அசோகர் கதைகள்
பாவலர் நாரா. நாச்சியப்பன்
acOkar kataikaL
by nArA nAcciyappan
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image/PDF of this work.
The e-text has been generated using Google OCR online tool.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அசோகர் கதைகள்
ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்
Source:
அசோகர் கதைகள் (1975)
ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்
தமிழாலயம்
232, பைகிராப்ட்ஸ் சாலை
சென்னை-600014.
முதற் பதிப்பு: ஜனவரி 1966, இரண்டாம் பதிப்பு மார்ச் 1975
உரிமை ஆசிரியருக்கே.
விற்பனை உரிமை: மீனாட்சி புத்தக நிலையம்,
60 மேலக் கோபுரத் தெரு, மதுரை -1
--------------
பதிப்புரை
மாமன்னர் அசோகர் இந்திய வரலாற்றில் பெற்றுள்ள இடம் பெரியது. நாடுகள் பலவற்றைக் கட்டியாண்ட பெரு மன்னர் என்பதோடு, கலிங்கப் போரிலே அவர் கொண்ட பெருத்த மனமாற்றமும் கூடி அவருக்குப் பெருஞ்சிறப்பை யளித்தது.
மாமன்னர் அசோகர் மனமாற்றம் கொண்ட பிறகுங் கூட அவருடைய பேரரசு எவ்விதக் குறையும் குறைவும் அற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்குக் காரணம் அவருடைய மனக் கவர்ச்சியாற்றல் தான்!
மாமன்னர் அசோகரின் குணப்பண்பை அடிப்படையாகக் கொண்டு திரு. நாரா நாச்சியப்பன் புனைந்துள்ள இந்தக் கற்பனைக் கதைகள் சுவைமிக்கவை. இளஞ் சிறுவர்களுக்கு நல்ல படிப்பினைக் கதைகளாகவும், பெரியவர்களுக்குச் சிறந்த இலக்கியமாகவும், இரு பயன் நல்கும் இக்கதைகளைப் பெருமையுடன் வெளியிடுகிறோம்.
--தமிழாலயம்
-------------
அசோகர் கதைகள்
கதை ஒன்று - துன்பம் போக்கும் அன்பர்
மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அசோகர் இனிமேல் போரே நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தார். போரினால் மக்கள் அடையும் துன்பங்களை நேரில் கண்டறிந்து மனம் மாறிய பின் அவர் இவ்வாறு உறுதி செய்துகொண்டார். இந்தச் செய்தி பரத கண்டம் முழுவதும் பரவியது.
ஒரு சிற்றுாரிலே இருந்த பெரியவர்கள் ஒருநாள் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"துன்பம் அடைந்தவர்களைக் கண்டால் அரசர் அப்படியே கண்ணிர் விட்டு விடுகிறாராம்! யாராவது ஏதாவது கவலை என்று சொன்னல் அதை உடனே தீர்ப்பதற்கு வழி செய்கிறாராம்!அரசர் அடியோடு மாறிவிட்டார்" என்றார் ஒரு பெரியார்.
"உண்மைதான். மற்ற உயிர்களைத் தம் உயிர்போல் மதிக்கும் மனப்பான்மை ஒருவருக்கு வந்துவிட்டால், அவர் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே பாடுபடுவார். புத்த பெருமானின் வழியில் திரும்பிய அசோக மன்னர், இரக்கம் கொண்டவராக மாறியதில் வியப்பில்லை” என்றார் அவ்வூர்ப் பள்ளி ஆசிரியர்.
"கவிஞர் ஒருவர் சாப்பாட்டுக்கில்லாமல் பட்டினியாய்க் கிடக்கிறார் என்று யாரோ தெருவில் பேசிக்கொண்டார்களாம். மாறுவேடத்தில் சென்ற மாமன்னர் இதைக் கேள்விப்பட்டு, உடனே உண்மையை அறிந்து, கவிஞர் வீட்டுக்கு வண்டி வண்டியாய்த் தானியங்கள் அனுப்பி வைத்தாராம்!" என்று வெளியூரிலிருந்து வந்த ஒரு வணிகர் கூறினார்.
இப்படியே மாமன்னர் அசோகரைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டவற்றையும் அறிந்தவற்றையும் கூறிப் புகழ்ந்து பொழுது போக்கிக்கொண்டிருந்தார்கள் அந்த ஊர்ப் பெரியவர்கள். அவர்கள் பேசியவற்றையெல்லாம் ஓர் இளைஞன் கவனித்துக் கொண்டிருந்தான்.
அந்த இளைஞனுடைய தந்தை ஒரு போர் வீரன். அந்தப் போர் வீரன், இளைஞன் சிறு பிள்ளையாய் இருந்த போதே ஒரு போரில் நெஞ்சில் அம்பு பாய்ந்து இறந்து போனான். அந்த இளைஞனை அவனுடைய தாய் தான் வளர்த்துவந்தாள். அவள் எப்படியோ பாடுபட்டு அவனைக் கவலையில்லாமல் வளர்த்துவந்தாள். ஒரே பிள்ளையாகையால் அவள் அவனை அடக்கி வளர்க்கவில்லை.
அந்த இளைஞன் சிறு வயதில் ஒழுங்காகப் பள்ளிக்குப் போகவில்லை. வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியில் எங்காவது போய்ச் சுற்றிவிட்டு வருவான். அவன் வளர்ந்த பிறகு அவன் தாய் சிலசமயம் அவனைக் கடிந்துகொள்ளுவாள். படிக்கவில்லை என்றாலும் ஏதாவது வேலை பழகிக்கொள்ளக் கூடாதா என்று கேட்பாள். ஆனால் அவளுடைய பேச்சையெல்லாம் அவன் உதறித் தள்ளிவிடுவான். தான் உழைத்துப் பெறும் கூலியில் தாய் அரிசியும் காய்கறியும் வாங்கிவந்து அவனுக்கும் சோறு சமைத்துப் போடுவாள். ஒருநாளாவது அவன் வயதான தன் தாயின் உழைப்பில் தின்று தான் சோம்பேறியாய் இருந்துகொண்டிருப்பது தவறு என்று நினைத்துப் பார்த் ததே யில்லை.
கடைசியில் ஒருநாள் காய்ச்சல் என்று சொல்லிக் கொண்டு அவனுடைய தாய் படுத்துவிட்டாள். அவள் நோயாகப் படுத்துவிட்டபின், வீட்டுச் செலவுக்குக் காசே கிடைக்கவில்லை. தான் போய் வேலை பார்க்க வேண்டும் என்று அந்த இளைஞன் நினைக்கவேயில்லை. எங்கோ சுற்றி விட்டு வந்து "அம்மா எனக்குச் சோறு போடு!" என்றான். அவளோ, படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் கிடந்தாள்.
தன் தாய் முடியாமல் இருக்கிறாள் என்பதையே சிறிதும் கருதிப் பாராமல், "அம்மா, வயிறு பசிக்கிறது. எழுந்துவந்து சோறு போடு” என்று கேட்டான்.
அவள் அவனே அருகில் வரும்படி அழைத்தாள்.
"மகனே, எங்காவது போய் வேலை செய்து நாலு காசு கூலி வாங்கிக் கொண்டு வா. நான் அரிசி வாங்கிச் சோறு சமைத்துப் போடுகிறேன்" என்றாள்.
"நான் வேலை செய்வதா? எனக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாதே!" என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் பேசாமல் படுத்துவிட்டான்.
இரண்டு மூன்று நாட்களாக அவனும் பட்டினி; அவன் அம்மாவும் பட்டினி; மருந்து வாங்கிக் கொடுக்காத தால் அம்மாவின் நோய் முற்றியது. ஐந்தாவது நாளே அவள் இறந்து போய்விட்டாள்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அக்த இளைஞனைத் திட்டினர்கள். அவன்தான் தன் தாயைக் கொன்று விட்டான் என்று குற்றம் சாட்டினார்கள். அதன் பிறகும் தான் உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று அந்த இளைஞன் நினைக்கவேயில்லே. உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வேளையாகச் சாப்பிட்டுவந்தான். சில நாட்கள்வரை, உறவினர்கள் இரக்கப்பட்டுச் சோறு போட்டர்கள். பிறகு, அவர்கள் அவனைத் தங்கள் வீட்டு வாசற்படியையே மிதிக்கக் கூடாதென்று கூறி விரட்டி யடித்து விட்டார்கள்.
அதன் பிறகும் அந்தப் பையன் உழைத்துப் பொருள் பெற வேண்டுமென்று நினைக்கவில்லை. வீடுவீடாகப் போய்ப் பிச்சை எடுத்தான்.
பிச்சைக்குச் செல்லும்போது சில சமயம் ஏதாவதொரு வீட்டில் அவனுக்குச் சாப்பாடே போடுவார்கள். சில சமயம் ஒவ்வொரு வீட்டில் ஒரு கைப்பிடி சோறுதான் போடுவார்கள். பத்துப் பதினேந்து வீட்டில் பிச்சை யெடுத்த பிறகுதான் வயிற்றுக்குச் சோறு கிடைக்கும். சில சமயம் வீட்டுக்காரர்கள் "வராதே போ!" என்று விரட்டி யடிப்பார்கள்.
ஊர்ப் பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அந்த இளைஞன் பிச்சைக்காரனாகத்தான் இருந்தான். அந்தப் பெரியவர்களிடம் ஏதாவது காசு பிச்சை கேட்கலாம் என்று சென்றவன்தான் அந்தப் பேச்சுக்களைக் கவனித்தான்.
அசோக மன்னர், பிறர் கவலையைப் போக்குபவர் என்று கேள்விப்பட்டவுடன் அவனுக்கு மனத்துக்குள் ஒரு திட்டம் உருவாயிற்று. அசோக மன்னரைப் பார்த்துத் தன் துன்பத்தை எடுத்துக் கூறினால், தனக்கு நிறையப் பணம் கொடுக்கமாட்டாரா என்று எண்ணினான். நேரம் ஆக ஆக, அந்தப் பெரியவர்கள் அரசரைப் புகழ்ந்து பேசப் பேச, அவன் எண்ணம் வலுப்பட்டது. ஆகவே எப்படியும் அசோகரை நேரில் பார்த்து விடுவதென்று அவன் உடனே அங்கிருந்து புறப்பட்டான்.
தலைநகரம் மிகத் தொலைவில் இருந்தது. அவ்வளவு தொலையும் அவன் நடந்துதான் போக வேண்டியிருந்தது. ஒருநாள் முழுவதும் நடந்த பிறகும் தலைநகரம் வெகு தொலைவில் இருப்பதாகவே தோன்றியது. மேலும் ஐந்தாறு நாட்கள் நடந்து சென்றால்தான் அங்கு போய்ச் சேரமுடியு மென்று வழிப்போக்கர்கள் சொன்னார்கள்.
பேசாமல் திரும்பிவிடலாமா என்று நினைத்தான். ஆனால், கவலையைத் தீர்ப்பதற்கு என்று ஒருவர் இருக்கும் போது அவரைப் பார்க்காமல் இருப்பது சரியல்ல என்று தோன்றியது. எப்படியும் அசோக மன்னரைப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.
ஒரு முறை உறுதியான முடிவு ஏற்பட்ட பிறகு அவன் பின்வாங்கவில்லை. என்ன தான் கடுமையாக இருந்த போதிலும், பசியையும், களைப்பையும் பொறுத்துக் கொண்டு அவன் வழி நடந்தான்.
வழிப்போக்கர்களில் ஒரிருவர் அவன்மீது இரக்கப்பட்டு ஓரிரு முறை தங்கள் கட்டுச் சோற்றில் சிறிது கொடுத்தார்கள். சில வேளை அவன் அரைப் பட்டினி யாகவும், சில வேளைகளில் முழுப்பட்டினியாகவும் இருக்க நேரிட்டது. வயிற்றைக் கிள்ளும் பசியைப் பொறுத்துக் கொண்டு, கால்வலியைப் பொருட்படுத்தாது அவன் நடந்து கொண்டேயிருந்தான். காட்டுச் சாலைகளிலும், ஊர்த் தெருக்களிலும் நடந்து, பல ஊர்களையும், வயல் வெளிகளையும் கடந்து ஒரே நோக்கத்தோடு சென்றுகொண்டிருந்தான்.
அவன் புறப்பட்ட ஐந்தாவது நாள் சாலையின் வழியில் ஒரு துறவியைக் கண்டான். காவியுடை உடுத்தியிருந்த அந்தத் துறவியின் தோற்றம் எடுப்பாக இருந்தது. சிங்கம் போல் நிமிர்ந்த பார்வையும், ஒளிநிறைந்த, கண்களும், புன் சிரிப்பு நெளியும் உதடுகளையுடைய வாயும், அந்த இளைஞனை எப்படியோ கவர்ந்து விட்டன.
"தலைநகரம் இன்னும் எவ்வளவு தொலையிருக்கிறது?’’ என்று இளைஞன் அந்தத் துறவியைக் கேட்டான்.
அன்புகனிந்த கம்பீரமான குரலில் அவர் அந்த இளைஞனைப் பார்த்து, "தம்பீ, தலைநகரத்துக்கு நீ எதற்காகப் போகிறாய்?" என்று கேட்டார்.
"அசோக மன்னரைப் பார்க்க” என்று சிறிதும் தயங்காமல் பதிலளித்தான் இளைஞன்.
"தம்பீ, பிச்சைக்காரனைப் போல் இருக்கும் உன்னை அரண்மனைச் சுற்றுப் புறத்திலேயே நெருங்க விட மாட்டார்களே! நீ எப்படி மன்னரைப் பார்க்கப் போகிறாய்?" என்று கேட்டார் துறவி.
"ஐயா, நீங்கள் தெரியாமல் சொல்லுகிறீர்கள். அசோக மன்னர் கருணையே உருவானவர். அவர் துன்பப்படுபவர்களின் துயர் தீர்க்கப் பிறந்தவர் என் கவலைகளைப் போக்கிக் கொள்ளவே நான் அவரைப் பார்க்கப் போகிறேன். எப்படியும் அவரைப் பார்ப்பேன். பலனும் பெறுவேன்!" என்றான் இளைஞன்.
அந்தத் துறவி அவனுடன் பேச்சுக் கொடுத்து அவனைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்துகொண்டார். அவனுக்கிருந்த கவலையெல்லாம் சோற்றுக் கவலை தான் என்பதையும் தெரிந்துகொண்டார்.
திரும்பவும் அவர் சொன்னார்: "தம்பீ, நீ அசோக மன்னரைப் பார்த்துவிட்டால் எப்படியும் அவர் உன் கவலைகளைத் தீர்த்துவிடுவார் என்பது உண்மைதான். ஆனால், அரண்மனைக் காவலர்கள், அசோக மன்னரைப்போல் இருப்பார்களா? அவர்கள், பிச்சைக்காரனைப் போன்ற உன்னே உள்ளே விடுவார்களா?" என்று கேட்டார்.
"அதையும் தான் பார்த்து விடுவோமே!" என்று பதிலளித்து விட்டு இளைஞன் மேலே நடந்தான்.
"தம்பி, மன்னரைப் பார்க்க முடிந்தால் பார். இல்லாவிட்டால் என் மடத்துக்கு வா!" என்று சொல்லி அந்தத் துறவி, தான் இருக்கும் புத்த மடாலயம் ஒன்றை அவனுக்குக் காண்பித்தார்.
'சரி' யென்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சென்றான்.
துறவி சொன்னபடிதான் நடந்தது. தலைநகருக்குள் நுழைந்த இளைஞன் அரச வீதிக்குள் செல்லவே முடியவில்லை. நகர்க் காவலாளிகள் அவனை அந்த வீதியை விட்டுத் துரத்தினார்கள்.
"நான் மன்னர் பெருமானைப் பார்க்க வந்திருக்கிறேன்: என்னைப் போகவிடுங்கள்!” என்று அவன் காவலரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான்.
"பெரிய அரண்மனை அதிகாரி! அரசரைப் பேட்டி காண வந்து விட்டார்! போடா! இல்லாவிட்டால் உதை விழும்" என்று அந்த தகர்க் காவலர்கள் எரிந்து விழுந்தார்கள்.
இளைஞன் துயரம் தோய்ந்த முகத்தோடு தலைநகரிலிருந்து திரும்பினான்.
வழியில் துறவி காட்டிய மடம் இருந்தது. அவரைப் பார்த்தாவது ஆறுதல் அடையலாம். முடிந்தால் மடத்துச் சோறு சிறிது கிடைக்குமா என்று பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் அவன் அந்த மடத்துக்குள் நுழைந்தான்.
அன்பு கனிந்த அதே வசீகரப் பார்வையோடு அத் துறவி அவனே வரவேற்றார். "தம்பி, அரசர் பெருமானைப் பார்த்தாயா? ஏன் இப்படிச் சோர்ந்து போயிருக்கிறாய்?" என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டார்.
அந்தக் குறுஞ்சிரிப்புக்குள்ளே குறும்பும் இருந்தது. அதை இளைஞன் கவனிக்கவில்லை.
"ஐயா, நீங்கள் சொன்னபடியேதான் ஆயிற்று. என்னை அரச வீதியில் செல்லக்கூட காவலர்கள் விடமாட்டேன் என்று தடுத்து விட்டார்கள். என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்கு எட்டாத இடத்தில் கருணையுள்ள மன்னர்கள் இருந்து என்ன பயன்?" என்று உள்ளங் குமுறிப் பேசினான் இளைஞன்.
"தம்பீ, நீ பேசுவது சரியல்ல. மன்னர்கள் உன்னைப் போன்ற பிச்சைக்காரர்களைப் பார்ப்பது என்று ஆரம்பித்தால், பார்க்க வரும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமற் போய்விடும். சொல்லப்போனால், ஏதாவது உதவி பெறுவதற்காக எல்லோருமே பிச்சைக்காரர் களாக வேடம் போட்டுக் கொண்டு வந்து விடுவார்கள்!" என்று துறவி சொல்லிக் கொண்டு வரும்போதே இளைஞன் இடையிற் பேசினான்.
"அப்படியானால் நான் எப்படித்தான் அசோக மன்னரைப் பார்ப்பது?" என்று கேட்டான்.
"இந்த நிலையில் நீ அவரைப் பார்க்க நினைப்பதே தவறு. உன்னால் அவரைப் பார்க்கவே முடியாது!" என்றார் துறவி.
"அப்படியானால் எந்த நிலையில் நான் அவரைப் பார்க்க முடியும்?"
"நீ உன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். சாதாரணப் பிச்சைக்காரனாக இல்லாமல் ஒரு வசதியுள்ள குடிமகனாக நீ மாற வேண்டும்" என்றார் துறவி.
"ஒன்றுமில்லாத நான் எப்படி வசதியுள்ளவனாக மாற முடியும்?"
"முடியும், கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டால்!"
"பணம் எப்படிச் சேர்ப்பது?"
"அதற்கு வேண்டுமானல் நான் வழி சொல்லித் தருகிறேன்" என்றார் துறவி.
"அது என்ன வழி?" என்று ஆவலோடு கேட்டான்.
"எனக்குத் தெரிந்த ஒரு தச்சன் இருக்கிறான். அவனுக்கு உதவியாக ஓர் ஆள் வேண்டுமென்று கேட்டான். நீ அவனுக்கு உதவியாகச் சில வேலைகள் செய்து கொடுத்தால், அவன் உனக்குப் பணம் தருவான். அந்தப் பணத்தைச் சேர்த்து வைத்து நீ வசதியுள்ள மனிதனாக மாறி விடலாம்" என்றார் துறவி.
"வேலையா? எனக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாதே" என்றான் இளைஞன்.
"வேலையென்றால் ஒன்றும் கடினமானதில்லை. சரி, அதோ அந்தப் பீடத்தை இந்தப் பக்கத்திலே எடுத்துப் போடு!" என்றார் துறவி.
அந்த இளைஞன் அவர் குறிப்பிட்டபடி பீடத்தைத் தூக்கிக் கொண்டு போய் அவர் குறிப்பிட்ட இடத்தில் மாற்றி வைத்தான்.
"தம்பீ. இப்பொழுது நீ என்ன செய்தாய்?" என்று கேட்டார் துறவி.
"அந்தப் பீடத்தை இடம் மாற்றி வைத்தேன்" என்றான் இளைஞன்.
"இது உனக்குக் கடிதாக இருக்கிறதா?" என்று கேட்டார் துறவி.
"இல்லை" என்றான் இளைஞன்.
"இதுபோல நீ அந்தத் தச்சனுக்கு ஏதாவது வேலைகள் உதவியாகச் செய்தால் அவன் உனக்குக் கூலி தருவான். அதில் உன் சாப்பாட்டுச் செலவு போக மீதியைச் சேர்த்து வைத்து உன் நிலையை உயர்த்திக் கொள்ளலாம். உன்னை அந்தத் தச்சனிடம் வேலைக்குச் சேர்த்துவிடவா?" என்று கேட்டார் துறவி.
இளைஞனுக்கு வேலையில் நாட்டமில்லை என்றாலும், தன் நிலையை உயர்த்திக் கொண்டு அசோக மன்னரைப் பார்த்துத் தன் கவலையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது.
துறவியிடம் சரி என்று சொல்லிவிட்டான். அவரும் அவனை ஒரு தச்சனிடம் வேலைக்குச் சேர்த்து விட்டார்.
தச்சன் முதலில் அந்த இளைஞனிடம் சிறுசிறு வேலைகள் வாங்கினான். மரக்கட்டைகளைத் தூக்கிக் கொண்டு வருவது, கருவிகளே எடுத்துக் கொடுப்பது, பலகைகளை அறுத்துக் கொடுப்பது போன்ற மிக எளிய வேலைகளை இளைஞன் முதலில் செய்தான். நாளாக ஆக அவன் பார்க்க வேண்டிய வேலைகள் விரிவு பெற்றன. உழைப்பும் அதிகமாயிற்று.
மூன்று மாதம் சென்றபின், இளைஞன் கையில் ஐம்பது ரூபாய் சேர்ந்திருந்தது. அதை எடுத்துக்கொண்டு மடத்துக்குச் சென்றன். ஆனால் துறவி அங்கில்லை. ஏதோ வெளியூர் ஒன்றுக்குச் சென்றிருப்பதாகவும், அங்கிருந்து பல ஊர்களுக்குச் சென்று திரும்பிவர நான்கைந்து மாதங்கள் செல்லும் என்றும் மடத்தில் இருந்த மற்ற துறவிகள் கூறினர்கள்.
இளைஞன் தச்சனிடம் திரும்பிச் சென்றான். வழக்கம் போல் அவனுக்கு வேலை பார்த்தான். நுண்ணிய தரமான வேலைகள் அவன் பார்க்கப் பார்க்கத் தச்சன் அவனுக்குக் கொடுக்கும் கூலியும் உயர்ந்தது. இளைஞன் தன் சாப்பாட்டுச் செலவுக்குப் போக மிகுந்த பணத்தையெல்லாம் சேர்த்து வைத்தான். இடையிடையே துறவியைத் தேடிச் சென்றான். அவர் அகப்படவேயில்லை. கடைசியாக ஓர் ஆண்டுக்குப் பிறகு அவன் கையில் ஐநூறு ரூபாய் சேர்ந்திருந்தது. அந்த ஐநூறு ருபாயுடன் துறவியைத் தேடி மடத்துக்குச் சென்றான். அந்த முறை துறவி மடத்தில்தான் இருந்தார். அவனை அன்போடு வரவேற்றார் அவர்.
துறவி அவனுடைய நலத்தைப் பற்றியும், வாழ்க்கை முறை பற்றியும், வேலை பற்றியும் ஆதரவான முறையில் விசாரித்தார். எல்லாவற்றுக்கும் பதில் சொன்ன அவன் "ஐயா! இப்பொழுது என்னிடம் ஐநூறு ரூபாய் இருக்கிறது. மன்னரைப் பார்க்கப் போகும் நிலை வந்துவிட்டதா. நான் அவரைப் பார்க்கப் போகலாமா?" என்று கேட்டான்.
"தாராளமாகப் போகலாம்?" என்றார் துறவி.
"எப்படிப் போக வேண்டும்?" என்று கேட்டான் அவன்.
"இப்போது உள்ள நிலையிலேயே போகலாம்" என்றார் துறவி.
"புதிய ஆடைகள் எதுவும் அணிந்து கொள்ள வேண்டாமா? இந்த நிலையில் இந்த ஆடைகளுடன் என்னேக் கண்டால் காவலர் உள்ளே விடுவார்களா?" என்று கேட்டான் இளைஞன்.
"ஆடைகள் எப்படி யிருந்தால் என்ன? நீ தான் நிலையில் உயர்ந்து விட்டாயே!” என்றார் துறவி.
"நான் உயர்ந்தது காவலர்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டான் இளைஞன்.
"தெரியும். அசோகருடைய காவலாளிகளுக்கு பிச்சைக்காரன் யார், உழைப்பாளி யார் என்று நன்றாகத் தெரியும். அதற்கு ஆடை தேவையில்லே" என்றார் அந்தத் துறவி.
துறவியிடம் பழகப்பழக அவர்மேல் ஏதோ ஒரு விதமான நம்பிக்கையும் மதிப்பும் அந்த இளைஞனுக்கு ஏற்பட் டிருந்தது. ஆகவே, அவர் சொல்லை அவன் தலைமேற் கொண்டு, மறுநாள் அசோகரைப் பார்க்கக் கிளம்பினான்.
காலையில் எழுந்து குளித்து, நன்கு துவைத்து உலர வைத்த எளிய ஆடைகளை அணிந்து கொண்டு அவன் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டான்.
அரச வீதியுள் நுழைந்தபோது, யாராவது காவலாளிகள் தன்னை விரட்டுவார்களா என்று எதிர் பார்த்தான். யாரும் அவனே எதுவும் சொல்லவில்லை. காவலர்கள் சிலர் அங்கங்கே நின்றார்கள். சிலர் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். யாரும் அவனைக் கவனிக்க வில்லை. கண்டாலும் நெருங்கி வந்து எதுவும் கேட்க வில்லை.
அரண்மனையை நெருங்கினான். கடைவாயிலில் இருந்த காவலர்களில் ஒருவன், "என்ன வேண்டும்?" என்று கேட்டான்.
"மாமன்னரைப் பார்க்க வேண்டும்!" என்று இளைஞன் கூறியவுடன், "இவனோடு செல்லுங்கள்” என்று ஒரு வீரனைக் காட்டினான்.
அந்த வீரன் இளைஞன் ஒரு மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் ஒப்படைத்தான். அந்த அதிகாரி, பணிவும் கனிவும் கலந்த குரலில், "சற்று இங்கே அமர்ந்திருங்கள். மாமன்னர் வரும் நேரமாகி விட்டது" என்று கூறினார்.
இளைஞன் ஒர் இருக்கையில் அமர்ந்தான். அவ்வளவு பெரிய மண்டபத்தை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை. அவ்வளவு அழகிய கட்டிடத்தை அவன் முன்பு எங்கும் கண்டதில்லை. வியப்புணர்ச்சியுடன் அந்த மண்டபத்தை முற்றும் ஆராய்ந்தான். கீழே முற்றிலும் சலவைக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே நின்ற பெரிய பெரிய பளிங்குத் தூண்கள் மேல் விதானத்தைத் தாங்கி நின்றன. மேல் விதானத்தில் அழகிய சித்திரங்கள் தீட்டப் பெற் றிருந்தன. எல்லாம் புதியவை; எல்லாம் அழகியவை; ஆங்காங்கே புத்தர் பெருமானின் திருவாசகங்களும் எழுதப் பெற்றிருந்தன. மண்டபத்தின் நடுவில் நவமணிகள் இழைத்த பொன் அரியணை ஒன்று இருந்தது.
கணீர் என்று மணியடிக்கும் ஒலியெழுந்தது. வீணைகளின் மெல்லிய இன்னிசை தொடர்ந்தது. அந்தப்புரத்திலிருந்து மெல்ல நடந்து வந்த மாமன்னர் அசோகர் கம்பீரமான தோற்றத்துடன் அந்தப் பொன் அரியணையில் வந்து அமர்ந்தார். சபையில் இருந்த அதிகாரிகளும் பிறரும் எழுந்து நின்று வணக்கம் செய்து வாழ்த்துக் கூறினார். இளைஞனும் அவர்களோடு சேர்ந்து எழுந்து நின்றான். அவர்களோடு சேர்ந்து அவனும் வாயசைத்து வாழ்த்திசைத்தான்.
எடுப்பும் ஏற்றமும் பொருந்திய மாமன்னரின் உருவத்தையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கண்கள்! அரசர்க்கரசரின் கண்கள்! அவற்றிலேயே அவன் பார்வை பதிந்தது. அந்தக் கண்களுக்கும் அவனுக்கும் முன்பே எங்கோ எப்போதோ பழக்கம் ஏற்பட்டிருந்தது போல் தோன்றியது.
மாமன்னர் அசோகர் வந்து உட்கார்ந்ததும் பார்வையாளர்களின் பெயரை ஓர் அதிகாரி ஒவ்வொன்றாகக் கூற அந்தந்த மனிதர்கள் எழுந்து தாங்கள் வந்த நோக்கங்களை எடுத்துக் கூறினர். மாமன்னர் அவற்றிற்குப் பதில் அளித்தார். எல்லா நடவடிக்கைகளையும் இளைஞன் கவனித்துக் கொண்டிருந்தான். திடீரென்று அதிகாரி இளைஞன் பெயரைக் கூறிஞர். அவன் எழுந்து நின்றான். ஆனால் பேச வாய் வரவில்லை. அவன் சோற்றுக் கவலையால் வாடியபோது, அசோகரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவரைச் சந்தித்துத் தன் குறையைக் கூறினால் அதைத் தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்த்தான். ஆனால், இப்போது அவனுக்குச் சோற்றுக் கவலை கிடையாது. வேறு கவலை எதுவும் கிடையாது. எதைக் கூறுவான் அசோகரிடம்? விழித்துக் கொண்டு நின்றான்.
மன்னர் பேசினர்:
"தம்பீ! என்ன கவலை உனக்கு? ஏன் கூறத் தயங்குகிறாய்? கூசாமல் பேசு!" என்றார்.
அந்தக் குரல்கூட அவனுக்குப் பழக்கமான குரல் போலிருந்தது. ஆனால் மன்னர் பெருமானுக்கும் தனக்கும் என்ன பழக்கம்! ஏதோ மனத் தோற்றம் என்றெண்ணிக் கொண்டான்.
“மன்னர் பிரானே! வணக்கம்! எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. தங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் இருந்தது. பார்த்து விட்டேன். இனி எனக்கு எந்தக் குறையும் இல்லை!" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் போகப் புறப்பட்டான்.
"தம்பீ!" என்று ஒரு குரல் அழைத்தது. தனக்குப் பிழைக்கும் வழி சொல்லித்தந்த அந்தத் துறவியின் குரல் போன்றிருந்தது. குரல்வந்த திசை நோக்கித் திரும்பினான். அரியணையில் இருந்த அசோக மாமன்னர்தாம் "தம்பீ!” என்று அன்புடன் அழைத்தார்.
மாமன்னரே துறவியாக வந்து தன் கவலையைப் போக்க வழிகாட்டியவர் என்று அறிந்தபோது, அவனுக்குப் பெருமை கொள்ளவில்லை. ஒடிச் சென்று மன்னரின் காலடியில் வீழ்ந்து அவற்றைப் பற்றிக் கொண்டு கண்ணீர் சொரிந்தான்.
--------------------
கதை இரண்டு - ஐயம் தீர்க்கும் ஆசான்
அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் குழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு சிறப்பும் இருந்தது.
பாடலி புத்திரத்திலிருந்து புத்தகயா போவதற்கும், காசியிலிருந்து ராஜகிரி போவதற்கும் இடையே அந்தக் கிராமம் இருந்தது. வழிப் போக்கர்கள் சநிதித்துக் கொள்ளும் மைய ஊராக அது விளங்கியது.
அதனால் உழவுத் தொழிலைத் தவிர அந்தக் கிராம மக்கள் மற்றொரு தொழிலும் செய்து பிழைத்துக் கொள்ள வழியிருந்தது. வழிப்போக்கர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்கள் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்வது தான் அந்தத் தொழில்.
விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க வேண்டும் என்கிற பண்பாடெல்லாம் எப்போதாவது அத்தி பூத்தாற் போல் வருகிற விருந்தினர்கள் விஷயத்தில்தான் கையாள முடியும். நாள்தோறும் விருந்தினர் வந்துகொண்டேயிருந்தால் அதெல்லாம் நடைபெறக் கூடிய காரியமா, என்ன? அதற்காக அந்த ஊர்க்காரர்கள் வருகிற விருந்தினர்களை விரட்டியடித்து விடவில்லை. அவர்களே உபசரிப்பதையே ஒரு தொழிலாக மாற்றிக் கொண்டு விட்டார்கள்.
இருக்க இடமும் உண்ண உணவும் தேடி வருபவன், அவை அடியோடு கிடைக்காவிட்டால்தான் வருத்தப்படுவான். காசு கொடுத்துக் கிடைக்குமென்றால் நல்லதாகப் போயிற்று என்றுதான் எண்ணிக் கொள்வான். முன்பின் தெரியாதவர்களிடம் பழகுகிற கூச்சம் சிறிதும் இல்லாமல் பழக முடியுமல்லவா? இந்த மாதிரியான நேரங்களில் காசு செய்கிற உதவி பெரியதுதான்.
அந்த ஊரின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் மாமன்னர் அசோகர் அங்கே ஒரு சத்திரம் கட்டும்படி ஏற்பாடு செய்தார்.
சத்திரம் ஏற்பட்ட பிறகு அந்த ஊரின் சிறப்பு மேலும் அதிகமாயிற்று. வழிப்போக்கர்களுக்கும் நல்ல வசதியாயிற்று.
சத்திரத்து அதிகாரிகள் வழிப்போக்கர்களின் தராதரத்தையறிந்து வாடகை வசூலித்தார்கள். வாடகையில் உயர்வு தாழ்வு கிடையாது. எல்லோருக்கும் ஒரே மாதிரி யான வாடகைதான். ஆனால் ஏழைகளாயிருந்தால் வாடகை கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் ஏழைகள் தாம் என்று சத்திரத்து அதிகாரிகள் தீர்மானித்து விட்டால் போதும். வணிகர்களும் மற்ற தொழில் செய்பவர்களும் சத்திரத்துக்கு உள்ள வாடகையைக் கொடுத்து விட வேண்டியதுதான். அந்தக் காலத்து மக்களிடையே ஒரு நல்ல பண்பாடு இருந்தது. அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. உழைத்து நாலு காசு சம்பாதிக்கக் கூடிய வலுவும் திறனும் உள்ள எவனும் தன்னை ஏழை யென்று கூறிக்கொள்ள மாட்டான். அவ்வாறு கூறிக் கொள்வதையோ, கூறப்படுவதையோ அவமானம் என்று கருதுவான். அற நிலையங்களிலே போய்க் கையேந்துவது தன் தகுதிக்குக் குறைவானதென்று கருதுவான். தான் அனுபவித்த வசதிக்குரிய கூலியைக் கொடுத்துவிட்டால் தான் அவன் மன அமைதியோடு இருப்பான்.
எதையும் சம்மா பெறக்கூடாது என்ற எண்ணம் அந்தக் காலத்து மனிதனின் பண்பாடாக விளங்கி வந்தது.
இந்த மாதிரியான சில பண்பாடுகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அசோகரின் அறநெறி ஆட்சி நிலைத்திருக்க முடியுமா என்ன?
அசோகர் கட்டிய அந்தச் சத்திரம் அப்படி ஒன்றும் பெரியதல்ல. ஆனால் அவர் மற்ற நகரங்களில் கட்டிய பெரிய பெரிய சத்திரங்களில் உள்ள எல்லா வசதிகளும் இந்தச் சத்திரத்திலும் இருந்தன.
குதிரைகள், ஒட்டகங்கள் கட்டுவதற்கான தனித்தனித் தொழுவங்கள், பசுமாடுகள் கட்டுவதற்கான கட்டுத் துறைகள் எல்லாம் பின் பக்கத்தில் இருந்தன. சத்திரத்தையடுத்த நந்தவனத்தில் குளிப்பதற்கான ஒரு கிணறும், மற்ருெரு மூலையில் குடி தண்ணிர்க் கிணறும் இருந்தன.
சத்திரத்தின் உள்ளே வழிப்போக்கர்கள் தங்கள் உடைமைகளை வைத்துக் கொள்வதற்கான அறைகளும் படுத்துறங்குவதற்கான கூடங்களும், சமைத்து உண்பதற்தான கட்டுக்களும் வசதியாக அமைந்திருந்தன. சுவர்களில் யாரோ ஒரு சாதாரணச் சித்திரக்காரன் புத்தர் பெருமானின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை வண்ணப் படங்களாக எழுதியிருந்தான். அவை தவிர, உத்திரங்களின் மீதும், சத்திரத்து முகப்பிலும், புத்தர் பெருமானின் திருவாசகங்களும் அசோகருடைய நல்லுரைகளும் எழுதப் பெற்றிருந்தன.
சத்திரம் கட்டி முடித்து வெகு நாளாகிவிடவில்லை. புத்தம் புதிதாக இருந்த அந்த சத்திரத்திற்கு வந்த வழிப் போக்கர்களுக்கு அது தேவலோகம் போல் காட்சியளித்தது. பாடலிபுத்திரத்திலிருந்து புத்த கயாவிற்கும் கயாவிலிருந்து தலைநகருக்கும் போகும் வழிப் போக்கர்கள் பெரும்பாலும் புத்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் பிட்சுக்களாகவும் இருந்தார்கள். காசிக்கும் ராஜகிரிக்கும் போய் வந்து கொண்டிருந்தார்கள், வணிகர்களாகவும், பிராமணர்களாகவும், வேறு பல பெருந்தொழில் துறையினராகவும் இருந்தார்கள்.
யாராயிருந்தாலும் வரவேற்று இடங்கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. யாருக்கும் எவ்வித வேற்றுமையும் காட்டப்படவில்லை. எல்லோரையும் சமமாக நோக்கும் தன்மையே சத்திரத்து அதிகாரிகளிடம் காணப்பட்டது. எல்லாம் அசோக மாமன்னரின் நோக்கப்படியே யிருந்தது.
இந்தச் சத்திரத்துக்கு ஒருநாள் ஒர் இளைஞன் வந்து சேர்ந்தான். அவன் உடல் அங்கங்களிலே இளமையின் பூரிப்பும் கண்களிலே புதிய மினுமினுப்பும், முகத்திலே கவலையற்ற குதுரகலிப்பும் அவன் கடையிலே ஒரு துடி துடிப்பும் காணப்பட்டன.
காசியிலிருந்து வந்த ஒரு கூட்டத்தினரோடு அவனும் சத்திரத்துக்கு வந்து சேர்ந்தான். வந்தவுடன் அவன் மற்றவர்களைப் போலவே தனக்கு இடத்தேடிக் கொள்வதிலும், தன் துணிமணி படுக்கைகளை ஒழுங்கு படுத்துவதிலும், குளிப்பதிலும் உணவு தேடுவதிலும் ஈடுபட்டிருந்தான். மதிய உணவு முடித்த பிறகு சிறிது கேரம் இளைப்பாறி விட்டு, மாட்டு வண்டிகளில் அவர்கள் ராஜகிரி கோக்கிப் புறப்பட இருந்தார்கள்.
சத்திரத்தில் பதிவேட்டுக்காரன் அவன் பெயரைக் கேட்டபோது மகாலிங்க சாஸ்திரி என்று கூறினன். அந்தப் பெயரைக் கொண்டும், அவன் கூடவந்த ஆட்களைப் பார்த்தும் அவன் ஒரு பிராமண இளைஞன் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
சத்திரத்துப் பதிவேட்டிலே ஊர் பேர்தான் குறிக்கப் படுமே தவிர சாதி குலமெல்லாம் குறிக்கப்படமாட்டாது. எல்லாம் தோற்றம், வழக்கம், பேச்சு வார்த்தைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.
மகாலிங்க சாஸ்திரி என்ற அந்த இளைஞன், குளியல் முடித்து மற்றவர்களோடு, சத்திரத்தக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பிராமணர் வீட்டிலே போய்க் காசு கொடுத்துச் சாப்பாடு முடித்துக்கொண்டு வந்தான். மற்றவர்களோடு சேர்ந்து சத்திரத்து வெளித்திண்ணையிலே சிறிது சாய்ந்து ஓய்வுபெற முயன்றான்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்ற பழ மொழி பொய்யாகாத வண்ணம் கூட வந்த பிராமணர்கள் குறட்டைவிட்டுத் தூங்கலானர்கள். மகாலிங்க சாஸ்திரி யும் தூங்கியிருப்பான். ஆனால், உத்திரங்களிலும், சுவர்களிலும் எழுதியிருந்த அந்த வாசகங்கள் அவன் கண்களைக் கவர்ந்துவிட்டன.
மெல்ல எழுந்து அந்த வாசகங்களே ஒவ்வொன்ருகப் படித்துப் பார்த்துக்கொண்டு வந்தான். வாசற்கதவருகில் வந்த போது உள்ளே உத்திரங்களில் இருந்த எழுத்துக்களும் தென்பட்டன. உள்ளே நுழைந்து வரிசையாகப் படித்துக்கொண்டு வந்தான். வேக வேகமாகப் படித்து அவற்றை அவன் உடனே மறந்துவிடவில்லை.
ஒவ்வொரு வாசகத்தையும் ஒருமுறைக் கிருமுறை படித்து, அவற்றின் பொருளே மனத்தில் வரச்செய்து, அவற்றைப் பற்றிச் சிந்தித்து, உள்ளம் ஒவ்வொரு கருத்தையும் ஒப்புக்கொண்ட பிறகுதான் அவன் அடுத்த வாசகத்தைப் படிக்கச் சென்றான்.
உண்மையே பேசு.
நல்லெண்ணம் கொள்.
நற்சொல் பேசு.
நற்செயல் புரி. உயிர்களுக் கன்பு செய்.
ஆசை யகற்று.
மக்கள் யாவரும் நிகரே.
குல வேறுபாடு கொள்ளாதே.
இப்படிப்பட்ட பல அறங் கூறு மொழிகளை அவன் படித்தான். காசியிலே பண்டிதர்களிடம் தான் கற்ற நூல்களிலே உள்ள நீதிமொழிகளோடு இவற்றை ஒப்பு நோக்கிப் பார்த்தான். அம்மொழிகளுக்கும் இவ்வாசகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்தான். எவை ஏற்கத்தக்கன என்று மனத்திற்குள்ளே விவாதித்துக் கொண்டான். இதுதான் சரி. இதுதான் ஒப்பத்தக்கது என்ற முடிவுக்கும் வந்தான். அப்படி ஒவ்வொரு வாசகத்தையும் துருவி ஆராய்ந்து, இது உண்மைதான் என்ற முடிவுக்கு வந்தபிறகே அவன் கால்கள் இடம் பெயர்ந்தன. எல்லா வாசகங்களையும் படித்து முடித்த பிறகுதான் அவன் வெளி வாசற் பக்கம் வந்தான்.
ஏற்கெனவே அங்கிருந்தவற்றை யெல்லாம் படித்து முடித்து விட்டபடியால் அவன் திரும்பவும் தான் படுத்திருந்த இடத்தை நோக்கிச் சென்றான். அப்போது, நுழை வாயிலில் கதவுக்கு மேலே எழுதியிருந்த எழுத்துக்கள் புதிதாக அவன் கண்களைக் கவர்ந்தன. முதல் முறை அவன் அவ்வாசகத்தைக் கவனிக்கவில்லை. இப்போது கொட்டை எழுத்துக்களில் பளிச்சென்று அந்த வாசகம் அவன் கண் முன்னே தோன்றியது. அவன் அந்த வாசகத்தையே திரும்பத் திரும்ப மனத்திற்குள் படித்து கொண்டான்.
எத்தனை முறை படித்தும் அவன் கண்கள் அந்த வாசகத்தை விட்டு அகலவில்லை. திரும்பத்திரும்ப அதன் பொருளைச் சிந்தித்துப் பார்த்தும் அவன் மனம் அதை - அக்கருத்தை - ஒப்புக்கொள்ள மறுத்தது.
மற்ற எல்லா வாசகங்களும் சரியென்று அவன் மனம் ஒப்புக் கொண்டு விட்டது. புத்த பெருமானின் புத்தம் புதிய புரட்சிகரமான அந்தக் கொள்கைகள் அவனுடைய இளம் உள்ளத்தைக் கவர்ந்தது வியப்புக் குரியதல்ல.
நேர்மையான நெஞ்சத்தோடு உண்மையை ஆராயும் அந்த இளம் உள்ளத்தில்லே அவை ஆழப் பதிந்தது ஆச்சரி யத்திற்கு குரியதல்ல.
ஆனால், மகாலிங்க சாஸ்திரியின் இளம் உள்ளம், புத்த பெருமானின் புதுக் கருத்துக்களைப் பொன்னே போல் போற்றி ஏற்றுக்கொண்ட அந்தத் தூய உள்ளம் இந்த ஒரு வாசகத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. தன் உள்ளம் ஏற்றுக்கொள்ள மறுத்த அந்த வாசகம் புத்த பெருமானுடையதாக இருக்க முடியாது என்று அவன் திண்ணமாக நம்பினான். அந்த வாசகம் அசோகர் தாமாகச் சேர்த்து எழுதச் சொன்னதாக இருக்கவேண்டும் என்றுதான் அவன் எண்ணினான்
புத்த பெருமானின் புதுக் கருத்துக்களை யெல்லாம் ஏற்றுக்கொண்ட இந்த மாமன்னர் ஏன் இந்தப் பழங் கருத்தையும் அவற்றோடு ஒப்ப வைத்துப் பரப்ப முன்வர வேண்டும் என்று அவன் மனம் கேள்வி தொடுத்தது.
இவ்வளவு சிந்தனைக்கு இலக்காகியும் அவன் மனம் ஒப்புக் கொள்ள மறுத்த அந்த வாசகம் இதுதான்.
மூத்தோரைப் போற்று
உயர்ந்தோரைப் போற்று என்றோ, பெரியோரைப் போற்று என்றோ, அந்த வாசகம் அமைந்திருந்தால், கல்வியால் உயர்ந்தோரைப் போற்று என்றோ, அறிவிற் பெரியோரைப் போற்று என்றோ, அனுபவத்தால் முதிர்ந்தோரைப் போற்று என்றே பொருளுரைத்துக் கொள்ளலாம்; மன அமைதி பெறலாம்! ஆனால் மூத்தோரைப் போற்று என்றால் வயதில் பெரியவர்களைப் போற்ற வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன பொருள் கொள்ள முடியும்?
அந்த வாசகத்தைப் பார்க்கப் பார்க்க இளைஞனுக்கு ஒருவிதமான அருவருப்பு வளர்ந்தது. மாமன்னர் அசோகர் சற்றும் பொருத்தமற்ற இந்த வாசகத்தையும் மற்ற வாசகங்களோடு இணையாக ஏன் எழுதினர் என்றுகூட நினைத்தான். அந்த வாசகத்தைப் படித்ததால் ஏற்பட்ட அதிருப்தி அவனுடைய முகத்திலே வெளிப்பட்டது மட்டு மல்லாமல் வாய்ச் சொற்களாகவும் வெளிப்பட்டது.
"சற்றும் பொருத்தமற்ற வாசகம்! மூடத்தனமான வாசகம்!" என்று வாய்விட்டுத் தனக்குள் பேசிக் கொண்டான்.
"தம்பீ. எந்த வாசகத்தைச் சொல்கிறாய்?" என்று பின்னாலிருந்து ஒரு குரல் கேள்வி எழுப்பியது.
இளைஞன் மகாலிங்க சாஸ்திரி திரும்பிப் பார்த்தான்.
குடியானவரைப் போன்ற உடை யணிந்திருந்த ஒருவர் திண்ணைத் தூண் ஒன்றிலே முதுகை வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தார். அவருடைய உடைதான் அவரை ஒரு குடியானவர் போல் காட்டியதே தவிர, அவருடைய வளையாத உடலும் நிமிர்ந்தகன்ற மார்பும் நேர் கொண்ட பார்வையும் எல்லாம் ஒருவிதமான கம்பீரத்தை உருவாக்கிக் காட்டின. அவருடைய கண்களிலே தோன்றிய அந்த ஒளி இளைஞனின் உள்ளத்தை எளிதாகக் கவர்ந்தது.
இளைஞன் மகாலிங்க சாஸ்திரியோ இரண்டு இதிகாசங்கள், நான்கு வேதங்கள், ஆறு சாத்திரங்கள், பதினெட்டுப் புராணங்கள், அறுபத்து நான்கு கலைஞானங்கள் அத்தனையும் ஆசான் மூலமாகப் பாடங்கேட்ட ஒரு வித்துவான். அந்த மனிதரோ ஒரு சாதாரண குடியானவர். இருந்தாலும் அவரிடம் தன்னேவிட ஏதோ ஒர் ஆற்றல் மிகப் பெரிய ஆற்றல் கூடுதலாக அமைந்திருப்பதாக இளைஞனுக்குத் தோன்றியது.
"அதோ எழுதியிருக்கிறதே, 'மூத்தோரைப் போற்று' என்று, அந்த வாசகத்தைத்தான் சொல்கிறேன்" என்று இளைஞன் இந்தக் குடியானவருக்குப் பதில் கூறினன்.
"அதிலே என்ன தவறு கண்டாய்?" திருப்பிக் கேட்டார் அவர்.
"ஐயா, அறிவாலோ அனுபவத்தாலோ பெரியவர்களைப் போற்று என்றால் பொருளிருக்கிறது. வயதால் மூத்தவர்களைப் போற்று என்ற பொருளை மட்டும் தருகின்ற இந்த வாசகத்தில் என்ன சிறப்பு இருக்கிறது? வயதில் மூத்தவர்களை யெல்லாம் இளைஞர்கள் போற்றிக் கொண்டிருந்தால், மூடத்தனத்தை ஆராதிப்பதைத் தவிர வேறு என்ன பயன் காணமுடியும்? நானும் எத்தனையோ நூல்கள் கற்றிருக்கிறேன். அவற்றில் எதிலும் இம் மாதிரியான அசட்டுக் கருத்தை நான் பார்த்ததில்லை. ஒரு குடியிலே பலர் பிறந்திருந்தாலும், அவருள்ளே மூத்தவனை வருக என்று வரவேற்போர் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்; அறிவுடையவனைத்தான் அரசனும் வழிபட்டு ஒழுகுவான் என்றெல்லாம் அறிஞர்கள் எழுதிவைத்த நூல்கள் முழங்குகின்றன. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்லி நீங்கள் என் கருத்தை மறுத்து விடலாம். என் சிறிய வாழ்க்கை அனுபவங் கூட இந்தக் கருத்துக்கு மாறானதாகவே யிருக்கிறது” என்று கூறினான் மகாலிங்க சாஸ்திரி.
"தம்பி, உன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைக் கொஞ்சம் சொல்லுகிறாயா?" என்று வேண்டிக் கொண்டார் பெரியவர்.
மகாலிங்க சாஸ்திரி, தன்னுள் அமைந்த ஏதோ ஒரு சூத்திரத்தைத் தட்டிவிட்டாற் போன்ற உணர்ச்சியுடன் முன்பின் தெரியாத அந்தக் குடியானவரிடம் தன் பிறப்பு வளர்ப்பெல்லாம் எடுத்துக் கூறத் தொடங்கி விட்டான்.
"ஐயா, ராஜகிரியிலே மகா பண்டிதர் சாம்பசிவ சாஸ்திரியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அவருடைய மகன்தான் நான். என்னுடன் கூடப் பிறந்தவர்கள் -அதாவது எனக்கு முந்திப் பிறந்தவர்கள்-மூவர். என் இனச் சேர்த்து நான்கு பேர். என் அண்ணன்மார் மூவரையும் பற்றி நான் சொல்லிவிட்டாலே இந்த வாசகம் பொருளற்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
"என் தக்தை பல ராஜ சபைகளிலும் வித்வ சபைகளிலும் பாடிப் பெற்ற பரிசுகள் பலப்பல. பொன்னகவும் பொருளாகவும், வீடாகவும், நிலமாகவும் அவர் தம் கலை ஞானம் ஒன்றைக் கொண்டே ஏராளமான சொத்து சேர்த்திருந்தார்.
"என் முதல் அண்ணன், பள்ளிக்கு ஒழுங்காகப் போகாமல் ஊர் சுற்றியாகவும் சூதாடியாகவும், தகாத நட்பினரோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தான். அவனைத் தம் கண்ணிலேயே விழிக்க வேண்டாம் என்று விரட்டியடித்து விட்டார் என் தந்தை. ஆனால் அவர் இறந்த வீட்டிற்கு அண்ணன் அழுதுகொண்டே ஓடி வந்தான். இறந்த வீட்டிற்குத் துன்பத்தோடு வருபவனை விரட்டியடிக்கவா முடியும்? துக்க வீட்டில் நுழைந்தவன், தானே மூத்தவன் என்று வழக்காடி என் தந்தைக்குக் கொள்ளி வைத்தான். பிறகு கொள்ளி வைத்த உரிமையைக் காட்டி வழக்காடி எல்லாச் சொத்துக்களுக்கும் தானே நிர்வாகியாகி விட்டான். பின்னால் சொத்தில் பங்கு கொடுக்க முடியாதென்று கூறி எங்கள் மூவரையும் வீட்டை விட்டு விரட்டியடித்து விட்டான்.
"என் இரண்டாவது அண்ணன் ஒரு சோற்றுக் கட்டை. கல்வி அறிவும் கிடையாது; இயற்கை அறிவுங் கிடையாது; மூத்த அண்ணன் விரட்டியடித்த பிறகு, வீட்டை விட்டு வெளியேறிக் காசிக்குப் போய் அங்கு ஒரு சாஸ்திரி வீட்டில் சமையல் வேலை செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.
"மூன்றாவது அண்ணன் ஒரு பைத்தியம். அவனைக் கண்டால் என் தாய்க்கு அறவே பிடிக்காது; என் தந்தைக் கும் பிடிக்காது. என் தந்தை இருக்கும்போதே அவன் அரைப் பைத்தியமாக இருந்தான். பின்னல் அவர் இறந்து மூத்த அண்ணன் எல்லோரையும் விரட்டியடித்த பிறகு இப்போது முழுப் பைத்தியமாகி விட்டான்.
"என் தாயோ, முத்த அண்ணனுக்குச் சாதகமாகப் பேசி எல்லாச் சொத்துக்களையும் அவனே ஆக்கிரமித்துக் கொள்ள உதவியாக இருந்தாள். அவன் கடைசியில் தன் மனைவியின் சொல் கேட்டு அவளேயும் அடித்து விரட்டி விட்டான். அவள் வீட்டு வேலைகள் செய்து கொடுத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறாள்.
"நான் என் தந்தையின் வழியைப் பின்பற்றிக் காசியில் ஒரு பண்டிதரிடம் சென்று கல்வி கற்று வருகிறேன். இப்போது ராஜகிரிக்கு என் தாயைப் பார்த்துவரத்தான் போகிறேன்.
"இப்போது சொல்லுங்கள். என் அண்ணன்மார் மூன்று பேரும் என்னைவிட வயதில் மூத்தவர்கள்தாம். இவர்களில் யாருக்காவது கான் மரியாதை காட்டும்படியாக இருக்கிறதா? யாருக்கு நான் மரியாதை செய்து போற்ற வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்? எங்களை மோசம் செய்து வீட்டை விட்டு விரட்டிய மூத்த அண்ணனுக்கா? சோற்றுப் பிண்டமாகத் திரியும் என் இரண்டாவது அண்ணனுக்கா? அல்லது பைத்தியமாக விடுதியில் அடை பட்டுக் கிடக்கும் என் மூன்றாவது அண்ணனுக்கா?”
இளைஞன் கேள்விக்கு அந்த மனிதர் உடனே பதில் சொல்லவில்லை. அவர் வாய் திறந்து பேசமுன் மகாவிங்க சாஸ்திரி மீண்டும் அவரைக் கேள்வி கேட்டான்.
"என் வாழ்க்கை அனுபவத்தை அறிந்த பின்னும் நீங்கள் இந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லுகிறீர்களா? அசோகர் இப்படிப்பட்ட பொருளற்ற கருத்துக்களைப் பரப்பக் கூடாது!"
மகாலிங்க சாஸ்திரியின் இச் சொற்களைக் கேட்ட அந்தக் குடியானவர் முகத்தில் ஒரு புன்சிரிப்பு உதித்தது.
"நீங்கள் இன்னும் என் கருத்தை ஏற்றுக் கொள்ள வில்லை போலிருக்கிறதே!" என்று இளைஞன் மறுபடியும் கேட்டான்.
இவ்வளவு சொல்லியும் அந்த மனிதருக்கு அறிவில் படவில்லையே என்ற எண்ணம் அவன் மனத்தில் தோன்றவில்லை. வேறு யாருமாயிருந்தால் அவர்களைப் பற்றி இளே ஞன் அப்படித்தான் எண்ணியிருப்பான். ஆனால, அந்தக் குடியானவரிடம் ஏதோ ஒரு பெரிய ஆற்றல் இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அவர் தன் கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டால், தான் ஒரு பெரிய சாதனை செய்த பலன் கிட்டும் என்பது போன்ற ஓர் உணர்வு அவனையறியாமல் அவன் மனத்தில் வேரூன்றி யிருந்தது.
"தம்பீ. என்மீது உனக்கு நம்பிக்கை உண்டாகிறதா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அவர்.
"ஐயா இதற்கு முன் நான் உங்களைப் பார்த்ததோ, பழகியதோ கிடையாது. ஆனால், இன்று உங்களைப் பார்த்த உடனேயே, எனக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை உண்டாகி விட்டது" என்றான் இளைஞன்.
"அது போதும்! நான் இவ்வளவு நேரமும் நீ கூறியவற்றைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்; அவ்வளவும் கேட்ட பிறகு எனக்குத் தோன்றியது இதுதான்: உன் வாழ்க்கை அனுபவம் மிகச் சிறியது, அசோகருடைய அனுபவம் மிகப் பெரியது. நீ வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும்தான் கண்டிருக்கிறாய்; அசோகர் வாழ்க்கையின் இரு பக்கத்தையும் கண்டவர். அவர் முழுக்க முழுக்க அனுபவித்து அறிந்த உண்மைகளைத்தான் நாடெங் கும் பரப்பி வருகிறார். அவருடைய வாசகத்தின் உண்மையை உணர்ந்து கொள்ள நீ இன்னும் அனுபவம் பெற வேண்டும். அதற்கு நீ உன்னையே தியாகம் செய்து கொண்டு சோதனையில் ஈடுபட வேண்டும்.
அவருடைய சொற்கள் அழுத்தமாக இருந்தன. அவை இளைஞன் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. அவருடைய சொல் எதையும் மீறிப் பேச வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவேயில்லை.
தம்பீ, நான் உனக்கொரு வழி சொல்லுகிறேன். அந்த முறையில் நீ சோதனை செய்து பார். இந்தச் சோதனைகளுக்காக நீ மூன்று ஆண்டுகள் ஒதுக்கினால் போதும். என் சொல்லை நம்பி நீ உன் வாழ்க்கையில் மூன்று ஆண்டுகள் செலவிட முன் வருகிறாயா?” என்று அவர் கேட்டார்.
முன் அறிமுக மில்லாதவராக இருந்தாலும் அவரை நம்ப வேண்டும் என்று ஒர் உள்ளுணர்ச்சி கூறியது.
"சொல்லுங்கள்" என்றான் மகாலிங்க சாஸ்திரி.
"முதலில் உன் பைத்தியக்கார அண்ணனைப் போய்ப் பார். பைத்தியக்கார விடுதியிலிருந்து, நீ இருக்கும் இடத்திற்கு அவனை அழைத்துக் கொண்டு வந்துவிடு. அவனை உனக்கு மேலானவனாக மதித்து மரியாதை செய். அன்பு காட்டு. ஆதரித்துக் காப்பாற்று. ஓர் ஆண்டுக்குப் பிறகு சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமையன்று இதே இடத்தில் என்னே வந்து பார். அப்போது நான் அடுத்த சோதனையைப் பற்றிக் கூறுகின்றேன்" என்றார் அந்தக் குடியானவர்.
“சரி” என்றான் இளைஞன். அந்தச் சொல்லை அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை அந்தக் குடியானவருக்கு இருந்தது. அவன் குடியானவரைப் பற்றி எதுவும் விசாரித்துக் கொள்ளவில்லை. உடன் வந்த பிராமணர்களெல்லாம் தூங்கி எழுத்தபின் அவர்களோடு புறப்பட்டுச் சென்றான். போகும்போது குடியானவரிடம் "போய் வருகிறேன்" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டான்.
சரியாக ஓராண்டு கழிந்தது. புத்தாண்டு பிறந்தது. சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை வந்தது. மகாலிங்க சாஸ்திரி அன்று நண்பகல் நேரத்தில் அந்தக் கிராமத்துச் சத்திரத்துக்குள் நுழைந்தான். அவனை எதிர்பார்த்துக் கொண்டு அந்தக் குடியானவர் காத்திருந்தார்.
அவர் அருகில் சென்றவுடனேயே அவன் தானாகப் பேசத் தொடங்கினன். ஆனந்தத்தோடு "ஐயா, என் அண்ணனுக்குப் பைத்தியம் தெளிந்துவிட்டது!" என்று கூறினான்.
"எப்படி?" என்று கேட்டார் குடியானவர்.
"என் தாய்க்கு மூத்த அண்ணன் மேல் பற்று அதிகமாயிருந்தது. என் தந்தைக்கு இரண்டாவது அண்ணன்மேல் பாசம் அதிகமாயிருந்தது. என் மூன்றாவது அண்ணனுக்கு யாருடைய அன்பும் கிடைக்கவில்லை. அந்த ஏக்கம் அவனை வாட்டிக் கொண்டிருந்தது. நான் பிறந்த பின், தாய் தந்தை இருவருமே கடைசிப் பிள்ளையான என்னிடம் மிகுந்த அன்பு செலுத்தினர்கள். அந்த நிலையில் என் மூன்றாவது அண்ணன் முற்றிலும் ஒதுக்கப்பட்டவணுகி விட்டான். அன்புக்காக ஏங்கி ஏங்கி அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.
"சென்ற ஆண்டு நான் என் தாயைப் பார்க்கப் போனபோது தங்கள் கருத்துப்படி அண்ணனை என்னுடன் அழைத்து வந்து வைத்துக் கொள்ளப் போவதாகச் சொன்னேன். "அவன் பைத்தியமாயிற்றே, வேண்டாம்" என்று முதலில் மறுத்தாள். பிறகு நான் ஒரே பிடிவாதமாயிருந்ததால் ஒப்புக் கொண்டாள். அவளும் எனக்குத் துணையாக வீட்டில் வந்திருந்து அண்ணனைக் கவனித்துக் கொள்ள முன் வந்தாள். நான் அண்ணனைப் பைத்தியக்காரனாகக் கருதாமல் அன்பும் மரியாதையும் காட்டி நடந்து கொண்டேன். இதைக் கண்டு என் தாயும் அவனிடம் அன்பாக நடந்து கொண்டாள். பிள்ளைப்பாசம் அப்போதுதான் அவளுக்கு ஏற்பட்டது. எங்கள் அன்பு கிடைக்கத் தொடங்கியபின், அண்ணனுடைய பைத்தியம் சிறிது சிறிதாகத் தெளிய ஆரம்பித்தது. இப்போது அவன் முற்றிலும் தெளிந்தவனாகி விட்டான். ராஜகிரியில் உள்ள ஒரு கோயில் மடப்பள்ளியில் அவன் வேலை பார்த்து வருகிறான்” என்று சொல்லி முடித்தான் இளைஞன்.
"சரி, அடுத்த சோதனையை நான் இப்போது சொல்லுகிறேன். நீயும் உன் மூன்றாவது அண்ணனும் இப்போது உங்கள் இரண்டாவது அண்ணனைப் போற்றி நடக்க வேண்டும். ஓராண்டுக்குப் பிறகு இதே சத்திரத்தில் சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமையன்று என்னை வந்து பார்" என்றார் குடியானவர்.
"சரி, அப்படியே செய்கிறேன்" என்றான் அந்த இளைஞன். அன்று பகல் அவன் சத்திரத்திலேயே மற்றவர்களோடு சாப்பிட்டான். தனிச் சாப்பாடு தேடிப் பிராமணர் வீட்டுக்குப் போகவில்லை. புத்த பெருமான் கொள்கைகளில் அவனுக்குப் பற்று ஏற்பட்டிருந்தது. மாலையில் திரும்பவும் ராஜகிரிக்குப் புறப்பட்டுச் சென்றான்.
மறுபடியும் ஓராண்டு கழிந்தது. சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமை சத்திரத்துத் திண்ணையில் அந்தக் குடியானவர் அவனுக்காகக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவனும் உரிய நேரத்தில் வந்து சேர்ந்தான்.
"ஐயா, காங்கள் இப்போதுதான் இன்பமாக, குடும்பமாக வாழ்கிறோம். என் அண்ணன்மார் இருவரும் என் மேல் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். என் தாயும் எங்கள் மூவரையும் தான் பெற்ற செல்வங்கள் என்று கருதுகிறாள். ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு வாழ்கிறோம். பெரிய அண்ணன் கூட இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர வேறு எதுவும் இல்லை. இரண்டாவது அண்ணன் இப்போது எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டான். சமையற்கலை பற்றி ‘பாக சாஸ்திரம்' என்ற பெய ரில் அவன் எழுதிய புத்தகத்துக்கு ராஜகிரி மன்னர் பரிசு கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார்" என்று மகிழ்ச்சியோடு கூறினான் மகாலிங்க சாஸ்திரி.
"இந்தக் குடும்பப் பிணைப்பு ஏற்படக் காரணம் என்ன வென்று நினைக்கிறாய்?" என்று கேட்டார் குடியானவர்.
"அசோகருடைய பொன்மொழியும், அதைப் பின் பற்றிப் பார்க்க வேண்டுமென்ற தங்கள் தூண்டுதலும் தான் காரணம்" என்று இளைஞன் பதிலளித்தான்.
"இன்னும் ஒரே ஒரு சோதனை. இது சிறிது கடுமையான சோதனைதான். இதையும் செய்து பார்த்துவிடு" என்றார் குடியானவர். இளைஞன் கவனமாக அவர் கூறியதைக் கேட்டான்.
"தம்பி, இப்போது நீங்கள் மூன்று பேரும் உங்கள் பெரிய அண்ணன் வீட்டுக்குச் செல்லுங்கள். பணம் எதுவும் வேண்டாம் என்றும், உங்களுக்கு ஏதாவது வேலை கொடுத்து வயிற்றுக்குச் சோறு போட்டால் போதும் என்றும் கேளுங்கள். அவன் வீட்டுக்கு உங்கள் தாயை முதலில் கூட்டிச் செல்ல வேண்டாம். வீட்டில் நீங்கள் இடம் பெற்ற பிறகு, உங்கள் அண்ணனிடம் மட்டுமல்லாமல் அண்ணியிடமும் மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்" என்று சோதனையின் விவரத்தைக் கூறினர் குடியானவர்.
வழக்கம்போல் அடுத்த ஆண்டு சித்திரைமாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று தம்மை வந்து சந்திக்கும்படி அவர் சொல்லத் தவறவில்லை.
ஒராண்டுக்குப் பிறகு இளைஞன் அவரைச் சத்திரத்தில் சந்தித்தான்.
"அசோகர் வாக்கு அமுத வாக்கு! ஐயா, இப்போது எங்கள் அண்ணன் தானகவே எங்களுக்குப் பல வசதிகள் செய்து கொடுத்திருக்கிறான் வாணிபத்தில் வரும் லாபத்தை எங்கள் ஒவ்வொருவர் பெயருக்கும் நிலம் வாங்கக் கூடப் பயன் படுத்தியிருக்கிறான்” என்று மகாலிங்க சாஸ்திரி மகிழ்ச்சியோடு கூறினான்.
"தம்பீ. இந்த மாறுதலுக்குக் காரணம் என்னவென்று நினைக்கிறாய்?"
"அம்மா அதிகம் செல்லம் கொடுத்ததால் அவன் தான்தோன்றியாக வளர்ந்தான். அப்பாவின் அளவுக்கு மிஞ்சிய திட்டமான கண்டிப்பு அவர்மீது வெறுப்பைத் தூண்டவே அவன் கட்டுப்பாடற்ற தறுதலையாக மாறி விட்டான். நாங்கள் யாவரும் அவனை மதிக்காமல் இருக்கவே அவன் எங்களைப் பகைவராகக் கருதி வீட்டை விட்டுத் துரத்தி விட்டான். இப்போது நாங்கள் எல்லோரும் அவனை மதித்துப் போற்றி நடந்ததைப் பார்த்தும், எங்களுக்குள்ளே நிலவும் அன்பைக் கண்டும் அவனும் மனம் மாறி விட்டான். ஐயா, உங்கள் பேச்சைக் கேட்டதால் எங்கள் குடும்பமே புது வாழ்வு பெற்றுவிட்டது" என்று கூறினன் இளைஞன்.
"இனிச் சோதனை எதுவும் தேவையில்லை. அசோகர் எழுத்துப் பொருள் பெற்றுவிட்டதல்லவா?" என்று கூறிச் சிரித்தார் குடியானவர்.
"ஐயா, அசோகரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டிருக்கிறது" என்றான் இளைஞன்.
"அசோகரை யாரும் எளிதாகப் பார்க்கலாம். தலைநகருக்குப் போனால் அரண்மனையில் அவரைப் பேட்டி காணலாம். சாதாரண குடியானவனை என்னிடம் பேசுவது போலவே அவரிடம் எந்தப் பிரச்சினை பற்றியும் பேசலாம்" என்று கூறினர் குடியானவர்.
மகாலிங்க சாஸ்திரி அன்றே தலைநகருக்குப் புறப்பட்டான். அதற்கு வேண்டிய ஆயத்தங்களோடுதான் அவன் ராஜகிரியிலிருந்து புறப்பட்டு வந்திருந்தான்.
அரண்மனையில் மாமன்னரைப் பார்க்க அவனுக்கு எளிதாக அனுமதி கிடைத்தது. மணி மண்டபத்தில் அரசர் வருகைக்காகக் காத்திருந்த பலரோடு அவனும் காத்திருங்தான். கணீர் என்ற மணியோசையைத் தொடர்ந்து எழுந்த வீணையின் மெல்லிய நாதத்துடன் அரசர் மண்டபத்தினுள் நுழைந்தார். அரியணையில் அவர் அமர்ந்தபின் எல்லோரும் எழுந்து வணங்கி நின்றனர்.
மகாலிங்க சாஸ்திரி மாமன்னரைக் காண விரும்புவதாக அரண்மனை அதிகாரி கூறினார். இளைஞன் எழுந்து நின்றான். அவன் வாய் திறக்குமுன் அசோகரே பேசினார்:
"அமைச்சர்களே, மகாலிங்க சாஸ்திரியை நான் நன்கு அறிவேன், அவர் இளைஞராயினும், பெரிய பண்டிதர், அவருடைய பணி நம் அரசுக்கு இன்றியமையாதது. அவரை நான் கமது மாவட்ட நீதிபதிகளிலே ஒருவராக நியமிக்கிறேன். இந்த ஆண்டுமுதல் அவர் ஒரு பிரதேச மகாமந்திரராகப் பதவி ஏற்று நமது அரசுக்குப் பணிபுரிய ஆணையிடுகிறேன்" என்று கூறினார்.
அவருடைய குரலும் தோற்றமும் அவர் யார் என்பதை இளைஞனுக்குத் தெளிவாக்கிவிட்டன. குடியானவர் உருவத்தில் வந்து தன்னைக் கவர்ந்துகொண்ட பெருமான் அவர்தாம் என்று அறிந்து மகாலிங்க சாஸ்திரி ஆனந்த வெள்ளத்தில் மிதந்தான்.
----------------
கதை மூன்று - அன்பு வளர்க்கும் அண்ணல்
அந்தக் காடு நல்ல அடர்த்தியான காடு, கங்கை நதிக் கரையிலே உள்ள காடு வேறு எப்படியிருக்கும்! வானுறவோங்கி வளர்ந்ததோடு நெருங்கி அடர்த்திருந்த மரங்கள், அந்தக் காட்டில் பகலவன் ஒளி பாயாமல் செய்தன; ஒரே இருட்டு மயமாகத் தோன்றும்படி செய்தன. .
அந்தகாரம் நிறைந்த அந்தக் காட்டிலே, அதன் தன்மைக்கு ஏற்பவே பல கொடிய மிருகங்கள் நிறைந்திருந்தன. அந்தக் காட்டுப் பாதையில் கொள்ளைக்காரர்கள் கூடப் போகப் பயப்படுவார்கள். அவர்கள் அங்கே போகவேண்டிய வேலையே இல்லை. யாராவது மக்கள் போகும் இடமாக இருந்தால்தானே அவர்களுக்கு அங்கே வேலையிருக்கும்!
இதற்காக அந்தக் காட்டை மனித நடமாட்டமே இல்லாத காடு என்று ஒதுக்கிவிட முடியாது. அங்கே மனித நடமாட்டமும் இருக்கத்தான் செய்தது. எப்படி யென்றால், இளவரசர்களும், வேட்டை வீரர்களும் போரில்லாத நாட்களிலே தங்கள் வீர விளையாட்டுக்களை நடத்திப் பார்க்க அங்கேதான் போவார்கள்.
சீறிப் பாயும் சிங்கத்தின் வாயைப் பிளக்க வீரவாளை எப்படி வீச வேண்டும்? பதுங்கியிருந்து பாயும் புலியை ஒதுங்கியிருந்து அம்பெய்து உயிரைப் போக்குவது எப்படி? காட்டெருதுக்குச் சினத்தை மூட்டி, அதன் ஓட்டத்தில் வேகத்தைக் கூட்டி, வேலெய்து, விலாப்புறத்தைப் புண்ணாக்குவதெப்படி? கோட்டை வாயிலிலே கட்டிவைக்க, தனித்து வரும் யானையைப் பிடித்துவருவது எப்படி ? அரண்டு மிரண்டு, இருண்டு கிடக்கும் புதர்களின் பின்னே பதுங்கியிருக்கும் மானினங்களைக் கலைத்துவிட்டு அவை பயந்து பாய்ந்தோடும் வேகத்தோடு போட்டி போட்டுச் செல்லும்படி காணிமுத்து அம்பெய்து அவற்றை வீழ்த்துவது எப்படி? இப்படிப்பட்ட விளையாட்டுக்களுக்காக அங்கே வீரர்கள் வருவார்கள்.
அப்படிப்பட்ட வீரர்களிலே ஒருவன்தான் காசி இளவரசன் ஈசுவர நாதன். இளவரசன் ஈசுவர நாதன் கம்பீரமான தோற்றமுடையவன். வீரமும் ஆண்மையும் மிக்குடையவன்.
காசி அப்போது மாமன்னர் அசோகரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. காசி மன்னனை அசோகர் தம் அரசப் பிரதிநிதியாக நியமித்திருந்தார். அசோகர் தம் கீழ் உள்ள அரசர்களை, என்றும் தாழ்வாக மதித்ததில்லை. அவருடைய வாழ்விலே புனிதமான மாற்றம் ஏற்படுவதற்கு முன்புகூட, தம்மிடம் கப்பம் கட்டிவரும் சிற்றரசர்களை அவர் கொடுமைப் படுத்தியதோ, இழிவாக நடத்தியதோ கிடையாது. அசோகர் புதிதாகப் போருக்கு எழுந்ததில்லை; அவருடைய முன்னேர்கள் வீரப் போரிட்டுச் சேர்த்த நாடுகளை அவர் சிதறிப்போகாமல் திறமையாகத் தம் நேரிய ஆட் சியில் பிணைத்து வைத்திருந்தார்.
காசியும் அவரால் வெல்லப்பட்டதல்ல. ஈசுவர நாதனுடைய பாட்டன் இறந்தபின், அசோகர் அவனுடைய தங்தையைத் தம் சிற்றரசராக ஏற்றுக்கொண்டு, தம் அரசப் பிரதிநிதியாக அதிகாரம் கொடுத்துக் காசி நாட்டின் ஆட்சியை அவர் கையில் ஒப்படைத்திருந்தார். ஈசுவரநாதனின் தந்தையும் அசோகரிடம் விசுவாசமாக நடந்துகொண்டார். ஆனால் ஈசுவரநாதன் விவகாரம் அப்படிப்பட்டதல்ல.
அரச பரம்பரையிலே பிறந்த ஈசுவரகாதன் தீவிரமான சுதந்திர உணர்ச்சியுள்ளவன். அத்தோடு அவனது இளமைப் பருவம் அவனுக்குச் சுதந்திர ஆவேசத்தையே ஊட்டியிருக்தது என்று சொல்லவேண்டும். அவன் மனத்துக்குள்ளேயே தன் தந்தையின் போக்கை வெறுத்தான்.
தன் பாட்டன்தான் போரிலே தோற்றான் என்றால், தக்தை ஏன் தன் ஆண்மையைக் காத்துக்கொண்டிருக்கக் கூடாது? ஏன், தன் நாட்டைப் போரிட்டு மீட்டுக்கொண்டிருக்கக்கூடாது?-என்று அவன் மனத்திற்குள்ளேயே துடிப்பான். தன் காலத்திலாவது மவுரியர்களின் ஆட்சியினின்றும் காசியை மீட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்திற்குள்ளே கருவாகி உருவாகி வளர்ந்து கொண்டிருந்தது.
காசி இளவரசன் ஈசுவரதாதன் தன் தோள்வலியைப் பெருக்கிக் கொள்வதற்காகவும், அரசியல் முறைகளையும், இராஜதந்திரக் கோட்பாடுகளையும் அறிந்துகொள்வதற்காகவும் தீவிரமாக முயன்றுவந்தான். அவனுடைய ஆர்வத்தையும் வேட்கையையும் கண்ட அவனுடைய தந்தை அவனுக்குப் பெரும் பொறுப்புக்களைக் கொடுத்துப் பாதி அரசாங்க வேலைகளை அவனைக்கொண்டே முடித்துக் கொண்டார்.
அரசாங்க வேலைகள் இல்லாத ஓய்வுநேரத்திலே ஈசுவர நாதனையும் அவனுடைய தோழர்களையும் வேட்டைக் காட்டிலேதான் பார்க்கலாம்.
அன்று ஒரு நாள் வழக்கம்போல வேட்டைக் காட்டுக்கு ஈசுவரனாதனும் தோழர்களும் சென்றிருந்தனர். வழக்கத் திற்கு மாருக அன்று ஒரு பயங்கர நிகழ்ச்சி நடந்தது.
ஈசுவரகாதனுக்கு நேர் எதிராக ஒரு சிங்கம் வந்து விட்டது.
கூட வந்த தோழர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்று விட்டார்கள். இளவரசனை விட்டு விட்டு ஓடுவதா? அப்படியே ஒடுவதென்றாலும் அதற்குக் கூட அச்சத்தால் அவர்கள் கால்கள் நகரவில்லை. ஈசுவர நாதனும் சிங்கமும் நேருக்கு நேரே நின்றார்கள்.
அந்தச் சிங்கம் மிகுந்த பசியோடு இரை தேடிக் கொண்டு புறப்பட்டு வந்திருந்ததுபோலும். வாலைத் தூக்கிக் கொண்டு, எதிரே நின்ற ஈசுவரநாதனை நோக்கிப் பாய்ந்து வந்தது. ஈசுவரநாதன் இமை கொடிக்கும் நேரத் திற்குள்ளாக எதிர்த்துப் போரிட ஆயத்தமாகிவிட்டான். வாளை உருவிக் கொண்டு சிங்கத்தை எதிர்த்துத் தாக்கி னான். அது தன்மீது பாய்ந்தபோது சட்டென்று விலகிக் கொண்டான். பாய்ந்த வேகத்தில் அது படீரென்று தரையில் விழுந்தது. அது திரும்ப எழுவதற்குள் ஈசுவரநாதன் அதன் முதுகின் மேல் பாய்ந்து விலாவில் தன் வாளைப் பாய்ச்சி விட்டான். மிகுந்த ஆரவாரத்தோடு சிங்கம் இளவரசன் பக்கமாகத் திரும்பியது. அதன் விலாவில் பாய்ந்த வாளை உருவிச் சுழற்றிச் சுழற்றி அதன் முகத்தில் பல காயங்களை உண்டாக்கினான் இளவரசன். கடைசியில் சிங்கம் வாயைப் பிளந்து கொண்டு அவனைக் கடித்துக் குதறிவிட முன் வந்தது. தன் வாளை அதன் தொண்டைக் குழிக்குள் பாய்ச்சிக் கொன்று விட்டான் ஈசுவர நாதன்.
தோழர்கள் ஆரவார முழக்கங்கள் எழுப்பிக் கொண்டு ஈசுவர காதனைச் சூழ்ந்து கொண்டார்கள். தனியொருவனாக நின்று சிங்கத்துடன் நேருக்கு நேர் போராடி அதைக் கொன்றொழித்த அவன் வீரத்தைப் பலபடப் பாராட்டினர்கள். இரண்டு வீரர்கள் அந்தச் சிங்கத்தை ஒரு மரக் கொம்பிலே தொங்கவிட்டுத் தங்கள் தோள்களிலே அந்த மரக்கொம்பைத் தாங்கிக் கொண்டார்கள். வெற்றிக் களிப்போடு அவர்கள் நகர் நோக்கித் திரும்பினார்கள்.
திரும்பும் வழியில், அவர்கள் வரும் ஓசை கேட்டுப் புதருக்குள்ளே ஒளிந்திருத்த மான் ஒன்று தப்பி ஓடுவதற்காக வெளிப்பட்டுப் பாய்ந்தோடியது.
"இளவரசே, தங்கள் வெற்றி விருந்துக்கு இந்த மான் பயன்படுமே" என்று தோழன் ஒருவன் கூறினான்.
அவன் கூறி முடிப்பதற்கு முன்னால் மான் அம்புபட்டு வீழ்ந்தது. ஈசுவரனாதன் அவ்வளவு விரைவாக நாணேற் றிக் குறி பார்த்து அம்பெய்து ஒடும் மானைச் சாய்த்து விட்டான். அந்த மானையும் தோழர்கள் தூக்கிக் கொண் டார்கள். வழி முழுவதும் தோழர்கள் இளவரசனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே நடந்தார்கள்.
நகருக்குள் அவர்கள் நுழைந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது. சிங்கத்தைக் கண்டு வியப்போரும், சிங்கத்தைக் கொன்ற இளவரசனுடைய வீரத்தைப் பாராட்டுவோரும், அவர்கள் ஊர்வலத்தை வேடிக்கை பார்ப்போருமாகக் கூட்டம் கூடி விட்டது. அந்தக் கூட்டத்தினர் இளவரசன் குழுவினரை அரண்மனை வாயில் வரையில் தொடர்ந்து சென்றனர். பின்பு கலந்து சென்று விட்டனர்.
இளவரசன் ஈசுவரகாதன் வெற்றிக் களிப்போடு அரண்மனையினுள் நுழைந்தான். வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குள் அங்கு தான் வருமுன்னரே விருந்து ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்து வியப்படைந்தான்.
இந்தத் திடீர் விருந்து யாருக்காக என்று அறிய அவன் மனம் அவாக் கொண்டது.
அதற்குள் அவன் தந்தையே எதிர்ப்பட்டு அவன் கேள்விக்கு விடையளித்து விட்டார்.
மாமன்னர் அசோகர் காசிக்கு வருகிறாராம். புத்த சங்க கிர்மாணத்திற்காக வரும் அவர் ஒரு வேளை அரண்மனையில் விருந்துண்ண ஒப்புக் கொண்டிருக்கிறாராம். அவருக்காகத்தான் விருந்து ஏற்பாடுகள் நடைபெறுகின்றனவாம். மாமன்னர் அசோகரை ஈசுவரநாதன் அதற்குமுன் நேரில் பார்த்தது கிடையாது. அன்று அவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற மனக்கிளர்ச்சி ஒரு புறம். அவருக்கு விருந்து வைப்பதற்காகத் தனக்கு அந்த மான் சிக்கியதோ என்ற எண்ணம் ஒருபுறம். இப்படிப் பல திறப்பட்ட எண்ணங்களோடு உலவினால் ஈசுவரகாதன்.
மாமன்னர் அசோகரைப் பற்றி அவள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறான். அவனுடைய தந்தையே அவருடைய சிறந்த குணங்களைப் போற்றிப் பலமுறை பேசக் கேட்டிருக்கிறான்.
யாரும் எப்போதும் அசோகரைப் பற்றிக் குறைவாகப் பேசியதே கிடையாது. உலக முழுவதும் போற்றும் அவருடைய பெருமைகளைக் கேட்டுக் கேட்டு, தானும் அவரைப்போல் பெருமைக்காளாக வேண்டுமென்ற ஓர் ஆசை அவன் உள்ளத்தின் அடியிலே ஊறியது. எல்லாவற்றுக்கும் முதலாக அவன் தன் காட்டை அசோகரின் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். தன் ஆட்சியில் நாடு வரும்போது, நிச்சயமாக அடிமைத் தளையை உடைத்தெறிந்து சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென்று அவன் வீர உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. தன் காட்டை அடிமைப்படுத்தி யிருப்பவர் என்ற முறையில் அவனுக்கு அசோகர் மீது ஒரளவு வெறுப்பு இருந்தபோதிலும், அவருடைய புகழைக் கேட்டு கேட்டு அவரைத் தன் இலட்சிய நாயகராக அவன் ஏற்றுக் கொண்டிருந்தான். அந்த இலட்சிய நாயகரைக் காணப் போகிறோம் என்ற நினைப்பில் அவன் மனம் கிளர்க் தெழுந்தது வியப்பிற்குரியதல்லவே!
அசோகர் வரும் நேரத்தை எதிர்பார்த்து அவன் ஆவலோடு காத்திருந்தான். அவன் கொண்டு வந்த மான் அன்று சிறப்பான கறியாகச் சமைக்கப்பட்டிருந்தது.
மாலை உணவுக்குத்தான் அசோகர் வருவதாக இருந்தார். எனவே அந்திப் பொழுது நெருங்க நெருங்க அரண்மனையில் எல்லோரும் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாக வும் வேலைகளைக் கவனிக்கலானார்கள். கோட்டை வாயிலிலேயே, மன்னர் மாமன்னரை எதிர் கொண்டு வரவழைக்க ஆயத்தம் செய்யப்பட்டது.
கதிர் மறைய இன்னும் ஒரு காழிகைப் பொழுது இருந்தது.
வீரமுரசம் அதிர்ந்தது.
தொடர்ந்து கணகணவென்ற மணியோசை எழுந்தது.
புத்தம் சரணம் கச்சாமி !
தருமம் சரணம் கச்சாமி !
சங்கம் சரணம் கச்சாமி !
பிட்சுக்கள் சூழ அசோக மாமன்னர் அரண்மனை வாயிலினுள் நுழைந்தார். காசி மன்னர் அவரை வணங்கி வரவேற்றார். தம் பரிவாரங்கள் சூழ மாமன்னரையும் உடன் வந்த துறவிகளையும் அரண்மனையினுள் அழைத்து வந்தார்.
மழுங்க வழித்த தலையும் காவியுடையுமாகக் காட்சி யளித்த நூறு பிட்சுக்களின் நடுவிலே, ஒளிமணி முடியும் கனிந்த அருட்பார்வையும், கம்பீரம் சற்றும் குறையாத திருமுகமும் படைத்த மாமன்னர் அசோகர் நடந்து வந்த காட்சி, நூறு நிலவுகளின் இடையே ஒரு பகலவன் தோன்றி ஒளி வீசிக்கொண்டு நகர்ந்து வருவது போன்றிருந்தது.
ஒரு மாமன்னரை வரவேற்க ஒரு சிற்றசரர் முறையாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யவேண்டுமோ அத்தனை ஏற்பாடுகளும் குறைவறச் செய்திருந்தார் காசி மன்னர். வேலையாட்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற, சுழன்று சுழன்று ஓடி ஒடிப் பணிபுரிந்தனர்.
வரவேற்பு மண்டபத்திலே எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். காசி மன்னரோடு அரசியல் பற்றிச் சிறிது நேரம் அசோகர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் பார்வை இளவரசன் ஈசுவரநாதன் மீது பதிந்தது.
"தங்கன் மைந்தன்தானே?" என்று அசோகர் கேட்டதற்கு ஒரு புன்னகையைப் பதிலாக அளித்துப் பேசாமலிருந்தார் காசி மன்னர்.
"ஈசுவரநாதா, உன் வீர சாகசத்தைப் பற்றிக் கேள்விப் பட்டேன். சிங்கத்தை வெல்லும் ஒரு சிங்கத்தைத் தன் மகனாகப் பெற்ற காசி மன்னர் பெரும் பாக்கியசாலிதான்!” என்று மாமன்னர் கூறினர்.
ஈசுவரகாதனின் உள்ளம் முழுவதும் இந்தப் பாராட்டுரையால் மகிழ்ச்சி வெள்ளம் நிறைந்து வழிந்தது. அவனி முழுவதும் வளைத்தாளும் ஒரு மாமன்னர்-உலகம் போற்றும் ஒரு பெரிய சீல நாயகர் தன்னை நேரில் நின்று போற்றிப் புகழ்ந்து பேசுகிறார் என்னும்போது எந்த இளைஞன் உள்ளம்தான் எக்களிப்படையாமல் இருக்கும்!
புத்த சங்கம் அமைக்கவந்த அசோகர் தன் வீரச் செயலை எவ்வாறு அறிந்தார்! அரண்மனையில் இருப்பவர்க்கே சற்று முன் தான் அச்செய்தி தெரிந்தது. அது நிகழ்ந்து இரண்டு நாழிகைப் பொழுதுகூட ஆகியிருக்காது. அதற்குள் அசோகருக்கு எப்படித் தெரிந்தது என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.
விருந்து ஆயத்தமாகிவிட்டதாகப் பணிப்பெண்கள் வந்து கூறினர். உடனே காசி மன்னர் யாவரையும் விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.
விருந்துண்ணும்போது அசோகரின் அருகில் காசி மன்னரும் ஈசுவரகாசனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இருபுறத்திலும் வரிசையாகப் புத்த பிட்சுக்கள் அமர்ந்திருந்தார்கள்.
விருந்து மிகச் சிறப்பாகவே தயாராகி யிருந்தது. அரண்மனைச் சமையற்காரர்கள் மிகுந்த கவனத்தோடும் திறமையோடும் உணவுவகைகளைப் பாகம் பண்ணியிருந்தார்கள். ஆனால், அந்த விருந்து ஈசுவரநாதனுக்கு ஏமாற்றமளித்துவிட்டது. அவன் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் கறி அன்று விருந்தில் பரிமாறப்படவில்லை.
புத்த பெருமான் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தார். புத்த சங்கத்தில் சேர்ந்தவர்கள் கொல்லாமை நோன்பைக் கட்டாயமாகக் கடைப் பிடிக்கவேண்டும் என்பது விதியாகத்தான் நெடுநாள் இருந்துவந்தது.
இடையிலே யாரோ கதை கட்டி விட்டிருந்தார்கள்.
புத்த பெருமான ஒரு பேதை போய்க் கண்டானாம். அவனுக்குப் புத்த பெருமான் உயிர்களைக் கொல்லக் கூடாது என்று போதனை புரிந்தாராம். அந்தப் பேதை உணவுக்காகக் கொல்லக் கூடாதா என்று கேட்டானாம். உணவுக்காகவும் கொல்லக் கூடாது என்று அழுத்தக் திருத்தமாகப் பதிலளித்தாராம் பெருமான். மேலும் ஒரு சந்தேகம் என்று கேட்டானம் பேதை. என்ன? என்று கேட்டிருக்கிறார் புத்த பெருமான்.
"தானாகச் செத்துப்போன உயிர்களின் உடலைத் தின்னலாமா?' என்று அவன் கேட்டானாம்.
"அதை வேண்டுமானல் தின்னலாம், கொல்லுவது பாபம். செத்துக் கிடப்பதைத் தின்பது பாவமில்லை" என்று புத்த பெருமான் கூறினராம்.
இந்தக் கதையைக் கட்டிவிட்டவர்களின் நோக்கம் நிறைவேறிற்று.
கொல்லுவது பாவம்; புலால் தின்னுவது பாவமில்லை என்ற போலிக் கொள்கை புத்த பெருமானின் விளக்கம் என்ற பெயரிலே நாடெங்கும் பரவிவிட்டது. நாளா வட்டத்தில் செத்ததைத் தின்னலாம் என்ற கொள்கை போய்த் தான் கொல்லாத எதையும் தின்னலாம் என்ற கருத்து எங்கும் பரவிவிட்டது. கொல்லுவதற்கென்றும் கொன்ற பாபத்தை ஏற்றுக் கொள்ளுவதற்கென்றும் ஒரு வகுப்பினர் தோன்றினர்கள். அவர்கள் பாவத்தைப் பற்றி அக்கறை கொள்ளாமல், தங்கள் போக போக்கியங்களேயே பெரும் பாக்கியமாகக் கருதிப் புலால் கடைகளைத் திறந்தார்கள். மற்றவர்கள் தின்னுவது பாவமில்லை என்ற கொள்கையில் தாராளமாகப் புலால் தின்னத் தொடங்கினார்கள்.
இந்தக் கொள்கைகள் புத்த சங்கத்தினரிடையேயும் பரவிவிட்டன. புத்த பிட்சுக்களே புலால் தின்னுவது பாவமில்லே என்ற கருத்தை ஏற்று நடக்கத்தொடங்கி விட்டார்கள். எல்லோரும் புத்த பெருமானின் கருத்துக்கு மாறுபாடில்லாமல் தாங்கள் நடப்பதாகக் கருதிக்கொண்டார்கள்.
அசோகர் புத்த சங்கத்தில் ஈடுபாடு கொண்ட பின்னர்தான் புத்த பெருமானின் உண்மையான தத்துவங்கள் மீண்டும் நடைமுறைக்கு வந்தன. புத்த சங்கத்தினர் உயிர்களைக் கொல்லவும் கூடாது; புலால் உண்ணவும் கூடாது என்ற கண்டிப்பான விதி ஏற்பட்டது. அசோகர் தம் வாழ்வில் இந்த ஏற்பாட்டை உண்மையோடு அனுசரித்து வந்தார். மேலும் அவர் கலிங்கப் போரில் மனமாறுதலடைந்தபின் புத்த தருமக் கொள்கையில் கருத்துான்றி அவற்றைத் தம் வாழ்வில் அனுசரித்து வந்தார். புத்த தருமங்களை வாழ்வில் கைக்கொள்ளக் கொள்ள, அவருக்கு ஒரு விதமான மனச்சாந்தியும் இன்பமும் ஏற்பட்டு வந்தன.
அசோகர் புலால் உண்பதில்லை என்பதை அவருடைய ஆட்களின் மூலம் அறிந்துகொண்ட காசி மன்னர், தம் பரிசாரகர்களுக்குச் சொல்லி-புலாலுணவு வகைகளை அடியோடு நிறுத்திவிடச் செய்தார். விருந்தில் புலாலைப் படைத்து அசோகரின் மனம் புண்படாமல் செய்துவிட்டோம் என்ற மன அமைதியுடன் அவர் இருந்தார்.
சிங்கத்தைத் தான் எதிர்த்து நின்று போராடியதை வலிய வந்து பாராட்டிய மாமன்னர், மான் கறியின் சுவையையும் பாராட்டிப் பேசுவார் என்று ஈசுவரகாதனின் உள்ளம் எதிர்பார்த்தது. ஆனால் மான் கறியே படைக்கப் பெறவில்லை என்பதை அறிந்தபோது அந்த இள உள்ளம் ஏமாற்ற மடைந்தது. பின்னால் காரணத்தை அறிந்த போது, ஈசுவரநாதன் புத்த சங்கத்தைப் பற்றியே அலட்சிய எண்ணம் கொள்ளத் தொடங்கிவிட்டான். உண்ணும் உணவிலெல்லாம் பாகுபாடுகள் செய்வது மூட நம்பிக்கைகளின் வகையைச் சார்ந்தது என்று அவன் கருதலானான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொன்றில் விருப்பிருக்கும்; ஒவ்வொன்றில் வெறுப்பிருக்கும். உணவு, மரக்கறி என்றும் புலால் என்றும் இருவகைப் பட்டது. இதில் மனம் விரும்பியதை அவனவன் உண்ண வேண்டுமே யொழிய இன்னதுதான் உண்ண வேண்டும் என்று சட்டம் வகுப்பது தகாது என்று அவன் கருதினான்.
மக்களை நல்வழிப்படுத்துவதற்கென்று சமயங்களை வகுக்கின்ற பெரியார்கள் இப்படிச் சில மூட நம்பிக்கைகளையும் புகுத்திவிடுகிறர்களே என்று அவன் எண்ணினான். அசோகர் போன்ற பேராற்றல் வாய்ந்த மாமன்னர்கள் இது போன்ற கொள்கைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்களே என்று அவன் சலித்துக் கொண்டான். வாய்ப்புக் கிடைத்தால் மாமன்னருடன் பேசி அவருடைய இந்தக் குருட்டுக் கொள்கையை நீக்க வேண்டும் என்றும் உறுதிகொண்டான். முன் பின் பழக்கமில்லாத நிலையில், அப்போதே தான் மாமன்னருடன் வாதிடுவது சரியல்ல என்ற நினைப்பில் அவன் அன்று எதுவும் பேசவில்லை.
விருந்து முடிந்தவுடன், மான்னர் காசியரசருடன் அரசியல் பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்.
நெடுநாட் கழித்து ஈசுவரநாதனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அசோக மாமன்னருடன் கூட இருந்து பழகும் ஓர் அரிய வாய்ப்பு- அவனுடைய இலட்சிய நாயகரை அணுகிப்பழகும் கிடைத்தற்கரிய சிறந்த வாய்ப்பு, அவன் எதிர்பாராமலே கிடைத்தது.
அசோகர் புனித மன மாற்றம் அடைந்த பிறகு புத்த சங்கத்தில் சேர்ந்து, அன்பும் அறநெறியும் பரவப் பாடுபட்டார். உண்மையும் ஒழுக்கமும் ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் அரசியலிலும் கூட நிலைக்கவேண்டுமென்று பெரு முற்சியுடன் தளராது உழைத்தார். அதற்காக, புத்த சங்கக் கொள்கைகளிலே தம் மனத்தை ஈடுபடுத்தியதற்காக, அரசியல் வேலைகளில் கவனம் செலுத்தாமல் இருந்துவிடவில்லை.
அசோகருடைய பெரும் பேரரசு, அவருடைய காலத்தில் சிதறாமல் குலையாமல் கட்டிக் காக்கப்பெற்று வந்தது. இதற்கு அவர் இரத்தவெறி மிகுந்த போர்முறையையோ, அநாகரிகமான நேர்மையற்ற இராஜ தந்திர முறைகளையோ கையாளவில்லை. ஒவ்வொரு செயலிலும் அவர் உண்மையையும் அன்பையும் கருவிகளாகக் கொண்டு அறவழியை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டார்.
ஈசுவரநாதனின் மனப்போக்கையும் அவன் கொண்டிருந்த சுதந்திர எண்ணங்களையும் ஒற்றர்கள் மூலம் அசோகர் தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். ஈசுவரநாதன் அதே எண்ணங்களுடன் மேலும் பெரியவனாக வளர்ந்து வந்தால், தன் பேரரசுக்கு எவ்வளவு சீர் குலைவு ஏற்படும் என்பதையும் அவர் கணக்கிட்டு வைத்திருந்தார். போரென்று எழுந்தால், ஈசுவரகாதன் பொடியாகிப் போவான் அசோகரின் மாபெரும் படைக்கு முன்னுல் என்பது உண்மைதான். ஆனால் போர் புரி தில்லை என்று உறுதி கொண்டிருந்த அசோகரை எதிர்த்து அந்த இளைஞன் கலகம் செய்தால் அது எத்தகைய தீய விளைவுகளை உண்டாக்கும்!
காசி இளவரசன் கலகம் செய்தான்; அசோகருடைய ஆட்சி கலகலத்துவிட்டது என்ற நிலை ஏற்பட்டால், மற்ற சிற்றரசர்களுக்கும், இதுவே எடுத்துக்காட்டாகி விடும். தாங்களும் காசி இளவரசனைப் பின்பற்றிச் சுதந்திரம் பெற ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்தச் சூழ்நிலை தன் பேரரசில் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று அசோகர் முடிவு செய்திருந்தார். அதற்கு காசி இளவரசனுடைய மனம் மாறியாக வேண்டும். அந்த மாற்றம் அவன் உள்ளத்திலே தன்னை யறியாமலே நிகழ்ந்தாக வேண்டும். மாறுகிறோம் என்று அவன் சிறிதும் எண்ணிப் பாராத நிலையிலே மன மாற்றம் உண்டாக வேண்டும்.
இப்படித்தான் அசோகர் தம் இராஜ தந்திரத்தை நிறைவேற்ற எண்ணினார். ஈசுவரகாதன் சுதந்திர வெறி மட்டுமே கொண்டிருந்தவனாக இருந்திருந்தால், அசோக ருக்கு இந்த வேலை எளிதாக இருந்திருக்காது. அவன் அசோகரைத் தன் இலட்சிய நாயகராகவும் கொண்டிருந்ததால் அது மிகவும் எளிதாக நிறைவேற வசதியாயிற்று.
அந்த நிகழ்ச்சி இப்படித்தான் கடந்தது.
ஒரு நாள் காசி மன்னருக்கு மாமன்னரிடமிருந்து ஒரு திருமுகம் வந்தது. தம் அமைச்சர்களில் ஒருவர் முதுமையுற்று ஓய்வு பெற்றுவிட்டபடியால், அந்த வேலைகளை அசோகரே மேற்கொள்ள வேண்டியிருந்தது. வேறு ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்தும்வரையில் மாமன்னர் தாமே அதைக் கவனிக்க வேண்டியிருந்தது. தமக்குத் துணையாக இளவரசன் ஈகவரநாதனைச் சில நாட்கள் அனுப்பி வைத்தால் நலமாக இருக்கும் என்று மாமன்னர் தம் கைப்பட எழுதியிருந்தார்.
காசி மன்னர் மறுத்துரைக்க எண்ணவேயில்லே. மகனே அழைத்துப் 'புறப்படு’ என்று கட்டளையிட்டுவிட்டார். அசோகர் வேலைக்கு என்று அழைத்திருக்தால் ஈசுவர நாதனின் சுதந்திர உள்ளம் அதை உதறித் தள்ளி யிருக்கும். தமக்குத் துணையாக ஒத்தாசை இருக்கவே அழைக்கிறார் என்ற நினைப்பில் அவன் பெருந்தன்மையோடு தன் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படித்தான். மறு நாளே பாடலிபுத்திரத்திற்குப் போய்ச் சேர்ந்தான்.
அசோகர் அவனை அன்பும் ஆர்வமும் பொங்கித் ததும்ப வரவேற்றார். அவன் நலத்தையும் அவன் தாய் தந்தையர் நலத்தையும் அக்கறையோடு விசாரித்தார். தன் அழைப்புக்கு இணங்கி உடனே புறப்பட்டு வந்தமைக்காகத் தன் பாராட்டுதல்களைக் கூறினர். பின் அவனிடம் பார்க்க வேண்டிய வேலைகளை ஒப்படைத்தார். ஈசுவர நாதனிடம் ஒப்படைத்த வேலை, சிற்றரசர்களின் நிலையைக் கண்காணிப்பதாகும். அசோகர் தம் பேரரசு சீர் குலையாமல் காப்பற்ற - சிற்றரசர்களைக் கண்காணிப்பதற்காக ஒரு தனித் துறையே உண்டாக்கி, அதற்கு முதிர்ந்த அனுபவம் வாய்ந்த ஓர் அமைச்சரையே நியமித்திருந்தார். அந்தப் பேரறிஞரின் வேலையைத் தான் ஈசுவரகாதன் தொடர்ந்து பார்க்க வேண்டியிருந்தது. நாள் தோறும் மாமன்னர் தாமே முன்வந்து அரை நாழிகைப் பொழுது அவ்வேலையில் ஈடுபடுவார்.
ஈசுவராாதன் வேலையை ஒப்புக்கொண்டு கருத்தூன்றிப் பார்க்கத் தொடங்கினான். அசோகரின் அரசாட்சி முறையையும், இராஜதந்திர வழிகளையும் தானும் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தோடுதான் ஈசுவராாதன் அந்த வேலையில் அமர்ந்தான். ஆனால் போகப் போக அவனுக்கு அசோகரிடம் இருந்த மதிப்பு அதிகரித்தது. அவர் மீது அன்பும் தோன்றி வளர்ந்தது.
பொதுவாகத் தலைவர்களாக விளங்குவோரிடம் தூரத்திலிருந்து பழகுவதே சிறப்பு. அவர்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் உய்ர்ந்த மதிப்பும் கருத்தும் நெருங்கிப் பழகப் பழகக் குறைந்துவிடும். சில தலைவர்களிடம் நெருங்கிப் பழகப் பழக, ஏன் இந்த மனிதரிடம் பழகினோம் என்ற வெறுப்பும் ஏற்பட்டு விடும். பெரும்பாலான தலைவர்கள் நிலை இப்படித்தான். ஆனால் அசோகர் நிலை இப்படிப் பட்டதல்ல, நெருங்கிப் பழகப் பழக, அவர் மீது நமக்கு அன்பே உண்டாகும். அவருடைய கொள்கைளில் ஆழ்ந்த பற்றே உண்டாகும். அதற்குக் காரணம், அவருடைய உண்மையான செயலும், உயர்ந்த ஒழுக்கமும் சிறந்த மனப் பண்புமேயாகும்.
சுதந்திர உணர்ச்சியும் மகோன்னதமான இலட்சிய வேட்கையும் கொண்ட ஈசுவரனாதன், தன் இலட்சிய நாயகரான அசோகரிடம் நெருங்கிப் பழகப் பழக அவருடன் ஓர் அன்புறவால் பிணிப்புண்டான் என்றால் அது வியப்புக் குரியதல்ல. அன்புணர்ச்சி வளருமானால் பகையுணர்ச்சி கருகி மடியத்தானே செய்யும் ஈசுவரகாதன் பாடலிபுத்திரம் வந்தபிறகு தானே அசோகராய்-அசோகரே தானாய் ஆன ஒரு நிலையை எய்திவிட்டான். அவருடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் மாசுமருவற்ற அவனுடைய இளம் உள்ளத்திலே வேரூன்றி விட்டன. புத்த தருமம் அவனுடைய வாழ்வின் இலட்சியமாகி விட்டது. அரசியலிலேயும் புத்த தருமமே நிலைபெற வேண்டுமென்ற கருத்து அவனுக்கு உடன்பாடாயிற்று.
ஒரு முறை பெரும் சிக்கலான ஒரு பிரச்சினை ஏற்பட்டது. சிற்றரசன் ஒருவன் அசோக மாமன்னருடன் போர் தொடுப்பதாக அறிவித்து ஒலை அனுப்பியிருந்தான். ஒற்றர்களின் குறிப்பும் அவன் போர் ஆயத்தங்கள் செய்து வரும் உண்மையைப் புலப்படுத்தின.
அந்தச் சிற்றரசன் எண்ணம் இதுதான். அசோகர் போர் செய்யவில்லை என்ற உறுதி பூண்டிருக்கிறார். தான் போருக்குப் புறப்பட்டால், போரைத் தவிர்ப்பதற்காக விட்டுக்கொடுத்து விடலாம். தான் எளிதாக சுதந்திர அரசு பெற்றுவிடலாம். பிறகு அசோகரின் பேரரசுக்கு நடுவிலேயே தன் வலிமையால் ஒரு குட்டிப் பேரரசு கூட நிறுவிவிடலாம்.
சிற்றரசனின் இந்த மனப்போக்கைப் பொறுப்பில் இருந்த ஈசுவரநாதன் நன்கு தெரிந்துகொண்டான். ஆனால், அவனுடன் ஏற்படக் கூடிய போரை எப்படித் தவிர்ப்பது? அவனுடைய முயற்சிகளைப் பின்னடையச் செய்வது எப்படி? இதற்கு எப்படிப்பட்ட இராஜ தந்திரத்தைக் கையாளுவது?
சிந்தித்துச் சிந்தித்துப் பார்த்தான். அவனுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை. இந்தச் செயல் தன் அனுபவத்திற்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டதாகப் புலப்பட்டது.
எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று அசோகரிடமே கேட்டு விடுவதென்று புறப்பட்டான்.
அசோகர் அங்கே இல்லை. தோட்டத்தில் இருப்பதாகக் கூறினார்கள். தோட்டத்திற்குச் சென்றான்.
அங்கே அவன் கண்ட காட்சி அவனை மெய்மறந்து நிற்கச் செய்தது. மாமன்னர் அசோகர் தோட்டத்தின் நடுவே பசும்புல் தரையில் சாதாரணமாக உட்கார்ந்திருந்தார். அவருடைய மடியிலே ஒரு மான் கன்று படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தது. அவரைச் சுற்றிலும் மான் கன்றுகள் அச்சமற்றுப் புல் மேய்ந்து கொண்டு நின்றன. புறாக் கூட்டம் ஒன்று அவரைச் சுற்றி இரைந்து கிடந்த தானிய மணிகளைப் பொறுக்கித் தின்று கொண்டிருந்தது. அவர் தோளிலும் மடியில் கிடந்த மான் கன்றின் முதுகிலும் இரண்டொரு புறாக்கள் குந்துவதும் பறப்பதுமாக இருந்தன. தாங்கள் அந்த மனிதருக்குச் சற்றேனும் அஞ்ச வேண்டுவதில்லை என்ற எண்ணத்துடன் அவை அவரை நெருங்கிப் பழகுவதாகத் தோன்றியது. மனிதரைக் கண்டால் அஞ்சி அரண்டோடுகின்ற மிருகங்களையும் பாய்ந்து கொல்ல முனையும் கொடு விலங்குகளையுமே கண்டிருந்த ஈசுவர நாதனுக்கு இங்கே சற்றும் அச்சமின்றி அன்பு கொண்டு பழகுகின்ற உயிரினங்களைக் கண்டபோது வியப்பாக இருந்தது, அந்த உயிர்களுக்கும் மனிதர்களுக்கிருப்பதைப் போலவே அன்புணர்வும் உறவு மனப்பான்மையும் இருக்கின்றன என்பதை அவன் நேரில் கண்டு கொண்டான்.
தான் வந்தது எதற்கென்று அவனுக்கு நினைவு வரச் சிறிது நேரம் பிடித்தது. அது நினைவு வந்தவுடன் அவன் தடதடவென்று கடந்து அசோகரை நெருங்கினான். அவன் நெருங்கிச் செல்லும்போது புறாக்கள் படபடவென்று இறக்கைகளை அடித்துக் கொண்டு மேலெழும்பின. மான் கன்றுகள் துள்ளிப் பாய்ந்து ஓடின. அவன் அசோகரின் எதிரில் போய் கின்றவுடன் அவை மீண்டும் அங்கே வந்து சூழ்ந்து கொண்டன. தன்னையும் அவை தம் அன்புலகில் ஏற்றுக் கொண்டு விட்டன போலும் என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டான் ஈசுவரநாதன்.
அசோகர் அவனே நோக்கி நிமிர்ந்தார். தான் வந்த காரணத்தைச் சில சொற்களில் அவன் விளக்கிக் கூறினான்.
"உடனடியாகக் கவனிக்க வேண்டியதுதான்" என்று கூறிக் கொண்டே அசோகர் எழுந்திருந்தார். ஆனால், அவர் இச் செய்தியைக் கேட்டுப் பரபரபபோ கலவரமோ அடைந்ததாகத் தெரியவில்லை.
அலுவல்மனைக்கு வந்தவுடன், சிற்றரசனின் ஒலையை வாங்கிப் பார்த்தார் அசோகர். உடனடியாகத் தன்னை வந்து சந்திக்கும்படி அவனுக்கு ஒரு கடிதம் அனுப்புமாறு ஈசுவரகாதனிடம் கூறினர். தூதர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஆணவமும் அசட்டுத் தைரியமும் தொண்ட அந்தச் சிற்றரசன் அசோகரை வந்து காண மறுத்து விட்டான். மறுநாளே அச்செய்தி கிடைத்து விட்டது.
"ஈசுவரநாதா, நாளை நான் அந்தச் சிற்றரசனைச் சந்திக்கப் போகிறேன். நீயும் வருகிறாயா!" என்று கேட்டார் அசோகர்.
'வருகிறேன்!" என்றான் ஈசுவரநாதன்.
இருவரும் தங்கள் அரச உடைகளைக் களைந்து மூட்டை கட்டிக் கொண்டார்கள். ஆட்டிடையர்களைப் போல வேடம் கொண்டு, சிற்றரசனின் கோட்டைக்குள்ளே நுழைந்தார்கள். பால்காரர் போல் நடித்து அரண்மனை அந்தப்புரத்தை அடைந்து விட்டார்கள். அங்கே ஒரு மறைவான இடத்திலே நின்று தங்கள் அரச உடைகளை அணிந்து கொண்டார்கள்.
பகையரசனின் அரண்மனை. அரச உடையில் மாமன்னர். பின்னால் இளவரசன். அசோகர் சற்றும் கலங்கவில்லை. அவர் உடன் செல்லும் தைரியத்தோடு ஈசுவரகாதன் இருந்தான்.
கம்பீரமாக நடந்து சென்றார் அசோகர். சிற்றரசன் மந்திராலோசனை மண்டபத்தை அடைந்தார். திடீரென்று மாமன்னரை நேரில் கண்ட அதிர்ச்சி காவலர்களைப் பிரமிக்க வைத்தது. வாளை உயர்த்தி வணக்கம் கூறினர். "அசோகர் வந்திருக்கிறார் என்று உங்கள் அரசனிடம் போய்ச் சொல்" என்று கூறினர் அசோகர். ஒரு காவலன் ஒடினான். அசோகர் ஈசுவரநாதன் பின் தொடர நடந்தார்.
அந்தச் சிற்றரசன் ஓடோடி வந்து வணங்கி வரவேற்றான், இருவருக்கும் உயர்ந்த இருக்கை தந்து தான் கீழே நின்றான். அவனுடைய அமைச்சர்களும் எழுந்து வணங்கி நின்றனர்.
அசோகரிடமோ, ஈசுவரநாதனிடமோ அப்போது வாளில்லை. வேறு எவ்விதமான ஆயுதமுமில்லை. ஆனல் அந்தச் சிற்றரசன் ஏன் அப்படிப் பணிய வேண்டும்? வணங்க வேண்டும்?
சின்னஞ்சிறு பிள்ளை கூட இதன் காரணத்தைக் கூறி விட முடியும் வஞ்சகமாக, அசோகரிடம் அந்தச் சிற்றரசன் நடந்து கொண்டிருந்தால் அந்தச் செய்தி வெளிப்பட்டவுடன் அவனுக்கு என்ன கதி நேரிட்டிருக்கும் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியாது. மக்களிடையே அசோகருக்கு அவ்வளவு மதிப்பிருந்தது; அவ்வளவு அன்போடு மக்கள் அசோகரை நேசித்தார்கள். இதை அந்தச் சிற்றரசன் அறியாதவனல்ல. ஆகவே, அவன் எதிர்பாராத விதமாக - ஆயுதமற்றுத் தன் முன்னிலையில் திடுமென வந்து நின்ற அசோகரைக் கண்டவுடன் வியப்பும் திகைப்பும் அடைந்து வணங்கி நின்றது ஆச்சரியத்திற்குரியதல்ல.
ஆனால், ஒரு பகைவன் கோட்டையில் துணிந்து நுழைந்து கையில் எவ்விதமான படைக்கலனுமின்றி நெஞ்சுறுதி ஒன்றே துணையாக அவன்முன் நிற்கின்ற தன்மை அசோகரை யன்றி வேறு யாருக்கு வரும்? ஈசுவரநாதன் அசோகரின் நெஞ்சுறுதியைக் கண்டு பிரமித்தவாறே அவர் பின் நின்றான்.
வணங்கி நின்ற சிற்றரசனை நோக்கி அசோகர் சில கேள்விகள் கேட்டார். அவன் படையெடுத்துக் கலகம் செய்து சுகந்திரம் பெற முயன்ற செய்தி உண்மை யென்பதை அவன் வாய் மூலமாகவே அறிந்து கொண்டார். பின் அவர் பேசத் தொடங்கினார்.
முதலில் அவர் அவனுடைய சுதந்திர உணர்ச்சியையும் வேட்கையையும் பாராட்டினர். அவன் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டுமென்பது தன் குறிக்கோளல்ல என்பதை விளக்கிக் கூறினர். நாட்டு நிலைமையைப் படம் பிடித்துக் காட்டினர், சுதந்திரமாக அவன் தனியரசு ஏற்படுத்திய பின் பிற அரசர்களும் பேரரசை எதிர்த்துக் கிளர்ந்தெழக் கூடும் என்ற உண்மையை ஒளிவு மறைவின்றி அவனுக்கு எடுத்துரைத்தார். தனியரசுகள் பலப்பல ஏற்பட்டபின், அவற்றுள்ளே வலிமை மிக்க ஒன்று மற்றவற்றை அடக்கியாள முற்படும் என்ற பின் விளைவை விளக்கினர். அப்போது மீண்டும் அந்தச் சிற்றரசன் வேறு வழியின்றி ஒரு பேரரசுக்கு ஆட்பட நேரிடும் என்பதையும் எடுத்துரைத்தார். எதிர்த்துப் போரிடாத அசோகரிடமிருந்து விடுதலை பெற்று, மீண்டும் கொடுமையான போருக்கு உயிர்ப்பலி கொடுத்து அடிமைத் தனத்தை விலைக்கு வாங்க நேரிடும் என்பதை அவர் அந்தச் சிற்றரசனுடைய மனத்தில் பதியும்படி எடுத்துக் கூறினர். இத்தனை மாறுபாடுகளுக்கும் இடையிலேயே நாடெங்கிலும் ஏற்படக் கூடிய குழப்பம், கொள்ளை, கலகம், உயிர்க்கொலை, கட்டம், அழிவு எத்தனை, எவ்வளவு என்பதெல்லாம் எடுத்துரைத்தார்.
கடைசியாக, அவன் தன் அழைப்பை மதித்து வர மறுத்ததைக் கண்டித்து விட்டு, தன் ஆட்சியில் அவன் சுதந்திரத்திற்கோ, சுதந்திர உணர்ச்சிக்கோ பாதகமாக தான் கடந்து கொண்டிருக்கிறாரா என்று கேட்டார்.
முன்னோர்கள் போரிட்டுச் சேர்த்த பேரரசைக் கட்டிக் காத்துவருவதைத் தவிர அசோகர் எந்த அரசரையும இழிவாக நடத்தியதில்லை. எல்லோரையும் சிறப்பாகவே நடத்தி வந்தார். குடிமக்கள் எவ்வாறு அசோகரைப் போற்றி மதித்து வந்தார்களோ அவ்வாறே சிற்றரசர் அனைவரும் அவரைப் போற்றி மதித்து வந்தார்கள். அவர்கள் அசோகரின் பேரரசுக்கு ஆட்பட்டிருந்தார்கள் என்பதைத் தவிர வேறு எவ்விதமான குறைபாடுகளும் அடையவில்லை.
அசோகருடைய பேச்சு அந்தச் சிற்றரசனுடைய மனத்தைத் தொட்டது. தான் சுதந்திர அரசு நிறுவிய பின் தன் சிற்றரசுக்கு நேரிடக்கூடிய கதியைத் தன்னைக் காட்டிலும் அசோகர் தெளிவாக அறிந்திருக்கிறார் என்பதை அவன் உணர்ந்தான்.
அன்பு வழியில் ஒரு பேரரசை நிலை நாட்ட அசோகர் கொண்டிருக்கும் உண்மையான வேட்கையை அவன் மனம் ஆதரித்தது.
போர் வெறிக்கும் கொலை வெறிக்கும் ஊடே தத்தித் தடுமாறிக் கொண்டு நின்று தத்தளிக்கும் சுதந்திரத்தைக் காட்டிலும், போரரற்ற அமைதி விரும்பிய ஒரு பேரரசை, போட்டி, பொறாமையற்ற ஓர் அன்பு வழிப் பேரரசை, ஆதிக்க வெறியற்ற ஒரு நல்லரசை நிலை நிறுத்தத் தானும் உதவியாக இருப்பது பெருமைக் குரியதே என்பதை அவன் ஏற்றுக் கொண்டாள். தன் போர் ஆயத்தங்களை உடனடியாகக் கைவிடுவதாக அசோகருக்கு உறுதியளித்தான். அந்தச் சிற்றரசனுக்கு மனமாற்றம் ஏற்பட்ட பொழுதிலேயே ஈசுவரனாதனுக்கும் மனமாற்றம் ஏற்பட்டு விட்டது.
அசோக மாமன்னரின் பேரரசை நிலை நிறுத்துவதற்குத் தானும் தொடர்ந்துழைக்க வேண்டுமென்று அவன் தன் மனத்திற்குள்ளேயே முடிவு செய்துகொண்டான்.
கோட்டையிலிருந்து அசோகர் வெளியேறிய போது அவர் அடிநிழலை மட்டுமன்றி அவர் வழி முழுவதையும் பின்பற்றும் ஒரு மனநிலை பெற்று ஈசுவரநாதன் அவரைப் பின்தொடர்ந்து நடந்தான்.
முற்றும்
----------------------
This file was last updated on 14 Nov. 2019
Feel free to send the corrections to the webmaster.