙனம் ஆற்றுவள் என்று இரங்கியபடியாம். ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய் என்பது கம்பராமாயணம்: (தாடகை - 24). ( 117 )
1529. கடத்திடைக் கவளந் தேனெய்
கனியைத்தோய்த் தினிய துற்றத்
தடக்கையாற் கொடுத்துப் புல்லுந்
தவழ்மதக் களிறு நீங்கின்
மடப்பிடிக் குய்த லுண்டோ
வாலடிக் குஞ்சி சூட்டுங்
கொடைக்கையான் பிரிந்த பின்றைக்
கோதையாட் குய்த லுண்டோ.
பொருள் : தேன் நெய் கனியைத் தோய்த்து இனிய கவளம் துற்ற - தேனாகிய நெய்யைக் கனியில் தோய்த்தலாலே இனியவாகிய கவளத்தைத் தின்னும்படி; தடக்கையால் கொடுத்துப் புல்லும் தவழ் மதக் களிறு நீங்கின் - பெரிய கையினால் ஊட்டித் தழுவும் மதம் பொருந்திய களிறு நீங்கினால்; கடத்திடை மடப்பிடிக்கு உய்தல் உண்டோ - காட்டிலே இளம்பிடிக்கு வாழ்வு உண்டோ?; (அதுபோல) வாலடிக் குஞ்சி சூட்டும் கொடைக் கையான் பிரிந்த பின்றை - இவளுடைய தூய அடியிலே தன் முடியை வைத்து ஊடல் தீர்த்துக் கூடும் வண்கையான் நீங்கின பிறகு; கோதையாட்கு உய்தல் உண்டோ - கோதையை உடைய இவளுக்கு வாழும் இயல்பு உண்டோ?
விளக்கம் : கடம் - காடு. தேனெய் - பண்புத் தொகை. இனிய, பல வறிசொல். துற்றல் - உண்ணல். மதந்தவழ் களிறு என மாறுக. குஞ்சி - குடுமி, தலைமயிர். ஊடலை நீக்குவதற்குக் கணவன் மனைவியின் காலில் வீழ்ந்து வணங்கினான் என்று கூறுவது இலக்கிய மரபு. ( 118 )
1530. முயங்கினான் சொன்ன வண்டாய்
முகிழ்முலைத் தெய்வஞ் சேர
வுயங்குவா ளுணர்ந்து கேள்வற்
கூனமும் பிரிவு மஞ்சி
யியங்குவா னின்ற வாவி
தாங்கின ளென்ப போலும்
வயங்குபொன் னீன்ற நீல
மாமணி முலையி னாளே.
பொருள் : முயங்கினான் சொன்ன வண்டாய் முகிழ்முலைத் தெய்வம் சேர - (தன்னைத் தழுவிய) கணவன் கூறிய வண்டின் வடிவாய் முகிழ்த்த முலையை உடைய இல்லுறை தெய்வம் அவள் எதிரில் வந்த அளவிலே; உயங்குவாள் - வருந்திக்கொண்டிருந்த; வயங்கு பொன் ஈன்ற நீல மாமணி முலையினாள் - விளங்கு பொன் அனைய தேமலையுடைய, நீலநிற மணிக் கண்களையுடைய முலையினாள்; உணர்ந்து - (வண்டை நோக்கித் தன் கணவன் கூறியதை) உணர்ந்து; கேள்வற்கு ஊனமும் பிரிவும் அஞ்சி - தன் கணவனுக்குப் பழியும் இறந்துபடுதலும் நேரும் என அஞ்சி; இயங்குவான் நின்ற ஆவி தாங்கினள் - போதற்கு ஒருப்பட்டு நின்ற உயிரைப் போகாமல் தாங்கினாள்.
விளக்கம் : என்ப, போலும் : அசைகள். அவன், துணைவண்டு துஞ்சில் நீயும் துஞ்சுவை என்றதனை நினைத்து ஆற்றினாள். அவள் நிலைகண்டு இரங்கிய தெய்வம், நின் இறந்துபாடு நின் கேள்வதற்கு ஊனமும் பிரிவுமாமென்று கூறுவதுபோல வண்டாய் வந்து தன் தெய்வத்தன்மையால் அவன் கூறியதை நினைப்பித்தது. ( 119 )
1531. வங்சவாய்க் காமன் சொன்ன
மணிநிற வண்டு காணீர்
துஞ்சுவேன் றுயரந் தீரத்
தொழுதகு தெய்வ மாவீர்
மஞ்சுதோய் செம்பொன் மாடத்
தென்மனை தன்னு ளென்றாள்
பஞ்சிமேன் மிதிக்கும் போதும்
பனிக்குஞ்சீ றடியி னாளே.
பொருள் : பஞ்சிமேல் மிதிக்கும்போதும் பனிக்கும் சீறடியினாள் - பஞ்சியின்மேல் மிதித்தாலும் வருந்துகின்ற சிற்றடியாள்; வஞ்சவாய்க் காமன் சொன்ன மணிநிற வண்டுகாள் - வஞ்சிக்கும் வாயையுடைய காமன் கூறிய நீலநிற வண்டுகளே! -நீர் - நீவிர்; துஞ்சுவேன் துயரம் தீர - இறந்துபடுவேனது துயரம். நீங்கும்படி; மஞ்சு தோய் செம் பொன் மாடத்து - முகில் படியும் பொன்மாடத்திலே; என் மனை தன்னுள்; - என் மனையிலே; தொழுதகு தெய்வம் ஆவீர் - தொழத்தகுந்த தெய்வமாவீர்கள்.
விளக்கம் : துணை வண்டையும் கருத்துட் கொண்டு, வண்டுகாள் என்றாள். நும்மால் இறந்துபாடு நீங்கினேன். இனி, இரங்காத நும்மைக் கண்டு, இரக்கமுந் தீரும்படி இல்லுறை தெய்வமாய் இருப்பீர் என்றாள்; இருக்குமே யிரங்கலின்றாய் (சீவக. 1502) என்றானாதலின், இது தெய்வத்தன்மையாற் கூறுவித்தது தெய்வம். ( 120 )
1532. நொந்தெடுக் கலாது வீங்கும்
வனமுலை நுசுப்பிற் றேய்ந்தோர்
பந்தெடுக் கலாத நங்கை
பால்கடை வெண்ணெய்ப் பாவை
வெந்துடன் வெயிலுற் றாங்கு
மெலிந்துக விளங்கும் வெள்ளி
வந்துவா னிட்ட சுட்டி
வனப்பொடு முளைத்த தன்றே.
பொருள் : வீங்கும் வனமுலை எடுக்கலாது நொந்து தேய்ந்த நுசுப்பின் - பருக்கும் தன் அழகிய முலையைச் சுமக்கமுடியாமல் வருந்தித் தேய்ந்த இடையினாலே; ஓர் பந்து எடுக்கலாத நங்கை - ஒரு பந்தையும் ஏந்தமுடியாத கேமசரி; பால் கடை வெண்ணெய்ப் பாவை வெயில் உற்று உடன் வெந்தாங்கு - பால் கடைந்தெடுத்த வெண்ணெயால் ஆன பாவை வெயிலில் உற்று உடனே வெந்தாற்போல; மெலிந்து உக - மெலிந்து கெடாநிற்க; வான் இட்ட சுட்டி வனப்பொடு - வானுக்கு இட்ட சுட்டி போன்ற அழகுடன்; வெள்ளி வந்து முளைத்தது - வெள்ளி வந்து தோன்றியது.
விளக்கம் : இனி, நுசுப்புப்போல் தேய்ந்து என்றுமாம். தேய்ந்த நுசுப்பாற் பந்தெடுக்கலாத நங்கையென அவளியல்பு கூறினார். தேய்ந்த ஓர் : தேய்ந்தோர் : தொகுத்தல் விகாரம். இனி தேய்ந்து எனப் பிரித்து, வருந்தும் என ஒரு சொல் வருவித்து முடிப்பர் நச்சினார்க்கினியர், இறந்துபாடு நீங்கி வருந்தினாள் என்க. ( 121 )
1533. எரிநுதி யுற்ற மாவி னிளந்தளிர் போன்று மாழ்கிப்
புரிநரம் பிசையிற் றள்ளிப் புன்கணுற் றழுத லாலே
யரிகுரற் கொண்ட பூச லகத்தவர்க் கிசைப்ப வீண்டித்
திருவிரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள்.
பொருள் : எரி நுதி உற்ற மாவின் இளந்தளிர் போன்று மாழ்கி - எரியின் நுனியிற் பொருந்திய மாவின் இளந்தளிர்போல மயங்கி; புரிநரம்பு இசையின் தள்ளிப் புன்கண் உற்று அழுதலாலே - தன் மிடற்றை முறுக்கிய நரம்போசையினின்றும் நீக்கி வருத்தம் உற்று அழுததனால்; அரிகுரல் கொண்ட பூசல் அகத்தவர்க்கு இசைப்ப - அரித்தெழும் குரல் கொண்ட ஓசை இல்லிலுள்ளார்க்கு அறிவிக்க; ஈண்டி - அவர்கள் திரண்டு வந்தபோது; திருவிரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள் - அழகு மலர்ந்த மாலையையுடைய கேமசரியின் நற்றாயான நிப்புதி ஆங்கு வந்து கூறினாள்.
விளக்கம் : யாழ் நரம்பிசை போன்று அவட்கியல்பாக அமைந்துள்ள குரல் துன்பத்தால் மாறி அரிகுரல் ஆயிற்றென்பது கருத்து. அரிகுரல் - அரித்தெழும் குரல். அரிக்கூ டின்னியம் என்றார் மதுரைக் காஞ்சியினும், (612) ஈண்டி என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. ( 122 )
1534. விழுத்திணைப் பிறந்து வெய்ய
வேட்கைவே ரரிந்து மெய்ந்நின்
றிழுக்கமொன் றானு மின்றி
யெய்திய தவத்தின் வந்து
வழுக்குத லின்றி விண்ணோன்
வச்சிர நுதியி னிட்ட
வெழுத்தனான் றந்த வின்ப
மின்னுநீ பெறுதி யென்றாள்.
பொருள் : விழுத்திணைப் பிறந்து - உயர்ந்த குடியிலே பிறந்து; வெய்ய வேட்கை வேர் அரிந்து - கொடிய பிறப்பின் வேரை அறுத்து; மெய்ந் நின்று - உண்மை நெறியிலே நின்று; இழுக்கம் ஒன்றானும் இன்றி - தவறு எவ்வாற்றானும் இல்லாமல்; எய்திய தவத்தின் வந்து - நமக்குக் கிடைத்த தவப்பயனாக வந்து; விண்ணோன் வச்சிர நுதியின் இட்ட எழுத்தனான் - அயன் வச்சிரத்தின் நுனியாலே இட்ட எழுத்தைப் போன்றவன்; தந்த இன்பம் - நினக் களித்த இன்பத்தை; வழுக்குதல் இன்றி நீ இன்னும் பெறுதி என்றாள் - தவறுதல் இல்லாமல் நீ மேலும் எய்துவை என்றாள்.
விளக்கம் : விழுத்திணை - உயர்ந்த குடி. வேட்கை, ஈண்டு ஆகுபெயராற் பிறப்பினை உணர்த்தி நின்றது. வச்சிரத்தின் நுனியிற் பொறிக்கப்பட்ட எழுத்து அழியாமை பற்றி வச்சிர நுதியின் இட்ட எழுத்தன்னான் என்றாள் எனினுமாம். முன்னும் தவப்பயனாக வே இவனை எய்தினை; அத் தவப்பயன் கெடா வியல்பிற்றாகலின் மீண்டும் நீ அவனை எய்துல் ஒருதலை என்பது கருத்து. (123 )
1535. பிறங்கின கெடுங்கள் யாவும்
புணர்ந்தவர் பிரிவர் பேசி
னிறங்கின வீழு மேலா
யோங்கிய வெண்ணில் யோனிப்
பிறந்தவர் சாவர் செத்தார்
பிறப்பவே யென்ன நோக்கிக்
கறங்கிசை வண்டு பாடுங்
கோதைநீ கவல லென்றாள்.
பொருள் : கறங்கு இசை வண்டுபாடும் கோதை - ஒலிக்கும் இசையுடன் வண்டுகள் முரலும் மலர் மாலையாய்!; பிறங்கினகள் யாவும் கெடும் - மிக்க வனப்புக்கள் யாவும் ஒருகாற் கெடும்; புணர்ந்தவர் பிரிவர் - கூடியவர் பிரிவர்; பேசின் - ஆராய்ந்தால்; மேலாய் ஓங்கிய இறங்கிய வீழும் - மேலாக வளர்ந்தன தாழ்ந்து வீழும்; எண்ணில் யோனிப் பிறந்தவர் சாவர் - கணக்கற்ற பிறவிகளிற் பிறந்தவர் இறப்பர்; செத்தார் பிறப்பவே என்ன நோக்கி - இறந்தவர் பிறப்பர் என்று இன்பமுந் துன்பமும் மாறிமாறி வருமென ஆராய்ந்து; நீ கவலல் என்றாள் - நீ கவலைப்படுவதை விடுக என்றுரைத்தாள்.
விளக்கம் : புணர்ந்தவர் பிரிவர் என்பதைப் பிரிந்தவர் புணர்வர் என மாற்றி இறுதியில் தந்து, அங்ஙனங் கெட்டாலும், பிரிந்தவர்கள் எல்லோரும் புணர்வரே யென்று பார்த்து நீ கவலாதே என்று முடிப்பர் நச்சினார்க்கினியர். மேலும் நீ இவ்வுலகியற்கையினை உணர்ந்து ஆற்றியிருத்தலும் வேண்டும் என்றிதனால் ஆற்றுவிக்கின்றனள் என்க. பிறங்கினகள் யாவும் என இயைக்க. கள் : விகுதிமேல் விகுதி. ( 124 )
1536. எரிதலைக் கொண்ட காமத்
தின்பநீர்ப் புள்ளி யற்றாற்
பிரிவின்கட் பிறந்த துன்பம்
பெருங்கட லனைய தொன்றா
லுருகிநைந் துடம்பு நீங்கி
னிம்மயோ டும்மை யின்றி
யிருதலைப் பயனு மெய்தா
ரென்றுயாங் கேட்டு மன்றே.
பொருள் : எரிதலைக்கொண்ட காமத்து இன்பம் நீர்ப்புள்ளி அற்று - தீயைத் தன்னிடத்தே கொண்ட காமத்திலே புணர்ச்சி யாற்பெறும் இன்பம் நீர்த் துளியை ஒத்திருக்கும்; பிரிவின்கண் பிறந்த துன்பம் பெருங்கடல் அனையது ஒன்று - பிரிவாற் பிறந்த துன்பம் பெரிய கடலை ஒப்பதொன்றாகும்; உருகி நைந்து உடம்பு நீங்கின் இம்மையோடு உம்மை இன்றி இருதலைப் பயனும் எய்தார் - (ஆதலின்) இப் பிரிவாலே உருகி வருந்தி உடம்பு நீங்குமாயின் இம்மையினும் மறுமையினும் செய்து கொள்ளும் நன்மையும் இல்லாமல் இரண்டிடத்தும் பெறும் பயனையும் பெறார்; என்று யாம் கேட்டும் அன்றே - என்று உணர்ந்தார் கூறக்கேட்டிருப்போம் அல்லவோ? (ஆதலின் பிரிவால் வருந்தாதே.)
விளக்கம் : நீர்ப்புள்ளி இன்பத்தின் சிறுமைக்கும் பெருங்கடல் துன்பத்தின் பெருமைக்கும் உவமையாகக் கூறப்பட்டன. உருகு நைதல் காரணமாக இறந்துபடின் என்றவாறு. இருதலை - அவ்விம்மை மறுமையாகிய ஈரிடத்தும். கேட்டும் : தன்மைப் பன்மை வினைமுற்று. ஆதலின் வருந்தாதேகொள் என்பது குறிப்பு. ( 125 )
1537. மன்னுநீர் மொக்கு ளொக்கு மானிட ரிளமை யின்ப
மின்னினொத் திறக்குஞ் செல்வம் வெயிலுறு பனியி னீங்கு
மின்னிசை யிரங்கு நல்யா ழிளியினு மினிய சொல்லா
யன்னதால் வினையி னாக்க மழுங்குவ தென்னை யென்றாள்.
பொருள் : இன் இசை இரங்கும் நல்யாழ் இளியினும் இனிய சொல்லாய் - இனிய இசையொலிக்கு நல்ல யாழினது இளியென்னும் நரம்பினும் இனிய மொழியினாய்!; மானிடர் இளமை மன்னும் நீர் மொக்குள் ஒக்கும் - மக்களின் இளமை மிகவும் நீர்க்குமிழியை ஒக்கும்; இன்பம் மின்னின் ஒத்து இறக்கும் - அவர் இன்பமோ மின்னைப்போன்று தோன்றி நீங்கும்; செல்வம் வெயிலுறு பனியின் நீங்கும் - அவர்களுடைய செல்வமும் வெயிலைக் கண்ட பனிபோல் அழியும்.; வினையின் ஆக்கம் அன்னது - (ஆதலின்) தீவினையின் ஆக்கம் அவ்வாறு வலியுடைத்து; அழுங்குவது என்னை என்றாள் - இதற்கு வருந்திப் பெறுவது என்னை யென்று ஆற்றுவித்தாள்.
விளக்கம் : மன்னும் - மிகவும் என்பர் நச்சினார்க்கினியர். நீர் மன்னும் மொக்குள் என மாறி நீரிடத்தே நிலைபெற்ற மொக்குள் எனினுமாம். அன்னது - அத்தகைய வன்மையுடையது. நிப்புதி தன் முதுமைக்கேற்றன கூறி ஆற்றுவித்தல் அறிந்தின்புறுக. இளி - யாழிடத்து ஒரு நரம்பு. ( 126 )
1538. பஞ்சிறை கொண்ட பைம்பொற்
கலைபுறஞ் சூழ்ந்து வைத்து
நஞ்சிறை கொண்ட நாகப்
படம்பழித் தகன்ற வல்குல்
வெஞ்சிறைப் பள்ளி யாக
விழுமுலைத் தடத்து வைகத்
தஞ்சிறைப் படுக்க லாதார்
தம்பரி வொழிக வென்றாள்.
பொருள் : பஞ்சு இறைகொண்ட பைம்பொன்கலை புறம் சூழ்ந்து வைத்து - துகில் தங்கிய புதிய பொன்மேகலையைப் புறத்தே சூழவைத்து; நஞ்சு இறைகொண்ட நாகப் படம் பழித்து அகன்ற அல்குல் - நஞ்சு தங்கிய அரவின் படத்தைப் பழித்துப் பரந்த அல்குலை; வெஞ்சிறைப் பள்ளியாக - வெவ்விய சிறையிடமாகக் கொண்டு; விழுமுலைத் தடத்துவைக - சிறந்த முலைத்தடத்திலே தங்குமாறு; தம் சிறைப்படுக்கலாதார் - தம் சிறையிலே கணவரை அகப்படுக்க அறியாத மகளிர்; தம் பரிவு ஒழிக என்றாள் - பிரிவின்கண் தாம் வருந்துவதை விடுக என்றாள்.
விளக்கம் : இது கேமசரி தன்னிலே கூறி ஆற்றியது. தாய்க் கூற்றென்பாரு முளர். பஞ்சு : ஆகுபெயர்; ஆடை என்க. கலை - மேகலை என்னுமோரணி கலன். இறைகொண்ட - தங்கிய. இதனைக் கேமசரி கூற்றாகக் கொள்ளலே சிறப்பு. ( 127 )
1539. வாசமிக் குடைய தாரான் வண்டினுக் குரைத்த மாற்றப்
பாசத்தா லாக்கப் பட்ட வாவிய ளல்ல தெல்லாம்
பேசினார் பிணையன் மாலை பிசைந்திடப் பட்ட தொத்தா
டூசுலாம் பரவை யல்குற் றூமணிப் பாவை யன்னாள்.
பொருள் : தூசு உலாம் பரவை அல்குல் தூமணிப் பாவை அன்னாள் - ஆடை தங்கிய பரவிய அல்குலையுடைய தூ மணிப் பாவையைப் போன்றவள்; வாசம் மிக்குடைய தாரான் வண்டினுக்கு உரைத்த மாற்றப் பாசத்தால் - மணம் மிகவுடைய மாலையான் வண்டுக்குக் கூறிய மொழியாகிய கயிற்றாலே; ஆக்கப்பட்ட ஆவியள் - கட்டுண்ட உயிரொன்றையுமே உடையாள்; அல்லது எல்லாம் பேசின ஓர் பிணையல் மாலை பிசைந்திடப்பட்டது ஒத்தாள் - அவ்வுயிரொழிய உடம்பு முழுவதும் நாம் சொல்லிற்பிசைந்து போகட்டதொரு கட்டு தலையுடைய மாலையை ஓத்தாள்.
விளக்கம் : வண்டினுக்குரைத்த மாற்றம் என்றது, துணை வண்டு துஞ்சின் நீயுந் துஞ்சுவை என்றதனை (91). பாசம் - கயிறு. பாசம் என்றதற்கேற்ப, ஆக்கப்பட்ட ஆவி என்றதற்குக் கட்டப்பட்ட உயிர் என்னலே சிறப்பு. தூ - தூய. ( 128 )
1540. பையர விழுங்கப் பட்ட
பசுங்கதிர் மதிய மொத்து
மெய்யெரி துயரின் மூழ்க
விதிர்விதிர்த் துருகி நையு
மையிருங் குழலி னாடன்
மைந்தனை வலையிற் சூழ்ந்து
கையரிக் கொண்டுங் காணாள்
காளையுங் காலிற் சென்றான்.
பொருள் : பையர விழுங்கப்பட்ட பசுங்கதிர் மதியம் ஒத்து - படத்தையுடைய பாம்பினால் விழுங்கப்பட்ட பைங்கதிரையுடைய திங்களைப்போன்று பசந்து; மெய் எரி துயரின் மூழ்க விதிர்விதிர்த்து உருகி நையும் - உடம்பு எரியுந் துயரத்திலே மூழ்கும்படி நடுநடுங்கி நெஞ்சுருகி வருந்துகின்ற; மை இருங் குழலினாள் தன் மைந்தனை - கரிய நீண்ட குழலாள் தன் கணவனை; வலையின் சூழ்ந்து கையரிக் கொண்டும் காணாள் - வலைபோலே சூழ்ந்துகொண்டு அரித்தல் கொண்டு தேடியும் கண்டிலள்; காளையும் காலின் சென்றான் - அவனும் காலாலே நடந்து போனான்.
விளக்கம் : குழலினாள் : கேமசரி. தன் மைந்தனை என்றது தன் கணவனை என்றவாறு. நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம் என மணிமேகலையில் (21 : 29) கணவனை மகன் எனலுங் காண்க. அரா : அர என ஆனத விகாரம். காலின் - காற்றுப்போ லென்றுமாம். ( 129 )
1541. காழகச் சேற்றுட் டீம்பால்
கதிர்மணிக் குடத்தி னேந்தி
வீழ்தரச் சொரிவ தேபோல்
விளங்கொளித் திங்கட் புத்தேள்
சூழிருட் டொழுதி மூழ்கத்
தீங்கதிர் சொரிந்து நல்லார்
மாழைகொண் முகத்திற் றோன்றி
வளைகடன் முளைத்த தன்றே.
பொருள் : காழகச் சேற்றுள் வீழ்தர - கருஞ்சேற்றிலே விழும்படி; கதிர்மணிக் குடத்தின் தீ பால் ஏந்திச் சொரிவதே போல் - ஒளிவிடும் மணிக்குடத்திலே இனிய பாலை ஏந்திச் சொரிவதைப்போல; விளங்கும் ஒளித்திங்கள் புத்தேள் - விளங்கும் ஒளியுறும் திங்களாகிய தெய்வம்; தீ கதிர் சூழ் இருள் தொழுதி மூழ்கச் சொரிந்து - இனிய கதிரைச் சூழ்ந்த இருள் திரளிலே முழுகும்படி பெய்து; நல்லார் மாழைகொள் முகத்தின் தோன்றி - மகளிருடைய பசத்தல்கொண்ட முகம்போலே தோன்றி; வளைகடல் முளைத்தது - வளைந்த கடலிலே தோன்றியது.
விளக்கம் : காழகம் - கருமை. கருஞ்சேறு : இருளிற்கும் பால் நிலவிற்கும் உவமை. ஒளி வீழ்தலேயன்றி இருள் அகலாமையின் சேற்றிற் பெய்த பால் என உவமை கூறினர். புத்தேள் - கடவுள். தொழுதி - திரள். வளைகடல் : வினைத்தொகை. மாழை - பொன். விடியற் காலத்தெழுந்த நிலவு இருளைக்கெடுத்தல் ஆகாமையின் இங்ஙனம் கூறினார். ( 130 )
1542. ஏறனாற் கிருளை நீங்கக் கைவிளக் கேந்தி யாங்கு
வீறுயர் மதியந் தோன்ற விரைவொடு போய பின்றை
மாறிலாப் பருதி வட்டம் வருதிரை முளைத்த வாங்க
ணாறுசெ லொருவற் கண்ண லணிகல மருள லுற்றான்.
பொருள் : ஏறனாற்கு இருளை நீங்கக் கைவிளக்கேந்தி யாங்கு - சீவகனுக்கு இருளை ஓட்ட ஏந்திய கை விளக்குப்போல; வீறு உயர் மதியம் தோன்ற - சிறப்புற உயர்ந்த திங்கள் முளைத்தலாலே; விரைவொடு போய பின்றை - சீவகன் சிறிது தூரம் விரைந்து நீங்கிய பிறகு; மாறு இலாப் பரிதிவட்டம் வருதிரை முளைத்த ஆங்கண் - மாறுபடாத ஞாயிறு, மோதும் அலையுறு கடலிலே முளைத்த அளவிலே; ஆறு செல் ஒருவற்கு - அவ்வழியே செல்லும் ஒருவனுக்கு; அண்ணல் அணிகலன் அருளல் உற்றான் - சீவகன் தன் அணிகலன்களைக் கொடுக்கவிரும்பினான்.
விளக்கம் : ஏறனான் : ஆண் சிங்கத்தை ஒத்த சீவகன். சீவகன் இருளில் செல்லக் கண்டிரங்கிய விண்ணோர் ஒரு கை விளக்கேந்தினாற்போன்றென்க. வீறு : வேறொன்றற் கில்லாத அழகு. திங்கள்போலத் தேய்தலும் வளர்தலும் மறைதலும் இல்லாமையின் மாறிலாப் பரிதிவட்டம் என்றார். பரிதி வட்டம் - ஞாயிற்று மண்டிலம். வருதிரை : கடல். வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஏறு + அனான் = ஏறனான். அன்னான் என்பது அனான் எனத் தொகுத்தல் விகாரம் ஆயிற்று. இல்லா என்பது இலா என நின்றதும் அது. ( 131 )
வேறு
1543. எவ்வூரீர் ரெப்பதிக்குப் போந்தீர்நும்
மனைவியர்தா மெனைவர் மக்க
ளொவ்வாதார் தாமெனைவ ரொப்பார்மற்
றெனைவர்நீ ருரைமி னென்றாற்
கிவ்வூரே னிப்பதிக்குப் போந்தேனென்
மனைவியரு நால்வர் மக்க
ளொவ்வாதார் தாமில்லை யொப்பா
னொருவனென வுரைத்தான் சான்றோன்.
பொருள் : எவ்வூரீர் - நீர் எவ்வூரிலே யிருப்பீர்?; எப்பதிக்குப் போந்தீர் - எவ்வூர்க்கு வந்தீர்?; நும் மனைவியர் தாம் எனைவர் - நும் மனைவியர் எத்துணைவர்?; மக்கள் ஒவ்வாதார் தாம் எனைவர் - மக்களில் ஒழுக்கமில்லாதார் எத்துணைவர்?; மற்று ஒப்பார் எனைவர் - ஒழுக்கமுடையார் எத்துணைவர்?; உரைமின் என்றாற்கு - கூறுமின் என வினவினாற்கு; இவ்வூரேன் - இப்போது இவ்வுடம்பினிடத்தேன்; இப்பதிக்குப் போந்தேன் - இவ்வுடம்பெடுத்தற்குப் போந்தேன்; என் மனைவியரும் நால்வர் - எனக்கு மனைவியர் நான்கு பேர்; மக்கள் ஒவ்வாதார் தாம் இல்லை - மக்களில் ஒழுக்கமிலாதார் இல்லை; ஒப்பான் ஒருவன் - ஒழுக்கமுடையான் ஒருவன்உளன்; என சான்றோன் உரைத்தான் - என்று உணர்வுடையோன் கூறினான்.
விளக்கம் : எனைவர் - எத்தனைபேர். உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலே ஒழுக்கமாதலின், ஒழுக்கமுடைமையை ஒப்பு என்று அஃதில்லாமையை ஒவ்வாமை என்றும் கூறினார். இவ்வூரேன் இப்பதிக்குப் போந்தேன் என்புழி ஊர் பதி என்பன உடல் என்னும் பொருளில் கூறப்பட்டன. உணர்வு என்றது தத்துவ உணர்ச்சியினை. இஃது அணிகலன்களைப் பெறுவோன் பெறுமுன் வினவியது.
( 132 )
1544. ஒப்பா னொருமகனே நால்வ
ரொருவயிற்றுட் பிறந்தா னென்ன
நக்கான் பெருஞ்சான்றோ னம்பிபோல்
யாருலகி லினியா ரென்ன
மிக்கா னுரைப்பதுவு மிக்கதே
போலுமால் வினவிக் கேட்பேன்
றக்காய் குறித்த துரையென்றான்
றானுரைப்பக் கேட்கின் றானே.
பொருள் : ஒப்பான் ஒரு மகனே - ஒழுக்கமுடைய அவ்வொரு மகனே; நால்வர் ஒரு வயிற்றுள் பிறந்தான் என்ன - நான்கு தாய்மாரது ஒரு வயிற்றிலே பிறந்தான் என்ற கூறினானாக; நம்பிபோல் உலகில் இனியார் யார் என்னப் பெருஞ்சான்றோன் நக்கான் - இந்த நம்பியைப்போல் உலகினில் இனியார் யாவரென்று கூறி அறிவில்லாதவன் நகைத்தான்; மிக்கான் உரைப்பதுவும் மிக்கதே போலுமால் வினவிக் கேட்பேன் - (நகைத்தவன் பிறகு) அறிவு மிக்கவன் கூறிய மொழியும் மிக்கது போலே யிராநின்றது, யான் வினவிக்கேட்பேன் (என்று கருதி); தக்காய் குறித்தது உரை என்றான் - நல்லோனே! நீ கூறியதன் கருத்தை விளக்குக என்று வினவினான்; உரைப்பத் தான் கேட்கின்றான் - அவனுரைப்பத் தான் கேளாநின்றான்.
விளக்கம் : பிறந்தான் - என்ன பிறந்தான் என்று கூறினானாகக் கருதி நக்கான் என்க. பெருஞ்சான்றோன் என்றது குறிப்புமொழி - அறிவிலாதான் என்றவாறு. வினவிக் கேட்பேன் : ஒரு சொல். குறித்தது : நின் கூற்றாற் குறிக்கப்பட்ட பொருள். ( 133 )
1545. நற்றானஞ் சீல நடுங்காத்
தவமறிவர் சிறப்பிந் நான்கு
மற்றாங்குச் சொன்ன மனைவியரிந்
நால்வரவர் வயிற்றுட் டோன்றி
யுற்றா னொருமகனே மேற்கதிக்குக்
கொண்டுபோ முரவோன் றன்னைப்
பெற்றார் மகப்பெற்றா ரல்லாதார்
பிறர்மக்கள் பிறரே கண்டீர்.
பொருள் : நல் தானம் சீலம் நடுங்காத் தவம் அறிவர் சிறப்பு இந்நான்கும் - நல்ல தானமும் ஒழுக்கமும் அசைவில்லாத தவமும் இறைவர் வழிபாடும் ஆகிய இந்த நான்கும்; ஆங்குச் சொன்ன மனைவியர் - முன் கூறிய மனைவியர்; இந்நால்வரவர் வயிற்றுள் தோன்றி - இந்நால்வர் வயிற்றினும் பிறந்து; உற்றான் ஒரு மகனே மேற்கதிக்குக் கொண்டு போம் உரவோன் - பயன் தருவானாகிய நல்வினை யென்கின்ற அவ்வொரு மகனே உயர்கதிக்குக் கொண்டு போவானாகிய உரவோன்; தன்னைப் பெற்றார் மகப்பெற்றார்- அவனைப் பெற்றவரே மகவைப்பெற்றவராவார்; அல்லாதார் பிறர் - மற்றோர் மகப்பெறார் ஆவர்; மக்கள் பிறரே கண்டீர் - பெற்ற மக்களும் அவர் மக்களல்லர் கண்டீர்.
விளக்கம் : நால்வரவர் என்புழி அவர் என்பது வாளா பகுதிப் பொருளாய் நின்றது. மேற் கதிக்குக் கொண்டுபோம் உரவோம் என்றமையால் அது நல்வினை என்பது பெற்றாம். உரவோன் - அறிவுடையோன்; ஆற்றலுடையோனுமாம். அல்லாதார் - அவ்வுரவோனைப் பெற மாட்டாதார். பிறர் : மகப்பெறாதார். மக்களும் பிறரே எனற்பால் உம்மை தொக்கது. ( 134 )
1546. படநாகந் தோலுரித்தாற் போற்றுறந்து
கண்டவர்மெய் பனிப்ப நோற்றிட்
டுடனாக வைம்பொறியும் வென்றார்க்
குவந்தீத றான மாகுந்
திடனாகத் தீந்தேனுந் தெண்மட்டு
முயிர்க்குழா மீண்டி நிற்றற்
கிடனாகு மூனுமிவை துறத்தலே
சீலமென் றுரைத்தார் மிக்கோர்.
பொருள் : படநாகம் தோல் உரித்தாற்போல் துறந்து - படத்தையுடைய நாகம் தோல் உரித்தாற் போலே அகமும் புறமும் தூயவாகத் துறந்து; கண்டவர் மெய் பனிப்ப நோற்றிட்டு - பார்த்தோர் உடல் நடுங்கும்படி நோற்று; உடன் ஆக ஐம்பொறியும் வென்றார்க்கு - தம் வயத்தனவாக ஐம்பொறிகளையும் வென்றவர்கட்கு; உவந்து ஈதல் தானமாகும் - விரும்பிக் கொடுத்தல் தானம் ஆகும்; தீம் தேனும் தெள் மட்டும் உயிர்க்குழாம் ஈண்டி நிற்றற்கு இடன் ஆகும் ஊனும் இவை - இனிய தேனும் தெளிந்த கள்ளும் உயிர்த்திரள் கூடி நிற்பதற்கு இடமாகிய ஊனும் ஆகிய இவற்றை; திடன் ஆக துறத்தலே சீலம் என்று மிக்கோர் உரைத்தார் - உறுதியுற நீக்குதலே ஒழுக்கம் என்று பெரியோர் கூறினர்.
விளக்கம் : நாகம் தோலுரிக்கும்போது தன் அகத்துள்ள நஞ்சினையும் உமிழ்ந்துவிடும் என்பது பற்றி நச்சினார்க்கினியர், படநாகந்தோலுரித்தாற் போலே அகமும் புறமும் தூயவாகத் துறந்து, என நுண்ணிதின் உரை விரித்தனர். வாளரவு தோலும் விடமு நீத்தென்ன (12 : 98) என்றார் சூளாமணியாரும். ( 135 )
1547. ஓவா திரண்டுவவு மட்டமியும்
பட்டினிவிட் டொழுக்கங் காத்த
றாவாத் தவமென்றார் தண்மதிபோன்
முக்குடைக்கீழ்த் தாதை பாதம்
பூவே புகைசாந்தஞ் சுண்ணம்
விளக்கிவற்றாற் புனைத னாளு
மேவா விவைபிறவும் பூசனையென்
றீண்டியநூல் கரைகண் டாரே.
பொருள் : ஈண்டிய நூல் கரை கண்டார் - அறம் பொருந்திய நூல்களைக் கற்றுத் துறைபோய துறவோர்; ஓவாது இரண்டு உவவும் அட்டமியும் பட்டினி விட்டு ஒழுக்கம் காத்தல் தாவாத்தவம் என்றார் - இரண்டு உவாவிலும் அட்டமியிலும் பட்டினியிருந்து ஒழிவின்றி ஒழுக்கங் காத்தலைக் கெடாத தவம் என்றனர்; தண்மதிபோல் முக்குடைக்கீழ்த் தாதை பாதம் - குளிர்ந்த மதியைப்போன்ற முக்குடையின்கீழ் எழுந்தருளிய இறைவன் அடியை; பூவே புகை சாந்தம் சுண்ணம் விளக்கு இவற்றாற் புனைதல் - பூவும் நறுமணப் புகையும் சந்தனமும் சுண்ணப்பொடியும் விளக்கும் என்ற இவற்றாற் புனைதலையும்; இவை பிறவும் பூசனையென்று ஏவா - இவைபோன்றவற்றையும் பூசனை எனக் கூறினர்.
விளக்கம் : இரண்டுவவு - அமாவாசையும், பூரணியும். அட்டமி - எட்டா நாள். உவவு - பதினான்கா நாள் என்பாருமுளர். உவா : குறியதன்கீழ் ஆகாரம் குறுகி உகரமேற்று உவவு என்றாயிற்று. கண்டார் பூசனை என்று ஏவா, தவம் என்றார் என இயைக்க. ( 136 )
1548. இந்நால்வர் துணைவியராக் காதன்
மகனிவனா வுடையார் போகிப்
பொன்னார மார்பிற் புரந்தரராய்ப்
பூமி முழுது மாண்டு
மன்னாகி முக்குடைக்கீழ் வாமன்
சிறப்பியற்றி வரம்பி லின்பம்
பின்னா விளைவித்துப் பிறவா
வுலகெய்தல் பேச லாமே.
பொருள் : இந்நால்வர் துணைவியர் ஆ - இந்த நான்கு பேரும் மனைவியராக; இவன் காதல் மகன் ஆ - இவனே அன்புறும் மகனாக; உடையார் போகி - உடையவர் துறக்கத்தே சென்று; பொன் ஆர மார்பின் புரந்தரராய் - பொன் மாலை பினையுடைய இந்திரராய் அத்துறக்கத்தை யாண்டு; மன் ஆகி பூமி முழுதும் ஆண்டு - பின்னர்ப் பேரரசராய் நிலமுழுதும் ஆண்டு; முக்குடைக்கீழ் வாமன் சிறப்பு இயற்றி - முக்குடைக்கீழ் இறைவனுக்கு வழிபாடு முதலிய சிறப்புக்களைச் செய்து; வரம்புஇல் இன்பம் பின்னா விளைவித்து - அதீதாவத்தை என்னும் வரம்பிலா இன்பத்தைப் பிறகு விளைவித்து; பிறவா உலகு எய்தல் பேசல் ஆம் - பிறவாப் பேரின்ப உலகாகிய வீட்டைப் பெறுதல் உண்மையென்றே உரைக்கலாம்.
விளக்கம் : வாமன் - அருக்கடவுள். வரம்பிலின்பம் : இஃது அதீதாவத்தை என்றும் அருகந்தாவத்தை என்றும் வழங்கப்படும். துணைவியரா, மகனிவனா, பின்னா என்னும் மூன்றிடத்தும் ஈற்றுக் ககரமெய்யும் அகரவுயிருங் கெட்டன. ( 137 )
1549. மட்டார்பூம் பிண்டி வளங்கெழு
முக்குடைக்கீழ் மாலே கண்டீர்
முட்டாத வின்பப் புதாத்திறக்குந்
தாளுடைய மூர்த்தி பாத
மெட்டானும் பத்தானு மில்லாதார்க்
கிவ்வுலகி லின்ப மேபோ
லொட்டாவே கண்டீர் வினையவனைத்
தேறாதார்க் குணர்ந்தீ ரன்றே.
பொருள் : மட்டு ஆர் பூம் பிண்டி வளம் கெழும் முக்குடைக்கீழ் மாலே - தேன் பொருந்திய மலர்ப் பிண்டியின் அடியில் முக்குடைக்கீழ் எழுந்தருளிய அருகப் பெருமானே; முட்டாத இன்பப் புதாத் திறக்கும் தாள் உடைய மூர்த்தி கண்டீர் - தடையற்ற இன்ப வுலகிற் கதவைத் திறக்குந்தாழாகிய திருவடியை உடைய தலைவன் என்று அறிவீர்களாக; எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு இவ்வுலகில் இன்பமே போல் - எட்டேனும் பத்தேனும் இல்லாதவர்கட்கு இவ்வுலகிலே இன்பம் இல்லாததைப் போல்; அவனைத் தேறாதார்க்கு வினை ஒட்டா கண்டீர் - அவனைத் தெளியாதார்க்கு நல்வினைகள் ஒட்டா என்று அறிவீர்; உணர்ந்தீர் அன்றே - இத்தன்மையை உணர்ந்தீர் அல்லவோ?
விளக்கம் : பிண்டி - அசோகு. மால் - அருகன். முட்டாத - தடையில்லாத. புதா - கதவு. தாள் - தாழ்ப்பாள். புதாத்திறக்கும் தாளாகிய பாதமுடைய மூர்த்தி மாலே என்க. எட்டானும் பத்தானும் என்றது சிறிதேனும் என்னும் பொருள்பட நின்றது. இவற்றின் உள்ள ஆனும் உம்மும் அசைகள் என்பர் நச்சினார்க்கினியர். ( 138 )
1550. வேற்றுவ ரில்லா நுமரூர்க்கே
செல்லினும் வெகுண்டீர் போல
வாற்றுணாக் கொள்ளா தடிபுறத்து
வைப்பீரே யல்லிர் போலுங்
கூற்றங்கொண் டோடத் தமியே
கொடுநெறிக்கட் செல்லும் போழ்தி
னாற்றுணாக் கொள்ளீ ரழகலா
லறிவொன்று மிலிரே போலும்.
பொருள் : வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே செல்லினும் - அயலார் இல்லாத நும் உறவினர் ஊருக்கே சென்றாலும்; வெகுண்டீர் போல ஆற்று உணாக்கொள்ளாது அடிபுறத்து வைப்பீரே அல்லிர் போலும் - அவருடனே சினந்து ஆண்டுச் செல்லாதீர் போலப் பொதிசோறு கைக்கொள்ளாமற் புறத்தே ஓர் அடியிட்டிடீர் (இத்தன்மையரான நீவிர்); கூற்றம் கொண்டு ஓடத்தமியே கொடுநெறிக்கண் செல்லும் போழ்தின் - கூற்றுவன் நும்மைக் கட்டிக்கொண்டு ஓடத் தனியே கொடிய நெறியிலே செல்லும்போது; ஆற்று உணாக் கொள்ளீர் - (உண்ணும் ஊணுக்குப்) பொதிசோறு இப்போதே தேரடிக்கொள்கின்றிலீர் (ஆதலின்); அழகலால் அறிவு ஒன்றும் இலிரே போலும் - அழகன்றி அறிவு சிறிதும் உடையீர் அல்லீர் போலும்!
விளக்கம் : வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே என்றதனால் நுமரில்லா வேற்றுவர் ஊர்க்கே கூற்றங்கொண்டோட எனவும், கொடு நெறிக்கண் என்றதனால், நுமரூர்க்கு நன்னெறிக்கண் செல்லினும் எனவும் விரித்தோதுக. அறிவொன்றும் என்புழி ஒன்றும் என்பது சிறிதும் என்பதுபட நின்றது. வைப்பீரே யல்லீர், இலிரே என வினைமுடிவு செய்க : இன், ஏழனுருபாதல் புறனடையாற் கொள்க. ஏ : அசை. போலும் : உரை யசை. ( 139 )
1551. அளைவது காம மடுநறவு
நெய்யொழுகு மூனும் பின்னா
விளைவது தீவினையே கண்டீ
ரிவைமூன்றும் விடுமி னென்றாற்
றளையவிழ் கோதையார் தாமஞ்சேர்
வெம்முலைபோல் வீங்கிக் கண்சேந்
துறைய வுறுதி யுரைப்பாரை
யோஒபாவ முணரா ரேகாண்.
பொருள் : அளைவது காமம் அடுநறவு நெய் ஒழுகும் ஊனும் பின்னே - தோய்வதாகிய காமத்தானும் துன்புறுத்தும் கள்ளானும் நெய்ஒழுகும் ஊனானும் பின்னர்; விளைவது தீ வினையே கண்டீர் - உண்டாகும் பயன் தீவினையே என்றறிவீர்; இவை மூன்றும் விடுமின் என்றால் - இவை மூன்றையும் விடுங்கோள் என்று பிறர்க்குக் கூறினால்; தளை அவிழ் கோதையார் தாமம் சேர் வெம்முலைபோல் வீங்கிக் கண்சேந்து - முறுக் கவிழ்ந்த மலர் மாலையாரின் வெவ்விய முலைபோற் பொருமிக் கண்சிவக்கச் சினந்து; உளைய உறுதி உரைப்பாரை உணரார்காண் - தாம் வருந்த நன்மை கூறுவோரை அறியாராயினார்காண்!; ஓ! பாவம் - ஓ! இஃதொரு பாவம் இருந்தபடி என்!
விளக்கம் : அளைவது - நுகர்வது. அடுநறவு - காய்ச்சுகின்ற கள்ளுமாம். பின்னாக என்பதன் ஈறுகெட்டது. ( 140 )
1552. இழுதன்ன வெண்ணிணத்த செந்தடிக்கே
யேட்டைப்பட் டிரும்பிற் போர்த்த
பழுதெண்ணும் வன்மனத்தா ரோட்டைமரச்
செவியர் கேளார் பால்போன்
றறொழுகியமு தூறுநல் லறத்தை
யோர்கிலரூன் செய்கோட் டக்குக்
கழுகுண்ண வள்ளூர மேசுமந்து
புள்ளிற்கே புறஞ்செய் கின்றார்.
பொருள் : ஊன்செய் கோட்டக்கு - ஊனாற் செய்த உடம்பிற்கு; கழுகு உண்ண வள்ளூரமே சுமந்து புள்ளிற்கே புறம் செய்கின்றார் - கழுகு உண்ணுமாறு அவ்வூனையே சுமந்து அக்கழுகிற்கே புறம் செய்வோராவர்; இழுது அன்ன வெள்நிணத்த செந்தடிக்கே ஏட்டைப்பட்டு - நெய்யனைய வெண்மையான நிணமுடைய செவ்வூனைப் பெறவேண்டுமென்றே இளைத்து; இரும்பிற் போர்த்த பழுது எண்ணும் வன்மனத்தார் - இரும்பினாலே போர்த்த குற்றத்தை எண்ணும் வலிய மனத்தராய்; ஓட்டை மரச் செவியர் கேளார் - ஓட்டையான மரச் செவியராய் அறத்தைக் கேளார்; பால் போன்று ஒழுகி அமுதூறும் நல்லறத்தை ஓர்கிலர் - பால் போலப் பெருகி அமுது ஊறும் நல்லறத்தை அறிகிலர்
விளக்கம் : இழுது - நெய். இது நிணத்திற்குவமை. செந்தடி - சிவந்த தசை. ஏட்டைப்படுதல் - இளைத்தல்; எண்மை என்னும் பண்படியாகப் பிறந்த சொல். பழுது - குற்றம். பழுதெண்ணும் மந்திரியின் (குறள். 639) ஊனாற் செய்த உடம்பிற்கு ஊனையே சுமந்து கழுகுக்கே புறத்தைச் செய்கின்றவர் வன்மனத்தராய்ச் செவியராய்க் கேளார்; தாமே அறிவதுஞ் செய்யார் என்க. செய்கின்றவர் தாமே அறிவதுஞ் செய்யார்; கேளார் என மாற்றினும் நன்றே. கோட்டக்குப் புறஞ்செய்கின்றார், புள்ளிற்கே புறஞ்செய்கின்றார் என இரண்டிடத்துங் கூட்டுவர் நச்சினார்க்கினியர். ஓட்டையென்றார் உட்கொளாமையின். வள்ளூரம் - ஊன். ( 141 )
1553. கையாற் பொதித்துணையே காட்டக்
கயற்கண்ணா ளதனைக் காட்டா
ளையா விளாம்பழமே யென்கின்றீ
ராங்கதற்குப் பருவ மன்றென்
செய்கோ வெனச்சிறந்தாள் போற்சிறவாக்
கட்டுரையாற் குறித்தவெல்லாம்
பொய்யே பொருளுரையா முன்னே
கொடுத்துண்டல் புரிமின் கண்டீர்.
பொருள் : கையால் பொதித் துணையே காட்ட - (இறக்கும் நிலையிலுள்ள ஒருவன்) மொழியின்றிக் கையாலே பொருள் திரளின் அளவைக் காட்டினானாக; கயல் கண்ணாள் அதனைக் காட்டாள் - கயல்போலும் கண்ணாளாகிய மனைவி அதனைக் கட்டாளாய்; ஐயா விளாம்பழமே என்கின்றீர் - ஐயனே! விளாம்பழமே வேண்டும் என்கின்றீர்; ஆங்கு அதற்குப் பருவம் அன்று - அது தருதற்கு விக்குள் வந்து அடுத்திருப்பதாற் பருவம் ஆகாது; என் செய்கோ என - என் செய்வேன் என்று; சிறந்தாள் போல் சிறவாக் கட்டுரையால் குறித்த எல்லாம் - சிறந்தவளைப்போல நடித்துச் சிறவாத கட்டுரையினாலே, அவன் குறித்த பிறவற்றிற் கெல்லாமும்; பொய்யே பொருளுரையா முன்னே - பொய்ப் பொருள் கூறாமுன்னமே; கொடுத்து உண்டல் புரிமின் - கொடுத்து உண்பதை விரும்புங்கோள்.
விளக்கம் : உரையாடாவண்ணம் நாச்செற்று விக்குள்மேல் வந்தமையின் பொதித்துணையைக் கையாற் கார்ட்டினன் என்பது கருத்து. அதனை - அப்பொற்பொதியினை. பருவம் - உண்ணுதற்கேற்ற செவ்வி. சிறந்தாள் போல் என்றது சிறவாதவளாயிருந்தும் என்பது பட நின்றது. செய்கு : தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று. இவ்வாறு நீயிர் ஈட்டியவற்றைக் கொன்னே இழப்பதன் முன்னே கொடுத்துண்மின் என்றவாறு. ( 142 )
வேறு
1554. பனிமதி யின்கதிர் பருகு மாம்பல்போன்
முனிமதி முகத்தியர் முறுவ னம்பினார்
துனிவளர் கதிகளுட் டோன்றி நாடகங்
கனியநின் றாடுவர் கடையில் காலமே.
பொருள் : பனிமதி கதிர் பருகும் ஆம்பல்போல் - குளிர்ந்த திங்களின் கதிரை விரும்பிப் பருகும் அல்லிபோன்று; மதிமுனி முகத்தியர் முறுவல் நம்பினோர் - திங்களை மாறுபடும் முகமுடைய மங்கையரின் முறுவலுடைய வாயை விரும்பினோர்; துனிவளர்கதிகளுள் தோன்றி - துன்பந்தரும் தீய கதிகளிலே தோன்றி; கடைஇல் காலம் நாடகம் கனிய நின்று ஆடுவர் - அளவில்லாத காலமாக, வெவ்வேறுடம்பெடுத்து முற்றத்திரிவர்.
விளக்கம் : மதிமுனி முகத்தியர் என மாறுக. ஆம்பல் : ஒரு நீர்ப்பூ; இது நிலவில் மலருமியல்புடையதாகலின் மதியின் கதிர் பருகும் ஆம்பல் என்றார். முறுவல் என்றது மகளிர் இன்பத்திற்கு ஆகுபெயர். துனி - துன்பம். கதி - நகரகதி முதலியன. வெவ்வேறு யாக்கைகொண்டுழலுதலால் நாடகம் என்றார். மதியின் கதிரை விரும்பும் ஆம்பல்போல் முகத்தியர் முறுவலை விரும்பினோர் எனக் கோடலே நூலாசிரியர் கருத்தோடியையும் எனல் அடுத்த செய்யுளாலும் உணரலாம். ( 143 )
1555. நிழனிமிர் நெடுமதி நிகரி றீங்கதிர்ப்
பழனவெண் டாமரை பனிக்கு மாறுபோற்
குழனிமிர் கிளவியார் கோல மஞ்சினார்
தொழநிமிர்ந் தமரராய்த் துறக்க மாள்வரே.
பொருள் : நிழல் நிமிர் நெடுமதி நிகர் இல் தீம்கதிர் - ஒளிமிக்க பெரிய திங்களின் ஒப்பற்ற இனிய கதிருக்கு; பழனம் வெண் தாமரை பனிக்கும் ஆறுபோல் - வயலில் உள்ள தாமரை வருந்தும் தன்மைபோல; குழல் நிமிர் கிளவியார் கோலம் அஞ்சினார் - குழலிசையினும் மிக்க இனிய மொழியாரின் ஒப்பனைக்கு அஞ்சினோர்; தொழ நிமிர்ந்து அமரராய்த் துறக்கம் ஆள்வர் - பலரும் தொழுமாறு மிக்கு வானவராய்த் துறக்கத்தை ஆள்வர்.
விளக்கம் : நிழல் - ஒளி. பழனம் - கழனி. பனித்தல் - வருந்துதல். கோலம் அஞ்சினார் என்றது, அவர் இயல்பாகவே விரும்புதற்குரியரல்லர், அவர் தம் கோலமே விரும்பச்செய்வது, அதனை அஞ்சினோர் என்பதுபட நின்றது. ( 144 )
வேறு
1556. இன்னவா றுறுதி கூறி
யெரிமணி வயிர மார்ந்த
பொன்னவிர் கலங்க ளெல்லாம்
பொலிவொடு புகன்று நீட்டிச்
சென்மினீ ரென்று கூற
வலங்கொண்டு தொழுது சென்றான்
வின்மரீஇ நீண்ட தோளான்
வெயிற்கட நீந்த லுற்றான்.
பொருள் : இன்ன ஆறு உறுதி கூறி - இங்ஙனம் நன்மையைக் கூறி; எரிமணி வயிரம் ஆர்ந்த பொன் அவிர் கலங்கள் எல்லாம் - ஒளிவிடும் மணியும் வயிரமும் பொருந்திய பொன்விளங்குங் கலன்களையெல்லாம்; பொலிவொடு புகன்று நீட்டி - அழகுற விரும்பிக்கொடுத்து; நீர் சென்மின் என்று கூற - நீர் போமின் என்று கூற; வலம்கொண்டு தொழுது சென்றான் - அவன் வலம் வந்து வணங்கிப் போயினான்; வில் மெரீஇ நீண்ட தேளான் வெயில் கடம் நீந்தல் உற்றான் - வில் பயின்று நீண்ட தோள்களை உடையவன் வெம்மையுறும் காட்டுவழியே செல்லத் தொடங்கினான்.
விளக்கம் : இன்னவாறு - இவ்வாறு. உறுதி : உறுதிப்பொருள். தனக்கு ஞானாசிரியனாகிவிட்டபடியால் வலங்கொண்டு தொழுது சென்றான் என்பது கருத்து. கடம் - காடு ( 145 )
கேமசரியார் இலம்பகம் முற்றிற்று.
------------------
சீவக சிந்தாமணி
7. கனகமாலையார் இலம்பகம்
கதைச் சுருக்கம்: இங்ஙனம் சென்ற சீவகன் மத்திம தேயத்துள்ள ஏமமாபுரம் என்னும் நகரத்தின் பாங்கருள்ள ஒரு பூம்பொழிலை எய்தினன். அப்பொழிலின் கண்ணுள்ள பூம்பொய்கைத் தடங்கரையிலமர்ந்து காந்தருவதத்தை முதலியோரை நினைந்து ஆற்றாமையான் வருந்தியிருந்தான். அப்பொழுது அந் நகரத்து வேந்தன் மகன் விசயன் என்பான் அவண் வந்து சீவகனைக் கண்டனன். அவனோடு ஊர் முதலியன வினவி அளவளாவினன். சீவகன் தன் ஊர் முதலியவற்றை உண்மை வகையானன்றியுரைத்தனன். அப் பொழிலின்கண் உள்ள ஒரு தேமாங்கனியை வீழ்த்தும் பொருட்டு அவ் விசயன் பன்முறையும் கணைகளை ஏவியும் அக்கனி வீழ்ந்திலது. அதுகண்ட சீவகன் அவன் வியப்புறும்படி ஒரே கணையால் வீழ்த்தித் தன் வில் வன்மையை அவனுக்குக் காட்டினன்.
விசயன் சீவகனைத் தன் தந்தையிடம் அழைத்தேகினன். அவ் வரசன் சீவகனுடைய வித்தைச் சிறப்பை யுணர்ந்து தன் மக்களாகிய விசயன் முதலிய ஐவர்க்கும் சீவகனை ஆசிரியனாக்கினன். அவர்களும் சீவகன்பாற் பயின்று மேன்மை யெய்தினர். ஏமமாபுரத்து மன்னனாகிய அத்தடமித்தன் சீவகன் தன்னகரத்தினின்றும் பிரியாதிருக்கும்பொருட்டுத் தன் மகளாகிய கனகமாலையையும் அவனுக்குத் திருமணஞ் செய்வித்தனன். சீவகன் இவ்வாறு ஏமமாபுரத்தில் இன்புற்றிருந்தான்.
இனி, இராசமாபுரத்தே நந்தட்டன் முதலியோர் சீவகன் நிலையினை உணராராய்ப் பெரிதும் துன்புற்றனர். நாடெங்குந்தேடியும் காண்கிலர். ஒருநாள் நந்தட்டன் காந்தருவதத்தையின் பாற் சென்று சீவகனைப் பற்றி வினவினான். அவள் தன் வித்தை வன்மையால் சீவகன் ஏமமாபுரத்தில் கனகமாலையோடு இன்புற்றிருத்தலை நந்தட்டனுக்குக் கண்கூடாகக் காட்டினள். பின்னரும் அவள் தனது வித்தை வன்மையால் நந்தட்டனைச் சீவகன் இருக்குமிடத்தே சேரும்படி செய்தனள். சீவகன் நந்தட்டனைக் கண்டு மகிழ்ந்தான். அவனோடு அந் நகரத்தே பின்னரும் உறைந்தனன்,
இனி, சீவகனுடைய தோழன்மார் சீவகன் செய்தியைக் காந்தருவ தத்தையாலுணர்ந்து அவனிருக்கு மிடத்திற்கு மறவர்
பலரோடும் செல்லலாயினர். அவர்கள் செல்லுநெறியில் இருந்ததொரு தவப் பள்ளியின் மருங்கே தங்கினர். அத்தவப் பள்ளியே விசயை நோற்றிருக்கும் பள்ளியாகும். விசயை அவர்களை நீவிர்யாவர்? எவ்வூரீர்? யாண்டுச் செல்கின்றீர்? என வினவினள். அவட்கு விடை கூறிய தேவதத்தன், சீவகன் வரலாறும் கூறும்படி யாயிற்று. அவன் கட்டியங்காரன் சீவகனைக் கொல்லக் கருதி என்று சொல்லும்பொருட்டுச் சீவகனைக் கொல்ல என்ற வளவிலே விசயை மூர்ச்சையுற்று விழுந்தாள். இந் நிகழ்ச்சியால் தோழன்மார் இவரே சீவகனுடைய நற்றாய் என்றும் சீவகன் இறைமகன் என்றும் அறிந்து கொண்டனர். சீவகன் இறவாதிருத்தலை விசயைக்கு விளக்கிக் கூறினர். விசயை சீவகனை நினைந்து பலவாறாகப் புலம்பினாள். தோழன்மாரை நோக்கி அன்பரீர்! சீவகசாமியை என்பால் அழைத்து வம்மின், என்று இரந்தனள். தோழர்கள் அவளை வணங்கி அங்ஙனமே அழைத்து வருவதாக வுணர்த்தி அவளைத் தேற்றி விடை பெற்றுச் சென்றனர்.
சென்ற தோழர்கள் சீவகனிருக்கும் ஏமமாபுரத்தை அணுகி அவனைக் காண்டல் எங்ஙனம் என்று தம்முட் சூழ்ச்சிசெய்து அந் நகரத்து ஆனிரையைக் கவர்ந்துகொண்டனர். அஃதறிந்த அரசன் சினந்து அவ்வானிரையை மீட்கும்பொருட்டுப் படைகளை ஏவினான். அப் படைக்குத் தலைவராய்ச் சீவகனும் நந்தட்டனும் வந்தனர். அதுகண்ட பதுமுகன் நம் சூழ்ச்சி பலித்தது என்று மகிழ்ந்து, ஓர் அம்பில் நின்னடியேம் நின் திருவடியிலுறைதல் வேண்டிச் சச்சந்தன் மகனாகிய நின்னைக் காணவே வந்துள்ளேம் என்று எழுதி அதனைச் சீவகன் அடிகளிலே விழும்படி எய்தான். அக் கணையையும் அதன்கட் பொறித்த செய்தியையும் அறிந்த சீவகன் இங்ஙனம் அம்பேவியவன் பதுமுகனே ஆதல் வேண்டுமென்று துணிந்தனன்.பின்னர்ப் போர் நிகழாதபடி செய்து அவர்களைக் கண்டு அளவளாவினான். அரசன் திருமுன்னர் அழைத்தேகி இவரெல்லாம் என் ஆருயிர்த் தோழராவார் என்று அறிவுறுத்தினன். அரசனும் அவரை வரவேற்று மகிழ்ந்தான். பின்னர்ச் சீவகன் பதுமுகன் முதலியோரைத் தனியிடத்தே வைத்து யான் இறைமகனாதலை நீயிர் உணர்ந்ததெப்படி? என்று வினவினன். அவர்களும் தாம் விசயையைத் தண்டகாரணியத்துத் தவப்பள்ளியிற் கண்டமை கூறினர். அதுகேட்ட சீவகன் ஆற்றாமையாலழு தனன். என்னே! என்னே! என்னே! எம் அடிகளாரும் உளரோ! உளரோ! என்று வினவினன். அவர்பால் இப்பொழுதே செல்லுதல்வேண்டும் என்று விரைந்தனன். தடமித் தன்பால் விடை கேட்டனன். அவனும் சீவகன் இறைமகனாதலறிந்து உவகை கொண்டனன். அன்புடன் விடையும் ஈந்தான். சீவகன் கனகமாலையை அங்கேயே இருக்கச் செய்து தோழரோடும் மறவரோடும் விசயை தவப்பள்ளி நோக்கிச் சென்றான்.
1557. இரங்கு மேகலை யல்கு
லின்கனித் தொண்டையந் துவர்வா
யரங்கக் கூத்திக ணன்பின்
மனையவட் டுறந்துசெல் பவர்போற்
பரந்த தீம்புனன் மருதம்
பற்றுவிட் டினமயி லகவு
மரங்கொல் யானையின் மதநா
றருஞ்சுர மவன்செலற் கெழுந்தான்.
பொருள் : இரங்கும் மேகலை அல்குல் இன்கனித்தொண்டை அம் துவர் வாய் - ஒலிக்கும் மேகலை தவழும் அல்குலையும் இனிய கொவ்வைக் கனிபோன்ற அழகிய சிவந்த வாயையும் உடைய; அரங்கக் கூத்திகண் அன்பின் - அரங்கில் ஆடும் பரத்தையினிடம் வைத்த அன்பினால்; மனையவள் துறந்து செல்பவர்போல் - இல்லாளை விட்டுச் செல்பவர் போல; பரந்த தீ புனல் மருதம் பற்றுவிட்டு - பரவிய இனிய நீரையுடைய மருத நிலத் தொடர்பை விட்டு; இனம் மயில் அகவும் மரம் கொல் யானையின் மதம் நாறு அருஞ்சுரம் அவன் செலற்கு எழுந்தான் - திரளான மயில்கள் கூவுகின்றதும், மரத்தைப் பிளக்கும் யானைகளின் மதம் கமழுகின்றதுமான அரிய காட்டுவழியிலே சீவகன் செல்வதற்குப் புறப்பட்டான்.
விளக்கம் : பழகினும் மயில் பாம்பையும், யானை பாகனையும் கொல்வன ஆதலின், பரத்தையர்க்கு மயிலும் யானையும் உடைய காடு உவமைப் பொருளாயிற்று. சுரம் - சுதஞ்சணன் கூறிய கானவர் குரம்பை சூழ்ந்த காடு.( 1 )
1558. கலவ மாமயி லெருத்திற்
கடிமல ரவிழ்ந்தன காயா
வுலக மன்னவன் றிருநா
ளொளிமுடி யணியந்துநின் றவர்போற்
பலவும் பூத்தன கோங்கம்
பைந்துகின் முடியணிந் தவர்பின்
னுலவு காஞ்சுகி யவர்போற்
பூத்தன மரவமங் கொருங்கே.
பொருள் : காயா கலவ மாமயில் எருத்தின் கடிமலர் அவிழ்ந்தன - காயாவின்கண் கலவத்தையுடைய மயிலின் கழுத்தைப் போல மண மலர்கள் விரிந்தன; கோங்கம் பலவும் உலக மன்னவன் திருநாள் ஒளிமுடி அணிந்து நின்றவர் போற் பூத்தன - கோங்கங்கள் பலவும் மாநிலத்தரசனுக்கு முடிசூட்டு நாளிலே, முடி சூடிச் சேவிக்கும் மன்னரென மலர்ந்தன; மரவம் அங்கு ஒருங்கே பைந்துகில் முடி அணிந்து அவர்பின் உலவு காஞ்சுகியவர்போல் பூத்தன - மரவங்கள் அக்காட்டில் ஒன்று சேர, மயிர்க்கட்டுக் கட்டி அவ்வரசர் பின்னே திரியும் மெய்ப்பை புக்க மிலேச்சரைப் போலப் பூத்தன.
விளக்கம் : கலவம் - கலாபம், தோகை. எருத்தின் - கழுத்தைப் போன்று. கடி - மணம். கருநனைக் காயாகணமயில் அவிழவும் என்றார் சிறுபாணினும் (165). உலக மன்னன் என்றது பேரரசனை. முடியணிந்தவர் என்றமையால் அரசர் என்பது பெற்றாம். கோங்கம் பலவும் பூத்தன என மாறுக. காஞ்சுகி - மெய்ப்பைபுக்க காவன்மாக்கள் - இவரை மிலேச்சர் என்பர் நச்சினார்க்கினியர். (2)
1559. ஓங்கு மால்வரை வரையா
டுழக்கலி னுடைந்துகு பெருந்தேன்
றாங்கு சந்தனந் தளரத்
தழுவி வீழ்வன தகைசா
லாங்கண் மாலுல களப்பா
னாழி சங்கமொ டேந்தி
தேங்கொண் மார்பிடைத் திளைக்குஞ்
செம்பொ னாரமொத் துளவே.
பொருள் : ஓங்கும் மால்வரை வரையாடு உழக்கலின் உடைந்து உகு பெருந்தேன் - உயர்ந்த பெரிய மலைகளிலே உலவும் வரையாடுகள் கலக்குதலின் உடைந்து சிந்துகின்ற மிகுதேன்; தாங்கு சந்தனம் தளரத் தழுவி வீழ்வன - (தாம் விழும்போது) தம்மைத் தாங்கின சந்தனம் தளரும்படி அம்மலையைத் தழுவி வீழ்வன; ஆங்கண் மால் உலகு அளப்பான் ஆழி சங்கமொடு ஏந்தி தேன் கொள் மார்பிடைத் திளைக்கும் செம்பொன் ஆரம் ஒத்துள - அங்கே திருமால் உலகை அளப்பவன் ஆழியையும் சங்கத்தையும் ஏந்தியவன், மார்பிடத்தே அசையும் ஆரத்தைப் போன்றன.
விளக்கம் : விழும் தேன் அருவிகள் ஆரத்தை ஒத்தன; இறால்கள் சங்கையும் ஆழியையும் ஒத்தன; மலை திருமாலை ஒத்தது, ஆங்கண் அங்கண் என்பதன் விகாரம், தேன் கண்ணுக்கினிமை. வரை தாங்கின சந்தனமும் ஆரம்போன்றன எனினும் ஆம். ( 3 )
1560. வீழ்ந்து வெண்மழை தவழும்
விண்ணுறு பெருவரை பெரும்பாம்
பூழ்ந்து தோலுரிப் பனபோ
லொத்த மற்றவற் றருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழவிற்
றதும்பின மதுகரம் பாடச்
சூழ்ந்து மாமயி லாடி
நாடகந் துளக்குறுத் தனவே.
பொருள் : வெண்மழை வீழ்ந்து தவழும் விண் உறு பெருவரை - வெள்ளிய முகில் படிந்து தவழும் வானுயர் பெருமலை; பெரும் பாம்பு ஊழ்ந்து தோல் உரிப்பன போல் ஒத்த - பெரிய பாம்பு கழன்று தோலுரிப்பன போலேயாய், அம் முகில் போன பிறகு அப் பாம்பை ஒத்தன; அவற்று அருவி தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின - அம்மலையினின்றும் அருவிகள் தாழ்ந்து வீழ்கின்றவை முழவு போல முழங்கின; மதுகரம் பாடச் சூழ்ந்து மாமயில் ஆடி நாடகம் துளக்கு உறுத்தன - (அம் முழக்கம் கேட்டு) வண்டுகள்பாட, வளைந்து மயில்கள் ஆடிப், பிறர் ஆடும் நாடகங்களை வருத்தம் உறுத்தின.
விளக்கம் : வெண்மழை வீழ்ந்து தவழும் என மாறுக. மழை: ஆகுபெயர்; முகில். ஊழ்ந்து - கழன்று. வெண்முகில் தவழும் மலை தோலுரிக்கும் பாம்பிற்குவமை. அருவி முழக்கத்திற்கு மத்தள முழக்கம் உவமை. மயில்களுக்குக் கூத்தியரும், வண்டுகட்குப் பாணரும் உவமைகள். ( 4 )
1561. கருவி தேனெனத் தூங்குங்
கதிரணி யிறுங்கொடு தினைசூழ்
பொருவில் யானையின் பழுப்போற்
பொங்கு காய்க்குலை யவரை
யருவி யைவனங் கரும்பு
மடக்கருங் கவைக்கதிர் வரகு
முருவ வெட்பய றுழுந்து
மல்லவு மெல்லையின் றுளவே.
பொருள் : கருவி தேன் எனத் தூங்கும் கதிர் அணி இறுங்கொடு தினை சூழ் - கைத்தளமும் தேனடையும் என்னுமாறு தொங்குகின்ற கதிர்களை யுடைய சோளத்தையும் தினையையுஞ் சூழ்ந்த; பொருஇல் யானையின் பழுப்போல் பொங்கு காய்க்குலை அவரை - ஒப்பற்ற யானையின் விலா வெலும்பு போலும் மிகுதியான காயையுடைய குலைகளுடன் கூடிய அவரையும்; அருவி ஐவனம் கரும்பும் அடக்கருங் கவைக்கதிர் வரகும் - அருவியால் விளைந்த ஐவன நெல்லும் கரும்பும் அடங்காமற் கிளைத்த கதிர்களையுடைய வரகும்; உருவ எள் பயறு உழுந்தும் அல்லவும் எல்லை இன்று உள - அழகிய எள்ளும் பயறும் உழுந்தும் பிறவுணவுகளும் அளவின்றி உள்ளன.
விளக்கம் : கருவித்தேன் பாடமாயின் தொகுதியையுடைய தேன் என்க. கருவி அல்லது கைத்தளம் என்பது ஒருவகைக் கேடகம். கருவியும் தேனடையும் இறுங்குக்கு உவமை. அவரைக் குலைக்கு யானைப்பழுவெலும்பு உவமை. மதமால் யானைப் பழுக்குலை அவரை (திருவிளை. நாட்டு - 29.) ( 5 )
1562. யானை வெண்மருப் புலக்கை யறையுர லைவன மிடித்த
தேனெய் வாசவற் குவவித் தீங்கனிவாழையின் பழனு
முனை யுண்டவருருகும் பசுந்தினைப் பிண்டியு மொருங்கே
மானி னோக்கியர் நோக்கி வழிதொறு மீவதவ் வழியே.
பொருள் : யானை வெண் மருப்பு உலக்கை அறை உரல் ஐவனம் இடித்த - யானையின் வெள்ளிய கொம்பாகிய உலக்கையாலே பாறையாகிய உரலில் ஐவன நெல்லை யிடித்த; தேன் நெய்வாசவல் குவவி - தேனாகிய நெய்யைக் கலந்த புதிய அவலைக்குவித்து; தீ கனி வாழையின் பழனும் - இனிய பழமாகிய வாழைப் பழத்தையும்; உண்டவர் ஊன் உருகும் பசுந்தினைப் பிண்டியும் - உண்டவர் மெய்யுருகும் புதிய தினைமாவையும்; மானின் நோக்கியர் நோக்கி - மானனைய கண்ணார் (பசித்தவரை) நோக்கி; வழிதொறும் ஒருங்கே ஈவது அவ்வழி - வழிகள் தோறும் ஒருங்கே கொடுக்குந் தன்மையுடையது சீவகன் செல்ல முற்பட்ட வழி.
விளக்கம் : பாசவல் என்பது வாசவல் என விகாரப்பட்டது. பசுமை+அவல்; பாசவல், பசுமை - புதுமை. புதிய நெல்லாவது அறுத்த அண்மையிலுள்ள நெல். ஊனை : ஐ : அசை. ( 6 )
1563. குறிஞ்சி யெல்லையி னீங்கிக்
கொடிமுல்லை மகண்மொழிந் தாடச்
செறிந்த பொன்னிதழ்ப் பைந்தார்க்
கொன்றையஞ் செல்வதற்குக் குரவ
மறிந்து பாவையைக் கொடுப்பத்
தோன்றி யஞ்சுட ரேந்து
நிறைந்த பூங்குருந் துகுதே
னீர்பெய் தார்த்தன சுரும்பே.
பொருள் : குறிஞ்சி எல்லையின் நீங்கி - சீவகன் (அத்தகைய) குறிஞ்சி நில எல்லையை நீங்க; கொடி முல்லை மகள் மொழிந்து ஆட - முல்லைக் கொடி மகட் பேசிச் செல்லுதலின்; குரவம் அறிந்து - அதனைக் குரவம் உணர்ந்து; செறிந்து பொன் இதழ்ப் பைந்தார்க் கொன்றைஅம் செல்வற்குக் கொடுப்ப - நெருங்கிய பொன்போலும் இதழையுடைய புதிய மலர் மாலையையுடைய கொன்றையாகிய செல்வனுக்குக் கொடுப்ப; தோன்றி அம்சுடர் ஏந்த - செங்காந்தள் அம் மணத்திற்கு அழகிய விளக்கை எடுப்ப; சுரும்பு நிறைந்த பூங்குருந்து உகுதேன் நீர் பெய்து ஆர்த்தன - வண்டுகள் நிறைந்துள்ள அழகிய குருந்தினின்றும் சிந்துகின்ற தேனாகிய நீரை வார்த்து ஆரவாரித்தன.
விளக்கம் : முல்லைக் கொடி கொன்றையினும் குருந்தினும் படர்ந்தது. நடுவே நின்ற குருந்திற் சுரும்பு எழ, அஃது அசைந்து தேனைச் சொரிந்ததனாற் சுரும்பைப் பாவைக்குத் தந்தையாக்கினார். ( 7 )
1564. அரக்குண் பஞ்சிக டிரட்டி
யருமணி மரகதப் பலகைப்
பரப்பி யிட்டன போலக்
கோபங்கள் பயிர்மிசைப் பரவ
வுரைத்த மென்றயிர்ப் பித்தைக்
கோவலர் தீங்குழ லுலவ
நிரைக்கண் மாமணி கறங்க
நீணிலங் கடந்தன னெடியோன்.
பொருள் : அரக்கு உண் பஞ்சிகள் திரட்டி - செம்பஞ்சையுருட்டி; அருமணி மரகதப் பலகைப் பரப்பியிட்டன போல - அரிய மணியாகிய மரகதத்தாலாகிய பலகையிலே பரப்பினாற் போல; கோபங்கள் பயிர்மிசைப் பரவ - இந்திர கோபங்கள் பயிர்களின் மேலே பரவ; உரைத்த மென் தயிர்ப்பித்தைக் கோவலர் தீ குழல் உலவ - வார்த்த தயிர் பூசப்பெற்ற மெல்லிய மயிரினையுடைய கோவலர் ஊதும் குழலோசை பரவ; நிரைக்கண் மாமணி கறங்க - ஆனிரையிலே மணிகள் ஒலிக்க; நெடியோன் நீள் நிலம் கடந்தனன் - சீவகன் அம்முல்லை நிலத்தையும் கடந்தான்.
விளக்கம் : அரக்கு - சாதிலிங்கம், பயிருக்கு மரகதப் பலகை உவமை. இந்திர கோபம் செம்பஞ்சிக்குவமை. இந்திரகோபம் கார் காலத்தே தோன்றும் ஒருவகைப் புழு. எனவே முல்லை நிலத்திற்குரிய கார்ப்பொழுதும் கூறினாராயிற்று. தயிர் உரைத்த மென்பித்தைக் கோவலர் என்க. பித்தை - ஆண் மயிர். உரைத்தல் - தடவிக்கோடல். கறங்குதல் - ஒலித்தல். நெடியோன் - ஈண்டுச் சீவகன்.
1565. வள்ளி வாரிய குழியின்
வளர்பொன்னும் வயிரமு மிமைக்குஞ்
சுள்ளி வேலியி னீங்கித்
துறக்கம்புக் கிடுமெனச் சூழ்ந்து
வெள்ளி வெண்டிரள் விசித்து
நிலத்தொடு தறிபுடைத் தவைபோற்
றுள்ளி வீழுய ரருவி
வனகிரி தோன்றிய தவணே.
பொருள் : வள்ளி வாரிய குழியின் வளர் பொன்னும் வயிரமும் இமைக்கும் - வள்ளிக் கிழங்கை அகழ்ந்த குழியிலே பொன்னும் வயிரமும் ஒளிவிடுவதும்; சுள்ளி வேலியின் நீங்கி - மராமரத்தின் வேலியினின்றுந் தப்பி; துறக்கம் புக்கிடுமெனச் சூழ்ந்து - துறக்கத்திலே சென்று விடுமென எண்ணி; வெள்ளி வெண்திரள் விசித்து - வெள்ளிக் கம்பிகளைத் தலையிலே பூட்டி; நிலத்தொடு தறி புடைத்தவை போல் - நிலத்திலே தறியைப் புடைத்துக் காட்டினாற் போல்; துள்ளி வீழ் உயர் அருவி வனகிரி அவண் தோன்றியது - நாற்றிசையினும் துள்ளி வீழும் அருவிகளையுடையதுமான வனகிரி அங்கே தோன்றியது.
விளக்கம் : பொன்னும் வயிரமும் இமைக்கும் வனகிரி, அருவிகளையுடைய வனகிரி என்க. வள்ளி - ஒருவகைக் கிழங்கு. வாரிய - அகழ்ந்த. வனகிரி, வானுறவளர்தலின் மேலும் வளர்ந்து துறக்கத்தே புகாதபடி தடைசெய்தற் பொருட்டு வெள்ளிக் கம்பிகளை அதன் தலையிலே பூட்டி நிலத்தொடு கட்டிவைத்தாற்போலத் தோன்றின அதன் உச்சியினின்று வீழும் வெள்ளிய அருவிகள் என்க. ( 9 )
1566. அண்ண றான்செலு முன்னா
லணிமலர்ப் பூம்பொழி லதனுள்
வண்ண மாச்சுனை மாநீர்
மணிதெளித் தனையது ததும்பித்
தண்ணென் றாமரை கழுநீர்
நீலத் தாதவி ழாம்ப
லெண்ணில் பன்மலர் கஞலி
யினவண்டு பாண்முரன் றுளதே.
பொருள் : அண்ணல் தான் செலும் முன் - சீவகன் செல்லும் வழியில் வனகிரிக்கு முன்னர்; அணி மலர்ப் பூம் பொழிலதனுள் - அழகிய மலர்களையுடைய மலர்க்காவிலே; மணி தெளித்தனையது மா நீர் ததும்பி - பளிங்கைக் கரைத்தனையதாகிய நீர் நிறைந்து; தண் என் தாமரை கழுநீர் நீலம் தாது அவிழ் ஆம்பல் எண் இல் பல் மலர் கஞலி - குளிர்ந்த தாமரையும் கழுநீரும் நீலமும் மகரந்தம் மிகுந்த ஆம்பலும் பிறவுமாகிய பல இனமாகிய வண்டுகள் பாண் சாதிபோலே பாடப்பெற்று; வண்ணம் மாச்சுனை உளது - அழகிய சுனை ஒன்று இருந்தது.
விளக்கம் : வண்ணமாச்சுனை உளது எனக் கூட்டுக.அண்ணல் : சீவகன். முன்னால் என்பதன்கண் ஆல் அசை. தெளித்தல் - கரைத்தல். ததும்பி என்றது நிரம்பி என்றவாறு. கஞலி --நெருங்கி. பாண் முரன்றது என்புழி உவம உருபுதொக்கது. பாண் - பாணர். ( 10 )
வேறு
1567. கானத்தி னேகு கின்றான்
கடிபொழிற் கவின்கண் டெய்தித்
தானத்தி லிருந்த லோடுந்
தையலா ளொருத்தி தானே
வானத்தி னிழிந்து வந்த
வானவர் மகளு மொப்பா
ணானமும் பூவுஞ் சாந்து
நாறவந் தருகு நின்றாள்.
பொருள் : கானத்தின் ஏகுகின்றான் - அத்தகைய வனகிரியைச் சார்ந்த காட்டிலே செல்கின்ற சீவகன்; கடி பொழில்கவின் கண்டு எய்தி - மண மலர்க் காவின் அழகைக் கண்டு அதனை அடைந்து; தானத்தில் இருத்தலோடும் - ஓர் இடத்திலே அமர்ந்திருந்தபோது; தையலாள் ஒருத்தி வானத்தின் இழிந்து வந்த வானவர் மகளும் ஒப்பாள் - பெண்ணொருத்தி விண்ணினின்றிறங்கி வந்த அரம்பையைப் போன்றவள்; நானமும் பூவும் சாந்தும் நாற - புழுகும் மலரும் குங்குமச் சாந்தும் மணக்க; தானே வந்து அருகு நின்றாள் - தானே வந்து சீவகன் அருகே நின்றாள்.
விளக்கம் : நச்சினார்க்கினியர் கானத்தின் ஏகுகின்றான் என்பதைப் பெயராக்கி, வனசரிதன் என்னும் பொருளைக் கொண்டும் தானம் என்பதை முனிவருறைவிடம் என்றும் கூறுவர். இவ்வாறு கொண்டு சீவகன் கடிபொழிலிற் சென்றிருந்த அளவிலே, தையலொருத்தி அத்தானத்தில் உறைவான் ஒரு வனசரிதன் கவினைக் கண்டு, தானே வந்து அவனருகே நின்றாள் என்று முடிபு கூறுவர். செய்யுளமைப்பை நோக்கின் இப் பொருள் நச்சினார்கினியரது படைப்பென்பது தானே போதரும். இவ்வாறு படைப்புப் பொருள் கூறுதற்கு அவர் கூறுங் காரணம்: இங்ஙனங் கூறாது சீவகன் கவினைக் கண்டு அவள் எய்தினாளென்று கூறின், மேல் இவற்கு இவள் வேட்கை விளை வித்தலின், இவன் நெஞ்சு தன் தன்மை திரிந்ததனை இவன் தேற்றினான் என்று கூறுவர். அங்ஙனம் கூறவே; மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாற் செய்து கொள்ளும் பாவங்களிற் சிறந்த மனத்தாற் செய்து கொள்ளும் பாவமும் சீவகற்கு எய்திற்றாம் ஆதலானும், உழுவலன்போடு தோன்றிய மகளிரிடத்தல்லது இவற்கு வேட்கை நிகழாதென்பது இத் தொடர் நிலைச் செய்யுட்குக் கருத்தாதலாலும் அது மாறுபடக் கூறிற்றாம் என்றுணர்க என்பதாம். இவருடைய இக் கருத்து நூலாசிரியர்க் கிருக்குமேல் இங்ஙனம் வேறு பொருள் பயக்க நூலியற்றரென்க. ( 11 )
1568. குறிஞ்சிப்பூங் கோதை போலுங்
குங்கும முலையி னாட
னிறைந்தபொற் கலாபந் தோன்ற
நெடுந்துகில் விளிம்பொன் றேந்திச்
செறிந்ததோர் மலரைக் கிள்ளித்
தெறித்திடாச் சிறிய நோக்கா
நறும்புகைத் தூது விட்டு
நகைமுகங் கோட்டி நின்றாள்.
பொருள் : குறிஞ்சிப் பூங் கோதை போலும் குங்கும முலையினாள் - குறிஞ்சி மலர்மாலை போன்ற குங்குமம் அணிந்த முலைகளையுடைய அவள்; தன் நிறைந்த பொன் கலாபம் தோன்ற - தன்னுடைய மிகுந்த பொன்னாலியன்ற கலாபம் வெளிப்பட; ஒன்று நெடுந்துகில் விளிம்பு ஏந்தி - ஒரு கையாலே நீண்ட தன் துகிலின் ஓரத்தைத் தாங்கி; செறிந்தது ஓர் மலரைக் கிள்ளித் தெறித்திடா - மற்றைக் கையிலே வேடிக்கையாக ஆங்குச் செறிந்திருந்த ஒரு மலரைக் கிள்ளித் தெறித்து; சிறிய நோக்கா - கடைக்கணித்துப் பார்த்து; நறும்புகைத் தூது விட்டு நகை முகம் கோட்டி நின்றாள் - காற்று வாக்கிலே நின்று நறுமணப் புகையைத் தூதுவிட்டு ஒளி முகத்தைச் சாய்த்து நின்றாள்.
விளக்கம் : குறிஞ்சிப் பூ குங்குமத்திற்குவமை. தோன்ற - சிறிதே உடை நெகிழ்தலாலே தெரிய. தெறித்திடா, நோக்கா இவை யிரண்டும் செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்கள்; இவையும், விட்டு, கோட்டி என்பனவும் அடுக்கி, நின்றாள் என முடிந்தன. ( 12 )
1569. அணிகல வரவத் தாலு
மமிழ்துறழ் நாற்றத் தாலும்
பணிவருஞ் சிங்க நோக்கிற்
பணையெருத் துறழ நோக்கி
மணிமலர் நாகஞ் சார்ந்து
வழையொடு மரவ நீழற்
றுணிவருஞ் சாய னின்றா
டோன்றறன் கண்ணிற் கண்டான்.
பொருள் : வழையொடு மரவ நீழல் - சுரபுன்னையுடன் கூடிய மரவமரத்தின் நீழலிலே; மணிமலர் நாகம் சார்ந்து துணிவருஞ் சாயல் நின்றாள் - மணிபோலும் மலரையுடைய நாகத்தைச் சார்ந்து யாவளென உறுதி கூற வியலாத மென்மையுடையாள் நின்றாள்; அணிகல அரவத்தாலும் அமிழ்து உறழ் நாற்றத்தாலும் - (அவளுடைய) பூண்களின் ஒலியாலும் அமிழ்தனைய மணத்தினாலும்; தோன்றல் - சீவகன்; பணிவருஞ் சிங்கநோக்கின் பணையெருத்து உறழ நோக்கி - தாழ்வகன்ற தன் சிங்க நோக்கினாலே பருத்த கழுத்தைத் திரும்பிப் பார்த்து; தன் கண்ணின் கண்டான் - தன் கண்களாலே அவளைக் கண்டான்.
விளக்கம் : கண்ணின் எனவே, மனம் பொருத்த நோக்கிற்றிலன் என்க. துணிவருஞ்சாயல்; தெய்வமோ அல்லளோ என்று துணிதலரிய சாயல். ( 13 )
1570. கண்டவன் கண்ணி னோக்க
நடுங்கித்தன் காதிற் றாழ்ந்த
குண்டலஞ் சுடர வொல்கிக்
கொடிநடுக் குற்ற தொப்ப
நுண்டுகிற் போர்வை சோர
நுழைமழை மின்னி னிற்ப
வெண்டிசை மருங்கு நோக்கி
யியக்கிகொ லிவண்மற் றென்றான்.
பொருள் : கண்டவன் கண்ணின் நோக்க - பார்த்தவன் காமக் குறிப்பின்றிக் கண்ணால் நோக்குதலின் ; நடுங்கி -உள்ளம் நடுங்கியதால்; கொடி நடுக்குற்றது ஒப்ப - பூங்கொடி நடுங்கியது போல; தன் காதில் தாழ்ந்த குண்டலம் சுடர ஒல்கி - தன் காதில் தூங்கிய குண்டலம் ஒளிர் அசைந்து; நுண் துகில் போர்வை மழை நுழை மின்னின் நிற்ப - மெல்லிய ஆடையாகிய போர்வை நெகிழ அதன் நடுவே முகிலில் நுழையும் மின்போல மறைந்து நிற்க; எண்திசை மருங்கும் நோக்கி - (இவளுடன் வந்தாருளரோ என) எட்டுத் திசையின் சார்பிலும் பார்த்து (தனியே வந்திருப்பதை அறிந்து) இவள் இயங்கிகொல் என்றான் - இவள் ஓர் இயக்கி போலும் என் றெண்ணினான்.
விளக்கம் : அந்நோக்கத்தின்கண் காமக்குறிப்பின்மை கண்டு நடுங்கிச் சோர நிற்ப என்க. எண்டிசை மருங்கு நோக்கி என்றது இவளுடன் கூடவந்தாருளரோ என்று நோக்கி என்பதுபட நின்றது. ( 14 )
1571. எண்ணத்தி லியக்கி யென்றே சோ?யிருப்பமற் றெழுத லாகா
வண்ணப்பூங் கண்க ளம்பா சோ?வாணுதற் புருவம் வில்லா
வுண்ணிறை யுடைய வெய்வா னுருவச்சா தகத்துக் கேற்பப்
பெண்ணலங் கிடந்த பேதை சோ?பெண்ணலங் கனிய நின்றாள்.
பொருள் : எண்ணத்தில் இயக்கி யென்றே இருப்ப - அவன் தன் கருத்திலே இயக்கி யென்றே எண்ணி இருப்ப ; பெண் நலம் கிடந்த பேதை - பெண்ணின் நலம் தங்கிய பேதையாகிய அவள்; எழுதல் ஆகா வண்ணப் பூங்கண்கள் அம்புஆ - எழுத வியலாத தன் அழகிய மலர்க் கண்கள் அம்பாகவும்; வாள் நுதற் புருவம் வில்லா - ஒளிரும் நெற்றியிற் புருவம் வில்லாகவும்; உள் நிறை உடைய எய்வான் - அவனுடைய மன நிறை கெட எய்வதற்கு; உருவச் சாதகத்திற்கு ஏற்ப - தன் உருவ இயலுக் கேற்றவாறு; பெண் நலம் கனிய நின்றாள் - தன் பெண் அழகு முற்றுப் பெற நின்றாள்.
விளக்கம் : எண்ணத்தில் - சீவகன் தன் கருத்தின்கண் என்க. ஓவியத்தில் எழுதவொண்ணாத கண்கள் என்க. அம்பா, வில்லா : இவை ஈற்றிற் ககர யுயிர்மெய் தொக்கு நின்றன. ( 15 )
1572 முறுவன்முன் சிறிய தோற்றா முகைநெறித் தனைய வுண்கட்
குறுநெறி பயின்ற கூந்தல் குறும்பல்கா லாவிக் கொள்ளாச்
சிறுநுதற் புருவ மேற்றாச்சோ? துகிற் றானை சோர
வறியுந ராவி போழு மநங்கனைங் கணையு மெய்தாள்.
பொருள் : முகை நெறித்தனைய உண்கண் குறு நெறி பயின்ற கூந்தல் - அரும்பை அலர்த்தினால் ஒத்த கண்களையும் குறுமையாக நெறித்தல் கொண்ட கூந்தலையும் உடைய அவள்; குறும்பல்கால் ஆவி கொள்ளா - நெருங்கப் பலமுறை கொட்டாவி கொண்டு; சேர்துகில் தானை சோர - மேற் போர்த்த துகிலுடன் உடுத்த தானையும் நெகிழ; முன் முறுவல் சிறிய தோற்றா - அக் காமன் எய்வதற்கு முன்னாக முறுவலைச் சிறியவாகத் தோற்றுவித்து; சிறுநுதல் புருவம் ஏற்றா - சிறிய நெற்றியிலே புருவத்தையும் ஏற்றுவித்து (வில்லை வளைத்து); அறியுநர் ஆவி போழும் அநங்கன் ஐங்கணையும் எய்தாள் - அறிஞர்களின் உயிரையும் பிளக்கும் காமனுடைய ஐந்தம்பையும் தான் எய்தாள்.
விளக்கம் : அறியுநர் ஆவி போழும் அம்பு எனவே, இவன் நெஞ்சு தன் தன்மை சிறிது திரிகின்றமை பெற்றாம். ( 16 )
1573. வடுப்பிள வனைய கண்ணாள் வல்லவ னெழுதப் பட்ட
படத்திடைப் பாவை போன்றார் நோக்கின ளாகி நிற்ப
வடிப்பொலிந் தார்க்குஞ் செம்பொ னணிமணிக் கழலி னானம்
மடத்தகை குறிப்பு நோக்கி மனத்திது சிந்திக் கின்றான்.
பொருள் : வல்லவன் எழுதப்பட்ட படத்திடைப் பாவை போன்று - கைவல்லானால் எழுதப்பட்ட படத்திலே ஓவியப் பாவைதான் அழியுமளவும் ஒரு நோக்காய் நின்று அழிவதைப் போல; வடுப் பிளவு அனைய கண்ணாள் - மாவடுவின் பிளவு போன்ற கண்ணாள்; ஓர் நோக்கினள் ஆகி நிற்ப - இவனைக் கூடுவதாகிய ஒரே கருத்துடன் நிற்ப; அம் மடத்தகை குறிப்பு - அவ் விளநங்கையின் எண்ணத்தை; அடிப் பொலிந்து ஆர்க்கும் செம்பொன் அணி மணிக் கழலினான் நோக்கி - அடியிலே அழகுற்ற ஆரவாரிக்கும் செம்பொன்னான் ஆகிய மணிக்கழலணிந்த சீவகன் அறிந்து; மனத்து இது சிந்திக்கின்றான் - உள்ளத்திலே இதனை எண்ணுகின்றான்.
விளக்கம் : என்றது, தன் தன்மை திரிந்த நெஞ்சினைத் தேற்றுகின்றான் என்றவாறு. அது மேற் கூறுகின்றார்.வடு - மாவடு. வல்லவன் - ஓவியத்தொழில் வல்லோன்.ஓர்நோக்கு - கூடவேண்டும் என்னுமொரு நோக்கம். கழலினான் : சீவகன். மடத்தகை : அன்மொழித்தொகை; ஈண்டு அம் மடந்தை என்னு மாத்திரையாய் நின்றது. ( 17 )
1574. கடிமாலை சூடிக் கருப்பூர முக்கித்
தொடைமாலை மென்முலையார் தோடோய்ந்த மைந்தர்
கடைமாலை மற்றவரே கண்புதைப்பச் செல்லு
நடைமாலைத் திவ்வுலக நன்றரோ நெஞ்சே.
பொருள் : நெஞ்சே! - மனமே!; கடி மாலை சூடி - மண மலர்மாலையைச் சூடி; கருப்பூரம் முக்கி - பச்சைக் கருப்பூரம் கலந்த முகவாசந் தின்று; தொடை மாலை மென்முலையார் தோள் தோய்ந்த மைந்தர் - தொடுத்த மாலை அணிந்த மென்முலை மகளிரின் தோளைத் தழுவிய மைந்தர்கள்; கடைமாலை மற்று அவரே கண் புதைப்பச் செல்லும் - கடைப்பட்ட நாளிலே வேறாக, அம் மகளிரே தம் கண்களைக் கையால் மூடிக்கொள்ள முதுமையடைந்து செல்லுகின்ற; நடை மாலைத்து இவ்வுலகம் - ஒழுக்க நெறியினை யுடையதாகிய இவ்வுலகம்; நன்று! - நல்லது!
விளக்கம் : அரோ : அசை. மற்று. வினைமாற்று. அவர் என்றது சாதிபற்றி. முக்கி - தின்று. கடைமாலை - இறுதி நாள்களிலே. கிழப்பருவ நாள் மாந்தர்க்கு மாலைப்பொழுது போறலின் மாலை என்றார். கடை மாலை : பண்புத்தொகை. மாலைத்து - இயல்புடைத்து. நன்று என்றது இகழ்ச்சி. ( 18 )
1575. நாவி யகல மெழுதி நறுநுதலா
ராவி தளிர்ப்ப வவர்தோண்மேற் றுஞ்சினார்
தூவியொழி புள்ளிற் றோன்றித் துயருழப்பக்
காவிநெடுங் கண்புதைத் தாங்ககல்வர் நெஞ்சே.
பொருள் : நெஞ்சே! - ; நாவி அகலம் எழுதி - புழுகை மார்பிலே பூசி ; நறு நுதலார் ஆவி தளிர்ப்ப அவர் தோள் மேல் துஞ்சினார் - அழகிய நெற்றியினாரின் உயிர் தழைப்ப அவர்களுடைய தோளின்மேலே துயின்றவர்கள்; தூவி ஒழி புள்ளின் தோன்றி - கடை மயிர் கழிந்த பறவை போலே தோன்றி; துயர் உழப்ப - வருந்துதலாலே; காவி நெடுங்கண் புதைத்து - அம் மகளிர்தம் காவிமலர் போன்ற நீண்ட கண்களைப் புதைத்து; ஆங்கு அகல்வார் - அவ்விடத்தினின்றும் விலகிச் செல்வர்
விளக்கம் : இதனால் இருதலையும் ஒத்த அன்பின் திறம் கூறினார். நாவி - புழுகு. அகலம் - மார்பு. ஆவி - உயிர். துஞ்சுதல் - ஈண்டுத் தங்குதல் எம் பொருட்டு. தூவி - இறகு. ( 19 )
1576. இன்புகை யார்ந்த விழுதார்மென் பள்ளிமே
லன்புருகு நல்லா ரவர்தோண்மேற் றுஞ்சினார்
தம்புலன்கள் குன்றித் தளரத்தங் காதலா
ரன்புருகு கண்புதைத் தாங்க கல்வர் நெஞ்சே.
பொருள் : நெஞ்சே-; இன்புகை ஆர்ந்த இழுது ஆர்மென் பள்ளி மேல் - இனிய அகிற்புகை நிறைந்த, வெண்ணெய் அனைய மென்மை நிறைந்த பள்ளியின் மேல்; அன்பு உருகும் நல்லாரவர் தோள்மேல் துஞ்சினார் - அன்பினால் உருகும் நல்லவராகிய அம் மங்கையரின் தோள் மேலே துயின்றவர்கள்; தம் புலன்கள் குன்றித் தளர - முதுகையாலே தம்முடைய புலன்கள் குன்றித் தளர்வடைந்ததனால்; தம் காதலார் அன்பு உருகு கண் புதைத்து ஆங்கு அகல்வர் - தம் காதல் மகளிர் தம் அன்பினாலுருகிய கண்களைப் புதைத்துக்கொண்டு (அவர்களைப்பராமல்) அங்கிருந்தும் நீங்குவர்.
விளக்கம் : இதனாற் புலன் குறையும் என்றார். இவள் விரும்பப் பெற்றோமே யென்று கூடினார்க்குப் பின் வருவது கூறியவாறு.
( 20 )
1577.என்பினை நரம்பிற் பின்னி
யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப்
புன்புறந் தோலைப் போர்த்து
மயிர்புறம் பொலிய வேய்ந்திட்
டொன்பது வாயி லாக்கி
யூன்பயில் குரம்பை செய்தான்
மன்பெருந் தச்ச னல்லன்
மயங்கினார் மருள வென்றான்.
பொருள் : உதிரம் தோய்த்து - உதிரத்தைத் தோய்த்து; நரம்பின் என்பினைப் பின்னி - நரம்பினாலே என்பினைக் கட்டி; இறைச்சி மெத்தி - தசையை அப்பி; புன்புறம் தோலைப் போர்த்து - புன்மையான வெளிப்புறம் மறையத் தோலைப் போர்த்து ; புறம் பொலிய மயிர் வேய்ந்திட்டு - அப்புறம் அழகுற மயிராலே மூடி; ஒன்பது வாயில் ஆக்கி - ஒன்பது வாயிலைச் செய்து ; ஊன் பயில் குரம்பை - ஊன் பழகிய குடிலை; மயங்கினார் மருள - அறிவு மாறியவர்கள் மருளுமாறு; மன்பெருந் தச்சன் செயதான் - மிகப் பெரிய தச்சன் இயற்றினான்; நல்லன் - (ஆதலால்) அவன் மிகவும் நல்லன் என்றெண்ணினான்.
விளக்கம் : என்பு எலும்பு. பின்னி - கட்டி. இறைச்சி - தசை. புன்புறம் - புல்லிய வெளிப்பகுதி. குரம்பை - கூடு. தச்சன் என்றது படைப்புக்கடவுளை. மயங்கினார் மருள என்றது இதன்கண் மயங்காத மெய்க்காட்சியாளர் அல்லாத ஏனைய மயக்கமுடையோரெல்லாம் மருளும்படி என்பதுபட நின்றது. ( 21 )
1578. வினைப்பெருந் தச்ச னல்லன்
மெய்ம்மைநா நோக்க லுற்றா
புலெனக்குற்றுக் கிடந்த தென்றாங்
கிருகணும் புதைத்து வைக்கு
நினைப்பினாற் பெரிய ரென்னா
னீந்தினார் கலைக ளென்னான்
மனத்தையுங் குழையச் செத்து
மாண்பினன் மாதோ வென்றான்.
பொருள் : மெய்ம்மை நாம் நோக்கல் உற்றால் - உடம்பின் உண்மையை நாம் ஆராயத் தொடங்கினால்; எனக்கு உற்றுக் கிடந்தது என்று - எனக்கு ஆதரவாய் இவ்வுடம்பு கிடந்தது என்று எண்ணும்படி; ஆங்கு இருகணும் புதைத்து வைக்கும் - அப்போது அகக்கண்ணையும் புறக்கண்ணையும் மறைத்து வைக்கின்றனன்; நினைப்பினால் பெரியர் என்னான் - ஆராய்ச்சியால் மிக்கோரென்று நினையாமலும்; கலைகள் நீந்தினார் என்னான் - பல கலைகளையும் கற்றுக் கடந்தவரென்றும் எண்ணாமலும்; மனத்தையும் குழையச் செத்தும் மாண்பினன் - யாவருடைய உள்ளத்தையும் தளரும்படி வெட்டும் தகையினன் (ஆகையால்); வினைப்பெருந் தச்சன் நல்லன் என்றான் - படைக்குந் தொழிலையுடைய தச்சன் நல்லன் என்றெண்ணினன்.
விளக்கம் : மாது ஓ : அசைகள். நல்லன் - இகழ்ச்சி. மெய்ம்மை என்றது இயல்பினை. இருகண் அகக்கண்ணும் புறக்கண்ணும் நினைவு ஈண்டு அறிவின்மேனின்றது; ஆகுபெயர். கலைகள் நீந்தனார் என மாறுக. மனத்தையும் என்புழி உம்மை சிறப்பு. அருவமாகிய மனத்தையும் என்பது கருத்து. மான்பினன் - இகழ்ச்சி. ( 22 )
1579. என்றவ னிருப்ப மாத
ரென்வர விசைப்பி னல்லா
புலொன்றுமற் றுருகல் செல்லா
னென்றெடுத் தோது கின்றாண்
மன்றலந் தோழி மாருள்
வனத்திடைப் பண்ணை யாடக்
குன்றிடைக் குளிர்க்கு மின்போற்
குழாமழை முகட்டிற் செல்வான்.
பொருள் : என்று அவன் இருப்ப - என உள்ளத்தைத் தேற்றி அவன் இருக்கும்போது; என் வரவு இசைப்பின் அல்லால் - என்னுடைய வரவைக் கூறினாலன்றி; ஒன்றும் உருகல் செல்லான் என்று - சிறிதும் இரங்கி அருளமாட்டான் என்றெண்ணி; எடுத்து ஓதுகின்றாள் - அவன் கேட்குமாறு கூறுகின்றாள்; வனத்திடை மன்றல் அம் தோழிமாருள் பண்ணை ஆட - ஒரு வனத்திலே மணத்தையுடைய என் தோழிகளினிடையே நான் விளையாடிக்கொண்டிருக்க; குன்றிடைக் குளிர்க்கும் மின்போல் - மலையிடைத் தங்கும் மின்போல; குழாம் மழை முகட்டின் செல்வான் - திரளாகிய முகிலின் மிசை செல்வானானான் (ஒரு விஞ்சையன்).
விளக்கம் : இது முதல் மூன்று பாட்டுக்கள் ஒரு தொடர்.அவன் : சீவகன். உருகல் செல்லான்: ஒரு சொல். என்று எண்ணி எடுத்து ஓதுகின்றாள் என்க. பண்ணை - மகளிர் விளையாட்டு. மழை - முகில். ( 23 )
1580. மயிலின மிரிய வாங்கோர்
மடமயி றழுவிக் கொண்ட
வெயிலிளஞ் செல்வன் போல
விஞ்சைய னெற்கொண் டேகத்
துயிலிய கற்பி னாடன்
றுணைவிகண் டிடுவித் திட்டா
ளயிலியல் காட்டுள் வீழ்ந்தே
னநங்கமா வீணை யென்பேன்.
பொருள் : மயில் இனம் இரிய ஆங்கு ஓர் மடம் மயில் தழுவிக் கொண்ட - மயிலின் திரள் சிதைந்து ஓட ஆங்குள்ள ஓர் இளமயிலை எடுத்துக் கொண்ட; வெயில் இளஞ் செல்வன் போல - இளஞாயிறு போல; விஞ்சையன் என்கொண்டு ஏக - அவ்விஞ்சையன் என்னைக் கொண்டு சென்றானாக; துயிலிய கற்பினாள் தன் துணைவி கண்டு இடுவித்திட்டாள் - தங்கிய கற்பினாளாகிய அவன் மனைவி கண்டு என்னை விடுவித்தாள்; அயில் இயல் காட்டுள் வீழ்ந்தேன் - கொடுமை பொருந்திய இக்காட்டிலே வீழ்ந்தேன்; - கொடுமை பொருந்திய இக்காட்டிலே வீழ்ந்தேன்; அநங்கமா வீணை என்பேன் - யான் அநங்கமா வீபுணை என்று பெயர் கூறப்படுவேன்.
விளக்கம் : மயிலுவமை தோழியர் அஞ்சி ஓடியதற்கு. மயிலினம் தோழியர்ககுவமை. மடமயில் என்றது தனக்கே அவள் கூறிக்கொண்டவுவமை. வெயிலிளஞ்செல்வன் - காலை ஞாயிறு. இது விஞ்சையனுக்குவமை. துயிலிய : செய்யிய என்னும் வாய்பாட்டு வினை
1581. தாயிலாக் குழவி போலச்
சாதுய ரெய்து கின்றேன்
வேயுலாந் தோளி னார்தம்
விழுத்துணைக் கேள்வ நிற்கண்
டாயினேன் றுறக்கம் பெற்றே
னளித்தரு ளாது விட்டாற்
றீயினு ளமிர்தம் பெய்தாங்
கென்னுயிர் செகுப்ப லென்றாள்.
பொருள் : வேய் உலாம் தோளினார் தம் விழுத்துணைக் கேள்வ! - மூங்கிலனைய தோளையுடைய பெண்களின் சிறந்த துணையாகிய கேள்வனே!; தாய் இலாக் குழவி போலச் சாதுயர் எய்துகின்றேன் - (நின்னைக் காணும் வரை) தாயை இழந்த குழவிபோல இரந்துபடுதற்குரிய துயரத்தை அடைகின்ற நான்; நின் கண்டு துறக்கம் பெற்றேன் ஆயினேன் - நின்னைப் பார்த்தவுடன் துறக்கம் பெற்றேன் போல ஆயினேன்; அளித்து அருளாது விட்டால் - (இனி என்னை) ஆதரித்து அருளாமல் விட்டால்; தீயினுள் அமிர்தம் பெய்த ஆங்கு என் உயிர் செகுப்பல் என்றாள் - நெருப்பிலே அமிர்தத்தைப் பெய்தாற்போல என் உயிரைக் காமத் தீயிலே பெய்து கெடுப்பேன் என்றாள்.
விளக்கம் : உலாம் : உவமைச் சொல். அவன் தோற்றம் துறவி போல இன்மையின், தோளினார் துணைவ என்றாள்.சாதுயர் - சாங்காலத்துண்டாகும் துயர்போன்ற துயர். வேய் - மூங்கில். துறக்கம் பெற்றேனாயினேன் என மாறுக. தீ - காமத்திற்குவமை. காமத்துன்பத்தானே இறந்துபடுதல் ஒருதலை என்பது கருத்து. ( 25 )
1582. மணியெழு வனைய தோளும்
வரையென வகன்ற மார்புந்
தணிவருங் கயத்துப் பூத்த
தாமரை யானைய கண்ணும்
பணிவரும் பருதி யன்ன
முகமுமென் றயர்ந்து காமப்
பிணியெழுந் தவலிக் கின்ற
பேதைநீ கேளி தென்றான்.
பொருள் : மணி எழு அனைய தோளும் - மணி புனைந்த தூணனைய தோள்களும்; வரை என அகன்ற மாப்பும் - மலை போலப் பரந்த மார்பும்; தணிவு அருங்கயத்துப் பூத்த தாமரை அனைய கண்ணும் - வற்றாத குளத்திலே மலர்ந்த தாமரை மலர் போன்ற கண்களும்; பணிவு அரும் பருதி அன்ன முகமும் என்று அயர்ந்து - பணிதல் இல்லாத ஞாயிறு போன்ற முகமும் என்று எண்ணித் தளர்ந்து; காமப் பிணி எழுந்து அவலிக்கின்ற பேதை - காம நோய் தோன்றி வருந்தும் பேதையே!; நீ இது கேள் என்றான் - நீ இதனைக் கேட்பாயாக என்றுரைக்கின்றனன்.
விளக்கம் : மணி என்பது தொடங்கி முகமும் என்னுந் துணையும் சீவகன் அவள் கூற்றைக்கொண்டு கூறியபடியாம். மணிஎழு - மணியிழைத்த தூண். பருதி - ஞாயிறு. பேதை : விளி. இது கேள் என மாறுக. ( 26 )
1583. போதொடு நான மூழ்கிப்
பூம்புகை தவழ்ந்து முல்லைக்
கோதைகண் படுக்குங் கூந்தல்
குரைவளி பித்தோ டையே
யேதஞ்செய் மலங்க ணெய்த்தோ
ரிறைச்சியென் பீருண் மூளை
கோதஞ்செய் குடர்கள் புன்றோ
னரம்பொடு வழும்பி தென்றான்.
பொருள் : போதொடு நானம் மூழ்கி - மலரிலும் புழுகிலும் முழுகி; பூம் புகை தவழ்ந்து - அழகிய அகிற் புகை கமழ்ந்து; முல்லைக் கோதை கண்படுக்கும் கூந்தல் - முல்லைமலர்மாலை துயிலும் கூந்தலாய்!; குரை வளி பித்தோடு ஐ ஏய் - ஒலிக்கும் வாதமும் பித்தமும் சிலேற்பனமும் பொருந்திய; ஏதம் செய் மலங்கள் நெய்ததோர் இறைச்சி என்பு ஈருள் மூளைகோதம் செய் குடர்கள் புன் தோல் நரம்பொடு வழும்பு இது என்றான் - குற்றஞ் செய்யும் மலங்களும் குருதியும் ஊனும் என்பும் ஈரலும் மூளையும் குற்றம் புரியும் குடர்களும் இழிந்த தோலும் நரம்பும் வழும்பும் ஆக இருக்கும் இவ்வுடம்பு என்றான்.
விளக்கம் : பூ முதலியவற்றாற் கூந்தல் நன்றாயிற்று என்றான். எழுவும் வரையும் தாமரையும் பருதியும் என்று தன் உறுப்புக்களைப் பாராட்டினாட்கு இவை அன்னவல்ல; மெய்ம்மை நோக்கின் வளியும், பித்தும், ஐயும், இயைந்த மலமும், குருதியும், இறைச்சியும், என்பும், மூளையும், குடரும், தோலும், நரம்பு மேகாண் என்று தெளிந்த படியாம். கூந்தல், பன்மொழித்தொடரிற் பிறந்த அன்மொழித தோகை. ( 27 )
1584. விழுக்கொடு வெண்ணஞ் சல்லா
வுகிர்மயி ருமிழ்கட் பீளைப்
புழுப்பயில் குரம்பை பொல்லாத்
தடிதடித் கீழ்ந்த போழ்தில்
விழித்தியார் நோக்கு கிற்பார்
பிள்ளையார் கண்ணுட் காக்கை
கொழிப்பாரும் பொன்னிற் றோன்றுங்
கொள்கைத்தாற் கொடியே யென்றான்.
பொருள் : கொடியே! - கொடி போன்றவளே!; விழுக்கொடு வெண் நஞ்சு அல்லா உகிர் மயிர் கண் உமிழ் பீளைப் பொல்லாத்தடிப் புழுப்பயில் குரம்பை - விழுக்கும் வெள்ளையான நிணமும் இவை ஒழிந்த உகிரும் மயிரும் கண் உமிழும் பீளையும் பொல்லாத ஊனும் புழுவும் பயில்கின்ற இவ்வுடம்பு; தடி கீழ்ந்த போதில் யார் விழித்து நோக்கு கிற்பார்? - ஊனைப் பிளந்த போதில் எவர் கண்ணை விழித்துப் பார்க்கும் அருவருப்பிலார்?; பிள்ளையார் கண்ணுள் காக்கை கொழிப்ப அரும் பொன்னின் தோன்றும் கொள்கைத்து என்றான் - கரிக்குருவியார் கண்ணிற்குக் காக்கை கொழிக்க அருமையான பொன்போல் தோன்றும் கொள்கையுடைத் தாயிற்று என்றான்.
விளக்கம் : கரிக் குருவியார் கண்ணுக்குக் காக்கை பொன் ஒத்துத் தோன்றும் என்பது ஒரு பழமொழி. விழுக்கும் வெண்ணஞ்சும் ஊன்வகை. வெண்ணஞ்சு - நிணமுமாம். பிள்ளையார் - கரிக்குருவி. வெண்ணஞ்சு என்பதும் பாடம். ( 28 )
1585.உருவமென் றுரைத்தி யாயி
னிறைந்ததோற் றுருத்தி தன்னைப்
புருவமுங் கண்ணு மூக்கும்
புலப்பட வெழுதி வைத்தாற்
கருதுவ தங்கொன் றுண்டோ
காப்பியக் கவிகள் காம
வெரியெழ விகற்பித் திட்டா
ரிறைச்சிப்போ ரிதனை யென்றான்.
பொருள் : உருவம் என்று உரைத்தியாயின் - உள்ளொழியப் புறத்தின் வடிவு நன்றெனக் கூறினையாயின்; நிறைந்த தோல் துருத்தி தன்னை - முற் கூறியவை நிறைந்ததொரு தோல் துருத்தியை; புருவமும் கண்ணும் மூக்கும் புலப்பட எழுதி வைத்தால் - புருவம் கண் மூக்கு இவற்றை நன்றாக எழுதி வைத்தால்; கருதுவது அங்கு ஒன்று உண்டோ? - நன்றெனக் கருதுவதொரு பொருள் இல்லையே! இறைச்சிப் போர் இதனைக் காப்பியக் கவிகள் காம எரி எழ விகற்பித்திட்டார் என்றான். - (ஆதலின்) ஊன் திரளாகிய இதனைக் காப்பியஞ் செய்யுங் கவிகள் மக்கட்குக் காமத்தீ எழ வேறுபடுத்திக் கூறினர் என்றான்.
விளக்கம் : இவளுக்குத் தெளிவுண்டாகுமென்று இவற்றைக் கூறினான். தன் நெஞ்சுக்கும் இவளுக்கும் தெளிவுண்டாக இத்துணையும் கூறும் அறிவுடைமையை யெல்லாம் சீவகனுக் கேற்றாமல் வனசரிதனுக்குத் தகவுபடுத்துதல் எங்ஙனம் பொருந்தும்? அழகிய பெண்ணுருவை நோக்கியும் பெற்றியில் நின்றிடின் பேடியர் அன்றோ? நெகிழும் நெஞ்சைத் தன் வயப்படுத்துதல் சீவகனுக்கு எப்போதும் இழுக்காகாது ( 29 )
வேறு
1586 காதன் மாமன் மடமகளே கருங்குழன் மேல்வண் டிருப்பினு
மேத முற்று முரியு நுசுப்பென் றுன்னியல் பேத்துவே
னோதம் போல வுடன்றுடன்று நைய நீயொண் டாமரைக்
கோதை பேறால்வா யொளித்தொழிதல் கொம்பே குண னாகுமே.
பொருள் : காதல் மாமன் மடமகளே! - அன்புறும் மாமனுடைய மடப்பம் பொருந்திய மகளே!; ஒண் தாமரைக்கோதை போல்வாய் - ஒள்ளிய தாமரையிலுள்ள திருவனையாய்!, கொம்பே! - பூங்கொம்பு போல்வாய்!; கருங்குழல் மேல் வண்டு இருப்பினும் ஏதம் உற்று நுசுப்பு முரியும் என்று ஏத்துவேன் - கரிய கூந்தலின் மேல் வண்டு தங்கினும் துன்பம் உற்று இடை ஒடியும் என்று நின்னைப் புகழ்வேனாகிய நான்; ஓதம் போல உடன்று உடன்று நைய - கடலலை போல வருந்தி வருந்திக் கெடும்படி; நீ ஒளித்து ஒழிதல் குணன் ஆகுமே? - நீ மறைந்து நீங்குதல் நன்றாகுமோ?
விளக்கம் : இதுமுதல் ஏழு செய்யுள் பவதத்தன் கூற்று. ஏதமுற்று - துன்பமுற்று. நுசுப்பு - இடை, ஓதம் - கடல், தாமரைக்கோதை - திருமகள். கொம்பு - அனங்கமாலை. குணனாகுமே என்புழி ஏகாரம் எதிர்மறை. கொம்பு, கொம்புபோல்வாளை யுணர்த்துதலால் உவமையாகு பெயராம். கோதை - பெண். தாமரைக் கோதை - தாமரைப் பூவில் வாழும் பெண். ( 30 )
1587. வண்ணத் திங்கண் மதிமுகத்த
வாளோ கருங்க யல்களோ
வுண்ணுங் கூற்றோ வொளிவேலோ
போதோ வுணர்க லேனாற்
பண்ணின் றீஞ்சொலாய் படாமுலைப்
பாவாய் கொடியே பாங்கி
ணுண்ணுந் தேனே யமிர்தே
யென்னின் னுயிரே யெங்கணாயோ.
பொருள் : பண்ணின் தீ சொலாய்! - இசையனைய இனிய மொழியாய்!; படாமுலைப் பாவாய்! - சாயாத முலையை யுடைய பாவையே!; கொடியே! - கொடியே!; பாங்கின் உண்ணும் தேனே!; - தகுதியான பருகுந் தேனே!; அமிர்தே! - அமிழ்தே!; என் இன் உயிரே! - என் இனிய உயிரே!; எங்கணாயோ! - எங்குள்ளாயோ?; வண்ணம் திங்கள் மதி முகத்த - அழகிய திங்களும் போற்றும் முகத்திலுள்ளவை; வாளோ? கருங்கயல்களோ? உண்ணும் கூற்றோ? ஒளிவேலோ? போதோ - வாளோ? கரிய கயல்களோ? உயிரைப் பருகும் கூற்றுவனோ? ஒளி தரும்வேலோ! மலரோ!; உணர்கலேன் - அறியேன்.
விளக்கம் : என் என்பது வினா என்பர் நச்சினார்க்கினியர், எங்கணாயோ!: ஓ! : வியப்பு. ( 31 ) மதிமுகத்த - வினைத்தொகை. மதியாநின்ற முகத்திலுள்ளன என்க. உயிரையுண்ணும் கூற்றோ என்க.
1588.இலவம் போதே ரெழிற்றகைய
சீறடிக ளஞ்சி யொல்கிப்
புலவன் சித்தி ரித்த
பொற்சிலம்பு நகப்பூ நிலத்துமே
லுலவும் போழ்து மென்னாவி
மலர்மேன் மிதித்தொ துங்குவாய்
கலவ மஞ்ஞை யனையாய்
கட்காத லொழிகல் லேனால்.
பொருள் : கலவ மஞ்ஞை அனையாய் - கலவ மயில் போன்றாய்!; இலவம்போது ஏர் எழில் தகைய சீறடிகள் அஞ்சி ஒல்கி - இலவ மலரனைய அழகு பொருந்திய சிற்றடிகள் நடுங்க அசைந்து; புலவன் சித்திரித்த பொன் வேலை சிலம்பு நக - பொன் வேலை செய்யும் அறிஞன் அமைத்த பொற் சிலம்பு ஒலிக்க; பூ நிலத்து மேல் உலவும் போழ்தும் - அழகிய தரைமிசை நீ உலவும் பொழுதும்; என் ஆவி! மலர்மேல் மிதித்து ஒதுங்குவாய் - (அந் நிலத்தில் அன்றி) என் உயிரே! என் உள்ள மலர்மேல் மிதித்துச் செல்வாய்; கண் காதல் ஒழிகல்லேன் - நின்னிடத்துள்ள அன்பினின்றும் நீங்குமாற்றலிலேன்.
விளக்கம் : இலவம்போது ஏர்எழில் என்புழி ஏர் உவமவுருபு. புலவன் - ஈண்டுக் கம்மியப் புலமையுடைய பொற்கொல்லன். சிலம்பொலி சிரிப்பொலி போறலின பொற்சிலம்பு நக என்றார். பூநிலம் - மலர் பரப்பிய நிலம். கலவ மஞ்ஞை - தோகை மயிர். ( 32 )
1589. பணிசெ யாயத்துப் பந்தாடு
கின்றாயைக் கண்டு மாழ்கிப்
பிணிசெய் நோயேன் யான்கிடப்
பப்பிறர் வாயது கேட்டலுந்
துணிக போது மென விடுத்தாய்
போந்தேன் றுயரு ழப்பநீ
மணிசெய் மேகலை யாய்மாற்
றந்தாராய் மறைந்தொ ழிதியோ.
பொருள் : பணி செய் ஆயத்துப் பந்தாடுகின்றாயைக் கண்டு மாழ்கி - ஏவல் புரியும் பணிமகளிருடன் பந்தாடும் நின்னைக் கண்டு மயங்கி; பிணி செய் நோயேன் யான் கிடப்ப - பிணித்தலையுடைய நோயை உடையேனாய் நான் அயர்ந்து கிடக்க; பிறர் வாய் அது கேட்டலும் - மற்றோர் வாயிலாக அதனை நீ கேட்டவுடன்; துணிக! போதும்! என விடுத்தாய்! - துணிவு கொள்க! யாம் உடன் செல்வேம்! என்று கூறி வர விட்டாய்; மணி செய் மேகலையாய்! - மணிகளாற் செய்த மேகலையுடையாய்!; மாற்றம் தாராய் மறைந்து ஒழிதியோ! - மறுமொழி கூறாமல் மறைந்து போகின்றனையோ!
விளக்கம் : ஆயம் - மகளிர் குழு. மாழ்கி - மயங்கி, பிணிசெய் நோய் - பிணித்தலைச் செய்யும் நோய். அது - அந்த நிலைமையினை. உரைத்தாய் என்பதும் பாடம். ( 33 )
1590. இயக்கி நின்னோ டிணையொக்கு
மென்று நலஞ்செ குப்பான்
மயக்கிக் கொண்டு போய்வைத்தா
யென்மா தரைத்தந் தருளுநீ
நயப்ப வெல்லாந் தருவலெனத்
தொழுது நல்லி யானைதன்
வயப்பிடி கெடுத்து மாழாந்த
தொப்ப மதிம யங்கினான்.
பொருள் : இயக்கி! - இயக்கியே!; நின்னோடு இணை ஒக்கும் என்று என் மாதரை நலம் செகுப்பான்.- நின்னுடன் இணைத்தற்கண் ஒப்பாள் என்று கருதி என் காதலியை அவள் நலத்தைக் கெடுத்தற்கு; மயக்கிக் கொண்டு போய் வைத்தாய் - அறிவைக் கலக்கிக் கொண்டுபோய் மறைய வைத்தாய்; நீ தந்தருள் - நீ அவளை என்னிடந் திருப்பித் தருக; நயப்ப எல்லாம் தருவல் எனத் தொழுது - (தந்தால்) நீ விரும்பிய யாவற்றையும் நல்கு. வேன் என்று வணங்கி; நல்லி யானை தன் வயப்பிடியைக் கெடுத்து மாழாந்தது ஒப்ப மதி மயங்கினான் - அழகிய களிறு தன் வெற்றியுறும் பிடியை இழந்து மயங்கினாற் போல அறிவு கலங்கினான்.
விளக்கம் : தாராய் : முற்றெச்சம். ஓ : வியப்பு இயக்கி - விளி. இணைஒக்கும் - ஒப்பிடுதற்கு ஒப்பள். செகுப்பான் : வினையெச்சம். நயப்ப : பலவறிசொல். தருவல் : தன்மை ஒருமை வினைமுற்று. ( 34 )
1591. மல்லற் றெல்வ ளத்து
மத்திமநன் னாட்டுவண் டாமரை
புல்லும் பேரூர்ப் புகழ்த்தத்தன்
காதற் சினதத் தைக்குஞ்
செல்வநா மற்குஞ் சித்திரமா
மாலைக் குஞ்சுற் றத்தார்க்கு
மல்லல் செய்தே னவட் சென்றா
லென்னுரைக்கே னென்செய் கேனே.
பொருள் : மல்லல் தொல் வளத்து மத்திம நல்நாட்டு - வளமிகும் பழமையான செல்வத்தையுடைய மத்திம நாட்டிலே; வண் தாமரை புல்லும் பேரூர் - பதுமபுரம் என்னும் பேரூரிலே; புகழ்த்தத்தன் காதல் சின தத்தைக்கும் - என் தந்தை கீர்த்தி தத்தனுக்கும் அவன் காதல் மனைவியான என் அன்னை சினதத்தைக்கும்; செல்வ நாமற்கும் சித்திரமா மாலைக்கும் - என்மாமன் சீமானுக்கும் என் மாமி சித்திர மாலைக்கும்; சுற்றத் தார்க்கும் - மற்றைய உறவினர்க்கும்; அல்லல் செய்தேன் - யான் துன்பஞ் செய்தேன்; அவண் சென்றால் - யான் அங்கே சென்றால்; என் உரைக்கேன்? - என் மொழிவேன்?; என் செய்கேன்? - யாது புரிவேன்!
விளக்கம் : மல்லல் - வளம். வளம் - செல்வம். தாமரை புல்லும், பேரூர் - பதுமபுரம் என்னும் பேரையுடைய ஊர். புகழ்த்தத்தன் - கீர்த்திதத்தன். இவன் பவதத்தன் தந்தை. சினதத்தை பவத்தத்தன் தாய். செல்வ நாமன் - சீமான். இவன் பவதத்தன் மாமன். சித்திரமா மாலை - பவதத்தன் மாமி. அல்லல் செய்தேன் என்றது நின்பிரிவாலே அவரெல்லாம் பெரிதும் அல்லலுறாநின்றனர் என்றவாறு. ( 35 )
1592. உண்ணு நீர்வேட் டசைந்தே
னெனவுரைப்பக் காட்டு ணாடி
நண்ணிப் பொய்கை தலைப்பட்டு
நற்றா மரையி லையினுட்
பண்ணி நீர்கொண்டு வந்தேன்
படாமு லைப்பா வாயென்
றண்ண லாற்றா தழுதழுது
வெந்துருகி நைகின் றானே.
பொருள் : படா முலைப்பாவாய்! - சாயாத முலையையுடைய பாவையே!; உண்ணும் நீர்வேட்டு அசைந்தேன் என உரைப்ப - நீ குடிநீர் விழைந்து இளைத்தேன் என்று கூறியதாலே; காட்டுள்பொய்கை நாடி நண்ணித் தலைப்பட்டு - காட்டிலே பொய்கையிருக்குமிடம் தேடிக் கண்டுபிடித்தடைந்து; நல் தாமரை இலையினுள் பண்ணிநீர் கொண்டு வந்தேன் - அழகிய தாமரை இலையைக் கோலி அதனுள் நீரை ஏந்தி வந்தேன்; என்று - (நின்னைக் கண்டிலேன்,) என்று கூறி; அண்ணல் ஆற்றாது அழுது அழுது வெந்து உருகி நைகின்றான் - பேதையாகிய அவன் அமைதியின்றி அழுது அழுது மனம் வெதும்பி உருகி நைகின்றான்.
விளக்கம் : அண்ணல் : இகழ்ச்சிக் குறிப்பு. உரைப்ப - நீ கூறுதலாலே என்க. தலைப்பட்டு - கண்டு. தாமரையிலையைப்பண்ணி அதனுள் நீர் கொண்டு வந்தேன் என்க. பண்ணுதல் - குடையாகக் கோலுதல் ( 36 )
1593. குழைகொள் வாண்முகத்துக் கோல்வளையைக்
காணான் குழைந்தழு கின்ற
வழகன் சொல்லுமணி செய்கோதை
காமமுங் கண்டுங் கேட்டு
முழவுத் தோளான் முறுவ
லித்தீங் கேயிரு நீயென்
றிழையச் சொல்லி யிளையா
னிளையானை யெய்தி னானே.
பொருள் : குழைகொள் வாள்முகத்துக் கோல் வளையைக் காணான் - குழையணிந்த ஒளிசெயும் முகத்தையும் திரட்சியுறும் வளையையும் உடையாளைக் காணானாகி; குழைந்து அழுகின்ற அழகன் சொல்லும் - நெகிழ்ந்து அழுகின்ற உடலழகனாகிய பவதத்தன் மொழியையும்; அணிசெய் கோதை காமமும் - அணி பொருந்திய மலர்மலையாளின் காமத்தையும்; முழவுத்தோளான் கண்டும் கேட்டும் முறுவலித்து - முழவனைய தோளானாகிய சீவகன் பார்த்தும் கேட்டும் நகைத்து; இங்கே நீ இரு என்று இழையச் சொல்லி - நீ இங்கேயே இரு என்று அவள் பொருந்தக் கூறி; இளையான் இளையானை எய்தினான் - சீவகன் பவதத்தனை நெருங்கினான்.
விளக்கம் : தன்மேற் காமுற்றவளை நன்னெறிப்படுத்த விரும்பிய சீவகன் அவள் மனம் பொருந்த இன்மொழி கூறிவந்தான், நயம்பட வுரைத்த லின் நயமுணர்ந்தானாகையால். நச்சினார்க்கினியர் தாம் படைத்த வனசரிதனை, இரு என இழையச் சொல்லிச் சீவகன் சென்றான் என்பர். முன்னர் 1567 ஆஞ் செய்யுளில் தானம் என்பதனை முனிவருறைவிடமாக்கி அங்கேயிருந்தான் சீவகன் என்றும், கானத்தினேகுகின்றான் ஆகிய வனசரிதன் கவினை அநங்கமாலை கண்டு காமுற்றுக் காமத்தை மிகுவிக்கும் மொழிகளைக் கூறிக் குறிப்புக்களைக் காட்டி நின்றதையும் அவன் அவளுக்கு நன்னெறி புகன்றதையும் பவதத்தன் அவளைத் தேடிவந்ததையும் கண்டு பவதத்தனுக்கு நன்னெறி புகட்ட வந்தான் என்று இதுகாறும் உரையை அமைத்தார். ஆனால், இதுவரை வனசரிதனையும் சீவகனையும் ஓரிடத்தில் இருத்திவனசரிதன் சீவகனை விருந்தினனாக ஏற்றதாக ஓரிடத்திலும் உரைத்திலர். இச் செய்யுளுக்கு விளக்கங் கூறுமுகத்தான் அவற்றை அமைக்கின்றார். அவர் கூறுவது:-
தோளான் - இவர்கள் செய்தியைக் கண்டிருந்த சீவகன் இழையச்சொல்லி என்றது - தாமுறைவிடத்தே வந்தார்க்குத் தாம் நுகர்வனவற்றைக் கொடுத்துப் பேணி விடுத்தல் வனசரிதர்க் கியல்பாகலின், சீவகன் போக்கொருப்பட்டமை கண்டு. அவ் வனசரிதனும், யான் நுகர்வனவற்றை நீயும் நுகர்ந்து வழிவரல் வருத்தந் தீர்ந்து ஏகுவாயாக என்றாற்கு, அவனும் தனக்கு அவ் வருத்த மின்மையை அவன் மனம் பொருந்தச்சொல்லி என்றவாறு. ஈங்கேயிரு என்றது - எப்போதும் இப்படியே மனத்தைச் சென்ற இடத்தாற் செல்லவிடாதே (குளற். 422) விலக்கியிருக்க என்றவாறு. ஆங்கு உவம உருபு ஆயினமையின் ஈங்கு என்பதும் உவம உருபாம் புறனடையால்; இவ்விடத்தே இரு என்று உபசாரமுமாம். சீவகன் அவளை இங்கே இரு என்று பொருந்தக் கூறல் அவற்கு இயையாமை உணர்க.இவ்வாறு தாம் படைத்துக்கொண்ட வனசரிதனுக்கு இச் செய்யுளில் இடமளிக்கின்றார். ( 37 )
1594. என்னை கேளீ ரென்னுற்றீ
ரென்ன பெயாபு ரென்றாற்குப்
பொன்னங் குன்றிற் பொலிந்ததோ
ணம்பி யொருபொற் பூங்கொடி
யென்னு நீராளை யீங்கே
கெடுத்தே னென்பா வத்தாற்
பன்னூற் கேள்வி யுடையேன்யான்
பவதத்த னென்பே னென்றான்.
பொருள் : கேளீர்! - நண்பரே!; என் உற்றீர் என்னை? என்ன பெயரீர்? என்றாற்கு - நீர் என்னவருத்தம் அடைந்தீர்? அதற்குக் காரணம் என்னை ? நும்பெயர் என்னை? என்ற சீவகனை நோக்கி; பொன் அம் குன்றின்பொலிந்த தோள் நம்பி! - பொன்னாகிய அழகிய குன்றைப்போல அழகுற்ற தோளையுடைய நம்பியே!; ஒரு பொன் பூங்கொடி என்னும் நீராளை என் பாவத்தால் ஈங்கே கெடுத்தேன் - ஒரு பொற்கொடியே என்னும் பண்பினாளை என் வினையினால் ஈங்கே போக்கடித்தேன்; யான் பல்நூல் கேள்வியுடையேன் - யான் பலநூலைக் கேட்ட கேள்வியினை உடையேன், பவதத்தன் என்பேன் என்றான் - பவதத்தன் என்னும் பெயருரையேன் என்றான்.
விளக்கம் : கேளீர் என்உற்றீர் என்னை? என மாறுக. என்றாற்கு - என்று வினவிய சீவகனுக்கு. பொன்னங்குன்று என்புழி. அம் சாரியையுமாம். நம்பி : விளி. நீராள் - தன்மையுடையாள், என் பாவத்தால் ஈங்கே கெடுத்தேன் என மாறுக. ( 38 )
வேறு
1595. கைப்பொருள் கொடுத்துங் கற்றல்
கற்றபின் கண்ணு மாகு
மெய்ப்பொருள் விளைக்கு நெஞ்சின்
மெலிவிற்கோர் துணையு மாகும்
பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம்
புகழுமாந் துணைவி யாக்கு
மிப்பொரு ளெய்தி நின்றீ
ரிரங்குவ தென்னை யென்றான்.
பொருள் : கைப்பொருள் கொடுத்தும் கற்றல் - (இடுக்கணுக்கு தவுமாறு) கையில் வைத்திருக்கும் பொருளைக் கொடுத்தாயினும் கற்க; கற்றபின் கண்ணும் ஆகும் - அவ்வாறு கற்ற பிறகு அது அகக்கண்ணும் ஆகும்; மெய்ப்பொருள் விளைக்கும் - உண்மையான பொருளைத் தரும்; நெஞ்சின் மெலிவிற்கு ஓர் துணையும் ஆகும் - உள்ளம் மெலிந்தால் உறுதுணையும் ஆம்; பிற பொய்ப்பொருள் - மற்றவை பொய்யான பொருள்களாகும்; பொன் ஆம் - கல்விப்பொருளே செல்வப் பொருளுமாம்; புகழும் ஆம் - புகழும் ஆகும்; துணைவி ஆக்கும் - காதலியையும் உண்டாக்கும்; இப்பொருள் எய்தி நின்றீர் இரங்குவது என்னை என்றான் - இத்தகைய கல்விப்பொருளை அடைந்திருக்கும் நீர் வருந்துவது ஏன் என்றான்.
விளக்கம் : புகழும் ஆம் துணைவியாக்கும் என்பதைப் புகழாம் துணைவியாக்கும் என்று கொண்டு, கீர்த்தி மகளை யுண்டாக்கும் என்றும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். கற்றல் : அல்லீற்று உடன்பாட்டு வியங்கோள் இற்றெனக்கிளத்தல் (தொல் - கிளவி. 19) என்பது போல். அல்லீறு எதிர்மறை வியங்கோளுக்கும் வரும். மகனெனல் - மக்கட்பதடி யெனல் என்னுங் குறளிற் காண்க. ( 39 )
1596. அன்புநூ லாக வின்சொ லலர்தொடுந் தமைந்த காத
லின்பஞ்செய் காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
பின்செலும் பிறார்க ணுள்ளம் பிணையனார்க் கடியதன்றே.
பொருள் : அன்பு நூலாக இன்சொல் அலர்தொடுத்து - அன்பை நூலாகக்கொண்டு இன்சொல்லாகிய பூவை வைத்துக் கட்டி; அமைந்த காதல் இன்பம்செய் சாந்தின் கைபுனைந்து - பொருந்திய காதலாகிய இன்பமுண்டாக்கும் சாந்தினாலே ஒப்பனைசெய்து; ஏற்ற காமமாலை நன்பகல் சூட்டி - தகுதியான காமமாலையை நல்ல பகற்பொழுதினும் அணிவித்து; விள்ளாது ஒழுகினும் - நீங்காமலிருந்தாலும்; நங்கைமார்க்குப் பிறர்கண் பின் உள்ளம் செலும் - பெண்களுக்கு மற்றோரிடத்திலே அவர் பின்னரே மனம் போகும்; பிணையனார்க்கு அடியது அன்றே? - மானனையார்க்கு அவ் வுள்ளம் அடிப்படையாக வுள்ளது அன்றோ?
விளக்கம் : பகல் - வெளியுமாம் என்பர் நச்சினார்க்கினியர். இனிய சொல்லாகிய அலர் என்க. அலர் - மலர். காதல் சாந்திற் கைபுனைந்து ஏற்றகாமமாலை என மாறுக. பகற்சூட்டி என்புழி உயர்வு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தாற்றெக்கது. நங்கைமார், இகழ்ச்சி. பிணையனார்க்கு என்றது அவர்க்கு என்னும் சுட்டுப்பெயர்மாத்திரையாய் நின்றது. காதல் இன்பத்தைச் செய்யும் காமமாகிய சாந்தினால் ஒப்பனை செய்து எனப்பொருள் கொள்வது சிறந்தது. அன்பு நூலால் இன்சொல் மலராற் றொடுத்தமாலை என்பது தானே தோன்றுதலால். ( 40 )
1597.பெண்ணெனப் படுவ கேண்மோ
பீடில பிறப்பு நோக்கா
வுண்ணிறை யுடைய வல்ல
வொராயிர மனத்த வாகு
மெண்ணிப்பத் தங்கை யிட்டா
லிந்திரன் மகளு மாங்கே
வெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போன்
மெலிந்துபின் னிற்கு மன்றே.
பொருள் : பெண் எனப்படுவ கேள் - பெண் என்று கூறப்படுவனவற்றின் இயல்பைக் கேள்; பீடுஇல - மனவலியுடைய அல்ல; பிறப்பு நோக்கா - குடிப்பிறப்புக் கெடுமென்று பாரா; உள்நிறை உடைய அல்ல - உள்ளத்திலே நிறையை உடையனவல்ல; ஒராயிரம் மனத்த ஆகும் - ஆயிரம் முகமாக எழும் மனத்தாவம்; எண்ணிப் பத்து அங்கை இட்டால் - எண்ணிப் பாத்துப் பொருளை அகங்கையிலே வைத்துவிட்டால்; இந்திரன் மகளும் - பொருட்குறையில்லாத இந்திரன் மகளேயாயினும்; ஆங்கே வெண்ணெய்க் குன்று எரியுற்றாற்போல் மெலிந்து பின் நிற்கும் - (பொருள் பெற்ற) அங்கேயே வெண்ணெய் மலை எரியினால் தாக்கப்பெற்றாற் போல உருகி அவர் பின்னே நிற்கும்.
விளக்கம் : இழிவு தோன்ற அஃறிணை வாய்பாட்டாற் கூறினான். பீடு ஈண்டு மனத்திண்மையின் மேனின்றது. பிறப்பு - ஈண்டு நற்குடிப் பிறப்பு என்பது படநின்றது. நிறை - நெஞ்சத்தை ஒரு நிலைக்கண் நிறுத்தும் வன்மை. ஓராயிரம் என்றது மிகுதிக்கோர் எண் குறித்தபடியாம். பத்தென்றது சிறுமைக்கோர் எண் குறித்தவாறு. இந்திரன் மகளும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. எரி - நெருப்பு. ( 41 )
1598. சாமெனிற் சாத னோத
றன்னவன் றணந்த காலைப்
பூமனும் புனைத லின்றிப்
பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை யென்றுஞ் சொல்லார்
கணவற்கை தொழுது வாழ்வார்
தேமலர்த் திருவோ டொப்பார்
சோந்தவன் செல்ல றீர்ப்பார்.
பொருள் : சாம் எனின் சாதல் நோதல் - கணவன் சாகிற் சாதலும்; நோவின் நோதலும் உடையராய்; தன்னவன் தணந்த காலை - கணவன் நீங்கினால்; மனும் பூப்புனைதலின்றிப் பொற்புடன் புலம்ப வைகி - மிகவும் மலரணிதலும் இன்றித் தானும் அழகும் தனித்துத் தங்கி; காமன் என்றும் சொல்லார் - காமன் என்று பெயரும் கூறாராய்; கணவன் கைதொழுது வாழ்வார் - கணவனையே வணங்கி வாழும் மங்கையர்; தேன்மலர்த் திருவோடு ஒப்பார் - அவனுக்குத் தாமரை மலரில் வாழும் திருமகளைப் போல்வார்; சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார் - மேலும் தம் கணவனின் துன்பத்தைத் தீர்ப்பார்கள்.
விளக்கம் : சொல்லார் : முற்றெச்சம். வாழ்வார் : வினையாலணையும் பெயர், எழுவாயாய் நின்றது. காமனை : ஐ : அசை. இவர்கள் கற்புடை மகளிர். ( 42 )
1599. அன்னணின் றோழி யையா
வளென்னைக் கண்ட கண்ணாற்
பின்னைத்தான் பிறரை நோக்காப்
பெருமட மாது தன்னை
யென்னையா னிழந்து வாழு
மாறென விரங்கி னானுக்
கன்னளோ வென்று நக்கா
னணிமணி முழவுத் தோளான்.
பொருள் : ஐயா நின்தோழி அன்னள் - ஐயனே! உன் தோழி அத்தகையளே; அவள் என்னைக் கண்ட கண்ணால் - அவள் என்னைப் பார்த்த விழியினால்; தான் பிறரைப் பின்னை நோக்காப் பெருமடமாது - தான் மற்றவரைப் பிறகு பாராத பெருமைமிக்க இளமங்கை; தன்னை இழந்து யான் வாழும் ஆறு என்னை - அவளைப் பிரிந்து யான் வாழும் வகை எங்ஙனம்; என இரங்கினானுக்கு - என்று வருந்திய பவதத்தினின் பேதைமையைப் பார்த்து; அணிமணி முழவுத்தோளான் அன்னளோ என்று நக்கான் - அணியணிந்த அழகிய முழவனைய தோளானாகிய சீவகன் அத்தகையளோ! என்று நகைத்தான்.
விளக்கம் : அன்னளோ என்றது யான் கூறியவற்றாலும் தெளிவு நிகழாமல் இவனை வருந்துந் தன்மையளோ என்றவாறு. நகை, பிறர் அறியாமைபற்றி நிகழ்ந்தது. இனி யாம் இவன் இடுக்கணுக்கு உதவி யானோம் என்று மனம் மகிழ்ந்தான் என்றுமாம். ( 43 )
வேறு
1600. இனையல்வேண் டாவிம் மந்திரத்தை
யோதிநீ யொருவில் லேவள
வனைய வெல்லை சென்றா
லியக்கி கொணர்ந் தருளுநீ
புனைசெய் கோல்வளை யைக்கைப்
படுதியென் றாங்கவன் போதலு
மனைய மாதரைக் கண்டாங்
கடிபுல்லி வீழ்ந்த ரற்றினான்.
பொருள் : இனையல் வேண்டா - நீ வருந்தல் வேண்டா; நீ இம் மந்திரத்தை ஓதி ஒருவில் ஏ அளவு அனைய எல்லை சென்றால் - நீ யான் கூறும் மந்திரத்தைக் கூறி ஒரு வில்லிலிருந்து அம்பு சென்ற அளவை யொத்த எல்லைபோனால்; இயக்கி கொணர்ந்து அருளும் - அவ்விடத்தே அவளை இயக்கி கொண்டுவந்து தருவாள்; நீ புனைசெய் கோல் வளையைக் கைப்படுதி - அப்போது நீ ஒப்பனைசெய்த திரண்ட வளையுடையாளைக் கையிலே பெறுவாய்; என்று ஆங்கு அவன் போதலும் - என்றுகூறிச் சீவகன் ஆங்கு நின்றும் சென்றவுடனே; அனைய மாதரைக் கண்டு ஆங்கு அடி புல்லி வீழ்ந்து அரற்றினான் - பவதத்தனும் பிறர் பின் சென்று மெலிந்து நிற்கும் அத்தகையவளைப் பார்த்து; ஆங்கு அவள் அடியைத் தழுவி வீழ்ந்து அழுதான்.
விளக்கம் : மந்திரம் : மகளிரை மயக்குவதாகிய மந்திரம். தான் அநங்கமாலையைக் கண்டதைக் கூறிற்றிலன், தன்னையும் ஐயுற்றுத் தீங்கு புரிவான் என்று கருதி. ( 44 )
1601. பட்ட வெல்லாம் பரியா
துரைத்தா னவளுங் கேட்டாள்
விட்டா ளார்வ மவன்க
ணிவன்மேன் மைந்துறவினான்
மட்டார் கோதை மனைதுறந்தாண்
மைந்தனு மங்கை மேலே
யொட்டி விள்ளா வார்வத்த
னாகி யுருவ மோதினான்.
பொருள் : பட்ட எல்லாம் பரியாது மைந்தனும் உரைத்தான் - அவ்வாறு அழுதுதான் அடைந்த யாவையும் வருந்தாமலே அம் மைந்தனும் கூறினான்; மட்டு ஆர் கோதை மனை துறந்தாள் - தேனார்ந்த கோதையாள் அடிநாளிலேயே மனையை விட்டு வந்தவள்; மங்கைமேலே விள்ளா ஆர்வத்தன் ஆகி ஒட்டி உருவம் ஓதினான் - இவள்மேல் இவன் நீங்கா ஆசையுடைய வனாகிய இவளைப் பெறவேண்டும் என்று ஒட்டி அம் மந்திரத்தைப் பலவுரு ஓதினான்; அவளும் கேட்டாள் - அம்மந்திரத்தை அவளும் கேட்டாள்; இவன்மேல் மைந்து உறவினால் அவன்கண் ஆர்வம் விட்டாள் - கேட்டதனால் பவதத்தன்மேல் அன்பு வலியுற்றதனால், சீவகன் பாற்கொண்ட ஆசையை விட்டாள்.
விளக்கம் : அம் மந்திரம் அவள் நெஞ்சை இவ்வாறு பிணிப்பித்த தென்று உணர்க. அவன்கண் ஆர்வம் என்பதற்கு வனசரிதன் மேற் சென்ற ஆர்வம் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர் ( 45 )
வேறு
1602. மெழுகு செய்படம் வீழ்முகின் மத்தகத்
தொழுகும் வெள்ளரு வித்திர ளோடைசூழ்ந்
திழுகு பொன்மதத் தின்வரைக் குஞ்சரந்
தொழுது வேய்முதற் றூசங்கொண் டேறினான்.
பொருள் : வீழ்முகில் மெழுகு செய்படம் - படிந்த முகிலாகிய மெழுகினாற் செய்த முகபடத்தையும்; ஒழுகும் வெள் அருவித்திரள் மத்தகத்து ஓடை சூழ்ந்து - ஒழுகுகின்ற வெள்ளிய அருவித் திரளாகிய நெற்றிப்பட்டமும் சூழ்ந்து; இழுகு பொன் மதத்தின் - ஏறுவாருடைய காலைச் சூழ்ந்துகிடந்து, உரிஞ்சும் பொன்னாகிய மதத்தினையும் உடைய ; வரைக்குஞ்சரம் தொழுது - மலையாகிய யானையைத் தொழுது; வேய் முதல் தூசம்கொண்டு ஏறினான் - மூங்கில் வேராகிய புரோசைக் கயிற்றைப் பிடித்து (அம் மூங்கில் கவையிலே அடியிட்டு) ஏறினான்.
விளக்கம் : அருகன் கோயில் அம் மலையில் இருப்பதால் தொழுதான். யானை ஏறுவாரும் தொழுதல் இயல்பு. ( 46 )
1603. நிரைத்த தீவினை நீங்க நெடுங்கணார்
வரைக்க ணேறலின் வாலரிப் பொற்சிலம்
புரைத்து மின்னிருண் மேற்கிடந் தாலுமொத்
தரைத்த லத்தக மார்ந்ததொர் பாலெலாம்.
பொருள் : நிரைத்த தீவினை நீங்க - இடைவிடாத தம் தீவினை கெடும்படி வணங்க ; நெடுங்கணார் வரைக்கண் ஏறலின் - நீண்ட கண்களையுடைய மங்கையர் அம் மலைக்கண் ஏறுவதால்; வால் அரிப் பொன் சிலம்பு உரைத்து - தூய பரல்களையுடைய பொன்னாலாகிய (அவரடியில் அணிந்த) சிலம்புகள் உரைக்கப்பட்டு ; மின் இருள்மேல் கிடந்தாலும் ஒத்து - மின் இருளின் மேற் கிடந்த தன்மையும் ஒத்து; அரைத்த அலத்தகம் ஆர்ந்தது ஒர்பால் எலாம் - அம்மகளிரடி மதித்தலாற் செம்பஞ்சுக் குழம்பும் நிறைந்தது ஒரு பக்கமெல்லாம்.
விளக்கம் : அரைத்த அலத்தகம் : அகரம் தொகுத்தல் விகாரம்.நெடுங்கணார் என்றது மகளிர் என்பது படநின்றது. வால் - தூய. அரி - பரல். உரைத்து - உரைக்கப்பட்டு. மின் பொன்னுரைக்கும் இருள் மலைக்கும் உவமைகள். அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. ( 47 )
1604. சாந்துங் கோதையுந் தண்ணறுஞ் சுண்ணமு
மாய்ந்த பூம்புகை யும்மவி யுஞ்சுமந்
தேந்து பொன்விளக் கேந்தி யிடம்பெறா
மாந்தர் சும்மை மலிந்ததொர் பாலெலாம்.
பொருள் : சாந்தும் கோதையும் தண்ணறுஞ் சுண்ணமும் ஆய்ந்த பூம் புகையும் அவியும் சுமந்து - சந்தனமும் மலர்மாலையும் தண்ணிய நறிய சுண்ணப் பொடியும் ஆராய்ந்த அகிற் புகையும் அவியும் சுமந்து; ஏந்து பொன் விளக்கு ஏந்தி - உயர்ந்த பொன் விளக்கை எடுத்துக்கொண்டு; இடம் பெறா மாந்தர் சும்மை ஓர்பாலெலாம் மலிந்தது - இடம்பெறாத மக்களின் ஆரவாரம் ஒரு பக்கமெல்லாம் நிறைந்தது.
விளக்கம் : சாந்து - சந்தனம். சுண்ணம் - மணப்பொடி. பூம்புகை ஈண்டு நறுமணப்புகை. அவி - கடவுட்கிடும் பலிப்பொருள். ஏந்து - உயர்ந்த. சும்மை - ஆரவாரம். ( 48 )
1605. துறந்த மன்னவர் தூமுடி தோள்வளை
நிறங்கொ ளாரம்பைம் பூணிழற் குண்டலம்
பிறங்கு வெங்கதிர் மின்னொடு பின்னிவீழ்ந்
துறங்கு கின்றன போன்றவொர் பாலெலாம்.
பொருள் : துறந்த மன்னவர் தூமுடி தோள்வளை நிறம் கொள் ஆரம்பைம்பூண் நிழல் குண்டலம் பிறங்கு வெங்கதிர் மின்னொடு பின்னி வீழ்ந்து - துறந்த அரசர் (துறப்பதற்குமுன் அணிந்திருந்த) தூயமுடியும் தோள்வளையும் ஒளிபொருந்திய முத்துமாலையும் புதிய பூணும் ஒளிவிடும் குண்டலமும் ஆகிய இவை விளங்கும் வெம்மைமிகும் கதிரும் மின்னும் பின்னி வீழ்ந்து; ஒர்பாலெலாம் உறங்குகின்றனபோன்றன - ஒரு பக்க மெல்லாம் உறங்குவன போன்றன.
விளக்கம் : துறந்த அரசர் - துறந்தபொழுது களைந்திட்ட முடி. முதலியன என்பது கருத்து . ஆரம் - முத்துமாலை. நிழல் - ஒளி. பிறங்குதல் - ஒளிவிடுதல். ( 49 )
1606. கருவித் தேன்கலை கையுறக் கீண்டுடன்
மருவிப் பைங்கறி வாரிப் பழந்தழீஇ
வெருவி நாகம் பிளிற்ற விரைந்துரா
யருவி நின்றதி ரும்மொரு பாலெலாம்.
பொருள் : கருவித்தேன் - கைத்தளம் போலும் தேனடை; கலை கைஉற உடன்மருவிக் கீண்டு - ஆண் முசுவின் கை உறுதலாலே சேரக் கிழிந்து; விரைந்து உராய் - விரைந்து பரந்து; பைங்கறி வாரி - பச்சை மிளகை வாரி; பழம்தழீஇ - பழங்களைத் தழுவி; நாகம் வெருவிப் பிளிற்ற - யானைகள் அஞ்சிப் பிளிறும்படி; ஒருபாலெலாம் அருவி நின்று அதிரும் - ஒருபக்கமெல்லாம் அருவியாய் நின்று ஒலிக்கும்.
விளக்கம் : கருவி - கைத்தளமென்னும் ஒரு போர்க்கருவி. இது தேனடைக்குவமை. கருவி - தொகுதியுமாம். கலை - ஆண் குரங்கு. ( 50 )
1607. வெங்க திர்க்கட வுள்வியன் றேர்வரைத்
தங்கு சந்தனக் கோட்டிடைப் பட்டெனப்
பொங்கு மான்குளம் பிற்குடை பொற்றுகண்
மங்கு லாய்த்திசை யாவையு மல்கின்றே
பொருள் : வரைத் தங்கு சந்தனக் கோட்டிடை - வரையில் தங்கிய சந்தனக் கோட்டிடையிலே; வெங்கதிர்க் கடவுள் வியன்தேர் பட்டென - ஞாயிற்றின் தேர் அகப்பட்டதாக; பொங்கும் மான் குளம்பின் குடை பொன் துகள் - தாவும் அத் தேரிற் பூண்ட குதிரைகள் (தம் அடியை ஊன்றி அத் தேரை இழுத்துச் செல்லும்போது) குளம்பினாலே குடைந்த பொன் துகள்; மங்குலாய்த் திசை யாவையும் மல்கின்றே - இருளாகத் திசைகள் எங்கும் நிறைந்தது.
விளக்கம் : வெங்கதிர்க் கடவுள் - ஞாயிறு. வரை - மலை. கோடு - கொம்பு. பொங்குமான் - தாவுங்குதிரை. மங்குல் - இருள். மல்கின்று - மல்கிற்று; நிறைந்தது. ( 51 )
1608. சுனைய நீலமுஞ் சுள்ளியுஞ் சூழ்மலர்
நனைய நாகமுங் கோங்கமு நாறிணர்ச்
சினைய சண்பகம் வேங்கையோ டேற்றுபு
முனைவன் மேற்றுதி முற்றெடுத் தோதினான்.
பொருள் : சுனைய நீலமும் - சுனையிடத்தனவாகிய நீல மலரும்; சுள்ளியும் - மராமர மலரும்; சூழ்மலர் நனைய நாகமும் - சூழ்ந்த மலரின் தேனையுடைய நாகமலரும்; கோங்கமும் - கோங்கமலரும்; நாறு இணர்ச் சினைய சண்பகம் - மணமிகும் பூங்கொத்துக்களையும் கிளைகளையும் உடைய சண்பகமலரும்; வேங்கையோடு - வேங்கை மலருடன்; ஏற்றுபு - அருகன் திருவடியில் இட்டு; முனைவன்மேல் துதி முற்று எடுத்து ஓதினான் - அருகன்மேல் உள்ள வாழ்த்துக்களை முழுக்க எடுத்து வாழ்த்தினான்.
விளக்கம் : நாறிணர்க் கோங்கம் என இயைப்பர் நச்சினார்க்கினியர். முற்றெடுத்து என்பதற்கு மிடறுள்ள அளவும் எடுத்து என்றும் ஆம். ( 52)
1609. முனிமை முகடாய மூவா முதல்வன்
றனிமைத் தலைமை தனதுதா னென்ப
தனிமைத் தலைமை தனதுதா னென்றாற்
பனிமலர்தூய் நின்று பழிச்சாவா றென்னே.
பொருள் : முனிமை முகடுஆய - முனித்தன்மைக்கு மேலாகிய; தனிமைத் தலைமை - ஒப்பில்லாத முதன்மை; மூவா முதல்வன் தனது தான் என்ப - கெடாத முதல்வனுடையதே என்பர்; தனிமைத் தலைமை தனதுதான் என்றால் - அவ்வாறு கூறுதலால்; பனிமலர் தூய் நின்று பழிச்சா ஆறு என்னே! - அவனை உலகம் தண்மலர் இட்டு நின்று வாழ்த்தாதிருத்தல் என் கொல்? (அறியாமையே).
விளக்கம் : முனிமை - குணப் பண்பு. முனிமை - முனிவர் தன்மை. முகடு - உச்சி. ஈண்டு மேன்மை மேனின்றது. தனிமை - ஒப்பின்மை. பழிச்சுதல் - ஏத்துதல். ( 53 )
1610. மலரேந்து சேவடிய மாலென்ப மாலா
லலரேந்தி யஞ்சலிசெய் தஞ்சப் படுவா
னலரேந்தி யஞ்சலிசெய் தஞ்சப் படுமே
லிலரே மலரெனினு மேத்தாவா றென்னே.
பொருள் : மாலால் அலர் ஏந்தி அஞ்சப்படுவான் - இந்திரனால் மலர்தூவி வணங்கி மதிக்கப்படுவான்; மலர் ஏந்து சேவடியமால் என்ப - மலர்தான் ஏந்தின சிவந்த அடிகளையுடைய அருகன் என்பர்; அலர் ஏந்தி அஞ்சலி செய்து அஞ்சப்படுமேல் - அவ்வாறு அருகன் வணங்கி மதிக்கப் படுவானேல்; மலர் இலரெனினும் ஏத்தாவாறு என்னே! - உலகத்தார் மலர் இல்லாரெனினும் வாழ்த்தாதிருப்பது அறியாமையே அன்றோ!
விளக்கம் : பூமேனடந்தான் என்பதுபற்றி மலரேந்து சேவடியமால் என்ப என்றான். மால் ஈண்டு அருகன். மாலால் என்புழி மால் இந்திரன். அஞ்சலி செய்தல் - தொழுதல். மலர் இலர் எனினும் எனமாறுக. ( 54 )
1611. களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த
வளிசே ரறவாழி யண்ணலிவ னென்ப
ரளிசே ரறவாழி யண்ண லிவனேல்
விளியாக் குணத்துதிநாம் வித்தாவா றென்னே.
பொருள் : களிசேர்கணை உடைய காமனையும் காய்ந்த - களிப்பூட்டும் அம் பேந்திய காமனை வென்ற; அளிசேர் அறஆழி அண்ணல் இவன் என்பர் - அருள்பொருந்திய அறவாழியையுடைய தலைவன் இவனே என்பர்; அளிசேர் அறஆழி அண்ணல் இவனேல் - அத்தகைய அண்ணல் இவனெனின்; விளியாக் குணத்துதி நாம் வித்தாவாறு என்னே! - அப்பெருமானுடைய கெடாத பண்புகளைப் போற்றுதலை நாம் பரப்பாதிருப்பது அறியாமையே அன்றோ?
விளக்கம் : அரனும் அரியும் அயனும் இவனே என்பது கருத்து. செய்யுள்: தேவபாணிக் கொச்சக ஒருபோகு. காமனையும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. அறவாழி அண்ணல் அருகனுக்கு ஒரு பெயர். அறவாழி அந்தணன் என்பர் திருவள்ளுவனாரும். விளியா - அழியாத. ( 55 )
வேறு
1612. இன்னண மேத்தி யிறைவ னடிதொழு
தன்ன முறங்கு மணிவரை மேனின்று
பொன்னங் கழலா னிழிந்து பொழிமழை
மின்னி னடந்து மிகுசுரஞ் சென்றான்.
பொருள் : பொன் அம் கழலான் - பொற் கழலான்; இன்னணம் இறைவன் அடி ஏத்தித்தொழுது - இங்ஙனம் அருகன் அடியைப் போற்றி வணங்கி; அன்னம் உறங்கும் அணிவரைமேல் நின்று இழிந்து - அன்னங்கள் துயிலும் அழகிய மலைமேலிருந்து இறங்கி; பொழி மழை மின்னின் நடந்து - பெய்யும் முகிலிடை மின்போல விரைந்து நடந்து; மிகுசுரம் சென்றான் - பெருங் காட்டுவழியே சென்றான்.
விளக்கம் : மழை மின்னின் என்பது தூரகமனம் வல்லன் என்பதை உணர்த்துகிறது என்பர் நச்சினார்க்கினியர்.இறைவன் - அருகக்கடவுள். கழலான் - சீவகன., மின் விரைந்து செல்லுதற்குவமை. ( 56 )
1613. மாலைக் கதிர்வேன் மலங்க மணிமலர்க்
கோலை விடுக ணுருகு கொடியிடை
யேலங் கமழ்குழ லேழை யவரன்ன
வாலைக் கரும்பி னகநா டணைந்தான்.
பொருள் : மாலைக் கதிர்வேல் மலங்க - மாலை அணிந்த ஒளிவிடும் வேல் கெடுதலினால்; மணிமலர்க்கு ஓலை விடுகண் - நீல மலர்க்குப் போரோலை செலுத்தும் கண்ணினையும்; உருகு கொடியிடை - தேயும் கொடிபோன்ற இடையினையும்; ஏலம் கமழ்குழல் - மயிர்ச் சாந்து மணக்கும் கூந்தலையும்; ஏழையவர் அன்ன - மகளிரைப்போன்ற (ஐம்புலனும் நுகரும் பொருள்களையுடைய); ஆலைக் கரும்பின் அகநாடு அணைந்தான் - ஆலைகளிற் கரும்பு பிழியும் மருதநாட்டை அடைந்தான்.
விளக்கம் : அகநாடு - மருதநாடு. அகநாடு புக்கவர் அருப்பம் வெளவி (மதுரைக்.149) என்றார். வேல் தன் கண்ணுக்குத் தோற்று மலங்கலின் பகைபெறாது மலர்க்கு ஓலைவிடுதற்குக் காரணமான பேரழுகு படைத்ததன்கண் என்க. ஏலம் - மயிர்ச்சாந்து. ஏழையவர் அன்ன நாடு, ஆலைக் கரும்பின் அகநாடு எனத் தனித்தனி கூட்டுக. கண்டுகேட் டுண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலவின்பமும் தருதலால் நாட்டிற்கு மகளிர் உவமை என்க. ( 57 )
வேறு
1614. வாழைச்சறு சாடிமட் டயின்று மள்ளர்தாங்
கழைக்கரும் பெறிந்துகண் ணுடைக்கு மெந்திர
மழைக்குர லெனமயி லகவ வார்செந்நெற்
புழைக்கடைப் புனலலைத் தொழுகும் பொற்பிற்றே.
பொருள் : மள்ளர் - உழவர்; வழைச்சு அறு சாடி மட்டு அயின்று - இளமை அற்ற சாடியிலுள்ள கள்ளைப்பருகி; கழைக்கரும்பு எறிந்துகண் உடைக்கும் எந்திரம் - கழையாகிய கரும்பைக் குறுகத்தறித்துக் கொண்டு வந்து கணு பிளக்கும்படி ஆட்டும் ஆலைகளின் ஒலியை; மழைக்குரல் என மயில் அகவ - முகில் ஒலியென்று மயிர்கள் கூவ; வார் செந்நெல் புழைக்கடைப் புனல் அலைத்து ஒழுகும் பொற்பிற்று - நீண்ட நெல்வயலின் கடைமடையிலே நீரை அலைத்து (ஆலையில் வடியும் கருப்பஞ்சாறு) செல்லும் அழகினது அந் நாடு.
விளக்கம் : எந்திரம், ஒழுகும் என்று இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்திற் கேற்றின இடவாகுபெயர். வழைச்சு - இளந்தன்மை. மட்டு - கள். கழைக்கரும்பு - கரும்பினுள் ஒருவகை. கண் - கணு. கரும்பாலை முழக்கத்தை மயில்முகில் முழக்க மெனக் கருதி அகவும் என்பது கருத்து. ( 58 )
1615. தாமரை மலர்தலை யடுத்துத் தண்கமழ்
தூமலர்க் குவளைகா லணைத்துத் தோலடிக்
காமரு பெடைதழீஇ யன்னங் கண்படுந்
தேமலர்த் தடந்தழீஇத் திசைக்கண் மல்கின்றே.
பொருள் : தாமரை மலர்தலை அடுத்து - தாமரை மலரைத் தலையணையாக் கொண்டு; தண் கமழ் தூமலர்க் குவளை கால் அணைத்து - குளிர்ந்த மணங்கமழும் தூய மலராகிய குவளையைக் காலணையாகச் சேர்த்து; காமரு பெடை தழீஇ - விருப்பூட்டும் பெடையைத் தழுவி; தோல்அடி அன்னம் கண்படும் - தோலடிப் பறவையான அன்னம் துயில்கின்ற; தேமலர்த் தடம்தழீஇத் திசைக்கண் மல்கின்று - தேனையுடைய மலர்த்தடங்களைத் தழுவித் திசையெங்கும் நீர்மல்கியது அந்நாடு.
விளக்கம் : தலை அடுத்து, கால் அணைத்து என வரும் வினைச்சொற்களால் அணையாக என்னும் சொல் வருவிக்கப்படும். தோலடிபெடைக்கும் சேவற்கும் பொதுவினின்றது. ( 59 )
1616. கண்பயி லிளங்கமு கெருத்திற் காய்பாபுஇக்
கொண்டிள மந்திக ளெறியக் கோட்டிடைத்
திண்கனி முசுக்கலை சிதறுந் தேம்பொழின்
மண்டமர் கடந்தவன் மகிழ்வொ டேகினான்.
பொருள் : கண் பயில் இளங் கமுகு எருத்தின் காய்பெரீஇக் கொண்டு - தம்முடைய கண் பார்த்துப் பழகிய இளங்கமுகினிடமுள்ள காயை எடுத்துக்கொண்டு; இளமந்திகள் எறிய - இளமையான மந்திகள் எறிதலால் (அதற்குத் தோற்று); கோட்டிடைத்திண்கனி முசுக்கலை சிதறும் தேன் பொழில் - மரக்கிளைகளிலுள்ள திண்ணிய கனியை முசுவின் கலைகள் சிந்தும் இனிய பொழிலிலே; மண்டு அமர் கடந்தவன் மகிழ்வொடு ஏகினான் - பெரும் போரைவென்ற சீவகன் களிப்புடன் சென்றான்.
விளக்கம் : இஃது அந் நாட்டின் நகரைச் சூழ்ந்த பொழில். கண் - கணுவுமாம். பெரீஇக்கொண்டு - எடுத்துக்கொண்டு. பரிந்து என்பது பெரீஇ என அளபெடையாய் நின்றது. கடந்தவன் : சீவகன். ( 60 )
1617. களிறுமாய் கதிர்ச்செநெற் கழனி நாட்டிடை
யொளிறுவே னரபதி நகர மொய்யெனப்
பிளிறுவா ரிடிமுர சார்ப்பப் பெய்கழல்
வெளிறிலாக் கேள்வியான் விருப்பொ டெய்தினான்.
பொருள் : களிறுமாய் கதிர்ச் செநெல் கழனி நாட்டிடை - யானையை மறைக்கும் கதிர்களையுடைய செந்நெல் நிறைந்த கழனி சூழ்ந்த நாட்டிலே; ஒளிறு வேல் நரபதி நகரம் - விளங்கும் வேலேந்திய மன்னன் வாழும் தலைநகரை; ஒய் எனப் பிளிறு வார் இடிமுரசு ஆர்ப்ப - விரைவாக ஒலிக்கும் பெரிய இடிபோல முரசம் ஆர்ப்ப; பெய்கழல் வெளிறு இலாக் கேள்வியான் - கட்டிய கழலையுடைய தெளிவான கேள்வியையுடைய சீவகன்; விருப்பொடு எய்தினான் - மகிழ்வோடு சென்றான்.
விளக்கம் : மாய்த்தல் - மறைத்தல். களிறும் எனற்பாலதாகிய சிறப்பும்மை தொக்கது. ஒளிறுதல் - விளங்குதல். ( 61 )
1618. புறநகர் மணமக னொருவன் போதர்வா
னிறைமகன் வினாயினா னென்ன பேரவே
துறைவளர் நாட்டொடு நகரஞ் சொல்லென
வறிகவென் றலரிவாய் கமழக் கூறினான்.
பொருள் : புறநகர் மணமகன் ஒருவன் போதர்வான் - புறநகரிடத்தே மணமகனாக ஒருவன் வந்தவனை; துறைவளர் நாட்டொடு நகரம் என்ன பேரவே சொல்என இறைமகன் வினாயினான் - பல துறைகளிலும் மேம்பட்டுள்ள இந்நாடும் நகரமும் என்ன பெயருடையன சொல்வாயாக என்று சீவகன் வினாவினான்; அறிக என்று அலரி வாய் கமழக் கூறினான்- அறிந்து கொள்க என்று மணங்கமழும் வாய்மணக்க அவன் உரைத்தான்.
விளக்கம் : புறநகர் - நகர்ப்புறம் என்பதன் முன்பின்னாக மாறித்தொக்க தொகை. மணக்கோலத்தோடு வந்த ஒருவனை என்பது கருத்து. போதருவான் - போதர்வான் என உகரந்தொக்கு நின்றது. இறைமகன் என்றது சீவகனை. அலரிவாய் கமழக் கூறினான் என்பது முகத்தான் அமர்ந்து இனிது நோக்கிக் கூறினான் என அவன் அன்புடைமையை உணர்த்தி நின்றது. ( 62 )
1619. மத்திம தேசமா நாடு மற்றிநாட்
டெத்திசை நிதியமு மிறைகொண் டில்லவர்க்
குய்த்துமூர் கொடுப்பவ ரேம மாபுர
மித்திசைக் கையநீ புதியை போன்மென.
பொருள் : நாடு மத்திம தேசம் ஆம் - இந்நாடு மத்திம நாடு ஆகும்; இந்நாட்டு எத்திசை நிதியமும் இறைகொண்டு - இந்நாட்டிலே எத் திக்கினும் உள்ள செல்வமும் தங்குதலால்; இல்லவர்க்கு உய்த்தும் கொடுப்பவர் ஊர் ஏமமாபுரம் - வறியவர்க்குக் கொண்டு சென்றும் கொடுப்பவர் இருக்கும் ஊர் ஏமமாபுரம் ஆகும்; ஐய! நீ இத்திசைக்குப் புதியை போன்ம் என - ஐயனே! நீ இப் பக்கத்திற்குப் புதியை போலும் என்றுரைக்க.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். போன்ம் : போலும் என்பதன் திரிபு. ஈற்றுமிசை உகரம் கெட்டது (தொல் - வினை. 41.)நாடு என்புழிச் சுட்டுச்சொல் தொக்கது. நாடு மத்திமதேசமாம் என மாறுக. இறைகொள்ளல் - தங்கிக்கிடத்தல். இறைகொண்டு என்பதனை இறைகொள எனச் செயவெனெச்சமாகக் கொள்க. இல்லவர் - வறியார். உய்த்தும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. ஊர் ஏமமாபுரம் என ஒட்டுக. ( 63 )
1620. அன்னதே யென்றலி னடிசிற் காலமா
லென்னொடு பேசினாய் தவிர்மற் றீங்கெனப்
பொன்னகர்ப் புக்கபி னறிவல் போகென்றான்
வின்மாபுஇ வாங்கிய வீங்கு தோளினான்.
பொருள் : அன்னதே என்றலின் - (அதற்கு) சீவகன் அங்ஙனம் புதியனேன் என்றுரைக்க; அடிசில் காலம், என்னொடும் பேசினாய் - (அவன்) இஃது உணவுக்குரிய காலம், என்னுடனே தான் உரையாடினாய் (ஆதலால்); ஈங்கு தவிர் என - இவ்விடத்தே தங்குக என்றுரைக்க; பொன் நகர்ப் புக்கபின் அறிவல் - அழகிய நகரிலே புகுந்தபின் நின்னைப் பார்ப்பேன்; போக என்றான் வில் மெரீஇ வாங்கிய வீங்கு தோளினான் - (இப்போது) செல்க என்றுவில் பயின்று வளைத்த பருத்த தோளையுடையான் கூறினான்.
விளக்கம் : அறிவல் : மறுத்தற் பொருளதாய் விடை பயந்தது. அன்னதே என்றது ஆம் யான் புதியனே என்றபடி. அடிசிற்காலம் - உண்ணுங்காலம். என்னொடு பேசினாய் என்பது நீ புகாக்காலைப் புக்கெதிர்ப் பட்டனையாகலின் நின்னை விருந்தினனாக ஏற்றுக்கோடல் என் கடமையாம் என்பதுபட நின்றது. போகு - போவேன் எனினுமாம். தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று. ( 64 )
1621. புணர்மருப்பி யானையின் புயல்கொண் மும்மத
மணமகள் கதுப்பென நாறு மாநகர்த்
துணைமலர்க் கண்ணியுஞ் செம்பொன் மாலையு
மிணைமலர்த் தாரினா னிடறி யேகினான்.
பொருள் : புணர் மருப்பு யானையின் புயல்கொள் மும்மதம் - இணை மருப்புக்களையுடைய யானையின் முகில் பொழிதலைப் போன்ற மும்மதம்; மணமகள் கதுப்பு என நாறும் மாநகர் - மணப்பெண்ணின் கூந்தலைப்போல மணக்கும் பெரிய நகரிலே; துணைமலர்க் கண்ணியும் செம்பொன் மாலையும் இடறி - கட்டப்பட்ட மலர்க் கண்ணியையும் பொன் மாலையையும் இடறியவாறு; இணைமலர்த் தாரினான் ஏகினான் - இணைத்த மலர் மாலையானாகிய சீவகன் சென்றான்.
விளக்கம் : இடறி : நிகழ்காலம் உணர்த்தியது. புணர்மருப்பு : வினைத்தொகை. கதுப்பு - கூந்தல். துணைமலர் : வினைத்தொகை. கண்ணி - ஒருவகை மாலை. ( 65 )
1622. வண்டுகொப் புளித்துணு மாலை மார்பனைக்
கண்டுவப் பளித்தவர் கடைக்க ணேக்கற
மண்டபப் பளிக்கறை மருங்கொர் மாநிழல்
கொண்டவற் களித்ததோர் குளிர்கொள் பொய்கையே.
விளக்கம் : வண்டு கொப்புளித்து உணும் மாலை மார்பனை - வண்டுகள் தேனைக் கொப்புளித்துப் பருகும் மாலையணிந்த மார்பனை; கண்டு உவப்பு அளித்தவர் கடைக்கண் ஏக்கற - பார்த்து மனத்திற்கு மகிழ்ச்சியளித்த மகளிரின் அக் கடைக் கண்கள் பின்பு அவனைக் காணாமையின் இளைத்து இடைய; மண்டபப் பளிக்கறை மருங்குஓர் மாநிழல் - மண்டபம்போலும் பள்ளிக்கறையின் அருகிலே ஒரு மாமர நிழலை; கொண்டு அவற்கு ஓர் குளிர்கொள் பொய்கை அளித்தது - இடமாகக்கொண்டு இருக்கை சீவகனுக்கு ஒரு தண்மைகொண்ட பொய்கை கொடுத்தது.
விளக்கம் : உவப்பளித்தவர் - மகிழ்ச்சியளிக்கப்பட்ட மகளிர். ஏக்கறுதல் - ஆசையாற்றாழ்தல். மண்டபமாகிய பளிக்கறை எனினுமாம். மா - மாமரம் சீவகன் தெருவினூடே சென்று ஒரு பொய்கைக்கரையின் கண் மரநிழலிலிருந்தான் என்பது கருத்து. ( 66 )
வேறு
1623. வண்சிறைப் பவளச் செவ்வாய்ப்
பெடையன்ன மடமை கூரத்
தண்கய நீருட் கண்ட
தன்னிழல் பிறிதென் றெண்ணிக்
கண்டனங் கள்வ மற்றுன்
காதலி தன்னை நீர்க்கீழ்ப்
பண்டைய மல்லம் வேண்டா
படுக்வென் றூடிற் றன்றே.
பொருள் : வண் சிறைப்பவளச் செவ்வாய்ப் பெடை அன்னம் - வளவிய சிறையினையும் பவளம்போலச் சிவந்த வாயினையும் உடைய பெட்டை அன்னம்; மடமைகூர - அறியாமை மிகுதலாலே; தண்கய நீருள் கண்ட தன் நிழல் பிறிது என்று எண்ணி - குளிர்ந்த குளத்தின் நீரிலே காணப்பட்ட தன்நிழலை வேறொரு பெடையன்னம் என்று கருதி; கள்வ! உன் காதலி தன்னை நீர்க் கீழ்க் கண்டனம் - கள்வனே! நின் காதலியை நீரின் கீழே பார்த்தோம்; பண்டையம் அல்லம் - இனி, முன் போல் தேற்றத் தேறோம் : படுக்கவேண்டா என்று ஊடிற்று - அகப்படுத்தல் வேண்டா என்று ஊடியது.
விளக்கம் : மடமை - அறியாமை. கூர்தல் - மிகுதல். பிறிது - மற்றொரு பெடை. படுத்தல் - அகப்படுத்தல். இச் செய்யுளோடு,
மண்ணு மணியன்ன ஒண்ணிறத் தெண்ணீர்த்
தண்ணிழற் கண்டே என்னிழல் என்னும்
நுண்மதி நுணுகாப் பெண்மதி பெருக
வேகவூடல் அவள் வயின் (1 : 40 - 318 - 40)
எனவரும் பெருங்கதையினை ஒப்புக் காண்க. ( 67 )
1624. செயிர்ப்பொடு சிவந்து நோக்கிச் சேவலி னகலச் சேவ
லயிர்ப்பதெ னின்னை யல்லா லறியலே னன்றி மூக்கி
னுயிர்ப்பதுன் பணியி னாலே யூடனீ யென்று பல்காற்
பயிர்ப்பறச் சிறகாற் புல்லிப் பணிந்துபாண் செய்த தன்றே.
பொருள் : செயிர்ப்பொடு சிவந்து நோக்கிச் சேவலின் அகல - (இவ்வாறு ஊடிய பேடை) குற்றத்துடன் சினந்து பார்த்துச் சேவலைவிட்டு நீங்க; சேவல் - (அதனை அறிந்த) சேவல்; அயிர்ப்பது என்? - என்னை ஐயுறுவது ஏன்?; நின்னை அல்லால் அறியலேன் - யான் நின்னை அன்றிவேறொன்றறியேன்; அன்றி மூக்கின் உயிர்ப்பது உன் பணியினாலே - அதுவும் அன்றி நான் மூக்கினாலே மூச்சுவிடுவதும் உன் ஏவலாலே யாம்; நீ ஊடல் என்று - (ஆதலின்) நீ ஊடாதே என்றுரைத்து; பயிர்ப்பு அறச் சிறகாற் பல்கால் புல்லி - அருவருப்பு நீங்கச் சிறகினாற் பலமுறை தழுவி; பணிந்து பாண் செய்தது - வணங்கித் தாழ்ச்சி செய்தது.
விளக்கம் : செயிர்ப்பு - குற்றம். சிவந்து - வெகுண்டு. அயிர்த்தல் - ஐயுறுதல். மூக்கின் உயிர்ப்பது - மூக்காலே மூச்சு விடுதலும். சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ஊடல் - ஊடாதேகொள். ( 68 )
1625. கலையுணர் மகளிர் நெஞ்சிற்
காமத்திற் கனிந்த வூட
னிலையுணர் மைந்தர் நீக்கி
நெறியினாற் புணர்ந்த தொப்ப
வலர்மிசைப் பெடையி னூட
லன்புகொள் சேவ னீக்கிக்
குலவிய புணர்ச்சி நோக்கிக்
குன்றனான் சிந்திக் கின்றான்.
பொருள் : கலை உணர் மகளிர் நெஞ்சில் காமத்தின் கனிந்த ஊடல் - கலையுணர்ந்த பெண்களின் உள்ளத்திலே ஆசையினாலே கனிவுற்ற ஊடலை; நிலைஉணர் மைந்தர் நீக்கி - நீக்கும் முறை அறிந்த மைந்தர்கள் நீக்கி; நெறியினால் புணர்ந்தது ஒப்ப - நெறியறிந்து கூடியதுபோல; அலர்மிசைப் பெடையின் ஊடல் அன்பு கொள் சேவல் நீக்கி - மலரின்மேல் அமர்ந்த பெடையின் பிணக்கை அன்புடைய சேவல் தணித்து; குலவிய புணர்ச்சி நோக்கி - தங்கிய புணர்ச்சியைப் பார்த்து; குன்றனான் சிந்திக்கின்றான் - முன்னர் மலையெனச் சலியாமல் இருந்தவன் நினைக்கின்றான்.
விளக்கம் : கலை : மகளிர்க்குரியவாக மணிமேகலையில் (2 : 18 - 32). கூறிய கலைகள்; கலவிக்குரிய கரணமும் ஆம்.அன்னங்களின் செயல்கள் சீவகனுக்கு இந் நினைவுகளை உண்டாக்கின என்பது கருத்து. ( 69 )
1626. தன்னையான் முகத்தை நோக்கிற்
றான்முலை முகத்தை நோக்கும்
பின்னையான் பலவும் பேசிற்
றானொன்று மிழற்றும் பைம்பூட்
பொன்னவாஞ் சுணங்கு போர்த்த
பொங்கிள முலையி னாளென்
முன்னையாள் போன்று தத்தை
முகத்துளே தோன்று கின்றாள்.
பொருள் : தன்னை யான் முகத்தை நோக்கின் - யான் அவளூடலை நீக்க அவள் முகத்தை நோக்கினால்; தான் முலை முகத்தை நோக்கும் - (எதிர்நோக்கின் ஊடல் நீங்கும் என்று அஞ்சி) அவள் இறைஞ்சி நிற்பாள்; பின்னை யான் பலவும் பேசின் - பின்னர், யான் ஊடல் தீரப் பலவும் பகர்ந்தால்; தான் ஒன்று மிழற்றும் - அவற்றைக் கேளாள்போல அவள் வேறொரு மொழியை மெல்ல மிழற்றுவாள்; பைம்பூண் பொன் அவாம் சுணங்கு போர்த்த பொங்கு இளமுலையினாள் தத்தை - புத்தணிகள் அணிந்த, பொன்போன்ற தேமல் படர்ந்த இன்பம் பொங்கும் இளமுலையாளாகிய தத்தை; என் முன்னையாள் போன்று முகத்துளே தோன்றுகின்றாள் - என் முன்னிருப்பவள் போல என் முகத்திலே காட்சியளிக்கிறாள்.
விளக்கம் : அவாம் - விரும்பும் : ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டது (தொல் - வினை - 41) முன்னையாள் போன்று என்பதற்கு முன்னர் ஊடினாள் போலவே என்றும் ஆம். குணமாலையால் தத்தைக்கு ஊடல் தீர்த்ததை நினைத்தான் என்பர் நச்சினார்க்கினியர். ஊடலும் கூடலும் எப்போதும் நிகழ்பவாதலின் அதனையே கூறினாரெனல் பொருந்தாது. ( 70 )
1627. பரிவுற் றாற்பய னின்றியும் பாவைமார்
முரிவுற் றார்களின் மூர்ச்சனை செய்பவாற்
பிரிவிற் றோன்றிய பேரன் பெனப்படு
மெரியின் மூழ்கி யிறந்து படுங்கொலோ.
பொருள் : பாவைமார் பரிவு உற்றால் பயனின்றியும் - பெண்கள் அன்புற்றால் ஒரு பயன் இன்றியும்; முரிவு உற்றார்களின் மூர்ச்சனை செய்ப - வருத்தம் உற்றார்போல நெட்டுயிர்ப்புக் கொள்வார்கள்; பிரிவில் தோன்றிய பேரன்பு எனப்படும் எரியின் - அப் பிரிவினாலே தோன்றிய மிகுந்த அன்பு என்னும் நெருப்பிலே; மூழ்கி இறந்து படுங்கொலோ? - அழுந்தி இறந்து படுவாளோ?
விளக்கம் : அன்புற்றால், இவ்வாறு பிறமகளிரிடமும் இருப்பான் என்று கருதுதல் பரிவு. பாவைமார் எனப் பொதுவாகக் கூறியவன் தத்தையை எண்ணி, இறந்துபடுமோ? என்றான். கொல் : ஐயம்.பாவைமார் - உவமவாகுபெயர். பரிவு - அன்பு. முரிவு - வருத்தம். மூர்ச்சனை - நெட்டுயிர்ப்பு. ( 71 )
1628. வாளி யம்பன வாட்டங் கண்ணிதன்
றோளு மென்முலைப் பாரமுந் தொன்னல
நாளு நாளினு நைந்துநைந் துள்சுடப்
பூளை மெல்லணை மேற்புற ளுங்கொலோ.
பொருள் : வாளி அம்புஅன வாள் தடம் கண்ணி - அலகுடைய அம்புபோன்ற ஒளி பொருந்திய பெருங் கண்ணாள்; தன் தோளும் மென்முலைப் பாரமும் தொல்நலம் - தன்னுடைய தோளும் மென்மையான முலைப்பாரமும் தன் பழைமையான அழகு; நாளும் நாளினும் நைந்துநைந்து உள்சுட - ஒவ்வொரு நாளும் கெட்டுக் கெட்டு உள்ளம் வெதும்ப; பூளை மெல் அணைமேல் புரளுங்கொலோ? - பூளை மலர் முதலியவற்றாற் சமைத்த மெல்லிய அணையின் மேற் புரள்வாளோ?
விளக்கம் : வாளியம்பு - அலகம்பு. பூளை மெல்லணை என்றது பூளைப்பூ முதலியவற்றாற் சமைத்த அணை என்றவாறு. முன்பு என்றோளாகிய அணைமேல் துயின்றாள். இப்பொழுது தீயாகிய அணையிலே புரளுமோ என்றான் என்க. ( 72 )
1629. உருகி வாடியென் னுற்றது கொல்லெனக்
கருகி வாடிய காமரு கோதை
னிருக ணீரு மிடைமுலை பாய்ந்துகக்
குருகு பாய்தட மாகவ ழுங்கொலோ.
பொருள் : என் உற்றது கொல்என உருகி வாடி - (யான் போந்த பின்பு) எனக்கு யாது நேர்ந்ததோ என்று உருகி வாடுதலாலே; கருகி வாடிய காமரு கோதை தன் இருகண் நீரும் முலை இடை பாய்ந்து உக - கரிந்த மெலிந்த விருப்பூட்டும் மாலைபோல்வாள் தன் இருகண்களிலிருந்து வரும் நீரும் முலைகளினிடையே வடிந்துவீழ; குருகுபாய் தடம் ஆக அழும் கொலோ? - நாரைகள் பொருந்திய குளமாக அழுமோ?
விளக்கம் : கருங்கால் வெண் குருகு மேயும், பெருங்குள மாயிற்றென் இடைமுலை நிறைந்தே ( குறுந் - 325) என்றார் பிறரும். காமருகோதை - காந்தருவதத்தை. குருகு - நாரை. தடம் - குளம கொல் : ஐயமுணர்த்தியது. ஓர் : அசை. ( 73 )
1630. வண்டு வாழ்பயில் கோதை மணமுதற்
கண்ட ஞான்றுதன் கண்ணெனுங் கைகளா
னொண்டு கொண்டு பருகிய நோக்கமொன்
றுண்டெ னாவி யுருக்கி யிடுவதே.
பொருள் : வண்டு வாழ் பயில் கோதை - வண்டு வாழ்ந்து பயிலும் கோதையாள்; மணம் முதல் கண்ட ஞான்று - கூட்டத்திற்கு முன்னே கண்ட அன்று; தன் கண் எனும் கைகளால் - தன்னுடைய கண்கள் என்னும் கைகளாலே; நொண்டு கொண்டு பருகிய நோக்கம் ஒன்று உண்டு - முகந்துகொண்டு பருகிய பார்வை ஒன்று உண்டு; என் ஆவி உருக்கியிடுவது - அப்பார்வை என் உயிரை இப்போதும் உருக்கா நின்றது.
விளக்கம் : இந்நோக்கம் அவளுடைய இயற்கை நோக்கமே அன்றித் தலைநாள் தோன்றியவாறும் தோன்றிய தன்மையுங் கூறிற்று. கோதை என்பது கோதையையுடையாள் என்று காந்தருவதத்தையை யுணர்த்தியது. கோதை - கூந்தல்; பயில் கோதை; வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழி. நொண்டு கொண்டு - முகந்து கொண்டு. ( 74 )
1631. காத லாளுட லுள்ளுயிர் கைவிடி
னேத மென்னுயி ரய்தி யிறக்குமற்
றாத லாலழி வொன்றில ளல்லதூஉ
மாதர் விஞ்சையும் வல்லளு மல்லளோ.
பொருள் : காதலாள் உயிர் உடலுள் கைவிடின் - (யாங்கள் இருதலைப் பறவையேபோல் ஓருயிரேம் ஆதலின்) காதலையுடைய தத்தையின் உயிர் உடலில் நீங்கின்; என் உயிர் ஏதம் எய்தி இறக்கும் - என் உயிரும் துன்பம் அடைந்து நீங்கும்; ஆதலால் அழிவு ஒன்றிலள்- என்னுயிர் நீங்காமையின் அவளும் அழிவைப் பொருந்திலள்; அல்லதூஉம் மாதர் விஞ்சையின் வல்லளும் அல்லளோ! - அல்லாமலும், அவள் விஞ்சையினும் வல்லவள் அல்லளோ?
விளக்கம் : தன் பிரிவால் அவள் வருந்தி யிறந்து படுவாளோ என்று ஐயுற்றவன் தாம் காதலால் ஓருயிரும் ஈருடலுமாக ஒன்றியிருத்தலை நினைந்து தானிறவாமையின் அவளும் இறந்திராள் என்று சிறிது ஐயம் நீங்கினான். மற்றும் விஞ்சை வல்லவளாதலின் பன்னிருதிங்கள் மறைவையும் பிறவற்றையும் உணர்ந்து ஆற்றுவளென்றெண்ணினான். அல்லதூஉம் என்றது, முன் வருந்துவளோ என்றதனையும் உணர்த்தியது. அவட்கு வருத்த மில்லாமையை அவள், பின்னர் வரவிடும் ஓலையானும், இவன் சென்ற காலத்துக் குணமாலையிடத்தே போம் என்றதனானும் உணர்க. ( 75 )
1632. காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா
வாதல் கண்ணகத் தஞ்சனம் போலுமாற்
றாது துற்றுபு தங்கிய வண்டனார்க்
கேத மிற்றென வெண்ணுமென் னெஞ்சரோ.
பொருள் : தாது துற்றுபு தங்கிய வண்டனார்க்கு - தேனைப் பருகிக்கொண்டு அதிலே தங்கிய வண்டை ஒக்கும் தலைவர்க்கு; ஏதம் இற்றுஎன என் நெஞ்சம் எண்ணும் - காதலால் வரும் துன்பம் இவ்வாறு பெருகக் கூடியதாய் இருந்தது என்று இகழ்ந்து அறிவுடையோர் கூறுமாறு என் நெஞ்சு எண்ணும்; காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா ஆதல் - (இங்ஙனம் எண்ணும்படி) காதல் மிக்கவிடத்துக் கற்ற கல்வியும் கைகொடா தனவாய் நீங்குதல்; கண்ணகத்து அஞ்சனம் போலும் - கண்ணுட் கிடந்த மையானது கண்ணுக்குப் பயன்படா தவாறு போலும்.
விளக்கம் : கற்றவும் என்ற உயர்வு சிறப்பும்மை துன்பம் நீங்குதற்குக் கற்ற கல்வி யென்பதனை உணர்த்தியது. பவதத்தனுடைய காதல் வருத்தம் நீங்க அறிவுரை கூறியவன் தான் காதலால் வருந்துவதை யெண்ணிக், கற்றவுங் கைகொடா வாதல் கண்ணகத் தஞ்சனம் போலும் என்றான். மற்றும் சச்சந்தனை யெண்ணியும் இது கூறினான் என்க. இனி, இற்றென என் நெஞ்செண்ணும். இது வண்டனார்க்கு ஏதம் என்றுமாம்; இற்று என்றது முற்கூறிய வருத்தத்தை. வண்டன்னார் - உத்தமர். இனி, வண்டன்னார் தபோதனர்; பிரமராசனராதலின், அப் பெயராயிற்று. அவர்க்கே வருத்தம் இல்லாததென்று எண்ணும் என்றுமாம். இன்று - இற்றென விகாரம்; - இவ்வாறு நச்சினார்க்கினியர் அகலங் கூறுவர். ( 76 )
1633. நறவெங் கோதையர் நன்னலங் காதலான்
மறவெங் காமத்து வந்துற்ற தீவினைப்
பறவைத் தோ?நர கத்துப் பதைக்குங்கா
லறிவ னல்லதங் கார்சர ணாகுவார்.
பொருள் : நற வெம் கோதையர் நல் நலம் காதலான் - தேனையுடைய விருப்பூட்டுங் கோதையரின் நல்ல நலத்தில் உள்ள காதலினாலும்; மறவெம் காமத்தும் - பாவத்தொழிலாகிய அவரைப் புணருங் காமத்தாலும்; வந்துற்ற தீவினைப் பறவைத் தேர் நரகத்துப் பதைக்குங்கால் - வந்து சேர்ந்த தீவினையாகிய பறக்குந் தேரிலே போய் நரகத்திலே பதைக்கும்போது; அறிவன் அல்லது அங்கு சரண் ஆகுவார் ஆர்? - அருகனையல்லாமல் அவ்விடத்தே புகலாவார் இல்லையே? (ஆதலின் ஈண்டு அவனே சரண்).
விளக்கம் : நறா - நற என ஈற்றாகாரம் குறுகிநின்றது. மறவெங்காமம் பாவத்தையுடைய வெவ்விய காமம். பறவைத்தேர் - பறத்தற்றொழிலையுடைய தேர். அறிவன் - அருகன். சரண் - புகலிடம். ( 77 )
1634. வேட்கை யூர்தர விம்முற வெய்திய
மாட்சி யுள்ளத்தை மாற்றி மலர்மிடை
காட்சிக் கின்பொய்கைக் காமார் நலனுண்டு
மீட்டு மங்கிருந் தான்விடை யேறனான்.
பொருள் : வேட்கை ஊர்தர - வேட்கை மேலிடுதலாலே; விம்முதல் எய்திய - வருத்தம் உற்ற; மாட்சி உள்ளத்தை மாற்றி - மாய்தலையுடைய உள்ளத்தைக் கெடுத்து; மலர்மிடை காட்சிக்கு இன் பொய்கை - மலர்கள் நெருங்கிய பார்வைக்கினிய அப் பொய்கையின்; காமர் நலன் உண்டு - விருப்பூட்டும் அழகைப் பருகியவாறு; மீட்டும் அங்கு விடை ஏறனான் இருந்தான் - பின்னரும் அங்கே விடைகளிற் சிறந்த விடைபோன்றவன் தங்கியிருந்தான்.
விளக்கம் : வருத்தத்திற்குக் காரணமாகின்ற இடத்து இருத்தல் அருமை தோன்ற, மீட்டும் என்றார். ( 78 )
வேறு
1635. நேரார் நேரு நீணிதி துஞ்சுந் நிறைகோயி
லாரா வெம்போ ராய்தட மித்த னரசற்கு
நாரார் கற்பின் னாகிள வேய்த்தோ ணளினைக்குஞ்
சீராற் றோன்றிச் செல்வமொ டெல்லாந் திருத்தக்கான்.
பொருள் : நேரார் நேரும் நீள்நிதி துஞ்சும் நிறை கோயில் - பகைவர் திறையாக நல்கும் மிகு செல்வம் தங்கிய, யாவும் நிறைந்த கோயிலையுடைய; ஆரா வெம்போர் ஆய் தடமித்தன் அரசற்கும் - அமையாத கொடும் போரை ஆராயும் தடமித்தன் என்னும் மன்னனுக்கும்; நாரார் கற்பின் நாகுஇள வேய்த்தோள் நளினைக்கும் - அன்பு நிறைந்த கற்பினையும் மிகவும் இளமை பொருந்திய வேயனைய தோளையுமுடைய நளினை யென்பாளுக்கும்; சீரால் தோன்றிச் செல்வமொடு எல்லாம் திருத்தக்கான் - தலைமையோடு பிறந்து செல்வத்துடன் கல்வி முதலிய எல்லாம் அழகுறப் பொருந்தியவன்;
விளக்கம் : அடுத்த செய்யுளும் இதுவும் ஒரு தொடர்.
நேரார் - பகைவர். நேர்தல் - திறையாகத் தருதல். நிதிதுஞ்சுங் கோயில். நிறைகோயில் எனத் தனித்தனி கூட்டுக. ஆய்தடமித்தன் : வினைத்தொகை. தடமித்தன் என்னும் அரசற்கும் என்க. நார்-அன்பு. வினைத்தொகை. தடமித்தன் என்னும் அரசற்கும் என்க. நார் - அன்பு. நாகிளமை : ஒருபொருட் பன்மொழி. நளினை - தடமித்தன் மனைவி. ( 79 )
1636. விண்டார்த் தேய்க்கும் வெம்பரி
மான்றேர் விசயன்னென்
றுண்டா நின்றான் றன்புக
ழூழி யுலகேத்த
வண்டார் சோலை வார்மண
நாறப் புகுகின்றான்
கண்டான் சேர்ந்தான் காளையைக்
கல்விக் கடலானே.
பொருள் : விண்டார் தேய்க்கும் வெம் பரிமான் தேர் விசயன் என்று - பகைவரை அழிக்கும் கொடிய குதிரை பூண்ட தேரையுடைய விசயன் என்று; தன் புகழ் ஊழி உலகு ஏத்த உண்டா நின்றான் - தன் புகழை ஊழிக்காலம் வரை உலகு புகழ நிலைபெற்றவன்; வண்டு ஆர் சோலைவார் மணம் நாறப் புகுகின்றான் - வண்டுகள் நிறைந்த பொழிலிலே மிகுமணம் கமழ்தலால் நுழைகின்றபோது; கல்விக் கடலான் காளையைக் கண்டான் சேர்ந்தான் - கல்விக் கடலானாகச் சீவகனைக் குறிப்பாற் கண்டு அருகிற் சென்றான்.
விளக்கம் : புகுகின்றான், கண்டான் : முற்றெச்சங்கள். விண்டார் - பகைவர். உண்டாக என்பது உண்டா என ஈறு தொக்கு நின்றது. ஊழி உலகு ஏத்த உண்டாநின்றான் என மாறுக. காளை - சீவகன். கல்விக்கடலான் காளை என மாறுக. ( 80 )
1637. இந்நாட் டிவ்வூ ரிவ்விட
மெய்தா ரிவண்வாழ்வா
ரெந்நாட் டெவ்வூ ரெப்பெய
ராய்நீ யுரையென்றாற்
கந்நாட் டவ்வூ ரப்பெய
ரல்லாப் பெயர்சொன்னான்
பொய்ந்நாட் டேனும் பொய்யல
வாற்றாற் புகழ்வெய் யோன்.
பொருள் : இந்நாட்டு இவ்வூர் இவண் வாழ்வார் இவ்விடம் எய்தார் - இந்நாட்டிலே இவ்வூரிலே இப்பக்கத்தில்லே வாழ்கின்றவர் இங்கு வரமாட்டார்கள்; நீ எந்நாட்டு எவ்வூர் எப்பெயராய் உரை என்றாற்கு - நீ எந்த நாட்டிலே எவ்வூரிலே எப்பெயருடன் இருக்கின்றனை எனக் கூறு என்ற விசயனைப் பார்த்து; அந்நாட்டு அவ்வூர் அப்பெயர் அல்லாப் பெயர் - தன் நாடும் தன் ஊரும் தன் பெயரும் அல்லாத பெயர்களை; பொய்ந் நாட்டேனும் பொய்யல ஆற்றால் புகழ் வெய்யோன் சொன்னான் - தான் கூறிய நாடு முதலியவை பொய்யாக நாட்டிக் கொள்ளப்பட்டனவாயினும் பொருளாற் பொய்யல்லாததொரு வழியாலே புகழை விரும்பினோன் புகன்றான.
விளக்கம் : இவ்வாறு கூறியதனால் மறைந்தொழுகுதல் பெற்றாம்.இந்நாட்டிவ்வூர் இவ்விடம் இவண் வாழ்வார் எய்தார் என்னும் அளவும் விசயன் உட்கோள். எனவே, ஆகவே இவன் இவ்விடத்தான் அல்லன் என்று நினைத்து என்பது எச்சப்பொருள். பொய்ந்நாட்டு - பொய்யாக நாட்டிக்கொள்ளப்பட்டது. ( 81 )
1638. வாமான் றிண்டேர் வள்ளலு முள்ளம் மிகைகொண்டெங்
கோமாற் குய்ப்பன் கொள்பயன் மிக்கான் கொலைவேலா
னேமா றில்லா விந்திர னேயும் மிவனொவ்வான்
போமா றாய்வென் பொற்பொடு கூடும் வகையென்றான்.
பொருள் : ஏ மாறு இல்லா இந்திர னேயும் இவன் ஒவ்வான் - அம்பு எய்தலில் எதிரில்லாத இந்திர னெனினும் இவனை ஒவ்வான்; கொலைவேலான் கொள்பயன் மிக்கான் - கொலை வேலையுடைய இவன் நம்மாற் கொள்ளப்படும் பயன் மிகுந்தவன் என்று; வாமான் திண்தேர் வள்ளலும் உள்ளம் மிகை கொண்டு - தாவும் பரிபூட்டிய திண்ணிய தேரையுடைய விசயனும் உள்ளத்திலே தன் அறிவின் மிகையாலே கொண்டு, எம் கோமாற்கு உய்ப்பன் - எம் அரசனிடத்திலே இவன் உள்ளத்தைச் செலுத்துவேன்; பொற்பொடு கூடும் வகை போமாறு ஆய்வென் என்றான் - அவ்வாறு அழகுறக் கூடும் வகையிலே இவன் நெஞ்சு செல்லும் வழியை ஆராய்வேன் என்றெண்ணினான்.
விளக்கம் : வாமான் - குதிரை. வள்ளல் - ஈண்டு விசயன். உள்ளம் - அறிவு. கோமான் : தடமித்தன். ஏ - எய்யுந்தொழில். உய்ப்பன் - செலுத்துவேன். ( 82 )
1639. பூங்கழ லானைப் புண்ணிய நம்பி முகநோக்கி
யீங்கிது நின்னா டிப்பதி நின்னூ ரிதுநின்னில்
வீங்கிய திண்டோள் வெல்புக ழாய்நின் கிளையென்றாற்
காங்கது வெல்லா மண்ணலு நேர்ந்தாங் கமைகென்றான்.
பொருள் : புண்ணிய நம்பி பூங்கழலானை முகம் நோக்கி - விசயன் சீவகன் முகத்தைப் பார்த்து ; வீங்கிய திண்தோள் வெல்புகழாய்! - பருத்த திண்ணிய தோளையும் வெல்லும் புகழையும் உடையாய்!; ஈங்கு இது நின் நாடு இப்பதி நின் ஊர் இது நின் இல் - இங்ஙனம் நட்புக்கொண்டதனால் இந்நாடு, நினது நாடு இவ்வூர் நினது ஊர், எம்அரண்மனை நினது அரண்மனை; நின்கிளை என்றாற்கு - யாமெல்லாம் நின்னுறவினர் என்று கூறியவற்கு; ஆங்கு அது எல்லாம் அண்ணலும் நேர்ந்து - அவ்விடத்திற் கூறிய முகமனுரையின் பன்மையை யெல்லாம் சீவகனும் ஒப்புக்கொண்டு; ஆங்கு அமைக என்றான் - இனி இம் முகமனை யெல்லாம் மொழியற்க என்றான்.
விளக்கம் : பூங்கழலான் : சீவகன். இவனை எதிர்ப்படுதலின் விசயனைப் புண்ணிய நம்பி என்றார். ஈங்கு - இங்ஙனம் நட்புக்கொண்ட விடத்து என்பதுபட நின்றது. இது நின்னாடு - இந்நாடு நின்னாடு. பதி - ஊர். இது நின்னில் என்க. யாங்களெல்லாம் நின்கிளை என வருவித் தோதுக. அதுவெல்லாம் - எல்லாம் எஞ்சாப் பொருண்மைத்து கடலெல்லாம் வற்றிற்று என்புழிப்போல. ( 83 )
வேறு
1640. மன்னவன் சிறுவ னாங்கோர் மாங்கனி யுண்ண லுற்று
மின்னவிர் கணையிற் பல்காற் பிழைப்பெய்து மீண்டு நிற்பப்
பொன்னவிர் கழலி னானப் பொருசிலை கணையின் வாங்கி
யின்னமிர் தூறு கின்ற விருங்கனி யறவெய் திட்டான்.
பொருள் : மன்னவன் சிறுவன் ஆங்கு ஓர் மாங்கனி உண்ணல் உற்று - அரசன் மகனாகிய விசயன் அப்பொழிலிடையுள்ள ஒரு மாங்கனியை உண்ண விரும்பி; மின் அவிர் கணையின் பல்கால் பிழைப்ப எய்து மீண்டு நிற்ப - ஒளி விடும் அம்பினாலே பலமுறை குறி தவறுமாறு எய்து, மாங்கனி உண்ணும் நினைவை விடுத்து நிற்ப; பொன் அவிர் கழலினான் - பொன்னாற் செய்த விளங்கும் வீரகண்டை புனைந்தவன் ஆகிய சீவகன்; அப் பொருசிலை கணையின் வாங்கி - அப் போருக்குரிய வில்லை அம்புடன் வாங்கிக்கொண்டு; இன் அமிர்து ஊறுகின்ற இருங்கனி அற எய்திட்டான் - இனிய அமிர்தம் ஊற்றெடுக்கும் பெரிய கனியை விழுமாறு எய்தான்.
விளக்கம் : மன்னவன் சிறுவன் : விசயன். உண்ணல் உற்று - உண்ண விரும்பி. பிழைப்ப வெய்து எனற்பாலது பிழைப்பெய்து என நின்றது. கழலினான் : சீவகன். சிலை - வில். இருங்கனி - பெரிய பழம். ( 84 )
1641. எய்தவக் கணையு மாவி
னிருங்கனி யதுவும் பூமிக்
கெய்தவச் சிலையி னெல்லை
யணுகலு மேந்த னோக்கி
யெய்தவவ் விடத்து நின்றே
யெய்தவத் தடக்கை கொண்டாற்
கெய்தச்சென் றைய னாரத்
தழுவிக்கொண் டிதனைச் சொன்னான்.
பொருள் : எய்த அக் கணையும் மாவின் இருங்கனி யதுவும் - சீவகன் விடுத்த அந்த அம்பும் மாமரத்தில் உள்ள பெரியகனியும்; எய்த அச் சிலையின் எல்லை பூமிக்கு அணுகலும் - தான் அம்பை விடுத்த அவ் வில்லின் உயரத்திலே பூமிக்கண் அணுகின அளவிலே; ஏந்தல் நோக்கி - சீவகன் அதனைக் கண்டு; எய்த அவ்விடத்து நின்றே எய்த அத் தடக்கை கொண்டாற்கு - அம்பினை ஏவிய அங்கு நின்றே ஏவிய அப் பெரிய கையினாலே வாங்கிக் கொண்டுவனுக்கு ; ஐயன் எய்தச் சென்று ஆரத் தழுவிக் கொண்டு இதனைச் சொன்னான் - விசயன் அணுகச் சென்று மார்புறத் தழுவிக்கொண்டு இவ்வாறு கூறினான்.
விளக்கம் : சிலையினெல்லை என்பது ஓரளவும் ஆகும். ஏந்தல் : சீவகன். ஐயன் : விசயன். ( 85 )
1642. வண்சிலை கொண்ட வாறும்
வார்கணை தொடுத்த வாறுங்
கண்கணை வைத்த வாறுங்
கற்செய்தோ ளிருந்த வாறுந்
திண்சரம் விட்ட வாறுஞ்
சென்றகோல் போந்த வாறுங்
கண்டெலாம் வியந்து நோக்கி
வில்லுடைக் கடவு ளென்றான்.
பொருள் : வண்சிலை கொண்ட வாறும் - வலிய வில்லை ஏந்திய வகையையும்; வார் கணை தொடுத்த வாறும் - சிறப்புற நின்று நீண்ட அம்பைத் தொடுத்த படியையும்; கண் கணை வைத்தவாறும் - கண்ணாற் குறிபார்த்து அம்பை அமைத்த படியையும்; கல் செய் தோள் இருந்தவாறும் - மலையனைய தோள் பிறழாமல் இருந்ததையும்; திண் சரம் விட்டவாறும் - வலிய கணையை விட்ட படியையும்; சென்ற கோல் போந்தவாறும் - சென்ற அம்பு கனியின் காம்பை அறுத்துத் திரும்பிய படியையும்; எலாம் கண்டு - எல்லாவற்றையும் பார்த்து; வியந்து நோக்கி - வியப்புற்றுச் சீவகனை நோக்கி; வில்லுடைக் கடவுள் என்றான் - நீ வில்லைப் படைத்த இறைவனே ஆவாய் என்றான்.
விளக்கம் : விற்பிடித்தது, கணைதொடுத்தது, இலக்கு வைத்தது அப்போது தோள் இருந்த நிலை இவையெல்லாம் வியந்துநோக்கி என்க.(86 )
1643. மராமர மேழு மெய்த வாங்குவிற் றடக்கை வல்வி
லிராமனை வல்ல னென்ப திசையலாற் கண்ட தில்லை
யுராமன மிவன்க ணின்றி யுவக்குமா செய்வ லென்று
குராமலர்க் காவி னீங்கிக் கோயிலே கோண்டு புக்கான்.
பொருள் : மராமரம் ஏழும் எய்த வாங்கு வில் தடக்கை - ஏழு மராமரங்களையும் வீழ்த்திய வளைந்த வில்லேந்திய பெருங்கையையுடைய; வல்வில் இராமனை வல்லன் என்பது - வலிய வில்லினனாகிய இராமனை வல்லவன் என்று கூறுவது; இசை அலால் கண்டது இல்லை - வாய்மொழியால் அல்லது கண்ணால் கண்டது இல்லை; வாய்மொழியால் அல்லது கண்ணால் கண்டது இல்லை; (இன்று நேரிற் கண்டேன், உராமனம் இவன் கண் இன்றி - இனி நீங்கிச் செல்லும் உள்ளம் இவனிடத்தில் இல்லையாம்படி; உவக்குமா செய்வல் என்று - இவன் மகிழுமாறு செய்வேன் என்று நினைத்து; குராமலர்க் காவின் நீங்கிக் கோயிலே கொண்டு புக்கான் - குராமலர்ப் பொழிலை விட்டு அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
விளக்கம் : இராமன் ஏழு மராமரங்களை ஒரே கணையா லறுத்ததனை இராமாயணத்திற் காணலாம். இசை - சொல். கண்டதில்லை என்றது இவன் அத் தொழிலில் வல்லனாதலைக் கண்ணாற் கண்டேன் என்பது பட நின்றது. உராமனம் இவன்கணின்றி என்றது நீங்காத மனமே இவன்கண் உண்டாகும்படி என்னும் பொருளை யாப்புறுத்தி நின்றது கோயில் - அரண்மனை. ( 87 )
1644. வழிவரல் வருத்த மோம்பி
வயிரப்பூ ணணிந்த மார்ப
னழிகவுள் யானை வேந்தற்
கவன்றிற மறியச் சொன்னான்
மொழியெதிர் விரும்பி மன்னன்
மூரிவிற் றடக்கை யாற்குக்
கழிபெரு முகமன் கூறிக்
காதலங் காளை யென்றான்.
பொருள் : வழிவரல் வருத்தம் ஓம்பி - சீவகனுக்கு வழி நடந்த சோர்வினை நீக்கி; அழிகவுள் யானை வேந்தற்கு - மதம் பெருகும் கவுளையுடைய யானை மன்னனுக்கு; வயிரப்பூண் அணிந்த மார்பன் - வயிர அணிகலன் புனைந்த மார்பனான விசயன்; அவன் திறம் அறியச் சொன்னான் - சீவகன் இயல்பை அறியுமாறுரைத்தான்; மன்னன் மொழி எதிர் விரும்பி - அரசனும் அவன் மொழியை வரவேற்று; மூரி வில் தடக்கையாற்கு - பெரிய வில்லேந்திய சீவகற்கு; கழிபெரு முகமன் கூறி - மிகப் பெரிய முகமன் உரைத்து; காளை! காதலம் என்றான் - காளையே! யாம் நின்மேல் அன்புற்றேம் என்றான்.
விளக்கம் : வழிவருதலானே உண்டான வருத்தம் என்க. வருத்தம் ஓம்புதலாவது - வருத்தத்தைத் தீர்த்தல். மார்பன் : விசயன். வேந்தற்கு - தடமித்தனுக்கு. அவன் என்றது சீவகனை. மூரிவில் - பெரிய வில் காதலம் : தன்மைப்பன்மை வினைமுற்று. காளை : விளி ( 88 )
1645. கிலுத்தங்கூர்ப் பரங்க ளென்னு
மிரண்டினுட் கிலுத்தஞ் சார்ந்து
நலத்தகு விரல்க ளைந்தி
னிம்பர்மூ விரலி னீளஞ்
சிலைத்தழும்பி யானைத் தோலி
னூற்றுரை சிறுமீ னொத்த
விலக்கணக் கிடக்கை கண்டே
யேவினுக் கரச னென்றான்.
பொருள் : கிலுத்தம் கூர்ப்பரங்கள் என்னும் இரண்டினுள் - முன்கைச் சந்து முழங்கைக்கு முன் என்னும் இரண்டினிலே; கிலுத்தம் சார்ந்து - முன்கைச் சந்தைச் சார்ந்து, நலத் தகு விரல்கள் ஐந்தின் இம்பர் - உத்தம இலக்கணத்தை யுடைய விரல்கள் ஐந்திற்கு அருகே; மூவிரலின் நீளம் - மூவிரல் நீளமாக; யானைத் தோலின் நூற்று உரை சிறுமீன் ஒத்த - யானைத் தோலிலே சுண்ணாம்பு நூற்றை உரைத்தாற் போலவும் சிறுமீனைப் போலவும் உள்ள; சிலைத் தழும்பு இலக்கணக் கிடக்கை கண்டே - வில் தழும்பாகிய இலக்கணப் பொருத்தத்தைப் பார்த்து; ஏவினுக்கு அரசன் என்றான் - வில்லுக்குத் தலைவன் என்றான்.
விளக்கம் : யானைத் தோல் காழ்ப்பேறின படியையும், அதிலே நூற்றை யுரைத்தது வெண்மைக்கும், சிறுமீன் தழும்பிற்கும் உவமை. ( 89 )
1646. அண்ணலஞ் சிலைவ லாரு
ளமோகமா வாசா னிற்பின்
விண்ணகு வெள்ளி வெற்பின்
விஞ்சைய ருலகி னல்லான்
மண்ணகத் தில்லை யென்பார்
வாயினை மடங்க வந்தான்
புண்ணகத் துறையும் வேலா
னெனப்புகழ்ந் தரசன் சொன்னான்.
பொருள் : அண்ணல் அம் சிலைவலாருள் அமோக மா ஆசானின்பின் - தலைமை பெற்ற அழகிய வில்வல்லவர்களில் தப்பாத பெரிய ஆசிரியனுக்குப் பின்னர்; விண் நகு வெள்ளி வெற்பின் விஞ்சையர் உலகின் அல்லால் - வானில் ஒளி தரும் வெள்ளிமலையிலுள்ள வித்தியாதரர் நாட்டின் அல்லாது; மண் அகத்து இல்லையென்பார் வாய்மடங்க - நிலவுலகில் இல்லை யென்பாரின் வாய் அடங்க; புண் அகத்து உறையும் வேலான் வந்தான் என- புண்ணில் வாழும் வேலினான் வந்தான் என்று; அரசன் புகழ்ந்து சொன்னான் - தடமித்த மன்னன் புகழ்ந்து கூறினான்.
விளக்கம் : அமோகம் - தப்பாமை, மாஆசான் - பேராசிரியன், ஆசானின் : இன் : ஐந்தனுருபு நான்கன் பொருளில் வந்த உருபு மயக்கம். வாயினை : இன், ஐ : அசைகள். ( 90 )
1647. விற்றிற னம்பி தேற்றான்
விருந்தின னிவனு மன்றி
மற்றுமோர் நால்வ ருள்ளார்
மாண்பினால் வளர்ந்த தில்லை
கொற்றநீ கொடுக்கல் வேண்டுங்
குறையெனக் குருசி னேர்ந்தா
னற்றைநா ளாதி யாக
வவர்களும் பயிலு கின்றார்.
பொருள் : நம்பி வில்திறல் தேற்றான் - விசயன் விற்பயிற்சி அறியாதவன்; விருந்தினன் - அதற்குப் புதியன்; இவனும் அன்றி மற்றும் ஓர் நால்வர் உள்ளார் - இவனையன்றி வேறு நால்வர் இருக்கின்றனர்; மாண்பினால் வளர்ந்தது இல்லை - அவர்களும் கல்வி மாட்சியுடன் வளர்ந்ததில்லை; கொற்றம் நீ கொடுக்கல் வேண்டும் - இவர்களுக்குக் கல்வியை நீ அளித்தல் வேண்டும்; குறை என இஃது என் வேண்டுகோள் என்று அரசன் கூற; குருசில் நேர்ந்தான் - அதற்குச் சீவகனும் ஒப்பினான்; அற்றை நாள் ஆதி ஆக - அன்று முதலாக; அவர்களும் பயிலுகின்றார் - அவர்களும் அக் கலையைப் பயிலத் தொடங்கினர்.
விளக்கம் : நம்பி என்றது விசயனை; மற்றும் ஓர் நால்வர் என்றது இவனுடன் பிறந்தோர் நால்வரையும் என்க. மாண்பு - கல்வி மாட்சி, கொற்றம் - வெற்றி; ஈண்டுக் கல்விக்கு ஆகுபெயர். குருசில் : சீவகன். அவர்களும் - அவ் வைந்து மக்களும் ( 91 )
வேறு
1648. கழலிற் செந்தா மரையடிகள்
புல்லித்தங் காதல் கூர
நிழலி னீங்கார் நினைத்தன
நினைப்பி னமைவா னாக்கி
யழலிற் சாரா தகலா
தொழுக வொருநா ளவன்போகிப்
பொழிலின் மிக்க தனிற்புக்கான்
மணமகளிர் போற்பொ லிந்ததே.
பொருள் : செந்தாமரை அடிகள் கழலின் புல்லி - செந்தாமரை அனைய அடிகளைப் பொருந்திய செருப்புப் போலப் பொருந்தி; தம் காதல் கூர நிழலின் நீங்கார் - தம் அன்பு மிகுதலாலே நிழல்போல நீங்காராய்; நினைத்தன நினைப்பின் அமைவான் ஆக்கி - அவன் நினைத்தவற்றை நினைத்தவாறே பொருந்த முடித்து; அழலின் சாராது அகலாது ஒழுக - தீப்போல அணுகாமலும் அகலாமலும் ஒழுகிவர; அவன் ஒரு நாள் போகிப் பொழிலின் மிக்கதனின் புக்கான் - சீவகன் ஒருநாள் புறம் போந்து பொழிலிற் சிறப்புற்ற தொன்றினுள் புகுந்தான்; மண மகளிர் போல் பொலிந்தது - அதுவும் பல மணத்தால் மண மகளிரைப் போல விளங்கியது.
விளக்கம் : இனிக் கழலென்பதனைக் கழலையுடைய தலைவன் காலாக்கி, அக் காலொடு தலைமகளிர் புணர்ந்து உடன்போகும் என்பாரும் உளர் - இது பதிற்றுப்பத்தின் பழையவுரை. ஒண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும் - விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் (பதிற் - 30) என்றார் பிறரும். அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி என்னும் நன்னூற்பாயிரம் ஒப்பு நோக்கத்தக்கது. ( 92 )
1649. பாசிப் பாசத்துப் பைம்பொ
னிரைத்தாலி பூத்த வேங்கை
மாசில்வெண் டுகிலை நீர்தோய்த்து
மேற்போர்த்த வண்ண மேபோற்
காசின்மட் டொழுகப் பூத்த
வழிஞ்சில்கண் ணார்கவின் கொண்டன
பேசிற் செந்தலைய வெண்கறைய
புன்கம் பொரிய ணிந்தவே.
பொருள் : வேங்கை பாசிப்பாசத்துப் பைம்பொன் நிரைத்தாலி பூத்த - வேங்கைகள் பச்சைக் கயிற்றிலே புதிய பொன்னால் வரிசையாகிய தாலியைக் கோத்தாற் போலப் பூத்தன; மாசு இல் வெண்துகிலை நீர் தோய்த்து மேல் போர்த்த வண்ணமே போல் - குற்றமற்ற வெள்ளாடையை நீரிலே நனைத்து மேலே போர்த்த தன்மையைப் போல்; காசு இல் மட்டு ஒழுக அழிஞ்சில் பூத்த - குற்றமற்ற தேன் சொரிய அழிஞ்சில்கள் மலர்ந்தன; பேசின் செந்தலைய வெண்கறைய பொரிபுன்கம் அணிந்த - கூறினால் செந்தலையையும் வெண் மறுவையும் உடைய நெற்பொரி போலப் புன்குகள் பூத்தன; கண் ஆர் கவின் கொண்டன - இவை கண்கள் நிறைந்த அழகைக் கொண்டன.
விளக்கம் : வேங்கை தாலிபோலப் பூத்தன. அழிஞ்சில் நீர்தோய்த்த வெண்டுகிலை மேலே போர்த்தாற் போன்று பூத்தன. புன்கு பொரிபோற் பூத்தன என்க. ( 93 )
1650. கோடு தையாக் குழிசியோ டாரங் கொளக்கு யிற்றிய
வோடு தேர்க்கான் மலர்ந்தன வகுள முயர்சண் பகங்
கூடு கோழிக் கொழுமுள் ளரும்பின வங்கோ சிக
வாடை பூத்தன பாதிரி வெண்க டம்புபந் தணிந்தவே.
பொருள் : குழிசியோடு ஆரம் கொளக் குயிற்றிய கோடு தையா ஓடு தேர்க்கால் வகுளம் மலர்ந்தன - குடத்துடன் ஆர்கள் அழுந்தத் தைத்து, மேற் சூட்டு வையாத, தேரின் உருளைபோல மகிழ்கள் மலர்ந்தன; உயர் சண்பகம் கோழி கூடு கொழுமுள் அரும்பின - உயர்ந்த சண்பகங்கள் கோழியிடத்தே கூடிய முள்ளைப் போல அரும்பின; பாதிரி அம் கோசிக ஆடை பூத்தன - பாதிரி மலர்கள் அழகிய கோசிக மென்னும் பட்டாடை போல மலர்ந்தன; வெண் கடம்பு பந்து அணிந்த - வெண்கடம்புகள் பந்து போல மலர்ந்தன.
விளக்கம் : வகுளம் - மகிழமரம். வகுளம் தேருருள்போலப் பூத்தன. சண்பகம் கோழிமுள்போல அரும்பின, பாதிரி கோசிக ஆடைபோலப் பூத்தன, வெண்கடம்பு பந்துபோலப் பூத்தன என்க. கோசிக ஆடை - பட்டாடை. ( 94 )
1651. வெருகு வேட்பச் சிரிப்பனபோன்
முகைத்த முல்லை வெய்யவா
ளரவு பைத்தா வித்தன்ன
வங்காந்த ளவிழ்ந்த லர்ந்தன
குரவங் கொண்ட குறும்பூழ்போற்
கொழுங்கான் முகைசு மந்தன
குருதிக் கூரெயிறு கூத்தியர்கட்
கொண்ட கொடித்த ளவமே.
பொருள் : வெருகு வேட்பச் சிரிப்பனபோல் முல்லை முகைத்த - காட்டுப்பூனை விருப்புற நகைப்பன போல முல்லை அரும்பின; வெய்ய வாய் அரவு பைத்து ஆவித்த அன்ன அம்காந்தள் அவிழ்ந்து அலர்ந்தன - கொடிய வாயையுடைய நாகப்பாம்பு படம் விரித்துக் கொட்டாவி கொண்டன போல செங்காந்தள் அரும்பு விரிந்து பிறகு மலர்ந்தன; கொண்ட குறும்பூழ் கொழுங்கால் போல் குரவம் முகை சுமந்தன - கையிலே பிடித்த குறும்பூழ்ப் பறவையின் கொழுவிய கால்போல குரவம் கொழுவிய அரும்புகளைச் சுமந்தன; கூத்தியர்கண் குருதிக் கூரெயிறு கொடித் தளவம் கொண்ட - கூத்தாடும் பெண்களிடத்துச் சிவந்த கூரிய பற்களைப்போல கொடிகளாகிய செம்முல்லைகள் அரும்பின.
விளக்கம் : வெருகு - காட்டுப்பூனை. முல்லை வெருகு சிரிப்பனபோல் முகைத்தன. காந்தள் அரவு பைத்து. ஆவித்தனபோல் அலர்ந்தன. குரவம் பூழ்க்கால் போல் அரும்பின. தளவம் கூத்தியர் எயிறுபோல் அரும்பின என்க. அரும்புகள் மேனோக்கி நிற்றற்குவமையாகக் கையிலே பிடித்த குறும்பூழின்கால் என்பார் கொண்ட குறும்பூம்க்கால் என்றார். 1649 முதல் இச் செய்யுள் முடியக் கூறிய உவமை நலம் உணர்ந்து மகிழற்பாற்று. ( 95 )
1652. சொன்ன நன்மலரு மல்லனவும்
வீழ்பல வின்சூழ் சுளைகளு
நன்மை நூலி னயந்தோன்ற
நன்பொன் விரலி னுதியினாற்
பன்மணியு முத்தும் பவளமும்
பைம்பொன்னுங் கோத்தா லொப்ப
வென்ன வமரரு மருளத்
தொடுத்தா னினமா லையே.
பொருள் : சொன்ன நல் மலரும் அல்லனவும் வீழ்பலவின் சூழ்சுளைகளும் - இங்குக் கூறப்பட்ட அழகிய மலர்களையும் பிற மலர்களையும் விரும்பும் பலவின் சுளைகளையும் கொண்டு; நன்மை நூலின் நயம் தோன்ற - உயர்ந்த நூல்களிற் கூறிய அழகு பொருந்த; பல்மணியும் முத்தும் பவளமும் பைம் பொன்னும் கோத்தால் ஒப்ப - பல மணிகளையும் முத்துக்களையும் பவளங்களையும் பொன்னையும் தொடுத்தாற் போல; என்ன அமரரும் மருள - எத்தகைய வானவரும் மயங்க;நன்பொன் விரல் நுதியினால் - தன் அழகிய பொன் அணிந்த விரல் நுனியினால்; இனமாலை தொடுத்தான் - ஒரு வகை மாலையைக் கட்டினான்.
விளக்கம் : வகைமாலை : மாலைகளில் ஒன்று.அல்லன - ஈண்டுக் கூறப்படாத மலர்கள். வீழ்பலவின் சுளை - விரும்புதற்குரிய சுளை. சூழ்சுளை - சூழ்ந்திருக்கும் சுளை, இனித்தின்போர் விரும்பிச் சூழ்தற்குக் காரணமான சுளை எனினுமாம். என்ன அமரரும் - எத்தகைய தேவரும். ( 96 )
1653. ஊனுண் சிங்கக் குழவி
யெயிற்றே ரொளியெ யிற்றினான்
றேனுண் போதிற் பிணையலும்
பந்தும் புனைந்து தேமார்ந்த
நானந் தோய்த்து நனைகலவை
நாறு மதந்தெ ளித்தபின்
பானுண் டீஞ்சொல் லாளோர்
படுவிவண் டார்ப்பவந் திறைஞ்சினாள்.
பொருள் : ஊன் உண் சிங்கக் குழவி எயிற்று ஏர் ஒளி எயிற்றினான் - ஊனை உண்ணும் சிங்கக் குருளையின் பற்களை ஒப்ப ஒளிரும் பற்களையுடைய சீவகன்; தேன் உண் போதின் பிணையலும் பந்தும் புனைந்து - வண்டுகள் தேனைப் பருகும் மலர்களாலே முற்கூறிய வகைமாலை நீங்கலாக ஒரு மாலையையும் பந்தையும் பின்னும் கட்டி; தேம் ஆர்ந்த நானம் தோய்த்து - இனிமை நிறைந்த புழுகிலே இவற்றைத் தோய்த்து; நனை கலவை நாறும் மதம் தெளித்தபின் - அவற்றின் அரும்புகளுக்குச் சந்தனத்தோடு கூடிய பனிநீரையும் புழுகையும் தெளித்த பின்; பால்நுண் தீ சொல்லாள் ஓர் படுவி வண்டு ஆர்ப்ப வந்து இறைஞ்சினாள் - பாலைப் போல இனிய மொழியாளாகிய ஒரு பணிப் பெண் வண்டுகள் முரல வந்து வணங்கினாள்.
விளக்கம் : பலாச் சுளை கலந்த மாலை ஓலைப் பாசுர மாலையாகும். இதனைப் பிறர் ஐயுறாதவாறு மற்றவற்றையுங் கட்டினான். குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க் கொடை (தொல் - மரபு - 19) என்றதனுள், கொடை என்றதனாற் சிங்கக் குழவியுங் கொள்க. ( 97 )
1654. நெடிய வாட்கண்கள் வாயா
விமைப்பெ னுஞ்சொல் லின்மற்றெங்
கொடியிற் கொத்த விவையென்றா
ணம்பியுங் கொள்க வென்றான்
வடுவும் வேலு மலருங்
கயலும் வனப்ப ழித்தகண்
ணடியஞ் சிலம்பி னாட்குய்த்
திறைஞ்சிக் காட்ட வவள்கொண்டாள்.
பொருள் : நெடிய வாள் கண்கள் வாயா இமைப்பு எனும் சொல்லின் - (வந்தவள்) தன் நீண்ட வாளனைய கண்கள் வாயாக இமைப்பு எனும் சொல்லாலே; எம் கொடியிற்கு இவை ஒத்த என்றாள் - எம் கனகமாலைக்கு இம் மாலைகளும் பந்தும் பொருந்தின என்றாள்; நம்பியும் கொள்க என்றான் - சீவகனும் கொள்க என்று கொடுத்தான்; வடுவும் வேலும் மலரும் கயலும் வனப்பு அழித்த கண் அடி அம் சிலம்பினாட்கு - மாவடுவையும் வேலையும் நீல மலரையும் கயலையும் அழகினாலே அழித்த கண்களையும் அடியிலே அழகிய சிலம்புகளையும் உடைய கனகமாலைக்கு; உய்த்து இறைஞ்சிக் காட்ட அவள் கொண்டாள் - கொண்டு சென்று வணங்கிக் காட்ட அவளும் வாங்கிக் கொண்டாள்.
விளக்கம் : படுவி குறிப்பறிந்து கொடுத்தாள் வாயா - வாய்ஆக. இமைப்பு - இமைத்தல். அப்படுவி குறிப்பான் இவை கனகமாலைக்கு ஏற்றன வென்றுணர்த்தினாள் என்பது கருத்து.கொடி : கனகமாலை. நம்பி : சீவகன். வடு - மாம்பிஞ்சு. மலர் - தாமரை மலர். சிலம்பினாள் : கனகமாலை படுவியின் குறிப்பறிந்து கொடுத்தான் என்பது கருத்து. அவளும் எனல் வேண்டிய உம்மைதொக்கது. ( 98 )
1655. கொண்டு கோதை மலரெழுத்து
மெல்விரலின் மேற்றாங்கி நோக்கும்
வண்டு சேர்ந்த குழலாள்
வருமுலைகள் பாய வண்டார்
விண்டு தேன்று ளிப்ப
வேற்றடங்கண் டாமாடு நாடகங்
கண்டு வாழா தவர்வாழ்க்கை
யெல்லாஞ் சவரர் வாழ்க்கையே.
பொருள் : கோதை கொண்டு மெல்விரலின் மேல் தாங்கி மலர் எழுத்து - அம் மாலையை வாங்கிக் கொண்டு மெல்லிய விரலின் மேல் தாங்கி அம் மாலையில் மலராலாகிய எழுத்தை; வண்டு சேர்ந்த குழலாள் நோக்கும் - வண்டுகள் தங்கிய கூந்தலாள் நோக்குவாள்; வரும் முலைகள் பாய வண்தார் விண்டு தேன் துளிப்ப - (மங்கையரின்) வளரும் முலைகள் பாய்தலினால் மார்பில் அணிந்த வளவிய தார் நெகிழ்ந்து தேன் சிந்த; வேல் தடம் கண் தாம் ஆடும் நாடகம் - வேலனைய பெரிய கண்கள் பிறழும் நாடகத்தை; கண்டு வாழாதவர் வாழ்க்கை யெல்லாம் சவரர் வாழ்க்கை - பார்த்து மகிழ்ந்து வாழாதவர்களின் வாழ்க்கையாவும் வேடருடைய வாழ்வாகும்.
விளக்கம் : நாடகம் - அவர்கள் கவரும் தன்மை. கவர வாழ்தலே வாழ்வு என்றான்.கோதை கொண்டு என மாறுக. மலராலேயே எழுத்துருவம்படப் புனைந்தமையின் மலரெழுத்து என்றார். குழலாள்; கனகமாலை வருமுலை; வினைத்தொகை. கண்தாம் என்புழித்தாம் அசை. சவரர் - வேடர். சவரர் வாழ்க்கை என்றது வேடர் வாழ்க்கை போன்று பயனிலா வாழ்க்கையே என்றவாறு. ( 99 )
1656. ஆம்ப னாறு மரக்கார்
பவழ வாயா ரமுதன்னார்
பாம்பு பைத்தாங் கனைய
பவழப் படவர வல்குலார்
தாம்ப லருமருட் டவகி
றவழுந் தண்பூ வணைக்
காம்பின் மென்றோள் கவின்வளர
வைகல் கலப்பென் பவே.
பொருள் : ஆம்பல் நாறும் அரக்கு ஆர் பவழவாயார் அமுது அன்னார் - அல்லி மலர்போற் காணப்பெறுஞ் சிவப்பு நிறைந்த பவழவாயாரும் அமுது போன்றாரும்; பாம்பு பைத்தாங்கு அனைய பவழப் பட அரவு அல்குலார் - பாம்பு படம்விரித்தாற் போன்ற பவழ மேகலை புனைந்த, அல்குலாரும் ஆகிய; தாம்பலரும் மருட்ட - மகளிர் பலரும் மருட்ட; அகில் தவழும் தண் பூவணை - அகிற் புகை தவழும் தண்ணிய மலரணையிலே; காம்பு இன் மென் தோள் கவின் வளர வைகல் கலப்பு என்ப - மூங்கில் அனைய இனிய மெல்லிய தோள் மிசை அழகு வளரத் தங்குதல் கலப்பு என்பார்கள்.
விளக்கம் : என்ப : பலர்பால் வினைமுற்று. பவழவாயார் என்புழி அடைமொழி உவமை குறியாமனின்றது. படவரவல்குலார் என்புழியும் அங்ஙனமே அடைமொழி உவமங் குறியாமல் பெயர் மாத்திரையாய் நின்றது. பாம்பு பைத்தாங்கு மருட்ட என நச்சினார்க்கினியர் கூட்டிக்கூறும் பொருள் சிறப்புடையதாகத் தோன்றவில்லை.( 100 )
1657. ஆகந் தானோர் மணிப்பலகை யாக முலைக ணாயாகப்
போகக் கேற்ற புனைபவழ வல்குல் கழக மாக
வேக வின்பக் காமக் கவறாட லியைவ தன்றே
லாக நோற்றிட் டடங்க லாண்மைக் கழகென் பவே.
பொருள் : ஆகம் தான் ஓர் மணிப் பலகை ஆக - தன் மார்பு மணிகளிழைத்த ஒரு பலகையாக; முலைகள் நாய் ஆக - மகளிரின் முலைகள் நாயாக; போகக்கு ஏற்ற புனைபவழ அல்குல் கழகம் ஆக - இன்பத்திற்குத் தக்க, பவழ மேகலை அணிந்த அல்குல் சூதாடும் இடம் ஆக; ஏக இன்பக் காமக் கவறு ஆடல் இயைவது அன்றேல் - ஒப்பற்ற இன்பத்தையுடைய காமச் சூதாடல் கூடாது எனின்; ஆக நோற்றிட்டு அடங்கல் ஆண்மைக்கு அழகு என்ப - இவை யாவும் மேலுண்டாவதற்காகத் தவம்புரிந்து அடங்கியிருத்தல் ஆண்மைக்கு அழகு என்று கூறுவர்.
விளக்கம் : குழலாள் நோக்குவாளாயினாள்; அவ்வாறு நோக்கும் போது மாலையிலிருந்த மலரெழுத்துக்களை இவ்வாறு வாசித்தாள். நச்சினார்க்கினியர், நோக்கும் குழலாள் என முதற்செய்யுளில் அமைத்து வாசித்தாள் என மூன்றாஞ்செய்யுளில் முடிப்பர். அவர் 99 -101 ஆகிய மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கி முடிக்கும் முடிபு:- மாலையை வாங்கிக்கொண்டு தாங்கி, வாசிக்குங் குழலாள், அரக்காம்பல் போல நாறும் பவழவாயார். அமுதன்னார், அல்குலாராகிய மகளிர்தாம் பலரும் ஆடும் நாடகங் கண்டு வாழாதார் வாழும் வாழ்வெல்லாம் - நன்கு நுகராத - வேடர் வாழ்வாயிருக்கும். அவரைக் கலக்குமிடத்து வேற்றடங் கண்கள் தாம் பாம்பு பைத்தாங்கு மருட்ட, தேன்துளிக்கும்படி முலைகள்பாய, அவர் தோள் கவின் வளர அணையிலே தங்குதல் கலப்பென்று கூறுவர். அங்ஙனம் கலந்து ஆகம் பலகையாக, அவர் முலைகள், நாயாக, அல்குல் கழகமாக, கவறாடல் கூடாதாயின், இவை மேலுண்டாகத் தவஞ் செய்தடங்குதல் ஆண்மைக்கு அழகு என்று கூறுவர் என்று வாசித்தாள் என்க ( 101 )
1658. பின்னி விட்ட பிடித்தடக்கை
யிரண்டு போன்று திரண்டழகார்
கன்னிக் கலிங்க மகிலார்ந்து
கவவிக் கிடந்த குறங்கினாண்
மின்னுக் குழையும் பொற்றோடு
மிளிர வெருத்த மிடங்கோட்டி
யென்னு மிமையா ணினைத்திருந்தா
ளியக்கி யிருந்த வெழிலொத்தாள்.
பொருள் : பின்னி விட்ட பிடித் தடக்கை இரண்டு போன்று திரண்டு - (தாம் இடை வெளியின்றி இருத்தலின்) சேர்த்து விட்ட பிடியின் பெரிய கைகள் இரண்டு போன்று திரண்டு; அழகு ஆர் கன்னிக் கலிங்கம் அகில் ஆர்ந்து கவவிக் கிடந்த குறங்கினாள் - அழகு பொருந்திய கணவன் தீண்டாத ஆடை அகில் மணம் பொருந்திப் பற்றிக் கிடந்த துடையினாள்; மின்னுக் குழையும் பொன் தோடும் மிளிர எருத்தம் இடம் கோட்டி - ஒளிரும் குழையும் பொன் தோடும் விளங்கக் கழுத்தை இடப்பக்கம் சாய்த்து; என்னும் இமையாள் நினைத்திருந்தாள் - சிறிதும் இமையாளராய் அம் மாலையின் வாசகத்தை எண்ணியிருந்தவள்; இயக்கி இருந்த எழில் ஒத்தாள் - இயக்கி இருந்த அழகை ஒத்தாள்.
விளக்கம் : இயக்கியும் தனக்கு மேலான இறைவனை எண்ணி இமையாது இருப்பாள் என்றுணர்க. கணவன் தீண்டாத ஆடை என்பார் கன்னிக் கலிங்கம் என்றார். கலிங்கம் - ஆடை. குறங்கு - துடை, என்னும் - சிறிதும். இமையா திருந்தமைக்கு இயக்கி உவமை. ( 102 )
1659. கொடுவெஞ் சிலையைக் கொளையமைத்துக்
கொதிநீர்ப் பகழி கொளவாங்கிக்
கடுவெங் குறவ னெயப்பட்ட
கன்னிப் பிணையி னிலைகலங்கித்
தொடிதோ ணடப்பத் தோடேம்பத்
துணைவெம் முலைகள் பசப்பூர
நெடுமாத் தோகை மென்சாய
னெஞ்சிற் கிவ்வா றுரைக்கின்றாள்.
பொருள் : கொடு வெம் சிலையைக் கொளை அமைத்து - வளைந்த கொடிய வில்லை நாணேறிட்டு; கொதி நீர்ப் பகழி கொள வாங்கி - உலையிலே காய்ச்சிய தன்மையுடைய அம்பை நிரம்ப வளைத்து; கடுவெங் குறவன் எயப்பட்ட கன்னிப் பிணையின் நிலைகலங்கி - மிகவும் கொடிய வேடனால் எய்யப்பட்ட கன்னித் தன்மையுடைய பிணைமானின் நிலையைத் தப்பி; தொடி தோள் நடப்பத் தோள் தேம்ப - தொடிகள் தோளிலே உலாவுமாறு தோள்கள் மெலிய; துணை வெம் முலைகள் பசப்பு ஊர - இணையான வெம் முலைகள் பசலைபாய; நெடுமாத் தோகை மென்சாயல் நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றாள்- நெடிய கரிய மயில் போலும் மெல்லிய தன்மையாள் உள்ளத்திற்கு இவ்வாறு இயம்புகிறாள்.
விளக்கம் : நிலை கலங்குதல் - ஈண்டு இறந்துபாடு நீங்குதல். மாலையைத் தன் பணிப்பெண் கொண்டு வருதலின், அவற்கு நிகழ்ந்த வேட்கை தன்னிடத்தே என்று கருதி இறந்துபாடு நீங்கினாள். பிணைபோல் என்றால், மேல் வருத்தமின்றி இறந்துபாடு தோன்றும். ( 103 )
1660. ஒன்றே யெயிற்ற தொருபெரும்பே
யுலகம் விழுங்க வங்காந்து
நின்றாற் போல நிழலுமிழ்ந்து
நெடுவெண் டிங்க ளெயிறிலங்க
வின்றே குருதி வானவா
யங்காந் தென்னை விழுங்குவா
னன்றே வந்த திம்மாலை
யளியே னாவி யாதாங்கொல்.
பொருள் : ஒன்று எயிற்றது ஒரு பெரும் பேய் உலகம் விழுங்க அங்காந்து நின்றாற் போல - ஓர் எயிற்றை உடையதான ஒரு பெரிய பேய் உலகை விழுங்குதற்கு வாயைத் திறந்து நின்றாற் போல; நிழல் உமிழ்ந்து நெடுவெண் திங்கள் எயிறு இலங்க - ஒளியைச் சொரிந்து நீண்ட வெண்மதியாகிய பல் விளங்க; குருதி வான வாய் அங்காந்து - செக்கர் வானமாகிய வாயைத் திறந்து ; என்னை விழுங்குவான் அன்றே இம்மாலை இன்றே வந்தது? - என்னை விழுங்குவதற்கன்றோ இம்மாலையானது இப்போதே வந்தது?; அளியேன் ஆவி யாது ஆம் கொல்? -இரங்கத் தக்கேன் உயிர் என்னாகுமோ? (இம் மாலையின் கண்ணதோ? என் கண்ணதோ?)
விளக்கம் : ஒன்றே : ஏ : அசை. வந்தது : விரைவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாக வந்த வழுவமைதி ஓரெயிற்றது எனற்பாலது ஒன்றே எயிற்றது எனப் புணர்ச்சி பெறாமனின்றது. ஒற்றைப் பல்லையுடைய பெரும்பேய் பிறையையுடைய மாலைப்பொழுதிற்குவமை. நிழல் - ஒளி. வானவாய் : பண்புத் தொகை; விழுங்குவான் : வினையெச்சம். ( 104 )
1661. வருந்தி யீன்றாண் மறந்தொழிந்தாள்
வளர்த்தாள் சொற்கேட் டில்கடிந்தாண்
முருந்தின் காறுங் கூழையை
முனிவார் நின்னை யென்முனிவார்
பொருந்திற் றன்றா லிதுவென்னாய்
பொன்று மளித்திவ் வுயிரென்னாய்
திருந்து சோலைக் கருங்குயிலே
சிலம்ப விருந்து கூவுதியால்.
பொருள் : திருந்து சோலைக் கருங் குயிலே! - அழகிய சோலையிலே (மறுவைப்போல் இருக்கும்) கரிய குயிலே!; இது பொருந்திற்று அன்று என்னாய் - மாலை வருகின்ற காலத்து யாம் கூவும் இது இவர்க்குத் தனிமையால் வருத்தமூட்டு மாதலால் பொருத்தமுடையது அன்று என்று நினையாய்; அளித்து இவ்வுயிர் பொன்றும் என்னாய் - இரங்கத்தக்க இவ்வுயிர் இறந்துபடும் என்றும் எண்ணாய்; இருந்து சிலம்பக் கூவுதி - அமர்ந்து முழக்க மிட்டுக் கூவுகின்றாய்; (இத் தன்மையை ஆதலின்); வருந்தி ஈன்றாள் மறந்து ஒழிந்தாள் - உன்னை வருந்திப் பெற்ற நற்றாய் (குயில்) மறந்து விட்டாள்; வளர்த்தாள் சொல் கேட்டு இல் கடிந்தாள் - வளர்த்த செவிலி (காக்கை) நின் சொல்லைக் கேட்டவுடனே வீட்டினின்றுந் துரத்திவிட்டாள்; முருந்தின் காறும் கூழையை - நீயோ என்பளவும் சென்ற மயிரை யுடையாய்; நின்னை முனிவார்? என் முனிவார்? - நின்னை வெறுப்பவர் நின் பிறப்பையோ, வளர்ப்பையோ, வடிவையோ வெறுப்பார்?
விளக்கம் : இது சினத்தினால் வந்த திணைமயக்கம். வருந்தியீன்றாள் என்றது தாய்க்குயிலை. வளர்த்தாள் என்றது காக்கையை. குயில் காக்கைக் கூட்டில் அதன் முட்டைகளோடு முட்டையிட்டு வைத்துப் போய்விடக் காக்கை அதனைத் தன் முட்டை யென்றே அடைகாத்துக் கிடக்கும். குஞ்சு வெளிப்பட்ட பின்னர் அதன் குரலான் வேற்றுமை யுணர்ந்து கடிந்து விரட்டிவிடும். இந் நிகழ்ச்சியை ஈண்டுத் தேவர் இங்ஙனம் செய்யுளில் புனைந்தளிக்கின்றார். ( 105 )
1662. பெருவெண் டிங்கண் மாலகப்பூ
மலைந்து பெட்ப நகுகின்ற
துருவு கொண்ட குரலன்றி
லுயிர்மே லாம்ப லுலாய்நிமிரு
மொருபெண் பாலென் யானாக
வுலக மெல்லாம் பாகையாகி
யெரிகொன் றீன்ற விலைப்பலிபோ
லிருத்தி யாலென் னின்னுயிரே.
பொருள் : பெரு வெண் திங்கள் மால் அகப் பூ மலைந்து பெட்ப நகுகின்றது - பெரிய வெள்ளிய திங்கள் மயக்கமுற்ற மனமாகிய மலருடன் மலைந்து அதன் கேடு கண்டு மிகவும் நகைக்கின்றது ; அன்றில் குரல் உருவு கொண்ட - அன்றில்கள் தம் குரலாலே வடிவைக் கொண்டன; ஆம்பல் உலாய் உயிர் மேல் நிமிரும் - ஆம்பல் என்னும் பண் சூழ்ந்து உலாவி இவ்வுயிரின் கேடு கண்டு இதன் மேலே நடக்கின்றது; உலகம் எல்லாம் பகையாகி ஒரு பெண்பாலென் யானாக - (இவ்வாறு) உலகம் முற்றும் பகையாதற்குப் பற்றாதவாறு ஒரு பெண்பாலேன் யான் ஆகவும்; என் இன் உயிரே! எரி கொன்று ஈன்ற இலைப் பலிபோல் இருத்தி - என் கொடிய உயிரே! நீ தீ மேய்ந்து வேறொரு வடிவாகப் பெற்ற இலைச் சாம்பல் போலேயிரா நின்றாய்.
விளக்கம் : இஃது நீ இருக்கும் அளவு அன்று; நின் நினைவு என் என்றாள் என்க. அகப்பூ - மன மலர். உலகம் : இடவாகு பெயர். பகை ஆகி - பகையாக : எச்சத்திரிபு. பின்னும் இலை போலிருத்தலின் ஈன்ற என்றார். இது தொழிலுவமம். ஏ : எதிர்மறை. ( 106 )
1663. வேமென் னெஞ்ச மெய்வெதும்பும்
விடுக்கு மாவி வெய்துயிர்க்கும்
பூமென் குழலார் புறநோக்கி
நகுவார் நகுவ தாயினேன்
றாம மார்பன் றான் புனைந்த
தண்ணென் மாலை புணையாக
யாமக் கடலை நீந்துவேன்
யாரு மில்லாத் தமியேனே.
பொருள் : என் நெஞ்சம் வேம் - காமத் தீயால் என் உள்ளம் வேகும்; மெய் வெதும்பும் - (அதனால்) உடம்பு வெதும்பும்; ஆவி வெய்து உயிர்க்கும் - (அதனால்) உடம்பைக் கைவிடும் உயிரும் போகாமல் நெட்டுயிர்ப்புக் கொள்ளும்; பூ மென் குழலார் புறம் நோக்கி நகுவார் நகுவதாயினேன் - (யானும்) மலரணிந்த மென் கூந்தலாரின் பொல்லாங்கை நோக்கி நகைப்பாரின் நகைப்புக்குரிய பொல்லாங்கின் வடிவாயினேன்; யாரும் இல்லாத் தமியேனே - இவ்வாறு யாரும் இல்லாத தமியேனே; தாம மார்பன் தான் புனைந்த தண் என் மாலை புணை ஆக - மாலை மார்பன் தான் தொடுத்த தண்ணிய மலர்த் தொடையே தெப்பமாக; யாமக் கடலை நீந்துவேன் - இரவாகிய கடலை நீந்திச் செல்வேன். (நீந்துதல் அரிது).
விளக்கம் : அவன் கையாற் புனைதலின் அது கொண்டு நீந்தலாமோ என நினைத்து, அதனை மறுத்தாள். ( 107 )
1664. செம்பொற் கடம்பன் செவ்வேலுங்
காமன் சிலையிற் றொடுத்தலர்ந்த
வம்பும் வென்ற வரிநெடுங்க
ணம்மா மதிவாண் முகத்தினாள்
வம்பு பூத்து முருகுலாய்த்
தேன்கொப் புளித்து நின்றதோர்
கொம்பு வெந்தீ யிடைப்பட்ட
தொத்தாள் விரைசெய் கோதையே.
பொருள் : செம் பொன் கடம்பன் செவ்வேலும் - சிவந்த பொன் அனைய கடம்பணிந்த முருகனுடைய சிவந்த வேலையும்; காமன் சிலையில் தொடுத்து அலர்ந்த அம்பும் - காமனுடைய வில்லிலே தொடுக்கப்பட்டு மலர்ந்த அம்பையும்; வென்ற வரி நெடுங்காண் அம் மா மதி வாள் முகத்தினாள் - வென்ற செவ்வரி பரந்த நீண்ட கண்களையும் அழகிய பெரிய திங்களனைய ஒளி பொருந்திய முகத்தையும் உடையாள்; விரை செய்கோதை - மணமிகுங் கோதையாள்; வம்பு பூத்து முருகு உலாய்த் தேன் கொப்புளித்து நின்றது - புதிதாய் மலர்ந்து மணந் தங்கித் தேனைச் சிந்தி நின்றதாகிய; ஓர் கொம்பு வெந்தீயிடைப் பட்டது ஒத்தாள் - ஒரு மலர்க் கொம்பு கொடிய நெருப்பிலே வீழ்ந்ததைப் போன்றாள்.
விளக்கம் : கடம்பன் - முருகன், அலர்ந்த அம்பு - மலர்ந்த மலரம்பு - முகத்தினாள் ஆகிய கோதை என இயைக்க. வம்புபூத்து - புதிதாக மலர்ந்து என்க, முருகு - மணம். விரைசெய் - மணத்தைத் தரும். கோதை - கூந்தல்; இஃது உடையாளை யுணர்த்தியது. காமனுக்குத் தாமரை மலரும் நீல மலரும் அம்பு ஆதலின் அம்பும் வென்ற கண் என்றார். ( 108 )
வேறு
1665. மணிநிற மாமை சாயல்
வளையொடு வண்டு மூசு
மணிநிறப் போர்வை யாய
வரும்பெற னாணும் விற்றுப்
பணிநலம் புதிய துண்டான்
பன்மலர் மாலை கொண்டேன்
பிணிநிறப் புறஞ்சொ லென்னும்
பெருமிஞி றார்ப்ப வென்றாள்.
பொருள் : மணி நிற மாமை சாயல் - நீல மணி போலும் மாமையினையும் மென்மையினையும்; வளையொடு - வளையலையும்; அணி நிறப் போர்வை யாய அரும் பெறல் நாணும் விற்று - மகளிர்க்கு அழகிய நிறமுடைய போர்வையாகிய பெறுதற்கரிய நாணத்தையும் விற்று; பணி நலம் புதியது உண்டான் வண்டு மூசும் பன் மலர் மாலை - தாழ்கின்ற என் அழகைப் புதியதாக உண்டவன் கொடுத்த வண்டு மொய்க்கும் பல மலர்களால் ஆன மாலையை; பிணி நிறப் புறஞ் சொல் என்னும் பெரு ஞிமிறு ஆர்ப்பக் கொண்டேன் என்றாள் - நோயை நிறமாகவும் புறஞ்சொல் என்னும் பெரிய ஞிமிறுகள் ஆர்ப்பக் கொண்டேன் என்றாள்.
விளக்கம் : மாமை - நிறம், சாயல் - மென்மை/ தன்மை மறைத்துக் கோடற்குக் காரணமாதல் பற்றி நாணத்தைப் போர்வை என்றாள். நாணமே மகளிர் அழகை மிகுவித்தலின் அணிநிறப் போர்வையாய நாணம் என்றாள். வண்டுமூசும் பன்மலர்மாலை என இயைத்துக் கொள்க. ( 109 )
1666. காதலான் காதல் போல
வகன்று நீண் டலர்ந்தவாட்கட்
போதுலாங் கோதை மாதர்
புனைந்தலர் தொடுத்த மாலை
யாதலா லலர தாகா
தொழியுமே யழுங்க லென்று
மாதுலா மழலைச் செவ்வாய்
மடக்கிளி மொழிந்த தன்றே.
பொருள் : காதலான் காதல் போல அகன்று நீண்டு அலர்ந்த வாள் கண் - நின் கணவனின் அன்பைப்போல அகன்று நீண்டு மலர்ந்த ஒளிமிகுங் கண்களையும்; போது உலாம் கோதை மாதர் - மலர் நிறைந்த மாலையையும் உடைய மங்கையே!; அலர் புனைந்து தொடுத்த மாலை ஆதலால் - இஃது அலராற் புனைந்து தொடுத்த மாலையாகையால்; அலரது ஆகாது ஒழியுமே! -அலருடைய தாகாமல் நீங்குமோ?; அழுகங்கல் என்று வருந்தாதே என்று; மாது உலாம் மழலைச் செவ்வாய் மடக்கிளி மொழிந்தது - அன்பு பொருந்திய மழலை பேசும் செவ்வாயை உடைய இளங்கிள்ளை இயம்பியது.
விளக்கம் : அதனால் ஆறுதல் கொண்டாள். அலர் - பழிச் சொல். காதலான் என்றது சீவகனை. மாதர் - விளி, இஃதலராயிற்றே என்று வருந்திய கனகமாலைக்குக் கிளி சிலேடைவகையால் அலராற்றெடுத்த மாலை கொண்ட நின்பால் அலருண்டாகாமற் பின் என்னுண்டாம் என அசதியாடி நகைச்சுவை பிறப்பித்து அவளை ஆற்றியது என்றபடியாம். ( 110
வேறு
1667. என்னை யுள்ளம் பிணித்தென்
னலங்க வர்ந்தவீர்ந் தாரினான்
றன்னை யானும் பிணிப்பே
னெனத்தன் மணிச்செப் பினுண்
மன்னு மாலை கொடுத்தவனுக்
குய்த்தீ யெனத்தொ ழுதுகொண்
டன்ன மென்னா வொதுங்கிச்
சிலம்பரற் றச்சென் றணுகினாள்.
பொருள் : என்னை உள்ளம் பிணித்து - என் உள்ளத்தை இறுகப் பிணித்து; என் நலம் கவர்ந்த ஈர்ந்தாரினான் தன்னை - என் அழகையும் கொண்ட குளிர்ந்த மாலையானை; யானும் பிணிப்பேன் என - யானும் அவ்வாறே பிணிப்பேன் என்று கருதி; தன் மணிச் செப்பினுள் மன்னும் மாலை கொடுத்து - தன் மணிச் செப்பிலே வைத்திருந்த மாலையை (அநங்க விலாசினி யென்பாள் கையில்) கொடுத்து; உய்த்து அவனுக்கு ஈ யென - கொண்டு போய் அவனுக்குக் கொடு என்றுரைக்க; தொழுது கொண்டு - (அவளும்) தொழுது அம் மாலையை வாங்கிக் கொண்டு; அன்னம் என்ன ஒதுங்கிச் சிலம்பு அரற்றச் சென்று அணுகினாள் - அன்னம் போல ஒதுங்கிச் சிலம்பு மிழற்றச் சென்று அவனை அடைந்தாள்.
விளக்கம் : என் உள்ளத்தை என வேற்றுமையுருபினை உள்ளத்தோ டொட்டுக. ஈர்ந்தாரினான் - சீவகன், உய்த்து ஈ எனக் கண்ணழித்துக் கொள்க. ஒதுங்கி - நடந்து. ( 111 )
1668. அணுகி முன்னின்ற வநங்க
விலாசினி யங்கை கூப்பிப்
பிணைய னீட்டப் பெருந்தகை
யஃதே லான்முக நோக்கலுந்
துணையி றோகை யென்னங்
கைக்குத் தொங்கறொடுப் பாயுநீ
மணிசெய் மென்றோண் மருந்துநீ
யாருயிரு நீயே லென்றாள்.
பொருள் : அணுகி முன் நின்ற அநங்க விலாசினி அங்கை கூப்பிப் பிணையல் நீட்ட - அவ்வாறு நெருங்கி அவன் முன்னே நின்ற அநங்க விலாசினி அங்கை குவித்து வணங்கி மாலையை நீட்ட; பெருந்தகை அஃது ஏலான் முகம் நோக்கலும் - சீவகன் அதனை வாங்காமல் அவள் முகத்தைப் பார்த்த அளவிலே; துணை இல் தோகை என் நங்கைக்குத் தொங்கல் தொடுப்பாயும் நீ - (அவளும்) ஒப்பில்லாத மயிலாகிய என் தலைவிக்கு மாலை தொடுப்பாயும் நீயே; மணி செய் மென் தோள் மருந்தும் நீ - மணிக்கலன் புனைந்த மெல்லிய தோள் மெலிவுக்கு மருந்தும் நீயே; ஆருயிரும் நீ - சிறந்த உயிரும் நீயே; ஏல் என்றாள் - (ஆதலின்) இதனை வாங்கிக் கொள் என்றாள்.
விளக்கம் : பெருந்தகை - அன்மொழி; சீவகன். ஏலான் - முற்றெச்சம், துணை - ஒப்பு. தோகையாகிய என் நங்கைக்கு என்க. தொங்கல் - மாலை. தோள் மருந்து - தோள் மெலிவு தீர்க்கும் மருந்து, ஏல் - ஏற்றுக்கொள். ( 112 )
வேறு
1669. மன்னர் கோயி லுறைவார்
பொறிசெ றித்த மாண்பினரே
யென்ன வஞ்சி னாயென்
றவனைநக் காட்கஃ தன்றுகோதா
யின்ன கொள்கை யேற்கேலா
தென்ன விலங்கெ யிற்றினா
ளன்ன மன்ன நடையினா
டான்வ ருந்து மெனநேர்ந்தான்.
பொருள் : மன்னர் கோயில் உறைவார் பொறி செறித்த மாண்பினரே என்ன - (அவன்) அரசர் கோயிலில் தங்குவார் ஐம்பொறியையும் அடக்குவாரே, இது தகாது என்ன; அஞ்சினாய் என்று அவனை நக்காட்கு - (அது கேட்டு) நீ அஞ்சுகின் றனை என்று அவனை இகழ்ந்த அவளுக்கு; கோதாய்! அஃது அன்று இன்ன கொள்கையேற்கு ஏலாது என்ன - கோதையே! அஃதன்று ஆசிரியனாந் தன்மையேனுக்கு இது பொருந்தாது காண் என்ன; இலங்கு எயிற்றினாள் அன்னம் அன்ன நடையினாள் தான் வருந்தும் என - (அது கேட்டு) விளங்கும் முறுவலினாளாகிய தோழி, நீ இதனை வாங்கா தொழியின் அன்னம் போன்ற நடையினையுடைய என் தலைவி வருந்துவாள் என்று கூற; நேர்ந்தான் - அதற்கு அஞ்சி அவனும் ஒப்பினான்.
விளக்கம் : மன்னர் கோயில் உறைவார் பொறிசெறித்த மாண்பினர் என்றது யான் பொறியடங்கியிருப்பதே நேரிது என்றவாறு. அஃது என்றது அவ்வச்சம் என்றவாறு. இன்ன கொள்கையேற்கு என்றது அரசன் மக்கட்கு ஆசிரியனாம் மேற்கோளினை யுடையேனுக்கு என்றவாறு. எயிற்றினாள் - அநங்கவிலாசினி. நடையினாள் - கன கமாலை ( 113 )
1670. குலிக மார்ந்த கொழுந்தா
மரையன்ன வண்கை நீட்டி
யொலிய லேற்றா னிஃதூழ்
வினையாலுள் ளஞ்சுடு மாலென்ன
விலைகொள் பைம்பூ ணிளமுலையாள்
போகிக் கனக மாலை
மெலிய வெம்பி நைகின்றா
ளுய்யும் வகைதொ டங்கினாள்.
பொருள் : குலிகம் ஆர்ந்த கொழுந்தாமரை அன்ன வண்கை நீட்டி - சாதிலிங்கம் ஊட்டப்பெற்ற வளவிய தாமரை போன்ற வண்மையுறுங் கையை நீட்டி; ஒலியல் ஏற்றான் - மாலையை வாங்கினான்; இஃது ஊழ்வினையால் உள்ளம் சுடும் என்ன - (வாங்கி) இதுதான் உழுவல் அன்பினாலே என் மனத்தைச் சுடும் என்றானாக; இலை கொள் பைம் பூண் இள முலையாள் போகி - (அது கேட்டபின்) பூணணிந்த இள முலையாளாகிய அநங்க விலாசினி சென்று; மெலிய வெம்பி நைகின்றாள் கனகமாலை உய்யும் வகை தொடங்கினாள் - சோர்வுறவெதும்பி வருந்துகின்ற கனகமாலை பிழைக்கும் நெறியைக் காணத் தொடங்கினாள்.
விளக்கம் : குலிகம் - சாதிலிங்கம்; இது அதன் சிவப்பை உணர்த்தியது. ஆர்ந்த - நிறைந்த. குலிகம், சிவப்பு என்றும் பொருள்தரும். ஒலியல் - மாலை. ஊழ்வினை ஈண்டு உழுவலன்பு என்னும் பொருட்டாய் நின்றது : ஆகுபெயர். சுடுமால் என்புழி ஆல், அசை, இளமுலையாள் - அநங்கவிலாசினி. நைகின்றாளாகிய கனகமாலை என்க. நைகின்றாள்; வினையாலணையும் பெயர். ( 114 )
1671. நீர்செய் காந்த மணிகூந்த ளம்பா வைநீண் டழகியவோ?
செய் சாந்திற் கழுநீர் விரைகம ழும்பூக்கள் கோத்த
வார்செய் தண்டா மரைவளைய மைவரை யின்வெள் ளருவிநீர்
சீர்செய் கோமகளைச் சேர்த்தினாள் சீதஞ் செய்யா தொழிந்தனவே.
பொருள் : ஏர் செய் சாந்தின் - அழகிய சாந்துடன்; நீர் செய் காந்த மணி - நீரைக் கொப்புளிக்கும் சந்திர காந்தக் கல்லையும்; நீண்டு அழகிய கூந்தளம் பாவை - நீண்டு அழகுடைய கூந்தளம் பாவையையும்; கழுநீர் - கழுநீர் மலரையும் ; விரைகமழும் பூக்கள் - மற்ற மணங் கமழும் மலர்களையும்; கோத்த வார்செய் தண்டாமரை வளை - கோத்த நெடிய தாமரை வளையத்தையும்; வரையின் வெள்ளருவி நீர் - மலை வீழருவிநீரையும் கொண்டு; கோமகளைச் சேர்த்தினாள்- அரசிளங்குமரிக்கு அணிவித்தாள்; சீதம் செய்யாது ஒழிந்தன - அவை தண்மையாகாமற் கொதித்தன.
விளக்கம் : கூந்தளம் பாவை : ஒரு வகை மலர். நீர்செய்காந்தமணி - சந்திரகாந்தக்கல். ஏர் - அழகு. விரை - மணம். கோமகள் - கனகமாலை. (115 )
1672. பவ்வத் தங்கட் பிறந்து
பனிபெயர்க் குந்தண் ணூற்றதாகி
யெவ்வ மன்னர் படவுலகம்
விற்கு மரும ணியினைச்
செவ்வ னூலிற் சித்திரிக்கப்
பட்டதனைச் சேர்த்திப் பின்னு
மவ்வ னாறுங் குழலாட்கு
மற்று மிவைக ணாடினாள்.
பொருள் : பவ்வத் தங்கண் பிறந்து - கடலிலே தோன்றி; பனி பெயர்க்கும் தன் ஊற்றதாகி - பனியை மாற்றும் தண்ணிய ஊற்றையுடையதாய்; மன்னர் எவ்வம்பட - அரசர் வருத்தம் உற; உலகம் விற்கும் அருமணியினை - உலகை விற்கும் அரிய முத்தினை; செவ்வன் நூலின் சித்திரிக்கப் பட்டதனை - நல்ல நூல் கோக்கப்பட்டதனை; பின்னும் சேர்த்தி - மறுபடியும் அணிவித்து; மவ்வல் நாறும் குழலாட்கு - முல்லை மலரின் மணம் வீசும் கூந்தலை யுடையாட்கு; மற்றும் இவைகள் நாடினாள் - மேலும் இம் மருத்துவத்தைச் செய்யத் தொடங்கினாள்.
விளக்கம் : பவ்வம் - கடல், ஊறு - ஐம்புலனுள் ஒன்று, மன்னர் எவ்வம்பட என்க. எவ்வம் - துன்பம், செவ்வன் - நேரியதாகிய, மவ்வல் - முல்லை. ( 116 )
1673. களிசெய் கோசிக நீர்விழக்
கடிமாலை மேற்றொ டர்ந்துகீழ்
நளிசெய் தண்பூஞ் சலஞ்சயன
மாக்கி நன்னீர் பிலிற்றும்வாய்க்
குளிர்கொள் சாந்தாற்றி பொன்னால
வட்டங்கொண் டேந்தி வீசச்
சளிகொள் சந்தின் கொழுஞ்சாந்த
மாக முழுது மெழுகினாள்.
பொருள் : களி செய் கோசிக நீர் விழ - கஞ்சி தோய்த்த கோசிகப் பட்டின் நீர் விழும்படி; கடி மாலை மேல் தொடர்ந்து - மணமிகு மாலையால் வந்து விழும்படி அதனை மேலே கட்டி; கீழ் நளி செய்தண் பூஞ்சலம் சயனம் ஆக்கி - கீழே செறிவு செய்த பூவையுடைய நீரிலே படுக்கையை ஆக்கி; நன்னீர் பிலிற்றும் வாய்க் குளிர்கொள் சாந்தாற்றி பொன் ஆலவட்டம் கொண்டு ஏந்தி வீச - நல்ல நீரைத் துளிக்கும் வாயையுடைய குளிர்ந்த சாந்தாற்றியையும் பொன்னாலான ஆலவட்டத்தையும் கையில் ஏந்திப் பணிமகளிர் வீச; சளிகொள் சந்தின் கொழுஞ்சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள் - குளிர்ச்சியைக் கொண்ட சந்தனக் குழம்பை மெய்ம் முழுவதும் பூசினாள்.
விளக்கம் : களி - கஞ்சி, கோசிகம் - ஒருவகைப்பட்டு, நளி - செறிவு பூஞ்சலம் - மலரிட்ட நீர், சயனம் - படுக்கை, சாந்தாற்றி - சிற்றால வட்டம், சளி - குளிர்ச்சி, சந்து - சந்தனமரம். ( 117 )
1674. கொம்மைவெம் முலையிற் சாந்தங்
குளிர்செயா தாவி வாட்ட
வம்மென் மாலை முகங்கரிய
நீர்துளும்ப நின்று நீடி
வெம்மை மிக்கது வீரன்
றொடுத்த விளங்கு மாலை
பொம்ம லோதிக்குத் தானே
துணையாம் புணையா யிற்றே.
பொருள் : கொம்மை வெம் முலையில் சாந்தம் குளிர் செயாது ஆவி வாட்ட - இளமை பொருந்திய விருப்பூட்டும் முலையிற் பூசிய சந்தனம் குளிர்ச்சி யுண்டாக்காமல் கொதித்து உயிரை வாட்ட; அம் மென் மாலை முகம் கரிய - (மேலே கட்டிய) அழகிய மெல்லிய மாலை கருக; நீர் துளும்ப - கீழ் நின்ற நீர் வெம்மையால் கொதித்து எழ; நின்று நீடி வெம்மைமிக்கது - நீட்டித்து நின்று வெப்பம் மிகுந்தது; பொம்மல் ஓதிக்கு - (அப்போது) பொலிவுறுங் கூந்தலாட்கு; வீரன் தொடுத்த விளங்கும் மாலை தானே துணை ஆம் புணை ஆயிற்று - சீவகன் கட்டிய விளக்கமுறும் மாலை ஒன்றே துணையாகிய தெப்பம் ஆயிற்று.
விளக்கம் : கொம்மை - பருமையுமாம்; வட்டமுமாம். ஆவி - உயிர் துளும்ப என்றது கொதித்தெழ என்றவாறு. வீரன் - சீவகன், பொம்மல் ஓதி - கனகமாலை. புணையாயிற்று என்றதனால் அத்துன்பக்கடலை நீந்துதற்கு என்க. ( 118 )
1675. வாச நீலங் கழுநீர் குவளை படைசாற் றிவந்
தோச னைக்க ணுடையு நெடுங்கட் கனக மாலை
தாசிதூ தாகத் தாமம் புணையாகச் செல்லு நாளுட்
காசில் கல்விக் கடலைக் கரைகண்டார் காளை மாரே.
பொருள் : வாச நீலம் கழுநீர் குவளை படை சாற்றி வந்து - மணமுறும் நீலமும் கழுநீரும் குவளையும் போர் கூறி வந்து; ஓசனைக் கண் உடையும் நெடுங்கண் கனகமாலை - ஓசனைத் தொலைவிலேயே தோற்றோடும் நீண்ட கண்களையுடைய கனகமாலை; தாசி தூது ஆகத் தாமம் புணை ஆகச் செல்லும் நாள் - தனக்கு அநங்க விலாசினி தூதாகவும் சீவகன் மாலை தெப்பமாகவும் நடக்கும் நாட்களிலே; காளைமார் காசு இல் கல்விக் கடலைக் கரைகண்டார் - விசயன் முதலானோர் குற்றம் அற்ற கல்விக் கடலின் கரையைக் கண்டனர்.
விளக்கம் : படைசாற்றி வருதல் - போர்க்கு அறைகூவி வருதல். யோசனை - ஓசனை என நின்றது. தாசி - பணிப்பெண்; ஈண்டு அநங்க விலாசினி. காசு - குற்றம். காளைமார் என்றது தடமித்தன் மக்களாகிய விசயன் முதலியோரை. ( 119 )
வேறு
1676. பொருசரஞ் சலாகை வெய்ய புகன்றனர் துரக்கு மாறும்
வருகணை விலக்கு மாறும் வாளமர் நீந்து மாறுங்
கருவியுட் கரக்கு மாறுங் கணைபுறங் காணு மாறும்
விரியமற் றவர்க்குக் காட்ட வீற்றிருந் தவருங் கற்றார்.
பொருள் : வெய்ய பொரு சரம் சலாகை புகன்றனர் துரக்கும் ஆறும் - கொடியனவாகிய பொருகணையையும் இருப்பு நாராசத்தையும் விரும்பி எய்யும் முறையையும்; வருகணை விலக்கும் ஆறும் - தம் மேல் வரும் அம்பை அம்பினால் விலக்கும் முறையையும்; வாள் அமர் நீந்தும் ஆறும் - வாளேந்தும் போர்க்களத்திலே போரைக் கடக்கும் வகையையும் ; கருவியுள் கரக்கும் ஆறும் - அம்பு முதலியன பகைவர் எய்தாற் கருவிகளாலே தம்மை மறைத்துக் காத்துக் கொள்ளும் நிலையையும்; கணைபுறம் காணும் ஆறும் - பகைவர் அம்பைப் புறமாக்கித் தம் அம்பைச் செலுத்தும் திறனையும்; அவர்க்கு விரியக் காட்ட - அவர்கட்கு விரிவாகக் கற்பிக்க; அவரும் வீற்றிருந்து கற்றார் - அவரும் சிறப்புற வருத்தமின்றிக் கற்றனர்.
விளக்கம் : எனவே, தொடையும் விலக்கும் செலவும் சேமமும் தவிர்த்து வினைசெயலும் என ஐவினையாம் வடநூலார் பஞ்ச கிருத்தியம் என்பர். இவை தலைமை பற்றி வில்லையே கூறின வேனும் படைக்கலங்கட் கெல்லாம் பொது. இச் செய்யுளையும் அடுத்த செய்யுளையும், பொருவில் நாழிகை பூணுமாறும், செருவாளாட்டும் சேடகப் பிண்டியும் சாரியை விலக்கும் வேல்திரி வகையும், இடுக்கட்போதில் ஏமப் பூமியுள், வகுத்தவாயில் வகைவகை இவையென, ஒட்டும் பாய்த்துளும் கரந்தொருங் கிருக்கையும் செருக்கொள் யானை மருப்பிடைத் திரிவும்...பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி என வரும் பெருங்கதையையும் (1-37, 31-43) ஒப்புக் காண்க. ( 120 )
1677. வேலுடைத் தடக்கை யார்கள்
வேழமேற் சென்ற போழ்திற்
காலிடைக் கரக்கு மாறுங்
கையிடைத் திரியு மாறும்
வாலிடை மறியு மாறு
மருப்பிடைக் குளிக்கு மாறு
நூலிடைக் கிடந்த வாறே
நுனித்தவன் கொடுப்பக் கொண்டார்.
பொருள் : வேலுடைத் தடக்கையார்கள் - வேலேந்திய பெருங்கையினரான விசயன் முதலானோர்; வேழம் மேற் சென்ற போழ்தில் - யானை தம்மேல் வந்த காலத்தில்; காலிடைக் கரக்கும் ஆறும் - அதன் கால்களினிடையே புகுந்து மறையும் படியையும்; கையிடைத் திரியும் ஆறும் - அது துதிக்கையால் வளைத்த பொழுது அதன் கைக்கு நடுவே உடம்பு பிறழும் திறனையும்; வாலிடை மறியும் ஆறும் -அது தன் வாலாலே வீசினால் அது படாதவாறு அதன் காலிடையே புகும் வகையையும்; மருப்பிடைக் குளிக்கும் ஆறும் - அது கொல்லப் புகுந்தால் கொம்புகளினிடையே ஆம்படியையும்; நூலிடைக் கிடந்த ஆறே - நூலிற் கூறியவாறே; நுனித்தவன் கொடுப்பக் கொண்டார் - கூரிதாகக் கற்ற சீவகன் கொடுப்பக் கொண்டனர்.
விளக்கம் : இது யானையுடன் தனித்துப் போர் செய்யும் முறை. ( 121 )
1678. கொடிநெடுந் தேரின் போருங் குஞ்சரங் குறித்த போருங்
கடுநடைப் புரவிப் போருங் கரப்பறக் கற்று முற்றி
யிடனறிந் திலங்கும் வைவா ளிருஞ்சிலை குந்த மூன்று
முடனறிந் தும்ப ரார்க்கு முரைப்பருந் தகைய ரானார்.
பொருள் : கொடி நெடுந் தேரின் போரும் - கொடியையுடைய நீண்ட தேரூர்ந்து செய்யும் போரும் ; குஞ்சரம் குறித்த போரும் - யானையாற் கருதிய போரும்; கடுநடைப் புரவிப் போரும் - விரைந்து செல்லும் குதிரைப் போரும்; கரப்பு அறக்கற்று முற்றி - தெளிவாகக் கற்றறிந்து முதிர்ந்து; இடன் அறிந்து இலங்கும் வைவாள் இருஞ்சிலை குந்தம் மூன்றும் - (இவ்வூர்த்திகளிலிருந்து) வினை செய்யும் இடம் அறிந்து (செலுத்தும் பொழுது) விளங்கும் வாளும் பெரிய வில்லும் எறிகோலும் என்கிற மூன்றையும்; உடன் அறிந்து - சேர அறிந்து; உம்பரார்க்கும் உரைப்ப அருந் தகையரானார் - வானோர்க்கும் புகழ்தற்கரிய தகுதியுடையவரானார்.
விளக்கம் : தேரின் போர் - தேர்கொண்டு செய்யும் போர். குஞ்சரம் - யானை. கரப்பற என்றது நன்கு விளக்கமாக என்றவாறு. வைவாள் - கூரிய வாள். இருஞ்சிலை - பெரிய வில். குந்தம் - எறிகோல். உம்பரார் - தேவர். ( 122 )
1679. தானையு ளன்றி நின்ற
தனியிட மொற்றி மன்னர்
தானைமேற் சென்ற போழ்தும்
வென்றியிற் றளர்த லின்றித்
தானையை யுடைக்கும் வெம்போர்த்
தருக்கினார் மைந்த ரென்று
தானைசூழ் மன்னற் குய்த்தார்
மன்னனுந் தருக வென்றான்.
விளக்கம் : தானையுள் அன்றி - படையினுள் அல்லாமல்; தனியிடம் ஒற்றி - தாம் தனியே நின்ற இடத்தை ஒற்றிப் பார்த்து; மன்னர் தானைமேல் சென்ற போழ்தும் - பகை மன்னரின் படைமேற் சென்ற காலத்தும்; வென்றியில் தளர்தல் இன்றி - வெற்றியிலே தளரும் தன்மையின்றி; தானையை உடைக்கும் வெம்போர் - அப் பகைப் படையைக் கெடுக்கும் கொடிய போர்த் தொழிலிலே; மைந்தர் தருக்கினார் என்று - அவன் பிள்ளைகள் மிகுத்தார் என்று; தானை சூழ் மன்னற்கு உய்ந்தார் - படை சூழ்ந்த தடமித்த மன்னனுக்குக் கூறினர்; மன்னனும் தருக என்றான் - தடமித்தனும் யாம் காணுமாறு அவரைக் கொணர்க என்றான்.
விளக்கம் : தானை - படை, ஒற்றி - மறைவின் அறிந்து, தனியனாயினும் தானையோடாயினும் புகவும் போக்கும் பொச்சாப்பின்றி என்றார் கதையினும், (1-37 : 41-2.) மைந்தர் விசயன் முதலியோர் ( 123 )
1680. மழையொடு சூழ்ந்து கொண்ட
வான்றுகள் சிலையி னீக்கிக்
குழைமுக நெற்றி நக்கக்
கோலவிற் பகழி வாங்கி
யிழைபக விமைப்பி னெய்திட்
டெறிந்துமின் றிரிவ வேபோல்
விழைவுறு குமரர் புக்குச்
சாரியை வியத்த ரானார்.
பொருள் : விழைவுறு குமரர் - கலை விருப்பங்கொண்ட அரசன் மக்கள்; மழையொடு சூழ்ந்து கொண்ட வான் துகள் சிலையின் நீக்கி - அம்புகளினாற் கூடங் கட்டி மழையையும் அதனுடன் சூழ்ந்த தூளியையும் வில்லால் விலக்கிக் காட்டி; முகம் குழை நெற்றி நக்கக் கோலவில் பகழி வாங்கி - முகத்திலுள்ள குழையின் நெற்றியைத் தொடுமாறு அழகிய வில்லிற் கணையைத் தொடுத்து வளைத்து; இழைபக இமைப்பின் எய்திட்டு - நூல் பிளக்க நொடியிலே எய்து காட்டி ; எறிந்து - அவ்வாறே வாளாலும் வேலாலும் நூல் பிளக்க எறிந்து காட்டி; மின் திரிவவேபோல் - மின் திரியுமாறு போல ; சாரியை புக்கு வியத்தர் ஆனார் - சாரியை திரியும் தொழிலிலே புக்கு வியக்கத் தக்கார் ஆயினார்.
விளக்கம் : சூழ்ந்து கொண்ட மழையையும் தூளியையும் வில்லாலே நீக்குதல் - சர கூடங் கட்டி அதனாலே விலக்கிக் காட்டுதல். அத்திரங்கற்ற தன்மையையும் பயன்கொண்ட தன்மையையும் இத் தொடர்நிலைச் செய்யுளுட் கூறாமையின் நெருப்பும் நீருமாகிய அத்திரங்களை விட்டானென்றல் பொருந்தாது. விசயன் காண்டவ வனம் எரித்ததூஉம் சரகூடங் கட்டி யென்றுணர்க - இவ்வாறு நச்சினார்க்கினியர் கூறுவதால் இங்ஙனம் முன்னர் பொருள் கொண்டன ரெனக் கொள்ளவேண்டும். மழை கூறவே புய முட்டியும் துகள் கூறவே சிரோமுட்டியும், குழை நெற்றி நக்க வாங்கி யெனவே சுந்தர முட்டியும் கூறினார். மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் நேருமே எய்தலாம்! இதுவும் நச்சினார்க்கினியர் விளக்கம் (கந்தரம் - கழுத்து) ( 124 )
1681. விசயனே விசயன் விற்போர்க்
கதம்பனே முருகன் வேற்போர்த்
திசையெலாம் வணக்கும் வாட்போர்க்
கந்தணன் செம்பொ னாம
னசைவிலான் யானைத் தேர்ப்போர்க்
கசலனே யசல கீர்த்தி
வசையிலான் புரவிச் சேனென்
றியாவரும் புகழப் பட்டார்.
பொருள் : விற்போர் விசயன் விசயனே - விற் போரிலே விசயன் அருச்சுனனே; வேற் போர் கதம்பன் முருகனே - வேற் போரிலே கதம்பன் முருகனே; திசையெலாம் வணங்கும் வாட்போர்க்குச் செம்பொன் நாமன் அந்தணன் - எல்லாத் திக்கினும் வணங்கும் வாட்போரிலே கனகன் பரசுராமனே; யானைத் தேர்ப் போர்க்கு அசலகீர்த்தி அசைவிலான் அசலனே - யானைப் போரிலும் தேர்ப் போரிலும் அசலகீர்த்தி யென்பான் அசைவிலானாகிய அசலனே; புரவிச்சேன் வசையிலான் என்று - புரவிக்குச் சேனன் குற்றமில்லாத நகுலனே என்று; யாவரும் புகழப்பட்டார் - எல்லோராலும் இவ் வைவரும் புகழப்பட்டார்.
விளக்கம் : விசயனே விசயன் என்புழி முன்னின்ற விசயன் அருச்சுனனையும் பின்னது தடமித்தன் மகனாகிய விசயனையும் குறிக்கும். கதம்பன், (செம்பொனாமன்) கனகன் அசலகீர்த்தி சேனன் என்னு மிந் நால்வரும் விசயன் - தம்பிமார்கள். சேனன் - சேன் என நின்றது. அந்தணன் - பரசுராமன், அசலன் - சச்சந்தன் படைத்தலைவன், வசையிலான் என்றது நகுலனை. ( 125 )
1682. காவலன் மக்க ளாக்கங்
கண்டுகண் குளிர்ந்து நோக்கி
யேவலா னரச னொன்றோ
விருபிறப் பாள னல்லார்க்
காவதன் றின்ன மாட்சி
யவனையா னிகளம் பெய்து
காவல்செய் திடுவல் வல்லே
காளையைக் கொணர்மி னென்றான்.
பொருள் : காவலன் மக்கள் ஆக்கம் கண்டு கண் குளிர்ந்து நோக்கி - அரசன் மக்கள் கல்வியைக் கண்டு மகிழ்ந்து நோக்கி; ஏவலான் அரசன் ஒன்று இரு பிறப்பாளன் - இந்த வில்வல்லான் அரசனாதல், ஒன்று அந்தணன் ஆதல் ஆம்!; அல்லார்க்கு இன்ன மாட்சி ஆவது அன்று - மற்றோர்க்கு இத்தகைய கல்வி உண்டாகாது; (ஆதலால்); அவனை யான் நிகளம் பெய்து காவல் செய்திடுவல் - அவனை யான் தளையொன்று இட்டுக் காவலில் இடுவேன் : வல்லே காளையைக் கொணர்மின் என்றான் - இப்போதே காளையாகிய அவனைக் கொண்டு வருக என்றான்.
விளக்கம் : மகட் கொடையை நிகளம் என்றான். காற் கட்டு என்னும் வழக்குண்மையின். ஒன்று என்பது அல்லது என்னும் பொருட்டு. ( 126 )
1683. கல்வியுங் கொடிது போலுங்
காவலன் காளை தன்னை
யொல்லலன் சிறைசெய் கின்றா
னென்றவன் கருதிற் றோரார்
பல்சனம் பாபிந்து நிற்பப்
பார்த்திப குமரன் சோர்ந்தான்
வில்வலாற் கொண்டு வேந்தன்
வேறிருந் திதனைச் சொன்னான்.
பொருள் : காவலன் காளை தன்னை ஒல்லலன் சிறை செய்கின்றான் - அரசன் இக் கல்வியுடைய காளையைப் பொறானாய்ச் சிறைப்படுத்துகின்றான், ஆதலால்; கல்வியும் கொடிது போலும் என்று - கல்வியும் தீமைதரும் போலும் என்று கருதி; அவன் கருதிற்று ஓரார் பல்சனம் பரிந்து நிற்ப - அரசன் எண்ணியதை அறியாராய்ப் பலரும் வருந்தி நிற்கின்ற அளவிலே; பார்த்திப குமரன் சேர்ந்தான் - அரச குமரனாகிய சீவகன் வந்தான்; வேந்தன் வில்வலாற் கொண்டு வேறு இருந்து இதனைச் சொன்னான் - அரசன் வில் வல்லவனாகிய அவனை அழைத்துக்கொண்டு சென்று தனியே இருந்து இம் மொழிகளைக் கூறினான்.
விளக்கம் : சிறை செய்கின்றான் ஆதலால் கல்வியும் கொடிது போலும் என மாறுக. ஒல்லலன் - பொறாதவன், கருதிற்று - கருதியது. சனம் - மக்கள். பார்த்திப குமரன் - இறைமகன்; ஈண்டுச் சீவகன். வேந்தன் - தடமித்தன். (127 )
1684. புண்முழு திறைஞ்சுங் கோட்டுப்
பொருகளி றனைய தோன்றன்
மண்முழு தன்றி வானும்
வந்துகை கூடத் தந்தாய்
கண்முழு துடம்பிற் பெற்றேன்
காளைகைம் மாறு காணேன்
பண்முழு துடற்றுந் தீஞ்சொற்
பாவைநின் பால ளென்றான்.
பொருள் : புள் முழுது இறைஞ்சும் கோட்டுப் பொருகளிறு அனைய தோன்றல் - பறவைகள் எல்லாம் (ஊன் உண்ண) வந்து படியும் கோடுகளையுடைய களிறு போன்ற தோன்றலே!; மண்முழுது அன்றி வானும் வந்து கைகூடத் தந்தாய் - நில முழுதுமே அன்றி விண்ணும் வந்து கைகூடுமாறு போர்க்கலையைத் தந்தனை; கண்முழுது உடம்பில் பெற்றேன் - உடம்பு முழுதிலும் கண்பெற்றேன் ஆயினேன்; கைம்மாறு காணேன் - கைம்மாறு செய்ய அறியேன்; காளை - காளையே!; பண் முழுது உடற்றும் தீ சொல் பாவை நின் பாலள் என்றான் - இசையையெல்லாம் வருத்தும் இன்மொழியுடைய என் மகளாகிய பாவையாள் நினக்குரியள் என்றான்.
விளக்கம் : இவர்க்கு நீ கொற்றம் கொடுத்தலின், மண் முழுதும் கை கூடுதல் அன்றி, மறுமையில் வானும் வந்து கைகூடும்படி ஞானநெறியைத் தந்தாய்; நல்வினை செய்தாருடம்பிற் கண்முழுதும் யான் பெற்றேன் என்றது, இவர் போர்த் தொழில் காணப்பெறுதலின் ஊனக்கண்ணும், இவரை நன்னெறியைச் சேர்வித்தலின் ஞானக் கண்ணும் பெற்றேன் என்றவாறு.இனி வியந்து கூறுகின்றவன் மண்ணும் விண்ணும் கைகூடத் தந்தாய்; யானும் உடம்பெல்லாம் கண்பெற்றேன் என்றுமாம்; இந்திரனானேன்என்றுமாம் - இவ்வாறு நச்சினார்க்கினியர் கூறுகின்றார். ( 128 )
1685. முடிகெழு மன்னன் சொல்ல
மொய்கொள்வேற் குருசி றேற்றான்
வடிவமை மனனொன் றாக
வாக்கொன்றா மறுத்த லோடுந்
தடிசுவைத் தொளிறும் வேலான்
றன்கையான் முன்கை பற்றி
யிடிமுர சனைய சொல்லா
லிற்றென விளம்பு கின்றான்.
பொருள் : முடி கெழு மன்னன் சொல்ல - (இவ்வாறு) முடியுடைய மன்னன் மொழிய; மொய்கொள் வேல் குருசில் தேற்றான் - ஒளி பொருந்திய வேலேந்திய சீவகன் தெளிவுறக் கூறானாய்; வடிவமை மனன் ஒன்றாக வாக்கு ஒன்றா மறுத்தலோடும் - கனகமாலையின் வடிவம் பொறிக்கப் பெற்ற மனம் வேட்கையுறவும் மொழியால் வேட்கை தோன்றாமல் மறுத்தவுடன்; தடி சுவைத்து ஒளிறும் வேலான் தன் கையால் முன் கைபற்றி - ஊனைச் சுவைபார்த்து விளங்கும் வேலினான் தன் கையினாலே சீவகனுடைய முன் கையைப் பிடித்துக்கொண்டு; இடிமுரசு அனைய சொல்லால் இற்று என விளம்புகின்றான் - இடியும் முரசும் போன்ற மொழியால் இத்தன்மைய தென்று ஒரு மொழி கூறுகின்றான்.
விளக்கம் : வடியமை என்பது பாடமாயின், ஆராய்ச்சி அமைந்த என்க.வடிவு அமை மனம் - கனகமாலை உருவம் பதியப்பெற்ற மனம். தடி - தசை, வேலான் - தடமித்தன், இற்று - இத்தன்மைத்து. ( 129 )
1686. பூவியல் கோயில் கொண்ட
பொன்னனா ளனைய நங்கை
காவியங் கண்ணி வந்து
பிறத்தலுங் கண்க ளீண்டி
மூவிய றிரித லின்றிச்
சாதக முறையிற் செய்தா
ரேவியல் சிலையி னாய்க்கே
யுரியளென் றுரைப்ப நேர்ந்தான்.
பொருள் : பூ இயல் கோயில் கொண்ட பொன் அனாள் அனைய காவி அம் கண்ணி நங்கை - தாமரை மலரால் இயன்ற கோயிலைக் கொண்ட திருவைப் போன்றவளும், காவி அனைய கண்ணாளும் ஆகிய இப் பெண்; வந்து பிறத்தலும் - எனக்கு மகளாக வந்து பிறந்தவுடனே; கணிகள் ஈண்டி - சோதிடர்கள் கூடி; மூஇயல் திரிதல் இன்றி முறையின் சாதகம் - மூன்றியலும் கெடுதல் இல்லாமல் முறைப்படி சாதகத்தை; ஏ இயல் சிலையினாய்க்கே உரியள் என்று செய்தார் - அம்பு பொருந்திய வில்லையுடைய நினக்கே பொருந்தியவள் என்று குறித்தனர்; உரைப்ப நேர்ந்தான் - என அரசன் கூறச் சீவகன் ஒப்பினான்.
விளக்கம் : மூவியல் : சிரோதயம், பூபதனம், தெரியுங் காலம், மூவியலை உதயா ரூடக்கவிப் புக்கள் என்பர் நச்சினார்க்கினியர். கலைகளும் வடிவு முதலியனவும் உடையவன் ஒருவன் என்றலின் இவனே யாயிற்று. ( 130 )
1687. வாருலா முலையி னாட்கும்
வரிசிலைத் தடக்கை யாற்குஞ்
சீருலாங் கோலஞ் செய்தார்
செப்பினார் வதுவை நன்னாட்
பாரெலா மறிய நின்று
படாமுர சார்ப்பத் தீவேட்
டேருலாங் கோதை யின்பத்
திளநலம் பருகு கின்றான்.
பொருள் : வார் உலாம் முலையினாட்கும் வரிசிலைத் தடக்கையாற்கும் - கனகமாலைக்கும் சீவகனுக்கும்; வதுவை நல்நாள் செப்பினார் - மணத்துக்குரிய நல்ல நாளைக் கூறினர்; சீர் உலாம் கோலம் செய்தார் - சிறப்புப் பொருந்திய மணக் கோலம் செய்தனர்; பார் எலாம் அறிய நின்று படாமுரசு ஆர்ப்ப - உலகெலாம் அறியுமாறு நின்று ஒலியவியா முரசு ஆரவாரிக்க; தீ வேட்டு - தீயிலே ஆகுதி பண்ணி; ஏர் உலாம் கோதை இன்பத்து இளநலம் பருகுகின்றான் - அழகு பொருந்திய கோதையாளின் இன்பந்தரும் இளநலத்தைத் துய்க்கலுற்றான்.
விளக்கம் : முலையினாள் - கனகமாலை, தடக்கையான் - சீவகன், வதுவை - திருமணவிழா, பார்; ஆகுபெயர். ஏர்-அழகு, கோதை - கனகமாலை, இளநலம் - இளமையழகு. ( 131 )
1688. மோட்டிளங் குரும்பை யன்ன
முலைக்கடாக் களிறு முத்தஞ்
சூட்டிய வோடை பொங்க
நாணெனுந் தோட்டி மாற்றி
யாட்டிய சாந்த மென்னு
முகபடா மழித்து வெம்போ
ரோட்டற வோட்டிப் பைந்தா
ருழக்கியிட் டுவந்த வன்றே.
பொருள் : மோட்டு இளங் குரும்பை அன்ன முலைக்கடாக் களிறு - பெரிய இளங் குரும்பை போன்ற முலைகளாகிய மதகளிறுகள்; முத்தம் சூட்டிய ஓடை பொங்க - முத்துக்களாகிய அணிந்த நெற்றிப்பட்டம் பொங்க; நாண் எனும் தோட்டி மாற்றி - நாணமாகிய அங்குசத்தை நீக்கி; ஆட்டிய சாந்தம் என்னும் முகபடாம் அழித்து - பூசிய சாந்தமாகிய முகபடாத்தை விலக்கி; வெம்போர் - விரும்பிய முயக்கமாகிய போரில்; ஓட்டு அற ஒட்டி - பொருந்தாத இடமிலை யென்னுமாறு மார்பெங்கும் பொருத்தி; பைந்தார் உழக்கியிட்டு உவந்த - புதிய மாலையை மிதித்துக் கீழே போகட்டு மகிழ்ந்தன.
விளக்கம் : கொடிய போரை இனிக் கேடில்லை யென்னும்படி கெடுத்துத் தூசியை உழக்கி யென்றும் கொள்க. ( 132 )
1689. ஒண்மணிக் குழைவில் வீச
வொளிர்ந்துபொன் னோலை மின்ன
வண்ணமே கலைக ளார்ப்ப
வான்சிலம் பொலிப்ப முத்துங்
கண்ணியும் பசும்பொ னாணுங்
கதிர்முலை புடைப்பக் காம
ரண்ணலங் குமரன் றன்னொ
டாயிழை யாடி னாளே.
பொருள் : ஒண் மணிக் குழை வில்வீச - சிறந்த மணிக்குழை ஒறி வீச; பொன் ஓலை ஒளிர்ந்து மின்ன - பொன்னாலாகிய ஓலை கதிர் விட; வண்ணம் மேகலைகள் ஆர்ப்ப - அழகிய மேகலைகள் ஒலிக்க; வான் சிலம்பு ஒலிப்ப - சிறந்த சிலம்பு ஒலிக்க; முத்தும் கண்ணியும் பசும் பொன் நாணும் கதிர்முலை புடைப்ப - முத்துமாலை முதலியவை கதிர்த்த முலையைப் புடைப்ப; காமர் அண்ணல் அம்குமரன் தன்னொடு ஆயிழை ஆடினாள் - விருப்பூட்டும் அண்ணலாகிய சீவகனோடு கனகமாலை ஆடினாள்.
விளக்கம் : குமரனோடு ஆயிழை ஆடினாள் எனவே, ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தாய் இருவரும் ஆடினார் என்பது பட நின்றது. எனவே, அவன் வண்ண மேகலை ஆர்ப்பச் சிலம்பு ஒலிப்ப ஆடினானென்றும் அவள் வீச மின்னப் புடைப்ப ஆடினாளென்றுங் கொள்க, இவன் காட்டக் கண்டாளென வேண்டுதலின். ( 133 )
1690. மூசுதேன் வாரி யல்குற்
பட்டபின் முலைக ளென்னு
மாசறு கந்தின் மென்றோண்
மணித்தொடர்க் கொளுத்தி வாட்க
ணாசறு வயிரத் தோட்டி
நுதலணிந் தமுதச் செவ்வாய்
காசறு கவள மாகக்
களிறுகோட் பட்ட தன்றே.
பொருள் : களிறு - சீவகனாகிய களிறு; மூசு தேன் அல்குல் வாரி - தேன் மொய்க்கும் அல்குலாகிய கூடத்திலே; அமுதச் செவ்வாய் காசு அறு கவளம் ஆகப் பட்டபின் - அமுதனைய செவ்வாய் குற்றம் அற்ற கவளமாகக் கொண்டு அகப்பட்டபின்; முலைகள் என்னும் மாசு அறு கந்தின் - தன் முலைகளாகிய குற்றமற்ற கம்பத்திலே; மென்தோள் மணித் தொடர்க் கொளுத்தி - மெல்லிய தோளாகிய மணிகளிழைத்த சங்கிலியாலே பூட்டி; வாள் கண் ஆசு அறு வயிரத் தோட்டி நுதல் அணிந்து - வாளனைய கண்ணாகிய வயிரத்தோட்டியை நுதலில் அணிந்து; கோட்பட்டது - பிணிக்கப்பட்டது.
விளக்கம் : களிறு வாரியிற்பட்டபின் கந்தின் தொடர்கொளுத்தி கோட்டி நுதலணிந்து கவளம் கொடுப்பக் கோட்பட்டது என்க. களிறு - சீவகனுக் குவமை வாரி - யானை அடக்குமிடம்; இஃதல்குற்குவமை. கந்து - யானை கட்டுந்தறி; இது முலைக்குவமை. தொடர் - சங்கிலி; இது தோட்குவமை. தோட்டி - அங்குசம்; இது கண்ணுக்குவமை. செவ்வாய் என்றது வாலெயிறூறிய நீரினை : ஆகுபெயர். கவளம் யானைக்கிடும் உணவு. ( 134 )
1691. ஒப்பிணை தனக்கி லாதா னுறுவரை யகல மூழ்கிச்
செப்பிணை யனைய செங்கேழ் வனமுலை பொருதுசேப்பக்
கற்பக மரத்தைப் புல்லிக் கைவிடா தொழிந்து காமத்
துப்புர வுமிழுங் காம வல்லியின் றோற்ற மொத்தாள்.
பொருள் : தனக்கு ஒப்பு இணை இலாதான் உறுவரை அகலம் - தனக்கு உவமையாகிய இணை இல்லாத சீவகனின் பெருவரை அனைய மார்பிலே; செப்பு இணை அனைய செங்கேழ் வனமுலை பொருது மூழ்கிச் சேப்ப - தன்னுடைய இணையான செப்புப் போன்ற சிவந்து ஒளிரும் அழகிய முலைகள் பொருது புதைந்து சிவக்குமாறு; கற்பக மரத்தைப் புல்லிக் கைவிடாது ஒழிந்து - கற்பக மரத்தைத் தழுவிக் கைவிடாமல் தங்கி; காமத் துப்புரவு உமிழும் காம வல்லியின் தோற்றம் ஒத்தாள் - அம்மரத்திற்குக் காமமாகிய நுகர்பொருள்களை நல்குகின்ற ஒரு காம வல்லியின் தோற்றத்தை ஒத்தாள்.
விளக்கம் : கற்பக மரத்திற்குத் துப்புரவு நல்கும் காமவல்லி : இல் பொருளுவமை.அகலம் - மார்பு, செங்கேழ் - சிவப்புநிறம், வனமுலை - அழகிய முலை, சேப்ப - சிவப்ப, துப்புரவு - நுகர்பொருள். காமவவல்லி - கற்பகத்தின்மேற் படருமொரு பொன்னிறமுடைய கொடி. ( 135 )
1692. காய்வுறு வேட்கை தன்னாற்
கங்குலும் பகலும் விள்ளான்
வேய்வெறுத் தமைந்த தோளாள்
விழுத்திரை யமுத மென்று
சேய்நலங் கடந்த செல்வன்
றிருநலந் தெளித்திட் டாற்ற
வாய்விடாள் பருகி யிட்டாண்
மடக்கிள்ளை மருட்டுஞ் சொல்லாள்.
பொருள் : சேய் நலம் கடந்த செல்வன் - முருகன் அழகையும் வென்ற சீவகன்; காய்வுறு வேட்கை தன்னால் - எரியும் காமத் தீயினால்; கங்குலும் பகலும் விள்ளான் - இரவும் பகலும் நீங்காதவனாய்; வேய் வெறுத்து அமைந்த தோளாள் - மூங்கிலை அது ஒவ்வாமையால் வெறுத்துப் பொருந்திய தோளாளை; விழுத்திரை அமுதம் என்று - சிறந்த பாற்கடலிலே தோன்றிய அமுதம் என்று கருதி; திரு நலம் தெளித்திட்டு ஆற்ற - ஊடலாற் கலங்காதவாறு அவள் அழகைப் புனைந்துரைத்து தெளிவித்து ஆற்றுதலால் : மடக்கிள்ளை மருட்டும் சொல்லாள் - இளங்கிளியை மயக்கும் சொல்லினாள்; வாய்விடாள் பருகியிட்டாள் - நீங்காமல் நுகர்ந்திட்டாள்.
விளக்கம் : விள்ளான் - நீங்காதவனாகி, வேய்தான் ஒவ்வாமையான் வெறுத்துமாறின தோள் என்க. விழுத்திரை என்றது திருப்பாற்கடலை. சேய் : முருகன், பருகியிட்டாள் : ஒருசொல்; பருகினாள் என்க. ( 136 )
1693. திரையிடைக் கொண்ட வின்னீ ரமுதுயிர் பெற்ற தென்னு
முரையுடைக் கோதை மாத ரொளிநல நுகர்ந்து நாளும்
வரையுடை மார்ப னங்கண் வைகின னென்ப மாதோ
கரைகட லனைய தானைக் காவலன் காத லானே.
பொருள் : வரையுடை மார்பன் - வரை தோற்கும் மார்பனான சீவகன்; திரையிடைக் கொண்ட இன்னீர் அமுது உயிர் பெற்றது என்னும் - இனிய பண்புடைய அமுதம் உயிர் பெற்ற தென்கின்ற; உரையுடைக் கோதை மாதர் - உலகம் புகழும் உரையை இப்போது கொண்ட கனகமாலையின்; ஒளிநலம் நாளும் நுகர்ந்து - ஒளியுறும் அழகை எப்போதும் பருகி; கரை கடல் அனைய தானைக் காவலன் காதலான் - முழங்காநின்ற கடல் போன்ற படைகளையுடைய அரசன் அன்பினாலே; வைகினன் - அவ்விடத்தே சில நாட்கள் தங்கினான்.
விளக்கம் : வரையகல் மார்பன் என்றும் பாடம். உயிர் சீவகன், அமுது : கனகமாலை. திரை - பாற்கடல். திரையளிப்பக் கொண்ட அமுதென்க. இனிய நீர்மையுடைய அமுது என்க. உரை - புகழ், மாதர் : கனகமாலை, மார்பன் : சீவகன், மாது, ஓ. அசைகள். கரைகடல் : வினைத்தொகை.( 137 )
1694. வாளினான் மிடைந்த கண்ணாள்
வருமுலைத் தடத்துள் வைகித்
தோளினான் மிடைந்து புல்லித்
தொண்டைவா யமுத மாந்திக்
காளைசெல் கின்ற நாளுட்
கட்டியங் காரன் மூதூர்
மீளிவேற் குருசிற் குற்றார்க்
குற்றது விளம்ப லுற்றேன்.
பொருள் : வாளினால் மிடைந்த கண்ணாள் - வாளாலே போர் செய்யப்பட்ட கண்ணாளின்; வரும் முலைத் தடத்துள்வைகி - வளரும் முலையாகிய தடத்திலே தங்கி; தோளினால் மிடைந்து புல்லி - தோளினாலே நெருங்கத் தழுவி; தொண்டை வாய் அமுதம் மாந்தி - கொவ்வைக் கனி அனைய வாயின் அமுதத்தை நுகர்ந்து; காளை செல்கின்ற நாளுள் சீவகன் வாழ்கின்ற நாளிலே; கட்டியங்காரன் மூதூர் - கட்டியங்காரனுடைய இராசமா புரத்திலே; மீளிவேல் குருசிற்கு உற்றார்க்கு உற்றது விளம்பல் உற்றேன் - சிறந்த வேலையுடைய சீவகனுடைய சுற்றத்தார்க்கு நேர்ந்ததை உரைக்கத் தொடங்கினேன்.
விளக்கம் : மிடைந்த கண் - மிடையப்பட்ட கண். கண்ணாள் : கனகமாலை. வருமுலை : வினைத்தொகை. மிடையப் புல்லி என்க. தொண்டை - கொவ்வைக்கனி. மாந்தி - பருகி. காளை : சீவகன். மூதூர் - ஈண்டு. இராசமாபுரம். மீளிவேல் - தலைமைத் தன்மையுடைய வேல். உடையான்றன்மை உடைமைமேனின்றது. ( 138 )
1695. வெண்மதி யிழந்த மீன்போல்
விடலைக்குத் தம்பி மாழாந்
தொண்மதிச் சூழ்ச்சி மிக்கா
னுள்ளுழி யுணர்தல் செல்லான்
புண்மதித் துடைந்த போது
பொழிந்துமட் டொழுகு நன்னாட்
டுண்மதி வருந்த நாடி
யொளிநக ரெய்தி னானே.
பொருள் : விடலைக்குத் தம்பி வெண்மதி இழந்த மீன்போல் மாழாந்து - சீவகனுக்கு இளையானாகிய நந்தட்டன் திங்களைப் பிரிந்த உரோகிணி போலே மயங்கி; ஒண் மதிச் சூழ்ச்சி மிக்கான் உள்ளுழி உணர்தல் செல்லான் - சிறந்த அறிவின் சூழ்ச்சியிலே சிறந்தானுடைய இருப்பிடம் அறியானாகி; புள் மதித்து உடைந்த போது மட்டுப் பொழிந்து ஒழுகும் நன்னாட்டு - வண்டுகள் குடைதலால் விரிந்த மலர்கள் தேனைப் பொழிந்து ஒழுகும் நல்ல நாட்டிலே; உள்மதி வருந்த நாடி - அறிவு வருந்தத் தேடி; ஒளி நகர் எய்தினான் - பிறகு ஒளியை யுடைய நகரத்தை அடைந்தான்.
விளக்கம் : நகர் - குணமாலையின் வீடு என்பர் நச்சினார்க்கினியர். விடலைக்குத் தம்பி என்றது நந்தட்டனை. மாழாத்தல் - மயங்குதல். சூழ்ச்சி மிக்கான் : சீவகன். புள், ஈண்டு வண்டு. மதித்தல் - குடைதல். மட்டு - தேன். மதி உள்வருந்த என்க. ( 139 )
1696. வெள்ளிவெண் மலைக்கு வேந்த
னொருமகள் வேற்கட் பாவை
யொள்ளிழை யவளைக் கேட்பா
னுறுவலி செல்லு மாங்கண்
வள்ளிதழ்க் கோதை தானே
யிட்டதோர் வண்ணந் தன்னைக்
கொள்ளத்தான் முரல லுற்றுக்
கோலமை வீணை கொண்டாள்.
பொருள் : வெள்ளி வெண் மலைக்கு வேந்தன் ஒரு மகள் - வெள்ளி மலைக்குத் தலைவனான கலுழவேகன் மகளாகிய; வேல் கண் பாவை ஒள்ளிழை அவளைக் கேட்பான் - வேலனைய கண்களையுடைய பாவையும் ஒளியிழைகளை அணிந்தவளுமான தத்தையைக் கேட்பதற்கு; உறுவலி செல்லும் ஆங்கண் - மிகு வலியுடைய நந்தட்டன் செல்லும்போது; வள் இதழ்க் கோதை தானே இட்டது ஓர் வண்ணம் தன்னை - வளவிய இதழையுடைய மலர்க் கோதையாள் தானே அமைத்ததொரு வண்ணத்தை; கொள்ளத் தான் முரலல் உற்றுக் கோல் அமை வீணை கொண்டாள் - தன் மனங் கொள்ளத் தானே பாடத் தொடங்கி நரம்பையுடைய யாழைக் கையிற் கொண்டாள்.
விளக்கம் : வெள்ளி வெண்மலை என்புழி வெண்மை இயல்படை. வேந்தன்; கலுழவேகன். ஒரு மகளும் வேற்கட்பாவையும் ஒள்ளிழையவளும் ஆகிய காந்தருவதத்தை என்க. கேட்பான் - கேட்டற்கு. உறுவலி: அன்மொழித் தொகை. வண்ணம் - பாடல். கோல் - நரம்பு ( 140 )
1697. ஆடகச் செம்பொ னாணி யானெய்வார்ந் தனைய திண்கோன்
மாடக நொண்டு கொண்டு மாத்திரை நிறைய வீக்கிச்
சூடக மணிந்த முன்கைத் தொகுவிரல் சேப்ப வெற்றித்
தோடலர் கோதை கீதந் துணிவினிற் பாடுகின்றாள்.
பொருள் : தோடு அலர் கோதை - இதழ் விரிந்த மலர் மாலையாள்; ஆடகச் செம்பொன் ஆணி ஆன்நெய் வார்ந்த அனைய திண்கோல் - ஆடகப் பொன்னால் ஆன ஆணியிற் கட்டின ஆவின் நெய் ஒழுகினாற் போன்ற திண்ணிய நரம்பினை; மாடகம் நொண்டு கொண்டு - முறுக்காணியினாலே முகந்து கொண்டு; மாத்திரை நிறைய வீக்கி - சுருதியின் அளவை மிகுத்துக் கட்டி; சூடகம் அணிந்த முன்கைத் தொகுவிரல் சேப்ப எற்றி - வளையல்அணிந்த முன்கையில் குவிந்த விரல் சிவக்குமாறு தெறித்துப் பார்த்து; கீதம் துணிவினில் பாடுகின்றாள் - இசையைத் தெளிவுடன் பாடுகின்றாள்.
விளக்கம் : ஆடகச் செம்பொன் நால்வகைப் பொன்னில் ஒன்று. திண்கோல் - திண்ணிய நரம்பு. மாடகம் - முறுக்காணி. நொண்டு கொண்டு : ஒரு சொல்; முகந்துகொண்டென்க. சூடகம் - ஒருவகை வளையல். தொகுவிரல் : வினைத்தொகை. கோதை : காந்தருவதத்தை; துணிவு - தெளிவு.( 141 )
வேறு
1698. இறுமருங்குல் போதணியி னென்றினைந்து கையி
னறுமலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார்
நண்ணார் துறப்ப நனிவளையுந் தோடுறப்பக்
கண்ணோவா முத்துறைப்பத் தோழி கழிவேனோ.
பொருள் : தோழி! - தோழியே!, மருங்குல் போது அணியின் இறும் என்று இனைந்து - இடை மலரணியினும் ஒடியும் என்று வருந்தி; கையின் நறுமலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார் - கையில் உள்ள நல்ல மலர்களைக் கீழே போகடுவாராகிய காதலர் இப்போது அணுகாமல் நீங்கினார்; நண்ணார் துறப்ப வளையும் தோள் நனி துறப்ப - (இங்ஙனம்) அவர் அணுகாராய்க் கைவிட, வளைகளையும் தோள்கள் அறவே நீங்க; கண் ஓவா முத்து உறைப்பக் கழிவேனோ? - கண்கள் ஒழிவின்றிக் கண்ணீராகிய முத்துக்களைச் சிந்த இங்ஙனம் காலம் கழிப்பேனோ? கழியாத தொரு நாளும் வருமோ?
விளக்கம் : ஓ : வினா.போது அணியின் மருங்குல் இறும் என்று மலர் சிந்துவார் என மாறுக. சிந்துவார் என்றது சீவகனை நண்ணார்: முற்றெச்சம். இது முதல் மூன்று செய்யுளும் தலைவி தன் ஆற்றாமையைத் தோழிக்குக் கூறல் என்னும் அகத்துறை பற்றிய செய்யுள். முத்து கண்ணீர்க்கு ஆகுபெயர். உறைத்தல் - துளித்தல். இவற்றைத் தாழிசைக் கொச்சக ஒருபோகென்பர் நச்சினார்க்கினியர். ( 142 )
1699. பூமாலை சூடிற் பொறையாற்றா நுண்மருங்கு
லேமாரா தென்றினைவா ரெண்ணார் துறந்தா
ரெண்ணார் துறப்ப வினவளையுந் தோடுறப்ப
மணணார்வேற் கண்டுயிலா தோழி மருள்வேனோ.
பொருள் : தோழி - தோழியே!; பொறை ஆற்றா நுண்மருங்குல் பூமாலை சூடின் - முலைச் சுமையைச் சுமக்கவியலாத நுண்ணிய இடை மலர்மாலையையும் அணிந்தால்; ஏம் ஆராது என்று இனைவார் - இன்பம் நிறையாமல் இறும் என்று வருந்தும் காதலர்; எண்ணார் துறந்தார் - என்னை நினையாராய்க் கைவிட்டார்; எண்ணார் துறப்ப இனவளையும் தோள் துறப்ப - இங்ஙனம் அவர் நினையாமல் துறப்பத் தொகுதியான வளைகளும் தோளினின்றும் நழுவ; மண் ஆர் வேல் கண் துயிலா மருள்வேனோ? - மஞ்சனம் ஆடுதல் பொருந்திய வேலனைய கண்கள் உறங்காமல் மயங்குவேனோ?
விளக்கம் : ஏம் - இன்பம். ஏமாராது, என்றது முறிந்துபடும் என்னும் பொருள் குறித்தது. மண் - மஞ்சனமாடுதல். ( 143 )
1700. வண்டூத வம்மருங்கு னோமென்று பூமாலை
கொண்டோச்சுங் காதலார் கூடார் துறந்தார்
கூடா ரவர்துறப்பக் கோல்வளையுந் தோடுறப்பத்
தோடார்பூங் கண்டுயிலா தோழி துயர்வேனோ.
பொருள் : தோழி - தோழியே!; வண்டு ஊத அம் மருங்குல் நோம் என்று - இயல்பான மணத்தை நுகர வண்டுகள் முரல்வதனாலே அழகிய இடை வருந்தும் என்று; பூ மாலை கொண்டு ஓச்சும் காதலார் - ஒப்பனைக்கு வந்த மலரையும் மாலையையும் வீசிஎறியும் காதலன்; கூடார் துறந்தார் - கூடாமல் கைவிட்டார்; கூடார் அவர் துறப்பக் கோல் வளையும் தோள் துறப்ப - கூடாமல் அவர் நீங்கத் திரண்ட வளையும் தோளினின்றும் நழுவ; தோடு ஆர் பூங்கண் துயிலா துயர்வேனோ? - இதழ்களையுடைய மலரனைய கண்கள் உறங்காவாய் நான் வருந்துவேனோ?
விளக்கம் : அம் மருங்குல் - அழகிய இடை. வண்டூதவே நோமிது இவற்றை அணியின் இறுதல் ஒருதலை என்று பூமாலை ஓச்சும் காதலார் என்பது கருத்து. இவை அகத்திணைப் பாடலாதற்குச் சுட்டி ஒருவர் பெயர் கூறாது புனைந்தனள் என்க. ( 144 )
வேறு
1701. ஊன்றகர்த் தனைய போன்று
மூடெரி முளைப்ப போன்றுந்
தோன்றுபூ விலவத் தங்கட்
டொகையணி லனைய பைங்காய்
கான்றமென் பஞ்சி யார்ந்த
மெல்லணை யாழ்கை நீக்கித்
தேன்றயங் கிணர்பெய் கோதை
சிந்தையி னீட்டி னாளே.
பொருள் : ஊன் தகர்த்த அனைய போன்றும் - ஊனைச் சிதறினாற் போன்றும்; ஊடு எரி முளைப்ப போன்றும் - இடையிலே எரிகள் பலவாய் முளைப்பன போன்றும்; தோன்று பூ இலவத்து அங்கண் - தோன்றும் மலர்களையுடைய இலவமரத்தினிடையே; தொகை அணில் அனைய பைங்காய் - திரளாகிய அணிலைப் போன்ற பசிய காய்கள்; கான்ற மென் பஞ்சி ஆர்த்த - உமிழ்ந்த மெல்லிய பஞ்சினை நிறையக் கொண்ட; மெல் அணையாழ் கை நீக்கி - மெல்லிய அணையிலே சாய்ந்து யாழினைக் கையிலிருந்து நீக்கி வைத்து; தேன் தயங்கு இணர் பெய் கோதை - தேன் தங்கிய மலர்க் கொத்துக்களைப் பெய்த கூந்தலாள்; சிந்தையின் நீட்டினாள் - சிந்தனையிலே மிகுத்தாள்.
விளக்கம் : தகர்க்கப்பட்ட ஊன்போன்றும் எரி பலவாய் முளைப்பன போன்றும் தோன்றும் பூவையுடைய இலவத்திடத்து அணிலனைய காய்கான்ற பஞ்சென்க என்பர் நச்சினார்க்கினியர். ஊனும் நெருப்பும் இலவம் பூவிற்குவமை. அதன்காய்க்கு அணில் உவமை. சிந்தை - வருத்தம். நீடினாள் என்பது நீட்டினாள் என விரிந்தது; விகாரம். ( 145 )
வேறு
1702. நுண்ணிய வரியொடு திரண்டு நோக்குநர்
கண்மனங் கவற்றிய காமர் தொண்டைவா
யண்ணலை நினைந்துவெய் துயிர்ப்ப வாய்நலம்
வண்ணத்தின் மழுங்கிவாட் கண்ணி வாடினாள்.
பொருள் : நுண்ணிய வரியொடு திரண்டு நோக்குநர் கண் மனம் கவற்றிய காமர் தொண்டைவாய் - நுண்ணிய வரிகளுடன் திரண்டு, பார்ப்பவருடைய கண்ணையும் மனத்தையும் வருத்தின, விருப்பம் மருவிய கொவ்வைக் கனியனைய வாயின்; ஆய்நலம் - ஆய்தற்குரிய அழகு; அண்ணலை நினைந்து வெய்து உயிர்ப்ப - சீவகனை எண்ணிப் பெருமூச் செறிவதால்; வண்ணத்தின் மழுங்கி - பழைய வண்ணத்தினின்றும் மாறுபட்டு; வாள்கண்ணி வாடினாள் - வாளனைய கண்ணாள் உடலும் மெலிந்தாள்.
விளக்கம் : நோக்குநர் கண்மனம் கவற்றிய அண்ணல் எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். கண்ணையும் மனத்தையும் கவற்றிய என்க. காமர் - காமம் மருவுதற்குக் காரணமான என்க. காமர் - அழகுமாம். வாட்கண்ணி : காந்தருவதத்தை. ( 146 )
1703. மின்றவழ் மணிவரை மாலை மார்பனை
பொன்றவ ழிளமுலை பொருது புல்லுநா
ளென்றுகொ லெனநினைந் திருந்த செவ்வியுட்
சென்றனன் சீவகற் கிளைய செல்வனே.
பொருள் : மின் தவழ் மணிவரை மாலை மார்பனை - ஒளி தவழும் மணிமலை போன்ற, மாலை அணிந்த மார்பனை; பொன் தவழ் இளமுலை பொருது புல்லும் நாள் - தேமல் தவழும் இள முலைகள் பொரத் தழுவும் நாள்; என்று கொல் என நினைந்திருந்த செவ்வியுள் - என்றோ என்று எண்ணியிருந்த காலத்தில்; சீவகற்கு இளைய செல்வன் சென்றனன் - சீவகனுக்குத் தம்பியான நந்தட்டன் அவளிருக்கும் மனையைச் சேர்ந்தான்.
விளக்கம் : பொருது - பொர. மார்பன் : சீவகன். புல்லுநாள் - தவழுதற்கியலும் நாள், என்று கொல் என்புழிக் கொல் என்பது ஐயப்பொருள்மேனின்றது. செவ்வி - பொழுது. செல்வன் : நந்தட்டன். ( 147 )
வேறு
1704. ஐவிலி னகல நின்றாங்
கடிதொழு திறைஞ்சி னாற்கு
மைவிலை பெற்ற கண்ணாண்
மைந்தனை மருண்டு நோக்கிக்
கைவிலுங் கணையு மில்லாக்
காமன்போந் திருக்க வென்ன
மொய்வெல்லுங் குருதி வேலான்
மூவிற்க ணிறைஞ்சி நின்றான்.
பொருள் : ஆங்கு ஐவிலின் அகல நின்று - அவளிருக்குமிடத்திற்கு ஐந்து விற்கிடை நீளத்தே நின்று ; அடி தொழுது இறைஞ்சினாற்கு - அவள் அடிகளில் வணங்கிக் கவிழ்ந்து நின்றவனுக்கு; மைவிலை பெற்ற கண்ணாள் மைந்தனை மருண்டு நோக்கி - மைவிலை பெறுதற்குக் காரணமான கண்ணாள் அவனை மருண்டு பார்த்து; கை விலும் கணையும் இல்லாக் காமன் போந்து இருக்க என்ன - கை வில்லும் அம்பும் இல்லாத காமனே! இங்ஙனே போந்து இருக்க என்று கூற ; மொய் வெல்லும் குருதி வேலான் மூவிற்கண் இறைஞ்சி நின்றான் - பகையை வெல்லும் குருதி படிந்த வேலான் மூவிற்கிடை நீளத்தே வந்து தலைகுனிந்து நின்றான்.
விளக்கம் : வேலான் போந்திருக்க என்று தத்தை கூற காமன் போந்து நின்றான் என்பர் நச்சினார்க்கினியர். அண்ணன் மனைவி காமனே என்று விளிப்பது தகுதி அன்றென எண்ணினார் போலும். எனினும், அவரே, பிள்ளையை உவந்து கூறுமாறே கூறினாளென அவள் கூற்றாக்கலுமாம் என்பர். இறைஞ்சினாற்குக் கூற என இயைக்க. ( 148 )
1705. திங்கள்வாண் முகமு நோக்கான்
றிருமுலைத் தடமு நோக்கா
னங்கதிர்க் கலாப மின்னு
மணியல்குற் பரப்பு நோக்கான்
செங்கயற் கண்ணி னாடன்
சீறடிச் சிலம்பு நோக்கி
யெங்குளா ரடிக ளென்னா
வின்னண மியம்பி னானே.
பொருள் : செங்கயல் கண்ணினாள்தன் - சிவந்த கயல் போன்ற கண்களையுடைய தத்தையின்; திங்கள் வாள் முகமும் நோக்கான் - திங்களைப் போன்ற ஒளி பொருந்திய முகத்தையும் நோக்கானாய்; திருமுலைத் தடமும் நோக்கான் - அழகிய முலைத் தடத்தையும் நோக்கானாய்; அம் கதிர்க் கலாபம் மின்னும் அணி அல்குல் பரப்பும் நோக்கான் - அழகிய ஒளி செயும் கலாபம் மின்னுகின்ற அழகிய அல்குற் பரப்பையும் பாரானாய்; சீறடிச் சிலம்பு நோக்கி - தான் இறைஞ்சி நிற்றலின் அவளுடைய சிற்றடிக்கண் சிலம்பொன்றையுமே நோக்கி; எங்கு அடிகள் உளார் என்னா இன்னணம் இயம்பினான் - எங்கே தலைவர் இருக்கின்றனர் என்று வினவி மேலும் இவ்வாறு கூறினான்.
விளக்கம் : முகச் சோர்வையும் முலைப்பசப்பையும் ஆடை மாசுண்டதையும் நோக்கியிருப்பானெனிற் கணவன் பிரிவால் அவள் வருந்தியிருக்கின்ற நிலையை அறிவான். சிலம் பொன்றையுமே நோக்கியதால், அவன் பிரியவும் அணிசுமந்திருக்கின்றனள் என்று வருந்தி வினவுகிறான். உம்மைகள் வருத்த மிகுதியை உணர்த்தின. ( 149 )
1706. பொறிகுலாய்க் கிடந்த மார்பிற்
புண்ணியன் பொன்றி னானேல்
வெறிகுலாய்க் கிடந்த மாலை
வெள்வளை முத்த நீக்கி
நெறியினா னோற்ற லொன்றோ
நீளெரி புகுத லொன்றோ
வறியலென் கொழுநன் மாய்ந்தா
லணிசுமந் திருப்ப தென்றான்.
பொருள் : பொறி குலாய்க் கிடந்த மார்பின் புண்ணியன் பொன்றினானேல் - மூவரியாகிய இலக்கணம் விளங்கிக் கிடந்த மார்பையுடைய புண்ணியன் இறந்தான் எனின்; வெறி குலாய்க் கிடந்த மாலை வெள் வளை முத்தம் நீக்கி - மணங் குலவிக் கிடந்த மாலையையும் வெள் வளையையும் முத்துமாலையையும் விலக்கி; நெறியினான் நோற்றல் ஒன்றோ - நூல் முறைப்படி கைம்மை நோன்பு நோற்றல் ஒருதொழில்; நீள் எரி புகுதல் ஒன்றோ - பெருந் தீயிடை நுழைதல் ஒரு தொழில்; கொழுநன் மாய்ந்தால் அணி சுமந்திருப்பது அறிய லென் என்றான் - கணவன் இறந்தால் அணிகளைச் சுமந்திருத்தலை அறியேன் என்றான்.
விளக்கம் : பொறி - ஈண்டு உத்தமவிலக்கணத்திற்குரிய மூன்று கோடுகள். புண்ணியன் என்றது சீவகனை. பொன்றுதல் - இறத்தல். இச் செய்யுளோடு காதலர் இறப்பின் கனையெரிபொத்தி, ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது, இன்னுயிர் ஈவர் ஈயாராயின், நன்னீர்ப் பொய்கையின் நளியெரிபுகுவர், நளியெரிபுகாராயின், அன்பரோடு, உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர் எனவரும் மணிமேகலை (2 : 42-8) நினைவு கூரற்பாலது. ( 150 )
1707. காய்தழல் கவரப் பட்ட
கற்பக மரத்திற் கன்றி
யாய்கழற் குருசில் வாடி
யற்புத்தீ யழலு ணிற்ப
வாய்மொழிந் துரைக்க லுற்றாள்
வனைகுழற் கற்றை வண்டார்த்
தோய்பிழி துளிக்குங் கண்ணிச்
சுரும்புசூழ் கொம்ப னாளே.
பொருள் : காய் தழல் கவரப்பட்ட கற்பக மரத்தின் - சுடுந்தீயினாலே பற்றப்பட்ட கற்பக மரம்போல; ஆய்கழல் குரிசில் அன்புத்தீ அழலுள் கன்றி வாடி நிற்ப - கழலணிந்த நந்தட்டன் அன்பாகிய நெருப்பின் வெம்மையிலே வருந்தி வாடி நிற்க; வனைகுழல் கற்றை வண்தார்த் தோய் பிழி துளிக்குங் கண்ணி சுரும்பு சூழ் கொம்பனாள் - பண்ணிய குழற் கற்றையையும் வளவிய தாரினையும், செறிந்த மதுவைத் துளிக்குங் கண்ணியினையும், உடைய வண்டு சூழ் பூங்கொம்பு போன்றவள்! வாய்மொழிந்து உரைக்கல் உற்றாள் - உண்மையை எடுத்துக் கூறத் தொடங்கினாள்.
விளக்கம் : வாய் மொழிந்து - முற்பட அவன் மறைந்து வேற்றுருக் கொண்டிருக்கின்றபடியைக் கூறிவிட்டு - என்பர் நச்சினார்க்கினியர். ( 151 )
1708. மதுமுகத் தலர்ந்த கோதை
மாற்றமைந் தற்கு ரைப்பாள்
கொதிமுகக் குருதி வைவேற்
குருசிலோ நம்மை யுள்ளான்.
விதிமுக மணங்க ளெய்தி
வீற்றிருந் தின்ப முய்ப்ப
மதிமுக மறியு நாமே
வாடுவ தென்னை யென்றாள்.
பொருள் : மது முகத்து அலர்ந்த கோதை - தேனைத் தன்னிடங் கொண்டு மலர்ந்த மாலையாள்; மைந்தற்கு மாற்றம் உரைப்பாள் - நந்தட்டனுக்கு விடை கூறுகின்றவள்; கொதி முகக் குருதி வைவேல் குருசிலோ நம்மை உள்ளான் - காயும் முகமுடைய இரத்தம் தோய்ந்த கூரியவேலை அணிந்த தலைவனோ நம்மை நினையானாய்; விதிமுக மணங்கள் எய்தி வீற்றிருந்து இன்பம் உய்ப்ப - ஊழின் வாயிலாக மணங்களைப் பெற்று வீற்றிருந்து இன்பம் நிகழ்த்த; மதிமுகம் அறியும் நாமே வாடுவது என்னை என்றாள் - மதிமுகம் என்னும் விஞ்சையை அறிந்திருக்கின்ற நாமே இதற்குப் பிணங்கு தலன்றித் துன்பம் உண்டாம் என வாடுவது என் என்றாள்.
விளக்கம் : நாம் எனத் தன்னை உயர்த்திக் கூறினாள். கோதை : காந்தருவதத்தை. குருசில் : சீவகன். உள்ளான் - நினையாதவனாய். விதி - ஊழ், மதிமுகம் - தூரியவிடத்தே நிகழ்வனவற்றை அறிதற்குரிய வித்தை. இதனை ஆபோகினியென்றும் கூறுப. இதனால் சீவகன் உயிருடன் இருத்தன் முதலிய செய்திகளும் உணர்த்தினாளாயிற்று. ( 152 )
1709. வேண்டிய தெமக்கு நேரின்
வில்வலாய் நுமைய னாரைக்
காண்டியென் றுரைப்பக் காளை
யெழுமையு மடிமை நேர
மாண்டதோர் விஞ்சை யோதி
மதிமுகந் தைவந் திட்டா
ணீண்டது பெரிது மன்றி
நினைத்துழி விளக்கிற் றன்றே.
பொருள் : வில்வலாய்!- வில் வல்லோனே!; வேண்டியது எமக்கு நேரின் - யாம் வேண்டிய அடிமைத் தொழிலை நீ எமக்கு ஒப்பினால்; நுமையனாரைக் காண்டி என்று உரைப்ப - நும் ஐயனாரைக் காண்பை என்று தத்தை நகை மொழி நவில; காளை எழுமையும் அடிமை நேர - அவனும் இம்மையே அன்றி எழுமையும் அடிமையாகக் கடவேன் என்று நேர்ந்தானாக; மாண்டதோர் விஞ்சை ஒதி மதிமுகம் தைவந்திட்டாள் - அவள் ஒரு விஞ்சையைக் கூறித் தன் திங்களனைய முகத்தைத் தடவினாள்; நீண்டது பெரிதும் அன்றி நினைத்துழி விளக்கிற்று - நீண்ட தொலைவும் அரியதுமாக அல்லாமல் அவ்விஞ்சை சீவகன் இருந்த இடத்தை விளக்கியது.
விளக்கம் : இனி, நீண்ட தென்றது இவனுக்கு மிகவும் அரிய காட்சியை. அரிதன்றாக விளக்கிற் றென்றுமாம். பெருமை - அருமை. ( 153 )
1710. பொற்புடை யமளி யங்கட்
பூவணைப் பள்ளி மேலாற்
கற்பக மாலை வேய்ந்து
கருங்குழற் கைசெய் வானை
முற்படக் கண்டு நோக்கி
முறுவல்கொண் முகத்த னாகி
விற்படை நிமிர்ந்த தோளான்
றொழுதுமெய் குளிர்ந்து நின்றான்.
பொருள் : பொற்பு உடை அமளி - அழகிய அமளியாகிய; அம்கள் பூ அணைப் பள்ளி மேலால் - அழகிய கள்ளையுடைய மலரணைப் படுக்கையின்மேல்; கற்பக மாலை வேய்ந்து கருங்குழல் கைசெய்வானை - கற்பக மாலையைப் புனைந்து கனகமாலையின் கரிய குழலைப் புனைவோனை; முன் படக் கண்டு நோக்கி - எதிரிலே கண்டு மனத்தாலும் நோக்கி; முறுவல் கொள் முகத்தவன் ஆகி - முறுவலையுடைய முகத்துடன்; வில்படை நிமிர்ந்த தோளான் தொழுது மெய் குளிர்ந்து நின்றான் - விற்படை ஓங்கிய தோளினனாகிய நந்தட்டன் வணங்கி உடல் குளிர்ந்து நின்றான்.
விளக்கம் : மனத்தாலே நோக்கி என்றது அவன் வேற்றுருக் கொண்டுள்ளதனை. கற்பகம் : அரசர் தம் ஆணையால் இவ்வுலகிற் கொணர்ந்த கற்பகம் வானவர் சாபத்தால் தன்னிலை அன்றிப் பூவளவே உண்டாயிற்றென்பர். மந்தாரம் கவிரம் என்பனவும் அவ்வாறாம். இனி, உத்தர குருவில் உள்ள கற்பகம் ஈண்டுக் கொணர்ந்தார் என்றுமாம். அல்லது கற்பகம் என்பது கனகமாலையின் ஒரு பெயருமாம். ( 154 )
வேறு
1711. செய்த விஞ்சையைத் தேமொழி மாற்றலு
மைய னெஞ்சொடு வண்டிமிர் தாரினான்
பொய்ய தன்மையிற் பூங்கழ லானடிக்
கெய்து கேனரு ளாயென் றிறைஞ்சினான்.
பொருள் : தேன் மொழி செய்த விஞ்சையை மாற்றலும் - தேனனைய மொழியாள் தான் செய்த விஞ்சையை அவ் வளவிலே மாற்றியவுடன்; வண்டு இமிர் தாரினான் - வண்டுகள் முரலும் மாலையான்; பொய்யது அன்மையின் - தத்தை கூறிய சீவகன் இன்ப நிலை உண்மையாக இருத்தலின்; பூங்கழலான் அடிக்கு எய்துகேன் அருளாய் என்று - யான் அழகிய கழலான் திருவடியை அடைவேன், அதற்கு அருள்புரி என்று; மையல் நெஞ்சொடு இறைஞ்சினான் - மயங்கிய மனத்துடன் வணங்கினான்.
விளக்கம் : அடிக்கு : உருபு மயக்கம். தேமொழி : காந்தருவதத்தை. மையல் - மயக்கம். கண்டமையானே புதிதாகக் கிளர்ச்சியெய்திய மையல் நெஞ்சம் என்க. தாரினான் : நந்தட்டன். பூங்கழலான் என்றது சீவகனை. எய்துகேன் : தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று. ( 155 )
1712. மதுக்கை மாலையும் வண்டிமிர் சாந்தமும்
புதுக்கச் சார்ந்தபொன் வாளுஞ் சுரிகையுங்
கதுப்பி னானமுங் காமர் கலங்களும்
பதிக்கட் டம்மெனப் பாவையு மேவினாள்.
பொருள் : கை மது மாலையும் - கையையுடைய மது மாலையும் ; வண்டு இமிர் சாந்தமும் - வண்டுகள் முரலும் சந்தனமும்; புதுக்கச்சு ஆர்ந்த பொன் வாளும் சுரிகையும் - புதிய இடைக்கச்சிலே அமைந்த பொன் வாளும் சுரிகையும்; கதுப்பு இன் நானமும் - மயிருக்கு இனிய புழுகும்; காமர் கலங்களும் - விருப்பூட்டும் அணிகளும்; பதிக்கண் தம் என - இவ்விடத்திலே கொண்டு வருக என்று ஏவலரைக் கூவி; பாவையும் ஏவினாள் - இவற்றை அணிக என்று இவனையும் பணித்தாள்.
விளக்கம் : இமிர் - முரலுதற்குக் காரணமான. கச்சு - ஒருவகை ஆடை. சுரிகை - உடைவாள். கதுப்பு-மயிர், இன் நானம் - இனிய புழுகு. காமர் - விருப்பம், கலம் - அணிகலம், பதி என்றது யானிருக்குமிவ்விடத்தே என்பதுபட நின்றது. தம் - தருவீராக. பாவை : காந்தருவதத்தை. ( 156 )
1713. மணியின் மேல்புறம் போர்த்தன்ன மாக்கதிர்
துணிய வீசுந் துளங்கொளி மேனியன்
பணியிற் பல்கலந் தாங்குபு சென்றபி
னணிசெய் கோதையங் காமினி யோதினாள்.
பொருள் : மணியின் மேல்புறம் போர்த்த அன்ன - பளிக்கு மணியின் மேலே (இளைய கதிரைப்) போர்த்தாற் கோல; மாக் கதிர் துணிய வீசும் துளங்கு ஒளி மேனியன் - இருளின் கதிர் கெட வீசும் அசையும் ஒளியை யுடைய மேனியனாக ; பணியின் பல்கலம் தாங்குபு சென்ற பின் - தத்தையின் பணியாலே பல கலன்களையும் பிறவறையும் அணிந்து சென்ற பிறகு; அணி செய்கோதை அம் காமினி ஓதினாள் - அழகிய கோதையாளாகிய அவள் ஆகாய காமினி என்னும் மந்திரத்தை ஓதினாள்.
விளக்கம் : பல்கலம் எனவே படைக்கலங்களும் அடங்கின, பணியின் என்றது சீவகன் கொண்டு நிற்கிற நிறமும் வடிவும் அவனைக் காணுமளவும் இவனுக்கு நிற்க வென்று நிருமித்தனை. இங்ஙனம் நிருமித்த தென்னெனின், நந்தட்டனுடைய உண்மை வடிவுடனே கொண்டுபோய் அரசன் கோயிலில், ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பினுள்ளே (நெடுநல். 107) வைத்தாற் சீவகன் அறிதற்கு முன்னே தீங்கு நேரும் என்று கருதியும், அரசன் கோயிலுக்கு வெளியே விட்டாற் சீவகன் என்னும் பெயர் ஆண்டு வழங்காமையின், இவன் சீவகனுடைய புனைபெயர் அறிந்து கோயிலுட் சேறல் அரிதென்று கருதியும் என்க. அஃது, அந்நாட்டவ்வூரப் பெயரல்லாப் பெயர் சொன்னான் (சீவக -1637) என்பதனாலுணர்க. இதனானே சுதஞ்சணனை நீங்கிய பின்பு தன்னை மறைத்தற்கு வடிவும் பெயரும் வேறாகவே நிகழ்த்துகின்றானென்பதூஉம் பெற்றாம். வடிவு மறையாவிடத்து நாடும் ஊரும் மறைத்ததனாற் பயனின்றாம். இவ் விலகம்பகங்களிற் சீவகனென்றது நூலாசிரியர் கூற்று. இனி, இவ்வாறன்றி, அரசர் குலத்திலும் வணிகர் குலத்திலும் பிறந்தவர்கட்குச் சிறிது வடிவொப்பன்றி ஒரு வடிவே என்று மேற்கூறல் பொருந்தாது. ஒரு வடிவே என்பது ஆசிரியர் கருத்தாயின் ஈண்டன்றிப் பிறாண்டும் இருவர்க்கும் ஒரு வடிவே என்று கூறுவர். அது கூறாமையானும் சீவகனுக்கு மாற்று வடிவும் அம் மாற்று வடிவே நந்தட்டனுக்கும் தத்தையால் நல்கப்பட்டதென்றும் கொள்வதே ஆசிரியர் கருத்து. ( 157 )
1714. சாந்தி னான்மெழு கித்தட மாமல
ராய்ந்த தாமங்க ணாற்றி யகிற்புகை
யேந்தி யிட்டிளை யாரொடு நீங்கினாள்
காந்தி வண்டுணுங் கற்பகக் கோதையே.
பொருள் : சாந்தினால் மெழுகி - சாந்தாலே தரையை மெழுகி; தடமா மலர் ஆய்ந்த தாமங்கள் நாற்றி - குளத்திலுள்ள பெரிய மலர்களால் அமைந்த மாலைகளைத் தூக்கி; அகில் புகை ஏந்தி யிட்டு - அகிற் புகை எடுத்துக் காட்டி; காந்தி வண்டு உணும் கற்பகக் கோதை இளையாரொடு நீங்கினாள் - பசித்து வண்டுகள் தேனைப் பருகுங் கற்பக மலரால் ஆகிய கோதையாள் தோழிகளுடன் வெளிப் போந்தனள்.
விளக்கம் : தடம் - குளம். தாமம் - மாலை, நாற்றி - தூக்கி, ஏந்தியிட்டு : ஒருசொல். காந்தி - பசித்து. வயிறு காந்துகிறதென்னும் வழக்குண்மை உணர்க. கோதை : காந்தருவதத்தை. ( 158 )
1715. தூமம் மார்ந்த துகிலணைப் பள்ளிமேற்
காமன் றம்பியிற் காளை கிடந்தபி
னேம மாபுரத் திட்டதொர் மாதெய்வ
நாம நல்லொளி நந்தனை யென்பவே.
பொருள் : தூமம் ஆர்ந்த துகில் அணைப் பள்ளிமேல் - அகிற்புகை நிறைந்த துகிலை அணையாகக் கொண்ட பள்ளியின் மேல்; காமன் தம்பியின் காளை கிடந்தபின் - காமனைப்போல நந்தட்டன் கிடந்த பிறகு; நாமம் நல் ஒளி நந்தனை ஓர் மா தெய்வம் ஏம மாபுரத்து இட்டது - அச்சந்தரும் நல்ல ஒளியை உடைய நந்தனை ஒரு பெரிய தெய்வம் ஏமமாபுரத்திலே கொண்டு சேர்த்தது.
விளக்கம் : தத்தை ஓர் அறையிலே தரையைச் சந்தனத்தால் மெழுகிச் சுற்றிலும் மாலைகளைத் தூக்கித் துகிலொன்றைத் தரையின் மேல் விரித்து அதன்மேல் நந்தட்டனைத் துயில வைத்துச் சென்றனள். தெய்வம் அவனைக் கொண்டு சேர்த்தது. அச்சங் கூர்தலும் நிருமித்த வடிவாயிற்று. ( 159 )
1716 . மின்னும் பூணும் மிளிர்கதி ராரமும்
பொன்னும் பூத்ததொர் கற்பகப் பூமர
மன்ன காளை யமர்துயி றேறினான்
மன்னும் வெஞ்சுடர் மாக்க லிவர்ந்ததே.
பொருள் : மின்னும் பூணும் மிளிர் கதிர் ஆரமும் பொன்னும் பூத்தது ஒர் கற்பகப் பூமரம் அன்ன - விளங்கும் பூணும் ஒளிருங் கதிரையுடைய முத்து மாலையும் பொன்னும் மலர்ந்ததொரு கற்பக மலர்மரம் போன்ற; காளை அமர் துயில் தேறினான் - காளை தான் கொண்ட துயிலை நீங்கினான்; மன்னும் வெம்சுடர் மாக்கல் இவர்ந்தது - பொருந்திய ஞாயிறும் உதயகிரியிலே வந்து பரவியது.
விளக்கம் : கதிராரம் என்றது முத்துமாலையை. மின்னும்.....பூத்த கற்பகமரம் : இல் பொருளுவமை; இது நந்தட்டனுக்குவமை. துயில் தேறுதல் - துயிலுணர்தல். வெஞ்சுடர், ஞாயிறு. மாக்கல் - பெருமலை; ஈண்டு உதயகிரி. ( 160 )
வேறு
1717. செய்யவாய் நெடிய கண்ணாள்
செல்கென விடுக்கப் பட்ட
வெய்யவாட் டடக்கை வீர
னிருத்தலும் விசய னென்பான்
கையவாஞ் சிலையி னானைக்
கண்டுவந் தருகு சேர்ந்தான்
பையவாய்ப் பரந்த வல்குற்
பாவையர்க் கமிர்த மன்னான்.
பொருள் : செய்யவாய் நெடிய கண்ணாள் செல்க என விடுக்கப்பட்ட - சிவந்த வாயையும் நெடிய கண்களையும் உடையாளால் செல்க என்று விடப்பட்ட; வெய்ய வாள் தடக்கைவீரன் இருத்தலும் - கொடிய வாளேந்திய பெருங்கையனான நந்தட்டன் (தெய்வம் விட்ட அரண்மனையி னுள்ளிடத்தே) இருந்த அளவிலே; பை அவாய்ப் பரந்த அல்குல் பாவையர்க்கு அமிர்தம் அன்னான் விசயன் என்பான் - பாம்பின் படம் அவாவப் பரவிய அல்குலையுடைய பாவையர்க்கு அமிர்தம் போன்றவனாகிய விசயன் என்பவன்; கை அவாம் சிலையினானைக் கண்டு வந்து அருகு சேர்ந்தான் - கையில் விரும்புதற்குக் காரணமான வில்லையுடையவனைக் கண்டு வந்து அருகே அமர்ந்தான்.
விளக்கம் : கையவாம் சிலையினான் எனவே காமனாம். காமனைப் போன்ற நந்தட்டன் என்க. கண்ணாள் - காந்தருவதத்தை. வீரன் - நந்தட்டன், கை அவாம் சிலையினான் - காமன். காமன் என்றது நந்தட்டனை. அமிர்தமன்னான் : விசயன். ( 161 )
1718. தெய்வமே கமழு மேனித்
திருவொளி கலந்த மார்பி
னையநீ யாரை யென்றாற்
கவனுரை கொடாது விட்டான்
பையவே பெயர்ந்து போகிப்
பனிமலர்க் கோதை மார்பின்
மையலங் களிறு போலு
மைத்துனற் கிதனைச் சொன்னான்.
பொருள் : தெய்வமே கமழும் மேனித் திருவொளி கலந்த மார்பின் ஐய! நீ யார் என்றாற்கு - தெய்வத் தன்மையே மணக்கும் மேனியையும் திருவின் ஒளி கலந்த மார்பினையும் உடைய ஐயனே! நீ யார் என்று வினவிய விசயற்கு ; அவன் உரை கொடாது விட்டான் - அவன் மறுமொழி கூறாது விட்டான்; பையவே பெயர்ந்து போகி - மெல்ல நீங்கிச் சென்று; பனிமலர்க் கோதை மார்பின் - தண்ணிய மலர்மாலை மார்பினையுடைய; மையல் அம் களிறு போலும் மைத்துனற்கு - மயக்கமுடைய களிற்றைப் போன்ற மைத்துனனாகிய சீவகனைப் பார்த்து; இதனைச் சொன்னான் - இச் செய்தியைக் கூறினான்.
விளக்கம் : சீவகனுடைய மாற்று வடிவத்தைக் கொண்டு நின்ற தெய்வமாதலின், தெய்வமே கமழும் மேனியாய் விசயற்குக் தோற்றியது. வடிவொன்றேயாகவும் தெய்வத் தன்மையைத் தன் நுண்ணுணர் வால் உணர்தலின், இவற்குச் சிறிது வேறுபாடும் உண்டென்றறிந்து, நீ யாரை என்றான். யாரை : ஐ : அசை. வசுந்தரி என்னும் பணிப் பெண் விசயற்குக் கூற, அவன் கண்ட செய்தியை இதனை என்றார். இவ்விடத்திருந்து உரைகொடாதிருந்ததும், அவன் வெறாதபடி காத்ததும் நந்தட்டன்மேல் தங்கிய தெய்வம் என்றுணர்க என்பர் நச்சினார்க்கினியர். அன்றி, வடிவ வொற்றுமையிருப்பினும் பழகிய நோக்கமின்மையின், நீ யார் என்றான் எனவும், ஒன்று பட்ட வடிவினால் வியந்து வெறாமல் உண்மையுணர்தலை மேற்கொண்டானாகையால் யாதும் புரிந்திலன் எனவும் கொள்ளுதலே சிறப்புடைத்து.( 162 )
1719. சந்தனக் களியும் பூவுந் தமனியக் குடத்து ணீருங்
கெந்தநா றகிலு முத்துங் கிளரொளி விளக்கு மேந்தி
யந்தில்விற் பயிற்றுந் தானம் வழிபட வாங்குச் சென்றாண்
மந்திர மடந்தை யன்னாள் வசுந்தரி வந்து சொன்னாள்.
பொருள் : சந்தனக் களியும் - சந்தனக் குழம்பும்; பூவும்- மலரும்; தமனியக் குடத்துள் நீரும் - பொற்குடத்திலே நீரும்; கெந்தம் நாறு அகிலும் - மணம் வீசும் அகிற்புகையும்; முத்தும் - முத்து மாலையும்; கிளர் ஒளி விளக்கும் ஏந்தி - விளங்கும் ஒளியையுடைய விளக்கையும் ஏந்தி; வில்பயிற்றும் தானம் வழிபட ஆங்குச் சென்றாள் - விற்பயிலும் கோயிலை வழிபட ஆங்குச் சென்றவளாகிய; மந்திர மடந்தை அன்னாள் வசுந்தரி வந்து சொன்னாள் - மந்திரமாகிய மங்கையைப் போல்வாள் வசுந்தரியென்பாள் வந்து கூறினாள்.
விளக்கம் : அந்தில் : அசை. களி - குழம்பு. தமனியக் குடம் - பொற்குடம், கெந்தம் - மணம். அந்தில் - அசை, மந்திர மடந்தை - இருபெயரொட்டு. இது முதல் நான்கு செய்யுள் விசயன் சீவகனுக்குக் கூறுவன. ( 163 )
1720. ஆரகிற் சேக்கை நீங்கி
வெறுநிலத் தடிக டாமே
நீரிதிற் கிடந்த தென்கொ
லென்றியா னினைந்து போகிச்
சேர்துணை கழறச் சென்றேன்
செல்வியோ டாங்குக் கண்டேன்
போர்பல கடந்த வேலோய்
மாயங்கொல் போற்றி யென்றாள்.
பொருள் : அடிகள் தாம் - சீவகசாமி; ஆர் அகில் சேக்கை நீங்கி வெறுநிலத்து - நிறைந்த அகிற்புகை கமழும் படுக்கையை விட்டு வெறு நிலத்திலே; நீரிதின் கிடந்தது என்கொல் - பண்புறப் படுத்திருந்தது என்னோ?; என்று யான் நினைந்துபோகி - என்று நான் எண்ணிச் சென்று; சேர்துணை கழறச் சென்றேன் - கனகமாலையைச் சினந்து வினவ அந்தப்புரத்திற்குப் போனேன்; போர்பல கடந்த வேலோய்! - பல போர்களையும் வென்ற வேலோனே!; மாயம் கொல்? - மாயமோ?; செல்வியோடு ஆங்குக் கண்டேன் - கனகமாலையுடன் சீவகசாமியை அங்கே பார்த்தேன்; போற்றி என்றாள் - இந்நிலையை ஓம்புக என்றாள்.
விளக்கம் : இவ்வாறு வசுந்தரி கூறினாள் என்றான். ( 164 )
1721. கணைகடி கண்ணி சொல்லக்
காணிய யானுஞ் சென்றேன்
மணியிலங் கொண்பொன் வைவாள்
கேடக மருங்கு வைத்த
விணைகடி சீய மன்னா
னிளமையும் வனப்பு மேருந்
துணையமை வடிவுஞ் சொல்லி
னிற்பொறி யொற்றிக் கொண்டான்.
பொருள் : கணைகடி கண்ணி சொல்ல யானும் காணிய சென்றேன் - அம்பை வெறுத்த கண்ணினாள் இவ்வாறு கூற, யானும் பார்க்கச் சென்றேன்; மணி இலங்கு ஒண் பொன் வைவாள் கேடகம் மருங்கு வைத்த - மணிகளிழைத்த ஒள்ளிய பொன்னாலாகிய கூரிய வாளும் கேடகமும் அருகே வைத்திருக்க; இணைகடி சீயம் அன்னான் - உவமையில்லாத சிங்கம் போன்றவன்; இளமையும் வனப்பும் ஏரும் துணை அமை வடிவும் - இளமையும் அழகும் எழுச்சியும் ஒப்பில்லாத உருவமும்; சொல்லின் நின்பொறி ஒற்றிக் கொண்டான் - கூறுதலுறின் நின் உத்தம இலக்கணத்தை நின்னிடத்துப் பொருத்திக் கொண்டான்.
விளக்கம் : வனப்பு - பல உறுப்பும் திரண்டவழிப் பெறுவதோர் அழகு. துணை அமை வடிவு - உவமையின்மையாகிய உருவம். துணை அமை வடிவு என்பதற்கு இளமை வனப்பு ஏர் இவற்றிற்குத் துணையாகப் பொருந்திய வடிவு என்றும் பொருள்கொள்ளலாம். துணை - சார்பு. ( 165 )
1722. நீண்டதோ ணெடிய செங்க
ணீலமாய்ச் சுரிந்த குஞ்சிப்
பூண்டதோ ரார மேனிப்
பொன்னுரைத் திட்ட தொக்குங்
காண்டகு காதிற் றாழ்ந்த
குண்டலங் குவளைப் பைந்தா
ராண்டகை யழகன் யார்கொ
லறியல னவனை யென்றான்.
பொருள் : நீண்ட தோள் - நீண்ட தோள்களையும்; நெடிய செங்கண் - நீண்ட செங்கண்களையும்; நீலமாய்ச் சுரிந்த குஞ்சி - நீலநிறமாய் நெளிந்த முடிமயிரையும்; பொன் உரைத்திட்டது ஒக்கும் - கல்லிற் பொன்னை உரைத்தாற்போன்ற ; பூண்டது ஓர் ஆரம் மேனி - அணிந்ததாகிய ஒரு முத்து மாலையையுடைய மேனியையும்; காண்தகு காதில் தாழ்ந்த குண்டலம் - காணத்தகுங்காதிலே தங்கிய குண்டலத்தையும்; குவளைப் பைந்தார் - குவளை மலரால் ஆன புதிய மாலையையும் உடைய; ஆண்தகை அழகன் யார் கொல் - ஆண்தகையாகிய அழகன் யாரோ?; அவனை அறியலன் என்றான் - அவனை அறிகிலேன் என்று விசயன் கூறினான்.
விளக்கம் : வசுந்தரி, அடிகள் வெறுநிலத்தே கிடந்தார் என்று கழறச் சென்றே னென்றமையானும், விசயன் நிற்பொறி ஒற்றிக் கொண்டான் என்றமையானும், உவமை கூறுதல் இன்றி இருவரும், இருவர்க்கும் ஒரு வடிவென்றே கூறினார்கள். உவமையாவது சிறிது ஒத்து இரண்டிற்கும் வேறுபாடு உணர்த்துவது. இஃது அஃதன்மை உணர்க. பொறியும் ஒன்றில் அழுத்தினால் ஒப்பன்றி அதுவேயாய் இருக்கும் என்று உணர்க. இவ்வாற்றானும் நிருமித்தமையே கூறிற்றாம், வசுந்தரி பெண்பாலாதலின் தெய்வத் தன்மை உணர்ந்திலள். ( 166 )
1723. இனத்திடை யேறு போலு
மெறுழ்வலி யுரைத்த மாற்ற
மனத்திடை மகிழ்ந்து கேட்டு
மைந்தனந் தட்ட னேயாம்
புனத்திடை மயில னாளாற்
பொருளுரை பெற்று வந்தா
னெனத்தவி ராது சென்றாங்
கெய்தின னென்ப வன்றே.
பொருள் : இனத்திடை ஏறு போலும் எறுழ்வலி உரைத்த மாற்றம் - ஆவினத்திடை விடைபோலும் பெருவலியுடையான் கூறிய மொழியை; மனத்திடை மகிழ்ந்து கேட்டு - உள்ளத்திலே களிப்புடன் கேட்டு; மைந்தன் நந்தட்டனே ஆம் - இவர்கள் கூறிய மைந்தன் நந்தட்டனே ஆகும்; புனத்திடை மயிலனாளால் பொருள் உரை பெற்று வந்தான் - புனத்து மயில் போன்றாள் தத்தையாலே உண்மையுணர்ந்து இவ்வடிவைப் பெற்று வந்தான்; எனத் தவிராது சென்று ஆங்கு அன்றே எய்தினன் - என்றெண்ணிக் காலந் தாழ்த்தாது சென்று அவ்விடத்தை அப்போதே அடைந்தான்.
விளக்கம் : என்ப : அசை. தவிராது என வருவதால் அன்று ஏ அசை எனினும் பொருந்தும். பொருளுரை - மந்திரம் எனக் கொண்டு பொருளுரையாலே இவ்வடிவைப் பெற்று வந்தான் என்பதும் பொருந்தும். நச்சினார்க்கினியர், மைந்தன் யாம் என்ப எனக் கூட்டுக என்றும், என்ப எனப் பன்மையாற் கூறிற்று வசுந்தரி கூற்றையுங் கருதி என்றும் கூறுவர். எறுழ்வலி யுரைத்த மாற்றம் கேட்டு என்ற அளவிலே வசுந்தரியும் விசயனும் நந்தட்டனைச் சீவகன் எனக் கருதினார்கள் என்று சீவகன் உணர்ந்ததனால், மைந்தன் நந்தட்டனேயாம்எனக் கருதினான் என்பது போதரும், எனவே, இவ்வாறு கொண்டு கூட்டுதல் எற்றுக்கோ? ( 167 )
1724. கருமுகிற் பொடித்த வெய்யோன்
கடலிடை நடப்ப தேபோற்
றிருமுகஞ் சுடர நோக்கிச்
சீவகன் சென்று சேர்ந்தான்
றருமனை யரிதிற் கண்ட
தனஞ்சயன் போலத் தம்பி
திருமலர்த் தடக்கை கூப்பிச்
சேவடி தொழுது வீழ்ந்தான்.
பொருள் : கடலிடைப் பொடித்த வெய்யோன் கருமுகில் நடப்பதே போல் - கடலில் தோன்றிய ஞாயிறு கரிய முகிலினிடை நடப்பதைப் போல; சீவகன் திருமுகம் சுடர நோக்கிச் சென்று சேர்ந்தான் - சீவகன் தன் அழகிய முகம் ஒளிர நோக்கியவாறு தம்பியினிடம் சென்றடைந்தான்; தருமனை அரிதின் கண்ட தனஞ்சயன் போல - தருமனை அருமையாகக் கண்ட அருச்சுனனைப் போல; தம்பி திருமலர்த் தடக்கை கூப்பிச் சேவடி தொழுது வீழ்ந்தான் - நந்தட்டன் அழகிய பெரிய மலர்க் கையைக் குவித்தவாறு சீவகனுடைய சிவந்த அடியிலே வணங்கி வீழ்ந்தான்.
விளக்கம் : கடலிடைத் தோற்றின இளங்கதிர் கருமுகிலிடத்தே விடாது நடப்பதே போலும் முகம். முகில் குழலிற்கும், வெய்யோன் முகத்திற்கும் உவமை; கடல் - தோற்றுஞ் செஞ்சுடர்போலச் சுடர்ந்ததே (சீவக. 2497) என்பர் பின்னும். ( 168 )
1725. தாமரைத் தடக்கை கூப்பித்
தாண்முதற் கிடந்த தம்பி
தாமரைத் தடத்தை யொத்தான்
றமையனும் பருதி யொத்தான்
றாமரைக் குணத்தி னானை
மும்முறை தழுவிக் கொண்டு
தாமரைச் செங்க ணானுந்
தன்னுறு பரிவு தீர்ந்தான்.
பொருள் : தாமரைத் தடக்கை கூப்பித் தாள்முதல் கிடந்த தம்பி - தாமரை யனைய கையைக் குவித்து அடியிலே கிடந்த தம்பி; தாமரைத் தடத்தை ஒத்தான் - தாமரைக் குளம் போன்றான்; தமையனும் பருதி ஒத்தான் - சீவகனும் ஞாயிறு போன்றான்; தாமரைக் குணத்தினானை மும்முறை தழுவிக் கொண்டு - தாமரை யென்னும் எண்போல அளவில்லாத பண்புடைய நந்தட்டனை மூன்றுமுறை தழுவிக்கொண்டு தாமரைச் செங்கணானும் தன்உறு பரிவு தீர்ந்தான் - தாமரை மலரனைய கண்களையுடைய சீவகனும் தனக்குற்ற வருத்தமெல்லாம் நீங்கினான்.
விளக்கம் : சீவகன் பரிவு இருமுது குரவரை எண்ணியது. ( 169 )
1726. என்னுறு நிலைமை யோரா
தெரியுறு தளிரின் வாடிப்
பொன்னுறு மேனி கன்றிப்
போயினீர் பொறியி லாதேன்
முன்னுற விதனை யோரேன்
மூரிப்பே ரொக்க லெல்லாம்
பின்னுறு பரிவு செய்தேன்
பேதையேன் கவல லென்றான்.
பொருள் : என்உறு நிலைமை ஓராது எரியுறு தளிரின் வாடி; யானுற்ற நிலையை அறியாமல் தீயிலுற்ற தளிரைப்போல வாடி - பொன் உறு மேனி கன்றிப் போயினீர்-பொன்னனைய உங்கள் மெய்யெலாம் வெதும்பிப் போயினீர்; பொறி இலாதேன் முன் உற இதனை ஓரேன் - நல்வினை இல்லாதேன் முதலிலேயே இதனை அறியேனாகி; மூரிப் போரொக்கல் எல்லாம் பின் உறு பரிவு செய்தேன் - பெருமை மிக்க அளவற்ற உறவினர்க் கெல்லாம் பின்னர் மிகுவருத்தம் ஊட்டினேன்; பேதையேன் கவலல் என்றான் - அறிவிலேன் யான்; நீ வருந்தாதே என்றான்.
விளக்கம் : என் உறு நிலைமை ஓரேன் என்றது தேவன் கொண்டு போந்த நிலைமையை அறிந்தும், உண்மை என்று உணராதே என்றவாறு; கொண்டு போம் இயக்கன் (சீவக. 1131) என்று முனிவர் கூறிய கூற்றைக் கந்துகன் கூறக் கேட்டும் இவர் வருந்துவர் என்று இங்ஙனங் கூறினான். பொறியிலாதேன் என்றது இருமுது குரவரையும் வழிபட்டிருக்கும் நல்வினையில்லாதேன் என்றவாறு.
இதனை என்றது களிற்றிடைக் குணமாலைக் குதவியதனை. முன்னும், ஊழ்வினை என்று விட்டான் (சீவக.1167) என்றார். இனி முன் உற என்றதனை அச்சணந்தி யாசிரியனுக்கு நேர்கின்ற பொழுதெனின் அது பொருந்தாது; என்னை? தான் மேல் வருகின்ற இதனை அறியானாதலானும் ஆசிரியன் கூற்றாலே ஓரியாண்டு அவன் இருப்பனென்றுணர்ந்து,இன்னுயிர் அவனை உண்ணும் எல்லை நாள் வந்ததில்லை (சீவக. 1154) என்று தான் கூறினமையானும் என்பது. மேனி கன்றிப் போயினீர் என்றான் மதனன்மேல் ஏவாமையை உட்கொண்டு. குணமாலையின் ஓருயிர்க்காகப் பல்லுயிரையும் வருத்தினேன் என்று நினைத்து, முன்னுற இதனை ஓரேன் என்றான். ( 170 )
1727. ஆக்கமுங் கேடு முற்றீ ரடிகளே யல்லிர் மேலைப்
பூக்குலா மலங்கன் மாலைப் புட்கொடி யாற்கு முண்டே
வீக்குவார் முலையி னார்போல் வெய்துயிர்த் துருகி நைய
நோக்கினீ ரென்னை யென்றா னுதியழற் குட்ட மொப்பான்.
பொருள் : நுதி அழல் குட்டம் ஓப்பான் - கொழுந்து விட்டெரியும் தீத்திரள் போன்ற நந்தட்டன்; ஆக்கமும் கேடும் உற்றீர் அடிகளே அல்லிர் - நன்மையும் தீமையும் அடைந்தீர் அடிகள் மட்டும் அல்லீர்; மேலைப் பூங்குலாம் அலங்கல் மாலைப்புள் கொடியாற்கும் உண்டு - மேலை நாளில் மலர் கலந்த அசையும் மாலையை உடைய கலுழக் கொடியானுக்கும் இருந்தது; வீக்குவார் முலையினார் போல் வெய்துயிர்த்து உருகி நைய - வாரினால் இறுக்கப் பெற்ற முலைகளையுடைய. உடன்பிறந்த மகளிரைப் போல உதவாதே யிருந்து நான் பெருமூச் செறிந்து உருகி வாட; என்னை நோக்கினீர் என்றான் - என்னைப் பார்த்தீர் என்றான்.
விளக்கம் : புட்கொடியான் : இராமன். என்னை நோக்கினீர் என்றான் இராமன் காட்டிற்குச் செல்லுங் கேட்டிற்குத் தம்பியையும் கொண்டு சென்றான்; நீர் நும் கேட்டிற்கு என்னையுங் கொண்டிலீர் என்று கருதி. தேர் பண்ணிவந்து கண்டபோது மதனன்மேல் ஏவாமல் நில் எனக் குறிப்பித்தான் என்று வருந்தியே இங்ஙனங் கூறினான். ( 171 )
1728. குரவரைப் பேண லின்றிக்
குறிப்பிகந் தாய பாவந்
தரவந்த பயத்தி னாலித்
தாமரைப் பாத நீங்கிப்
பருவருந் துன்ப முற்றேன்
பாவியே னென்று சென்னி
திருவடி மிசையின் வைத்துச்
சிலம்பநொந் தழுதிட் டானே.
பொருள் : குரவரைப் பேணல் இன்றிக் குறிப்பு இகந்து ஆய பாவம் தர வந்த பயத்தினால் முற்பிறப்பிற் குரவர்களை ஓம்பலின்றி, அவர் கருத்தைக் கடத்தலால் உண்டாய பாவந் தந்த பயனாலே. இத் தாமரைப் பாதம் நீங்கிப் பருவருந் துன்பம் பாவியேன் உற்றேன் என்று இந்தத் தாமரை மலரனைய திருவடிகளைப் பிரிந்து மிகத் துன்பம் பாவியேன் அடைந்தேன் என்றுகூறி, சென்னி திருவடி மிசையின் வைத்துச் சிலம்பநொந்து அழுதிட்டான்- தன் முடியைத் தமையனுடைய திருவடி மேல் வைத்து வாய்விட்டலறி நொந்து அழுதான்.
விளக்கம் : குரவர்- தாய் தந்தை தமையன் ஆசிரியன் அரசன் என்னுமிவர். குறிப்பு-அக் குரவர் குறிப்பெனக் இகந்து-கடந்து இத் தாமரைப்பாதம் என்றது சீவகன் திருவடிகளை பருவரும் துன்பம், துன்புறற்குக் காரணமான இன்னல் என்வாறு. சிலம்ப என்றது வாய்விட்டு எதிரொலி எழும்படி என்பதுபடநின்றது. சிலம்ப அழுதிட்டான் என ஓட்டுக.
1729. பரிந்தழு கின்ற தம்பி
பங்கய மனைய செங்கண்
பொருந்துபு துடைத்து வேண்டா
புலம்புதல் காளை யென்று
மருந்தனா ளுறையுங் கோயின்
மடுத்துடன் கொண்டு புக்கா
னருந்ததிக் கற்பி னாளை
யடிபணிந் தவனுங் கண்டான்.
பொருள் : பரிந்து அழுகின்ற தம்பி பங்கயம் அனைய செங்கண்-வருந்தி அழுகின்ற தம்பியின் தாமரை அவைய செங்கண்களை; பொருந்துபு துடைத்து- கை பொருந்தத்துடைத்து; காளை! புலம்புதல் வேண்டா என்று காளையே! வருந்துதல் தவிர்க என்றுரைத்து; மருந்து அனாள் உறையும் கோயில் மடுத்து உடன் கொண்டு புக்கான்- அமிழ்தம் போன்றாள் வாழும் இல்லிலே வலிதிலே அழைத்துச் சென்று புகுந்தான். அவனும் அருந்ததிக் கற்பினாளை அடிபணிந்து கண்டான்- நந்தட்டனும் அருந்ததி போன்ற கற்புடைய அவளை அடியிலே பணிந்து கண்டான்.
(விளக்கம்.) பங்கயம் - தாமரை, பொருந்துபு - செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; இதனைச் செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்க. காளை புலம்புதல் வேண்டா - முன்னிலைப் புறமொழி - மருந்தனாள் - கனகமாலை, கற்பினாள் - கனகமாலை. அவன் - நந்தட்டன். ( 173 )
1730. கொழுநனைக் குறிப்பி னாலே
குமரன்யா ரென்று நோக்கக்
கழுமிய கற்பி னாய்நின்
மைத்துன னைய னென்ன
வெழுமையும் பெறுக வின்ன
விளங்கிளைச் சுற்ற மென்றாள்
கொழுமலர்த் தடங்கட் செவ்வாய்க்
குவிமுலைக் கொம்ப னாளே.
பொருள் : கொழுமலர்த் தடங்கண் செவ்வாய் குவிமுலைக் கொம்பனாள் - வளவிய மலர் போன்ற பெரிய கண்களையும் செவ்வாயையும் குவிமுலையையும் உடைய பூக்கொம்பு போன்றவள்; குமரன் யார் என்று கொழுநனைக் குறிப்பினாலே நோக்க - காளை யாவன் என்று கணவனைக் குறிப்பாக நோக்க; கழுமிய கற்பினாய்! ஐயன்நின் மைத்துனன் என்ன - நிறைகற்புடையாய்! ஐயன் உன் மைத்துனன் என்றுரைக்க; இன்ன இளங் கிளைச் சுற்றம் எழுமையும் பெறுக என்றாள் - இத்தகைய இளங்கிளையாய உறவினையான் எழுபிறப்பும் பெறுவேனாக என்றாள்.
விளக்கம் : கொழுநன் - கணவன், குமரன் என்றது இவன் என்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. கழுமுதல் - நிறைதல். மைத்துனன். இளங்கிளைச் சுற்றம் என்பன கொழுந்தன் என்னும் பொருளன. ( 174 )
1731. குடவரை யனைய மார்பிற்
குங்கும மெழுதிக் கோல
வடவரை வைரச் சாதி
வாலொளி கலந்த பைம்பூண்
டடவரை மார்பின் மின்னத்
தம்பியோ டமிர்த முண்டான்
படவர வல்கு லாளும்
பான்மையால் விருந்து செய்தாள்.
பொருள் : குங்குமம் எழுதி குடவரை அனைய மார்பின் - குங்குமம் எழுதலாலே கதிரவன் மறையும் அத்தகிரி போன்ற நந்தட்டன் மார்பில் அணிந்த; கோல வடவரை வைரச்சாதி வால்ஒளி கலந்த பைம்பூண் - அழகிய இமயமலையினது வைரத்திரளின் தூய ஒளி கலந்த புதிய கலன்களின் ஒளி; தடவரை மார்பின் மின்ன - தன்னுடைய பெரிய மலையனைய மார்பிலே ஒளி செயும்படி; தம்பியோடு அமிர்தம் உண்டான் - சீவகன் தன் தம்பியின் எதிரே இருந்து அவனுடன் உண்டான் ; பட அரவு அல்குலாளும் பான்மையால் விருந்து செய்தாள் - அரவின் படம் போன்ற அல்குலையுடையாளும் தகுதிபெறத் தன் மைத்துனனுக்கு விருந்தளித்தாள்.
விளக்கம் : குடவரை - அத்தகிரி. வடவரை - இமயம், வைரச்சாதி - வைரவகை; சாதி வைரம் என மாறினுமாம். அமிர்தம் - உணவு ஆகுபெயர். ( 175 )
1732. விருந்தவள் செய்த பின்றைத்
தம்பியுந் தானும் வேறா
விருந்துழி யென்னைக் காணா
துற்றதை யெவன்கொ லென்று
பொருந்தினார் செய்த தெல்லாம்
புரைவிடுத் துரைமோ வென்னக்
கருங்கழற் செங்கட் பைந்தார்க்
காளையீ துரைக்கின் றானே.
பொருள் : அவள் விருந்து செய்த பின்றை - அவள் விருந்தளித்த பிறகு; தம்பியும் தானும் வேறா இருந்துழி - தம்பியும் தானும் தனியே இருந்தபோது; என்னைக் காணாது உற்றதை எவன்கொல் என்று - என்னைக் காணாமையாற் பெற்றோர் முதலாக எல்லோரும் அடைந்த வருத்தம் என் என்று முதலில் வினவி; பொருந்தினார் செய்தது எல்லாம் புரைவிடுத்து உரைமோ என்ன - நம்மைச் சார்ந்தோர் செய்த கூறுபாடெல்லாம் வேறுவேறாகச் சொல்லாய் என்று சீவகன் கூற; கருங்கழல் செங்கண் பைந்தார்க் காளை ஈது உரைக்கின்றான் - கொடிய கழலையும் செங்கண்களையும் பைந்தாரையும் உடைய நந்தட்டன் இதனை இயம்புகின்றான்.
விளக்கம் : நந்தட்டனுடன் தோழன்மார் கூடுதற்குமுன்பு, அவர் தம்முள் கூறியவாறு நந்தட்டன் அறியானாதலின், தானும் அவரும் கூடின பின்பு பிறந்த செய்தி இவன் சீவகனுக்குக் கூறுகின்றான். இதனால், அதற்கு இது வேறுபாடாயிற்று ( 176 )
1733. புண்ணுமிழ் குருதி போர்த்த
பொருகளம் போன்று தோன்றி
யண்ணலங் கதிரு மத்த
மடைந்துசெவ் வான்கொ ளந்தித்
துண்ணெனக் களத்தி னீங்கித்
தொன்னகர்ப் புறத்துத் தொக்கே
யெண்ணுமின் செய்வ தென்றான்
பதுமுக னெரியும் வேலான்.
பொருள் : அண்ணல் அம் கதிரும் அத்தம் அடைந்து ஞாயிறும் அத்தகிரியை அடைதலாலே; புண் உமிழ் குருதி போர்த்த பொருகளம் போன்று தோன்றி - புண்ணிலிருந்து சொரியும் குருதியைப் போர்த்த போர்க்களம்போலத் தோன்றி; செவ்வான் கொள் அந்தி - செக்கர்வான் கொண்ட அந்திப் போதிலே; துண் எனக் களத்தின் நீங்கித் தொல்நகர்ப் புறத்துத் தொக்கு - (மழை மிகுதியால்) எல்லோரும் விரைந்து அவ்விடத்தினின்றும் பெயர்ந்து பழைமையான நகரின் வெளியிலே கூடி; எரியும் வேலான் பதுமுகன் செய்வது எண்ணுமின் என்றான் - ஒளிரும் வேலானாகிய பதுமுகன் இனிச் செய்யவேண்டுவதைச் சிந்தியுமின் என்றான்.
விளக்கம் : சுதஞ்சணனால் மிகுதியான மழை வந்தது. சீவகன் காணப்படாமையின் எண்ணுமின் என்றான். ( 177 )
1734. மின்னென மிளிரும் பைம்பூட்
புத்திசேன் வெகுண்டு வெய்ய
கன்னவி றோளி னானைக்
காண்கலே மாயி னின்னே
மன்னனை வாளி னானே
வானகங் காட்டி மூதூர்
தன்னையுஞ் சவட்டிப் போகிச்
சாமியைச் சார்து மென்றான்.
பொருள் : மின்என மிளிரும் பைம்பூண் புத்திசேன் வெகுண்டு - மின்போல விளங்கும் பூணையுடைய புத்திசேனன் சீறி; வெய்ய கல்நவில் தோளினானைக் காண்கலேம் ஆயின் - கொடிய மலைபோன்ற தோளையுடை சீவகனைக் கண்டிலோம் எனின்; இன்னே வாளினாலே மன்னனை வான் அகம் காட்டி - இப்போதே வாளாலே அரசனை விண்ணுலகிற்கு விடுத்து; மூதூர் தன்னையும் சவட்டிப் போகி - பழம்பதியையும் அழித்துச் சென்று; சாமியைச் சார்தும் என்றான் - சீவகசாமியைக் காண்போம் என்றான்.
விளக்கம் : புத்திசேன் - புத்திசேனன். தோளினானை - சீவகனை. காண்கலேம் - தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று. இன்னே - இப்பொழுதே. மன்னனை - கட்டியங்காரனை. வானகம் காட்டி என்றது கொன்று என்றவாறு. சவட்டி - அழித்து. சாமியை - சீவகசாமியை. ( 178 )
1735. சிலையொடு திரண்ட திண்டோட்
டேவமா தத்த னென்பான்
மலையுடை யுருமிற் சீறி
மாற்றல னுயிரை யுண்ட
லிலையுடைக் கண்ணி யீர்க்கிஃ
தெளிதுநங் குருசி லுண்மை
யுலைவினோ டின்மை யாராய்ந்
தொறுப்பதே துணிமி னென்றான்.
பொருள் : சிலையொடு திரண்ட திண்தோள் தேவதத்தன் என்பான் - கல்லின் தன்மையுடன் திரண்ட திண்ணிய தோள்களையுடைய தேவதத்தன் என்பவன்; மலைஉடை உருமின் சீறி - மலையைப் பிளக்கும் இடிபோல முழங்கி ; இலையுடைக் கண்ணியீர்க்கு மாற்றலன் உயிரை உண்டல் இஃது எளிது - இலை கலந்த கண்ணி யணிந்த நுங்கட்குப் பகைவன் உயிரைக் கொள்ளுதலாகிய இஃது அரியதன்று; நம் குரிசில் உண்மை இன்மை உலைவினோடு ஆராய்ந்து - நம் அரசன் இருப்பதையும் இல்லாததையும் வருத்தத்துடன் ஆராய்ந்து; ஒறுப்பதே துணிமின் என்றான் - பின்னரே பகையைக் கொல்வதை உறுதி கொண்மின் என்றான்.
விளக்கம் : அவன் சிறையாய் இருக்கின், இஃது ஆகாதென்றான், தேவமாதத்தன், உலோகமா பாலன் (சீவக. 395) போற் கொள்க. ( 179 )
1736. பவ்வத்துப் பிறந்த வெய்ய
பருதிபோற் றிறலி னாற்குத்
தெவ்வரைக் கிழங்கி னோடுந்
தின்றுநீ சொன்ன வாறே
யெவ்வத்தைத் தணித்து மென்றான்
சீதத்த னென்ன லோடு
மவ்வல மணந்த தண்டார்ப்
பதுமுக னிதனைச் சொன்னான்.
பொருள் : சீதத்தன் - (அதனைக் கேட்ட) சீதத்தன் என்பவன்; நீ சொன்னவாறே - நீ கூறியவாறே; பவ்வத்துப் பிறந்த வெய்ய பருதிபோல் திறலினாற்கு - கடலில் தோன்றிய கொடிய ஞாயிறு போன்ற திறலுடைய சீவகற்கு; தெவ்வரைக் கிழங்கினோடும் தின்று எவ்வத்தைத் தணித்தும் என்றான் - பகைவரை அடியோடு தீர்த்துத் துன்பத்தை நீக்குவோம் என்றான் ; என்னலோடும் - என்றுரைத்த அளவிலே; மவ்வல் மணந்த தண்தார்ப் பதுமுகன் இதனைச் சொன்னான் - முல்லை மலர் கமழும் தண்ணிய தாரையுடைய பதுமுகன் இதனைக் கூறுகின்றான்.
விளக்கம் : ஞாயிறு இருளை நீக்குமாறு போலத் தன்னை சூழ்ந்த பகையை நீக்குதற்குரியன், அவற்குத் தீங்கு வாரா தென்றான். மக்கள் நூற்றுவரையுஞ் சேரக் கோறற்குக் கிழங்கினோடும் என்றான். மவ்வல் அம் மணந்த : அம் சாரியை. ( 180 )
1737. நம்பிநந் தட்டன் கேட்க
நங்கட்குக் குரவ ருள்ளார்
தம்பரி வகற்றி யோம்பி
நீர்க்கடன் மரபு தாங்கிக்
கம்பஞ்செய் பரிவு நீங்கிக்
கற்பிப்பார்க் குவர்த்துச் சொல்லா
ரிம்பரிவ் வுலக மொப்பாய்க்
கென்னையா னுரைப்ப தென்றான்.
பொருள் : கற்பிப்பார்க்கு உவர்த்துச் சொல்லார் - தம்மைக் கற்பிப்பார்க்குத் தாம் வெறுத்துக் கூறார் ; இம்பர் இவ்வுலகம் ஒப்பாய்க்கு யான் உரைப்பது என்னை - இவ்விடத்து இவ்வுலகொழுக்கந் தன்னை ஒக்கும் நினக்கு இனி யான் கூறுவது யாது? நம்பி நந்தட்டன் கேட்க! -(எனினும்) நம்பியாகிய நந்தட்டனே! கேட்பாயாக!; இக் கம்பம் செய்பரிவு நீங்கி - இந் நடுக்கந்தருந் துன்பத்தினின்றும் விடுபட்டு; நங்கட்குக் குரவர் உள்ளார் தம் பரிவு அகற்றி ஓம்பி - நமக்குக் குரவராய் உள்ளோருற்ற வருத்தத்தையும் நீக்கி, அவரிருக்கும் அளவும் அவரைப் பேணி; நீர்க் கடன் மரபுதாங்கு - அவர் இறந்தால் நீர்க்கடனாகிய முறைமையைச் செய்வாயாக என்று கூறினான்.
விளக்கம் : என்னை : என் : எவன் என்பதில் திரிபு. ஐ : சாரியை. நம்பியாகிய நந்தட்டன் என்க. நந்தட்டன் : விளி. நங்கட்கு - நமக்கு. குரவராயுள்ளார் என்றது கந்துகனையும் சுநந்தையையும், கம்பம் - நடுக்கம். இம்பர் - இவ்விடத்தே. என்னையான் உரைப்பது என்றது. உனக்கு யான் கூறுதல் மிகை என்பதுபட நின்றது. ( 181 )
1738. ஓம்படை சாற்றற் பால
துள்ளவர்க் காகு மன்றே
யாம்புடை யென்க ணில்லை
யங்கையென் கண்க ளாகத்
தேம்படு தாரி னீர்க்குஞ்
செல்வற்குஞ் செய்வ செய்தேன்
காம்படு காட்டுத் தீயிற்
கனன்றுட னெழுக வென்றேன்.
பொருள் : உள்ளவர்க்கன்றே ஓம்படை சாற்றற் பாலது ஆகும் - உயிருடனே இருப்பார்க்கன்றே இவரைப் பாதுகாத்துக் கொள்ளென்று கூறுவது தகுதியாகும்?; ஆம்புடை என்கண் இல்லை - உயிர் வாழும் பக்கம் என்னிடம் இல்லை; என் கண்கள் அங்கை ஆகத் தேன்படு தாரினீர்க்கும் செல்வற்கும் செய்வ செய்தேன் - என் கண்களை அகங்கைகளாகக் கொண்டு நுமக்குஞ் செல்வனுக்குஞ் செய்யும் முறைமை எல்லாம் செய்துவிட்டேன்; காம்புஅடு காட்டுத் தீயின் கனன்று உடன் எழுக என்றேன் - மூங்கிலை எரிக்குங் காட்டுத் தீயைப்போலக் கொதித்துச் சேர எழுமின் என்றேன்.
விளக்கம் : அழுதது இழவு என்னும் மெய்ப்பாடு. தாரினீர்க்கு எனவே இருமுது குரவர் முதலிய சுற்றத்தினர் எல்லோரையும் அடக்கிக் கூறினா னாயிற்று. ( 182 )
1739. கோட்டிளங் குழவித் திங்க
ளிரண்டன்ன வெயிற்றுக் கோளே
வேட்டவோர் சிங்கஞ் சூழ்ந்த
வேங்கையி னினத்தின் வெய்ய
வாட்படை யெழுந்து வாழ்க
சீவக னென்னு மாங்கட்
பாட்டினை யொருவ னெங்கள்
பரிவறப் பாடி னானே.
பொருள் : கோட்டு இளங்குழவித் திங்கள் இரண்டு அன்ன எயிற்றுக் கோளே வேட்ட - வளைவான இளங்குழவிமதி இரண்டு போல உள்ள பற்களாற் கொலையை விரும்பிய; ஓர் சிங்கம் சூழ்ந்த வேங்கையின் இனத்தின் - ஒரு சித்தைச் சூழ்ந்த புலித்திரளைப்போல (உள்ள); வெய்ய வாள்படை எழுந்து சீவகன் வாழ்க என்னும் ஆங்கண் - நம்முடைய கொடிய வாளேந்திய படை (அச் சிங்கத்தின் ஏதம் தீர்த்தற்குப் புலித்திரள் எழுந்தாற்போல) எழுந்து சீவகன் வாழ்க என்ற அளவிலே; பாட்டினை ஒருவன் எங்கள் பரிவு அறப் பாடினான் - ஒரு பாட்டை ஒருவன் எங்கள் துன்பந்தீரப் பாடினான்.
விளக்கம் : சீவகன் சிங்கமும் மற்றையோர் புலித்திரளுமாகக் கொண்டு சிங்கத்தின் ஏதந்தீர்க்க எழுந்த புலித்திரள் என்றான். ( 183 )
1740. வருவர்நங் கேள்வ ரின்னே
வாணுதற் பசலை தீர
வுருகிநைந் துடன்று முன்கை
வளையுக மெலிய வேண்டா
வருவிமும் மதத்த யானை
யதிர்ந்துழிக் காரென் றெண்ணித்
தெரிவில பேதை முல்லை
பூத்தன தெளியி தென்றான்.
பொருள் : அருவி மும்மதத்த யானை அதிர்ந்துழிக் கார் என்று எண்ணி - அருவி மும்மதஞ் சொரியும் யானை பிளிறுதலைக் கேட்டுக் கார்முழக்கமென எண்ணி; தெரிவில பேதை முல்லை பூத்தன - அறியாதனவாய்ப் பேதைமையுடைய முல்லைகள் மலர்ந்தன; இது தெளி - இதனை உணர்வாயாக (எனவே); வாள்நுதல் பசலைதீர நம் கேள்வர் வருவர் - ஒளி பொருந்திய நுதலையுடைய நின் பசலை நீங்க நம் காதலர் குறித்த பருவத்தே வருவர்; இன்னே உருகி நைந்து உடன்று முன் கைவளை உகமெலிய வேண்டா - நீ இப்போது உருகி வருந்திச் சினந்து முன்கை வளைகள் கழன்று விழ மெலிய வேண்டா.
விளக்கம் : இது, பருவம் அன்று என்று தலைவியை ஆற்றுவித்துத் தூது செல்கின்ற பாணன் கூற்று ;நிம் பெயர்த்துறைதல், வரைநிலை, உரைத்தல் - கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய (தொல். கற்பு. 28) என்னும் கற்பியற் சூத்திரத்தானும், அரக்கத்தன்ன....தேரே என்னும் (14) அகப்பாட்டில், யாங்கா குவங்கொல் பாணவென்ற - மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன் - செவ்வழி நல்யாழ் இசையினென்பையெனக் - கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்ந்நிறுத் - தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே என்பதனானுங் கொள்க. எனவே, சீவகன் இப்பொழுதுவாரான் என்பதூஉம், யாம் சென்று பின்பு கொண்டு வருவோம் என்பதூஉம், இதற்குக் கருத்தென்று தேறிப் போர்த்தொழில் தவிர்தல் பயனாம். இனி என்றாள் என்று பாடம் ஓதித் தோழி ஆற்றுவித்தாள் என்றல் ஈண்டைக்குப் பொருந்தாது. இன்னே வருவர் எனக் கூட்டி, இப்பொழுதே வருவர் என்றால், இவனும் இப்பொழுதே வருவன் என்பது கருத்தாம் ஆதலின் பொருந்தாது. அருவி மும்மதத்த - அருவி போன்ற மூன்று மதத்தையுடைய. இஃது உவமைத்தொகை. ( 184 )
1741. பாட்டினைக் கேட்ட லோடும்
பழம்பகை நட்பு மாமே
யோட்டியுங் கோறு மன்றே
நம்பிதா னுண்மை பெற்றா
னாட்டிடம் பரந்து போகி
நாடுது நாங்க ளென்னா
வீட்டமும் வேறு மாகி
யிலைப்புரை கிளைத்திட் டேமே.
பொருள் : பாட்டினைக் கேட்டலோடும் - பாட்டைக் கேட்ட அளவிலே; நம்பிதான் உண்மை பெற்றால் ஓட்டியும் கோறும் அன்றே - (அதன் பொருளைப் போலவே) சீவகன் உயிருடன் இருப்பதை அறிந்தாற், சிலநாள் கழித்தும் கட்டியங்காரனைக் கொல்வோம் அன்றோ?; பழம்பகை நட்பும் ஆமே - பழம்பகை நட்பு ஆதல் இல் என்னும் பழமொழியும் உள்ளதன்றே?; நாங்கள் நாட்டிடம் பரந்துபோகி நாடுதும் என்னா - இனி, யாம் நானிலமெங்கும் பரவிச் சென்று தேடுவோம் என்று கருதி; ஈட்டமும் வேறும் ஆகி இலைப்புரை கிளைத்திட்டேம் - திரண்டும் தனித்தும் எவ்விடமும் தேடினோம்.
விளக்கம் : ஆமே : ஏ : எதிர்மறை. நாடு : நானிலத்திற்கும் பொதுப் பெயர். இலைப்புரை கிளைத்தல் பழம்பகை நட்பாதல் இல் என்பவை பழமொழிகள். ( 185 )
1742. மணிபொதி துகிலிற் றோன்று
மஞ்சுசூழ் வரைக ணாடி
யணிநகர் யான்சென் றெய்தி
மாலைதன் மனையைச் சேர்ந்தேன்
றுணைமலர்க் காந்த ளூழ்த்துச்
சொரிவபோற் றோன்றி முன்கை
யணிவளை நலத்தோ டேக
வங்ஙன மிருந்து நைவாள்.
பொருள் : மணிபொதி துகிலின் தோன்றும் மஞ்சுசூழ் வரைகள் நாடி - நீலமணியை மூடிய ஆடையைப் போலத் தோன்றும் முகில் சூழ்ந்த மலைகளைத் தேடி; யான் அணிநகர் சென்று எய்தி மாலைதன் மனையைச் சேர்ந்தேன் - யான் அழகிய நகரிற்போய்ச் சேர்ந்து குணமாலையின் அகத்தை அடைந்தேன்; துணைமலர்க் காந்தள் ஊழ்த்துச் சொரிவபோல். தோன்றி - (அப்போது) துணையாக மலர்ந்த காந்தட்பூ முதிர்ந்து உதிர்வன போலத் தோன்றி; அணிவளை நலத்தோடு ஏக அங்ஙனம் இருந்து நைவாள் - அழகிய வளை அழகுடன் செல்ல அவ்வாறு இருந்து வருந்துகின்றவள்.
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். காந்தள் மலர் வளைக்கு உவமை வளையுடைந்தன்ன வள்ளிதழ்க் காந்தள் (மலைபடு. 159) என வருதல் காண்க. ( 186 )
1743. என்னைக்கண் டடிசி லாக்க
வையர்க்கென் றவல நீங்கப்
பொன்னைக்கண் டனைய சாய
லவர்புரிந் தடிசி லேந்தத்
துன்னிநோ யுற்ற மஞ்ஞைத்
தோற்றம்போ லிருந்த நங்கை
பின்னைநாட் குவளை நீர்வீழ்
பெற்றிய கண்ண ளாகி.
பொருள் : என்னைக் கண்டு - என்னைக் கண்ட அளவிலே; ஐயர்க்கு அவலம் நீங்க அடிசில் ஆக்க என்று - ஐயர்க்கு வருத்தம் நீங்க உணவு சமைக்க என்ன; பொன்னைக் கண்டன்ன சாயலவர் புரிந்து அடிசில் ஏந்த - திருவனைய சாயலார் உணவினைச் சமைத்து ஏந்த; நோய் உற்ற மஞ்ஞைத் தோற்றம்போல் இருந்த நங்கை துன்னி - நோயடைந்த மயிலின் தோற்றம் போல் இருந்த அந் நங்கை என்னை அணுகி; பின்னை நாள் குவளை நீர் வீழ்பெற்றிய கண்ணாள் ஆகி - செவ்வியழிந்த குவளையிலிருந்து நீர் வீழும் தன்மையுடைய கண்களையுடையவளாய்.
விளக்கம் : பின்னை நாட்குவளை எனவே, செவ்வியழிந்த குவளையா யிற்று. பின்னை ஐ : அசை. பின்னாள் - மற்றை நாள், என்று - என்ன : எச்சத்திரிபு. ஆக்குக என்பது, ஆக்க என விகாரப்பட்டது. இப்பாட்டுங் குளகம். ( 187 )
1744. அடிகளை யின்றி நீரே
யுண்ணவும் வல்லீ ரானீர்
கடியிர்நீ ரைய னீரே
யெனக்கசிந் துருகிக் காய்பொற்
கொடிதுக ளார்ந்த வண்ணங்
குழைந்துமா நிலத்து வீழ்ந்த
பெடைமயிற் சாய லாடன்
பேதுகண் டாங்கு மீண்டேன்.
பொருள் : ஐயனீரே!- ஐயரே!; அடிகளை இன்றி நீரே உண்ணவும் வல்லீர் ஆனீர் - நம் தலைவரை விட்டு நீர் தனியே உண்ணவும் உறுதியுடையீர் ஆயினீர்; நீர் கடியிர் என - நீவிர் கொடியீர் என்று ; கசிந்து உருகி - அழுது உருகி; காய் பொன்கொடி துகள் ஆர்ந்த வண்ணம் - காய்ந்த பொன்னாலான கொடி புழுதியிலே பொருந்தினாற் போல; குழைந்து மாநிலத்து வீழ்ந்த - சோர்ந்து பெருநிலத்தே விழுந்த; பெடைமயில் சாயலாள் தன் பேது கண்டு ஆங்கு மீண்டேன் - பெட்டை மயிலின் தோற்றத்தையுடைய அவளுடைய வருத்தம் கண்டு அங்கிருந்தும் மீண்டேன்.
விளக்கம் : பெடைமயில் என்றார் பொலிவு கெடுதலின்.அடிகளை என்றது, சீவகனை, கடியிர் - கொடியீர் , சாயலாள் : குணமாலை. பேது - துன்பம். ( 188 )
1745. செல்வனை யின்று நாடிச்
சேவடி தொழுத லொன்றோ
வல்லதிவ் வுடம்பு நீங்க
வேற்றுல கடைத லொன்றோ
வெல்லையிவ் விரண்டி னொன்றை
யிப்பகன் முடிப்ப லென்னா
மல்லிகைக் கோதை யைம்பான்
மலைமகண் மனையைச் சேர்ந்தேன்.
பொருள் : இன்று செல்வனை நாடிச் சேவடி அடைதல் ஒன்றோ - இன்று நம் தலைவனைத் தேடிக்கொண்டு சேவடியை வணங்குதல் ஒன்றாவது; அல்லது இவ்வுடம்பு நீங்க வேற்றுலகு அடைதல் ஒன்றோ - அன்றி இம்மெய் விலக வேற்றுலகை நண்ணுதல் ஒன்றாவது; எல்லை இவ்விரண்டின் ஒன்றை - முடிவாக இவ்விரண்டினுள் ஒன்றை; இப் பகல் முடிப்பல் என்னா - இப்பகலிலேயே முடிப்பேன் என்று கருதி; மல்லிகைக் கோதை ஐம்பால் மலைமகள் மனையைச் சேர்ந்தேன் - மல்லிகை மாலையணிந்த கூந்தலையுடைய தத்தையின் இல்லத்தை அடைந்தேன்.
விளக்கம் : செல்வனை - சீவகனை, வேற்றுலகடைதல் - சாதல். முடிப்பல் - தன்மை ஒருமை வினைமுற்று. மலைமகள் - காந்தருவதத்தை. ( 189 )
1746. மணியொலி வீணை பண்ணி
மாண்டகோ றடவ மாத
ரணிமுலைத் தடத்தி னொற்றி
வெப்பராற் றட்ப மாற்றிப்
பிணைமலர்க் கோதை கீதம்
பாடயான் பெரிதும் பேதுற்
றிணைமலர்க் கண்ணிக் கொவ்வா
விளிவரு கிளவி சொன்னேன்.
பொருள் : பிணைமலர்க் கோதை மாதர் - மலர் பிணைந்த கோதையை உடைய அம் மாதராள்; மணி ஒலி வீணை பண்ணி - அழகிய ஒலியையுடைய யாழைப் பண்ணி; மாண்ட கோல் தடவ - அதன் சிறந்த நரம்புகளை இசைப்பதற்கு; அணிமுலைத் தடத்தின் ஒற்றி வெப்பரால் தட்பம் மாற்றி - அழகிய முலைகளிலே ஒற்றி முலைவெப்பத்தால் யாழின் குளிர்ச்சியை நீக்கி; கீதம் பாட யான் பெரிதும் பேது உற்று - இசையைப் பாட யான் பெரிதும் வருந்தி; இணைமலர்க் கண்ணிக்கு ஒவ்வா இளிவரு கிளவி சொன்னேன் - இணைந்த மலரனைய கண்ணிக்குத் தகாத இழிமொழியை உரைத்தேன்.
விளக்கம் : மாண்ட கோல் - மாட்சிமையுடைய யாழ் நரம்பு. தடவ - வருட. மாதர் அவள் எனச் சுட்டு மாத்திரையாய் நின்றது. வெப்பர் - வெப்பம். தட்பம் - குளிர்ச்சி, ஈண்டுத் தளர்ச்சி, என்பது படநின்றது. கீதம் - இசை. இளிவரு கிளவி என்றது. அறியலென் கொழுநன் மாய்ந்தால் அணி சுமந்து இருப்பது என்று கூறியதனை - (1706). ( 190 )
1747. சொல்லிய வென்னை நோக்கித்
துளங்கனும் மடிகள் பாதம்
புல்லயான் புணர்ப்ப லென்று
பொழுதுபோய்ப் பட்ட பின்றை
யெல்லிருள் விஞ்சை யோதி
யிவ்வழி யிடுவித் திட்டாள்
சொல்லுமி னடிக ணீரும்
போந்தவா றெனக்கு மென்றான்.
பொருள் : சொல்லிய என்னை நோக்கி - இழிமொழியுரைத்த என்னைப் பார்த்து; துளங்கல் - வருந்தாதே; நும் அடிகள் பாதம் புல்ல யான் புணர்ப்பல் - நும் தலைவருடைய திருவடிகளைத் தழுவ, யான் கூட்டுவேன்; என்று - என்று கூறி; பொழுது போய்ப் பட்ட பின்றை - ஞாயிறுபோய் மறைந்த பிறகு; எல் இருள் விஞ்சை ஓதி - விடியற்கால இருளிலே மறைமொழியினை முறையுறக் கணித்து; இவ்வழி இடுவித்திட்டாள் - இவ்விடத்தே விடச் செய்தனள்; அடிகள் நீரும் போந்தவாறு எனக்கும் சொல்லுமின் என்றான் - அடிகளே! இனி நீர் வந்தவாற்றையும் எனக்குக் கூறுமின் என்றான்.
விளக்கம் : காளையீதுரைக்கின்றவன் (சீவக. 1732) இடுவித் திட்டாள் என்றுரைத்தான் என முடிக்க. ( 191 )
1748. தாதையா ருவப்பச் செய்வான்
றாழ்கச்சிற் பிணிப்புண் டைய
போதரா நின்ற போழ்திற்
போர்ப்புலிக் குழாத்திற் சீறிக்
காதனஞ் சுற்ற மெல்லாங்
கையிலங் கெஃக மேந்திச்
சாதலே புரிந்து தோன்றுந்
தன்மையந் நகரிற் கண்டேன்.
பொருள் : ஐய - ஐயனே!; தாதையார் உவப்பச் செய்வான் தாழ் கச்சிற் பிணிப்புண்டு - தந்தையாரை மகிழ்விக்க வேண்டித் தாழ்ந்த கச்சினாலே பிணிக்கப்பெற்று; போதராநின்ற போழ் தின் - வருகின்ற காலத்தில்; போர் புலிக் குழாத்திற் சீறி - போர்புரியும் புலித் திரளினைப் போல முழங்கி; காதல் நம் சுற்றம் எல்லாம் கைஇலங்கு எஃகம் ஏந்தி - அன்புடைய நம் சுற்றத்தார் யாவரும் கையில் விளங்கும் வேலை ஏந்தி; சாதலே புரிந்து தோன்றும் தன்மை அந் நகரிற் கண்டேன் - சாதற் பொருட்டுத் தோன்றும் இயல்பை அந் நகரிலே கண்டேன்.
விளக்கம் : இங்கும் நச்சினார்க்கினியர், கச்சின் : இன் : உவமப் பொரு. எனக் கொண்டு, கச்சிற் பிணித்தாற் போலச் சொல்லாற் பிணிக்கப்பட்டு என்று பொருள் கூறுவர். ( 192 )
1749. கண்டபி னின்னைக் காண்பேன்
கருவரை புலம்பிப் பல்கால்
விண்டுவு முடைய வாலின்
வெடித்துராய் வெகுண்டு நோக்கா
வெண்டிசை யோரு மெள்கக்
குஞ்சர மிரியப் பாயு
மொண்டிறற் சிங்க மன்ன
கதழொளி யுடற்சி கண்டேன்.
பொருள் : கண்ட பின் நின்னைக் காண்பேன்- அவர்களைக் கண்ட பின் நின்னை நோக்கும் யான்; கருவரை விண்டுவும் உடைய வாலின் பல்கால் வெடித்து - கரிய மலையிலே சிகரமும் அஞ்சி உடையும்படி வாலினாலே பல முறையும் வீசி; உலம்பி உராய் வெகுண்டு நோக்கா - முழங்கிப் பரந்து வெகுண்டு பார்த்து; எண்திசையோரும் எள்க - எட்டுத் திசையோரும் அச்சம் மிகும்படி; குஞ்சரம் இரியப் பாயும் - குஞ்சரம் ஓடப் பாயும்; ஒண்திறல் சிங்கம் அன்ன - சிறந்த திறலையுடைய சிங்கம் போல; கதழ் ஒளி உடற்சி கண்டேன் - பேரொளியை உடைய நின் மாறுபாட்டைப் பார்த்தேன்.
விளக்கம் : பழிவந்து மூடுமென் றெள்குதும் (சிற். 92) என்றாற் போல எள்க என்பது அஞ்ச என்னும் பொருளில் வந்தது. அஃக எனவும் பாடம். முன்னர் அவன், சிங்கத்தை யின்றி எழுந்தேம் (சீவக. 1731) என்றதற்கு, நீ அப் புலித்திரளுக்குச் சிங்கம் என்றான் என்க. விண்டுவும் என வகரவுடம்படுமெய் பெற்றது விகாரம். விண்டும் என வருதல் வேண்டும். ( 193 )
1750. சினந்தலைப் பெருக்கித் தீக்கோ
ளுறுப்பினைச் சுருக்கித் தீப்போ
லனன்றுநில் லாத கண்ணா
னிறுத்தின செவியிற் றாகி
முனம்புக வடக்கிப் பின்போந்
திருந்துபாய் வான மைந்த
வினந்தலைப் புலியோ டொக்குந்
தோழர்நின் னிடத்திற் கண்டேன்.
பொருள் : சினம் தலைப்பெருக்கி - சினத்தைத் தம்மிடத்தே வளர்த்து; தீக்கோள் உறுப்பினைச் சுருக்கி - தீக்கோட்பாட்டையுடைய உறுப்புக்களைச் சுருக்கி; தீப்போல் அனன்று நில்லாத கண்ணால் - தீயைப்போல் அழன்று சுழல்கின்ற கண்ணுடன்; நிறுத்தின செவியிற்று ஆகி - நேரே நிறுத்தின காதுகளை உடையதாய்; அடக்கி - உடம்பினைக் குறைத்து; பின்போந்திருந்து - பின்னே சென்றிருந்து; முனம் புகப் பாய்வான் அமைந்த - முன்னே செல்லப் பாய்தற்கிருந்த; இனந்தலைப் புலியோடொக்கும் - கூட்டத்தை இடத்தே கொண்ட புலியோடு ஒப்பாகிய; தோழர் நின்னிடத்தில் கண்டேன் - தோழரை நின்னிடத்தே கண்டேன்.
விளக்கம் : தீக்கோள் உறுப்பு - தீய கோட்பாட்டினையுடைய உறுப்புக்கள். நில்லாத என்பது சுழற்சியுடைய என்னும் பொருள்பட நின்றது. கண்ணான் என்புழி ஆன் உருபு ஒடு உருபின் பொருட்டு. செவியிற்று - செவியினையுடைத்து . இனம் - கூட்டம். ( 194 )
1751. கூடநீர் நின்ற பெற்றி
கண்டிப்பா னோக்கு வேற்கொர்
கேடகம் வாளொ டேந்திக்
கெடுகவிந் நகர மென்னா
மாடத்தி னுச்சி நின்ற
மலைமக டன்மை கண்டே
யாடவர்க் குழுவை யொப்பா
யஞ்சினே னதன்க ணென்றான்.
பொருள் : நீர்கூட நின்ற பெற்றி கண்டு இப்பால் நோக்குவேற்கு - நீர் அங்ஙனம் சேர நின்ற தன்மை கண்டு (தந்தையார் கருத்து அஃதன்மையின் நும்மை ஏவாமல்) இப் பக்கத்தே பார்ப்பேன் பொருட்டு; கெடுக இந் நகரம் என்னா - அழிவதாக இந் நகரம் என்று கூறி; ஓர் கேடகம் வாளொடு ஏந்தி - ஒரு கேடகத்தையும் வாளையும் ஏந்தி; மாடத்தின் உச்சி நின்ற மலைமகள் தன்மை கண்டு - கோயிலின் உச்சியிலே நின்ற தத்தையின் இயல்பை நோக்கி; ஆடவர்க்கு உழுவையொப்பாய் - ஆடவராகிய மான்றிரளுக்குப் புலிபோன்றவனே!; அதன்கண் அஞ்சினேன் என்றான் - அந் நிலையிலே அஞ்சினேன் என்றான்.
விளக்கம் : ஆடவர்க் குழுவை ஒப்பாய். ஏகதேச உருவகம். பெற்றி - தன்மை. மாடத்தின் உச்சி மலைமகள் ஏந்தி நின்ற தன்மை கண்டே என மாறுக. உழுவை - புலி. அதன்கண் - அந்நிலையிடத்து. ( 195 )
1752. பெண்ணிடர் விடுப்ப வாழ்விற்
சாதலே பெரிது நன்றென்
றெண்ணினே னமர்கள் வீயு
மியல்பினா னெருங்கப் பட்டுக்
கண்ணிநா னியக்கன் றன்னைச்
சிந்தித்தேன் கடவுள் வாழ்த்தி
யண்ணல்வந் தழுங்கத் தோன்றி
யாங்கென்னைக் கொண்டு போந்தான்.
பொருள் : பெண் இடர் விடுப்ப வாழ்வின் சாவதே பெரிதும் நன்று என்று எண்ணினேன் - தன் மனையாள் தன் இடரை நீக்க வாழ்வதினும் சாதலே மிகவும் நல்லதென்று நினைத்தேன்; நமர்கள் வீயும் இயல்பினால் நெருங்கப்பட்டு - (நமக்கு ஒரு செயலும் இன்றாகச் செய்து) சுற்றமும் இறக்கும் வகையோடு முன்செய்த தீவினை நெருங்கப்படுதலாலே; கண்ணி - இந்நிலைக்கு அருகன் அல்லது வேறொருவர் இன்றென்று கருதி; கடவுள் வாழ்த்தி - அருகனை வாழ்த்தி; இயக்கன் தன்னைச் சிந்தித்தேன். சுதஞ்சணனை (அவனுக்குக் கூறிய நிலையைவிட்டு) நினைத்தேன்; அண்ணல் வந்து அழுங்கத் தோன்றி ஆங்கு என்னைக் கொண்டு போந்தான் - அப்பெரியோன் வந்து என்னைச் சூழ்ந்தவர் வருந்தத் தோன்றி அவ்விடத்தினின்றும் என்னைக் கொண்டு போந்தான்.
விளக்கம் : வாமணத் தொழுவின் முற்றி - மீளிமை செய்யின், (சீவக. 658) என்ற நிலையைவிட்டு நினைத்தான். ( 196 )
1753. மந்திர மூன்றுந் தந்து
வானவன் விடுப்பச் செல்வேற்
கிந்திர திருவிற் சூழ்ந்த
வினமழைக் குழாத்தின் வேழங்
கொந்தழற் காட்டுத் தீயால்
வளைப்புண்ட குழாத்தை நோக்கிச்
சிந்தித்துக் கவன்று நிற்பத்
திருமழை பொழிந்த தன்றே.
பொருள் : வானவன் மந்திரம் மூன்றும் தந்து விடுப்ப - சுதஞ்சணன் மூன்று விஞ்சைகளையும் வழி முதலியவற்றையும் அறிவித்துவிட்டபின்னர்; செல்வேற்கு - செல்லுவேனுக்கு; இந்திர திருவில் சூழ்ந்த இனமழைக் குழாத்தின் - இந்திர வில்லினாற் சூழப்பட்ட முகில் திரளைப்போல; கொந்து அழல் காட்டுத்தீ?யால் வளைப்புண்ட வேழக்குழாத்தை நோக்கி - பெரு நெருப்பையுடைய காட்டுத் தீயினாலே சூழப்பட்ட யானைத் திரளைப் பார்த்து; கவன்று சிந்தித்து நிற்ப - வருந்தித் தெய்வத்தைப் பார்த்து நிற்ப; அன்றே திருமழை பொழிந்தது - அப்போதே நல்ல மழை பெய்தது.
விளக்கம் : குழாத்தை நோக்கிச் செல்வேற்கு எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். மந்திரமும் பிறவும் உண்மையின், உம்மை, இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும் (தொல் - கிளவி. 33) உம்மையன்றி மூன்று மந்திரமும் வழி முதலியனவும் என எச்சவும்மை செல்வேற்குக் கவன்று என்க. எண்ணிறந்த இனக் களிற்றின் துயரை நீக்குதற்குரிய யான் நீக்காதொழியின், செய்தல், செய்வித்தல், உடன்பாடு என்னும் மூவகைப்பாவத்தினும் உடன்பாடாகிய பாவம் எய்தி, நெருநலிலே சுற்றமும் யானும் உற்ற துன்பமும் போல் இதுவும் பின்பு வருமென்று எனக்குக் கவன்று என்றான். முன்பு, வேழப் பேரினந் தங்கிய காடு (சீவக. 1179) என்றார்.சீவகன் மற்றும் வழியில் நிகழ்ந்தன எல்லாம் கூறாது. இதனையே கூறியது என்னையெனின், யாண்டு நேரெல்லை (சீவக. 393) என்ற மொழி நந்தட்டன் அறியானாதலின். இன்னும் இராசமாபுரத்துச் சென்றாலும் இத் துன்பம் உளதாமோ என்று கருதினும் அது கருதாதபடி, மற்றை நாளே அத் தீவினையுள்ளது நீங்கவேண்டும். பேரறஞ் செய்தேன் என்றான் என்க. இனிச் செல்வேற்கு மழை பொழிந்ததெனக் கூட்டி, தேவன், பாம்பும் அல்லவும் - கடுந்திறல் நோய்களுங் கெடுக்கும் (சீவக. 1218) என்ற மந்திரத்தைக் கூறலின், அவன் கூறிய மந்திரமே இம் மழையைப் பெய்வித்த தென்றுமாம். இதற்கு, நெருநற் சுற்றமுற்ற துயரை இவையும் உற்றன என்று கவன்று என்க இம்மந்திரங்களின் பெருமை கூறியது இனி நமக்கு ஏதம் இன்று என அறிவித்தது. ( 197 )
1754. வெல்களிற் றச்ச நீக்கி
விரைவொடு வனத்தி னேகிப்
பல்லவ தேய நண்ணித்
தனபதி யென்னு மன்ன
னல்வனப் புடைய தேவி
திலோத்தமை பெற்ற நம்பி
செல்வன்மற் றுலோக பாலன்
றிருமகள் பதுமை யென்பாள்.
பொருள் : வெல் களிற்று அச்சம் நீக்கி - இவ்வாறு களிறுகளுற்ற அச்சத்தைப் போக்கி; விரைவொடு வனத்தின் ஏகி - விரைந்து வனத்தைக் கடந்து சென்று; பல்லவ தேயம் நண்ணி - பல்லவ நாட்டை அடைந்து; தனபதி என்னும் மன்னன் - தனபதி என்னும் அந்நாட்டு மன்னனும்; நல்வனப்புடைய தேவி திலோத்தமை - நல்லழகுடைய அவன் மனைவி திலோத்தமையும்; பெற்ற நம்பி செல்வன் உலோக பாலன் - பெற்ற நம்பியாகிய செல்வன் உலோக பாலன்; திருமகள் பதுமை என்பாள் - அவர்களுடைய திருமகள் பதுமை என்பவள்.
விளக்கம் : வெல்களிறு : வினைத்தொகை. மன்னனும் திலோத்தமையும் பெற்ற என்க. நம்பியாகிய செல்வன் என்க. திருமகள் என்றது முறைப் பெயர் அடையடுத்தவாறு. ( 198 )
1755. அரிகுரற் கோழி நாமத்
தரவவட் கடித்த தாகத்
திருவிழை யவளைத் தீர்த்தேன்
றீர்விலா நண்பு வேண்டிப்
பொருகளி யானை மன்னன்
புனையிழை யவளைத் தந்தா
னிருமதி கழிந்த பின்றை
யிடையிராப் பொழுதிற் போந்தேன்.
பொருள் : அரிகுரல் கோழி நாமத்து அரவு அவள் கடித்ததாக - சிலம்பின் குரலையுடைய கோழியின் பெயருடைய பாம்பு அவளைத் தீண்டியதாக; திருவிழை அவளைத் தீர்த்தேன் - திருமகளும் விரும்பும் அழகுடைய அவளுக்குற்ற நஞ்சினை நீக்கினேன்; பொருகளி யானை மன்னன் - போருக்குரிய மதகளிற்று வேந்தன்; தீர்வு இலா நண்பு வேண்டி - நீங்காத நட்பை விரும்பி; புனையிழை அவளைத் தந்தான் - ஒப்பனை செய்த அணிகளையுடைய அவளை எனக்குக் கொடுத்தான்; இருமதி கழிந்த பின்றை - இரண்டு திங்கள் அங்கே கழிந்த பிறகு; இடையிராப் பொழுதில் போந்தேன் - நள்ளிரவிலே வெளிப்பட்டு வந்தேன்.
விளக்கம் : களிற்றின் அச்சம் நீக்கியதனால் அவன் சுற்றமாகிய பதுமைக்கும் அச்சம் இன்றெனக் கருதினான். ( 199 )
1756. வாவிப்புண் ணடையி னாளை
வஞ்சித்துத் தக்க நாட்டை
மேவியான் காண லுற்றுச்
சார்தலு மிப்ப ருள்ளான்
றூவிப்பொன் மாட மூதூர்ச்
சுபத்திர னென்னைக் கண்டே
யாவிக்க ணறிவு போல
வளவளா யன்பு பட்டான்.
பொருள் : வாவிப் புள் நடையினாளை வஞ்சித்து - அன்னப்பறவை அனைய நடையாளாகிய பதுமையை ஏமாற்றி; யான் தக்க நாட்டை மேவிக் காணல் உற்றுச் சார்தலும் - நான் தக்க நாட்டையடைந்து காணவிரும்பி அடைதலும்; தூவிப் பொன் மாடமூதூர் - கிளிச் சிறைப் பொன்னாலாகிய மாடங்களையுடைய அப் பழம்பதியிலே; இப்பர் உள்ளான் சுபத்திரன் என்னைக் கண்டு - இப்பர் என்னும் வணிகர் குடியிலுள்ளானாகிய சுபத்திரன் என்னைப் பார்த்து; ஆவிக்கண் அறிவுபோல அளவளாய் அன்பு பட்டான் - உயிரினிடம் அறிவைபோலப் பழகி அன்புற்றான்.
விளக்கம் : வணிகரில் இப்பர், கவிப்பர், பெருங்குடியர் என முப்பிரிவினர் உண்டு. தூவிப் பொன் என்பதனைத் தூவி அனைய பொன் என்றும் கொள்க. தூவி - பறவையின் மெல்லிய சிறகு. ( 200 )
1757. பண்ணமை தேரி னேறி
யவனொடியா னிருந்து போகி
விண்ணுயர் செம்பொன் மாடத்
திழிந்தவண் விளங்கப் புக்கேன்
வெண்ணிலா முத்தஞ் சூழ்ந்த
வெம்முலைத் தடங்க ணாளை
மண்ணெலாஞ் செல்ல நின்ற
மகிழ்ச்சியின் மகிழ்ந்து தந்தான்.
பொருள் : அவனொடு யான் பண் அமை தேரின் ஏறி இருந்து போகி - (பின்னர்) அவனோடு யானும் பண்ணுதல் அமைந்த தேரிலே ஏறி அமர்ந்து சென்று; விண் உயர் செம் பொன் மாடத்து இழிந்து - வானுயர்ந்த பொன் மாடத்தினருகே இறங்கி; அவண் விளங்கப் புக்கேன் - அம்மனை விளங்குமாறு புகுந்தேன்; வெண் நிலா முத்தம் சூழ்ந்த வெம்முலைத் தடங்கணாளை - வெள்ளிய நிலவைப்போல முத்துக்கள் சூழ்ந்த விருப்பூட்டும் முலையையும் பெரிய கண்களையும் உடைய கேமசரி என்பாளை; மண் எலாம் செல்ல நின்ற மகிழ்ச்சியின் மகிழ்ந்து தந்தான் - உலகம் எல்லாம் தன்னிடத்திலே செல்ல நின்ற அரசுரிமையாகிய மகிழ்ச்சியைப் பெற்றவன்போல மகிழ்ந்து கொடுத்தான்.
விளக்கம் : அவண் விளங்க - கேமசரி நாணுதலின், அவள் மனை விளங்கியது. மகிழ்ச்சியின் : இன் : ஒப்பு. ( 201 )
1758. அவ்வழி யிரண்டு திங்கள்
கழிந்தபி னவளி னீங்கி
யிவ்வழி நாடு காண்பான்
வருதலு மிறைவன் கண்டே
செவ்வழி பாட ராகிச்
சிலைத்தொழில் சிறுவர் கற்ப
மைவழி நெடுங்க ணாளைத்
தந்தனன் மதலை யென்றான்.
பொருள் : மதலை - குழந்தாய்!; அவ்வழி இரண்டு திங்கள் கழித்தபின் - அங்கே இரண்டு திங்களைப் போக்கிய பிறகு; அவளின் நீக்கி - அவளிடத்தினின்றும் பிரிந்து; நாடு காண்பான் இவ்வழி வருதலும் - நாடுகளைப் பார்க்க இவ்வழியே வருதலும்; இறைவன் கண்டு - இந்நாட்டரசன் என் திறனைப்பார்த்து; சிறுவர் செவ்வழி பாடராகிச் சிலைத்தொழில் கற்ப -அரசன் மக்கள் நல்ல வழிபாடுடையராகி விற்றொழில் கற்ப; மை வழி நெடுங்கணாளைத் தந்தனன் என்றான் - மை வழியும் நீண்ட கண்ணாளாகிய கனகமாலையைக் கொடுத்தான் என்றான்.
விளக்கம் : ஏனைப் படைக்கலங்களின் தொழிலும், யானை முதலிய ஏற்றுத் தொழிலும் கற்றாரேனும் அவை கூறாது விற்றொழிலே கூறினார், அதன் சிறப்பு நோக்கி. ( 202 )
1759. தானுழந் துற்ற வெல்லாந்
தம்பியை யுணரக் கூறித்
தேனுழந் தரற்றுந் தாரான்
குரவரைச் சிந்தித் தாற்கு
வானிழிந் தாங்குக் கண்ணீர்
மார்பக நனைப்பக் கையா
லூனுமிழ்ந் திலங்கும் வேலா
னொற்றிமற் றிதனைச் சொன்னான்.
பொருள் : தேன் உழந்து அரற்று தாரான் - வண்டுகள் மலரைக் கிண்டி முரலும் மாலையானாகிய சீவகன்; தான் உழந்து உற்ற எல்லாம் - (இவ்வாறு) தான் வருந்திப் பெற்றவற்றையெல்லாம்; தம்பியை உணரக் கூறி - தம்பிக்கு விளங்கக் கூறி; குரவரைச் சிந்தித்தாற்கு - இருமுது குரவரை நினைந்து வருந்தியவற்காக; வான் இழிந்தாங்குக் கண்ணீர் மர்பகம் நனைப்ப - முகிலினின்றும் பெய்தாற்போல நந்தட்டனுக்குக் கண்ணீர் பெருகி மார்பிடத்தை நனைப்ப; ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் கையால் ஒற்றி இதனைச் சொன்னான் - ஊனைச் சொரிந்து விளங்கும் வேலானாகிய சீவகன் தன் கையால் அவன் கண்ணீரை மாற்றி இதனைக் கூறினான்.
விளக்கம் : இனி, கூறி என்பதைக் கூற, எனக்கொண்டு; சீவகன் கூற இதனைக் குரவருங் கேட்கப் பெற்றிலமேயென்று சிந்தித்த நந்தட்டனுக்குக் கண்ணீர் மார்பிடத்தை நனைப்ப என்றுமாம். ( 203 )
1760. திண்பொரு ளெய்த லாகுந்
தெவ்வரைச் செகுக்க லாகு
நண்பொடு பெண்டிர் மக்கள்
யாவையு நண்ண லாகு
மொண்பொரு ளாவ தையா
வுடன்பிறப் பாக்க லாகா
வெம்பியை யீங்குப் பெற்றே
னென்னெனக் கரிய தென்றான்.
பொருள் : ஐயா! - ஐயனே!; திண்பொருள் எய்தலாகும் - அசைவிலாத செல்வத்தைப் பெறற்காகும்; தெவ்வரைச் செகுக்கலாகும் - பகைவரை வெல்லுதற்கியலும்; நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணல் ஆகும் - நட்பையும் பெண்டிரையும் மக்களையும் பிறபொருள்கள் எல்லாவற்றையும் அடையமுடியும்; ஆக்கலாகா ஒண்பொருளாவது உடன்பிறப்பு - ஆக்கிக்கொள்ள முடியாத சிறந்த பொருளாவது உடன் பிறப்பு ஒன்றே; எம்பியை ஈங்குப் பெற்றேன் - அத்தகைய தம்பியாகிய நின்னை இவ்விடத்தே பெற்றேன்; என் எனக்கு அரியது என்றான் - இனி எனக்கு அரியது இல்லை என்றான்.
விளக்கம் : எம்பி : முன்னிலைப் படர்க்கை. திண்பொருள் - அறத்தாறு நின்று ஈட்டலான் நிலைத்திருக்கும் தன்மையுடைய பொருள். தெவ்வர் - பகைவர். செகுத்தல் - அழித்தல். யாவையும் என்றது பிற பொருள் பலவற்றையும் என்பதுபட நின்றது. எம்பி - என் தம்பி, அரியதென் என்னும் வினா அரியதொன்றுமில்லை என்பதனை வற்புறுத்து நின்றது. நின்னைப் பெற்றேன் என முன்னிலையாகக் கூற வேண்டிய விடத்து எம்பியை எனப் படர்க்கையாகக் கூறினர். இஃது இடவழுவமைதி. ( 204 )
வேறு
1761. தேனிற் பாலெனச் செல்வன் றம்பியோ
டானி யம்பல கழிய வாயிடை
வேனிற் குன்றெனத் தோழர் வெந்துமெய்
யூனி னைகின்றார் செய்வ துன்னினார்.
பொருள் : தேனில் பால் என - தேனிடத்துப் பால்போல இனிமையாக; செல்வன் தம்பியோடு ஆனியம் பல கழிய - சீவகன் தம்பியுடன் பல பொழுதுகள் கழியாநிற்க; ஆயிடைத் தோழர் - அவ் விராசமா புரத்தே உள்ள தோழர்கள்; வேனில் குன்றென வெந்து - கோடையில் மாலைபோல மனங் கொதித்து; மெய் ஊன் நைகின்றார் செய்வது உன்னினார் - உடம்பில் ஊன் மெலிகின்றவர் மேல் செய்யவேண்டுவதென்னென நினைத்தனர்.
விளக்கம் : ஊனின் : இன் : அசை. தேனிற் பால் என்றது தேனும் பாலும் கலந்தாற் போன்று என்றவாறு. ஒன்றன் இனிமைக்கு மற்றொன்று ஆக்கமாதல் பற்றி இங்ஙனம் உவமை கூறினர். ஆனியம் - நாள். வேனிற்குன்று - கோடைக் காலத்து மலை. தோழர் - பதுமுகன் முதலியோர். ( 205 )
1762. நாடு மின்னினி நாங்கள் செய்வதென்
றீடி னாலிருந் தெண்ணி நால்வரு
மாடு மஞ்ஞையஞ் சாயற் றத்தைமெய்
வாட லொன்றிலள் வஞ்சமாங் கொலோ.
பொருள் : நால்வரும் ஈடினால் இருந்து - தோழன்மார்நால் வரும் வருத்தத்தோடேயிருந்து; நாங்கள் செய்வது நாடுமின் இனி என்று எண்ணி - இனி நாம் செய்யுங் காரியத்தை ஆராய்மின் என்று சிந்தித்து; ஆடும் மஞ்ஞை அம் சாயல் தத்தை மெய் வாடுகின்றிலள் - ஆடும் மயில் போன்ற அழகிய தோற்றத்தையுடைய தத்தை உடல் மெலிகின்றிலள்; வஞ்சம் ஆம்கொல்? - (ஆதலின்) அவன் மறைந்துறைகின்றனனோ?
விளக்கம் : இப்பாட்டுக் குளகம் : நால்வர் : பதுமுகன், புத்திசேனன், சீதத்தன், தேவதத்தன், கொல். ஐயம். நாங்கள் : கள் : பகுதிப் பொருள் விகுதி. ( 206 )
1763. கள்ள முண்டெனிற் காண்டு நாமென
மௌள வெய்தினார் வினவக் கூறினாள்
வள்ளற் குற்றதும் மறைந்த வண்ணமும்
வெள்ளி வெண்மலை வேந்தன் பாவையே.
பொருள் : கள்ளம் உண்டு எனின் நாம் காண்டும் என - கரந்துறைதல் உண்டாயின் நாம் அறிவோம் என்று துணிந்து; மெல்ல எய்தினார் - மெல்லத் தத்தையிடம்போய்; வினவ - அவர்கள் கேட்ப; வெள்ளி வெண்மலை வேந்தன் பாவை - வெள்ளிமலை மன்னனுடைய மகள்; வள்ளற்கு உற்றதும் மறைந்த வண்ணமும் கூறினாள் - சீவகனுக்கு நேர்ந்ததையும், அவன் மறைந்திருக்கும் இடத்தையும் இயம்பினாள்.
விளக்கம் : மௌள - மெல்ல, எய்தினார் : முற்றெச்சம். வேந்தன் பாவை - கலுழவேகன் மகளாகிய காந்தருவதத்தை. வள்ளற்கு - சீவகனுக்கு. வண்ணம் - தன்மை. ( 207 )
1764. மற்ற வள்சொலக் கேட்ட மைந்தர்க
ளிற்ற தம்முயி ரியல்பிற் போத்தவட்
பெற்ற மாந்தரிற் பெரிது மெய்குளிர்ந்
தற்ற மன்மையி னவல நீங்கினார்.
பொருள் : அவள் சொலக் கேட்ட மைந்தர்கள் - அவள் கூறக்கேட்ட தோழர்கள்; இற்ற தம் உயிர் இயல்பின் பேர்த்து - இழந்த தம் உயிரை முறைப்படி மீட்டு; அவண் பெற்ற மாந்தரின் - அங்கே அடைந்த மக்களைப்போல; பெரிதும் மெய் குளிர்ந்து - மிகவும் உடல் குளிர்ந்து; அற்றம் அன்மையின் அவலம் நீங்கினார் - அக் கூற்றுப் பொய் அல்லாமையின் வருத்தம் நீங்கினார்.
விளக்கம் : அவள் : காந்தருவதத்தை. மைந்தர்கள் - பதுமுகன் முதலாயினோர், பேர்த்து - மீட்டு. மாந்தரின் - மனிதரைப்போல. அற்றம் - பொய். ( 208 )
1765. திருவின் சாயறன் சீற டிச்சிலம்
புருவக் குஞ்சிவா யுறுத்தி யொய்யென
வுருகு முள்ளத்தி னுடம்பு வீங்கினார்
பருகு காதலிற் பாடி யாடினார்.
பொருள் : திருவின் சாயல்தன் சீறடிச் சிலம்பு - திருமகளின் சாயலை உடைய தத்தையின் சிற்றடிச் சிலம்பை (நோக்கி); உருவக் குஞ்சிவாய் உறுத்தி - அழகிய சிகையிலே சேர்ந்தாற் போல வணங்கி; உருகும் உள்ளத்தின் ஒய்என உடம்பு வீங்கினார் - அன்பால் உருகும் உள்ளத்தால் மெய் பருத்தார்; பருகு காதலின்பாடி ஆடினார் - பருகலாம் போன்ற காதலாற் பாடி ஆடினார்.
விளக்கம் : திருவின் : இன் : பொரு. சிலம்பு : ஆகுபெயர்; அடியை நோக்கி வணங்கி என்று கொள்க. ( 209 )
வேறு
1766. பைத்தர வத்திரை சிந்திய பல்கதிர்
மொய்த்தெரி நித்திலம் வைத்தன பல்லின
ளித்திரு வின்னுரு வந்தொழு தார்தம
தெத்துய ருங்கெடு மென்றின சொன்னார்.
பொருள் : அரவத் திரை பைத்துச் சிந்திய - ஒலியையுடைய கடல் பொங்கிச் சிதறிய; பல்கதிர் மொய்த்து எரி நித்திலம் வைத்த அன பல்லினள் - பல கதிர்கள் நெருங்கி விளங்கும் முத்துக்களை வைத்தாற் போன்ற முறுவலையுடையவளாகிய; இத்திருவின் உருவம் தொழுதார் தமது - இந்தத் திருமகளின் உருவத்தைத் தொழுதவருடைய; எத்துயரும் கெடும் என்று இனசொன்னார் - எல்லாத் துயரும் போம் என்று இவைபோன்ற புகழ் மொழிகளைப் புகன்றனர்.
விளக்கம் : அரவத்திரை பைத்துச் சிந்திய என மாறுக. அரவம் - ஒலி. திரை - அலை. பைத்து - பொங்கி. நித்திலம் - முத்து. இத்திரு என்றது - காந்தருவதத்தையை. இன - இன்ன. ( 210 )
1767. ஐயனை யாமவ ணெய்துவ மாயிழை
நொய்தினு ரைபொரு ளுண்டெனி னொய்தென
மையெழுத் தூசியின் மாண்டதொர் தோட்டிடைக்
கைவளர் கோதை கரந்தெழுத் திட்டாள்.
பொருள் : ஆயிழை - ஆயிழையே!; யாம் அவண் ஐயனை எய்துவம் - யான் அங்குச் சென்று எம் தலைவனை அடைவோம்; பொருள் உண்டு எனின் நொய்தின் உரை என - அவற்குக் கூறும் பொருள் உளதேல் விலைந்து கூறுக என; கைவளர் கோதை - கற்பாகிய ஒழுக்கம் வளர்கின்ற தத்தை, மை எழுத்து ஊசியின் - மையைத் தோய்த் தெழுதும் எழுத்தாணியாலே; மாண்டது ஓர் தோட்டிடை - சிறப்புடையதோர் ஏட்டிலே; நொய்து எனக் கரந்து எழுத்திட்டாள் - விரைவாக மறைந்த எழுத்தாலே எழுதினாள்.
விளக்கம் : மை-மஷிஎன்பர் நச்சினார்க்கினியர். அவ்வெழுத்தறிந்தாலும் பிறர் வாசியாதபடி எழுதினாள். ( 211 )
1768. ஆங்குருக் காரரக் கிட்டதன் மீமிசைப்
பூங்குழை யாற்பொறி யொற்றுபு நீட்டத்
தேங்குழ லாடொழு தாடிசை செல்கெனப்
பாங்கரங் குப்படர் குற்றன ரன்றே.
பொருள் : ஆங்கு உருக்கு ஆர் அரக்கு இட்டு - அவ்வேட்டின்மேல் உருக்கி அரக்கையிட்டு; அதன் மீமிசை பூங்குழையால் பொறி ஒற்றுபு - அதன்மேல் அழகிய தன் குழையாலே பொறி வைத்து; தேன் குழலாள் திசை செல்கெனத் தொழுதாள் நீட்ட - தேன் பொருந்திய கூந்தலாள் அவனிருக்குந் திசை நோக்கிச் செல்க என்று தொழுதவளாய் அவர்களிடம் கொடுக்க : அங்குப் பாங்கர் அன்றே படர்குற்றனர் - அத் திசை நோக்கித் தோழரும் அப்போதே செல்லலுற்றனர்.
விளக்கம் : குரவரை நோக்கச் சில பிள்ளைகள் நிற்கவேண்டுமென்று நபுல விபுலர் நின்றனர்; மற்றையோர் புறப்பட்டனர். ( 212 )
1769. வேந்திரி யக்கணை வித்திய வெஞ்சிலைக்
காய்ந்திரிக் கும்புரு வக்கருங் கண்ணிய
ராய்ந்தரிக் குந்நற வம்மலர் மாலையை
வேய்ந்தரிக் கும்மிஞி றார்ப்ப விடுத்தாள்.
பொருள் : வேந்து இரிய வித்திய - அரசர்கள் ஓடுமாறு தொடுத்தற்கு; காய்ந்து வெஞ்சிலை கணை இரிக்கும் புருவக் கருங்கண்ணியர் - காய்ந்து கொடிய வில்லிற்றங்குங் கணையக் கெடுக்கும் புருவத்துள் தங்கும் கண்ணியராலே; ஆய்ந்து அரிக்கும் நறவம் மலர்மாலையை - ஆராய்ந்து தீமணங் களைந்து தொடுக்கும் தேன் மலர்ந்த மாலையை; வேய்ந்து அரிக்கும் மிஞிறு ஆர்ப்பவிடுத்தாள் - சூழ்ந்து மேயும் வண்டுகள் ஆர்ப்ப விடுத்தாள்.
விளக்கம் : தத்தை தன் தலையை அசைத்துப் போம் என்றலின் மிஞிறு ஆர்த்தது என்க. (213)
வேறு
1770. அலங்கு வெண்மதி யைப்பசி யடையவப் பகலே
நிலங்கொண் டோங்கின நிரம்பின புகர்சுழி யுடைய
வுலம்பி முன்னிரு தாள்களு முமிழ்வன போல்வ
விலங்கு பாய்வன விடுகணை விலக்குவ கலிமா.
பொருள் : அலங்கு வெண்மதி ஐப்பசி அடைய அப்பகலே - விளங்கும் வெண்திங்கள் அசுவதி நாளினைச் சேர அற்றை நாளிலே; நிலம் கொண்டு ஓங்கின - நிலத்திலே பிறந்து வளர்ந்தன; நிரம்பின புகர் சுழி உடைய - நிறைந்த புள்ளிகளையும் சுழிகளையும் உடையன; உலம்பிமுன் இருதாள்களும் உமிழ்வன போல்வ - முழங்கி முன்தாள்கள் இரண்டையும் கால்வனபோல்வன; விலங்கு பாய்வன - குறுக்கிட்டுப் பாய்வன; விடுகணைவலக்குவ கலிமா - தம்மேல் இருந்து எய்த அம்பைப் பின்னிட்டு விரைவனவாகிய குதிரைகள்.
விளக்கம் : இதுமுதல் மூன்று பாட்டுகள் குதிரைப்படையின் இயல்பைத் தெரிவிப்பன. மதி - திங்கள். ஐப்பசி -அசுவதிமீன்.நிலங்கொண்டென்றது - பிறந்து என்றவாறு. நல்லிலக்கணமாகிய புகரையும் சுழியையும் உடைய என்க. உலம்புதல் - முழங்குதல், விலங்கு - குறுக்கே. தம்மேலிருந்து விடுகணை என்க. ( 214 )
1771. அள்ளற் சேறரு மணல்புன லருவரைப் படினு
முள்ளம் போற்செல்வ வுரனசை வில்லன வமருட்
கொள்ளி மண்டிலம் போற்கொடி படத்திரிந் திடுவ
வெள்ளி மால்வரைத் தாழ்வதின் மேம்படப் பிறந்த
பொருள் : அள்ளல் சேறு அருமணல் புனல் அருவரைப் படினும் - அள்ளலாகிய சேற்றினும் அரிய மணலினும் புனலினும் அரிய மலையினும் செல்லவேண்டினும்; உள்ளம்போல் செல்வ - தம்மேல் ஏறிய வீரரின் மனம்போற் செல்லக் கூடியன; உரன் அசைவு இல்லன - வலிமை கெடாதன; அமருள் கொள்ளி மண்டலம்போல் கொடிபடத் திரிந்திடுவ - போர்க் களத்திலே கொள்ளி வட்டம்போல இடையறாமல் திரிந்திடுவன; வெள்ளி மால் வரைத் தாழ்வதில் மேம்படப் பிறந்த - பெரிய வெள்ளி மலையின் சரிவிலே உயர்வுறப் பிறந்தவை (அக்குதிரைகள்)
விளக்கம் : அள்ளற்சேறு : இருபெயரொட்டு. அருவரை - ஏறுதற் கரிய மலை. தம்மேலேறிய வீரர் உள்ளம்போல் என்க. உரன் - வலிமை. கொள்ளி மண்டிலம் - எரிகொள்ளியைச் சுற்றுங்காற் றோன்றும் ஒளி வட்டம். கொடி - வரிசை, வரைத்தாழ்வு - மலைச்சரிவு. ( 215 )
1772. ஈரைஞ் ஞாற்றினை யிருபதின் முரணிய தொகைய
வீர ரேறின விளங்கொளிப் பக்கரை யமைந்த
தாரும் புட்டிலு மரற்றுவ சாமரை யணிந்த
வோருங் கூடின மள்ளரு மொலித்தெழுந் தனரே.
பொருள் : ஈரைஞ் ஞாற்றினை இருபதின் முரணிய தொகைய - இருபதினாயிரம் என்னும் தொகையை உடையன; வீரர் ஏறின - வீரரால் ஏறப்பட்டவை; விளங்கு ஒளிப் பக்கரை அமைந்த - விளங்கும் ஒளியை உடைய கலணை அமைந்தவை; தாரும் புட்டிலும் அரற்றுவ - கிண்கிணி மாலையும் கெச்சை மணியும் ஒலிப்பன; சாமரை அணிந்த கூடின - சாமரை அணியப்பட்டனவாகக் கூடின (அக் குதிரைகள்); மள்ளரும் ஒலித்து எழுந்தனர் - வீரரும் ஆரவாரித்து எழுந்தனர்.
விளக்கம் : ஈரைஞ்ஞாற்றினை : நகர ஞகரப்போலி. ஆயிரத்தை இருபதால் உறழ்ந்த (பெருக்கிய) தொகை; அஃதாவது இருபதினாயிரம். பக்கரை - கலணை என்னும் உறுப்பு. புட்டில் - கெச்சை. ஓரும் : அசை. ( 216 )
வேறு
1773. வடித்த போத்தொடு வன்செல லத்திரி
கடுத்த வொட்டகங் காற்செல்வ யாவையு
நொடிப்பின் மாத்திரை நூற்றுவில் லேகுவ
வெடுத்த பண்ட மியைந்துட னென்பவே.
பொருள் : நொடிப்பின் மாத்திரை நூற்று வில் ஏகுவ - நொடி அளவிலே நூறு விற்கிடை செல்வனாகிய; வடித்த போத்தொடு வன்செலல் அத்திரி கடுத்த ஒட்டகம் கால் செல்வ யாவையும் - பண்ணமைந்த எருதும் வலிய நடையையுடைய கோவேறு கழுதையும் கடிது செல்லும் ஒட்டகமும் மற்றுங்காலாற் செல்வன யாவும்; பண்டம் இயைந்து உடன் எடுத்த - பொருள்களை மனம் பொருந்திச் சேரச் சுமந்தன.
விளக்கம் : நொடிப்பின் : இன் : அசை. என்ப, ஏ : அசைகள். வடித்த - பண்ணுறுத்திய. போத்து - எருது. அத்திரி - கோவேறு கழுதை. கால்செல்வ - காலாற் செல்வனவாகிய ஊர்திகள், வில் - ஓரளவு. ( 217 )
1774. ஞாலம் விற்பன பைங்கிளி நன்னிறத்
தாலு மாபவ ளக்குளம் பார்ந்தன
காலி னொய்யன கண்வெளவு காட்சிய
நால்குப் பண்ணினர் நால்வரு மேறினார்.
பொருள் : ஞாலம் விற்பனை - உலகை விலைப்படுத்துவன; பவளக் குளம்பு ஆர்ந்தன - பவளமெனச் சிவந்த குளம்பு பொருந்தியன; காலின் நொய்யன - காற்றைப்போல விரைவன; கண் வெளவு காட்சிய - கண்ணைப் பறிக்குந் தோற்றத்தின; பைங்கிளி நன்னிறத்து ஆலும்மா நால்கு பண்ணினர் - பச்சைக் கிளிபோல நல் நிறமுடையனவாகிய அசையும் குதிரைகள் நான்கினைப் பணியாளர் பண்ணுறுத்தினர்; நால்வரும் ஏறினர் - அவற்றின்மேல் நால்வரும் ஏறினர்.
விளக்கம் : நால்கு : பெயர்த்திரிசொல்; பால்புரை புரவி நால் குடன் பூட்டி (பொருந. 165) என்றார் பிறரும். ஞாலம் - உலகம், விற்றல் - விலையாகக் கோடல், ஆலுமா - ஆடும் குதிரை, ( 218 )
1775. நாளும் புள்ளு நயத்தகு நன்னிலைக்
கோளு மோரையுங் கொண்ட நிமித்தமு
மாளு மாந்தரி னாய்ந்துகொண் டாயிடைத்
தாளி னூக்குபு சாத்தொ டெழுந்தவே.
பொருள் : நயத்தகும் நல்நிலை நாளும் - விரும்பத்தகும் நன்னிலையிலுள்ள நாளையும்; புள்ளும் - பறவைச் சகுனத்தையும்; கோளும் - கிரகத்தையும்; ஓரையும் - முழுத்தத்தையும்; கொண்ட நிமித்தமும் - கொண்ட பிற நிமித்தங்களையும்; ஆளும் மாந்தரின் ஆய்ந்துகொண்டு - கொள்ளும் மக்களைப்போல ஆராய்ந்து கொள்ள; ஆயிடைத் தாளின் ஊக்குபு சாத்தொடு எழுந்த - ஆங்கே காலாலே செல்ல முயன்று, அவ்விடத்துப் போகின்ற வணிகர் திரளுடன் போயின.
விளக்கம் : புறப்பட்டு நின்று நாட்கேட்டனர் போக்கின் விரைவால். புள் - பறவையான் அறியும் நிமித்தம். ஆளும் மாந்தரின் - இவற்றை மேற்கொள்ளும் நிமித்திகர் போன்று. சாத்து - வணிகர் கூட்டம் : உயர் திணைவிரவி மிகுதிபற்றி அஃறிணை முடிபேற்றது. ( 219 )
1776. பறையுஞ் சங்கும் பரந்தொலித் தார்த்தெழ
வுறைகொள் வாளினோ டொண்சுடர் வேன்மினச்
சிறைய ழிந்ததொர் செம்புனல் போன்றவ
ணறைக டற்படை யார்ப்பொ டெழுந்தவே.
பொருள் : பறையும் சங்கும் பரந்து ஒலித்து ஆர்த்து எழ - பறை பரவி ஒலிக்கவும் சங்குகள் ஆர்த்து முழங்கவும்; உறை கொள் வாளினோடு ஒண்டசுடர் வேல்மின - உறையிலே கொண்ட வாளுடன் ஒளிபொருந்திய வேலும் மின்ன; சிறை அழிந்தது ஒர் செம்புனல் போன்று - கரை உடைத் தெழும் புதுவெள்ளம் போல; அவண் அறை கடல் படை ஆர்ப்பொடு எழுந்த - அங்கே ஒலிக்குங் கடலனைய படை ஆரவாரித்துப் புறப்பட்டன.
விளக்கம் : பறை பரந்து ஒலித்து எழ சங்கு ஆர்த்து எழ என இயைக்க. மின்ன - மின என இடை குறைந்து நின்றது. செம்புனல் - புதுநீர். அறைகடல் : வினைத்தொகை. ( 220 )
1777. காய்த்த செந்நெலின் றாழ்கதிர் நெற்றிமேற்
பூத்த முல்லையின் போது பொழிந்துக
நீத்த நீர்வய லன்னமு நாரையு
மேத்தல் சான்முரு டார்ப்ப விரிந்தவே.
பொருள் : ஏத்தல் சால்முருடு ஆர்ப்ப - புகழ்பெற்ற முருடுகள் ஒலிப்பதனாலே; நீத்தம் நீர் வயல் அன்னமும் நாரையும் - வெள்ளமாகிய நீரையுடைய வயலின்கண் அன்னமும் நாரையும்; காய்த்த செந்நெலின் தாழ்கதிர் நெற்றிமேல் - விளைந்த நெல்லின் தாழ்ந்த கதிரின் நெற்றியிலே; பூத்த முல்லையின் போது பொழிந்து உக இரிந்த - மலர்ந்த முல்லை மலர்கள் தேனைச் சொரிந்து சிந்தும்படி ஓடின.
விளக்கம் : இது முல்லையும் மருதமும் மயங்கின நிலமயக்கம். ( 221 )
1778. அளகு சேவலொ டாடியங் காய்க்குலை
மிளகு வார்கொடி யூசல் விருப்புறூஉஞ்
சுளகு வார்செவித் தூங்குகைக் குஞ்சர
மிளகு காடிள கப்பரி கொண்டவே.
பொருள் : அளகு சேவலொடு ஆடி - கூகைப் பெடை தன் சேவலுடன் புணர்ந்து; அம் காய்க்குலை வார் மிளகு கொடி ஊசல் விருப்பு உறூஉம் - அழகுறக் காய்த்த குலையையுடைய நீண்ட மிளகுக் கொடியாகிய ஊசலை விரும்புகின்ற; சுளகு வார் செவித்தூங்கு கைக் குஞ்சரம் இளகுகாடு - சுளகுபோலப் பெரிய காதுகளையும் தூங்குங் கையையுமுடைய யானைகளை யுடைய தழைத்த காடு; இளகப் பரி கொண்ட - அசையும்படி இவர்களுடைய படைகள் சென்றன.
விளக்கம் : ஊசலை விரும்புகின்ற காடு, யானைகளையுடைய தழைத்த காடு எனக் கூட்டுக. இளகு காடு - தழைத்த காடு காடு அசையும்படி யானை அவ்வோசைகளைக் கேட்டுச் செலவு கொண்டன என்றுங் கூறலா மென்பர் நச்சினார்க்கினியர். அளகு - காட்டுக் கோழியுமாம்; கோழி கூகை ஆயிரண்டல்லவை - சூழுங்காலை அளகெனல் அமையா (தொல். மரபு. 55) ( 222 )
1779. அருவிக் குன்றமு மைவனச் சாரலுங்
குருவி யார்த்தெழு கொய்புனக் கானமுந்
திருவிற் றீர்ந்தவர் தேயமுந் தோந்துபோய்
மருவி மாதவர் பள்ளியுள் விட்டதே
பொருள் : அருவிக் குன்றமும் - அருவிகளையுடைய மலைகளையும்; ஐவனச் சாரலும் - மலை நெல்லைக் கொண்ட மலைப் பக்கங்களையும்; குருவி ஆர்த்து எழு கொய்புனக் கானமும் - குருவிகள் ஆரவாரித் தெழுகின்ற தினைகொய் புனத்தையுடைய காட்டையும்; திருவில் தீர்ந்தவர் தேயமும் தேர்ந்துபோய் - செல்வமில்லாத வறியர் வாழும் நாடுகளையும் சீவகன் உளனோ என்று ஆராய்ந்து சென்று; மாதவர் பள்ளியுள் மருவிவிட்டதே - தாபதர் வாழும் பள்ளியிலே பொருந்தித் தங்கியது இவர்களுடைய படை.
விளக்கம் : ஐவனம் - மலைநெல். கொய்புனம் : வினைத்தொகை. திரு - செல்வம், தேயம் - நாடு, தேர்ந்து - ஆராய்ந்து. விட்டது - தங்கியது. ( 223 )
வேறு
1780. வண்டுதுயில் கொண்டுகுயி லாலிமயி லகவி
விண்டுமது விட்டுவிரி போதுபல பொதுளிக்
கொண்டுதளிர் வேய்ந்துசினை தாழ்ந்துநனை யார்ந்தொன்
றுண்டுபொழி லிமையவர்க ளுலகமுறு வதுவே.
பொருள் : வண்டு துயில் கொண்டு - வண்டுகள் உறங்கி; குயில் ஆலி - குயில்கள் கூவி; மயில் அகவி - மயில்கள் கூவுமாறு; விண்டு மதுவிட்டு விரிபோது பல பொதுளி - அலர்ந்து தேனைச் சொரிந்து மலரும் மலர்கள் பல தழைத்து; தளிர் கொண்டு வேய்ந்து - தளிரைக் கொண்டு வேய்ந்து; சினை தாழ்ந்து - கிளைகள் தாழ்ந்து; நனை ஆர்ந்து - அரும்புகள் நிறைந்து; இமையவர்கள் உலகம் உறுவது - வானவர்களின் உலகைப் போன்றதாகிய; பொழில் ஒன்று உண்டு - சோலை ஒன்று ஆண்டு உளது.
விளக்கம் : துயில் கொள்ளப்பட்டு ஆலப்பட்டு அகவப்பட்டு பொதுளப்பட்டு வேயப்பட்டு; தாழ்ந்து ஆர்ந்து ஒரு பொழில் உண்டு என்க. உறுவது - ஒப்பது. ( 224 )
1781. காவிகழு நீர்குவளை யாம்பல்கடிக் கமலந்
தூவிமட நாரைதுணை யன்னம்பயின் முதுமீன்
மேவியுறை வண்டினொடு மல்கிவிழை தகைய
வாவியொடு காவினிடை மாந்தர்பதி கொண்டார்.
பொருள் : காவி கழுநீர் குவளை ஆம்பல் கடிக்கமலம் - நீலோற்பலமும் கழுநீரும் குவளையும் ஆம்பலும் மணமுறு தாமரையும் ஆகிய மலர்களும்; தூவி மடநாரை துணை அன்னம் பயில்முதுமீன் மேவி உறை வண்டினொடு - தூவியையுடைய இளநாரையும், துணையையுடைய அன்னமும், பயில்கின்ற மீனும், விரும்பி வாழும் வண்டுகளும்; மல்கி - நிறைந்து; விழைதகைய - விரும்புந் தகைமையையுடைய; வாவியொடு - குளத்துடன் கூடிய; காவினிடை மாந்தர் பதிகொண்டார் - சோலையிலே நால்வரும் படை வீரருடன் தங்கினர்.
விளக்கம் : காவி - நீலோற்பல மலர். கடிக்கமலம் - மணமுடைய தாமரை மலர். தூவி - சிறகு. பயின்முதுமீன் - பயில்கின்ற முதுமையாகிய மீன் என விவரிக்க. வினைத்தொகை பின்னது பண்புத்தொகை. மல்கி - நிறைந்து. தகைய - தன்மையையுடைய. பதிகொள்ளுதல் - தங்குதல். ( 225 )
1782. ஐயருறை பள்ளியிட மாண்டிழகர் காணச்
செய்கழகர் தாரரவ ரெங்கந்திரி கின்றார்
கொய்தகைய பூம்பொதும்பர்க் குளிருமரப் பலகைச்
செய்யவளிற் சிறிதுமிகை சேயவளைக் கண்டார்.
பொருள் : அழகர் அவர் - அழகராய அந் நால்வரும்; ஆண்டு ஐயர் உறை பள்ளியிடம் காண - ஆங்கே முனிவர் வாழும் பள்ளியிடத்தைக் காண்டற்கு; செய்கழலர் தாரர் எங்கும் திரிகின்றார் - கழலுடனும் தாருடனும் எங்கும் உலாவுகின்றவர்; கொய்தகைய பூம்பொதும்பர்க் குளிரும் மரப்பலகை - பறிக்குந்தகவினை தாய் உள்ள மலர்ப் பொதும்பரில் இருக்கும் மரப்பலகையிலே; செய்யவளின் சிறிது மிகை சேயவளைக் கண்டார் - திருமகளினும் சிறிது மிகுதியாக உயர்ந்தவளைக் கண்டனர்.
விளக்கம் : விசையையைக் கண்டனர். குளிரும் : திசைச் சொல். மலர்ப்பலகை என்றும் பாடம்.( 226 )
1783. அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்தச்
செந்நுண்டுகி லுத்தரியம் புதைந்துசுவல் வருத்த
மைந்நுண்குழற் சிறுவன்மனம் வருத்தவடி வேற்கண்
கைந்நொண்டன கவர்ச்சிநனி வருத்தக்கலுழ்ந் தாற்றாள்.
பொருள் : அம் நுண்துகில் அரத்தம்கல் அல்குலது வருத்த - அழகிய நுண்ணிய துகிலில் தோய்த்த அரத்தம் போலச் சிவந்த கல் அல்குலாகிய அதனை வருத்துதலானும்; செம்நுண் துகில் உத்தரியம் புதைந்து சுவல் வருத்த - சிவந்த நுண்ணிய துகிலாகிய மேலாடை அழுந்தித் தோளை வருத்துதலானும்; மைநுண் குழல் சிறுவன் மனம் வருத்த - கரிய நுண்ணிய குழலையுடைய சீவகன் மனத்தை வருத்துதலானும்; வடிவேல் கண் கை நொண்டன கவற்சி - கூரிய வேலனைய கண்கள் (அரசனை யிழக்கும்படி நிகழ்த்தின) ஒழுக்கத்தாலே முகந்து கொண்டனவாகிய கவலை; நனி வருத்த - மிகவும் வருத்தலானும்; கலுழ்ந்து ஆற்றாள் - அழுதழுது ஆற்றாதவள்.
விளக்கம் : அரத்தம் போலும் நிறமுடைய கல் அல்குலது என்புழி அது பகுதிப் பொருளது எனினுமாம். உத்தரியம் - மேலாடை. சுவல் - தோள். மை - கருமை. சிறுவன் : சீவகன். கை - ஒழுக்கம். கவற்சி - கவலை, கலுழ்ந்து - அழுது. ( 227 )
1784. மாசொடுமி டைந்துமணி நூற்றனைய வைம்பால்
பூசுதலு மின்றிப்பிணி கொண்டுபுறந் தாழ
வாசமலர் மறைந்தவழி வாமனடிக் கேற்றித்
தோசமறத் துதிகண்மனத் தோதித்தொழு திருந்தாள்.
பொருள் : மாசொடு மிடைந்து - அழுக்குடன் கலந்து; மணிநூற்ற அனைய - நீலமணியைக் கம்பியாக்கினால் ஒத்த ; ஐம்பால் பூசுதலும் இன்றிப் பிணிகொண்டு புறம்தாழ - மயிர் கழுவுதலும் இல்லாமல் சடையாகிப் புறத்திலே தாழ; மறைந்த வழி - மறைவான இடத்திலமர்ந்து; வாசமலர் வாமன் அடிக்கு ஏற்றி - மணமுறும் மலர்களை அருகன் திருவடியிலே ஏற்றி; தோசம் அறத் துதிகள் மனத்து ஓதி - குற்றமற வாழ்த்துக்களை மனத்திலே ஓதி; தொழுது இருந்தாள் - வணங்கியிருந்தாள்.
விளக்கம் : கருத்து சீவகன் வாழ்வே கருதுதலின் மறைந்த வழியில் இருந்தாள். மணி - நீலமணி, ஐம்பால் - கூந்தல். பூசுதல் - கழுவுதல், புறம் - முதுகு. மறைந்தவழி வாசமலர் வாமனடிக்கேற்றி என மாறுக. வாமன் - அருகக்கடவுள். தோசம் - குற்றம். (228 )
1785. சிந்திப்பலென் சிறுவன்றிற மினியென்றெழி னெடுங்கண்
வந்துபனி வார்ந்துமுலைக் கலிங்கமது நனைப்ப
வந்திலிருந் தாளவளுக் கடைந்துமன நடுங்கி
வந்தித்திருந் தார்மகிழ்ந்து காதன்மிக மாதோ.
பொருள் : இனி என் சிறுவன் திறம் சிந்திப்பல் என்று - இப்போது என் மகன் நிலையைச் சிறிது நினைத்துப் பார்ப்பேன் என்று எண்ணி; எழில் நெடுங்கண் பனி வந்து வார்ந்து - அழகிய நீண்ட கண்களிலிருந்து நீர்த்துளி வந்து வீழ்ந்து; முலைக் கலிங்கத்து நனைப்ப - முலையிற் கலிங்கமாகிய அதனை நனைக்க; அந்தில் இருந்தாள் - அங்கே இருந்தாள்; அவளுக்குக் காதல் மிக - அவளுக்கு நம் பிள்ளைகள் என்று ஒரு காதல் மிகும்படி; மனம் நடுங்கி வந்தித்து அடைந்து மகிழ்ந்திருந்தார் - அவர்கள் அஞ்சிய உள்ளத்துடன் வணங்கிச் சேர்ந்து மகிழ்ந்திருந்தனர்.
விளக்கம் : இவர்களைக் கண்டு அழுகை மாற்றினாள். சிந்திப்பல் : தன்மை ஒருமை வினைமுற்று. சிறுவன் - பிள்ளை; சீவகன். முல்லைக்கலிங்கம் - முலையின் மேற்றுகில். அந்தில் - அவ்விடத்தே. அவளுக்குக் காதன்மிக அடைந்து என இயைக்க. அவள் : விசயை. ( 229 )
1786. வரையுடுத்த பள்ளியிட மாகவதின் மேயோள்
விரையுடுத்த போதுறையும் வேனெடுங்க ணாள்கொ
லுரையுடுத்த நாவுறையு மொண்ணுதல்கொ லன்றித்
திரையுடுத்த தேமொழிகொ லென்றுதெரி கல்லார்.
பொருள் : வரை உடுத்த பள்ளி இடம் ஆக அதின் மேயோள் - மலைகள் சூழ்ந்த அப் பள்ளியே இடமாக அதனுள் இருப்பவள்; விரை உடுத்தபோது உறையும் வேல் நெடுங்கணாள் கொல்? - மணங்கொண்ட மலரில் வாழும் திருமகளோ?; உரை உடுத்த நாஉறையும் ஒள் நுதல் கொல்? - சொல்லுடுத்த நாவிலே வாழும் ஒள்ளிய நுதலாளாகிய நாமகளோ?; அன்றித் திரை உடுத்த தேன் மொழிகொல்? - அல்லது கடலை ஆடையாகக் கொண்ட மண்மகளோ?; என்று தெரிகல்லார் - என்று விசையையை உணராதவராயினார்.
விளக்கம் : உடுத்த - சூழ்ந்த. இடம் - உறையுமிடம். மேயோள் - இருப்பவள், விரை - மணம், போதுறையும் நெடுங்கணாள் : திருமகள். நாவுறையும் ஒண்ணுதல் : கலைமகள். திரையுடுத்த தேமொழி - நிலமகள். ( 230 )
1787. மங்கலம டிந்ததிரு மாமகளை யொப்பீ
ரிங்குவர வென்னைகுலம் யாதடிகட் கென்ன
வெங்குலமு மெம்வரவும் வேண்டிலெளி தன்றே
நுங்குலமு நும்வரவும் நீருரைமி னென்றாள்.
பொருள் : மங்கலம் மடிந்த திருமாமகளை ஒப்பீர் - மங்கலத்தை இழந்த திருமகளைப் போல்வீர்; அடிகட்கு இங்கு வரவு என்னை? - அடிகள் இங்குவர வேண்டியதன் காரணம் என்ன?; குலம் யாது? - குலம் என்ன?; என்ன - என்று வினவ; எம் குலமும் எம் வரவும் வேண்டில் எளிது அன்று - எம் குலமும் வருகையும் அறிய விரும்பின் இவ் வேடத்தாற் கூறுதல் எளிதாகாது; நும் குலமும் நும் வரவும் நீர் உரைமின் என்றாள் - நும்முடைய குலத்தையும் வருகையையும் நீர் கூறுமின் என்று விசயை வினவினாள்.
விளக்கம் : அடிகள் என்னுஞ் சொல் பெண்பால் முன்னிலையாயும் வருதற்கு இந் நூலிலேயே 1792, 1884, 1909 ஆம் செய்யுட்களிலும், ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும் (சிலப். 14 : 24) என்று வருதல் காண்க. மங்கலமடிதலாவது - மங்கலநாண் இல்லையாதல். இஃது அவள் கைம்மைக்கோலத்தினை உணர்த்தி நின்றது. ( 231 )
1788. மோட்டுமுது நீர்மலங்கு மொய்த்தவிள வாளை
பூட்டுசிலை யிறவினொடு பொருதுதுயின் மடியு
மீட்டமுடை யவர்களுறை யிராசபுர மென்னு
நாட்டமுடை நகரமெம தாகுமுறை பதியே
பொருள் : மோட்டு முதுநீர் - பெருமையுடைய பழைய நீரில்; மலங்கு மொய்த்த இளவாளை பூட்டு சிலை இறவினொடு பொருது துயில் மடியும் - மலங்கும் மொய்த்த வாளையும் நாண்பூட்டிய வில்போன்ற இறவுடன் பொருது உறங்குகின்ற; ஈட்டம் உடையவர்கள் உறை இராசபுரம் என்னும் - பொருள் திரளுடையோர் வாழும் இராசமாபுரம் என்கிற; நாட்டமுடை நகரம் எமது உறைபதி ஆகும் - அழகுடைய நகரம் யாம் வாழும் இடமாகும்.
விளக்கம் : பொருது துயிலும் இராசமாபுரம், உடையவர்கள் இராசமாபுரம் எனக் கூட்டுக. மோடு - பெருமை, மலங்கு - ஒருவகை மீன். இறவு - இறாமீன், இதற்கு நாண் பூட்டப்பட்ட வில் உவமை. துயின்மடியும் : ஒருசொல். இராசமாபுரம் - இராசபுரம் என நின்றது. நாட்டம் - அழகு. ( 232 )
1789. பொன்னுடைய மார்பிற்புகழ் மந்திரிபொ லந்தார்த்
தன்னுடைய நுண்ணுணர்விற் சாகரற்குத் தக்காள்
கொன்னெடிய வாட்கட்குரு தத்தைசீ தத்தன்
மன்னடுங்க வீங்குதிர டோண்மடங்க லன்னான்.
பொருள் : மன் நடுங்க வீங்குதிரள் தோள் மடங்கல் அன்னான் - அந்த நகரத்தரசன் நடுங்குமாறு பருத்துத் திரண்ட தோள்களையுடைய சிங்கம் போன்ற இவன்; பொன் உடைய மார்பின் - திருமகள் தங்கும் மார்பினையுடைய; புகழ் மந்திரி - புகழ்பெற்ற அமைச்சனாகிய; பொலம்தார் - பொன்மாலை அணிந்த; தன்னுடைய நுண் உணர்வின் சாகரற்கு - தன் மந்திர நூலிற் கூறிய நுண்ணிய அறிவினையுடைய சாகரன் என்பானுக்கு; தக்காள் - தக்க மனையாள்; கொன் நெடியவாள் கண் குருதத்தை - அச்சமூட்டும் நீண்ட வாளனைய கண்களையுடைய குருதத்தை பெற்ற மகன்; சீதத்தன் - சீதத்தன் என்பான்.
விளக்கம் : பொன் : திருமகள். மந்திரியாகிய சாகரற்கு. கொன் - அச்சம், மடங்கல் - அரிமா. ( 233 )
1790. அளப்பரிய நான்மறையி னானசல னென்பான்
றிளைக்குந்திரு வொப்புடைய திலோத்தமைதன் சிறுவன்
விளைத்திரும்பு மேய்ந்தொழிந்த மிச்சில்வரை மார்ப
னிளைப்பலிவன் றேசுரைப்பிற் புத்திசே னிவ்விருந்தான்.
பொருள் : இவ் இருந்தான் - இங்கிருந்தவன்; அளப்ப அரிய நான்மறையினான் அசலன் என்பான் - அளத்தற்கரிய நான்கு மறைகளையும் ஓதிய அசலன் என்பான்; திளைக்கும் திரு ஒப்புடைய திலோத்தமைதன் சிறுவன் - நுகரும், திருமகளனைய திலோத்தமையின் மகன்; விளைத்து இரும்பு மேய்ந்து ஒழிந்த மிச்சில் வரை மார்பன் புத்திசேன் - தனக்கு ஒரு போரை உண்டாக்கிக் கொள்வதாலே படைக்கலங்கள் மேய்ந்து குறை கிடந்த எச்சிலாகிய, மலையனைய மார்பன் புத்திசேனன் என்பான்; இவன் தேசு உரைப்பின் இளைப்பல் - இவன் புகழைக் கூறின் இளைப்பேன்.
விளக்கம் : வளைத்து என்பது பாடமாயின் சூழ்ந்து என்க. இவன் படைத் தலைவன். நச்சினார்க்கினியர் வரைமார்பனைச் சச்சந்தனாக்கி அவனுடைய அந்தணன் அசலன் எனக் கூட்டுவர் ( 234 )
1791. செட்டிதன பாலன்மனை யாள்சினவு வாட்கட்
பட்டநுதன் மின்னினகு பவித்திரைக்குத் தோன்றி
மட்டுமலர் மார்பின்மத யானையெயி றுழுதாங்
கிட்டகுறி தார்திவளப் பதுமுகனிவ் விருந்தோன்.
பொருள் : செட்டி தனபாலன் மனையாள் - (அரசற்குரிய) செட்டியாகிய தனபாலன் மனையாளாகிய; பட்டம் நுதல் மின்னின் நகு பவித்திரைக்குத் தோன்றி - பட்டம் நெற்றியிலே மின்போல ஒளி செயும் பவித்திரைக்கு மகனாகி; மட்டுமலர் மார்பின் மதயானை எயிறு உழுது ஆங்கு இட்டகுறி தார் திவள - தேனையுடைய மலரணிந்த மார்பினில் மதகளிற்றின் கொம்பு உழுது ஆங்கே அமைத்த குறியும் தாரும் விளங்க; இவ்விருந்தோன் பதுமுகன் - இங்கிருந்த இவன் பதுமுகன் எனப் படுவோன்.
விளக்கம் : நுதலிலே மின்போலப் பட்டம் நகுமென்னும் பெயரெச்சம் பவித்திரை யென்னும் நிலப்பெயர் கொண்டது; அரவம் புன்சடைமிடைந்த - மின்னனையான் (சிற். 125) போல. ( 235 )
1792. பொன்னகருள் வேந்தன்பெய ராற்பொறியும் பெற்றான்
வின்மரிய தோள்விசய தத்தனுயிர்க் கவசம்
பின்னரிய கற்பினவள் பிரீதிமதி காதற்
றன்மகனென் யானடிக டேவதத்த னென்பேன்.
பொருள் : அடிகள்! - அடிகளே!; பொன் நகருள் வேந்தன் பெயராற் பொறியும் பெற்றான் - அந்த அழகிய நகரிலே அரசன் பெயராற் பட்டமும் பெற்றவன்; உயிர்க்கவசம் - அரசன் உயிருக்குக் கவசம் போன்றவன்; வில் மரிய தோள் விசய தத்தன் - வில் பொருந்திய தோளையுடைய விசயதத்தன் என்னும் இயற்பெயரினன்; பின்னரிய கற்பினவள் பிரீதிமதி - மகளிரால் மதித்தற்கரிய கற்பினையுடைய பிரீதிமதி; காதல் தன் மகனென் - அவளுடைய காதல் மகனேன் ஆகிய; யான் தேவதத்தன் என்பேன் - யான் தேவதத்தன் என்னும் பெயரையுடையேன்.
விளக்கம் : நால்வர்க்குத் தாயரைக் கூறி அவர் புதல்வரென்றது, மகடூஉவாற் குலந்தூய்மை பெறுதலானும், மகடூஉவிற்குக் கூறுதலானும் என்றுணர்க. ஒரு பெயரை எழுதலிற் பொறியென்று பட்டத்திற்குப் பெயர் கூறினார். பொறி : ஆகுபெயர். ( 236 )
1793. எங்கள்வினை யாலிறைவன் வீடியவஞ் ஞான்றே
யெங்களுயிர் நம்பியொடு யாங்கள்பிறந் தேமா
வெங்கடமர் நம்பிக்கிவர் தோழரென வீந்தா
ரெங்கெழிலென் ஞாயிறென வின்னணம்வ ளர்ந்தேம்.
பொருள் : எங்கள் வினையால் இறைவன் வீடிய அஞ்ஞான்றே - எங்கள் தீவினையால் அரசன் இறந்த அற்றை நாளிலே; எங்கள் உயிர் நம்பியொடும் யாங்கள் பிறந்தேம் ஆ - எங்கள் உயிர்போலும் நம்பியுடன், யாங்கள் வந்து பிறந்தேமாக; எங்கள் தமர் இவர் நம்பிக்குத் தோழர் என ஈந்தார் - எங்கள் உறவினர் எம்மை இவர்கள் நம்பிக்குத் தோழர் என்று கொடுத்தார்; எங்கெழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம் - எங்கெழில் என் ஞாயிறு என இவ்வாறு வளர்ந்தோம்.
விளக்கம் : அரசன் சுற்றத்தை யெல்லாம் கட்டியங்காரன் அழிக்கின்றமை நோக்கியும் கந்துக்கடன் தமக்கு இன்றியமையாமை நோக்கியும் இவர்கள் தமர் தோழரென ஈந்தார் : இங்ஙனம் செய்வித்தது தோழர் நல்வினை யென்று உணர்க. இனி அழுகுரல் (சீவக. 330) என்னுஞ் செய்யுளில் உழிதரு பெருநிதி என்றதனைத் தோழராக்கி, இவரைக் கட்டியங்காரன் தன் கந்துக்கடற்குக் கொடுத்தான் என்பார்க்கு, இச் செய்யுளில், எங்கள் தமர் தோழரென ஈந்தார் என்றல் பொருந்தாமை உணர்க. ( 237 )
1794. யாண்டுநிறைந் தேகியபி னந்தனவற் கிளையார்
மாண்டகுணத் தார்நபுல விபுலரொடு மன்னு
மீண்டவளர்ந் தேந்தவிசி னுச்சிமிசை யெய்தித்
தீண்டரிய வெம்மையொடு திக்கயங்க ளெனவே.
பொருள் : யாண்டு நிறைந்து ஏகியபின் - யாம் பிறந்து ஓராண்டு கழிந்தபின் பிறந்த; அவற்கு இளையார் - எம் நம்பிக்கு இளையராகிய; மாண்ட குணத்தார் நந்தன் நபுல விபுலரொடு - சிறந்த பண்புடையராகிய நந்தன் நபுலவிபுலர் என்பாருடனே; தவிசின் உச்சிமிசை எய்தி - தவிசின்மேல் அமர்ந்து; தீண்ட அரிய வெம்மையொடு - பகைவர் தீண்டுதற்கரிய வெம்மையுடன்; திக்கயங்கள் என - திசையானைகள் என்னும்படி எண்மராய்; மன்னும் ஈண்ட வளர்ந்தேம் - மிகவும் கடுக வளர்ந்தோம்.
விளக்கம் : இளையான் என்பது பாடமாயின், அவனுக்கிளையான் நந்தன்; அங்ஙனம் மாண்ட குணத்தார் நபுலவிபுலரென்க. நந்தன் - நந்தட்டன். அங்ஙனம் மாண்ட குணத்தார் எனவே தம்பிய ரென்னும் பொருள் தோன்றிற்று. ( 238 )
1795. விற்றொழிலும் வாட்டொழிலும் வீணைபொரு தொழிலு
மற்றொழிலுந் தோத்தொழிலும் வாரணத்தின் றொழிலு
நற்றொழில வாசியொடு நன்கலைக ணீந்திக்
கற்றனங்கள் யாமுமுடன் கற்பனக ளெல்லாம்.
பொருள் : வில் தொழிலும் வாள் தொழிலும் மல் தொழிலும் தேர்த்தொழிலும் வாரணத்தின் தொழிலும் நல்லதொழில் வாசியொடு - வில்தொழில் முதலியவற்றை நல்லதொழிலாகிய குதிரையேறுந் தொழிலுடன்; வீணைபொரு தொழிலும் - யாழிசைக்குங் கலையும்; யாமும் உடன் - யாமும் அவருடனே கூட; கற்பனகள் எல்லாம் - கற்கப்படும் விச்சைகளை யெல்லாம்; நன்கலைகள் நீந்தி - நல்ல நூல்களாகிய கலைகளை நீந்திய பின்; கற்றனம் - கற்றுக்கொண்டோம்.
விளக்கம் : பொருதல் - தடவுதல், நன்கலைகள் - நூல்கள். வீணை பொரு தொழில் போர்த்தொழிலுடன் சேர்க்காமல் தனியே கூறுக. நல்தொழில் : அ : அசை. ( 239 )
1796. வெஞ்சிலையின் வேடர்தொறு மீட்டுவிசும் பேகும்
விஞ்சையரை யன்மகளை வீணைபொரு தெய்திக்
குஞ்சரமும் வென்றுகுண மாலைநல னுண்ட
நம்பியவ னாமமெவ னென்னினிது வாமே.
பொருள் : வெஞ்சிலையின் வேடர்தொறு மீட்டு - கொடிய சிலை வேடர் கொண்ட ஆனிரையை மீட்டு; விசும்பு ஏகும் விஞ்சை அரையன் மகளை வீணை பொருது எய்தி - வானிற் செல்லும் விஞ்சையரிறைவன் மகளை யாழ் வென்றியால் அடைந்து; குஞ்சரமும் வென்று குணமாலை நலன் உண்ட - அசனிவேகம் என்னும் யானையையும் வென்று குணமாலையின் அழகைப் பருகிய; நம்பி அவன் நாமம் எவன் என்னின் இது ஆம் - நம்பியாகிய அவனுடைய பெயர் யாதெனின் இதுவாகும்.
விளக்கம் : அப் பெயர்மேற் கூறுகின்றான். சிலையின் - வில்லினால். வேடர் கவர்ந்துகொண்ட தொறு வென்க. தொறு - ஆனிரை. விஞ்சையரையன் மகளை - கலுழவேகன் மகளாகிய காந்தருவதத்தையை. குஞ்சரம் - யானை; அசனிவேகம். எவன் - யாது. ( 240 )
1797. கந்துக்கட னென்றநகர்க் காதிமுது நாய்கன்
முந்திப்பெறப் பட்டமகன் மூரிச்சிலைத் தடக்கைச்
சிந்திப்பவ ரவலமறு சீவகனென் றோழ
னந்திலொரு நாளவனை யரசனொரு தவற்றால்
பொருள் : கந்துக்கடன் என்ற - கந்துக்கடன் என்றழைக்கப்படுகின்றவனும்; நகர்க்கு ஆதி முது நாய்கன் - இராசமாபுரத்திலே முதன்மை பெற்ற முதிய நாய்கனுமாகியவன்; முந்திப் பெறப்பட்ட மகன் - முதலிற் பெற்ற மகன்; மூரிச் சிலைத் தடக்கை - பெருமைமிக்க வில்லேந்திய பெருங்கையையுடைய; சிந்திப்பவர் அவலம் அறு சீவகன் - நினைப்பவர்களின் துன்பத்தை நீக்கும் சீவகன் எனப்படுவோன்; என் தோழன் அவனை - என் தோழனாகிய அவனை; அரசன் ஒருநாள் ஒரு தவற்றால் - கட்டியங்காரனாகிய மன்னன் ஒருநாள் அவனுடைய பிழையாலேயே.
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். கந்துக்கடன் என்ற நாய்கன், நகர்க்கு ஆதிநாய்கன், முதுநாய்கன் எனத் தனித்தனி கூட்டுக. மூரிச்சிலை - பெரிய வில். அவலம் அறுதற்குக் காரணமான சீவகன் என்க. அந்தில் - அவ்விடத்தே. ( 241 )
1798. தொடிகடவழ் வீங்குதிர டோளிறுக யாத்துக்
கடிகடவழ் குழன்மகளிர் கசிந்துமனங் கரியக்
கொடிகடவழ் மாடநகர்க் கொல்லவென மாழ்கி
யிடிகடவழ்ந் திட்டபட நாகமென வீழ்ந்தாள்.
பொருள் : தொடிகள் தவழ் வீங்குதிரள் தோள் இறுகயாத்து - தொடிகள் தவழ்கின்ற, பருத்துத் திரண்ட, தோள் இறுகப் பிணித்து; கடிகள் தவழ் குழல் மகளிர் கசிந்து மனம் கரிய - மணமுறும் தேன் பொருந்திய கூந்தலையுடைய பெண்கள் உள்ளம் கசிந்து கருக; கொடிகள் தவழ் மாடநகர் கொல்ல; கொடிகள் தவழும் மாடங்களையுடைய நகரிலே கொல்லுதற்கு ; என - என்று தேவதத்தன் கூறிய அளவிலே; மாழ்கி - மயங்கி; இடிகள் தவழ்ந்திட்ட படநாகம் என வீழ்ந்தாள் - இடிகள் உடம்பு முழுதும் தவழப்பட்ட படத்தையுடைய நாகம்போல விசயை விழுந்தாள்.
விளக்கம் : கொல்லக் கொலைக்களம் குறுகலும் என்றுரைக்கப் புகுகின்றவன், கொல்ல என்ற அளவிலே வீழ்ந்தாள். அரசன் கொல்லும்படி அவன் வென்று கொலைக்களங் குறுகலும் எனப் பொருள் கொள்கஇடிகள் உடம்பெங்குந் தவழ்ந்த நாகம் - இல்பொருளுவமை. மோட்டு முதுநீர் என்பது தொடங்கிக், கொல்ல என்னும் சொல்வரை தேவதத்தன் கூற்று. ஒரு பெண்ணுயிரைக் காத்தவனைக் கோறல் அறம் அன்மையின், ஒரு தவறு என்பதனை அரசனுடையதாக்குக. இங்கும் நச்சினார்க்கினியர், யாத்து என்பதற்கு நாய்கன் பிணிக்க என்றே பொருள் கூறுவர். நாய்கன் என்ற சொல் முற்செய்யுளில் (1797) உள்ளது. தொடிகள் - வீரவளைகள். தவழ்தோள், வீங்குதோள், திரள்தோள் எனத் தனித்தனி கூட்டுக. இவைகள் மூன்றும் வினைத்தொகைகள். ( 242 )
வேறு
1799. மாதவப் பெருமை வண்ண
மாநகர் நம்பிக் குற்ற
வேதத்தைக் கேட்ட லோடு
மிருகணும் பிறழ்ந்து மாழ்கிக்
காதற்றம் மகனுக் குற்ற
நவையெனக் கலங்கி வீழ்ந்தா
ராதலா னங்கை யாரே
யருள்பெரி துடைய ரென்றார்.
பொருள் : மாநகர் நம்பிக்கு உற்ற - பெருநகரிலே நம்பிக்கு நேர்ந்த; ஏதத்தைக் கேட்டலோடும் - துன்பத்தைக் கேட்டவுடனே; இருகணும் பிறழ்ந்து மாழ்கி - இருகண்களும் மேலே செருகி அறிவிழந்து; காதல் தம் மகனுக்கு உற்ற நவையெனக் கலங்கி வீழ்ந்தார் - காதலையுடைய தம் மகனுக்கு நேர்ந்த துன்பமெனக் கலங்கி வீழ்ந்தனர்; ஆதலால் நங்கையாரே அருள் பெரிது உடையர் - ஆகையால், அடிகள் பெரிது அருளுடையராயிருந்தார்; மாதவப் பெருமை வண்ணம் (என்!) என்றார் - இங்ஙனம் அருளைப் பிறப்பித்த தவப் பெருமையின் வண்ணம் இருந்தபடி என்னே என்று வியந்தனர்.
விளக்கம் : மாதவப் பெருமை வண்ணம் இருந்தபடி என்? என வருவித்துக் கூறுக. நம்பி : சீவகன். ஏதிலான் ஒருவன் துயரத்தைக் கேட்டமாத்திரையானே இவ்வாறு கலங்கி வீழ்தற்குக் காரணமான பேரருளை இவர்க்கு இவர் தவமே உண்டாக்கியதாதல் வேண்டும் என்று வியந்தவாறாம். ( 243 )
1800. மாழ்குபு மயங்கி வீழ்ந்த
மாபெருந் தேவி தன்னை
யாழ்துய ரவித்தற் கொத்த
வரும்பெறல் யோக நாடிக்
காழ்பரிந் தரைத்த சாந்தின்
களிதரு நீரிற் றேற்ற
யாழ்புரை கிளவி யாற்றாண்
மயங்கிவீழ்ந் தரற்று கின்றாள்.
பொருள் : மாழ்குபு மயங்கி வீழ்ந்த மாபெருந்தேவி தன்னை - (இங்ஙனம்) அறிவிழந்து மயங்கி வீழ்ந்த விசயையை; ஆழ்துயர் அவித்தற்கு ஒத்த - பெருந்துயரை நீக்குதற்குத் தக்க : அரும்பெறல் யோகம் நாடி - பெறுதற்கரிய மருந்தைத் தேடி;காழ்பரிந்து அரைத்த சாந்தின் களிதரு நீரில் தேற்ற - முத்து வடத்தை அறுத்து அம் முத்துக்களைச் சேர்த்து அரைத்த சந்தனக்குழம்புடன் தந்த பனிநீரினாலே தெளிவிக்கத் (தெளிந்து); யாழ்புரை கிளவி ஆற்றாள் - யாழிசையனைய சொல்லாள் ஆற்றாளாய்; மயங்கி வீழ்ந்து அரற்றுகின்றாள் - மயங்கி விழுந்து அழுகின்றாள்.
விளக்கம் : கையாற்றின் நீங்கி நின்றாள். மாழ்குபு : செய்பு என்னும் வாய்பாட்டெச்சம். தேவி; விசயை; கோப்பெருந்தேவியை என்றவாறு . யோகம் - கூட்டுமருந்து. காழ் -முத்துவடம், சாந்தின்களி - சந்தனக் குழம்பு. யாழ்புரை கிளவி - வீணையின் இசை போன்ற சொல்லுடையவள்; விசயை. ( 244 )
வேறு
1801. கைம்மாண் கடற்படையுட் காவலனை யாண்டொழியப்
பொய்ம்மா மயிலூர்ந்து போகிப் புறங்காட்டுள்
விம்மாந்தி யான்வீழ வீழ்ந்தேன் றுணையாகி
யெம்மானே தோன்றினா யென்னை யொளித்தியோ.
பொருள் : எம்மானே! - என் பிள்ளாய்!; கைம்மாண் கடற்படையுள் காவலன் ஆண்டு ஒழிய - படை வகுப்பால் மாட்சிமைப்பட்ட கடலைப் போன்ற படையிலே அரசன் படுதலாலே; பொய்மா மயிலூர்ந்து போகி - பொய்யாகிய மயிற்பொறியில் ஊர்ந்து சென்று; புறங்காட்டுள் யான் விம்மாந்து வீழ - சுடுகாட்டிலே யான் வருத்தத்தாற் பொருமி வீழ; வீழ்ந்தேன் துணை ஆகித் தோன்றினாய் - அங்ஙனம் வீழ்ந்த எனக்குத் துணையாகத் தோன்றிய நீ; என்னை ஒளித்தியோ - என்னை ஒளிக்கின்றாயோ?
விளக்கம் : காவலனை : ஐ : அசை. எம்மான் : எம்பெருமான் என்பதன் மரூஉ. ( 245 )
1802. கையா ரிலங்கெஃகிற் கந்துக்கடன் கொடுபோய்
மொய்யா ருவகையனாய் முற்றிழைக்குத் தான்கொடுப்ப
நையாள் வளர்த்த சுநந்தை நவையுற வென்
னையாவென் னையாவென் னையா வகன்றனையே.
பொருள் : கைஆர் இலங்கு எஃகின் கந்துக்கடன் - கையில் விளங்கும் வேலேந்திய கந்துக்கடன்; மொய்ஆர் உவகையனாய் கொடுபோய் முற்றிழைக்குக் கொடுப்ப - நிறைந்த களிப்புடையவனாய்க் கொண்டு சென்று தன் மனைவியிடம் கொடுப்ப; நையாள் வளர்த்த சுநந்தை நவைஉற - வருந்தாமல் வளர்த்த சுநந்தை துன்பமுறும்படி; என் ஐயா! என் ஐயா! என் ஐயா! - என் ஐயனே! என் ஐயனே! என் ஐயனே!; அகன்றனையே! - நீங்கிவிட்டனையே.
விளக்கம் : விரைபொருளின் வந்த சொல்லடுக்காதலின் மூன்றாயின. என் ஐயா என்பது விளியன்று; இரக்கக்குறிப்பு. நின்னை வளர்த்தற்குரிய நல்வினையுடையவளும் வருந்த அகன்றாயே என்றாள். ( 246 )
1803. மின்னிரைத்த பைம்பூண் விளங்கிலை வேல்வேந்தன்
முன்னுரைத்த மூன்று கனவும் புணையாக
வென்னுயிரைத் தாங்கி யிருந்தேன் வலியாகா
தென்னரசே யென்பூசல் கேளா திறந்தனையே.
பொருள் : என் அரசே! - என் இறையே!; மின் நிரைத்த பைம்பூண் விளங்கு இலை வேல்வேந்தன் - ஒளி நிரைத்த புதிய பூணையுடைய, விளக்கமான இலைவடிவமாகிய வேலேந்திய அரசன்; முன் உரைத்த மூன்று கனவும் புணை ஆக - முன்னர்ப் பயன் கூறிய (யான் கண்ட) மூன்று கனவும் தெப்பமாக; என் உயிரைத் தாங்கியிருந்தேன் - என் உயிரைச் சுமந்திருந்தேனுக்கு; வலி ஆகாது - ஆற்றலாகாமல்; என் பூசல் கேளாது - என் வருத்தத்தையும் கேட்கமுடியாமல்; இறந்தனையே - இறந்துவிட்டாயே.
விளக்கம் : பைம்பூணையுடைய வேந்தன், வேல் வேந்தன் எனக் கூட்டுக. மூன்று கனவுகளில் சச்சந்தன் இறத்தலாகிய ஒரு கனவு பலித்து விட்டதனால் மற்றையவும் பலிக்குமென்றிருந்தாள். அரசன் நீ உயிர் கொண்டிருந்து நின் புதல்வனாற் பகையை வெல்க என்று போக விடுதலின், என்பூசல் என்றாள். ( 247 )
1804. கோவமா வாகிக் குடியோம்பி நின்குடைக்கீழ்ப்
பாவமே செய்தேன் பரிவெலா நீங்கினாற்
போவம்மா வென்றுரைப்பப் போவேன்முன் போயினா
யாவம்மா வம்மாவென் னம்மா வகன்றனையே.
பொருள் : கோ அ மா ஆகி நின் குடைக்கீழ் குடியோம்பி - உலகைக் காத்தலின் அரசனுமாய்ச் செல்வத்தை நல்கலின் அழகிய திருவுமாய் நின்று நின் குடையின்கீழ் இவ்வுலகெலாம் நீ ஓம்ப; பாவமே செய்தேன் பரிவு எலாம் நீங்கினால் - பாவமே புரிந்த நான் (அதனைக் கண்டு) யான் உற்ற துன்பம் எலாம் நீங்கினால்; போ அம்மா என்று உரைப்பப் போவேன் - (பிறகு) நீ துறந்துபோ அம்மா என்று நீ கூற நான் போவேன்; முன் போயினாய் - (அதற்கு முன்) நீ போயின; ஆ அம்மா! அம்மா! என் அம்மா! அகன்றனையே - அங்ஙனம் போய் நீ ஆ! ஐயோ! ஐயோ! ஐயோ! இனி அகன்றே விட்டாயோ? இதற்குக் காரணம் என்ன?
விளக்கம் : ஆ : இரக்கக் குறிப்பு. ஏ : வினா ஓம்பி - ஓம்ப : எச்சத்திரிபு, அரசனுடனும் இறந்திலேன், இருந்தும் பகையையும் வென்றிலேன் என்று கருதிப் பாவமே செய்தேன் என்றாள். பரிவு - தான் நினைத்தவை முடியாத வருத்தம் . போ அம்மா : அம்மை அம்மா என விளியேற்றது; முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி -ஆவொடு வருதற் குரியவும் உளவே (தொல். விளிமரபு. 9) என்றதனால். அம்ம என அடுக்கிய திசைச்சொல்லாகிய விலாவணை கடிசொல் இல்லை (தொல் எச்ச. 56) என்பதனாற் கொள்க. அன்றி, அம்ம, என்ற அகர ஈற்றிடைச் சொல், கேட்பித்து உரையசையாய விடத்து, உரைப் பொருட்கிளவி நீட்டமும் வரையார் (தொல் உயிர் மயங்கு. 10) என்பதனால் நீண்டு - அது பின்பு. அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் அம்முறைப் பெயரொடு சிவணாதாயினும் - விளியொடு கொள்ப தெளியுமோரே (தொல். விளிமரபு. 36) என்பதனால், அம்மா கொற்றா என்ற வழிக். கொற்றா என்பது எதிர்முகம் ஆக்கத் தான் கேளாய் என்னும் பொருள் தந்து, அதனோடு கூடி நின்றதாதலின் பிரிந்து நின்று விளியேலா தென்றுணர்க. இதனாற் பிள்ளாய் என விளித்தல் பொருந்தாது. இதனால் அடுக்கி வந்த அம்மா என்னும் சொல் இரக்கக் குறிப்பைத் தரும் இடைச்சொல்லே அன்றி விளியாகாது என்பது நச்சினார்க்கினியர் கருத்தாயிற்று. மற்றும், அம்மா என்பது மரபு வழுவமைதியாய்ப், பிள்ளாய்! என விளித்தற் பொருளில் வந்ததென உரைகூறினாரும். முன்னர் உளர் என்று தெரிகிறது. ( 248 )
1805. கோமான் மகனே குருகுலத்தார் போரேறே
யேமாங் கதத்தா ரிறைவாவென் னின்னுயிரே
காமா கடலுட் கலங்கவிழ்த்தேன் கண்ணுணீர்
பூமாண் புனைதாராய் நோக்காது போதியோ.
பொருள் : கோமான் மகனே! - அரசன் மகனே!; குரு குலத்தார் போரேறே! - குருகுலத்திற் பிறந்த சிங்கமே!; ஏமாங்கதத்தார் இறைவா! - ஏமாங்கத நாட்டாரின் அரசே!; என் இன் உயிரே! - எனக்கு இனிய உயிரே! காமா! - காமனே!; பூமாண் புனைதாராய்! மலர்த்தார் மார்பனே!; கடலுள் கலம் கவிழ்த்தேன் கண்ணுள் நீர் நோக்காது போதியோ? - கடலிலே கலத்தைக் கவிழ்த்த என் கண்ணிலிருந்து வடியும் நீரைப் பாராமலே போகின்றாயோ?
விளக்கம் : குருகுலத்தார் பலருளராதலின், ஏமாங்கதத்தார் இறைவர் என்றாள். உவப்பின் கண் புதல்வனைக் கூறுவதனை ஈண்டுக் கூறிக், காமா என்றாள். கலங்கவிழ்த்தது - அரசன் பட்டது. கண்ணுள் நீர் நோக்காது என்றது யான் பகை வென்றால் யான் நின் தந்தையை நோக்கி அழுகின்ற நீரை நோக்காதே என்றவாறு. கண்ணுள் நீ என்றும் பாடம். ( 249 )
1806. கந்தார் களியானைக் காவலனார் கான்முளையை
வந்தார்வாய்த் தீதின்மை கேட்டு மறைந்திருந்து
நொந்தேன் பலகாலு நோயோடே வீகின்றே
னந்தோ வறனேமற் றாற்றேனா லாற்றேனால்.
பொருள் : கந்து ஆர் களியானைக் காவலனார் கால்முளையைத் தீதின்மை - கம்பத்திற் பொருந்திய மதயானையை உடைய சச்சந்தன் மகனுக்குத் தீதின்மையை; வந்தார் வாய்க்கேட்டு மறைந்திருந்து - வந்தவர் உரைப்பக் கேள்வியுற்றவாறே நோன்பிலே மறைந்திருந்து; பலகாலும் நொந்தேன் - பலமுறையும் (பார்த்தற்கியலாமையின்) வருந்தினேன்; அந்தோ! ஆற்றேன்! ஆற்றேன்! - (வருந்திய யான்) அந்தோ! இனி ஆற்றேன்! ஆற்றேன்!; அறனே! நோயோடே வீகின்றேன் - (ஆதலின்) அறக்கடவுளே! யான் இந் நோயுடனே இறக்கின்றேன்.
விளக்கம் : கந்து - கட்டுத்தறி காவலனார் : சச்சந்தன், கான்முளை - மகவு. நோன்பிலே மறைந்திருந்து என்க. வீசுகின்றேன், தெளிவுபற்றி, எதிர்காலம் நிகழ்காலமாயிற்று. அறன் - அறக்கடவுள், ஆல் : அசை. ( 250 )
1807. முன்னொருகா லென்மகனைக்
கண்டேனென் கண்குளிரப்
பின்னொருகாற் காணப்
பிழைத்ததென் றேவிர்கா
ளென்னொப்பார் பெண்மகளி
ரிவ்வுலகிற் றோன்றற்கென்
றன்னப் பெடைநடையா
ளாய்மயில்போல் வீழ்ந்தனளே.
பொருள் : முன் ஒருகால் என் மகனை என் கண் குளிரக் கண்டேன் - முன் ஒரு முறையே என் மகனை என் கண் குளிர்ச்சியடையக் கண்டேன்; தேவிர்காள்! - தேவர்களே!; பின் ஒரு கால் காணப் பிழைத்தது ஏன்? - பின்னர் ஒரு முறை காண்பதற்குத் தப்பின தீவினை யாதோ?; என் ஒப்பார் பெண் மகளிர் இவ்வுலகில் தோன்றற்க என்று - என்னைப் போன்றாராகிய நங்கையர் இவ்வுலகிலே இனியும் பிறவற்க என்று அரற்றி; அன்னப்பெடை நடையாள் ஆய்மயில்போல் வீழ்ந்தனள் - அன்னப்பேட்டின் நடையை உடைய அவள் வருந்திய மயில்போல் வீழ்ந்தனள்.
விளக்கம் : தாபதர்க்குக் குலமுதலியன கூறலாகா தென்றவள் தன் உணர்வழிந்து அரற்றினதாற் குலனே அன்றி மறைபொருள் எல்லாங் கூறினள்; தோழர் நல்வினை அங்ஙனம் நிகழ்த்திற்று. ( 251 )
1808. புண்மல்கு மத்தகத்த போர்வேழம் பொற்பழித்த
மண்மல்கு தாரான் பெருமாட்டி வாய்மொழிகேட்
டுண்மல்கு நெஞ்சினரா யொய்யெனவே வெய்துயிராக்
கண்மல்கு நீரார் முகமுகங்க ணோக்கினரே.
பொருள் : புண் மல்கும் மத்தகத்த போர் வேழம் பொற்பு அழித்த - (தோட்டி எடாமற் கிடத்தலின்) புண்மிக்க மத்த கத்தையுடைய (கட்டியங்காரன் ஏறிய) போர் வேழத்தின் அழகைக் கெடுத்த; மண் மல்கு தாரான் பெருமாட்டி வாய்மொழி கேட்டு - பண்ணுதல் மிகுந்த தாரினையுடைய சீவகனுடைய தாயின் வாய்ச்சொல்லைக் கேட்டு; ஒய்யெனவே வெய்துயிரா - (அரசன் பட்டதற்கு) விரைந்து பெருமூச் செறிந்து; உள் மல்கு நெஞ்சினராய் - மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய்; கண் மல்கும் நீரார் - கண்ணிறைந்த நீரை உடையவராய்; முகம் முகங்கள் நோக்கினர் - ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கினர்.
விளக்கம் : மண் மல்குதார் - பண்ணுதல் மிக்க மாலை. ஆவுதி மண்ணி (மதுரைக். 494) என்றார் பிறரும். தோழர்களிடையே வாய்ப்பேச்சின்றிக் குறிப்பே நிகழ்ந்தது அரசன் மனைவியாகிய விசயையிடம் தாம் கொண்ட வழிபாட்டுணர்ச்சியினால். ( 252 )
1809. கண்டீர் கருமம் விளைந்தவா றென்றாராய்
வண்டாரார் வண்கடக மின்னத்தங் கைம்மறித்துக்
கொண்டாங் கடல்வேலி கீழ்மகனைக் கூற்றமா
யுண்டா முயிரென் றுவப்பெழுந் தாடினரே.
பொருள் : வண் தாரார் - வளவிய தாரினராகிய அவர்கள்; கருமம் விளைந்த ஆறு கண்டீர் என்றாராய் - காரியம் முடிந்த படியைப் பாரீர் என்று வெளியாகக் கூறினராகி; வண் கடகம் மின்னத் தம் கைம் மறித்து - வளவிய கடகம் மின்னத் தம் கையைக் கவிழ்த்து; கீழ்மகனை உயிரைக் கூற்றமாய் உண்டாம் - கட்டியங்காரனுயிரைக் கூற்றமாகி உண்டிட்டோம்; கடல்வேலி கொண்டாம் - உலகைக் கைக்கொண்டோம்; என்று உவப்பு எழுந்து ஆடினர் - என்றுரைத்து உவகை மிக்கு ஆடினர்.
விளக்கம் : எதிர்காலத்தைத் துணிவினால் இறந்தகாலமாகக் கூறினார். ( 253)
1810. வீழ்ந்து மயில்போல் விசயை கிடந்தாளைத்
தாழ்ந்து பலதட்பந் தாஞ்செய்ய வேல்பெற்றுப்
போழ்ந்தகன்ற கண்ணாள் புலம்பா வெழுந்திருப்பச்
சூழ்ந்து தொழுதிறைஞ்சிச் சொன்னா ரவன்றிறமே.
பொருள் : விசயை மயில்போல் வீழ்ந்து கிடந்தாளை - விசயை மயிலைப்போல விழுந்து கிடப்பவளை; தாம் தாழ்ந்து பல தட்பம் செய்ய - தாங்கள் தாழ்ந்து பல குளிர்ச்சிகளைச் செய்ய; ஏல் பெற்று - உணர்ச்சி பெற்று; போழ்ந்து அகன்ற கண்ணாள் புலம்பா எழுந்திருப்ப - அரசனுயிரைப் பிளந்து அகன்ற கண்ணினாள் புலம்பியவாறு எழுந்திருப்ப; தொழுது இறைஞ்சிச் சூழ்ந்து அவன் திறம் சொன்னார் - கைகுவித்து வணங்கிச் சூழ்ந்து சீவகன் பிழைத்தபடியைக் கூறினர்.
விளக்கம் : மயில்போல் வீழ்ந்துகிடந்த விசயை என்றவாறு. தட்பம் - குளிர்ச்சி, ஏல் - உணர்ச்சி, அரசன் இறத்தற்குக் காரணமாதல் பற்றி அரசனுயிரைப் போழ்ந்தகன்ற கண்ணாள் என்றனர் நச்சினார்க்கினியர். ( 254 )
வேறு
1811. கொலைக்களங் குறுகலுங் கொண்டொர் தெய்வத
நிலைக்கள மிதுவென நீக்க நீங்கினா
னிலக்கண மடப்பிடி யியைந்தொர் போதக
மலைக்கணத் திடைமகிழ்ந் தனைய மைந்தனே.
பொருள் : இலக்கணம் மடப்பிடி இயைந்து ஒர் போதகம் - இலக்கணத்தையுடைய மடப்பிடியுடன் பொருந்தி ஒரு களிறு; மலைக் கணத்திடை மகிழ்ந்த அனைய மைந்தன் - மலைத்திரளினிடையே மகிழ்ந்த சீவகன்; கொலைக்களங் குறுகலும் - தன்னை அரசன் கொல்வதற்குக் கொலைக்களத்தைக் குறுகின அளவிலே; ஒர் தெய்வதம் கொண்டு - ஒரு தெய்வம் தன் உணர்வாலே பார்த்து; இது நிலைக்களம் என - இஃது தக்க இடம் என்று; நீக்க நீங்கினான் - அத் துன்பத்தை நீக்க நீங்கினான்.
விளக்கம் : கொல்ல என்று தேவதத்தன் முன்னர்க் கூறியதனைத் தொடர்ந்து, கொல்லக் கொலைக்களங் குறுகலும் தேவன் நீக்கினான், என்றனர். மலைக்கணம் : தோழர்க்குவமை. ( 255 )
1812. பூவுடைத் தெரியலான் போர்வை நீத்தினிக்
கோவுடைப் பெருமக னாதல் கொண்டனஞ்
சேவடி சோந்தனந் தொழுது சென்றன
மாவடு நோக்கியுண் மகிழ்ந்து கூறினாள்.
பொருள் : பூ உடைத் தெரியலான் போர்வை நீத்து - மலர் நிறைந்த மாலையானாகிய சீவகன் தன் வணிகனாகிய போர்வையை நீக்கிவிட்டு; இனிக் கோவுடைப் பெருமகன் ஆதல் கொண்டனம் - இனித் தான் அரசுடைய பெருமகன் ஆதலைக் கண்டு கொண்டோம்; தொழுது சென்று சேவடி சேர்ந்தனம் என -யாங்கள் நின்னைத் தொழுது செல்வதற்கு, நின் சிவந்த திருவடியை அடைந்தோம் என்று கூற; மாவடு நோக்கி உள் மகிழ்ந்து கூறினாள் - மாவடு போன்ற கண்ணாள் உள்ளம் மகிழ்ந்து ஒரு மொழி உரைத்தனள்.
விளக்கம் : சென்று - செல்ல : எச்சத்திரிபு. தெரியலான் - மாலை புனைந்தவன் : சீவகன். போர்வை - மறைப்பு, வணிகச்சாதி என்பது இவன் மன்னர் சாதியை இதுகாறும் மறைத்திருத்தமைப்பற்றி அதனைப் போர்வை என்றார். நோக்கி : விசயை. ( 256 )
வேறு
1813. தரணி காவலன் சச்சந்த னென்பவன்
பரணி நாட்பிறந் தான்பகை யாவையு
மரணி லானென்கட் டங்கிய வன்பினா
லிரணி யன்பட்ட தெம்மிறை யெய்தினான்.
பொருள் : தரணி காவலன் சச்சந்தன் என்பவன் பரணிநாள் பிறந்தான் - உலகைக் காவாதவனாகிய சச்சந்தன் பரணி நாளிலே பிறந்தவன்; பகை யாவையும் அரண் இலான் - அந் நாளின் சிறப்பாற் பகையெல்லாவற்றிற்கும் ஒரு காவல் இல்லாதவன்; என்கண் தங்கிய அன்பினால் - (எனினும்) என்னிடங் கொண்ட காதலால்; எம் இறை இரணியன் பட்டது எய்தினான் - எம் இறைவனாகிய அவன் உலகையுங் காவாமல் இரணியன் பட்ட துன்பத்தைத் தானும் பட்டான்.
விளக்கம் : இன்ன நாளிற் பிறந்த இன்னான் என்னல் அரசர்க்கு மரபு. பரணி யானை பிறந்த நாளாதலின் யானைபோற் பகையை மதியான் என்றாள். பரணியிற் பிறந்தவன் தரணி ஆள்வான் என்பது இக்காலப் பழமொழி. இறைவன் உற்றது - அமைச்சர் நிலமும் திருவும் நீங்கும் என்றது கொள்ளாதே, கட்டியங்காரனே எனக் குள்ளான் என்று பின் உதவியின்றி நின்ற நிலை. காவலன் என்பது உண்ணலன் என்பதுபோல ஈண்டு மறையை உணர்த்திற்று. ( 257 )
1814. விசயை யென்றுல கோடிய வீறிலேன்
பசையி னாற்றுஞ்சி யான்பட்ட தீதெலா
மிசைய நம்பிக் கெடுத்துரைத் தென்னுழை
யசைவின் றையனைத் தம்மி னெனச்சொன்னாள்.
பொருள் : விசயை என்று உலகு ஓடிய வீறு இலேன் - வீசயை என்று எங்கும் பரந்த நல்வினை இல்லாதேன் மேல் வைத்த; பசையினால் துஞ்சி - பற்றால் (அரசன்) துஞ்சுதலாலே, யான் பட்ட தீது எலாம் - யான் அடைந்த தீமைகளையெலாம்; நம்பிக்கு இசைய எடுத்து உரைத்து-நம்பிக்குப் பொருந்த முறையாகக் கூறி, ஐயனை அசைவு இன்று என் உழை தம்மின் இதனால் ஐயன் வருந்தாதபடி அவனை என்னிடம் அழைத்து வம்மின்; எனச் சொன்னான்- என்றுரைத்தான்.
விளக்கம் : விசயை என்றுலகெலாம் புகழ்பரவுதற்குக் காரணமான வீறு இலேன் என்க. வீறு ஈண்டு நல்வினை. இனி அந்தோ விசயை பட்டன. காண்மின் என உலகெலாம் கூறுதலின் என்பெயர் உலகெலாம் பரத்தற்குக் காரணமாவேனும் வீறு இலேனும் ஆகிய யான் எனினுமாம். பசை-பற்று. என்னுறை-என்பால்.
1815. கோதை வேனம்பிக் கல்லதை யிப்பொருள்
யாதுங் கூறின்மின் யாரையுந் தேறன்மி
னேத மின்னன வின்னண மெய்தலாற்
பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்மின்.
பொருள் : கோதை வேல் நம்பிக்கு அல்லது மாலையணிந்த வேலையுடைய நம்பிக்கன்றி; இப்பொருள் யாதும் கூறின்மின்- இப்பொருளிற் சிறிதும் பிறர்க்குரையன்மின்; யாரையும் தேறன்மின்- எவரையும் தெளியன்மின்; இன்னன ஏதம் இன்னனம் எய்தலால் இத்தன்மையவாகிய பிழைகள் நினைவின்றியும் வருதலின்; பேதையாரொடும் பெண்ணொடும் பேசன்மின் அறிவிலாரொடும் பெண்களுடனும் பேசாதீர்.
விளக்கம் : இன்னன என்றது தான் பிறப்புணர்த்திய அதனை இன்னனம் என்றது தன் நினைவின்றிப் புலம்பலிற் கூறிய அதனை (259)
1816. பகைவ ருள்ளமும் பாம்பின் படர்ச்சியும்
[1]வகைகொண் மேகலை மங்கையர் நெஞ்சமு
மிகைசென் மேகத்து மின்னுஞ்செந் நில்லலா
புகைசெய் வேலினீர் போற்றுபு சென்மினே.
பொருள் : புகை செய் வேலினீர்! - வெம்மையாற் புகையும் வேலையுடையீர்!; பகைவர் உள்ளமும் - பகைவருடைய நெஞ்சமும்; பாம்பின் படர்ச்சியும் - பாம்பின் போக்கும்; வகை கொள் மேகலை மங்கையர் நெஞ்சமும் - வகையுற்ற மேகலை அணிந்த மங்கையரின் உள்ளமும்; மிகை செல் மேகத்து மின்னும் - வானிற் செல்லும் மேகத்திலுள்ள மின்னும்; செம் நில்லலா - செவ்வையாக நில்லா (ஆதலின்); போற்றுபு சென்மின் - பகைவர் உள்ளத்தையும் மகளிர் நெஞ்சையும் அறிந்து ஒழுகுமின்.
விளக்கம் : படர்ச்சி - செலவு. மிகை - மேலே; வானிலே என்றவாறு நில்லலா - நில்லா. வேலினீர் : விளி. ( 260 )
வேறு
1817. வணக்கருஞ் சிலையி னானை
யொருமதி யெல்லை நாளுட்
குணத்தொடு மலிந்த பாதங்
குறுகயாங் கொணர்ந்த பின்றைப்
பணித்ததே செய்து பற்றார்
பகைமுத லடர்த்து மென்றார்
மணிக்கொடி மாசுண் டன்னாண்
மற்றதே துணிமி னென்றாள்.
பொருள் : வணக்க அருஞ் சிலையினானை - பிறரால் வணக்குதற்கரிய வில்லையுடைய சீவகனை; ஒருமதி எல்லை நாளுள் - ஒரு திங்கள் எல்லைப் போதிலே; குணத்தொடு மலிந்த பாதம் குறுக - பண்பினாலே நிறைந்த அடிகளின் திருவடியைக் குறுகும்படி; யாம் கொணர்ந்த பின்றை - யாங்கள் அழைத்து வந்த பிறகு, பணித்ததே செய்து - அருளிச் செய்ததையே செய்து; பற்று ஆர் பகைமுதல் அடர்த்தும் என்றார் - தழும்பேறிக் கிடந்த நிறைந்த பகையை முற்படக் கொல்லுவோம் என்றார்; மாசு உண்ட மணிக்கொடி அன்னாள் - அழுக்குண்ட மணிக்கொடி போன்ற விசயையும்; அதே துணிமின் என்றாள் - அதனையே துணிவாகக் கொண்மின் என்றாள்.
விளக்கம் : பிறரால் வளைத்தற்கரிய சிலையினையுடையானை என்க. சீவகனை, ஒருமதி - ஒரு திங்கள், குணத்தொடு மலிந்த பாதம் என்புழி முதலின் குணம் சினைமேலேற்றிக் கூறப்பட்டது. நின் பாதம் என்ற படியாம். அடர்த்தும்: தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று. ( 261 )
1818. பொறிதவ நெருங்க நோற்றுப்
புகரற நிறைந்த கொள்கைச்
செறிதவ விசயை பாதஞ்
சென்னியின் வணங்கி மீண்டு
வெறிகமழ் சோலை நண்ணி
வேண்டிய வடிசில் கைதொட்
டெறிபடை யெழுக வென்றார்
வளையெழுந் தார்த்த வன்றே.
பொருள் : பொறி தவ நெருங்க நோற்று - ஐம்பொறிகளும் புலன்களில் செல்லும் வேட்கை மிகுதியும் ஒடுங்கும்படி நோற்று; புகர்அற நிறைந்த கொள்கை - குற்றமின்றி நோன்பையுடைய; செறி தவ விசயை பாதம் - (முற்பிறப்பிலே) செறிந்த தவமுடைய விசயையின் திருவடியை; சென்னியின் வணங்கி மீண்டு - தலையாலே தொழுது திரும்பி; வெறி கமழ் சோலை நண்ணி - மணங்கமழும் பொழிலை அடைந்து; வேண்டிய அடிசில் கைதொட்டு - விரும்பிய உணவை உண்டு; எறிபடை எழுக என்றார் - பகையை எறியும் படை எழுவதாக என்றனர்; வளை எழுந்து ஆர்த்தது - சங்கு மிகவும் முழங்கியது.
விளக்கம் : பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம் பொறிகளும். தவ - மிகுதியும், நெருங்க என்றது விரிவின்றி ஒடுங்க என்றவாறு. செறிதவம் : வினைத்தொகை, வெறி - மணம், அடிசில், கைதொட்டென்றது - உண்டு என்றவாறு, வளை - சங்கு. ( 262 )
1819. பைந்துகின் மகளிர் தேன்சோர்
பவளவாய் திகழ நாணிச்
சிந்தித்துக் கூந்தல் வாங்கிச்
செவ்வணந் துடைப்ப தேபோ
லிந்திர கோபங் கௌவி
யிறகுளர் கின்ற மஞ்ஞை
யந்தரத் திவர்ந்த பாய்மா
வரும்பொற்றா ரரவத் தாலே.
பொருள் : பைந்துகில் மகளிர் தேன் சோர் பவளவாய் திகழ நாணி - பைந்துகிலுடுத்த மங்கையர் தம்முடைய தேன் பொழியும் பவளம் போலும் வாய் சிவந்து விளங்க அதற்கு நாணுற்று; சிந்தித்து - அது தீரும்படியை ஆராய்ந்து ; கூந்தல் வாங்கி - தம் கூந்தலைக் குலைத்து; செவ்வணம் துடைப்பதே போல் - அச்சிவந்த வண்ணத்தைத் துடைப்பதைப்போல; இந்திர கோபம் கௌவி - இந்திர கோபம் என்ற பூச்சிகளைப் பற்றியவாறு; இறகு உளர்கின்ற மஞ்ஞை - இறகைக் கோதுகிற மயில்கள்; பாய்மா அரும் பொன் தார் அரவத்தால் - குதிரைகளின் கழுத்திற் கட்டிய அரிய பொன்னாலான கிண்கிணி மாலையின் ஒலியாலே; அந்தரத்து இவர்ந்த - வானிலே பறந்து சென்றன.
விளக்கம் : தேன் சோர்வாய், பவளவாய் என ஒட்டுக. செவ்வணம் - சிவப்பு நிறம். இந்திரகோபம் - ஒரு புழு. பாய்மா : வினைத்தொகை, பொற்றார் அரவத்தால் மஞ்ஞை அந்தரத்து இவர்ந்த என்க. ( 263 )
1820. சாந்தின்மேற் றொடுத்த தீந்தேன்
றண்மதிக் கோடு போழப்
போந்துமட் டருவி வீழும்
பொன்னெடுங் குன்று மந்த
ணேந்துபூங் காவு சூழ்ந்த
விரும்புனல் யாறு நீந்தி
மாந்தரே மலிந்த நாடு
மடுத்துடன் சென்ற தன்றே.
பொருள் : சாந்தின்மேல் தொடுத்த தீந்தேன்- சந்தன மரங்களின் மேலே தொடுக்கப்பட்ட இனிய தேனிறால்; தண் மதிக்கோடு போழ - குளிர்ந்த பிறைத் திங்களின் கோடு பிளந்ததனால்; மட்டுப் போந்து அருவி வீழும் பொன் நெடுங் குன்றும் - தேன் வடிந்து அருவியைப்போல வீழ்கின்ற பொன் மயமான நீண்ட மலைகளையும்; அம் தண் ஏந்து பூங்காவு சூழ்ந்த இரும்புனல் யாறும் - அழகும் தண்மையுந் தாங்கிய மலர்ப் பொழில்கள் சூழ்ந்த புனல் நிறைந்த பெரிய யாறுகளையும்; நீந்தி - கடந்து; மாந்தரே மலிந்த நாடு மடுத்து உடன் சென்றது - மக்களே நிறைந்த நாட்டிலே நெருங்கி ஒருசேரச் சென்றது.
விளக்கம் : சாந்து - சந்தனமரம். தேன் - தேன் அடை; ஆகுபெயர். மதி - ஈண்டுப் பிறைத்திங்கள். மட்டு - தேன், அந்தண்ஏந்து - அழகையும் குளிர்ச்சியையும் தாங்கிய என்க. இரும்யாறு, புனல்யாறு என ஒட்டுக. ( 264 )
1821. மதுக்குலா மலங்கன் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத் தெழுந்த தீம்பாற்
பொங்கலி னுரையிற் பொங்கிக்
கதிர்த்துவெண் மாடந் தோன்றுஞ்
செவ்வெயிற் காத நான்கி
னதிக்கரை வந்து விட்டார்
நச்செயிற் றரவோ டொப்பார்.
பொருள் : மதுக் குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் பொங்கி - தேன் நீங்காத அசையும் மாலையை உடைய பெண்கள் வளர்த்த செந்தீயாலே பொங்கி; புதுக்கலத்து எழுந்த தீ பாற் பொங்கலின் நுரையின் - புதிய கலத்தினின்றும் எழுந்த இனிய பாற் பொங்கலின் நுரைபோல; செவ்எயில் வெண் மாடம் கதிர்த்துத் தோன்றும் - செங்கல்லாற் செய்த சிவந்த மதிலைக் கடந்து வெண்ணிற மாடங்கள் விளங்கித் தோன்றுகிற; காதம் நான்கில் - (ஏமமாபுரத்திற்கு) நாற்காத அளவிலே; நதிக்கரை - நதிக்கரையிலே; நச்சு எயிற்று அரவோடு ஒப்பார் - நஞ்சினையுடைய பற்களையுடைய பாம்பு போன்றவர்கள்; வந்து விட்டார் - சென்று தங்கினார்.
(விளக்கம்.) எயில் : ஏமமாபுரமதில். அலங்கலையுடைய மாலை என்க. செவ்வெயில் - சிவந்த நிறமுடைய மதில். இதற்குப் புதுக்கலத்தின் வாய்விளிம்பு உவமை. அம்மதிலக்கத்து உயர்ந்து தோன்றும் வெண்மாடங்களுக்குப் புதுக்கலத்தின் அகத்தே உண்டான பாற்பொங்கலின் நுரைகள் உவமை. ( 265 )
வேறு
1822. மானயா நோக்கியர் மருங்குல் போல்வதோர்
கானயாற் றடைகரைக் கதிர்கண் போழ்கலாத்
தேனயாம் பூம்பொழிற் றிண்ணை வெண்மணற்
றானையா நால்வருந் தணப்பின் றெய்தினார்.
பொருள் : மான் அயாம் நோக்கியர் மருங்குல் போல்வது - மான் வருந்தும் கண்ணியரின் இடை போன்று நுடக்கமும் அழகும் உடையதாகிய; ஓர் கான யாற்று அடைகரை - ஒரு காட்டாற்றின் நீரடை கரையிலே; கதிர்கண் போழ்கலாத்தேன் அயாம் பூம்பொழில் - கதிரவனுடைய கதிர்களாலும் ஊடுருவிச் செல்ல முடியாத, தேனினம் நீங்கமாட்டாது வருந்தும் மலர்க் காவிலே; திண்ணை வெண்மணல் - மேடையாக உயர்ந்த வெண்மணலிலே; தானை ஆம் நால்வரும் - படை உண்டாதற்குக் காரணமான நால்வரும்; தணப்பு இன்றி எய்தினார் - பிரிவின்றிச் சென்றமர்ந்தனர்.
விளக்கம் : கான யாறு : அ : அசை. கண் - இடம். மான் அயாவுதற்குக் காரணமான நோக்கென்க. அயாவுதல் - வருந்துதல். அடைகரை - நீரடைகரை. கதிர்- ஞாயிற்றின் கதிர் போழ்கலாப் பொழில், தேனயாம் பொழில், என ஒட்டுக, தானை ஆம் என்புழி ஆம் அசையெனினுமாம். ( 266 )
1823. வார்ந்துதேன் றுளித்துமட் டுயிர்த்து வார்மண
லார்ந்துபோ தருந்துவி சடுத்த தொத்துமேற்
றூர்ந்துதேன் வண்டொடு துதைந்துள் புக்கவர்
போந்துபோக் கரியதப் பொழிலின் பெற்றியே.
பொருள் : அப்பொழிலின் பெற்றி - அம் மலர்க்காவின் இயல்; தேன் வார்ந்து துளித்து மட்டு உயிர்த்து-ஈக்கள் வைத்த தேன் பெருகித் துளித்து மலரின் மது ஒழுகி; வார் மணல் போது ஆர்ந்து - நிறைந்த மணலிலே மலர்கள் பொருந்தி; தவிசு அடுத்தது ஒத்து - தவிசு பொருந்தியதைப் போன்று : மேல் தூர்ந்து - மேலிடம் வெளியடங்கி; தேன் வண்டொடு துதைந்து - தேனும் வண்டும் நெருங்கி; உன் புக்கவர் போந்து போக்கு அரியது - உள்ளே. புக்கவர்க்குப் புறப்பட்டுப் போதல் அரிதாயிருந்தது.
விளக்கம் : அப்பொழிலின் பெற்றி துளித்தலானும் உயிர்த்தலானும் ஆர்தலானும் தூர்தலானும் துதைதலானும் உள்புக்கவர் போக்கரிது என்க ( 267 )
1824. தாதணி கொழுநிழ லிருந்து தண்மதுப்
போதணி யலங்கறாழ் பொருவின் மார்பனை
யாதுநா மடைதிற முரைமி னீரெனக்
காதலாற் பதுமுகன் கண்டு கூறினான்.
பொருள் : தாது அணி கொழுநிழல் இருந்து - பூந்தாதை அணிந்த அக் கொழுவிய நிழலிலே அமர்ந்து; தண்மதுப் போது அணி அலங்கல் தாழ் பொரு இல் மார்பனை - தண்ணிய தேனையுடைய மலர்களால் ஆக்கப்பெற்ற மாலையணிந்த ஒப்பற்ற மார்பையுடைய சீவகனை; யாம் அடை திறம் யாது நீர் உரைமின் என - யாம் காணும் வகை யாது ? நீவிர் கூறுமின்! என்ற அளவிலே; பதுமுகன் கண்டு காதலாற் கூறினான் - பதுமுகன் ஆராய்ந்து அன்புடன் உரைத்தான்.
விளக்கம் : தாது - பூந்துகள் மதுப்போது தேனையுடைய மலர். மார்பனை : சீவகனை, நீர் உரைமின் என மாறுக. கண்டு ஆராய்ந்து தெளிந்தென்க. ( 268 )
1825. திருக்கிளர் மன்னவன் சேனை மாநகர்
பொருக்கொளி யினநிரை கோடுங் கொண்டபின்
முருக்கொளி மலரடி மூரி மொய்ம்பனைச்
செருக்களத் தெதிர்ப்படச் சிதைவ தில்லையே.
பொருள் : திருக்கிளர் மன்னவன் சேனை மாநகர் - செல்வம் விளங்கும் தடமித்த மன்னவனுடைய படை நிறைந்த பெரிய நகரில் உள்ள; ஒளி என நிரை பொருக்குக் கோடும் - ஒளி பொருந்திய ஆநிரையை ஒப்புக்குக் கொள்வோம்; கொண்ட பின் - (அவ்வாறு) கொண்டபிறகு; முருக்கு ஒளி மலர் அடி மூரி மொய்ம்பனை - முருக்கினது ஒளி பொருந்திய மலர் போலும் அடியையுடைய பெருவலியுடைய சீவகனை; செருக்களத்து எதிர்ப்படச் சிதைவது இல்லை - போர்க்களத்திலே எதிர்ப்படுவதற்குக் கெடுவதில்லை.
விளக்கம் : பொருக்கு - பொருவுக்கு; நிலக்குப்போல் என்றது, துரியோதனன் விராடபுரத்தே நிரையடித்துத் தருமன் முதலாயினோருண்மை யுணர்ந்ததற்கு யாமும் இவன் உண்மையை உணர்கின்ற தன்மை ஒக்கும்படி என்றவாறு. இனி, பொருவுக்கு ஆனிரை கொள்வோம் என்றது வாய்மையானன்றிப் பொய்யாக ஆனிரையைக் கொள்வோம் எனினுமாம். ( 269 )
1826. சேட்குலாஞ் சிலையொடு திளைத்த பின்னவர்
வாட்கலாம் வலித்தமர் தொடங்கின் வல்லையே
மீட்கலாம் விருப்புடைத் தெழுக வென்றுதன்
னாட்கெலாஞ் செப்பின னலர்ந்த தாரினான்.
பொருள் : சேண் குலாம் சிலையொடு திளைத்தபின் - தொலைவிலே யிருந்து, வளைந்த வில்லுடனே பொருதபின்; அவர் வாள்கலாம் வலித்து அமர் தொடங்கின் - அவர்கள் அணுகி வாட்போரைச் செய்யத் துணிந்து போர் தொடங்கின்; வல்லையே மீட்கலாம் - (நம்படையை ) விரைந்து மீட்கலாம்; விருப்பு உடைத்து - இஃது என் விருப்பமுடையது; எழுக என்று - புறப்படுக என்று; தன் ஆட்கு எலாம் - தன்னை ஒழிந்த மூவருக்கும் படை வீரர்க்கும்; அலர்ந்த தாரினான் செப்பினான் - மலர்ந்த மாலையான் கூறினான்.
விளக்கம் : திளைத்தல் - ஈண்டு போர்பொருதல். வாள்கலாம் - வாளாற் செய்யும் போர். வல்லையே - விரைந்து. தாரினான் : பதுமுகன். ( 270 )
வேறு
1827. இருங்கடன் மணிநிரை யெய்திநாங் கொண்டபின்
னருங்கடி யணிநக ரையனங் கில்லையேற்
பெரும்படை தான்வரிற் பின்றிநீங் கிற்பழி
தரும்படித் தன்றியுஞ் சாற்றுவல் கேண்மினோ.
பொருள் : இருங்கடல் மணி நிரை எய்தி நாம் கொண்ட பின் - பெரிய கடல்போன்ற ஆநிரைகளை அடைந்து நாம் கொண்ட பிறகு; அருங்கடி அணி நகர் அங்கு ஐயன் இல்லையேல் - அரிய காவலையும் அழகினையும் உடைய நகரமாகிய அங்கே நம் சீவகன் இல்லையெனில்; பெரும்படை தான்வரின் - (அதனுடன்) பெரிய படையும் வந்துவிட்டால்; பின்றி நீங்கின் பழிதரும் படித்து - (அஞ்சினாரைப்போல) யாம் மீண்டு போந்தால் தோற்றார்கள் என்று பழிக்கும்படியாயிருக்கும்; அன்றியும் சாற்றுவல் கேண்மின் - அஃதன்றியும் பின்னும் ஒன்று கூறுவேன் கேளுங்கள்.
விளக்கம் : இது புத்தி சேனன் கூற்று. இருங்கடல் - பெரியகடல்; இஃது ஆனிரைக்குவமை. அணிநகரங்கு என ஒட்டுக. ஐயன் : சீவகன், ஐயன் இல்லையாகப் படை வருதல் ஒருதலை; அதுவரின் என்றவாறு. பின்றி - மீண்டு. அச்செயல் பழிதரும் படித்து என்க. ( 271 )
1828. மஞ்சுசூழ் விசும்பிடை மணந்துமின் மிளிர்வபோல்
வஞ்சமின் மறவர்வாண் மிளிர்ந்துபாய் குருதியுட்
குஞ்சரங் குளிப்பதோர் நீத்தமா மாதலா
லெஞ்சலில் கொள்கையீ ரெண்ணிச்சூழ் மின்களே.
பொருள் : மஞ்சு சூழ் விசும்பிடை மணந்து மின் மிளிர்வ போல் - முகில் தவழும் வானிலே கலந்து மின் ஒளிர்வனபோல; வஞ்சம் இல் மறவர் வாள் மிளிர்ந்து - வஞ்சமின்றி முன்சென்று பொரும் வீரருடைய வாள் விளங்கி; பாய் குருதியுள் குஞ்சரம் குளிப்பது ஓர் நீத்தம் ஆம் - பாய்கின்ற செந்நீரிலே யானைகள் முழுகும்படியான ஒரு வெள்ளம் உண்டாகும்; ஆதலால் - ஆகையால்; எஞ்சல் இல் கொள்கையீர்! - ஒழியாத கொள்கையீர்!; எண்ணிச் செய்ம்மின்கள் - இனி, இதனையும் ஆராய்ந்து செய்யுங்கோள்.
விளக்கம் : படைவீரர் பின்வாங்காமற் பொருதால் நேருவது இஃது என்று கூறினான். ஒழியாத கொள்கையீர் என்பது எச் செய்தியையும் நன்காய்ந்து துணிந்து வெற்றியுடன் முடிக்கும் ஊறுதியுடையீர் என்பதாம். மஞ்சு - முகில், விசும்பு - வானம், அவர் நமக்குப் பகைவர் அல்லர் என்பான் வஞ்சம் இல் மறவர் என்றான். இவ்விரண்டும் செய்யுளும் புத்திசேனன் கூற்று. (இவற்றால்) நமக்குப் பழியும் பாவமும் உண்டு என்றான். ( 272 )
1829. என்றனன் புத்திசே னென்னுநான் மறையினா
னன்றதே பொருளென நால்வரு மிருந்துழி
யொன்றிமுன் விடுத்தவர் மூவரொற் றாட்கள்வந்
தின்றிதாற் பட்டதென் றியம்புகின் றார்களே.
பொருள் : என்றனன் புத்திசேன் என்னும் நான் மறையினான் - என்றுரைத்தான் புத்திசேனன் என்னும் அந்தணன்; அதே நன்று பொருள் என நால்வரும் இருந்துழி (என்ற பின்னும்) பதுமுகன் கூறிய அதுவே நல்ல பொருள் என்று நால்வரும் எண்ணியிருந்த போது; முன் ஒன்றி விடுத்தவர் மூவர் ஒற்றாட்கள் வந்து - முன்னரேயே தாம் பொருந்தி விட்டவராகிய ஒற்றர் மூவர் வந்து; இன்று இது பட்டது என்று இயம்புகின்றார்கள் - இன்று இது பிறந்த செய்தி என்று கூறுகின்றார்கள்.
விளக்கம் : மூவர் வந்து கூறுகின்றார்கள் என்றாராயினும் மூவரும் ஒருவரையொருவர் அறியாமலே சென்று ஒற்றிவந்து தனித்தனியே கூறினார்கள் என்றும், அம் மூவர் கூற்றும் ஒன்றாக இருந்தன என்றும் கொள்க. ஒற்றொற் றுணராமை ஆள்க; உடன் மூவர் - சொற்றொக்க தேறப் படும் (குறள். 589) என்பதூஉங் காண்க. ( 273 )
1830. வளையசுந் தரமெனும் வாரண மால்வரை
முளையிளந் திங்கள்போன் முத்துடைக் கோட்டது
கிளையிளம் பிடிகளைஞ் ஞாற்றிடைக் கேழரக்
களையவஞ் சனவரை யனையதக் களிறரோ.
பொருள் : வளைய சுந்தரம் எனும் வாரணம் மால்வரை - வளைய சுந்தரம் என்னும் பெயருடைய (தடமித்தனுடைய) பட்டத்து யானையாகிய பெரிய மலை; முளை இளந் திங்கள்போல் முத்து உடைக்கோட்டது - முளைத்த இளமதிபோல் முத்துக்கள் பொருந்திய கொம்பினையுடையது; அக்களிறு - அந்த யானை; கிளை இளம் பிடிகள் ஐஞ்ஞாற்றிடைக் கேழ் அரக்கு அளைய அஞ்சன வரை அனையது - உறவுடைய இளம் பிடிகள் ஐந்நூற்றின் இடையிலே ஒளியுடைய அரக்கு அளாவின கருமலை போன்றது.
விளக்கம் : வளையசுந்தரம் என்பது தடமித்தன் பட்டத்தியானையின் பெயர். மால்வரையில் முளைத்த இளந் திங்கள்போல் கோடு, முத்துடைக் கோடு எனத் தனித்தனி கூட்டுக. ஐஞ்ஞாறு - ஐந்நூறு. கேழ் - நிறம். அளைய - அளாவிய. அஞ்சனவரை - கருமலை. ( 274 )
1831. கடுமதக் களிப்பினாற் காரென முழங்கலின்
விடுகலார் பாகரும் வெருவரக் கொன்றிடப்
பிடியொடுங் கந்தணை வின்றிநீ ருருள்பிளந்
தடுகளி றந்தப்போ திகைபரிந் தழன்றதே.
பொருள் : கடுமதக் களிப்பினால் கார் என முழங்கலின் - கொடிய மத மயக்கினால் முகில்போலப் பிளிறுதலாலே; பாகரும் விடுகலார் - பாகரும் அதனை விடாதாராயிருந்தார்; வெருவரக் கொன்றிட - அச்சமுண்டாகக் கொன்றிடற்கு; பிடியொடும் கந்து அணைவு இன்றி - பிடியையும் கம்பத்தையும் அணையாமலே; நீருருள் பிளந்து - நீருருளைப் பிளந்து; அந்தப் போதிகைபரிந்து - பின்னங்காலிற் சங்கிலியை அறுத்து; அடுகளிறு அழன்றது - அவ்வடு களிறு சினந்தது.
விளக்கம் : நீருருள்- சங்கடமாகப் பண்ணித் தண்ணீர் ஏற்றி உருட்டுவதொன்று. இனி, ஈருள் பிளந்து என்று ஓதின், உள்ளீரலைப் பிளந்து கொன்றிட வெனக் கூட்டுக. (ஈர்+உள் : உள்+ஈர்.) ( 275 )
1832. கண்ணுமிழ் தீயினாற் சுடநிறங் கரிந்தபோற்
பண்ணுமிழ் வண்டுலாய்ப் பரத்தரா நின்றசீ
ரண்ணலங் களிற்றினை யடக்கினான் சீவகன்
வண்ணமே கலையினார் மனமெனப் படிந்ததே.
பொருள் : கண் உமிழ் தீயினால் சுடநிறம் கரிந்த போல் - கண்உமிழும் தீயினாற் சுடுதலின் நிறம் கருகினாற்போல; பண்உமிழ் வண்டு உலாய்ப் பரத்தராநின்ற - இசையை உமிழும் வண்டுகள் பரத்தலைத் தராநின்ற; சீர் அண்ணல் அம் களிற்றினைச் சீவகன் அடக்கினான்- சீரையுடைய பெரிய அழகிய அக் களிற்றைச் சீவகன் அடக்கினான்; வண்ண மேகலையினார் மனம் எனப் படிந்தது - (அப்போது) அக் களிறு, அழகிய மேகலையுடைய மகளிர் மனம் அவனிடம் தாழ்வதுபோல வந்து தாழ்ந்தது.
விளக்கம் : வண்டுலாம் பார்த்தர என்ற பாடத்திற்கு, வண்டுலாங் களிற்றைப் பார்க்கின்ற சீரை நமக்குத் தருதற்கு அடங்கினான் என்க. ( 276 )
1833. இறுவரை யிவர்வதோ ரிலங்கெயிற் றரியென
வுறுவரை மார்பினான் றூசங்கொண் டொய்யெனப்
பெறலருங் குஞ்சர மேறலிற் பெருஞ்சன
மறைகடற் றிரையொலித் தாங்கென வார்த்ததே.
பொருள் : உறுவரை மார்பினான் - பெரிய மலைபோலும் மார்பினான் ஆகிய சீவகன்; இறுவரை இவர்வதோர் இலங்கு எயிற்று அரியென - பெரிய மலையிற் பாய்வதொரு சிங்கம்போல; பெறல் அருங் குஞ்சரம் தூசம் கொண்டு ஒய்யென ஏறலின் - அடக்குதற்கரிய அக்களிற்றைப் புரோசைக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு விரைய ஏறுதலாலே; அறைகடல் திரை ஒலித்து என ஆங்குப் பெருஞ்சனம் ஆர்த்தது - கரையுடன் மோதுங் கடலின் அலை ஒலித்தாற்போல ஆங்கு மிகுதியான மக்கள் திரள் ஒலித்தது.
விளக்கம் : இறுவரை - பெரிய மலை. அரி - சிங்கம். உறுவரை - பெரிய மலை. மார்பினான் : சீவகன். தூசம் - புரோசைக்கயிறு. பெருஞ்சனம் - மக்கட் கூட்டம். ( 277 )
1834. அங்கையந் தலத்தினா லப்புதா தையெனக்
கொங்கலர் கண்ணியான் கொம்மைதான் கொட்டலும்
பொங்கிய வுவகையிற் பொலிந்துமாக் களிறவன்
றங்கிய பயிர்த்தொழி றடக்கையாற் செய்ததே.
பொருள் : கொங்கு அலர் கண்ணியான் - மணம் விரியும் மலர்க் கண்ணியான்; அப்புது ஆது ஐ என - அப்புது அப்புது, ஆது ஆது, ஐ ஐ என்று கூறி; அங்கை அம் தலத்தினால் கொம்மைதான் கொட்டலின் - அங்கையாகிய அழகிய தலத்தினாற் பொய்க்கத் தட்டின அளவிலே; மாக்களிறு பொங்கிய உவகையின் பொலிந்து - அப் பெரிய களிறு பொங்கும் மகிழ்ச்சியினாலே பொலிவுற்று; அவன் தங்கிய பயிர்த்தொழில் தடக்கையால் செய்தது - அவனிடத்தங்கிய பயிரால் தொழில்களைத் தன் துதிக்கையாலே செய்தது.
விளக்கம் : அப்புது, ஆது, ஐ : இவை யானைப் பேச்சான குறிப்பு மொழிகள், பயிராவன; பரிபரி என்பன முதலியன. தொழில் - தோட்டி முதலியன எடுத்துக் கொடுத்தல். ( 278 )
1835. கொட்டையம் புரோசைதா னிருவடங் கொண்டுடன்
கட்டினான் கருவலித் தடக்கையாற் றோட்டியு
மிட்டன னிரண்டுட னிமிழ்க்கொளீஇ யிலங்குபொற்
பட்டமும் பனிவரை மின்னெனக் கட்டினான்.
பொருள் : கருவலித் தடக்கையால் - கொடிய வலியையுடைய கையினால்; கொட்டையம் புரோசைதான் இருவடங்கொண்டு உடன் கட்டினான் - தலையில் மணிமுடியை உடைய புரோசைக் கயிற்றை இரண்டு வடங்கொண்டு சேரக் கட்டினான்; இரண்டு தோட்டியும் உடன் இமிழ்க் கொளீஇ இட்டனன் - நெடுந்தோட்டியையும் குறுந் தோட்டியையும் தம்மிற் பிணைத்து அதன் கழுத்திலே இட்டான்; பனிவரை மின் என இலங்குபொன் பட்டமும் கட்டினான் - இமயமலையிலே மின்போல விளங்கும் பொற்பட்டத்தையும் கயிற்றையுங் கோத்துக் கட்டினான்.
விளக்கம் : கொட்டை - முடிமணி, முடிச்சுமாம், கருவலித்தடக்கையான் என்புழி கருமை கொடுமைப் பண்பின்மேற்று. இரண்டு தோட்டியும் என்க. அவை நெடுந்தோட்டி குறுந்தோட்டி என்பன. ( 279 )
1836. கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணியணிந்
தச்சுறு கொழுந்தொடர் யாப்பழித் தடியிணை
யுச்சியும் புரோசையுட் குளிப்பவுய்த் துறுவலி
மெச்சிமேல் வேந்தனும் விழைதகத் தோன்றினான்.
பொருள் : உறுவலி - மிகுவலியுடைய சீவகன்; கச்சையும் வீக்கினன் - கீழ் வயிற்றிற் கட்டும் கச்சையையுங் கட்டினான்; கறங்கு இரு மணி அணிந்து - ஒலிக்கும் இரு மணிகளை இரு பக்கமும் அணிந்து; அச்சுறு கொழுந் தொடர் யாப்பு அவிழ்த்து - யானையின் வேகத்தை அடக்கும் வளவிய தொடரையும் கட்டவிழ்த்து; அடி இணை உச்சியும் புரோசையுள் குளிப்ப உய்த்து - (தன்) அடியிரண்டின் உச்சியையும் (அதன்) புரோசைக் கயிற்றுக்குள்ளே அழுந்தச் செலுத்தி; மேல் வேந்தனும் மெச்சிவிழைதகத் தோன்றினான் - புலிமுகப்பில் இருக்கும் அரசனும் புகழ்ந்து விரும்பும்படி வந்து தோன்றினான்.
விளக்கம் : அச்சுறு கொழுந்தொடர் - விரையாதபடி மரங்களிலே இரும்பைத்தைத்துக் கழுத்திலே மாலைபோலே இடுவதொன்று. ( 280 )
1837. கோற்றொடிப் புரிசையுட் கொற்றவ னின்றைய
னேற்றியல் காண்டுநா மிவட்டரு கென்னவே
காற்றெனக் கடலெனக் கருவரை யுருமெனக்
கூற்றெனக் குஞ்சரங் கொண்டுபுக் கானரோ.
பொருள் : கோல் தொடிப் புரிசையுள் கொற்றவன் நின்று - திரண்ட வளையலைப்போல வளைந்த மதிலிலே தடமித்தன் வந்து நின்று; ஐயன் ஏற்றியல் நாம் காண்டும் - ஐயனுடைய யானையேற்றத்தின் தன்மையை யாம் காண்போம்; இவண் தருக என்ன - இவ்விடத்தே கொண்டு வருக என்ன; காற்று எனக் கடல் எனக் கருவரை உரும் எனக் கூற்று என - விசையாற் காற்றென, ஒலியாற் கடலென, வடிவால் கரிய மலையென, அச்சத்தால் இடியெனக், கொலையாற் கூற்றுவன் என; குஞ்சரம் கொண்டு புக்கான் - யானையை உள்ளே கொண்டு சென்றான்.
விளக்கம் : கொற்றவன் : தடமித்தன். ஐயன்: சீவகன். ஏற்றியல் - யானை ஏறும் அழகு, காண்டும் - காண்பேம். விசையாற் காற்று எனவும் முழக்கத்தால் கடல் எனவும் வடிவால் வரையெனவும் பொதுத்தன்மை விரித்தோதுக. ( 281 )
1838. குழவியஞ் செல்வனோர் குன்றுகொண் டொய்யென
வழகிதாப் பறப்பதே போலவு மார்புயன்
மழையையூர்ந் தோடுமோர் வானவன் போலவு
மெழுதலா காவண மிருந்தன னென்பவே.
பொருள் : குழவி அம் செல்வன் ஓர் குன்று கொண்டு - இள ஞாயிறு ஒரு குன்றைக் கவானிடைக் கொண்டு; ஒய் என அழகிதாப் பறப்பதே போலவும் - கடுக அழகாய்ப் பறக்கின்ற தொழிலைப்போல் தன்னிடத்தே தொழிலையுடையவனாயும்; புயல் ஆர் மழையை ஊர்ந்து ஓடும் ஓர் வானவன் போலவும் - நீர் நிறைந்த முகிலை யூர்ந்து செல்லும் வித்தியாதரனைப் போலத் தன்னிடத்தே தொழில் கிடக்கவும்; எழுதலாகா வணம் இருந்தனன் - எழுதலாகாதபடி இருந்தான்.
விளக்கம் : என்ப, ஏ : அசைகள். குழவியஞ் செல்வன் என்றது ஈண்டுக் குறிப்பால் இளஞாயிற்றை உணர்த்தியது. ஓய்யென : விரைவுக் குறிப்பு. குன்று - ஈண்டு உதயகிரி. ( 282 )
1839. வனைகலத் திகிரியும் வாழுயிர் மேற்செலுங்
கனைகடுங் கதழ்பரிக் காலசக் கரமும்போல்
வினைதகு வட்டமும் வீதியும் பத்தியு
மினையவை யேமுற விமைப்பினி னியற்றினான்.
பொருள் : வனை கலத் திகிரியும் - மண் கலன்களை வரையும் திகிரியும்; வாழ் உயிர்மேல் செலும் கனைகடுங் கதழ் பரிக் கால சக்கரமும்போல - வாழும் உயிரை வவ்வச் செல்லும் மிகவுங் கடிதாகிய மிக்க செலவினையுடைய கூற்றுவன் ஆழியும் போல; வினை தகு வட்டமும் வீதியும் பத்தியும் இனையவை - தொழிற்குத் தக்க வட்டமும் வீதியும் பத்தியுமாகிய இத் தன்மையவற்றை; ஏம் உற இமைப்பினின் இயற்றினான் - தப்பாதபடியே ஒரு நொடியிலே நடத்தினான்.
விளக்கம் : கலம் வனைதிகிரி என்க. வாழுயிர் : வினைத்தொகை. கதழ்பரி - விரைந்த செலவினையுடைய. வட்டம், வீதி, பத்தி என்பன யானையின் செலவு வகை. ( 283 )
1840. ஒருவனே களிறுமொன் றோருநூ றாயிரந்
திரிவவே போன்றன திசையெலாங் குஞ்சரக்
குரியவன் னிவனலா லுலகினில் லிலனென
வரிதுணர் வேத்தவை யமைகமற் றென்றதெ.
பொருள் : ஒருவனே களிறும் ஒன்று - நடத்துவோனும் ஒருவனே, களிறும் ஒன்றேயாக இருக்கவும்; திசையெலாம் நூறாயிரம் திரிவவே போன்றன - ஏறினபடி திசையெல்லாம் எண் இறந்த யானை திரிவனபோலே இருந்தன; -குஞ்சரக்கு உரியவன் உலகினில் இவன் அலால் இலன் என - (ஆதலால்) யானையேற்றத்திற்குரியவன் உலகிலே இவன் அல்லது மற்றொருவன் இலன் என்று கூறி; அரிது உணர் வேத்தவை அமைக என்றது - அரிதென்று உணர்ந்த அரசவை அமைக என விலக்கியது.
விளக்கம் : ஓரும், மற்று : அசைகள். களிறும் ஒன்று அதனை ஊருவோனும் ஒருவனே என்க. நூறாயிரம் என்றது மிகுதிக்கோர் எண் கூறியவாறு. குஞ்சரக்கு - குஞ்சரத்திற்கு. சாரியையின்றி உருபு புணர்ந்தது. ( 284 )
1841. வள்ளுகிர் நுதியினால் வரிநுத லுறுத்தலு
முள்ளுணர் குஞ்சரம் ஓய்யென நிற்றலு
மௌளரும் மிருமணி கிணினென விசைத்தன
வெள்ளநீர்ப் பெருஞ்சனம் வியந்துகை விதிர்த்ததே.
பொருள் : வள் உகிர் நுதியினால் - தோட்டி நுனியென்னும் உகிர் நுனியினால்; வரி நுதல் ஊறுத்தலும் - வரியையுடைய நெற்றியிலே அழுத்தின அளவில்; உள் உணர் குஞ்சரம் - இவன் மனம் உணர்ந்த யானை; ஒய்யென நிற்றலும் - கடுக நின்ற அளவிலே; எள் அரும் இரு மணி கிணின் என இசைத்தன - குற்றமற்ற இரண்டு மணிகளும் கிணின் என்று ஒலித்தன; வெள்ளநீர்ப் பெருஞ்சனம் வியந்து கைவிதிர்த்தது - வெள்ளம் போன்ற தன்மையுடைய மிகுதியையுடய மக்கள் திரள் வியப்புற்றுக் கைவிதிர்த்தது.
விளக்கம் : ஓடுகின்ற விசையாலே ஒலி அடங்கின மணிகள் நின்ற பொழுது ஒலித்தன. நுதி - முனை. வரிநுதல் - வரிகளையுடைய நெற்றி. ஓய்யென; விரைவுக் குறிப்பு. கிணின்; ஓசைக் குறிப்பு. ( 285 )
1842. என்மன நின்மன மென்றிரண் டில்லையாற்
றன்மனத் துளபொரு டான்றனக் குரைப்பதொத்
துன்மன மென்மன மென்பதொத் திழைத்ததா
னன்மனக் குஞ்சர நம்பியோ டென்மரும்.
பொருள் : தன் மனத்து உள பொருள் தான் தனக்கு உரைப்பது ஒத்து - தன் மனத்திற் பொருளைத் தான் தனக்கு உரைக்கும் தன்மையை ஒத்து ஏவல் செய்தலாலே; உன் மனம் என் மனம் என்பது - உன் மனமே என்மனம் என்று கூறுவதாகிய; நன்மனக் குஞ்சரம் நம்பியோடு ஒத்து இழைத்தது - நல்ல மனமுடைய குஞ்சரம் நம்பியின் மனமுடன் ஒன்றித் தொழிலைச் செய்தது; (ஆதலால் அக் குஞ்சரத்திற்கும் நம்பிக்கும்) என்மனம் நின்மனம் என்று இரண்டு இல்லை என்மரும் - என்மனம் நின்மனம் என இரண்டில்லையாக இருந்தது என்பாரும்.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். ( 286 )
1843. தேவனே மகனலன் செல்வன்மற் றென்மரும்
பாவையே நோற்றனள் பாரின்மே லென்மருங்
கோவனும் மக்களுங் குளிர்ந்துதோ ணோக்கினா
ரோவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே.
பொருள் : செல்வன் தேவனே, மகன் அலன் என்மரும் - இச் செல்வன் தேவனே, மகன் அல்லன் என்பாரும் : பாரின் மேல் பாவையே நோற்றனள் என்மரும் - உலகில் கனகமாலையே (இவனை அடைய) தவம்புரிந்தனள் என்பாரும் (ஆகி) : ஓ என ஓசை போய் வையகத்து உயர்ந்தது - ஓ என்ற ஓசை சென்று உலகில் மேம்பட்டது. (அதனால்) கோவனும் மக்களும் குளிர்ந்து தோள் நோக்கினார் - அரசனும் அவன் மக்களும் மகிழ்ந்து தம் தோளை நோக்கினார்கள்.
விளக்கம் : என்பார் என்பர் எனத் திரிந்தது. உண்மரும் தின்மரும் (பதிற் -24) என்றாற்போல; இனி, ஆயினார் என வினை கோடலின்; மாரீறு விகாரமாய் நின்ற தெனின், தனக்குரிய எதிர்காலம் உணர்த்தாமை உணர்க. ( 287)
1844. பிண்டமுண் ணும்பெருங் களிறுபூட் டியவன்
வண்டரும் மோவரும் பாடமா நகர்தொழக்
கொண்டதன் றம்பியுந் தானுங்கோ யில்புகக்
கண்டனங் கண்ணினே யென்றுகண் டவர்சொனார்
பொருள் : பிண்டம் உண்ணும் பெருங்களிறு பூட்டி - கவளம் உண்ணுதற்கு விழைந்த பட்டத்துக்குரிய களிற்றைக் களிற்றைக் கம்பத்திலே கட்டி; அவண் வண்டரும் ஓவரும் பாட - அங்கே மங்கலப் பாடகரும் வாழ்த்துக் கூறுபவரும் பாட ; மாநகர் தொழ - அப் பெருநகரம் வணங்க; கொண்ட தன் தம்பியும் தானும் கோயில் புக - இச் சிறப்பைக்கொண்ட தானும் தன் தம்பியுமாகத் தனக்குரிய கோயிலிலே நுழைய; கண்ணின் கண்டனம் என்று - கண்ணாலே பார்த்தோம் என்று; கண்டவர் சொனார் - பார்த்து வந்த ஒற்றர்கள் உரைத்தனர்.
விளக்கம் : கண்ணினே : ஏ : அசை. கண்டவர் என்றது முன்னர் இயம்புகின்றார் என்ற ஒற்றரைச் சுட்டிநின்ற பெயராகக்கொண்டு, அவர் இங்ஙனங் கூறினார் என்க. நந்தட்டன் கூட நிற்றலின் சீவகன் என்று உணர்ந்தார். (நச்சினார்க்கினியர் முன்னர் (சீவக. 1713, 1718, 1721, 1722 முதலிய செய்யுட்களில்) சீவகனும் வேற்று வடிவுடன் இருந்தான், நந்தட்டனையும் சீவகனைப்போலவே வேற்றுருவுடன் இருக்கத் தன் விஞ்சையால் மாற்றியனுப்பினாள் என்று கூறியவர் ஈண்டு, நந்தட்டனை ஒற்றர் அறிந்தனர் என்றும், அவனால் உடன் இருப்பவன் சீவகன் எனக் குறித்தறிந்தனர் என்றுங் கூறுகின்றனர். ( 288 )
1845. பாத்தில்சீர்ப் பதுமுகன் படிவவொற் றாளர்சொற்
கோத்தெனக் கொடுத்தனன் கொழுநிதி யுவகையிற்
றூத்திரட் சுறாவினந் தொக்கபோன் மறவரு
மேத்தருஞ் சிலைகைவா ளிலங்குவே லேந்தினார்.
பொருள் : பாத்து இல் சீர்ப் பதுமுகன் படிவ ஒற்றளர் சொற்கு ஓத்தென - நீக்கம் இல்லாத புகழையுடை பதுமுகன் மறைந்த வேடங்கொண்ட ஒற்றர் ஒருவர் கூறிய சொற்கு மற்றும் இருவர் சொல்லும் சேர்ந்தது என்று கருதி; உவகையின் கொழுநிதி கொடுத்தனன் - மகிழ்ச்சியால் வளவிய செல்வத்தைக் கொடுத்தான்; தூத்திரள் சுறா இனம் தொக்கபோல் - வலிய திரட்சியையுடைய சுறாவின் கூட்டம் குழுமினபோல; மறவரும் ஏத்த அருஞ்சிலை வாள் இலங்குவேல் கை ஏந்தினார் - புகழ்தற்கரிய சிலையையும் வாளையும் விளங்கும் வேலையும் கையினில் ஏந்தினர்.
விளக்கம் : ஒத்ததென என்பது ஓத்தென விகாரமுற்றது; ஓத்து : விதியுமாம்.பாத்தில் - பாத்தல் இல்லாத - பகுத்தல் இல்லாத; நீங்குதல் இல்லாத என்றவாறு, படிவம் - மறைந்த வேடம். ஒத்ததென எனற்பாலது முதனீட்டல் விகாரமும் தகர அகரம் கெடுதல் விகாரமும் எய்தி ஓத்தென என்றாயிற்று. ஓத்து என்றே கொண்டு விதி எனினுமாம். இப்பொருட்கு ஒற்றளர் சொற்கு நிதிகொடுத்தல் விதியெனக் கருதிக் கொழுநிதி கொடுத்தனன் எனப் பொருள் கூறுக. ( 289 )
1846. வேனிரை வாண்மதில் பிளந்துவெஞ் சமத்திடைத்
தேனிரை களிற்றின்மேற் றிண்குளம் பழுத்துவ
வானிரை வளைப்பதோர் பொருளெனச் சிரித்துடன்
மாநிரை பண்ணினார் வடித்தநூற் கேள்வியார்.
பொருள் : வடித்த நூல் கேள்வியார் - ஆராய்ந்த நூல்களைக் கேட்ட அவர்கள்; வேல் நிரை வாள்மதில் வெஞ்சமத் திடைப்பிளந்து - வேலாகிய காவல் காட்டையுடைய வாள் மதிலைப் போரிலே பிளந்து; தேன் நிரை களிற்றின்மேல் திண் குளம்பு அழுத்துவ - வண்டுகள் மொய்க்கும் களிற்றின்மேல் தம் திண்ணிய குளம்பை அழுத்துவனவாகிய; மாநிரை - குதிரைத் திரள்; ஆனிரை வளைப்பது ஓர் பொருள் எனச் சிரித்து - (இப்போழுது) ஆவின் திரளை வளைப்பதாகிய ஒரு பொருளையுடையது என்று நகைத்து; உடன் பண்ணினார் - ஒரு சேர அம் மாநிரையைப் பண்ணினார்.
விளக்கம் : வேனிரை, வாண்மதில் இரண்டும் பண்புத்தொகை, சமம் - போர், தேன் - வண்டுகள், நிரைகளிறு : வினைத்தொகை, மாநிரை - குதிரை அணி. ( 290 )
வேறு
1847. விடையுடை யினநிரை விழுங்கன் மேயினார்
துடியொடு சிறுபறை துவைத்த வால்வளை
முடியுல குறநிமிர்ந் தார்த்த மொய்கழ
லடுபடை யிளையரு மரணம் வீசினார்.
பொருள் : விடை உடை இனநிரை விழுங்கல் மேயினார் - எருதுகளையுடைய ஆனிரையைக் கொள்ள விரும்பினாராக; துடியொடு சிறுபறை துவைத்த - துடியும் சிறுபறையும் ஒலித்தன, வால்வளை முடி உலகு உற நிமிர்ந்து ஆர்த்த - வெள்ளிய சங்குகள் வானுலகு பொருந்த ஓங்கி ஒலித்தன; மொய் கழல் அடுபடை இளைஞரும் அரணம் வீசினார் - மொய்கழலையுடைய அடுபடை யேந்திய வீரரும் கவசத்தை அணிந்தனர்.
விளக்கம் : விடை - காளை, துவைத்த; பலவறிசொல்; வால்வளை வெள்ளிய சங்கு, முடியுலகு - மேலுலகம், அரணம் - கவசம். ( 291 )
1848. காந்தளங் கடிமலர்க் கண்ணி நெற்றிய
ராய்ந்தளந் தியற்றிய வத்து ணாடையார்
வேய்ந்துணி யலமரும் புறத்தார் வெஞ்சுட
ரேந்தெழி னவியமு மேந்து தோளினார்.
பொருள் : அம் கடிகாந்தள் மலர்க் கண்ணி நெற்றியார் - அழகிய மணமுடைய காந்தள் மலர்க் கண்ணியையுடைய நெற்றியராய்; ஆய்ந்து அளந்து இயற்றிய அத்து உண் ஆடையர் - ஆராய்ந்து அளந்து நெய்யப்பட்ட சிவப்பு நிறம் ஊட்டப்பெற்ற ஆடையினராய்; வேய்ந்துணி அலமரும் புறத்தர் - மூங்கில் குழல் அசையும் முதுகினராய்; வெஞ்சுடர் ஏந்து எழில் நவியமும் ஏந்து தோளினார் - வெவ்விய ஒளியைத் தன்னிடத்தே ஏந்திய அழகிய கோடரியைத் தாங்கிய தோளினராய்,
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். அளந்தியற்றுதல் - இந்த ஆடைக்கு இஃது அளவு என்று அளந்து பண்ணுதல். அத்து - சிவப்பு. வேய்ந்துணி-மூங்கில் துண்டம் (குழல்) ÷ய்த்துணி, வேய்ந்துணி : உறழ்ச்சி. ( 292 )
1849. கோனுடை யினநிரை காக்குங் கோவலர்
தேனொடு கடிச்சுரும் பரற்றும் தேமலர்க்
கானிடை யினநிரை காவல் போற்றுமி
னானிடை யழித்தபுள் ளென்று கூறினார்.
பொருள் : கோன் உடை இனநிரை காக்கும் கோவலர் - அரசனுடைய இனங்களாகிய நிரையைக் காக்கும் ஆயர்; தேனொடு கடிச் சுரும்பு அரற்றும் தே மலர்க் கானிடை - தேனும் சுரும்பும் முரலும் தேனையுடைய மலர் நிறைந்த காட்டிலே; இனநிரை காவல் போற்றுமின் - இனநிரைகளைக் காப்பாற்றுதலைப் போற்றுமின்; ஆனிடை புள் அழித்த - பசுத்திரளின் இடையிலே காரி யென்னும் பறவைகள் எழுந்தன; என்று கூறினார் - என்றுரைத்தனர்.
விளக்கம் : கோன் - அரசன். இனநிரை - ஆன்சுட்டம். கோவலர் - இடையர். தேன், சுரும்பு என்பன வண்டின்வகை. கான் - காடு. புள் - காரி என்னும் பறவை. மணிநிரைக் கட்சியுள் காரியெழும் என்றார் வெண்பாமாலையினும் (பு. வெ. 3. பி-ம்.) ( 293 )
1850. விடுபொறி யரவென விளங்கு வெஞ்சிலை
யடுகணை சிதறினா ரார்த்த வால்வளை
கடுகின காலிய லிவுளி காண்டலு
முடுகுபு கோவலர் முந்து காற்பெய்தார்.
பொருள் : விடு பொறி அரவு என விளங்கு வெஞ்சிலை அடுகணை சிதறினார் - வீசுகின்ற தீப்பொறியையுடைய பாம்பைப் போல விளங்கும் கொடிய வில்லாலே அம்புகளை (ஆனிரை கொள்ள வந்தோர்) வீசினார்; வால்வளை ஆர்த்த-வெண் சங்குகள் முழங்கின; கால் இயல் இவுளி கடுகின - காற்றைப்போல இயங்கும் குதிரைகள் விரைந்தான; காண்டலும் - இவற்றைக் கண்டதும்; கோவலர் முந்து முடுகுபு காற்பெய்தார் - கோவலர் முற்பட ஆனிரையைக் காத்தற்கு முற்பட ஓடினார்.
விளக்கம் : விடுபொறி : வினைத்தொகை. பொறி - தீப்பொறி, அடுகணை : வினைத்தொகை. காலியல் - காற்றைப்போல, முடுகுபு - முடுகி, காற்பெய்தார் - ஓடினார். ( 294 )
1851. அளைச்செறி யிரும்புலி யனைய வாடவர்
வளைத்தனர் மணிநிரை வன்க ணாயரும்
விளைத்தனர் வெருவரத் தக்க வெஞ்சொலா
லுளைத்தனர் பூசல்விட் டுணர்த்த வோடினார்.
பொருள் : அளை செறி இரும்புலி அனைய ஆடவர் - குகையிலே தங்கிய பெரும்புலி போன்ற ஆடவர்கள்; மணிநிரை வளைத்தனர் - மணியையுடைய நிரையை வளைத்துக்கொண்டனர்; வன்கண் ஆயரும் வெருவரத்தக்க வெஞ்சொலால் விளைத்தனர் - கொடிய ஆயரும் அஞ்சத்தக்க கொடிய சொற்களால் வீரமொழி விளைத்தனராய்; பூசல் உளைத்தனர் - போரை வருந்திச் செய்தனர்; விட்டு உணர்த்த ஓடினார் - பிறகு போரைவிட்டுத் தெரிவிக்க அரசனிடம் ஓடினர்.
விளக்கம் : அளை - குகை, இரும்புலி - பெரிய புலி, ஆடவர் ஈண்டு வீரர் என்பதுபட நின்றது. வெருவரத்தக்க - அஞ்சத்தக்க. பூசல் - போர். ( 295 )
வேறு
1852. தோத்தொகைத் தானை மன்னன்
சீவகற் கிளைய நம்பி
வார்த்தொகை முழவம் விம்ம
மல்லுறழ் தோளி னானை
நீர்த்தொகைக் கழனி நாடு
நெடுநகர்ப் பெயரு நுங்கள்
சீர்த்தொகைக் குலனு மெல்லாந்
தெரிந்தெமக் குரைமோ வென்றான்.
பொருள் : தேர்த் தொகைத் தானை மன்னன் - தேர்ப்படையையுடைய தடமித்தன்; சீவகற்கு இளைய நம்பி - சீவகனுக்கு இளையவனான நம்பியாகிய; வார்த்தொகை முழவம் விம்மமல் உறழ தோளினானை - வாராற் கட்டப்பெற்ற முழவம் தோற்றுவிம்மா நிற்ப மல்லுடன் மாறுபட்ட தோளையுடைய நந்தட்டனை; நீர்த்தொகைக் கழனி நாடும் நெடுநகர்ப் பெயரும் நுங்கள் சீர்த்தொகைக்குலனும் - நீர் திரண்ட கழனியை உடைய நாட்டையும் பெரு நகரின் பெயரையும் உங்கள் சிறப்புறு குலமும்; எல்லாம் தெரிந்து எமக்கு உரை என்றான் - யாவற்றையும் தெரியும்படி எமக்குக் கூறுக என்றான்.
விளக்கம் : தெரிந்து - தெரிய : எச்சத்திரிபு. தானை மன்னன் - தடமித்தன், இளையநம்பி - நந்தட்டன், முழவம் இதனை (தோளை) ஒவ்வேன் என வருந்தி அழாநிற்ப மல்லுடன் உறழ்ந்த தோள் என்க. விம்ம என்றது சிலேடை. அழ - ஒலிப்ப என்னும் பொருளது. உரைமோ - மோ : முன்னிலையசை. (296 )
1853. திருக்குறிப் பன்ன தாயிற்
செப்புவ லடிகள் செம்பொ
னரித்தசும் பொழுகு குன்றத்
தருவியின் வெரீஇய மஞ்ஞை
பரித்தவை பழன நாரைப்
பார்ப்பொடு மருதிற் சேக்கு
முரைத்தகு நாடு மூருங்
குலத்துட னுணர வென்றான்.
பொருள் : அடிகள் - அடிகளே!; திருக்குறிப்பு அன்னது ஆயின் - திருவுள்ளக் கருத்து அத்தகையது எனின்; செம் பொன் அரித்து அசும்பு ஒழுகு குன்றத்து அருவியின் - பொன்னை அரித்துக்கொண்டு அசும்பெடுத்து ஒழுகும் குன்றத்தின் அருவியினால்; வெரீஇய மஞ்ஞை பரித்தவை - அஞ்சிய மயில்கள் ஓடினவை; பழனம் நாரைப் பார்ப்பொடு - பழனத்திலுள்ள நாரைப் பார்ப்புகளுடன்; மருதின் சேக்கும் - மருத மரத்திலே தங்குகின்ற; உரைத்தகு நாடும் ஊரும் குலத்துடன் உணர - உரைக்கத்தக்க நாட்டையும் ஊரையும் குலத்தையும் அறிந்து கொள்ளும்படி; உணரச் செப்புவல் என்றான் - அறிந்து கொள்ளுமாறு உரைப்பேன் என்றான்.
விளக்கம் : திருக்குறிப்பு - திருவுள்ளக் குறிப்பு. செப்புவல் - தன்மை ஒருமை வினைமுற்று. அடிகள் - விளி. அசும்பு - ஊற்று. வெரீஇய - வெருவிய; அஞ்சிய. பரித்தவை - ஓடியவை. பழனம் - வயல். உரைத்தகு - புகழத் தகுந்த. ( 297 )
1854. பொருகய லுகளிப் பாயப்
பூஞ்சிறைக் குமரி யன்னங்
குருகினோ டிரியச் செந்நெற்
கொழுங்கதிர் குவளை யெற்ற
முருகுவிண் டிரியத் தீந்தேன்
முழங்குநீர்க் கழனி நன்னா
டெரியுமிழ்ந் திலங்கும் வேலோ
யேமமாங் கதம தென்றான்.
பொருள் : எரி உமிழ்ந்து இலங்கும் வேலோய் - தீயைச் சொறிந்து விளங்கும் வேலனே!; பொருகயல் உகளிப் பாய- பொருகின்ற கயல்மீன்கள் பிறழ்ந்து பாய்தலினாலே; பூஞ்சிறைக் குமரி அன்னம் - குருகினோடு இரிய - (அஞ்சிய) அழகிய சிறகினையுடைய அன்னமும் நாரையும் ஓடுதலின்; செந்நெல் கொழுங்கதிர் குவளை எற்ற - (அவற்றின் மெய் தீண்டி) வளவிய செந்நெற் கதிர் குவளைமேல் எற்றுதலின்; முருகு விண்டு இரிய - நறுமணம் விட்டு உலவ; தீ தேன் முழங்கு நீர்க் கழனி நன்னாடு - இனிய தேன் கலந்து முழங்கும் நீரையுடைய கழனிகள் சூழ்ந்த அழகிய நாடு; ஏமமாங் கதமது என்றான் - ஏமாங்கதம் என்றான்.
விளக்கம் : உகளுதல் - பிறழ்தல், பூஞ்சிறை - அழகிய சிறகு. குமரியன்னம் - இளைய அனைப் பெடை. குருகு - நாரை முருகு - மணம், எரி - தீ, ஏமாங்கதம் ஏமமாங்கதம் என விரிந்தது. அது : பகுதிப்பொருளது. ( 298 )
1855. பூந்துகிற் கொடுத்த தீந்தே
னகிற்புகை பொன்ன னார்தங்
கூந்தலிற் குளித்த வண்டு
கொப்புளித் திட்ட வாச
மாந்தர்மேற் றவழ்ந்து மாட
மிருள்படப் புதையுஞ் செல்வத்
தேந்துபொன் னிஞ்சி மூதூ
ரிராசமா புரம தென்றான்.
பொருள் : பூதுகில் கொடுத்த தீ தேன் அகிற்புகை - அழகிய ஆடைக்கு ஊட்டிய இனிய தேன் கலந்த அகிலின் புகையும்; பொன் அனார்தம் கூந்தலில் குளித்த வண்டு கொப்புளித்திட்ட வாசம் - திருவனைய மகளிரின் கூந்தலிலே முழுகிய வண்டு கொப்புளித்திட்ட மணமுறு தேனும்; மாந்தர் மேல் தவழ்ந்து - மக்களின்மேல் தவழ; மாடம் இருள்பட -மாடங்கள் இருள் படுமாறு; புதையும் செல்வத்து - அம்மாடங்கள் புதையும் செல்வத்தினையும்; ஏந்து பொன் இஞ்சி மூதூர் - உயர்ந்த பொன் மதிலையும் உடைய பழம்பதி; இராசமாபுரமது என்றான் - இராசமாபுரம் என்றான்.
விளக்கம் : துகிற்குக் கொடுத்த புகை என்க. தேன் கலந்த புகை என்க. பொன் - திருமகள். கொப்புளித்திட்ட; ஒரு சொல் . தவழ்ந்து - தவழ பொன்னிஞ்சி - பொன்னாலியன்ற மதில். இராசமாபுரமது என்புழி அது பகுதிப்பொருளது. ( 299 )
1856. எங்குல மடிகள் கேட்க
வென்றலு மெழுந்தோர் பூசல்
பொங்குளைப் புரவி வெள்ளம்
போக்கற வளைத்து முற்றி
யிங்குள நிரையை யெல்லாங்
கவர்ந்ததென் றிட்ட போழ்தே
திங்கள் வெண்குடையி னான்றன்
றிருச்செவிக் கிசைத்த தன்றே.
பொருள் : எம்குலம் அடிகள் கேட்க என்றலும் - இனி, எம் குலத்தினை அடிகள் கேட்க என்று நந்தட்டன் உரைத்த அளவிலே; இங்குள நிரையையெல்லாம் போக்குஅற - இங்குள்ள ஆனிரைகளையெல்லாம் தப்பாதபடி; பொங்கு உளைப்புரவி வெள்ளம் முற்றி வளைத்து கவர்ந்தது என்று - கிளரும் உளையையுடைய குதிரைத் திரள் சூழ்ந்து வளைத்துக் கவர்ந்துகொண்டது என்று; ஓர் பூசல் இட்டபொழுது - ஆயர் ஒரு பூசலை எழுப்பியதனால்; திங்கள் வெண்குடையினான் தன் திருச் செவிக்கு இசைத்தது அன்றே - வெண்மையான திங்கள் போலுங் குடையையுடைய தடமித்தனின் திருச் செவியிலே அப்பூசல் பட்டது.
விளக்கம் : என்றலும் - என்று நந்தட்டன் கூறியபொழுது. பூசல் இட்டபொழுது என ஒட்டுக. அப்பூசல் எனச் சுட்டு வருவித்துக் கொள்க. குடையினான் - தடமித்தன். ( 300 )
1857. எரித்திறல் வென்றி வேந்தற்
கிற்றென விசைப்பச் சீறி
மருப்புறக் கந்து பாய்ந்து
முழங்குமால் களிறு போலத்
திருக்கிளர் மணிசெய் பொற்றூண்
டீப்படப் புடைத்துச் செங்க
ணுருத்தெரி தவழ நோக்கி
யுடல்சினங் கடவச் சொன்னான்.
பொருள் : எரித்திறல் வென்றி வேந்தற்கு - தீப்போலும் வலிமையையும் வென்றியையுமுடைய தடமித்தனுக்கு; இற்று என் இசைப்ப - இத் தன்மைத் தென்று அதைப்பற்றிக் கூறியதனால் ; மருப்பு உறக் கந்து பாய்ந்து முழங்கும் மால் களிறு போலச் சீறி - கொம்பு பொருந்தத் தூணைக் குத்திப் பிளிறும் பெரிய களிற்றைப்போல; திருக்கிளர் மணி செய் பொன் தூண் தீப்படப் புடைத்து - அழகு பொருந்திய மணிகளிழைத்த பொற்றூணிலே தீயுண்டாக அறைந்து; செங்கண் எரிதவழ உருத்து நோக்கி - செங்கண்களிலே நெருப்பெழச் சினந்து நோக்கி; உடல் சினங் கடவச் சொன்னான் - மெய்யினைச் சீற்றம் தூண்டக் கூறினான்.
விளக்கம் : எரிபோலும் வலிமையுடைய வென்றி - கொன்று வெல் லும் வென்றி. மருப்பு - கொம்பு, மால் - பெரிய, மணிகளிழைத்தியற்றிய பொற்றூண் என்க. சினங்கொண்டுழித் தூணைப்புடைத்தல் பன்மணிக்கடகஞ் சிந்தப் பருப்புடைப் பவளத்தூண்மேல் மன்னவன் சிறுவன் வண்கை புடைத்து என்புழியுங் காண்க (சீவக.1282) எழுவுறழ் திணிதோள் எடுத்தனன் ஓச்சிப் பொழிமணித்திண்டூண் பொறிபடப் புடைத்து என்றார் கதையினும் (1.17 : 109 -10). உடல்சினம் : வினைத்தொகையுமாம். ( 301 )
1858. நாற்கடற் பரப்பும் வந்து
நன்னகர்க் கண்ணுற் றென்ன
வேற்கடற் றானை பாய்மா
விளங்கொளி யிவுளித் திண்டோ
கூற்றென முழங்கு மோடைக்
குஞ்சரக் குழாத்தோ டேகிப்
பாற்கடற் பரப்பின் வல்லே
படுநிரை பெயர்க்க வென்றான்.
பொருள் : நாற்கடற் பரப்பும் வந்து - பரவிய நான்கு பக்கக் கடல்களும் வந்து; நல் நகர்க்கண் உற்று என்ன - அழகிய நகரிலே உற்றாற்போல; வேல் கடல் தானை பாய்மா விளங்கு ஒளி இவுளித் திண்தேர் - வேலேந்திய கடலனைய படையும், குதிரையும், விளங்கும் ஒளியை உடைய குதிரை பூட்டிய திண்ணிய தேரும்; கூற்றென முழங்கும் ஓடைக் குஞ்சரக் குழாத்தொடு ஏகி - காலனைப்பேல முழங்கும், நெற்றிப்பட்டம் அணிந்த யானையும் ஆகிய படைத்திரளுடன் சென்று; பால்கடல் பரப்பின் படுநிரை வல்லே பெயர்க்க என்றான் - பாற்கடல் போலப் பாலுடன் பரவிய ஆனிரையை விரைந்து திருப்புக என்றுரைத்தான்.
விளக்கம் : கடற்பரப்பு; இருபெயரொட்டு, வேற்றானை, கடற்றானை எனத் தனித்தனி கூட்டுக. பாய்மா : வினைத்தொகை; குதிரை. குஞ்சரம் - யானை, பாற்கடல் பாலையுடைய ஆனிரைக்குவமை. ( 302 )
1859. கண்ணகன் கடலங் கோடும்
பறைகளு முழங்கி விம்ம
விண்ணகத் தியங்கு மேகக்
குழாமென நிரைத்த வேழந்
திண்ணுகப் புரவித் திண்டோ
விரைந்தன நிரந்த பாய்மா
மண்ணக மலிரக் காலாட்
கடல்கிளர்ந் தெழுந்த தன்றே.
பொருள் : கண் அகன் கடல் அம் கோடும் பறைகளும் முழங்கி விம்ம - இடம் அகன்ற கடலிற் கிடைத்த அழகிய வளைகளும் பறைகளும் எழுந்தொலிக்க; விண் அகத்து இயங்கும் மேகக் குழாம் என நிரைத்த வேழம் - வானகத்திலே உலவும் முகிற் கூட்டம்போல ஒழுங்கான யானைகளும்; திண் நுகப்புரவித்திண் தேர் - திண்ணிய நுகமுடைய குதிரை பூட்டிய திண்ணிய தேர்களும்; விரைந்தன நிரந்த பாய்மா - விரைந்து செல்வனவாகிய பரவிய குதிரைகளும்; மண்ணகம் மலிரக் காலாள் கடல் - நிலப்பரப்பு நிறையக் காலாளாகிய கடல்; கிளர்ந்து எழுந்தது - (ஆகிய) படை பொங்கி எழுந்தது.
விளக்கம் : இனி வேழமுந் தேரும் விரைந்தன; மாப் பரந்தன காலாட்கடல் மிக்கு எழுந்தது என்த் தனித்தனியே முடிப்பினும் ஆம். ( 303 )
1860. பானிறக் கவரி நெற்றிப்
பசுங்கிளி நிறத்த பாய்மாத்
தானுறப் பண்ணித் திண்டோத்
தம்பிகோல் கொள்ள வேறிக்
கூனிறக் குழவித் திங்கட்
குளிர்கதி ரார மார்பிற்
றேனிறங் கொண்ட கண்ணிச்
சீவக குமரன் சொன்னான்.
பொருள் : பால்நிறக் கவரி நெற்றிப் பசுங்கிளி நிறத்த பாய் மா - பால்போலும் நிறமுடைய கவரிகொண்ட நெற்றியும் பச்சைக் கிளிபோலும் நிறமும் உடைய குதிரைகளை; திண்தேர்த்தான் உறப்பண்ணி - திண்ணிய தேரிலே பொருந்தும்படி பண்ணி; தம்பி கோல் கொள்ள ஏறி - நந்தட்டன் அதனைச் செலுத்தும்படி ஏறி; அமர்ந்து; கூன் நிறக் குழவித் திங்கள் குளிர்கதிர் ஆரம் மார்பின் - வளைந்த ஒளிபொருந்திய பிறைத்திங்கள்போலக் குளிர்ந்த முத்துமாலை அணிந்த மார்பினையும்; தேன் நிறம் கொண்ட கண்ணி - தேனையுடைய ஒளிகொண்ட மாலையினையும் உடைய; சீவக குமரன் சொன்னான் - சீவகன் ஒருமொழி உரைத்தான்.
விளக்கம் : பானிறக்கவரி - பால்போலும் நிறமுடைய கவரி, திண்டேர் உறப்பண்ணி என இயைக்க. தான்; அசை, தம்பி ; நந்தட்டன். ( 304 )
1861. மன்னவ னிரைகொண் டாரை
வளநகர்த் தந்து மன்னன்
பொன்னவிர் கழலிற் றங்கள்
புனைமுடி யிடுவி யேனே
லின்னிசை யுலகந் தன்னு
ளென்பெயர் சேற லின்றாய்க்
கன்னிய மகளிர் நெஞ்சிற்
காமம்போற் கரக்க வென்றான்.
பொருள் : மன்னவன் நிரை கொண்டாரை வளநகர்த் தந்து - அரசனுடைய நிரையைப் பற்றியவரை வளமிகு இந்நகரிற் கொணர்ந்து; மன்னன் பொன் அவிர் கழலில் தங்கள் புனைமுடி இடுவியேனேல் - அரசனுடைய பொன் விளங்குங் கழலணிந்த திருவடியிலே அவர்களுடைய அணிமுடியைப் பொருத்திலேனெனின்; இன் இசை உலகந் தன்னுள் என் பெயர் சேறல் இன்றாய் - இனிய புகழை உடைய உலகிலே என் பெயர் செல்லுதல் இன்றி; கன்னி மகளிர் நெஞ்சில் காமம் போற்கெடுக என்றான் - கன்னியராகிய பெண்களின் உள்ளத்திலே உண்டான காமம் வெளிவராது அழிதல்போல அழிக என்றான்.
விளக்கம் : கன்னிய; அ : அசை. அரசனைக் காணாமலே இவ் வஞ்சினங் கூறினான். ( 305 )
1862. பார்மலி பரவைத் தானைப்
பரப்பிடைப் பறப்ப தேபோ
னீர்மலி கடாத்த கொண்மூ
நெற்றிமேன் மின்னி னொய்தாத்
தார்மலி மார்பன் றிண்டோ
தோன்றலுந் தறுகண் மைந்தன்
சீர்மலி பகழி யேந்திப்
பதுமுகன் சிலைதொட் டானே.
பொருள் : பார்மலி பரவைத் தானைப் பரப்பிடைப் பறப்பதே போல் - நிலம் நிறையக் கடல் போலப் பரவிய படையின் இடையிலே பறப்பதுபோல; நீர்மலி கடாத்த கொண்மூ நெற்றிமேல் மின்னின் நொய்து ஆ - கடல் போலும் நிறைந்த மதத்தையுடைய முகிலின் தலையிலே தோன்றுகின்ற மின்னினும் கடிதாக; தார்மலி மார்பன் திண் தேர் தோன்றலும் - மாலை நிறைந்த மார்பனாகிய சீவகனுடைய திண்ணிய தேர் தோன்றிவுடன்; தறுகண் மைந்தன் பதுமுகன் - அஞ்சாத மைந்தனாகிய பதுமுகன்; சீர்மலி பகழி ஏந்திச் சிலை தொட்டான் - சிறப்புடைய கணையை ஏந்தி வில்லிலே தொடுத்தான்.
விளக்கம் : கொண்மூ போன்றது : யானை. கடல்போல நிறைந்த மதத்தையுடைய மேகத்தின் தலையிற்றோன்றுவதொரு மின்னினுங் கடிதாகத் தேர் தோன்றிற்று. மேகம் - யானை, மார்பன் - சீவகன். மைந்தனாகிய பதுமுகன் என்க. ( 306 )
1863. குடைநிழற் கொற்ற வேந்த னொருமகற் காணக் குன்றா
வடிநிழ லுறைய வந்தே மடியம்யா மென்ன வெய்த
விடுகணை சென்று தோமேற் பின்முனா வீழ்த லோடுந்
தொடுகழற் குருசி னோக்கித் தூத்துகில் வீசி னானே.
பொருள் : குடைநிழல் கொற்ற வேந்தன் ஒருமகன் காண - குடை நிழலில் இருந்த கொற்ற வேந்தனாகிய சச்சந்தின் ஒரே மகனைக் காண்பதற்கும்; குன்றா அடிநிழல் உறைய - குறைவில்லாத அவனுடைய திருவடி நிழலிலே வாழ்வதற்கும்; அடியம்யாம் வந்தேம் - அடியமாகிய யாம் வந்தேம்; என்ன எய்த விடுகணை சென்று - என்று அறிவிக்குமாறு விடப்பட்ட அக்கணை சென்று; தேர் மேல் பின் முனா வீழ்தலோடும் - தேரின் மேல் மாறி வீழ்ந்த அளவிலே; தொடுகழல் குருசில் நோக்கி - அணிந்த கழலையுடைய சீவகன் பதுமுகனே எனக் கண்டு; தூத்துகில் வீசினான் மேலே பொராதபடி தூய ஆடையை எடுத்து வீசித் தன் படையை விலக்கினான்.
விளக்கம் : விடுகணை என்பது கணை என்னும் பெயரளவாகியது. அறிவிக்கும்படி எழுதி எய்த அம்பு என்பர் நச்சினார்க்கினியர். குருசில் - சீவகன். தூத்துகில் - வெள்ளிய ஆடை. போரை நிறுத்தியதற்கு அறிகுறியாக வெள்ளையாடை வீசினான் என்பது கருத்து. ( 307 )
1864. ஏந்தலைத் தோழ ரெல்லாமிணையடி தொழுது வீழச்
சேந்தன கண்ணி னாலுந் திண்ணெழிற் றோளி னாலும்
வாய்ந்தவின் சொல்லி னாலு மாலைதாழ் முடியி னாலு
மாய்ந்தவன் சிறப்புச் செய்தா னவலநோ யவருந் தீர்ந்தார்.
பொருள் : ஏந்தலைத் தோழர் எல்லாம் இணையடி தொழுது வீழ - சீவகனை அவன் தோழரெலாரும் (அரசனென்றறிந்தமையின்) இரண்டடிகளிலும் வணங்கி வீழ; சேந்தன கண்ணிணாலும் - சிவந்தனவாகிய கண்களாலும்; திண் எழில் தோளினாலும் - திண்ணிய அழகிய தோளினாலும்; வாய்ந்த இன் சொல்லினாலும் - பொருந்திய இனிய மொழியினாலும்; மாலைதாழ் முடியினாலும் - மாலை தாங்கிய முடியாலும்; அவன் ஆய்ந்து சிறப்புச் செய்தான் - சீவகன் ஆராய்ந்து சிறப்புச் செய்தான்; அவரும் அவல நோய் தீர்ந்தார் - அவர்களும் துன்ப நோய் தீர்ந்தனர்.
விளக்கம் : ஏந்தல் - சீவகன். வரிசையறிந்து கண்ணாலும் தோளாலும் இன்சொல்லினாலும் முடியினாலும் சிறப்புச்செய்தான் என்பது கருத்து. ( 308 )
1865. கழலவாய்க் கிடந்த நோன்றாட் காளைதன் காத லாரை
நிழலவா யிறைஞ்சி நீங்கா நெடுங்களிற் றெருத்த மேற்றி
யழலவாய்க் கிடந்த வைவே லரசிளங் குமரர் சூழக்
குழலவாய்க் கிடந்த கோதை தாதையூர் கொண்டு புக்கான்.
பொருள் : கழல் அவாய்க் கிடந்த நோன்தாள் காளை - கழல் அவாவித் தங்கிய வலிய தாளையுடைய சீவகன்; தன் காதலரை - தன் தோழரை; நிழல் அவாய் இறைஞ்சி நீங்கா நெடுங்களிற்று எருத்தம் ஏற்றி - தன் நிழலைப் பகை என்று அவாவித் தாழ்ந்து நீங்காத பெரிய களிற்றின் பிடரிலே ஏற்றி; அழல் அவாய்க் கிடந்த வைவேல் அரசிளங்குமரர் சூழ - கொல்லுலையை விரும்பிக்கிடந்த கூரிய வேலேந்திய அரசன் மக்கள் சூழ; குழல் அவாய்க் கிடந்த கோதை தாதையூர் கொண்டு புக்கான் - கூந்தலை அவாவிப் பொருந்திய மனையாளின் தந்தையின் நகரிலே கொண்டு சென்றான்.
விளக்கம் : கழல் அவாய்க் கிடந்த தாள் என்க. காளை - சீவகன். காதலார் - தோழர். தன்னிழலைப் பகை என்று அவாவித் தாழ்ந்து நீங்காக் களிறு என்க. அழல் - கொல்லுலையிற்றீ. கொற்றுறைக் குற்றில என்றார் பிறரும் (புறநா. 95) வங்கியம் விரும்பிக்கிடத்தற்குக் காரணமான இன்சொல்லையுடைய கோதை எனினுமாம். ( 309 )
வேறு
1866. வானக்கி நின்று நுடங்குங்கொடி மாட மூதூர்ப்
பானக்க தீஞ்சொற் பவளம்புரை பாவை யன்ன
மானக்க நோக்கின் மாடவார்தொழ மைந்த ரேத்த
யானைக்கு ழாத்தி னிழிந்தாரரி மானொ டொப்பார்.
பொருள் : வான் நக்கி நின்று நுடங்கும் கொடி - வானைப் பொருந்தி நின்று அசையுங் கொடிகளையுடைய; மாட மூதூர் - மாடங்கள் நிறைந்த முதுநகரிலே; பால் நக்க தீசொல் - பால் போன்ற மொழியினையும்; மான் நக்க நோக்கின் - மானைப்போன்ற பார்வையினையும்; பவளம் புரை பாவை அன்ன மடவார் தொழ - பவளம் போன்ற நிறமுடைய பாவைகளைப் போன்ற மங்கையர் வணங்க; மைந்தர் ஏத்த - மைந்தர்கள் போற்ற; அரிமானொடு ஒப்பார் - சிங்கத்துடன் ஒப்பாராகிய அவர்கள்; யானைக் குழாத்தின் இழிந்தார் - யானைத் திரளினின்றும் இறங்கினர்.
விளக்கம் : சீவகனும் அரசிளங் குமரரும் தோழர் நால்வரும் யானையினின்றும் இழிகின்ற காலத்துச் சீவகனையும் அரசிளங்குமரரையும் மகளிர் தொழுதாரென்றுணர்க. ( 310 )
1867. செம்பொற் புளகத் திளஞாயிறு செற்ற கோயில்
வம்பிற் றுளும்பு முலைவாணெடுங் கண்மா டவார்
நம்பப் புகுந்து நரதேவ னருளி னெய்திப்
பைம்பொற் புறகக் களற்றானடி தாம்ப ணிந்தார்.
பொருள் : செம்பொன் புளகத்து இளஞாயிறு செற்ற கோயில் - செம்பொன்னாற் செய்த கண்ணாடியால் இளஞாயிற்றைக் கெடுத்த கோயிலிலே; வம்பின் துளும்பும் முர்லை வாள் நெடுங்கண் மடவார் நம்பப் புகுந்து - கச்சுடன் மாறுபட்டசையும் முலையினையும் வாளனைய நீண்ட கண்களையும் உடைய மாதர் விரும்பப் புகுந்து; நரதேவன் அருளின் எய்தி - மன்னன்அழைக்கச் சென்றணுகி; பைம் பொன் புளகக் களிற்றான் அடிதாம் பணிந்தார் - பசிய பொன்னாலாகிய கண்ணாடி அமைத்த பருமத்தையுடைய களிற்றையுடைய அவ்வரசன் அடியிலே அவர்கள் பணிந்தனர்.
விளக்கம் : செம்பொன்னாலாகிய புளகம் என்க. புளம் - கண்ணாடி, கண்ணாடி ஒளியால் இளஞாயிறு மழுங்கிற்று என்பது கருத்து. வம்பு - கச்சு, நம்ப - விரும்ப, நம்பும்மேவும் நசையா கும்மே என்பது தொல்காப்பியம் (உரி. 31) - நரதேவன் அரசன்; தடமித்தன். ( 311 )
1868. வல்லான் புனைந்த வயிரக்குழை வார்ந்து வான்பொற்
பல்பூ ணெருத்திற் பரந்தஞ்சுடர் கால மன்னன்
மல்லார் திரடோண் மருமான்முக நோக்க மைந்த
ரெல்லா மடிக ளெனக்கின்னுயிர்த் தோழ ரென்றான்.
பொருள் : மன்னன் - தடமித்த அரசன்; வார்ந்து வான் பொன் பல் பூண் எருத்தில் - வாரப்பட்டுத் தூயதாகிய பொன்னாற் செய்த பல பூண்களையுடைய எருத்திலே; வல்லான் புனைந்த வயிரக்குழை - வல்லவன் செய்த வயிரக்குழை; பரந்து அம் சுடர் கால - பரவிய அழகிய ஒளியை உமிழ; மல்ஆர் திரள் தோள் மருமான் முகம் நோக்க - மற்றொழில் நிறைந்த திரண்ட தோளையுடைய மருமகனுடைய முகத்தைப் பார்க்க; அடிகள் - அடிகளே!; மைந்தர் எல்லாம் எனக்கு இன் உயிர்த் தோழர் என்றான் - இவர்களெல்லோரும் எனக்கு இனிய உயிர்த் தோழர் என்றான்.
விளக்கம் : மருமான் முகத்தை இவர் யார் என்னுங் குறிப்புடன் நோக்கினான். வல்லான் - கைத்தொழிலின் வல்லவன். எருத்து - பிடர். அஞ்சுடர் - அழகிய ஒளி. மல் - மற்றொழில். மருமான் - ஈண்டுச் சீவகன். அடிகள் -விளி. இம்மைந்தரெல்லாம் என்க. ( 312 )
1869. வார்பொன் முடிமேல் வயிரம்முழச் சேந்த செல்வத்
தார்பொன் னடிசூழ் மணியங்கழ லானை வேந்தன்
கார்மின் னுடங்கு மிடைமங்கையைக் காண்க சென்றென்
றோமின்னு தாரா னருளத்தொழு தேகி னாரே.
பொருள் : வார் பொன் முடிமேல் வயிரம் உழச் சேந்த - (அரசர்களுடைய) நீண்ட பொன் முடிமேல் உள்ள வயிரம் உழுதலாலே சிவந்த; செல்வத்து அடி ஆர்பொன் மணி அம் கழல்சூழ் - செல்வத்தையுடைய அடியைப் பொன்னிடத்திலே நிறைந்த மணியை உடைய கழல் சூழ்ந்த; ஆனை ஏர் மின்னுதாரான் வேந்தன் - யானையையுடைய அழகு பொருந்திய மாலையணிந்த, அரசன்; கார் மின் நுடங்கும் இடை மங்கையைச் சென்று காண்க என்று அருள் - காரிடை மின்போல அசையும் இடையையுடைய மங்கையைச் சென்று காண்க என்று அருள் செய்ய; தொழுது ஏகினார் - அவரும் வணங்கிகச சென்றனர்.
விளக்கம் : வார்தல் - பெருகுதலுமாம்; ஆர்பொன் - திருவுமாம். முடிமேற் பதித்த வயிரமணி என்க. சேந்த - சிவந்த. கழல் வேந்தன், ஆனைவேந்தன் எனத் தனித்தனி கூட்டுக. காரிடத்து மின் போல் நுடங்கும் இடை என்க. மங்கை; கனகமாலை அவரும் ஏகினார் என்க. ( 313 )
1870. தழுமுற்றும் வாராத் திரடாமங்க டாழ்ந்த கோயின்
முழுமுற்றுந் தானே விளக்காய்மிணிக் கொம்பி னின்றா
ளெழுமுற்றுந் தோளார் தொழுதாரின்ன ரென்று நோக்கக்
கழுமிற்றுக் காதல் கதிர்வெள்வளைத் தோளி னாட்கே.
பொருள் : தழு முற்றும் வாரத் திரள் தாமங்கள் தாழ்ந்த கோயில் - தழுவுவதற்கு முற்றும் வாராத திரண்ட தாமங்கள் தாழ்ந்த கோயிலின்; முழு முற்றும் தானே விளக்காய் மணிக் கொம்பின் நின்றாள் - முழுதுந்தானே விளக்கமாய்ச் சென்று மணிக்கொம்புபோல் நின்றவளை; எழுமுற்றும் தோளார் தொழுதார் - எழுவனைய தோளையுடையார் வணங்கினார்; இன்னர் என்று நோக்க - (அப்போது) இத் தன்மையர் என்று குறிப்புறச் சீவகன் கனகமாலையை நோக்கின அளவிலே; கதிர் வெள்வளைத் தோளினாட்குக் காதல் கழுமிற்று - ஒளி பொருந்திய வெள்ளிய வளையணிந்த தோளினாட்கு அன்பு நிறைந்தது.
விளக்கம் : முழுமுற்றும் என்பதை முழுதும் முற்றும் என்பதன் விகாரம் என்றும், முற்றும் என்பதை மணிக் கொம்புடன் சேர்த்தும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மற்றும், முழுமுற்றும் ஒரு சொல்லாக்கியும் உரைப்ப என்றுங் கூறுவர். வாளாண்மையும் தாளாண்மையும் வேளாண்மையுமாகிய ஆடவர் அணிசேர் தோள் எழுவினை யொத்து விளங்குவதாகும். எழு - உருக்கு. ( 314 )
1871. துறக்கம் மிதுவே யெனுந்தொன்னகர் மன்னன் மங்கை
தொறுக்கொண்ட கள்வ ரிவரோவெனச் சொல்லி நக்காங்
கொறுக்கப் படுவா ரிவரென்றங் கசதி யாடி
வெறுக்கைக் கிழவன் மகளென்ன விருந்து செய்தாள்.
பொருள் : துறக்கம் இதுவே என்னும் தொல் நகர் மன்னன் மங்கை - வானுலகம் இதுவே எனத் தகும் பழம்பதியின் மன்னன் மகள்; தொறுக் கொண்ட கள்வர் இவரோ எனச் சொல்லி நக்கு - ஆனிரை கொண்ட திருடர் இவரோ என்றுரைத்து நகைத்து; இவர் ஒறுக்கப்படுவார் என்று அசதி ஆடி - இனி இவர் தண்டஞ் செய்யத் தகுவர் என்று நகையாடி; அங்கு வெறுக்கைக் கிழவன் மகள் என்ன விருந்து செய்தாள் - அப் போது இருநிதிக் கிழவன் மகளென்னும்படி விருந்து செய்வித்தாள்.
விளக்கம் : துறக்கம் - தேவருலகம், மன்னன் மங்கை; கனகமாலை, தொறு - ஆனிரை, ஆனிரை கொண்ட கள்வராதலான் இவர் தண்டிக்கப்படுவர் என்றவாறு. அசதியாடுதல் - பரிகசித்து நகுதல். வெறுக்கைக் கிழவன்; குபேரன். வெறுக்கைக்கிழவன், மகள் செய்யும் விருந்து போன்று சிறந்த விருந்து செய்தாள் என்றவாறு. ( 315 )
1872. அருந்தீத் தொழிலே புரிந்தான்மறை யாய வெல்லாம்
விருந்தா விரிப்பா னவன்சீவக சாமி வேறா
விருந்தாற்கொ ரோலை கொடுத்தானெரி குண்ட லத்தாற்
பொருந்தார் பொறியைப் புறநீக்குபு நோக்கு கின்றான்.
பொருள் : அருந் தீத்தொழிலே புரிந்தான் - அரிய வேள்வி யியற்றும் மரபினனான் புத்திசேனன்; மறை ஆய எல்லாம் விருந்து ஆவிரிப்பான் - மறைந்த காரியங்கள் எல்லாம் புதிதாக் கூறவேண்டி; அவன் சீவகசாமி வேறா இருந்தாற்கு - (வந்த) அவன் சீவகசாமி தனியே இருந்தவனுக்கு ஓர் ஓலை கொடுத்தான் - ஒரு திருமுகத்தைக் கொடுத்தான் : எரி குண்டலத்தால் பொருந்து ஆர் பொறியைப் புறம் நீக்குபு நோக்குகின்றான். ஒளிவிடும் குண்டலத்தால் பொருந்துதல் நிறைந்த குழையைப் புறத்தினின்றும் நீக்கி வாசிக்கின்றான்.
விளக்கம் : பொறி, தத்தம் பொருள் வயின் தம்மொடு சிவணிய ஆகுபெயரிலேயாய்க் குழையை உணர்த்திற்று. அருந் தீத்தொழில் - செய்தற்கரிய வேள்விச் செயல். விருந்தாக எனற்பாலாது ஈறுகெட்டது. விரிப்பான் : வினையெச்சம். அவன் : புத்தி சேனன். வேறா - வேறாக. பொருந்து ஆர் எனக் கண்ணழித்துக் கொள்க. பொறி - இலச்சினை. ( 316 )
வேறு
1873. மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ்ச்
சிற்றடிச்சி தத்தையடி வீழ்ச்சி திருவடிகட்
குற்றடிசின் மஞ்சனத்தை யுள்ளுறுத்த காப்பும்
பொற்புடைய வாகவெனப் போற்றி யடிவீழ்ந்தேன்.
பொருள் : சிற்றடிச்சி தத்தை அடி வீழ்ச்சி - சிற்றடிச்சியான தத்தை அடியிலே வீழ்ந்திருப்பதை; அடிகள் மலரடிக் கீழ்க் கண்டருளிச் செய்க - அடிகள் தம் மலரடியிலே பார்த்தருளிச் செய்க; திருவடிகட்கு உற்ற அடிசில் மஞ்சனத்தை உள்ளுறுத்த காப்பும் - திருவடிகளுக்குப் பொருந்திய அடிசிலையும் மஞ்சனத்தையும் உள்ளிட்டனவும் பிற காப்புக்களும் ; பொற்பு உடையவாக எனப் போற்றி அடி வீழ்ந்தேன் - தகுதி யுடையனவாக என்று வாழ்த்தி அடியிலே வீழ்ந்தேன்.
விளக்கம் : மற்று; அசை . நச்சினார்க்கினியர் இச் செய்யுளிற் கொண்டு கூட்டி உரைக்கும் முடிபும் பொருளும்:- மற்றுக் காப்பென்க; அரசன் நுகருவனவற்றைக் காப்பென்றல் மரபு. அடியிலே உற்றுப் போற்றியென்க. என்றது சமைக்கின்ற பொழுது உற்றுக் காக்கப்பட்டு என்றவாறு. திருவடிகட்கு அடிசிலையும் மஞ்சனத்தையும் உள்ளிட்டனவும் மற்றுக் காப்புக்களும் அடியிலே உற்றுப் போற்றப்பட்டுப் பொற்புடையவாக வேண்டுமென்று சிற்றடியாளாகிய தத்தை மலரடிக் கீழ் வீழ்ந்தேன். அவ்வடி வீழ்ச்சியை அடிகள் நெஞ்சாலே கண்டருள்க என்றவாறு.இவை காத்தல் தனக்குக் கடனாதலின், முற்கூறினாள். ( 317 )
1874. வயிரமணிக் கலன்கமழுங் கற்பகநன் மாலை
யுயிரைமதஞ் செய்யுமதுத் தண்டொடுடை யாடை
செயிரினறுஞ் சாந்துசிலை யம்புமணி யயில்வாண்
மயிரெலியின் போர்வையொடெம் மன்னன்விடுத்தானே.
பொருள் : வயிர மணிக்கலன் - வயிர மணிகளாகிய பூண்களும்; கற்பக நன்மாலை - அழகிய கற்பக மாலையும்; உயிரை மதஞ் செய்யும் மதுத்தண்டொடு - உயிருக்குக் களிப்பூட்டும் மதுத் தண்டும்; உடை - உடையும்; ஆடை - ஆடையும்; செயிர் இல் நறுஞ் சாந்து - குற்றமற்ற நல்ல சாந்தும்; சிலை - வில்லும்; அம்பு - கணையும்; மணி - மணியும்; அயில் - வேலும்; வாள் - வாளும்; எலியின் மயிர்ப் போர்வையொடு - எழிமயிர்ப் போர்வையுடன்; எம் மன்னன் விடுத்தான் - கலுழவேகன் வரவிட்டான்.
விளக்கம் : மதுத்தண்டு - வீரபானம் இருக்குங் குழாய், உம்மையும் இரண்டனுருபும் விரிக்க. ( 318 )
1875. வந்தவனை யாருமறி யாமன்மறை யாகத்
தந்துதரன் கேட்பவிது சாமிவலித் தானா
வைந்துமதி யெல்லையினை யாண்டுடைய னாகி
யந்திலகன் றான்றமரொ டாங்கணெனச் சொன்னேன்.
பொருள் : வந்தவனை யாரும் அறியாமல் மறையாகத் தந்து - வந்தவனாகிய தானை ஒருவரும் அறியாமல் மறைவாகக் கொண்டு வந்து வைத்து; தரன் கேட்ப - அவன் கேட்கும்படி; ஐந்துமதி எல்லையினை ஆண்டு உடையனாகி - ஓர் ஆண்டிற்கு ஐந்து திங்களளவு குறையாக உடையனாகி; தமரோடு ஆங்கண் அகன்றான் - உறவினரோடே ஏமமாபுரத்தே அகன்றான்; எனச் சாமி வலித்தான் ஆ சொன்னேன் - என்று இதனைச் சாமி தானே அருளிச் செய்தானாகக் கூறினேன்.
விளக்கம் : தோழர் ஏமமாபுரத்திற்கு ஏறப் போவதற்கு முன்பே ஏழு திங்கள் சென்றமை, இங்கிவர்கள் இவ்வாறு (சீவக. 492) என்னுஞ் செய்யுளிற் கூறனாம். பின்பு, தோழர் தாபதப் பள்ளியிற் செல்ல ஒன்றும், ஒருமதி எல்லை நாளுட் ... கொணர்ந்த பின்றை (சீவக. 1817) எனவே சீவகன் வந்து விசயையைக் காண ஒன்றும், இவனைக் கண்டு ஊரேறப் போக ஒன்றும், மாமனாரிடத்துச் செல்ல ஒன்றும், மீண்டு ஊர் செல்ல ஒன்றும் ஆக ஐந்து திங்களும் சென்றவாறுணர்க என்று கால விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 319 )
1876. பட்டபழி வெள்ளிமலை மேற்பரத்த லஞ்சித்
தொட்டுவிடுத் தேனவனைத் தூதுபிற சொல்லிப்
பட்டபழி காத்துப்புக ழேபரப்பி னல்லால்
விட்டலர்ந்த கோதையல ரால்விளைவ துண்டோ.
பொருள் : பட்டபழி வெள்ளிமலை மேல் பரத்தல் அஞ்சி - கட்டியங்காரன் சிறைசெய்தான் என்று பிறந்தபழி வெள்ளி மலைமேற் பரவுதலை அஞ்சி; பிற தூது சொல்லி - வேறே சிலவற்றைக்கூறி; அவனைத் தொட்டு விடுத்தேன் - அவனை என்னைத் தொட்டுச் சூளுறவு கொண்டு போகவிட்டேன்; பட்ட பழி காத்துப் புகழே பரப்பின் அல்லால் - இனி இப் பழியை மறைத்து அரசவுரிமை எய்திப் புகழைப் பரப்புதல் அல்லது; விட்டலர்ந்த கோதையவரால் விளைவது உண்டோ - முறுக்குவிட்டு மலர்ந்த கோதையவர்களை மணஞ் செய்கின்ற அதனால் விளைவதொரு புகழில்லை.
விளக்கம் : பழி வெள்ளிமலை மேற் பரத்தல் அஞ்சி எனவே இவன் சிறைப்பட்டமை கலுழ வேகனும் அறிந்திலன் என்பது பெற்றாம். எனவே, பொன்னணி (சீவக. 1147) என்னும் செய்யுளில், தெய்வ மாதரைச் சூழ்ந்த என்றும், சந்தமாலை (மேற்படி. 1160) என்னுஞ் செய்யுளில், வந்த விண்ணோர்களை என்றும், அவள் வழிபட்ட தெய்வங்கள் வந்து நினைத்தவை முடித்துக்கொடுக்கும் என்ற தன்றித் தன் படையாகிய விஞ்சையர் ஈண்டு வந்தார் என்னாமை உணர்க. அவ் விஞ்சையரை அழைக்குங்கால், தன்னுடை விஞ்சை எல்லாம் தளிரியல் ஓதலோடும் (மேற்படி1147) என்ன வேண்டாவாகலின். ( 320 )
1877. அல்லதுவு மெங்கைகுண மாலையவ ளாற்றாள்
செல்லுமதி நோக்கிப்பக லேசிறியை யென்னும்
பல்கதிரை நோக்கிமதி யேபெரியை யென்னு
மெல்லியிது காலையிது வென்பதறி கல்லாள்.
பொருள் : அல்லதுவும் - அதுவன்றி; எங்கை குணமாலையவள் ஆற்றாள் - எங்கையாகிய குணமாலையானவள் அமைதியில்லாமல்; எல்லியிது காலையிது என்பது அறிகல்லாள் - இரவிது பகலிது என்பதை அறியாளாய்; செல்லும் மதி நோக்கிப் பகலே சிறியை என்னும் - செல்கின்ற திங்களைப் பார்த்து, வெம்மையினாற், பகலே! சிறியை என்பாள்; பல்கதிரை நோக்கி மதியே பெரியை என்னும் - ஞாயிற்றை நோக்கித் தண்மையான், திங்களே! பெரியை என்பாள்.
விளக்கம் : அல்லதுவும் - அப்பழியன்றியும், எங்கை - என் தங்கை. குணமாலை யவன் என்புழி அவள் பகுதிப்பொருளது. செல்லுமதி - ஊர்கின்ற திங்கள். பல்கதிர் - ஞாயிறு. திங்களை ஞாயிறென்பள் ஞாயிற்றைத் திங்கள் என்பள் என்க. ( 321 )
1878. அரவுவெகுண் டன்னவக லல்குனிலம் புல்லித்
திருவில்வளைந் தனையதிரு மேகலையி னீங்கிப்
புருவமதி முகமும்புகழ் தோளும்புணர் முலையு
முருவமழிந் தடிச்சியுள் ளாங்கொலுணர் கலனே.
பொருள் : அரவு வெகுண்டன்ன அகல் அல்குல் நிலம் புல்லி - பாம்பு சீறிப் படம் விரித்தாற்போன்ற அல்குலையுடையாள் நிலத்தே வீழ்ந்து; திருவில் வளைந்தனைய திருமேகலையில் நீங்கி - வானவில் வளைந்தாற்போலும் திருவாகிய மேகலையினின்றும் நீங்கி; புருவ மதி முகமும் புகழ் தோளும் புணர்முலையும் உருவம் அழிந்து - புருவத்தையுடைய திங்களனைய முகமும் தோளும் முலைகளும் வடிவழிதலாலே; அடிச்சி உள் ஆம்கொல் உணர்கலனே - அவள் பிழைப்பாளோ, இறப்பாளோ? அறியேன்.
விளக்கம் : அல்குல்; குணமாலை. திருவில் - வானவில். புருவத்தையுடைய மதிபோலும் முகம் என்க. புணர் முலை : வினைத்தொகை உருவம் - அழகு, அடிச்சி என்றது குணமாலையை; நும் மடிச்சி என்ற வாறு. கொல்; ஐயப் பொருட்டு. ( 322 )
1879. நாளைவரு நையலென நன்றெனவி ரும்பி
நாளையெனு நாளணிமைத் தோபெரிதுஞ் சேய்த்தோ
நாளையுரை யென்றுகிளி யோடுநகச் சொல்லு
நாளினுமிந் நங்கைதுயர் நாளினுமற் றிதுவே.
பொருள் : நாளை வரும் நையல்என - சீவகன் நாளை வருவான், நீ வருந்தாதே என்று கிளிகூற ; நன்று என விரும்பி - அது நன்று என்று விரும்பி; நாளை யெனும் நாள் - நீ கூறிய நாளையென்னும் நாள்; அணிமைத்தோ? பெரிதும் சேய்த்தோ? - நெருங்கியுளதோ? மிகவும் தொலைவில் உள்ளதோ?; நாளை உரை என்று - அந் நாளைக் கூறு என்று ; கிளியோடு நகச் சொல்லும் - கிளியோடு அது நகுமாறு கூறுவாள்; இந் நங்கை துயர் நாளினும் நாளினும் இதுவே - இக் குணமாலையின் துயர் நாளினும் நாளினும் இத் தன்மைத்து
விளக்கம் : மற்று : அசை. கிளி நாளைச் சீவகன் வரும் நையல் என்று கூற என்க. நையல்; முன்னிலை ஒருமை வினைமுற்று. அணிமைத்து - அண்மையில் உள்ளது. சேய்த்து - தொலைவிலுள்ளது. ஓகாரமிரண்டும் வினா அந்நாளை யுரை எனச் சுட்டு வருவிக்க. இந்நங்கை என்றது குணமாலையை ( 323 )
வேறு
1880. நோக்கவே தளிர்த்து நோக்கா
திமைப்பினு நுணுகு நல்லார்
பூக்கம ழமளிச் சேக்கும்
புதுமண வாள னார்தா
நீப்பிலார் நெஞ்சி னுள்ளா
ராதலா னினைத்தல் செய்யேன்
போக்குவல் பொழுதுந் தாந்தம்
பொன்னடி போற்றி யென்றாள்.
பொருள் : நோக்கவே தளிர்த்து நோக்காது இமைப்பினும் நுணுகும் நல்லார் - பார்க்கவே தளிர்த்துப் பாராமல் இமைத்தாலும் மெலியும் பெண்களின்; பூக் கமழ் அமளிச் சேக்கும் புது மணவாளனார் தாம் - மலர் மணங் கமழும் படுக்கையிலே தங்கும் புது மணவாளப் பிள்ளையார் தாம்; நீப்பிலார் நெஞ்சினுள்ளார் ஆதலான் இனைத்தல் செய்யேன் - நீங்காமல் நெஞ்சி லிருக்கின்றாராகையால், யான் வருந்தல் செய்யேனாய்; பொழுதும் போக்குவல் - காலமுங் கழிப்பேன்; தாம் தம் பொன் அடிபோற்றி என்றாள் - தாம் தம்மைப் பாதுகாப்பாராக என்று எழுதினாள்.
விளக்கம் : நோக்கவே தளிர்த்து நோக்கா திமைப்பினும் நுணுகு நல்லார் என்றது மகளிரின் பிரிவாற்றாமையைத் திறம்படவிளக்கி நிற்றல் உணர்க. புதுமணவாளனார் என்றது பழையேம் ஆகிய எம்மை நீத்து எப்பொழுதும் புது மணமே விரும்பு மியல்புடையாய் என அசதியாடியவாறு. ( 324 )
1881. இலவம்பூ வாக்குண் டன்ன
பஞ்சிமெல் லடியி னாடன்
புலவிச்சொற் பொறித்த வோலை
திருமுடி துளக்கி நோக்கித்
தலைவைத்த காப்பு விஞ்சை
கொண்டபின் றாமஞ் சூழ்ந்து
கொலைவைத்த குருதி வேலான்
றோழரைக் குறுகி னானே.
பொருள் : இலவம்பூ அரக்கு உண்ட அன்ன - இலவம் பூவிற் சாதிலிங்கம் ஊட்டப் பெற்றால் ஒத்த; பஞ்சி மெல்லடியினாள் தன் - செம்பஞ்சு ஊட்டிய மெல்லிய அடியையுடைய தத்தையின்; புலவிச் சொல் பொறித்த ஓலை - புலவி மொழி எழுதிய ஓலையை; திருமுடி துளக்கி நோக்கி - திருமுடியைச் சாய்த்துப் பார்த்து ; தலைவைத்த காப்பு விஞ்சை கொண்ட பின் - ஓலையின் முடிவில் எழுதின தனக்குக் காவலாகிய விஞ்சையை உட்கொண்ட பின்னர்; தாமம் சூழ்ந்து - வெற்றிமாலை சூழப் பட்டு; கொலை வைத்த குருதி வேலான் - கொலைத் தொழிலைத் தன்னிடத்தே கொண்ட குருதி வேலினான்; தோழரைக் குறுகினான் - தோழரை யடைந்தான்.
விளக்கம் : இயல்பாகவே சிவந்த அடியாகலின் இலவம்பூ அரக்குண்டன்ன என்றார். பஞ்சி - செம்பஞ்சிக் குழம்பு. முன் புதுமணவாளனார் என்ற சொல் அவள் புலவியைப் புலப்படுத்தாதாகலின் புலவிச் சொற் பொறித்த வோலை என்றார். அவ்வோலையின்கண் எழுதிய சொற் பொருளழகு கண்டு முடிதுளக்கினான் என்பது கருத்து. ( 325 )இதன் பின் சில பிரதிகளிற் காணப்படுஞ் செய்யுள்:-அடிகணீ ரரச ராதல் அறிந்திலேம் மேலை நாட்கண் - தொடியணி தோளும் நல்ல ஆகமும் புல்லி நும்மைக் - குடி வழி வந்த தோலாக் கந்துகன் மகனென் றெண்ணி - அடிகணாம் இகழ்ந்ததெல்லாம் அருளுக என்று நின்றார்.
வேறு
1882. எங்கோமற் றென்றிறநீர் கேட்டதென்
றாற்கெரி மணிப்பூட்
செங்கோன் மணிநெடுந்தோச் செல்வன்
காதற் பெருந்தேவி
தங்காத் தவவுரு வந்தாங்கித்
தண்டா ரணியத்து
ளங்காத் திருந்தாளைத் தலைப்பட்
டைய வறிந்தோமே.
பொருள் : என்திறம் நீர் கேட்டது எங்கோ என்றாற்கு - நீர் என் திறனைக் கேட்டது எங்கேயோ என்று வினவினாற்கு ; ஐய! - ஐயனே!; எரிமணிப்பூண் செங்கோல் மணிநெடுந்தேர்ச் செல்வன் - ஒளியுடைய மணிக்கலன்களும் செங்கோலும் மணி நெடுந்தேரும் உடைய சச்சந்த மன்னனின்; காதல் பெருந்தேவி - அன்புடைய பட்டத்தரசி விசயை ; தங்காத் தவ உருவம் தாங்கி - தனக்கேலாத தவ உருவத்தைச் சுமந்து; தண்டாரணியத்துள் - தண்டாரணியம் என்னும் வனத்திலே; அங்காத்து இருந்தாளை - மனத்தே நீ வாழ வேண்டுமென்ற ஆசை பிணிக்கப் பட்டுத் துறவோருறையும் அவ்விடத்தே இருந்தவளை; தலைப் பட்டு அறிந்தோம் - எதிர்ப்பட்டு அறிந்தோம்.
விளக்கம் : ஆத்த பொறிய (நாலடி. 290) ஆத்த அறிவினர் ங்நாலடி. 151சி என்றாற்போல ஆத்து என்றார். இனி உளங்காத்து என்றும் பாடமோதுப. பொள்ளெனக் கூறின் அவன் துன்பம் எல்லையற்றதாம் என நின்தாய் என்னாது ஏதிலாட்டிபோலச் செல்வன் காதற் பெருந்தேவி என்றார். செல்வன் என்றது சச்சந்தனை. தண்டாரணியம் - தண்டகாரணியம். ( 326 )
1883. என்னேமற் றென்னேநீர் மொழிந்ததென்
னேயென விரும்பி
முன்னேமொ ழிந்தாற்போன் முறைநின்
றெல்லா முடன்மொழிய
மன்னாஞ் சிந்துவபோன் மலர்ந்த
செந்தா மரைக்கண்ணீர்
பொன்னார மார்பின்மேற் பொழியப்
புன்க ணுற்றானே.
பொருள் : விரும்பி முற்று நீர் மொழிந்தது என்னே என்னே என்னே என - சீவகன் விரும்பி, இனி நீர் கூறியது என்னே! என்னே! என்னே! என்று வினவ; முன்னே மொழிந்தாற் போல் முறைநின்று எல்லாம் உடன் மொழிய - விசயை இவனுக்குமுன்னே நின்று கூறினாற்போலச் செய்தி யெல்லாம் அடைவே சேரச் சொல்ல; மன் ஆரம் சிந்துவ போல் - நிலையாக முத்துக்களைச் சிந்துவது போல; மலர்ந்த செந்தாமரைக் கண்ணீர் - மலர்ந்த செந்தாமரை மலரனைய கண்களிலிருந்து நீர்; பொன் ஆரம் மார்பின் மேல் பொழியப் புன்கண் உற்றான் - பொன்னும் ஆரமும் உடைய மார்பிலே சொரியத் துன்பம் அடைந்தான்.
விளக்கம் : விரைவாதலின் மூன்றடுக்கினார். விசயை யிருப்பதை ஆசிரியன் வாயிலாக விளங்கக் கேளாமையின், இங்ஙனம் ஈண்டு வினவினான். ( 327 )
1884. அஃதே யடிகளும் முளரோ
வென்றாற் கருளுமா
றிஃதா விருந்தவா றென்றார்க்
கென்னைப் பெறவல்லார்க்
கெய்தா விடருளவே யெங்கெங்
கென்றத் திசைநோக்கி
வெய்தா வடிதொழுது வேந்தன்
கோயிற் கெழுந்தானே.
பொருள் : அஃதே? அடிகளும் உளரோ? என்றாற்கு - நீர் கூறிய அதுவோ? அடிகளும் உள்ளாரோ? என்ற சீவகனுக்கு; அருளுமாறு இருந்த ஆ இஃதா என்றார்க்கு - தெய்வம் அருள் இருந்தபடி இத் தன்மைத்தாக இருந்தது என்றார்க்கு; என்னைப் பெறவல்லார்க்கு எய்தா இடர் உளவே - என்னைப் பெறவல்ல தீவினை உடையார்க்கு எய்தா திருப்பன சில தீவினை இல்லை; எங்கு எங்கு என்று அத் திசை நோக்கி - அவரிருக்கின்ற திசை எங்கே எங்கே என்று கூறி அத் திசையை நோக்கி; வெய்தா அடி தொழுது - விரைய அடியை வணங்கி; வேந்தன் கோயிற்கு எழுந்தான் - (பின்பு) அரசன் கோயிலுக்குப் போனான்.
விளக்கம் : முற்செய்யுளின்கண் என்னே! என்னே! என்னே! எனவும் இச்செய்யுளின்கண் எங்கு எங்கு (எங்கு) எனவும் அடுக்கு மாற்றால் இப்புலவர் பெருமான் சீவகன் மனநிலையை நம்மனோர்க் குணர்த்துகின்ற புலமைத்திறம் நினைந்து மகிழற்பாலாது. ( 328 )
1885. இலைவிரவு பூம்பைந்தார் வேந்த
னேந்தல் குலங்கேட்பான்
மலைவிரவு நீண்மார்பின் மைந்தன்
றோழர் முகநோக்கிக்
கொலைவிரவு கூர்நுதி வேற்குமர
னென்னக் குருகுலத்தான்
கலைவிரவு தீஞ்சொல் லார்காம
னென்றார் கமழ் தாரார்.
பொருள் : இலைவிரவு பூம்பைந்தார் வேந்தன் - இலை விரவிய மலர்மாலை வேந்தன்; ஏந்தல் குலம் கேட்பான் - சீவகன் குலத்தைக் கேட்க வேண்டி; மலைவிரவு நீண் மார்பின் மைந்தன் தோழர் முகம் நோக்கி - மலை போன்ற அகன்ற மார்பினையுடைய சீவகனுடைய தோழர் முகத்தைப் பார்த்து; கொலைவிரவு கூர்நுதி வேல் குமரன் என்ன - கொலை பொருந்திய கூரிய நுனியையுடைய வேலேந்திய குமரன் என்று கூறிய அளவிலே; கலைவிரவு தீஞ்சொல்லார் கமழ்தாரார் - கலையறிவு பொருந்திய இனிய சொல்லாராகிய மணங்கமழ் மாலையார்; காமன் குருகுலத்தான் என்றார் - இக் காமன் குருகுலத்தான் என்றார்.
விளக்கம் : மலைவிரவு : விரவு : உவம உருபு வேந்தன்; தடமித்தன். கேட்பான் : வினையெச்சம். மைந்தன் என்றது சீவகனை. சொல்லார் காமன் குருகுலத்தான் என்றார் என்க. முன்னர் நந்தட்டனைத் தடமித்தன் வினவி நாடும் ஊரும் உணர்ந்திருந்தான், தடமித்தன் உணர விரும்பியவை நாடும் ஊரும் குலனும் ஆகும். இதனை 1852 ஆம் செய்யுளான் உணரலாம். ஆண்டு நந்தட்டன் குலங்கூறுமுன்னர் அவன் கூறலாகாதபடி புலவர் பெருமான் செய்வித்துக்கொண்டு ஈண்டு வெளிப்படுத்தமை காப்பியம் இனிமையுடையதாதற்கு இன்றியமையாதாயிற்று. ( 329 )
1886. அண்ணல் குருகுலத்தா னென்றால்
யான்முன் கருதியதென்
ணெண்ணம் வெளிப்பட்டான் கரந்த
மைந்த னெரிசெம்பொன்
வண்ண வரைமார்ப முயங்கி
நுண்ணூன் மதியாரோ
டெண்ணி வியநெறியால் விடுத்தான்
கோயில் புக்கானே.
பொருள் : அண்ணல் குருகுலத்தான் என்றால் - தலைவன் குருகுலத்தான் எனின்; யான் முன் கருதியது - இது யான் முன் நினைத்த குலம்; என் எண்ணம் வெளிப்பட்டான் - என் எண்ணத்திலே வெளியானான்; (என்று எழுந்து) கரந்த மைந்தன் எரி செம்பொன் வண்ணமார்பம் முயங்கி - மறைந்திருந்த சீவகனுடைய ஒளிவிடும் பொன் மார்பிலே தழுவி; நுண் நூல் மதியாரொடு எண்ணி - நுண்ணிய நூலறிந்த அமைச்சருடன் ஆராய்ந்து; விய நெறியால் விடுத்தான் - போகவிடும் நெறியாலே போகவிட்டான்; கோயில் புக்கான் - சீவகனும் கனகமாலையின் கோயிலை அடைந்தான். ( 330 )
1887. விள்ளா வியனெடுந்தோ வேந்தன்
காதன் மடமகளே
கள்ளாவி கொப்புளிக்குங் கமழ்பூங்
கோதா யென்மனத்தி
னுள்ளாவி யுள்ளாய்நீ யொழிந்தா
யல்லையெனக் கையிற்
புள்ளாவிச் செங்கழுநீர்க் குவளை
செய்தாள் புனைபூணாள்.
பொருள் : வியன் நெடுந்தேர் வேந்தன் காதல் விள்ளா மடமகளே! - பெரிய நீண்ட தேரையுடைய வேந்தனின் அன்பு நீங்காத மகளே!; கள்ஆவி கொப்புளிக்கும் கமழ்பூங் கோதாய்! தேனின் மணத்தை உமிழும் மணங் கமழ் மாலையாய்!; என் மனத்தின்உள் ஆவி உள்ளாய் - என் மனத்திலே உறைகின்ற உயிராய் உள்ளாய்; நீ ஒழிந்தாய் அல்லை - (ஆதலின்) நீ நீங்கினாய் அல்லை; என - என்று பிரிவின் - குறிப்புப் புலப்படக் கூற; புனை பூணாள் - அதனை உணர்ந்த பூணினாள் ; கையில் புள் ஆவிச் செங்கழுநீர் - தன் கையில் இருந்த, வண்டிற் குயிராகிய செங்கழு நீரை; குவளை செய்தாள் - தன் நெட்டுயிர்ப்பினாற் கருங்குவளையாக்கினாள்.
விளக்கம் : இனி, கள்ளாவி கொப்புளிக்கும் என்பதற்குக் கள்ளை நீராவியாகக் கொப்பளிக்கும் என்றும் , ஆவி உள்ளாய் என்பதற்கு, உயிரிலே இருத்தலின் என்றும், புள் ஆவிச் செங்கழுநீர் என்பதற்கு, அன்னங்களை உடைய வாவியிற் கழுநீர் என்றும் உரைப்ப. ( 331 )
1888. வார்முயங்கு மென்முலைய வளைவேய்த்
தோளாண் மனமகிழ
நீர்முயங்கு கண்குளிர்ப்பப் புல்லி
நீடோ ளவனீங்கித்
தோமுயங்கு தானையான் சிறுவர்
சேடா ரகன்மார்பந்
தார்முயங்கிக் கூந்தன்மா விவர்ந்தான்
சங்க முரன்றவே.
பொருள் : வார் முயங்கும் மென்முலைய வளைவேய்த் தோளாள் மகிழ - (அதுகண்டு) கச்சிறுகும் மென் முலையையும் வளையணிந்த மூங்கிலனைய தோளினையும் உடையாள் மகிழவும்; நீர் முயங்கு கண் குளிர்ப்ப - நீர் தழுவிய கண் குளிரவும்; நீள் தோளவன் புல்லி - நீண்ட தோளுடைய சீவகன் தழுவி; நீங்கி - அங்கிருந்து போய்; தேர் முயங்கு தானையான் சிறுவர் - தேரையுடைய படையினனின் மக்களின்; சேடு ஆர் அகல் மார்பம் தார் முயங்கி - பெருமை பொருந்திய அகன்ற மார்பிலே தாருறத் தழுவி; கூந்தல்மா இவர்ந்தான் - புரவிமீது ஏறினான்; சங்கம் முரன்ற - சங்குகள் ஒலித்தன.
விளக்கம் : வார் - கச்சு, தோளாள் : கனகமாலை. பிரிவை நினைந்து கண்ணீர்மல்க நிற்றல் தோன்ற, நீர் முயங்குகண் குளிர்ப்ப என்றார். தோளவன் : சீவகன். தானையான் சிறுவர் என்றது விசயன் முதலியோரை. சேடு - பெருமை, கூந்தன்மா - குதிரை. ( 332 )
கனகமாலையார் இலம்பகம் முற்றும்.
-------------------
This file was last updated on 03 June 2019.
Feel free to send the corrections to the Webmaster.