வீரை. சு. பழனிக்குமாரு பண்டாரம் இயற்றிய
"வீரவநல்லூர் மரகதவல்லியம்மை பிள்ளைத்தமிழ்"
vIravanallUr marakatavalliyammai piLLaittamiz
by vIrai pazanikkumaru paNTAram
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Kambapaadasekaran @ E. Sankaran of Tirunelveli for providing
a printed copy of this work along with permission to publish the e-version as part of Project Madurai collections. .
We thank Mrs. Meenakshi Balaganesh for her assistance in the preparation of the soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
"வீரை. சு. பழனிக்குமாரு பண்டாரம் இயற்றிய
"வீரவநல்லூர் மரகதவல்லியம்மை பிள்ளைத்தமிழ்"
Source:
வெளியிட்டோர் :
நாகர்கோவில், கோட்டாறு முதுபெரும்புலவர்
வீரை. சு. பழனிக்குமாரு பண்டாரம் (கி. பி. 1860) இயற்றிய
திருநெல்வேலி மாவட்டம், அம்பை வட்டம், வீரவநல்லூர்
மரகதவல்லியம்மை பிள்ளைத்தமிழ்
பதிப்பாசிரியன் : கம்பபாதசேகரன், ஆதீன சமயப்பரப்புனர், நெல்லை .
கம்பன் இலக்கியப்பண்ணை
பிட்டாபுரத்தம்மன் கோவில்தெரு, திருநெல்வேலி நகர்.
க.ஆ. 1130 ; விளைநிலம் 171
வள்ளுவம் 2046ம் ௵ அலவன் 25௳ மான்றலை 10.8.2015
பிள்ளைத்தமிழ் மஞ்சரி 1 /பிள்ளைத்தமிழ்க் களஞ்சியம்- 1
தூத்துக்குடி திரு. பாகம்பிரியாள் மாதர் கழகத்தின் 87-ஆம் ஆண்டு நிறைவு விழா மலர்
----------
பதிப்பாசிரியன் குறிப்பு
விநாயகர் துணை
வீரவநல்லூர் மரகதவல்லியம்மை பிள்ளைத்தமிழ்
இராசராசசோழர், நாதமுனிகள், உ. வே. சாமிநாத ஐயர், மு. ரா. அருணாசலக் கவிராயர்,
புட்பரத செட்டியார் திருமுறையை, திவ்விய பிரபந்தத்தை, காப்பியங்களை, சிற்றிலக்கியங்களை,
செப்பேட்டிலும், பட்டோலையினும், அச்சிட்டும் பைந்தமிழ் செல்வங்களை
உலகிற்கு அளித்த சான்றோர் இவர்கள் திருவடிகளுக்கு துறைசை ஆதீன 23வது
குருமகாசந்நிதானம் சிவப்பிரகாச தேசிக மூர்த்திகள் அவர்கள் ஆணையிட்டபடி
இந்நூலை பதிப்பித்து படிமக்கலமாக படைக்கின்றேன்.
கம்பபாதசேகரன் (எ) E. சங்கரன்
-------------
நூல் ஆசிரியர் வரலாற்றுக் குறிப்பு
மரகதவல்லியம்மை பிள்ளைத்தமிழ் :- இந்நூலின் ஆசிரியர் வீரவநல்லூர் சுப்பிரமணிய பண்டாரம்
என்பவருக்கு கி.பி. 1860ல் புதல்வராய் பிறந்தார். நாகர்கோயில் கோட்டாற்றில் திருமணம் புரிந்து
அங்கேயே வாழ்ந்து, பெரும்புலவராகத் திகழ்ந்தார். இவர் தேசிக விநாயகர் பன்மணிமாலை,
சித்திவிநாயகர் வெண்பா அந்தாதி, கன்னியாகுமரியம்மை இன்னிசைப் பாமாலை, சுசீந்தைக்
கலம்பகம், மும்மணிமாலை, வீரைக்கலம்பகம், புராந்தக மாலை, மரகதவல்லி இன்னிசைப் பாமாலை,
மருங்கை ஒருதிணை மாலை, நாகை நவமணிமாலை, வடிவீசர் இரட்டை மணிமாலை,
அனந்தை நீலகண்டர் பதிகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவரைப் பற்றிய முழுமையான வரலாறு கிடைக்கவில்லை.
---------
வீரவநல்லூர் மரகதவல்லியம்மை பிள்ளைத்தமிழ்
பாயிரம்
விநாயகர் துதி
அமுதம்தரு பிறைமதியும் பனிநிறை
அறுகும் புனைதரு முடிமேல்நீள்
அகிலம்புக ழுமெல்லொளி மிஞ்சிடுமணி
அவிழுங்கதிர் மகுடமுநீறே
அணிபுண் டரமணம் அமைசிந் துரமுடன்
அனலங் கணமுறு நுதல்தானும்
அலைமண் டிடுகடல் மடைகொண் டொழுகலின்
அருள்பொங் கியவிழி களுமேரெண்
சிமயங்களு மலைவுற நின்றுறு மருள்
தெளியும் தனதடியவர் பாவம்
சிதறுண் டிடமிகுபவ வன்பிணி மயல்
சிதைகொண் டிடவசை வளியொடு
திகழுங்குழை அணிமுற வண்செவி யுமோர்
சிதகிம் புரியிழை ஒருகோடும்
திரைகொண் டிடும்எழில் மதனன் சிலையது
திருகும் புழையொடு பணிகார
நமனன்பரை எணிவரின் அங்குஅவன் உயிர்
நலியும் படிதலை யிடுபாச
நசைநுங்கிய அமணர் எனும் கரிகளை
நசிஅங்குச கலச நிதான
நகமுன் பொருகதை வரை கொம்பு இவை ஒளி
நகும் ஐங்கரமொடு புரிநூலு(ம்)
நறை சிந்திடு மலர் மணியின் தொடை பல
நணுகுங் கிரி நிகர் இருதோளும்
இமயம் கெழு குடவயிறும் திசைமுகன்
இரு மங்கையர் இடம் வலமார
இசை கிண்கிணி அணி கமலம் புரை சரண்
இணையும் தெரிதர மகிழ்வோடும்
இலகும் துரு மிசை எழு நங்கணபதி
இயறுன்றிய அழகினை நாளும்
எழில் அம்பரை மரகத மென்கொடி
தமிழ் இலகும் படி உளின் நினைவேனே. 1
---------------
வேறு
சீர் கொண்ட மணி நகையும் இலவிதழும்
இன்கிளிகள் தேறரிய மென்குதலையும்
தெள்ளித் தெளிந்து அலைகொழிக்கும் தடங்கடல்
சிறந்த கருணைக் கண்களும்
பார் கொண்ட கருவோடு மாறுஞ்சு சீர்வடப்
பைந்தளிர்த் தரும் உந்தியும்
பாத பங்கயமும் மிளிர் வீரை மரகதவல்லி
பைந்தமிழ் சிறந்து ஓங்குமே
தார்கொண்ட தந்தை முடி வெண்பிறை எடுத்து
ஒளிரு தன் கொம்பு இணைத்தும் அவர்தம்
தனி மார்பில் அணி ஏன வெண்கோடொடும்
தந்து சால் உவமம் ஒவ்வாமலே
கார்கொண்ட விட அரவ முன்பு விட்டு உறவாதல்
கண்டு நகையாடி இடமார்
கைத் துடி முழக்கி விளையாடும் வெண்பிள்ளைக்
கணேசப் பிரான் கழறவே. 2
---------------
பயன்
மங்கலமார் திருவீரைப் பூமி ஈசன்பால் மருவு
மரகதவல்லித் தமிழை அன்பு
தங்கும் உளத்தொடுகேட்போர் படிப்போர் ஏடுதனில்
எழுதுவோர் விரிப்போர் தரணிமீதில்
துங்கமிக அவள் கருணைசுரந்து நாளுந்துணை
புரியப்பிணி அகன்று பகையை வென்று
பங்கமிலா நவ நிதியம் படைத்துப் புத்ர பாக்கியம் பெற்று
இறுதி அரன்பதி சேர்வாரே. 3
-----------
அவையடக்கம்
பிள்ளைத் தமிழே பெரியோர் பெரிது என்ப பேதமையேன்
வெள்ளைச் சிறுவர் சொலற்கு எளிது என்று உன்னி விள்ளல் எழு
பள்ளக் கடலைக் கடந்திட அங்கணப் பாற்புழு ஒன்று
உள்ளிச் செலல் ஒக்கும் என்று எனக்கே நகை உற்றதுவே. 4
நிலையாதவற்றைப் பொருளாக் கொள்ளாது நெடும்புகழ்ச்சி
உலையாத வீரை உறைந்து உயிர் யாவையும் உந்தியில் கொண்டு
அலையாது காக்கு மரகதவல்லி சொல் ஆதலினால்
கலையாவும் ஓர்ந்த பெரியோர் இதில் குறை காண்கிலரே. 5
------------
1. காப்புப் பருவம்
திருமால்
திருவார் கஞ்சத்தில் குவளை திகழ மலர்ந்து ஆங்கு இணைவிழியும்
செங்கேழ்க் குமுதத்து இடைத் தரளம் செறிந்தது எனப் புன்னகை இதழும்
திரண்ட முகிலின் வான்தனுசு சேர்ந்தது என்னக் கவுத்துவமார்
தெரியல் புரளு(ம்) மணிமார்பும் சேயேன் தனக்கு இங்கு இருபொருளும்
தரு மா மருவும் பாகமும் வெண்சங்கு சக்கரக் கரமும்
சவியில் பிறங்கத் துவள மணந் தழைக்கக் கலுழன் தனில் வருவாய்
தடத்தின் முதலை வாய்ப்பட்டுத் தவிக்கும் கரியைக் காத்த, மதன்
தனக்கும் பிரமன் தனக்கும் உயர் தந்தை ஆகும் திருமாலே
அருவாய் உருவாய் அருவுருவாய் ஆண்பெண் <அலியாய் அவை இலவாய்
அணித்தாய்த் தொலையாய் எவ்விடமும் அளவா நிறைவாய் ஓர் இடமும்
அல்லாதவனாய் அறம் பொருள் இன்பு அருளார் வீடும் அளிப்பவனாய்
அமரும் தகைப் பூமீசன்பால் அமர்ந்து அங்கு அவன் செய் செயற்கு எல்லாம்
குருவாய் மூலக் கொழுந்தாகிக் குலத்தோடு எனைத் தன் தொழும்பு கொள்ளுங்
குமரற்கு எனக்கு அம்புவிக்கு அனையாய்க் கூட வரும் உன் தங்கையுமாய்க்
குழகா முளைத்த இறைவியைப் பொற்குவட்டுக் குழவி எனும் பரையைக்
கோதில் வீரை மரகதப் பைங்கொடியாம் உமையைப் புரந்திடவே! 1
---------------------------
சிவபிரான்
வேறு
அரி மிசை அறிதுயில் அரி அயன் அமரர்கள் அசுரர்கள் அஞ்சவே
அலைகடலுறும் வடவையை நிகர் அரவு உமிழ் விடம் அது அயின்றவன்,
அருமுனிவரர் விடும் உழை மழு, அர இபம் எழிலொடு கொண்டவன்,
அவுணர்கள் விடு கரி பசுபணிய விதர விறலொடு வென்றவன்
பரிவின் ஓர் அடியர் கல் எறியும் இப்பணி மலர் என உள் மகிழ்ந்த வன்,
பகைகொடு மலர் உருவிலி தரப் படர்எரியுற விழி விண்டவன்,
பரவிய புவிமகள் பரவிடப் பலர் தொழ அள் பெயர் கொண்டவன்
பனிமதி நதி அணிபரன் இவன் பதமலர் இணையை இறைஞ்சுவாம்
வரிசிலை மதனனை முனி கணை வகையறு நிலைமையில் வென்றவள்,
வளைகடல் அசுரனை முடுகயின் மயிலவனையும் முக உம்பலா
மகனையும் உலகு உயிர் முழுவது மகிழ்வுசெய் அருளோடு தந்தவள்,
மலைதரு மகள் எனும் அமலையை மறை முடிவினில் உறை மங்கையைத்
திரிபுரை பகவதி கவுரியைச் சிவைபரை உமையை என் நெஞ்சுளே
திகழ்வளை குவளை மைவிழியளைச் சிறுநகையளை அவலங்களைத்
தெறு தவவனம் அதில் உறையும் ஓர் சிகி எழில் மரகத மென்கொடித்
திரு அமிழ்து எனு(ம்) மொழி மழலையைத் திரமுடன் நின்று புரப்பவே. 2
---------------
கன்னி விநாயகர்
வேறு
ஆறு ஆதாரங்களின் அமரும் அறுவர்களில் தான் தவைனு(ம்) மற்று
அவரைக் காப்பான் என ஆதி ஆதாரத்தில் அமர்பவனும்
அண்டம் அனைத்துஞ் சிற்றணுவாய் ஆட்டும் பூத கணாதிபனும்
அகில புவன பூதம் எலாம் ஆகும் பெரிய புந்தியனு(ம்)
நீறாரனன் மெய் இயல் ஒழித்து நீர்சூழ் உலகர் வெண்மை என
நிலைக்கக் கருமை புறங்காட்டு நீர்போல் பசிய மேனியனும்
நிகர் ஓதனை அல்லாத எவரு நேரும் வதனம் போல் தனது
நிகரில் வதனங் கொளின் இலையார் எனக்கொள் கயமாமுகம் உளனும்
ஏறு ஊர்தரு தன் தாதை புரம் எரிப்பச் செல்லின் இரதத்து அச்சிறத்
தன் அம்மான் சுதை கடையின் ஏர் மத்து உலைய விக்கினமும்
இயற்றி அருள்செய்தலுங் காட்டும் இயல்பார் விக்கினேசுரனும்
என்ன இலகுந் திருவீரை எழிலார் கன்னிக் கணபதியே
வேறா நிகர் ஒன்றில்லாத விமலை பரையை அம்பிகையை வேதச்
சுவடி தாதை கரம் விரைவிற் பறித்துப் பெரும் புனலார் வீரை
அதில் நீ வீச உள(ம்) மிகவே மகிழ்ந்த ஒருதாயை விரியு(ம்)
மலர்த்தாள் மரகத மெய் விளங்கும்ம உமையைப் புரப்பாயே. 3
----------------
முருகக் கடவுள்
வேறு
தான குலவரைகளே சிறிய கனிகளாக வடி விரல்களாஉதிர் கோட்டினால்
தாழும் உலகம்என மேவும் தலம் அளவும் ஈர விரைவினுடன் நீருறத் தோட்டியே
தாடி இணைகளொடு நீடு தலைமுடியுளாய குருதிநிகர் பூஅசைத்து ஆட்டியே
சாணை பொருது நுதிவேலின் அலகுகொடு தாழும் ஒலி அலசி மாறிடத் தாக்கியே.
வானும் அதிர உடுமீனும் உதிர, மணுமூடி இருள்நிறைய ஊழியிற் காற்று என
வாயு எழ, வளையு(ம்) நேமி வரை முகடு பேர, இரு சிறைகள் நீடுறக் கோட்டியே,
வான மிசை வெகு வையாளி கொடு பகை கண்மாள இகலிமுடி வார்குரல் காட்டும்ஓர்
வாரணமும் ஒளிரு(ம்) வேலும் மயிலும் என ஓதும் அவர்கள் களிகூற வற்பூட்டுவான்,
கான மகளிர் குழுவோடு பரவி உறவாடும் அவர்களொடு கூடும் மெய்க் கூத்தினான்,
காதல் உடையவர் முன் ஆடி மனைவியர்களோடு, வரம் அருள மேவு மெய்க் காட்சியான்,
காவல் இவன் என உள்நாடும் அவர் முன் ஆவலுடையன் எமது ஆரூயிர்க்கு ஏற்றவன்,
காளை வடிவம் அகலாத முருகன்என வாழும் ஒருவனையே நாளும் உள் போற்றுதுஞ்
சானவி கதிஉறவான மகிழ்வுற நிசாசர் உளம் இடிய வாரியைத் தூர்த்திடச்
சாடு திறல் அயலுமாகி உடலும் உயர் சாலு நீலை உயிருமான மெய்க் கூற்றினார்
தானவர் உளொடுனு மான் அதனை உதவி மோன அறிவு அருளு ஞான நற்கோப்பினாள்
சாரு மகிழு(ம்) மொழி வீரை மரகத மீன் ஆன பரைஎனும் ஓர் தாயினைக் காக்கவே. 4
--------------------------
பிரமதேவன்
வேறு
வண்டே மண்டி விண்டே ஆதி மகி திசையொடு கமழ
வண்டே கிண்டி உண்டே ஊது மலரவன் அயன் உயர்மால்
மைந்தா அண்டர் தொண்டால் வாழ மறைதரு திசை முகம்
ஐந்தான் ஒண்தார் எண்டோள் வேதன் மலர்தலை உலகம் எலாஞ்
செண்டே வண்டே தண்டேயான திருமுலை விழி தொடை பேச
செண்டே ரென்பார் துண்டா மாறொர் சிறு குறி உலகு உயிரார்
சிந்தே யென்றேர் கொண்டே மேவு திகழ் கலையொடு புரிக
சிந்தே நின்றே உண்டாமாறு திருவுளன் அடி பணிவாம்
பண் தேன் ஒன்ற நின்றே பாடுபவர் உளின் உறைதருமோர்
பண்டோன் பங்கே கொண்டார் வீரைப்பதி மரகத வடிவைப்
பஞ்சே தஞ்சம் என்றே நாணும் பதமலர் உமையினை வேட்
பஞ்சே வஞ்சி நஞ்சாய் ஏகும் படிவளர் அமலையை நற்
கண்டார் தொண்டை மஞ்சார் ஓதிக் கனி இதழ் ஒளிர் பரையைக்
கண்டார் தொண்டு முன்பேயாகக் கதழ்வொடு பெறு கதியைக்
கண்பார் என்றே அன்பால் ஓது என் கரு அகல்வுற அருளிக்
கண்பாரின் பால் நின்றேர் காவல் கனிவொடு புரிதரவே. 5
---------------------
தேவேந்திரன்
வேறு
முப்பத்திரண்டு அறமும் இருநாழி நெற்கொண்டு
முற்றுவித்தவள் அன்பினால்
முடிவு இது என வரு கம்பைநதி விலக
மதி முடியன் மொய்ம்பு குழையச் செய்தவள்,
முடி இலகு நான் மரபின் முப்பத்து மூவர் தொழ
முண்டகன் சிறை தவிர்த்து
முந்நீரின் நினது சசி மங்கலம் இலங்கவே
மூட்டு அயிலனைத் தந்தவள்,
ஒப்பற்ற நின் புதல்வி தெய்வானைக்கு
உரிய ஓர் மாமியாய் நின்றவள்,
உலகஞ் சுமக்கின்ற உரகம் அதை ஆழியாய்
ஒளிர விரலில் கொண்டவள்,
ஓதரிய செந்நெல் வளை வீரைநகர்
மன் இன்மொழி உற்ற மரகத வல்லியாள்
உள்ளும் அவர் பாவமொடு கள்ளமற அருள்கின்ற
உமையம்மையைக் காக்கவே.
வெப்புற்ற வெங்கனல் சொலிக்கின்ற விழிநாலு
வெண்தந்த முக நாலுகை
வெள்ளை வாரணமு(ம்) நிதி கொள்ளவே தர நின்ற
வெண்சங்கும் ஒண்பதுமமும்
வீயாத மணியும் உயர் கற்பகாதித் தருவு(ம்)
மிளிரும் அமுதக் கபிலையும்
வித்த நகருங் கொண்டு வேந்தன் எனவே நின்று
விண் அமரர் தொழ வாழும் ஓர்
தப்பற்ற அயிராணி முலைமுகடு தோய்ந்தவா,
தரணி சிறை தண்டித்தவா,
தானவரை வென்றவா ததீசி முதுகந்
தண்டு தன்படை எனக் கொண்டவா,
சத வேள்வியா, புனித மேகவாகன, இடி
தயங்கு கொடியா, புங்கவா
தனி வச்சிரப் படைய தாவும் உச்சைச்சிரவ
தனியா, ஆயிரக் கண்ண னே! 6
---------------------------
இலக்குமி
வேறு
காரே மானுங் கார் ஆ மேயக் கயலே மடி மோதக்
கனைத்தே கன்றை நினைத்தே ஊறிக் கடிதே சொரி பாலைக்
கண்டாய் உண்டு மண்டூகங்கள் கரைந்தே தாலாட்டக்
கண் நோய் தீரும் அன்னப் பார்ப்பு ஆர் கமலாலயம் அதிலே
காலே ஓடித் தலையே கவிழுங் கதிரால் சென்று ஊரி
கமமாச் சூல் கொண்டு அளிக்கு(ம்) மணியைக் கண்டே அனப்பேடு
களித்தே சிறகால் அணைக்குஞ் செந்நெற் காடே வளைகின்ற
கவினார் வீரைநகரே தெற்காங் கயிலைப் பதி என்றே.
ஏரார் ஏறே ஏறுந் தேனார் இதழித் தொடை அரவார்
இந்து ஆறு அறுகு ஊமத்தம் இலங்கு ஓர் ஏமச் சடை அமலன்
இடமாய் எழிலோடு உறையும் பரையாம் இமயச் சிலைமகளாம்
எந்தாயாம் அந்தரி அம்பிகையாம் இருக்கு உறை சுந்தரியாம்
இளையே பொருவு நின் நாயகனுக்கு இசை உள தங்கையுமாம்
இழை கடல் மேனி மண்ணிட இருகை ஏந்தத் தரும் அவளாம்
இசையே பாடி அடியவர் ஏத்தும் எழிலார் அருளுடைய
இழையேரிடை நம் மரகத வடிவை என்றும் புரந்திடவே.!
தாரா விண்ணோடு ஓர் அடி நீடுந் தாமரை விழியானைத்
தன்பாலாகக் கொண்டவளாம், பால் தண்கடல் வந்தவளாந்,
தனைநிகர் வாதவூரனை மோக்கந் தந்திட உடன் வந்தான்
தன்குல அரிமருத்தனன் மாறன் தன் தனம் ஆனவளாஞ்
சம்பு(உ)றை ஆரூர் நாவலன் அன்பு தான் கொள்ளவே தரும் ஓர்
தாவறு குண்டையூர்க் கிழவோன் செஞ்சாலியும் ஆனவளாந்,
தனபதி நண்பு சங்கரனாகத் தான் பொருளானவளாந்,
தகு பொருள் எல்லாந் தந்திட வல்ல தரணியும் ஆனவளாஞ்
சீரார் உலகங் காத்திடு மன்னர் செங்கோல் ஆனவளாஞ்
சிறியேன் கலிகள் ஏகிட என்பால் செறிவுறு செல்வியுமாந்
திருவாம் பொறியாங் கமலையுமாஞ் சீதேவியு(ம்) நளினியுமாஞ்
செங்கேழ் முண்டகாசனை என்றே தெளிவோர் நவில் தரும் ஓர்
செழிப்புறு பொன்னாங் கோகன கையும் இந்திரையும் பதுமையுமாந்
திகழுறு பின்னையாம், பாற் கவியாம் திருவார் இளையளுமாஞ்
சிந்தனையோடே வந்தனை புரியுந் திறத்தார் களிப்புறவே
சிலம்பொலி காட்டும் இலக்குமி உனையே தினமும் பணிவேனே.! 7
----------------------------------
சரசுவதி
வேறு
ஊசி எழுதா மறையின் ஒண்சுவடி ஓர் கரம்
உருச்செய செபமணி ஓர் கரம்
உற்று ஒளிரும் வயிரமணி தரளமணி
வடம் உருளும் ஓர்மார்பும் வெண்கலையும், வண்டு
உறை கமலம் என விழிகண் முகமு(ம்) மதி
நுதலும் அழகுற வரிண மலர் ஆசனம்
உறைந்து நன்மணி மாழை மாடக நிறைந்து
இலகும் உயர் யாழ்க் கோல் கொண்டுமே
வாசம் வன மல்லிகையின் னுருசிபான்
மயிலின் இசை வந்த குரலும் முல்லைதேன்
மழவிடப துத்தமும் வார்கடம்பொடு
கிழான் மதமேட கைக்கிளையுமால்
வஞ்சியவி கொக்குழையு மரையாஞ்சி
குயில் இளியும் வண்பொனா விரை கன்னியாய்
வாசி தரு விளரியும் புன்னை
மாதுளமியானை மன்னு தாரமுமாகவே
தேசு பெறு மிடறு நா வண்ண முடி
நுதல் நெஞ்சு சீர் மூக்கு இசைந்து முறையே
செறி துருவ மட்டியமு(ம்) ரூபகஞ்
சம்பை திரிபுடை தாளம் அடவேகமுந்
திகழு(ம்) பயிரவி ஆதி எண் நான்கு இராகமுஞ்
சிதறாது காலமுடனே
தேர்ந்து மந்தர மத்தி மந்தாரமொடு
தெரிந்து இலகு குரு துரிதம் அளவால்
தூசற விசைக்கும் உயர் வெண்சலசி
நாமகள் தூயவள் வெண்மேனியள்,
சொல்லினொடு பொருளு(ம்), நன்நாவில் நின்று
அருள்செயுந் தொல்வாணியைப் பணிகுவாஞ்
சூழு முகில் சோலை வளை வீரை அரன் இடன் ஒன்று
சுக மொழி கயற் கண்ணியைத்
தொல்லை மறை விள்ளு மரகதவல்லி
மெல்லியைத் துணை நின்று காக்கவென்றே. 8
---------------------------
வீரவ நங்கை
மிடியன் எனும் ஒருவன் மேல் முனைகொண்டு
தண்ட மலை மேல் மரம் முறிந்து முளையாம்
வில் ஆழி சுழல் சங்கு அலைக்கரம் எடுத்து கரி
வெம்பரி படைத்து அதிர்த்தே
விறல் கொண்டு தினை அளிகள் உண்டு சைவலவளக
மிசை மலர் அணிந்து தரளம்
விளங்கு புற்புத முலையில் ஆரம் புனைந்து
முகம் விழி மரைகள் அருள் ஒழுகவே
கடிது உலக மக்கள் களிகொள்ள விளைதர
வயற் காலொடு நடந்து உலாவுங்
கங்கை நிகர் பொருநை மகள் வளைகின்ற வீரைநகர்
காக்கற்கு அமர்ந்து இலகும் ஓர்
கல்லினையும் உயர் தாதையாகவே கொண்டு இன்னருள்
கசியு(ம்) மரகதவல்லியைக்
கருணை மிகும் அமலை அம்பிகை உமையை
அனுதினங் கனிவினுடனே காக்கவே
படிஅதிர விண்உடு படீர் என்ன வடவையுள்
பதைப்ப நடையுறு கூளிகள்
படை சூழ வில் அம்பு உலக்கை தடி அலகு எஃகு
பல நேமி சூலமொடு கைப்
பங்கயங் கொண்டு அரியின் மிசை மேவி வடுகர்
தளபதியாக முரசு கொம்பு
பம்பை பல அதிரவே சென்று மகிடன் சிரசு
பதம் வைத்து விண் காத்த சீர்த்
தொடி அரவ எண்தோளி சமரி சண்டிகை
அமரி சூலி நாரணி தேவி மா
சூரி பயிரவி கவுரி சாமுண்டி கங்காளி
துட்ட தாருக விநாசி
சுடுகண்ணி நீலி யாமளை பதுமை மாதங்கி
துரிசற்ற பத்திரி ஐயை
சுந்தரி குமரி மங்கை அந்தரி வீரவன
நங்கை துணையடிகளைப் பேணுவாம். 9
-----------------
ஏழுசத்தியர்
வேறு
அங்கண் ஏர்விடை ஊரும் அத்தியின் அதள் புனைந்த மகேசுரி
அந்தமா மயில் ஏறி வெற்றிகொள் அயில் கொளும் கவுமாரி, நீள்
அங்கை ஆழியொடு அதிர்த்து ஓர் புள் அரசில் உந்து நாராயணி,
அஞ்ச வாளியிலே கலப்பையொடு அமருகின்ற வராகி, தீத்
தங்கு வாயுறு பேயினைக் கொடு தனி நடந்திடு காளிகைச்,
சந்த மாமறையோடு அனத்து உயர் தகவின் உந்து அபிராமி, வெண்
தந்தி வாகன வேதி வச்சிர சதுரி சுந்தரி, சீர்புகழ்
தங்கும் ஏழ்எனு மாதர் பொற்கழல் தமை உள் அன்பொடு பேணுவாம்
மங்குல் ஆர்தரு வானைமுட்டி எல்வழி மருண்டிடவே எழின்
மண்டு கேதன வேறு நித்தமும் வரர்கள் அஞ்சிய வாவினில்
வந்து வார்கழல் ஆதாரத்தொடு மகிழ வந்தனையே செய
வம்பு மாலைகளோடு அழைத்து என அசையு மந்திரமே அருள்
வங்கமே என மேதினிக் கடன் மடியு(ம்) மைந்தர்கள் வாழவே
வந்து வீரையினார் அரித்தட மலைமடந்தை மாரியை
மஞ்சை நேர்தரும் ஓதி மைக்கணி மரகதந் திகழ் மேனியார்
மங்கையாகிய ஞான சத்தியை மனம் உவந்து இவள் ஆளவே! 10
-----------------------------
முப்பத்து முக்கோடி தேவர்கள்
வேறு
வடமணிகள் ஒத்திட்டு மச்சாடு தோரணம்
வருநர் தலைபட்டு அற்ற அத்தான சோதிசெய்
மணிகளை விளக்கிட்டு விற்போது வாணிகர்
மகளிர் மறுகில் சிற்றில் வைத்தாடு வீரையின்
வடிவமுறு மக்கட்கு வற்றாத பாவநோய்
மடிய அருளக்கத்தி மற்றாரு(ம்) நேரிலா
மரகதம் எனப் பெற்ற மட்டு ஏயும் ஆரருள்
வடிவை உமையைச் சத்தியைக் காவலாவரே
ஓடிவறு சுவர்க்கத்தில் உற்றாரு(ம்) மேலவர்
உயர் சுரர் அறத்திற்கு உரித்தான மானியர்
உவர் அமண அரக்கர்க்குள் ஒட்டாருமானவர்
உரை அறிஞர் நட்பர்க்கும் உட்பாசமானவர்
முடி அணி நல் உச்சிக்கண் இட்டு ஏறு பூவினர்
முழுதும் அமுதத்தைப் புசித்தே விண்ணாள்பவர்
மொழிதபுதம் எலற்பட்ட முப்பார் உலாவுவர்
முறை சதுரின் முப்பத்து முக்கோடி தேவரே. 11
------------
சமயாசாரியர்கள்
வேறு
புத்தமுதத்தின் இனிப்பற மாற இறுக்கி நடத்தி இசைக்கும் யாழிசை
கைத்திட மைப்புயலைப் பொரு வேய் தரு குழல் நீட்டிப்
பொத்தி விடுத்து வளிச்சுர நீட இசைக்கும் இசைச் சுவை எட்டியதாக,
இனித்திடு சொற்பயில் உற்றிடு தேமொழி அமுதூட்டி
முத்தி எவர்க்கும் அணித்துற வீரையினுற்று ஒளிர் பச்சை மணிக் கொடியாகி
உயிர்ப்ப அருட்கடலில் திரி மீனின் நயன நோக்கு
முத்து நிரைத்ததை ஒத்திடு வாள்நகை வித்துருமத்தினை வைத்து என வாய் இதழ்
உத்தம மெய்பரையைக் கனிவார் உளமொடு காக்க
பொய்த்த மனத்தினர் சித்தமது ஓரா எரித்திடும் ஏற்பு ஒரு
பொற் கொடியாகவெ எழுப்பிய அருட்டிறம் மெய்புகழ் ஈதெனு நிலைநாட்டிப்
பொற்பு வளர்த்தவர் கற்கலன் ஆழி உகைத்திடு மெய்த்தவருக்கு கரவாது
கக்கிட அப்பினுள் உக்கிய பாலனை யுற மீட்டிச்
சித்தி விளைத்தவர் அத்தனி யாவரும் ஒப்ப நரிக்குல மெய்ப் பரியாக
நடத்திடுதற்கு உழுவற் பரிவாகி உள் இருள் ஒட்டித்
திக்கு விளக்கு அமுதச் சொலர் நீடு அளி மொய்த்து அரி நக்க ஒழுக்கு சரோருக
நற்பதம் உச்சி முடித்தனனால் அருள் உளம் வேட்டே! 12
-----------------------------
2. செங்கீரைப் பருவம்
ஏர் பூத்த பங்கயத் திருமுகம் இலங்கவே
இழுது புழு கோடிழைத்த
ஏலமுறு மஞ்சள் திமிர்ந்து இளவெ(ந்) நீராட்டி
இணை நாசி கண் காது வண்
பார் பூத்த உந்தி தலை ஊதி வெண்ணீற்றினொடு
பார்ப் பொட்டும் இட்டு நுதலில்
பல மணிகளால் சுட்டி பொற்பட்டம் ஒளிர்தரள
பவள வட(ம்) மார்பு ஓங்கவே
கார் பூத்த விழிகட்கு மையிட்டு வளைகளொடு
கலகல் எனவே கைகளில் கங்கணம்
அணிந்து கால் தண்டைகள் புனைந்து அழகு
காணும் இவள் தவம் என் எனச்
சீர் பூத்த வீரைநகராம் அழகி மகிழ்வுறச்
செங்கீரை ஆடி அருளே!
திகழும் மரகதவல்லி புகழும் அமுதுறு சொல்லி
செங்கீரை ஆடி அருளே! 13
---------------------------------
தான் ஒருவர் கருவுறாது உலக(ம்) முழுதுங்
கருவு தான் கொண்டு அளிக்கின்ற நந்
தாய் என எவ்வுலகமும் இறைஞ்ச
இமயத் தரணி தன்குழவியாங் கருணையு(ம்)
மான்உருவ மச்சினியதாக வந்தாட்கு முன்
மாதாவு(ம்) மகளாகவு(ம்)
மன்னும் உயர் கருணை(ம்) மாறாது வளரவே
மகிழ்வோடு இவ்வீரை நகரின்
வானவர்கள் தொழ மேவு பூமீசர் வாமத்து
மருவுற்றும் இத்தமிழினின்
மகளாகவே கொண்ட மகிமைக்கு இணங்கவே
வாசமுடனே ஊறிடும்
தேன் ஒழுகு குமுதமுறும் வாய் மலரு மெல்லியே
செங்கீரை ஆடி அருளே! தி
கழும் மரகதவல்லி புகழும் அமுதுறு சொல்லி
செங்கீரை ஆடி அருளே. 14
----------------------------------
ஒரு புவனர் அன்றி மற்று எப்புவனர் தம்மையும்
ஒருத்தியாய் நின்று அருளு நீ
ஒளிர் ஆழியன் குழலவன் தனையன் அஞ்சிலை
விண்ணுயர் வித்தியாதரர் யாழ்
தரும் இவைகள் இனிமை கைத்திட இனிய மழலை
மொழிதரு தரணியின் குழவியாய்த்
தனது மலர்வாய் கொண்டு பொதியை தரு
பொருநையந் தனி நாட்டின் ஓர் வீரையின்
மரு இலகு கொன்றையந் தார் புனைந்து ஏறெழுது
மாலை அணி துவசத்தொடு
மறையான பரி மேவி உம்பர் முரசு அங்கரைய
மதயானை திசை சூழவே
திருவருளின் ஆணை இளநகை புரியு(ம்) மெல்லியே
செங்கீரை ஆடி அருளே!
திகழு(ம்) மரகதவல்லி புகழும் அமுதுறு சொல்லி
செங்கீரை ஆடி அருளே! 15
---------------------------------
நாலு வகையுறு தோற்றம் எழுபிறவி எண்பத்தி
நான்கு இலக்க பேதமு(ம்)
நலியாது அகட்டினில் சுமவாது அளித்தும் அந்
நல்லுயிர்களுக்கு அன்னையாய்
ஏலுதல் பொய் அன்று என்னவே அன்னை உதரத்து
இருங்கரு உதிக்காமலே
எழுதரிய படிவமொடு புழுதி அளை குழவி
எனவே வந்த பைங்கிள்ளையே
பாலும் அளியுங் கண்டும் விலைகொண்ட வாய் அமுது
படி முழுதும் விலைகொண்ட ஓர்
பவளவாயின் சொல் நுதல் இந்திர தனு விலைகொண்ட
பங்கய முகச் செல்வியே!
சேல் உலவு கழனி வளை வீரைநகர் இளமயிலி
செங்கீரை ஆடி அருளே!
திகழு(ம்) மரகதவல்லி புகழும் அமுதுறு சொல்லி
செங்கீரை ஆடி அருளே! 16
------------
வட்ட அமுதத் தடமதாகவே நீற்றறையின்
மகிழ்வுற்ற தொண்டனுக்கு உன்
மகிழ்நன் எரி நோய் இட்ட வசை தீர்ந்திடவும்
அந்த மன்னனுக்கு ஏத முயலுந்
துட்டர் உரை கண்டுமுட்டு எனும் அமணர் ஆவிகள்
சுருங்க ஒரு கடுவாகவுஞ்
சுத்த சைவந் தழைய அமுதாகிடவு(ம்) ஞான
சுதை நினது சேய்க்கு ஊட்டியே
திட்டமொடு நெற்றி மிசையுறு சோதியைத்
துணைகொள் சீருறு பிருங்கி உடலிற்
செறி தசைகள் வாதினொடு வௌவி உந்தன்
அடிகள் சிந்திக்கவுஞ் செய்து தன்
சிட்டர் தொழ இட்டமொடு திருவீரை வாழ் அமலை
செங்கீரை ஆடி அருளே!
திகழு(ம்) மரகதவல்லி புகழும் அமுதுறு சொல்லி
செங்கீரை ஆடி அருளே! 17
---------------
அருந்துணைவன் நின்னோடு மும்முறை சூதாடிட்டும்
அத்தனையும் வென்றிட்ட ஓர்
அருள்மிக்க வலியுடையள் ஆகியும் அப்புகழ்கள்
அகிலம் எல்லாம் ஓங்க நீ
தருந் தலம் அதில் பல தலங்கள்தனில் அவனோடு
சார்ந்து வலம் ஆகுவதினும்
தவமது புரிந்து பெறு பேற்றினை விளக்கலே
தகுதி பெறு பெரியோர்கள் தம்
பெருந்தகைமை யாம் எனும் கருணை காட்டுவள் போல்
பிறங்கு பதி பலவாய்த்து அதில்
பெருமை தரும் வீரைநகர் ஆலயம் உறைந்து இலகு
பெம்மான் தன் இட மேவியே
திருந்தும் உலகந் தழைய வாழும் இளமயிலியே!
செங்கீரை ஆடி அருளே!
திகழு(ம்) மரகதவல்லி புகழும் அமுதுறு சொல்லி
செங்கீரை ஆடி அருளே! 18
----------------------
மண்தலமும் விண்தலமும் மற்றும் உள எத்தலமு(ம்)
மருவிப் பொலிந்தினைந்து
வந்த இரவி மண்டலமொடுந் துன்று பொழின் மேவு
வளவீரையிற் கண்டு உனை
அண்டர்கள் துதிப்பதும் தொண்டர்கள் படிப்பதும்
அன்பர்கள் நினைந்து அயர்வதும்
ஆகியே நின்று காகா என்று இரக்கும் அடியார்க்கு
இன்னருள் செயு(ம்) மயிலியே
வண்டலர் திளைந்த இருதுண்டுற வகிர்ந்து மதி
வந்த நுதலின் சுட்டி கால்
மண்டு புகை என்ற பனி கொந்தளக மஞ்சடைய
வான் இரவியின் கதிர் செயச்
செண்டின் மிசை நின்ற கிளி கொஞ்ச மொழியுங் குயிலி
செங்கீரை ஆடி அருளே!
திகழு(ம்) மரகதவல்லி புகழும் அமுதுறு சொல்லி
செங்கீரை ஆடி அருளே! 19
-------------
வேறு
உலகுயிர் முழுமையும் உறுபயன் எழுதிய ஓலை எனக் காதில
உயர் மறை முடிவின் இரகசியம் ஓதிட உற்றது எனச் செறிய
உதித்து அடைந்து அடியவர்க்கு அளவையை முடியேன்உறுதி இது என்று இரவி
உறைந்தனன் என்ன நல் இணை எழில் ஓவாது ஒளிர்மணி உறு தோட்டின்
நலமொடு ஞான்றக் கதிர்ஒளி செய்பவன் நவின்றமை பொய் அன்று
நல்லருள் புரிவாள் வம்மின் என்று உளநனி நசையொடு அழைத்திடும் ஓர்
நட்புறுமாலோ இதமுகம் என்றிட நற்குழைகளும் ஆட
நாசியின் பிறையாம் பணிமணி அடியினின் ஞாலு(ம்) முத்துகள் ஆட
மலைதரு சந்தம் வளர் கமுகு என்னும் வளை வளையாது வளை
மணி பல உறையுள் கட்டு ஒளி பலகதிர் வருணக் காலாட
வலன் உதிரந்தரு மாமணி சூழ்வுற வயிர மணி நாப்பண்
வைத்து வரைந்திடு பதக்க ஒள்ஒளி இருமாந்து பரந்து ஆட
அலைபுனல் ஆட்டிய சிறுதுளி கருமணல் அலர்தரு குழலான
அரியசை வலமுறுமாறு இளிமுத்து என ஆகி உருண்டாட
அலர்மழை சொரி பொழில் வீரையின் இளமயில் ஆடுக செங்கீரை!
அருள்ஒழுகிய முகமரகதவடிவே! ஆடுகசெங்கீரை! 20
--------------------
இந்திரன் அயன்அரி வந்து தினம் பணி ஏரார் புகழ் மேவி
ஏறுடை அரன் உதை கொண்டு அழி எமன் எழுந்து பணிந்து ஓதி
இன்புற அருள்செயும் இந்துறை பொழிலொடு இலங்கிடும் அணி வீரை
எனு(ம்) நகர் வளர் உயர் மலைமகளான நின்னிடையாங் கொம்பாடக்
கந்தர நேர் குழல் வண்டு அலரோடு கவிந்து பரந்தாடக்
கருவிழி அஞ்சன நீல மணித்திரள் கான்று கரைந்தாடக்
கந்த நறும்பொடி மேனி திளைந்துயர் ககனமொடுந் தாவிக்
கற்பகம் ஆதி தருக்களை ஊட்டிடு கான நிரைந்தாடச்
சுந்தர நகை எனை இகழ்வது என்று ஒளி தூற்றுதலாங்கு அருள் நூல்
சொற்பொருள் அறிஞர் உளிற்று ஒளிமுத்து புலாக்கு முற் சூழ்ந்தாடத்
தொந்தி அலைத்திரை ஒத்து வடிந்து துவண்டு துவண்டு ஆடத்
துப்பு வடத்தொடு நித்தில மாலை தொடர்ந்து பிணைந்தாட
அந்தர மங்கையர் தொண்டு மகிழ்ந்து இவண் அன்பொடு நின்றாட
அம்பர விஞ்சையர் வீணை மிழற்றி அகங் களி கொண்டாட
வான் அமுதுறு மொழி வார்கடல் அருள் விழி ஆடுக செங்கீரை!
அருள் ஒழுகிய முக மரகதவடிவே! ஆடுக செங்கீரை.! 21
----------------------------
மணமிகு சூதம் இருந்துழல் கிஞ்சுகம் வண்பார் கொண்டாடி
வழிபடும் ஆர் ஒலி கொண்டு திரிந்து மகிழ்ந்தே பண் பாட
மயிலது கார்முகில் கண்டு இது நிந்தையின் மஞ்சோ என்று ஓதி
வளரும் முன் நேர்குழல் கண்டு உள் இசைந்து கனிந்தே நின்றாட
இணையறு வாள்விழி வென்றன என்று உள் இரிந்தே வண்டோட
இறைவர் கை மானும் மருண்டு மயங்கி இடைந்தே கண் கோண
இயல் அ(ன்)னம் ஓரடி கண்டு உளம் அஞ்சி எழுந்தே விண் தாவ
விடையின் நீள்அரி கண்ட அணை தங்க இசைந்தே நண்பாக
அணிபல பூணில் என் என்று அகிலங்கள் அறைந்தே நின்று ஓத
அழகியல் பேய் என நின்று புகழ்ந்துறு(ம்) மன்போர் கொண்டாட
அருளுறு வீரவனின் பணி என்றிட அன்பால் உண்டான
அணிநகர் வீரையில் இன்போடு அமர்ந்த அணங்கே நுண்பாவாந்
திணைதிகழ் கோவை வரைந்திடும் அங்கணர் தென்பால் நின்று அருந்
திருவளை மால் உயர் தங்கை எனுங் கொடி செங்கேழ் ஒண்பூவார்
திருவடி மேவு சவுந்தரி சுந்தரி செங்கோ செங்கீரை!
சிறு தள வார் நகை அந்தரி அம்பிகை செங்கோ செங்கீரை! 22
------------------------------
தருவொடு மழை குழல் தோள் பணை இந்து ……. இசைந்தேர் கண் கூடத்
தனம் என வளர் உயர் ஆர நகந்தரு …………. என்றாகும்
தனி அருள் நிறை பொருநா நதி இந்த இடம் போல் ஒன்றேனுந்
தரணியில் இலை அருள்நாயகி தங்க உவந்தாள் என்றே சூழ்
அருமறையகம் இஃதாம் என அந்தணர் அன்பால் நின்று ஓதி
அறைதர நிறைவுறு வீரையில் நந்து அளியின் பால் அன்போர் உள்
அமுது அகடுறு சிசு தாயுள் அருந்திட அங்கே உண்டாரும்
அடைவினில் உலகு உயிர் வாழ உவந்து கசிந்தே கொண்டாளாய்
இரவியை இளமதியே பகை வென்றது என்றே கொண்டாட
இதழ் அலரொடு கர மானனம் என்றிடும் மென்போதுங் காழ்செய்து
எழிலொடு மலர்தர வாள்நகை என்ற நல் இந்தாம் வெண்சோதி
இலகிட அருளொடு வாழும் இளங்கொடி என்பால் நண்பூறுந்
திருமரகத வடிவான சவுந்தரி திண் பார் கொண்டாடுஞ்
சிவை உமை பரை கலியாணி நிரந்தரி சிந்தார் ஒண்பாலாய்த்
தெளி தமிழ் அமுதுறு தேமொழி அங்கிளி செங்கோ செங்கீரை!
சிறுதளவார் நகை அந்தரி அம்பிகை செங்கோ செங்கீரை! 23
-------------------------------
3. தாலப் பருவம்
பாலும்பழமும் பசுந்தேனும் பாகின்மொழியார் பரிந்தூட்டப்
பருகிக்கிள்ளை மதிபோலும் பளிங்கார்மாடச் சாளரத்தில்
காலுங்கதிர்வெண் நிலவுண்டு களித்தங்குறுச கோரமதைக்
கண்டாமினிய இசைபயிற்றக் காண்பான்கேட்போர் தலைமுகத்தர்
போலுமண்ணாந் தகலாமல் பொருந்தும்பந்தி நிரைமறுகார்
பொருவில்வீரை நகர்க்கரசாய்ப் புரக்குமரக தாம்பிகையே!
சேலும்பிணையும் வென்றவிழித் திருவேதாலோ தாலேலோ
தேனார்கொன்றைச் சிவன்மருவுஞ் சிவையேதாலோ தாலேலோ! 24
--------------------------------------
எங்கள் பொருளாம் இவை கவரேல் என்றே பொரல் போல் கடைசியர் கால்
எழின் மின் அலவன் உகள அவர் எங்கண் முகம் வாய்ப் பகை என்றே
பொங்கு உற்பலம் பங்கயம் குமுதம் பொருந்தக் கதிரோடு அறுத்து எறியப்
பொருந்து மள்ளர் வையாளிப் போத்தின் அடியால் துவைத்து உதறி
மங்கு தவழப் பொற்சிலை போல் வளர் சூடேற்றி நெற்றூற்றி
வழங்கிப் போரிட்டு அளந்து ஏற்றும் வையம் அகலாத் திருவீரைத்
திங்கள் நுதலார் மரகதப் பைந்திருவே! தாலோ தாலேலோ!
தேனார் கொன்றைச் சிவன் மருவுஞ் சிவையே! தாலோ தாலேலோ! 25
-------------
கொம்பில் கலுழன் குடம்பை கொடு குடிகொண்டு உறையக் கார் அரவங்
குடியாய் அடியில் குழுவினொடுங் குலவக் குளிரக் குயின்மருவித்
தும்பிக் குழுவுக் களி ஒழுகத் துடியேரிடையார் துவண்டாடத்
துளிர்ந்தே மலரும் புன்னைவனஞ் சூழுந் தொல்லைப் பொலிவுடைய
அம்பில் துயிலும் அரி வாமத்து அணங்காள் ஆரம் வீரைநகர்க்கு
அரசாய் அமர்ந்து புரந்தருளும் அழகார் மரகதாம்பிகையே!
செம்பொற் குழைகள் இலகு செவித் திருவே! தாலோ தாலேலோ!
தேனார் கொன்றைச் சிவன் மருவுஞ் சிவையே! தாலோ தாலேலோ! 26
-------------------
அரியும் கரியும் பகை தெரியா(து) தான் கன்று அடியின் மடி சுவைக்க
அவசமொடு நற்பணி புரிய அணிமா ஆதிச் செயல் ஒழிந்து
புரியஞ் சடையிற் புறவடையப் புற்றே வளர்தம் உடல் பொதியப்
பொறிகள் புலனிற் பொருந்தாமல் போத நடு நாடியில் செலுத்தித்
தருவும் புரிந்தது என முனிவர் தவஞ்செய்து இலகுந்தவ வனமாந்
தலத்தில் இலகுந் திருவீரை தழைத்த மரகதாம்பிகையே!
திரியுங் கயலை இணைத்த விழித் திருவே! தாலோ தாலேலோ!
தேனார்கொன்றைச் சிவன்மருவுஞ் சிவையே!தாலோ தாலேலோ! 27
-------------
கந்தக் கமழுங் குழற்கு எதிராங் காரார் கறையைக் கந்தரத்துங்
கண்கட்கு எதிராம் உழையை இடக் கரத்து நுதலுக்கு எதிர்மதியைச்
சந்தந் திகழச் சடையகத்துந் தரித்தான் கேள்வன் என அதனைச்
சகியாள் போலுங் களவறியாத் தனைநேர் எழிலார் குழவியதாய்
வந்து இங்கு அமுதம் வாய்ஒழுக மழலை மொழிந்து வளர்தல் என
வளமை பெருக வீரைநகர் வசிக்கு(ம்) மரகதாம்பிகையே!
சிந்தங் கருணை ஒழுகு விழித் திருவே! தாலோ தாலேலோ!
தேனார் கொன்றைச் சிவன் மருவுஞ் சிவையே! தாலோ தாலேலோ.! 28
---------------
புலித்தோல் உடுத்துப் போதகத்தின் புறணி போர்த்து முடை வீசும்
பொருத்துக் கலையா முழுவங்கம் புயத்தில் தாங்கித் தலை ஓட்டை
பலிக்கே கொண்டு திரி கேள்வன் பழி தீர்ப்பாள் போன்று ஒளிர் கனகப்
பட்டார் இடையு(ம்) மணிகள் பல பதித்த கச்சும் மேகலையுஞ்
சொலித்தே ஒளிரச் சுக மகிழ்சொல் துளங்க வளருங் குழவி எனத்
தோன்றி வீரைநகர் வளருந் துவர் வாய் மரகதாம்பிகையே!
சிலைக்கோன் மகளே! சிலை நுதலார் திருவே! தாலோ தாலேலோ!
தேனார் கொன்றைச் சிவன்மருவுஞ் சிவையே! தாலோ தாலேலோ.! 29
-------------------
அண்டத்து உயிர்கள் அத்தனையு(ம்) மண்டக் கொண்ட அகட்டாளாய்
ஆயாதவர்க்கு ஆய்ந்தவர்க்கும் ஆயாய் அமர்ந்த அருட்கடலே!
தண்டத் தென்கோன் ஏத்தரி வேதண்டக் குழவியாங் கிளியே!
தரைத் தென்வீரையினில் வான் மாதரைத் தன் தொண்டு கொளு மயிலே!
வண்டுற்று இரையுங் குழற் குயிலே! வண்டுற்று ஒலிக்குங் கரப்புறவே!
மைக்கண் உழையே! மரகத மா மைக்கோன் மரகதாம்பிகையே!
செண்டுற்றிடு கைக் காந்தள் மலர்த் திருவே! தாலோ தாலேலோ!
தேனார் கொன்றைச் சிவன்மருவுந் சிவையே! தாலோ தாலேலோ! 30
-------------
வேறு
அனம்என அயன் அரன்முடி அறியாமையினால் அவனி வர நாணி
அவிர்சடை மதி தவழ்தல் ஒளிர்தலின் இவன் அறிகுவன் இனும் என்று
உள் நினைவொடு பல வடிவொடு திரிகுதல் என நிறமிகும் அனமொடு
நிலவொடு தழுவிய சினையோடும் ஒளியோடு ஞிமிறுறு சோதிகளார்
நனைமழை சொரி பொழில் வீரை நன்னகர் உறை நதிபதி போல் அருளார்
நகமகள் எனும் எழில் இளநகை மரகத நாயகியாய் பொதுவில்
தனிநட முதலவன் இடமுறை தற்பரை தாலோ தாலேலோ!
தவமுனிவரர் தொழ வாழ்ந்திடு சாம்பவி தாலோ தாலேலோ! 31
-----------------
உடுவென ஒளிர்வது சிதறிய நிலவு என உரைசெய ஒளிர் மதியும்
உடைபட மோதி உட்பாய்ந்து எழில் வாளைகள் உலவ வெணிக்குடைவார்
அடர்பவ முழுவதுங் கழிதர வௌவியும் அதைத் தனது இடையாடாது
அவ்வழி கடப்பவர்க்கு ஆற்றியும் இன்புறும் அருட் பொருநா நதிப்பால்
கடிமதில் பகைவரை அடுபொறியொடு பல கருவிகளொடு சூழக்
கவினுறு வீரை நன்னகரினில் அரசுசெய் கனிசிலை நுதல் வடிவாம்
சடை அரவு என மிளர் மரகத மென்கொடி தாலோ தாலேலோ
தவமுனிவரர் தொழ வாழ்ந்திடு சாம்பவி தாலோ தாலேலோ. 32
---------------------
வேறு
பல பழியுடையவனாம் இவன் என்றுயர் பாரார் ஏசாமே
பங்கய நின்கழல் நாடல் ஒழிந்திடு பாழ் நாள் ஆகாமே
உலகினில் அருளறு உலோபிகள் தங்களை ஓயாதே தேடி
ஒன்றி அலைந்து உழலாத வரம் பெற ஓரேன் ஆனாலும்
அலைகடல் உலகு உயிராய் என வந்ததினாலே ஆள்வாய் என்று
அஞ்சல் ஒழிந்திடவே வளர் அம்பிகையாளே மாவீரைத்
தலனுறை மரகத மேனி இளங்கிளி தாலோ தாலேலோ
சந்த இளம்பிறை வாள் நுதல் அந்தரி தாலோ தாலேலோ. 33
--------------------
வானவர் புகழ் திருவீரை உறைந்த நல்வாழ்வே மாதாவே
வஞ்சக நெஞ்சற வா என வந்திலை வாதே ஓதாயே
கானவர் வலையுறு மான் என நைந்தது காணாது ஓவாதே
கன்றை மறந்திடுமோ வனையன்றியர் காவார் காவாய் ஓர்
வானநல் உளமொடு கூவிடும் அன்பரை ஆள்வோயே பேயேன்
அன்பினுடன் தலை சூடிடு செஞ்சரணாளே மாறாதார்
தானவ மரகத மேனி இளங்கிளி தாலோ தாலேலோ
சந்த இளம்பிறை வாள்நுதல் அந்தரி தாலோ தாலேலோ. 34
----------------------
வேறு
அந்தரி தாலோ நிரந்தரி தாலேலோ
அம்பிகை தாலேலொ வாயார
அன்பர் உளோடு ஓதும் ஒண்பரை தாலோ
அருஞ்சிவை தாலோ சர்வான்மாவுந்
தந்தவ தாலோ புரந்தவ தாலோ
தலந்தனிலே மேல் எனா மேலோர்
தங்கள் சொலார் வீரையம்பதி மாதா
எனுங் குயில் தாலேலோ
தானான சுந்தரி தாலோ சவுந்தரி தாலோ
துறந்தரி தாலேலோ தூயானாஞ்
சுந்தரனோடே இடம் பொலி மான்நேர்
சுதந்தரி தாலேலோ தாலேலோ
வந்தனையோடே நினைந்திடுவார்பால்
வளர்ந்தவ தாலேலோ தாலேலோ
மண்டு ஒளிர் பூணார் இளங்கிளியாம் ஆதி
வஞ்சியே தாலேலோ தாலேலோ.! 35
------------------------------------
4. சப்பாணிப் பருவம்
எண்திசையும் எத்தலமும் எவ்வுயிரும் ஒருமிக்க
ஈன்றருளு(ம்) மலைமங்கை உன்
எழில் நுதலை ஒவ்வாது தினம் உருகி அலைமூழ்கும்
இந்தினொடு நாள்களுறு விண்
அண்டர் உலகு ஒளிர் கமலன் அரி அண்ட மண்டலம்
அனந்தன் உலகோடு எங்கணும்
அமர் உயிர்கள் ஆங்காங்கு காண்கின்ற
ஆதார ஆதேயமாம் பொருள்களைக்
கண்டு மருளுண்டு பின் காண விரலாற் கருணை
காட்டுவிப்பவள் போலவே
சுந்தரம் அது ஒத்த கறை சுந்தரம் அமைந்த அவர்
கண்களில் அமைத்து எடுத்த
தண்தளிரின் வண்டுகள் கலிக்கின்ற கைகொண்டு
சப்பாணி கொட்டி அருளே!
தானவர்கள் பகை வெல்லி வீரை மரகதவல்லி
சப்பாணி கொட்டி அருளே! 36.
---------------
தன் பதிதனைப் பழித்திடு நுதலி நமது எழில்கள்
தமையும் பழிப்பள் என்றே
தாரகை கண் மூவேழொடு ஓராறு மகிழ்வினொடு
சார்ந்தென வரிச் சிலம்பார்
ஒன்பதுறு வீரர்கள் உதித்திட்ட செம்பஞ்சு
உறுத்து அடிகள் சேப்பேறவே
உள்ளமுடன் உடல் வாயும் ஒருமித்து இயற்று பணி
ஒப்பற்ற விச் சாவதிக்கு
அன்பினொடு மகள் ஆகு முன் மூன்று பருவமுடன்
அகில முழுதும் புரந்த
அருள் அழகினொடு நின்று வரம் அருளும்
இதழ் ஒத்த வந்துப் பணிந்திட்டவோர்
தன்புகழ் விளங்க வரதங் காட்டும் அங்கை கொடு
சப்பாணி கொட்டி அருளே.!
தானவர்கள் பகைவெல்லி வீரை மரகதவல்லி
சப்பாணி கொட்டி அருளே! 37.
-----------------
தங்கச் சிகர மேவு செங்கற் சிலையதாகத்
தன் கைச் சிறப்பார் பரன்
சந்திரப் பிறை இது என்ற இந்திரத் தனுசை வென்ற
சந்தத் திலக வாள் நுதற்
பங்கத்திலுறு கெண்டை புங்கத்தினொடு சண்டை
பணல் ஒத்திடப் பாய் விழி
பண் சித்ரமொடு சொற்ற ஒண்புத்திரன் மொழிபெற்ற
பைம்பொற் குழைகளார் செவி
சிங்கத்தினிடை ஒன்ற அஞ்சத்தின் நடை என்ற
செங்கேழ்க் கமல பாதமுந்
திகழச் செவ்வரியுற்ற இமைகொட்டி அமுதிட்ட
தெளி சொற் பழகு சீரொடு
சங்கத்தை வளர் சத்தி சங்கத்தர் தங்கச்சி
சப்பாணி கொட்டி அருளே!
தானவர்கள் பகைவெல்லி வீரை மரகதவல்லி
சப்பாணி கொட்டி அருளே.! 38
------------------
வாள் அத்திர வேல் தண்டு நீள் உக்கிரமொடு தண்டு
வருப்பாளினும் என்று விண்
வச்சிரதரன் அச்சமொடு கப்பங்கள் இவர் என்று
வரவிட்டது என விஞ்சையர்
தோளிற்கு ஒளியாழ் கொண்டு நாளில் திரி நாகங்கள்
சுவை கொண்டு எழுந்து ஆடிடச்
சுத்தப் பதுமை போன்று இனிக்கத் திரமொடு நின்று
சுரமுற்ற இசை பாடலும்
வேள் இக்குறு நீள் புருவ வானச் சூர்அர
மாதர் கண் மொட்டு ஒத்து அசைந்தாடலு(ம்)
மிக்கப் பிரசிக்க இதழ் வைத்துச் சுவைத்து
ஒழுகி விரையுற்ற கைகொண்டு நீ
தாளப் பிரமாணுடன் நீள் உக்கிர மேளமொடு
சப்பாணி கொட்டி அருளே!
தானவர் பகைவெல்லி வீரை மரகதவல்லி
சப்பாணி கொட்டி அருளே.! 39
---------------
பொன் இரும்பு இரசிதப் புர அவுணர் தங்களைப்
புங்கவர் பொருட்டாக வெண்
பொடிபடக் கொழுநராம் பூமீசர் செய்த நகை
புதுமையே என்று அன்பர்கள்
நன்னயங்களினோடு உள் நலிவின்றி மகிழ்வோடு
நண்பில் களித்து ஓங்கியே
நளின முக மலர வரு நகை செய்து புகழ் கொண்டு
நவிலரிய மவுனத்தொடு
பன்னருந் தொண்டர்களை வம்மின் வம்மின் என்ற
பண்புபெற வாய் மலர்ந்தே
பகர்தலினை ஒக்குஞ் சிரக்கம்ப மோடே
பரிந்து அழைக்கின்ற ஓர்
தன் இரும் பங்கயக் கைம்மலரினைக் கொண்டு
சப்பாணி கொட்டி அருளே!
தானவர்கள் பகைவெல்லி வீரை மரகதவல்லி
சப்பாணி கொட்டி அருளே! 40
-------------------
வானத்தின் மீன்கனொடு போர் உற்று எழுந்தது என
வளர்வுற்ற கயல்சேர் கொடி
வழுதி வழியிற் சித்ரசேனனது மகன் நாமம்
வாய்ப்பச் செய்திடுவான் நகர்
ஆன்உற்ற கொடியோடு மேவுற்று உள்
அன்பினால் ஆறுமுகன் ஆதியரை முன்
னாறாட்டிடுங் குறை அகற்றிடுவல் எனப் போன்று
அன்போடு புன்பாவையைத்
தேன்உற்ற நானந் திமிர்ந்து இணைக்கால்களில்
சேர்த்தி நன்னீராட்டியே
செந்துகில் புனைந்து சில பொன்கலன் அணிந்து பல
சீராட்டி விளையாடு கற்
றானத் தனிக்குழவி என அருளும் மெல்லியே
சப்பாணி கொட்டி அருளே!
தானவர்கள் பகைவெல்லி வீரை மரகதவல்லி
சப்பாணி கொட்டி அருளே! 41
----------------
வேறு
கஞ்சமலர்க் கிழவன் சிகு தங்கிய
கட்டழகுற்ற அனக் கொடியுங்
கந்தர மெய்த்துளவன் புடை இன்புறு
கற்பொடு பொற்புறு வித்தகியும்
அஞ்சி நடித்து உயர் அஞ்சலி தந்து உள
அற்பின் இணைக்கை குவித்துருகி
அங்கண் அலர்க்கொடி அந்தரி சுந்தரி
அற்கள நற்பர மெய்ச் சிவனாஞ்
செஞ்சிலை மொய்த்தடர் பைங்கொடி என்றணி
சித்திர மெய்ப் புனைவிற் பிழை ஒண்
செம்பொன் இழைத்திடும் அந்துகிலின் பிழை
சித்தம் அதுஉற்று அறிவிப்பவள் போல்
கொஞ்சி அடித்திடு மங்கை நயங்கொடு
கொட்டுக சப்பாணி கொட்டுகவே!
கொன் பொருநைத்துறை அம்பதி அம்பிகை
கொட்டுக சப்பாணி கொட்டுகவே.! 42
-----------------
வஞ்சமது ஒன்றிடா நெஞ்சினர் நாடி உள்
வாய்மையால் உற்று நிலைத்துறினும்
வந்தினை உண்டு மேயம்பினுந் தீயினு
மாகமோடு உற்ற வனத்துறினும்
பஞ்சிதம் என்ப நீள் அன்பர் ஒண்பாடல்கள்
பாடியே முட்டி நெருக்குறினும்
பஞ்சடியின் தராசங்கடன் பால்உள
பாசமாய் அட்டை நிறுத்தருளி
விஞ்சையர் தொண்டு அறாது உம்பரின் பேரிகை
வீரவோலிட்டு நிரைத்திடு நீள்
விண்டு அயன் உம்பரோடும் பணிந்தே தொழும்
வீரை மா நத்தம் அது உற்றிடும் ஓர்
கொஞ்சும் இளம்புறா மென்கிளி நேர் உமை
கொட்டுக சப்பாணி கொட்டுகவே!
கொன் பொருநைத்துறை அம்பதி அம்பிகை
கொட்டுக சப்பாணி கொட்டுகவே.! 43
----------------
சந்த வேதங்கள் ஓதுஞ் சதானந்த மாதங்கியே!
சத்தி உருத்திரையே!
சம்பு நீள் அங்கி வேதண்டமா நின்ற நாடள்
செலா மெய்க்கருணைத் திறலால்
அந்த ஏமங்கியே தண்டரா நின்ற ஓர்
அஞ்சமே! பச்சைவனக் கிளியே!
அண்டம் ஊர் மங்குலாருங் கலாபங்களோடு
அஞ்சமார் நற்பொழில் உற்று இலகு
கந்த மேல் நின்று காதங்கள் போய் ஒன்றும் ஏர்
கண்ட வீரைத் தலம் உற்றிடு வண்
கங்கை சூடு அங்கண் ஈசன் தனோர் பங்கியே!
கண்கொளா வித்தை விளைப்பவளே! வை
குந்தமார் அங்கண் மால் தங்கையே! மங்கையே!
கொட்டுக சப்பாணி கொட்டுகவே!
கொன் பொருநைத்துறை அம்பதி அம்பிகை
கொட்டுக சப்பாணி கொட்டுகவே.! 44
--------------------
வேறு
இடியுறு கொடி உனது அணி அரவால் உள் இளைத்து விண் உற்றாட
எழுதரு மறை துதி எனு முறை ஓலமது இட்டு விதிர்த்தாட
இலகுறு ககபதி திகழுறு நீள்கொடி இட்டளம் அற்றாட
இகலுறு கலுழனும் வெருவிட மூடிகம் எக்களியிட்டாட
வடவை இது என விழியொடு திரி கோழி மதத்தொடு அசைத்தாட
வகை வகையொடு பலர் மருவுதலே மகரக்குடி ஒப்பாக
மலியவை நிரலுறு வகை மழஏறு மதித்து அலைவுற்றாட
மலருறு நினதடி அருளுயர் தேனை மடுத்திட உற்றார்கள்
கடிகமழ் அளகமொய் அலர் அளி வீழ ஓர் கட்கணை ஒட்டாது
கருவிழி ஒழுகு அருள் அமுது கொள் சேடியர் கட்கடை கொட்டாத
கவினுடன் உளர் பல மணிவளையே இரு கைக் கருணைக்கான
கடி மிக எழிலுறு திசையிலும் ஆடிடு கட்டவிழ் கைப் போதாற்
குடிகுல மறு பரனொடு திருவீர வகுப்ப மதுற்றேரார்
குவலயமொடு பல புவனமு நாடுறு குட்டரி நற்சேயாய்க்
குழகொடு வளர் இள மரகத நாயகி கொட்டுக சப்பாணி!
குவடுறு சிலை அரனிட மொய் பராபரை கொட்டுக சப்பாணி! 45
----------------------
முத்தி எவர்க்கும் அளித்திடு(ம்) மெய்ப்பொருள் மொய்த்து அருளைக் கூறு
முத்தமிழ் உட்சுவையைக் கழை சர்க்கரை முக்கனியைப் பாகை
மொக்குள் உடைத்து மதத்த சுருப்பு வடித்திடு நற்றேனை
முற்செய் தவத்தில் உதித்தனர் ஒத்து எதிர் உற்றவர் சொற் கூழைப்
புத்தமுதத்தை நிகர்த்து வடித்திடு தட்டுரை மெய்தேறல்
புத்தகம் உற்ற அடிக்கமலத்தோடு புக்கும் ஒழுக்கேய
பொய்ச் செயலைத் தெறு முத்தர் த(ம்) மெய்த்தவ முற்று வனத்தே நீள்
பொற்புறு பச்சை மணிக்கொடி பற்றி உதித்திடு மெய்ச்சீரே
ஒத்தது எனத் திகழ்வுற்று எவர்கட்கும் உரித்துடை நற்றாயா
உற்று உறைக் கைக்கிளி சொற்குயில் பொற்சிகி ஒத்த வனப்பாரும்
உத்தம நற்குணி தற்குணி சற்குணி உத்தமர் உட் காண
உற்றிடு பொற்கமலப் பத மைக்கணி உத்தமி பொய்ப்போடு
குத்திரம் அற்றவர் சித்த நிலத்து முளைத்து எழு நட்போடு
குட்டரியைத் தனதத்தன் எனக்கொடு உதித்த எழிற் பூவின்
கொத்தணி மெய்ப்பரை தற்பரை சிற்பரை கொட்டுக சப்பாணி!
கொக்கிறகைப் புனை அத்தன் இடத்து உமை கொட்டுக சப்பாணி! 46
--------------------------
5. முத்தப் பருவம்
புத்தகம் இசைத்திடை இளம்பிறை இணைத்து முற்
பொற்றுண்ட வித்துரும மேற்
புது மதிகளைப் பிணைத்து அருகு இலகு கோபங்கள்
போர்த்தன அனத்தூவியுங்
கொத்தலர் அனிச்சமும் செம்பஞ்சும் அஞ்சு
மென்குளிர்க் கமல ஒள் அடிகளால்
கொடுமைகள் சிதைந்து உனது சிந்தனை இயற்ற என்
குவடு ஒக்கும் உள் உடையவே
பத்தி படும் உர மீது தைத்தும் இருவிழி மாசு
பாறிட அமைத்து முற்றும்
பரிவிலா விதி வரி அழிந்து உனை வணங்கிடும்படி
தலை நடந்து வந்தே
சுத்தமுறு வீரைநகருற்ற மரகதவல்லி
துவர் வாயின் முத்தம் அருளே!
சுக மெச்சு மழலை மொழி மதி மெச்சு நகை இதழி
துகிர்முத்த முத்தம் அருளே! 47
-----------------
தடையற்று வருக என்று அடியர்க்கு இசைப்ப போல்
தனி வீரையம் பதியினில்
தலையெட்டு கொடி அசைய இணையற்ற
அரசு புரிசடையில் தண்நதி தாங்குமோர்
படையுற்ற மழுவலர் கை இடமுற்ற உழை உடையார்
பகை காமனுக்கு ஆனவர்
படியுற்ற மகள் பரவ ஞமனுக்கு இன்னருள் புரி ஓர்
பரமுத்த அத்தர் இடமார்
மடையுற்று வழியும் அருள் நிறைவுற்ற விழ எழிலி
வலி தீர மொய்த்த குழலி
மகிழ்வுற்ற மரகதவில் ஒளிவுற்ற உமை அமலை
மலை பெற்று உவக்கு மகளாந்
தொடைவுற்ற பணை அனைய புயமுற்ற அருள் அழகி
துவர் வாயின் முத்தம் அருளே!
சுக மெச்சு மழலை மொழி மதி மெச்சு நகை இதழி
துகிர்முத்த முத்தம் அருளே.! 48
-------------------------
வேறு
அடியிற் கமலமது மலர்ந்த அலர்க் கொம்பிடை மேல் தலைத் தாலம்
அடர்ந்து ஆங்கு அளகத்து எழிற்கு அஞ்சி அகன்று ஆகாயந் திரிதல் எனும்
படி விண்ணோடுங் கொண்டலையும் பற்று மரத்தில் தூக்கணங்கள்
பரிவில் தூக்குங் குடம்பைகளில் பண்ணைச் சாலித் தரளம் அதைக்
கடிதில் கொடுபோய் விளக்கிட நற் கவின் நீர் வாவி புறத்தமரக்
கனகப் புவி போல் வளரும் அலங்காரப் பொழிலார் வீரைநகர்
குடி கொண்டுறையு(ம்) மரகதப் பைங் கொடியே! முத்தந் தருகவே!
குன்றச் சிலையான் இட(ம்) மருவும் குயிலே! முத்தந் தருகவே.! 49
----------------
கந்தச் சிலையில் நின்றாடிக் கலைகள் எடுத்து விளவு எறிந்து
காட்டு ஆன் திரட்டிக் கழை எடுத்துக் கவினார் முல்லைப்பதி ஓடிச்
சிந்தத் தயிர் பால் நவநீதஞ் சேரப் பருகி மலர் புனைந்து
திருமால் ஆடுஞ் செயல் போன்று திகழ்ந்து வளைந்து சிறப்புறு நற்
சந்தப் பொருநை அலைகொழிக்குஞ் சங்கு ஓடி இப்பி முத்தம் அதாற்
சமையுங் கரைசேர் திருவீரைத் தலத்தின் வாழ்வே! தழைத்த நறுங்
கொந்துக் குழலார் மரகதப் பைங்கொடியே! முத்தந் தருகவே!
குன்றச் சிலையான் இட(ம்) மருவுங் குயிலே! முத்தம் தருகவே! 50
------------------
பிரமன் மருகி கத்துருவின் பிரிய சுதராய்த் திசை காக்க
பெறும் வாசுகி ஆதிய அரவிற் பிறக்கு(ம்) முத்தம் விடம் வீசுங்
கரமன் முகச் சுப்பிரதீபக் களிறு ஆதிய வெண்மருப்பில் வருங்
கனத்த முத்தங் கடிமையொடுங் கரிமுத்து என்னும் பெயருமுறும்
அரியும் விதியுந் தினம் பணியும் அருளார் திருவீரவனல்லூர்க்கு
அரசா மரகதாம்பிகை நின் அருளார் புதல்வர்க்கு அளித்திடும் ஓர்
குரலின் குமுத மலர்வாயின் குறைதீர் முத்தந் தருகவே!
குன்றச் சிலையான் இட(ம்) மருவுங் குயிலே! முத்தந் தருகவே! 51
-----------------
காலன் தொழுது கதி பெறு நின் கவினார் வீரைநகரிற் பெய்
காரின் முத்தம் விழும் விசையால் கன்றிப் புகராங் கடல்மீதில்
பால் என்று ஒளிர்ந்த விடைச் சுறவின் பளிங்கு ஏய்முத்தம் அலைப்படும், அப்
பசுவின் முத்தமுறு முத்தன் பணைக்கண் முத்தம் ஒத்ததெனச்
சீலந் திகழ முத்தமிடத் திறக்குங் குமுதவிதழ் அவிழுஞ்
சீரார் முத்த நகை வாயைச் சிறுசேய் கொள்ள உதவுவ போல்
கோலந் திகழு மரகத மென்கொடியே! முத்தந் தருகவே!
குன்றச் சிலையான் இட(ம்) மருவுங் குயிலே! முத்தந் தருகவே.! 52
---------------------
தென்றல் குடியா மலைக்குணமார் திருவீரவனல்லூர்க்கு அரசாய்ச்
செங்கோல் ஓச்சு மரகதச் செந்தேனே! மைக்கண் திகழ் மயிலே!
மன்றல் கமுகின் நித்திலமும் வளருங் கன்னல் தரளம் அதும்
வனச மணியு(ம்) நத்தார மதுவுங் கதலி மௌத்திகமும்
ஒன்றற்கு ஒன்று அங்கு ஒப்பறலோடு உரிய விலைகள் அளவுளதாம்
உடையான் அடி தேடரிக் கேழல் ஒளிர் பன்முத்தும் விளைந்தில நின்
குன்றிக் களங்கமறு குமுதக் குளிர்வாய் முத்தம் தருகவே!
குன்றச் சிலையான் இட(ம்) மருவுங் குயிலே! முத்தந் தருகவே.! 53
---------------------------
வேறு
கரியினைத் தண்தடம் அதற்கண் கவர் அனற்கண் முசலியின்
கழிவு முத்தங் கரடு முற்றுங் கருணைமுத்தங் கவினுற
அரசு இயற்றுந் தவ வனத்து என்பணி இடத்தன் பரிணமார்
அரனொடு ஒத்து இன்பொடு வசித்து இங்கு அருள் கொழிக்கும் கயல்விழி
மரகதப் பைஞ்சுடர் விரிக்கும் வளர்உமைக்கண் திகழுமா
மணமுறச் செந்தளம் அவிழ்க்கும் வனசம் ஒக்கும் பத உமா
சரவணத்தன் கயமுகத்தன் சந்நி முத்தந் தருகவே!
தளவ மொய்க்கும் குமுத முத்தந் தமிழ முத்தந் தருகவே.! 54
-------------
குவயத்து இன்புற மணங்கும் குடிதுதிக்கும் தகைமையாய்க்
குல வசிட்டன் குடி புரக்கும் குயிலி முத்தங் களமுறற்கு
கவசமுற்று அம்புய அடிக்கு அஞ்சலி இயற்றும் பெருமை தேர்ந்து
அருளளித்து அன்புறு நிழற் சிந்து அளவின் முத்தந் திகழவே
புவனமுற்றும் கதி விளைக்கும் பொருநை சுற்றுந் தலம் அதாய்
புலவர் மெச்சுந் தமிழ் வளர்த்த தம்புகழ் மிகைத்து இன்பு உயர்வுறுந்
தவ வனத்து ஒண் மரகதப் பெண் தளிரி முத்தந் தருகவே!
தளவ மொய்க்குங் குமுத முத்தந் தமிழ முத்தந் தருகவே.! 55
---------------------
விமலை முத்தந் தருக முக்கண் விறலி முத்தந் தருக நல்
விரதமுற்று அன்பொடு துதிக்கும் விபுதருக்கு இன்பு அருளும் ஓர்
இமய வெற்பன் குழவி எற்கு இங்கு இரதமுத்தந் தருக என்
இதய நிற்குங் கவுரி முத்து என்று இலகு முத்தந் தருக ஒண்
ஞிமிறு மொய்க்குந் தவ வனத்தின் ஞெகிழ முற்றங் கழல் அரி
ஞிமிறுரு மைக்கண் மரகதப் பெண் ஞெகிழ்வின் முத்தந்தருக நீள்
சமய முற்றும் பரவி நிற்குஞ் சரசி முத்தந் தருகவே!
தளவ மொய்க்குங் குமுத முத்தந் தமிழ முத்தந் தருகவே! 56
------------------
வேறு
வித்தக மிஞ்சும் இளங்கிளி அந்தரி மித்ரி உருத்திரை நல்
வீரை வளம்பதி மேவிய சுந்தரி மிக்கவருக்கு அருள் மா
சத்தி சவுந்தரி சங்கரி அம்பிகை தற்பரை ஒப்பறு நீடு
தார் அணியுஞ் சிவகாமி இளங்குயில் சற்குணி நிற்குணியே
சித்தசனங் குடை என்று எழும் இந்து செனித்திடு முத்தமுமே
சீரில் களங்கம் அதோடு விளைந்தது செப்புறு கொக்கொடு பன்
முத்தினை வென்ற இளந்தசனஞ் செறிமுத்தம் அளித்தருளே!
மூஎயில் வென்றவர் பாகம் அமர்ந்தவள் முத்தம் அளித்தருளே.! 57
---------------
6. வருகைப் பருவம்
விண் தடவு தண்டலைகள் அண்டர் அர்ச்சனை
என்னவே மலர் உதிர்க்கின்ற ஓர்
வீரைநகர் மேவும் உயர் பூமிசர் பாகங்கொள்
விமல மரகத வல்லியே
கொண்டலது நின் குழலினுக்கு ஒல்கினும் பொழிதல்
குறையாது பார் நினது அடி
கொளற்கு ஓவாது எனினும் பெறற்கு அருமை
என்று உனிக் கொண்டாடியே கொண்டிடும்
வண்டு உழும் அனிச்சப் பரப்புகள் கசங்கிட
மற்றஞ்ச முடி நையுற
வானவரு நாடும் உயர் மாதவ நிறைந்த நறு
மலரடி பெயர்த்து ஓடியே
செண்டிலகு செங்கைகளின் வண்டுகள் கலிக்கின்ற
சீரினுடனே வருகவே!
செஞ்சிலம்பொடு தண்டை மிஞ்சி கிண்கிணி
கொஞ்சு தென்பாத மயில் வருகவே! 58
-------------------
கும்பமுனி உறைகின்ற தென்கயிலை என நின்ற
குவட்டின்கண்உறு மான் இனங்
குறிய தினை கவர் பொழுது கிள்ளை முடி
மடிபடக் கூறு தன் கன்று உன்னியே
அம்பர் இழி பால் உலர்வு கற்பூர வண்டல் என
அள்ளி வயல்கட்கு ஏகும் ஓர்
அலை என்ற கரமோடு அறஞ்செய் பொருநைக் கிழவி
அணைவுற்ற வீரை நகரின்
உம்பரொடும் இம்பர் தொழ உறைகின்ற மலைமங்கை
உரியவர்க்கு அருள் அம்பிகை
உரிமையொடு செழியரிற் சித்ரசேனற்கு அருள
ஒளி கொண்ட வெளிவந்திடும்
செம்பொன் உறு வரைவல்லி பங்கின் மரகதவல்லி
செல்வியங் குயில் வருகவே!
செஞ்சிலம்பொடு தண்டை மிஞ்சி கிண்கிணி
கொஞ்சு தென்பாத மயில் வருகவே.! 59
----------------
மங்கையர் சுவைக்க நட்புற நோக்க நிழல் செய்ய
மதியாது தைக்க நிந்தை
வசனிக்க நகை செய்ய மார்போடு அணைக்க
இசை வாய்கொண்டு பாட மலருந்
துங்க மகிழ் சீவனி மரா சண்பகம்பிண்டி
சூழ் பாடலம் மாலதி
துளிர் குரா வாசந்தி எவையும் ஆங்காங்கு உனது
துணையாகவே மலர் தரப்
புங்கவர் வணங்கு அறிஞர் ஒண்தவசு புரிகின்ற
புயல் ஓங்கு வனம் என்னு(ம்) நற்
புகழ் மேவு வீரைநகர் தனில் வாழு மலைமங்கை
பொற்புறவு சொற் பூவையாம்
செங்கை வளை அனம் மெல்லி இன்சொல் மரகதவல்லி
திகழ்கின்ற குயில் வருகவே!
செஞ்சிலம்பொடு தண்டை மிஞ்சி கிண்கிணி
கொஞ்சு தென்பாத மயில் வருகவே.! 60
---------------------
நீண்ட நேமிக் குவடு சுவர் எண்மர் சூழ்கால்
பொன்நேர் அசல நடுநட்டு விண்
நிழல் மாடமுற்று இரவி மதி தீபம் இட்ட மனை
நின்று உயிர்கள் செய்வினைகளைக்
காண்டக அளந்து அளவையின் எழு பிறப்பும்
கதிக் கரையும் ஆற்றிடுதல் ஆம்
காரிய நடத்தல் அறிவிப்பள் போல் முத்துக்
கழங்காடு மொய் குழலியே
தூண்டு கோல் தளர்கின்ற சுடரினுக்கு எனவுற்ற
துணை சுருதி என்று ஓதியே
சூழு மல மாயைகள் தொலைத்து அறிவு மயமான
தொண்டர் தொழு வீரைநகர் வாழ்
சேண்தழீஇய கிருபை ஓங்கு மரகத
சிவை எனுங் குயில் வருகவே!
செஞ்சிலம்பொடு தண்டை மிஞ்சி கிண்கிணி
கொஞ்சு தென்பாத மயில் வருகவே.! 61
-------------------
வேறு
மலை மகளாம் என வந்தபின் அறுமுக
மதலையை அளித்ததுவோ முன்போ
மதமழை என அருள் மழைபொழி கயமுக
மதலையை அளித்ததும் எப்போதோ
வலைஞர்கள் இறைமகள் எனவுறில்
இருபுதல்வரும் அரனிடை மறைகளை வாரி
வாரியில் விட்டதும் என்னென மாமகள்
மச்சினி முறை கொடு வினவிடினுங்
கலை மதியொடு கடல் வந்தபினோ மதக்
காளையை அளித்ததும் அல்லாதக்
காலமோ கடலுள் இலங்கையின் உற்றது
கழறு எனு மறுப்புற களிப்போடு என்
தலைதரு மலரடி மரகத மென்கொடித்
தாயே அருள்செய வந்தருளே!
தவவன வீரை நன்கர் வளர் இளமயில்
சாம்பவி அம்பிகை வந்தருளே! 62
--------------------
நஞ்சணி கந்தர நாயகன் இயற்பகை
ஞானியின் மனையை அவாப் போல் உள்
நாடி இரந்தது நகமகள் என்ன நீ
நண்ணிய அமயமோ பின் போதேன்
கொஞ்சிய சொல்லி என் மரகதவல்லி மெய்
கூறுக எனினும் அக்குழகுடைய
கோகன கை எனும் மாமகட்கு அதில் நிறை
குறைவிலை அருளுறு நிலையா நீ
வஞ்சி எனத் திகழ்வுற வரி பிருந்தையை
வாழ விரும்பினன் இதை நீயே
வாய்நவில் என்று வழக்கிட உண்டு எனு
மகிழ்ச்சியின் வருக எந்தாய் எனக்குத்
தஞ்ச நின் அஞ்சரணங்கள் அலாது இலை
தற்பரை அருள்செய வந்தருளே!
தவவன வீரை நன்னகர் வளர் இளமயில்
சாம்பவி அம்பிகை வந்தருளே.! 63
------------------
வேறு
வளை சூல் உளைந்து புரண்டு வயல்
வளைந்தே நின்ற வயற் புறத்து
வாளைநிகர் கண் கடைச்சியர்கள்
வாளை மோத அகழ்ந்து எறிந்த
களையோடு உயிர்த்த வெண்முத்தங்
களையோடு ஒளிர முத்தமுடன்
கடையர் வாரிக் கண் அளந்து
கடையிற் குடித்துக் களிகொள நெல்
விளையா நின்ற வளத்தொடு விண்
விளை பூம்பொழில் சூழ் வளமுறும் ஓர்
வீரை சூழுந் தரணியில் நல்
வீரை நகரந்தனில் வளருங்
கிளையார் முத்தன் இடமருவு எங்
கிளையே வருக வருகவே!
கிழியே போலு மரகதப் பைங்
கிளியே வருக வருகவே.! 64
---------------------
அரிகம் பணியும், அத்தி, அதழ், அறுகும், பணியும், அத்தியுமே
அன்போடு அணியும் பரனிடம் அந்துகிலோடு அணியும் பொலி பரையாய்
விரைதார் வீரவன்மன் உளம் விரும்பும் வீரவன் மனலூர்
விளைவே மரகதன் புகழ மிளிரு(ம்) மரகதாம்பிகையே
வரியார கலகல் எனக் கைவண்டு கலகல் என மிளிரு(ம்)
மழைக்கண் வாரி அருள் ஒழுக மார்பில் வாரின் மணி ஒளிரக்
கிரிசைக் குயில்நேர் அளகமுறுங் கிரணக் குயிலே வருகவே!
கிழியே போலு மரகதப் பைங்கிளியே வருக வருகவே.! 65
------------
போதம் திகழ் காழியில் வளர்ந்த புனிதக் குழவி பால் கருதிப்
புலம்பிக் கலுழ விலை பசிக்குப் புசிக்க கொடு வா சோறு என்று
வாதில் குரு நமசிவயனும் வருந்த விலை பட்டணத் தடியும்
மகிழ்ந்து ஊட்டு அமுது என்று இரங்கவிலை வருந்தாது உயர் வீரவ நகரின்
வேதம் பரவற்கு அறிவரிதாய் வேதக் கழல்கள் கலகல என
வேதச் சிகையில் நடமிடும் ஓர் விமலப் பதங்கள் பெயர்த்தோடிக்
கீதம் பயிலும் வண்டோதிக் கிரிசைக் குயிலே வருகவே!
கிழியே போலு மரகதப் பைங்கிளியே வருக வருகவே.! 66
-------------------
பாசத் தளைகள் தமை அறுத்துப் பரவும் அடியார்க்கு அருள்புரியும்
பரையே வருக! அடருமலப் பகையே வருக! பனிக்கடல் சூழ்
தேசத்து இணையில் வீரைநகர் செழிக்க வளருஞ் சிவையாம் என்
தேனே வருக! எனது பவஞ் சிதைக்க வருக! அருள் ஒழுகு
மாசு அற்று ஒளிராடிக் கதுப்பின் மணக்கு முத்தம் இதழ் முத்தம்
மலர்ச் செங்கரங்கண் முத்தமொடு மகிழத் தரும் ஒண்கழற் சீர்க்கு என்
கேசத்து அயன் கையெழுத்து மழுங்கிடத் தாள் அடித்து வருகவே!
கிழியே போலு மரகதப் பைங்கிளியே வருக வருகவே.! 67
--------------
வேறு
வேத விதி வழுவாத மறையவர் மேவி நிரைநிரை மருவியே
மேக மழை ஒழியாது சொரிதர வேள்வி புரி ஒலி அரசர்கள்
வீறொடு இரதம அதுஊரும் ஒலி பொனொர் கூல மணி துகில் விலைபகர்
வீதி ஒலி வயல் நாறு தொடும் ஒலி மீள அவை நடும் ஒலிகளை
வீசும் ஒலி கதிராடும் ஒலி அவை வீழ அடும் ஒலி களம் அதில்
மேவி அடிகொள் நெல்வீசும் ஒலி பொலிவீசி அளவு ஒலி சகடமேல்
வீதி வரும் ஒலி வீடு சொரி ஒலி வீறு கொடை மண முரசு ஒலி
வேலை ஒலிகெட நீடி வளருறு வீரை நகரினில் உறையும் ஓர்
பாதி மதி அரவு ஆறொடு அறுகு அளிபாயு மலர் பலபுனை சடை
பாலின் ஒளிர் திருநீறு தரும் ஒரு பால விழி அருள் இணை விழி
பாசமறு பொய் நிசாசரின் எயில் பாற நகைபுரி பவளவாய்
பாயும் உழை மழு நீடும் எழிலொடு பாச நமன் உதைபட மலர்
பாதம் அணை கதிசேரு நெறிவரு பாப முயலகன் முதுகிலே
பாரினொரு விணும் ஏதம் அகல உபாய நடமிடு பதம் இவை
பாளியுறு குறி நாடி உளமொடு பாரர் இவை தொழ அருள் செய் ஓர்
பாச மழவிடை ஏறு பரன் ஒரு பாகமது தனில் இலகியே
சீத நனிமிகு பாலும் அமுதொடு தேனும் உயர்கழை இரதமுஞ்
சீனி குளமடு பாகு திரிகனி சேரும் இரதமும் வடிகொடு
சேர விரவி உள்நாவின் உருசிகொள் சீரின் அவனுடன் இனிமையாய்ச்
சீவனுடையார் யாரு நமதுயர் சேயர் எனுமுறை உளம் உளித்
தீய சில சிலர் பாவவினை பல தீது செயினும் அவ் விடர்கள் தாம்
தீருநெறிகள் இலாதது எனினு மெய்தீரும் என நமை நினைவதால்
தீர அருள்வது ஞேயம் என உயிர் சேமமுறு செயதிகழ்வுறு
சேதி பலவொடு நாடும் அருளொடு தீரமுடன் அவன் உருகவே
வாதின உரிமையொடு ஓது மகிமை கொள் வாய்மை மிகும் எழில் அமலையே
வாரி எனவிலை சரண் அது அளவுறுமாய் வில் அகடுசெய் வலியினான்
மாழ்கி உழலுறு பாவர் சிலரினு மானம் அழிபழி பலபவம்
வாது கெடுவினை தீது கொடுமைகள் வாழ வளருவன் எனினுமே
வாரமுடன் உனை நாடி நினைவது மாறு நெறி இலன் எனை அடர்
மாயையொடு பல பாவ வினைகளுமாள அருள்புரி மனதொடு
மானின் இணை விழியோடு என் அருகினில் ஓடி வருக முன் வருகவே
மாலை மணமொடு மேவு மரகதமாம் என் இளமயில் வருகவே. 68
----------------------------
7. அம்புலிப் பருவம்
அமுத கதிரோன், சந்ரன், அரி, சுதாகரன் அலவன்
அல்லோன் இராக் கதிரினன்
ஆலோன், நல் இந்து, இமகரன், கோன் கலாநிதி
அரிச்சிகன், சசி, சோமன், நீர்க்
குமுத நண்பன், தானவன், திங்கள், விது, மதி
குபேரன் வீபத்து முயலின்
கூடு, சீதன், தராபதி, நிசாபதியம்
குரங்கி, தண்சுடர் என்னுமே
கமுகு கழையாதி வெண்முத்துகக்கும் இனிய
கவின் முத்து குக்கு நிற்குக்
கடுவுற்ற அமுது என்ன ஓது பற்பெயருடன்
களங்கன் எனவும் பெற்றதால்
அமுதம் இலை அது தீர வீரைநகர்
அமலையுடன் அம்புலீ ஆடவாவே!
அமுது ஒழுகு சொல்லி மரகதவல்லி
அம்மையுடன் அம்புலீ ஆடவாவே! 69
-------------------------
ஆனை உயர் கொடி எனக் கொண்டனள் இவள் நீயும்
அம்மானையே கொண்டனை
ஆறுற்ற தலையனைப் பெற்றாள் நீயும் பரமன்
ஆறுற்ற தலை பெற்றனை
மான அமுதுறு நிலவு பொழிகுவாய் நீ இவளும்
வாள் நகை நிலாப் பொழிகுவாள்
மதியன் இவன் என்னல் நீ பெற்றை இவளுங் கருணை
மதியள் எனவே பெற்றனள்
வானமுடன் எவ்வுலகும் இவ் வீரைநர் நின்று
வாழ மல இருள் நீக்கியே
வாழ்த்த நின்றாள் நீயும் இருள் நீக்கி யாவர்களும்
வாழ்த்த நின்றாய் ஆதலால்
ஆனின் ஐம்பொருள் ஆடும் அரன்
இடத்து இவள் ஒக்கும் அம்புலீ ஆடவாவே!
அமுது ஒழுகு சொல்லி மரகதவல்லி
அம்மையுடன் அம்புலீ ஆடவாவே! 70
--------------------------
கருணாகடாட்சி இவள் என்பது அறிகிலை உனைக்
கயரோகி என்றும் இருகோள்
கடுவுற்ற அரவங்கள் உணும் எச்சில் என்றுங்
களங்கம் பொதிந்தது என்றும்
வரவோடு செயநின்ற சிறுவிதி மகத்தின் ஒரு
மைந்தனால் தேய்ந்தது என்றும்
மலம் அற்ற ஒரு முனிவன் உண்டு உமிழும் எச்சிதனில்
வந்த இழிசேயது என்றும்
திருவாரு கருணையால் தேராமலோ நினைச்
சீரோடு வாவா எனல்
செவ்விய மனத்தோர்கள் பிறர் குறையை நாடாத
திறமை தெரிவிப்பாள் என
அரனோடு வீரைநகர் அமர்வுற்று
அழைப்பவளோடு அம்புலீ ஆடவாவே!
அமுது ஒழுகு சொல்லி மரகதவல்லி
அம்மையுடன் அம்புலீ ஆடவாவே.! 71
----------------------------
எண்ணிரண்டு உண்டு கலை நிற்கு, இவட்கு
எண்ணான்கு இரட்டி கலைகளும் உண்டு அலால்
இயற்கை ஒளி குறைவில்லை உண்டு அடியினு
கிருகளில் எண்ணில் கலைகளும் உண்டு நீ
கண்ணிரண்டொடு மனிதர் காண அரிதாக
ஒருகலை ஒழிய மற்று ஒழிகுவாய்
கண்கண் மறையினும் உழுவல் அன்பர் கண்முன் ஆயிரங் -
கலையொடு இவள் காண நிற்பாள்
புண்ணியந் தாங்கொளாது ஏனையர்கள் கொள்ளப்
புரிந்து ஆங்கு உன் மது சக்கர
புள் உண்ண விடம் உண்ணு நினை இவள் அழைக்கின்ற
புதுமையை நினைத்து ஈசனாம்
அண்ணல் தன் பங்கில் உறை வீரைநகர்
அம்பிகையொடு அம்புலீ ஆடவாவே!
அமுது ஒழுகு சொல்லி மரகதவல்லி
அம்மையுடன் அம்புலீ யாடவாவே.! 72
-----------------------------
உலக இருள் போக்கினோம் உழை ஏந்தினோம் விண்ணின்
உடுபதி எனத் தோன்றினோம்
உப்புற்ற அமுது கொண்டோம் என்று நீ மகிழ்தல்
ஒப்பிலி இவள் முன் ஒக்குமோ
இலகும் இவள் நகை நிலவு முத்துடுவை வென்று மல
இருளோடும் உலகற்றெறும்
இறைவர் இடமான் கோண எழில்செய் விழிகண் முன் நின்
இரலைகெடும் எனல் ஐயமோ?
நலமுறு தன் மொழி அமுத அன்பர் பவ நோய்கட்கு
நன் மருந்தாம் ஆதலால்
நண்பு மிக இவளொடு நீ வந்து பணி செய்யில் உன்
நலிவொடு களங்கம் அறுமால்
அலகில் திரு வீரைநகரார் அமலர்
பங்கினளொடு அம்புலீ ஆடவாவே!
அமுது ஒழுகு சொல்லி மரகத வல்லி
அம்மையுடன் அம்புலீ ஆடவாவே.! 73
------------------
செங்கையொடு வா என உனைக் கூவுகின்ற இவள்
திரிலோகமுஞ் சென்று நீள்
திக்கு விசையஞ் செய்து ஒருநகர் நின்று கொழுநகர் பால்
செங்கோல் அளித்திட்டவள்
கங்கை தரு துறையில் ஒருதலம் உறைந்து
அன்னம் உயிர்களுக்கு எலாம் இட்டு அவர்களைக்
கடைநாளில் அரன் விஞ்சை ஓத மடிதனில்
வலது காது மேலுற வைப்பவள்
சங்கையற ஒருபதியில் எண்ணான்கு
அறங்கள் நமர்தம் பொருட்டே செய்தவள்
சாதம் அது குரு நமசிவாயற்கு அளித்தவள்
தயையொடு உனையுங் காப்பள் ஆறு
அங்கம் வளர் இவ்வீரைநகர் அரசி
ஆதலால் அம்புலீ ஆடவாவே!
அமுது ஒழுகு சொல்லி மரகதவல்லி
அம்மையுடன் அம்புலீ ஆடவாவே.! 74
------------------------------
தண்டலையை வென்று வளர் தன்குழல் எனும் புயல்
தருஞ் சிலைநுதற்கு அஞ்சி நீ
தரியாமல் விண்வழி வளைந்து ஓடல் கண்டோ
தளிர்க் காந்தள் அங்கைமலர்
கொண்டு விசையோடு விட்டெறிகின்ற வெருவினால்
கூசி நலிவது கொண்டுமோ
கோள் அரவினுக்கு அஞ்சி வெருவுதலினோ அலது
கொழுநர் முடிஆர்பு உன்னியோ
செண்டு மணிமாட மேற் கூடவிளையாடு
தன் சேடியொடு உதித்தை என்றோ
திருநகர் தனக்கு அரசு செய்தற்கு அமைத்திட்ட
செழியர் வழிமுதல் என்றுமோ
அண்டர் தொழும் வீரைநகர் நின்று இனிது
அழைப்பவளொடு அம்புலீ ஆடவாவே!
அமுது ஒழுகு சொல்லி மரகதவல்லி
அம்மையுடன் அம்புலீ ஆடவாவே.! 75
----------------------------
காசமொடு நின்னது களங்கமும் அறுக்கவோ
கடலின் அமுதங் கடையும் ஓர்
கல்லின் அடிகொண்ட ஒரு நோவுகள் தவிர்க்கவோ
கடுகும் முன் உயர் மாமனால்
தேசு குறைவு ஆதலை நிரப்பவோ நினது உரிய
தெரிவையர்களிற் சிலர்க்குத்
தீமை செய்திட்ட பழி தீர்க்கவோ
குருவுக்கு இழைத்த பழி சேதிக்கவோ
கேசவன் உளத்தனன் முகத்து அத்திரியின் விழி
கீர வாரியும் உற்று நீ
கிட்டிப் பிறக்கின்ற பிறவிகள் தொலைக்கவோ
கிருபையொடு உனைக் கூவுதல்
ஆசையொடு வந்து என் என்று எழில் வீரைநகர்
உமையொடு அம்புலீ ஆடவாவே!
அமுது ஒழுகு சொல்லி மரகதவல்லி
அம்மையுடன் அம்புலீ ஆடவாவே.! 76
--------------------
கன்னல் பெறு வில்லி விரி கவிகை என நீ நின்ற
காரிய நினைக்கில் எவரே
கருணை நிறை இவள் அன்பர் உன்தனை மதித்திடுவர்
கழறில் இவள் தன் கொழுநனாஞ்
சொன்ன மலைவில்லி நுதலால் அவனது உடலந்
தொலைந்த பினு நீள் சூக்குமந்
துணையின்றி வென்ற இவள் நின் வலி தொலைப்பள் எனல்
சொல்ல எற்கு என்ன அச்சமோ
நின்னையுறும் அவ்வசை உனது அருளின் வா என்பள்
நேர்ந்திலையேல் என்னாவையோ
நேர்விழியும் உண்டு நுதல் வில் உண்டு விழி அம்பு
நெடுவாள் வை வேல் உண்டு இவட்கு
அன்னமலி வீரைநகர் அரசி வா
என்றிடு முன் அம்புலீ ஆடவாவே!
அமுது ஒழுகு சொல்லி மரகதவல்லி
அம்மையுடன் அம்புலீ ஆடவாவே! 77
---------------
வன்பினொடு துருவன் உனை நீயாள் உடுக்களொடு
வலிகொண்டு இழுத்து அலைப்ப
ரேகை வலமாய்ச் சுழற்படுவை மாற்று அறியாத நீ
மகிழ்வொடு இவள் வா என்றிட
இன்பினுடன் வாராது இருக்கின் இவள் முனிவினுக்கு
எதிர் நிற்க வலையோ இவட்கு
ஏரம்பன் என்னும் ஒரு சுதன் உண்டு தாருகனை
எற்றும் உயர்கோடு உண்டலால்
தன்பெருமை மிஞ்சு ஆறுமுகன் என்னும் ஒரு
மகன்தான் உண்டு கை வேலதோ
தானை தனிலோ மலையிலோ விண்ணிலோ எங்கு
சார்ந்தாலுமே விட்டிடாது
அன்பின் இவர் அறியுமுன் வீரைநகர்
அம்பிகையொடு அம்புலீ ஆடவாவே!
அமுது ஒழுகு சொல்லி மரகதவல்லி
அம்மையுடன் அம்புலீ ஆடவாவே.! 78
-------------
பொன் இலகு மலையை வலமுற்றிடும் புண்யமோ
புகழ் பெற்ற இவள் கொழுநராம்
பூமீசர் முடியில் உறலால் உலகர் உன் கிழமை
புரிகின்ற தவ மகிமையோ
கன்னி இவள் சுதனான கணபதியினால் உற்ற
கழியா நின் நீசத்துவங்
கழிய அவனைச் சிங்க முன்பக்க நான்கினிற்
காசினி செய் நோன்பன்புகொல்
தன்னிகரிலாத இவள் நின்னை வா வென்றிடுதல்
தனை எண்ணின் இன்னன்னயத்
தவம் என்னவே புகல்வன் ஆதலால் அப்புகழ்
தங்கித் தழைத்து ஓங்க நம்
அன்னை எனவே வளரும் அந்தரி சவுந்தரியொடு
அம்புலீ ஆடவாவே!
அமுது ஒழுகு சொல்லி மரகதவல்லி
அம்மையுடன் அம்புலீ ஆடவாவே.! 79
-------------------------
வேறு
தானமும் தவமதுவும் அன்பொடு சாரும் இன்பமும் உதவும் இத்
தாயை அன்பொடு சரணம் என்று அடிசார ஒண்கதிர் தருவளால்
ஏனம் அஞ்சம் ஒர் இருவர் கொண்டு அடி ஏழும் அம்பரம் எழுமையும்
ஏகியும் தெரிவரியது என்றிடவே எழுந்திடு பரனொடு
வானமுந் தொழு தவவனந் தனி வாழுகின்ற நம் உமையை உன்
மாக ஒழிந்திட மயல் ஒழிந்திட வாது ஒழிந்திட வசை முதல்
ஆனதுங் கெட உள நினைந்து உடன் ஆட அம்புலீ வருகவே!
ஆயும் இன்கனி மழலை நங்கையொடு ஆட அம்புலீ வருகவே.! 80
----------------------------
8. அம்மானைப் பருவம்
தண்தரள முதலான நவமணிகளைப் பசிய
சம்பூந்தப் பொன்னிடைச்
சார்தர நிரைத்து அழகு மிகையாச் சொலிக்கச்
சமைந்து பற்பல வன்னமாக்
கொண்டு இலக நினை வேண்டு தொண்டருக்கு இடர்தரக்
குறுகாத வகையாய் மதன்
குடையான மதியாதி நவகோள்கள் தம்மைக்
கொடுஞ்சிறை செய்திட்டது ஒப்ப
மண்டு ஒளிகள் பலவாகி எண்டிசை கடந்து நெடு
வானத்தும் ஊடுருவியே
மருவித் தழைக்க மிளிர் கைம் மலரினில் கொண்டு
மந்தார மலர் மாரி பெய்து
அண்டர் தொழ வாழும் உயர் வீரைநகர் இளமயில்
அம்மானை ஆடியருளே!
அம்பூமி லிங்கரது பங்கின் மரகதவல்லி
அம்மானை ஆடியருளே.! 81
--------------
ஒடிசில் என நீல மரகதமுற்ற அம்மனைகள்
உயர் நீல முகில் கம்மவே
ஒளிசெய்து கைம்மலர் கன்உறு மணத்தோடு
உலவும் உம்பரிடையே மற்றும் ஓர்
வடிவு இலகு மாணிக்க அம்மனைகள் இரவி ஒளி
மங்கிட மலைந்து எல் செயும்
வான் முத்த அம்மனைகள் இந்து ஒளி மழுங்க
மதியோடும் உடுவோடு மாம்
படிபலவு மொய்த்து விண்ணார்தனின் பார்வையாம்
பாண விசையாம் கால் கொளும்
பந்தர் என விலகிடக் கொந்தளகம் உலைவுறப்
பங்கய மலர்க் கைகளால்
அடிமை என எனை ஆண்ட வீரவனலூர் அரசி
அம்மானை ஆடியருளே!
அம்பூமி லிங்கரது பங்கின் மரகதவல்லி
அம்மானை ஆடியருளே! 82
-------------
கைக்கருணை கொப்புளித்திடும் அமுத அருவிகள்
கடுப்ப விண் போவதும் அவை
கலைமதி இடித்து அமுது உடைந்து ஒழுகல் என்பது மக்
கடுப்ப வருவதும் அம்புபோல்
மிக்க விரைவொடும் இழைகள் இடையுறற்கு அரிதாய்
மிடைந்தும் ஒன்றோடு ஒன்றுகண்
மேவி அடிகொள்ளாது தவறுதலும் இல்லாது ,
விளையாடும் அம்மானைகள் தாம்
பொக்கமுறும் உரையாளர் தங்கள் கண்களுக்குப்
புலப்படாதே மயங்கப்
புகை போலு மொய்த்த ஒளிபொங்கிப் பரக்கவே
பூங் கைகளாற் செய்கள் ஊர்ந்து
அக்குகள் உயிர்க்கு மணி நிறை வீரைநகர் அமலை
அம்மானை ஆடியருளே!
அம்பூமி லிங்கரது பங்கின் மரகதவல்லி
அம்மானை ஆடியருளே.! 83
-------------------
சந்தமுடன் நீஆடும் அம்மனை பிடிக்க
நின்தன் சேடிமார் தேடியே
தாவிப் பரந்தே சுழன்றாடி நாடித்
தவித்துச் சலித்து ஏங்கவும்
கந்த மலர் வண்டு கலையாது அளகம் உலையாது
கலை பணி அசங்காது இவள்
கண்கள் இமையாது நுதல் சுழியாது கை வளைகள்
கலியாது கைக் கொள்ளும் ஓர்
விந்தையெவனோ என்று தொண்டர்கள் துதிக்கவும்
விபுதர்கள் படித்து ஓதவும்
விடையவனும் உள்ளங் களிக்கவும் உனை நம்புஎன்
வினைகளொடு மிடி ஓடவும்
அந்தணர் இறைஞ்சு திருவீரைநகரின் கவுரி
அம்மானை ஆடியருளே!
அம்பூமி லிங்கரது பங்கின் மரகதவல்லி
அம்மானை ஆடியருளே.! 84
-----------------
கஞ்சமுறும் இருதான் மடக்கியும் உள் ஒருகால்
முடக்கி ஒரு கால் நீட்டியும்
கவினோடு உறைந்து இருக்கின்ற பல வருணங்கள்
காழ் செய்யும் அம்மனை எலாம்
கொஞ்சி அளைகின்ற கைக் குங்குமச் சேறுண்டு
கோதில் செவ்வானம் எனவுங்
குறி கண்டு நீ செயும் ஓர் புன்னகையின் ஒளி இனக்
குணமாறி இந்து எனவும் இவ்
விஞ்சை புரி நின் தனது நடை அஞ்சும் அஞ்சங்கள்
விண்ணிற் பறப்பது எனவு
மிளிர்வுற்றும் எண்ணற்றும் விண்ணுற்று
விளையாடவே இருகை மலர்கொண்டு நீ
அஞ்சல் என எனை ஆளும் வீரைநகர் வாழ் அமலை
அம்மானை ஆடியருளே!
அம்பூமி லிங்கரது பங்கின் மரகதவல்லி
அம்மானை ஆடியருளே.! 85
------------------
பல்லாயிரங் கோடி அண்டங்கள் ஒக்கப்
படைத்து அப்படைப்பு எங்கணும்
பரவுற்றதோடு எனது பாழான மனம் என்ற
பங்கயத்திலு(ம்) நிற்கு நீ
நல்லாறு இஃது என்று அற(ம்) முயலுநரை விணுலகாள
நட்புற்று இயற்றி அந்த
நாட்டின் அனுபவம் அளவை கண்டு இவண் தவமுயல
நாட்டுதலும் உட்குறிகள் போல்
கொல்லாத விரதமொடும் அணிமாதி சித்தி பல
கொண்டு வானாறு திரிவோர்
கொள்ள உயர் வீரைநகர் உள்ளவர் விண் நெறிகின்ற
குளமுறு மனத் திரளும் அன்பு
அல்லார்கள் எறிதிரளும் ஒப்ப மகிழ்வுற்று
முத்தம்மானை ஆடியருளே!
அம்பூமி லிங்கரது பங்கின் மரகதவல்லி
அம்மானை ஆடியருளே.! 86
--------------------
வேறு
குழல் இனிதோ கழை யாழ் இனிதோ எனக் குயில் கிளி மயில் புறவாங்
குருகுகள் கனிவுற மடிதரு இனங்கிளை குளகலரொடு தழைய
மழலையின் உரையுடன் இசை பல பாடி உள் மகிழ்வொடு இறைப்பன மேல்
மகபதி உழுவலுக்கு அருள் செய முன்னு நின் மனவிசை போல்
எழலும் எழிறர இந்திரன் உயர் அயிராவதத்து இயல்தரு முத்தினையும்
எழிலிதன் முத்தினையும் பரிசு என விடல் ஏய்ந்திட வரலுமுற
அழகொடும் விரைவொடுங் கைகளில் எடுத்து எடுத்து ஆடுக அம்மனையே!
அருள் நிறையும் தனி மரகத மென்கொடி ஆடுக அம்மனையே.! 87
-------------------
பண்தரும் இன்பொடு பாட ஓர் சேய்க்கு உயர் பாலை அளித்திட ஓர்
பதியும் அமர்ந்தவள் ஆடுக அம்மனை பழைய பொன்னம்பலமுங்
கொண்டவள் ஆடுக அம்மனை காசி குடந்தை நெல்வேலியு(ம்) முக்
கூடமு(ம்) நின்றவள் ஆடுக அம்மனை குவலயமும் திசையும்
விண்தலமும் பிலமண் தலமும் பல வெளிகளும் அப்புறமும்
விரவி நிறைந்து உயிர்க்கு உயிராகி இவ் வீரைநகர்க்கு அரசா
அண்டர் துதிக்க மகிழ்ந்துறை தற்பரை ஆடுக அம்மனையே!
அருள் நிறையுந் தனி மரகத மென்கொடி ஆடுக அம்மனையே.! 88
---------------
பைங்கதிரைத் தரு செங்கதிர் அந்தினை பாறிட நவ்விகள் கைப்
பகடினொடுந் திரி பொதியையின் நின்று இழி பால் நிகர் வெள்ளருவி
பொங்கி அடித்து எழும் ஒண் துளியின் திரள் போர் என மன்னி விணில்
புகை எரி தந்திடு பொரிகள் எதிர்ந்திடல் போல நின் அம்மனைகள்
வெங்கதிரைப் பொருது சிந்தினையும் பொர மேலொடும் எண்ணிலவாய்
விரைவொடு சென்று கை வருவது கண்டிட வீரவ நன்னகர் எம்
ஐங்கரனைத் தரும் அந்தரி அம்பிகை ஆடுக அம்மனையே!
அருள் நிறையும் தனி மரகத மென்கொடி ஆடுக அம்மனையே.! 89
---------
குழைகள் அசைந்திட ஒளிகள் பரந்திடு கோல்விழி அஞ்சனமென்
குளிர்மலர் சிந்திட அளகம் உலைந்து உயர் கோகிலமும் புகழு(ம்)
மழலை மொழிந்திடும் இதழ் மது சிந்திட வாள் நகையின் கதிரா
மணிகள் இலங்கிட வியர் அமுதந்தரு வாசம் விணுங் கமழ
விழைதரு குஞ்சரமுக மகனும் கதிர்வேலவனூம் கனிய
விதவித நின் செயல் என திருகண் கொள வீரையில் இன்பொடு வாழ்
அழகிய சங்கரன் இடமுறு சங்கரி ஆடுக அம்மனையே!
அருள் நிறையுந் தனி மரகத மென்கொடி ஆடுக அம்மனையே.! 90
----------
வேறு
பத்தரும் உம்பரும் இந்திரனுங் கமழ் பங்கயனும் அரியோடு தொழும்
பச்ச மிகும் பத பங்கயம் இன்புறு பண்பினர் உள் உறவாகிடும் ஓர்
சித்தசன் நுண்பொடி என்ப மலர்ந்திடு செங்கனல் மன்னு கண் நேயர் இடச்
சிற்பரை உன்தனை என்றன் உளங்கொடு சிந்தனை செய்ய விசாலமுறு
புத்தி வழங்கிய பைங்கிளி அம்பிகை பொங்கர் விண் நண்ணுறு வீரையின் நற்
புத்தமுதங் கனியும் படி விஞ்சையர் புந்தியொடு இன்னிசை பாடிடவே
தத்தையின் இன்சொலை வென்ற இளங்கொடி சங்கரி அம்மனை ஆடுகவே!
சத்தி சவுந்தரி சங்கரி சுந்தரி அந்தரி அம்மனை ஆடுகவே.! 91
--------------------------
9. நீராடற் பருவம்
முன்பு ஓர் அனம் அறியாத கங்கையை அறிந்து அதனை
மொய்க்கின்ற எகினங்கள் போல்
முகிழ் முலை கொள் அயிராணி அபிராமியாய பலர்
முன்பு மொய்த்து அம்மம்ம என்று
அன்பொடு கலன் துகில்களின் பேழை கால்
மர மடப்பை பல காளாஞ்சிகள்
அருகு எடுத்துச் சூழ்ந்து கைகட்டி வாய் பொத்தி
ஆடைகள் ஒதுக்கி நின்று உன்
தன்பணிகள் செய்ய நறுநான களபச்சேறு
தலைமைபெறு சேடியர் எனும்
தனது நாராயணிகள் கைக்கு ஒருவர் மெய்க்கு ஒருவர்
தாட்கு ஒருவராய் நின்றுமே
பொன் பொலிவு மெய்த் தொட்டு இழைப்ப இவ்வீரை நகர்
பொங்கு புனலாடி அருளே
பூமிசர் தமது திருவாம மரகதவல்லி
பொங்கு புனல் ஆடியருளே! 92
---------------
கையுற்ற வளைகள் கற்கடகங்கள் பவளங்கள்
கங்கணங் கண் மின்னி ஆழ்
கடல் ஒத்து ஒலிக்கக் கழங்காடு
கையின் உகிர்களின் உற்ற ஒளி ஆடும் ஓர்
ஐயுற்று இலங்கும் கழங்கு எலா(ம்) மொய்த்து மதி
அமுதக் கழங்கு என்பவே
அடிமை பெறு சேடியரொடு ஒத்து விளையாடு நல்
அன்புடைய நீ அம்மனை
மெய்யுற்ற விளையாட்டினால் உற்ற வியர்வு
ஒழியவே அத்தர் தலையுற்றதால்
விளைவுற்ற பகையினை ஒழித்து இளங்கா மருவு
வீரைநகர் சூழ்கின்ற இப்
பொய்அற்ற மெய்யுற்ற பொருநையாம் கங்கைநற்
பொங்கு புனல் ஆடியருளே!
பூமிசர் தமது திருவாம மரகதவல்லி
பொங்கு புனல் ஆடியருளே. 93
-----------------
எண்ணும் அக்கருமங்கள் சித்தி பெறவும் தொய்வில்
இணையில் பவமும் தீரவும்
ஈழை பெறு வயிறுவலி குட்டங்கள் குறை நோவோடு
எண்ணில் பல நோய் தீரவும்
மண்ணவரும் விண்ணவரும் வந்து ஆடுதற்கு என்று
மணியுற்ற தளி முன்புற
வருவித்த அரன் அருளை ஒப்ப விவணமரால்
உவந்து ஆடினாள் என்பவே
வெண்ணிறக் குருகோடு செந்நிறக் கமலங்கள்
மென்குவளை தண் சைவல
மிளிர் குமிழி நமை நிந்தை செயும் என்று உன்
அவயவ மேல் மோதிடா ஆதலின்
புண்ணியத் திருவீரைநகரின் திருத்தடப்
பொங்கு புனல் ஆடியருளே!
பூமிசர் தமது திருவாம மரகதவல்லி
பொங்கு புனல் ஆடியருளே! 94
----------------
அன்பொடு உனைவா என்று அழைக்கின்ற கைக்கருணை
அம்புயத்தால் காட்டி உன்
அழகு கண்டு ஔவியமுற்றோர் என்பது உற்பல
அருட்கண்களாற் காட்டி நின்
தன்பெருமை நங்கொழுநர் உன்றனை மணம்
புரிதலைக் காண்பவே குறுமுனி
தவத்தால் உணர்ந்திட்டேன் என்பதைக்
குமுத வாய்தனை விரித்துக் காட்டியே
நின்பெயர்கொள் மணிமேனி போலப் பசந்து
தனை நேர்ந்தவர் தம் எப்பாவமும்
நீக்கும் அளியோடுற்ற இவ் வீரைநகர் உற்று
நேயரொடு விழவாடும் ஓர்
பொன்பெருகு தெப்பத் திருக்குளச் சிவகங்கை
பொங்கு புனல் ஆடியருளே!
பூமிசர் தமது திருவாம மரகதவல்லி
பொங்கு புனல் ஆடியருளே.! 95
----------------
சேப்புறாது இணைவிழிகள் நீர்க்கொளாது உயர் சிரசு
சிக்குறாது எழில் அளக மெய்
திரையாது வறளாது குடையும் எவர்கட்கும் ஒரு
செழுநகரில் ஓர் அப்பினின்
மூப்பினுடன் உயர் மனைவியோடு ஆடி இளமை கொடு
முன் வந்த அன்புடையர் போல்
முதிர்வு பவ மயல் நீக்கி இளமையொடு ஞானமும்
ஊட்டும் இக்குளம் வாழ மாக்
காப்பினோடு ஆனைந்து திலநெய் பால் தயிர் இழுது
கனி கன்னலின் சாறு தேன்
கானுற்ற ஐந்தமுதம் இளநீர் நன்மஞ் சனங்
கணவனொடும் இவ்வீரையில்
பூப்பரா உறவாடும் ஆடல் எனவே கொண்டு
பொங்கு புனல் ஆடியருளே!
பூமிசர் தமது திருவாம மரகதவல்லி
பொங்கு புனல் ஆடியருளே.! 96
------------------
சலதரத்தினை வென்ற குழலினுக்கு அஞ்சி அலை
சைவலமுறுங் கயல்கள் கண்
சரம் உண்டு துள்ளிடுங் கெளிறுகள் கை விரல்களால்
தாழ்ந்து தரையொடுறும் வரால்
இலகு நற்கால்கட்கு இடைந்து பாய்ந்திடும் அடிகட்கு
ஏங்கு கமடம் பம்மிடும்
இணைக்காலின் முட்டுக்கு உடைந்து அலவன் மட்டுழி
இடுக்குற்று ஒளித்து ஏகுமால்
அலைதரக் குழல் விரித்து ஆனன மலர்த்தி மெய்
அலைவுற்ற குங்குமம் அதால்
அந்தடஞ் செம்படாமாக மணம் விண் கமழ
அருளோடு நீ வாழும் ஓர்
பொலன் நிறைந்து ஒளிர்தரும் இவ்வீரைநகரின்
பொய்கை பொங்கு புனல் ஆடியருளே!
பூமிசர் தமது திருவாம மரகதவல்லி
பொங்கு புனல் ஆடியருளே.! 97
---------------
வேறு
கங்கை யமுனை சரச்சுவதி நனிருமதை காவிரி குமரி யு(ம்) நீள்
கனிவுறு விருத்த கோதாவரி நதியொடு கவின் மிகு கிட்டிணியும்
துங்கபத்திரையும் ஓர் சிந்துவும், நாம் எனத் தொல் குறுமுனி மலையில்
தோன்றி நின்தனை வலமாம் கருணையின் உனைத் துணைகொள வருமா போல்
சங்கு அலை கரமொடு பன்மலர் தூவி விண் தரும் ஒலித் துதியொடு நீ
தயையினொடு உறையும் இவ்வீரை நன்னகர் தனை வளைந்து எழிலொடு
நீர்ச் சங்கமமாய் வரு தாமிரபருணியின் தண்புனல் ஆடுகவே!
தனைநிகர் கோமள மரகத நாயகி தண்புனல் ஆடுகவே.! 98
-------------------------
பற்குனி கோமதை கெண்டகை பொன்முகி பழயை நாராயணிகள்
படிதிகழ் கருணை எலாம் எனது என்று உயர் பயன் நிறை கருணை எனுஞ்
சொற்கொளு மகள் என ஒரு நதி ஈன்று விண்தொழு திருப்புடை மருதூர்த்
துறையின் முற்பிரி மகட் காதலொடு அணைதலில் துணையுறு சங்கமமாய்
வற்கலை முனிவர்கள் அருந்தவ முயல நீ வாழ் தலம் எனு நினைவால்
வானவர் புகழும் இவ்வீரவ நன்னகர் வளை பொருநைத் துறையில்
தற்கர மான் மழுவோன் இடம் அமர் உமை தண்புனல் ஆடுகவே!
தனைநிகர் கோமள மரகதநாயகி தண்புனல் ஆடுகவே.! 99
------------------------
பண்டு ஒரு பாவி மடிந்து உயிர் போய் உடல் பாரில் அழிந்து பன்நாள்
பழகிய தான நுண் என்பை ஓர் ஞாளி பரிந்து கடித்து இழிவாய்க்
கொண்டு தரு நீள்கரை ஏகிட அங்கு அது கூர் எயிற்றில் தவறிக்
குளிர்தரு நீரிடை வீழ முன் உருவு கொடுத்து அருள் வீடு உதவித்
தண்டுறை தோறு மகிழ்ந்து இதுபோல் பல தனியருள் புரிந்தே நின்
தனை வலமாகிடும் அன்பு நிறைந்து உயர் தண்பொருநைப் பெயராய்த்
தண்டலைச் சூழும் இவ்வீரை நன்னகர் வரு தண்புனல் ஆடுகவே!
தனைநிகர் கோமள மரகத நாயகி தண்புனல் ஆடுகவே.! 100
------------
வேறு
கலிசூழ் உலகில் கயிலை எனும் கமழ் காலாரும் அலையும் நதிக்
கயலால் அழகது ஓங்கிடவே கனிவார் பாவ நசி செயும் ஓர்
தலமே வருணர் திசை தர வந்தனிவே யாரு நகர் குணமாத்
தர வாயிடையில் வாழ்ந்திடு மாதவமார் வீரைநகர் முனிவர்
மலமாறிய பொற்குடி நதி மந்திரம் வாய் ஓதி மனு வழியார்
மன நீர்மையினொடு ஓர்ந்து உதவ மகிழ்வாய் ஆடு மனதொடு நீ
பொலனார் பொருநைத் துறை தெளியும் புதுநீர் ஆடி அருளுகவே!
புகழ்சேர் மரகதாம்பிகையே புதுநீர் ஆடி அருளுகவே.! 101
--------------
கயலோ சிறியதாம் சினையோ கடுகே அருளோ மலைஎனச் செய்
கருணா நிதியம் ஓங்கிய நீ கருத்துக்கு இசைந்த அனை அலையோ
அயலே திரிய நான் தகுமோ அடியேன் நானு மகவு அலவோ
அருளாது ஒழியின் நான் தமியேன் அருள்வாயாக எனும் அடியார்
மயலே கெடுத்துப் புரந்து அருள வந்தே வீரைநகர் அமலன்
மனமோடு இடமும் மருவும் உயர் மணியே நான மணம் ஒழுகும்
புயல்நேர் அளகமாம் குயிலே புதுநீர் ஆடி அருளுகவே!
புகழ்சேர் மரகதாம்பிகையே புதுநீர் ஆடி அருளுகவே! 102
---------------
10. ஊசற்பருவம்
அரன் ஆடலைக் காணும் அரவு உனது தனிஊசல்
ஆடல்தனையுங் காண்குவான்
அடிநெறியின் வருமுன்பு வந்த மணியின் கதிர்களாம்
என ஒளிர்ந்து உனதடி
விரல் ஒக்க என்று நண்போடு உற்றது என்னவே
மேவு பவளக் கால்கள் மேல்
வெண்கதிர்கள் தரு கயிலைமலை மாடம் என
வயிரமேவுற்ற நீள் விட்டமா
வரமுற்ற நிலவு ஒன்று கதிர் ஒப்ப விலகின்ற
மணி நித்திலத் தொடர்களில்
வலனுக்கு முற்றவ நயம் போலும் இடமாக
வாய்த்தது எனவே பீடிகைப்
புரமுற்ற மாணிக்கம் ஒளிர்தர அமைந்து இலகு
பொன்னூசல் ஆடியருளே!
புலவர் புகழ் திருவீரைநகரின் மரகதவல்லி
பொன்னூசல் ஆடியருளே.! 103
---------------
தானை எழு தன் கதிர்எனப் பவள ஒளிர் கால்கள்
தழுவுற்றதற்கு எதிரியாச்
சசி தரள வந்துகக் கதிர் எனலும் அன்றி உயர்
தனி வயிர விட்டத்தினும்
வான் ஒளி நிகர்த்தது எனும் ஒளவியமொடு ஆதவன்
வனச மலர் உன் சீறடி
மருவு பொற்பீடமுற்று மணிகளானான் என்ப
வளர்ஒளி செய் மாணிக்கமார்
ஊனம் அறு பொற்பலகை மீதுற அமர்ந்து உலக
உயிர்முழுதும் ஆட்டுவது உனது
ஒரு விரலினால் என்பது உணர்விலேன் உணர உனி மனம்
ஒள் அளக முகில் பரவுதல்
போனனை பொழிந்து இலக நின்கருணை ஆடலிற்
பொன்னூசல் ஆடியருளே!
புலவர் புகழ் திருவீரைநகரின் மரகதவல்லி
பொன்னூசல் ஆடியருளே! 104
--------------
அவனி முழுதுந் தழைய முன்பு ஒருதலத்தால்
அறங்கள் முழுதுங் கால்களா
ஆறங்க மேல்மாட நான்மறைகள் அந்துகம்
அதன் புகழ்களே ஒளிகளா
நவிலரியதாம் பிரணவம் பீடமாக அதில்
நண்ணு பொருதாத் தங்கியே
நாற்பத்திரண்டு இலக்கத்து இரட்டியதான
நல்லுயிர் எலாம் ஆட்டலே
உவமையறு கருணையின் அசைந்தாடலாய் ஆடும்
ஒப்பினின் தன் எழிலினை
உரகபதி விள்ளநாப் பல்லாயிரம் பெறினும்
உரனுறுவனோ என்ன நற்
புவனமது புகழவே பூமிசர் மகிழவே
பொன்னூசல் ஆடி யருளே!
புலவர் புகழ் திருவீரைநகரின் மரகதவல்லி
பொன்னூசல் ஆடியருளே.! 105
------------------
உரிமை பெறுநீ புனையு மணியின் எழில் கண்டு
ஈசர் ஓர் அரவமுந் தேய்ந்திடும்
ஒரு மதியையும் கொளல் இயன்ற செயலோ என்று
எவ்வுலகர்களுமே பாட நீடு
இருள் முகில் வகிர்ந்து இரவி மதிபுடை ஒதுங்கவிட்டு
இன் குஞ்சினுக்காடறான்
எதிரின் நின்று அன்பொடு பயிற்றரவம்
என்ன நல்லிசைவு கொள மைக் குழலினில்
அரவ மணி ஐந்துற்ற தலைகொண்ட பொற்பணியும்
அழகிய மணிச் சுட்டியும்
ஆதித்த அணியும் பிறைப் பணியும் ஆட உயர்
அன்பர்கள் துதித்து ஆடவே
பொருளுடைய மகளிர்குழு இன்பினொடு அசைந்தாட்டு
பொன்னூசல் ஆடியருளே!
புலவர் புகழ் திருவீரைநகரின் மரகதவல்லி
பொன்னூசல் ஆடியருளே!. 106
----------------
மழுவும் அரிணமும் ஆட மதி நதியும் ஆட நின்
மகிழ்நர் நட்புடன் ஆடநீள்
மாலாட அயனாட மகபதி விணவர் ஆட
மலையாட மகியாட யாழ்
எழும் இசை தெரிந்து கலை மகளிர்கள் பழம்பாடல்
இன்பொடு படித்தாடி வான்
இந்திரைகள் நின் மேனி நலியாது அசைத்து அருகில்
நேர் மகிழ்வு கொண்டாட வார்
குழலவர் சொரிந்த வழி குணகுடம் அளந்து அளிகள்
கொங்கொடு பரந்தாட மின்
குழைகள் ஒளி ரவிபோலும் ஆட வாரத் தெரியல்
கொங்கைகள் புரண்டாடவே
புழுகொடருள் ஒழுக முக நிலவு நகையாடவே
பொன்னூசல் ஆடிஅருளே!
புலவர் புகழ் திருவீரை நகரின் மரகதவல்லி
பொன்னூசல் ஆடியருளே.! 107
-----------------
தித்தி மத்தள தாளம் ஒத்துக் கலிக்கவும்
பொது திகழ் மதங்கிகள் ஆடவும்
சீரடியர் முன்நின்று மூவர் தமிழும் பெரிய
திருவாசகச் சுருதியுஞ்
சித்தம் ஒத்து உருக உயர் திருவிசைப் பாவுந்
திருப்பலாண்டுந் தொண்டர்தம்
திருப்புராணமும் ஆதி முத்திப் பழம்பாடல்
சீர்ப் பண்ணினொடு பாடவுஞ்
சுத்த மெய்த்திருவேட வித்தகர் துதிக்கவுஞ்
சூழ் ககன மிசை விஞ்சையர்
துந்துபி முழக்கவும் கண்கருணை சிந்த மனை
தொட வைத்த ஒரு காலின் மேல்
புத்தமுதம் ஒத்த யாழாம் ஓர் கை நிமிர்ந்து இலகு
பொன்னூசல் ஆடியருளே!
புலவர் புகழ் திருவீரை நகரின் மரகதவல்லி
பொன்னூசல் ஆடியருளே.! 108
---------------
தாமவங் கோதை பனிநீர் களப நானங்கள்
தன்புகழ் எனக் கமழ வில்
தனி நுதலின் நற்றிலகம் இலக அருள் கண்கடை
ததும்ப இணையாடி இடைமேல்
நீமசெங் கேழ்குமுதமொடு திலமலர்ந்த என
நேர் கபோலமும் வாயும் நன்
நீள் நாசியும் திகழ ஆரவட மார்பு உருள
நிறை காஞ்சியின் கதிர் எனச்
சேமம் எனவே உலகர் தங்குடி எனப் பரவு
திருவயிற்று இளரோம நேர்
திகழ உறையொடும் அம்பு எனக் கால்கள்
இரு பிறைகள் சேர்ந்தாங்கு பூந்தாள் மினப்
பூமிலிங்கேசரது வாம பங்கின் சொல்லி
பொன்னூசல் ஆடி யருளே
புலவர் புகழ் திருவீரைநகரின் மரகதவல்லி
பொன்னூசல் ஆடியருளே! 109
----------------
ஓதி அறியேன் கல்வி உண்மை அறியேன் நின்தன்
ஒப்பில் புகழ் அறியேன் நலம்
ஒன்றேனும் அறியாத என் பனுவலும் கொண்டு
உவந்து எனையும் ஆட்கொள்ளும் ஓர்
பாதிமதி சூடும் உயர் பூமிசர் உளமும் ஒரு
பங்கு கொள் பரை சத்தியே
பத்தர் அகமோடு புறம் வேத அகமோடு தலை
பற்றி நிற்பாள் என்னும் அவ்
ஆதிமறை தேடரிய நாத முடிவே சருவ
அகிலாண்டமாய் நின்றும் ஓர்
ஆதார மற்றிட நிராதாரியாக யார்க்கும்
ஆதாரமாய் நின்றிடும்
போத நிறைவான பரிபூரணி புராதனீ
பொன்னூசல் ஆடியருளே!
புலவர் புகழ் திருவீரைநகரின் மரகதவல்லி
பொன்னூசல் ஆடியருளே.! 110
-----------------
எனது பொருள் எனது இறைவி என்று
எந்த உலகர்களுமே சொந்தமாக் கொள்ளவும்
இங்கு அங்கு எனாதபடி எங்கும் எவ்வுயிருமாய்
ஏய்ந்த அருளோடு என்னை உன்
தனது பொருள் என்று என்றன் உள்ளி நதி மதி கொன்றை
சடை கொண்டு விடையூரும் ஓர்
தன் பதி எனப் பெற்ற பூமிலிங்கேசரொடு
தங்குற்றிடுந் தகைமையால்
உனது பொருளாகின்ற என்னை உடல் ஆவி பொருளொடு
கொள்வாய் என்று நான்
உறவாட உரியவளுமாகி எனை ஆட்கொண்டு
அவ்வுடல் ஆவி பொருளொடு நற்
புனலில் தண்எனவே கலந்தவளுமான நீ
பொன்னூசல் ஆடியருளே!
புலவர் புகழ் திருவீரைநகரின் மரகதவல்லி
பொன்னூசல் ஆடியருளே.! 111
--------------
அன்பினொடு நீ காக்கும் அவர்களாற் காக்க நின்று
அழகு ஒழுகு செங்கீரையோடு
அரிய தால் சப்பாணி கொட்டியே முத்த அமுது
அன்பொடு சுரந்த அவனிமாது
இன்புற நடந்து வந்து அம்புலியை அங்கைகொடு
இசைந்திட அழைத்து அம்மனை
இளையவளு நாணிக் களிக்க விளையாடி நல்
எழிலோடு நீராடி உன்
தன் பெருமை அறியாத நாயினேன் உள்ளி நீ
தரு கிருபையால் ஓதும் இத்
தமிழினில் பிள்ளை என விளையாடும் அன்பது
தழைத்து ஆங்கு மதியோடு செம்
பொன்புரை கடுக்கை அணி பூமிசர் பங்கியே
பொன்னூசல் ஆடியருளே!
புலவர் புகழ் திருவீரைநகரின் மரகதவல்லி
பொன்னூசல் ஆடியருளே.! 112
----------------
உலகெலாம் வாழ வயல் வருட முப்போகமுற
ஒரு மதியில் மும்மாரிகள்
உதவ மன்னவர் கோல்கள் வாழ மகம் வாழ மறையுற்ற
முனிவோர் வாழ நீண்டு
இலகு மால் அயன் இந்திரன் சுரர்கள் வாழ இவர்
இல்லினர்கள் நிறைவாழ மற்று
எங்கு மங்கலமாக யாவர்களும் வாழவே இயல்
செய்தது என்ப அணியுள்
திலகமாம் என்ப உயர் தெய்வநாயகம் என்ப
திரு என்ப தங்கொழுநராய்
திகழ்கின்ற பூமிசர் செயல் செய்து வாழ
நற்செய் தந்தது என்ப அந்தப்
பொலன் ஒளியொடு இலகுமணி மங்கலம் விளங்கவே
பொன்னூசல் ஆடியருளே!
புலவர் புகழ் திருவீரைநகரின் மரகதவல்லி
பொன்னூசல் ஆடியருளே.! 113
---------------------------------
மரகதவல்லியம்மை பிள்ளைத்தமிழ் முற்றும்
_________%%_______
This file was last updated on 02 April 2020.
Feel free to send the corrections to the webmaster.