வ. அழகியசொக்கநாத பிள்ளை இயற்றிய
"திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி"
tirunelvEli kAntimatiyammai kalittuRai antAti
by nellai azakiyacokkanAta piLLai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy (Tamil Digital Library) for providing
a scanned PDF copy of this work.
The e-text was produced using Google OCR online tool followed by proof-reading/correction
of the OCR output text.
We thank Mrs. Meenakshi Balaganesh for her assistance in the preparation of the soft copy
of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருநெல்வேலி தச்சநல்லூர் வ. அழகியசொக்கநாத பிள்ளை
இயற்றிய "திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி"
Source:
திருநெல்வேலி காந்திமதியம்மை பேரில்
கலித்துறை அந்தாதி
இயற்றியவர் : தச்சநல்லூர் வன்னியப்ப பிள்ளை குமாரர்
அழகிய சொக்கநாத பிள்ளை
பதிப்பாசிரியர் : தொ. மு. சிதம்பர ரகுநாதன்
வெளியீடு: வெ. ப. சு. தமிழ்க்கலை ஆய்வு மையம்
ம.தி.தா. இந்துக்கல்லூரி
திருநெல்வேலி-10
1990
----------
முன்னுரை
பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்தே
துஞ்சி மடிகின் றாரே-இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லை யே!
அடிமை இந்தியாவில் நிலை கெட்டு வாழ்ந்து வந்த மனிதரை நினைந்து நெஞ்சு பொறுக்காமல் இவ்வாறு மனம் குமுறிப் பாடிச் சென்றான் மகாகவி பாரதி. தென்பாண்டிச் சீமையின் வறண்ட, வானம் பார்த்த பூமியான கோவில்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த எட்டயபுரத்தில் வளர்ந்து ஆளானவன் அவன். எனவே அந்த மண்ணில் அடிக்கடி தலைதூக்கிய பஞ்ச நிலைமைகளை அவன் நேரிலேயே கண்டிருக்கக் கூடும்.
பாரதி காலத்துக்குப் பின்னரும் இந்திய மக்கள் பஞ்சங்களைப் பார்க்காமல் போகவில்லை. இந்த நூற்றாண்டில் இந்திய மக்களின் மனத்தில் வடுப் பாய்ந்தது போல் பதிந்து போனது 1943 ஆம் ஆண்டு வாக்கில் நிலவிய வங்காளப் பஞ்சம் தான். சென்ற இரண்டாவது யுத்த காலத்தில் கங்கை நதி பாயும் வங்க வள நாட்டில் தோன்றிய இந்தப் பஞ்சம், நீர்வளம் பொய்த்து நிலம் வறண்டு போனதால் ஏற்பட்ட பஞ்சம் அல்ல. மாறாக, அது கள்ளச் சந்தைக்காரர்களாலும், கொள்ளை லாபக்காரர் களாலும், அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்தாலும் உருவாக்கப் பட்ட பஞ்சமேயாகும். இந்தப் பஞ்சத்தால் வங்க நாடே சீரழிந்தது. இதன் விளைவாக, இந்திய நாட்டின் முதற்பெரும் நகரமான கல்கத்தாவின் நாகரிகம் மிக்க வீதிகளிலே நாதியற்றுச் செத்து விழுந்த பிணங்கள் நாறத் தொடங்கின. ஐம்பது லட்சம் மக்களைத் தின்று தீர்த்துப் பசியாறியது இந்தப் பஞ்சம்.
கங்கையும் காவிரியும் வேறு பல நதிகளும் பாய்கின்ற நாடு தான் இந்தியா. என்றாலும் அன்னியர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்கள் எண்ணிறந்தவை. இந்தியாவை நாகரிகப்படுத்துவதாகச் சொல்லிவந்த ஆங்கிலேயர்கள், இந்திய நாட்டுக் கிராமங்களை அபிவிருத்தி செய்யவோ, பாசன வசதிகளைச் செய்து தரவோ போதிய அக்கறை காட்டவில்லை. மாறாக, அவர்கள் இந்திய விவசாயிகளை மேலும் மேலும் ஓட்டாண்டிகளாக்குவதிலேயே கவனம் செலுத்தினார்கள். எனவே அரை வயிறும் குறை வயிறுமாக வாழ்ந்து வந்த மக்கள். இயற்கையின் வஞ்சனையால் வானம் பொய்த்து விட்டால், உடனே பஞ்சத்துக்கு இரையானார்கள். இந்த நிலைமை மிகவும் வாடிக்கையாக இருந்து வந்தது. எனவே 1941ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ரவீந்திரநாத் தாகூர் தாம் காலமாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னால், மிஸ் ராத்போன் என்ற ஆங்கில மாதொருத்திக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் நேர்ந்த காலத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியாவை நாகரிகப்படுத்திய லட்சணத் தைப்பற்றிப் பின் வருமாறு ஆத்திரத்தோடு எழுதினார் :
“இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, எங்கள் நாட்டின் மூலாதாரக் செல்வங்களைக் சுரண்டிக் கொண்டும். எங்கள் நாட்டுச் செல்வங்களையெல்லாம் மடியில் இறுகக் கட்டிக் கொண்டும் இருந்த பிரிட்டிஷ்காரர்கள், எங்கள் நாட்டு ஏழை மக்களுக்கு எதைச் சாதித்து விட்டார்கள்? எங்கெங்கு திரும்பி னாலும் உணவுக்காகக் கதறுகின்ற வற்றி மெலிந்த உடலங்க ளையே நான் காண்கிறேன். குடிப்பதற்குச் சில சொட்டுத் தண்ணீராவது கிடைக்காதா என்று கிராமப்புறங்களில் பெண்கள் சேற்று மண்ணில் ஊற்றுத் தோண்டும் காட்சிகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தியக் கிராமங்களில் பள்ளிக் கூடங்கள் இல்லாத பஞ்சத்தை விட, கிணறுகள் இல்லாத பஞ்சம் தான் பெரிய பஞ்சம். பஞ்சத்தில் மக்கள் பசியால் துடித்துச் சாவதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அத்தகைய சந்தர்ப்பத்திலும், அவர்களுக்குப் பக்கத்து ஜில்லாவிலிருந்து ஒரு வண்டி அரிசி கூட உதவிக்கு வந்து சேர்ந்ததில்லை … ”
இதே போன்று பண்டித ஜவஹர்லால் நேருவும் (தமது மகள் இந்திராவுக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்பாக அமைந்த) தமது ‘உலக சரித்திரம்' (Glimpses of World History) என்ற நூலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்கள் பலவற்றைக் குறித்தும், நாற்பதாண்டுக் காலத்தில் ஏறக்குறைய ஒரு கோடி மக்களைத் தின்று தீர்த்த பஞ்ச நிலைமைகளைக் குறித்தும் பின்வருமாறு எழுதியுள்ளார் :
“நாற்பதாண்டுகளுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நாட்டை உலுக்கிய நான்கு பெரும் பஞ்சங்களைப்பற்றி நான் சுருக்கமாக ஒரு பாராவில் கூறி விட்டேன். அவற்றில் அடங்கி யிருந்த நரக வேதனையையும் கோரக் கொடுமைகளையும் நானும் வருணிக்க முடியாது; நீயும் உணர முடியாது. உண்மையில் அதை உணராமலிருப்பதே நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவ்வுணர்ச்சியினால் உனக்கு ஆங்கிலேயர்களின் மீது ஆறாத சினமும் தீராத பகையும் மூன்வது நிச்சயம். உனது கன்னி இதயத்தில் அத்தகைய நஞ்சு தோய்வதை நான் விரும்ப வில்லை ...''
இவ்வாறு நேர்ந்த பஞ்சங்கள் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பாதித்தன; வடநாடும் தென்னாடும் பாதிக்கப் பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளைந்த பஞ்சங்களில் இரண்டு கோடி மக்கள் பட்டினிச் சாவுக்கு இரை யானார்கள் என்று ஆங்கிலேயரின் அதிகார பூர்வமான கணிப்பே கூறுகிறது. இதனைப்பற்றி இந்திய நாட்டின் பிரபல சரித்திர ஆசிரியரும், மகராஷ்டிர ஜீவன் உதயம்' ரஜபுத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம்' முதலிய சரித்திர நாவல்களின் ஆசிரியருமான ரமேஷ் சந்திர தத் என்பவர் கசப்புணர்ச்சியோடு இவ்வாறு எழுதியுள்ளார்:
“விக்டோரியா மகாராணி ஆட்சி பீடத்தில் ஏறிய ஆண்டில் (1837) வட இந்தியாவில் பெரும் பஞ்சம் ; அந்தப் பஞ்சத்தில் பத்து லட்சம் பேர் பலியானார்கள். சிப்பாய்க் கலகம் (1857ஆம் ஆண்டில் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போர்) நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இருபது ஆண்டுக்காலத்தில் மூன்று பெரும் பஞ்சங்கள் நிகழ்ந்தன. இவற்றினால் பீகார், ஒரிசா, மற்றும் வடமேற்கு மாகாணங்கள் பாதிக்கப்பட்டன. விக்டோரியா மகாராணி இந்தியாவின் சக்கரவர்த்தினியாகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஆண்டிலோ (1877) சென்னை மாகாணத்தில் மிகப் பெரும் பஞ்சம். அந்தப் பஞ்சத்தில் தென்னிந்தியாவில் ஐம்பது லட்சம் மக்கள் ஆவி துறந்தனர். மகாராணியின் வைர விழாவின் போதோ (1897) துரதிருஷ்டவசமாக இந்திய நாடு எங்கணுமே பஞ்சம்... ”
தாதுவருஷமும் தமிழ்நாடும்
இந்த நூற்றாண்டில் நிலவிய வங்காளப் பஞ்சம் பற்றி முன்னர் குறிப்பிட்டோம். வங்கப் பஞ்சத்தில் இறந்தவர்களின் தொகை ஐம்பது லட்சம். சென்ற நூற்றாண்டில், தமிழ்நாட்டில் திலவிய, ரமேஷ் சந்திர தத் குறிப்பிட்டுள்ள தாது வருஷப் பஞ்சத்தில் மடிந்தவர்களின் தொகையும் ஐம்பது லட்சம்தான். இவ்வாறு வங்கப் பஞ்சத்துக்கு நிகரான இந்தக் கோரமான, கொடிய பஞ்சம் சென்ற நூற்றாண்டின் கடைக்காலப் பகுதியில், 1876ஆம் ஆண்டுக்குச் சரியான தமிழ் ஆண்டு தாதுவில் தமிழ் நாட்டில் தலை தூக்கிப் பல ஆண்டுக்காலம் நிலவி மக்களைப் பலி கொண்டது. இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்களைப்பற்றி அறிக்கை தருவதற்கு அன்றைய ஆங்கிலேயே அரசாங்கம் நிறுவிய பஞ்சக் கமிஷன் அறிக்கைகளிலிருந்து, சென்னை மாகாணத்தைப் பாதித்த பின்வரும் பஞ்சங்களைப் பற்றிய விவரங்கள் கிட்டுகின்றன:
-1876-78ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தின் இருபத்தியொன்று ஜில்லாக்களில், பெல்லாரி, கர்நூல், நெல்லூர் கடப்பை, செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூர் ஆகிய ஜில்லாக்கள் நெடுங்காலத்துக்கு உண்மையிலேயே கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட ஏனைய ஜில்லாக்கள் மதுரையும் திருநெல்வேலியும் ஆகும்.
-1884ஆம் ஆண்டு : மதுரை, கோயம்புத்தூர், கடப்பை ஜில்லாக்களில் கடுமையான உணவுப் பற்றாக்குறை .....
-1890-92ஆம் ஆண்டுகள் : சென்னை மாகாணப் பஞ்சம். சென்னை மாகாணம் முழுவதிலும் ஈராண்டுகளுக்கும் மேலாக, விவசாயம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயிற்று.........
இந்த விவரங்களிலிருந்து 1876ஆம் ஆண்டு தொடங்கிய பஞ்சம் பத்துப் பதினைந்து ஆண்டுகள் வரையிலும் கூட நீடித்திருந்தது என்று நாம் தெரிந்து கொள்கிறோம். எனவேதான் தாது வருஷத்தில் தொடங்கிய பஞ்சம், வங்கப் பஞ்சத்தைப் போலவே தமிழ் நாட்டு மக்களின் நினைவில் நெடுங்காலம் வடுப் பாய்ந்து பதிந்து போயிருந்தது. இந்தப் பஞ்சத்தை அனுபவிக்க நேர்ந்த நமது முதியவர்கள் பலரும், இந்தப் பஞ்சத்தைப் பற்றிக் குறிப்பிடுவதை நாமே கேட்டிருக்கிறோம். இந்தப் பெரும் பஞ்சத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய சீமைகளைச் சேர்ந்த மக்கள் தான்.
இந்தச் சீமைகளில் பல்வேறு சமயங்களில் பல பஞ்சங்கள் தலை தூக்கியுள்ளன. மதுரையிலிருந்த கத்தோலிக்கப் பாதிரிமார்கள் ஆண்டாண்டுதோறும் ரோமாபுரிக்குத் தாம் அனுப்பிவந்த மிஷன் அறிக்கைகளில் தென்னாட்டில் நிலவி வந்த பஞ்சங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் பதினெட்டாம் நூற்றாண் டின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு பஞ்சத்தைப் பற்றி அவர்கள் குறிப்பிடும் போது, அந்தப் பஞ்சத்தில் பெற்றெடுத்த குழந்தைகளை விற்பதும், கட்டிய மனைவிமார்களை அடகு வைப்பதும் நிகழ்ந்தன என்றும், பாதையோரங்களில் பட்டினிச் சாவினால் செத்து விழுந்தவர்களுக்கு ஈமக்கடன்கள் செய்யக்கூட நாதி இருக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் அந்த அறிக்கை யொன்றில் ஓர் உள்ளம் உருக்கும் நிகழ்ச்சியின் விவரமும் காணப்படுகிறது. பஞ்சத்தினால் வாடி, பிழைப்பை நாடிச் சென்ற ஒரு கணவனும் மனைவியும் களைத்துப் போய், பாதையோரத்தில் படுத்து உறங்கினார்களாம். இடையிலே விழித்தெழுந்த கணவன் எவனோ ஒரு வழிப்போக்கனிடம் சிறிது அரிசியை வாங்கிக் கொண்டு, அதற்கு விலையாகத் தூங்கிக் கொண்டிருந்த தன் மனைவியைக் கொடுத்துவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டானாம். விழித்தெழுந்த மனைவி தன் கணவனைக் காணாமல் தவித்து, பின்னர் தன்னருகே உரிமை கொண்டாடி நின்ற நபரின் மூலம் தனது கணவனின் மானம் கெட்ட செயலைக் கேட்டறிந்தாளாம். அதனைக் கேட்டறிந்த மாத்திரத்திலேயே அவள் அவமானமும் அதிர்ச்சியும் தாங்க மாட்டாமல், அங்கேயே திடீரென்று செத்து விழுந்து, தன் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு விட்டாளாம் (மதுரை மிஷனரி 1709ஆம் ஆண்டு எழுதியனுப்பிய அறிக்கை).
இத்தகைய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த பஞ்சகாலத்திலும் கூட, தாது வருஷப் பஞ்சத்தில் இறந்த மாதிரி மக்கள் பெருவாரியான அளவில் இறக்கவில்லை. அவ்வாறாயின் தாது வருஷப் பஞ்சத்தில் எத்தகைய கோர நிகழ்ச்சிகள் எல்லாம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதை நாம் சற்றே ஊகித்துக் கொள்ளலாம். பஞ்சத்தில் அடிபட்டு லட்சக்கணக்கான மக்களை வங்க நாட்டில் பறி கொடுத்துக் கொண்டிருந்த சென்ற யுத்த கால இந்தியா ஸ்டெர்லிங் நிதியின் பேரால் எவ்வாறு இங்கிலாந்துக்குக் கோடிக் கணக்கில் கடன் கொடுத்து வந்ததோ, அதேபோல் தாது வருஷப் பஞ்ச காலத்திலும் இந்திய நாடு இங்கிலாந்துக்குத் தனது செல்வத்தை வாரிக் கொடுத்து வந்தது. இந்தப் பஞ்சத்தினால் மக்கள் ஈசலைப் போல் செத்து விழுந்து கொண்டிருந்த காலத்தில், அதாவது 1877 ஆம் ஆண்டில், இந்திய நாடு 79 லட்சம் பவுன் மதிப்புள்ள கோதுமை, அரிசி போன்ற உணவு தானியங்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தது. அந்த நூற்றாண்டின் இறுதி வரையிலும் பஞ்சம் நீடித்த போதிலும், ஏற்றுமதி குறையவில்லை. மாறாக, அதிகரிக்கவே செய்தது. அதே பஞ்ச கால இந்தியா. 1901ஆம் ஆண்டில் 3 லட்சம் பவன் மதிப்புள்ள உணவு தானியத்தை ஏற்றுமதி செய்தது. ஆனால் இந்த இரண்டு ஏற்றுமதிக் காலத்துக்கும் (1875-1900) இடைப் பட்ட காலத்தில் இந்தியாவில் ஒன்றரைக் கோடி மக்கள் பட்டினிச் சாவினால் இறந்து விட்டார்கள் என்று ஆங்கிலேயரின் அதிகார பூர்வமான கணக்கே கூறுகிறது! இவற்றை அறிந்த பின்னர் மகாகவி தாகூரும் பண்டித ஜவஹர்லால் நேருவும் எழுதியுள்ள வரிகள் எவ்வளவு உண்மையானவை என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
வங்காளப் பஞ்சத்தின் கோரத்தையும் கொடுமையையும் பிரதிபலிக்கும் பல இலக்கியங்கள் வங்க மொழியிலும், பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. அதைப் போலவே கோரமும் கொடுமையும் மிகுந்த ஒரு பஞ்சம் தமிழ் நாட்டில் நிகழ்ந்திருக்கும் போது, அதனையும், அக்காலச் சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கக்கூடிய இலக்கியங்கள் தமிழில் தோன்றியுள்ளனவா என்ற கேள்வி என்னுள் எழுந்ததுண்டு இதனால் தொடங்கிய நூல் வேட்டையின் விளைவாக, அந்தப் பஞ்சத்தைப் பிரதிபலிக்க முற்பட்ட, குறிப்பிடத்தக்க இரண்டு தமிழ் நூல்கள் எனக்குக் கிட்டின. ஒன்று சிவகங்கை ஜமீனைச் சேர்ந்த பிரமனூர் கிராமத்தில் வாழ்ந்து வந்த வில்லியப்ப பிள்ளை என்பவர் எழுதிய பஞ்சலட்சணத் திருமுகவிலாசம்; இந்நூலைத் தமிழில் தோன்றிய தலைசிறந்த அங்கத இலக்கியம் என்றே சொல்ல வேண்டும். மற்றொன்று இங்கு அறிமுகம் செய்விக்கப்படும் நூலான, திருநெல்வேலியை அடுத்துள்ள தச்சநல்லூரைச் சேர்ந்த அழகிய சொக்கநாத பிள்ளை இயற்றிய காந்தியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.
பஞ்சமும் பாட்டும்
தமிழ் இலக்கியத்தில் பஞ்சப் பாட்டுக்களுக்குக் குறைவே இல்லை . அதாவது தமிழ்ப் புலவர்கள் புரவலர்களையும், மன்னர்களையும், பிரபுக்களையும் நாடிச் சென்று, தமது வறுமை நிலையை எடுத்துக் கூறி அவர்களிடம் குறையிரந்து பாடிய பாடல்களுக்குக் குறைவே இல்லை. இத்தகைய புலவர்களை நாம் புறநானூற்றுக் காலம் தொட்டே இனம் காண இயலும். திருமுருகாற்றுப்படையைத் தவிர பெரும்பாணாற்றுப் படை, சிறு பாணாற்றுப் படை போன்ற முழு நூல்களான ஆற்றுப் படை நூல்களும், இந்த உண்மையைத்தான் பறை சாற்றுகின்றன. இவ்வாறு புலவர்கள் உதவி நாடிச் செல்வதும், உதவி கிடைத்தால் உதவியவர்களை இந்திரன், சந்திரன் என்று வானளாவப் புகழ்வதும், உதவி கிடைக்காவிட்டால், "வஞ்சகர் பால் நடந்தலைந்த காலிற் புண்ணும், வாயில் தொறும் முட்டுண்ட தலையிற் புண்ணு'' மாகத் திரும்பி வருவதும் தமிழ் இலக்கியத்தில் பரவலாகக் காணப்படும் செய்தியேயாகும். ஆனால் சமுதாயம் முழுவதையும் உலுக்கிக் குலுக்கிய உணவுப் பஞ்சங்கள் ஏற்பட்ட காலத் தில், அதனால் சமுதாய வாழ்க்கை எவ்வாறெல்லாம் பாதிக்கப் பட்டது என்பதை எடுத்துக் கூறுகின்ற புலவர் பெருமக்களை விளக்கு வைத்துத்தான் தேட வேண்டும். ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் நிகழ்ந்த பஞ்சங்களைக் குறித்து முன்னர் குறிப்பிட்டோம். இந்தப் பஞ்சங்கள் புலவர்களையும் விட்டு வைத்திருக்காது ; பஞ்சத்திலே சிக்கி அவதிப்படாத அளவுக்குத் தமிழ்ப் புலவர்கள் பணம் படைத்தவராகவும், பங்களா வாசிகளாகவும் வாழ்ந்து விடவில்லை. என்றாலும், அந்தப் புலவர்களில் சிலருக்கேனும் அந்தப் பஞ்சத்தைப் பற்றியும், அதனால் பாதிக்கப்பட்டுப் படாதபாடு பட்ட மக்களைப் பற்றியும் உணர்வோ , நினைப்போ இருந்து, அதனைப் பிரதிபலிக்கக் கூடிய பாடல்களை எழுதியுள்ளார்களா என்று பார்த்தால் அத்தகைய பாடல்கள் கிட்டுவது மிகவும் அரிதாகவே உள்ளது. "ஓர் தட்டிலே பொன்னும், ஓர் தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும் கார் தட்டிய பஞ்ச காலத்திலும்" என்று படிக்காசுப் புலவரைப் போல், போகிற போக்கில் பொதுப்படையாக ஓரிரு வரிகள் பாடிச் சென்றவர்கள் ஒரு சிலர் அகப்படலாம். ஆனால் ஐம்பது லட்சம் தமிழ் மக்களின் உயிர்களைக் குடித்த தாது வருஷப் பஞ்சத்தை, அதனால் விளைந்த கொடிய சமுதாயச் சீர்கேட்டை, அதில் மக்கள் பட்ட துன்ப துயரங்களை எத்தனை தமிழ்ப் புலவர்கள் தமது பாடல்களில் பாடிச் சென்றனர்? இந்தக் கேள்வியை நெஞ்சில் நிறுத்திக் கொண்டு , தமிழ் இலக்கியத்தைத் துருவிப் பார்த்தால், நமக்குக் கிட்டும் விவரங்கள் மிகவும் அற்ப சொற்பமானவையாகவே உள்ளன.
என்றாலும், தமிழ்ப் புலவர்கள் பலரும் செய்யாத ஒரு காவியத்தைப் புலமை அறிவே இல்லாத பாமர மக்கள் செய்திருந்தனர் . இலக்கிய ஏடுகளிலும், தனிப்பாடல் திரட்டுக்களிலும், சில்லரைப் பிரபந்தங்களிலும் காணப்படாத விவரங்கள் வாய் மொழி வழக்காக வழங்கி வந்துள்ள பல்வேறு நாட்டுப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. மண்ணை நம்பி வாழ்ந்த மக்கள் தமது அனுபவத்தில் பிறந்த உணர்ச்சிகளுக்கு அருமையான உருவம் கொடுத்திருக்கிறார்கள். ஆம். அவர்களது வாய் பாடா விட்டாலும், வயிறு பாட வைத்து விட்டது. இவ்வாறு பஞ்தத்தின் கொடுமையால் அவதிப்பட்ட மக்கள் மத்தியில் தோன்றிய பாடல்கள் பலப்பல. உதாரணமாக,
மாசி மழை பேயாதோ?
மழை வெள்ளம் சாயாதோ?
ஏத்து மீன் ஏறாதோ?
எங்கள் பஞ்சம் தீராதோ?
நித்தம் கவலைகளோ?
நெடுநாளும் துன்பங்களோ?
பாரக் கவலைகளோ?
பல நாளும் தொல்லைகளோ?
கன்னங் கறுத்த மழை
காலூணிப் பெய்யு மழை
இன்னம் கறுக்க வேணும்!
எங்கள் பஞ்சம் தீரவேணும் !
என்றெல்லாம் விவசாய மக்கள் தமது பஞ்சகாலத் துயரைப்பாடி வைத்திருக்கிறார்கள். இவை தவிர - மழை வெய்ய வேண்டு மென்பதற்காக மழைக் கஞ்சி எடுப்பது கொடும் பாவிகட்டி இழுப்பது, கொடை நடத்துவது முதலிய சந்தர்ப்பங்களிலும் அவர்கள் பாடும் பாட்டுக்கள் பஞ்சக் கொடுமையை நமக்கு எடுத்துக் காட்டுவனவாகும். இத்தகைய மக்களைத் தவிர மக்களோடு ஒன்றி நின்று அவர்களது வழக்கு மொழியில் மக்களுக்காகப் பாடல்கள் இயற்றிய அம்மானைக் கவிஞர்கள் சிலரும் பஞ்சக் கொடுமையைப் பற்றிப் பாடியுள்ளனர். அல்லி அரசாணி மாலை, நல்ல தங்காள் கதை முதலிய அம்மானைப் பாடல்களில் பஞ்சத்தால் சமுதாயம் பாதிக்கப்பட்ட விவரங்கள் சிலவற்றைக் காணலாம்.
வாய்மொழி வழக்காக இருந்து வந்த நாட்டுப் பாடல்கள் சில தாது வருஷப் பஞ்சம் பற்றியும் கூறுகின்றன. அவற்றில் ஒரு பாடல் அந்தப் பஞ்சத்தில் ஒவ்வொரு மாதத்திலும், அதாவது ஆண்டு முழுவதிலும் மக்கள் பட்ட அவதிகள் என்னென்ன என்று விவரிக்கிறது. அதிலிருந்து. இதோ சில வரிகள்
தாது வருஷப் பஞ்சத்திலே - ஓ! சாமியே!
தாய் வேறே! பிள்ளை வேறே!
காட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ ! சாமியே!
வீட்டுப் பக்கம் நூறு பிணம்!
ரோட்டுப் பக்கம் நூறு பிணம்! - ஓ ! சாமியே!
மேட்டுப் பக்கம் நூறு பிணம்!
ஆத்திலேயும் தண்ணியில்லை - ஓ! சாமியே!
குளத்திலேயும் தண்ணியில்லை!
தண்ணித் தாகத்தால் வறண்டு - ஓ! சாமியே!
தவறானது கோடி சனம்!
கஞ்சியில்லாது தவித்து - ஓ ! சாமியே!
காட்டில் மாண்டது கோடி!
வேதநாயகம் பிள்ளை
தாது வருஷப் பஞ்சத்தின் போது தோன்றிய நாட்டுப் பாடல்களையும், வில்லியப்ப பிள்ளையும் அழகிய சொக்கநாத பிள்ளையும் இயற்றியுள்ள பிரபந்தங்களையும் தவிர, அந்தப் பஞ்சத்தைப் பற்றித் தமிழ்ப் புலவர்கள் எவரேனும் பாடியுள்ள தனிப் பாடலோ பாடல்களோ உள்ளனவா என்று தேடும்போது, நமக்குத் தென்படக் கூடியவை ஒரே ஒரு புலவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையும், அவர் இயற்றிய சில பாடல்களும் தான். தமிழில் தோன்றிய முதல் நாவல் என இலக்கிய விமர்சகர்களால் கருதப்படும் ‘பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நூலை எழுதியவர் அவர். தமிழ் வசன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கிய வேதநாயகம் பிள்ளை அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்தின் கீழ் ஜில்லா முனிசீபாகப் பணியாற்றியவர். இவர் ஒருவரே தமது வாழ் நாட்காலத்தில் நிலவிய பஞ்ச நிலைமை குறித்துச் சில பாடல்கள் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் மழையில்லாதிருந்த கொடுமையைப் பற்றி அவர் சில வெண்பாக்களும் விருத்தங்களும் பாடியுள்ளார். அந்த வெண்பாக்களில் இரண்டு வருமாறு:
அம்புவியைத் தீயால் அபிஷேகம் செய்தது போல்
வெம்புகதிர் எட்டுக்கண் விட்டெரிக்க-பைம் புயலே!
வானம் வேக, மலையும் வேக, வனமும் வேக, மனமும் வேக
ஈனமாக நீ வராத (து) ஏன்?
உண்நீர் இலாமையினால் உள்நீரும் வற்றி அழக்
கண்ணீரும் வற்றியது கந்தரமே! - தண்ணீரின்
பஞ்சம் உனக்குண்டோ ? பாரோர்க்கு இரங்காத
நெஞ்சம் உனக்(கு) இரும்பு நிகர்
[புயல் : மழை : கந்தரம் : மேகம்]
இவ்வாறு வானமழை பொய்த்த கொடுமையைப் பாடிய வேதநாயகம் பிள்ளை, படிப்படியாகப் பொன் கொட்டி நெற்கொள்ளும் அந்தப் பஞ்ச காலத்தில், திருவாவடுதுறை ஆதீன கர்த்தாவான சுப்பிரமணிய தேசிகர் பஞ்சத்தினால் அவதியுற்ற மக்களுக்குக் கஞ்சித் தொட்டி முதலியன வைத்து ஆதரித்ததையும் பல விருத்தங்களில் பாராட்டிப் பாடியுள்ளார்.
மேலும் நிலமெல்லாம் விளைச்சலற்றுத் தரிசாகக் கிடந்த அந்தப் பஞ்ச காலத்திலும், அந்த விளைவில்லா நிலங்களுக்கு வரி வசூல் செய்வதை நிறுத்தி வைக்கவோ, தள்ளுபடி செய்யவோ முனையாது, அந்தக் காலத்திலும் நிலவரியை வசூலிக்க முனைந்த ஆங்கிலேயர் ஆட்சியையும் அதன் அதிகாரிகளையும் குறித்தும் அவர் இரண்டு விருத்தங்கள் பாடியுள்ளார். இரண்டும் சிவனையும் திருமாலையும் பற்றி நிந்தாஸ்துதியாகப் பாடிய பாடல்களாகும். சிவபெருமானிடம் மாடு இருந்தும், அதனை மேய்ப்பதற்கு மைத்துனனான திருமால் இருந்தும், உழுவதற்குக் கையிலே சூலமிருந்தும், பெரிய நிலப்பரப்பும் இருந்தும் கூட, அவன் ஏர் பிடிப்பதை விட்டுவிட்டு, பிச்சை எடுத்துத் திரிவதற்குக் காரணம், இந்த இரக்கச் சித்தம் இல்லாது நில வரி வசூல் செய்யும் அதிகாரிகள் தாம் என்று பாடியுள்ளார். அவர்
அழல் ஒக்கும் கோடை நட்டுப்
பாழிலே அதிகாரிகள் செய்
இழவுக்கு அஞ்சி ஏர்விட்டு
அரன் பிச்சை ஏற்றனனே.
இதே போன்று திருமாலைப்பற்றிய நிந்தாஸ்துதியிலும், திருமாலுக்கு மகாபலிச் சக்கரவர்த்தி தந்த மூவடி மண்ணும், கோகுலத்தில் மேய்த்த மாடுகளும், பரசுராமனின் கலப்பையும் இருந்தும் கூட, அவனும் இத்தகைய அதிகாரிகளின் கொடுமைக்கு அஞ்சியே பயிர்த்தொழிலை மேற்கொள்ளாது மண்ணைத் தின்று வாழ்ந்தான் என்று அவர் பாடியுள்ளார்.
இங்கு ஓர் உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. இந்த நிந்தாஸ்துதிப் பாடல்களின் மூலம் வேதநாயகம் பிள்ளை நிலவரி வசூல் செய்யும் அதிகாரிகளை, அதாவது அரசாங்கத்தின் பிரதி நிதிகளை மறைமுகமாகத் தாக்கியுள்ளார். விளைச்சலற்ற காலத்தில் வரிகளைத் தள்ளுபடி செய்யாமலிருப்பது அநியாயம் என்பதையும் அவர் சொல்லாமற் சொல்லிச் சுட்டிக் காட்டியுள்ளார். சுருங்கச் சொன்னால், அரசாங்கத்தின் நிதி வசூல் இலாகாவுக்கு எதிராகவே பிரசாரம் செய்திருக்கிறார். அவர் அந்த அரசாங் கத்தின்கீழ் பணியாற்றி வந்த ஒரு ஜில்லா அதிகாரி என்பதை நாம் கருத்தில் கொண்டால், அவரது துணிச்சலையும் மனிதாபிமான உணர்ச்சியின் வெளிப்பாட்டையும் நாம் நன்கு புரிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்ல. அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய புலவர்களுக்கும் அவருக்கும் இருந்த ஒரு வேற்றுமையையும் நாம் தெரிந்து கொள்ளலாம். அவரோ அரசாங்க ஜில்லா அதிகாரி; நீதிபதி. அந்தப் பதவியின் மூலம் நல்லதோர் ஊதியத்தையும் அந்தஸ்தையும் பெற்று வாழ்ந்தவர். அந்தக் காலத்தில் நிலவிய பஞ்சத்தினால் பாதிக்கப் படாதவர். ஆனால் அவரது காலத்தில் ஏனைய புலவர்கள் பலரும் வறுமை வாய்ப்பட்டவர்கள்; பஞ்சத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள்; எந்நேரமும் புரவலர்களை நாடி ஆதரவு தேடியவர்கள். எனவே அவர்கள் தான் மக்கள் பட்ட அவதிகளைக் குறித்துப் பெரிதும் பாடியிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத மனிதாபிமான உணர்ச்சியும் சமுதாய உணர்வும் அரசாங்க உத்தியோகத்திலிருந்த வேதநாயகம் பிள்ளையிடம் தான் காணப்பட்டன என்பதே அந்த வேற்றுமையாகும்.
தனிப் பாடல்கள் என்று பார்த்தால் தாது வருஷப் பஞ்சம் பற்றிப் பாடியுள்ள தமிழ்ப் புலவர் இவர் ஒருவரே எனலாம். எனவேதான் இவரைப் பற்றி இங்குக் குறிப்பிட்டோம். என்றாலும், பஞ்சத்தின் பல்வேறு தன்மைகளையும் நாம் புரிந்து கொள்ள உதவுகின்ற நூல்கள் பஞ்சலட்சணத் திருமுக விலாசமும், காந்திமதி அந்தாதியும் தான். இவ்விரண்டிலும் பஞ்சலட்சணம் தான் தலை சிறந்தது; ஈடு இணையற்றது. காந்திமதி அந்தாதி அளவிலும் தரத்திலும் பஞ்சலட்சணத்தை விட மிகவும் தாழ்ந்த, மிகவும் சிறிய நூலேயாகும். என்றாலும் அதுவும் பஞ்சத்தின் தன்மைகளையும், அவற்றால் விளைந்த பரிதவிப்பையும் நன்றாகவே எடுத்துக் கூறுகின்றது.
அழகிய சொக்கநாத பிள்ளை
காந்திமதி அந்தாதியை இயற்றிய அழகிய சொக்க நாத பிள்ளை சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த புலவராவார். இவரது வாழ்க்கை வரலாறு பற்றி. இவரது சமகாலப் புலவரும், இவரை நன்கறிந்தவருமான வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார் எழுதியுள்ள கட்டுரையின் மூலமும் (வித்துவான் அழகிய சொக்கநாத பிள்ளை - கரந்தைக் கட்டுரை, வெள்ளி விழா மலர்), அழகிய சொக்கநாதபிள்ளையின் நூல் ஒன்றில் இடம் பெற்றுள்ள அவரது வாழ்க்கை வரலாறு மூலமும் (திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தச்சநல்லூர்க் கலை மன்ற வெளியீடு, 1957) சில விவரங்களை நாம் தெரிந்து கொள்கிறோம். அழகிய சொக்கநாத பிள்ளை திருநெல்வேலி நகருக்கு வடக்கே ஒரு மைல் தூரத்திலுள்ள தச்சநல்லூர் என்ற ஊரில் சுத்த சைவ வேளாளர் மரபில் வந்த வன்னியப்ப பிள்ளைக்கும், அவரது துணைவியார் சுப்பம்மாளுக்கும் மகனாக 1836ஆம் ஆண்டில் பிறந்தார். அழகிய சொக்கநாத பிள்ளையின் தந்தை வன்னியப்ய பிள்ளை தமிழ்ப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர், இலக்கண இலக்கிய அறிவும் தமிழ்ப் புலமையும் மிக்கவர். அழகிய சொக்கநாத பிள்ளை தமது தந்தையையே குருவாகக் கொண்டிருந்தார் என்பது,
…. கடையனேன் தனையும் மகவென்று
இனிது பெற்று, அருமையில் வளர்த்துப் படிப்பித்து
இகத்தோடு பரத்தும் இன்பம்
எய்த அருள் உபதேசம் உதவு சற்குருவான
எந்தை தாள் சிந்தை செய்வாம்
என்று ‘திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்' நூலுக்கு அவர் பாடியிருந்த குருவணக்கப் பாடல் மூலம் தெரிய வருகிறது.
வன்னியப்ப பிள்ளையின் இளவலான கணபதியா பிள்ளை என்ற கணபதி வாத்தியாரும் கல்வியறிவும் தமிழ்ப் புலமையும் மிக்கவர் என்றும், அவர் திருநெல்வேலி தெற்குப் புதுத்தெருவில் (இன்றைய வ. உ. சி. தெரு) இருந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தலைமை ஆசிரியராகவும் இருந்தார் என்றும், அவரிடம் தாமும் தமது பாலப் பருவத்தில் கல்வி கற்றதாகவும் வெ.ப. சு. எழுதுகிறார். எனவே அழகிய சொக்கநாத பிள்ளையின் தமிழ்ப் புலமையை வளர்ப்பதற்கு அவரது சிறிய தந்தையான கணபதி வாத்தியாரும் உறுதுணையாக இருந்திருக்கக் கூடும் என நாம் ஊகிக்கலாம்
அழகிய சொக்கநாத பிள்ளை தமது தந்தையாரிடம் தமிழ் கற்றதோடு, ஆங்கிலமும் கற்றுக் கொண்டதாகவும், தமது தந்தை காலமான பின்னர் தமது பள்ளிப் படிப்பை விடுத்து. தாமே சிறிது காலம் தமிழ்த் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்ததாகவும் மேற்கூறிய வாழ்க்கை வரலாறு கூறுகிறது. இதன்பின்னர் அவர் திருநெல்வேலி முனிசீப் கோர்ட்டில் எழுத்தராகப் (காப்பிஸ்ட்) பணியாற்றி வந்திருக்கிறார். இதனால் அவர் திருநெல்வேலி நகரிலேயே பின்னர் குடியிருந்து வந்திருக்கிறார் என்பது, அவர் தம் வாழ்நாளில் வெளியிட்ட ‘பத சாகித்தியங்கள்' என்ற நூலில், ‘திருநெல்வேலி புதுத் தெருவிலிருக்கும் அழகிய சொக்கநாத பிள்ளை' என்று தம்மைக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் உறுதிப் படுகின்றது. ஆயினும், அது தெற்குப் புதுத் தெருவா அல்லது கீழப் புதுத் தெருவா (இன்றைய பாரதியார் தெரு) என்று தெரிய வில்லை .
அழகிய சொக்க நாத பிள்ளை தமது இருபத்தைந்தாம் வயதில், 1861 ஆம் ஆண்டில் வள்ளியம்மை என்ற மாதை மணம் புரிந்தார். இந்தத் தம்பதிகளுக்கு நெல்லை நாயகம் என்ற மகனும், சுப்பம்மாள் என்ற மகளும் பிறந்தனர். எனினும் வள்ளியம்மை 1879 ஆம் ஆண்டில் காலமாகி விட்டார். இவர் நோயுற்று நெடுங்காலம் படுக்கையில் கிடந்தபோது, அழகிய சொக்கநாத பிள்ளை தம் மனைவிக்கு உற்ற துணையாக இருந்து பணிவிடை செய்து வந்தார் என்றும், அவரே தமது கவியொன்றில் தம்மைப் பற்றிப் பாடியது போல் ‘தேளும் பாம்பும் போலப் பாழ்த்த வறுமையும் கடனும் படுத்துகின்ற’ பாட்டுடன் தான் அவர் வாழ்ந்து வந்தார் என்றும் வெ. ப. சு. எழுதுகிறார். முதல் மனைவியின் மரணத்துக்குப் பின் அழகிய சொக்கநாத பிள்ளை 1880 ஆம் ஆண்டில் காந்திமதி என்னும் மாதை மணந்து கொண்டார். இரண்டாவது மனைவி மூலம் இவருக்கு மேலும் மக்கட்பேறு கிட்டியதா என்பதை இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. அழகிய சொக்கநாத பிள்ளை ஆங்கில அறிவும், தமிழ்ப் புலமையும், கவிபாடும் ஆற்றலும் மிக்கவராக இருந்ததோடு, இசையோடு பாடுவதிலும் வல்லவராக இருந்தார் என்றும், அழகிய சொக்கதாத பிள்ளை பாடுவதைக் கேட்டுத் தாம் பெருமிதம் கொண்டதாகவும், தாமும் தமிழ் இசையில் பெரும் நாட்டம் கொண்டதாகவும் திருவனந்தபுரம் இலக்குமணப்பிள்ளை தமது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார் என்றும் மேற்கூறிய வாழ்க்கை வரலாறு தெரிவிக்கிறது. அத்துடன் அவர் ஓவியம் தீட்டுவதிலும் வல்லவராக இருந்தார் என்றும், தமது காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூலின் கையெழுத்துப் பிரதியின் முகப்பில் அவர் காந்திமதியம்மையின் திருவுருவப் படத்தையும் தீட்டியிருந்தார் என்றும் ‘வாழ்க்கை வரலாறு’ தெரிவிக்கிறது. இவ்வாறு பல துறைகளிலும் வல்லவராக இருந்த அழகிய சொக்கநாத பிள்ளை தமது நாற்பத்-தொன்பதாவது வயதில், 1885ஆம் ஆண்டில் காலமானார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறிகிறோம்.
அழகிய சொக்க நாத பிள்ளையை நேரில் அறிந்த வெ.ப. சு., திருநெல்வேலியில் வாழ்ந்த தளவாய் இராமசாமி முதலியார் அரண்மனையில் முதன் முதலாக இவரை யான் பார்க்கும்படி வாய்த்தது. செந்நிற மேனியும், சிறிது நீண்ட வட்ட முகமும், சற்றுக்குறைய ஐந்தரையடி உயரமும், நடுத்தரமான உயரமும் பருமையையும் உடையவராகக் காணப்பட்டார் அவர்,” என்று எழுதுகிறார். சி. வை. தாமோதரம் பிள்ளை தயாரித்து வந்த தொல்காப்பியப் பதிப்புக்கு உதவியாக, தளவாய் இராமசுவாமி முதலியாரின் ஆணைப்படி, அவரது அரண்மனைக்கு வந்து, திருநெல்வேலிக் கவிராயர் வீட்டுத் தொல்காப்பிய ஏட்டுச்சுவடியைப் பார்த்து, அழகிய சொக்கநாத பிள்ளை அந்தச் சுவடியைக் காகிதத்தில் பிரதி பண்ணிக் கொண்டிருந்த காலத்தில்தான் வெ . ப . சு. அவரை நேரில் கண்டார். அழகிய சொக்கநாத பிள்ளையின் தமிழ் எழுத்துக்களும் சரி, ஆங்கில எழுத்துக்களும் சரி , மிகவும் அழகாக இருக்கும் என்று வெ. ப. சு. குறிப்பிடுகிறார்.
அழகிய சொக்கநாத பிள்ளை தளவாய் இராமசுவாமி முதலி யாரின் மாளிகையில் காலை பத்து மணி வரையிலும் பிரதி எடுக்கும் எழுத்து வேலையில் ஈடுபட்டிருந்தார் என்றும், அதன் பின் அவர் திருநெல்வேலி முனிசீப் கோர்ட்டில் தாம் பார்த்து வந்த எழுத்தர் (காப்பியிஸ்ட்) வேலைக்குச் சென்று வருவார் என்றும் வெ.ப. சு கூறியுள்ளார். இந்த எழுத்தர் வேலைக்கு அவருக்குக் கிடைத்து வந்த சம்பளம் மாசம் பத்து ரூபாய். அழகிய சொக்கநாத பிள்ளை சிலேடையாகப் பேசுவதில் வல்லவராதலால், அவரது சம்பளம் என்ன என்று கேட்பவர்களிடம், இந்தச் சிறு தொகையான பத்து ரூபாயை ‘மா - சம்பத்து' என்று சிரித்துக் கொண்டே சொல்வாராம். இதேபோல் அவரது நண்பர் ஒருவர் மற்றொருவரது பொடிமட்டையை எடுத்து ஒளித்து வைத்து, மட்டைக்குரியவர் அதனைத் தேடித் தவித்த காலத்தில், அந்த நண்பர் சிரிக்கக் கண்ட அழகிய சொக்கநாத பிள்ளை, சிரித்தவரை நோக்கி, ''பொடி வைத்துத்தானே நகை செய்ய வேண்டும்!'' என்று (பொற்கொல்லர்கள் செம்புப் பொடி வைத்து ஊதி, நகைகள் செய்வதைக் கருத்தில் கொண்டு) சிலேடையாகக் கூறினாராம்.
திருநெல்வேலி நகரில் தெற்குப் புதுத் தெருவின் தென் சரகில் மேல்கோடியில் கல்வியும் செல்வமும் நிரம்பப் பெற்ற கவிராச நெல்லையப்ப பிள்ளை என்பார் தமது மாளிகையில் வாழ்ந்து வந்தார். அந்த மாளிகைக்குப் பின்புறமுள்ள பூந்தோட்டத்தில் வாய்க்கால் கரையை ஒட்டி, ஒரு பூசை மடமும் மடைப் பள்ளியும், அதற்கு அருகே ஒரு சவுக்கையும் இருந்து வந்தன. அந்தச் சவுக்கை வள்ளல் முத்துசாமிப் பிள்ளை என்பார் நெடுங்காலம் வசித்து வந்த இடமாகவும், புலவர்கள் வந்து கூடும் இடமாகவும் இருந்தது என்று வெ. ப . சு. எழுதுகிறார். வள்ளல் முத்துசாமிப் பிள்ளை கார்காத்த வேளாளர் மரபில் வந்தவர்: அவர் திருநெல்வேலிக்கு வடக்கே சுமார் நான்கு மைல் தொலைவில் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர்; அவர் தெற்குப் புதுத் தெருவில் குடியிருந்து, தம்மைக் காணவரும் புலவர்களுக்கு வேண்டும் பொருளுதவி புரிந்து ஆதரித்து வந்தார். அவரைக் காண மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஜில்லாக்களைச் சேர்ந்த புலவர்கள் வருவதுண்டு எனவும், வேம்பத்தூர் பிச்சுவையர், கல்போது புன்னைவனைக் கவிராயர், முகவூர் கந்தசாமிக் கவிராயர். இவரது புதல்வரான எட்டயபுர சமஸ்தான வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, முகவூர் இராமசாமிக் கவிராயர். இவரது புதல் வர்களான அருணாசலக் கவிராயர், சுப்பிரமணியக் கவிராயர், சின்னிகுளம் அண்ணாமலை செட்டியார், ஊற்றுமலை சமஸ்தான வித்துவான்களான முத்துவீருப்புலவர் மற்றும் கந்தசாமிப் புலவர், திருநெல்வேலி முத்துப்புலவர் முதலியோரும் முத்துசாமிப் பிள்ளையைக் காண வந்தனர் என்றும், இவர்களோடு கவிராக நெல்லையப்ப பிள்ளையும் அழகிய சொக்கநாத பிள்ளையும் உடனிருப்பர் என்றும், முத்துசாமிப் பிள்ளையும் அழகிய சொக்கநாத பிள்ளையும் கம்பனும் சடையப்ப வள்ளலும் போல நண்பர்களாக இருந்தனர் என்றும் வெ. ப. சு. தெரிவிக்கிறார். மேலும் தம்மை ஆதரித்து வந்த வள்ளல் முத்துசாமிப் பிள்ளை மீது அழகிய சொக்கநாத பிள்ளை பாடிய காதல் பிரபந்தமும். சிங்காரக் கவிதா மஞ்சரியும் தெற்குப் புதுத்தெருச் சவுக்கையில் தான் அரங்கேற்றப்பட்டன என்றும், அவர் பாடிய காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூலை அவர் கொல்லம் 1055ஆம் ஆண்டு (கி. பி. 1880) தை மாதம் 27ஆம் தேதியன்று இரவில் காந்திமதியம்மன் சன்னதியில் அரங்கேற்றினார் என்றும் அவர் குறிப்பிடு கிறார். இந்நூலை அரங்கேற்றிய காலத்தில் வள்ளல் முத்துசாமிப் பிள்ளை அழகிய சொக்கநாத பிள்ளைக்கு வைரக்கடுக்கன்களை அணிவித்துக் கௌரவித்தார் என்ற செய்தி, அந்நூலுக்குத் திருநெல்வேலி கவிராச நெல்லையப்ப பிள்ளை இயற்றிக் கொடுத்த சாற்றுக்கவி மூலம் தெரிய வருகிறது.
இயற்றியுள்ள நூல்கள்
அழகிய சொக்கநாத பிள்ளை இயற்றியுள்ள நூல்களில்
1) காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், 2) பத சாகித்தியங்கள்,
3) சிங்காரப் பதம், 4) அனவரத தான நாதர் பதிகம்,
5) காந்திமதியம்மை பதிகம், 6) காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி,
7) நெல்லை நாயக மாலை, 8) முத்துசாமிப் பிள்ளை பேரில் காதல் பிரபந்தம்,
9) முத்துசாமிப் பிள்ளை பேரில் சிங்காரக் கவிதா மஞ்சரி,
10) சோமசுந்தரக் கடவுள் விருத்த குமார பாலரான திருவிளையாடற்கும்மி ஆகிய நூல்கள் அச்சானவை என்றும்,
11) சங்கர நயினார் கோயில் கோமதி அந்தாதி, 12) ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை அந்தாதி,
13) தாணு மால் பதிகம் (சிவனுக்கும்திருமாலுக்கும் சிலேடையாகப் பாடியது)
ஆகியவை அச்சேறாதவை என்றும் வெ. ப. சு. வின் கட்டுரை, மற்றும் ‘வாழ்க்கை வரலாறு' ஆகியவற்றின் மூலம் தெரிய வருகின்றது. இவை தவிர அவர் ஏராளமான தனிப்பாடல்களையும், இசை நயம் மிகுந்த கும்மிப் பாடல்களையும், பிற பாடல்களையும் இயற்றியுள்ளார் என்று பிற தகவல்களின் மூலம் தெரிய வருகின்றது. இவரது தனிப் பாடல்களும், முத்துசாமிப் பிள்ளை மீது இவர் பாடிய பல பாடல்களும் பல்வேறு தனிப்பாடல் திரட்டுக்களிலும் இடம் பெற்றுள்ளன. பொதுவாகச் சொன்னால், இவரது காலத்தில் வாழ்ந்த ஏனைய புலவர்கள் பலரையும் போலவே, இவரும் சிலேடை, மடக்குப் போன்ற சித்துவித்தைப் பாடல்களையும், சிருங்கார ரசம் (விரசமும் கூடத்தான்) மிகுந்த பாடல்களையுமே பெரிதும் பாடியிருக்கிறார். என்றாலும், தெய்வங்களின் மீது இவர் பாடியுள்ள பிரபந்தங்கள் சிலவற்றில் அற்புதமான சொல்லாட்சியும் கவிதை நயமும் மிக்க பாடல்கள் பல காணப்படுகின்றன. இவர் பாடியுள்ள கோமதி அந்தாதியில் ஒரு பாட்டு :
கேடாய் வரும் நமனைக் கிட்ட வராதே! தூரப்
போடா!' என்றோட்டி, உன் பொற்கமலத் தாள் நிழற்கீழ்
வாடா என அழைத்து வாழ்வித்தால், அம்ம! உனைக்
கூடாது என்று யார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே
இந்தப் பாடலின் வடிவ அமைப்பையும் கவிச் சுவையையும், கோமதித்தாயோடு உள்ளங்கலந்த உறவோடு பாடும் பாவத்தையும், ரசிகமணி டி. கே. சி. அவர்கள் ரசித்து ரசித்துக் கூறுவதை நானும் கேட்டிருக்கிறேன். மேலும் அவர் ‘திருநெல்வேலியும் கவியும்’ என்ற தமது கட்டுரையில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டு ‘பக்தியானது தமிழுக்குள்ளே வளைந்து வளைந்து ஓடுவது எவ்வளவு அழகாய் இருக்கிறது!'' என்று வியந்தும் கூறியிருக்கிறார் (இதய ஒலி - கட்டுரைத் தொகுப்பு)
இதேபோல் அழகிய சொக்கநாத பிள்ளை இயற்றியுள்ள காந்திமதியம்மைப் பிள்ளைத் தமிழில் வாரானைப் பருவம் (வருகைப்பத்து) பகுதியில் ஓர் அருமையான பாடல் இடம் பெற்றுள்ளது. பாடல் வருமாறு:
வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மையெழுதேன்;
மதிவாணுதற்குத் திலகமிடேன்;
மணியால் இழைத்த பணிபுனையேன்;
பேராதரத்தி னொடு பழக்கம்
பேசேன்; சிறிதும் முகம் பாரேன்;
பிறங்கு முலைப்பால் இனி தூட்டேன்;
பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத்
தேரார் வீதி வளம் காட்டேன்;
செய்ய கனிவாய் முத்தமிடேன்;
திகழு மணித் தொட்டிலிலேற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தட மார்பில்
தவழும் குழந்தாய்! வருகவே !
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே ! வருக வருகவே!
பாடலில் ‘பழக்கம் பேசுதல்' (குழந்தையிடம் அர்த்தமில்லாமல் பேசி மகிழ்தல்) 'ஒக்கலில் வைத்தல்' (இடுப்பில் வைத்தல்) ஆகிய திருநெல்வேலி வழக்குச் சொற்கள் அருமையாகப் பொருத்தி வந்துள்ளன.
இத்தகைய பாடல்களைத் தவிர, இவர் பாடியுள்ள காதல் பிரபந்தங்கள், மற்றும் முத்துசாமிப்பிள்ளை பேரில் பாடிய பாடல்கள் மற்றும் தனிப் பாடல்கள், பத சாகித்தியங்கள் முதலியன பெரும்பாலும் சிருங்கார ரசத்திலேயே முங்கி முழுகித் தோய்ந்தவை என்றே சொல்லலாம். உதாரணமாக இவரது பத சாகித்தியத்திலிருந்து ஒரு பகுதி:
தனித் திருக்கப் போமோடீ சகியே - நித்தம் எனைத்
தழுவி நயந்தகும ரேசனையும் விட்டுத் - (தனித் ..
சரணம்
எப்போதும் கொக்கோக நூலே - வகுத்த
இன்பமுறை தவறாமல் இணை அன்றில் போலே
சப்ரமஞ்ச புட்ப அணை மேலே - சேர்ந்த
சையோக சுகத்தை அரை க்ஷணமும் மறந்தென் னாலே (தனித்)
(பத சாகித்தியங்கள்; பதிப்பு 1885)
இந்தப் பகுதியை இவரது சாகித்தியத்துக்கும் அதன் கருத்துக்கும் ஒரு ‘மாதிரி' யாகக் கொள்ளலாம். என்றாலும், இந்தப் பகுதியையெல்லாம் விட, வெளிப்படையாகவும் விரசமாகவும் உள்ள பத சாகித்தியங்களையும் இவர் இயற்றியுள்ளார் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
தெற்குப் புதுத் தெருவிலிருந்த சவுக்கைக்கு இனிய குரலில் நயமாகப் பாடும் சிங்கக்குட்டி என்ற சீனிவாச ராயர் என்பவர் வருவதுண்டு எனவும், அவர் தெலுங்கு, இந்துஸ்தானி, மராத்தி முதலிய மொழிகளிலுள்ள பதங்களைப் பாடுவது வழக்கம் எனவும், அவற்றைக் கேட்டு மகிழ்ந்த அழகிய சொக்கநாத பிள்ளை அந்த இசை வடிவங்களைப் பின்பற்றித் தமிழில் சில பாடல்களைப் பாடினார் எனவும் வெ. ப. சு. குறிப்பிட்டுள்ளார். அத்தகைய பாடல்களின் இனிமையைத் தம் கருத்தில் கொண்டு, அழகிய சொக்கநாத பிள்ளை காலமான சமயத்தில், தாம் முத்துசாமிப் பிள்ளைக்கு எழுதிய நிருபக்கவிகளில்,
ஆந்திரப் பதம் போல் இன்று என்பவர் வாய்
அடைபடச் செந்தமிழ்ப் பதம் போல்
ஆந்திரப் பதம் இன்று எனப் புரிந்திட்ட
அழகிய சொக்க நாதக் கோ ....
[ஆந்திர (தெலுங்குப்) பாடல்கள் போல் பிற பாடல்கள் இல்லை என்று சொன்னவர் வாய் அடைபடும் வீதத்தில்) செந்தமிழ்ப் பதப் பாடல்கள்போல் திறம்மிக்க (ஆம்திரம், ஆகிய உறுதியான பதம்) பாடல்கள் எனக் கூறச் செய்திட்ட அழகிய சொக்கநாத பிள்ளை] என்று பாடியிருக்கிறார் வெ. ப. சு. இவ்வாறு அழகிய சொக்கநாத பிள்ளை இயற்றிய இசைப்பாடல்களில் சொப்பன சுரத சுகானந்த லகரி என்பதும் ஒன்றாகும்.
அதிலிருந்து சில வரிகள் :
செண்பகப் பூஞ் சோலையிலே
பெண்களுடன் மாலையிலே
சென்றுலவும் காலையிலே
நின்றேனடி நான் தனியே
இங்கிதவை போகத்திலே
அங்கொருவன் வேகத்திலே
என் முன்வந்து மோகத்திலே
சொன்னதெலாம் கேளடியே!
மலர் சொருகும் கொண்டையிலே
கலகவிழிக் கெண்டையிலே
மனம் லயித்துன் அண்டையிலே
வந்தேனடி செந்தேனே!
பந்தடிக்கும் மேடையிலே
வந்துவிளை யாடையிலே
பார்த்துநின்ற ஜாடையிலே
பறிகொடுத்தேன் என் மனசை!
மாங்குயிலின் ஓசையிலே
பாங்கியுடன் பேசையிலே
மான் விழியுன் ஆசையிலே
நான் முழுகிப் போனேன்டி! ………..
இவ்வாறு வளர்ந்து கொண்டே செல்கிறது அந்தப் பாடல்: கண்டதும் காதலிலே தொடங்கி, கலவியிலே திளைத்து, கனவிலிருந்து விழித்தெழுகிறது கவிஞரது இந்தச் சொப்பன சுரத சுகானந்த லகரி! அழகிய சொக்கநாத பிள்ளையின் இசைப் பாடல்களையும் பத சாகித்தியங்களையும் பார்க்கும் போது அவற்றின் கருத்தைப் புறக் கணித்துவிட்டு கவியுருவத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், தமிழில் நல்ல இசைப் பாடல்களை இயற்றுவதற்கான உருவ அமைதி பலவும் நமக்குக் கிட்டுமென்றே சொல்லலாம்.
இங்கு அறிமுகப்படுத்தப் பெறும் ‘காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி’ என்ற நூல் எந்த ஆண்டில் எழுதி முடிக்கப்பெற்றது என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை, எனக்குக் கிடைத்த அச்சுப் பிரதி, ‘திருநெல்வேலி வடுகக்குடி முடுக்குத் தெரு பழனிக் குமாருப் பிள்ளையவர்கள் குமாரர் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் வேண்டுகையின் பொருட்டு திருநெல்வேலி மகாவித்வான் சாலிவாடீசுர ஓதுவா மூர்த்தியவர்களால் பார்வையிடப்பட்டு, திருநெல்வேலி முத்தமிழாகர அச்சுக்கூடத்தில்’ அக்ஷய வருஷம் தை மாதம் - அதாவது 1927 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் - பதிப்பிக்கப்பட்டதாகும். இதற்கு முன்பும் இந்நூல் பதிப்பிக்கப்பட்டதா என்று தெரிய வில்லை. என்றாலும் நூலிலுள்ள பாடல் ஒன்றில்
பரிசுற்ற காந்திமதி அம்மையே! இந்தப் பன்னி ரண்டு
வருஷத்துப் பஞ்சத்தை நீக்கி, அன்பாய் என்மை வாழ்விப்பையே!
என்று அழகிய சொக்கநாத பிள்ளை பாடியுள்ளார். எனவே இந்நூல் தாது வருஷப் பஞ்சத்துக்குப்பின் (1876) பல ஆண்டுகள் கழித்து, அந்தப் பஞ்சம் ஓய்ந்து வந்த பருவத்தில், அதாவது ஆசிரியரின் அந்திமக் காலத்தையொட்டியே இயற்றப்பட்டிருக்க லாம் என்று தெரிகிறது.
இந்நூலில் அந்தாதித் தொடராக அமைந்த நூறு கலித்துறை விருத்தப் பாடல்கள் உள்ளன. முதல் தொண்ணூறு பாடல்களும் தாது வருஷப் பஞ்சத்தில் மக்கள் படும் பல்வேறு அவதிகளையும் திருநெல்வேலி நகரில் கோவில் கொண்டுள்ள காந்திமதியம்மையிடம் முறையிட்டுக் கொள்ளும் முறையிலும், இறுதிப் பத்துப்பாடல்களும் அந்த முறையீட்டைக் கேட்டு, அருள் புரிந்த காந்தியம்மையின் சிறப்பையும், மக்கள் குறை தீர்ந்து வாழ்வதையும் கூறும் முறையிலும் அமைந்துள்ளன.
இனி நாம் நூல் வழங்கும் செய்திகள் சிலவற்றை அதன் வாயிலாகவே காண்போம்.
அன்ன விசாரம்
‘அன்னம் பிராணன்!' என்று கோஷிக்கிறது வேதம். அந்த அன்னத்துக்கு - உணவுக்குப் பஞ்சம் வந்துவிட்டால் மக்கள் பாடு பெரும் மரண வேதனையாகி விடுகிறது. அந்த வேதனையைக் கண்டு மண்கூட வாய் விட்டு அழுது விடும் போலிருக்கிறது. ஆனால் வானம் மட்டும் ஈரமேயற்ற கல்நெஞ்சனைப்போல் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வழங்காமல் அடம் பிடிக்கிறது:
மண்கூட வாய் விட்டு அழும் ஒரு சத்தம் அம்மா! மனசும்
புண்கூடு என நொந்து போச்சுதம்மா! பட்ட புன்மை சொல்ல
எண்கூட வில்லை; பிழைப்பது எவ்வாறு அடியேங் கள் அம்மா !
கண்கூடு வீங்கி உலகோர் படும் பஞ்ச காலத்திலே?
என்று புலவர் பாடுகிறார். ஆனால் இத்தனை துயரத்துக்கும் காரணம் பஞ்சம்தான் பஞ்சத்துக்குக் காரணம் என்ன? மழையில்லாதது மட்டும் தானா? 'கஞ்சி குடிப்பதற்கிலார்; அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்’ என்று பாரதி பாடி னான். ஆனால் பாரதிக்கிருந்த அரசியல் ஞானமும் பொருளாதார அறிவும் அழகிய சொக்கநாதரிடம் இல்லை . எனவே அவரும் பாமர மக்களைப் போலவே பஞ்சத்தின் காரணம் தெரியாமல் விழிக்கிறார் :
காலத்தைக் கஷ்டம் பெறாமல் நொந்தோம்; பங்கயனை நொந்தோம்,
சாலத்தை நீ செய்கின்றாயே என உன்றனையும் நொந்தோம்;
பாலத்தையுற்ற விழி உமையே ! இந்தப் பஞ்சம் வந்த
மூலத்தை இன்னம் அறியேம்! திகைத்தனம் முற்றிலுமே!
மக்கள் போதாத கலி காலத்தையும், படைத்த பிரமனையும் அம்பிகையின் சோதனையையும் நொந்து, ‘தலைவிதியே!' என்று சலித்துக் கொண்டார்கள். பஞ்சத்தின் மூல காரணத்தை மட்டும் - அதாவது அன்னியராட்சியின் சுரண்டலும் கொள்ளையும் கூட, அந்தப் பஞ்சத்தில் பெரும் பங்கு வகித்த காரணத்தை - அவர்கள் உணரவில்லை; அவர்களுக்காகப் பாட வந்த புலவரும் அதனை உணரவில்லை. என்றாலும் வாழ்க்கையில் படும் துன்பங்களை உணர்வதற்கு, அரசியல் ஞானம் தேவையில்லையே. அவை கண் கண்ட உண்மைகள் ஆயிற்றே எனவே அவர்கள் தமது இல்லாமையையே நொந்து கொள்கிறார்கள் :
எல்லாரைப் போலவும் வைத்தனையோ ? எம்மை இவ்வுலகில்
இல்லாளர் ஆக்கி, பசித்தோர்க்கு அனமிலை என்னச் செய்யும்
இல்லாமை ஒன்று அதை இல்லாமை ஆக்குவது என்றைக்கு? அதும்
சொல்லாதிருப்பதுவோ? நல்ல நீதி! உன் தொண் டருக்கே !
உலகில் பலரை இல்லாதவர்களாக்கி, அவர்களுக்கு உண்ண உணவும் இல்லையென்று ஆக்கி வைத்திருக்கிறாயே ! இந்த இல்லாமை என்னும் கொடுமையை இல்லாமற் செய்வது என்றைக்கு? என்று புலவர் அம்பிகையிடம் கேட்கிறார். ஆனால் வறுமை என்ற இந்தக் ‘குசேலல வியாதியைப் போக்கும் சஞ்சீவி மனிதன் வசம் தான் உண்டு!’ (பக்த குசேலா) என்று புதுமைப்பித்தன் எழுதியுள்ள உண்மையையோ, « இல்லையென்ற சொல்லை உலகில் இல்லையாக வைப்பேன்," என்று பாடிய பாரதியின் வைராக்கியத்தையோ அழகிய சொக்கநாதர் அறிந்திருக்கவில்லை. அவர் வாழ்ந்த சூழ்நிலையில் அதனை அறிந்திருக்கவும் வழியில்லை. எனவே இல்லாமை என்ற கொடுமையை மனித எத்தனத்தால் தான் ஒழிக்க முடியும் என்ற பிரக்ஞையற்று, அதனை ஒழிக்க அவர் தெய்வத்தின் அருளை நாடுகிறார். என்றாலும் அவரது விருப்பம் சரியானதுதானே.
இல்லாமை ஒழிய வேண்டும் என்று அவரும் விரும்புகிறார். ஆனால் அந்தக் கொடுமை விரும்பிய மாத்திரத்தில் ஒழிந்து நீங்கி விடுமா? அது நீங்கும் வரையிலும் உயிர் நீங்காதிருக்க வேண்டுமே ஆனால் இல்லாத மக்களின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது :
உதறுதம்மா உடலைப் பசிநோய்! மன ஊக்கங் களும்
சிதறுதம்மா! நிர்க்கதியாகி ஏழை ஜனங்கள் எல் லாம்
கதறுதம்மா! இப்படிப் படும் பாரதம் காண நெஞ்சு
பதறுதம்மா! எப்படிப் பிழைப்போம் என்று இந்தப் பஞ்சத்திலே
(பாரதம் - தொலையாத நெடுந்துன்பம்)
உள்ளாரும் இல்லாரும்
இல்லாமை என்ற கொடுமை என்று நீங்கும் என ஏங்குகின்ற புலவருக்கு. உலகில் இல்லாதவர்கள், உள்ளவர்கள் என்ற இரு பிரிவினர் இருக்கும் உண்மையும் நெஞ்சில் உறைக்கிறது. எனவே அவர் காந்திமதித்தாயை நோக்கி பின்வருமாறு கேட்கிறார் :
மெய்க்க அநேகரைச் செல்வர்களாய்ப் புவிமீதில் வைத்தாய்;
மிக்கவும் எங்களைப் பொல்லா வறுமையில் வீழ்த்தி விட்டாய்;
மக்களிலே பக்ஷபாதம் செய்தால் எவ்வகை பிழைப்போம்?
திக்கு உனையன்றி ஒருவர் உண்டோ , பஞ்சம் தீர்ப்பதற்கே?
இவ்வாறு வறுமையில் வீழ்த்தப்பட்ட இல்லாரைப்பற்றி நினைக்கின்ற புலவர் உழைத்தும் போதுமான கூலி கிட்டாமல் உண்ண உணவும் கிட்டாமல் வாடும் மக்களையும் எண்ணிப் பார்க்கிறார். அன்றாடம் காய்ச்சிகளும் அத்தக் கூலிகளுமான அந்த மக்கள் தமது பிழைப்பையும் இழந்து தவிக்கின்றனர். ‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்'. அப்போது தொழில்கள் மட்டும் நிலைக்குமா என்ன?
கூலிக்கு வேலை செய்தே பிழைப்பவர் கொட்டை கள் நூற்
றால் இக் குவலயத்தில் பிழைப்பு உண்டென்று உள்ளார்கள் , உன்நெல்
வேலிக்குள் இவ்விதம் பஞ்சம் கண்டால் எவ்விதம் பிழைப்பார்?
பாலிக்க வேண்டும் அம்மா ! இந்த வேளைகண் பார்த்தருனே!
நெல் வயல்களால் சூழப் பெற்று அவையே வேலி போல் இருப்பதால் திருநெல்வேலி எனப் பெயர் பெற்ற சீமையிலேயே பஞ்சம் என்றால், கூலி வேலை செய்பவர்களும். கொட்டை நூற்று ஆடை நெய்பவர்களும் எப்படிப் பிழைக்க முடியும்? எனவே இந்தக் கொடுமையை நீக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறார் புலவர். அதே சமயம் அவருக்குத் தன் நினைவும் வந்து விடுகிறது. ‘செல்வம் நிறைந்தவர்கள் ஒரு பக்கம் ; வறுமைப் பட்டவர்கள் ஒரு பக்கம்' என்ற நிலையை உணர்ந்து ஏழை மக்களுக்காக அனுதாபப்படும் புலவருக்கு இந்த இரு வேறு பிரிவினருக்கும் இடையே இரண்டும் கெட்டான் நிலையிலுள்ள மத்தியதர வர்க்கத்தினரைப் பற்றிய நினைவு வந்து விடுகிறது. அதாவது கல்விச் செல்வம் இருப்பதால் பாமரர்களான ஏழை மக்களிடம் அண்டாமலும், பொருட் செல்வம் இல்லாமையால் பணம் படைத்தவர்களை அண்ட முடியாமலும் உள்ள நிலையிலுள்ள மத்தியதர வர்க்கத்தைப் பற்றிய, அதாவது தம்மையும் தம் போன்றாரையும் பற்றிய உணர்வு புலவருக்கு வந்து விடுகிறது. எப்படி ?
இரந்து குடிப்பவர்க்கோ பஞ்சத்தால் குறை என்ன? முன்போல்
நிரந்தரம் பிச்சை எடுத்துண்பார் ! செல்வர் என்னில் குறையோ?
தரம்தப்பி, எம் தரக்காரர்களே மெலிந்தார் ! இனி உன்
வரம் தந்து அளித்திட அம்மா ! உனக்கு இது எம் மாத்திரமே!
பரம்பரை ஆண்டியாக இருப்பவனுக்கு ஒன்றும் குறைவில்லையாம். அவன் வழக்கம் போலவே பிச்சையெடுத்து உண்பானாம். அதேபோல் பரம்பரைப் பணக்காரர்களும் எந்தக் குறையுமின்றி இருப்பார்களாம். ஆனால் பஞ்சத்துக்கு ஆண்டியான அவரது தரத்தைச் சேர்ந்தவர்களே, அதாவது மத்தியதரக்காரர்களே மிகவும் மெலிந்து நலிந்து விட்டார்களாம். ஆம். சொப்பன சுரத சுகானந்த லகரியைப் பாடி வைத்த அழகிய சொக்கநாத பிள்ளையின் சொப்பன வாழ்க்கையைப் பஞ்சத்தினால் ஏற்பட்ட பிரத்தியட்ச வாழ்க்கை கலைத்து அவரை விழித்துப் பார்க்கச் செய்து விட்டது. என்றாலும் அந்த நிலையிலும் அவர் தமது வர்க்க பாசத்தை விடவில்லை. ஆனால் வாழ்க்கை மட்டும் அவரை விட்டு வீடுமா? வள்ளல் முத்துசாமிப்பிள்ளை போன்ற செல்வந்தர்களை அண்டி வாழ்ந்து வந்தவர் தான் அவர். எனினும் அவரைப் போன்று பொருள் உள்ளவரைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வந்த புலவர்களையும் பஞ்சம் பாதித்து விட்டது. அவர்களது பஞ்சப்பாட்டைக் காது கொடுத்துக் கேட்கச் செல்வர்கள் தயாராக இல்லை. செல்வர்களுக்கோ அந்தப் பஞ்ச காலத்தில் கையிலுள்ள தானியத்தை எவ்வளவு அதிகமான லாபத்துக்கு விற்கலாம், எவனுடைய நிலத்தை எழுதி வாங்கலாம் என்பதல்லவா கவலை? எனவே புலவர்களின் பஞ்சப்பாட்டைக் கேட்க அவர்களுக்குப் பொறுமையும் இல்லை, நேரமும் இல்லை. இதனால் புலவர்கள் பாடும் திண்டாட்டமாகிவிட்டது.
கொண்டாடுவார் இந்தப் பஞ்சத்தை நெல் கட்டிக் கொண்டு விற்போர்;
திண்டாடினோம்; புகல் வேறே இடமின்றிச் செல் வரைப் போய்க்
கண்டாலும் பேசிலர்; வெம்பசியால் அவர் காதினிலே
விண்டாலும் ‘தள்ளு ! தள்ளு!’ என்பார்கள் சீறி வெடு வெடென்றே!
ஆனால் இப்படிச் சீறி விழும் செல்வந்தர்களைப் புலவர்கள் அண்டாமல் இருந்தார்களா? பசிக் கொடுமை அவர்களை அண்டாமலிருக்க விடவில்லை. ஆனால் அண்டியும் பயனில்லை; அரைக் காசுக்கும் வழியில்லை :
வெடுவெடென்றே சொலும் வீணரைப் பாடி வியந்தலைந்து
'கொடு கொடு' என்றாலும் இங்கு , அம்மா, அரைச் சல்லி கொடார்!
(சல்லி; பழைய நாணயம். 192 சல்லிகள் கொண்டது ஒரு ரூபாய்).
இவ்வாறு மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த படிப்பாளிகளும் புலவர்களும் ஆதரவின்றித் திண்டாடினார்கள். அழகிய சொக்கநாத பிள்ளை மட்டும் இதற்கு எந்த அளவுக்கு விதி விலக்காக இருந்திருக்க முடியும்? இதனால் அவருக்குப் பணம் படைத்த செல்வர்கள் மீது பொறாமை ஏற்படுகிறது.
பணக்காரர்களுக்கென்ன? நிலம், கரைகள் ஏராளம். குனிந்து நிமிராமல் ‘விவசாயி' என்ற பெயரோடு, ஏராளமான நிலங்களில் கூலியாட்களைக் கொண்டு பயிரிடச் செய்யலாம். பயிர் செய்து விளைந்த நெல்லைச் சேமித்தும் வைக்கலாம். உடம்பு கொழுத்துப் புடைக்கும்படி உண்டு களிக்கலாம், உண்டது போக மீதமுள்ள நெல்லைக் கொள்ளை லாபத்துக்கு விற்கலாம்; விற்று முதலான பணத்தில் இல்லக்கிழத்திக்கும் காதற் கிழத்தியருக்கும் நகைகள் செய்து பூட்டலாம்; கொஞ்சலாம்; குலாவலாம். புலவரது பொறாமையுணர்ச்சி - சொல்லப் போனால் வயிற்றுப் பசியினாலும் வறுமையினாலும் எழுந்த தர்மாவேசக் குரல் - இவ்வாறு எழுந்து ஒலிக்கிறது :
செய்கள் உள்ளோர்கள் பயிரிடுவார்; நெல்லைச் சேர்த்து வைப்பார்;
மெய் கொழுக்கும்படி உண்டிடுவார்; நெல் மிகுந் ததை வி
லைகட்கு விற்று, வருடம் தப்பாமல் நகைகள் செய்வார்!
கொய் கமழ் பூங்குழலாய்! பஞ்சத்தால் குறை என்ன அவர்கட்கே?
அகவிலை ஏற்றம்
இவ்வாறு எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று செல்வர்களும், வியாபாரிகளும், நிலச்சுவான்தார்களும் பஞ்ச காலத்தின் கொடுமையைத் தமக்குச் சாதகமாக்கி, மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்கிறார்கள்; கொள்ளை லாபம் திரட்டுகிறார்கள். இதனால் விலை விஷம் போல் ஏறுகிறது.
நாளுக்கு நாள் விலை ஏறுதம்மா! கடன் ஆகுதம் மா!
தேளுக்கு நேர் இந்தப் பஞ்சத்திலே என்ன செய்வம் அம்மா
என்று புலவர் விலையேற்றம் பற்றிக் குறிப்பிடுகிறார். விலையேற்றம் என்றால் எப்படி?
தலையெழுத்து ஈதென்று கண்டோம்; பெருமை தளரக் கண்டோம்!
விலை ஒரு கோட்டை நெல் ரூபாய் பன்னிரண்டு விற்கக் கண்டோம்!
(கோட்டை : 168 படி)
அந்தக் காலத்தில் இந்த விலையேற்றம் மிகவும் அதிகமானது தான். இதேபோல் பஞ்ச லட்சணத் திருமுக விலாசத்தைப் பாடிய வில்லியப்ப பிள்ளையும் தமது நூலில் ரூபாய்க்கு “பட்டணத்தில் மட்டும் ஐந்து படியாச்சே அகவிலைகள்!" என்று அரிசி விலை ஏற்றம் பற்றிப் பாடி அங்கலாய்க்கிறார். இதிலிருந்து திருநெல்வேலிச் சீமையில் நிலவிய விலைவாசி ஏற்றத்தைக் காட்டிலும் ராமநாதபுரச் சீமையில் ஏற்றம் மிகவும் அதிகமாக இருந்தது என்பது புலனாகின்றது.
உணவு விலை ஏறிவிட்டால் ஏனைய பொருள்களின் விலைகளும் தானாக ஏறிவிடும். அவற்றின் விலையும் ஏறுகிறது. உணவு விலை ஏறிய பின், அந்த விலையுயர்ந்த உணவு விலை குறைந்த இலையிலே வந்திருக்கச் சம்மதிக்குமா? வாழையிலையின் விலையும் ஏறுகிறது. விலை ஏறினாலும், சாமான்களேனும் கிடைக்கின்றனவா? அதுவும் இல்லை .
மெட்டுக் கெட்டோம், பொருள் இலாமையால்; நெல் விலைகள் எல்லாம்
மட்டுக்கு எட்டாத படியானது; அன்றியும் வாழை இலை
துட்டுக்கு எட்டாம் ! அதுவும் கிடையாது, அலைந்தோடி எங்கும்
தட்டுக் கெட்டு ஏங்கினது அம்மா! சொல்லவும் தரம் இல்லையே!
(துட்டு - நான்கு சல்லி)
அகவிலை இவ்வாறு ஏறும் போது அதனைச் சமாளிக்க மக்களிடம் பொருள் வசதி இருக்கவேண்டும். ஆனால் இருந்த பிழைப்பிலும் மண் விழுந்து விட்ட பின்னர், கையில் நாலு காசு நடமாட வழியேது கையில் பணமும் இல்லை ; அப்படியே ஏதாவது பிழைப்பைத் தேடிச் சம்பாதித்தாலும், அந்த வருமானம் போதவில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் அந்தச் சம்பாத்தியம் - சம்பளம் - விலைவாசி ஏற்றத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை
இன்று கோபம் அடிமைக்கு மேல்
ஏது இத்தனை உனக்கம்மா? இப்பஞ்சத்தில் எப்படிச்
சம்பாதித்தும் அதில் என்ன? காணாதம்மா சம்பளப் பணமே !
இதனால் கடையில் சரக்கு இருந்தாலும் மக்களிடம் அவற்றை வாங்குவதற்குச் சக்தியில்லை. மக்களின் வயிற்றுக்கு உணவாக வேண்டிய பொருள்கள் விற்பனையாகாமல் கடைக்கு அலங்காரமாகக் கொலு வீற்றிருக்கின்றன. உணவுக்கும் வாய்க்கும் இடையே பணமில்லாக் கொடுமை தடை மதில் எழுப்பி நிற்கிறது.
அடைக்கலம்! காத்து அருள் அம்மா! பலசரக்கு அவ்வளவும்
கடைக்கு அலங்காரம் என்று ஏங்கி வந்தோம்! பஞ்ச கால வன்மை
யிடைக் கலங்காமல் பொருள் கொடுப்பாய்! எங்கட்கு என்றென்றைக்கும்
படைக்கலம் காண்! விழிமாதே ! பணிவம் உன் பாதங்களே !
என்றென்றைக்கும் துன்பங்களைத் துடைத்தெறியும் படைக்கலமாக விளங்கும் அம்பிகையின் பாதங்களை வணங்கும் புலவர், எதார்த்த வாழ்க்கையின் உண்மையான படைக்கலத்தையும் மறக்கவில்லை. பணம் - சர்வ சக்தி படைத்த படைக்கலமல்லவா அது? வயிற்றுப் பசிக்கு உதவ வேண்டிய பொருள்கள் கடைக்கு அலங்காரமாக வீற்றிருக்கும் காட்சியை உடைத்தெறிய வேண்டாமா? அதற்குப் பணம் என்ற படைக்கலம் அல்லவா தேவை? ஆனால் அந்தப் பணம் எங்கிருந்து கிட்டும்? உழைக்க உடலிருந்தும் பிழைக்க வழியில்லாவிட்டால் பணத்தை எப்படிப் பெறுவது? பஞ்சத்தில் சிக்கிய மக்கள் என்ன செய்தார்கள்?
பணம், பணம்!
பணத்தைப் பணமுள்ளவர்களிடமிருந்துதான் பெற முடியும். அதனை உழைத்ததற்கான கூலியாகப் பெற வழியில்லையென்றால் கடனாகத்தானே பெற முடியும். எனவே மக்கள் கடன் கொடுப்பவர்களைத் தேடி ஓடுகிறார்கள். ஆனால் கடன் கொடுப்பவர்கள் அவ்வளவு லகுவில் மசிந்து விடுவார்களா? அவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்ப வர வேண்டுமே என்ற கவலை ; அதை விட, அந்தக் கடன் அசலும் வட்டியுமாக வந்து சேர வேண்டுமே என்ற ஆசை. இந்த ஆசையும் கவலையும் அவர்கள் மனத்தைக் கல்லாக்கி விடுகிறது. எனவே அவர்கள் தம்மிடம் உதவி நாடி வருபவரை இழிவு படுத்துகிறார்கள்.
நீந்தரும் பஞ்சத்தினால் கயவோரை நெருங்கில்,
மாந்து இழிவாய் மதிக்கின்றார் ; பிறர்தம் வருத்தங்களை
ஆய்ந்து உணரார் ; இவர் ஏன் பிறந்தார் இந்த அற்பர்கட்கும்
காந்திமதி யம்மா ! எல்லாம் உன்னால் வந்த கட்டு மெட்டே
இவ்வாறு கடன் தர மறுப்பவர்களை ‘ஏன் பிறந்தார்கள் இந்த அற்பர்கள்?' என்று வசை பாடித் தூற்றுகிறார் புலவர். கடனுக்குப் போனால் இது மட்டும் தானா தொல்லை? வாடிக்கையாகக் கடன் கொடுத்து வாங்கியவனிடம் போகலாம் என்றால், அவன் பழைய பாக்கியை வட்டியும் முதலுமாகக் கேட்பான். வீட்டிலோ ஏற்கெனவே பல செலவுகள்; இதில் பஞ்சக் கொடுமையால் உணவுக்கும் ஆபத்து வந்துவிட்டது. உணவுக்காகக் கடன் கேட்டுச் சலித்தாயிற்று. மீண்டும் கடனுக்குப் போனால், பழைய செல்லுக்கு, பாக்கிக்கு - என்ன பதில் சொல்வதென்ற பதற்றம்; திகைப்பு. இந்நிலையில் என்னதான் செய்வது?
இல்லுக்குச் சங்கடம் தீர்வது என்றோ என்று இருக்கையிலே
நெல்லுக்குச் சங்கடம் ஆச்சு ; இது கூறி நிதி உளர் பால்
மல்லுக்கு நின்று மனமோ சலித்தது ! அம்மா! பழைய
செல்லுக்குப் போக்கு என்ன சொல்வோம் என் றுள்ளம் திகைப்புற்றதே!
(போக்கு : நொண்டிக் காரணம்)
பணம் பணம் என்று பறந்து, எப்படியோ பணத்தைப் பெற்றாலும், தமக்கு வேண்டிய உணவுப் பொருளை அதனால் பெற முடியுமா? உணவுப் பொருளின் விலை கொம்பேறி மூக்கனைப் போல் ஏறிக்கொண்டால், பணத்துக்குத்தான் என்ன மதிப்பு? எனவே மக்கள் தாம் உண்டு பழக்கப்படாத விலை குறைந்த உணவுப் பொருட்களைத் தின்று பசியாற முனைந்து விடுகிறார்கள் :
மாத் தின்றும், கேப்பைக்களி தின்றும், புல் மண்டி வாய்மடுந்து
நாத் தின்றும், மெல்லப்படும் கீரைகள் தின்றும், நாங்கள் உயிர்
காத்து, இன்று வரையிலும் கழித்தோம் இந்தப் பஞ்ச காலத்தையே!
ஆனால் அப்படியும் உயிர் வாழ்ந்து விட முடியவில்லை. உண்ணும் உணவு வயிற்றுக்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே!
நெல் மண்டிக்கு ஏகக் கணக்கில்லை; உப்புடனே மிளகாய்
புல் மண்டியோடு கடித்தே குடிக்கப் பொருந்து வதில்
சொல் மண்டி, நோயும் மண்டி, கும்பி காந்தித்து உறுத்துமண்டி
அல்மண்டிடும் !
இத்தகைய உணவால் நோயும் வயிற்றுப் போக்கும் கண்டு உயிருக்கே ஆபத்து நேரத் தொடங்கி விடுகிறது.
இந்த நிலைமையில் இவ்வாறு தினம் தினம் செத்துப்பிழைப்பதைவிட ஒரேயடியாகச் செத்து விட்டாலும் பரவாயில்லை என்ற சலிப்பும் தோன்றுகிறது. மானம் குலைந்து, வாழ்க்கை குலைந்து வாழ்வானேன் என்ற எண்ணம் அவர்களுக்கு . வறுமை வந்தால் மனிதனின் மானாபிமானம் எல்லாமே சோதனைக்குள்ளாகி விடுகிறது :
சிறுமைப் படுவதும் பட்டதும் போதும்! இச் சென்மத்துக்கும்
மறுமைக்கும் காணும்! இப் பஞ்சத்தின் மாகொடிய
வறுமைப் பிணிகள் வந்தால், அதைப் போலில்லை மானிகட்கே !
மானமுள்ளவர்கள் மட்டும் தான் இவ்வாறு சாவை விரும்பினார்கள் என்பதில்லை. மற்றவர்களும் கூடத்தான் விரும்பினார்கள். என்றாலும் சாவு நெருங்கும் போது எந்த மனிதன் தான் சாக விரும்புவான்? இன்னும் ஒரு மணி நேரம், ஒரு நிமிடம், ஒரு விநாடி உயிர் வாழ முடியாதா என்பதல்லவா உயிர் வேட்கை? ஆனால் இத்தகைய உயிராசை இருந்தாலும், மக்கள் தமது உயிர் வாழும் ஆசைக்கும் விருப்பத்துக்கும் மாறாக, பட்டினியால் சாகவே செய்தார்கள் . இவ்வாறு செத்தவர்கள் தொகைக்கு ஒரு கணக்கே இல்லை.
தீ தங்கமான பஞ்சத்திலே பசித்து ஏங்கி உயிர்ச்
சேதங்கள், அம்மா, கணக்கும் உண்டோ தொகை செப்புதற்கே?
என்று புலவர் கையை விரித்து விடுகிறார்.
அரசாங்கத்தின் நிலை
இவ்வாறு மக்கள் பட்டினியால் லட்சக் கணக்கில் செத்து விழுந்து கொண்டிருந்த காலத்தில்
அரசாங்கம் என்ன செய்தது? பஞ்சத்தைக் கண் திறந்து பார்த்த கவிஞர் அரசாங்கத்தின் அலட்சியத்தையும் பார்க்கத் தவறவில்லை. பஞ்ச காலத்தில் கொள்ளை விலைக்குத் தானியங்களை விற்று வந்த வியாபாரிகளை அரசாங்கம் தட்டிக் கேட்டதா? அல்லது மக்களுக்குக் கடன் வசதி செய்து தர முன் வந்ததா? எதுவும் இல்லை. மக்களின் வாழ்வே வியாபாரிகளின், செல்வம் படைத்தவர்களின் கைகளில் சிக்கி விட்டது. அவற்றிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது.
சிம்மாசன பதி கேள்வியும் இல்லை; நெல் சேர்வை கட்டி
இம்மாய வல்விலை கூறுகின்றார்; கடனேனும் நல்கார்;
கைமேல் பணம் கொண்டு வா என்கிறார்; கையில் காசும் இல்லை;
அம்மா ! இப்பஞ்சத்தில் எவ்வாறு உய்வோம் என்று அஞ்சினமே
அரசாங்கத்தின் அலட்சிய மனப்பான்மையும் பஞ்சத்தை அதிகரிக்கச் செய்தது. எனவே
அரசாங்கத்தின் அருட் பார்வை கிட்ட வேண்டுமென்றாலும், அதற்கும் அம்பிகையின் அருட்பார்வையும் அபிமானமும் வேண்டுமெனக் கருதுகிறார் புலவர்.
மன்னர் தயவு சம்பாதித்துமே பெருவாழ்வு பெற
உன் அபிமானம் இல்லாவிடில் எவ்வண்ணம் உய் வண்ணமே?
ஆனால் அரசாங்கம் மட்டும் மனம் இரங்கி விடும் என்பது என்ன நிச்சயம் ? அரசாங்கம் இரங்குவதற்கு முன்னால், தெய்வம் கருணை காட்ட வேண்டும். வான மழை பொழிய வேண்டும். ஏனெனில் இந்தப் பஞ்சம் திடீரென்று வந்த பஞ்சம் அல்ல. பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மாறி மாறி வந்த பஞ்சம் தான் இப்படியே தலைமுறை தலைமுறையாய்ப் பஞ்சத்திலேயே செத்துப் பிழைத்து வந்தால் எப்படி வாழ்வது?
ஆண்டாண்டு தோறும் இப்பஞ்சத்தினால் தொலையாக் கவலை
பூண்டால் எளியவர்க்கு எவ்வாறு இந்நாள் பிழைப்புக்கு இடமே?
தூண்டா மணி விளக்கே ! பலவாறு எம்மைத் துன்பம் செய்ய
வேண்டாம்; இவ்வளவு போதும் அம்மா செய்த வெவ்வினைக்கே !
பாவம் ஆண்டாண்டு தோறும் தோன்றும் பஞ்சங்களுக்கெல்லாம் மக்கள் செய்த கொடும் பாவம் தான் காரணமென்றும், அதன் காரணமாகத் தெய்வமே அவர்களை மாறி மாறித் துன்புறுத்துவதாகவும் புலவர் கூறுகிறார். ஆனால் உண்மையான பாவிகள் யார் என்பதை அவர் உணரவில்லை. அன்னியராட்சியின் சுரண்டலும், அலட்சிய மனப்பான்மையும், மக்களை முன்னேற விடாமல் தடுத்து, அவர்களை என்றென்றும் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் ஆழ்த்தி வைக்க முனைந்த ராஜ தந்திரமும் தான் காரணங்கள் என்பதை அவர் உணரவில்லை, என்றாலும் பஞ்சம் தீர வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார் நாடு செழித்தால் தான் அது நீங்கும் என்பதையும் அவர் உணர்ந்தார். எனவே நாடு செழிக்க நல்ல மழை பொழிய வேண்டும். மழை பொழிவதற்கு அம்பிகையின் அருள் வேண்டும் என்று அவர் கருதினார்; அவளது அருளை நாடினார்.
மயில் விளையாடும்படி மேகம் சூழ்ந்து, மழை விழுந்தால்
வெயில் விழுமோ இப்படியே? அப்போ நெல் விலையும் விழும்;
செயில் விழும் வித்தும் விளைவாய், இப் பஞ்சத்தினை விழுங்கும்
அயில் விழிக் காந்திமதியே குறை என்ன அடிமை கட்கே
ஆம் மழை விழுந்தால் நெல் விலையும் விழும். அப்போது, செய் நிலங்களில் விழுகின்ற வித்தும் விம்மி விளைந்து பலன் தந்து பஞ்சத்தைப் போக்கும். எனவே நாடு செழித்தால் தான், விவசாயம் பெருகினால் தான் பஞ்சம் தொலையும் என்று உணர்கிறார் புலவர்.
நிந்தாஸ்துதி
திருநெல்வேலியில் சுவாமி நெல்லையப்பரும் தான் கோயில் கொண்டுள்ளார். அவரிடம் முறையிடாமல் புலவர் அம்பிகையிடம் முறையிடுவானேன்? ஆனால் புலவரோ காந்திமதியம்மையை நோக்கி, ''உன் கணவர் நெல்லையப்பர் என்று பெயர்தான் வைத்திருக்கிறாரே தவிர, அவர் என்ன படியளக்கின்றார் எங்களுக்கு?” என்று கேட்டு விடுகிறார். அம்பிகையைத் தவிர ஏனைய தெய்வங்கள் எல்லாம் அவருக்குக் கையாலாகாத தெய்வங்களாகத் தோன்றுகின்றன. இந்தக் கருத்துடன் அவர் சிவன், திருமால், ஐங்கரனான கணபதி முதலிய தெய்வங்களைக் குறித்து நிந்தாஸ்துதியாகப் பாடுகிறார். அம்பிகையின் சகோதரனான திருமாலோ பஞ்சத்தின் கொடுமை தாங்காமல் மண்ணையள்ளித் தின்று சீவிக்கிறானாம். அவளது கணவனான சிவனோ திருவோடும் கையுமாகப் பிச்சை யெடுத்து உண்டு வாழ்கிறானாம். அவளது புத்திரனான வினை தீர்க்கும் விநாயகனோ, கைகளே பஞ்சமாக (அதாவது ஐந்து கரங்களைக் கொண்டவனாக) மாறி விட்டானாம்! எனவே அம்பிகை ஒருத்தியையே புலவர் மக்களுக்கு ஆதரவாக விளங்குபவள் எனக் கருதுகிறார்:
கண்டனம் செய்யும் கணபதியே, பஞ்சம் கண்டு மெய்து
வண்டனம் என்றனம்; கேட்டு எனவோ முகம் மாற வைத்துக்
கொண்டனன்; இங்கு எனக்கும் பஞ்சமாகக் கை கூடிற்று என்று
விண்டனனால்! எங்கட்கு ஆர் துணை நீயும் கை விட்டிடிலே?
‘நாங்கள் பஞ்சத்தால் வாடி விட்டோம்' என்று கூறக் கேட்டவுடன் விநாயகன் முகத்தை எப்படியோ மாற வைத்து ஆனை முகமாக மாற்றிக் கொண்டு விட்டான். மேலும் எனக்கும் பஞ்சக் கைகள் தான் என்று கைகளை விரித்துவிட்டான். எனவே உன்னையன்றி எங்களுக்கு வேறு கதியே இல்லை - என்று அம்பிகையின் சரணைக் சிக்கென்று பிடித்துக்கொண்டு விடுகிறார் புலவர்.
காந்திமதி அந்தாதியின் இறுதிப் பத்துப் பாக்களும் அம்பிகையின் அருளால் பஞ்சம் நீங்கி, மக்கள் நலமுற்றதாகக் கூறுகின்றன. எனவே அம்பிகையின் அருளைக் குறித்துப் புலவர் உற்சாகத்தோடும் உணர்ச்சியோடும் இறுதியில் பாடுகிறார்.
வாழ்வில் குறையில்லை; கண்ணேறும் இல்லை; வறுமை இல்லை ;
தாழ்வில்லை; நோயில்லை; அஞ்சுதல் இல்லை; பஞ்சங்கள் இல்லை,
பாழ்வினையால் துன்பங்கள் இல்லை; நெல்லைப் பதி வடிவைச்
சூழ்வரும் தொண்டர்கட்கு என்றறிந்தோம்; இதில் சோர்வில்லையே!
அரம் என்று உளே நின்று அறுக்கும் கவலையெல் லாம் தொலைத்தாள்,
திரம் என்று மிக்க பொருள் அளித்தாள்; பஞ்சம் தீர்த்து விட்டாள்,
வரம் என்றும் நீட அருளினள்; காந்திமதி அம்மையைப்
பரம் என்று நம்பின பேருக்கு ஒரு நாளும் பழு தில்லையே!
என்றெல்லாம் பாடித் துதித்து, தமது அந்தாதியை நிறைவு செய்கிறார் புலவர் அழகிய சொக்கநாத பிள்ளை.
ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் ?
அழகிய சொக்கநாத பிள்ளை இயற்றிய காந்திமதி அந்தாதியை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? நாட்டை உலுக்கிக் குலுக்கிய பஞ்சத்தின் பெருமையை இந்நூல் பலவாறு எடுத்துக் கூறியுள்ளது என்பது மட்டும் காரணமா? இல்லை. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் பலரும் பஞ்சத்தை அனுபவித்த போதிலும், அதனால் நாட்டு மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஏன் பாட முன்வர வில்லை? இதற்குரிய விளக்கம் தெரிந்து விட்டால், காந்திமதி அந்தாதியை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு காரணமும் புரிந்து விடும். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களின் வாழ்க்கையைத் தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் புரியாத புதிர் அல்ல. அந்த நூற்றாண்டுப் புலவர்கள் பலரும் தமது நூல்களில் எளிமையையும், இனிமையையும், புதுமையையும், அருமையான சொல்லாட்சியையும் புகுத்தத்தான் செய்தார்கள். எனினும் அவர்களிற் பெரும்பாலோர் தமது கும்பிக் கொதிப்பையும் குடும்ப வாழ்க்கையையும் கவனித்துக் கொள்வதற்காக, ஜமீன்தார்களையும் செல்வந்தர்களையும் அண்டிப் பிழைத்து வந்தனர். இதனால் அவர்கள் மக்களிடமிருந்து விலகியே நின்றனர். அவர்கள் தாம் அண்டிப் பிழைத்து வந்த ஆதரவாளர்களைப் புகழ்ந்து பாடுவதிலேயே காலத்தைக் கழித்தனர். அந்தச் சீமான்களின் சிற்றின்ப வேட்கையையும் நப்பாசைகளையும் திருப்திப்படுத்தும் விதத்தில், அவர்கள் மீது காதல், தூது, மடல், உலா போன்ற பிரபந்தங்களையே பாடிச் சென்றார்கள். இவ்வாறு மேலிடத்துச் சீமான்களை அண்டிப் பிழைத்து வந்த அந்தப் புலவர்கள் கீழிடத்திலிருந்த மக்களை வாட்டி வதைத்து வந்த பஞ்சத்தைப் பாட முன்வரவில்லை; துணியவில்லை. எனவேதான் அந்தக்காலத்தில் புலவர்களின் பஞ்சப் பாட்டுக்குச் குறைச்சலில்லையே தவிர பஞ்சத்தைப் பற்றிய பாட்டுக்களுக்குப் பஞ்சமாகவே போய் விட்டது!
அழகிய சொக்கநாத பிள்ளையும் மேலே குறிப்பிட்ட புலவர்களிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவர் அல்லர்தான். அவரும் தமது கவி பாடும் திறமையை யெல்லாம் ‘காயென்று எடுத்து இலை' என்று முடிப்பதற்கும், ‘நேரியல் என்று எடுத்து வாரியல்' என்று முடிப்பதற்குமான சில்லறைச் சாமர்த்தியத்துக்குத்தான் தமது செய்யுள் இயற்றும் திறனைப் பெரிதும் பலியிட்டார், அதேபோல் ஐந்து 'சன்' வரப் பாடுவது. அடை மொழியின்றியே பாடுவது, பலகாரங்களின் பெயர் வரப்பாடுவது, சிரங்குக்கும் குரங்குக்கும் சிலேடை பாடுவது என்பதோடு நில்லாமல் பெண் உறுப்புக்கும் வேறு பல பொருள்களுக்கும் சிலேடையாக உவமித்துப் பாடுவது, அடி மடக்கு வரப் பாடுவது. நடுவெழுத்தலங்கலாம் வரப் பாடுவது முதலிய செப்படி வித்தைகளிலும் சிந்தையைச் செலவிட்டுக் காலத்தைப் போக்கியவர் தான். மேலும் அவர் தம்மை ஆதரித்து வந்த வள்ளல் முத்துசாமிப்பிள்ளையைக் கவி நாயகனாகக் கொண்டு, அவர்மீது பல்வேறு காதல் பாட்டுக்களைப் பாடியவர்தான். உதாரணமாக, முத்துசாமிப் பிள்ளையோடு கலந்து உறவாடிய ஒரு பெண்ணின் கூற்றாக அவர் பின்வரும் பாடலைப் பாடியுள்ளார்:
பலவித லீலைகள் பாராட்டுவான் ; என்னைப் பஞ்சணையில்
குலவிமுத் தாடுவான், ஓயாமல் கோழிகள் கூவு மட்டும்;
புலவி செய்தாலும் நலவு சொல்வான் ; முன்பு போகம் விடான்;
கலவியில் என் முத்துசாமியைப் போல் எங்கும் கண்டிலேனே!
இதுமட்டுமல்ல. ஊரிலுள்ள பெண்களெல்லாம் - திருமணம் ஆன பெண்களும் கூடத்தான் - அந்த வள்ளலின் மீது காதல் கொண்டு தவித்ததாகப் பாடியவர்தான் அவர்.
“உன் கண் அவன்மேல் நாட்டம் கொண்டதேன்?''
என்று என்னை அடித்து உறுக்கி விட்ட
என் கணவன் கண்டு கொண்டால் உயிர் வை யான்!
சீக்கிரத்தில் எனைச் சேர்வாயே!
என்று ஒரு மணமான பெண் வள்ளல் முத்துசாமிப் பிள்ளையை நோக்கிக் கூறி, அவரோடு சேரத் துடிப்பதாகவெல்லாம் பாடிப் பரிசில் பெற்றவர்தான் அவர்.
சொல்லப் போனால், உலகம் எப்படி இருக்கிறது. உலக மக்கள் எப்படி வாழ்கின்றனர், பஞ்சமும் நோயும் நாட்டு மக்களை. சமுதாய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பனவற்றையே பார்க்க மறந்தவர்களாய், மறுத்தவர்களாய், கண்ணி ருந்தும் கண்ணைக் கட்டிக் கொண்டு குருடியாக வாழ்ந்த காந்தாரியைப் போன்று வாழ்ந்து வந்த புலவர்களில் ஒருவராக இருந்தவர்தான் அழகிய சொக்கநாத பிள்ளை. என்றாலும், அத்தகைய புலவர்களைக்கூட, தாது வருஷப் பஞ்சத்தின் விளைவுகள் எவ் வாறு பாதித்தன என்பதையே நாம் காந்திமதி அந்தாதியில் காண்கிறோம். அத்துடன் தாது வருஷப் பஞ்சத்தின் தன்மைகள் சிலவற்றையும் நாம் அதன் மூலம் தெரிந்து கொள்கிறோம். இதன் மூலம் இந்த நூலும் சரித்திர முக்கியத்துவம் கொண்ட ஒரு சமூக இலக்கியப் படைப்பாகவும் நமக்குக் காட்சியளிக்கிறது.
இங்குக் காந்திமதி அந்தாதி என்ற நூலை நான் பொருட் தெளிவுக்காகப் பதம் பிரித்தும், அரும் பதங்கள் சிலவற்றுக்கு அடியில் அர்த்தம் எழுதியும் வழங்கியுள்ளேன்.
இனி நூலைப் படியுங்கள்.
91. பெருமாள்புரம்
திருநெல்வேலி. ரகுநாதன்
--------------------
விநாயகர் காப்பு
அஞ்சம் தெளிய நடைபயில் காந்திமதி அம்மை மேல்
பஞ்சம் தெளிய நல்லந்தாதி பாடிப் பரவுவதற்கு
நெஞ்சம் தெளிய மதிக்காட்டி வாக்கு நிரம்ப நல்கு
நஞ்சம் தெளிய உண்டோன் அருள் சந்தி விநாயகனே
(அஞ்சம் : அன்னம்)
நூல்
திருநெல்லைக் காந்தி மதியே! இப்பஞ்சம் தெளிக என்றே
ஒரு சொல்லை தீ திருவாய் மலர்வாய்; இங்கு உனதுதவி
அருகில்லை யேல் எமக்கு ஆருண்டு ? இந்நாள் மட்டு அனுபவித்து
வருதொல்லை தீர்த்தருள் எண்ணான்கு அறமும் வளர்த்த பொன்னே! 1
பொன்னம்பல வர்மகிழும் உமையே! பஞ்சம் பூமிதனில்
இன்னம் பலம் உற்றிருப்பது என்னோ ? கஷ்டமே வளரும்
முன்னம், பலன் கொடுத்து ஆண்டருள்வாய் அருள் முற்றும் வைத்தே
அன்னம் பல உயிர்க்கும் தந்து காஉன் அடைக்கலமே. 2
[கா : காப்பாற்று ]
அடைக்கலம் காத்து அருள் அம்மா; பலசரக்கு அவ்வளவும்
கடைக்கு அலங்காரம் என்று ஏங்கி வந்தோம்; பஞ்ச கால வன்மை
யிடைக் கலங்காமல் பொருள் கொடுப்பாய்; எங்கட்கு என்றென் றைக்கும்
படைக்கலம் காண் , விழி மாதே ! பணிவம் உன் பாதங்களே . 3
(வன்மை : கொடுமை )
பாதங்களே வங்கம் ஆகி மெய்யன்பர் துன்பக் கடலி
லே தங்கிடா மல்கரை ஏற்றும் என்பது எமக்கு இலையோ?
தீ தங்க மான இப் பஞ்சத்தி லேபசித்து ஏங்கி, உயிர்ச்
சேதங்கள், அம்மா, கணக்கும் உண்டோ தொகை செப்புதற்கே? 4
[வங்கம் : மரக்கலம்]
செப்பப் படாது இந்தப் பஞ்சத்தி லேபட்ட சீரழிவே!
வெப்பப் படாத உன் கண்ணோக்கம் இன்றி விடுவித்து, இதைத்
தப்பப் படாது; இங்கு அறிந்தறியாது குற்றம் செயினும்
ஒப்பப் படாது அம்ம, எக்காலமும் எங்கட்கு உன்பலமே. 5
உன் பாதமே கதி அம்மா, இந்நெல்லை உமையவளே!
பொன்பார் பெண்ணாசை இலதேல் சுகம் அது போலுமில்லை;
வன்பாய் அதுவும் படைத்து அநியாயத்தில் வாடுகின்றோம்;
அன்பாகத் தீர்த்து வைப்பாய், பஞ்சத்தால் படும் ஆபத்தையே. 6
(வன்பாய் : வன்மையாக)
ஆ! பாரதத்தும் உண்டோ , இதுபோல் அநியாயம் அம்மா?
நீ பார்த்து இப்பஞ்சத்தை ஓட்டவென்றால் வெகு நேரமுண்டோ ?
தாபாக்கினியில் வருந்திய பேர்கள் வந்தால், இரங்கா
மா பாதகரைச் சுமந்தது எவ்வாறு இந்த மண் மகளே? 7
(தாபாக்கினி : துன்ப நெருப்பு)
மண்கூட வாய்விட்டு அழும் ஒரு சத்தம் அம்மா, மனசும்
புண் கூடு என நொந்து போச்சு தம்மா; பட்ட புன்மை சொல்ல
எண் கூட வில்லை ; பிழைப்பது எவ்வாறு அடியேங்கள் அம்மா
கண்கூடு வீங்கி, உலகோர் படும் பஞ்ச காலத்திலே? 8
(எண் : மனம்; அடியேங்கள் : அடியார்களான நாங்கள்)
காலத்தைக் கஷ்டம் பொறாமல் நொந்தோம் ; பங்கயனை நொந்தோம்
சாலத்தை நீ செய்கி றாயோ என உன்றனையும் நொந்தோம் ;
பாலத்தை உற்ற விழி உமையே! இந்தப் பஞ்சம் வந்த
மூலத்தை இன்னம் அறியேம்; திகைத்தனம் முற்றிலுமே. 9
[பங்கயன் : பிரமன் ; சாலம் : மாயவித்தை ; பாலத்தை : ஒளிப் பிரவாகத்தை]
முற்றின நெற்றென வற்றினது எம்முடல் மூள் பசியால்;
சற்றும் உன் நெஞ்சு இரங்காத தென்னே? இப் பஞ்சத்தில் எதேன்
விற்றுத் தின்போம் எனில் ஆமானதில்லை; மிடிய தனால்
இற்றை வரை கஷ்டப் பட்டது போதும் இரங்குவையே. 10
[எதேன் : எதையேனும் ; ஆமானதில்லை : முடியவில்லை ; மிடி: வறுமை]
இரந்து குடிப்பவர்க்கோ பஞ்சத்தால் குறையென்ன? முன்போல்
நிரந்தரம் பிச்சை எடுத்துண்பர்; செல்வர் என்னில் குறையோ?
தரம் தப்பி , எம்தரக் காரர்களே மெலிந்தார்; இனியுன்
வரம் தந்து அளித்திட உனக்கு இது எம் மாத்திரமே ? 11
மாத் தின்றும், கேப்பைக் களி தின்றும், புல் மண்டி வாய்மடுத்து
நாத் தின்றும், மெல்லப்படும் கீரைகள் தின்றும், நாங்கள் உயிர்
காத்து, இன்று வரையினும் கழித்தோம் பஞ்ச காலத்தையே;
கூத்தின் துறைப்படி ஆடவல்லான் மகிழ் கோகிலமே! 12
[மா : மாவு; புல் : கம்பம்புல் ; நாத்தின்றும் : நாவால் தின்றும்;
கோகிலமே : குயிலே]
கோகனகத் திருவே! பசியாலும் குழைந்து பட்ட
சோகமெல்லாம் எங்கள் தாயான உன்னுடன் சொல்வதல்லால்,
காக அறிவின்றித் தாமே வைத்து உண்ணும் கயவர் தம்பால்
ஏக , உடலும் ஒலுகுதம்மா , உள்ளம் எஞ்சல் உற்றே . 13
[கோகனகத் திருவே : சிவபெருமானின் செல்வமே; காக அறிவு :
காகங்களின் கரைந்து உறவு கலந்துண்ணு அறிவு ; ஒலுகுதம்மா :
ஒடுங்கு தம்மா ; எஞ்சல் : சுருங்கல்]
எம்சாண் கும்பிக்கு இரைக்கே இந்தமட்டெனில் என்ன செய்வோம்?
பஞ்சாங்கத் தேனும் இப் பஞ்சாங்கம் நீங்கும் என்பார்கள் இல்லை;
நஞ்சாம் கவலை எவர்படுவார், பல நாளும் அம்மா?
செஞ்சாலி யின்விலை சீராக நீ அருள் செய்குவையே. 14
[பஞ்சாங்கம் : பஞ்ச நெருப்பு ; செஞ்சாலி : செந்நெல்]
செய்கள் உள்ளோர்கள் பயிரிடுவார் ; நெல்லைச் சேர்த்து வைப்பார்;
மெய் கொழுக்கும்படி உண்டிடுவார்; நெல் மிகுந்ததை வி
லைகட்கு விற்று, வருடம் தப்பாமல் நகைகள் செய்வார்;
கொய் கமழ் பூங்குழலாய் ! பஞ்சத்தால் என் குறை அவர்க்கே ? 15
[கொய்கமழ் பூங்குழல் : கொய்த வாசனைமிக்க பூச்சூடிய கூந்தல்]
அவமதித்தால் கதிவேறு இல்லை; நீ அன்னையாய் இருந்தும்
இவளவு தூரம் கஷ்டப்படப் பார்த்தும் இருப்பது என்னோ ?
எவளவு குற்றம் செய்கின்ற பொல்லாப் பிள்ளை என்னினும் தாய்
தவற விடுவதுண்டோ ? ஏது அம்மா அடம் சாதிப்பதே ! 16
(இவளவு: இவ்வளவு; எவளவு : எவ்வளவு)
சாதித்து அநியாயத் தெமை நீங்கிடாச் சஞ்சல இருட்கோர்
ஆதித்தன் போல்வந்து அருள்; இன்று கோபம் அடிமைகள் மேல்
ஏது இத்தனை உனக்கு அம்மா? இப்பஞ்சத்தில் எப்படிச் சம்
பாதித்தும் அதில் என்ன? காணாதம்மா சம்பளப் பணமே. 17
(ஆதித்தன் : சூரியன்)
பணமிருந்து இப்பஞ்சம் வந்துவிட்டால் ஒரு பாரமில்லை;
உணவின் பொருட்டுக் கடன் கொண்டதோ தரத்துக்கு அதிகம்;
மணமற்ற சீவனத்தாலே புசிப்பது எவ்வாறு? கொண்ட
ரணமும் தொலைப்பது எவ்வாறு? சொல்வாய் நெல்லை நாயகியே! 18
(மணம் : மகிழ்ச்சி ; ரணம் : கடன்)
அகிலாண்ட நாயகியே! பஞ்சத்தால் உய்வது ஐயமென்றே
திகில் ஆண்டதே எம்மை , என் செய்குவோம்? ஐவர் தேவிக்கு முன்
துகிலாண்டவன் தங்கையாய் இருந்தும், படும் துன்பம் அற,
முகிலாண்ட எங்களைக் காவாது இருத்தல் முறையல்லவே! 19
(ஐவர்தேவி பாண்டவரின் மனைவி பாஞ்சாலி ;
முகில் ஆண்ட : இருள்மேகம் சூழ்ந்த )
அல்லும் பகலும் இப்பஞ்சத்தில் பட்ட அவதியெல்லாம்
சொல்லும் பொழுதில் உருகாதது ஒன்றுளதோ? கடிய
கல்லும் கரைந்திடுமே ! உனக்கோ இரக்கங்கள் இல்லை;
நெல்லும் தவசமும் எல்லாம் மலிந்திட நீ அருளே . 20
(தவசம் : தானியங்கள்)
அருள் கொடுத்தாலன்றி ஈடேறுவது இங்கு அரிது; பொல்லா
மருள் கொடுத்தால் எவர்தாம் பிழைப்பார் ? உய்யும் வண்ணம் இனித்
தெருள் கொடுத்து ஆதரவாய் வறுமைப்பிணி தீர்த்து எமக்குப்
பொருள் கொடுத்தால் உனை யார் தடுப்பார் இந்தப் பூதலத்தே ? 21
(மருள் : மயக்கம் ; தெருள் : அறிவுத் தெளிவு)
பூதர வல்லியை நெல்லேசரை, தண்புனல் முடித்த
நாதரை, வேணுவனத்தரை மன்றுள் நடம் புரிந்த
பாதரைச் சேர்ந்த பராசத்தியே! இந்தப் பாரில் எங்கள்
ஆதரம் தீரக் கருணை செய்வாய், உலகாண்டவளே. 22
(பூதரவல்லி : சிவபெருமான் ; ஆதரம் : கலக்கம்)
ஆண்டாண்டு தோறும் இப் பஞ்சத்தினால் தொலையாக் கவலை
பூண்டால், எளியவர்க்கு எவ்வாறு இந்நாள் பிழைப்புக் கிடமே?
தூண்டா மணிவிளக்கே! பலவாறு எம்மைத் துன்பம் செய்ய
வேண்டாம்: இவளவு போதும் அம்மா, செய்த வெவ்வினைக்கே. 23
(இவளவு : இவ்வளவு)
வினையின் துயர்கெடும் என்றே வரம் தரல் வேண்டுமல்லால்
பினை யொன்றும் வேண்டிலம் அம்மா; சகல பிராணிகட்கும்
அனை என்று நீ உறலாலே சரண் என்று அடைந்தனம் யாம்
உனையன்றி வேறில்லை என்று நன்றாய் எம் உளத் தெண்ணியே. 24
[பினை : பின்னை ; பின்னர் ; அனை : அன்னை]
எண்ணிய எண்ணங்கள் ஒன்றாகிலும் நிறைவேறவில்லை;
பண்ணிய தீவினைக்கு என்றோ, எமக்கு இப்படி அமைத்தாய் ?
திண்ணிய வந்த வினைகள் எல்லாம் இனித் தீர்வது எந்நாள்?
தண்ணிய எங்களை ஈடேற்றுவது எந்நாள்? உரையே. 25
[உரையே : சொல்லேன்]
நாளுக்கு நாள் விலை ஏறுதம்மா! கடன் ஆகுதம்மா!
தேளுக்கு நேர் இந்தப் பஞ்சத்திலே என்ன செய்வம் அம்மா?
வாளுக்கு உவமை சொலும் விழிக் காந்திமதி அம்மை நின்
தாளுக்கு நாங்கள் அடிமை என்றே வந்து சார்ந்தனமே. 26
தனத்தைப் படைத்திருந்தால் நன்மை ஏற்பவர் தங்களுக்கே;
அனத்தைப் படைத்திருந்து ஆனந்தமே பெறலாம்; அதன்றி
மனத்தைப் படைத்திருந்தால் மாத்திரம் தவம் வாய்த்திடுமோ?
எனத்தைப் படைத்திருந்தால் என்ன என்று உள்ளம் ஈர்க்கின்றதே. 27
[அனத்தை : அன்னத்தை, உணவை ; அதன்றி : அதுவன்றி :
எனத்தை: என்னத்தை]
ஈர்க்கப் பதறும் நெஞ்சுற்றோம் ; இப் பஞ்சத்தில் ஏழைகளைப்
பார்க்கப் பதறுதம்மா! இதை யார் சகிப்பார் என்று உடல்
வேர்க்கப் பதறுதல் கண்ணாரக் கண்டும், இவ்வேதை எல்லாம்
தீர்க்கப் பதறுவதோ தயவான திருவுள்ளமே? 28
(வேதை : வேதனை)
உள்ளக் கவலை எவ்வாறு உரைப்போம்? உன்னுடன் பிறந்த
கள்ளப் பிரான் வயிற்றில் வேதனையுற்றும், காட்டில் சென்றும்
கொள்ளப் படாத கொடும் படையாய் , பஞ்சம் கூடுகையால்
அள்ளி மண்ணைத் தின்று மாவடி காப்பது யாம் அறிந்தே. 29
(கள்ளப் பிரான் : கண்ணபிரான்)
யாமளையே! உன் மணவாளரோடு உரைத்தாலும் அவர்
தாம் என் செய்வார் என்று உள் எண்ணுதம்மா ; என்னத்தால் எனிலோ ,
ஈமத்திலே நடித்து எக்காலும் பிச்சை எடுத்து அலைந்து உண்
டே, மலைவாய் முகமும் பஞ்சம் காட்டி இருத்தல் கண்டே. 30
(யாமளையே : பார்வதியே ; உள் : உள்ளம் ; ஈமம் : சுடுகாடு ;
பஞ்சம் : தவமுத்திரை)
கண்டனம் செய்யும் கணபதியே, பஞ்சம் கண்டு மெய்து
வண்டனம் என்றனம்; கேட்டு எனமோ முகம் மாற வைத்துக்
கொண்டனன்; இங்கு எனக்கும் பஞ்சமாகக் கைகூடிற்று என்று
விண்டனனால்! எங்கட்கு ஆர் துணை நீயும் கைவிட்டி டிலே? 31
(எனமோ : என்னவோ போல் ; முகம் மாற : மாறிய ஆனைமுகமாக ;
பஞ்சமாகக் கை கூடிற்று: ஐந்து கரங்களாயிற்று)
விட்டுணு தங்கச்சியே ! இரப்போர் எங்கள் வீட்டில் வந்தால்
இட்டுணும் வண்ணம் நிதியளிப்பாய், பஞ்சமே தளையாய்க்
கட்டுணும் எங்கள் துயர் தவிர்ப்பாய் என்று கண்டு திடுக்
கிட்டுணர்ந்தே பணிந்தோம் ; விலக்காய் இக் கெடுதலையே. 32
( இட்டுணும் : இட்டு உண்ணும் ; கட்டுணும் : கட்டுண்ணும்)
தலை எழுத்து ஈதென்று கண்டோம் ; பெருமை தளரக் கண்டோம் ;
விலை ஒரு கோட்டை நெல் ரூபாய் பனிரெண்டு விற்கக் கண்டோம் ;
நிலை கெடப் பஞ்சமும் சேரக் கண்டோம் ; துன்பம் நேரக் கண்டோம் ;
அலைய விடாது எம்மை ஆட்கொள்ள நீவரக் காண்கிலமே. 33
(கோட்டை : 168 படி)
காணுதி! இப்பஞ்சத்தில் அம்மா எம் கஷ்டக் கணக்கைச் சொல்லத்
தோணுது ; மெத்தவும் உன்பால் வந்தே உன் துணை யடியைப்
பேணுதும், காந்திமதியே! நிதியுள்ள பேரைக் கண்டால்
நாணுது ; நீ இரங்காவிடில் ஆர் சொல்வர் ஞாயம் என்றே? 34
(ஞாயம் : நியாயம்)
ஞாயிறு போன்ற குழைக்காதும், திங்கள் நகைமுகமும்
தூய செவ்வாயும், சிலப்புதனைக் கொடு இணையடியும்
வேய வியாழமர் செங்கையுமாய், வெள்ளிடப மிசை
நீ எழுவாய், பஞ்சமிஞ் சனி யாயங்கள் நீங்கிடவே 35
[இப்பாடலில் கிழமைப் பெயர்கள் ஏழும் இடம்பெற்றுள்ளன.
அடிக்கோடிட்டவை. யாழ் அமர் : யாழ் தாங்கிய ; வெள்ளிடபம்:
வெண்இடபம் - வெள்ளை நிறக் காளை]
நீங்கித் தளர்ந்திடும் உள்ளன்பிலார் பத்தி ; நித்த நித்தம்
தாங்கித் தளர்ந்திடும் சண்டாளரைப் புவி ; தாழ் சுடரின்
ஓங்கித் தளர்ந்திடும் ஈயாதவர் செல்வம் ; ஊனும் இன்றி
ஏங்கித் தளர்த்திடும் பஞ்சத்தில் ஏழைகள் எங்கெங்குமே. 36
எம் குறைபாட்டை எல்லாம் சொலக் கேள் ; பஞ்சம் என்பது எமை
இங்கு உறைபோலவும் மூடிற்று அம்மா ; மனத்து இன்னலெனும்
கங்கு உறையா வண்ணம் செங்கதிராகிக் கங்காதரனார்
பங்கு உறை காந்திமதியே ! திருவருள் பாலிப்பையே. 37
[பங்கு : பக்கத்தில்]
பாலிக்கும் காந்திமதி எனும் தெய்வம் இப் பார்புகழ் நெல்
வேலிக்குள் நீ ஒரு தாய்போல் இருந்தும், வெகுண்டு பஞ்ச
காலத்தைப் போக்க நினையாதது என்ன காரணமே?
நீலித் தனத்தைச் சரிக்கட்டவோ இந்நிலை நின்றதே? 38
நிலைநிற்க ஏழைக்கு இரங்கி, எக்காலமும் நெல் மலிந்து
விலை விற்கவே திங்கள் மும்மாரி பெய்விக்க வேண்டும் அம்மா!
உலை உற்கம் போல் கனன்று எத்தனை நாள் கொதிப்போம்? இப்படி
அலையற்கு இனி எங்களால் முடியாது. நெல்லை வடிவே. 39
(உலை உற்கம் : உலைத்தீ ; அலையற்கு : அலைவதற்கு)
வடிவே! எம் காந்திமதியே ! இப்பஞ்சத்தின் வன்மை சொல்ல
மிடியேம் எங்கட்கு ஆயிரம் வாயாகிலும் இனி வேண்டும் ; இந்தப்
படி ஏங்க வைத்தது எது காரணத்துக்கு? பாவத்தினால்
அடியேங்கள் செய்த குறையோ , சொல் ! இப்படி ஆனதுவே. 40
(வன்மை : கொடுமை ; மிடியேம் : தரித்திரர்கள் ; எது : என்ன :
அடியேங்கள் : அடியார்களான நாங்கள்)
ஆனாலும், அம்ம! இப்பஞ்சத்துக்கு ஏது இனி ஆற்றுவமோ?
போனாலும் நம் உயிர் போகட்டும் என்றுனைப் போற்றுவமோ?
தானா இது தெளியாது ; இது நீங்க உன் தண்ணருள் செய்;
மானாபி மானமும் காத்தருள் காந்தி மதியம்மையே. 41
(ஆற்றுவமோ : (என்ன) செய்வோம் ; தானா : தானாக)
மதியேதும் இன்றி மனம் மருண்டோம் பஞ்ச வன்மையினால்;
துதியே உனைச் செய்தும், அம்மா எமக்கு இந்தத் துன்பம் வந்த
விதி ஏது? காந்திமதியே ! அருள் எங்கள் மீதில் வைக்கத்
ததியே இப்போதன்றி வேறெந்த நாள், சொல் சதாநந்தியே? 42
[ததி : தருணம்]
நந்தா மணி விளக்கே ! செல்வியே ! நெல்லை நாயகியே!
செந்தாமரை மகள், நாமகள் போற்றும் சிகாமணியே!
சிந்தாகுலம் கெட, மெய்யடியார்கள் இச்சிப்பது எல்லாம்
தந்தாளும் காந்திமதியே! இரங்கு அருள் தன்மை கொண்டே. 43
[சிந்தாகுலம் : மனக் கவலை]
கொண்டாடுவார் இந்தப் பஞ்சத்தை நெல் கட்டிக் கொண்டு விற்போர் ;
திண்டாடினோம் புகல் வேறே இடமின்றி ; செல்வரைப் போய்க்
கண்டாலும் பேசிலர்; வெம்பசியால் அவர் காதினிலே
விண்டாலும், ‘தள்ளு, தள்ளு' என்பார்கள் சீறி வெடுவெடென்றே. 44
வெடுவெடென்றே சொலும் வீணரைப் பாடி வியந்து, அலைந்து
கொடுகொடு என்றாலும் இங்கு அம்மா, அரைச்சல்லி கூடக் கொடார் ;
அடிமை கொள் காந்திமதியே ! இதனை அறிந்திருந்தும்
கடுகளவாயினும் நீ இரங்காதது என்ன காரணமே? 45
[சால்லி : பழைய நாணயம் ; ஒரு ரூபாய் = 192 சல்லி]
கார் அணி சேர்ந்த குழலாளை , அம்மையை, காந்திமதிப்
பேர் அணி சேர்ந்த உமையாளை, துன்பப் பிணி மருந்தை,
சீர், அணி சேர்ந்த கவியால் தினம் துதி செய்திடுவோம்,
ஓரணி சேர்ந்த இப்பஞ்சத்தின் மூர்க்கங்கள் ஓய்வதற்கே 46
[கார் அணி : கருமுகில்]
ஓயாக் கவலை ஒழிவது எப்போது என உன்னிடத்தில்
நாயாய் அலைகின்ற இவ்வேளையில், நெல்லை நாயகியே!
நோயான பஞ்சமும் வாதிக்குதே ! இந்த நுண் பலத்தைத்
தாயான உன்னுடன் சாற்றாமல் யாருடன் சாற்றுவதே? 47
(வாதிக்குதே - வருந்துகிறதே ; நுண்பலம்: நொம்பலம், துன்பம்)
சாற்றரும் சீர்த்தி உடையவளே! நல் தடம் பொருனை
ஆற்றின் நெடுந்துறை மேல் பாரிசத்தில் அமர்ந்தவளே!
மாற்றிடுவாய், இந்தப் பஞ்சத்தை, அம்ம! உன் மாமலர்த்தாள்
போற்றிடும் தொண்டர் செய் குற்றங்கள் யாவும் பொறுப்பவளே! 48
(பொருனை : தாம்பிரவருணி)
பொறுமைக் குணம் நினக்கு என்பது கஷ்டம் பொறுத்தலையோ?
சிறுமைப் படுவதும், பட்டதும் போதும், இச் சென்மத்துக்கும்
மறுமைக்கும் காணும் ; அதினும் இப் பஞ்சத்தின் மாகொடிய
வறுமைப் பிணிகள் வந்தால், அதைப் போலில்லை மானிகட்கே. 49
(மானி : மானம் மிக்கவர்கள்)
மானம் கொடு ; நல்வரம் கொடு ; மங்கள வாக்குக் கொடு ;
ஞானம் கொடு ; பஞ்சம் நீங்கிடவே அருள் நாட்டம் கொடு ;
நானம் கொடுங்கமழ் பூங்குழலே ! நெல்லை நாயகியே!
ஈனம், கொடும் துன்பம் நாடாது இங்கு உய்வண்ணம் எம் தமக்கே ! 50
[நானம் : நறுமணம்]
எந்தக் கவலையினும் கொடிதானது இல்லாமை ; அது எம்
சொந்தக் கவலை ; அது தீரவில்லை ; இத்தொல்லையுடன்
பந்தக் கவலை ஒப்பாகிய பஞ்சம் பரவிற்றம்மா!
இந்தக் கவலைப் பட முடியாது எங்கட்கு இன்னமுமே. 51
இன்னபடி என்று உரையாதிருப்பதும் என்ன? முகில்
அன்ன படிவக் குழல் உமையே! நெல்லையப்பர் முன்னம்
சொன்ன படி நெல் இரு நாழி ஈவதில் சோர்வும் உண்டோ ?
என்ன படி அளக்கின்றார் ? எங்கட்கு அதையேனும் சொல்லே. 52
சொல் - பொருள், பூ - மணம், எள் - எண்ணை , கன்னல் - சுவை எனவே
பற்பல சராசரத்தும் கலந்தே நின்ற பார்வதியே!
நெல் படியேறும் படிக்கு அருள்வாய், பஞ்சம் நீக்கி, அம்மா!
வெற்பரையன் தந்த கண்மணியே ! நெல்லை மெய்ப் பொருளே 53
[படியேறும் படிக்கு : வீட்டுப்படி ஏறி உள்ளே வருவதற்கு;
வெற்பரையன் : மலையத்துவசன்]
மெய்க்க அநேகரைச் செல்வர்களாய்ப் புவி மீதில் வைத்தாய்;
மிக்கவும் எங்களைப் பொல்லா வறுமையில் வீழ்த்தி விட்டாய்;
மக்களிலே பக்ஷபாதம் செய்தால் எவ்வகை பிழைப்போம்?
திக்கு உனையன்றி ஒருவருண்டோ , பஞ்சம் தீர்ப்பதற்கே? 54
[திக்கு : ஆதரவு]
தீராத வல்வினை தீர்ப்பாய் என்றே மறை செப்புதலை
ஓராது இதுவரை வீணே அலைந்தனம் ; உன்னை யன்றி
யாரார் இருந்தென்ன? காந்திமதீ ! இனியாவது அருள்
கூராவிடில் சொல்வது எவ்வாறு உனை அனுகூலி என்றே? 55
(ஓராது : உணராது : அனுகூலி : அனுகூலம் செய்பவள்)
கூலிக்கு வேலைகள் செய்தே பிழைப்பவர் கொட்டைகள் நூற்
றால், இக் குவலயத்தில் பிழைப்பு உண்டென்று உள்ளார்கள் ; உன் நெல்
வேலிக்குள் இவ்விதம் பஞ்சம் கண்டால் எவ்விதம் பிழைப்பார்?
பாலிக்க வேண்டும், அம்மா ! இந்த வேளை கண் பார்த்தருளே! 56
(கொட்டை : பருத்தி)
பார்வதியே ! எந்தத் துன்பமும் நின் அருள் பார்வையினால்
தீர்வது ; இப் பஞ்சம் மாத்திரம் ஏன் அதில் தீர்வதில்லை ?
சோர்வு அது இல்லாது உங்கள் எண்ணம் கைகூடும், சுகம் உண்டாகும் என்று ஆ
சீர்வதி, காந்திமதி அம்மையே ! எங்கள் சீர் நினைந்தே . 57
[சீர் : நிலைமை]
நைந்து சொல் நோக்கம் அறிவாய் ; முன் சுந்தரனால் நடந்து
சந்து சொன்னோன் மகிழ் சேர் காந்திமதி ! உன் சந்நிதியில்
வந்து சொன்னோம் ; இன்னமும் தீர்ந்திடாததில் வாடி, மனம்
நொந்து சொன்னோம் ; பொய்த்ததோ இடைக்காடர்தம் நூல் என்றுமே? 58
( சொல் : சொல்லும் ; சுந்தரன் : சுந்தரமூர்த்தி நாயனார் ; சந்து : தூது)
நூல் பஞ்ச லக்ஷணம் கற்று உனைப் போற்றும் மனுக்களும், பார்
மேல் பஞ்ச லக்ஷணம் கண்டு நொந்தார் ; உன்னை வேண்டின பேர்க்கு
ஏற்பஞ்ச லக்ஷணம் காட்டாது ஒழிப்பை எனும் சொல்லும் பொய்யோ?
தோல் பஞ்ச லக்ஷணம் காண் நடையாய் என் கொல் சூழ்ந்ததையே? 59
(நூல் பஞ்சலக்ஷணம் : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து
இலக்கணங்கள் ; தோல் பஞ்சலக்ஷணம் : தோல் பஞ்சத்தால் வாடிய
நிலைமை ; நடையாய் : வழக்காய்)
ததைப்பாய் அளி முரல் பூங்குழலாளுக்கு, தாரகம் என்று
அதைப் பாதுகாக்கும் நெல்லை வடிவாளுக்கு அடிமைப் பட்டும்
பதைப்பால் முன்போல் பஞ்சத்தாலே வருத்தப்படுவது என்றால்
இதைப் பார்க்கிலும் இங்கு அதிசயம் வேறு இனி என்ன உண்டே ? 60
(ததைப்பாய் அளி முரல் : நெருக்கமாகத் தேனீக்கூட்டம் ரீங்காரம்
செய்கின்ற; தாரகம் : கண்மணி)
என்ன பிழைப்பு எம்பிழைப்பு என்று நாங்கள் எடுத்துரைப்போம்?
கன்னல் மொழி நெல்லை நாயகியே! பஞ்ச காலத்திலே
மன்னர் தயவு சம்பாதித்துமே பெரு வாழ்வு பெற
உன் அபிமானம் இல்லாவிடில் எவ்வண்ணம் உய்வண்ணமே? 61
(கன்னல் : கரும்பு)
உய்வண்ணம் நாங்கள் வந்து உன் தாட்கு அடிமைப் பட்டோம், வடிவே!
கை வண்ணம் கால் வண்ணம், காந்தள் செந்தாமரை காட்டும் உன்றன்
மெய் வண்ணம் பாதி கொள் வேணுவனேசர்க்கு விண்டு, உதவி
செய்வண்ணம் நீ உளம் கொள்வாய் இப்பஞ்சம் தெளிந்திடவே 62
(தாட்கு : தாள்களுக்கு; காந்தன் : காந்தப்பூ ; மெய்வண்ணம்: உடம்பில்)
தெளித்துக் கொள்ளா மருள் சிந்தையர் ஆயினும், தேடுபவர்க்கு
ஒளித்துக் கொள்ளா உன் சேவை கண்டால் எவர்க்கும் குறையோ?
நெளித்துக் கொள் ஆடு அரவார் புயம் சேரும் நெல்லை வடிவே!
சுளித்துக் கொள்ளாது இந்தப்பஞ்சத்தை என்று சுருக்குவையே? 63
(மருள் : மயக்கம் ; நெளித்துக் கொள் ஆடு அரவார் : நெளிந்து
கொண்டு ஆடும் பாம்பை அணிந்த சிவன ; சுளித்து : முகம் சுளித்து]
சுருக்காம் இந்நல்வழி முன் தெரிந்தீர் இல்லை , தொல் புவியீர்!
பெருக்கான பேய்மதி நீர் படைத்தீர் ; இனிப் பேசில் என்ன?
மருக்கால் எறி குழலாள் நெல்லைக் காந்தி மதியம்மை பேர்
ஒருக்கால் சொன்னால் பஞ்சமெல்லாம் பஞ்சாய்ப் பறந்தோடிடுமே. 64
[மருக்கால் எறி : மருக்கொழுந்து வாசனை வீசும்]
ஓடம் கவிழ்த்த விதம் போல், பொருள் எங்கட்கு உள்ளதெல்லாம்
கூடும் இப் பஞ்சம் கவிழ்க்கின்றது என்ன கொடுமையம்மா
சூடகக்கை நெல்லை நாயகியே! பஞ்சம் தோன்றி எம்மை
ஈடுபடுத்திய கஷ்டத்துக்கே இல்லை எல்லையுமே! 65
[சூடகம் : கைவளை]
எல்லாரைப் போலவும் வைத்தனையோ ? எம்மை இவ்வுலகில்
இல்லாளர் ஆக்கி, பசித்தோர்க்கு அனம் இல்லை எனச் செய்யும்
இல்லாமை ஒன்று அதை இல்லாமை ஆக்குவது என்றைக்கு? அதும்
சொல்லாது இருப்பதுவோ? நல்ல நீதி! உன் தொண்டர்கட்கே! 66
[அனம் : அன்னம் ; அதும்: அதையும்]
கட்கடை கொண்டு சற்றாயினும் பார்; சங்கடங்களைக் கேள் ;
உட்கி, மனத்துள் விசாரத்தினால், உடல் உப்பிருந்த
மட்கலம் போலவும் ஆனது ; இவ் வேளையில் வந்தருள்வாய்,
சட்கம லானனைப் பெற்றவளே! நெல்லைச் சங்கரியே 67
(கட்கடை : கடைக்கண் ; உட்கி அச்சமுற்று ; மட்கலம் : மண் பானை;
சட்கமலானனன் : தாமரை போன்ற ஆறுமுகங்களைக் கொண்ட ஆறுமுகன்)
சங்கார் தடங்கை நெல்லை வடிவே! துன்ப சாகரத்துள்
முங்காது இருக்க இனியாகிலும் அன்பு முற்றும் வைப்பாய் ;
எம் காதல் தீர்ந்திட, இங்கு ஆதரவுடன் எங்களுக்கு
மங்காத செல்வம் தந்து, எந்நாளும் காத்து வரல் முறையே. 68
[சங்கார் ; சங்கு தாங்கிய ; காதல் : ஆவல்]
முறைக்கு உன் குழந்தைகள் யாம்; பஞ்சத்தால் பட்ட மோசமெல்லாம்
மறைக்கும் தெளிதற்கு அரிதான வேணு வனத்தர் எனும்
இறைக்கும் உனக்கும் விபரம்தாய் முறையிட்டும், இன்னம்
உறைக்கும் வெயில் மிகுதே ! இதுவோ உன் உதவியுமே? 69
(மறைக்கும் : வேதத்துக்கும்)
உதறுதம்மா உடலைப் பசிநோய் ; மன ஊக்கங்களும்
சிதறுதம்மா ; நிர்க்கதியாகி ஏழைச் சனங்கள் எல்லாம்
கதறுதம்மா; இப்படிப்படும் பாரதம் காண, நெஞ்சு
பதறுதம்மா; எப்படிப் பிழைப்போம் என்று இப் பஞ்சத்திலே. 70
[பாரதம் : தொலையாத பெருந்துன்பம்]
பஞ்சத்திலே இந்த வல்விலையால் படும் பாட்டை, அம்மா,
கொஞ்சத்திலே சொல்வதுண்டோ ? அந்து ஊது நெற்கு ஒப்பந்தமாய்
நெஞ்சத்திலே ஒரு ஆதாரமும் இல்லை; நெல்லையில் வா
ழும் சாத்தியே இந்த வேளை தற்காப்பதும் உன் பரமே! 71
(அந்து ஊது நெற்கு : அந்துப் பூச்சி அரித்த நெல்லுக்கு ;
பரமே : பொறுப்பே)
பரமேட்டி கற்பனையோ பஞ்சத்தால் களைப்பாகியது
யரம் ஏட்டிலே அடங்கத் தக்கதோ, சொல்! அருமை கெட்ட
நர மேட்டிமை கொண்ட பேர்களைப் பாடியும் நாள் கழித்த
தரம், மேட்டிற்கே இறைத்திட்ட தண்ணீரினும் தாழ்வுற்றதே. 72
[பரமேட்டி : பிரமன்; கவிதைப் படைப்புக்கான ;
நரமேட்டியை: மனிதர்களிலே சீரும் சிறப்பும்]
தாழ்ந்து பணிந்தனம், அம்மா ! பொல்லாத பஞ்சக் கொடுமை
சூழ்ந்து கொண்டு எங்களை வாட்டுதம்மா! இங்கு உன் தொண்டர் என
வாழ்ந்திடும் தரங்கள் ஒரே தீர்வையாய் வறுமைக் கடலில்
ஆழ்ந்து விடுதல் நன்றோ? தொலைப்பாய் இந்த அல்லலையே. 73
(தீர்வையாய் : முடிவாய்)
அலையா அலைச்சல் அலைந்தே இப்பஞ்சத்தினால் எளியேம்
உலையார் மெழுகு ஒத்து உருகினம்; தீர்க்க உனக்கு இதென்ன
மலையா? எம் காந்திமதியே! பராமுகமாய் இருந்தால்
நிலையா வறுமைக் கடலில் எவ்வாறு அம்ம, நீந்துவதே 74
( மலையா? : பெரிய பாரமா?)
நீந்தரும் பஞ்சத்தினால் கயவோரை நெருங்கில், இறு
மாந்து இழிவாய் மதிக்கின்றார் ; பிறர்தம் வருத்தங்களை
ஆய்ந்து உணரார்; இவர் ஏன் பிறந்தார் இந்த அற்பர் கட்கும்?
காந்தி மதியம்ம ! எல்லாம் உன்னால் வந்த கட்டுமெட்டே. 75
[கட்டு மெட்டு: சங்கடம் ; வழக்குச் சொல்]
மெட்டுக் கெட்டோம் பொருள் இல்லாமையால்; நெல் விலைகள் எங்கள்
மட்டுக்கு எட்டாதபடியானது ; அன்றியும் வாழை இலை
துட்டுக்கு எட்டாம் ! அதுவும் கிடையாது, அலைந்தோடி எங்கும்
தட்டுக் கேட்டு ஏங்கினது, அம்மா ! சொலவும் தரம் இல்லையே. 76
(மெட்டு : தரம் ; வழக்குச் சொல்; மட்டுக்கு : சக்தியளவுக்கு இதுவும்
வழக்குச்சொல் ; துட்டு : பழைய நாணய மதிப்பு - 48 துட்டு ஒரு ரூபாய் ;
தட்டுக் கெட்டு : தவித்துப் போய்)
இல்லுக்குச் சங்கடம் தீர்வது என்றோ என்றிருக்கையிலே,
நெல்லுக்குச் சங்கடம் ஆச்சு ; இது கூறி, நிதி உளர்பால்
மல்லுக்கு நின்று மனமோ சலித்தது, அம்மா! பழைய
செல்லுக்குப் போக்கென்ன சொல்வோம் என்றுள்ளம் திகைப் புற்றதே! 77
(இல்லுக்கு : வீட்டுச் செலவுக்கு; மல்லுக்கு : விடாப்பிடியாக - வழக்குச் சொல் ;
செல்லுக்கு : பாக்கிக்கு)
திகைப்புக்கு இடம் இப்படி சிறியேங்கள் திரிவதென்றால்
நகைப்புக்கு இடம் அல்லவோ உனக்கே ! இது நாள் வரைக்கும்
பகைப்புக்கு இடம் மிடியால் வைத்தல் போதும்; கண் பார்த் தருள்வாய் ,
சிகைப்புக்கு இடம் கங்கைக்கே தந்த ஈசனைச் சேர் மயிலே! 78
(சிறியேங்கள் : சிறியோர்களான நாங்கள் ; சிகைப்புக்கு,
தலை முடிக்குள் புகுந்திருக்க)
மயில் விளையாடும்படி மேகம் சூழ்ந்து மழை விழுந்தால்
வெயில் விழுமோ இப்படியே? அப்போ நெல் விலையும் விழும்;
செயில் விழும் வித்தும் விளைவாய், இப்பஞ்சத்தினை விழுங்கும்
அயில்விழிக் காந்திமதியே! குறை என், அடிமைகட்கே? 79
(செயில் : செய்யில் ; விளை நிலத்தில் ; அயில் : வேல்)
அடிமைகட்கும் வரலாமோ இக்கஷ்டம் ? அதிக செழிப்
பொடும், ஐயமின்றி நெல் எங்கெங்குமே விளைந்தும், அடியால்
கடுமைய தாய்ப் பந்து உயர்ந்தது போல் என்ன காரணமோ,
கொடுமைய தாம் விலை ஆயிற்று, அம்மா, ஒரு கோட்டை நெல்லே ! 80
நெல் மண்டிக்கு ஏகக் கணக்கில்லை ; உப்புடனே மிளகாய்
புல் மண்டியோடு கடித்தே குடிக்கப் பொருந்துவதில்
சொல் மண்டி, நோயும் மண்டி, கும்பி காந்தித்து உறுத்து மண்டி, அல்
மண்டிடும் குழலாய்! இதுவோ உனது ஆதரவே? 81
(கணக்கில்லை : வகையில்லை; புல் மண்டி :
கம்பம்புல் கூழ்மண்டி; அல்: கருமை)
ஆதரிப்பார்கள் ஒருவரும் இல்லை இங்கு, ஆண்டவளே !
நீதர் இப்பார் மிசைக் காணோம், பொருளை நினைந்து தண்ணீர்
மீதரிப்பார்களில் தேடியும் கங்கையை வேணி தனி
லே தரிப்பார் பங்கு இருப்பவளே உன்னை அன்றியுமே. 82
(நீதர் : நீதி தெரிந்தவர்கள்)
அன்றொருக்கால் வந்த பஞ்சத்தை நீ தொலைத்தாய்; அதுபோல்
இன்றும் இப் பஞ்சத்தை நீயே தொலைத்து, இங்கு எமைப் புரப்பாய் ;
உன் திருவுள்ளம் இரங்கிடில் எவ்வுயிரும் பிழைக்கும் ;
அன்று எனிலோ கதியில்லை , அம்மா, நெல்லை அம்பிகையே! 83
அம்பிகை காந்திமதியே! எந்நாளும் அடுத்தும் உன்னை
நம்பின பேர்பெறும் பேறு இதுவோ? அன்னபானமின்றி
வெம்பின ஏழைகள் ஈடேற , நீ இந்த வேளை ஒரு
சிம்புள் என வந்தொழிப்பாய் பஞ்சானன சிம்மத்தையே. 84
[சிம்புள் : எட்டுக்கால்களைக் கொண்ட பறவை ;
பஞ்சானன சிம்மம் : பஞ்சமான, ஐந்து முகங்கள் கொண்ட சிங்கம்]
சிம்மாசன பதி கேள்வியும் இல்லை; நெல் சேர்வை கட்டி
இம்மாய வல்விலை கூறுகின்றார் ; கடனேனும் நல்கார்;
கைம்மேல் பணம் கொண்டுவா என்கின்றார் : கையில் காசுமில்லை;
அம்மா! இந்தப் பஞ்சத்தில் எவ்வாறு உய்வோம் என அஞ்சினமே 85
[சேர்வை : சேகரித்துக் கட்டிய ; மாயவன் விலை : கொடிய கொள்ளைவிலை]
சினமோ உனக்கு எங்கள் மீதில், அம்மா? கொடுந்தீவினை செய்
தனமோ? அலது இந்தப் பொல்லாக் கலியுக தன்மம் இதோ?
எனமோ தெரிய விலையே ! இரக்ஷத்திட இனித்தான்
மனமோ? எம் காந்தி மதியே, சொல் இப்பஞ்சம் வந்ததுவே. 86
[தன்மம் : தருமம்; எனமோ : என்னவோ]
வந்தனை செய்து உனைப் போற்றாதவரிடம் வைத்திடும் கோ
பம் தனைக் கொண்டு இந்தப் பஞ்சத்தை நீ வரப் பார்த்திருந்தால்
உந்தனையே பணிவோரும் அம்மா, அதற்குள் மெலிந்து
நிந்தனைக்கே இடமாகில் என்னாகும் உன் நீதிகளே? 87
நீ திருவாய் மலர்ந்து அஞ்சல் என்றால், உடனே புவியின்
மீதினிலே இந்தப் பஞ்சமும் நீங்கும்; விளைவும் மிகும்;
மேதினி மேல் ஒரு கஷ்டமும் இல்லை என்று இங்கு யாங்கள் உய்வோம்
மாதிரு நெல்லை நகர் வாழும் காந்தி மதி யம்மையே 88
அம்மா அம்மா என்று அழும் குரல் கேட்டு இரங்காமலும், தாய்
'சும்மா கிடக்கட்டும் போ, என்பளோ ? பெற்ற தொந்தம் விட்டே
இம்மாதிரி வன்மை கொண்டது என்னே? அன்னை என்றிருந்தும்
பெம்மான் நெல்லேசர் மகிழும் இமாசலப் பெண்ணரசே. 89
(தொந்தம் : பாசம்)
அரசற்ற ஆக்கினை உண்டோ ? இது முதலாக மழை
வருஷித்துப் பூமி செழிக்கச் செய்து, அம்பல வாணரிடம்
பரிசுற்ற காந்திமதி அம்மையே! இந்தப் பன்னிரண்டு
வருஷத்துப் பஞ்சத்தை நீக்கி, அன்பாய் எம்மை வாழ் விப்பையே. 90
வாழ்வில் குறையில்லை; கண்ணேறும் இல்லை ; வறுமை இல்லை;
தாழ்வில்லை நோயில்லை ; அஞ்சுதல் இல்லை; பஞ்சங்கள் இல்லை;
பாழ்வினையால் துன்பமும் இல்லை; நெல்லைப் பதி வடிவைச்
சூழ்வரும் தொண்டர்கட்கு என்றறிந்தோம் ; இதில் சோர் வில்லையே. 91
(கண்ணேறு : கண் திருஷ்டி)
சோரா மனமுண்டு; மாறாமல் இன்ப சுகமும் உண்டு;
பாராளும் மன்னர் பவுசுண்டு; பார்மிசைப் பஞ்சம் இனி
வாராது அருள் நெல்லை நாயகி காந்திமதி யம்மையைப்
பேராதரமுடன் போற்றிடவே அன்பு பெற்றவர்க்கே. 92
(பேராதரம்: பேராவல்)
பெற்றோம் சகல வரங்கள் எல்லாம் ; பெற்றபின் கவலை
அற்றோம், அனுதினம் பொற்றாமரைப் புனலாடி மகிழ்வு
உற்றோம் ; இந் நெல்லை வடிவாளை அன்றி மற்றொன்று மனம்
பற்றோம்; அவள் அருளாலே நிதியும் படைத்தனமே. 93
படை கொண்டு வந்த இப்பஞ்சம் தெளியவும், பத்தர் மனத்
திடை கொண்டுள துன்பு ஒழியவும், கோபித்து எழும் புலித்தோல்
உடை கொண்டு, கங்கையணி நெல்லை நாதருடன் திருமால்
விடைகொண்டு காந்திமதித்தாய் பொன் ஆலயம் மேயினளே. 94
மேய விண்ணார்ந்திட்ட ஐங் கோபுரங்கள் விளங்கு திருக்
கோயிலுள் நெல்லை வடிவாளை , பண்டு செங்கோல் அறுபது
ஆயிரம் ஆண்டு முடி தரித்தே உலகு ஆண்டவனைத்
தூய கண்ணால் தரிசித்தோம்; அற்றோம் எம்துயரம் இன்றே . 95
அரம் என்று உளே நின்று அறுக்கும் கவலை எல்லாம் தொலைத்தாள்!
திரமென்று மிக்க பொருள் அளித்தாள் ; பஞ்சம் தீர்த்து விட்டாள்!
வரம் என்றும் நீட அருளினள் ; காந்திமதியம்மையைப்
பரம் என்று நம்பின பேர்க்கு ஒருநாளும் பழுதில்லையே. 96
(உளே : உள்ளத்துக்குள்ளே ; திரமென்று: நிலைபெற்று வாழ ; நீட : நீடிக்க)
பழுது வராது புரந்தாய் , அம்மா இந்தப் பஞ்சத்திலே
தொழுது வரா நின்ற வெம்கலி தீர்ந்து சுகம் அடைந்தோம்;
முழுதுவராம் இதழ்த் தாயே ! உன் கீர்த்தி முழுமையையும்
எழுதுவர் ஆர் ? அடங்காது பிரமானந்தம் எய்தியதே. 97
[துவராம் : பவளம்]
எய்தரும் மோக்ஷம் விரும்பாமல், காமியமே விரும்பி,
கைதொழுது இவ்வண்ணம் வேண்டிய எங்கள் கருத்தின்படி
உய்திறம் தந்தது போலே பரகதியும் பெறவே
செய்திடக் காந்திமதியே எவ்வாறு உன் திருவுளமே? 98
[காமியம் : கன்ம மலங்கள்]
உளமே கொண்டாய் என்றறிந்தோம்; இனி குறை ஒன்றுமில்லை;
அளகா புரியினும் ஓங்கிய சீர் நெல்லை யம்பதியுள்
புளகாங்கிதமுடன் வாழ்வோம் ; எங்கெங்கும் முப் போகங்களும்
விளைவாக என்றென்றும் மாதம் மும்மாரி பெய்விப்பதற்கே. 99
விப்பிராதி குலம் வாழ்க! தன்மம் விளங்க! முறை
தப்பின்றி மாரி பொழிக! இப்பூமி தழைக்க! மனம்
ஒப்பிய காந்திமதியே ! இப் பஞ்சம் ஒழிந்தது என்றே
செப்பி இனிது அருள் செய்தாய், திரு நெல்லைச் செந்திருவே 100
[விப்பிரர் : அந்தணர் ; தன்மம்: தருமம்]
நேரிசை வெண்பா
நூறு கலித்துறையும் பாடினுமக் களவில்
பேறு கலித்துறையும் பேருலகீர் – தேறுமன்பு
கந்தெளிதா யென்று நெல்லைக் காந்திமதி யே கொடும்பஞ்
சந்தெளிதா யென்றுள்ள தால்
திரிபங்கி
துயர் நல்காள், நெஞ்சமே சேர்ந்திடு வானேன்? புன்
செயல்தொடுத்த பஞ்சமே தீர்ந்தும் - பயம் இனியென்?
செஞ்சாலி சேர்ந்தவிலை சாய்தல் கண்டோம்; தீவினை தீர்
சஞ்சீவி காந்திமதித் தாய்.
காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி முற்றுப்பெற்றது.
-----
This file was last updated on 04 March 2020.
Feel free to send the corrections to the Webmaster.