கவிராஷஸ ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள்
முதற்பகுதி.
1. பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி.
2. கச்சி ஆனந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி.
3. கச்சி ஆனந்தருத்திரேசர் கழிநெடில்.
kacciyappa munivar pirapantangkaL - part 1
1. piramIcar patiRRuppattantAti
2. kacci AnantaruttirEcar patiRRuppattantAti
3. kacci AnantaruttirEcar kazineTil
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned PDF of this work.
The e-text has been generated using Google OCR and subsequently edited by K.Kalyanasundaram.
We thank Mr. R. Navaneethakrishnan for his help in proof-reading the etext file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கவிராஷஸ ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள்
முதற்பகுதி.
Source:
கவிராக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரபந்தங்கள்.
முதற்பகுதி .
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து
இருபத்தொன்றாவது குருமஹாசந்நிதானம்
ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகமூர்த்திகள்
கட்டளையிட்டருளியபடி அவ்வாதீன வித்துவான்
த. ச. மீனாட்சி சுந்தரம்பிள்ளையால்
பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பிக்கப்பெற்றன.
உரிமை பதிவு . விசய - புரட்டாசி 1953.
விசய - புரட்டாசி / முதற்பதிப்பு-1953.
திருவாவடுதுறை ஆதீன வெளியீடு 71.
அச்சிட்டது ஸ்ரீ முருகன் அச்சகம், கும்பகோணம்
கலைமகள் விழா வெளியீடு
--------
சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
கவிராஷஸ ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள் - முதற்பகுதி .
உள்ளடக்கம்
1. பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி.
2. கச்சி ஆனந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி.
3. கச்சி ஆனந்தருத்திரேசர் கழிநெடில்.
4. கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடு தூது.
5. பஞ்சாக்கரதேசிகரந்தாதி. (குறிப்புரையுடன்)
---------
திருவாவடுதுறை ஆதீனம்.
சிவமயம். திருச்சிற்றம்பலம்.
திருத்தொண்டர்.
பாய வாருயிர் முழுவதும் பசுபதி யடிமை
ஆய வெவ்வகைப் பொருள்களு மவனுடைப் பொருள்கள்
மேய விவ்வண மலதுவே றின்றென வுணர்ந்த
தூய மெய்த்தவத் தடியவர் துணையடி தொழுவாம்.
- தணிகைப்புராணம்
ஸ்ரீ ஞானமா நடராசமூர்த்தி.
ஓங்கொளியாய் அருள்ஞான மூர்த்தி யாகி
உலகமெலாம் அளித்தருளும் உமையம்மை காணத்
தேங்கமழும் மலரிதழி திங்கள் கங்கை
திகழரவம் வளர்சடைமேல் திகழ வைத்து
நீங்கலரும் பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள்
நின்றிமையோர் துதிசெய்ய நிருத்தம் செய்யும்
பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும்
புந்தியினும் உறவணங்கிப் போற்றல் செய்வாம்.
- ஸ்ரீ உமாபதிதேவநாயனார்.
முகவுரை .
தேவாரம்.
“முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னார்க்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன்காண் அவனென் எண்ணத் தானே."
திருச்சிற்றம்பலம்.
திருக்கயிலாயபாம்பரைத் திருவாவடுதுறையாதீனம் தெய்வச் செந்தமிழ் நாட்டுக்குத் திலகம் போல்வது. என் ? 'கண்ணாய்க் கண்ணிற்கருமணியாய் மணியாடு பாவையாய்' இலங்கியொளிர்வது. ‘ கல்விக் களஞ்சியம்' இத்திருவாவடுதுறையே எனக் கற்றோர் சொல்வர். சிவஞானராசதானி இது எனச் சிவஞானச் செல்வர் சொல்வர். புலவர்கட்குத் தாயகம் இதுவே எனப் புலவர் பலருங் கொள்வர். புவியாசரும் கவியரசரும் எம் துறவரசு வீற்றிருக்கும் துறைசைமாநகரென இதனைச்சூழ்வர். தொண்டுபடு தொண்டர் துயர் தீர்க்கும் தூய தலம் இதுவே எனத் தொண்டர்கள் வந்து வந்து வழிபடுவர். 'ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறையனாரே' என்றருளிய திருநாவுக்கரசு சுவாமிகள் ‘மாயிரு ஞாலமெல்லாம் மலரடி வணங்கும் போலும்' என்று அன்றருளிய திறமே என்றும் மன்ற நின்று நிலவுவது என்பர் பெரியோர்.
இனி, இப்பிரபந்தங்களின் ஆசிரியராகிய கவிராக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்பமுனிவர் திராவிட மாபாடியகாரராகிய ஸ்ரீ மாதவச் சிவஞானயோகிகள் மாணவர் பன்னிருவருள் முதல்வர். ஏனைய மாணவர் பதினொருவராவார் :- தொட்டிக்கலை-சுப்பிரமணிய முனிவர், மதுரையாதீனம் - வேலாயுததேசிகர், காஞ்சீபுரம் - சரவண பத்தர், இராமநாதபுரம் - சோமசுந்தரம்பிள்ளை, முத்துக்குமார தேசிகர், இலக்கணம் - சிதம்பரநாதமுனிவர். கல்யாண சுந்தர உபாத்தியாயர் , அடைக்கலங்காத்தான் முதலியார், காஞ்சீபுரம்- சிதம்பர முனிவர், திருமுக்கூடல் - சந்திரசேகரமுதலியார், திருச்சிற்றம்பல தேசிகர் முதலியோர் என்ப. இக்கவிஞர் பெருமான், இவ்வாதீனத்து மஹாவித்துவான், வடமொழி தமிழ் மொழிகளில் பெரிதும் வல்ல சிவாநுபூதிச்செல்வர். நெட்டுருப்பண்ணிய பழம் பாடல்களை ஒப்புவிப்பது போலப் புதிய புதிய பாடல்களைச் சிறிதும் வருத்தமின்றி எளிதில் இயற்றும் ஆசுகவி இவர்கள். குருபத்தியிலும், குருபணிவிடையிலும் இவர்களுக்கு இணை எவருமிலர். இவர்கள் செய்த பெரு நூல்கள் - காஞ்சிப்புராணத்து இரண்டாங்காண்டம், திருத்தணிகைப்புராணம், பேரூர்ப்புராணம், பூவாளூர்ப்புராணம், திருவானைக்காப்புராணம், விநாயகபுராணம் என்பனவாம்.
சிறு பிரபந்தங்களாகிய
1. திருத்தணிகையாற்றுப்படை
2. திருத்தணிகைப்பதிற்றுப்பத்தந்தாதி
3. பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி
4. ஆனந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி
5. ஆனந்தருத்திரேசர் கழிநெடில்
6. ஆனந்தருத்திரேசர் வண்டுவிடு தூது
7. பஞ்சாக்கர தேசிகரந்தாதி
என்பனவும் இவர்களருளியவைகளே. இவற்றுள், பிற்கூறிய ஐந்து சிறு பிரபந்தங்களின் தொகுப்பே இம்முதற்பகுதி. முன்னிரண்டு பிரபந்தங்களும் தனியே இரண்டாம் பகுதியாக அச்சிட்டு விரைவில் வெளிவரும்.
இனி, "ஸ்ரீ கச்சியப்ப முனிவரியற்றிய பிரபந்தங்களெல்லாவற்றையும் சேர்த்து ஒருதொகுதியாகக் குறிப்புரை, நூலாசிரியர் சரித்திரம் முதலியவற்றுடன் வெளியிட எண்ணியுள்ளேன். அதனை நிறைவேற்றிவைக்கும் வண்ணம் தமிழ்த் தெய்வத்தை இறைஞ்சுகின்றேன்.'' என மஹாமஹோபாத்தியாய - டாக்டர் ஸ்ரீ ஐயரவர்கள் வண்டுவிடு தூது' இரண்டாம் பதிப்பின் முகவுரையிலே 20-1-31ல் குறித்துள்ளார்கள். இந்தக் குறிப்பொன்றே இவைகளையெல்லாம் ஒரு தொகுதியாக்கி வெளியிட நெடுநாளாக என்னைத் துண்டியது. ‘அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி -எடுத்த கருமங்களாகா' என்பது முதியோர் வாக்கன்றோ ?
இனி, ஸ்ரீ மாதவச்சிவஞானயோகிகள் பேரூர் - ஸ்ரீ வேலப்ப தேசிகர் சின்னப்பட்டத்திலிருந்தகாலத்து அவர்கள்பால் சைவ சந்நியாசமும், சிவதீட்சையும் சிவஞானோபதேசமும் பெற்றுச் சிவஞானயோகிகள் என்ற தீட்சாநாமமும் சூட்டப்பெற்று விளங்கினார்கள். அப்போது குருமஹாசந்நிதானமாக வீற்றிருந்தருளியவர்கள் 10-வது ஸ்ரீ வேலப்பதேசிக சுவாமிகள். இம் மூர்த்திகள் சங்கரநாராயணர் கோயிலிலே சிவபரிபூரணமாயினார்கள். ஸ்ரீ மாதவச் சிவஞானயோகிகளது ஞானாசிரியர் பேரூர் - வேலப்ப தேசிகர் சின்னப்பட்டத்திலிருந்தபடியே பேரூரிலே சிவபரிபூரணமெய்தினார்கள். இவர்கள் அருளிச்செய்தது பண்டார சாத்திரம் பதினான்கனுள் ஒன்றாகிய பஞ்சாக்கரப்பஃறொடையாம். பேரூர் - வேலப்பதேசிகர் சிவபரிபூரணமுற்றமையை அறிந்த பத்தாவது ஸ்ரீ வேலப்ப தேசிகர் அடியவர் கூட்டத்திலுள்ள மற்றொரு வேலப்பத்தம்பிரானுக்கு ஆசாரியாபிடேகம் செய்து ஸ்ரீ வேலப்ப தேசிகர் என்ற அபிதானத்துடனேயே சின்னப்பட்டத்திலிருத்தினார்கள். இவர்களே
ஸ்ரீ பின்வேலப்பதேசிகமூர்த்திகள். பின்பு இவர்கள் பதினொராம்பட்டத்தில் குருமூர்த்தியாக வீற்றிருந்தருளி ஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகளது மாணவர் பன்னிருவரில் ஒருவராகிய திருச்சிற்றம்பல தேசிகரைச் சின்னப்பட்டத்தில் அமர்த்தினர்.
இனி, திராவிடமாபாடியகாரராகிய ஸ்ரீ மாதவச்சிவஞான சுவாமிகள் மாணவர்களில் இலக்கணம் - ஸ்ரீ சிதம்பரநாத முனிவர் திருச்சிற்றம்பல தேசிகரிடத்திலே சைவசந்நியாசமும், சிவதீட்சையும், சிவஞானோபதேசமும் பெற்றார். இராமநாதபுரம் - சோமசுந்தரகுருவும் இவர்களிடத்திலேயே நிருவாண தீட்சையும், சிவ ஞானோபதேசமும் பெற்றனர். இப்பிரபந்தங்களின் ஆசிரியராகிய கவிராக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்ப முனிவரும், தொட்டிக்கலை - மதுரகவி - ஸ்ரீ சுப்பிரமணிய முனிவரும் பன்னிரண்டாவது குருமகாசந்நிதானம் திருச்சிற்றம்பல தேசிகர் பெரிய பட்டத்தில் வீற்றிருந்து சிவாகம ஆராய்ச்சியையே பொழுதுபோக்காகக் கொண்டு சிவாநந்த நிட்டையில் எழுந்தருளியிருந்தமையின் அப்போது சின்னப்பட்டத்தில் உள்ள
ஸ்ரீ அம்பலவாண தேசிகர்பால் சைவசந்நியாசமும் சிவ ஞானோபதேசமும் பெற்றுக்கொண்டனர். இவை ஆதீன குருபரம்பரை விளக்கத்தாலும், ஆதீன வரலாற்றாலும், ஸ்ரீ சுப்பிரமணிய முனிவர் தமது ஞானாசிரியர் மீது இயற்றியுள்ள பிரபந்தங்களாலும் அறியக்கிடப்பன.
இனி, இப்பிரபந்தங்களின் பதிப்புக்கு உதவியாயிருந்த பிரதிகள் வருமாறு:--
இவ்வாதீனத்துக் கல்விக் களஞ்சியமாகிய
சரஸ்வதி மஹால் புத்தகசாலை ஏட்டுச்சுவடி 1.
இராமநாதபுரம் - இராமசாமிப்பிள்ளை எனவழக்கும் மதுரை ஞான சம்பந்தப்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்ட கச்சி ஆனந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி, ஆனந்தருத்திரேசர்கழி நெடில், (பிரமாதி - 1879) அச்சுப்பிரதி 1.
[ இப்பிரதியைக் கொடுத்துதவியவர் ஆரணி - வித்துவான், சித்தாந்தரத்நாகரம், திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் அவர்கள் ]
இவ்வாதீனத்து ஸ்ரீ சுந்தரலிங்கத்தம்பிரான் சுவாமிகள் எழுதிய கைக்காகிதப்பிரதி 1.
என் தந்தையார் ஸ்ரீ T. A . சபாபதி பிள்ளையவாகள் எழுதிய காகிதக் கையெழுத்துப் பிரதி 1.
இவ்வாதீனவித்துவானும், ஆதீன ஓதுவார்களுள் ஒருவருமாகிய
ஸ்ரீ சு.பொன்னோதுவா மூர்த்திகள் காகிதப்பிரதி 1.
[இக்கையெழுத்துக் காகிதப் பிரதியில் இம்முனிவர் பிரபந்தங்களும், தொட்டிக்கலை - மதுரகவி - ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் பிரபந்தங்களும் உள்ளன.]
இயற்றமிழாசிரியர், புரசை அட்டாவதானம்-- ஸ்ரீசபாபதி முதலியார் அவர்கள் பார்வையிட்டு கலி-4983: விஷு- தநுர்௴ (கி.-பி. 1882-ல்) பதிப்பித்த பெருநகர்ப் பிரமீசர்பதிற்றுப் பத்தந்தாதி அச்சுப்பிரதி 1.
[இதனையுதவியவர் குடந்தை - திரு. R. கங்காதர முதலியார்)
இவ்வாதீனத்து 17-வது குருமஹாசந்நிதானம் ஸ்ரீ அம்பல வாண தேசிகமூர்த்திகள் கட்டளையிட்டருளியபடி மதுராபுரிவாசியாகிய இராமசாமிபிள்ளை என வழங்கும் ஞானசம்பந்தப்பிள்ளை யவர்கள் ஸ்ரீ மாதவச் சிவஞானசுவாமிகள் பிரபந்தங்களைத் தொகுத்து நந்தன - சிங்கமதியில் இரண்டாம்பதிப்பாக அச்சிட்டுதவினர். அதற்கு முன் பாலவநத்தம் ஸ்ரீ பாண்டித்துரைசாமித் தேவரவர்களுடைய விருப்பத்தின்படி மேற்கூறிய பிரபந்தங்கள் யாவும் ஞானசம்பந்தப்பிள்ளையே முதற்பதிப்பாக விரோதி ஆண்டிலே அச்சிட்டனர்.
ஸ்ரீ மாதவச் சிவஞானயோகிகள் பிரபந்தங்களும், அவர்கள் மாணவர்களில் கவிராக்ஷஸ-ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரபந்தங்களும் தனித்தனியாக இவ்வாதீன வித்துவான் விசுவலிங்கத்தம்பிரான் சுவாமிகளும் மேற்சொல்லிய ஞானசம்பந்தப் பிள்ளையும் சேர்ந்து பரிசோதித்து அச்சிட்டுள்ளனர். ஆயினும், ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரபந்தங்களும், தொட்டிக்கலை-ஸ்ரீ சுப்பிர மணிய முனிவர் பிரபந்தங்களும் தொகுத்து முதன்முதலாக 70, 71-வது வெளியீடுகளாக இவ்வாதீனத்து 21-வது குருமகாசந்நி தானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகசுவாமிகள் கட்டளையிட்டரு ளியபடி இப்பொழுது எளியேனால் பரிசோதிக்கப்பட்டுப்பதிப்பிக்கப் பெற்றன. இவ்விரு முனிபுங்கவர்களும் அருளிய ஏனைப்பிரபந்தங்கள் இரண்டாம்பகுதியாக அச்சிட்டு வெளிவரவுள்ளன. இப்பதிப்பிலே கவிராக்ஷஸ-ஸ்ரீ கச்சியப்ப முனிவரருடைய திருவுருவச் சிலைச்சித்திரமும் முகப்பில் சேர்க்கப்பட்டுள்ளது காண்க.
இனி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் - ஸ்ரீமான் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் பழைய நூல்களை அச்சிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காலத்திலே தணிகைப்புராணத்தையும் அச்சிடவிரும்பினார்கள். 25-3-1883ல் மஹாமஹோபாத்தியாய ஸ்ரீமத் ஐயரவர்களுக்கு எழுதிய கடிதத்துக்கு முன் 16-வது மேலகரம் - ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகமூர்த்திகளுக்கு விண்ணப்பமநுப்பியிருந்தார். அவ்விண்ணப்பத்தின்படியே மகாவித்துவான்-பிள்ளையவர்களிடத்துப் பாடங்கேட்டபோது மதுரை - இராமசாமிபிள்ளையவர்கள் எடுத்துவைத்துள்ள குறிப்பையும் உடன் உபயோகித்துக் கொள்ளும்படி மகாசந்நிதானத்தில் பெருங்கருணையுடன் அந்நூற் பிரதிகளுடன் அனுப்பிவைக்கக் கட்டளையிட்டருளியது. அதன்பின் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் சரித்திரச்சுருக்கமும் எழுதுவித்து அநுப்பப் பெற்றது. எனினும், தணிகைப்புராணக் குறிப்புக்களை இராமசாமி பிள்ளையவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டும் அவர் என்ன காரணத் தினாலோ பதிப்பிக்கவில்லை. தணிகைப்புராணம் அச்சிட்ட காலம் சுபானு - சித்திரை (1883). "பிள்ளையவர்கள் சொன்ன அருமையான குறிப்புக்களை இவர் லக்ஷியம் செய்யவில்லையே! நல்லபொருள் கிடைத்ததென்று மிக்க மகிழ்ச்சியோடு இவருக்கு உபயோகப்படுத்திக்கொள்ளத் தெரியவில்லையே! என்று நான் எண்ணினேன்.
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகளும் அதேகருத்தை உடையவர்களாக இருந்தார்கள்'' (என் சரித்திரம் - 759ம் பக்கம் பார்க்க.) என ஐயரவர்கள் வருத்தத்தோடு குறித்துள்ளார்கள். அக்குறிப்புக்கள் ஆதீனத்தில் இருந்தாலும் ஒருகாலத்திலே வெளிவருமே! பிறர் கைவசப் பட்டுப் பயனில தாயிற்றே!! என் செய்வது !! எல்லாம் திருவருள்.
இப்பிரபந்தத்தில் உள்ள ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு முற்கூறிய ஞான சம்பந்தப்பிள்ளையால் எழுதப்பட்டுப் பேரூர்ப் புராணத்தை தாரண - சித்திரையில் அச்சிட்ட காலத்து அதில் சேர்க்கப்பட்டிருந்ததேயாம்.
இனி, இவ்வாதீனத்து 16வது குருமகாசந்நிதானம் மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகமூர்த்திகள் காலத்துச் சின்னப்பட்டத்திலே (கி. பி. 1871-1883) வீற்றிருந்த ஸ்ரீ நமசிவாயதேசிக சுவாமிகள் தணிகைப்புராணத்தையும் சிறந்தமுறையிலே பாடம் சொல்வார்கள். இவ்வாதீன அடியவர் கூட்டத்துட்சிறந்து ஆதீனவித்துவானாக விளங்கிப்பின்பு கி.பி. 1888ல் குன்றக்குடியில் உள்ள திருவண்ணாமலை ஆதீனத்துக்குத் தலைவராக மகாசந்நிதானத்தால் அநுப்பப் பெற்ற
ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகளும் தணிகைப்புராணம் பாடம் சொல்லும் ஆற்றல் மிகப் படைத்தவர்களே. சின்னப்பட்டத்து ஸ்ரீ நமசிவாய தேசிகர் கல்லிடைக்குறிச்சியில் வீற்றிருந்தகாலத்திலே அவர்கள்பால் கல்விகற்றவர்களில் சேற்றூர் - அருணாசலக் கவிராயரும், அவர்தம் பின் சுப்பிரமணியக்கவிராயரும் மிகச்சிறந்து விளங்கினர். சுப்பிரமணியக் கவிராயரவர்கள் ஸ்ரீ நமசிவாயதேசிக சுவாமிகளிடத்திலே தணிகைப்புராணத்தையும் பெரியபுராணத்தையும் நன்கு கற்றுத்தேர்ந்தவர். சேற்றூர் சுப்பிரமணியக் கவிராயரவர்களிடத்திலே என் தமிழாசிரியர்களுள் ஒருவரும், இவ்வாதீன வித்துவானும், ஓதுவார்களுள் சிறந்து விளங்கியவர்களும், சிதம்பரம் ஸ்ரீ மீனாட்சி காலேஜில் பிரின்ஸிபாலாகவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே தமிழாசிரியராகவும் வீற்றிருந்து தமிழரசு செலுத்தியவர்களும் ஆகிய ஸ்ரீ சு . பொன்னோதுவாமூாத்திகள் தணிகைப் புராணத்தைக் கேட்டு நல்லகுறிப்பொன்று எழுதிவைத்துள்ளார்கள்.
சுப்பிரமணியக்கவிராயரவர்களிடத்திலும் தணிகைப்புராணத்துக்குச் சிறந்த குறிப்புக்கள் இருந்தன. பின்பு, திருப்பனந்தாட் காசி மடத்துத்தலைவர்களாக வீற்றிருந்து வடமொழி தமிழ்மொழிகளில் பெரும்புலமையுடன் விளங்கிய ஸ்ரீ சொக்கலிங்கத்தம்பிரான் சுவாமிகள் தலைவர்களாக வருவதற்கு முன்னே குன்றக்குடிக்குச் சென்றிருந்து ஸ்ரீ சு . பொன்னோதுவாமூர்த்திகளும் தாமுமாகத் தணிகைப்புராணத்தை ஒருமுறை பாடங்கேட்டார்கள். இதனை ஒதுவாமூர்த்திகளே அடியேன் பாடங்கேட்டபோது கூறியருளினார்கள். ஸ்ரீ பொன்னோதுவாமூர்த்திகள் ஸ்ரீ மீனாட்சி காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்தபோது ஸ்ரீ சொக்கலிங்கத்தம்பிரான் சுவாமிகள் திருப்பனந்தாளிலிருந்து ஆளனுப்பித் தணிகைப்புராணக் குறிப்பை ஓதுவா மூர்த்திகளிடமிருந்து வருவித்துப்பார்த்துவிட்டுச் சிலநாட்களில் திரும்பவும் அக்குறிப்புக்களை அனுப்பிவிட்டார்கள்.
ஸ்ரீ மீனாட்சி காலேஜில் தமிழாசிரியராக இருந்த சோழவந்தான் - ஸ்ரீ கந்தசாமியாரவர்களும் தணிகைப்புராணத்தைச் சேற்றூர் - சுப்பிரமணியக் கவிராயரவர்களிடம் பாடங்கேட்டவர்களே. நாங்கள் சிதம்பாம் ஸ்ரீ மீனாட்சி காலேஜில் படித்துக்கொண்டிருந்த பொழுது ஸ்ரீபொன்னோதுவாமூர்த்திகளுடைய தணிகைப்புராணக்குறிப்பைப் பெற்று வந்து மாலை கட்டித்தெருவில் உள்ள
ஸ்ரீ மெய்கண்ட வித்தியா சாலையில் கீழ்புறம் அறையிலே சூரியனார்கோயில் ஆதீனத்து இலக்கணம் - ஸ்ரீ முத்துக்குமார தம்பிரான் சுவாமிகளுடன் இருந்து ஸ்ரீ கந்தசாமியாரவர்கள் ஆராய்ந்து வந்தார்கள். அக்காலத்திலே எளியேனும்,
திரு. பெ கோவிந்தமூப்பனாரும் தணிகைப்புராணத்தைக் கந்தசாமியாரவர்கள் பால் கேட்கப் பெரிது முயற்சி செய்தும் மிகமிக அரிதாயிற்று. பின்பு, ஸ்ரீ கந்தசாமியார் மிக விரிவாக எழுதிவைத்துள்ள தணிகைப்புராணவுரைப்பிரதி அவர்கள் இறுதிக் காலத்திலே மாயமாயிற்று. தணிகைப்புராணத்துக்கு இதுவரையில் முறையே பாடங்கேட்டபடி திருவாவடுதுறையாதீனத்திலிருந்து மதுரை - ஸ்ரீ இராமசாமிபிள்ளையவர்கள் குறிப்பும், சேற்றூர் - ஸ்ரீ சுப்பிரமணியக்கவிராயரவர்கள் குறிப்பும், ஸ்ரீ பொன்னோதுவா மூர்த்திகள் குறிப்பும், ஸ்ரீ கந்தசாமியாரவர்கள் விரிந்தவுரையும் வெளிப்படாமல் தமிழ்மக்களுக்குத் தணிகைப்புராணச் சுவையைத் துய்க்கப் பெருந்தடைகள் பல இருந்தன. ஸ்ரீ பொன்னோவா மூர்த்திகள் தணிகைப்புராணக் குறிப்பொன்று தவிர ஏனையோர் குறிப்புக்கள் ஒன்றும் பயனிலவாயின. அவை எப்போது? யாரால்? எவ்வாறு? தமிழகத்து அச்சில் உலாவருமோ திருவருட்கே தெரியும். என் தமிழாசிரியராகிய - ஸ்ரீ பொன்னோதுவா மூர்த் திகள் குறிப்புடன் தணிகைப்புராணம் விரைவில் வெளிவர இருக்கும் செய்தி தமிழக மக்களுக்குப் பெரிதும் அகமிக மகிழ்வையுண்டு பண்ணும் எனவே நம்புகின்றேன்.
கவிராக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்ப முனிவரர் பிரபந்தங்களை ஒரு சேரத் தொகுத்து வெளியிடக் கட்டளையிட்டருளிய இவ்வாதீனத்து இருபத்தொன்றாவது குருமஹா சந்நிதானம் ஸ்ரீ-ல - ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக மூர்த்திகள் தணிகைப்புராணத்தையும் உடனடியாக ஆராய்ந்து அச்சிடக் கட்டளையிட்டருளினார்கள். திருவருளும் குருவருளும் முன்னிற்க.
இப்பிரபந்தங்கள் கற்போருக்கு எளிதாகப் பயன்படுமாறு சந்திகள் பிரித்து அச்சிடப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் குறிப்புரை எழுதுவதாயின் மிகவிரியும் எனவும், முன்னே குறிப்புரையுடன் வெளியிட்ட நூல்களைப் பின்னும் பின்னும் வெளியிடுவது தக்கதன்று எனவும், எளிதாகக் கிடைக்கப்பெறும் கச்சி - ஆனந்தருத்தி ரேசர்வண்டு விடு தூது முதற்பதிப்பு மூலபாடமாகவும், இரண்டு பதிப்புக்கள் உரையுடனும் மகாமகோபாத்தியாய ஸ்ரீமத்-ஐயரவர்கள் வெளியிட்டிருப்பதில் மூன்றாம் பதிப்பு குறிப்புரையுடன் இவ்வாதீனத்து 17-வது வெளியீடாக வந்திருக்கின்றதெனவும் எண்ணி இப்பிரபந்தங்களைக் குறிப்புரை முதலியன எழுதாமல் வாளா மூல பாடமாக அச்சிட நேர்ந்தேன். இவ்வாதீன வித்துவான் பல்கலைப் புலவர் - ஸ்ரீ வி. சிதம்பரராமலிங்கம்பிள்ளையவர்கள் எழுதி முன்பு வெளியிட்டுள்ள பஞ்சாக்கர தேசிகரந்தாதிக் குறிப்புரை மட்டும் இதிற்சேர்க்கப்பட்டுள்ளது காண்க.
குற்றமிருப்பின் பொறுத்தருளும்படி பெரியோரை வேண்டிக் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
''ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.''
- திருவருட்பயன்.
திருவாவடுதுறை,)
18-9-53. இங்ஙனம் ,
சித்தாந்தசைவமணி - த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளை,
ஆதீனவித்துவான்.
------------------
௨
சிவமயம்.
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்.
ஒன்றாவுலகனைத்துமானார் தாமே
யூழிதோறூழியுயர்ந்தார் தாமே
நின்றாகியெங்கு நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீயாகாசமானார் தாமே
கொன்றாடுங்கூற்றையுதைத்தார் தாமே
கோலப்பழனையுடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்களானார் தாமே
திருவாலங்காடுறையுஞ்செல்வர் தாமே.
- திருநாவுக்கரசுநாயனார்.
உ
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
ஸ்ரீ கச்சியப்பமுனிவர் வரலாறு.
இப்பிரபந்தங்களின் ஆசிரியராகிய ஸ்ரீ கச்சியப்ப முனிவரர் சற்றேறக்குறைய நூற்றறுபது வருஷத்திற்குமுன் தொண்டை மண்டலத்திலே, தணிகைத் திருப்பதியிலே, காஞ்சீபுரத்துப் பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே அபிஷிக்தர் மரபிலே அவதரித்து ஒழுக்கம் அன்பு அருள் முதலிய நற்குணங்களோடு வளருவாராயினார்.
பின்பு தந்தைதாயர்களாலே தக்க பிராயத்திலே வித்தியாரம்பஞ் செய்விக்கப்பெற்று, சிறிது கல்வி கற்ற வளவிலே, அக்கச்சியப்ப முனிவர், சிவக்ஷேத்திர யாத்திரை செய்யத் தொடங்கித் தொண்டை நாட்டிலுள்ள சிவஸ்தலங்களெல்லாம் தரிசித்துக் கொண்டு, சோழநாட்டிலே ஸ்ரீசிதம்பா முதலிய திருப்பதிகளைத் தரிசித்தார். பின்னர் ஸ்ரீ ஞானக்கோமுத்தியாகிய திருவாவடு துறையை அடைந்து, மடாலயத்தினுள்ளே புகுந்து திருக்கைலாச பரம்பரைச் சித்தாந்தசைவ ஞானபாநுவாகிய ஸ்ரீநமச்சிவாய மூர்த்தியைத் தரிசித்து, திருவருணோக்கஞ் சிந்திக்கப்பெற்று, அப்பொழுது அத்திருமரபிற் சின்னப்பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஞானாசாரியராகிய (அம்பலவாண) தேசிகரை ஒடுக்கத்திலே போய்த் தரிசித்துப் பேரன்போடு வணங்கினார். வணங்கியபின் அந்த ஞான தேசிகரிடத்தே, சமய தீக்ஷையும் விசேஷதீக்ஷையும், பெற்று, சிவாச்சிரமத்திற்குரிய துறவறத்தை அடைந்து, நிருவாண தீக்ஷையும் பெற்றுக்கொண்டார்.
உற்று நோக்கி ஆனந்தவெள்ளத்தில் அமிழ்ந்திக் காலந்தோறும் சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு திருவருட்செல்வர்களாய் வீற்றிருந்தார்கள்.
அப்போது, சிலகாலம் மழையில்லாமையால் வெப்பமிகுதி பற்றி ஜனங்கள் தாக சோகங்களுற்று வருந்துவதை நோக்கித், தெள்ளியோர் உள்ளமேபோல வெள்ளியம்பலத்திலே, ஆனந்த தாண்டவஞ் செய்தருளியகாலத்து, ஆடலின் வேகத்தால் அருமைத் திருமேனியில் ஆபரணமாக அணிந்துள்ள அரவங்கள் விடத்தை யுமிழ்ந்ததனால் தேவராதியோர்க்கு உளவாகிய தாக சோகங்களைத் திருமுடிக்கண்ணதாகிய கங்கையைக் காஞ்சி நதியாகச் செல்லும் வண்ணம் ஆஞ்ஞாபித்து மாற்றியருளிய பேரருண் முதலியவற்றை அடக்கி அரசம்பலவாணர்மீது பெரிதும் அருமையாகிய ஓர் பிரபந்தம் பாடி மழை வருஷிக்கச் செய்து,
ஜனங்களுடைய தாகசோகங்களை மாற்றியருளினார்கள். பின்னும் பட்டீசர் மீது பல பதிகங்கள் பாடிப் பலருக்குக் குட்ட நோய் முதலிய போக்கி மற்றும் பல அற்புதங்களையுஞ் செய்தருளினார்கள்.
அந்த ஸ்தலத்தின் மகிமைகளை உலகத்தார் பலரும் உணர்ந்துய்யும்படி திருவுளங் கொண்டு சொற்சுவையும் பொருட்சுவையும் இனிது விளங்கும் வண்ணம் காலம் இடங்களுக்கேற்ற அலங்கார அமைதியோடு பேரூர்ப்புராணத்தையும் மொழிபெயர்த்து அருளினார்கள்.
அதன்பின்பு திருத்தணிகையை அடைந்து ஆங்கே சிலகாலம் வீற்றிருந்து இயற்றமிழ்ப் போதகாசிரியர் விசாகப்பெருமாளையர், வித்துவான் - சரவணப்பெருமாளையர் இருவருக்கும் பிதாவாகிய கந்தப்பையர் முதலாயினோருக்குக் கல்வி கற்பித்தருளினார்கள். அப்போழ்து, பலவித்வான்களும் தமிழிலே புறச்சமயியாற் செய்யப்பட்ட சீவகசிந்தாமணியைப் பேரிலக்கியமாகக் கொண்டாடுதலைச் சித்தத்திலே கொண்டு, அதினும் மாட்சிமை பெறத் திருத்தணிகைப் புராணத்தை மொழிபெயர்த்தருளிச்செய்தார்கள். சொல் வளம், செய்யுணடை, சந்தம், பொருட்சுவை யென்னும் இவைகளிலே தமிழ் மொழியிலுள்ள எந்த இலக்கியமும் இதற்கு மேம் பட்டிலதென்பது அப்புராணத்தை ஓதியுணர்வோர்க்கு எளிதில் விளங்கும் என்பர்.
தம்மாணாக்கரிற் சிறந்தவராகிய கந்தப்பையருக்கு வயிற்றிலே ஓர் குன்மநோயுண்டாய பொழுது, தணிகையாற்றுப்படையைப் பாடி, அவர் நோயை மாற்றியருளினார். அதனால் அவர்கள் சிவத்தியான வுறைப்பிற் சிறப்புடையரென்பது தெள்ளிதிற் புலப்படும். மற்றும் திருத்தணிகைப் பதிற்றுப் பத்தந்தாதி முதலிய பிரபந்தங்களும் அங்கே இருந்தபொழுது இயற்றினார்கள்.
பின்பு சென்னை மாநகர்க்குச்சென்று அங்கே சிறிது காலம் வசித்தார்கள். அப்பொழுது அவ்விடத்துப் பக்தஜனங்களும், பிரபுக்களும் வேண்டிக்கொண்டபடி விநாயகபுராணம், சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ் முதலியன இயற்றி, அவர்கள் அடியுறையாக இரண்டாயிரம் வராகனிட அதைக்கொண்டு இத்திருவாவடுதுறை யிலே ஆதீன பரமாசாரியராகிய ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகள் சந்நிதி மண்டபப்பணி அணிபெறச் செய்வித்தருளினர்.
விநாயக புராணம் அரங்கேற்றுஞ் சபைக்கு ஐயாப்பிள்ளை என்னும் ஒரு பெரிய பிரபு "நாம்வர இதென்ன இராமாயணமா'' என்று சற்றே இகழ்ந்தனர். மற்றப் பிரபுக்கள் முனிவரர்க்கு அதனை மறைத்தும், அவர் தமது புராணத்தைத் தொடங்காது இராமாயணத்தை எடுத்துக்கொண்டு யாவரும் பிரமிக்கும்படி முதல் ஆறு செய்யுளில் நூறு குற்றம். ஏற்றினார். உடனே அப் பிரபு நூறுவராகனும் , பீதாம்பர முதலியவைகளும் கொண்டு போய்ப் பாதகாணிக்கையாக வைத்துத் தீர்க்க தண்டஞ் சமர்ப்பித்து, சுவாமிகளது மகத்துவம் அறியாத ஏழையைத் தேவரீர் காத்தருளுக வென்று விண்ணப்பஞ்செய்ய, அதன் பின்பு தமது புராணத்தைத் தொடங்கி அரங்கேற்றினார்கள்.
இம்முனிவர் சென்னப்பட்டணத்திலிருக்கும் போது, காஞ்சீபுரத்தில் எழுந்தருளியிருந்த அவராசிரியராகிய ஸ்ரீமாதவச்சிவஞானயோகிகள்பால் ஆங்குள்ள தமிழ்வித்துவான்கள் ஒருங்குகூடி, நீவிர் காஞ்சிமான்மியஞ் செய்யப்புகுந்து அதன்கண்ணே கடவுள் வாழ்த்தில், "சங்கேந்து மலரக்குடங்கை " என்பதை முதலிலுடைய சபாநாயகர் துதியை முன்னர் அமைத்து, "தணந்தபெரும் " என்பதை முதலிலுடைய ஸ்தலநாயகராகிய ஏகாம்பரநாதர் துதியைப் பின்னர் வைத்தது தவறென்று சாதித்தனர். அச்சிவஞானயோகிகள் தம்முடைய மாணாக்கனைக் கொண்டு அவர்களைத் தலைமடங்கச் செய்வதே தகுதியென்று திருவுளங்கொண்டு, அதனைக்கச்சியப்ப முனிவருக்குத் தெரிவித்தார். உடனே முனிவரர் சென்னையினின் றும் புறப்பட்டு ஸ்ரீகாஞ்சி சேர்ந்து, அனைவரையும் ஏகாம்பரநாதர் சந்நிதி மண்டபத்திற் சேரச்செய்து, பிரசங்கிக்கத் தொடங்குவாராகி, அந்தஸ்தலத்து ஓதுவாரை நோக்கி இந்த ஸ்தலத்துத் தேவாரப்பதிகங்களுள் ஒன்றனை முதலிலே ஓதும்படி சொல்ல, அவர் ''திருச்சிற்றம்பலம்'' என்று தொடங்கினர். அப்பொழுது கச்சி யப்ப முனிவரர், ஆக்ஷேபித்த வித்துவான்களை நோக்கி இவர் "திருச்சிற்றம்பலம் " என்று தொடங்குகின்றாரே, இது உங்கட்குப் பொருத்தந்தானா? இவரை நீங்கள் சேர்ந்து இச்சந்நிதியில் இந்த ஸ்தலத்துத் தேவாரப்பதிகங்களைப் பிருதிவியம்பலம் என்று சொல்லி ஆரம்பிக்கும்படி செய்யக்கூடாதா? வென்ற அளவி லே, அனைவரும் வாயெடாது ஊமர்கள் போலத் தலைவணங்கியிருந்தனர். அதன்மேல் விநாயகர் காப்புக்குப்பின், கடவுள் வாழ்த்தில் முதலாவது உயிர்களின் போகம் வீடுபேறுகட்கு ஹேதுவாகப் பஞ்சகிருத்தியத் திருநிருத்தஞ் செய்தருளும் சபாநாயகர் துதி கூறுதலே முறையென்று பல நியாயங்கள் காட்டி அவ்வித்துவான்கள் அவமானம் அடையச் செய்தனர்.
பின்பு, ஸ்ரீகாஞ்சியில் வீற்றிருக்கக்கருதி அங்கே அமர்ந்த பொழுது தம்முடைய ஆசிரியர் திருவாக்கைச் சிரமேற்கொண்டு காஞ்சிப் புராணத்து இரண்டாங்காண்ட மொழிபெயர்ப்புச் செய்தருளிப், பின்னர்க் கச்சியானந்தருத்திரேசர் வண்டு விடு தூது கச்சியானந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி, பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி முதலிய பல நூல்கள் இயற்றியருளினார்.
இங்ஙனம் லோகோபகாரமாகப் பல நூல்கள் இயற்றிப் பல நன்மாணாக்கர்களுக்குக் கற்பித்துத் தமிழ் மொழியை அபிவிருத்தி செய்து, சிவபேற்றிற்குக் காரணமாகிய சிவத்தியானாதிகளின் உறைப்பில் வதிந்தருளிய ஸ்ரீ கச்சியப்ப முனிவரர் ஸ்ரீ காஞ்சீபுரத் திலே சாலிவான சகாப்தம் 1712- க்குச் சரியான சாதாரண௵ சித்திரைமீ 11௨ மங்கள வாரத்தில், புனர்பூச நக்ஷத்திரமும் பூருவ பக்ஷத்துச் சத்தமியுங்கூடிய கும்பலக்கினத்திற் சிவ பரிபூரண தசை யடைந்தருளினர். (கி.-பி. 1790)
ஏர்தரு சாலி வாகன சகாததம்
ஆயிரத் தெழுசதத் தொருபத்
திரண்டின் மேற்சாதா ரணவரு டத்தில்
இயை தரு சித்திரைத் திங்கள்
சார்தரு தேதி பத்தினோ டொன்று
தகுசெவ்வாய் வாரம்பூ ருவத்திற்
சத்தமி புனர்பூ சாத்திரு நாளில்
தவலறு கும்பலக் கினத்திற்
சீர்தரு துறைசை வாழ்சிவ ஞான
தேவன்மா ணாக்கருண் முதன்மை
திகழ்ந்துள கச்சியப்பமா முனிவன்
திருப்பெருங் காஞ்சியி லெய்திச்
சேர்தரு மடியார் தமதக விருளைத்
திருந்து தன் னருளா லகற்றி வீடுறுத்திச்
சிறந்தபூ ரணமடைந் தனனே.
இச்செய்யுள் முற்காலத்தது.
ஸ்ரீமெய்கண்டதேவர் திருவடி வாழ்க.
ஸ்ரீமாதவச் சிவஞானயோகிகள் திருவடி வாழ்க.
ஸ்ரீ கச்சியப்ப முனிவரர் திருவடி வாழ்க.
------------
குருபரம்பரை.
அருள்வளர் நந்தி மேதகை விளக்கி
யருள்சிவ ஞானபோ தத்தைத்
தெருள்வளர் தமிழ்ச்செய் தளித்தமெய் கண்ட
தேவனற் சந்ததி விளங்க
வருமொரு துறைசைத் திருநகர் நமச்சி
வாயதே சிகனொடு மிந்தக்
குருபரன் வழிவந் தருணனி கொழிக்குங்
குரவர்கள் பலரையுந் துதிப்பாம்.
- தணிகைப்புராணம்.
-------------
௨
சிவமயம். - திருச்சிற்றம்பலம்.
கவிராக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரபந்தங்கள்.
1. பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி
திருவாவடுதுறையாதீனம்.
''கயிலாய பரம்பரையிற் சிவஞான போதநெறி
காட்டும் வெண்ணை
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர்
மெய்ஞ்ஞான பாநு வாகிக்
குயிலாரும் பொழிற்றிருவா வடுதுறைவாழ் குருநமச்சி
வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் றிருமரபு நீடூழி
தழைக மாதோ.''
--- ஸ்ரீ மாதவச் சிவஞானயோகிகள்.
காப்பு.
அஞ்சிறைவண் டினம்புரளுங் கரடமதக் கலுழிவிண்ணோர்க்
கலக்கண் காட்டும்
வெஞ்சினவே லவுணர்நெடும் படை முழுதும் பொருதடமுன்
விசித்த நீலக்
கஞ்சுகமே யெனவுடலம் போர்த்தொளிருங் களிற்றுமுகக்
கடவுள் வாசச்
செஞ்சரணப் போதிறைஞ்சிப் பிரமீசன் றனைவழுத்தல்
செய்வா மன்றே. (1)
வளிவழங்கு மொருநிலைத்தண் மழைவழங்கு மொருநிலைவாம்
புரவித் தேரின்
ஒளிவழங்கு மதிவழங்க வுடுவழங்க நிலையுளவென்
நூழி னோங்கித்
தெளிவழங்கு மணிப்பெருங்கோ புரத்தொருசா ரமர்ந்தருளித்
தேய மெல்லாங்
களிவழங்கு பிரமநகர்ச் சக்கரத்தைங் கரக்களிற்றைக்
கருத்துள் வைப்பாம். (2)
நூல்.
பூமருவும் பசுந்துணர்க்கற் பகநாடு புரந்தளிக்கும்
புலவன் வாணி
நாமருவு மயன்கமலை நாயகனான் மறையின்னு
நாடிக் காணாத்
தேமருவுங் குழலுமையா ளிடத்தானைப் பிரமநகர்
சிறப்ப வோங்கும்
மாமருவுங் கொன்றையந்தார் முடியானை யவனருளால்
வணங்கி னேனே. (1)
வணங்குமிடு கிடையுமையா டவமுஞற்றுங் காஞ்சிநகர்
வரைப்பி னும்பர்
கணங்கள் கிளர்ந் திறைஞ்சுசது ரானனசங் கரத்தமர்ந்த
கருணை வாழ்வைப்
பணங்கிளர்பாப் பணிதயங்கும் பிரமீசன் றனைவழுத்தும்
பண்பு மிக்கார்க்
கணங்குறுநோய் வினைமுழுதும் வளியெதிர்ந்த பஞ்சியென
வகன்று போமே. (2)
போந்து திரை கொழித்து மணி வரன்று நறுஞ் சேயாற்றுப்
புனலின் மூழ்கித்
தேந்துணர்ப்போ தலர்சொரிந்த நான்முகற்கு நான்முகத்துந்
திகழ வேதம்
ஈந்தருளும் பிரமநகர்ப் பிரமீசன் றனையிறைஞ்சி
யேத்தி னோர்கள்
காந்துமணி முடியிமையோர்க் கிறையவராய்ப் பேரின்பங்
கலந்து வாழ்வார். (3)
வாரணிந்த வணங்கனையார் களபமுலைப் பெருங்குவடு
மதர்த்து லாவுங்
கூரணிந்த வேற்றடங்க ணெடுங்கடலுங் குழற்காடுங்
குமைத்தெ னுள்ளத்
தேரணிந்த பிரமநகர்ப் பிரமீசன் புயவரையு
மிலங்கு மேனிச்
சீரணிந்த பெருவனப்பாங் கடலும்வளர் சடைக்காடுஞ்
செறிந்து மன்னும். (4)
மன்னியநான் முகனெழுத்து மதன்போருங் கூற்றொறுக்கும்
வதையு மாற்றும்
நன்னர்மருந் துட்கொண்டே னவையாவை யெனினுலகீர்
நவிற்றக் கேண்மின்
கன்னிமதில் புடையுடுத்த பிரமநகர்ப் பிரமீசன்
கபாலக் கையுந்
துன்னியவா னிருள் கிழிக்கு நுதல்விழியுந் துலக்குமலர்ப்
பதமு மாதோ. (5)
மாதொருபா லிடங்கொள்ள மற்றொருபான் மாலவற்கு
மகிழ்ந்து நல்கும்
வீதுதைபைந் துணர்ப்பொதும்பர்ப் பிரமநகர்ப் பிரமீசன்
விரைசூழ் பாதப்
போதுதொழு தேத்துநர்க்குப் பொகுட்டலர்த்தா மரைத்தவிசிற்
புத்தே ளாதிக்
கோதுகுநற் பதங்களெலாங் கொடுக்குமெனக் கூறுவதோ
ரிறும்பூ தன்றே. (6)
அன்றியமுப் புரம்பொடிப்ப வசும்புகதிர்ப் பொலஞ்சிமய
வடுக்கல் கோட்டிக்
கன்றுகுணி லாவெறிந்த கணைபூட்டும் பிரமநகர்க்
கடவு ளார்தம்
பொன்றயங்கு மலர்ப்பாதப் பூசனையின் பயனன்றோ
புயலை மெய்யால்
வென்றநெடு மான்முதலோர் வீற்றிருக்கும் விம்மிதமார்
பதங்க ளெல்லாம். (7)
எல்லாரு முனைப்போற்றி யினியவணிந் தினியநுகர்ந்
தினிய செய்ய
வல்லாதா ரெனநீமற் றென்னேதோ லரவணிந்து
மறுகத் தாக்கும்
அல்லார்ந்த விடமுண்டு புறங்காட்டி னடங்குயின்றா
யமர ரேறே
சொல்லார்ந்த பெருங்கீர்த்திப் பிரமநகர்ப் பெருமானே
சோதி யானே. (8)
சோதியார் சுடர்களெல்லாந் தூங்குவீங் கிருட்பிழம்பாஞ்
சோதி யாகிப்
பேதியா விருட்பிழம்பு வெளியாகு மலவிருளைப்
பெயர்த்தாட் கொள்ளும்
வேதியா பிரமநகர் வித்தகா வெனதிடுக்கண்
வேலை வல்லே
சேதியா தடியேனைப் புறக்கணித்தா லுலகுன்னைச்
சிரிப்ப தாமே. (9)
சிரித்துவரத் தாலுயர்ந்த புரம்பொடித்தான் வழிபாடு
செய்து போற்றும்
வரித்தகழற் றுவரையர்கோன் பார்த்தனுட னமராடி
வரங்க ளீந்தான்
விரித்தமறை மலரவனுக் களித்தருளும் பிரமநகர்
விமல னம்மா
பரித்தருளுந் திருவுளப்பாங் கிதுவெனமற் றெவர்தெரிந்து
பகரற் பாலார். (10)
வேறு.
பாலாழி கடைந்தமுது பருகமதி யாதிறந்த
மாலாதி யிமையவர்கள் வந்துசர ணடைதலுமே
ஆலால மமுது செய்த பிரமநக ரமரர்பிரான்
சாலாவென் குணம்பொறுத்துத் தகுவனவே யருளுமே. (11)
அருளுருவாய்ப் பிரமநக ரமர்ந்தருளும் பெருகொளியில்
தெருளுருவா யழுந்தாது செயிர்வலியாற் பிரிந்தன்னோ
இருளுருவா மலத்தழுந்தி யிருவினையிற் றுடக்குண்டு
மருளுருவா மரமேய வலைப்பட்டுக் கிடந்தேனே. (12)
தேனேறு மிதழிநறுந் தெரியல்கமழ் சடைமுடியில்
ஊனேறு தலையணிந்த பிரமநக ருத்தமனே
வானேறு புகழடியார் வதியுமலர்க் கழலிணைமற்
றியானேற வளித்திடினு மெம்பெருமாற் கிழிவின்றே. (13)
இழிவின்றித் தவமியற்றி யெல்லோரு மூழியினும்
அழிவின்றி நின்றவுன தடியடைய முயல்கின்றார்
ஒழிவின்றி யானுலகி லுழிதருவே னுய்குவனோ
கழிவின்றி யருள்சுரக்கும் பிரமநகர்க் கண்ணுதலே. (14)
கண்ணுதலு மிளநகையுங் கையுகிருங் கழற்காலும்
விண்ணுரிஞ்சு மதில்புடைசூழ் பிரமநகர் வீற்றிருந்த
அண்ணலே யில்லைகொலோ வறந்திறம்பு மென்வினையைத்
தண்ணருளா லொறுத்துமயர் தவிர்த்தருளா திருந்தனையே. (15)
இருந்தனனெவ் விடத்துநிறைந் தென்றாலு முயிர்களெல்லாந்
திருந்தவெழிற் பிரமநக ரிடங்கொண்ட சிவபெருமான்
மருந்தனைய திருமேனி வழிபாட்டின் பயத்தன்றிப்
பொருந்துமலந் துமித்தின்பப் புணரிபடி வாரிலரே. (16)
இலம்பாடு பிணிகாம மிளிவரலா திகளுறினுஞ்
சிலம்பாடு கழற்கன்பு சிதையாமை யளித்தருளாய்
நலம்பாடு நாவலர்க ணயந்தேத்தும் பிரமநகர்த்
தலம்பாடு பெறவிமயத் தையலொடும் வீற்றிருந்தோய். (17)
இருந்தோடு பெருந்தோளி னிடையுரிஞ்ச வொருபுடையே
முருந்தோடு மிளமுறுவன் முகநிமிர்த்துக் கடைக்கணித்து
மருந்தோடு பொரமொழிவார் மயறுமிக்கு மருந்திதழிக்
கருந்தோடு செறிசடிலப் பிரமநகர்க் கடவுளே . (18)
கடவுளரா யினுமன்பிற் கலவாரே லவர்க்கரியான்
அடர்வினைமா னிடரேனு மன்பினரே லவர்க்கெளியான்
மடலவிழ்பைந் துணர்ப்பொதும்பர் வானவர்நாட் டினு நிழற்றும்
இடனகன்ற பிரமநக ரிடங்கொண்ட வெம்மானே. (19)
மானேந்து கரதலமும் விடமேந்து மணிமிடறுங்
கானேந்து புனற்சடையுங் கரிகண்டாய் மடநெஞ்சே
ஆனேந்து கொடியுயர்த்த பிரமநக ரங்கணனம்
ஊனேந்து முடற்பிறவி யுறுவிழுமங் களைதற்கே. (20)
வேறு.
தற்கொண்ட வுள்ள முரணித் திரிந்த தகுவோர் புரங்க டழலப்
பொற்குன்று வாங்கி யமராட் டுகந்து புகழ்திக் கணிந்த புலவன்
நெற்குன்ற மெங்கு நிலைபெற்று மல்கு பிரமா புரத்து நிமலற்
கற்கொண்டு நெஞ்ச மிகல்கிற்றி யாயி னழிவாயிதுண்மை யறியாய். (21)
அறியாமை யுய்த்த பழிபாவ மஞ்சி
யறனூ னவிற்று கழுவாய்
முறையா லுழக்கு மவர்கட் கொழிக்கு
முறைதேர்ந் திருந்து முறையோ
செறிபாவ பேத மறிவுற் றுஞற்று
சிறியேற்கு முய்தி வருமே
நெறியா லுயர்ந்த பிரமா புரத்து
நிறைஞான மோன முதலே. (22)
முதலற்று நின்ற முதலாகி மற்று முடிவற்று நின்ற முடிவாய்ப்
பதமற்று நின்ற பதமாகி மண்டு பயனற்று நின்ற பயனாய்
மதமற்று நின்ற மதமாய் வயங்கு பிரமா புரத்த மலனை
இதமற்று நின்ற விதமாக வெண்ண வறியா திழந்த துளமே. (23)
உளர்வண்டு பாடி நறைவாய் மடுக்கு
மொளிர்கொன்றை வேணி மதியப்
பிளவொன் றணிந்து நடமாட் டுகந்த
பிரமா புரத்து வரதன்
அளவின்றி நின்ற கருணைப் பெருக்கி
னலையா தழுந்த நினையிற்
களவொன்று மின்றி வெளிவந்து நின்று
கதழ்விற் பணித்தருளுமே. (24)
அருளிற் கலந்த வறிவுற் றலாது
தொழிலொன்று மாற்றல் புரியாப்
பொருளிற் கலந்த பிரமா புரத்து
விகிர்தா புயங்க நடனா
தெருளிற் கலந்த விமையோர் முயன்று
தெருமந்து நின்று கழிய
இருளிற் கலந்த தமியேனை யாண்ட
விதுவென் குறித்து மொழியாய். (25)
மொழியாக மாதி வழிவைத்து மூர்த்தி
முதன்மூன்று மாகி மிடைவுற்
றொழியாத வண்ண மருள்செய்ய நின்று
மொழிவே னெனுண்மை யிதுவாற்
பிழிவார் பொதும்பர் புறமெங்கு மொய்த்த
பிரமா புரத்து விமலர்
கழியாத வீடு நிறைவிற் கலத்தல்
கலவாது கோடறகுமே. (26)
தகுதிக்க ணின்று தவமே புரிந்து
தறுகட் புலன்கள் களைவோர்
தொகுதிக்க ணின்று மொழிவேனை மைய
றொடரா தொழிப்ப துளதே
பகுதிக்க ணின்று புலவோர் குழாங்கள்
பலகாலு மேத்து விழவின்
மிகுதிக்க ணின்ற பிரமா புரத்து
விளைகின்ற வின்ப வுணர்வே. (27)
உணர்வா யுணர்ந்து மொளியா யொளிர்ந்து
முயிரா யுயிர்த்து மொழியாப்
புணர்வாய்ப் புணர்ந்து மதுவுங் கடந்த
பொருளென்ப தேற னகுவீ
இணர்வாய் பொதும்ப ரிளகிக் குளிர்ந்த
பிரமா புரத்தி னிருடோய்
வணர்வார் கதுப்பி னுமையோ டமர்ந்து
வரமுய்த் தளிப்ப வனையே. (28)
வனை மட் பிறக்க வொழிவின்றி யாழி
மடியா துழற்சி யதுபோல்
வினைதொக் கிருப்ப தொழிவின்றி யாக்கை
விளியாமை வைத்த கருணை'
முனைவற் பணிந்து பிரமா புரத்தின்
முதிரன்பின் வைகு தவர்கள்
இனைவுற் றிரார்க ணினைவுற்ற யாவு
மினிதுற்று வீடு றுவரே. (29)
உறுகால் வழங்கு நெடுநீர் வளர்த்த
வுயர்தெங்கு வாழை பொதுள
அறுகா லுழக்கு மலர்வாவி சூழ்ந்த
பிரமா புரத்தி லமரும்
முறுகால முண்ட முதல்வற் பணிந்து
முடியாத வின்ப நுகரீர்
இறுகால மோர்ந்து தெறுகாலர் சூழி
கருத்து ரைமினே. (30)
வேறு.
மின்னி லங்கிய முகிற்குலம் விலங்கலென் றிவரும்
பொன்னி லங்குமா ளிகைப்பிர மாபுரப் புனிதன்
தன்னி லங்கு தாண் மலர்முனர்க் கூம்பிய தடங்கை
மன்னி லங்குவா னவர்கரங் கூம்புமுன் மலரும். (31)
மலர்ந்த பண்ணை சூழ் தரும்பிர மாபுர வள்ளல்
அலர்ந்த தன்புக ழழுத்துநா வினுமவி ருருவங்
கலந்த நெஞ்சினுங் கழலிணை யிருத்திய சிரத்தும்
பொலிந்த வாணியைக் கமலையைக் கங்கையைப் புணர்த்தும். (32)
புணர்த்த மாயையாற் புணர்ந்ததன் னியல்புகா ணாமை
வணர்த்து வல்வினை யீட்டவு மறுத்தெனை யாண்டான்
பிணர்த்த நெட்டரைச் சோலைசூழ் பிரமமா புரத்தின்
உணர்த்த வுள்குவோ ருயிர்தனக் குடலென வுகைப்போன். (33)
உகைக்கு மைம்பொறி யுடற்றுமூ விருவகைக் குற்றந்
துகைக்கும் வல்வினை தொடக்குமுன் போலமா மாயை
பகைக்கு முப்புரம் பாற்றிய பிரமமா புரத்தோன்
தகைக்கு மின்னருட் கடலினைத் தணத்தொறு மம்மா. (34)
அம்மெ லோதியா ராடகப் பாடகத் தளிரும்
விம்மு பூண்முலை முகிழுங்கைம் மலருமெய் யணியா
திம்மென் காலமு மிரேனையும் பிரமமா புரத்தோன்
வம்மென் றாண்டுதன் வரம்பிலாற் றலைத்தெரித் தனனே. (35)
தெரித்து விட்டதான் முப்பொரு ளியற்கையுந் திருவாக்
கரித்து விட்டதா லடர்மலம் விழியென தறிவை
இரித்து விட்டதா லிலகுசே வடியெனை யொன்றாய்த்
தரித்து விட்டதாற் பிரமமா புரத்தொளி தானே. (36)
தானுந் தையலுஞ் சார்ந்திருட் பிழம்புகால் சீத்திட்
டூனுந் தங்கிய வுயிரையும் வேறுசெய் தாண்டான்
மீனுந் திங்களு மென்மெல நுழைந்துலாம் பொதும்பில்
தேனுந் தும்பியுஞ் செறிபிர மாபுரச் செல்வன். (37)
செல்வ மோபெருஞ் செல்லனல் குரவதிற் செல்லல்
கல்வி யோபெருஞ் செல்லல்கல் லாமையுஞ் செல்லல்
எல்வ ளாம்பொலஞ் சடைப்பிர மாபுரத் திறைவன்
சொல்வ ளாவிய துணையடி தொழும்பரி சிலர்க்கே. (38)
பரிசி லாத்தனை யொருவருக் களித்தவர் பரர்க்குப்
பரிசி லாம்வகை யில்லைதற் பணிந்தவர்க் கெல்லாம்
பரிசி லாத்தனை யருள்பிர மாபுரப் பகவன்
பரிசி லாத்தொழு வார்க்குமேற் றரப்படா திருந்தான். (39)
இருந்தை மேனியாற் கீந்துதன் வலமெலாங் கறுத்தான்
முருந்துண் மூரலாட் களித்திட முழுவதும் பசந்தான்
திருந்து தீயென விருவர்முற் சேந்தனன் பிரமூர்ப்
பொருந்த ருட்குறி யதனிடைப் புணருரு விளர்த்தோன். (40)
வேறு.
விளரிவண் டிமிர்பொழில் விண்ணம் போழ்ந்துமேல்
வளர்பிர மாபுர வரைப்பின் வள்ளலார்
பிளவியன் முடிமதி பெட்ப வுள்குவோர்
வளவியன் மதன்முடி மதிக்கஞ் சார்களே . (41)
சார்பெறு சார்பெனச் சார்ந்து மாதவா
தேர்பிர மாபுரச் செம்மற் கண்டகண்
வார்பிதிர் முலையினார் வனப்புண் மூழ்கினும்
ஊர்பகட் டியமனா ருருவு காணுமோ. (42)
கானரும் பிரமமா புரத்துக் கண்ணுதல்
எணருங் கழன்மலர் பெய்த கைத்துணை
ஏணுறு மமரர்க்கு மீத லல்லது
தாணுவென் றொருவர்பாற் றாழ்ந்தி ரக்குமோ. (43)
இரப்பதும் பிரமனூ ரிறைவன் சேவடி
தரப்பெறு வதுமது தானன் றில்லைமற்
றிரப்பதுங் கொடுப்பது மினைதன் மாலைய
தரப்பெறும் பயனறி தகுவர்க் கென்பவே. (44)
வேய்புரை தோளியோர் பாக மேய்தும்
பாய்புகழ்ப் புதல்வரைப் பயந்த வண்ணமும்
வாய்புணர் பிரமனூர் வதிந்த தும்பிரான்
தோய்புன லுலகெலாம் புரக்குஞ் சூழ்ச்சியே. (45)
சூழ்ந்தவ ருயிர்புறஞ் சூழ்ந்து கொள்ளுமே
வீழ்ந்தவ ருள்ளகம் வீழ்ந்தொன் றாகுமே
போழ்ந்தவெண் மதிபொலஞ் சடிலச் சூழலின்
வாழ்ந்தொளிர் பிரமனூர் வதிந்த வள்ளலே. (46)
வள்ளலென் றுரைப்பதென் மதித்துச் சொற்றிடாய்
தெள்ளிய பிரமமா புரத்துச் செம்மலே
தொள்ளையி லார்பொருட் டொகையு மாக்கையும்
உள்ளிய வுயிருங்கொண் டொழியு நின்னையே. (47)
நின்னையொப் பாரிலை நிறைகு ணத்தினில்
என்னையொப் பாரிலை யிழிகு ணத்தினில்
அன்னதா மாண்டவ னடிமை யென்பது
புன்னகை தரும்பிர மாபு ரத்தனே. (48)
புரத்தினால் வலியினாற் போர்செய் மாண்பினால்
வரத்தினா னிகரிலா வவுணர் வாழ்க்கைநாள்
துரத்தினான் பிரமனூர்த் தோன்ற லென்மல
உரத்தினைத் துரப்பதோ ரூக்கங் கண்டிலான். (49)
கண்டிலா னன்பர்செய் கரிசி யாவதுங்
கொண்டிலா னன்பிலார் குணமும் யாவதும்
பிண்டிவார் பொழில்கமழ் பிரம மாபுரத்
தண்டவா ணர்கடொழ வமர்ந்த வண்ணலே. (50)
வேறு.
அண்ணன்மறை நாடரிய வங்கண னிரங்கி
நண்ணுபிர மாபுர நலத்தக விருந்தும்
வண்ணமலர் தூவிவழி பாடுபுரி கில்லேன்
எண்ணரிய தீவினை யிடங்கர்கவர் சேயேன். (51)
சேயனணி யான்பிறிவி லான்செறிவி லான்மண்
பாயபுன றீவளி பரந்தவெளி யானான்
மாயனய னாயவர் மனத்தினொளிர் கல்லான்
ஆயபிர மாபுரனை யாவாரி கிற்பார். (52)
பார்பக விழும்புனலை வேணிபயில் வித்தாய்
சார்பிரம னூரிலுறை தத்துவவி தென்னே
ஏர்புனையு மண்டில மிருந்துமறை யோர்கை
வார்புனலை வைகறொறு மேற்கவரு கின்றாய். (53)
வரும்பிறவி நல்குவினை மாட்டிநுகர் வாய
விரும்பயனை யேறுவினை தாழவினி தேற்றுப்
பெரும்பய னளித்தபிர மாபுர விடத்தோன்
அரும்பிறவி பத்துடைய வான்கொடி வலத்தோன். (54)
வலத்தய னிடத்தரிநன் மார்பிலர னைத்தந்
துலப்பிலருண் முத்தொழி லுவர்க்கருளு மெம்மான்
தலத்திலுய ரும்பிரம னூரனனி தக்கோன்
நலத்தினிடு பிச்சைகொள நாண்சிறிது மில்லான். (55)
இல்லினை யிகழ்ந்துவன மேகிமுயல் வுற்று
நல்லதுற வெய்தினு நலத்தபிர மூரான்
வில்லுமி ழிருங்கழல் விராவுநெறி யின்றே
வல்லவிரு பற்றுமற மாற்றும்வழி யல்லால். (56)
ஆலமுண வாடறொழி லாடைபுலி யானைத்
தோலணிய ராவின னெனத்தொழு கிலாரார்
மூலவினை மோதுபிர மூரின்முதல் வோனைச்
சாலவவ னன்பர்களு மத்தகுத ரத்தோர். (57)
தரங்கமலி பாற்கடற ணாரமுத மன்றி
வரங்கண்மலி தேவரை வருத்துக்கடு விற்றோ
இரங்கியுயிர் வான்கதி யிடும்பிரம னூரிற்
பரங்கருணை யானருள் பணைத்தவினை யொன்றே. (58)
ஒன்றுமல வேர்வினை யிரண்டுமல மூன்று
வென்றுவரு நாற்பிறவி யைம்பொறியும் வீட்டி
நன்றுவிழி யாறெழுமெ ணன்புறு நலத்தோர்
மன்றபிர மூரன்வடி வொன்பதுணர் பத்தோர். (59)
பத்தில்வரு பத்திலுறு பத்தினி லிறந்தோர்
பித்தனரு ளாழிபிர மாபுரனொ டொன்றாம்
அத்தகைய முத்தியி னழுந்தினல தேனை
முத்திகளு மைந்தொழின் முதன்மைகளும் வேண்டார். (60)
வேறு.
வேண்டி யண்ணலா ரருளினாற் பார்ப்பதி
விடுத்தநீ லுருக்கன்னி
மாண்ட தானவர் கோடியோர் சூலத்தின்
மாட்டியவ் வதைதீர்ப்பான்
காண்ட குந்திருக் கோடிதீர்த் தத்தடங்
கண்டருச் சனைசாலப்
பூண்டசீர்ப்பிர மூரனைப் போற்றுவார்
போற்றிடார் பவச்சார்பே. (61)
சார்ந்த நான்முகற் கருளுவான் கோடிதீர்த்
தத்தடத் தொருபாங்கர்
ஆர்ந்த பேரருண் முகிழ்த்தெழ நான்முக
மலர்ந்துதா னேதோன்றி
வார்ந்த வேணியான் வளர்சது ரானன
சங்கர மதிப்போரிற்
பேர்ந்து வல்வினைத் தொடரெழு காவதம்
பின்னிட வொளித் தோடும். (62)
ஓடக் கண்டன னெனதிய லோட்டிய வுருப்பவிர் மலமென்னால்
ஆடக் கண்டன னென்னைமுன் னாட்டுமைம் பொறிகளு மாங்காங்கே
வாடக் கண்டன னெனதுயிர் வாட்டுமவ் வல்வினைப் பறம்பெல்லாம்
நாடக் கண்டிடாப் பிரமமா புரத்தனை நாடிக்கண் டருளாலே. (63)
அருளி லாருல கோரென வழக்கிலைப் பிரமனூ ரடிகேளோ
தெருளு லாநின திடமுரி மாலவன் றீர்தரக் கைக்கொண்டு
பொருளு லாமரற் குரியமார் புங்குறி பொறித்தன ளுமைமாயோன்
மருளிலாவயற் குரியநின் வலப்புறம் வெளவின னிருந்தானே. (64)
இருந்த நெஞ்சகத் திருந்தொளிர்ந் தெழுந்தநெஞ்
சிடை யெழுந் தொளிர்கல்லாத்
திருந்து பைம்பொழிற் பிரமனூ ரிறைவன்முற்
சேறலு நுதல் வாட்கண்
பொருந்து வல்வினைக் காட்டையுஞ் செவ்விழி
புகரிரு ளையும் வெண்கண்
வருந்து பல்பொரு ளார்வவெங் கோடையும்
வாய்மடுத் திருமாக்கும். (65)
மாக்கு லம்பயில் சோலைமென் னீழலும் வந்தசை யிளங்காலும்
பூக்கு லம்பயில் சேக்கையும் புலம்பினிற் புலம்புறத் தெறுமாபோல்
தீக்கு லம்பயி லுலகுனைத் தீர்வுழித் தெறுவதும் வருங்கொல்லோ
ஆக்கு லம்பனி யாதுகல் லேந்திய வானுகை பிரமூரா . (66)
பிரம னாயுல களித்தனை மாயனாய்ப் பேணினை தழற்சூல
வரத னாயவை யழித்தனை யீசனாய் மறைத்தனை யொருதானாய்
விரவு நோய்தப வருளினை பிரமனூர் வீற்றிருந் தரசாளும்
பரம னேயெமக் கரியன நினக்கவை பார்த்திடின் விளையாட்டே. (67)
ஆட்டு பாவையி னடியனை யுடங்குநின் றாட்டிவல் வினையெல்லாம்
ஊட்டு கின்றனை செய்தனை நீயென வூட்டவும் வளர்க்கின்றாய்
நாட்டு கின்றவிக் கருணையை நாடியே நலத்தக வுய்ந்தேனாற்
சேட்டி ளங்கிளி பயில்பொழிற் பிரமனூர்ச் சிவணிய சிவவாழ்வே. (68)
வாழ வேண்டிய வடியரை முழுவதும் வாங்கிமுப் பாழ்மேலாம்
பாழ தாக்கினை பயில்சது ரானன சங்கரத் தமர்வோயே
தாழ வேண்டிய வடியரல் லாருழைச் சகலமு நிறைவித்தாய்
ஏழை பாகன்மற் றடியவர்க் குரியவ னென்பது பழுதாமே. (69)
பழுது தீர்சது ரானன
சங்கரம் பயில்பவ வுனைநாடி
அழுது கண்சிவந் திலனுனக்
லர்கள்கொய் தணிந்துகைந் நகந்தேயேன்
எழுது தொய்யிலார் கலவியிற்
கண்சிவந் திளமுலைக் குறிவைத்து
முழுதுங் கைந்நகந் தேய்ந்தன
னடுத்தனன் முனியினு முய்வேனே. (70)
உய்திகொள் பிரம னூரி னுவந்தரு டேவ தேவன்
செய்தியின் றிறத்தை நோக்கிற் சிரிப்பல்லால் வேறொன் றில்லை
கொய்தளிர் மலரிட் டீண்டுக் குலவுமூண் காட்டு வோர்கட்
கைதுவிண் டருவுஞ்சாவா வமிழ்துமுய்த் தமைவி லானே. (71)
அமைபொரு தோளி நம்மாட் டருளுவன் போலுந் தன்மாட்
டுமையவன் றோழன் றோழி யுடைதமக் கணியாத் தன்மை
இமையவ னேனும் வெஃகி யியற்பகை மனைவிக் கேகுங்
கமையறு கங்கை வேணிப் பிரமனூர்க் கடவுட் டேவன். (72)
தேவனாந் தனது தன்மை தெரிதல்போ லுருவெவ் வேறு
மேவியெவ் விடத்துந் தோன்றி வீழ்ந்தியான் றழுவச் சேரான்
யாவருந் தொழுது போற்றும் பிரமனூ ரிறைவ னம்மா
பாவனைக் கெட்டா னென்னிற் பற்றுதற் கெட்டு வானோ. (73)
எட்டுரு வுடைய னென்பர் பிரமனூ ரிறையை யென்னே
விட்டொளி ரொளிகண் மூன்றும் வேள்வியில் வெகுண்டான் பூமி
வட்டவான் றனது சேவின் மலரடி படுத்தா னாவி
பட்டது பிரப்பி னுண்ணப் படுமுளர் வளியு நீரும். (74)
நீர்திவள் சடிலக் கற்றைப் பிரமனூர் நிமலர் விண்ணோர்
வார்துரும் பொன்று தூக்கா மதுகைசே யுன்னை யுன்னி
ஆர்தர வளத்து வைப்பே னயர்ந்துசே ணகற்று வேனா
ஓர்தரிற் றமியே னாற்ற லுனக்குமற் றின்று போலும். (75)
போலுமாற் சடிலக் கற்றை பொழிகதிர்ப் பரிதித் தோற்றம்
போலுமாற் பாவை பாகம் பொங்கிய திமிர வீக்கம்
போலுமா னீற்று மேனி பூரண மதியின் றோற்றம்
போலுமாற் பொருளொன் றில்லாப் பிரமனூர்ப் புனித னார்க்கே. (76)
புனிதனே பிரம னூரிற் புலவனே குரவ னில்லாள்
தனிநல நுகர்ந்த கோளுந் தழறவழ் விடவ ராவும்
பனிதவழ் கங்கை வேணி பதித்துல கேத்த வைத்தாய்
இனியடித் தலத்தி லென்னை யிருவுதல் வழக்கே யாமால். (77)
மாலுமோர் பித்த னென்றல் வழக்குமற் பிரம னூரின்
ஏலும்வா னவனே யாக்கை யாவரு மியக்க லன்றிச்
சாலும்வே றுருவு கொண்டு தரித்தது சுமத்த லில்லை
ஆலுநீ ரனல்வெண் டிங்களாருயிர் சுமத்தி யன்றே . (78)
அன்று நீ மேருக் கோட்டிற் றங்கைவா ணுதற்றீக் காய்ப்பின்
என்றுனை வலிய னாக வெண்ணிலே னெனது நெஞ்ச
வன்றனிச் சிலையைக் கோட்டி வரவரக் கரைத்த வாற்றால்
வென்றமுன் வலியுங் கொண்டேன் பிரமனூர் வியந்து ளோயே. (79)
வியந்துளோ ரகமும் வேத வுச்சியும் பிரம னூரும்
நயந்தநா வகமு மன்று நாடக நடிக்கும் பெம்மான்
பயந்தளி யேனை முன்பு முன்புறப் பயிற்றி யின்பம்
இயைந்தகங் களிப்பப் பின்பு மின்புற விருத்தி னானே. (80)
வேறு.
இருத்தி னானிரு ளாணவத் தின்வலி
வருத்தி னான்வினை வாட்டினன் மாயையென்
றருத்தி யாலுரைத் தாலுநெஞ் சாலுமே
பெருத்த சீர்ப்பிர மாபுரன் றன்னையே. (81)
தன்னைத் தன்னரு ளானனி கண்டுபின்
தன்னைத் தானது வாய்நின்று கண்டவர்
தன்னைத் தானிக ரும்பிர மூரிறை
தன்னுட் டாழ்வால் லார்பிறந் தாழ்வரோ. (82)
தாழ வேணி வளர்த்துல கோர்தமைத்
தாழ வேண்டுநர் தங்களிற் றூயரே
வாழி வான்பிர மாபுர வள்ளறன்
வாழி வேட மெனத்தொழு வார்களே. (83)
வார ணிந்த வனமுலைக் குன்றமும்
கார ணிந்த கருங்குழற் கற்றையும்
பார மென்று பதைத்திநெஞ் சேபிர
மூர னைப்பணி யாயொரு காலுமே. (84)
கால யிற்றிக் கனலி னிறுத்திலென்
சால நீருட் டணித்துழக் கிற்றிலென்
ஏல வான்பிர மூரனை யேத்தெனின்
மாலு கிற்றி மறுத்தியென் னுள்ளமே. (85)
உள்ளந் தீய வுழப்பினுந் தஞ்சமென்
றள்ளி லைப்படை யாண்மை யியமனென்
றள்ள விவ்வயிற் சாரல் பிரமனூர்
வள்ளல் பாதம் வளைந்துகொண் டிட்டதே. (86)
இட்டி தானவென் னுள்ள மிரும்புகழ்
அட்ட திக்கு மவிர்பிர மூர்புகக்
கட்டு வார்சடைக் காளைபல் லோர்தொழ
நட்ட மாடு நனந்தலை யாயதே. (87)
ஆய மோவடி யார்குழு வன்றெனத்
தாய மோநின தாளின் வல்லவிக்
காய மோகன வோதடித் தோகொன்னே
மாய மோபிர மாபுர வாணனே. (88)
வானத் துய்ப்பினு மண்ணி னிறுப்பினும்
ஈனத் துய்ப்பினு மின்புளன் வேதனூர்ப்
பேனத் துற்ற பெரும்புனல் வேணியான்
ஊனத் துற்ற தொழிப்பதென் றோர்தலால். (89)
ஓர்ந்து பார்க்கி னுனக்கே யிழுக்கெனைத்
தீர்ந்து போக விடுத்தல்செல் லூழிகள்
பேர்ந்து மாள்வதுன் பெற்றிமை யாதலால்
ஆர்ந்த சீர்ப்பிர மாபுரத் தண்ணலே. (90)
வேறு.
அண்ணற் கரிய பிரமநக
ரலங்கு மொளியுன் னியபொழுதே
உண்ணெக் குருக வதின் முளைத்திட்
டுரையிற் கிளைத்துப் பொறிவழியில்
நண்ணிப் படர்ந்து புறத்தெழுந்து
நனிபல் பொருளு மகத்தடக்கி
விண்ணிற் பரந்து திசைவிழுங்கி
விரிவற் றெங்கும் விரிந்ததே. (91)
விரிவின் றெழுந்து விரிந்தவொளி
விழுங்கிக் கிடப்ப வதினின்றும்
பிரிவின் றிகப்பப் பிரித்துவினைப்
பிணக்கிற் றுவக்கிக் கொட்புறுத்திப்
பரிவின் றிருக்குந் திறமின்னும்
பண்ணும் வலிய திருளென்றான்
முரிவின் றொளிரும் பிரமநகர்
முதலன் றின்பும் பெறுவரே. (92)
பெறுதற் கரிய பிரமநகர்ப்
பெருவாழ் வுள்ளு தொறும்புதிதாய்
முறுகிக் கதித்த பேரன்பின்
முதிர்ச்சி யளவி னண்மையதாய்
உறுமக் கருத்தி னிலையாமை
யொழியுந் தோறும் பண்டையதாய்
அறுதிக் கழிவ தளவினஃ
தகன்று சேட்பட் டொளிக்குமே. (93)
ஒளிக்கு மடியேன் மலவிருளை
யொளிர்க்கு மளியேன் றனியுளத்தை
விளிக்குஞ் சிறியேன் சிற்றறிவை
மிளிர்க்குந் தமியேன் முரணிலையைத்
தெளிக்கு மறை சூழ் பிரமநகர்த்
தெளிக்கும் வளைக்கை மாதுடனாய்த்
தளிக்கு மழைபோ லருள்சுரந்து
தளிர்க்குந் தருவிற் குளிர்ப்பவனே. (94)
பவளக் கடிகைத் துவரிதழ்வாய்ப்
பட்டுக் கிசைந்த பெருமாட்டி
தவளத் தாள முறுவனிலாத்
தனக்கும் பிரம நகராளும்
திவளக் கதிர்விட் டிலகுசடைத்
தேவன் முறுவ னிலாத்தனக்கும்
குவளைக் குலமன் றடியருளக்
கொழுந்தா மரையு மலருமே. (95)
மலர்ந்த கருணைப் பிரமநகர்
வள்ள லருட்கண் மலர்தலுமே
புலர்ந்த திறுதி யொளிகளுக்கும்
புலரா வெனது மலத்திமிரம்
அலர்ந்த துலப்பில் காலங்க
ளலர்ந்து மலரா வுளக்கமலம்
உலர்ந்த துலக முலப்புழியு
முலவா மதுகை யுடலுமே. (96)
உடலும் வினையி னுலகனைத்து
முயிர்த்து நிறுவி யொழித்துமறைத்
தடைவி னருள வேறுவே
றடுத்தாங் கருளா னந்தநிலைத்
தடவு மனத்தை நிமிர்த்தருளத்
தனியே யுருக்கொண் டெழுந்தருளும்
கடவுட் கருணைப் பிரமநகர்க்
களைக ணேநற் களைகணே. (97)
களைகட் டகற்றி யெருப்பெய்து
கமழ்நீர் யாப்ப வுடன் வளர்ந்து
விளையப் பலவும் பதடிவிளை
முதல்போல் வினையேற் கடியரொடும்
தளைக்கட் டறுத்திட் டருள்புரிந்துந்
தமியேன் றணந்தேன் றடுத்தருளாய்
உளையப் புரங்கொல் சிலைத்தடக்கை
யொருவா பிரம நகரானே. (98)
நகரங் கலந்த மணிவிளக்கே
நறைவார் பகழி மதனுயர்த்த
மகரங் கலக்கு மனத்திருளே
மனநன் கெதிர்ந்தோர்க் கெதிரொளியே
புகரங் ககற்றி யவமாற்றிப்
பொற்ப வசித்த பூரணமே
சிகரங் கலந்த பிரமநகர்த்
தெளிவே யென்னைத் தெளித்தாயே. (99)
தாயா யிரங்கி வளர்மதி*
றதைபே ரிருளைத் துறந்தவருள்
ஓயா துள்கிக் கரைந்துருகி
யொருவன் பிரம நகரெந்தைக்
காயா வளியே னிடுமலர்க
ளன்னோ னடியின் மருவுமவன்
மாயா தளிப்ப வென்சிரத்தில்
வனவார் கழற்பூ மருவுமே . (100)
பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ கச்சியப்பமுனிவரர் கழலடி வாழ்க.
ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள் மலரடி வாழ்க.
கவிராக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரபந்தங்கள்.
2. கச்சி ஆனந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி
திருவாவடுதுறையாதீனம்.
பண்ணிசைவெம் பரிதிமதி திலதயிலம் தீயிரும்பு
பாணி யுப்பு
விண்ணனில முடலுயிர்நீர் நிழலுச்சிப் பளிங்கு பகல்
விளக்குப் பானீர்
கண்ணிரவி யுணர்வொளிபோற் பிறிவரிய வத்துவிதக்
கலவி காட்டித்
தண்ணளிவைத் தெனையாண்ட துறைசைநமச் சிவாயகுரு
சரணம் போற்றி.
-- ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள்.
கச்சி ஆனந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி.
காப்பு
முந்திமையோர் மதியாமை மூரிநெடுங்
கடல்கடைய முனிந்து வல்லே
அந்திலமிழ் துயிர்ப்பியா தாலாலந்
தோற்றியவ ரகந்தை காற்றும்
தந்தைவினைக் கூறிழைத்திட் டுய்ந்தது மல்
லான் முதன்மை தனக்கே நாட்டும்
மைந்தனைவண் காஞ்சிநகர் ஆனந்த
விநாயகனை வணக்கஞ் செய்வாம்.
நூல்.
மணிபூத்த மலர்த்தடமு மலர்பூத்த
விணர்ப்பொழிலு மருங்கு சூழ்ந்த
அணியூத்த காஞ்சிநக ரானந்த
ருத்திரே சத்து வாழும்
பணிபூத்த குரைகழற்றாட் பண்ணவனைப்
பணிந்தேத்தும் பண்பு மிக்கோர்
பிணிபூத்த பெரும்பிறவிக் கடனின்று
மானந்தப் பிறங்கல் சேர்வார். (1)
சேர்ந்தோங்கு மணிக்குறங்கிற் றிதலைமுலைச்
சேயரிக்கட் டெரிவை பாகம்
கூர்ந்தானை யானந்த ருத்திரே
சத்தமர்ந்த குணக்குன் றானைச்
சார்ந்தாவி யுடல் பொருளுந் தனக்களித்துப்
பேரின்பத் தடத்துண் மூழ்கி
வாழ்ந்தார்கள் வாழ்ந்தார்கண் மற்றையர்கள்
வாழ்வென்னை வாழ்வு மாதோ. (2)
மாதர்வடி வினைவாட்கண் வதனநகை
முலையல்குன் மருங்குல் கைகால்
ஆதியெனத் தெரிந்துளமே மயங்கியயர்
கின்றனைமற் றறையக் கேண்மோ
நீதியரு ளானந்த ருத்திரே
சத்தமர்ந்த நிமலற் போற்றி
மேதை மச்சை சுக்கிலமூத் திரமாதி
யெனத்தெரிதி விருப்பெங் குண்டே . (3)
உண்டில்லை யெனுமருங்கு லுமையிடங்கொண்
டாடிருக்க ணுற்று மூடக்
கண்டொல்லை கழுவாய்க்கு விடை கொடுத்தா
னெனிற்காஞ்சி நகரில் யார்க்கும்
தொண்டல்கு மானந்த ருத்திரே
சத்தமர்ந்த தொல்லை வாழ்வை
விண்டல்ல புரிகிற்பார் யாங்குய்தி
பெறுகிற்பார் விடைக்கு நெஞ்சே. (4)
நெஞ்சகமே சீசீநின் குணமென்னே
வானமிழ்த நேர்ந்துண் டாலும்
அஞ்சிறைமெல் லீயெவரு மருவருக்கும்
பவ்வீகண் டகலா வாபோன்
மஞ்சனைநல் லானந்த ருத்திரே
சத்தமர்ந்த மணியைக் கண்டு
நஞ்சனைய விழிமடவார் நாற்றவுடல்
வெறுத்திலையா னயக்கின் றாயே. (5)
நயக்குமடி யவர்கோல நாள்வாயு
நயந்தவர்க ளேவ லாற்றிப்
பயக்குமரு ளானந்த ருத்திரே
சத்தமர்ந்த பகவற் றாழ்ந்து
வியக்குமவன் றிருப்புகழை வாயார
விரித்துரைத்து மேவு கிற்பிற்
புயக்கரிதோ வுலகமெனுஞ் சேற்றிடைப்போ
யழுந்தியபுல் வறிவை யம்மா. (6)
அம்மையிற்செய் தீவினையின் பயன்வருவ
தறியாமை யந்தோ வந்தோ
இம்மையிற்செய் நல்வினையி னிது வருவ
தெனக்கருதி யிழுதை யோர்கள்
செம்மையரு ளானந்த ருத்திரே
சத்தமர்ந்த செம்மற் போற்றா
தும்மைவரு பயனிழந்தார் நெஞ்சகமே
நீகலங்க லொழுக்கி னில்லே. (7)
நிற்குணனை யானந்த ருத்திரே
சத்தமர்ந்த நிலைமை யானை
விற்குணமே யிலைமுகப்பைம் பூணெனமார்
பிடைக்கிடத்தும் விடங்கன் றன்னை
நற்குணமுள் ளவரல்லா ரடுத்திருந்தும்
வழிபாடு நண்ணு கில்லார்
எற்கதிரி னலர்கமலம் வண்டலது
மண்டூக மெண்ணா தன்றே. (8)
அன்றிய முப் புரம்பொடிப்ப தணிநகையா
லென்பதுமுன் பறியாய் கொல்லோ
ஒன்றியசீ ரானந்த ருத்திரே
சத்தமர்ந்த வொருவா கோல
வென்றிவரிச் சிலைவரையும் வீக்குறுநாண்
வாசுகியும் விரைசெ லம்பு
மன்றல்கமழ் துளவணிந்த மார்பனுமாக்
கரத்தேந்தும் வயமை யென்னே. (9)
என்னையுடை யான்றிருமான் முண்டகனிந்
திரனிமையோ ரெவருஞ் சூழ்ந்து
முன்னிறைஞ்சு மானந்த ருத்திரே
சத்தமர்ந்த முதல்வ னென்றால்
அன்னையனை யாய்க்கறவும் பெருமையே
யினியேனு மடியா ரெல்லாம்
துன்னியசூ ழலில்யானு முடங்குறையக்
கடைக்கணியாய் சோதி வாழ்வே. (10)
வேறு.
வாழ்வெனும் படுகர்ச் சேறு வயின் வயி னமுக்க மாழாந்
தாழ்வது தகுமோ வன்னோ வானந்த ருத்தி ரேச
ஏழ்வயப் புரவித் திண்டே ரிரவியல் லுகுத்தோ யென்பால்
காழ்வினைக் கவய நூறிக் கருணையங் கவய நல்கே. (11)
நல்குவ துனது தாளே யல்லது வேறு நல்கா
தல்கிய காஞ்சி மூதூ ரானந்த ருத்தி ரேச
பல்கிய வன்பு நீங்காப் பண்பெனக் கருள்க வன்றேல்
மெல்குவல் வேறு காணேன் விம்முவ னென்செய் கேனே. (12)
செய்யபொன் னுருவா னென்றும் வெண்பொடி திமிர்ந்தா னென்றும்
ஐயனா யாண்டா னென்று மானந்த ருத்தி ரேசத்
துய்யவே நின்றா னென்று மோதிடப் படாதே லெந்தாய்
பொய்யிருள் கழுவி யாரே நின்னடிப் போது காண்பார். (13)
காண்பது கருதி மாலுங் கமலனு நெடிது காலம்
வீண்பட முயன்றா ரென்றால் வினையினேன் காண்பல் கொல்லோ
ஆண்படு பொழில்சூழ் காஞ்சி யானந்த ருத்தி ரேச
மாண்படு கருணை தன்னால் வயக்குதி நினது பாதம். (14)
பாதகம் பலவுஞ் செய்தேன் பரிந்தொரு கழுவா யாற்றேன்
ஏதமே யியற்ற வின்னு மெண்ணுவ லெங்ங னுய்வேன்
ஆதகா தென்று வல்லே யானந்த ருத்தி ரேச
நீதடுத் தாள வேண்டு நின்பெருங் கருணை நீரால். (15)
நீரினை விடத்தை மானை நெருப்பினைப் பிறவற் றோடும்
ஆரிணர் முடித்த வேணி யானந்த ருத்தி ரேச
பாரிடை யடக்கிக் காத்தும் பயனிலை பலவு நேரா
ஒருமென் றனையுந் தாளி லுறுத்திடா தொழிந்த காலை. (16)
காலையிண் மலநோ யுச்சிக் கடும்பசி யுடற்றுந் துன்பம்
மாலையிற் காமப் பீழை யிடையிடை மற்ற னந்தம்
ஆலையிற் கரும்பு போன்றே னானந்த ருத்திரேச
மேலைவல் வினையே றாமை விழுத்தகு கலப்பு வையே. (17)
வையக முழுதுஞ் சூழ்ந்தும் வனம்பல சரித்தும் பன்னாள்
ஐயமேற் றுழன்று மென்னே யானந்த ருத்தி ரேசன்
செய்யபூங் கழல்கள் காண்டல் செல்லுமோ சிறிது நோவா
துய்யலா மன்னோ னோக்க முறுத்துவ னாயி னின்னே . (18)
இன்னலே யாக்கை யென்னப் பட்டன வெவைய மாவிக்
கன்னது தெரித ராமை யானந்த ருத்தி ரேசன்
தன்னைநன் றடுத்தும் போக தனுக்களை யிரத்தி நெஞ்சே
பொன்னடிப் போதே வேண்டத் தக்கது புகழ்ந்து வேண்டே. (19)
வேண்டுவார் வேட்ட யாவும் பெற்றபின் விழைய நிற்ப
தாண்டருள் காஞ்சி மூதூ ரானந்த ருத்தி ரேசன்
மாண்டகு கமல பாத மற்றது பெற்றாற் பின்றைக்
காண்டகு மனமே வேட்டுக் கவர்பொருள் வேறொன் றின்றே. (20)
வேறு.
இன்று வாழ்குது மென்னவும் வரையிலா வுடலினை, யெடுத்தேமுக்
கொன்று மானந்த ருத்திரே சத்தம ரொருவனை மடநெஞ்சே
மன்றன் மாமல ரான்மணிப் புனலினான் மற்றுள பொருளாலும்
நன்று மன்பினால் வழிபட லல்லது நாடுவ தினியென்னே. (21)
என்னை யாண்டருள் புரியென நினைந்தன னெண்ணுமவ் வுளத்துடே
அன்னை யாகிய வானந்த ருத்திரே சத்தம ரருளாளன்
மின்னி னேரிடை யாளொடுங் கணத்தொடும் விண்ணவர் தொழுதேத்தத்
தன்னை நேர்நட மாடுத றொடங்கினன் றகர்ந்தது மலக்கோட்டம். (22)
கோட்ட மேபுரி கின்றனை சிதடர்தங் கூட்டமே விழைகின்றாய்
ஏட்டை தீர்த்திடு மானந்த ருத்திரே சத்தம ரிறையோன்பால்
நாட்டம் யாவதும் வைத்திலை யடியவர் நண்ணிய குழாங்கண்டால்
ஒட்ட மேபுரி வாய்மன மேயுனக் குய்வகை மொழிகல்லாய். (23)
கல்ல ரத்தமூட் டியநறுங் கலிங்கமுங் கதிர்த்தசெஞ் சடைக்காடும்
அல்ல னுக்கிய தவளவெண் பூதியு மக்கமா லையுங்கண்டால்
வில்ல ழுத்திய வானந்த ருத்திரே சத்துமெய்ப் பொருளென்றே
சொல்ல டித்துணை பணியுளத் ததுவென்றே துணிவழி யிதுவாமால். (24)
ஆலம் பூத்தொளிர் மணிநிறக் கண்டமு மவிழ்ந்தசெஞ் சடைக்காடும்
நீலம் பூத்தொளிர் விழியுமை பாகமு நிலவுமிழ் முகப்போதும்
கோலம் பூத்தொளி ரானந்த ருத்திரே சத்தமர் குணக்குன்றின்
சீலம் பூத்தொளிர் பாததா மரையுமென் சிந்தைவிட் டகலாவால். (25)
அகல வெண்ணுவா ருளத்தினைத் தானுமங் ககலவெண் ணுபுநிற்கும்
புகற லெண்ணுவா ருளத்தினைத் தானுநேர் புகறலெண் ணுபுநிற்கும்
பகரு மெண்குண னெட்டுரு வத்தனெண் டோளன்பார்ப் பதிபாகன்
நிகரி லானந்த னானந்த ருத்திரே சத்தமர் நிறையோனே. (26)
நிறையு மன்பினா னினைந்திலை பணிந்திலை நெடிதவன் றிசைநோக்கி
உறைகள் கண்ணிணை கால நன்றுருகலை யுரைதழு தழுத்தில்லாய்
மறைமு ழக்கறா வானந்த ருத்திரே சத்தமர் மழவெள்ளேற்
றிறையை யெங்ஙனம் பெறுகுவை நெஞ்சமே யென்னையான் புரிகேனே. (27)
புரிமு றுக்கவிழ் முண்டகப் புதுமலர் பூத்தவுந் தியினானை
அரிவி ழிப்பொது மகளென வரவழைத் தருந்தவர் திருக்கோட்டி
உரிய தன்மனை யாக்கிய வானந்த ருத்திரே சத்தண்ணல்
விரிபு கழ்ப்பதம் போற்றுந ருள்ளகம் விடைப்பினு மீட்பானால். (28)
மீட்சி யில்லதோ ரானந்தப் பெருகொளி வீட்டிடைக் குடியேற்றி
ஆட்சி கொண்டரு ளானந்த ருத்திரே சத்தம ரறவோனைக்
காட்சி கொள்ளலுங் காணுறா திருத்தலுங் கரிசெனக் கண்டாங்கே
மாட்சி கொண்டவக் காட்சியின் யாத்தனன் வளர்ந்தது பெரும்போகம். (29)
போகம் வேண்டிய விண்ணவர் குழாங்களைப் புழுவினுங் கடையாக்கி
ஏக மாகிய வீட்டினைத் தலைப்பட வெண்ணிய வடியாரை
மாக மேத்திய வானந்த ருத்திரே சத்தமர் மணிகண்டன்
பாக சாதனன் முதலியோர் பணிந்தெழும் பரிசினிற் றருமம்மா. (30)
வேறு.
மாவெழுந் தொலிக்கு நந்தன வனமு மதுமழை சொரிமலர்ப் பொழிலும்
பூவெழுந் துயிர்க்கும் பொய்கையு மடுத்துப் போகபூ மியின்வளம் விறந்து
பாவெழுந் தரற்று மானந்த ருத்தி ரேசம்வாழ் பதியென வமர்ந்த
சேவெழுந் தொலிக்குந் திண்கொடி யானைச் சேர்ந்தனன் றீர்ந்ததென் வினையே. (31)
வினைவள மீட்டி நரகொடு துறக்கம் வியனில னென்னுமூன் றிடத்தும்
வனைகலத் திகிரி கொட்புறல் போல வைகலுங் கொட்புறு வேனை
அனையென விரங்கி யாள்வது கருதி யானந்தருத்திரே சத்துத்
தனைநிகரில்லா னிருந்தன னவன்றன் றன்மையை யாவரே யறிவார். ( 32)
அறிவிரண் டனையு மடக்குபே ரறிவா யலரியா தியவொளிக் கெல்லாம்
செறியொளி செறிக்கும் பெருகுபே ரொளியாய்த் திலதமார் நெய்யென வெங்கும்
பிறிவில தாகி நிறைந்துநின் றருளும் பெரும்பெயர்க் கடவுள்வண் காஞ்சிக்
குறிகொளா னந்த ருத்திரே சத்துக் குடிகொளுங் குரூஉமணி யுருவன். (33)
உருவமா யருவா யுபயமா யுலக முயிர்த்தளித் தழித்துடன் மறைத்திட்
டருளுமா னந்த ருத்திரே சத்தெ மமலனை யுள்ளவா றறியார்
மருளினான் மூவர் தங்களு ளொருவ னாகவே மதித்துட னெண்ணி
இருளினால் விழுங்கப் பட்டெரி நிரயத் தினைவரீ தென்னபா தகமே. (34)
பாதகம் பலவும் பயிற்றினும் பொதும்பர்ப் பண்ணைவண் டினமது மாந்திப்
போதகத் துறங்கு மானந்த ருத்தி ரேசத்துப் பொற்பவீற் றிருக்கும்
சேதகப் பொருளைச் சிறுவரை யேனுஞ் சென்றடி வணங்கிடிற் றீரும்
பீதக வுடைய னாதியர்ப் பன்னாட் பேணினும் பெயருமோ வொன்றும். (35)
ஒன்றதாய்ப் பலவா யுரைகளா யுரையி னுணர்தரு பொருள்களா யுலகாய்
அன்றதா யசல மாயகண் டிதமா யப்பிர மேயமா யறிவாய்
நின்றவண் காஞ்சி யானந்த ருத்தி ரேசத்து நின்மலக் கொழுந்தை
என்றுகொல் புணர்வ தென்றவா யுருகி யிருக்குமா லெனதுளப் பேதை. (36)
பேதையேன் பிழைக்கும் பிழைகளோ வனந்தம் பிழைதபத் தீர்வுசெய் வதற்கு
வேதனை மிகுந்த பிணியுட லொட்டா தயலவர்க் களித்திட வெறுக்கை
யாதுமொன் றில்லே னானந்த ருத்தி ரேசத்து ளெம்பிரா னதனால்
ஓதுவ சிலகொண் டென்பிழை நூறி யுய்யக்கொண் டருள்வதுன் கடனே. (37)
கடன்முகட் டெழுந்த விடமிடற் றடக்கிக் கடவுள ராருயிர் காத்த
இடவிய காஞ்சி யானந்த ருத்தி ரேசத்து ளெம்பிரா னடுத்தேன்
மடவிய மனத்தன் மாசுளா னென்று மருங்குளார் நகைத்திடப் பட்டால்
தடவிய நினக்கே யிழிவுமற் றதனாற் றாழ்த்துறா தாண்டுநன் கருளே . (38)
அருளுவ னருளு வானெனப் பன்னா ளவாயவா யலந்தலந் தெய்த்தேன்
இருளினுங் கழிக கழிகவென் றாடல் யாவும்பார்த் திருந்தனை நீயும்
தெருளினர் சூழு மானந்த ருத்தி ரேசத்துச் சிவபரம் பொருளே
வெருளுவ லவ்வா றின்னுநீ விடுப்பின் விரைந்தென திடும்பைநோய் களையே. (39)
களைகணா யுலக முழுவதுங் காக்குங் கண்ணுதால் காஞ்சிமா நகரின்
விளைமதுப் பொழில்சூ ழானந்த ருத்தி ரேசத்து வித்தகர் தமியேன்
தளையவிழ் பூநீ ரிடுவதே போலுந் தாளிணை தருவதற் கேதுத்
திளைபெருங் கருணை யன்றுகொ லதுசெய் வித்ததுந் திருவருட்டிறமே. (40)
வேறு.
அருட்டிறஞ்சே ரானந்த ருத்திரே சத்தமர்ந்து
பொருட்டிறங்கள் பகுத்தருளும் புண்ணியனைப் புன்மதியைத்
தெருட்டியிடு முதற்குருவைச் சேர்ந்தார்க்கு மூலமெனும்
இருட்டிருக்கு மேயெழுந்த வினனொளியின் மாயுமே. (41)
மாய்வனமும் பிறப்பனவும் வைகுவன வும்புந்தி
ஆயுமெனி லானந்த ருத்திரே சத்தமர்ந்த
தேயுமிள மதிச்சடிலச் சிவபெருமான் பதத்தன்றிக்
காயுமுல கிடைச்சிறிதுங் கதுவாது கதுவாதே. (42)
கதுவியுயி ரினைக்கவற்றிக் கலக்குவது மூலமலம்
அதுகரப்ப தானந்த ருத்திரே சத்தமர்ந்த
விதுவொளிர்பொற் சடைப்பெருமான் விளங்குதிரு வருளது தான்
முதுமறையின் வழிச்சரியை முதன்மூன்றின் வருவதே. (43)
வருவதும்பின் போகுவது மாயுழலு மாநுடத்தீர்
அருண்மிகுந்த வானந்த ருத்திரே சத்தமிழ்தை
ஒருமுறையேத் திடினுங்க ளுலமந்த பவம்பறையும்
இருமுறையேத் திடினும்மை யெய்தினர்க்கும் பிறப்பிறுமே. (44)
இறுமுடலுக் குபசார மியற்றியுறு நாள் வீணில்
அறுவதுசெய் தானந்த ருத்திரே சத்திறையைப்
பெறுவதுசெய் தாயில்லை பீழையிற்பட் டவலித்தாய்
கொறுகொறுக்குஞ் சமனாலுங் கோட்பட்டாய் மனக்குரங்கே. (45)
குரங்கமனந் துறவோர்க்குங் கொடியிடையார நடநவிற்றும்
அரங்கமலி யானந்த ருத்திரே சத்தடிகள்
வரங்களெனத் தனதருளை வயக்கமுறுந் தனைமன்ற
இரங்கியரு ளுவனென்றால் யாதுவரம் பெறாரவன்பால். (46)
பாலொத்த திருநீற்றான் பவளத்தி னொளிருருவான்
நீலத்தி னவிர்மிடற்றா னிலாநகையா னிழல்கஞற்றும்
ஆலத்த னானந்த ருத்திரே சத்தமலன்
கோலத்தைக் குறிக்கொண்டேன் பிறர்கோலங் குறியேனே. (47)
குறியேது மில்லானென் குறிமாற்றக் குறியேற்றான்
அறிவாள னானந்த ருத்திரே சம்பதியா
உறைவானென் பதியெனக்கிங் கொழிக்கிற்ப விளமாவின்
முறிமேனி தரித்தானென் முடைமேனி கழிப்பவே. (48)
கழிகாதல் பெற்றார்கள் கைகண்டார் காஞ்சிநகர்
அழியாத வானந்த ருத்திரே சத்திறையை
ஒழிகாதல் பெற்றார்க ளுறல்வேண்டல் வரையுச்சிப்
பிழிகாண முடமில்லிற் பெரிதுயிர்த்த வாறாமால். (49)
மாலிருந்த வலக்கரத்தான் வரையிருந்த விடக்கரத்தான்
நூலிழுத்த மணித்தேரா னூலொருநால் வர்க்களிப்ப
ஆலிருந்த வானந்த ருத்திரே சத்தமலற்
கோலமிடல் வழக்கன்றே யுறுமலத்தின் வெரீஇயினரே. (50)
வேறு.
வெருவுவதென் வருவினைக்கு மடமை நெஞ்சே
வேலைவிட மிடற்றடக்கி விண்ணோர்க் கெல்லாம்
அருவியென விழிகவிழ்த்த புனலை மாற்றி
ஆவியரு ளானந்த ருத்தி ரேசத்
தொருபொருளுண் டவன்பெயருண் டவனை யண்மி
ஓங்கியவத் திருவெழுத்தை யுரைத்துப் போற்றிப்
பெருகியபே ரின்பவெள்ளத் தழுந்தி யொன்றாய்ப்
பிணைந்துவிடி னெஞ்ஞான்றும் பீழை யின்றே. (51)
இன்றளவுந் தீவினைகள் சால வாற்றி
யெழுநான்கு கோடியள றனைத்து மூழ்கி
நின்றவினைப் பயனருந்தப் பிணிகள் பல்ல
நெருங்கியவாக் கையிற்கிடந்து நெஞ்சே காண்டி
நன்றியினி வேண்டுமெனிற் காஞ்சி மூதூர்
நலத்தகையை யானந்த ருத்தி ரேசத்
தொன்றியொளிர் பரம்பரனைத் தேவர் தேவை
யுன்னுதியன் னவனடியா ருவப்பச் செய்யே. (52)
செய்யவுரு வான்வெள்ளை நீற்றா னீலஞ்
செறிமிடற்றான் பொற்சடையான் பைங்கட் டுத்திப்
பையரவப் பூணினா னுடுத்த தோலான்
பல்லெடுத்த கபாலத்தான் பயினற் கூத்தான்
மையளக வுமையிடத்தான் மழவெள் ளேற்றோன்
மருங்குமிடை பூதத்தா னென்று வாழ்த்தி
ஐயனைநல் லானந்த ருத்தி ரேசத்
தடிகளைக்கண் டார்காணா ரவல நோயே. (53)
நோயிலியை மலமாயை கன்ம மில்லா
நோன்றகையை நூலுரைத்த முனைவன் றன்னைத்
தாயிலியைத் தத்துவனை யுலகுக் கெல்லாந்
தாயாகி யருள்சுரக்குந் தந்தை யானை
வேயினதோ ளுமைபூசை கொண்ட காஞ்சி
வேதியனை யானந்த ருத்தி ரேசக்
கோயிலிடைக் குருமணியைக் கூறு வார்கள்
குவலயந்தங் கூற்றின் வழி நடப்பக் கொள்வார். (54)
வாரணிந்து வடம்பூட்டித் தொய்யி றீட்டி
மையெழுதி யலர்சூட்டி மாத ரார்பாற்
சீரணிய வொருவருஞ்செப் பாமை நீயே
செல்கின்றாய் நான்மறையஞ் செல்வக் காஞ்சி
ஏரணிந்த வானந்த ருத்தி ரேசத்
தெம்மானை யிறைஞ்சாயென் றரற்றா நின்றும்
போரணிந்த விடையானை யேகம் பத்தெம்
புண்ணியனை நெஞ்சேசே ராயி தென்னே . (55)
என்னுயிருக் குயிர்போலுங் கச்ச பேசத்
தெம்பெருமான் போலுமெழி லேகம் பத்து
மன்னியொளி ரேகம்ப வாணன் போலு
மயானத்து மணிபோலுங் காரோ ணத்துத்
துன்னுநிழற் கூவிளத்துத் தோன்றல் போலுந்
தூயநெறிக் காரைக்காட் டிறைவன் போலும்
பொன்னிமைக்கு மானந்த ருத்தி ரேசம்
பொற்பவீற் றிருந்தருளும் புராணன் றானே. (56)
தானேவல் லிருட்கிடந்த ஞாட்பி னாக்கை
தந்துமன மாதியாற் றழைத்த கன்மம்
ஆனாது பொருத்திமல பாக மாக்கி
யருள்பதித்துக் கன்மநே ராக்கி யாண்ட
வானேயு மானந்த ருத்தி ரேச
வரதனைமா வடிமுளைத்த மாணிக் கத்தைக்
கானேயு மலர்தூவிக் கருணை நோக்கிக்
கரைந்துருகிப் பணிகடப்பா டுறுவ தென்றே. (57)
என்றூழும் வெண்மதியும் விலகி யேகு
மெழிற்காமக் கோட்டம்வாழ் காஞ்சி மூதூர்
மன்றூடு காப்புநட மாடு முக்கண்
வள்ளலுய ரானந்த ருத்தி ரேசன்
வென்றாடு மலவலியை யறுத்த லோடு
மேலானே னதுசுத்தத் தருளா மென்றான்
தன்றாளி னிருந்துதொழில் புரியப் புக்கேன்
றகுதியின்மை காட்டினான் றணிந்துய்ந் தேனே. (58)
உய்ந்தாமென் றமரர்தொழு தாட நோக்க
முறுத்தவர்கள் வேட்டவர முதவு நாதன்
பந்தாடு பூண்முலையாள் பாகத் தண்ணல்
பண்பினர்சூ ழானந்த ருத்தி ரேசன்
பிந்தாத விருண்மலமும் யானும் பிந்தப்
பெயர்த்துமல மறுத்தாங்குத் திருகி னேனை
முந்தாத வகைதெரித்துத் தான்முன் னாகி
முடியாத வின்பவெள்ளத் தழுத்தி னானே. (59)
அழுத்தினான் சூலத்தி னெடுமா லாக்கை
யரிந்தேற்றான் மலர்த்தவிசிற் கிழவன் சென்னி
விழுத்தினான் வாளிரவி யெயிற்றுப் பந்தி
வீட்டினான் றக்கனொடு மெச்ச னாவி
வழுத்தினார்க் கருள்சுரந்து வேட்ட முற்றும்
வழங்கியிடு மானந்த ருத்தி ரேசன்
கொழுத்தின்னா நெறிக்கடவி யென்னைத் தட்குங்
கோணைமலப் பெரும்பகையைக் குமைத்தி லானே . (60)
வேறு.
குமைத்தா னெதிர்ந்த காலனுயிர் கோல மாரன் றனக்கருவம்
அமைத்தான் காஞ்சி யானந்த ருத்தி ரேச னெனவஞ்சி
இமைத்தாற் பழுது வருமாலென் றெண்ணி யிமையா தமரரெலாம்
தமைத்தாம் பேணி விசும்பிருந்தார் தரைமாதவத்தோர் நகைக்கவே. (61)
நகைக்கு முறுவ னெருப்பானா னளினக் கரத்து நெருப்பானால்
தகைக்கு நுதற்க ணெருப்பானாற் றயங்கு முருவு நெருப்பானான்
முகைக்குஞ் சோலை யானந்த ருத்தி ரேச முழுமுதலே
பகைக்கும் பகையு நினக்குள தாய்ப் பாரி னிருக்கு மிருக்குமே. (62)
இருக்கு முதலா நான் மறையு மெழுந்து நாடி யெட்டாமல்
தருக்கு விளியு மானந்த ருத்தி ரேசத் தனிப்பெருமான்
உருக்கி யளியே னுளமுழுது மோவா வின்பத் துறைபடியச்
செருக்கு மலத்தின் றிறனழித்தான் றேங்கிற்றேங்கு மருட்கடலே. (63)
கடலாய் விரிந்தான் மழையானான் கதிர்த்த மணிக்குன் றுகளானான்
இடனா ரடவி முழுதானா னெல்லா மானான் காஞ்சிநகர்
மடலார் சோலை யானந்த ருத்தி ரேசம் வதிவள்ளல்
படமா வடியே னுளம்புகுந்து பயின்றா னீங்காப் பரிசினனே. (64)
பரிசில் விழைந்து மானுடரைப் பதுமத் தடங்க ணான்மகவான்
பெரிய வெறுக்கைத் தனதனெனப் பெரிதும் பாவாற் புகழ்புலவீர்
கரிசு தணிக்கு மானந்த ருத்தி ரேசக் கண்ணுதல்பால்
விரசு மன்பிற் பாப்புனைமின் வேட்ட வேட்டாங் கடுக்குமே. (65)
அடுக்கு மலமே மாயையே யடர்க்குங் கன்ம மெனமூன்றும்
விடுக்கு மடியார் தாந்தானாய் விளையாட் டயர்ந்து பயனெவர்க்கும்
கொடுக்குங் காஞ்சி யானந்த ருத்தி ரேசக் கொழுமணிதன்
உடுக்கு முடையி லெண்கரியு மொளிரெண் பணியும்வ தியுமே. (66)
வதியும் புவனந் தொறுந்தானும் வதிந்து வினைக ளினிதூட்டிப்
பொதியு மலத்தின் வலிதேய்த்துப் புனித மாக்குந் திருக்காஞ்சிப்
பதியில் வளரு மானந்த ருத்தி ரேசப் பசுபதிதன்
கதிர்செய் மணிநூ புரக்கழற்றாள் கருதா வினைக்குர் தீர்வுளதோ (67)
உளமே பிழைத்தா மிலையென்பா
யுள்ளே பிழைக்கும் பிழைகேண்மோ
இளமாம் பொழில் சூ ழானந்த
ருத்தி ரேசத் தெம்பெருமான்
அளமார் துரும்பு போனம்மை
யாக்கப் பணிக்குந் தொழிலெல்லாம்
வளரா நிற்ப நினதாக
மதித்தாய் பவத்திற் கதித்தாயே . (68)
தாயா யிரங்கி யானந்த ருத்தி ரேசத் தனிவள்ளல்
மாயா வுருவ மெனக்களித்து மாயா வுருவிற் றான்வதிந்து
தோயா திருக்கு மவனியல்பு சூழ்ந்தா யாகின் மடநெஞ்சே
வீயா நின்றங் கபாவமாய் வெற்ற வின்பந் திளைப்பாயால் . (69)
பாயா வேங்கை மடவாரும் பமர நாமு மாயினக்காற்
காயா நிற்கும் வாளரவக் கலன்பூண் டெழிலு மார்பத்தான்
தூயார் வணங்கு மானந்த ருத்தி ரேசத் தொழுகுலத்தின்
ஓயா வின்பத் தாளுறுத லொழிப்பார் யாவர் யாவரே. (70)
வேறு.
யாவரும் வந்து வணங்கிப்போத
வெம்பெரு மானர சாட்சிவைகும்
காவள ரானந்த ருத்திரேசங்
காதலிற் கண்டவ ரேத்தெடுத்தோர்
பூவணை நான்முக வன்பதமும்
பூதல மோரடி யாலளந்த
தேவன்வை குந்தமும் பொன்னுலகுஞ்
செல்லலர் கீழ்ப்பட வும்பர்ச்சேர்வார். (71)
சேர்ந்து செறிந்த குறங்கின்மாதர்
சேல்விழிப் பார்வையிற் பட்டுறாமை
வார்ந்த சடைப்பெரு மானைக்காஞ்சி
வைப்பின் முளைத்த மருந்தையன்பர்
சார்ந்து வணங்கு முக்கட்கரும்பைத்
தவளவெண் ணீற்றுரு வானைச்சீர்த்தி
ஆர்ந்தொளி ரானந்த ருத்திரேசத்
தண்ணலை யெண்ணினர் விண்ணாள் வாரே. (72)
ஆள்வது செய்தெனைத் தன்றொழும்பி
னாக்குதற் கேமன வாக்குக்காயம்
நாள்வயிற் றந்துநண் ணாமைகண்டு
நாதனல் லானந்த ருத்திரேசம்
மூள்வது செய்தெழு காதலோடு
முன்னி யிருந்து வணக்கியிட்டான்
மீள்வது செய்திட லாகுங்கொல்லோ
மேதகு மத்தகு தெய்வச்சூழல். (73)
சூழலங் காரமும் போக மற்றுந் தொல்லுக கத்தவர்க் காற்றநல்கிக்
கேழலங் கோடு மராவுமென்புங் கேழ்த்த திருவுருத் தாங்கியாழி
எழல மந்து கலங்கவைய மேங்க வெழுந்தநஞ் சுண்டதென்னே
ஊழலங் கானந்த ருத்திரேசத் தோகையின் வைகிய வும்பர்வேந்தே. (74)
வேந்தர்கள் வேத்தியல் கண்டசோதி
மேதகு மானந்த ருத்திரேச
போந்தழு மோர்புலிக் குட்டிக்கம்மா
புவனங்கள் காக்கு மொருத்தன்பாயல்
ஈந்தனை நீதிகொ லன்னமாய
னெய்திட மின்மையி னன்றுகொன்னின்
காந்தொளி மேனியிற் பாதிவல்லே
கைக்கொண்டு விட்டனன் காசினிக்கே . (75)
காசினிக் கேற்றதொன் றன்று நின்றன்
கைத்தொழி லானந்த ருத்திரேசத்
தாசில ராகியெல் லோருமுய்ய
வல்கிய வெம்பரு மானதனைப்
பேசுவல் கேட்டிநி னம்புவாயிற்
பெய்தது தாங்கிய வில்லுமேந்தித்
தேசொளித் தேரை யிவர்ந்தொடித்துத்
தேவர்கண் முன்னர்ச் சிரித்திநின்றே. (76)
நின்று மிருந்துங் கிடந்தும் போந்து
நெக்கு வணங்கி நக்கேத்தெடுக்கும்
துன்றிய மெய்யடி யார்குழாத்துத்
தொடக்குட னாய்விளை யாட்டயரும்
நன்றரு ளானந்த ருத்திரேச
நண்ணிய நாதவன் பேதுமில்லேன்
முன்றலை தாழ்த்தது வேபணியா
முன்னினை யென்வினை மோதுவாயே. (77)
மோது தரங்க மிரங்குகங்கை
மொய்யொளி வேணி யமைத்துச்செந்தீப்
போதுறழ் கைத்தல மேந்திற்றும்பர்
பூமழை தூர்த்து வணங்கித்தங்கள்
தீதுகு மானந்த ருத்திரேசத்
தேவர்பி ரான்கல னேந்தியையம்
மாத ரிடைப்புகுங் காலைவேட்ட
வைப்பி னடமதித் தோவிளம்பாய். (78)
விளம்புவ தொன்றுள தேழைநெஞ்சே
மெய்ம்மையிற் கேட்டி குருப்பிழைத்த
இளம்பிறை வேணியன் மாலரக்கற்
கின்னரு டந்தவே கம்பவாணன்
வளம்படு மானந்த ருத்திரேசன்
வந்தடி தாழிற் பொறுப்பனென்று
களம்படு தீவினை செய்யறீர்ந்த
கைதையம் போதினைக் கண்டுகொள்ளே. (79)
கொள்ளக் குறையா வளத்தினோங்குங்
கோலத் திருக்காஞ்சி வைப்பின்வைகும்
அள்ளெழி லானந்த ருத்திரேசத்
தடிகள் கழிய விழுந்தவென்னைத்
தள்ளலை யாளது சீர்த்தியாகுந்
தாழ்ந்தவெள் ளென்பும்பைந் தோலுமற்றும்
விள்ளலை யாத லறிந்துளார்க்கு
மெய்ப்புக ழாக விளங்கிற் றன்றே. (80)
வேறு.
அன்றி னார்புரத் தாரழற் கோட்படா
தன்பி னான்றவர் மூவர் பிழைத்தமை
இன்றும் வையக மோதிடக் கேட்டநீ
யேர்கொ ளானந்த ருத்திரே சத்தனை
நன்று மன்பின் வணங்கலை போற்றிலை
நாடி நண்ணிலை திண்ணிய நெஞ்சமே
ஒன்று நிற்புறத் தோதிலன் வல்விரைந்
துனக்கு நேர்ந்த நெறிக்க ணியங்கிடே. (81)
இயங்கு முப்புர மெய்து பொடிப்பதற்
கியக்க மின்றி யிருந்த புடவியும்
தயங்கு வெற்பு மியங்க வெளிக்கொளுஞ்
சதுர னானந்த ருத்திரே சத்தவன்
புயங்கு லாவுவெண் ணீற்றொளி கண்டவர்
போதுந் தென்றிசை யானுருக் காண்பரோ
வயங்கு மன்னவன் கச்சுடை கண்டவர்
மறலி பாசம் வரிக்கப் படுவரோ. (82)
படுவதொன் றில்லை துன்பமல் லானெடும்
பௌதி கத்திடைப் பண்பினெஞ் சேயது
விடுவ தேவிடுத் தாலெழிற் காஞ்சியின்
மேவு மானந்த ருத்திரே சத்தனைத்
தொடுவ தாம்பய னெய்துறு மெய்துறிற்
சூழ்ந்த வல்வினை மூல மலத்தொடும்
கெடுவ தாமவை கெட்டிடி னெய்து மாற்
கேடி லாப்பர மானந்த வெள்ளமே. (83)
வெள்ளம் பூத்த விரிசடைக் கற்றையும்
வெண்பொ டித்திகழ் பாலமும் பாலத்துக்
கள்ளம் பூத்த கதிர்க்கன னோக்கமுங்
கதித்த பேரருட் பார்வை முகங்களும்
அள்ளெ ழிற்கறைக் கண்டமு மாதடை
யாளம் வைத்த மருமக் குறிகளும்
உள்ள லானந்த ருத்திரே சத்தவன்
மலர்ப்ப தமும்வ யங்குவ வெங்குமே. (84)
எங்கு நின்றுல கோம்பு மிறைவனை
யென்னு யிர்க்குயி ராகிய வின்பனைப்
பொங்கு பேரரு ணல்கும் புராணனைப்
போகு கோட்டிமில் வெள்விடைப் பாகனைக்
கங்கை வேணி தரித்த கடவுளைக்
காஞ்சி யானந்த ருத்திரே சத்தனை
அங்கை யாமல கக்கனி போலவ
னருளி னாற்கண்டு கொண்டன மென்பவே. (85)
என்பு காண்டொறு மீது நமக்குவந்
தெய்து மேயென வும்பர் கலங்குவார்
வன்பி னார்ந்த கபாலங்கள் காண்டொறு
மாலும் வேதனு மவ்வகை யேங்குவார்
முன்பன் னோர்கள் புகும்பொழு தையனே
மூரி மாமணிப் பேரணி தோற்றிடாய்
தென்பி றங்கிய காஞ்சி வளம்பதி
சிவணு மானந்த ருத்திரே சத்தனே. (86)
சிவணு மானந்த ருத்திரே சத்தனே
தெய்வ வாணி நதிக்கரை வாசனே
உவண வூர்தி விழிக்குச் சலந்தர
னுடலம் போழ்ந்த திகிரி யளித்தவா
கவன வாம்பரி குஞ்சர மற்றுநிற்
காத லாற்றொழு வார்க்கருள் கின்றனை
பவன வேகமும் பிற்பட முற்படு
பாய்வி டைவைத்த பண்பு தெரிக்கவே. (87)
தெரிக்கு மாகம மாமறை யாதியுந்
தெய்வ போக நுகர்ச்சி யொழுக்கமும்
பரிக்கும் பாச மிரிக்கு நெறிகளும்
பண்ண வர்க்கதி காரத் தொடர்ச்சியும்
விரிக்கு மெய்ப்புகழ்க் காஞ்சி வளம்பதி
மேவு மானந்த ருத்திரே சத்திறை
தரிக்கும் பேரரு ளாற்றிரு மேனியைத்
தரிக்கி லானெனி லாம்வகை யில்லையே. (88)
இல்லை யானமக் கென்று வெறுக்கைமிக்
கெய்தி னார்களை யெண்ணி யிரங்கிநீ
அல்ல லிற்றுளை கின்றனை நெஞ்சமே
அவர்க ளோபண்டை நல்வினை யாற்றினார்
செல்ல லாம்வகை தீவினை முன்புநீ
செய்தொ ழிந்தனை தெய்வதக் காஞ்சியின்
மல்ல லானந்த ருத்திரே சத்தனை
வழுத்து மேலை வளத்தினை யாவையே. (89)
ஆவ தும்மழி வெய்தலும் பாலவே
யாவ தற்கு மகிழ்ச்சி திளைத்தலும்
போவ தற்குக் கவலைப் படுதலும்
பூரி யோர்தொழி லாம்விடுத் துள்ளமே
சாவ தும்பிறப் புந்தவிர்த் தாண்டருள்
தலைவன் காஞ்சி வளம்பதி பொற்புற
மேவு மானந்த ருத்திரே சத்தவன்
மெய்ம்மை யாரரு ளேதுணைக் கோடியே. (90)
வேறு.
கோடி கோடிவன் பூதங்கள் குழுமிநின் றாட
ஆடு மானந்த ருத்திரே சத்திறை யமரர்
நாடி நையநப் புணர்ந்தன னருளினான் மனமே
கூடு மன்னவன் குறிப்பினை யேகுறிக் கொள்ளே. (91)
குறிக்கொ ளானந்த ருத்திரே சத்தமர் குழகா
வெறிக்கு மெல்லிதழ்க் கொன்றைசூழ் வேணியா நல்ல
நெறிக்க ணின்றில னென்றெனைத் தள்ளலை யன்னை
செறிக்கு மாசொரீஇச் சேயெடுத் தணைப்பது கடனே. (92)
கடங்க விழ்க்கும்வண் கவுட்டுளைக் களிற்றுரிப் போர்வைப்
படங்க விழ்க்கும்பொற் சடைமுடிப் பகவமெய் யடியார்
அடங்கு மானந்த ருத்திரே சத்தம ரமல
விடங்க முற்றநின் றிருவுரு விழியெதிர் காட்டே. (93)
காட்ட தாகிய தன்னரு ளிடையெனைக் கலவி
மீட்டி ரண்டறத் தன்னொடும் விராய்த்தகை வினைகள்
ஓட்டி வல்வினை யேற்றுமே லுறுவினை காத்தான்
கூட்டு மானந்த ருத்திரே சத்தமர் குழகன். (94)
குழக னானந்த ருத்திரே சக்குணக் கொண்டல்
அழகன் வாணுதல் விழிகொலோ வங்கையி னெருப்போ
உழலு நாயினேன் முன்செல வுறுவினைக் காட்டை
முழுது முண்டது விண்டது மூலமா மலமே. (95)
மலத்தின் வேரொடு மிருவினை மும்மல மாட்டி
நலக்கு மானந்த ருத்திரே சத்தமர் நம்பன்
நலக்க ணல்கிய வுதவிநே ருதவியின் றுளமே
அலக்கண் மாற்றிய வவனடித் தொழும்பூண் டொழுகே . (96)
ஒழுகு கண்கணீ ருரங்கழீஇத் தாழ்ந்திரு தாளும்
இழுக நெக்குநெக் கழுமடி யாருள விலதைக்
கொழுகொம் பாயினன் குளிர்பொழின் மலர்மது விடைத்தேன்
முழுகு மானந்த ருத்திரே சத்தமர் முதல்வன். (97)
முதல்வ னானந்த ருத்திரே சத்தின்முன் னினர்க்குப்
பதுமன் மாலறி யாதவப் பெரியபண் டாரப்
புதவு நீக்கினன் காவலுங் கடிந்தனன் புகுமின்
மதவு மாமலக் கலிதப வௌவுமி னறவீர். (98)
அறவ னானந்த ருத்திரே சத்தருட் செல்வன்
பிறவி நீக்கிய பேயினேன் போலுரு வெடுத்தான்
துறவின் மேலவர் மாலயன் சுரருமற் றெவரும்
உறவி தாமென வவ்வுரு வுளத்துறுத் துவரே. (99)
உறுத்த ருட்பத மென்றலை மேலுறு பாசம்
அறுத்த வானந்த ருத்திரே சத்தனை யடுத்தோர்
வெறுத்த செல்வங்க ளாவன விம்மித வுலகம்
பொறுத்த வான்றரு விருநிதி புகழ்ச்சிந்தா மணியே. (100)
காப்பு உள்பட ஆகச் செய்யுள் 101.
கச்சி ஆனந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.
------------------
ஸ்ரீ மெய்கண்டதேவர் மிளிர்கழல் வெல்க.
ஸ்ரீ மாதவச் சிவஞானயோகிகள் மலரடி வாழ்க.
ஸ்ரீ கச்சியப்பமுனிவரர் கழலடி வாழ்க.
கவிராக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரபந்தங்கள்
3. ஆனந்தருத்திரேசர் கழிநெடில்.
திருவாவடுதுறையாதீனம்.
தேவாரம்.
"தாயவன்கா ணுலகிற்குத் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்
வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்
வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணு ளோர்க்கும்
சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத்
திருவடியே யுள்கிநினைந் தெழுவா ருள்ளம்
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் னெண்ணத் தானே.''
திருச்சிற்றம்பலம்.
ஆனந்தருத்திரேசர் கழிநெடில்.
மண்ணில மாதி நாதமீ றான
மலி தரு தத்துவக் குழாத்துள்
வதிந்திடை தெரியா திருவினை யீட்டி
மறுப்பயில் பவம்பல வெடுத்து
விண்ணில மாதி யிடந்தொறுந் திரிந்து
மெலி தரு வீணனேன் றனையும்
விரைமலர்ப் பதத்து எழுத்திமீட் டெழாமை
வியனருட் பார்வைதந் தருளாய்
பெண்ணிடம் படர்ந்த கருணையங் குன்றே
பெட்டவ ரகத்தினள் ளூறும்
பெருகொளிப் பிழம்பே யிகந்தவர்க் கென்றும்
பீழைசெய் தூங்குவீங் கிருளே
அண்ணலர் தேவர்க் கரியமெய்ப் பொருளே
அடியவர்க் கெளியவா னமுதே
அழகடை கிடக்குங் காஞ்சிவீற் றிருந்த
ஆனந்த ருத்திரே சுரனே. (1)
மும்மலச் செருக்கு மிருவினைத் திருக்கு
முதிர்ந்தவா ணவப்பெருங் கிழங்கும்
முழுவது மடர்த்த வடியவர் குழாத்துண்
முன்னிவாழ் வழிமுறை யறியேன்
செம்மலங் கருணை வழங்குநிற் பணியச்
சிந்தையுள் யாவது நினையேன்
சிதடனாய்த் திரியும் வீணனேன் றனக்கும்
திருவருட் பார்வை தந் தருளாய்
இம்மெனு மளவின் முப்புரஞ் சிதைய
இளநகை விடுத்தசே வகனே
எறுழ்வலி யியம னுயிர்குடித் தொருவற்
கீண்டுமா யுகமருண் முதலே
அம்மைவல் வினைக ளடியவர்க் கேறா
தனைத்துமேற் றருணிரு மலனே
அழகடை கிடக்குங் காஞ்சி வீற் றிருந்த
ஆனந்த ருத்திரே சுரனே. (2)
ஒழுங்கிய மறையின் விதித்தன வேம்பு
முடற்றுவல் விடமுமொத் தினியா
ஒழிதர விலக்கு முழுவதுங் கரும்பு
முறுசுவை யமிழ்து மொத் தினிப்ப
விழுங்கெழு நான்கு கோடிவெந் நிரய
விழுக்குழி யழுந்தமிக் குஞற்றும்
வினையினேன் றனையும் வம்மெனப் பணித்து
விளங்கருட் பார்வைதந் தருளாய்
எழுங்கலை யோதை செஞ்செவி யடக்கி
இனிதுல களித்தவெண் குணனே
இருநில முலைப்ப வருபுனற் கங்கை
யெரிசடைக் கரந்தவெண் புயனே
அழுங்கிய வமரர்க் கிரங்கியா லாலம்
அயின்றவெண் வடிவுடைப் பொருளே
அழகடை கிடக்குங் காஞ்சிவீற் றிருந்த
ஆனந்த ருத்திரே சுரனே. (3)
என்புநெக் குருக விழிப்புனல் வார
இருகரஞ் சென்னிமேற் குவிய
இரும்புகழ் நவின்று நாத்தழு தழுப்ப
எழுமயிர் மெய்யெலாம் பொடிப்ப
மன்புலன் வழியிற் பொறிசெலா தடக்கி
மலர்ப்பத நினைக்குமா றறியா
மடமையேன் றனக்கு மலவிரு ளொதுக்கி
வயங்குகருட் பார்வை தந் தருளாய்
பொன்புரை சடிலத் தெறிதிரைக் கங்கை
புனிற்றிள மதியலைத் தாடப்
பொறியராத் தளர்ந்து தலைக்கலத் தடங்கப்
பொருப்பிறை மகள்விழி களிப்ப
அன்புமிக் கிருவர் தொழுதெழ மன்றுள்
அருணடங் குயின்றபே ரறிவே
அழகடை கிடக்குங் காஞ்சிவீற் றிருந்த
ஆனந்த ருத்திரே சுரனே. (4)
வலம்வரப் பதமுங் கும்பிடக் கரமும்
வயங்குரு நோக்கவாள் விழியும்
வண்புகழ் கேட்கச் செவியுநின் பாதம்
வணங்குறச் சென்னியும் வழுத்த
நலம்வரு வாக்கு நினையநெஞ் சகமும்
நல்கிய கருணைநா டாது
நாரிமார் தொழற்கே யனைத்தையும் விடுத்த
நவையினேன் றனையுமாண் டருளாய்
குல மறைச் சிரமு மடியவ ருளமுங்
கோமள மாதொடு மமர்ந்த
கோலமே சூலத் தந்தக னுடலங்
கோத்தெடுத் தருள்சிவக் கொழுந்தே
அலமரு பிறவி மலமற வெவர்க்கும்
அருளிய வருட்பெருங் கடலே
அழகடை கிடக்குங் காஞ்சி வீற் றிருந்த
ஆனந்த ருத்திரே சுரனே. (5)
ஒளிர்விளக் கினம் வீழ் விட்டிலுந் தூண்டில்
உணவுவீழ் மீனமு மிசை வீழ்
ஒண்சிறை மாவும் வேங்கைவீ ழளியும்
ஒருத்தல் வீழ் பிடியுமே யென்னத்
தெளிர்வளை மடவார் கலவிபே ரின்பச்
செறிவென மதித்து வீழ்ந் தாவி
சிதையும்வல் வினையின் சீத்தையேன் றனையும்
திருவடிக் கலப்பின்வைத் தருளாய்
வளியெழப் பெயரு முறச்செவிப் பனைக்கை
மதங்கவிழ் கரடமால் வேழம்
வகிருரிப் போர்வைச் சிங்கவல் லேற்று
வயங்குரி யுத்தரா சங்கத்
தளியறு வேங்கை யதளுடைப் பரனே
அணியெலாம் வகுத்தகா ரணனே
அழகடை கிடக்குங் காஞ்சி வீற் றிருந்த
ஆனந்த ருத்திரே சுரனே. (6)
பெருந்தவந் தான முதலிய தருமம்
பேணிவேட்டனவெலாம் பெறாது
பிறருழைச் செல்வங் கண்டழுக் கற்றும்
பிறனிலாள் வனப்புவேட் இழந்தும்
திருந்துமே தகையென் றுலகவர் மதிப்பச்
சிறந்தவர்க் கிழிவெடுத் துரைத்தும்
தேம்புறப் பிறருக் கிடுக்கணே விளைத்தும்
திரிதரு மெனையுமாண் டருளாய்
முருந்திள முறுவன் மாதரார்க் கெல்லாம்
முழங்கழல் சான்றதா வேட்ட
மொய்ம்பரை யலது பிறரை நோக் காமை
முறையென நூலெலாம் விதித்தும்
அருந்திறன் முனிவர் மா தர்செஞ் சழிய
ஐயமேற் றருள்களை கண்ணே
அழகடை கிடக்குங் காஞ்சிவீற் றிருந்த
ஆனந்த ருத்திரே சுரனே. (7)
பண்டுறு தவத்தி னீட்டு தீ வினையாற்
பரந்தபன் னோயுநல் குரவும்
பரிபவப் பாடு மிளிவரு திறமும்
பண்பறு மிழிகுலச் சார்வும்
மிண்டுமெப் பிழையும் வருவவென் றறிந்தும்
விளங்குமெப் பவத்துந்தீ வினைகள்
விளைப்பதே விருது கொண்டுள மழியும்
விதியினேன் றனையுமாண் டருளாய்
தொண்டையங் கனிவாய்க் கலைமகள் கொழுகன்
சுந்தரத் தலைக்கல னணிந்த
தொடிபொலி தடக்கை யேந்தலே மாயற்
றொலைத்தகங் காளமார் புயனே
அண்டர்க ளெலும்பும் பன்றியின் கோடும்
ஆமையு மணிந்தமார் பகனே
அழகடை கிடக்குங் காஞ்சிவீற் றிருந்த
ஆனந்த ருத்திரே சுரனே. (8)
மாதினைக் கொடுத்து மகவினை யரிந்து
மதிப்பருந் திறம்பல புரிந்தும்
வயங்கடி யவர்சீர்க் கடியனே னெங்கே
மற்றது நிற்கநின் னடியார்
போதுறி னெழுத லாதியின் றேனும்
பொற்பவா ளாங்கவர்ப் புகாது
புகர்நினைந் துரைத்துத் தகவில வுஞற்றும்
பூரியேன் றனையுமாண் டருளாய்
காதழற் கடவுள் செஞ்சுடர்க் கடவுள்
கலைமதிக் கடவுளோர் மூன்றுங்
கண்ணெனக் கதிர்க்குங் காரணப் பொருளே
காழறு முயிர்க்குயி ராகி
ஆதியீ றிடையு மாயவை யெய்தா
அகண்டசிற் பரவெளிப் பரப்பே
அழகடை கிடக்குங் காஞ்சிவீற் றிருந்த
ஆனந்த ருத்திரே சுரனே. (9)
மூர்த்தியுந் தலமுந் தீர்த்தமு மாகி
மூடனேற் கறிவுறா வண்ணம்
மொய்த்தெழு மருளாற் புண்ணிய மாக்கி
முன்னறி வுறப்பல விளைத்துச்
சேர்த்தகச் சரியை நான்குமே லாகத்
திகழுமந் நான்கையுஞ் செறித்துத்
திருத்துநின் விரகை யுள்கியுள் ளுருகாச்
சிறியனேன் றனையுமாண் டருளாய்
பார்த்தலை நாத மிறுதியாக் கிடந்த
பலவகைத் தத்துவங் கடந்து
பகையுற விறந்த வுயிர்நிலை கடந்து
பணிகொளுங் கருத்தினை வாட்டி
ஆர்த்தபே ரிசையி னருளையுங் கடந்திட்
டறிபவர்க் கறிவுறுஞ் சுகமே
அழகடை கிடக்குங் காஞ்சி வீற் றிருந்த
ஆனந்த ருத்திரே சுரனே. (10)
திருச்சிற்றம்பலம்.
ஆனந்தருத்திரேசர் கழிநெடில் முற்றிற்று.
This file was last updated on 16 Feb. 2020.
Feel free to send the corrections to the Webmaster.