கோடுகளும் கோலங்களும்
(சமூக நாவல்)
ராஜம் கிருஷ்ணன்
kOTukaLum kOlangkaLum
(Tamil Social Novel)
by rAjam kirushNan
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
The e-text has been generated using Google OCR and subsequent editing and proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கோடுகளும் கோலங்களும்
(சமூக நாவல்)
ராஜம் கிருஷ்ணன்
Source:
கோடுகளும் கோலங்களும் (சமூக நாவல்)
ராஜம் கிருஷ்ணன்
தாகம்
34, சாரங்கபாணித் தெரு, தி. நகர், சென்னை-600 017
முதற் பதிப்பு: டிசம்பர் 1998; இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2007
விலை ரூ. 80.00
----
Kodugalum Kolangalum (Tamil Social Novel)
By Mrs. Rajam Krishnan,
C Rajam Krishnan,
Second Edition Sept 2007, pages 232
Dhagam,
34, Sarangapani Street, T. Nagar, Chennai 600 017
ISBN: 81-89629-16-6
--------
முன்னுரை
பயிர்த் தொழிலையும், பயிர்த் தொழில் செய்பவர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளையும் மையமாக்கி ஏற்கனவே, நான் “சேற்றில் மனிதர்கள்” என்ற நாவலை எழுதியுள்ளேன். அந்த நாவல் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றதுமன்றி, இரு பரிசுகளுக்கும் உரித்தாயிற்று. பாரதீய ஞானபீடம், இதை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இது மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
புரட்சிப் பெண்மணி மணலூர் மணியம்மா 1930களில் விவசாயத் தொழிலுக்காகக் கீழ்த் தஞ்சைப் பிரதேசத்தில் இயக்கத்தைத் தோற்றுவித்தவர். 1953 இல் காலமான அவருடைய வாழ்க்கை வரலாற்றை - கிராமத்து எளிய விவசாயக் கூலி மக்களின் வாய் மொழியாகவே கேட்டறிந்து ‘பாதையில் பதிந்த அடிகள்’ எழுதும் போதும் இதே பயிர்த் தொழிலாளரையே எழுத்து மையம் கொண்டது.
இந்த நாவல் ‘கோடுகளும் கோலங்களும்’, பயிர்த் தொழிலையும் அதில் ஈடுபடும் பெண்களின் வாழ்வையும் மையமாக்கி எழுதப்பட்டதுதான். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் பார்வையைச் செலுத்தி எழுதப்பட்டது. எப்போதுமே, முரணான உண்மைகள் சிந்தையை நெருடும் போது அந்த நெருடலே அதை ஆராய வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும். அதுவே படைப்புக்கும் ஆதாரமாகும்.
சுதந்தரம் பெற்ற பின்னர், மாறிய அரசியல் சூழலில், ஒரு கால் நூற்றாண்டுகாலம் கழிந்த பின் அந்த அரசியல் சுதந்திரம் உழுதுண்டு வாழும் கடைக் கோடி மனிதரின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன என்ற கோணத்தில் பார்த்து எழுதிய நாவல் ‘சேற்றில் மனிதர்கள்’.
அவர்களுடைய சமூக, பொருளாதார மேம்பாடுகள், பல போராட்டங்களுக்குப் பின்னரும் கனவாகவே இருந்த நிலை கண்டேன். சுதந்தரம் பெற்ற பின் - நாற்பதாண்டுக் காலம் ஓடிய பிறகு விஞ்ஞான தொழில் நுட்பங்கள் எல்லாத் துறைகளிலும் வியக்கத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. பயிர்த் தொழிலில், பெருகி வரும் மக்கட் தொகைக்கு ஈடுகட்ட புதிய வீரிய வித்துக்கள், பயிரிடும் முறைகள், நீர் நிர்வாகம், புதிய ரசாயன உரங்கள் ஆகியவை, முன்னேற்றப் பாதையில் மக்களை வளமையை நோக்கிச் செல்ல வழி வகுத்திருக்கின்றன என்று சொல்லலாம்.
ஆனாலும், ஒரு சமுதாயத்தைச் சக்தி வாய்ந்ததாக இயக்கவல்ல பெண்களுக்கு இந்த வளமை பயன்பட்டிருக்கிறதா என்ற சிந்தனை குறிப்பாகத் தோன்றியிருக்கவில்லை எனலாம்.
கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிக்கும் பயிர்த் தொழிலைப் புறக்கணித்து, நிலமற்ற விவசாயிகளும், நிலம் உள்ள பெருந்தனக்காரரும் நகரங்களுக்கும் பெயர்ந்து வந்து, சுற்றுச் சூழலை மாசுபடுத்தி ஒரு நச்சுக் கலாச்சாரத்தைப் பரவ விடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற நிலையை எதிர் நோக்கத் தெம்பின்றி, பணமே பொருளாதாரச் செழிப்பு என்ற மாய மானை நோக்கிய மக்கள் நகர்ப்புறங்களில் நெருங்கினர்.
பெண்களின் சுயச்சார்பு, பொருளாதார சுதந்தரம் என்பதில் நகரங்களையும், நகர்ப்புறங்களையும் சார்ந்ததாகவே, அவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என்று கணிக்கப்பட்டது.
உண்மை நிலை என்னவென்றால், கிராமப்புறங்களில் விவசாய பயிர் உற்பத்தியில், மிகப் பெரும்பான்மையினராகப் பெண்களே ஈடுபட்டிருக்கின்றன. இந்த உற்பத்தியில் மிக அதிகமான விழுக்காடு, பெண்களின் உழைப்பை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.
நிலத்தில் உழுவது ஒன்று தவிர, எருச்சுமந்து கொட்டுதல், அண்டை வெட்டுதல், விதைத்தல், நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல், தூற்றுதல், புழுக்குதல் என்று நெல்லை அரிசியாக்கிச் சோறாக்கிக் கலத்தில் இடுவது வரையிலும் அவர்களின் உழைப்பே பிரதானமாகிறது.
இவ்வளவு பொறுப்பைச் சுமந்து கொண்டு உழைப்பை நல்கும் பெண்களுக்கு, நிலத்தின் மீது பட்டா உரிமையோ, முடிவெடுக்கும் உரிமையோ இருக்கிறதா என்பதும் கேள்விக் குறி.
வீட்டோடு இருந்து, வீடு, கொட்டில் மாடு, பயிர் எல்லாவற்றையும் பேணுவதில் தன் வாழ்வையே ஈடாக்கும் பெண்ணுக்கு, விடுப்பு உண்டா? ஊதியம், ஊதிய உயர்வு, ஓய்வுக்கால ஆதரவு, போனஸ் என்ற சலுகைகள் பற்றியோ, பேறுகால, உடல் நோய் வரும்போதான மருத்துவ வசதிகளுக்குத் தேவையான உத்தரவாதம் பற்றியோ ஓர் அடிப்படை உணர்வேனும் உண்டோ?
பெண் என்றால், பெண் தான். எல்லா வேலைகளையும் செய்வது அவள் இயல்பு. அவ்வளவுதான்.
ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என்று சொந்தமாக நிலம் வைத்துக் கொண்டு பயிரிடும் குடும்பங்களில், தங்கள் நிலங்களில் வேலை செய்வது தவிர, இது போன்ற வேறு சில விவசாயிகளின் நிலங்களில் கூலி வேலையும் செய்கிறார்கள் பெண்கள்.
உழவு செய்யும் ஆண், ஒரு நாளைக்கு ஆறு மணி உழவோட்டி, ரூபாய் எண்பதிலிருந்து நூறு வரையிலும் கூலி பெறுகிறான். ஆனால் பெண்ணோ, அவள் வேலைக்கு ஊதியமாக, பதினைந்தில் இருந்து இருபது வரையிலும் தான் பெறுகிறாள்.
சமவேலை - சமகூலி என்பது விவசாயத் தொழிலைப் பொறுத்து ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கிறது.
அறுவடைக்காலத்தில் இருவரும் ஒரே வேலையைச் செய்தாலும், ஆணுக்குக் கூலி நெல்லுக்கு மேல் பணமும் கொடுக்கிறார்கள். ஆனால் பெண்ணோ, அதே அளவு நெல்
மட்டுமே என்றும் கூலியாகப் பெறுகிறாள். பணம் கிடையாது.
இது கொஞ்சமும் சரியில்லையே, ஏன் இப்படி? நீங்கள் ஏனம்மா ஊதிய உயர்வு கோரவில்லை. போராடவில்லை என்ற கேள்விக்கு வந்த பதில் சிந்தனைக்குரியதாகும்.
ஐந்து ஏக்கர் வரை வைத்துக் கொண்டு தங்கள் நிலங்களில் தாங்களே வேலை செய்யும் சிறு விவசாயக்காரர்கள் - பெண்கள் ஒருவருக்கொருவர் என்று உதவிக் கொள்கிறார்கள். நிலமற்ற விவசாயக் கூலிகள் - பெரும் பண்ணை என்ற அளவில் போராட்டங்கள் நிகழ்கின்றன; தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் சிறு விவசாயிகள் பெண்கள் அத்தகைய போராட்டத்தை விரும்பவில்லை. ஏனெனில், நடவு, களையெடுத்தல் வேலைகளுக்கு இருபது ரூபாய் என்று ஐந்து ரூபாய் கூலி உயர்வைக் கூட அவர்கள் ஏற்கவில்லை. கூலி வாங்குவதுடன் அதே கூலி கொடுக்க வேண்டும் என்றாகிவிடுமே? உழவோட்ட ஆட்கள் கிடைப்பதில்லை. சில இடங்களில் உபரியாகச் சாராயம் வாங்கவும் காசு கேட்பதாகச் சொல்லப்படுகிறது.
பெண் ஏர்பிடித்து உழுவதில்லை. அது ஒரு தடையாகவே இருக்கிறது. எனவே ஆண், உழவுத் தொழிலில் எப்படி இருந்தாலும் கோலோச்சுபவனாகவே இருக்கிறான். பெண் இந்தத் தொழிலில் அதிகமாக வஞ்சிக்கப்படுகிறாள் எனலாம்.
இந்த நிலையை மாற்றி, பெண் தன் உழைப்பின் பலனையும் உரிமையுணர்வையும் பெற, வாய்ப்பாகத் துவக்கப்பட்டது தான் தமிழ்நாடு பண்ணை மகளிர் பயிற்சித் திட்டம் - அல்லது - ‘தான்வா’ என்ற அமைப்பு. ‘தமிழ்நாடு விமன் இன் அக்ரிகல்ச்சர்’ என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமே ‘தான்வா’வாகும். இது டென்மார்க் அரசின் ‘டேனிடா’ உதவித் திட்டத்தின் ஆதாரத்தில் தோன்றியதாகும். தமிழ்நாடு முழுவதும், சுமார் இருநூறு விவசாயத் தொழில் பட்டதாரிப் பெண்களைத் தேர்ந்து, சிறப்புப் பயிற்சி அளித்து, அவர்களைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு விவசாயிகளாகிய குடும்பப் பெண்களுக்கு மண் பரிசோதனை, விதைச் செய் நேர்த்தி, நுண்ணூட்ட உரங்கள், நடவு, நீர் பராமரிப்பு, உரமிடுதல் ஆகிய அம்சங்களின் சிறு சிறு நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கும் திட்டமாகும். இதற்கு முன்னர், உழவர் பயிற்சித் திட்டங்கள் பரவலாகச் செயலாக்கப்படாமல் இல்லை. ஆனால் இதுவோ குறிப்பாகக் கிராமப்புறத்து மகளிரைச் சக்தி மிகுந்தவர்களாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரப்படுத்தப்பட்ட திட்டம்.
இந்தப் பெண் பயிற்சியாளர், அந்தந்தக் கோட்டங்களில் உள்ள விவசாய அலுவலர்களின் ஒத்துழைப்புடன், மகளிரைப் பயிற்சிக்குத் தேர்ந்தனர். வாலிப, நடுத்தர வயதுப் பெண்கள் சொந்தக் குடும்ப நிலங்களில் வேலை செய்பவர்களே பயிற்சிக்கு உரியவராயினர். இருபத்தைந்து பேர் கொண்ட குழுவினருக்கு, ஐந்து நாட்கள் பயிற்சி; பயிற்சிக் காலத்தில் ஒரு சிறு ஊக்கத் தொகையும் அளிக்கப் பெற்றது. பிறகு இவர்களே ஒவ்வொருவரும் பத்துப் பத்துப் பெண்களைப் பயிற்றுவித்தார்கள்.
பயிற்சி பெற்ற உடன் இந்தப் பெண்கள், செயலில் இறங்க உடனே ஊக்கம் பெற்றதும், இவர்கள் அறிவு, விரிந்து புதிய அநுபவங்களாக, விளைச்சலில் பலன் பெற்றதும், அண்மைக்கால வரலாறு. பண்ணை மக்களின் வாழ்வில், புதிய மாற்றங்கள் இசைந்தன. புதிய மாற்றத்துக்கான ஆதாரம், தன்னம்பிக்கையும் பொருளாதாரச் சுயச்சார்புமாகும்.
காலம் காலமாகக் குருட்டுத் தடங்களில் ஒடுக்கப்பட்டு வந்த இந்திய விவசாயக் குடும்பப் பெண், விழிப்புணர்வு பெற்றிருக்கிறாள். சிந்திக்கும் திறன் இவளுக்கு வந்திருக்கிறது. இவர்களுடைய தன்னம்பிக்கையும் சுயச்சார்பும், உழைப்பின் பயனாகப் பெற்றவை என்றாலும், சிந்திக்கும் சக்தியே அவற்றைச் சாத்தியமாக்கி இருக்கிறது. பயிர்த் தொழிலின் முன் நிற்கும் பிரச்னைகளை, சமூக நோக்கில் எதிர்நோக்குமளவுக்கு, ஒன்றுமே தெரியாமல் உழைத்து உழைத்துத் தேய்ந்திருந்த இந்தப் பெண்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கின்றன.
காலந்தோறும் பெண் என்ற கணிப்பு, பெண்களின் பின்னடைவுகளையே துல்லியமாகக் காட்டுவதான சோர்வையே தந்திருந்தது.
ஏறக்குறைய ஒரு பத்தாண்டுக்கால முயற்சியில் தான்வா என்ற பண்ணை மகளிர் குழுவினர் தமிழ்நாடெங்கும் பல்கிப் பெருகி, ஒரு புதிய வரலாறு படைப்பதைக் காணும் போது நம்பிக்கை துளிர்க்கிறது. சமூகத்தின் முன்னேற்றத்துக்கும், வளமைக்கும் ஆதாரமான தொழிலில், பெண்கள் ஈடுபட்டு, விளைவு கண்டு ஆற்றல் பெறுவது சாதனையல்லவா!
பெண்கள், பொதுத்துறைகளிலும், அரசுத் துறைகளிலும் முக்கிய இடங்களில் பொறுப்பேற்றிருப்பதும், அமைப்பு ரீதியிலான பெண்கள் இயக்கங்களின் இடைவிடாத செயல்பாடு சார்ந்த அனைத்து முடிவெடுக்கும் நிறுவனங்களுக்கும் பெண்களைக் குறிப்பாக்கியே வலியுறுத்தி இருக்கின்றன என்றால் மிகையில்லை.
இந்தத் திட்டத்தினால் பயனடைந்து, புதிய சாதனை படைக்க ஊக்கம் பெற்று வரும் பல பெண்களைச் சந்திக்க, எனக்கு ஊக்கமும் உறுதுணையுமாக இருந்தவர், டேனிடா திட்டத்தின் ஆலோசகர் திருமதி மங்களம் பாலசுப்ரமணியன் ஆவார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு வட்டங்களில் உள்ள கிராம விவசாய மகளிரையே என் ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டேன்.
எனக்குப் பலவகைகளிலும் பயிற்சியாளரான பெண் அலுவலர் பலர் உதவினார்கள். குறிப்பாக திருமதிகள், மங்களம், பத்மாவதி, வளர்மதி ஆகியோருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். பல கிராமங்களிலும் நான் சென்று சந்தித்த தான்வா பெண்கள் தங்கள் அநுபவங்களை ஆர்வத்துடன் எடுத்துரைத்தார்கள். வயல்களுக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு அம்சத்தையும் காட்டியும், எத்தனை முறைகள் கேட்டாலும் சந்தேகம் தீர்த்து வைக்க விளக்கியும் எனக்கு உதவிய பெண்கள் பலர். அவர்களில் முசர வாக்கம் குப்பம்மாள், ‘வேண்டாம்மா’ லட்சுமி, அரண்வாயில் இந்திரா, பிரேமா, ஜகதீசுவரி, அவளூர் ஏகம்பம்மா, சுந்தரி, காக்களூர் குணாபாய் ஆகியோர் குறிப்பிடத் தகுந்த சில பெண்மணிகள். பயிற்சி வகுப்புகள், செயல் முறை விளக்கங்கள், பிறகு பெண்களில் அன்றாட ஈடுபாடுகள், அநுபவங்கள் எல்லாவற்றிலும் நான் பங்கு கொள்ளும் வகையில் எனக்கு உதவி புரிந்தார்கள் தான்வாக் குழுவின் இப் பெண்மணிகள்.
என்னைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு நாவலும் புதிய பரிசோதனை முயற்சியாகவே இருக்கிறது. அந்த வகையில் எனக்குப் பேருதவி புரிந்த திருமதி. மங்களம் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட அனைத்துப் பெண்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தொடரை ‘புதிய பார்வை’ இதழில் வெளியிட்ட இதழாசிரியர் ம.நடராசன், இணையாசிரியர் பாவை சந்திரன் அவர்களுக்கும் என் நன்றி.
எனது எல்லா நூல்களையும் வெளியிட்டு என் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் தாகம் பதிப்பாளர் திரு.அகிலன் கண்ணன், மீனா அவர்களுக்கும் என் நன்றியை வெளியிட்டுக் கொண்டு இந்நூலை வாசகர்கள் முன் வைக்கிறேன்.
--- ராஜம் கிருஷ்ணன்
---------------
அத்தியாயம் 1
புதன் கிழமை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதாம். செவந்தி படுக்கையில் உட்கார்ந்த வண்ணம் உள்ளங்கைகளை ஒட்டிக் கண்களில் வைத்துக் கொண்டு எழுந்திருக்கிறாள். சாதாரணமாகவே காலையில் ஐந்து மணிக்கு அவள் விழித்து எழுந்து விடுவாள். இன்று இன்னமும் ஐந்தாயிருக்காது என்று தோன்றியது.
அவள் படுத்திருந்த உள்வாயில் நடையில் ஒரு குட்டித் திண்ணை இருக்கிறது. வாசலில் ஒரு பக்கம் நீண்டும், ஒரு பக்கம் ஒருவர் மட்டுமே உட்காரும் அகலத்திலும் திண்ணைகள் இருக்கின்றன. நீண்ட திண்ணை உள்ள பக்கத்துக் கோடியில் ஒரு அறையும் உண்டு. அதில் அநேகமாக, நெல் மூட்டைகள் இருக்கும். மழைக்குப் பாதுகாக்க வேண்டிய கட்டாயமாக விறகு எரிமுட்டை கூடச் சேர்ந்திருக்கும்! வைக்கோல் தூசு எப்போதும் உண்டு.
நடை கடந்தால் முற்றம், சார்புக் கூடம் தவிர இரு புறங்களிலும் தாழ்வரை. ஒரு பக்கத்தில் அம்மி கல்லுரல் சாமான்கள். பின்பக்க நடையை ஒட்டிப் பெரிய சார்புத் தாழ்வரை. அதில் குந்தாணி, உலக்கை, ஏர், உழவு சாதனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. கிணறு, துவைக்கல், மாட்டுக் கொட்டில்... உழவு மாடுகள்... ஒரு சின்னப் பசு, அதன் முதற் கன்று...
மாட்டுக் கொட்டில் மண் சுவரும் கூரையும் புதுப்பிக்க வேண்டும் என்று சொல்லுகின்றன. வீட்டுக் கூடம் முன்புறம் எல்லாம் நாட்டு ஓடு வேய்ந்த கட்டிடங்கள். சமையலறை, பின் நடைச் சார்பு தென்னங் கீற்றுக் கூரை.
புருசன் ரங்கசாமியும் பன்னிரண்டு வயசுச் சரவணனும் திண்ணையில் படுத்திருக்கிறார்கள். மூத்த பெண் சரோசா ‘பத்தி’ல் படிக்கிறாள். வெகு நேரம் கூடத்து அறையில் படித்து விட்டுத் தூங்குவாள்.
அப்பா, கயிற்றுக் கட்டிலில் கருணையாகிப் போன ஒரு மெத்தையில் கிடக்கிறார். ஒரு சிறு முட்டை பல்ப், பச்சையாகச் சுவரில் வீற்றிருந்து அப்பாவின் எழும்புக் கூட்டு மார்பு விம்மித் தணிவதைக் காட்டுகிறது. அண்ணன்... இந்த வீட்டு மகன் மண்ணைத் தட்டிக் கொண்டு மதுரைப் பட்டணம் போய்விட்டான். இந்தக் கரும்பாக்கத்துக் கிராம மண் அவனுக்கு ஒட்டவில்லை. மருமகனும் மகளும் வீட்டோடு இருக்க வேண்டிய நிலை.
மண்... மண்ணில் ஒரு புதுமை காணப் போகிறோம் என்று சுறுசுறுப்பு செவந்தியின் கைகளில் ஏறுகிறது.
கிணற்றில் இருந்து நீரிறைத்து விடுகிறாள். கொட்டிலில் இருந்து சாணம் வாரிக் கழுத்து உடைந்த சட்டி ஒன்றில் கரைக்கிறாள். வாசல் முற்றத்தில் சட சட சட் சட்டென்று ஏதோ சலங்கை ஜதியின் லயம் போல் சாண நீர் விழுகிறது.
குட்டித் திண்ணை, வாயில் நடை, உள் நடை எல்லாம் மெழுகுகிறாள். வாயிலைப் பெருக்கி முடிப்பதற்குள் வெளிச்சம் மெல்லப் பரவி, இருள் கரைகிறது. ஆனி பிறந்தாயிற்று. பள்ளிக்கூடம் திறந்து, புதிய புத்தகங்கள் தேடிப் பிள்ளைகள் போகிறார்கள். இவளும் புதிய பாடம் - புதிய பாடம் தொடங்குகிறாள் மண்ணில்...
முதலில் மண் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றார்கள். அதைச் செய்வதற்கில்லை. இப்போது பரிசோதனைப் பட்டமாக விதைக்கப் போகிறாள். அவள்... அவளே.
ஒரு ஏக்கருக்கு எட்டு சென்டு நாற்றங்கால்.
இவளோ கால் ஏக்கர் தான் புதிய பாடம் படிக்கப் போகிறாள்.
சமையலறையில் அடுப்புச் சாம்பலை வாரி, மெழுகுகிறாள். சாமான்கள் கிணற்றடி ஓரம் துலக்கச் சேருகின்றன.
அம்மா நலிந்த குரலில் தன்னைக் காட்டுகிறாள்.
“இன்னும் பொழுது விடியல. அப்பா ராமுச்சூடும் தூங்கல கறட்டுக் கறட்டுன்னு இழுப்பு; இருமல். இப்பத்தா செத்தக் கண்ண மூடுனாரு. நீ அதுக்குள்ளாற எந்திரிச்சி லொடபுடங்கற...”
செவந்திக்குக் குற்ற உணர்வு குத்துகிறது.
“இன்னக்கி, நடவுன்னு நேத்தே சொன்னதுதான். அப்பாவுக்கு ஒண்ணில்ல. டாக்டர் குடுத்த மாத்திரய ஒழுங்கா சாப்புடறதில்லை. எத்த சாப்புடக் கூடாதோ, அத்த ஊத்திக்கிறாரு...” என்று முணுமுணுத்தவளாய் அப்பனுக்கு அருகில் வந்து நிற்கிறாள். அவர் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருக்கிறார்.
முகம் தான் எப்படி வெளுத்துப் போயிற்று? கழுத்து, மார்புச் சதை பைபையாகத் தொங்குகிறது. முன் முடி வழுக்கையாகிப் பனங்காய் வாடினாற் போல் இருக்கிறது. கண்கள் செருகி, விழி பிதுங்க ஓர் இருமல் தொடர் உலுக்குகிறது.
கட்டிலுக்கடியில் வட்டையில் சாம்பல் போட்டு வைத்திருக்கிறார்கள். செவந்தி அதை எடுத்து அவர் முன் நீட்டுகிறாள். கோழை என்று நிறைய வரவில்லை. அவஸ்தைதான் பெரிதாக இருக்கிறது.
முதல் நாளைக்கு முதல் நாள் தான், பெரிய சாலையில் நிலவள வங்கியின் வாசலில்
அப்பன் உற்சாகமாக உட்கார்ந்திருந்தார். நிலத்தின் உரிமையாளர் அவர். அவர் மண்ணில் தான் அவள் கால் காணியை, புதிய முறையில் பயிர் வைக்கப் போகிறாள்.
ஏறக்குறைய ஐந்து ஏக்கரா நிலமிருந்தும், அடமானத்திலும், கடனிலும் பயிர் வைக்க ஆள் கட்டில்லாமலும், சோர்ந்து போன விவசாயக் குடும்பமாகியிருக்கிறது. இதை நிமிர்த்த வேண்டும்.
“அப்பா, நேத்து சாயங்காலம் சாராயம் குடிச்சிட்டு வந்திருக்கிறீங்க. அத்த நிறுத்துங்க. உங்களுக்கு அதுக்கு மட்டும் காசு எப்படிக் கிடைக்குதோ? எருவடிக்கப் போவ, அது இதுன்னு வண்டியோட்டிட்டுக் காசு தேடிக்கிறீங்க...”
“இல்....ல... இல்...ல செவுந்தி... கொஞ்சுண்டு சுடுதண்ணி வச்சிக் கொண்டா...” என்று இரைஞ்சுகிறார்.
செவந்தி உள்ளே சென்று அடுப்பை எரிய விடுகிறாள். அவருக்கு ஒரு வட்டையில் வெந்நீரை ஊற்றி ஆற்றிக் கொண்டு வருகிறாள்.
“அம்மா, நீ எந்திரிச்சிக் கொஞ்சம் வேலயப் பாரு. உக்காந்துட்டே இருக்காதே...” என்று எழுப்புகிறாள்.
வாசலில் கணவன் அதற்குள் எழுந்து போயிருக்கிறான்.
“த, சரவணா... எந்திரிச்சி முகம் கழுவிட்டுப் படி. எந்நேரமும் ஆட்டம் ஓட்டம். பத்தும் பத்தாம மார்க் வாங்கிப் பாஸ் பண்ணிருக்க. எந்திரு?”
நடவாளுகள் ஐந்தாறு பேர், கன்னியப்பன் எல்லோருக்கும் சோறு பொங்க வேண்டும்.
தவலையை அடுப்பில் வைத்து உலை போடுகிறாள். அரிசியை முறத்தில் எடுத்து வைக்கிறாள். இன்னோர் அடுப்பில், ஒரு சட்டியில் பருப்பை வேக வைக்கிறாள். வெங்காயம், கத்திரி, உருளை என்று காயை அரிந்து ஒரு புறம் நகர்த்துகிறாள். புளியைக் கரைத்துக் குழம்பையும் கூட்டி வைக்கிறாள்.
“சரோ? எந்திரி, எந்திரியம்மா? இன்னைக்கி நடவு. கிளாசெடுத்த மாதிரி பயிர் வைக்கிறோம். எல்லாம் ஒம்பது மணிக்கு வந்திருவாங்க. நீயும் செத்த வந்திட்டு, அப்படியே ஸ்கூலுக்குப் போகலாம்?” என்று எழுப்புதலுடன் தன் ஆசையையும்
வெளியிடுகிறாள். இத்தனை நேரமும் பேசாமல் இருந்த அம்மா சட்டென்று சீறுகிறாள்.
“ந்தா, அத்த ஏனிப்ப கழனிக்கு இழுக்கற? அது படிக்கிற பொண்ணு... ராவெல்லாம் படிச்சிட்டுத் தூங்கிருக்கு...”
“ஆமா, உம்புள்ள படிச்சிட்டு இப்ப பவுன் பவுனா கொட்டுறா. இவ படிச்சிட்டுக் கொட்டப் போறா! இதப்பாரு! மண்ணுதா சோறு போடும், கடைசி வரை...!”
இவளும் பதிலுக்குக் கொட்டி விட்டு மேற்கொண்டு காரியங்களைக் கவனிக்கப் போகிறாள்.
“தா கன்னீப்பா...”
“ரா, தண்ணி பாச்சிருக்கில்ல? நாஞ் சொன்ன மாதிரி, ஒரு குளம் போல பண்ணிட்டு, அதில இந்த பாக்கெட் அஸோஸ்பைரில்லம்... இது தான் உயிர் எரு... இத்தக் கரைச்சிடு... நாத்தக் களைப்புடுங்கி அதில வைச்சிடு... நடவு வயல்ல ரெடி பண்ணிடு... நா வாரேன்...” அவன் கருப்பாக இருக்கும் அந்த உயிர் உரப் பாக்கெட்டை மாற்றி மாற்றிப் பார்க்கிறான்... “நான் வந்திடறே. நா வந்தப்புறம் எல்லாம் செய்யலாம். சாந்தி கூட வரேன்னிச்சி. நீலவேணி, அம்சு, உன் ஆயா வருதா?”
“ஆறாளு வரும்கா, அஞ்சாளு போதும் காக்காணிக்கு. ஆனா நீங்க நடவுல புது மாதிரின்னீங்க... ஆறாளு வரும்” என்று சொல்லிவிட்டு அவன் மாட்டை அவிழ்த்துக் கொண்டு, எவள் எடுத்து வைத்த சாமான்களுடன் போகிறான்.
மணல், இரண்டு பெரிய முனைகள், நீளமான கயிறு... பிறகு சைக்கிள் டயர் ஒன்று...
நோட்டுப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு செவந்தி சரி பார்க்கிறாள்.
பல் விளக்கிவிட்டு புருசன் வந்தாயிற்று. அம்மாதான் மாடு கறந்து வர வேண்டும்.
“சரோ... உலையில அரிசி போட்டிருக்கு. பாத்துச் சரிச்சி வையி. பாட்டி பால் கறந்ததும் டீ போட்டுக் குடியுங்க...”
“நா ஒரெட்டுப் போயிட்டு பார்த்து ஓடியாரேன்!” என்று கிளம்புகிறாள்.
“என்னம்மா நீ! என்னால முடியாது! நீ சோறு வடிச்சிட்டுப் போ! பெரிய பாயைத் தூக்க முடியாது!”
“என்னது? பொம்புளையாப் பிறந்துட்டுப் பாயைத் தூக்க முடியாதுங்கற? சம்சாரி வீட்டுப் பொண்ணு! இந்த சல்லியம் எல்லாம் இங்க நடக்காது. காலம எந்திரிச்சி அந்த ரேடியோவத் திருகிவுடறே. அது என்ன பாட்டுடீ! சட்புட்ன்னு வேலையைப் பாரு! இன்னக்கிப் புதுசா உங்கையில நடவு செய்யி, கத்துக்க! உம் போல படிச்ச பொண்ணுகதா வரணும். சாந்தி பத்துப் படிச்சிருக்கா. அவ ஒண்டியாளா, கொல்ல மேட்டுல பயிரு வைப்பேன்றா! படிச்சிப்புட்டா மண்ணு அந்நியமில்ல. வந்தாங்களே பெரிய மேடம். அவங்க பெரிய பெரிய படிப்புப் படிச்சவங்க! இதைச் சொல்லிக் கொடுத்தவங்க எல்லாரும் பெரிய... படிப்புப் படிச்ச பொம்புளங்க. நாப்பது வருஷமா ஆம்புளங்களுக்குப் புதுத் தொழில் நுணுக்கம் சொல்லிக் கொடுத்தோம். பொம்புளங்க கையில் பலமும் வரல, சக்தியும் வரல. இப்ப நேரடியா பொம்புளங்களுக்கே சொல்லித் தரோம்னு அரசே சொல்லி வந்திருக்கு... வாம்மா, கண்ணு, உங்கையாலே நாலு குத்து வச்சிட்டுப் போயிடு!” என்று மெல்ல ஊசி குத்தினாள். ரங்கனுக்கு இது மறைமுகத் தாக்குதல்.
அவன் மண்ணில் உழைப்பவனாக இருந்தால், கொல்லை மேட்டுப் பூமி தரிசாகக் கிடக்காது. ஏதோ ஒரு போகம் போடலாம். அண்ணன் படிப்பென்றும், வேலை என்றும் பந்தகம் வைத்த பூமி மீட்கப்படாமலே போக வேண்டாம். எஞ்சியிருக்கும் ஒரு ஏக்கரிலும் கூலிக்கு ஆள் பிடித்து மல்லுக்கட்ட வேண்டியதில்லை. சொந்த அத்தை மகன் தான். பத்து படித்ததும் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு மண் ஒட்டக் கூடாது என்று கௌரவம் பாராட்டினான். அத்தையும், மாமாவும் போன பிறகு, இரண்டு பெண்களைக் கல்யாணம் கட்டிக் கொடுத்து, இரண்டு பையன்களுக்கும் பிரிவினை என்று வந்தது. இவன் தன் பங்கை தன் தம்பிக்கு விட்டுக் கொடுத்து, பணம் வாங்கினான். பெரிய சாலையில் சைக்கிள் கடையாக, சைக்கிள் மராமத்துக் கடையாக இருக்கிறது. அவன் எப்போதேனும் அதில் இருந்து உபரி வரும்படி என்று இவள் கையில் நோட்டோ, பொன்னோ, துணியோ கொடுத்ததாக நினைவில்லை.
உழைக்கும் ஒரே ஆள் அப்பன் தான். அம்மாவும் வீட்டுப் படி இறங்க மாட்டாள். கழனி வேலை என்று செல்பவள் அவள் மட்டுமே.
ஆனால் பெண்சாதியின் ‘மேட்டிமைத்தனம்’ ரங்கனால் பொறுக்க முடியுமா?
“என்னமோ ரெண்டு பொம்பளைங்க ஜீப்புல வந்து எறங்கி பயிரு வைக்கற பாடம் நடத்துனாங்களாம். இவங்களுக்குத் தலகால் புரியல! நாலு புஸ்தகத்த, அதுவும் இங்கிலீஷ் புஸ்தகத்தப் படிச்சிட்டுப் பயிர் வைக்கிறதாம். உர மருந்து பூச்சி மருந்து அது இதுன்னு கெடங்கில் வெலயில்லாம கிடந்திச்சின்னா, தலையில கட்ட இப்பிடி ஒரு சூட்சுமம் போல. இவளுவ புத்தகத்தில எழுதிட்டு வந்து, அது போல பயிரு வைக்கிறதாம். தொரசானி முருங்கக்கா சாப்புட்ட கத தா. அப்படியே முழுங்கணுமின்னு தொண்டக் குழில சக்கய எறக்கிட்டுத் தவிச்சாளாம்.
“அவவ, ஏரிப் பக்கத்துப் பூமியெல்லாம் பயிரு வச்சிக் கட்டுப்படி ஆவலன்னு பிளாட்டு போட வித்துட்டு டவுன் பக்கம் போயி எதானும் தொழில் பண்ணலான்னு போறா.
“பாரு, நாகு பெரியம்மா மகனுக போடு போடுன்னா போடுறானுக. ஒருத்தன் பைனான்ஸ் கம்பனி வச்சிருக்கான். ஒருத்தன் ரியல் எஸ்டேட் பிஸினஸாம். காரிலதா வாரான். மோதிரம் என்ன, தங்கப்பட்டை வாட்ச் என்ன, அடயாளமே தெரியல... ஆளுங்கட்சில கூட பலான ஆளெல்லாம் தெரியும். அத்தினி செல்வாக்கு. இவ என்னமோ, ஏக்கருக்கு முப்பது மூட்டை எடுக்கப் போறாளாம்... அத்தே, காபியக் கொண்டாந்து குடுங்க. எனக்கு வேலை இருக்கு; போற...!”
செவந்திக்கு உள்ளூர ஆத்திரம் பொங்குகிறது.
“நான் இத்தச் சவாலா எடுத்துக்கறேன்... பண்ணிக் காட்டுறேன். அதுவரைக்கும் பேசாதீங்க!”
இதற்குள் சுந்தரி வாசல் வழியே வருகிறாள். “ஏக்கா? நடவாமே? அம்சு சொல்லிச்சு...”
“ஆமா, வா சுந்தரி, அடுப்புல அரிசி கொதிக்குது. குழம்பக் கூட்டி வச்சிருக்கே. பழஞ்சோறு இருக்கு. சரோ, சரவணன் சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்குப் போகட்டும். சைக்கிள்ள ரெண்டு பேரும் வந்து பகலுக்கு சாப்புடுவாங்க... நா வாரேன்...”
நோட்டுப் புத்தகம் அலுமினியம் கூடையில் இடம் பெறுகிறது.
நடவு வயலுக்கு கால் காணிக்கு... என்று மனசுக்குள் பாடம் படித்தவளாய், ஜிப்சம், யூரியா, பொட்டாஷ் என்று வைக்கிறாள். நாற்று நனைக்க அசோஸ்பைரில்லம். உயிர் உரம் கொடுத்தாயிற்று. பிறகு...
அம்மாவுக்கும் மகள் சரோவுக்கும் இவள் கேலிக்குரியவளாகிறாள்.
முகம் கை கால் கழுவிக் கொண்டு உள்ளே வருகிறாள். பழைய சோற்றை உப்பைப் போட்டுக் கரைக்கிறாள். ஒரு வெங்காயத் துண்டைக் கடித்துக் கொண்டு குடிக்கிறாள். சுந்தரி அடுப்பைப் பார்த்து எல்லாம் செய்வாள். இந்த நிலம், வீட்டுக் கொல்லையில், கூப்பிடு தூரத்தில் தான் இருக்கிறது. தலையிலும், இடுப்பிலும் சுமை - டயர் வளையம் கையில்... நடக்கிறாள் செவந்தி. வெயில் சுள்ளென்று விழுகிறது.
ஓரத்தில் ஊர்ப் பொதுவிடம். நடு ரூமில் பஞ்சாயத்து நூலகம். சுற்றி உள்ள இடத்தில் குந்தியிருப்பார்கள் ஆண்கள். தண்ணீர் முறைக்காரர்களும் இருப்பார்கள். ஆற்றிலே பாதி நாள் தண்ணீர் இருக்காது. மழை பெய்தால் மட்டுமே கால்வாயில் தண்ணீர் வரும். பக்கத்தில் வெற்றிலைக் கொடிக்காலின் கார மணம் வருகிறது. மடையில் நீர் பாய்ந்திருக்கிறது. இது கிணற்று நீர். அந்தப் பூமியும் இவர்களுடையது. இப்போது, சிங்கப்பூர்க்காரர் குடும்பத்துக்குப் போய் இருக்கிறது. அவர்கள் வெற்றிலைக் கொடிக்கால் வைத்திருக்கிறார்கள்.
பழனிச்சாமி வெற்றிலை கிள்ளுகிறான்.
“நடவா...” என்று கேட்கிறான்.
ஆமாம் பொல்லாத நடவு... கால் காணி... முழுசையும் போட ஆசைதான். நாற்று முழுசுக்குமாக விட்டிருக்கிறார்கள். ஆனால் அப்பன் கை எழுத்துப் போட்டுக் கடன் வாங்கி இவளுக்குத் தருகிறான். அகலக் கால் வைத்து நட்டமானால்...?
ஆம், கால்காணி... ஆயிரம் ரூபாய்க்குள் செலவு செய்து போடப் போகிறாள்... எருவாகவும் நுண்ணூட்டச் சத்தாகவும், நோய்களைத் தாக்காத மருந்தாகவும், கூலியும் கூடத்தான் கட்டுப்படியாகும்படி கடன் கொடுத்திருக்கிறார்கள். ‘பொம்புள என்ன கிழிப்பா?’ என்ற அலட்சியத்துக்கு நேர் நின்று காட்டுவோம்!
விடுவிடென்று வரப்பில் நடக்கிறாள்.
--------------
அத்தியாயம் 2
வயல் வரப்பு, நீர் ததும்பிய கோலம், பசுமை...
என்றுமில்லாத உற்சாகம் பொங்கி வழிகிறது. நீலவேணி, கன்னியப்பனின் ஆயா, அம்சு எல்லோரும் வந்திருக்கிறார்கள். ‘செவந்தியக்கோ!’ என்ற கூவல் ஒலி கேட்கிறது. வரப்பின் ஓரத்தில் சுமையை இறக்க நீலவேணி வருகிறாள். இவளும் ஒரு உறவு முறைக்காரி. ரங்கனுக்குச் சின்னம்மாள் மகளாக வேண்டும். இருந்த பூமியை விற்று, பட்டணத்துக்குக் கொண்டு போய் பிஸினஸ் பண்ணித் தொலைத்து விட்டான். இவள் கூலி வேலை செய்கிறாள்.
“யக்கோ...!”
“ஓ... சாந்தி...! வாங்க வாங்க...! கன்னிப்பன் வந்து சொன்னாரா?”
“இல்ல... உங்களத்தான் வங்கி முன்ன பார்த்தனே? எல்லாம் வாங்கிட்டுப் போனீங்க. இன்னைக்குப் புதன்கிழமை - பயிர் வைப்பீங்கன்னு, புள்ளங்கள ஸ்கூலுக்கு அனுப்பிச்சிட்டு ஓடு வந்தேன்.” கையில் மூங்கில் பிளாச்சில் பட்டையும் எழுத்துக்களுமாகத் தாங்கி நிற்கும் அறிவிப்பை சேற்றில் குத்தி வைக்கிறாள்.
“ஏய் என்ன இது?”
“தான்வா மகளிர் பண்ணை...”
‘ஹோ’ என்ற சிரிப்பு! “காக்காணி பண்ணையாயிடிச்சா?”
“காக்காணியோ அரைக்காணியோ, இது தான்வா மகளிர் பண்ணைதான்...”
“அது என்னக்கா, தான்வா...”
அம்சு அதைப் படித்துவிட்டுக் கேட்கிறாள்.
“இங்கிலீசில், தமிழ்நாடு விமன் இன் அக்ரிகல்ச்சர் என்று இந்தத் திட்டத்துக்குப் பெயர். இப்ப நாமளும் காலம் காலமா உழுவதும், நாத்துப் போடுவதும், நடவும், கள பறிக்கிறதும், அறுப்பறுக்கிறதும் பாத்திட்டு வாரோம். முன்னக் காலத்துல தொழு உரம், சாம்பல் இதுங்கதா தெரியும். அப்புறம் யூரியா பொட்டாஷ்னு போட்டாங்க. பூச்சி புகையான் மருந்தடிச்சாங்க... இப்ப, இதுங்களிலே சின்னச் சின்ன நுணுக்கங்கள் கையாண்டா, பயிர் நல்லா வருது, களை பூச்சியெல்லாம் கட்டுப்படுத்துதுன்னு கண்டிருக்காங்க” என்று சாந்தி விளக்குகிறாள். கன்னியப்பனின் பாட்டி வரப்பில் குந்தி வெற்றிலை போடுகிறாள்.
“நீங்க வேற நோட்டு எடுத்திட்டு வந்திருக்கிறீங்களா...?”
“ஆமாம்...”
“என்ன கன்னிப்பா...?”
செவந்தியும் சாந்தியும் வந்து பார்க்கிறார்கள். குளம் போல் மண்ணை வெட்டி வரைகட்டி, அதில் நுண்ணுயிர் உரத்தைக் கலக்கியிருக்கிறான். பாக்கெட் வெற்று உரையாகக் கிடக்கிறது தடத்தில்.
நாற்று முடிகள், அதில் உரம் பெறுகின்றன. எட்டு முடிகள்.
“அக்கா நேத்து ரெண்டு கிலோ ஜிப்சம் மணலில் கலந்து நாத்தங்காலுக்குப் போட்டீங்க...”
“பின்ன? விதை செய் நேர்த்தி செய்து நாற்றங்கால் போடலே. இது சும்மா அப்படியே போட்டது. ஆனா, மத்ததெல்லாம் கரெக்டா பாத்துட்டு வாரேன். நடவு வயலில் இரவு நீர் பாய்ந்திருக்கிறது. காலையில் உழவோட்டி இருக்கிறான்.”
சாந்தி தொழு உரம், சாணி உரம், மணல், பொட்டாஷ், யூரியா, ஜிப்சம், அஸோஸ்பைரில்லம் எஞ்சிய பாக்கெட் எல்லாம் கலந்து சேலையைத் தூக்கிச் செருகிக் கொண்டு விசிறுகிறாள். செவந்தி பாதியும், இவள் பாதியுமாக இதை முடித்து விடுகிறார்கள்.
பிறகு, முளைகளை எட்டடிக்கு ஒன்றாக நடுகிறார்கள். அதில் கயிறைக் கட்டுகிறார்கள்.
கயிறோரமாகக் கோடு போட்டாற் போல் சாந்தியும் செவந்தியும் நாற்றுக்களை வைத்துக் காட்டுகிறார்கள்.
“அஞ்சாறு எடுத்துக் குத்துக் குத்தா வைக்க வேணாம் ஆயா? ரெண்டோ மூணோ போதும்...”
இடையில் ஓரடி விட்டு மீண்டும் எட்டடிப் பாத்தி. முளை அடித்துக் கயிறு கட்டுவதில் கன்னியப்பனும் பங்கு கொள்கிறான்.
“இது எதுக்கு இப்படி? வருசா புடிச்சி குத்துக் குத்தா வச்சிட்டு வந்தா பத்தாதா?” என்று பாட்டி முணுமுணுக்கிறாள்.
“இல்ல ஆயா, இப்ப ஓரடி உடறதால, இடையில நிக்க, பாக்க எடம் இருக்கும். நாத்த, பயிர முதிக்க வேணாம்.”
கிடுகிடென்று எட்டடிக்குள் நாற்றுக்களை விரைவாக அம்சு வைக்கிறாள். “இருங்க, இருங்க!” என்று செவந்தி சைகில் டயரைக் கொண்டு வந்து நட்ட பயிர்களிடையே போடுகிறாள். உள்ளே எண்ணுகிறாள். இருபது குத்துகள் இருக்கின்றன.
“பரவாயில்லை. இப்படியே இருக்கட்டும்.”
“இது எதுக்கு அக்கா?”
“நெருக்கமாயிருந்தா, காத்துப் போக, நல்லா வளர இடம் இருக்காது. மனுஷங்களைப் போல பயிருக்குக் காத்து வேணுமில்ல?”
விருவிரென்று வேலை நடக்கிறது. வெயில் விழுவது தெரியாமல் குளிர் சுமந்த சூழல். உற்சாகம்...
சாந்தி... பத்துப் படித்த பெண். தோற்றம் பார்த்தால் கழனி வேலை செய்பவள் என்று சொல்ல மாட்டார்கள். புருசன் ஏதோ போட்டோக் கடையில் உதவியாளனாக இருக்கிறானாம். கொல்லை மேடு என்று சொல்லும் மானாவாரி பூமிதான் அரை ஏகரா இருக்கிறதாம்.
“தண்ணி இருந்திச்சின்னா, நாங் கூட உடனே செஞ்சி பாதுடுவ. எங்க நாத்துனாருக்கு அரைக் காணி இருக்கு. அது வேப்பேரில டீச்சரா, இருக்கு. அவ மச்சான் பாக்குறாரு, அவங்ககிட்டக் கேட்டு பயிரு வைக்கணுமின்னு ஆசை...” என்று சொல்கிறாள்.
“ஆயாதா முத நாத்த வச்சிருக்கு. அது வளரட்டும்... பாப்பம்... கன்னிப்பனில்லாம போனா இந்தப் பயிர் கூட வைக்கிறதுக்கில்ல...”
“அவுரு உங்க சொந்தக்காரரா அக்கா?”
“சொந்தத்துக்கு மேல. பாட்டிக்கு மக வயித்துப் பேரன். அம்மா அப்பா ரெண்டு பேரும் செத்துட்டாங்க. ஏழெட்டு வயசுப் பையனா, இங்க ஆயி வந்தாக. கூலி வேலை செஞ்சே காப்பாத்தியிருக்காங்க. எங்கூட்டுக்காரருக்குத் தா பயிரு வேலையில் நாட்டமில்ல. பன்னண்டு வயசிலேந்து உழவோட்டுவான், சேடை போடுவா, மாட்ட அவுத்திட்டுப் போயி, கட்டி, எல்லாம் அவந்தா.”
“படிக்கலியா?”
“படிச்சா, அஞ்சோ, ஆறோ... அப்பவே சம்பாதன வந்திட்டது. இப்ப உழவாளுங்க எம்பது ரூபால்ல வாங்கறாங்க? ஆளு கிடைக்கல?”
“உழவு மட்டும்தான அவுங்க செய்யிறாங்க? அண்டை வெட்டுறதிலேந்து, நாத்து நடவு, களை பறிப்பு, அறுவடை வரை பொம்பிளங்க செய்யலியா?”
ஒரு பத்தி முழுவதும் நட்டு விட்டார்கள். வரப்பில் இருந்து பார்க்க, அழகாகப் பாய் விரித்தாற் போல் இருக்கிறது.
“இதுக்குள்ள காவாசி ஆயிருக்கும். இதென்னாடி! கோடு போட்டாப் போல நடுறதும்?” என்று ஆயா சலித்துக் கொள்கிறாள்.
“பயிறு என்ன கிச்சிலிச் சம்பாதான?” என்று கேட்கிறாள் சாந்தி.
“ஆமா. வெள்ளக் கிச்சிலின்னு போட்டாங்க. நாத்து வேர் அறுகாக வந்திருக்கில்ல? நேத்து 2 கிலோ ஜிப்சம் மணலில் கலந்து தூவினேன். நாத்து நல்லா வந்திருக்கு...”
சுந்தரி போசியில் காபியுடன் வருகிறாள். சுந்தரி...
பாவம் அவள் தான் கைக்கு உதவி.
இவளுக்குச் சின்ன அத்தானை அவள் கட்டினாள். செயலான இடம். இருபது சவரன் போட்டு, பண்ட பாத்திரங்கள் கொடுத்துக் கட்டினார்கள். அந்த அத்தானும் மண்ணில் வேலை செய்யவில்லை. லாரி ஓட்டப் போனான். அவ்வப் போது வரும் போதும், பூவும் பழமும் அல்வாவும், துணிகளும் அமர்க்களப்படும். அத்துடன் சகவாசம் கெட்டது தெரியவில்லை. குடித்தான். குடித்துவிட்டு லாரியை ஓட்டிப் படுவெட்டாகப் போய் சேர்ந்தான். ஐந்து வருசம் ஆகிறது. லாரி முதலாளிகள் நட்ட ஈடென்று ஒரு சல்லிக்காசு தரவில்லை. வீடு சொந்தம். இவர்கள் பிரிவினையில் வந்த ஒரு ஏக்கரா பூமி இருக்கிறது. அதையும் போக்கியத்துக்கு விட்டு, இரண்டு பிள்ளைகளுடன் வாழ்கிறாள். இவள் கணவனிடம் சரளமாகப் பேசுவாள். சொந்தம் கொண்டாடுவாள்... ஓர் ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். ஒன்றுக்கு ஏழு வயசு. அவன் போகும் போது ஆறு மாசமாக இருந்தான். அதற்கு அப்பன் முகமே தெரியாது...
“காப்பி வந்திடிச்சி. வாங்கடீ...!” சுந்தரி வந்து பார்க்கிறாள்.
“யா... அழவா இருக்கு, இது ஒரு சைசா...” என்று நடுவில் ஓரடி விட்ட ஓடையில் நின்று கொண்டு, சாந்தி டயர் போட்டு குத்துகளை எண்ணுவதைப் பார்க்கிறாள்.
“செவந்தி அக்கா, இந்தவாட்டி நல்லா வெளஞ்சா, நானும் பயிர் வைக்கிறேன். ஏன் போக்கியத்துக்கு வுடணும்?”
“உன் அத்தான் சவால் வுட்டுருக்காரு. பார்ப்பம்... காபித் தூளு இல்லியே? வாங்கி வரச் சொன்னியா?”
“இல்லக்கா, டீத்தூளுதா இருந்திச்சி, போட்டேன். சரோசா ஸ்கூல் போயிட்டது அப்பமே. சரவணன் செத்த மின்னாடி அத்தான் கூட சைக்கிள்ல உக்காந்திட்டுப் போனான்.”
“மாமாவுக்குக் கஞ்சித் தண்ணில உப்புப் போட்டுக் குடுத்தே. வெந்நீர் வச்சித்துடச்சிட்டு, வேற துணி மாத்திட்டு உட்கார்ந்திருக்காரு...”
எல்லாரும் கரையேறி, தேநீர் குடிக்கிறார்கள்.
ஆயா தனக்குத் தேநீர் வேண்டாம் என்று சொல்கிறாள்.
“எனக்கு வெத்திலக் காசு மட்டும் குடுத்திடு!”
“வேணி, இன்னிக்கி டிபன் போடலியா?”
“கொஞ்சம் அரை லிட்டர்தான் போட்டே நேத்து. அம்மா தட்டி வச்சிடும். கிரைண்டர் எதுனாலும் வாங்கினா சல்லிசா இருக்கும். முடியலம்மா!” என்று உட்காருகிறாள்
நீலவேணி. பூமியைத் தோற்றுவிட்டு, டிபன் கடை வைத்துப் பிழைப்பு நடக்கிறது.
“உங்கூட்டுக்காரர் என்னதா செய்யிறாரு?”
“அதெல்லாம் கேட்காதீங்க; ரகசியம்...” என்று அம்சு கிண்டுகிறாள்.
“எல்லாருக்கும் பட்டணம் போனால் காசை வாரிக் கொட்டலாம்னு கனா. பட்டாலும் புத்தி வரல... இப்பவும் மைக்கு செட்டு வாங்கினா நல்ல கிராக்கின்னு அம்மாகிட்டச் சொல்லிட்டுருக்காரு. வூட்டுக்குக் கூரை மாத்தனும். இவுரு மண்ணத் தொட வாணாம். இதே டிபன் போடுற பிசினஸ்ல கூடக் கொஞ்சம் ஒத்தாசை செய்யலாம்...”
“அதுல என்ன ஒத்தாசை செய்வாரு? மாவாட்டுவாரா?”
“ஒரு கிரைண்டர் வாங்கிப் போடலாமில்ல? ஒரு கணக்கெழுதி வைக்கலாமில்ல? அட கடவீதிப் பக்கம் ஒரு எடம் புடிச்சி, கடை போடலாமில்ல? வங்கில லோன் வாங்கித் தரலாமில்ல? ஆம்புள இருந்திட்டு பொம்புளயே எல்லாம் செய்யிறதுன்னா?”
“வேணி, நீ சும்மா இரு. பொம்புளங்க நிச்சியமா எதானும் பண்ணுவம். அப்ப புத்தி வரும்” என்று முடிக்கும் செவந்தி எழுந்திருக்கிறாள்.
சுந்தரி வீட்டுக்குப் போகிறாள். இவர்கள் களத்தில் இறங்குகிறார்கள். இந்த நடவு பழக்கமில்லாததால் கொஞ்சம் நேரம் தானாகிறது.
“நட்ட மூணாம் நாள்... வெள்ளிக்கிழமை... களைக் கொல்லி போடணும். நினைப்பிருக்கா? பூடாக்ளோர் வாங்கி வச்சிருக்கீங்களா?” என்று சாந்தி நினைப்பூட்டுகிறாள்.
“எல்லாம் செட்டா வாங்கிட்டேன். கால் லிட்டர், மணலில் கலந்து, கையில் உரை போட்டுக் கிட்டுத் தெளிக்கணும். உரை கூட இருக்கு. மூணாம் நாளா, அஞ்சாம் நாளான்னு சந்தேகமாயிருக்கு.”
“நீ என்ன எழுதியிருக்கிறே சாந்தி?”
“பாத்துக்கலாம்...”
செவந்திக்கு இப்போது ஒரு புதிய பிரச்னை தலை நீட்டுகிறது. இவர்கள் எல்லோருக்கும் சோறு போட்டு தலைக்குப் பதினைந்து ரூபாய் கொடுப்பாள். கன்னியப்பனுக்கு அறுபது ரூபாய். அவனிடத்தில் அவளுக்குத் தனியான பரிவு எப்போதுமே இருக்கிறது. மண் என்றால் துச்சமாகக் கருதும் ஆண்களைப் பார்த்த அவளுக்கு அவன் வித்தியாசமாக இருக்கிறான். அப்பன் பெயருக்கு உழவோட்டி, பயிர் வைத்தாலும் கன்னியப்பனைப் போல் பொறுப்பாக யார் பார்ப்பார்கள்? உழவு மாடுகள், ஏர் எல்லாம் அவன் உடமைகள் போல் கையாளப்படுகின்றன. அவன் பெரிய இங்கிலீஷ் படிப்புப் படிக்காவிட்டால் என்ன? இந்த வீட்டுக்கு, விவசாயக் குடும்பத்துக்கு ஒட்டுபவனாக ஒரு வாரிசு வேண்டும். இந்த சரோசாவின் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கன்னியப்பனைக் கட்டி வைத்து விடலாம். வீட்டோடு உரிமையாகக் கைக்கு உதவும் பிள்ளையாக... இதுதான் பெரிய சொத்து...
கன்னியப்பன் தான் போய்ச் சோறு கொண்டு வருகிறான். சுந்தரியும் வருகிறாள். பணப்பையும் வருகிறது. நடுவில் யாரும் சாப்பிட ஏறவில்லை. மூன்றரை மணியோடு முடித்து விடுகிறார்கள். பிறகு தான் கலந்து வந்த குழம்புச் சோற்றை உண்டு பசியாறுகிறார்கள்.
சாந்திக்குப் பதினைந்து ரூபாய் கூலியை எப்படிக் கொடுக்க? மற்றவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள். சாந்தி...
ஆனால் எதுவும் கொடுக்காமல் இருக்க முடியுமா? ஒரு ஐந்து ரூபாயும் ஒரு பத்து ரூபாயும் வைத்து நீட்டுகிறாள்.
அவள் முகத்தில் உணர்வுகள் மின்னுகின்றன. கையால் தள்ளுகிறாள்.
“இருக்கட்டும் அக்கா... நான் இப்படித் தொடங்குறப்ப நீங்க முதல்ல வந்து ஒத்தாசை செய்யணும். இப்ப வச்சிக்குங்க! பணம்னு அத்தோட உறவு போகக் கூடாது. நம்ம சிநேகம் பெரிசா வளரணும்...”
“ஐயோ... என்ன இது சாந்தி...?”
“வையுங்க சொல்றேன்... பிள்ளைங்க ஸ்கூல்லேந்து வந்திடுவாங்க. நான் வாரேன்...” தான்வா மகளிர் பண்ணை அறிவிப்பை எடுத்துக் கொள்கிறாள். அவள் விடுவிடென்று வரப்பில் நடக்கிறாள். எட்டி முள் முருங்கை மரத்தின் பக்கம் வைத்திருக்கும் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவள் போவதையே பார்க்கிறாள் செவந்தி.
“ஏ, செவந்தி? யாரு அந்தம்மா? கழனிக்குச் சைக்கிள்ல வார பொம்புளய இப்பதா பாக்கிறே!” என்று வியந்து பேசினாள் வேணி.
“ரொம்பக் கெட்டிக்காரி. நல்ல குணம். நான் முந்தா நா வங்கில பார்த்துச் சொன்னே. வந்து ஒரு நாள் வேலை செஞ்சிட்டுப் போயிட்டது...”
“நா இதுக்கு மின்ன பாத்த நினைப்பில்ல... எந்தப் பக்கம்?”
“ஆவனியாபுரம் காலனின்னு சொல்லிச்சி...” என்று அலட்சியமாக ஆயா பாக்கைக் கடிக்கிறாள்.
“ஓ...?”
குரல் ஓங்கித் துவண்டு விழுகிறது.
“அதான பாத்தேன்! காலனிப் பொம்புள...! ஓ... அவளுவ நடை உடயப் பாரு. பேச்சப் பாரு! எங்கியோ ஆடுமாடக் கடிச்சிட்டுக் கிடந்து...”
“ஆயா!” என்று செவந்தி சுள்ளென்று விழுகிறாள்.
“இப்படி எல்லாம் பேசாதீங்க! அவங்களும் நம்மப் போல மனுசங்க... இனிமே யார்ன்னாலும் இப்படிப் பேசுனா, எனக்குக் கெட்ட கோபம் வரும்.”
“என்ன கோபம் வரும்? ஆயிரம் பேசுனாலும், அவ சாதி சாதிதானே?”
“இல்ல, எல்லாம் மனிச சாதி!”
“அவள உன் வீட்ல கூட்டிப்ப. நீ அவ வீட்ல போயிச் சோறு எடுப்ப?”
“ஆமாம், எடுப்பே! இந்தச் சேத்தில் நின்னு பச்சையத் தொடுற நாமெல்லாந்தா ஒரே சாதி. ஒசந்த சாதி! இனிமே இப்படிப் பிரிச்சிப் பேசாதீங்க! நாங்க டிரெயினிங் எடுத்தம். யார் என்ன சாதின்னு தெரியாது. யாரு இந்து, யாரு கிறிஸ்ட்தியன், யாரு அல்லான்னு தெரியாது. எங்களுக்குச் சொல்லிக் குடுத்த மேடம் என்ன சாதின்னு தெரியாது. எல்லாரும் பொம்புளங்க. எல்லாரும் நோவும் நோம்பலமும் மாசந்தோறும் அனுபவிக்கிறவங்க... வாங்க போவலாம்.”
இந்த ஓர் எழுச்சியில் பத்தி நடவுப் புதுமையைப் பார்த்து அறிவிக்கும் அழகுணர்வு சிதைந்து போகிறது.
அலுமினியக் கூடை, சாமான்கள் டயர் எல்லாவற்றுடனும் செவந்தி வீடு திரும்புகையில் சூரியன் மலை வாயில் விழுந்தாயிற்று.
----------------
அத்தியாயம் 3
செவந்தி வீடு மெழுகித் துடைத்து, வாயிற்படி நிலைகளில் மஞ்சட் குங்குமம் வைக்கிறாள். கோலம் போடுகிறாள். கூடத்துச் சுவரில் மஞ்சளால் வட்டமிட்டு, புள்ளி வைக்கிறாள். நடவு நட்டுப் பதினேழு நாட்களாகி விட்டன. பதினைந்தாம் நாள் இரவே வேப்பம் புண்ணாக்கும் யூரியாவும் கலந்து வைத்து மறுநாள் பொட்டாஷூம் சேர்த்து உரமிட்டிருக்கிறாள். பயிர் அழகாக வளர்ந்து தனியாகத் தெரிகிறது.
மனசுக்கு நிறைவாக இருக்கிறது. இத்துடன் இன்னொன்றும் சேர்ந்திருக்கிறது. கோயில் சாமி ஊருக்கு வந்திருக்கிறாராம்.
இந்த ஊர் கரும்பாயி அம்மன் கோயில் தானாக வளர்ந்த ஒரு கரும்பு சோலையில் இருந்ததாம். இப்போது கரும்பு இல்லை. ஏன், அவளுக்கு நினைவு தெரிந்தே அங்கு கரும்பு பயிரிட்டிருக்கவில்லை. சுற்றிலும் முள் மரங்கள் இருந்தன. சடாமுடியுடன் இந்தச் சாமி அங்கு வந்தார். அவர் அந்த இடத்தில் அரளியும், நந்தியாவட்டையும் பயிர் பண்ணி நந்தவனம் அமைத்தார். கிணறும் அப்போது தோண்டியதுதான். கிணற்று நீர் கரும்பாக இனிக்கும். அவர் அங்கேயே பல நாட்கள் யோகத்தில் அமர்ந்திருப்பார். என்றேனும் ஊருக்குள் வந்து பிச்சை கேட்பார். உள்ளே அழைத்தால் பெரும்பாலும் வரமாட்டார். நோய் நொடிக்குப் பச்சிலை மருந்து தருவார். பச்சிலைகள் அவருக்குத் தெரியும். ஏதேதோ செடிகள் அந்த நந்தவனத்தில் வளர்ந்திருந்தன. மக்கள் குறை கேட்பார். ஆறுதல் சொல்வார்.
அவர் இருக்கிறார் என்றால் கோயில் வளைவில் மக்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருப்பார்கள். பாம்புக் கடி, தேள் கடி என்றால் வேறு ஊர்களில் இருந்தும் கூட இரவோ, பகலோ, சிகிச்சைக்கு ஆட்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். ஆனால், அவர் காசைக் கையால் தொட்டதில்லை. அதிகம் பேசவும் மாட்டார். அவர் ஊரில் இருக்கிறார் என்றால் ஊருக்கே பொலிவு இருப்பது போல் நம்பிக்கை இருந்தது. ரங்கனுக்கு இந்தக் கோயில் சாமியிடம் மிகுந்த ஈடுபாடு. அவர் அப்போது ஊரில் இருக்கக் கூடாதா என்று நினைப்பான். அந்த ஈடுபாட்டினால் அவன் கவிச்சி, இறைச்சி எதுவும் தொட மாட்டான். கள், சாராயம் எந்தப் பழக்கமும் கிடையாது. அவர் திடீரென்று ஊரை விட்டுப் போய் விடுவார். திடும்மென்று ஒரு நாள் வந்திருப்பார். அவர் யோகசாதனையினாலேயே அப்படி மறைந்து போகிறார். பிறகு வருகிறார் என்று ரங்கன் சொல்வான். அந்தச் சாமி, ஊரை விட்டுப் போய் வெகு நாட்களாகி விட்டன. சரவணன் ஐந்து வயசாகவும், சரோ எட்டு வயசாகவும் இருந்த போது அவர் வந்திருந்தார். ஏறக்குறைய பத்து வருசம் இருக்கும். அவ்வளவு இடைவெளி இதற்கு முன் இருந்ததில்லை. அவர் இமயமலையில் சமாதி ஆகிவிட்டார் என்று பேசிக் கொண்டார்கள். அம்மா ஏதேனும் ஒன்றென்றால் அவரிடம் சென்று திருநீறு வாங்கிக் கொள்வாள்.
சின்னம்மாள் வீட்டை விட்டுச் சென்ற பின்னர், ஒரு நாள் அம்மா சாமியிடம் திருநீறு வாங்கச்சென்றாள். அவர் அவளை உறுத்துப் பார்த்தார். திருநீறு கொடுக்கவில்லை.
“இந்தச் சாமி பாக்கற பார்வை சரியில்லை. ஏன் திருநீறு குடுக்கல?” என்று வீட்டுக்கு வந்து பொருமினாள்.
அப்பா மெதுவாகச் சொன்னார். “நீ அபாண்டமா ராசாத்திய அடிச்சி வெரட்டிட்டே... எந்த சாமியும் மன்னிக்காது.”
“ஆமா, மன்னிக்காது! நீரு இத்தச் சொல்றீரு! அவ ரோக்கியமானவளா இருந்தா, அவள ஏன் வெரட்டனும்? சோத்துல பங்கு கொடுக்கலாம். எங்குடியில் பங்கு கொடுக்க மாட்டேன்!”
“செங்கோலு! அநாவசியமாப் பேசாத நாக்குப்புழுக்கும்!” என்று அப்பன் கத்துவார்.
“பாவி இன்னோவோ செய்திட்டுப் போயிட்டா...” என்று கையை நெறிப்பாள். புருசனுக்கு இளைப்போ இருமலோ வந்தால், உடனே யாரேனும் மந்திர தந்திரக்காரனிடம் போக வேண்டும் என்று தான் அவள் நினைப்பாள். அம்சு மாமியார், இவளுக்கு எப்போதும் உடன்பாடானவள். இரண்டு பேருமாக, மந்திரக்காரர்களைத் தேடிப் போவதுமுண்டு. நூறு இரு நூறு செலவழித்துக் கழிப்பும் செய்திருக்கிறாள். அந்தப் பணத்துக்கு வீட்டில் சண்டை வரும்.
உறவுகள் விடுவதுமில்லை. இழைவதுமில்லை. இது இந்த வீட்டுக்குள், தெருவுக்குள் முண்டி முரண்டி சேர்ந்து இழையும். ஆனால் சின்னம்மாளைப் பொறுத்த வரையிலும் இந்த மண் அவளுக்குக் கசந்து விட்டது. உறவு அறுந்து போன மாதிரியே இருக்கிறது. அறுத்து விட்டார்கள். குற்றவாளி யார்?
“சாமி வந்திருக்கிறார். வீட்டுக்குக் கூட்டி வாரேன். வருவாரு...” என்று கூறிவிட்டு ரங்கன் சென்றிருக்கிறான்.
சாமி அப்படிக் கூப்பிட்டு வருபவர் இல்லை...
என்றாலும் தலைமுழுகி, சோறாக்கி, ஒரு காய் குழம்பு, பொரியல் செய்திருக்கிறாள். அரிசியும் வெல்லமும் பாலும் சேர்த்துப் பாயாசம் செய்திருக்கிறாள். பழம், வெற்றிலை, பூ, தேங்காய் எல்லாம் தயார்.
முற்றத்தில் இறங்கி வெயில் சுவருக்குப் போயாயிற்று.
இந்த சாமி ஒரு டாக்சியில் வந்து இறங்குகிறார்.
“வாங்க... வாங்க...” இவரா சாமி நம்ம கோயிலுக்கா வந்திருக்கிறார்.
கருகருவென்று தாடி இழைகிறது. மினுமினுக்கும் பட்டுச் சட்டையில் ருத்திராட்சங்கள், துளசி மணிமாலைகள்... கையில் பெரிய ரிஸ்ட் வாட்ச்... கருப்புத்தான். மூக்குக் கண்ணாடி போட்டிருக்கிறார்.
“தாயே.. ஜகதாம்பா” என்று சொல்லிக் கொண்டு குனிந்து வருகிறார்.
பலகையில் உட்காருகிறார். அவர் மட்டுமே தான் வந்திருக்கிறார். இவள் புருசன், மாட்டாசுபத்திரி கம்பவுண்டரின் மச்சான் ஒரு பையன், சிவலிங்கம், வேலு...
“சாமி”... என்று பணிவுடன் பலகையைப் போட்டு உபசரிக்கிறான்.
“பூசைக்கு எல்லாம் வச்சிருக்கிறல்ல... இன்னைக்கி காலலேர்ந்து மூணு எடத்துல பூசை... நா நம்ம வீட்டுக்கு வந்தாகணும்னு கூட்டியாந்தேன்...” என்று செவந்தியிடம் ஒரமாக வந்து கணவன் தெரிவிக்கிறான். அவளோ, அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே, “நா, நம்ம கோயில் சாமின்னு நினைச்சே... இவரு வேற யாரோ போலல்லே இருக்கு” என்று தன் ஒவ்வாமையைக் கோடி காட்டுகிறாள்.
“அவுரு ஜலசமாதியாயிட்டாராம். இமாலயக் குகையில் இவரு சிஷ்யரா இருந்தாராம். இவரும் ரொம்பப் பேசுறதில்ல. அவுரு சொல்லித்தா நம்ம கோயிலுக்கே வரணும்னு வந்திருக்காரு...” அவள் பேசவில்லை.
பலகையில் உட்கார்ந்து மஞ்சளைப் பிடித்து வைத்துப் பூஜை செய்கிறார். அப்பனை எதிரே உட்கார்த்தி வைக்கிறார். திருநூறு தடவுகிறார்.
“இவருக்கு... மனசில ஒரு கறுப்பு, கவலை உறுத்துது. இது உடம்பு சீக்கில்ல. என்ன மருந்து சாப்பிட்டாலும் போகாது. அது சிரமப்படுத்திட்டே இருக்கும்...”
கொல்லென்று அமைதி படிகிறது.
அப்பாவின் இழுப்பு ஒலி மட்டுமே துருப்பிடித்த கதவுக் கீல் மாதிரி, இருட்டில் ஒலிக்கும் சில்வண்டு போல் வலிமையாகக் கேட்கிறது.
“சாமி, அதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம்னு சொல்லுங்க. எதுன்னாலும் செய்யலாம்” என்று அம்மா முன்வந்து கும்பிடுகிறாள்.
அப்பனுக்குப் பொறுக்கவில்லை.
“சாமி, என் மச்சினிச்சிதா. இவப்ப, என் மாமனுக்குப் புள்ளக் கெடயாது. ரெண்டு பொம்புளப் புள்ள. அதும் சின்னதிலியே பெத்தவ போயி, ரெண்டையும் மறுகலியாணம் கட்டாம வளர்த்தாரு. அவ தோசம், கடன் ஆறு மாசத்துல புருசன் போயிட்டா. பெறகு அவ இங்கிருக்கக் கூடாதுன்னு ஒரு கலமசம் வந்துட்டது. உடம் பெறந்தவளே விசமாயி வெரட்டிட்டா. இருவது வருசமாயிடிச்சி... இப்ப கொஞ்ச காலமா எதும் சரியில்ல. பெரிய பைய... அவனுக்கு முத மூணு புள்ள தங்கல. அவனும் எங்கள வுட்டுப்போயிட்டா. நிலம் நீரு சுகமில்ல. ஒண்ணும் விருத்திக்கு வர இல்ல. போன வருசம் திடீர்னு ஒழவு மாடு சீக்கு வந்து செத்துப் போச்சி... இவளுக்கும் எப்பவும் சீக்குதா...”
சாமி அவரையே உற்றுப் பார்க்கிறார். பிறகு தாடியை உருவுகிறார்.
“உங்க மனசில் குற்றம் இருக்குதோ இல்லையோ, குற்றம் பண்ண உணர்வு இருக்குது. அதுதான் உங்களை சிரமப்படுத்துது...” என்று சொல்லி விட்டு எல்லோரையும் பார்க்கிறார்.
“அந்தப் பொம்புள ஏதேனும் வச்சிருக்கிறாளா, சாமி?” என்று அம்மா கேட்கிறாள். “ம்... ம்...” என்று தாடியை உருவிக் கொள்ளும் சாமி தலை நிமிராமல் யோசிக்கிறார்.
“அத்த எடுக்க முடியாதா சாமி ராத்திரி முழுக்க இப்படி சாயங்காலமானா ரொம்ப சாஸ்தியாவுது. ஆசுபத்திரி டாக்டர்ட்ட மாத்திரை வாங்கிக் குடுக்கிறோம். சம்சாரி வூடு... இத்த எப்படீன்னாலும் எடுத்திடுங்க சாமி...”
“இதுக்கு ஒரு தாயத்து மந்திரிச்சித் தாரேன்... ஒரு நூத்தம்பது ஆகும். அதைக் கையிலோ கழுத்திலேயோ கோத்துக் கட்டிக்குங்க. வீரியமில்லாம போயிடும்.”
சாமி வந்திருக்கிறார் என்ற செய்தியில், அந்த வீட்டில் தெருவே கூடி விட்டது.
நீலவேனியின் புருசன், “சாமி, புதுசா தொழில் செய்யிறது பத்திச் சொல்லணும்...” என்று ஐம்பது ரூபாய் நோட்டை வைத்துவிட்டுக் கேட்கிறான்.
“தாராளமாகச் செய்யலாம். முயற்சி செய், முன்னுக்கு வருவாய்...”
“சாமி முன்னே துணி - எக்ஸ்போர்ட் பிஸினஸ் பண்ணி நஷ்டமாயிட்டது. இப்பவும் அதுபோல் செய்ய முதல் தேறல...”
சாமி சிரிக்கிறார். “முயற்சி செய்! முதல் வரும்...”
கன்னியப்பனின் ஆயாவும் கூட வருகிறார்.
“சாமி கன்னியப்ப கலியாணம் கட்டுன்னா வாணாங்கிறான். ஒரே பேரப் பய. அவனுக்கு ஒண்ணு கட்டி வச்சி, அது வயித்தில ஒரு குஞ்சப் பாத்துட்டுக் கண்ண மூடணும்...”
“ஆகும்... ஆகும்... அவனுக்கு நல்ல இடத்தில் பெண் வரும்...”
பாட்டி பதினைந்து ரூபாய் காணிக்கை வைக்கிறாள். காலனியில் இருந்து சாந்தியும், புருசனும் கூட எட்டிப் பார்க்கிறார்கள். ஆனால் எதுவும் கேட்கவில்லை.
சாமி சாப்பிடவில்லை.
“என்னைச் சுற்றி ஏழைப் பிள்ளைகள் இருக்கிறார்கள்... நீங்கள் ஆக்கி வைத்தது வீணாக வேண்டாம் தாயே... இந்தப் பாத்திரத்தில் போட்டுக் கொடுங்கள்...”
கையோடு கொண்டு வந்த தூக்குகளில் சோறு, குழம்பு, எல்லாம் போட்டுக் கொண்டு போகிறார்.
ரங்கனும், சாமியுடன் வண்டியில் ஏறிக் கொண்டு போகிறான்.
சரோவும், சரவணனும் பள்ளிக் கூடத்தில் இருந்து வந்து விட்டார்கள்.
“ஹை! பூசையாம்மா வடை பாயசமா போடும்மா... பசிக்கிது.”
“வா சாந்தி, உங்கூட்டுக்காரரா? வாங்க உக்காருங்க! சுந்தரி, இவங்களுக்குச் சோறு வையி...” என்று அனுப்புகிறாள். சாந்தியும், புருசனும் வாசல் திண்ணையில் உட்காருகிறார்கள்.
“நீங்க இந்தச்சாமியெல்லாம் நம்புவீங்களாக்கா?”
“அதென்னமோ. எங்கம்மா அப்பாக்கெல்லாம் இதுல நம்பிக்கை இருக்கு. எங்க வீட்டுக்காரர் கோயிலுக்குப் போவாங்க. இத, காஞ்சிபுரம் புரட்டாசி சனிக்கிழமைன்னாப் போவாங்க. ஆடிக் கிருத்திகை திருத்தணி போயிடுவாங்க. மச்சமாமிசம் ஏதும் ஊட்ல சமைக்கிறதில்ல. எங்க ஓப்படியா சுந்தரி இல்ல, அவ செய்வா. கவிச்சி கறி எதுனாலும் கொண்டிட்டு வருவா. அதும் எம் பொண்ணு சரோசா தொடாது...”
“அதுக்குச் சொல்லல. நாம சாமி கும்பிடணும். ஆனா, இப்படி தாடி வச்சிட்டுக் காருல வந்து அம்பது நூறுன்னு சனங்க மூடநம்பிக்கைய வளர்க்கிறவங்ககிட்ட சாக்கிரதையா இருக்கணும்க்கா. ஒருத்தர், எங்க நாத்தனார் வூட்டுப் பக்கம் இப்படித்தான் பூசை போடுறேன் தங்க நகை எதுனாலும் வையுங்கன்னு சொன்னாரு. கண்ணு முன்ன பூசை போட்டாங்க. அப்படியே எந்திரிச்சி போயிட்டாரு. ஆனா அடுத்த நா பூசை போட்ட எடத்துல வெறும் சின்ன சின்னக் கல்லுதா இருந்திச்சி. வளையலும் இல்ல, மோதரமும் இல்ல?”
“ஐயையோ!”
“அதா. வூட்டுக்கு வந்து நம்ம உள்மாந்தரம் எல்லாம் தெரிஞ்சிக்கிடுவாங்க ரொம்ப சாக்கிரதையா இருக்கணும்...”
செவந்திக்கு அநியாயமாகப் புருசன் இன்று ஐநூறு ரூபாய் போல் பணம் செலவழித்திருப்பதை நினைத்து எரிச்சல் வருகிறது. அடக்கிக் கொள்கிறாள்.
“இப்ப எதுக்கு நா வந்தேன் சொல்லட்டுமாக்கா? எங்க நாத்தானா நிலம் இருக்குன்னு சொன்னேன்ல்ல? அதுல பயிர் வைக்கிறன். அரைகாணி முறையா நாத்தங்கால் வுட்டு, அதும் திரம் மருந்து போட்டு விதை செய் நேர்த்தி பண்ணி, எல்லாம் போட்டு பயிர் வைக்கலான்னிருக்கே. வர புதங்கிழமை யன்னிக்கு காலம வந்தீங்கன்னா, வூட்ல வெத செய் நேர்த்தி பண்ணுறப்ப சேந்து செய்யலான்னு... அப்படியே இவங்களும் உங்கூட்டுக்காரரப் பாத்திட்டு போகாலான்னு வந்தாம்.”
“வாரேன். நமுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கணுந்தான? இருங்க முதமுதல்ல வந்திருக்கிறீங்க. உள்ள வாங்க. கொஞ்சம் பாயசம் சாப்பிடலாம்.”
உள்ளே வருகிறார்கள். பூசை இடத்தில் விளக்கு எரிகிறது. சாந்தி பார்க்க டீச்சர் போல் இருக்கிறாள். புருசன்சராய் சட்டை போட்டு கடிகாரம் கட்டிக் கொண்டிருக்கிறான்.
யாரோ ஆபிசர் என்றுதான் அம்மா நினைத்திருக்க வேண்டும்.
அந்தக்கயிற்றுக் கட்டிலைக்காட்டி “உக்காருங்க” என்று உபசரிக்கிறாள்.
சிறு தம்ளர்களில் அவள் கொடுத்த பாயாசத்தைச் சாப்பிட்டு விட்டு அவர்கள் விடை பெறுகிறார்கள்.
-------------
அத்தியாயம் 4
அவர்களை வாயில் வரை வழியனுப்பிவிட்டு, செவந்தி உள்ளே வருகிறாள். சுந்தரி சும்மாயிருக்கக் கூடாதா?
“ஏக்கா அவருதாம் வூட்டுக்காரரா? போட்டோக் கடையில் பாத்திருக்கிற. எங்க பெரிம்மா பொண்ணு மல்லிகா போன வருசம் பூ முடிச்சிட்டு இவரு கடயிலதா போட்டோ எடுத்தாங்க... பாத்தா காலனி ஆளுங்கன்னு சொல்ல முடியுமா? எல்லாம் ரொம்ப மதிப்பாயிட்டாக! அவுங்களுக்கு சர்க்கார் வூடு பட்டா குடுத்திருக்கு. குழாபோட்டு குடுத்திருக்காங்க...”
இவள் எதோ மனசில் எந்த வேற்றுமையும் இல்லாமல்தான் இதைச் சொல்கிறாள் என்பதைச் செவந்தி அறிவாள். ஆனால் அம்மா, இதை விசுக்கென்று பற்றிக் கொள்கிறாள்.
“ஏண்டி வந்தவங்க காலனி ஆளுங்களா?”
“ஆமா அதனால என்ன? அவங்களும் நம்மப்போலதா. இந்த மாதிரி எல்லாம் பேசுறது தப்பு” என்று செவந்தி கோடு கிழிக்கிறாள்.
“அவதா எவ்வளவு ஒத்தாசை பண்ணுனா! நல்லாபடிச்சவ. ஆனா கொஞ்சம் கூடக் கருவம் இல்ல. ஒராள் வேலை பண்ணுனா அன்னிக்கு. இப்ப நாம் போயி உதவாட்டி அது மனிச சன்மத்துக்கு அழகில்ல!”
“ஏ வாய அடிச்சிருவீங்க இந்துாட்டுல” மூசுமூசென்று அழத்தொடங்குகிறாள்.
ரங்கனும் வரும் போது சந்தோசமாக இல்லை.
“சோறு வையி. எனக்கு ஒரே பசி. சாமி இங்க உக்காந்து சாப்புடும் எல்லாரும் சாப்பிடுவோம்னு பாத்தா, தூக்கெடுத்து வசூல் பண்ணிட்டுப் போவுது! சீ! நம்ம கோயில் சாமி, நிசமாலும் சாமி!” என்று அலுத்துக் கொள்கிறான்.
சுந்தரிதான் அவனுக்கு இலை போடுகிறாள்.
“நீங்கல்லாம் சாப்பிட்டிங்களா?”
“ஆமா, எனக்குப் பசி பிச்சிட்டுப் போச்சி! காலமேந்து நிக்க நேரமில்லாம எல்லாம் செஞ்சி, ஆற அமர உக்காந்து சோறு தின்னக்கூடக் குடுத்து வய்க்கல. இந்தச் சாமி எங்கேந்து வந்திருச்சி இப்ப?”
“அதென்னவோ, உங்கம்மாளக் கேளு! பூங்காவனப் பெரிம்மா சொன்னாங்களா, வேலுவும் தர்ம ராசுவும் குதிச்சாங்க. வரதராசன் வூட்ல பூசை வச்சாங்க. அவரு வந்திட்டுப் போனா, ஒடனே நல்லதெல்லாம் நடக்குதாம். கலியாணம் ஆகாம நின்னவங்களுக்கு மூணே நாளில் கலியாணம், வேல கிடைக்காதவங்களுக்கு வேல, கடன் இருந்தா எப்பிடியோ அடயுது. என்னெல்லாம் சொன்னாங்க. உங்கம்மா இப்பிடிப் போயி இந்தச் சேதியெல்லாம் கொண்டிட்டு வந்து பத்து நாளா குடஞ்சி தள்ளிட்டா. ஆக, நம்ம கைவுட்டு அஞ்சுக்குக் குளோசு. தாயத்து வச்சிருக்கிறே, விளக்குப் பக்கத்தில. கட்டிக்கிறவங்க கட்டிக்குங்க!”
“நம்பிக்கை இல்லேன்னா, எதுவும் வராது. நம்பணும். நாலு பேர் நடந்ததத்தான சொல்வாங்க. இவர முன்னபின்ன தெரியுமா? பொம்பிளைதோசம்னு பார்த்ததும் சொல்லிடல? நீங்க நம்ப மாட்டீங்க. எந்தச்சேரி ஆளுங்களும் உள்ள வந்து சொல்லுறத நம்புவீங்க? வக்கீல் வூட்ல பூசை பண்ணாராம். ஒரு மாசம் அந்தப் பூ வாடவே இல்லையாம்!”
“இப்பதான சாமி இங்க வந்திருக்கு, இமயமலையவுட்டு? எப்படிப் பாட்டி ஒரு மாசம் பூ வாடல? இமயத்திலேந்து கொண்டுட்டு வந்த பூவா?” என்று சந்தடி சாக்கில் சரோ கிண்டி விட்டுப் போகிறாள்.
அப்பாவுக்கு இருமல் தொடங்குகிறது.
சங்கிலித் தொடராக, இழுத்து இழுத்துக் கண்கள் செருகி மீண்டு திணற இருமல்.
செவந்தி பக்கத்தில் உட்கார்ந்து நீவி விடுகிறாள்.
“என்னப்பா... அப்பா?.. .ந்தாம்மா வெந்நீ போட்டு வச்சிருந்தே. கொஞ்சம் கொண்டா...”
வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கச் செய்கிறாள். பக்கத்தில் மின் விசிறியை இழுத்து வைக்கிறாள்.
“வேத்துக் கொட்டுது...”
தன் சோலைத் தலைப்பால் மேனியைத் துடைக்கிறாள். சிறிது ஆசுவாசமடைகிறார்.
“அந்தச் சக்களத்தி நினைச்சிட்டிருப்பா” என்று அம்மா முணுமுணுத்துக் கையை நெறிக்கிறாள்.
“யம்மா, நீ எந்திரிச்சிப் போ, இங்கேந்து! போயி ரெண்டு வேலயப் பாரு! மாடு கத்துது. அதுக்கு ரெண்டு வைக்கோல் அள்ளிப் போட நாதியில்ல. நா இன்னக்கி இந்த லோலுப்பட்டதில கழனிப் பக்கம் போகல...?”
“யக்கோ...” என்று கன்னியப்பன் குரல் கொடுக்கிறான்.
“புல்லறுத்திட்டு வந்தே... சாமி வந்தாராமில்ல? எனக்குப் பாயசம் இல்லையாக்கா?”
“உனக்கு இல்லாமயா? வா, வா! சுந்தரி! பாயசம் இருக்கா?”
“இருக்கு...”
“குடு.... கன்னீப்பன மறந்தே போயிட்டமே? அவ இல்லேன்னா இந்த வூட்டுல சோத்துல கை வைக்கத் தெம்பிருக்காது!”
அம்மா உறுத்துப் பார்த்துவிட்டு வாசலுக்கு எழுந்து போகிறாள்.
“இந்தாளப்பத்தி என்னெல்லாம் சொன்னாங்க தெரியுமா? வெள்ளக்காரங்கல்லாம் வந்து அருள் வாங்கிட்டுப் போறாங்களாம்? ஆஸ்திரேலியாவிலேந்து ரெண்டு பேர் வந்தாங்களாம். ஊருல அந்தப் பொம்புள புள்ளியங்கள வுட்டுப்போட்டு வந்திருக்காம். புள்ளக்கு உடம்புசரில்லன்னு போன் வந்திச்சாம். இங்கே வேல முடியலியாம். சாமிகிட்ட நின்னு, சாமின்னு வேண்டிட்டு நின்னிச்சாம். அடுத்த நிமிசம் அவுங்க இங்க இல்லையாம்! நின்னிட்டிருக்கிற புருசனுக்கு, அவ அவவூட்டல ஆஸ்திரேலியாவுல புள்ள கிட்ட உட்காந்திருப்பது தெரிஞ்சிச்சாம்...”
“எல்லாம் ரீல். யாரோ இமாலயத்திலேந்து சுத்தி வுடுறாங்க. இங்க கரும்பாக்கத்துக் கீழத் தெருவுல, செங்கோலுப் பாட்டி காதுல வந்து வுழுது!” என்று செவந்திக்குக் கேட்கத் தோன்றுகிறது.
அரும்பு மீசையைச் செல்லமாகத் தடவிக் கொண்டு முற்றத்தில் நிற்கும் கன்னியப்பனையும் பார்க்கிறாள். நல்ல உழைப்பினால் உரமேறிய உடல். வெள்ளை உள்ளம். இவனுக்குச்சரோவைக் கட்டினால் ஒத்து இருப்பானே?
“கன்னிப்பா! உனுக்குப் பெரிய எடத்துலந்து பொண்ணு வருதாம். உன் ஆயா, எப்பய்யா கலியாணம் கட்டிப்பா, அவன் கட்டி, ஒரு பேரப்புள்ளயப் பாத்திட்டுச் சாவணும்னு சாமி கிட்டப் புலம்பிச்சி. கவலப்படாதீங்க. கலியாணம் வருது, பெரிய எடத்துப் பொண்ணுன்னாரு...”
“பெரிய எடம்னா மாடி வூடா. உக்காந்தா பெரி.... எடத்த அடச்சிக்கிற எடத்துப் பொண்ணா?” சரோவின் கிண்டலுக்கும் அவன் வாயெல்லாம் பல்லாகச் சிரிக்கிறான்.
“அதென்னமோ தெரியாது, கன்னிப்பா, உன் கல்யாணத்துல எனக்கு பெரீ... எல போட்டுப் பெரீ... சோறு போடணும்” என்று சரோ மேலும் நீட்டவே, கன்னியப்பன் மகிழ்ந்து போகிறான்.
“உனுக்கு இல்லாமயா சரோ? உனுக்குத்தான்முக்கியமாப் போடுவ...”
உள்ளே வரும் பாட்டி பட்டென்று வெட்டுகிறாள். “போதும், ஒரு வரமுற இல்லாத பேச்சி. பாயசம் குடிச்சாச்சில்ல? எடத்தக் காலி பண்ணிட்டுப் போ!”
“அவம் மேல ஏணிப்பக் காயுற? சிறுசுங்க கேலியும் கிண்டலுமா பேசிட்டுப் போவுதுங்க! நீ முதல்ல எந்திரிச்சிப் போ” என்று செவந்தி விரட்டுகிறாள்.
இந்த அம்மா, அப்பனை விட்டு அங்கே இங்கே நகருவதில்லை. அவர் வெளியே போனால், இவளும் சேலைத் தலைப்பை உதறிக் கொண்டு அங்கே இங்கே வம்பு பேச, டி.வி பார்க்க என்று கிளம்பி விடுவாள். வீட்டில் வணங்கி ஒரு வேலை பொறுப்புடன் செய்தாள் என்பதில்லை. அந்தக் காலத்தில், செவந்தி சிறியவளாக இருக்கையில், ஆண் பாடு பெண் பாடு என்று உழைத்தவள் சின்னம்மாதான். அம்மாவுக்கும் அவளுக்கும் ஆறேழு வயசோ மேலேயோ வித்தியாசமிருக்கும். பாட்டி சாகும் போது, சின்னாத்தாளுக்கு ஒரு வயசோ ஒன்றரை வயசோதானாம். அம்மாவுக்கும், சின்னம்மாவுக்கும் இடையில் மூன்றோ, நான்கோ குறைப் பிரசவங்களும் ஒரு முழுப் பிள்ளையும் வந்து நலிந்து போன பிறகு இவள் பிறந்தாளாம்.
பாட்டன் அந்தக் காலத்தில் வேறு கல்யாணம் கட்டாமல் இரண்டையும் தாயுமாக நின்று வளர்த்தாராம். சின்னம்மாவைத் தோளில் சுமந்து கொண்டு கழனிக்கரைக்குப் போவாராம்.
பாட்டனாரைச் செவந்திக்குத் தெரியும். அவளைத் தோள் மீது சுமந்து கொண்டு காஞ்சிபுரம் தேர்திருவிழாவுக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். பொரி கடலை மிட்டாய் வாங்கித் தந்திருக்கிறார். யானை காட்டி, அதன் துதிக்கையை தலையில் வைத்து ஆசி வழங்கப் பண்ணுவார். காசு கொடுக்கச் சொல்லுவார். பெருமாள் கோயிலில் பல்லி தொட்டுக் கும்பிடத் தூக்கிப் பிடிப்பார்.
அவளுக்கு நினைவு தெரிந்த வயசில்தான் சின்னம்மா ராசாத்திக்குக் கல்யாணம் நடந்தது. கோயிலில்தான் நடந்தது. பெரிய பெரிய அதிரசம் பணியாரம் சுட்டு நடுக்கூடத்தில் வைத்திருந்தார்கள். சின்னம்மா அம்மாவைப் போல் உயரமில்லை. வெளுப்புமில்லை. ஆனால் குருவி போல் சுறுசுறுப்பாக உட்கார்ந்து செவந்தி பார்த்ததாக நினைவில்லை. ஆடு வளர்த்தாள். கோழி வளர்த்தாள். பாட்டன் சந்தையில் கொண்டு கோழி விற்றோ, ஆடு விற்றோ அவளுக்குக் காலில் முத்துக் கொலுசு வாங்கி வந்தது நினைவிருக்கிறது.
செவந்தியின் மீது சின்னம்மாவுக்கு நிறைய ஆசை. அவள் பள்ளிக்கூடம் போக இரட்டைப்பின்னல் போட்டுக் கட்டி விடுவாள். முருகன் அம்மா பிள்ளை. அவனுக்குச் சின்னம்மாவிடம் ஒட்டுதல் இல்லை. இவள் ஸி.எஸ்.ஐ. பள்ளியில் படிக்கச் செல்கையில் சின்னம்மா அவளை அதுவரையிலும் கொண்டுவிட்டு கொல்லைமேட்டுப் பூமியைப் பார்க்கப் போவாள். ஒரு நாள் மழை வந்து விட்டது. முருகனிடம் குடையைக் கொடுத்துவிட்டு இவளைத் துக்கிக் கொண்டு வந்தாள். செல்லியம்மன் கோயில் பக்கம் வருமுன் மழை கொட்டு கொட்டென்று தீர்த்து விட்டது. கோயிலில் ஏறிக் காத்திருந்தார்கள். அடுத்த நாள் முருகனுக்குக் காய்ச்சல் வந்து விட்டது. அம்மா சின்னம்மாவைத் திட்டித் தீர்த்தாள்.
அப்போது சின்னம்மாவுக்குப் புருசன் இருந்தான். கல்யாணமான ஆறுமாசத்துக்குள் வண்டியில் மூட்டை ஏற்றிக் கொண்டு அவன் இரவில் சென்ற போது, எதிரே வந்த லாரி கண்டு மிரண்டு மாடுகள் சாய, வண்டி குடை கவிழ்ந்து அவனுக்குக் கால் உடைந்து விட்டது. அது சரியாகவே இல்லை. அவனுக்குச் சொந்த பந்தம் என்று மனிதர்கள் இல்லை. நிலம் துண்டுபடக் கூடாது. இரண்டு பெண்களும் மருமகன்களும் ஒன்றாக உழைத்துச் சாப்பிடவேண்டும் என்று பாட்டன் நினைத்திருந்தார். ஆனால் அவனுக்கு விபத்து நேர்ந்து, ஊனமாய், சோற்றுக்குப் பாரமாக உட்கார்ந்தான் என்பதால் சின்னம்மா அம்மாவுக்குத் தரம்தாழ்ந்து போனாள்.
அத்தைமகனான தன் புருசன் உரிமைக்காரன்; உழைக்கிறான். அதுமட்டுமில்லை, தான் முதலில் ஓர் ஆண் பிள்ளையைப் பெற்றிருக்கிறோம் என்ற கருவம் அவளுக்கு உண்டு. இப்போதுதான் செவந்திக்கு இதெல்லாம் நன்றாகப் புரிகிறது. அம்மா வெளி வேலைக்குப் போனதே இல்லை. வீட்டு வேலையும் செய்ய மாட்டாள். அதுவும் சின்னம்மா புருஷனை இழந்த பிறகு, அவள்தான் முழு நேர வேலைகளையும் செய்தாள். அம்மா, இழை சிலும்பாமல், சேலை கசங்காமல், வெற்றிலை வாய் மாறாமல், குந்தி இருந்து வம்பளப்பாள்.
அந்தப் புருசன் மூன்று நாள் காய்ச்சல் வந்து இறந்து போனார். அப்போது சின்னம்மா முழுகாமல் இருந்தாள். சின்னம்மாவைச் சுற்றி வந்து எல்லோரும் மாரடித்து அழுதபோது, விவரம் புரியாமல் அவளும் கோவென்று அழுதாள். பெரியசாமி மாமன் அவளையும் முருகனையும் ஓட்டலுக்குக் கூட்டிச் சென்று இட்டிலியும் காபியும் வாங்கிக் கொடுத்து அவர் வீட்டிலேயே வைத்துக் கொண்டதும் நினைவு இருக்கிறது.
பிறகு, சின்னம்மாவின் இந்த வடிவம்...
இளைத்துத்துரும்பாக... நெற்றிப் பொட்டும் மூக்குத்தித் திருகாணிகளும் இல்லாமல், கன்னம் ஒட்டி.. சாயம் மங்கிய ஒரு சேலையைப் பின் கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டு, முந்தியை இடுப்பைச் சுற்றி வரிந்து செருகி இருப்பாள்.
காதில் முன்பிருந்த தோடுகள் இல்லை. தேய்ந்த சிவப்புக்கல் திருகு ஒன்று ஓட்டை தெரியாமல் மறைத்தது. வளையமோ மாலையோ எதுவும் கிடையாது. எப்போதுமே வேலை செய்தவள் அவள்தானே!
வீடு பெருக்கி, மாவாட்டி... மாட்டுக் கொட்டில் சுத்தம் செய்து, தண்ணிர் இறைத்து, சாணி தட்டி, சோறாக்கி... ஓயாமல் வேலை. கழனிக்குப் போவாள்.
கல்யாணத்துக்கு முன் அவள் வளர்த்த ஆடுகளை விற்றுத் தான் பாட்டனார் அந்தக் கொல்லை மேட்டுப் பூமியை வாங்கினாராம். அதை ஓட்டிப் போக ஆள் வந்த போது, “அப்பா எனக்கும் அக்காவைப் போல் நாலு சவரனில் செயின் வாங்க வேணும்” என்றாளாம்.
ஆனால் செயின் வாங்காமல், பூமி வாங்கி, தன் மூத்த மருமகன் செவந்தியின் அப்பா பேரில் எழுதி வைத்தார். பிறகு தான் சின்னம்மாவுக்குக் கல்யாணம் ஆயிற்று; வாழ்வும் போயிற்று.
பாட்டன் இறந்த போது, வயிறும் பிள்ளையுமாக இருந்த சின்னம்மா இதெல்லாம் சொல்லி அழுதாள்.
அவர் போன பிறகு, சின்னம்மாவுக்கு நாதியே இல்லை என்றாயிற்று.
-------------
அத்தியாயம் 5
“அக்கா, வேலையெல்லாம் ஆயிட்டது... சோறு ஒரு குண்டானில் வடிச்சது அப்படியே இருக்கு. அடுப்படி எல்லாம் சுத்தமாக்கிட்டே. நா வரட்டா! வூட்ல அரிசி உளுந்து கெடக்கு. ஆட்ட, பிள்ளங்க வூட்டத் திறந்து போட்டுட்டுத் தெருவில ஆடிட்டிருக்கும்!” என்று சுந்தரி இவளை நினைவுலகுக்கு இழுக்கிறாள்.
“சுந்தரி...! போம்மா. காலமேந்து நீயே வேல செய்யிற! நீ சாப்புட்டியான்னு கூடக் கேக்கல... வித்தியாசமா நினைச்சிக்காத சுந்தரி...!” என்று வாஞ்சையுடன் அவள் கையைப் பற்றுகிறாள். நெஞ்சில் ஒரு குற்ற உணர்வு.
ஏறக்குறைய இவளும் சின்னம்மாளைப் போல் புருசனைப் பறி கொடுத்துள்ளவள் தானே!
சுந்தரி நகை நட்டைக் கழற்றவில்லை.
பூப்போட்ட நைலக்ஸ் சீலையை, உள் பாவாடை கட்டிப் பாங்காக உடுத்தி இருக்கிறாள். முடியை இழையப் பின்னித் தூக்கிக் கட்டிக் கொண்டிருக்கிறாள். வளைவாகப் பூ வைத்தால் நன்றாகத்தான் இருக்கும் . ஆனால்? பூ வைக்க முடியாது.
பொட்டும் குங்குமம் வைப்பதில்லை. இப்போதுதான் ஒட்டுப் பொட்டு வந்திருக்கிறதே? ஒரு கறுப்புப் பொட்டு, கடுகளவு ஒட்டியிருக்கிறாள்.
சுந்தரியே நல்ல நிறம் இல்லை. பளிச்சென்று அது தெரியவே இல்லை.
புருசன் வரும் போது பொட்டைக் கொண்டு வந்தானா? அதை ஏன் அழித்துத் தொலைக்கிறார்கள்? அவன் காலம் முடிந்து போனான். அது அவள் குற்றமா?
சுந்தரி ரங்கனுடன் சாதாரணமாகப் பேசுவாள். பழகுவாள். சோறு வைப்பாள். அவனும் தம்பி மனைவியிடம் ஆதரவாகவே இருக்கிறான். கடையில் இருந்து வரும் போது, எது வாங்கி வந்தாலும் முதலில் அந்த வீட்டுக்குக் கொடுத்து விட்டே வருவான். சரோ, சரவணனுக்கும் வித்தியாசம் தெரியாது.
செவந்திக்கு இதெல்லாம் சந்தோசமே. ஆனால் சின்னம்மா விசயத்தில் இப்படி நடந்ததா?
இவள் அம்மா தங்கையை பரம விரோதியாக அல்லவோ பார்த்தாள். இங்கும் அரிசி உளுந்து ஊறுகிறது. செவந்தி கிணற்றில் நீரிறைத்து அரிசியைக் கழுவி உரலில் போடுகிறாள்.
சரசரவென்று மழை விழுகிறது.
கொட கொடவென்று செவந்தி உளுந்து ஆட்டுகிறாள்.
“அம்மா! அம்மா! முத்தத்துக் கொடித் துணிய எடுத்து வையி! எரு மூட்டை நனையும். நான் பார்க்கலன்னா ஆரும் பார்க்கமாட்டாங்க...! அம்மா...! ஏ சரோ?”
இந்தத் தாழ்வரையே அங்கங்கு ஒழுகுகிறது. ஓரத்தில் விறகு அடுக்கி இருக்கிறாள். அதுவே நனையும்.
“சரோ! இந்த வெறகக் கொண்டு சமையல் ரூமுல வையி...”
சரோ வரவில்லை. அவள் வீட்டிலேயே இல்லை. சுந்தரி வீட்டுக்குப் படிக்கப் போயிருப்பாள். சரவணன் படிக்க மாட்டான். தெருவிலோ, எங்கோ நாலு பிள்ளைகளுடன் எதானும் விளையாடிக் கொண்டிருப்பான். அம்மாதான் முணமுணத்துக் கொண்டு வருகிறாள்.
பத்தி நடவுக்கு எடுத்துப் போன டயர் கிடக்கிறது. அதை எடுத்து வீசுகிறாள். எரு முட்டை எல்லாம் நனைந்து விட்டது.
மாட்டுக் கொட்டிலும் கூடச் செப்பனிடவேண்டும். பசு சினையாக இருக்கிறது. மழை வந்தது பயிருக்கு நல்லது...
மாவை வழித்துக் கரைத்துக் கொண்டு வந்து உள்ளே வைக்கிறாள். பட்டென்று மின் விளக்கு அணைந்து போகிறது.
“என்ன எளவு, ரெண்டு தூத்தல் போட்டால் வெளக்கு அணையிது! சீமண்ண விளக்கைக் கொளுத்தி வையி... செவந்தி...”
ரங்கன் குறட்டில் உட்கார்ந்து ஏதோ வரவு செலவுக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
செவந்தி இருட்டில் முதலில் சாமி விளக்கை ஏற்றி வைக்கிறாள். பிறகு முட்டைச் சிம்னியைத் தேடுகிறாள். அதில் எண்ணெய் கொஞ்சமாக இருக்கிறது. எண்ணெயே போன மாசம் போடவில்லை. இருக்கிற எண்ணெயை, டிஃபன் போடும் வேணி தனக்கு வேண்டும் என்று வாங்கிக் கொண்டு போனாள். கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியவில்லை. எல்லோருக்கும் எல்லாரும் வேண்டித்தானே இருக்கிறது?
“செவந்தி..! ஒரு நூறு ரூபா இருந்தா குடேன்!”
செவந்தி மஞ்சள் ஒளியில் அவன் முகத்தை உற்றுப் பார்க்கிறாள்.
“என்ன வெள்ளாடுறீங்களா? இந்தச்சாமிக்கும் காருக்கும் நானா செலவழிக்கச் சொன்னேன்?”
“அட ஒடனே கத்தாதே. நா நாளக்கி சாயங்காலம் குடுத்திடறேன்.”
“எங்கிட்ட நூறு காசு கூட இல்ல. களயெடுக்கணும். அடுத்த வாட்டி உரம் போடணும். ஊரியாவும் பொட்டாஷும் வாங்கிட்டு வரணும். வண்டிக் கூலி கேப்பா. நானே முழிச்சிகிட்டிருக்கிறேன். வீட்ல மல்லி முளவா சாமானில்ல. மாடு வேற செனயா நிக்கிது. ஒண்ணும் கட்டி வரலப்பா!”
“உங்கிட்டக் கேட்டா இப்படித்தா. ஈசக் கூட்டம் அப்புநாப்ல பொல பொலத்து மனுசன உண்டு இல்லைன்னு பண்ணிடுவ.”
“செவுந்தி, சுந்தரி, அதுகிட்டக் கேட்டு வாங்கின. மனசுக்கு எப்பிடியோ இருக்கு...”
“மாமியாள திருப்தி பண்ண, அவகிட்டக் கேட்டு வாங்கினீங்களா? உங்களுக்கு வெக்கமால்ல?”
“இன்னிக்கிச் செலவுக்கு வாங்கல. செவலிங்கத்த ஒரு சாமான் வாங்கி வர டவுனுக்கு அனுப்பிச்சே, நூறு ரூபா குறைஞ்சிச்சி. ஒரு அவுசரம்தானே. இருக்கு ஆத்தான்னு குடுத்திச்சி. நா இன்னிக்கி எனக்கு வரவேண்டிய பணம் இருக்கு, குடுத்துடலாம்னு இருந்தே. அதுக்கு இப்படிச் செலவு வந்திட்டது. அது சீட்டுக் கட்டுன பணத்திலேந்து குடுத்திருக்கு...”
“சரி, நா குடுத்துக்கறேன். நீங்க கவலைப்பட வாணாம்...”
“இல்ல, நா வாங்கினத நானே குடுக்கிறதுதா முற...”
“இப்ப இந்த நேரத்துல நா பணத்துக்கு எங்க போவ? காலயில, எத்தையானும் ஆண்டாளம்மா வூட்டில வச்சிட்டு வாங்கித் தாறன்...”
“நீ தரவே வேணாம். நான் புரட்டிக் குடுக்கிற...”
மழை விட்டிருக்கிறது.
சரோ வருவது தெரிகிறது.
“ஏய், எங்க போயிட்டு வார? இருட்டினப்புறம், வயிசு வந்த பொண்ணு...”
“எங்கும் போகல. அந்த வூட்டுல செந்தில் கூடப் பேசிட்டிருந்தே...”
“செந்தில் கூட இன்னா பேச்சு? காதோரம் கிருதாவும் மீசையும் சிகரெட்டும் விடலயாத்திரியிறா. பத்துப் படிச்சி முடிக்கல. அவங்கூட இன்னாடி பேச்சி? எதோ பொம்புளப் புள்ள படிக்கப் போற. பத்து படிக்கிற. படிச்சிட்டுப் போகட்டும்னு வுட்டா, சொன்ன பேச்சே கேக்குறதில்ல! இது சம்சாரிக் குடும்பம். அதுக்குத் தகுந்த மாதிரி இருந்துக்க!”
“அட போம்மா! நீ ரொம்ப போராயிட்டே” என்றவள் புத்தகத்தைக் கொண்டு உள்ளே வைக்கிறாள். அடுத்த நிமிஷம், அவள் ரேடியோவில் இருந்து பாட்டு வருகிறது. பார்ட்டின்னா பார்ட்டிதா... ப்யூட்டின்னா ப்யூட்டிதா...
சோடா குப்பி மூடியைத் திறந்தாற் போல் செவந்தி பொங்கிச் சீறுகிறாள். “அந்த எளவ மூடுடி! பாட்டா அது? கரண்ட் இல்லியே? இப்ப அதுக்கு மட்டும் கரண்ட் எப்படி வந்திச்சி?”
“ம் வந்திச்சி.. பன்னண்டு ரூவிக்கி பாட்டரி வாங்கிப் போட்டிருக்கு!” என்று கணவன் தெரிவிக்கிறான்.
“நீங்க குடுக்கிற எடந்தா இவள் துள்ளுறாள். இதுக்கெல்லாம் காசு குடுக்கறிங்க...”
“அட இதெல்லாம் கேக்குற வயசு. இதுக்கெல்லாம் பிள்ளைங்களக் கசக்கப்பண்ணக் கூடாது. நீயும் கேளேன். சமையல் ரூமில கொண்டு வச்சிட்டு!”
மனசைப் போட்டுப் பிராண்டிக் கொள்ளவேண்டும் போல் ஒரு நமைச்சல். செவந்தி மாட்டுக் கொட்டிலின் பக்கம் போகிறாள். இவள் ஓசை கேட்டதுமே பசு குரல் கொடுக்கிறது. முதல் ஈற்றுக் கன்று கிடாரி. பெரிதாக வளர்ந்தது. உழவு மாடுகள்...
கொல்லைப்படலைத் தள்ளி வைக்கிறாள். மழை நின்று வானில் இரண்டொரு நட்சத்திரங்கள் கூடத் தெரிகின்றன.
எங்கிருந்தோ காற்றில் ஓர் வாடை இழைந்து வருகிறது. புரியவில்லை. பின் பக்கம் வயல்களுக்கும் கொல்லைக்கும் இடையே குப்பை மேடுகள். முள் காத்தான் செடிகள் என்று ஒழுங்கற்ற இடம். இவர்கள் வீட்டை அடுத்து நாகு வீட்டுக்காரர் குடியிருந்த வீடு இடிந்து கிடக்கிறது. அவர்கள் ஊரைவிட்டுப் பெயர்ந்து பல வருடங்கள் ஆகின்றன. அந்த வீட்டைச் செப்பனிட்டுக் கொண்டு வாத்தியார் பரமசிவம் வந்தார். நாலே மாசத்தில் மஞ்சட் காமாலை வந்து செத்துப் போனார். அது இடிந்து குட்டிச் சுவராகக் கிடக்கிறது. பிறகு சிறிது தூரம் முட்செடிகள்... பொதுச் சாவடி. மேலத் தெரு அங்கிருந்து தொடங்கும்.
குட்டிச் சுவருக்குப் பின் சாராய வாடை வந்ததாக நீலவேனி சொன்னாள். ஊர்ப் பஞ்சாயத்தில் தண்ணீர் பங்கு, கட்சி அரசியல் வம்புகள் தான் நடக்கும். சாராயக் கடை வெட்ட வெளிச்சமாக இல்லை. ஆனால்...
திடீரென்று அப்பன் நினைவு வருகிறது.
இருட்டில் அவர்தான் படலையைத் தள்ளிக் கொண்டு வருகிறார். உடம்பு தள்ளாடுகிறது.
“அப்பா...? நீங்க செய்யிறது நல்லாருக்கா, உங்களுக்கு?”
“...”
வாயில் வசைகள் பொல பொலக்கின்றன.
அம்மாவுக்குத்தான் அந்த வசைகள். “என் ராசாத்தியத் துரத்தி அடிச்சபாவி... வயிறெறியப் பண்ண பாவி. உன்னியக் கழுத்தப் புடிச்சி வெளிய தள்றனா இல்லியா பாரு! தள்ளிட்டு என் ராசாத்தியக் கொண்டாந்து வைப்ப. அவலட்சுமி. லச்சுமி டீ. நீ மூதேவி. மூதேவின்னா, மூதேவி! இன்னாமா வேல செய்வா! புழுதிச்சால் ஒட்டிட்டுப் போவ, ஒண்ணொண்ணாக் கடல... மல்லாக் கொட்ட விதச்சிட்டே வருவா. மூட்டயா வந்திச்சி. அவ போனப்பறம் ஒண்ணில்ல. ஒன்னக் கொன்னி போட்டு அவளக் கொண்டாருவ...”
“சரோ உங்கப்பாவக் கூப்பிடு! என்னாங்க! ஏ... வேல்ச்சாமி, பழனியப்ப யாரானும் இருந்தாகூப்பிடு...”
“அவங்க எங்கேந்து வருவாங்க! அவங்களுந்தா ஊத்திட்டிருப்பாங்க...” என்று ரங்கன்தான் வருகிறான்.
“என்ன மாமா இது. வகதொக இல்லாம இப்படிப் பேரைக் கெடுத்துக்கிறீங்க” என்று அவரைப் பற்றி நிதானத்துக்குக் கொண்டு வருகிறான்.
அவர் திமிறுகிறார். இந்த உடலில் இவ்வளவு எதிர்ப்புச் சக்தியா?
“இவரு சாயந்திர நேரத்தில எந்திரிச்சிப் போக ஏவுடுறீங்க! எப்பப் போனாரு? இங்க பக்கத்துக் குட்டிச் சுவராண்டயே கொண்டாந்து கவுக்கிறானுவ. ஒரு நா பாத்து செமயா ஒதய்க்கனும்னு பாக்குற. என் கண்ணில தட்டுப்பட மாட்டேங்கிறாங்க. இந்தப் போலீசுக்காரக் கழுதங்களே வேபாரம் செய்யிறவனுக்கு உள் கையி. இந்த வியாபாரத்த நிறுத்திட்டேன்னு கை வண்டில ஏதோ சாமான் வச்சி வித்திட்டிருந்தவன, உள்ள தள்ளி, அடிச்சானுவளாம். செவலிங்கம் சொன்னான்... இந்த அக்கிரமத்தக் கேக்கிறவங்களே இல்ல...”
ரங்கசாமிக்குக் குடி வாடையே ஆகாது. பக்கத்திலேயே வரமாட்டான். சுந்தரி புருசன் குடித்தான். அதற்கு இவன் சொல்லும் காரணம் இதுதான். “எங்கப்பா நா சனனம் ஆகிறப்ப குடிக்காதவரா யோக்கியமா இருந்தாரு செவுந்தி. என் தம்பி பொறக்கிறப்ப அவரு முழு குடியவா ஆயிட்டாரு...”
“சரோ! உங்க பாட்டிய இன்னிக்கி வூட்டுக்கு வரவேண்டாம்னு சொல்லு! அம்சு வூட்டுத் திண்ணையில கெடக்கட்டும்!” என்று செவந்தி கத்துகிறாள்.
-----------------
அத்தியாயம் 6
செவந்தி வயல் வெளியில் நிற்கிறாள். கார்கால வானம் கனத்திருக்கிறது. . .
கீழே ஒரே பசுமை. அவளுடைய கால்காணி மட்டும் தனியாகத் தெரிகிறது. பதினைந்து, இருபத்தைந்து, முப்பத் தைந்து என்று மூனுரம் இட்டாயிற்று.
வேப்பம் புண்ணாக்கில் யூரியாவைக் கலந்து, முதல் நாளிரவே வைத்துவிட வேண்டும். காலையில் பொட்டினையும் கலந்து தூவினாள். மூன்றாந் தடவை வேப்பம் புண்ணாக்கு இல்லை.
யூரியாவை ஒரேயடியாக அதிகமாப் போடுவார் அப்பா. அது தண்ணிராகி வீணாகப் போய்விடுமாம்.
சிறு குழந்தைக்குச் சிறுகச் சிறுக உணவு கொடுப்பது போல், முதல்-இளம் பருவத்தில் வேப்பம் புண்ணாக்குடன் கலந்த யூரியா கொஞ்சம் கொஞ்சமாக அதன் வேர்களுக்குப் போகுமாம்.
பத்தி நடவு, இடையில் உள்ள வெளி, கால் வைத்துப் பயிர்களைப் பார்க்க, இடையே களை, பூண்டு இருக்கிறதா என்று பார்க்க, கழிக்க வசதியாக இருக்கிறது. ஆனால், களையே மண்டவில்லையே? மேலுரம் இடுமுன் களை யெடுக்க என்று நாலைந்து ஆட்கூலி கொடுக்க வேண்டுமே? ஆச்சரியமாக இருக்கிறது. களையே வரவில்லை. அவ்வப் போது வந்து புல், பூண்டு சும்மாகையில் புடுங்கி விடுகிறாள். கதிர் பூக்கும் பருவம்.
சித்திரைப் பட்டம் - சொர்ணவாளிப்பினால், இப்போது அறுவடையாகும். அதற்கு முப்பத்தைந்துக்கு மேல் உரமிட வேண்டாமாம். இது ஆடிப்பட்டம். சம்பா.... இன்னொரு உரம். யூரியாவும் பொட்டாஷும் மட்டும் போட்டால் போதும்.
தினமும் இந்தப் பயிரைச்சுற்றி வரும்போது மனது எல்லாக் கவலைகளையும் மறந்து விடுகிறது. வான வெளியில் சிறகடித்துப் பறக்கும் ஒர் உற்சாகம் மேலிடுகிறது. கால்காணியோடு ஏன் நிறுத்தினோம், முழுவதும் இப்படிப் பயிரிட்டிருக்கலாமே என்று தோன்றுகிறது. நாற்றங்களில் எஞ்சிய நாற்றுக்களை, வேல்சாமி பயன்படுத்திக் கொண்டான்.
“செவந்தியே! செவுந்தி!”
ரங்கனின் குரல்தான். முள்ளுக்காத்தான் செடிப் பக்கம் வெள்ளையாகத் தெரிகிறது.
வா! என்று கையைசைக்கிறான்.
கருக்கென்று ஒரு திடுக்கிடும் உணர்வுடன் வரப்பில் விரைந்து நடக்கிறாள். சிறு களைக்கொட்டும் கூடையுமாக விரைகிறாள்.
அப்பனுக்கு ஏதேனுமா? மாடு நிறைசெனை... அதற்கு ஏதேனுமா? நெஞ்சு குலுங்க வருகிறாள்.
“என்னாங்க? அப்பா...?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல, வா சொல்றே...”
வெற்றிலைக் கொடிக்காலின் வாசனை வருகிறது. “சென மாடு... காலமயே தீனி எடுக்கல. அதுக்கு நேரம் வந்திடிச்சா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல... வூட்ல ஆள் வந்திருக்காங்க. பட்டணத்துப் பெரீம்மா...”
“பட்டணத்துப் பெரீம்மாவா? பெரீம்மாவா?”
சின்னம்மா என்றால் நடவாதது நடந்து விட்டதாகத் தோன்றும். “பெரிம்மா... ஆரு... எந்தப் பெரீம்மா?”
“என்ன நீ, தெரியாதது போலக் கேக்குற? சுந்தரிக்கும் கூட ஒரு பக்கம் உறமுறை. அவ பெரியப்பன் மக உசாவைக் கட்டிருக்கே அந்தப் பெரிம்மா...”
“ஓ... அவுங்களா?”
“அவுங்க எதுக்காக நம்மூட்டத் தேடி வாராங்க? அவுங்களுக்கும் நமக்கும் எந்த நாளிலும் நெனப்பில்லியே? இப்ப என்ன வந்திச்சி, உறவு, நீங்க அக்கறயா கூப்பிட வரீங்க? அதுக்குத்தா, அம்மா இருக்காங்க, சுந்தரி இருப்பா?”
“நீ என்ன கிராஸ் கேள்வி கேக்குற? செவுந்தி இல்லியான்னு கேட்டாங்க. வூடு தேடி வந்தாங்க. வந்திருக்காங்க. சேவுப் பொட்டலம் ஒண்ணு வாங்கியாந்தே.... நீ வந்து ரெண்டு வார்த்த பேசு...”
அவளுக்குப் பிடிக்கவில்லை. பின் தாழ்வரையில் களைகொட்டையும் கூடையையும் வைக்கிறாள். தலைப்பை உதறிச் சுற்றிக்கொண்டு வருகிறாள். பசு மாடு குரல் கொடுக்கிறது. அதற்கு நேரம் வந்து விட்டது. ஒரு காலை மாற்றி ஒரு காலை வைத்து அவதிப்படுகிறது.
“என்னாங்க பசு அவதிப்படுது. பாத்தீங்கல்ல!”
“இருக்கட்டும். அதுக்குள்ள கன்னு போடாது. நீ உள்ளற வந்து வந்தவங்கள வாங்கன்னு சொல்லு?”
ஓ... பெரியம்மா... உடம்பு முகம் ஒரே செழிப்பில் மிதப்பது தெரிகிறது. கழுத்தில் பட்டையாக இரண்டு வரிச் செயின். காதுகளில் பெரிய தங்கத்தோடு. மூக்குப் பக்கங்களில் அன்னமும் பூவாளியுமாக மூக்குத்திகள். கைகளில் வளையல்கள். வெள்ளை ரவிக்கை. நீலத்தில் பூப்போட்ட பாலியஸ்டர் சேலை. வெள்ளை இழையோடிய முடியை இழைய வாரிக் கொண்டை போட்டிருக்கிறார்.
பலகையில் உட்கார்ந்து அம்மாவுடன் பேசுகிறார்.
“பெரியவன்தான் ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணுகிறான். முத்துய்யா, கண்ணன், ஜயகுமார் நற்பணி மன்ற செயலாளன். தமிழ்நாடு மிச்சூடும் இளைஞர் மன்றத்துக்கும் அவந்தா. நிதம் கூட்டம், நிதம் மீட்டிங். வூட்ல தங்க நேரமில்ல. ஆளு காரு வாசல்ல வந்திடும். புதுசா, நாகரகேணில வூடுகட்டிட்டிருக்கு. இது ராசியான எடம், இத்தவுட்டுப் போகக் கூடாதுன்னு குமார் சொல்லுறான். அவன் எக்ஸ்பர்ட் கம்பெனில ஆறாயிரம் சம்பாதிக்கிறான். பொஞ்சாதி முழுவாம இருக்கா. அவப்பன் துபாயில இருக்கிறான். நான் போறேன்னு பயமுறுத்திட்டிருக்கிறான். காலம் எப்படி மாறிப் போச்சுங்கற செங்கோலு! காசு... காசுதா... மாசத்துல ரெண்டு நா ஒட்டல்ல போயி சாப்பிட்டு ரெண்டாயிரம் செலவு பண்ணுறா குமார். குடும்பத்தோட ஆமா, எனக்கென்னத்துக்குடான்னா, கேக்கமாட்டா. போன மாசம் இப்பிடித்தா... ஏஸி ஓட்டல்ல கூட்டிட்டுப் போனா காரு காரா வாறாங்க. எங்கதா பணம் இருக்குதோ? சிக்கன் எழுபதோ? இன்னமோ சொன்னான். சும்மா சொல்லக் கூடாது. நல்லாதான் இருந்திச்சி. என்னமோ அவுங்க இதெல்லாம் அநுபவிக்காம போயிட்டாங்க. அப்படியே ஒரு சினிமாக்குக் கூட்டிப் போனா. ஜெயகுமார் படம்... எல்லாம் ஏசிதா. புதுசா கட்டுற வூடு கூட ஏசி பண்ணப் போறாங்க...”
செவந்திக்கு இந்தப் பெருமைகளைக் கேட்டு எரிச்சல் மண்டுகிறது.
“வாம்மா. செவுந்தி உன் தாத்தா திருவிழாவுக்கு உன்னத் தூக்கிட்டு வாரப்ப பாத்தது. மூக்கொழுகிட்டிருக்கும். மேத்துணில துடச்சி பாசமா வச்சிப்பாரு. இப்ப உனுக்கு மேசரான பொண்ணிருக்காமே...?” என்று விசாரிக்கிறாள்.
“ஏது இவ்ளோதுாரம் வந்திட்டீங்க? உங்களுக்கெல்லாம் நாங்க இருக்கிறது ஞாபகமே இருக்காதே?”
செவந்தி குத்தலாகப் பேசிவிட்டு உள்ளே சென்று தண்ணி எடுத்துக் குடிக்கிறாள். பிற்பகல் மூன்று மணி நேரம். இன்று பொழுதுடன் சாப்பாட்டுக் கடையாகி விட்டது.
“டீ போட்டுட்டு வா செவுந்தி...” என்று காரா சேவை சில்வர் தட்டில் பிரித்துப் போட்டுக் கொண்டு வருகிறான்.
“மாமா உடம்பு ரொம்ப மோசமாயிருக்காரே! ஒரு நட எல்லாம் வாங்க.”
“முத்தப்பனுக்கு அப்பலோ ஆசுபத்திரி டாக்டர்லாம் நல்லாத் தெரியும். வெளிநாட்டிலேந்தெல்லாம் ஹார்ட் ஆபுரேசன் பண்ணிட்டுப் போறாங்க. எம்.ஜி.ஆர். அங்கதான படுத்திருந்தாரு. அவருக்குன்னு ஸ்பெசலா ஒரு மெத்த பண்ணிருந்தாங்க. அது மட்டும் நாலு கோடியாம்....” செவந்திக்கு அவளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளவேண்டும் போல இருக்கிறது.
அப்பனுக்கு ஒரே தாரக மந்திரம் தான்...
“ஆமா... ராசாத்திய எப்பனாலும் பாப்பியா?”
“ஏம்பாக்காமா? அவ மருமவ சுந்தர் நம்ம கண்ணனுக்குத் தோஸ்து. இவந்தா அவனுக்கு வேல போட்டுக் குடுத்திருக்கிறா. ரெண்டு பொட்டப்புள்ள... ஏரிப்பக்கம் குட்சையில தா இருக்கு... அவ ஆத்தாக்காரி ஹோம்ல வேல செய்யிறா. எப்பனாலும் பாப்பே...”
“நீ பார்த்தா, ஒருக்க வந்து போகச் சொல்லு. நாகு போன தெல்லா போவட்டும். மறந்திடு. மன்னாடிக் கேட்டுக் கிட்டேன்னு சொல்லு...”
அப்பனுக்கு நெஞ்சு தழுதழுத்துக் குரல் நெகிழ்கிறது.
“அதுக்கு என்ன இப்ப? சுவர்ணவல்லிம்மா அவங்க ஹோம்லதான அது? இதுக்கு நல்லா தங்க எடம் சலுகை எல்லாம். ஆளு நல்லாத்தா இருக்கா. இங்கேருந்தா என்ன கிடைக்கும்? முத்தய்யஞ் சொல்றா. இங்கல்லாம் சர்க்கார் தொழிற்சாலை என்னமோ வருதாம். நில மெல்லாம் கட்டாயமா ஆர்ச்சிதம் பண்ணிடுவாங்கன்னு. நெறயப்பேரு, நில நீச்சில வருமான மில்லன்னு வித்துப் போட்டு, பட்டணத்துல ரெண்டு வீட்டக் கட்டிப் போடுறாங்க. மாசம் அஞ்சாயிரம் பத்தாயிரம்னு வூட்டு வாடகைய வசூல் பண்ணிட்டு உக்காந்து சாப்புட்றாங்க. கூலி குடுத்துக் கட்டுப் படியாவலன்னு வித்திட்டாங்க. அத்தோட பயிர்லல்லாம் பூச்சி வுழுகுதாமே?”
“அத்தே, இத்தச் சொல்லவா மூட்டக் கட்டிட்டு வந்திங்க? நா என்னாக்கும்னு பாத்தனே? நாங்க பூமிய விக்கிற உத்தேசம் இல்ல” என்று செவந்தி வெடித்துவிட்டு அடுப்பில் கரி வட்டையில் தண்ணிரைக் கொதிக்க விடுகிறாள்.
காரியமில்லாமல் இவள் ஏன் வந்தாள் என்று பார்த்தது சரியாக இருக்கிறது? புருசன் சொல்றதுக்காக டீத்துளைப் போட்டு, வடிகட்டிக் கொண்டு வருகிறாள். கைச்சூடு, மனச்சூடு இரண்டும் அவள் டம்ளரையும் வட்டையையும் வைத்ததில் புலனாகின்றன.
“இன்னாமோ உம் புருசன் கூப்பிட்டானேன்னு வந்த நா. இங்க கண்ணனோட சிநேகிதப் புள்ளக்கிக் கலியாணம், நெகமத்துல. காருல இங்க பஸ்ஸுக்குக் கொண்டாந்து வுட்டா. உன் புருசன் கடையிலேந்து வந்து வாங்க பெரிம்மா வூட்டுக்குன்னு கூப்பிட்டா; வந்தேன். இந்த ஊரு ஒறவே வானாம்னு எப்பவோ போனவ. முத்தய்யஞ் சொல்லுவ. நம்ம வூடு இருந்த எடம்னாலும் இருக்கும்பா. பாத்தனே. குட்டி சுவரா கெடக்கு. எங்களுக்கு எந்த நெலமும் வானாம். உங்களுக்கு வோணும்னா அதுக்கு ஒரு வெல போட்டு எடுத்துக்குங்க...”
அவள் முகத்தில் பல வண்ணங்கள் - மின்னுவது போல் இருக்கிறது. பக்கத்து மனை அவர்களுடையதுதான்.
“யார் சொந்தமும் யாருக்கும் வாணாம். அவுங்கவுங்க சொத்து தங்கினாப் போதும்...”
முகத்தில் அடித்தாற் போல் கூறிவிட்டு அவள் பின்கட்டுக்குப் போகிறாள்.
மாடு... வேதனைப்படுகிறது.
அவிழ்த்துத் தாழ்வாரத்தில் கொண்டுக் கட்டுகிறாள். ஏர் சட்டி சவரெல்லாம் கிணற்றுப்பக்கம் ஒதுக்குகிறாள்.
கிடாரிக் கன்றாகப் போட வேணும்... முருகா... என்று வேண்டுகிறாள்.
குமுறிய வானில் மழைத் தூற்றல் விழுகிறது. பெரிய மழை இன்னும் விழவில்லை என்றாலும், சமையற்கட்டு ஒழுகுகிறது. பானைகளில், பருப்பு, புளி, மிளகாய் வைத்திருக்கிறாள். மேலே ஏறி இந்த மழைக்குத் தாங்குவது போல பிளாஸ்டிக் ஷீட்டோ, மெழுகு சீலையோ போட்டால் பரவாயில்லை. எப்படியேனும் இந்த மழையைத் தாங்கி விட்டால் தை பிறந்தோ கோடையிலோ வீட்டுக் கூரை மாற்ற வேண்டும். சமையல் அறையும், பின் தாழ்வரையும் கீற்றுக்கூரை... மற்ற இடங்கள் ஓடு. பழைய காலத்து நாட்டு ஓடு. அதுவும் பிரித்துக் கட்டத்தான் வேண்டும்.
கால் காணியில் நல்ல மகசூல் வந்து, எல்லா நிலமும் பயன்தரக் கைக்கு வந்து... வளமை கண்டு வீடு பிரித்துக் கட்ட முடியுமா? கிணற்றுப் பாசனப் பூமியைப் பந்தகத்துக்குக் கொடுத்துவிட்டு, கோடைச் சாகுபடி என்றால் அந்தக் கிணற்றுத் தண்ணிருக்கு விலை கொடுக்க வேண்டும். வீட்டு ஆண் பிள்ளை என்று அப்பாவும் படுத்த பிறகு, இவள் புருசனின் எதிர்ப்பையும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாள்? சரவணனுக்கு வயசு பன்னிரண்டுதான் முடிகிறது. அவனை உழவில் பூட்டலாமா? சீ!
மழை இறங்குவதையும் மாடு தவிப்பதையும் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறாள்...
கொல்லையில் வைத்த தெங்கு இப்போதுதான் காய்க்கத் தொடங்கி இருக்கிறது. ஐந்து வருசம் என்று கொண்டு வைத்த பிள்ளை பத்தாவது வருசத்தில் தான் காய்க்கத் தொடங்கிற்று. ஆனால் பெரிய காய். ஒரமாக அவரையை ஊன்றி, அது கொடி வீசி படர்ந்திருக்கிறது. வைக்கோல் போர் கரைந்து விட்டது. வேளாண்மை இல்லை என்றால் விலைக்குத்தான் வாங்க வேண்டும்.
சட்டென்று நினைவு வருகிறது. பசுகன்று போடும் போது முகம் உதயமானதும் சூடம் கொளுத்திக் காட்டிக் கும்பிடுவார்களாம். இவர்களுக்கு வழக்கமில்லை. அது தாயேதான். மழையில் நனைந்து கொண்டு சரோசா வருகிறாள். சைக்கிளை உள்ளே கொண்டு வைக்கிறாள். சரவணனுக்கு பிளாஸ்டிக் மழைக் கோட்டு இருக்கிறது.
அத்த எடுத்திட்டுப் போகலாமில்ல? நனஞ்சி ஒரே தெப்பலாயிருக்கு. காய்ந்த சேலைத் துணியைப் போட்டுத் துடைத்து விடுகிறாள் பாட்டி.
செவந்தி கர்ப்பூரம் இருக்கிறதா என்று பார்க்கிறாள். கன்று போட்ட பிறகு, நல்லபடியாகக் கர்ப்பூரம் ஏற்றித் திருஷ்டி கழிக்க வேண்டும்...
டிபன் டப்பியைப் பையில் இருந்து எடுத்து முற்றத்தில் போட்டபடி, “யம்மா, சூடா காபி, டீ எதினாச்சிம் குடும்மா. எனக்கு சார்ட் போடணும் உட்காந்து...” என்று கூறுகிறாள்.
“அம்சுப் பெரிம்மா வூட்டில போயி பாலு கேட்டேன்னு வாங்கிட்டு அப்பிடியே, ஓரத்துக் கடயில நாலணா கர்ப்பூரம் வாங்கிட்டு வா சரோ. மாடு கன்னு போட நிக்கிது. காபி போட்டுத் தரே...”
அவளிடம் ஒரு ரூபாய் நோட்டொன்றைத் தருகிறாள். அடுப்பில் காய்ந்த ஓலையைச் செருகிப் புகைய விடுகிறாள். அந்தச் சமையலறை ஓரமாகவே ஓலை எரு முட்டை, காய்ந்த சுள்ளிகள் எல்லாம் பத்திரப்படுத்தி இருக்கிறாள். தட்டுமுட்டு பானை என்று சமையலறையில் பல்லியும் பாச்சையும் இருக்கத்தான் இருக்கின்றன. சமயத்தில் தேளும் கூட ஓடும். மாசத்தில் ஒரு நாள் அமாவாசைக்கு முதல் நாள் கோமயத்தில் மஞ்சட் தூளைப் போட்டு ஓரமெல்லாம் மெழுகுவாள். விஷப்பூச்சி அண்டாது. சென்ற அமாவாசை விட்டுப் போய்விட்டது. மேலுரம் கலந்து கொண்டு இருந்தாள். சாந்தியின் வயலுக்கு நடவென்று போனாள்.
ஒரு கண் கொட்டாங்கச்சியைப் பார்த்து அடுப்பில் போடுகிறாள். அது பாதி எரிந்ததும் வெளியில் இழுத்து அணைக்கிறாள்.
தேயிலைக் கசாயம் போட்டு விட்டு, அடுப்பில் உலை போடுகிறாள்.
தெருக்கோடிக்குப் போவதற்குக் கூட சைக்கிள்.
“கர்ப்பூரம், தூக்கில் பால்... இதென்னடீ, பொட்டலம்?”
வெங்காயம் பொரிந்த மணம் பகோடா...
“இது ஏது?”
“வேணிப் பெரிம்மா குடுத்தாங்க!”
“குடுத்தாங்களா? அவ பாவம் முதுகொடிய உழைக்கிறா. அடுப்படில வேகுறா... நீ வாங்கிட்டுவர?”
“நாஒண்னும் கேக்கல. குமாரு காலம கணக்கு சொல்லித் தரச் சொன்னா. சொல்லிக் குடுத்தேன். பெரிம்மா என்னப் பாத்ததும் நிறுத்திக் கொண்டுக் குடுத்தாங்க.”
“சீ... ஏ இப்பிடிப் புத்தி போவுது உனக்கு?”
“நாங் கேக்கலம்மா சத்தியமா...”
“சரி சரி... இந்தாங்க பாட்டிக்கு ரெண்டும், தாத்தாக்கு ரெண்டும் குடு...”
“பாட்டி எங்கே?”
பாலைக் கலந்து தேநீரை டம்ளரில் ஊற்றுகிறாள்.
கிணற்றடியில் சலதாரையில் தண்ணிர் ஓடுகிறது.
பாட்டி அங்கேதானிருக்கிறாள். மாடு ஈன்று விட்டது. குளம்பு கிள்ளிக் கன்று கிடாரி என்று பார்த்து இருக்கிறாள்.
நஞ்சுக் கொடி தொங்குகிறது. மாடு கன்றை நக்கி நக்கிக் கொடுக்கிறது. சரசரவென்று அரிசி கழுவிக் கழுநீரில் பொட்டும் சிறிது புண்ணாக்கும் கலந்து கொண்டு வந்து வைக்கிறாள்.
கர்ப்பூரம் ஏற்றி மூன்று முறை சுற்றி திருஷ்டி கழிக்கிறாள். பாதி எரிந்த கண் கொட்டாங்கச்சியில் கறுப்புக் கயிற்றைக் கோர்த்து அதன் கழுத்தில் கட்டுகிறாள்.
நஞ்சுக் கொடியை பழந்துணியில் சுற்றிச் சாக்குத்துண்டில் பதிந்து ஓரமாக வைக்கிறார். காலையில்தான் அம்மன் கோயிலின் பின் உள்ள அத்தி மரத்தில் கொண்டு கட்ட வேண்டும்.
பாட்டி சீம்பாலைக் கறந்து கீழே உற்றுகிறாள். கன்றுக் குட்டியை முட்ட விடுகிறாள்.
“அப்பா... மாடு கிடாரிக் கன்று போட்டிருக்கு! டீ சாப்பிடுங்க இந்தாங்க கடிச்சிக்குங்க!”
அப்பா எதோ கனவில் இருந்து வெளிப்படுபவர் போல், உ.ம்... உம்? என்று கேட்கிறார்.
“செவுந்தி, நாவு வந்ததிலேந்து மனசு சரியில்ல. உன் அம்மா எங்க போனா?”
“பின்னாடி மாடு கன்னு போட்டிருக்கப்பா!”
“அதான பாத்தன். எங்கனாலும் விட்டு ஒரு பத்து நா இருக்கணும் போல இருக்கு. எம் மனசு விட்டு அழுகணும் போல இருக்கு செவுந்தி! அபாண்டமாக அவ பேரில பழி சொல்லி, நடுகாட்டுல வச்சி அடிச்சாங்களே... அந்தப் பாவம் வுடுமா?”
“அதெல்லாம் இப்ப எதுக்கப்பா நினைக்கிறீங்க?” என்று மகள் சமாதானப்படுத்துகிறாள்.
“நெஞ்சுல ஒரு பக்கம் அது குமுறிக்கிட்டிருக்கு செவுந்தி. உன் சின்னாத்தா என்ன தப்புப் பண்ணிச்சி? அவ எப்பிடி வேல செய்வா தெரியுமா? வூட்டுவேல, காட்டுவேல, கழனிவேல சும்மா குருவி பறந்து பாராப்பல வருவா. ஒரு நேரத்துல அவ மூக்கச் சிந்திட்டு மூசுமூசுன்னு அழுதுட்டு உக்காந்ததில்ல. அவ அப்பங்கிட்ட, அவுரு இருக்கிற வரையிலும் தனக்கு அப்பன் அக்காளைப் போல் பாராட்டவில்லை, நகை நட்டு செய்து போடவில்லைன்னு கோபம் இருந்திச்சி. ஆனா, அதை ஒரு நேரம் கூட அக்காகிட்டக் காட்டியதில்லை. எட்டு வருசம் சின்னவ தங்கச்சி சங்கிலி போட்டுக்கட்டும், வளவி போட்டுக்கட்டும்னு குடுத்ததில்ல, இந்த மவராசி. அப்படி இல்ல சீல உடுத்தணும், மேனி அழுக்குப்படாம நிக்கணும்னு எண்ணம் இல்ல. உழப்பாளி. அவுலிடிச்சி, பொரி பொரிச்சி, காஞ்சிபுரம் சந்தையில வித்திட்டு வந்து பணம் காசு சேப்பா. உனுக்குத்தா ஞாபகம் இருக்குமே? இருபது பேருக்கு. நடவாளுகளுக்குப் பொங்கி வச்சிட்டு, இவளும் நடவுன்னு வந்திடுவா. புருசன் நல்லா இருக்கக் கூடாதா? அவ விதி. இருக்கிறதே பாரம்னு செத்துப் போனா...”
“ஏப்பா, அவரு எங்க கட்டிட வேலக்காப் போனாரு?”
“இல்லம்மா. இதா இங்க மில்லு. ரோட்டாண்ட இருக்கில்ல? அது அப்பதா வய்க்கிறாங்க. மேலே இரும்புச் சட்டம் போட்டிருக்கறாங்க. வண்டில கனசாமான். அதெல்லாம் வந்திருக்கு. இவ ரோட்டோரம் வயல்ல களை வெட்டுறா. வண்டி மாடு எதிரே எத்தயோ கண்டு மெரண்டு மீற, வண்டி எப்பிடியே கவுந்திடிச்சி. அந்தச் சட்டம் வந்து இவ இடுப்பைச் சதக்கிட்டு விழுந்திடிச்சி. சேறில்ல. கோர உழவு. கட்டி கரம்பை கிடந்திச்சி. எசகு பிசகா வுழுந்திட்டா... இடுப்பு எலும்பு ஒடஞ்சி போச்சி. கையிலும் முழங்கைக்கு மேல எலும்பு முறிஞ்சிடிச்சி. புத்துாருக்குக் கொண்டிட்டு உடனே போயிருந்தா நல்லாயிருக்கும். இங்கதா நெகமத்துல ஒரு வயித்தியருகிட்டப் பச்சில போட்டுக் கட்டிக் கொண்டாந்து விட்டாங்க. அது சரியாவல. பெறகு புத்துருக்குக் கொண்டு போனாங்க. மூணு மாசமாச்சி. ஆனா கை, காலு சரியாவல. ஆண்பாடு, பெண்பாடு பட்டிச்சி. அவன் செத்தப்ப இது முழுவாம இருக்கு. உங்கம்மா ராட்சசி. இது அவனுக்குத் தரிச்சதில்லன்னு என்ன ரகள பண்ணுனா? செவந்தி! மேல காயுறானே அவனுக்குப் பொதுவாச் சொல்லுறேன், அவ நாக்கு அழுகாம செத்தா, அது சரியில்ல. அத்த அபாண்டமா என்ன வச்சிப் பேசினது தாங்காம, உங்க பாட்டன் நெஞ்சிலியே அடிச்சிட்டாரு... உன்ன மருமகனா நெனக்கல ஏகாம்பரம், எதுனாலும் தப்பு நடந்திருந்திச்சின்னா எங்கிட்டச் சொல்லிடு. பாவம், அதுக்கு ஒரு கெதி இல்லாம பாவி பண்ணிட்டன். அது உம் புள்ளன்னாலும் இருந்திட்டுப் போகட்டும்; உனுக்கே கட்டி வச்சிடறேன்னு சொன்னாரு...”
“அப்டில்லாம் இல்ல... இது அவம் புள்ளதா. அபாண்டமா அதும் பேரில பழி சொல்லாதீங்க...”
“அரச பொரசலா ஊரெல்லாம் பேசுனா அசிங்கமாயிடுமேப்பா...”ன்னாரு.
“பேசுனவங்க நாக்கு அழுவிடும்னே. ஆனா, ஆரு நாக்கும் அழுவல. அவருதா அறுப்பறுத்திட்டிருந்தவரு, நெஞ்சு வலின்னாரு, போயிட்டாரு. உனுக்கு ஞாபகமிருக்குமே செவுந்தி?”
செவந்தி சிலையாக நிற்கிறாள்.
இப்படி ஒரு பொறி அவளுக்குள் தட்டியதில்லை. ஆனால், சின்னம்மாவுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று அப்பா அபிப்ராயப்பட்டதை அவரே சொல்லி இருக்கிறார்.
“இதொண்ணும், பழிபாவமில்ல. அந்தப் புள்ளையையும் பாத்துக்கிட்டு, கொல்ல மூட்டுல பயிர் பண்ணுறவ யாரேனும் வந்தா கட்டிட்டா என்ன? அதுக்கு ஒரு நாதி இருக்குமே?” என்று சண்டை போட்ட விசயம் இவள் வளர்ந்த பின் நினைவில் தெறித்திருக்கிறது.
ஆனால், நட்டுவாக்காலி வாயில் கவ்விக் கொண்டு தான் கொடுக்கால் கொட்டும். அம்மா அப்படித்தான் தங்கச்சியைப் பற்றி இருந்தாள் என்று தோன்றுகிறது.
“என்ன, இங்க அப்பனும், மகளும் பேசுறீங்க...? ஏ... என்ன ஒரு வீட்டில் அப்பனும் மகளும் கட்சி கட்டுறீங்க?”
அந்தக் குரல் அம்மாவுக்குரியதா?
இது எங்கிருந்து வருகிறது? பாம்பு செத்து, குப்பைக்குப் போன பின், அது மேடாகிப் புதைந்து பின், இன்னும் பலம் இருக்குமா? எதனால் இப்படிப் பயம்?
“இங்க யாரும் கட்சி கட்டல. இதுக்கு நேரமும் இல்ல” என்று சொல்லிவிட்டு அகலுகிறாள் செவந்தி.
-------------
அத்தியாயம் 7
ஆனால் மனம் அந்த நினைவுகளில் இருந்து அகலவில்லை. அப்பா கிளப்பி விட்டுவிட்டார்.
சின்னம்மாவை ஆசுபத்திரிக்கு எதற்கும் கூட்டிப் போகவில்லை. நர்சம்மா யாரும் வரவில்லை. வீட்டில் அந்த வாசல் திண்ணை அறையில் தான் பெற்றிருந்தாள். குழந்தையின் முட்டைக் கண், அந்தக் கூரில்லாத மூக்கு, சுருட்டை முடி எல்லாம் அதன் அப்பனையே கொண்டிருந்தது. ஆனால், குழந்தை கையிலெடுக்க முடியாத நோஞ்சானாக இருந்தது. பெண்...
“புருசன்தா போனா. ஆம்பிளப் புள்ளையைப் பெத்துக்கக் கூடாதா? பொட்டை? இது இன்னும் என்ன பேரக் கொண்டு வருமோ” என்று இடித்தார்கள்.
“அவ ஆளான நேரமே சரியில்ல. அதுதா புகுந்த எடம், புருசன் உருப்படல...”
குழந்தை எப்போதும் அழுதது. கைக்குழந்தைக்காரி என்று உட்கார்த்தி வைப்பார்களா?
பொட்டழிஞ்சி போனவ, வேல வெட்டி செய்யாம எப்படி?
வீட்டிலேயே அவளை வாட்டினாள். வயல் வெளிக்குப் போகத் தடை. ஏனெனில் அப்பாவும் அங்கே தானே வேலை செய்வார்? பிற ஆண்கள் இருப்பார்களே?
நடவு, களை பறிப்பு என்று கும்பலாகப் பெண்களுடன் கைக் குழந்தையுடன் போக வேண்டும். நோஞ்சான் பாலுக்கு அழும். தாய்ப்பால் இல்லை.
“ராசாத்தி, புள்ள அழுகுதும்மா. பாலு குடு புள்ளக்கி” என்று சமையல் அறையில் பானை சரித்துக் கொண்டிருந்த தாயிடம் அவர் கொண்டு போனதை அம்மா பார்த்து விட்டாள்.
“சமில் ரூம்புல உமக்கென்ன வேல? தாய்ப் பால் இல்லன்னா, இந்தச் சனியனுக்கு, ஊட்டுப் பால் குடுக்கணுமா? இது யார் குடியக் கெடுக்குமோ? ஒடஞ்ச நொய்யிருக்கு, கஞ்சிகாச்சி ஊத்தட்டும். ஆம்புளப்பைய, அவம் படிச்சிட்டு வாரான். அவனுக்கு நல்ல பாலில்லை.” என்று தொடுத்தாள்.
“ஏ மூதேவி வாய மூடுடி! உங்கூடப் பிறந்தவதான அவ! இந்த வூடு, காணி எல்லாத்திலும் அவளுக்கும் பாதி உண்டுடி! நீ இப்பிடி வஞ்சன பண்ணாதே. உன் வமுசமம் அழிஞ்சிடும்” என்று அப்பா கத்தினார்.
“இன்னாது? பாதி உண்டா. பாதி? அத்த அவ புருசன் வூட்ல போயிக் கேக்கச் சொல்லுங்க! ஓராம்புளப் புள்ளயப் பெத்துக்காதவ, புருசனும் போனப்புறம் எந்தப் பாதிய நினைச்சிட்டுப் பேசுறீய! பாதியாமே பாதி! பன்னாட...” என்று பேசுவாள்.
குழந்தைக்கும் கழுக்கட்டையில் சிரங்கு, மண்டையெல்லாம் கட்டி. அனல் காய்ந்தது. அம்மாவைப் பொருட்படுத்தவில்லை. அப்பாதான் அவளையும், குழந்தையையும் காஞ்சிபுரம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றார். நாலைந்து மாசம் வீட்டுக்கு வரவேயில்லை.
வேலூர் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனதாகவும், குழந்தைக்கு ரொம்ப சீக்கென்றும் தெரியவந்தது.
அப்போதெல்லாம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் எப்போதும் சண்டைதான். வீட்டில் வேலை செய்ய ஆளில்லை. அப்பாவின் அம்மா அந்தப் பாட்டி வேறு இங்கு வந்திருந்தாள். ஒரு மார்கழி மாதத்தில், பாட்டிக்குக் காலரா வந்தது. செத்துப் போனாள்.
சின்னம்மா குழந்தையுடன் ஒரு வருசம் கழித்துத் திரும்பி வந்தாள். அப்பாதான் கூட்டி வந்தார்.
செவந்திக்குச் சின்னம்மாவின் மீது அப்போதுதான் அதிகம் பிடிப்பும் பாசமும் வளர்ந்தது.
குழந்தை அழகாக இருந்தது. சுருட்டை முடி, பெரிய கண்கள். ஆனால் குச்சிக் கால்களும், கைகளுமாக இருந்தது. பிடித்துக் கொண்டு நிற்கும், நடக்க வரவில்லை.
“சீ. விடுடீ கீழ? சீக்குப் புடிச்சத இங்க கொண்டிட்டு வந்து குலாவுற. அது கண்ட எடத்திலும் பேண்டு வைக்குது. மூத்திரம் போவுது” என்பாள்.
சின்னம்மாள் பொறுத்தாள். எத்தனையோ பொறுத்தாள். ஒரு நாள் செவந்தி ஸ்கூல் விட்டு வந்த சமயம் சின்னம்மா இல்லை. அவளுக்கு யாருடனோ தொடிசாம். குழந்தையை ஆஸ்பத்திரியில் கொண்டு காட்டுகிறேன் என்று சொல்லி ஓடி விட்டாளாம். கொல்லை மேட்டில் மணிலாக் கொட்டை போட்டுக் கடலை பிடுங்கி இருந்தார்கள். கடலை வறுத்து உடைத்து, வெல்லம் போட்டு உருண்டை பிடித்துக் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் போது கொடுத்திருந்தாள்.
திரும்பி வந்தபோது அவள் இல்லை.
நடுவில் எத்தனையோ சம்பவங்கள். முருகன் படித்து முடிந்து, வேலை நிரந்தரம் என்று நிலைக்காமல் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை என்று அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தான். வீட்டோடு மருமகன் வந்த புதிது. கொஞ்ச நாட்கள் சீட்டுக் கம்பெனி வேலை செய்தான். இரண்டாவதாக இவள் கருவுற்றிருந்தாள். இப்போதும் வளையல் அடுக்கி இருந்தார்கள். திடுமென்று சின்னம்மா மகளை அழைத்துக் கொண்டு ஒரு நாள் பகலில் வந்தாள்.
முதலில் ஒன்றுமே புரியவில்லை. மகள் குச்சியாய் பாவாடை தாவணி போட்டுக் கொண்டிருந்தது. பம்மென்ற சுருட்டை முடியை ஒரு நாடா போட்டுக் கட்டியிருந்தது. அழுதழுது முகம் வீங்கி இருந்தது. சின்னம்மாவும் குச்சியாகத்தான் இருந்தாள்.
“வாங்க சின்னம்மா... வாங்க... என் கல்யாணத்துக்குக் கூட நீங்க வரவில்லை. இப்பவானும் வந்தீங்க...”
சுந்தரியின் அம்மா அப்போது அங்கு வந்திருந்தாள். அம்மா அங்கே பேசப் போயிருந்தாள். அடுப்பில் குழம்பு காய்ந்து கொண்டிருந்தது. “செவுந்தி, இத. இவ இங்க கொஞ்ச நா இருக்கட்டும்மா உன் தங்கச்சி. நா. ஒரு ஹோம்ல வேல் செய்யிற. இவள அங்க வச்சிக்க எடமில்ல. எடமும் சரியில்ல. இங்க உன்தங்க மாதிரி நினைச்சிக்க. வேல செய்யிவா. தோதா ஓரிடம் பாத்திட்டு வந்து கூட்டிப் போறேன்... உன் அம்மா எங்க?”
“அத்த வூட்டுக்குப் போயிருக்காங்க. அப்பா குழனிக்குப் போயிருக்காரு. கூப்பிட்டுட்டு வார சின்னம்மா... இருங்க...”
“பரவாயில்ல. அவ இருந்தா எதும் மனசு சங்கடப்படும்படி சொல்லுவா. பாடி, பரதேசின்னு நினைச்சிக்க. பொம்புளப் புள்ள. அதுக சரியில்ல. ஒரு நெருக்கடி அவுசரத்துல வுட்டுட்டுப் போற. ருக்கு... இங்க இருந்துக்கம்மா...” என்று பையை வைத்து விட்டு விரைந்தாள்.
“யம்மா... நானும் வாரேன், எனக்கு...”
அவள் படாரென்று வெளிக் கதவைச் சாத்திவிட்டுச் சிட்டாய்ப் போய் விட்டாள்.
செவந்திக்கு இது கனவா, நனவா என்று புரியவில்லை. அரை மணி நேரம் சென்ற பின் அம்மா பிள்ளைத்தாச்சிப் பெண்ணுக்கென்று இறைச்சிக் குழம்பு வாங்கிக் கொண்டு படியேறி வருகையில் கதவு சாத்தியிருந்தது.
“கதவ ஏன் சாத்தி வைக்கிற? ஏம்மா? அந்தக் குருசாமி கிராக்கு உன் தங்கச்சி வந்திருக்கா மகள அழைச்சிட்டு, போன்னுது. வந்தாளா?”
அவள் ஒலி தேயுமுன் பார்வை அந்தப் பையின் மீதும் தூணோடு தூணாக நிற்கும் ருக்குவின் மீதும் பட்டுவிட்டது.
“எங்கடீ வந்தாளுவ? பண்ணதெல்லாம் பத்தாதுன்னு மிச்ச சொச்சத்துக்கு வந்தீங்களா?”
“யம்மா, நீ எதும்பேசாத, உன் வாய்க்குப் பயந்து அர நிமிசம் தங்காம சின்னம்மா போயிட்டாங்க, எனக்கு ஆளான பொண்ண வச்சிக்க எடமில்ல. ஹோமுல இருக்கிற எடம் தோதா பாத்திட்டுக் கூட்டிப் போறன். ரெண்டு மாசம் இங்க பதனமா இருக்கட்டும். நெருக்கடி. பாடி, பரதேசின்னு நினைச்சிட்டுப் பாத்துக்கிங்கன்னு சொல்லிச்சம்மா. நீ வீணா கத்தாத...” என்றாள் செவந்தி.
“ஊஹூம்... பாடி பரதேசியா? ஏண்டி, நானும் தெரியாமதா கேக்குறேன். ஆளான பொண்ண இங்க எதுக்குடி கொண்டாந்து வுடுறா? அடி சக்களத்தி. இப்ப என் மவளுக்குச் சக்களத்தியாக் கொண்டாந்து வுடுறாளா? போடி, இந்த நிமிசமே இங்கேந்து போங்க! இந்த வூட்டு மனுசன் வந்திட்டா அது வேற புள்ளைய அணச்சிட்டுக் கொஞ்சும்!”
ருக்கு... ஓ... என்று அழத் தொடங்கி விட்டது, பிழியப் பிழிய...
“ம், பைய எடு, நட...!”
“யம்மா, உனக்கே நல்லா இருக்கா? உன் பொண்ணுக்கு, புள்ளக்கி ஒரு கட்ட நட்டம் வராதா? என்னம்மா இது...”
“அடி நாம் பெத்த மவளே! உனக்கு என்னடி தெரியும், இந்தச் சூதெல்லாம்! அப்பந் தெரியாத பொண்ண எவங் கெட்டுவா; அதாஇங்க கொண்டாந்து எளிசாவுட்டுப் போட்டு ஓடிருக்கா ஏய், நட... போ!”
அடித்து விரட்டாத குறையாகப் பிடித்துத் தள்ளி விட்டாள். அது அழுது கொண்டே போயிற்று.
செவந்தி கத்தினாள். அப்பா வந்ததும் அம்மாளின் அக்கிரமத்தைச் சொல்லி ஏற்கெனவே எரியும் நெருப்பில் நெய்யூற்றினாள்.
அப்பன் ஆத்திரத்தில் அன்று குடித்து விட்டு வந்தார். அம்மாவைப் போட்டு அடித்தார். தெருவே கூடிச் சின்னாத்தாளைப் பேசிற்று. நாவில் பல் படக் கூசாமல், சின்னம்மா வேலூருக்குச் சென்று வயிற்றுப் பிள்ளையைக் கரைத்தாள் என்றும், அவள் புருசனில்லாத வாழ்வில் வளர்ந்த பெண் தடையாக இருப்பதாக இங்கு கொண்டு தள்ளி இருப்பதாகவும் பேசினார்கள்.
அத்துடன் விஷயம் ஒயவில்லை.
செல்லி அம்மன் கோயில் பூசாரி அதிகாலையில் வந்து கதவிடித்தார். “அந்தப் பொண்ணு, ராசாத்தி மக, கெணத்துல வுழப் போச்சுங்க. நல்ல வேள, நாம் பாத்திட்டே. சின்னானக் காவல் வச்சிட்டு சேதி சொல்ல ஓடியாந்தே. பொண்ணு பாவம் பொல்லாதுங்க. ஒண்ணு நீங்க வச்சிக்கணும். இல்லாட்டி பத்திரமா அவாத்தா கிட்டக் கூட்டிப் போய் ஒப்படச்சிடுங்க...” என்றார்.
அப்பா கெஞ்சியும் அவள் வரவில்லை. அத்தை வீட்டில் கொண்டு வந்து வலுக்கட்டாயமாகக் கஞ்சி குடிக்கச் செய்தார்கள். சின்னம்மாளுக்குச் சேதி சொல்ல ஆள் போயிற்று. சின்னம்மா வந்தாள்.
அம்சுவின் மாமன்... அவன் என்ன உறவு?
சின்னம்மாவுக்கு எந்த உறவிலோ அத்தை மாப்பிள்ளையாம். நடுத்தெருவில் நிற்க வைத்து அவளை அநியாயம் பண்ணினான்.
“எங்க மானம் மரியாதையச் சந்தி சிரிக்க வச்சிட்டியே? பாவி, எங்களுக்குத் தலதுாக்க முடியாம, அறுத்தவ, ஊரு மேல போயி மகளையும் உன் வழிக்கு விட இங்க கொண்டாந்து விட்டிருக்க?”
அப்போது செவந்தி திண்ணையில் நிற்கிறாள். துடப்பத்தை எடுத்து வந்து அவளை அடித்தான் மாபாவி!
அவன் ஊர் - உறவுக்குப் பெரிய மனிதர். பெண்டாட்டி தவிர மேல வீதியில் தொடுப்பும் உண்டு. இவன் நியாயம் பேசினான்!
அப்பா... உள்ளே வைக்கோல் போர் போட்டுக் கொண்டிருந்தார்.
ஓடினாள். “அப்பா, சின்னம்மாவை செங்கண்ணு மாமன் நடுத்தெருவில நிறுத்தித் துடப்பத்தால அடிக்கிறாரு அம்மா, இன்னும் அல்லாரும் பாத்திட்டிருக்காங்க!”
அப்பா ஓட்டமாக ஓடிவந்த போது, சின்னம்மா கண்ணீரும் கம்பலையுமாகத் தலைவிரி கோலமாக நின்றிருந்தாள்.
கண்ணகி சினிமாப் போல் இருந்தது. அடி மண்ணை வாரி எல்லாக் கூரைகளிலும் வீசினாள்.
“அபாண்டமா பழி சுமத்தும் நாக்குக்கு ஆண்டவன் கேக்கட்டும்? அந்த ஆத்தா கேக்கட்டும்!” என்று சொல்லிக் கொண்டு மகளை அழைத்துக் கொண்டு விசுக் விசுக்கென்று போனாள்.
“இவ பெரிய பத்தினி சாபம் வைக்கிறா?” என்று அம்மா நொடித்தாள்.
நாலைந்து மாசம் சென்றபின், ஒரு நாள்...
ஆவணி மாசம். சரவணன் பிறந்து முப்பது நாள். அத்தான் சேதி கொண்டு வந்தார்.
“உன் சின்னம்மா, மக, மருமகன் கூட வந்திருக்கா. வக்கீல் வரதராசர் வீட்டில வந்திருக்கா. ஸ்டாம்ப் வெண்டர் தரும ராசன் வந்துசொன்னான். உன் அப்பா போயிருக்காங்க...”
மனசு சுருசுருவென்று பொங்கி வந்தது.
“வக்கீலையாவை வச்சிட்டு, பாகம் கேக்கப் போறா. அந்தப் பையன் வெடவெடன்னு இருக்கிறான். எங்கியோ கம்பெனில வேலையாம். நம்ம சாதி இல்ல. வேற எனமாம். ரிஜிஸ்தர் கலியாணம் கட்டிருக்காம். அவ ஏற்கெனவே தொட்டுப்புட்டாம் போல...”
“அதைப்பத்திக் கேட்க நமக்கு என்ன மரியாதி இருக்கு? நாமதா வீட்ட விட்டுத்துரத்திட்டமே?” என்றாள் செவந்தி.
சின்னம்மா இந்தப் பக்கமே வரவில்லை.
அப்பா வக்கீல் வீட்டுக்குப் போனதும், “அவள் பங்குக்கு ஒரு கிரயம் போட்டுக் கொடுத்து விடு ஏகாம்பரம்... தகராறு எதுவும் வேண்டாம்” என்று சொன்னாராம்.
“அவங்களே அனுபவிச்சிக்கட்டும். இந்த ஊருமண்ணு எனக்கு நஞ்சாயிட்டுது... நானும் எங்கப்பன் ஆத்தாவுக்குப் பொறந்தவ. என் பங்குக்கு நாயமாக் கிரயம் கொடுத்திடனும்” என்றாளாம்.
அப்பா வீட்டுக்கு வந்து பேசினார். கொல்லை மேட்டுப் பூமி மட்டும்தான் அவளுடையது என்று அம்மா அப்போதும் விவாதம் செய்தாள். அதற்கு நாலாயிரம் என்று மதிப்புப் போட்டார்கள். உடனடியாகக் கொடுக்கப் பணம் இல்லை.
செவந்திக்குப் போட்டிருந்த இரட்டை வரிச் சங்கிலி இருந்தது.
“அவ சங்கிலிதாங் கேட்டா...” என்று அதை வாங்கிக் கொடுத்தார்கள். ரிஜிஸ்தரார் ஆபீசுக்குப் போய்ப் பத்திரம் எழுதினார்கள்.
செவந்தியின் புருசன் பேரில் அது எழுதப்பட்டது. ஏற்கெனவே அப்பாவின் பேரில் இருந்து மருமகன் பேருக்கு வந்தது. இந்த நிலங்களுக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் உரிமையும் இல்லை என்று சின்னம்மா, மகள், மருமகன் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார்களாம்!
அப்பனின் ரணம், இவளுக்கு நன்றாகப் புரிகிறது. இரவு முழுவதும் ஏதேதோ எண்ணங்கள். அந்தக் கொல்லை மேட்டில் கடலை பயிரிட்டு, மகசூல் எடுக்கவேண்டும்.
ஒரு படி போட்டு உருண்டை செய்து கொண்டு போய் அந்தச் சின்னம்மாளைப் பார்க்க வேண்டும். இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்றாள் நாகு பெரியம்மா... மனித வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் எப்படியெல்லாம் வருகின்றன! சுந்தரி... பூவிழந்து போனாள். அந்த உத்தமியை நடு வீதியில் வைத்து அவள் செய்யாத குற்றத்துக்கு அடித்தானே, பாவி! நாக்குப் புண்ணாகிப் புழுத்து ஒரு வருஷம் கிடந்தான். வலி வலி என்று துடித்தான். காஞ்சிவரம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றார்கள். நாக்கில் புற்று வந்து செத்தான்.
அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்?
அண்ணன் குடும்பத்தோடு ஒட்டவேயில்லை. அண்ணி குழந்தைகளுடன் இங்கு வருவதேயில்லை. கல்யாணமே அவன் விருப்பப்படி செய்து கொண்டான். மதுரையில் அவர்கள் குடும்பம் இருக்கிறது. பிறந்த வீட்டுச்செல்வாக்கு. தானும் பி.ஏ. பட்டம் பெற்றவள் என்ற பெருமையில் இந்தக் கிராமம் பிடிப்பதேயில்லை. அண்ணியின் தங்கை சென்னைப் பட்டணத்தில் இருக்கிறாள். அவளும் வேலை செய்கிறாள். பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பெரிய லீவுக்கு அங்கே செல்வார்கள். அப்போது அண்ணன் மட்டும் வந்து ஒப்புக்குத் தலை காட்டிவிட்டுப் போவான். இவன் எம்.எஸ்.சி. எம்.எட் படிக்க ஆதாரமாக இருந்த கிராமத்து மண் அவனுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளைகள் இங்கு வந்து ஒரு ராத் தங்கியதில்லை. காரில் காஞ்சிபுரம் போனார்கள் எல்லோரும். இங்கே வந்து அரை மணி தங்கினார்கள். எங்கிருந்தோ இளநீர் வெட்டி வந்து கொடுத்து, மைத்துனர் உபசாரம் செய்தார்.
மேலோட்டப் பெருமை. அம்மாவை அந்தக் காரில் கூட்டிச் சென்றுவிட்டு, செல்லும் வழியில் கடைப்பக்கம் இறக்கி விட்டுப் போனார்கள். நெருக்கியடித்துக் கொண்டு அந்த வண்டியில் போன பெருமை அம்மாவுக்குப் பட்டுப் பளபளப்பாக இருந்தது. அது நல்ல பட்டில்லை, வெறும் சாயம் குழம்பும் அற்பம் என்று யார் சொல்வது?
உறவும் மனிதச் சூடும் இல்லாமலே விலகிப் போகும் குடும்பத்தில் என்ன எதிர்பார்க்க முடியும்?
உள்ளே ரேடியோப் பாட்டுக் கேட்கிறது. விளக்கும் எரிகிறது.
“சரோசா நீ படிக்கிறியா பாட்டுக் கேக்குறியா? கரண்டு காச எவ கட்டுவது?”
“நீ செத்த சும்மா இரும்மா! நாங் கணக்குப் போடுறனில்ல? நீ வேற ஏன் தொந்தரவு பண்ணற?”
“அதுக்கு ரேடியோ இன்னாத்துக்கு?”
“அதும் வேணும். நான் பாட்டுக் கேட்டுட்டுக் கணக்குப் போடுவ...”
“ஏண்டி பாட்டுக் கேட்டுட்டே நீ என்னாடி படிக்கிறது? அத்த முதல்ல மூடு. படிக்க வேண்டிய பய்யன் ஊரு சுத்திட்டு வந்து சோறு ஒரு வாய் உள்ள போறப்பவே தூங்குறா. நீயானா...”
“யம்மா! நீ கொஞ்சம் வாய மூடிட்டு போக மாட்டியா?”
“நாவாய மூடுறேன். நீ ரேடியோவ மூடு!”
இதற்குள் அவளுக்கு ஆதரவாகத் தகப்பன் வந்து விடுகிறான்.
“என்ன இப்ப அதோடு உனக்கு வாக்குவாதம்?”
“ரேடியோவப் போட்டுக் கத்த வுட்டுட்டு என்ன படிப்பு வரும்?”
“எனக்கு ரேடியோவப் போட்டாத்தான் படிக்க ஓடுது. கணக்கு ஓடுது. இந்த வருசம் டென்த். நல்ல மார்க் எடுக்கணும். நா மேலே படிக்கணும்.”
“இதபாரு, உங்கப்பாரு தலையில தூக்கி வச்சிருக்காரு உன்ன. நீ சைக்கிள்ள அசால்ட்டா பள்ளிக்கூடத்துக்குப் போறதும் வாரதும், ஃப்ரண்ட் வீடு, டீச்சர் வீடுன்னு போவுறதும் சம்சாரி வூட்டுப் பொண்ணா லட்சணமா இல்ல. நீ வரவர தாய மதிக்கிறதில்ல. வூட்டு வேல, ஒண்ணு செய்யிறதில்ல. கழனிப்பக்கம் எட்டிப் பாக்குறதில்ல. உன் வயசுப் பொண்ணு, அத மேகலா, சம்பங்கி எல்லாம் நடவு, கள எடுப்புன்னு போவுதுங்க; காசு சம்பாதிக்கிதுங்க. நீ படிச்சி என்ன ஆகப்போவுது? எங்கண்ணி படிச்ச மேட்டிம, புருசனையே பெறந்த மண்ணுக்கு ஆகாம ஆக்கிட்டா. உனக்குப் படிச்ச இங்கென்ன பவிசு இருக்குது? ஆண்பாடு பெண்பாடுன்னு ஒரு பொம்பள லோலுப்படுற...”
கண்களில் தன்னிரக்கம் மேலிடுகிறது.
“போதுமா? நிறுத்தியாச்சா? ஆம்புள கையாலாகாதவன்னு வாய்க்கு வாய் சொல்லுறதுல உனக்கு ஒரு பவுரு. அட நாம படிக்கல. அதுன்னாலும் ஊக்கமாப் படிக்கிதேன்னு உனுக்கு ஏன் பெருமையா இல்ல? அதும் டீச்சர் என்னப் பாத்து, சரோஃபஸ்டா மார்க் எடுக்குதுங்க. இந்த ஸ்கூலுக்கு அவ ரேங்க் வாங்கிப் பெருமை சேப்பான்னு நம்பறோம். நல்லாப் படிக்க வையிங்கன்னு சொன்னாங்க. எனக்கு எவ்வளவு பெருமையா இந்திச்சி? உனக்கு நீதா உசத்தி. மத்தவங்க எல்லாம் மட்டம்...”
அவள் வாயடைத்துப் போகிறாள்.
சரோ ஊக்கமாகப் படிப்பது பெருமைதான். ஆனால் இவளால் புரிந்து கொள்ள முடியாத முரண்பாடு இருப்பதால் உள்ளூர ஓர் அச்சம் பற்றிக் கொள்கிறது.
இவள் படிப்பு, சாதி, குலம் இல்லாத ஒருவனுடன் இவள் போகும்படி சந்தர்ப்பம் நேர்ந்து விட்டால்? அன்று சின்னம்மாவுக்கு நேர்ந்த நியாயம் இங்கு நேராது என்பது என்ன நிச்சயம்? செங்கண்ணு மாமன் போய் விட்டான். ஆனால் இந்தக் கீழ் - மேல் தெருக்களில் பிறர் விவகாரங்களில் தலையிட்டு, கண் மூக்கு வைத்துப் பெரிதாக்கிரணங்களைக் குத்திக் கிளறப் பல செங்கண்ணு மாமன்கள் இருக்கிறார்கள். இவர்கள் பேச்சுக்குத் தாளம் போடும், பிறர் நோவறியாத பெண்களும் இருக்கிறார்கள்.
சுந்தரிக்குப் புருசன் செத்த போது, அவளுக்கு வளையலடுக்கிப் பூ வைத்துச் சிங்காரித்து, இலை போட்டுப் பரிமாறி, எரிய எரிய எல்லாவற்றையும் உடைத்துப் பொட்டழித்துக் குலைத்து, அவமானம் செய்தார்கள். இதெல்லாம் சாதி, சமூகக் கட்டுப்பாடுகள்.
இதை இந்த அநியாயக்கார ஆண்களும் அவர்களுக்குத் துணை நிற்கும் பெண்களும் இன்றும் நாளையும் அமுல்படுத்துவார்கள். இந்தக் கோடுகள், வரமுறைகளை யார் எப்படி அழிக்கப் போகிறார்கள்?
சுந்தரி சாதாரணமாக இருக்க வேண்டும் என்று தூண்டிப் பக்க பலமாக இருப்பவளே செவந்திதான். அதனால்தான் அவளுக்கு இவள் மீது தனியான பிரியம்.
அவளுடைய அம்மா முணுமுணுப்பதையோ எச்சரிப்பதையோ செவந்தி செவிகளில் வாங்கிக் கொண்டதில்லை.
புருசன் போனபின் ஒருத்தி, அடுப்படி ஊழியத்துக்கே உரியவள். கட்டுக்கிழத்தி, பூவும் நகையுமாக மேனி மினுக்கிக் கொண்டு நெளிவெடுக்க வேண்டும் என்ற கருத்துக்களே அவளுக்குப் பிடிப்பதில்லை. ஒரு சிறு மாறுதலையேனும் கொண்டுவர வேண்டும் என்று நினைப்புக்கே ஊக்கமில்லாத சூழலில் சரோ... என்ன செய்யப் போகிறாள்? கண்களை மூடிக் கொண்டு பழக்கமில்லாத பாதையில் அடி வைக்கிறாளா?
---------------
அத்தியாயம் 8
பயிர் கதிர் அடைத்து நெஞ்சை இதமாக வருடுகிறது. மழையில் செழித்து, ஒரே சீராக, நட்டபோது எப்படி அழகாக பாய் விரித்தாற் போன்று பத்தி நடவு என்று வயல் கொஞ்சியதோ, அப்படியே இப்போதும் முத்துச் சொரியக் கொஞ்சுகிறது.
கதிர்கள் குஞ்சம் குஞ்சமாக... ஏதோ முத்துக்கள் பிரிவந்தாற் போல், இளங் காற்றிலும், இள வெயிலிலும் அசைந்து பயிரின் சிறப்புக்குக் கட்டியம் கூறுகின்றன.
இதற்குள் ஒரு களை, இரண்டு களை என்று எடுத்திருப்பார்களே? அவ்வப்போது வந்து பார்த்து ஒன்றிரண்டு தலை நீட்டும் களை, புல்லைத் தவிர, ஆள் வைத்து எடுக்க மண்டவேயில்லை. சரியாகக் கணக்குப் பார்த்து, பதினைந்து, இருபத்தைந்து, முப்பத்தைந்து என்று மேலும் ஒரு முறையும் உரமிட்டிருக்கிறாள். பூக்கும் பருவம், முப்பத்தைந்துக்குள் சுவர்ண வாரிக்கு உரமிட்டு விட வேண்டும். சம்பாப் பயிரானதால், நாட்களை எட்டிப் போடலாம். கடைசி உரம் போட்டாயிற்று.
விடிந்தால் தீபம்.
இந்த வருசம், தை பிறப்பதற்கு முன்பே அறுப்பறுத்து விடலாம் என்று கணக்குப் போடுகிறாள். எப்போதும் தை பிறந்த பின்னரே, அறுப்பறுப்பார்கள். இந்தப் புதிய முறையில், பொங்கலுக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பே அறுப்பறுத்து, புதிய கதிர் உதிர்த்து, அந்த மணிகளில் பொங்கல் வைக்கலாம். சாமி புண்ணியத்தில், இந்த விளைச்சல் நன்றாக வந்து விட்டால், இவள் தேறி விடுவாள். அகலக்கால் வைக்கலாம்.
தீபத் திருநாள் சாமி கும்பிடும் நாள்தான். ஆனால், இந்த ஆண்டு போல் உற்சாகமாக இருந்ததில்லை. மழை பெய்யும்; பூச்சி அண்டியிருக்கும்; புகையான் பற்றி இருக்கும். இந்த ஆண்டு ஊக்கமாகச் சாமி கும்பிட, அதிகாலையிலேயே விழிப்பு வந்து விடுகிறது.
பரபரவென்று அன்றாட வேலைகளை முடித்து, வீடு மெழுகி துடைக்கிறாள். தலை முழுகி, வேறு சீலை மாற்றிக் கொள்கிறாள். சுவரில், சாமி கும்பிடும் இடத்தில், மஞ்சட் குங்குமம் கொண்டு வட்டமும் சதுரமுமாகச் சாமி சின்னம் வைக்கிறாள்.
அடுப்பில் இட்லிக்கு ஊற்றி வைத்துவிட்டு, அரியுமனையை எடுத்து வைத்துக் கொள்கிறாள். ரேடியோவில் உழவர்களுக்கு ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று நினைவு வருகிறது. சாந்திதான் இதை நினைவுபடுத்துவாள். ‘அக்கா, காலம சொல்லுவாங்க. இன்னிக்கு எப்படி வானிலை இருக்கு. இந்தப் பருவத்தில் என்ன போடலாம், எப்படிப் பயிர் பராமரிப்பு பண்ணலாம்னு சொல்லுவாங்க...ன்னு, கேளுங்க...’ என்பாள். ஆனால் செவந்திக்கு ஏனோ அந்த ரேடியோவே பிடிப்பதில்லை.
“சரோ... ஏ. சரோ...? அந்த ரேடியோவை எடுத்திட்டு வாங்கே?”
சரோ வரவில்லை. அம்மாதான் சாமான்களைத் துலக்கிக் குறட்டில் கொண்டு வந்து கவிழ்த்துகிறாள். முற்றம் நசநச வென்றிருக்கிறது.
“எதுக்கு இப்ப ரேடியோ? உனுக்குத்தாம் புடிக்காத?” என்று முணுமுணுத்தவாறே சரோ ரேடியோவை எடுத்துக் கொண்டு கண்களையும் கசக்கிக் கொண்டு வருகிறாள்.
“இந்தா...!”
“நீ வையி. உழவர்களுக்கு ஒரு வார்த்தை...”
அவள் திருப்புகிறாள். பாட்டு வருகிறது... அப்பள விளம்பரம் வருகிறது...
“எத்தினி மணிக்கு அது வரும்?”
“உனக்குத் தெரியாதா? சாந்தி சொல்லிச்சி, நிதம் கேளுங்கக்கா, அது நமக்கு உபயோகமாயிருக்கும்னு...”
அவள் அதைப் பக்கத்தில் வைத்துவிட்டுப் போகிறாள்.
காச நோயைக் கட்டுப்படுத்தச் சிகிச்சைப் பற்றி யாரோ பேசுகிறார். சாந்தியிடம்தான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறாள். ஒரு பக்கம் வெட்கமாகவும் இருக்கிறது.
காலையில் ரங்கனும் குளித்துத் திருநீறு பூசிக் கொண்டு வருகிறான்.
“இட்டிலி வேவுது... தட்டிட்டு காபி தாரேன்...”
“இன்னிக்கித் தீபம் இல்லியா? நீ காபி குடு. நா மலைத்தீபத்துக்குப் போறன். இட்டிலிவானாம். விரதம்...”
“அட செத்த இருங்க; நா இங்க சாமி கும்புட இருக்கிற... நீங்க மலைத் தீபத்துக்குப் போறங்கறீங்க?”
அவளுக்கு உள்ளூரக் கோபம்.
காபித்துளைப் போட்டு, கொதி நீரை ஊற்றி வைத்திருக்கிறாள். நாலைந்து தம்ளருக்குக் கலக்குகிறாள். ஒரு தம்ளரில் ஊற்றி அவனிடம் கொடுக்கிறாள்.
“வூட்ட சாமி கும்பிடறப்ப, நீங்க போகனுமாங்க?”
“தா, நா முன்னமே தீர்மானிச்சாச்சி. நாலஞ்சி பேரு போறம். நீ இப்ப வந்து மறிக்காத. நீ சாமி கும்புடப் போறன்னு எனக்கெப்படித் தெரியும்? புரட்டாசி சனி, சாமி கும்புட்டியா? தீபாளி ஆதும் ஓடிப்போச்சி. ஒரு துணி கூட எடுக்கல. புள்ளங்களுக்குத்துணி எடுத்து, ஸ்வீட்டும் காரமும் நாவங்கிட்டு வந்தே. அமாசக் கூட்டம், சாந்தி போடுறான்னு காலனிக்கு ஓடுற. அன்னக்கெல்லாம் கும்புடாத நோம்பு இன்னக்கா?”
“ஏங்க கோச்சிக்கிறீங்க? நீங்க வந்து நூறு ரூபா நோட்டக் குடுத்து ந்தா செவுந்தி நாளக்கி நோம்பு கும்புடுன்னு சொன்னிங்களா? நானாக வயித்தக் கட்டி வாயக் கட்டி, வூட்ட எப்படியோ கவுரதியா நடத்திட்டுப் போற... நீங்க வந்து பாருங்க, கழனியில நல்லா கதிர் புடிச்சிருக்கு. சாமி கும்புடற...”
“சரி கும்புடு, ராவிக்கே வந்தாலும் வந்திடுவ!”
செவந்தி தனியாக வேலை செய்கிறாள். கன்னியப்பன் மாட்டை வண்டிக்கு அவிழ்த்துப் போகிறான். வண்டி இருக்கும்; மாடிருக்காது. இவன் பூட்டிக் கொண்டு செல்வான். மண்ணடிப்பான், எருவடிப்பான், மூட்டைகள் கொண்டு போவான். மாட்டுக்கு ஒரு நாளைக்கு இருபத்தைந்தேனும் கொடுப்பான். அது நேரத்தைப் பொறுத்தது.
சரோ, பள்ளிக்கூடத்தில் ஸ்பெசல் கிளாஸ் என்று போய் விட்டாள். சரவணனும் இட்டிலி சாப்பிட்டுவிட்டுப் போய் விட்டான். பகலுக்கு வந்து விடுவேன் என்று சரோ சொல்லி இருக்கிறாள். பருப்புப் போட்டு சாம்பார் வைத்து, வாழைக்காய் வாங்கிக் காரம் தடவி எண்ணெய் ஊற்றிப் பொரியல் செய்கிறாள். பச்சரிசியும் பாசிப் பருப்பும் கடலைப் பருப்பும் வேக வைத்துப் பாயாசம் வைக்கிறாள். வடைக்கு ஊறப் போட்டு உரலில் இட்டு அரைத்துக் கொண்டிருக்கையில் சரவணன் ஓடி வருகிறான்.
“அம்மா... அம்மா.. உன்னைத் தேடிக்கிட்டு ஜீப்புல மேடம் வந்திருக்காங்க. ஆபீசர் ரெண்டு மூணு பேரு... எல்லம் வந்திருக்காங்க!”
சாந்தி கூறினாள், அவர்கள் இடையில் பயிர் எப்படி வைத்திருக்கிறாள் என்று பார்க்க வருவார்களென்று.
அப்படியே உதறிவிட்டு எழுந்து வாசலில் ஒடுகிறாள்.
“அம்மா! வாங்க... ஐயா வாங்க... எங்கன... வாங்கம்மா” ...உடலும் உள்ளமும் பரபரக்கிறது. அவர்கள் திண்ணையில் உட்காருகிறார்கள்.
“அம்மா... அம்மா...” என்று கத்துகிறாள்.
பின்புறம் இருக்கும் அவளிடம், “ஆபீசர் அம்மால்லாம் வந்திருக்காங்க. வடைக்குப் போட்டுட்டேன், ஆட்டித் தட்டி எடு...” என்று கூறுகிறாள். இதற்குள் அப்பன் சாவடிப் பக்கமிருந்து வருகிறார். கும்பிடுகிறார்.
“வாங்கையா! வாங்கம்மா பயிர் வச்சிருக்கு...”
செவந்தி வாசலுக்கு வருகிறாள். “உள்ளே வந்து உக்காராம, வெளியே உக்காந்துட்டீங்க! இன்னிக்கு தீபம். சாமி கும்புடுகிற நாள்...”
“ஓ, நாங்க வந்து தொந்தரவு குடுக்கிறமோ?” என்று பெரிய மேடம் சிரிக்கிறார்.
“அய்யோ அப்படி இல்ல. எனக்குச் சாமியே நேரில வந்தாப்பல இருக்கு. பயிரு நீங்க சொன்னபடி வச்சேங்க. நாத்து விடுறப்ப மண் பரிசோதனை, விதைத் தேர்வுதான் செய்யல. ஆனா, அஸோஸ்பைரில்லம் குழி போல தண்ணிய கரச்சி, நாத்து முடிய அரை மணி வச்சோம். நிலத்தில தொழு உரம், சாணி உரம் கலந்து போட்டோம். தழைச்சத்து, சாம்பல் சத்து, மணிச்சத்து, எல்லாம் நீங்க படிச்சிக் குடுத்தாப்புல நோட்ட வச்சிப் பாத்திட்டு வச்சோம். பூடாக்ளோர்... களைக் கொல்லி மணலில் கலந்து கையில் உரை போட்டுக்கிட்டு விசிறினேன். களையே இல்லம்மா. பதினஞ்சி, இருபத்தஞ்சு, முப்பத்தஞ்சு, அம்பதுன்னு உரம் போட்டோம். முதல்ல ரெண்டு வாட்டி வேப்பம் புண்ணாக்கு கலந்து வச்சே... நீங்க வந்து பாருங்க...” இதற்குள் சரவணன் சொல்லி வேணி வீட்டில் இருந்து செம்பில் காபியுடன் வருகிறாள்.
“காபி குடியுங்கம்மா... ஸார், காபி குடியுங்க...”
சிறு தம்ளர்களில் ஊற்றி வைக்கிறாள்.
“இப்ப எதுக்கம்மா காபி எல்லாம்? எவ்வளவு வச்சிருக்கே...?” வளர்மதி அம்மா, பத்மாவதி அம்மா, பெரிய மேடம், விரிவாக்க ஆபீசர்...
முதன் முதலில் இவர்கள் தாம் வீடுதேடி வந்தார்கள்.
வந்தவர்களை வாருங்கள் என்று அழைக்கவில்லை. செவந்தி உள்ளே சென்று மறைந்தாள்.
“நீங்கல்லாம் பயிர் வேலை செய்யிறவங்கதானே?” என்று பெரிய மேடம் என்று இப்போது அறியப்படும் அம்மாள் கேட்டார்.
“அதெல்லாம் ஆம்பிளங்கதா செய்வாங்க” என்றாள்.
“நீங்க, களையெடுப்பு, நடவு, அறுவடை எதற்கும் போக மாட்டீங்க? உங்களுக்குச் சொந்த நிலம் இருக்குன்னு தெரியாது?”
செவந்தி எட்டிப் பார்த்து, “அதெல்லாம் கூலிக்குப் போறதில்ல. எங்களுக்குள்ள நான் செய்வே... எங்கம்மா செய்யாது” என்றாள்.
“பின்னென்ன? ஏன் உள்ள போய் மற ஞ்சுக்கறீங்க? உங்க பேரென்ன? வயசு?... கலியாணமாயி எத்தன வருசம், வீட்டுக்காரரும் பயிர்த் தொழில் செய்கிறவரா... எல்லாம் சொல்லுங்க, வாங்க!”
“அய்யய்யோ! அதெல்லாம் ஆம்புளகளைக் கேக்காம எப்படிச் சொல்றது? நீங்க யாருன்னு எனக்கென்ன தெரியும்?”
“நாங்களா? நாங்கல்லாம், தமிழ்நாட்டுப் பண்ணை மகளிர் திட்டம்னு ஒரு திட்டத்தைச் செயல்படுத்துபவர்கள். இதை டென்மார்க் என்ற நாட்டின் உதவியுடன் நம் அரசே நடத்துகிறது. நீங்கள் நடவு நடுகிறீர்கள். களையெடுக்கிறீர்கள், ஏன் அண்டை வெட்டுவதில் இருந்து அறுவடை வரை செய்கிறீர்கள். ஆனால் மொத்தமாகப் பார்த்தால், பெண்கள் பாடுபடுவதன் பலன் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இப்போது, இந்த ஆபீசர் அம்மாக்கள், உங்களுக்குச் சிறு சிறு தொழில் நுணுக்கப் பயிற்சி வகுப்பு நடத்துவாங்க. பண்ணை வேலைசெய்யும் பெண்கள் சுயமாக நிற்க வேணும். வளமை கூடவேண்டும். நிறைய இடங்களில், தமிழ்நாடு முழுவதும், ஏன், இந்தியா முழுவதுமே மகளிருக்கு இந்தப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு நீங்கள் காசு ஒன்றும் கொடுக்க வேண்டாம். ஐந்து நாள் பயிற்சிக்கு வந்து போக நாங்களே ஓர் ஊக்கத் தொகை தருகிறோம். அஞ்சு மூட்டை எடுத்த வயலில் எட்டு மூட்டை காணலாம்...”என்று விரிவாகச் சொல்லிக் காகிதங்களைத் தந்தாள். ஊர், பேர், விவரம் எல்லாம் எழுதிக் கொண்டார். இவள் புருசன் கேட்டதும்,
“பயிற்சியும் வாணாம், ஒண்ணும் வாணாம். நீ வீட்ட விட்டு எங்க போவ?” என்று தீர்த்து விட்டான்.
ஆனால் அடுத்த நாளும் விரிவாக்க ஆபீசருடன், திட்ட ஆபீசர் அம்மாக்கள் இருவரும் வந்தார்கள். ஜனாபாய் என்ற பயனடைந்த பெண்மணியும் வந்தாள்.
“நீங்க சேருங்க செவந்தியம்மா... நான் பாருங்க, ஆடிப்பட்டம் முதலில் வெள்ளைக் கிச்சலி கால் காணி போட்டேன். எட்டு மூட்டை எடுத்தேன்” என்று ஜனா ஆசை காட்டினாள். ஜனாபாய், கிராமத்துப் பெண்மணிதான். ஆனால் பி.ஏ. படித்திருந்தாள். ஒப்புக் கொள்ள வேண்டி வந்தது.
இதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது. நன்றியுணர்வில் கசிகிறாள்.
“செவந்திம்மா, வண்டில ஏறுங்க; உங்க வயலைப் பார்க்கிறோம்!”
“நா இப்படி நடந்து வந்திடுவே. சரவணா, வண்டில ஏறிட்டுப் போயி நம்ம வயலைக்காட்டு! நா அஞ்சுநிமிசத்தில் வர...”
சரவணனுக்குச் சந்தோசம்.
செவந்தி உள்ளே சென்று அம்மா வடை சுடுவதைப் பார்க்கிறாள். அப்பா இன்னமும் குளிக்கவில்லை. தன் வீட்டைத் தேடி ஆபீசர்கள் வந்தது பெருமைதான்.
“விருசா சாமி கும்பிட்டுட்டு வந்தவங்களுக்கு வடயும், பாவாசமும் குடும்மா...” என்று சொல்கிறாள்.
“அதுதா... நா இப்ப போகலன்னா நல்லாருக்காது. அம்மா, வட சுட்டதும் எல்லாம் எடுத்து வச்சி, கப்பூரம் காட்டிக் கும்பிட்டுக்க. நான் வாரப்ப கூட்டியாரேன்...” என்று சொல்கிறாள்.
விடுவிடென்று பின்பக்கம் வழியாக அவள் நடக்கிறாள். அப்பாவும் கிளம்புகிறார்.
“நீங்க வீட்ல இருங்களேன் அப்பா? சாமி கும் புடுது அம்மா. நா அவங்களக் கூட்டிட்டு வார. தவலயில வெந்நி இருக்கு. முழுகிட்டு நல்லதா வேட்டி எடுத்து உடுத்திட்டு இருங்க!”
இவள் செல்லும் போது அவர்கள் வரப்பில் நின்று இவள் கழனியைப் பார்க்கிறார்கள்.
“செவந்திம்மா? உங்களுக்கு நூத்துக்குத் தொண்ணுத் தெட்டு மார்க்” என்று சொல்கிறார் பெரிய மேடம். “பத்தி நடவு எவ்வளவு வசதியாக இருக்கு பாத்தீங்களா? வடத்துக்கு எவ்வளவு குத்து வச்சீங்க?”
“பத்தொம்பதுதா. ரெண்டு மூணுல இருபது இருக்கும்...”
“பரவாயில்ல... இல்லாட்டி கொச கொசன்னு அதுங்களுக்குக் காத்துப் போக வசதி இருக்காது... இது சம்பாப் பயிர் இல்ல?”
ஒரு சட்டியில் சுண்ணாம்படித்து கரும்புள்ளி வைத்துக் கவிழ்த்திருக்கிறாள். பக்கத்து மேல் வீதிப் பொன்னம்பலத்தாரின் வயல். அதில் கொச கொசவென்று அடர்ந்து இருக்கிறது. சிலவற்றில் பழுப்பாக இருக்கிறது. சொட்டை விழுந்த முடி போல் தெரிகிறது. சீராக இல்லை. களையும் இருக்கிறது. இன்னும் பூப்பிடிக்கவில்லை.
“அந்த நிலத்துல பூச்சி விழுந்திச்சின்னா நமக்கும் வந்திடுமோன்னு பயமா இருக்குங்க...”
“பயப்படாதீங்க. ஒரு தாம்பாளத்தில் தண்ணி ஊத்தி கிரசினும் ஊத்தி நடுவில ஒரு காடா விளக்கக் கொளுத்தி வச்சிடுங்க. நாலு பக்கமும் பூச்சி வந்தா செத்திடும்... அடுத்த முறை உங்களைப் பார்த்து எல்லாரும் இதே மாதிரி போடுறோம்பாங்க. நீங்க கத்துகிட்டத, பத்துப் பேருக்கு சொல்லிக் குடுக்கணும். அதுக்கு ஒரு புரோகிராம் இருக்கு...”
“காபி கொண்டாந்தாளே நீலவேனி, எங்க ஒப்படியா சுந்தரி, எல்லாரும் கொஞ்ச கொஞ்ச நிலம் வச்சிருக்காங்க. அத்தயும் வாரத்துக்கு உட்டிருக்காங்க. பொம்புள எப்படி விவசாயம் செய்றதுன்னு பயப்படுறாங்கம்மா. எனக்கு இப்படித்தானே பயமாயிருந்திச்சி. இப்பதா தயிரியம் வந்திருக்கு.”
“இனி வந்திடும்...” எல்லோரும் ஜீப்பில் ஏறிக் கொள்கிறார்கள். செவந்தியையும் உள்ளே அடைத்துக் கொள்கிறார்கள்.
வீட்டு வாசலில் வண்டி நிற்கிறது. அப்போது சைக்கிளில் சரோ வந்து இறங்குகிறாள்.
“அம்மா எல்லாம் உள்ள வாங்க! வாங்க சார்...!”
“இல்லம்மா, நேரமில்ல. இன்னும் நிறைய இடத்துக்குப் போகணும்... எறங்கிக் காபி குடிச்சமே...?”
“ஓ... அதெல்லாம் கூடாது. அம்மாசாமி கும்புட்டிருக்கு. எதாகிலும் எறங்கி வந்து சாப்புடனும்...”
“அதெல்லாம் வாணாம்மா...”
“இப்படி எறங்கி வந்து உக்காருங்க... நான் கொண்டாறேன்..” என்று பாயாசப் போணியை அப்பா எடுத்து வருகிறார். வலுக்கட்டாயமாகத் தம்ளரில் ஊற்றிக் கொடுக்கிறார். சரோசா இலையில் சுடச்சுட வடைகளைக் கொண்டு வருகிறாள். கன்னியப்பன் அப்போது ஓடி வருகிறான்.
“வணக்கம் ஸார்! வணக்கம்மா! சொன்னாங்க, ஆபிசர்லாம் வந்திருக்காங்கன்னு, வந்தேன்...”
“கன்னியப்பன்தான் எல்லா உதவியும். நல்ல உழைப்பாளி...”
“உனக்கு சொந்த நிலம் இருக்காப்பா?”
“இனி வாங்க வேணும். பாத்திட்டிருக்கேனுங்க...”
“கலியாணம் ஆயிருக்கா?”
“இல்லங்க...”
“காணி இருக்கிற பெண்ணப் பாத்துக் கட்டிக்க... சரியாப் போயிடும்” என்று சொல்கிறார் ஆபீசர் அம்மா.
மனசுக்கு மிக இதமாக இருக்கிறது.
சாமி கும்பிட்டதின் பலனை உடனேயே கண்டுவிட்டாற் போல் நினைக்கிறாள் செவந்தி.
ஜீப் போன பின்பும் தெருவில் இவளையும், வந்தவர்களையும் பற்றியே பேச்சு நடக்கும் என்று அவளுக்குத் தெரியும்.
ரங்கன் மறுநாட் காலையில் தான் வருகிறான். வரும் போதே செய்தி எட்டியிருக்கும் என்று தோன்றுகிறது.
இவள் உழவருக்கு ஒரு வார்த்தையைப் பற்றி விட்டாள்.
ஆடிப்பட்டம் விதைத்தவர்கள், பயிர் நேர்த்திக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். பூச்சிக்கு விளக்குப் பொறிதான் அன்றைய பேச்சு.
இனி நிதமும் கேட்க வேண்டும். ரேடியோவின் மீதிருந்த வெறுப்பு மாறி விட்டது. அது முடிந்து செய்திகள் வருகின்றன.
செவந்தி அதைக்கேட்டுக் கொண்டே, முதல் நாள் வைத்த எண்ணெய்ச் சட்டியில் இருந்த எண்ணெயை வடித்துச் சுத்தம் செய்கிறாள். ரேடியோ சமையலறைக்கு வெளியே வாயிற்படியில் இருந்து சிறிது எட்டி வைத்திருக்கிறது.
“காபி கூபி இருக்கா?” என்று கடுகடுப்பாக அவன் பார்க்கிறான்.
“அட...? நீங்க எந்த பஸ்ஸுக்கு வந்தீங்க? ராவே வந்துட்டீங்களா?”
“இப்பத்தா வாரேன். எனக்குத் தலை வலிக்கிது. காபி கொண்டா. மாத்திர சாப்பிடணும்...”
அப்போது அங்கு சரவணன் ஒடி வந்து அவளிடம் ஒரு சீட்டைக் கொடுக்கிறான். “ஓராளு வந்திருக்காரு. இதை உங்ககிட்டக் கொடுக்க சொன்னாரு..”
பாப்பாம்மாள் என்று எழுதி இருக்கிறது.
அவள் வாசலுக்கு விரைகிறாள்.
“பாப்பாம்மா சொல்லிச்சி. அமாவாசக் கூட்டம் காக்கனேரில. உங்களவரச் சொல்லிச்சி...”
“சரி, போங்க, அமாசிக்கு எத்தினி நாளிருக்கு?” அவள் உள்ளே வரும்போது ரங்கன் அந்த ரேடியோவைத் தூக்கி ஏறிகிறான். அது முற்றத்தில் போய் சத்தத்துடன் விழுகிறது. உடைகிறது.
அவள் விக்கித்து நிற்கிறாள்.
“நா ஒராளு தலவலி மண்ட உடய்க்கிதுன்னு வந்து உக்காந்திருக்க. நீ இத்த அலறவுட்டுப் போட்டு எவனையோ பாக்க ஓடுற! நானும் பாத்திட்டுதாணிருக்க. உனக்கு வர வரத் திமுரு ரொம்பப் போவுது. புருசன், வீடுன்னு மதிப்பு இல்ல. நினைச்ச நேரத்துக்கு வார, நினைச்ச நேரத்துக்குப் போற! மானம் மரியாதியுள்ளவ அர நேரம் தங்கமாட்டா...!”
எழுந்திருந்து முகம் கடுக்கப் போகிறான்.
--------------
அத்தியாயம் 9
மனசே சரியில்லை.
அவன் கோபித்துக் கொண்டு சென்ற போது இவளுக்கும் வீறாப்பாக இருந்தது. ரேடியோவைப் போட்டு உடைக்க வேண்டுமென்றால்... அதுவும் அவன் ஆசையாக மகளுக்கு வாங்கிக் கொடுத்தது. அதை இவள் உபயோகிக்கக் கூடாதென்றா?
இல்லை. பெண் பிள்ளை. சம்சாரம், தலை தூக்கக் கூடாது. அவளை மதித்து யாரும் வரக் கூடாது. இவனுக்குப் பிடிக்காதது, அவளுக்கும் பிடிக்கக்கூடாது. சரோவுக்குத்தான் இழப்பு.
“என்னம்மாது? ஒரு ரேடியோ இருந்திச்சி, அதையும் உடைக்கப் பண்ணிட்ட? அப்பா சமாசாரம் தெரியும். அவரை ஏன் கோவிக்கும்படி வைக்கிற?”
“என்னாடி அவரைக் கோபிக்கும்படி வச்சிட்டேன்? நான் என்ன பண்ணிட்டேன் சொல்லு? காபி கேட்டாங்க. இவன் சீட்டக் குடுத்தான். யாருன்னு பார்க்கப் போனேன். பொம்பிள்ளைனா அவ்வளவு கேவலமா? கோபிச்சிட்டுப் போனாப் போகட்டும்! நானும் மனுசிதா...” என்றாள். கண்ணிர் முத்துக்கள் சிதறின.
“நீ சரவணங்கிட்ட அந்தாள இருக்கச் சொல்லிட்டு முதல்ல அவரக் கவனிச்சிருக்கணும். அவருதா பஸ்ஸுல லோலுப்பட்டுட்டு வந்திருப்பாரு. கோவம், தலவலி...”
“அப்படி யாரு, நானா போகச் சொன்னே. நேத்து நாசாமி கும்புடனும் வூட்ல இருங்கன்னு சொன்ன. தீபத்துக்குப் போற, நீ தனியா கும்புட்டுக்கன்னாரு...”
“நீங்க சண்டை போட்டுக் கோவிச்சிக்குங்க! எனக்கு ரேடியோ இல்ல. இப்படி உடஞ்சிருக்கு. இத்தயாரு ரிப்பேர் பாப்பாங்க! சீ... எனக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்ல...” என்று முகத்தைத் தூக்கிக் கொள்கிறாள்.
“அது என் ரூமில இருந்திச்சி. அத்த ஏன் சமையல் ரூமுக்குக் கொண்டாற? உழவருக்கு ஒரு வார்த்தையோ என்ன புரோகிராமோ, அங்க வந்து நின்னு கேக்க வேண்டியது தான?”
“சரி. மன்னிப்பு. மாப்பு! அறுவடை ஆவட்டும். முதல்ல உனக்கு ரேடியோ வாங்கித் தாறேன். கோபிச்சுக்காதம்மா”
“அதுவரைக்கும்? எனக்குப்பரிட்சைம்மா, படிக்கணும்”
“சுந்தரி வூட்டுல ரேடியோ இருக்கு. சின்னம்மாதான, குடுப்பா, வச்சிக்க”
“ஆகா! அவங்க வாலுங்க வுடுமா? ரேவதிக்குட்டி அவங்க வூட்டுப் பொருளத் தொட்டாலே பிடாரி போல அழும். அந்தப் பய வரதன் வாசப்படில குறுக்க நின்னு மறிப்பா!”
அவன் பகல், இரவும் வரவில்லை. சரவணனை அனுப்பிக் கடையில் இருக்கிறானா, சாப்பாட்டுக்கு வரவில்லையா என்று அழைத்து வரச்சொன்னாள்.
“அப்பா கடையில் இல்லமா; முதலாளி டவுனுக்குப் போயிருக்காருன்னு சிவலிங்கம் சொன்னாரு...”
மாட்டுக்குப் புல்லறுத்து வருவோம் என்று கிளம்புகிறாள்.
மனசில் அமைதியே இல்லை.
வெற்றிலைக் கொடிக்காலில் இலை கிள்ளும் பழனியாண்டி, “திடீரென்று ஆயிசு முடிஞ்சிட்டவங்க போறாங்க...” என்று யாரிடமோ பேசுகிறான்.
யார்?
சின்னசாமி... அகத்திக்கீரைப் பறித்துக் கொண்டிருக்கிறான்.
“யாருக்கு என்ன?”
“பஸ் கவுந்து போச்சாம்!”
ஐயோ? என்று நெஞ்சு குலுங்குகிறது.
“எங்கே?”
“திருவள்ளுர் பஸ்ஸாம். பிரேக் புடிக்காம மரத்தில மோதி, ரெண்டு பேர் செத்திட்டாங்களாம். நாகசாமி வாத்தியார் வந்து சொன்னாரு. அவரு அந்த பஸ்ல போக இருந்தாராம். மக திருவள்ளுருல குளிகுளிச்சிருக்காம். பஸ் தவறிப் போச்சாம்.”
புல்லறுப்பை விட்டாள். குலுங்கக் குலுங்க வீடு வருகிறாள்.
இவளே கடைவீதிக்கு ஒடுகிறாள்.
எந்த பஸ்... எங்கே போனானோ? திருவள்ளூரில் அவனுக்கு ஒன்றுவிட்ட அக்கா இருக்கிறாள். அவள் மகள் படித்து விட்டு டீச்சராக வேலை செய்தாள். அவளைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததுண்டு. ஆனால் அவர்கள் இவருக்குப் பெண் கொடுக்க இஷடப்படவில்லை.
“ந்தா, எங்க போற?”
எதிரே சைக்கிள் வருவதும், அவன் இருப்பதும் கூடக் கண்களில் தைக்காமல் அப்படி ஒரு பதட்டம்.
“எதுக்கு இப்படி ஓடுற? வூட்டுக்கு வந்து சேதி சொன்னாங்களா?”
“வயலுக்குப் போயிருந்தேன். பழனியாண்டியும் சின்னசாமியும் பேசிட்டாங்க. கப்புன்னுது. ஓடி வர்றேன். ஏங்க, எதோ வீட்ல ஏறத்தாழப் பேசுறதுதா, அதுக்காக நேத்துக் காலம போனவங்க. நமக்கும் ஒரு பொம்புளபுள்ள இருக்கு. நாளைக்கி அதுக்கும் கலியாணம் காட்சி செய்யணும். ஆனா, ஆம்புள, பொறுப்பில்லாம..” சட்டென்று அவள் நாவைக் கடித்துக் கொள்கிறாள்.
“ந்தா? என்ன பேசுற நீ.. ? பின்னால் வந்து உக்காரு. வூட்டப் பாக்கப் போகலாம். பெரியம்மா பய்யன் கண்ணன்ல? அவம் பூட்டான். இப்பத்தாசேதி வந்திச்சி. அந்தப் பொண்ணு உசா. சுந்தரிக்குத் தங்கச்சி முறையாகணும். நாம கூடத்தா போகணும்.”
செவந்தி வாயடைத்துப் போகிறாள்.
இருவரும் வீட்டில் வந்து இறங்குகிறார்கள்.
செய்தி தேன் கூட்டில் தீ வைத்தாற் போல் பரவுகிறது.
“எப்படிச் செத்துப் போனா? கலியாணம் பண்ணி அஞ்சு வருசம் ஆகல. வரவேற்பு குடுத்தானே. நடிகரெல்லாம் வந்தாங்க, கட்சித் தலவரெல்லா வந்தாங்க. அவ்வளவு உசரமும் தாட்டியுமா இருப்பா... சாவுற வயசா?”
“அவ்வளவு ஏத்தமா? வாரத உலவம் பொறுக்காத? எவ கொள்ளிக் கண்ணு வச்சாளோ? அந்தப் பொண்ணுக்கு ஒரு நெக்லசு போட்டிருக்கானாம். அதுவே அம்பதாயிரமா, அவெ மட்டும் என்ன, அஞ்சுவெரலும் மோதரம், சங்கிலி, அதுல புலி நகம் வயிரம் பதிச்சடாலர்...”
அம்சுவின் அத்தை குரலை இறக்கி அடுத்த வரிசையை விரிக்கிறாள்.
“அரைஞாண் ஒண்ணு மட்டும் முப்பது பவுனாம்!”
செவந்திக்கு எரிச்சல் பீரிட்டுக் கொண்டு வருகிறது.
“நீங்க பாத்தீங்களா?”
“இவ எதையும் நம்ப மாட்டா! பாத்தவங்க சொன்னாங்க. சினிமாக்கார ரசிகர் மன்றச் செயலாளர். இது பெரிய பவுருள்ள பதிவியில்லியா? அதா... யார் கொள்ளிக் கண்ணோ, அடிச்சிப் போட்டது.”
சுந்தரி குழந்தைகளைச் செவந்தியிடம் விட்டுவிட்டுச் சாவுக்குப் போவதாகத் தீர்மானமாகிறது. அம்மா கிளம்புகிறாள். சும்மாப் போக முடியுமா?
மேலவீதி ஆண்டாளம்மா வீட்டில், சரோவுக்குப் பண்ணி வைத்த தோடு குடை சிமிக்கியை வைத்து இருநூற்றைம்பது வாங்கி வருகிறாள்.
ஆண்டாளம்மாவுக்கு ஒரே பையன். பட்டணத்தில் முருகன் போல்தான் படித்தான். படிக்கும் போதே கலியாணமும் கட்டிக் கொண்டான். இரண்டு பேருமாக எங்கோ ஆப்பிரிக்க நாட்டில் டீச்சர் வேலை பண்ணுகிறார்கள். பத்துவயசுப் பேரனை வைத்துக் கொண்டு வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் - பொழுது போக்கில் ஈடுபட்டிருக்கிறாள். புருசன் ஒரு வேலையும் செய்ய மாட்டான். இரண்டு ஏக்ரா போல் காணி கரை உண்டு. அதில் பயிர் பண்ணிச் சம்பாதிப்பதை விட, இது சுவாரசியமாக இருக்கிறது. எத்தனை வங்கிகள் வந்தாலும் ஒரு முட்டுக்கு சேட் கடைக்குப் போவதைப் போல ஆண்டாளம்மா இவர்கள் தேவைகளுக்கு உதவுவாள். முழுகிப் போகும் பொட்டு பொடுக தங்க நகைகளை, வேண்டுமென்று சொல்லி வைத்திருந்தால், கிரயம் போட்டுத் தருவாள். கூலி, போன்ற தள்ளுபடியும் கிடைக்கும். மகன் மூலமாக, தங்கம் கொண்டு வந்து நகை விற்கிறாள் என்ற பேச்சும் கூட அடிபட்டதுண்டு.
அம்மாவுக்கு அழுது மூக்கைச் சிந்தப் பிடிக்கும்; போகிறாள்.
“யம்மா நா, ரீட்டா வீட்டில படிக்கப் போற. சோறு போடு...” என்று சரோ தட்டைப் போட்டுக் கொள்கிறாள், மாலை ஆறு மணிக்கே.
பசுவுக்குச் செவந்தி பருத்திக் கொட்டை ஆட்டிக் கொண்டிருக்கிறாள்.
“வெளக்கு வச்சிருக்கு. இப்பதா இங்கேந்து படிச்சாப் போதும்; விளக்கு வச்சு யார் வீட்டுக்கும் படிக்கப் போக வேணாம்.”
“போம்மா! இங்க ஒரு ரேடியோ கூட இல்ல. நான் ரீட்டா கூடச் சேந்து படிப்பேன்! எங்க சயின்சு டீச்சரு தங்கச்சி. என் கிளாஸ்ல தான் படிக்கிறாள்.”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன் அப்பா ஊரில் இல்ல. மேசரான பொண், யாரு வீட்டிலியோ, கிறித்தவங்க வீட்டில பொழுது போயி அனுப்ப மாட்டேன்!”
சரோ, கன்றுக்குட்டி திமிறுவது போல் குதிக்கிறாள்.
“யாரோ இல்ல... எங்க டீச்சர் வீடு! யம்மா, நான் படிக்கணும். டென்த்ல நிறைய மார்க் எடுக்கணும். பிளஸ் டூ படிச்சி என்ஜினியரிங் படிக்கணும்...”
“வெளக்கு மாத்துக்கட்ட. பொம்புளப் புள்ளக்கி இதுக்கு மேல ஒரு காசு செலவு பண்ணமாட்ட, தெரிஞ்சிக்க கழனிக் காரன் வீட்டில பெறந்தவ. சேத்துல எறங்கி நாத்து நடக் கத்துக்க. அதான் சோறு போடும்! பருத்திக் கொட்டயும் புண்ணாக்கும் கலக்கி மாட்டுக்கு வச்சிப் பராமரிக்கக் கத்துக்க! அதான் நமக்கு சோறு போடும். படிச்ச பய்யனே கிழிக்கல. நீ இன்னொருத்தன் வீட்டில போய் குப்ப கொட்டணும். ஒரு நா, அடுப்பாண்ட வாரதில்ல, ஒரு காபி வச்சிக் குடுக்கத் துப்பில்ல. என்னமோ ராசா வூட்டுப் புள்ள போல உக்காந்து, சோறெடுத்து வையின்னு அதிகாரம் பண்ணுற?”
“யம்மா என்ன நீ? நான் இப்ப படிக்கக் கூடாதுன்னா, அப்ப ஏன் படிக்க வச்சே? நீ சோறெடுத்துப் போட வேணாம். நானே போட்டுக்கறேன்...” அவள் அடுப்படிக்குச் சென்று கொஞ்சம் சோறும் குழம்பும் வைத்துக் கொள்கிறாள். பிசைந்து நின்றபடியே சாப்பிடுகிறாள். தட்டைக் கழுவி வைத்துவிட்டு, உள்ளே சென்று புத்தகப் பையை எடுத்துக் கொள்கிறாள். சைக்கிள் இல்லை... நடந்தே விடுவிடென்று போகிறாள்.
“ஏய் சரோ? அடி. சரோ?”
பருத்திக் கொட்டைக் கையை நீரில் கழுவியவாறு கூப்பிடுகிறாள். அவள் திரும்பியே பார்க்கவில்லை.
யார் மீதென்று சொல்ல முடியாமல் கோபம் வருகிறது.
கருகருவென்ற மேனியும் முண்டாசுமாகக் கன்னியப்பன் வருகிறான்.
“கன்னிப்பா, சரோவ பாத்தியா?”
“ஆமாம்... போகுது. விடுசாப் போகுது. புத்தகப் பையோட...”
“ஓடிப்போய், அம்மா உன்னக் கூப்பிடுதுன்னு கூட்டிவா, கையோட..”
அவன் இவள் ஆணையை சிரமேற் கொண்டவனாக ஓடுகிறான். இவள் விடுவிடுடென்று உரலைக் கழுவுகிறாள். மாட்டுக்குக் கலக்கி வைக்கிறாள்.
அவளை அழைத்து வந்து விடுவானா?
இவள் கூப்பிட்ட போதே வராதவள், இப்போது வருவாளா?
ரேடியோ இல்லை, வீட்டில் படிக்க முடியவில்லை என்று சாக்குச் சொல்கிறாள். இது நம்பும்படி இல்லை.
ஆறாவது வருமுன்பே படிப்பை நிறுத்தி இருக்க வேண்டும்.
இந்தத் தெருவில், எந்தப் பெண்ணும் பத்துக்கு வரவில்லை. ஆறு, ஏழு, எட்டு... வயசுக்கு வந்ததும் நிறுத்தி விடுவார்கள். மகாலட்சுமி, பூரணி, யாரும் படிக்கவில்லை. நடவு, களை எடுத்தல், அறுப்பு என்று போய்க் காசு சம்பாதிக்கிறார்கள். வருபவன் பத்து இருபது சவரன், வாட்ச், கட்டில், பீரோ, ரேடியோ, டி.வி. என்று கேட்கிறானே? சமர்த்தாக சீட்டுக் கட்டிப் பண்ட பாத்திரம் வாங்குகிறார்கள்.
இவளை இப்படி வளர்த்ததே தப்பு. கிறித்தவ ஸ்கூல், டீச்சர்கள்... என்ன சொக்குப் பொடி போடுவாங்களோ? அப்பாவும் இல்லை, பாட்டியும் இல்லை. இவளை ஓரம் கட்டிவிட்டுப் போகிறாள். அந்த டீச்சர் வீடு எந்தத் தெருவோ? கிறிஸ்தவ டீச்சர் வீடென்றால் காலனிக் குப்பத்தில் மாதா கோயில். அங்கே வீடுகள் இருக்கின்றன. சைக்கிளில் போகவில்லை. அங்கிருந்து ராத்திரி எட்டு மணிக்கோ ஒன்பது மணிக்கோ தனியாக வருவாளா?
இளங்கன்று பயமறியாது. இளம் பெண்... ஊர் கெட்டுக் கிடக்கையில் என்னதான் நேராது?
கன்னியப்பன் வருகிறானா என்று வாசலில் போய் நின்று பார்க்கிறாள். வருகிறான். அவன் மட்டுமே...
“ஏம்ப்பா? அவளக் கூட்டியான்னே, விட்டுப் போட்டு வந்திருக்க?”
“அது சொல்லிச்சி, ரொம்பப் படிக்கணுமாம். அம்மாக்கு நீ புரிய வை கன்னிப்பா. கணக்கு நாத்து நடுறாப்பல இல்ல. எல்லாரும், மாசம் நூறு நூத்தம்பது குடுத்து டூசன் வச்சிக்கிறாங்க. நான் அதெல்லாம் இல்லாம, கேட்டுப் படிக்கிறேன். டீச்சர்தா வரச் சொன்னாங்க. நேரமாயிடிச்சின்னா. அவங்க தங்கச்சியோட தங்கிட்டுக் காலம வருவேன். விசயம் புரியாம அம்மா ஓன்னு கத்துது... சொல்லுன்னு சொல்லிச்சி. அதும் நியாயந்தான்.”
“ஏ மடயா, என்ன நியாயத்தக் கண்ட? நீ கூப்புட்டு வருவேன்னு தானே உன்ன அனுப்பிச்சே? அன்னாட சம்சாரி வாழ்க்கைக்கு என்ன பெரிய படிப்பு வேண்டி இருக்கு? இவ படிச்சிட்டு உட்கார்ந்திருப்பா. இவளுக்கு மேல படிச்சவனுக்கு ரொக்கம் குடுக்க, கட்ட, எங்க போக?”
அவன் தலை குனிந்து கொண்டு நிற்கிறான். அவன் எதற்கு வந்தான் என்று கேட்கக் கூடத் தோன்றவில்லை.
“இத பாருங்க. நா இத்தச் சொல்லத்தா வந்தேன்க்கா. நா, நமக்கு முற, மடயத் துறந்து விட்டுப் போட்டு மேக்கால புல்லறுத்திட்டிருந்த. வேல்ச்சாமி அத்த அடச்சிப்பிட்டா. தண்ணி பாதிக் கூட பாயல. மூணு நாளா இப்படிச் செய்யிறா. தண்ணி காவாத்தண்ணி பொது. நம்ம முறையில, அரமணி கூட பாயலிங்க! நம்ம கதிர் நல்லா வருதுன்னு பொறாமை. நீங்க அவனக் கூப்பிட்டுக் கண்டிச்சி வையுங்க! நான் சொன்னா, உனக்கென்ன, அவ்வளவு அக்கறை? அவ வூட்டு மாப்பிள்ளையோன்னு கிண்டலா பேசுறா...” குழந்தை போல் அவன் பேசுவதைக் கேட்கக் கேட்க ஆற்றாமையாக இருக்கிறது.
கையில் வந்திருக்கும் கதிர்க்கட்டைக் கை நழுவ விட்டுவிட்டு, எங்கோ கருப்பங்கொல்லை இருக்கிறதென்று எதிர்பார்க்கிறாளா? கருப்பங்கொல்லை பணம் தரும். ஆனால் சோறு போடுமோ?
பாடுபட்டு மணிகள் கண்டு, உறவு கொண்டு மகிழும் கனவு அவளில் கனவாகவே நின்று விடுமோ?
அப்பா வருகிறார். நெஞ்சுக் கனைப்பு வாயிலிலேயே கட்டியம் கூறுகிறது. உள்ளே வந்து உட்காருகிறார். நூறு இருநூறு சரக்கு உள்ளே போயிருக்குமோ?
“செவந்தி, அந்தப்பய எப்படிச் செத்தானாம் தெரியுமா?” இவள் அவர் முகத்தையே பார்க்கிறாள்.
அவர் குரலை இறக்குகிறார். “அதா ரசிகர் மன்றம்ன்னு சொன்னான்னில்ல... ஏதோ தவராறாம்... யாரோ ஏதோ பண்ணிட்டாங்கன்னு சொல்லிக்கிறாங்க..”
“அப்படீன்னா...?”
“ராத்திரி நிறையக் குடிச்சிட்டு வந்து பொண்டாட்டியப் புடிச்சி அடிச்சானாம். அது கோவிச்சிட்டு மச்சாங்காரன் வூட்டுல போய் அழுதிச்சாம். விடியக் காலம வந்து பாத்தா வாசப்படில கெடக்கிறானாம், ரத்த வாந்தி எடுத்து...”
“இந்தக் கதையெல்லாம் நமக்கென்னத்துக்கப்பா! கேட்டுக்குங்க, அவங்க நமக்கு ஒட்டுமில்ல, ஒறவுமில்ல. சுந்தரிக்கும் ஏதோ உறவு. அவ புருசன் படு வெட்டியா செத்தப்ப, அவ வந்தாளா? இப்ப எதுக்கு இவங்க போவணும்? நா சொன்னா எடுபடாது. அவ பேச்சிலியே இவங்க மயங்கிட்டாங்க... உங்களுக்கும் நான் சொல்றேன். குடிக்கறத விட்டுப்போடுங்கன்னு...” என்று பேச்சோடு அவருக்கும் தைக்கும்படிச் சொல்லி வைக்கிறாள்.
“நான் குடிக்கல செவந்தி இன்னைக்கு? ஒங்கிட்ட நா ஏன் பொய் சொல்றே?”
சரவணன் சைக்கிளில் சுற்றி விட்டு வருகிறான். இருட்டி விட்டது. விளக்கைப் போட்டுக் கும்பிடுகிறாள்.
“ஏண்டா, ரீட்டா டீச்சராமே? உங்கக்காவுக்கு... அவ வீடு எங்கிருக்கு?”
“போஸ்ட் ஆபீசு பக்கத்துல இருக்கும் மா. தெரு திரும்பினதும் மேலத் தெருவுக்குப் போவமில்ல, நேராப் போனா, அண்ணா தெரு, மூணாம் வீடு...”
“அக்கா படிக்கப் போயிருக்கு. ஒம்பது மணிக்கு தாத்தாவக் கூட்டிட்டுப் போய் வுடு. அவ தாத்தாவக் கூட்டிட்டுத் திரும்பி வருவா!”
“நானே கூட்டிட்டு வாரம்மா”
“ஒம்பது மணிக்கெல்லாம் வந்திடணும்! தாத்தா போணாத்தா அவ வருவா? முன்னப் பின்ன ஆனாலும்...”
அவனுக்குச் சைக்கிளை விட்டு விட்டு வர விருப்பம் இல்லை.
இரவு அங்கு தங்கினால் தங்கி விட்டுப் போகட்டுமே என்று இருக்கவும் மனம் கொள்ளவில்லை. இது எப்படியும் வெளியே தெரிந்து விடும். ஏற்கனவே இவள் சைக்கிளில் பள்ளிக்கூடம் செல்வதும் பையன்களுடன் பேசுவதும் ஏற்கும் படியாக இல்லை. பிறகு ஒன்றுமில்லாததற்குக் கண் வைத்து மூக்கு வைத்துப் பேசுவார்கள்.
இரவு பத்து மணிக்குப் பாட்டனும் பேத்தியும் திரும்பி விடுகிறார்கள் என்றாலும் சரோ பற்றி கவலை தனியாக அழுத்துகிறது.
------------------
அத்தியாயம் 10
“மாடு கட்டிப் போரடிச்சா மாளாதுன்னா” சொல்லி, “டிராக்டர்கட்டிப் போரடிக்கும் அழகான கரும்பாக்கம்...”
கன்னியப்பனுக்கு ஒரே சந்தோசம். ஏதேதோ சினிமாப் பாட்டுக்கள். அவன் குரலில் மீறி வருகின்றன.
எப்போதும் வரும் முத்தய்யா, வேல்ச்சாமி, கன்னியப்பனின் ஆயா என்று பெண்கள்...
சாவடியை அடுத்த முற்றம் போல் பரந்த மேட்டில் கதிர்களைப் பரப்பிப் போடுகிறார்கள். பண்ணை வீட்டு டிராக்டர் பத்து ரவுண்டு வந்தால் போதும். நெல்மணிகள் கலகலக்கும். அப்பா வந்திருக்கிறார். சரோ படிப்புக்குப் போய்விட்டாள். சரவணன் டிராக்டரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். ரங்கன் எப்போதுமே களத்து மேட்டுக்கு வந்ததில்லை. அம்மாவும் கூட அதிசயமாகச் சாவடிப் பக்கம் நெல் துாற்ற முறத்துடன் வந்திருக்கிறாள். அம்முவும் நெல் தூற்றுகிறாள்.
எவ்வளவு மூட்டை காணுமோ?
வங்கிக் கடனை அடைத்து, தோடு ஜிமிக்கியை மீட்க வேண்டும். சாந்தி ஒடி வருகிறாள்.
“கையை குடுங்கக்கா!” கையில் கதிர்க் கற்றையுடன் பற்றிக் குலுக்குலுக்கென்று குலுக்குகிறாள்.
ஒரே சந்தோசம். வெயிலில் உழைப்பு மணிகள் முகத்தில் மின்னுகின்றன.
“விடு. விடு சாந்தி அருவா...”
அப்போதுதான் பார்க்கிறாள். நீலச்சட்டையும் ஒட்டு மீசையும் காமிராவுமாக அவள் புருசன் படம் பிடிப்பதை.
“ஐயோ இதென்ன சாந்தி?”
“வெற்றிச்சந்தோசம். அதுக்கு இது ரிகார்டு.”
சரவணனுக்கு வாயெல்லாம்பல்.
அம்மா, அப்பவே படம் எடுத்திருக்காங்க. நா டிராக்டர்ல உக்காந்து எடுத்திருக்காங்க!”
“அப்படியா? நீயாவது வந்து நிக்கிறியே, சந்தோசம்டா...”
“ஏங்க எங்க இரண்டு பேரையும், எங்களுக்குத் தெரியாமயே எடுக்கணுமின்னே எடுத்தீங்களா? தெரிஞ்சு போஸ் குடுத்தா அது நல்லா இருக்காதே...”
“அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ கையப் புடிச்சிக் குலுக்கினப்ப கதிர்க்கட்டு, இடுப்பு அரிவா எல்லாம் கச்சிதமா வுழுந்திருக்கு” செவந்தி குரலை இறக்கிக் கோபித்துக் கொள்கிறாள்.
“என்ன சாந்தி இது? எங்கூட்டுக்காருக்கு... இதெல்லாம் ரசிக்காது. இப்பவே ரொம்பப் பேசறதில்ல. உன்னிடம் சொல்றதுக்கென்ன, அன்னிக்கு ரேடியோவப் போட்டு உடச்சிட்டாரு...”
“அதெல்லாம் சரியாப் போயிடும் அக்கா! நான் சொல்றன் பாருங்க! நம்ம செட்ல, நீங்கதா உடனே போட்டு, பலன் எடுத்திருக்கிறீங்க. படம் நல்லா வந்தா இவுங்க போட்டிக்கு அந்தப்படத்த அனுப்பப் போறதாச் சொல்லிருக்காரு...”
செவந்தி ஏதோ ஒரு புதிய உலகில் நிற்பது போல் உணருகிறாள்.
பொன்னின் கதிர்கள்.
பொன்னின் மணிகள்.
வியாபாரி, ரத்தின முதலியார் வந்திருக்கிறார்.
எல்லாக்கதிர்களும் பகல் ஒரு மணிக்குள் அறுவடையாகி வந்து விட்டன. டிராக்டர் தன் பணியைச் செய்துவிட்டுப் போகிறது.
செவந்தி குவிந்த நெல்மணிகளைப் பார்த்து ஊமையான உணர்வுகளுடன் நிற்கிறாள். ஒரு பதர் இல்லை. ஒரு சாவி இல்லை.
பொன்னின் மணிகளே.
நெற்குவியலுக்கு முன் கர்ப்பூரம் காட்டிக் கும்பிடுகிறாள். பொரி கடலைப் பழம் படைக்கிறாள்.
அப்பா ஒரு பக்கம் சுந்தரியும் கன்னியப்பனும் துாற்றி விட்ட நெல்லைச் சாக்கில் அள்ளுகிறார்.
“அப்பா நெல்லு நெடி. நீங்க போங்க... இருமல் வந்திடப் போவுது வேணி... வந்து சாக்கப் புடிச்சிக்கம்மா...”
“இருக்கட்டும்மா, புது நெல்லு, ஒண்ணும் ஆவாது. இந்த நெடிதா நமக்கு உள் மூச்சு. எம் பொண்ணு நின்னுக்கிட்டா, நா உசந்துடுவே...”
“எல்லாம் அந்த ஆபீசர் அம்மாக்குச் சொல்லுங்க”
“ஆமாம்மா. மகாலட்சுமிங்க போல அவங்க வந்தாங்க, நாங்கூட இவங்க என்ன புதுசாச் செய்யப் போறாங்க. எத்தினி யூரியா போட்டும் ஒண்ணும் வெளங்கல. பூச்சி புகையான் வந்து போவுது. ஏதோ போடணுமேன்னு போட்டுச் சாப்புடறோம். செலவுக்கும் வரவுக்கும் சரிக்கட்டிப் போவுது. உழுதவங் கணக்குப் பாத்தா உழக்கு மிச்சம்பாங்க. அதும் கூட செரமமாயிருக்குன்னுதாம்மா நெனச்சே...”
மூட்டைகளைக் குலுக்கி எடுக்கிறார். செலவு போக, ஏறக்குறைய ஒன்பது மூட்டைகள் கண்டிருக்கின்றன.
எப்போதும் வரும் ஆண் பெண் சுற்றார்களே கூலி பெறுபவர்கள். சுந்தரி காபி கொண்டு வந்து கொடுக்கிறாள்.
மூட்டைகளைத் தட்டு வண்டியில் போட்டுக் கொண்டு முதலியார் போகிறார். மூன்று மூட்டைகளைச் செலவுக்கு வைத்திருக்கிறாள்.
ஆறு மூட்டைகள்... ஆயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய், சுளையாகக் கைகளில்...
அப்பா செவந்தியின் கைகளில் கொடுக்கிறார்.
வாங்கிக் கொண்டு களத்து மேட்டிலேயே அப்பன் கால்களைத் தொட்டுக் கும்பிடுகிறாள்.
“இருக்கட்டுங்கப்பா. நீங்க வச்சிக்குங்க. வங்கிப் பணத்தைக் கட்டிருவம். பொங்கலுக்கு மின்ன புது நெல்லு வந்திட்டது. அதுதான் சந்தோசம். நா நினைச்சே, பொங்கக் கழிச்சித்தா அறுப்போமின்னு...”
“கதிர் முத்திப் பழுத்துப் போச்சி. உதுர ஆரம்பிச்சிடுமில்ல... நீ முன்னாடியே நாத்து நடவு பண்ணிட்டல்ல...?”
“அப்பா தொடர்ந்து, கொல்ல மேடுல சாகுபடி பண்ணனும். இது முழு ஏகராவும் பயிர்பண்ணனும்.”
ஆங்காங்கு வைக்கோல் இழைகள். நிலம், பிள்ளை பெற்று மஞ்சட் குளித்து நிற்கும் தாய்போல் தோன்றுகிறது.
வைக்கோல் அங்கேயே காயட்டும் என்று போட்டிருக்கிறார்கள்.
வீட்டில் சுந்தரிதான் அடுப்பைப் பார்த்துக் கொண்டு, ஆட்களுக்குக் காபியும், பொங்கலும் வைத்துக் கொண்டு வந்தாள். அதிகாலையிலேயே ஆட்கள் வந்துவிட்டார்கள்.
அவளுக்கு... அந்தப் பெரியம்மா பிள்ளை சாவு. பெரிய அதிர்ச்சி. ஒரு இளம் பெண் புருசனை இழந்து சமூகக் கட்டுப்பாடுகளுக்கு ஆட்படுவதைப் போன்ற கொடுமை ஒன்றும் கிடையாது. அந்தச் சாவுக்குப் போய் வந்ததாலோ என்னமோ, அவள் கணவனும் சரியாகவே இல்லை. அம்மாதான் அந்தக் கடைசி ஊர்வலப் பெருமையை, ஏதோ கல்யாண வைபவம் கண்டவள் போல் சொன்னாள். பெரிய பெரிய அமைச்சர்கள் வந்தார்களாம். பூமாலைகளே வந்து குவிந்ததாம். நடிகர் ஜயக்குமார் வந்து கண்ணிர்விட்டு அழுதானாம். லட்ச ரூபாய் செலவழித்தானாம், அந்தக் கடைசி ஊர்வலத்துக்கு..!
அம்மா இந்தப் பெருமையைச் சொன்னது ரங்கனுக்கே பிடிக்கவில்லையோ? “ஆமாம், குடிச்சிப்புட்டு ஆடினானுவ. வாணவேடிக்கை, இதெல்லாமா? செத்தவனுக்கு, ஒரு சாமி பேரு, கோவிந்தான்னு சொல்லல்ல. மட்றாசு விவஸ்தை இல்லாம ஆயிட்டது. பூமாலை மேலுக்கு மேல் போட அமைச்சர் வாரார். வட்டத் தலைவர், செயலாளர், டி.வின்னு பெருமைதாம் பெரிசு. அந்தப் புள்ள பொஞ்சாதி தா உள்ள அழுதிட்டிருந்திச்சி. அதுக்காகத் தான் கருமாதியன்னிக்குப் போன. அவ அண்ணன் கூட்டிட்டுப் போயிடுவா. பாவம், அஞ்சு வருசம் வாழ்ந்து ரெண்டு புள்ளையத் தந்தா. குடி... குடிக்கறதோட, சாமி இல்லேன்னு திரிஞ்சானுவ. அதுதா அடிச்சிடுத்து...” என்று வருந்தினாள்.
செவந்திக்கு ஆறுதலாக இருந்தது.
“இந்தப் புள்ளிங்க இல்லன்னா, வேற கலியாணம் கூடக் கட்டலாம். ஆம்புளங்க கட்டுவாங்க, புள்ளிங்களை வளர்க்கன்னு. பொம்புள, இந்தப் பிஞ்சுகளுக்கு ஒராண் காவல் வேணும், அப்பன் ஸ்தானத்திலன்னு கல்யாணம் கட்டலாமா? கூடாது. அத்தோட விட்டதா? சொந்தக்காரங்க, கூடப் பெறந்தவங்க கூட நடத்த சரியில்லன்னு கரியத்தித்தும். இவங்க புருசன் பொஞ்சாதி இணைபிரியாம, சீவிச்சிங்காரிச்சி மினுக்குவாங்க. அட, வூட்டில படுவெட்டா, புருசனில்லாம ஒரு பொம்புள இருக்காளேன்னு நினைப்பாங்களா?” என்று யாருக்கோ கல்லிலே மருந்திழைப்பது போல் உரசி விட்டாள்.
பொங்கலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் போதுதான் அறுவடை செய்திருக்கிறார்கள். பச்சை நெல்லை முற்றத்தில் காய வைத்திருக்கிறாள். ஒரு மூட்டையைப் புழுக்கி வைக்க வேண்டும்.
ஓய்ந்தாற் போல் குறட்டில் உட்காருகிறாள்.
வெந்நீர் வைத்து உடம்புக்கு ஊற்றிக் கொள்ளவேண்டும். வயிறு பசிக்கிறது.
“பொங்க இருக்குதாசுந்தரி?”
“இருக்கக்கா... குழம்பூத்தித் தாரேன். சாப்பிடுங்க. நீங்க சரியாகச் சாப்பிட்டிருக்க மாட்டீங்க...”
“உனக்குத்தா ரொம்ப வேல சுந்தரி..”
“நமக்குள்ள இதெல்லாம் எதுக்கக்கா! பொங்கலுக்கு முருகண்ணா அண்ணி எல்லாம் வராங்களாம். மதியம் அத்தான் சாப்புட வந்தப்ப லெட்டர் வந்திருக்குன்னு சொன்னாங்க.”
“லெட்டரா? நாளப் பொங்கலுக்கா வராங்க? விசேசந்தா...”
“நா முதல்ல அறுப்பு வச்சது நல்லாப் போச்சு. புதுநெல்லு போட்டுப் பொங்கி, வாராத அண்ணனும் அண்ணன் பொஞ்சாதியும் வாராங்கன்னா விசேசந்தா.” பொங்கலுக்கு எப்படியும் துணி வாங்குவது வழக்கம். காஞ்சிபுரம் போய்க் குழந்தைகளுக்கும், அப்பாவுக்கும், வாங்க வேண்டும் என்றிருந்தாள். கோ - ஆப்டெக்ஸ் கடையில், ஒரு வாயில் சேலை எடுத்தால், சரோவை உடுத்தச் சொல்லலாம். அவர்கள் அப்பா அவளுக்கும், சரவணனுக்கும் வேண்டியதை எடுப்பார். அவள் தலையிட மாட்டாள். அவளுக்கும் ஏதோ ஒரு சேலை வரும். பொங்கல் தீபாவளி என்றால், முருகன் இருநூறு இருநூற்றைம்பது என்று பணம் அனுப்பி வைப்பான். இல்லையேல், அவன் மட்டும் பேப்பர் திருத்த, அது இதென்று பட்டணம் வரும்போது சுங்கடிப் புடவையோ, வேட்டியோ வாங்கி வந்து கொடுப்பான். அதற்கே அம்மா அகமகிழ்ந்து போவாள்.
பொங்கல் சந்தை அல்லவா? கோ - ஆப்டெக்ஸ் துணிக்கடையில் கூட்டம் அலை மோதுகிறது. செவந்தி கன்னியப்பனையும் கூட்டி வந்திருக்கிறாள். ஒரு சோடி வேட்டி நாற்பது நாற்பது ரூபாயில் இரண்டு சட்டைகள், ஒரு வாயில் சேலை, நான்கு ரவிக்கைத் துணிகள் என்று துணி எடுக்கிறாள். புதுப்பானை, நான்கு கருப்பந்தடிகள், வாழைப்பழம், ஒரு சிறு பறங்கிக் கொட்டை, பூசணிக்காய், கத்தரிக்காய், மொச்சைக் கொட்டை என்று வாங்கிக் கொள்கிறாள். சேவு அரைக் கிலோ, இனிப்பு கேக், ஒரு பெட்டி என்று பணத்தைச் செலவு செய்கிறாள்.
கன்னியப்பன் உடன் வர விடுவிடென்று நடந்து வீட்டுக்குள் நுழைகையில் வீடு கலகலவென்றிருக்கிறது. ரங்கன் மட்டும் வந்திருக்கவில்லை. அண்ணன் முருகன், அண்ணி, இரண்டு குழந்தைகள் வந்திருக்கிறார்கள். கயிற்றுக் கட்டிலில் பிள்ளைகளுடன் அண்ணன் இருக்கிறார். அண்ணி கருப்புத்தான். ஆனால் படித்த களை, பணக்களை.
“வாங்கண்ணா, அண்ணி நல்லாருக்கிறீங்களா?”
“ம். பொங்கச்சந்தையா?”
“ஆமா. நேத்துத்தா காகிதம் வந்திச்சின்னு சொன்னாங்க. நா காலம வரீங்களோ, ராத்திரியோன்னு நினைச்சே. பஸ்ஸுல வந்தீங்களா?”
“நாங்க மெட்ராசிலிருந்து வரோம். மாப்பிள்ளைகிட்டச் சொன்னனே? கண்ணன் காரியத்துக்கு வந்திருந்தாரே. இவ தங்கச்சி வீடு ஏரிக்கரைப் பக்கமிருக்கே ஜீவா பூங்கா நகர். அங்கதானே இருக்கு? புதுசா கட்டிருக்காங்க. கிரகப்பிரவேசத்துக்கே வரணும் வரணும்ன்னாங்க. அட பொங்கல், அப்படியே ஊருக்கும் வருவோம்னு வந்தோம். நீ என்னமோ கிளாஸ் எடுத்தியாமே? நல்ல வெள்ளாமைன்னு அப்பா சொன்னாங்க...”
“ஆமாம் காக்காணிக்கு ஒம்பது மூட்டை, ஒரு கருக்காய் பதர் இல்ல..” என்று ஆற வைத்துக் குந்தாணியில் குத்துப்பட்ட நெல்லை - அரிசியைக் கொண்டு வந்து காட்டுகிறாள்.
“இருக்கட்டும் நமக்கு இதெல்லாம் சரிவராது. மாப்புள்ள போல...”
“அண்ணி, நின்னிட்டே இருக்காங்க, நீங்க பாட்டுல உக்காருங்க...”
“அதான் பாய விரிச்சி வச்சேன்...” என்று கூறும் சுந்தரி காபி கொண்டு வருகிறாள். சாமி மேடைக்கு முன் ஒரு தாம்பாளத்தில், ஸ்வீட் பாக்கெட், கதம்பம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய வரிசைகள் இருக்கின்றன. நீலத்தில் கருப்புக் கரையிட்டு இரு சரிகைக் கோடுகள் ஒடிய சுங்கடிச் சேலை, ஒரு உயர் ரக வேட்டி, மேல் வேட்டி, எல்லாம் இருக்கின்றன. அண்ணியின் கழுத்தில், புதிய தங்கச் செயின் டாலருடன் பளபளக்கிறது. இரண்டு அன்னங்களாய்க் கல்லிழைத்த டாலர். உள்ளங் கழுத்தில் அட்டிகைப்போல் ஒரு நகை. தங்கமாக ஒரு மீன் இரண்டு முனைகளையும் இணைக்கிறது. மீனின் சிவப்புக்கல் கண் மிக அழகாக இருக்கிறது. செவிகளில் சிவப்புக்கல் கிளாவர் ஜொலிக்கும் காதணியில் முத்துக்கட்டி இருக்கிறது. நதியாகுத்தோ, நகுமா குத்தோ, குத்தி அதில் ஒரு சிவப்பு நட்சத்திரம் சொலிக்கிறது. கைகளில் மும்மூன்று தங்க வளையல்கள், ஒரு சிவப்பும் முத்துமான வளையல். மூக்கில் முத்துக்கட்டிய மூக்குத்தி, விரலில் வங்கி நெளி மோதிரம். முடியைத் தளர்த்தியாகப் பின்னி காதோரம் தூக்கிய ஊசிகளுடன் பேஷனாக அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். இந்த இடத்துக்கே பொருந்தாமல், இரண்டு விரல்கடை சரிகை போட்ட, மினுமினுக்கும் பட்டில் பூப்போட்ட சேலை... இளநீலமும் ரோசுமான கலர். அதே இள நீலத்தில் ரவிக்கை... குழந்தைகளில் பெரியவன் ஆண். எட்டு வயசாகிறது. ஆனால் நருங்கலாக இருக்கிறான். புசுபுசுவென்று ஒரு முழுக்கால் சட்டை கழுத்து மூடிய பூப்போட்ட பனியன் போன்ற மேல் சட்டை. அவன் கழுத்தில் ஒரு போட்டோ பிடிக்கும் காமிரா. பொம்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது. பெண் சிறியவள். அடுக்கடுக்காக ஜாலர் வைத்த பம்பென்ற லேசு வைத்த கவுன் போட்டிருக்கிறது. காதுகளில் சிறு தங்க வளையல்கள். கழுத்தில் இருக்கிறதோ இல்லையோ என்ற மெல்லிய இழைச்சங்கிலி. நட்சத்திர டாலர்...
கன்னியப்பன் அந்தச் சட்டையை சிறு குழந்தைக்குரிய ஆவலுடன் தொட்டுப் பார்க்கிறான். அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கையில் கிள்ளி உதட்டில் வைத்துக் கொள்கிறான். உடனே அந்தக் குழந்தை முகத்தைச் சுருங்கிக் கொண்டு அம்மாவைப் போய் ஒட்டிக் கொள்கிறாள்.
“அவ... அழுக்குக் கையோடு தொடுறா...”
“ந்தா. அப்படில்லாம் சொல்லக் கூடாது திவ்யா!” என்று முருகன் சிறு குரலில் அதட்டுகிறான். உடனே, அவள் தொட்டாற் சுருங்கியாக அழத் தொடங்குகிறாள்.
செவந்திக்கு அப்போதே கவலை பற்றிக் கொள்கிறது. இரவு இவர்கள் எங்கே தங்கி, எப்படிப் படுத்துக் கொள்வார்கள்? முன்பு அவர்கள் வந்த போது கழிப்பறை கூடக் கிடையாது என்று குறைப்பட்டு, போய் விட்டாள். இப்போது, படலை ஒரமாக ஒரு கழிப்பறை கட்டி இருக்கிறார்கள். அது சரோ மட்டுமே உபயோகிக்கிறாள். சுத்தம் செய்ய என்று ஆள் பிடிப்பது சிரமம். அதனாலேயே அதை உபயோகிப்பவள் அவள் மட்டுமே.
இதெல்லாம் நினைவுக்கு வந்து அழுத்துகிறது.
திராபையான கந்தலை இழுத்துப் பிடிக்கும் சாகசத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது.
அப்பா இருமினாலும் கொண்டாலும் இருக்கட்டும் என்று சுந்தரி வீட்டுக்குப் படுக்க அனுப்புகிறாள். சரோவுடன் கூடத்து அறையில் அண்ணி, குழந்தைகள், கட்டிலில் அண்ணன். கீழே அம்மா.. விடிந்தால் போகி..
கவலைகளின் கணமும் அலுப்பும் உடலை அயர்த்தி விடுகிறது. வாசலில் சட்பட்டென்று சாணம் தெளிக்கப்படும் ஒசையில் அலறிச்சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.
இருள் பிரியவில்லை.
-----------------
அத்தியாயம் 11
முதல் பொங்கல், பெரும் பொங்கல் எல்லாம் சுரத்தில்லாமலே கழிந்து போகின்றன. அன்று மாலையே அண்ணியையும் குழந்தைகளையும் அண்ணன் கூட்டிக் கொண்டு போகிறான்.
“நா இவங்கள மட்ராசில விட்டுப் போட்டு வாரம்மா, அப்பா தப்பா நினைக்காதிங்க தப்பா நினைக்காத மாப்புள” என்று அண்ணன் விடைபெறுகிறான்.
செவந்தி தலையாட்டிக் கொண்டு நிற்கிறாள். போகியன்று, விளைந்த நிலத்தில் அடுப்பு வைத்துப்பானை வைத்துப் புத்தரிசியைப் போட்டு, வீட்டுச் சாமியை நினைத்துப் பொங்கல் வைத்தாளே. அண்ணி, அண்ணன் வந்தார்களா? பெரும் பொங்கல். முன் வாசலில் வைத்து இவள்தான் விரதமிருந்து கும்பிட்டாள். “எங்களுக்கு இதெல்லாம் வழக்கமில்ல. தப்பா நினைச்சிக்காத செவந்தி. திவ்யாவுக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ்னு மருந்து குடுக்கிறோம். நேரத்துக்கு அதுக்கு பாலு, முட்டைன்னு குடுக்கணும். பொங்கல் வீட்டுக்கு வராமலிருக்கக் கூடாதுன்னு வந்தோம்...” என்றாள். ஒப்புக்கு நின்றாள்.
ரங்கன் குழந்தைகளுக்குப் புதுத்துணி வாங்கி வந்தான். மாப்பிள்ளைக்கும் வேட்டி துண்டு வாங்கி வந்தான். முன் வாசலில் மாலையோடு பொங்கல் வைத்துக் கும்பிட்ட போது, ஏதோ சிறைக் கைதி போல் தோன்றியது. தான்வாங்கி வந்த வாயில் சேலையை அண்ணிக்குக் கொடுக்கலாமா என்று தோன்றியது. பிறகு, அவள் அதைத் தொடக்கூட மாட்டாளோ என்றும் தயங்கிக் கொடுக்கவில்லை. சரோவும் சரவணனும் தான் பொங்கலை ரசித்து அனுபவித்தார்கள். சரோ வாசலில் பெரிய பெரிய கோலம் போட்டாள். கலர் பொடி வாங்கி வந்து தூவினாள்.
பொங்கல் பானை, கரும்பு, மஞ்சட் கொத்து என்று கோலம்...
“மாமா, எப்படி?”
“நல்லா போட்டிருக்கே. உங்கம்மாவுக்கு இந்த மாதிரி ஃபைன் ஆர்ட் வராது. காட்டு மேட்டு வேலதான் செய்வாள்...”
“எனக்குப் பெயின்டிங் பண்ணக் கூட ஆசை. டென்த் முடிச்சப்புறம் என்ன கோர்ஸ் எடுக்கலாம் மாமா?”
“மேல படிக்கப் போறியா? உன்ன உங்கம்மா இப்பவே புருசன் வீட்டுக்கு மூட்டைக்கட்ட ரெடியா வச்சிருப்பாளே?”
“நோ... அதெல்லாம் நடக்காது. நா பி.இ. படிக்கணும். குறைஞ்ச பட்சம் பாலிடெக்னிக்ல படிச்சிட்டேனும் டிகிரி எடுப்பேன்! மாமா, ரேங்க் வாங்கிட்டா மேல் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குமில்ல?”
“கிடைக்கும். நீ பரீட்சை எழுதிட்டு மதுரைக்கு வா. விமன்ஸ் பாலிடெக்னிக் இருக்கு. சேரலாம்.”
அவள் முகம் ஒளிருகிறது. மத்தாப்பூக்கட்டினாற் போல்.
“நிச்சயமாவா மாமா?”
“நிச்சயமா, உன்னோடு நான் ஏன் விளையாடணும்? நல்ல ஸ்கோப். சொந்தத் தொழில் செய்யலாம், வேலையும் கிடைக்கும்...”
“ப்ளஸ் டு படிக்கணும்ன்னாலும் உங்க ஸ்கூலில் இடம் கிடைக்குமா?”
“அதுவும் பார்க்கலாம்.”
“அம்மா என்ன எப்பப் பார்த்தாலும், பொம்புளப்புள்ள படிச்சிட்டு என்ன கிழிக்கப் போறேன்னு இன்ஸ்ல்ட் பண்ணுது. அதக்காகவேணும், நான் படிப்பேன்.”
“படி... உங்கம்மாவுக்கு ஒரு பாடம். . நீ வா, சரோ... பரீட்சை எழுதிவிட்டு வா.”
இந்தப் பொண்ணை வேறு எதற்குத் துண்டிவிட வேணும்?
அவளுக்குக் கோபம் கொள்ளாமல் வருகிறது. ‘அவங்கவுங்க அவங்கவுங்க வேலையப் பார்த்திட்டுப் போனா நல்லாயிருக்கும். சமுசாரிக் குடும்பத்துலதா கட்டணும். அதுக்கு மேல எடுப்பு எடுக்க உங்களுக்குச் சத்து இல்ல...’ என்று முகத்தைக் காட்டி விட்டுப் போகிறாள்.
அவர்கள் கிளம்பிச் செல்வதில் வருத்தமில்லை. அவர்கள் சந்தோஷமாக உறவு கொண்டாடாததோ, ஏதோ ஒப்புக்கு வந்து போவதோ எதிர்பாராததில்லை. அவள் வருத்தம், கன்னியப்பன் இரண்டு நாட்களிலும் வந்து தலை கூடக் காட்டியிராததுதான். அவனுக்கென்று அவள் வாங்கிக் கொடுத்த கோடி வேட்டியும், சட்டையும் அணிந்து அவன் வரவில்லை. மறுநாள் மாட்டுப் பொங்கல், மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புக்கு வர்ணம் அடித்து, அவன் தானே எல்லாம் செய்வான்.
அவன் ஏன் வரவில்லை?
அவனை இங்கு யாரேனும் ஏதேனும் பேசினார்களா?
மகனும் மருமகளும் குழந்தைகளும் பெரும் பொங்கலன்று மாலையிலேயே பட்டணம் திரும்பிச் செல்வதைத் தெருவே பார்த்தது.
படித்தவர்களுக்கும், கிராமத்திற்கும் வெகு தொலைவு என்று கணக்குப் போட்டது. அண்ணியின் தோற்றம், குழந்தைகளின் அரசகுமாரக் கோலம் ஆகியவற்றை வைத்து, நாலெழுத்துப் படித்து டவுனுக்குப் போனால்தான் வாழ்வு என்று உறுதி செய்தது.
மனசுக்குள் பூனை பிறாண்டுவது போல் ஒவ்வாமை, காலையில் எழுந்து களேபரமாக இருந்த சமையல்கட்டில் இருக்கும் சாமான்களை ஒழித்துப் பின்பக்கம் போடுகிறாள். முதல் நாள் அடுப்பு வைத்த முன் வாசலில் மீண்டும் சாணம் தெளித்துப் பெருக்குகிறாள். சரோவை எழுப்பிக் கோலம் போடச் சொல்லிவிட்டுப் பின்பக்கமாகவே ஏரிக்கரைப் பக்கம் நடக்கிறாள்.
நெல்லு மிசின் புழுங்கல் உலர்த்தும் முற்றம் விழாக் கொண்டாடுகிறது. பக்கத்தில் பெரிய சாலை. காஞ்சிபுரம் பஸ் போகும் சாலை. வயல்கள்... கரண்ட் ஆபீஸ்... அந்தப் பக்கம் உள்ள குடிசைகளில் ஒன்றுதான் கன்னியப்பனும், ஆயாவும் இருக்கும் இடம். வெளியே முற்றம் பச்சென்று தெளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கோலமும் புதிதாகப் போட்டிருகிறது. ஆயா எழுந்திருக்கிறாள்.
“கன்னிப்பா. கன்னிப்பா..!”
உள்ளிருந்து அவன் எட்டிப் பாக்கிறான். சட்டென்று வேட்டியை நன்றாக இறுக்கிக் கொண்டு மேல் துண்டுடன் வெளியே வருகிறான்.
“அக்கா நீங்களா?”
“ஆமாம்பா. நீ பொங்கலுக்கு வாராம போயிட்டே?”
அவன் அவளையே நேராகப் பார்க்கவில்லை.
“மிசின்காரர் வூட்ட வேலை இருந்திச்சி. போயிட்டே.”
“ஏம்பா கூடவே ஒழச்சிட்டு நம் மூட்டுக்கு வராம போயிட்ட?”
அவன் கால் பெருவிரல் நிலத்தைச் சீண்டுகிறது.
“நம்மூடு இல்லிங்க. உங்கூடு. நீங்களும் நானும் எப்படீங்க சமமாக முடியும்?”
“இதெல்லாம் என்ன கன்னிப்பா, புதுப் பேச்சு?”
“புதுசு இல்லீங்க. பழசுதா. எனக்குத்தா புத்தி குறைவு. நா ஒங்கள அக்கா அக்கான்னு கூட்டாலும் எனக்கு அக்கா ஆக முடியுமா? நீங்க எசமானி. நாபண்ண பாக்குற கூலிக்கார. ஆயி அப்பந் தெரியாத அநாத. ஊருச்சோத்தத் தின்னும் கூலிக்கார ஆயா. எப்படிங்க ஒண்ணாக முடியும்?”அவனுடைய நெஞ்சுச் சுமையைப் பிளந்து வரும் குரல்...
அவள் சொல்லொணா வேதனைக்காளாகிறாள்.
“ந்தா.. கன்னிப்பா, நீ இப்படியெல்லாம் பேச எங்க கத்துக்கிட்ட? உன்னயாரு என்ன சொன்னாங்க?”
புரியவில்லை.
யார் என்ன சொல்லி இருப்பார்கள்? அவள் புருசனா? இருக்காதே? அண்ணனா? சரோவா? அப்பாவா? இல்லை... அம்மாவாகத்தான் இருக்கும்.
அவள்தான் விசச்சொல்லை உதிர்ப்பவள். பல்லில் விசம். உடம்பில் விசம்.
“யாருப்பா சொன்னாங்க... ? கன்னிப்பா?” அவன் அருகில் நகர்ந்து அவன் கையைப் பற்றுகிறாள்.
அவனுக்குச் சிறுபிள்ளை போல் அழுகை வந்துவிடுகிறது.
“யாரப்பா உன் மனசு நோகப் பேசியவர்?”
“இல்லீங்க யாரும் இல்ல. நீங்க வீட்டுக்குப் போங்க. நீங்க இந்தக் குட்சப் பக்கம் வந்தது யாரு கண்ணிலும் பட்டாக்கூட காது மூக்கு வச்சிப் பேசுவாங்க. ஒரு கையகல பூமி சொந்தமில்ல. நாலெழுத்தும் பாக்கல...”
துக்கம் துருத்திக் கொண்டு வருகிறது.
“நீ இப்படில்லாம் பேசுன, நான் வூட்டுக்கே போக மாட்டேன். இங்கே உக்காந்திருப்பே. இல்லேனனா, ஏங்கூட இப்ப நீ வீட்டுக்கு வா. மாடுகளெல்லாம் குளிப்பாட்டி எல்லாம் வழக்கம் போல நீதா செய்யணும். நீ இல்லாம, வீட்டுல உசுரே இல்லே...”
அவன் சட்டென்று உள்ளே சென்று வருகிறான்.
அவள் வாங்கிக் கொடுத்த சட்டை, வேட்டி, துண்டு பிரிக்கப் படாமலே இருக்கின்றன. அவளிடம் நீட்டுகிறான். “இந்தாங்க. எனக்கு நீங்க குடுக்கற கூலி சரியாப் போச்சி. அதுக்கு மேல இதுக்கெல்லாம் அவசியமில்ல..”
அவள் விக்கித்துப் போகிறாள்.
“கன்னிப்பா, உன்ன யாரு, எது என்ன சொன்னாலும் நீ என்ன மதிக்கலியா? நான் உழைச்சது உனக்கு எடுத்துத் தந்தது. எனக்குக் கூடப் பிறந்தவ இருந்தும் புண்ணியமில்ல. நீதா தம்பிக்கு மேல, புள்ளக்கி மேலன்னு நினைச்சிட்டிருக்கே. உன் உழைப்பு, என் உழைப்பு. இத்தனைக்கு மேல நீ என்ன மதிக்கலேன்னா, இந்த வேட்டி, சட்டையத் தூக்கி எறிஞ்சிடு. எங்கூட்டுக்கு நீ வரவேணாம். இல்ல, என்ன மட்டும் மதிக்கிறேன்னா, இன்னிக்கி வந்து கொட்டில் மாடுங்களுக்குச் செய்நேர்த்தி செஞ்சி பொங்கலுக்கு வந்திடு. கோயிலுக்கு கொண்டு போவம். சாமி கும்பிடுவோம். நீ வரலன்னா அந்த வூட்டுல இன்னிக்கு மாட்டுப் பொங்கலும் இல்ல... நாவார!” முகத்தில் சிவ்வென்று இரத்தம் ஏறினாற் போல் இருக்கிறது. வேகுவேகென்று திரும்பி வருகிறாள்.
மாடு கரக்கவில்லை. அது கத்துகிறது. கன்றை அவிழ்த்து விடுகிறாள். உள்ளே வந்து எண்ணெய்க் கிண்ணம், செம்பு, மடிகழுவ நீர் எல்லாம் கொண்டு வருகிறாள்.
“காலங்காத்தால எங்க போயிட்டே? வாசல் கோலம் வைக்கல. எனக்கு முழங்கால் புடிச்சிக்கிச்சி. சரோவ எழுப்ப எழுப்ப எந்திரிக்கல. நீ எங்க போயிருப்பன்னு எனக்குத் தெரியும். அவவ, நாக்கு மேல பல்லுப் போட்டு கண்டதும் பேசுறாளுவ. பொங்கலுக்கு வந்த புள்ள ஒரு நேரம் தங்குனதே போதும்ன்னு கெளம்பிப் பூட்டான். நீ என்னதாண்டி நினைச்சிட்டிருக்கிறே?”
செவந்தி பேசவில்லை. பேசாமல் பால் கறக்கிறாள். பால் கறப்பவர் மனம் சரியில்லை என்றால் மாடும் பாலை எக்கிக் கொள்ளும்.
“லச்சுமி! நீயும் எனக்கு விரோதியா? வாணாண்டி!”
மாட்டைத் தட்டிக் கொடுக்கிறாள்.
பாலைக் கறந்து உள்ளே கொண்டு வந்து வைக்கிறாள்.
அம்மா விடுவதாக இல்லை.
“ஏண்டி செவந்தி, நீ என்னதா நினைக்கறடீ? இப்ப நீ எங்க போயிட்டு வார? கூலிக்காரப் பய. அவன் கோவிச்சிட்டா வரலன்னு பாக்கப் போற. கூடப் பொறந்த அண்ண, அண்ணி, அவுங்களப் பாத்துப் போறாமயில சாவுற!”
“தா... வார்த்தய அளந்து பேசு! ஆருக்குப் போறாம! கன்னிப்பன என்ன சொல்லி வெரட்டின? அந்தப்புள்ள, இந்தக் குடும்பத்துக்கு ஒடம்பச் செருப்பா ஒழக்கிறவ. ஒரு ஒழவோட்டினா கூலி எம்பது ரூபா இந்த வூட்டுக்கு அது எத்தினி ஒழச்சிது? ஒம்பது மூட்ட, காக்காணில. ஒரு பதாரில்ல, கருக்காயில்லன்னு பூரிச்சி போனியே? அது ஆரூ ஒழச்சி வந்தது? ராவோடு தண்ணி பாத்து அடச்சது ஆரு? உம்புள்ளையா, மருமகப் புள்ளயா? இத சுந்தரி பாவம் புருசனில்ல. வெள்ளாம வைக்க வகையில்லாம தருமச்சோறு சாப்புடுது. பூமி நீ குந்திச் சாப்புடக் குடுக்காது. உழச்சித் தின்னத்தான் கொடுக்கும். அந்தப் புள்ள, ஒரு கள்ளம் கபடு தெரியாது. என்ன கேலி பண்ணாலும் தப்பா எடுத்துக்காது. அத்த வெரட்டிட்டே, மனசு நோகப் பேசி!”
“ஆமா வெரட்டித்தா விட்ட அததுக்கு ஒரு வரமுற இருக்கு. எதெது எங்க வைக்கணுமோ அங்க வைக்கணும். போ...டி... நேத்து மொளச்ச முசுக்கட்ட, எனக்குப் புத்தி சொல்ல வாரா! அறிவு இருக்காடி உனக்கு? அவ உழவோட்டினா கூலி குடுத்திட்டுப் போ! அதுக்கு மேல அவனுக்கென்ன சரிகக் கோடு போட்ட வேட்டி, சட்ட, துப்பட்டா விளக்குமாறு? அருமயா அண்ணா, அண்ணி, அவம்புள்ளங்க வந்திருக்கு. அதுக்கு ஒரு பார்வயா நல்லது செய்ய உனக்குத் தோணல. என்னமோ பொண்ணக் கட்டின மருமவங் கோவிச்சிட்ட மாதிரி ஓடுறா துடப்பக்கட்ட...”
“ந்தாம்மா, ரொம்பப் பேசாத நா அவனியே மருமகப் புள்ளயா ஆக்கிக்குவே! உன்னப் போல நன்னிக் கொன்ன ஆளில்லே நா! உம்புள்ள, மருமவ என்ன செஞ்சா ஒரு தல முழுவி, வெளக்கேத்தி பொங்கக் கும்புட முடியாதவ எதுக்கு வந்தா? கிராமத்துல இப்படி இருக்கும்னு தெரியுமில்ல? இல்லாட்டி இவரு வந்து பத்தாயிரம் செலவு பண்ணி அம்மா வந்திருக்கத் தோதா குழா போட்டு, மேடப் போட்டு அலமாரி போட்டு கட்றது? நானா வாணாங்கறேன்? அஞ்சு வருசமா கொல்ல மேட்டுல ஒழுங்காசாகுபடி இல்ல. ஒரு கேவுறு கூட இந்த வருசம் வெதய்க்கல. நாதி இல்ல. இவிரு கலியாணத்துக்குத்தான கிணத்துப் பாசன நிலத்த ஒத்திக்கு வச்ச? அதையேனும் அடச்சாரா, இத்தினி வருசத்துல? அவ நகை போட்டுட்டு மினுக்குறா, ஏன் சொல்லுறதான புள்ளகிட்ட?”
இவளுக்கு ஆற்றாமை பொங்குகிறது. சொற்கள் பொல பொல வென்று வருகின்றன.
ஆனால் அம்மாவோ... ஆம்பிளப் பிள்ளையைப் போல் இவள் பேசுவதா என்று மேலே இருந்து விரட்டுகிறாள்.
“ஏய், நீ இப்படிப் பேசுறதுன்னா, இப்பவே வூட்டவிட்டுத் தனியாப் போய்க்க. பூமி அவனோடது. அவன் போடுவா, அழிப்பா. இன்னைக்குத் தேதில அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவனால சோறு போட முடியும். வித்துப் போட்டு ஊரோட வந்திருங்கன்னுதான் இப்பவும் சொல்லிட்டுப் போச்சி! அப்பாவுக்கும் அங்க வந்தா, நல்ல டாக்டர்ட்ட காட்டி வைத்தியம் பண்ணுறன்னு, வூடு கட்டியிருக்கு. கிரக பிரவேசம்னு வைக்கல. சாங்கியமா பால் காச்சி சாபிட்டுட்டு டூசன் பசங்க வரதுக்குத் தோதா தெறந்து விட்டிருக்கு. நீங்க வாங்க. இங்க ஒரு வசதியும் இல்லன்னு சொல்லிட்டுத்தாம் போயிருக்கா...”
மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டாற் போல் இருக்கிறது செவந்திக்கு.
அதுவும் அப்படியா? இப்படி உருவேற்றத்தான் இப்போது பொங்கலுக்கு வந்தார்களா?
அவள் பொட்டில் அடிபட்டாற் போல் நிற்கிறாள்.
சரோ பின்புறம் பல்துலக்கி விட்டு வருகிறாள்.
“கன்னிப்ப வந்து மாடெல்லாம் அவுத்துட்டுப் போறா! தாத்தாவும் கூடப் போவுது...”
குளிர்ச்சியான துளி விழுந்தாற் போல் ஆறுதலாக இருக்கிறது. ஒன்றும் பட்டுக் கொள்ளாமலே அடங்கியவளாக இயங்குகிறாள். மாடுகளைக் குளிப்பாட்டி, வயிறு நிறையத் தீவனம் வைக்கிறார்கள். கொம்புக்கு வர்ணம் பூசி, சலங்கைகளைப் பளபளப்பாக்கிக் கட்டுகிறான். கட்டுத்தறி சுத்தம் செய்து, வீடு முழுதும் மாவிலையும் தென்னங் குருத்துமாகத் தோரணம் கட்டுகிறான். வாயிலில் பொங்கல் வைக்கிறார்கள். ஏர், குந்தாணி, உலக்கை எல்லாமே வாயிலுக்கு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மஞ்சள் குங்குமம் வைத்து, இலையில் பொங்கலும் காயும், இனிப்பும் படைத்துக் கன்று காலிகளையும், தொழில் செய்யும் கருவிகளையும் கும்பிடுகிறார்கள்.
சரோவும், சுந்தரி குழந்தைகளும் சரவணனும் கரும்பு கடித்துத் துப்புகிறார்கள்.
அலங்கரித்த மாடுகளை எல்லாம் கும்பலாகக் கோயில் முன் ஒட்டிச் செல்கிறார்கள். கொட்டு மேளம் முழங்க மாடுகளுடன் ஏரையும் உழுவது போல் தூக்கிக் கொண்டு கன்னியப்பன் பொழுது சாயும் நேரம் வீட்டின் முன் வந்து வைக்கிறான்.
செவந்தி மனம் துளும்ப, கண்துளும்ப வரவேற்கிறாள்.
-----------------
அத்தியாயம் 12
இந்தக் கூட்டம் இவர்களுடைய அமாவாசைக் கூட்டம் போல் இல்லை. இதுவும் தான்வா பண்ணை மகளிர் கூட்டம் என்று தான் சாந்தி கூறினாள். இவர்கள் வட்டத்துக்குள் இல்லை. செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் மாமண்டூர் சரகத்தில் நடக்கிறது. காலையிலேயே சாந்தி, பிரேமா, செவந்தி மூவரும் பஸ் ஏறி வந்திருக்கிறார்கள்.
விவசாயத் துறை அலுவலர், பெண்கள் முதலில் பேசினார்கள். பிறகு மதியம் அங்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் தத்தம் அநுபவங்களைச் சொல்கிறார்கள். செவந்தியையும் பேசச் சொன்னார்கள். அவளுக்கு வெட்கமாக இருந்தது. “சாந்தி நீ என்னைக் காட்டி வுடாதே. நீ பேசு...” என்றாள் கண்டிப்பாக.
அலுவலர் அம்மா ஒவ்வொருவர் பேரையும் சொல்லிக் கூப்பிடுகிறார். “பாப்பாம்மா... பாப்பாம்மாள் வந்து பேசுவார்...” என்ற அறிவிப்பு வருகிறது.
பாப்பம்மாவுக்கு இளம் வயசுதான். வெள்ளைச் சேலை உடுத்தி, நெற்றியில் துளி திருநீறு வைத்திருக்கிறாள். புருசன் இல்லாதவள் என்பதை அந்தக் கோலம் பறையடித்துத் தெரிவிக்கிறது.
“இந்தப் பாப்பம்மா அனுபவத்தைக் கேளுங்கள். அவ்வளவுக்கு மனசைத் தொடும்” என்று சாந்தி காதில் கிசுகிசுத்தாள்.
“வணக்கமுங்க... எனக்குப் பேசெல்லாம் தெரியாதுங்க. நாலாவது வரைதான் படிச்சேன். பொம்புளப்புள்ள எதுக்குப் படிக்கணும்னு நிறுத்திட்டாங்க. எங்கூட்டுக்காரர் லாரி ஓட்டிட்டிருந்தாருங்க. லாரி கவுந்து இறந்து போய்ட்டாருங்க. எனக்கு ரெண்டு புள்ளிங்க. ரெண்டு பொண்ணு. ஒண்ணுக்கு நாலு வயசு. மத்தது ரெண்டு வயசு, லாரியக் குடிச்சிட்டு ஓட்னாருன்னு மொதலாளி நட்ட ஈடெல்லாம் ஒண்ணுமில்லன்னுட்டாங்க. சரக்கு ஏத்திப் போயிட்டுத் திரும்பி வாரப்ப விபத்தாயிட்டது. பங்காளிங்க, எங்க பங்குக்கு பிரிச்சித் தந்தது ரெண்டேக்கர்... மானாவாரி. எப்பனாலும் மழ பெஞ்சிச்சின்னா பயிரு வைக்கலாம். எங்கூட்டுக்காரருக்கு முதலே பயிரு வேல பழக்கமில்ல. சின்னப்பவே லாரி கிளீனராப் போயிட்டராம்.
“எங்க மாமியாதா அவ மருமகன் கூட முன்னெப்பவோ ஏரித் தண்ணி வந்தப்ப, பயிரு வைச்சாங்களாம். எள்ளு தூவி வைப்பாங்க. கேவுரு போடுவாங்க. அதும்கூட சரியாக் காவல் இல்லன்னா யாரும் பூந்து அறுத்திட்டுப் போயிடுவாங்க. ஆம்புள உரப்பா காவல் இல்லன்னு தெரிஞ்சா ஆடுமாடக் கூட இஷ்டத்துக்கு மேயவுடுவாங்க.
“அப்படி ஒரு ஞாபகம் இது. எங்க மாமியாளும் சீக்கு வந்து செத்துப் போச்சி. நா ரெண்டு புள்ளங்களக் காப்பாத்திப் பிழைக்கணுமே? கூலி வேலைக்குப் போவே. சாணி கொண்டாந்து ஒரு மூட்டை தட்டி விப்பே. நடவு, களையெடுப்புன்னு கும்பலா போறவங்க கூடப் போவே... தனியாப் போனாலே எப்பிடி எப்பிடியோ பேசுவாங்க. பொம்புளயாப் பொறந்தாலே கஷ்டந்தாங்க.
“பெறகு இந்தத் தான்வா திட்டம் வந்திச்சி. இந்தம்மாமாருங்க காரப் போட்டுகிட்டு வந்தாங்க.
“நா அப்ப கூளம் கொண்டாந்து எருமுட்ட தட்டிட்டிருந்தே. இவங்க வாரதப் பாத்துப் பயந்து உள்ள ஒடிக் கதவப் போட்டு கிட்டே.
“ந்தாம்மா...? ஆரு, ஆரு உள்ள கதவத் தெறங்க!”
“இங்க ஆம்புள யாரும் இல்லிங்க. எங்கூட்டுக்காரு செத்திட்டாருன்னே. அழுக வந்திச்சி. ‘நாங்களும் பொம்புளதாம்மா. நீங்க பயப்பட வேணாம். வெளில வாங்க’ ன்னாங்க. கதவத் தெறந்தே. எனக்கு லாரிக்கார நட்டஈடு குடுப்பாங்கற ஆச அப்பவே போயிடிச்சி. அவன் குட்சிட்டுக் கொண்டு போய் மோதிட்டா, அவனால லாரியும் நட்டமாச்சி, சரக்கும் போச்சின்னு சொல்லிட்டாங்க. இப்ப லாரிக்காரங்க, நா நட்ட ஈடு குடுக்கணுமின்னு பொம்புள ஆபிஸ்ரை வுட்டுருப்பாங்களோன்னு பயம் புடிச்சிக்கிச்சி. எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. என்னிய வுட்டுடுங்க. ரெண்டு பொம்புளப் புள்ளியா வச்சிட்டு நா எப்படியோ பிழைக்கிறேங்கன்னு அழுவற...
அவுங்க ஏங்கிட்ட ‘ஏம்மா பயப்புடுறீங்க. உங்களுக்கு உதவி செய்யணு மின்னு தா வந்திருக்கிறோம். நாங்கள் உங்களைப் போல் விவசாயப் பெண்களுக்கு, நிலத்தில் இறங்கி வேலை செய்யும் பெண்களுக்கு, நல்லபடியாகப் பயிர் செய்து விளைச்சல் காண உதவி பண்ணனும்னு வந்திருக்கிறோம். உங்களுக்கு இந்த ஊருதான?’
‘ஆமாங்கம்மா, எங்கூட்டுக்காரருக்கோ, எனக்கோ சொந்தமா நெலமில்லீங்க. பங்காளிங்க பிரிச்சிட்டாங்க...”
‘நிசமாவா?’ன்னு கேட்டாங்க.
எங்கூட்டுக்காரர் பண்ண தப்புக்காக, அந்தத் தரிசு நெலத்தயும் புடுங்கிட்டுப் போகத்தா இப்பிடிச் சூழ்ச்சி பண்றாங்கன்னு நினைச்சிட்டு, ‘நீங்க போங்க இங்க நிலமும் இல்ல ஒண்ணுமில்ல’ன்னு கதவச்சாத்திட்ட...
ஆனாஅவுங்க வுடல. மறுநாளைக்கி, இந்தப் பாலாமணி அம்மாளக் கூட்டிட்டு வந்தாங்க. பாலாமணி கூட நா நடவுக்குப் போயிருக்கிற, அவுங்களுக்கு என்னியப் பத்தி நல்லாத் தெரியும். அவங்க தான்வா பயிற்சி வாங்குனதும் இப்பிடி இந்த கிராமத்துலன்னு துப்பு சொல்லியிருக்காங்க. அவங்க எல்லாம் எடுத்துச் சொன்னாங்க.
“பொம்பிளைன்னு ஏன் நம்மையே தாழ்வா நெனச்சுக்கணும்? இப்ப மத்தவங்க வயல்ல போயி, நடவு பண்ணுற, களை எடுக்கிற, அறுவடைக்கும் போறீங்க. இத்தையே நம்ம சொந்தமா இருக்கிற அறுபது சென்டிலோ, ஒரு ஏகரிலோ ஏன் செய்யக் கூடாது?’ன்னாங்க.
“அது என்னால முடியுங்களா? நா ஒரே ஆளு.”
“நீ ஒரே ஆளுதா. செய்யணும்னு நினைச்சா முடியும். நீ நினைக்கணும். உனக்கு அண்ணன், தம்பி, மாமன், மச்சான்னு யாருமே இல்ல. அட, ஒரு உறவு கூடவா இரக்கமா இல்ல? நீங்க எல்லாத்தையும் நடக்காதுன்னுற கண்ணுல பார்க்காம, நடக்கும்னு பாருங்க. நாம்ப பொம்பளைங்க ரொம்பப் பேர் யோசிக்கறதே இல்ல. வாழ்வு வரும்போதும் யோசிக்கிறது இல்ல. தாழ்வு வரும்போதும் யோசிக்கிறது இல்ல. சரிதானா? யோசிச்சுப் பாருங்க...?”
அவங்க புட்டுப்புட்டுச் சொன்ன பிறகுதான் யோசிக்கணும்னு தோணிச்சி. வூட்டுக்காரரு லாரில லோடு கொண்டு போயிட்டு வாரப்ப, பூவு, பழம், துணி, மணின்னு கொண்ட்டு வருவாங்க. ஆசையா புள்ளைங்களுக்கும் குடுப்பாரு. அவரு குடிக்கிறாரா, குடிச்சிட்டு வண்டி ஓட்டுறாரா, எங்க சாப்புடறாரு, எதுனாலும் கேட்டனா, இல்ல. ஆம்புளங்க வெளில போவாங்க. பவுரானவங்க அவங்கதா எல்லாம்னு இருந்த பெறகு ஒரேடியாப் போனதும் நம்மால ஒண்ணும் ஆகாதுன்னு ஓஞ்சு போன நிலை மாறும். அவர் குடிச்சிட்டுத்தா வண்டு ஓட்டுனாரா, அவரு மேலத் தப்பான்னு கேக்கத் தோணல... எம் மேலியே எனக்கு நம்பிக்கையே இல்ல.
“இவங்க வந்து சொன்ன பிறகு யோசிச்சே."
“எம் மாமியா, மருமகனத் துணையா, ஒரு ஆதரவா வச்சிட்டுக் கழனி வேலை செஞ்சாங்க. இப்ப நாத்தனாளுக்கு ரெண்டு மகன் இருக்கிறான். படிக்கவும் படிக்கிறா, கழனிக்கும் வாறான். நான் போயி ஏன் கேக்கக் கூடாதுன்னு தோணிச்சி.”
“மின்ன இந்த ரோசனையை யாருன்னாலும் சொன்னா ஊருல நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க. நாத்துனாரே, ஆரு குடியடி கெடுக்க வாரேன்னு பேசுமோன்னு பயந்தே.”
“இப்படியெல்லாம் சொல்லிட்டு, பயிற்சி கிளாசுக்கு என் பேரை எழுதிக்கிட்டாங்க. அஞ்சு நாளாக்கிப் புள்ளங்கள அக்கம் பக்கத்துல விட்டுப் போட்டுப் போனே. அங்கதா மண்ணை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்புறதிலேந்து, விதையைத் தேர்வு பண்ணி, திரம் மருந்து போட்டு வச்சு நாத்தங்கால் பயிர் பண்ணுவதெல்லாம் சொல்லிக் குடுத்தாங்க. எப்படி வேப்பம் புண்ணாக்கு உரமா போடுவது... கடலப் பயிருக்கு எப்படி செய் நேர்த்தி பண்ணுவது, புழுதி உழவு பண்ணுறப்பவே பூச்சி பாத்து அழிப்பதுன்னெல்லாம் சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாதுங்க... எல்லாம் கத்திட்டு வந்த பெறகு பூமிய வச்சிட்டு நா ஏ சோத்துக்குத் திண்டாடணும்னு தோணிச்சி.
“நாத்தனா வூடு பட்டாபிராம் பக்கத்துல... புருசன் செத்திட்டாரு. ஒரு மக கலியாணம் கட்டிருக்கு, ஒரு பய்யன் பி.ஏ. படிச்சிட்டு கழனி வேல செய்யிறா. இன்னொருத்தன் ப்ளஸ் டு படிக்கிறான்னாங்க.
“என்னப் பார்த்ததும் அவங்களே, மக ‘தான்வா’ பயிற்சிக்குப் போய் வந்து கடல போட்டு நல்ல விளைச்சல் எடுத்ததைச் சொன்னாங்க. அவங்க பையன் கருவமே இல்ல. விவசாயப் படிப்புப் படிக்கப் போறேன்னிச்சி. கூட்டியாந்தேன். பூமியப் பார்த்தோம். மண் பரிசோதனை முடிச்சி பத்து வண்டி ஏரி வண்டல் அடிச்சோம். ஆதிச்சப்புரம் கூட்டுறவு வேளாண் வங்கிக்குக் கூட்டிப் போச்சி. அவங்க ரொம்ப உதவி செஞ்சாங்க. நா நெல்லுப் போடலான்னு பார்த்தேன். அந்தப் புள்ள, நெல்லுக்குத் தண்ணி சவுரியம் இல்ல. மாணவாரி கடல பயிர் பண்ணலாம்னிச்சி.
“ஜி.ஆர்.ஐ. கடலை வித்து வாங்கி வந்தம். திரம் மருந்து கலந்து பாலதின் பையில் போட்டுக் குறுக்கி வச்சிட்டம். நெல்லு போல இதுல தண்ணி வுடக்கூடாது. பூமில ஈரம் பக்குவமா இருக்கணும். உழவோட்டிட்டே வாரப்ப ஒண்ணொன்னா விதைக்கணும். பிறகு எம்.என். மிக்ஸர் ஒரு கிலோவை ஒரு சட்டி மணலில் கலந்து தூவினோம். ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் நடுவுல ஒரு சாண் வுடனும். அப்பப்ப மழை பெஞ்சிச்சி. ஈரம் காயாம இருந்திச்சி. பதினைஞ்சு நா கழிச்சி களையெடுத்தோம். அப்பல்லாம் அது படிக்கப் போயிட்டது. எனக்குத் தயிரியம் வந்திட்டது. ஆளவச்சிட்டுக் களையெடுத்தேன். நாப்பத்தஞ்சி நாள் ஆனதும் ஜிப்சம் ஒரு இருபது கிலோவாங்கி, ஒவ்வொரு செடிக்கும் மண்போட்டு அணைச்சி விட்டோம். நூறு நாள்ள கடலை மண்ணுக்குள் தூர் இறங்கிச்சி. அப்ப ஒண்ணைப் புடுங்கிப் பாத்தம். கடலை புடிச்சிருந்திச்சி. ஒரே ஒரு தண்ணி மட்டும் ஏரிக்காவாயில கிடைச்சிச்சி. பிறகு பே மழைதான். எட்டு மூட்டை வேர்க்கடலை கிடைச்சிச்சி. பிறகு சொன்னாங்க. ஊடு பயிரா பயிறு உளுந்து போடலாமின்னு... இப்ப எங்க நாத்துனா குடும்பம் எனக்கு ரொம்ப ஒட்டிப் போச்சுங்க. அந்தப் பைய, கோயமுத்துார் விவசாய காலேஜில படிக்கிறா. படிச்சாலும் ஆம்புளயோ, பொம்புளயோ நாம சேத்தில கால வச்சாத்தா, ஊரே சோத்துல கை வைக்கணும்னு புரிய வைக்கணும். அச்சப்படக் கூடாதுங்க...”
கூட்டம் மாநாடு முடிந்து திரும்புகையில் செவந்திக்கு ஏதோ ஊட்டச்சத்து ‘டானிக்’ சாப்பிட்ட மாதிரி இருக்கிறது. கால் காணியில்லை, ஒரு ஏகரும் அறுபது சென்ட்டும் உள்ள முழு இடத்திலும் பயிர் பண்ண அப்பன் கடன் வாங்கித் தருவார். சின்னம்மாவின் கொல்லை மேட்டில், நாமும் ஏன் பாப்பம்மா சொன்ன கடலை பயிரிடக் கூடாது? அந்த பூமி ரங்கன் பெயரில் இருக்கிறது. இப்போது கணவர் சற்றே திருந்தி வருவது போல் நினைக்கிறாள். எனவே, அவர் மனசு வைத்துக் கடன் வாங்கித் தந்தால்... அதில் கடலையும், இதில் நெல்லும் பயிரிடலாமே...? இந்தத் தடவை முதலிலிருந்து எல்லாம் பாடம் படித்த படி செய்து விட வேண்டும்.
இரவெல்லாம் கிளர்ச்சியாக இருக்கிறது. அதிகாலையில் அயர்ந்து தூங்கி இருக்கிறாள்.
பொழுது விடிந்து, காலை வேலைகள் முடித்து, கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறாள். வாசலில் பேச்சுக் குரல் கேட்கிறது. அண்ணன்... அண்ணனும் அவள் புருசனும் பேசிக் கொண்டே படி ஏறி வருகிறார்கள்.
ஒ, பெண்சாதியையும் குழந்தைகளையும் விட்டு விட்டுத் தனியாக வந்திருக்கிறானா? என்ன விசயம் இருக்கும்? முதலிலேயே சந்தேகம் தான் தோன்றுகிறது. அப்பா பல் விளக்கிக் கொண்டிருக்கிறார். காறிக் காறிச் செம்பு நீரை வாயில் விட்டுக் கொப்புளிக்கிறார். அண்ணன் குரல் கேட்ட வெறுப்பா? அம்மா கொண்டாடிக் கொண்டாலும் அப்பா உள்ளூரச் சங்கடமடைந்திருக்கிறார் என்பதை அவள் அறிவாள். அந்தக் காறி உமியும் கொப்பளிப்பு வெறுப்பைப் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது.
“அப்பா, நீங்க தப்பா நெனச்சிடக் கூடாது. பேபிக்கு டாக்டர் பிரைம்ரி காம்ப்ளக்ஸ்னு சொல்லி மருந்து குடுத்திட்டு வாரோம். இங்க ஹைஜினிக்கா இல்ல. சளியும் காய்ச்சலும் வரக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு. சின்னப் புள்ள, எல்லாரையும் போல, கேணித் தண்ணிய மொண்டு குடிக்கும். அத்தோட சுகந்தாவுக்கு ‘மென்ஸ்ஸ் டைம்’ வசதி இல்லாத இடத்தில இருந்து பழக்கமில்ல. அப்பா இங்க ஒரு பாம்பே டைப் கக்கூஸ் கட்டிடுங்க. அதனாலேயே இங்க வரச் சங்கடப்பட வேண்டி இருக்கு...” என்று அப்பாவிடம் எதற்கோ குழை அடிக்கிறான்.
“கட்டவேணான்னு நான் சொல்றனா? வந்து லீவு ரெண்டு மாசமும் இரு. எப்படிவூட்டக் கட்டணுமோ அப்படிச் செலவு பண்ணிக் கட்டு!”
செவந்தி பாத்திரங்களை உள்ளே கொண்டு வந்த கையோடு அவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்க அந்த வாயிலிலேயே நிற்கிறாள்.
“செவந்தி ஏன் நிக்கிறே? நாங்க காபி ஒண்ணும் குடிக்கல. காபி கொண்டா...”
“காபிக்கு வைக்கிற...” என்று சொல்லிவிட்டு அவர்கள் பேசுவதைக் கேட்பதிலேயே அவள் தீவிரமாக இருக்கிறாள்.
“எனக்கு ரெண்டு மாசம் இங்க எப்படி இருக்க முடியும் அப்பா? தவிர இங்க டச் வுட்டுப் போயி ரொம்ப நாளாச்சி. மாப்பிள்ளதா இருக்காரு. வூட்ட இடிச்சிச் சவுரியமா கட்டிக்க வேண்டியது தான்?”
“ஒரு லட்சம் பணத்தை அனுப்பி வையி. மாடி போட்டு, குழா கக்குசெல்லாம் போட்டு நல்லா கட்டிடறோம். இந்த வெள்ளாமய நம்பி, வூடு கட்ட முடியாதப்பா இப்பதா செவந்தி ஏதோ போட்டு வெள்ளாம எடுத்தது ரொம்ப சிரமம். எனக்கும் வயிசாயிப் போச்சு. முடில. ஒழவு கூலி எழுபது எம்பதுங்கறா. அஞ்சேரு, ஆறேரு வச்சிப் பயிர் பண்ணி, வெள்ளாம எடுக்கறதப்பத்தி நெனக்கவே பயமா இருக்கு. அதுக்கும் ஆள் கிடைக்கல.” அப்பா பரவாயில்லையே என்று செவந்தி நினைத்துக் கொள்கிறாள்.
“இதையேதான் நானும் மாப்பிள்ளையிடம் சொல்லிக் கிட்டிருந்தேன். வெள்ளாமை பண்ண முடியலைன்னா வித்துக் காசாக்க வேண்டியதுதான? நானே ஒரு விசயம் கேள்விப் பட்டேன். இப்ப கடலூர் புவனகிரி எல்லாம் தோண்டி எண்ணெய் இருக்குன்னு கண்டுபிடிச்சி நிலமெல்லாம். ஏதோ ஒரு வெலக்கி சர்க்கார் ஆர்ச்சிதம் பண்ணிருக்கு. ஏரிக் கரைய சுத்தி இருக்கிற சின்னச்சின்ன கிராமம், குடிசை தரிசெல்லாம் ஒரு சாடிலைட் டவுன் ஷிப்பாக்கிடறதா பிளான் இருக்கிறதா கேள்விப்பட்டேன். இன்டஸ்ட்ரியல் டவுன்ஷிப்னு வேற சொல்லிட்டாங்க. அந்த இடம் வெலைக்கு வந்தா வித்துடறது நல்லது. அம்பதாயிரம் கண்டிப்பா கிடைக்கும். வித்துட்டு வீட்ட நல்லாக் கட்டுங்க. நாங்களும் வந்து இருக்கலாம்...”
பூமி நழுவுவது போல் செவந்தி அதிர்ச்சி அடைகிறாள்.
தோலக் கடிச்சி, துருத்தியக் கடிச்சி, ஆட்டக் கடிச்சி, மாட்டக்கடிச்சி மனிசனையே பதம் பாக்குறீங்களா?
“இத பாருங்க நா அந்தப் பூமில பயிர் வைக்கப் போற! அதெல்லாம் விக்கிய முடியாது! சின்னம்மா பூமி. என் சங்கிலிய சின்னம்மாக்குக் குடுத்தேன். நான் பயிர் வைப்பேன்!”
இப்படி ஓர் இடையீட்டை அவர்கள் எதிர்பார்க்க வில்லை. அப்பா மவுனமாக இருக்கிறார்.
அண்ணன்தான் அதிகாரக் குரலில் அதட்டுகிறான்.
“இதபாரு செவந்தீ! உனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. வீடு என் உரிமை. அந்த நிலமும் உன் புருசன் பேரில இருக்கு. அதுனால கம்முனு இரு!”
செவந்திக்கு ஒர் அரக்கனைக் கட்டிப் போட்டாற் போல் இருக்கிறது.
“என்ன அநியாயம்? சின்னம்மாவுக்கு மூவாயிரம் தேறாதுன்னு வித்திங்க. எழுதி வாங்கிட்டீங்க. இப்ப எனக்கு ஒண்ணுமே உரிமையில்லைன்னு சொல்றீங்க? ஏங்க, கேட்டுட்டுச் சும்மா உக்காந்திருக்கிறீங்க?”
குரல் கக்கலும் கரைசலுமாகப் பீறி வருகிறது.
“இதபாரு செவந்தி, நீ எதுக்கு முந்திரிக் கொட்டை போலத்தலையிடுற? எனக்கு என்ன செய்யணும்னு தெரியும். நீ பேசாம இரு.”
“அந்தப் பூமில என்னத்த வெளயும்? ஏரில தண்ணி இல்லை. ஒரு பக்கம் அரசியல்வாதிகளின் ஆளுங்க குட்ச போட்டுட்டு உட்கார்ந்திருக்காங்க. நம்ம நிலத்திலும் ஒண்ணும் பண்ண முடியாதபடி எவங்கிட்டன்னாலும் பத்துப் பத்துன்னு பணம் வாங்கிட்டு முப்பது பேரைக் கொண்டாந்து வைப்பானுவ. இப்படித்தான் மட்ராஸ் பூர நடக்குது. பேசாம மில்லுகாரர் வாங்கிக்கிறார்னா குடுத்திட்டு ரொக்கம் வாங்க. வூட்ட நல்லபடியாக் கட்டலாம். இல்லாட்டி ஏன் கடைய ஆட்டோ ஷாப்பாக்க வசதியாக இருக்கும்...”
“அதெல்லாமில்ல. எனக்கு லோன் வாங்கித் தருவீங்க. நா மணிலாக் கொட்டைப் பயிர்வைப்பேன்...”
“இத பாரு செவந்தி, நீ வீண் கனவு காணாத, லோன் லாம் எடுக்க நாவரமாட்டே...”
‘நான் பயிர் பண்ணுவே பாருங்க!’ மனசுக்குள் சபதம் செய்து கொள்கிறாள் செவந்தி.
----------------
அத்தியாயம் 13
சாந்தி காலனி வீட்டின் பெரிய முற்றத்தில் நெல் புழுக்கி உலர்த்தியிருக்கிறாள். தாழ்ந்த கூரையின் குட்டித் திண்ணையில் பிள்ளைகள் பள்ளிக்குப் போகும் சீருடையில் இருக்கிறார்கள்.
கூரை வீடானாலும் நல்ல அகலம், வசதி, பெரிய சாணி மெழுகிய முற்றம். திண்ணையும் கூட வழுவழுவென்று மிக நன்றாக இருக்கிறது. எந்த வேலையிலும் ஒரு திருத்தமும், மெருகும் தனக்கு வரவில்லை என்பது சாந்தியின் வீட்டைப் பார்த்தால் புலனாகிறது.
“வாங்கக்கா, வாங்க. வள்ளிக்கிழங்கு வெவிச்சேன், சாப்பிடுவீங்களா?” தட்டில் நான்கு கிழங்குகளுடன் உள்ளிருந்து வெளியே வருகிறாள். நெல் புழுக்கலில் அவித்ததா?
பிள்ளைகளுக்கு டிபன் டப்பியில் வைத்து மூடுகிறாள்.
அவளுக்கும் ஆவி பறக்கும் இரண்டு கிழங்குகளைத் தட்டில் எடுத்துக் கொண்டு வருகிறாள்.
“கிளம்புங்க; மணி எட்டே கால்... பஸ் வந்திடும்...!”
காலனியின் வளைவுக்கப்பால் சாலை வரை சென்று அவர்களை வழி அனுப்புகிறாள். “பத்திரம் சுஜாம்மா, தம்பி கையப் புடிச்சிட்டு கிராஸ் பண்ணணும்; பாத்து...”
டாடா காட்டிவிட்டு வருகிறாள்.
“நெல்லு இன்னக்கி வெவிச்சியா சாந்தி?”
“ஆமா விடிகாலம் எந்திரிச்சி ஒரு கால் மூட்ட வெவிச்சிப் போட்ட” செவந்தி கையிலெடுத்துப் பார்க்கிறாள்.
“பொன்னியா?”
“இது ஏ.டி.டி 36ன்னாங்க. கொஞ்சம் தாட்டியா இருக்கு. சோறு நல்லாருக்கும். புது நெல்லு தா...”
“சாந்தி, எனக்கு ஒண்ணுமே புடிக்கல. வெறுத்துப் போயி ஓடியாந்த. எங்கூட்ல தகராறு. இத்தினி வருசமா, உளுமையா, எல்லாரும் நல்லபடியா இருக்கணும்னு உழச்சி என்ன பலன்? ஒரு ஆதரவு, ஒரு பேச்சு இல்ல.”
“அன்னைக்குக் கடன் கட்டினப்ப, வங்கிக்காரரு, ‘சந்தோசம்மா அடுத்த பயிர் வைக்கக் கடன் வாங்கலாம் நீங்க’ன்னாரு. மொத மொதல்ல நா வங்கில கேக்கலாம்னு போயி செவனேன்னு வாசல்ல நின்னுட்டிருந்தே. எல்லாரும் சொன்னாங்க. நீல்லாம் போயிக் கேட்டா கிடைக்காது. வரதராச மொதலியாரோ, நாச்சப்பனோ போல பெரி... கைங்க சிபாரிசு பண்ணனுன்னாங்க. பயமாயிருந்திச்சி. பன்னண்டு மணி வர நின்னிட்டிருந்தே. அவுரே கூப்பிட்டு, உனுக்கு என்னம்மா வோணும் காலமேந்து நிக்கிறீங்கன்னாரு. சொன்னே. அதெல்லாம் தேவயில்ல. உங்கப்பா பேருல நிலமிருக்குன்னு சொல்றீங்க. அவரு வந்து கையெழுத்துப் போட்டாப் போதும்ன்னாங்க. உனுக்கும் தா. நா வாங்கினது தெரியும். இப்ப... பாப்பாம்மா சொன்னதைக் கேட்டு, எனக்கும் கொல்ல மேட்டுல வேர்க்கடலை சாகுபடி பண்ணணும்னிருக்கு. எங்கூட்டுக்காரரு கடனுக்கு உதவி செய்ய மாட்டாங்க. ஏ அண்ண வேற வந்து, வித்துப் போடுங்க, வூட்டக் கட்டுங்கன்னுதூபம் போடுறா! எனக்குக் கோபமா வருது. என்ன செய்யிறதுன்னும் புரியல. நீ ஒருத்திதா சாந்தி புரிஞ்சுக்கிற என்ன. அக்கம் பக்கம் ஒட்டு உறவு யாரும் தைரியம் குடுக்க மாட்டாங்க. அதென்ன, புருசன் சொல்றத மீறிச் செய்யிறதும்பாங்க. பொம்புளகோடு தாண்டக் கூடாது. சீத தாண்டினா, ஆனானா கஸ்டமும் பட்டாம்பாங்க. ஆ - ஊன்னா இதொரு கத. இன்னாதா ஆவுதுன்னு கால எடுத்து வைக்கத் துணிச்ச வரல. ஒரே வெறுப்பாருக்கு. இல்லாட்டி இப்பிடிக் காலங்காத்தால வூட்டப் போட்டுட்டு வாலறுந்த பட்டம் போல வந்திருக்க மாட்டே...”
செவந்திக்குக் கண்களில் நீர்த்துளி எட்டிப் பார்க்கிறது.
“சீ, இதென்னக்கா, நீங்க சின்னப் புள்ள போல விசனப்படுறீங்க. இங்க நீங்க வந்ததே சந்தோசம்க்கா. சிநேகம்ங்கறது. இதுதா. இப்ப என்ன, நீங்க பயிரு வைக்கக் கூடாதுன்னு சொல்றாங்களா, இல்ல, கடன் வாங்க உதவி பண்ண மாட்டேன்னு சொல்றாங்களா?”
“ரெண்டுந்தா சாந்தி. கடன் இல்லேன்னா, நா எப்படிப் பயிரு வைக்கிறது?”
“நீங்க முதல்ல நிலத்தப் பாருங்க. மண் பரிசோதனைக்கு அனுப்புங்க. மணிலாக் கொட்டை போடறதப் பத்திக் கேளுங்க.. அதுக்குள்ள யோசனை செய்யலாம்...”
“அப்படீன்னு சொல்லுறியா சாந்தி...?”
“ஆமாம்... முதல்ல ஒரு அஞ்சு நூறு போல புரட்ட வேண்டி இருக்கும். நா ஒரு அம்பது ரூபாச்சீட்டுக் கட்டுறே... பாக்கலாம். முன் வச்சகாலப் பின் வைக்க வேண்டாம். பயிர் வச்சிட்டோம்னா புடுங்கி எறியச் சொல்வாங்களா?”
சாந்தியின் கைகளை நேசமாகப் பற்றிக் கொள்கிறாள்.
“வள்ளிக் கிழங்கு சாப்பிடுங்கக்கா...”
மனத் தெம்புடன் வள்ளிக் கிழங்கை பிட்டுப் போட்டுக் கொள்கிறாள். நல்ல இனிப்பு.
அந்த மனதுடனே அவள் வீடு திரும்புகிறாள். நெல்லு மிசின் பக்கம் தானாகக் கால்கள் நகருகின்றன.
ஆயா பெருக்கிக் கொண்டிருக்கிறாள். புழுங்கல் நீர் கீழே ஓடி ஓடிப் புளித்த கள் வாடையாக மூக்கைத் துளைக்கிறது.
“ஆயா கன்னிப்பன் இல்லையா?”
“எங்கியோ அறுப்புன்னு போனா. வந்தா வாரச் சொல்லுறன்...”
வீட்டில் மச்சான் மாப்பிள்ளை இருவரும் இல்லை.
நீலவேனி வீட்டிலிருந்து இட்டிலி தோசை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார்கள். சட்டினி சிறு கிண்ணத்தில் இருக்கிறது. வாங்கி வந்த பாத்திரம் கழுவியிருக்கவில்லை. இவள் புருசன் குளித்துவிட்டுக் கிணற்றடியில் லுங்கியும், பனியனும் போட்டிருக்கிறான். அவரைப் பந்தலடியில் சரோசா நின்று காய் பறிக்கும் சுவாரசியத்தில் இருக்கிறாள்.
“இட்டிலி வாங்கின. ஏனத்தைக் கழுவி வைக்கிறதில்ல? டீ போட்ட வடிக்கட்டி, ஆத்தின ஏனம் எல்லாம் அப்படியே இருக்கு” என்று சிடுசிடுத்துக் கொண்டு அடுப்பில் ஓலைக் குத்தை செருகி எரிய விடுகிறாள். உலையைப் போடுகிறாள். அரிசியைக் கழுவிப் போட்டு, குழம்புக்குப் புளியை எடுக்கையில் அம்மா வருகிறாள்.
“கால நேரத்துல கோவிச்சிக்கிட்டு எங்கயோ போயிட்ட இப்ப பருப்புக் குழும்புக்குக் கூட்டவேணாம். கறி வாங்கிட்டு வாரன்னு போயிருக்காப்பல... ஆசையாச் சொல்லிட்டுப் போச்சி...”
“அப்படியா? மச்சானும், மாப்புளயும் கறிக் குழம்புக்கு ஆசைப்படுறரா? சரி, நடக்கட்டும். பண்ணி ஊத்து...” என்று மனசுக்குள் சொல்லிக் கொள்கிறாள். பழைய சோற்றைக் கரைத்துக் குடிக்கிறாள்.
“அடுப்பப் பாத்துக்க. நா வாரேன்” என்று வெளியே கிளம்புகிறாள்.
அப்பன் சாவடியில் இருக்கிறார்.
“அப்பா ஒரு நிமிசம் வாங்க...!
முள்ளுக் காத்தான் செடி சேலையை உராய்கிறது.
“ஏம்மா?”
“நா அந்தச் சின்னம்மா பூமில கடலக்காப் பயிர் வைக்கப் போறேன். நான் கத்துக்கிட்டாப் போல, செய் நேர்த்தி செஞ்சி வைப்பேன். இப்ப மண் பரிசோதனைக்கு அனுப்பணும். அத்தோட சர்வே நம்பர் வேணும்... தாங்க...”
“இப்ப வேணுமா?”
“ஆமா...”
“நா இங்க நிக்கிற, நீங்க பாத்துக் கொண்டுட்டு வாங்க... மண்ண பரிசோதனைக்கு அனுப்புமுன்ன, சர்வே நம்பர்... விவரமெல்லாம் எழுதி அனுப்பணும்...”
“சரிம்மா, நீ மண்ணு கொண்டிட்டு வா... நானே கொண்டிட்டுப் போய்க் குடுக்கறேன் ஆபிசில...”
“அவங்களுக்குத் தெரிஞ்சா எதும் பேசுவாங்கப்பா, வானாம்... நானே போற...”
“சரி... நீ எடுத்திட்டு வா. நான் பாத்து எழுதித் தார...” வயல் வரப்புகளினூடே நடந்து, செல்லியம்மன் கோயில் பக்கம் பெரிய சாலை கடந்து அப்பால் ஏரிக்கரை மேடு தெரிகிறது. அதற்கும் முன்பாகத்தான் அந்த பூமி. கருவேல மரம் ஒன்று அடையாளம். முள்முள்ளாகத் தலைவிரித்த பேய்ச்சி போல் இருக்கிறது. இன்னொரு பக்கத்தில், எல்லைக் கல்லுடன் ஒர் உதிய மரம் இருக்கிறது. ஏரித் தண்ணிர் வரும் தடம் நீர் கண்டு எத்தனையோ நாட்களாயின என்று சொல்கிறது.
ஆட்டுக்குக் குழை தேடி ஒரு பயல் கம்பும் இரு ஆட்டுக் குட்டிகளுமாகப் பார்த்துக் கொண்டு போகிறான்.
நிலத்தின் நடுவே நடக்கிறாள். சிறு சிறு பாசி பூத்தாற் போல் ஒரு திட்டுப் பச்சை. வானம் எப்போதோ பொழிந்ததுண்டு என்று நம்பிக்கை கொடுக்கிறது. செவந்தி அப்போது தான் எல்லையில் கண் பதிக்கிறாள். எல்லைக் கல்லை அடுத்த பூமியில் ஒரு நரைத்த மீசைக்காரர் அரை டிராயர் போட்டுக் கொண்டு நிற்கிறார். அங்கு கிணறு வெட்டுகிறார்கள் என்று தெரிகிறது.
அந்த மண் யாருக்குச் சொந்தம் என்று அவளுக்குத் தெரியாது.
கிணறு வெட்டி, வெளியே மண்ணும் பாறைச் சில்லுமாகக் குவித்திருக்கிறார்கள். இப்போதும் வேலை நடக்கிறது. மேலே கயிறு கட்டி, உள்ளிருந்து வரும் மண்ணை அரை டிராயர்க்காரர் வாங்கிக் கொட்டுகிறார்.
அடுத்த நிலத்தில் வசதியுள்ள யாரோ கிணறு வெட்டுகிறார். அதனால் இவளுக்கு நீர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. செவந்திக்கு மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. வானை நிமிர்ந்து நோக்கி தெய்வத்தை நினைக்கிறாள்.
மண் பரிசோதனைக்கு மண் எப்படி எடுக்க வேண்டும்?
கூடை, சிறு மண் வெட்டி, பாலிதீன் பை, ஆகிய சாமான்களைக் கீழே வைக்கிறாள். கூடையில் அந்த நோட்டு இருக்கிறது. ஒரு தரம் பிரித்துப் படிக்கிறாள்.
நிலத்தில் ஓரிடத்தை, மேல் பரப்பை மண் வெட்டியால் வெட்டிக் கொள்கிறாள். கன்னியப்பனுக்கு இதைக் காட்ட வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனைக் காணவில்லை.
இவளே நன்றாகப் பல இடங்களில் வெட்டி மண்ணைப் பொல பொலப்பாக்குகிறாள். அவற்றைச் சேர்த்து ஒரு கூட்டல் குறி போடுகிறாள். இடைப்பட்ட நான்கு பகுதிகளில் இருந்தும், எதிர் எதிர் பகுதிகளில் இருந்து மண்ணை எடுத்துக் கொள்கிறாள். மறுபடியும் அதில் ஒரு கூட்டல் குறி போடுகிறாள். அப்போது அந்த அரை நிஜார்க்கார நரைத்த மீசைக்காரர்.அவளிடம் வருகிறார்.
“என்னம்மா? நீயும் கிணறு வெட்டப் போறியா? நாந்தா தனியாக இங்க கிணறு வெட்டப் போற. நீயும்...”
“வணக்கம் ஐயா. நான் கிணறு வெட்டல. இது மண் பரிசோதனைக்கு அனுப்பத் தேர்ந்து எடுக்கறேங்க...”
“அடஅப்படியா? எப்படி? எனக்குத் தெரியலியே?”
அவள் ‘V’ வடிவில் தோண்டி மண்ணை எடுத்ததைக் காட்டுகிறாள்.
“இதை நாம் உழவர் பயிற்சி ஆபிசில் கொண்டுக் கொடுத்தால் அவங்க நம்ம மண்ணுக்கு என்ன சத்து வேணும்னு சொல்லுவாங்க... பாலிதீன் பையில போட்டு. அரை கிலோ போதும்ங்க... கட்டி, நம்ம சர்வே நம்பர், பேரு, அட்ரசு எழுதிச் சீட்டுக் கட்டணும்...” என்று காட்டுகிறாள்.
“ஆமா, இதெல்லாம் உங்களுக்கு யாரு சொன்னாங்க?”
“என்ன அப்படிக் கேட்டீங்க! ‘தமிழ்நாடு பண்ணை மகளிர் பயிற்சி திட்டம்’னு ஒண்ணிருக்கு. டேனிடா ஆபீசில ஒரு பெரிய ஆபீசர் அம்மா இருக்காங்க. அவங்களும், நம்ம விவசாய ஆபீசருங்களும் சேர்ந்து எங்களைப்போல நிறைய பெண்களுக்கு அஞ்சஞ்சு நாள் பயிற்சி நடத்தி இதெல்லாம் சொல்லிக் குடுக்கிறாங்க. நான் முதல்ல பயிற்சி எடுத்ததும் கால் காணில நெல்லு, வெள்ளக் கிச்சிலி ஆடிப்பட்டம் போட்டு, ஒம்பது மூட்டை எடுத்தேங்க...”
“ஆ...? உங்கூட்டில, நீங்கதா விவசாயம் செய்யிறவங்களா வூட்டுக்காரர் அண்ணந்தம்பி இல்லையா?”
“இருக்கிறாங்கையா, அப்பா செய்வாரு. அவருக்கு வயசாச்சி. ஏகாம்பரம்னு பேரு. இத, இதக்கூட எங்க சின்னம்மா இருந்தப்ப, ஏரித் தண்ணி வந்து வெள்ளாமை கடலை கேவுறு போடுவாங்க. அவங்க பட்டணத்தோடு போயிட்டாங்க. அப்பாக்கு வயிசாயிடுச்சி, உழைக்க சிரமம். நாந்தா இப்ப இதுல மணிலா போடணும்னு தீவிரமா வந்திருக்கிறேன்.”
இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கன்னியப்பன் வந்து விடுகிறான்.
“அக்கா, கூப்டனுப்பினிங்களாமே...?”
“ஆமா... நா இங்கே இருப்பேன்னு ஆயா சொல்லிச்சா? நீ அறுப்புக்குப் போயிருக்கேன்னாங்க...?”
“இல்ல வைக்கோல் கொண்டாந்து போர் போட்ட. வேல முடிஞ்சிச்சி வாரேன். அக்கா இங்க பயிர் வைக்கப் போறிங்க? இதா, இவங்க கூட கேணி தோண்டுறாங்க. தண்ணி வந்திருக்கு போல...?”
“ஆ...” என்று சிரித்துக் கொண்டு மீசையை முறுக்கிக் கொள்கிறார். அவள் அப்பனுக்கு மீசை கிடையாது. இவருக்கும் அப்பன் வயசு இருக்கலாம். ஆனால் தாட்டியாக, உயரமாக இருக்கிறார். காதோரம் மட்டுமே கம்பிகள் போல நரை இழைகள். கிருதாவும் வெளுப்பு. மற்ற இடங்கள் வழுக்கை. பார்த்தால் படித்து விவரம் அறிந்தவர் போல் இருக்கிறார். ஆனால் கூட நான்கு பேரை வைத்து வேலை வாங்காமல், இவரே வேலையாளுக்கு சமமாக மண் வாங்கிக் கொட்டுகிறார்.
“ஏம்மா, இவரு யாரு? தம்பியா?”
“தம்பி போலதா. ரொம்ப வேண்டியவரு. இவுரு ஒத்தாச இல்லன்னா நா ஒண்டியா வெள்ளாம செய்யிறது சிரமம். ஏங்க நா தரிசாக் கெடக்குற இந்த பூமில வெள்ளாம பண்ணனும்னு வாரப்ப நீங்க கேணி வெட்டிட்டிருக்கீங்க, நல்ல சவுனம். எனக்கும் தண்ணி குடுப்பீங்களா? தண்ணி எப்படி வந்திருக்கா?”
மீசைமுறுக்குவது இவர் வழக்கம் போல. ஏனோ சிரிப்பு வருகிறது. அவர் நகர்ந்து சென்று, “வா வந்து பாரு!” என்று கூப்பிடுகிறார். செவந்தி சென்று குனிந்து பார்க்கிறாள். உள்ளே கோவணம் மட்டும் உடுத்திய இரண்டு ஆட்கள் இருக்கிறார்கள். மேலே இதற்குள் இன்னோர் ஆள் வந்து கல் மண் தொட்டியை வாங்கிக் கொட்டுகிறான். உள்ளே சேரும் நீருமாக முழங்கால் அளவு இருக்கும் என்று தோன்றுகிறது. பதினைந்து இருபதடிக்குள் தான் தோண்டி இருக்கிறார்கள். தண்ணிர் வருகிறது...
“ஏரிக்கால் இல்ல? இதா கூப்பிடு தூரத்துல ஏரி. முன்னெல்லா தண்ணி எப்பவும் கிடக்குமாம். இப்ப அந்தப் பக்கமெல்லாம் பாக்டரிக்காரங்க வூடு கட்டிட்டாங்க. பெரிய ஸ்கூல் ஒண்ணிருக்கு. போர்டிங் ஸ்கூல். அவங்க வேற முந்நூறு ஏக்கர் வளச்சிட்டிருக்காங்க...”
“ஏம்மா, நீ சொன்ன பயிற்சி ஆம் புளங்களுக்கு இல்லியா?”
செவந்தி நின்று யோசிக்கிறாள்.
“ஆம்புளங்களுக்கு ஏற்கனவே இருக்குங்க. எஃப்டிஸியோ என்னமோ சொல்றாங்க. ஆனா, தான்வா பொம்புளங்களுக்கு மட்டுந்தா. சிறு விவசாயிங்க, பொம்புள நிலத்தில வேல செய்யிறவங்களுக்கு இது சொல்லிக் குடுக்கிறாங்க...”
“நா... பட்டாளத்துல இருந்தவ. வெட்டுவ கொத்துவ, எல்லா வேலயும் செய்வே. ஆனா வெள்ளாம சூட்சுமம் தெரியாது. இது என் தங்கச்சி நிலம். அவளுக்குப் புருசன் இல்ல. ஒரே ஒரு பொண்ணு இருக்கு. இந்த நாலு ஏக்கரா போல, ஏதோ ஆளவச்சி வெள்ளாம பண்ணேன்னா ஒண்ணுந் தேறல. இப்பதா நா ஓய்வு பெற்று வந்திட்டே. ஒரு கேணி எடுப்பம்னு வந்திருக்கே...”
“அதுனால என்னங்க? நீங்க என் அப்பனப் போல இருக்கறீங்க. இதொண்ணும் பெரி... விசயம் இல்ல. எப்படிப்படி பண்ணணும்னு நாஞ் சொல்ற முதல்ல ஏக்கருக்கு எட்டு செண்டு நாத்தங்கால் வுடனும். நீங்களும் மண் பரிசோதனைக்கு நாஞ் சொல்றாப்பல மண்ணெடுத்து அனுப்புங்க. பூமி தங்கச்சி பேரில தான இருக்கு?”
“இது சொல்லப் போனா, என் பூமிதா. எம் பய்யனதா தங்கச்சி மகளுக்குக் குடுத்துப் படுவெட்டாப் போய் சேந்தா... அதொரு சோகம். அதென்னத்துக்கு இப்ப...? இனி அத அந்தப்புள்ள பேரில எழுதி வச்சிடுவ. ஒரு புள்ள, மூணு வயசு போல இருக்கு... அதுவா ஆசப்பட்டு, கலியாணம் கட்டிக்கிறதுன்னாலும் அவங்க அனுபவிக்கணும்.”
குரல் கரகரக்கிறது.
“ஐயா, உங்களுக்கு எத்தினி பெரிய மனசு? பொம்புள பேருக்கு நிலம் யாருமே எழுதறதில்ல. உரிமையோடு இருக்க வேண்டிய நிலத்தக் கூட அவ பேருக்கு எழுதறதில்ல. இத, இந்தபூமி எங்க சின்னம்மாக்குச் சேர வேண்டியதுங்க. அவங்க புருசனும் செத்திட்டான். வாழவே இல்ல. ஒரு பொம்புள புள்ள அவங்கப்பா எங்க பாட்டனே அவ வேற கலியாணம் கட்டிக்கிட்டா, பூமி கைய வுட்டுப் போயிடும்னு எங்கப்பா பேருக்கு எழுதிட்டாரு. இப்ப இந்த பூமி எங்கூட்டுக்காரரு பேருல இருக்கு... எனக்கு லோன் வாங்கணுமின்னா, அவரு சம்மதிக்கணும், கையெழுத்துப் போடணும். பெரிய ரோட்ல, சைகிள் கடை வச்சிருக்காரு. வெள்ளாமையில் கொஞ்சம் கூட இஸ்டம் இல்ல. ஏங்க சோறு போடுற மண்ணவுட்டுப் போட்டு வேற என்ன தொழிலச் செய்ய?”
அவர் கை மீசையைத் திருகுகிறது. “சபாஷ் உம் பேரன்னம்மா?”
“செவுந்திங்க?”
அவருக்கு மண் பரிசோதனை செய்ய பத்து இடங்களில் இருந்து ‘V’ என்ற மாதிரியில் வெட்டி அந்த உட்புற மண்ணைச் சேர்க்கிறாள். பிறகு கூட்டல் குறிபோட்டு எதிரும் புதிருமான பகுதி மண்ணைச் சேர்த்து அதில் கூட்டல் குறியிட்டு கடைசியில் அரை கிலோ மண் வரும் வரையிலும் அதைக் குறைக்கிறாள்.
நேரம் போனதே தெரியவில்லை. கன்னியப்பனுக்கும் மண் பரிசோதனை காட்டியாயிற்று.
வயிறு பசி எடுக்கிறது. ஆனால் மிக உற்சாகமாக இருக்கிறது. உள்ளூர அவள் செய்து கொண்ட உறுதி மேலும் வலிமை பெறுகிறது. நம்பிக்கை ஒளி தெரிகிறது.
“கன்னிப்பா, இங்கமின்னப் போல, கொஞ்சம் காக்காணி, நெல்லும் போடுவம். தண்ணி பட்டாளத்துக்காரரு தருவாரு. அந்த மண்ணுல நவரைப்பட்டமா வேர்க்கடலை போடுறது. அதுக்கு அப்பா லோன் எடுத்துத் தருவாங்க. அன்னைக்கு அந்த மாநாட்டுல அஞ்சல அம்மான்னு ஒருத்தர் சொன்னாங்க. பயிரை மாறி மாறிப் போடணும்னு. நெல்லு விதச்சஇடத்துல கடலை போடுவோம்.”
“சரிங்கக்கா....”
இவள் கூடையில் பிளாஸ்டிக் பை மண்ணைப் பத்திரமாக வைத்துக் கொள்கிறாள். வீட்டுக்குச் சென்றதும் சர்வே நம்பர், விலாசம் எழுதிக் கட்டி ஆபிசில் கொண்டு கொடுக்க வேண்டும்...
அவர்கள் கிளம்பு முன் பட்டாளக்காரர் கூப்பிடுகிறார்.
“செவந்தியம்மா! வாங்க!”
“என்ன அப்படி சொல்லாம கொள்ளாம போறீங்க, செய்யிறத எல்லாம் செஞ்சி போட்டு?”
“சடையா, பூசை சாமானெல்லாம் எடுத்து வையி”
கிணற்றடியில் ஓர் இலைப் பரப்பி, அதில் பொரிகடலை, பழம் வெல்லம் வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள். கேணித் தண்ணிர் ஒரு செம்பில். உள்ளே இருந்த இரு ஆட்களும் வெளியே வந்திருக்கிறார்கள். சடையன் என்று பெயர் கொண்ட ஆள், அவற்றைப் பூமிக்கும் வானுக்கும் நீருக்கும் படைக்கிறான்.
“சாமி, தண்ணியும் பூமியும் மானமும் எங்களுக்கு என்னைக்கும் பக்க பலமா இருக்கணும்... பொங்கிப் பொழியணும். நல்லா வைக்கணும். ஊரு உலகம் சுபிச்சமாகணும்...”
எல்லோரும் கும்பிட்டு நிற்கிறார்கள்.
வெல்லமும் பொரியும் கடலையும் நெஞ்சமெல்லாம் அன்பாய்ப் பரவுகின்றன.
---------------
அத்தியாயம் 14
“இத பாருங்க செவந்தி அம்மா. உங்க பேரில எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அதனாலதான் இப்ப, நீங்க ஒண்ணரை ஏக்ராவில பயிரிடப் போகும் மணிலாப் பயிருக்கான இடு பொருட்கள் எல்லாம் தந்து உதவுறோம். உங்கப்பா பேரில் நிலம் இருக்கிறது. அவரை அழைத்து வந்து, எல்லாப் ஃபாரத்திலும் ஒப்புப் போட்டுக் கொடுக்கச் சொன்னிங்க. அதில் ஒரு சிக்கலும் இல்ல... ஆனா, அதே போல, இந்த பூமிச் சொந்தக்காரர் வந்து சான்றிதழ், ஃபாரங்களில் நிரப்பி ஒப்புப் போட்டு தரணும். இப்போது நீங்களே விவசாயம் பண்ணறவங்கண்ணு தெரிஞ்சாலும் ரூல், சட்டம் ஒண்ணிருக்கு. நிலம் யார் பேரிலே இருக்குதோ அவங்க பேருக்குத்தான் குடுப்போம்....”
செவந்தி சங்கடப்பட்டு நிற்கிறாள்.
“ஒரு கால் காணிக்கு... முன்ன கொடுத்த மாதிரி கொஞ்சமா, அதுகூடக் கொடுக்க மாட்டீங்களா சார்...?”
“எப்படிம்மா கொடுக்க? நீங்க உங்க புருசனக் கூட்டிட்டு வாங்க. இல்லாட்டி உங்க பேரில நிலத்த ரிஜிஸ்தர் பண்ணிக்குங்க...”
கடலைப் பயிருக்கு வேண்டிய நுண்ணூட்டச் சத்து, ஜிப்சம் எல்லாம் வாங்கி வண்டியில் அப்பாவும் கன்னியப்பனும் போய் விட்டார்கள். தைக் கடைசி. வேர்க் கடலைக்கு நடுவில் ஊடு பயிராகப் பயிறு விதைக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறது. மண் காய்ந்திருக்கிறது. உழவோட்டிக் கடலையை விதைத்து விட்டு நுண்ணூட்டச் சத்து மணலைக் கலந்து தூவ வேண்டும். ஆட்கள், அப்பாவும், கன்னியப்பனும், இவளும் சாந்தியும்தாம்.
ஆனால், கடலை விதைத்த கையுடன், கால்காணி கொல்லை மேட்டில் நெல் எப்படிப் பயிரிடப் போகிறாள்?
பட்டாளக்காரர் நாற்றங்கால் உழவு ஓட்டி நிலம் தயார் பண்ணுகிறாரே?
ஒரு எட்டு நூறு - ஆயிரம் எப்படியானும் திரட்டி, பயிர் வைக்க வேண்டும். வண்டி சென்ற பிறகு பஸ் நிறுத்தத்தில் வந்து நிற்கிறாள். மோட்டார் போட்டு, கரெண்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்.
அவர் பட்டாளக்காரர். விவரம் அறிந்தவர். எங்கே யாரைப் பார்த்துக் காரியம் சாதிக்க வேண்டும் என்று ஊக்கமாகச் செயல் படுகிறார். கடைசியாக ரங்கனிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.
அவள் அண்ணன் விடை பெற்ற போது வீட்டில் இல்லை. வீட்டில் இப்போது பொருந்தி அவள் வேலை செய்வதில்லை. வெளியே செல்லவும் கடன் ஏற்பாடு பண்ணிப் பயிர் வைக்க முயற்சி செய்வதுமே நேரத்தைத் தின்று விடுகிறது. அம்மா இடை இடையே ஊசியாகக் குத்துவாள். உரைப்பதில்லை.
பஸ் கஜேந்திர விலாஸ் ஒட்டல் முன்பு நிற்கிறது. ஓரெட்டுத்தான் சைக்கிள் கடை. கசகசவென்று புழுதி குறையாத கூட்டம். பிற்பகல் மூன்று மணி இருக்கும்.
யாரோ ஒரு தாடிக்காரருடன் அவன் பேசிக் கொண்டிருக்கிறான். சிவலிங்கம் தான் பங்க்சர் ஒட்டுகிறான். இவளைப் பார்த்து விடுகிறான். “மொதலாளி, அம்மா வந்திருக்கிறாங்க!” என்று எழுந்து செல்கிறான். சிவலிங்கத்துக்கு முன் வெகு நாட்களுக்கு சோமயிஜிதான் இங்கே இருந்தான். நெளிவு சுளிவு வியாபாரம் கற்றான். புதிய சைக்கிள்கள் தருவித்து விற்பது, பழைய சரக்கு வாணிபம் எல்லாம் அவன் இருந்த போது செழிப்பாக இருந்தது. அவன் பத்துப் படித்தவன். அம்பத்துரில் எங்கோ கம்பெனியில் மாசம் மூவாயிரம் சம்பாதிக்கிறானாம். கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டான். அந்தப் பெண் பள்ளியில் டீச்சராக இருக்கிறாளாம். பத்திரிகை வைக்க வந்தான். அவன் போகவில்லை. சிவலிங்கம் ஒரு வகையில் உறவுக்காரப் பையன். தொட்டுத் தொடாமல்... நீலவேணிக்கு அண்ணன் பிள்ளை உறவு. எட்டாவது ஃபெயில். இங்கே வேலைக்கிருக்கிறான். ரங்கனுடன் பேசும் ஆள் தாடி வைத்திருக்கிறான். பெரிய பொட்டு, மல் ஜிப்பா, தங்கப்பட்டைக் கடிகாரம், மோதிரம்...
“யாரப்பாஅது?” என்று மெல்லிய குரலில் கேட்கிறாள்.
“அவுருதாம் புரோக்கர் பன்னீரு.”
“முதலாளிக்கிட்டப் போயி, ஒரு நிமிசம் வந்திட்டுப் போகச் சொல்லு...”
நிற்கிறாள். அவன் ஏதோ சொல்லியனுப்பபுகிறானே ஒழிய வேண்டுமென்றே திரும்பிப் பார்க்கவில்லை.
சீ! இப்படி ஒரு அவமானமா?
இந்த ஆளிடம் என்ன கேட்க?
விடுவிடென்று வீட்டுக்கு வருகிறாள். முன்பே வண்டியில் இடுபொருட்கள், விதை மூட்டைகள் வந்திருக்கின்றன. வாசல் நடைத்திண்ணையில் அடுக்கியிருக்கிறான்.
செவந்தி உள்ளே சென்று பையில் உள்ள ரசீது, பத்திரங்களைப் பெட்டியில் வைத்துப்பூட்டுகிறாள்.
கிணற்றடியில் சென்று, தண்ணிரை இறைத்து ஊற்றிக் கொண்டு குளிக்கிறாள். சேலையைச் சுற்றிக் கொண்டு வருகையில், அப்பனும் மாப்பிள்ளையும் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள்.
“சுடுதெண்ணி காச்சி வையி!” என்று சொல்கிறார் அப்பா.
சோறு ஆறி இருக்கிறது.
செவந்திதான் சோற்றை வைத்து, சட்டியில் இருந்த காரக் குழம்பை ஏனத்தில் ஊற்றி எடுத்து வருகிறாள்.
“அப்பளப்பூ வறுக்கலாம்னு பார்த்தே. எண்ணெயில்ல...” என்று அம்மா பின்பாட்டுப் பாடுகிறாள்.
“வெறும் சோத்த எப்படித்தின்ன? ஒரு கீரை, அவரை ஒரு எழவும் இல்ல! வரவர வூட்டுல ஏன் வாரோமின்னிருக்கு” என்று கணவன் கோபிக்கிறான்.
“அவரயில பூச்சி வுழுந்தடிச்சி. அதத்தா நாலு குழம்புல போட்ட. பொறியலுக்குப் பத்தாது. அதுல மாடு வாய் வச்சிடிச்சி. பத்தாத்ததுக்கு சோப்புத் தண்ணியெல்லாம் ஊத்துறீங்க...?” என்று அம்மா சொல்கிறாள்.
“ஆமா, நா சோப்புத் தண்ணிய ஊத்துர. மாட்டே அவத்து வுட்டே. ஏ, நெதியும் மெயின் ரோடுலந்து வராரு. முட்டக் கோசு, தக்காளி, உருளைக்கிழங்கு வாங்கியாரது! நீங்க வாங்கி வந்து நா ஆக்கிப் போடுறது தட்டுக் கெட்டுப் போச்சி!”
“தா, செவுந்தி அநாசியமா என்னிய வம்புக்கிழுக்காத? உங்கண்ணெ ஈரலு, தொடன்னு வாங்கியாந்தானே? ஆக்கிப் போட்டுக் கழிச்சுட்ட? உனுக்குக் கண்டவங்க கூட ஊர் சுத்தறதும் பேசுறதும், புருச சரியில்லன்னு சொல்லுறதும் சரியாப் போயிடுது...”
“ந்தாங்க! நீங்க மச்சான் ஒறவு புதுசுன்னா வச்சிக்குங்க! மச்சானுக்காகப் புதுசா அதெல்லாமும் சாப்புடக் கத்துட்டிருக்கிறீங்கன்னு நான் கண்டனா?” என்று நொடிக்கிறாள்.
“அட ஏம்பா, இப்படிச் சின்ன புள்ளகளப் போல சண்ட போடுறீங்க? கட்டிக் குடுக்கற வயசில பொண்ணு நிக்கிது. ஒருத்திர ஒருத்தர் அனுசரிச்சிப் போங்கப்பா. செவந்தி சொல்றதும் நாயந்தா. அது என்ன சொல்லுது? இப்ப மூணு மூட்ட எடுக்கற எடத்துல ஒம்பது மூட்ட எடுத்தமே, இது போலப் பயிரு செய்யணும்னு ஆசப்படுது. நாயந்தான? நீ கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமில்ல?”
“மாமா, அது மட்டும் பேசாதீங்க! இந்த வெவசாயம்லாம் சூது. நெல்லா வெளஞ்சிருக்கும் திடீர்னு மழை கொட்டி நட்டமாப்பூடும். போனவருசம் முத்து நாயக்கர் பண்ணையில, பத்தேக்கரும் மழ பெஞ்சி அறுத்துக்கறதுக்கு முந்தி ஊறி... பல்லு மொளச்சிப் பாழாப் போச்சி. மறுபடி மண்ணச் சரியாக்க அம்பதாயிரம் செலவு பண்ணாரு. நா ஏற்கனவே கடன் வாங்கி, வித்து வே.பாரம் பண்ணுற. நெலத்தில இவங்கள நம்பிக் கடன் வாங்க சம்மதிக்க மாட்ட? ஆளவுடுங்க!” அத்துடன் நிற்கவில்லை.
“பேச்சுக்குப் பேச்சு, இது இந்த வூட்டில நா எதுமே செய்யில போலயும், இவதா வேல செய்யறா போலும் பேசறது சரியில்லை. எங்கேந்தோ வார சில்வானமெல்லாம் அலட்சியமாகப் பாக்குதுங்க. காலம, எதிர்த்த எலக்ட்ரிக் சாப்புல ஒரு மீசைக்காரர் வந்து நின்னாப்பல. அவர் மெனக்கெட்டு வந்து, நீங்கதா, செவுந்தியம்மா புருசனா...? என்னு கேட்டாரு. எனக்கு எப்படியோ இருந்திச்சீ”
‘ஒ இதுதானா விசயம்?’ என்று மனசுக்குள் சிரித்துக் கொள்கிறாள்.
‘ரங்கா சைக்கிள் மார்ட்’ வாசலில் வந்து நின்று ‘செவந்தியம்மா புருசரா’ என்று கேட்க மீசைக்காரருக்கு என்ன தைரியம்?
“ஆமா, நானுந்தா கேக்குற. அது பயிர் பண்ண ஆசப்படுது நாயந்தான? அவவ பொஞ்சாதி பேச்சக் கேட்டு ஆடுறா. இவன் ஸ்கூல், டியூசன்னு மாசம் அஞ்சாயிரம், ஆறாயிரம் சம்பாதிக்கிறான்னு கேள்வி. வூடு கட்டியாச்சி. மாமியா வூட்டில அந்தஸ்துகாரங்க. துபாயி, அமெரிக்கான்னு மச்சாங்க இருக்காங்கன்னு சொல்லுறா. ஏ, நாம வந்து தங்கணுமின்னா வசதி செய்யணும்னா நாம பூமியை வித்துச் செய்யணுமா? தென்ன மரத்தோட வச்ச பூமி நம்ம கைக்கு வாரதக்கில்ல. இவம் படிப்பு, கலியாணம்... பத்து சவரன் தாலிச் சங்கிலி, சீலை எல்லாம் இவனா வாங்கினா? நம்ம கண்ணுமின்ன, நம்ம புள்ள ஒண்ணுமில்லாம நிக்கிது. இப்ப இன்னும் மூணு நாலு வருசம் போனா, அந்த புள்ளக்கி ஒரு கலியாணம்காச்சி செய்யத் தாவல? அது மனுசியானதுக்கு மாமங்காரன் என்ன செஞ்சா? கவுரதியா, ரெண்டு சவரன், ஒரு வளவி பண்ணிப் போட்டானா? பூன்னு ஒரு மோதிரம். அதுல பார்வையா ஒரு கல்லு கூட இல்ல. போலிப்பட்டுல ஒரு பாவாடை. ஏ, ஒரு நல்ல சீலைதா எடுத்தா என்ன? நா.அப்பவே தெரிஞ்சிட்டே அவனால நமக்குப் பிரோசனம் இல்ல. கடசி காலத்துல பொண்ணுதா நமக்குத் கஞ்சியூத்துவா, புள்ள புள்ளங்கறதெல்லாம் சும்மான்னு”
ஓடிச் சென்று அப்பனைத் தழுவிக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. அப்பனுக்கே உணர்ச்சி வசப்பட்டதில் தொண்டை கம்முகிறது.
அவள் அவசரமாக அடுப்பில் சூடு பண்ணிய வெந்நீரைக் கொண்டு வருகிறாள்.
“இந்தாங்கப்பா, சுடுதண்ணி...”
அம்மாவுக்கு இது ரசிக்குமா?
“எதுக்கு இப்ப அதும் இதும் பேசணும்? இருக்கிறது அது ஒண்ணு. ஆயிரம் சொன்னாலும் தலை சாஞ்சா அவந்தா வரணும். அத்தப் பகச்சிக்க முடியுமா?” என்று முணுமுணுக்கிறாள்.
சாப்பாடு முடிந்து சைக்கிளில் ஏறிக் கொண்டு அவன் போகிறான். செவந்தியும் சாப்பிட்டு முடித்துவிட்டுச் சாமான்களைக் கழுவி வைக்கிறாள்.
கடலை வித்து, ஜி.ஆர். ஐ. என்று கொடுத்திருக்கிறார்கள். இதை இரவு திரம் மருந்து கலந்து குலுக்கி வைக்கவேண்டும். ஊடு பயிர் என்று பயிறு விதை வாங்கி இருக்கிறாள். இதற்கு ரைசோபியம் என்ற நுண்ணூட்டச்சத்து சேர்க்க வேண்டும்... சோறு வடித்து ஆற வைத்த கஞ்சியில் அந்தப் பொட்டலத்தைக் கரைக்கிறாள். அதில் விதைகளைப் போட்டுக் கலக்கி வைக்கிறாள். அந்த மேடையையே சுத்தமாக துடைத்து, விதைகளை உலர்த்துகிறாள். பொழுது நன்றாக இறங்கி விட்டது. சரோவும் சரவணனும் பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறார்கள். அவர்கள் அப்பா ஓட்டலில் இருந்து ஏதோ காரசாமான் பொட்டலமும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
செவந்தி ஒர் உறுதியுடன் வீட்டிலிருந்து கிளம்புகிறாள்.
குறுக்கு வழியாகச்செல்லியம்மன் கோயில் பக்கம் சாலை கடந்து இவர்கள் பூமிப் பக்கம் வருகிறாள்.
கிணற்றுப் பக்கம் பளிச்சென்று விளக்கு எரிகிறது.
பம்ப் செட் ஓடித் தண்ணிர் கொட்டுகிறது... பெரியவர், அவருடைய மகள் போலிருக்கிறது. அவளும் இருக்கிறாள். சடையன் இருக்கிறான். நல்ல நேரம். வீடு வரை போக வேண்டியில்லை. பம்ப் ரூமொன்று கட்டியிருக்கிறார்கள். எவ்வளவு விரைவில் வேலை நடக்கிறது?
“அடேடே... செவந்திம்மா! வாங்க! உங்கள நினைச்சிட்டேன். இப்பதா தண்ணி கொட்டுது பாருங்க! நூறு வயசு உங்களுக்கு. போனது போக...”
“அவ்வளவெல்லாம் வாணாங்க! லோலுப்பட வேணும்...”
“அதுதான் சொகம் செவுந்தியம்மா! இதுதா எம் மருமக, மக எல்லாம் லச்சுமி... அதா என்தங்கச்சி சொர்ணம்மா...”
ஒரு குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறாள். “வணக்கம்மா...”
“இந்த நிலத்துச் சொந்தக்காரங்க... இவங்க சொல்லித்தா மண் பரிசோதனைக்கு அனுப்பின. இன்னைக்குக் கேட்டு வாங்கிட்டே. ஏரி வண்டல். சான எரு போடுங்க போதும்னாரு. நீங்க உங்க ரிசல்ட் வாங்கிட்டீங்களா?”
“இனித்தா வாங்கணும் ஐயா...” எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. நெஞ்சில் வார்த்தைகள் சிக்கிக் கொள்கின்றன.
“நா உங்களப் பாக்கத்தா வந்தேங்க. நீங்க காலம இவங்க கடைப்பக்கம் போயிருந்தீங்களாம், சொன்னாங்க...”
சிரித்துக் கொண்டே மீசையைத் திருகிக் கொள்கிறார். “எம் பேரு ராமையா, உங்க பூமிக்குப் பகத்துல கிணறு தோண்டிப் பயிர் பண்ணப் போறேன். செவுந்தியம்மா சொன்னாங்க ‘எங்க வூட்டுக்காரர்தா சைகிள் மார்ட் வச்சிருக்கிறார்னு’ ன்னு. நானே சிநேகம் பண்ணிட்டே. சரிதானே, செவுந்தியம்மா?”
“அதான் சொன்னாங்க...”
“இதா வீடு இருக்கு வாங்க பேசிக்கலாம். லச்சுமி, புள்ளையக் கூட்டிட்டுப் போங்க. பனி இருக்கு. இன்னும் போகலாம்...” அவர்களைப் போகச் சொல்கிறார். பம்ப்பை நிறுத்தி அறைக் கதவைப் பூட்டுகிறார். பிறகு இருவரும் நடக்கிறார்கள்.
“ஐயா, உங்ககிட்ட... எப்படி கேக்கிறதுன்னு தெரியல. ஆனா என்னமோ ஒண்ணு கேக்கலாம்னு தயிரியம் சொல்லுது. பாங்க்காரரு கடன் குடுக்க மாட்டே. வூட்டுக்காரரு கையெழுத்துப் போடணுங்கறாரு.. ஆனா எனக்குள்ள ஒரு காக்கானினாலும் இங்கே போடணும்ன்னு இருக்கு. நீங்க ஒரு உதவி மட்டும் செஞ்சா...”
“சொல்லுங்க செவுந்திம்மா...”
“எனக்கு ஒராயிரம் ரூபா கடனா குடுத்து உதவி செய்யனும். நா நிச்சியமா உழச்சி, முதலெடுத்து உங்கக் கடன எம்புட்டு வட்டி போடுறீங்களோ, அப்படிக் குடுத்திடறேன்...”
வானில் இருள்பரவி நட்சத்திரங்கள் பூத்துவிட்டன.
அவளுக்கு அவள் குரல் அந்நியமாகத் தெரிகிறது.
“செவுந்தியம்மா, வெள்ளிக் கிழம நா வார, உங்க வூட்டுக்கு. வூடு எங்க சொன்னிங்க?”
“கிழத் தெரு கோடிவூடு. அடுத்து ஒரு குட்டிச் சுவரு. எட்டினாப்புல சாவடி, இருக்கும்...”
“சரி. இப்ப வூட்டுக்கு வந்து ஒருவா காபி சாப்பிட்டுப் போங்க.”
“இருட்டிப் போச்சையா...”
“பரவாயில்ல ரோட்டுவர கொண்டாந்து வுடுறே!”
அவர்கள் நடக்கிறார்கள்.
--------------
அத்தியாயம் 15
“அப்பா, நீங்க வந்து கைவச்சதே பெரிய சந்தோசம். பாருங்க வேத்து வுடுது. போயி உக்காந்துக்குங்க. வேல்ச்சாமி, ஏரப் புடியப்பா...” என்று அப்பா கையை விடுவித்துக் கரைக்குக் கூட்டிச் செல்கிறாள் செவந்தி. புடவைத் தலைப்பால் அவர் நெற்றியைத் துடைத்து விசிறுகிறாள். செம்பில் இருந்து கஞ்சித் தண்ணிரை எடுத்துக் கொடுக்கிறாள்.
கடலை விதைப்பு நடக்கிறது. அப்பா தானும் ஓர் ஏர் பூட்டி உழுவேன் என்று பிடிவாதமாக வந்தது அவளுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், முழு பூமியிலும் விதைப்பு. கன்னியப்பன் ஒர் ஏர்; வேல்ச்சாமி ஓர் ஏர். பூமி உள்ளே ஈரமாக, விதைக்கப் பதமாக இருக்கிறது. முன்பே கன்னியப்பன் ஒருவனே நான்கைந்து நாட்களாய் விதை நிலத்தைப் பதமாக்கி இருக்கிறான். உழுமுனை நிலத்தில் பதிந்து செல்கையில் திரம் மருந்து போட்டுக் குலுக்கி வைத்திருந்த கடலை வித்துக்களை ஒன்றொன்றாகச் செவந்தி விடுகிறாள். பின்னால் அடுத்த ஏர் அந்தக் கடலை மீதும் மண்ணைத் தள்ளி மூடுகிறது. எண்ணி ஐந்து வரிசைக்கு ஒன்றாக, ரைஸோபியம் போட்டு ஊட்டமேற்றிய பயிறு வித்தையும் விதைக்கிறாள்.
முழுதும் விதைத்து முடிய மாலை வரையாகிறது. இடையில் பசியாற ஒர் அரை மணி நேரம் தான் ஒதுக்கல்.
அப்பன் நிறைந்த மனசுடன் பூவரச மரத்தடியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். பணத்தை எண்ணிப் பையில் வைத்து அவரிடம் தான் கொடுத்திருக்கிறாள்.
நட்டு முடிந்ததும் தயாராக வைத்திருந்த பாண்டு சட்டியில் மணலையும் எம். என். மிக்ஸ்சரையும் கலந்து நெடுகவும் துரவுகிறாள்.
கரையேறி மாடுகளைத் தட்டிக் கொடுக்கிறார்கள். வேல்ச்சாமி ஏர் மாடு இரண்டும் அவனே கொண்டு வந்தான். அவனிடம் எண்பது ரூபாய் கூலியை அப்பா எண்ணிக் கொடுக்கிறார்.
“கன்னிப்பா... இந்தா!” கத்தையாக நோட்டுக்களைக் கொடுக்கிறார்.
“இருக்கட்டும் மாமா, வூட்டுல மாட்டை ஏரைக் கொண்டு கட்டிப்போட்டு தண்ணி ஊத்திட்டு வந்து வாங்கிக்கறேன்!”
ஒரு பெரிய மலையேறி நிற்பது போல் அழகாக உழுமுனை பதிந்து நடவு முடித்த நிலத்தைச் செவந்தி பார்க்கிறாள்.
இதற்கு முன் மணிலாப் பயிர் அவள் செய்ததில்லை. நெல் நாற்று நடவு, களை பறிப்பு, அண்டை வெட்டுதல் செய்திருக்கிறாள். இப்படிப் புழுதி உழவு செய்து ஈரமாக மட்டும் வைத்து நடும் சூட்சுமம் இப்போதுதான் கண்டிருக்கிறாள். கொல்லை மூட்டில் சின்னம்மா கடலைப் பயிர் செய்து வீட்டுக்கு வந்து எடுத்து வந்ததும், உருண்டை பிடித்ததும் வேக வைத்துத் தின்றதும் நினைவுகள்தாம்.
இப்போது இங்கே தண்ணிர் காணும் பூமியில் வேர்க்கடலை பயிரிட்டிருக்கிறாள்... ஒண்ணரை ஏக்கருக்கு மேல்...
கர்ப்பூரம் கொளுத்திக் கும்பிட்டு விட்டு இருட்டுக் கவ்வு முன் வீடு திரும்புகிறாள்.
மாடுகளைக் கால்வாயில் கழுவிவிட்டுத் தானும் சுத்தமானவளாக ஏர் சுமந்தபடி பின்னே வரும் கன்னியப்பனைப் பார்க்கிறாள்.
அப்பா இவனுக்கு அறுபது ரூபாய்தான் கொடுப்பாரோ? ஏனெனில் ஏரும் மாடும் இந்த வீட்டுக்குரியவை தானே?
“இரு... வாறேன்...”
அப்பன் முற்றத்துக் குறட்டில் புதிய ரேடியோவைப் பார்த்து மகிழ்கிறார். குழந்தைகளும், அவர்கள் தந்தையும் ஓட்டல் பகோடாவும் பஜ்ஜியும் தின்று கொண்டிருக்கிறார் கள். சினிமாப்பாட்டு கேசட்டில் ஒடிக் கொண்டிருக்கிறது.
“அப்பா... கன்னிப்பனுக்கு ரூபா கொடுங்க...”
அப்பா தயாராக வேட்டி மடிப்பில் வைத்திருக்கிறார். அதே கற்றையைக் கொடுக்கிறார்.
செவந்தி எண்ணுகிறாள்.
அறுபது ரூபாய்...
“அப்பா வேல்ச்சாமிக்கு எட்டுக் குடுதீங்க. இன்னொரு இருபது குடுங்க.”
அப்பன் நிமிர்ந்து பார்க்கிறார்.
பிறகு பதில் சொல்லாமல் உள்ளே எழுந்து செல்கிறார். பெட்டியைத் திறந்து இன்னும் இருபது ரூபாயைக் கொண்டு வருகிறார்.
பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு வாய் துடிதுடிப்பதைச் செவந்தி ரசிக்கிறாள்.
கன்னியப்பன் முற்றத்தில் நின்று “அஞ்சலி... அஞ்சலி” பாட்டை மகிழ்ந்து ரசிக்கிறான்.
“அஞ்சலி சினிமாவுல வருது...”
“நீ அந்த சினிமா பாத்தியா?” என்று சரோ கேட்கிறாள்.
“இல்ல. அது காஞ்சிவரம் கொட்டாயில ஓடிச்சி....”
“இதபாரு கன்னிப்பா, பேசாம ஒரு கலர் டி.வி. டெக்கு வாங்கி வச்சிக்க. படம் ஒரு நாளக்கி மூணு வாடகைக்கு எடுக்கலாம். காஞ்சிவரத்துக்குப் போகவேணாம். வேலூருக்குப் போக வேணாம். வூட்டிலேந்து படுத்திட்டே பார்க்கலாம்..”
கன்னியப்பன் வெள்ளையாகச் சிரிக்கிறான். “நீ வாங்கி வையி, சரோ நான் நெதியும் பாக்கறேன்.”
பாட்டிக்குக் கொள்ளாமல் கோபம் வருகிறது.
“த... வேல முடிஞ்சிச்சா, கூலிய அங்கேயே வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே? உள்ளாற வந்து, என்ன சிரிப்பு, பேச்சு? ஏ. சரோ, உள்ள உன் ரூம்புக்குப் போ கூலிக்காரங் கிட்ட என்னவெ கண்டப் பேச்சு?”
கன்னியப்பன் முகம் ஊசி குத்தினாற் போல் சுருங்கி விடுகிறது. அவன் மேற் கொண்டு இருபது ரூபாயை வாங்கிக் கொள்ளாமலே போகிறான்.
கையில் அந்தப் பணத்துடன் “கன்னிப்பா... கன்னிப்பா...” என்று ஓடுகிறாள். இல்லை. அவன் பரவி வரும் இருளில் மறைந்து போகிறான்.
இவள் கோபம், சரோவின் மீது திரும்புகிறது. கோபம் புருசனின் மீதுதான். இப்போது, ஆயிரத்தைந்நூறு கொடுத்து இது வாங்க வேண்டியது அவசியமா? பயிர் வைக்க அவள் பிறர் கையை எதிர்ப்பார்க்கிறாள்.
“பரிட்சைக்குப் படிக்க இது அவசியமில்ல? நா இங்க ஒரு வா கஞ்சி குடிக்க கணக்குப் பாத்துக்கிட்டு லோலுப்படுற. நெதியும் ஓட்டல் சாமான்... பாட்டு.. சமீன்தார் வூடு கணக்கா... இது இப்பத் தேவையா? பூமில போட்டா சோறு குடுக்கும். இந்தப் பாட்டக் கேட்டுப் பரிட்சை எழுதி, பாஸ் பண்ணி பொம்புளப் புள்ள சம்பாதிச்சிக் குடுக்கப் போவுது! நாளெல்லாம் அந்தப்புள்ள ஒழச்சிருக்கு. ஆனா இருபது ரூபா கணக்கு பாக்குற...” கண்ணில் கசியும் நீரைத் துடைத்துக் கொண்டு ஆற்றாமையை விழுங்குகிறாள்.
“நீதா இப்ப கச்சி கட்டுற செவந்தி. ஏ நீயுந்தா கேளேன்? இது ஸோனி... ஆயிரத்து நூறுக்கு வந்திச்சி. ரெண்டு மாசமாத் தாரேன்னு வாங்கிட்டு வந்தே. மத்தவங்க சந்தோசப்படுறதே பாத்தா உனக்கு ஏம் பொறுக்கல?”
அவள் பேசவில்லை. பட்டாளத்துக்காரர் வெள்ளிக் கிழமை வருவதாகச் சொல்லி இருக்கிறார். அவள் செய்து காட்ட வேண்டும்.
வெள்ளிக்கிழமை காலையில், வீடு மெழுகுகிறாள். நிலைப்படிக்கு மஞ்சள் குங்குமம் வைக்கும்போது, கணைப்பு குரல் கேட்கிறது.
“நீங்க உக்காருங்கையா, செவந்திம்மா வேர்க்கடல போட்டிருக்காங்க. பாத்தேன். நாமும் பயிர் பண்ணணும்னு தா வந்திருக்கிற. எனக்குப் பழக்கம் இல்ல. பட்டாளத்திலேந்து வந்த பெறகு வடக்க ஆஸ்பத்தரி ஒண்ணுல செக்யூரிட்டியா வேல பாத்தேன். சம்சாரம் சீக்காளி. ஒரு மகளக் கட்டிக் குடுத்து அது பங்களூரில் இருக்கு. சம்சாரம் போய்ச் சேர்ந்திச்சி. ஊரோடு வருவம்னு வந்திட்ட...”
அவள் கை வேலையை விட்டு விட்டு மனம் துள்ள வாயிலுக்கு வருகிறாள்.
“வாங்கையா. வணக்கம். வாங்கையா, உள்ளாற வாங்க திண்ணையில் உக்காந்துட்டீங்க...” என்று அகமும் முகமும் பூப்பூவாய் சொரிய வரவேற்கிறாள்.
“ம்... இருக்கட்டும்மா. இதுதா சவுரியமா இருக்கு... இவங்க ஊக்கமாப் பாடு படுறதப் பாக்கவே சந்தோசமா இருக்கையா... நான் படையில் இருந்தவன். எங்கோ பாலைவனப் பிரதேசத்தில் உள் நாட்டுச் சண்டைகளைச் சமாளித்து நிறுத்தும் அமைதிப் படைக்குப் போனவன். சண்டையெல்லாம் ஏன் வருது? சாப்பாடு, தண்ணி, காத்து, மானம் மறைக்கத் துணி, இடம் இதெல்லாம் எல்லோருக்கும் சரியாக இல்ல. ஒருத்தன மத்தவன் வஞ்சிக்கிறான். சுரண்டுறான். சனங்களுக்கு ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கையில்லை. பொம்பளங்க, கர்ப்பிணிங்க, பச்சபுள்ளங்களுக்குக் குடுக்கப்பட்ட தருமப் பால் ரொட்டியக் கொள்ளயடிச்சு விக்கிற மகா பாவம் பாத்தேன்... மனசு தவிச்சி என்ன புண்ணியம்? ஒரே மகன். தங்கச்சி மகளுக்குக் கட்டிக் கொடுத்தேன். நமக்குத்தா ரொம்ப படிக்க வசதியில்ல. பையன் நல்லா பி.ஏ., எம்.ஏ., ன்னு படிக்கணும்னு ஆசப்பட்டேன். அவன் படிக்கிறத வுட, அரசியல் அக்கப் போர், சினிமா நடிகர் விசிறிகள் சங்கம்னு தலையக் குடுத்திட்டு... பாவிப் பய, தலைவருக்காக தீக்குளிச்சிச் செத்தான். கலியாணம் கட்டி வேற வச்சேன். அந்தப் பொண்ணு பாவத்தைக் கொட்டிக்கிட்டான்...” தலையைக் குனிந்து கொள்கிறார்.
இவளுக்கு நெஞ்சு சில்லிட்டாற் போல் இருக்கிறது.
சிறிது நேரம் ஒலியே சிலும்பவில்லை.
லச்சுமி... பச்சை பால் மணம் மாறாத முகம். அதற்கு ஒரு குழந்தை. அதற்குள்...
“அரசியல் தலைவருக்காக, இவனுவ ஏ நெருப்புக் குளிக்கிறானுவ... பயித்தியம்தான் புடிச்சிருச்சி. அவனுவ ஓட்டு வாங்க என்னமோ புரட்டு பித்தலாட்டம் பேசுறானுவ. இந்த இளவட்டம் எல்லாம் அந்த மயக்குல போயி விழுந்துடுதுங்க. அதும் இந்த சினிமாதா ஊரக் கெடுக்குதுங்க. ஆம்புள், பொம்புள எல்லாம் போயி, வயித்துக்குச் சோறு இருக்கோ இல்லியோ போயி வுழுவுதுங்க...”
“எனக்கு இந்தப் பயிர்த் தொழில வுட மேன்மையானது ஒண்ணில்லன்னு நிச்சயமாருக்கு. எங்கப்பாரு காலத்திலோ, பாட்டன் காலத்திலோ, இந்தப் பூமி சர்க்கார் குடுத்திருந்திச்சாம். ஆனா, மேச்சாதிக்காரங்க, குடிமகன் வெள்ளாம பண்ணக் கூடாதுன்னு தடுத்தாங்களாம். நான் அந்தக் காலத்துல, குடியாத்தத்துல ஸ்கூல் படிச்சேன். பட்டாளத்துக்குப் போன. இந்தப் பூமிய எழுதிவுட்டு, மீட்டுக் கிட்டேன். எக்ஸ் சர்வீஸ் மேன்னு ஒரு பக்கம்... நாலு ஏகரா... சம்சாரம் சீக்குக்காரி. அதுக்காக மங்களுரில் இருந்திட்டிருந்தேன். அவ போன பெறகு, வந்திட்டே. செவந்தியம்மாளப் பாத்ததும், இவங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. இவங்களுக்கு மட்டுமில்ல, சபிக்கப்பட்டதா நெனச்சிட்டிருக்கமே, பொம்புளப் புள்ளங்களுக்கே நல்ல காலம்னு தோணிச்சி...”
மனம் குதிபோட காபித் தூளை ஏனத்தில் போட்டுப் பொங்கு நீரை ஊற்றுகிறாள். இதற்குள் வெளியே பல்குச்சியுடன் சென்றிருந்த புருசன் கிணற்றடியில் முகம் கழுவுவது புரிகிறது. பளபளவென்று தேய்த்த தவலைச் செம்பில் காபியை ஊற்றுகிறாள். இரண்டு தம்ளர்களுடன் வருகிறாள்.
“குடு. நான் கொண்டுட்டுப் போறே...”
முகத்தைத்துடைத்துக் கொள்கிறான். சீப்பால் முடியைத் தள்ளிக் கொள்கிறான். தேங்காய்ப் பூத்துவாலையைப் போட்டுக் கொண்டு காபியுடன் செல்கிறான்.
உள்ளுக்குள் இருக்கும் சிறுமை உணர்வை, மரியாதைப் பட்டவர் முன்னிலையில் காட்டமாட்டான். சாந்தி புருசன் முன் மிக மரியாதையாக நடப்பான். ஆனால் அவர்கள் அகன்ற பின் குத்தலாக ஏதேனும் மொழிவான். அவனுடைய சிறுமை உணர்வுகள் ஆழத்தில் பதிந்தவை. அவை அவளைக் கண்டதும் ஏதோ ஓர் உருவில் வெடிக்கும்.
“நீங்கல்லாம் சாப்பிடுங்க. நான் காபியே குடிக்கிறதில்ல. என் தங்கச்சி குடிக்கிது. தங்கச்சிப் புள்ளயும் குடிக்கிது. இல்லாட்டி தல நோவுதுங்க. வடக்கேல்லாம் போறப்ப, தேத்தண்ணி குடிப்பம். மனசு இளகல, மறக்க பீர் குடிப்பம். இங்க எண்ணத்துக்கு? மனசு தெளிஞ்சி உறுதியாயிடிச்சி. பொய்யும் பித்தலாட்டமுமா இருக்கிற உலகத்துல வாழணும் பாருங்க.”
“கேணி எடுக்கறப்ப, சில்லும் களியும் கரம்பையும் எல்லாம் வந்திச்சி. பாறை இல்ல. தண்ணி அந்தச் சில்லிங்களா வர்றப்ப குபுகுபுன்னு வந்திச்சி. தெளுவா... இப்ப குழப்பம் இல்ல. காலம எந்திரிச்சி நீராகாரம்தா குடிப்ப. ஆச்சி, எனக்கு அறுபதாகப் போவுது. காலம கழனி வேல, அஞ்சாறு கிலோ மீட்டர் நடை, எல்லாம் நல்லாருக்கு...”
“இருக்கட்டும் நீங்க ஒரு டம்ளர் குடியுங்க. நம்மூட்ல கறந்த பாலு...”
அவர் எடுத்துக் கொள்கிறார்.
புருசன் முன்பு பணம் தருவது பற்றிப் பேசப் போகிறாரோ என்று செவுந்தி அஞ்சுகிறாள்.
ஆனால் அது நடக்கவில்லை.
அவன் சட்டையைப் போட்டுக் கொண்டு, “ஐயா, கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க உட்கார்ந்து பேசிட்டிருங்க...” என்று நடையில் உள்ள சைக்கிளை உருட்டிக் கொண்டு கிளம்புகிறான்.
அவன் சென்ற பிறகு அவர் செவந்தியைக் கூப்பிடுகிறார்.
ஒரு கவரை தன் சட்டைப் பையில் இருந்து எடுத்து நீட்டுகிறார்.
“செவந்திம்மா, இதுல ஆயிரத்தைந்நூறு இருக்கு. நீங்க எவ்வளவு பயிர் வைக்க முடியுமோ, அவ்வளவுக்கு வையுங்க.. பிடியுங்க...”
அவளுக்குக் கண்கள் நிறைகின்றன.
“ஐயா, இதுக்கு ஒரு பத்திரம் எழுதி வாங்கிக்குங்க. அப்பா நீங்க நம்ம ராமசாமிக்கிட்டச் சொல்லி ஒரு பத்திரம் எழுதிட்டு வாங்க...”
“எதுக்கம்மா? எனக்கு உம் பேரில நம்பிக்கை இருக்கு. நீ என்னை நம்பு. நீ பயிர் வைக்கணும். நல்லா வரணும். நாமெல்லாரும் சிநேகமா இருக்கணும். கஷ்ட நஷ்டம் பகிர்ந்துக்கணும்... இதுல பணம் குறுக்க வரக்கூடாது. அது ஒரு கருவி. ஒரு சாதனம். அது வாழ்க்கை இல்லம்மா... நா வரட்டுமா?”
அவர் மீசையை முறுக்கிக் கொண்டு எழுந்திருக்கிறார்.
அப்பனும் எழுந்திருக்கிறார்.
செவந்தி கையெடுத்துக் கும்பிடுகிறாள்.
குரலே எழும்பவில்லை.
---------------------
அத்தியாயம் 16
“யக்கோ! உங்கள அவங்க கையோடக் கூட்டியாரச் சொன்னாங்க!” என்று கன்னியப்பன் வந்து நின்றான்.
அன்றாடம் இந்த வயலுக்கும் அந்த வயலுக்குமாக நடந்து கால்கள் வலிக்கின்றன. அதுவும் முதல் நாள்தான் இவர்கள் வயலில் நடவு செய்தார்கள். எட்டு பேர் நடவு. அரிசியும், வெஞ்சனமும் கொடுத்து, அத்தனை ஆட்களுக்கும் மீசைக்காரர் வீட்டிலேயே சமையல் ஏற்பாடு செய்தார்கள். சாந்திதான் உதவினாள். மீசைக்காரர் வயலில் வாரம் முன்பே நட்டுவிட்டார்கள். அவர்களுக்கு எடுத்ததற்கெல்லாம் சந்தேகம். ஏதேனும் சிறு சந்தேகம் வந்தாலும் லட்சுமி சிட்டுக்குருவி போல் ஒடி வந்துவிடுகிறாள்.
“அக்கா, திரம் மருந்து எவ்வளவு போடணும்? தீப்பெட்டிலதான அளந்து போடணும்? மாமா இல்லேங்கறாரு... அக்கா நீங்களே வந்து காட்டுங்கக்கா...”
இவள் கை வேலையாக இருப்பாள். பொழுது போயிருக்கும். மீசைக்காரர் வாயிலில் நிற்பார். சிநேகங்களில் இப்படிச் சிறு சிறு முட்கள் இருக்கத்தான் இருக்கின்றன. என்றாலும் அம்மா அவர்கள் சாதியைப் பற்றிய குத்தலைப் பேச்சில் இழையோட விடுவது ரசிக்கும்படி இல்லை.
எலும்பில்லா நாக்கு எதுவும் பேசும். அப்படி அந்தத் தெரு பேசும் என்பதில் சந்தேகமில்லை. வீட்டுக்குள், அந்தத் தெரு உறவுகளில் அரச பொரசல் விழுந்து விட்டது. அவர் பணம் கொடுத்திருக்கும் செய்திக்கும் கண் மூக்கு காது முளைத்திருக்கும்.
“ஏம்பா, நேத்துத்தான பார்த்தன். நல்லாதான இருந்திச்சி? என்ன சேதி இப்ப?”
“அங்க ஓரிடத்தில நட்ட பயிரில வைரஸ் நோய் வந்திருக்குமோன்னு பயப்படுறாரு. மோனாகுரோட்டபாஸ் அடிக்கணும்னு விவசாய ஆபிசில சொன்னாங்களாம்...”
“நிசமாலுமா? நீதா பெரி அனுபவமுள்ள ஆளாச்சே? நோயா வந்திருக்கு?”
“இல்லிங்க வேப்பம் புண்ணாக்கு யூரியாவில் கலந்து வச்சா சரியாப் போயிடுங்க. கொஞ்சம் அந்த எடத்தில குத்து கம்மியாக இருந்திச்சி. ரெண்டு நாக்கழித்து அந்தப் பொண்ணு வந்திச்சி. ஆபீசிலேந்து கத்தையா நோட்டீசு வாங்கிப் படிச்சிட்டு ஒண்ணொண்ணாப் பாக்குறாரு...” என்று சிரிக்கிறான்.
“இப்ப வாரதுக்கில்ல. வேலை முடிச்சிட்டோ, பொழுதோடயோ வந்து பாக்குறேன்னு சொல்லப்பா. யூரியாவும் வேப்பம் புண்ணாக்கும் கலந்து அடுத்த வாரம் வைக்கணுமில்ல... நீ ஒண்ணு செய்யி. என்ன வுட சாந்தி அனுபவப்பட்டவ. அவங்க வூடும் இவ்வளவு தொலுவில்ல. அவளைக் கூப்பிட்டுக் காட்டு” என்று அனுப்புகிறாள்.
பிள்ளையே பெற்றிராதவள் ஒரு கைப்பிள்ளையை வைத்துக் கொண்டு தடுமாறுவது போலிருக்கிறது!
வீட்டு வேலை முடிய மணி பன்னிரண்டாகிறது. காலையில் பழைய சோறு உண்டது திம்மென்றிருக்கிறது. வடித்த கஞ்சியில் உப்புக் கல்லைப் போட்டு அருந்துகிறாள். விடுவிடென்று கொல்லைக்கு நடக்கிறாள். கடலைப் பயிர் பரந்து சிறுசிறு இலைகளுடன் கண் கொள்ளாக் காட்சியாகப் பசுமை விரித்திருக்கிறது. ஊடுபயிர்... பயிறு, உயரமாக அகன்ற பெரிய இலைகளுடன் தன்னை இனம் காட்டிக் கொள்கிறது. அடுத்த வாரம் களை எடுத்து மண் அணைந்து ஜிப்சம் போட வேண்டும். இது அப்பன் பொறுப்பு. அவரே வண்டி ஓட்டிச் சென்று எடுத்து வந்து விடுவார். இப்போதெல்லாம் உடம்பு அவ்வளவு மோசம் இல்லை...
வெயில் உரைக்கவில்லை. உடமையாளில்லாமல் எழுத்துக் குத்து இல்லாமல், யாரோ ஒருவர், வீட்டுக்குக் கொண்டு வந்து பணம் கொடுத்தார். பிரியமாக, உரிமையுடன் அவளை வந்து பார்க்கச் சொல்கிறார். கால்கள் மனோ வேகமாக இழுத்துச் செல்கின்றன. எங்கே தரிசு, எங்கே பச்சை, எங்கே ஆடு மேய்கிறது என்று எதையும் பார்க்காமல் அவள் நடக்கிறாள்.
கழனிப்பக்கம் யாருமே இல்லை. பம்ப் ரூம் பூட்டிக் கிடக்கிறது. நாற்றுக்கள் பிடித்து, தலை நிமிர்ந்து நன்றாகத்தானே வளர்ந்திருக்கிறது.
வரப்பிலே நடந்து பார்க்கிறாள். முழுப் பரப்பையும் பார்க்கும் பொறுமை இல்லை. நோயொன்றும் இல்லை. கன்னியப்பன் சொன்னாற் போல் விட்டுப்போன இடத்தில் மூன்று நாட்களான பின் விட்டு வைத்திருந்த நாற்றுக்களை ஊன்றியிருக்கிறாள்.
அது வளர்ச்சி குறைந்து தெரிகிறது. களைக்கொல்லி போட்டு, நாற்றுக்களை அலோஸ் பைரில்லத்தில் நனைத்து நன்றாகவே நடவு செய்தார்கள் இருபது ஆட்கள். கிணற்றடிக்கு வருகிறாள். கிணற்றில் தண்ணிர் தெளிந்து இருக்கிறது. ஓராள் ஆழம் இருக்கும். நான்கடி கூட இல்லை கைப்பிடிச் சுவர். இத்தச் சுவருக்கும் பூசவில்லை. இந்தத் தண்ணிர் கற்கண்டு போல் இருக்கிறது. உப்பு, சவர், எதுவும் இல்லை. இங்கே வந்தால் தண்ணிர் குடிக்கத் தோன்றுகிறது. இவர்கள் வீட்டுக் கிணற்றுத் தண்ணிர் கூட இவ்வளவு நன்றாக இருக்காது. கிணற்றில் இறங்கப் படி வைத்திருக்கிறார்கள். ஆனால், செவந்திக்கு அந்த நேரத்தில் இறங்கத் தோன்றவில்லை.
அப்படியே நடந்து, செல்லியம்மன் கோயில் பக்கம் வருகிறாள். அது புளியந்தோப்பாக இருந்த காலம் அவளுக்கு நினைவு இருக்கிறது.
கோயில் முன் மைதானம். பெரிதாக இருந்தது. இப்போது போல் பஸ் போகும் சாலை இல்லை. ஒற்றையடிப் பாதைதான். கோயில் முன் ஆடி மாசம் விழா நடக்கும். கூத்து நடக்கும். வாணுவம் பேட்டைக்காரர் ஒருவர் வந்து ஆஞ்சநேயர் வேசம் கட்டுவார். அண்ணன் அவரே மாதிரி வீட்டில் வந்து எல்லோர் முன்பும் ஆடிக்காட்டுவான். அண்ணன் எவ்வளவு வாஞ்சையாக இருந்தான்.
இங்கு புளியம் பிஞ்சு உதிர்ந்து கிடக்கும்... பொறுக்கித் தின்று கொண்டு ஸி.எஸ்.ஐ. ஸ்கூலுக்கு நடந்து செல்வார்கள். அம்சு, அவள் அக்கா பாக்கியம், தணிகாசலம் என்ற பையன். வெட வெட என்று எல்லோரும் கீழத் தெருவில் இருந்து பள்ளிக் கூடம் சென்றார்கள். முட்டக் கண்ணு டீச்சர், மூன்றாவதில், இவள் முடி சீவிக் கொண்டு வரவில்லை என்றால் தண்டனை கொடுப்பாள். சின்னம்மா போன பிறகு அம்மா இவளுக்கு ஒழுங்காக முடி சீவி விட்டதே இல்லை. இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய மாற்றம் வந்திருக்கிறது?
சரோ முதல் வகுப்புக்குப் போகும் போதே, முடி சீவி, இரட்டைப் பின்னல் போட்டு ரிப்பன் பூப்போல் கட்டிக் கொள்ள வேண்டும் என்பாள். இவளுக்கு அந்த முடிச்சு சரியாக வராது. பள்ளிக்கூட நாட்களில் பூ வைத்துக் கொள்ள மாட்டாள். மற்ற நாட்களில் கனகாம்பரம், மல்லிகை வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பாள். அம்மாவுக்குக் கூடக் கொடுக்கக் கூடாது. இரட்டைப் பின்னல்களிலும் வளைத்து வைத்துக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்ப்பாள். சிறிது விவரம் தெரிந்ததும் தானே சிங்காரித்துக் கொள்ளப் படித்து விட்டாள். அதே சி.எஸ்.ஐ ஸ்கூலில் பத்து வகுப்புக்கள் வந்திருக்கின்றன. அப்பாவைக் கேட்டு மை, பல வண்ணப் பொட்டுகள், கீரிம், பவுடர், நகச்சாயம் எல்லாம் வாங்கிக் கொண்டிருக்கிறாள். பாவாடை, தாவணிதான் சீருடை. நீலமும் வெள்ளையும். அந்தத் தாவணியும் சட்டையும், அன்றாடம் சோப்புப் போட்டுத் துவைத்து மடிக்க வேண்டும். தாவணி மடிப்பும், தொங்க விடும் மேலாக்கும் சிறிது கூடக் கலையக் கூடாது. முகம் திருத்தி மை இழுத்துக் கொள்வதற்கும் முடி வாரிப் பின்னல் போட்டு முடிந்து கொள்வதற்குமே அரை மணியாகிறது. லீவு நாட்களில் உச்சியில் ஆணி அடித்துப் பூவைத் தொங்க விட்டாற் போல் ஊசியில் செருகிக் கொண்டு போகிறாள். இன்று காலை சைக்கிளில் சென்றிருப்பது நினைவில் வருகிறது.
ஊடே இனம்புரியாத ஒரு கவலை பரவுகிறது. அவள் சாலையைக் கடக்கையில் விர்ரென்று நாலைந்து சைக்கிள்கள் போட்டாப் போட்டியாய்ப் போவது போல் தோன்றுகிறது. பையன்களும், ஒன்றிரண்டு பெண்களும் இருக்கிறார்கள் என்று புரிகிறது. கண்களை ஊன்றிப் பார்க்கிறாள். லாரிகளும் கார்களும் பஸ்ஸும் போகும் சாலை அது.
பூத் தொங்கினதும், பெரிய பூப் போட்ட தாவணியும் தெரிந்தன. காலையில் சரோ இதே உடைதான் போட்டிருந்தாளா? பள்ளிக் கூடம் இல்லை என்றால், இப்படி விடலைகளுடன் சைக்கிளில் சுற்றுகிறாளா?
சின்னம்மா பெண் இங்கு வந்து அழுததும் சின்னம்மா கெஞ்சியதும் துருத்திக் கொண்டு நினைவுச் செதில்களிடையே காட்சிப் படங்களாய் எழும்புகின்றன.
“யாரோ தொட்டுட்டாப் போல. அடிச்சி வெரட்டிட்டாங்க. இங்க கொண்டாந்துவுட என்ன தைரியம்?”
“இவளே நடத்த இல்லாதவ. மகளையும் அதே வழிக்கு வுட்டுட்டா...” அன்று சின்னம்மாவின் முதுகில் விழுந்த சாட்டையடி தன் மீதே விழுந்து விட்டாற் போல் குலுங்குகிறாள். சின்னம்மா கண்ணகி போல் தலையை விரித்துக் கொண்டு மண்ணைவாரி வீசிய காட்சி அவளை ஒரு சாணாகக் குறுகச் செய்கிறது.
இந்தப் பெண் என்ன கலகத்துக்கு வழி செய்கிறாள்?
புளிய மரத்தில் புளி உலுக்குகிறார்கள் போலும்?
வருடத்துக்குப் புளியம் பழம் இந்தக் குத்தகைக்காரியிடம் தான் அவள் வாங்குவாள். இது தித்திப்பும் புளிப்புமாக மிக ருசியாக இருக்கும்.
“புளியம்பழம் வாங்குறீங்களா? உலுக்குறாங்க...?”
மேலத்தெரு சிங்காரத்தம்மா கேட்கிறாள். இவளுக்கு அது காதிலேயே விழாமல் தேய்ந்து போகிறது. புளியாவது புளி? இங்கே குடி முழுகுவது போலல்லவோ காரியங்கள் நடக்கின்றன. சரோவுக்குச் சைக்கிள் பழக்குவதிலேயே அவளுக்கு உடன்பாடில்லை. ஆனால், எல்லாம் அவள் பார்வைக்கு மீறியதாகவே நிகழ்கின்றன. எட்டு வயசிலேயே குட்டி சைக்கிளை அப்பா கடையில் இருந்து எடுத்து வந்து பழகி விட்டாள். ஏழாவதிலிருந்து சைகிளில்தான் பள்ளிக்கூடம். இவளுக்கென்று, குறுக்குப் பார் இல்லாத வளைவான கைப்பிடி, சீட்டு எல்லாம் உள்ள சைக்கிள். இப்போது சரவணனும் அதில் போகிறான். அடுத்த வருசம் தனக்குப் புதிய சைக்கிள் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
கீழத் தெருவில், மூக்காயிப் பாட்டி பேத்தி ரஞ்சிதம் எட்டு வரைபடித்து நின்றுவிட்டாள். எந்தப் பெண்ணும் சைக்கிளில் போகவில்லை.
வேகு வேகென்று வீட்டுக்கு வருகிறாள்.
சரோதாவணியை எடுத்து மடித்து விட்டு, வெறும் மேல் சட்டையும், பாவாடையுமாக இருக்கிறாள். வெளியில் செல்லும் போது தாவணி அணிய வேண்டும் என்பது பாட்டியின் சட்டம்.
“ஏண்டி? ரோட்டுல அத்தினி வேகமாக சைக்கிள்ள வந்தீங்க... அந்தப் பய்யங்க ஆருடீ?”
“ஆ... எந்தப் பய்யங்க?”
“உங்கூட சைக்கிள்ள வந்தவங்க?"
“எங்கூடயா? ரோட்டுல ஆயிரம் பேரு போவாங்க. அவங்க கூட வர்றவங்களா? இது கதயாருக்குதே?”
“சீ. பேசாதே! ஏதோ சினிமால வர்றாப்புல வேகமாக விட்டுப்போட்டுப் போனிங்க, எங்கண்ணு பொய்யா?”
“ஆமா... காத்து இந்தப் பக்கம் அடிச்சிச்சி. வேகமாகப் போனே... அதுக்கென்ன?”
“நிசமா அவனுவள உனக்குத் தெரியாது?”
இதென்னம்மா, உங்கூட பேஜாராருக்குது! அவங்க யாரோ பாய்ஸ்... போனாங்க. நா அவங்கள ஏன் பாக்குறே?”
“சரோ, அம்மாக்கிட்டப் பொய் சொல்லாதே! உனக்கு நிச்சயமாத் தெரியாது?”
“ஐயோ, என்னம்மா இது? நா அந்தப் பக்கம் நித்தியானந்தம் மாஸ்டர் வீட்டுக்குப் போயி கொய்ச்சின் ஆன்சர் மாடல் வாங்கிட்டு வந்தேன். இதபாரு உனக்கு ஒரெளவுந் தெரியல... சொன்னாலும் புரியல. என்ன விட்டுடு!”
செவந்திக்கு ஒன்றும் புரியவில்லை. தலை கனக்கிறது. கிணற்றடியில் சென்று முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். சேலை அழுக்கு, கசமாக இருக்கிறது. அவிழ்த்து வேறு மாறிக் கொள்கிறாள். பகலில் ஒன்றும் சரியாகச் சாப்பிடவில்லை. தட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு சோற்றையும் குழம்பையும் ஊற்றிக் கொள்கிறாள்.
கையில் ஒரு புத்தகத்துடன் சரோ முற்றத்தில் குந்தியிருக்கும் பாட்டியிடம், “பாட்டி எனக்குப் பசிக்கிது...” என்று சொல்கிறாள்.
“ஏ, பாட்டிக்கிட்ட கேப்பானே? சோறு இருக்கு. போட்டுக்கிட்டுத்தின்ன வேண்டியதுதான?”
“நா உங்கிட்டக் கேக்கல. எப்பப் பார்த்தாலும் சோறு சோறு சோறு... ஒரு பூரி கிழங்கு சப்பாத்தி ஒண்ணும் பண்ணுறதல்லை. உக்கும்” என்று மகள் முகத்தைத் தூக்கிக் கொண்டு போகிறாள்...
நீலவேணி டிபன் கடையில் நினைத்த போது போய்க் கேட்கக் கூடாது என்று ஒரு கண்டிப்பு உண்டு. கையில் காசில்லாமல் போனால் அவள் கணக்கு வைக்க மாட்டாள் தான் என்றாலும் அப்படிச் செய்யலாமா?
“சோறு என்ன அவ்வளவு கொறஞ்சிப்போச்சா? தண்ணில வேவுற சோற்றுக்கே உழைக்க வேண்டி இருக்கு. நெதம் எண்ணயில வேவுற பூரிக்கு நா எங்க போவம்மா? உங்கப்பா ரோக்க ரோக்கா பணம் கொண்டாந்து குடுத்தா, நானும் சொகுசா குந்திக்கிட்டு உனக்கு விதவிதமாச் செஞ்சித் தரலாம். இதா அரிசி ஊறப் போட்டிருக்கு. ராவுல உக்காந்து அரப்பே. இதுக்கு மேல எனக்குச் செய்யத் தெரியாது. யாரு செய்வாங்களோ செஞ்சித்தரச் சொல்லு...”
ஆத்திரத்துடன் கூறிவிட்டுத் தட்டுச் சோற்றை உருட்டிப் போட்டுக் கொள்கிறாள். தண்ணீரைக் கடகட வென்று குடிக்கிறாள். சரோ புத்தகத்தை வைக்காமலே வெளியேறப் போவதைப் பார்த்து,
“டீ. சரோ..” என்று கத்துகிறாள். “வேணி வீட்டில் போயி டிபன் காசில்லாம கேக்கக் கூடாது?”
“நாஒண்ணும் அங்க போவல!”
“பின்ன எங்கப் போற? சொல்லிட்டுப் போ!”
“எங்கியோ போற. உனக்குத்தா அக்கர இல்லியே? இந்த வூட்டுக்கு ஏண்டா வரோமின்னு இருக்கு சே!”
“அக்கற இல்லாமத ஆண் பாடு பெண்பாடுன்னு உழக்கிறனா? யாருக்கடி நான் பாடுபடுறதெல்லாம்? பொம்புளப் புள்ள, தாய் சொல்லுக்கடங்கணும் டீ! எதானும் சிலும்பிடிச்சின்னா, வெளில தல காட்ட மூஞ்சியில்ல. இந்தத் தெருக்காரங்களே நார் நாராக் கிழிச்சிடுவாளுவ! கண்ணு, மூஞ்சி சுண்டிப் போச்சி. வா, தயிரு வச்சிருக்கு, நல்ல கெட்டியா. சோறு போட்டுக் கொண்டாற சாப்பிடும்மா... காலம நாலு இட்டிலி சாப்பிட்டுப்போனது. படிப்பு படிப்புன்னு... என்ன படிப்போ... ஒடம்பு கறுத்து எளச்சி போச்சி.... வா கண்ணு...”
அவளை உள்ளே கூட்டி வந்து சோறு போடுகிறாள்.
இரண்டுங்கெட்டான் வயசு. இவளுக்குப் புரியாத படிப்பு. ஒரு புறம், இவளோடு பிணைந்திருக்கும் மரபின் அழுத்தங்கள்...
“அடுத்த வாரம் பரிட்சை முடிஞ்சதும், பாட்டியோடு திருவள்ளூர் அத்தை வீட்டில் போயி ஒரு வாரம் இருந்திட்டு வாங்க. அந்த அத்ததா, வரல வரலன்னு குறைப்படுறாங்க...”
“அங்க போயி என்ன செய்யட்டும்? கொல்லை கழனி சாணி சகதின்னு இதே கதைதான். நா மாமா கூப்பிட்டிருக்காங்க, மதுரைக்குப் போகப் போறேன்.”
“அவன் சும்மா வாய்ச் சொல்லுக்குச் சொல்லிருப்பா... போயிப் பார்த்தாத் தெரியும். சரோ அதெல்லாம் நெஞ்சிலேந்து வந்ததில்லை?”
“இல்ல அங்க அவரு சுலபமா என்ன பாலிடெக்னிக்ல சேர்த்திடுவாரு. மூணு வருசம் எலக்ட்ரிகல் எல்க்ட்ரானிக்ஸ், இல்லாட்டி மெக்கானிக்கல் படிப்பே. நல்ல மார்க் எடுத்தா. ப்ளஸ் டு சேர்ந்து பி.இ. கூட படிக்கலாம்னு மாமா நிச்சயமாச் சொல்லிருக்கார். படிச்சு முடிச்சா, அஞ்சாயிரம் சம்பளம் வாங்குவேன்...”
“அதும் அப்படியா? சரிம்மா! எனக்கு ரொம்ப சந்தோசம்... நீங்க நல்லாயிருகிறத நா வாணான்னு ஏன் தடுக்கிறேன்? அப்படியே உங்க மாமனையே மாப்பிள்ளை பாத்துக் கட்டிக் குடுக்கச் சொல்லு. எனக்கு இந்த மண்ணு போதும்” என்று முடிக்கிறாள். பாட்டி எதுவும் பேசவில்லை.
----------------
அத்தியாயம் 17
மாமா வீட்டுக்கு அவன் வந்து அழைத்துப் போவதாக இல்லை. சரோ, தன்னை வைகையில் ஏற்றி அனுப்பினால் தானே போய் விடுவதாகப் பிடிவாதம் செய்கிறாள். சரவணனுக்கு இன்னும் பரீட்சை ஆகவில்லை. தினம் தினம் காலையில் எழுந்து சண்டைதான்.
“இத பாரு சரோ, உன் மாமனுக்கு லெட்டர் எழுதிப் போடு. வயசுப் பெண்ணை நான் தனியா அனுப்ப மாட்டேன். உங்கப்பா வந்தால் கொண்டுட்டு விடச் சொல்லு” என்று தீர்த்து விட்டு செவந்தி, வேப்பம் பிண்ணாக்கும் யூரியாவும் கலந்து வைக்கிறாள். “தார் கிடைத்தால் கொஞ்சம் கலந்து வைத்தால் மறுநாள் விசிற நல்லாவரும் அக்கா” என்று சாந்தி சொன்னாள். மீசைக்காரர் தங்களுக்கும் இவருக்கும் எங்கிருந்தோ தார் வாங்கி வந்து, கன்னியப்பனிடம் அனுப்பினார். கன்னியப்பன் இப்போது அவர்களுக்கு மிக நெருக்கம். எப்போது கரண்ட் விடுவார்களோ பார்த்துக் தண்ணிர் பாய்ச்சுவதில் அவனுக்கு ஒரு தனி அக்கறை விழுந்திருக்கிறது. வேர்க்கடைலையுடன் ஊடு பயிராக நட்ட பயிறு கொத்துக் கொத்தாக காய்ப் பிடித்திருக்கிறது. அங்கே இரவு காவல் இருப்பதை விட, காவலே தேவையிராத கொல்லை மேட்டு நெற்பயிருக்குக் காவல் என்று கழிக்கிறான்.
“ஒரெட்டு ராவுல இப்படிப் பார்த்து வாங்க...” என்று புருசனிடம் சொல்வதை விடுத்து, வீம்புடன் செவந்தியே வீட்டில் எல்லோரும் அடங்கிய பின் பயிரை இரவில் பார்க்கப் போகிறாள். இரவில் வானில் நட்சத்திரங்கள் ஒளிர, தனியாளாகப் போகும் அச்சமில்லை. வேல்ச்சாமியோ, பழனியோ தென்படுவார்கள். மடையில் நீர்பாயும் ஓசை வருகிறது. மணங்கள்... பயிரின் மணம், பசுமையின் மணம், தவளை, பாம்பு சரசரக்கும் உணர்வுகள்... எதிலும் இப்போது அச்சம் தோன்றவில்லை. ஆனால், இந்த சரோ ஒட்டாமல் போகும் பாதையும், முரண்டு பிடிவாதமும் அவளுக்கு அடி மனதில் பீதியைக் கலக்குகிறது. இளங்கன்று பயமறியாது. ஏதேனும் ஆகிவிட்டால்...? சரக்கென்று வரப்பில் கால் நழுவுகிறது.
வழுவழுவென்று காலடியில் ஏதோ போனாற் போல உடல் முழுவதும் துடிப்பாகப் பரவுகிறது.
கையில் டார்ச் விளக்கு இருக்கிறது.
அதை அழுத்துகிறாள். மஞ்சளாக ஒளி...
பயிரை மிதித்திருக்கிறாள். பயிறு பிஞ்சுக் காய்களுடன் மிதியுண்டிருக்கிறது. ஆனால் அவள் அங்கே கால் வைக்கவில்லையே? பிரமையா? அப்படித்தான் நடந்து வந்தாளா?
“யாரு? செவந்தியக்கா? நீங்க எங்க?”
பின்னிருந்து வேல்ச்சாமி.
“நீங்க ஏம்மா இந்த ராவுல? தண்ணிதா நா பாக்குறனே? ஈரம் இருக்கு. இனிமே நாளக்கிக் கூட ஆறப்போடலாம். கன்னியப்பன் செத்த முன்ன வந்திட்டுப் போனா, பயிர யாரம்மா எடுத்துப் போகப் போறாங்க?”
“கன்னியப்ப வந்தானா?”
“வந்தா. அம்மா, உங்ககிட்ட ஒண்னு சொல்லவா? பட்டாளக்காரர் வூட்ல ஒரு பொண்ணிருக்குமே! அதுக்கு... அது அவுரு மகளா...?”
“மகளாமா...?”
“நாங்கேட்டா, நீங்க என்னக் கேக்குறிய திருப்பி இவன் அந்தப் பொண்ணுக்கூட ஒரு இதுவா இருக்காப்புல. பாட்டி வந்து செத்த நேர்முன்ன பிலுபிலுன்னு புடிச்சித் திட்டிச்சி. பய மவனே, உன்ன நா நாயா ஒழச்சிக் கஞ்சியூத்தி ஆளாக்கின, ஏதோ சாதி... அறுத்துப் போனது. அத்தப் போயி கட்டுவேங்குற, அறிவிருக்காடா? ஒனக்கு ராசாத்தி போல பொண்ணக் கட்டக் காத்திருக்காங்கடா. அறுவு கெட்ட பயலே? அது ஏற்கனவே கெட்டி, அத்தங்கெட்டு அறுத்துக் குளிச்சி நிக்கிது. ஒரு பொட்டப் புள்ள வேற, நீ ஏண்டா அங்க போற? இத்தினி நா நீ கன்னிப்பா, ஒழுக்கம்னு பேரெடுத்தவன். இப்ப ஏண்டா... அந்த மலத்த எடுத்துப் பூசிக்கிறே? ன்னு கெஞ்சிச்சி. அழுதிச்சி... பாவம்...”
“அவ என்ன சொன்னா?”
“த நீ என்ன எதெல்லாமோ கனாக் கண்டுட்டுப் பேசுற? எங்கே போனாலும் வந்து தொந்தரவு பண்ணுற. எனக்கு எங்கப் போகணும் எங்க வரணும்னு தெரியும். போற எடமெல்லாம் வந்திட்டு! என்று சண்டை போட்டான். கிழவி வுடல; 'செவந்திக்கு சரோவக் கட்டி வூட்டோட வச்சிக்கணுமின்னு ஆசயிருக்குப்பா. அது புரிஞ்சி நாமும் நல்ல விதமா நடக்கணு மில்ல? என் ராசா... அந்தக் கழு நீர்ப் பான வாணாம்பா. நீ அங்க போவாதடா... னிச்சி அதாங் கேட்ட...”
“ந்தா வேல்ச்சாமி, உனக்கு வெவகாரம் பண்ணணுமின்னா வேற எதானும் பேசு. ந்த மாதிரி ஏதானும் ரீல் வுட்டுட்டுத் திரியாத.”
இந்த வேல்ச்சாமி ஐந்து வருஷத்துக்கு முன்பே மாமன் மகளைக் கட்டினான். இவன் அம்மாவுக்கும் அவளுக்கும் மயிர்ப் பிடிச் சண்டை. கடைசியில் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள். மாமன்கட்டிட வேலை செய்பவன். இவனும் இந்த அறுபது சென்ட் பூமியை விட்டுவிட்டுத் தன்னுடன் வரவேண்டும் என்று தூபம் போடுகிறாள். இவன் அம்மா பையனைக் கொக்கி போட்டுப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். படிப்பு இல்லை. உழவு, அறுப்பு என்று போவதில் காசு இருக்கிறது. சுதந்திரமாகத் திரிய முடிகிறது. சாராயம் குடிப்பான். பெண்சாதிக்கும் இவனுக்கும் இது நிமித்தமே சண்டை.
“அதெல்லாம் இல்லக்கா. நா ஏ ரீல் வுடுற? நிசமாலும் சொல்ற... இவ இப்பல்லாம் வூட்டுக்கே போறதில்ல போல. கெழுவி வந்து அழுதிச்சி. அதாங் கேட்ட நீங்க சரோவக் கெட்டி வக்கிறதில எனக்கென்ன இருக்குது! ஆனா உரும இதுன்னு உங்க காதுல போட்டு வச்ச...”
“இதப் பாரு, அத்தப் பத்தி எதும் பேசாத? சரோ டென்த் பரிட்சை எழுதியிருக்கு. இவ, ஆறாவது கூடப் படிக்கல! கேவுறில நெய்யொழுகுதுன்னா கேப்பாருக்கு மதி வாணாம்! இதுபோல யாரிட்டயும் சொல்லிட்டுத் திரியாத அவங்கப்பா காதுல வுழுந்தா, உன்னியே உண்டில்லன்னு பண்ணிடுவாங்க.”
இப்படி ஓர் ஆத்திரமாக அவளையும் அறியாமல் சொற்கள் வருமென்று அவளே நினைத்ததில்லை.
ஏதோ ஓர் ஆசை மெல்லிழையாக இருந்தது உண்மைதான். ஆனால், அது நடப்பின் உண்மைகளில் ஊட்டம் பெறும் வாய்ப்புக்களே இல்லை. ஒரே மகளின் கல்யாணம். அந்த மகள் சந்தோசப்பட வேண்டாமா? புருசன், அம்மா, அப்பா... ஏன், அந்த ஒரு மாமன் பந்தலில் நின்று வரிசை வைத்துப் பெருமைப் பட வேண்டாமா? இந்தக் கன்னியப்பனுக்கு என்ன இருக்கிறது? பெற்ற தாய், தந்தை கூடத் தெரியாது. அந்தக் கிழவி மகா சூசனைக்காரி. இவள் பொங்கலன்று அவனைத் தேடிச் சென்று துணி வாங்கிக் கொடுத்ததைக் கிழவியிடம் சொல்லி இருப்பான். அவர்கள் சரிகைக் கனவுகள் காணும்படி இடம் கொடுத்தவள் அவள்தான்...
மனம் எப்படியெல்லாமோ கணக்குப் போடுகிறது.
பட்டாளக்காரர் கெட்டிக்காரர். இந்த மாதிரி ஒரு பிடிப்பை அவனுக்கு அவரே ஏற்படுத்தி இருக்கலாம். இப்போது என்ன குடி முழுகிப் போயிற்று? நல்ல சாய்கால். ஒரே பெண். பூமி சொந்தமாகலாம். இவனும் மக்கள் மனிதர் இல்லாதவன். பெண் அடக்கம். புறாப் போல் சாது. நல்ல ஜோடிதான்...
இப்படி ஒரு பக்கம் கணக்குப் போடுகிறது மனம்.
ஆனால் ஊடே கை நழுவிப் போனாற் போலும் ஆற்றாமை தவிர்க்க முடியவில்லை.
கொல்லை வழியாக அவள் வீட்டுக்கு வருகிறாள். பசு இவளை இனம் கண்டு கொள்கிறது.
“லச்சுமி” என்று தட்டிக் கொடுத்துவிட்டு உட்கதவை மெல்லத் திறந்து கொண்டு வருகிறாள். அப்பா கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார். டார்ச் விளக்கை ஆணியில் தொங்க விடுகிறாள்.
“ஏம்மா, என்னக் கூப்பிடக் கூடாது. தனியே நீ இருட்டில் போற? கன்னிப்பன் வாரதில்லயா இப்ப?”
“வர்ரான். எனக்குத்தான் அவனையும் ரொம்ப எதிர் பார்க்கக் கூடாதுன்னு... சரோ தூங்கிடிச்சா...?”
“அவப்பா கூட இந்நேரம் பேசிட்டிருந்திச்சி. முருகனோட மச்சினிச்சி மட்றாசில இருக்கால்ல? அதா நாகு கூடச் சொல்லிச்சே வூடு கட்டிருக்காங்க, அவ இஸ்கூல்ல வேல செய்யிறாங்கன்னு, அவ மதுரைக்கு அக்கா வூட்டுக்குப் போறாளாம். இவெம் பாத்தாப்புல. இங்க கொண்டாந்து வுட்டுப் போடுங்க. நாங்க பத்திரமா கூட்டிப் போறம்னு சொன்னாங்களாம். கேக்கணுமா? குதிச்சிட்டிருக்கு. இப்பவே உடனே துணி மணியெல்லாம் பையில எடுத்து வச்சிட்டிருக்கா. இந்த வூட்ல ஒரு நல்ல பொட்டியோ, எதுவோ இல்லேன்னு சிலுப்பிட்டிருந்திச்சி. அதும் அவப்பா காலம வாங்கித் தாரேன்னு சொல்லியிருக்காப்பல...”
அவள் பேசவேயில்லை.
காலையில் இவளுக்கு விழிப்பு வருவதற்கு முன்பே சரோ தயாராகிவிட்டது தெரிகிறது. கிணற்றடியில் தண்ணிர் இரைத்துக் குளிக்கிறாள். அவள் அப்பாவும், குளித்தாயிற்று. இவள் பூப்போட்ட பளபளப்புப் பாவாடையும், பெரிய கை ஜாக்கெட்டும் போட்டுக் கொண்டு தாவணி அணிந்திருக்கிறாள். முன் பக்கம் சுருட்டையாக முடியை அலங்காரம் செய்து கொண்டிருக்கையில் செவந்தி பக்கத்தில் போய்ப் பார்க்கிறாள்.
“இப்ப... கால பஸ்ஸுக்குப் போறீங்களா?”
“ஆமா... இன்னைக்கு மத்தியானம் அவங்க வைகையில் போறாங்களாம். எப்படின்னாலும் டிக்கட் சமாளிச்சிக்கலான்னு சொன்னாங்களாம்... ஒரு நல்ல பொட்டி கூட இல்ல... பையில வச்சிக் கொண்ட்டுப் போற...”
“நா அப்பாகிட்டச் சொல்லுற வாங்கிக் குடுப்பாங்க. கண்ணு... அவங்ககிட்டப் புதுசாப் போற. எப்பவோ பத்து வருசம் முன்ன கலியானத்துக்குப் போனது...”
“அதெல்லாம் எனக்கு நீ சொல்லித் தர வேண்டாம். நீ நினைக்கிறாப்பல மாமா ஒண்ணும் இல்ல. அவுரு என்ன பி.இ. படிக்க வச்சிப்பாரு...”
“வச்சிக்கட்டும். எனக்குச் சந்தோசம்தா...”
அவளாகவே பூவை வைத்துக் கொள்கிறாள்.
இவர்கள் வீட்டை விட்டுப் போன பின் வாசல் தெளிக்கக் கூடாது என்று நினைவு வருகிறது. சரசரவென்று சாணம் கரைத்து வாசல் தெளித்துப் பெருக்குகிறாள்.
“தெரிஞ்சிருந்தால் பால் கொஞ்சம் வச்சி காபி போட்டுக் குடுத்திருப்பே... இப்ப மாடு கரக்குமா...?”
“நேரமாச்சி. கெளம்பு. ஆறு மணிக்குப் பஸ் போயிடும். எட்டரைக்குள்ள நாம போயிடணும்... கிளம்பு...”
அப்பாவும் அம்மாவும் எழுந்து உட்காருகிறார்கள்.
வாசல் வரை வந்து அவர்கள் சைக்கிளில் ஏறிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
அன்று பகல் நெல் வயலுக்கு இரண்டாம் மேலுரம் வைக்க வேண்டுமே? பிசிறி வைத்திருக்கும் யூரியா வேப்பம் பிண்ணாக்கை வண்டியில் போட்டு அப்பன் ஓட்டி வருகிறார். வண்டி இவர்களுடையது அல்ல. இரவல்தான்.
“வெயில் கொளுத்துகிறது. சித்திரைக்கு முன்ன இப்படி இருக்கு. இந்தப் பட்டத்தில, கொல்ல மேட்டுல நெல்லு வைப்போம்னு யாரு நினைச்சாங்க!”
“நாம நினைக்கிற தெல்லாம் நடக்கிறதில்ல. மேல ஒருத்தன் இருக்கிறான். அவன் நடத்துறான். உன் சின்னாத்தாவுக்கு இதில விளைஞ்ச மொதப் பயிரில், ஒரு படிக் குடுக்கணும். அவ புள்ளக்கி ஒரு சீலயோ, பேத்திங்களுக்கு ஒரு கவுனோ வாங்கிக் கொண்டு குடுக்கணும்...”
“ஆனா நமுக்குப் போக என்ன மூஞ்சிருக்கு! அவ ரோசக்காரி. இப்ப எதினாலும் கொண்டுக் குடுத்தாத் தூக்கியெறிவா. உங்கம்மா போல இல்ல. உங்கம்மா கொணம், அல்லாம் தனக்கு வேணும். ஆதாயம் பாப்பா. சொல்லு... ரோசம் கெடையாது. கலியாணத்தின் போது முருகனின் மச்சான் சம்சாரம் அதா அமெரிக்காவிலோ எங்கியோ இருக்காளே... அவ தஸ்ஸா புஸ்ஸ்-ன்னு இங்கிலீஸ்-ல பேசி, எப்படித் தூக்கியெறிஞ்சா. பந்தலுல! என்னிய வந்து, யாரோ சாமான் கொண்டாந்த ஆளுன்னு நினைச்சி, போய்யா இங்க சேர்ல உக்காரதீங்கன்னு வெரட்டினாள்ள? அப்பமே எனக்கு ஒரு நிமிசம் அங்கதங்கக் கூடாதுன்னு. அவுங்க என்ன செஞ்சாங்க? சம்பந்தின்னு பந்தல்ல மரியாதி வச்சாங்களா? சந்தனம் பூசுனாங்களா? என்ன மரியாதி செஞ்சாங்க?”
“நம்ம பைய போயிக் கால வுட்டுக்கிட்டா. பெரிய வெளக்குப் போட்டாங்க, படம் புடிச்சாங்க... நம்ம பையன் கோட்டு சூட்டு போட்டுட்டு நின்னா... படம் புடிச்சிகிட்டே இருந்தாங்க. உங்கம்மாவுக்கு அங்க போயி நாமு நிக்கணும். வீடிஒ புடிச்சிக்கணும்னு ஆசதா. நம்ம புள்ள, எங்கப்பா, எங்கம்மா, தங்கச்சின்னு கூட்டி வச்சிட்டுப் படம் புடிக்கச் சொல்லணும். இவங்க படம் புடிக்கிற சமயத்துல, மாப்பிள்ளையையும் உன்னயும் காரு வச்சி ஊரு பாக்கப் போங்கன்னு சொல்லிட்டான். எவ்வளவு குசும்பு! என் சகோதரி பயந்தா. அவனுக்கும் ரோசம் உண்டு. பட்டுக்கவே இல்லை. அடுத்த நாளே கிளம்புவம்னு கிளம்பிட்டா. பொண்ணக் கூட்டி வந்து வச்சிக்கிறது. மறுவூடு அழைக்கிறது. என்ன நடந்திச்சி? ரெண்டு பேரும் கலியானமானதும் அனிமூன் போனாங்க. இங்க ரெண்டு பேரும் வந்து தலை காட்டிட்டு அன்னைக்கே போனாங்க. அப்பதா, அவஞ் சொல்றான், அப்பா, இந்த ஸ்கூல் வேல அவங்க முப்பதாயிரம் குடுத்து எனக்கு வாங்கினாங்க. உங்ககிட்ட கேட்டா மூக்காலழு வீங்க. நம்மால முடியாத போது ஒண்ணும் சொல்லுறதுக்கில்லங்கிறா. இவனப் படிக்க வச்சதே தப்புன்னு அப்ப தோணிச்சி. அதும் ஊரவுட்டுச் சிதம்பரம் போயிக் காலேஜூல சேத்தது அத்தவுட தப்புன்னு. பர்ஸ்ட் கிளாசில் எம்.ஏ. படிச்சா. அதுக்கு மேல வாத்தியார் படிப்பு. இங்க உள்ளூர்ல ஒரு எடத்திலும் வேலை கிடைக்கலன்னா, இவ காலேஜிலேயே கொக்கி போட்டுட்டா... என்னத்த சொல்லிக்கிறது!”
“ஒரு வேள அதுக்கெல்லாம் பரிகாரமா நம்ம தங்கச்சி புள்ளையப் படிக்க வச்சி முன்னுக்குக் கொண்டு வரலாம்னு இருக்கும்பா... சரவணனை நா வுட மாட்டே... அவம் படிச்சாலும் நம்ம பூமிய வுட்டுப் போகக் கூடாது. இதுப் பொம்புளப் புள்ள. எப்படியோ அவம் மூலமாகவேப் படிச்சி, அவம் மூலமாகவே மாப்பிள்ளையும் கட்டினா, சரித்தான்...” செவந்தி ஏதோ ஒர் ஆறுதலுக்காகச் சொல்லிக் கொள்கிறாள்.
அந்த நிலப்பரப்பு முழுவதும் யூரியா வேப்பம் பிண்னாக்குக் கலவையுடன் பொட்டாஷ் கலந்து விசிறுகிறார்கள். கன்னியப்பன் அடுத்து வயலில் இருக்கிறான்.
ஒரு புல்லைப் பல்லில் கடித்துக் கொண்டு மஞ்சள் துண்டு முண்டாசுடன் உல்லாசமாகக் களைக் கொட்டினால் சீர் செய்து கொண்டிருக்கிறான்.
“யக்கோ, மாமா வந்திருக்காரா? அதா நா வரல. மாமாவுக்கு வாலிபம் திரும்பிடிச்சி!” என்று சம்பந்தமில்லாமல் ஏதோ பேசுகிறான். லட்சுமி கீரை பிடிங்கிக் கொண்டிருக்கிறாள். ஆராக்கீரை. கிணற்றில் நீர் இறைத்துக் கைகளையும் கழுவிக் கொள்கிறாள் செவந்தி.
“யக்கோ” என்று லட்சுமி கூப்பிட்டுக் கொண்டு வருகிறாள்.
“கீரை சமைக்கிறீங்களா? நல்லாபச்சுன்னு இருக்கு...”
“குடு...”
“எதுல வாங்குறீங்க. அந்த பாண்டு சட்டில போடட்டுமா?”
“வாணாம். இப்படிச் சீலையிலே போடு. அது தார் நாத்தம் அடிக்கும்...” சேலை முந்தியை நீட்டி விரிக்கிறாள். அவள் கீரையை எடுத்துப் போடும் போதுதான் கையைப் பார்க்கிறாள். வலது உட்கையிலும் இடது உட்கையிலும் பச்சை குத்தியிருக்கிறாள். கோலம் போல் நீண்ட கொடி இடது கையில்... வலது கையில் ஏதோ பெயர் குத்தியிருக்கிறாள். காலம் சென்ற புருசனின் பெயரோ?
“பச்சப் பருப்புப் போட்டுக் கடஞ்சா பஷ்டாருக்கும்...”
“அப்பா... இல்ல எனக்கு அப்பான்னே வருது. மாமா இல்லையா?”
“மாமா பங்களுருக்குப் போயிருக்காங்க. அங்க மக இருக்குல்ல இங்கதா வெயில் அடிக்குதே! ஒரு அஞ்சாறு நாள் இருந்திட்டு வருவாங்க...”
“சொந்த வூடு இருக்குதா?”
“இருக்கு. ஆனா ரொம்பத் தள்ளி, ஒசூர் ரோடுல.”
“நீங்க போவீங்களா?”
“அதாம் பயிருப் போட்டிருக்கே. இதுதா நல்லாருக்கு. அங்க போனா பொழுது போவாது. அக்கா டீச்சரா இருக்கு. வேலய்க்குப் போயிடும். மாமா கடை வச்சிருக்காங்க. ரெண்டு புள்ளங்க இருக்கு... ஆச்சி, முப்பத்தஞ்சா நா ஊரியா வைக்கணுமால்ல. இவக தா பாத்துக்கறாங்க...” என்று கன்னியப்பனைச்சொல்லும் போது நாணம் முகத்தில் மின்னி மறைகிறது.
-------------
அத்தியாயம் 18
சித்திரைக் கத்திரி சுட்டெரிக்கிறது. சரோ ஊரில் சென்று ஒரே ஒரு கடிதம் சுருக்கமாகத் தான் வந்து சேர்ந்ததாக எழுதினாள். சரவணனுக்குப் பள்ளிக் கூடம் அடைத்தாயிற்று. நானும் மதுரைக்குப் போவேன். மாமா வீட்டுக்கு என்று குதிக்கிறான். “நம் கொல்லையில் கடலை புடுங்கப் போறம், அங்க என்னடா இருக்கு? புரட்டாசி லீவுல அப்பாவக் கூட்டிட்டுப் போய் காட்டச் சொல்ற, உனக்குத்தா இனி அந்த சைக்கிள்...” என்றெல்லாம் ஆசை காட்டி அவனைச் சமாதானப்படுத்துகிறாள்.
இந்நாட்களில் கன்னியப்பன் அவள் கண்களில் தட்டுப்படுவதில்லை. பட்டாலும் முன்போல் வெள்ளையாகப் பேச்சுக் கொடுப்பதில்லை.
நெற்பயிர் கதிர் பிடிக்கிறது.
அன்று, கன்னியப்பன் பம்ப் ரூமுக்குப் பக்கத்தில் விநோதமாகக் காட்சி அளிக்கிறான். வரி வரியான பனியன் மேனியை முழுமையாக மூடுகிறது. மஞ்சளும் பச்சையுமான பட்டை கண்களில் பளிரென்று படுகிறது. இடுப்பில் வேட்டி தார் பாய்ச்சாமல்... கையில் ஒரு டிரான்சிஸ்டர். அதிலிருந்து வரும் பாடலை அவன் ரசிக்கிறான் என்று தெரிகிறது. “ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், அந்த உறவுக்குப் பெயர் என்ன... காதல்...” என்ற பாட்டு தெளிவாகச் செவந்தியின் செவிகளில் விழுகிறது.
அவள் நின்று நிதானித்துப் பாட்டு எதையும் கேட்பதில்லை. சில பாட்டுக்கள் தொடக்கத்திலேயே அசிங்கம் என்று அவளுக்குத் தோன்றும். சரோ இம்மாதிரி பாட்டுக்களை அலறவிடும் போது கோபமாக வரும்.
கல்யாணமான புதிதில் அவள் புருசன் அவளைக் காஞ்சிபுரம் சினிமா தியேட்டருக்குக் கூட்டிச் சென்றிருக்கிறான். “சீ என்னங்க அசிங்கமா டிரஸ் போட்டுகிட்டுக் கூச்ச நாச்சம் இல்லாம வாராங்க. இதெல்லாமா நல்ல சினிமா” என்றாள். இப்போது வீட்டுக்கு வீடு டி.வி. வாங்கி வைத்திருக்கிறார்கள். அம்சு வீட்டில் ஒரு கறுப்பு வெள்ளை இருக்கிறது. வேல்ச்சாமி அவன் அம்மா வாங்கி வைத்திருக்கிறாள். நீலவேணி வீட்டில் இருக்கிறது. சுந்தரிக்குக் கலராக வாங்க வேண்டும் என்று உள்ளூர ஆசை. இதில் சினிமவே பார்க்க வசதியாக மேலும் பத்து பண்ணிரண்டாயிரம் கொடுத்து டெக் வாங்கி வைத்து சினிமாப் பார்ப்பதாம். இளசுகள் எப்படி உடம்பு வணங்கி வேலை செய்யும்?
புல் அறுத்துக் கொண்டு இவள் நகருவதைக்கன்னியப்பன் பார்க்கறான். “என்னக்கா, பேசாம போறிங்க?”
தன் விதி வலிமையைக் காட்டும் பெருமையா?
“பேசுவதற்கு என்னப்பா இருக்கு?”
“ஏனில்ல? எப்ப கடல வெட்டப் போறீங்க? வெட்டறதுக்காச்சுக்கா. நாநெறய பேரக் கூட்டிட்டு வந்து ஒரு புடிபுடிக்கணுமில்ல? முதமுதல்ல கடல போட்டு அமோகமா எடுக்கப் போறீங்க. எனக்கு வேட்டி மட்டும் வாங்கித் தந்தாப் பத்தாது.”
“வேட்டி வாணாம். டெளசர் வாங்கித் தாரே. பூடிசும் போட்டுட்டு தாட்டுப்பூட்டுன்னு நடந்து வா!”
அவள் சிரித்துக் கொண்டே இதைச் சொல்லவில்லை. குத்தல் தொனிக்கிறது. அது அவளே அறியாமல் வரும் குத்தல்...
அவன் சிரிக்கிறான்.
அப்போது கூடையுடன் லட்சுமி வருகிறாள். முருங்கைக் கீரைக் குழைகள் கூடை நிறைய...
“மிசின் பக்கம் கழிச்சிப் போட்டிருந்தாங்க. ஆட்டுக்கும் குடுக்கலாம்; வூட்டுக்கும் ஆவும். உங்களுக்கு வேணுமாக்கா?”
“வானாம். இன்னைக்கு எல்லாம் ஆயிடிச்சி.”
“மாமா ஊரிலேந்து வந்திட்டரா?”
கன்னியப்பனின் சட்டையும், டிரான்சிஸ்டரும் அவளை அப்படிக் கேட்கும்படித் தூண்டுகின்றன.
“இல்ல. வெயில்தா எரிக்கிதே... ஆனா அறுப்புக்கு மின்ன வந்திடுவாங்க...”
கிராமியமாகப் பச்சை வாயில் சேலையைப் பின் கொசுவம் வைத்து உடுத்தியிருக்கிறாள். ஒரு கையில் கொடியாக இலைகள்... லட்சுமி கறுப்பில்லை. சிவப்போடு சேர்த்திதான். பச்சைக் குத்து பளிச்சென்று தெரிகிறது. “எங்கே கையில் பச்சைகுத்திருக்கே. உம் பேரா...?”
இவள் வலிய அவள் வலது கையைப் பற்றி நிமிர்த்திப் பார்க்கிறாள். எல்.வி என்று ஆங்கிலத்தில் ஒரு பூமாலைக்குள் எழுதப்பட்டிருக்கிறது. லட்சுமி இவள் பெயர். வி. யார் பெயர்? அவள் கேட்கவில்லை. காலஞ் சென்ற புருசனின் பெயராக இருக்கும். அவள் சடக்கென்று கையைத் திருப்பிப் போட்டுக் கொள்கிறாள்.
“நீங்க கல்யாணமானா பச்சை குத்திப்பிங்களா?”
“இல்ல... அவுங்க கட்சித் தலவர் பேரக் குத்திட்டாங்க. என்னையும் மகளிரணி, குத்திக்கன்னாங்க... நா மாட்டேன்னே. பிறகு அவுங்க பேரு வேலு. அத்தச் சேத்துக் குத்தினாங்க. அதா...”
குரலில் சோகம் இழையோடுகிறது.
“பாவம் லச்சுமி. நாந் தெரியாம கேட்டுட்டே. வருத்தப்படாதே... தப்பா நினைச்சிக்காத” என்று சமாளிக்கிறாள். என்றாலும் இது நாகரீகமான நடப்பு அல்ல என்று உறுத்துகிறது.
இப்போது கன்னியப்பனைக் கட்டினால் இந்தப் பச்சைக் குத்து உறுத்தும். பச்சைக் குத்து ஒன்றுதானா? ஒரு பிள்ளையே இருக்கிறது.
ஆண் ஒரு பெண்ணைக் கட்டிய பின் இன்னொருத்தியைக் கட்டாமலே தொடர்பு கொள்கிறான். அவனுக்கு வரைமுறையே இல்லை. மனைவி இறந்து குழந்தைகளை மாற்றாந்தாய்க்குக் காட்டக் கூடாது என்று அவள் பாட்டன் திருமணமும் இல்லாமல் வேறு அப்பழுக்கும் ஒட்டாமல் இருந்தாராம். ஆனால் தன் மகளுக்கு அதனால் தானோ, நியாயம் செய்யவில்லை?
ஆண் தான் ஒரு பெண் ஒழுக்கமுடனோ, ஒழுக்கமில்லாமலோ இருப்பதற்குக் காரணம். சின்னஞ்சிறு வயசு. இவள் காலமெல்லாம் ஒழுக்கச் சுமையைச் சுமந்து கொண்டு மோசமான உலகில் எப்படி வாழ்வாள்? அவளுக்கும் நல்ல புருசன். அவனுக்கும் நல்ல இடம். சரோசா அவனுக்கு ஏற்றவளல்ல. கைநழுவிப் போனதுதான்...
கடலை முற்றுவதற்கு முன் பயறு கொத்துக் கொத்தாகப் பழுக்கிறது. அவ்வப்போது பறித்துக் கொண்டு வந்து வீட்டு முற்றத்தில் போட்டு அது காய்கிறது. அம்மா தடியில் அடித்து ஒரு படி பயிறு போல் எடுக்கிறாள். பொக்கில்லை. நல்ல திரட்சியாக இருக்கிறது.
கடலைப் பயிர் மேலே செடி பழுத்து விட்டது. பச்சை இலைகள் பழுத்த செடியில் புள்ளிகள் போல் தெரிகின்றன. சாந்தியும் கூட அன்று வந்திருக்கிறாள். கொல்லைக்குச் சென்று ஒரு செடியைப் பிடுங்கிப் பார்க்கிறார்கள். கடலை சலங்கை சலங்கையாகப் பிடித்திருக்கிறது. ஒன்றை உடைத்துப் பார்க்கிறார்கள். தோல் முற்றிப் பழுத்து விட்டது.
“அக்கா, புடுங்கிடலாம்...”
“புதன் கிழம புடுங்கிடலாம். இன்னக்கித் திங்கள்...”
சாந்தி சைகிளில் ஏறும் போது “அந்தப் பக்கமா, கன்னியப்பன பாத்தீன்னா சொல்லிடு. கடல புடுங்கறமின்னு!”
“சொல்றேன்க்கா” என்று சொல்லிவிட்டு அவள் போகிறாள்.
புதனன்று காலையில், கன்னியப்பன் ஏழெட்டுப் பேரைக் கூட்டி வருகிறான்.
சாந்திதான் முதல் குத்தைப் பிடுங்கி, அக்கா “சாமி கும்பிட்டுக் கர்ப்பூரம் காட்டுங்க?” என்று வைக்கிறாள்... சாந்தி கை தனக்கு மிகவும் உதவியான நெருக்கமான, அதிர்ஷ்டமான கை என்று நம்பிக்கை.
எல்லாப் பெண்களும் குலவை இடுகிறார்கள்.
நீ முந்தி, நான் முந்தி என்று கடலைப் பயிரைப் பிடுங்கி ஆங்காங்கு ஈரமண் உதிர்த்துக் குவிக்கிறார்கள். செவந்தி மனம் துளும்பப் பார்க்கிறாள்.
ஒரு பொக்குக் கடலை கூட இல்லை. ஏக பேச்சும் சிரிப்புமாக இருக்கிறது. கன்னியப்பன், வேல்ச்சாமி, லட்சுமி, வேணி, அம்சு எல்லோரும் கடலை உதிர்க்கிறார்கள். சுந்தரியும் அம்மாவும் அத்தனை பேருக்கும் சோறு பொங்கிக் கொண்டு வருகிறார்கள்.
எல்லோருக்கும் சந்தோசம். “அதாஅதா குண்டெலி, அடி, அடி வேல்ச்சாமி!”
வளைகளில் இருந்து தலை நீட்டும் எலிகளுக்குக் கபால மோட்சம் தான். ஒரு பத்துப் பதினைந்து எலிகள் அடிபடுகின்றன.
“இந்தா கடலையை வுடு, எலியத் துக்கிட்டுப் போ” என்று காகத்துக்குத் தூக்கி எறிகிறான் கன்னியப்பன்.
“நல்ல பால்கடலை. காஞ்சா எண்ணெய் நல்லா வரும்” என்று வேணி சொல்கிறாள். “என்ன ரகம் இது? ஆபீசில தான கேட்டு வாங்கின?”
“ஜி.ஆர்.ஐ. நல்ல ரகம், போடுங்கன்னாரு...”
“அக்கா வேர்க்கடலை வடை சுட்டிருக்கீங்களா?”
“இல்லையே? எப்படிச் சுடுறது?”
“இத்தோட கொஞ்சம் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு, உப்பு முளவு சோம்பு போட்டு அரச்சி, வெங்காயம் இஞ்சி கொத்தமல்லி கறிவேப்பிலை போட்டு வட சுட்டா பஷ்டா இருக்கும்!”
“நீ ஒரு நா டிபன் போடு!”
“பின்ன ஒரு வடை 1 ரூவா!” என்று சிரிக்கிறாள் வேணி.
“இதே கடலையைக் கொதிக்கிற வெந்நீர ஊத்தி ஊறவச்சி, தோலிய எடுத்திரணும். பிறகு பருப்ப நல்ல வெண்ணெயா அரச்சிப் பால் போல் கரச்சி அடுப்பில வச்சிக் காச்சணும். சர்க்கரை போட்டு சுண்டக் காச்சின பாலவுட்டு ஏலக்கா போட்டா, பாயசம் ரொம்ப நல்லா இருக்கும்...”
“பண்ணினாப் போச்சி. நிசமாலுந்தா. ஒரு நா அமாவாசக் கூட்டத்த நம் மூட்டில வச்சிட்டு, பாயசம் பண்ணி வைக்கிறேன்...” என்று சொல்கிறாள் செவந்தி.
“அப்பவடையும் சுட்டு வையுங்க!”
“அதென்னவோ, கடலையை வெவிச்சுத் திண்ணாத்தா ருசி. அதும் நெல்லுப்புழுக்கையில மூட்டக் கட்டிப் போட்டுட்டா, அந்த ருசி தனி...” மூக்காயிப் பாட்டியின் பேத்தி வந்திருக்கிறாள். இவள் கை சுத்தம் கிடையாது. தனியாகக் கடத்தி விடுமோ என்ற அச்சம் உண்டு.
சரவணன் நாகம்மாளின் மகனுடன் பச்சைக்கடலை பிடுங்குவதாகச் சொல்லிக் கொண்டு உடைத்து உடைத்து வயிற்றுக்குள் தள்ளுகிறார்கள். கடைவாய் வழி பால் ஒழுகுகிறது.
“டேய், பச்சைக் கடலை வகுத்தால புடுங்கிக்கும். வூட்டுக்குப் போங்க. வேவிச்சித்தார!”
குவியலாகக் களத்து மேட்டில் கொண்டு வந்து குவித்தாயிற்று. பிடுங்கியவர்களுக்கெல்லாம் மரக்கால்களாகக் கடலையை அளந்து கொடுக்கிறாள்.
காக்கைகள் கருப்பாகச் சுத்தி வட்டமிடுகின்றன.
நாயும் கூட அசந்து மறந்தால் எடுக்கும் பண்டம்.
வெயில் நாட்கள். இரண்டு நாட்கள் காய்ச்சல் போதும்.
இரவும் பகலுமாகக் காவல் இருக்க வேண்டும்.
பகல் பொழுதுக்குச் செவந்தியும் அம்மாவும் மாறி மாறிக் காவல் இருப்பார்கள்...
இரண்டு இரவுகள்... ரங்கன் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு படுத்துக் கொள்ளவேண்டும்.
இப்போதெல்லாம் இவளுக்கு இரண்டு வயல்களில் வேலை இருப்பதனால் வீட்டில் அதிக நேரம் தங்கவே நேரம் இல்லை. சரோ இல்லாததால், வீட்டிலேயே வேலை இல்லை போல் ஒரு வெறுமை...
ஏழு மணியோடு வீட்டில் வந்து கிணற்றடியில் இலைத் தூசு, மண், புழுதி போகத் தண்ணீரிறைத்துக் குளிக்கிறாள். ரங்கன் வருகிறான்.
“குளிக்கிறியா?”
“ஆமா. நீங்கதா என்ன ஏதென்று எட்டிப் பார்க்குறதில்ல. நான்ல சபதம் போட்டிருக்கேன்.” பேச்சில் மனத்தாங்கலின் சுமை...
“கடலபுடுங்கப் போறமின்னு நீ சொல்லவேயில்லை. நா ஒரு அவுசர காரியமா பட்டணம் போகவேண்டியதாச்சு. அண்ணியோட தங்கச்சி வந்திட்டாங்க. சரோ ரிசல்ட் இந்த வாரக் கடாசில வராப்பில இருக்கு.”
“...”
“சரோ கடிதாசி எதானும் குடுத்தனுப்பி இருக்கா?”
“ஒண்ணுமில்ல. இவங்க பத்துநாக் கூட இருக்கல. ஒரு வாரம் இருந்திட்டு வந்திட்டாங்க. அவருக்கு லீவில்ல. அவங்களுக்கு என்ன பிரச்னையோ. சரோவ நாந்தா போய் கூட்டி வரணும் போல....”
“அவ என்னமோ அங்கியே படிக்கறன்னு சொல்லிட்டுப் போயிருக்கா?”
அவன் முகம் பரவி வரும் இருட்டில் உணர்வுகளை புலனாகும்படி துலக்கமாகத் தெரியவில்லை. ஆனால் குரலில் உற்சாகமில்லை.
“நீ உள்ளாற வா செவந்தி, உங்கிட்ட ஒரு விசயம் பேசணும்...” இத்தனை ஆண்டுகளில் இப்படி அவன் கூப்பிட்டிருக்கிறானா? என்ன புது விசயம்?
ஈரப் பாவாடையுடன் உள்ளே வந்து உடை மாறுகிறாள். அம்மாவும் அப்பாவும் களத்து மேட்டில் இருக்கிறார்கள். முடியைத் துவட்டிக் கொண்டு, “நீங்கதா செத்த ராத்திரி காவலுக்குப் படுக்கணும். கன்னியப்ப வந்தா, கூலி வாங்கிட்டுப் போயிட்டா. அவனப் போயி கெஞ்ச எனக்கு மனசில்ல. சொத்து நம்முது.”
“சரி நான் கட்டிலக் கொண்டு போட்டுட்டுப் படுக்கிற. இல்லாட்டி என்ன, சாவடிப் பக்கந்தான செவந்தி எனக்கு இப்ப அவசரமா ஆயிரம் ரூபா வேண்டியிருக்கு. ஒரு வண்டி நல்லா இருந்திச்சி வாங்கினே. வண்டிய வச்சிட்டுப் போ, நாளக்கி பணந்தாரே. நிலுவ வரணும்னு சொன்னேன். அவ மூணு நாளு களிச்சி வந்து இன்னக்கி பணம் கேக்குறான். நமக்கு ரொம்ப வேண்டிய பார்ட்டி. வண்டி நல்லாருக்கு, நா எடுத்துக்கறேன்னு ஓட்டிட்டுப் போயிட்டாரு. பணம் முன்னப் பின்னத் தருவாரு. அவரோட வண்டி பாங்கு வாசல்ல வச்சிட்டு உள்ள போனாராம். திரும்ப வரச்சே காணமாம். மேல நத்தத்திலேந்து சொசைட்டி ஆபீசுக்கு வராரு. ரொம்ப நல்ல மனுசன். ரெண்டு மாசமாத் தந்துடறேன்னாரு. இப்ப இவனுக்குப் பணம் குடுக்கணும். தெரிஞ்சவங்க யார் கிட்டயும் புரட்ட முடியல. ஒரு அஞ்சு நூறு குடுத்தாலும்... சமாளிச்சிக்குவே. வண்டிய எடுத்திட்டுப் போன்னு சொல்ல வண்டியும் இல்ல?”
இது வரையிலும் இவன் இப்படி இவளிடம் தன் இயலாமையைச் சொல்லிக் கொண்டதில்லை. கடுகு சிறுத்தாலும் காரம் உண்டு. வியாபாரத்தில் பெரிய வளமை இல்லை.
கடைகளில் ஏழெட்டுச் சைகிள் கூட இல்லை. ஆனால் கண்டிகை சைகிள் கம்பெனியில் இருந்து இங்கே சைக்கிள் விற்கும் ஏஜென்சி போல் வாணிபம் நடக்கிறது என்று தெரியும். அங்கு மூன்று சக்கர குழந்தை சைக்கிள், சிறுவர், பெரியவர்கள் சைகிள் என்று பண்ணும் ஃபாக்டரி பத்து வருசங்களுக்கு முன் ஏற்பட்டது. அந்த முதலியார் சிநேகம். அவருக்கு ஏதோ நஷடம் வந்துவிட்டது என்று அப்பன் சொன்னதாக நினைவு.
ஆக இப்போது...
பட்டாளத்தார் கொடுத்த பணம் மீதி இருக்கிறது. எப்போதும் வங்கியில் தான் போட்டு வைக்கிறாள். ஐநூறு இருக்கும். அவள் மிக சிக்கனமாகச் செலவு செய்திருக்கிறாள். அதைத் தொடவே இல்லை. வளையல்களை ஆண்டாளம் மாவிடம் வைத்து அவசரப் பணம் வாங்குவாள்...
“இப்பக் குடுக்கறதுக்கில்லீங்க. நாளக்கின்னா, வங்கிலேந்து எடுத்துத் தருவே. திடுமின்னு அஞ்சு நூறு எங்கிட்ட எப்படி?”
“நாளக்கித்தா போதும்...”
இதுவும் ஒரு சுப சூசகம் தான்.
அன்றிரவுக்குக் கன்னியப்பன் காவலுக்கு வரவில்லை. இவ்வளவு நாட்களில் இப்படி அவன் வராமலிருந்ததில்லை. எப்படியானாலும் அவன் அந்தக் கழனிக்கு நீர் பாய்ச்சி, மராமத்துச் செய்யாமல் இருக்கமாட்டான். இருக்கட்டும்.
காலையில் வங்கிக்குச் சென்று அவள் பணத்தை எடுத்து கணவரிடம் கொடுக்கிறாள்.
செவந்தியின் கை ஓங்குகிறது.
ஆம். ஏக்கருக்கு ஆறு ஏழு மூட்டைதான் காணும் என்றுதான் அப்பன் சொன்னார். ஒண்ணரை ஏக்கர் நிலத்தில், ஏறக்குறைய இருபது மூட்டைகள் விளைந்திருக்கின்றன. மிஷினில் காய்களைக் கொடுத்து தோடு நீக்கிய மணிகள்... முழி முழியாக... சிவப்பு மணிகளாக பூமி தந்த பரிசு. உழைப்பும் நம்பிக்கையும் தந்த பரிசு.. இல்லை தான்வா அம்மாள் மூலமாகக் கடவுள் காட்டிய வழி இது. பயிறும் கூட ஏறக்குறைய முக்கால் மூட்டை கண்டிருக்கிறது. கூலிகளையும் கணக்குப் போட்டால் இருபது மூட்டைத் தேறும்.
“அக்காஅந்த ஆபீசுக்குக் கூட்டிப் போங்க. நானும் கடலப் பயிர் செய்யிறேன்...” என்று சுந்தரி சொல்கிறாள்.
வங்கியில் பயிருக்கு வாங்கிய கடனை அடைத்த பின் கையில் இரண்டாயிரத்து சொச்சம் இருக்கிறது.
சரோவின் ரிசல்ட் வந்துவிட்டது. கணக்குப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றதுடன் பள்ளிக்கு மாநிலத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பெருமையையும் தேடித் தந்திருக்கிறாள். இவள் பெயர் தினத்தாள்களில் வருகிறது. பள்ளி ஆசிரியை, ரீடா கடை தேடி வந்து பாராட்டி விட்டுப் போகிறாள்.
எல்லோருக்கும் பெருமை. செவந்திக்கு ஆகாயத்தில் மிதப்பது போல் இருக்கிறது. “நீங்க இப்பவே ராத்திரி பஸ்ஸில போயி நம்ம குழந்தையக் கூட்டிட்டு வாங்க. நாம எப்படியும் மேல படிக்க வச்சிடுவம்...”
“ஸ்காலர் ஷிப் கிடைக்கும்ன்னு சொல்றாங்க. நா. இத இப்பவே போறேன்...” செவந்தியின் மனதில், தான்வா ஆபீசர் மேடம் போல் சரோ வர வேண்டும் என்ற கனவு உயிர்க்கிறது. அவங்களைப் போல் மண்ணுடன் ஒட்டி தாய்ப்பாசமாக இருக்கும்படியான ஒரு படிப்பைப் படிக்கலாமே?
அவன் காலை பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு மதுரைக்குச் செல்கிறான். செவந்தி அன்று மாலை திரிகையில் பயிறை எண்ணெய் தடவி வைத்துக் கொண்டு உடைத்துக் கொண்டிருக்கிறாள்.
“அம்மா அம்மா! அக்கா வந்திடிச்சி!” என்று சரவணன் ஓடி வருகிறான்.
“அப்பா காலமதான போனாங்க? எப்படி? மாமன் கூட்டி வந்திட்டானா?...”
சரோசா கையில் அப்பா வாங்கிக் கொடுத்திருந்த பெட்டியுடன் விரைந்து வருகிறாள். பெட்டி கீழே நழுவுகிறது.
அம்மாவின் தோளில் தலை சாய்த்து விம்முகிறாள்.
“சரோ... சரோ என்னம்மா? என்னாச்சி? அப்பா காலம போயிருக்காங்க, நீ பஸ்டா பாஸ் பண்ணியிருக்கேன்னு பேப்பர்லல்லாம் வந்திச்சி, போட்டோ கேட்டு வந்தாங்க. எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கு. கடலக்கா நல்லா வெளஞ்சிருக்கு... ஏங்கண்ணு, சந்தோசமா இருக்கறப்ப ஏ அழுவுற? சீ கண்ணத் தொட. நீ மேல பெரிய படிப்பு படி. அந்தத் தான்வா மேடம் போல படிக்கணும். உன்ன யாரு கூப்பிட்டு வந்தாங்க? மாமன் வரலியா?” இத்தனைக் கேள்விக்கும் விசும்பலே விடையாக இருக்கிறது. இவளுக்கு இனம் தெரியாத கலவரம் வயிற்றைக் கலக்குகிறது. ஏதேனும் ஆயிட்டதா? எதானும் நடக்கக் கூடாதது நடந்துவிட்டதா? கடவுளே!
“ஏம்மா ஏனழுவுற? என்ன ஆச்சி?”
“நீ நினைச்சாப்பல தாம்மா, அவங்க மோசமானவங்க. மாமாக்கு உணுமையில நம்ம மேல பாசம் இல்ல. மாமி அவுங்க வீட்டுக்காரங்க வச்சது தா சட்டம். அவங்க தங்கச்சி பசங்க கூடப் போனனா, அவங்க கூட நானும் திரும்பிடு வேன்னு நினைச்சிருந்தாப்பல. அவங்க ஒரு வாரந்தா இருந்தாங்க. அவங்க புருசன் பெண்சாதி ரெண்டு புள்ளங்கள ஆட்டோ வச்சிட்டு ஊரெல்லாம் பாத்தாங்க. என்ன அவங்க கூட அனுப்பவே இல்லை. மாமா ட்யூட்டோரியல் நடத்துறாப்பல. அவங்க வீட்டு மாடில. அது கீழ ஒரு டாக்டரு கிளினிக்குக்கு வாடகைக்கு விட்டிருக்காங்க. மேல அவங்க பெட்ரூம் இருக்காப்பல. சேந்தாப்பல ஒரு போர்ஷன்ல, மாமியோட அம்மா. ஒரு லூசு தம்பிக்கு இடம். பிறகு கிச்சன். எல்லாம் ‘பாஷா’ இருக்கும். நான் போயி ஒரு வாரம் தான் வேலக்காரி இருந்தா. தங்கச்சி ஊருக்குப் போனா, வேலக்காரியும் நின்னிட்டா.”
“ஏண்டி சுகு, உன் நாத்தனா பொண்ணா? அதென்ன உக்காத்தி வச்சி சோறு போடவா கூட்டிட்டு வந்திருக்க? சும்மா நின்னிட்டிருக்கு. வீடு பெருக்கித் துடைக்கச் சொல்லு. கிரைண்டில மாவாட்டுறதுக்குக் கசக்குதா. அவ வூட்டில கல்லுல அரய்க்கல?”ம்பா.
“மெள்ள மெள்ள எல்லா வேலையும் நானே செய்யணும்னு ஆயிட்டது. அது கூட பொறுத்துக்கலாம், அந்தாளு தம்பி அது மென்டலி ரிட்டார்ட்... அது அசட்டு சிரிப்பு சிரிச்சிகிட்டு ஏங்கிட்டயே நிக்கும். சரோ ..உம்பேரு அதான? நாங்க கூட்டிட்டுப் போரேன். என்னோட ஊரு பாக்க வரியா? கோயிலுக்கு, சினிமாக்கு என்று அசடு வழியும்.”
“ஏண்டி அவங்கிட்ட பேசுனா என்ன? முகம் காட்டாம திருப்பிக்கிற? என்று அவன் ஆத்தாக்காரி வேற. எனக்கு கோபமா வரும். மாமா சாப்புட வரப்பத்தான் கீழ வருவாங்க. காபி மாமிக் கொண்டு குடுப்பா. கார்த்திக் கராத்தே கிளாஸ், திவ்யா டான்ஸ் கிளாஸ்ன்னு மாமி காலம கூட்டிட்டுப் போவாங்க. டாக்டர் இவங்களுக்கு சொந்தக்காரங்க போல, மாமி அங்கப் போயி ரிசப்ஷனிஸ்ட்டா உக்காந்திருவாங்க.”
“மாமா சாப்பிட வரச்சே ஒரு நாள் கேட்டேன். எனக்கு பாலிடெக்னிக்ல சேர அப்ளிகேசன் வாங்க வேணாமான்னு. சும்மா அவரு சொன்னத ஞாபகப்படுத்தறாப்பல. ‘ரிசல்ட் வரலியே, வரட்டும் பாக்கலாம்’ என்று மழுப்பிட்டு எந்திரிச்சிப் போயிட்டாரு. பிறகு ரிசல்ட் வந்திடிச்சி. பேப்பர் காலம போட்டுட்டுப் போவா. இவங்க யாரும் எந்திரிக்க மாட்டாங்க. நான் பார்த்தேன். முதல் மூணுல நா மூணாவதுன்னு வந்திருக்கே. எனக்கு ஒரே சந்தோசம். மாடிக்கு ஏறிப் போன. கதவத் திறந்து வச்சிட்டுப் பிள்ளைங்க இவங்க படுத்திருந்தாங்க. அப்பவும் நான் கதவு தட்டினே... மாமா மாமா... ன்னு கூப்பிட்டதும் அவரு அலறி அடிச்சிட்டு லுங்கிய இழுத்துக் கட்டிட்டு சரோவா என்ன இப்படி.. என்ன விசேசம்ன்னாரு. நா பேப்பர காட்டின. சாவகாசமா சிகரெட் பத்த வச்சிட்டு, ‘இதுக்குத் தா இப்படி எழுப்பினியா? சரி. கங்கிராட்ஸ்... நல்லா பண்ணிட்ட. கீழே போ நா வாரேன்...’ ன்னாரு.
“இதுக்குள்ள மாமி எந்திரிச்சிட்டாங்க. நானும் அங்கியே நின்ன. தெரிஞ்சதும் அவங்க சந்தோசப் படுற மாதிரி ‘பரவாயில்லையே நீயும் ராங்க்ல வந்திட்டியா?’ ன்னாங்க.
“பாலிடெக்னிக்... விமன்ஸ் பாலிடெக்னிக் படிக்கணும்ங்குது. என்ன சொல்ற சுகந்தா..”ன்னாரு மாமா.
“பாலிடெக்னிக் படிச்சி இவ என்ன பண்ணப் போறா? ஏற்கனவே ஆம்புளக்கே வேல இல்லே. இவப்பாம்மாவால மூணு வருசம் ஆஸ்டல்ல சேத்துப் படிக்க வைக்க முடியுமா? அப்படியே படிக்க வச்சப் பிறகு ஒரு பி.இ. பி.டெக். மாப்பிள்ளையைத் தேடி பிடிக்க முடியுமா? ஒண்ணரை லட்சம் செலவாகும். இவம்மா நம்ம பூமில விவசாயம் பண்ணுறா. அதுல ஒரு லாபமும் நமக்கு இல்ல. கடசீல அத வித்து தா கலியாணம் கட்டணும்னு ஒரு இக்கட்டுல கொண்டு வப்பாங்க. என்னக் கேட்டா நா ஒரு யோசனை சொல்வே. உறவும் இருக்கும். கலியாணத்துக்கும் செலவில்ல? அவ பேருக்கு ஒரு பிசினஸ்ஸாம் இருக்கும்...”ன்னாங்க. அது என்ன தெரியுமா? அந்த லூசுக்கு என்னக் கல்யாணம் கட்டி வைக்கிறதாம். அவங்க அவன் பேரில் ஒரு பப்ளிக் டெலிபோன் வைப்பாங்களாம். அதோட ஜெராக்ஸ் லாமினேஷன்லாம் வச்சிட்டா நா ஆபிசையும் பாத்திட்டு, இவங்களுக்குக் கையாளா இருப்பேனாம்... என்ன வச்சிட்டே இப்படிச் சொன்னாங்கம்மா... அந்த லூசு பல்ல இளிச்சிட்டு என்னத் தொட்டுத் தொட்டுப் பேசறப்ப அவம்மா ஒண்னும் சொல்லமாட்டா...”
அழுகை கட்டுப்படுத்த முடியாமல் வருகிறது அவளுக்கு. மகளின் முதுகை அவள் ஆதரவாகத் தடவுகிறாள். “நீதா வந்திட்டியேம்மா. அழுவாத, நீ எங்கும் போக வேண்டாம். நா உன்ன மேல சேர்த்துப் படிக்க வைப்பேன். அவன் கெடக்கிறான். சொந்தத் தாய் தகப்பன மதிக்கல. போகட்டும். அவனவன் பொண்ணு பிள்ள பெத்து வச்சிருக்கிறான். காலம் வரப்ப தெரியும்...”
“அம்மா நீ சொன்னப்ப நா நினைக்கவே இல்ல. எப்படிம்மா மனிசங்க இப்படி இருக்கிறாங்க! அவங்க நிலத்தில நீ பயிரு போடுறியாம். அதுக்கு அவங்களுக்குப் பணம் குடுக்கணுமாம்... மாமி சொல்லுது... நா அடுத்த நிமிசமே மாமாகிட்ட, நா ஊருக்குப் போறேன். என்ன ஏத்தி வுடுங்கன்னிட்டேன். காலம பஸ்ஸுக்கு அவருதா வந்து ஏத்துனாரு. சொல்றாரு சரோ இங்க வீட்ல இருக்கிறது தோதுப்படாது. நீ அங்கேயே பக்கத்தில எதானும் பாலிடெக்னிக்ல சேர்ந்து படி. நா ஒண்ணும் செய்யலேன்னு நினைக்காத...ன்னு பஸ் டிக்கெட் எடுத்துக் குடுத்திட்டு நூறு ரூபா கையில் குடுத்தாரு. எனக்கு அவுரு மூஞ்சியில எறிஞ்சிடணும்ன்னு கோவம் வந்திச்சி. ஆனா பெரியவங்க. அவுரு ஏ, மாமிக்கு அப்படிப் பயப்படறாரு. அப்பால்லாம் உன்ன எப்படி வெரட்றாரு? ரேடியோவப் போட்டு உடைச்சாரே! மாமா, மாமி என்ன சொல்றாங்களோ அதுக்கு மாறு இல்லாம நடக்கிறாரு. இந்த நூறு ரூபா அவளுக்குத் தெரிஞ்சி குடுத்தாராங்கிறது சந்தேகம். அப்படி அவங்ககிட்ட என்ன பவர் இருக்கு?...” சரோ அங்கிருந்து செல்லும் போது பக்குவம் வராத குழந்தையாக இருந்தாள். இப்போதோ, இந்த ஒரு மாதத்தில் எவ்வளவு மாற்றம்!
“செங்கல்பட்டு வந்ததும் இறங்கி, நம்மூர் பஸ் புடிச்சிட்டு ஓடியாந்தேன். கடயில அப்பா இல்ல. சைகிள் கூட கேக்கல. நடந்தே வந்தேன்.”
“சரி, எதும் சாப்பிட்டுருக்க மாட்டே. குளிச்சிட்டு வாம்மா. சோறு குழம்பு எல்லாமிருக்கு, வா! முகம் எப்படி வாடி கறுத்துப் போச்சு? நா உங்கப்பாவப் போயி இட்டுட்டு வாங்கன்னு அனுப்பினே. வயசுப் பெண்ணத் தனியே ஏத்தி அனுப்பி இருக்கிறான். இவன்ல்லாம் ஒரு மாமன்!” பாட்டி பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருக்கிறாள்.
தாத்தா சாவடியில் இருந்து ஓடோடி வருகிறார்.
“ஊரே கொண்டாடுது. உன் டீச்சர் வந்ததும் உன்னியப் பார்க்கச் சொல்லிச்சாம். சோறு சாப்பிட்டு வா கண்ணு, சைக்கிள்ள நானும் வாரேன்.”
புதிய ஏடுகள் திரும்புகின்றன.
மதுரை சென்ற கணவன் அங்கு ஒரு நாள் கூட தங்கவில்லை. மகள் இல்லை என்று தெரிந்த மறுநிமிடமே அவன் திரும்பி விடுகிறான். அதிகாலையில் வந்து கதவு இடிக்கிறான்.
அடுத்து அவர்கள் சரோவின் மேற் படிப்பை இலட்சியமாக்கி முயற்சிகள் செய்கிறார்கள். சரோவைப் பள்ளியில் அழைத்துப் பாராட்டுகிறார்கள். பத்திரிக்கை காரர்கள் அவள் இலட்சியம் பற்றிக் கேட்கிறார்கள். அதற்கு அடுத்த மாதம் காஞ்சிபுரம் அரிமா மகளிர் சங்கத் தலைவி அவள் என்ன படித்தாலும் அதற்கு உதவி செய்வதாக அறிவிக்கிறார்.
விண்ணப்பப் படிவங்கள் பெறுவதும் சான்றிதழ்கள் வாங்குவதும், நேர் முகம் காணச் செல்வதுமாக நாட்கள் ஓடுகின்றன.
ப்ளஸ் டூக்கு சேரு. நீ டாக்டராகவோ, இன்ஜினியராகவோ வரலாம் என்று ஒரு பக்கம் யோசனை சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் அவ்வளவுக்கு முடியுமா என்ற மலைப்பு.
“ஏம்மா நீ என்ன சொல்லுற? அப்பா இன்ஜினியரிங் போலாம்னு சொல்றாங்க. எனக்கென்னமோ, பிளஸ் டூ ரெண்டு வருசம், பிறகு என்ட்ரன்ஸ் டெஸ்ட். பிறகு காலேஜ் நாலு வருசம். முடியுமா? நான் பாலிடெக்னிக்ல சேர்ந்து மூணு வருசம் படிப்பேன். பிறகு அதற்கு எதானும் வேலை கிடைக்கும். அதற்கப்புறம் எம்.ஐ.இ எதிலானும் படிக்கலாம்ன்னு எங்க ஜூலி மிஸ் சொல்றாங்க.. லயன்ஸ் அம்மா பாலிடெக்னிக்லே இங்கேயே எடம் கிடைக்கும்ன்னு சொல்றாங்க... ஆனா பாய்ஸ் கூடப் படிக்கணும்...”
அவளே சொல்லிக் கொண்டு போகிறாள்.
செவந்தியோ, கடலை விளைவித்த நிலத்தில் பசுந்தாளுடன் உழுது சுவர்ண வெளிப்பட்டத்துக்கு மும்மரமாக உழவோட்டி, நாற்றங்கால் பயிர் செய்கிறாள்.
கொல்லை மேட்டு விளைச்சலும் இவளைத் துாக்கி விடுகிறது. அடுத்து அங்கு வேர்க்கடலை பயிரிட ரங்கன் வங்கியில் கடன் பெற உதவுவதாக உறுதி கூறுகிறான்.
நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கின்றன. சரவணனுக்குப் பள்ளிக் கூடம் திறந்தாயிற்று. செவந்திக்கு, தான்வா ஆபிசர் அம்மாளைச் சென்று பார்க்க வேண்டும், மகள் படிப்புக்கு அவள் யோசனையைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம்.
ரங்கனுடன் கொல்லை மேட்டுப் பயிருக்குக் கடன் வாங்க நிலவள வங்கிக்குச் செல்கிறாள்.
“அம்மா உங்க வீட்டுக்காரரா? பூமி அவங்க பேரில இருக்குதா?” என்று கேட்டுக் கொண்டு விண்ணப்ப படிவம் தருகிறார், அவருக்கு நன்கு பரிச்சயமான வங்கிக்காரர்.
வேர்க்கடலை பயிர் இடையில் ஊடு பயிர் உளுந்து, வரப்பில் சுற்றி ஆமணக்கு என்று விரிவாக்கப் பணியாளரின் ஆலோசனைப்படி தீர்மானம் செய்கிறார்கள்.
இங்கே கையெழுத்து அங்கே கையெழுத்து என்று அவரே எல்லாம் காட்டுகிறார். செவந்திக்குப் புருசனுடன் வந்து அவரும் தன் உழைப்பில் பங்கு பெறுகிறார் என்று வெளியுலகுக்கு அறிவிப்பதே பெருமையாக இருக்கிறது.
காற்றுக் காலம் போய், சுவர்ணவளிப்பட்டம் நடவு வயல் உழுது சீராக்கும் பருவம்...
கன்னியப்பன் இப்போதெல்லாம் முழுப் பொறுப்பும் எடுத்துக் கொள்வதில்லை. முழு நிலமும் உழ நாலைந்து ஏர் தேவைப்படுகிறது. உழவு காலங்களில் அப்பன் சும்மா இருக்க மாட்டார். ஆனால் அவரை முழுசும் நம்பவும் முடியவில்லை.
“கன்னிப்பா, ஏம்பா காலவாரிவுடறே! ஒரே நாள்ல முடிக்கணும் கூட ரெண்டாளக் கூட்டிட்டு வான்னா, இப்படிக் கால வாரி வுடுற?” என்று செவந்தி சத்தம் போடுகிறாள்.
“ஆளே இல்லக்கா... நா, நீங்க மக்யா நாள் வச்சிட்டா வரத் தோதுப்படும். நாளக்கி எனக்கு வேல இருக்கு. வர்றதுக்கில்ல.”
“அப்ப வேற ஆளும் கொண்டாந்து விடமாட்ட? அப்பா இருந்தா ஒரு ஏருக்கு அவர நம்பலாம். மூணு நாளா உடம்பு சரியில்ல...”
“ஆமா... கையில் காசு வேணும்னு, வண்டியடிக்கிறாரு, காசு எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்.”
“சரி... சரி... போ... நானே சமாளிச்சிக்கறே!”
அவள் அதிகாலையில் எழுந்து சாணம் அள்ள வந்த போது திகைக்கிறாள். மாடுகள் இல்லை; ஏரும் இல்லை.
உள்ளே ஓடிவந்து கட்டிலில் பார்க்கிறாள். அப்பன் குறட்டை இழுப்பு கேரு கேரென்று வாசல் வரை கேட்கிறது. வாசலில் புருசன் இல்லை.
மனசுக்குள் ஒரு குறளியாக...
விடுவிடென்று வாசல் கதவைச் சாத்திக் கொண்டு ஒடுகிறாள். அவள் கண்களால் தன்னையே நம்ப முடியவில்லை.
ஐந்து ஏர்... தண்ணிர் பாய்ந்து, தொழுஉரம் போட்ட வயலில் உழுகின்றன. கண்களைத் துடைத்துக் கொண்டு பார்க்கிறாள். கன்னியப்பன் , வேல்ச்சாமி, பழனியாண்டி, மாரி... பிறகு அந்த அகலமான முதுகுடன் உயரமான ஆள்... வரப்படியில் அருகில் நிற்கிறாள். தார்ப்பாய்ச்சிய வேட்டி. கன்னியப்பன் அரையில் அணிந்த சட்டியுடன் முன்னே செல்கிறான்.
“மாமோவ்.... முதலாளி அம்மா வாராங்க. பாத்து உழுங்க!...”
கேலிச் சிரிப்பு காற்றின் அலைகளுடன் வந்து செவிகளில் மோதுகிறது.
----------------
அத்தியாயம் 19
“யக்கோ...”
“என்ன கன்னிப்பா ஒரே சந்தோசமா இருக்கே! என்ன விசயம்?”
“அக்காவக் கூப்பிடுங்க மாமா. அவங்ககிட்டத்தா மொதல்ல சொல்லணும்.”
“செவந்தி, கன்னியப்பன் கூப்பிடுறான்...” கணவன் முற்றத்தில் நின்றபடி கூறுகிறான்.
“என்னன்னு கேளுங்க! நா சோறு வடிச்சிட்டிருக்கே. சரோ காலேஜிக்குக் கிளம்பிட்டிருக்கு...!”
உள்ளிருந்தபடியே அவள் குரல் கேட்கிறது. சரோ இப்போதெல்லாம் பாவாடை தாவணி சேலை அணிவதில்லை. இரண்டு செட் சல்வார் கமிஸ் வாங்கியிருக்கிறாள். காலை ஏழரை மணிக்குள் வீடு விட வேண்டும். அதிகாலையிலேயே எழுந்து சித்தமாகிறாள். எப்போதுமே சரோவுக்கு சுத்தமாக மடிப்பாக உடை அணிய வேண்டும். பள்ளியில் படித்த நாட்களிலும் சீருடையைத் துவைத்து உலரப் போட்டிருந்தால் விரித்து விட்டு அழகாக மடித்துக் கொள்வாள். இப்போது கூடுதலாக இந்த உணர்வு வந்திருக்கிறது. காலையிலேயே சோப்பு போட்டு அலசி உள் முற்றத்துக் கயிற்றில் உலர்த்தி விடுகிறாள்.
“ஏம்மா நா நல்லா அலசி உலர்த்த மாட்டேனா உனக்கு நேரமாகுமில்ல?”
“நீ பிரிக்கவே மாட்டே. நான் உலர்த்தி மடிச்சிப் பெட்டிக் கடியில் வச்சா, இஸ்திரி போட்ட மாதிரி இருக்கும்” என்று சொல்கிறாள்.
கன்னியப்பன் முற்றத்தில் பார்த்துக் கொண்டே நிற்கிறான்.
“என்ன சமாச்சாரம் எங்கிட்டச்சொல்லக் கூடாதா?”
“உஹூம்... அம்மாகிட்ட மட்டும் தான் சொல்லுவ...” என்று வெள்ளைச் சிரிப்புடன் நெளிகிறான்.
“சரி சரி அம்மா நீ போயிக் கேளு. நா சாப்பிட்டுக்கிறே...”
“என்னவாம் அவனுக்கு அவுசரம் இப்ப?” சுடு சோற்றை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கிறாள். தட்டில் ஒரு ஈடு இட்டிலியைத் தட்டி சாம்பார் கிண்ணத்தை நகர்த்தி வைக்கிறாள்.
சரோ தண்ணிர் குப்பியில் தண்ணிர் ஊற்றித் திருகிக் கோணிப்பை போல் பெரிதாக இருக்கும் பையில் வைத்துக் கொள்கிறாள். உள்ளே சாப்பிட உட்காருகிறாள்.
“அம்மா, டிபன் டப்பியில் ஒரு ஸ்பூன் வேணும். நேத்து ஸ்பூன் எங்கோ விழுந்திருக்கு தெரியல...”
“என்ன கன்னிப்பா? என்ன விசயம்? மீசைக்காரரு சொல்லி அனுப்பினாரா?”
அவன் அவளை நடை வரை தள்ளிச் செல்கிறான்.
“வந்து... இன்னிக்கி சாயங்காலம் நீங்களும் மொதலாளியும் வரீங்க. அதுக்கு மின்னாடி காலம காஞ்சிபுரம் வர்ரீங்க...”
“எதுக்கு? என்ன சொல்லுற நீ?”
“அதாங்க, உங்களுக்கு தெரியுமேக்கா...! மீசக்காரரு, இன்னிக்கி நிச்சிதார்த்தம் வச்சிக்கலான்னு...”
செவந்தி சுதாகரித்துக் கொள்ளு முன், சரோ சாப்பிட்டுக் கை கழுவுவது தெரிகிறது.
“அக்கா உங்களையும் முதலாளியையும் வுட்டா எனக்கு ஆரிருக்காங்க!” குரல் நெகிழ்கிறது.
செவந்தி புரிந்து கொள்கிறாள்.
“ஓ, அப்படியா? லட்சுமி மாமா சம்மதிச்சிட்டாரா? என்னங்க” உட்பக்கம் கணவரைக் கூவி அழைக்கிறாள். அம்மா இப்போது தான் பல்விளக்கிவிட்டுக் கொல்லையில் இருந்து வருகிறாள்.
“அவங்கதா இன்னைக்கு நாளு நல்லாருக்கு, நிச்சயதார்த்தம் வச்சிக்கலான்னு சொன்னாங்க. நீங்களும் மொதலாளியும் காலம ஏங்கூட காஞ்சிபுரம் வரணம். அதுக்கு நல்லதா ஒரு சீல எடுக்கணுமுங்க...”
“ட்டேயப்பா கன்னிப்பன் மொகத்தப் பாருங்க! இன்னிக்கு நிச்சியதார்த்தமாம். காஞ்சிபுரம் போயிச் சீல எடுக்கணுமாம்!”
சரோ பையுடனும், வரிச்சட்டத்துடனும் வருகிறாள். வாசலில் நிற்கும் சைகிளில் பையை மாட்டுகிறாள்.
“சரோ நெதக்கிம் காஞ்சிபுரம் போயிப் படிக்கிதில்ல? ஆமா கிறிஸ்தவங்கசாமி சிலுவ போல அதொன்னு கொண்டிட்டுப் போற? இப்பவும் சிலுவக் காலேஜியா? இத சொந்தமா வச்சிட்டுக் கும்பிடணுமா? வேதத்துல சேத்துடுவாங்களா?”
“இது கும்புடறுதுக்கில்ல. இதுக்குப் பேரு ‘டிஸ்கொயர்’ இத்த டிராயிங் போர்டில் வச்சி வரையிவோம். பிளான் எல்லாம். நீங்க காஞ்சிபுரம் வாரீங்களா? எங்க இன்ஸ்டிட்யூட் தெரியும்...”
“நீயெல்லாம் ரொம்பப் படிச்சி, பேப்பரிலல்லாம் பேரு வந்திடிச்சி. எனக்கு அதெல்லாம் புரியாது சரோ. நா அம்மாவையும் அப்பாவையும் கூட்டிட்டுப் போற. இன்னிக்குச் சாயங்காலம் பட்டாளக்காரர் வூட்டுக்கு நீயும் வரணும்...”
“விருந்து உண்டா? லட்டு, பாயிசம், வடை அப்ப வாரேன்...”
“நிச்சயம் உண்டு. சரோ வந்திடு.”
அவள் சிரித்துக் கொண்டே சைகிளில் ஏறிச் செல்கிறாள்.
பத்து மணியளவில் கன்னியப்பன் பளிச்சென்ற வேட்டியுடுத்தி கோடு போட்ட நீலச்சட்டை அணிந்து, துவாலைப் போட்டுக் கொண்டு வந்து நிற்கிறான். செவந்தியின் அப்பா வாசல் திண்ணையில் இருக்கிறார்.
“கன்னியப்பனா? ஏய் மாப்பிள கணக்கா இருக்கிற. உக்காரப்பா” அவனைப் பற்றி பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்கிறார்.
“உங்களக் கும்புடறே மாமா. எனக்கு நெனப்புத் தெரிஞ்சா நாள்ளேந்து இந்தூடுத்தா பெறந்த வூடு. ஆயியப்பந் தெரியாத எனக்கு...”
“கன்னிப்பா, செவந்தி வெவரம் சொல்லிச்சி. நீ ரொம்ப ஒசந்து போயிட்டப்பா! எங்களெல்லாம் காட்டியும் ஒசந்தவ. பொண்ணும் பூமியும் ஒண்ணுதா. மேமயா பாவிக்கணும். பூமில அழுக்கும் கூளமும் போடுறோம். அத்தையே நமக்குப் பயிரா, தானியமாத் தருது. பொன்னா மாத்தித்தருது. பொம்புளயும் அப்படித்தா. நீ எத்தினி குத்தம் பண்ணினாலும் பொறுக்குறா. சகிக்கிறா. அத்த மனசுல வச்சிட்டு அதுக்கு அன்பா அனுசரணையா தாய்க்கு சமானமா மதிச்சி நடக்கணும். பூப்போல வச்சிக்கணும்...”
“ஏதேது கன்னிப்ப மாட்டக் கூட அடிக்க மாட்டா. வாயால ட்ராய் ட்ரய்ன்னு வெறட்டுவா லட்சுமிதா இவன வெரட்டப் போற...” என்று கூறிக் கொண்டு செவந்தி வருகிறாள். ரங்கனும் வாயிலில் வந்து நிற்கிறான்.
முன்பெல்லாம் சாமி கும்பிட, சாமான் வாங்க என்று ரங்கன் அடிக்கடி காஞ்சிபுரம் செல்வான். தான்வா பயிற்சி பெற்றபின், சாந்தியுடன் காஞ்சிபுரம் செல்ல வாய்ப்புக்கள் அதிகமாகி இருக்கிறது. விரிவாக்க அலுவலர் அலுவலகத்துக்கு விதைகள் பற்றி தீர்மானிக்க, வாங்க, இரண்டு மூன்று தரம் தான்வா மகளிர்கூட்டம் நடந்தது. பெரிய மேடம் வந்திருந்தார்.
சரோவின் கல்லூரியை எட்ட இருந்து ரங்கன் பஸ்ஸில் போகும் போதுகாட்டுகிறான்.
ஒரு புதிய பாதையில் அவர்கள் செல்கிறார்கள். இரண்டு தடவை பயிர் வைத்தாயிற்று. கொல்லை மேட்டில் போட்ட பயிரில் பட்டாளத்தாரின் கடனைக் கட்டி, மேல் பணமும் கையில் தங்கியிருக்கிறது. இனி மழைக்கு முன் வீட்டுக் கூரையைச் செப்பம் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டில் முன்பு அண்ணன் கலியாணத்தின் போது, வைத்த பூமியையும் மீட்க வேண்டும். அதில் தென்னை இருக்கிறது. கிணறு பம்ப் எல்லாம் இருக்கின்றது. அதில் சாகுபடி செய்தால், அண்ணனுக்கு ஏதேனும் அனுப்பி வைக்கலாம். மூன்று வருசம் சரோ படிக்க, பையன் படிக்க செலவுகள் அதிகம்தான். இடையில் சரோவுக்கு ஏதேனும் நகைகள், பண்ட பாத்திரங்கள் வாங்கிச் சேமிக்க வேண்டாமா?
நிறுத்தத்தில் வந்து இறங்குகையில் ஊமை வெயில் எரிக்கிறது. நேராகக் கடைக்குப் போகிறார்கள். தாமரைப் பூக்கலரில், அரக்குக் கரையில் இரண்டிழை சரிகை போட்ட ஒரு சேலை எடுக்கிறார்கள். எண்ணுற்று ஐம்பது ரூபாய். அரக்கில் சரிகைக் கட்டம் போட்ட ரவிக்கை. அந்தக் குழந்தைக்கு ஒரு கவுன். நூற்றிருபது ரூபாய்...
“ஓட்டலுக்குப் போய், சாப்பிடலாம் வாங்க...” என்று கன்னியப்பன் கூப்பிடுகிறான்.
“ஏம்ப்பா, வூட்ட சாப்பிட்டதே செரிக்கல. எதுக்கு ஒட்டல் இப்ப? பணத்த ஏன் விரயம் பண்ணுற?” என்று ரங்கன் மறுக்கிறான்.
“மொதலாளி, இன்னிக்கு நான் சொல்லுறத நீங்க தட்டக் கூடாது, நீங்க சாப்பிடணும்.”
“அட வூட்ட சோறாக்கி வச்சிருக்க. வீணாகும். எதானும் டி.பன் சாப்பிடுவம் போதும்!”
“சரி அப்ப டிபன் சாப்புடலாம் வாங்க!”
ஓட்டலில் எந்த நேரத்திலும் கும்பல் இருக்கும் போலும்! கன்னியப்பனுக்கு இந்த மாதிரி வெளிப்பாடு என்றோ ஒரு நாள் தானே? மேசையில் உட்காருகிறார்கள்.
“யப்பா, மூணு அல்வா, மூணு மசால்தோசை, கொண்டா!”
“தோசைவேற என்னாத்துக்கு? ஸ்வீட் போதும்...”
“அட நீங்க சும்மா இருங்கக்கா” மஞ்சளாக அல்வா ஒரு தட்டில் வருகிறது.
கன்னியப்பன் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்துக் கொள்கிறான்.
“நல்லாருக்கா... அன்னிக்கொருநா வேறொரு ஒட்டல்ல மைசூர் பாக் வாங்கின. ஒரே காரல் கசப்பு...” என்றுபேசிக் கொண்டே அநுபவிக்கிறான்...
“கன்னியப்ப நெறையப் பணம் சேத்து வச்சிருக்காப்பல?”
அரும்பு மீசையைப் பல்லால் கடித்துக் கொண்டு அவன் சிரிக்கிறான்.
“எவ்வளவு வச்சிருக்கேப்பா சும்மா சொல்லு!”
“என்ன மொதலாளி, நீங்க?”
“எவ்வளவு? பத்துத் தேறுமா?”
“அவ்வளவுக்கில்லீங்க. ஏழுக்கு ஒரு பத்திரம் வாங்கி வச்சிருக்கிறேன். ஆறு வருசத்துல ரெண்டு பங்காகும்னாங்க. அதிர்ஷ்டம் இருந்தா டி.வி. காரு எல்லாம் பிரைஸ் கூட வருமாம்...” சிரிப்பாய் வழிகிறது.
“வந்திச்சின்னா, சொந்தத்துக்கு ஒரு அரக்காணி, கால்காணினாலும் வாங்கணுங்க...”
“இப்பத்தான் உனக்குப் பொஞ்சாதி வழி வருதில்ல? ரெண்டேகராவுக்கு மேல இருக்குமே?”
“நமக்குன்னு ஒரு அம்பது சென்ட்ன்னாலும் இருக்கணுங்க”
“கிணறு இருக்கு. உன் உழைப்பு இருக்கு. ஜமாய்சிடுவ. உங்காயா சம்மதிச்சிச்சா?”
அவன் பேசவில்லை.
செவந்தி பேச்சை மாற்றுகிறாள்.
“லட்சுமி நல்ல பொண்ணு. பட்டாளத்தாரு முதலிலேயே அவளுக்கு அவள வச்சிட்டு சந்தோசமா குடும்பம் நடத்தற ஒருத்தனுக்கு கட்டி வைக்கணும்னு நல்ல யோசனை, நல்ல முடிவு. அந்தப் பய அழிச்சது போக, பத்து சவரன் நகை இருக்கு. அவம்மா தாலிய பத்திரமா வச்சிருக்கிறேன்னெல்லாம் சொன்னாரு. கன்னியப்பனுக்கு நல்ல எடம். அவளுக்கும் கன்னியப்பனைப் போல ஒரு புருசன் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்... நல்லாருப்பீங்க.”
“இப்பக் கூட தாலிக் கூறை வாங்குறது நம்ம முறைன்னு தோணிச்சி. நா அதுக்குன்னே ஆயிரம் ரூபா தாரேன்னு சொன்ன. அதுக்கு அவரு, என் சம்சாரம் போட்டுட்டிருந்த தாலி. அவ நல்லா வாழ்ந்தா. அத்த அழிச்சி செஞ்சி வச்சிருக்கிறேன். நீ பணம் வச்சிக்கன்னாங்க. அதா சீல நல்லா வாங்கணும்னு வந்த மொதலாளி...”
“சும்மா என்ன மொதலாளி மொதலாளின்னு கொழப்ப தாப்பா. மாமோன்னு கூப்டு போதும். கலியாணம் எங்க வச்சி நடக்க?”
“நம்ம ரோட்டோரத்து அம்மங் கோயில்ல வச்சித் தாலி கட்டிட்டு ரிஜிஸ்திரார் ஆபீசில பதிவு பண்ணனும்னு பட்டாளத்தார் சொல்லிட்டாரு. சரின்னே... சரிதானேக்கா?”
“ரொம்ப சரி...”
“எம்பக்கம் நீங்கதாங்க மனுசா...”
நெஞ்சு நிறைந்திருக்கிறது.
அன்று சாயங்காலம் சைகிளில் புருசனும் பெண் சாதியுமாகப் போகிறார்கள். பட்டாளத்தாரின் தங்கை வீடு கூரை வீடுதான். ஆனால் பெரிய வசதியான வீடு. பளிச்சென்று துடைத்துக் கோலம் போட்டு மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரித்திருக்கிறார்கள். ஒயர் இழுத்து வாசல் கம்பத்தில் இரண்டு வாழைத்தண்டு விளக்குகள் போட்டிருக்கிறார்கள். லட்சுமியே வாசலில் வந்து “வாங்கக்கா!” என்று அழைக்கிறாள். பூப்போட்ட ஒரு பச்சை சில்க்குச் சேலை அணிந்திருக்கிறாள். பின்னல் பின்னித் தொங்கவிட்டு ரிப்பன் முடிந்து, நிறையப் பூச்சூடி இருக்கிறாள். காதில் தோடு, மாட்டல், இரண்டு மூக்கிலும் மூக்குத்தி அணிந்து, புதுமையாக காட்சித் தருகிறாள். பெண் குழந்தை, அவன் வாங்கி வந்திருக்கிற புதிய கவுனை அணிந்திருக்கிறது. ராமையா, பின்புறம் சமையல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பவர், இவர்களைக் கண்டு விரைந்து வருகிறார்.
“வாங்க, வாங்க சம்பந்தி அம்மா...எங்க நம்ம இன்ஜினிர் பொண்ணு வரல?”
“வருவா. முன்ன பின்ன வூடு வர ஆறு மணி ஆகுது சில நாள்ள. வந்ததும் வந்திடுவா.”
“சின்னப் பய்யன் வரல?”
“அவ கூட வருவான். படிச்சிட்டிருக்கச் சொன்னேன்...”
வெற்றிலைப் பாக்கு, பழம், கல்கண்டு, சர்க்கரை எல்லாவற்றையும் எடுத்துத் தட்டுக்களில் வைக்கிறார்கள்.
“மாப்புளயக் காணல?”
“இத வந்திடுவா. நீங்க காபி சாப்பிடுங்க!”
லட்டு காராபூந்தி கொண்டு வைக்கிறாள் லட்சுமி. அவள் அம்மா காபி கொண்டு வருகிறாள்.
சற்றைக்கெல்லாம் புது மாப்பிள்ளையாக, கன்னியப்பன் வருகிறான். நெற்றியில் சந்தனம், குங்குமம், மில்காரர் அங்கவஸ்திரம் விசிற வந்து உட்காருகிறார். அண்டை அயல்காரர்கள், வங்கிக்காரர் ராமலிங்கம், எல்லோரும் வர களை கட்டி விட்டது. ஆடியோ காசெட், நாதசுரம் ஒலிக்கிறது. ரங்கனும் செவந்தியும் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ராமையாவும் அவர் சகோதரியும் நின்று பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள்.
சரோசா சொன்னபடி சரவணனுடன் வந்து விடுகிறாள்.
இரவு சிரிப்பும் கேலியுமாகச் சாப்பிட்டுவிட்டு அவர்கள் திரும்புகையில் மணி பத்திருக்கும். ஆவணி மாசம். நிலவு பாதியாகத் தெரிகிறது. சைகிளில் தொங்கும் பையில் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பழமும், லட்டும், வடையும், வெற்றிலைப் பாக்கும் கொண்டு வருகிறார்கள். அப்பா வாயில் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்கள். லேசாக இழுப்பு இருக்கிறது.
குடித்திருக்கிறார் என்று தோணுகிறது.
“கலியாணம் ஆயிடிச்சா?”
“கலியாணம் சொர்ணவாளிப்பட்டம் அறுவடையான பின் அப்பசிக்குப் போயிடும். அப்ப அவங்க மக பிள்ளைங்க வருவாங்க போல. இது நிச்சியம்தான? கன்னியப்பனுக்கு நல்ல அதிர்ஷ்டம்தா...” என்று செவந்தி சொல்லி பையில் இருந்து லட்டு வடை எல்லாம் எடுத்து அப்பாவிடம் கொடுக்கையில் அம்மாவும் அங்கே இருப்பது தெரிகிறது.
“என்ன பெரிய அதிர்ஷ்டம். அறுத்தவளப் போயிக் கெட்டுறா! ஆயா வந்தாளா? எடுத்து வளர்த்தவளக் கால வாரிவுட்டுப் போட்டு ஆக்கம் கெட்டவளப் போயிக் கெட்டுவானா?”
“சீ! வாயை மூடு” என்று அப்பா கத்துகிறார்.
“என்ன பேச்சுப் பேசுற நீ! அந்த ஆயா ஒரு மூதேவி. மகள இதுவே சாதிக் கெட்டவன் பின்னே போனன்னு குத்தி சாகடிச்சிருக்கும். இங்க வந்து உக்காந்து திட்டுது. எனக்குக் கெட்ட கோவம் வந்திடிச்சி. இந்த வூட்டுப்படி இனி வராதேன்னு தெரத்தின.”
“ஆமா உங்களுக்கு ஏ அறுத்தவள்னு சொன்னா கோபம் வருது? முதமுதல்ல இவம் போயி அவ வூட்ல விழலாமா? கன்னி கழியாத புள்ளகளா இல்ல? அவப்ப என்ன சாதியோங்கறது சரியாத்தா இருக்கு. அதும் மொதல்ல கட்னவனுக்கு ஒரு பொட்டப் புள்ள வேற...”
“தா பேசக்கூடாதுன்னா பேசாத! உன்னிய வெட்டிக் கொன்னிருவ! அன்னிக்கே நம் மூட்டில் இப்படி ஒரு கலியாணம் நடந்திருக்க வேண்டியது. வூடு தேடி வந்து பொண்ணு கேட்டாரு. அவர ஏசி அனுப்பிச்சிட்டு, இந்தப் பாவி எவனையேனும் கட்டிட்டு சொத்தப் பிரிசிட்டுப் போயிடுவான்னு; அவ பங்குக்கு ஒண்ணுமில்லாம இவப்பனே எழுதிட்டா... அந்தப் பாவம் என்னிக்கின்னாலும் தலை மேலதா தொங்கிட்டிருக்குங்குறத மறந்திடாதே!”
கொல்லென்று அமைதித் திரைபடிகிறது.
----------------
அத்தியாயம் 20
வயசுப் பெண்ணைத் தனியாகப் பஸ்ஸில் அனுப்புவது, ஆண் பிள்ளைகள் பழக இடமுள்ள கல்லூரியில் படிக்க வைப்பது என்பதை நினைத்தும் பாராத ஒரு குடும்பத்தில் செவந்தி துணிந்து தன் மகளை அனுப்பி இருக்கிறாள். இந்த மூன்று ஆண்டுகளில் அவள் எத்தனை பழிகள், மனதோடு எத்தனை நெருப்புக் கண்டங்கள், கவலைகளுக்கு மனசைக் கொடுத்திருக்கிறாள்?
அடுப்படியில் இருந்தாலும் கொட்டிலில், கழனியில், களத்து மேட்டில் எங்கிருந்தாலும் சரோ அடிமனசில் ஒரு சக்தியாக வியாபித்திருக்கிறாள் என்றால் தவறில்லை.
சில நாட்களில் ஐந்து மணியுடன் வந்து விடுவாள். அவள் சைக்கிள் வந்து நிற்கும் ஒசை, அவள் வேக நடை, அம்மா என்று நடையிலேயே கொடுக்கும் குரல், ஆகியவற்றில் நெஞ்சுக்கனம் எப்படி உருகும்!
சரோ இப்படி ஒரு சக்தியாக உருவாவாள் என்று அவள் நினைத்திருக்கவே இல்லை. ஒரு காசு அவளறியாமல் செலவழிக்கவில்லை. இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஏற்ற இறக்கங்கள்; முட்டல்கள், மோதல்கள்! ஆனால் முன் இருந்திராத நம்பிக்கையல்லவோ அவர்கள் மாற்றி மாற்றிப் பயிர் விளைவிக்கச் செய்கிறது?
சென்ற ஆண்டில் சுவர்ணவளி நெல்லைப்போட்டு அது அறுவடையாகும் சமயத்தில் மழை கொட்டிப் பயிர் நஷ்டமாகிவிட்டது. வீட்டைச் சுமாராகச் செப்பனிட்டிருக்கிறாள். ஆனால் போக்கியத்துக்கு விட்ட நிலத்தை மீட்பது லட்சியமாகவே இருக்கிறது.
“அம்மா லீவு நாளில் நடவு வைத்துக்கொள். நானும் ஒரு கைக்குவாரேன்” என்று சரோ நிலத்து வேலையில் ஈடுபடுவது சாதாரணமாகி விட்டது. சாந்தி சைக்கிளில் வந்து நடவு நடுவதை விட கால் சட்டையைச் சுருட்டி விட்டுக் கொண்டு சேற்றில் இறங்கும் மகள் புதுமையாகிறாளே? முடி, பின்னல் நீண்டு விழும். அதிகாலையில் எழுந்தாலும் சீவிச் சிடுக்கெடுக்க எண்ணெய் முழுக்காடி நேரம் செலவழிக்க முடியவில்லை. மரபுகள், கோடுகள் அழிக்கப்படுகின்றன. அவளே ஓரளவு முடியைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு அளவாக அம்மாவையே கத்திரிக் கோலால் வெட்டி விடச் சொல்லி விட்டாள்.
“இதென்னடீ அநியாயம்? வாழுற வூட்டுப் பொம்புள இப்படிச் செய்யலாமா” என்று பாட்டி ஆரம்பித்ததுதான் தாமதம். பட்டென்று சென்று வாயைப் பொத்துவாள் சரோ.
“பாட்டி உங்க காலம் அது. இது எங்க காலம் சும்மாருங்க! இங்க நா முடி சிங்காரிச்சிட்டிருந்தேன்னா பஸ் போயிடும்” என்று ஒரே போடாகப் போட்டு விட்டாள்.
கோடுகள் அழியப்படும் போது கூக்குரல்கள் எழத்தான் எழுகின்றன. ஆனால் மன உறுதிக்கு முன் அந்தக் கூக்குரல்கள் எடுபடாதுதான். செவந்திக்குத்தான்மகள் எது சொன்னாலும் நியாயமாக வேத வாக்காக இருக்கிறது.
“ஆம்புளப் புள்ளங்க கூட படிகிறதுன்னா, தொட்டுப் பழகாமலா இருக்கும்? சதா சினிமா டி.வி.ல காட்டுறாங்களே? செவந்தி புத்தி கெட்டு இந்தப் பொண்ண வுட்டு போட்டா. என்ன கொண்ட்டு வரப்போகுதோ...” என்று அம்சுவின் அத்தை பிரலாபித்தது அவள் செவிகளில் விழுந்து விட்டது. விடுவிடென்று போகிறாள்.
“ஏ, பெரியம்மா? உங்களுக்கு வேற வேல இல்ல? நீங்க வயலுக்குப் போகலே? கடைக்குப் போகல? பொம்புளயும் பொம்புளயும் நாலு முருங்கைக்காக முடி புடிச்சி இழுத்திட்டுக் கேவலமா ஊரக் கூட்டல கழுநீருக்கும் கருமாதிக்கும் வித்தியாசம் இல்லாம தொண்டத் தண்ணி வத்த கத்தல? அத்தவுட நான் காலேஜுக்குப் போய் படிப்பது கேவலமின்னா இருக்கட்டும். இன்னொரு தடவ என் காதுல இப்படி இங்க யாருன்னாலும் அடுத்த வூட்டுச் சங்கதியக் காது மூக்கு வச்சிப் பேசட்டும். போலீசக் கூட்டியாந்துடுவே! இப்பல்லாம் பொம்புள போலீசு இருக்கு. ஜாக்கிரதை” வாயடைத்துப் போயிற்று.
கல்வியறிவு, வெளி உலகத்தின் அன்றாடத் தொடர்புகள் இரண்டும் பெண்ணுக்கு நிமிர்ந்து நிற்கும் உறுதியை மட்டும் கொடுக்கவில்லை. கசடுகளை ஒதுக்கிக் கொண்டு முன்னேறவும் துணிவைக் கொடுப்பதுமாகச் செவந்தி புரிந்து கொள்கிறாள்.
ரங்கன் சைகிள் கடை இருந்தாலும், முழுமனசுடன் அவள் ஊன்றிய விவசாயத் தொழிலில் ஈடுபடுகிறான்.
“செவந்தி பூச்சி இருக்குது. அதோட அதைச் சாப்பிடும் நன்மை செய்யும் இனமும் இருக்கு. இப்ப மருந்து வானாம். விளக்குப் பொறி வச்சிப் பாக்கலாமா?” என்று அவளிடத்தில் யோசனை கேட்கிறான்.
“ஆமாங்க மருந்தடிச்சா நல்ல பூச்சியும் அழிஞ்சிடும்... ப்யூட்ரான் போட்டிருக்கு பார்ப்போம்...” என்று அவள் சொன்னால் ஒத்துக் கொள்கிறான்.
பொம்புள சொல்லிக் கேட்பது கேவலம் என்று ஊன்றியிருந்த மனப்பான்மை தகர்ந்து விட்டது.
படிப்பு, படித்து ஏற நல்லது கெட்டது பிரித்தறியும் விவேகமும் விரிவாவதைச் செவந்தி உணருகிறாள்.
செயல் முறை அறிவுக்காகச் சென்னையின் எல்லைக்குள் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு சக மாணவர்களுடன் செல்ல வேண்டி இருக்கும். தனி வகுப்புகள் ஆலோசனை விவாதங்கள் என்று நேரம் கழித்து வீடு திரும்புவதைத் தவிர்க்கவியலாது. இறுதிப் பரிட்சை முடிந்த பின் நேர்முகப் பயிற்சி என்ற அளவில் ஒரு தொழிலகத்தில் சில நாட்கள் அவள் சேர வேண்டும். கிண்டியில் அந்தத் தொழிற்சாலை இருக்கிறதாம்.
அவருடைய தோழி ஒருத்திக்கு சென்னையில் வீடு இருக்கிறதாம். வசதியாகத் தங்கிக் கொள்ள அழைத்திருக்கிறாள். அவளுடன் தந்தையும் சென்றிருக்கிறார்.
சின்னம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற அவா இன்னமும் ஈடேறவில்லை. இரண்டொரு முறை செவந்தியும் சாந்தியும் சென்னைக்குச் சென்றார்கள். தான்வா அலுவலகம் சென்று பெரிய மேடத்தைப் பார்த்தார்கள். திருவள்ளுர், காரணை ஆகிய இடங்களில் நடந்த சிறப்புப் பயிற்சிக்குப் போனார்கள். இப்போது இங்கேயே தான்வா மகளிர் சங்கம் என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். செவந்தி தலைவர். சாந்தி செயலாளர். சுந்தரி, வேனி, எல்லோரும் தான்வா பயிற்சி பெற்று சுயமாகத் தங்கள் நிலங்களில் பயிர் செய்கிறார்கள்.
மொத்தத்தில் திண்ணையில் குந்தி இருந்து ஏதேனும் பேசக் கூடப் பொழுது இல்லை.
இந்த நவரைப் பட்டம் கொல்லை மேட்டில் இவர்கள் கடலையும் மிளகாயும் பயிரிட்டிருக்கிறார்கள்.
கத்திரி வெய்யில் சுட்டெரிக்கக் காலையிலேயே சென்ற கணவனை எதிர்பார்த்து செவந்தி நிற்கிறாள். கோயில் தோப்பு புளிதான் வாங்கி உடைத்து, கொட்டை எடுக்கிறார்கள்.
“ராவிக்கு சரோ வராதா?”
அம்மா சும்மா இருக்கமாட்டாளே?
“நீ சும்மா துணப்பாத அது பத்து நா ட்ரெய்னிங் இருக்கப் போகுது. அதா அப்பா போயிருக்காரில்ல? எங்களுக்கு இல்லாத கவல உனக்கென்ன...”
இரவு ஒன்பது மணிக்கு ரங்கன் வரும்போது அம்மா வீட்டில் இல்லை. நீலவேனி டி.வி. வாங்கிவிட்டாள். அம்மா மட்டுமில்லை. சரவணனும் அங்கே போய்விடுகிறான். சரோ இருந்தால் தான் கண்டிப்பு அவனுக்கு. வாசல் திண்ணையில் ஒரு விசிறியை வைத்து விசிறியபடி அப்பனுடன் அவள் இருக்கிறாள். அவன் விர்ரென்று சைகிளில் வந்து இறங்குகிறான். உள்ளே வருகிறாள். கையில் இருக்கும் பையை அவளிடம் கொடுக்கிறான்.
மாம்பழங்கள்... ஏதோ புத்தகம்...
“சரவணன் எங்கத் துரங்கிட்டனா? அவனுக்குத்தா சரோ மாடல் பேப்பர் வாங்கிக் குடுத்திச்சி!”
“சரோ... எங்க அவங்க பிரண்ட் வீட்டிலா இருக்கு?”
“அங்கதாம் போன. இவங்க... பாக்டரிக்குக் காலம எட்டு மணிக்குள்ள வரணும். அவங்க வூடு, திருவான்மியூர் பக்கத்தில இருக்கு. ரெண்டு பேரும் வர்றதுன்னா பரவாயில்லை. அது எலக்ட்ரானிக்ஸ் எடுத்திருக்கு. இது மெக்கானிக்கல். அம்பத்துரில் இல்ல. இங்க கிண்டி எஸ்டேட்டுக்குள்ள நிறைய சின்ன சின்ன தொழிலகங்கள் இருக்கு. இவங்க பாக்டரில டிரெயின்ங் எடுக்கலாம்னு லெட்டருக் குடுத்துச் சொல்லிருக்காரு. தான்வா அம்மா, அம்பத்துரில் பவர் டிரில்லர்... பாக்டரிக்கு சரோ மின்னியே பாத்து பேசிருக்குப் போல... திருவான்மியூரிலிருந்து இது பல்லாவரத்து தங்கிக்கிறதுன்னு முடிவு பண்ணி சேத்துட்டே கிண்டி கிட்டக்க. நிறைய பஸ் இருக்குது.”
இவளுக்கு ஆவல் துடிக்கிறது.
“பல்லாவரம்ன்னா.... அங்க எங்கே?”
“சின்னம்மா இருக்காங்கல்ல, அவங்க இருக்கிற ஆஸ்டல்தா.”
“திருவான்மியூர்ன்னு இடம் வச்சிட்டு கிண்டி பாக்டரில வந்து பார்த்துக்கிட்டோம். பால் பேரிங் எல்லாம் செய்யற பாக்டரியாம். அங்கேந்து சின்னம்மாவப் பார்க்க ஹோமுக்கு வந்தோம். அவங்களுக்கு ரொம்ப சந்தோசம். உடனே வெளியே ஆளனுப்பி காபி மிக்சர் எல்லாம் வாங்கிட்டு வந்து குடுத்திச்சி. சின்னம்மா பேருல எல்லாருக்கும் மதிப்பு இருக்கு. அங்கே சமையல் வேலை செய்யிது. கூட ரெண்டு எடுபிடி பொம்பிளங்களாம். எல்லாம் பொம்புளங்க. திருவான்மியூர்லேந்து ஏவாரணும். என் ரூமில தங்கிக்கட்டும் பாப்பா. இங்க ஆஸ்டல்ல எல்லாம் வேலை செஞ்சிட்டுத் தனியா இருக்கிற லேடீஸ்தா. ஸ்ட்டுடண்ட்ஸ் கூட போன வருசம் ரெண்டு பேர் இருந்தாங்க. பிறகு இப்ப வேலைக்குப் போறவங்களுக்கு மட்டும்ன்னு வச்சிருக்காங்க. ரொம்பப் பாதுகாப்பு. கிறித்தவங்கதான் நடத்திட்டிருந்தாங்க. ஆனா இங்க இதுக்கு தலைவியாக இப்ப இருக்ற அம்மா சொர்ண லலிதா பெரிய சோஷியல் வொர்க்கர். அவங்க மின்ன எம்பியா இருந்தவங்க. கேள்விப்பட்டிருப்பீங்க. ரொம்ப நல்ல மாதிரி. இவங்களுக்கு ரெண்டு பையன்க அமெரிக்காவுல டாக்டராக இருக்காங்க. இங்க இந்த ஹாஸ்டல் தவிர, நீலாங்கரையில் பெரிய முதியோர் இல்லம் நடத்தறாங்க. பார்வையில்லாத வங்ளுக்காக ஒரு சங்கம் கூட அவங்க தலைமையில் நடக்குது... எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. எப்படியோ ஆடிக்காத்துல பறந்து வந்து இப்படி ஒரு பத்திரமான எடத்துல விழுந்திட்ட... ன்னு சொல்லிச்சு. நமக்கு அது குத்தாறப்பில இருந்தாலும் பெரிசா எடுத்துக்கறதுக்கில்ல.
“பத்து நாட்களுக்கு எங்கூடத் தங்க அம்மா பர்மிசன் குடுப்பாங்க. இல்லாட்டி இப்ப ஒரு ரூமில மூணு பேர் இருக்கிற இடத்துல ஒண்னு காலி இருக்கு. பத்து நாளைக்கு நூறு ரூபா கேட்பாங்க. குடுத்திடலாம். பிரச்சன இல்லன்னிச்சி. காலம ஏழரைக்குள்ள உனக்கு நாஷ்டா குடுத்திடறேன். பகலுக்கு அங்க காண்டின்ல எதானும் சாப்பிட்டுக்க. இங்க எட்டரைக்கு நாஷ்டா சாப்பிட்டு கையில் ஒரு சாம்பார் சாதம் எலுமிச்சை சாதம் தயிர் சாதம் லஞ்ச் கட்டிட்டு போற வங்க இருக்காங்க. அது ஏழரைக்குள்ள ஆவாது. ராத்திரிக்கு எட்டுக்குள்ள டின்னர் ரெடியாயிடும்னிச்சு. இதவிட பத்தரமா வசதியாக நம்ம குழந்தையைப் பாத்துக்கப்போறவங்க யாரு? அதுதா சொல்லச் சொல்லக் கேக்காம இந்த மாம்பழம் வாங்கிக் கொடுத்திச்சி.”
இவர்கள் சமையலறையில் தணிந்த குரலில் பேசுவது அப்பனுக்கு எப்படி எட்டியதோ?
“ஏம்பா ராசாத்திய பாத்தியா? ஒரு நட இங்க வரச் சொன்னியா?”
“பாத்த மாமா. அவங்க கூடத்தா இப்ப சரோவ வுட்டிருக்க...”
“எப்பிடி மக கூட இருக்காளா? மக நல்லபடியா வச்சிக்கிதா?”
“மக அவங்ககூட இல்ல. இவங்க ஒரு ஆஸ்ட்ல்ல இருக்காங்க. சமையல் வேலதா. ஆனா நல்லபடியா இருக்கேன். பிரச்னை எதும் இல்லைன்னு சொல்லிச்சி...”
செவந்தி மாம்பழத்தைக் கழுவி நறுக்குகிறாள்.
மெல்லியதோல். உருண்டையான ருமானி. ஒரு துண்டை அப்பனுக்குக் கொடுக்கிறாள். அப்பன் அதை வாயில் போட்டுக் கொள்கிறான். கண்களில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணிர் பெருகிறது.
“ஏம்ப்பா... இப்ப இஸ்கூல் லீவுதான. ராசாத்தி மகளையும் பிள்ளைகளையும் மருமவனையும் ஒரு வாட்டி கூட்டிட்டு வரச் சொல்லலாமில்ல. மக ருக்கு நல்லபடியாக இருக்கிறதா ருக்குமணி அவ ஆத்தா பேரை அதுக்கு வச்சிது. அதுக்கு ஒரு நெல்லது செய்யல பாவி நாங்க...” உணர்ச்சி வசப்பட்டு மார்பில் அறைந்து கொள்கிறார்.
“அப்பா.... என்ன இது? உங்ககிட்ட எதும் சொல்ல முடியல. அவங்கள நினைச்சா ஒடம்புக்கு ஆவறதில்ல இல்ல.”
“இல்ல செவந்தி. நெஞ்சு ஆறாத புண் இது. உங்கம்மா பழிகாரிதா என்ன அப்படி தடுத்துப் போட்டது. ஒரு பாவமும் அறியாத அவ மேல அபாண்டம் சுமத்தினா. அந்தப் பாவம் இங்க புண்ணா இருக்கு. அவ இங்க வந்து நா மனசில வச்சுக்கல என்று சொல்லுற வரைக்கும் ஆறாது...”
ரங்கன் மெளனமாக கலத்தில் போட்ட சோற்றைச் சாப்பிடுகிறான். அப்போது தான் பாட்டியும் பேரனும் டி.வி. பார்த்து விட்டு வருகிறார்கள். “ஏய் இங்க வா! படிக்கிறப்ப இப்படி ராத்திரி பத்து மணிக்கு டி.வி. பாத்திட்டு படிச்சி எப்பிடித் தேருவே? ரெண்டாயிரம் கட்டி சேர்த்திருக்கு. சரோக்கு ஒரு பத்து பைசா அதிகமா செலவு பண்ணல. இன்னி வரையிலும் அவங்க டீச்சர் எல்லாம் பெருமையா பேசும்படி வந்திச்சி. நீ...” இழுத்து வைத்து முதுகில் ஒர் அறை விடுகிறான்.
உடனே சரவணன் பெரிதாக அழத் தொடங்குகிறான். “மூடுமூடு ராஸ்கல். சத்தம் போட்டே பலி வச்சிடுவே. மூடு. அக்கா மாடல் கொஸ்சின் பேப்பர் அவங்க பிரண்ட்கிட்டந்து வாங்கிக் கொடுத்திருக்கு, போயி சோறு துன்னிட்டுப் படுத்துக்க. விடிகாலம நாலு மணிக்கு எழுப்பி விடுவே.. படிக்கணும்! போ...”
பாட்டிக்குப் பொறுக்கவில்லை. “அது வரலன்னுதா சொல்லிச்சி. நாந்தா கூட்டிட்டுப் போன. அங்க அவன் புஸ்தகம் வச்சி படிச்சிட்டுதா இருந்தா.”
“அது சரி கெடுக்கறதே நீங்கதா. நீங்க டி.வி. பார்க்கப் போனா அவ எதுக்கு? போங்க! போங்க!”
வேலை முடிந்து மாட்டுக்கு வைக்கோல் போட்டுவிட்டு செவந்தி சேலையை உதறிக் கொண்டு வாயிலுக்கு வருகிறாள். ஒரே புழுக்கமாக இருக்கிறது. காற்றே வரவில்லை. தரையில் தலைப்பை உதறிக் கொண்டு தலை சாய்கிறாள்.
“செவந்தி... ஒரு விசயம் சொல்ல வானாம்னாலும் சொல்லாம முடியல... முருகன் இப்ப பத்து நாள் மின்னக் கூட பட்டணம் வந்திருந்தானாம். வயிற்றுவலி அல்சர்ன்னு வைத்தியம் பண்ணிக்கிறானாம். இளைச்சிப் போயிட்டான். அவங்க மச்சினிச்சி வீட்டில் பார்த்தேன்னு சின்னம்மா சொல்லிச்சி. ருக்கு அங்கதா ஏரிக்கரைப் பக்கம் குடிசையில் இருக்காப்பல. இவங்க ஏரிக்கரைப் பக்கம் ஜீவா நகர்ன்னு புதிசா வீடுகள் கட்டிருக்காங்க. அங்க இருக்காங்க. எனக்கென்னமோ, ஒரு நடை போயி பாத்துட்டு ஒராயிரம் ரூபான்னாலும் குடுத்திட்டு வரணும்னு. ஏன்னா, அப்ப நான் சரோவக் கூப்பிடப் போனப்ப, அண்ணி குத்தலா பேசிச்சி. நாம ஒண்ணும் அவங்க சொத்த அபகரிக்கலன்னு காட்டணும். அம்மா அப்பாக்கு சோறு போட்டு வைத்தியம் பண்ணி நல்லபடியா வச்சிருக்கிறம்... நீ சொல்லு நாயத்த...”
“நீங்க நினைச்சா சரி. சரோவும் படிப்பு முடிச்சிட்டது. எங்கனாலும் வேலைக்குப் போயிடும். நடவுக்குன்னு பணம் வச்சிருக்கிற. நாளக்கே ஆயிரம் போல எடுத்திட்டு போய் வந்திருங்க. ஆனா இது விசயம் அப்பா அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.”
------------
அத்தியாயம் 21
இதற்கு முன் இந்த தான்வா திட்டத்தின் பெரிய ‘மேடம்’ என்று சொல்லப்படும் ஆபிசரைப் பல தடவைகள் செவந்தி பார்த்திருக்கிறாள். அவர் அவள் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்து ஒவ்வொரு மறுப்பையும் பொருட்படுத்தாமல் ஊக்கி இருக்க வில்லையெனில் இன்று இந்தப் பெரிய ஆபிசில் அடி வைக்க அவளுக்குத் தகுதி வந்திருக்குமோ? வாசல் கூர்க்கா முன்னறைப் பெண்மணி எல்லோரையும் தாண்டி அவளும் சரோவும் சில்லென்று குளிர்ச்சி அணையும் அந்த அறைக்குள் வருகிறார்கள்.
உள்ளே வரும் போது ஒரே அச்சம். ஒரு கூச்சம்; அச்சம்.
‘இந்தம்மா எவ்வளவு எளியராக இருந்தார்? ஆனால் எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறார்’ என்ற வியப்பு.
உள்ளே நாற்காலியில் ஒரு பருமனான பெண்மணி, காதில் பெரிய தோடு மூக்குத்தி, தங்கச்சங்கிலி வளையல்களணிந்து உட்கார்ந்திருக்கிறாள். அவளுடன் ஒரு பதினான்கு பதினைந்து வயசுப் பெண்ணும் நிற்கிறாள்.
“அடடே வாங்க செவந்தியம்மா. வா சரோ. உட்காருங்க” என்று நாற்காலிகளைக் காட்டி உட்காரச் சொல்கிறார்கள்.
சரோ “தேங்க்யூ மேடம்” என்று சொல்லிக் கொண்டு உட்காருகிறாள்.
“இந்தம்மா தஞ்சாவூர் பக்கத்திலிருந்து வந்திருக்காங்க. வளர்மதின்னு பேரு. தான்வா பயிற்சியெடுத்தவங்க. இப்ப விவசாயத்தோட பால் மாடு வாங்கி கூட்டுறவு சங்கத்தில் நூறு பெண்களை ஈடுபடுத்தி இருக்காங்க. அவங்க அனுபவம் கேளுங்க.”
“வணக்கம்” என்று சரோ அவளைப் பார்த்துக் கை குவிக்கிறாள்.
“நூறு மாடுன்னா, எப்படிங்க?”
“அதான் தான்வா மகளிர் சங்கம்ன்னு ஒண்ணு வச்சிட்டோம். அதில் நூறு பெண்களுக்கு லோன் வாங்கி மாடு வாங்கினோம். பெண்களுக்கு இதில் உபரியாய் வருவாய் இருக்கு. லோன் அடைஞ்சு அதிகமாக வருவாய். மேலும் மாடுகள் விருத்தியாகுது. இப்ப சொசைட்டிக்கு பால் விட்டது போக கூடுதலாகக் கிடைக்குது. இதை எப்படித் தொழில் பண்ணலாம்னு யோசனை கேட்க வந்தேன்.”
செவந்தி வியந்து நிற்கிறாள்.
“ஏம்மா பவர் டிரில்லர் பற்றிக் கேட்டியே. பாக்டரிக்கு போய் பார்த்தாயா?” என்று சரோவிடம் அவர் கேட்கிறார்.
“அந்த மேடத்தை ஆபீசில் பார்த்தேன். ஆனால் பாக்டரிக்கு போகவில்லை. ரிசல்ட் வந்து பர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணிட்டேன் மேடம்.”
கையில் வைத்திருக்கும் பையில் இருந்து பால்கோவாப் பெட்டியைத் திறந்து நீட்டுகிறாள்.
“வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோசம், சரோ.”
அந்தப் பெண்மணியிடமும் நீட்டுகிறாள். அவள் ஒரு துண்டை எடுத்துக் கொள்கிறாள். “நீயும் எடுத்துக் கொள்” என்று அந்தப் பெண்ணிடமும் நீட்டிவிட்டு பெட்டியை மேசை மீதே வைக்கிறாள்.
“மேடம், நீங்க அன்னிக்கு வந்து என்னிய தூண்டிவிட்டு இழுத்திங்க. எங்க வீட்ல மகா லட்சுமி அடி வச்சதா நினைக்கிறேன். இப்ப எங்க பக்கம் ஒரு காணி அரைக்காணி வச்சிருக்கும் வீடுகள்ள ஆம்புளய எதிர்பார்க்காமல் பெண்களே விவசாயம் செய்யிறாங்க. நாங்களும் தான்வா மகளிர் சங்கம் வச்சிருக்கிறோம். மீனாட்சி மேடமும் பத்மாவதி மேடமும் வந்தாங்க. அடுத்தாப்பல உரம் ஊட்ட மேற்றுவதற்கு மண்புழு பத்தி சொன்னாங்க.. அதும் செய்யணும்னு இருக்கிறோம்...”
“நீங்களெல்லாரும் கிராமங்களை விட்டு வந்து பட்டணங்களில் அல்லல் படாமல் முன்னேறனும். நன்றாக வாழ வேண்டும். சமுதாயம் வளமடையனும் என்பதே தான்வாவின் நோக்கம்.”
“பெண்கள் எல்லாம் செய்கிறோம். உழுவதற்குத்தான் சரியாக ஆள் கிடைப்பதில்லை. ரொம்பக் கூலியாகுது. பெண்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் செய்து கொள்கிறோம். ஒருகாணி, அரைக்காணி, நடவு அறிப்பு என்றால் ஒரே மாதிரியான கூலிதான். அவங்க உழவுக்கு எம்பது நூறு நமக்குப் பதினைஞ்சான்னு கேட்டுக்கறாங்க. ஆனா நாங்க எங்களுக்குள்ள கூட்டிக்கிட்டா எல்லாருக்கும் தானே கஷ்டம்னு உசத்தல. ஆனா இதுபத்தி பேச்சிருக்கு. எங்கூட்டுக்ககாரரு லோன் எடுத்து டிராக்டர் வாங்கலாங்கறாரு. அவரே ஒட்டக் கத்துக்கறாரு. ஆனா ரொம்ப வெலயாவுது... போக்கியத்துக்கு வுட்ட பூமிலன்னாலும் திருப்பலான்னு...”
சரோ, அம்மாவின் முழங்காலில் மெள்ள இடிக்கிறாள். இந்த அம்மா பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அதற்குப் பொருள்.
“நீங்க வேணுமானால் ‘பவர் டிரில்லர’ப் போய்ப் பாருங்களேன். அதை ஒரு அம்மாதான் தயாரிக்கிறாங்க. டிராக்டர் விலை வராது. உண்மையில் பெண்கள் ஓட்டணும்னு தயாரிக்கிறாங்க.”
“அப்படீங்களா? ஆம்புளங்க இல்லாம நாமே எல்லாம் செய்ய முடியுங்களா?”
“கேளு, சரோக்கிட்டச் சொன்னேன். டிரெயினிங் புரோகிராமுக்கே போக லெட்டர் கேட்டா; குடுத்தேன்.”
“நான் அவங்கள இங்க ஆபீசில் பார்த்து அனுமதி வாங்கிட்டேன். ஆனா கிண்டியிலேயே டிரெயினிங் புரோகிராம் முடிச்சிட்டேன். இப்பக் கூட அவங்க ஒரு லேடி தொழில் முனைவராக இருப்பதால் எங்கள போன்றவர்களுக்கு ஆதரவு கொடுப்பாங்களான்னு கேக்கலாம்னு வந்தேன்... பவர் டிரில்லரையும் பார்க்கலாமே?”
“ஓ... தாராளமாய் போய்ப் பாருங்க!”
அந்த அலுவலகத்தைவிட்டு அவர்கள் அம்பத்தூர் தொழிற் பேட்டைக்குப் பஸ் ஏறி வந்து இறங்குகிறார்கள். பவர்டிரில்லர் தொழிற்சாலையைத் தேடி வரும்போது நண்பகல் நேரம். புரட்டாசி மாதப் புழுக்கம். கூர்க்காவிடம் சொல்லி வரவேற்பில் சரோ முன்பே பெற்று வந்த கடிதம், தான்வா மேடம் கொடுத்த கடிதம் எல்லாவற்றையும் காட்டுகிறார்கள்.
உள்ளே நுழையும் போதே நான்கு சக்கரமுள்ள ஒரு டிராக்டர் மிகச் சிறியது நிற்கிறது. இன்னொரு பக்கம் இரண்டே சக்கரமுள்ள கையால் தூக்கி உழக்கூடிய பவர் டிரில்லர்.
உள்ளிருந்து நடுத்தர வயசில் ஒரு ஒட்டு மீசைக்காரர் வருகிறார்.
“நாங்கள் ‘தான்வா’ பெண்கள். இந்தப் பாக்டரி, டிரில்லர் பார்க்க வந்தோம்” என்று சரோ, தன் ஈடுபாட்டை படிப்பைச் சொல்லுகிறாள்.
“புரொப்ரைட்டர் மேடம் இருக்காங்களா?”
“அவங்க பாக்டரிக்குக் காலமே வந்திட்டுப் போயிட்டாங்க; நீங்க வாங்க, பாருங்க.”
தொழிற்சாலையில் நீளப் பல பகுதிகள் இருக்கின்றன. இயந்திரங்கள் இயங்குகின்றன. அராவுதல் வெட்டுதல் வட்ட வடிவமாக்கல் என்று...
செவந்தி மலைப்புடன் பார்த்து நிற்கையில் சரோ, ஈடுபாட்டுடன் ஒவ்வொரு பகுதியிலும் சென்று பார்க்கிறாள். வரைதல் என்று ஒரு தனிப்பகுதி. அதையும் கடந்து அவர்கள் முழுதாக உருவாக்கப்பட்ட இயந்திரக் கலப்பை நிற்கும் ஓரிடத்திற்கு வருகிறார்கள்.
“இங்க இப்ப டிமான்ஸ்ட்ரேட் வசதி இல்ல” என்று சொல்லிவிட்டு அவர் பல இணைப்புகளைக் காட்டுகிறார்.
“இத பாருங்க இது புழுதி உழவு. ரோடோடில்லிங்.”
“இதுதா பட்லர் இல்ல?”
கட்டிகளை உடைக்கும் சீப்பு போன்ற கொழு முனைகள். இவர்கள் மாட்டுடன் இணைக்கும் மத்துக் கடைவது போல் சேற்றைக் குழம்பாக்கும் பட்லர்.
“இது என்ன கத்தி கத்தியாக?”
“இதுதான் அறுவடை செய்யும்.”
“நீங்க வாங்கறதானா ரெண்டே நாள் டிரெய்னிங் போதும். அது நாங்களே தாரோம்.”
“எவ்வளவு டீசல் ஆகுதுங்க ஒரு ஏகர் உழ?”
“ஒரு மணிக்கு ஒண்ணரை லிட்டர் ஆகும். ஒரு நாளைக்கு எட்டு மணிநேர வேலை செய்தால் மூணரை ஏக்கர் உழலாம்.”
“ஏயப்பா..” என்ற செவந்தி மலைக்கிறாள்.
“மூணு ஏர் மூணு சோடி மாடு...”
கணக்குப் போடுகிறாள்...
ஒன்றும் புரியவில்லை.
ஆனால் சரோதான் வெகு நேரம் அவரிடம் ஏதேதோ ஆங்கிலத்தில் பேசுகிறாள். தன் கைகளால் அதன் கைகளைத் தூக்கி நிமிர்த்திப் பார்க்கிறாள்.
மதிய உணவு நேரம் வந்து விடுவதால் அவரவர் கலைந்து வருகிறார்கள்.
“என்னப்பா வின்சென்ட்” என்று கேட்டுக் கொண்டே அங்கே முன்புறம் வழுக்கையாக ஒருவர் வருகிறார்.
சரோவைப் பார்த்துக் கொண்டே நிற்கிறார்.
“ஏய்... நீ... சுகந்தா அவங்க வீட்டுக்கு வந்திருக்கல?”
“ஆமாம்.நீங்கள் மிஸ்டர் கருணாகரன் இல்ல. அவங்க என் மாமி...”
“நீ டி.எம்.ஈ. படிச்சிட்டிருந்தேல்ல.”
“முடிச்சிட்டேன் சார். நீங்க மாமி தங்கச்சி வீட்டுக்குப் பின் வீட்டில இருகிறவங்கல்ல? நீங்க இங்கே வேலை பண்ணறீங்களா ஸார்?”
“ஆமாம்மா. ஆப்டர் ரிடயர்மெண்ட் இங்க இருக்கிறேன். நான் டிராயிங் போர்ட் பக்கமிருந்து பார்த்தேன். ஏதோ தெரிஞ்சாப்பல இருந்தது.”
“அம்மா, நம்ம மாமி தங்கச்சி இருக்காங்கல்ல. அவங்க வீட்டுக்குப் பின்னாடி உள்ள வீட்ல இருக்காங்க. இவங்க மக அருணா இவங்க எல்லாரும் அப்ப மதுரைக்கு வந்தாங்க. பயணம் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி சார். ரொம்ப சிரிக்க சிரிக்க பேசுவாங்க. நேரம் போனதே தெரியாம. அருணா என்ன பண்ணுது சார்?”
“அவ மியூசிக் காலேஜுக்குப் போறா. உங்க மாமா கூடப் போன மாசம் ஏதோ அல்சர்ன்னு டாக்டர்ட்ட காட்ட வந்தாப்பல. செயின் ஸ்மோக்கரா இருந்தாரு. இப்ப வுட்டுட்டேன்னாரு...”
“பெரிய வங்களுக்கு யார் புத்தி சொல்லுறது? பட்டாத்தான் தெரியும்” என்று செவந்தி முணுமுணுக்கிறாள்.
“பவர் டிரில்லர் வாங்கப் போறீங்களா?”
“விலை ரொம்ப இருக்குமே சார்.. யோசனை பண்ணனும். டிமான்ஸ்ட்ரேட் பண்ணி காட்டுவாங்கன்னு நினைச்சேன். மேலும் டீசல் இல்லாம மான்யூல் டிரில்லர் பெண்கள் ஒட்டலாம்ன்னு சொன்னாங்க.”
“ஒண்ணு பண்ணாங்க... வொர்க்அவுட் ஆகல..”
“சார் எனக்கு இங்க வேலை கிடைக்குமா? பெண் தொழில் முனைவோர்ன்னு சொன்னாங்க. ரிசப்ஷன் டிராயிங்கலேந்து கடைசிவரை ஒரு பெண் கூட இல்லை. எங்களைப் போல இருக்கறவங்களுக்கு இங்கே வாய்ப்பே இல்லையா?”
அவர் சிரிக்கிறார்.
“இங்கே அவங்க பெண்களை வேலைக்கே எடுப்பதில்லை. முன்பு ஒரு பெண்ணை டிராயிங் செக்ஷனில் வேலை கொடுத்து வைத்தாராம். அவள் நிமித்தமாக இங்கே காதல் ஊதல்ன்னு பிரச்னை வந்திட்டதாம். அதற்குப் பிறகு பாலிசியாகவே வச்சிட்டதாகக் கேள்வி. நீங்க கேட்டுப் பாருங்க...”
சரோ ஒன்றும் பேசவில்லை.
செவந்திக்கும் உவப்பாக இல்லை. வெளியே வருகிறார்கள்.
மணி இரண்டடித்து விட்டது.
ஓர் ஓட்டலைக் கண்டுபிடிக்கிறார்கள். எலுமிச்சை சாதமும் தயிர் சாதமும் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
செவந்தி சின்னம்மாவுக்காக அரை கிலோ திராட்சைப் பழம் வாங்கி வைத்துக் கொள்கிறாள்.
இருவரும் மூன்று மணியளவில் அந்த விடுதியை நாடி வருகின்றனர். பகலின் அமைதியில் விடுதி உறங்குகிறது.
சரோவைப் பார்த்ததும் கூர்க்கா உள்ளே விடுகிறான்.
முன்னே உள்ள விருந்தினர் கூடத்தில் வந்து மணி அமுக்குகிறாள். வார்டன் அம்மா எட்டிப் பார்க்கிறாள்.
“ஓ... ராசாத்தியப் பார்க்க வந்தவங்களா? ராசாத்தி...?”
சின்னம்மா கிரைண்டரில் மாவழித்து கொண்டிருந்தாள் போலிருக்கிறது. அவசரமாகக் கையைத் துடைத்த வண்ணம் வருகிறாள்.
“சரோ, செவந்தி வாங்க!”
உள்ளே சென்று நன்றாகக் கை கழுவித் துடைத்துக் கொண்டு வருகிறாள்.
செவந்திக்குக் கண்ணிர் முட்டுகிறது. அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.
“சின்னம்மா, நீங்க எங்களத் தல குனிய வச்சிட்டீங்க. அப்பா நிதம் புலம்பிட்டிருக்காரு. அவரு உடம்பும் சரியில்ல. அத்தயும் இத்தயும் நினைச்சி குடிச்சிடிட்டு வாராரு. அம்மாவுக்கும் அவருக்கும் கொஞ்சம் கூட நெரப்பில்ல. எந்நேரமும் பிருபிருப்பும் சண்டையுந்தா. நீங்க ஒரு நடை வரணும். சின்னம்மா பழசெல்லாம் மறந்திடணும். உங்க கால்ல விழுந்து நான் கும்புடறேன்.” அவள் காலடியில் விழுந்தே பணிகிறாள்.
“சீ, இதென்னம்மா செவந்தி. அதது அந்தந்த நேரக் கோளாறு. நடந்திச்சி. பாப்பா எங்கூட இங்க வந்து தங்கிச்சி. பெரும்மையாக இருந்திச்சி. நல்ல கொணம். இங்க அத்தினி பேருக்கும் இதும் பேரில் இஷ்டம். எல்லாம் விசாரிப்பாங்க. மேக் கொண்டு வேலைக்குப் போகப் போவுதா? மாப்புள பாத்திருக்கிங்களா?”
“அதெல்லாம் ஒண்ணும் இப்ப யோசனை இல்ல. ஒங்க கொல்ல மேட்டுப் பூமில வெள்ளாம செய்யிறம். நெல்லுப் போட்டோம். கடல போட்டோம். முளவா போட்டோம். போன வாட்டி நீங்க சரோ இங்க இருந்ததுக்குக் கூட எதும் வாணாம்னு சொன்னிங்களாம். இப்ப இத்த வாங்கிக்கனும்...” கைப்பை கவரில் வைத்திருக்கும் ஐநூறு ரூபாயை அவளிடம் நீட்டுகிறாள்.
“அய்ய இதென்ன! நீ போட்டுருந்த சங்கிலியக் கழட்டி வாங்கிட்டு வந்தேனில்ல? சும்மாவா குடுத்தீங்க. அது கெடக்கட்டும். வச்சிக்க. நாளையு மின்னியும் நீங்க ஒர முற நல்லாயிருந்தா எனக்குத்தா சந்தோசம். போன மாசம் முருகன் பொஞ்சாதிய அழச்சிட்டு வந்தான். ஒடம்பு சரியில்லாம எளச்சிப் போனா. மனசு சங்கடப்பட்டுது. நீங்க வந்திட்டுப் போயிருக்கிறதே எனக்குப் பெரிசு. செவந்தி பணத்த உள்ள வையி.”
“இல்ல, நீங்க உங்களுக்கில்லன்னாலும் ருக்குவுக்கு ஏதானும் வாங்கிக் குடுங்க. லீவு வந்திச்சின்னா புள்ளங்கள அழச்சிட்டு நீங்களும் வாங்க சின்னம்மா”
அந்தக் கவரை அவள் கைகளில் வைத்து மூடிவிட்டு அவள் மகளுடன் திரும்புகிறாள்.
ஊரில் வந்து இறங்கும் போது மணி ஏழு.
சைக்கிள் கடை வெளிச்சத்தில் பட்டாளத்தார் நிற்கிறார். ரங்கன் இருக்கிறான்.
இத வந்திட்டாங்க.
“செவந்தி! கன்னிப்பன் அப்பாவாயிட்டான். காஞ்சீபுரம் ஆசுபத்திரில காலம பொண் ஒண்ணு, ஆணொன்னு.”
முதலில் லட்சுமிக்கு இருக்கும் பெண்ணைச் சேர்த்துச் சொல்லுவதாக செவந்தி எண்ணுகிறாள். “அப்ப ஆம்புளப்புள்ள பொறந்திருக்கா. நா அப்பமே நினைச்சே. சுகப்பிரசவந்தானே.”
“முதல்ல பொண்ணு பிறந்து அரைமணி கழிச்சி ஆம்புள. இங்க இந்த விலாசினி டாக்டரம்மா ரெட்டயா இருக்கும்னு கூட சொல்லல, பாருங்க. நா இப்பதா பாத்திட்டு வேணுங்கற சாமானெல்லாம் வாங்கிக் குடுத்திட்டு உங்கள கூட்டிட்டுப் போகலான்னு வந்தே...”
“நாங்க இவ வேல விசயமா போனோம். எப்படியோ சுகமாயிட்டது இல்ல? கன்னியப்பனுக்கு ரொம்பப் பொறுப்பாயிட்டது.”
“இருக்கட்டும் இருக்கட்டும். இன்ஜினிர் பொண்ணு வேலை கெடைச்சிச்சா?”
“இல்ல தாத்தா. பட்டளாத்துலதான் சேர வோணும்.”
“பலே! பலே! சேத்து வுட்டுடலாம்! இப்பதா பட்டாளத்துல உங்களையும் எடுக்கிறாங்களே!”
“அந்தப் பட்டாளம் இல்ல தாத்தா. சோத்துப் பட்டாளத்த சொல்றேன். இத்த உற்பத்தி பண்ணாத்தானே ரெட்டையும் ஒத்தையுமாப் பெருகுற உற்பத்திக்கு ஈடுகொடுக்கலாம்? பவர்டில்லர் பார்த்தம். எழுபதாயிரம் ஏறக் குறைய ஆகும். அது சரி. நமக்கு அங்க எதினாச்சிம் வேலை வாய்ப்பு இருக்குமான்னு பார்த்தே. அந்தம்மா, பொண்ணுங்கள பாக்டரில வேலைக்கு வச்சா காதல் பிரச்னை வந்திடுமாம். அதுனால எல்லாம் மீசைக்காரங்களாவே வைச்சிருக்காங்க... நாமுடிவு பண்ணிட்ட... முதல்ல பால் மாடு வாங்குவோம். பால் உற்பத்தி கூட்டுறவு. பிறகு பவர் டில்லர், அதுக்குள்ளே நாமே ஏதாலும் காம்பொனன்ட் பண்ணும் தொழில்முனைவர் இங்கேயே இங்கேயே!”
“பலே!” என்று ராமையா மீசையில் கை வைக்கிறார்.
-------------
அத்தியாயம் 22
கரும்பாக்கம் பெண்கள் உயர் நிலைப் பள்ளி விழாக் கோலம் கொண்டிருக்கிறது.
‘தான்வா மகளிர் மாநாடு - கரும்பாக்கம் - டிசம்பர் 27’ என்று கொட்டையாக எழுத்துக்கள் தெரியும் முகப்புத் துணி காற்றில் ஆடாதபடி நான்கு முனைகளிலும் அகல நாடாவினால் கம்பங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பள்ளியின் நடு ஹாலில் மேடை போட்டிருக்கிறார்கள். மேடையைச் சுற்றிக் குருத்தோலைகளாலும் வண்ணக் காகிதங்களாலும் தோரணங்கள் அழகு செய்கின்றன. சுவர்களில் அறிவொளிக் காரர்கள் பொருத்திய படங்கள், வாசகங்கள், வாழ்த்துக்கள்... மாநாடு காணும் தான்வா மகளிருக்கு வாழ்த்துக்கள். கரும்பாக்கம் பால் உற்பத்தியாளர் சங்கம். நிலவள வங்கியின் வாழ்த்துக்கள்.
சின்னச்சின்ன நுணுக்கங்கள்... பெரிய லாபங்கள்... வருக வருக... என்று ஆட்சியாளரையும் டேனிடா திட்ட அலுவலரையும் விரிவாக்கப் பணியாளரையும் வரவேற்கும் வாசகங்கள். காலையில் இருந்து மாநாடு நடைபெறுகிறது. வழக்கமான வரவேற்பு உரை, அலுவலர் ஆட்சியாளரின் வாழ்த்துக்கள் எல்லாம் முடிந்தாயிற்று. அரிமா சங்கத் தலைவி லாவண்யா அம்மாள், இந்த மாநாட்டுப் பெண்களுக்குப் பகலுணவாகச் சோற்றுப் பொட்டலம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அந்த அம்மையார் தாம் வரவேற்புக் குழுத் தலைவர். முன் வரிசையில் பல முன்னணிப் பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோரும் பூமியுடனும் பெண்கள் முன்னனேற்றத்துடனும் தொடர்பு கொண்டவர்கள். கூட்டு முயற்சியில் நம்பிக்கை வைத்து ஊக்கியவர்கள்.
வானொலிக்காரர்கள் ஒரு புறம் இந்த நடவடிக்கைகளைப் பதிவு செய்கிறார்கள். சரோ... சரோ.. அங்கே நிற்கிறாள். உயரமாக ஒரு வெளிர் நீல சல்வார் அணிந்து குட்டையான முடியைச் சீவி ஒரு வளையத்தில் இறுக்கிக் கொண்டு நிற்கிறாள். எப்படி வளர்ந்து விட்டாள். தன்னம்பிக்கையின் வடிவாக நிற்கிறாள்.
கரும்பாக்கம் மகளிர் பால் உற்பத்திச் சங்கம் காண எப்படிப் பாடுபட்டு பெண்களைச் சேர்த்தாள். பங்குத் தொகை பிரித்து மூலதனம் திரட்டி முப்பத்தைந்து பேருக்கு பால் மாடு வாங்கி பால் உற்பத்தி தொடங்கி நடக்கிறது. நூறு மாடுகள் என் இலட்சியம் என்று நிற்கிறாள். யூரியா தெளித்து வைக்கோலுக்கு ஊட்டமேற்றும் வித்தை இப்போது பலன் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்!” என்ற வாசகம் செவந்தியின் கண்களில் படுகிறது. முன் வரிசையில் அவள் பிற்பகல் நடவடிக்கைகளில் பங்கு பெறுபவளாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் ஏதோ கனவு உலகத்தில் இருப்பது போல் தோன்றுகிறது.
இன்னும் பிற்பகல் விவாதங்கள் தொடங்கவில்லை. அறிவொளிக்காரர்களின் இசை நிகழ்ச்சி மேடையேறி இருக்கிறது. இந்த இளைஞர்கள் எல்லாம் சரோவின் தோழர்கள். ‘டிரம்’ என்று சொல்லும் தாளம் கீ போர்டு கிட்டார் எல்லாம் செவந்திக்குப் புதுமையானவை.
சரோவும் இன்னும் மூன்று பெண்களும் சேர்ந்து பாடுகிறார்கள்.
‘பட்டா - படி கற்போம்
பாட்டா - படி... கற்போம்
பாட்டி - படி
மாமா - படி’
என்று பல்லவியைச் சொல்லி அவர்கள் பாடப் பாட தாளங்களும் குரல்களுமாக மகிழ்ச்சி அலைகள் பரவுகின்றன. “கண்ணுக்கு மை அழகு. கட்டை விரலுக்கு அழகாகுமா? பெண்ணுக்கு கல்வி கொடு. பெருமையை தேடிக் கொள்ளு!” சாந்தி, ஜனாபாய், பாப்பம்மா, எல்லாரும் இந்த மாநாட்டுக்கு எத்தனை நாட்கள் பாடுபட்டிருக்கிறார்கள். இதோ பெரிய மேடம் உட்கார்ந்து பாட்டை அனுபவிக்கிறார். அவ்வப்போது ஒருங்கிணைந்த முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சரோ முனையவில்லை என்றால் இது சாத்தியமா என்று தோன்றுகிறது. கன்னியப்பனுக்குக் கட்டி வீட்டோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தது எத்தனை மடத்தனம் என்று தோன்றுகிறது.
கூடை நிறைய பழத்தில் ஓர் அழுகல் இருந்தால் மணம் இருக்காது. நாற்றம் தான் பரவும் என்ற கருத்தைத்தான் இதுவரை இவர்கள் வாழ்க்கையில் கற்றிருந்தார்கள். குறைகள் குற்றங்கள் ஆற்றாமைகள் புகார்கள். “புருசஞ் செத்து அவ உள்பாடி ரவிக்கை போட்டுட்டு திரியறா” என்ற செய்தி எங்கோ யாரையோ பற்றிக் காற்றில் மிதந்து வரும். உடனே எல்லாப் பெண்களும் விதி மீறி கோடு தாண்டுபவர்கள் என்று கடித்துக் குதறுவார்கள். நாற்று நடும்போது பேசமாட்டார்கள். ஆனால், புளி கொட்டை எடுக்கும் போதோ, உளுந்து பருப்பு உடைத்துப் புடைக்கும் போதோ, இந்த மாதிரி அவதூறுகள் வேலையைச் சுவாரசியமாக்கும். படி தாண்டிப் போன பெண்ணை வீட்டுல சேத்துப்பாங்களா? அது கழண்டு போனதுதா...?
“அதுக்குத்தான் ஆளாயி ஒரு வருசத்துக்குள்ள கேக்க வந்தவங்க கிட்டச்சாட்டி வுடனும்ங்கிறது?” என்பார்கள்.
இப்போது அந்தக் கருத்துக்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. கோடுகள் இன்று அழிக்கப்பட்டிருகின்றன.
பாட்டு நின்று, ஜனாபாய் மேடை மீதேறி மைக்கின் முன் நின்று பேசுவது கூடச் சிந்தையைக் கிளப்பவில்லை.
பெரிய மேடத்தை அவர்கள் மேடைக்கு அழைக்கிறார்கள். அவர் மறுக்கிறார். “நான் இங்கேயே உட்கார்ந்து நீங்கள் பேசுவதைக் கேட்பேன்.”
“கரும்பாக்கம் தான்வா மகளிர் அணி இப்போது மேடைக்கு வருகிறது. இவர்கள் குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்து விட்ட சாதனையாளர்கள். சோதனையில் சாதனை செய்து காட்டிய முன்னணிப் பெண்மணி செவந்தி இப்போது தன் அநுபவங்களைக் கூறுவார்.”
செவந்திக்கு தன்னைத் தான் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆகிறது.
“செவந்தி!”
சரோ ஒடிவந்து அவள் தோளைப் பற்றி உசுப்புகிறாள். “எல்லாம் நினைப்பிருகில்ல? நல்லாப் பேசு.”
செவந்தி மேடைக்கு ஏறுகையில் முழங்கால்கள் நடுங்குவன போல ஒரு பிரமை.
“பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய” என்று சொல்ல வேண்டும் என்று சரோ சொல்லிக் கொடுத்து சொல்லச் சொன்னதெல்லாம் சுத்தமாக நினைவில் வரவில்லை. புளிச்சோற்றின் மிளகாய் பெருங்காய் நெடிமட்டும் நெஞ்சில் நிற்பதாக உணருகிறாள்.
என்ன பேச...?
பெண்கள் மட்டுமில்லை... ஆண்கள்... ஓரமாக நிறைய பேர் நிற்கிறார்கள். பட்டாளத்தார் மீசையை முறுக்கிக் கொண்டு, மூத்த பேத்தியைப் பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டு கன்னியப்பன்... அங்கே... துணுக்கென்று ஒரு குலுக்கல். யாரது? வெள்ளைச்சேலையில் சிறு சிவப்புக்கரை போட்ட சேலை புள்ளிப்போட்ட ரவிக்கை... முடி நரைத்து காது மூக்கு மூளியாக... ஆனால் மலர்ந்த முகத்துடன் சின்னம்மாவா அது?
செவந்தி தன் மனவெழுச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுயலுகையில்,
“பேசும்மா பேசு” என்று சரோ மைக்கை சரி செய்வது போல் உசுப்புகிறாள்.
யாரையும் கூப்பிடாமல் பட்டென்றதுவங்கி விடுகிறாள்.
“எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல. நான் ஆறாவது வரைதான் படிச்சேன். அதற்குப்பிறகு பொம்புள புள்ளக்கி படிப்பு எதுக்குன்னு நிறுத்திட்டாங்க. அப்பல்லாம் அப்படி தாங்க. இப்ப நா எங்க பொண்ணப் படிக்க வைக்கணும்னு படிக்க வச்சிட்டேங்க. அது காஞ்சிபுரம் போயி மூணு வருசம் இன்ஜினியர் படிச்சிருக்குங்க. அதுனாலதா ரொம்ப முன்னேற்றம்.” சரோ தலையில் கை வைத்துக் கொள்கிறாள்.
இவளுக்குச் சட்டென்று தான் தப்பு பண்ணுவதாகப் படுகிறது. “தான்வா மேடம் தாங்க எங்களுக்கு மொத ஊக்கம். அவங்க வூடு தேடி வந்து சொல்லிக் கொடுத்தாங்க. பயிர் பண்ணப்புறமும் வந்து வந்து பார்த்தாங்க. அதுக்கு மின்ன இந்த யூரியாவ வேப்பம் பிண்ணாக்கில் கலந்து போடணும்னு தெரியாது. எங்கப்பா நெறய யூரியா வாங்கிப் போடுவாரு...” பேசிக் கொண்டே போகிறாள். உள்ளுணர்வு சரியாகப் பேசவில்லை என்று சொல்லுகிறது.
ஜனாபாய் மேடை மீதிருக்கும் மணியை அடிக்கிறாள்.
“சரிம்மா நல்லா பேசனிங்க” என்று சொல்லுகிறாள். கடைசியில் நினைவு வந்து விடுகிறது. “ஏதானும் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சிக்குங்க. வணக்கம்.”
சரோ வெளி வராந்தாவில் அழைத்து வந்து கடிந்து கொள்கிறாள்.
ஏம்மா எழுதிக் குடுத்தத்தான படிக்க சொன்ன. அத்தப் படிக்க வேண்டியதுதான. என்னமோ திண்ணையில உக்காந்து கத பேசற மாதிரி பேசுற!”
“அத்த நா அங்கியே பைக்குள்ளே வச்சிட்டே சரோ...”
“போகட்டும்போஅடுத்ததடவை நல்லாப் பேசுவ போயி உக்காந்துக்கோ...”
“சரோ ராசாத்தி சின்னம்மா போல இருக்காங்க. வந்திருக்காங்க. கடாசில வெள்ள சீல உடுத்திட்டு நோட்டீசு குடுத்தியா.”
“அவங்க ஆஸ்டல் நடத்துறாங்களே சொர்ணவல்லியம்மா அவங்க மகதா இந்த லயன்ஸ் லாவண்யாம்மா. நாமதா வரச் சொல்லியிருந்தோமே. வந்திருப்பாங்க போல. இரு நான் பாத்திட்டு முன்ன கூட்டி வாரேன்.”
இதற்குள் செவந்தியை சாந்தி கூப்பிடுகிறாள். “நீங்க இங்க வந்து உக்கர்ந்துக்குங்க. அப்புறம் பேசப் போங்க மககிட்ட...”
சரோ வெளியில் சென்று வானொலிக்காரர்களுக்குத் தேநீர் கொண்டு வருகிறாள்.
மேடையின் மீது பெரிய குங்குமப் பொட்டும் பெரிய - மூக்குத்தியுமாக குட்டை குஞ்சம்மா கணிரென்று பேசுகிறாள்.
“எங்களுக்கு ஏரித் தண்ணிர் தான் பாசனம். முன்னெல்லாம் ஏரியில் ஒரு போகத்துக்கு நிச்சியமாத் தண்ணீர் கிடைக்கும் பயிர் வைப்போம். மூணு வருசமா தண்ணி சரியாக இல்லை. போன வருசந்தான் நான் தான்வா பயிற்சி எடுத்தேன். கடல போட்டு நல்லா விளைஞ்சிச்சி. ஏரி தண்ணிதா பிரச்னை. ஒரு பக்கம் ஏரி மண்ண வெட்டி வெட்டி மண்ணெடுத்திட்டுப் போறாங்க. இன்னொரு பக்கம் ஏரிய தூத்து மேடு பண்ணி பிளாட் போட்டு வூடு கட்டுறாங்க. போனவருசம் பெரிய மழ வந்தப்ப அங்க கட்டியிருக்கிற மூணு வூடும் தண்ணிக்கு நடுவ நின்னிச்சி. எங்களுக்குத் தண்ணி வார பக்கம் காவாயில தண்ணி வாரதில்ல. மதகு மேலும் தண்ணி கீழும் இருந்தா எப்படித் தண்ணி வரும்? நாங்க தான்வா பெண்கள் ஏழெட்டுப் பேர் தாசில்தார் ஆபிசிற்குப் போனோம். கூட்டம் போட்டுச் சொன்னோம். எல்லாம் பார்க்கிறோம். சத்தம் போடாதீங்கன்னிட்டாங்க. இதுக்கு நாமெல்லாம் சேர்ந்து ஒரு முடிவு கட்டணும். இங்க வந்து பிறகு நிறைய ஊரில இது போல ஏரி பராமரிக்காம உதவாம போறதா தெரியுது. தனித்தனியா அரசாங்கத்துல கேட்டுப் பிரயோசனமில்ல. இதுக்குக் கூட்டா சேரணும். நன்றி. வணக்கம்.”
குஞ்சம்மா உட்காருவதற்கு முன்பே இன்னொருத்தி நெடியவள் ஆத்திரத்துடன் மேடையேறுகிறாள்.
“அவங்க சொல்றது மெய்தாங்க. எங்கூரிலும் இது நடக்குது..”
“பேர் சொல்லுங்க. எந்தக் கிராமம் சொல்லுங்க?”
“என் பேரு சக்குபாய். எலக்கூரு எங்க ஊரு. திருவள்ளுர் வட்டம். எங்களுக்கு நஞ்செய்ப் பயிர் போடுற நிலந்தாங்க. ஏரிப்பாசனம். இப்ப கேணியும் தோண்டியிருக்கிறோம். மண்ணெடுத்து மண்ணெடுத்து தண்ணி கீழே போயிட்டது. ஏரி பாதியும் குப்பையும் அதும் இதும் கொட்டி தூத்து பிளாட் போட்டு வித்திட்டாங்க. கேட்டா, நகர்ப்புற அபிவிருத்தின்னு சொல்றாங்க. விளைச்சல் நிலமெல்லாம் பிளாட்டாகுதுங்க. எங்கூட்டுக்காரரும் சேர்ந்து, பஞ்சாயத்துப் போர்டு, தாசில்தார்னு முறையிட்டுப் பார்த்தோம். இப்ப எங்கூட்டுக்காரரு பிடிசன் போட்டு வயல்ல வூடுகட்டக் கூடாதுன்னு ஸ்டே வாங்கியிருக்காரு. இதுக்குன்னு செலவுக்கு என் நகையக் கழட்டிக் குடுத்திருக்கேங்க. இது மாதிரி விளைச்சல் நெலம் தண்ணி எல்லாம் போயிட்டா, நம்ம விவசாயத் தொழில் என்ன ஆவுதுங்க? இதுக்கு எல்லாம் சேந்து நடவடிக்கை எடுக்கணும். தரிசு நிலத்தில வூடு கட்டலாம். விளையற நிலத்தக் குடுக்காம பாத்துக்கணுங்க... அதா.”
செவந்திக்குத் தன்னை விட எல்லோரும் குறிப்பாக விசயத்தை நல்லபடியாகப் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. வியாபாரிகள் விலை வைக்கும் பிரச்னை, உழவர் பிரச்னை, இதெல்லாம் அவள் குறித்துக் கொண்டிருந்தாள். இப்போது அவள் முறை முடிந்த பிறகு எப்படிப் பேசுவது?
அடுத்தவள் யார் என்று பெயரைக் கவனிக்கவில்லை. ஆங்காங்கே பேச்சுச்சத்தம் அமைதியைக் குலைக்கிறது. ஜனா பாய் மேசையைத் தட்டுகிறாள். அரிமா லாவண்யா அம்மாளும் பெரிய மேடமும் எழுந்திருக்கின்றனர். “நீங்க உக்காந்துக்கங்க. நான் வாரேன்” என்று அவர் மட்டும் எல்லோரையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே விடை பெறுகிறார். மேடையில் கரண்ட் பிரச்னை அடிபடுகிறது.
“நஞ்சவயல் தான். கிணற்றில் தண்ணீர் கிடக்கு. ஆனால் கரண்ட் கிடைக்கல்ல. மின்ன பதினாலு மணி நேரம் கரண்ட் கிடைச்சிச்சி. இப்ப பத்து மணி நேரமா குறைச்சிட்டாங்க. பேசுறாங்க. எல்லாரும் விவசாயிக்கு மின்சாரம் ப்ரீன்னு. ஆனா, அது எங்கே கிடைக்குது. தொழிற்சாலைக்கு முன்ன குடுக்கறாங்க. எங்களுக்கு பக்கத்துல ஃபாக்டரி இருக்கு. இரும்பு பீரோ செய்யிறாங்க. அதுக்கு எப்பவும் கரண்ட் போகுது. இரும்பு பீரோவவுட பயிரு முக்கியமில்லீங்களா? பயிரு விளஞ்சாத்தான பீரோவுல வச்சுப் பூட்டலாம்.”
எல்லோரும் கைதட்டிச்சிரிக்கிறார்கள்.
“தண்ணியில்லாம முளவாச் செடி காஞ்சி போச்சிங்க. அப்படியே நஷ்டம். போயிப் போயி ஈபி ஆபீசில் இன்ஜினியருங்களப் பார்த்தோம். தான்வா மகளிர் சங்கம் சேந்து போயிப் பிடிசன் கொடுத்தோம். சில பேரு சொல்றாங்க. திருட்டுக் கரண்டு எடுக்கிறதாம். இல்லாட்ட ‘சம்திங்’ குடுக்கிறதாம். அதெல்லாம் நேர்மையா? தான்வா பொண்ணுங்க அப்படியெல்லாம் குறுக்கு வழிக்குப் போகக் கூடாதுன்னு தீர்மானம் வச்சிட்டோம். நமக்கு விவசாயம் முக்கியம்னு கரண்டுக்கு கவர்மெண்ட் வழி செய்யனும்...”
அடுத்து வருபவள் அபிராமவல்லி. மதுராந்தகம் பக்கம். பொத்தேரி கிராமம்.
“ஏம்மா நாம கஷ்டப்பட்டு நெல்லு பயிர் பண்ணுறோம். அதை வித்தாத்தான் நமக்கு எல்லாத்துக்கும் காசு. நமக்கு எப்படி விலை கிடைக்கிது? மூட்டை முன்னூறு முன்னுத் தம்பதுன்னு வச்சிருக்காங்க. ஆனா அரிசியாக்கிட்டா அது கிலோ பத்து ரூபாய்க்கு மேல போகுது. சரி நாமே நெல்லக் காய வச்சு ஆறவச்சி அரிசியாக்கி விக்கலான்னா முடியிதா? உடனே களத்து மேட்டிலேயே வியாபாரிங்க நம்ம மூடையைச் சாதகமாக்கிக் குறைச்ச விலை நிர்ணயிக்கிறாங்க. நாம கடனை அப்பத்தான் உடனே அடைக்க முடியும். இல்லாட்டி வட்டிகட்டணும். சர்க்கார் விற்பனைக்கூடம் வச்சிருக்காங்க. ஆனா, இங்கே வெளியே இருக்கிற வியாபாரிங்க தான் அங்கேயும் விலையை கம்மியா நிர்ணயிக்கிறாங்க. யாருமே அதிக விலைன்னு ஏற்றாமல் பாத்துக்கறாங்க.”
செவந்தி இதே பிரச்னையை இவ்வளவு நன்றாகச் சொல்லியிருக்க முடியாது என்று நினைக்கிறாள்.
இப்படி வரிசையாக ஒவ்வொருவரும் வந்து பிரச்னைகள், அநுபவ பாடங்கள் என்று பேசுகிறார்கள்.
ஒரு பெண் சுற்றுப்புறச் சூழல் பற்றிப் பேசுகிறாள். குப்பையை, சாணி கூளங்களை அப்படியே மேடாகக் கொட்டுவதில்லையாம். எட்டடிக்கு ஆறடி பள்ளம் தோண்டி அதில் குப்பையும், கூளமும் அடுக்கடுக்காகப் போட்டு மண்புழு விட்டிருக்கிறார்களாம். ஊட்டச் சத்து மிகுந்த உரமாகிறதாம். அதை விதைக்கும் கொடுக்கிறாளாம். பால் மாடு பராமரிப்பு, அதன் பிரச்னைகள்...
ஒரு வயசு முதிர்ந்த உழைப்பாளிப் பெண் எழுந்து நிற்கிறாள். கீச்சுத் தொண்டையில் கேட்கிறாள்.
“ஏம்மா, பொண்டு வளா, எல்லாம் சரித்தா, இந்த ஆம்புளங்க சாராயம் குடிக்காம, ஒழுங்கா இருக்க எதனாலும் வழி சொல்லுவீங்களா?”
கொல்லென்று அமைதி படிகிறது. பிறகு மற்றவளைப் பார்ப்பதும், நமட்டுச் சிரிப்புச் சிரிப்பதுமாக மழுப்புகிறார்கள்.
“ஏண்டி சிரிக்கிறாயா? எங்க காலத்துல இப்படி எதும் பேசத் தெரியாது; படிக்கத் தெரியாது. குடிச்சிட்டு வந்தா, அடிச்சு மொத்தினா, சோறெடுத்து வைடீன்னான். வச்சோம். உழச்சிட்டு வரவன், காவாயில குளிச்சிட்டு கள்ளுத்தண்ணிய ஊத்திட்டுத்தா வீட்டுக்கு வருவா. இப்ப என்னன்னா, நெலத்து வேல கேவலம்னு கொத்துக் கரண்டி புடிக்கிறான். ரிஸ்ட் வாட்ச், சர்ட்டுன்னு ஆபீசர் கணக்க ஒரு நாளக்கி நுத்தம்பது சம்பாதன பண்றான். அத்தயும் குடிச்சி, பொண்டாட்டி தாலியையும் உருவிட்டுப் போயிக் குடிக்கிறான். அதென்ன எளவுடி! ஆயிர ரூவாக்கு ஒரு பாட்டிலாம். படிக்கிற புள்ள குடிக்கிறான். வெள்ளயும் சுள்ளயுமா உடுப்புப் போட்டு கிட்ட ஆபீசரும் குடிக்கிறானுவ இதெல்லாம் உனுக்கு எப்படித் தெரியும்னு கேக்குறியளா? கைப்பூணுக்குக் கண்ணாடி வேணுமா? இந்தப் பொம்புளக, படிச்சி என்ன பிரயோசனம்? நாலு காசு சேத்து காதுல மூக்குல தொங்க விட்டுக்கிட்டு என்ன பிரயோசனம்? எங்க பெரிய பண்ண வூட்டில, புறா போல பொண்ணு, நூறு சவரன் போட்டு, காணி எழுதி வச்சி, பட்டணத்துல போயி கலியாணம் செஞ்சி வச்சாங்க. ஆறாம் மாசம் பொண்ணு வூட்டுக்கு வந்திரிச்சி. ஒரு நகை இல்ல. உடம்புல பாவி சிகரெட்டால சுட்டிருக்கறா. இப்படி எல்லாம் நாங்க கேட்டதில்லம்மா! புள்ள இல்லன்னா தள்ளி வச்சிட்டு ரெண்டாவது கட்டுவாங்க. அப்பம் படிக்கல. இப்ப படிச்ச பொண்ணுக்கு இப்பிடி மதிப்பின்னா, இது என்னாடிம்மா மின்னேத்தம்!” ஜனாபாய் மணி அடிக்கிறாள்.
“பெரியம்மா, ரொம்பக் குறிப்பாக விஷயங்களை முன் வைக்கிறார். படித்த பெண்கள் இதற்குப் பதில் சொல்ல வரவேண்டும்!”
சரோ, அவர்களுக்குக் காரா பூந்திப் பொட்டலமும், தம்ளரில் தேநீரும் வழங்கும் பணியில் இருக்கிறாள்.
பதிலாக விஜயலட்சுமி, இரண்டு பெண்களுக்குத் தாய் மேடையேறுகிறாள். “பெண்கள் இருவரும் பத்து முடித்திருக்கிறார்கள். நிலத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். ஆனால், பெண் கேட்டு வருபவர்கள் அதை மதிக்கவில்லை. பத்துக் கூடப் படிக்காத தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் முறை மாப்பிள்ளை, முப்பது சவரன் கேட்கிறான். அம்பத்தூர் ஃபாக்டரியில் வேலை பார்க்கும் ஒரு மாப்பிள்ளை, பைக் வாங்கித் தரச் சொல்கிறான். விசாரித்ததில் அவன் குடிகாரன். ஒழுக்கம் இல்லாதவன் என்று தெரிகிறது. முன்பெல்லாம் நிலம், உழைப்பு, ஆடு, மாடு, உறவு எல்லாம் மதிப்பாக இருந்தன. இப்போது உயிரில்லாத பொருட்கள் டி.வி., பைக், கிரைண்டர், மிக்ஸி அதோடு கூரை தாலியும் பெண் வீட்டிலிருந்தே கேட்கிறார்கள்...”
ஜனாபாய் மணியடிக்கிறாள்.
“இன்னும் யாரேனும் பேச இருக்கிறார்களா?”
ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். செவந்தி எழுந்து நிற்கிறாள். மறுபடி மேடை ஏறலாமா? அநுமதிதருவார்களா?
இவள் தயங்கும் போதே ஓர் அற்புதம் நிகழ்கிறது.
“நா ரெண்டு வார்த்தை சொல்லட்டுங்களா?”
வெள்ளைச்சீலையில் சிவப்புக்கரை... வெள்ளை ரவிக்கை... சின்னம்மா...
காது மடல்கள் குப்பென்று சிவப்பது போல்செவந்திக்குத் தோன்றுகிறது.
“தலைவி அம்மா அவர்களே! சகோதரிகளே, பெண்களே! சம்பந்தப்பட்ட எல்லா விசயமும் பேசினர்கள். குடிபற்றி, வரதட்சணை பற்றி எல்லாரும் சொன்னிர்கள். மிகப் பெரிய கொடுமையை இங்கே சொல்லணும்னு நினைக்கிறேன். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழணும். அதற்குதான் ஆண்டவன் ஆணையும் பெண்ணையும் படைச்சிருக்கிறார். கலியாணம்னு சேத்து வைக்கிறாங்க. பொம்பிள கிட்ட வாழ்நாள் முழுதும் இருக்கப் போற, வாழப் போற ஆண், புடிச்சிருக்கான்னு கேக்கிறதில்ல. கலியாணமே ஆம்பிளக்குத்தா. அவ ஏதோ விதி வசத்தால முன்னாடி செத்திட்டா அவ பாவியாயிடறா. அவ செத்திட்டா, இல்ல இருக்கறப்பவே கூட அவன் வேற கலியாணம் செய்யிற கொடுமை... இன்னிக்கு நடக்குது. புருசன் செத்து போகலன்னாலும் உழைக்கிறா. அவன் செத்தா பத்தாம் நாள் அவள உக்காத்தி வச்சி பூ முடிச்சி புதுசு உடுத்தி கை நிறய வளயல அடுக்கி அத்த ஒடச்சி பொட்ட அழிச்சி, பூவப் பிச்சி இதே பொம்பிளங்க எதுக்கு அவமரியாதை பண்ணணும். புருசன் செத்து போனா அவ உலகத்திலே இருக்கக் கூடாதா? அவ பேரில் அத்தினி நாக்கும் அபாண்டம் போடக் காத்திருக்கும்.
“அவளுக்கு ஒரு பொண்ணு இருந்தா அது மேலயும் அந்த பாவம் விடியும். அதுக்கு ஏதானும் தவறு நேந்திச்சின்னா, தாய நடு வீதில நிக்க வச்சி, உறவு சனமின்னு சமுதாயம்னு நாட்டாம பண்ணுறவ அடிப்பா. இந்த பொம்பிளங்க ஏன், சொந்த அக்கா தங்கச்சியே பாத்திட்டிருப்பா. அவ புருசன் இல்லாததால எப்பவும் யார் குடியும் கெடுக்கவே நினைச்சிட்டிருப்பாளாம். அவ சொந்த அப்பாவே அவளுக்குன்னு சேர வேண்டிய சொத்தக் கூட அவ பேருக்குக் குடுக்க மாட்டா. ஏன்னா அவ சாதி இல்லாம யாரையும் தேடிட்டுச் சொத்தக் கொண்டு போயிடுவாளாம். அவ்வளவு பயம் புருசனில்லாதவகிட்ட!
“நீங்க எல்லாம் விவசாயம் செய்யிறவங்க! பயிர்த் தொழில் செய்யிறவங்க! உங்கள்ல எத்தினி பேருக்கு உங்க பேரில பட்டா நிலம் இருக்கு? அண்ட கட்டுறதிலேந்து அறுப்பு அறுக்கிற வரை நீங்க வேலை செய்யிறீங்க. நிலம் மட்டும், புருசன் பேரிலோ, அப்பா பேரிலோ, மாமன், மச்சான் பேரிலோ இருக்கும்.
“இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, பெண்ணுகளப் படிக்க வச்சிடறோம். வரதட்சணை கேக்கறாங்கங்கறது மட்டும் பிரச்னை இல்ல. அடிப்படையில் நாமே நம்ம பொண்ணுகளே, அக்கா, தங்கச்சி, அண்ணி, நாத்தின்னு ஒருத்தருக்கொருத்தர் விரோதமாப் பார்க்கிறோம். புள்ள குடிகாரனா இருப்பா. கலியாணம் கட்டினாதான் திருந்துவான்னு கட்டி வைப்பா. பிறகு இந்த தாயே இவ வந்ததாலே அவன் குடிச்சிக் கெட்டுப் போறாம்பா. அவ, அம்மாளப் பத்தி பொண்டாட்டிட்டச் சொல்லி அவள ஏமாத்தி நகை நட்டு வாங்குவா. அவள் பத்தி அம்மாக்கிட்டச் சொல்லி அவ ஏதானும் நாத்துநட்டு கள எடுத்தும் சம்பாதிச்சிட்டு வந்தா அத்தப் புடுங்கிட்டுப் போவா. எத்தினி குடும்பங்கள்ள இப்படி நடக்குது?
“நீங்க... ஏ நாம எல்லாம் முதல்ல ஒத்துமையா இருந்து, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கணும். பொண்ணா பிறந்திட்டா அவளுக்குச் சாதி மதம் ஏதும் இல்ல. நாம ஒத்துமையா இருந்தாத்தா, நம் முன்னேற்றத்துக்குப்பாடுபட முடியும்...”
படபடவென்று கைத்தட்டல் வெகு நேரம் ஒலிக்கிறது.
“குடியை எதிர்த்து நாம போராடலாம். வரதட்சனையை எதிர்த்தும் நாம போராடலாம். பெண்களால் எல்லாம் செய்ய முடியும். நாம ரொம்ப ஒத்துமையா இருக்கணும். ஒரு பொண்ணு அவளா கெட்டுப் போகமாட்டா. ஆனா அப்படி முத்திரை போட்டுட ஆணுக்கு ஒரு அதிகாரமா உரிமை கொடுத்திருக்காங்க. இதெல்லாம் நாம ஒத்துமையா நின்னுதான் மாத்தணும். எனக்கு இதப் பேசணும்னு தோணிச்சி. வந்தேன், வணக்கம்.”
கைகுவித்துவிட்டு அவள் படி இறங்கப் போகுமுன் ஜனாபாய் அவளை நிறுத்துகிறாள்.
“அம்மா ரொம்ப நல்லாப் பேசினிங்க. நாங்க இதெல்லாமும் தீர்மானம் போடுகிறோம். உங்க பேரு, நீங்க எந்த கிராமம்னு சொல்லுங்க...”
செவந்தி விலுக்கென்று எழுந்து மேடைக்குப் போகிறாள்.
“இவங்க அதே ஊர்தா. எங்க சின்னம்மா”
கைத்தட்டல் அதிருகிறது.
----------------
அத்தியாயம் 23
செவந்தி சின்னம்மாளை வீட்டுக்கு வரும்படி வருந்தி அழைக்கிறாள். ஆனால் அவள் வீட்டுப் பக்கம் திரும்பாமலே போய்விட்டாள். “நீங்கள் எல்லோரும் முன்னேற்றமாக வந்ததைப் பார்க்க ஆசை இருந்தது; இருக்கட்டும் அம்மா...” என்று மட்டும் சொன்னாள்.
இதைக் கேள்விப்பட்ட பிறகு அப்பன் மிகவும் தளர்ந்து போனார். அம்மாவைக் காணுந்தோறும் சண்டை. கத்தல்கள். வண்டியோட்டிக் கொண்டு எருவடிப்பார். வேலைக்குப் போவார். மாலையில் நன்றாகக் குடித்துவிட்டு வருவார்.
சரோதான் அவரைத் திருத்த அன்றாடம் மல்லுக்கு நிற்பவள். "தாத்தா உங்களுக்கு அப்படி என்னக் கஷ்டம். நீங்கள் இப்படி குடிச்சுக்கிட்டே இருந்தால், குடல் வெந்து போகும். நீங்கள் நினைக்கிறாப்பல சீக்கிரம் செத்துப் போக மாட்டீங்க. யமன் தூண்டில மாட்டி இந்த சாராயத்தால சித்திரவதை பண்ணுவா, நாங்க வீட்டைக் கவனிப்பமா? மாட்டைப் பாப்பமா, பயிரைப் பாப்பமா? நாங்க சந்தோசமா இருக்கணும்னு நினைக்கிறீங்களா இல்லையா?”
“நா... ராசாத்திய ஒருக்க பாக்கணும், எத்தனை கொதிச்சிருந்தா அவமேடையில பேசிப்பிட்டு இங்க வராம போயிருக்கா.”
“ஐய, அவங்களுக்கு அப்படி விரோதமில்ல தாத்தா, இன்னும் இங்க இருகிற பொம்பிளங்க சாதிக் கெட்டு சாங்கியம்னு அசிங்க மெல்லாம் பண்ணக்கூடாது. அதனால நாம தான் கட்டுக்குலைஞ்சு போகிறோம்னு சொன்னாங்க. அப்பிடிச் சொன்னாத்தா இந்த மரமண்டைகளில் உரைக்கும். அவங்க அன்னைக்கு லாவண்யா அம்மா கூடக் காரில் வந்திருந்தாங்க. சோத்துப் பொட்டலமெல்லாம் அவங்கதான் ஏற்பாடு செய்திருந்தாங்க. அதெல்லாம் எடுத்து வச்சிக்குடுக்க ஒத்தாசையா இவங்க வந்திருந்தாங்க. அப்படியே திரும்பி போயிட்டாங்க. நா அழச்சிட்டு வாரேன். நீங்க இனி இந்தச் சனியன் பக்கம் போறதில்லன்னு ஏங்கிட்ட சத்தியம் வுடுங்க...”
“அவ வரமாட்டாம்மா. நாங்க அத்தினி கொடும செஞ்சிருக்கோம். புள்ளயக் கொண்டு வந்து ஒரு சமயம்ன்னு விட்டப்ப என்ன செஞ்சோம். அத்த வெரட்டி அடிச்சோம். அவ மனசு எரிஞ்சி சாபமிட்டத எப்படி மறக்க முடியும்? முருகனுக்கு என்னமோ வராத நோவு வந்திருக்காம். சோறு தண்ணி இறங்காம குச்சியாப் போயிட்டானாம்.”
“பாவம்... பாவம் செஞ்சவங்க... அனுபவிக்கிறம்... யம்மா கண்ணு அவனுக்கு ஏதானும் ஆச்சின்னா அந்தப்புள்ள கழுத்து நிறைய தங்கமும் பட்டுமா லட்சணமா வந்து நின்னிச்சே அது கதி...” மார்பில் அறைந்து கொள்கிறார். கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. செவந்தி திடுக்கிட்டுப் போகிறாள்.
“அப்பா அப்பா... அதெல்லாம் ஒண்ணுமில்ல. முருகனுக்கு அப்படி ஒண்ணுமில்ல. சும்மா சிகரெட் குடிக்கிறா. அது அல்சர் வந்திருக்கு. அதுக்கு ரொம்ப பவுரா அமெரிக்காவிலிருந்து மருந்து தருவிச்சி குடுக்கறாங்களாம். ஒண்ணுமே பயமில்லைப்பா...” என்று தேற்றுகிறாள்.
“செங்கண்ணு பொஞ்சாதி சொன்னாளாம். இப்ப இவ எதுக்கு வந்தா? கொம்பேறி மூக்கம் பாம்பு கடிச்சிட்டு மரத்து மேல ஏறி நின்னு செத்தவம் புகையிறானான்னு பாக்குமாம். அப்படி வந்து மீட்டிங்கி பேசுனாளாம். அவளப் பாம்பு புடுங்கன்னு சொல்றா, எங்கிட்டியே!”
“இந்தப் போக்கத்தவங்க பேச்ச நீங்க நம்புறீங்களப்பா? இத பாருங்க, முருகனுக்கு நல்லபடியாயிடும். அப்படில்லாம் நமக்கு வாராது. கோழி மிதிச்சிக் குஞ்சி சாவுமா? சின்னம்மா அப்படி நிச்சயம் நினைக்கறவங்க இல்ல...” என்று சமாதானம் செய்ய முயலுகிறாள்.
கரும்பாயி அம்மன் கோயில் புதுப்பிக்கப்படுகிறது. சித்திரை மாசத்தில் குட முழுக்குச் செய்ய வேண்டும் என்று ஊரில் எல்லோரும் கூடித் தீர்மானிக்கிறார்கள்.
தைப் பொங்கல் கழிந்து மாசி மாசத்தில் ஓர் அந்தி நேரம்... கோயில் முகப்பில், தோளில் தொங்கிய மூட்டையுடன் கோயில் சாமியார் வந்து உட்காருகிறார். அப்போது கோயில் கமிட்டிக்காரர்கள் அங்கிருக்கிறார்கள். சொந்தமான சாமியாரைக் கண்ட சந்தோசம் ரங்கனுக்குப் பிடிபடவில்லை, வீட்டுக்கு ஓடி வருகிறான்.
“செவந்தி... நம்ம ஊருக்கு நல்ல காலம் பிறந்திட்டது”
“எனக்கு உடம்பு புல்லரிச்சி போச்சி. அந்தப் போலிச்சாமி, என்ன திமிரில சாமி ஜல சமாதியாயிட்டாருன்னு சொன்னா!... பச்சில மூட்ட தொங்குது. அதே முகம். தாடி முடி அதே மாதிரி இருக்கு. வந்திட்டாங்க. ‘சாமி உங்கள நினைக்காத நாளில்ல.. இந்த அம்மாதா உங்கள இப்பக் கொண்டு விட்டான்னு’ சொல்லி அப்படியே வுழுந்தே. வாங்க போய்க் கும்புட்டு வரலாம். அப்பா எங்கே?”
“சரோ கதவடச்சி உள்ள போட்டிருக்கு.”
“அவுரயும் கூட்டிட்டுப் போவோம் வா....”
செவந்திக்கு ஆறுதலாக இருக்கிறது. வீட்டிலுள்ள அனைவருமே, சாமியைக் கண்டு வணங்கப் புறப்பட்டு விடுகிறார்கள். அம்மா மட்டும் வீட்டில் இல்லை.
கதவைப் பூட்டிக் கொண்டு சரோ, சரவணன் செவந்தி ரங்கன் அப்பா எல்லாரும் முகம் தெரியாத இருட்டில் செல்வதை சுந்தரி பார்க்கிறாள். “கோயிலுக்குப் போறம்...” என்று சுருக்கமாகச் செவந்தி தெரிவிக்கிறாள்.
கோயிலின் முன்மண்டபம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. வாயிலிலேயே பெரிய வாழைத்தண்டு விளக்குகள் சாமியார் வந்து விட்டார் என்று வந்திருக்கும் சிலரை இனம் காட்டுகிறது. வரதராஜன், சிவலிங்கம், நாச்சப்பன் இவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள். சாமியார் கிணற்றடியில் நீரிறைத்துத் தலையில் ஊற்றிக் கொண்டு இருக்கிறார்.
“நிறையப் பச்சிலைக் கொண்டாந்து இந்நேரம் அங்கே வச்சிட்டிருந்தாரு” என்று பூசாரி தெரிவிக்கிறான்.
நீராடி முடிந்து திருநீரு பூசிக் கொண்டு வேம்படியில் வந்து உட்காருகிறார்.
ரங்கன் அருகில் செல்லுமுன் சாமியே கையசைக்கிறார்.
அவன் பணிவுடன் அருகில் செல்கிறான்.
சாமி அவனை அழைக்கவில்லை. அப்பனைத்தான் கையசைத்து அழைக்கிறார்.
“சாமி...!”
குரல் தழு தழுக்க அப்பா அவர் காலடியில் நெடுஞ்சாண் கிடையாக விழுகிறார்.
அவர் எழுந்து அவரை எழுப்புகிறார். அப்பாவுக்கு நிற்க முடியவில்லை.
அவர் பிடித்து அருகில் உட்கார வைத்துக் கொள்கிறார்.
“எத்தனை நாளா இப்படி...?”
அப்பா பதில் சொல்லவில்லை. தேம்பித் தேம்பி அழுகிறார். “நாளக்குக் காலம, சுத்தமா ஒண்ணும் சாப்புடாம வெறும் வயிற்றோட இங்க வாங்க... ஒரு பச்சிலைக் கசாயம் தாரேன். மொத்தம் நாலு வேளை. ரெண்டு நா... எல்லாம் சரியாப் போயிடும்... அந்தத் தண்ணி நெனவே வராது...” முதலில் எல்லோருக்கும் என்னதென்று புரியவில்லை.
மூடிக்கிடந்த கண் திறந்தாற்போல் ஒரு பிரகாசம்...
இரண்டு நாட்களும் காலையிலும் மாலையிலும் அவரே பயபக்கதியுடன் சென்று அந்த பச்சிலைக் கசாயத்தை வாங்கிக் குடிக்கிறார். வெறும் தயிர் சோறுதான் உணவு.
இரண்டாம் நாள் கசாயம் கொடுத்ததும், “நாளைக்குக் காலம எண்ணெய் தேச்சுத் தலை முழுகிடுங்க. உங்களைப் பிடிச்ச வேதனை நமைச்சல் எல்லாம் போய் மன அமைதி வரும்...
“பிறகு, இஞ்சி நூறு கிராம் வாங்கிக் கழுவித் தோல் சீவித் துண்டு துண்டா நறுக்கி நிழல் உலர்த்தலாகக் காய வையுங்க. சுத்தமான தேன் கால் லிட்டர் வாங்கி அதில் அதைப் போடுங்க.. காலம வெறும் வயிற்றில் ஆறுதுண்டு இஞ்சியும் ஒரு ஸ்பூன் தேனும் சாப்பிடுங்க. சாராயம் யாரேனும் குடிச்சிட்டு வந்தால் கூடப் பிடிக்காது. காத தூரம் ஒடி வருவீங்க.”
ஊர் முழுதும் சாமியாரின் இந்த வைத்தியம் பற்றிப் பரவுகிறது. சரோ அவசரமாக மகளிர் சங்கத்தில் ஒரு கூட்டம் கூட்டுகிறாள். “சாமியார் பச்சிலை மருந்து கொடுக்கிறார். எல்லாரும் அவவ புருசன அண்ணன் தம்பி அப்பான்னு கூப்பிட்டு வாங்க...” என்று விளம்பரம் செய்கிறாள்.
பிறகு சாமியாரிடம் சென்று பணிகிறாள் “சாமி இந்த ஊரு சனங்கள் நல்லவர்கள். உழைப்பாளிகள். சாராயம் ஒண்ணு தான் கெடுக்கிறது. ஆந்திரத்தில் பெண்கள் போராடினார்களாம். அது போல் இங்கு வராதான்னு ரொம்பவும் ஆசைப் பட்டேன். சாமி நீங்க இங்கேயே இருக்கணும். எங்க ஊருல ஓராள் கூட அந்தக் கண்ராவி பாட்டில இங்க வரவுடக்கூடாது. உங்களுக்கு நாங்க என்ன உதவின்னாலும் செய்யிறோம்.”
“இஞ்சி நார் இஞ்சிதான் கிடைக்கிறது. காஞ்சிபுரம் போயி சுத்தத் தேனும் இஞ்சியும் வாங்கிட்டு வந்தாங்க. ஏங்க்கா தண்ணி இருக்கயில் நாம ஏன் இஞ்சி மஞ்சா போடக்கூடாது.”
“லட்சுமியா சொல்கிறாள்? என் லட்சுமி கன்னியப்ப அவனுக்கு இந்தப் பழக்கம் உண்டா?”
லட்சுமி புருசனைக் காட்டிக் கொடுத்துவிட்டதை எண்ணி நாணத்தால் குனிகிறாள்.
“நெதியும் இல்லன்னாலும் என்னிக்கின்னாலும் குசியா இருக்கறச்ச வாங்கி ஊத்திக்கும். எங்க மாமா பட்டளாத்துல முன்ன குடிப்பாராம், ஆனா அங்கேந்து வந்த பிறகு அதும் குடிச்சு குடிச்சே புத்தி கெட்டு மகன் போன பிறகு வெறுத்துப் போனவர். மாமாக்குத் தெரிஞ்சி அவர் இங்க இருக்கும் போது இவருக்குப் பயம். அதான் சாமிக்கிட்ட கூட்டியாந்திட்டே” என்றாள்.
அன்று பால் எடுத்துக் கொண்டு சொசைட்டிக்கு வந்தவனைச் சரோ பிடித்துக் கொள்கிறாள்.
“மருந்து குடிச்சப்புறம் அந்தப்பக்கம் போகவே கூடாது. தெரியுமில்ல. அப்படிப் போனா ஆளு போகமாட்டா. கை கால் விழுந்திடும்.”
“இல்ல சரோ நிச்சயமா இல்ல. இந்த வேல்ச்சாமி பழனி இவனுவதா என்னிக்கானும். சத்தியமா இனி மாட்டே சாமி கிட்ட சத்தியம் வுட்டிருக்கே... எல்லாம் ஃபுல் ஸ்டாப். தெரியுமில்ல. அப்படின்னா முற்றுப்புள்ளி. பொண்ணிருக்கு ஆணிருக்கு. அடுத்த வருசம் பவர் டில்லர் வாங்கணும்!” அவன் நாணிக் குறுகுகிறான்.
“அது சரி எங்களயெல்லாம் நீ வெரட்டிட்ருக்க. நீ எப்ப கல்யாணச் சீலை உடுத்தி, தலைப்பட்டம் கட்டி, மூக்குத்தி செயின் போட்டுகிட்டு மாப்புள கூட வரப்போற? ஏன் சரோ?”
“அதெல்லாங் கிடையாது. மூக்குத்தி, செயின் சரிகைச் சேலை எதும் கிடையாது. நீங்க லட்சுமிய கட்டிட்டபுலதா, சாமி முன் மால மாத்திட்டு போயி ரிஜிஸ்தார் ஆபீசில பதிவு பண்ணுவோம்.”
“விருந்து?”
“போட்டுட்டாப் போச்சி!”
“அப்ப... மாப்புள ஆரு சரோ? அறிவொளி இயக்கத்துல செவுப்பா ஒல்லியா அரும்பு மீசை வச்சிகிட்டு ஒருத்தர் இருந்தாரே... அவருதானா?”
சரோ இடி இடி எனச் சிரிக்கிறாள்.
“அவருக்குக் கலியாணம் கட்டி ஒரு புள்ள இருக்கு. இப்ப நீங்க அதும் இதும் வம்படிக்காம வூட்டுக்குப் போங்க.”
அறிவொளி இயக்கம் என்று ஆண் பிள்ளைகள் உள்ள குழுக்களில் அவள் தீவிரமாக ஈடுபட்டு அங்கே இங்கே கற்போம், கற்பிப்போம் என்று பாட்டுப் பாடிக் கொண்டு போவதைச் செவந்தியால் தடை செய்ய முடியவில்லை. குடியை ஒழிக்க இந்தச் சாமியாரிடம் பச்சிலை மருந்து கொள்ள, ஓர் இயக்கம் போல் ஆட்களை அந்த இயக்கமே கொண்டு வருகிறது. சாமியார் பச்சிலை கொண்டு வருவதற்காக அடிக்கடி கண்ணப்பர் மலைக்குப் போக வேண்டியிருக்கிறது.
“பத்திரிகை ரேடியோ பேட்டி எதுவும் வரக்கூடாது. இது வியாபாரம் இல்ல. உள் மனசோடு குடியை விட்டு நல்ல மனிதராக வேண்டும் என்ற உறுதி இருந்தாலே இங்கு வரவேண்டும்...” என்று சரோவுக்கும் அவள் சகாக்களுக்கும் அவர் எச்சரித்திருக்கிறார்.
சரவணன் படித்து ஊன்றும் வரையிலும் சரோ கல்யாணம் என்று கட்டிக் கொண்டு இடம் பெயர்ந்து போகாமல் இருக்க வேண்டும் என்ற உள்ளுர வேண்டிக் கொள்கிறாள் செவந்தி.
நிறைய வெளி உலகில் பழகுவதனால், கீழ் மட்டத்தில், இருந்து மேல் மட்டம் வரையிலும் ஒரு திறந்த மனதுடன் தொடர்பு கொள்வதால் சரோ ஒர் அச்சமற்ற துணிவுடன் தலையெடுத்திருப்பது செவந்திக்குப் புரிகிறது.
பழைய கோடுகளை அழிக்கிறோம் என்ற உணர்வில்லாமலேயே அவை அழிந்து போனதைக் காண்கிறாள். தெருவில் இருக்கும் இளம் குருத்துகள், சரோ அக்கா போலப் படிப்போம் என்று ஆதரிசம் கொள்ளும்படி அவள் முன்னோடியாக இருக்கிறாள். அவள் நிச்சயமாக பண்ட பாத்திரம் தட்சணை என்று பெண்மக்களை விட்டுக் கிடுக்கிப்பிடி போட அனுமதிக்க மாட்டாள். மேலும் அவள் மனதுக்குப் பிடித்தவன் என்று வரும் போது அவன் அவள் சுதந்தரங்களைக் கட்டுப் படுத்தாதவனாகத்தான் இருப்பான். அவன் இவர்கள் சாதி சமூகத்தைச் சாராமலிருந்து இருவரும் விரும்பினால் இவர்கள் முட்டுக்கட்டை போடக்கூடாது.
இதெல்லாம் சாத்தியமில்லை என்று ஒரு புறமும் சாத்தியமாகும், அவள் நல்லது கெட்டது தரம் பிரிக்கும் பக்குவம் பெற்றிருக்கிறாள் என்ற தைரியமும் அவள் மனதில் அவ்வப்போது தோன்றாமல் இல்லை.
ஒரு நாள் ராமையா சரோவுக்கு ஒரு நல்ல வரன் இருப்பதாக வந்து சொன்னார்.
“பங்களுரில் பையன் வங்கியில் வேலை செய்கிறானாம். தகப்பனார் இல்லை. தாயார் மட்டும் இருக்கிறாள். நல்ல குணம். பெண் படித்து நல்ல மாதிரியாக இருந்தால் போதும். ரொக்கம் இது அது வேண்டாம் என்ற சொல்கிறார்கள். சொந்தத்தில் சிறு வீடு இருக்கிறது. சரோவுக்கு பங்களுரில் சிரமமில்லாமல் வேலையும் கிடைக்கும்...” என்று சொன்னார்.
“இப்ப பேசக்கூடாது. என் லட்சியம்... இங்க காளை மாடெல்லாம் பசுக்களாக மாறணும். பணம் பண்ணணும். பவர் டில்லர் வாங்கணும். இங்க விட்டு நகர மாட்டேன். அந்தம்மா.. நா வேல கொடுப்பானே? நீயே வேலை கொடுக்கும்படி ஏதேனும் காம்பொனன்ட் செய்யும்படி முதலாளியாகு... ன்னாங்க. செஞ்சி காட்டணும். ஒரு அஞ்சு வருசம்... அதற்குள், யாரேனும் என் காரியத்தில் கை கொடுக்கும் வாழ்க்கைத் துணை வந்தால்... ஓ.கே.!” என்று முடித்துவிட்டாள்.
“அந்தப் பையன் கிட்டச் சொல்றேன்” என்று போனார் அவர்.
-------------
அத்தியாயம் 24
கரும்பாயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா.
செவந்தியின் குடும்பத்துக்கு இந்த விழா, குடும்ப உறவுகளே புதுப்பிக்கப்படும் ஒரு விழாவாகப் பொலிகிறது.
முருகனும் அண்ணி சுகந்தாவும் இரண்டு பிள்ளைகளுடன் முதல் நாளே வந்து இறங்குகிறார்கள்.
இந்த வீட்டில் இப்போது நல்ல கழிப்பறை வசதி இருக்கிறது. முன்புறம் விரிவாக்கி கழி போட்டு படியை உயர்த்தி பார்வையாகக் கட்டி இருக்கிறார்கள். அன்று பார்த்த அண்ணன் அண்ணியா!
பழைய கறுத்த உதடுகளும் டம்பப் பேச்சும் திமிரான பார்வையும் போய் விட்டன. உடல் மெலிந்து போயிருக்கிறது. குண்டான கன்னங்களும் ஒட்டிப் போயிருக்கின்றன. முன் முடி வழுக்கை விழுந்திருக்கிறது என்றாலும் இணக்கமான பரிவு வேண்டிய பார்வை. அவன் மேல் இரக்கத்தைத் தோற்றுவிக்கிறது.
பட்டும் பகட்டும் கர்வமுமாக வந்த அந்த அண்ணியா?
அவளுடைய கர்வமும் பெருமையும் புண்ணில் காய்ந்த பொருக்குகள் போல் உதிர்ந்துவிட்டன. அந்த வயிரங்கள் காதுகளில் இல்லை. கழுத்தில் வெறும் மஞ்சட் சரடுதான் இருக்கிறது. கைகள் இரண்டிலும் கண்ணாடி வளையல்கள்...
வந்திறங்கியதும் வாய் நிறைய “அக்கா சவுக்கியமா? சரோ எப்படி இருக்கே! உங்கள எல்லாம் மறுபடி பார்த்து நல்லபடியா சாமி கும்பிட வேணும்னு ஒரே தாபமாப் போயிடுச்சி” என்று கைகளைப் பற்றிக் கொள்கிறாள். கண்கள் தளும்புகின்றன.
திவ்யாவும் கார்த்திக்கும் “சரோ அக்கா, சரவணன் அண்ணா” என்று ஒட்டிக் கொள்கிறார்கள். இப்போது நன்றாக வளர்ந்திருக்கிறார்கள். அண்ணி அண்ணனை ஏதோ கைப்பிள்ளையைப் பராமரிப்பது போல் பாவிக்கிறாள்.
அவனுக்குப் பல்விளக்க புருசும் பேஸ்ட்டும் எடுத்துக் கொடுப்பதில் இருந்து, இட்டிலியை ஆறவைத்து மிளகாய் பொடி இல்லாமல் தயிர் ஊற்றி வைப்பதும், பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொடுப்பதுமாகக் கவனிக்கிறாள்.
அவளே அடுப்படிக்கு வந்து புகையடுப்பில் அவனுக்கு தக்காளி பருப்பு ரசம் வைக்கிறாள்.
சில சமயங்களில் செவந்திக்கு எல்லோரும் கண்ணாமூச்சி ஆடுவது போல் தோன்றுகிறது.
“ராசா மாதிரி இருந்த பிள்ளை. உருகி உக்கிப் போயிட்டா. அந்தப் பாவி என்ன சாபமிட்டாளோ...” என்று அம்மா ஊடே கடித்துத் துப்புவது மாறவில்லை.
கன்னியப்பனின் ஆயாவைப் போல் திருந்தாத சன்மங்கள். தெருக்காரர் அவர்களைப் பற்றிப் பேசாமலிருப்பார்களா?
வெறும் வாயையே மெல்லுபவர் ஆயிற்றே?
ஆனாலும் சரோவின் வாய்க்கும் கண்டிப்புக்கும் சிறிது பலன் இருக்கத்தான் செய்கிறது.
“சரோ, விவசாயம் பால் சொசைட்டி இதோட சரியா? படிச்ச படிப்புக்கு மேலே திட்டம் உண்டா” என்று முருகன் கேட்கிறான்.
“இருக்கு மாமா பவர்டில்லர் வாங்கணும். விவசாயம் பூரா எங்கையில்” என்கிறாள் உற்சாகமாக...
“உன்னைப் போல் மெக்கானிக்கல் லைன் படிச்ச பையனுக்கு பேப்பரில் விளம்பரம் செய்வோம். இரண்டு பேருமாக சேர்ந்து ஏதேனும் தொழில் ஆரம்பிக்கலாம்.”
“மாப்பிள்ளைக்குப் பேப்பரில் விளம்பரமா?” என்று செவந்தி மலைக்கிறாள். காலம் எவ்வளவு மாறிவிட்டது!
அன்று குடமுழுக்கு விழா.
கோயில் வளைவே மக்கள் கடலாகக் காட்சியளிக்கிறது. ஒரு புறம் தீ வளர்த்து வேள்வி நடக்கிறது.
ஊரின் பெரிய தலைகள், வாணிபம் செய்வோர், உழைப்பாளிகள்... பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று காலையிலேயே எல்லோரும் குழுமியிருக்கின்றனர்.
பந்தல் போதாமல், மஞ்சளும் நீலமும் சிவப்புமாகப் பட்டை போட்ட சாமியானா என்ற நிழல் வசதியும் செய்திருக்கிறார்கள். செவந்தியின் குடும்பத்தினர் அதிகாலையிலேயே நீராடித் தூய்மை பெற்று, தேங்காய் பழம், பூ வெற்றிலைப் பாக்கு கர்ப்பூரம் ஆகிய பூசனைப் பொருட்களுடன் கோயில் வளைவுக்கு வந்து விட்டார்கள். ஒலி பெருக்கி பக்திப்பாடல்களை இடைவிடாமல் ஒலி பெருக்கிக் கொண்டிருக்கிறது.
இவர்கள் வேள்விச் சாலைப்பக்கம் சென்று வணங்கி வலம் வந்து கருப்ப கிரகத்தில் அம்மனைத் தரிசித்துக் கொண்டு வெளியே வந்து சாமியானாவில் உட்கார்ந்து கொள்கிறார்கள். அண்ணனும் அண்ணியும் அம்மாவும் அப்பாவும் உட்கார்ந்ததைப் பார்த்த பின் செவந்தி எழுந்திருக்கிறாள். சரோ, சரவணன் ரங்கன் மூவரும் கூட்டத்தில் கலந்து போகிறார்கள்.
பட்டாளத்தார்.... கன்னியப்பன் குடும்பம். கன்னியப்பன் சந்தனம் குங்குமம் நெற்றியில் வைத்துக் கொண்டு இடுப்பில் துண்டுக் கட்டித் திறந்த மார்புடன் பூசைப் பொருட்கள் உள்ள தூக்குக் கூடையை வைத்திருக்கிறான். லட்சமி ஒரு குழந்தையையும் அவள் அம்மா ஒரு குழந்தையையும் வைத்திருக்கிறார்கள். அனிதா பாட்டனாரின் கையைப் பிடித்துக் கொண்டு வருகிறாள்.
“அம்மா... டி.வி. எடுக்கிறாங்க! நாம விழுவோமா?” என்று கார்த்திக் ஓடி வந்து கேட்கிறான்.
இரண்டு பெரிய பலூன்களை வாங்கிக் கொண்டு சரோ வருகிறாள்.
“இந்தாங்க. இந்தா திவ்யா பலூனை வச்சிட்டுக் காட்டுங்க! டி.வி.காரர் கிட்டச் சொல்லிருக்கே. விழுவீங்க.”
“எதுக்கு சரோ இப்ப? உடச்சிடுவாங்க.”
அண்ணி அண்ணனுக்கே நேரம் தவறாமல் பழச்சாறும் மாத்திரையும் எடுத்துக் கொடுக்கிறாள்.
“உடய்க்கிறத்துக்குத்தான வாங்குறது?”
செவந்தி எதிலும் ஒட்டாமல் கூட்டத்தில் பார்வையில் துழாவுகிறாள். சின்னம்மாவுக்குக் கும்பாபிசேகப் பத்திரிகை வைத்துக் கடிதமும் கொடுத்து அனுப்பியிருந்தாள். குடும்பத்துடன் வரவேண்டும் என்று அவளே எழுதியிருந்தாள்.
பார்க்காதவர்கள், இடையில் வயது கூடி உருமாறியவர்கள், சிநேகிதர்கள், உறவுகள் விசாரணைகள்...
சின்னம்மா இவ்வளவு வைராக்கியமாக இருப்பாளா?
எல்லோரும் சரேலென்று எழுந்து நிற்கிறார்கள். ஒரு பேரலை வந்தாற்போல் கூட்டத்தில் ஆரவாரம்.
சாமியார் குருக்களையா பூசாரி சங்கரலிங்கம் எல்லோரும் கும்பங்களுடன் மூங்கில் படியில் ஏறுகிறார்கள்.
புனித நீர்க்கலசங்களை சாமியார் வாங்கிக் கும்பத்தில் சொறிகிறார். வெயில் பளபளக்கிறது. அந்தப் புனித நீரைச் சற்று இறங்கி நின்று கொண்டு கூட்டத்தின் மீது வீசித் தெளிக்கிறார். கைகளில் ஏந்துபவர்களும் தலை வணங்கி ஏற்பவர்களுமாகச் சூழலே புனிதமாகிறது. ஆதவனும் தன் கதிர்களை மேகத்துள் முடக்கிக் கொள்கிறான்.
“உங்க மீது விழுந்திச்சா... எங்கமேல விழுந்திச்சி. இந்தாங்க கையில்... இந்தாங்க” கணவன் குழந்தைகள் பெற்ற புனிதத்தை அண்ணி முகமலர்ந்து செவந்திக்கு நீட்டுகிறாள்.
பிறகு இசைப் பேருரை, பாட்டுக் கச்சேரி எல்லாம் தொடர்ந்து நடக்க இருக்கிறது. மாலையில் கலைப் பயணக்காரரின் அறிவொளி நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எல்லோரும் திரளாகக் குழுமி இருந்து பார்த்துக் கேட்டுப் பயனடைய வேண்டும் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு கேட்கிறது. செவந்திக்கு எல்லாம் நிறைவாக இருந்தும் நெஞ்சம் தோய்ந்து விடுகிறது.
பிரசாதம் இரண்டு இடங்களில் வழங்குகிறார்கள்.
“மாமா மாமி இங்கே நீங்க இருங்க, நான் உங்களுக்கு பிரசாதம் வாங்கிட்டு வந்து தாரேன்” என்ற சரோ போகிறாள்.
“வாணாம்; நாம அங்க போயித்தான் வாங்கணும்... போகலாமில்ல..”
“சரி, அப்ப இந்தக் கூடை, பையெல்லாம் நான் பாத்துக்கறேன். அம்மா நீ தாத்தா எல்லோரும் போங்க... பாட்டி. சேந்து போங்க!” என்று சரோ கூறுகிறாள்.
ஆனால் பாட்டி தனியாக விடுவிடென்று போகிறாள்.
“வூட்டப் பூட்டிட்டு வந்திருக்கு. மாட்டுக்குத் தண்ணி வைக்கணும்...”
பெரிய தவலையில் சர்க்கரைப் பொங்கல்; ஒரு பெரிய கூடையில் இலை போட்டுத் தயிர்சாதம்.
வரிசையில் ஒவ்வொருவராக ரங்கன் விடுகிறான். முதலில் தொன்னைகள் கொடுக்கிறார்கள். பிறகு ஒவ்வொரு கரண்டி பிரசாதம் வழங்கப் பெறுகிறது.
இந்த அம்மாவும் வாங்கிட்டுப் போயிருக்கலாமில்ல? சரவணன், திவ்யா, கார்த்திக், அவள்...
“அப்பா எங்கே?”
அப்பாவுக்காக அவள் கூட்டத்தில் ஆராய்கிறாள். ஆராய்ந்தவளாக அந்த சாமியானாவுக்கு வருகிறாள்.
சாந்தி குழந்தைகள் புருசன்...
உட்கர்ந்து சாப்பிடுகிறார்கள். சரோ அவளுடைய தோழிகளுடன் அவசரமாக வெளியேறுகிறாள்.
அண்ணனையும் அண்ணியையும் பார்த்தவாறு அவள் திரும்புகிறாள்.
சின்னம்மா அண்ணனின் பக்கத்தில்...
அதே வெள்ளைச் சேலை... கொடி கொடியாகக் கருப்புக்கரை. மகள் ருக்கு.. ஒரு கிரேப் சேலையும், கனகாம்பரப் பூவுமாக நிற்கிறாள். குச்சிகள் போல் கால்கள் தெரிய பம்மென்ற கவுனணிந்து பாப் முடியுடன் இரண்டு பெண்கள்... நெடுநெடுவென்று ஒட்டிய கன்னங்களும் ஒட்டு மீசையுமாக டீசர்ட் அணிந்த மருமகன். சின்னம்மா முருகனின் கையைத் தன் கையில் வைத்துக் கொண்டு எதோ நெஞ்சு நெகிழப் பேசுகிறாள்.
ருக்குவைப் பக்கத்தில் அழைத்து உட்கார்த்துகிறாள் அண்ணி. டீசர்ட் அணிந்த மருமகன் கை கூப்புகிறான்.
சரேலென்று அப்பா நினைவு வருகிறது.
இப்போதும் சின்னம்மா அவரைப் பார்க்காமல் போய் விடுவாளோ? அன்று மாநாட்டில் நழுவ விட்டாற் போல் நழுவ விடக் கூடாது. அவர் இலக்கில்லாமல் கூட்டத்தில் புகுந்து விரிவுரை கேட்கும் கும்பலில் ஆராய்ந்து விரிச்சிட்ட யாகசாலைப் பக்கம் துழாவி, மீண்டும் பிரசாதம் வழங்கும் இன்னோர் இடத்துக்கும் வருகிறாள். அங்கு அறிவொளி இயக்கத் தோழர்களுடன் சரோ பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். லலிதா, தேவிகா என்ற பெண்கள் காஞ்சியிலிருந்து வந்திருக்கிறார்கள்.
“சரோ! தாத்தா பிரசாதம் வாங்கிட்டாரா? பார்த்தாயா?”
“பார்க்கல. பாட்டிதா எந்திரிச்சி போச்சு. நா வாங்கிக் கொடுத்தேன்.”
“சின்னம்மா வந்திருக்காங்க. ருக்குவும் கூட வந்திருக்கு. அவங்க மாமாகிட்டப் பேசிட்டிருக்காங்க. அப்பாதானே பார்க்கணும்ன்னாரு.”
அவளாகச் சொல்லிக் கொள்கிறாள். சரோ இதில் எந்த முக்கியத்துவமும் இருப்பதாகப் புரிந்து கொள்ளவில்லை.
சுந்தரி... தன் பிள்ளைகளுடன் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருகிறாள். பையன் ஒரு பாட்டிலில் தண்ணிரைக் கொண்டு வருகிறான். சாப்பிட உட்காருகிறார்கள்.
“சுந்தரி? அப்பாவப் பாத்தியா? சின்னம்மா வந்திருக்காங்க. அவர்தான் பார்க்கணும், பேசணும்னு துடிச்சிட்டிருந்தாரு?”
“அதா கிணத்தாண்ட எல்லாருக்கும் தண்ணி எறச்சிக் குடுத்திட்டிருக்காரு. இத இவ அங்கேருந்துதா வாரான். நாங் கொஞ்சம் எரச்சி ஊத்தன. எல்லாம் வெயில்ல தாகம் தாகம்னு வராங்க... பானையில் தண்ணி ஊத்தி வச்சிருந்தாங்க. காலியாயிடிச்சி. செவந்தி சாயங்காலம் வரைக்கும் இருக்கப் போறியா? நாம வூட்டுக்குப் போயி கொஞ்சம் பாத்திட்டு ஆறுமணிக்கு வந்தாப் பத்தாது? சரோ, அறிவொளி இயக்க நாடகம் எட்டு மணிக்குத் தானே?”
செவந்தி காதில் வாங்கிக் கொள்ளவில்லை.ஒரே குறியாக கிணற்றுக் கரைக்கு வருகிறாள்.
“அப்பா...?”
காதுகளில் பூ... திரும்பியே பாராமல் தண்ணிர் இறைத்துக் குடத்தில் ஊற்றுகிறார்.
அவள் அருகே சென்று அவரைத் தொடுகிறாள்.
“அப்பா நா இறைக்கிறேன். நீங்க பிரசாதம் சாப்புட்டீங்களா?” மேலெல்லாம் வேர்வையா தண்ணிரா என்று தெரியாமல் நனைந்து இருக்கிறது. வேட்டியைத் தார் பாய்ச்சி இருக்கிறார்.
“விடுங்க... நான் இறைச்சி ஊத்தறேன். சின்னம்மா வந்திருக்காங்க. ருக்கு மருமகன் குழந்தைங்களை கூட்டிட்டு வந்திருக்காங்க. நாம உக்காந்திருந்தோமே, அந்த இடத்தில் சின்னம்மா அண்ணன் அண்ணி கூட உட்கார்ந்து பேசிட்டிருப்பாங்க...” உடனே அவர் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் அங்கு ஒடுவார் என்று நினைத்தாளே, அது நடக்கவில்லை.
நிறைந்த குடத்தை எடுப்பவர் தலையில் ஏற்றிவிட்டு நிற்கிறார். “அப்பா! நீங்க போங்க. ஒருவேள அண்ணிக்குப் போல அவங்க அப்படியே பஸ் ஏறிப் போயிடுவாங்களோன்னுதா ஓடி வந்தேன்...”
“தெரியும் செவந்தி. அவங்க வாசல்ல வாரப்பவே பாத்திட்டே உங்கம்மா அதுனாலதா வூட்டுக்கு ஓடிட்டா...”
அவள் வாயடைத்து நிற்கிறாள்.
“அவளுக்குப் பார்க்க இஷடமில்லாம தா அன்னைக்கு இந்த எல்லைக்கு வந்திட்டுத் தெருவ மிதிக்காம போனா. எத்தினி நாளானாலும் அந்த நினைப்பு வரத்தா வரும்... நா தூரத்தலேந்து அவ வந்தப்ப பார்த்தேன். அது போதும். எனக்கு இப்ப எந்தக் கிலேசமும் இல்ல. சாமி சொல்லிச்சி. அமைதியாயிருன்னு. இந்த மனசில அமைதியா இருந்தாலே சுத்துப்புறம் நோவு நொடி செடியாத் தாக்கும் விசப்பூச்சி வாராம இருக்கும்னு. நா அதுவும் இதுவும் ஏன் நினைக்கணும்.” செவந்தி திகைத்துப் பார்க்கிறாள்.
அவளைப் பாத்து மன்னிப்புக் கேக்காம நெஞ்சு ஆறாதுன்னு கரைந்து போன அப்பனா?
சுருக்கம் விழுந்த இந்த முகத்தில்... இதுதான் தெளிவா?
“செவந்தி, உங்கிட்ட ரங்கன் சொல்லல. ஆனா முருகனுக்கு வந்த நோவு, இரைப்பை புத்துன்னு சொன்னா. கெடந்து துடிச்சே. அந்தப் பொண்ணு அவ்வளவு நொடிச்ச பொண்ணு, சொத்து சொகம் நகை நட்டு எல்லாம் தோத்து, சாவித்திரி போல யமங்கிட்ட வாதாடி அவ உசிரை மீட்டிருக்கு. இப்ப நல்லா குணமாயிட்டது. சோதிச்சிச் சொல்லிட்டாங்கன்னாங்க... என்னமோ எல்லாம் அந்தத் தாயின் கிருபைதான்.”
“சாமி சொன்னாங்க. கெட்டவங்கன்னு யாருமே இல்ல. பகை வெறுப்பு பொறாமை பழி எல்லாம் மனிசனே உண்டாக்கிக் கொள்ளும் கசடுகள். மாயைகள். இதெல்லாம் நீக்கி விட்டா, உள்ளேருந்து தண்ணீர் கரும்பா வரும். எல்லார் மனசிலும் அதாம்மா...” அப்பா அவள் தலையில் பரிவுடன் கையை வைக்கிறார்.
“உனக்கு நல்ல மனசு. அவ மக ருக்குவுக்கும் அந்தப் புள்ளங்களுக்கும் நல்லது செய்யி. படிக்க வையி, நீ செய்வே... இதுக்கு மேல எனக்கு என்னம்மா வோணும்?”
உணர்ச்சி மிகுதியில் நெஞ்சு முட்டுகிறது.
மனம் மிக இலேசாகிறது.
சரேலென்று வானம் மங்க... கோடையிடி முழங்குகிறது. “மழை ... மழை...” என்று எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறார்கள்.
செவந்தி ஏதோ நினைவு வந்தாற் போன்று விடுவிடென்று சாமியானாவை நோக்கி முன்னேறுகிறாள்.
நிறைந்தது
--------00---------
This file was last updated on 25 Dec 2019.
Feel free to send the corrections to the webmaster.