செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்
அறிஞர் கா. ந. அண்ணாதுரை
cevvAzai & 3 other short stories
by C.N. Annadurai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
The e-text has been generated using Google OCR and subsequent editing and proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்
அறிஞர் கா. ந. அண்ணாதுரை
Source:
செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்
அறிஞர் அண்ணாதுரை.
முதற்பதிப்பு
திராவிட நாடு அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது
பரிமளம் பதிப்பகம், காஞ்சிபுரம்
--------------
உள்ளடக்கம்
1. செவ்வாழை
2. சரோஜா ஆறணா
3. மதுரைக்கு டிக்கட் இல்லை
4. நாக்கிழந்தார்
-------------
1. செவ்வாழை
செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டு விட்டது.
செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும் கூட, வயலிலே அவன் பட்ட கஷ்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டிருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான், தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்து வந்தான். கன்று வளர வளர அவன் களிப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும் போதும், கல் மண்ணைக் கிளறிவிடும் போதும், அவன் கண்கள் பூரிப்படையும்- மகிழ்ச்சியால். கரியனிடம்-அவனுடைய முதல் பையன்- காட்டியதைவிட அதிகமான அன்பும், அக்கறையும் காட்டுகிறாரே என்று ஆச்சரியம், சற்றுப் பொறாமைகூட ஏற்பட்டது குப்பிக்கு.
“குப்பி! ஏதாச்சும் மாடுகீடு வந்து வாழையை மிதிச்சிடப் போகுது. ஜாக்ரதையாக் கவனிச்சுக்கோ. அருமையான கன்று-ஆமாம், செவ்வாழைன்னா சாமான்யமில்லே. குலை, எம்மாம் பெரிசா இருக்கும் தெரியுமோ? பழம், வீச்சு வீச்சாகவும் இருக்கும், உருண்டையாகவும் இருக்கும்-ரொம்ப ருசி-பழத்தைக் கண்ணாலே பார்த்தாக் கூடப் போதும்; பசியாறிப் போகும்” என்று குப்பியிடம் பெருமையாகப் பேசுவான் செங்கோடன்.
அப்பா சொல்லுவதை நாலு பிள்ளைகளும் ஆமோதிப்பார்கள்-அது மட்டுமா-பக்கத்துக் குடிசை-எதிர்க் குடிசைகளிலே உள்ள குழந்தைகளிடமெல்லாம், இதே பெருமை-யைத்தான் பேசிக் கொள்வார்கள். உழவர் வீட்டுப் பிள்ளைகள், வேறே எதைப் பற்றிப் பேசிக் கொள்ள முடியும்-அப்பா வாங்கிய புதிய மோட்டாரைப் பற்றியா, அம்மாவின் வைரத்தோடு பற்றியா, அண்ணன் வாங்கி வந்த ரேடியோவைப் பற்றியா, எதைப் பற்றிப் பேச முடியும்? செவ்வாழைக் கன்றுதான், அவர்களுக்கு, மோட்டார், ரேடியோ, வைரமாலை, சகலமும்!
மூத்த பயல் கரியன், “செவ்வாழைக் குலை தள்ளியதும், ஒரு சீப்புப் பழம் எனக்குத்தான்” என்று சொல்லுவான்.
“ஒண்ணுக்கூட எனக்குத் தரமாட்டாயாடா - நான் உனக்கு மாம்பழம் தந்திருக்கிறேன்? கவனமிருக்கட்டும்-வறுத்த வேர்க்கடலை கொடுத்திருக்கிறேன்; கவனமிருக்கட்டும்”-என்று எதிர்க் குடிசை எல்லப்பன் கூறுவான்…
கரியனின் தங்கை, காமாட்சியோ, கண்ணைச் சிமிட்டிக் கொண்டே “உனக்கு ஒரு சீப்புன்னா, எனக்கு இரண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒரு சீப்பு, அப்பாவைக் கேட்டு ஒரு சீப்பு” என்று குறும்பாகப் பேசுவாள்.
மூன்றவாது பையன் முத்து, “சீப்புக் கணக்குப் போட்டுக்கிட்டு ஏமாந்து போகாதீங்க ஆமா-பழமாவதற்குள்ளே யாரார் என்னென்ன செய்து விடுவாங்களோ, யாரு கண்டாங்க” என்று சொல்லுவான்-வெறும் வேடிக்கைக்காக அல்ல-திருடியாவது மற்றவர்களைவிட அதிகப்படியான பழங்களைத் தின்றே தீர்த்து விடுவது என்று தீர்மானித்தே விட்டான்.
செங்கோடனின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தது செவ்வாழை. உழைப்பு அதிகம் வயலில். பண்ணை மானேஜரின் ஆர்ப்பாட்டம் அதிகம். இவ்வளவையும் சகித்துக் கொள்வான்-செவ்வாழையைக் கண்டதும் சகலமும் மறந்துபோகும். குழந்தைகள் அழுதால், செவ்வாழையைக் காட்டித்தான் சமாதானப்படுத்துவான்! துஷ்டத்தனம் செய்கிற குழந்தையை மிரட்டவும், செவ்வாழையைத்தான் கவனப் படுத்துவான்!
குழந்தைகள், பிரியமாகச் சாப்பிடுவார்கள், செவ்வாழையை என்ற எண்ணம் செங்கோடனுக்கு. பண்ணை வீட்டுப் பிள்ளைகள் ஆப்பிள், திராட்சை தின்ன முடிகிறது-கரியனும் முத்துவும், எப்படி விலை உயர்ந்த அந்தப் பழங்களைப் பெற முடியும்? செவ்வாழையைத் தந்து தன் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணந்தான் செங்கோடனை, அந்தச் செவ்வாழைக் கன்றைச் செல்லமாக வளர்க்கும்படிச் செய்தது. உழவன் செங்கோடனிடம், எவ்வளவு பாடுபட்டாலும், குழந்தைகளுக்குப் பழமும், பட்சணமும், வாங்கித் தரக்கூடிய ‘பணம்’ எப்படிச் சேர முடியும்? கூலி நெல், பாதி வயிற்றை நிரப்பவே உதவும்-குப்பியின் ‘பாடு’ குடும்பத்தின் பசியைப் போக்கக் கொஞ்சம் உதவும். இப்படிப் பிழைப்பு! பலனில் மிகப் பெரும் பகுதியோ, பண்ணைக்குச் சேர்ந்து விடுகிறது. இந்தச் ‘செவ்வாழை’ ஒன்றுதான் அவன் சொந்தமாக மொத்தமாக பலன் பெறுவதற்கு உதவக்கூடிய, உழைப்பு!
இதிலே பங்கு பெற பண்ணையார் குறுக்கிட முடியாதல்லவா? அவருக்காகப் பாடுபட்ட நேரம் போக, மிச்சமிருப்பதிலே, அலுத்துப் படுக்க வேண்டிய நேரத்திலே பாடுபட்டு, கண்ணைப் போல வளர்த்து வரும் செவ்வாழை! இதன் முழுப் பயனும் தன் குடும்பத்துக்கு! இது ஒன்றிலாவது தான் பட்ட பாட்டுக்கு உரிய பலனைத் தானே பெற முடிகிறதே என்று சந்தோஷம் செங்கோடனுக்கு.
இவ்வளவும் அவன் மனதிலே, தெளிவாகத் தோன்றிய கருத்துகள் அல்ல. புகைப்படலம் போல, அந்த எண்ணம் தோன்றும், மறையும்-செவ்வாழையைப் பார்க்கும்போது பூரிப்புடன் பெருமையும் அவன் அடைந்ததற்குக் காரணம் இந்த எண்ணந்தான்.
கன்று வளர்ந்தது கள்ளங்கபடமின்றி. செங்கோடனுக்குக் களிப்பும் வளர்ந்தது. செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டு விட்டது.
“இன்னும் ஒரு மாசத்திலே குலை தள்ளுமாப்பா?” கரியன் கேட்பான் ஆவலுடன் செங்கோடனை.
“இரண்டு மாசமாகும்டா கண்ணு” என்று செங்கோடன் பதிலளிப்பான்.
செவ்வாழை குலை தள்ளிற்று-செங்கோடனின் நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டு விட்டது. நிமிர்ந்து பார்ப்பான் குலையை பெருமையுடன்.
பண்ணை பரந்தாம முதலியார், தமது மருமகப் பெண் முத்துவிஜயாவின் பொன்னிற மேனியை அழகுபடுத்திய வைர மாலையைக் கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்க மாட்டார்!
செங்கோடனின் கண்களுக்கு அந்தச் செவ்வாழைக் குலை, முத்துவிஜயாவின் வைர மாலையைவிட விலைமதிப்புள்ளதாகத்தான் தோன்றிற்று. குலை முற்றமுற்ற செங்கோடனின் குழந்தைகளின் ஆவலும், சச்சரவும் பங்குத் தகராறும், அப்பாவிடமோ அம்மாவிடமோ ‘அப்பீல்’ செய்வதும் ஓங்கி வளரலாயிற்று. “எப்போது பழமாகும்?” என்று கேட்பாள் பெண். ‘எத்தனை நாளைக்கு மரத்திலேயே இருப்பது?’ என்று கேட்பான் பையன்.
செங்கோடன், பக்குவமறிந்து குலையை வெட்டி, பதமாகப் பழுக்க வைத்துப் பிள்ளைகளுக்குத் தரவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான். உழைப்பின் விளைவு! முழுப் பலனை நாம் பெறப் போகிறோம-இடையே தரகர் இல்லை-முக்காலே மூன்று வீசம் பாகத்தைப் பறித்துக் கொள்ளும் முதலாளி இல்லை. உழைப்பு நம்முடையது என்றாலும் உடைமை பண்ணையாருடையது-அவர் எடுத்துக் கொண்டது போக மீதம் தானே தனக்கு என்று, வயலில் விளையும் செந்நெல்லைப் பற்றி எண்ண வேண்டும்-அதுதானே முறை! ஆனால் இந்தச் செவ்வாழை அப்படி அல்ல! உழைப்பும் உடைமையும் செங்கோடனுக்கே சொந்தம்.
இரண்டு நாளையில், குலையை வெட்டிவிடத் தீர்மானித்தான்-பிள்ளைகள் துள்ளின சந்தோஷத்தால். மற்ற உழவர் வீட்டுப் பிள்ளைகளிடம் ‘சேதி’ பறந்தது-பழம் தர வேண்டும் என்று சொல்லி, அவலோ, கடலையோ, கிழங்கோ, மாம்பிஞ்சோ, எதை எதையோ, ‘அச்சாரம்’ கொடுத்தனர் பல குழந்தைகள் கரியனிடம்.
பாடுபட்டோம், பலனைப் பெறப் போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. இதைப் போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப்பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்! செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே, நூற்றுக்கு ஒரு பாகம் கூட இராது-ஆனால் உழைப்பு நம்முடையதாகவும் வயல் அவருடைய உடைமையாகவும் இருந்ததால் பலனை அவர் அனுபவிக்கிறார் பெரும்பகுதி.
இதோ, இந்தச் செவ்வாழை நம்மக் கொல்லையிலே நாம் உழைத்து வளர்த்தது-எனவே பலன் நமக்குக் கிடைக்கிறது-இதுபோல நாம் உழைத்துப் பிழைக்க நம்முடையது என்று ஒரு துண்டு வயல் இருந்தால், எவ்வளவு இன்பமாக இருக்கும். அப்படி ஒரு காலம் வருமா! உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம்-பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட, இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான். செவ்வாழை இதுபோன்ற சித்தாந்தங்களைக் கிளறி விட்டது அவன் மனதில். குழந்தைகளுக்கோ நாக்கிலே நீர் ஊறலாயிற்று.
செங்கோடன் செவ்வாழைக் குலையைக் கண்டு களித்திருந்த சமயம், பண்ணை பரந்தாமர், தமது மருமகப் பெண் முத்துவிஜயத்தின் பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அம்பிகை கோயிலில் அபிஷேக ஆராதனை செய்வதற்காக, ‘ஐயரிடம்’ சொல்லி விட்டார். கணக்கப்பிள்ளையைக் கூப்பிட்டு, ‘பட்டி’ தயாரிக்கச் சொன்னார். பல பண்டங்களைப் பற்றிக் குறிப்பு எழுதும் போது, ‘பழம்’ தேவை என்று தோன்றாமலிருக்குமா? ‘இரண்டு சீப்பு வாழைப்பழம்’ என்றார் பண்ணையார்.
“ஏனுங்க பழம்-கடையிலே நல்ல பழமே இல்லை-பச்சை நாடன்தான் இருக்கு” என்று இழுத்தான் சுந்தரம், கணக்கப்பிள்ளை.
“சரிடா, அதிலேதான் இரண்டு சீப்பு வாங்கேன்?-வேறே நல்ல பழமா எங்கே இருக்கு!” என்று பண்ணையார் சொல்லி முடிப்பதற்குள், சுந்தரம், “நம்ம செங்கோடன் கொல்லையிலே, தரமா, ஒரு செவ்வாழைக் குலை இருக்குதுங்க- அதைக் கொண்டு-கிட்டு வரலாம்” என்றான். “சரி” என்றார் பண்ணையார்.
செங்கோடனின் செவ்வாழைக் குலை! அவனுடைய இன்பக் கனவு!! உழைப்பின் விளைவு!! குழந்தைகளின் குதூகலம்!!
அதற்கு மரண ஓலை தயாரித்து விட்டான் சுந்தரம்!
எத்தனையோ பகல் பார்த்துப் பார்த்து, செங்கோடனின் குடும்பம் பூராவும் பூரித்தது அந்தக் குலையை! அதற்குக் கொலைக்காரனானான் சுந்தரம். மகிழ்ச்சி, பெருமை, நம்பிக்கை இவைகளைத் தந்து வந்த, அந்தச் செவ்வாழைக் குலைக்கு வந்தது ஆபத்து.
தெருவிலே, சுந்தரமும், செங்கோடனும் பேசும்போது குழந்தைகள், செவ்வாழையைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணவே இல்லை! செங்கோடனுக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றிற்று-நாக்குக் குழறிற்று-வார்த்தைகள் குபுகுபுவென்று கிளம்பி, தொண்டையில் சிக்கிக் கொண்டன.
மாட்டுப் பெண்ணுக்கு பிறந்த நாள் பூஜை-என்று காரணம் காட்டினான் சுந்தரம். என்ன செய்வான் செங்கோடன்! என்ன சொல்வான்? அவன் உள்ளத்திலே, வாழையோடு சேர்ந்து வளர்ந்த ஆசை-அவன் குழந்தைகளின் நாக்கில் நீர் ஊறச்செய்த ஆசை-இன்று, நாளை, என்று நாள் பார்த்துக் கொண்டிருந்த ஆவல்-எனும் எதைத்தான் சொல்ல முடியும்?
கேட்பவர் பண்ணை பரந்தாமர்! எவ்வளவு அல்பனடா, வாழைக் குலையை அவர் வாய் திறந்து, உன்னை ஒரு பொருட்டாக மதித்துக் கேட்டனுப்பினால் முடியாது என்று சொல்லி விட்டாயே! அவருடைய உப்பைத் தின்று பிழைக்கிறவனுக்கு இவ்வளவு நன்றி கெட்டதனமா? கேவலம், ஒரு வாழைக்குலை! அவருடைய அந்தஸ்துக்கு இது ஒரு பிரமாதமா!-என்று ஊர் ஏசுகிறது போல் அவன் கண்களுக்குத் தெரிகிறது.
"அப்பா! ஆசை காட்டி மோசம் செய்யாதே! நான் கூடத்தான் தண்ணீர் பாய்ச்சினேன்-மாடு மிதித்து விடாதபடி பாதுகாத்தேன்-செவ்வாழை ரொம்ப ருசியாக இருக்கும். கல்கண்டு போல இருக்கும் என்று நீதானே என்னிடம் சொன்னாய். அப்பா! தங்கச்சிக்குக் கூட, ‘உசிர்’ அந்தப் பழத்திடம். மரத்தை அண்ணாந்து பார்க்கும்போதே, நாக்கிலே நீர் ஊறும். எங்களுக்குத் தருவதாகச் சொல்லிவிட்டு, இப்பொழுது ஏமாற்றுகிறாயே. நாங்கள் என்னப்பா, உன்னை கடையிலே காசு போட்டுத் திராட்சை, கமலாவா வாங்கித் தரச் சொன்னோம். நம்ம கொல்லையிலே நாம் வளர்த்ததல்லவா!’-என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், ‘குழந்தைகளைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா?" என்று கோபத்துடன் கேட்கும் மனைவியும், அவன் மனக்கண்களுக்குத் தெரிந்தனர்!
எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை! அரிவாள் இருக்குமிடம் சென்றான். ‘அப்பா, குலையை வெட்டப் போறாரு-செவ்வாழைக்குலை’ என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு, குழந்தைகள் கூத்தாடின. செங்கோடனின் கண்களிலே நீர்த்துளிகள் கிளம்பின! குலையை வெட்டினான்-உள்ளே கொண்டு வந்தான்-அரிவாளைக் கீழே போட்டான்-’குலையைக் கீழே வை அப்பா, தொட்டுப் பார்க்கலாம்’ என்று குதித்தன குழந்தைகள். கரியனின் முதுகைத் தடவினான் செங்கோடன். “கண்ணு! இந்தக் குலை, நம்ம ஆண்டைக்கு வேணுமாம் கொண்டு போகிறேன்-அழாதீங்க-இன்னும் ஒரு மாசத்திலே, பக்கத்துக் கண்ணு மரமாகிக் குலை தள்ளும். அது உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்து விடறேன்” என்று கூறிக்கொண்டே, வீட்டை விட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல் மனதைப் பிளப்பதற்குள்.
செங்கோடன் குடிசை, அன்று பிணம் விழுந்த இடம் போலாயிற்று. இரவு நெடுநேரத்திற்குப் பிறகுதான் செங்கோடனுக்குத் துணிவு பிறந்தது வீட்டுக்கு வர! அழுது அலுத்துத் தூங்கிவிட்ட குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்களிலே, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்பிற்று. துடைத்துக் கொண்டு, படுத்துப் புரண்டான்-அவன் மனதிலே ஆயிரம் எண்ணங்கள். செவ்வாழையை, செல்லப்பிள்ளைபோல் வளர்த்து என்ன பலன்…!
அவருக்கு அது ஒரு பிரமாதமல்ல-ஆயிரம் குலைகளையும் அவர் நினைத்த மாத்திரத்தில் வாங்க முடியும்! ஆனால் செங்கோடனுக்கு…? அந்த ஒரு குலையைக் காண அவன் எவ்வளவு பாடுபட்டான்-எத்தனை இரவு அதைப் பற்றி இன்பமான கனவுகள்-எத்தனை ஆயிரம் தடவை, குழந்தைகளுக்கு ஆசை காட்டியிருப்பான்! உழைப்பு எவ்வளவு! அக்கறை எத்துணை! எல்லாம் ஒரு நொடியில் அழிந்தன!
நாலு நாட்களுக்குப் பிறகு, வெள்ளித் தட்டிலே, ஒரு சீப்பு செவ்வாழைப் பழத்தை வைத்துக் கொண்டு, அன்னநடை நடந்து அழகுமுத்துவிஜயா அம்பிகை ஆலயத்துக்குச் சென்றாள்.
நாலு நாட்கள் சமாதானம் சொல்லியும், குழந்தைகளின் குமுறல் ஓயவில்லை. கரியன் ஒரே பிடிவாதம் செய்தான், ஒரு பழம் வேண்டுமென்று. குப்பி, ஒரு காலணாவை எடுத்துக் கொடுத்தனுப்பினாள் பழம் வாங்கிக் கொள்ளச் சொல்லி. பறந்தோடினான் கரியன்.
கடையிலே செவ்வாழைச் சீப்பு, அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கணக்கப்பிள்ளை பண்ணை வீட்டிலே இருந்து நாலு சீப்பை முதலிலேயே தீர்த்துவிட்டான்-அவன் விற்றான் கடைக்காரனுக்கு-அதன் எதிரே, ஏக்கத்துடன் நின்றான் கரியன்! “பழம், ஒரு அணாடா, பயலே-காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா-போடா” என்று விரட்டினான், கடைக்காரன். கரியன் அறிவானா, பாபம், தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை, இப்போது கடையில் கொலு வீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாபம்! எத்தனையோ நாள் அந்தச் சிறுவன், தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்குமென்று! பழம் இருக்கிறது; கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டிற்கு வந்தான் வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக் கொண்டே. செங்கோடன் கொல்லைப்புறத்திலிருந்து வெளியே வந்தான் வாழை மரத்துண்டுடன்.
“ஏம்பா! இதுவும் பண்ணை வீட்டுக்கா?” என்று கேட்டான் கரியன்.
“இல்லேடா, கண்ணு! நம்ம பார்வதி பாட்டி செத்துப் போயிட்டா, அந்தப் பாடையிலே கட்ட” என்றான் செங்கோடன்.
அலங்காரப் பாடையிலே, செவ்வாழையின் துண்டு!
பாடையைச் சுற்றி அழுகுரல்!
கரியனும், மற்றக் குழந்தைகளும் பின்பக்கம்.
கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டிச் சொன்னான். “எங்க வீட்டுச் செவ்வாழையடா” என்று.
“எங்க கொல்லையிலே இருந்த செவ்வாழைக் குலையைப் பண்ணை வீட்டுக்குக் கொடுத்து விட்டோம்-மரத்தை வெட்டி ‘பாடை’யிலே கட்டி விட்டோம்” என்றான் கரியன்.
பாபம் சிறுவன்தானே!! அவன் என்ன கண்டான், செங்கோடனின் செவ்வாழை, தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணச் சம்பவம் என்பதை.
---------------
2. சரோஜா ஆறணா!
என்னைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது அந்தச் சொல். மனப்பிராந்தியல்ல, என் செவியிலே தெளிவாக விழுந்தது அப்பேச்சு. என் மூச்சே திணறிவிட்டது. என்னை நிலை குலைய வைத்த அந்தச் சொல்லுரைத்தவரோ, நெற்றியிலே நீறு பூசி, வெள்ளை ஆடை அணிந்து, விளங்கினார். போக்கிரியல்ல, போக்கற்றவருமல்ல, புத்திதடுமாறி யவருமல்ல, அவர் தான் சொன்னார் சரோஜா ஆறணா என்ற சொல்லை. என்ன என்ன? என்று கேட்கவோ என்நா எழவில்லை. நமக்கென்ன என்றிருக்கவோ மனம் இடந்தா வில்லை. நடுவீதி நின்றேன், வண்டியோட்டிகளுக்கு அது பெருந்தொல்லை, என் நிலை காண அந்த ஆசாமிக்குக் கண்ணா இல்லை? புன்முறுவல் செய்தார். அருகில் சென்றேன். சரோஜா ஆறணா! என்ன அநியாயம், என்ன அக்ரமம் பட்டப் பகலில், பவர் கூடும் கடைவீதியில், சரோஜா, ஆறணா என்று ஏலங்கூறும் அளவுக்கா நாடு கெட்டுவிட் டது, நாகரிகம் பட்டுவிட்டது, என்று நினைத்தேன், பதறினேன், பெண் விற்பதா! வீதியில்! அந்த விலைக்கா!! ஆறணாவுக்கா அந்தச் சரோஜினி?
என்னால் ஆத்திரத்தை அடக்க முடியாததால், நீறு பூசியவரைக் கோபப் பார்வையுடன் நோக்கி "என்னய்யா அநியாயம், சரோஜா ஆறணா என்று வாய் கூசாமல் கூவுகிறீரே'' என்று கேட்டேன். அந்த ஆள் கோபியாமலில்லை. அனியாயமா? பங்கஜா இன்று என்ன விலை தெரியுமா?' என்று என்னைக் கேட்டு, துடிதுடித்து நான் நிற்பதைத் துளியும் சட்டை செய்யாமல், "பங்கஜா, பத்தணா விலை" என்றான், அதற்குமேல் என்னால் பொறுக்க முடியவில்லை. பிறகு எங்களுக்குள் பின்வரும் காரசாரமான பேச்சு நடந்தது.
“என்ன அனியாயமய்யா! சரோஜா ஆறணா, பங்கஜா பத்தணு என்று கூவுகிறீர். காலம் இப்படியா கெட்டு விட்டது”
"காலம் கெட்டு விட்டதற்கு நான் என்ன செய்வேன்? நானா இவைகளுக்குப் பொறுப்பாளி. சரோஜாவும் பங்கஜாவும் போகிற போக்கை நானா தடுக்க முடியும்?''
"நீர் தடுக்கா விட்டாலும் அந்த அனியாயத்திலே நீர் பங்கெடுத்துக் கொள்ளாமலிருக்கக் கூடாதா? ஆளைப் பார்த்தால் நல்லவபாகத் தெரிகிறதே!”
"இதென்னய்யா காலையிலே நீ யோர் பித்துக்கொள்ளியாக வந்து சேர்ந்தாய். நான் பங்கெடுத்துக் கொள்வது தானா உன் கண்களை உறுத்துகிறது. இதே தொழிலிலே, மாதத்திலே ஆயிரம் பத்தாயிரம் சம்பாதிக்கிறான் ஒவ்வொருவன். எனக்கு ரூபாய்க்குக் காலணா கூடச் சரியாகக் கமிஷன் கிடைப்பதில்லை, இதற்கு நான் படுகிற பாடும், போடுகிற கூச்சலும், நடக்கிற நடையும் எவ்வளவு. என்னைக் குறை கூற வந்து விட்டாய்.”
”இது ஏனய்யா இந்த மானங் கெட்ட பிழைப்பு?''
ஓங்கி என்னை அடித்தான் அந்த ஆள். ’ஈனப் பிழைப் புக்காரா! என்னையா அடித்தாய்’, என்று கூவினேன். நானும் ஒரு அறை கொடுத்தேன். கும்பல் கூடிவிட்டது. ரோஷமும் நியாய புத்தியுமுள்ள யார்தான் என்னை ஆதரிக்க மாட்டார்கள் என்ற தைரியம் பிறந்தது. நான், அந்தத் தாசன் கரத்தைப் பிடித்துக்கொண்டு, "கேளுங்களய்யா! இந்த அனியாயத்தை. சரோஜா, ஆறணாவாம்! நடுவீதியிலே கூவுகிறான், தைரியமாக." என்று கூறினேன்.
"உனக்குத் தேவையில்லையானால், நீ போய்விடு. அவனை அடிப்பானேன்."
"உனக்கு அந்த விலை பிடிக்காவிட்டால், வாங்கவேண்டாம், போ. அடிக்கலாமா!"
"அனியாயம் என்றால் போய்க் கெவர்மெண்டைக் கேள். அதற்கு இவனை அடிக்க எவ்வளவு தைரியமடா உனக்கு''
இத்தகைய சொல்லம்புகள், நாலா பக்கத்திலிருந்தும் பாய்ந்து வந்து என்னைத் தாக்கின. என் திகைப்புக்கு அளவேயில்லை. என்ன அனியாயம்! நடுத்தெருவில் நங்கையை விலை கூறிப் பிழைப்பவனுக்கு, இவ்வளவு ஆதரவா? இது என்ன பட்டினம்! என்று எண்ணித் தத்தளித்தேன்.
அடிபட்ட ஆசாமி அழுதாலுடன், "நானும், இந்த மார்க்கட்டிலே பத்து வருஷமாக உலவுகிறேன். ஒருவர் கூட என்னை நாயே என்று சொன்னது கிடையாது. என் போராத வேளை இந்தப் போக்கிரியிடம் இன்று அடிபட் டேன். சரக்கு வாங்க வருகிறான் என்று நினைத்தேன். உள்ள விலையைத்தான் கூறினேன். வீண் வம்பு பேசி, வலிச்சண்டைக்கு இழுத்து, அடித்தான்" என்று கூறினான்.
உண்மையிலேயே அவன் பேசியது கேட்கப் பரிதாபமாகத் தான் இருந்தது.. ஆனால், பெண்ணை விற்கும் பேயனை, அடிப்பது தவறா? .
"உன்னை அடித்தது தவறா? நீ செய்த காரியம், ஈனத் தனமல்லவா? பட்டப்பகலிலே, நடுவீதியிலே, ஒருபெண்ணை ஆறணாவக்கு விலைக்கு விற்பதா?" என்று நான் கேட்டேன்.
"என்ன? என்ன? பெண்ணை விற்றாரா?" என்று பலரும் பதைத்துக் கூவினர்.
”ஆமாம், சரோஜா ஆறணா என்று சொன்னான் என்று கூறினேன். . .
உடனே, "அட பைத்யக்காரா'' என்று பலரும் கூறிச் சிரித்தனர்.
'அட தடிராமா' சரோஜா, ஆறணா என்று நான் சொன்னது, ஒரு பெண்ணின் விலை என்ற எண்ணிக் கொண்டாய்! முட்டாளே! சரோஜா மில் நூல் விலையல்லவா நான் சொன்னேன் என்று அடிபட்டவன் கூறினான். ஒரே கேலிச் சிரிப்பு. அட பட்டிக் காட்டானே! மடைமன்னார் சாமி! என்று அர்ச்சனை ஆரம்பமாயிற்று. மேலாடையை இழுப்பவர்களும், காலைத் தட்டி விடுபவர்களும், சிறுகல்லை வீசுபவர்களுமாகப், பலர் என்னைத் தொல்லை கொடுக்கத் தொடங்கினார்கள். என் முகத்திலே அசடு சொட்டிற்று! நான், பூரா உண்மையும் தெரிந்து கொள்ள முடியாது திண றினேன். அடக்க ஒடுக்கமாகப் பேசலானேன்.
"ஐயா! எனக்கொன்றும் விளங்கவில்லை. இந்த ஆள், பெண்ணின் விலையைத்தான் கூறினார் என்றே எண்ணித் தான் கோபித்தேன், அடித்தேன். எனக்கு உண்மையைக் கூறுங்கள்'' என்று கேட்டேன்.
அடிபட்டவனே, கூறினான்.
"இது நூல்மார்க்கட் தம்பி! நீ இதற்கு முன்பு இதைக் கவனித்ததில்லை என்று தெரிகிறது. இங்கு பல ஊர் மில்களின் நூல் பேல்கள் விற்பனை செய்யப்படும். நாங்கள் தாகுக்காரர்கள், விலை கூறுவோம், விற்பனைக்கு ஏற்பாடு செய்வோம். உன்னைப் பார்த்தபோது தான். கோவை சரோஜா மில் நூல் கட்டு ரூ. 44-6-0 என்று தந்தி வந்தது. நேற்று ரூ. 44-க்கு விற்பனை நடந்தது. ஆறனா என்றது, ஆறணா விலை ஏறிவிட்டது என்பது பொருள். இதைக் கூறிக்கொண்டிருந்தேன். பங்கஜா மில் சாக்கு, ரூ.44-10-0 என்றும் விலை கூறினேன். இந்தத் தாகு வியாபாரத்திலே, ஆயிரக் கணக்கிலே பலர் சம்பாதிக்கின் றனர்; எனக்கு ரூபாய்க்குக் காலணா கமிஷனே கிடைக்கும் என்றும் சொன்னேன். இவ்வளவும், ஓர் பெண் விஷயம் என்று எண்ணிக்கொண்டாய். என் விதி! உன்னிடம் அடியும் பட்டேன்'' என்று விளக்கினான்.
"ஐயா! என்னை மன்னிக்க வேண்டும், நூல் விற்பனை என்றால், கடையிலே நடக்குமே தவிர, நடுவீதியிலே நடை பெறுமென்று எனக்குத் தெரியாது. அதிலும், சாக்கு மூட்டைபைக் காட்டி, வியாபாரம் நடத்தியிருந்தால் நான் தெரிந்துகொண்டிருப்பேன். நீர், கையிலே ஒன்றுமே. வைத்துக் கொண்டிருக்கவில்லை. சரோஜா ஆறணா என்றதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. யாரோ ஓர் பெண்ணைத்தான் விற்கிறீர், அதற்காகவே ஆள் பிடிக்கிறீர் என்று எண்ணி இந்த அடாத செயல் செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கூறினேன். கூட்டம் கலைந்தது. நான் வாட்டத்துடன் இரயிலடி வந்தேன்.
சரோஜா மில் நூல் 44-6-0விலைக்கு விற்கிறது. அதற்குப் பரபரப்பு. அதற்காகத் தரகர்கள் வீதிகளில் உலவுவர், என்ற வியாபார நடவடிக்கை அன்று தான் எனக்குத் தெரியவந்தது. நான் நூல் மூட்டைகள், நேராக நூல் கடைக்கு வரும், செய்பவர்கள், நேராகச் சென்று வாங்கு வர், என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்படிச் சரோஜா ஆறணு, பங்கஜம் பத்தணு என்று கூறுவார்கள் என்று எனக்குத் தெரியாது. அன்று, மேலும் பலரை, இவ்விஷயமாக விசாரித்தேன்.
"ஏனப்பா, கேட்கிறாய்! அனியாயமாகத்தான் விலை எறுகிறது. ஒன்றுக்கு ஒன்பது, பத்து, இருபது, என்று விலை ஏறி விட்டது. இன்றைக்கு இருக்கும் விலை நாளைக்குக் கிடையாது. மணிக்கு மணி தந்தி வருகிறது! இடையிலே இருந்து, பலர், இலாப-மடிக்கின்றனர். இன்றைக்கு 200 மேல் "ஆர்டர்' கொடுப்பார்கள், முப்பது ரூபாய் விலைக்கு; அந்த ஆர்டர் கொடுப்பவர், கெசவுத் தொழில் செய்பவரு மல்ல. அவருக்கு நூல் பேல் தேவையில்லை. ஆனால் பணம் இருக்கிறது, வியாபார சூட்சமம் இருக்கிறது. 200 பேல் வாங்குவார். ஒரு வாரத்திலே, 40 என்று விலை ஏறிவிடும், அவர் இலாபச் சாட்டு எறும்! இறங்குவதுமுண்டு, அதிலே சிலருக்கு இடர் வருவதுண்டு. ஆனால் இப்போது, விலை எறிக்கொண்டே போவதால், துணிந்து வாங்கி, விலை ஏதோ இறங்குவது போல இருந்தாலும், நஷ்டம் வருமோ என்று பயப்படாமல் சரக்குகளைக் கட்டிவைத்து விட்டால், பிறகு, தரகர்கள் வீதியிலே கூவுவர், சரோஜா, 44-6-0 பங்கஜா 44-10-0, என்று நூல் மூட்டைகளை வாங்கினவர், மகிழ்வார். புள்ளி போட்டுப் பார்ப்பார். இந்த அயிட்டத்திலே ஐந்தாயிரம் என்று கணக்கெடுப்பார்!
துணி விற்கும் கடைகளிலே,
“நேற்று இதே பீஸ், 3-12-0-க்குக் கொடுத்தீரே”,
"ஆமாம்! இன்று நூல் விலை என்ன? நாலு ரூபாய் ஏத்தம். நாளைக்கு வந்தால் இதே பீஸ் ஆறு ரூபாய் என்ற இப்பேச்சு நடக்கும். துனி வாங்குபவர்கள், நாட் டிலே நிர்வாணச் சங்கங்கள் ஏன் ஏற்படவில்லை என்று எங்குவர்.
இத்தனை கஷ்டங்கள், பண்டங்களை உபயோகிக்கும். மக்களுக்கு விளைய, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு, உற்பத்தியாகும் சரக்குகளை உபயோகிப் போரிடம் போய்ச் சேருமுன், குறுக்கே படுத்துத் தடுத்து வரும், தாகுத் தொழிலால், ஏராளமான இலாபம்! பணப் பெருக்கமும், இலாபப் பெருக்கமும் அதிகம். ஆனால் இதனால், எழை, களின் முகம் சோகத்தால் சுளித்துக் கிடப்பது, யாருக்குக் கஷ்டந் தரும்! அந்த ஏழையின் முகத்தைக் காண, நேரம் எது, சரோஜா, பங்கஜாவுடன் சரசமாடும் பேர்வழிகளுக்கு.
எங்கள் ஊர் திரும்பினேன், இவ்வளவு அனுபவமும், அறிவும் பெற்று. ஆடைகளைக் கண்டால் கூட எனக்குக் கோபம் வரத்தொடங்கிற்று உனக்காக, மக்கள் இவ்வளவு அலைகிறார்கள்! நீ, ஒரு சிலருக்குப் பெருத்த இலாபத்தைக் கொடுத்து, மற்றவருக்குக் கஷ்டமே தருகிறாய் என்று ஆடைகளை ஏசலாம் என்றும் தோன்றிற்று.
"என், பட்டினத்திலே, சினிமா பாக்கலையோ, முகம் வாட்டமாக இருக்கே” இது என் மனைவியின் கேள்வி அதற்கு நான் பதில் சொல்லவில்லை.
”புதுப்புடவையார் என்ன விலை இது” என்று கேட்டேன், முறைத்தபடி,
”அநியாய விலை. போன மாசம், இதே சேலை ஆறு ரூபாய். இப்போ , எட்டேகாலுக்குக் காசுகூடக் குறையல்லே” இது என் மனைவியின் பதில்.
”என்ன விலை சொன்னாலும், வாங்க, நீங்கள் இருக்கவே தான், அவனவன் விலையை, இஷ்டபடி தூக்கிக்கொண்டே போகிறான்'' என்று நான் கோபமாகக் கூறினேன். என் மனைவி சிரித்துவிட்டு, வாங்காமல் என்ன செய்வது! அந்தப் பாவிகள் விலையை ஏற்றி விட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்வது" என்று சமாதானம் கூறினாள். ஆமாம், பாவம், தனம் (என் மனைவி) என்ன செய்வாள்.
அன்றிரவு என் கோபத்தை அவள் குளிர்ந்த மொழி பேசி உபசரித்துத் தணிவித்தாள்.
"ஒரு அநியாயம் தெரியுங்களா! கோடி வீட்டிலே பகுப்புசாமி தெரியுமேல்லோ, தறி நெய்யலே அந்த அண்ணன், அவருக்குச் செக்கச் செவேலுன்னு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்பவே அரை டசன். என்ன செய்வாரு பாபம். அதை ஆறணாவுக்கு, அடுத்த தெரு அகிலாண்டத்துக்கு விற்று விட்டாங்க. அகிலாண்டத்துக்குப் புள்ளே குட்டி கிடையாது. அவ, என் கண்ணே, பொன்னே என்று கொஞ்சிக் குழந்தையை ஆசையாத்தான் வைச்சிருக்கா!'' என்றாள் என் மனைவி.
பெற்ற குழந்தையை விற்றார்களா! என்ன பரிதாபம்"
"பாவந்தான், அவளுக்கு மனசே இல்லை. குழந்தையைப் பார்த்துப் பார்த்து அழுதாள். என்ன செய்வாள். தரித்திரம் பிடிங்கித் தின்கிறது. ஒரு நாளைக்கெல்லாம் அவ புருஷன் வேலை செய்தா, பத்தணா கிடைக்குமாம். கூழுக்குக் கூட அது, இப்போதுள்ள விலைவாசியிலே போதாது. குழந்தைக்கு ஒரு மாந்தம், ஜுரம் வந்தா, வைத்தியத்துக் கூடக் காசு கிடையாது. முன்னே துணி நெய்தா, உடனே கடையிலே விற்றுவிடுமாம். இப்போ, வேண்டாம், வேண்டாம், என்று கடைக்காரன் சொல்லி விடுகிறானாம். நூல் விலை, ஏறிவிட்டதாம். அந்த விலைக்கு வாங்கித் துணி நெய்ய முடியல்லையாம். சாசமாக இருக்கிற போது நூல் கொஞ்சம் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளப் பணம் கிடையாது. தவிக்கிறாரு, தறிகார அண்ணன்" என்றாள் தனம்.
ஆடை நெய்பவருக்கு அவதி, ஆடை வாங்குபவருக்குக் கஷ்டம், ஆடைக்குத் தேவையான நூலை, அவசியமே இல்லாதவர்கள் வாங்கி, அடைத்து வைத்து, இலாபமடிக்கிறார்களே, இது என்ன கொடுமை! நூல் விலை, இலாபப் போட்டிக்-காரரால் ஏற்றப்பட்டும் இறக்கப்பட்டும், வருகிற அந்தச் சுமலிலே நெசவாளர் சிக்கிச் சிதைகின்றனர். குடும்பம் கதறுகிறது. இந்தக் கஷ்டம் எப்படி, எப்போது தீரும் என்று எண்ண ஆயாசமடைந்தேன்.
உறியடி உற்சவத்திலே, கம்பத்தில் களிமண்ணும் எண்ணெயும் கலந்து பூசிவிட்டு, உயரத்திலே சிறு பண மூட்டையை எடுத்துக்கொள்ளச் சிலரை அமர்த்துவார்கள். களிமண்ணும், எண்ணெயுங் கலந்த கம்பத்திலே, சாண் ஏறினால் முழம் சறுக்கும். அது மட்டுமா! ஏறிக் கொண்டிருக்கையிலே, சிலர் கீழே இருந்து, கம்பத்தின் மீதும், ஏறுபவர் மீதும் தண்ணீரை வாரி வாரி இறைப்பர்! அது ஓர் விளையாட்டு, பகவான் பெயரால் நடப்பது ! அதுபோல, நெசவாளரை, வியாபாரம் எனும் சறுக்குக் கம்பமேறி, அதன் மேலே கட்டப்பட்டுள்ள வருவாய்" எனும் பண முடிப்பை எடுத்துக்கொள்ளச் சொல்லுவதுடன், உறியடி எறுபவன் மீது நீர் இறைப்பது போல, நெசவாளர் மீது தரகரீன் தயவும் பொழியப்பட்டு, நெசவாளர்களின், வாழ்க்கை , உறியடி ஏறுபவன் படும் வேதனையை விட அதிகம் நிரம்பியதாக இருக்கிறது.
நான் இவைகளை யோசித்துக்கொண்டு, சோகத்தி வாழ்ந்திருந்தது கண்ட தனம், "பரிதாபமாகத் தான் இருக்கிறது. ஆறணாவுக்கு விற்றார்கள். குழந்தைக்கு அகிலாண்டம், பேர் கூட வைத்துவிட்டாள், சரோஜாஎன்று - இதை என் மனைவி கூறினதும், என்னையுமறியாமல் என் உடல் குலுங்கிற்று, சரோஜா!- ஆறணா! அங்கு சென்னையிலே நூல் இச்சொல், இங்கே, என் கிராமத்திலே, குடும்ப பாரம் தாங்கமாட்டாமல், குழந்தையை விற்ற நெசவாளியின் பெண் குழந்தை சரோஜாவும் ஆறணாவுக்கு விற்கப் பட்டதாகச் சொல் கேட்டேன். என் இருதயம் அனலிடு மெழுகின உருகிற்று.
உருகி என்ன பயன்? உலகம் , ஏழைகளின் கண்ணீ ரைக் கவனிக்கிறதா! இல்லையே!
-------------
3. மதுரைக்கு டிக்கட் இல்லை
கலியாணாமாம் கலியாணம் ! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலை வரை, மாடு நான்! இந்த வாழ்வுக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு ! அவள் வேறு, வீட்டிலே உட்கார்ந்துகொண்டு, அது வேண்டும், இது வேண்டும் , அன்னத்தின் சேலையைப் பார், அகிலாண்ட்த்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாளின் சிரிப்பைப் பார், என்று. இரவிலே ஈட்டியால் குத்த வேண்டும் போலிரிக்கு. இந்த வேதனையை நான் படவேண்டுமாம்; இதற்கு வீட்டிலே உபதேசம் செய்கிறார்கள். “ நான் கெட்ட் கேட்டுக்குக் கலியாணம் வேறு வேண்டுமா! இப்போதாவது தொல்லை காலையிலே மட்டும் இருக்கிறது.
“டே! கழுதே! தடிப்பயலே! முகத்தைப் பார்! அழுமூஞ்சி! வேலை செய்வதென்றால் ஏண்டா இப்படி மூக்கால் அழுகிறாய். முள்ளங்கிப் பத்தைப் போல வாங்கவில்லையாஅ பணத்தை. ரோஷமில்லாத ஜென்மம்! இப்படி இருக்கிறது இதுகளுக்கு” காலையிலே நடக்கிறது இந்த அர்ச்சனை. இரவேலேயாவது ஏதாவது மனக்கோட்டை கட்டியபடி, இப்போது காலந்தள்ள முடிகிறது. இந்த நிம்மதிக்கும் உலை வைக்கிறார்கள், என்னைப் பெற்ற யமன்கள். கலியாணம் செய்து கொண்டால், இரவிலேயும் காலைக் காட்சி தானே இருந்து தீரும். பாஷையிலே வித்யாசம் இருக்கும். ஆனால், தொல்லை, தொல்லை தானே! எந்த உருவிலே இருந்தால் என்ன ?
எஜமான், உருட்டி மிரட்டிடும் கண்களோடு, தர்பார் நடத்துவார். வீட்டுக்கரசி, விழியிலே நீரை வரவழைத்துக் கொண்டு, விசார கீதம் பாடுவாள். அவன் எசும்போதாவது, கோபம் வரும், ஒரு சமயமில்லா விட்டால் வேறோர் சமயம். விறைத்துப் பார்க்கலாம், முணு முணுக்கலாம், சாக்கிட்டுத் திட்டலாம், இவைகளால் சிறிது மன ஆறுதலாவது உண்டு. அவள், பக்கத்திலே படுத்துக்கொண்டு, உடல் உரசும்போது, கோபம் குறைவாகவும் சோகம் அதிகமாகவும் இருக்குமே. பாவம்! எவ்வளவு பரிவு இவளுக்கு நம்மிடம்! நமது சுக துக்கத்துக்குப் பாத்யப் பட்டவள். நம்மைக் கேட்கும் உரிமை உள்ளவள்! நாமும் அவளுக்குத் தேவையானவைகளை வாங்கித் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அவளுடைய புருஷன்; அவள் கேட்பதெல்லாம் நல்ல சேலை நாலு பெண்கள் உடுத்துவது போல, நவசரத்ன கண்டியல்ல - என்றெல்லாம் தோன்றும். ஆகவே, அவளிடம் கோபித்துக்கொள்ளவும் முடியாது. காலை வேளையிலே எஜமானனைப் பார்த்தது போலக் கடுமையாகப் பார்க்கவும் முடியாது. தவறிப் பார்த்தாலோ தளும்பும் நீர் கன்னத்திலே புரளும். பிறகு, நானாக அதைத் துடைத்து, விம்மலை அடக்கி, வேண்டியதை வாங்கித் தருகிறேன் என்று வரம் கொடுத்து, முன் தொகையாக முத்தம் பெற்று, பெருமூச்சுடன் கிடக்கவேண்டும்.
காலையிலே, அந்தக் கடின சித்தம் படைத்தோன். ’அடே கழுதே!’ என்று ஏசினானே, அது ஆயிரம் தடவை கேட்டுச் சகித்துக் கொள்ளக் கூடியதாகத் தோன்றும். அர்த்த ராத்திரியிலே அவள், "ஆமாம்! நான் கேட்டால் வாங்கித் தருவீர்களா? என்னிடம் ஆசை இருந்தால் இப்படி ஏமாற்றுவீர்களா?'' என்று கொஞ்சுவதைக் கேட்டும், அவள் மனம் சோணாமல் நடக்கும் மார்க்கம் இல்லையே என்பதை எண்ணித் திண்டாடுவது, சகிக்க முடியாத தொல்லையாக இருக்கும்.
அவர்கள் கலியாணம் செய்து கொண்டு கண்ட பலன் என்ன? நான் ஒரு ஏழை பரிதாபத்துக்குரிய பாட்டாளி! இது தெரிந்தும் என்னையும் கலியாணம் செய்து கொள்ளடா என்று வற்புறுத்துகிறார்கள். எனக்கு இருக்கும் கஷ்டம் போதும், கலியாணமும் வேண்டாம்.....
பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலே, மில் தொழிலாளி மதுரை இருந்தபோது இதுபோலக் கூறி வந்தான். ஆயுள் பூராவும், அந்த ஆஸ்ரமத்திலேயே இருந்து விடுவது என்று தீர்மானித்தான். அவனுக்கு ஆறணா கூலி, ஒன்றேகால் ரூபாயானது! ஆஸ்ரமத்தை மாற்றி விடவேண்டிய அவசியமும் பிறந்தது. "என்ன செய்வது? அவர்கள் மூச்சு இருப்பதற்குள் மூணு முடிபோடுவதைப் பார்க்க வேண்டுமென்று பிடிவாதம் செய்கிறார்கள். நான் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சாகிறபோது கூட அவர்கள் மனச்சாந்தி வில்லாமலே இறக்கவேண்டி நேரிடும். நம்மைப் பெற்று வளர்த்தவர்களுக்கு நாம் என் மனக்குறை ஏற்படும்படி நடந்துகொள்வது? எதுவோ இருக்கிற கஞ்சியைக் குடித்து விட்டு, கஷ்டமோ, சுகமோ, நம்மோடு கிடக்கட்டுமே ஒரு கட்டை. என்னமோ அவளைத் தொட்டுத் தாலி கட்டுகிற வேளை, பகவான் கண் திறந்து பார்க்கட்டுமே, கஷ்டம் தீராட்டுமே.
"கலியாணத்துக்குத் தான் சம்மதித்தது, பெற்றோரின் வற்புறுத்தலால் தான் என்பதை மதுரை இது போலக் கூறினான். கொஞ்சம் உண்மை இருந்தது, அவன் கூறியதிலே. ஆனால், அவன் பிரம்மச்சரியத்தை விட்டுக் கிரஹஸ்தாஸ்ர மத்திலே பிரவேசிக்க விரும்பியதற்கு முழுக் காரணம் பெற்றோரின் பெருமூச்சு மட்டுமல்ல, பெரியநாயகியின் புன்சிரிப்புத்தான். அவன் அதை வெளியே சொல்லவில்லை! அவன் மட்டுந்தானா? எந்த மதுரையும் அவனுடைய பெரிய காயகியின் புன்சிரிப்புக்குக் கட்டுப்படுவதை வெளியே சொல்லத்தான்மாட்டார்கள்!!
”மதுரை! உங்க வீட்டுத் தோட்டத்திலே மருக் கொழுந்து இருக்குதாமே! கொஞ்சம் கொடு"
"ஏன்! சாமி கோயிலுக்கா?"
"அம்மன் சன்னதிக்கு! சாமிக்கு இல்லை''
"எந்த அம்மன் சன்னதி?''
”அடே, போடா மக்கு! அதாண்டா, என் சம்சாரம் இல்லை, சௌபாக்கியம், அவளுக்குத் தான். கோயிலுக்கும் இல்லை, குளத்துக்கும் இல்லை''
”திருமலை! எது நீ சம்சாரம் கீறின கோட்டைத் தாண்டமாட்டே போலிருக்கே. உங்க வீட்டுக்காரம்மா, எள் வேணும்னா நீ எண்ணெயே கொண்டுபோயிடுவே போலிருக்கே"
”ஆமாம்! நாம்ம ராஜா சர்! வைர மாலையும், கை நிறைய வளையலுமா வாங்கித் தரப்போறோம்? என்னமோ பாபம், நம்மைக் கட்டிக்கிட்ட கோஷத்துக்கு நம்ப சக்தியாலுசாரம் எதுவோ செய்யவேண்டியது தானே. நான் மட்டுந்தானா! நாளைக்கு உனக்கு நடக்கட்டுமே! பாரேன், அப்போ நீயும் அப்படித்தான்"
”நானா? நான் தான் கலியாணமே செய்துகொள்ளப் போறதில்லையே!"
"வேண பேரு, இப்படிச் சொன்னவங்க. எப்படிப் பட்ட பிரம்மச்சாரியும், கொஞ்சநாள் போனா, எவளையாவது கண்டு இளிச்சி விட்டுக், கலியாணம் செய்துகிட்டுத்தான் கிடப்பான். எந்தச் சீமையிலேயும் நடப்பது தான் இது, மட்டும் என்ன?"
திருமலை, மதுரையின் நண்பன், இருவருக்கும் ஒரே இடம் உழைப்பதற்கு. மாலை வேளையிலே, திருமலை இந்த உபதேசம் செய்து வந்தான் மதுரைக்கு. ஆனால், வீட்டுக்குப்போனதும், திருமலை, மதுரையாகி விடுவான். அதாவது சௌபாக்கியம் ஏதாவது வேண்டும் என்று கேட்டதும், திருமலை "ஆரம்பமாய்விட்டதா, உன் தொல்லை! இதைத் தெரிந்து தானே, அந்த மதுரை, கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று சொல்கிறான். அவன் புத்திசாலி. இந்த சோதனை இல்லை" என்று கூறுவான்.
"பார்ப்போம் அந்தப் பிரம்மச்சாரியின் பிடிவாதத்தை. கலியாணம் செய்துகொண்டா கஷ்டமாம் அவருக்கு. பெண்டாட்டி என்ன, புலியா கரடியா? இப்படித் தான் சிலபேர், எனக்குக் கலியாணமே வேண்டாம்; கலியாணம் தொல்லை என்று பேசுவார்கள். எதற்கு கண்டபடி, ஆடலாமென்று தான். கலியாணம் செய்து கொண்டு குடும்பத்தை நடத்தாவிட்டா, கையிலே வருகிற பணத்தைக் கண்டபடி செலவுசெய்து விட்டு, உடம்பைக் கெடுத்துக் கொண்டு உதவாக்கரையாக வேண்டியது தானே. இல்லை, நான் தான் கேட்கிறேன். என்னமோ பாவம் காலையிலே போறார் வேலைக்கு, சாயங்காலம் வருகிறார். அப்பான்னு அலுத்து வீட்டுக்கு வந்ததும், தாகத்துக்கு வேணுமான்னு கேட்க ஒரு சம்சாரம் வேண்டாமா? நாலு நாளு நோவுன்னு படுத்தாரு, பக்கத்திலே இருந்து பிடிக்க எடுக்க ஒருத்தி வேண்டாமா? அதுக பாவம், இன்னைக்கோ, நாளைக் கோன்னு இருக்கு. அதுங்க சாவதற்குள்ளே ஒரு பேரனையோ பேத்தியையோ பார்த்துட்டுப் போக வேணாமா? அந்த ஆணுக்கு என் இதெல்லாம் தோணலையாம் நல்ல மனுஷரு அவரு. அவர் சம்பாரிச்சி அவரே சாப்பிடவேணுமாம், பெண்டாட்டி கூடாது. என்? அவளுக்குச் சோறு போட வேணுமே" என்று சௌபாக்கியம், மள மளவென்று பேசுவாள்.
மறு மாலை, திருமலை இந்தத் திவ்யப் பிரபந்தத்தை மதுரைக்குச் சமர்ப்பிப்பான். ஆறணா பத்தணாவாகி, ஒரு ரூபாயுமாகிவிட்டது. ஆறணா கிடைத்தபோது, "திருமலை! உன் வீட்டுக்காரம்மா வாயாடி போலிருக்கு'' என்று கூறின மதுரை, ஒரு ரூபாயான சமயத்திலே அதே பிரபந்தத்துக்கு "உன் சம்சாரம் சொல்வது போலத் தான் எல்லோரும் சொல்லுவாங்க" என்று சாந்தமாகப் பதில் கூறினான். கூலியும் உயர்ந்தது, அதே சமயத்திலே, பெரியநாயகியின் புன்சிரிப்பும் கிடைத்தது. அவள் அவனுடைய பிரம்மச்சரியத்தைக் கலைக்க அச்சிரிப்பை ஏவவில்லை. அவனைக் கண்டாள், அக்கா அவனைப்பற்றிச் சொன்னதை எண்ணினாள், சிரித்தாள்! அது அவனுடைய விரதத்தைக் குலைத்து விட்டது. பெரியநாயகி, சௌபாக்கியத்தின் தங்கை!
கிரஹஸ்தாஸ்ரமத்திலே புகுந்தான், மதுரை. பிரம்மச்சரியம் அனுஷ்டிக்க வேண்டியதற்கு எவ்வளவு பாலமான காரணம் அவனுக்குத் தோன்றிற்றோ, அவ்வளவு காரணம் தோன்றிற்று இந்தப் புது ஆஸ்ரமத்துக்கும்!
வீடுன்னு இருந்தா அதிலே நமக்குன்னு ஒரு சம்சாரம் உலாவுனாத்தான் களையா இருக்கு. ஒண்டிக்கட்டையாக எத்தனை காலந்தான் இருந்தோம், என்ன பலன்! நாயகி நம்மைப் பார்த்து, வெந்நீர் வேணுங்களா? என்று கேட்டவுடனே, காலை யெல்லாம் பட்ட கஷ்டமத்தனையும் காற்றுப் பறந்து போயிடுது. என்னமோ அழைக்கிறோம், பெரிய நாயகி அன்போடு சாப்பாடு போட்டு, காலையிலே செய்த கறியிலே நமக்குன்னு கொஞ்சம் எடுத்துவைத்திருந்து இரவிலே போடுவதும், இன்னும் கொஞ்சம், ஒரே ஒரு பிடி, என்று உபசரிப்பதும், என்னாங்க! எவ்வளவு பாடு உங்களுக்கு வயிறாரச் சாப்பிடவேண்டாமா? எல்லாம் உடலிலே பலம் இருந்தாத்தானே என்று கனிவாகப் பேசும்போதும், வர வரத் துரும்பாக இளைத்துப் போறிங்க என்று வைத்தியராகும் போதும், தலை வலிக்குத் தைலம் தடவும் போதும், அடடா! அது ஒரு தனி இன்பமாகத்தான் இருக்கிறது. மனிதனுக்கு எவ்வளவு கஷ்டந்தான் இருக்கட்டும், வீட் டிலே ஒரு மனைவி இருந்தாலே, அது ஒரு சந்தோஷம் தானே!- என்று மதுரை எண்ணிக் களித்தான். பெரிய நாயகி, தாயானதும், அவனுடைய சந்தோஷம் அதிகரித்தது. இரண்டு குழந்தைகளான போதும் சந்தோஷமாகத் தான் இருந்தது. "அவன் எங்கே? சின்னவனை ஜாக்ரதையாகக் கவனி! ஜலதோஷம் போல இருக்கே" என்று சொல்லுவான் மதுரை, பூரிப்பு தழுவிய பொறுப்புடன். நாலு குழந்தைகளாகிவிட்டன. சந்தோஷம் சஞ்சலத்தைப் பெற்றுவிட்டது.
"அடடா! காச்சு மூச்சுன்னு, ஏன் இதுகள் இப்படிக் காக்காயாக் கத்துதுங்க!''
"குழந்தைகள் இருந்தா அழாமே இருக்குமா?"
”குழந்தைகள்! மகா குழந்தைகள்! கோட்டான்கள் மாதிரி கூவி உயிரை வாங்குதுங்க"
“இந்தப் பாவி வயிற்றிலே வந்து பிறந்து துங்களே, அதுகள் இப்படித்தான் சீரழியும். அப்பாப்பா! குழந்தைகளை அப்படி அலற அடிக்கக் கூடாது"
கிருஹஸ்தாஸ்ரமத்திலே, விசாரம் குடி புகுந்தது. குடும்பம் வளர்ந்தது! கூலி வளர வில்லை. கோபம் பெரு கீற்று மதுரைக்கு. பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தைவிட்டு விலகியது தவறு என்று தோன்றிற்று. நாலு பிள்ளைகளுக்குத் தகப்பனான பிறகு, பழைய ஆஸ்ரமத்திலே பாசம் வைத்துப் பயன் என்ன?
வைசூரியின் பிரவேசத்தால், மதுரைக்கு மூன்றாம் ஆஸ்ரமம் சித்தியாயிற்று. பெரியநாயகி வைசூரிக்குப் பலியானாள். நாலு குழந்தைகள்! நாரும் நரம்புமாகப் பெற்றோர்கள். இந்நிலையிலே, முதலாளியிடம் சண்டை ! வேலை போயிற்று! கிருஹஸ்தாஸ்ரமத்தின் முழு விஷயமும் அவனுடைய உள்ளத்திலே புகுந்தது. உருமாறினான். உள்ளமும் மாறிவிட்டது. வானப்பிரஸ்தம் புகுந்தான் - அதாவது திருமலையிடம், குமுந்தைகளை அடைக்கல மாக்கினான்! பெற்றோர்களை ஈசனிடம் ஒப்படைத்தான்.
கங்காணி கனசு சபையின் காலைக் கும்பிட்டுக் கூலி வேலை பெற்று, ரப்பர் காட்டுக்குப் போனான்! பர்மாவிலே, பாடுபட்டான்; குடும்பம் இல்லை, வானப்பிரஸ்தாள்ரமம்! அது ஓரளவுக்குத் திருப்தி தந்தது. வேலை செய்வான். கிடைப்பதை உண்பான்! கை, தலையணை , உறக்கத்துக்குப் பதில் ஏக்கம். இந்நிலையிலே சில ஆண்டுகள் இருந்தான். வானப்பிரஸ்தம், குடும்பத்தை எற்று நடத்தவேண்டிய பொறுப்பிலிருந்து விலகிய நிலைமை, அதிகநாள் நீடிக்கவில்லை. மூத்த பையன் முடிச்சவிழ்த்தான், மூன்று மாதம் தண்டனை! இரண்டாவது பையன் இன்ன இடம் போனானென்று தெரியவில்லை, எவனோ ஜால வித்தைக்காரன் வந்தான் அவனோடு ஓடிவிட்டான். மூன்றாவது பெண்! அது, மூன்றேநாள் ஜுரத்திலே, போய் விட்டது. நாலாவது பையன்; அவன் தோட்டத்துக் கிணற்றிலே தவறி விழுந்து விட்டான்.
அடுத்தடுத்துக் கிடைத்தன இத் தபால்கள். வானப்பிரஸ்தத்திலே இருந்த மதுரையின், துக்கம் சம்பூர்ணமாக, அவனுடைய பெற்றோர்கள், பிச்சை எடுக்கிறார்கள் என்றோர் தபாலும் கிடைத்தது. உடனே, அவன் ரப்பர் தோட்டவேலையையும் விட்டுவிட்டான். அலைந்தான் ! அலைந்தான்! ஐயா கொஞ்சம் சோறு என்று கேட்டுப் பார்த்தான்! எச்சில் இலைகளிடம் உறவுகொண்டான். ஆண்டி சிலரின் நேசம் பெற்றான். காவி அணிந்தான். நீறு பூசினான்! கஞ்சாவுடன் கொஞ்சினான். சன்யாஸ் ஆஸ்ரமத்திலே பிரவேசித்தான். வேலை கிடையாது! கூலி கேட்கத் தேவையில்லை! குடும்பம் இல்லை, எனவே பொறுப்பு கிடையாது! கிடைத்தால் புசிப்பது! கிடைக்குமட்டும் பஜிப்பது!! இந்தச் சன்யாச ஆஸ்ரமத்திலே, வானப்பிரஸ்த வாட்டமோ கிருஹஸ்தாஸ்ரமக் கஷ்டமோ இல்லை! அது மட்டுமா! பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தின் தனிமையும் இதில் இல்லை! சன்யாசி மதுரைக்குச் சன்யாசினி ஒருவளும் கிட்டிவிட்டாள்! அவளுக்கும் "அரோகரா" கூறத் தெரியும் இவன் போலவே!! ஆகவே இவனால் தான் பிழைத்தாக வேண்டுமென்ற நிலை இல்லை அவளுக்கு. ஆனால் அவளுக்கு ஒரு "அவன்" தேவை! சன்யாஸ ஆஸ்ரமத்திலே, மதுரை சஞ்சலமின்றி இருந்து வந்தான்.
இந்து மார்க்கத்திலே உள்ள இலட்சிய எழில்கள், சாமான்யமானவையல்ல. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற உன்னதமான கொள்கைகள் என்ன! பிரமச்சர்யம், கிருஹஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம் எனும், நான்கு ஆஸ்ரமங்களென்ன! இவைகளின் உத்தம உறைவிடமாக விளங்குவது நமது மார்க்கம்.
தொழில் பெரு வேண்டும், தேசத்தில் வளம் பெருக வேண்டும், என்று ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், இந்த ஆத்மார்த்த இலட்சணத்தை, இந்த மாறுதல்கள் கெடுத்திடக் கூடாது - என்று, கவலைப்பட்டார், ஒரு நீதிபதி 1945-ம் ஆண்டிலே சென்னையில், ராமகிருஷ்ண மடாலய விழாவிலே, அட்வகேட் ஜெனரல் வேலையிலிருந்து ஹைகோர்ட் ஜட்ஜி வேலைக்குச் செல்ல இருந்த அன்பர் ராஜமன்னார் அவர்கள், இந்து மார்க்க விசேஷம் பற்றிப் பேசினார். சுவி சேஷம் படித்த, மிஸ்டர் ஆஸ்டின், சுடச் சுடப் பதிலுரைத்தார், "இந்த இலட்சியங்கள் எழிலுள்ளன தான்! மார்க்க மணிகள் தான்! ஆனால் காலையிலே எழுந்திருச்சிக் கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படும்" பாட்டாளி காணச் சகியாத இடத்திலே இருந்து கொண்டு பசியால் பாதவித்து, ஒருவேளைச் சோறு எங்கிருந்து கிடைக்கும் என்பதறியாது தேம்பிக் கிடக்கும் போது, அவனுக்கு இந்தத் தேவவாக்கும், திவ்ய போதனையும், ஆஸ்ரம இலட்சணமும், என்னப்பா விளங்கும்! எப்படி ஐயனே! அவன் அந்த மார்க்க தத்து வங்களின் போதனைகளை உணருவான்" என்று கேட்டார்.
ஆம்! ஆஸ்டின் துரைமட்டுமல்ல, நாலு ஆஸ்ரமத்திலேயும் நிலைமை, வறுமை, தெருக்கடி, நாட்டுப் பொரு ளாதார பேத முறையினால் தள்ளப்பட்டுத் தள்ளாடி நடந்து வரும் மதுரை, நாகரிக வாழ்வுக்கு, வசதி பெற்ற நமது அன்பர் நவின்ற நாலு ஆஸ்ரம போதனையைக் கேட்டு நகைக்காமல் இரான்!
---------------
4. நாக்கிழந்தார்
தர்மப் பிரபுவே! சாப்பிட்டு நாலு நாட்களாகின்றன; கண் பஞ்சடைந்திருக்கிறது, கைகால்கள் துவண்டு போகின்றன. காது அடைத்துக்கொண்டு போகிறது, மயக்கமாக இருக்கிறது, ஒரு கவளம் கிடைத்தால் உயிர் நிற்கும்.''
பஞ்சையின் இப்பரிதாபக் குரலைக் கேட்க, அந்தத் தர்மப் பிரபுவுக்கு நேரம் உண்டா?. அவருக்கு எவ்வளவோ தொல்லை, எத்தனையோ அவசரமான ஜோலி. இந்தப் பிச்சைக் கிண்ணி, குறுக்கே நின்றால் அவர் தமது காரியத்தைக் கவனிக்காது இவனுக்கு உபசாரம் செய்யவா, தங்குவார்! அதோ பாருங்கள் அவர், எவ்வளவு கவலையுடன் காரில் உட்காருகிறார். கதவை இழுத்து அடிக்கிறாரே கேட்கிறதா சத்தம்! அவ்வளவு கோபம் அவருக்கு. எங்கே செல்கிறார் தெரியுமா! ஒரு பெரிய நஷ்டம் நேரிட்டுவிட்டது அவருக்கு. அதற்காகவே அவசரமாக ஒடுகிறார். பதினைந்து ஏகரா நிலமும், பழைய வீடுமாகச் சேர்த்து இவரிடம் கடன்பட்ட 'சோணகிரி, கடன் தொகை (வட்டி அசல்) ஐந்தாயிரத் துக்கு, விக்ரயப் பத்திரம் எழுதிக் கொடுத்து விடுவதாகச் சொன்னான்; சரி என்றார். ஏகர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கக் கூடியபடி நிலத்தை திருத்தியமைத்து, மெஷின் வைத்து தண்ணீர் பாய்ச்சி, ஏதேதோ செய்ய வேண்டு மென்று எண்ணினார்; பூரித்தார்.
ஆனால், ஓர் போட்டி வந்து விட்டது. மற்றொரு பணப்பெட்டி இடையே நுழைந்து, 7000 தருவதாகக் கடனாளிக்குக் கூறினான். கடனாளி, பிகுவானான் -- அவனை ஏதோ 100, 200, தருகிறேன் என்று கூறிச் சரிப்படுத்தவே, தர்மப் பிரபு, அவசரமாகச் செல்கிறார், அந்த நேரத்திலே அவருக்குள்ள தொல்லை எவ்வளவு, கஷ்ட நஷ்டம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளாமல், பட்டினி கிடக்கும் அந்தப் பராரி, ஒரு கவளம் என்று கேட்டால், பிரபுவுக்குக் கோபம் பிறக்காதா, கூறுங்கள் ! "தடிப்பயல்கள், எங்காவது கூலிக்குப் போவது தானே, குளத்திலே விழுந்து சாகக்கூடாதோ'' என்றும் பிரபு கூறுகிறார். "இவ்வளவு பெரிய சீமான் ஒரு - பிடி சோறு தரக்கூடாதா? அட ஆண்டவனே! இவனை இப்படிப் படைத்தாய், என்னை இந்தக்கதியிலே விடுத்தாய்” என்று அந்தப் பராரி, பகவானிடம் முறையிட்டான்.
# #
இரவு மணி எட்டு; அமாவாசை இருட்டு; சரிந்து போன சாவடித் திண்ணையிலே, பராரிகள் மாநாடு கூடுகிறது. வறட்டுத் தலையன், மாநாட்டைத் திறந்துவைக்கிறான். "ஈவு இரக்கம் கொஞ்சமாவது இருக்குதா. தர்ம சிந்தனை இருக்குதா. இப்படி, ஏழைகள் செத்து மடியறாங்க ளேன்னு கருணை இருக்குதா? ஒரு வேளைச் சோத்துக்கு ஒன்பது காதம் சுற்றித் திரிகிறோம்; பார்க்கிறவனை எல்லாம் பகவானேன்னு கும்பிட்டு பல்லை இளிக்கிறோம், காலில் விழுகிறோம், கஷ்டத்தைச் சொல்லிக் கதறுகிறோம். போடா! மூடா! தடியா! திருடா! போக்கிரி! முட்டாளே! என்று திட்டித் துரத்துகிறார்களே தவிர, ஐயோ பாவம் என்று சொல்லி மனமிரங்கி, தர்மம் செய்யணுமேன்னு ஒருவருக்கும் எண்ணம் வரவில்லையே. அட ஈஸ்வரா! ஈஸ்வரா! இவனுங்க கிட்ட எண்டாப்பா, இவ்வளவு சம்பத்து கொடுத்து எங்களை இப்படி ஓட்டாண்டியாக்கி, சாவடியிலே சாகவைக்கிறே. உனக்குக் கண்ணில்லையா?"
மகாநாட்டுத் தலைவர் ஓர் மார்வலிக்காரன்; "ஆமாண்டா, ஈஸ்வானுக்குக் கண் இருந்தா, என்னை எண்டா இந்தக் கதியிலே விடுகிறார். பஞ்சையா இருந்தாலும், இப்போது கூட நான், பூபறித்து மாலை கட்டி, ஆலமரத்துப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து சூட்டி, தோப்புக் காணம் போட்டுத் துதித்துக்கொண்டுதானே இருக்கிறேன்; என் சக்திக்கேற்ற பக்தி செய்கிறேன்; வாரிக் கொடுத்து விட்டதா சாமி. போடா! சாமி கூட, சீமானாக இருந்தாத் தான், சிரிச்சு விளையாடிப் பேசும். நாம் உப்பிட்டா அதன் காதிலே ஏறவா போவுது? அதுக்குக் கண்ணுமில்லை, பேச வாயும் இல்லை'' என்று வெளுத்து வாங்கினான். காலையிலே சீமானிடம் சிப்பட்ட பஞ்சை, நாம், கேவலம் மனிதர்களைப் பார்த்து, கைகூப்பித் தொழுது, சாமி, புண்யவானே, என்று துதித்துப் பயன் இல்லை. பகவானைத் துதித்தால் பலனுண்டு. அவன் பெயரைப் பஜிக்க வேண்டும். அவன் நாமத்தைப் பாட வேண்டும். அவன் கண் திறந்து பார்த்தால் நமது கஷ்டம் ஒருவிநாடியிலே காற்றாய்ப் பறக்காதா?'. என்று முடிவுரை கூறினான். ஜே! சீதாராம். என்று கூவிக் கஞ்சாப் புகையைக் கெம்பீரமாக வெளியே அனுப்பி விட்டு, வடநாட்டுச் சாது போல் வேடம் போட்டுக்கொண்டு தன் பிச்சைக்காரத் தொழிலை நடத்திவந்தவன் வந்தனங் கூறிய பின், மாநாடு கலைந்தது; அவர்கள் உறங்கலாயினர்.
பஞ்சை, பிற்கு, தன் தீர்மானத்தின்படி கோயில்கள் முன்பு சென்று, கோவிந்தா! முகுந்தா! கோபாலா! இரகு ராமா! பாண்டுரங்கா! பக்தவத்சலா ! பரந்தாமா! என்று, பூஜித்துவரத் தொடங்கினான். கோயில்களிலே பூஜைக்காக வரும் பக்தர்கள் இந்தப் பஞ்சையின் பஜனையை மதித்தார்கெளென்றா எண்ணுகிறீர்கள்? அவர்கள் மனதிலே எத்தனையோ விதமான குமுறல்! அவைகளைப்பற்றி ஆண்டவனிடம் முறையிட்டுப் பரிகாரம் கோரவும், கொந்தளிக்கும் மனதுக்கு நிம்மதி தேடவும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் , கோபுர வாயிலிலேயே, குடல் வெளியே வரும் விதமாகவும் பகவந் நாமத்தைக் கூவிக்கொண்டிருப்பவனிடமா நிற்பர், அவன் குறை கேட்பர், உபகாரம் புரிவர்! உள்ளே சென்று, இலட்சார்ச்சனை புரிந்து, ஆபத்பாந்தவா! அனாதரட்சகா! என்று துதிக்கவேண்டாமோ?
# #
"ஓ! என் பக்தர்களே! இங்கே, நீங்கள், ஏதேதோ குறை கூறிக் கோரிக்கொள்கிறீர்கள். அங்கே கோபுரவாயிலிலே கூவிக்கிடக்கிறானே, அவன் அஷ்ட ஐஸ்வரியம் கேட்கவில்லை, வியாபாரத்திலே அமோகமான இலாபம் கிடைக்கவேண்டு மென்று கேட்கவில்லை, மூத்த மகனுக்கு ஜெமீன் தாரர் வீட்டிலே பெண் கிடைக்க வேண்டுமென்று கேட்கவில்லை. அவன் கேட்பது அரைவயிற்றுக் கஞ்சி! அதைத் தீர்த்துவிட்டுப் பிறகு உங்களிடம் வருகிறேன்" என்று ஆண்டவன் கூறுகிறாரா? இல்லை! அவர் திகைத்து நிற்கிறார், வாய் திறக்க முடியாதபடி வியப்புடன் நிற்கிறார், ஆச்சரியத்தால், அவருடைய உடல் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. அடடா! இந்தக் கபட வேடதாரி என்னை எவ்வளவு அழகாக அர்ச்சிக்கிறான்! எனக்கு அபிஷேகம் ஆராதனை என்று கூறிப் பொருள் பறித்து, திரையிட்டு, நீரைத் தெளித்துச் சிலையை அவசரமாகத் தேய்க்கிறான். கையிலே ஏதேனும் வலியிருப்பின், என் மீது கடிந்து கொள்கிறான், காலால் மிதிக்கிறான், அப்பப்பா இவன் செய்யும் அக்ரமம் கொஞ்சமா!
இரவு வந்ததும், எனக்கென்று பக்தர்கள் தந்த பிரசாதம், இவனுடைய சரசிகளுக்குப் போய்ச் சேருகிறதே! இதோ, பட்டை நாமம், துளசிமணி, பஞ்சகச்சம், எனும் பக்த வேடமணிந்து பச்சைமா மலைபோல் மேனி என்று பாடுகிறானே, இவன் இன்று காலையில்தான் கள்ளக் கையொப்ப மிட்டான், இங்கே கசிந்துருகிக் கோரிக் கொள்கிறான். ஆஹா! இந்தக் கள்ளி, கணவனை எய்க்காத நாளே கிடை யாது, இங்கே எவ்வளவு சுத்தம், என்ன பக்தி! ஏன்று தன் எதிரே வருவோரின் இயல்புகளைக் கண்டு, இப்படிப்பட்டவர்கள் சர்வமும் தெரிந்தவர் என்றும் என்னைத் துதிக்கின்றனர். ஆனால், தாங்கள் செய்யும் தீய காரியம் எனக்குத் தெரியாதென்றும் கருதிக்கொண்டு, பூஜித்து என்னை ஏய்க்கப் பார்க்கின்றனர். என்ன துணிவய்யா இந்தப் பக்தர்களுக்கு என்று ஆச்சரியப்பட்டுத் திகைத்து நிற்கிறார்.
பஞ்சை, பகலிலும் மாலையிலும், கோயிலை வலம் வருவதும் கும்பிடுவதும், உரத்த குரலிலே, பஜனை பாடுவதுமாக இருந்து வந்தான்; ஆண்டவனுக்கு என் சத்தம் எட்டாமலா போகும் என்று எண்ணினான். ஒவ்வோரிரவும், சாவடியிலே, பஞ்சையைக் கேலி செய்யாத ஆண்டி கிடையாது; அவன் அலுத்தும் போனான். கடைசியில் ஓர் பயங்கரமான முடிவுக்கு வந்தான். அதை அவன் கூறினபோது அந்த ஆண்டிகள் கை தட்டிக்கேலி செய்தனர். அவன், மிக உறுதியுடன் இருப்பதை அவர்கள் அறியவில்லை.
நம்மைப்போன்ற மனிதப் பிறவியைத் தேவா என்று துதித்துத் துதித்து, வாழ்த்தி வாழ்த்தி, என் நாக்குத் தழும்பேறிவிட்டது. மனிதரைப் பஜித்துப் பயனில்லை, மகேஸ்வரனைப் பஜிப்போம்; அவர், தன் மகனிடம், இரக்கம் காட்டாமலிரார் என்று எண்ணி, நாக்குக்கு நிமிடமும் ஓய்வு தராமல் நாமாளி பாடினோம்; அவரோ நம் குறை தீர்க்க முன்வரவில்லை. என் வேதனைக் குரலைக் கேட்காத செவிகளை அறுத்து விடவேண்டும், அல்லது, வியர்த்தமாக பஜித்து வரும் என் நாக்கையாவது துண்டித்தெறிய வேண்டும். மற்றவரின் செவியை அறுக்க என்னால் - முடியாது: ஆண்டவனுக்குள்ளதோ, கருங்கற் செவி, அறுபடாது, உடைபடும்; செய்வதோ சிரமம். அதை விட, 'என் நாவைத் தண்டித்து விடுவதே சுலபம். எதற்கு எனக்கு இந்த நா? கீதம் பாடுகிறேனா? களிப்பு இருந்தால் தானே கானம்! "ஏ! எங்கேயடா மோட்டார் டிரைவர், கூப்பிடு அவனை" என்று அதிகார மொழி பேசப்போகிறேனா? அரை இலட்சந்தான் இந்த ஆண்டு இலாபங் கிடைத்தது என்று இலாபக் கணக்குப் பேசப்போகிறேனா? அருமை மனைவியிடம் ஆனந்தமாகப் பேசுவேனா, குழந்தைகளிடம் கொஞ்சுவேனா? என் நாவின் வேலை இதல்லவே! எதிரே தலை தெரிந்ததும், தர்மப் பிரபுவே! என்று சொல்லவும், பிச்சை கேட்கவும், கோயிற் படியிலே இருந்து கொண்டு கோவிந்தா என்று கூவவுந்தானே இருக்கிறது. இதற்கு ஒரு நா இருக்கவேண்டுமா - என்று ஏதேதோ எண்ணினான்.
தன் நாக்கைத் துண்டித்து, கோயிற் படிக்கட்டிலேயே வீசி எறிவது என்று தீர்மானித்தான். இதை அவன் கூறினபோது, ஆண்டிகள் அவன் அது போலச் செய்தே விடுவான் என்று துளியும் எண்ணவில்லை. அவன் நாக்கைத் துண்டித்துக்கொண்ட செய்தி தெரிந்த போது திடுக்கிட்டு, திருவோடு கீழே விழுவதையுங் கவனி யாது, "அடேடே பாவம், விளையாட்டுக்குப் பேசினான் என்று நினைத்தோம்; உண்மையாகவே நாக்கை அறுத்துக் கொண்டானே" என்று பரிதாபப்பட்டனர்.
# #
கலியுக அதிசயம். நாத்தீகரக்கு ஒரு வெடிகுண்டு. ஆத்திகருக்கு ஓர் பூச்செண்டு, கடன் இல்லை என்று பேசிக்கொண்டும், பக்திமான்களைத் தூஷித்துக் கொண்டும், பேய்க்குரல் கிளப்பும் பேர்வழிகள், இன்று மாலை, கோபால சுவாமி கோயில் முன்பு பஞ்ச பக்தர் எனும் மகான், பரவச மேலிட்டுத் தம் நாக்கைத் துண்டித்து, பகவானுக்குச் சமர்ப்பிக்கப் போகும் அபூர்வமான அற்புதக் காட்சியை நேரிலே கண்டு பக்தியின் பெருமையை உணரலாம். ஆத்திகர்கள், சூடத்துடன் வந்து மேற்படி பக்தரைத் தரிசித்து பகவத் அனுக்கிரகம் பெறக் கோரப்படுகிறார்கள். இங்ஙனம் கோபாலசாமி கோயில் தர்மகர்த்தா, கொடைகோவிந்த சாமி என்று அச்சிடப்பட்ட துண்டு நோடீசுகள் ஊரிலே ஆயிரக்கணக்கிலே வீசப்பட்டன. தெருவுக்குத் தெரு கூட்டம் சேர்ந்து விட்டது. இத்தகைய பக்திமான் யாரோ என்று ஒவ்வொருவரும் ஆவலுடன் கேட்டனர்.
மோசமும் வேஷமும் நிரம்பிய உலகம்! சூதும் வஞ்சனையும் சூழ்ந்த உலகம். அகந்தையும் அனியாயமும் தாண்டவமாடும் உலகம். மயக்கத்தையும் மருளையும், தரும் மதம். எழை எளிய வரை ஏய்க்கத் தந்திரக்காரன் தயாரித்தது இந்தப் போதை தரகரும் தருக்கரும், தன்னலத்துக்காகத் தோண்டினர் இந்த், நாசக்குழியை. பணமெனும் கோட்டைக்குள் பதுங்கிக் கொள்வான், பாட்டாளியை வாட்டி வதைப்பான், பஞ்சாங்கத்தைக் கூட்டாளியாகக் கொள்வான்; ஆள்வோனுக்கு அடி பணி வான, இவன் பெயர் சீமான். எதிர்க்கத் தெரியாத கோழை; இங்கிதம் தெரியாத வாழை; இவன் பெயர் ஏழை.
கூடிப் பேசவு கும்பிட்டுக் குமுறவும் உள்ள கூடம், கோயில்... இது வறியவர் சென்று பார்த்துப் பயன்பெறாது வெளியே வரும், வாயில் ! அக்ரமத்தைக் கண்டு அஞ்சி மெய் மறந்தவரே, ஆண்டவன். இவ்விதமான புது அகராதியின் படி பேசினாள் பஞ்சை. தனக்குச் சோறு போட மறுத்துக் கோபமாக மோட்டார் ஏறிச்சென்ற சீமானின் மாளிகைக்குச் சென்றான். வெறி கொண்டவன் போலத் தூற்றினான். வேலையாட்கள் பிடித்திழுத்துக் கட்டினர், கம்பத்தில். "சவுக் கெடு!" என்று கூறினார் சீமான். பயமின்றிச் சிரித்தான் பஞ்சை .
"இப்போது கேட்கிறதா உன் செவி, பேஷ்! இது தெரியாமல் இத்தனை நாள் தவித்தேனே. உன்னைப் பூஜித்தேன், துதித்தேன், அப்போது உன் செவி மந்தமாக இருந்தது. இப்போது என் மனமார உன்னைத் திட்டினேன். உன் செவிக்கு அது எட்டிற்றா? சரி! சவுக்கெடுத்து உன் கை வலிக்குமளவு என்னை அடி! பசியைவிடவா, சவுக்கு என்னை அதிகமாக வாட்டமுடியும். உன் கோபத்தைத் தணிக்கக்கூடிய அளவு அடிக்க உன் காத்திலே வலிவு இராது. அதற்கு எவனாவது ஓர் முரட்டு ஆளைப் பிடி! வேறோர் எழை அசப்படுவான், அவனை விட்டு என்னை அடி, அதற்கு அவனுக்குக் கூலி கொடு" என்று பஞ்சை பேசினான், பயமின்றி. அவனுக்குப் பித்தமோ என்று சீமான் சந்தேகித்தான். வேலையாட்களை வெளியே அனுப்பிவிட்டு விசாரித்தான். அந்த ஏழை தன் வேதனையான வாழ்வையும் நாக்கை அறுத்துக்கொள்ளப்போகும் விஷயத்தையும் சொன்னான். சில விநாடி, சீமான் மௌனமாக இருந்தான். ஓர் முடிவுக்கு வந்தான், கட்டுகளை அவிழ்த்தான். பஞ்சையை மாளிகை மேன்மாடிக்கு அழைத்துச் சென்றான். வீட்டினர் ஆச்சரியப்பட்டனர். பச்சையே ஆச்சரியப் பட்டான்.
அறுசுவை உண்டி அளிக்கப்பட்டது, ஆடை தரப்பட் டது, ஆயாசம் போக்கப்பட்டது. அதற்குப் பிறகு, சீமான் பஞ்சையை அருகில் அமரச்செய்து "உண்மையாகவா நீ, நாக்கை துண்டித்துக் கொள்ளப் போகிறாய்?" என்று கேட்டான்.
"உண்மை தான். எனக்கு, நாக்கு இருந்து பயன் என்ன? அது இருப்பதால், நான் உன் போன்றவர்களைத் துதிக்கவும், துயர் வரும் போது தூற்றவும் முடிகிறது. வேறென்ன முடிகிறது? ஆகவே, அதனை இழக்கத் துணிந்து விட்டேன்" என்றான் பஞ்சை. சீமானின் முகம் சந்தோஷத்தால் ஜொலிக்கது. "ஒரு வருஷத்திலே ஒரு இலட்சமாவது சேர்த்தி - முடியும்! உன்ன தமான மடம் ஏற்படுத்த முடியும்! நமது செல்வாக்கு முழுவதும் பயன்படும்'' என்று தனக்குள் கூறிக்கொண்டு, பஞ்சையை நோக்கி, "சரி! நீ இக்காரியத்தைச் செய்து ஒரு பலனும் பெறாதிருப்பதை விட, நல்ல பலன் உண்டாகும் விதமாகச் செய்கிறேன். என் சொற்படி நடந்தால், நீ சுகமாக இனி வாழ வழி செய்கிறேன"- என்று கூறினான். பஞ்சை சரியென்றான். உடனே தான், துண்டு நோட்டீசுகள் ஊர் முழுதும் பரவின.
குறிப்பிட்ட நாள் பஞ்சை தன் நாக்கைத் துண்டித்துக் கொண்டான். சிமான், ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில், பஞ்சையின் காலில் வீழ்ந்து, "பக்தரே! தாங்கள் இந்த அடியவனைத் தங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்'' என்று வேண்டிக்கொண்டான். பஞ்சை தலை அசைத்தான். பக்குவமான சிகிச்சைக்குப் பிறகு, பஞ்ச பக்தர் எனும் திருநாடத்துடன்; அவன், சீமான் மாளிகையில் தங்கினான். ஊர் ரெண்டு வந்தது, காணிக்கை செலுத்த; அதனைச் சேர்த்து வைக்கும் சேவையிலே சீமான் ஈடுபட்டார்.
வேறு எந்தத் தொழிலிலும் கிடைக்காத வருமானம் நாக்கிழந்தாருக்குச் சீடராக இருந்ததால், சீமானுக்குக் கிடைத்தது. ஊரார், தன்னை ஓர் உத்தமன், பக்திமான், அவதார் புருஷன் என்று பூஜிப்பதும், நுனி துண்டித்துப் போன நாக்கைத் தரிசிக்க நாள் தோறும் காத்திருப்பதும், பாகத்தில் பணம் கொட்டுவதையும், பாலும் பழமும் படைப்பதையுங் கண்ட பஞ்சைக்கு நெஞ்சு பதறிற்று. வேஷத்துக்கும் வஞ்சனைக்கும் எவ்வளவு மயங்குகிறது இவ்வுலகம் என்று எண்ணி ஏங்கினான். எவ்வளவு தந்திரமாகத் தன்னை உபயோகித்து அந்தச் சீமான் பொருள் திரட்டுகிறான் என்பது கண்டு மனம் பதறலாயிற்று.
வேலைக்குச் சோறு, தங்க ஓர் ஆஸ்ரமம், உடுத்த பட்டாடை, வேலையாட்கள், இவைகள், நாவிழந்ததால் தனக்குக் கிடைத்தது. ஆனால், நாக்கிழந்தானை நர்த்தனம் செய்யவைப் போன், பதினாயிரக்கணக்கிலே பணம் திரட்டுகிறான். என்ன பாதகம்! என்று கோபம் கொதித்தெழுந்தது. என்ன செய்வான் பாபம், நாக்கில்லை, பேச; மற்ற ஆண்டிகளோ, 'எதோ தெய்வானுக்கிரகம் இல்லாமலா, நாக்கிழந்ததும் இவனுக்கு இவ்வளவு நல்ல கதி கிடைத்தது'' என்று மயங்கி, அவர்களும் காலில் வீழ்ந்து கும்பிடத் தொடங்கினர். சீமான் தவிர, மற்றவர்கள் தன்னை ஓர் அவதாரமாகவே கண்ட பன்சைக்கு மிகுந்த கோபம் உண்டாகி, சீமானின் சூதுக்கு உடந்தை யாக வாழ்வதற்காக, உயிரை வைத்துக்கொண்டிருப்பதை விட, இறப்பதே மேல் என்ற துணிவு பிறந்துவிட்டது. ஒரு நடு நிசியில், மனோவே தனை அதிகப்படவே, கூரிய சாத்தி கொண்டு, தற்கொலை செய்து கொண்டு இறந்தான்.
சீமான், புரண்டழுதான்; ஊகாவெனக் கதறிற்று. இன்னமும் கொஞ்ச நாளைக்கு நாக ரோ, தார் இருக்கக் கூடாதா? நாடு சீர்படுமே, என்று பக்கள்' கை பிசைந்தனர். படம் கட்டப்பட்டு, படம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சீமான் கோபாலசாமி, கோயில் தர்மகர்த்தா வேலையை ராஜி நாமாச் செய்துவிட்டு, மடத்தின் அதிபரானார். ஆண்டு, தோறும் நாக்கறு விழா நடைபெறுகிறது; சீடகோடிகளின் காணிக்கை குவிகிறது. எங்கே? என்று கேட்பீர்கள்!
பெரும் புளுகு என்றுரைப்பீர்கள்! கட்டுக்கதை என்று பேசுவீர்கள். இஷ்டம் போல் எண்ணிக் கொள்ளுங்கள்.
# #
1943-ம் ஆண்டிலே ஏப்ரல் மாதத்திலே, சுதேசமித்ரன், வடநாட்டிலே ஏதோ ஓர் கோயிலிலே, ஒரு வாலிபன், தெய்வபக்தி காரணமாகத் தன் நாக்கை அறுத்துக் கொண்டான், என்றோர் செய்தியை, பக்தி சிரத்தையுடன், பரோபகார சம்ரட்சணார்த்தம் வெளியிட்டது. அந்தப் பக்தன், என் தன் நாவைத் துண்டித்துக் கொண்டானோ எனக்குத் தெரியாது. ஆனால், நான் தீட்டியுள்ள கதையில் வரும் பஞ்சை போன்றவர்கள் நாக்கைத் துண்டித்துக் கொள்ளக் தயங்கவுமாட்டார்கள். சூது சூட்சி தெரிந்தவன், நாக்கிழப் பவனைக் கொண்டு, பணம் திரட்டவும் கூசான் . நாடு, அவன் கட்டிவிடும் கதையைக் கேட்டு ஏமாறவும், பொருள் தரவும், தயாராகத்தான் இருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள். ஆனால் சிந்தனைக்கு வேலை தந்தால், "ஆம்" என்றே கூறுவர்.
மூடநம்பிக்கையில் ஊறிக் கிடக்கும் இந்த நாட்டிலே, இது போன்ற சூதுகளுக்கும், சாமியாடி களுக்கும், அற்புதங்கள் நடத்துவோருக்கும், இன்றும் ஆதிக்கம் நிரம்ப இருக்கிறது. இல்லாமலா பகிரங்கமாக, வடலூர் இராமலிங்கர் வரப்போகிறார், செத்தவரைப் பிழைப்பிக்கப்றோர் என்று எவனோ ஓர் ஏய்த்துப் பிழைப்பவன் பிரச்சாரம் செய்யவும், பணம் வசூலிக்கவும் துணிந்தான். அதற்குத் தாளந் தட்ட ஓர் திருக்கூட்டம் கிளம்பிற்று! எங்கேயடா, வள்ளலார் ? என்ன ஆயிற்று நீ சொன்ன சூளுரை? ஏன் இப்படி ஊரை ஏய்த்தாய்? என் பிக்கை மோசடி செய்தாய்? எங்கே, வசூல் செய்த பணம்? என்று யார் போய் அந்த உண்டி குலுக்கியைக் கேட்டார்கள். அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு, இதுபோல் ஓடுபவர், ஆண்டுக்கு ஒருவர் இருவர் தோன்றுகிறார்கள். என் சாலும், எத்தனை முறை ஏமாந்தாலும், மூடத்தனத்திலே ஊறிப் போனவர்களுக்கு, பித்தம் குறைவதில்லை. இந்த நாட்டுக்கு விமோசனம் உண்டா? இன்று நாம் உட்கார்ந் திருக்கும் அறையிலிருந்து கொண்டு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இலண்டன், வாஷிங்டன், மாஸ்கோ, சிட்னி, நெட்டால், ஆட்டவா, போன்ற தூர நகரங்களிலே நடைபெறும் பேச்சையோ, இசையையோ, அங்கே நடைபெறும் போதே கேட்டு இன்புறுகிறோம்.
இதை அதிசயம், அற்புதம், என்று இந்த மூடமதியினர் கூறுவதில்லை.
"ஒரு அதிசயம் தெரியுமா? நமது ஊருக்கு ஓர் சாமியார் வந்திருக்கிறார். அவர் சாப்பிட்டுப் பத்து வருஷமாச்சாம். அவர் விபூதி மந்திரித்துக் கொடுத்தால் தீராத வியாதியே கிடையாதாம்' என்று பேசுவர்.
அவனுக்குக் குணமாகவில்லையே இவனுக்குப் பலன் கிடைக்கவில்லையே என்று ஆதாரங் காட்டிப் பேசினாலோ, “அது அவன் எழுத்து” என்று கூறிடுவர்.
ரேடியோ, கம்பியில்லாத் தந்தி, வானவூர்தி, சப்மெரைன், டெலிவிஷன், என்று எந்த அற்புதக் கண்டு பிடிப்பு பற்றி வேண்டுமானாலும் கூறிப் பாருங்க. தலையாட்டுவார்களே தவிர, மறுபடியும், மாரி கோயில் பூஜாரி, குறி சொல்லும் அதியசம், சாமியாடி மந்திரித்துக் கொடுக்கும் எலுமிச்சையால் கரு உண்டாகும் அற்புதம், நாக்கில் வேல் குத்திக் கொண்டவனின் மகிமை, என்ற இவைகளைப் பிரமாதமாகப் பேசுவர். பாமரர் பேசினாலும் பரவாயில்லை. படித்தோம் என்று நாவசைக்கும் கூட்டத்திலும் சில, இத்தகைய நாக்கிழந்தார் வாக்கிழந்தார், நோக்கிழந்தார், பெருவழியார், சிறு விழியார் என்று ஏதோதோ “மகான்களை”த் தேடிக்கொண்டும் தெந்தினம் பாடிக்கொண்டும் இருக்கின்றனர். இந்தப் பித்தம் போக மருத்துண்ணாதவரையில், நாடு, நயவஞ்சகருக்கு வேட்டைக்காடாகவே இருந்து தீரும். வாலிபர்கள் விரைந்தெழுந்து இந்த வீணர்களை அடக்காவிட்டால், வாழையடி வாழையென்றிருந்து விட்டால், எதிர்காலத்திலே இந்நாடு காட்டுமிராண்டிகளின் கூடமென்றே நாகரீக மக்கள் கருதி எள்ளி நகையாடுவர்.
இத்தையக மூடக் கோட்பாடுகளைத் தகர்க்கப் பிரசாரம் புரிய முன்வரத் துணியாதவர்களை, நான் நாக்கிழந்தார் என்றே கூறுவேன். அவர்கள் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதிலே நாவுக்கரசர்களாக இருக்கலாம். ஆனால் நாட்டை அரித்துவரும் இந்த மூட நம்பிக்கைகளைக் கண்டிக்க முன்வராத நிலையில், நான் அவர்களை, நாக்கிழந்தார் என்றே கூறுவேன். அது தவறுமல்ல!
------------00-------------
This file was last updated on 3 Jan. 2020.
Feel free to send the corrections to the webmaster.