எட்டு நாட்கள் (கட்டுரைகள்)
அறிஞர் அண்ணா
eTTu nATkaL (essays)
by ka. nA. aNNAturai (C.N. Annadurai)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
எட்டு நாட்கள்
அறிஞர் அண்ணா (கா. ந. அண்ணாதுரை)
Source:
எட்டு நாட்கள்
அறிஞர் அண்ணா (கா. ந. அண்ணாதுரை)
வெளியீடு: கே. ஆர். நாராயணன், 2-14, நடேசன் ரோடு, சென்னை-5
முதற் பதிப்பு 1958
உரிமை பெற்றது
விலை ரூ. ஒன்று.
அச்சிட்டோர்: ஜமாலியா பிரஸ், சென்னை -14
-------------
எட்டு நாட்கள்
எட்டு நாட்கள் ! மரணத்துக்கும் அவனுக்கும் இடையே எட்டே நாட்கள் உள்ளன. தண்டனை தந்தாகிவிட்டது. அவனைச் சுட்டெரிக்க, மாற்ற முடியாத தண்டனை - வேறு வழக்காடி நீதி கேட்கும் இடமும் கிடையாது - இன்று 1600-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் ஒன்பதாம் நாள் - எட்டு நாட்கள் உள்ளன. தண்டனை நிறைவேற்றப்பட! அவன் விரும்பினால். உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம். ”ஐயனே ! அடி பணிகிறேன், அஞ்ஞானத்தால் நான் உளறி வந்தேன் இது நாள் வரையில். மெய்ஞ்ஞான போதகரே! என் பிழை பொறுத்திடுக ! என் பிழை பொறுத்திடுக!" என்று சொன்னால் போதும், தண்டனை இல்லை. சாவு இல்லை, வாழலாம். சிறப்புறக்கூட வாழலாம்! வரவேற்பு களும் பதவிகளும் வழங்கப்படும்! திருவிழாக் கோலத்து டன் உலவலாம்! பட்டத்தரசர்கள் கட்டித் தழுவிக்கொள்வர் - பாத காணிக்கை பெறும் குருமார்கள் அன்புமுத்தம் அளிப்பர் - மாளிகைகள் விருந்தளிக்கும்,
எட்டே நாட்கள் உள்ளன அவன் ஒரு முடிவுக்கு வர.
வாழ்வா? சாவா? என்ற முடிவு - அவனே இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
அவன் கொல்லப்படவேண்டியவன்தான் என்று. ஆச்சாரியாரும் கூறிவிட்டார், அரச மன்றமும் தீர்ப் பளித்துவிட்டது. எட்டு நாட்கள் தவணை தருகிறோம் என்று தீர்ப்பளித்தோர் கூறிவிட்டனர்.
ஆண்டு அனுபவித்துவிட்டு, இனி ஆட அனுபவிக்க இயலாத நிலையில் உள்ள படுகிழமல்ல - உலகம் மாயை, வாழ்வே அநித்யம். இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடமில்லை என்று குளறும். வரட்டு வேதாந்தியுமல்ல ; வாழ்வா? ஏன்? வாழ்ந்து நான் சாதிக்க வேண்டியது என்ன இருக்கிறது என்று பேசும் குழப்ப நிலையுடையோனுமல்ல, நடுத்தர வயதுடையவன் - உலகுக்கு உண்மையை அளித்தாக வேண்டும் என்ற ஆர்வம் கொழுந்துவிட்டெரியும் உள்ளம் படைத்தவன் - அவனைக் கட்டி வைத்துக் கொளுத்திச் சாகடிக்க உத்தரவு பிறப்பித் தனர் - அற மன்றத்தினர் - ஆம்! அறமற்ற செயல் புரியினும், அறமன்றமென்றே அது அழைக்கப் பட்டது. அறம் மட்டுமல்ல, அன்பு எனும் சீரிய பண்பினைத் தன் அகத்தே கொண்டது என்றும், அந்த மன்றம் கருதப்பட்டுவந்தது.
அறம் எது? அன்பு எது? என்று மக்களிடம் எடுத்துரைக்கும் உத்தமன் அவன் - அவனுக்குத்தான் மரண தண்டனை - எட்டே நாட்கள் தரப்பட்டுள்ளன. முடிவுக்கு வர
எட்டு ஆண்டுகள் சிறையிலே சித்திரவதைக்கு ஆளாகி, வேதனையால் கொட்டப்பட்டு, தலைமயிர் வெளுத்துப்போய், கண்ணொளி மங்கி, கைகால் சோர்வுற்று, உடலெங்கும் வெதும்பிக்கிடந்தான் - ப்ருனோ - இத்தாலி தந்த அறிவாளி !
ரோம் நகரச் சிறைக்கூடத்தில் தள்ளப்பட்டுக்கிடக்கும் அவன் முன், ஒரே பிரச்சினை நிற்கிறது. வாழ்வா, சாவா, என்று ! அவன் வாழ்வது என்று முடிவு செய்துவிட்டான் - எனவே அவனை எட்டாம் நாள் சுட்டெரித்து விட்டனர் !!!
வாழ்வு! என்ன பொருள் அதற்கு? உண்டு உலவி உறங்கி எழுந்து, மீண்டும் உண்டு உலவிடும் வேலையை ஒழுங்காகச் செய்யும் யந்திரமா. மனிதன்? ஆதிக்கக்காரன் அடிபணிந்து, ஆர்ப்பரிப்போன் பாதம் பற்றி, குற்றேவல் செய்து கும்பியை நிரப்பிக்கொண்டு, கொத்தடிமையாகிக் குடும்பம் சமைத்துக்கொண்டிருப்பதா வாழ்வு? எத்தனிடம் சித்தத்தை ஒப்படைத்துவிட்டு. ஏமாளியாகிக் கிடப்பதா வாழ்வு! அவன் அப்படி எண்ணவில்லை / வாழ்வு. ஒரு பெரும் பொறுப்பு, ஒரு அரும் வாய்ப்பு. உண்மையை அறிய, அறிந்ததன் வண்ணம் ஒழுக. பிறருக்கும் அந்த ஒழுக்கத்தை அளிக்க - அம்மட்டோ ! - அந்த ஒழுக்கத்தை அழிக்கும் சழக்கருடன் போரிட்டு. அறமல்லாததை. விரட்டி ஓட்டி அறத்தை நிலைநாட்டப் பாடுபடல் வேண்டும். வாழ்வு, அதற்கான ஒருவாய்ப்பு ! இந்தக் குறிக்கோளற்று இருப்பது. வாழ்வு அல்ல. என்று அவன் கருதினான். அவன் போல் ஒரு சிலரே எண்ணினர் - ஒரு சிலருக்கே அந்தச் சீரிய கருத்து இருக்க முடியும் - அந்த ஒரு சிலராலேயே உலகு. மெள்ள மெள்ள மாண்பினைப் பெறுகிறது.
அவன் அறிந்து போற்றிய ’வாழ்வு' அவனுக்குக் கிடைத்துவிட்டது. கொடியோரால் அவன் சுட்டுக் கொளுத்தப் பட்டான் - இன்று வாழ்கிறான் - என்றும் வாழ்வான்! அவன். அப்படிப்பட்ட 'வாழ்வு தேவை. என்று தீர்மானித்தான். எனவேதான், சாகச் சம்மதித்தான்.
"எட்டே நாட்கள்!" என்றனர்! உயிரை இழக்க எப்படி மனம் துணியும். ஒன்று, இரண்டு, மூன்று என்று நாள் ஓட ஓட, அவன் நெஞ்சம் நெருப்பிலிட்டது போலாகும், அஞ்சுவான். கெஞ்சுவான். அலறுவான். அடி பணி வான், என்று தீர்ப்பளித்தோர் எண்ணிக் கொண்டனர்! அவர்கள், சிறையிலே தள்ளப்பட்டுக் கிடந்தவனின் உள்ளத்தின் மேன்மையை உணர முடியாத உலுத்தர்கள்.
”அரசை இழந்துவிடச் சம்மதித்தால், உயிரோடு இருக்கலாம்" என்றால், அரசு இழக்கலாம். உயிர். இருக்கட்டும், உயிர் இருந்தால் புது அரசு கிடைத்தாலும் கிடைக்கும், இல்லை எனினும் பரவாயில்லை. குடும்பத்தாருடன் இனிது வாழலாம் என்றே, அரசாள்பவன் கூறுவான். அங்ஙனம் உயிர் தப்பினால் போதும் என்று மணி முடியைக் கீழே வீசிவிட்டு ஓடின் மன்னர்களின் கதையை அவன் அறிவான். அவனை அவர்கள் இழக்கச் சொன்னது
" அறிவை”
இயலாது என்றான் : அறிவு வேண்டி நின்ற ஒரே குற்றத்துக்காக, அவனைச் சுட்டுக் கொல்வது என்று தீர்ப்பளித்தனர்.
அறிவு வேண்டுகிறான் - என்பதை எப்படிக் குற்றச் சாட்டு ஆக்கமுடியும்? எனவே ப்ருனோ ஒரு நாத்திகன் என்று குற்றம் சாட்டப்பட்டான்.
நாத்தீகன் ! இந்த ஒரு சொல்லைக் காட்டி, எத்துணைக் கொடுமைகளைச் செய்துள்ளனர் ! எவரெவர்மீது அந்தச் சொல்லம்பு வீசப்பட்டது!
எது ஆத்தீகம்? எது நாத்தீகம்?
விளக்கம் தந்தனரா? இல்லை ( எங்கு யார் ஆதிக்கத்தில் உள்ளனரோ அவர்கள் கொண்டுள்ள வழிபாட்டு முறையை ஏற்க மறுப்பவன், நாத்தீகன் என்று குற்றம் சாட்டப் பட்டான். வழிபாட்டு முறையை மட்டுமல்ல. ஆதிக்கத்திலிருக்கும். எந்தக் கருத்தை ஏற்க மறுப்பவனும், மாறுதலான கருத்தைக் கொள்பவனும் விள்பவனும் நாத்திகர் எனப்பட்டனர்.
போப்பாண்டவரின் ’ஸ்ரீமுக’த்தைத் தீயிலிட்டபோது மார்டின் லூதர் நாத்தீகனென்று. கத்தோலிக்க உலகினால் குற்றம் சாட்டப்பட்டார். அதேபோல, இங்கிலாந்தில் பிராடெஸ்டென்ட் மார்க்கம் அரச மார்க்கமான பிறகு, கத்தோலிக்கர்களை அங்கு நாத்தீகர்' என்று கூறினர்.
மார்க்க சம்மந்தமான பிரச்னைகளில் மட்டுமல்ல. அன்று ஆதிக்கத்திலிருந்த மத ஏடுகளிலும் அவைகளைத் துணையாகக் கொண்டு தீட்டப்பட்ட மற்றத் துறைகள் பற்றிய ஏடுகளிலும் காணப்பட்ட கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களைக் கொள்பவரை எல்லாம், நாத்தீகர் என்றே குற்றம் சாட்டினர் - கடும் தண்டனை தந்தனர் - சித்திரவதை செய்தனர்.
அரசு முறை, அதன் தொடர்பான அறமுறை. வரி வசூலிக்கும் முறை, சமுதாய அமைப்பு முறை நடை நொடி பாவனைகள், எனும் எதிலும் அரச மார்க்கத்தின் மத ஏடுகளில் உள்ளபடியே சொல்லும் செயலும் அமைந்திருக்க வேண்டும் என்றனர்.
மனிதன் மனிதனை அடிமையாகப் பிடித்து வைத்து. வேலை வாங்குவதும், சந்தைச் சதுக்கத்தில் ஆடுமாடுகள் போல் விற்பதும், கொடுமையானது. அநாகரீகமானது. அஃது அறமாகாது. என்று கருணையும் நேர்மையும் கொண்டவர்கள் வலியுறுத்திய போது கூட, அந்த முறையீடு நாத்தீகம் என்றே கூறப்பட்டது.
எனவே, ப்ருனோ மீது நாத்தீகக் குற்றத்தை வீசியது. அன்றைய மனப்போக்கிலே, திடுக்கிடக்கூடிய, தனிச் சம்பவமல்ல.
# # #
ஜியார்டானோ ப்ரூனோ, அன்று ஆதிக்கத்திலிருந்தவர்கள் எந்த அடிப்படையின் மீதமர்ந்து அரசோச்சி வந்தார்களோ, அந்த அடிப்படைக்கு ஆட்டம் கொடுக்கக்கூடிய அறிவுப் பணியில் ஈடுபட்டிருந்தான். அவன் இருந்தால் தங்கள் ஆதிக்கம் அழிந்துபடும் என்று அஞ்சினவர்கள். அவனுடைய அறிவுப் பணியைத் தடுத்திடவோ, தகர்த் திடவோ முடியாத மூட மதியினர். அவனைக் கொன்றால் தான், தாங்கள் வாழ முடியும். என்று எண்ணினர் - அவனும் சாகச் சம்மதித்தான்.
எட்டு நாட்கள் தவணை தந்தனர். ஏன்? நெஞ்சு உரமிக்கவன்தான் ப்ருனோ, கொண்ட கொள்கைக்காகவே. ஆண்டு பல ஆபத்தால் வேட்டையாடப்பட்டு அலைந்து கொண்டிருந்தவன்தான். அச்சம் அவனை அடக்கியதில்லை. ஆசை அவனைக் கட்டுப்-படுத்தியதில்லை. அரண்மனை கண்டு அவன் சொக்கினதில்லை, மாளிகை கண்டு மதுரவாழ்வு வேண்டி நின்றவனல்ல. நிந்தனையை நிலாச்சோறு எனக் கொண்டான். வேதனையை வேண்டுமளவு உண்டான். எதற்கும் சளைக்கவில்லை. எதனாலும் மனம் இளைக்கவில்லை : எனினும், மரணம் தன் குரூரக்குரல் கொடுத்து நிற்பதைக் காணும் போது. நாட்கணக்கிலே உயிர் ஒட்டிக் கொண்டிருந்ததை உணரும்போது. ஒருவேளை, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நெஞ்சிலே ஒரு சிறு ஆசைப் பொறி கிளம்புமோ என்று எண்ணினர் : ஆவல் கொண்டனர்.
அவனைத் தண்டித்தவர்கள். வாழ்வின் சுவையைப் பருகிக் கொண்டிருந்தவர்கள். செல்வத்தைப் பெறுவதிலே ஓர் இன்பம் கண்டனர். செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதிலே வேட்டையாடும் மிருகமாக இருந்தனர் - வாழ்வு எவ்வளவு சுவைதருகிறது. மாளிகையில் வாழும்போது. மலர்த்தோட்டங்களிலே வீசும் மணத்தை உட்கொள்ளும் போது. மலரணி கொண்டைச் செருக்கிலே அவர் மையல் தரும் கண்ணின் மினுக்கிலே, உள்ள இன்பம் கொஞ்சமா. கூப்பிட்ட குரலுக்கு ஆட்கள் ஓடி வந்து கட்டளைக்குக் காத்துக் கொண்டிருக்கும் போது ஏற்படும் பெருமிதம் சாமான்யமா - பேழையிலே விதவிதமான அணிபணி மணிகள் மின்னும் போது கண்களிலே களிப்பு ஒளிவிடுகிறதே பெரும்பதவிகள் கிட்டிடும் போது, மார்பு நிமிர்கிறது. நடை யிலே ஒரு புது முறுக்கு ஏறுகிறது. பேச்சே புதிய பொலிவு பெறுகிறதே - இவைகள் எல்லாம் இன்பத்தேன் அல்லவா!
இவ்விதமான வாழ்வைச் சுவைத்துக்கொண்டிருந்தவர்கள் - ப்ரூனோவைத் தண்டித்தவர்கள். எனவே, அவர்கள். எதையும் ஏற்க நெஞ்சம் இடம் தரும் சாக மட்டும் துணிவு இராது. நாள் செல்லச் செல்ல, நெஞ்சு நெகிழும். ஆசை அரும்பும், உறுதி குலையும், ப்ரூனோ உயிருக்கு மன்றாடுவான் என்று எண்ணினர். பெருமழை பெய்கிறது, மண்மேடு கரைகிறது. பாறை எப்போதும் போலத்தானே இருக்கிறது! ஏடு பல படித்த அந்த ஏமாளிகள். இந்தச் சிறு உண்மையை உணரவில்லை - ப்ருனோ. வாழ்வு என்பதற்குக் கொண்டிருந்த தத்துவம் தூய்மை நிரம்பியது. வீர உள்ளத்தில் மட்டுமே தோன்றவல்லது. சுயநலமிகளும் சுகபோகிகளும் சூது மதியினரும், அதனை உணர்தல் இயலாது.
எட்டு நாட்களா ! என்னைக் கொல்லும் துணிவு இவர்களுக்கு உண்டாக, எட்டு நாட்கள் தேவைப்படுகிறதா ! பயங்கொள்ளிகள் ! - என்றுதான் ஜியார்டானோ ப்ரூனோ, எண்ணிக்கொண்டிருப்பானே தவிர, ஐயோ! எட்டு நாளிலே உயிர் இழக்க வேண்டுமா, என்று அஞ்சி இருக்கமுடியாது.
”நாத்திகனான உன்னைத் தீயிலிட்டுக் கொளுத்திச் சாகடிப்பது என்று தீர்ப்பளிக்கிறோம்" என்று அவர்கள் கூறிய போது, ப்ரூனோ பெருஞ் சிரிப்புடன். ”இந்தத் தண்டனையைக் கேட்கும் எனக்கு அச்சம் இல்லை : இதைக் கூறும் உங்களுக்கு அச்சம் ஏன் இவ்வளவு இருக்கிறது!" என்று கேட்டான்.
அந்த நெஞ்சு உரத்தைக் குலைக்க, எட்டு நாட்களா? பேதைமை !!
# # #
என்றையதினம், ப்ரூனோ உண்மையை உரைத்திடுவதே தன் பணி எனக் கொண்டானோ, அன்றே அவன் அறிவான், தன் மீது குறிவிழுந்துவிட்டது என்பதை எவ்வளவு காலத்துக்கு அவர்களிடமிருந்து தப்பித்திருக்க முடிகிறதோ அதுவரையில் தான் கண்ட உண்மையை உலகுக்குக் கூறிவருவது என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தான் அந்தத் திண்மையை, கொடுமைகள் தகர்க்க முடியவில்லை" அவன் நாடு பல சுற்றி, பல அவைகளிலே நின்று, தன் கொள்கையைக் கூறினான் - போதுமான அளவுக்கு - இனிச் சாக அஞ்சுவானேன். இறந்தால், கொள்கை இறந்து. படவா செய்யும் இல்லை. இல்லை. மாறாக, கொள்கை பன்மடங்கு புதுவலிவும் பொலிவும் பெறும் - வளரும். பரவும், வெல்லும்! ப்ரூனோ. அந்த எட்டு நாட்களும் இதையன்றி வேறெதனை எண்ணிடப் போகிறான். குவித்து வைத்த பொன்னை யார் அனுபவிப்பார்களோ, குலவிவந்த கிளியை எந்தக் கூண்டிலே கொண்டு போய் அடைப்பார் களோ, மனைவி மக்கள் என்னவென்று கூறிக் கதறுவார் களோ என்ற எண்ணி ஏங்கப் போகிறான். ப்ரூனோ. துறவி தூர்த்தர்கள் பலர் அதனை வேலையாகக் கொண்டு, 'துறவி' எனும் சொல்லையே மாசுபடுத்தி விட்டனர் - எனவே ப்ரூனோவைத் துறவி' என்று கூறுவது, அவருக்கு உள்ள மாண்பினை பாதிக்குமோ என்று கூட அஞ்சவேண்டி இருக்கிறது.
பரூனோ கொள்கைக்காகப் போரிடும் அஞ்சா நெஞ்சினன் - வாழ்க்கையில் இதற்காகவன்றி வேறு எதற்கும், அவருக்கு நேரமும், நினைப்பும் கிடையாது. எனவே எத்தனை நாள் தவணை தரப்பட்டாலும், நெஞ்சு தடுமாறாது! அந்த நெஞ்சம் அவ்வளவு உறுதிப்பட்டுவிட்டிருக்கிறது. நச்சு நினைப்பினர் அதனை அறியார்.
ஏன், அவர்கள். ஜியார்டானோ ப்ரூனோ, மடிவதைவிட மனம் மாறிவிடுவது நல்லது என்று எண்ணினர்? நாத்திகன் ஒழியத்தானே வேண்டும்? என் பிழைத்துக்கொள்ள வாய்ப் பளிக்கின்றனர் - புனித மார்க்கத்தை ஏற்றுக்கொள் பூஜ்யர்களை வணங்கு, உயிர் பிழைக்கலாம் என்று ஏன் கூறினர். நேர்மையும் ஈரமும் கொண்டனரா? இல்லை சிங்கத்தைக் காலடியில் விழச் செய்தால், காண்போர். எவ்வளவு பெருமை தருவர் ! சிறு நாய்கள் நத்திப் பிழைக்கின்றன - பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது நரிகள் பதுங்கிக் கொள்கின்றன - தேடுவதே கஷ்டமாகி விடுகிறது. இதோ சிங்கம் - வீரமுழக்கத்தை எழுப்பிய வண்ணம் இருக்கிறது! வலையில் வீழ்வதில்லை ; கணைக்குத் தப்பி விடுகிறது - காடு ஒன்றிலே வேட்டையைத் துவக்கினால், வேறோர் காடு சென்று விடுகிறது -- எங்கு சென்றாலும் முழக்கம்! ! இந்தச் சிங்கத்தை. இந்த ப்ரூனோவை. இந்த அஞ்சா நெஞ்சினனை. மனமாறிவிட்டவனாக்கினால் சில தலைமுறைகள் வரையிலே, அறிவுத்துறையிலே ஈடுபடவும் ஆட்கள் முன்வருவாரா? அப்படிப்பட்ட அசகாய சூரன் ! ஆண்டு பலவாக மார்க்கத்தை மதிக்க மறுத்து மனம்போன போக்கிலே புதுமை புதுமை என்று பொல்லாக் கருத்துக்களைப் பேசித் திரிந்தவன். என்ன ஆனான்? கடைசியில் கண்ணீர் பொழிந்தான், காலடி வீழ்ந்தான், கண்டுகொண்டேன் உண்மையை என்று இறைஞ்சினான்!' என்று கூறிக்கொள்ளலாம் அல்லவா ! பகுத்தறிவு கருவில் இருக்கும் போதே கருக்கிவிட இதைவிட வாய்ப்பு வேறு கிடைக்குமா ! எனவேதான். ஜியார்டானோ ப்ரூனோவுக்கு மரண பயத்தைக் காட்டி பணியவைக்கலாம் என்று ஆவல் கொண்டனர்.
எட்டு நாள் தவணை ! ஒரு தனி மனிதனுடைய, ஒரு மாவீரனுடைய உயிர் இருப்பதா பறிக்கப்படுவதா என்பதல்ல முழுப் பிரச்சினை, உண்மையான பிரச்னை, பகுத்தறிவுக்கு. இனியும் இடம் உண்டா அல்லது இந்த எட்டே நாட்களிலே. அது சுட்டுச் சாம்பலாக்கப்-படுவதா என்பது தான். ப்ரூனோ இதை நன்கறிந்தே. என்னைச் சுட்டுச் சாம்பலாக்கட்டும் - அறிவு கொழுந்துவிட்டு எரிந்த வண்ணம் இருக்கட்டும் என்று கூறினான் - செயலால் !!
ப்ரூனோ. எப்போதும் தனக்காக அஞ்சினதில்லை - ஆண்டு பல கஷ்டப்பட்டதால் உள்ளத்தில் உரம் மெருகாகிவிட்ட இந்த நிலையில் மட்டுமல்ல - சிறுவனாக இருந்த போதே.
பதினைந்து வயதுச் சிறுவன் ப்ரூனோ. டாமினிக்கன் மடாலயத்திலே சேர்ந்தபோது : ஆர்வமும் நம்பிக்கையும் அதிகமாக இருந்தது மடாலயத்திலே சேரும்போது. அங்கு தான் அறிவுத்தாகம் தீரும் என்று எண்ணிச் சென்றான்.
புது நெறிகள் புரட்சிபோலக் கிளம்பி, கத்தோலிக்க மார்க்கத்தைக் குலைத்த போது, வெடிப்புகளை மூடவும், வெதும்பியதைக் களையவும், பூச்சுகளைப் புதுப்பிக்கவும், எடுத்துக்கொள்ளப்பட்ட பல முயற்சிகளிலே, டாமினிக் தேவாலய இயக்கம் ஒன்று. தூயநெறி நிற்பது, தூய்மையைப் பரப்புவது. வழி தவறியவர்களை மீண்டும் நன்னெறி கொண்டுவந்து சேர்ப்பது என்ற நோக்கத்துடன், கற்றறி வாளர்கள், கர்த்தரின் சுவிசேஷம் உணர்ந்த வித்தகர்கள், துவக்கியது டாமினிக், மடாலயம்.
நாத்தீகத்தை நசுக்குவதற்கான நல்லதோர் ஏற்பாடு என்றனர் இதனை - அது உலகு வியக்கும் அறிவுத் திலகம் ப்ரூனோவை அளிக்குமென்று, எவ்வளவோ ஜெபதயம் செய்தும், டாமினிக் துறைவிகளுக்குத் தெரியவில்லை. அறிவுக் கூர்மையுள்ள வாலிபர்களை. அவர்களைப் பாசம் பற்றிக் கொள்ளா முன்னம், ஆலயக்கல்லூரியில் கொண்டு சேர்த்து. ஐயன் பெருமைகளைக் கூறி. நல்ல 'சாமியார்' ஆக்கிடும் வேலையில், டாமினிக் மடாலயம் ஈடுபட்டிருந்தது. ப்ரூனோ. மடாலயம் அளித்த கல்வியைக் கற்றான் - ஆனால் கசடு அறக் கற்றான் ! இவனை, மடாலயக் கல்லூரியில் சேர்த்து. அன்பும் அக்கரையும் காட்டிய ஆன்ஸ்லம் பாதிரியாருக்கு ப்ரூனோ. புன்னகை பூத்த முகம் படைத்த வாலிபனாகத் தெரிந்த போதிலும் அவன் உள்ளம். இத்தாலி நாட்டு வெசுவயஸ் எரிமலை போன்றது என்பது புரிந்துவிட்டது ; அஞ்சினார்.
மடாலயத்தில் இருக்கும்போதே ப்ருனோ ஒரு சிறு எடு தீட்டினான் - வெசுவயல் கொஞ்சம் நெருப்பைக் காட்டிற்று ! பொறிகளைக் கண்ட ஆன்ஸ்லம் பாதிரியார். "மகனே! வேகமாக ஆபத்தை நோக்கிச் செல்கிறாய் என்று ஏச்சரித்தார். ப்ரூனோ பதறவில்லை - புன்னகை பூத்த முகத்துடன் நின்றான்.
மடாலயச் சாமியார்களின் மந்த மதியையும் கோலாகல வாழ்வையும் கேலி செய்து. ப்ரூனோ அந்த ஏட்டிலே தீட்டி யிருந்தான். அவனுடைய நெஞ்சிலே நாத்தீக அரவம் குடி புகுந்துவிட்டது என்று சந்தேகித்த பாதிரிகள், 'விசாரணை' நடத்தத் திட்டமிட்டனர் - மதவிசாரணை அதிகாரியும் அழைக்கப்பட்டிருந்தார். இதை அறிந்ததும். ஆன்ஸ்லம் பாதிரியார் அலறிப்போனார். ப்ரூனோ சிறுவன். நாட்டிலே நடைபெறுவது, அதிலும் மக்களின் ’பூஜை ' யைப் பெற்றுக்கொள்ளும் மடாலயத்திலே நடைபெறும் முறை அவனுக்கு என்ன தெரியும் - ஆன்ஸ்லம் அறிவார்! விசாரணை என்றால் என்ன? கொடுமைக்கு வேறோர் பெயர் தானே ! கனல்கக்கும் கண்படைத்த கொடியவர்கள், ஈவு இரக்கமற்ற நெஞ்சினர்கள், உருட்டி மிரட்டும் கண்ணினர். உட்காருவர் : எதிரே நிறுத்தப்படுபவனைக் கேள்விகள் கேட்பர் : அந்தக் கேள்விகள் எதன் பொருட்டுக் கேட்கப் படுகிறது என்று அறியாமல், பதில் கூறுவான் : அந்தப் பதிலிலே பொதிந்து கிடக்கும் பொருளைத் துருவிப்பார்த்து. இவன் நாத்தீகன்தான் என்பர் !- தீர்ந்தது. கடும் தண்டனை! சிறை கிடைக்கலாம். அவர்கள் சீற்றம் அதிகம் கொள்ளாதிருந்தால். சித்திரவதை செய்வது, வழக்கமான சாதாரண தண்டனை!
இந்த விசாரணை ஏற்பட இருக்கிறது. ஜியார்டானோவுக்கு. அந்தத் துணிவுள்ள வாலிபன், வானத்தின் வண்ணத்தைக் கண்டு களிக்கிறான் - அலையின் ஒலி கேட்டு மகிழ்கிறான் -- கொத்துக் கொத்தாகக் காய்த்துக் குலுங்கும் திராட்சைகள் நிரம்பிய கொல்லையைக் காண்கிறான். எங்கும் தெரியும் இயற்கை எழிலை ரசித்துக் கொண்டிருக்கிறான்.
’மகனே ! மகனே ! வர இருக்கும் ஆபத்து அறியாமல் கிடக்கிறாயே!' என்று கூறியவண்ணம் வந்த ஆன்ஸ்லம் பாதிரியார், மடாலய ஏற்பாட்டைக் கூறினார் - நடுங்கும் குரலில்.
"நான் அறிவேன் ! நான் அறிவேன்! விசாரணை என்றால் என்ன என்பதை நான் அறிவேனடா ஜியார்டானோ" என்று வேதனை ததும்பும் குரலில் அவர் கூறியபோது. ப்ருனோ.”அஞ்சாதீர் ஐயனே ! அஞ்சாதீர் என் பொருட்டு அஞ்சாதீர் ஏனெனில் என் பொருட்டு நானெ அஞ்ச வில்லை!" என்று கூறினான்!
# # #
அந்தப் ப்ருனோ இப்போது தணலில் போட்டு எடுக்கப்பட்ட தங்கமாகி விட்டிருக்கிறான். ஆபத்தெனும் அகழிகளைத் தாண்டியிருக்கிறான். கொடுமை-யூர்களைக் கடந்திருக்கிறான். வெறுப்பு வெப்பத்திலே மூழ்கி எழுந்திருந்து இருக்கிறான் - இப்போதா அஞ்சப் போகிறான்! மானைக் கொல்லக் குதித்த சிங்கக்குட்டி, பெரும் பிடரிபடைத்த காட்டரசனான பிறகு மத்தகத்தை அல்லவா பிளக்கும் - முயற் கூட்டம் கண்டா ஓடி ஒளியும்? நீலநிற வானத்தையும், பச்சைப் பசேலென்ற தோட்டத்தையும் கண்டதும் பரவசப்படும் வாலிபன். என்னைப்பற்றி நான் அஞ்சவில்லை" என்று சொன்னான் என்றால், இப்போது அந்த நெஞ்சு உரம். எதிரியின் உறுதியை முறியடிக்கும் வகையினதாகத்தானே ஆகிவிட்டிருக்கும். இடைக்காலத்திலே அவன் சுகத்துக்கும் சுய நலத்துக்கும் பலியாகி விட்டிருந்தால், கோழைத்தனம் தோழமை கொண்டு விட்டிருக்கும். அன்று மடாலயத்திலிருந்து தப்பி ஓடிவந்த ப்ரூனோதன் அறப்போரை நிறுத்திய பாடில்லை - பயணத்தை முடித்துக்கொண்டானில்லை !
நெஞ்சு உரம், ப்ரூனோவுக்கு சிறுவயது முதல் இருந்து வந்த பெருந்துணை. அதை எட்டாண்டு சிறை கெடுக்க வில்லை. இன்னும் இருப்பது எட்டே நாட்கள் ! நெஞ்சு உரம் குலைக்கப்படும் என்று எண்ணினவர்கள். ப்ரூனோவின் குணம் அறியாதவர்கள்!
கோழைகளை அவர்கள் மிரட்டிப் பணிய வைத்திருக்கிறார்கள்.
கொடுமைகளை ஓரளவுக்குமேல் அனுபவிக்க முடியாத வலுவற்றவர்களை அவர்கள் அடிபணிய வைத்திருக்கின்றனர்.
ஆசைக்கு ஆட்படுபவர்களை அவர்கள் பாசவலையில் வீழச்செய்திருக்கிறார்கள்.
ப்ரூனோ, இந்தக் கயவர் வலையிலே சிக்க மறுக்கும் வீரன் !
சரண் புகுந்தால், ப்ருனோ போன்ற கற்றறிவாளனுக்கு வைதீகபுரியில், எந்தக் காணிக்கையும் பெறத்தக்க குரு பீடம் கிடைத்திருக்கும். காரணம் கேளாது. பொருள் அறிய முயற்சிக்காது. ஆபாசம் என்று தோன்றினாலும் அதற்கு ஏதேனும் உட்பொருள் இருக்கும் என்று நம்பிக் கொண்டு, மத ஏடுகளை மனப்பாடம் செய்து அவ்வப் போது சிறிது சிறிது கக்கிவிட்டு, அதனை அருள்வாக்கு என்று எண்ணும் ஏமாளிகளிடம், பொன்னும் புகழும். பூஜையும் தொழுகையும் பெற்றுக்கொண்டு, முடியுடை மன்னரையும் தன் பிடியிலே வைத்துக்கொண்டு, தம்பிரானாக - சன்னிதானமாக. வாழ்ந்து வந்தனர் பலர் - அறிவுத் தெளிவிலே, ப்ரூனோவிடம் நெருங்கவே முடியாத குறை மதியினர் !
ப்ரூனோ, கற்றறிவாளன்! அவன் சொற்பொழிவு, கரும்பென இனிக்கும் தரத்தது : எத்தகைய கடினமான பொருளையும் அவன் எளிதாக்கிடும் வண்ணம் பாடம் கூறவல்ல பேராசிரியன் ; சலிப்பளிக்கும் தத்துவத்தையும், தேனாக்கித்தரும் தெளிவுரை கூறவல்லான்; பாரிசிலும், இலண்டனிலும், பதுவாவிலும், வட்டன் பர்க்கிலும், அவனிடம் பாடம் கேட்க வந்த வாலிபர்கள், சொக்கி நின்றனர் ; எந்தப் பேராசிரியனுக்கும் கிடைக்காத பெரும்புகழ் அவனைத் தேடி வந்தது!
அத்தகைய ப்ரூனோ, ஒருகணம், சபலத்துக்கு ஆட்பட்டு, ஆசைக்கு அடிமைப் பட்டு, ரோம் நகரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் போப்பாண்டவருக்குச் சரணம், என்று கூறிவிட்டிருந்தால் போதும், தேவாலயக் கதவுகள் திறந்து இருக்கும், அருளாலயங்களிலே குவிந்து கிடந்த செல்வத்திலே புரளலாம், அரசர்கள் அஞ்சலி செய்வர் ! நடவடிக்கையைப் பற்றிக் கூடக் கவலைப்பட வேண்டியதில்லை : பக்தர்கள், பாதிரிகளின் உபதேசத்தின் சுவையைத்தான் தரம் பார்ப்பார்களே தவிர, நடவடிக்கையைப் பற்றித் துளியும் கவலை கொள்ள மாட்டார்கள் : நாற்றம் வெளியே தெரியாம லிருக்கும் பக்குவம் அறிந்திருந்தால் போதும். உபதேசம் செய்வதிலே, உருக்கம் இருந்தால் போதும், நம்பிக்கை இருக்க வேண்டும் என்பது கூட வேண்டப்படுவதில்லை. ஒரு பெரிய மத அதிபர், "ஏசுநாதர் பற்றிக் கட்டிவிடப்பட் டுள்ள சுவையானகதை, எவ்வளவு சுகபோகத்தையும் செல்வத்தையும் நமக்கு அளிக்கிறது!" என்று கூறிப் பூரித்தாராம்! அப்படிப்பட்ட காலம் அது. ஜியார்டானோ ப்ரூனோ இசைந்திருந்தால் போதும், குருபீடம் கிடைத்திருக்கும்.
ஆனால், சொந்த இலாபம். சுகபோகம். என்பவைகளில் துளியும் பற்றுக்கொள்ளாத துறவி அவர்!
"பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவி உமக்கு அளிக்கப்பட இருக்கிறது. ஜியார்டானோ' என்று கூறினார். அரசர்!
"இறையே ! எனக்கா? இதற்குள்ளவா? நான் அத்தகுதி பெற்றவனா?" என்று கேட்கிறார் ப்ரூனோ.
”பகட்டுடை அணிந்து, பசப்புகளிலே மனதைப்பறி கொடுத்து விடும். பாரிஸ் பட்டண வாலிபர்களையே, உமது பேருரைகளால் திருத்தவும், திரட்டவும் முடிகிறதே! உம்மையன்றி வேறுயார். அந்தப்பதவிக்கு ஏற்றவர், பேராசிரியரே!" என்று கேட்கிறார் மன்னர்.
மடாலயத்தில், விசாரணைக் கொடுமையிலே சிக்கிக் கொள்ளாதிருக்க, ஆன்ஸ்லம் பாதிரியார் யோசனைப்படி, ப்ரூனோ, இரவில், பலகணி வழியாகக் கயிற்றின் துணை கொண்டு இறங்கி ஓடினார் - ஊரைவிட்டு - இத்தாலியை விட்டு. சுவிட்சர்லாந்து நாடு கடந்து, இடையே பல இடங்களில் தங்கி, கடைசியாக பாரிஸ் வந்து சேர்ந்தார்.
பிரான்சிலே அரசோச்சி வந்த மூன்றாவது என்ரி என்பவர். பாரிஸ் பட்டணத்தில் தத்துவத்துறைச் சொற்பொழிவாளராகக் கீர்த்தி பெற்ற ப்ரூனோவைப் பற்றிக் கேள்விப் பட்டு அவரை ஆதரித்தார் ; அரண்மனையில் இடம் தந்தார். அங்குதான் அவர் ப்ரூனோவுக்குச் செய்தி தருகிறார், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலைக்கு. அழைப்புக் கிடைத்திருப்பதாக.
ப்ரூனோவுக்கு. பல்கலைக்கழத்தைப் பாசறைகளாக்கி மாணவர்களை அறிவுத்துறை வீரர்களாக்கி குருட்டறிவை விரட்டும் போரிட வேண்டும் என்பதுதான், குறிக்கோள். இத்தாலியில், குருட்டறிவு, அரச மார்க்கமாகி விட்டிருந்தது : இருட்டறையில் தள்ளி இம்சிக்கும், அருளாளர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்தது : எனவேதான். ப்ரூனோ ஓடி வந்து விட்டார், பாரிஸ் பல்கலைக் கழகம், பிரான்சு நாட்டிலே புதிய புகழ் பெற்று வருகிறது! புதுமைக் கருத்துகளை வரவேற்கும் கூடமாக அது விளங்கிற்று. பழமைக்குப் பாசறையாக, சோர்போன் பல்கலைக் கழகமும், புதுமைக்குப் புகலிடமாக, பாரிஸ் பல்கலைக் கழகமும் விளங்கின. ப்ரூனோவுக்கு, உண்மையிலேயே பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணியாற்றுவதிலே பெரு மகிழ்ச்சி - எதிர்பார்த்த இன்பம் கிடைக்கிறது என்று தான் பொருள்.
மன்னன் மகிழ்வூட்டும் செய்தியைக் கூறியதும். ப்ரூனோ, விரும்பிய வாய்ப்புக் கிடைத்தது என்று எண்ணிக் களித்தார். ஆனால், பேரிடி உடனே வந்தது.
பல்கலைக் கழகத்தில் பணியாற்றுவதற்கு ஒரு நிபந்தனை உண்டு : மன்னர் அதனைக் கூறினார். கூறுமுன் கேட்டார். 'ப்ரூனோ! ஏன், தேவாலயத் தொழுகைகளிலே நீர் கலந்து கொள்வதே இல்லை?' என்று. கேட்டுவிட்டுச் சொன்னார். பல்கலைக் கழக ஆசிரியர் என்ற முறையில் நீர் கக்தோலிக்க முறைப்படி உள்ள தொழுகை நடத்த வேண்டும் தேவாலயத்தில்.
"என்ன சொல்கிறீர், மன்னா! தொழுகையா? பேராசிரியர் வேலைக்கு அது நிபந்தனையா?" என்று கேட்கிறார். ப்ரூனோ : அச்சம் தலைகாட்டுகிறது.
"ஆமாம் ! ஆசிரியரைப் பார்த்துத்தானே மாணவர்கள் நடந்து கொள்வர் : தொழுகை முக்கியம்" என்றார் மன்னர் இதில் என்ன இடையூறு என்று எண்ணிய வண்ணம்.
மகிழ்ச்சி கருகலாயிற்று. விசாரம் கொண்டார் ப்ரூனோ.
”தத்துவம். நான் போதிக்கப்போவது : மதமல்ல: தொழுகைக்கு நான் சென்றாக வேண்டுமென்று நிபந்தனை ஏன், மன்னா !" என்று கேட்கிறார்.
”வீணான குழப்பம் ! தொழுகை சடுதியில் முடிந்து விடும், ப்ரூனோ! காலம் வீணாகுமே என்று கவலையோ" என்று மன்னர் வேடிக்கையாகவே பேசுகிறார்.
"முடியாது. வேந்தே !"
"முடியாதா? தொழுகையா?"
"ஆமாம். அரசே ! நான் தொழுகை செய்து நீண்ட காலமாகிவிட்டது"
"தொழுகை, கத்தோலிக்கரின் நீங்காக் கடமை ப்ரூனோ ! தவிர்க்கக்கூடாத கடமை"
”நான் கத்தோலிக்கனல்ல, காவலா ! கத்தோலிக்கனல்ல !”
"மெள்ளப் பேசு ப்ரூனோ. மெள்ளப் பேசு. கத்தோலிக்க மதமல்லவா. நீ எவ்வளவு வேதனை ! அப்படியானால் லூதர் கூட்டத்தவனோ?"
"இல்லை. அரசே!'
"கால்வின் கூட்டமோ?"
"அதுவுமல்ல! அரசே ! நான் கத்தோலிக்கனுமல்ல, லூதர், கால்வின் ஆகியோர் முறையின்னுமல்ல; நான் ஒரு தத்துவாசிரியன் ; நெடுநாட்களுக்கு முன்பு நான் டாமினிகன் பாதிரியாக இருந்தேன் - மடாலயத்திலே பயின்றேன் : அங்கு நான் அறிந்து கொண்ட உண்மைகள் என்னை எம்மதத்திலும் இருக்கவிடவில்லை”
"மதமற்றவனா! அப்படியானால்....... ப்ரூனோ!....... நீ, நாத்திகன்.... அல்லவா......... எவ்வளவு வேதனை......... என் ப்ரூனோவா இப்படி........."
”அரசே ! நான் ஒரு தத்துவ ஆசிரியன் : அவ்வளவுதான்”
பாரிஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் வேலையை உதறித் தள்ளிவிட்டார் ப்ரூனோ.
தன்னிடம் அன்பு காட்டிய மன்னன் கூறியும், உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசமறுத்த உத்தமன் ப்ரூனோ! துளியாவது அச்சம் மனதிலிருந்தால், அரசனிடம் இவ்விதம் பேசுவதா என்று எண்ணத் தோன்றியிருக்கும். சிறிதளவாவது, ஆசைக்குக் கட்டுப்படும் சுயநலம் இருந்திருந்தால் தொழுகைதானே என்று கூறிவிட்டு, பேராசிரியராகி இருக்கமுடியும் ஆனால். ப்ரூனோவின், இயல்பு அவ்வளவு உயர்தரமானது ஆசைக்கு ஆட்பட்டு, பொய்யொழுக்கம் கொள்ள மறுக்கும் தூய்மையாளர் அவர்.
அவருக்கா, சிறையிலே. ஆசைபிறக்கும்? எட்டு நாட்களா? இதுபோல. ஆசையூட்டும் சம்பவங்களை அவர் பல கண்டிருக்கிறார். எல்லாவற்றையும் வென்றிருக்கிறார். எனவே, எட்டு நாட்களை வீணாக்குகிறார்கள் எட்டு நாட்கள், ப்ரூனோவை, அவருடைய கொள்கையை எடுத்துரைக்கவும். வாதிடவும் பயன்படுத்தச் சொல்லியிருந்தால், வாய்ப்பு என்று கூறி, ஏற்றுக்கொண்டிருப்பார். இப்போதோ சாகத்துணிந்த அவரைச் சாகடிக்க எட்டு நாட்கள் கழிய வேண்டி இருக்கிறது!
தான் உரைக்கும் கொள்கையை மறுத்திட, வாதிட யார் முன் வந்தாலும், ப்ரூனோ மகிழ்ச்சியுடன் வரவேற்பவர். அந்த வாதிடும் திறமை பாராட்டுதலை மட்டுமல்ல பகையைப் பெற்றுத்தந்தது. எனினும், பகை வளருகிறது. ஆபத்து ஏற்படுகிறது என்பதற்காகக் கொள்கையை விட் டுக்கொடுப்பவரல்ல ப்ரூனோ, நாம் கொண்டுள்ள கொள்கையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மக்கள், அறிவாளிகள் உட்பட, பக்குவம் பெறவில்லை. இந்நிலையில் நாம் ஏன் வீணாகப் பாடுபட வேண்டும் - எதைப் பேசினால் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ அதைக் கூறிப் புகழ் பெறலாம். அல்லது எந்த அளவுக்குக் கூறினால், மக்கள் உள்ளம் அன்று இருந்த நிலையில் தாங்கிக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்குக் கூறிக்கொண்டிருப்போம், என்று திருப்தி கொள்பவரும் அல்ல. மிகமிகத் தெளிவானது - அப்பழுக்கற்ற ஆதாரமுள்ளது நான் கொண்டுள்ள கொள்கை - இதனை மறுப்போரோ, மணலில் கோட்டை கட்டி வைத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய கொள்கைகளில் தெய்வீகம் இருப்பதாகக் கூறுகிறார்கள். தெளிவு இல்லை. காட்டவும் இயலவில்லை. அருள்வாக்கு என்கிறார்கள், அக்ரமத்தைக் கூசாமல் புரிகிறார்கள், பற்று அறுபடச்செய்யும் பாசுரம் பாடுகிறார்கள், பாபச்செயலை அஞ்சாது செய்கிறார்கள் : இவர்களுக்கு அஞ்சி, நான் என் அசைக்கொணாத கொள்கையைக் குடத்திலிட்ட விளக் காக்குவதா ! குத்தட்டும். வெட்டட்டும். உயிர் இருக்கு மட்டும். போராடுவேன். வாதாடுவேன். குன்றின் மேலிட்ட விளக்காக்குவேன் என் கொள்கையை ; அதனை எடுத்துக் கூறிட வாய்ப்பு, எப்படிப்பட்ட சூழ்நிலையில் கிடைத்தாலும், பயன்படுத்திக் கொள்வேன் என்ற கருத்துடன் அவர் பணிபுரிந்து வந்தவர். எந்த வாய்ப்பையும் அவர் நழுவ விட்டதில்லை: அதன் பலனாக என்ன விளைவு நேரிட்டாலும், தாங்கிக்கொள்ளத் தயங்கினதுமில்லை.
பிரன்ச்சு மன்னன் ப்ரூனோவின் மனப்போக்கைக் கேட்டுக் கோபித்துக் கொண்டான் ; வருந்தினான். வெறுத்து விடவில்லை. எப்படி வெறுக்க முடியும் மன்னன். புன்னகைப் புலிகளையும் நயவஞ்சக நரிகளையும் காண்கிறான்! காவி அணிந்து திரியும் காமாந்தகாரர்களையும் அருட்கவி பாடி அக்ரமம் புரிவோரையும், பிறர் பொருள் கவரும் பேயரின் பூஜாமாடங்களையும் கண்டிருக்கிறான். மன்னன் கூறினாலும், என் மனதிலுள்ளதை மாற்றிக் கொள்ள மாட்டேன். மறைத்து வைத்து இச்சகம் பேசித் திரியவும் மாட்டேன் என்று தூய்மையான உள்ளத்துடன் இருந்த ப்ரூனோவிடம், வெறுப்பு அடைய முடியுமா ! அவர் சொல்லும் கொள்கை, மன்னனுக்கு உடன்பாடானது அல்லதான் - சரியா தவறா என்று ஆராய்வது கூடத் தேவை யில்லை என்று கருதினான் : ஆனால் மன்னனும் மண்டலமும் சீறும் என்று அறிந்தும், உண்மையைக் கூறிவிட்ட நேர்மையைப் பாராட்டாதிருக்க முடியுமா? ப்ரூனோ தன்னிடம் சொன்ன உண்மையை ஊர் அறிந்தால் ஆபத்து என்பது மன்னனுக்குத் தெரியும். மத அதிபர்களின் கோபத்தை எந்த மன்னனும் தாங்கிக்கொள்ள முடியாதல்லவா : மண்டலமே சீறும்; மாதா கோவில்களெல்லாம் சாபமிடும். ப்ரூனோவின் கொள்கை தெரிந்துவிட்டால், மத அதிபர்களும், அவர்களின் கோட்டை என விளங்கிய சோர்போன் பல்கலைக் கழகமும், பகை கொள்ளும். அதுபோது, தன்னால் கூட, ப்ரூனோவைக் காப்பாற்ற முடியாது என்றறிந்த மன்னன் இங்கிலாந்து நாட்டிலே இருந்த பிரன்ச்சுத் தூதுவருக்கு ஒரு கடிதம் கொடுத்து அந்த நாடு சென்று வதியுமாறு, ப்ரூனோவுக்குக் கூறினான். ப்ரூனோ. இங்கிலாந்து வந்த சமயம், அங்கு, கலையும் காவியமும், வீரமும் காதலும், செல்வமும் சீரும் கொஞ்சி விளையாடிய. எலிசபெத் இராணியின் ஆட்சிக்காலம்.
இங்கு ரோம் நகர மத அதிபர்களின் ஆதிக்கம் இல்லை : மத விசாரணைக்கூடக் கொடுமைகள் இல்லை; புத்தம் புதிய போக்கு வரவேற்கப்பட்டது. பொற்காலம் என்று புகழ்ந்தனர். இங்கு ப்ரூனோவின் புகழ் வளர வழி இருந்தது - கொள்கையை எடுத்துக்கூறும் வாய்ப்பு ஏற்பட்டதும். மீண்டும் ஆபத்து ப்ரூனோவைத் துரத்தலாயிற்று.
என்ன கொள்கை அது? மத ஏகாதிபத்தியத்தை முறி யடித்து. ரோமாபுரியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து நின்று லூதரின் புரட்சி இயக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்த இங்கிலாந்திலும், பகையை மூட்டிய, அந்தக் கொள்கை என்ன? இங்கிலாந்தில் மட்டுமல்ல, கால்வின் சித்தரித்த சீர்திருத்தத்தைச் செம்மையாக்கி வாழ்ந்த, சுவிட்சர்லாந்திலும். ப்ரூனோவின் கொள்கை மீது சீறிப் பாய்ந்தனர். கத்தோலிக்க நாடுகள் மட்டுமல்ல, பிராடெஸ்ட்டென்டு நாடுகளும், பாபம் ! மோசம்! அக்ரமம்! அனுமதியோம்! என்று கூவின ; அப்படிப்பட்ட கொள்கையை ப்ரூனோ கூறி வந்தார்.
கொலை கொள்ளை என்னும் தீச்செயல் புரிகிறவனை மகா சன்னிதானம் என்று போற்றுகிறீர்களே. இந்த மடைமை ஆகுமா? என்று கேட்டார். மார்டின் லூதர் - கால்வின், ஜிவிங்லி. போன்ருகும் இதையே கூறினர் - மக்கள் முதலில் மருண்டனர். பிறகு "ஆமாம், இந்த மடைமை ஆகாது. நமக்கு மோட்ச வழி காட்டியாக நாம் ஓரு தூய்மையாளரைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினர் : லூதர் வென்றார்.
"பாவத்துக்குப் பரிகாரம், மனதால் கழுவாய் தேடுவது தானே - காணிக்கை கொடுத்தால் பாவம் மறையுமோ! மறையும் என்று வாணிபம் செய்கிறார் மத அதிபர் ! ஏற்றுக் கொள்கிறீர்களே. ஆராய்ந்து பாராமல். காணிக்கை கொடுத் துப் பாவத்தைக் கழுவிக்கொள்ள முடியுமானால். பணக் காரன். கொலை, கொள்ளை, எனும் எந்தப்பாவமும் புரிய லாம். தப்பித்துக்கொள்ளலாம். அல்லவா? இதுவா அறம்? இதுவா மார்க்கம்? இதுவா கர்த்தரின் கட்டளை? இதுவா சுவிசேஷம்?" என்று கேட்டனர். பிராடெஸ்ட்டென்ட் இயக்கத்தினர் - மக்கள், தெளிவு பெற்றனர் - துணிந்து போப்பாண்டவரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டனர்.
இந்த அளவுக்குத்தான் மக்கள் தயாராயினர்.
கயமையைக் கண்டிக்கவும் தூய்மையைப் போற்றவும் முன்வந்தனர்.
மத அதிபர்கள், மாசுமருவற்றவர்களாக இருத்தல் வேண்டும் - ஒழுக்க சீலர்களாக விளங்க வேண்டு என்று கோரத் தலைப்பட்டனர்.
ப்ருனோ. மத அதிபர்கள், எப்படி இருக்கவேண்டும். கயமை நிரம்பியவர்கள் கூடாதல்லவா. தூய்மை உள்ளவர்கள்தானே தொழுகை நடாத்தும் தகுதியுடையார் என்ற பிரச்னையை அல்ல, எடுத்துரைத்தது. அவர் இப்படிச் சில அதிபர்களே தேவைதானா : அவர்கள் நடாத்திவைக்கும் தொழுகைகள், சடங்குகள் ஆகியவைகளால் மக்களின் ஒழுக்கம் மேம்படவும், மனம் தூய்மை பெறவும், செயல் சீர்படவும், மார்க்கமுண்டா என்ற அடிப்படையை அலசு ஆரம்பித்தார் :
மற்றவர்கள், கட்டிடத்துக்கு என்ன - வண்ணச் சுண்ணம் பூசினால், கவர்ச்சிகரமாக இருக்கும் என்ற ஆய்வுரையில் களித்தனர். ப்ரூனோ அந்தக் கட்டிடம், உனக்கும், உள்ளத்துக்கும், சிறைக்கூடம் ஆகிவிடக் கூடாதே, என்று எச்சரிக்கை கூறினார்.
மத ஏடுகளிலே காணப்படும் மாண்புகளின்படி, மத அதிபர்கள் நடந்துகொள்கிறார்களா என்பதை லூதர், கால்வின், போன்றார் ஆராய்ந்தனர் ; ப்ரூனோ மத ஏடுகளிலே மாண்புகள் என்று கருதப்படுவன, உண்மையிலேயே மாண்புகள் தானா என்று ஆராய்ந்தார் ! அந்த மட்டோடு நிற்கவில்லை, புத்தறிவு தரும் புது உண்மைகளுக்கும், மத ஏடுகளில் காணப்படும் கருத்துக்களுக்கும் உள்ள முரண்பாட்டை எடுத்துக் காட்டினார்.
ஆன்ஸ்லம் பாதிரியார் ப்ரூனோவை மடாலயத்தில் இருந்தபோதே இதற்காகத்தான் எச்சரிக்கை செய்து வைத்தார். அவர், மடாலயக் கொள்கையில் ஊறிப் போனவர். எனினும் புத்திக்கூர்மையும் நற்பண்பும் உள்ள ப்ரூனோவிடம் மட்டற்ற ஆசை கொண்டவர். எனவே தான் எச்சரித்தார்.
ஐரோப்பா முழுவதும் அந்த நாட்களில் அரிஸ்டாடில் தந்த கொள்கைகள் ஆட்சி புரிந்து வந்தன் - எல்லாத் துறைகளிலும் - சிறப்பாக மார்க்கத் துறையில்.
கிரேக்க நாடு தந்த அந்த அறிவுக் கருவூலம், அவர் காலத்தில், அவருக்கு இருந்த வசதிகளுக்கு ஏற்றவகையில் அவர் காலத்துச் சுற்றுச்சார்பின் படி ஆராய்ந்து, அறிந்த உண்மைகளை வெளியிட்டார் - அவை உலகு உள்ளளவும் மாற்றப்பட முடியாதன என்று அல்ல!
ஆனால், அந்தக் கொள்கைகளை ஏற்று, அவைகளின் படி, அரசியல், பொருளியல், மத இயல் அமைப்புகளை ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டனர் - பழக்கத்தில் வந்துவிட்டது - அதனால், அது இறுகியும் விட்டது.
மனிதனுடைய சிந்தனாசக்தியை அரிஸ்டாடிலின் தத்துவங்களுடன் பிணைத்து விட்டனர்; அதற்கு மேலால் செல்வதோ, முரணாகச் சொல்வதோ, கேடு பயக்கும். என்றனர் ; செல்பவர் தண்டனைக்கு உள்ளாவர் என்றும் சில இடங்களில் சட்டம் இயற்றினர்.
விண்ணிலே சிறகடித்துச் செல்லும் பறவை எங்கும் சென்று இன்புறும்.
கட்டி விடப்பட்ட 'பட்டம்' நூலும் அதைச் செலுத்து வோனின் திறமும் அனுமதிக்கும் அளவுதான் செல்லும்.
அரிஸ்ட்டாடில் தந்த கருத்துத்தான். முடிந்த முடிவு என்று ஐரோப்பா கூறிற்று.
அவர் விண், மண், கடல் என்பவை குறித்துக் கூறிவைத்த கருத்துக்களை ஆராய்வதும் ஆபத்தானது என்று கருதப்பட்டது.
சூரியன் சுற்றித்திரியும் கோளம்! பூமி நிலைத்து நிற்பது என்பது அரிஸ்டாடில் அளித்த கொள்கை.
இதன்படியே ஏடுகள் குறிப்பாக மதஏடுகள் தீட்டப் பட்டு விட்டன.
விண்ணுலகம். ஆங்கே விசாரணைக்கூடம் : நரகம், அங்கு வேதனைக்கூடம்; எனும் மதக்கருத்து. அசையா திருக்கும் பூமி. அன்றாடம் சுற்றிவரும் சூரியன் என்ற அடிப்படையின் மீது கட்டப்பட்டது.
இந்த அடிப்படையைச் சந்தேகிப்பது பாவம் என்று கூறுவதில் மதவாதிகள் முனைந்தனர் ; ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் இந்த அடிப்படையை அலசத் தொடங்கினர்.
ப்ரூனோ சிறுவனாக இருந்தபோதே வெடிகுண்டு வீசப்பட்டு விட்டது.
வேதநிந்தகன் கிளம்பிவிட்டான்!
கோபர்னிகஸ் எனும் ஆராய்ச்சியாளன் பூமி உருண்டை வடிவுடன் இருக்கிறது. அது சுற்றித்திரிகிறது. சூரியன் நிலைத்து நிற்கும் கோளம் என்று ஏடு தீட்டி விட்டான். மதவாதிகள் பாய்வர் என்ற அச்சத்தால், கோபர்னிகஸ் அந்த ஏடு தீட்டியும் வெளியே காட்டாது வைத்திருந்து. மரணப்படுக்கையில் இருக்கும் போதுதான் அந்த ஏட்டை வெளியிட ஏற்பாடு செய்தான். கோபர்னிகஸ் கொள்கை கேட்டு வைதீக உலகு சீறிக் கிளம்பிற்று : இது பொய்க் கொள்கை, பேய்க்கொள்கை ; பூமியாவது சுற்றுவதாவது: மேலே விண் ; இங்கே மண் ; இதனடியில் நரகம்: புண்யம் பாவம் இரண்டிலே எதைச் செய்யவும் மண் : புண்ணியம் செய்தால் விண்ணுலகு செல்லலாம் : பாவம் புரிவோர் நரகம் சேர்வர்; என்று முழக்கினர்.
பூமி உருண்டையாய் இருந்தால் என்ன, தட்டையாக இருந்தால் என்ன, சுற்றி வந்தாலென்ன சும்மா கிடந்தா லென்ன என்று மத அதிபர்கள் எண்ணிக் கிடப்பதற் கில்லை; ஏனெனில், கோபர்னிகசின் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொண்டால், புனித ஏடுகளின் அடிப்படையே தகர்ந்துவிடுகிறது - பிறகு, அந்த ஏடுகளின் துணைகொண்டு கட்டப்பட்ட அமைப்பு என்ன கதியாவது அந்த அமைப்பின் பயனாகக் கிடைத்துள்ள கோலாகல வாழ்வு என்ன ஆவது - இது அவர்கள் கவலை, பயம்! எனவே, தங்கள் ஆதிக்கத்தை ஏவி கோபர்னிகசின் கொள்கையை அழித்தொழிக்க முனைந்தனர். ப்ரூனோ, கோபர்னிகசின் கொள்கையைச் சரியானது என்று கற்றறிந்தார். சிந்தித்துத் தெளிவும் உறுதியும் பெற்றார். இந்த அடிப்படை மாற்றம் அவருக்கு ஏற்பட்டான பிறகு, எந்த மத அமைப்புத்தான் அவரை ஆட்கொள்ள முடியும்!
கோபர்னிகஸ், ஆராய்ந்து அறிந்த புது உண்மைகூட, முழுவதும் புதிதல்ல. கிரேக்க நாட்டுப் பேரறிஞர் பிதாகோராஸ் என்பவர் இதனை முன்பே கூறி இருந்தார்: ஆனால் அரிஸ்டாடில் கொள்கை, அதனை இருட்டடிப்பில் வைத்து விட்டது கோபர்னிகசின் கொள்கை. இதைப் புதுப் பித்தது : புயல் என்றனர் மதவாதிகள் - மத அடிப்படையில் கற்றவர் அனைவரும், இது கவைக்குதவாத கொள்கை என்றனர். ஆனால் கோபர்னிகஸ் வெற்றிபெற்ற வண்ண மிருந்தார். ப்ரூனோ மடாலயத்தில் பயிலும் போதே இந்தக் கொள்கையை ஐயந்திரிபற உணர்ந்தார். ஆன்ஸ்லம் பாதிரியார் "மகனே ! ஏன் இந்த கோபர்னிகசைக் கட்டி அழுகிறாய், அறியவேண்டியதை அரிஸ்டாடில் அளித்துவிட்டார் அதுபோதும். ஐயன் பெருமைகளைப் படி" என்று கூறி வந்தார். இளம் உள்ளம் கோபர்னிகசின்பால் லயித்துவிட் டது. பன்முறை கண்டித்திருக்கிறார் ஆன்ஸ்லம்.
"உலகம் உருண்டை என்கிறாயே, மகனே ! அப்படியானால், நரகம் எங்கே இருக்கிறது? புனித ஏடு படித்திருக்கிறாயே, கூறு. நரகம், உன் உருண்டை உலகிலே எங்கேயடா இருக்கும்" என்று கேட்பார் ஆன்ஸ்லம், ப்ரூனோ சிரித்துக்கொண்டே, "எங்கே இருக்கும்? நீங்களல்லவா கூற வேண்டும்" என்று மடக்குவான். அவர் காதைப் பொத்திக்கொள்வார் ! அவரும் அவர் போன்றாரும், விண்ணகத்திலே, ஒளிவிடும் சிம்மாசனத்தில் ஐயன் வீற்றிருக்கிறார். அங்கு விசாரணை நடைபெறும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ப்ரூனோவின் கவலை விசாரணை எப்படி இருக்கும் எப்போது நடைபெறும் என்பது கூட அல்ல. சுற்றாத சூரியனைச் சுற்றுவதாகவும், சுற்றும் பூமியைப் பாய்போல கிடப்பதாகவும், ஆராய்ச்சிக்கு ஒவ்வாத முறையிலே நம்புகிறார்களே. இது ஏன் என்பதாகும். இதிலிருந்து துவங்கிய அறிவு விசாரணை, ப்ரூனோவை நெடுத்தூரத்துக்கு அழைத்துச் சென்றது.
மனிதன் பாவத்தோடு பிறக்கிறான் - அவனைப் பாவம் புரியும்படி தீயதேவன் சதா தூண்டுகிறான் - அவனுடைய தூண்டுதலிலிருந்து மீளவும், கர்த்தரின் கிருபையைப் பெறவும் தொழுகை நடத்தவேண்டும் - முறை நாங்கள் கூறுகிறோம் - இடம் நாங்கள் காட்டுகிறோம் - நேரம் நாங்கள் குறிக்கிறோம் - காணிக்கை எமக்குத் தாருங்கள் என்றனர் மத அதிபர்கள் - கேட்கும் முறை, பெறும் காணிக்கை. வகுத்திருக்கும் சடங்கு இவைகள் பற்றி, லூதரும் பிறரும் ஆராய்ந்தனர் - ப்ரூனோ. இவைபற்றி அல்ல, மனிதன், ஈடேற, தூய்மை பெற, அவனாலேயே முடியும், தக்கபடி முயன்றால். என்பது பற்றி ஆராய்ந்தார்.
கோளங்கள் பற்றியும், ஒழுக்கமுறை பற்றியும், பரூனோ தீட்டிய மூன்று அரிய ஏடுகள். பழைய கோட்பாட்டைத் தகர்த்தெறிவனவாக அமைந்தன.
கலத்தில் இருப்போன் தான் அலையையும் சுழலையும் சமாளித்துக் கலத்தைச் செலுத்தவேண்டுமே தவிர, இக் கரையிலோ அக்கரையிலோ இருந்துகொண்டு ஒருவன் கலத்தைச் செலுத்துவான் என்று எங்ஙனம் கூறமுடியும் - மனிதனும் அதுபோன்றே, தன் சிந்தனையையும் செயலையும் அவனே தான் செலுத்திச் செல்லவேண்டும். அதற்காக வேறு ஒருவரை நியமித்துக்கொள்வது பொருளற்றது, எனவே பயனற்றது என்று ப்ரூனோ வாதிட்டார்.
தூய்மையான சிந்தனை, செம்மையான செயலைச் செய்யும் முயற்சி - இவை மனிதனை ஈடேறச் செய்யும் என்று ப்ரூனோ கூறினார்.
மதவாதிகள், மனிதனுக்குப் 'போலீஸ்' வேலை செய்தனர் - ப்ரூனோ 'தோழமை' பேசினார். மனிதன் இயல்பால் கெட்டவனுமல்ல, பாபியுமல்ல, அவனிடம் 'தெய்வீகம்' இருக்கத்தான் செய்கிறது; அதனை அறிந்து இன்புற்று, தக்கன தகாதன என்ற பாகுபாடு பெற்று பாடு அறிந்து ஒழுகுதல் வேண்டும் - மனிதன், கயமை, தூய்மை எனும் இரு கடல்களுக்கிடையே தவிக்கும் கலம். நாங்காள மீகான்கள் என்று கூறும் மதவாதிகள் போலின்றி, ப்ரூனோ மனிதன் மேம்பாடடைய முடியும், சுய முயற்சியால் என்று நம்பினார். இதனை எப்படி, தொழுகை ஸ்தலங்களை நம்பி வாழ்வோர் பொறுத்துக் கொள்ள முடியும்? பகை மூண்டது, ப்ரூனோ அஞ்சவில்லை.
சுவிட்சர்லந்து விரட்டினால், பிரான்சு : அங்கு எதிர்ப்பு வெப்பமானால், இங்கிலாந்து : அங்கும் பகை மூண்டால் ஜெர்மனி. இவ்வண்ணம், ஓடியவண்ணம் இருந்தார் - எந்த இடம் தங்குமிடம் ஆன போதிலும், கோபர்னிகஸ் கொள்கையை வலியுறுத்துவார்.
இங்கிலாந்து நாட்டிலே ப்ரூனோ தங்கி இருந்தபோது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், அறிவு வளர்ச்சி விழா நடைபெற்றது : பல்வேறு நாட்டு அறிஞர்கள் கலந்து கொண்டனர்; ப்ரூனோ. அங்கு கோபர்னிகஸ் கொள்கையை வாதாடினார் ; குதூகலம் கொதிப்பாக மாறிவிட்டது - சுட்டிக் காட்டிச் சுடுசொல் கூறலாயினர் மக்கள்.
'போகிறான் பார் நாத்திகன்!"
"உலகம் சுற்றுகிறது என்கிறான் இந்த உலுத்தன்"
"சூரியன் சுற்றாதாம் -- மேதாவி கூறுகிறான்" என்று ஏளனம் செய்வர் - மிரட்டுவர்.
இங்கிலாந்திலும் வெப்பம் அதிகமாகிவிட்டது.
ஜெர்மெனியிலிருந்த விர்ட்டன்பர்க் பல்கலைக் கழகத்தில், ப்ரூனோவுக்கு நிம்மதி அளிக்கும் வாழ்வு கிடைத்தது தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார் - அவருடைய கொள்கைக்காக வெறுத்து விரட்டவில்லை : அவர் கண்ட ஆராய்ச்சி உண்மையை அவர் எடுத்துரைக்கட்டும், அது அவர் உரிமை என்று பெருந்தன்மையுடனும், தாராளத் தன்மையுடனும் விர்ட்டன்பர்க் பல்கலைக் கழகத்திளர் நடந்து கொண்டனர்.
நிம்மதி, ப்ரூனோவுக்குச் சில காலமே பிடித்தது. பிறகோ அவருக்குப் போரிட வேண்டும் என்ற எண்ணம் துளைத்தது. கொள்கையை, மறுப்போரிருக்கும் இடத்திலெல்லாம் சென்று பரப்புதல் வேண்டும்; அறிவுப் போர் வாழ்வின் குறிக்கோள் என்று கருதினார். போர்வீரன் மனம் களம் காணாது, கழனியில் கதிரின் அழகு கண்டு காலந் தள்ளுவதற்கு ஒருப்படுமோ! திறம் வந்த நாள் முதல் போரிட்டே பழக்கமாகிவிட்டது!
ப்ரூனோ மடாலயத்தில் சேருவதற்கு முன்பு தாயும் சிற்றப்பாவும், ப்ரூனோவை போர் வீரனாக்கவே விரும்பினார்கள். ப்ரூனோவேதான், அறிவு பெற மடாலயம் செல்வேன் என்று கூறினான். மக்களை மக்கள் காரணமற்றுக் கொன்று குவிக்கும் போர் முறையை, சிறுவன் ப்ருனோ தாயிடம் கண்டித்து, வெறுத்துப் பேசினான். "எவனோ சோம்பேறிச் சீமான் சண்டையிடச் சொல்வான். அவனுக்காக என் போன்ற ஏழையைக் கொல்ல நான் செல்ல வேண்டுமா?" என்று கேட்டான். தாயின் உள்ளம் மகனுடைய நேர்மையும் ஈரமும் கொண்ட உள்ளத்தைக் கண்டு பூரித்துப்போயிருக்கும் ! அவள் என்ன கண்டாள். பாபம், ப்ரூனோ, வேறோர் பயங்கரப் போருக்குச் செல்வான் என்பதை.
போர் உள்ளம் கொண்ட ப்ரூனோ, நிம்மதி தந்த விர்ட்டன்பர்க்கை விட்டு, பிராங்பர்ட், பதுவா போன்ற இடங்கள் சென்றார்.
யார் செய்த சூழ்ச்சியோ, இதுநாள் வரை ரோம் நகர மதஅதிபர் பிடியில் சிக்காது இருந்துவந்த ப்ரூனோவை, ஆபத்தில் கொண்டுவந்து சேர்த்தது.
ப்ரூனோவுக்கு எப்போதும், சிறுவயது முதலே தாயகத்தினிடம் அளவற்ற பற்று. எந்த நாட்டிலே உலவினாலும், இத்தாலியைப் பற்றிய எண்ணம் மனதில் கனிந்து நிற்கும். நீலநிற வானமுள்ள என் இத்தாலி எங்கே, இந்த வண்ண மற்ற வானம் தெரியும் நாடு எங்கே ! என்று ஏங்கிக் கூறிக் கொள்வார். மடாலயத்திலிருந்து தப்பி ஓடியபோது. சுவிட்சர்லாந்து நாட்டு எல்லையருகே நின்று, 'இத்தாலியை விட்டுப் பிரிகிறோமே. மீண்டும் இங்கு வருவோமா' எனக்குத் தொட்டில் தந்த இத்தாலி, கல்லறைதான் தரருக்கிறதா? இங்கு நான் வாழ இடமில்லயா? தாயகமே! பேயகமாக மாற்றப்பட்டு விட்டாயே கான்றெல்லாம் என்லக் கசீர் துருகினார் ப்ரூனே. போர் உள்ளமும் பாகப் பற்றும், ப்ரூனோவை சதிகாரடைட் சிக்கவைத்தது.
ரோம் நாட்டு மத அதிபர்கள் தமது எதிரிகள் கண்ணி வைத்துப் பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். எத்திருக்கும் அவர்கள் வலைவைந்தனர் - ஆனால் அவருக்குத் துணையாக மன்னர் சிலரும் மக்கள் பலரும் திரண்டு நின்றதாலும், அன்றைய அரசியல் நில மாற்றங்கள் அவருக்குச் சாதக மளித்ததாலும், அவர் தப்பித்துக் கொண்டார் ரோம் மத அதிபரின் ஆதிக்கத்தை அழிக்கும் பிராடெஸ்டென்டு புயல் கிளம்பிய நாள் தொட்டு, மோப்பம் பிடித்துச் செல்லும் வேட்டை நாய்கள் போன் ஒற்றர்கள் பல்வேறு நாடுகளிலும் சுற்றிய வண்ணம் இருந்தார். அவர்களுக்கு ப்ரூனோவின் நடவடிக்கைகள் யாவும் நன்கு தெரியும். இத்தாலிய மண்ணிலே. ப்ருனோ கம்பவத்ததும் கல்விக்கொள்ளக் காத்துக் கிடந்தனர். பகைமூண்ட இடங்களிலேயே ப்ரூனோ நீண்ட காலம் தங்கி இருந்திருந்தாலும் அவரை ஒழிக்க வழி கண்டிருப்பர் - ஆனால் அந்தப் புயல் ஓரிடத்தில் தங்கவில்லை.
ஒரு நாட்டிலும் ஓய்ந்து இருக்கவில்லை.
இத்தாலி நாட்டுச் சீமான் ஒருவன் மோஷினிகோ - எனும் பெயருடையான், ப்ரூனோவுக்கு ஒரு அழைப்புக் கடிதம் அனுப்பினான். ’என் மாளிகையில் வந்து தங்கி அருந்து, என் மகனுக்குத் தத்துவம் கற்றுத்தருக ! உமக்கு இங்கு எந்த ஆபத்தும் நேரிடா வண்ணம் நான் பாதுகாப்பளிக்கிறேன்’ என்று எழுதியிருந்தான். ப்ரூனோ களிப்பு அடைந்தார். என் இத்தாலி அழைக்கிறது! பசுமை நிரம்பிய தோட்டங்கள் என் கண்களுக்கு மீண்டும் விருந்தளிக்கும். என் தாயகத்தில் மீண்டும் உலவலாம். என் உள்ளத்தில் உள்ளதை என் நாட்டவருக்கு உரைத்திடலாம். நல்ல வாய்ப்பு! ஈடில்லா இன்பம்! என்றெல்லாம் எண்ணிக் களித்தார். ப்ரூனோவுக்குச் சதிகாரர்களின் இயல்பு தெரியாது. அவர் பண்பு அறிவார். படித்தவர்களின் பழக்க வழக்க மறிவார், சூது பேசும் சதிகாரர்களின் போக்கினை அறியார்.
இத்தாலியில். இனிமைதரும் திராட்சை மட்டுமா இருக்கிறது – எரிமலை யுமல்லவா இருக்கிறது ! வெசுவயஸ் மட்டுமல்ல, மத அதிபர் இருக்கிறார். எந்த நேரத்திலும் அவர் பாபம் எரிமலை கக்கும் நெருப்பைவிடக் கொடுமையாகக் வெம்பக்கூடும். நாம் அங்கு செல்வது ஆபத்தாக முடியும் என்று எண்ணத்தான் செய்தார். ஆனால் அந்தச் சூதுக்காரன் அனுப்பி வைத்த கடிதம், அவரை ஏமாற்றிவிட்டது. இத்தாலிய நாட்டுச் சீமான் -- அவனால் மத அதிபரின் பகையைக் கூட எதிர்த்து நிற்க இயலும் - அந்த மாளிகையைத் தாக்கத் துணிவு பிறக்காது. மத ஆதிக்கக்காரருக்கு என்று எண்ணினார்.
பேசும் சதி படித்தவர்களின் இயல்பு தெரியாது ஒரு வேளை பகைப்பட்டுவிட்டது போலும் - ஒரு வேளை நமது கொள்கையை ஆதரிப்போரின் தொகை இத்தாலியில் வளர்ந்துள்ளது போலும் - இல்லை என்றால் தன் மகனுக்குத் தத்துவ ஆசிரியராக இருக்கும்படி, ஏன் அந்தச் சீமான் அழைக்கப்போகிறார். என்று எண்ணினாரோ என்னவோ! ஏமாந்து விட்டார். புற்றருகே அமர இசைந்து விட்டார்.
வெனிஸ் நகர் ! கடலலை தழுவும் கோட்டைச் சுவர் உள்ள அழகிய மாளிகை ! ப்ரூனோ அங்கு தங்கி, தமது அருந்திறனை அள்ளி அளித்து வந்தார் சீமான் மகனுக்கு. வெள்ளியை உருக்கிவார்க்கும் நிலவு போல, அவர் அறிவு புகட்டி வந்தார் காலிபச் சீமானுக்கு -- ஆனால், அவன் மனதிலே அறிவு புகவா செய்தது - அவன் முன் ஏற்பாட்டின்படி, ப்ரூனோ சொன்னதை எல்லாம் மதவிசாரணைக் குழு அலுவலரிடம் ஒவ்வருநாளும் ஒப்புவித்துக் கொண்டிருந்தான் – குற்றப் பத்திரிகை தயாராகிக் கொண்டிருக்கிறது ப்ரூனோமீது.
"அகண்ட வெளியின் அழகினைக் காண் இளைஞனே இயற்கையின் எழிலைப் பாரப்பா ! என்ன கவர்ச்சி! எவ்வ ளவு நேர்த்தி வீசும் காற்று. கீதமாக இல்லையா வாலிபனே. உற்றுக் கேள் ! கடலலையைக் கண்டால் எத்துணை மாட்சிமை தெரிகிறது. இந்த இயற்கை அழகைக் கெடுக்க அழுகும் கற்பனைகளை, கட்டுக்கதைகளைக் கட்டி வைத்திருக்கிறார்களே கபடர்கள்" என்றெல்லாம், பாகுமொழியில் பகுத்தறிவைக் கூறி வந்தார் ப்ரூனோ. எப்போதுமே ப்ரூனோவுக்கு இயற்கை அழகைக்கண்டு களிப்பதிலே அளவற்ற இன்பம். ஆண்டு பலவாக அவர் மாளிகைகளிலே சிற்சில காலம் தங்க் கிடந்தாலும் பெரும் நாடு விட்டு நாடு சுற்றித்திரியும் நிலையிலே இருந்ததால், இயற்கையுடன் நெருங்கிய தோழமை பூண்டிட முடிந்தது. சாலைகளில் நடப்பார். சோலைகளில் உலவுவார். குன்றின் மீது ஏறி நின்று, சுற்றிலும் தெரியும் கோலம் கண்டு களிப்பார்! வெனிஸ் மாளிகையின் அமைப்பும், இயற்கை அழகை அவருக்கு அள்ளித் தருவதாக அமைந்திருந்தது. கடலோரம் மாளிகை!
ஓரிரவு ! அற்புதமான நிலவு ! அலங்காரப் படகு ஏறி மாணவனுடன் சென்று, கடற்காட்சி கண்டுவிட்டு, ப்ரூனோ திரும்புகிறார். மாணவனுக்குப் பாடம் கற்றுத் தருகிறார் - அவரே பாடம் பெறுகிறார். இயற்கையைக் கண்டு களிக்கி றார். இதற்கு இணையான இன்பம் வேறு ஏது என்று கேட்கிறார். பால்வண்ண நிலவைக் கருநிறமேகம் கவ்விக் கொள்வதுண்டு - ஆனால் நிலவு அதனைக் கிழித்தெறிந்து விட்டு வெற்றி ஒளி வீசும்! ப்ரூனோவைக் கவ்விக்கொள்ள கருமேகமல்ல, கருநாகம், மனித உருவில் வந்தது. மத விசாரணைக் குழுவினர். சீமானிடம் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி முகமூடி அணிந்து கொண்டு மாளிகை நோக்கி வருகின்றனர். கடற்பயணம், நிலவொளி, அறிவு தரும் இன்பம் இவைகளில் திளைத்திருக்கிறார் ஜியார்டானோ - அக்ரமக்காரர்கள் அவர் அறியாவண்ணம், மெல்ல மெல்ல நடந்து வருகிறார்கள் அவரை நோக்கி. இயற்கையின் இனிமைபற்றி அவர் வண்ணச் சிந்து பாடுவது போலப் பேசி மகிழ்கிறார். வன்னெஞ்சர்கள் அவரருகே வந்துவிட்டனர் பின்புறமாக! எல்லையற்ற இன்பமே! இயற்கை அழகே! என்று அவர் மன எழுச்சியுடன் கூறுகிறார். கருப்புப் போர் வையைச் சரேலென அவர்மீது வீசி அவரைச் சிறை பிடிக்கின்றனர், கயவர்கள் ! ஒரு கணம் எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. திடுக்கிட்டார் ! சிங்கம் பிடிபட்டுவிட்டது! சிலர் சிறைக்குட்படுத்தப்பட்டார். நிலவின் அழகுகண்டு மகிழ்ந்திருந்தார். அவரைப் பாதாளச் சிறைக்கு இமுத்துச் சென்று அடைத்தனர் பாதகர்கள்.
மாளிகையிலே இருந்தது பாதாளச் சிறை ! ஆறு ஆண்டுகள் அதிலே அவரை அடைத்து வைத்தனர். ஒளி கண்களில் படுவதில்லை! பறவைகளின் இன்னிசையை அவர் செவி கேட்கவில்லை ! இருட்டறை! தனி அறை! ஆடைகளையப்பட்டு அலங்கோலமான நிலை! இரும்புச் சங்கிலிகள்! இந்தக் கொடுமை, ஆறு ஆண்டுகள், வெனிஸ் நகர மாளிகைச் சிறையில்.
நம்பிக்கையற்றவனை நல்வழிப்படுத்த, மதவாதிகள் கையாண்ட முறை என்ன? அவன் உணரும் வண்ணம் உண்மையை அவன் முன் எடுத்து வீசினரா? இல்லை! இரத்தம் பிறிட்டுக்கொண்டு வருமளவுக்குச் சவுக்காலடித்தனர்! மார்க்க ஏடுகளை அவன் முன் கொட்டி ”மதியிலி! இதைப்படி, அறிவுபெறு" என்றனரா? இல்லை, கட்டி வைத்து அடித்தனர். இரும்பு வளையங்களிட்டு இம்சித்தனர். இரும்புப் பலகைமீது சாயவைத்து, இரும்பு முள் வளையங்களுள்ள உருளைகளை அவன் மீது உருட்டுவர் ; ஆழப்பதிந்து எலும்புவரை உள்ள சதையைப் பிய்த்து வெளியே கொண்டுவரும் - சிலர் மாண்டு விடுவதுண்டு, பெரும்பாலானவர்கள் குற்றுயிராகி விடுவர். இரத்தம் கசியக் கசிய அவன் வேதனைப் படும் போது, ”வேதத்தை ஏற்றுக்கொள்கிறாயா" என்று கேட்பர் ; அவன் தேகம், சல்லடைக் கண்போலத் துளைக்கப் பட்டுக் கிடக்கும் போது. தேவனை பூஜிக்கிறாயா? என்று கேட்பர். அவன் குற்றுயிராகக் கிடக்கும் போது, "குருவுக்குக் கீழ்படிகிறாயா?' என்று கேட்பர். பழத்தைச் சாறுபிழிந்து பருகி இன்பம் பெறுவர் மக்கள். இந்த மகானுபாவர்கள் பகுத்தறிவு கொள்ளத் துணிபவரின் இரத்தத்தைப் பிழிந்து எடுத்து, அவனுக்குக் காட்டி இன்பம் பெற்றனர்.
ஜியார்டானோ ப்ரூனோ ஆறு ஆண்டுகள் இந்தக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டான்! உடலில் இன்னும் கொஞ்சம் வலுவிருக்கிறது. பிடிவாதம் குறையவில்லை. இன்னும் சில நாட்களில் பயல் பணிந்துவிடுவான் என்று எண்ணிக் கொண்டனர் - அந்த அக்ரமக்காரர்கள் அது போலப் பலரைப் பணியவைத்தார்கள் ! ஆனால் ப்ரூனோவை அவர்கள் அடிக்கடி காண முடியுமா!
அவர் அவர்களுடைய முறை கண்டு, மனம் உடைய வில்லை. தகுந்த விலை கொடுக்கிறோம் என்றே எண்ணிக் கொண்டார்.
"இந்த மகா பாவி, என்ன வெல்லாம் சொன்னான். சொல்லு தம்பீ" என்று வாலிபச் சீமானை. ப்ரூனோ எதிரே கொண்டுவந்து நிறுத்தி வைத்துக் கேட்டனராம் ஒரு நாள் - அவன் குளறினான், "ஐயன்மீர் ! ஏன் அந்த அறியாச் சிறுவனை இம்சிக்கிறீர்கள். நானே கூறுகிறேன் கேளும்" என்று கேலியாகப் பேசினாராம் ப்ரூனோ.
இவ்வளவு இம்சைக்குப் பிறகும் இவனிடம் பிடிவாதம் இருக்கிறதே என்று திகைத்த அந்தத் தீயர்கள் ப்ரூனோவைத் திருத்தலத்துக்கே அனுப்பிவிடத்தான் வேண் டும் என்று தீர்மானித்தனர் - ப்ரூனோ, ரோம் நகர் கொண்டு செல்லப்பட்டான் மோட்சலோகத் திறவுகோல் உள்ள திருத்தலமல்லவா. ரோம் ! இரண்டாண்டுகள் அங்கே சிறை! அவ்வப்போது, மத நூல் வல்லுநர்கள் ப்ரூனோவை விசாரிப்பர் - ஒவ்வோர் முறையும், ப்ரூனோவின் அறிவுத் தெளிவு அவர்களைத் திகைக்கச் செய்தது. இறுதியில்.. ’இவன்
திருத்தப்பட முடியாத நாத்தீகன்' என்று திருச்சபையினர் தீர்ப்பளித்து, இந்தப் பாவியின் இரத்தம் மண்ணில் விழாத படி இவனைக் கொல்க ! என்று கட்டளையிட்டு. அதனை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை அறமன்றத்துக்கு அளித்தனராம். இரத்தம் கீழே சிந்தலாகாது என்றனராம் ! ஆறு ஆண்டுகள் அந்த வெனிஸ் நகரச் சிறையிலே இரத்தமும் சதையும் கலந்து கலந்து வெளிவந்தது - இப்போது இரத்தம் கீழே சிந்தலாகாது என்றனராம்! என்ன பொருள் அதற்கு? உயிரோடு கட்டி வைத்துக் கொளுத்து என்பதாகும்.
ஆண்டு பலவாக அவர்கள் படித்த மத ஏடுகள் ஏராளம் - ஐயன் அருளும் உடையார் என்று கூறப்பட்டது - அவர்களால் ஒரு நாத்திக னுடன் வாதிட்டு அவன் கொள்கையை முறியடிக்க இயலவில்லை - உயிரோடு கொளுத்திவிடு என்றுதான் கூறமுடிந்தது, என் செய்வார்கள் அவர்கள் ! அவனுடைய அறிவு கிளப்பும் புரட்சித் தீ, மடாலயத்திலே குன்றெனக் குவித்து வைத்துள்ள மத ஏடுகளைச் சுட்டுப் பொசுக்குகிறதே ! தப்ப வழியில்லை. எனவே அவனைத் தீயிலே தள்ளு என்றனர்.
"நாத்திகன் - எனவே நாதன் இவனைத் தண்டிப்பார். நிச்சயமாக" என்று கூறிடக்கூட இவர்களுக்கு நம்பிக்கை இல்லை ! ஒரு வேளை, அவர்கள் ஆண்டவனின் தீர்ப்புக்கு இந்த வழக்கை விடலாகாது. ப்ரூனோ பக்கம் தீர்ப்புக் கிடைத்தாலும் கிடைத்துவிடும். என்று அஞ்சினர் போலும் ஆத்திகத்தைக் காத்திட அரண்மனைகளும் மாளிகைகளும் மட்டுமல்ல, சிறு குடில்கள் இலட்ச இலட்சமாக உள்ளன - இதனை ஒரு ப்ரூனோவின் கொள்கை என்ன செய்துவிட முடியும், கத்தித் திரியட்டும். நமது பக்தர்களின் தொழுகை யின் சத்தத்தின் முன்பு இவனுடைய புரட்சிக்குரல் நிற்குமா என்று எண்ணும் துணிவு இல்லை ! ஒரு வேளை. ப்ரூனோ வென்றுவிட்டால். தங்கள் ஆதிக்கம் என்ன கதி ஆவது என்ற அச்சமே அவனைப் பிடித்தாட்டிற்று.
பிராடெஸ்டன்டுகளைக் கூடச் சகித்துக்கொள்ளலாம் - அவர்கள் அடிப்படையை மறுக்கவில்லை. நமது ஆதிக் கத்தில் இருக்க மறுக்கிறார்கள், எனினும், ஜெபமாலை. தொழுகை, இவைகள் உள்ளன; இவன் போன்றார், அனு மதிக்கப்பட்டால், பிறகு, நமக்கு மிச்சம் என்ன இருக்கும்? இவன் தான். விண்ணிலே சுவர்க்கம் இல்லை. மண்ணுக்கு அடியில் நரகம் இல்லை. என்று பேசுகிறானே. இந்த இரண் டும் இல்லை என்று மக்கள் தீர்மானித்துவிட்டால், நாம் ஏது. நமக்குள்ள இந்த சுவைமிக்க வாழ்வு ஏது. என்று எண்ணி னர் - குலை நடுக்கமெடுத்து விட்டது - கொளுத்துங்கள் இவனை. என்று கொக்கரித்தனர்.
பழிபாவத்துக்கு அஞ்சாத பாவியாக இருக்கலாம் ஒரு வன் - தாங்கிக்கொள்ளலாம். பாவத்தைத் துடைத்திடும் பரிகார முறை தரலாம். திருத்தலாம்: கொள்ளைக்காரனைக் கூட, புண்யவானாகும்படி புத்தி கூறி, கோயில் கட்டச் சொல்லலாம்; கசிந்து உருகு காரிகையே! கற்பு இழந்த என்னைக் காப்பாற்று என்று நெஞ்சுருக இறைஞ்சு நோன்பு இரு! திருத்தலங்களைத் தொழுது அடியார்களை வழிபடு. பாவக்கறை கழுவப்படும் என்று கூறி வழுக்கி விழுந்த வனிதையை. மீண்டும் பரிசுத்தமாக்கிவிடலாம் - ஆனால் ப்ரூனோ ! இவன் பாபம் என்று கூறுகிறீர்களே. எதை? என்றல்லவா, கேட்கிறான். மனிதன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவனிடமே இருக்கிறது. என்று கூறி நம்முடைய வேலையைப் பறிக்கிறானே ! விட்டுவைத்தால் பத்து நிச்சயம். எனவே தீயிலே தள்ளுங்கள் என்றனர்.
"கோயிலை இடிப்பதும் கொளுத்துவதும். பாபம் தானே?"
"நிச்சயமாக, பாபம்தான்"
"இவன் கத்தோலிக்கத் தேவாலயத்கைக் கொளுத்திய மகாபாவி"
"ஏன் கொளுத்தினான் தேவாலயத்தை?"
"பிராடெஸ்டண்டு மார்க்கமாம் எனவே, கத்தோலிக்க மடாலயத்தைக் கொளுத்துவது, புண்ணிய காரியம் என்று கருதிக்கொண்டானாம்."
பிராடெஸ்டெண்டு நீதியாளர்களின், நெரித்த புருவம் மாறிவிடுகிறது - மன்னிப்புக் கிடைக்கிறது. அதுபோன்றே கத்தோலிக்கர்கள், பிராடெஸ்டன்டை இம்சை செய்வது. பாவமாகாது என்று கருதி வந்தனர். எனவே பாவம் என்பதற்கே இரு வகையினரும் ஒன்றுக்கொன்று நேர் மாறான விளக்க உரை தரலாயினர்.
ஆனால் ப்ரூனோ இரு சாராருக்கும் ஆகாதவன்!" ஏனெனில் அவன், உலகம் உருண்டை என்று கூறி புனிதக் கருத்துக்களை மறுக்கிறான் ! மாபாவி! எனவே கொளுத்திக் கொல்க என்றனர்.
கோபர்னிகஸ், உலகு பற்றிய தன் கருத்தைக் கூறு முன்பே, மத ஏடுகளைக் கேலிப் பொருளாக்கும் சம்பவ மொன்று நடந்தது. ஆசார்ய புருஷர்களும், அர்ச்சகர்களும் சன்னிதானங்களும், சாதாரணச் சாமியார்களும், நம்பிக்கையுடனும் ஆவேசமாகவும். உலகு, மோட்சம், நரகம் என்பவைபற்றிக் கூறிவந்த உபதேச உரைக்கு வேட்டு வைத்தான். சாதாரணக் கப்பலோட்டி!
மாகெல்லான் என்பவன், ஸ்பெயின் நாட்டில் செவில்லி எனும் கடலகத்திலிருந்து கிளம்பினான் கலத்தில் - மேற்குத் திசையாக ! மேற்குத் திசையாகவே சென்றான் ! திசை மாறவில்லை ; திரும்பவில்லை; மேலால், மேலால் செல்கிறான் - உலகம் தட்டை என்றால். கடைசி பாகம் எது காண்பேன் என்று பிடிவாதம் பேசுகிறான் - "மகனே! மாபாவியாகாதோ அருளாளர்கள் அளித்த உண்மையைச் சந்தேகிக்காதே, உலகம் தட்டைதான் - நீ, கடைசிவரை சென்றால் - அதோ கதிதான்," என்று மதவாதிகள் எச்சரித்தனர். அவனோ நான் உலகம் உருண்டை என்று நம்புகிறேன் -- உலகின் நிழல், சந்திரன் மீது வீழ்கிறது என்பதை உணர்கிறேன் - எனக்கு அந்த நிழல் தரும் நம்பிக்கையை, உங்கள் நிகண்டு கள் தரவில்லை. எனவே நான் செல்வேன். செல்வேன்" என்று கூறுகிறான். வென்றான் ! மேற்கு நோக்கியேதான் சென்றான். மாகெல்லான் திசை மாறவில்லை. 1519 ஆண்டு ஆகஸ்ட்டு திங்கள் பத்தாம் நாள் செவில்லி விட்டுக் கிளம்பியவன், 1522-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி செவில்லி வந்தடைந்தான் - ஒரே திசையில் பயணம் செய்து ! உலகம் உருண்டைதானே ! என்றான். ஆமாம் போலிருக்கிறதே என்று சிலர் இழுத்தாப்போல் பேசினர்.
மதவாதிகள் மயக்க மொழி, மாகெல்லான் பெற்ற வெற்றியின் உண்மையை மாய்த்தது. உலகம் தட்டைதான் என்றனர் மக்கள். கோபர்னிகஸ் அறிவாளிகள் உள்ளத்திலேயே புயல் எழக் கூடிய வகையிலே ஏடு தீட்டினான். தேவாலயம் அதனைத் தீண்டாதீர் என்று உத்தரவிட்டது. 1616-ம் ஆண்டு ப்ரூனோ இறந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, போப்பாண்டவரே முன்னின்று, கோபர்னிகசின் கொள்கையைக் கண்டிக்க வேண்டி நேரிட்டது ! கொளுத்திவிட்டளர் ப்ரூனோவை. கொள்கையோ மடியவில்லை. போப்பின் சாபம் வீசப்பட்டது - அப்போதும் சாகவில்லை - கொள்கை வளர்ந்தது - புதுப்புது ஆராய்ச்சியாளர்கள் தோன்றலாயினர் - ப்ரூனோவின் சார்பிலே பேசப் பலர் முன்வந்தனர். 278 ஆண்டுகள் போரிட்டுப் பார்த்தது தேவாலயம் உலகம் உருண்டை என்பதையும், சுற்றி வருகிறது என்பதையும் ஏற்க மறுத்தது. கடைசியில், களத்தைவிட்டு தேவாலயத் தாரே ஓடிவிட்டனர். ப்ரூனோக்கள் அல்ல ! ஒரு ப்ரூனோவைக் கொளுத்தி விட்டால் வேறு ப்ரூனோக்கள் கிளம்ப மாட்டார்கள் என்று எண்ணியவர்கள் ஏமாந்தனர். பல்கலைக் கழகங்களும், ஆராய்ச்சிக் கூடங்களும். வேக வேகமாக புத்தறிவின் சார்பிலே, படை திரட்டித்தந்தன ! என்ன மர்மமோ? என்ன மாயமோ? என்று மக்கள் கேட்டுக் கிடந்த பல நிகழ்ச்சிகளுக்கும் பொருள்களுக்கும் விளக்கம் அளிக்க முன்வந்தனர் ஆராய்ச்சியாளர்கள் - பழமைப்படை புறமுதுகிட்டோடிற்று. கடைசியில் ப்ரூனோவிடம் மத உலகு மன்னிப்புக் கேட்டுக் கொள்வது போல, 1821-ம் ஆண்டு ஏழாம் பயஸ் எனும் போப்பாண்டவர். கோபர்னிகஸ் கொள்கை மீது இருந்த கண்டனத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார்! மதவாதிகளும், உருண்டை உலகில் வாழச் சம்மதித்தனர்.
இந்தப் பெரு வெற்றிக்காக, ப்ருனோ தீயிலே தள்ளப் பட நேரிட்டது. எட்டு நாட்களில் அவருடைய மனதிலே ஒரு துளி மருட்சியோ, மயக்கமோ கிளம்பி இருந்தால் போதும், அவர் உயிர் தப்பியிருக்கும். ஆனால் புத்தறிவு பிணமாக்கப்பட்டிருக்கும். ப்ரூனோ. உண்மை பிழைக் கட்டும், என் உடல் சாம்பலாகட்டும் என்றார். எட்டு நாட்களிலே. அவர் மனக் கண்முன் தோன்றித் தோன்றி மறைந்த காட்சிகள் எத்தனையோ ! துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்தை எண்ணிக் கொண்டாரோ ! மடாலயத்திலே துருவித் துருவிப் படித்த நாட்களை எண்ணிக்கொண்டாரோ! அன்பு பொழிந்த தாயையும், அக்கறை காட்டிய தந்தையையும் எண்ணியிருப்பார் ! அவர் மனக் கண்முன் நடுக்கும் குரலுடன் பேசும் ஆன்ஸ்லம் பாதிரியாரும் திகைத்து நிற்கும் என்ரி மன்னனும், தேள் கொட்டியவர் போல அலறிய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், தெரிந்திருப்பர்! காட்டிக்கொடுத்த கயவனைக் கண்டிருப்பார் - பயத்துக்கு அடிமைப் பட்டவன், பரிதாபத்துக் குரியவன் என்று எண்ணியிருப்பார்.
எட்டு நாட்கள் தானே ! விரைவிலே ஓடிவிடும் - என் கதையும் முடிந்துவிடும் என்று எண்ணி இருந்திருப்பார்.
அவர் தம் எண்ணத்தை வெளியிட வாய்ப்பில்லை விஷம் தரப்பட்ட சாக்ரடீசுக்கு, கடைசிப் பொழுதில் நண்பர்கள் உடனிருந்தனர் - உலகு அவருடைய எண்ணங்களை ஓரளவு அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. ப்ரூனோவுக்கு அஃதும் இல்லை!
ஆனால், சொல்லவேண்டியதை ப்ரூனோ, நாடுபல சுற்றிச் சொல்லிவிட்டார் ! ஒரு வாழ்நாளில் செய்யவேண்டியதைச் செய்துவிட்டார் ! பல்கலைக் கழகங்கள் எல்லாம். உலகம் உருண்டையா? தட்டையா? என்று விவாதித்த வண்ணம் உள்ளன. தெளிவறியா மக்கள் மட்டுமே, புத்தறிவைக் கொள்ள பீதி அடைகின்றனர். வேலை முடிந்து விட்டது போலத்தான் - அரியதோர் உண்மையை உலகு ஏற்றுக்கொள்வதற்காக. உபிரியாணிக்கையாகட்டும் என்று எண்ணியிருப்பார்! அந்தத் தூய்மையாளன் உள்ளத்திலே இத்தகு உயர் எண்ணங்களன்றி வேறென்ன மலர முடியும்.
எட்டு நாட்கள் ஓடின : மதவாதிகள் ஏமாந்தனர் - ப்ரூனோ வெற்றி பெற்றார்.
சதுக்கத்திலே, ஏராளமான கூட்டம் - வேடிக்கை பார்க்க. நாத்தீகனைக் கொளுத்தப் போகிறார்கள். ஆத்தீகர்களுக்கு அந்த 'வாண வேடிக்கையைக் காண்பது தவிர வேறு வேடிக்கை இருக்க முடியுமா ! வேடிக்கை மட்டுமா அது - பக்தரின்' கடமையுமாயிற்றே!
ப்ரூனோவுக்கு மஞ்சள் ஆடை அணிவித்தனர் – பாவிகளுக்கு, வேத நிந்தகருக்கு, மஞ்சள் நிற ஆடை தருவது வாடிக்கை.
அந்த உடையிலே, பேய் பூதம் பிசாசு, பெரு நெருப்பு. போன்ற சித்திரங்கள் - இவன் நரகம் செல்கிறான் என்பதைக் காட்ட.
இழுத்துச் செல்கிறார்கள் ப்ரூனோவை! ஏறு நடை! கலங்கா உள்ளம்! புன்னகைகூடத் தெரிகிறது.
இரு மருங்கிலும் கூடி நிற்கும் ஏதுமறியாதவர்கள். தூற்றுகிறார்கள் - ஏசுகிறார்கள்! ப்ரூனோ அவர்களைக் கண்டு கோபம் கொள்ளவில்லை.
ஓடி வருகிறார் ஒரு சாமியார் - மரத்தாலான சிறு சிலுவையை ப்ரூனோவின் முகத்திற்கெதிரே காட்டுகிறார் - சாகுமுன் சிலுவைக்குப் பணியட்டும் என்று!
சிலுவை! இதன் பெயர் கூறிக்கொண்டு எவ்வளவு அக்ரமத்தைச் செய்கிறீர்கள், அறிவிலிகளே ! என்று கேட்பவர் போல, ப்ரூனோ முகத்தை வேறோர் பக்கம் திருப்பிக் கொள்கிறார்.
கம்பம் - அதிலே கட்டுகிறார்கள் - தீ வளருகிறது! எதிரே காட்டுக்கூச்சல் - ப்ரூனோ அமைதியே உருவானவராக நிற்கிறார். புகை சூழ்ந்து கொள்கிறது. அதைக் கிழித்துக்கொண்டு நெருப்பு தெரிகிறது - உடல் கருகுகிறது - அதோ, அதோ; என்று காட்டுகிறார்கள் - முகம் தெரிகிறது. தீச்சுழலுக்கு இடையில் அமைதியான முகம்!
தீயோர் மூட்டிய தீ, தன் வேலையைச் செய்து முடித்து விட்டது - ப்ரூனோ சாம்பலாக்கப்பட்டார்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்று கூறி அன்பு மார்க்கம் சமைத்துத் தந்தார் எமது தேவன் என்று கூறிக்கொண்டனர். அவர்கள் ப்ரூனோவை நெருப்பிலிட்டனர்.
பல தெய்வ வணக்கத்தையும் காட்டுமிராண்டிச் சடங்குகளையும் எதிர்த்து அறப்போர் நடத்திய அண்ணலைச் சிலுவையில் அறைந்தார்கள் பாதகர்கள் என்று கூறின விசுவாசிகள். அந்தச் சிலுவை தரும் நெறியையும் மறந்து. பரூனோவைத் தீயிலிட்டனர்.
”அவர்களை மன்னித்துவிடுக, அண்ணலே. அவர்கள் அறியாக்கள் என்ன செய்கிறோமென்று” என்று சிலுவையில் அறையப்படும் போது ஏசு கூறினாரென்றுரைத்து உருகும் கிருஸ்தவர்கள், ப்ருனேவக் கட்டிவைத்துக் கொளுத்தவர்கள்.
ஆதிக்கத்திலிருந்த பல தெய்வ வழிபாடு முறையை எதிர்த்து அன்பு நெறி தந்த ஏசுவின் சொல்லைக் கேட்டும் செய்லக் கண்டும், அந்தநாள் மத ஆதிக்கக்காரர்கள், நாத்தீகன் என்று நிந்தித்தனர் - தெய்வத்தின் பெயர்கூறி வதைத்தனர். சலுவை காட்சி தந்தது.
அக்ரமக்காரர்கள் தந்த கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளும் உள்ள உரமும், கொள்கைப் பற்றும் இருந்தது என்பதை எடுத்துக்காட்டும் சின்னம், இந்தச் சிலுவை என்றனர் - அதைக் கண்டும், கருத்திலே தெளிவு பெற மறுத்தனர். அதைக் காட்டியே ப்ரூனோவைக் கொன்றனர்.
பாவிகளை இரட்சிக்க இரத்தம் சிந்தினார் என்று தொழுகையின் போது கூறுபவர்கள், ப்ரூனோவைக் கொன்றால், அன்புக்கும் அறத்துக்கும் இழக்காகுமே என்று எண்ணவில்லை. எங்கே தங்கள் ஆதிக்கம் அழிந்து பட்டு விடுமோ என்ற அச்சத்துக்குத்தான் ஆட்பட்டனர். கோலா கலமாக ஆண்டுவந்த பழைய மார்க்க மன்னன் ஏசுவைக் கொன்றால் தான் தன் ஆதிக்கம் நிலைத்திருக்க முடியும் என்று எவ்விதம் கோபம் கக்கினானோ. அதற்குத் துளியும் குறைந்ததாக இல்லை, சிலுவை தொழுதோரின் சீற்றம்.
ஏசு மீண்டும் எழுந்து வந்தார் என்கிறார்கள். ப்ரூனோ தேவன் அருள் பெற்றவன் கூட அல்ல. எனினும் ஜியார்டானோ ப்ரூனோ சாகவில்லை - என்றும் நிலைத்து நிற்கும் உண்மை சாகாது.
ஜியார்டானோ ப்ரூனோவைக் கொல்வதற்காக மூட்டப்பட்ட நெருப்பிலிருந்தும், கிளம்பிய சிறு சிறு பொறிகள் பல்வேறு இடங்களில் பரவி, குருட்டறிவை அழிக்கும் பணியாற்றின.
அவரை அக்ரமமாகக் கொன்றதற்குக் கழுவாய் தேடு வதுபோல, பிற்காலத்தில் அவருடைய உருவச்சிலையை வைத்தனர். ஆனால் அவர் அடைந்த வெற்றி அது அல்ல. பகுத்தறிவு, பெருமிதம் கொள்ளச் செய்ததே அவர் அடைந்த வெற்றி. ப்ரூனோ வாழ்கிறார், வெற்றி வீரராக.
---------------------
2. உடன்பிறந்தார் இருவர்
”காட்டு மிருகங்களுக்குக் குகையும் புதரும் உண்டு. தங்கியிருக்க நாட்டைக் காக்கும் போர் வீரர்களாகிய உங்களுக்கு உறைவிடம் உண்டா ?"
”இல்லையே!!”
"மாற்றான் வருகிறான் தாயகத்தைத் தாக்க, உங்கள் இல்லத்தைத் காக்கக் கிளம்புங்கள் என்று தளபதிகள் முழக்கமிடுகிறார்கள். உங்களைப் போர்க்கோலம் கொள்ளச் செய்கிறார்கள்! உங்களுக்கு எங்கே இல்லம் இருக்கிறது? எந்த இல்லத்தை காப்பாற்ற நீங்கள் போரிட வேண்டும்? இல்லம் இருக்கிறதா உங்களுக்கு?"
இல்லை! இல்லை!
"இரத்தம் கொட்டுகிறீர்கள் நாட்டுக்காக உயிரையும். தருகிறீர்கள். தாயகத்தைக் காப்பாற்ற தாயகம் உங்களுக்குத் தருவது என்ன ?"
தெரியவில்லையே!
”தெரியவில்லையா ! காற்றும் ஒளியும் கிடைக்கிறது! இருக்க இடம் தரவில்லை தாயகம்! உழுது பயிரிட வயல் இல்லை. ஒண்டக் குடிசை இல்லை."
ஆமாம்! ஒண்டக் குடிசையும்தான் இல்லை.
வீர இளைஞன், விழியிலே கனிவுடன் காட்சிதரும் இலட்சியவாதி, பெருந்திரளான மக்களைப் பார்த்துக் கேட்கிறான். அவனுடைய கேள்விகள் அந்த மக்கள் மனதிலே தூங்கிக்கொண்டிருக்கும் எண்ணங்களைத் தட்டி எழுப்புகின்றன.
இதே கேள்விகள், அவர்கள் மனதிலே ஆயிரம் முறை எழும்பின - அடங்கின ! மாளிகைகளைக் காணும் போதெல்லாம் இந்தக் கேள்விகள், மனதைக் குடைந்தன! பசும் வயல்களிலே முற்றிக் கிடக்கும் கதிர்களை அறுவடை செய்த போதும், பழமுதிர் சோலைகளிலே பாடுபட்ட போதும், பாதை ஓரத்தில் நின்று பட்டுடைக்காரருக்கு மரியாதை செய்தபோதும், அவர்கள் மனதிலே இந்தக் கேள்விகள் எழுந்தன!
ஆலயங்களிலே கோலாகல விழாக்கள் நடைபெற்ற பொழுதெல்லாம் இந்தக் கேள்வி! ஆடல் பாடல் அரங்கங்களிலிருந்து களிப்பொலி கிளம்பிய போதெல்லாம் இந்தக் கேள்வி! மதுவும் மமதையும் தலைக்கேறிய தருக்கரின் சிவந்த கண்களையும், சிங்காரச் சீமாட்டிகளின் பல வண்ண ஆடைகளையும் கண்டபோ தெல்லாம் இந்தக் கேள்வி!
உழைத்து அலுத்து, உண்டது போதாததால் ”இடும்பை கூர் என் வயிறே" என்று ஏக்கமுற்ற போது - இந்தக் கேள்வி - சகதியில் புரண்டபோது இந்தக் கேள்வி - பன்முறை இக்கேள்வி மனதிலே எழுந்ததுண்டு - நிலைமை தெரிகிறது - தெரிந்து?
தாயகத்தின் மணிக்கொடி வெற்றிகரமாகப் பறந்து. ஒளி விடுகிறது. வாகை சூடுகிறார்கள் மாவீரர்கள் - விருந்துண்கிறார்கள் சீமான்கள் - விருதுகள்ளிக்கும் விழாவுக்குக் குறைவில்லை. ஆண்டவர்களையும் மறக்கவில்லை. அழகழகான கோயில்கள், அலங்காரம், திருவிழா - இந்த வேலைப் பாடுகள் குறைவற உள்ளன - நமக்குத்தான் இருக்க இல்லம் இல்லை, வாழ்வில் இன்பம் இல்லை!
தாயகம், மாற்றாரை மண்டியிடச் செய்திருக்கிறது - வெற்றிப் பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன - மண்டலங்கள் பிடிபட்டன. மாநகர்கள் தரைமட்டமாக்கப் பட்டன, கொன்று குவித்தது போக மிச்சம் இருப்பவர்களை, அடிமைகளாக்கி வீரம் அறிவிக்கப்படுகிறது!
தாயகம் ! கெம்பீரம், வீரம், வளம், எனும் அணி பணிகளுடன் !!
ஆனால், நமக்கோ ஒண்டக் குடிசையில்லை. நாமோ தாயகத்தின் வெற்றிக்காகக் குருதி கொட்ட அழைக்கப்படுகிறோம், முரசு கேட்டதும் பாய்ந்து செல்கிறோம். மாற்றான் புறமுதுகு காட்டும் வரை போரிடுகிறோம், தாயகம் தாயகம்! என்று தளபதிகள் களத்திலே முழக்கமிடும்போது, எழுச்சி கொள்கிறோம். எத்தனை பேர் எதிரிகள், என்ன ஆயுதம் நம்மிடம், என்பது பற்றிய கவலையற்றுப் போரிடுகிறோம். பிணங்களைக் குவிக்கிறோம். பிறந்த நாட்டின் பெருமைக்காக -- ஆனால் அந்தப் பிறந்த நாட்டிலே நமக்கு உள்ள நிலை என்ன? அந்த வீர இளைஞன் கூறியது போல, காட்டு மிருகங்களை விடக் கொடுமையானது ! நமக்கும் தானே இது தாயகம்? நாம், அவ்விதம்தான் கருதுகிறோம். ஆனால், நாடாளும் நாயகர்கள். அவ்விதம் கருதுவதாகத் தெரியவில்லை, கருதினால், நம்மை இந்தக் கதியிலா வைத்திருப்பர்! நியாயமான கேள்வி கேட்டான் இளைஞன், நேர்மையாளன் அஞ்சா நெஞ்சன் ஏழை பங்காளன் !!
மக்கள் வாழ்த்துகின்றனர் - தம் சார்பாகப் பேசும் இளைஞனை – அவனோ வாழ்த்துப்பெற, உபசார மொழிகளை வழங்குபவனல்ல. அவன் உள்ளத்திலே தூய்மையான ஒரு குறிக்கோள் இருக்கிறது - கொடுமையைக் களைய வேண்டும் என்ற குறிக்கோள் ; உறுதிப்பாடு.
தாயகத்தின் வெற்றிகளையும் அவன் கண்டிருக்கிறான் - அந்த வெற்றிக்காக, உழைத்த ஏழையின் இரத்தக் கண்ணீரையும் பார்த்திருக்திறான்.
மமதையாளர்கள் மாளிகைகளிலே மந்தகாச வாழ்வு நடாத்துவதையும் பார்த்திருக்கிறான், உழைப்பாளர் உடல் தேய்ந்து உள்ளம் வெதும்பிக் கிடப்பதையும் கண்டிருக்கிறான்.
இருசாராருக்கும் இடையே உள்ள பிளவு பயங்கரமான அளவிலே விரிவதும் காண்கிறான், இந்தப் பிளவு எதிர்கால அழிவுக்கே வழி செய்கிறது என்பதையும் அறிகிறான்.
கைத்திறனும் வாய்த்திறனும் கொண்டவர்கள் கண் மூடி மக்களது நிலத்தை எல்லாம் கொத்திக் கொண்டு ஏப்பம் விடுகிறார்கள் - இது அபாய அறிவிப்பு என்பது அவனுக்குப் புரிகிறது.
கூலி மக்கள் தொகை தொகையாய் அதிகரிக்கிறார்கள் - புழுப்போலத் துடிக்கின்றார்கள் - இனி புதுக்கணக்குப் போடாவிட்டால் ஓடப்பர் உதையப்பர் ஆகிவிடுவர் என்பது அவனுக்குத் தெரிகிறது. ஆனால், ஆர்பாட்டக் காரர் இதை அறிய மறுக்கிறார்கள். தாயகத்தின் வளத்தை அவர்களே சுவைக்கிறார்கள், செக்கு மாடென் உழைக்கும் ஏழை மக்களுக்குச் சக்கை தரப்படுகிறது – ’பாபம்' போக்கிக்கொள்ள, பல்வேறு கடவுளருக்கு விழா நடத்தப் பணம் இருக்கிறது - பயம் என்ன!
இரண்டாயிரத்து எண்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ரோம் நாட்டில், அங்காடிச் சதுக்கத்தில், காணப்பட்ட காட்சி இது !
"காட்டு மிருகங்களுக்கேனும் குகை இருக்கிறது. நாட்டைக் காக்கும் வீரர்களே! உங்களுக்கு உறைவிடம் உண்டோ ?” என்று கேட்டான் டைபீரியஸ் கிரேக்கஸ் எனும் இளைஞன்.
இன்று உலகில் பல்வேறு நாடுகளிலே காணப்படும் எந்தத் துறைக்கும் வித்து ஆதிநாள். கிரேக்க - ரோமானிய அறிவுக் கருவூலம், என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உண்மையாகும். கிரேக்க, ரோமானிய பேரரசுகளின் பெருமையைக் கூறிவிட்டுத்தான், பிறவற்றைப் பற்றிப் பேசுவர், மேலைநாட்டு வரலாற்றுரை ஆசிரியர்கள். மெச்சத் தக்கதும். பாடம் பெறத் தக்கதுமான பல்வேறு கருத்துகளை உலகுக்கு அளித்தன. அவ்விரு பூம்பொழில்கள் எனினும் அங்கு உலவி, பிறகு அவைகளை நச்சுக் காடாக்கிய அரவங்கள் சிலவும் உலவின் ! வண்ணப் பூக்களையும். அவைகளை வட்டமிட்டு வண்டுபாடும் இசையையும், தாமரைபூத்த குளத்தினையும், அதிலே மூழ்கிடும் கோமளவல்லிகளையும். கண்டு சொக்கிவிட்டால் போதாது - மலர்ப் புதருக்குள்ளே அரவங் காட்டாதிருக்கும் அரவம். பச்சைக் கொடியுடன் கொடியாகக் கிடப்பதையும் கண்டுகொள்ள வேண்டும். ரோம் நாடு இறுதியில், ஆற்றலும் அணியும் இழந்து வீழ்ந்து பட்டதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. நச்சரவு கள் போன்ற சில நடவடிக்கைகளை, முறைகளை. கருத்துகளை, நீக்காமற் போனதேயாகும்.
ஏழையர் உலகின் பெருமூச்சுக்கு, ரோம். மதிப்பளிக்க மறுத்தது - தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் கொடு நோய்க்கு ஆட்பட்டது. மண்டிலங்களைப் புதிது புதிதாக வென்று, மணிமுடிகளைப் பறித்துப் பந்தாட்டமாடி மகிழ்ந் தது. பஞ்சை பராரிகளை அடக்கி வைப்பதே அரசியல் முறை என்று எண்ணிக்கொண்டது. ஒரு அரசின் மாண்பு அது களத்திலே பெரும் வெற்றிகளின் அளவைப் பொறுத்து இருக்கிறது என்பதையே குறிக்கோளாக்கிக் கொண்டு வரண்ட தலையர் தொகை வளருவதை பிரச்னையாகக் கருதாமற் போயிற்று - கீறல் வெடிப்பாகி வெடிப்பு ஓட்டையாகி, கலம் கவிழ்ந்தது போலாகிவிட்டது. நாட்டின் கதை.
ரோம் நாட்டு வீரம், பிற நாடுகளைப் பீதி அடையக் செய்தது - காலில் வீழ்ந்து கப்பம் கட்டிய நாடுகள் பல களத்திலே நின்று அழிந்துப்பட்டன பல - ரோம் நாட்டு வீரப் படையினர், புகாத நகர் இல்லை. தகர்க்காத கோட்டை இல்லை, பெறாத வெற்றி இல்லை, என்று பெருமை பேசிக் கொண்டு ஒளிவிடும் வாளை ஏந்திய தேசத்தில், எதிரியின் முடியையும், அதனை உறையிலிட்ட நேரத்தில் இன்பவல்லிகளின் துடி இடையையும் வெற்றிப் பொருளாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். மேட்டுக் குடியினர் - நாட்டுக்காக உழைக்கும் ஏழையரோ, டைபீரியஸ் கிரேக்கஸ் கூறியபடி, காட்டு மிருகங்களை விடக் கொடிய நிலைக்குத் தள்ளப் பட்டனர்.
டைபீரியஸ் கிரேக்கஸ் ஏழையர் சார்பில் பேசும் நாட்களிலே, ரோம், வெற்றி பல கண்டு செல்வமும் செல்வாக்கும் கொழிக்கும் அரசு ஆகிவிட்டது. வளமற்ற நிலத்திலே வாட்டத்துடன் உழைத்துக் கொண்டு பலன் காணாது தேம்பித் தவிக்கும் பஞ்சபூமியாக இல்லை ரோம். அண்டை அயல் நாடுகளிலே, அதன் கீர்த்தி பரவி இருந்தது. வளம் பெருகி வந்தது.
ஆப்பிரிக்காவிலே 300 நகரங்கள் கப்பம் கட்டி வந்தன. ஸ்பெயின், சார்டீனியா, சிசிலி ஆகிய பூபாகங்களிலே பெரும் வெற்றிகளைக் கண்டு, தரைப்படை மட்டுமல்லாமல் திறமிக்க கப்பல் படை கொண்டு, வாணிபம் நடாத்திச் செல்வத்தை ஈட்டி, பல நூற்றாண்டுகளாக வெற்றிக்கொடி நாட்டி வாழ்ந்த, கார்த்தேஜ் எனும் மண்டலத்தை ரோம் வென்றது! பயங்கரமான போர் நடாத்தும் ஆற்றல் மிக்க ஹனிபால் என்பான், ரோம் நாட்டுத் தளபதியால் விரட்டப் பட்டான்! கார்த்தேஜ் தரைமட்டமாக்கப் பட்டது. பெருஞ் செல்வம் கொள்ளைப் பொருளாகக் கிடைத்தது. ரோம் சாம்ராஜ்யக் கொடி கடலிலும் நிலத்திலும், கெம்பீரமாகப் பறந்தது. சிசிலியும், ஆப்பிரிக்காவும் ரோம் அரசுக்குக் கப்பம் செலுத்தின, தோற்ற காரணத்தால்.
உலகை வென்ற மாவீரன் என்று விருது பெற்ற அலெக்சாண்டரின் அரசான மாசிடோனியாவை ரோம் வென்றது ! கிரீஸ் தோற்றது!
வெற்றி மேல் வெற்றி ! எந்தத் திக்கிலும் வெற்றி ! ரோம் இந்த வெற்றிகளால் திரட்டிய செல்வம் ஏராளம். தோற்ற நாடுகளிலிருந்து ரோம், கைது செய்து கொண்டு வந்த அடிமைகளின் தொகை 100 இலட்சம் ! இவர்களை விலைக்கு விற்று ரோம், பணம் திரட்டிற்று.
ஈடில்லை. எதிர்ப்பு இல்லை என்ற நிலை பிறந்தது! எந்தெந்த நாட்டிலே என்னென்ன போகப் பொருள் கிடைக்குமோ அவைகள் எல்லாம், ரோம் நகரிலே கொண்டுவந்து குவிக்கப்பட்டன. முத்தாரங்கள், நவமணிகள் ஆகிய ஆபரணம் அணிந்து, பூந்துகில் உடுத்தி, புன்னகை காட்டிப் பூவையர் தம் காதலரின் தங்கப்பிடி போட்ட வாட்களை எடுத்து மூலையில் சாய்த்துவிட்டு. களத்தில் அவன் கொய்த தலைகளின் எண்ணிக்கை பற்றிக் கூறக் கேட்டு, தான் பூம்பொழிலில் கொய்த மலர்களின் அளவுபற்றிக் கூறிட, அவ்வளவு மலரா ! கனியே! மெத்தக் கஷ்டமாக இருந்திருக்குமே!" என்று வீரன் கூற. ”எல்லாம் தங்களைக் கண்டதும் பறந்ததே கண்ணாளா!" என்று அவள் கூற - காதல் வாழ்வு நடாத்திய கனவான்கள் நிரம்பினர் ரோம் நாட்டில்.
அந்தச் சமயத்தில் ஏழையர் உலகு ஏக்கத்தால் தூக்க மிழந்து, நெளிந்தது. இதைக் கண்டு உள்ளம் வாடினான் டைபீரியஸ் கிரேக்கஸ். தன் தொண்டு மூலம் ஏழையரை உய்விக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
வையகம் வியக்கும் அறிவுக் கருவூலப் பெட்டகமென விளங்கிய கிரேக்க நாடு. இருப்புச் செருப்பினரால் முறியடிக் கப்பட்டது : அந்நாட்டு அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் ஆகியோர். ரோம் நாட்டிலே அடிமைகளாக அமர்ந்த எஜமானர்களுக்கு கலையின் நேர்த்தியையும் காவியத்தின் மேன்மையையும் எடுத்துக்கூறி இன்பமூட்டி வந்தனர். உலக வரலாற்றிலே மனதை உருக்கவல்லதான நிகழ்ச்சி இது. தோற்ற கிரேக்கர்கள். வெற்றிபெற்ற ரோம் நாட்டவருக்கு அடிமைகளாகி, அதே போது ஆசான்களாகி இருந்து வந்தனர். களத்திலே கண்டெடுத்த கொள்ளைப் பொருள்களைக் காட்டி மகிழ்வதுடன் ரோம் நாட்டுச் சீமான் அடிமையாகக் கொண்டுவந்த கிரேக்கக் கவிஞனையும் காட்டிக் களிப்பான். ’பாடு' என்பான் படைத்தளபதி. கிரேக்கக்கவி அரும் பாடலை அளிப்பான். அதன் பொருளையும் அளிப்பான் - இன்பமும் அறிவும் குழைத்தளிப்பான். அடிமைதரும் இன்னமுதை உண்டு மகிழ்வான் ரோம் நாட்டுச் சீமான்.
போர்த்திறனைப் பெறுவதுதான், வாழ்வில் உயர்வளிக்கும் என்பதையும், வீரவேற்றிகள் பெற்றவனை நாடு தலைவனாகக் கொள்கிறது என்பதையும் கண்டுகொண்ட ரோம் நாட்டு உயர்குடியினர். அந்தத் துறையிலேயே ஈடுபட்டனர். அரசு அவர்களை ஆதரித்தது. போற்றிற்று.
டைபீரியஸ் கிரேக்கஸ், இத்தகைய புகழ் ஏணி மூலம் உயர்ந்திருக்கலாம்; செல்வக்குடி பிறந்தவன். கீர்த்தி வாய்ந்த குடும்பத்தினன். போர்த்திறனும் பெற்றிருந்தான். ஆப்ரிக்காவில் மண்டிலங்களை வென்று விருது பெற்ற ஸ்கிபியோ என்பானின் பெண்வயிற்றுப் பேரன், டைபீரியஸ் கிரேக்கஸ். எனவே ரோம் நாடு அவனுக்கு உயர்மதிப்பளிக்கத் தயாராக இருந்தது. டைபீரியஸ் கிரேக்கஸ், கெயஸ் கிரேக்கஸ் எனும் இரு புதல்வர்களுக்கும் தாயார் கர்னீலியா. நாட்டவரின் நன்மதிப்பைப் பெற்றார். ஆழ்ந்த அறிவும், சிறந்த பண்புகளும் மிக்க அந்த அம்மையின் சொல்லுக்கு நல்ல செல்வாக்கு உண்டு. ஸ்கிபியோவின் மகள் கேட்கும் எந்தப் பதவியையும், உயர்வையும் டையீரியசுக்குத் தர எந்த ரோம் நாட்டுத் தலைவனும் மறுத்திட முடியாது. வாழ்வில் இன்பம். அரசில் பெரும்பதவி பெற்று, ஒய்யார வாழ்வு நடத்திவர, வாய்ப்பு இருந்தது. டைபீரியஸ் கிரேக்கசுக்கு. எனினும் அவன், பிறருக்காக வாழப்பிறந்தவன். ஏழையரின் இன்னலைத் துடைப்பது, புதுமண்டிலங்களை வெல்வதிலும் மேலான வெற்றி என்ற எண்ணம் கொண்டவன்.
வெறியன்! என்றனர் சிலர். மயக்கமொழி பேசுகிறான். ஏழை மக்களை ஏய்த்துத் தன் பக்கம் திரட்டிக் கொள்ள என்றனர் சிலர். அனைவரும் இவன் கவனிக்கப்பட வேண்டியவன் என்று கூறவேண்டி இருந்தது : டைபீரியஸ், நாட்டுக்கு ஒரு பிரச்னையாகி விட்டான்.
அவனை ஒத்த இளைஞர்கள் போல அவன் சோலைகளையும் சொகுசுக்காரிகளையும் நாடிச் செல்லும் சுகபோகியாக இல்லை : எளிய வாழ்க்கை நடத்தி வந்தான். ஏழையருடன் பழகி வந்தான். களத்திலே பெற்ற வெற்றிகளை எடுத்துக் கூறி, காதற் கனி பறித்து மகிழ்ந்திருக்கும் காளையர் பலப் பலர். டைபீரியஸ். அவர்கள் போலல்லாது. நாட்டுக்கு உண்மையான சீரும் சிறப்பும் ஏற்பட வேண்டுமானால் வறியவருக்குள்ள வாட்டம் தீர்க்கப்படவேண்டும் என்று திட்டமிட்டுப் பணியாற்றினான். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு.
ரோம் நாட்டுச் சமுதாய அமைப்பு – பெட்ரேஷியன் பிளபியன் எனும் இரு பெரும் பிரிவு கொண்டதாக இருந்தது - முன்னர் மேட்டுக் குடியினர், சீமான்கள், பரம்பரைப் பணக்காரர்கள் - இரண்டாமவர், ஏழைகள், ஏய்த்துப் பிழைக்கத் தெரியாதவர்கள், நாட்டின் முதுகெலும்பு போன்றார். டைபீரியசின் அன்பு நோக்கு இவர்பால் சென்றது.
பிளபியன் எனும் ஏழைகளைக் கொடுமை பல செய்து. பெட்ரீஷியன்கள் அடக்கி வைத்திருந்தனர். சகிக்கொணாத நிலைமை வந்தது. இந்த நாட்டிலே இருந்து இடியும் இழிவும் மிடிமையும் தாக்கத் தகர்ந்து போவதைக் காட்டிலும், இதைவிட்டே சென்று விடுவோம், வேற்றிடம் புகுந்து புது ஊரே காண்போம், உழைக்கத் தெரிகிறது. ஏன் இந்தப் பகட்டுடையினருக்குப் பாடுபட்டுத் தேய வேண்டும். நம் கரம் நமக்குப் போதும் என்று துணிந்து. பிளபியன் மக்கள் அனைவரும், ரோம் நகரை விட்டே கிளம்பினர். மூன்று கல் தொலைவில் உள்ள குன்று சென்றனர்! ரோம் நாட்டிலே உல்லாச வாழ்வினர் மட்டுமே உள்ளனர் - உழைப்பாளிகள் யாரும் இல்லை ! வயல் இருக்கிறது. உழவன் இல்லை ! சாலை சோலை இருக்கிறது. பாடுபடுபவன் இல்லை ! மாளிகை இருக்கிறது. எடுபிடிகள் இல்லை / திடுக்கிட்டுப் போயினர். பெட்ரீஷியன்ஸ்.
இந்த வெற்றிகரமான வேலை நிறுத்தம் சீமான்களைக் கதிகலங்கச் செய்தது. ஏர் பிடித்தறியார்கள், தண்ணீர் இறைத்துப் பழக்கம் இல்லை. மாளிகை கலனானால் சரிந்து. போக வேண்டியதுதான், செப்பனிடும் வேலை அறியார்கள். என் செய்வர் தூது அனுப்பினர். தோழமை கோரினர். சமரசம் ஏற்பட வழி கண்டனர். வெள்ளை உள்ளத்தினரான பிளபியன்கள், இனி நம்மை அன்புடனும் மதிப்புடனும் நடத்துவர் என்று நம்பி. ஒருப்பட இசைந்தனர்.
இந்த ஏழைகள் கடன் படுவர். சீமான்கள் அட்டை என் உறுஞ்சுவர் இரத்தத்தை. வட்டி கடுமையானது ஏழை, வட்டியுடன் கூடிய கடனைச் செலுத்தும் சக்தியை இழந்ததும், அவன், தன்னையே சீமானுக்கு அடிமையாக விற்றுவிடுவான். குடும்பம் குடும்பமாக இப்படி அடிமைகளாவர்.
இந்தக் கொடுமையை ஒழிப்பதாக வாக்களித்தனர். அதுவரை செலுத்திய வட்டித் தொகையை, கடன் தொகையிலே கழித்துக்கொள்வது. மீதம் இருப்பதை மூன்றாண்டுகளில் செலுத்துவது. அடிமைகளை விடுதலை செய்வது என்று ஏற்பாடாயிற்று.
ஏழை மக்களின் உரிமைகளைக் கேட்டுப் பெறவும், அரசியலில் அவர்களுக்குப் பங்கு இருக்கவும் ட்ரைப்யூன் எனும் அதிகாரியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதென்றும் ஏற்பாடாயிற்று.
இந்த ட்ரைப்யூன்கள், பெரிதும் சீமான்களே கூடி சட்ட திட்டம் நிறைவேற்றும் செனட் சபையின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம் என்றும் ஏற்பாடாயிற்று.
ஏட்டளவில் பார்க்கும் போது ஏழைகளுக்கு இது மகத்தான வெற்றிதான். கலப்பு மணத்துக்குக்கூடத் தடையில்லை என்றனர், கனதனவான்கள்.
கான்சல் எனும் உயர் பதவிக்குக்கூட பிளபியன்கள் வரலாம். தடை கிடையாது என்றனர்.
இவைகளை விட முக்கியமான ஓர் ஏற்பாடும் செய்யப் பட்டது - நிலம் ஒரு சிலரிடம் குவிந்து போவதால், கூலி மக்களாகப் பெரும்பான்மையினர் ஆகிவிடும் கொடுமை ஏற்படுவதால், இனி யாரும் 330 ஏகருக்கு மேல் நிலம் வைத் துக்கொள்ளக் கூடாது. என்று சட்டம் ஏற்பட்டது !
இனியும் என்ன வேண்டும் / நிலம் ஒரு சிலரிடம் குவியாது ! கடனுக்காக அடிமைகளாக்கும் கொடுமை கிடையாது. கலப்பு மணம் உண்டு. கான்சல் பதவி வரையில் அமரலாம்!
ஏட்டளவில் இந்தத் திட்டம் இருந்துவந்தது. ஆனால் சீமான்கள் இதைக் கவையற்றதாக்கி வந்தனர். சட்டத்தைத் துணிந்து மீறினர் - அதன் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொள்வர். ஏழையின் இன்னல் ஒழியவில்லை : பொங்கி எழுந்த ஏழையரை அந்த நேரத்தில் தட்டிக் கொடுத்தனர். பிறகோ எப்போதும் போல ஏய்த்தனர்.
சீமான்கள், தன் குடும்பத்தார், உற்றார் உறவினர், அடுத்துப் பிழைப்போன் ஆகியோருடைய பெயரால் நிலங்களை அனுபவித்து வந்தனர் ஏழையின் வயல். எப்படியும் தன்னிடம் வந்து சேரும் விதமான நடவடிக்கைகளை நய வஞ்சகர்கள் செய்து வந்தனர். டைபிரியஸ் கிரேக்கஸ் இந்த அக்ரமத்தைக் கண்டான். வாயில்லாப் பூச்சிகளாக உள்ள ஏழை எளியவருக்காகப் பரிந்து பேச முற்பட்டான். கவனிப்பாரற்றுக் கிடந்த தங்கள் சார்பில் வழக்காட ஒரு வீர இளைஞன் முன் வந்தது கண்டு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெற்ற பிளபியன்கள், டைபீரியசுக்குப் பேராதரவு அளித்தனர்.
டைபீரியசும் கெயசும், சிறுவர்களாக இருக்கும் போதே தந்தையார் காலமானார். சிறுவர்களைத் திறமிகு இளைஞர்களாக்கும் பொறுப்பு, தாயாருக்கு வந்து சேர்ந்தது. அதனை அந்த அம்மை, பாராட்டத்தக்க விதமாக நடாத்தினார். கல்வி கேள்விகளில் சிறந்தனர் - போர்த்திறன் பெற்றனர் - பேச்சுக் கலையில் வல்லுநராயினர். வீர இளைஞர்கள், ரோம் நகரில் ஏராளம் - ஆனால் அந்த இருவர், வீரமும் ஈரமும் நிரம்பிய நெஞ்சினராக இருந்தனர். குடிப் பெருமையையும் நாட்டின் பெருமையையும் குறைவற நிலைநாட்ட வேண்டும் என்பதை அன்னை எடுத்துரைப்பார்கள் ; இருவரும், அவை தமைக் குறிக்கோளாகக் கொண்டதுடன், அக்ரமத்தைக் கண்டால் கொதித்தெழும் அறப்போர் உள்ளமும் கொண்டவராயினர்.
"எஸ்கிபியோவின் மகள் என்றே என்னை அனைவரும் அழைக்கின்றனர் - கிரேக்கசுகளின் தாயார் என்று என்னை அழைக்கும் வண்ணம் சீரிய செயல் புரிவீர்" என்று தன் செல்வங்களுக்கு கர்னீலியா கூறுவதுண்டாம், பெற்ற மனம் பெருமை கொள்ளும்படி, சிறுமதியாளரின் செருக்கை ஒழிக்கும் பெரும் போரில் ஈடுபட்டனர். இணையில்லா இரு சகோதரர். பெற்ற பொழுதும், குறுநடை நடந்த போதும், மழலை பேசிய போதும், பெற்ற மகிழ்ச்சியைவிட அதிகமான அளவு பெற முடிந்தது. தன் மக்கள், அறப் போர் வீரர்களாகத் திகழ்ந்த போது.
அறிவுக் கூர்மையும் மாண்பும் மிகுந்த கர்னீலியாவினிடம் பாடம் பெற்ற மைந்தர்கள், ரோம் நாட்டுச் சமுதாயத்திலே கிடந்த சீர்கேட்டினைக் களைய முனைந்தனர் - கடமை யாற்றுகையில் இருவரும் இறந்துப்பட்டனர் - கொல்லப் பட்டனர் - இறவாப் புகழ் பெற்றனர்.
டைபீரியஸ் கிரேக்கஸ், கெயஸ் கிரேக்கஸ் - இருவரும், சிறந்த பேச்சுத் திறன் பெற்றனர் - அந்த அருங்கலையை ஏழைகளின் சார்பிலே பயன்படுத்தினர்.
டைபீரியஸ், உருக்கமாகப் பேசுபவன் - கெயஸ். எழுச்சியூட்டும் பேச்சாளன்.
டைபீரியஸ், அடக்கமாக. அமைதியாகப் பேசுவான். இளையவன். கனல் தெறிக்கப் பேசுவான். கடுமையாகத் தாக்குவான்.
இருவரும் செல்வர்கள் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்தே பேசுவர் -- ஏழைகள் சார்பிலேயே வாதாடுவர் : இருவரும் இலட்சியவாதிகள்.
இருவரையும், செல்வர் உலகம், எதிர்த்தொழிக்காமல். விட்டா வைக்கும்!! டைபீரியஸ், பையப் பையப் பெய்யும் மழை போன்று பேசுவான் - குளிர்ந்த காற்று - வளமளிக் கும் கருத்து மாரி!
கெயஸின் பேச்சிலே புயல் வீசும் - பொறி கிளம்பும்.
பேசிக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சிவயத்தனாகி மேலங்கியை வீசுவானாம். இங்குமங்கும் அசைந்து ஆடிய படி இருப்பானாம், கெயஸ் கிரேக்கஸ், அண்ணனோ. கம்பத் தில் கட்டி விடப்பட்ட விளக்கு ஒரு சீராக ஒளிதரும் பான் மைபோல. அறிவுரை நிகழ்த்துவானாம்.
இருவருடைய வாதத் திறமையையும் ஆற்றலையும், எதிர்த்துப் பேசி வெல்ல வல்லவர்கள் ரோம் நகரில் இல்லை - திறமைமிக்க பேச்சாளியானாலும், அநீதிக்காகப் போரிடும் போது. திறமை சரியத்தானே செய்யும்.
கெயஸ் கிரேக்கஸ் பேசிக் கொண்டிருக்கும் போது. எழுச்சி அலை எனக் கிளம்புமாம். உரத்த குரலெடுத்து ஆவேச முறப் பேசுவானாம், குரல் மங்குமாம், வார்த்தைகள் தேனொழுக்காக வராதாம்! அவனுடைய பணியாள் ஒரு வன், இதனை, கெயசுக்கு உணர்த்துவிக்க, சிறு குழல் எடுத்து ஊதுவானாம், உடனே கெயஸ் குரலைச் சரிப்படுத்திக் கொள்வானாம். உண்மைக்காகப் பரிந்து பேசும்போது, தன்னையும் மறந்து விடும் நிலை, கெயசுக்கு!
டைபீரியஸ் தண்ணொளியும், கெயஸ் வெம்மை மிக்கது மான. பேச்சினை வழங்குவர் - இருவரின் பேச்சும் சீமான் களுக்குச் சீற்றத்தையும் அச்சத்தையும் சேர்த்தளித்தது.
செல்வக் குடி பிறந்தவர்கள். ஏன் இந்தப் போக்கிட மற்றவர்களுக்காகப் போரிடக் கிளம்புகின்றனர்! திறமையைக் காட்ட வேறு முறையா இல்லை! களம் இருக்கிறது. கட்கமெடுத்துப் போரிட்டு, காவலர்களின் முடி தரித்த சிரங்களைச் செண்டுகளாக்கி வீர விளையாட்டு ஆடிக் காட்டலாம். உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. அங்கு ஆற்றலைக் காட்டி நாட்டுத் தலைவர்களின் நல்லாசி பெறலாம் : குதிரை ஏற்றம், தேரோட்டம், என்றெல்லாம் வீர விளையாட்டுகள் விதவிதமாக உள்ளன. அவைகளிலே ஈடுபட்டு. புகழ் ஈட்டாது. வரண்ட தலையரிடம் சென்று, விபரீத திட்டங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்களே, ஏன் இந்த வீண் வேலை எதற்காக இந்த ஆபத்தான செயலில் ஈடுபடுகின்றனர். என்று செல்வர்கள் பேசினர் - ஏசினர். டைபீரியசும், கெயசும், தூண்டி விடும் தலைவர்கள். என்று செல்வர் கண்டித்தனர் : மக்களோ, வாழ்த்தினர்.
ரோம் நாட்டுக் கீர்த்தி பரவியது. இடிமுழக்க மெனப் பேசும் பேர்வழிகளல்ல, எதிரியின் வேலுக்கு மார்காட்டி நின்ற வீரர்களால் அகழ்களைத் தாண்டி, கோட்டைகனைத் தாக்கிக் கொடி மரங்களைச் சாய்த்து, உயிரை துச்சமென்று கருதி வீரப்போரிட்டு வெற்றி கண்டவர்களால். அணி அழகும் உவமை நயமும், கலந்து புன்னகையும் பெருமூச்சும் காட்டிப் பேசிடும் நாநர்த்தனக்காரரால் அல்ல. கூர்வாள் ஏந்தத் தெரிந்தவர்கள் சந்தைச் சதுக்கத்திலே நின்று கொண்டு, "சாய்ந்தீரே ! மாய்ந்தீரே!" என்று ஏழை மக்களிடம் அழுகுரலில் பேசுவதும், 'எழுக ! வருக! போரிடுக !' என்று தூண்டி விடுவதும், எளிதான காரியம். தாக்க வரும் மாற்றானைத் துரத்திச் சென்று அவனுடைய மாநகரை தரைமட்டமாக்குவது. அனைவராலும் சாதிக்கக் கூடிய செயலல்ல !!
செல்வர்கள், அதிலும் செருமுனை சென்று வெற்றி கண்டவர்கள், இதுபோலத்தானே ஏளனம் பேசுவர். அறிவுத் துறையிலே ஈடுபடும் இளைஞர்களைக் கண்டு டைபீரியஸ், இந்த ஏளனத்துக்கும் இடமளிக்கவில்லை. களத்திலே தன் கடமையைச் செம்மையாகச் செய்தான். நியூமான்டைன்ஸ் என்னும் நாட்டாருடன் நடந்த பெரும் போரில், டைபீரியஸ் காட்டிய வீரம், சாமான்யமானதல்ல. மான்சினஸ் எனும் படைத்தலைவன், டைபீரியசின் வீர தீரத்தைக் கண்டது மட்டுமல்ல, களத்திலே ஒரு சமயம், எதிரிகளால் சுற்றிவளைத்துக் கொள்ளப்பட்ட நேரத்தில், டைபீரியசின் யோசனையால் பெரிதும் பயன் கண்டவன்.
மாற்றாரிடம் சென்று சமரச ஏற்பாடுகளைத் திறம்படப் பேசி, பேராபத்தில் சிக்கிக் கொண்ட ரோம் நாட்டுப் பெரும் படையை மரணத்தின் பிடியிலிருந்து தப்பவைத்த பெருமை, டைபீரியசுக்குக் கிடைத்தது, குறைந்தது இரு பதினாயிரம் ரோமான்ய வீரர்கள் டைபீரியசினால் பிழைத்தனர்.
டைபீரியஸ் கிரேக்கஸ், பொதுப்பணியிலே, நேர்மையைக் கடைப்பிடித்து ஒழுகினவன் - களத்திலே மாற்றார்களிடம் அவனுடைய கணக்கேடு சிக்கிவிட்டது – நாட்டவர் கணக்குக் கேட்டால் என்ன செய்வது என்ற கடமை உணர்ச்சியால் உந்தப்பட்ட டைபீரியஸ், மாற்றார் நகருக்கு மீண்டும் ஓர்முறை சென்று, கணக்கேட்டைக் கேட்டுப் பெற்றுவந்தான்.
இதனைக்கூட, சூதுக்காரச் சீமான்கள் திரித்துக்கூறி, டைபீரியஸ் மீது கண்டனம் பிறப்பித்தனர். ஆனால் டைபீரியசின் ஆற்றலால் உயிர்தப்பிய போர் வீரர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும் திரண்டு வந்து நின்றனர், பெரியதோர் நன்மையை நாட்டுக்குச் செய்த டைபீரியசையா கண்டிக்கத் துணிகிறீர்கள் - என்ன பேதமை - ஏன் இந்தப் பொறாமை ! என்று ஆர்ப்பரித்தனர். இந்த எழுச்சியைக் கண்டே கண்டனத்தை விட்டு விட்டனர். ஆனால் சீமான்களின் சீற்றமும் பொறாமையும் புற்றுக்குள் பாம்பென இருந்து வந்தது.
இந்தப் போரிலே, டைபீரியஸ் வீரமாகவும் ராஜதந்திரமாகவும் பணியாற்றிப் பெரும்புகழ் பெற்றான் - ஆனால் இந்தப் புகழைவிட, பயன் தரத்தக்க மற்றோர் பாடம் இந்தச் சமயத்தில் அவனுக்குக் கிடைத்தது.
களம் நோக்கி அவன் சென்றதாலை வழி நெடுக அவன் கண்டபட்டி தொட்டிகளெல்லாம் பாழ்பட்டுக் கிடந்தன. சிற்றூர்களிலே மக்கள் இல்லை, அங்கொருவரும் இங்கொரு வருமாக அயல் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த அடிமைகள் காணப்பட்டனர். இந்தக் காட்சி டைபீரியசுக்குக் கருத்தளித்தது. நாடு காடாகிறது. நல்ல உழைப்பாளிகள். கிராமத்தில் வாழ வகையின்றி, வெளி இடங்களை நாடிச் சென்று விட்டனர்: காரணம், அவர்களுக்கு வயல் இல்லை. குடில் இல்லை. தொழில் இல்லை. இந்நிலைக்குக் காரணம், அவர்களிடம் இருந்த நிலமெல்லாம் செல்வர் கையிலே சிக்கிக்கொண்டதுதான். மீண்டும் நாட்டுக் குடி மக்கள் வளம்பெறவேண்டும் - அறம் அதுதான், அன்பு நெறியும் அதுதான் - அரசு கொள்ள வேண்டிய முறையும் அதுதான் - இதற்காகவே நாம் இனிப் போரிட வேண்டும், என்று டைபீரியஸ் தீர்மானித்தான். ரோம் திரும்பியதும் இந்தத் திருப்பணியைத் துவக்கினான், மக்கள் திரண்டனர்.
"உழவனுக்கு நிலம் வேண்டும்”
“நிலப் பிரமுகர்களை ஒழித்தாக வேண்டும்"
"ஏழைக்கு எங்கே இல்லம் !"
சுவர்களிலும் வளைவுகளிலும், இந்த வாக்கியங்கள் எழுதப்படுகின்றன ! ஏழை விழித்துக் கொண்டான் - உரிமையைக் கேட்கத் தொடங்கிவிட்டான் ; டைபீரியசின் பேச்சு. ஊமைகளைப் பேசச் செய்துவிட்டது.
குறிப்பிட்ட அளவுக்குமேல் நிலத்தைக் குவித்து வைத்துக்கொண்டிருக்கும் செல்வர்கள், அளவுக்கு மேற்பட்டு உள்ள நிலத்தை அரசினரிடம் தந்துவிட வேண்டும். அதற்காக அவர்களுக்கு நஷ்டஈடு அளிக்கப்படும்.
அங்ஙனம் பெறப்பட்ட நிலத்தை ஏழை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் - அவர்கள் சிறுதொகை நிலவரி செலுத்த வேண்டும்.
டைபீரியஸ் கிரேக்கஸ், இந்தத் திட்டத்தை எடுத்துக் கூறினான், மக்கள் இதுதான் நியாயம், ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டத்தைச் சதி செய்து சாகடித்து விட்டனர் : இப்போது புதுக்கணக்கு வேண்டு. என்று முழக்கினர்.
டைபீரியஸ் கிரேக்கஸ், ட்ரைப்யூனாகத் தேர்ந்தெடுக் கப்பட்டான் - மக்களுக்கு வழக்கறிஞனானான் ! சீமான்கள் சீறினர்.
உலகை வென்றோர் ! - என்று விருது இருக்கிறது. இங்கே, ஏழையின் உள்ளத்தை வென்றோமா! - என்று இடித்துரைத்தான் டைபீரியஸ், புயலொன்று கிளம்புகிறது பூங்கா அழிந்துபடும். இதனை உடனே அடக்கியாக வேண்டும், என்று எண்ணிய சிமான்கள், மார்க்ஸ் ஆக்டேவியஸ் எனும் மற்றோர் ட்ரைப்யூனைச் சரிப்படுத்திக் கொண்டனர். ஒரு ட்ரைப்யூன் கொண்டுவரும் திட்டத்தை மற்றோர் ட்ரைப்யூன் மறுத்து ஓட் அளித்தால், திட்டம் தோற்றதாகப் பொருள் - சட்டம் அவ்விதம் ஆக்கப் பட்டிருந்தது. ஏழைகளின் 'ரட்சகனாக' ஏழைகளாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மார்கஸ் ஆக்டேவியஸ் மாளிகை வாசிகளுக்கு அடிமையாகி, டைபீரியசின் நல்ல திட்டத்தை எதிர்க்கலானான். மக்கள் வெகுண்டனர். டைபீரியஸ் இனியன் கூறினான், இறைஞ்சினான், எச்சரித்தான். பணப் பெட்டிகளிடம் பல்லிளித்துவிட்ட ஆக்டேவியஸ். ஏழைகளுக்குத் துரோகியாகி விட்டான். டைபீரியசின் திட்டத்தை மறுத்து ஓட் அளித்தான், திட்டம் தோற்றது. சீமான்கள் வெற்றிக் கொட்டமடித்தனர்.
தோல்வி - துரோகம் ! - இதனை டைபீரியஸ் எதிர் பார்க்கவில்லை. சீமான்கள் சீறுவர். எதிர்ப்பர், சாதி புரிவர் என்பதை எதிர்பார்த்திருந்தான், ஆனால் ஏழைகளின்
’பாதுகாவலன்' எனும் பதவியைப் பெற்ற ஆக்டேவியஸ், துணிந்து, தன் திட்டத்தைத் தகர்ப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு ஏளனம் கிளம்பியிருக்கும் சீமான்களின் மாளிகையில்! பணம் செய்யும் வேலையைப் பாரடா, பக்குவமற்றவனே ! என்றல்லவா கூறுகிறது. பணக்காரரின் பார்வை, ஏழைக்கு வாழ வழி வகுக்க கிளர்ச்சிசெய்து. வேலை நிறுத்தம் நடத்தி, ட்ரைப்யூன் எனும் பாதுகாவலர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்
முறையைக் கண்டனர் ! வேலியே பயிரை மேய்கிறதே! மான் வழி காட்ட, சிறுத்தை, மான் கன்றுகளைக் கொன்று தின்றதே ! என்ன அனியாயம்! என்ன கேவலம்!! என்று டைபீரியசும். அவன் பக்கம் நின்றோரும் வருந்தினர் : செல்வர் வெற்றிச் சிரிப்புடன் உலவினர்.
டைபீரியஸ். சோர்ந்துவிடவில்லை - மீண்டும் ஓர் சட்டம் கொண்டுவந்தான் - பழையதைவிட, பரபரப்பும் தீவிரமும் மிகுந்தது.
"யாரும் 330 ஏகருக்கு மேல் நிலம் வைத்துக் கொண்டி ருக்கக்கூடாது என்பது சட்டம். இப்போது அந்த அளவுக்கு மேல் வைத்திருப்பவர்கள் சட்ட விரோதமான செய் லாற்றினார்கள் என்று பொருள்படுகிறது. எனவே அவர்கள் சட்ட விரோதமாக வைத்துக்கொண்டிருக்கும் நிலத்தை சர்க்கார் வசம் உடனே ஒப்படைக்க வேண்டு." - என்பது டைபீரியசின் புதுத் திட்டம்.
சீமான்களின் அக்கரமத்துக்கு உடந்தையாக இருந்த ஆக்டேவியசேகூட குற்றவாளி-யானான் ! சட்ட வரம்புக்கு மீறி அவனும் நிலம் வைத்துக் கொண்டிருந்தான்.
டைபீரியசின் இந்தப் புதிய திட்டத்தை தீவிரமாக சீமான்களின் கையாளான ஆக்டேவியஸ் எதிர்த்தான். மீண்டும் டைபீரியஸ், பொது நன்மையை எண்ணி நீதியாக நடந்துகொள்ளும்படி, ஆக்ஸ்டேவியசைக் கெஞ்சிக் கேட் டுக்கொண்டான் : ஆக்டேவியஸ் இணங்க மறுத்தான்.
இந்தப் பிரச்னை தீர்க்கப்படும் வரையில் அதிகாரிகள். தமது அலுவலைச் செய்யக்கூடாது என்றான், டைபீரியஸ், அதிகாரிகள் இணங்கினர்.
சனிபகவானுக்கு ஒரு கோயில் உண்டு ரோம் நகரில்! துரைத்தனத்தாரின் பணம் அங்குதான், வைத்திருப்பர். ஏழைகளின் பிரச்னை தீர்க்கப்படுகிற வரையில், கோயிலி லுள்ள பணத்தைத் தொடக்கூடாது. இழுத்துப்பூட்டுங்கள் ஆலயத்தை என்றான் டைபீரியஸ். கோயில் கதவு அடை பட்டுவிட்டது! டைபீரியசின் வார்த்தைக்கு வலிவு ஏற்பட்டு விட்டது. செல்வர் பீதியுற்றனர்! துக்க உடை அணிந்து வலம் வந்தனராம்!
வருந்திக்கொண்டு வாளா இருந்துவிடுவாரா, வன்கணாளர்கள்! நமது ஆதிக்கத்தை அழிக்கத் துடிக்கும் இந்த அற்பனைக் கொலை செய்தாக வேண்டும் என்று துடித்தனர். சதி செய்யலாயினர். டைபீரியஸ் வாளும் கையு மாகவே உலவ நேரிட்டது.
இவனல்லவா இதுகளுக்காகப் போராடுகிறான் - அடங்கிக்கிடந்ததுகளை ஆர்ப்பரிக்க வைக்கிறான் - இவன் இருக்கு மட்டும் பேராபத்துதான். எனவே இவனை ஒழித்தாக வேண்டும் என்று செல்வர்கள் கொக்கரித்தனர்.
வயலை வளமாக்கியவர்களே ! வறுமைதான் உங்களுக்குப் பரிசா? பாதை அமைக்கப் பாடுபட்டோரே! பட்டினி தான் உங்களுக்குப் பரிசா? சித்திரச் சோலைகளுக்காக உங்கள் செந்நீரைக் கொட்டினீர்கள் ! அற்புதமான கட்டிடங்கள் எழுப்பினீர்கள் உழைப்பால்! உங்கள் நிலைமை காட்டு மிருகத்துடையதைவிடக் கேவலமாக வன்றோ காணப்படுகிறது! என்று டைபீரியஸ் முழக்கமிடுகிறான்.
சட்டத்தை மீறினவர்கள் செல்வவான்களே ! என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறான். ஏழைகளுக்குத் துரோகம் செய்தவர்களை இழுத்து வரச் சொல்கிறான். எவ்வளவு ஆணவம்! செனட் சபையிலே ஈடில்லா அதிகாரம் செலுத்துகிறோம். நமது மாளிகைகளிலேயோ. எதிரி நாடுகளிலிருந்து கொண்டுவந்த விலையுயர்ந்த பொருள்கள். காட்சியாக இருக்கின்றன. ஏன் என்று கேட்காமல் இருந்துவந்தனர். அந்த ஏழையரை நம்மீது ஏவிவிடுகிறானே கொடியவன், இவனைக் கொன்றால் என்ன. கொல்லாது விடினோ இவன் நமது செல்வாக்கையே சாகடித்து விடுவானே என்று எண்ணினர். சீறினர். டைபீரியஸ் கிரேக்கசைக் கொன்று போடக் கொடியவர்களை ஏவினர்.
டைபீரியஸ் புகுத்த விரும்பிய புதுத் திட்டம் பற்றி வாக்கெடுப்பு நடாத்தும் நாள் வந்தது. செல்வர்கள் கூலிப் படையை ஏவி, குழப்பத்தை மூட்டி விட்டு, வாக்கெடுப்பு நடைபெறாவண்ணம் தடுத்து விட்டனர்.
அன்று அவர்களை அடித்து நொறுக்கும் அளவுக்கு டைபீரியசிடம் ஆட்பலம் இருந்தது. எனினும், இரத்தக் களரியைத்தடுக்கவேண்டும், சிக்கலைத் தீர்க்கும் பொறுப்பை, செனட்சபையிடம் விட்டுவிடலாம், என்று நண்பர் சிலர் கூறிய நல்லுரைக்கு இணங்கி. டைபீரியஸ். அமளியை அடக்கினான்.
செனட் சபை, செல்வரின் சூதுக்கும் சுக போகத்துக்கும் அரணாக அமைந்திருந்தது. அங்கு. நியாயம் எப்படிக் கிடைக்கும் - சமர் இன்றி பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளும் சகல வழிகளையும் பார்க்கவில்லை என்று பிறகோர் நாள் எவரேனும் குற்றம் சாட்டுவரே என்பதற்காகவே, டைபீ ரியஸ், செனட் சபையிடம் பிரச்னையை அனுப்பிவைத்தான் - நம்பிக்கையுடன் அல்ல. அவன் எதிர்பார்த்தபடியே செனட் சபை மழுப்பிற்று. மிரட்டிற்று காரியமாற்றவில்லை மீண்டும் மக்களிடம் வந்தான் டைபீரியஸ்.
ஏழைகளுக்கு இதமளிக்கும் திட்டத்தை எதிர்ப்பவன். ஏழைகளாலேயே டிரைப்யூன் ஆக்கப்பட்ட ஆக்டேவியஸ் தானே ! அவனைப் பதவியிலிருந்து அகற்றினாலொழிய வெற்றி கிடைக்காது. எனவே, மக்கள். அவன் தேவையா? என்று தாமே தீர்ப்பளிக்கட்டும் என்று டைபீரியஸ் கேட்டுக் கொண்டான்.
ஏழைகளுக்காகவே நான் புதிய திட்டம் கொண்டு வருகிறேன் - அதை நீ மறுக்கிறாய் - ஏழைகளுக்கு என் திட்டம் கேடு பயக்கும் என்று உன்னால் காரணம் காட்ட முடியுமானால், மக்களிடம் கூறி, என்னைப் பதவியிலிருந்து நீக்கிவிடச் சொல் என்று அறைகூவி அழைத்தான் டைபீ ரியஸ். ஆக்டேவிஸ் முன்வரவில்லை. பிறகே டைபீரியஸ் ஆக்டேவியசை பதவியிலிருந்து நீக்கும்படி மக்களிடம் முறையிட்டான். வாக்கெடுப்பு துவங்கிற்று. முப்பத்தைந்து ஆயத்தார்கள் கூடினர். அவர்களில் 17 ஆயத்தார். ஆக்டேவியஸ் நீக்கப்படவேண்டும் என்று வாக்களித்தனர்.
பெருங்குணம் படைத்த டைபீரியஸ். அப்போதும், வெற்றி எவர்பக்கம் என்பது விளங்கிய அந்த வேளையிலும், பழி தீர்த்துக் கொள்ளும் உணர்ச்சி கொள்ளாமல், தோழமை பேசி, ஆக்டேவியசைக் கட்டித்தழுவி முத்தமிட்டு. வேண்டலானான். 'வேண்டாம் வீண்பிடிவாதம்! ஏழைகள் உய்யும் திட்டத்தை நீயும் ஆதரித்து நற்பெயர் பெறு என்று கெஞ்சினான். உருக்கமான வேண்டுகோள் : ஆக்டேவியசுக்குக் கூட கண்களிலே நீர் ததும்பிற்றாம். எனினும் அவனை அடிமைப்படுத்தி விட்ட, செல்வர்கள் அங்கிருந்தனர். அவர்களைக் கண்டான் ஆக்டேவியஸ், கருணை கருகி விட்டது. வஞ்சகம் படமெடுத்தது, இணங்க முடியாதெனக் கூறிவிட்டான். வாக்கெடுப்பு தொடர்ந்து நடந்தது. ஆக்டேவியஸ், நீக்கப்பட்டான்.
ஆக்டேவியஸ், பதவி இழந்தான். ஆனால் டைபீரியஸ் வெற்றியால் வெறியனாகவில்லை - பண்புடன் நடந்து கொண் டான். ஆக்டேவியஸ் ஒரு அம்பு என்பதை அவன் அறிவான். அவனிடம் கோபம் அல்ல, பரிதாபம் தான் பிறந்தது, ஏழைகளுக்கென்று அரசியல் சட்டத்தின்படி ஏற்படுத்தப் பட்ட பாதுகாவலனைக் கொண்டே ஏழையை நாசமாக்கக் கூடிய வலிவு, செல்வர்கள் பெற்றிருக்கிறார்களே, என் பதை எண்ணியே டைபீரியஸ் துக்கித்தான்.
ஆக்டேவியசை மக்கள் தாக்கிய போது கூட, டைபீ ரியஸ் ஓடிச்சென்று அவனைக் காத்து, மக்கனை அடக்கினான். டையீரியசின் வழி நிற்கக்கூடிய மியூஷியஸ் என்பான் ட்ரைப்யூன் ஆக்கப்பட்டான். செனட் சபை, டைபீரியசின் செல்வாக்கு ஓங்கி வளர்வது கண்டு பெரிதும் பூதி அடையலாயிற்று.
புதிய சட்டம் நிறைவேறிற்று. அதன்படி, ஒவ்வொரு பிரபுவிடமும் உள்ள நிலத்தை அளவெடுக்க முற்பட்டான் டைபீரியஸ். இதற்காகக் கூடாரம் அமைத்துக் கொள்ளும் செலவுத் தொகை கூட, தர மறுத்தது செனட் ; அவ்வளவு அருவருப்பு. மற்றவர்கள் சர்க்கார் சார்பிலே பொதுப் பணியாற்றக் கிளம்பும்போது படிச் செலவு, மிகத் தாராளமாகத் தரும் இதே செனட். ஆனால், ரோம் நாட்டுச் சமுதாய அமைப்பின் சீர்கேட்டை நீக்கி, சமன் உண்டாக்கி வலிவடையச் செய்யும் நற்பணிபுரியும் டைபீரியசுக்கு படிச் செலவுகூடப் போதுமான அளவு தரமறுத்தது. அதுமட்டு மல்ல, அவனுக்கு எதிராகத் தப்புப் பிரசாரத்தைத் தீவிரமாக நடத்தலாயிற்று.
"மண்டைக்காவி மக்களை மயக்கி அடிமை கொள்கிறான்!"
"வீதியிலே பெரிய வெற்றி வீரன் போலல்லவா செல்கிறான்."
"ஏழைகளுக்காக உருகும் இவன் என்ன வெட்டுகிறானா. குத்துகிறானா, வெய்யிலிலும் மழையிலும் நின்று வேலை செய்கிறானா? ஏழைகள் பெயரைக் கூறிக்கொண்டு ஏய்த்துப் பிழைக்கிறான்”
"மண்டிலங்களை வென்ற மாவீரர்களெல்லாம், தலை குனிந்து நடந்து செல்கிறார்கள் : இந்த மார்தட்டி மக்கள் புடைசூழ அல்லவா செல்கிறான்."
'இரவுக் காலத்தில் பார்த்திருக்கிறீர்களா அவனை, வீடு செல்லும்போது மக்கள் தீவர்த்தி பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். அவ்வளவு ஒய்யாரம் கேட்கிறது அவனுக்கு"
”திட்டமிட்டு வேலை செய்கிறான் ; ஏழைகளை ஏவி விட்டு, செல்வர்களை அழிப்பது. பிறகு அதே ஏழைகளை ஏய்த்துவிட்டு, அரசன் ஆகிவிடுவது. இதுதான் அவன் திட்டம்!"
'முடி தரித்துக் கொண்டால், தீர்ந்தது : பிறகு. நாடு அவன் காலடியில் தானே!"
"ஏழை மக்களுக்கு எங்கே அவனுடைய வஞ்சகம் தெரிகிறது"
'இவன் எவ்வளவு உரிமை உள்ளவனோ. அதே அளவு உரிமை படைத்தவன்தானே. ட்ரைப்யூனாக இருந்த ஆக்டேவியஸ், அவனைப் பதவியிலிருந்து விரட்டினானல்லவா! சரியா அது? மக்களுக்கு இழைத்த துரோக மல்லவா. கொடுங்கோலர்கள் கூட, ட்ரைப்யூனை நீக்கமாட்டார்களே ! எவ்வளவு அரும்பாடுபட்டு மக்கள், ட்ரையூனைப் பெறும் உரிமையைப் பெற்றனர். ஒரு கணத்தில் ஒழித்து விட்டானே!'
”எல்லாம். அரசனாவதற்காகத்தான் !"
இவ்வண்ணம் பலமான தப்புப் பிரச்சாரம், மக்களுக்கு மன்னனாக யாராவது முயற்சிக்கிறார்கள் என்றால் போதும். ஆத்திரம் பொங்கும். அவ்வளவு அல்லலை அனுபவித்திருக்கிறார்கள். அரசர்கள் ஆண்டபோது. அதிலும். மன்னன் என்ற உடன் மக்கள் மனதிலே. டார்க்வின் என்ற கொடுங் கோலனுடைய நாட்கள் தான். எழும் : எழுந்ததும் பதறுவர். எனவே, டைபீரியஸ், மன்னனாவதற்கு திட்டமிடுகிறான் என்ற வதந்தி கிளம்பியதும், மக்கள் மனம் குழம்பலாயிற்று, மெள்ள மெள்ள அவர்கள் மனதைச் செல்வர்கள் கலைத்தனர்.
ஆக்டேவியசை அகற்றியது அக்ரமம்தான் என்று கூடச் சிலர் பேச முன்வந்தனர். மக்கள் ஏமாற்றப்படு வதைக் கண்டு டைபீரியஸ் வருந்தினான்.
”ட்ரைப்யூன் பதவி மகத்தானது - மக்களின் உரிமையையும் நலனையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு வாய்ந்தது - அதனை மதிப்பதே அனைவரின் கடமையாகும். எனினும், மக்களின் ’காப்பாளர்' ஆகப் பதவி பெற்றவர் மக்களுக்கே துரோகம் செய்தால். அவரை விரட்டாதிருக்க முடியுமா ! டார்க்வின் எனும் மன்னன் கொடுமை செய்தான் - அதனால் வெறுப்படைந்த நாம், மன்னராட்சி முறையையே ஒழித்துக்கட்ட வில்லையா ! மக்களின் நலன்களுக்காகத்தானே பதவிகள் ! பதவிகளை அளிக்கவல்ல மக்களுக்கு அவைகளைப் பறிக்கவும் உரிமை உண்டு எனவே என் செயல் நியாயமானது - தவறான பிரச்சாரத்தைக் கேட்டு ஏமாந்து போகாதீர். நான் எதேச்சதிகாரமாக நடந்து கொள்ளவில்லை. கெஞ்சினேன் மிஞ்சினான் ! கை குலுக்கினேன். கடுமையாக என் தோழமையை நிராகரித்தான். எனவேதான் ஆக்டேவியசைப் பதவியிவிருந்து அகற்றினேன்" என்று விளக்கமுரைத்தான்.
"நான் என் கண்ணாரக் கண்டேன், காட்சியை ; ஒரு ஆசாமி, பட்டுப் பட்டாடையும் மணி முடியும் கொண்டு வந்து டைபீரியசிடம் தந்தான்' என்று டைபீரியசின் பக்கத்து வீட்டுக்காரனே புளுகினான்.
செல்வர்களின் சூழ்ச்சிக்கு நான் பலியாகிவிடுவேன். உங்களுக்காக உழைத்தேன். ஊரைச் சுரண்டி வாழும் உலுத்தர்களின் சீற்றத்தினுக்கு ஆளானேன். என்னைக் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டார்கள். நான் கொல்லப் பட்ட பிறகு, இதோ என் குழந்தைகளையும், குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பு உம்முடையது என்று கூறி மக்கள் முன், தன் குழந்தைகளைக் கொண்டுவந்து டைபீரியஸ் நிறுத்தினான் - மக்கள் கசிந்துருகினர்.
அடாலஸ் என்னும் வெளிநாட்டு மன்னன் ஒருவன் இறக்கும்போது, பிறகு தன் பெருஞ்செல்வத்தை ரோம் நகருக்கு அளித்தான். இதை ஏழை எளியவருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். அவர்கள் விவசாயக் கருவிகள் வாங்க இந்தப் பணம் தேவைப்படுகிறது.
செனட் சபையிலே செல்வர்களே கூடிக்கொண்டு கொட்ட மடிக்கிறார்கள். அவர்கள் அளிக்கும் தீர்ப்புகள் ஏழையருக்குக் கேடு பயப்பனவாகவே உள்ளன. ஓர வஞ்சனை நடைபெறுகிறது. எனவே செனட் சபையிலே ஏழைகளும் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப உரிமை பெறவேண்டும்.
செனட் சபையின் தீர்ப்பை மாற்றும் உரிமை மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
போரில் ஈடுபடுவதற்கு ஒரு கால வரையறை இருக்க வேண்டும்.
இன்னோரன்ன திட்டங்களை டைபீரியஸ் புகுத்த விரும்புவதாகக் கூறினான்.
ஏழைகளுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளையும் கொடுமைகளையும் அகற்ற, இந்தத் திட்டங்கள் பெரிதும் பயன்படும். பாதுகாப்பும் உரிமையும் பெற்று, ஏழையர் தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொண்டு அதன் மூலம் நாட்டின் வளத்தையும் மாண்பையும் அதிகமாக்க முடியும்.
செல்வர்களின் சீற்றம் மேலும் அதிகமாயிற்று. கொலைகாரர்கள் ஏலப்பட்டனர். மக்களோ டைபீரியசைக் காக்கக் கிளம்பினர். பலர் அவனுக்குப் பாதுகாப்பளிக்க அவன் வீட்டைச் சுற்றிலும் கூடாரங்கள் அமைத்துக் கொண்டு. இரவேல்லாம் காவலிருந்தனர். ஏழைகளுக்காக உழைத்து, அவர்கள் நெஞ்சத்திலே இடம் பெற்றுவிட்ட டை பிரியசுக்கு இந்தச் சம்பவம் மாபெரும் வெற்றி எனத் தோன்றிற்று.
வாக்கெடுப்புக்கான நாள் வந்துற்றது. மக்கள் சந்தைச் சதுக்கத்தில் திரண்டனர். மாவீரன் டைபீரியஸ் வந்து சேர்ந்தான். மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
செல்வர்களும் அவர்தம் கையாட்களும் ஒருபுறம் குழுமி இருந்தனர்.
நெருக்கடியான கட்டம். டைபீரியசைத் தாக்கிக் கொல்ல செல்வர்கள் வருவதாக ஒருவன் செய்தி கொண்டு வந்தான். இது கேட்ட மக்கள் கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்துக்கொண்டு அமளிக்குத் தயாராகிவிட்டனர். தொலைவில் இருந்த மக்களுக்கு நிலைமையை விளக்குவதற்காக, டைபீரியஸ் பேச முயன்றான். பெருங் கூச்சல்! எனவே, என்ன சொல்கிறான் என்பது புரியவில்லை. புரிய வைப்பதற்காக டைபீரியஸ் தன் தலையைத் தொட்டுக் காட்டினான் - தன்னைக் கொல்லச் செல்வர்கள் துணிந்து விட்டனர் என்பதை எடுத்துக் காட்டினான்.
ஓடோடிச் சென்றான் ஒருவன் செனட் சபைக்கு - டைபீரியஸ். மன்னன் ஆகப்போவதாக அறிவித்து விட்டான் ; தன் சிரத்துக்கு மணிமுடி வேண்டும் என்று தெரிவித்துவிட்டான், நானே கண்ணால் கண்டேன் என்று கூவினான். செனட் சபையினர் சீறினர் உடனே டைபீரியசைக் கொன்றாக வேண்டும். கிளம்புக! என்று முழக்க மிட்டான் நாசிகா எனும் கொடியோன் ; ஆர அமர யோசிக்க வேண்டும் என்றனர் சிலர் ; நாசிகாவோ "பெரும் ஆபத்து நாட்டுக்கு வந்துவிட்டது! நீங்கள் கிளம்பாவிட்டால் நான் செல்கிறேன், துரோகியை ஒழித்துக்கட்ட” என்று கொக்கரித்தான். உடன் சென்றனர் அவன் போன்ற ஆத்திரக் காரர்கள். ஏற்கனவே செல்வர்கள் திரட்டி இருந்த கூலிப் படை திரண்டது. சந்தைச் சதுக்கத்தில் பாய்ந்தது. பயங்கரமான போர் முண்டது. முன்னூறு பேர்களுக்கு மேல் டைபீரியசின் சார்பினர் படுகொலை செய்யப்பட்டனர். பாதகர்கள் டைபீரியசையும் கொன்றுவிட்டனர்.
ஏழைகளின் நல்வாழ்வுக்காக உழைத்தவனை அடித்துக் கொன்றனர். ஏழைகள் வாழ வழி வகுத்துத்தந்த உத்தமனை, தன்னலமின்றி உயர்ந்த கொள்கைக்காகப் பாடுபட்ட இலட்சிய வீரனை மனித மிருகங்கள் தாக்கிச் சாகடித்தன!
ரோம் நாட்டிலிருந்த காட்டுமுறையை மாற்றி அமைக்க விரும்பினான். நாட்டின் முதுகெலும்பாக உள்ள ஏழை மக்களை வாழ வைத்தால் தான் நாட்டுக்கு மாண்பு என்று நம்பினான். நன்னலம் தற்பெருமை எதற்கும் இடந்தராமல், தளராது உழைத்து வந்த வீரனை, தன்னலக்காரர்கள் படுகொலை செய்தனர்.
செல்வரின் ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிபவர்களை எப்படிச் சித்திரவதை செய்வோம் காணீர்! என்று கூறுவது போல. இலட்சியவாதிகளுக்கு எச்சரிக்கை தருவது போல, சந்தைச் சதுக்கத்திலே சழக்கர் கூடி டைபீரியசைப் படு கொலை செய்தனர்.
கள்ளனும் காமுகனும், பிறர் பொருளைக் கொள்ளை அடித்து மாளிகை கட்டுவோனும், துரைத்தனத்துக்குத் துரோகம் இழைத்து அதை இலஞ்சம் கொடுத்து மறைத்து விடுவோனும், கற்பழித்தவனும், காமுகனும், கனவானாகி, செனட்சபை உறுப்பின்னாகி, விருது அணிந்த சீமானாகி, கொலு இருந்து வந்தான். ஏழைக்கு இதமளிக்கும் ஏற்பாடு பற்றியன்றி வேறொன்றின் மீதும் நாட்டம் கொள்ளாமல், மிரட்டலுக்கு அஞ்சாமல், தோல்வி கண்டு துவளாமல். மாளிகையின் மயக்க மொழி கேட்டு ஏமாந்து விடாமல். உழைத்த உத்தமனைக் கொலை செய்து விட்டனர் கொடியவர்கள்.
“தங்கள் பாதுகாவலன் படுகொலை செய்யப்பட்டது கண்ட மக்கள், பதறினர் ; கதறினர் : வேறென்ன செய்வர்? வெறிகொண்ட செல்வர் படை, துரத்தித் துரத்தித் தாக்கு கிறது. எதிர்த்து நிற்கச் செய்யும் ஆற்றல் படைத்த தலைவன் இல்லை. செல்வர்களை எதிர்த்து நிற்கும் ஆற்றலை அளித்து வந்தவன் பிணமானான் : மக்களோ நடைப்பிணமாயினர். மாளிகைகளிலே மது அருந்தி மகிழ்ந்தனர் ; ஏழைக் குடில்களிலே குலைநடுக்கம். கண்ணீர். முயற்சியை முறியடித்து விட்டோம் என்று வெற்றி பேசினர் வெறியர் ; உத்தமனை இழந்துவிட்டோம் என்று விம்மிக் கிடந்தனர் எளியோர். டைபீரியஸ் கிரேக்கஸ் மறைந்தான் ; படுகொலைக்கு ஆளானான். வயது 36!
சோலை சுற்றியும், சொகுசுக்காரியின் மாலைக்கு அலைந்தும், வாழ்ந்து கொண்டிருக்-கிறார்கள் அவனை ஒத்த வயதினர் ரோம் நகரில். டைபீரியஸ், உழைத்து ஊராரின் நண்பனாகி உலுத்தரின் சதியால் பிணமாகி விட்டான்.
36- வயது! வீரத்துக்கும் ஆர்வத்துக்கும் இடமளிக்கும் பொருத்தம் அமைந்த வயதினன்! கீர்த்தி மிக்க குடும்பம்! தன் நிலையை உயர்த்திக்கொள்ள வாய்ப்புப் பெற்றவன். ஆனால், அவனோ, களம், செனட், காதல் கூடம் இவைகளிலே இன்பம் காணவில்லை; சந்தைச் சதுக்கத்திலே ஏழையரிடமே இன்பம் கண்டான். அவர்களுடைய முகத்திலே படிந்து கிடக்கும் கவலையைத் துடைக்க வேண்டும். அதுவே சிறந்த குறிக்கோள், பெறற்கரிய வெற்றி என்று எண்ணினான் : சிறந்த பணியாற்றினான். தூங்கிக்கிடந்த மக்களைத் தட்டி எழுப்பினான்; பேச வைத்தான்; போரிட நெஞ்சுரம் தந்தான்; நேர்மையாளனாக வாழ்ந்தான் ; வஞ்ச கர்களால் வீழ்த்தப்பட்டான்.
அறம் வீழ்ந்தது ! அன்புருவம் உயிரிழந்தது ! ஏழை பங்காளன் பிணமானான் ! எத்தர்கள் கொட்ட மடிக்கின்றனர் ! ஏழை மக்கள் கதறுகின்றனர்!
அறிவும் அறமும் குழைத்து வீர உரையாக்கி, சந்தைச் சதுக்கத்திலே நின்றளித்து வந்த சிறந்த பேச்சாளன். கேட்போர் உள்ளத்தைத் தன்பால் ஈர்க்கும் தகைமை வாய்ந்த பேச்சுவல்லோன், பிணமாக்கப் பட்டுவிட்டான், பேயுள்ளம் பூரிக்கிறது. தாயகம் போக்க முடியாத கறையைப் பெறுகிறது.
கொன்றதுடன் கொடுமையாளர் திருப்தி அடையவில்லை. இழிவும் சொரிந்தனர். கண்களில் நீர் சோர்கெயஸ் கிரேக்கஸ், தன் அண்ணன் உடலை அடக்கம் செய்ய, எடுத்துச்செல்ல அனுமதி கேட்கிறான் - மறுக்கப்படுகிறது. ஆப்ரிக்க மண்டிலத்தை ரோமுக்குக் காணிக்கையாகத் தந்த ரணகளச் சூரன் ஸ்கிபியோவின் பேரன் டைபீரியஸ்.
மகனின் உடலை மாதா பெற முடியவில்லை.
அண்ணன் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து ஏதும் செய்ய முடியாத நிலையில், கெயஸ் கிரேக்கஸ் இருந்தான். வளமற்ற மனமல்ல; நாள் வரவில்லை; பக்குவப் பட்டுக்கொண்டு வருகிறான். ரோம் நாடு, எவ்வளவு கொடியவர்களின் உறைவிடமாகிக் கிடக்கிறது என்பது கெயசுக்குப் புரியாமலிருக்குமா ! தன் அண்ணனை நினைவிற் கொண்டு வந்தாலே போதும், ரோம் அவனுக்குப் புரிந்து விடும் வெதும்பினான், வெகுண்டான். வாலிப உள்ளம் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதானே கொள்ளும். என் அண்ணனைச் சாகடித்த மாபாவியைக் கொன்று போடா முன்னம் ஊணும் உறக்கமும் கொள்ளேன் என்று சூளுரை கூறி, வாள் எடுத்துக்கொண்டு சந்தைச் சதுக்கத்தில் நின்றோ மாளிகையில் புகுந்து மமதையாளர்களைத் தேடிப் பிடித்தோ பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் கொள்ளக்கூடிய வாலிபப் பருவம்தான். எனினும் கெயஸ் அறிவாளி.
பழிதீர்த்துக் சொள்ளத்தான் வேண்டும் ஆனால், யார் மீது? நாசிகர் மீதா? செச்சே ! அவன் மந்தையிலே ஒருவன் அவன் மீது மட்டும் வஞ்சம் தீர்த்துக் கொண்டால் பயன் என்ன? உருவத்தால் வேறு வேறு எனினும், செல்வர் எல்லாம் உணர்ச்சியால் நாசியாக்கள் தாமே! எனவே ஒருவனைக் கொன்று என்ன பயன்? முறையை ஒழித்தாக வேண்டும் ! உலவுவது ஒரு அரவம் அல்ல; புற்றிலே பல ; புற்றோ பலப்பல ; அடவியிலே உள்ள புற்றுக்களோ ஏராளம். எனவே அடவியையே அழித்தாக வேண்டும். அண்ணன் தொடுத்த அறப்போரை தொடர்ந்து நடத்தி வெற்றி காணவேண்டும், மாண்புமிக்க முறையிலே பழி தீர்த்துக்கொள்ளும் முறை இதுதான் என்ற முடிவுக்(கு) வந்தான் கெயஸ். அந்தப் பெரும் பணிக்காகத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்தான். வீரமும் அறிவும் நிரம்பியவன்; அண்ணன் மாண்ட சம்பவம் கெயசுக்கு நல்லா சான் தரும் பாடமாக அமைந்தது.
குறிக்கோளுக்காக அண்ணன் உயிரை இழந்தான் - அந்தத் தியாக உள்ளம் நமக்கும் உண்டு என்பதை நிலை நாட்ட வேண்டும். சந்தைச் சதுக்கத்திலே அண்ணனைக் கொன்று போட்டனர் : உடலைக்கூட ஆற்றிலே போட்டனர். இதைக் கண்டு, இனி எவர்தான் ஏழைக்காகப் பரிந்து பேச முன்வருவர் ! என்று எக்காள மிடுகின்றனர் அந்த எத்தர்கள். இதோ நான் இருக்கிறேன் டைபீரியசின் இளவல், அறப்போர் நடாத்துவேன். டைபீரியசின் தம்பி என்ற நிலைக்கு மாசு ஏற்பட விடமாட்டேன். அண்ணனிடம் கண்ட அதே ஆர்வம், அதே நெஞ்சு உரம், ஆற்றல் தம்பியிடம் இருக்கிறது என்று நாடு காணவேண்டும். அதே துறையிலே நான் பணியாற்றாது போவேனாகில், நான் டைபீரியசுக்குத் துரோகமிழைத்தவனாவேன், என் குடும்பக் கீர்த்தியைக் கருக்கியவனாவேன்.
சந்தைச் சதுக்கத்திலே அவரைச் சாகடித்த போது. உயிர் பிரியுமுன், என் அண்ணன் என்னென்ன எண்ணினாரோ அவர் மனக் கண்முன் என்னென்ன காட்சி தெரிந்ததோ ! அறப்போர் - முதல் கட்டம் - முதல் பலி ! இனி யார் முன்வருவார்கள்? அறப்போர் தொடர்ந்து நடைபெறுமா? அல்லது கொல்வார்களே என்று குலை நடுக்கம் பிறந்து, அனைவரும் ஒடுங்கி விடுவார்களா? எதிர்காலத்தில் என்ன நடைபெறும்? யார் என் கொள்கையை மேற்கொண்டு போரிடுவர்? என்றெல்லாம் எண்ணியிருப்பார்! என்னைப்பற்றி எண்ணாமலா இருந்திருப்பார். என் தம்பி இருக்கிறான் கெயஸ். அவன் வாளா இருக்கமாட்டான். அவனிடம் ஒப்படைக்கிறேன் அறப்போர் நடாத்தும் பேரும் பொறுப்பை என்று எண்ணியிருப்பாரா ! இறந்து படுமுன்னம் அவர் இதயத்திலே இந்த எண்ணங்கள் எழாமலா இருந்திருக்கும்? நிச்சயம் எண்ணியிருப்பார். ஒரு கணம், நம்பிக்கை கூடப் பிறந்திருக்கும். நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை பிறந்திருக்கத்தான் செய்யும். நான் வேறு எதற்கு இருக்கிறேன், தம்பி ! என்று அழைத்தாரோ - "தம்பி இருக்கிறான் தருக்கர்களே ! என்னைக் கொன்று போட்டு விட்டால், போர் ஓய்ந்து விடும். வெற்றி உங்களுக்குக் கிட்டி விடும் என்று எண்ணாதீர், ஏமாளிகளே ! தம்பி இருக்கிறான். என் வேலையை அவன் தொடர்ந்து செய்து வருவான். உங்களை வீழ்த்த வீரன் இருக்கிறான் - நான் கடைசி அல்ல - நான் துவக்கம்-" என்று முழக்கமிட்டிருப்பாரோ?
கெயஸ் கிரேக்கசின் உள்ளம் இவ்வாறெல்லாம் பேசாமலிருந்திருக்க முடியுமா?
அருமைக் குமாரனைப் பறிகொடுத்த கர்னீலியாவின் மனவேதனை சொல்லுந் தரத்ததாகவா இருந்திருக்கும்? பார்த்துப் பார்த்து மகிழ்ந்து வந்த தாய்! களம் சென்றான், கீர்த்தி பெற்றான் ! மக்களிடம் மதிப்புப் பெற்றான். நாட்டுக் களங்கத்தைத் துடைக்கும் திட்டம் வகுத்தான். சமுதாயத்திலே புதிய திட்டம் புகுத்த அரும்பாடுபடுகிறான், ஊரெல்லாம் புகழ்கிறது : மக்கள், மண்டிலம் வென்ற மாவீரர்களைப் போற்றுவதைவிட அவனைப் போற்றுகிறார்கள். அவன் உரை கேட்டால் மகிழ்கிறார்கள், அவனைக் கண்டால் களிப்படைகிறார்கள். அவன் சொல்லைச் சட்டமெனக் கொள்கிறார்கள். 'காப்பாளர்' பதவியே. புதுமதிப்புப் பெறுகிறது மகனால்! அப்படிப்பட்ட மகனை, மாபாவிகள் கொன்றுவிட்டார்கள். தாய் உள்ளம் எப்படித் தாங்கிக் கொள்ளும் ! எவ்வளவு பதைத்திருப்பார்கள் ! எவ்வளவு கதறி இருப்பார்கள்? பாவிகளே! பாதகர்காள்! என பாலகனை பழி ஏதும் நினைத்தறியாதவனை, பிறருக்காக உழைத்து வந்தவனைக் கொன்றீர்களே! நீங்கள் வாழும் நாடு வாழுமா! என்றெல்லாம் சபித்திடத்தானே செய்வார் கள், துக்கத்தைத் துடைத்துக்கொள்ளவோ, சம்பவத்தை மறந்து விடவோ. முடியுமா!
ஆனால் கர்னீலியா தாங்கிக்கொண்டார்கள் ! அறப் போர் நடாத்தினான் நமது அருமை மைந்தன் - அற்பர்களால் கொல்லப்பட்டான் - புறமுதுகு காட்டவில்லை - சாவுக்கு அஞ்சி, கொள்கையை விடவில்லை - மாவீரனாகவே இறுதி வரை இருந்தான் - அவனைக் கொன்றவர்கள் அவன் பெற்ற புகழைக் கொல்ல முடியாது - அவன் வாழ்கிறான் - என் நினைவல் - ஏழையர் கண்ணீரில் - எளியோரின் பெருமூச்சில் - வரலாற்றிலே அவன் சாகாப் பரம்பரை ! - என்றெண்ணினார்கள்.
நான் மகனை இழந்தேன் - பெரும் வேதனைதான் - ஆனால் நாடு, ஒரு நன்மகனை இழந்துவிட்டது. நாடு வேதனையில் கிடக்கிறது. ஏழையர் உலகுக்குத் தன்னை அர்ப்பணித்து விட்டான், என் மகன் - அவன் கொல்லப்பட்டது. எனக்குத் தரும் துக்கத்தைப் போலவே. ஒவ்வொரு ஏழையின் உள்ளத்துக்கும் தரும்அவன் என் மகனாகப் பிறந்தான். நாட்டவரின் மகனானான்! அவன் பொருட்டு துக்கிக்கும் உரிமை, எனக்கு மட்டுமல்ல. நாடு முழுவதுக்குமே வந்துவிட்டது! எனவே, அவன் மறைந்ததால் நான் மட்டுமே வேதனை அடைகிறேன் என்று கூறுவதே தவறு! நாட்டுக்கே வேதனை! என் வேதனையைப் பெரிதெனக் கொள்ளல் கூடாது தாங்கிக்கொள்வேன்! வேதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடத் தெரியாமல், டைபீரியசின் தாயார் இருக்கக் கூடாது! நான், வீரனின் தாய் ! அந்த வீரன் உயிர் இழக்கவே அஞ்சவில்லை! அவன் தாய் தான் நான் என்பதைக் காட்டவாகிலும், நான் கண்ணீரை அடக்கிக் கொள்ள வேண்டும்! என் கண்ணீரைக் கண்டால், என் மகனைச் சாகடித்த செருக்குமிக்கோர். கேலியன்றோ செய்வர்! பரிதாபம் காட்டுவர் சிலர். அது கேலியைவிடக் கொடுமையன்றோ ! ' பாபம் கர்னீலியா கதறுகிறாள். என்ன நேரிடும் என்பதறியாது குதித்தான். கூத்தாடினான் டைபீரியஸ். இறந்துப்பட்டான். இதோ அவன் தாயார் அழுதபடி இருக்கிறார்கள்" என்று சுட்டிக்காட்டுவர். டைபீரியசுக்குத் துரோகம் செய்வதாகும் இந்த நிலை, ”என் மகன் பெரும் பேறு அடைந்தான். பேதைகளே ! நான் கண்ணீர் விடமாட்டேன்" என்றல்லவா, டைபீரியசின் தாயார் கூற வேண்டும், அப்போதல்லவா அக்ரமக்காரர்கள் அஞ்சிச் சாவர்! அவன் சாக அஞ்சவில்லை! என்று தெரிந்து கொள்ளட்டும், செல்வர்கள்.
கர்னீலியா துக்கத்தைத் தாங்கிக்கொண்டதன் கருத்தை உணரமுடியாதவர்கள், ஆச்சரிய மடைந்தனர். ஆனால் வீர உள்ளம் படைத்த அந்த மூதாட்டி, புலம்பிக்கொண்டு மூலை யில் கிடக்கவில்லை. ’ஒரு மாணிக்கத்தை நாடு வாழ காணிக்கையாகக் கொடுத்தேன். தெரிந்து கொள்க!' என்று நாட்டுக்கு எடுத்துரைக்கும் நிலையில் வாழ்ந்திருந்தாள்.
மற்றும் ஒரு மாணிக்கம் இருக்கிறது - கெயஸ்.
இவனையாவது இழக்காமலிருக்க வேண்டும், என்று எண்ணி அவனை, அண்ணன் கொண்டிருந்த ஆபத்தான வேலையிலே இறங்காதிருக்கப் பணித்திடுவாள் என்று பலர் எண்ணினர். ஆனால் கர்னீலியா கெயசைத் தடுக்கவில்லை, குடும்பமே, இலட்சியத்தை அணியாகக் கொண்டு விட்டது!
கெயஸ் கிரேக்கஸ், நாட்டு வழக்கப்படி, களத்திலே பணிபுரியச் சென்றான் ; துவக்கமே புகழ் தருவதாக அமைந்தது.
சார்டினியா எனும் இடத்தில் நடைபெற்ற சமரில், கெயஸ் புகழ் பெற்றான் -- அதனினும் அதிகமாக செல்வாக்குப் பெற்றான்.
மாரிகாலம். கடுங்குளிர். போதுமான உடையின்றிப் படை வீரர்கள் வாடினர். ரோம் நகரிலிருந்தோ உதவி கிடைக்கவில்லை. படைத் தலைவன் ஏது செய்வதென்று அறியாதிருந்தான், படை வீரர் படும் அவதி கண்டு, நமக்கென்ன என்று வாளா இருக்க மனம் இடம் தரவில்லை. கேயசுக்கு. 'நமக்கென்ன என்று இருந்திருந்தால் சந்தைச் சதுக்கத்திலா இறந்திருப்பான், டைபீரியஸ், செனட் சபைச் சீமானாகவன்றோ இருந்திருப்பான். அவன் தம்பிதானே இவன்! எனவே அல்லலைத் துடைப்பது நமது கடன்’ என்று எண்ணினான். அண்டை அயலிடெங்கும் சென்றான், உடை திரட்ட. அவன் காட்டிய ஆர்வமும் கொண்ட முறையும் கண்டு, தாராளமாகப் பலரும் உதவினர். கொட்டும் குளிரினின்றும் தப்பிய போர் வீரர்கள் வாழ்த்தினர்.
கெயஸ் கிரேக்கசின் நற்குணத்தைப் பாராட்டி, வெளி நாட்டு வேந்தன், ரோம் நாட்டுப் படைக்கு. உணவு தானியம் அனுப்பி வைத்தான்.
இந்தச் ’செய்தி’ரோமுக்கு எட்டிற்று, சீமான்களைக் கொட்டிற்று!
நாட்டுப் படையிலே பணிபுரியும் ஒரு இளைஞன் பிறர் மனதைக் கவரும் பண்புடன் இருக்கிறான், அதனால் நாடு பயன் பெறுகிறது என்றால், நாட்டிலே மற்றையோர். அதிலும், வயதாலும் பதவியாலும் பெரியோர் ஆயினோர் மகிழத்தானே வேண்டும். ஆம்! என்போம் தயக்கமின்றி. அப்படி இருந்ததில்லை என்கிறது வரலாறு !!! ஒருவன். செல்வாக்கு அடைகிறான் என்ற உடன் பொறாமை. பொச்சரிப்பு அச்சம், இவையே எழுகின்றன. ஆதிக்க உள்ளம் கொண்டோருக்கு, அதிலும் புகழ் பெறுபவன். யார்? அச்ச மூட்டிய பெயர் டைபீரியஸ்! அவன் தம்பி. இவன்! இவனும், செல்வாக்குப் பெறுகிறான் ! புதிய ஆபத்து !! - என்று சீமான்கள் எண்ணினர்.
கெயஸ் கிரேக்கஸ் செவிக்கு விஷயம் எட்டிற்று. எரிச்சலாயிற்று - ரோம் சென்றான். கேட்போர்க்கு விளக்கம் தரலாம் என்று.
”களத்திலே படைத் தலைவன் இருக்கிறான் - உடன் இருக்க வேண்டியவன் ஊர் திரும்பிவிட்டானே - பெருங் குற்றமல்வா இது" என்று கண்டனம் கிளம்பிற்று: கட்டிக் கொடுத்த சோறு!
இந்தக் கண்டனம் ஓசை அளவில் போய்விட்டது. ”என்மீதா கண்டனம். பெரியவர்களே ! படைத் தலைவருடன் ஓராண்டு தங்கியிருந்தால் போதும், ஓய்வெடுக்கலாம் என்பது முறையாயிருக்கிறது. நானோ மூன்றாண்டுகள் ஊழியம் செய்த பிறகே ஊர் திரும்புகிறேன். இது எங்ஙனம் குற்றமாகும்? பலர் களம் சென்றனர். கொள்ளைப் பொருளுடன் வீடு திரும்பினர். நானோ பணம் கொண்டு சென்றேன். வெறுங்கையுடன் வீடு திரும்புகிறேன், மதுக்கிண்ணமும் கையுமாக மாடி வீட்டில் இருந்தவர்களெல்லாம் இப்போது. அந்தக் கோப்பைகளிலே தங்கக் கட்டிகளை நிரப்பிக் கொண்டு வந்துள்ளனர். நான் களம் சென்றேன்: கடும் போரில் ஈடுபட்டேன் : பொருளைக் கொள்ளையிட வில்லை; தாயகத்தின் புகழ் வளர்த்தேன்! இது. இந்நாளில் குற்றமா?" என்று கெயஸ் கேட்டபோது. வம்பர் வாயடைத்து நின்றனர்.
கெயஸ் கிரேக்கஸ், அண்ணன் போன்றே, பெற வேண்டிய பெரு வெற்றி, ரோம் நகரில் தான் இருக்கிறது. என்ற கருத்து கொண்டவன். எனவே, மக்களுக்குத் தொண்டாற்ற முற்பட்டான். 'காப்பாளர்' பதவி பெறத் தேர்தலில் ஈடுபட்டான். ரோம் நகரில் மட்டுமல்ல, இத்தாலி முழுவதுமே வரவேற்றது. கெயஸ் கிரேக்கசுக்கு வாக் களிக்க, வெளி இடங்களிலிருந்து திரளான கூட்டம் வந்தது. நகரிலே அன்று இடநெருக்கடியே ஏற்பட்டதாம் !
முளையிலேயே கிள்ளிவிடவேண்டும் என்று முனைந்து வேலை செய்தனர் செல்வர்கள் - வெற்றி பெற்றான் கெயஸ். ஆனால், முதலிடம் கிடைக்கவில்லை. நாலாவது இடம் கிடைத்தது.
வாக்கெடுப்பிலேதான், செல்வர்களால் சூது புரிய முடியுமே தவிர, மக்கள் இதயத்திலே கெயஸ் இடம் பெறுவதை எங்ஙனம் தடுத்திட முடியும்? டைபீரிசியசின் தம்பி! அவன் போன்றே ஆற்றலுள்ளவன்; ஏழைக்கு இரங்கும் பண்பினன். மக்கள் தலைவனைக் கண்டனர் : டைபீரியஸ் மறைந்ததால் ஏற்பட்ட பெரு நஷ்டம் இனி ஈடு செய்யப்படும் என்று பெருமையுடன் பேசினர்.
"மக்கள்! எவ்வளவு பற்றும் பாசமும் காட்டுகிறார்கள். ஆனால், ஆபத்தான சமயத்தில், எவ்வளவு குழப்ப மடைந்துவிடுகிறார்கள். தங்களுக்காக உழைப்பவனை எப்படிப் பாராட்டுகிறார்கள், ஆனால், எத்தர்கள் ஏதேனும் கலகமூட்டினால், எவ்வளவு ஏமாந்து விடுகிறார்கள். என் அண்ணனைக் கண்கண்ட தெய்வமெனக் கொண்டாடினார்கள். ஆனால், அவரைக் காதகர் கொன்றபோது, மிரண்டோடி விட்டார்களே - என்று எண்ணி கெயஸ் வருந்தினான்.
மக்கள் மகிழ்ச்சியுடன் வாக்குகளை நல்கினர்; காப்பாளர் ஆனான் - அண்ணனுடைய நினைவு. நெஞ்சிலே வந்தது - மனம் உருகினான்.
வெளிநாட்டார் ட்ரைப்யூனைப் பற்றி இழிவாகப் பேசியது கேட்டு வெகுண்டெழுந்து காப்பாளரின் கண்ணியத்தைக் காப்போம் என்று போரிட்டனர். மக்கள். மற்றோர் காப்பாளருக்கு சதுகக்த்தில் வழிவிட மறுத்தான் என்பதற் காக ஒருவனைக் கொன்று போடும்படி உத்திரவிட்டனர், மக்கள் ! அத்தகைய ரோம் நகரில் அன்பர்களே! என் அண்ணன் டைபீரியஸ் கிரேக்கசை. உங்கள் காப்பாளரை' கொடியவர்கள் கொன்றனர் - உடலை வீதியில் இழுத்துச் சென்றனர் - ஆற்றில் வீட்டெறிந்தனர். உங்கள் கண்முன்னால் நடைபெற்றது. இந்தக் கொடுமை. கண்டீர்கள்; என்ன செய்தீர்கள்!" என்று கெயஸ் கேட்டான். நெஞ்சிலே மூண்ட சோகத்தால் உந்தப்பட்டதால், என் சொல்வர்? கண்ணீர் சொரிவதன்றி வேறென்ன பதில் தரமுடியும்?
இத்தகைய மக்களுக்காக நான் ஏன் வீணாக உழைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. கெயஸ் கிரேக்கஸ்.
மக்களுடைய நிலை இதுதான் என்றாலும். அவர்களுக்கே பாடுபடுவேன் - நான் தியாகியின் தம்பி ! என்று கூறுவது போல. ஆர்வத்துடன் பணியாற்றி வரலானான்.
வெற்றிகள் மூலமாக அரசுக்குக் கிடைக்கும் பொது நிலத்தை ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்க வேண்டும்.
படை வீரர்களுக்கு உடைகளைப் பொதுச் செலவில் தயாரித்துத் தரவேண்டும்.
பதினேழு வயதாவது நிரம்பப் பெற்றால் மட்டுமே படையில் சேர அழைக்க வேண்டும்.
ரோம் மக்களுக்கு இருப்பதுபோலவே வாக்களிக்கும் உரிமை இத்தாலி மக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும்.
உணவு தானிய விலையை, ஏழைகளுக்குக் குறைத்திட வேண்டும்.
செனட் சபையின் நீதிமன்ற அதிகாரத்தைக் குறைப்பதுடன், அதிலே ஏழையர்களின் சார்பிலே உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவை, கெயஸ் கிரேக்கஸ் தீட்டிய திட்டம், அரசிலே நீதி நிலவவேண்டும். நிர்வாகத்திலே நேர்மை இருக்க வேண்டும், பொதுநலம் எனும் மணம் கமழவேண்டும் என்ற நோக்கத்துடன் கெயஸ் கிரேக்கஸ் தன் புதுத்திட்டத்தைத் தீட்டினான். இறந்துபட்டான், இடர் ஒழிந்தது என்று எண்ணினோம்; இதோ டைபீரியஸ் மீண்டும் உலவுகிறான் கெயஸ் வடிவில் என்று எண்ணினர் செல்வர்.
இந்த அரிய திட்டத்துக்காகப் பணியாற்றிடும் கெயசை மக்கள் போற்றாதிருப்பரா?
நமக்குப் பாதுகாவலன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு.
மக்களிடம், கெயஸ் கிரேக்கஸ் மிக நெருக்கமான தொடர்பு கொண்டான்.
முன்பெல்லாம், நேராம் நகரில் பேச்சாளர்கள், சென்ட் சபைக் கட்டிடத்தை நோக்கித்தான் பேசுவாராம் - மக்களைப் பார்த்தல்ல ! கெயஸ் கிரேக்கஸ்தான் முதன் முதலாக மக்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தது!
சொல்லவேண்டியது மக்களிடமே ஒழிய செனட்சபையிடமா? என்று கேட்பது போலிருந்தது. கெயசின் புது முறை.
அரசு எவ்வழி செல்லவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஆற்றலும் உரிமையும் படைத்தவர்கள் மக்களே யன்றி, சீமான்கள் கொலுவிருக்கும் செனட்சபை அல்ல என்ற கருத்தை விளக்குவதாக அமைந்தது அந்தப் புது முறை.
மனுச் செய்து கொள்வதாக இருந்தது முன்னைய முறை இது மக்களைப் பரணி பாடிடச் செய்வதாக அமைந்தது.
கோரிக்கையை வெளியிடுவதல்ல கூட்டத்தின் நோக்கம். மக்களின் ஆற்றலை அரசாள்வோருக்கு அறிவிக்கும் செயலாகும். என்று தெரியலாயிற்று.
மக்களுக்குப் புது நிலை பிறந்து விட்டது என்பதைத் தெரிவிக்கும் நிகழ்ச்சியாயிற்று. புதுமுறை.
சொல்லில் வல்லவனான கெயஸ் கிரேக்கஸ், செயலாற்றுவதில் சளைத்தவனல்ல. தானே முன்னின்று எல்லா வேலைகளையும் கவனிப்பான்.
பொதுப்பணிதானே என்ற எண்ணத்தில் மற்றவர் ஏனோதானோவென்று இருந்து விடக்கூடும். கவைக்குதவாத முறையிலே காரியமாற்றக்கூடும். கண்மூடித்தனமாகச் செலவு செய்து விடக்கூடும். சிலர் வேண்டுமென்றே துரோகம் செய்யக்கூடும். பலர் அக்கரையின்றிக் காரியத்தைக் கெடுத்துவிடக்கூடும். எனவே, நாமே கவனித்து வேலைகளை முடித்தாக வேண்டும் என்ற தூய நோக்குடன், ஓயாது உழைத்தான், கெயஸ் கிரேக்கஸ்.
மக்கள், கெயஸ் கிரேக்கசை எப்போதும் காணலாம்: ஏதாவதொரு பொதுப்பணியில் ஈடுபட்டிருப்பான்.
பாதைகள் செப்பனிடப்படுகின்றனவா, கெயஸ் அங்கு தான் காணப்படுவான். நிலங்களை அளவெடுக்கிறார்களா, கெயஸ் அங்குதான் ! வேலை செய்வோர் சூழ. இங்குமங்குமாகச் சென்றபடி இருப்பான். இவ்விதம், உழைக்கும் கெயசைக் கண்டு, மக்கள் உள்ளம் பூரித்தனர்.
மக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது - காப்பாளர் பதவி கிட்டி விட்டது - இனி நமது வாதிடும் திறமையைக் கொண்டு, மேற்பதவிகளைத் தாவிப்பிடிப்போம், என்று எண்ணும் சுயநலமிகளையும், மக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி இடம் பிடித்துக்கொண்டு, காரியமானதும், மக்களை ஏறெடுத்தும் பார்க்காத எத்தர்களையும். மக்களை வாழ்த்தி வணங்கி, வாக்கு பெற்றுக்கொண்டு, வரம் கிடைத்தான பிறகு, வரண்ட தலையரின் தயவு நமக்கு ஏன் என்று இறுமாந்து மக்களுக்கு அறிவுரை கூறுவதாக நடித்து அவர்களின் தன்மானத்தைத் தகர்க்கும் தருக்கர்களையும், மக்களின் ’காப்பாளர் ' என்ற கெண்டையை வீசி, இலஞ்ச இலாவணம், சீமான்களின் நேசம் ஆகிய வரால்களைப் பிடிக்கும் வன்னெஞ்சர்களையும், எதிரிகளுடன் குலவும் துரோகிகளையும், பார்த்துப் பார்த்து வாடிய நெஞ்சினர் மக்கள் - அவர்கள் முன், ஏழைக்காக அல்லும் பகலும் ஆர்வத்துடன் உழைக்கும் கெயஸ் கிரேக்கஸ் உலவிய போது மக்கள் நமது வாழ்வின் விளக்கு இந்த வீரன் என்று வாழ்த்தாதிருக்க முடியுமா? மீண்டும் கெயசைக் காப்பாளராகத் தேர்ந்தெடுத்தனர். வலிய இந்த 'இடம்’ தந்தனர். செல்வாக்கு இந்த அளவு செல்லக் கண்டவர்கள் கத்தி தீட்டலாயினர்!
இனிக்க இனிக்கப் பேசுகிறான் - இதைச் செய்கிறேன் அதைச் சாதிக்கிறேன் என்று தேன் சிந்துகிறான் - மக்களின் உரிமை பற்றி முழக்கமிடுகிறான் - எனவே மக்கள். அவனைப் பின்பற்றுகிறார்கள். இதைக் குலைக்க இவனைவிடத் தீவிரமாகப் பேசும் ஆளைத் தயாரிக்க வேண்டும். இவன் குளம் வெட்டுவேன் என்றால், அவன் கடல் தோண்டுவேன் என்றுரைக்க வேண்டும்! இவன் பூமாலை தருகிறேன் என்றுரைத்தால், அவன் பூந்தோட்டமே தருகிறேன் என்று பேச வேண்டும் ! இவ்விதம் ஒருவனைக் கிளப்பிவிட்டால், ஏமாளிகள் தானே மக்கள், இவனை விட்டுவிடுவர். புதியவனைப் போற்றத் தொடங்குவர். இவன் செல்வாக்கு சரியும்; புதியவனோ நடிகன், நம் சொல் தாண்ட மாட்டான், பார்த்துக் கொள்வோம், என்று ஒரு தந்திரத் திட்டம் வகுத்தனர்.. தன்னலக்காரர் இந்தப் பாகத்தைத் திறம்பட ஏற்று நடத்த ட்ரூசஸ் என்பான் முன் வந்தான். அவனுக்கும். செனட் சபைச் சீமான்களுக்கும் ஒப்பந்தம் ஊர் அறியாது இரகசியத்தை.
ரோம் நாடு, வெற்றி பெற்று தனதாக்கிக் கொண்ட நாடுகளிலே ஏழையர்கள் சென்று குடி ஏற இரண்டு வட்டாரங்கள் அமைப்பது என்று கெயஸ் கிரேக்கஸ் திட்டம் கூறினான்.
”இரண்டே இரண்டுதானா! பன்னிரண்டு வேண்டும்!" என்றான் நடிப்புத் தீவிரவாதி ட்ரூசஸ்.
ஏழைகள் பெறும் நிலத்துக்காக, அவர்கள் சிறுதொகை வரி செலுத்தவேண்டும் என்றான் கெயஸ்.
"வரியா? ஏழைகளா? கூடாது. கூடாது! ஏழைகளுக்கு இனாமாகவே நிலம் தரவேண்டும்" என்றான் ட்ரூசஸ்.
கெயஸ் கிரேக்கசைவிட புரட்சிகரமான திட்டங்களைத் தன்னால் புகுத்த முடியும் என்று வீம்பு பேசித்திரியலானான். கெயஸ், செனட் சபையின் விரோதத்தைக் கிளறி விட்டு விட்டான். எனவே ’அவன் கூறும் திட்டங்களை சென்ட் ஏற்காது - என் நிலையோ அவ்விதமல்ல. என் திட்டங்களைச் செனட்சபையும் ஏற்றுக் கொள்ளும்’, என்று வேறு பசப்பினான்.
மக்கள் மனதிலே. குழப்பத்தை மூட்ட இந்தப் போக்கு ஒரளவுக்குப் பயன்பட்டது.
கெயஸ் கிரேக்கஸ், மக்களுக்காக நிறைவேற்றப்படும் எந்தப் பொதுப் பணியையும் தானே முன்னின்று நடத்தி வந்தான். மக்களும் அவனது தொண்டின் மேன்மையைப் பாராட்டினார்கள் - இதையே கூட ட்ரூசஸ் திரித்துக் கூறினான் - கெயஸ் கிரேக்கஸ் எதேச்சாதிகாரி. ஒருவரையும் நம்பமாட்டான், எல்லாம் தனக்குத் தான் தெரியும், தன்னால் தான் சாதிக்க முடியும் என்ற அகம்பாவம் கொண்டவன், ஒருவரையும் ஒழுங்காக வேலை செய்ய விடமாட்டான். எல்லாவற்றிலும் தலையிடுவான். தற்பெருமைக்காரன். எல்லா அதிகாரமும் தன்னிடமே வந்து குவிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் என்று தூற்றித் திரிந்தான்.
ஆப்பிரிக்காவிலே ஒரு புது மண்டிலம் அமைக்கும் பணியாற்ற கெயஸ் கிரேக்கஸ் அங்கு சென்றிருந்த சமயத்தில், ட்ரூசஸ், வேகமாக இந்த விபரீதப் பிரசாரத்கை நடத்தி வந்தான். எதிர்ப்பு முளைக்கும் வண்ணம் வதந்திகளைக் கிளப்பிக் கொண்டிருந்தான்.
கெயஸ், ரோம் நகரில் இல்லை. இவனது தவறான பேச்சுகளை மறுத்துரைக்க. எனவே, ட்ரூசஸ் சண்டப் பிரசண்டனானான். புல்வியஸ் எனும் நண்பன், கெயசின் ஏற்பாட்டின்படி, செல்வர்களின் நிலங்களை அளவெடுத்து ஏழைகளுக்காக்கும் காரியத்தைச் செய்து வந்தான். அவன் மீது பழி சுமத்தி, வழக்குத் தொடுத்தான் வஞ்சக ட்ரூசஸ்.
இரண்டு திங்களுக்குப் பிறகு ஊர் திரும்பிய கெயஸ் தன்னை வீழ்த்த வெட்டப்பட்டிருக்கும் நச்சுப் பொய்கையைக் கண்டான்; மக்களை அழைத்தான். தன் புதுத் திட்டங்களுக்கு ஒப்பம் அளிப்பதற்காக, ரோம் நகருக்கு வெளியே இருந்தும் ஏராளமான மக்கள் வந்தனர்; செனட் அவர்களை உடனே சென்று விடுமாறு கட்டளையிட்டது. அதை கவனிக்க வேண்டாம், நானிருக்கிறேன் அஞ்சாதீர்கள், என்று கூறினான் கெயஸ், ஆனால் செனட் சபை, காலிகளை ஏவி. வெளியூர்க்காரர்களைத் தாக்கித் துரத்திற்று.
கெயஸ் கிரேக்கசின் ஆற்றல் இவ்வளவுதான்! என்று கைகொட்டிச் சிரித்து, கலகமூட்டும் பேர்வழிகள். மக்கள் மனதைக் கலைத்தனர். செல்வர்கள். கெயஸ் மீண்டும் ’காப்பாளர்' பதவிபெற முடியாதபடி, தில்லுமல்லுச் செய்தனர் ; வென்றனர்.
ஆப்டிமஸ் என்பான், கான்சல் பதவியில் அமர்ந்தான் - அவன் சீமான்களின் நண்பன், எனவே, அவன் கெயஸ் கிரேக்கஸ் புகுத்திய சட்டங்களை ரத்து செய்ய முனைந்தான்.
அரும்பாடுபட்டுக் கட்டிய அறநெறியை அக்ரமக்காரன் அழிக்கக் கிளம்பினான். அதனைத் தடுத்திடும் 'காப்பாளர்' இல்லை, இரவு பகலாகச் சிந்தித்துச் சிந்தித்துச் சித்தரித்த ஓவியத்தை அழிக்கிறான். ஏழையரின் எதிர்காலத்தைச் சிதைக்கிறான். புரட்சியில் பூத்த மலரைக் கசக்கிப் போடுகிறான். தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லை. கெயஸ் 'காப்பாளர்' பதவியில் இல்லை. எனினும், கெயஸ், இதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடும்படி மக்களிடம் கூறினான்: பலம் திரண்டு வந்தது. ஆத்திரமுற்ற மக்கள், அக்ரமம் புரியத் துணிந்த கான்சலின் பணியாள் ஒருவன் பதட்டமாக நடந்து கொண்டதற்காக, அவனைக் கொன்றுவிட்டனர். கெயஸ் இதைக் கண்டித்தான்.
செல்வர். இறந்தவனைக் காட்டி ஓலமிட்டனர் ஐயகோ! அக்ரமத்தைக் காணீர்! படுகொலை புரிந்துவிட்டனர், ஊழியனை ! என்று முகத்திலறைந்து கொண்டு அழுதனர்.
சந்தைச் சதுக்கத்திலே இந்த விந்தைக் காட்சி! எந்தச சந்தைச் கதுக்கத்திலே டைபீரியசைத் தாக்கிச் சாகடித்த னரோ, நூற்றுக்கணக்கான ஏழை எளியவரைக் கொன்று ருவித்தனரோ, எந்த இடத்தில் மனித மிருகங்கள் உத்தமர்களைப் பிய்த்து எறிந்தனவோ, அதே இடத்தில் இந்த மாய்மாலம் !!
அரசுக்குப் பேராபத்து வந்து விட்டது - இனிக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் - என்று கிளம்பினர் செல்வர்கள், படைக்குக் குறைவு என்ன. பணம் இருக்கும் போது செல்வர்கள் தங்கள் முழு வசதியையும் பயன்படுத்தினர். கெயஸ் கிரேக்கஸ் பலிபீடம் செல்ல வேண்டியவனாகி விட்டான். ஏழையர் அவன் பக்கம் தான் நின்றனர். எனினும் களத்தில் வென்றார்கள் கடும் போரிட்டுப் பயிற்சி பெற்றவர்கள், இரத்தத்தை உறிஞ்சிப் பழக்கப்பட்டவர்கள், ஈரமற்ற நெஞ்சினர், சுகபோகத்தை இழக்கக்கூடாது என்ற எண்ணத்தால் வெறியரானவர்கள். கெயசுக்கு எதிராகக் கிளம்பினர். அரசு அவனுக்கு எதிராக அவன் படைவரிசையிலேயோ. உழைத்து அலுத்த உத்தமர்கள்! ரோம் நகரச் சீமான்களின் முகாமில், குடி, கொண்டாட்டம். வெறிச் செயல்கள். கெயஸ் முகாமில், உறுதி வசதிக் குறைவு.
கெயஸ் கிரேக்கசைச் சுற்றிலும் தீயாலான வளையம் - தப்புவது இயலாத காரியம் என்றாகிவிட்டது நிலைமை.
கெயஸ் கலங்கவில்லை! அண்ணனை அடித்து ஒழித்த அதே ’வெறி' தன்னைப் பலிகொள்ள வருவதை உணர்ந்தான் - இது பலி தரும் நாட்கள் - வெற்றிக்கு அச்சாரம்!
என்று எண்ணிக்கொண்டான்.
எவ்வளவு வேண்டுமானாலும் முழக்கமிடுவார்கள் : ஆனால் உயிருக்கு உலைவருகிறது என்று தெரிந்தால் அடங்கி விடுவர்; இதுதான். இந்த ஏழைக்காகக் கிளம்பும் வீரர்கள் இயல்பு, என்று கனவான்கள் கேலி செய்ய விடுவானா டைபீரியசின் இளவல்!
சிறு உடைவாளை எடுத்துச் செருகிக்கொண்டான்; சந்தைச் சதுக்கம் கிளம்பினான்.
கெயசின் துணைவி, நிலைமையை அறிந்தாள்; பதறினாள்.
”ஆருயிரே ! செல்ல வேண்டாம்! படுகொலை செய்யும் பாதகர்கள் உள்ள இடத்துக்குப் போகாதீர் ! பழிபாவத்துக்கு அஞ்சாதவர்கள் அவர்கள் ! இன்னுயிரே ! களமல்ல. நீர் செல்லும் இடம். களத்திலே வீரம் இருக்கும், வஞ்சகம் இராது. ஆற்றலைக் காட்டலாம். வெல்ல வழி உண்டு. இல்லையேல், வீரமரணம் கிட்டும். ஆனால், வெறியர்கள் எந்த வஞ்சகமும் செய்யக் கூசாதவர்கள் கூடிக் கொக்கரிக்கும் இடம், இப்போது நீர் போக விரும்பும் சந்தைச் சதுக்கம். அன்பே ! அங்கு சென்றால், உம்மைப் படுகொலை செய்துவிடுவர் - உடலை கூடத் தரமாட்டார்கள். ஆற்றிலல்லவா அண்ணன் உடலை வீசினார்கள். வேண்டாம். போகாதீர்!" என்று துணைவி கரைந்துருகிக் கதறுகிறாள்; மகன் அழுது கொண்டு நிற்கிறான்.
கெயஸ் என்ன பதில் கூற முடியும்? துணைவி கூறுவது அவ்வளவும் உண்மை; மறுக்க முடியாது. ஆனால், போகாமலிருக்க முடியுமா? உயிரா பெரிது? விழிப்புணர்ச்சி அளித்து விட்டோம். இன்று இல்லாவிட்டால் மற்றோர் நாள். வெற்றி ஏழையருக்குக் கிடைத்தே தீரும். என்னைக் கொல்வர்; எனினும், நான் உயிருடன் இருந்தபோது செய்த தொண்டுக்குச் சிகரமாக அல்லவா அந்தச் சாவு அமையும். ஏழைக்காகப் பரிந்து பேசமட்டுமல்ல, சாகவும் தயாராகச் சிலர் முன்வந்து விட்டனர் என்பது உறுதிப்படுத்தப் பட்டால் தான். விடுதலை கிடைக்கும் மக்களுக்கு - என்று எண்ணினான். துணைவியின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். தரையில் புரண்டழுகிறாள் துணைவி; தளிர் வாடுகிறது. தன்னலமற்றோன். மரணத்தை நாடிச் செல்கிறான்.
அமளி! வெறியாட்டம் ! படுகொலை! பயங்கர நிலைமை !
செல்வர் கரமே ஓங்குகிறது : கொல்லப்படுகிறார்கள் கொடுமையை எதிர்த்தோர்.
நிலைமை கட்டுக்கு அடங்குவதாக இல்லை, கெயல் கிரேக்கஸ், இரத்த வெள்ளம் பெருகக் கண்டான்.
நியாயத்தைப் பெற, இவ்வளவு கடுமையான விலையா என்று எண்ணி வாடினான்.
கயவர் கரத்தால் மாள்வதைவிட, தற்கொலை செய்து கொள்ளலாம் என்று துணிகிறான். நண்பர் சிலர் தடுக்கிறார்கள். இந்தப் பொல்லாத புயல் வீசுமட்டும் வேறோர் புகலிடம் தேடிக்கொள்வது நல்லது : புயலின் வேகம் தணிந்ததும், திருப்பித் தாக்குவது பயன் தரும் என்று கூறினார். கெயஸ் அமளி நடைபெறும் இடத்தைவிட்டு அகன்றான்.
வழிநெடுக அவனை வாழ்த்துகிறார்கள். "நல்லோபோ! இந்த நாசச் சுழலில் சிக்காதே! புகலிடம் செல். பதுங்கிக் கொள். காரிருள் நீங்கும். கதிரவன் என வெளிவருவாய் பிறகு " என்று கூறினர்.
கெயஸ் கிரேக்கசுக்கு, அவர்களின் அன்புகனிந்த சொல் மகிழ்வூட்டிற்று. எனினும், நிலைமையும் தெளிவாகப் புரிந்து விட்டது. செல்வர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்; புரட்சியைப் பொசுக்கித் தள்ளிவிட்டார்கள் ; வஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள். இந்தக் கடும் தாக்குதலுக்குப் பிறகு. ஏழையர் உரிமைப் போர் புரியும் ஆற்றலை மீண்டும் பெறுவ தென்பது இயலாத காரியம். இந்தச் சித்ரவதைக்குப் பிறகு, சீரிய முயற்சி எது எடுத்தாலும், மக்கள் ஆதரிக்க முன்வர மாட்டார்கள் என்று எண்ணினான். துக்கம் நெஞ்சைத் துளைத்தது !
"நண்பா !” என்றழைத்தான் தன் உடன் வந்த பணி யாளனை.
"என்ன ஐயனே!"
"எனக்கோர் உபகாரம் செய்"
"கட்டளையிடும். ஐயனே ! காதகர்மீது பாயவா !"
"வீரம் அல்ல. நண்பனே ! நான் உதவி கேட்கிறேன்."
" மனதைக் குழப்புகிறீரே, ஊழியக்காரன் நான்!"
"என்னைக் கொடியவர்கள் கொல்லச் சம்மதிப்பாயா?"
"உயிர் போகும் வரை அவர்களை அழிப்பேன்! ஒரு சொட்டு இரத்தம் என் உடலில் இருக்கு மட்டும் உமது பக்கம் நின்று போரிடுவேன்!"
"நன்றி! மிக்க நன்றி ! என்னை அக்கொடியவர்கள் கொன்று வெற்றி வெறி அடைய விடக்கூடாது. கடைசியில் கெயஸ் கிரேக்கஸ், எங்கள் கரத்தால் மாண்டான் என்று செருக்குமிக்கோர் பேச இடமளிக்கக் கூடாது. கடைசிவரையில் கெயஸ் கிரேக்கஸ் நம்மிடம் சிக்கவில்லை என்று அவர்கள் கூறவேண்டும் !
"நிச்சயமாக அந்தக் கொடியவர் கரம் தங்கள் மீது பட விடமாட்டேன்."
”அவர்களிடம் நான் சிறைப்படுவதும் கேவலம் இழிவு; என் குடும்பத்துக்குக் களங்கம் : நான் கொண்ட கொள்கைக்குக் கேவலம் ஏற்படும்."
"உண்மைதான் ! அந்த உலுத்தர்களிடம் உத்தமராகிய தாங்கள் சிறைப்படுவது கூடவே கூடாது!"
"ஓடி விடவும் கூடாது! ஓடி விட்டான் எமக்கு அஞ்சி, கோழை! என்று தூற்றுவர். சகிக்க முடியாத அவமானம். என் தாய்க்கு நான் துரோகம் செய்தவனாவேன். மாண்டு போன என் அண்ணன் மீது ஆணை. நான் அத்தகைய இழிவைத் தேடிக்கொள்ள மாட்டேன். ஓடக் கூடாது."
”ஆமாம்! கோழை என்ற ஏச்சு கூடாது !"
"அப்படியானால், நண்பனே ! எண்ணிப் பார் ! பணிதல் கூடாது. ஓடி. ஒளிவது கேவலம், அவர்களால் கொல்லப் படுவதும் இழிவு......!"
"ஆமாம்......!"
"ஆகையால், நண்பனே ! உன் கரத்தால் என்னைக் கொன்றுவிடு! ”
"ஐயோ! நான் கொல்வதா ! தங்கள் பொருட்டுச் சாக வேண்டிய நான், தங்களைக் கொல்வதா"
”இழிகுணம் படைத்த செல்வர் என்னைக் கொல்வது சரியா, நண்பா ! அவர்களிடம் என்னை ஒப்படைக்கலாமா? நண்பன் செய்யும் செயலா? வெட்டுண்ட என் சிரம் அந்த செருக்கர் காலடியில் கிடப்பதா? எனக்கு நீ செய்யும் - சேவை இதுவா? விசாரப்படாதே : நான். இறுதிவரையில் வீரனாகவே இருக்கவேண்டும்; என் எதிரிகளிடம் காட்டிக் கொடுக்காதே. எடு வாளை ! வீசு ! நான் சாகவேண்டும். அவர்களால் சாகாமலிருக்க !
" இதென்ன கொடுமை!"
”வீரன் தேடும் விடுதலை இது. யோசிக்காதே - எடு வாளை."
" தங்களைக் கொன்ற மாபாவியாகி நான் வாழ்வதா? நான் இறந்து படுகிறேன்."
”நீயும் வீரன். சந்தேகமில்லை. இருவரும் மரணத்தைத் தேடிக்கொள்வோம். எத்தரிடம் சிக்கமாட்டோம். உனக்கு நான், எனக்கு நீ ! எடு, வீசு ! நானும் வீசுகிறேன் ! எடுத்தேன் வாளை!"
வீரன் கெயஸ் கிரேக்கஸ், தன் உடன்வந்த பணியாள் பிலோகிராடிசுக்கு நிலைமையை விளக்கினான். உறுதியை வெளியிட்டான்.
பிலோகிராடிஸ், கெயசைக் குத்திக் கொன்றுவிட்டு தானும் குத்திக்கொண்டு இறந்தான்.
டைபீரியஸ் - கெயஸ் - இரு சகோதரர்கள். இணையில்லா இடம் பெற்றுவிட்டனர் மக்கள் உள்ளத்தில்.
மலைப்பாம்பிடம் சிக்கி, சிக்கிய நிலையிலேயே அதன் வலிவைப் போக்கவாவது முயற்சிப்போம் என்று துணிந்து போராடி, அந்த முயற்சியிலேயே உயிரிழந்த பரிதாபம் போன்றது இரு சகோதரர்களின் கதை.
சீறிவரும் செல்வர்களை எதிர்த்து நின்று தாக்கினர். கொல்லப்பட்டனர். எனினும், அந்த முயற்சியின் போது பூத்த வீரமும், தியாகமும், விழிப்புணர்ச்சியும், மன எழுச்சியும். ஏழையரை வாழ்விக்கத் தயாரிக்கப்பட்ட மாமருந்து ஆயிற்று. பெரு நெருப்பில் சிக்கிய சிறு குழந்தையைக் காப்பாற்ற, தீச்சுழலுக்கு இடையே புகுந்து. உடல் கருகி வெந்து சாம்பலாகும் வீரம் போல், இரு சகோதரர்கள் அறப்போர் நடாத்தினர். அவர்களை அழித்தனர் அக்ரமக்காரர் எனினும், அக்ரமத்தை எதிர்க்கும் பண்பு அழிந்துபட வில்லை - வளர்ந்தது.
இரண்டு மாணிக்கங்களையும் இழந்த மூதாட்டி கர்னீலியா, தன் துக்கத்தைத் தாங்கிக்கொண்டு. வீரர் இருவர் வாழ்ந்தனர். வீழ்ந்து படும் வரையில் கொள்கைக்காக உழைத்தனர் என் மக்கள் அவர்கள் என்று பெருமிதத்துடன் கூறி வந்த காட்சி கண்டு ஆறுதல் கூறவந்தோர்களே. அதிசயப்பட்டனர் ! அம்மையின் வீர உள்ளம். அவ்விதம் அமைந்திருந்தது.
கொடுமைக்கு ஆளான அந்தத் தூயவர்களை எண்ணி எண்ணி, மக்கள் கசிந்துருகினர்.
கிரேக்கஸ் சகோதரர்களுக்கும் அன்னை கர்னீலியாவுக்கும், உருவச் சிலைகள் அமைத்தனர் : வீர வணக்கம் செலுத்தினர்.
ரோம் நாட்டு வரலாற்று ஏட்டிலே மட்டுமின்றி உலக வரலாற்று ஏட்டிலேயே, உன்னதமான இடம் பெறத்தக்க பெருந் தொண்டாற்றி, தியாகிகளான, இரு சகோதரர்களின் காதை. இல்லாமையை ஓட்டி பேதமற்ற சமுதாயத்தைச் சமைக்கும் பெருமுயற்சி வெற்றிபெறப் பாடுபடுவர்களுக் நகல்லாம். உணர்ச்சி அளிக்கும் காதையாகும்.
--------
3. உலக ஒளி
வேலை மாநகர் ஆட்சி மன்றத்தார். மணி மண்டபத்தில் விளங்கும் உத்தமரின் சிலையைத் திறக்கும் பணியினை எனக்களித்தார்கள். இது பற்றிக் குறிப்பிட்ட மன்றத் தலைவர் வேலூர் வரலாற்றிலேயே இன்று ஓர் பொன்னாள் எனக் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரையிலேயே என்னுடைய வாழ்க்கையில் - ஏன் - தமிழ் நாட்டின் அரசியலில் ஒரு முக்கியமான கட்டம் என்று கூறுவேன். காந்தியாரின் உருவச் சிலையை நான் திறக்கிறேன் - இந்தச் செய்தியால், அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியை, நாடு அறியும்.
எனக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு - என்னைப் பொறுத்தவரையில் - முதல் முறையல்ல; இரண்டாவது தடவை. இதற்கு முன்னரே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இடைப்பாடியிலே, ராஜாஜி பூங்காவிலேயுள்ள காந்தியாரின் சிலையை, நான் திறந்து வைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன் : ஆனால், அங்குள்ள காங்கிரஸ் நண்பர்கள், இங்கு போல் கிலேசம் அடையவில்லை : பீதியடை வில்லை : "இவனாவது, திறப்பதாவது!' என்று கூற வில்லை.
காந்தியாரின் உருவச் சிலையை நான் திறக்கிறேன் - நான் திறக்க வேண்டும் என்று நகராட்சி மன்ற நண்பர்கள் பெரிதும் விரும்பி யிருக்கிறார்கள். காரணம் என்ன? காந்தியாரின் சிலையைத் திறக்க நான் மட்டுமே தகுதியுள்ளவன் என்பதாலா? அல்ல! அல்ல! என்னை விடத் தகுதியுள்ளவர்கள் ஏராளம் இருக்கிறார்கள் : ஆனால், நான் வந்து திறக்க வேண்டும் என்று நண்பர்கள் விரும்பியதற்குக் காரணம். மற்றவர்கள் எவ்வளவோ திறப்பு விழாக்களைச் செய்கிறார்கள் - அதோடு. இதுவும் பத்தோடு பதினொன்றாகப் போய்விடும் - ஆகவே, இவனையும் இது போன்ற காரியத்துக்குத் தகுதியுடையவ-னாக்குவோம் என்ற நல்லெண்ணமாகவே இருக்கும் எனக் கருதுகிறேன்.
எனக்குப் பதில் இந்நாட்டு முதலமைச்சர் காந்தியாரின் சிலையைத் திறந்திருக்கலாம். ஆனால், அது. அவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்காது. அவர் அடிக்கடி திறந்து வைக்கும் பல சின்னங்களிலே. இதுவும் ஒன்றாகப் போயிருக்கும். அதனாலேயே, என்னை காந்தியாரின் முகாமிலே இல்லாதவனும் - அவரது திட்டங்களில் சிலவற்றை ஏற்று. சிலவற்றைக் கண்டித்தவனும் - ஆகிய என்னை இந்தப் பணியை நடத்தச் சொல்லி யிருக்கிறார்கள். இதைக் கண்டு, எனதருமைக் காங்கிரஸ் நண்பர்கள் கலக்கமா அடைவது?
மாற்றான் தோட்டத்து மல்லிகை யென்பதால், அதன் மணத்தை ரசிக்கிறானா. அல்லது ரசிக்க மறுக்கிறானா எனப் பார்த்திருக்கலாம்! என்னைப் பொறுத்த வரையில், மல்லிகை மாற்றாரிட மிருப்பதால், அதற்கு மணமிருக்காது என்று உரைப்பவனல்ல. அதனால் தான். நண்பர்கள் வந்து என்னை அழைத்ததும். ஒப்புக் கொண்டேன்.
அவர்கள் அழைத்த நேரத்தில், நகராட்சி மன்றத்தினர் மெஜாரிடி முடிவோடு, என்னை அழைக்கத் தீர்மானித் திருப்பதாகவும் - ஒரு முறைக்கு இரண்டு முறை - தீர்மானம் நிறைவேற்றி யிருப்பதாகவும் குறிப்பிட்டனர். ஆகவே நான் இசைந்தேன்.
இந்தச் சிலைத் திறப்பு விழாவுக்கு உள்ளூர் காங்கிரஸ் கமிட்டியினரும் கடைசி நேரத்தில் கூடி, இந்த விழாவில் ஒத்துழைக்க வேண்டுமெனத் தீர்மானம் செய்தார்களாம். இந்தப் பெருந்தன்மைக்கு என்னுடைய நன்றியைக் கூறிக் கொள்ளுகிறேன்.
ஏன், இவர்களுக்கெல்லாம் நன்றி கூறுகிறேன் என்றால் - இது போன்ற பெருந்தன்மை. அரசியல் வாழ்வில் நிலவவேண்டும் என்ற ஆசை கொண்டவன் நான். அதற்கு உதாரணம் போல், நாம் எல்லாம் நடந்து கொள்ள வேண்டும்.
"உத்தமர் காந்தியாரிடத்தில், எனக்கு மதிப்பு உண்டா?” இவ்விதம் சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்குச் சொல்வேன் - மதிப்பு காட்டுவது என்பது இருவகைப்படும். எதிரில் வாயாரப் புகழ்ந்து விட்டு, தலைமறைந்ததும் மாறாகப் பேசுவது ஒரு வகை ! பழகா விட்டாலும், கூடாரத்தி லில்லாவிட்டாலும். பிறரின் பணியினை தனித்திருக்கிற நேரத்தில் எண்ணி எண்ணி, மகிழ்வது இரண்டாவது வகை.
நான் இரண்டாவது வகையைக் சேர்ந்தவன். நம்முடைய உலக உத்தமர் உயிரோடிருந்த நாட்களில் -- பிடிக்காதவைகளைக் கண்டித்த போதும் - எனக்கேற்ற எண்ணங்களைப் பாராட்டிய போதும். அவருக்குள்ள சிறப்பை நான் எண்ணாம லிருந்ததில்லை.
மாற்றார் காந்தியாரைப் பற்றி எண்ணு மளவுக்கு அவருடைய தொண்டு இருந்ததால் தான் அவர் உலகத்தின் ஒளியானார் ! காந்தியாரின் புகழை காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல - எல்லோரும் புகழ்கிறார்கள் : உலக மக்களெல்லாம் போற்றுகிறார்கள். அவ்விதம் பிறர் போற்றுவதுதான் ஒரு தலைவருக்குக் கிடைக்கும், தனி மரியாதை யாகும்.
இதனை, காங்கிரஸ் நண்பர்கள் எண்ணியிருந்தால். என்னை உள்ளன்போடு வரவேற்றிருக்க வேண்டும். மாற்றுக் கட்சிக்காரனான நான், திறந்து வைப்பதைக் குறித்துப் பெருமை யடைந்திருக்க வேண்டும். 'அருளொழுகும் கண்ணைப்பார் ! அழகு மேனியைப்பார் ! ஒளிதவழும் முகத்தைப் பார் ! உத்தமரைப்பார்’ - என்று என்னை அழைத்துச் சொல்லி யிருக்கவேண்டும். இவ்விதம் செய்திருந்தால், தங்களுக்கும் கீர்த்தி தேடிக் கொண்டவர்களாவார்கள்; உத்தமருக்கும் கீர்த்தி தேடிக் கொடுத்தவர்களாவார்கள். அதை விட்டு விட்டு எம்முடைய காந்தியாரைத் தீண்டவே கூடாது என்று சொல்வது. பொருத்தமில்லை - பொருளில்லை - கீர்த்தி இல்லை - சிறப்பு இல்லை.
உத்தமர் காந்தியார் வெறிகொண்ட ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்னும் செய்தியை ரேடியோ மூலமாகக் கேள்விப் பட்டேன் - பதறினேன். அப்போது என்னை வானொலி நிலையத்தார் அழைத்தார்கள். காந்தியடிகளைக் கொன்றவன் மராட்டிய பார்ப்பனான கோட்சே என்பவன். அதனால் மக்களின் ஆத்திர வெறி, அக்குலத்தார்மீது பாய்ந்து விடுமோ என்று அஞ்சிய காரணத்தால் என்னை அழைத்துப் பேசச் சொன்னார்கள்.
கயவனா யிருந்தால், கட்சி வெறி கொண்டவனா யிருந்தால், அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் விபரீதங்கள் பல ஏற்படுவதைக் கண்டிருக்க முடியும். அப்படிப்பட்ட விபரீதங்களைக் கண்டு கை கொட்டும் கருத்துற்றவனல்ல நான்.
'உத்தமரை. ஒருவனின் வெறி கொன்று விட்டது. அதற்குப் பார்ப்பன மக்கள் மீது பழி சுமத்தக் கூடாது’ என்று எடுத்துரைத்தேன். உத்தமரின் சேவைகளை எடுத்துரைத்தேன். அந்த நேரத்தில் எந்தக் காங்கிரஸ்காரருக்கும் ஏற்படாத அதிர்ச்சி இப்போதேன் ஏற்பட வேண்டும்?
அந்த நிகழ்ச்சி முடிந்த சின்னாட்களுக்கெல்லாம், காங்கிரஸ் தேசீயக் கவியான நாமக்கல் கவிஞரை ஒரிடத்தில் நான் சந்திக்க நேர்ந்தது. அப்போது. அவர் என்னைப் பாராட்டினார் - காந்தியடிகளின் அருமை பெருமைகளைப் பலர் உரைக்கக் கேட்டிருக்கிறேன்; ஆனால், ரேடியோவில் தாங்கள் எடுத்துச் சொன்னதைக் கேட்டபோது. நான் மனம் குளிர்ந்தேன்; யாரும் அப்படிச் சொல்லிய தில்லை என்று தன்னுடைய பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டார்.
என்னுடைய சொந்த விஷயங்களை எடுத்துக் கூறுவது எனது வழக்கமல்ல; ஆனாலும், இதனை இங்குள்ள தேசீய நண்பர்களுக்காகக் குறிப்பிட விரும்புகிறேன். எனவே. என்னைப் போன்றவன் - காந்தியாரின் அடிப்படை ஆசைகளையும், அவைகளைச் சாதிக்க அவர் ஆற்றிய அரும் பணியினையும் கண்டு அகமகிழ்ந்தவன் - இந்தச் சிலையைத் திறந்து வைப்பதில், பொருத்த முடையதாகாது என்று யார் கூற முடியும்?
நான் என்ன, நாள் முழுதும் காங்கிரசைத் தூற்றிக் கொண்டிருந்து விட்டு, தேர்தல் காலத்தில் காங்கிரசிலே நுழைந்து கொண்டு வேட்டையாடியவனா! காங்கிரஸ் போர்வையை போட்டுக் கொண்டு அதிகார வேட்டை பாடியவனா! இந்தக் கரம் வெள்ளையனோடு கை குலுக்கிய கரமா ! வகுப்புவாதத்தை வளர்த்து, வெறிச் செயல் ஏற்பட பாடுபட்ட கரமா ! பள்ளி வாழ்வு முடிந்ததும், உத்தியோகத்துக்குச் செல்லாது. ஊருக்காக உழைக்கும் கரம் ! பொது வாழ்வுக்காகப் பாடுபடும் கரம்! இந்தக் கரம் தவிர, வேறு எந்தக் கரம்.
சிலையைத் திறப்பது பொருத்தமாகும்?
காந்தியார், காங்கிரசைக் கட்டிக் காத்தார் - வளர்த்தார் - நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தார். காங்கிரசில் நாலணா மெம்பராகக்கூட அவர் இருந்ததில்லை. பலகாலம்! தான் விரும்பிய விடுதலை கிடைத்துவிட்ட தென்றதும். "காங்கிரஸ் தேவையில்லை – கலைக்கலாம்” என்றும் சொன்னார். "காங்கிரஸ் லாப வேட்டைக்காரர்களின் கூடமாகி விட்டது" என்று கூறி மனமும் நொந்தார்.
நான், காந்தியார் பெயரைச் சொல்லி லாபம் பெறாதவன் ! அவர்களால் அழுத்தி வைக்கப்பட்டிருப்பவன். அவர் வளர்த்த காங்கிரசின் நிலை என்ன இப்பொழுது? பழைய கோட்டையில் வெளவாலும், புற்றுக்குள் பாம்பும் இருப்பது போல, காங்கிரசுக்குள் கயவர்களும், சுயநல வாதிகளும் இருப்பதாக அவர் கூறினார். அவர் எங்கே? இன்று இருப்போர் எங்கே? அந்த ஒளி எங்கே? இந்த இருள் எங்கே !
இந்தச் சிலை திறப்பு விழாவை, என்னைக் கொண்டு செய்யவேண்டு மென்பதில், இங்கிருக்கும் கம்யூனிஸ்டுத் தோழர்களும் விரும்பி ஒத்துழைத்ததாக அறிந்தேன். அந்த
நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி.
இவ்வண்ணம் மாற்றுக் கட்சியாருடன் மனமொத்துப் போவதுதான் அரசியல் நாகரீகம். எனது தலைவர் பெரியாரும், முதலமைச்சர் ஆசாரியாரும் நபிகள் நாயகத்தின் திரு நாளில், ஒரே இடத்தில் சந்தித்தார்கள். அது அரசியல் நாகரீகம்.
இன்று நான் காந்தியாரின் சிலையைத் திறக்கிறேன் ! இது ஓர் புனிதமான நாள் எனக் கூறுவேன். இந்தச் சிலையைத் திறக்கும் விஷயத்தில் கட்சிப் பாகுபாடு கட்சி வெறி இல்லாது. எல்லா அரசியல் கட்சிகளும் ஒத்துழைத் திருக்க வேண்டும் - அதுதான் அரசியல் நாகரீகம்.
அப்படியின்றி, அரசியல் அமளியிலீடுபட்டால் இந்த உபகண்டத்தின் பிதாவுக்கு கீர்த்தி தேடியவர்களாக மாட்டோம்.
எனக்கும் காங்கிரசுக்கும் பலமான கருத்து வேற்றுமைகள் உண்டு. அதே போல, கருத்து ஒற்றுமைகளும் உண்டு. காங்கிரசுக்கு மட்டுமல்ல - மற்றக் கட்சிகளுக்கும் எனக்கு மிடையே, கருத்து வேற்றுமைகளும் உண்டு, ஒற்றுமைகளும் உண்டு.
நன்றாகச் சிந்தித்தால், விளங்கும் வேற்றுமைகள் கொஞ்சம்; ஒற்றுமைகள் அதிகம். இந்த ஒற்றுமைப் பண்பு வளர். ஒவ்வொரு கட்சியும் அரசியல் அமளியிலீடுபடாமல், ஒத்துழைக்கும் மனோபாவம் ஏற்பட்டு, அரசியல் நாகரீகம் வளர வேண்டும்.
காந்தியார் இறந்த பிறகு கட்டப்பட்டுள்ள சமாதி யிருக்கும் ராஜ கட்டத்துக்கு அமெரிக்க நாட்டுத் தூதுவர் வந்து மல்லிகைச் செண்டுகளை வைத்து வணக்கம் செலுத்துவதையும், பாகிஸ்தான் நாட்டுப் பிரதமர் வந்து மரியாதை செய்வதையும், வேறு பல வெளிநாட்டுக்காரர்கள் வந்து தமது அன்பு வணக்கங்களைச் செலுத்திப் போவதையும் படங்களில் காண்கிறோம். இதன் பொருள் என்ன? வெளிநாட்டுக்காரர்கள் வந்து வணங்குவதன் சூட்சுமம் என்ன? அவர்களை எல்லாம் படம் எடுத்துப் பிரமாதமாக எழுதி. 'பார்! பார் !! அவர்கள் செய்யும் அஞ்சலியை என்று பெருமையோடு வெளியிடு-கின்றோமே. அவர்களெல்லாம் யார்? காங்கிரஸ்காரர்களா? காங்கிரசிலே இருந்தறி யாதவர்கள்! அது மட்டுமல்ல காங்கிரசையே எதிர்த்த வர்கள்! இந்த நாட்டுக்குச் சொந்தமில்லாதவர்கள். வெளி நாட்டினர்!
அவர்களெல்லாம், காந்தியாரின் நினைவுச் சின்னத்தைக் கண்டு. பூரிப்புக் கொள்வதை விட - மரியாதை செய்வதை விட நான் செலுத்தும் அன்பு, எந்த அளவுக்குக் குறைந்தது என்று கூற முடியும்? அவர்களை விட நான் செலுத்தும் மரியாதை, மட்டமாகவா இருக்கும்?
அவர்கள் மரியாதை செலுத்தும்போது அகமகிழும் உங்களுக்கு. அரசியல் ஆவேசமும். ஆத்திரமும் ஏற்பட லாமா! மலர் தூவுகிறான் வெளி நாட்டான். அதைவிட நான் தூவும் மலர் எவ்விதத்தில் கெட்ட காகும்? இந்தப் பொது அறிவு - அரசியல் விளக்கம் - நம்மவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும்.
ஆனால். நாம் நினைப்பது போல, அவ்வளவு சுலபத்தில் இங்கே வந்துவிடாது. ஏனெனில், வருடத்துக்கு ஒரு தடவை நமக்குள் இன்னும் மன்மதன் எரிந்தானா? எரிய வில்லையா? என்கிற பிரச்னையே தீரவில்லையே ! மன்மதனைக் கண்டவர்கள் யாரும் கிடையாது - சண்டையோ, ஓயாமல் நடக்கிறது ! இதைப்போல எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?
சுதந்திரம் கிடைத்த பின், உத்தமர் காந்தியடிகளே சொன்னார் - சுதந்திரத்தில் ஒரு கட்டத்தைத்தான் தாண்டி யிருக்கிறோம். இந்தச் சுதந்திரம், ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றக் கூடியதாக அமையவேண்டும் என்று.
அவர் வெளியிட்ட அதே கருத்தைத்தான், நானும் கூறுகிறேன் : "களிப்படைய வில்லை, கவலை கொள்ளுகிறேன் " என்றார். அதுதானே, நிலையும்!
சுதந்திரம் காகிதப் பூவாக இல்லாமல், மணமுள்ள பூவாக இருக்க வேண்டுமானால் மாற்றுக் கட்சிகள் யாவும் வந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் சந்தர்ப்பம் அளிக்கப் படவேண்டும்.
யாரைப் பார்த்தாலும், எதைக் கேட்டாலும், சுதந்திரக் குழந்தை ! சுதந்திரக் குழந்தை ! என்கிறார்கள். அந்தக் குழந்தைக்குப் பாலூட்டி விட்டால் மட்டும் போதாது. தாலாட்ட வேண்டும் - சொக்காய் போடவேண்டும் - விளையாட்டு காட்ட வேண்டும் - இது அத்தனையையும் தாயே செய்துவிட முடியாது. மாமன்மார் விளையாட்டுப் பொம்மைகள் வாங்கிவர, தங்கை தாலாட்டுப் பாட, உற்றார் குழந்தை யைத் தூக்கி வைத்துக் கொஞ்ச - இவ்விதம் வளர வேண்டும், அக் குழந்தை !
அப்படியில்லாமல், குழந்தையை ’நான் தானே பெற்றேன் என்று சொல்லி மற்றவர் எவரும் அருகில் வரக் கூடாது என்று பெற்றெடுத்த தாய் சொன்னால்' குழந்தையை எவரும் சீந்தார்! குழந்தையின் அருமை பெருமை யையும் அறியார்! அதுபோலவே, பிறந்த சுதந்திரக் குழந்தையைச் சீராட்டி வளர்க்க எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் சந்தர்ப்பம் வேண்டும். குழந்தைக்கு அடிக்கடி உணவு தந்து - அதிகமாகவும் தந்து - யாரிடமும் அண்ட விடாமல் சில பணக்காரக் குடும்பத்திலே வளர்க்கப்படும் குழந்தை கடைசியில் நோஞ்சானாகி விடும்! டாக்டரிடத்தில் செல்ல நேரிடும் !!
இதையே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் சுதந்திரக் குழந்தையைத் தூக்கி மகிழ. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் சந்தர்ப்பம் தாருங்கள். எங்களிடம் விட்டுப் பாருங்கள் நிச்சயம், கெடுதல் வராது.
அப்படியே கெடுதல் வருவதாகக் கருதுவீர்களே யானால் உங்களுக்குப் பிடித்தமான கிருஷ்ணன் கதையையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கிருஷ்ணனுக்குப் பாலூட்டச் சென்ற பூதகி போல் நாங்கள் என்றால், கிருஷ்ணன் கவனித்துக் கொள்வான் - அந்த நம்பிக்கையாவது இருக்கக் கூடாதா உங்களுக்கு!! அதை விட்டு விட்டு எங்களைக் சண்டால் ஏன் பயப்பட வேண்டும்?
காந்தியாரின் சிலையை நான் திறந்து வைப்பதைக் காணும் நீங்கள், முகத்தையா தொங்கப்போட்டுக் கொள்வது? - 'பார்! எதிர்க் கட்சிக்காரனாகிய அவனே எங்கள் காந்தியின் சிலையைத் திறக்கிறான். எங்கள் காந்திஜியின் பெருமை யல்லவா இது? என்று நீங்கள், மார்பல்லவோ தட்ட வேண்டும்!’
காந்தியாரின் புகழுக்குக் காரணம் குடும்பத்திலே யிருந்தவர்களால் மட்டும் உண்டானதல்ல. வெளியேயிருந்தவர்கள் அவரைக் கண்டு அவருக்கு அஞ்சலி செய்ததால் தான், உலக ஒளியானார் அவர். நான் திறப்பதைக் கண்டு, சந்தோஷமடைய வேண்டும். இந்த மேடையில் எனது நண்பர் காங்கிரஸ் எம். எல் ஏ. தோழர் மாசிலாமணி அவர்களும் இருந்திருந்தால் மிகவும் பெருமையா யிருந்திருக்கும்.
நான் யார்? நீங்கள் யார்? நமக்கு இடையிலிருக்கும் உறவு முறை - முறிகின்ற முறை - இருக்கலாகாது. இதனை எனதருமை காங்கிரஸ் நண்பர்களுக்கு வலியுறுத்திச் சொல்லுவேன், சில பல கருத்து மாறுபாடிருக்கலாம். எனக்கும் உங்களுக்கும் - காந்தியாரின் சில கொள்கைகளை மறுக்கின்ற முகாமில் தானிருக்கிறேன். நான், ஆனால் அதற்காக, நாட்டு விடுதலையை மறக்கவில்லையே ! உத்தமர் வாங்கித் தந்த விடுதலையை மறைத்துக் கூறுபவன் - ஏமாளி !
அவர் விரும்பியது இந்த நாட்டுக்கு சுயராஜ்யம் மட்டு மல்ல; அவர் விரும்பிய சுயராஜ்ய மல்ல இன்று இங்கே இருப்பதும்.
ஏழை - பணக்காரன், கூடாது! மதத்தின் பெயரைச் சொல்லி, ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வது கூடாது மோதலை உண்டாக்கக் கூடாது - ஜாதி ஆணவம் கூடாது. என்றார் அவர்.
அத்தகைய விடுதலை பூமியைக் காண விரும்பினார்! அதனாலேயே ஒருமுறை, அவரைக் கேள்வி கேட்டபோது கேட்டவருக்கு விளக்கினார்.
”வைணவர் என்றால் யார்? நெற்றியிலே திரு நாமமும் நெஞ்சிலே வஞ்சகமும், கழுத்திலே துளசிமாலையும் கருத்திலே கபட எண்ணங்களும் கொண்டவர்களல்ல. உண்மையான உள்ளம் கொண்டவர்கள்," என்று விளக்கினார்.
அவர் அன்றோர் நாள் தென்னாட்டுக்கு வந்திருந்த நேரத்தில், நானும் என்னைச் சார்ந்த இயக்கத்தினரும் ராமாயண ’எரிப்பு' கிளர்ச்சியிலீடுபட்டிருந்தோம். அதை பற்றி அவரிடம் குறிப்பிட்டபோது, உத்தமர் குறிப்பிட்ட வார்த்தைகளை தேசிய நண்பர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் சொன்னார் –
"நான் கூறும் ராமன் வேறு ! ராமாயணத்தில் - வால்மீகியும் கம்பரும் வர்ணிக்கும் ராமன் வேறு! என்னுடைய ராமன் சீதையின் புருடனல்ல : தசரதரின் மகனுமல்ல இராவணனைக் கொன்றவனுமல்ல; அவன் அன்பின் சொரூபம் ! உண்மையின் உருவம்' என்று விளக்கினார்: அப்போது நான், திராவிட நாடு இதழில் தீட்டினேன் - 'எரியிட்டார் ! என் செய்தீர்?'- என்று.
இதுபோல் அவருடைய அடிப்படைக் கொள்கைகளை அலசிப் பார்த்ததால் தான். அவருடைய எண்ணங்களும் எனது இயக்கத்தின் அடிப்படை ஆசைகளுக்கு மிடையே ஒற்றுமைகளிருப்பதைக் கண்டோம், அதனால் தான் காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டதும் எனது இயக்கத் தலைவர் பெரியார் ஒரு அறிக்கை விடுத்தார்.
"இந்த நாட்டின் பெயரை, இந்தியா என்பதற்குப் பதில் காந்தி நாடு” என்றழையுங்கள் – ’இந்து மதம்' என்பதற்குப் பதில் ’காந்தி மதம்' என்று மாற்றுங்கள் - இவ்வண்ணம் செய்தால், ஏற்கத் தயார் !' என்று கூறினார். யார் முன் வந்தார்கள்? இன்றிருக்கும் காங்கிரஸ் தலைவர்களைக் கேட்கிறேன், யார் ஏற்றுக் கொண்டார்கள்?
அதுமட்டுமா? காந்தியார் அடிக்கடி சொன்னார் – ’உண்மையே என் கடவுள்' என்று. இதனை யார் ஏற்றுக் கொண்டார்கள்? இது போல, அவர் கூறிச்சென்ற பல வழிகளை உங்களால், ஜீர்ணிக்க முடியவில்லை. ஆனால், மாற்றுக்கட்சியிலிருக்கும் நாங்கள் ஏற்று பணி செய்து வருகிறோம். அந்த நற்பணியின் பெயரால் மணிமண்டபம் கட்டி, உருவச் சிலையைத் திறந்து வைக்கும் இந்த நேரத்தில். உங்களை நான், கேட்டுக்கொள்வேன் - அவரது பெயரால்'.
அரசியல் நாகரீகத்தை வளர்க்கப் பாடுபடுங்கள்.
ஜாதி பேதம் ஒழியப் போராடுங்கள், இல்லாமைக் கொடுமைகளை யொழிக்க ஒத்துழையுங்கள்.
மத நம்பிக்கையால் விளையும் கேடுகளை ஒழித்துக் கட்ட முன் வாருங்கள் !
----------------
4. பொன் மொழிகள்
நமது குறிக்கோளும் நாம் திரட்டும் வலிவும்!
தேங்காயை தேவாலயத்துக்கு எடுத்துச் சென்று உடைத்து அர்ச்சனை செய்யச் சொல்லி, ஒரு முடியை அர்ச் கருக்குக் கொடுத்து விட்டு, இன்னொரு முடியை வீட்டுக்குக் கொண்டு செல்பவர்களும் உண்டு.
இன்னும் சிலர், வீட்டு விசேடத்தின் போது திருஷ்டி கழிப்பதாகக் கூறி, நடுவீதியில் - சூறைக்காய் உடைப்பது போல - உடைப்பார்கள். அதைப் பொறுக்கச் செல்பவர்களில் சாமர்த்தியம் உள்ளவனுக்கு நல்ல தேங்காய் கிடைக்கும் : மற்றவர்களுக்கு வெறும் ஓடுதான் கிடைக்கும்.
இன்னொரு விதமும் உண்டு - தேங்காயைத் தாய்மார்களிடம் கொடுத்தால், அதை உடைத்துப் பதமாகத் திருகி எந்தப் பண்டத்தில் சேர்த்தால் இனிப்போடு சுவை தரும் என்பதறிந்து பக்குவமாகச் சேர்த்துப் படைப்பார்கள்.
’கட்சிகளும் அப்படித்தான் ; பயன்படுத்துகிற விதத்தை யொட்டித்தான் பலனும் இருக்கும்.'
மூன்றாவது சொன்னேனே. அந்த விதத்தைச் சேர்ந் ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
சில கட்சிகள் தங்களுக்கிருக்கும் செல்வாக்கை சூறைக்காய் உடைக்கிறதைப் போல பயன்படுத்தி வருகின்றன. உடைக்கும்போது சிலருக்கு மண்டைகளும் உடைகின்றன ; சாமர்த்திய முள்ளவனுக்குத் தேங்காய் கிடைக்கிறது; நோஞ்சலாயுள்ளவன் ஓட்டை எடுத்துக் கொண்டு போகிறான்.
திராவிட முன்னேற்றக் கழகம், தன் செல்வாக்கை அவ்வப்பொழுது பலப் பரீட்சை நடத்தாமல், பலாத்காரத்தில் இறங்காமல், ஒருவரோடு இன்னொருவர் மோதிக் கொள்ள உதவாமல் பயன்படுத்த வேண்டும். வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்க்க வலிவைத் திரட்டுவதுதான் நம் வேலையாக இருக்க வேண்டும்,
வலிமையை எந்தப் பெரிய நோக்கத்திற்காகப் பயன் படுத்த வேண்டுமோ அதற்குப் பயன்படுத்த வேண்டும். தி. மு. கழகம் தன் வலிமையைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். சமயம் வரும்போது இதை பயன்படுத்திக் கொள்ளத் தவறமாட்டோம். ஆனால், சூறைக்கா யாகவும் ஆக்கிவிட மாட்டோம்.
தமிழர் என்ற உணர்ச்சியையும், திராவிடம் என்னும் இலட்சியத்தையும் மக்களிடம் ஊட்டி விட்டால் பிறகு வெற்றி பெறுவது மிக எளிது!
மாசெனத் தூற்றியோர் மனம் மாறிவிட்டனர்!
நமக்கு மிகமிக சகிப்புத் தன்மை வேண்டும் : வளர்ந்திருக்கின்ற சக்தியைக் கட்டிக் காக்க திறமை பெற்றாக வேண்டும்.
காங்கிரஸ்காரர்கள் நம் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமலே நம்மைத் தாக்கிப் பேசினால், அவர்கள் மீது கோபம் வருவதை விட, என்னைப்பற்றி நானே வெட்கப்-படுவேன் - எவ்வளவு பன்னிப்பன்னிச் சொல்லியும், எவ்வளவு ஆதாரங்களை - விளக்கங்களை அழகாக எடுத்துரைத்தும், அவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு நாம் சொல்ல முடியவில்லையே; அதனால்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கருதுகிறேன்.
நாம் கொண்டிருக்கிற நோக்கம் சாமான்யமானதல்ல நாட்டை மீட்கும் ஒரு பெரிய பிரச்சினை.
நாம் இதற்கு இரத்தம் சிந்தாமல், பலாத்காரத்தில் இறங்காமல், வியர்வையையும் கண்ணீரையும் மட்டுமே சிந்தி நாட்டைப் பெறவேண்டும். பர்மாவும், இந்தோனேஷியாவும் சுதந்திரம் பெற்றது போல் யாராவது ஆயுதம் கொடுப்பார்களா என்றோ, நாகர் நாடு கோருபவர்களுக்கு எங்கிருந்தோ ஆயுதங்கள் கிடைக்கின்றன என்கிறார்களே அதைப்போல கிடைக்குமா என்றோ நாம் காத்திருக்க வில்லை.
அறிவுச் சுடரைக் கொளுத்தி சுதந்திரம் பெற வேண்டும்; ஏழை எளியவர்கள் குடிசைகளைத் கொளுத்தியல்ல!
என்னை ஒரு கொட்டடியிலும், ஈழத்தடிகளை ஒரு கொட்டடியிலும், அருணகிரி அடிகளை ஒரு கொட்டடியிலும், பெரியாரை பெல்லாரி சிறையிலும் அடைத்து வைத்திருந்தபோது. கனவாவது கண்டிருப்போமா - இதே ஆச்சாரியார் இப்படி இந்தியை நம்முடன் சேர்ந்து எதிர்ப்பார் - என்று? அல்லது அவர்தான் எண்ணியிருப்பாரா? மும்முனைப் போராட்டத்தின் போது இதே ஆச்சாரியார்தான், 'ஈ எறும்பு போல இவர்களை நசுக்கி விடுவேன்' என்று கூறினார். 'இவர்கள் இயக்கத்தைப் பழங்கதையில் சேருமாறு செய்துவிடுவேன்' என்றார்.
அப்படிப் பேசியவர்தான் அண்மையில் மைலாப்பூரில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், - ’1990 வரை இந்தித் திணிப்பை ஒத்திவைக்க வேண்டும்' என்னும் சுப்பராயனின் கோரிக்கையைப் பிய்த்தெறிந்து இருக்கிறார். அவருடைய பேச்சு முழுவதையும் நீங்கள் பத்திரிகையில் படித்திருக்க முடிந்திருக்காது. நான் நண்பர் ஒருவர் மூலம் அவரது அந்தப் பேச்சை டேப் ரிகார்டு செய்து வரச் செய்து கேட்டேன். அவர் பேச்சில், 'இந்தித் திணிப்பை ஒத்திவைக்க வேண்டும்' என்று சுப்பராயன் போன்றவர்கள் சொல்லுவது முறையல்ல. உதாரணமாக, ஒரு கிழவி என்னைக் கல்யாணம் செய்து கொள்' என்று ஒரு வாலிபனிடம் வந்து கேட்டால், இப்பொழுது வேண்டாம், இன்னும் 10 ஆண்டு கழித்துப் பார்த்துக்கொள்ளலாம்' என்று வாலிபன் பதில் கூறுவதுபோல இருக்கிறது இந்தக் கோரிக்கை!" என்று பேசியிருக்கிறார்.
இந்த அளவு வந்த அவர், ஏன் திராவிட நாடு கேட்பதிலும் நம்முடன் சேரமாட்டார்? அவர் அன்றையப் பேச்சில், தென்னாட்டைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம். 'நாகபுரிக்குத் தெற்கே உள்ள பிரதேசம்' என்றே குறிப்பிட்டுக்கொண்டு வருகிறார். இதன் அர்த்தமென்ன? திராவிட நாடு என்று பச்சையாகச் சொல்லக் கூச்சப்பட்டுக் கொண்டு தான் அப்படிச் சொல்லியிருக்கிறார். இறுதியில் ஒரு இடத்தில் வந்து, 'திராவிடியன் கண்ட்ரி ' என்றும் சொல்லி விட்டார். வசிஷ்டர் வாயால், 'பிரிம்மரிஷி' பட்டம் விசுவாமித்திரனுக்குக் கிடைத்தது போல, ஆச்சாரியார் வாயால், 'இந்தி இப்பொழுது மட்டுமல்ல. எப்போதுமே வேண்டாம். அது உத்தியோக மொழியானால் தமிழர் உருப்படவே முடியாது. திராவிடர்களுக்கு அது வேண்டாம்' என்று பேசுவார் என யார் எதிர்பார்த்தார்கள்?
நமக்கும் அவருக்கும் அதிக உறவு கிடையாது. ஒரே ஒரு நாள் அவரைச் சந்தித்தேன். அவ்வளவு தான். நான் சந்தித்ததும், பெரியார் கூட ஏதேதோ சந்தேகப்பட்டார். புராணத்திலே ரிஷிபிண்டம் இராத் தங்காது என்பார்களே. அதைப்போல. நானும் அவரும் சந்தித்த உடனே அவர், ’திராவிடத்தைக் காப்போம்' என்று எழுதிவிட்டார். அடுத்து, இந்தி கூடாது' என்று பேசுகிறார். காக்கை உட்கார பனம்பழம் ’விழுந்தது' என்பார்களே, அதைப் போல நடந்துவிட்டது.
1,000 பேரைச் சிறையில் தள்ளியவர் ஏன் மாறினார்? கிருத்துவக் கல்லூரியில் அவர் பேசுகையில், மனிதன், தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளக்கூட உரிமை இல்லையா?' என்று கேட்கிறார். அதே முறையில்தான், இன்று யார் யார் சுயநலத்துக்காக நம் கருத்தை ஐயப்பாட்டுடன் - அச்சத்துடன் கவனிக்கிறார்களோ, அவர்களெல்லாம் நம்முடன் நெருங்கிவரப் போகிறார்கள். அதற்கு நம்மிடம் கட்டுப்பாட்டு உணர்ச்சி வேண்டும்.
விசித்திரங்களில் ஒன்று!
பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள் நடிக்கவும், நடிகர்கள் பொதுவாழ்வில் ஈடுபடவுமான சூழ்நிலை உண்டாகிவிட்டது இதற்குக் காரணம் நான்தான், நாடகத்தின் மூலமாகத்தான் நல்லவிதத்தில் முன்னேற்றத்தைக் காண முடியும் நாட்டில் என்பதால்தான் இதைச் செய்ய வேண்டியதாயிற்று.
வேகமாக ஓடித் தேவைப்படும் இடத்தில் கொண்டு போய்விடும் குதிரைக்குக் கொடுக்கப்படும் கூலியை இது வரையில் வண்டிக்காரனே வாங்கி அனுபவித்தான். தனக்குத் தேவையானதைத் தேடிக்கொண்டான் என்பது மட்டுமல்ல, குதிரைக்காக வாங்கப்படும் கொள்ளையும் அவனே சமைத்துச் சாப்பிட்டுவிட்டான். பரிதாபத்துக்குரிய குதிரைகள் பகுத்தறிவற்ற ஐந்துக்களாக இருப்பதால் அவை இளைத்து நோஞ்சான்களான போதும் எதிர்த்துக் கேட்க முடியவில்லை. ஆனால் இதே நிகழ்ச்சி ஒரு அரசியல் கட்சியிலும் நிகழ்ந்தால்..... ? மிருகங்களால் பொறுத்துக் கொள்ளமுடியும். ஆனால் மனிதர்களால், அதுவும் மானமுள்ளவர்களால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? அந்த ஏமாளிகள் பணங் கிடைக்கவில்லை என்று ஏங்கவில்லை - நினைத்தால் ஆயிரக்கணக்கில் தங்கள் காலடியில் கொண்டுவந்து கொட்டச் செய்யும் சமத்தும் சாமர்த்தியமும் அவர்களுக்கு உண்டு. புகழ், பெருமை, முகஸ்துதி இவற்றில் பங்கில்லையே என்று கலங்கவில்லை - இவையெல்லாம் எதிர்பார்ப்பதற்கு மேலாகவே நாட்டிலே கிடைத்தது. ஆனால் அவர்கள் உழைப்பு ஒத்துக்கொள்ளப் படவில்லை - வாழ்வைப் பலியிட்டு வதை பட்டவர்கள் மேல் நம்பிக்கை உண்டாக வில்லை. எப்படியோ முளைத்து எதற்காகவோ சேர்ந்து வாழ்ந்த ஜீவன்கள் மேல் ஏற்பட்ட நம்பிக்கை கூட இந்த இரங்கத்தக்க தியாகிகள் மேல் ஏற்படவில்லை. அவர்கள் உழைத்தார்கள் - வாழமுடியாதவர்களா! பொறுக்க முடியாத நிலை வந்ததும் உதறித் தள்ளிவிட்டு வெளியேறினர்.
சினிமாத் துறையில் சேர்ந்து பணத்தைக் குவித்துக் கொள்ளுகிறார்கள் - பள பளப்பான வாழ்வு நடத்துகிறார்கள் - பவுடர் மோகினிகளோடு சேர்ந்து சுற்றுகிறார்கள்.
கருத்து வேறுபாட்டால், எதிர்க்க வேறு காரணம் இல்லாமல் கதறிக்கொண்டிருக்கும் கன்றாவி உருவங்களைப் பற்றியல்ல நான் குறிப்பிடுவது. கையாலாகாதவர்கள் குலைக்கத்தான் செய்வார்கள் ஆனால், கருத்தும் கொள்கை யும் குறிக்கோளும் ஒத்திருந்தும். உயருகிறார்களே என்ற பொறாமையால் உளறிக் கொட்டும் உதவாக்கரைகளைப் பற்றியே குறிப்பிடுகிறேன்.
இத்தகையோர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் - பணம். பத்திரிகை பக்தர்கள் பலத்தால் விழியிலே பழுதிருப்பது வேறு - விழிகளே இல்லாதிருப்பது வேறு. ஆனால், விழிகளில் பழுதிருப்பவர்களுக்கு விழிகளே இல்லாத கூட்டம் பாதை காண்பிக்கப் பாடுபடுவது இந்த நாட்டின் விசித்திரங்களில் ஒன்று.
உறவும் உதாசீனமும்!
அமைச்சர் பக்தவத்சலம் சட்டசபையில் சொன்னார் - 'காமராசர் பெரியாரைப் போய் பார்க்க மாட்டார் - என்று அழுத்தந் திருத்தமாக அதைச் சொன்னார்.
தேர்தலுக்கு முன்னால் காமராசர் இங்குதான் உட்கார்ந்திருந்தார் ; இந்த நாற்காலியில் தான் அமர்ந்திருந்தார் - என்றெல்லாம் சொல்லி, அந்த இடத்திலே யெல்லாம் திராவிடக் கழகத் தோழர்கள் பூசை செய்யக்கூடிய அளவுக்கு பக்தி கொண்டிருந்தார்கள் - இன்னும் இருக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு காமராசர் ஏன் போய் பெரியாரைச் சந்திக்க வில்லை? தேர்தலுக்குப் பிறகு அவர் தேவையில்லை - எனவே சந்திக்கவில்லை.
முரட்டுக் கணவன்மார்கள், தேவைப்பட்ட நேரத்தில் உள்ளே சென்று மனைவியிடம் பெசி, கொஞ்சிவிட்டுத் தெருத் திண்ணையிலே வந்து படுத்துக் கொள்கிறார்களே. அவர்களுக்கும் காமராசருக்கும் என்ன வித்தியாசம்?
காமராசர், பெரியாரைச் சந்திக்க வேண்டுமென்று நான் சொன்னதற்கு. அமைச்சர் சொன்ன பதில் வெட்கப்படக் கூடியதாகும். ’பெரியாருக்கு காமராசர்மீது ஆசை’ ஆனால் -காமராசருக்குப் பெரியார் மீது ஆசை இல்லை' என்றார் அவர். இதற்கு என்ன பொருள்?
அதன் பிறகுதான் அவர் சொன்னார் - அண்ணாதுரையே பெரியாரைப் போய்ப் பார்த்து, சமரசம் செய்ய வேண்டும்' - என்று.
நான் போக மாட்டேன் என்று சொல்லவில்லை. பெரியாரிடத்திலே இன்று தொத்திக் கொண்டிருக்கும் பிள்ளைகளும் தத்துப் பிள்ளைகளும், நான் அவர் வீட்டுக்குள்ளே நுழைந்தால் வழிவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும்; சமரசம் பேசவும் முடியும். ஆனால், அதுவரை சட்டத்தை நிறுத்த வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். அதைக் கேட்டதும் அமைச்சருக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. சட்டத்தை நிறுத்தி வைக்கவும் முடிய வில்லை. இக்கட்டான நிலைமை ஏற்பட்டது அவருக்கு! காரணம் சட்டசபை இப்படிப்பட்ட சட்டங்களைக் கண்டதில்லை. சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. காரணம் சட்டத்தை நிறுத்திவைக்கும் அளவுக்கு என் கரத்துக்கு வலுவு இல்லை.
நான் நெஞ்சத் தூய்மையோடு சொல்லிக் கொள்கிறேன் - 15 பேருக்குமேல் அதிகம் சட்டசபைக்கு வந்திருந்தால் இந்தச் சட்டம் வந்திருக்காது.
இந்தச் சட்டத்தை, எங்களைத் தவிர வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை.
சர்க்கஸ்காரர்கள், புலிகளுக்கு நடுவே புள்ளி மான்களை நிறுத்துவது போல, நாங்கள் மட்டுமே அத்தனை பேருக்கும் மத்தியில் நின்று சட்டத்தை எதிர்த்தோம்.
மதயானை
முதலாளித்வம் ஒரு மதம் பிடித்த யானை. அந்த யானையைப் பிடித்து வாழை நாரினால் துதிக்கையைக் கட்டி அந்தக் கயிறை ஒரு வாழை மரத்தில் கட்டி விட்டு, ’பார், யார் ! நான் முதலாளித்வத்தைக் கட்டிப் போட்டுவிட் டேன்' என்று கூறினால் சரியாகாது!
யானை ஒரு இழுப்பு இழுத்தால் அதன் கட்டு அறுந்துவிடும். அதுமட்டுமா? விடுபட்ட யானை தான் கட்டப்பட்டிருந்த வாழைமரத்தையே கூட வாயில் போட்டுக் கொள்ளும், அது யானை என்ற காரணத்தால். ஆகையால் வெறும் நாரினால். வாழைமரத்தில் யானையைக் கட்டுவதில் பயனில்லை என்று கூறுகிறோம் நாம். அரசாங்கமே ’யானையை அடக்க வாழை மரத்தில் கட்டாதே!' என்று அரசாங்கத்துக்கு அறிவுறுத்துகிறோம்.
நாட்டைப் பிரித்துவிட்டால், வெளிநாட்டு முதலாளிகள் தலைகாட்ட முடியாது திராவிடத்தில்! முதலாளிகளின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுதலையடையும் திராவிடம் அந்தத் திராவிடத்தை அடைவதுதான் நமது இலட்சியம்.
ஆங்கிலத்தின் அவசியம்!
ஆங்கிலத்தைப் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் சில தேசியத் தோழர்கள் - தங்களுடைய தேசியம் முற்றிவிட்ட காரணத்திலே என்று நான் கருதுகிரேன் - ஆங்கிலம் அன்னிய மொழி. ஆகவே, ஆங்கிலம் ஆகாது என்று!
அன்னியருடைய வழிகளெல்லாம் நமக்குத் தேவை யில்லை யென்றால், இரயில் அன்னியன் கொடுத்ததுதான். கார்டு, கவர்களை அன்னியன் காலத்திலே தான் பார்த்தோம். தபால் - தந்தி அன்னியன் காலத்திலேதான் கிடைத்தது. ஆப்ரேஷன். இஞ்செக்ஷ்ன் அன்னியன் காலத்தில் வந்தவை தான். இவைகளெல்லாம் இருக்கலாம் - ஆனால். அவர்களுடைய மொழி மட்டும் இருக்கக் கூடாது என்று எடுத்துச் சொல்லுவது எந்த வாதம் என்பது எனக்குப் புரியவில்லை.
ஆகையினாலேதான், ஆங்கிலத்தை அன்னிய மொழி என்று கருதாமல், அன்னியரோடு தொடர்பு படுத்துகின்ற மொழி - என்று கருதுகிற காரணத்தால் நாம் அதை விலக்க முடியாது.
நமது கருத்து
பாட்டாளி மக்களே பெரிதும் சுரண்டப் படுகிறார்கள். முதலாளிவர்க்கத்தாலும் புரோகிதவர்க்கத்தாலும். தொழிலாளர் கிளர்ச்சிகளின் போது பொருளாதாரப் பிரச்னையை மட்டுமே கவனித்தால் போதும் என்று எண்ணுகிறார்களே யொழிய புரோகிதப் பிடியிலிருந்து விடுபடும் முயற்சியைப் புறக்கணித்து விடுகின்றனர்.
திராவிட இனத்திலே மிகப் பெரும் பகுதியினர் பாட் டாளிகளே. ஆரிய இனமோ பாடுபடாத பிறவி. முதலாளி வர்க்கம். ஆகவே, ஆரிய - திராவிடப் போர் என்பது அடிப் படையிலே பார்த்தால் பொருளாதார பேத ஒழிப்பு திட்டந்தான்.
ஜாதி முறை, சடங்கு முறை என்பனவெல்லாம் தந்திரமாக அமைக்கப்பட்ட பொருளாதார சுரண்டல் திட்டமே யாகும். ஆகவே ஜாதி முறையை ஒழிப்பதும் சமதர்ம திட்டந்தான்.
தொழிலாளர்கள் ஆரிய ஆதிக்கத்தை அகற்றாமல் பொருளாதாரத் துறையிலே எவ்வளவு முன்னேறினாலும் அவர்களுடைய வாழ்வு மலரமுடியாது. ஆகவே அவர்கள் ஆரிய ஆதிக்கத்தை அகற்ற வேண்டும்.
பாட்டாளிகள் என்றால் ஆலைத்தொழிலிலே ஈடுபட்டு சங்கம் அமைத்துக் கொண்டு கூலி உயர்வு, குடியிருக்கும் வீட்டுவசதி, சுகாதார வசதிகள் ஆகியவைகளுக்காக கிளர்ச்சிகள் நடத்துபவர்கள் மட்டுமல்ல. பண்ணை வேலை செய்பவன், கல் உடைப்பவன், கட்டை வெட்டுபவன், குப்பை கூட்டுபவன் போன்ற சங்கமோ கிளர்ச்சி செய்யும் உணர்ச்சியோ கூட பெறாமல் சிதறி வாழ்க்கையை சிதைத்துக் கொண்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளரையே குறிப்பதாகும்.
தொழிலாளர்கள் அவல வாழ்வு பெற்றிருப்பதற்கு பெரிதும் காரணமாக இருப்பதும் அவர்கள் எழுச்சி பெற்று உரிமைப் போருக்கான வகை தேடிக்கொள்ளாமல் இருப்பதற்கும் காரணமாயிருப்பது மதத்தின் பேரால் அவர்கள் மனதிலே திணிக்கப்பட்டுள்ள மூட நம்பிக்கைகளே ஆகும். ஆகவே அவற்றினின்றும் விடுபடுவது தொழிலாளர்களின் விடுதலைக்கு முக்கியமான முதற் காரியமாகும். இதனைச் செய்யாமற் போனால் இன்று தொழிலாளர்களின் மனதிலே குடி கொண்டுள்ள பழயகால நம்பிக்கைகளை உபயோகப் படுத்திக்கொண்டு தந்திரக்கார தன்னல அரசியல் கட்சிகள் புரோகித வகுப்பாரின் கூட்டுறவுடன் தொழிலாளரை நசுக்கிவிட முடியும்.
திராவிட நாடு திராவிடருக்கு ஆகவேண்டும் என்று கூறும்போது பாடுபடும் இனத்தைப் பாடுபடாத இனம் சுரண்டும் கொடுமையும் பாடுபடும் இனம் தன்னுடைய மனதிலே பூட்டிக்கொண்ட தளைகளால் அடிமைப்பட்டுக் கிடக்கும் கேடும் ஒழியவேண்டும் என்ற எண்ணத்தையே தான் வேறு வார்த்தைகளால் கூறுவதாகப் பொருள். சம தர்ம நாடு. சமூக சமதர்மம் என்ற அடிப்படை மீது கட்டப் பட்டால்தான் நிலைக்கும். இந்த ஒரு அப்சம் இந்த நாட் நக்கு மட்டுமே உள்ளது. வேறு இடங்களில் ஜாதியின் பேராலே பொருளாதாரச் சுரண்டல் முறை ஏற்பட்டிருக்க வில்லை.
தன்னாட்சி பெற்ற திராவிட நாட்டிலே ஆரிய ஆதிக்கம் இராது என்றால் தந்திரத்தால் ஏழைகளையும் உழைப்பாளரையும் ஏமாற்றி உழைக்க வைத்து. மதத்தின் பேரால் கட்டி விடப்பட்ட கற்பனைகளைக் காட்டி ஏமாற்றி, தங்களை மேல் ஜாதி யென்று காட்டிக் கொண்டு பாடு படாமல் வாழும் சுரண்டல்காரர்களின் கொட்டம் இராது என்றே பொருள்.
திராவிட நாட்டிலே உற்பத்தி சாதனங்கள், பெரிய தொழிற்சாலைகள், போக்குவரத்துத் தொழில், லேவாதேவி முதலிய - பெரும் லாபந்தரும் தொழில்கள் தனிப்பட்ட முதலாளிகளிடம் இராது. சர்க்காரே நடத்தும். ஆகவே முதலாளித்வம் இராது.
தேன் குடத்திலே தேள் !
வெள்ளைக்கார முதலாளியிட மட்டுமே தகராறு நடத்தலாம், நமது சர்க்கார் நடக்கும் போது கூலிக்காகவோ, உரிமைக்காகவோ வேலை நிறுத்தம் போன்ற தகராறுகளில் இரங்கக்கூடாது என்று யோசனை கூறுவது அசல் பெர்லின் வாதம் ! விழிப்புற்ற தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரிடையாக நிற்பது இடுப்பொடிந்த ஏகாதிபத்யமல்ல. முறுக்கேறிய மூலபலம் உள்ள படை பலம் மிகுந்த தேசியம். அன்புடன் சொந்தம் கொண்டாடி. பாட்டாளிகளே வளர்த்த தேசியம். தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் இது எதிர்பாராத விபத்து ! எங்கு ஆதரவு கிடைக்குமென்று அவர்கள் மனமார நம்பினார்களோ அதே இடத்திலிருந்து எதிர்ப்பு! தேடியெடுத்த தேன்குடத்திலிருந்து தேள் கிளம்பி, கொட்டு கிறது! தேசியம் நாசிசமாக மாறுகிறது!
சிறைக்குள் தள்ளி கிளர்ச்சியை அடக்கிய எந்த வல்லரசும் வரலாற்றில் இடம் பெற்றதில்லை. பாஸிசத்தின் முதல் அடி பயங்கரமானதாகத்தான் இருக்கும். ஆனால் அதன் வீழ்ச்சி எதிர்பாராத நேரத்தில் இருக்கும். திடீரென்று சரியும்.
பொதுமக்களின் மனதை பிரசார பலத்தாலும், நியாயமான காரணங்களுக்காக போராடுபவர்களின் சக்தியை அடக்கு முறையாலும். முன்னதை மயக்கவும் பின்னதை முறியடிக்கவும் இன்றுள்ள ஆளவந்தார்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.
நல்ல தலைவர்கள் தேவை
படித்த உங்களிலிருந்து பண்பும் பயிற்சியும் பெற்றவர்கள் பலர் ’தொழிலாளர் தலைவர்’களாக வரவேண்டும். தொழிலாளர்களிலும் திறமையுள்ளோர் தலைவர்களாக வரவேண்டும். உங்களைப் போன்ற நடுத்தர வகுப்பினர் உள்ளன்பு வைத்து உங்களிலேயே தக்கவரை தலைவராக ஆக்க வேண்டும். தலைவர்களை உங்களிலேயே உற்பத்தி செய்யுங்கள்.
வயலிலே ஓயாது உழைக்கின்ற விவசாயி சிந்தனை செய்ய முடியாது. சிக்கலான பிரச்னையைப் பற்றி. நேரமில்லை அவனுக்கு உழைப்பு அதிகமென்பதால், ஆலையில் வேகின்ற தொழிலாளி அதிக நேரம் செலவிட முடியாது இத்தகைய பிரச்னைகளிலே. ஆனால் படித்த குமாஸ்தாக்களாகிய நீங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்களல்ல ; உங்களுக்கு வாழ்க்கையில் ஓரளவு சௌகரியம் உண்டு. ஓய்வாக யோசிக்க முடியும். பொறுப்பு என்ன, இன்றைய குறை களைத் தீர்க்க வழி என்ன என்று!
ஆலைத் தொழிலாளிகளையும், வயலிலே ஓயாது உழைக்கும் விவசாயிகளையும், வண்டி ஓட்டுபவரையும். வீதிகூட்டு வோரையும், சிறு கடை தொழிலாளரையும், கட்டை வெட்டுவோர் போன்ற எல்லாவகை தொழிலாளர்களையும் பற்றி கவலை கொண்டு ஒன்று திரட்டி நீங்களே நடத்தலாம். வியை விளக்கமும் தரலாம். அறிந்திருப்போர். அறியாதவருக்கு அறிவித்தல் நல்லது. தெரிந்திருப்போர் தெளிவில்லாத வர்க்கு தெளிவுப்படுத்தலாம் பற்பல பிரச்னைகளைப் பற்றியும். உங்களை நீங்களே காத்துக் கொள்ளும் நிலைபெற்றால் பிற அரசியல் சூதாட்டக்காரர்களுக்கு வேலை ஏது உங்களிடம்! எனவே, உங்களிலேயே உண்மைத் தலைவர்களை உண்டாக்குங்கள்.
தொழிலாளர்!
விதைத்துழுது அழுகிறாய் :
வதைத்தறுத்துச் செல்கிறான்!
கொண்டு சென்று குவிக்கிறாய்;
கொட்டிப் பூட்டி வைக்கிறான்!
பார். பாட்டாளித் தோழனே நன்றாகப் பார் ! இதயத்தை உறுத்துகிறதா.... மூடிக் கொள்ளாதே கண்களை விழித்துப் பார்! வேதனை எழும்புகிறதா? பரவாயில்லை. பார். நீதான் பார்க்கவேண்டும்... கண் மூடிக் கிடந்தவனே. நான் காட்டுவது தெரிகிறதா? நீதான் அவன்... அதை நினைத்த வண்ணம் இக் காட்சிகளைப் பார் !
ஏர் பிடித்துழுகிறாய் ;
மார்பிலுதைத்து வதைக்கிறான்!
பாடுபட்டு நெய்கிறாய் ;
பட்டுடுத்தி மகிழ்கிறான்!
ஏன் கண்களை மூடிக்கொள்கிறாய்? கடினமாக இருக்கிறதா?.. நீதானப்பா நாட்டின் தேனீ. நடமாடும். தெய்வம் !...? இந்தக் காட்சிகளைக் கண்டதுமே தவிக்கிறாயே! இத்தனை நாள் வேதனை உன்னை சந்தித்த போதெல்லாம் எங்கே மறைந்து போய்க் கிடந்தது. இந்த ஆத்திரம் இன்னுங் கொஞ்சம் பார்!
கருவிகளைக் காண்கிறாய்;
கைக்கொண்டவன் ஆள்கிறான்!
அதோ அடிக்கிறானே கம்பு ; அது எது தெரியுமா? நீ வெட்டித் தந்தது தான் சுட்டுப் பொசுக்குகிறானே அந்தத் துப்பாக்கிகள்; அவை நீ அன்று செய்து தந்தவைதான்!
காதுகளை மூடிக்கொள்கிறாயே. உழைத்து ஓடான உத்தமனே ! என் பேச்சு. 'உன் இதயத்தைச் சுட்டெரிக் கிறதா? பாவம்! நீ. என்ன செய்வாய்? உனக்கு யாரும் இந்தக் காட்சிகளைக் காட்டவில்லை, இது நாள் வரை!’
ஆகவேதான் இந்தக் காட்சிகளை கண்டதும் துடிக்கிறாய் ! தொல்லை செய்வோரின் துடுக்கடக்குவேன் என்று உன் இதயம் துடிப்பது என் கண்ணுக்கு நன்றாகக் தெரிகிறது!
உத்தமனே, அவசரப்படாதே ! இன்னும் கொஞ்சம் கேள் ! உன் மீது சவாரி செய்யும் பிரபுக்களின் ஆணவப் பிடரியை நீ ஆட்டவேண்டும் என்பதுதான் எனது ஆசை !
ஏன் இப்படி உனது கண்கள் சிவப்பேறுகின்றன? எனது வார்த்தைகள் உன் கோபாக்கினியை கிளறுகின்றனவா? மகிழ்ச்சி நண்பா. எனக்கு இரட்டை மகிழ்ச்சி! உன் இதயத்தில் எரிமலை உதயமாக வேண்டும் என்பது தானப்பா என் ஆசை ! அது ஏற்பட்டு விட்டதென்றால் என் லட்சியம் நிறைவேறும்; நிம்மதி பெறுவேன், கிளி கூண்டை விட்டுப் புறப்பட்டுவிட்டது ! காளை கட்டவிழ்த்துக் கொண்டது. வீரன் விலங்கை முறித்துக் கிளம்பி விட்டான் என்று எக்காளம் முழக்குவேன்! அதில்தான் நண்பா, உன் வாழ்வே இருக்கிறது
'சரி, என்னை நான் புரிந்து கொண்டேன். இப்போது என்ன செய்வது நான்? என்னை வேதனையிலாழ்த்தியவனை விரைவாகப் போய் வீழ்த்திவிட்டு வந்துவிடட்டுமா? கட்டளையிடும் கரங்களைக் கண்ட துண்டமாக்கி, கர்ஜனையிடும் வாயை இரண்டாகப் பிளந்து உதைக்கும் காலை ஓராயிரம் துண்டு போட்டு உழைக்காது மெருகேறி மினுமினுக்கும் அவன் சதைமலை மீது ஏறி கோரத் தாண்டவம் செய்யட்டுமா? இத்தனை நாள் என் இரத்தமெல்லாம் உறிஞ்சிக் கொழுத்தானே, அதை வட்டி போட்டு வாங்கி, நான் உழைத்து அலுத்த இப்பூமிக்கு அர்ப்பணம் செய்யட்டுமா? என்று கேட்கிறாய்...
வேண்டாமப்பா, வேண்டாம்! வேதனைகளை எடுத்துக்காட்டி விளக்கியதும், வெடித்த எரி மலையாகி விட்டாயே ! வெடித்த எரிமலை, விரைவில் தன் கோரச் சப்தம் இழந்து அடங்கி விடுமாம், அது தெரியுமோ உனக்கு? உன் உணர்ச்சி அப்படியாகி விடக்கூடாது! ஆத்திரம் அறிவை அழித்துவிடும்! வேகம் விவேகப் பாதைக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும். கொதித்து எழுந்து கொஞ்ச நேரத்துக்கெல்லாம் குந்திவிடுவது பெரிய காரியமல்ல; வெட்டி வீழ்த்தி ரத்தம் சிந்திவிட்டுப் போய்விடுவது பிரமாதமல்ல ; உனது இந்தப் புது உணர்ச்சி புது வாழ்வு காணப் பயன்படவேண்டும்!
"உணர்ச்சியைக் கிண்டி விட்டு உபதேசம் செய்யக் கிளம்பி விட்டாயா?” என்று என்னை இப்படி எரித்து விடுவதுபோலப் பார்க்கிறாயே! வேண்டாம் இவ்வளவு கோபம், வேதனைப்பட்டவனே ! அவசரத்துக்கு அடிமை யாகாதே! நான் உபதேசம் செய்ய வரவில்லை. 'உபதேசி’யாக உருத்திராட்சம் உருட்டும் வீணன் நானல்ல என்பது தான் உனக்குத் தெரியுமே ! உன் வாழ்வு செம்மைப்பட வேண்டும் ! உயரப்பனும் ஓட்டப்பனும் ஒன்றாக வேண்டும்! உன் உரிமைகளை நீ பெற்றுத் துன்பமற்று வாழவேண்டும்
என்ற ஆசையினாலேதான் சொல்கிறேன் !
உழைப்போனே ! உன் நிலையைப் பார்; சிந்தி; ஏன் என்று கேளேன்; சக்திகளைத் திரட்டு; உரிமைப் போரில் இறங்கு; உன்னை அடிமைப்படுத்தும் அறியாமையை எதிர்த்து. ஜாதீய முறையைத் தகர்த்து முதலாளித்து வத்தை முறியடித்து வெற்றி காணப் புறப்படு ! அவசரப் பட்டு ஆபத்துக்கு இரையாகாதே ! வெண்ணெய் திரளுவதற்குள் தாழியை உடைத்து விடாதே !
உலகம் உழைப்பாளிக்குத்தான்
திராவிடநாடு திராவிடர்க்கே என்று கூறுவது உலகம் உழைப்பாளிக்கே என்ற முழக்கம் போன்றதே. குறிச்சொல் மட்டுமே வேறு, குறிக்கோள் ஒன்றுதான் ! உலகம் உழைப்பாளிகளுக்கே. உலுத்தர்களுக்கல்ல. பிறர் உழைப்பை உண்டு கொழுப்பவர்க்கல்ல. சுரண்டி வாழுபவர்க்கல்ல. முதலாளித்வத்துக்கல்ல. ஆம்; அதே குரலில் தான் திராவிடநாடு திராவிடருக்கு. ஆரியருக்கல்ல, அண்டிப் பிழைக்க வந்து நம்மை மண்டியிடச் செய்த மத தரகர் ஆட்டத்துக்கல்ல. வடநாட்டு முதலாளித்வத்துக் கல்ல. உழைக்கும் உத்தமர்களாகிய திராவிடர்களுக்கே.
வறுமைக்கு காரணமென்ன?
மக்களின் வறுமைக்கும் வாட்டத்துக்கும் காரணம் பொருளாதார யந்திரக் கோளாறு என்று கருதுகிறார்கள். யந்திரக் கோளாறு நிச்சயமாகவே மக்களின் வாட்டத்துக்குக் காரணம்தான். ஆனால் ஏன் இத்தகைய சுரண்டல் யந்திரம் உருவாக்கப்பட்டது, எப்படி? யாரால்? மக்கள் ஏன் இதனை அனுமதித்தனர்? ஏன் இன்னும் சகித்துக் கொள்கின்றனர்? என்று கூறி கஷ்டப்படும் மக்களை சுரண்டு பவர்கள் மயக்கியும் அடக்கியும் வைப்பது ஏன்? என்பன போன்றவைகளை திராவிட இயக்கம் மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வந்து நிறுத்துவதுடன் சிந்திக்கவும் தூண்டுகிறது. அந்தச் சிந்தனையின் பலனாக அறிவுத் துறையிலே ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய பொருளாதார புரட்சியினால் மட்டும் புதுவாழ்வு கிடைத்து விடாது என்று நம்புகிறோம். ஆழ்ந்த நம்பிக்கை இது. எனவே தான் நாம் மனிதன் அடிமைப்பட்ட காரணத்தையும் அந்த அடிமைத்தனம் எப்படி நீக்கப்பட வேண்டும் என்பதையும் நமது பிரசாரத்திலே முக்கிப் பகுதியாக வைத்துக் சொண்டிருக்கிறோம்,
அவர்கள் பணி
மனதிலே உள்ள தளைகளை நீக்குவது அவசியமான காரியம் என்பதை உணர்ந்து ஐரோப்பா கண்டத்திலே பேரறிஞர்களான வால்டேர் ரூஸோ போன்றார் அறிவுத் துறைப் புரட்சிக்காக எவ்விதம் பணியாற்றினரோ அவ்விதமான பணியினையே நாம் புரிகிறோம்.
திராவிடனுடைய உழைப்பை மூன்று முனைகளிலிருந்து மூன்று சக்திகள் பறித்துக் கொள்கின்றன. ஆங்கிலேயன் ஆள்பவனானான். செல்வம் கொண்டு சென்றான்; ஆரியன் ஆலய வேந்தனானான், பொருளைத் தூக்கிச் சென் றான்; வடநாட்டான் வணிக வேந்தனானான். பொருளைச் சுமந்து செல்கிறான் ; இவ்வளவுக்கும் இடமளித்த திராவிடன் எக்கதி அடைய முடியும் தேம்புகிறான். திகைக்கிறான்.
நம் வளர்ச்சி!
தி. மு. கழகத்தின் இன்றைய வளர்ச்சி, நம்முடைய நண்பர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி-யளிக்கிறது : நான் ஒன்று சொல்லிக் கொள்வேன் - எனக்கு இந்த வளர்ச்சி பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்காமல் இல்லை; ஆனால் அதே நேரத்தில் பயத்தையும் கவலையையும் கூடவே அளித்துக்கொண்டு தான் இருக்கிறது. இவ்வளவு வளர்ந்திருக்கின்றோம் நாம்: இவ்வளவு பெரிய கழகத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்கு நாமெல்லாம் ஆற்றல் உள்ளவர்களா என்ற எண்ணம் என்னுடைய உள்ளத்திலே அவ்வப்போது உறுத்திக் கொண்டிருக்கின்றது.
உங்களிடத்திலே வெளிப்படையாகச் சொல்லிக்கொள்வதிலே நான் வெட்கமடைய வில்லை ; சட்ட மன்றத்திலே திறமை பெற முடியுமா முடியாதா என்பதைப்பற்றி எங்களுடைய உள்ளத்திலே என்றைய தினமும் ஐயப்பாடு ஏற்பட்டதில் : அதிலே. நல்லவர்கள் அல்ல என்ற பெயர் எடுத்தாலும் கவலையில்லை. ஆனால், இவ்வளவு இலட்சக் கணக்கான மக்கள் - சிற்றூர்களிலேயுள்ள மக்கள் - பேருரிலே வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் - மதிப்புக்குரிய தாய்மார்கள் - பொறுப்புள்ள பெரியவர்கள் - ஆர்வங் கொண்ட இளைஞர்கள் - படித்த வாலிபர்கள் - நல்ல அலுவல்களிலே உள்ளவர்கள் - இவர்களெல்லாம் ஆதரவு தருகிற அளவுக்கு இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி முழுப் பலனை நாடு அடையத்தக்க வகையிலே நடத்திச் செல்லுவதற்கேற்ற ஆற்றல் எனக்கு உண்டா என்பதில் தான் எனக்கு ஐயப்பாடு!
ஏழையினுடைய வீட்டில் அழகான பெண் பிறந்து, அவள் 16- வயதாகி, திருமணம் ஆகாவிட்டால். அந்த ஏழையினுடைய உள்ளத்தில் எப்படிக் கவலை தோன்றுமோ அதைப் போல் வளர்ச்சியடைந்த இயக்கத்தைப் பார்க்கின்ற நேர்த்தியிலல்லாம் நான் கவலையடைகின்றேன். ஏழையி னுடைய வீட்டில் பெண் பிறந்தால் ஆபத்து ! அந்தப் பெண் அழகாகவும் இருந்தால் அதிகமான ஆபத்து!
நாம் மிகச் சாமான்ய மானவர்கள் : நம்மிடத்திலே கிடைத்திருக்கின்ற இந்த இயக்கம் நம்முடைய கட்டுக்கும் அடங்காத அளவுக்கு இன்றைய தினம் வளர்ந்திருக்கின் றது. வளர்ச்சிக்கேற்ற அளவுக்கு நம்முடைய இயக்கத்திலே பலனைப் பெறவேண்டு மென்றால் - நான் சாதாரணக் கணக்கைச் சொல்லுகின்றேன் - திங்கள் ஒன்றுக்கு தலைமைக் கழகத்தில் 5,000 ரூபாயாவது செலவிட்டால் தான் முடியும். அந்த அளவுக்குப் புதிய பொறுப்புகள் - அந்த அளவுக்குப் புதிய நிலைமைகள் - அந்த அளவுக்குப் புதிய வேலைகள் நம்முடைய கழகத்திற்கு ஏற்பட்டு விட்டன, அன்றாடம் வருகின்ற கார்டு கவர்களுக்கு மட்டும் நம்முடைய கழகத் தோழர்கள் பதில் எழுதுவதென்றால் ரூ.10-க்கு தபால் கார்டு வாங்கினால்தான் முடியும்.
இன்றையதினம் இந்த ஊரிலிருந்து புறப்படுகின்ற நானோ, மற்ற எந்தத் தோழரோ. நாளைக்கு ஒரு ஊர் - மறு நாள் ஒரு ஊர் என்று தமிழ்நாடு பூராவும் சுற்றிவிட்டு. மறுபடியும் இந்த ஊருக்கு வரவேண்டுமென்றால் - நீங்கள் நான் சொல்லுவதிலே ஆணவம் இருப்பதாகக் கருதாதீர்கள் : உண்மை யிருக்கிறதென்பதை ஆராய்ந்து பார்த்தால் உணர்ந்து கொள்வீர்கள் - 5 வருடத்திற்குப் பிறகு தான் வர முடியும். அத்தனை இடங்களில் வேலை இருக்கிறது.
உங்களுக்கு நான் சொல்லுவேன் - நான் சொன்ன அந்த ஏழை. தன்னுடைய வயிற்றிலேயே பிறந்த நல்ல அழகான பெண் பருவமடைந்து விட்டாள் என்று தெரிவதற்கு முன்னாலேயே, அவள் பருவமடைவாள் - திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கின்ற பொழுதே. அவன் தான் கஷ்டப்பட்டு சேர்க்கின்ற சொத்தில் கொஞ்சம் கொஞ்சம் மிச்சப்படுத்தி, அடுத்த தைக்குக் கல்யாணம் - அடுத்த தைக்குக் கல்யாணம் என்று சேர்த்து வைப்பதைப் போல். இங்கே கூடியிருக்கின்ற நீங்களும். இங்கே வர முடியாமலிருக்கின்ற மற்றவர்களும் சீமான்கள் அல்ல என்பது எனக்குத் தெரியும்; நீங்களெல்லாம் கஷ்ட குடும்பத்திலே உள்ளவர்கள் - நான் உணர்ந்திருக்கின்றேன். நாமெல்லாம் நடுத்தரக் குடும்பத்தார்கள் - இதிலே ஒருவர்க்கொருவர் பெருமை பேசிக்கொள்ளத் தேவை யில்லை ; கஷ்ட ஜீவனத்தில் இருப்பவர்கள் - ஆனாலும் ஏழை எப்படி தன் மகளுடைய திருமணத்திற்காகக் கொஞ்சம் கொஞ்சம் பணத்தை அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வருவானோ அதைப்போல், தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற தி. மு. கழக ஆதரவாளர்கள் தொழிலிலே கிடைக்கின்ற வருமானத்திலே ஒரு சிறு பகுதியையாவது தி. மு. கழக வளர்ச்சிக்கென்று -- தி. மு. கழகப் பொறுப்புக்கென்று ஒதுக்கி வைத்துக் கொண்டே வந்தாகவேண்டும்.
நீங்கள் அப்படிப்பட்ட விதத்திலே எங்களுக்குக் கை கொடுத்தால் தான் பெரிய வளர்ச்சியடைந்துவிட்ட பிறகு - வளர்ச்சி பெற்றுவிட்ட இந்த இயக்கம், அதன் வளர்ச்சி யைக் காப்பாற்றிக் கொள்ளவும், இலட்சியத்தை அடைவதற்கான முயற்சிகளை எடுத்துக்கொள்ளவும் பயமின்றி ஈடுபட முடியும்
வாழ்வை வளைக்கும்
முதலாளி, தொழிலாளி என்ற பேதம் பொருள் சம்பந்தமானது. உடலை வறுத்தக்கூடியது. வாழ்வை வளைக்கக்கூடியது. ஆனால் ஆரியர் திராவிடர் என்ற பேதம் உயிரைக் கெடுக்கும், தற்கால வாழ்வையும் கெடுக்கும் தகைமை உடையதாக இருப்பதை ஆராய்வோர் காண்பர். ஆலைகளும் தொழிற்சாலைகளும் ஆங்காங்கு தோன்றினால் முதலாளி - தொழிலாளி என இரு வர்க்கம் பிரியக் காண்கிறோம். ஆனால் இந்த ஆரிய திராவிடர் என்ற வர்க்க பேதம் பிறக்கும்போதே இருக்கக் காண்கிறோம்.
தொழிலாளி ஆரியராக முடியுமா?
தொழிலாளி முதலாளியாக மாற மார்க்கம் உண்டு. மாறின பலரைப் பலர் அறிவர். அது போலவே முதலாளி தொழிலாளியாக மாறினதைக் கண்டதுண்டு. ஆனால் ஆரியனாக முடியாது. படித்து பணம் படைத்து, உயர் பதவி பெற்றிருப்பினும் அவன் உயர் ஜாதியென் கொள்ளட் படுவதில்லை. ஆசார அனுஷ்டானங்களும் அவனை ஆரியருடன் ஆரியராக அமரும் நிலையைத் தருவதில்லை. பிறவி முதலாளிகளாக உள்ள ஆரியர்களின் ஆதிக்கத்தை அகற்ற உணர்ச்சியும் ஆற்றலும் பெற்று அந்த ஆதிக்கத்தை அகற்றிவிட்டால் பின்னர் பொருள் படைத்ததால் முதலாளியாகி. பொருளிழந்தால் தொழிலாளியாகி விடக் கூடிய கூட்டத்தின் ஆதிக்கத்தை அகற்றுவதென்பது மிக எளிதாகச் செய்து முடிக்கக்கூடிய காரியமாகும்.
பிறவியிலேயே இருப்பதாகக் கற்பிக்கப்படும் உயர்வு தாழ்வு நீங்கும்படி செய்துவிட்டால் பிறவி பின் காரணமாக கற்பிக்கப்படும் பேதங்களை போக்கிவிட்டால் பின்னர் பணம் காரணமாக கற்பிக்கப்படும் பேதங்கள் பஞ்செனப் பறக்கும் சமுதாய அபேதவாதம் நிலை நாட்டப்பட்டு விட்டால் பொருளாதாரத் துறையில் அபேதவாதத்தைக் காணலாம். கஷ்டமான காரியமாகத் தோன்றாது. எனவேதான் முதலாளி தொழிலாளி என்ற பேதத்தைவிட மிக நீண்ட நாளையதும் நிரந்தரமானதாக இருப்பதும் வேத சாஸ்திர புராண, இதிகாச சம்மதம் பெற்றதெனப்படுவதும் மாறுதலுக்கு இடமே அளிக்காததுமான ஆரிய - திராவிட பேதம் மிக அவசரமாக முதலில் தீர்க்கப்படவேண்டும். இந்த மூலம் உணர்ந்து தான் திராவிடர் இயக்கம் சமூகக் கோளாறு. பொருளாதாராக் கோளாறு எனும் இரண்டினையும் தாக்கும் போக்கைக் கொண்டிருக்கிறது.
தொழிலாளர் பிரச்னை
உலக அரங்கில் மிக முக்கியமானதாகவும், பலருடைய மனதை மருட்டக் கூடியதாகவும், தொழிலாளர் பிரச்னை வளர்ந்து விட்டது. நீதியையும் நேர்மையையும் சமுதாயத்தில் அமைதியையும் சுபீட்சத்தையும் விரும்பும் எவரும் தொழிலாளர் பிரச்னையை அலட்சியப் படுத்தியோ அல்லது அடக்கு முறைகளால் அழித்துவிடக் கூடுமென்றோ எண்ண முடியாது. பிரச்னை நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டும் புதுப்புது உருவங்களைக் காட்டிக் கொண்டும் இருக்குமே ஒழிய, தானாக மங்கிவிடவும் செய்யாது ; தாக்குதலால் தளர்ந்தும் போய்விடாது. பொது அறிவும் ஜனநாயக உணர்ச்சியும் வளர வளர பிரச்னை பலம் பெற்றுக்கொண்டு தான் வரும்,
விழிப்பு
பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தொழில் முறை மாறிவிட்டது. உலகிலே அதற்கு முன்பு எந்த நாட்டிலும் குடிசைத் தொழில் முறையும் தேவைக்காக மட்டும் பொருளை உற்பத்தி செய்து கொள்வதுமாக இருந்துவந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் தொழில் புரட்சி ஏற்பட்டு, குடிசைத் தொழில் முறை மாறி யந்திரத் தொழில் முறையும், ஒரு சிலர் பலரை வேலைக்கமர்த்தி தொழில் நடத்தி உற்பத்தியைப் பெருக்கி பண்டங்களை விற்று லாபம் பெறுவதுமான முறை வளர்ந்தது. இதனால் ஓரிடத்தில் ஏராளமானவர்கள் கூடி தொழில் செய்யும் முறையும் அந்தத் தொழிலின் லாபம் தங்களுக்குக் கிடைக்கும் கூலி போக மீதமிருக்கும் பகுதி வேறிடம் போவதும் தொழிலாளர்களுக்கு விளங்க லாயிற்று.
முரண்பாடு
ஒரு புறம் வேலையில்லாத் தொழிலாளர்கள் தொகை தொகையாக இருப்பர். மற்றோர் புறம் தேவைக் கேற்ற அளவு சரக்கு கிடைக்காததால் தவிக்கும் மக்கள் இருப்பர். முதலாளியின் லாப நோக்கம் சில சமயம் சரக்குகளைத் தேக்கிவைக்கும், வேறு சில சமயங்களிலே சரக்குகளை மார்க்கெட்டை விட்டு விரட்டியடிக்கும் அவசியமானது : ஆகவே, செய்யப்பட வேண்டியது என்பதல்ல முதலாளித்வம்; லாபகரமானது, ஆகையால் செய்யப்படவேண்டியது என்பதே தத்துவம். 'மார்க்கெட் நிலவரத்துக்குத் தக்க படி முதலாளியின் டெலிபோன் பேச்சு அமையும். அந்தப் பேச்சின் விளைவாக எவ்வளவோ தொழிலாளரின் வாழ்வு சிதையும். சிதையும் வாழ்வை செம்மைப் படுத்துவது முதலாளித்வ முறையல்ல. ஆகையால் தான் முதலாளித்வ முறையுள்ள இடங்களிலே பண்டங்களின் தேக்கமிருந்தும் பட்டினி ஒருபுற மிருக்கிறது. பணம் சில இடங்களிலே குவிந்திருந்தும் பராரிகளின் பட்டியல் வளருகிறது தொழில் அபிவிருத்திக்கு வழியும் தேவையுமிருந்தும் வேலையில்லதார் உள்னர். முதலாளித்வம் முரண்பாடு நிறைந்த முகாம்!
உலக வரலாறு
வளமை பினருகே வறுமை; பலத்தினருகே பயம். இது ஏன்? இந்தக் கேள்வி சாதாரண மக்களையல்ல. கருத்துலகின் காவலர்களாக விளங்கியவர்கள் அனைவரையும் கதிகலங்க அடித்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளேட்டோ என்னும் கிரேக்க தத்துவ ஞானியின் காலத்திலிருந்து கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பித்த மார்க்ஸ் காலத்திற்கு முன்வரை மக்களின் நல்வாழ்வுக்கான ஆராய்ச்சிகளனைத்தும் நம்பிக்கையான முடிவை அளிக்கவில்லை. பெரும்பகுதி வெறும் சொல்லாராய்ச்சி-யாகவும், வேதாந்த விசாரணையாகவும், சமாதானத்தை யளிக்காத சமரச கீதமாகவும், நாட்டுக்குதவாத ஏட்டுரையாகவும் முடிந்தது.
இருட்டறையில் இன்னலுற்ற மக்கள் இன்பங்காண விழைந்த ஒவ்வொரு சமயமும் ஒடுக்கப்பட்டனர். ஆண்டை - அடிமை, உயர்ந்தவன் - தாழ்ந்தவன். மதகுரு - பக்தன். மிராசு - உழவன். பிரபு - பணியாள், முதலாளி - தொழிலாளி. இவர்களிடையே ஏற்பட்ட வர்க்கப் பேராட்டங்களே உலக வரலாறாகும்.
நம்பிக்கை ஒளி
இந்தப் போராட்டங்களின் வரலாற்றை நன்றாக அலசிப் பார்த்தவர் மார்க்ஸ். பிரபுக்கள் - முதலாளிகளின் கொடுங்க கோன்மை வெகு நாளைக்கு நிலைக்காதென்பதையும், உழைப்பாளிகளின் முயற்சியால் தான் உழைப்பாளர் உலகு மலரும் என்பதையும் அவர் எடுத்துக் காட்டினார். அவருடைய தெளிந்த முடிவு ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களை ஒன்று சேர்த்தது. நலிவுற்ற உள்ளத்தை புலியுளமாக்கியது. கசங்கிய கண்கள் கனலைக் கக்கின. மேதினி விழித்தது. மேதினம் பூத்தது.
ஏழை என்றும் பணக்காரன் என்றும் இருவர்க்கம் இருப்பது பொதுவாகவே சமூகத்துக்குக் கேடு, ஆபத்து என்று எடுத்துக்கூறி, பாட்டாளியின் துயரைத் துடைக்கப் பாடுபட்டார்கள். சமதர்ம நோக்குடையத் தலைவர்கள். அந்த அரும்பணியின் ஆரம்பவேலை, தொழிலாளரின் உழைப்பு. காலம் அளவு கட்டு திட்டம் இன்றி முதலாளிகளால் சூறையாடப்படுவது தடுக்கப்படவேண்டும் என்று துவக்கப்பட்ட முதல் முயற்சி மேதினம்.
முதலாளித்வ முறை
முதலாளித்வ முறை லாபம் கிடைக்கும் வரையில் வேலை தரும். தொழிலாளர்களுக்கு. லாபம் இல்லையேல் வேலையுமில்லை என்று கூறிவிடும். பால் தரும் வரையில் பசு தொழுவத்திலே யிருக்கிறது. பால் தருவது தீர்ந்ததும் கிராமத்துக்கு துரத்தப்படுகிறதே அதுபோல. நாட்டு வளம். இயற்கை சக்தி. பாட்டாளி உழைப்பு யாவும் சேர்ந்து இந்த முதலாளித்வத்துக்கு பெருவாரியான லாபம் தருகிறது. விஞ்ஞானத்தை விலைக்கு வாங்கி தொழிலாளியைக் கொண்டு மட்டுமல்லாமல் விஞ்ஞானத்தையும் துணை கொண்டு லாபந் தேடக் கிளம்பிவிட்டனர் முதலாளிகள்.
சிலருடைய தயாள குணத்தினால் ஒரு பெரிய கூட்டத்தில் வளர்ந்து வரும் தொல்லைகளைப் போக்கிவிட முடியாது. இதனால் தொழிலாளர்களின் வாழ்க்கையிலே வறுமை கொட்டலாயிற்று. வாட்டம் அதிகரித்தது. அதே போது தொழில் முறை மாறி பண்ட உற்பத்தி அதிகரித்து செல்வம் கொழித்ததால் வாழ்க்கை வசதிகள் அதிகமாகி நாகரீகம் மேலோங்கி விட்டது.
சிறிய நாடுகளில்
முதலாளிகள் இன்றைய உலகில் பெரிய நாடுகளில் தான் இருக்கிறார்கள். சிறிய நாடுகளில் முதலாளிகள் இல்லை.
நார்வே நாட்டிலே முதலாளிகள் இருக்கிறார்களா? இல்லை. கிரீஸில் முதலாளிகள் உள்ளனரா? ஸ்வீடனில் முதலாளிகள் உள்ளனரா? ஸ்விட்ஜர்லாந்தில் முதலாளிகளைப் பார்க்க முடியுமா? ஸ்பெயினில் முதலாளிகள் வாழ்கிறார்களா? பாரீஸில் பார்க்க முடியுமா முதலாளிகளை? அமெரிக்காவில் முதலாளியிருக்கிறான். அடுத்தபடி இந்தியாவில் வளர்கிறான். நான் குறிப்பிட்ட சிறிய நாடுகளில் முதலாளிகள் ஏன் இல்லை தெரியுமா? அந்த நாடு இந்தியாவைப்போல் மிகப் பெரியதல்ல. அந்த நாட்டிலிருக்கும் வியாபாரி ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோடுகளுக்கு ’இடை'யேதான் வியாபாரம் செய்யவேண்டும் எனவே அவன் பெரிய முதலாளியாவ தில்லை.
தேசியமயமாக்கு
டாட்டாக்களும் பிர்லாக்களும், பஜாஜிகளும், டால்மியாக்களும் இந்த பெருத்த லாபந்தரும் தொழிற்சாலைகளை நடத்துவதினாலேயேதான் உண்டாகின்றனர். முதலாளித்வம் இந்த முறையினாலே உண்டாகிறது. தொழிலாளர் துயரம் வளருவதற்கு இதுவே காரணம். எனவே பெருத்த லாபந் தரக்கூடியதும், பெரிய தொகையான முதலும், பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வைப் பொறுத்தும் இருக்கும். இந்த மூலாதாரமான தொழில்களை தனிப் பட்டவர்களின் உரிமைகளாக விட்டால் அதன் மூலம் முதலாளித்வம் வளர்ந்து பொருளாதார பேதம் மிகுந்து போகும் நிலை வரக்-கூடுமாகையால் இவைகளை சர்க்காரே நடத்துவது சாலச் சிறந்ததாகும். இவை மூலம் கிடைக்கக் கூடிய லாபம் நாட்டு மக்களுக்கே வந்து சேரும்! வாழ்க்கைத் தரம் உயரும்.
அபாயக் குறி
ஏழ்மையைக் கண்டு உலகம் இகழ்கிறது. வெறுக்கிறது என்பது தெரிந்து தன் ஏழ்மையை மறைக்கப் பார்க்கும் ஏழ்மையின் நிலைமை மிக மிக வேதனை நிரம்பியது. இடிந்த வீட்டுக்கு மண் பூச்சு. கிழிந்த கோட்டுக்கு ஒட்டு வேலை. சரிந்த சுவருக்கு முட்டுக் கொடுத்தல் போன்றவைகளை செய்யும்போது அந்த ஏழையின் நிலைமையைக் காண்போர் இரத்தக் கண்ணீர்விட வேண்டி நேரிடும். இருக்கும் ஏழ்மையை விளக்கமாகப் பலர் அறியும்படி தெரிவித்து, அதன் மூலம் உலகின் கருணை தன் பக்கம் வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடையும் ஏழை பரிதாபத்துக்குரிய சோக சித்திரம். ஏழை பல ரகம், நிலைக்கு ஏற்றபடி அவனைக் கொடியவன். முரடன், முட்டாள், வேஷக்காரன், கபடன், போக்கிரி என்று பலவாறு ஏசிப்பேசும் உலகம் அவனுடைய அப்போதையை நடவடிக்கையை கவனிக்கிறதெயொழிய, ஏன் அவன் முரடனானான். ஏன் கப்படனானான். முட்டாளாகவேண்டிய காரணமென்ன? என்று யோசிப்பதில்லை.
இப்படிப்பட்ட ஏழைகளின் ரகங்களிலே எந்த ரகத்திலேயும் தாங்கள் தள்ளப்படாமலிருக்க வேண்டுமே என்ற கவலை. திகில் மற்றவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. ஆகவே அவர்கள் தங்கள் தங்களின் நிலைமை கெடாதபடி பார்த்துக் கொள்ளும் சுயகாரியத்திலேயே கண்ணுங் கருத்துமாக இருந்து விடுகின்றனர். ஏழை அழுகிறான். ஏழையின் தொகை வளருகிறது. ஏழையின் ரகங்கள் வளருகின்றன. கவனிப்பார் இல்லை. சமுதாயத் திலே ஏழைகளின் தொகை பெருகுவது. படகுக்கு அடியிலே ஏற்படும் வெடிப்புகள் என்பதை உணருவதில்லை ஓடத்திற்கு அலங்காரப் பூச்சுத் தேடுகிறார்கள். உல்லாசப் பயணத்துக்கு. நான் நீ என்று முந்திக் கொள்கிறார்கள். அவர்கள் அறியவில்லை ஒடத்துக்கு அடியிலே ஏற்படும் ஓட்டைகளை!
ஏழை என்ற ஒரு சொல்லிலே அடங்கி இருக்கும் ஆபத்தை உணராமலேயே. சமூகத்தின் காவலர்கள் என்ற நிலை பெற்றவர்கள் தத்தம் காரியத்தையே கவனித்துக் கொண்டு போகின்றனர்.
ஏழை. இன்று அழுகிறான் ! இன்னும் கொஞ்ச நாட்களில் அவன் கண்கள் வறண்டுவிடும். நீர் வராது!
ஏழை சிரிக்கப்போகிறான். தன் சகாக்களின் தொகை பெருகியது கண்டு! பலரகமான ஏழைகள் இருப்பது கண்டு அதைக் கண்டு சீமான்கள். பயந்து பதுங்குவது கண்டு, ஊரெங்கும் ஏழை. பெருவாரியாக ஏழைகள், இடையே சிறு கூட்டம் செல்வான்கள் என்றால் அதன் பொருள் என்ன? இன்று உணர மறுக்கின்றார்கள் உடைமைக்காரர்கள். பிரபுக்களைச் சூழ்ந்து கொண்டு பட்டினிப் பட்டாளம் நிற்கிறது என்றுதான் அதற்குப் பொருள். பிரபுவின் அலங்காரத்தை ஏழையின் அலங்கோலம் கேலி செய்யும், பிரபுவின் பன்னீர் வாடையை ஏழ்மையின் துர்நாற்றம் இருக்கும் இடம் தெரியாமல் அடித்துவிடும்! இல்லாதார் தொகை ஏறுகிறது.
இதன் உண்மையான கருத்து, சமூகம் எனும் மாளிகையின் சுற்றுச் சுவர் சரிகிறது என்பதுதான் ! பூந்தோட்டத்தை நோக்கிப் புயல் வருகிறது என்று பொருள்.
கடமை என்ன?
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது முதலாளி இலாபம் குறைகிறது என்று குறை கூறுகிறான். சார்க்கார் அமைதி கெடுகிறது என்று கூறுகிறது. தனம் படைத்த தலைவர்கள் பொதுமக்களுக்கு இடைஞ்சல் என்று பேசுகின்றனர். ஆனால் தொழிலாளர்களின் வீட்டிலே துயரம், பட்டினி சூழ்ந்து கொள்கிறது. இதனைக் கவனிக்க மனம் இல்லை. உரிமைக்காக உணவுக்காகப் போராடும் தொழிலாளியை லாபத்துக்காகப் பாடுபடும் முதலாளி அடக்கும் போது பொதுமக்கள் கடமை என்ன? தொழி லாளர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களின் உழைப்பே சமூகத்தின் உயிர் நாடி. அவர்களின் வேதனை நமது வேதனை.
உரிமை எது?
மக்கள் தங்கள் உபயோகத்துக்காக விலை கொடுத்து வாங்கும் பண்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை பங்கு போட்டுக் கொள்வதிலே இருசாராருக்கு மிடையில் அதாவது முதலாளி-தொழிலாளி ஆகிய இருசாராருக்கு மிடையே ஏற்படும் சச்சரவு இது - நமது பணம் - நாம் கொடுத்த தொகை - ஆகவே அது பற்றிய பிரிவினைத் தகராறு வருகிறபோது நமக்கும் அந்தப் பிரச்னையிலே சம்பந்தம் கொள்ள, அபிப்பிராயம் கூற, சிக்கலைப் போக்க முழு உரிமையிருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட வேண்டும் பொது மக்கள் மனதிலே. இரு சாரார் கூறும் வாதங்களில் யார் கூறுவது நியாயம் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும், சீர்தூக்கிப் பார்த்து நியாயம் என்று மனதிலே படுவதை தைரியமாக எடுத்துக் கூறவேண்டும்.
பண்டம் வாங்குபவன் நான், பணம் கொடுப்பவன் நான். நான் கொடுத்த பணத்தை யார் யார் எந்தெந்த அளவு எடுத்துக் கொள்வது என்று நியாயம் கூற நான் வருவேன். எனக்கு அந்த உரிமை உண்டு. ஏனெனில் எந்தப் பணத்தில் பங்கு விகிதத்துக்காக சச்சரவு வந்ததோ அந்தப் பணத்தைத் தந்தவனே நான் என்று கூறும் உரிமையை பொதுமக்கள் மறக்கக் கூடாது. இந்த உரிமையை பொது மக்கள் உணரவும் உணர்ந்து நியாயம் கூறவும் தகராறு களைத் தீர்க்கவும் முன் வருமாறு பொது மக்களை அழைக்கும் பணியினை திராவிடர் இயக்கம் செய்து வருகிறது.
மக்கள் மன்றம்
தொழிலாளருக்கும் பொது மக்களுக்குமிடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் அரிய காரியம் இது அந்தக் காரியத்தைச் செய்ய வேறு கட்சிகளும் இல்லை. தொழிலாளர் கட்சி. முதலாளி கட்சி என்று இரண்டு கிளம்பி மோதிக் கொள்வதும் மோதுதலின் போது ஒழுங்கையும் சட்டத்தையும் அமைதியையும் நிலை நாட்டு வது எங்கள் கட்சி என்று கூறிக் கொண்டு சர்க்கார் கிளம்புவதுந்தான் காண்கிறோம், பொதுமக்கள் முன்பு கொண்டு வரப்படவேண்டய பிரச்னை இது என்பதும் கவனிக்கப்படுவதில்லை. பொது மக்கள் மன்றத்தின் முன்பு வழகுக்ரைத்து நீதி வழங்கும்படி கேட்கும் காரியத்தை திராவிடர் இயக்கம் செய்வதன் மூலம் பொது மக்களுக்கும் இதாழிலாளர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துகிறது.
போரும் பொதுநலமும்
தொழிலாளி வெறும் உழைப்பாளியாக மட்டுமே இருக்கும் நிலைமாறி அவன் தொழிற்சாலைகளிலே பங்காளியுமாக்கப்பட்டால் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும். பொதுநலம் பாட்டாளி ஆட்சியிலேதான் மலர முடியும். அந்த ஆட்சியின் வெற்றியினால் மட்டுமே உழைப்பு ஊரழிக்கும் காரியமாகாது தடுக்கவும், விஞ்ஞானம் விபரீதத்தைப் பொழியாது நன்மைகள் பயக்கக் கூடியதாக அமையவும் வழி பிறக்கும்.
போர் என்றால் ரத்தம் என்று களத்திலே உள்ளவர் கூறுவர். நாட்டிலே உள்ள ஏழைகள் போர் என்றால் அளவு அரிசியும் வேறு பல அவதியும் என்று கூறுவர். ஆனால் முதலாளிக்கோ லட்சக்கணக்கில் லாபம். நம்பிக்கை ஒளி, தொழிலுக்கு வளர்ச்சி.
நல்லகதி நாடுவோரே
கோடி கோடியாக லாபம் குவிந்தாலும் முதலாளிமார்கள் குமுறும் தொழிலாளியிடம் குளிர்ந்த முகத்துடன் நடக்க முன் வருவதில்லை. கோகில வாணிகளுக்குக் கொட்டித் தரவும், கோலாகலமான வாழ்க்கை நடத்தவும், கோயில் கும்பாபிஷேக செலவு செய்யவும் மனம் வருகிறதே தவிர தொழிலாளிகளுக்கு போனஸ் தருவதற்குக்கூட மனம் சுலபத்தில் இடந்தருவதில்லை. ஏழையின் வயிற்றிலடித்து திரட்டிய பணத்தை உருட்டி வைத்துக் கொண்டிருக்கும் செல்வந்தர்கள் பணத்தை பகுத்தறிவுக்கோ பயன் தரும் பணிக்கோ செலவிடும் திருந்திய மனம் உடையவர்களல்ல. போக போக்கியத்துக்கும் போகிற கதி நல்லதாக இருக்கவேண்டுமே என்பதற்காக மட்டுமே பணத்தைச் செலவிடுவார்கள்.
கூட்டணி தேவை
தொழிலாளியின் வாழ்வு முதலாளியின் நாக்கு நுனியில் இருந்து வந்தது. வேலையில்லை என்றால் இல்லைதான். ஐயா சொன்னால் சொன்னதுதான் ! இந்த முறை சங்க ரீதியாக இருக்கும் தொழில் ஸ்தாபனங்களில் இருப்ப தென்றால் ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்களின் ஜீவாதார உரிமை பாழ்படும்.
குறைகளை உணர்ந்து அவைகளுக்கு காரணம் யாவை என்பதற்குரிய விவாதத்திலே ஈடுபட்டு, உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்து, பிறகு அவைகளைப் போக்கிக்கொள்ள முயற்சித்துப் பார்த்து முடியாது போன பிறகு தொழிலாளர்கள் ஓர் ஸ்தாபன ரீதியாக தமது குறைகளை எடுத்துக் கூறித்தான் பரிகாரம் தேடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். தங்கள் வாழ்க்கை முறையும் தொழில் முறைபும் தங்களுக்குள்ள வாழ்க்கை வசதிக் குறைகளும் எல்லாத் தொழிலாளர்களுக்கும் ஒரே விதமானதாக இருக்கக் கண்டு அனைவருக்கும் உள்ளது ஒரேவகை வியாதி என்று தெரிவதால் அனைவருக்கும் ஒரே வகை மருந்து தேடவேண்டும் என்ற முடிவு செய்து ஸ்தாபனங்களை ஏற்படுத்தினர். இந்தப் பொதுத்தன்மை கெடாதிருக்கு மட்டும் ஸ்தாபனம் அவசியமானது மட்டுமல்ல. பயனுள்ள துமாகும்.
ஐக்யம் குலைவதேன்?
தொழில் ஸ்தாபனங்களில் ஐக்யமும் பலமும் கெடா திருக்க வேண்டுமானால் ஐன்னல் கம்பியையும் ஜாக்கிரதையுடன் கவனிக்கும் மாளிகைக் காரர்போல ஸ்தாபனத்தின் சகல உறுப்பினரையும் கவனித்து கட்டுக்கோப்பு கெடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையை கவனியாததால் தொழிலாளர் ஸ்தாபனங்களிலே ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டு அதன் விளைவாக அதனுடைய போரிடும் சக்தி சிதறிவிட்டதுண்டு.
தாங்கும் சக்தி தாக்கும் சக்தி இரண்டும் ஒருசேர ஒரு ஸ்தாபனத்துக்குத் தேவை. அதற்கு ஏற்ற வகையிலே அந்த அமைப்பு இருக்கவேண்டும். இருக்க வேண்டு மானால் இருவகை சக்திகளையும் திரட்டவும் திரட்டியதை உபயோகிக்கவும் ஏற்ப தகுதி படைத்தவர்கள் ஸ்தாபனத் தில் இருக்க வேண்டும்.
அடிப்படை வேண்டும்
தொழிலாளர் ஸ்தாபனம் மனக்குறையின் மீதும், அதனால் இயற்கையாக ஏற்படக்கூடிய ஆத்திரத்தின் மீதும் ஏறட்டுவிடுவதுண்டு. இவை சரியான அடிப்படை யல்ல. வாழ்வதற்கு உழைக்கிறோம். ஆனால் வாழ்வு இல்லை! உழைக்காது வாழ்கிறார்கள். அந்த வாழ்வுக்குத் தங்கு தடையில்லை வாழ்வோம் அனைவரும், வாழ உழைப்போம். ஒருவன் உழைப்பின் மீது மற்றொருவரின் வாழ்வு அமைக் கப்படும் அநீதியை ஒழிப்போம்' என்ற அடிப்படைகளின் மீது கட்டப்பட்டுள்ள தொழில் ஸ்தாபனங்கள், இந்த உன்னதமான லட்சியம் ஈடேறவேண்டும் என்ற பெரு நோக்கத்தை உறுதுணையாகக் கொண்டு. ஸ்தாபனத்தின் நடைமுறையில் உறுப்பினர்களுக்குள் உள்ளக் கொதிப்போ கசப்போ ஏற்படாத வகையிலும், இன்னார் செய்கிற காரியம் இன்னார்க்கு சரியென்ற நிலை ஏற்படாத வகையிலும் ஸ்தாபனத்தின் மூலக் கொள்கைக்கு ஊறு நேரிடாத முறையில் நடத்திச் சென்றால் ஐக்கியம் கெடாது. பலனும் நிச்சயம் விளையும்.
கம்யூனிஸ்ட் பூச்சாண்டி
தொழிலாளர் ஸ்தாபனத்தைத் திறம்பட நடத்தி தொழிலாளரின் அன்புக்குப் பாத்திரமாக வேண்டுமானால். அவர்களின் குறைகளை நீக்கியாக வேண்டும்.... அந்தக் குறைகளை ஆராயும் எவரும், அவைகளை நீக்கவேண்டு பென்று பாடுபட முயற்சிக்கும் எவரும், அவர்களுக்காக வாதாட முன் வருபவர் யாரும், அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், தெரிந்தோ தெரியாமலோ கம்யூனிஸ்ட்டு ஆகித் தீரவேண்டும் - இல்லையேல் தொழிலாளர்களின் தோழமையை இழந்து தீரவேண்டி நேரிடும். போலிச் சங்கங்களை வைத்துக்கொண்டு முதலாளிக்கு நண்பனாக இருந்து கொண்டு தன் சுயநல சொக்கட்டான் ஆட்டத்துக்குத் தொழிலாளர்களைப் 'பாய்ச்சிகை’ யாக்கி கொள்ளலாம் என்ற முறையில் சிலர் கிளம்பினாலும் கொஞ்ச நாளே அந்தக் கூத்து நடைபெற்ற பிறகு கொட்டகை காலியாகும்.
மனித உரிமையான ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களான கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, கிளர்ச்சியுரிமை ஆகியவற்றோடு தொழிலாளருக்கு வேலை நிறுத்த உரிமையும் நிச்சயம் தேவை. ஆனால் அது இரு பக்கம் கூர் உள்ளது. அந்த சக்தியைப் பெறுவதற்காக எண்ணற்ற தொழிலாளர்கள் தங்கள் ரத்தத்தைச் சிந்தி யுள்ளனர்.
கூலி உயர்வு ஏன்?
கோடி கோடியாக இலாபமடித்த முதலாளியை நாடி நரம்பு முறியப்பாடுபடும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்கிறார்கள் என்றால் தொழிலாளர்கள் தங்கள் மாளிகையிலே உள்ள மூன்றாவது மாடிக்குப் பளிங்குக் கல் அமைக்கப் பணம் கேட்கவில்லை. குடிசையில் படுத்து உறங்கும் போது பசியால் சிறுகுடலைப் பெருங்குடல் தின்றுவிடாதபடி தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே கூலி கொஞ்சம் கூட்டிக் கொடுக்கும்படி கேட்கிறார்கள்.
தொழிலாளர் வாழ்க்கையிலே இப்படி வறுமைத்தேள் கொட்டும்படி செய்துவிட்டுப் பிறகு அவர்கள் கட்டுக்கு அடங்குவதில்லை. வேலை நிறுத்தம் செய்து தொழில் பெருக்கத்தை கெடுக்கிறார்கள் - கலவரம் செய்கிறார்கள் - என்று குறை கூறுவதும் சரியாகுமா?
எங்கும் கிளர்ச்சி
ஆலைத் தோழர்கள் முதற்கொண்டு அரசாங்க உத்தியோகஸ்தர் வரையிலே சம்பள உயர்வுக்காகவும், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் தமக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், கிளர்ச்சி செய்து, கஷ்ட நஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு, சிற்சில சமயங்களில் தோல்வி அடைந்தபோதிலும், பொதுவாக ஓரளவு வெற்றி பெற்று வருகிறார்கள். பொருளாதார முறையிலே காணப்படும் பேதத்தின் பலனாக உத்தியோக மண்டலங்களில் ஒருசிலர் உச்சியில் அமர்ந்துகொண்டு, கொழுத்த சம்பளம் வாங்குகின்றனர். அவர்கள் பிறப்பிக்கும் கட்டளைகளை அமுலுக்குக் கொண்டுவர உழைக்கும் எண்ணற்ற சிறு உத்தியோகஸ்தர்கள் குறைந்த சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு. குடும்ப பாரம் தாங்கமாட்டாமல் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
வேலை நிறுத்தம்
எவ்வளவோ நாட்களுக்கு சகித்துக்கொண்டிருந்து விட்டு தொல்லை தாங்கமுடியாமல் போய் விட்டதால் கெஞ்சிப் பயன் ஏற்படாமல் போனதால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை துவக்கியிருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் உணரவேண்டும். எவ்வளவு பொறுக்க முடியுமோ அவ்வளவையும் பொறுத்துப் பார்த்து கடைசியில் வருகிற கஷ்டம் வரட்டும். அனுபவிப்போம். வேலை நிறுத்தம் செய்தே தீரவேண்டும்' என்று தீர்மானிக்கிறார்கள். வேலை நிறுத்தம் என்று தீர்மானித்தவுடனே தொழிலாளர்களின் மனக்கண் முன் ஆத்திரமடைந்து முதலாளி, சீறிடும் சர்க்கார். சட்டத்துக்காக தடியடி தர முன்வரும் அதிகாரவர்க்கம் ஆகியவர்கள் தோன்றாம லில்லை. பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், கலகங்கள் - தடியடி, சிறைப்படுதல் போன்ற காட்சிகள் அவர்கள் மணக்கண் முன் தோன்றாமலுமில்லை. அணைந்த அடுப்பு அழுகின்ற மனைவி, அலைகின்ற குழந்தைகள் -- இந்தக் காட்சிகளும் தெரிந்தும் வேலை நிறுத்தம் செய்கின்றார்கள் !
வீம்பு போராட்டமல்ல
வேலை நிறுத்தம் தொழிலாளியின் வீம்பு போராட்டமல்ல - ரத்தக் கண்ணீர் ! அவன் வேதனைப் புயல் விம்முதலின் எதிரொலி! வீட்டுக்குள்ளே சென்றால் பசிவேதனை. வெளியே சென்றால் அடக்குமுறை அச்சம், வீட்டுக்குள்ளே தரித்திரம். வெளியே அடக்குமுறை தர்பார் என்ற நிலை நாட்டில்! எனவே நெருப்போடு விளையாட தொழிலாளி பொறுப்பற்றவனல்ல. முதலாளியின் முகத்திலே இருக்கும் ஜொலிப்பும் தொழிலாளியின் வாழ்க்கையிலே காணப்படும் தவிப்பும் கண்டால் போதும் வேலை நிறுத்தத்தின் அவசியத்தை உணர.
அந்த சக்தி
முன்பெல்லாம் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்தால், வேலை நிறுத்தம் ஏற்பட்டால், சட்டம் சமாதானம் ஒழுங்கு அமைதி என்ற காரணம் கூறிக்கொண்டு, அதிகார வர்க்கம் அமுல் நடத்தும். 144 செக்ஷன் பிறக்கும். தடியடி துப்பாக்கிப் பிரயோகம். சிறை முதலியன நடைபெறும். தொழலாளர்கள் இவ்வளவு தாக்குதல்தளை சமாளித்தாக வேண்டும் - முடிந்தது. வெற்றிகரமாகவே முன்னேறிச் சென்றனர். அவர்கள் மீது சட்டம் சீறியபோது. அடக்கு முறை வீசப்பட்டபோது, அவர்களிடம் அன்பு காட்டவும் ஆதரவு தரவும் அவர்களுக்காகப் பரிந்து பேசவும் பொது மக்கள் முன் வந்தனர். எனவே அந்த பலத்தைத் துணைக் கொண்டு, அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் சக்தி தொழிலாளர்களுக்கு இருந்தது. பட்டினிக் கொடுஞ் சிறையில் இருக்க முடியாது என்று பரணி பாடிக்கொண்டு எழுந்தனர் பாட்டாளி மக்கள். ஆதரவு திரட்டித்தந்தனர் - அனுதாபப்பட்டனர்.
இரட்டைக்குழல் துப்பாக்கி
கத்தி வீச்சைத் தடுக்கக் கேடயம் இருந்தது ! குண்டு பாய்ந்து செல்ல முடியாத கவசம் கிடைத்தது. போரிடுவதற்குத் தேவையான ஆர்வம் தருவதற்கு வீரரசம் தரப்பட்டது. எனவே அவர்களால், தாக்குதல்களைச் சமாளிக்க முடியும். இப்போது நிலைமை வேறு. மாறிவிட் படது விபரீதமான முறையில். வேதனையான விளைவுகள் ஏற்படும் முறையிலே. இப்போழுது தொழிலாளர்கள் மீது இரட்டைக்குழல் துப்பாக்கி நீட்டப்படுகிறது தொழிலாளர் இருதயத்தின் மீது.
அன்றும் இன்றும்
தொழிலாளர்கள் மீது அடக்குமுறை ஒரு பக்கமும் பிரச்சாரம் மறுபக்கமும் வீசப்படுகிறது. அதாவது அடக்கு முறை சக்தி, அறிவிக்கும் சக்தி இரண்டும் கொண்டு சர்க்கார் தாக்கத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் இந்த இரட்டைக்குழல் துப்பாக்கி கிடையாது. போலீசைக் கொண்டு அடக்குவர் பாட்டாளிகளின் கிளர்ச்சியை. ஆனால் உடனே பிரச்சார பீரங்கிகள் ழுழங்கத் தொடங்கும் ஆட்சியாளரை நோக்கி இந்த வசதி இன்று தொழிலாளருக்கு இல்லை. இப்போது இரண்டு வகையான ஆயுதங்களும், போலீஸ் - பிரசாரம் இரண்டும், ஒரே கரத்தில் உள்ளன.
நாஜிசப் பாதையில்
இத்தகைய இரட்டைக் குழல் துப்பாக்கியின் துணை கொண்டு நடத்தப்படும் ஆட்சிக்குத்தான், நாஜிசம் என்றும் பெயர்! அதன் தாக்குதலை பாட்டாளி உலகு தாங்க வேண்டும் - நிச்சயமாகத் தாங்கமுடியும் என்று மட்டுமல்ல இறுதியில் இரட்டைக்குழல் துப்பாக்கியின் குண்டுகள் தீர்ந்துபோய் களத்திலே அதனைப் போட்டு விட்டு ஓடுமளவுக்கு நாஜிசத்தைப் பாட்டாளி வர்க்கம் முறியடிக்கத்தான் போகிறது.
பிரச்சாரபலம், அதிகாரபலம் இரண்டும் இருக்கும் காரணத்தாலேதான் வேலை நிறுத்தங்கள் ஒவ்வொன்றின் போதும் ஆளவந்தார்கள் முதலாளிகளின் முன்னோடும் பிள்ளைகளாகி பாட்டாளி மக்களை அடக்குகிறார்கள். தொழிலாளிக்குத் தடியடி. கண்ணீர் குண்டு. துப்பாக்கிப் பிரயோகம் சகலமும் நடக்கிறது. ஜனநாயக உணர்ச்சியை அடக்குமுறை கொண்டு ஒழித்து விட முடியாது. அந்த ஜனநாயக உணர்ச்சி ஏற்படவேண்டுமானால். பலப்பட வேண்டுமானால். நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் வேண்டும். பழைமையின் பிடிப்பிலிருந்து விலகும் நோக்கம் இருக்கவேண்டும்.
--------------
முற்றும்
This file was last updated n 4 May 2020.
Feel free to send the corrections to the webmaster.