குமாரசாமிப் புலவர் இயற்றிய
வெள்ளோடு பெரியண்ணன் குறவஞ்சி
veLLOTu periyaNNan kuRavanjci
by kumAracAmip pulavar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
The e-text has been generated using Google OCR and subsequently edited by K.Kalyanasundaram.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
குமாரசாமிப் புலவர் இயற்றிய
வெள்ளோடு பெரியண்ணன் குறவஞ்சி
Source:
குமாரசாமிப் புலவர் இயற்றிய
வெள்ளோடு பெரியண்ணன் குறவஞ்சி
பதிப்பாசிரியர்கள் : புலவர் செ. இராசு, & பொன் தீபங்கர் கி.
வெளியீடு : கொங்கு ஆய்வு மையம்
ஈரோடு - 638 011.
பதிப்பு ஆண்டு : 2014
------------
நூற்குறிப்பு
நூலின் பெயர் : வெள்ளோடு பெரியண்ணன் குறவஞ்சி
நூல் பொருள் : சமூக இலக்கியம்
ஆசிரியர்கள் : புலவர் செ. இராசு, பொன் தீபங்கர் கி.
மொழி : தமிழ்
பதிப்பு ஆண்டு : 2014
பக்கங்கள் : 88
விலை : ரூ.50/
நூல் கிடைக்குமிடம் : கொங்கு ஆய்வு மையம், "புலவர் பூங்குடில்" 58/2,
பாலக்காட்டுத் தோட்டம், புதிய ஆசிரியர் குடியிருப்புப் பாதை , ஈரோடு - 638 011.
நூல் - அட்டை வடிவமைப்பு : வாழ்க வளமுடன் ஆப்செட் பிரிண்டர்ஸ்
பிரைவேட் லிமிடெட் 29 நாச்சியப்பா வீதி || ஈரோடு - 638 001.
'கொங்கதேச சரித்திர கலாச்சார கேந்திரம், ஈரோடு ' அவர்களின் பொருள் உதவியால்
இந்நூல் வெளியிடப்படுகிறது. அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி உரியதாகுக.
----------------
வெள்ளோடு பெரியண்ணன் குறவஞ்சி
இக் குறவஞ்சி இலக்கியம்
19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த வெள்ளோட்டுக் காணியாளர்களான சாத்தந்தை குலம்,
பயிரன்குலம் - சார்ந்த பெருமக்கள், பிற சமுதாயம் பற்றிய அரிய செய்திகளைக் கூறும் ஒரு வரலாற்று ,
ஆவணமாகத் திகழ்கிறது. அத்துடன் பூந்துறை, நசியனூர், எழுமாத்தூர், காஞ்சிக்கோயில்
காணியாளர்களின் பெயர்களையும் கூறுகிறது. ஓலைச் சுவடியில் இருந்தது.
முதல் முறையாக அச்சாகியுள்ளது.
- கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638 01
-----------
முன்னுரை
வரலாற்றுப் பெருமையும், இலக்கியச் சிறப்பும் மிக்க மேல் கரைப் பூந்துறை நாட்டின் 32 தொன்மையான ஊர்களில் வெள்ளோடு ஒன்று. 'பழம் பூந்துறை' என்று 800 ஆண்டுகட்கு முற்பட்ட பிடாரியூர்க் கல்வெட்டுக் கூறும் பூந்துறை நாட்டுக்குப் பூந்துறை, வெள்ளோடு, நசியனூர், எழுமாத்தூர் என்பன நான்கு தலை நகரங்கள்.
இரண்டாவது தலைநகரான வெள்ளோடே பெரும்பாலும் நிர்வாகத் தலைநகராக இருந்துள்ளது. பெரிய கிராமமான வெள்ளோடு நிர்வாக வசதிக்காகத் தென்முகம் வெள்ளோடு, வடமுகம் வெள்ளோடு என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டது.
32 ஊர்களைக் கொண்ட பூந்துறை நாட்டை நிர்வாகம் செய்ய பூந்துறை, வெள்ளோடு, நசியனூர், எழுமாத்தூருக்கு முறையே 10-8-6-4 உறுப்பினர்களும், இந்நான்கும் நீங்கி ஏனைய 28 ஊர்களுக்கு ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆக மொத்தம் 56 உறுப்பினர்களைக் கொண்ட "பூந்துறை நாட்டுச் சபை" அமைக்கப்பட்டிருந்தது.
பூந்துறை நாட்டுச் சபை எண்ணற்ற அறப்பணிகளைச் செய்தது. இச்சபை நிர்வாகத்தின் நன்மையைக் கண்டு கொங்கு நாட்டை ஆட்சி புரிந்த அரசர்கள் எவரும் சபை நிர்வாகத்தைக் கலைக்கவே இல்லை .
வெள்ளோட்டில் பல புலவர்கள் செம்மொழித் தமிழை வளர்த்துள்ளனர். வெள்ளோட்டைப் பற்றிப் பல தனிப் பாடல்களும் இலக்கியங்களும் உள்ளன.
எடுத்துக்காட்டாக,
1) சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழ்
2) சருவலிங்கர் சதகம்
3) பாடகவல்லியம்மன் பிள்ளைத்தமிழ்
4) குப்பண்ண ன் நீதிச் சதகம்
5) பெரியண்ண ன் குறவஞ்சி
6) கொன்றை வேந்தன் வெண்பா
7) புதுநகர் நல்லணவேள் காதல்
ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் ஒன்றுகூட இன்னும் முழுமையாக அச்சாகாதது தமிழின் தவக்குறையேயாகும்.
அண்மையில் ஈரோடு அரசு அருங்காட்சியகத்திலிருந்த பெரியண்ணன் குறவஞ்சி ஓலைச் சுவடி முழுவதும் பெயர்த்து எழுதப் பட்டது. கொங்கு நாட்டுக் குறவஞ்சி நூல்களின் மணிமுடியாகத் திகழும் இந்நூலின் பாட்டுடைத் தலைவர் வெள்ளோடு பயிரகுலப் பெரியண்ண கவுண்டர்.
நூலின் ஆசிரியரும், காலமும்
நூலின் ஆசிரியர் வெள்ளோடு சாமிநாதப் புலவர் மகன் குமாரசாமிப் புலவர். இவரே சருவலிங்கர் சதகம் இயற்றியவர்.
சிறந்த புலவரான குமாரசாமிப் புலவர் பெயர்த்து எழுதிய மூவர் தேவாரமும் அடங்கிய ஓலைச்சுவடி அண்மையில் பூந்துறைக் காடை குலப் பெரியவர் சண்முகநாதபுரம் திரு. எஸ். கே. பாலசுப்பிரமணியக் கவுண்டர் இல்லத்திலிருந்து கொங்கு என். கொளந்தசாமி மூலம் கிடைத்தது. "இராட்சத வருடம் ஆனி மாதம் 24 தேதி சுக்கிரவாரம் கிருஷ்ண பட்சம் உத்திராட நட்சத்திரம் சுபநாம யோகம் பவகரணம் சிங்க லக்கினத்தில் எழுதி முடிக்கப்பட்டது' என்ற குறிப்பு அந்நூல் இறுதியில் காணப்படுகிறது. அதற்கு நேரான கி. பி. ஆண்டு 1855 ஆகும்.
இந்நூலில் பாலமடையம்மன் கோயிலைக் கட்டிய காலிங்கராயன் வழியினரான கனகபுரம் சாத்தந்தை குலம் பழனி வேலப்ப கவுண்டர் மகன் கொளந்தவேல் கவுண்டர் குறிக்கப் பெறுகிறார். அவர் கோயில் கட்டிய ஆண்டு கி.பி. 1850 ஆகும். இது பாலமடையம்மன் கோயில் மண்டப விதானக் கல்வெட்டு மூலம் தெரிகிறது.
இதே நூலில் தீரன் சின்னமலையின் தங்கை கணவரும் 1793 ஆம் ஆண்டு சின்னமலையின்
கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட்ட வருமான உலகபுரம் சாத்தந்தை முத்தித்
திருமலைக்கவுண்டரின் மூத்த மகன் சிவன்மலையும், அவர் மகன் திருமலையும் குறிக்கப் பெறுகின் றனர். இக்குறிப்புகளிலிருந்து பயிரகுலப் பெரியண்ணன் குறவஞ்சி கி.பி. 1850 வாக்கில் எழுதப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது. அந்நூல் நூற்று அறுபது ஆண்டுகட்கு முற்பட்ட வெள்ளோட்டின் வரலாறாகவே திகழுகிறது.
பெரியண்ண கவுண்டர்
பெரியண்ண கவுண்டர் பயிரகுலம் என்றும், அவர் தந்தையின் பெயரும் பெரியண கவுண்டர் என்றும் இந்நூல் தெரிவிக்கிறது. பாடல் இசைக்காகப் பெரியண்ணன் - பெரியணன் என்றும் கூறப்பட் டுள்ளார்.
"பெருகிய புகழ்வெள் ளோடைப் பெரியணன் அருளும் சேயன்
திருவுயர் பெரியணேந்திரன்"
"பயிர குலத்தில் வந்த பாக்கியவான் வெள்ளோடை வாசன்
தயவுயர் பெரியணேந்திரன்"
"செந்நெல்வயல் வெள்ளோடை யம்பதியில் வளர்கின்ற
துரை பயிரகுல மேரு
தீர பெரியண மகிபன் நீதி அருளால் வந்த
செயராம பெரியணேந்திரன்"
என்பன பெரியண்ணன் குறவஞ்சித் தொடர்களாகும்.
ஒரு சொல் வாசகன்
பெரியண்ணன் சொன்ன சொல் தப்பாதவர், மொழி மாறாதவர் என்கின்றார் புலவர்.
"சொன்னமொழி தப்பாத சுமுகனாம் பெரியணேந்திரன்"
"மேருவரை பொய்த்தாலும் வெங்கதிரோன் தன்னுடைய
சீருதயம் பொய்த்தாலும் சொன்ன மொழி பொய்யாதான்"
என்பன குறவஞ்சி இலக்கிய வரிகள். இமயமலை, சூரியன் ஆகியவை பொய்த்தாலும் பயிரகுலம் பெரியண்ணன் பொய்யாதவர் என்பது கவிஞர் வாக்கு.
தெய்வீக பக்தி
சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பெரியண்ணன் சதா சர்வலிங்கரை நினைந்து வழிபாடு செய்பவர். வெள்ளோடு இலட்சுமி நாராயணப் பெருமாளையும் வணங்குபவர். இதனை,
"திரிபுர தகனன் சருவீசர் உமை பாடகத்தாள்
இருசரண் போற்றி செய்யும் இந்திரன் வெள் ளோடைவாசன்
தருமனாம் பெரிய ணேந்திரன்"
என்ற அடிகள் விளக்குகின்றன.
வெள்ளோட்டில் உள்ள எல்லாக் கோயில்கள் மீதும், சென்னிமலை முருகன் மீதும் அளவற்ற பக்தி கொண்டவர் பெரியண்ணன்.
"நிலைக்குயர் சென்னி மலைக்கும் ரனையும்
நெறிமை பொங்கு அரவணி சர்வலிங் கரையும்
சூடகக் கரத்தாள் பாடக வல்லியும்"
"காரணன் லக்குமி நாரணன் தன்னையும்
பஞ்சின்மெல் லடிசீர் நஞ்சுண்ட நாதரும்
செய்யபொன் காளிமெய் ஆயி அம்மனும்"
"பூதல் மீதினில் ஓதுபொன் மாரியும்
தன்புயர் படைசூழ் அண்ணமார் தம்மையும்
வையக மீதினில் வெய்யவன் எனவே
மெய்யதாய்த் துலங்கும் அய்யன் ராசாக்கள்
அறப்பொருள் கன்னிமார் திறக்கருப் பணனையும்
சிதமுறக் கனிவாய் உச்சிதத் துடனே
பணியும் விபேகன் குணமுடை தியாகன்"
என்று பெரியண்ணன் வழிபட்ட வெள்ளோட்டுக் கோயில்களைக் கவிஞர் குறிப்பிடுகின்றார். இக்கோயில்களில் தென்முகம் சாத்தந்தை குலத்தார் குலதெய்வமாகிய இராசாக்கள் மிகவும் சிறப்பிக்கப்பட் டுள்ளார்.
குருபக்தி
வெள்ளோடு சாத்தந்தை குலத்துப் பெருமக்களுடன் இணைந்து பாசூர் அகிலாண்ட தீட்சிதர் அவர்களைக் குருவாக ஏற்று பயிர குலத்தார் செப்பேடு அளித்திருப்பினும், உள்ளூர் குருக்களான மூவேந்த பண்டித் குரு சுவாமி அவர்களையும் மதித்துப் போற்றி வணங்கிய சீடராக இருந் துள்ளார் பெரியண்ணன்.
"தாண்டவப் பான அகி லாண்டதீட் சிதர்தாள்
பதமலர் அதனைத் துதிக்கும் உதாரன்
மூவேந் தருக்கருள் மூவேந்த பண்டித
சாமிதாள் இணையை நேமமாய்ப் பணிவோன்"
என்கிறார் புலவர்.
கொடை
இரவலர்கட்கும், ஏழைகட்கும், புலவர்கட்கும் கொடை கொடுப் பதில் பெரியண்ண ன் மிகச் சிறந்து விளங்கினார்.
"அட்டதிக்கு ஓங்கும் கீர்த்தி ஆகிய போசன் ஆன
இட்டவான் ஏற்போர்க்கு எல்லாம் ஈகையே தரும் உத் துங்கன்"
எனப் போச மன்னனுக்கு நிகராகப் புகழப்படும் பெரியண்ணனை நினைத்ததைத் தரும் கற்பகத்தரு, கொடையில் சிறந்த கர்ணன், குமணவள்ளல் என்கிறார் கவிஞர்.
"பாரில் உயர் தாருநிகர்
பார்த்திபன் வெள்ளோடைப் பெரியணன்"
"தமிழ்வலர்க்கு அதிக குமணன் நேரான
கரதலன் இனிய பெரியணன்"
'கானனைப்போல தியாகமிகு பெரியணேந்திரன்"
என்கிறார் கவிஞர்.
பயிரகுலத் தலைவர்
வெள்ளோடைப் பெரியண்ணன் பயிரகுலம் என்பதால் பழைய கோட்டைப்பட்டக்காரர் மரபிற்குரிய பல சிறப்புக்கள் பெரியண்ண னுக்கும் கூறப்படுகின்றன. புலவர்களைப் போற்றிய பழையகோட்டை மரபினர் பெருமைகளில் சில,
1. புலவர் சவுக்கால் அடிக்கப் பொறுத்தது.
2. புலவர்க்குச் சூலி முதுகில் சுடுசோறு போட்டது.
3. தாய் முதுகில் புலவர் ஏறப் பொறுத்தது
என்பனவாம்.
வெள்ளோடு பெரியண்ணன் குறவஞ்சியில்,
"புவியினில் துலங்கும் கவிவலன் கையில்
வடிவுயர் சவுக்கால் அடிதனைப் பொறுத்தோன்"
"திதியுடன் சூலி முதுகினில் அன்னம்
பகர்ந்துமே மனதில் உகந்துமே மகிழ்வோன்"
"பெற்றதாய் முதுகில் பற்றதாய் ஏற
நல்லதென் றுயர்புகழ் சொல்லது படைத்தோன்'
என்பன பெரியண்ணனுக்கும் ஏற்றிக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
விசயநகர ராயர் கையால் பெருமை பெற்றவர்கள் பழைய கோட்டை மரபினர். அப்புகழையும் பெரியண்ணனுக்கு ஏற்றி மகிழ்கிறார் புலவர்.
"அதிகமாம் விசயநகர் அதில்வரு ராயர்
மனமது மெச்சி அணிகலன் சிவிகை
பச்சிலைக் கடகமும் வச்சிர மோதிரமும்
திங்கள் ஒப்பான தங்கப் பதக்கமும்
மேலான சாலுவை மாலாய்க் கடுக்கணும்
வெகுமதி பெற்ற புகழ்க்கன தூயன்"
என்பது புலவரின் பொன்னுரைகளாகும். இச்சிறப்புக்கள் தென்னிலை வெற்றிக்காக அழகன் சர்க்கரையாருக்கு அளிக்கப்பட்டவையாகும்.
புலவரைப் போற்றல்
பயிர குலத்தார் தமிழ்ப் புலவர்கள் பலரை ஆதரித்தனர். கொடை பெற்ற புலவர்கள் அவர்களைப் புகழ்ந்து பாடினர். அதனால் பயிரகுலம்,
"பன்னு தமிழோர் புகழும் பயிரகுல கோத்திரம்"
எனப்பட்டது. சாத்தந்தை குலச் சடையப்ப வள்ளல் புலவர்களை ஆத ரித்தது போலவே வெள்ளோடு பயிரகுலப் பெரியண்ணனும் புலவர் களை ஆதரித்ததால்,
"வடிதமிழ் தனக்குச் சடையன் நேரான
கொடைக்குப் காரன் பெரிய ணேந்திரன்"
என்று அவர் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளார்.
சோழ நாட்டிலிருந்து கொங்குநாடு வந்த கம்பரை ஆதரித்த கொங்கு வேளாண் பெருமக்கள் பலர் கம்பருக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துக் கம்பரிடம் தங்களுக்குள்ள மரியாதையைக் காட்டினர். வெள்ளோடு சாத்தந்தைகுலக் கந்தயகவுண்டர் முன்னோர் "சந்திர சூரியர் உள்ளவரை நானும் என் வழியினரும் கம்பர்க்கு அடிமைகள் " என்று கூறியது போலப் பயிரகுலத்து வெள்ளோடு பெரியண்ண கவுண்டரின் முன்னோரும் கம்பருக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துள்ளனர். இச்செய்தி இக்குறவஞ்சி நூலில்,
"சந்ததி மாறிலும் செந்தமிழ்க் கம்பர்க்கு
அடிமை நாம் எனவே திடமதாய்ப் பகர்ந்தோர்"
என்று பெரியண்ண கவுண்டரின் முன்னோர் புகழப்பட்டுள்ளனர். இது வெள்ளோட்டின் பெருமையாகும்.
குறவஞ்சி அறங்கேற்றம்
வெள்ளோடு புலவன்பாளையம் சாமிநாதப் புலவர் மகன் குமார சாமிப் புலவர் தன் மீது பாடிய குறவஞ்சி நூலைப் பார்வையிட்ட வெள்ளோடு பயிரகுலப் பெரியண்ண கவுண்டர் நூல் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடியைப் பார்த்து மகிழ்ந்தார். அதை ஒரு நல்ல நாளில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார். நூல் அரங்கேற்ற விழா அவருடைய உற்றார் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ நடைபெற்றது. வெள்ளோடு மேலை விநாயகர் சன்னதியில் அவ்விழா நடைபெற்றதென நூல் மூலம் அறிகின்றோம்.
அவ்விழாவில் தன் பங்காளிகள் அனைவரையும் பெரியண்ணன் அழைத்தார். தென்முகம், வடமுகம் சாத்தந்தை குலத்தினர் மட்டுமல்ல, பூந்துறைக் காடை குலத்தினரும், நசியனூர் கண்ணன், பூச்சந்தை, செம்பன், கூறை குலத்தினரும், எழுமாத்தூர்ப் பனங்காடை குலத்தினரும், காஞ்சிக்கோயில் செம்பன், கண்ணன் குலத்தாரும் ஆகிய உறவினர் களும், உள்ளூர்க் கணக்குப் பிள்ளைகள், ஆசாரிமார்களும் நூல் அரங் கேற்ற விழாவில் கலந்து கொண்டனர். மேல்கரைப் பூந்துறை நாட்டின் ஒற்றுமைக் காப்பியமாக இந்நூல் திகழுகிறது.
அரங்கேற்ற விழாவில் கலந்து கொண்டவர்களை உறவுமுறை கூறிப் புலவர் வரிசையாகப் பெயர்களுடன் கூறுவது நம்மை மிக வியக்க வைக்கிறது. அந்த வகையில் இந்நூல் 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலப் பூந்துறை நாட்டு வரலாற்றை விளக்கும் ஒரு சிறந்த வெள்ளோட்டு ஆவணமாகவும் திகழ்கிறது. அரங்கேற்ற விழாவில் கலந்து கொண்ட பயிரகுலப் பெரியண்ண கவுண்டரின்,
பாட்டன்மார் - பழனிவேலப்ப கவுண்டர், கவுண்டைய கவுண்டர், காளியணகவுண்டர்.
சித்தப்பாமார் - முத்துவேலப்ப கவுண்டர், பொய்ங்காக்கவுண்டர், முத்து வேலப்பகவுண்டர்.
தமையன்மார் - பழனிக்கவுண்டர், முத்து வேலப்பகவுண்டர், வெள்ளையணகவுண்டர், குப்பணகவுண்டர், சின்னப்பகவுண்டர், முத்துராய கவுண்டர், பழனியப்ப கவுண்டர், சின்னத்தம்பிக் கவுண்டர், நல்லய கவுண்ட ர். தம்பிமார் - கருப்பண கவுண்டர், பழனிவேலப்பகவுண்டர்
மக்கள் - பழனிவேலப்பகவுண்டர், பெரியண கவுண்டர், சின்னையகவுண்டர், முத்துப் பெரியண கவுண்டர், முத்துக்குமாரக் கவுண்டர்..
மாமன்மார் - வெள்ளோடு சாத்தந்தை குலக் கருப்பண கவுண்டர், நசியனூர்க் கண்ணகுல வெள்ளைக் கவுண்டர், காஞ்சிக்கோயில் கண்ணகுல ராவுத்தகவுண்டர்.
மைத்துணன்மார் - சிவன்மலைக்கவுண்டர், பழனிவேல்கவுண்டர், ராவுத்த கவுண்டர், குமார கவுண்டர், செங்கோட கவுண்டர், பிறப்பணகவுண்டர், ராவுத்த கவுண்டர்.
சம்மந்திகள் - ராமையகவுண்டர், இராசையகவுண்டர், ராமய்ய கவுண்டர், குப்பண கவுண்டர், நல்லயகவுண்டர்.
மருமக்கள் - திருமலைகவுண்டர், முத்தய்ய கவுண்டர், ராவுத்த கவுண்ட ர்.
சகலைகள் - பழனி நல்லய்யகவுண்டர், மொசுவணகவுண்டர்
நண்பர்கள் - எல்லோரையும் அன்பு காட்டி அரவணைத்துச் செல்லுகின்ற உயர் பண்புடைய பயிரகுலப் பெரியண்ணன்,
"மனதினில் அதிக கனிவது பொருந்த
அற்புத மாக நட்பொடு"
திகழும் பண்புடையவர். அதனால் குறவஞ்சி அரங்கேற்ற விழாவிற்கு உள்ளூர், வெளியூர் உறவினர்கள், நண்பர்கள் பலர் வந்திருந்தனர்.
பூந்துறை காடைகுல வாரணவாசிக் கவுண்டர், அளப்பித்தாக் கவுண்டர், பெரியதம்பிக் கவுண்டர், நல்லமுத்துக் கவுண்டர், நஞ்சைய கவுண்டர், அவிநாசிக் கவுண்டர், காசிலிங்கக்கவுண்டர், பயிரகுலக் குப்பண கவுண்டர், பழனி வேலப்பகவுண்டர், சின்னய்ய கவுண்டர், தென்முகம் வெள்ளோடு சாத்தந்தைகுல முத்தித் திருமலைக் கவுண்டர் மகன் சிவன்மலைக்கவுண்டர், நல்லய்ய கவுண்டர், வெள்ளை முத்துக் கவுண்டர், கருப்பணகவுண்டர், முதலிக் கவுண்டர், பெரியண கவுண்டர், பழனிப் பெரியணகவுண்டர், சின்னப்பகவுண்டர், குழந்தை வேலப்ப கவுண்டர், முத்துக் கவுண்டர், வடமுகம் வெள்ளோடு சாத்தந்தை குல முத்தயகவுண்டர், பழனிவேல் கவுண்டர், முத்தயகவுண்டர், முத்துக் குமார கவுண்டர், மாரப்ப கவுண்டர், சின்னய்ய கவுண்டர்.
நசையனூர்க் கண்ணகுல முதலிக்கவுண்டர் , திருமலைக் கவுண்டர், வேலப்பகவுண்டர், கருமண கவுண்டர், பூச்சந்தை குலப் பழனிவேலப்ப கவுண்டர், சின்னத்தம்பிக் கவுண்டர், வேலாயுத கவுண்டர், செங்கோட கவுண்டர், செம்பகுல காசியண்ண கவுண்டர், கூறைகுல அமராபதிச் சின்னய்யகவுண்டர், எழுமாத்தூர்ப் பனங்காடை குல வாரணவாசிக் கவுண்டர், நல்லகுமாருக்கவுண்டர், காஞ்சிக் கோயில் செம்பகுல அவிநாசிக் கவுண்டர், அறம் வளர்த்த கவுண்டர், பெரியண கவுண்டர், கண்ணகுல வெள்ளைக் கவுண்டர், நஞ்சைய கவுண்டர், முத்தரசப்ப கவுண்டர் ஆகியோர்.
கணக்குப்பிள்ளைமார்களில் முத்தரசப்பிள்ளை, முத்துப் பிள்ளை, அரசப்பிள்ளை , தாயுமானபிள்ளை ஆகியோரும், ஆசாரி குலப் பெரு மக்களில் குமர ஆசாரி, குழந்தைவேல் ஆசாரி ஆகியோரும் அரங்கேற்ற விழாவிற்கு வந்திருந்தனர். இதனால் வெள்ளோடு பயிரகுலப் பெரி யண்ணகவுண்டரின் சமூக ஒற்றுமை புலப்படுகிறது.
சாத்தந்தை குலத்தாருக்குச் சிறப்பு
வெள்ளோடு தென்முகம் சாத்தந்தை குலத்தினர் மிகவும் சிறப்பாக இந்நூலில் போற்றப்படுகின்றனர். தீரன் சின்னமலையின் தங்கை பருவதத்தின் கணவர் உலகபுரம் சாத்தந்தை குல முத்தித் திருமலைக் கவுண்டரின் மூத்த மகன் சிவன்மலைக்கவுண்டர் அவர்களை
"வன்னன் ஆயிரம் பரி இந்நிலம் அதனில்
நடத்திய கீர்த்திப் படைக்குயர் நகுலன்
ஆயிரம் பொன்னில் நல் தூய சவ்வாதை
புறங்காலில் இட்டுத் திறம் காட்டும் தீரன்
நிலைகொள் சாத்தந்தை குலமதில் இனிய
பரிவுயர் முத்தித் திருமலை மகிபன்
அருளிய சிவன்மலை பிரபலத் துரை"
என்று குறவஞ்சி புகழுகிறது. வாய்க்கால் வழியாக வரலாறு கண்ட கனகபுரம் காலிங்கராயனை,
"அனதரு வான கனமா மேரு
திண்டிறல் வானியில் கண்டணை கட்டிக்
கருவூர் வரைக்கும் வரிசையாய் வாய்க்கால்
நடத்தும் உதாரன் படைக்குயர் தீரன்
தாலங்கள் புகலும் காலிங்க ராயன்"
என்று குறவஞ்சி புகழுகிறது.
குல ஒற்றுமை
வெள்ளோட்டு இலக்கியங்களில் தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குல இராசாசுவாமியைப் போற்றும் தெய்வங்களில் வட முகம் வெள்ளோடு பயிரன், சாத்தந்தை குலத்தாரின் குல தெய்வம் அண்ணன்மார் குறிக்கப் பெறுகிறார். 'புகழ்பெற்ற அண்ணன்மார்" என்று இராசாசாமியைப் பற்றிய பாடலில் கூறப்பட்டுள்ளனர்.
"திருமாது சர்வலிங் கேசுரர் பாடகவல்லி
தேவி உமையாள் கணபதி
சிவசுப்பிர மன்னியர் ஆதிநா ராயணர்
சீதை அல மேலுமங்கை
பொருசூலி பொன்காளி அத்தனூர் ஆயியும்
புகழ்பெற்ற அண்ணமாரும்
பொன்னிலகு முப்பத்து முக்கோடி தேவர்கள்
புவிமீதில் வந்து காக்க
திருமேவும் வடசோலை நந்தன வனங்களும்
தர்மமட சாலைநிலையும்
தண்டா மரைக்கமல மேவுதிரு மாலுடன்
சரசுவதி கலைவாணியும்
இருமாது பிரியாமல் அனுதினமும் விளையாடும்
எழிலான வெள்ளேடையில்
எண்டிசை மதிக்கவரு தண்டிகைத் துரையான
எங்கள் குல ராசாக்களே"
என்பது அச்சிறப்புமிகு பாடலாகும்.
பயிரகுலப் பெரியண கவுண்டர்,
"வையக மீதினில் வெய்யவன் எனவே
மெய்யதாய்த் துலங்கும் அய்யன் ராசாக்கள்"
கோயிலில் வழிபட்டுள்ளதாக இப்பயிரகுலக் குறவஞ்சி நூல் கூறுகிறது.
தென்முகம் சாத்தந்தை குலத்தார் திருமண வீட்டுப் பாடலில் அண்ணன்மார்,
"தென்னுலவு வெள்ளோடைச் சீரான பதியில்
தேவனே அண்ணன்மார் என்னும் நாயகனே"
என்று சிறப்புடன் புகழப்படுகிறார். வெள்ளோடு தென்முகம் - வடமுகம் என்பது ஊர்
நிருவாகப் பிரிவே தவிர சமூக, தெய்வீக, குலப் பிரிவாக இருக்கக் கூடாது என்பதை
160 ஆண்டுகட்கு முற்பட்ட இப்பயிர குலப் பெரியண்ணன் குறவஞ்சி கூறுகிறது.
இந்நூல் வெளிவரப் பெரிதும் ஆர்வத்துடன் துணை புரிந்த கொங்குச் சமூக வரலாற்று ஆர்வலரும், 'கொங்கதேச சரித்திர கலாச் சார கேந்திரம்" அமைப்பாளருமாகிய திரு. பொன் தீபங்கர் அவர்கட்கு மனமார்ந்த நன்றி உரியதாகுக.
ஈரோடு வரலாற்றுப் பணியில்
01.03.2014 செ. இராசு
-------------------
குறவஞ்சி
தமிழின் 96 வகை சிற்றிலக்கியங்களில் "குறவஞ்சி" என்பதும் ஒன்று. இது குறம், குறத்திப் பாட்டு, குறவஞ்சி நாடகம் என்றும் அழைக்கப் பெறும். கட்டியங்காரனால் பல்வேறு சிறப்புக்கள் உடையவர் என்று கூறப்பட்ட பாட்டுடைத் தலைவர் தன் பரிவாரங்களோடு வீதியில் உலா வருவார். அதனை ஒரு பருவப்பெண் கண்டு அத்தலைவர் மீது காதல் கொள்வாள். தன் காதலை மிகுவித்து வருத்தும் நிலா, தென்றல், குயில், கடல் இவைகளை ஏசுவாள்.
பாங்கி (தோழிப் பெண்) வந்து தலைவியின் வருத்தம் தணிவிப் பாள். வீதியில் வரும் குறி சொல்லும் குறத்தியை அழைப்பர். குறத்தி தன் தொழில் திறமை கூறி தன் நாடு , மலைவளம், குறி சொல்லிப் பெற்ற பரிசு இவைகளைக் கூறுவாள். தலைவன் வந்து உன்னைக் கூடுவான் என்று கூறிக் குறத்தி பரிசு பெறுவாள். தோழி தலைவன் மாலை வாங்கி வருவாள்.
குறத்தியைக் காணாத குறவன், குறத்தியைத் தேடி வருவான். குறவனின் வேட்டைத் திறம் பலவாறு கூறப்படும். இறுதியில் பிரிந் திருந்த குறவனும், குறத்தியும் சந்திப்பர். குறத்தி தான் பெற்ற பரிசு களைப் பற்றியும், அதை அளித்தவர் பற்றியும் விரிவாகக் கூறுவாள். எல்லோரையும் வாழ்த்தி நூல் நிறைவு பெறும். பல்வேறு வகைப் பாடலாகப் பாடப் பெறும். இசை வகுக்கப்பட்டிருப்பது குறவஞ்சியின் சிறப்பாகும்.
-----------------
வெள்ளோடு பெரியண்ணன் குறவஞ்சி
மேலை விநாயகர் காப்பு
பெருகிய புகழ்வெள் ளோடைப் பெரியணன் அருளும் சேயன்
திருவுயர் பெரிய ணேந்திரன் சற்குணன் மீதில் நன்றாய்
வருகுற வஞ்சி நாட்டியம் மகிழ்வுடன் நானும் பாட
விரைசெறி செல்வ மேலை விநாயகன் காப்புத் தானே . 1
சிரகிரி வேலவர் காப்பு
தவத்தில் வெள் ளோடை ஆளத் தகும் பெரி யண்ணன் மீதில்
புவியினில் துலங்க மெய்ப்பாய் புகல்குற வஞ்சி பாட
சிவனருள் மைந்த னான சிரகிரி வேலர் பாதம்
தவறாமல் ஓதி நித்தியம் தயவுடன் பணிகு வேனே. 2
கலைமகள் காப்பு
பயிரகோத் திரத்தில் வந்த பாக்கியன் வெள் ளோடை வாசன்
தயவுயர் பெரிய ணேந்திரன் சற்குணன் மீதில் நண்பாய்
வயனமாய்க் குறவஞ்சி நாட்டியம் வரிசையாய் நானும் பாட
இயல்தவள் மேனி வாணி இணையடி வாழ்த்து வேனே. 3
சருவீசர், பாடகவல்லி காப்பு
சீருயர் நாடகத்தைக் கேள்க்கும் செல்வவான் அகில மீதில்
பேருயர் பெரிய ணேந்திரன் பெருமையில் என்றும் வாழ்த்தும்
வாருதி முடிமேல் கொண்டு வளர்சரு வீசர் பாதம்
சேருபா டகத்தாய் தாளைச் சிந்தையில் துதிசெய் வேனே. 4
விநாயகர், சிரகிரி முருகர், சருவீசர் காப்பு
பன்னரிய கீர்த்திப்பிர பலபுனித கெம்பீர
பதுமலட் சண்புருஷனை
பதியிலுயர் மகபதிக்கு இணையான சோமனைப்
பலகலைகள் புகழ்குமணனை
பழமொழிகள் துதிக்கின்ற கர்னனைத் தியாகமிகு
பண்பான கனயோகனை
பாக்கியமிகு கற்பகத் தாருக்கு நிகரான
பைங்குவளை அணிமார்பனை
சொன்ன மொழி தவறாத வாக்கரிச் சந்திரனை
துய்ய நய குணசதுரனை
செகராசர் மகிழ்தியாக சம்பன்னன் எனவந்த
செங்கண்மால் நிகர்வாசனை
சுயமான நந்தாத பூஞ்சோலை யும் அதிக
திவ்யமா கியசாலையும்
தெண்புயர் தடாகத்தண்ணீர்ப்பந்தல் அழகான
சித்திரச் சாவடிகளும்
நன்னய மிகும் சகல தர்மதா னங்களும்
நயமுடன் புரிகு கருணை
நாதரருள் குலவுதே வாதிகள் தமக்குமிக
நலதிருப் பணிகள் செய்யும்
நாவலர்கள் புகழ்கின்ற தண்டமிழ்க் குறவஞ்சி
நாடகம் தன்னில் வாழ்த்தி
நவில்கின்ற சரசகுண விதர்ணனை அன்பான
நளராச மகராசனை
சென்னெல்வயல் வெள்ளோடை யம்பதியில் வளர்கின்ற
துரைபயிர குலமேருவை
தீரபெரி யணமகிபன் நீதியரு ளால் வந்த
செயராம பெரியணேந்திரன்
சிந்தையில் துதி பரவு சந்தத்து ஐந்துகரச்
சிந்துர முகத்தேவனைச்
சிரகிரிக் குமாரர்சரு வீசர்தா ளிணைதனைச்
சீருடன் பணிகுவோமே. 5
சாவடி மண்டப விநாயகர் தரு (ராகம் - மத்தியமாவதி)
அரனருள் பாலனை ஆனந்த ரூபனை
கரிமுகனை கயிலைவாசனை
தொந்த மெனநடன மிஞ்சும் உமையவள்தன்
மைந்தனை மூஷிக வாகனனை
அரனரி அயன்முத் தேவர்க ளுக்கு முன்
பரிவுடன் தோன்றும் பஞ்சாட்சரனை
சரவண பவகுக சண்முகன் முன்னோன்
சத்திக்கண பதிநாதனே
வேதவி னோதனே மெய்ஞ்ஞானப் பரப்பிரமம்
நாதசருவ லோகநாயகனே
வெள்ளோடை நகரினில் வேந்தன் பயிரகுல
வள்ளல் பெரி யணமகிபதிமேல்
சொல்லும் அதிக்குற வஞ்சித் தமிழ் பாட
நலமதுர வாக்கருளுவாய்
செந்திரு விளங்கும் சாவடிமண் டபத்தில் வாழ்
சிந்து ரமுக செகதீசனே. 6
செய செய (ராகம் - நாட்டை )
பொன்மேவும் வெள்ளோடை நகர்வாழும் சருவலிங்கர்
பேரார் நல் திருவருள் பதம் போற்றும் கனயோகன்
பன்னுதமி ழோர் புகலும் பயிரகோத் திரத்தில் வந்த
பாக்கியன் பெரியணமகிபன் அருளிய பூபாலன் .... செயசெய
நண்மாது புகழ்மார்பன் பெரியண வசீகரன்மிசை
நளினமுடன் குறவஞ்சி நாடக மேபாட
பண்மேவும் பாடகத்தாள் அருள் தந்தி முகஞான
பரிவால் மேலை விநாயகனை மறவேனே ...... செயசெய
மண்மேவும் இலக்குமி நாராணர் அண்ணன்மார் பொன்காளி
வடிவுயர்நஞ் சுண்டலிங்கர் மலரடிகள் துணையே
வண்ணதள மேபரவும் பாதையில்ரா சாக்களய்யன்
வண்மையிரு தாளிணையை மனதில் தினம் துதிப்பேன் .... செயசெய
மன்னவர்கள் புகழ்கின்ற பூந்துறைசை நாட்டில் வளர்
மகிமைச் சிரகிரியில் வடிவேல் னைப்பணிவேன்
தன்னமை குலாவும் வெண் டாமரையில் வாழ்வு செறி
சர்வபூ ஷணவாணி தாள் மனதில் நினைவேன்...... செயசெய 7
மங்களம்
பூரண வதனனுக்கு மங்களம் - அதிக
பெரியண நரேந்திரனுக்கு மங்களம் - பூரண
நிசவசன தீரனுக்கு நேமகெம் பீரனுக்கு
விசயன்நிகர் வீரனுக்கு மங்களம் - பூரண
உத்தம விலாசனுக்கு உயர்தமிழ் நேசனுக்கு
சுத்த புவி ராசனுக்கு மங்களம் - பூரண
நீதிதிகழ் சோமனுக்கு நீள்குவளைத் தாமனுக்கு
மாதர்புகழ் காமனுக்கு மங்களம் - பூரண
பேருபுகழ் நேயனுக்குப் பெரியணன் சேயனுக்கு
கருணைப் பெரியண தீரனுக்கு - மங்களம் - பூரண 8
வீசீபவா
செந்திரு விலாச வீசீபவா - புகழ்
செழிக்கும் பெரியணேந்திர வீசீபவா
அனகன் பெரியணேந்திரா வீசீபவா
பகைவர்முடி சிதறவே நடனமிடவரு
பரியுயர் தீரா வீசீபவா
அழகில் பதுமன் பெரியணேந்திரா வீசீபவா
வடிவுயர் பரனருள் சிரகிரி முருகர்தன்
மலரடி பணிபவா வீசீபவா - விந்தை
மருவு பெரியணேந்திரா வீசீபவா
படிமிசை நிதியுயர் பயிரகுல முகிலே
பணிதரு கரனே வீசீபவா - கன
பாக்கியன் பெரியணேந்திரா - வீசீபவா 9
கட்டியக்காரன் வருகை - விருத்தம்
அட்டதிக்கு ஓங்கும் கீர்த்தி ஆகிய போசன் ஆன
இட்டவான் ஏற்போர்க்கு எல்லாம் ஈகையே தரும் உத் துங்கன்
திட்டவான் பெரிய ணேந்திரன் செய்கீர்த்தி தனைக் கொண் டாடி
கட்டியக் காரன் வந்து களரியில் தோன்றி னானே. 10
தரு (ராகம் - சார்ங்கம்)
கட்டியக் காரன்வந்தான் - வந்தானய்யா
கட்டியக் காரன்வந்தான்
திட்டமாம் பெரியண தீரன் நல் நாட்டில்
கட்டியக் காரன்வந்தான்
பட்டுடை யும்மிகத் தொட்டு - நல்ல
பாங்குடன் காதில் கடுக்கணும் இட்டு
கட்டழகான துப்பட்டு அணிந்து
கதிரொளியான திலதப் பொட்டிட்டு - கட்டியக்காரன்
பத்தமுடன் வயனம் பேசி மார்பில் பதக்கச்சரம் மின்னப்
பரிமள களபம் பூசி சித்தம் மகிழ்ந்த உல் லாசி
சபையில் சிறப்பாய்ப் பிறம்பெடுத்துச்
செங்கையை வீசி - கட்டியக்காரன்
பூதல மீதினில் நீடி சாற்றப் பிசகாமல் இவன் நிகர்
இலையிணை மோடி போதார வாய்மலர் சூடி
அதிக புகழாளன் பெரியணன்
சமூகமே தேடி - கட்டியக்காரன் 11
கட்டியக்காரன் பெரியணன் மகிமை கூறல் - விருத்தம்
திரிபுர தகனன் சருவே சுரர்உமை பாட கத்தாள்
இருசரண் போற்றி செய்யும் இந்திரன் வெள் ளோடை வாழும்
தருமனாம் பெரிய ணேந்திரன் தருபெரி யணமால் கீர்த்தி
வரைமுறை சொல்லி இப்போ மகிமையை உரைசெய் வேனே. 12
தரு (ராகம் - ஆனந்த பயிரவி)
கங்கா குலத்தில் வரு சிங்கா - பராக்கு
கானா உதாரபிர சங்கா - பராக்கு
திங்கள் குண மாகவரு துங்கா - பராக்கு
விந்தை செறி மேழிக்கொடி நேசா - பராக்கு 13
தசாங்கம்
(நூல் தலைவன் தொடர்பானவை 10 கூறுதல்)
பொருள்வளஞ் சேர்திருப் பெருகும்வெள் ளோடைச்
சருவீ சுரர்தன் திருவடி துதிப்போன்
மலை
நன்னயங் குலவும் சன்னதந் திகழும்
பொன்னிலங் கியதிருச் சென்னியங் கிரியான்
தண்பதாய்ச் சித்தர்க்கு அன்பதாய்ப் பரவும்
பண்புமூ லிகை உள செண்பக மலையான்
நலமுயர் நாக மலைக்கன காசலம்
இலகுசீர் வேத மலை பொதி யங்கிரி
தண்டமிழ் புகழும் வண்டினஞ் சூழும்
விண்டலங் குடிபெறு திண்டல்மா மலையான்
காராச்சி கொண்டு பேராச்சி யான
சீராச்சி கீர்த்தி ஊராட்சி மலையான்
நதி
பன்னக முடிப்பரன் மின்னவே புணரும்
தன்னன்மை குலவும் பொன்னிமா நதியான்
தவாகம் ஞான சுவாமிகள் நுகர
அவாவினை அகற்றும் பவானிமா நதியான்
விதமிகு காஞ்சி நதியியல் பான
அதிவித அனும நதியையும் உடையான்
நாடு
தேர்ந்தர வின்மணிக் காந்திகள் பரவும்
பூம்பொழில் சூழ்ந்த பூந்துறை நாடன்
ஊர்
மேடைகோ புரமும் நீடுசேர் வீதியும்
ஆடலே புகழ்வெள் ளோடையூர் அதிபன்
குதிரை
தரணி யோர்புகழ் உரகனே நெளிய
பரிவதாய் நடத்தும் துரகதம் உடையான்
யானை
இசைக்கன புவியில் உசத்தி இந்துவை
நிசத்தொடு பிடித்து கசக்குவன் கயத்தான்
கொடி
நீளப் புவியை ஆளப் பரமன்
வாளத் தருகும் மேழிக் கொடியான்
முரசு
செம்மையாய்ப் புவியில் இம்மையாய்க் காரின்
தன்முர சேநிகர் மும்முர சுடையான்
ஆணை
திருமகள் குலவும் பருவயி றாமன்
நிரையுள் பகளி முறையுள் ஆணையான்
தெய்வங்கள்
நிலைக்குயர் சென்னி மலைக்கும ரனையும்
நெறிமை பொங்கு அரவணி சருவலிங் கரையும்
சூடகக் கரத்தாள் பாடகச் செல்வியும்
காரணன் லக்குமி நாரணன் தன்னையும்
பஞ்சின்மெல் லடிசீர் நஞ்சுண்ட நாதரும்
செய்யபொன் காளிமெய் ஆயி அம்மனும்
பூதல் மீதினில் ஓதுபொன் மாரியும்
தன்புயர் படைசூழ் அண்ணமார் தன்னையும்
வையக மீதினில் வெய்யவன் எனவே
மெய்யதாய்த் துலங்கும் அய்யன் ராசாக்கள்
அறப்பொருள் கன்னிமார் திறக்கருப் பணனையும்
சிதமுறக் கனிவாய் உச்சிதத் துடனே
குலகுருக்கள்
பணிகு விபேகன் குணமுடை தியாகன்
வெற்றிசேர் வேதத் துற்றதில் துலங்கும்
தாண்டவப் பான அகி லாண்டதீச் சதர்தாள்
பதமலர் அதனைத் துதிக்கும் உதாரன்
மூவேந் தருக்கருள் மூவேந்த பண்டித
சாமிதாள் இணையை நேமமாய்ப் பணிவோன்
பயிரகுலக் காணியூர்கள்
திதிக்கும் பரஞ்சேர் பதிபவுத் திரமும்
பணிதிகழ் வெள்ளி யணைகாரை யூரும்
தெளிவானூர்மிகு வளிகூட லூரும்
வருகொன்னை யாறும் திருமுக் கூடலும்
அண்டவள நாடும் வண்டமிழ்ச் சேலம்
வயிரம் பள்ளியும் நயகொடு மணலும்
பாலத் தொழுவுடன் மேலுமை யான
புள்ளா நத்தமும் வெள்ளோ டுடனே
சீர்பெறு காணி யேர்பெறப் படைத்த
நாற்றிசை புகழும் கீர்த்தி விலாசன்
தலைவர் பெரியண்ணன் பெருமை
புவியினில் துலங்கும் கவிவலர் கையில்
வடிவுயர் சவுக்கால் அடிதனைப் பொறுத்தோன்
திதியுடன் சூலி முதுகினில் அன்னம்
பகர்ந்துமே மனதில் உகந்துமே மகிழ்வோன்
பெற்றதாய் முதுகில் பற்றதாய் ஏற ந
ல்லதென் றுயர்புகழ் சொல்லது படைத்தோன்
அன்புயர் நீலி தன்பழி யதற்கு
அழகுடன் பூமேல் பழியது கொடுத்தோன்
சந்ததி மாறிலும் செந்தமிழ்க் கம்பாக்கு
அடிமை நாம் எனவே திடமதாய்ப் பகர்ந்தோன்
அதிகமாம் விசைநகர் அதில்வரு ராயர்
மனமது மெச்சி அணிகலன் சிவிகை
பச்சிலைக் கடகமும் வச்சிர மோதிரமும்
திங்கள் ஒப் பான தங்கப் பதக்கமும்
மேலான சாலுவை மாலாய்க் கடுக்கணும்
வெகுமதி பெற்ற புகழ்கன தூயன்
மகராச யோகன் செகராச தீரன்
இந்திரன் நற்குண சந்திரன்
தோகையர் மதனன் வாகுசேர் கருனன்
தயகுண வேந்தன் பயிர குலேந்திரன்
தந்தை
அரிவையர் மோகன் பெரியண விபேகன்
அருளிய சேயன் பெரியண பூபன்
இரவலர் தமக்குத் தருநிக ரான
இங்கித நேமன் பங்கயத் தாமன்
பாட்டனார்
விற்பனன் பழனிவே லப்பன் கவுண்டையன்
குணசெல்லக் காளி யணமகி பதியை
பத்தமா யழகு மெத்தவே பொருந்தப்
பாட்டனாம் இவர்தனைத் தேட்டமாய்ப் பணிவோன்
சிறிய தந்தை
சத்துரர் சிங்கம் முத்துவே லப்பன்
அங்கச நிகர்பெறு பொய்ங்கவுண் டேந்திரன்
சித்திர ரூபன் முத்துவே லப்பன்
வையகம் புகழ்சின் னய்யனாய்ப் படைத்தோன்
தமையனார்
நிலையினில் அதிக சிலை மதன் எனவே
அழகிய புகழ்சேர் பழனி மகீபன்
கன்னன்என முத்துவேல் மன்னன் நயவான்
வெள்ளைப் பூபதியும் வள்ளல் குப்பணனும்
சின்னப்பன் இனிய நன்முத்து ராயன்
செழியன் நேரான பழனி யப்பன்
தெம்புயர் சின்னத் தம்பி மகீபன்
செல்வனாம் அதிக நல்லய ராயன்
சீருயர் யோகன் தாரு நேர் தியாகன்
கமலமாது உலவும் தமையனாம் இவரை
புவனியோர் புகழ மவுனமாய்ப் படைத்தோன்
தம்பியர்
ஐந்தரு வான பைந்தமிழ் நேசன்
நாற்றிசை புகழும் கீர்த்தி விலாசன்
நளன் நிகர் கருப்பணன் பழனிவே லப்பன்
தென்பு சேர்ந் திலங்கும் அம்புவி யதனில்
இன்பமாய் இனிய தம்பியராய்ப் படைத்தோன்
மக்கள்
கற்பகத் தருவான நற்பழனி வேலன்
கருணைசேர் புனிதன் பெரியண தீரன்
பழனிவே லப்பன் தளபதி சின்னணன்
முத்துப் பெரியணன் முத்துக் குமாரு
நட்புடன் அழகாய்ப் பொற்புடன் இவரை
பாலனாம் எனவே சீலமாய்ப் புகல்வோன்
மாமன்மார்
கங்கை சேர் சருவ லிங்கர்வாழ் அதிக
நீடுயர்ந் திடும்வெள் ளோடையூர் அதிபன்
வாய்த்தன சொல்நீடு சாத்தந்தை கோத்திரன்
சிறப்புயர் தீரன் கறுப்பண ராயன்
அழகிய நசையனூர் தளபதி கண்ண
குலமதில் இனிய பலிதசிங் காரன்
வள்ளல் ஒப்பான வெள்ளைபூ பதியும்
முதிர்தமிழ் வேதச் சதுர நேரான
தமதுயர் கீர்த்திக் குமணரா சேந்திரன்
மாவலன் காஞ்சிக் கோவில் நா டதனில்
நலமுயர் கண்ண குலமக மேரு
பார்தனில் வளர்கெம் பீரனே யான
தீரரா வுத்த தாரஉத் துங்கனே
நேமமாய் இவரை மாமனாய்ப் படைத்தோன்
மைத்துணர்
தவநிலை மகிமை சிவமலை நீதியும்
வல்லவன் பழனிவேல் நல்ல ராவுத்தன்
திருவருள் மார்பன் தருமன் குமாரு
அழகுசெங் கோடன் நளன்பிறப் பண்ணனும்
இயல்புரா வுத்தன் நயகுண சதுரன்
இத்திசை புகழும் மைத்துணர் எனவே
மனதினில் அதிக கனிவது பொருந்த
அற்புத மாக நட்பொடு நினைவோன்
சம்மந்திகள்
சொன்ன மொழி தவறா மன்னன் ராமையனும்
துரை புகழ் குப்பணன் நரபதி ராசய்யன்
கற்றவர் புகழும் வெற்றிரா மய்யனும்
சொல்லுயர் குப்பணன் நல்லய ராயன்
இச்சையாய் இவரை மெச்சுசம் பந்தர்
எனமன மதனில் அனுதினம் புகல்வோன்
மருமக்கள்
மருவயர் விசையன் திருமலை மகிபன்
நல்லணன் முத்தய்யன் வல்ல ராவுத்தன்
விரைநிறை குவளை மருவுநற் புயவேள்
பிரியமாய் இவரை மருகராய்ப் படைத்தோன்
சகலைகள்
பழனிநல் லய்யனும் நளினவான் மொசுவணன்
சுகமதாய் இவரை சகலனாய்ப் படைத்தோன்
பூந்துறையார்
பூந்துறை நகரில் வேந்தனாம் காடை
கோத்திரம் இனிய கீர்த்தி விலாசன்
வாரண வாசிமால் சீரணி தமிழ்க்கு
மாணிக்கம் ஈந்த பூணிக்கை யாளன்
தளகர்த்த ரான அளப்பித்த ராயன்
தெரிவையர் மகிழும் பெரியதம்பி மகிபன்
வல்லமைக்கு இனிய நல்லமுத் தேந்திரன்
வஞ்சகர் குடோரி நஞ்சய ராயன்
தவமனம் இனிய அவிநாசி மகிபன்
வாசமே குலவும் காசிலிங் கேந்திரன்
இனிமையாய் இவர்கள் மனமது மெச்ச
அரசது புரியும் தரும் தயாளன்
தென்முகம் வெள்ளோட்டார்
வடிதமிழ் தனக்குச் சடையன்நே ரான
கொடைதரு கரனாம் அடையலர் புகலும்
அற்புதச் சாத்தந்தை குப்பண நிதியும்
விற்பனன் பழனிவே லப்பன்சின் னய்யனும்
முன்கையில் சந்தனம் அன்புடன் அரைத்து
சங்கரர்க்கு அளித்த இந்திர யோகன்
வன்னன் ஆ யிரம்பரி இன்னிலம் அதனில்
நடத்திய கீர்த்திப் படைக்குயர் நகுலன்
ஆயிரம் பொன்னின் நற் தூயசவ் வாதை
புறங்காலில் இட்டுத் திறங்காட்டும் தீரன்
நிலைகொள் சாத்தந்தை குலமதில் இனிய
பரிவுயர் முத்தித் திருமலை மகிபன்
அருளிய சிவன்மலை பிரபலத் துரையும்
வித்தகர் புகழும் கர்த்தய தீரன்
மெல்லியர் மோகன் நல்லய ராயன்
வெள்ளமுத் தேந்திரன் வள்ளல் கருப்பணன்
நாட்டினில் அதிக தாட்டிமை யுடனே
செங்கோல் நடாத்தும் இங்கித யோகன்
அற்புதன் முதலி நற்பெரி யணனும்
களபப் புயனாம் பழனிப் பெரியணன்
மனமுடன் இவர்கள் தனதுடன் புகலும்
அனதரு வான கனமா மேரு
திண்டிறல் வானியில் கண்டனை கட்டிக்
கருவூர் வரைக்கும் வரிசையாய் வாய்க்கால்
நடத்தும் உதாரன் படைக்குயர் தீரன்
தாலங்கள் புகலும் காலிங்க ராயன்
தொன்னிதி பரவும் சின்னப்ப ராயன்
தளம்பெரு நேமன் குழந்தைவே லப்பன்
நித்தனைப் பூசிக்கும் முத்து மகீபன்
தெள்ளுயர் குப்பணன் வெள்ளைபூ பதியும்
வடமுகம் வெள்ளோட்டார்
நீணில் மதனில் பேணவே புகல்வோன்
புடவியோர் புகலும் வடமுகம் அதனில்
வாழ்த்தினர் கீர்த்திச் சாத்தந்தை கோத்திரன்
முத்தய்ய மகீபன் சித்தசன் பழனிவேல்
முத்தய்ய ராயன் முத்துக் குமாரு
தாருக்கு இணைசேர் மாரப்ப தீரன்
கர்னன் ஒப்பான சின்னய மகீபன்
வயல்முளை நெல்லை நயமுடன் கொணர்ந்து
போசனஞ் சமைத்து ஈசனுக்கு அருள்வோன்
நசையனூரார்
விசையமே பரவும் நசைய னூர்தனில்
நிலமைசேர் கண்ண குலமக ராசன்
நிதியுயர் தரும் முதலி மகீபன்
அருமறை பயிலும் திருமலை பூபன்
தாலமே புகலும் வேலப்ப தீரன்
விரைமணஞ் சூழும் கருமண பூபன்
ஆச்சியாய்க் கவி புகழ் பூச்சந்தை கோத்திரன்
பழனிவே லப்பன் நளன் சின்னத் தம்பிமால்
தருமன்வே லாயுதன் அருமைச் செங்கோடன்
செம்பகோத் திரத்தில் அன்புயர் காசிமால்
தாருவாய் இனிய கூறை கோத் திரத்தில்
அதிவா கனமாம் பதிமிக மேரு
மன்னன் அமராபதிச் சின்னய ராயன்
எழுமாத்தூரார்
வேதமே புகல்எழு மாதை யூர்தனில்
கனம் போல் உதவும் பனங்காடை கோத்திரன்
பூசித வாரண வாசிமன் னவனும்
சொல்லதில் நிலைசேர் நல்ல குமாரு
நெற்கதிர் தன்னில் நற்புயர் வேசி
மனைதனை மேய்ந்த அனதரு வாளன்
காஞ்சிக்கோயிலார்
காவிசூழ் காஞ்சிக் கோவில் நா டதனில்
செம்பகோத் திரத்தில் இன்பம் தானோன்
புவிராசர் புகழும் அவிநாசி மகிபன்
திறமிகுத் திடுசீர் அறம்வளர்த் தய்யனும்
மருவலர் புகழும் பெரியண மகீபன்
சிலைமதன் கண்ண குலமகமேரு
தகைமைசேர் வெள்ளை மகிபதி தன்னையும்
வஞ்சியர் மதனன் நஞ்சய ராயன்
தனைத்தினம் பரிவாய் மனத்தில் அன்புடனே
கேள்வி விலாசன் வாழ்வதி யோகன்
சண்டப்ர சண்டன் மிண்டரு தண்டன்
பொய்யுரை யாத மெய்யறி வாளன்
நூல் தலைவர் பெரியண்ணன்
மண்டல மதனில் கொண்டல் நேரான
கொடைதரு கரனாம் வடிவுயர் பெரியணன்
அருள்சுத னான பெரியண்ண விதரணன்
சமுகமெச் சியகன சுமுகனாம் கங்கை
கோத்திரம் அதனில் கீர்த்திசம் பன்னன்
குணமுடன் கார்க்குப் பிணையதி னின்றும்
மழை பொழிய வைத்த செழுந்தமிழ் வாசன்
கணக்கர்
வசீகரம் உலவு நிசகர ணிக்கன்
நித்யசுப யோகன் முத்தர சப்பன்
நன்மொழி பரவு விற்பனன் ஒய்யாரன்
சத்துரர் வல்லியம் முத்துக் குமாரு
தேக்கிய புகழ்கன பாக்கிய நயகுண
இரசப் பால்மொழி அரசப்ப தீரன்
ஆசாரியர்
புகழ்தமிழ் வளர்க்கும் மகபதி யான
நேயமே பரவும் தாயுமா மகீபன்
தண்புய ரும்கவி கம்பருக்கு இனிய
செம்பொனின் மகுடம் அன்பதாய்க் கொடுத்தோன்
சாந்தமா மணிசூழ் மாந்தை நகர்க்கதி
பதியென வந்த மதிமுக வதனன்
சகல தொழிலுயர் செகத்குரு வென்னும்
பூசா பலமிகு ஆசாரி யர்தன்
விசுவ குலத்தில் புசபெல தீரன்
அமரர்கள் புகழும் குமரபூ பதியும்
மால் எனும் குழந்தை வேலெனும் புனித
நோட்டமென் றழகு நாட்டமாய் வாழ்வோன்
வரிசையாய் இவருடன் பரிவதாய் மகிழ்ந்த
தலைவர் பெரியண்ணன் பவனி வரல்
கருணை சோதிக பெருமையே கொண்ட
வனிதையர் மதனன் தினமன தருவான்
கொடையினில் கர்னன் படையினில் வீமன்
மாசிலா மணிசரு வீசர்தன் பதத்தை
ஓதிய மன்பிறைக் காதி வசீகரன்
செகதலம் அதனில் புகழது பெற்ற
அருமறை மொழிசேர் பெரியண தீரன்
தமிழ்வலர்க்கு அதிக குமணநேர் கொண்ட
காதலன் இனிய பெரியண ராயன்
மன்னிய மணி சூழ் பொன்னிமா நதியில்
பூர்த்தியாய்க் குளித்து வெண்ணீற்றையே புனைந்து
சிவனடி தொழுது தவமது புரிந்து
அன்ன சொன்னமும் வண்மையாய்க் கொடுத்து
சுற்றம துடனே உற்றபால் அன்னம்
சுகமுடன் நுகர்ந்து அகமனம் மகிழ்ந்து
பாகிலை தந்தும் னேகரஞ் சிதமாய்
மதியிணை பரவும் நிதிசரப் பணியும்
தங்கக் கடகமும் இங்கிதா பரணமும்
வச்சிரமோ திரமும் மெச்சுசா லுவையும்
வண்மையாய் இனிய வெண்முத்துக் கடுக்கணும்
வாகுசேர் சரிகைப் பாகுமெல் லியதாய்
அணிகலன் அதிகப் பணியது புனைந்து
மால் என வரு அனு கூலஇங் கிதவேள்
ஆனைமேல் பேரிகை பேணவே ஒலிக்க
வீரசின் னமும்மல் லாரிபூ ரிகையும்
மேளமத் தளகண தாளமு மிசையாய்ச்
சிந்துவின் ஒலி போல் முந்தவே தொணிக்க
நீளுதுத் தாரியெக் காளமும் ஒலிக்கத்
தாரைவீ றாணம் காரென அதிரப்
பன்னரித் தான வன்னமாம் பரிமேல்
விருதுகள் வீரர் விரைந்தெதிர் நடக்க
அளவிலாச் சேனைத் தளங்களும் சூழ
பகையவர் மனது விகடமே குலவி
பதமதைப் பணிய நிதமனுப் புரிவோன்
தண்டிகை மீதினில் மண்டலம் புகழ
வரும் சுருள் வெஞ்சா மரைகளும் இரட்ட
கர்னனாய் இனிய விற்பனமே குலவும்
காராள னான தீரனே பூமேல்
தமிழ்வலர் புகழும் சமூகமீ தினிலே
கட்டியக் காரர் திட்டமாய்க் கீர்த்தி
முறைமையே கூறி நெறிமையாய் நிற்க
வேல்வெடி பாணமும் நால்புறம் நெருங்க
மதிமுகம் இனிய வனிதையர் நாட்டியம்
செய்யவும் இனிய செப்பமாய் நால்வர்
கவிதனைப் புகழ்ந்து கனமெனச் சூழ
வேதியர் ஓத மேதினி புகழ
வரிசையே பரவும் பெரியண ராசன்
மாடகோ புரவெள் ளோடையில் பவனி
பவனி காண மோகினி வருதல்
வருபோ ததனில் சுருபமாய் இனிய
கார்நிகர் குழலாள் சீர்பெரும் தொழிலாள்
கமலமா முகத்தாள் விமலநீள் சுகத்தாள்
மேருநேர் முலையாள் ஆரமே கலையாள்
சிறுநுதல் விழியாள் நறுமண மொழியாள்
நற்கனி வாயாள் உற்பன நேயாள்
சிங்கநுண்ணிடையாள் பொங்கு செந் துடையாள்
மெல்லிய நடையாள் கல்வியன் புடையாள்
அருள்வன மயிலாள் திருநிகர் செயலாள்
உருவசி மேலாள் பெருகிய மாலாள்
பொற்பணிக் கையாள் நற்புள மெய்யாள்
மதனநூல் முறையாள் இதமுமெய் குறையாள்
நடனாஞ் சிதத்தாள் படினசங் கிதத்தாள்
சம்போக விதத்தாள் கம்பீர மதத்தாள்
நிலமைமூர்க் ககத்தாள் கலவிமார்க் கதத்தாள்
கதிர்தண்டைக் காலாள் மதிரின்பச் சேலாள்
சித்திர வீதிச் சிறப்பது கண்டு
மெத்தமே மையல் விரகமே கொண்டு
பச்சமாய் அரிவையின் பணிமுலை ததும்ப
இச்சையாய் மேனியில் இனிதுடன் கதம்பம்
மருமலர் வாச மதுகம கம என
பரிவுடன் திலதம் பளப ளென்னப்
பிரியமாய்ப் பதுமினிப் பெண்ணெனும் இவளைப்
பெருகுசத் தம் உடன் கருணைவஞ் சியர்புகழ்
அருமைமோ கினிசுய தெரிவைவந் தனளே. 13
விருத்தம்
திருவளர் குவளை மார்பன் திறமைவெள் ளோடை வாசன்
கருணைசேர் பெரிய ணேந்திரன் கனிவுடன் பவனி வார
வரிசையைக் கண்டு நட்பாய் மனமது மகிழ்ந்து கூறி
அரிவையர்க் கெழில்மி குந்த அழகுமோ கினிவந் தாளே . 14
தரு (ராகம் - மத்தியமாவதி)
நவராச மோகினி வந்தாள் - சிங்காரமாக
நவராச மோகினி வந்தாள்
புவி புகழ் குணசந்திரன் பெரியண துரைமைந்தன்
சவுரியன் பெரியணேந்திரன் சாமி சபைதனில் - நவராச
தேகம் பரிமளமே வாசம் - வடித்தெழுத
தென்மொழியில் சொன்னப்பிற யாசம் - இவள்க்கு நிகர்
தோகையர் இல்லை இணை பேச - அதிகமுள்ள
சுரத வகையில் விசு வாசம் மிக உல் லாசம் - நவராச
போக மதனில் இச்சை புரிகுலம் மனது பட்ச
வாகுசேர் முலைக் கச்சு
வாலையாம் மனம் மெச்சு - நவராச
இருவிழி நிகர்க்கும் வண்டு வரின் நெற்றி
இனிய பிறை போலவே உண்டு
இலகு கூந்தல் மருமலர் புனைகுவள் பண்டு
தங்கத்தன மருமல்லிகை மலர்ச் செண்டு அழகு கண்டு - நவராச
பருவமறிந் தனேக பார்வை இனிமை யாக
புருஷர்கள் உறவாக புனிதமுடன் செயயோக - நவராச
வாலை வயதுயர் சீமாட்டி - அதிக ரூபமான
ஆபரணமே பூட்டி துடிய நீடு
கலையணி இடையது காட்டி
பவனிவார கனிவதைக் காணமயல் பூட்டி
கதிகள் கூட்டி பயிரகுலனை நாட்டி - நவராச
பண்பெரி யண்ணனைத் தேடி
இயல்வா யவரைக் கூடி
இசைந்த ராகமே பாடி - நவராச மோகினி வந்தாள் 15
தரு (ராகம் - பரிசு)
வந்தாள் சிங்காரமாய் எழில் மாது - இதோ
வந்தாள் சிங்காரமாய் எழில் மாது
குணசந்திரன் பெரியணமால் சதுரமான சபைதனில் - வந்தாள்
நடையினில் அன்னப்பேடு - நாசி குமிளைமலர்ச் சோடு
திடமுடன் சுதி கூடும் - தெரிவை இவள் கீதம் பாடும் - வந்தாள்
குழலது கார்மேகம் - கொண்டிடு ரசபாசம்
வளமையாச் சயயோகம் - மார்க்கமுமே யனபாசம் - வந்தாள்
பரத நாட்டியம் ஆடி - பாகிலைச் சுருள் நீடி
பிரியமாய்த் தமிழ்பாடி - பெரியணன் சபைதேடி - வந்தாள்
மோகினி நிலாவை ஏசுதல் - விருத்தம்
சொன்னநன் மொழிதப் பாத சுமுகனாம் பெரியணன் சொல்
மன்னவன் பெரிய ணேந்திரன் மகிமைசேர் ஆத ரிந்து
உன்னியங் கசனுக் கேற்ற உடுபதி உதித்த தாலே
இன்னஎன் மனதுக் கேற்ற இயல்புடன் ஏசுவேனே. 17
தரு (ராகம் - சங்கராபரணம்)
மாதர்மீதில் ஏது நீதான் வெண்ணிலாவே - வெகு
வாது செய் தனல் வீசுறாய் வெண்ணிலாவே
சீதமதி யலவோநீதான் வெண்ணிலாவே - இது
செப்பும் நீதி யோயுனக்கு வெண்ணிலாவே
பேதமதில் லாமலிரு வெண்ணிலாவே - மதி
பேதகமுனக் குண்டாச்சுதோ வெண்ணிலாவே
நாதர்மைந்தன் கையெறியால் வெண்ணிலாவே - வட்டம்
நடுவினில்க் களங்கம் கொண்டாய் வெண்ணிலாவே 18
அரிவையர்கள் சாபத்தினால் வெண்ணிலாவே - நீ
அரூபமாகிப் போனையல்லோ வெண்ணிலாவே
பெருகுபர மன்முடியில் வெண்ணிலாவே - அவர்
பித்தனென் றுரைபெற்றாரே வெண்ணிலாவே
கருணையுடன் இச்சையாக வெண்ணிலாவே - யித்தை
கண்டு பகை யேன்செய்குறாய் வெண்ணிலாவே
பருவதக்கன் யாகமதில் வெண்ணிலாவே - வீர
பத்திரனைக் கண்டு நின்றாயோ வெண்ணிலாவே 19
இரவினில் பகையாய் வந்தாய் வெண்ணிலாவே - உலகுக்கு
ஏற்குமோ றகஞ்செய்யாதே வெண்ணிலாவே
தரளமணி மேகலைகள் வெண்ணிலாவே - இது
சகிப்பதில்லை இதுஞாயமோ வெண்ணிலாவே
பரமர்கற் பனையோயிது வெண்ணிலாவே - பண்டு
பழகுநட்பு உனக்கிலையோ வெண்ணிலாவே
இரசபாலன்னம் கைக்குதே வெண்ணிலாவே - இப்ப
இணங்கிப்பின் வலுச் செய்யாதே வெண்ணிலாவே 20
தையலுடன் பிறந்து நீதான் வெண்ணிலாவே - மெத்த
தன்மையல்லா விதம் என்ன வெண்ணிலாவே
மெய்யரவம் வந்துனைத்தான் வெண்ணிலாவே - வீணா
வந்துன்னைத் தீண்டாதோ வெண்ணிலாவே
செய்ய புக ழாளனாம் பயிரகோத்திரன் - நல்ல
தீரனாம் பெரியணேந்திரன் சேயன்
வையக மதிக்கும் பெரியணதீரன் - என்னை
மருவினால் நீ என்செய்குவாய் வெண்ணிலாவே. 21
மோகினி தென்றலை ஏசுதல் - தரு கலிப்பா
பன்னகமாய் மணியதனைப் பாவலர்கட் கே உதவும்
தென்னன் பெரியணமால் சேறாத போதறிந்து
வன்னக முன்கதிர் வளமையுடன் காந்தியதால்
தன்னமயாய் மோகினியும் சற்கால்கண்டு ஏசுவாளே.
தரு (ராகம் - ஆனந்த பயிரவி)
பொதியந் தனில் பிறந்து வாவிந்தை யாய்ப் பரந்து
அதிகமாகிய தென்றலே - மனதுயிச்சை
அறிவாயோ சிறுதென்றலே
விதமுடன் மனதினில் பரிவாய்நாண மில்லாமல்
விசைமதனனைத் தென்றலே - சுமந்து நீதான்
ஏற்கை கொண்டாயே தென்றலே
பத்தமுடன் உனது சித்தந் தெளிந்துரைக்க
மெத்த யுகமைத் தென்றலே - அரவ முன்னைத்
தெளிவாய் உண்ணாதோ தென்றலே
புசபலனாம் வெள்ளோடை நிசவாணர் பெரியணேந்தின்
இச்சையுடன் என்னைச் சேர்ந்தாலே - உனது
வீறாப்பு என்ன செய்யும் தென்றலே. 23
மோகினி குயிலைக் கூவாதே எனல் - கலிப்பா
மேருவரை பொய்த்தாலும் வெங்கதிரோன் தன்னுடைய
சீருதயம் பொய்த்தாலும் செப்பு மொழி பொய்யாதான்
தாரு நிகர் பெரியணமால் தன்மீதில் ஆசை கொண்ட
வாருமுலை மோகினி முன் மன்னுகுயில் கூவியதே. 24
தரு (ராகம் - ஆனந்த பயிரவி)
சோலையில் மேவிய பூங்குயி லே நீ
சோறாமல் கூவுறாய் மாங்குயிலே
சால விரகமும் மீறலுமே - வெகு
கம்பீரமாய்க் கூவுறாய் மாங்குயிலே
உத்தம மாமதி மெத்தவே சாயுது
சற்று நீ கூவாதே மாங்குயிலே
பத்தமில் லாமல் நீ இத்தனைக் கோபமாய்
பரிந்து கூவாதே மாங்குயிலே
சுந்தர மாகிய பந்து முலைவிம்மி
சுரக்கக் கூவாதே மாங்குயிலே
அந்தரத் தில் நின்று பந்தன மாய் வெகு
ஆசையாய்க் கூவாதே மாங்குயிலே
சித்திர மாகக் கூவுறாய் மாங்குயிலே - ஞாயஞ்
செல்லுமோ சொல்லு நீ மாங்குயிலே
சித்தசன் பெரியண மகிபாலனைச் சேர்ந்தால்
நீயென்ன செய்குவாய் மாங்குயிலே. 25
கடல் முழங்குதல் - கலிப்பா
பாரிலுயர் தாருநிகர் பார்த்திபன் வெள்ளோடை
பெரியண வசீகரன்மிசை மையல் கொண்ட
தெரிவையிள மோகினியும் நேருகுயில் தொனியால் நித்
திரையில்லாப் பக்குவங்கண்டு ஆர்க்குங் கடல் முரசம். 26
தரு (ராகம் - சங்கராபரணம்)
தீர்க்கமாய் ஒலிசெய்குறாய் சிந்துவே - என்மேல்ச்
சினந்து வினை செய்குறாய் சிந்துவே
பார்க்கப் பொதியமுனி கையினில் - கமண்டலத்தில்
பண்புடன் அடக்கினாரே சிந்துவே
வலிமை செய்குறாய் நீதான் சிந்துவே - என்மீதில்
மகிமையில்லை யோசொல்லுஞ் சிந்துவே
பலிதமிகுந்த சுயா சிந்துவே - மாலிடகையில்
பாணமது பூணவுண்டோ சிந்துவே. 27
மலர்க்கணை தொடுத்த மன்மதன் - விருத்தம்
கனமென அருதி யாகன் கானன் வெள் ளோடை வாசன்
அனதனாம் பெரிய ணேந்திரன் அன்புடன் புணரா தாலே
இனிமை செறிந்து தென்றல் இன்குயில் திரையொ லிக்க
மனமகிழ் சிலைக்கர மன்மதன் மலர்க்கணை தொடுத்துற்றானே 28
தரு (ராகம் - சவுறாட்டகம்).
சிந்தையிலின்று நினைந்தென்னைக் கொண்டாயோ மன்மதா - இது
சேபரமேருயர் அர்ப்பித நட்பது ஒப்பாதே மன்மதா
கந்தமலர்க்குழல் மங்கையர் தங்கட்கு மன்மதா - வெகு
காதலையே தந்து பயிலுடன் ஒயில் செய்தாய் மன்மதா
திடவனி தையரிட படையுடன் புடைசூழும் மன்மதா - இது
சேராமலுனக்கு நல்லிசையெங்கே விசையெங்கே மன்மதா
வடிவான விடையா னிடமுன்னே கடினமாய் மன்மதா - நின்று
மலர்க்கணை தொடுக்கவே சுடர்த்தேகம் அடர்த்தாயோ 29
தண்பொடு நங்கையர் சந்ததத் தாலுமை மன்மதா - வெகு
சார்வதி னாலுடல் வியர்த்தாயோ இளைத்தாயோ மன்மதா
பண்புடன் தென்றல் தேருந்தனுக்கே மன்மதா - எனக்குப்
பரிவான அழகுத்தேர்ப் படையுண்டு யிடர் வேண்டா மன்மதா
சீர்பெறும் வெள்ளோடை ஊரில் உத் தாரன்காண் மன்மதா - தமிழ்
சேர்பயி ரகுல தீர வசீரனாம் மன்மதா
பேர்பெறும் நீதிப் பெரியணன் ஈன்பாலன் மன்மதா - அருமைப்
பெரியண துரை என்னை மருவினால் என் செய்குவாய் மன்மதா 30
மோகினியின் பாங்கி வருதல் - கலிப்பா
இரவுதனில்ப் பரமனுக்கு இயல்புமுளை அமுதளித்த
பிரபலனாம் வெள்ளோடைப் பெரியணமால் மருவாத
வரிசைமதி தென்றல் குயில் வாருதியும் மன்மதனால்ப்
பரிவுடனே மோகினிக்குப் பாங்கிவந்து தொன்றினளே. 31
தரு (ராகம் - சவறாட்டகம்)
ஆசைகொண்ட மோகினிக்குப் பாங்கி
அன்புடன் வந்து தோன்றி னாளே - தமிழ்
வாசவன் நேர்புகழ் பெரியண பூபதி
மைந்தன் பெரியண இந்திரன் சபைதனில் - ஆசை
சித்திர மாகிய இடைதனில்க் கெண்டைச்
சேலை பளீரென்ன மின்ன - வெகு
உத்தார மாகவே மொழிகள் பலசொல்லும்
உண்மைய தான் நீல வர்ண
சித்தச னுக்கிவள் ஒப்பித மாகிய
செப்ப நடையொயில் அன்ன - வெகு
வித்தைய தான் நீ லறிவுள்ள பேர்பெறும்
மென்மைய தானவிற் பன்ன - மேரு
முலையாள் வடிவுப் பிரசன்ன - அதிக
விருப்பமாய் வடிகொண்ட சொன்ன - ஆசை கொண்ட
பதுமினி யாகிய பெண்களி லே இவள்
பக்குவமாய் அருள் நீடு - இனிய
பதுமமுக வடிவாகிய தேகநன்
பால்பழ மாமொழி கூடு
அதிகக் கதிரினில் ஒளிவான ரதிதன்
மனமகிழ் கவிகள் அதிகமே பாடும்
மருவு மதுமலர் புனுகுசந் தனவாடை
யேமிகும் வனிதையில் உலர் குயில் பேடு
இவள் வாசமே பூந்துறை நாடு - நல்ல
மனையி ருப்பது வெள் ளோடு
ஆசை கொண்ட மோகினிக்குப் பாங்கி
அன்புடன் வந்து தோன்றினாளே - ஆசை கொண்ட 31
பாங்கி மோகினியை வினவுதல் - கலித்துறை
பூங்கமழ் சேரும் வெள் ளோடைப் பெரியண பூபதியை
பாங்கியும் யானும் மனதினி லேதினம் பந்தமுடன்
தேங்கிடத் தோத்திரம் செய்திட வேமிகச் செப்பமுடன்
மாங்குயில் மோகினி நின்மன தாசை வழுத்துவையே. 32.
தரு (ராகம் - பயிரவி]
ஆசையாய் என்னை நீ அழைத்த தென்னடி
வாசவான் பெரியண மகிபதி சமூகந்தன்னில் - ஆசையாய்
அழகுடன் கூந்தலுக்கு அரும்பு மலர் சூட்டுவர்
அதிக மோகாஞ்சி ஆபரணம் பூட்டுவர்
தோடி அன்பாய் நின்முன் பாட்டுவர்
நளினமுடனே பரத நாட்டியம் ஆட்டுவர்
நாகரிக மாகவே பாகிலைச் சுருள் நீட்டுவர் - ஆசையாய்
சந்தனம் பன்னீருடன் சவ்வாதுகளைப் பூசவோ
தனிமை மதன நூல் முறைதனை எடுத்துப் பேசவோ
பைந்தொடி யே உந்தன் எதிர்பாவையரை ஏசவோ
பண்புடன் வெண்கவரி பரிந்துண்மையாய் வீசவோ - ஆசை
சித்தமாய் விழிக்கு மைத்தில் கங்கள் குழைக்கவோ
சீருடன் உந்தனுக்கு ஆசை சேரவே விளைக்கவோ
பத்தமாய் முத்துச் சரப்பணி யை எடுத்து அளிக்கவோ
பயிரகுலப் பெரியணன் உன்பால் வரவழைக்கவோ - ஆசை 33
குறத்தி வருதல் விருத்தம்
தேன்மொழி இனியயுல் லாசத் தெரிவை முன் பாங்கி தானும்
தான் மனம் மகிழ நன்றாய்த் தயவுடன் நினைக்கும் வேளை
மேன்மைசேர் பெரிய ணேந்திரன் விசயனை மிகப்பு கழ்ந்து
வான்உல வியசீர் சென்னி மலைக்குற வஞ்சி வந்தாள். 34
அகவல் (ராகம் - சாவேரி)
அருகு பொங்கு அரவு அணி சருவலிங் கரையே
சிந்தையில் துதிக்கும் செந்தமிழ்ப் புகழ்க்கோன்
பயிரகோத் திரத்தில் வயனெனத் திறலான்
பெரியணன் சேயன் பெரியண பூபன்
மகிபதி நாட்டில் சுகமது இனிய
நெற்றிசேர் பிறையின் பொற்பணி நிறையாள்
அரும்பு சேர் எழிலாள் சுரும்புசூழ் குழலாள்
தேனெனும் மொழியாள் ஆன கூர் விழியாள்
செங்கனி வாயாள் அங்கச நேயாள்
அழகில் வெண் மதியாள் இளமை நல் மதியாள்
மணிவளைக் கரத்தாள் புணர்முலைத் திறத்தாள்
தளிர்நிற மேனியாள் நளின இந் திராணியாள்
துடியிடை ஒயிலாள் நடைபயில் இயலாள்
கற்பினில் இனியாள் நற்பிதழ்க் கனியாள்
நவமணி புனைகும் தவமுறை நிறைகும்
சுத்தமாய்த் திருநீர் பத்தமாய்த் தரித்து
இச்சையாய்த் திலதம் பட்சமாய் வைத்து
வளர்செவி யோலை பளபள பளென
வாரு சேர் தனங்கெம் பீரமா யலுங்க
உறுதிகள் பொருந்த நெருமையாய் நினைந்து
சூத்திர முடனே மாத்திரைக் கோலை
நேர்த்தியாய்க் கையில் பூர்த்தியாய் எடுத்து
இயல் குறக் கூடை நயமுடன் எடுத்து
இடையினில் இடுக்கித் திடமுடன் மனதில்
வள்ளியைத் துதித்து உள்ளமே கதித்து
விரைசெறி சென்னி கிரிதனி லிருந்து
வளமையாய்த் தங்க வளைகல கலென
மிஞ்சியிங் கிதக்குற வஞ்சிவந் தனளே. 35
தரு (ராகம் - மத்தியமாவதி)
வஞ்சி வந்தாள் - மலைக்குற
வஞ்சி வந்தாள்
அஞ்ச லெனமத நஞ்சும் வடிவுயர்
கிஞ்சு கனமொழி யுஞ்செய் வளிவளர்
தஞ்ச மலர்முகம் விஞ்சு மதியெழில்
உஞ்சி யிருகர ரஞ்சித முடனே - வஞ்சி
அருமை மிகுங்கலை நெருங்கு கூந்தலில்
அழகாய் நறுமலர் சாற்றியே
தரள நவமணி இலகு கரம் இரு
தனமிசை புணர்வன நேர்த்தியே - வஞ்சி
இந்திர தாருவெனுடம்பு யாசலன்
இரவலர் கள்கலி ஓட்டியே
வந்த ருள்பெரி யண்ண மகிபதி
வரவு பூந்துறை நாட்டிலே - வஞ்சி 36
தரு [ராகம் – பருசு]
சிரகிரிக் குறவஞ்சி வந்தாள்
அருமைத் திருவைப்போல்
ஒளிவான சித்திர மடந்தை
சிரகிரிக் குறவஞ்சி வந்தாள்
தண்மைய தாக மனமகிழ்ந்து - வெகு
சாத்திர முறையது பூர்த்தியாய்த் தெளிந்து
உண்மைய தாக விரைந்து குறி
உச்சித மாய்ச்சபை மெச்சப் புகழ்ந்து - சிரகிரி
இங்கித மாகிய நாரி இசையுடன்
இராசி இயம்பும் உதாரி
சிங்கார மாகிய பாரி - மெத்தத்
திறமாய்க் குறம்பாடும் செய்கையில்ச் சாரி - சிரகிரி
அரம்பையில் அதிக சீமாட்டி - இவள்
அழகினில் ஒளிவான அருமைக் கண்ணாட்டி
பெருமை குலவும்வெள் ளோட்டில் - செல்வப்
பெரியணன் வாழ்திருப் பூந்துறை நாட்டில் - சிரகிரி 37
குறத்தியை வரவழைக்கக் கூறுதல் - வெண்பா
பொன்னே நவமணியே பூவையே தெள்ளமிர்தே
இன்னேர் இளமுலைசேர் ஏந்திழையே - மின்னல்சேர்
வாணுதலின் மோகினியே வாநீ குறத்தி முன்னே
பூணவுரைப் பாள் உனக்கிப் போது. 38
விருத்தம்
பூதல மீதில் வாழும்
பெண்கள் தம் கருத்திற் கேற்க
போதர வாயு ரைக்கும்
புகல்குற வஞ்சி மாதே
மாதவன் பெரிய ணேந்திரன்
மகிபதி நகரில் வாழும்
மாதுமோ கினியாள் உம்மை
வரவழைத் திடச்சொன் னாரே. 39
குறத்தி கூற்று - தரு (ராகம் - சாவேரி)
மறையவர் குலப்பெண்களே - நிலை
மன்னவர் குலப்பெண்களே
திறமை வைசிகப் பெண்களே
சிறக்கும் சூத்திரப் பெண்களே
அதிகக் கானாடப் பெண்களே - ரதி
அழகு குச்சலியப் பெண்களே
கதிரிலங் கும்சிங்கள தேசத்துக்
காருண்ய மான பெண்களே - இவ்
வையந் தனில் உள்ள பெண்களே - உங்கட்குக்
கணவர்சேர் மூலிகை வேணுமோ
செஞ்சி மாநகரப் பெண்களே - செல்வம்
செழிக்க மூலிகை வேணுமோ
தஞ்சை மாநகர்ப் பெண்களே - நல்ல
தம்பனக் குளிகை வேணுமோ
மதுரை மாநகர்ப் பெண்களே –
மணி மந்திர மூலிகை வேணுமோ
நிதிபெறும் அரிதான பெண்களே
நேமக் குளிகை வேணுமோ
மைந்தனில் லாத பெண்களே - பெற்றிட
லான மூலிகை வேணுமோ
குணச்சந்திரன் பெரியணேந்திரன் நாட்டினில்
சுத்தமாய்க் குறி சாற்றியே. 40
குறத்தி வாசல் வளம் கூறுதல் - விருத்தம்
ஆதித்த னொடுபதியின் பிரபை மின்ன
அகற்றுதம னியப்பொருப்பில் அதிக மான
மாதுற்ற சிரகிரியின் மீதி ருந்து
வருகுறப்பெண் ணேநமது வளமை கேளாய்
பூதலத்தில் ஐந்து தரு வாக வந்த
புண்ணியவான் பெரியணமால் அருள்வி பேகன்
மாதவன் நேர் பெரியண்ண னேந்திர தீரன்
வாசல்வளம் மெய்ப்பாக வசனிப் பாயே. 41
தரு (ராகம் - சங்கராபரணம்)
செந்திருவும் அய்ந்த ருவும் - நித்தியம்
செழித்திருக்கும் வாசலிது அம்மே
சுந்தர மாகிய வாசமலர்த் - தோரணம்
சூழும் வாசலிது அம்மே
புவிராசர் கவிராசர் - வந்து
புகழுந்தமிழ் வாசலிது அம்மே
தவறாமல் ஏற்போர்க்கு அன்ன சொன்னம்
தருபோசன் வாசலிது அம்மே
தேவர்களும் பூசுரரும் - வந்து
சிறந்திருக்கும் வாசலிது அம்மே
மாவல னாகிய புருஷர் வந்து
வணங்கி நிற்கும் வாசலிது அம்மே
துரக பதாதியுடன் - தந்தி
சூழ்ந்து நிற்கும் வாசலிது அம்மே
மரகதகோ மேதகமும் - பச்சை
மாணிக்கஞ்சேர் வாசலிது அம்மே
பகையவர்கள் மனம் நடுங்கி - பாதம்
பணிந்து நிற்கும் வாசலிது அம்மே
புகலும் மக ராசர்களில் - நல்ல
புத்தியுள்ளோன் வாசலிது அம்மே
இன்பமுடன் விலைமாதர்கள் - கவரி
இரட்டுமிந்த வாசலிது அம்மே
தென்புடனே தெரிவையர்கள் - நாட்டியம்
செய்யும் சுப வாசலிது அம்மே
மாறாமல் இருகரத்தில் - செம்பொன்
வாரித்தரும் வாசலிது அம்மே
கர்ணனிக ராகவரும் - செல்வக்
காராளர் வாசலிது அம்மே. 42
குறத்தி தன் சாதிவளம் கூறல் - விருத்தம்
குயில் மொழி இசைந்த சித்திரக் குறப்பெண்ணே அருமையாக
புயல் எனப் பெரிய ணன்வாழ் பூந்துறை நாட்டில் மெய்ப்பாய்
வயனமாய் அதிக வாசல் வளமதை உரைத்தாய் முன்னே
நயமுடன் சாதி செய்கை நன்மையாய் உரைசெய் வாயே . 43
தரு [ராகம் – தோடி]
பொன்னி நதியில் குளித்தெழுந்துமே - நெற்றியில்
விபூதி யணிந்து புரிந்து பேசுவோம்
சென்னியங் கிரிமுருகர் வள்ளியைத் - தெவியானை
உமையைத் தினம் பணிந்து தெரிசனம் செய்வோம்
கொக்கிறகு நல் அக்கு மணியுடன் - வச்சிரநீலம்
கோமேதகமும் கோர்த்துப் புனைவோம்
மிக்கவே சிங்கனை மருவுவோம்
கவுதாரி காடை விரைந்து பிடித்து
சமைத்து நுகருவோம்
கஞ்சாவும் அபினி கள்ளும் சாராயம்
பூர்த்தியாய் மனங் களித்துக் குடித்து
கணவனை அணைவோம்
யிஞ்சலுடனே யயில் பேசுவோம்
வெறிகள் மீறியெழுந்து விழுந்து
கழன்று திரிவோம்
சக்கர ஸ்தாபிதம் மிக்கச் செய்குவோம்
மந்திரத்தினில் சர்ப்பம் தொடாமல்
சார்ந்தகம் செய்குவோம்
பக்கமாகப் புலியும் பசுவுமே சேர்ந்துலாவிப்
பரிந்திருக்க மருந்து செய்குவோம்
வசியமாக உசித மூலிகை கேட்போர்க் கீந்து
வளர் சிரகிரியில் குடியிருப்போம்
புசபலத்தோடு நிசங்கள் கூறுவோம் - புண்ணிய
புருஷர் புகலும் சமத்தில் உசத்திப் பேசுவோம்
திட்ட மாய்க்குறி இஷ்ட்டமாய்ச் சொல்லுவோம்
வெள்ளோடை நகர்தீரன் பெரியணேந்திரனை வாழ்த்துவோம்
கொட்டமிடும் பேரைக் கொலைகளவு செய்வோம்
எங்களுடைய குலத்துப் பெருமைக்குறி தானம்மே. 44
குறத்தி மலைகள் கூறல் - விருத்தம்
விரைமலர்சூழ் பிறைசூடும் சருவ லிங்கர்
விமலரிரு தாளிணையை விரும்பும் தீரன்
உரைதவிறான் மொழிக்கினிய பெரிய ணேந்திரன்
உசிதமிகும் சந்துரைசெய் நாட்டில் மிக்க
நிரைகுயிலின் மொழிகுலவும் குறத்தி யே நீ
நேயமுடன் அழகாகக் கொண்டு வாழ்ந்த
வரையதனை இன்னதென்று என் முன் னேநீ
வரிசையுடன் இது முறைமை வழுத்து வாயே. 45
தரு [ராகம் - புன்னாக வராளி]
மாணிக்க வடகயிலை அமரும்
மந்திரகிரி விந்தைமா மலையும்
சேணிப் புகழின் மலைகள்
சித்திர கூடமலை பன்றிமலை
வேதமலை பவளமலை வேள்விபுரி பொன்னூதி மலை
கோதைமலை அருணகிரி குன்று மலை தீர்த்த கிரியும்
சென்னிமலை கனகமலை செண்பக மலை மங்களகிரியும்
மன்னும் மருத மலை வெள்ளி மலையுடன்ஊ ராட்சி மலையும்
திண்டல்மலை பொதியமலை சித்தர்கள் தினஞ்சூழ்பாலமலை
எண்டிசைசூழும் ரத்தினகிரி மயேந்திரமலை நீலகிரியும்
சோலைமலை அலைவாய் மலை தோகைமலை அலகுமலை
தந்தி மலை நாமகிரி சதுரகிரி பரங்கிரியும்
செந்தூர்மலை அருணாசலம் திருவேங் கடமலை
கஞ்சமலை வானவர் சூழும் வையப்பமலை கபிலமலை
சோலைமலை காளத்தி மலை சூழ் வண்டினம் பாடும் ரங்கமலை
நிஷ்கந்த மாமலையும் நீள் பச்சைமலை குடகுமலை
புஷ்பகிரி உதயகிரி சூரர் பொற்கினிதாகிய கந்தர்மலை
சவுரிமலை பழனிமலை சாமிமலை கேதாரமலை
புவியிலுள்ள மலைகள் எல்லாம் பொற்போடு கண்டு புகழ்ந்து வந்தேன்
கவிராசர் மனமகிழும் - துரைக் கானன் பெரியண பூபதிதன்
தவமாகத் துதிக்கும் சிரகிரி - தான்
எங்கள் மலைவளம் செப்பினேன். 46
குறவர் கொடுத்த மலைகள்
தரு [ ராகம் - புன்னாகவராளி ]
பொங்கரவ மார்பனுக்குப் பொன்மலையும் கொடுத்தோம்
இங்கிதமால் தனக்கு இயல் அரவகிரி கொடுத்தோம்
இந்திரன்வா னவர்தமக்கு வெள்ளிமலை கொடுத்தோம்
விந்தைதிகழ் மலைகள் கதிர் வேலவர்க்குக் கொடுத்தோம்
வன்னமிகு அகத்தியர்க்குப் பொதியமலை கொடுத்தோம்
இன்னம் வெகு வரையுண்டு நாம் வாழ்வு செய் என்று
கடலினுள்ளே மறைத்துவைத்துக் கனமாய் மனம் மகிழ்ந்தோம்
திடமிகுபெரி யணன் துதிக்கும் சிரகிரிக்குடி நாங்கள். 47
சென்னிமலை மகிமை கூறல் - விருத்தம்
திரைகடல் ஒலிசேர் பூவில் செப்பமாய் வரைகள் தன்னை
விரிவுடன் புகழ்ந்த தெல்லாம் மெய்ப்புடன் குறப்பெண் மாதே
பிரபலன் பெரிய ணேந்திர பூபதி நாடு தன்னில்
வருசென்னி மலையின் மேன்மை மகத்துவம் உரைசெய் வாயே. 48
தரு [ராகம் - சாவேரி]
மகிமைசேர் சென்னிமலை மகத்துவம்
வழுத்தக்கேளடி மானே
வனச மாதுக் கிணை குலாவிய
மங்கையே பசுந்தேனே
வாகுசேர் சித்தர் கணநாதரும்
வந்து மகிழ்ந்திருப்பார்
மாகமிகு மூன்று தேவரும்
வாழ்ந்தே சஞ்சரிப்பார்
சித்தமாகிய மாணிக்கப் பிரபை
துலங்கித்தின மிருக்கும்
தோராமல் இருட் டானதைக் கண்டு
துரத்தி உச் சரிக்கும்
அத்தை நீள் கதிர்வேலர் வள்ளி தேவ
யானையும் தின மிருப்பர்
அகமகிழ்ந்து சிவயோகிகள்
அன்பாய்ச்சூழ்ந் திருப்பர்
மிக்கவேசோதி விருட்சம் பொய்யாமல்
விந்தையாய்ப் பொழியும் நீடும்
இயல்வதைக் கண்டு களங்கம் எல்லாம்
விண்டேயதிர்ந் தோடும்
முக்கிய மாகிய மாமாங்க தீர்த்தம்
உச்சிதமாய்ப் பொங் கிவரும்
முறைமை யாய் அதை நுகர்வோர்க் கேவினை
மூர்க்கங்களே யிருக்கும்
சிந்தை மகிழ்ந்து பசுவும் புலியும்
சேர்ந்து மெய்ப்பா யிருக்கும்
தென்பதாய்ச் சஞ்சீவி மூலிகை
திறமாய் உண்டா யிருக்கும்
அந்தமாய்க் கேசரி மார்க்கத்தில்
அடர்ந்து மானிடர் நடக்கும்
அதிக மாகிய பச்சிலைகளும்
அன்பாயுண்டா யிருக்கும்
செந்தமிழ் சேர்வெள் ளோடைநகர்
செழிக்கும் பயிரகோத்திரன் தீரன்
பெரியணேந்திரன் நாட்டினில்
தெரிவையே மடமயிலே. 49
குறத்தி தான் அறிந்த தேசங்கள் கூறல் - விருத்தம்
இளமுலை வனிதை மின்னே எழில்குற வஞ்சிப் பெண்ணே
தளபதி பெரிய ணேந்திரன் தழைத்த பூந் துறை செய் நாட்டில்
அழகிய வரையி லுள்ள அதிசயச் சொல் நன் றாச்சு
வளமையாய் அறிந்த தேசம் அதுதனை வழுத்து வாயே. 50
தரு (ராகம் - சவுறாட்டகம்)
கலிங்க மராட்டர் துளுவர் குருதர்கள் தேசம்
தூயகானாடர் பப்பரர் சோனகர் குச்சரர் தேசம்
குலிங்கர் நதரர் கவரர் கேகயர் தேசம்
ஈழம் கொச்சி மலையாளம் கொங்கணர் ஒட்டியர் தேசம்
தெலுங்கர் சீனம் கச்சி மாதங்கம் விதர்ப்பர் தேசம்
நல்ல சூரர் புலிங்கர்கன பாஞ்சாலர் பாண்டிய தேசம்
துலங்கும் பயிர குலேந்திரன் பெரியண தீரன் தன்னைச்
செப்பமாய் இந்தத் தேசத்தில் புகழ்ந்தேன் நான் அம்மே. 51
குறத்தி குடியிருந்த மலைகள் கூறல் - கலிப்பா
மாலும் திரு உறையும் மகிமைப் பெரியணன் தன்
பாலன் பெரியணமால் பண்புயரும் அன்னகரில்
சோலைக் கிளியே சுயதேசம் பகர்ந்தாய்
மாலாய்க் குடியிருந்த வரையதனைச் சொல்வாயே. 52
தரு (ராகம் - யாகடை)
சஞ்சரித்த மலைகளெல்லாம் யிஞ்சலுடன் நானே
சவுரிய முட னேயுரைப்பேன் சார்ந்த மட மானே
பொன்மேரில் நன்மையுடன் வண்மைக்குடி கொண்டோம்
புரம் அதற்குச் சிலைவளைக்கப் பின்பு அகன்றோம் அம்மே
மன்னுதிரு வேங்கடமால் மலையிற்குடி சென்றோம்
மாயன்வந்து குடிசெய்கவே மனைவிடுத்தோம் அம்மே
சித்ரகூடம் தன்னில் குடி செப்பமுடன் இருந்தோம்
சீதையும்ரா மரும் வருகச் சிந்தனை மருண் டகன்றோம்
பத்தமுடன் தென்பொதியம் தன்னில் மகிழ்ந் திருந்தோம்
பன்னும் தமிழ் முனியைக்கண்டு பயந்துகுடி எடுத்தோம்
பழனிமலை தன்னில் உளம் மகிழ்ந்து புகழ்ந் திருந்தோம்
பச்சமாய சுரரைக் கொன்றென் பாலில்வர எழுந்தோம்
வளமைதிகழ் பொன்னூதி வரையில் சுகம் கொண்டோம்
மார்க்கமுடன் சித்தர் சூழ அரவகிரி வந்தோம்
பரமன் உமை யவள்க்கு இடப் பாகம்தர வந்தார்
பார்த்து மனம் நீர்த்துமிக பரிதவித்து அகன்றோம்
திறமைதிகழ் விந்தைகிரி தன்னில் விரைந் திருந்தோம்
சினந்து குறு முனிவன்மார் செய்யவிட்டுப் பிரிந்தோம்
நவமணிசூழ் வெள்ளோடைப் பயிரகுல கோத்திரன்
நாகரிகன் பெரியணமால் அருளியவ தாரன்
புவனி புகழ்ப் பெரியணன் வாழ் பூந்துறைசை நாட்டில்
புனித சென்னி கிரியில் நாங்கள் புகழ்ந்திருந்தோம் அம்மே. 53
குறத்தி நதி வளம் கூறல் - விருத்தம்
இந்திரனே வந்து தினம் வாசஞ் செய்யும்
இனிய பொன் மாரி பொழிந் தேற்கை நாடன்
செந்திருவாழ் வெள்ளோடைப் பெரிய ணேந்திரன்
செல்வன் முன்னே மொழி பகரும் சிங்கி மாதே
பைந்தமிழ்சேர் குடியிருந்த மலையைச் சொல்லி
பத்தியாய் நிலமை கொண்டாய் புரிந்து இப்ப
சந்ததமாய்ப் பெரியோர்கள் பணிந்து நிற்கும்
சகலந்தி யின் பெருமை சாற்று வாயே. 54
தரு (ராகம் - சவுறாட்டகம்)
அருமைந்தி வளங்கே ளம்மே - அதிகமுடன்
அருமைந்தி வளங்கே ளம்மே.
நிருமதை கங்கை யமுனை கோதாவரி சிந்து
காவேரி சுவேதம் தாம்பிரவேணி கன்னியாகுமரி
காட்சிதிரு வைகையும் பம்பை கனஞ்சேர் வானி - அருமை
பூவுலகினில் பெண்ணை சரசுவதி கம்பை
திருமணி முத்தாறுடன் அய்யாறு காஞ்சியுடனே
துங்க பத்திரியும் நல்லாறு திருப்பாலாறு
திறமைசீர் தனுக்கோடி நேர்அனுமந்தி வாசம் - அருமை
வெள்ளோடை நகர்வாழும் போசன் பயிரகுல
வேந்தன் பெரியணன் உதாரன் அழகில் பரதன்
வள்ளல் பெரியணேந்திரன் மனமது மெச்சிய தேனே
அருமைந்தி வளங்கே ளம்மே. 55
குறத்தி நாட்டுவளம் கூறல் - வெண்பா
அன்னமே முல்லை அரும்பே நிகர்தந்தம்
ஒன்னலர் மின்னுகுற வஞ்சியே - இன்னிலத்தில்
நீட்டுபுகழ் தேசந் தனில் நதியைச் சொல்லி வந்தாய்
நாட்டுவள மேசிறப்பாய் நல்கு. 56
தரு (ராகம் - கேதாரகௌளம்]
பன்ன மாதுளை கோங்குசெந் தாமரைப்
பலவு மாவொடு கதலியின் தூய்நறை
மின்ன வே அதை வண்டு வருந்தி
விசைய மாய்மனம் மகிழ்ந்து அருந்தும்
கன்னல் அமுதத்தை ஈன்று கொடுக்கும்
கவிக்கு லங்கள் வனத்தை அடுக்கும்
பொன்னின் மாமணிப் பிரபைகள் சூழுநற்
பெருமை யாகிய பூந்துறை நாடே. 57
அரும றைகளும் அன்பாய்த் துலங்கும்
அறங்கள் பொய்யாமல் மெய்யாய் விளங்கும்
பெருகு செல்வத் திறமை செழிக்கும்
புகலும் நீதி நிலைபரி மளிக்கும்
விரைம லர்நிறைந் தன்பாய் அலரும்
விளக்க மாகிய பொன்னம் பலரும் பி
ரிய மாகவே வந்து குடிகொளும்
புயலு லாவிய பூந்துறை நாடே. 58
வயல்கள் எல்லாம் மதுத்தினம் பாயும்
வளமையாய்ச் செந்நெல் விளைந்ததில் சாயும்
சுயம தாய்மனந் தன்னில் துலங்கும்
சொல்லெல் லாம் அரும் பொருள்வி ளங்கும்
சயிலமாய் மாதமும் மாரியே பெய்யும்
சகலரும் தழைத்து வாழ்வு செய்யும்
நயமு டன்கவி வாணர் புகழ்ந்து
நவிலுவ தெங்கள் பூந்துறை நாடே. 59
அன்னை சருவலிங் கேசர்பா டகவல்லி
அம்மன் வாழும் வெள்ளோடை சூழ்நாடு
அன்ன தாரு விசைந்திடு நாடு
அருள்சிரகிரி வாழ்திரு நாடு
பொன்னி வானி புரிந்திடு நாடு
புனித நாலெட்டூர் உள்ள நன் னாடு
மன்ன னாம் பெரிய ணேந்திரன் மகிழ்ந்து
வாழு கின்ற பூந்துறை நாடே. 60
குறத்தி தரிசித்த தலங்கள் கூறல் - கலிப்பா
வேதாக மம் உலவும் வெள்ளோடை மாநகரான்
மாதரார் கனயோகன் வள்ளல்பெரி யணன் நாட்டில்
சீத மதிவதனன் தேனேநன் னாடதனை
போதயினி நன்றாச்சு புகுந்த தலம் சொல்வாயே. 61
தரு [ராகம் - ஆனந்தபயிரவி]
அதிக மாகவே நான் தெரிசித்த தலங்களை
அன்பாய் நீ கேள் அம்மே
பதியினில் உயர் சிரகிரி வளநாட்டினில்
பாவைகட்கு நேயம்பகர் மோகனாங்கியே - அதிகமாகவே
சிதம்பரம் சீர்காழி விருத்தா சலம் குடந்தை
தெற்பசய ணம் சாதி நீதிபெறும் கமலாலயம் தி
ருத்தணி வைகுந்தம் பழனி திருவேரகம்
திருவாவடுதுறை கச்சி கருத்தினில் உயர்கருவூர்
வெஞ்சமாங்கூடல் காசி அவிநாசி - அதிகமாகவே
செந்திரு மார்பன் வெள்ளோடைப் பயிரகுல
தீரன் பெரியணேந்திரன்
சிந்தை மகிழ்ந்து போற்றும் சருவலிங்கேசுரர்
செயலுற்ற மாநகரில் செப்பும் தலங்கள் மானே
அதிகமாகவே நான் தெரிசித்த தலங்களை
அன்பாய் நீ கேள் அம்மே. 62
குறத்தி தன் வித்தைகள் கூறல் - கலிப்பா
செங்கமல மாது தினம் செழிக்கும் பரிவாளன்
பொங்கமுடன் பெரியணன் பூபதிதன் நன்னாட்டில்
தங்குபுகழ்க் குறமகளே தலங்கள் தனை ஓதினையே
இங்கிதமாய் உந்தன் வித்தை இயல்பாகச் சொல்வாயே. 63
தரு (ராகம் - எருக்கிலை காம்போதி)
உண்மையுடன் எங்கள் குல வித்தை கேள் அம்மே - மெத்த
உயர்ந்த எட்டு வரையெடுத்துத் தின்று போடுவோம்
வண்மையா காசத்தில் வாழும் அம்புலியைக் கையால்
வளமையாய்ப் பிடித்ததை அமுதாகக் குடிப்போம்
காட்டில் மேய்ந்து வரும் ஆனை தன்னைமிகவே - ஒரு
கையினா லே எடுத்துக் கும்பந்தனில் அடைப்போம்
நாட்டமுடன் ஏழ்கடலை யும் சமத்தினால் - அதை
நன்மையாய்ப் பிசகாமல் அள்ளி நுகர்வோம்
பூனைதனை யேயெடுத்து ஓடவும் செய்குவோம் - மிக்க
புலியும் பசுவும் சாந்தமாகச் செய்குவோம்
கானகத்தில் வாழும் அத்தி மீதிலேறுவோம் - அதின்
கனமான கொம்பைப்பிடித் திழுத்து முறிப்போம். 64
குறத்தி தெய்வங்கட்குக் குறிசொன்ன விபரம் கூறல் - விருத்தம்
கன்னனைப்போல் தியாகமிகு பெரிய ணேந்திர
காவலன் தன் நாட்டிலுயர் கருணை மானே
தன்னமைசேர் உந்தனிட குலத்து வித்தை
தயவாகக் கேட்டு மனம் மகிழ்ந்தேன் இப்பால்
தென்னுலவும் நின்னுடைய குலத்தோர் முன்பு
தேவருக்கும் அரசருக்கும் செப்ப மாக
நன்னயமாய்க் குறிசொல்லிப் பெருமை பெற்ற
நளினமதை இன்னதென்று நவிலு வாயே. 65
தரு (ராகம் - எருக்கிலை காம்போதி)
தென்புடனே சங்கரற்கு நிசமாகவே - உமை
சேர்வாள் ஒரு பாகமென்று செப்பினாள் என்தாயி
அன்புடனே தங்கப்பிறை அன்னத்தளுக்கு - வச்சிர
அட்டிகை சவுக்களியும் இட்டமாய்த் தந்தான்
அரவினில் பள்ளிகொண்ட நெடியோன் தனக்கு - பதி
னாறாயிரம் பெண் சேருமென்று உரைத்தாளென் பாட்டி
பெருமையுடன் உத்தண்டால் மார்புப் பதக்கமும் - நல்ல
பின்னல்சர மோதிரம் அண்ணைக்கே கொடுத்தான்
வேதனுக்கு மெய்ப்பதாய் உச்சிதமாகவே - வெகு
விதநான்மறை வருமென்று உரைத்தாள் என் நங்கை
போதரவாய் இப் பரிசுதந்து தங்கத் தாயித்து - உயர்
புகடியுஞ் செண்டு கொப்பு புகர்ந்து தவினான்
மலையில் வடி வேலவற்கு நிலமையாகவே - வள்ளி
வந்து சேர்வாள் என்று சொன்னாள் என் சமந்தி
நலமணிமே கலை ஒட்டி யாணமுடனே - குப்பி
நளினமுடன் பாதசரம் கொலுசு நல்கினான்
கொங்கிலிரு பத்து நாலு நாட்டில் உயரும் - செல்வம்
குலவும் பூந் துறைசைநாட்டில் பெரியணன் சேயன்
இங்கிதமிகு பெரியணேந் திரன் நகரில் - மெய்ப்பாய்
இன்பமுடன் வேண்டியதெல்லாம் கேளடி மானே. 66
குறத்தி அரசர்கட்குக் குறி சொன்ன விபரம் கூறல் - விருத்தம்
ஆரணவா சம்உலவு மொழியின் மாதே
அருமையுள நின்னுடைய பெரியோர் எல்லாம்
ஒருலவும் தேவர்முன்னே குறிகள் சொல்லி
இயல்புடனே வெகுமதிகள் திறமாய்ப் பெற்ற
சீரதனை இன்னதென்று என் முன் சொன்னாய்
செல்வனெனும் பெரியணனைத் தினமும் நாடி
பாருலகில் மனமகிழ்ந்து குறியு ரைத்த
பண்பதனை இன்னதென்று பகரு வாயே. 67
தரு [ராகம் - சவுறாட்டகம் ]
அர்த்தமாய்ப் புவியதனில் - மிக்க
அழகிய செஞ்சி மகா ராசன் தனக்கு
உற்பனமாய்க் குறிசொல்ல - மெச்சி
உச்சித் வச்சிரப் பதக்கங் கொடுத்தான்
மனுநீதி தவறாத போசன் - துளசா
மகராசன் மனத்தினில் நினைத்தது சொன்னேன்
கனமான பச்சிலைக் கடையம் - கையில்
கணையாழி மோதிரம் கருத்துடன் ஈந்தான்
ஆண்டவன் தென்கூடல் சொக்கர் - பங்கில்
அம்பிகைமீ னாட்சி அருள் தன்னைக் குறித்து
பாண்டியன் முகக்குறி பார்த்து - சொல்லப்
பாங்கான முத்துச்சரப் பணிகொடுத்தான்
மைசூர்நகர்த் தளகர்த்தன் - தனை
வாழ்த்திக் குறியது பூர்த்தியாய்ச் சொன்னேன்
வையமே புகழவே தங்க - நல்ல
மாடை வராகனோர் வள்ளம் புரிந்தான்
திருவருள் பரவும் வெள்ளோட்டில் - கன
செல்வன் பெரியண தீரன் நாட்டில்
வரிசை குலாவிய மானே - சிந்தை
மகிழ்ந்து குறிசொல்லிப் புகழ்ந்துவந் தேனே. 68
குறத்தி பூந்துறை நாட்டில் குறிசொன்ன விபரம் கூறல் - கலிப்பா
நாலுசமஸ் தானபதி நன்றாய் மனமகிழ
சீலமுடன் குறியுரைத்துச் சீர்வரிசை பெற்றுவந்தாய்
மாலுயரும் குறமாதே மன்னன் பெரி யணன் நாட்டில்
கோலமிகும் குறியுரைத்த குணமதனைச் சொல்வாயே. 69
தரு [ராகம் - ஆனந்த பயிரவி]
பொன்னி நதி சூழ்சோலை பூந்துறைநாட்டு மன்னர்க்கு
நன்மையாய்க் குறி நவின்ற விதங்கே ளம்மே
தென்னவன் காடைகுலத் தீரன்வா ரணவாசிக்கு
உன்னிதமாய் மூலிகை உண்மையாகக் கொடுத்தேன்
பத்தமாய் ஆயிரம் பொன் பதக்கம் கொடுத்தானம்மே
வித்தகர் புகழும் நல்லமுத்து விசையனுக்கு
பண்பாய் முகவசியம் பச்சிலை கொடுத்தேனம்மே
அன்பாய் என்னையே மெச்சி அட்டிகை ஒட்டி யாணம் தந்தான்
பன்னுதமிழ் வெள்ளோட்டில் பயிரகுல கோத்திரத்தில்
கன்னன் முத்து வேலனுக்கு கைரேகை பார்த்துச் சொன்னேன்
கனமாய் ஒரு பைப்பணம் கட்டிக் கொடுத்தானம்மே
அளகன்நிகர் வெள்ளைய ணேந்திரன் தனக்குமெய்ப்பாய்
திறமாய்க் குளிகைதந்தேன் செம்பொன் ஓலை கொடுத்தான்
அனதருவான் சின்னப்பன் அதிக விபேகனைத்தான்
கீர்த்திசம் பன்னன் என்று தெளிவாய்ப் புகழ்ந்தேனம்மே
பூர்த்தியாய் மெய்சித்துத்திப் பசப்புக்கடி கொடுத்தான்
நிறைவசன குப்பண்ணன் நேமன் தனக்கு மெய்ப்பாய்
தனரேகை பார்த்துச் சொன்னேன் தங்கக்கடையம் தந்தானம்மே
பழனி மகீபதியைப் பாராள விபேகம் என்றேன்
எளிதாய் நவதானியம் எண்பது பொதிகொடுத்தான்
நாற்றிசை யும்புகழும் நளன் பழனித்துரையை
வாழ்த்தி அவருக்கு நான் வனமூலிகை கொடுத்தேன்
சுருதிக்காசு ரத்தினமும் துலங்க வாரிக்கொடுத்தான்
இரதி மதன் பெரியணேந்திர சாமிக்குக் குறிவிரசி
பரணிலுள்ள விபரங்க ளெல்லாம் சொன்னேன்
அவரூபமா யினிய முத்தாரம் கொடுத்தானம்மே
தவமிகும் கருப்பண்ண சாமிக்குக் குறிசொன்னேன்
பாங்காய் அய்ம்பதுசேர் வெள்ளிப் பாடகம் கொடுத்தான் அம்மே
ஓங்குதமிழ் சேர்வாசன் உத்தமன்சாத் தந்தைகுல
பழனி மகீபன் அருள் பாலன் சிவமலைக்கு
வளமை உளம் மகிழ்ந்து வனமூலிகை கொடுத்தேன்
மனமது மெச்சிநூறு வராகன் கொடுத்தான் அம்மே
தினகரன் நேரான முத்தித் திருமலை நரேந்திரன் பாலன்
சிவமலை பூபதிக்குத் தெளிவாய்க் குறியுரைத்தேன்
நவமணிக் கொத்துச்சரம் நல்கினான் அதையும் பெற்றேன்
திருமலைத் துரைக்கு யோகம்
செழிக்குமென்று நான் சொன்னேன்
அருமைய தானபரி அன்பாய்க் கொடுத்தானம்மே
கருத்த மகீபனுக்குக் கவனக் குளிகையீந்தேன்
சித்தம் மகிழ்ந்து செகதாரங் கொடுத்தானம் மே
முதலி மகீபனுக்கு மூலிகைவேர் ஒன்று சொன்னேன்
இதமாய்மோ கனமாலை இயல்பாய்க் கொடுத்தானம் மே
நிலமைப்பெரி யணன் அருள் நேமன்ரா சய்யனுக்கு
வலமை சங்கிரமன் என்று வணங்கிப் புகழ்ந் துரைத்தேன் அம்மே
மண்டலம் புகழ் முன்னூறு வண்டி ரூபாய் கொடுத்தான்
அண்டினவற் குபகாரன் அருமைக் குப்பணனுக்கு
துரைகள் மெச்ச உச்சிதம் சொல்லிக் கொடுத்தேன் அம்மே
பரிவாய் அய்ம்பது பொன்னின் பாக பந்து கொடுத்தானம்மே
திசையெங்கும் புகழ்தூயன் செல்வன் குழந்தைவேலனை
புசபல கெம்பீரன் என்று புகழ்ந்தேன் தயவதாக
நீலவர்ணக் குதிரை நேர்ந்தான் அதையும் பெற்றேனம்மே
வாலை மதன் சாத்தந்தை மகீபன்முத் தய்யனுக்கு
வேணஉச் சிதம் எல்லாம் விரும்பிச்சொல்லிக் கொடுத்தேன்
அம்மே பேணி எனக்குத் தங்கப் பிறையும் கொடுத்தான் அம்மே
நசைய நகர்க்கதிபன் நண்பன் கண்ண குலத்தில்
விசையன் முதலிக்கு நான் வேண்டிய விசித் திரம் சொன்னேன்
வாகாய்க் கெண்டைச் சாலுவை மகிழ்ந்து கொடுத்தானம்மே
யோகன்பூச் சந்தைகுல உண்மைவே லாயுதனுக்கு
அன்பாய்ச் செல்வவான் என்று அருமையுடன் புகழ்ந்தேன்
தெண்பாய் என்னையே மெச்சி சிவமாலை யுங்கொடுத்தான்
செல்வன்கூறை குலதிலகன் அமராபதியை வில்விசையன் நீயென்று
வேண்டிய குறிபுகன்றேன் பட்சமுடன் இருநூறு பங்கிவராகன் தந்தான்
செம்பகுல காசிமாலுக்கு வங்காளச் சஞ்சீவி வேர்
வாழ்த்திக் கையில் கொடுத்தேன் தங்கத்தினால் அன்னத்
தளுக்குக் கொடுத்தானம்மே
மங்களகாரன் எழுமாதை யூராதிபதி சிங்காரன்
வாரணவாசிக்குக் குறியுரைத்தேன் கனகமோ கனமாலை
கருத்துடனே கொடுத்தானம்மே
புனிதவான் காஞ்சிக்கோயில் புகழோன் செம்பகுலத்தில்
அவினாசி பூபனுக்கு ஆண்மைக் குளிகைதந்தேன்
தவறாமல் என்னை மெச்சித் தங்கச் சரங்கொடுத்தான்
திட்டவான் கண்ணகுலத் தீரன் ராவுத்தனுக்கு
அட்டபாக்கியம் வரும் என்று அருமைக் குறியுரைத்தேன்
இன்பமுடன் மனதில் எண்ணி இருநூறு பொன் கொடுத்தான்
தென்புலாவிய ராசர்கள் சிந்தை மகிழும் கனதுங்கன்
முத்தரசப்ப சுமுகன் தனக்கு மெய்ப்பாய்க் குறிசொல்லப்
பொன்னின் அறணா ஈந்தான் மன்னர் புகழ் முத்துக் குமாரபூபதிக்கு நான்
வண்ணமதாய்க் குறி வரிசையாகவே சொன்னேன்
சீரிணங்கிய பாதச்சிலம்பு கொடுத்தானம்மே
தாரணாகிய அரசப்பனுக்கு மெய்யாய்க் கர்னனென்று
நிசமாகவே நான் சொன்னேன் ஆயிரம் பொன்னின் நகை
அருமையாகவே கொடுத்தானம்மே
புயபலன் தாயுமானனைப் புகழ்ந்து குறியுரைத்தேன்
அகிலம்புகழ் உத்தண்டால் அழகாகவே கொடுத்தான் அம்மே
மெச்சும் தமிழ்வாசன் விசையன் பூந்துறை நாட்டில்
போசன் பயிரகுல வேந்தன் பெரியணன் சொல் விதரணன்
சீமான் பெரியண வசீரனைவாழ்த்திப் பூமாதெனப்
புகழ்ந்து வந்தேன் அம்மே. 70
குறிசொல்லத் தெய்வங்கட்குப் படைக்க வேண்டுதல் - கலிப்பா
மண்டலத்தில் கீர்த்தி பெற்ற மன்னன் பெரியணனைக்
கண்டு புகழ்ந்தோதும் கானக் குறமகளே
தண்டமிழ்க்கு மெய்ப்பாகச் சார்ந்து குறியதனைக்
கொண்டெனக்குப் பட்சமுடன் குணமுடனே சொல்வாயே. 71
தரு (ராகம் - மங்களகௌசிகை)
அருமைாய்க் குறியுரைக்க
அது விபரங்கள் தானே
அந்தமிகும் சுந்தரமுயர்
அன்னமே பசுந் தேனே
பிரியமாகிய பொரிகடலை
பிலாச்சுளைதினை மாவும்
பெருமையானை முகற்குநை வேத்யம்
புரிந்து நினைந்து லாவும் 72
கருத்திசைந்து கொண்டு வாடி
கந்தருக்குப் பூ மாலை - அருள்
கன்னிதெய்வ யானைக்கு - நல்ல
கண்டைச் சருகச் சேலை
கருணைமிகும் சருவலிங்கர்க்கு
கல்விப்பணி மாலை
கதிக்கும் திவ்யப் பாடகவல்லிக்கு
கனமிகு முத்து மாலை 73
திங்களணியும் தேவேந்திர லிங்கர்க்கு
தென்பசெகஞ் செய்யும்
தேவர்புகழ் லக்குமி நாரணரைத்
தினம் தரிசனம் செய்யும்
இங்கிதமிகு பொங்காளி யம்மைக்கு
ஏற்கையாய்ப் பொங்கல் வையும்
இயல்பாகிய ஆயியம் மையிரு
தாளினைப் போற்றி செய்யும் 74
பைந்தமிழ்க்கலை வாணிக்கு உயர்ந்த
பாங்கான வெள்ளைப் பட்டு
பாதையில் மேவு ராசாக்களய்யர்க்குப்
பதக்கச் சரமே கட்டு
மந்திரமகாமுனி யய்யனுக்கு நல்ல
வளமாகக் கிடாய் வெட்டு
மங்கை தெய்வ கன்னிமார்க்கு
வாசமலர்கள் சூட்டு 75
ஏரிக்கருப் பண்ண னுக்கு
இசைந்துக் கோகருங் கச்சை
எழிலானபக வதிக்கு முப்பூசைக்கு
இசைந்து சாராயப் பச்சை
பாரில் புகழும் மாரியம்மையின்
பரிவாய் மனது மெச்ச
பண்பான பேச்சியாய்க்கு
பருங்கோழி சமைத்து வச்சேன் 76
திடமிகு லகன குறளிமந்திரம்
செய்தண்டியுச் சாடம்
செப்பமுடன் நாற் றிசைகட் டனேகம்
சிந்தையி லுண்டடி பாடம்
அடருகு ஞானக் கங்காளநாதற்கு
அணியத்திரு வேடம்
அண்ணமாற்குக் கனகுருத்தெல்லாம்
அன்பாய்க் கொண்டாடிச் சூட 77
காரணமான படைத்தலைவிக்கு
கஞ்சா அபினி ரொட்டி
கனதுர்க்கை அம்மனுக்கு எருமைக்
கிடாக் காவு கொள்ள வெட்டி
வீரபத்திர சாமிக்கிக்கோழி
முட்டை வையொரு பொட்டி
மேலான இருளப்பூசைக்கு
வேண்டியது வெள்ளாட்டுக் குட்டி 78
சந்திரசேகர சாமிக்கு நல்ல
சரிகை கெண்டைப் பாகு
சந்ததமுண் தேவாதிரைத் தொழ
சகல பாக்கியமுண் டாகும்
விந்தைதிகழும் வேட்டைக் காரர்க்கு
வெல்லம் பால் பழப் பாகு
விதரணன்பெரி யண்ணன் நகரில்
விமலரைப் போற்ற லாகும். 79
குறத்தி தெய்வங்களை வணங்கக் கூறல் - வெண்பா
இவ்வகையெல் லாம் தருவேன் இன்பக் குறமகளே
செவ்வேள் பெரியணமால் சீர்நாட்டில் - ஒவ்வவுமே
நேராக எந்தனுக்கு நிச்சயமா கக்குறிகள்
சீராக நீயுரைப்பாய் தேர்ந்து. 80
தரு (ராகம் - மங்கள கவுசிகை)
சாந்தம தாகவே நானே - உனக்குத்
தயவுடன் குறிசொல் வேனே
மாந்தளிர் மேனியின் மயிலே - நல்ல
மகிமையாய்க் கேளுநீ குயிலே 81
நிறைநாழிகை கொண்டு வாடி - அதிக
விமலர்சரு வீசரை நாடி
அறிவுடன் கெங்கையில் முழுகி - நிலமாது
அழகுடன் சதுரமாய் மெழுகி 82
வன்ன மாக்கோலம் வைத்து - அதில்
வாசமலர்த் துடர்தனைப் பதித்து
தன்னமை யாய் அருள் காட்டு - சுயமுடன்
தந்தி முகன்தனை நாட்டு 83
கெந்தமும் பரிமளம் சூட்டு - விளக்கை
கெச்சித மாய்ச்சுடர் காட்டு
அந்தம தாய்ப்பழம் தேங்காய் - உடனே
அவல்பொரி கடலையும் பாங்காய் 84
வைத்துநை வேத்தியம் புரிந்து - உந்தன்
மனதினில் உள்ளபடி தெரிந்து
சித்த மகிழ்ந்துமே நானே - உனக்குச்
சொல்லுறேன் கேளடி தேனே 85
இவ்வகைத் தெய்வங்களைக் கும்பிட்டு - காணிக்கை
இருபது பொன் எண்ணிக் கட்டு
திவ்விய மகாமுனி சிறப்பாய் - மெய்யாய்ச்
சிந்தையில் காணுதடி வெறுப்பாய் 86
நட்புடன் தட்சிணை மெல்லி - அதிக
நயமுடன் சொல்லுது பில்லி
விற்பன மாகிய கண்ணே - பெரியண
விசையன்தன் நாட்டில் வாழ் பெண்ணே. 87
குறத்தி குறி சொல்லத் தொடங்குதல் - விருத்தம்
கற்பகத் தாரு வான கருணைசேர் பெரிய ணேந்திரன்
நற்புயர் நாட்டில் வந்த நளினஞ்சேர் குறப்பெண் மாதே
உற்பன மாக வேதான் உகந்துதே வதைகும் பிட்டேன்
பொற்புடன் விரைந்து பார்த்து புதுமையாய்க் குறிசொல் வாயே. 88
தரு (ராகம் - மோகன கலியாணி)
சூடகக் கரந்தனை நீட்டு தோகையே எழில் அன்னமே
பாடகத் தாளிணை பரவிய பதுமினி மதன காமியே - சூடக
அன்பு டன்தன ரேகையால் - உனக்கு
அதிக பாக்கியமுண் டாகுமே
அழகு சேர்மச்ச ரேகையின் - பலன்
அருள்கொள் கொழுநர்கை சேருமே
இன்ப மாய்க்கூர்ம ரேகையால்
இந்திராணி போல் வாழ் வாயம்மே
இனிமையா கியபதும் ரேகையால்
என்றும் கணசுப யோகமே - சூடக 89
சீரு டன்கன ரேகையால் - வித்தை
செழித்தி ருக்கும் என் றென்றுமே
சேலுலா வியசங்கிர ரேகையால்
திரும கட்கிணை நன்றுமே
பூருரு செங்கிர ரேகையின் - குணம்
சந்திர மதிநிக ராகுமே
கோதையே வச்சிர ரேகையால் - சுகங்
கொண்டு உலகில் பெருகுமே - சூடக 90
மங்கை யேசுந்தர மிகுந்திடு
வர்ண நிறமயில் வஞ்சியே
மருள்ம லர்புனை கார்குழல் - உலாவிய
வளமை பெரும் அபரஞ்சியே
கொங்கை யேகன மேருவை - நிகர்
கொண்ட வயனம் விஸ்த் தாரியே
கூர்மை யேபெறும் பெரியணேந்திரன்
குலவும் ஆசைக்கண் ணாட்டியே. - சூடக 91
குறத்தி தெய்வங்களை அழைத்தல் - விருத்தம்
சென்னியங் கிரியில் வேலர் திருவருள் குலாவும் செல்வன்
மன்னவன் பெரிய ணேந்திர மகிபதி நாட்டில் வாழும்
கன்னியே குறப்பெண் மாதே கருத்தினில் நினைத்த தெல்லாம்
மன்னியே பரிந்து மெய்ப்பாய் பரிந்து நீ உரைசெய் வாயே. 92
தரு - அகவல் [ராகம் - ஆகரி]
சங்கரர் மகனே தந்திமா முகனே
செங்கண்மால் மருகா சிரகிரி முருகா
தாண்டவப் பரனே சருவலிங் கரனே
பாண்டியன் சேயே பாடகத் தாயே
செந்திரு நேயா தேவர் சகாயா
விந்தையுத் தண்டாமெய் ஞானப்பிர சண்டா
வெள்ளோடு பெரியண்ணன் குறவஞ்சி
பாரில் விநோதா பஞ்சவர் தூதா
ஏர்பெரும் பூரண இலக்குமி நாரணா
குண்டலக் காதா கெவுரி வினோதா
நண்பொருள் வேதா நஞ்சுண்ட நாதா
சிந்தையி லங்கா சிவகாமி பங்கா
செந்தமிழ்ப் பிரசங்கா தேவேந்திர லிங்கா
சுந்தரி நீலி துர்க்கை கபாலி
மந்திர கங்காளி வல்லிபொங் காளி
மருமலர் வாணி மங்கள கலியாணி
அருள்மக மாயி ஆனூ ராயி
பார்புகழ் வீரா படையலங் காரா
ஏர்சிலைக் கையா இராசாக்கள் ஐயா
இயல் நல குமாரா என்னைநீ காரே
புயபல வீரா பெருமைசிங் காரா
மந்திர பயோதரி மாலின் சகோதரி
சந்திர முகாரி தையல் பொன் மாரி
அகோர சூரா அதிர்விஷ்த் தாரா
செகமதில் சிறப்பா துஷ்ட்டக் கருப்பா
விரைமலர்க் குழலி விந்தை சேர் எழிலி
மறைமொழி கன்னி மலையாளக் கன்னி
சீர்சடை முடியாள் செயலறி வுடையாள்
வரைசுயக் கண்ணா மகாமுனி யண்ணா
அருள்மிகு மெய்யா அண்ணமா ரய்யா
வரிசைபொற் பாதா வயிரவ நாதா
சீர்த்தி வினோதா சிவகுரு நாதா
மாத்திரைக் கோலை வடிவேலர் காக்க
பூர்த்தியாய் மார்பைப் பிரமனே காக்க
சீர்த்தியாய்ச் சகல தேவரும் காக்க
கமலக் கையைக் கணபதி காக்க
தமனிய நேர் பதத்தை சந்திரனார் காக்க
நாவில் கலைமகள் நன்றாய்ச் சிறக்க
தேவி யோங்கார செல்வி நீ வாவே. 93
குறத்தி குறி சொல்லல் - கலிப்பா
வேண்டிய தெய் வங்கள் எல்லாம் என் சொல்லுக் கேயிரங்கி
தூண்டா மணிவிளக்காய்ச் சுடராக வந்து நின்று
நீண்ட புகழ்ப் பெரியணமால் நின்னாட்டு மோகினிக்கு
பூண்டு சிந்தை தன்னில் உள்ள போதகமே புகல்வாயே. 94
தரு (ராகம் - புன்னாகவராளி)
சிந்தையில் நினைந்து நீ தெரியக்கேட் கும் விதம்
அந்தமாய்ப் பகருவேன் அன்னமே நல்ல
விந்தை அணிகலன் வேண்டிய தெல்லாம்
இப்பயெந் தனக்கு இசைந்து கொடுப்பாயே
உந்தன் மெய்யினில் எண்ணான்கு ரூபத்தில்
ஒன்றதை விளக்கமாய்த் தீண்டு மெல்லியே
அன்பாய்க் கையினில் கும்பத் தனத்தைத்
தீண்டிய தாலே கருதிக் கேட்ட
விபரங்கை கூடும் நிசமாய் அனகன்
பகளி அய்ந்திலோர் பகளி அதை
நினைவினால் உண்மையாய் நேர்ந்துக்கோ இப்ப
உசித மாகவே உற்பன மாய்க்குறி
நிசமுடன் செப்புறேன் நேமமாய் உயர்வன்
இதை நீ நினைந்தது வனசம லர்க்கணை
அதனின் பெருமையை சாற்றக்கேள் முந்து
பூபதி யாகிய புகழ்பெற்ற சீமான் மேல்
சோப முற்றாப் போலே தோணுது. 95
மோகினி காதல் கொண்ட தலைவனைக் கூறல்
பத்தியம் ராகம் - புன்னாகவராளி
பூரண மதிமுக பூவைநான் நினைந்திடும்
பொருள்தெ ரிந்தியல் சொலும் பெண் ணரசே
வார ணம்புரி சென்னி மலையில்
வாழ்கிற பெண்ணே வரிசையாய் எனக்கு
காரண மாகவே கணவன் மேல் விரகம் கொள்
கன்னி என்றுரை செய்தாய் கருத்தினில்
சீரிணங் கியமொழி இவரென்று தெளிவதாய்
சித்திரமாய்ச் சொல்லடி திவ்விய மானே. 96
தரு (ராகம் - கைவராளி )
காதல் கொண்ட புருசன் இவர்தா னென்று
கண்டு சொல்லச் சொன்னே னம்மே
மாதவமாய் நல்வாக்கு உரைப்பேன் உனக்கு
போதக மாய்க்கேளும் பூவையே நீ வெகு - காதல்
மூவொன் பதிலொன்றை உண்மைய தாக
விரைவிக் கேட்கவும் நன்றே
மூவொன் பதிலொன்று விரசிக் கேட்கும்
சித்திர நாவலர்புகழ் திருநாமம் உள்ளவனடி - காதல் 97
ஈரூரி லொன்றதனைக் கருத்திலே நீயெனக்கு
நினைந்துக்கோ மின்னே
ஈரூரி லே ஒன்று இசைந்ததுவே கன்னி
பேரான மைந்தராசிப் பொருத்தமுள்ளவனடி - காதல் 98
தேவதையில் ஒன்று நீதான் உன்சிந்தையிலே நினை
தெளிவாய் நினைந்து கொள் அம்மே
தேவதையில் ஒன்று தெய்வச் சருவலிங்கரை
நாவில் அவரைத் துதிக்கும் மனத்தானடி - காதல் 99
குறத்தி தலைவன் வருவான் எனல்
தரு (ராகம் - எருக்கிலை காம்போதி)
எந்தநா ளையில் அவர் வருவார் என்று
இந்தநாள் என்று சொல் பெண்ணரசே
விந்தை யுடன் உமக்குச் சிந்தை மகி ழும்படி
சொந்தமுடன் உரைப்பேன் சந்ததமாய்
அய்ந்தரு வான பூந்துறை நாட்டிலவன்
இந்திரன் நேரான குணச்சந்திரன்
பைந்தமிழ் சேரும் வெள்ளோடை யினில் அவர்
பயிரகுலன் பெரியணன் சேயனாம்
செந்திரு விலாசன் பெரியண்ண பூபதி
செழிக்கும் சுபசுக்கிர வாரம் தன்னில்
அந்தமுடன் தசமி உத்தர நட்சத் திரம்தனில்
அழகாய் நல்ல பஞ்சணை மீதிலே
சந்தோச மாகவே வந்து மதன் என
தழுவி யணைத்துன்னைச் சேர்வானம் மே
இந்திராணி வாணியெனும் பூஷண மாகவே
இயல்பாய் என்றும் சுகம் பெறுவாய் அம்மே. 100
பாங்கி தலைவனிடம் மாலை வாங்கி வரல் - விருத்தம்
அற்புதமாய்ச் சிந்தையில் சந் தோஷம் கொண்டு
அழகான பாங்கிபெரி யணன் தன் மார்பில்
நற்புடனே புனைகுமண மாலை வாங்கி
நளினமோ கினிதனக்கு நல்க வேதான்
உற்பனமாய்ச் சிரசில் வைத்து நேத்திரந் தன்னில்
ஒளிவாக அர்ச்சித்து உண்மை கூர்ந்து
கற்பனமாய்ச் சொர்ன இரு தனத்தின் மீது
கனிவுடனே அணிந்து சுகம் கதிக்கின் றாளே. 101
விருத்தம்
செகம் புகழும் வெள்ளோடைப் பெரிய ணேந்திரன்
சேயனெனும் பெரியண வசீரன் முன்பாய்
அகமகிழ்ந்து பாங்கியுமே தூது சென்று
அன்புடனே காதலினை அதிகம் செப்ப
மகிமையுடன் குமணனுமே மாலை ஈந்து
மணம் புணர்ந்தான் என்று இரு வருமே வாழ்ந்தோம்
சுகமுலவும் குறமகளே சுயம தாக
சொன்ன குறி மகிமையென்ன சொல்லு வேனே. 102
குறி சொன்ன குறத்திக்குப் பாராட்டு
தரு (ராகம் - தோடி)
பாங்கி வெகுமானங் கொண்டு வாடி
பூங்கழ்சேர் சிரகிரி முருக ரைத்தினம்
போற்றி மறிவதன் பூவைக்கொப் பிதமாக - பாங்கி
உற்பன மாகக்குறி நட்புடனே புகன்ற
சிற்றிடைக் குறமகட்கு அற்புத மாகவே - பாங்கி
கஞ்ச மலர்முக மிஞ்சும் எழிலிது
ரஞ்சி யெனுங்குற வஞ்சிக்குச் சுயமாக - பாங்கி
வெள்ளோடைப் பெரியண வேந்தன் சேரு வான் என்று
தெள்ளிமைக் குறிசொன்ன சித்திரக் குறமாதுக்கு - பாங்கி 103
குறத்தி பெருமை பெற்ற விபரம் கூறல் - விருத்தம்
மின்னிடைப் பாங்கி தானும்
வெகுமானங் கொண்டு வந்து
தன்னவள் மோக னாங்கி
தன்கையி லேகொ டுக்க
வண்ணமாங் குறப்பெண் தன்னை
வரவழைத் துசித நல்க
பொன்வளைக் கரத்தில் வாங்கிப்
பெருமை பெற் றதைச் சொல் வாளே. 104
தரு (ராகம் - சவுறாட்டகம்)
பெருமை பெற்றேனே - வரிசைப்
பெருமை பெற்றேனே
தருவுயர் பெரியணன் சாமியன் பாய்ச் சேரும்
தய்யல்மோ கினிக்கு நான் மெய்யாய்க் குறிசொல்லிப் - பெருமை
மாணிக்க மின்பொன் சுட்டி உச்சிதமாக
வாள் செவிக்குத்தண் டொட்டி
பூணிடைக்குச் சீட்டிச் சேலை - நல்ல
புனிதக் காலாளி மெட்டி
ஆணிமுத் தாரமும் ஆணிப்பொன் ஆரமும்
வேணசிங் காரமாய்
மிகச்செய் தாள் உப சாரமாய் - பெருமை 105
முத்து மூக்குத்தி வன்ன முலை மீதில்
மோகன மாலை மின்ன உத்தாரமாய்ச் செம்பொன்னு
ஆபரணங்கள் உயர் சபையின் முன்னால்
சித்தமெய்ப் பாய்வசம் சிறக்க
மேனியில் பூசப் பந்தமாய் உல்லாசப்
பணிதந்தாள் விசுவாசம் - பெருமை 106
சிங்கியைத் தேடி குறவன் சிங்கன் வருதல் - விருத்தம்
பூந்துறை நாட்டில் மிக்க புனித வெள் ளோடை வாசன்
வேந்தனாம் பெரிய ணேந்திர விதரணன் தனையே வாழ்த்தி
பாந்தமாய்ச் சில்லாக் கோலும் பரிவுடன கையிலெடுத்து
ஏந்திழை சிங்கியைத் தேடி எழில்சிங்கன் வந்துற் றானே. 107
தரு [ராகம் சாவேரி]
சிங்கி மீதினில் ஆசைகள் பொங்க - மாயச்
சிங்கனும் வந்து தோன்றினனே
பங்கச் முகவத னங்கச நிகர்பெறு
இங்கித முடனே செங்கை வீசி - சிங்கி
சிரசினில் அதிகத் தோப்பா ரமுடன்
சேர்க்கையாய்க் கொக்கிற கதனைச் சூடி
பரிவதாய் அக்கு மணிவட மார்பினில்
பலக ரையது தினமாய் அணிந்து - சிங்கி
விந்தையாய்ப் புனுகுடன் சந்தனம் பூசி
மிக்கவே மலர்கள் ஏற்கவே முடித்து அ
ந்தமாய்க் கையில் மீசை முறுக்கியே
அதட்டி உறுட்ட லுடனே முளித்து - சிங்கி
கள்ளும்சா ராயமும் உள்ள மகிழவே
கரத்து டன்வெறி கொள்ளவே குடித்து
தெள்ளிமை யாய்க்குறப் பாசைகள் பேசியே
சிறப்புடன் அதிக உல்லாச மதாக - சிங்கி
உத்தார மாகவே யம்புவி யது தனில்
உண்மையாய்க் கூடை முறங்கள் பொத்த
சித்த மதிக்கும் குறவஞ்சி யைத்தேடி
செப்ப மிகவே நளினத் துடனே - சிங்கி
கவிவலர் புகழ்பெரி யணமகி பதியென்றும்
காண்டீ பன்வாழ் பூந்துறை நாட்டில்
மவுனம தாய் ஒயி லாக நடந்து
மார்க்க முடனே வெகுமூர்க் கமதாய் - சிங்கி 108
பறவைகள் - கலிப்பா
பூமாது வாழ்வுயரும் புனித வெள் ளோடைநகர்
சீமான் பெரியணமால் செழிக்கும் திருநாட்டில்
வாமான் நேர் சிங்கனுந்தான் மனையாளைக் காணாமல்
பூமலர்சூழ் குளத்தருகில் போந்துவரப் பட்சி கண்டான். 109
தரு (ராகம் - பந்துவராளி)
வருகினுமையே பறவைகள்
வருகினுமையே
பரிவுயர் பெரியணன் வளர்திரு நாட்டில்
பக்கிக் குலங்களும் மிக்கப் பக்கத்தினில் - வருகினுமையே
காணாங் கோழியும் கம்புள்
காடை மாடப்புறா - வருகினுமையே
கவுதாரி நாரையும் கானமயில்ப்பெறா – வருகினுமையே
குயிலும் சகோரப்புள் கொக்கு அன்னப்பட்சி
குருவிகளிரைமீன் கொத்தி மெத்தச் சொக்கி – வருகினுமையே. 110
குறவன் பறவைகட்குக் கண்ணி விரித்தல் - விருத்தம்
கோமான் நேர் ஆன தூயன் சுமுகனாம் குவளை மாலை
தாமானாம் பெரிய ணேந்திரன் தமதுநன் னாட்டில் தானே
நேமமாய்ப் பட்சி எல்லாம் நிறைந்தெதிர் வரவே கண்டு
ஆமெனும் கண்ணி தன்னை அழகுடன் விரிக்கின் றானே. 111
தரு (ராகம் - புன்னாகவராளி)
முறுக்கமாய்க் கண்ணி குத்தின வகைமுறைமை - பாரடையே
சிறக்கும் புகழ் பெரியணன் நகர்
செழிக்கும் பெரியேரி யருகிலே - முறுக்கமாய்
பொன்னி நதியின் சார்பிலே - கமழ்
பூஞ்சோலை நீழல் ஆலிலே
பெருங் கோப்பண்ணன் மேட்டு வயலிலே
குளக் கரையிலே
நெடும் மடையிலே வாய்க்கால் அடியிலே
பாதை இடையிலே - முறுக்கமாய்
சருவ லிங்கர்தன் சன்னதி முன்புறம்
தளங்கொண் டண்ணமார் கோவில்க்குத் தென்புறம்
தயவாய் ஓரணைக் கரையிலே நடு வரையிலே
தண்ணித் துறையிலே - முறுக்கமாய் 112
கண்ணியில் பறவைகள் படல் - கலிப்பா
பொற்பிரபை நன்றாய்ப் புரிந்திலங்கும் வெள்ளோடை
சற்குணவான் பெரியணன்மால் தானரசு செய்நாட்டில்
அற்புதஞ் சேர் வானிபொன்னி ஆற்றருகின் கண்ணியதில்
உற்பனமாய்ப் பட்சிபட உச்சாட முற்றனனே. 113
தரு (ராகம் - பந்துவராளி)
பட்டுக் கொண்டுது - கையிலகப்
பட்டுக் கொண்டுது
சிட்டுக்கிளைக் கூட்டமும்
நட்ட கண்ணியில் திட்டமாய்ப் - பட்டுக் கொண்டுது
கொக்கு மணிப்புறாவும் சகோதரப் புள்ளுடன்
மிக்கவே பக்கிக்குலங்கள் கிக்கீயெனவே - பட்டுக்
பச்சைக் கிளிக்குயில் தாராநற் சிற்சியும்
இச்சையுடன் குறுங் காடை பட்சமாய்
கண்ணிக்குள் அகப்பட்டுக் கொண்டுது
கன்னன் பெரியணேந்திர விற்பனன் தன்நாட்டில்
ஒன்னலர் அகப்பட்டாப் போலே
எண்ணமில்லாமல் நேத்தியாய் - பட்டுக் கொண்டுது 114
குறத்தியைக் காணவில்லை எனல் - விருத்தம்
பொன்னிறக் குவளை மார்பன் பெரியண தீரன் நாட்டில்
மின்னவே கண்ணி தன்னில் விரிவுடன் சிக்கும் பட்சி
தன்னையே மனதுக் கேற்ப தானக பாகஞ் சேர்த்து
வன்னமாய்க் கரிச மைக்க வஞ்சியைக் காணே னய்யே. 115
தரு [ராகம் - நீலாம்பரி]
எந்த னாசை வஞ்சியைக் காணேனே
விந்தைப் பெரியண விதரணன் நாட்டினில் - எந்த
அன்பத் தாறுதேசம் அட்ட கிரிகள் எல்லாம்
இன்ப முடனே நான் இசைந்துதான் ஓடிப் பார்த்தேன் - எந்த
கெந்த கஸ்தூரிகள் பாவாடை கள் பூசி
சந்தோச மாய் என்னைத் தழுவி அணையவுமே - எந்த
கானன் பெரியணமால் கதிக்கும் திருநகரில்
வன்மையாய் இவளைத்தான் வரவழைத்துக் கொண்டாரோ – எந்த 116
சிங்கியை வேண்டி இறைவனுக்குப் படையலிடல்
விருத்தம் - (ராகம் - புன்னாகவராளி)
மாடமாளிகைகள் செச்சை மாணிக்கஞ் சேர்வெள் ளோடை
நாடிய பெரிய ணேந்திர நரபதி வளர்நன் னாட்டில்
பேடைமயில் வஞ்சி யாளைப் புணர்மணஞ் செய்ய வேண்டி
நாடிய தெய்வங் கட்கு நல்விதப் படைய லிட்டான். 117
தரு (ராகம் - புன்னாகவராளி)
நல்ல திங்களணி சருவீச லிங்கற்கு
அனேகம் பணி நேர்ந்தேன் – பாடக
வல்லித் தாயாருக்கு சூடகம்
நெற்றிப் பொட்டு நேர்ந்தேன் - அருள்
போதனை சூழ்நஞ்சை யுண்ட
நாதருக் கபிஷேகம் செய்தேன் - விந்தை
கொண்டகரி முகனுக்கோர்
மண்டல மும்பூசை புரிந்தேன் - மிக்க
ஆரணன் இலக்குமி
நாராணர்க்குப் பதக்கம் வைத்தேன் – அருள்
சிரகிரி யான்றனக்கு
மரகத மயில் செய்து வைத்தேன் - நல்ல
வாகுபொன் காளிக்கு
அபிஷேகமுஞ் செய்து வைத்தேன் - எங்கள்
அத்தனூ ரம்மனுக்குச்
சித்த மகிழ் ஒட்டியாணம் வைத்தேன் - சேர்ந்த
பாதையில் ராசாக்களுக்குப்
போதமாய் முக்கனி படைத்தேன் - நல்ல
வண்ணப்படை அண்ணமார்க்கு
எண்ணிக்கையுடன் காணிக்கை வைத்தேன் - நல்ல
ஏரிக்கருப் பண்ணனுக்குச்
சீருடன் கருங்கச்சை வைத்தேன் - மிக
அன்னையாகிய தெய்வக்
கன்னிமார்க்குச் சிற்றாடை வைத்தேன் - மிக
துஷ்ட்டமுனி யப்பனுக்கு
இஷ்ட்டமாய் சாராயங்கரி படைத்தேன் - பாளமைக்
கருக்கண்ண மார்தமக்குப்
பெருக்கமாய் வீச்சறுவாள் வைத்தேன் - புகழ்
வண்ணமாரி யம்மனுக்குக்
கண்ணடக்கம் நெற்றிப்பிறை நேர்ந்தேன் - நான்
இந்தவகைத் தெய்வங்களைச்
சொந்தமுடன் வேண்டின பலத்தால் - பாரில்
தருமன் நிகராகிய பெரியணன் சமூகத்தை - நாடி
வரும் நாவலர் கள் புகழ்ந் தோதி ஆ பரணமும்
வரிசை பெற்றாள் மனச் சந்தோஷ மாகவே
செந்தாமரை மனையி னாளே. 118
சிங்கன் - சிங்கியைக் காணல் - விருத்தம்
வளர்கதி ரவனைக் கண்டால் வனசமே அலரும் போல
இலகுகால் கெச்சி தங்கண் டிய மயில்க் கெற்ப மாம் போல்
நளினவான் பெரிய ணேந்திர நரபதி சமூகந் தன்னில்
வளமையாய்க் குறவன் சிங்கி வரக்கண்டே மகிழ்வுற் றானே. 119
தரு (ராகம் - வயிரவி)
சிங்கி வரக்கண்டு மையல் கொண்டேன்
அங்கசன் பெரியணமால்
அருள்பெரி யணன் சபையில் - சிங்கி
கஞ்ச மலர்மாதின் போலெடுத்து - கையில்
காத்திரமாய் மாத்திரைக் கோலெடுத்து
வஞ்ச நெஞ்சரை விடுத்து
மனது கெம்பீரந் தொடுத்து - சிங்கி
அற்புதமாய் ஆபரணம் பூட்டி - அன்பாய்
அழகான கூந்தலில் மலர் சூட்டி
உற்பன மேயதனைக் காட்டி
உல்லாச மானசீ மாட்டி - சிங்கி
திருவளர் வெள்ளோடையில் உத்தாரன் - யோகம்
செழிக்கும் பயிரகுல விஷ்த்தாரன்
தருமன் பெரியண துரைச்சாமி
வளர்திரு நாட்டில் - சிங்கி 120
சிங்கன் - சிங்கி வாக்குவாதம் - விருத்தம்
நிலைக்குயர் பெரிய ணேந்திர நேமன்வாழ் வுயரும் நாட்டில்
துலக்கமா மான பட்சந் தோறாமல் எந்த நாளும்
மலைக்குற மகளே எந்தன் மனதுதப் பிலையே மூத்த
குலக்கொடி யிசையாள் செப்பும் குணமதைக் கூறு வாயே. 121
தரு (ராகம் - முகாரி)
சிங்கன் : கூற வேண்டுவ தில்லையே உனக்கு என் மனக்
குணநயனமுந் தெரியாதோ - இது கூற
காரண மோபுவிக் கேறாது - உன் ஞாயம்
வேறுபழி சொல்லாதே
சிங்கி : சொல்லாதே விகடமே காணுதே - முன்
சொந்தப் பெண் நானல்லவோ - அன்பாய்
நல்வசனம் என்பால் உல்லாச மாகவே
புல்கிச் சுகந்தாருமே
சிங்கன் : தாருமே எந்தனுக்கு விரக - தாபம்
சகிக்க சகிக்க வேணுமோ நான்
மிகலு றாமலுனக்கு நான்
பேறாண்மை கொண்டது சீராய் நீகேளு சிங்கி
சிங்கி : கேட்பது முன்னவள்தன் யோசினை
கேட்டியென் றெண்ணியிப்ப
நாட்ட முடன் மனத் தாட்டிமை யால்வீண்
போட்டி காட்டுவதேன் சிங்கா
சிங்கன் : போட்டி யேதடி யுன் மீதில் கள்ளி
பொல்லாங்கு என் மேல்ச் சொல்லாதே - தென்பாய்
காட்டி மறைக்கும் வித்தை
சூட்டும் தொழில்கள் கை
நீட்டிப் பேசாதே சிங்கி
சிங்கி : பேசாதே யென்று நீதான் அந்தரங்கப்
பேச்சை விட்டுவிடு - மனங்
கூசாம னால்வாலை நேசமது விசு
வாசம் போகுமே சிங்கா
வாசமே யுந்தனுக்கு மூத்தவள்
உல்லாசம் போகுதே சிங்கா - உந்தன்
வேசமும் உள்ளத்தில் பாசமதைக் கண்டு
மோசம் போனேனே சிங்கா
சிங்கன் : சிங்கார மான பெண்ணே எந்தன் ஆசை
தீர்க்கச் சுகந்தரும் கண்ணே சிங்கி
சிங்கி : பொங்கமா யுங்கண வங்கணமுங் கண்டேன்
அங்கேநீ போடா சிங்கா
சிங்கன் : போவென் றுரை செய்தெயே
முன்புணர்ந் தாமிவள் மோசமோ மிக
சாராய மேல் குடித்திட்ட பாவமோ சிங்கி
சிங்கி : பாவக மாயூன் கரியும் சோறும்
பாங்குடனே வாங்கி வந்து
தேவையுடன் வழக்குக் கோபமில் லாமல் - நீ
ஏவலாய் என ஈய்ந்தாயே
சிங்கன் : யீந்தது நீச மாகுமோ - உன்தனைப்
பாசமது போகுமோ
சாந்தமாய் இருவரும் நேர்ந்து புவிமீதில்
வாழ்ந்து சுகம் பெறுவோம்.
சிங்கியின் அணிகலன் பற்றிச் சிங்கன் வினாவும் சிங்கி விடையும்
சிங்கன் : சுகமான கார்குழலில் வச்சிர மான
சூரிய காந்திப் பூவை
அகலாமலே நீ புனைந்திருக்கும் விதம்
அதுவுமே என்னடி சிங்கி?
சிங்கி : என்னவென்று கேட்டாயே பயிரகுல
இந்திரன் முத்துவேலுக்கு
நன்னய மாய்க்குறி சொன்னேன்
என்னை மெச்சித் தந்த
பொன் சடை வில்லை சிங்கா
சிங்கன் : சிங்காரமாய் நாசியில் சங்கம் பழத்தைத்
தெளிவாய் அணிவதேன் சிங்கி?
சிங்கி : அங்கசன் வெள்ளை மகிய திக்கு நான்
பொங்கமாய்க் குறிபகர்ந்தேன்
பகரவும் என்னை மெச்சித்தந்த நத்துப்
பணியுசி தங்காண் சிங்கா
சிங்கன் : கருத்துடன் மார்பினில் சிறந்த ஆலாம்பழத்தை
நிரைத்த வகையேது சிங்கி?
சிங்கி : வகையாய்க் குப்பண பூபனை வணங்கியே நான்
தொகையாய்க் குறியுரைத்தேன்
தகைமையால் அவர்தந்த புகழ்மணி யேமிக
பவளத் தாவடங்காண் சிங்கா
சிங்கன் : காணவே தூதுவ ளாம்பழத்தை நீ
நாணமில்லாமல் கையிலே
பேணவே கோர்த்து நீ
கோணாமல் அதைப் பூணுவ தேதடி சிங்கி?
சிங்கி : பூணவே பழனிராயன் கருப்பண
பூபதி இவர்களுக்கு மெய்யாய்
பேணவே குறிசொல்ல ஆண்மையாய் அவர்தந்த
மேன்மைபச் சைப்பவளம் சிங்கா.
சிங்கன் : பான்மையால் உன் இடையில்
பனங்குருத் தோலையை அணிவ தென்னடி சிங்கி?
சிங்கி : சேணுல கோர்புகழ் சாத்தந்தை சிவன்மலை
சேயன் திருமலேந் திரன் முன்
செப்பமுடன் குறிதான் சொல்லத் தந்த
நற்புகழ் அற்புத மாய் வெகு உற்பனமாகவே
விற்பன மாய்ப் பொன்னின் ஒட்டியாணம் காண் சிங்கா
சிங்கன் : உற்ற சிற்றிடை யதனில்ச்செம் மயிர்த்தோலை
உடுத்த விதமிதென்னடி சிங்கி?
சிங்கி : கற்றறி வாளன் வெற்றிரா சய்யனுக்கு
பத்தமாய்க் குறியுரைத்தேன்
உரைக்கவும் எந்தனுக்கு மாந்தளிர்ப்பட்டு
நிறக்கக் கொடுத்தான் காண் சிங்கா
சிங்கன் : சிறக்க இரு காலிலே வேப்பங்காயைத்
திறமாய் அணிவதென்னடி சிங்கி?
சிங்கி : குறிப்பறிவாளன் காஞ்சி நகர்க் கண்ணகுல
ராவுத்தேந் திரனுக்குப் பிரபலமாய் நானும்
குறியுரைக்கத் தந்த விரல்மணிச் சதங்கை சிங்கா
சிங்கன் : சதங்கை சேர் காலிணையில் மின்னல் கொடியைத்தான்
கட்டுவ தென்னடி சிங்கி?
சிங்கி : அன்பாய் நிதமனுப் பரிவாளன் மதிமந்திரி
பெரியண விதாரன் மோகினிக்கு
இயல்பாகவே குறி உரைக்கவும்
உத்தம தாகவே மிகப்பதி யோர்கள் புகழ்
பொன்னின் பாதச் சரமது
இதமா யீந்தாள்காண் சிங்கா
சிங்கன் : ஈந்ததி னாலிவர் சென்னிகிரி
சேந்தன் கிருபையினால் நல்ல
பாந்தமாய் மால் சேர்ந்த திருவும்போல்
வாழ்ந்து சுகம் பெறுவோம். 122
சோபனத் தரு (ராகம் - மத்திமாபதி)
சோபனமே நித்ய சோபனமே
கோபதி யாகிய பெரியண மால் அருள்
குணரத்ன மானதுரை பெரியணனுக்கு - சோபனமே
திங்களுங் கொன்றை அணிசிவ சருவீசருக்குத்
தேவிபா டகவல்லி அம்மனுக்கு நித்திய - சோபனமே
கந்தர் துணைவனான கரிமுக நாதன் எனும்
விந்தை மிகுந்த அருள் மேலை விநாயகனுக்கு - சோபனமே
கஞ்சனும் மால் அறியா நஞ்சுண்ட நாதனுக்கு
காரணன் லக்குமி நாரணற்கு நித்திய - சோபனமே
வானுலாவிய சிரகிரியில் மேவும் வள்ளி
தெவியானை மணாளனுக்கு நித்திய - சோபனமே
வண்ணப் படைசூழும் அண்ண மார்க்குமிக
வாசம் உலாவும் ராசாக்கள் அய்யனுக்கு - சோபனமே
அரனிடம் நடமிகு ஆயிபொன் காளிக்கு
கருணை மிகும் கலை வாணிக்குமே நித்திய - சோபனமே
திருவளர் மார்பனுக்குச் செல்வக் குபேரனுக்கு
அருமைப் பெரியணமால் அருள்பெரி யணனுக்கு நித்திய - சோபனமே 123
வாழி
திருமாது கலைவாணி தேவி வாழி
சிவசருவ லிங்கர் திருப் பாதம் வாழி
அருமறைகள் வாழிபா டகத்தாய் வாழி
அகிலமதில் மனுநீதி அரசர் வாழி
கருணைபெறும் வெள்ளோடை நகரும் வாழி
கவிஞர்கள் புகழ்பயிர குலமும் வாழி
பெருமை பெறும் பெரியண்ணன் தழைத்து மெய்ப்பாய்
பெருகி என்றும் நீடூழி வாழி தானே!!! 124
பாடகவல்லி துணை
-------------------
This file was last updated on 9 March 2020.
Feel free to send the corrections to the webmaster.