கவிராஷஸ ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள்
பாகம் 3
6. திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி.
7. திருத்தணிகையாற்றுப்படை (உரையுடன்)
kacciyappa munivar pirapantangkaL - part 3
6. tiruttaNikaip patiRRuppattantAti
7. tiruttaNikaiyaRRuppaTai (with urai)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned PDF of this work.
The e-text has been generated using Google OCR and subsequently edited by K.Kalyanasundaram.
We thank Mr. R. Navaneethakrishnan for his help in proof-reading the etext file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கவிராஷஸ ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள் - பாகம் 3
6. திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி.
7. திருத்தணிகையாற்றுப்படை உரையுடன்
Source:
கவிராக்ஷஸ ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரபந்தங்கள்
( இரண்டாம் பகுதி )
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து
இருபத்தொன்றாவது குருமஹாசந்நிதானம்
ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி
அவ்வாதீன வித்துவான் த. ச. மீனாட்சி சுந்தரம் பிள்ளையால்
பல பிரதிகளைக்கொண்டு பரிசோதித்துப் பதிப்பிக்கப்பெற்றன.
மெய்கண்டார் யாண்டு-731. -- விசய - பங்குனி
உரிமை பதிவு. 1954
ஸ்ரீ முருகன் அச்சகம், கும்பகோணம்.
திருவாவடுதுறை ஆதீன வெளியீடு 81.
--------
திருவாவடுதுறை ஆதீனம்
இருபதாவது குருமஹாசந்நிதானம் ஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள்
மூன்றாவது குருபூஜை வெளியீடு / விசய-பங்குனி- திருவாதிரை
இரண்டாம் குருபூசை வெளியீடு 1953 –நந்தன- திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ்
முதற்குருபூசை வெளியீடு1952 –கர- திருமந்திர சிந்தனை
சிவபரிபூரணம் – திருவிடைமருதூர் / விக்ருதி – பங்குனி – திருவாதிரை 1951
திருவாவடுதுறையாதீனம்.
குறிப்பு :- இப்புத்தகம் வேண்டுவோர் ஆதீனம் லைபரேரியன் அவர்களுக்கு 0-8-0 தபால்
தலைச்சீட்டு அனுப்பிப் பெற்றுக்கொள்க.
௳
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
கவிராக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள் - (இரண்டாம் பகுதி)
1. திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி.
2. திருத்தணிகையாற்றுப்படை உரையுடன்
பொருளடக்கம்.
1. முகவுரை
2. நூலாசிரியர் வரலாறு
3. உரையாசிரியர் வரலாறு
4. திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி
5. திருத்தணிகையாற்றுப்படையுரை
திருவுருவப்படங்கள்.
1. ஸ்ரீ பஞ்சாக்கரபரமாசாரியரை ஸ்ரீ-ல-ஸ்ரீ மகாசந்நிதானம் வணங்கி நிற்றல்.
2. கவிராக்ஷஸ - ஸ்ரீகச்சியப்ப முனிவர்.
-----------
௳
சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
1. முகவுரை.
'தணிகையாற்றுப் படை' என்றதற்கு வீடு பெறச் சமைந்தானோர் இரவலனை வீடுபெற்றான்
ஒருவன் தணிகையினிடத்தே ஆற்றுப்படுத்தது என்று பொருள் கூறுவர். ஆற்றுப்படையின்
இலக்கணம் தொல்காப்பியம் முதலிய நூல்களிற் காண்க. திருமுருகாற்றுப்படைக்கு ஆசிரியர்
நச்சினார்க்கினியர் உரைத்த உரையானும் உணர்க. விரிக்கிற் பெருகும். இனி,
''பதிற்றுப்பத்தந்தாதி"யின் இலக்கணம் முன்பு வெளியீடுகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னரேயே
தெய்வச் செந்தண்டமிழையும், சித்தாந்த சைவத்தையும் தமிழகத்திலே நன்கு வளர்த்துப் பரிபாலனம்
செய்யத் தொடங்கியது. ‘கல்விக் களஞ்சியம்' எனவும், ‘சிவராசதானி' எனவும் கற்றோர் பலரால்
என்றென்றும் போற்றப்பெற்று வருவது. பதினெட்டு - பத்தொன்பதாம் நூற்றாண்டிலே
இவ்வாதீனம் அடைந்த பெருமை தமிழர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சியையும் பெருமையையும்
உண்டு பண்ணுவதாம் என்க. ஸ்ரீ மாதவச் சிவஞானயோகிகள், அவர்கள் மாணவர் பன்னிருவர்,
அவ்வவர் வழியில் வந்த மாணவர் தமிழ்நாடு முழுவதும் தமிழையும் சைவத்தையும் தழைக்கச்
செய்தனர். ஸ்ரீ கச்சியப்ப முனிவர், ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள், தொட்டிக்கலை-ஸ்ரீ
சுப்பிரமணிய முனிவர் இவர்கள் அருளிய நூல்கள் சிறுவர் முதல் பெரியோர் வரையில்
படித்துத் தமிழ்ச்சுவையைச் சித்தாந்தப் பேரமுதுடன் துய்த்து இன்புறுதற்குரியனவாம்.
ஆகலின், தமிழ் மக்கள் அனைவரும் இவர்கள் அருளிய பிரபந்தங்களையும் படித்து இன்பம்
துய்ப்பார்களாக.
இனி, இவ்வாதீனத்தில் இப்பொழுது இருபத்தொன்றாவது குருமஹாசந்நிதானமாக வீற்றிருந்தருளிச்
சிந்தாந்த சைவத்தையும் செந்தமிழ் மொழியையும் பண்டைப் பெரியோர் கொண்ட முறையிற்
சிறிதும் திறம்பாது போற்றிப் பேணி வளர்த்துவரும் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகசுவாமிகள்
பட்டம் ஏற்றுக்கொண்ட மூன்று ஆண்டுகளில் தமது ஆதீனத்துக் கல்விக் களஞ்சியமாகிய
சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் உள்ள பல நூல்களையும் உரைகளையும் அச்சிடுவித்துத்
தமிழுலகுக்கு வழங்கி வருவதையும், அடிக்கடி மெய்கண்டார் மாநாடு, திருமந்திர மாநாடு
போன்ற மாநாடுகளைச் சிறப்புற நடாத்துவித்துப் புண்ணியமும் புகழும் தமிழ் மக்கள் அடையும்படி
செய்து மகிழும் பெருங்கருணைத் திறங்களையும் நன்மக்களில் போற்றாதார் எவர்கொல்!
ஸ்ரீ-ல -ஸ்ரீ மகாசந்நிதானம் நீடு வாழ்க என வாழ்த்துவதையன்றி வேறறியேன்.
குற்றம் பொறுத்தருளுமாறு அறிஞருலகத்தை வேண்டுகின்றேன்.
திருவாவடுதுறை த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
8-4- 54. ) ஆதீன வித்துவான்.
--------------
௳
சிவமயம். திருச்சிற்றம்பலம் .
2. நூலாசிரியர் வரலாறு
'திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி ' 'திருத்தணிகையாற்றுப்படை' முதலிய பிரபந்தங்களை
இயற்றியருளிய கவிராக்ஷஸ -- ஸ்ரீகச்சியப்ப முனிவர் திருவடிகளைச் சைவப்புலவருலகம்
உச்சிமேற் கொண்டு போற்றி உய்வது பிரசித்தம். இம்முனிவர்பிரான் தொண்டை மண்டலத்திலே
திருத்தணிகையம்பதியிலே அவதரித்தவர்கள். பரம்பரைச் சைவவேளாளர் : அபிஷிக்தர்மரபு.
வடமொழிக் கடலையும் தென் தமிழ்க்கடலையும் நிலைகண்டுணர்ந்த திராவிடமாபாடியகாரர்
ஆகிய ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள் மாணவர் பன்னிருவருள் முதல்வர். திருக்கயிலாய
பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் மரபிலே பன்னிரண்டாவது
ஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் பெரிய பட்டத்திலும் 13-வது ஸ்ரீ அம்பலவாண தேசிகர்
சின்னப்பட்டத்திலும் வீற்றிருந்த காலத்து ஸ்ரீ அம்பலவாண தேசிகர்பால் சைவ சந்நியாசமும்
சிவஞானோபதேசமும் பெற்றுக்கொண்டவர்கள்.
12-வது குருமகாசந்நிதானம் திருச்சிற்றம்பல தேசிகமூர்த்திகளும் திராவிட மாபாடியகாரர்
மாணவகரே. சென்னைக்கு அண்மையில் உள்ள அரும்பாக்கம் என்னும் ஊர் ஸ்ரீ திருச்சிற்றம்பல
தேசிகர் அவதரித்த தலம் என்பர். இவர்கள் தொண்டைமண்டல வேளாளர்மரபு என்றும்
பெரியோர் சொல்வர். ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வடமொழி தென்மொழிகளில் வல்லவர்.
வாக்குவல்லபமுடையவர். பிரசங்கசாதுரியமுமுடையவர், நெட்டுருப்பண்ணிய பழம்
பாடல்களை ஒப்பித்தல் போலப் புதிய செய்யுட்களை விரைவில் இயற்றியருளுவர் என்பர்
பெரியோர்.
இனி, மேற்கூறிய பிரபந்தங்களையன்றி முதற்பகுதியாக அச்சிடப்பட்டுள்ள
1. பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி.
2. கச்சி ஆனந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி.
3. கச்சி ஆனந்தருத்திரேசர் கழி நெடில்.
4. கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதாது.
5 பஞ்சாக்கரதேசிகர் அந்தாதி
என்னும் பிரபந்தங்களையும் அருளிச் செய்தார்கள். பெருங்காப்பிய இலக்கணங்களெல்லாம் மலிந்து
விளங்கும் விநாயக புராணம், திருத்தணிகைப் புராணம், திருவானைக்காப் புராணம், பேரூர்ப்
புராணம், பூவாளூர்ப்புராணம் முதலிய வற்றையும் இயற்றியருளினர். தமது ஆசிரியர் ஸ்ரீ மாதவச்
சிவஞானயோகிகள் கட்டளையிட்டருளியபடி ஸ்ரீ காஞ்சிப் புராணத்து இரண்டாங்
காண்டத்தையும் தமிழில் மொழிபெயர்த்தருளினர்.
இனி, திருத்தணிகைச் சரவணப்பெருமாளையர், விசாகப் பெருமாளையர் என்னும் இரு பெரும்
புலவர்களுடைய தந்தையார் ஆகிய கந்தப்பையர் இம்முனிவர் பெருமானுடைய மாணவர்.
கவிபாடும் வன்மையால் கவிஞர்பெருமான். கவிச்சக்கரவர்த்தி, கவிராக்ஷஸர், மகாவித்துவான்
எனச் சிறப்புப் பெயர் பெற்று இவர்கள் விளங்கினார்கள். சிவதலயாத்திரை செய்தலில் பெரு
விருப்புடையவர்கள். சிலதலங்களில் சிவதரிசனம் செய்து சில காலம் அங்கே தங்கியிருப்பார்கள்.
அங்கங்கேயுள்ள மக்களுக்குத் தமிழறிவும் சைவசமய நூற்பயிற்சியும் செய்வித்து வந்தார்கள்.
செல்வமும் செல்வாக்கும் இயல்பாகவே மிகப்படைத்தவர்கள்.
மந்திர சித்தியும் சிவஞானமும் கைவரப்பெற்ற சிவாநுபூதிமான். இவர்கள் ஞானாசிரியரிடத்தும்
தமது வித்தியாகுருவினிடத்தும் பக்தியும் விசுவாசமும் பெருமதிப்பும் உடையவர்கள்.
இனி, இவ்வாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
ஸ்ரீ கச்சியப்ப முனிவரை உபாசனாமூர்த்தமாகக்கொண்டு ஒழுகியவர்கள். தமக்குச் செய்யுட்களின்
பொருள் விளங்காமல் மயங்கும்போதெல்லாம் ஸ்ரீ கச்சியப்பமுனிவர் திருவடிகளை தியானித்துச்
சிறிது பொழுது இருப்பின் நன்கு விளக்கமுறும் எனப் பிள்ளையவர்களே தம் மாணவர்களிடம்
அடிக்கடி கூறினார்கள் என ஸ்ரீமத்-ஐயரவர்கள் எழுதியுள்ளார்கள்.
ஸ்ரீ கச்சியப்ப முனிவர் காஞ்சீபுரம், திருத்தணிகை, திருவானைக்கா. சென்னை முதலிய இடங்களில்
பெரும்பாலும் வசித்து வந்தார்கள். சென்னையில் தங்கியிருந்தபோது விநாயக புராணம் பாடி
அரங்கேற்றி அதனால் தமக்குக் கிடைத்த பாதகாணிக்கையைக் கொண்டு இவ்வாதீனத்துப்
பிரதம பரமாசாரியர் கோயில் முன் மண்டபப் பணியைச் சிறப்புற இயற்றினார்கள். இவர்கள்
அருளிய நூல்கள் யாவும் சொல்வளம், செய்யுள் நடை, சந்தம், பொருட்சுவை மலிந்து சிவமணம்
கமழும். இவர்கள் வாக்கு சங்கநூற்புலவர் வாக்குப் போலக் கம்பீரமானது. ஈடு எடுப்பு இல்லாதது.
இவர்கள் சிவத்தியான உறைப்பு மிக உடையவர்கள். ஆகலின், ஒரு காலத்து இவர்கள் மாணவர்
கந்தப்பையர் குன்ம நோயால் பெரிதும் துன்புற்று வருந்திய காலத்து இத் திருத்தணிகையாற்றுப்
படையைப் பாடித்தந்து, முறையாகப் பாராயணம் பண்ணிவரக் கட்டளையிட்டு அந்நோயை
மாற்றியருளிசார்கள். குட்டம் முதலிய நோய்களையும் இறைவர் திருவருளால் மாற்றியருளினர்
என்பர் பெரியோர்.
இனி, இவ்வாதீனத்து 14-வது பட்டத்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக மூர்த்திகள் பட்டத்துக்கு வருவதற்கு
முன்பு நன்றாகப் படித்து வரும்படி ஸ்ரீ கச்சியப்ப முனிவரால் தூண்டப்பெற்று வந்தார்கள் என்பர்.
காஞ்சீபுரத்திலே சாதாரண வருஷம் சித்திரை ௴ 11 ௳ மங்கள வாரம் புனர்பூச நாளில் ஸ்ரீ
கச்சியப்ப முனிவர் சிவபரிபூரணமுற்றார்கள். அது கி.பி. 1790க்குச் சரியாம்.
-------------
௳
சிவமயம்.
3. உரையாசிரியர் வரலாறு.
திருத்தணிகையாற்றுப் படைக்கு உரைவரைந்த பெரியோர்
புரசை, அட்டாவதானம் -- ஸ்ரீ சபாபதி முதலியாரவர்கள். இவர் தந்தையார் இரிசப்ப முதலியார்
என்பவர். வெண்ணெய்க்கார இரிசப்ப முதலியார் எனவும் அவர் வழங்கப்பட்டார். தாயார்
முனியாத்தையம்மாள். இவர்களுக்கு மூன்று புத்திரரும் பதினொரு புத்திரிகளும் பிறந்தனர்.
புத்திரர் மூவருள் இளையவரே ஸ்ரீ சபாபதி முதலியார் ஆவார். இவர் முன்னோர் தையூர், புழல்
கிராமம் முதலிய இடங்களில் வசித்திருந்து பஞ்சம் காரணமாகச் சென்னையில் புரசைப்பாக்கத்தை
அடைந்து சீவனம் செய்து வந்தனர் என்பர். நல்லோரையில் பிறந்த இவர் புரசையில் பள்ளிக்கூடம்
வைத்துக்கொண்டிருந்த புதுவை - அச்சுதவுபாத்தியாயரிடத்தில் சிற்சில இலக்கியமும் இலக்கணமும்
கற்றார். அச்சுதவுபாத்தியாயர் சோடசாவதானம் – சாமிநாத கவிராயர் மாணவர். தமிழ்க்கல்வி
பயிலும் போதே அவதானம் செய்யவும் இவர் பழகினர். சென்னைக் கல்விச் சங்கத்திலே தலைமைப்
புலமையை 1839 வரை நடத்தி வந்தவர் வித்துவான் ஸ்ரீ தாண்டவராய முதலியார். அவரிடத்திலும்
இவர் தமிழ் பயின்று வந்தனர். தாண்டவராய முதலியார் ஜட்ஜ் உத்தியோகத்தில் நியமிக்கப்பட்டு
விசாகப்பட்டணம் சென்றபின் அட்டாவதானம் சபாபதி முதலியார் வேறு சிலரிடம் கல்வி கற்றார்.
தாண்டவராய முதலியார்பால் அப்போது 22 மாணவர் தமிழ்க் கல்வி பயின்றனர் என்ப. மழவை
மகாலிங்கையர், இயற்றமிழாசிரியர் விசாகப்பெருமாளையர், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்,
புதுவை நயனப்ப முதலியார், காஞ்சிபுரம் சரவணதேசிகர் முதலியோர் இவர் ஆசிரியருள்
முக்கியமானவர். காஞ்சீபுரம் மகாவித்துவான் ஸ்ரீ சபாபதி முதலியாரவர்களும் இவர் ஆசிரியரே.
மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இவர் சக பாடியாவார்.
இவருடைய மாணவர் திருமயிலை - வித்துவான் - சண்முகம் பிள்ளை முதலியோர். இவர் இயற்றியுள்ள
புராணங்களும், பிரபந்தங்களும் பலப்பல, தனிப்பாடல்களும் பலவாம். இவர் வண்ணப்பாக்களை
விரைவிலே இயற்றிக் கற்றோரை மகிழ்விப்பர் என்ப. வண்ணக் களஞ்சியம் என்பது இவருக்குத்
தக்கதாம். இவர் பாடிய புராணம் திருப்போரூர்ப்புராணம் முதலியன. யமகவந்தாதி,
பதிற்றுப்பத்தந்தாதி, கலம்பகம் முதலிய பல பிரபந்தங்களையும் பாடியுள்ளார். பல நூல்களுக்கு
உரை வரைந்திருக்கின்றனர் எனப் பெரியோர் கூறுவர். இவர் செய்துள்ள தணிகையர்ற்றுப்
படை உரை மிகச் சிறந்ததோர் உரையாம். உரையின் போக்கு உச்சிமேற் புலவர் கொள்
நச்சினார்க்கினியர் உரை நடையை ஒத்தது என்னலாம். சித்தாந்த சைவக் கருத்துக்களை யெல்லாம்
அங்கங்கே உரிய இடங்களில் நன்கு காட்டிச் செல்கின்றார். இவர் உரை கற்றோர்க்குப்
பெருவிருந்தாம், கற்கும் மாணவர்கட்கும் பெரிதும் பயனளிப்பதாம். ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள்
திருவடியில் மாறாத அன்பு பூண்டொழுகிய இவ்வுரையாசிரியர் புரசபாக்கத்திலே விய - ஆவணி -
14 ௳ (28-8-1886)ல் தமது இல்லத்தில் சிவபதம் அடைந்தார் என்ப.
------------
௳
சிவமயம் - திருச்சிற்றம்பலம்
கவிராக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரபந்தங்கள்.
திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி.
குருமரபு வாழ்த்து
திருச்சிற்றம்பலம்.
''கயிலாய பரம்பரையிற் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணை
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பாநுவாகிக்
குயிலாரும் பொழிற்றிருவா வடு துறைவாழ் குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் றிருமரபு நீடூழி தழைக மாதோ.
- ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள்
விநாயகர் காப்பு.
உயிர்க்குங் கைத்தல மொன்றுடை யாற்பணிந்
தயிர்க்கு மச்ச மறுத்தடி யாருளம்
செயிர்க்கு ழாஞ்சிதை யுந்தணி கேசனைப்
பயிர்க்கு மேக மெனப்பயில் விப்பரால்.
நூல்.
எழுத்தி னவ்வுயி ரென்ன நிறைந்தளாய்
முழுத்த பேரறி வாய்முத லாகிய
வழுத்து சீர்த்தித்தணி கை மணாளனை
அழுத்து முள்ளத் தவர்க்கஞ ரில்லையே. (1)
இல்லை தெய்வமு யிருமற் றில்லெனும்
அல்லை வென்றொளி யாக்குவ தென்பவே
நல்ல சீர்த்தணி கைக்கொரு நாயகன்
சொல்லு லாவுஞ் சுடர்க்கழற் பாதமே. (2)
பாத நான்குமப் பாத பயன்களும்
ஓது நூலு முணர்த்து முரவனும்
யாது மாயெனை யுந்தடுத் தாண்டனன்
வேத மார்க்குந் தணிகை விமலனே. (3)
விமல மாயுயிர் தோறும் விராய்நின்றும்
கமல நாரணன் காட்சிக் கரியவன்
திமில மாமறை தெள்ளுந் தணிகையில்
அமல மேனிகொண் டாட்டய ரண்ணலே. (4)
அண்ணல் வேத னரிமுத லோரெலாம்
நண்ணு மவ்வத் தொழில்கண் டயரவர்
எண்ண கன்று தணிகை யிருங்கிரி
யுண்ண யந்தமர்ந் தானொரு வள்ளலே. (5)
வள்ளல் பூண்டு மறுமைப் பயன்கொள்வோர்
உள்ள நாண வுபகரித் தொய்யெனப்
பள்ள மேனடுப் பக்கமுங் கொட்புறீஇ
நள்ளல் செய்தான் தணிகையி னாதனே. (6)
நாத மாதி நவையென நீவியென்
போத மும்புக ரென்னொரு வித்தன
தோத ரும்பதத் தொற்றித் துணர்த்தினான்
மாதர் காவி வரைத்தலை மன்னனே. (7)
மன்னு மண்டமு மற்றவை போர்த்ததோர்
நன்னர் நீருநற் பூதமும் யாவையும்
தன்ன தாணையிற் றங்க நிறீஇயினான்
கொன்னும் வேற்கைத் தணிகைக் குமரனே. (8)
குமர ராய்ப்புறங் கூனுங் கிழவராய்
அமர ராதி யனைவரும் பொன்றினும்
சமர வேற்கைத் தணிகைப் புராதனன்
நமரங்கா ணந்தல் செல்லாக் கடவுளே. (9)
கடவு ளாயவர் காசினி மாந்தராய்
மடவ மாந்தர்கள் வானவ ராயுறப்
படர்வி னைப்பய னல்கும் பராபரன்
இடன கன்ற தணிகை யிறைவனே. (10)
வேறு
இறைகொண்டு தேவர் மகவான் விரிஞ்ச னிருள்மேனி மாயன் முதலோர்
நறைகொண் டலர்ந்த மலர்தூவி யுள்ள நவைசிந்தி நாளுமுயல
அறைவண்டு பாட லிமிழ்காவி வெற்பின் வெளிநின்ற வாறுமுகவன்
மறைகண்டி லாது தடுமாற மல்கு மருவற்ற சோதிமயமே. (11)
மயனார் விதித்த வலகுஞ் சமழ்ப்ப வளமொய்த்து வீதியொழுகி
வியனா லயங்கள் பலதுன்றி வேத விதியம்பி யோசையணவிப்
புயன்மீ யடுத்த தணிகைச் சிலம்பு பதியாக வைகுபுகழோன்
அயன்மால் பதங்க ளவைவைத்து வாங்கு மயர்வற்ற ஞானமுதலே. (12)
முதலா திறாது நிறமோன ஞான முறையிற் றெரிந்து முநிவோர்
பதறாது மோக வலைகீறி வீறு பரவின்ப வாரி படியு
முதன்மே யடுக்க னிமிர்காவி வெற்பி னுறைகின்ற சைவ முதல்வன்
மதமான யாவு மததேவ ரோடு வருவித் தளிக்கு மொளியே. (13)
ஒளிகான் றிலங்கு மணிசூழ் கிடக்கை தவிசாக வூறு மதுநீர்த்
துளிகான்றிலங்கு பொழினீ ழல்யானை துணையோடு பள்ளி பயிலும்
வளிகான் றிலங்கும் வெளிமுற் றடைத்து வளர்காவி வெற்பின் மதலை
தெளிகான் றிலங்கு மடியா ருளங்க டிகழ்கோயில் கொண்ட வுறவே. (14)
உறந்தார்வ முற்றி மடவோரு நூல்க ளுணர்கின்ற மேதைய வரும்
துறந்தாரும் யாரும் விடைகொள்ள வேறு துகடீர்க வென்று மிடைவுற்
றிறந்தார்க ளேத்தும் விழவோ விலாத வெழிறுன்று காவி வரையோன்
சிறந்தாவி தோறு முடனாகி யைந்து செயலுஞ் செயும்ப கவனே. (15)
பகலோன் மழுங்க வொளிவீசு மேனி பழிவீசு மாசு முழுக
இகலேறு வில்லி னொருகாளை யாகி யெழிலேறு வள்ளி யடியில்
தகவீழ்ந் திறைஞ்சி யிளிவந்து நின்ற தணிகைப் பொருப்பி னிளையோன்
பகர்போக வின்ப முயிர்தோறு நல்கும் பரபோக வின்ப வுருவே. (16)
உருமல்கு தேர்கள் பருமித்த வேழ முளைபொங்கு வாசி முனைவோர்
திருமல்கி யீன்ற வமராட் டுகந்து செறிசுற்ற மோட வுணரைக்
குருமல்கு வேலி னுயிர் சூன்று தின்ற குளிர்காவி வெற்பினமர்வோன்
பொருண்மல்கு மாறு புவியோர்க்கு நல்கு பொருளென்ப தேர்ந்த புலவோர். (17)
புலவோரை யன்று விடமுண்டு காத்த புலவோன் றனக்கு மவன்மெய்க்
குலவோர் மகட்கு நடுவட் சிறந்த குழமேனி கொண்டு வளரும்
நிலவோடு பானு வழியற் றிறைஞ்ச நிமிர்காலி வெற்பி னுரவோன்
நலமேவு மெச்ச முலகோர்க ளிக்கு நலனென் றரற்று மறையே. (18)
மறைநான்கு மேனை யலகற்ற நூலும் வழுவின் றுணர்ந்த மலய
நிறைமா தவத்து முநிவோனை மாயை நிகளஞ் சிதர்ந்து கழலக்
குறையாத ஞான மறிவித்த காவி வரையிற் குலாவு குமரன்,
தறையாதி யாரு முணர்வானு ணின்று சலியா துணர்த்து மறிவே. (19)
அறிவா னமைந்த முநிவோர் தவஞ்செய் தறல்போ லிருண்ட குழலார்,
கிறிமாய வெல்லு முறைசூழ்ந்த குன்று கிழவோ னெனப் பகர்தரும் ,
வெறிவீசு காவி மலர்மூன்று நாளும் விரியும் விலங்கல் விமலன்,
செறியாவி யாதி யுலகுந் தனாது கிழமைப் படுத்த சிவமே (20)
வேறு.
சிவந்த வாயிதழ் மாதரார் செப்பிள முலையை
உவந்த வாவுமுள் ளகவிரு ளொதுக்கியொள் ளொளிவாள்
நிவந்த வாதவ னெனத்தரு நிராமய னடியார்
தவந்த வாதுயர் தணிகையா னென்பதக் கோர்கள். (21)
கள்ளு லாங்குழற் கொடிச்சிதோள் காமுறு மறுகாற்
புள்ளு லாங்குவ ளைப்புயத் திறைவர்பூந் தணிகை
உள்ளு லாங்களி யன்பரா யுனிழிந் தோரும்
வள்ளு லாங்கதிர் வேலராய் வானவ ராவார். (22)
வார ணிந்தபூண் முலையினார் மையலா கியனாற்
போர ணிந்தெழு நோய்களும் போக்கரு வினையும்
கூர ணிந்தவேற் றணிகையிற் குமரனைக் குறுகா
தேர ணிந்தவை யகத்தெவ ரிருக்கவல் லுநரே. (23)
வல்ல மாதவர் குழாங்களும் வானவர் குழுவும்
சொல்லு லாமறைத் துதிகொடு பரவுபூந் தணிகை
அல்ல றாவிய மேனியா னடிதொழப் பெற்றோர்க்
கில்லை யாம்பொரு ளெவ்வுல கத்தினு மிலையால். (24)
ஆல நீழலி லரனென நால்வருக் கருளும்
கோல மேனியெங் குருபரன் குளிர்பொழிற் றணிகை
சால வோங்கிய குமரவேள் சாண்டொழப் பெறாதார்
ஞால மீதுபல் வினைகளு நலிதுயர் பெறுவார். (25)
பெறுவ தாவது பெரும்புன லுலகுவேட் டெவையும்
உறுவ தாகிய தணிகையா னொலிகழற் சரணம்
தெறுவ தாவது சேவலங் கொடியவ னருளான்
மறுவ தாகிய யானென தெனுமிருண் மயக்கம். (26)
மயக்க மாமல வுருவமாம் வனமுலை மடவார்
முயக்க மாகிய முளிகருஞ் சேதகப் பயம்பிற்
புயக்க லாதுபோ யழுந்திய வருவினைப் புயக்கு
நயக்க மேவருந் தணிகையா னலத்தரு மருளே. (27)
அருளி லாதவ ராயினு மறவழி நெறி நூற்
பொருளி லாதவ ராயினும் பொறிவழி யிகந்த
மருளி லார்பயிற் றணிகையான் றனைவழுத் துகரேல்
இருளி லாதவ ராவதற் கையமொன் றின்றே. (28)
இன்று வேண்டினு மீட்டும்வேண் டாமையி னீண்டு
மன்ற லோதியர் போகமா திகளெலாம் வளர்த்து
நின்ற வாணவக் குறும்பினை நீவுபூந் தணிகைக்
குன்ற வேலவ னருளினாற் கோணைவான் வீடு. (29)
வீட்டி யைம்புல னெனுமரில் படும்வெறி வனத்தை
நாட்டு மைம்பொறி யெனும்புலன் முழுவது நவைகள்
ஒட்டு நீலவெற் பிறையவ னோங்குதன் னருளாற்
கூட்டு மானந்தம் விளைநரன் றோபகை குமைத்தோர். (30)
வேறு
குமைத்தவைம் பொறியி னார்கள் குழாங்குழா மாகிநோற்கும்
நமைத்தடம் பொழில்சூழ் நீல நளிர்வரை யமர்ந்த நம்பன்
கமைத்தலைச் செல்லா வின்ற கருங்கட லழுந்தினேனை
இமைத்திடு மளவிற் காவா யெனிலுயிர் தரிக்கி லேனே. (31)
தரிப்பதுன் சரணப் போது சாற்றுவ துனது நாமம்
விரிப்பது னலகில் சீர்த்தி மேவுவ துனைப்பெற் றோரை
அரிப்பதுன் னருளாற் பாச மாகநீ யருளிச் செய்யாய்
தெரிப்பரும் பொருளே காவிச் செழுங்கிரி யமர்ந்த தேவே. (32)
தேவரு மயனு மாலுஞ் சென்றுசென் றிறைஞ்சிப் போதும்
பூவலர் பொழில்சூழ் காவிப் பொருப்பகம் பூத்த வள்ளல்
யாவது நன்மைக் கல்லா விழுதையேற் குண்டாங் கொல்லோ
தாவரும் பரமா னந்தத் தனிக்கட லழுந்து மாறே. (33)
மாறுகொண் டயலாற் கந்தோ வழுவறி தேற்றிச் சால
வீறுதம் வழுக்கட் கின்மை விளம்புந ரிணக்கம் வல்லே
நூறுமா கருணை காட்டி நுன்னடிக் கன்பு நல்காய்
ஏறுசீர்த் தணிகை யோங்க லிருந்தருள் விமல வாழ்வே. (34)
வாழுமா றாக்கை மீட்டும் வகுத்திடிற் சீர்த்தி யொன்றே
சூழுமா றருள்புன் சொல்லுஞ் சூழுமே லதனை மாற்றி
ஆழுமா நரகி னூக்கி யடர்ப்பதே நன்று போலும்
தாழுமா தவர்க்கள் ளூறும் தணிகையம் பதியு ளானே. (35)
பதியுளே கிடந்தும் பாசம் பற்றிய வாறும் பின்னர்
மதியுளே விராய பொல்லா மலந்தபு மாறுஞ் சுத்தக்
கதியுளே கலந்து நிற்கும் காட்சியும் தெரித்தாட் கொண்டான்
ததியுளே நெய்போ னிற்குந் தணிகையங் கடவு ளானே. (36)
கடவுளர் வீரங் காற்றுங் கருமுருட் டவுணர்க் காய்ந்து
குடர்நெடு மாலை வேய்ந்த குருதிவேற் றடக்கை யண்ணல்
தடவரைத் தணிகை யோங்கல் சார்ந்தவ ரான்றோர் பண்டைப்
படர்வினை முழுது மங்கிப் பஞ்சியி னுங்கக் காண்பார். (37)
காண்பவர் காட்சி யெல்லாங் கலந்ததன் னியல்பே யாக
ஏண்படு தணிகை யோங்க விடமெனக் கொண்ட செம்மல்
பூண்படு கருணை மேனி பொதுவறக் காண்ட லோடும்
வீண்படு முலக மெல்லாம் விளிந்தியா னிறந்த வாறே. (38)
இறந்தவாற் காட்டுக் குற்ற மிரிந்தன பொறிக ளைந்தும்
பறந்தன தோற்ற நான்கும் பாறின மலங்கண் மூன்றும்
வறந்தன வினையி ரண்டு மாய்ந்தது பாச மூலம்
சிறந்தசீர்த் தணிகை நம்மான் சிறக்கணித் திட்ட போதே. (39)
போதமுள் ளடக்கி மேலாம் போதமேல் போர்த்து நிற்ப
வாதனை தாக்கா தின்ப வாரியிற் படியும் பொங்கர்
வீதளை யவிழுங் காவி வெற்பிறை யடியார் தங்கள்
பாதபங் கயங்கள் போற்றும் பரிசலால் வேண்டி லேனே. (40)
வேறு
வேண்டுவார் வேண்டுவ தருளு மெய்ம்மைசால்
ஆண்டகை தணிகையம் மண்ண றாட்டுணை
பூண்டதோர் காதலிற் போற்றப் பெற்றிலேன்
மாண்டதோர் வல்வினை வயத்தி னென்பவே. (41)
என்பவந் துமிப்பதற் கிறைவன் வானுருத்
தன்பெருங் கருணையாற் றரித்துக் காவியந்
தென்பெருங் குன்றகஞ் சிவணிற் றென்கிலேன்
புன்புலைக் குரம்பையே போற்றல் சென்றதே. (42)
சென்றனந் தணிகையான் திருமுற் சேறலும்
நின்றன மானந்த நிலையில் வேறற
வென்றன மடியரோ டிருப்ப நேர்கிலா
அன்றிய வுலகுலா மாட்டு நெஞ்சமே. (43)
நெஞ்சிடை யொன்றுவாய் நிகழ்வ தொன்றுமெய்
விஞ்சுற விளைக்குவ தொன்ற தாகவே
வஞ்சக நடைபயின் மடமை யேனையும்
அஞ்சலென் றாள்வையோ தணிகை யண்ணலே. (44)
அண்ணலம் பழமறை யதர்ப்பட் டுய்ந்திலேன்
புண்ணிய வடியரைப் போற்றி யுய்ந்திலேன்
கண்ணகன் றணிகையங் கடவுட் குன்றினாய்
பண்ணிய வினை தபப் பரிவு நாணிலேன். (45)
நாணிலா னெனப்பிறர் நகைக்க மற்றெனக்
கேணிலாம் வினைப்பய னிருக்கி னேற்குமுன்
கோணிலா மிவ்வுட லருளிற் கொன்றிடாய்
சேணிலா வியபுகழ்த் தணிகைச் செல்வனே. (46)
செல்வமு மதற்படு செருக்கு மேதகு
கல்வியு மதற்படு களிப்பும் பார்த்தொரீஇச்
சொல்வளர் ஞானமே துளையு மாறருள்
கல்வளர் தணிகையங் கருணை யாளனே. (47)
ஆளெனப் படுபவ ரரியய ராதியோர்
கேளெனப் படுவன கிளர்க ணங்களே
வேளெனப் பெயரிய தணிகை வித்தகன்
தாளிணைப் போதுளந் ததைந்தவன் பர்க்கே. (48)
அன்பகந் ததும்பிமெய் யறிவு மீக்கொளீஇத்
தன்புணர்த் தாண்மலர் தாழ்நர்க் கல்லது
கொன்பெருந் தணிகையெங் கொற்ற வேலவன்
மன்பெரும் பவத்துயர் மாற்று கிற்கலான். (49)
கலாபமா மயில் கடாய்க் கணத்தி லெங்கணும்
உலாவிமீண் டமர் தரும் தணிகை யுத்தமன்
நிலாவுத னசைவறு நிலைமை தோற்றலும்
சுலாவுமென் மனமுமச் சுழற்சி யற்றதே. (50)
வேறு
அற்ற கேள்விய ரிணக்கமுங் கேள்வியி லான்றவ ரிடைத்தீர்வும்
பெற்றி லாவகை யருள்வையே லஃதுய்யும்பேறெனத் தரிப்பேனாற்
கற்ற வேதியர் வேள்வியஞ் சாலையுங் கழகமு மிடந்தோறும்
துற்ற காவியம் பொருப்பில்வீற் றிருந்தருள் சுந்தரப் பெருமானே. (51)
மானை வென்றிரு நோக்கமும் பயின்றொளிர் வாள்விழிப் படையேந்தும்
தானை வென்றெழு மூக்கமற் றியாதெனச் சழங்கலை மடநெஞ்சே
ஊனை வென்றமெய்ம் மாதவர் குழாந்தொழு முற்பல வரையாளும்
தேனை வென்றசொல் வள்ளிநா யகனிரு சேவடித் தலன்சேரே. (52)
சேர்ந்து வார்ந்தன குறங்கரி பரந்தன சேல்விழி மலைவென்ற
ஏர்ந்த பூண்முலை யெனமட வியர்நல னெண்ணிநைந் தழிநெஞ்சே
ஆர்ந்த பேரருள் கொழிப்பன விழியிரு ளனுக்குவ துருவேட்ட
தோர்ந்து வீசுவ கரமெனத் தணிகையா னுயர்நல னினைந்துய்யாய். (53)
ஆய்ந்த நுண்ணிடை யலைதொறு நிறையெலா மலைந்தனை யணங்கன்னார்
வாய்ந்த வாள்விழி பிறழ்தொறு நூன்முறை வரம்பெலாம் பிறழ்ந்தாயாற்
சாய்ந்த நெஞ்சமே தடங்கட றடிந்திருட தையவிண் ணிவர்மேகம்
தோய்ந்த காவிவெற் பிறையவ னருட்கட றோய்வதெங் ஙனமந்தோ. (54)
அந்தி மாதரார் மயக்கலா ரீதென வயர்வதென் மடநெஞ்சே,
சந்த லார்பொழி லிணர்விரி தணிகையந் தடங்கிரி யரசாளும்
கந்த வேண்ஞெமிர் தத்துவ குழாந்தொறுங் கலந்துநின் றசைவிக்கும்
இந்த நீரலா லிலையென வவருழை யெழுந்தொழி றனைக்காணே. (55)
காண மாதியெப் பொருள்களு மொருவர்தங் கைவயத்த னவன்றிப்
பேண லாவதும் பிழைப்பதுங் காண்டலிற் பிரசநக் கலர் பைங்கோட்
டாண நீள்பொழிற் றணிகையா னவரவர்க் கமைத்தன வருமென்றே
கோண றாமட நெஞ்சுநன் றமைத்தியேற் குற்றமன் றொழிவாயே . (56)
வாய லாநலம் பயக்குமேற் பொய்ம்மையு மறுவிலார் சொலக்கண்டும்
தூய காவிவெற் பிறையவன் றாட்டுணை தொழாரென வெவனெஞ்சே
தீய வாயின பிறருழை நினைக்கவுஞ் செப்பவுஞ் செயவன்னோ
நீய றாயிர முரைய றாயிர முருவ றாயிர மெனமுநின்றீர். (57)
நின்றி லாதவிவ் வுடலினை நிலையென நினைந்துமற் றிதிற்சாலத்
துன்று நோயெலாந் தமித்தபிற் றணிகையாற் றொழுதருள் பெறுகிற்பாம்
என்று நெஞ்சமே மட்சுவர் கழுவுவார்க் கெதிர்ந்துவீண் படநாள்கண்
மன்ற நீத்தனை யினித்திரை யெழுத்தகன் வாரி யாடுதிபோலும். (58)
போலி யானவை செய்யுளுட் கிடப்பினும் புலவரன் னவைதேர்வார்
போலி யாயடி யார்குழாம் புகினுமுன் புகருல கறியாகொல்
பீலி மாமயி லெதிரெதி ராட்டயர் பெருவனப் பிளஞ்சோலை
வேலி யோங்கலந் தணிகையாற் குள்ளமே மெய்த்தொழும் பினையாகாய். (59)
காய லங்கிலை வேலினா னுலகெலாங் காவல்பூண் டெழின்மஞ்ஞைச்
சாய லங்கனை யார்க்குவே ளெனத்தரு வரையும் தமரானோர்
தீய லங்குகாட் டிடுவதோர்ந் திமனுளஞ் செதுவுட றழீஇச்செந்தேன்
பாய லங்கலங் கடம்பணி தணிகையான் பதந்தொழா விஃதேலாய். (60)
வேறு
ஏலநா றிருங்கூந்த விளையவராட் டயர்சோலை யேலங் காட்டும்
நீலவார் சுனைச்சாரற் றணிகைநெடுங் கிரிபுரக்கு நிமல வாழ்வைச்
சாலநாண் மலர்தூவித் தொழுதுவினைப் பெரும்பறம்பு தாக்க கில்லீர்
ஆலமோ வெனக்கவற்று மடற்காலற் கெவன்செய்வீ ரறிவின் மாந்தீர். (61)
மாந்தர்காள் விழுங்கி நெடுங் காலமுமி ழாவளற்று மறுக லீங்குப்,
போந்ததோர் சிறுவரையின் விளைவிளைத்தீ ருய்யுமா புகலக் கேண்மோ
காந்துவான் மணிமௌலிக் கடவுளர்தே டருந்தணிகைக் கடவு ணெஞ்சின்,
ஆய்ந்தபோ தடுத்தலர்நீ ரளித்தனவேற் றிடாதுமிக்கு மருளான் மன்னோ . (62)
மன்னியபே ரன்புளத்து வளர்தோறு மவன்கருணை வளரா நிற்குந்
துன்னியதோடா ரன்புளத்திற் றொலைதோறு மவன்கருணை தொலையா நிற்கு
மின்னிலைமை தேர்ந்தவன்ற னருள்கிடைத்தோர் பெருவாழ்வு மெண்ணி யன்பாம்
மன்னிலையே குறிக்கொண்மி னருட்டணிகைப் பெருமான்மெய் யருளிற் றாழ்ந்தே.(63)
தாழ்ந்ததிறை திருமுன்னர்த் தயங்குமவ னருண்முன்னர்த் தாழக் கண்டேன்
சூழ்ந்த இறை திருக்கோயி றுலங்குமவ னருளெங்குஞ் சூழக் கண்டேன்
வீழ்ந்ததிறை யுருப்படிம மவன் வடிவி லாவடிவம் வீழக் கண்டேன்
வாழ்ந்ததிறை தணிகைவரை யவனருளா னந்தநிலம் வாழக் கண்டேன். (64)
கண்டவிழித் துணையவுணர்க் காய்ந்தபெரு மானுருவ மன்றிக் காணா
விண்டமலர் வாய்விலங்கல் வீறழித்தான் றிருப்புகழே யன்றி விள்ளா
துண்டவகஞ் செவிதணிகை யுயர்வரையான் புகழமிழ்த மன்றி யுண்ணா
மண்டியநெஞ் சகம்வள்ளி நாயகன்மெய்த் திறத்தன்றி மண்டா தம்மா. (65)
மாமலவா தனைதாக்க வையகத்து வந்துயங்கு மடமை நெஞ்சே
ஏமுறுமா மலமாதி யிடையொருவுந் திருவெழுத்தை யியல்பி னோதித்
தூமணியா லிருளொதுக்கிச் சுடரிமைக்குந் தணிகைவரைச் சூழல் வைகும்
காமருவே லவனிறைவிற் பரானந்த வவசமாய்க் கலந்து நில்லே. (66)
நில்லாத நீடுலக நெடுவிசும்பி னெழுத்தென்ன நீங்கக் காட்டி
ஒல்லாத மலவறிவு முயிரறிவும் பேரறிவா யொளிரா நிற்பக்,
கல்லார கிரிமுருகன் கலந்தளித்த சாக்கிரா தீதத் துண்மை
வல்லார்க ளைந்தொழிலு மைந்தொழிற்கா ரணர்நிலையு மருவார் மாதோ. (67)
மாதர்மணி வடம்வருடப் புளகரும்புங் களபமுலை மடநல் லார்தங்,
காதனனி கூர்ந்தவரிற் காதலெலாந் தணிகைவரைக் கடவுட் செய்ய
பாதமலர் தனிலிருந்தும் பாவனைவல் லாரவர்தாம் பரந்த கும்பி
பூதலம்வான் றுறக்கமெனு மிவற்றறிவோ டுருத்திரிந்து போகந் துய்ப்பார். (68)
பாரார விழுந்துபுரண் டெழுந்துபல முறையேத்திப் பண்புகூர
ஆராத பெருங்காத லகத்தரும்ப முகத்துவிழி யரும்பித் தேக்கும்,
நீரார வுயர்தணிகை நிமலனருட் கடறிளைக்கு நீரார் மீண்டு
வாரார்கள் வந்தாலுங் கடலெதிர்ந்த நதிபோல வயக்க மாறார். (69)
மாறாத சிவஞானப் பேறளிக்கும் வலியனைத்தும் வாவித் தாக்கிப்
பாறாத வினைவலியு முப்பாழுக் கப்பாலாம் பாழி னின்று
வேறாக வொருவுமவர் தாமன்றே யுலகமெலாம் விரியத் தோற்றும்
ஆறாறுங் கடந்ததிருத் தணிகை வரையாற்குரிய வடிமையாவார். (70)
வேறு
ஆவா வடியேற் குறுமே யவலம்
தாவா வினைதாக் குமருட் டணிகை
மூவா முதலா தமுழுப் பொருடன்
பூவா ரடிசேர் தருபுண் ணியமே.
(71)
(71)
மேலா கியதே வர்விழுப் பதமும்
சாலா விமையோர் பதமுந் தவிர
மாலா மதிநல் கும்வரைத் தணிகைக்
காலா யுதநீள் கொடியான் கழலே. (72)
கழலுங் கழலா விருகைக் குருகு
தழலுந் தழலா மதியந் தணிகை
அழலும் மழல்போ லலிர்வாற் பெறுமா
சுழலுஞ் சுழலா வெனுளத் துணையே. (73)
துணையா யுயிர்தோ றும்விராய்த் தணிகை
இணைவார் கழலேத் தவிருங் தெமைவந்
தணைவா னவனா ரருளன் றியுநாம்
பிணைமா மதியே பெறுமா ருளதே. (74)
தேதே யெனவண் டிசைசெய் யநறும்
போதேய் பொழில்சூழ் தணிகைப் புனிதன்
ஏதா விடமா வெனைமுற் றியெனக்
காதா ரமதா யின்ப ளித்தனனே. (75)
அளித்தான் றனையார்த் தியெனுள் ளமெலாங்
குளித்தேன் குறியற் றவன்கூர் நிறைவின்
ஒளித்தா னவனும் மிரண்டொன் றறவே
துளித்தாழ் மழைசூழ் தணிகைப் பரனே. (76)
பரமென் றிமையோர் பணியுந் தணிகை
வரணன் முதலென் றுமறைத் தொடரான்
உரனன் குகொளுத் தினுமுள் குவரோ
விரவும் பழவல் வினைவீ யலரே. (77)
அலரோ னரியா தியர்தம் மையெலாம்
பலநாண் முறையாற் பணியும் பலனன்
பிலரா யொருகா லெழிலார் தணிகைப்
புலவோர் பணியும் பலன்போ லருண்மோ. (78)
மோகத் திலழுந்து முகுந்தன் முதலா
நாகத் தவர்நல் குவரந் தணிகை
எகத் தொருவள் ளலிரங்கி விராய்ப்
பாகத் தளவிற் பகருங் கொடையே. (79)
கொடையா துமிலார் கடமைக் குறையுற்
றுடையா யெனவேத் தியுயங் குறுவீர்
கொடையா லுயருந் தணிகைக் குருவை
உடையா யெனவண் மினிருய் யுமினே. (80)
வேறு.
மின்னேர் மருங்கு லிடைதுமிய விம்மி யெழுந்து புடைபரந்து
பொன்னேர் சுணங்கு குடிகொண்ட புளகக் களபக் கனதனத்தீர்
தன்னேர் தணிகை யழகனெறுழ்த் தடந்தோடழுவப் பெற்றீரேல்
இந்நாள் காறுங் கழிநாளும் பயனா ளாகு மியல்பீரே. (81)
பீர்புத்தெழுந்த மணிமுலையும் பிடரிற் குலைந்து விழுங்குழலும்
நீர்பூத் தெழுந்த வாட்கண்ணு நிறைமுற் றொழிந்த துயர்நெஞ்சும்,
வேர்பூத் தெழுந்த நுதலுமாய் மேவார் போல வினைவல்லோ
சீர்பூத் தெழுந்த தணிகைவரைச் செம்மால் கலவி சிந்தியே. (82)
சிந்தித் தறியே னரைக்கணமுந் தெரிசித் தறியே னொருகாலும்
வந்தித் தறியேன் கனவினிலும் வழுத்தி யறியேன் மறந்தேனும்
பந்தித் தடர்க்கு மலஞ்சவட்டிப் பரமா னந்த மெனக்களித்தான்
கந்தித் தலருங் காவிவரைக் கந்தன் கருணைக் கெதிருண்டோ. (83)
உண்டு வீடென் றோர்ச்சியுமற் றுலகின் முழுது மதுவதுவாய்க்,
கண்டு கேட்டுண் டுயிர்த்துற்றுக் கலங்கிச் சுழலும் புலையேனை,
மண்டு தீர்த்தந் தலமூர்த்தி வடிவு மூன்று மாங்காங்குக்
கொண்டு காவி வரைத்தணிகைக் குமர னாண்ட திறும்பூதே. (84)
இறும்பூ தீட்டுஞ் சகலத்தி லீண்டி யாண்ட தெனல்வியப்போ
தெறும்போக் கிருளா ணவத்தழுந்திச் செயலற் றிருந்த வந்நாளில்
உறும்பால் வினைக்கீ டானவுட லுதவிச் சகலத் துறுத்தன்னோ
நறும்பூங் காவி வரைப்பெருமா னல்கு மதுமற் றோர்ந்தவர்க்கே. (85)
தவர்க்கே யருளுந் தவவொழுக்கஞ் சாராதவமே யுண்டுடுக்கும்
அவர்க்கே தோன்று மருளானென் றறைவா ரறிவு நுணுகாதார்
எவர்க்கே துண்டாம் வானரங்க ளிகலி யுகளும் பொழிறணிகைத்
துவர்க்கே முருவப் படைவேற்கைத் தோன்ற லருளா தொழிந்திடினே. (86)
இடிக்குந் துணையா யகம்புறமென் றெங்குந் தானா யுடனிற்கும்
கடிக்குங் குமவார் பொழிற்றணிகைக் கடவுட் களைகட் டிறனோரில்
துடிக்கும் படர்நோய்ப் பாவவினை தோன்றா வண்ணங் காவதனான்
முடிக்குந் திறமா ருயிர்சற்று முன்னா முன்னா வந்தோவே. (87)
அந்தோ வேழச் சிலைவணக்கி யலர்க்கோ றொடுக்கு மதன்போரால்
வெந்தோ வெனநெஞ் சழிந்தந்த வெப்ப முழுது மந்நிலையே
பந்தோ வெனும்பூண் முலையாரிற் பாற்ற முயங்கி வளர்க்கின்றீர்
வந்தோ மெனுஞ்சொற் பொருட்டணிகை மன்னைக் கலந்து மாற்றீரே. (88)
மாற்றீர் காமப் பெருவிழைவை வளரீ ரிறைவ ரிடத்தன்பைப்,
பாற்றீர் நெறியற் றவரிணக்கம் பற்றீ ரடியார் நல்லிணக்கம்
கூற்றீர் நுமக்கு நீரானாற் குற்ற மொழிப்பான் றுயர்ப்படுத்தும்
தேற்றீஞ் சோலைத் தணிகைவரைச் செம்ம றனைநேர்ந் திடலாமே. (89)
ஆமே நமதா ருயிர்த்துணையென் றமலன் றணிகை யெம்பெருமான்
தேமே வனசத் திருப்பாதஞ் சேமித் துளத்துப் போற்றிலீர்
நாமே லவன்மெய்த் திருப்புகழை நாட்டீர் நாட்டீ ரெவ்வாறு,
போமே சறவு படவுலகப் பொருண்மேல் விளைந்த பெரும்போத்தே. (90)
வேறு
போத்தனுக்கி யானந்தப் புணரியிற்றோய் வதுகருத்தேல்
நாத்திகமாம் பரமதத்து நவைமொழியா றொழுகுவீர்
ஆத்தனருட் டணிகைவரை யண்ணலரு ளானவின்ற
மூத்தமறை வழியருளே முன்னாக முன்னீரே. (91)
முந்நீரிற் புனலன்றி முகில்சொரியா வாறேபோல்
நன்னீர்மைப் பொருளெல்லா நயப்பவருக் கருட்குருவாய்த்
தன்னீர்மைப் பதத்தழுத்திச் சதுமறையா கமத்தன்றிக்
கொன்னீர்மைத் தணிகைவரைக் கொற்றவன்மற் றருளானே. (92)
அருளாழி தணிகைவரை யறக்கடவுள் கருணையால்
உருவாகி யருளானே லுயர்மறையு மறையொழுக்கும்
திருவாரு மைந்தொழிலுந் தீக்கையுமற் றெவைகளுமற்
றிருளாகி யெவ்வுயிரு மிடர்க்கடனின் றேறாவே. (93)
ஏறாம லென்வினையைப் பயனாக வினிதேற்று
மாறாம லெனைமாற்றி மாறாத தன்னியல்பிற்
பேறாக வைத்தருளுந் தணிகைவரைப் பெருமானைக்
கூறாத வாக்கினரே கூறாத வாக்கினரே. (94)
வாக்கினா லதுபடைத்த பயன்பெற்றேன் புகழ்வழுத்தி
நோக்கினா லதுபடைத்த பயன்பெற்றே னுருநோக்கி
யாக்கையா லதுபடைத்த பயன் பெற்றே னடிவணங்கித்
தேக்குசீர்த் தணிகைவரைச் சிவபெருமான் றனையடுத்தே. (95)
அடுத்தமல வுருவாகி யலைத்தழித்த வுலகமெல்லாம்
தொடுத்தவரு ளுருவாகிச் சுகம் பெருக்குந் திறங்கண்டேன்
எடுத்தவுடற் பயனேய்க்குந் தணிகைவரை யெம்பெருமான்
மடுத்தெனையான் றனைமடுத்து வயங்குநிலை யளித்ததுமே. (96)
அளித்துநிறுத் தமிழ்த்துமறைத் தருளுமுரு வாதியாய்க்
களித்து நடங் குயின்றவையுங் கடந்தொளிருந் தன்னியல்பைத்
துளித்தமதுக் காவிவரைச் சூழிளையோன் றன்னருளால்
தெளித்தலுமற் றவனுருவந் தீப்பிழம்பிற் றொழுதேனே. (97)
தொழுதேத்தப் படுவதுவுந் தொழுதேத்து விப்பதுவும்
தொழுதேத்து வதுமற்ற சுகப்பெருக்கி லதீதமாய்த்
தொழுதேத்தப் படுந்தணிகைத் தோன்றலுரு வாயின்றித்
தொழுதேத்து மெவ்வுயிர்க்குந் தோன்றாம நின்றனனே. (98)
நின்றனவுஞ் சரிப்பனவு நிலையனவு நிலையாவும்
அன்றியனைத் தினுநிறைந்த வருட்கடலி னினிதாடி
மன்றல் கமழ் காவிவரை வள்ளலவர் வரினந்தக்
குன்றிவர்ந்த தவரன்றே குன்றமென வசைவற்றார். (99)
அற்றவருக் கற்றபர மானந்தப் பெருவெள்ளம்
உற்ற திருத் தணிகைவரை யுறப்பணிந்தா ரேயன்றி
மற்றவரை வணங்குநரும் வணங்குநரை வணங்குநரும்
பற்றறுத்துத் துடைத்தார்கள் பங்கயத்தோன் கையெழுத்தே. (100)
திருச்சிற்றம்பலம்.
திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று.
ஸ்ரீ மெய்கண்டதேவர் மிளிர்கழல் வெல்க.
ஸ்ரீ மாதவச் சிவஞானயோகிகள் மலரடி வாழ்க.
ஸ்ரீ கச்சியப்பமுனிவரர் கழலடி வாழ்க,
கவிராக்ஷஸ ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரபந்தங்கள்.
7. திருத்தணிகையாற்றுப்படை (மூலமும் - உரையும் )
திருவாவடுதுறையாதீனம்.
காப்பு.
நேரிசைவெண்பா .
சீரார் தொடைபுனைந்த செம்பாவை முன்புபோல்
ஏரார் தணிகை யிளவற்கு – நேராகக்
கூட்டுமால் வேற்றுருவங் கொள்ளாமை யெப்பொருளுங்
காட்டுமா லைங்கைக் களிறு.
நூல்
பொன்மலைத் திருவிற் பன்னக நெடுநாண்
மாயப் பகழித் தாயக் குரிசில்
முரணமை யிருகாற் றிரண்மறைப் புரவி
அலர்மரை வாழ்க்கை வலவத் தேரும்
வழங்குதற் கமையா வண்மையி னிசைக்கும் 5
பெருந்தகு பாடற் றிருந்திசைப் புலவர்
அறன்கடைக் ககலாப் பிறங்குதம் முளத்திற்
சாலாக் கல்வி மாலார்க் ககலா
வரன்மாண் டமைந்த வுரன்மாண் பலகையில்
தண்டா விருப்பி னெண்டோண் முதல்வனோ 10
டானாது பயிலிய அருமறைக் கேள்வி
மாயிருந் தமிழ்க்கடல் வடமொழிக் கடலென்
றாயிரு கடலு மாற்றலிற் கடையா
ஐயந் திரிபெனு மழல்விடம் படாது
வெய்யசெம் பொருளெனு மிளிர்தீஞ் சுதைத்திரள் 15
ஆராக் காதலி னாராது கைப்பவும்
ஊன்றுவிர லழுந்தா துடறசை திணிந்து
கான்றதேந் தெரியற் கருங்குழன் மகளிர்க்
கணங்குள நிறீஇ யாருயிர் கவர்க்கும்
வளங்கவின் கொழிக்கும் விளங்குசீரிளமையும் 20
பல்வகைத் தொழிலும் பண்புற நவின்று
சிந்தை வழிச்செலு மைந்துநிலை பெறீஇயர்
அளவினைத் திறத்தி னயரா யாக்கையும்
அளகைக் கோமா னுளமழுக் கறுப்ப
நிலந்தினக் கிடந்த நெடுநிதிச் செல்வமும் 25
நீடின் றிரியு நிலைமை நாடி
ஏற்போ ரங்கைக் கொடைக்கடனிறுத்து
நோற்போர் நோற்கு நோன்மைசா லறனெனும்
உறுதி யாக்க மொய்யெனக் கழலவும்
வரைத்திரள் புரள்விற் றிரைத்தெழுந் திரைக்கணம் 30
விலங்கின வழங்கும் விழுக்கலன் செறித்தும்
ஒளிறுவே லழுவத் துருத்தெழுந் தடர்த்துக்
குளிறுவார் முரசும் பிளிறுமால் யானையும்
வைத்தபல் படையும் வழாதுகைக் கொண்டு
பராபவத் தெவ்வர் வரிசையி னிறுக்கும் 35
திறைகே ழுரிமை முறைநேர் நடாவியும்
தத்தந் தொழிலிற் றலைநின்று வளர்க்கும்
பொருளெனும் வெறுக்கை போற்றாது நழுவவும்
மிஞிறுந் தேனும் வெறிகவர் தும்பியும்
கஞலிப் பட்குரல் கஞற்றுவ சுழலும் 40
இருடுஞ்சு மலர்ப்பொழின் மருள்சில் லோதிப்
பூவார் சோலைப் புறத்தகப் படுத்து
மேவரத் தடைஇய விதுக்குறை கடுக்கும்
திவளொளி மாண்ட குவவுநுதல் வாணுதல்
தீங்கதி ரமிழ்தத் திங்கட் பிளவின் 45
நீங்குகார்க் கறையு நிலாத்தவழ் வெண்மையும்
விராயுருக் கொண்டென மிளிர்மதர் மழைக்கட்
செங்குமு தத்துச் சிறுமதி கிடந்தெனச்
செவ்வா யகத்த செயிர்தீர் வெண்பல்
விலங்குபாய் கதிர்க்குழை வீழ்ந்துசெகிற் றுயல்வர 50
வள்ளையி னொழுக்கிய வள்ளெழிற் செஞ்செவி
செவ்வாய் கவுட்டுணைச் சேல்விழி நெற்றி
இவ்வா யுறுப்பா னின்சுவை யமிழ்த
உறுகொடை யாற்றி வறிதுகொடை காட்டும்
விளைநிதி தன்னைக் குடுமிகைக் கொண்டல் 55
வளைமேல் கொண்டு வயங்கொளி தோற்றும்
பதும மாநிதி யிதுவெனக் கவன்று
தாவா வுறுவர் மேவா வுள்ளமும்
ஓலப் படமென வுஞற்றுறு திருமுகம்
பகுவாய்ப் பொற்குழை மகரமீ னாஅன் 60
றைதுமீக் கிடத்தலி னைங்கணைக் கிழவோன்
வெய்துதன் னாணை விளக்கிய வுயர்த்த
அணங்குதமிழ் கொடியி னிணக்குபணை வேய்த்தோட்
காம்புபுடை யடுத்த கதிர்மணிக் குன்றின்
தோள்புடை யடுத்த சுடர்ப்பூட் கொங்கை 65
குவிமுலைத் துணைகொள் சவிமணி மார்பில்
தத்தம் தேணி கடவாது தணிய
நள்ளுநின் றுணர்த்துந் தள்ளாக் குறியின்
அணிவயிற் றொழுகிய மணிமயிர் வல்லி
நெடகுமயி ரொழுக்கு நெடுவழிப் படர்ந்து 70
கடுமுலைக் கோட்டுக் களிறுபட மெடுத்த
படுகுழி யனைய பயம்படு கொப்பும்,
நடுநின்று வாழ்வோர் நலத்தோடு முரண
நடுநின்று தேய்ந்த விடுகுகொடி மருங்குல்
வையக முயிர்த்தோன் மதிபுனைந் தியற்றலின் 75
கைபுனைந் தியற்றுங் கதிர்மணித் திண்டேர்
கடாதுருக் கொண்டோடுந் தடாதபே ரல்குற்
கீழ்மே லாகக் கிளர்ந்தெழி னத்தகு
வாழையொடு பொரூஉம் வார்ந்தசெறி குறங்கின்
வேற்றொரு தாமரை மேவந்து தொழில் செய 80
வீற்றிருந் தருளும் விரைமல ரேய்க்கும்
அலத்தக மலர்ந்த நலத்தகு சீரடி
மயிலியன் மருளு மியன்மட மாதரைச்
சீலம் விழைவே செயல்குறி யிவற்றான்
நால்வகைப் பேதமு மாலறத் தெரிந்து 85
மருந்துமந் திரத்துந் திருவிழை வேற்றித்
தேயம் பயிற்சி சேட்டை யியல்பே
இன்பத் துறையே யிருவகைத் தொழிலே
இங்கித வகையே யிவைநனி நாடி
இருவகைப் பொழுதொடு மேற்ப மருவிய 90
மூன்று காலமு மூன்று வேகமும்
ஒப்பக் கலவி யுஞற்றுபே ரின்ப
அவாவுளம் பொதிந்துகொண் டழற்றுவெம் படர்நோய்
தவாதுபிறை போலத் தணிவின்றி வளர
உவாமதி போல வுருவே தபவும் 95
கடவுட் பொங்கருந் தடமருப் பாவும்
சிந்தா மணியு நந்தா நிதிகளும்
கலன்முத லான வளம்பல கொழிப்பப்
பல்வகைக் கணமும் பணிந்தெழுந் தேத்தத்
தெவ்வுத் தானவ ரவ்வித் தேங்க 100
விரிகதிர்ப் பிழம்பு மரிமான் றவிசிற்
களிகூர் நெஞ்சாற் காவல் வைகும்
ஒளிகூர் மகவா னுறுபத மாதி
எளிதினுய்த் தளிக்குந் தெளிவினை போலாது
பார்முதிர் புணரிப் பாயற் கடவுள் 105
வார்மதுப் பொருட்டு மரைமலர்ப் புத்தேள்
என்றிவர் தமக்கு மெய்தற் கரிய
சரியை கிரியை யோகத் தவநிலைப்
பெயர்பொச் சாப்பப் பிறக்கணித் துகவும்
ஊன நாடக முஞற்றிய திருவருள் 110
ஞான நாடக நவிலிய மாறலும்
ஆனா மலப்பகை நோனாது கழலத்
தானா னந்தத் தனியுயிர் மடங்கக்
கட்காண் குருமுதற் கடவு ளாகி
உயிரே யவத்தை யுணர்த்துந் தன்மை 115
அருளி னியல்பே யாங்கதன் பயனே
பெரும்பெயர்த் திறமே பெற்றவர் முறையென்
றனைவகை யேழு மரிறபத் தெரிப்பத்
தாழாது கேட்டு வீழாது சிந்தித்
தங்கைக் கொண்ட வமிழ்தெனத் தெளிந்து 120
பொங்குபேரின்பம் புணராது புணரும்
நிட்டை கூட நிலையது நீங்கவும்
பஃறிறப் பகைஞர் படையொடு நேர்ந்தென
வெஃறிறங் காட்டாது வீற்றுவீற் றுடற்றும்
பிணிக்கோட் பட்டுப் பேதுறு மனத்தான் 125
முந்தையோ ரீட்டு முழுநிதிச் செல்வமும்
பொய்ம்மை யாளர் புகழெனத் தேய
நோய்ப்பகை யாளர்க்கு நொடிந்தென் சிதரிற்
பல்வகை மருந்துக்குப் பகர்விலை தொலைச்சி
அதுவென வெறுமி யதன்றுமற் றிதுவென 130
முன்னைநாண் மருந்தை முறைமுறை யிகழாப்
பின்னைநாண் மருந்தைப் பெட்டுவாய் மடுத்துப்
பண்டை நோய் மேலும் பருகுபன் மருந்தான்
மண்டுகோய் வேறு மரீஇக்கிளர்ந் துருப்ப
உரைத்தவென் மொழிவழி யொழுகினை யல்லைகொல் 135
பெருத்து நோய் தெறுமென மருத்துவ னொழியத்
தெய்வத் திறத்தாற் றீர்வுகாண் பாமென
உள்ளூர் வயின்வயிற் றெள்ளிதி னோங்கும்
புரிமுறுக் கவிழ்க்கும் பூம்புனற் றீர்த்தமும்
பல்வகைத் தெய்வப் பசும்பொற் கோட்டமும் 140
படிந்தும் பணிந்தும் பயன்கா ணாமை
அணியயற் புறநகர் மணிகெழு கோட்டமும்
விரத நியதிப் பரவு கடனாதிப்
பல்வேறு தொழிலொடு படர்ந்துபணிந் தேத்தியும்
கவலை நெஞ்சங் கையறு பினையச் 145
சேட்சென் றொராஅல் செய்தென வலித்து
மிக்க நோய்க் கிரங்கு மொக்கல்புறந் தழுவ
வறுமைக் கவர்ச்சியு மிறுகுறப் பிணிப்ப
இல்லுந் தமரு மிசைபயி னாடு
மென்மெலக் கழீஇ விரிகதிர்ப் படையால் 150
இருள்கால் சீக்கு மெழுபரித் தேரோன்
கடுஞ்சினந் திருகிய கொடுமைகூ ரமையத்து
முளிமுதன் முருக்கிய முழங்கழல் போழ்ந்து
வளியுலாய்ப் புறத்தும் வழங்குநர்த் தெறூஉம்
பைதரு கானத்துப் படர்நெறி யொதுங்கலின் 155
முந்துபர லுழந்த வெந்துயர்க் கொப்புள்
பிந்துபர லுழத்தொறூஉம் பிளந்துநீ ருகுப்ப
இயங்காச் செல்ல லிணையடி தாங்க
வெயிற்பகை யுழந்த வேர்ப்புற நனைப்பச்
சூறை மாருதந் துறைத்துறை யெடுத்த 160
பூழி போர்த்த பொற்பறு மாசு
கலுழ்நீ ரல்லது கயந்தலை யின்மையிற்
கழுவுதல் புரியா முடைபயில் காயமோ
டிலையின் மராத்த நிலையின் மென்னிழற்
சேய்வரல் வருத்தஞ் சிதைபாக் கசைந்து 165
நெட்டுயிர்ப் பெறிந்து நினை தரு மிரவல!
ஆற்றா நின்னுளத் தவலமினி யொழிக
புளிஞரு மருளும் போக்கருஞ் சுரத்து
வீற்றுவீற் றொழுகு மாற்றினிற் றிரியா
தொருநெறி யெதிர்ப்பா டுற்றது முன்னைப் 170
பழுதறு பெருந்தவப் பயனது போலும்
விழும் வெந்துயர் முழுதொரால் வேண்டிற்
பாணியா தின்னே காணிய வெழுமதி
தோறேர்க் கோடுந் திருகுகோட் டிரலையின்
நோய்ப்பகை யென்ன வாய்ப்பிலா தமையும் 175
அடுத்தடுத் தியானு மலமரு காலை
ஊரூர் வைகிய சீர்கெழு மாந்தருள்
உண்டி கலவி யுறுதொழின் முதலா
மண்டிய பகுப்பின் வரையறைப் படாது
வேறுவே றுயிர்க்கும் வெம்பிணி யாளரும் 180
கருவி போழ்ந்த பெரும்புண் ணுறுநரும்
குட்டம் பெருநோய் முட்டிய வாதம்
முயலக னாதி மொய்ப்பிணி யுழவரும்
பாப்புக் கோளாதிப் பலவகைக் கடிஞரும்
பேய்கோட் படுநரும் பித்துமீக் கூர்நரும் 185
உறுப்புக் குறைநரு மொண்குண மிழநரும்
இன்ன பஃறிறத் தெனைவரு மன்றிக்
கல்விவேட் டவருங் கான்முளை வீழ்நரும்
செல்வம் வீழ்நருந் தேய நாடுநரும்
அலர்முலை மடவார் கலவிகா முறுநரும் 190
இரண்டறு கலப்பி னின்பநச் சுநரும்
இனையபல் வேறு நினைவின ரெவரும்
வாட்டுவ தணப்பவும் வேட்டன மணப்பவும்
மேற்கொண் டெழுந்து மேனா ணேர்ந்த
பொற்கிழித் திரளும் பூந்துகின் மூடையும் 195
மணிப்பூட் பேழையும் வார்தரு கவரியும்
பைம்பொற் கவிகையுஞ் செம்பொற் சிவிகையும்
ஊர்தியுங் கொடியும் வார்விசி முரசும்
சூட்டுவா ரணமுந் தோகைய மயிலும்
தத்தமக் கியன்ற தழீ இயினர் போதும் 200
ஓசைதிக் கதிர்க்கு மாசனப் பெருக்கம்
காண்டொறுங் காண்டொறு மீண்டிய களியேன்
உடங்குசென் றிறுப்பா னொருப்பட் டெழலும்
துன்னிய விழுமநோய் தன்ன நீங்க
உறுதுயர் யாக்கை சிறிதுவலி யெய்த 205
ஒய்யெனக் கிளர்ந்த வுவகைநெஞ் சத்துப்
படர்பே ரூக்கம் பிடர் பிடித் துந்த
எழுந்தன னிம்மென வேகுத றொடங்கி
அடிபெயர்த் தோறு மஞர்ப்பிணி நழுவ
உவரி நீரிற் றவவெழு மகிழ்வால் 210
அவன்மிசை பாடாஅ வனைத்து நெறியாகச்
சென்றன னடுத்து மன்றனகர் நுழைதலும்
வெருவுநோ யிருகூற் றொருகூறு விலங்கக்
காட்சி யார்வங் கையிகந் தீர்த்தலின்
நறுமணங் கமழு நந்திநதி குடையா 215
தெழுமுனி வரர்த மெழுசுனை யாடா
தலைமலைப் பகைஞ னருட்கயம் படியாது
நாக வண்சுனை நன்புன றோயாது
விண்டு தீர்த்த மேவரக் குளியா
தலரவ னிருஞ்சுனை யழிபுனன் முழுகா 220
தெத்துயர்த் திரளு மத்தினத் தகற்றும்
சரவணப் பொய்கைத் தடம்புனற் றுளைந்து
மென்மெலக் குன்ற மீமிசை யிவர்ந்து
காலை நண்பகன் மாலைமுப் போதும்
வைகல் வைகன் மலர்மூன்று தெரிக்கும் 225
நீலப் பைஞ்சுனை நேர்கண்டு தொழுது
புரண்டனர் சூழும் பொற்பினர் மிடைதலின்
அடியிடப் படாஅ வாரிடை வீதி
ஒதுங்குபு பைப்பய வொருமுறை சூழ்ந்து
தூவுமெண் ணிலத்துத் தோயாது வெறுத்த 230
தேவர்கள் குழுவுந் தேயத் தொழுதியும்
தடை இய வாய றடையாது நுழைந்தாங்
கொருவர்மெய் மணிப்பூ ணொருவர்மெய் வடுச்செய
நெருங்கிச் சென்று நித்தில வாணகை
வள்ளி நாயகி மணத்தினை முடித்த 235
கள்ள வேழக் கடவுளைப் பணியா
வீரரொன் பதின்மர் வார்கழ றாழ்ந்துமற்
றாவயின் வதியு மமரரைத் தொழுது
பூதப் பகுப்பும் பூதகா ரணமும்
இந்தியக் கூட்ட மிரண்டுமுக் குணமும் 240
நந்துமாங் காரமு நலத்தகு கரணமும்
இறுவாய் மாயை யெழுவா யேழும்
சுற்ற மென்னத் தோன்றிய வைந்தும்
விராய்நின் றியக்கி மராதுநின் றொளிரும்
ஆரா வின்ப வருணிலை யம்ம 245
தீரா மலப்பிணி தீர்த்தருள் கொழிப்ப
அருட்டிரு வுருவு கொண் டவிர்மணித் தவிசின்
ஞான சத்தியுங் கிரியா சத்தியும்
வானவர் கோமான் வளம்பயின் மகளும்
கானவர் நலங்கூர் கன்னியு மென்ன 250
இரண்டு பாது மிருந்தனர் களிப்பக்
கண்டமெய் யடியர் கலவினர் போற்றக்
காணா விண்ணவர் கலவா தேத்தக்
கட்கடை யொழுகுங் கருணை நோக்கமோ
டினிதுவீற் றிருக்கு மெழினேர் காண்டலும் 255
எஞ்சுநோய் துவர விரியல் போக
விஞ்சு நூற் பொருளு மேவந்து துவன்ற
ஆற்றாக் கடுந்துய ரருநர குழப்பவர்
நோற்றமுன் ஊழ்நனி நூக்கலு நொடிப்பின்
ஆயிடை நின்று மாயிருந் துறக்கம் 260
புக்குழிப் பொலிவித் தொக்கதோற் றத்து
விம்மித மகிழ்ச்சி மெய்தவ வீக்க
ஒருகதி விட்டுமற் றொரு கதி யடைந்தவர்
மயங்கறி வென்ன வுயங்குமுன் னுயங்கல்
எய்யே னாகி யிறுமாப் பெய்திச் 265
செய்முறை தெரியாது திருமுன் னிற்ப
இருமைப் பயனு மெளிதினுற் றளிக்கும்
பூதியுந் திருவுருப் பூச்சுநன் களித்திட்
டென்னைத் தன்வச மாக்கிய வுலகை
என்வச மாக்கி யென்றுமோ ரியல்பின் 270
நின்றதன் னிலையி னீங்கா திருத்தி
விடாதுவிட் டருள மெய்யருண் மேற்கொண்
டொழியா தொழிந்து வழிவரு கின்றனன்
அத்தகு பெருமா னருள்விளை யாடலைச்
சற்றிது கேண்மதி தவமேம் படுந! 275
விச்சொன் றின்றி விளைவுமிக் காக்கியும்
விச்சுமிக் கிருப்ப விளைவுமுழு தொழித்தும்
ஒளிதலை வளர்ப்ப வொளிகளைத் தணித்தும்
அழுக்கினைக் கழுவ வழுக்கினை யேற்றியும்
உறுந்தொழி லாளர்க் குறாதுசே ணகன்றும் 280
வறுந்தொழி லாளர்க் குவந்துடன் கலந்தும்
விதித்தநல் விதிகளை விலக்கென வுவர்த்தும்
விலக்கினை விதியென மேதக நயந்தும்
இத்தகு தொழின்மை நித்தலு மியற்றிப்
பொற்றபே ரின்பருள் பெற்றிய னஃதான்று 285
இருமுது குரவ ரெழுவாய்ச் சுற்றமொடு
துயரிலங் குலகந் தோற்றுதற் பொருட்டுத்
தந்தை யென்ன வைந்துமுக னாகியும்
அன்னை யென்ன மனோன்மனி யாகியும்
முன்முறை தந்தையர் தாய ரென்ன 290
நாதஞ் சிவமே நலத்தகு விந்து
மேதகு சத்தி வேறுவே றாகியும்
பின்முறை தந்தையர் தாய ரென்ன
மகேச னுருத்திரன் மகேசையுமை யாகியும்
தமைய னென்னத் தந்திமுக னாகியும் 295
தனைய னென்னத் தாமரை மருட்டும்
மூவிரு முகமு முந்நான்கு கரமும்
மருவிவீற் றிருக்கு மொருதா னாகியும்
கடப்படு மிரண்டு கைகோ ளியங்க
நான வார்குழ னகையிழை யானையைக் 300
கானவ ரரும்பெறற் காமரு மாதினைக்
கற்பினிற் களவினிற் பொற்புற மணந்தும்
பொருட்டுறை முழுதும் புரையின்றி நடப்ப
அண்டகோ டிகளு மரைக்கணத் தளவையின்
வறிதுநகை தோற்றி யிறுவது புரியும் 305
எறுழ்வலி யாற்ற லெய்யான் போல
மந்திரந் தூது செலவிகன் மற்றும்
ஆற்றிவெஞ் சூர்வலி காற்றியுல கோம்பியும்
எல்லா மறிந்தறி விக்குமவ் வியல்பைக்
கண்கூடாகக் காட்டுவ னதாஅன்று 310
மூவகை யுருவாய் மூவுல குயிர்த்தும்
மூவகை யுருவு முயங்காப் பரம்பொருள்
பந்தம் வீடு பல்லுயிர்க் கமைத்தும்
பந்தம் வீடு படாத பெருந்தகை
ஆருயிர்க் குயிரா யமைந்தன நடாவியும் 315
ஆருயிர் காட்சிக் கணுகா வருந்திறல்
தானாய் நின்று தற்காண் டனிமுதல்
அளிகளி னளியா வளிகளுஉங் களியன்
ஒளிகளி னொளியா வொளிகளூஉங் கொளியன்
வெளிகளின் வெளியா வெளிகளூஉங்கு வெளியன் 320
அளவினி னளவா வளவினூஉங் களவன்
இன்னா னொருவனை முன்னுபு சென்றவன்
பூங்கழற் சேவடி போற்றுதி யாயின்
பேரஞ ருறுத்த பேதுறு நோயும்
காரண நோயுங் கையிகந் திரியக் 325
கடைக்கணித் தருளிக் கரையினாற் பொருளும்
கொடைக்கட னீயிர் குறித்த வளவையின்
எண்மடங் காற்றி யென்றுந் தீரா
அகம்படித் தொழின்மையி னழுத்துவ னன்றே
ஆடகப் பசும்பொற் பாடகச் சீறடி 330
நாடக மகளிர் நவிற்றிய வாடற்
சிலம்பு கிண்கிணி தீங்குழன் முழவம்
முரசந் தூரி முழங்கொலி யானும்
விண்டல முரிஞும் வியன்மணிப் புரிசைக்
கொண்டல் கண் படுக்குங் கோபுர நிரைகள் 335
ஆடுகொடி சுமந்த மாடநெடு மாளிகை
இன்னன பிறவு மன்னுத லானும்
ஒலிதிரைக் கடலு மோங்குபல் வரையும்
உடங்கு தொக் கண்மி யொண்டுறை யாடி
இருபகுப் பினவா யிருகரை மருங்கும் 340
நோற்றன வதியும் பேற்றினைத் தெரிக்கும்
மும்மையு மளிக்கு மூவா முழுமுதல்
ஐம்முக னாகி யமர்ந்தவீ ரட்டமும்
அறுமுக னாகி யமர்ந்தகீழ்க் கோட்டமும்
பொன்னு மணியும் புதுமலர்க் குவையும் 345
திரைக்கையிற் றூஉய்த் திளைத்தெழுந் தொழுகும்
நந்தி யாற்று நறும்புனன் மடுக்கும்
குரங்குகதிர்ச் சாலியுங் கொழுந்தீங் கரும்பும்
குலைப்பூங் கதலியுங் கோட்டெங் கினமும்
கோள் கண்மீப் பரிக்கும் பாளைக் கமுகும் 350
வயின்வயிற் பொதுளி வளம்பல வுறந்த
முருகலர்ப் பண்ணை யொருபுறஞ் சூழ
அவரை துவரை யரிற்கதிர் வாகு
சாமை யிறுக்கு ததைந்தன விளையும்
கொல்லை முல்லை கோழிணர்ப் பூவையும் 355
பந்தர் மாதவி யுந்திய கோங்கும்
பைங்காற் கொன்றை பசும்பொற் சுண்ணமும்
வளியுளர்ந் தெடுப்ப மறுபுல வரைப்பும்
போர்த்தன கமழ்ந்து பொறிவண் டழைக்கும்
அரும்புலப் புறவம் மொருபுறஞ் சூழச் 360
செருந்திமந் தாரங் குருந்துவாழை பாடலம்
கோங்கு சண்பகம் வேங்கைமகிழ் சந்தனம்
குங்கும மரவங் கோழகிற் கப்புரம்
இல்ல மாவிரை வில்லம் பாக்கர்
பிடர்ஞெமை நமையாண் டடர்வரை யெகின்சே 365
அசோகந் தேக்கே யாத்தி சூதம்
மருது போதி வஞ்சி காஞ்சி
ஞாழல் புன்னை நரந்தை மாதுளை
பொகுட்டரை யிருப்பை பூங்கினைச் சரளம்
முன்னம் பலாசு முருக்கை வருக்கை 370
சோதி மாமரந் தொத்தின நாகம்
அன்றி யனைத்துந் துன்றிய கறிக்கொடி
மல்லிகை முசுண்டை மற்றும் பரித்து
மணங்கமழ் காமர் வல்லி யொன்றே
இணங்குபூத் தருந்த னிகழ்ச்சியை நாடி 375
வசைப்படத் தத்த மிசைவிளக் குனபோல்
பொறிவரிச் சுரும்பும் வெறிதூர் தேனும்
தோகைமா மயிலும் தொடிக்கட் பூவையும்
கிள்ளையுங் குயிலுந் தெள்ளுகுரற் காட்டி
வண்டளிர்ப் பொதும்பர் மருங்குகால் வளைஇ 380
நுண்டளி நறுந்தே னோலாது திவளும்
ததைமலர்ச் சினைய தருவைந் துடுத்த
பொன்னகர் வறுமையை முன்னிநக் காங்கு
வேர னரன்றுக்க வெண்மணிக் குப்பையும்
பிறழ்பற் பேழ்வாய்ப் பின்முன் பார்வைச் 385
சிங்கவல் லேறு பொங்கு சினந் திருகி
எழுந்து தாய்த் துமிப்ப விருங்கடா யானை
மத்தகம் பிளந்து மாயிருங் குன்றத்து
வெண்புன லருவி வீழ்வன் போலச்
சலசல வுக்க தரளக் குவாலும் 390
நிலவுராய்த் தவழ நெமிர்ந்தன மிளிரும்
கவான்மலைப் புனத்துக் கதிர்த்தினை காக்கும்
உவாமதி முகத்தா ரோச்சினர் விடுக்கும்
கவணையின் மணியோ கங்குற் கானவர்
விலங்கினந் துரக்கு மிலங்குகூர்ங் கணையோ 395
வலைத்தர விசும்பி னிலைத்தரு கலன்கள்
பல்வகை மின்கொடி யொல்கிவீழ்ந் தென்ன
வெல்வரை நிரையும் பில்குகதிர் மணிப்பூங்
காழுந் தாமமுங் கவினத் ததைஇய
மண்டப மேடை மாடமே னிலைகள் 400
இயங்கா நிலைத்தேர் இயங்குமணிப் பஃறேர்
விமானவூர் திகளும் வேற்றுமை தோற்றா
வளம்பல தழீஇயெம் மருங்குமெய் யடியார்
இடுமகிற் றூபமு மெக்கரிற் குவைஇய
படரொளி யூட்ட பளிதக் குப்பை 405
கான்றதீம் புகையுங் கழுமிவிண் கெழுமி
இமையார் நாட்ட மிமைப்பன செய்ய
மல்ல லாவண மறுகும் வீதியும்
நாடொறு மெழிலா னவநவ மாகி
இமைக்குநர் நாட்ட மிமையா மைசெய்ய 410
மண்டலம் விண்டல மாற்றிய தென்ன
இறும்பூது பயவா வேர்குலாய்க் கிடந்த
திசைகாப் பாள ரிசைநிறை தேவர்
அலரவ னெடுமா லாதிய கடவுளர்
முதுக்குறையன்பின் முறைமுறை பழிச்சச் 415
சாறுநா ளல்லது வேறுனா ளறியா
துலகமுழுதோம்புபல் சிறப்பின்
நிலைபெறு தணிகை மலைகிழ வோனே.
--------------
இதன் பொருள்.
‘சீரார் தொடைபுனைந்த... களிறு
இது கடவுள் வணக்கம் :---- என்பது இந்நூல் இடையூறு இன்றி முடிவுகூடற் பொருட்டு நூலாசிரியர்
தாம் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுள் ஆகிய மூத்தபிள்ளையாரை வணக்கம் செய்தல்.
நூல் கூறுவார் முதற்கண் மங்கலமொழி வகுத்துக் கூற வேண்டுதலால் மங்கலமும்,
எழுத்துத்தானமும், கணமும் நன்கு இயைந்த ‘சீரார் ' என்றும், இந்நூற் பொருட்பயன் ஈண்டுப்
பயப்பதாக நிற்றலானும் உலகியல் நடத்தற்கு ஏதுவாகப் பிள்ளையார் வள்ளிநாச்சியாரைக்
குறிச்சியின்கள் வதுவைவேய்ந்த கோலத்தோடு அத்திருமலைக்கண் வந்து வீற்றிருந்தமையானும்
’தொடை புனைந்த செம்பாவை' என்றும் கூறினர்.
திருத்தணிகை, என்னும் அடையடுத்த பெயர்க்குச் 'சீர் ' என்னும் மங்கலச் சொல்
பாலதானமும், ‘சீரார்' என்பது நேர் நேர் ஆகலின் உயிர்க்கணமும் , 'தணிகை' என்னும் அடையடுக்காத
பெயர்க்கு என்னின் குமாரதானமும் இயைந்து நிற்றல்காண்க.
இத்திருமலைக்குச் செருத்தணி என ஒரு பெயரும் உள்ளது. அது முன்னர்ச் சூரபன்மன்
செய்த போர்த்தொழிலினும், பின்னர் வேடர்கள் செய்த போர்த் தொழிலினும் பிள்ளையார் தணிந்து
வந்து வீற்றிருந்த காரணத்தாலாயது. அதனை, காந்தம் வள்ளியம்மை திருமணப்படலத்தில் "செங்கண்
வெய்யசூர்ச் செருத்தொழி லினுஞ்சிலை வேடர் – தங்க ளிற்செயும் செருத்தொழி லினுந்தணிந் திட்டே
- இங்கு வந்தியாம் இருத்தலாற் செருத்தணி யென்றோர் - மங்க லந்தரு பெயரினைப் பெற்றதிவ்
வரையே.' என்னும் 216 செய்யுளிற் காண்க.
(இ-ள்) ஐங் கை களிறு - ஐந்துகரமுள்ள யானை, முன்பு போல் - முன்னை நாட்கண்
(புணர்த்தினவாறு) போல, வேறு உருவம் கொள்ளாமை - (இற்றை நாட்கண்) வேற்றுருவம்
கொள்ளாமல், ஏர் ஆர் தணிகை இளவல் கு - ஏற்றம் அமைந்த திருத்தணிகைக் கண் இளைய
பிள்ளையாருக்கு, சீர் ஆர் தொடை புனைந்த செம் பாவை - (எழுத்து அசைகளால் ஆகிய) சீரும்
(அச்சீர் தளை அடிகள் அடுத்த) தொடையும் ஆகிய உறுப்புக்களால் தொடுக்கப்பட்ட செந்தமிழ்ச்
செய்யுளை, நேர் ஆக கூட்டும் -- நேர்மைப்பட ஒப்புவித்து, எ பொருளும் - (ஆற்றுப்படை என்பதற்கேற்ற)
எவ்வகைப்பட்ட பொருட் செறிவையும், காட்டும் - தெரிவித்தருளும் என்க,
` ஐங்கைக் களிறு முன்பு போல வேற்றுருவங் கொள்ளாமை தணிகை இளவற்குச்
செம்பாவை நேராகக் கூட்டி எப்பொருளும் காட்டும் என முடிக்க. 'இளவற்குச் செம்பாவை' என்பது
விளக்கிற்கு நெய் என்பது போல் நின்றது. ‘முன்பு போல்' என்றதற்கேற்ப இற்றை நாள் என்பது
வருவிக்கப்பட்டது. எர்பு என்பது குறைந்து நின்றது. கூட்டும் என்பது வினையெச்சமுற்று. ஆல்
இரண்டும் அசைநிலைகள்.
‘ஐங்கைக் களிறு முன்பு போல் வேற்றுருவம் கொள்ளாமை கூட்டும்' என்றதால் செம்பாவை போலும் வள்ளி நாச்சியாரை முன் இருகோடும் ஒருகரமும் உள்ள
வனவேழ வடிவாய்த் தோன்றி ளவற்குக் கூட்டினவாறு போலன்றி இற்றைநாட்கண் ஒரு கோடும் ஐங்கரமும் உள்ள இயற்கை உருவாய்த் தோன்றிநின்று செந்தமிழ்ப் பாவைக்கூட்டும் என்றவாறாயிற்று. நேராக' என்றதால் முன் நாச்சியாரை வழித்தடை செய்து அச்சுறுத்திப் பின் புணர்த்தினவாறு போலன்றி இற்றைநாட்கண் அடியேனை அஞ்சல் செய்து இடையூறு நீக்கிச் செம்பாவை நேர்ச்சியுறுத்தும் என்றதாயிற்று. இரட்டுற மொழிதலால் ‘சீரார் தொடைபுனைந்த செம்பாவை' என்றதனை மென்மை மிக்க மணமாலை புனைந்த செம்பொற்பாவை என நாச்சியாருக்குரைக்க. செம்பாவை செம்பொற்பாவை போல் வார் என விரித்தலால் உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைநிலை. இதில் பாவையை என இரண்டன் உருபு விரிக்க : செய்யுட்கு எனின், அவ்வுருபு விரிந்தே நின்றதாகலான். இவ்வகைத் தொடர்களை ''வேற்றுமை யுருபுக ளல்லா தனவும்---வேற்றுமை யுருபுகள் போன்வெளிப் படுமே'' என்று கூறின நுட்பவிதியாயுணர்க.
------------
நூல்
பொன்மலை (1) என்பது முதல் ஆராதுகைப்பவும் (16) என்னும் அளவும் ஒரு முடிபு.
1-2. பொன்மலை திரு வில் பன்னக நெடு நாண் மாய பகழி தாய குரிசில் - மாமேரு ஆகிய பெருமையுள்ள வில்லிற்கும் சேடன் ஆகிய நெடிய நாணிக்கும் மாயோன் ஆகிய அம்பிற்கும் உரிமையையுடைய இறைவனது, -
தாயக்குரிசில் என்றதால் எனையோர்க்கு அவை அவ்வாறு ஆதற்கு உரிமையுடைய அல்ல என்பதாயிற்று.
3. முரண் அமை இரு கால் திரள் மறை புரவி - திங்களும் ஞாயிறும் ஆகிய சக்கரங்களையும் நால்வேதமாகிய பரிகளையும், --
4. அலர் மரை வாழ்க்கை வலவன் தேரும் - அலர்ந்த தாமரைப் பூவின்கண் வாழ்தலுற்ற பிரமனாகிய பாகனையும் உடைத்தாகிய தேரும், -
குரிசிலது தேரும் எனக்கூட்டுக. முரண் என்றது வெண்மை செம்மை: இரவினும் பகலினும் மாறிவருதல் பற்றி. திரள் - பல வாதல்பற்றி. அலர்ந்த தாமரை - திருமால் உந்தித்தாமரை மலர். உம்மை சிறப்பும்மை.
முப்புரங்களையும் அழித்தற்கு உடம்படுதி என இந்திரன் முதலோர் வேண்டலும் இறைவன் அதற்கு ஒப்பினது தவறானாகி அவற்றின்மேல் சென்ற ஞான்று பொன்மலையும் பன்னகமும் மாயனும் தத்தம் உருத்திரிந்து முறையே வில்லும் நாணும் பகழியும் என்றாகியும் அவை தமக்கு ஏற்ற போர் புரிதற்கு அமையாதனவாய் நின்றன. எனினும், தத்தம் இயற்கைத் தொழிலான் உலகை நிலைபெறுத்தலும் பூமியைச் சுமந்து தாங்கலும் உலகைக் காத்தலும் என்னும் அத்தொழிற்கண் அமைவனவாய் நின்றமையின், இந்நூல் கேட்பார் ஊழ்வலியானும் தீமை அணுகாராய் நல்லவை பெறுவர் என்பது கருதி நூலாசிரியர் அவ்வரலாற்றைக் குரிசிலுக்கு விசே டணமாகக் கூறினர் என்று உணர்க.
5. வழங்குதற்கு அமையா வண்மையின் இசைக்கும் – கொடுத்தற்கு இயலாத பெருநலம் உடைமையால் பொருட்கு இடனான சொற்களால் இசைக்கப்படுகின்ற, -
6. பெருந்தகு பாடல் திருந்து இசை புலவர் - மேதக்க பனுவல் உணர்ச்சியின்கண் அஃகாதபுகழ்மையுடைய அறிஞரது, -
7. அறன்கடைக்கு அகலா பிறங்கு தம் உளத்தின் – பாவம் புகுதற்கு இடங்கொடுக்க விரியாத தெளிந்த இதயத்தை யொத்த,
அறிஞர் இதயம் எனக் கூட்டுக.
8-9. சாலா கல்வி மாலார்க்கு அகலா - நிரம்பாத கல்விமயக்கம் உடைய புன்புலவர் அணுகியிருத்தற்கு விரியாத, வரன் மாண்டு அமைந்த உரன் மாண் பலகையில் --- வரங்களால் மாட்சிமைத்தாய் நிறைந்த புலமை நிறுத்தலின்கண் வலிமை மிக்க சங்கப்பலகையினிடத்தே, -
புலவர் உளத்தை ஒத்த பலகை என்க.
10-11. தண்டா விருப்பின் எண் தோள் முதல்வனோடு - இடையறாத அருளொடு வீற்றிருந்த அவ் இறையனாருடன், ஆனாது பயிலிய அருமறை கேள்வி - பிரிவு இன்றிப் பயின்றுள்ள அருமையான வேதநெறி யுணர்ச்சியாகிய இன்பத்தினையும், -
இறையனார் சிவபிரான் ஆதலால் எண்டோள் முதல்வன் என்றார். வேதநெறிக்கு வேதம் என்றது ஆகுபெயர். பயிலிய என்னும் எச்சப்பொது கேள்வி என்னும் தொழிற்பெயர் கொண்டது. இறைவனது தேராகிய நிலன் பிறரால் கவரப்படும் நிலையின்மையவான பொருள்களைத் தருவது ஆதலானும், அவ்வாறன்றிச் சங்கப்பலகை கற்றுவல்ல சான்றோர் முகமாக அவர்க்கும் பிறர்க்கும் பயன்படும் நிலையுள்ளன ஆகிய அறம் முதலிய பொருள்களைப் பயப்பது ஆதலானும், அத்தேரும் வழங்குதற்கு அமையாவண்மையின் என்றும், அத்தேர் இறைவன் திருவடியிடலும் நிலைகுலைந்து வாளாப் போந்தது ஆதலாலும் , கற்றுவல்ல புலவரது புலமையை இதுபோலச் சீர் தாக்கவல்ல மிக்க கடவுட்டன்மை இன்மைத்தாதலானும், அதனினும் இப்பலகையிடத்தே மிக்க விருப்பினராய் வீற்றிருந்தமை தோன்றத் தண்டாவிருப்பின் என்றும் கூறினர். 'வேண்டுதல் வேண்டாமை இலா’னுக்கும் அப்பலகைக்கண் வீற்றிருக்குமதோர் விருப்பம் தோன்றிற்றாலோ? எனின், அது தூய்மையும் மந்திரவலியும் உடைத்தாதலானும் இறைவன் தானே நல்க நின்றது ஆதலானும் அப்பல்கைக்கண் ஆரியத்தின் முதலெழுத்து ஐம்பத்தொன்றுள் ஆகாரம் முதலிய நாற்பத்தெட்டு எழுத்துக்களாகிய நாற்பத்தெண் புலவரோடு தலைமையும் நிருவிகாரமும் ஏனைய அக்கரங்கள் அனைத்தையும் இயக்கும் ஆற்றலும் உள்ள அகரத்திற்கு முதல்வன் ஆகிய இறைவன் நெடிது வீற்றிருந்தது தனது திருவருளான் ஆகலான் அவ்அருளையே ‘விருப்பு’ என உபசரித்தார்.
12-15. மா இரு தமிழ் கடல் வடமொழி கடல் என்று - மிகப்பெரிய தமிழ் மொழியாகிய கடலும் வடமொழியாகிய கடலும் என (ச் சான்றோரால்), ஆய் இரு கடலும் - ஆராயப்படுகின்ற இருவகைக் கடல்களையும், ஆற்றலின் கடையா –அறிவாகிய மத்தினாற் கடைந்து (இஃது ஏகதேசவுருகம்), ஐயம் திரிபு என்னும் அழல் விடம் படாது - ஐயமும் திரிபுமான அழல்கின்ற நஞ்சம் எழாமே, வெய்ய செம்பொருள் எனும் மிளிர் தீம் சுதை திரள் - மிக்க செவ்விய பொருள் என்னும் தூய்மைத்தான இனிய அமிர்த புஞ் சத்தையும் (இஃது உருவகம்),
16. ஆரா காதலின் ஆராது கைப்பவும் - அடங்காத விருப் பத்துடனே அவற்றை நுகர அறியாமையால் வெறுக்கவும், -
சுதை என்றதற்கு ஏற்பக் கைப்ப என்றார் . ஆரா என்பதில் எச்ச விகுதி குறைந்து நின்றது. இன் உருபுமயக்கம். உம்மை எதிரது தழீ இய எச்சவும்மை. தாயக்குரிசிலது (2) தேராகிய நிலனும் (4) வழங்குதற்கமையா வண்மை யுடைமையால் (5) புலவர் (6) உள்ளத்தினையொத்த (7) சங்கப்பலகையினிடத்தே (9) அவ் எண்டோள் முதல்வனோடு (10) பயிலிய அருமறைக்கேள்வியும் (11) தீஞ்சுதைத்திரளும் (15) ஆராது கைப்பவும் (16) என முடிக்க.
17-20. ஊன்று விரல் அழுந்தாது உடல் தசை திணிந்து மூவிரல் கொண்டு அழுத்திடின் உள் ஆழாதபடி உடம்பு தசை திண்ணியதாய், கான்ற தேம் தெரியல் கரு குழல் மகளிர்க்கு - மணம் கமழ்கின்ற மலர்மாலை புனைந்த கரிய கூந்தலுள்ள மாதரிடத்தே, அணங்கு உளம் நிறீஇ - நோய்படும் உள்ளத்தை ஒப்புவித்து, ஆர் உயிர் கவர்க்கும் - அரிய அறிவு முதலியவற்றைத் திறைப்படுத்தாநின்ற, வளம் கவின் கொழிக்கும் விளங்கு சீர் இளமையும் - கட்டழகு கிளர்ந்த இனிமை மிக்க இளமைப்பருவமும் , உயிரின் இயற்கையாகிய அறிவை உயிர் என்றது ஆகுபெயர்.
21-23. பல்வகை தொழிலும் பண்பு உற நவின்று - இயமம் நியமம் முதலிய பலயோக உறுப்புக்களையும் அதன் அதனது இயல்பின்கண் குறையாமல் முறையே முற்றி, சிந்தை வழி செலும் ஐந்தும் - உட்புலன் ஆகிய மனம் போனவாற்றால் செல்லாநின்ற ஐம்பொறிகளும், - அவை நுகர்வன ஆகிய ஓசை முதலிய ஐந்தும் நிலை பெரீ இயர் அளவினை திறத்தின் அயரா யாக்கையும் -
அடங்க அகப்படுத்தின அறவோர்க்கு உரிய ஒழுக்கங்களைப் பாகுபாடு அறிந்து நோற்கப் பெறாத உடம்பும், -
திறத்தின் - ஆற்றலுக்கு எற்ப எனினும் அமையும்.
24-25. அளகை கோமான் உளம் அழுக்கறுப்ப - அளகைக்கு இறையான நிதிக் கிழவனும் தன்மனம் பொறாமை யுறுமாறு, நிலம் நின் கிடந்த நெடு நிதி செல்வமும் - மண் உருக் குலைக்கப் புதைபட்டுக் கிடந்த பெரிய பொருட் செல்வமும், -
26-20. நீடு இன்று இரியும் நிலைமை நாடி --நிலைமையின்றிக் கழிகின்ற தன்மையை உள்ளுணர்ந்து, எற்போர் அங்கை கொடை கடன் இறுத்து-- இரப்பவர் கைக்கண் மறாத ஈகையாகிய கடப்பாட்டினைச் செய்து, நோற்போர் கோற்கும் நோன்மைசால் அறன் எனும் --- வண்மையை விரதமாகக் கொண்டார் அதனை இகவாது காவாநின்ற பொருளமைந்த தருமம் என்னும், உறுதி ஆக்கம் ஒய் என கழலவும் - உயிர்க்கு உறுதி பயக்கும் பேறு நிலை நில்லாமற் கழியவும், -
இன்றி என்பது இன்று எனத் திரிந்து நின்றது. நீடுதல் நீடு எனக் கடைக்குறைந்தது. இளமையும் (20) யாக்கையும் (23) செல்வமும் (25) இரியும் நிலைமை நாடிக் (26) கொடைக் கடன் இறுத்து (27) நோற்கும் உறுதி ஆக்கம் கழலவும் (29) என முடிக்க.
30-31. வரை திரள் புரள்வின் திரைத்து எழும் திரை கணம் - மலைகள் திரட்சியாய்ப் புரளும் புாள்வை ஒத்த சுருட்டி மேல் எழுகின்ற கடற்கண் அலைகள், விலங்கின வழங்கும் விழுகலன் செறித்தும் -- ஒதுக்குமாறு அவற்றைப் பிளந்து ஓடுகின்ற பெரிய வங்கமேற் சென்று பொருள்களை ஈட்டியும் , -
உம்மை எதிரது தழீஇய எச்சவும்மை.
32 -34. ஒளிறு வேல் அழுவத்து - கூரிய ஆயுதங்கள் வழங்கப்படுகின்ற போர்க்களத்தினிடத்தே, உருத்து எறிந்து அடர்த்து - சினந்து எதிர்ந்து போர் புரிந்து வென்று, குளிறு வார் முரசும் -- (ஒன்னாரது) முழங்காநின்ற வார்கட்டிய முரசங்களையும், பிளிறு மால் யானையும் - மதச்செருக்கால் ஆரவாரிக்கா நின்ற பெரிய யானைக்கூட்டங்களையும், வைத்த பல் படையும் - அவரது ஆட்சியில் வைக்கப்பட்டிருந்த பலவாகிய மற்றைப் படைத்திரள்களையும், வழாது கைக்கொண்டு - அறை போதராவண்ணம் வயப்படுத்திக் கோடலால், -
பல்படை என்றது இரதம் பரி கரி காலாள் முதலியவற்றை. கொள்ள என்பது கொண்டு எனத் திரிந்துநின்றது.
35-36. பராபவம் தெவ்வர் வரிசையின் இறுக்கும் - தோல்வி யடைந்த ஒன்னார் கையுறையொடு செலுத்தாநிற்கும், திறை கேழ் உரிமைமுறை நேர் நடாவியும் - திறைப்பொருளும் ஈட்டல் அமைந்த அரசியல் உரிமையைச் சிறப்பியல்பால் நடாத்தியும், -
ஒன்னார்த்தெறுபொருளைத் தெவ்வர் இறுக்கும் திறை என்றார். கடல் மேற் கலன் செறித்தும் (31) அடர்த்து (32) கொண்டு (34) நேர் நடாவியும் (36) எனமுடிக்க.
37-38. தம் தம் தொழிலில் தலைநின்று வளர்க்கும், - அமைச்சர் முதலியோர் தத்தம் ஆள்வினையின் கண் முயன்று இடையறப் பெருக்காநின்ற, பொருள் எனும் வெறுக்கை போற்றாது நழுவவும் - பொன் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற செல் வப் பொருள் ஈட்டினாரைப் பாதுகாவாமல் சொல்லாது ஏகவும், --
பொருள் ஈட்டினார்மாட்டுச் சிறிது தவறு உண்டாயின் அந்நிலையே தனது ‘நிலையாமை இற்று' எனக்காட்டி வாளா போதலால் அதன் விருப்பம் இன்மையை உணர்த்துமாறு அதற்கெனவகுத்த பலபெயர்களுள் 'வெறுக்கப்படுவது' என்னும் பொருண்மைத்தாய் ‘வெறுக்கை’ என்பதனை அத்தன்மை நன்கு புலப்பட ஈண்டுப் பொருள் எனும் வெறுக்கை என்றார். போகூழால் ஒருவன் மிடுக்குற்றுப் பற்றிப் போற்றினும் அது நிலையாமைத்து ஆதலின், போற்றினானை அவ்வூழ் காரணமாக எனைத்துணையும் தான் போற்றாது கை நெகிழ விடுதலின் ‘போற்றாது நழுவவும்' என அதன் தொழிலாக உபசரித்தார்.
39-41. மிஞிறும் தேனும் வெறி கவர் தம்பியும் கஞலி - மணத்த மதுக் கவர்கின்ற மிஞிறு. தேன் தும்பி என்னும் வண்டினம் நெருங்கி, பண் குரல் கஞற்றுவ சுழலும் ---- பண்ணும் குரலோசை யும் கலப்பனவாய்ப் பாடிச் சுற்றுதற்கு இடனான, இருள் துஞ்சு மலர் பொழில் மருள் சில் ஓதி - இருள் தங்கின மலர் செறிந்த பொழிலோ என மருளத்தக்க சில் என்னும் தலையணி அணிந்த கூந்தலினையும், -
மிஞிறு ஆண் , தேன் பெடை, தும்பி வேறோர் வண்டின் சாதி. பொழிலும் எனச் சிறப்பும்மை விரித்து அது மருளத்தக்க ஓதி எனினும் அமையும். சில் என்பது சின்மை மென்மை என்னும் பொருட்டு.
42-44. பூ வார் சோல புறத்து அகப்படுத்து - அக் கூந்தலாகிய மலர் நிறைந்த சோலையிடத்தே உட்படுத்தி, மேவர தடை இய விதுக்குறை கடுக்கும் - ஆண்டுத் தங்கும்படித் தடையிட்ட குறைமதி போல்கின்ற, திவள் ஒளி மாண்ட குவவு நுதல் - பாவின் ஒண்மை மிக்க பெரிய நுதலினையும், -
குவவு, நுதல் - நரம்பும் உரோமமும் இல்லையாகத் தசை திணிந்து மூன்று விரல் அளவும் அகன்ற நுதல்.
45-47. வாள்நுதல் தீங்கதிர் அமிழ்தம் திங்கள் பிளவின் - விளக்கமுள்ள அந்நுதலாகிய தண்ணிய கிரணத்திற்கு இடனான அமிர்த உருவான அக்குறை மதியினின்று , நீங்கு கார் கறையும் - நீக்கமுற்ற கரிய களங்கமும், நிலா தவழ் வெண்மையும் - அதன் நிலவின் வெண்மையும், விராய் உரு கொண்டென - விரலி இவ்வுருக் கொண்டாலொத்த, மிளிர் மதர் மழை கண் - மாசில்லாத மதர்த்த குளிர்ச்சியான கண்ணினையும்,
குறைமதிக்குக் களங்கம் இன்மையின் நீங்குகறை என்றார், இது வண்ணவுவமம். நிலவின் களங்கமும் வெண்மையும் ஒரோவழிக் கலந்து உருக்கொண்டா லொத்த கண் எனவே, அவை அங்ஙனமாகி உருத்திரிதல் இன்மையால் வேறுவமம் அக்கண்கட்கு அமையாது என்றவாறாயிற்று.
48- 51. செங்குமுதத்து சிறு மதி கிடந்தென - செங்குமுதப் பூவினில் முந்நாட்பிறை கிடந்தால் ஒத்ததாய், செவ்வாய் அகத்த செயிர் தீர் வெண்பல் - செவ்வாயினிடத்து அழுக்கு அடையாத வெண்மைத்தான பல் வரிசையினையும், விலங்கு பாய் கதிர் குழை வீழ்ந்து - விலகிப் பரவாநின்ற ஒளியையுடைய குழைகள் நான்று, செகில் துயல் வர --தோண்மேலிடத்தே அசையாநிற்ப, வள்ளையின் ஒழுக்கிய அள் எழில் செஞ்செவி - வள்ளைப்பூவை நாலவிட்டாற் போலத் தாழ்ந்த அள்ளிக் கொள்ளும்படி செறிந்த அழகுள்ள செவியினையும், -
செஞ்செவி - வார்ந்து தாழ்ந்து மடற்சுழி வலஞ்சூழ முன் புறத்தே தள்ளின செவி.
52- 59. செவ்வாய் கவுள் துணை சேல் விழி நெற்றி இவாய் உறுப்பான் - செவ்வாயும் இரண்டு கபோலங்களும் சேல்மீனை ஒத்த கண்களும் நெற்றியுமான இந்நலனமைந்த உறுப்புக்களைக் கொண்டு, இன் சுவை அமிழ்த உறு கொடை ஆற்றி - இனிய சுவையுள்ள அமிழ்தமாகிய பெரிய வண்மையைச் செய்து, வறிது கொடை காட்டும் வளை நிதி தன்னை - வறிய கொடையைக் காட் டாநின்ற சங்கநிதியை, குடுமி கைக்கொண்டு அவளை மேல்கொண்டு - அதன் தலையைக் கைப்பற்றி அதன்
மேலதாய்ப் பொருந்தி, வயங்கு ஒளி தோற்றும் - மிக்க பொலிவை வெளிப்படுத்துகின்ற, பதும மாநிதி இது என கவன்று - பெரிய பதுமநிதி இஃது என்று வியந்து கவற்சியாகி, தாவா உறுவர் மேவா உள்ளமும் - கேடில்லாத மாதவரது ஒன்றினும் பற்றாத உள்ளமும், ஓவ படம் என உஞற்றுறு திருமுகம் - தன் நிலை பெயர்ந்து தடுமாறும்படி ஓவியப் படம் போல அயனால் படைக்கப்பட்டுள்ள அழகிய முகத்தினையும் , -
உம்மை சிறப்பும்மை. ஒன்றினும் பற்றின்மையாவது வீடு பேறன்றி இம்மை மறுமைப் பொருள்களில் பற்றாமை. 'தாவர உறுவர் மேவா உள்ளமும் ஓவ' என்று பாடம் ஓதித் ‘தாவரம் போல் சலித்தல் இல்லாத தவ வலிமை ஏறின துறவர் காதல் கூர்தலால் அவரது உள்ளமும் நிலை பெயர்ந்து ஒழிதற்குக் காரணமான முகம்'
என உரைப்பதும் ஒன்று. முகம் செய்வாய் முதலிய உறுப்புக்களின் இருக்கையதாகலானும், அவர்க் காமநூலுடையார் அமிழ்தநிலை எனக்கோடலானும், முகம் அவற்றைக்கொண்டு அவ்வமிழ்தத்தினை வழங்குதலாகிய கொடையைக் காதலர்க்கு அளிக்கின்றது என அதன் தொழிலாக உபசரித்தார். அம்முகம் சங்கு போன்ற கழுத்தின் மேலதாய் நிற்றலின் அதன் உருவாயுள்ள நிதி அவ்வாறு
அமுதத்தினை அளிக்க மாட்டாமையால் அது தரும் ஏனைய பொருள்களை வறிது கொடை என்றும் அது காரணமாகத்தன்னில் தாழ்ந்தது ஆகலின் குடுமியைப் பற்றித் தோற்கும் பிடர்மேல் வென்றார் எறுதல் முறையாக மேல் கொண்டு என்றும் கூறினர். இனி, முகத்திற்கு உவமம் தாமரை ஆகலின் அதன் உருவாய் நின்று பயன்படும் பொருள்களை உதவாநின்ற நிதியே என வியப்பும், தம் மனத்தையும் கவர்தலால் கவற்சியும் மிக்கு அறவோரது உள்ளமும் நிலை தடுமாறும்படி படம் போல்வதாய் அமைந்தது என அணிந்துரைக்கப்பட்டது.
60 - 63. பகுவாய் பொன் குழை மகரமீன் நான்று - அம் முகத்தின் பாங்கர் அங்கார்த வாயையுடைய சுறாமீன் வடிவாகப் பண்ணின பொன்னாலாகிய குழை தூங்கி, (பருவாய் மகரப் பொற் குழை என மாறுக) ஐது மீ கிடத்தலின் - வேய்த்தோளின் மேல் அடர்ந்து அசைந்திருத்தலால், ஐங்கணை கிழவோன் - ஐந்து மலர்களாகிய அம்புகளையுடைய மன்மதன், வெய்து தன் ஆணை விளக்கிய உயர்த்த - கொடி தான தனது ஆணையை யாவர்க்கும் புலப்படுத்துமாறு உயர நாட்டின, அணங்கு தவழ் கொடியின் இணங்கு பணை வேய் தோள் --- விருப்பத்தோடு நிகழாநின்ற கொடிக்கம்பம் போலத் தம்மில் இணையொத்த பருத்த தோள்களையும் , -
64- 69. காம்பு புடை அடுத்த கதிர் மணி குன்றின் - அம் மூங்கில்கள் பக்கத்தின் கண் நெருங்கியுள்ள ஒளிமிக்க மணிகளால் பொலிந்த குன்றுகளைப் போல, தோள் புடை அடுத்த சுடர் பூண் கொங்கை --தோள்களின் அருகே நெருங்கின சுடர் ஒளியைக் காலுகின்ற மணி அணிகள் செறிந்த முலைகளையும், குவி முலை துணை கொள் சவி மணி மார்பில் - அக்குவிந்த கொங்கைகளை ஏந்தின விளக்கமான அழகிய மார்பினிடத்தே, தத்தமது ஏணி கடவாது தணிய - அம்முலைகள் தமக்குரிய எல்லைக்கடவாமல் தங்கும்படி, நள்ளு நின்று உணர்த்தும் - நடுநின்று வரையறை செய்து யுணர்த்தாநின்ற, தள்ளா குறியின் - நீக்கப்படாத அடையாளம் போல, அணி வயிறு ஒழுகிய மணி மயிர் வல்லி - மென்மையான வயிற்றின்கண் ஒழுங்குறப் பொருந்தின கரிய உரோம இரேகையினையும்,
70-72. நெடுகு மயிர் ஒழுக்கு நெடு வழி படர்ந்து - அந் நீண்ட மயிரொழுக்கமான நெடிய வழியே சென்று, கடு முலை கோட்டு களிறு பட எடுத்த - பருமை தம்முள் ஒத்த முலைகளாகிய கோட்டு யானைகள் அகப்படுமாறு அகழ்ந்த, படுகுழி அனைய பயம் படு கொப்பூழ் - கொப்பம் போன்ற அச்சத்தைத் தருகின்ற உந்தியினையும் , -
கடுத்தல் - ஒப்பு. பயம்படு என்பதனை ஒருசொல் ஆக்கி ஆழ்ந்த என்று உரைக்கினும் அமையும்.
73-74. நடுநின்று வாழ்வோர் நலத்தொடு முரண - நடுவு நிலைமைக்கண் தங்கி நிகழ்வாரது ஆக்கத்தொடு மாறுகொண்டு, நடு நின்று தேய்ந்த இடுகு கொடி மருங்குல் - நடுவே நின்று வறுமை கூர்ந்த இளகின கொடியை ஒத்த இடையினையும், -
நடுவு நிலைமைக்கண் நின்றவர்க்குப் பெருக்கமே உளதாவதன்றித் தேய்வு உளதாகாது என்பது ஒருதலையாயிருந்தும் நடுநின்ற இடை அங்ஙனம் பெருகுதல் இன்றித் தேய்ந்தமையான் அவர் நலத்தொடு முரண என்றார்; இஃது ஓர் இலக்கணை.
75-77. வையகம் உயிர்த்தோன் மதி புனைந்து இயற்றலின் - உலகங்களை ஈன்ற பிரமன் மதிமிக்குப் படைத்த ஆற்றால், கை புனைந்து இயற்றும் கதிர் மணி திண் தேர் கடாது - யவனர் கைத் தொழில் வல்லராய் இயற்றின கதிர் ஒளியைச் செய்கின்ற திட்பமான தேரினை ஒவ்வாமல், உரு கொண்டு ஓடும் தடாத பேர்
அல்குல் - இத்தேர் அல்குல் எனும் உருவிற்றாய் ஆடவர் உள்ளந்தோறும் விரைந்து செல்லும் (செலவில்) தடைப்படாத அகற்சியையுடைய அல்குலினையும்,---
யவனர் கையால் இயற்றினதேர் இத்துணை வலிமைத்து அன்றாம் ஆகலின், அவ்வுருக் கொண்டு ஓடும் தடாத பேரல்குல் எனப்பட்டது.
78-79. கீழ்மேல் ,ஆக கிளர்ந்து எழின் -- பருத்த அரை மேல தாக வளர்ந்து எழுந் தால், (இஃது இல்பொருள் உவமை). அ தகு வாழையொடு பொருவும் வார்ந்த செறி குறங்கின் -- அப்புதுமைத்தான வாழையை நிகர்க்கின்ற நீண்டு அடர்ந்த தொடைகளையும், ---
வாழையொடு என்பது வேற்றுமைமயக்கம்.
80-82, வேறு ஒரு தாமரை மேவந்து தொழில் செய-- வேறோர் தாமரைப்பூ விரும்பி எவல் செய்யாசிற்ப, வீற்றிருந்து அருளும் விரைமலர் ஏய்க்கும் --அரசிருக்காநின்ற மணமுள்ள தாமரைப்பூவைப் போல்கின்ற, அலத்தகம் மலர்ந்த நலத்தகு சீர் அடி- செம்பஞ்சு ஊட்டிய அழகுள்ள மென்மையான கால்களையும் , ---
வேறொருதாமரை செம்பஞ்சிற்கு உவமம். (இது வண்ணவுவமம்). சீர் என்றும் பலபொருள் ஒருசொல் ஊறு எட்டனுள் ஒன்றாகிய சீர்மையினை . உணர்த்திநின்றது.
83. மயில் இயல் மருளும் இயல் மட மாதரை - மயிலினது சாயலை மருளுகின்ற சாயலையும் மடப்பத்தினையும் உடைய மாதர்களை, -
சில்லோதி (41) முதல் சீரடியும் (82) இயலும் உடைய மாதரை (33) எனமுடிக்க.
சீலம் (84) என்பது முதல் அழற்றுநோய் (93) என்னும் அளவும் ஒருமுடிபு.
84-85. சீலம் விழைவே செயல் குறி இவற்றால்- அவரது ஒழுக்கமும் உள்ளத்தின் வேட்கையும் செய்கையும் குறியும் ஆகிய இன்ன கருவிகளால், நால்வகை பேதமும் மால் அற தெரிந்து -- நான்குவகை வேறுபாடுகளையும் ஐயப்பாடு இன்றி உணர்ந்தவராய் –
" எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும்
எண்ணுக் குறித்தியலும் என்மனார் புலவர்.''
தொல் - சொல் - இடை-290.
என்றாராகலின் . எண்ணேகாரத்தைச் சீலம் முதலியவற்றோடும் கூட்டுக. நால்வகைப்பேதமாவன -- வாலை, தருணை, பிரவுடை, விருத்தை என்பன; இவை மாதர் பருவங்கள் என்பர்.
86. மருந்தும் மந்திரத்தும் திருந்து விழைவு ஏற்றி - மருந்தினானும் மந்திரத்தினானும் தன்னோடு இயைபுறத்தக்க வேட்கையை அவர்க்கு உளதாமாறு பெருக்கி, -
மருந்து - அமிர்தநிலை அறிந்து பரிசித்தல். மந்திரம் - மதனது மறையை அதற்குரிய தானத்தில் எழுதுதல். இவை வேட்கையை மிகுவித்தற்குத் தொடக்கத்தில் செய்யத்தக்க இன்றியமையாக் கருவிகள் என்பர். பெருகல்- உள்ள அளவின் மேற்படுதல்.
87-89. தேயம் பயிற்சி சேட்டை இயல்பே-தேயமும் குணமும் அவத்தையும் இயற்கையும், இன்ப துறையே இருவகை தொழிலே - இன்பத்தின் பாகுபாடுகளும் இருபாலதான தொழிலின் பாகுபாடுகளும், இங்கித வகையே இவை நனி நாடி- இங்கிதத்தின் பாகுபாடுகளும் ஆகிய இவற்றைப் பெரும்பான்மை ஆராய்ந்து, -
எண் ஏகாரத்தைத் தேயம் முதலியவற்றோடும் கூட்டுக. மக்கள் யாக்கையர் ஆதலின் அவற்றை ஆராய்தலும், அவ்வாறு கடைபோகத்துய்த்தலும் எளியன அன்றாம் : ஆகலின், நனிநாடி, என்றார். உலகத்துள்ள தேயந்தோறும் பிறந்த மாதரது தருமம் உள்ளம் செய்கை முதலியவற்றை விசாரித்துத் தேறுவது தேயம் நாடலாம். தேவர் முதலிய கணவகையுள் நின்ற மாதரை வாதம் பித்தம் சிலேட்டுமம் என்னும் முப்பகுதியுள் இன்னது உள்ளார் என உண்மை அறிவது பயிற்சி நாடலாம். வாலை முதலிய பருவங்கட்கு உரைத்த காலங்களையும் உள்ளத்தின் வேட்கையினையும் பகுத்தறிவது சேட்டை நாடலாம். மானினி முதலிய மாதர் சாதியும் சசன் முதலிய ஆடவர் சாதியுமான மாபுக்குட்பட்ட அவ்வவர் குறிகளின் பரிமாணங்கள் இன்னின்ன என்று அறிவது இயற்கை நாடலாம். புல்லுதல் சுவைத்தல் முதலிய புணர்நிலைவகைகனை அறிவது இன்பத்துறை நாடலாம். புணர்ச்சி அமயத்தின்கண் புடைத்திடல் வழிபடல் என்னும் இரண்டனையும் அறிவது இருவகைத் தொழில் நாடலாம். கிராமியம் பௌதிகம் முதலிய காரணங்கள் ஆகிய புணர்ச்சிப் பாகுபாடுகள் அறிவது இங்கிதவகை நாடலாம். இவற்றை விரிக்கிற் பெருகும் என விரித்திலம் . விரிந்த நூல்களுட் காண்க.
90-93. இருவகை பொழுதொடும் ஏற்ப மருவிய - பெரும் பொழுது சிறு பொழுதுகளில் எலுமாறு உற்ற, மூன்று காலமும் மூன்று வேகமும் - முக்காலங்களும் மூன்று வேகங்களும், ஒப்ப கலவி உஞற்று பேரின்ப அவா உளம் பொதிந்து கொண்டு -- பிறழாதபடி கலவி புரியாநின்ற பெரிய இன்பத்தின்கண் உள்ள பேராசை உள்ளத்தை வெளிப்படாத வண்ணம் மூடிக்கொண்டு, அழற்று வெம் படர் நோய் - விரகானலத்தை மூட்டுதலால் உண்டாகின்ற கொடிய துன்ப எதுவான நோய், -
கார்காலம் முதலிய ஆறும் பெரும்பொழுதாம். மாலைக்காலம் முதலிய ஆறும் சிறுபொழுதாம். மாதர் விரும்புமாறு அவர்க்கேற்ற ஆடவர் புணர்தற்குத் தக்க அமயம் காலமாம். அது மூவகை எனவும்; விரைவு சமம் தூக்கு என்பன வேகம் எனவும் கூறுவர். முன்னர்க் கூறிய சீலம் முதல் வேகம் என்பதன் துணையும் உள்ள வற்றின் பொருள்களை ஒருவாற்றான் உரைத்தாம். இன்னும் விரிக்கின் மிகப் பெருகும். ஆகலின், இவை எல்லாவற்றையும் ஒருங்கு உணர வேண்டின் வடமொழியுள் இன்ப நூலின் உணர்ந்து கொள்க.
இனி, சீலம் முதலியவற்றால் தெரிந்து ஏற்றித் தேயம் முதலியவற்றை நாடிக் கலவியுஞற்றும் இன்ப அவாப் பொதிந்து கொண்டு அழற்றும் நோய் எனமுடிக்க.
94-95. தவாது பிறை போல தணிவு இன்றி வளர - அந்நோய் இடையின்றி இளம்பிறை வளர்கின்றாற்போலத் தீர்வின்றி வளர்தலால், உவா மதி போல உருவே தபவும் - நிறைமதி குறைகின்றாற்போல உடம்பின் வலிமை முதலியவை நாள்தோறும் குன்றாநிற்பவும், -
நோய் வளர்தலால் உருவே நபவும் என முடிக்க. தபுதல் ஒருதலை ஆகலின் உருவே என்றார். ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது. பொருளடையால் உவமை அடைகள் வருவிக்கப்பட்டன.
கடவுட்பொங்கர் (96) முதல் தெளிவினை போலாது (104) என்னும் அளவும் ஒரு முடிபு.
96 - 98. கடவுள் பொங்கரும் தட மருப்பு ஆவும் - தெய்வத் தன்மையுள்ள ஐந்தருக்களும் பெரிய கோடுள்ள காமதேனுவும், சிந்தாமணியும் நந்தா நிதிகளும் - சிந்தாமணியும் கெடாத ஒன்பது நிதிகளும், கலன் முதலான பல வளம் கொழிப்ப - ஆகியவைகளுடன் அணிகலன்கள் முதலிய வெவ்வேறான பொருள்களை வேண்டி யாங்குவரையாது கொடா நிற்பவும், -
99-100. பல்வகை கணமும் பணிந்து எழுந்து ஏத்த - அமரர் சித்தர் முதலிய வெவ்வேறான பலகணங்களும் வணங்கி ஏத்தாநிற்பவும் , தெவ்வு தானவர் அவ்வித்து ஏங்க - அவருட் பகைமையையுடைய அசுரர்கள் தனது ஆக்கப்பெருக்கம் கண்டு மனக் கோட்டத்தால் பொறாதவர்களாய்ப் புழுங்கா நிற்கவும், -
101-104. விரி கதிர் பிழம்பும் அரி மான் தவிசின் - பரந்த கதிரொளியை மிகப் பரப்புதற்கு இடமான அரியணை மேல், களி கூர் நெஞ்சால் காவல் வைகும் - உவகை பெருகும் உள்ளத்தோடும் அரசு வீற்றிரா நின்ற, ஒளிகூர் மகவான் உறு பதம் ஆதி - பாட்டும் உரையுமான புகழ் மிக்க இந்திரற்கு உரிய பதம் முதலியவற்றை, எளிதின் உய்த்து அளிக்கும் - எளிதில் கை கூட்டுவித்தற்குக் காரணமான, தெளிவினை போலாது - நல்வினை போல்வதன்றி, -
பிழம்பும் என்றது பண்படியாக வந்த பெயரெச்சவினை . நெஞ சால் என்பது வேற்றுமைத் திரிபு . பாவல் வைகும் என்பதனை ஒரு சொல்லாகக் கொண்டுரைக்க.
ஆதிய என்பது குறைந்து நின்றது. வீடு பேற்றிற்கு வேண்டுவன ஆகிய அத்துணை ஆற்றல் உடைமை முத்திபதப்பேற்றிற்கு வேண்டாமையால் எளிதின் உய்த்தளிக்கும் என்றும், நல்வினையும் பிறவிக்கு எது ஆம் எனப் பெரியோரால் தெளியப்பட்ட தாகலான் தெளிவினை என்றும், பின்னர்க் கூறப்படும் சாதனங்களால் பெறத்தக்க வீடுபேறு ஒருவாற்றானும் இவற்றை ஒவ்வாதுமஆகலான் போலாது என்றும் கூறினர்.
பொங்கர் முதலியன வளம் கொழிப்ப எத்த ஏங்க தவிசில் காவல் வைரும் மகவான் பதமாதிய அளிக்கும் வினை போலாது என முடிக்க.
பார் (105) என்பது முதல் பிறக்கணித்துகவும் (100) என்னும் அளவும் ஒரு முடிபு.
105--107. பார் புதிர் புணரி பாயல் கடவுள் - பாராகிய நிலத்தினிடத்தே முதிர்ந்த பாற்கடலின் கண்ணே சேடனாகிய படுக்கைமேல் கண் வளர்கின்ற நெடுமாலும், வார் மது பொகுட்டு மரை மலர் புத்தேள் என்ற -- பெருகாயின்ற தேனோடு அலர்ந்த தாமரைப்பூம் பொருட்டினிடத்தே தங்கும் பிரமனும் ஆன, இவர் தமக்கும் எய்தற்கு அரிய --- இன்னோரானும் எளிதின் அடைதற்கு இயலாத, -
உம்மை உயர்வு சிறப்பு.
108 - 109. சரியை கிரியை யோகம் தவநிலை பெயர் - சரியை கிரியை யோகங்கள் என்னும் ஒப்பற்ற சாதனங்களின் பெயர்கள், பொச்சாப்ப பிறக்கணித்து உகவும் - மறக்குமாறு குறிக்கொள்ளாது கைவிடுதலானும், -
தத்தம் வருணநிலை வழாது நின்று தேசிகரிடத்தே மிருதி மறைநெறி முதலியவற்றைப் பயின்று எல்லாவற்றின் முடிவான மெய்ப்பொருளைத்தேறிப் பின்னர் அம்மெய்ப்பொருளாகிய இறைவனை நோக்கும் மதியால் உயர்ந்து சமயதீக்கை பெற்று இறைவனது திருக்கோயிலில் திருவலகிடல், மெழுகல், மலர் கொய்தல், மாலை முதலிய தொடுத்தல், தீபம் ஏற்றல், மெய்யடியார் பணித்த பணி தலைநின்று மேவல் இவை முதலான நற்கருமங்களைப் புரிவது தாதநெறியாகிய சரியையாம். இதனை முற்றிய பின்னர் மகநெறிக்கு ஆன விசேட தீக்கையைப் பெற்றுப் பூசனைக்கு ஏற்ற திருப்பள்ளித் தாமம் முதலியவற்றைச் சேகரித்து, சுத்தி ஐந்தும் செய்து, பதுமாசனம் பூசித்து, அதன் மேல் மூர்த்தியைப் பாவித்து, மூர்த்திமான் ஆகிய இறைவனை ஆவாகித்து, பத்திமையினால் ஒருமைப்பட்ட மனத்தோடு வழிபட்டுத் துதித்து, ஆவரண பூசை முதலியவும் புரிந்து, அழல் ஓம்புதல் புத்திரமார்க்கம் ஆகிய கிரியையாம். பின்பு இயமம் நியமம் முதலிய யோக உறுப்புக்களான எண்வகை இயல்பும் வாய்ந்து பிங்கலை இடைகலைகளை அடக்கிப் பிராண வாயுவை நடு நாடியில் நிறுத்தி ஆதாரம் ஆறினையும் அவற்றிலுள்ள பொருள்களையும் உணர்ந்து தியானித்து மூலாதாரத்தின் அனலை எழுப்பி உந்தியினிடத்தே குண்டலிசத்தி உருவாய் இருக்கும் அமிர்தினை உருகப்பண்ணி மற்றைய ஆதாரங்களின் கீழ்முகமாய் உள்ள பதுமங்களைப்பேதித்து மேலேசென்று சோமவட்டத்தில் பெருகாநின்ற அமிர்தினை உண்டு பேரொளியான இறைவனை தியானித்து அவ்வொளியுடன் கூடியிருத்தல் சகமார்க்கமாகிய யோகமாம். இவற்றின் பயன் முறையே இறைவன் உலகு, இறைவன் அருகு, இறைவன் உரு அடைவது. இவற்றின் விதியைச் சிவாகமங்களின் உய்த்துணர்க.
கடவுள் (105) புத்தேள் (106) இவர் தமக்கும் அரிய (107) சரியை கிரியை யோகத் தவநிலை (108) பிறக்கணித்துஉகவும் (109) என முடிக்க.
110-111. ஊன நாடகம் உஞற்றிய திருவருள் - இதுகாறும் மாயாகாரியமான நாடகத்தினை நடாத்திய (இறைவன் இடத்ததான) அருட்சத்தி, ஞான நாடகம் நவிலிய மாறலும் - இனி ஞான நாடகத்தை நடாத்தும் பொருட்டுத் திருவுளம் திரும்பின அளவில், -
உயிர்தன்னை இத்தன்மையன் என்று உணரும் ஆற்றினை மறந்து தன்னின் வேறாய யாக்கையைத் தான்தான் என்று கருதிப் பொருட்சார்பு உயிர்ச் சார்புகளை நித்தமாகக் கொண்டு அவத்தையுட்பட்டு உழலும் அதனை ஊன நாடகம் எனவும், இவ்வமயத்தும் அதனுடன் கலந்துநின்றே கலப்பில்லாத தாகலான் அதனை உஞற்றிய திருவருள் எனவும், அவ்வாறு உழன்று தனது பதியையும் அறியாது வருந்தின அவ்வுயிரைச் சத்திநிபாத அநுகுணமாகத் தீக்கை செய்து கருணையால் அநுக்கிரகிக்கும் முறையினை ஞான நாடகம் எனவும், அத்திருவருளே அப்பருவத்தின் கண் குருவாய் வந்து அவ் அவத்தைகளினின்றும் உயிரை விடுவித்து மல இருளை நீக்கி இச்சா ஞானக் கிரியைகளை இடையீடின்றி விளக்கச் செய்வதாகலின் அதனை நவிலிய மாறலும் எனவும் கூறினர்.
112 - 114. ஆனா மலப்பகை நோனாது கழல - அருள்விளைவின் அன்றி நீங்காது அநாதியாய் வருகின்ற ஆணவமாகிய பகை வலிமைபுரியாமல் ஒழியுமாறும், தான் ஆனந்த தனி உயிர் மடங்க - உயிர் தனியாய்த் தானாகவே பெருகும்படி தனது அவிச்சைத் தன்மை மடங்குமாறும், கண் காண் குரு முதல் கடவுள் ஆகி - எல்லாவற்றிற்கும் முதலாய் நிற்கும் கடவுள் கண்கூடாகக் காணப் படுகின்ற குரவனாகி, -
முதற் கடவுள் குருவாகி என மாறுக. அவிச்சை அகங்காரம் அவா விழைவு வெறுப்பு முதலிய தத்துவக் குழாத்தினைத் தொலைச்சித் தான் தனியாய் இறைவனிடத்தே நிற்றலைத் தானானந்தத் தனி உயிர் மடங்கலும் என்றார். எனவே, பசுஞான நீக்கம் என்றவாறாயிற்று. கண் காண் குரு என்றதால் முதற்கடவுள் அருளான் அன்றிக் காணப்படான் என்பது " அந்நியம் இலாமையானும் அறிவினுள் நிற்றலானும், உன்னிய எல்லாம் உண்ணின்றுணர்த்துவன் ஆதலானும், என்னது யானென் றோதும் இருஞ் செருக் கறுத்த லானும், தன்னறி வதனாற் காணும் தகைமையன் அல்லன் ஈசன்.'' (சித்தியார் - சூத் - 6, திருவிருத்- 8) என்னும் திருவிருத்தத்தாற் கண்டு கொள்க.
115-118. உயிரே அவத்தை உணர்த்தும் தன்மை - உயிரும் அவத்தைகளும் அவற்றை விரவிக் காரியப்படுத்தாநின்ற தன்மையும், அருளின் இயல்பே ஆங்கு அதன் பயனே - அருளின் இயற்கையும் அவ்வருளின் பயனும், பெரும்பெயர் திறமே பெற்றவர் முறை என்று - இறைவன் இயல்பும் இறைவன் அடியை அடைந் தார் முறையும் என, அனைவகை ஏழும் அரில் தப தெரிப்ப - வேதாகமங்களால் உணர்த்தப்படுகின்ற அவ் ஏழு பாகுபாடுகளையும் ஐயம் அற அறிவுறுத்துதலால், -
அனையவகை என்பது குறைந்து நின்றது. தெரிப்ப என்பதனை எல்லாவற்றோடும் கூட்டி உரைக்க.
உயிரைத்தெரிவித்தலாவது - அளவற்றதாய், விஞ்ஞான கலர் பிரளயாகலர் சகலர் என மூவகைத்தாய், என்றும் உள்ளதாய், சுத்தசத்துக்களைப் பகுத்துணர்தல் தன்மைத்தாய், இருளும் ஒளியும் அல்லாத கண் இயல்பிற்றாய், நிறைவிற்றாய், உணர்த்த உணர் சிற்றறிவிற்றாய் உள்ளதென்பது.
அவத்தைகளைத் தெரிவித்தலாவது - சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என ஐந்து எனவும் ; இவற்றிற்குத் தானங்கள் முறையே புருவநடு, அதுதொடுத்துக் கண்ட முடிவு, அது தொடுத்து இதயம் அளவு, அது தொடுத்து நாபி ஈறு, அதுதொடுத்து மூலாதார வரை எனவும்; இவற்றின் கருவிக் கொத்துக்கள் முறையே ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒன்று ஆம் எனவும் ; அன்றியும், கேவலம் சகலம் சுத்தம் எனக்காரணாவத்தை மூன்றாம் எனவும் தேற்றுதலாம்.
இவற்றை உணர்த்தும் தன்மை தெரிவித்தலாவது - முறையே உயிர் ஒருவர் உணர்த்த உணர்தலானும், சடங்கள் போல் அழியாமையானும், சதசத்தாய்ச் சுதந்தரவீனன் என நிற்கும் என்றும் கீழாலவத்தைச் சாக்கிராதி நின்மலாவத்தைச் சாக்கிராதி என்னும் இரண்டும் முறையே சனனங்களை உண்டாக்கிக் கீழேதள்ளுவது என்றும், பிறப்பு இறப்புக்களை உண்டாக்காமல் மேலான நிலையை அடைவிப்பது என்றும், உயிர் அநாதியே மலத்தால் மறைப்புண்டு கிடந்த அமயம் கேவலம் என்றும், இறைவன் உடலாதியைஅளித்த அமயம் சகலம் என்றும், மலம் முற்றும் நீங்கிப் பிறவியற்ற அமயம் சுத்தம் என்றும் விளக்குமாறும், விஞ்ஞானகலர் முதலிய மூவகை உயிர்களின் வினைகட்கும் முன்னிலையான ஆறு அத்துவாக்களினும் முறைப்படி கன்மங்களை ஊட்டித்தொலைத்து, மலபரிபாகம் பண்ணி, முதிர்ந்த பக்குவத்தின் கண் இறைவன் குருவாய்வந்து, அத்துவா ஆறினையும் தூய்மைசெய்து, பிராரத்த கன்மங்களை உண்பித்து, தீக்கைக்குப் பின்னர் ஏறின ஆகாமிய ஆணவங்களையும் ஞானத்தீயினால் தகிக்குமாறும் என்பது.
அருளின் இயல்பு தெரிவித்தலாவது - உயிர்கட்கு ஞானோபதேசம் செய்து ஆன்மஞானம் தோற்றுவித்து அருவமான இறைவனை வெளிப்படுத்தற்குத் தனது கருணையினால் குருவடிவாய் வருவது அருட்சத்தியே என்பது.
அதன் பயன் தெரிவித்தலானது - அப்போது பூத முதல் நாதம் ஈறான பிரபஞ்சம் எல்லாம் தன்னுள்ளே விளங்க இறைவன் சிறுமைக்குச் சிறுமையாகவும் பெருமைக்குப் பெருமையாகவும் உயிர்க்கு உயிராகவும் நிற்கும் கலைமகள் விளங்கும் என்பது .
பெரும் பெயர்த் திறம் தெரிவித்தலாவது - இறைவன் அருவுருவம் குறிகுணங்கள் தோற்றக்கேடுகள் பந்தவீடுகள் இன்றி, நித்தமாய்த்தான் எல்லாவற்றையும் கலந்து, தன்னை ஒன்றும் கலத்தல் இன்றி, நிருவிகாரியாய், எஞ்ஞான்றும் ஒருதன்மை உடையவனாம் என்பது.
பெற்றவர் முறை தெரிவித்தலாவது - அம்மெய்ப் பொருளை அதனோடு ஒற்றுமையுற இடைவிடாது பாவனை செய்து, காண்பார்க்கு விழைவு வெகுளிகளும் கரணவாதனையும் முக்குணச்செயல்களும் ஓர் அடையாளமும் நியமங்களும் வறுமை வாழ்வுகளும் இவை முதலிய இல்லையாய் இறைவன் அடியை நீக்கமற நினைந்திருக்கை என்பது முதலியன.
119-122. தாழாது கேட்டு வீழாது சிந்தித்து - மனம் புறம்பே சென்று தங்காமல் அவ் ஏழுவகையினையும் கேட்டு விபரீத ஐயங்களுள் வீழ்ந்து மயங்காமல் சிந்தித்து, அங்கை கொண்ட அமிழ்து என தெளிந்து - உள்ளங்கைக்கண் எற்ற அமிழ்தினை உள்ளும் புறம்பும் கண் கூடாகத் தெளியுமாறுபோல் அவற்றைத் திரிபறத்தெளிந்து, பொங்குபேர் இன்பம் புணராது புணரும் - தலை சிறந்த பேரின்ப வீட்டைக் கலவாமற் கலப்பதற்குக் காரணமான, நிட்டை கூட நிலை அது நீங்கவும் - தியான சமாதியைக் கூடுகின்ற அந்நிலையும் நீங்கவும், -
இது சன்மார்க்கமாகிய ஞானநிலையாம். நிட்டை கூடனிலையதும் எனப் பாடம் ஓதி நிட்டைகை கூடலாகிய நிலை என உரைப்பதும் ஒன்று. நிலையது என்பது ஈண்டு ஒரு சொல் நீர்மைத்தாய் நின்றது. உம்மை எச்சவும்மை. என என்பது வினையெச்ச உவமம் ஆகலான் அமிழ்தில் தூய்மை இனிமைகள்போல் அவற்றில் தெளிவுண்மை நன்மைகள் கூடலின் வண்ணஉவமமும், அமிழ்து மரிப்பை ஒழிக்குமாறுபோல் அவை பிறப்பிறப்புகட்கு ஏதுவான அவிச்சை இருளைத் தொலைத்தலின் தொழில் உவமழம் பெறக்கிடந்தவாறு காண்க.
பொங்கு பேரின்பமாவது - நிரதிசய இன்பம்; அதனின் மிக்கதோர் சீரிய இன்பம் பிறிதொன்று இன்மையின் . "உயர்வற உயர் நலம் என " அதனை உணர்ந்த பெரியார் பணித்ததும் அது. புணராது புணர்தல் ஒருகால் நீங்கிப் பின்பு கூடாமல் இடையறக் கூடல். அங்ஙனம் கூடற்குக் கருவியாய் உள்ளது நிட்டையாம். அது கேவல சகலங்களைப் பொருந்தாமல் மெய்யுணர்வை அடைந்து அவ்வுணர்ந்தவாற்றால் குறிக்கொண்டு நேயத்தோடு கூடியிருக்க சர்வ வியாபகனான இறைவன் தானே தோன்றி எல்லாப் பொருள் களும் அவனாகவும் அவ்வுருவம் அனைத்தும் இறைவன் அல்லாதனவாகவும் காணப்பட்டு அவை அனைத்திற்கும் வேறாகிய நிராதாரனாகி எப்போதும் தோன்ற நிற்கும்நிலை என்பர். இவற்றால் குரு மொழியைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என மெய்யுணர்வை அடைந்தார் பெறும் பயன் நால்வகைத்து என்றதாயிற்று.
.
ஊன நாடகம் உஞற்றிய (110) அருள்ஞான நாடகம் நவி லியமாறலும் (111) கழல
(112) மடங்க (113) குரு ஆகி (114) உயிர் (115) முதல் ஏழுவகையினையும் (118) தெரிப்ப கேட்டு, சிந்தித்து (119) தெளிந்து (120) புணரும் நிலை நீங்கவும் (122) என
முடிக்க.
பஃறிறப் பகைஞர் (123) என்பது முதல் இரவல (166) என்பதன் அளவும் ஒரு முடிபு.
123-127. பல் திறம் பகைஞர் படையொடு நேர்ந்தன - பலதிறங்களால் ஆற்றலுடைய பகைவர் படையொடும் எதிர்ந்தாற் போல, வெல் திறம் காட்டாது வீற்று வீற்று உடற்றும் - தம்மை வெல்லும் உபாயம் மேற்கொள்ள வொட்டாமல் வேறு வேறாய்ப் பல ஆற்றினும் மூண்டு வருத்தாநின்ற, பிணி கோள் பட்டு பேது உறு மனத்தான் - நோய்களால் பற்றப்பட்டுப் பித்துறுகின்ற மனத்தன் ஆகி , முந்தையோர் ஈட்டும் முழுநிதி செல்வமும் - தன் தாதை மூதாதையர் ஈட்டின பெருஞ் செல்வங்களும், பொய்ம்மையாளர் புகழ் என தேய - பொய்கூறுவாரது புகழ் தேயுமாறு போலத் தேய, -
பல்திறமாவன - துணை சுற்றம் பொருள் இவை முதலியன. ஆகி முற்றெச்சம். பேதைமைக்குக் காரணம் இரண்டனுள் இது காமத்தான் வந்தது : ஆகலான், தனக்கு உறுதி பயவாத அவ் ஒழுக்கத்தின் கண் விரும்பிச் செய்தமை பற்றி வந்த மயக்குற்ற மனத்தான் என்றார். பொய்யர் பொய் கூறுவார் எனக்கூறாது பொய்யைத் தாமே ஆளமாட்டாமே பொய்ம்மையால் தாம் ஆளப்பட்டார் என முன்செய்த புகழும் தேயும் என்றற்கு அதனை வற்புறுத்தினார். இவ் உவமத்தால் இவனால் ஈட்டப்பட்ட பொருளும் ஒருங்கு தேய்தல் பெறப்பட்டது.
128-132. நோய்ப் பகையாளர்க்கு-நோயாகிய பகையால் பீடிக்கப்பட்டார் பொருட்டு, நொடிந்து என் - யாது சொல்லினும் என்னை? சிதரின் - சிறிது சிறிதாக , பல்வகை மருந்துக்கு - பல் வேறு வகைப்பட்ட மருந்தினுக்கும், பகர் விலை தொலைச்சி - மருத் துவன் சொல்லி அளந்த விலைப் பொருள்களை இறுத்து, அது என வெறுவியது அன்று மற்று இது என - இது முற்பகல் உண்ட மருந்து போலப்பயனிலது அன்று என்று, முன்னை நாள் மருந்தை முன்னை நாளில் உண்ட மருந்தினை, முறை முறை இகழா - ஒரோ வொன்றாய் அவமதித்து, பின்னை நாள் மருந்தை பெட்டு வாய் மடுத்து - பின்னைநாளில் ஏற்றின மருந்தினை ஆர்வம் மிக்கு உண் நோயாளர்க்குத் தம்மால் தேய்ந்த செல்வத்தினை மீட்டும் ஈட்டுவான் தக்க வலியின்மையானும், நோயால் தெறப்படுகின்றார் ஆகலின் அதனைப் புறம் காண்டற்கு மருந்து என்னும் படைக்கலம் அன்றிப் பிறிதொன்று இன்மையானும், அதனைக் கொள்வான் பொருள் கொடுக்கற்பாலது இன்றியமையாமை ஆகலானும் நொடிந்து என் எனக்கூறினார். இது இரக்கக் குறிப்பு. சொல்லிற் பயனிலை என்பதாம். சிதர் என்பது துளி. அவை சிறியனயே ஆயினும் பலவும் ஒருங்கு கூடிய வழி நீத்தம் ஆமாறு போல், பலவகையுள் அவ்வவ் மருந்திற்கும் தனித்தனியே பகரும் விலைப்பொருள்கள் சிறிய சிறிய அளவின வேனும் அவ்வகை பலவும் உள்ளிட்ட மருந்துகள் அனைத்திற்கும் வேறு வேறு இறுத்து அவை பின் ஒருங்கு எண்ணப்பட்டுழி அளவுபடா ஆகலின் அம் மிகுதி தோன்றப் பல் வகை என்றார்.
மற்றிது அது என வெறுவியது அன்று எனக் கூட்டுக. வாய் என வேண்டாது கூறினார் : மடுத்து எச்சத்திரிபு.
133-134. பருகு பல் மருந்தால் - அவ்வாறு உண்ட பல வேறு மருந்துகள் காரணமாக, பண்டை நோய் - முன்னைய நோய்களே அன்றி, மேலும் மண்டும் நோய் வேறு மரீஇ - பின் வேறு மிக்க நோய்களும் ஒருங்கே கூடி, கிளர்ந்து உருப்ப - மூண்டு கொடுமை செய்தலும், -
135-136. உரைத்த என் மொழிவழி - இன்ன இன்ன அளவின்கண் நிற்க என விதித்த எனது சொற்படி, ஒழுகினை அல்லை கொல் - நின்று நடந்தாய் அல்லை ஆகலான், நோய்பெருத்து தேறும் என - இனி அந்நோய்கள் மிக வளர்ந்து கேடு செய்யாநிற்கும் என்று அச்சுறுத்தி, மருத்துவன் ஒழிய - மருத்துவன் கை நெகிழ்ந்து போந்ததால், -
137 - 141. தெய்வம் திறத்தால் தீர்வு காண்பாம் என -- தெய்வதங்களை வழிபடலான் இந்நோய்கட்குப் பரிகாரம் பெறுதும் என்று எண்ணி, உள்ளூர் வயின் வயின் தெள்ளிதின் ஓங்கும் - தான் வாழும் ஊருள்ளே இடங்கள் தோறும் அணிமைய ஆய நிலை பெற்ற, புரி முறுக்கு அவிழ்க்கும்பூ - வண்டுகள் இச்சித்து இதழ்களை முறுக்கு அவிழ்க்காநின்ற மலர்களையுடைய , புனல் தீர்த்தமும் படிந்தும் - நீர்வாவிகளின் மூழ்கியும், பல்வகை தெய்வம் பசும்பொன் கோட்டமும் பணிந்தும் - பலவான தெய்வங்களது செம்பொன்னால் ஆன கோயில்களைப் பணிந்தும், பயன் காணாமை - அவற்றால் தான் வேண்டின பயன் பெறக்கிடையாமையானும், -
ஊர் ஊர் என்னும் அடுக்கு பன்மை குறித்தது. நிலைபெற்ற புனல் தடம் என இயையும். ஏழாவதும் இரண்டாவதுமாக வேறு உருபுகள் அடுக்கி வந்த தொகை. படிந்தும் பணிந்தும் என்பது முறை நிரனிறைப் பொருள்கோள்.
142-145. அணி அயல் புறம் நகர் மணி கெழு கோட்டமும் - அணித்தாய் அயலான நகர்ப்புறத்துச் சிறப்புள்ள கோயில்களையும், விரதம் நியதி பரவு கடன் ஆதி - நோன்பு நோற்றல் பூசனை செய்வித்தல் இறை உய்த்தல் முதலான, பல்வேறு
தொழிலொடு படர்ந்து - அனந்த நியமங்களை மேற்கொண்டு ஆண்டாண்டுச் சென்று, பணிந்து ஏத்தியும் - வணங்கித் தியானித்தும், கவலை நெஞ்சம் கையறுபு இனைய - (தீராமைபற்றி) கவலைப்பிணியொடு பொருந்தின நெஞ்சம் இனிச்செய்யப்படுவதோர் செயல் இன்றி இரங்கா நிற்ப, -
கெழு "வேல் கெழு தடக்கை '' (முருகாறு) என்றது போல் நின்றதோர் இடைச்சொல். விரதம் ஓர்போது உணவு கோடல் முதலியன . நியதி சிறப்புச் செய்தல் முதலியன. ஆதி என்றதால் உண்டி சுருக்கல், பட்டினி கிடத்தல், சாந்தி செய்வித்தல், கோயில் வலம் வரல் முதலியனவும் கொள்க.
146 - சேண் சென்று ஒரால் செய்து என வலித்து - சேய்மைக்கண் பல தேயங்களிற் சென்று இதனை ஒருவுதல் செய் வல் எனத் துணிந்து, -
துவ்வீறு ஈண்டு இறந்தகால வினையெச்சப் பொருட்டாய் நில்லாது, எதிர்கால ஒருமைத்தன்மை முற்றுச் சொல் ஈறாய் நின்றது. ஒருவல் ஒரால் என இடை நீண்டு விகுதி முதல் குறைந்தது .
147-150. மிக்க நோய்க்கு இரங்கும் ஒக்கல் புறம் தழுவ - துன்பத்தை மிகுவிக்கின்ற நோய்கள் ஒழியாமையால் தாமும் துன் புறுகின்ற சுற்றம் தன்புடை சூழ்ந்து போதர, வறுமை கவர்ச்சியும் இறுகு உற பிணிப்ப - நல்குரவு என்னும் கவலை நோயும் சிக்கெனப் பற்றியாக்க, இல்லும் தமரும் இசை பயில் நாடும் - அச்சுற்றம் ஆகிய தன் துணைவியையும் தந்தை தாயர் முதலிய கிளைஞரையும் தாம் இசையுடன் பயின்றுள்ள நாட்டின் உள்ளாரையும், மென்மெல கழீஇ - பையப்பைய விடுத்துத் தான் நீங்கி,
151 - 155. விரி கதிர் படையால் இருள் கால் சீக்கும் - எங்கும் பரவின கதிர்க்கற்றையாகிய படைக்கலத்தினால் இருட் பகையைத் தள்ளுகின்ற, எழு பரி தேரோன் - ஏழ் என்னும் எண்ணுப்பெயர் பெற்ற புரவிகட்டின தேரூர்தி ஆகிய சுடரவன், கடு சினம் திருகிய கொடுமைகூர் அமயத்து - மிக்க தனது வெப்பம் முறுகின கொடுமை செய்கின்ற காலத்தின்கண் , முளி முதல் முருக்கிய முழங்கு அழல் போழ்ந்து - பட்டமரங்களின் அடி வேர்களையும் உட்டிண ஊற்றத்தால் கீழ்நிலத்தும் ஊடுருவிப் பசையறப் பண்ணின கட்டழலைப் போழ்ந்து, வளி உலாய் புறத்தும் வழங்குநர் தெறூஉம் - அவ்வெப்பத்தை மேற்கொண்டு சூறாவளி அந்நிலம் எங்கும் உலாவி அயற்புறங்களில் இயங்குவாரையும் வாட்டுதற்கு இடமான, பைதறு கானத்து படர்நெறி ஒதுங்கலின் -- துயர் உறுத்தும் பாலைக்கண்ணே கல் அதரிற் போதலால், -
கால்சீத்தல் ஒரு சொல். எழு பரி தேரோன் என்பது சுடரவன் என்னும் துணையாய் நின்றது. இவ்வமயம் வேனிற்பருவம். தனது இயற்கையான வெப்பமுதிர்ச்சியைக் ‘கடும்சினம் திருக’ என்றார். படர் - கல்மேடு. எச்ச உம்மையை வழங்குநரொடும் கூட்டுக. புறம் அதன் அயற்கண்ணதான முல்லை நிலமாம்.
156-159 முந்து பால் உழந்த வெம் துயர் கொப்புள் - அக்கல் அதரினது முற்கூற்றில் பரற்கற்கள் உறுத்தினதால் அரும்பின கொடுந்துயரைப் பண்ணும் கொப்புள்கள், பிந்து பரல் உழத் தொறூஉம் - அதன் பிற்கூற்றில் உள்ள பரல்கள் உறுத்தும் தோறும், பிளந்து நீர் உகுப்ப - வாய்விட்டு வெண்ணீரை ஊற்றலால், இயங்கா - அப்பால் இனி இயங்கமாட்டாத, செல்லால் இணை அடி தாங்க - நோய்களை இருகால்களும் தாங்கவும், வெயில் பகை உழந்த - வெயிலாகிய வெம்பகையில் அகப்பட்டதால், வேர் புறம் நனைப்ப - எழுகின்ற வெயர்வை நீரால் யாக்கையின் புறம் முற்றும் நனைவுபடவும், -
160 - 166. சூறை மாருதம் துறைதுறை உடுத்த - அச் சூறாவளி துறைதொறும் முகந்து வீசலால், பூழி போர்த்த - புழுதி மூடின, பொற்பு அறு மாசு கலுழ் நீர் அல்லது - பொலிவற்ற மா சொடு கொப்புளிக்கின்ற வெயர்வைநீர் அன்றி, கயம் தலை இன்மையின் கழுவுதல் புரியா - ஆண்டு வேறோர் குளநீர் இன்மையால் முழுகிக் கழுவப்பெறாத முடைபயில் காயமோடு - தீ நாற்றம் நிலை பெற்ற உடம்பொடு, இலை இல் மராத்த - இலைகள் வளாருடன் தீந்த மரங்களினது, நிலையின் மேல் நிழல் - அடிக்கூறாகிய குற்றிகள் நிற்கும் நிலைக்களத்தில் கதுவிய சிறு நீழலிடத்தே, சேய்வரல் வருத்தம் சிதைபாக்கு - நீளிடைநின்று வருதலால் முதிர்ந்த வேடையைத் தொலைத்தற்பொருட்டு, அசைந்து நெடு உயிர்ப்பு எறிந்து - துவண்டு உயிர்ப்பு வீங்கி, நினை தரும் இரவல் - பலவாறு நினைந்து கவலாநின்ற ஆதுரனே!, -
மென்மை சிறுமை குறித்து நின்றது. மரம் என்பது சாரியையும் இடை அகரம் நீட்சியும் பெற்றது. பலவாறு நினைதலாவன நோயொழிதல், வாழ்நாள் அளவும் அது உடம்பொடு கூடி நின்று அழிதல், கல்லதர் கடத்தல், மீண்டும் தன் ஊர்ப்புகுதல்,
இறைவன் துணை செய்யப்பெறுதல் இவைபோல்வன. இனி, ஒரு கால் கூடும் கொல்லோ ? எனக் கணந்தோறும் பலவாறு கருதி ஆகுலித்தலாம். ‘நெட்டுயிர்ப்பு எறியும் இரவல' என்னாது ‘எறிந்து நினை தரும் இரவல' என இரண்டு விசேடண அடையால் கூறியது என்னை? எனில், உயிர்ப்பு எறிதல் ஓசை ஊறுகளால் எளிதின் உணரப்படும்; அவன் மனத்தே நிகழும் நிகழ்ச்சி அவ்வாறு உணர்தற்பாற்றோ? கழிபெரு வெந்நோய்க் குடம்பை ஆய உடம்பினன் ஆதலால் அவ்வாறு நோய் உழத்தல், நல்கூர்தல், தனிவரல், வெஞ்சுரத்தில் அடிக்கண் கொப்புள் அரும்புதல், நிழல் இன்றி அலமரல் இவை முதலிய பல துயர்க்காரணங்களால் அவன்மனம் பிறிதோர் நிகழ்வு இன்றி வாளா இருத்தல் அமையாதோ? ஒரோவழி நிகழ்ந்துழி அஃது அயற்கண் பிறரால் உணர்தற்கு இயன்றதோ? எனின், இயலும்: இவ்வாற்றுப் படுத்துவோன் தானும் முன்னர் ஆதுரனாய் இருந்து ஒழிந்த உல்லாபன் ஆதலால் உயிரது உணர்ச் சியினை முகம் கண் முதலியவற்றால் உணர்தல் மாத்திரை அன்றி, தன்னுள்ளே முன்னர் நிகழ்ந்தவற்றில் பயிற்சியுண்மையானும் உணர்தற்கு இயலுமது ஒருதலை ஆதல் பற்றி ‘உயிர்ப்பெறிந்து நினை தரும் இரவல!' என்னப்பட்டது.
இஃது ஆற்றுப் படுத்துவோன் கூறும் கூற்றாகக் கற்றுவல்ல புலமை மேம்பட்ட இந்நூலாசிரியர் கூறியது தொல்லோர் வழக்கு. "குறிப்பிற் குறிப்புணர் வாரை " (குறள் - 703) எனப் பெரியர் விதித்துரைத்த திருக்குறளானும் இதனை உய்த்துணர்ந்து கொள்க. கயந்தலை தொடுகுளம் அடுக்குப் பன்மை நோக்கி நின்றது. கயந்தல இன்மை இடத்தின் நிகழ்பொருள் இடத்தின்மேல் நின்றது. சேய் ஆகுபெயர். பாக்கு ஓர் எச்ச விகுதி; ஈண்டுத்தொழிற்பெயராய் நின்ற து.
பிணிக்கோட்பட்டு (125) மனத்தான் ஆகி, தொலைச்சி (129) இகழா (131) மடுத்து (132) உருப்ப (134) ஒழிய (136) காண்பாம் என (137) படிந்தும் பணிந்தும் காணாமை (141) புறநகர் கோட்டமும் (142) தொழிலொடு படர்ந்து ஏத்தியும் (144) இனைய (145) சேண்சென்று ஒரால் செய்தெனவலித்து (146) தழுவ (147) பிணிப்ப (148) மென்மெல கழீஇ (150) நெறி ஒதுங்கலின் (155) நீர் உகுப்ப (157) தாங்க (158) நனைப்ப (159) காயமொடு (163) அசைந்து (165) உயிர்ப்பெறிந்து நினை தரும் இரவல (166) என முடிக்க.
167. ஆற்றா நின் உளத்து அவலம் இனி ஒழிக - நினது மனத்தினிடத்ததான தணிவுபடாத அவலத்தினை இது போழ்தே ஒழித்திடுதி, -
இரவல் ! நின் உளத்து அவலம்ஒழிக என இயையும்.
168-173. புளிஞரும் மருளும் போக்கு அரு சுரத்து - மறவர்களும் (அந்நில மக்கள்) அஞ்சாது சேறற்கு இயலாமை மயக்குறுகின்ற போதற்கு அருமைத்தான பாலைக்கண், வீற்று வீற்று ஒழுகும் ஆற்றினில் - வேறு வேறு கூறாய்ப் பிரிந்து செல்லா நின்ற அந்நெறிகளுள், திரியாது - யாதோர் வேறு நெறியே பிறழ்ந்து செல்லாதபடி, ஒரு நெறி எதிர்ப்பாடு உற்றது - நீயும் யானும் ஒருங்கோர் நெறிக்கண்ணே எதிர்ப்படுதலைப் பெற்றது, முன்னை பழுது அறு பெரு தவம் பயன் அது போலும் - முற்பிறப்பில் இய ற்றிய மாதவத்தின் பயனது விளைவு போல்கின்ற தாகலின், விழும் வெம் துயர் முழுது ஒரால் வேண்டின் - நினது வெய்ய துன்ப நோய் அனைத்தினையும் ஒழிதலை விழைந்தனையாயின், பாணியாது இன்னே காணிய எழுமதி - காலம் தாழ்க்காமல் இதுபோழ்தே (நான் நின்பொருட்டு மேற்கூறும்
பரம்பொருளைக்) காணுமாறு எழுவாயாக, -
உம்மை சிறப்பும்மை. முழுதும் என்பதில் முற்றும்மை தொக்கது. இன்னே என்பது விரைந்த காலப் பொருட்டாய இடைச் சொல், பாணியாது பாணி என்னும் தொழிற்பெயரடியிற் பிறந்த மறைவினை எச்சம். மதி முன்னிலை வினைக்கு உரியதோர் அசை. பயன் ஆகுபெயர். போலும் என்ற மிகையான் எதிர்ப்பாடு ஒரோ வழித் தபுமாயின் ஆற்றுப்படுத்தல் அமையாமையும், அதனால் தவப் பயன் இன்மையும் குறிப்பிக்கப்பட்டது.
சுரத்து (168) திரியாது (169) எதிர்ப்பாடுற்றது (170) முன்னைத்தவப்பயன் போலும் (171) அதனால் துயர் ஒரால் வேண்டின் (172) பாணியாது எழுமதி (173) என முடிக்க.
174-176. தோல் தேர்க்கு ஓடும் - பேய்த்தேரைப் புனல் என்று கருதி அதன் பொருட்டு ஓடுகின்ற, திருகு கோடு இரலையின் - திருகுதலையுற்ற கோடுகளையுடைய மான் போல, நோய் பகை என்ன - எனது முன்னை நோய்களைத் தீர்த்தற்குப் பகைஎன, வாய்ப்பு இல்லாதமையும் - அமைவு பெறாத வெறுவிய பரிகாரங்களையும் விரதம் முதலியவற்றையும், அடுத்து யானும் அலமரு காலை - மாறாது செய்தும் பயன் பெறாமே யானும் நீ உழன்றவாறு உழன்ற அமயத்தின்கண், -
எச்ச உம்மையால் விரதம் நோற்றல். தெய்வம் போற்றல், தீர்த்தம் ஆடுதல் முதலியன கொள்ளப்பட்டது. வாய்ப்பு இலாதமை ஈண்டுப் பெயராய் நின்றது. இரலையின் யானும் என இயையும். ஓடும் இரலையின் (174) அடுத்தடுத்து அலமருகாலை (176) என முடிக்க.
ஊரூர் (177) என்பது முதல் மணப்பவும் (193) என்னும் அளவும் ஒரு முடிபு.
177-180. ஊர் ஊர் வைகிய-ஊர்கள் தோறும் உறைகின்ற, சீர்கெழு மாந்தருள் - சிறப்புமிக்க மானுடத் தொகுதியுள், உண்டி கலவி உறு தொழில் முதலா- உணவும் மாதர்போகமும் செய்தொழிலும் இவை முதலாகிய பல நுகர்ச்சிகளிலும், மண்டிய பகுப்பின் வரையறைபடாது - மிக்குச்சென்ற பகுப்பினிடத்தே அவை இத்துணை என வரையறுத்தற்கு அமையாமல், வேறு வேறு உயிர்க்கும் வெம் பிணியாளரும் - வேறுவேறாகப் பயந்தகொடிய நோயாளரும், -
உணவு முதலியவற்றின் மிக்குச் சேறலாவது - குண ஒப்புமையும், செயல்கள் ஒப்புமையும் தத்தம் நிலை பிறழுதல். பகுப்பின் வரையறைப்படாமையாவது --- உண்டி முதலியனவும், அவற்றின் அளவும், காலம் முதலியவும் நோக்காமை. அங்ஙனம்
பிறழ்தலானும் நோக்காமையானும் வளிமுதலான முப்பகுதியும் துன்பம் செய்யும் என்பதாம். இவையெல்லாம் மருத்துவ நூலிற் காண்க.
இந்நோய்கள் தம்மால் வருவன.
181 - கருவி போழ்ந்த பெரும்புண் உறுநரும் - ஆயுதங்களின் ஊற்றத்தினால் பெரிய இரணம் உற்றவரும், -
182- 183. குட்டம் பெருநோய் முட்டிய வாதம் - தொழு நோயும் பெருநோயும் தொழில்களை இடைப்படுத்தும் வாதநோயும், முயலகன் ஆதி மொய் பிணி உழவரும் - முயலகன் என்னும் குமர கண்டவலியும் இவைமுதலிய நோய் உழக்கின்றவரும், -
இவை தெய்வத்தான் வருவன.
184- பாப்புக்கோள் ஆதி பலவகை கடிஞரும் - பாம்பு முதலிய நஞ்சுடையவற்றால் கடியுண்ட பலதிறத்தினரும், -
கோள் செய்வனவற்றைக் கோள் என்பது ஆகுபெயர்.
185-186. பேய் கோள் படுகரும் பித்து மீ கூர்நரும் - பேய் பிடிக்கப்பட்டாரும் பித்து மேற்பட்டவரும், உறுப்பு குறைநரும் ஒண்குணம் இழநரும் - யாக்கையின் அங்கங்கள் குறைந்தாரும் நற்குணம் இழந்தாரும்,-
இவை பிற உயிர்களால் வருவன.
187 - இன்ன பல் திறத்து எனைவரும் - இவ்வாற்றால் பலவகையினரான எத்தன்மையரும், - அன்றி - அல்லாமல், -
188-192. கல்விவேட்டவரும் - கல்விப்பொருளைக் காதலித்தாரும், கான்முளை வீழ்நரும் - மக்கட்பேற்றினை இச்சித்தாரும், செல்வம் வீழ்நரும் - செல்வப்பொருளை அவாவினாரும், தேயம் நாடுநரும் - தேய அரசியலை விரும்பினாரும், அலர்முலை மடவார் கலவி காமுறுநரும் - மார்பிடம் முற்றும் பரந்த முலைகளையுடைய மாதர் புணர்ச்சியைக் காமுற்றாரும், இரண்டு அறு கலப்பின் இன்பம் நச்சுநரும் - இரண்டறக் கலப்பதாகிய பேரின்பத்தை விழைந்தாரும் ஆகிய, இனைய பல்வேறு நினைவினர் எவரும் - இன்ன வெவ்வேறு வகைப்பட்ட நினைப்புள்ளார் பலரும், --
இரண்டறு கலப்பின் இன்பம் நச்சுதல் - பதிபசுபாசங்களைச் சிறப்பியல்பான் உணர்ந்து, தேறின ஞானநிலை கிடைத்து, ஆணவக்கட்டினை அறுத்து, ஆனந்தப்பேறு மருவி, பாசத்தை ஒழிவதும் பதியிற் புகுவதும் இல்லா ஒருநிலைமைத்து ஆன இயல்பின்கண்ணே ஞாதுரு ஞான ஞேயங்களை ஒழியாதொழிந்து சுடரவனைப் புணர்ந்த விழிபோல அப்பதியுடனே பேரின்பம் துய்க்கும் வாழ்வை நயத்தலாம்.
193- வாட்டுவ தணப்பவும் - தம்மைவாட்டும் அம் மூவகைத் துன்பங்களையும் ஒழித்துக் கோடற்பொருட்டும், வேட்டன மணப்பவும் - தாம் வேண்டும் அக்கல்வி முதலியவற்றையும் பிற இன்பங்களையும் பெற்றுக் கோடற்பொருட்டும், -
மாந்தருள் (177) வரையறைப்படாது (179) உயிர்க்கும் பிணியாளரும் (180) புண் உறுநரும் (181) பிணிஉழவரும் (183) கடிஞரும் (184) மீக்கூர்நரும் (185) குறைநரும் இழநரும் (186) எனைவரும் அன்றி (187) வேட்டவரும் வீழ்நரும் (188) நாடுநரும் (189) காமுறுநரும் (190) நச்சுநரும் (191) வேறு நினைவினர் எவரும் (192) தணப்பவும் மணப்பவும் (193) எனமுடிக்க.
மேற்கொண்டு (194) என்பது முதல் தன்னம் நீங்க (204) என்னும் அளவும் ஒரு முடிபு.
194-199. மேற்கொண்டு எழுந்து மேல்நாள் நேர்ந்த - விரதத்தினை மேற்கொண்டெழுந்து முன்னை நாளின்கண் தாம் தாம் பிரார்த்தித்த வாற்றால், பொன் கிழி திரளும் - பொன் நிதிப்பொதியும், பூ துகில் மூடையும் - பூந்தொழிலையுடைய துகிற்பொதியும், மணி பூண் பேழையும் - மணியணிப் பெட்டகமும், வார் தரு கவரியும் - நீட்சியுற்ற சாமரையும், பை பொன் கவிகையும் - மாற்றுயர் பொன்னாலாகிய குடையும், செம்பொன் சிவிகையும் ஊர்தியும் கொடியும் - பொன்னாலாகிய சிவிகையும் அத்தகைய வாகனமும் கொடியும், வார் விசி முரசும் - வார்கட்டின வாச்சியமும், சூட்டு வாரணமும் தோகைய மயிலும் - செஞ்சூட்டுக்கோழியும் கலாபம் உள்ள மயிலும் ஆகிய இவற்றை, -
மூடை முதலியவை சாதியொருமை.
200-204. தத்தமக்கு இயன்ற தழீஇயினர் போதும் ஓசை - தத்தமக்குக் கூடினவாற்றான் உடன் கொண்டு செல்லா நின்ற ஓசை, திக்கு அதிர்க்கும்
மா சனப்பெருக்கம் - திக்குகளை நடுக்குகின்ற மிக்க சனக்கூட்டங்களை, காண்தொறும் காண்தொறும் ஈண்டிய களியேன் - காணுந்தோறும் காணுந்தோறும் மிக்க
களிப்புறுகின்றேன் ஆகி , உடங்கு சென்று இருப்பான் - அக்கூட்டங்களுடன் கூடிச்சென்று சேர்தற்கு, ஒருப்பட்டு எழலும் - மன ஒருமையுற்று எழுந்த அளவின், துன்னிய விழும நோய் தன்னம் நீங்க - என்னைத் தொடர்ந்துள்ள துன்பநோய் சிறிது ஒழிதலான், -
ஆகி குறிப்பு முற்றெச்சம், விழுமம் என்பது ஈறு குறைந்று நின்றது. சிறிது என்பறு காற்கூறாம். மேலே 'இருகூற்று ஒரு கூறுவிளங்க' என்ப ஆகலான்.
எழுந்து திரள் முதலியவற்றைத் தழீஇயினர் போதும் (200) சனப்பெருக்கம் (201) காண்தொறும் களியேன் (202) ஆகிக் கூடிச் சென்றிறுப்பான் எழலும் (203) நோய் தன்னம் நீங்க (204) என முடிக்க.
உறுதுயர் யாக்கை (205) என்பதுமுதல் ஈர்த்தலின் (214) என்னும் அளவும் ஒருதொடர்.
205- உறு துயர் யாக்கை சிறிது வலி எய்த - மிக்க துன்பத்தை எய்திய உடம்பு சிறிது நோன்மையைப் பொருந்த,-
206-208. ஒய் என கிளர்ந்த உவகை நெஞ்சத்து - விரைந்து தலைக்கொண்ட களிப்பு உள்ளத்தின்கண், படர் பேர் ஊக்கம் -
சென்று புக்கதால் மிக்க மன எழுச்சி, பிடர் பிடித்து உந்த- பின் புறம் பற்றித் தள்ளாநிற்ப, எழுந்தனன் இம்மென -- இம்மென்று
இது விரைவுக் குறிப்பு.
208-209. எகுதல் தொடங்கி அடிபெயர்த்தோறும் - போதலை முன்னிட்டு அடிபெயர்க்குந்தோறும், அஞர் பிணி நழுவ - நோய்த்துன்பம் இருந்த இடம்விட்டுப் பெயர, -
210-213. உவரி நீரின் தவ எழும் மகிழ்வால் - கடல் நீரினும் மிக மேல் எழுகின்ற பெருங்களிப்பால், அவன் மிசை பாடாஅ அனைத்தும் நெறி ஆக- அவ்விறைவன் பேரால் தோத்திரம் பாடிக் கொண்டு எந்நெறியும் செந்நெறியாக, சென்றனன் அடுத்து - நடந்து அகன்று நெருங்கி , மன்றல் நகர் நுழைதலும் - வதுவை நீங்காத நகரினிடத்தே புகுந்த அளவில், வெருவும் நோய் இரு கூற்று ஒரு கூறு விலங்க- அச்சுறுத்தின நோய் தனது இரு கூறுகளுள் ஒருகூறு விட்டு நீங்கினதால், -
பிள்ளையார் இளைய நாச்சியாரைக் குறிச்சியின்கண் வதுவை செய்துகொண்ட அக்கோலத்துடனே தேவியொடு புக்கிருந்தருளிய திருப்பதி ஆகலான் தணிகைக்கு சீபூரண நகரம் என்று ஒரு பெயர் உள்ளது. இதனால், மன்றல் நகர் என்றார். இவ்வரலாற்றை அத்தல புராணத்துட் காண்க. அன்றி, மன்றல் விழவுச் சிறப்புகள் நீங்காத நகர் எனினும் ஆம்.
214- காட்சி ஆர்வம் கை இகந்து ஈர்த்தலின் - பிள்ளையாரைத் தரிசிக்க வேண்டும் என்னும் அன்பு தன் எல்லை கடந்து ஈர்ப்பது பற்றி,
யாக்கை வலி எய்த (205) ஊக்கம் உந்த எழுத்து (208) அடிபெயர்த்தோறும் பிணிநழுவ (209) மகிழ்வால் (210) பாடிச் சென்று நகர் நுழைதலும் (212) நோய் ஒருகூறு விலங்க (213) காட்சி ஆர்வம் ஈர்த்தலின் (214) என முடிக்க.
நறுமணம் (215) என்பது முதல் (36) தொழுது என்னும் அளவும் ஒரு முடிபு.
215- 222, நறுமணம் கமழும் நந்திததி குடையாது. --- (மலர்களின்) இனிய மணம் வாசிக்கின்ற நந்தியாற்றின் மூழ்காமலும், ஏழுசுனை ஆடாது --ஏழு முனிவாது எழுசுனை நீரில் குளியாமலும், அலை மலை பகைஞன் அருள் கயம் படியாது -- அலைந்த மலகட்குப் பகைஞன் ஆன இந்திரனது அருளைப் பயக்கும் தீர்த்த்தின் முழகாமலும், நாக வன் சுனை நன் புனல் தோயாது -- நாகரது பெரிய சுனையின் கண் நன்மை தரும் நீரில் படியாமலும், விண்டு தீர்த்தம் மேவர குளியாது - திருமாலது தீர்த்தத்தில் இச்சித்தவை பெறுமாறு முழுகாமலும், அலரவன் இரு சுனை அழி புனல் மூழ்காது - பிரமனது பெரிய சுனையின் மிக்க நீரில் குளியாமலும், எத்துயர் திரளும்
அத்தினத்து அகற்றும் - எவ்வகைப்பட்ட துயரும் முற்றும் மூழ்கின அத்தினத்திலேயே தீர்த்திடத்தக்க, சரவண பொய்கை தடம் புனல்துளைந்து - சரவணம் எனப்பெயர் பெற்ற தடாகத்தின் தெய்வத் தகைமை மிக்கதான நீரின் மூழ்கி.--
இவை மேற்கூறிய நந்திதேவர் முதலிய அவ்வவரும் முன்னை நாட்கண் நிருமித்து, மூழ்கிப், பிள்ளையாரைப் பூசித்து, வரம் பெற்ற தீர்த்தங்களாம். அவை எல்லாவற்றினும் வேறுவேறு மூழ்கிக் கடை முறையில் சரவணத்தின் மூழ்குதல் வேண்டின் காலம் நீட்டித்துக் காட்சிப்பேறு எய்தல் தாழ்க்கும் ஆகலான் அவற்றின் மூழ்காது என்றும், சாவண தீர்த்தம் ஒன்றே மூழ்கினர்க்கு எத்துயரங்களையும் அந்நிலையே நீக்கும் என்பது ஒருதலை ஆகலின் அந்நீர் ஒன்றினே
மூழ்கி என்றும் கூறினர்.
223 - 226. மென்மெல குன்றம் மீமிசை இவர்ந்து - பையப் பையத் திருமலைச் சிகரத்தின்கண் சென்று, காலை நண்பகல் மாலை முப்போதும் - வைகறை உச்சி அந்தி ஆகிய மூன்று போழ்தினும், வைகல் வைகல் மலர் மூன்று தெரிக்கும் - நாடோறும் மூன்று மலர்கள் பூவாநின்ற, நீலம் பை சுனை நேர் கண்டு தொழுது - நீலோற்பலம் நிலைபெற்றுள்ள பசுமைத்தான சுனையை எதிரிற்கண்டு வணங்கி , -
நோயுடைமைபற்றி மென்மெல என்றது. அம்மலர் இந்திரன் பிள்ளையாரைப் பூசித்தற் பொருட்டு முன் ஓர் உகத்தில் வைத்தது. இதனானே அத்திருமலைக்கு 'உற்பலப்பருப்பதம்' என ஓர் பெயரும் உள்ளது.
குடையாது (215) ஆடாது (216) படியாது (217) தோயாது (218) குளியாது (219) முழுகாது (220) துளைந்து (221) இவர்ந்து (222) நேர்கண்டு தொழுது (226) எனமுடிக்க.
புரண்டனர் (227) என்பது முதல் நுழைந்து (232) என்னும் அளவும் ஒரு முடிபு.
227- 228. புரண்டனர் சூழும் பொற்பினர் மிடைதலின் - யாக்கை நிலத்தின்கண் படியுமாறு புரண்டு வலம் வருகின்ற பொலிவையுடையார் எப்பாலினும் நெருங்குதலான், அடி இட படாஅ ஆர் இடை வீதி- ஏனையோர் கால்வைத்தற்கு இயலாத அரிய இடத்தையுடைய திருவீதியினிடத்தே, -
அருமை என்னும் பண்பு விகுதியோடு நடுநின்ற உகரமும் நீங்கி முதல் நீண்டது. அருமை இன்மை குறித்தது. இடை அரிது என விகுதி பிரித்துக் கூட்டினும் அமையும்.
229-232. ஒதுங்குபு பைப்பைய ஒருமுறை சூழ்ந்து மெல்ல மெல்ல ஒதுங்கிப் பெயர்ந்து ஒருமுறை வலம் வந்து, தூவும் எண் நிலத்து தோயாது வெறுத்த - தூவின எள் நிலத்தே வீழாமை (நெருக்குற்ற சனப்பெருக்கத்தால்) வெறுத்த, தேவர் குழுவும் தேய தொழுதியும் - தேவர் கூட்டமும் தேயத்தார் கூட்டமும், தடை இய வாயல் தடையாது நுழைந்து - உள்ளே புகப்பெறாமல் தகைவுற்ற திருவாய்தலுள் தடைப்படாமல் நுழைந்து, -
ஆரிடைபற்றி ஒருமுறை சூழ்ந்து என்றார். எனவே, அஃதும் மிகுந்த வருத்தத்துடன் முயன்று சூழ்ந்தது ஆயிற்று. இது குறிப்பெச்சம். தேயம் ஆகுபெயர். வீதியில் சூழ்ந்து நுழைந்து என்க.
பொற்பினர் மிடை தலின் (227) ஒதுக்குபு சூழ்ந்து (229) வாய்தல் நுழைந்து (232) என முடிக்க.
ஆங்கு (233) என்பது முதல் (257) துவன்ற என்னும் அளவும் ஒருமுடிபு.
223 - 238 ஆங்கு ஒருவர் மெய் மணி பூண் ஒருவர் மெய் வடு செய - ஆண்டு ஒருவரது மெய்யின் கண்ண ஆகிய மணியணிகள் ஒருவரது மெய்யில் தாக்கி
வடுச்செய்யாநிற்ப, நெருங்கி சென்று - நெருக்குண்டு உள்ளே புகுந்து, நித்தில வாள் நகை வள்ளிநாயகி மணத்தினை முடித்த - முத்துக்களையொத்த ஒள்ளிய பற்களை யுடைய இளைய நாச்சியாரது திருமணத்தை முற்றுவித்த, கள்ளம் வேழம் கடவுளை பணியா - கள்ள விநாயகமூர்த்தியை (முதற்கண்) பணிந்து, வீரர் ஒன்பதின்மர் வார் கழல் தாழ்ந்து - (பின்னர்) வீரவாகுதேவர் முதலிய ஒன்பதின்மரையும் கழல் கட்டிய பாதங்களில் வணங்கி, மற்று ஆ வயின் வதியும் அமரரை தொழுது - ஆண் டாண்டு வீற்றுறைகின்ற ஏனைப் பரிவார தெய்வதங்களையும் அம் முறையே போற்றி,
கழல் ஆகுபெயர். மற்று அசை. கள்ள வேழக் கடவுள் என்பது கடவுள் வாழ்த்துக்கூறிய வெண்பாவுரையில் சுருங்க உரைத்துப்போந்தது : அவ்வரலாற்றைத் தலபுராணத்துட்காண்க.
239-243 பூத பகுப்பும் பூத காரணமும் - ஐவகையாகிய பூதங்களும் அவற்றின் காரணமான தன் மாத்திரையும், இந்திய கூட்டம் இரண்டும் - ஞானம் கன்மம் என இரு தொகுதி ஆகிய இந்திரியங்களும், மு குணமும் நந்தும் ஆங்காரமும் - மூன்றாகிய குணங்களும் யான் எனது என்று எழும் அகங்காரங்களும், நல தகு கரணமும் - நன்மைக்குத் தக்க மனமும், இறுவாய் மாயை எழுவாய் ஏழும் - இறுதியாக மாயை முதலாகத் தோற்றா நின்ற இவ் ஏழுள்ளும், சுற்றம் என்ன தோன்றிய ஐந்தும் - மாயையின் கிளை என்று தோன்றிய ஆணவம் மாயை கன்மம் மாயேயம் திரோதை என ஐந்துள்ளும், -
நலத்தகு என்பது வலிந்து நின்றது. ஏழாவது தொக்கு நின்ற து.
244-251. விராய் நின்று இயக்கி-கலந்து நின்று காரியப் படுத்தி, மராது நின்று ஒளிரும் - அவற்றோடு மருவாமல் நின்று விளங்குகின்ற, ஆரா இன்ப அருள் நிலை அம்ம - தேக்காத பேரின்பக்காரணமான திருவருளே தனது இடனாக , தீரா மலம் பிணி தீர்த்து பிறிதொன்றானும் நீக்கற்பால தன்றாய அநாதி மலப்பிணிப்பைக் கட் டவிழ்த்து, அருள் கொழிப்ப - கருணை இரதம்பெருக , அருள் திரு உருவு கொண்டு - அத்திருவருளே தனது திருமேனியாகச் சகளீகரித்து, அவிர் மணி தவிசின் - ஒளிர்கின்ற மணிகுயின்ற தவிசின்கண், ஞானசத்தியும் கிரியாசத்தியும் - ஞானக்கிரியைகளாகிய சத்திகள் இருவரும் முறையே, வானவர் கோமான் வளம் பயில் மகளும் - தேவர் அரையனான இந்திரனுக்குப் பெருமை தங்கிய மகள் எனவும், கானவர் நலம் கூர் கன்னியும் என்ன --வேட்டுவர் மன்னனுக்கு நன்மை கூர்ந்தமகள் எனவும் அவதரித்து, இரண்டு பாலும் இருந்தனர் களிப்ப - பிள்ளையாரது இருமருங்கினும் வீற்றிருந்து மகிழ் சிறப்பவும், -
மருவாது என்பது மராது என விகாரம் ஆயிற்று. அம்ம என்பது ஈண்டுக் கேட்டி என்னும் பொருளது.
252 - 257. கண்டமெய் அடியர் கலவினர் போற்ற - (அன்ன திருவோலக்கத்தினைக்) காணப் பெற்ற மெய்யுணர்வுள்ள அடியர் கலப்புற்றவராய் இறைஞ்சவும், காணா விண்ணவர் கலவாது ஏத்த - காணப்படாத விண்ணுலகத்தார் கலப்புறாது நின்று ஏத்தவும், கண் கடை ஒழுகும் கருணை நோக்கமோடு - கடைக்கண்ணிடத்தே இடையறாது வாராநின்ற கருணைச் செவ்வி உடன் நிகழ, இனிது வீற்றிருக்கும் - உயிர்கட்கு இன்பம் தோன்றும் நிலைமையின்
வீற்றிருந்தருளுகின்ற, எழில் நேர் காண்டலும் ----காட்சியை எதிருறச் சேவைசெய்த அளவிலே, எஞ்சும் நோய் துவர இரியல் போக--நீங்காது மிகையாய் நின்ற நோய் முற்றும் நீக்கின வாற்றால், விஞ்சு நால் பொருளும் மேவந்து துவன்ற--பிறவற்றுள் மேம்பட்ட நால்வகைப்பொருளும் தாமே வந்து நிரம்புதலும் --
மெய் ஆகுபெயர். அடிமை சுதந்திரமின்மை . மேவந்து என்பது மேவரல் என்னும் வினைப்பெயரடியாகப் பிறந்து அதுபோல ஒரு சொல்லாய்நின்றது.
சென்று (234) பணிந்து தாழ்ந்து தொழுது (238) ஏழும் ஐந்தும் விராய் இயக்கி ஒளிரும் (244) அருள் நிலை பிணிதீர்த்து கொழிப்ப (246) இருந்தனர் களிப்ப போற்ற ஏத்த (253) நோக்க மோடு வீற்றிருக்கும் எழில் காண்டலும் (255) நோய் இரியல் போக நாற்பொருளும் துவன்ற (257) என முடிக்க.
ஆற்றாக் கடுந்துயர் (258) என்பது முதல் திருமுன்நிற்ப (206) என்னும் அளவும் ஒரு முடிபு.
258-262. ஆற்றா கடு துயர் அரு நரகு உழப்பவர்- தணிக்கப் படாத பெருந்துயர் ஆகிய கடத்தற்கு அரிய நரகத்துள் துன்புற்றோர், நோற்ற முன் ஊழ் - தாம் செய்துள்ள முன்னைய நல் ஊழ், நனி நூக்கலும் - (முறை பிறழாது) பின்வந்து கை தரலும், நொடிப்பின் ஆயிடை நின்று - நொடித்தல் அளவைத்தானது ஓர் சிறுவரையின் அந்நரகினின்று நீங்கி, மா இரு துறக்கம் புக்குழி - மிகப்பெரிய துறக்கத்தின்கண் புகுந்தக்கால், பொலிவித்து ஒக்க தோற்றத்து - பொலிவித்தாற் போன்ற வண்ணமே, விம்மித மகிழ்ச்சி மெய் தவ வீக்க - அதிசய வழித்தான கிளர்ச்சி மெய்ப்பாடுற
மீக்கூர்தலான்,
ஆற்றாத என்பது ஈறுகுறைந்து நின்றது. நரகு உழப்பதற்கு முன் ஊற்றாகாமல் அதனில் உழந்தவரை இறுதியின்கண் தற்செய்தான் அடியில் தீயவை முன்னும் நல்லவை பின்னுமாகச் செய்த முறை பிறழாது வந்து உதவிய வாற்றால் முன் ஊழ் நனி நூக்கா என்றார். நொடிப்பு என்பது நொடிக்கும் காலம் அது; ஒரு மாத்திரை அளவாம். மாயிருந்துறக்கம் என்பது மரூஉ. நவ என்பது ஈண்டு எச்ச வினையாய் நின்றது.
263-266. ஒருகதி விட்டு மற்று ஒருகதி அடைந்தவர் நாற்கதியுள் ஒன்றினை அடைந்து அதனை நீங்கிப் பிறிதோர் கதியை அடைந்தோரது, மயங்கு அறிவு என்ன - மயக்குற்ற அறிவை ஒப்ப, உயங்கும் முன் உயங்கல் எய்யேன் ஆகி - முன்னர் நோய் முதலிய பீழை வயத்தானே வருந்தின அம்மயக்கத்தினை இந்நிலைக்கண்ணே, அறியேனாகிய, இறுமாப்பு எய்தி - இறுமாந்து (இன்னது செய்வல் எனச்), செய்முறை தெரியாது - செய்யும் கடப்பாட்டினை அறியாது, திருமுன் நிற்ப - பிள்ளையாரது திரு முன்னர் நிற்ப, -
கதிநான்கு - தேவர் மக்கள் விலங்கு நரகர் என்பன. இறுமாப்பு எய்தி என்பது பிறவித் துன்பங்கள் ஒழிந்தமைக்கும், மயங்கு அறிவு என்ன என்பது உயிர் தன் அறிவு மறைப்புண்டமையால் தான் பழைய பயிற்சி வயத்தானே தொடர்ந்து நின்று செய்த வினையால் செலுத்தப்பட்டதான கதிக்கண் சென்று வேறுபட்டமைக்கும் உவமங்கள் ஆயின. ஆகவே, அவ்வேறுபாடு தன்பால் அறத்தொலைந்தது என்றவாறாயிற்று. முன் உயங்கல் எய்யாமை - ஆன்மா மாயை காரணமாக வருகின்ற ஆணவம் முதலிய குற்றம் தீர்தலாம். செய்முறை தெரியாமை:- தன் அறிவு மறைப்புண்டு ஆன்மா பிறப்பிற்கு வித்தினைத்தேடிக்கொள்ளும் முயற்சியைக் கைவிட்டமையாம். திருமுன் நிற்றல் :- அப்பரம்பொருளை இடைவிடாது பாவித்து அசைவற நிற்றலாம்.
மகிழ்ச்சி வீக்க (262) முன் உயங்கல் எய்யேன் ஆகி (265) இறுமாப்பு எய்தி தெரியாது திருமுன் நிற்ப (266) என முடிக்க.
267- 273 இருமை பயனும் எளிதின் உற்று அளிக்கும் பூதியும் - இம்மை மறுமைப் பயன்களை வேண்டியவாறு பொருந்தி நின்று தருவதாய திருநீறும், திரு உரு பூச்சும் -- திருவுருவிற் பூசுதற்கமைந்த சந்தனத்தேய்வையும், நன்கு அளித்திட்டு - நலன் உறத் தந்தருளி, என்னை தன் வசம் ஆக்கிய உலகை - முன் தன் வயத்தே என்னை அகப்படுத்தின உலகினை இது போழ்து, என் வசம் ஆக்கி - என்வயத்தாகப் பண்ணி, என்றும் ஓர் இயல்பின் நின்ற - எஞ்ஞான்றும் ஒரு தன்மைத் தாய் நிலைபெற்ற, தன் நிலையின் நீங்காது இருத்தி --- தமது நிலையின்கண் நீக்க முறாமே இருக்க வைத்து, விடாது விட்டருள மெய் அருள் மேற்கொண்டு - பிரியா விடை தந்தருளிய வாற்றால் அம் மெய்யுணர்விற்கு நிமித்தமான அருளைக் கவயமாக மேற்கொண்டு, ஒழியா தொழிந்து--நீங்காமல் நீங்கி, வழி வருகின்றனன் - இந்நெறிக் கண் வருகின்றேனாக, --
உலகை என் வசம் ஆக்கியவாறு இறைவன் இந்திரிய இலக்கணங்களை இதுகாறும் காட்டி நின்ற தன்மை. இனி, நமது அன்று என்று நீங்கித் தற்சொரூபத்தினைக் கண்டு நிற்குமாறு ஆன்மாவை அநுக்கிரகித்து, அனைத்தும் தன் வயமாக அவற்றை முற்றும் கடந்துநின்ற தன்னையும் அறிவித்து, அநாதித்தான அவிச்சையினின்றும் ஒழிவித்த இயல்பாம். 'ஞான நாடகம் நவிலிய மாறலும்' என்றதற்கு ஏற்ப 'மெய் அருள்' என்றார். விடாது விட்டருள எனலும் ஒழியாது ஒழிந்து எனலும் கூறியவாறு. ஆண்டான் அடிமைக்கு இயல்பு எனல் புலப்படுத்தியபடி.
இருமைப் பயனும் அளிக்கும் (267) பூதியும் பூச்சும் அளித்திட்டு (268) உலகை என் வயம் ஆக்கித் (270) தன் நிலையில் இருத்தி (271) விட்டருள அருள் கொண்டு (272) ஒழியாது ஒழிந்து வருகின்றனன் (273) என முடிக்க.
274-275 அத்தகு பெருமான் அருள் விளையாடலை-அத் தன்மையவான பிள்ளையாரது அருட்கு இடனாகிய திருவிளையாடல்களை, சற்று இது கேள் மதி தவம் மேம்படும் - (யான் கூற) சற்றே கேட்டி தவத்தால் மேம்படுகின்றோய், -
இனி, தான் உய்ந்தவாறு இரவலனும் உய்ந்து வாழ்தல் திண்ணம் ஆகலான் மேம்படுக என உயர்த்துக் கூறியது. பிள்ளையார் அருளால் ஆன்மாவை உணர்ந்த தமது சந்நிதி மாத்திரத்தால் உலகம் சீவித்து ஒடுங்கின ஆற்றினை அறியும் அறிவு உதித்தது என்பதாம். அப்பெருமான் அருள் விளையாடலைத் தவமேம்படும்! கேண்மதி என முடிக்க.
விச்சு (276) என்பது முதல் பெற்றியன் (285) என்னும் அளவும் ஒரு முடிபு.
276- விச்சு ஒன்று இன்றி விளைவு மிக்கு ஆக்கியும் - வித்து ஒன்றுமில்லாதிருக்கவும் விளையுள் மிகுதியாய் உள ஆக்கியும், -
இஃது அருவம் ஆகிய மாயையினின்றும் உலகம் எல்லாம் தோற்றுவித்தது.
277. விச்சு மிக்கு இருப்ப விளைவு முழுது ஒழித்தும் - வித்து மிகுதியாய் இருக்கவும் விளையுள் முழுதும் இல்லையாகப் பண்ணியும், -
ஆன்மா ஊழ்வகையால் போகங்களையெல்லாம் அநுபவித்தற்கு இருந்தும் உவர்ப்பாக அவை முற்றும் தன்னைத் தொடராவண்ணம் புணர்த்தது.
278- ஒளி தலைவளர்ப்ப ஒளிகளை தணித்தும் - ஞானத்தினை உயிர்கள் மாட்டு வளர்விப்பதற்கு அவைக்குரிய ஞானங்களைக் குறைத்தும், -
ஒளி ஆகுபெயர். இது பாசஞானத்தினை நன்கு உணர்ந்து நீக்கின பசுஞானத்தையும் நீக்கிப் பதிஞானம் ஒன்றினையே வளர்வித்தல்.
279- அழுக்கினை கழுவ அழுக்கினை ஏற்றியும் - அவ்வுயிர்களது மலமாசினைப் போக்குதற்கு மலமாசினைப் பின்னும் ஏற்றியும், -
இது ஆணவமலம் ஆகிய அழுக்கினை மாயாமலம் ஆகிய அழுக்கை ஏற்றித் தொலைத்தல்.
இதனை, " எழுமுடல் கரண மாதி இவைமல மலமலத்தால் - கழுவுவன் என்று சொன்ன காரணம் என்னை என்னில் -- செழுநவை அறுவை சாணி உவர்செறி வித்த ழுக்கை - முழுவதும் கழிப்பன் மாயை கொடுமலம் ஒழிப்பன் முன்னோன்'' (சித்தியார் - சூத்-2: செய்-52) என்னும் திருவிருத்தத்தில் காண்க.
280- உறும் தொழிலாளர்க்கு உறாது சேண் அகன்றும் - தம்மை அடைதற்கு இடைவிடாது முயலும் வினைஞர்களிடத்தே அவர் அடையப்பெறாவண்ணம் சேணிடை நீங்கியும் , -
இது வேதங்களும் பிரமாதியரும் துதித்தும் பூசித்தும் பலவாற்றால் பன்னாள் காறும் தேடியும் அவைக்கும் அவர்க்கும் எளிதின் அணியராகாமல் அப்பாலைக்கு அப்பாலாய் அகன்று நிற்றல்.
281- வறும் தொழிலாளர்க்கு வந்து உடன் கலந்தும் - அவ்வாறு முயலாத வறிய வினைஞர்களிடத்தே காலம் பாணியாமல் அடுத்துக் கலந்தும், -
இது அத்துணை வலியர் அல்லராய எளிய அன்பர்க்குத் தாம் நினைந்த வடிவொடு சென்று அவர் உள்ளத்தின்கண் நிற்றல்.
282 - விதித்த நல் விதிகளை விலக்கு என உவர்த்தும் - விதிக்கப்பட்ட நல்ல விதிகளை விலக்காம் என வெறுத்தும் -
இது தக்கன் செய்த யாகம் தீமையாயினது முதலிய. வெறுத்தல் - கடைப்படுத்தல்.
283 - விலக்கினை விதி என மேதக நயந்தும் - விலக்குகளை விதித்தனவாம் எனச் சிறப்புற நயந்தும், -
இது தண்டியடிகள் தந்தையைப் பேணாமையை நயத்தல் முதலிய. நயத்தல்- தலைப்படுத்தல். இதனை, சிவஞானசித்தியார் - '' அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும் - பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவம் ஆகும் - வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை ஆகி - நாரினில் பாலன் செய்த பாவமும் நன்மை ஆய்த்தே '' என்னும் (சூத்-2: செய் 29) திருவிருத்தத்தாற் காண்க.
284- 5. இத்தகு தொழின்மை நித்தலும் இயற்றி - இன்ன வகைப்பட்ட செய்கைத்திறங்களை எக்காலும் செய்யா நின்று, பொற்ற பேர் இன்பு அருள் பெற்றியன் - நித்தமான வீடு பேற்றை நல்கா நின்ற நோன்மையர். -
இத்தகு தொழின்மையாவன - ஒன்றினைச் செய்கை செய்யா தொழிகை வேறொன்று செய்கை முதலியன.
ஆக்கியும் ( 76) ஒழித்தும் (277) தனித்தும் (278) ஏற்றியும் (279) அகன்றும் (280) கலந்தும் (281) உவர்த்தும் (282) நயந்தும் (283) தொழின்மை இயற்றி (284) இன்பருள் பெற்றியன் (285) என முடிக்க.
அஃதான்று - அதுவன்றி, -
இருமுதுகுரவர் (286) என்பது முதல் காட்டுவன் (310) என்னும் அளவும் ஒரு முடிபு.
286 - 287 இரு முதுகுரவர் எழுவாய் சுற்றமொடு - இறைவனும் இறைவியும் ஆகிய அநாதியான இருவர் முதலான சுற்றத்துடனே, துயர் இலங்கு உலகம் தோற்றுதல் பொருட்டு - கன்மம் பயில்கின்ற உலகங்களைப் படைத்தற் பொருட்டு, -
இருமுதுகுரவர் ஆவார் சுத்தசிவமும் சிற்சத்தியும்.
288-289 தந்தை என்ன ஐந்துமுகன் ஆகியும் அன்ளை என்ன மனோன்மனி ஆகியும் - தமக்குத் தந்தையும் தாயும் என்னும்படி ஐம்முகம் உள்ள சதாசிவ மூர்த்தியும் மனோன்மனியும் ஆகியும், --
290-292 முன்முறை தந்தையர் தாயர் என்ன - முதற்கட் கூறிய இறைவனும் இறைவியும் போல், நாதம் சிவமே நலத்தகு விந்து மே தகு சத்தி வேறு வேறு ஆகியும் - நாதமே சிவமும் நன்மையுள்ள விந்துவே மேன்மைத்தான சத்தியும் என வேறு வேறாகியும் , -
293- 294. பின்முறை தந்தையர் தாயர் என்ன மகேசன் உருத்திரன் மகேசை உமை ஆகியும் - பின்னர்க் கூறிய ஐம்முகனும் மனோன்மனியும் போல மகேசனும் மகேசையும் உருத்திரனும் உமையும் ஆகியும் , -
2 95 - தமையன் என்ன தந்திமுகன் ஆகியும் - மூத்தோன் என்னும்படி யானை முக மூர்த்தியாகியும், -
296-298. தனையன் என்ன தாமரை மருட்டும் - சேயன் என்னும்படி தாமரைப்பூவை மருட்டாநின்ற, மூ இரு முகமும் முந் நான்கு கரமும் - ஆறு திருமுகமும் பன்னிரு நெடுங்கரமும், மருவி வீற்றிருக்கும் ஒரு தான் ஆகியும் - கொண்டு வீற்றிராநின்ற ஒப்பற்ற தாமே ஆகியும் , -
299-302. கடப்படும் இரண்டு கைகோள் இயங்க - தமது கடமைப்பாடான இருவகை ஒழுக்கங்களும் 'நடக்குமாறு, நான வார் குழல் - நானம் கமழ நீண்ட கூந்தலையும், நகை இழை யானையை - ஒளியுள்ள அணிகளையும் உடைய தெய்வயானை நாயகியையும், கானவர் அரு பெறல் காமரு மாதினை - வேடர்களது பெறுதற்கரிய அழகு தங்கிய வள்ளி நாயகியையும், கற்பினில் களவினில் பொற்பு உற மணந்தும் - முறையே கற்பியலினும் களவியலினும் (உயிர்கள் ஞானப்) பொலிவைக் கொள்ளுமாறு வதுவை செய்தும், -
இரண்டு கை கோளாவன ஞானமும் கிரியையும் ஆம். முற்றும்மை தொக்கு நின்றது. கற்பியல் தந்தைதாயர் தாமே விரும்பிக் கொடுப்பத் தலைமகனும் தலைமகளும் வதுவை புனைந்து எய்துவது. களவியல் எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் அத்தலைமகனும் தலைமகளும் எதிர்ப்பட்டுத் தாமே (எண்வகை மணத்துள் ஒன்றாய கந்தருவ மணத்தினராய்ப்) புணர்ந்து வருவது. இவற்றின் விரிவை அகத்திணையியலுட் காண்க. உலகம் தோற்றுதற் பொருட்டு இருமுது குரவரும் ஆகிய முதற் சுற்றமொடு சதாசிவன் சிவம் நாதம் மகேசன் உருத்திரனும் இவர்களுக்குரிய சாத்திகளும் தமையனும் தனையன் ஆகிய தாமும் ஆகி ஞானக் கிரியைகள் இயங்கத் தெய்வயானை வள்ளியம்மை என்னும் பெயருள்ள இரண்டு சத்தி களை மணந்தது என்றவாறாயிற்று.
303--306. பொருட்டுறை முழுதும் புரை இன்றி நடப்ப - எல்லாப் பொருள்களின் பாகுபாடுகள் அனைத்தும் வழாமல் நடக்கு மாறு, அண்டகோடிகளும் அரை கணத்து அளவையின் - அரை மாத்திரைப் போழ்தினே ஆயிரகோடி அண்டங்களையும், வறிது
நகை தோற்றி இறுவது புரியும் - (இதற்கென வேண்டாது) வறிய நகைபுரிதலால் படைத்து இறுதியுறப் பண்ணாநின்ற, எறுழ்வலி ஆற்றல் எய்யான் போல - தமது கழிபேராற்றல் உடைமையைத் தாமே அறியார் போல,
இயற்கையாய் முற்றும் உணர்ந்தானை அறியான் போல என் றது உபசார வழக்கு. பொருட்டுறை என்பது சிருட்டியாதி ஐந்தொழிலும்.
307-308. மந்திரம் தூது செலவு இகல் மற்றும் ஆற்றி -- அமைச்சொடு சூழ்தலும் ஒற்று விடுத்தலும் பகைவர்மேற்சேறலும் இகல்செய்தலும் இவை முதலியவும் இயற்றி, வெம் சூர் வலி காற்றி - கொடிய சூர்மாவின் வலியை இல்லையாகப் பண்ணி, உலகு ஓம்பியும் - உயிர்களைப் பாதுகாத்தும், -
காற்றி என்பது கால் என்னும் வினைப்பெயரடியாகப் பிறந்த எச்சம். காற்று என்னும் வளியின் பெயர்க்கும் இதுவே முதனிலை ஆகும். அன்றியும், இக்கால் என்னும் முதனிலைப் பெயரே அதற்கு ஆகுபெயராக நின்று கால் என்று வழங்கும்.
309-310. எல்லாம் அறிந்து அறிவிக்கும் அ இயல்பை - அனைத்தினையும் தாமே உணர்ந்து உயிர்களை உணர்த்தாநின்ற அந் நிலையை, கண்கூடாக காட்டுவன் - வெளிப்படையாகத் தோற்றுவிப்பன்,
அரையர் பகைவர் மாட்டு மந்திரம் தூது முதலிய இவை செயற்பாலன என்னும் அற நூற்பொருளை உணர்த்தற்பொருட்டு இங்ஙனம் இயற்றினவாறு. இரு முது குரவராகிய முதற் சுற்றமொடு உலகம் தோற்றுதற்பொருட்டு ஐம்முகன் முதலிய இறை வரும் மனோன்மனி முதலிய சத்திகளும் என வேறு வேறாகியும் மகேசனும் உருத்திரனும் இவர் சத்திகளும் தந்திமுகனும் தாமும் ஆகியும் ஞானக் கிரியைகள் இயங்க யானையையும் மாதையையும் மணந்தும் பொருட்டுறை நடப்பத் தோற்றிப் புரியும் ஆற்றல் எய்யான் போல மந்திரம் மற்றும் ஆற்றி, சூர்வலி காற்றி ஓம்பியும் அறிந்து அறிவிக்கும் அவ்வியல்பைக் காட்டுவன் என முடிக்க.
அஃதான்று - அதுவன்றி, -
மூவகை (311) என்பது முதல் . அளவன் (321)
311-312 மூவகை உருவாய் மூ உலகு உயிர்த்தும் - அயன் அரி அரன் என முத்தொழிற் கடவுளராய்ப் பெரிய உலகங்களை ஈன்று அளித்து அழித்தும், மூ வகை உருவும் முயங்கா பரம் பொருள் - அம்மூன்று உருவையும் கலவாது நின்ற மெய்ப் பொருளாய், மூவகை உரு என்றதால் இனம்பற்றி ஏனைய இரு தொழில்களும் கூட்டி உரைக்கப்பட்டன.
313-314. பந்தம் வீடு பல் உயிர்க்கு அமைத்தும் - பந்தமும் முத்தியும் பல்வகை உயிர்கட்கும் அமைத்தும், பந்தம் வீடுபடாத பெருந்தகை - அப்பந்த வீடுகளுள் தாம் முயங்காது நிற்கும் பிரானாய், -
இதனை, சிவஞானசித்தியார் முதற்சூத்திரம் 44-வது திரு விருத்தம் "பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்கள் அல்லான் - அந்தமும் ஆதி யில்லான் அளப்பிலன் ஆத லாலே - எந்தை தான் இன்னன் என்றும் இன்ன தாம் இன்னதாகி - வந்திடான் என்றும் சொல்ல வழக்கொடு மாற்றம் இன்றே.'' என்றதனாற் காண்க. வீடு விடு என்னும் முதனிலையிற் பிறந்ததோர் வினைப்பெயர்.
315-317. ஆர் உயிர்க்கு உயிராய் அமைந்தன நடாவியும் - தாமே உணர்தற்கு அரிய உயிர்க்குள் உயிராய் நின்று அவைகளுக்கு அநாதியே தொடர்ந்துள்ள வினைப்பயன்களை நுகர்வித்து இயக் கியும், ஆர் உயிர் காட்சிக்கு அணுகா - அவ் அரிய உயிர்களால் காண்டற்கு உறாத, அரு திறல் தான் ஆய் நின்று - அளவிடற்கு அரிய ஆற்றல்கள் உடைய தாமே ஓர் தனியராய் நிலைபெற்று, தன் நாண் தனி முதல் - தம்மை ஒருங்குணர்ந்துள்ள ஒப்பற்ற இறைவராய், -
318- அளிகளின் அளியா - அளிகள் என்பவை எல்லாவற்றுள்ளும் தண்ணளியாகவும், அளிகள் ஊங்கு அளியன் -- அவற் றின் மேம்பட்ட தலையளியினராய், -
319- ஒளிகளின் ஒளியா ஒளிகள் ஊங்கு ஒளியன் -- ஒளிகள் என்பவை எல்லாவற்றுள்ளும் பேரொளியாகவும் அவற்றின் மேம்பட்ட அருள் ஒளியினராய், -
320- வெளிகளின் வெளியா - வெளிகள் என்பவை எல்லாவற்றுள்ளும் பெருவெளியாகவும், வெளிகளூஉங்கு வெளியன் - அவற்றின் மேம்பட்ட பரவெளியினராய், -
321- அளவினின் அளவா - அளவுகள் என்பவை எல்லா வற்றுள்ளும் மிக்க அளவாகவும், அளவினூஉங்கு அளவன் - அவற்றின் மேம்பட்ட தனி அளவினராய், -
அளியன் ஒளியன் வெளியன் அளவன் என்பவை குறிப்பு முற்று எச்சங்கள். அளிகள் - தாய் தந்தையர் அரசர் முதலியோர் செய்யும் அளிகள் முதலியன. தண்ணளி-- மழை நிறைமதி முதலியவை செய்வன. மேம்பட்ட தலையளி பிறப்பு இறப்புக்களின் வேடையைத் தொலைப்பது. ஒளிகள் - விளக்கொளி விண்மீன் முதலியவை செய்வன. பேரொளி - இருசுடர் முதலியவை செய்வன. மேற்பட்ட அருள் ஒளி - அருள் உருவாய்த் தோற்றி அவிச்சைத் தொடக்கினைக் கட்டறுப்பது. வெளிகள் - கடவெளி முதலியன. பெருவெளி - மனவெளி முதலியன. மேற்பட்ட பரவெளி - சிதாகாயம். அளவுகள் - எண்ணல் எடுத்தல் முதலியன. மிக்க அளவு காட்சி முதலியன. தனி அளவு - முதல் நடு ஈறு இன்மையாம்.
மூவகை உருவாய் உயிர்த்தும் (311) முயங்காப்பொருள் அமைத்தும் (313) படாத பெருந்தகை (314) அமைந்தன நடாவியும் (315) அருந்திறல் தானாய் நின்று காண் தனிமுதல் (317) அளியன் ஒளியன் வெளியன் அளவன் (321) எனமுடிக்க.
இன்னான் (322) என்பது முதல் அழுத்துவன் (329) என்னும் அளவும் ஒரு முடிபு.
322-323. இன்னான் ஒருவனை முன்பு சென்று - இத்தன்மையராகிய ஒருவரை (பத்திமையால்) சிந்தித்து (ஆண்டுச்) சென்று, அவன் பூ கழல் சே அடி போற்றுதி ஆயின் - அம் முதல்வாது பூங்கழலை அணிந்த செய்ய திருவடிகளைப் போற்றல் செய்தனை ஆயின், -
பூங்கழல் என்பது வருமொழி முதற்கு இனம் தோன்றியது. சேவடி போற்றல் வீடு பேற்றிற்குக் காரணம். இதனை, முருகாற்றுப்படைக்கண் முதற்படை வீட்டு அகவலில் " சேவடி படரும் செம்மல் உள்ள மொடு '' என்னும் தொடரிற்குப் பெரியர் உரைத்த உரையானும் உய்த்துணர்க.
324-329. பேர் அஞர் உறுத்த பேது உறு நோயும் - பெருந் துன்பத்துள் ஆழ்த்தின மயக்கம் மிக்க நோயும், காரண நோயும் - அதனை உறுத்தற்குக் காரணமாய் நின்ற நோயும், கை இகந்து இரிய - கைவிட்டு ஓடுமாறு, கடைக்கணித்து அருளி - தமது கடைக் கண் நோக்கம் செய்தருளி, கரை இல் நாற் பொருளும் - வரையில்லாத அறம் முதலிய நான்கு பொருள்களையும். கொடை கடன் - (தம்மாட்டுப் பெறத்தக்க) கொடைப்பொருளாக, நீயிர் குறித்த அளவையின் - கருதிய அளவினும், எண்மடங்கு ஆற்றி - எண்மடங்கு மிக்கருளி, என்றும் தீரா அகம்படித்தொழின்மையின் - எக்காலத் தும் மீளாத அகம்படித்தொழில் புரியும் ஆற்றின் கண், அழுத்துவன் அன்றே - நிலையுதல் உறுத்துவர், -
அன்று ஏ அசைநிலைகள் . மேம்படுக கேண்மதி போற்றுதி என்னும் ஒருமை முன்னிலைப்பெயர் வினைகளுக்கு ஏற்ப நீ குறித்த அளவையின் என்னாது நீயிர் என்றது. 'நின் அன்னார்' என ஒரு குடியுள்ள ஒருவன் மெய்ந்நிலை அடையப் பெறின் அவன் முன்னோரும் பின்னோரும் தனது நற்றவம் காரணமாக உய்வுபெறுவர் என்பது அருள்வழக்கு; ஆதலின், பன்மையிற் கூறியவாறு.
"ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே.'' எனப் பெரியர் கூறுமாறுபோல எனக்கொள்க. அன்றேல், ஒருமையிற் பன்மை தழுவிய வழுவமைதியும் ஆம்.
அகம்படித் தொழின்மையாவது - சன்மார்க்கநிலை முதலிய மூன்றிற்கும் மூலமான தாதநெறியாம். இவை முன்னர் ஒருவாறு உரைக்கப்பட்டன. இந்நெறி - உண்முகச்சரியை நிலை.- பேதுறு நோய் - ஆகாமிய பிராரத்தங்கள். காரணநோய் சஞ்சிதம். முன்பு சென்று சேவடி போற்றுநர்க்குக் கடைக்கணித்து நாற்பொருளும் மிக்கு அருளல் வேண்டும் என்பது கடப்பாடு ஆதலின் கொடைக்கடன் என்றார். கடைக்கண் என்னும் சினைப்பெயரிற் பிறந்தது. கடைக்கணித்தல் என்னும் வினைப்பெயர் ஈண்டு எச்சமாய் நின்றது. கண்ணல் நுதலல் சுட்டல் எண்ணல் குறித்த இவை முதலியன கருதல் என்னும் ஒரு பொருட்கிளவி. அங்ஙனம் அகம்படித் தொழின்மையின் அழுத்தும் இறைவர் யாண்டைக்குஉரியர்? எனின் இச்சொற்கள் அவாய் நிலையான் வருவித்து உரைத்தவாறு. அன்றி, இவ்வாறு சொல்லக்கேட்ட ஆதுரன் கூற்றாக இவ்வினாவை ஆசங்கித்து உரைத்தது எனினும் அமையும்.
இன்னான் ஒருவனை முன்பு சென்று போற்றுதியாயின் பேதுறு நோயும் காரண நோயும் இரியகடைக்கணித்தருளிக் கொடைக்கடன் ஆற்றி அகம்படித் தொழின்மையின் அழுத்துவன் என முடிக்க.
ஆடகம் (330) என்பது முதல் கீழ்க்கோட்டம் (344) என்னும் அளவும் ஒரு முடிபு.
330-333 ஆடக பசு பொன் பாடக சீறடி - ஆடகம் என்னும் உயர் பொன்னின் ஆகிய பாத கடகத்தை அணிந்த மெல்லிய அடியினர் ஆகிய, நாடகமகளிர் நவிற்றிய - நாடகமாதர் (அரங்கின்கண்) ஆடுகின்ற , ஆடல் சிலம்பு கிண்கிணி - ஆடலில் சிலம்புகளும் கிண்கிணிகளும், தீங்குழல் முழவம் முரசம் தூரி முழங்கு ஒலியானும் - இன்னோசைத்தாய தண்ணுமையும் என முாசமும் தூரியமும் என இவை இடையறாது முழங்கும் ஒலியினாலும் , -
ஆடகப்பொன் இருபெயரொட்டுப் பண்பு. ஆடகம் நால்வகையுள் ஒர் வகைப் பொன் . பாடகம் மரூஉமொழி. சிலம்பு என்பதைப் பெயரெச்சம் ஆக்கி கிண்கிணிக்கு அடையாக உரைப்பினும் ஆம். சிறுமை மென்மை குறித்து நின்றது.
334-337 விண் தலம் உரினும் - விண்ணிடத்தை உரிஞ்சுகின்ற, வியன் மணி புரிசை - உயர்ந்த மணிகள் குயின்ற மதில்களும், கொண்டல் கண்படுக்கும் கோபுர நிரைகள் - மேகம் தங்குதற்கு இடமான கோபுர நிரைகளும், -
ஆடு கொடி சுமந்த மாடம் நெடு மாளிகை - அசையும் கொடிகளை மேலே பொறுத்த மேல் நிலைகளால் நெடிய மாளிகைகளும், இன்னன பிறவும் மன்னுதலானும் - இவைபோல்வன பிறவும் நிலைபெற்றிருக்கையாலும், -
பிற என்பது மண்டபம் விமானம் நிலைத்தேர் செய்குன்று முதலியவற்றை புரிசை சூழ்ந்த கோபுரம் எனினும் ஆம். 338-341. ஒலி திரை கடலும் ஒங்கு பல்வரையும் - ஒலித்து எழும் திரைகளையுள்ள கடலும் மேல் உயர்ந்த பன்னிற மலைகளும், உடங்கு தொக்கு அண்மி - ஒருங்கு சேர்ந்து எய்தி, ஒண் துறை ஆடி - திவ்விய தீர்த்தத்தில் ஆடி, இரு பகுப்பின ஆய இரு கரை மருங்கும் - இரண்டு பகுப்புகளாகிய அத்தீர்த்தத்தின் இருகரைப் புறத்தும் நின்று, நோற்றன வதியும் பேற்றினை தெரிக்கும் - நோற்கின் றவையாய் நிலைபெற்றிருக்கப் பெற்ற தமது பெரும்பயனைப் புலப்படுத்துகின்ற -
இப்பெயரெச்சம் மேல்வரும் கோட்டம் என்பதோடு இயையும். கிண்கிணி முதலியவற்றின் ஓசையை ஒலிகடல் ஆகவும், புரிசை முதலியவற்றின் மிகுதியைப் பல்வரையாகவும் உருவகப்படுத்தினவாறு, ஒலியாற்கடலும் நிறம் தோற்றங்களால் வரையும் உருவகம். பன்னிற மலை என்றது வெண்மலை பொன்மலை நீலமலை முதலியவற்றை. இவ்வண்ணம் உள்ள மலைகள் உள்ளன மேருவரைக்கு நாற்புடையிலும். தீர்த்தம் - சரவணப்பொய்கை. ஒண்மை - மாசின்மை .
342 - 344. மும்மையும் அளிக்கும் மூவா முழுமுதல் - இம்மை மறுமை வீடு என்னும் முத்திறத்து இன்பங்களையும் உயிர்களைப் பெறுவியா நின்ற மூத்தல் இல்லாத தனிமுதல் ஆகிய பிள்ளையார், ஐ முகன் ஆகி - ஐந்து முகமுள்ள இறைவனாகி, அமர்ந்த வீரட்டமும் - வீற்றிருக்கும் வீரட்டமும், அறுமுகன் ஆகி அமர்ந்த கீழ்க்கோட்டமும் -ஆறுமுகம் உள்ள கடவுள் ஆகி வீற்றிருக் கும் கீழ்க்கோட்டமும், -
மூவா என்பது மூத்த என்னும் எச்சவினையின் எதிர்மறைச் சொல்லாய் ஈறு குறைந்து நின்றது. முழுமுதல் தன்னிற் பிறி தொன்று இல்லை என்னும் பொருட்டு. கோட்டம் - கோயில்.
நாடக மகளிர் (331) ஆடற் கிண்கிணி முதலியவை முழங்கு ஒலியானும் (333) புரிசை முதலியவும் பிறவம் மன்னுதலானும் (337) கடலும் வரையும் தொக்கு அண்மி துறை ஆடி (339) இரு மருங்கும் வதியும் பேற்றினைத் தெரிக்கும் (341) வீரட்டமும்
கோட்டமும் (344) என முடிக்க.
பொன்னும் (345) என்பது முதல் பண்ணை ஒருபுறம் சூழ (352) என்னும் அளவும் ஒரு முடிபு.
345-347. பொன்னும் மணியும் புது மலர் குவையும் - பொன்னையும் மணிகளையும் புதுமைத்தான பூத்திரளையும், திரை கையின் தூஉய் - அலைகளாகிய கைகளால் எடுத்துத் தூவி, திளைத்து எழுந்து ஒழுகும் - கலந்து மேல் உயர்ந்து ஒழுகாநின்ற, நந்தி ஆற்று நறு புனல் மடுக்கும் - நந்திந்தியின் இனிமைத்தான நீர்ப்பாய்ச்சலால் வளர்ந்த, -
நீர் பாய்கின்ற எனினும் ஆம். முன்னையது மேல்வரும் கதிர்ச் சாலியொடும், பின்னையது பண்ணையொடும் இயையும்.
348-352. குரங்கு கதிர் சாலியும் கொழு தீம் கரும்பும் - கூனிய கதிர்செறிந்த செந்நெல்லும் இனிமை மிக்க கரும்புகளும், குலை பூ கதலியும் கோள் தெங்கு இனமும் - தாற்றுவாழைகளும் குலைகளால் மிக்க தெங்கின் வகையும், கோள்கள் மீ பரிக்கும் பாளை கமுகும் - விண் கோள்களைத் தம்மேல் சுமவா நின்ற பாளைகளையுள்ள கமுகுகளும், வயின் வயின் பொதுளி - இடங்கள் தோறும் நிறைந்து, வளம்பல உறந்த முருகு அலர் பண்ணை-பல்வேறு பயன்களை உதவுவதான நறுமணம் கமழும் மருதம், ஒரு புறம் சூழ - ஒருபுடை தழுவா நிற்ப, --
இடங்கள் - வயல் சோலை படப்பை முதலியன. இனம் என்பதனை சாலி முதலியவற்றிற்கும் கூட்டுக.
பொன் முதலியவற்றைத் திரைக்கையால் தூஉய் திளைத்து எழுந்து ஒழுகும் (346) நந்தியாற்றுப்புனல் மடுக்கும் சாலியும் கரும்பும் கதலியும் தெங்கும் கமுகும் பொதுளி வளம்பல உறந்த பண்ணை சூழ (352) என முடிக்க.
அவரை (353) முதல் புறவம் ஒருபுறம் சூழ (360) என்னும் அளவும் ஒரு முடிபு.
353-354. அவரை துவரை அரில் கதிர் வரகு- அவரையும் துவரையும் சிறு தூறுகள் போலும் கதிர்கள் உள்ளவாகும், சாமை இறுங்கு ததைந்தன விளையும் கொல்லை - சாமையும் இறுக்கும் நிரம்பினவாய் விளைதற்கு இடமாகிய கொல்லைகளும், -
355-360. முல்லை கோழ் இணர் பூவையும் - முல்லைக் கொடிகளும் கொழுவிய பூங்கொத்துக்கள் நிறைந்த காயாவும், பந்தர் மாதவி உந்திய கோங்கும் - பந்தர் போல் படரும் குருக்கத்திகளும் மேல் எழுந்த கோங்குகளும், பை கால் கொன்றை - பசிய அரையுள்ள கொன்றைகளும், பசு பொன் சுண்ணமும் - பசுமைத் தான பொன்நிறத்த பராகங்களும், வளி உளர்ந்து எடுப்ப - இவற்றிற் படிந்து காற்று வீசலால், மறுபுல வரைப்பும் போர்த்தன கமழ்ந்து -- வேற்றுநில எல்லையினும் நிறைந்து மணந்து, பொறி வண்டு அழைக்கும் - பொறிகளையள்ள வண்டினத்தை வரிக்கா நின்ற, அரும் புல புறவம் ஒரு புறம் சூழ - வெற்றிடம் அரிதான முல்லைநிலம் ஒருபுடை தழுவாநிற்ப, -
மறுபுல வரைப்பு - தனக்கு அணிய ஆகிய குறிஞ்சி மருதங்கள். அரும்புலம் - காடு பொதுளா வெற்றிடம் இன்மை.
அவரை முதலியவை விளையும் கொல்லையுள்ள புறவம் எனவும் (353) முல்லை பூவை முதலியவை உடைத்தாய் வளி உளர்ந்து எடுப்ப (358) மறுபுல வரைப்பும் கமழ்ந்து வண்டினம் அழைக்கும் அரும் புலப்புறம் ஒருபுறம் சூழ எனவும் முடிக்க.
செருந்தி (361) என்பது முதல் மருக்கு கால் வளைஇ (280) என்னும் அளவும் ஒரு முடிபு.
361-373. செருந்தி மந்தாரம் குருந்து வழை பாடலம் கோங்கு சண்பகம் வேங்கை மகிழ் சந்தனம் குங்குமம் மரவம் கோழ் அகில் கப்புரம் இல்லம் ஆவிரை வில்லம் பாங்கர் பிடர் ஞெமை நமை ஆண்டு அடர் வரை எகின் சே அசோகம் தேக்கு ஆத்தி சூதம் மருது போதி வஞ்சி காஞ்சி ஞாழல் புன்னை நரந்தை மாதுளை பொகுட்டு அரை இருப்பை பூசினை சரளம் முன்னம் பலாசு முருக்கை வருக்கை சோதி மாமரம் தொத்தின் நாகம் அன்றி அனைத்தும் துன்றிய கறிக்கொடி மல்லிகை முசுண்டை - செருந்தி முதல் நாகம் ஈறாகக் கிடந்த மரவகைகளும் அவையன்றிக் கர ணி கள் அனைத்தும் நெருங்கிப்படர்த்த மிளகு மலைமல்லிகை முசுண்டை முதலிய கொடி வகைகளும் , -
கப்புரம் - கப்புரமரம். இல்லம் - தேற்றா . அவற்றுள் பாங்கர் பிடர் ஞெமை நமை சரளம் இவை ஒரோவோர் மரச்சாதி. பொகுட்டு அரை இருப்பை - பொருக்காகிய அடியையுள்ள இருப்பை. வரை - மூங்கில். சே செம்மரம். போதி- அரசு . பலாசு - வெண்முருக்கு. சோதி மாமரம் - பெருமையுள்ள சோதிவிருக்கம். கரணி - கொடிமருந்து. அவை - சல்லிய கரணி, சந்தானகரணி, சமநியகரணி, சீவகரணி முதலியன. அனைத்தும் துன்றிய கறிக் கொடி என்பதற்கு இம்மரங்கள் எல்லாவற்றினும் சூழ்ந்து படர்ந்த கறிக்கொடி எனினும் ஆம்.
மற்றும் பரித்து - பிறவகை மரங்களையும் மேற்கொண்டு, -
அவை - அத்தி ஆல் இலந்தை எலுமிச்சை ஏலம் ஏழிலைப் பாலை ஓமை கடுகுரா கோட்டம் சிந்தூரம் சிவந்தி நறுவிலி நாவல் பச்சிலை மஞ்சாடி மரா வன்னி வெட்பாலை வேல் முதலியனவும் கொள்க.
374-375. மணம் கமழ் காமர் வல்லி ஒன்றே - மணம் மிக்க காமவல்லி என்னும் அஃது ஒன்று தானே, இணங்கு பூ தரும் தன் இகழ்ச்சியை நாடி - தனக்கு ஏற்ற பூத்தருகின்ற சிறுமையை நாடி, -
காமவல்லி தேவர் உலகில் கற்பகத்தின்மேல் படர்ந்துள்ளது ஓர் பூக்கொடி. ஆண்டு ஐந்து என்னும் எண்ணுள்ள தருக்களே அன்றி ஈண்டுள்ள பலவேறு கோட்டுப் பூக்கள் மலிந்த எண்ணில்லாத் தருக்கள் இன்மை நோக்கி வல்லி ஒன்றே என்றும், அக் கொடி ஒன்றே அன்றிப் பல இன்மை பற்றி இகழ்ச்சியை நாடி என்றும் கூறினர். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இகழ்ச்சிக்கு சிறுமை ஆகுபெயர்.
376- 379. வசைபட தம் தம் இசை விளக்குவ போல்-- பொன்னகர் அவ்வசை பட்டதால் தமது தமது இசையைப் புலப்படுத் துவன போல, பொறி வரி சுரும்பும் வெறி நுகர் தேனும் - பொறியுள்ள பண்வல்ல சுரும்பினமும் கள்ளுண்ணும் தேன் இனமும், தோகை மா மயிலும் தொடி கண் பூவையும் - பெரிய கலாப மயில்களும் தொடி போலும் கண்ணையுடைய பூவைகளும், கிள்ளையும் குயிலும் தெள்ளு குரல் காட்டி - கிள்ளைகளும் குயில்களும் ஆகிய இவை இனிய குரலோசையைக் காட்டி,
சுரும்பு வண்டின் ஆண். தேன் அதன் பெடை. தொடி-வளை. இசை - புகழ் பண் என்னும் பல பொருள் ஒருசொல்.
380-. வண் தளிர் பொதும்பர் மருங்கு கால் வளை இ - பச்சென்ற தளிர்களை உடைய சோலைகளின் பாங்கர் பயில, -
வளை இ எச்சத்திரிபு. வண்மை - பசுமை.
செருந்திமுதல் நாகம் ஈறாகக்கிடந்த மரங்களும் அன்றி அனைத்தும் கறிக்கொடி முதலியவும் மற்றும் பரித்து வல்லி ஒன்றே பூத்தரும் தன் இகழ்ச்சியை நாடித் தத்தம் இசை விளக்குவ போலச் சுரும்புமுதல் குயில் ஈறாக உள்ளவை குரல் காட்டிப் பொதும்பர் மருங்கு கால்வளை இ என முடிக்க.
381 - 384 நுண் தளி நறு தேன் நோலாது திவளும் - நுண் ணிய திவலையான நறிய தேனை உடைத்தாய் இராது துவளுகின்ற, ததை மலர் சினைய தரு ஐந்து உடுத்த - மலர் நிறைந்த கிளைகளையுள்ள ஐந்தருக்கள் சூழ்ந்த, பொன்நகர் வறுமையை முன்னி நக்காங்கு - பொன்னகரத்தினது நல்குரவை நோக்கி நகைத்தாற் போல,
திவளல் துவளலும் ஆம். பொன்னகர்க்கு வறுமை பொன் மலர்க்குத் தேன் இன்மையும், மணம் இன்மையும் ஆகிய இவற்றால் வறுமை புணர்த்தது.
384-390 வேரல் நரன்று உக்க வெள் மணி குப்பையும் - மூங்கில்கள் கணுக்கள் பீறி உதிர்ந்த முத்தின் திரளும், பிறழ்பல் பேழ்வாய் முன்பின் பார்வை சிங்க வல் ஏறு - வரிசை பிறழ்ந்த பற்களையும் பெரிய வாயையும் பின்னும் முன்னும் நோக்கும் பார்வை யையும் உடைய வலியதான சிங்க எறு, பொங்கு சினம் திருகி - பொங்கிய சினம் முதிர்ந்து, எழுந்து தாய் துமிப்ப - மேல் எழுந்து பாய்ந்து மோதலால், இரு கடாம் யானை மத்தகம் பிளந்து- மிக்க மதம் பொழியும் யானைகளுடைய மத்தகம் இரு கூறு ஆகி, மா இரு குன்றத்து வெண்புனல் அருவி - மிகவும் உயர்வாகிய மலையினின்றும் வெள்ளிய நீர் அருவிகள், வீழ்வன போல சலசல உக்க தரள குவாலும் - விழுவன போலச் சலசல என்று உதிர்ந்த முத்தின் திரளும் (சேர்ந்து),
கடா என்பதில் அயல் நீட்சி சொற்சுவை நோக்கி வந்தது. சலசல என்பது அநுகரண ஒலி.
391-392 நில உராய் தவழ நெமிர்ந்தன மிளிரும் - மதி ஒளியை விரித்து எங்கும் பொருந்துமாறு பரவி ஒளிர்தற்கு இடமாகிய, கவான் மலை புனத்து - மலைப்புறத்திற் புனங்களிடத்தே , -
நகாமும் ஞகரமும் தம்முள் ஒக்கும். கவான்மலை என்பது இலக்கணப்போலி.
393-400 கதிர் தினை காக்கும் உவா மதி முகத்தார் - கதிர் விளையுளின் பொருட்டுத் தினைப்பயிரை ஒம்புகின்ற நிறைமதி போலும் முகத்தழகுள்ள கொடிச்சியர், ஓச்சினர் விடுக்கும் கவணையில் மணியோ - மேலெறிந்து விடுக்காநின்ற கவணையின் மணிக் கற்களோ, கங்குல் கானவர் விலங்கு இனம் துரக்கும் - இருள் நிறம் உடைய வேட்டுவர் மாவினத்தைப் பற்றுமாறு எய்கின்ற, இலங்கு கூர் கணையோ - வடித்த முனை கூரிய அம்புகளோ, அலைத்தர - அலைத்தலால், விசும்பின் நிலைத்தரு கலன்கள் - விண்ணு லகில் உள்ள பல்வகை அணிகளும் , -
411- மண் தலம் விண்தலம் மாற்றியது என்ன - மண்ணுலகினை விண்ணுலகாம் எனவும் விண்ணுலகினை மண்ணுலகம் எனவும் மாற்றினது என்னும்படி, -
412- இறும்பூது பயவா ஏர் குலாய் கிடந்த- அதிசயத்தை உண்டாக்கி அழகு அடைகிடக்கின்ற, -
413-415. திசை காப்பாளர் இசை நிறை தேவர் - திக்குகளைக் காவாநின்ற இமையவரும் புகழ் மிக்க தேவரும், அலரவன் நெடுமால் ஆதிய கடவுளர் - பிரமன் நெடுமால் முதலிய பெருந்தேவரும், முதுக்குறை அன்பின் முறைமுறை பழிச்ச –
பேரறிவொடு கூடின அன்பினராய் நிரைநிரையாய் நின்று துதிசெய்யா நிற்ப,
416- சாறு நாள் அல்லது வேறுநாள் அறியாது - எந்நாளினும் திருவிழா வதுவை முதலியவை இயலும் நாளே அன்றி வேறு வெற்றுநாள் காணுதல் இல்லாமை, -
வேறுநாள் சிறப்புகள் இயலாமே வாளாகழியும் நாட்கள்.
417. உலகம் முழுது ஓம்பு பல் சிறப்பின் - உலகம் அனைத் தையும் தலையளி செய்து காவாநின்ற பலவகைச் சிறப்பின் மாண்பின தாய், -
பல் சிறப்பு - மூர்த்தி தலம் தீர்த்தம் முதலியவை . முற்றும்மை தொக்கு நின்றது.
418 - நிலைபெறு தணிகை மலை கிழவோன் ஏ - நிலைபெற்ற திருத்தணிகைமலைக்கு உரியவன் என்க.
ஏ - அசைநிலை.
நுண்டளித்தேன் நோலாது திவளும் (381) பொன்னகர் வறுமையை முன்னிநக்காங்கு (383) மணிக்குப்பையும் (384) தரளக்குவாலும் (39) தவழமிளிரும் மலைப்புனத்துக் காக்கும் (392) மதிமுகத்தார் விடுக்கும் மணியோ (394) கவணோ (395) அலைத்தர விசும்பிற் கலன்களும் மின்னுக் கொடிகளும் (397) வீழ்ந்தென்ன வரையில் காழும் தாமமும் ததைஇய (399) தணிகை எனவும், மண்டபம் முதலியவை வேற்றுமை தோற்றாவாய் வளம் தழீஇ (403) எம்மருங்கும் அகில் தூமமும் பளிதக்குப்பை கான்ற தீம்புகையும் (406) விண் கெழுமி இமைப்பன செய்யவும் (407) மறுகும் வீதியும் நவமாகி இமையாமை செய்யவும் (410) மண்டலம் விண்டலம் மாற்றியது என்ன ஏர் குலாய்க்கிடந்த தணிகை எனவும், திசை காப்பாளரும் தேவரும் ஆகிய கடவுளரும் (415) பழிச்ச சாறுநாள் அல்லது அறியாது (416) பல் சிறப்பினதாய் நிலைபெற்றுள்ள தணிகை மலை கிழவோன் எனவும் முடிக்க.
திருச்சிற்றம்பலம்.
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ நமச்சிவாய தேசிக மூர்த்திகள் மரபில் அநுக்கிரகம்
பெற்ற திராவிடமாபாடியகாரர் - ஸ்ரீ மாதவச்சிவஞான யோகிகள் மாணவர் கவிராக்ஷஸ-ஸ்ரீ கச்சியப்ப முனிவர்
அருளிச்செய்த திருத்தணிகை யாற்றுப்படைக்கு சென்னை - புரசை - அட்டாவதானம் - சபாபதி முதலியார் இயற்றிய
உரை முற்றுப்பெற்றது.
ஸ்ரீ மெய்கண்டதேவர் திருவடி வாழ்க
ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள் திருவடி வாழ்க.
ஸ்ரீ கச்சியப்ப முனிவர் திருவடி வாழ்க.
-----------
This file was last updated on 19 Feb. 2020.
Feel free to send the corrections to the Webmaster (pmadurai AT gmail.com)