முத்துச் சிப்பி (நாவல்)
சரோஜா ராமமூர்த்தி
muttuccippi (novel)
by carOja rAmamUrti (Saroja Ramamurthy)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
முத்துச் சிப்பி (நாவல்)
சரோஜா ராமமூர்த்தி
Source:
முத்துச் சிப்பி (நாவல்)
சரோஜா ராமமூர்த்தி
சமுதாயம் பப்ளிகேஷன்ஸ்
பிரைவேட் லிமிடெட் தியாகராய நகர் - சென்னை -17.
சமுதாயம் வெளியீடு : 6
முதற்பதிப்பு அக்டோபர். 1986
விலை ரூ.21-00
சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடட்,
தியாகராயநகர் சென்னை .17.
MUTHU CHIPPI
Novel By Saroja Ramamurthy
Published by :
S. Sankaran for Samuthayam Publications , T. Nagar, Madras-,17.
Printed at Vettri Achagam, Madras-14.
Wrapper Printed at Eskay Art Printers, Madras-5
---------
பதிப்புரை
சொந்த வாழ்வில் ஏற்படும் சோகங்களால் பலரும் சோர்ந்து விடுகிறார்கள். வீணாகி விட்ட வாழ்வையெண்ணிக் குமைந்து கொண்டிருப்பதால் தமக்கும் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் - ஏன் பூமிக்குமே பாரமாகத் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டு அல்லல் படுகிறார்கள்.
கை நழுவிப் போய்விட்ட ஒன்றை எண்ணிக் கலங்கிக் கொண்டிராமல் வாழும் காலம் வரை பிறர் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு விட்டால் பிறவி-யெடுத்ததற்கு ஓர் அர்த்தம் தானாகவே ஏற்பட்டு விடும். அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டால் இன்ப நிலை தானே வந்தெய்தும் என்பது ஆன்றோர் வாக்கு.
பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் படைக்கப் பட்டிருக்கிறார்கள். அதை உணர்ந்து செயல் பட்டால் ஒவ்வொருவரும் தம் வாழ்வைப் பயனுள்ளதாகச் செய்து கொள்ள முடியும்.
நச்சுக் கருத்துக்கள் நாவல்கள் மூலம் பரவலாக விதைக்கப்பட்டு வரும் இந்நாளில் நல்ல பண்புகளை அறியச் செய்யவும் எழுத்தைப் பயன்படுத்த முடியும் என்பதற்கு இந்நாவல் ஓர் எடுத்துக்காட்டு.
ஆசிரியர் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். சமூகத்துக்குப் பயன்படும் கருத்துள்ள கதைகளைப் பல ஆண்டுகளாக எழுதி வருபவர். முத்துச் சிப்பி அவருக்குப் பெருமை சேர்க்கும் படைப்புகளில் ஒன்று. இதனை எங்கள் பதிப்பக வாயிலாக வெளியிட அனுமதி அளித்த அவருக்கு நன்றி.
எஸ். சங்கரன், பதிப்பாசிரியர்
------------
முத்துச் சிப்பி -முதல் பாகம்
1.1. விடி வெள்ளி
பசுமலைக் கிராமம் பனிப் போர்வை போர்த்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது கார்த்திகை மாதத்தின் கடைசி. எந்த நம்பிக்கையும் ஆசையும் அவளைத் தூண்டுகோல் போட்டு அந்தக் கிராமத்துக்கு இழுத்து வந்ததோ, அந்த நம்பிக்கை வறண்டு விட்டது. பவானி பெருமூச்சு விட்டபடி படுக்கையில் புரண்டு படுத்தாள். விடிய இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தது. விடிந்து தான் அவள் என்ன புதுமையை அடையப் போகிறாள்? அண்மையில் படுத்திருந்த அவள் மகன் பாலு. நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அந்தப் பச்சிளம் முகத்தில் வருங்காலத்தைந் பற்றிய சிந்தனைகளையோ, கவலைகளையோ காண முடியாது தெளிந்த நீரைப் போலவும் நிர்மலமான ஆகாயத்தைப் போலவும் அம் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.
பவானி நன்றாக விழித்துக் கொண்டாள். அறையின் ஜன்னல் வழியாக வெளியே தெரியும் ஆகாயத்தைக் கவனித்தாள். சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து ஓய்ந்த வான வெளியில் திட்டுத் திட்டாக மேகங்கள் சிதறிக் கிடந்தன. அவை வான வெளியில் மெதுவாக தளர்ந்து செல்வதைக் கவனித்த பவானிக்கு மனிதனின் ஆசைகளும், எண்ணங்களும் முடிவு தெரியாத ஒரு நோக்கதுடன் ஓடுவதைப்போல இருந்தன. மேகக் கூட்டங்கள் எங்கேதான் போகின்றன? கடுங்கோடை...க்கு அப்புறம் வறண்டுபோன வயல்களுக்கும், நீர் நிலைகளுக்கும் மரையைப் பொழிந்துவிட்டு அவை மீண்டும் பிரயாணத்தைத் தொடங்குகின்றன. ஆனால், தன்னுடைய வறண்டு போன வாழ்க்கை வளம்பெற வழி இருக்கிறதா?
பவானி, அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கபடமில்லாத முகத்தைக் கவனித்தாள். களங்க மற்ற அந்த முகம் ஒன்று தான் அவளுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. அவனுடைய சிறு கரங்களைச் சேர்த்து தன் கைக்குள் பற்றிக் கொண்டாள். 'இன்று இவை சிறு கரங்கள் தான். ஆனால், நாளடைவில் வளர்ந்து வலிமை பெற்று விடும். பிறகு வாழ்க்கையில் ஆதரவற்றுப்-போன தனக்கு ஆதரவு தரும் அன்புக் கரங்களாக அவை மாறும்' என்றெல்லாம் பவானியின் எண்ணங்கள் ஊர்ந்தன.
படுக்கையின் தலைமாட்டில் கோட் ஸ்டாண்டில் மாட்டியிருந்த கம்பளிச் சட்டை, ஷர்ட், வேஷ்டி, கைக் குட்டை முதலியவை அவளைப் பார்த்துச் சிரித்தன.
கயிற்றுக் கட்டிலின் மீது விரிக்கப் பட்டிருத்த மெத்தை வெறிச் சென்று கிடந்தது. சில மாதங்களுக்கு முன்பு நோயாளியாக அந்தக் கட்டிலின் மீது வாசு படுத்திருந்தான். நோயாளி என்று சொல்லித்தான், பலரும் அவனை ஒரு நோயாளியாகக் கருதினார்கள் - துல்லியமான வேஷ்டியும், அதன் மீது வெண்ணிற ஷர்ட்டும் அணிந்து, மேலே கம்பளிச் சட்டையை மாட்டிக்கொண்டு விட்டால் அவன் ஜோராகத்தான் இருந்தான். ஆளை நாளடைவில் உருக்கி உருக்குலைக்கும் காச நோயாளி அவன் வலுவூட்டும் ஆகாரங்களும் டானிக்குகளும் அவனை அவ்வளவு ஜோராக வைத்திருந்தன. 'நெட்டி யால் செய்த பொம்மை இது. என்றைக்காவது இது சாய்ந்து விடும்' என்று பவானி நினைக்கவே யில்லை. எப்படியாவது அவனைக் காப்பாற்றி விடலாம் என்று தான் நினைத்தாள். நல்ல காற்றுக்காகவும், சுகவாசத் துக்காகவுமே அவள் பசு மலைக்கு வந்தாள்.
கல்யாணமாகிய சுருக்கில் அவள் ஒரு குழந்தைக்குத் தாயும் ஆகிவிட்டாள். செக்கச் செவேலென்று அவள் அந்தத் தங்க மதலையை ஈன்றபோது இருவர் உள்ளங்களும் கரை காணாத ஆனந்த வெள்ளத்தில் திளைத்தன. ’வாழ்க்கை தித்திக்கும் தேனாகவும், செங்கரும்பாகவும் தான் இருக்கப் போகிறது’ என்றெல்லாம் நினைத்தார்கள். ஆனால், குழந்தைக்கு நான்கு வயது ஆவதற்கு முன்பு வாசுவின் உடல் நிலை பாதிக்கப் பட்டது. திடீரென்று அவன் வாய் ஓயாமல் இரும ஆரம்பித்தான்.
"டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடுங்கள்" என் றாள் பவானி.
”ஆமாம், இருமலுக்குப் போய் மருந்து சாப்பிடுகிறார்கள்! ஏதாவது கஷாயம் வைத்துக் கொடு" என் றான் வாசு அவளிடம்.
கஷாயத்திலும் கல்கத்திலும் தற்கால வியாதிகள் மசிந்து போகிறதில்லை என்பதை அவன் என்ன கண்டான்?
"பவானி! சாயங்காலத்தில் ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கிறது. லேசாகத் தலைவலி கூட இருக்கிறது" என்றான் ஒரு தினம் அவன், காரியாலயத்திலிருந்து வீட்டுக்கு வந்தவுடன்.
பவானி பதறிப் போனாள். "சொன்னால் கேட்டீர்களா? பெரிசாக எதையாவது இழுத்து விட்டுக் கொண்டு?" என்று சொல்லிக் கொண்டே கணவனை அழைத்துக்கொண்டு டாக்டர் வீட்டுக்குக் கிளம்பினாள்.
அங்கே டாக்டர் அவனைப் பரிசோதித்து விட்டு, ”என்ன சார்! ஒரு மாசமாக இருமுகிறது என்கிறீர்கள்? சாவகாசமாக வருகிறீர்களே! காசம் ஆரம்பித்திருக்கிறதே" என்றார் ஈனஸ்வரத்தில்.
பவானியின் மனம் ’திக்' கென்று அடித்துக் கொண்டது. இருந்தாலும் அவள் தைரியசாலி. நம்மால் முடிந்தவரை நல்ல வைத்தியமாகச் செய்து பார்க்கிறது" என்றாள் டாக்டரிடம் தைரியமாகவே.
”செய்து தான் ஆகவேண்டும் அம்மா. வியாதி பணத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுமே!" என்றார் டாக்டர்.
”பணத்தை நாம் தானே சம்பாதிக்கிறோம்? அதுவா நம்மைச் சம்பாதிக்கிறது? என்னால் முடிந்த வரையில் பார்த்து விடுகிறேன். பிறகு பகவான் இருக்கிறான்” என்று நம்பிக்கையுடன் பவானி அவருக்குப் பதில் அளித்தாள்.
டாக்டருக்கு அவளுடைய தைரியத்தைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது . அவரால் முடிந்த வரையில் வைத்தியம் செய்தார். அருகில் இருக்கும் பசுமலையில் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி, தான் அடிக்கடி வந்து கவனிப்பதாகவும் கூறினர்.
பசுமலை கிராமத்துக்கு வந்த பவானிக்குப் படிப்படியாக ஏமாற்றமே ஏற்பட்டது. கணவனைக் காச நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டு அந்தக் கிராமத்துக்கு வந்தாள். ஆனால், கடவுளின் கருணை தான் அவள் விஷயத்தில் வற்றி விட்டதோ அல்லது விதியின் விளையாட்டுத்தானோ? அதை யார்தாம் தீர்மானித்துப் பதில் கூற முடியும்? அங்கு வந்த சில மாதங்களில் வாசு இறந்து விட்டான். அன்று உலகமே அவள் வரைக்கும் அஸ்தமித்து விட்டது போல் இருந்தது . இனிமேல் வாழ்க்கையில் அவளுக்கு என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை என்று தீர்மானித்தாள் பவானி. இல்லை என்பதற்குப் பவானிக்குப் பொருள் விளங்கி விட்டது. ஒரே சூன்யமான நிலைக்குத்தான் அப்படிப் பெயர் வைத்திருப்பதாக அவள் நினைத்தாள்.
இவை யெல்லாம் பழைய நினைவுகள். ஆனால் அவள் மனதில் பசுமையுடன் பதிந்திருப்பவை வியாதியை வென்று எப்படியாவது தானும் கணவனும் இன்ப வாழ்க்கை நடத்தவேண்டும் என்று துடித்த உள்ளத்துக்கு ஆறுதல் தரும் நினைவுகள் என்று அவற்றைச் சொல்ல வேண்டும்.
பவானி பெருமூச்சுடன் படுக்கையில் உட்கார்ந்தாள். கீழ் வானத்தில் உதயத்தின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. தொலைவிலே தெரியும் அந்த ஒளிதான் விடி வெள்ளியோ? சூரிய உதயத்திற்கு முன்தோன்றும் விடிவெள்ளி என்று இதைத்தான் சொல்லுகிறார்களோ? திரும்பிப் படுக்கையைப் பார்த்த பவானியின் கண்களுக்குப் பாலுவும் ஒரு விடி வெள்ளியாகவே தோன்றினான். ஆம் இன்று சிறு பையனாக இருப்பவன் நாளை உதயசூரியனாக மாறி புண்பட்ட அவள் மனத்துக்கு ஆறுதல் அளிப்பவனாக இருக்கலாம்.
பாலுவின் தூக்கம் கெடாமல் பவானி உள்ளம் கசியக் குனிந்து, பாலுவின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.
---------
1. 2. பொழுது விடிந்தது
பொழுது பலபல வென்று விடிந்து கொண்டுவந்தது. பவானியின் அடுத்த வீட்டில் கொட்டில் நிறையப் பசுக்கள் கட்டியிருந்தன. அன்று வெள்ளிக்கிழமை யாதலால் அந்த வீட்டு அம்மாள் பசுக்களுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டுக் கொண்டிருந்தாள். இங்கொன்றும் அங்கொன்றுமாக நரைத்திருந்த கூந்தலை அள்ளி முடிச்சிட்டு, பசேலென்று மஞ்சள் பூசியிருந்தாள்.
எழுந்தவுடன் மகாலட்சுமி போல விளங்கும் அடுத்த வீட்டுப் பார்வதியைப் பார்த்ததும் பவானியின் மனதுக்கு ஆறுதல் ஏற்பட்டது. நாற்பத்தைந்து வயதுக்கு மேலாகியும் பார்வதியின் தோற்றத்தில் ஒருவித தனிக் கவர்ச்சி இருந்தது. அவளுடைய கணவர் கல்யாணராமன் அடிக்கடி அவளைப் பார்த்துக் கேட்பது வழக்கம்.
”நீ! இப்படிச் சின்னப் பெண் மாதிரி, மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கிறாயே. அது என்ன ரகசியம்? ஏதாவது காயகல்பம் செய்து கொண்டாயா? சாப்பாடு கூட ஒரு வேளைதானே சாப்பிடுகிறாய்?"
"ஆமாம். காயகல்பமும், காயாத கல்பமும் எனக்கு எதற்கு? நீங்களாவது சாப்பிடு-வீர்கள்! இவளுக்குத்தான் குழந்தை இல்லையே. இன்னொரு தரம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று உங்களுக்குச் சபலம் இருக்கலாம்" என்று பார்வதி சிரித்துக் கொண்டே கூறுவாள்.
"இன்னொரு கல்யாணமா? உன்னை விட்டு விட்டா?" என்று அவர் அகமும் முகமும் மலரச் சொல்வதைப் பவானி தன் வீட்டுச் சமையலறையிலிருந்து எத்தனையோ முறை கேட்டிருக்கிறாள். அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையில் இருந்த நேச பாவத்தை நினைத்தவுடன், அவளுக்குத் தற்கால விவாகரத்துச் சட்டங்களும் ஜீவனாம்ச வழக்குகளும் ஒரு கேலிக் கூத்தாகவே தோன்றின.
அன்று காலையில் எழுந்தவுடன் பார்வதியைப் பார்த்ததும் பவானியின் மனத்துக்கு ஆறுதல் ஏற்பட்டது. இரண்டு வீடுகளுக்கும் இடையில் ஒருகாரைச்சுவர் தான் இருந்தது. இரண்டடி உயரத்தில் இருந்த அந்த சுவர் இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். சுவருக்கு அடுத்தாற்போல் பார்வதியின் வீட்டில் ஒரு பவளமல்லிகை மரம் இருந்தது. அதன் கிளைகள் பவானியின் வீட்டுப்பக்கமாகச் சாய்ந்திருந்தன. அதில் மலரும் மலர்கள் யாவும் பவானி பின் வீட்டில் உதிர்ந்திருக்கும்.
“இந்த அதிசயத்தைப் பார்த்தாயா பவானி? தினமும் இரண்டுவேளை தண்ணீர் ஊற்றி வளர்ப்பவளை மறந்து விட்டு, இந்த மரம் உன் வீட்டில் பூவாகக் கொட்டுகிறதே!" என்று சொல்லிக் கொண்டு பார்வதி பவானியைப் பார்த்துச் சிரித்தாள்.
”அது தான் உலக வழக்கம்" என்று பவானி விரக்தியாகப் பதிலளித்து விட்டுக் கீழே உதிர்ந்திருந்த மலர்களைப் பொறுக்கி, பாத்திரத்தில் நிரப்பிப் பார்வதியிடம் கொடுத்தாள்.
இதற்குள் கொட்டிலில் கட்டியிருந்த பசு மாட்டைக் கறந்து விட்டுப் பால் செம்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார் பார்வதியின் கணவர் கல்யாணராமன். சுவருக்கு அந்தண்டை நிற்கும் பவானியைப் பார்த்ததும் அவர். "உள்ளே போய் ஒரு தம்ளர் கொண்டுவா அம்மா. குழந்தைக்கப் பால் தருகிறேன்" என்றார். பவானியின் மகன் பாலுவிடம் அவருகு அலாதி அன்பு. சின்னஞ்சிறு வயதில் தன்னந்தனியாக வாழத் துணிந்து விட்ட பவானியிடம் அவருக்கு மதிப்பும் வாஞ்சையும் ஏற்பட்டிருந்தன.
பவானி சிறிதுநேரம் தயங்கி நின்றாள். பிறகு தயக்கத்துடன் உள்ளே சென்று. பாலுக்காகத் தம்ளர் எடுத்து வந்தாள்.
"நேற்று மத்தியானம் வீட்டில் பால் இல்லையென்று குழந்தைக்கு நீ ஒன்றுமே தரவில்லையாமே?" என்று கேட்டுக் கொண்டே அவர். செம்பிலிருந்த பாலைத் தம்ளரில் ஊற்றினார். பிறகு அவளைப் பார்த்து. ”உனக்குத் தேவைப்படுகிற பாலை நான் கொடுத்து விடுகிறேன் அம்மா. நீ விலை ஒன்றும் கொடுக்க வேண்டாம்" என்றார்.
பவானிக்கு அவரை எதிர்த்து ஏதாவது சொல்லவே தயக்கமாக இருந்தது. ”பால் நான் தான் கொடுப்பேன். நீ வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்" என்ற தோரணையில் அல்லவா பேசுகிறார்? அவரிடம் போய் எப்படி வேண்டாம் என்று சொல்வது என்று நினைத் தாள் பவானி.
இருந்தாலும், அவளுக்கு சுயகௌரவம் அதிகம். பிறத்தியாருடைய தயவிலே அவளுக்கு வாழ விருப்பமிருந்தால் அன்றே- அவள் கணவன் இறந்து போன தினமே-வருந்தி வருந்தி அழைத்த அவள் தமையனுடன், சென்னைக்குப் போயிருக்கலாம். ஆகவே பவானி விநயமாகக் கல்யாணராமனைப் பார்த்தாள். பிறகு தயக்கத் துடன், ”மாமா! காசில்லாமல் வெறுமனே இதை வாங்கிக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. ஊரிலே மற்றவர்களும் ஏதாவது வம்பு பேசுவார்கள்" என்றாள்.
கல்யாணராமன் பவானியை விழித்துப் பார்த்தார். "பூ! பிரமாதம்! ஊரிலே நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்று தானே உனக்குப் பயம் அம்மா? உனக்கு என்னைப் பற்றியோ என் மனசைப் பற்றியோ சந்தேகம் ஒன்றும் இல்லையே? அப்படி இல்லை யென்றால் பேசாமல் பாலை வாங்கிக் கொள்."
கல்யாணராமன் வெள்ளை மனம் படைத்தவர். வடக்கே நல்ல வேலையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு சொந்தக் கிராமத்தில் வீடு வாங்கிக் கொண்டு வந்து விட்டார். அவர்களுடையது என்று சொல்ல வீடும் நிலபுலன்களும் மாடும் கன்றும் இருந்தன. ஆனால் ஒரு குழந்தை இல்லை. பால்யத்தில் திருச்செந்தூர் முருகனையும் பழனி ஆண்டவனையும் வருஷத்தில் இரு முறை தரிசனம் செய்து தங்கள் குறையை முறையிட்டனர் அத்தம்பதி. ஆனால், மகப்பேறு மட்டும் அவர்களுக்குக் கிடைக்க-வில்லை. கல்யாணராமன் தெளிந்த உள்ளத்தைப் படைத்தவர். ஆகவே, அவர் இந்தக் குறையை மறந்து விட்டார். பார்வதிக்கு இது ஒரு ஆறாத குறை. அவள் இருந்த விரதங்களும், தவங்களும் மேலும் அவளுக்குப் புது ஒளியைத் தந்தன.
அவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பாக்கியத்தின் பிள்ளையும், அண்டை வீட்டில் இருக்கும் பவானியின் மகன் பாலுவும் ஒன்று தான். பாக்கியத்துக்கும் அன்றாடம் பார்வதி மோரும் பாலும் கொடுத்தாள். பவானிக்குக் கொடுத்தால் அவள் என்ன நினைத்துக் கொள்வாளோ என்கிற தயக்கத்தினால் தான் பார்வதி இதுவரையில் அதைப்பற்றி ஒன்றுமே கேட்கவில்லை.
கல்யாணராமன் கபடமில்லாமல் கேட்டு கொடுத்தும் விட்டார். பவானி, அத்தம்பதியின் உயர்ந்த மனப் பான்மையை வியந்து கொண்டே பால் தம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். குழந்தை எழுந்திருப்பதற்குள் அடுப்பைப் பற்ற வைத்துப் பால் காய்ச்சுவதில் முனைந்தாள்.
அடுப்பங்கரையின் சுவரில் ஒரு காலண்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அன்று தேதி பதினைந்து, அந்தப் பதினைந்தாம் தேதி தான் அவள் வாழ்க்கையில் எத்தகைய மாறுதல்களைச் சிருஷ்டித்து விட்டது! அவள் பார்வைக்கு எதிராகக் கொட்டையான எண்ணில் அது அவளைப் பார்த்து சிரித்தது. சரியாக இரண்டு வருஷங்களுக்கு முன்பு அந்தப் பதினைந்தாம் தேதிதான் அவளையும், அவள் கணவனையும் இந்த உலகத்தில் நிரந்தரமாகப் பிரித்த நாள். அந்தச் சனியன் பிடித்த எண் கண் முன்னால் தெரியவே பவானி அவசரத்துடன் எழுந்து 'சர்' ரென்று அந்தத் தாளைக் கிழித்து எரியும் கும்மட்டியில் போட்டாள்.
---------
1.3. கருகும் எண்ணங்கள்து
கும்மட்டியில் ஜ்வாலை விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பு அந்தத் தேதித் தாளை அப்படியே பஸ்மமாகப் பொசுக்கி விட்டது. அது கருகிச் சாம்பலாகிப் போவதை பவானி பார்த்துக் கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்தப் பதினைந்தாவது எண் கருகிப்போனதே ஒழிய அவள் மனத்துள் பதிந்து போன அந்தப் பழைய நினைவுகள், அடுப்பில் காற்று வேகத்தில் சுழன்று எரியும் தீயைப் போலச் சுழன்று எழுந்தன.
நான்கு வருஷங்களுக்கு முன்பு சித்திரை மாசத்தில் ஒருநாள். அன்று பதினைந்தாம் தேதி. அது தமிழ் மாசத்தின் பதினைந்தாம் தேதியோ அல்லது ஆங்கில மாசத்தின் பதினைந்தாவது நாளோ? அதைப்பற்றி அவ்வளவு தெளிவாகப் பவானிக்கு நினைவு இல்லை. அன்று அவள் கணவன் வழக்கத்தை விட சீக்கிரமாகவே எழுந்து விட்டான். பவானியின் மனமும் கடந்த பத்து தினங்களாகவே சரியாக இல்லை. இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை' என்று வைத்தியர் கூறி இருந்தார். ”இருதயம் பலவீனமாக இருக்கிறது; இருமினால் சளியுடன் ரத்தமும் கலந்து வருகிறது. இனிமேல் நான் என்ன செய்ய முடியும்?' என்று வைத்தியர் கூறியதைக் கேட்ட பவானியின் நெஞ்சம் துயரத்தால் வெந்தது. அவளுடைய மனம் துண்டங்களாகப் பிளந்து சிதறுவது போல் இருந்தது.
"டாக்டர்!" என்றாள் வேதனை தொனிக்கும் குரலில். டாக்டர் சிறிது நேரம் கையிலிருந்த ஸ்டெதஸ் கோப்பைச் சுழற்றிக் கொண்டே நின்றிருந்தார். இருபத்தைந்து வயது கூட நிரம்பாத பூங்கொடியாகிய அவள், இனிமேல் கணவனை இழந்து தனித்துத்தான் நிற்க வேண்டுமா? பிறைமதி போன்ற அவளுடைய நெற்றியில் வட்ட வடிவமாகத் துலங்கும் அந்தக் குங்குமம் அழிந்து தான் போக வேண்டுமா?
டாக்டர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பவானி நீர் மல்கும் கண்களுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். ”டாக்டர்! எப்படியாவது என் கணவரைக் காப்பாற்றி எனக்கு மாங்கல்யப் பிச்சை தாருங்கள்" என்று தன் மலர் போன்ற கரங்களை ஏந்தி அவரிடம் பிச்சை கேட்டாள் அந்தப் பேதை. டாக்டரும் பிறப்பு இறப்பு என்கிற இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்ட ஒரு மனிதப் பிறவிதான் என்பது பவானிக்கு மறந்து போய் விட்டது. பாவம்! வாழ்க்கையின் இன்பக் கோட்டில் நிற்க வேண்டியவள் துன்பத்தின் எல்லையைக் காணும்போது தடுமாறுவது இயற்கைதானே? விழிகளின் கோணத்தில் துளித்த நீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே அவர். “நான் என்ன அம்மா செய்ய முடியும்? உயிருக்கு உடையவனாகிய அந்தக் கடவுள் கருணை வைத்தால் உன் கணவன் பிழைத்து எழலாம். என்னால் ஆனவரைக்கும் முயன்று பார்த்தாகி விட்டது" என்றார்.
டாக்டர் தம் மனசைத் தேற்றிக் கொண்டு வெளியே போய் விட்டார். அப்புறம் அவர் முன்னைப் போல் சிரத்தையுடன் பவானியின் கணவனைப் பார்க்க அடிக்கடி வருவதில்லை.
பவானி எந்த நாளை ஒவ்வொரு நிமிஷமும் எதிர் பார்த்துக் கலங்கி இருந்தாளோ அந்தப் பதினைந்தாம் தேதி வந்தது. அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. கிழக்கே உதய சூரியன் பளீரென்று உதயமானான். மலர்கள் மலர்ந்தன. பறவைகள் உதய கீதம் இசைத்தன. தென்றல் வீசியது. பவானி சோர்ந்த உள்ளத்துடன் எழுந்தாள். பல் விளக்கி, முகம் கழுவி, கண்ணாடி முன் நின்று நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்ள ஆரம்பித்தாள்.
”பவானி" என்று கூப்பிட்டு இருமிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் அவள் கணவன். குங்குமச் சிமிழை ஒரு கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்த பவானி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
செக்கச் செவேல் என்று ராஜாவைப் போல் இருந்த அந்த உருவம் தான் எப்படி வற்றி உலர்ந்து போய் விட்டது! சுருள் சுருளாக அலைபாயும் அந்தக் கிராப்பு எப்படிக் கலைந்து சிதறிப் போய் இருக்கிறது? பார்வையிலேயே தன் உள்ளத்தின் அன்பை வெளியிடும் அந்தக் கண்களின் காந்த சக்தி எங்கே மறைந்து போய் விட்டது? ஆஜானுபாகுவாக இருந்த அந்த நெடிய உருவம் எப்படிப் பூனை போல் ஒடுங்கிக் கிடக்கிறது?
இளமையையும் இன்ப வாழ்க்கையையும் படைத்த இறைவன் ஏன் இந்த நோய் என்னும் துன்பத்தையும் கூடவே படைக்க வேண்டும்? இத்தனை கோடி இன்பங்களைப் படைத்த இறைவன் ஏன் இப்படிப் பயங்கரமான வியாதிகளைப் படைத்து. அதற்குப் பலி ஆகிறவர்கள விதி என்று சொல்லித் தேற்ற வேண்டும்?
மதுவைப் படைத்தவன் நஞ்சைப் படைத்திருக்கிறான். மலரைப் படைத்தவன் முட்களைப் படைத் திருக்கிறான். மானைப் படைத்தவன் புலியைப் படைத்-திருக்கிறான். அது தான் சிருஷ்டியின் தத்துவம். யாரும் கண்டறிய முடியாத ரகசியம்.
முகத்தில் வேதனை விளையாட எதிரில் தங்கச் சிலை மாதிரி நிற்கும் பவானியை அவன் ஆசை தீரப் பார்த்த பிறகு அமைதியான குரலில் ”பவானி! இங்கே வாயேன், இப்படி வந்து என் பக்கத்தில் உட்கார்" என்று ஆசை பொங்க அழைத்தான்.
பவானி பதில் ஒன்றும் கூறாமல் அவன் அருகில் சென்று உட்கார்ந்தாள். மெலிந்து போயிருந்த தன் கையால் அவள் இடுப்பைச் சுற்றி அணைத்தவாறு அவன் அவள் கையிலிருந்த குங்குமச் சிமிழை வாங்கிக் கொண்டான். அன்புடன் அவள் முகவாயைப் பற்றித் தன் முகத்துக்கு நேராக அவள் முகத்தைத் திருப்பினான். ஆள் காட்டி விரலைச் சிமிழுக்குள் தோய்த்துக் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வட்ட வடிவமாகப் பொட்டு வைத்தான்.
பவானியின் கண்கள் குளமாக இருந்தன. உதடுகள் துடித்தன. நெஞ்சுக் குமிழ் திக் திக் கென்று அடித்துக் கொண்ட து.
”பவானி! ஏன் அழுகிறாய்?" என்று கவலை தொனிக்கக் கேட்டான் அவன். அவள் பதில் பேசவில்லை.
”பைத்தியம்! நான் போய் விடுவேன் என்று தானே அழுகிறாய்? பிறந்தவன் இறப்பது உறுதி என்று கீதை படித்து எனக்கு உபதேசம் செய்தாயே! அதற்குள்ளாகவே மறந்து விட்டாயே பவானி?"
"ஆம்" என்கிற பாவனையாக அவள் கண்ணீருக்கிடையில் தலையசைத்தாள்.
" நான் பூமியில் பிறந்தேன். இன்றோ நாளையோ இறக்கப் போகிறேன். நான் பிறந்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இறக்கப் போவதும்..." என்று அவன் இன்னும் ஏதோ முணு முணுத்துக்கொண்டே இருந்தான்.
பவானி ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நீலவானில் மேலே எழும்பி வரும் கதிரவனின் ஒளி வையகமெல்லாம் பரவிப் புத்துணர்ச்சியை ஊட்டிக் கொண்டிருந்தது.
நீள் விசும்பையும் வெட்ட வெளியையும் உற்று நோக்கிச் சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்த அவள் கவனத்தை குழந்தை பாலுவின் மென் குரல் கலைத்தது .
"அம்மா! அம்மா!" என்று அழைத்துக் கண்ணைக் கசக்கிக் கொண்டே பாலு தட்டுத் தடுமாறிய வண்ணம் அவளைத் தேடி அறையை விட்டு வெளியே வந்தான்.
பவானி திரும்பிப் பார்த்தாள். தூக்கக் கலக்கத்தில் தடுமாறி நடந்து வரும் அவனை, ”வாடா கண்ணு இங்கே!" என்று அவள் கணவன் அழைத்து அவனுடைய தளிர்க்கரங்களைச் சேர்த்துத் தன் கைக்குள் புதைத்துக் கொண்டான். அதனால் மட்டற்ற மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அடைந்தான். அவன் மகிழ்ச்சி பொங்கும் குரலில், ”பவானி. குழந்தையின் கைகளைப் பிடித்துப் பாரேன். உனக்கு அந்த ஸ்பரிசம் எவ்வளவு இதமாக இருக்கிறது என்பது தெரியும்" என்றான்.
பவானி ஆசையுடன் பாலுவின் கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டாள். மெத்து மெத்தென் றிருந்த அந்தப் பிஞ்சுக் கரங்களின் பராமரிப்பில் தன் கணவன் தன்னை விட்டுப் போவதாகவே நினைத்தாள்.
”அம்மா! எனக்குக் காப்பி வேணும் அம்மா" என்றான் குழந்தை. அப்பொழுது தான் பவானிக்குத் தான் இது வரையில் அடுப்பே மூட்டவில்லை என்பது நினைவுக்கு வந்தது. விடிந்து ஏழரை மணி ஆகிவிட்டது. இதுவரையில் வியாதிக்காரனுக்கும் ஆகாரம் ஒன்றும் கொடுக்காமல் என்னவோ நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததை நினைத்து வருந்திக் கொண்டே பவானி சமையலறைக்குள் சென்று அடுப்பைப் பற்ற வைத்தாள்.
பதினைந்து நிமிஷங்களில் காப்பி போட்டு எடுத்துக் கொண்டு அவள் வெளியே வந்தாள். படுக்கை அருகில் குனிந்து கணவனைப் பார்த்தாள். அவனுடைய நெற்றியில் முத்து முத்தாக வியர்வை அரும்பியிருந்தது. கண்கள் லேசாகத் திறந்திருந்தன. அருகில் கிடந்த துண்டினால் அவன் நெற்றியை லேசாகத் துடைத்து விட்டு, "என்ன, காபி கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிடுகிறீர்களா!" என்று கேட்டாள் பவானி.
அவன் பதில் பேசவில்லை. மெதுவாக அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் பவானி. அப்பொழுதும் அவன் அசையவில்லை. மிகவும் நிதானமாக அவன் 'வளங் கையைத் தொட்டுப் பார்த்தாள். 'சில்'லென்று இருந்த அந்தக் கரம் அவளை நடுக்கத்துடன் பின் வாங்கச் செய்தது. அவள் பிடியினின்று துவண்டு அது படுக்கையில் விழுவதற்கும், அவள் சற்றும் எதிர்பாராத விதமாக டாக்டர் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.
”எப்படி இருக்கிறார்?" என்று கேட்டுக் கொண்டே அவர் அருகில் சென்று அவன் கையை எடுத்தவுடன் வேதனையால் அவர் நெற்றியைச் சுருக்கிக்கொண்டார் .
”டாக்டர் அவர்?..." என்று பவானி திணறிக் கேட்பதற்கு முன்பு ”அவ்வளவு தான் அம்மா, நீ கொடுத்து வைத்தது. கடவுளின் கருணை உன் விஷயத்தில் வற்றிவிட்டது" என்று கூறினார்.
---------
1.4. அண்ணனும் தங்கையும்
அதன் பிறகு கல்யாணமும் பார்வதியும் அவளுக்கு எவ்வளவோ உதவி செய்தார்கள். ஊரிலிருந்து பவானியின் தமையனும், அவன் மனைவியும் வந்தார்கள். அருகில் இருந்து எல்லாக் கிரியைகளையும் செய்து முடித்தார்கள். பவானியின் கணவன் இறந்து பதினைந்து தினங்கள் வரையில் யாருமே எதுவுமே பேசவில்லை . ஒரு வழியாக எல்லாம் முடிந்த பிறகுதான் பவானிக்குத் தன் தனிமையைப் பற்றி நினைவு வந்தது.
கொல்லைத் தாழ்வாரத்தில் உட்கார்ந்து குழந்தைக்குச் சாதம் ஊட்டிக் கொண்டிருந்த அவள் அருகில் அவள் தமையன் நாகராஜன் வந்து உட்கார்ந்து கொண்டான் .
மெதுவான குரலில் அவனாகவே பேசவும் ஆரம்பித்தான்.
”பவானி! இனி மேல் நீ என்ன பண்ணப் போகிறாய்?" என்று கேட்டான்.
பவானி. விழிகளில் கண்ணீருடன் அண்ணனை ஏறிட்டுப் பார்த்தாள்.
"என்ன பண்ண வேண்டும் அண்ணா நீதான் சொல்லேன்?'
”நான் என்னத்தைச் சொல்வது? நீயாகவே ஏதாவது சொல்லுவாய் என்று பதினைந்து நாளாகப் பொறுத்துப் பார்த்தேன். நீ ஒன்றுமே பேசவில்லை. எனக்குக் கேட்க வேண்டிய கடமை ஒன்று இருக்கிறதல்லவா?"
ஆரம்பத்தில் அன்புடனும், அனுதாபத்துடனும் பேச ஆரம்பித்த அவன் படிப்படியாகக் கோபத்துடன் பேச ஆரம்பித்தான்.
"உனக்கு இந்த நெஞ்சழுத்தம் ஆகாது. கூடப் பிறந்தவனை அண்டித்தான் இனிமேல் இருந்தாக வேண்டும்”, என்கிற பாவம் தொனிப்பதாக இருந்தது அவன் பேச்சில்.
அவன் வெடுவெடுவென்று பேசியதும் பவானியின் முகம் வாட்டமடைந்தது. மனதுக்குள் எதையோ வைத்துக் கொண்டு வெளியில், ஒன்றுக்கொன்று சம்பந்த-மில்லாமல் அவன் பேசுவது தெரிந்து போயிற்று. ”உன் புருஷன் உனக்கு என்ன ஆதாரத்தை வைத்து விட்டுப் போயிருக்கிறான்? ஏதோ வேலையில் இருக்கிறான். பிக்கல் பிடுங்கல் ஒன்றும் இல்லை என்று தானே அப்பா உயர்வு என்று உன்னைக் கொடுத்தார்? இப்போது நீ நிராதரவாக ஒரு குழந்தையுடன் நிற்கிறாயே?" என்று அவன் ஏச வேண்டியவன். அப்படி ஏசாமல் ”இனி மேல் என்ன பண்ணப்போகிறாய்" என்று நாசூக்காகக் கேட்கிறான்.
குழந்தைக்குச் சாதம் ஊட்டி முடிந்தவுடன் கையை அலம்பிக் கொண்டு பவானி உள்ளே சென்றாள். பீரோவைத் திறந்து அவளுக்காக அவள் கணவன் வைத்து விட்டுப் போன ஆதாரத்தை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.
அது ஓர் 'இன்ஷூரன்ஸ் பாலிஸி’. மூவாயிரம் ரூபாய்களுக்கு ’இன்ஷூர்' செய்யப்-பட்டிருந்தது. வேறே எந்தவிதமான ஆதாரத்தையும் நம்பி அவள் இருக்க முடியாது. இருபத்தைந்து வயது நிரம்பிய பவானியின் வாழ்க்கைக்கு அந்த மூவாயிரம் ரூபாய் ஒரு ஆதரவா என்ன? அவளும் அவள் குழந்தையும் அதை வைத்துக் கொண்டு சாப்பிட்டாக வேண்டும்: பாலு பெரியவனாகி விட்டால் அந்த மூவாயிரம் ரூபாயிலிருந்து அவனைப் படிக்க வைத்தாக வேண்டும்.
வாழ்க்கையில் அன்றாடத் தேவைகளே அநேகம். ஒரு மாசத்தில் மூவாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவர்களும் உண்டு. அதை ஒரு வருஷத்தில் சம்பாதிக்கிறவர்களும் உண்டு. ஏதோ ஒரு சமயம் என்றால் இருக்கட்டும் என்று எண்ணியே பவானியின் கணவன் மூவாயிரம் ரூபாய்க்குப் ’பாலிஸி' எடுத்துக்கொண்டான். மனைவிக்கும் குழந்தைக்கும் அதுதான் ஆதாரமாக அமையப் போகிறது என்று அவன் கனவிலும் நினைத்தவன் அல்ல. கணவன் மூவாயிரம் சேமித்து வைத்திருப்பதே பவானிக்குத் தெரியாது. மாதச் சம்பளம் நூற்றிருபது ரூபாய் வந்தது. அதில் நூறு ரூபாய் குடும்பச் செலவுக்குக் கணவன் அவளிடம் கொடுத்து விடுவான். மீதி இருபது ரூபாயை அவன் என்ன செய்கிறான் என்பதை அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.
இப்போது பவானியின் தமையன் அந்த மூவாயிரம் ரூபாயடன் அவள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அதை வைத்து பாலுவின் கல்வியை எடை போடுகிறான். 'பூ! அது ஒரு பிரமாதமா? பணமென்று மதிப்பு வைக்காமல் செலவு செய்தால் மூன்றே நாளில் தீர்த்து விடலாம். மதிப்புடன் செலவு செய்தால் மூன்று வருஷங்களுக்குக் காணாது. பிறகு?...' என்று அவன் சிந்தனை செய்வதாகவே பவானி நினைத்தாள்.
தலையைக் குனிந்து நிற்கும் தங்கையையும், அவள் கையிலிருந்த 'பாலிஸி' யையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் நாகராஜன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந் தான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவன் போல், ”ஆமாம், நீ இதை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டான்.
பவானி பரிதாபமாகச் சிரித்தாள்.
"என்னைப் போய்க் கேட்கிறாயே அண்ணா? உனக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செய்யேன். நான் என்னத்தைக் கண்டேன் உலகத்தில்?" என்று பதிலளித்தாள்.
"ஹும்... சரி. 'பாலிஸி'யைப் பற்றிக் கம்பெனிக்கு எழுதி பணத்துக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும். நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டான்.
பவானிக்கு முதல் கேள்விக்கு விடை கூறுவதற்குக் கஷ்டமாக இல்லை. ஆனால், இரண்டாவது கேள்விக்குப் பதில் அளிக்கத் தயக்கமாக இருந்தது. நிலத்திலே கோடுகள் வரைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள். அவள் மனதில் எவ்வளவோ எண்ணங்கள் எழுந்தன. சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் அண்ணாவின் பிரம்மாண்டமான இல்லம். பணத்தின் பெருமையிலும் வாழ்க்கையின் நிறைவிலும் பூரித்து இருக்கும் மன்னி கோமதி, அவர்கள் வீட்டுக் கார், வேலையாட்கள். குழந்தை சுமதி. எல்லோரும் அவள் மனக்கண் முன்பு ஆடி அசைந்து தோன்றினர். அந்த வீட்டில் இவள் யாராக மதிக்கப்படுவாள்?
நாகராஜனின் அருமைத் தங்கையாகவா? மஞ்சளும் குங்குமுமாக இருந்த போது அளித்த மதிப்பை மன்னி கோமதி இப்பொழுதும் இவளுக்கு அளிப்பாளா? யார் கண்டது?
ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு ஒரு தடவை பவானி ஆமையன் வீட்டுக்குப் போயிருந்தாள். கல்யாணமாகிப் புக்ககத்தில் போய் ஆறு மாசங்கள் குடித்தனம் பண்ணி
விட்டு வருகிறவள். மனசிலே எத்தனையோ ஆசைகள், விருப்பங்கள், வெறுப்புகள், உணர்ச்சிகள் நிறைந்து இருந்தன. யாரிடமாவது தன் வயசுக்கு ஒத்த பெண்ணி படம் அவைகளை வெளியிட வேண்டும் என்கிற எண்ணத் துடன் வந்தாள். கோமதி அவளைவிட வயசில் இரண்டு வருஷங்கள் மூத்தவள். அவளும் புதிதாக மணமாகி வந்திருப்பவள் தான். இருவரும் மனம் விட்டு எவ்வளவோ அந்தரங்கமாகப் பேசி இருக்கலாம்.
பவானி வீட்டுக்குள் நுழைந்ததும் ஹாலில் சற்று நின்று அவளைப் பார்த்துவிட்டு விருவிரு வென்று உள்ளே போய் விட்டாள் கோமதி. அவள் சுபாவம் அப்படி.
"கோமு! கோமு! இதோபார், யார் வந்திருக்கிறார்கள்?" என்று நாகராஜன் அவளைப் பல முறைகள் அழைத்தான்.
கோமதி அடுப்பங்கரையிலிருந்து வெளியே வந்தாள்.
"நான்தான் பவானி வந்ததை அப்பொழுதே பார்த்தேனே. இதற்குப் போய் இவ்வளவு அமர்க்களம் பண்ணுவானேன்?" என்று 'சூள்' கொட்டினாள் கோமதி.
---------
1.5. அழைப்பு ........!
எண்ணங்களும், சிந்தனைகளும் முடிவில்லாமல் ஏற்படும் போது நாம் நம்மையே மறந்து விடுகிறோம். பவானி இவ்விதம்தான் தன்னையே மறந்த நிலையில் நின்றிருந்தாள். மனதுக்கு வேகம் அதிகம் என்று சொல்வார்கள். நுங்கும் நுரையுமாகக் கொப்புளித்துச் சுழன்று ஓடும் காட்டாற்றைவிட எண்ணங்களுக்கு வேகம் அதிகம். வாயு வேகத்தை விட மனோவேகம் வலிமை வாய்ந்தது. பவானி ஒரு கண காலத்தில் கடந்துபோன நாட்களை நினைவு படுத்திக் கொண்டு, அவை எழுப்பும் எண்ணச் சுழலில் சிக்கித் தவித்தாள். வில்லைப் போல் வளைந்து நெற்றிக்கே ஒரு சோபையைத் தரும் புருவங்களைச் சுளித்து அவள் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அழகிய நீண்ட அவள் கண்கள் எங்கோ சூன்யத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
நாகராஜன் சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அமைதியான குரலில், ”பவானி! இனிமேல் நீ என்ன செய்யப் போகிறாய் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது என் கடமை அல்லவா? உன்னைப் பல முறைகள் கேட்டும் நீ பேசாமல் நிற்கிறாயே!" என்றான்.
பவானியின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
”அண்ணா ! உன்னுடன் என்னை வரும்படிக் கூப்பிடுகிறாய். அவ்வளவு தானே? என்றைக்கும் ஒருவருடைய ஆதரவின் கீழ்தான் நான் வாழவேண்டும். இவை எல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் அண்ணா ....." என்று சொல்லி முடிக்காமல் தேம்பிக் கண்ணீர் வடித்தாள்.
தமையன் வாஞ்சையுடன் அவள் அருகில் வந்து நின்றான். ஆதுரத்துடன் அவள் கண்ணீரைத் தன் கையால் துடைத்தான்.
"அசடே! என் வீட்டில் உனக்குச் சாப்பிடச் சாதம் இல்லாமலா போய்விட்டது? எதையோ நினைத்துக் கொண்டு வருந்துகிறாயே. பேசாமல் குழந்தையை அழைத்துக் கொண்டு என்னோடு புறப்படு அம்மா" என்று அழைத்தான்.
கூடத்திலே கோமதி உட்கார்ந்திருந்தாள். கொல்லையில் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் நடக்கும் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். அவளுக்குக் கல்யாணம் ஆனதிலிருந்து தனியாகவே, சுதந்திரமாக இருந்து வந்தவள். வீட்டுக்கு எஜமானி என்கிற எண்ணம் அவளுக்கு வளர்ந்து போயிருந்தது. அந்த வீட்டில் இன்னொருவர் சுதந்திரமாக வந்து தங்க வேண்டும் என்பதை அவள் விரும்பாதவள். தன்னுடைய புருஷனையும், குழந்தை சுமதியையும், தன்னையும் தவிர அவளுக்கு வேறு ஒருவருமே தேவையில்லாமல் இருந்தது.
செழித்து வளர வேண்டிய கொழு கொம்பிலிருந்து பிடுங்கித் தரையில் எறிந்த மாதிரி பூங்கொடியாகிய பவானியைப் பற்றி அவள் என்ன நினைத்தாள்?
நாத்திக்கும். மதனிக்கும் என்றும் ஒத்துக் கொள்ளாது என்று நினைத்து, அதற்கேற்ப கதைகளையும், சம்பவங்களையும் கேட்டும் படித்தும் அந்த எண்ணத்திலேயே ஊறிப் போயிருப்பவர்கள் நாம். நாத்தி என்ன பூவும் மணமுமாகவா அவள் இல்லத்தை நாடி வந்திருக்கிறாள்? அவள் எதிரில் ஒரு புதுப் புடவை உடுத்த முடியுமா? அவள் பார்த்துக் கோமதி கணவனுடன் பேசி மகிழ முடியுமா? அவள் விடும் பெருமூச்சு நெருப்பைவிட அதிகமாகச் சுட்டுப் பொசுக்கி விடுமே என்றெல்லாம் கோமதி நினைத்தாள்.
”இவருக்கு என்ன? வா என்று சுலபமாகக் கூப்பிட்டு விடுகிறார்! வீட்டிலே அனுபவிக்கப் போகிறவள் நான் தானே? காலையில் கம்பெனிக்குப் போனால், இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பும் இவருக்கு வீட்டில் நடப்பவை பற்றி என்ன தெரியப் போகிறது?"
கோமதி இவ்விதம் எண்ணமிட்டபடி ஊஞ்சலில் உட்கார்ந்து மெதுவாக ஆடிக் கொண்டிருந்தாள். எப்படியோ போகட்டும். அவர் கூப்பிட்டுப் பவானி வந்தால் அழைத்துத்தான் போய் ஆகவேண்டும். அண்ணன் வீட்டைப் பற்றிய பாத்தியதை மன்னிக்கும் உண்டு என்பதைப் பவானி மறந்து விடுவாளா என்ன? என்று மேலும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் கோமதி.
அப்பொழுது கொல்லையிலிருந்து பவானியின் குரல் தெளிவாகக் கேட்டது.
”இப்பொழுது அங்கே வருவதற்கு என்ன அவசரம் அண்ணா? போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம். கொஞ்ச காலம் அவர் இருந்த இடத்திலேயே நான் இருக்க ஆசைப் படுகிறேன்” என்றாள்.
நாகராஜன் பதில் ஒன்றும் கூறவில்லை . அவன் உள்ளத்தில் எத்தனையோ கேள்விகளும் பதில்களும் எழுந்தன. அவைகளை அடக்கிக் கொண்டு, அப்படியானால் இந்த மூவாயிரம் ரூபாய் என்னிடம் இருக்கட்டும். மாசம் உனக்காக ஐம்பது ரூபாய் அனுப்பி வருகிறேன் பவானி, உனக்கு எப்பொழுது வரவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது வரலாம். உன்னை இதற்கு மேல் தற்சமயம் வற்புறுத்த நான் ஆசைப்பட வில்லை " என்றான்.
நாகராஜன் அங்கே இருந்து உள்ளே சென்றதும். கூடத்தில் உட்கார்ந்து ஊஞ்சலாடும் மனைவியைக் கவனித்தான். கொல்லையில் நடந்த இவ்வளவு பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டு இருந்தவள் எழுந்து வந்து ஏதாவது ஒரு வார்த்தை பேசியிருக்கக் கூடாது? ஒப்புக்காகவாவது பவானியை 'வா' என்று அழைத்திருக்கக் கூடாதா? மனதில் பொங்கும் கோபத்துடன் அவன் மனைவியை விழித்துப் பார்த்து ”கோமு! நீ இங்கேயா இருந்தாய் இந்நேரம்? பக்கத்து வீட்டிற்குப் போயிருப்பதாக அல்லவோ நினைத்தேன்! உனக்கும் நம் வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லை போல் அல்லவா நீ பேசாமல் இருந்து விட்டாய்?" என்று கேட்டான்.
கோமதியின் உதடுகளில் அலட்சியம் நிரம்பிய புன்னகை நெளிந்தோடியது. அவள் ஒரு மாதிரியாகச் சிரித்துவிட்டு.
"நீங்கள் தான் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துச் செய்கிறீர்களே. இடையில் நான் வேறு குறுக்கே புகுந்து ஏதாவது பேச வேண்டுமா என்ன?" என்றாள்.
நாகராஜனின் கண்கள் கோபத்தால் சிவந்தன! அவன் படபடப்புடன்,
"அழகு தான் போ! என்ன தான் நான் பவானியை வருந்தி வருந்தி அழைத்தாலும் நீ கூப்பிடுகிற மாதிரி இருக்குமா கோமு?" என்றான்.
கோமதி அதற்குப் பதில் கூறுவதற்கு முன்பு பவானி பாலுவை அணைத்துப் பிடித்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள்.
"இதெல்லாம் என்ன அண்ணா ? நீ கூப்பிட்டால் மன்னி கூப்பிட்டமாதிரி இல்லையா? அம்மாதிரியெல்லாம் நீ ஏன் கற்பனை செய்து கொள்கிறாய்? எனக்கு வர வேண்டும் என்று தோன்றும் போது கட்டாயம் வந்து விடுவேன்" என்றாள்.
ஆனால் பவானியின் உள்ளத்தில் குமுறும் எண்ணங்களையோ அவள் மனம் துடிக்கும் துடிப்புகளையோ அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை. அண்ணனுக்கும் மன்னிக்கும் தெரியாமல் அவள் வாசல் அறைக்குள் புகுந்து வெகு நேரம் வரையில் கண்ணீர் விட்டுக் கலங்கியதைக் குழந்தை பாலு ஒருவன் தான் அறிவான். கண்களில் நீர் வழிய உட்கார்ந்திருக்கும் அன்னையிடம் சென்று ஆசையுடன் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான் அவன்.
"அம்மா! அம்மா! நீ ஏன் அழுகிறாய்? அப்பா இல்லையே என்றா? நான் இருக்கிறேனே அம்மா" என்றான் குழந்தை. பவானி அழுகையினூடே சிரித்தாள். அவளுக்குத்தான் பாலு இருக்கிறானே!
பின் அவள் ஏன் அழ வேண்டும்?
-------
1.6. கொம்பும் கொடியும்
நாகராஜன் ஊருக்குக் கிளம்பு முன் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துத் தங்கையிடம் கொடுத்தான்.
"எதற்கு அண்ணா இது? என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறதே. தேவையானால் எழுதி வாங்கிக் கொள்கிறேன்" என்றாள் பவானி.
”இருக்கட்டும் பவானி. இன்னும் பத்து நாட்களில் பாலுவுக்குப் பள்ளிக் கூடம் திறந்து விடுகிறார்கள். புஸ்தகம் வாங்கிச் சம்பளம் கட்ட வேண்டாமா? வைத்துக் கொள்."
பவானி சிரித்தாள்.
"மருமகன் பெரிய படிப்பு படிக்கிற மாதிரி தான் உன் எண்ணம். ஒண்ணாவது படிக்கிறவனுக்குப் புஸ்தகம் வாங்க நூறு ரூபாய் வேண்டுமா என்ன?"
பவானி இப்படி ஒவ் வொரு விஷயத்துக்கும் தர்க்கம் செய்து பேசுவது கோமதிக்குப் பிடிக்கவில்லை. புருஷன் போய் விட்டான். பிரமாதமாகச் சொத்து ஒன்றும் அவன் வைத்து விட்டுப் போகவில்லை. கூட வருவதற்கு ஆயிரம் ஆட்சேபணைகள் சொல்லிவிட்டாள். பள்ளிக் கூடம் திறந்தால் இருக்கட்டும் என்று பணம் கொடுத்தால் ”இது எதற்கு?' என்கிறாள். கர்வம் பிடித்தவள் என்று நினைத்து கோமதி கணவனைக் கோபமாக விழித்துப் பார்த்தாள்.
இடையில் அடுத்த வீட்டிலிருந்து கல்யாணம் வந்தார். வந்தவர் பேசாமல் இருந்தாரா? அப்படி இருப்பது தான் மனித சுபாவமே இல்லையே!
'என்ன ஸார்! ஊருக்குக் கிளம்புகிறீர்களா?" என்று கேட்டு வைத்தார் .
"ஆமாம் ஸார்! வந்த வேலை ஆயிற்று. கிளம்ப வேண்டியதுதானே?" என்று சலிப்புடன் நாகராஜன் கூறினான்.
"ஹும்... ஊருக்குக் கிளம்புகிறீர்கள். ஆமாம்..... ஆபீஸ் என்றும், வேலை என்றும் ஒன்று இருக்கிறதே. எத்தனை நாட்களுக்கு ஒரு இடத்தில் இருக்க முடியும்? அவரவர் வேலையை அவரவர் செய்தாக வேண்டுமோ இல்லையோ ஹும்..."
’தங்கையைத் தனியாக விட்டு விட்டுப் போகிறாயே அவளுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டாம் நீ' என்று கேட்பதற்குப் பதிலாக அவர் ஏதோ சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பது கோமதிக்குப் புரிந்து போயிற்று.
"அவரவர் வேலையை அவரவர் இருக்கிற இடத்தில் இருந்து கொண்டுதானே மாமா செய்ய வேண்டும்? இன்னொரு இடத்தில் வந்து உட்கார்ந்து செய்ய முடியுமா? அதுவும் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு நாள் கூட வெளியே போக முடியாது. பத்து தினங்களாக இங்கே இருந்ததே மேல். இன்னும் எத்தனை நாட்கள் இருப்பது?" என்று கேட்டு விட்டுக் கோமதி. அருகில் நின்று கொண்டிருந்த பவானியை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
இந்தப் பத்து தினங்களில் கல்யாணம் கோமதியின் சுபாவத்தை நன்றாகப் புரிந்து கொண்டவர். வீட்டிலே பிறந்த பெண். மணத்தை இழந்து வாடும்போது தன்னுடைய சுகத்தில் ஒன்றும் குறைவு ஏற்படக்கூடாது என்று நினைப்பவள் கோமதி.
கல்யாணராமன் கோமதிக்கு ஒன்றும் பதில் கூறவில்லை. அவருடைய சிந்தனை வேறு எங்கோ லயித்துக் கிடந்தது. உற்றாரும் உறவினரும் இருந்தும், ஒரு பெண்ணுக்கு தனிமை என்பது எப்பொழுது ஏற்படுகிறது என்று சிந்திப்பதில் முனைந்திருந்தார் அவர். உடன் பிறந்த அண்ணனும், பெற்று வளர்த்த பெற்றோரும் இருந்தால்கூட. கட்டிய கணவன் இல்லாமல் போகும் போது அவள் தனிமையில் சிக்கி வாடுகிறாள்.
ஒரு பெரிய நந்தவனம். அதில் மல்லிகை, இருவாட்சி, ரோஜா, கனகாம்பரம், மருக்கொழுந்து முதலிய மலர்ச் செடிகள் நிறைந்திருக்கின்றன. தோட்டக்காரன் ஒரு முல்லைக் கொடியை நட்டுப் பயிர் செய்கிறான். கொடியும் செழித்து வளர ஆரம்பிக்கிறது. கப்பும் கிளைகளுமாகப் புதருடன் மண்டி வளருகிறது. அப்பொழு-தெல்லாம் தோட்டக்காரன் கவலைப்படுவதில்லை. எல்லாச் செடிகளையும் போலச் செழுமையாக வளருகிறது என்றே நினைத்து ஆறுதல் அடைகிறான்.
ஆனால் சில மாதங்களுக்கு அப்புறம் அந்தச் செடியிலிருந்து தனித்தனியே பல கொடிகள் தோன்றுகின்றன. மெல்லிய காற்றிலே அசைந்தாடுகின்றன. பற்றிக் கொண்டு படர ஊன்று கோல் இல்லாமல் தவிக்கின்றன. தோட்டக்காரன் சிந்தனை செய்கிறான். நல்ல கொம்பாக ஒன்றைத் தேடி எடுத்து வந்து அருகில் நட்டு அதன் மீது கொடிகளைச் சேர்த்துப் படர விடுகிறான். முல்லைக் கொடி கொழு கொம்பைப் பற்றிக் கொண்டு பந்தலின் மீது படர்ந்து வெள்ளை மலர்களைத் தாங்கி நிற்கிறது.
ஒரு பெண்ணும் அண்ணன் தம்பிகளுடன் ஒரு குடும்பத்தில் பிறக்கிறாள். அவர்களிடையில் வளருகிறாள். அவள் மங்கைப் பருவத்தை அடையும் வரை அவளைப் பற்றிப் பெற்றோர் அவ்வளவாகக் கவலைப் படுவதில்லை. தள தளவென்று வளர்ந்து வாளிப்பாகத் தன் முன் நிற்கும் மகளைப் பார்த்து தாய் முதலில் கவலைப் படுகிறாள். ”பார்த்தீர்களா நம் மகளை? எப்படித் திடீரென்று வளர்ந்து விட்டாள் ! இனிமேல் நீங்கள் கவலையில்லாமல் தூங்க முடியாது" என்று கணவனை எச்சரிக்கிறாள். தந்தையும் மகளைப் பார்த்துப் பிரமித்துத்தான் போகிறார். மண்ணில் சிறு வீடுகள் செய்து விளையாடிய பெண்ணா இவள்? பந்துக்காகச் சகோதரர்களிடம் சண்டை-யிட்டவளா இவள்? ’அப்பா' என்று அழைத்து மடியில் உட்கார்ந்து கதை பேசிய கண்மணியா இவள்? எப்படி வளர்ந்து விட்டாள்!' என்று ஆச்சரியம் ததும்ப மகளைப் பார்க்கிறார்.
”நல்ல இடமாக வந்தால் பாருங்கள். காலத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விடலாம்" என்கிறாள் தாய்.
நல்ல நாயகனை, கொடிக்குத் தேவையான கொழு கொம்பைத் தேடுகிறார் தந்தை. மணமுடித்து வைக்கிறார். மனதிலே ஆறுதலும் திருப்தியும் அடைகிறார்கள் பெற்றோர்.
ஆனால் முல்லைக் கொடிக்கு ஆதாரமாக ஊன்றிய கொழு கொம்பை ஒரு பேய்க்காற்று, புயல், சூறாவளி அலைக்கழித்துத் தரையில் சாய்த்து விட்டுப் போய் விடுகிறது. முல்லைக் கொடி பற்றிப்படரக் கொம்பில்லாமல் தவக்கிறது. காற்றிலே ஊசலாடுகிறது.
இதைப் போலத்தான் இருக்கிறது பவானியின் வாழ்க்கை என்கிற தீர்மானத்துக்குக் கல்யாணராமன் வந்த போது. கூடத்தில் நின்றிருந்த கோமதியைக் காணோம். அவள் வண்டியில் போய் ஏறிக் கொண்டு விட்டாள். நாகராஜன் மட்டும் அவர் அருகில் நின்றிருந்தான்.
“ஊருக்குப்போய்விட்டு வருகிறேன் மாமா. பவானியைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவசியமானால் அவளைப் பற்றி எனக்கு ஏதாவது செய்தி இருந்தால் தெரிவிக்க அஞ்சாதீர்கள்" என்று அவரிடம் கூறி விடை பெற்றுக் கொண்டான்.
தமையனும் மன்னியும் ஏறிச் செல்லும் வண்டி தெருக் கோடியைத் தாண்டிப் போகும் வரையில் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் பவானி. அவள் அருகில் வந்து நின்ற பார்வதியைச் சிறிது நேரம் பவானி கவனிக்கவில்லை .
"பவானி! என்ன அப்படி ஒரேயடியாக எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்று அன்புடன் கேட்டு அவள் சிந்தனையைக் கலைத்தாள் பார்வதி.
---------
1.7. மூர்த்தி வருகிறான்!
அவள் கண் எதிரே சுவரில் காணப்பட்ட அந்தப் பதினைந்தாம் தேதி தான் அவள் மனத்துள் எத்தகைய சிந்தனைகளை எழுப்பிவிட்டது? பழைய நினைவுகளில் லயித்துப் போய் உட்கார்ந்திருந்த பவானி, அடுப்பில் பால் பொங்கி வழிவதைக் கூடக் கவனிக்கவில்லை. கல்யாணராமன் கொடுத்த பால் 'சுரு சுரு' வென்று பொங்கி, பாதிக்கு மேலாக அடுப்பில் வழிந்து போன பிறகு தான் பவானி தன் சுய உணர்வை அடைந்தாள்.
அடுப்பிலிருந்து பாலை இறக்கிக் காப்பி போட்டு முடித்தவுடன், பாலு கொல்லைப் பக்கத்தில் இருந்து பல் தேய்த்துக் கொண்டு உள்ளே வந்தான். அம்மாவின் அருகில் சென்று உட்கார்ந்து அவள் கொடுத்த காப்பியை வாங்கிக் குடித்தான். சிறிது நேரம் இருவருமே பேசாமல் இருந்தார்கள். பவானி மகனின் முகத்தை ஆசையுடன் பார்த்தாள்,
”பாலு! உனக்கு எத்தனாம் தேதி பள்ளிக்கூடம் திறக்கிறார்கள்?" என்று கேட்டாள்.
"ஜுன் மாசம் பன்னிரண்டாம் தேதி திறக்கிறார்கள் அம்மா. மே மாசம் பத்து தேதிக்குள் - ரிஸல்ட்' சொல்லி விடுவார்கள்."
அப்போ நீ பாஸ் பண்ணி விடுவாயோ இல்லையோ? கணக்கிலே நீ புலியாயிற்றே. அதனாலே கேட்கிறேன்" என்று பாதி கேலியாகவும், பாதி கவலையுடனும் விசாரித்தாள் பவானி.
பாலு கன்னங் குழியச் சிரித்தான். *ஓ! பாஸ் பண்ணி விடுவேனே ! கணக்கெல்லாம் சரியாகப் போட்டிருக்கிறேன். சமூக நூலில் நான் தான் முதலாகப் பாஸ் பண்ணுவேன். சரித்திரம் அப்படியே ஒரு கேள்வி விடாமல் எழுதி இருக்கேன். அதோடே அம்மா, வாத்தியார்களுக்கெல்லாம் என் பேரிலே கொள்ளை ஆசை. அவர்களுக்கு இடைவேளையின் போது நான் போய் டீ வாங்கி வந்து கொடுப்பேன். கிளாஸிலே பானைத் தண்ணீர் பிடித்து வைத்து கண்ணாடித் தம்ளரை அலம்பி சுத்தமாக வைப்பதும் நான் தான். நம் வீட்டிலிருந்து உனக்குத் தெரியாமல் இரண்டு ஏலக்காய்களை எடுத்துப்போய்த் தட்டி அதிலே போட்டு வைத்து விடுவேன். நல்ல பங்குனி மாசத்து வெயில் வேளையிலே ஏலக்காய் போட்ட ஜலத்தை சாப்பிட்டு என்னை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். கவனித்தும் மார்க்குகள் போடுவார்கள் அம்மா!"
பவானிக்கு மகிழ்ச்சியும் கோபமும் போட்டி போட்டுக் கொண்டு கிளம்பின. இந்தப் பிள்ளை இப்படிப் படிப்பில் அக்கறை இல்லாமல் தண்ணீரிலே ஏலக்காய் போட்டு உபாத்தியாயர்களிடமிருந்து மார்க்கு வாங்கப் பிரயாசைப் படுகிறானே! உண்மையிலே உழைத்துப் படித்தால் பாலு எவ்வளவு கெட்டிக்காரனாக இருப்பான்?' என்று நினைத்து வேதனைப் பட்டாள் அவள்.
தாயின் முகத்தில் தேங்கி நிற்கும் கவலையைப் பார்த் ததும் பாலு. "அம்மா கட்டாயம் நான் பாஸ் பண்ணி விடுவேன் அம்மா?.அடுத்த தடவை என்னை எந்தப் பள்ளிக்-கூடத்தில் சேர்க்கப் போகிறாய்?" என்று கேட்டு அவள் முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் பதில் கூறுவதற்குள் தெருவில் அவனுடைய சிநேகிதர்கள் வந்து அழைத்தார்கள். பாலு விளையாடுவதற்காக வெளியே எழுந்து சென்றான்.
முற்றத்து வெயில் தாழ்வாரத்தில் ஏறி வந்து கொண்டிருந்தது. பவானி குளித்துச் சமையல் செய்வதற்காக கொல்லைப்புறம் போக ஆரம்பித்தவள் தெருக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு நின்றாள்.
வாசல் கதவைத் திறந்து கொண்டு நடுத்தர வயதினனான வாலிபன் ஒருவன் வந்தான். நல்ல உயரமும், மிடுக்கான பார்வையும், எடுப்பான நாசியும், அழகான பதாற்ற-முமுடைய அவன் அவளைப் பார்த்ததும் புன் சிரிப்புடன், "கல்யாணராமன் வீடு இதுதானே? டில்லியில் அக்கௌண்ட்ஸ்' ஆபீசில் இருந்து ரிடையர் ஆனவர். அவரைப் பார்க்க வேண்டும்" என்று கேட்டான்.
பவானி சிறிது நேரம் தயங்கி நின்றாள். பிறகு நிதானமாக, ”இதுவும் அவர் வீடுதான். ஆனால் அவர் இங்கு இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கிறார். இங்கே நாங்கள் குடியிருப்பவர்கள்" என்று கூறினாள்.
"ஓ! ஐஸி! அதுவும் மாமாவின் வீடுதானா? பக்கத்து வீட்டையும் வாங்கி விட்டார் போலிருக்கிறது. நான் இந்தப் பக்கம் வந்து ஆறேழு வருஷங்கள் ஆயிற்று. என் தாயார் அவருடைய கூடப் பிறந்த தங்கை. அவள் போன அப்புறம் மாமாவை நான் பார்க்கவேயில்லை" என்று வந்திருந்த இளைஞன் பேசிக்கொண்டே நின்றான்.
பவானிக்கு என்னவோ போல் இருந்தது. அவளுக்கு இப்படியெல்லாம் பிறரிடம் பேசிப் பழக்கம் இல்லை. நெஞ்சில் உறுதியும், தைரியமும் வாய்ந்தவளாக இருந்தாலும் நடைமுறையில் அவள் வெகு சங்கோஜி. கட்டிய கணவனிடமே அவள் மனம் விட்டுப் பழகப் பல மாதங் கள் ஆயிற்று. ஆகவே தயக்கத்துடன் அவனைப் பார்த்து "இப்படி பெஞ்சியில் உட்காருங்கள். நான் போய் உங்கள் மாமாவையும் மாமியையும் அழைத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
வந்திருந்த இளைஞன் வெகு சுவாதீனமாகப் பெஞ்சியில் வந்து உட்கார்ந்து கொண்டான். பிறகு, "நோ! நோ! அனாவசியமாக உங்களுக்கு ஏன் சிரமம்? நானே போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு எழுந்தான். அதற்குள் பவானி கொல்லைப்-புறம் சென்று பார்வதி அம்மாளையும் கல்யாணராமனையும் அழைத்து வந்தாள்.
பார்வதி அம்மாள் ஒரு நிமிஷம் தயங்கியபடி அவனைப் பார்த்தாள். ’சட்'டென்று புரிந்து கொண்டவள் போல், ”யார்? மூர்த்தியா? எப்போடா வந்தே?" என்று கேட்டாள்.
கல்யாணராமன் மட்டும் ஒன்றுமே பேசவில்லை. பிறகு வீட்டிற்கு வந்தவனுடன் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்கிற காரணத்தினாலோ என்னவோ. ”மூன்று வருஷமாக உன்னிடமிருந்து கடிதமே வரவில்லையே! எங்கே, என்ன பண்ணிக் கொண்டிருந்தாய்? ”என்று கேட்டார்.
மூர்த்தி, சுருள் சுருளாக வாரிவிடப்பட்ட தன் கிராப் தலையைத் தடவிக் கொண்டான்.
உண்மையைச் சொல்லுவதா அல்லது அத்துடன் கற்பனையையும் கலந்து சரடு திரிப்பதா என்பது புரியாமல் சிறிது நேரம் யோசித்தான். அப்புறம் ஏதோ தீர்மானத்துக்கு வந்தவன் போல் "பம்பாயில் கபாதேவியில் ஒரு பெரிய துணிக்-கடையில் மானேஜராக இருந்தேன். அவர்கள் தான் என்னை இந்தப் பக்கம் அனுப்பி புதிசாகக் கடை திறந்தால் வியாபாரம் நடக்குமா என்று பார்த்து வர அனுப்பி-யிருக்கிறார்கள்" என்றான்.
”ஓஹோ! அப்படியா? சந்தோஷம் அப்பா. உன் அம்மா இருக்கிற வரைக்கும் தான் நீ எதிலும் நிலைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தாய். வகையாகக் கண்ணியமாக என் பிள்ளை இருக்கப்போகிறானா?' என்று அவள் என்னிடம் சொல்லி அரற்றிக் கொண்டே இருந்தாள். இனிமேலாவது ஒழுங்காக இருந்தாயானால் சரி' என்று கூறிவிட்டுக் கல்யாணராமன் வீட்டுக்குப் போக எழுந்தார்.
மூர்த்தியின் முகம் வாட்டமடைந்தது. யாரோ முன்பின் தெரியாத ஒரு பெண் எதிரில் மாமா சட்டென்று தன் பூர்வ காலத்தைப் பற்றிப் பேசிக் கௌரவத்தைக் குலைத்தது மூர்த்திக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பவானியை அவன் ஒரு மாதிரியாகப் பாத்து கொண்டே, பார்வதியிடம், "என்ன மாமி! பேச்சுத் துணைக்கு இருக்கட்டும் என்று குடி வைத்திருக்கிறீர்கள்போல் இருக்கிறது. வேண்டியது தானே?" என்று கேட்டான்.
"ஆமாண்டா அப்பா! வயசானவளாக இருந்தாலும் என்னைப்போல ஒண்டிக்கட்டையாக எனக்கு இருக்கப் பிடிக்காதுடா. நீ தான் உன்னைப் பச்சைக் குழந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். உனக்கு இந்த மாசியோடு முப்பத்தி ஒன்று வயசு ஆகிவிட்டதே. காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால்
மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன் ஆகியிருப்பாய். பிரமசாரிக் கட்டையாய் ஊர் ஊராய்ச் சுற்றிக் கொண்டு, நீயும் உன் போக்கும்! ஹும்... எழுந்திருந்து பெங்கள் வீட்டுக்கு வா. குளித்துச் சாப்பிடலாம்" என்று பார்வதி மேலும் அவனைப் பேச விடாமல் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.
பவானிக்கு எல்லாம் ஒரே வியப்பாக இருந்தது. சம்பாதிக்கும் ஒரு கண்ணியமான யுவன், ஏன் பிரம்மசாரியாக இருக்க வேண்டும்? மூர்த்திக்கு என்ன அழசில் குறைவா? படிப்பில் குறைந்தவனாகவும் தோன்றவில்லை.
பவானியின் மனதில் சட்டென்று ஒரு எண்ணம் மதித்தது . யார் எப்படி வேண்டு-மானாலும் இருக்கட்டும். அவன் இங்கு வருவதற்கோ , தன்னுடன் பேசுவதற்கோ எந்த விதமான சந்தர்ப்பத்தையும் அவள் ஏற்படுத்திக் கொள்ளமாட்டாள். அதற்கு அவசியமும் இல்லை .
பாலு விளையாடி விட்டுப் பசியுடன் திரும்பி வருவான் என்கிற எண்ணம் எழுந்ததும் பவானி அவசரமாகச் சென்று குளித்துச் சமையல் வேலையில் ஈடுபட்டாள்.
--------
1.8. பசுமலையும் பம்பாயும்
பார்வதி அம்மாளுடன் எழுந்து சென்ற மூர்த்தி, நேராகக் கொல்லைப் புறம் சென்று கை கால்களை அலம்பிக் கொண்டு உள்ளே வந்தான். அவன் பார்த்த இடங்களில் எல்லாம் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களுடன் இக்கிராமத்தையும் அந்த வீட்டையும் ஒப்பிட்டால் பசுமலை கொஞ்சம் கூட மாறவில்லை என்று தோன் றியது அவனுக்கு. அங்கங்கே மேடிட்ட நிலங்கள், அதன் வரப்பு ஓரங்களில் இருக்கும் கிணறுகள், அவற்றி லிருந்து இறைக்கப்படும் நீர் வாய்க்கால்களில் சுழன்று - ஓடி நிலங்களுக்குப் பாயும் காட்சி, வயல்களில் பாடுபடும் பாட்டாளி மக்கள். அவர்கள் வாழ்க்கை எள்ளளவாவது மாறி இருக்கிறதா என்றால் அதுதான் கிடை யாது. பம்பாயில் வானளாவும் கட்டிடங்களும், செல்வந்தர்கள் கூடிக் குதூகலிக்கும் ’நைட் கிளப்பு'களும் மூர்த்தியின் மனத்திரை முன்பு எழுந்தன. அங்கேதான் எத்தகைய மலர்ச்சி? அரம்பையர் போல் நாகரிகத்தில் மூழ்கித் திரியும் யுவதிகளும், யுவர்களும் அந்த நகரத்தை ஒரு பூலோக சுவர்க்கமாக அல்லவா மாற்றி இருக்கிறார்கள்!
பசுமலையின் மேட்டுக் கழனியில் தான் கிராமத்து ஏழை மக்கள் குடி இருந்தார்கள். பனை ஓலைகளால் வேய்ந்த குடிசைகள். காற்றினாலும் மழையினாலும் பிய்க்கப்பட்ட அதன் கூரைகளைப் பார்த்தால் பம்பாயின் பிரும்மாண்டமான மாளிகைக்குள் இருப்பவர்களும் இவர்களும் ஒன்றேதானா? மனிதனுக்கு மனிதன் வாழ்க்கைத் தரத்தில் இவ்வளவு வித்தியாசத்துடன் இருப்பதேன்? என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும்.
ஆனால் மூர்த்தி ஒரு சீர்திருத்த வாதியோக உன்னத லட்சியங்களுக்கு இருப்பிட-மானவனோ அல்ல. கிராமத்தின் வாய்க்காலிலிருந்து அவன் மாமா வீடு வரையில் மாறவே இல்லையே என்று நினைத்துத்தான் அவன் வியப்பில் ஆழ்ந்து போனான்.
இந்த யோசனையுடன் அவன் கொல்லைத் தாழ்வாரத்தைத் தாண்டி வரும் போது வாசற்படியில் 'ணங்' கென்று தலையில் இடித்துக் கொண்டான்.
”தலையில் இடித்துக் கொண்டாயாடா மூர்த்தி? குனிந்து வரமாட்டாயோ?" என்று கேட்டுக் கொண்டே பார்வதி சமையல் அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள்.
"ஊர் தான் மாறவில்லை என்றால் வீட்டையாவது மாற்றிக் கட்ட மாட்டீர்களோ? வாசற்படிகளையாவது இடித்துப் பெரிதாக வைக்கமாட்டீர்கள்?" என்று சொல்லிக் கொண்டே மூர்த்தி சமையல் அறையில் போய் உட்கார்ந்தான்.
அவன் எதிரில் வாதாம் இலையைப் போட்டு முறுகலாக நாலு தோசைகளை வைத்தாள் பார்வதி அம்மாள். அதற்கு மிளகாய்ப் பொடியும் எண்ணெயும் போட்டுவிட்டு அவன் அருகில் மணையின் மேல் உட்கார்ந்தாள்.
ஊர் ஊராக ஓட்டல்களில் சாப்பிட்டு அலுத்துப் போயிருந்த மூர்த்திக்கு இந்தத் தோசையும் காப்பியும் அமிருதமாக இருந்தது.
”இப்படி நான் 'ஹோம்'லியாகச் சாப்பிட்டு எத்தனையோ வருஷங்கள் ஆயிற்று மாமி" என்று பரம திருப்தியுடன் சொன்னான் மூர்த்தி.
"அதென்னடா அது? என்னவோ எலி, பூனை என்று பேசுகிறாயே, பம்பாயிலே எலி உபத்திரவம் அதிகமா என்ன?" என்று கேட்டாள் பார்வதி அம்மாள். மூர்த்தி 'கட கட' வென்று சிரித்தான்.
அவன் சிரித்து முடிப்பதற்குள் கல்யாணம் இதைக் கேட்டுக்கொண்டு உள்ளே வந்தார்.
"ஆமாம், அங்கே எலிகள் உபத்திரவம் அதிகம் தான் நம் வீட்டு மச்சில் பூனைக்குட்டிகள் இருக்கின்றனவே. அதிலே ஒன்றை அவன் பம்பாய் போகும்போது கொடுத்து அனுப்பு!"
கணவர் தன்னைக் கேலி செய்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. முகத்தை ஒரு நொடிப்பு நொடித்து விட்டு அவள்.
”மூர்த்தி! உன் மாமா ஏதாவது கொஞ்சமாவது மாறி இருக்கிறாரா, பார்த்தாயா? அதே பேச்சு, அதே பரிகாசம்! இப்படித்தான் ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்" என்றாள்.
”உன் மாமி மட்டும் ரொம்ப மாறி இருக்கிறாளோ? அப்படியே சின்னப்பெண் மாதிரி ஒடிசலான உடம்பும், படிப்படியான கூந்தலும், அப்படியே இருக்கிறாள். அன்று கழுத்திலே மூன்று முடிச்சுகள் போட்டு விட்டு அவளைப் பார்த்தபோது எப்படி என்னைப் பார்த்து முறுவலித்தாளோ அப்படியே இருக்கிறது இன்றும் அவள் சிரிப்பது!" என்று கல்யாணம் தம் மனைவியைப் பற்றிப் புகழ்வதில் ஈடுபட்டார்.
தெருவிலே ஒரே இரைச்சல் கேட்டது. பெரியவர்களும், பெண்களும், குழந்தைகளுமாக எல்லோரும் சேர்ந்து ஏகமாகச சத்தம் போட்டார்கள். கல்யாணராமன் உள்ளேயிருந்து வெளியே வந்தார். மூர்த்தியும் என்ன இரைச்சல் என்று பார்ப்பதற்காக வாசலுக்கு வந்தான். அங்கே பெரியவர்களாக ஆண்களில் நாலு பேர் நின்றிருந்தார்கள். நடுத்தர வயதுடைய பெண்களில் நாலைந்து பேர்; மற்றும் குழந்தைகளின் கூட்டம்.
"என்ன விஷயம்?" என்று விசாரித்தார் கல்யாணம் அமைதியை இழக்காமல்.
" என்ன விஷயமா? இந்தப் பையன் தினம் குளிப்பதற்கு எங்கே போகிறான் என்று உமக்குத் தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே பாலுவைக் கையில் பிடித்து இழுத்துக் கொண்டு முன்னாலே வந்தார் சேஷாத்ரி என்கிற ஒரு பெரியவர்.
கல்யாணம் பாலுவை ஏற இறங்கப் பார்த்தார். தண்ணீரில் நனைந்து, பாதி உலர்ந்ததும் உலராததுமாக இருக்கும் கிராப்புத் தலை. இடுப்பிலே அரை நிஜார் சொட்டச் சொட்ட நனைந்திருந்தது. பயத்தால் அவன் திரு திருவென்று விழித்து எல்லோரையும் பார்த்தான்.
இதற்குள்ளாக இந்த இரைச்சலைக் கேட்டு பவானியும் வெளியே வந்தாள். அவள் வெளியே வராமல் இருந்தால் அதிகமாகப் பேச்சு வளராமல் போயிருக்கும். பாலுவின் தாயைப் பார்த்ததும் அங்கிருந்த ஸ்திரீகளின் கோபம் அதிகமாயிற்று. "இந்த மாதிரி ஒரு துஷ்டத்தனம் உண்டா ? நல்ல குழந்தை !" என்றாள் ஒருத்தி.
”குழந்தையை வளர்க்கிற லட்சணம் அப்படி!" என்று குழந்தை வளர்ப்பைப்பற்றி விமரிசனம் செய்தாள் மற்றொருத்தி.
"அடியே! கேட்டதில்லையோ நீ! கைம்பெண் வளர்த்த மகன் கழிசடை என்று" என்று ஒருத்தி எல்லை மீறிப்பேச ஆரம்பித்தாள்.
பவானி பிரமை பிடித்தவள் போல் நின்றிருந்தாள். கைம்பெண்ணாக இருந்தால் அவள் தான் பெற்ற குழந்தையைக்கூட வளர்க்க அருகதை அற்றவளாகப் போய் விடுகிறாளா? சமூகத்திலே பல்வேறு காரணங்களால் ஒதுக்கப்படவேண்டியவர்கள் தானா?
பாலு தாயைப் பயத்துடன் பார்த்துக்கொண்டே நின்றான்.
கல்யாணராமன் பேச ஆரம்பித்தார்.
”அந்தப் பையன் என்ன செய்தான் என்று ஒருத்தருமே சொல்லாமல், நீங்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகிறீர்களே?" என்று கேட்டார்.
”என்ன செய்தானா பொழுது விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே இந்தப் பையன் வந்து என் பையனைக் கிணற்றில் குளிப்பதற்குக் கூப்பிடுகிறான் சார்! மிதந்து வைத்தால் யார் பதில் சொல்கிறது போலீஸுக்கு? சிவனே என்று உள்ளோடு கிடப்பவனை இதுகள் நடு வீதிக்கு இழுத்து விடும் போல் இருக்கிறதே! ஹும்" என்றார் சேஷாத்திரி பயங்கரமாகக் கண்களை உருட்டி பாலுவை விழித்துப் பார்த்தவாறு.
கல்யாணராமன் பாலுவின் கைகளைப் பற்றித் தம் அருகில் அழைத்தார்.
”ஏண்டா பாலு! நீ போய் இவர்களைப் கூப்பிட்டாயா அல்லது அவர்கள் உன்னை வந்து கூப்பிட்டார்களா? உண்மையைச் சொல்" என்று கேட்டார், அங்கு நின்றிருந்த பையன்களைச் சுட்டிக் காட்டி.
”அவன் தான் மாமா எங்களை வந்து கூப்பிட்டான்" என்றான் சேஷாத்ரியின் மகன்.
அவன் என்ன உளறி விடுவானோ என்று அவன் தகப்பனார் கவலையுடன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
”டேய்! டேய் பொய் சொல்லாதே! கிணற்றிலே நீச்சல் சொல்லித்தரேன்னு நீ தானேடா பாலுவைக் கூப்பிட்டே?" என்று மற்றொரு பையன் அதை ஆட்சேபித்தான்.
கல்யாணராமனுக்கு விஷயம் விளங்கி விட்டது. எல்லோருமாகத்தான் கிணற்றில் இறங்கி அமர்க்களம் பண்ணி இருக்கிறார்கள். ஆனால் பழி சுமத்துவதற்குப் பாலு ஒருவன் தான் அகப்பட்டான் அந்த ஊராருக்கு!
"சார்!" என்று சேஷாத்ரியைக் கூப்பிட்டார் அவர்.
"இதிலே பெரியவர்கள் சண்டை போட விஷயமே ஒன்றும் இல்லை, கிணற்றங்-கரையில் இவர்கள் பேசிக் கொண்டு கிணற்றிலே இருக்கும்போது ஒரு கட்சியாக இருந்தார்கள். நடுவில் ஏதோ சண்டை வந்து விட்டது. இப்பொழுது இவர்களுள் ஒரு எதிர்க் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவார்கள். குழந்தைகள் சண்டையில் நாம் தலையிடுவது அவ்வளவு உசித மில்லை" என்று கல்யாணராமன் கூறியதும் அங்கு வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த-வர்களுக்கு சண்டை சப் பென்று போய் விட்டது. ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றியபடி பேசிக் கொண்டே அங்கிருந்து சென்றார்கள்.
பீதியினால் உலர்ந்த வாயுடன் பாலு வாசல்குறட்டிலேயே தயங்கி நின்றான். கல்லாய்ச் சமைந்து நின்ற பவானி அவனைக் கோபத்துடன் உருட்டி விழித்துப் பார்த்தாள். ”வாசற்படி தாண்டி நீ உள்ளே வா சொல்கிறேன்!" என்கிற பாவம் அவள் முகத்தில் தெரிந்தது.
கல்யாணம் பாலுவையும் பவானியையும் கவனித்தார். பிறகு கண்டிப்புடன் “உள்ளே போய் ஈர நிஜாரை அவிழ்த்து விட்டு வேறு போட்டுக் கொள். இனிமேல் கிணற்றிலும் குளத்திலும் இறங்காதே. உனக்கேனடா இந்த வம்பெல்லாம்?" என்று கூறிவிட்டு உள்ளே போய் விட்டார்.
"பாலூ!" என்று அழைத்தாள் பவானி.
தலையைக் குனிந்து கண்ணீரை மாலை மாலையாக உதிர்க்கும் அவனைப் பார்த்து அவள் மறுபடியும், ”பாலு! உன்னாலே நான் இந்த ஊரிலே மரியாதையுடன் வாழ முடியாது போல் இருக்கே" என்றாள் வெறுப்புடன்.
”கூப்பிடுகிறேன். பேசாமல் நிற்கிறாயேடா! வாடா உள்ளே !" என்று அவன் கைகளைப் பற்றித் தர தர வென்று இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். விம்மி விசும்பிக் கொண்டே பாலு உள்ளே போனான்.
அடுத்த வீட்டுத் திண்ணையில் நின்று இது வரையில் இந்தச் சண்டையைக் கவனித்து வந்த மூர்த்தி, பவானியின் வீட்டுக்குள் சென்றான். அங்கே கூடத்தில் கையில் பிடித்த விசிறிக் காம்புடன் பாலுவை மிரட்டிக் கொண்டிருந்தாள் பவானி. ஒன்றிரண்டு அடிகள் விழுந்து அவன் விலாப்புறத்தில் வரிகள் தென்பட்டன. அவைகளைத் தடவிப் பார்த்து அழுது கொண்டிருந்தான் பாலு.
பவானியின் முகத்தில் கோபமும் துயரமும் நிரம்பியிருந்தன. ஒன்றும் தெரியாத பாலகன். பாம்பைப் பிடிக்கும் வயசு, துடிப்பு நிறைந்த சுபாவமுடையவன். அவனைக் கண்டால் ஊராருக்கு ஆகவில்லை. எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். புளியந் தோப்பில் நுழைந்து புளியம்பழம் உலுக்குகிறார்கள். கிணற்றில் குதித்து அமர்க்களம் பண்ணுகிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி யெல்லாம் ஊரில் வம்பு கிளம்புவதில்லை. இந்தக் குழந்தை செய்யும் ஒவ்வொரு
விஷமத்தையும் அவர்கள் பூதக் கண்ணாடி வைத்துப் புகார் செய்யவும் வந்து விடுகிறார்கள். ஏன்?
"ஏன்?" என்று பவானி வாய்விட்டு உரக்கவே கேட்டுக் கொண்டாள் தன்னையே. அவள் பேச ஆரம்பித்ததும் மூர்த்தி சுவாதீனத்துடன் அங்கிருந்த ஊஞ்சலில் வந்து உட்கார்ந்து கொண்டு, ”ஏனா? இந்த ஊரில் இருப்பவர்களுக்கே வயிற்றெரிச்சல் அதிகம். புத்திசாலியாக ஒரு குழந்தையைப் பார்த்தால் இவர்களுக்கு ஆகிறதில்லை . இந்த விஷயம் உங்களுக்குப் புதிசு. எனக்குப் புதிசல்ல” என்றான்.
வலுவில் வந்து பேசியும் அவனுடன் பேசாமல் இருந்தால் மரியாதைக் குறைவு என்று நினைத்து பவர்னி பதில் கூறினாள்.
"பாலு எவ்வளவோ சாதுவாக இருந்தான். இப்பத்தான் ஒரு வருஷமாக அவன் பண்ணுகிற விஷமம் சகிக்கவில்லை. இவனை வைத்துக்கொண்டு நான் படுகிற பாடு கொஞ்சமல்ல. ஊரிலே தகப்பன் இல்லாத பிள்ளை என்று இளப்பம் வேறே."
மூர்த்தி திடுக்கிட்டு பவானியை ஏறிட்டுப்பார்த்தான். களை பொருந்திய அந்த நெற்றி குங்குமத்தை இழந்தும் தன் அழகை இழக்கவில்லையே என்று நினைத்தான். மருட்சியோடு மிரளும் அந்தக் கண்களில் குறும்பும். பரிகாசமும் மிதக்க வேண்டிய காலமல்லவா இது! அவை சதா சோகத்திலும், சஞ்சலத்திலும் ஆழ்ந்து நிற்பது
அவனுக்கு வேதனையாக இருந்தது.
பெண்தான் தன்னை எப்படியெல்லாம் மாற்றிக் கொள்ள முடிகிறது! காதலொருவனைக் கைப் பிடித்தவுடன் அவளுடைய சிரிப்பிலே, பேச்சிலே, நடையிலே அவள் செய்யும் ஒவ்வொரு வேலையிலே புது மாதிரியான, மாறுதல்களைச் சிருஷ்டித்துக் கொள்கிறாள். பள்ளிப் பெண்ணாகப் படித்துக் கொண்டிருக்கும்போது வெடுக் வெடுக்கென்று பேசித் திரிந்தவள் பேச்சிலே இப்போது இனிமை மிதந்து செல்கிறது. கலகல வென்று சிரித்துக் கும்மாளமிட்ட கன்னி, காதலனைக் கண்டவுடன் புன்சிரிப்புச் சிரித்து அவன் உள்ளத்தை கொள்ளை கொள்கிறாள். எத்தனையோ புதுமை பெண்கள் நிமிர்ந்து நடப்பவர்கள் எல்லாம் காதலனைக் கண்டால் கடைக் கண்ணால் தான் பார்க்கிறார்கள். ஆனால்... பெண்ணைத் துயரம் பற்றிக் கொள்ளும் போது அவள் எப்படி மாறி விடுகிறாள்?
பவானியின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு கன்னத்தில் வழிவதைப் பார்த்தான் மூர்த்தி.
”நீங்கள்..." என்று ஏதோ கேட்க ஆரம்பித்தவன், "ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டு முடித்தான்.
"ஆமாம். பாலுவுக்கு அப்பா இல்லை. அதனால் தான் அவனை ஊரில் யாருக்குமே பிடிக்கவில்லை. ஒன்றுக்குப் பத்தாக அவன் மேல் குற்றங்கள் வருகின்றன. அதற்கு நான் என்ன செய்யட்டும்?" என்றாள்.
அதற்கு மேல் பவானியின் கண்களிலிருந்து பிரவாகம் பெருகியது.
அடுப்பங்கரையிலிருந்து அவள் விசும்புவது. வெகு நேரம் வெளியே உட்கார்ந்திருந்த மூர்த்திக்குக் கேட்டது.
-----------
1.9. மொட்டைக் கடிதம்....!
வாசல் திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த கல்யாண-ராமன். மூர்த்தி அடுத்த வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருவதைப் பார்த்து திடுக்கிட்டார்! மூர்த்தி ஒருவரிடம் அனுதாபம் காட்டுகிறான் என்றால், அதில் சுயநலம் கலந்து இருக்குமே தவிர, தன்னலமற்ற தியாக உணர்ச்சி என்று அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் கல்யாணத்தின் நினைவுக்கு வரவே அவர் மனம் மேலும் வேதனையில் ஆழ்ந்தது.
மூர்த்திக்கு அப்போது வயது இருபத்தைந்து இருக்கும். பசுமலையிலிருந்து அடுத்த டவுனில் இருக்கும் காலேஜுக்கு அவன் சைக்கிளில் போய் வருவான். அவன் படிக்கும் காலேஜிலேயே அந்த ஊர்ப் பெண்ணொருத்தி படித்துக் கொண்டிருந்தாள். அவள் தினமும் மாட்டு வண்டியில் காலேஜுக்குப் போகிற வழக்கம். குடும்பத்துக்கு மூத்த பெண்ணாக இருந்ததாலும், பெற்ற தகப்பன் இல்லாததாலும் அவள் படித்து வேலைக்குப் போய்க் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவள் தலையில் விழுந்திருந்தது. ஆகவே, அவள் அந்த எண்ணத்தில் உறுதியாக நின்று படித்து வந்தாள்.
மாட்டு வண்டி கிராமத்தின் எல்லையை அடைந்து டவுனுக்குப் போகும் ரஸ்தாவை அடைந்ததும், எங்கிருந்தோ மாயமாகக் குறுக்கு வழியாக வந்து மூர்த்தி சைக்கிளுடன் அவள் எதிரில் காட்சி அளிப்பான். பலரக சினிமாப் பாட்டுக்களையும், பாரதியின் காதல் கவிதைகளையும் பாடித் தீர்ப்பான்.
நம்முடைய செந்தமிழ் மொழியிலே அவனுக்கு ஏற்பட்ட அக்கறை கொஞ்ச நஞ்சமில்லை. அகநானூறில் காதலைப் பற்றி எத்தனை பாட்டுக்கள் இருக்கின்றன என்று அறிய அவனுக்கு அக்கறை ஏற்பட்டது. பாரதியாரின் குயில் பாட்டை அவன் தலை கீழாக ஒப்புவிக்கப் பயிற்சி செய்து கொண்டான். இவனுடைய காதல் வேதனையும், பைத்தியக்காரத் தனமான பாட்டுக்களும் அந்தப் பெண்ணுக்கு வேதனையையும் அருவருப்பையும் மூட்டின.
"என்ன ஐயா! ஒரு நாளைப் போல மாட்டுக்கு எதிரே சைக்கிளை ஓட்டுறீங்க?" என்று வண்டிக்காரன் அலுத்துக் கொண்டான்.
”சைக்கிள் மேலேயே விடப்பா நீ. இப்படிப் பட்டவங்களுக்கு தயை காட்டக் கூடாது" என்று கூட அவள் தன் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டாள். மூர்த்திக்கு அவள் வாய் திறந்து பேசியதே பிரும்மானந்தமாக இருந்தது.
வண்டிக்காரன் வண்டியை அவன் மேல் ஏற்றினால் கூடத் தேவலை என்று நினைத்து அந்தப் பாக்கியத்துக்காக அவன் காத்துக் கிடந்தான். அதன் பிறகு அந்த யுவதி நேராகவே அவனிடம் தைரியமாகப் பேசினாள்.
”மிஸ்டர்! பாதை உங்களுக்குத் தான் சொந்தம் என்று நினைத்துக் கொள்கிறீர்களே. அது சுத்தத் தவறு!" என்று கண்டித்தாள் அவள். கோபத்தினால் சிவந்த அவள் முகம் பகமலைக் கிராமத்தில் இருக்கும் குளத்தில் அலர்ந்திருக்கும் செந்தாமரையை நினைவூட்டி யது அவனுக்கு.
மூர்த்தி திடு திப்பென்று ஒரு முடிவுக்கு வந்தான். அவனுடன் அவள் தைரியமாகப் பேசுகிறாள். அவன் அவள் வண்டியின் பின்னாலேயே சைக்கிளை ஓட்டி வருவதைப் பார்த்து ஒரு தினுசாகக் சிரித்திருக்கிறாள். வெட்டும் ஒரு பார்வையை அவன் பக்கம் வீசி விட்டு அவள் பாதையின் வேறு பக்கம் பார்த்தவாறு முகத்தைத் திருப்பி-யிருக்கிறாள். ஒருவேளை மூர்த்தியின் மேல் அவளுக்குக் காதலோ என்னவோ?
இப்படி நினைத்தவுடன் அவன் உள்ளம் மகிழ்ச்சிக் கடலில் நீந்தியது. அந்தத் தாமரை முகத்தாள் அவனைக் காதலிப்பது என்றால் அது சாமான்ய விஷய மில்லை அல்லவா? ஆகவே மூர்த்தி கடைசியாக அவளுக்குக் காதல் கடிதம் எழுதத் துணிந்தான். நறுமணம் ஊட்டிய அக் கடிதத்தை ஒரு தினம் அவள் வண்டிக்குள் வீசி எறிந்து விட்டு சைக்கிளை வேகமாகச் செலுத்திக் கொண்டு காலேஜுக்குப் போய்விட்டான்.
மாலை அவன் வீடு திரும்பியதும் கல்யாணம் அவனை, "வாடா குழந்தை!" என்று என்றுமில்லாமல் வரவேற்றார். அத்தோடு விட்டு விடாமல் , ”உனக்கு இதெல்லாம் எத்தனை நாட்களாகப் பழக்கம்!" என்று கேட்டும் வைத்தார். வீட்டிற்குள்ளிருந்து பார்வதி வெளியே வந்தாள்.அவள் பட்டவர்த்தனமாக, "ஏண்டா அப்பா! ஊரிலே எங்களை மானத்தோடு வாழ விடமாட்டாய் போல் இருக்கிறதே?" என்று கேட்டாள்.
அந்த வயசிலே காதல் கடிதம் எழுதுவது அவ்வளவு தவறு என்று யாருமே சொல்ல மாட்டார்கள். ’இந்த மாமாவுக்கும் மாமிக்கும் நம்மைக் கண்டால் ஆகவில்லை. ஏதாவது சொல்கிறார்கள். அந்த அசட்டுப் பெண் இதையெல்லாம் பெரியவர்களிடம் சொல்லுவாளோ?' என்று நினைத்தான் மூர்த்தி. அந்தப் பெண்ணின் தாய் சற்று முன்பு வீட்டுக்கு வந்ததும் அவனுடைய திருவிளையாடல்களைக் கூறி அந்தக் கடிதத்தைக் காண்பித்ததையும் அவன் அறியவில்லை . அவசரப்பட்டு எதுவும் பேசக் கூடாது என்ற தீர்மானத்துக்கு வந்தவனாக மூர்த்தி அன்றிலிருந்து பதினைந்து தினங்கள் வரையில் அந்தப் பெண்ணின் எதிரில் போகாமல் நடந்து கொண்டான்.
ஒரு தினம் மூர்த்தி காலேஜிலிருந்து வீட்டுக்கு வந்ததும் கல்யாணராமன், ”ஏண்டா! அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதாமே? உன் காதல் எல்லாம் ஊதலாகி விட்டது. பார்த்தாயா? இதற்குத் தான் யோசனை இல்லாமல் நடக்கக்கூடாது என்கிறது" என்றார்.
மூர்த்தி ஸ்தம்பித்து நின்றான். அவன் கால்கள் பூமியில் புதைந்து போன மாதிரி ஆடாமல் அசையாமல் நின்றன.
*என்ன! அவளுக்குக் கல்யாணமா?" என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். உடலில் இருக்கும் ரத்தமெல்லாம் மூளைக்கு விறு விறு என்று ஏறிற்று. எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று துடித்தான் . மூன்று நாட்கள் சரிவரச் சாப்பிடாமல் ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் திரிந்தான். அவளுக்கும் தன்னிடத்தே காதல் உண்டு என்று நினைத்து தன்னைத்தான் ஏமாற்றிக் கொண்டான் அவன். அவனிடம் தனக்கு உதித்தது உண்மையான காதலா அல்லது அந்த வயதின் சேஷ்டையா என்று அவன் சிந்தித்துப் பார்க்கவில்லை.
கல்யாண வீட்டில் அமளி. மாலையில் மாப்பிள்ளை அழைப்பு ஏற்பாடுகள் பலமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, மாப்பிள்ளைப் யையனிடம் ஒரு சிறுவன் கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டுப் போனான். கடிதத்தின் வாசகம் ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை. இருந்தாலும் அந்தப் பெண்ணை மணக்கப் போகிறவனுக்கு அது பிரமாதமாகத்தான் தோன்றியது.
“நண்பரே,
தாங்கள் மணக்க முன் வந்திருக்கும் பெண் ஏற்கனவே என்னால் காதலிக்கப் பட்டவள். மனத்தை ஒருவனிடம் பறி கொடுத்து விட்டு அவள் உங்களிடம் உள்ளன்புடன் எப்படித்தான் வாழ்க்கை நடத்தப் போகிறாளோ? யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்."
என்பது தான் கடிதத்தின் சாரம். இம்மாதிரி பயமுறுத்தல் கடிதங்களும், பிதற்றல்களும் சகஜமாக இருந்தாலும், மாப்பிள்ளை இதைப் படித்தவுடன், வெட்கமும் பயமும் அடைந்தான்.
மாப்பிள்ளை அழைக்க வீட்டில் எல்லோரும் கூடி இருந்தார்கள். மாப்பிள்ளை ஊர்வலக் காரில் ஏறு மறுப்பதாகச் செய்தி வந்தது. சிறிது நேரத்துக்கு அப்புறம்தான் விஷயம் தெரிந்தது . மாப்பிள்ளைக்கு வந்த கடிதம் பெண் வீட்டாரிடம் கிடைத்ததும் எழுதியவன் யார் என்பது உடனே விளங்கிவிட்டது.
கல்யாணராமன் தம் வீட்டுக்கு வந்து இம்மாதிரி ஒரு புத்திர ரத்தினத்தை தம் சகோதரி பெற்று வைத்து விட்டுப் போனதற்காகத் தலையில் போட்டுக் கொண்டார். காதல் கடைத் தெருவிலும், காப்பி ஹோட்டல் களிலும், நடைபாதைகளிலும் விற்கப்படும் ஒரு சரக்காக மாறி இருப்பதை நினைத்து இந்த நிலைமைக்குப் பொறுப்பாளி யார் என்பது புரியாமல் திகைத்தார். தாமே நேரில் சென்று மாப்பிள்ளையிடம் பெண்ணைப் பற்றியும், அவள் குடும்பத்தைப் பற்றியும் விவரமாகக் கூறி, விவாகத்துக்குச் சம்மதிக்கச் செய்து, தாமும் உடனிருந்து கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
மாமாவே பொறுப்பேற்று கல்யாணத்தை முடித்து வைத்து விட்டார். இனிமேல் தன் ஜம்பம் ஒன்றும் அங்கே சாயாது என்பது புரிந்ததும் மூர்த்தி பசுமலைப் பக்கமே ஒரு வருஷத்துக்குத் தலை காட்டவில்லை.
பசுமலையில் இருக்கும்போதே இவ்வளவு கண்ணியமாக நடந்து கொண்டவன். இப்பொழுது பம்பாய் என்றும் கல்கத்தா என்றும் பல பெரிய நகரங்களைப் பார்த்து விட்டு வந்திருக்கிறான். மூர்த்தியின் அறிவு பல விஷயங்களைப் பற்றியும் விரிவடைந்து தானே இருக்கும்?
'பெண்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறையைப் பற்றியே அறியாதவன் பவானியின் வீட்டுக்குள் எதற்குப் போனான்? இதேதடா சங்கடம்?' என்று நினைத்துக் கொண்டு கல்யாணம் மனதுக்குள் அருவருப்பும் கவலையும் அடைந்தார்.
வெளியே வந்த மூர்த்தி மாமாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அங்கிருந்த வெற்றிலைப் பெட்டியிலிருந்து வெற்றிலையை எடுத்துப் போட ஆரம்பித்தான் . கல்யாணம் கண்ணை மூடிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்து இருந்தார்.
"ஏன் மாமா!" என்று அழைத்தான் மூர்த்தி.
"உம்..." என்றார் கல்யாணம்.
“இந்தப் பெண், பாவம் --- இப்படி இந்த வயசில்... பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது மாமா..."
”பரிதாபமாக இருக்கிறதா? உம்...ஏண்டா . ! அவள் அப்படியெல்லாம் தன்னைப் பிறத்தியார் பார்த்துப் பரிதாபப் படும்படி நடந்து கொள்ள மாட்டாள். அவளைப் போல துன்பத்தை விழுங்கிக் கொள்ளும் சக்தி யாருக்குமே கிடையாதுடா. அதெல்லாம் அவளோடு போகட்டும். நீ பேசாமல் வேலையைப் பார்த்துக் கொண்டு போ."
”எங்கே மாமா போகிறது? என் ஆபீஸிலே என்னை மதராஸ் ராஜ்யத்துக்கு டிராவலிங் ஸேல்ஸ் மென்னாகப் போட்டிருக்கிறார்கள். என் ஜாகை இனி மேல் இங்கேதான். மாசம் - மாமியிடம் எழுபது ரூபாய் என் சாப்பாட்டுக்காகக் கொடுத்து விடுவேன் . பெற்றவர்களைப் போல் என்னை வளர்த்தவர்களை விட்டு எங்கே போகிறது!"
கல்யாணம் மூடியிருந்த கண்களைத் திறந்து அவனை நேருக்கு நேராகப் பார்தார். பிறகு கண்டிப்பு நிறைந்த குரலில்,
"உன்னை யாரடா ஊரை விட்டுப் போகச் சொன்னது? பிறத்தியார் வம்பிலே தலையிடாமல் உன் வேலையைக் கவனித்துக் கொண்டு இரு என்றுதானே சொன்னேன்" என்றார்.
"மாமா எப்பொழுதும் இப்படித்தான். அவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு மூர்த்தி மேலும் அவரிடம் பேச்சை வளர்த்தாமல் திண்ணையில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான்.
----------
1.10. விசிறிக் காம்பு
குழந்தை பாலுவுக்குப் பிடிக்குமே என்று செய்து வத்திருந்த முருங்கைக்காய் சாம்பாரும் உருளைக் கிழங்கு பொடிமாசும் சமையலறையில் அடுப்பின் கீழ் ஆறிப் போய்க் கொண்டிருந்தது. பவானி கன்னத்தில் கையை ஊன்றித் தூணில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள்.
ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த பாலு விசிறிக் காம்பால் பட்ட அடிகளைத் தடவிப்பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். தெருவிலே சடுகுடு ஆடினால் தண்டனை. குளத்துக்குப் போனால் அடி. கிணற்றில் இறங்கினால் உதை. பள்ளிக்-கூடம் திறந்திருந்தால் இருக்கவே இருக்கின்றன புஸ்தகங்களும் வாத்தியார்களும்! இவ்வளவு பெரிய லீவைத் தந்து விட்டு அதைக் கழிப்பது எப்படி என்று சொல்லித் தராமல் இருக்கிறார்களே என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தான். வயிற்றில் பசி. சற்று முன் உள்ளேயிருந்து வந்த முருங்கைக்காய் சாம்பாரின் வாசனை மூக்கைத் துளைத்தது. சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் என்று அவன் நாக்கில் ஜலம் ஊறிற்று. ஆனால் பவானி அவன் நின்றிருந்த பக்கம் கூடத் திரும்ப வில்லை. என்னவோ பெரிதாக நடந்து விட்டதுபோல் முகத்தை 'உர்' ரென்று வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.
பாலுவுக்குக் கால்கள் வலி எடுக்கவே மெதுவாக ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டான். பவானியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. ஊராரின் கடுஞ்சொற்கள் அவள் நொந்த மனத்தில் வேல் கொண்டு குத்தித் துளைத்தன.
பாலு தாயைக் கவனித்துக் கொண்டே ஊஞ்சலில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தான். பசியினால் ஏற்பட்ட களைப்பினால் அவன் அயர்ந்து தூங்கிப் போனான். பாலுவின் உள்ளம் விழித்துக் கொண்டது. பசுமலையை விட்டு அவனும் அவன் அம்மாவும் ரயில் ஏறி சென்னைக்குப் போகிறார்கள். அங்கே ரயிலடியில் அவனுக்குப் பிரமாதமான வரவேற்பு மாமா நாகராஜனும், மாமி கோமதியும், அவர்கள் மகள் சுதியும் அவனை ஆசையுடன் வரவேற்றுக் காரில் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்கள். சுமதிதான் எவ்வளவு நல்ல பெண்! தன்னுடைய மேஜையிலேயே பாலுவின் புஸ்தகங்களை வைத்துக் கொள்ளச் சொல்கிறாள். தன்னுடைய விளையாட்டுச் சாமான்கள் அவனுக்குத்தான் என்கிறாள் அவள் கண்களைச் சுழட்டிப் பேசி கலீரென்று சிரிக்கும் போதெல்லாம் பாலு மெய்ம்மறந்து போகிறான்.
"ஏலே பையா! நீ நீச்சல் கத்துக்கொள்ளடா, உடம்புக்கு நல்லது" என்கிறார் மாமா நாகராஜன்.
பவானி வியர்க்க விறு விறுக்க வருகிறாள். "அண்ணா ! இந்த மாதிரியெல்லாம் அவனுக்கு இடங் கொடுக்காதே! அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அங்கேதான் ஆற்றிலும் குளத்திலும் குதித்துக் கொண்டிருந்தானே! போதும் அண்ணா!"
"அதெல்லாம் வேண்டாம் மாமா" என்று பரிதாபமாகச் சொல்லிவிட்டு பாலு சுமதியிடம், "இந்த ஊரிலே விசிறிக்கு காம்பு நீளமா குட்டையா?" என்று கேட்கிறான்.
"ஏண்டா பாலு! விசிறியெல்லாம் இங்கே அடுப்பு விசிறத்தான் உபயோகப்படும். காற்று வேணுமா உனக்கு? இந்தா ...பட்..." என்று மின் விசிறியின் பொறியைத் தட்டி விடுகிறாள் சுமதி.
காற்று சுழன்று சுழன்று வேகமாக அடிக்கிறது.
”அப்பா! என்ன காற்று மனசுக்கு சுகமாக இதமாக இல்லையே” என்று பாலு திணறுகிறான். அந்தத் திணறலில் தவித்து ' பொத்' தென்று விழுகிறான்.
கண் விழித்துப் பார்த்தபோது பவானியின் மடியில் படுத்துக்கொண்டிருந்தான் பாலு.
"ஏண்டா கண்ணா ! உனக்குப் பசிக்கவில்லையா மணி இரண்டாகப் போகிறதே! சாப்பிட வாயேன்" என்று அழைத்தாள் பவானி.
"நீயும்தான் சாப்பிடவில்லை அம்மா, உனக்குப் பசிக்காதா? வா, நானும் நீயும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று சொல்லியபடி பாலு எழுந்து சமையலறைக்குள் புகுந்து இரண்டு தட்டுக்களை எடுத்து வைத்துத் தானே உணவு பரிமாற ஆரம்பித்தான்.
சற்று முன் கண்ணீரால் நனைந்து போயிருந்த பவானியின் கண்கள் இவ்வதிசயத்தைப் பார்த்து மகிழ்ந்தன. "நீ கொஞ்சம் உருளைக்கிழங்கு அதிகமாகவே போட்டுக் கொள்ளடா பாலு!" என்று மகிழ்ச்சி ததும்பச் சொல்லிக் கொண்டே பவானி தட்டின் முன்னால் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
-------------
1.11. புதுப் பள்ளிக்கூடம்
சற்று முன் விசிறிக் காம்பால் பவானி தன்னை அடித்ததை பாலு அடியோடு மறந்து விட்டான். அதைப் போலவே மகன் செய்த துஷ்டத்தனத்தைப் பவானி அறவே மறந்து. அவனை உபசரித்து உணவு பரிமாறினாள்.
பவானி குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலுவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். எலுமிச்சை வண்ண உடலும், அகன்ற பெரிய விழிகளும், சுருள் சுருளான கேசமும் கொண்ட அந்தப் பாலகன் உண்மையிலேயே அழகானவன். துரு துருவென்று பார்க்கும் அந்தப் பார்வையில் அவன் துடுக்குத் தனம் எல்லாம் தெரிந்தது . இப்படி அழகான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பதே ஒரு பேறு என்று அவள் நினைத்தாள். ஆனால் ஊரார் அதை ஒப்புக் கொள்கிறார்களா? எப்படியாவது பாலுவை ஒரு நல்ல பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டால் அவன் விஷமங்களும் துடுக் குத்தனங்களும் ஓய்ந்து போகும். இந்தப் பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைக் கவனிப்பதே இல்லை என்று நினைத்துக் கொண்டாள்.
பாலு சாப்பிட்டு விட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு கொல்லைப் புறம் சென்று கை அலம்பிக் கொண்டு உள்ளே வந்தான் வந்தவன் தாயின் இலையைக் கவனித்து விட்டு, "என்ன அம்மா! குழம்புச் சாதத்தை அளைந்து கொண்டு எந்தக் கோட்டையையோ பிடிக்க முயன்று கொண்டிருக்கிறாயே. சாதம் ஆறிப்போய் இருக்குமே" என்று கேட்டான். பவானி அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை.
"ஏண்டா அப்பா! பள்ளிக்கூடம் திறக்க இன்னும் பதினைந்து தினங்கள் தானே இருக்கிறது? உன்னை வேறு பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டுமே. பேசாமல் இருக்கிறாயேடா?" என்று கேட்டாள்.
பாலுவிற்குப் புதுப் பள்ளிக்கூடம் என்றதும் உற்சாகம் பொங்கி வந்தது. அவன் தாயின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, "ஓ! அதுக்கென்ன அம்மா! சேர்ந்தால் போச்சு. டி. ஸி. தான் வாங்கணும். ரைட்டரைக் கேட்டால் கொடுப்பார். டி.ஸி. வாங்க நாளைக்குப் போகட்டுமா?" என்றான் ஆவலுடன்.
பவானிக்கு ஒரே கவலை. புதுப் பள்ளிக் கூடத்தில் அவனைச் சேர்ப்பதற்கு யாராவது பெரியவர்களாக ஏற்றுக் கொண்டு செய்தால் தேவலை என்று நினைத்தாள்.
அடுத்த வீட்டுக் கல்யாணராமன் அவளுக்கு எது வேண்டுமானாலும் செய்வார். ஒவ்வொன்றிற்கும் போய் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டுமே என்று யோசித்தாள் பவானி. வேறே அவளுக்காக உதவ அந்த ஊரில் யார் இருக்கிறார்கள்? மாசம் பிறந்தவுடன் நாலாம் தேதியன்று ஊரிலிருந்து ஐம்பது ரூபாய் வந்து கொண்டிருந்தது. மணியார்டர் கூப்பனில் ஒரு நாலு வரிகள் எழுதியிருப்பான் நாகராஜன். "பவானிக்கு ஆசீர்வாதம். பாலு சமத்தாகப் படித்துக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன். உனக்கு மேலும் பணம் ஏதாவது தேவையானால் எழுதவும்" என்று இருக்கும்.
இரண்டு பேர் சாப்பிட மாதம் ஐம்பது ரூபாய்க்கு மேல் ஆகிவிடுமா? கல்யாணராமன் பவானியிடமிருந்து ஒரு சல்லிக் காசுகூட வாடகைக்கு என்று வாங்கிக் கொள்வதில்லை. வீட்டை வாங்கி இப்படி இனாமாக விடுவார்களோ என்று நாலு பேர் பேசிக் கொண்டார்கள். "அதெல்லாம் என் இஷ்டம், உங்களுக்கு என்ன ஐயா?"
என்று அடித்துப் பேசினார் அவர்.
"அது ஒரு அரைப் பைத்தியம். ராஜா மாதிரி மருமகன் இருக்கிறான். அவனுக்குக் காலா காலத்தில் கல்யாணம் பண்ணி வைத்து. இருக்கிறதை அவனுக்குக் கொடுக்கக் கூடாதா? மேட்டுக் கழனியிலிருந்த மனையைப் பள்ளிக்கூடம் கட்டத் தானம் பண்ணி விட்டதாமே!" என்று சிலர் பேசிக் கேலி செய்தார்கள்.
"இந்தக் காலத்தில், தான தருமம் செய்து அது பத்திரிகைகளிலும் வெளியானால் தான் சார் பெருமை!" என்றார் ஒரு பொறாமைக்காரர்.
இவர்கள் இப்படிப் பேசுவதைக் கேட்டு பார்வதி அவரிடம், "மூர்த்திக்கும் வயசாகிறதே, நல்ல இடமாக வந்தால் பாருங்களேன்" என்றாள். மூர்த்தியைக் கல்யாணராமன் கவனிக்கவில்லை என்று ஊரார் சொல்வது பார்வதியின் காதில் விழுந்தது. அதனால் அவள் கணவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள்.
"நீயும் நானும் பார்த்துச் செய்து வைக்கிற கல்யாணத்துக்கு அவன் இசைந்து வருவானா? அவனுக்கு 'லவ்' இல்லாமல் கல்யாணம் பண்ணிக் கொள்ளவே பிடிக்காதே" என்றார் அவர்.
பார்வதிக்கு இந்தக் காலத்து வழக்கங்களெல்லாம் சிறிது தெரியும். கணவர் என்ன சொல்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. நாற்பத்தைந்து வயதுக்கு மேல் ஆகியிருந்தாலும் முகத்தில் வெட்கம் படர.."உங்களுக்கு என்ன வேலை? எதையாவது சொல்வீர்கள். அப்படி அவன் யாரையாவது 'லவ்' பண்ணுகிறான் என்று தெரிந்தால் அதன்படியே செய்து விட்டுப் போகிறது" என்றாள்.
"ஆகட்டும். பார்க்கலாம். கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் போன்றது. இந்தப் பிள்ளைக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேடுவது மிகவும் சிரமம். பேச்சிலும் செய்கையிலும் ஒழுங்கு தவறியவன். அவனைத் திருத்தி நல்வழிப்படுத்த ஒரு பண்புள்ள பெண் தான் வேண்டும்" என்று மனைவியைச் சமாதானம் செய்தார் கல்யாணராமன்.
மூர்த்தி பசுமலைக்கு வந்த நாட்களாக அவனைப் பற்றி அதிகம் கவலைப்பட்டவர் கல்யாணராமன் தான். நாலு இடங்களுக்குப் போய் விட்டு வந்தவன் கௌரவமாகவும் கண்யமாகவும் நடந்து கொள்வான் என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால் அவனுடைய போக்கு சிறிதும் மாறவில்லை என்று தெரிந்ததும் அவர் மனம் வருந்தினார். அன்று காலையில் தெருவில் நடந்த சில்லறைச் சண்டைக்கு அப்புறம் அவர். மூர்த்தி பவானியின் வீட்டுக்குள் போய் விட்டு வந்ததை விரும்பவில்லை. "இவன் தத்துப் பித்தென்று பேசிக் கொண்டு அங்கே போவானேன்?' என்று தான் அவர் நினைத்தார். மூர்த்தி தெருத் திண்ணையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது கல்யாணம் தாகத்துக்குச் சாப்பிட உள்ளே சென்றார். அங்கே பார்வதி வெள்ளரிப் பிஞ்சுகளைத் துண்டங்களாக நறுக்கி, மிளகும் உப்பும் சேர்த்துப் பொடி செய்து அதில் துண்டங்களைப் பிசிறி இரண்டு கிண்ணங்களில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
"ஏது வெள்ளரிக்காய்? வாங்கினாயா என்ன?" என்று கேட்டுக் கொண்டே கல்யாணம் மணையில் உட்கார்ந்து கொண்டார்.
"ஆமாம். மேட்டுக் கழனியிலிருந்து அந்தப் பெண் பச்சையம்மாள் கொண்டு வந்தது. மூர்த்திதான் விலை பேசி வாங்கினான். அவன் தான் என்னமாகப் பேரம் பேசுகிறான் என்கிறீர்கள்? அந்தப் பெண்ணிடம் குழைந்து குழைந்து பேசி வாங்கினான்" என்று மருமகன் சமர்த்தை மெச்சி வாயாரப் புகழ்ந்து கொண்டாள் பார்வதி.
கல்யாணத்துக்கு இதைக் கேட்கவே அருவருப்பாக இருந்தது. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், இப்படிப் பல்லைக் காட்டும் மூர்த்தியின் மேல் அவருக்கு ஆத்திரமாக வந்தது.
"இந்தா! சிறிசுகள் வந்தால் நீ பேரம் செய்து வாங்குவாயா? மூர்த்தி வாங்கினான் கீர்த்தி வாங்கினான் என்கிறாயே! அந்தக் கல்யாண விஷயம் மறந்துவிட்ட தாக்கும் உனக்கு! நீதான் எதையும் லேசில் மறந்து போகிறவளாயிற்றே' ' என்று கண்டித்தார் அவர்.
பார்வதி பதில் கூறுவதற்குள் கொல்லைக் கதவை திறந்து கொண்டு பவானியும் பாலுவும் உள்ளே வந்தார்கள். பாலு கல்யாணத்தின் அருகில் சென்று உட்கார்ந்து வெகு சுவாதீனமாகக் கிண்ணத்திலிருந்த வெள்ளரி துண்டுகளை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.
பவானி பார்வதியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரம் அங்கிருந்த யாருமே பேசவில்லை. பனியன் கூடப் போடாமல் வெற்றுடம்பாக அறையில் நிஜாருடன் உட்கார்ந்திருந்தான் பாலு. காய்களை நறுக்கி முடித்ததும் அரிவாள் மணையை ஒருபுறமாக வைத்துவிட்டுத் திரும்பிய பார்வதியின் கண்களில் பாலுவின் விலாப்புறம் தெரிந்தது. வரி வரியாக விசிறிக் காம்பால் அடித்த அடிகள் அங்கே அந்தப் பொன்மேனியில் கன்றிப்போய்த் தென்பட்டன. ஒரு மகவுக்காகத் தவமிருந்த அந்தப் பெண் உள்ளத்தில் வேதனை நிரம்பியது. பச்சைப் பாலகன், ஒன்றும் தெரியாத வயசு. இப்படி அடியும் உதையும் வாங்க அந்தக் குழந்தை செய்த தவறு தான் என்ன என்று நினைத்துப் பார்வதி கண் கலங்கினாள். புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள், "பவானி! குழந்தையை அடித்தாயா?" என்று கேட்டாள்.
கல்யாணராமன் அப்பொழுது தான் பாலுவைக் கவனித்தார். வரிவரியாகத் தெரிந்த அந்த அடிகளைப் பார்த்ததும் அவர் பவானியை ஏறிட்டுப் பார்த்தார். அந்தப் பார்வையில் பிள்ளையைப் பெற்று விட்டால் மட்டும் போதாது. எப்படி வளர்க்க வேண்டும் என்றும் தெரிந்து இருக்க வேண்டும் எனும் பாவம் தொனித்தது. வயசான அத்தம்பதி தன்னை ஒரு தினுசாகப் பார்ப்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தாள்,
"ஆமாம் மாமி. பாலுவை அடித்து விட்டேன். ஊரார் சொன்னதை நீங்கள் கேட்டிருந்தால் நான் அடித்தது சரியா தவறா என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்" என்றாள் பவானி.
”ஊரார் என்ன சொல்லி விட்டார்கள் பவானி? தகப்பன் இல்லாத பிள்ளை என்று தானே சொன்னார்கள். வாஸ்தவம்தானே அம்மா அது ? வாசு இருந்திருந்தால் பாலுவை நீ இப்படி அடித்திருப்பாயா?" என்று கேட்டார் கல்யாணம்.
தன்னை அடித்ததற்காக அம்மாவை எல்லோரும் கண்டித்துப் பேசுவதைப் பாலு விரும்பவில்லை. ஆகவே அவன் கணீரென்ற குரலில்.."அம்மா அடித்தால் பரவா யில்லை மாமா. அதற்குப் பதிலாக எனக்கு இரண்டு பங்கு உருளைக் கிழங்கு பொடிமாஸ் போட்டு விட்டாள். அத்தோடு என்னைக் கட்டிக் கொண்டு, 'என் கண்ணே, ஏண்டா நீ விஷமம் செய்கிறாய்?' என்று கேட்டுக் கண்ணீர் விட்டாள்" என்றான் பாலு.
வெப்பத்தால் சுடும் மணல் வெளியின் அடித்தனத்திலே ஓடும் குளிர்ந்த நீரைப் போல தாயின் கருணை இதயத்தின் ஆழத்திலே தேங்கிக் கிடக்கிறது. சமயம் நேர்ந்தபோது அது பொங்கிப் பிரவாகமாக வெளியே வருகிறது. அழகிய சுனைகளையும் நீர் ஊற்றுக்களையும் வற்றாத ஆறுகளையும் தன் அகத்தே கொண்டிருக்கும் பூமிதேவி. குமுறும் எரிமலைகளையும், கொதிக்கும் ஊர் றுக்களையும் கூடத் தாங்கியிருக்கிறாள். தாயின் உள்ளத்தில் கருணையும் கண்டிப்பும், அன்பும் கோபமும் ஒன்றோடொன்று பிணைந்து தான் இருக்கும்.
அம்மா வேண்டுமென்று தன்னை அடிக்கவில்லை. ஊரார் ஏசுகிறார்களே என்று குமுறித்தான் அடித்தாள் என்பதை அந்த பிஞ்சு மனம் புரிந்து கொண்டதோ இல்லையோ? ”என் கண்ணே!" என்று அவள் அவனை அன்புடன் அணைத்துக் கொண்டவுடன் அவன் அடியை மறந்து விட்டான். இனிமேல் விஷமம் செய்யக் கூடாது.. என்று தீர்மானித்துக் கொண்டான்.
கல்யாணராமன் தன்னையே நொந்து கொண்டார் ஒரு கணம். விரிந்த கடலைப் போல வியாபித்து நிற்கும் தாயின் அன்புக்குச் சற்று முன் களங்கம் கற்பிக்க முனைந்தார் அல்லவா?
பார்வதி மட்டும் அருகில் இருந்த அலமாரியைத் திறந்து தேங்காய் எண்ணெயை எடுத்துப் பஞ்சில் தோய்த்து பாலுவின் விலாப் புறத்தில் தடவிக் கொடுத்தாள். பவானிக்குப் பாலுவின் விலாவைப் பார்க்கும் போதெல்லாம் இதயம் வலுத்தது.
”நாளைக்குச் சரியாகப் போய்விடும் மாமி', என்றான் பாலு அலட்சியமாக.
"என்ன சரியாகப் போகிறதோ, போ! ஆடு மாடுகளைக் கூட இப்படி அடிக்கக் கூடாது" என்றாள் பார்வதி சற்று உஷ்ணமாகவே.
"அப்படியா மாமி! எங்க பள்ளிக்கூடத்து வாத்தியார்கள் இதைவிடக் கேவலமாக அடிப்பார்கள். ஒரு வாத்தியார் பிரம்பால் அடித்தால் வெளியே வரி வரியாகத் தெரிந்து விடும் என்று தலையில் 'நறுக்' 'நறுக்' சென்று குட்டுவார். ஒருவர் காதைப் பிடித்துத் திருகுவார். ஒருவர் வாய்க்கு வந்தபடி ஏசுவார்" என்று பாலு தன் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். பிறகு அவன், "மாமா, அடுத்த தடவை என்னை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுங்கள். அதைப்பற்றிக் கேட்கத்தான் நானும் அம்மாவும் இங்கே வந்தோம்' என்றான்.
------------
1. 12. பெண்களின் சம உரிமை!
திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த மூர்த்தி விழித்துக் கொண்டு சமையலறையில் இவர்கள் பேசுவதை அரை குறையாகக் கேட்டுக் கொண்டிருந்தான் . இடையில் வந்து சடாலென்று பேச்சில் கலந்து கொள்வதைவிடச் சற்றுப் பொறுத்திருந்து எழுந்து போகலாம் என்று நினைத்து அங்கேயே படுத்திருந்தான்.
பாலு புதுப் பள்ளிக்கூடத்தில் சேர இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அடுத்த வீட்டுக்குள் போய் பவானியுடன் பேசுவதற்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டாமா?
பாலு கூறியதைக் கேட்டதும் கல்யாணம், ”அதற்கென்ன அப்பா டவுனில் இருக்கும் முனிசிபல் ஹைஸ்கூலில் சேர்த்தால் போச்சு. நாளைக்குப் போய் ரைட்டரைக் கேட்டு டி.ஸி. வாங்கி வந்துவிடு" என்றார் .
"அவனை ஏன் போகச் சொல்ல வேண்டும்? நானே போய் வாங்கி வருகிறேன்" என்றாள் பவானி.
திண்ணையிலிருந்த மூர்த்தி மெதுவாகக் கூடத்தை அடைந்தான். பேச்சு சுவாரஸ்யமான கட்டத்துக்குத் திரும்புகிறது என்பதை அறிந்ததும் அடுத்தாற்போல் இருந்த சமையலறைக்குள் அவன் நுழைவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை .
இது வரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பவானி தயக்கத்துடன் எழுந்து நின்றாள்.
”நோ, நோ -- நீங்கள் பேசாமல் உட்கார்ந்து கொள்ளுங்கள் இந்தக் காலத்தில் -- அதுவும் ஈக்வாலிட்டி ஏற்பட்டிருக்கும் இந்த நாளில், ஒரு ஆணைப் பார்த்துப் பெண் எழுந்து நின்று மரியாதை செய்வது எல்லாம் எனக்குப் பிடிக்காது. உட்காருங்கள்" என்றான் மூர்த்தி .
பவானி தயங்கிக் கொண்டே உட்கார்ந்தாள்.
"நீ பாட்டுக்கு உட்கார் பவானி. அவன் உன் உடன் பிறந்தவன் மாதிரி" என்றாள் பார்வதி.
”சே! சே! சுத்தத் தவறு! உடன் பிறந்தவன் எதிரில் உட்காரலாம்; அன்னியன் எதிரில் உட்காரக் கூடாதாக்கும்! - பெண்கள் சுதந்திரம், சம உரிமை எல்லாம் சும்மா பேச்சளவிலே இருக்கிறதே தவிர, நடை முறையில் வரக் காணோமே" என்று அலுத்துக் கொண்டான் அவன்.
"அதெல்லாம் நடைமுறையில் வருவதற்கு முன்பு வாலிபர்களின் மனம் நன்றாகப் பண்பட வேண்டும். அது தெரியுமா உனக்கு மூர்த்தி? பேச்சிலே ஒழுங்கு இருந்தால் மட்டும் போதாது. செய்கையிலும் நடத்தையிலும் ஒழுக்கமும் பண்பாடும் நிரம்பி இருக்க வேண்டும். அது எல்லோரிடமும் இருக்கிறதா அப்பா? பெண்களை நிமிர்ந்து பார்க்காமல் போகிறவனை அசடன் என்றும், அப்பாவி என்றும் கேலி செய்கிறகாலம் ஆயிற்றே இது?" என்றார் கல்யாணராமன் .
மூர்த்தியின் முகம் சட்டென்று வாடிப் போயிற்று. "என்ன மாமா இது? நான் ஏதோ பேசப் போக நீங்கள் என்னவோ சொல்லுகிறீர்களே" என்று பேச்சை மாற்றினான்.
பவானிக்கு இந்தப் பேச்செல்லாம் பிடிக்கவில்லை. பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்து ரைட்டரிடமிருந்து டி.ஸி வாங்குவது ’சிவனை நேரில் தரிசித்து வரம் வாங்கும் விஷயமாகவல்லவா இருக்கிறது?' என்று கவலைப்பட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
தலையைக் குனிந்து சிந்தனையில் மூழ்கி இருந்த பவானியின் தோற்றத்தை மூர்த்தி தன் ஒரக் கண்களால் அளவெடுத்துக் கொண்டான். கனகாம்பர வர்ணத்தில் மெல்லிய கரை போட்ட கைத்தறிப் புடவையை உடுத்தி, வெள்ளைச் ’சோலி' அணிந்திருந்தாள் அவள். அலை அலையாகப் படிந்து வளர்ந்திருந்த கூந்தலை முடிச்சிட்டி ருந்தாள் பவானி.
நீண்ட அவள் கண் இமைகள் இரண்டும் மை தீட்டப் பட்டவை போலக் கருமையுடன் விளங்கின. அவள் வேண்டுமென்று கண்களைச் சுழற்றுவது இல்லை. ஆனால், மனத்திலே குமிழியிடும் துயரம் அவள் கண்களில் தேங்கி அவைகளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தி அங்கும் இங்கும் சுழல வைத்தன.
'யாருடன் பேசினால் என்ன தவறு நேர்ந்து விடுமோ? யாரைப் பார்த்தால், ஏதாவது களங்கம் வந்து விடுமோ' என்றெல்லாம் அவள் மனம் தவித்துக் கொண்டிருந்தது. அழகாகப் பிறந்தது அவளுடைய குற்ற மில்லை. அழகை ஒரு பெண்ணுக்கு அள்ளி அளித்த ஆண்டவன் அவள் வாழ்க்கையைச் சூன்யமாக்கி விட்டானே. அவனுடைய குற்றம்தானே அது?
தண்ணீர் கொண்டு வருவதற்குக் குளத்துக்குப் போனால் அறுபது வயசான சேஷாத்ரி ஏதாவது காரணத்தை வைத்துக் கொண்டு அவளிடம் பேச வருகிறார்.
”பையன் நன்றாகப் படிக்கிறானா? வாசு போன அப்புறம் உன் அண்ணா இந்தப் பக்கமே வரவில்லையே? கூடப் பிறந்தவர்களே அப்படித்தான் அம்மா" என்று ஏதாவது பேசிக் கொண்டு நிற்பார் குளத்தங் கரையில்.
”என்னோடு பேசாதீர்கள். இதெல்லாம் என்ன அனாவசியமான பேச்சுக்கள்!" என்று அவரிடம் சொல்லி விட வேண்டும் என்று பவானி துடிப்பாள். ஆனால் ஊரில் நாலு பெரியவர்களுடைய உதவி தனக்குத் தேவையாக இருக்கும் என்று எண்ணி ஒரு பரிதாபச் சிரிப்புச் சிரித்து விட்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்து விடுவாள்.
தலையைக் குனிந்து கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாலும் அவளுடைய சிந்தனை பூராவும் பாலுவின் வருங்காலத்தை எப்படி உருவாக்குவது என்பதில் முனைந்திருந்தது. பவானி இப்படி திடீர் என்று மௌனியாகச் சிந்தனையில் மூழ்கி விடுவதை பார்வதியும் கல்யாணமும் கவனித்திருக்கிறார்கள். ஆனால் மூர்த்தி மட்டும் தன்னைப் பார்த்துத்தான் அவள் தலை குனிந்து உட் கார்ந்து இருக்கிறாள் என்று விகல்பமாக நினைத்துக் கொண்டு அந்த அதர்மமான கற்பனைக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தான்.
-------------
1.13. அம்பலத்தரசன்
தகுந்த துணையின்றி வாடும் ஒரு அபலையின் வாழ்க்கையிலே. இன்பமும் அமைதியும் பார்ப்பதற்குக் கிட்டாது.
கல்யாணராமனின் வீட்டிலிருந்து கிளம்பி பவானி கொல்லைப் பக்கமாகவே தன் வீட்டுக்குள் சென்றாள். கொல்லையில் அடர்த்தியாகப் படர்ந்திருந்த நித்திய மல்லிகைப் பந்தலிலிருத்து 'கம்' மென்று மணம் வீசியது. மாலைத் தென்றலில் மலர்ந்து பசுமையான இலைகளின் ஓடையே அவை ஆடி அசைவதே வனப்பு மிகுந்த காட்சியாக இருந்தது.
பந்தலின் கால் ஒன்றில் சாய்ந்து பவானி சிறிது நேரம் வான வெளியையும், தொலைவில் மறையும் சூரியனின் அஸ்தமனத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கினிப் பிழம்பான ஆதவன் தன் வெப்பத்தைக் குறைத்துக் கொண்டு மேற்குக் கடலாகப் போய்க் கொண்டிருந்தான். வான வீதி எங்கும் பாவைகளின் பட்டம். தெருக்களில் மேய்ச்சலிலிருந்து திரும்பும் பமக்களின் குளம்பொலி. பசுமலைக் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் பசுபதி கோவிலிலிருந்து மிதந்து வரும் பணியின் நாதம்.
'இன்னொருவருடைய மனதிலே என்ன இருக்கிறது? விஷம் இருக்கிறதா அல்லது அன்பெனும் அமுதம் நிறைந் திருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? கல்யாணராமன் வெள்ளை மனத்தவர். அன்புடன் பழகுகிறார். அந்த அம்மாள் பார்வதி கருணையே உருவானவள். அடக்கமானவள். ஆனால் அவர்? அந்த மூர்த்தி எப்படிப்-பட்டவர்? பேச்சும் செய்கையும் அவரைப் பலவிதமாக எண்ணத் தோன்றுகிறதே!' என்று குழம்பினாள் பவானி.
அப்பொழுது கோவிலிலிருந்து காற்றிலே ஒரு இசை கலந்து வந்தது. மணியின் நாதத்தோடு அந்த இசை பரவியது.
இசையின் ஆனந்தத்தில் லயித்துப் பவானி அப்படியே நின்றாள். மேற்கே செக்கர் வானில் ஒளிப் பிழம்பாகச் சுழலும் சூரியனின் வடிவத்திலே தில்லையம் பதியிலே ஆனந்த நடனமிடும் இறைவன் தோன் றினான். உலகையே தன் சக்தியால் ஆட்டுவிக்கும் வள்ளலின் ஆட்டங்களுக்கு முன்பு நல்லவையும், தீயவையும். தலை குனிந்து வணங்க வேண்டியது தானே?
பவானியின் கல்யாணத்தின் போது அவளுக்குப் பல பரிசுகள் வந்திருந்தன. அதிலே அவளுக்குப் பிடித்தமான தேவாரப் பாடல்கள் புத்தகத்தை மட்டும் எடுத்துப் பத்திரமாகப் பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டாள். யாரோ ஒருவர் அன்புடன் அளித்த நடராஜனின் திருஉருவப் படத்தை வீட்டுக் கூடத்தில் மாட்டி வைத்தாள்.
குடும்பம் பல்கிப் பெருகப் போகிறது என்றுதான் முதலில் அவள் நினைத்தாள். ஆனால், அவள் இதயத்தில் அரசு புரிந்த நடராஜன் வேறு விதமாகவல்லவா செய்து விட்டான்? கணவனைப் பிரிந்த பிறகு சிலகாலம் அவள் நடராஜனின் உருவத்தை ஏறிட்டும் பார்க்க வில்லை. வாசு போய் ஒரு வருஷம் வரையில் அந்தப் படத்தில் தூசும். தும்பும் படிந்து கிடந்தது.
அன்று திருவாதிரை நாள். கோவிலில் பாண்டும் நாதஸ்வரமும் ஒலித்தன. உதயத்தில் நடராஜன் ஆடிக் கொண்டே கோபுர வாயிலில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க வந்து விட்டான். பவானி தன் வீட்டுத் திண்ணை ஓரமாக வந்து நின்று கோவிலின் வாயிலை நோக்கினாள்.
அருள் சுரக்கும் ஆண்டவனின் வதனம் அந்தச் காலை வேளையில் அன்புடன், தன் மகவுக்குப் பாலூட்டும் தாயின் கருணை முகத்தை நினைவூட்டியது. தாயை மறந்து மகவால் உயிர் வாழ முடியுமா? வறண்டு போயிருந்த அவள் உள்ளத்தில் அன்புப் பிரவாகம் பெருக ஆரம்பித்தது. பித்துப் பிடித்தவள் போல் வீட்டுக்குள் ஓடினாள். கூட்டத்தில் மாட்டியிருந்த நடராஜப் பெருமானின் உருவப் படத்தை நீர் மல்கும் கண்களால் பார்த்தாள் . விம்மி விம்மி அழுது கொண்டே . . ’பிரபு! என்னை மன்னித்துவிடு! உன்னை உதாசீனம் செய்தால் என் நெஞ்சில் ஏற்பட்ட துயரத்துக்கு முடிவு காண முடியும் என எண்ணி ஏமாந்து விட்டேன்' என்று வாய் திறந்து தன் உறவினர் ஒருவருடன் பேசுவது போல் அந்தப் படத் கடன் பேசினாள் பவானி.
கொல்லையில் பவழ மல்லிகைப் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. கூடை நிறைய மலர்களைச் சேர்த்து எடுத்து வந்து பாலை புனைந்து படத்துக்கு அணிவித்தாள் பவானி. அன்றிலிருந்து அவள் துன்பத்தால் வாடும் போதெல்லாம் தன் ஒப்புவமையற்ற புன்னகையால் நட ராஜப் பெருமான் அவளைத் தேற்றி வந்தான்.
கல்யாணராமனும் புன்னகை புரிந்து தான் அவளுடைய துயரங்களைக் கேட்கிறார். பார்வதி கவலையும் கஷ்டமும் பட்டுக் கொண்டே அந்தப் பேதைக்கு ஆறுதல் அளிக்கிறாள்.
’மூர்த்தி’ என்று நினைத்ததும் பவானியின் மனம் ஒரு வினாடி 'திக்' கென்று அடித்துக்கொண்டது. உடம்பு ஒரு தரம் குப்பென்று வியர்த்தது. அவன் கபடமாகச் சிரிக்கும்போது அதில் வஞ்சகம், சுயநலம், அதர்மம். கோழைத் தனம் இவ்வளவும் குமிழியிடுகின்றனவே என்று நினைத்தாள் பவானி.
இவ்வளவு பேர்களுடைய சிரிப்பையும் விட அவளுக்கு நடராஜப் பெருமானின் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்புத்தான் பிடித்திருந்தது. ஆகவே, அவள் அப்பொழுதுதான் அலர்ந்து கொண்டிருந்த நித்திய மல்லிகை மலர்களைப் பறித்து எடுத்துக் கொண்டு வீட் டுக்குள் நுழைந்தாள்.
கூடத்தில் ஸ்வாமி படத்தருகில் விளக்கேற்றி விட்டு இரண்டு ஊதுவத்திகளை எடுத்துக் கொளுத்திச் சுவரில் செருகி வைத்தாள். வாழை நாரை எடுத்து வந்து படத்துக்கு நேராக உட்கார்ந்து கூடையிலிருந்த மலர்களைத் தொடுக்க ஆரம்பித்தாள்.
அந்த அந்தி வேளையிலே, சற்றே திறந்திருந்த கொல்லைக் கதவை நன்றாகத் திறந்து கொண்டு அசட்டுச் சிரிப்புடன் மூர்த்தி உள்ளே வந்து நின்றான்.
பந்தாட்ட நிபுணன் போல் அவன் “ஸ்போர்ட்ஸ்' பனியனும், அதன் கழுத்துப் புறத்தில் சற்றே வெளியில் தெரியும்படியாகச் சுற்றப்பட்டிருந்த கைக்குட்டையும், 'பனாமா பாண்ட்'டும் அணிந்து உதட்டைப் பற்களால் அழுத்திக் கடித்துக் கொண்டே நின்றான். அவன் தடவியிருந்த வாசனைத் தைலத்தின் நெடி காத வழிக்கு வீசியது.
”யார்? நீங்களா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் பதறி எழுந்த பவானி.
"ஆமாம். என்னைக் கண்டு நீங்கள் ஏன் இப்படிப் பதறுகிறீர்கள்? படித்த பெண்ணாகிய நீங்கள் இப்படிப் பயந்து நடுங்குவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றான் மூர்த்தி.
----------
1.14. அன்னையும் ஆண்டவனும்
மல்லிகை மாலையைக் கையில் பிடித்துக் கொண்டு முகம் வெளிறிட அவள் நின்ற காட்சி பழைய சித்திரம் ஒன்றை நினைவூட்டியது அவன் மனத்தில். ’என் வீட்டுக்குள் உத்தரவில்லாமல் ஏன் வந்தாய்? வெளியே போய் விடு' என்று சொல்ல வேண்டும் போல் பவானி திணறினாள். ஆனால், கலவரத்தால் வார்த்தைகள் தொண்டைக்-குள்ளேயே புதைந்து போயின. கலவரமும் குழப்பமும் போட்டியிட அவள் பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவள் வெகுண்டு எழாமல் மௌனியாக நின்றது மூர்த்திக்கு அதிகமான துணிச்சலை ஏற்படுத்தியது. அவன் நிதானமாக பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு ”பாருங்கள் மாமாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன். பாலுவை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்க்க வெண்டும். அவ்வளவு தானே? அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு என்ன உதவி தேவையானாலும் என்னிடம் கேளுங்கள் செய்வதற்குச் சித்தமாக இருக்கிறேன்" என்று நாடக பாணியில் தலையைத் தாழ்த்தித் தன் பணிவைத் தெரிவித்துக் கொண்டான்.
பவானிக்குச் சற்றுத் தைரியம் வந்தது. "சே! சே! அதெல்லாம் வேண்டாம். உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்?" என்றாள் பவானி, தன் கையில் இருந்த மாலையைப் பார்த்துக் கொண்டே.
மாலையிலிருந்த அரும்புகள் யாவும் மலர்ந்து 'கம்' மென்று மணம் வீசிக் கொண்டிருந்தது. இவன் வராமல் இருந்தால் இத்தனை நேரம் அதைப் படத்துக்குப் போட்டிருப்பாள் அவள். சட்டென்று அவள் மனசில் ஓர் எண்ணம் தோன்றியது. கோவிலுக்குப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியே கிளம்பி விட்டால் ஒரு வேளை போய் விடக்கூடும் என்று தோன்றவே, அருகில் இருந்த அலமாரியைத் திறந்து தட்டில் வெற்றிலைப் பாக்குப் பழம், கற்பூரத்தை எடுத்து வைத்தாள்.
பெஞ்சியில் உட்கார்ந்திருக்கும் தன்னை அவள் லட்சியம் பண்ணின மாதிரியாகவே காட்டிக் கொள்ள வில்லையே என்று மூர்த்தி மனத்துள் குமைந்தான். அவளோடு மறுபடியும் பேச்சை எப்படி தொடங்குவது என்று புரியாமல் திகைத்தான்.
அதற்குள் பவானி மாலையை நடராஜப் பெருமானுக்குச் சாத்தி விட்டுக் கையில் தட்டுடன் கொல்லைப் பக்கம் போகத் திரும்பினாள். மூர்த்தி தொண்டையைக் கனைத்துக் கொண்டு எழுந்து நின்றான்.
”எங்கே கோவிலுக்கா?" என்று அவளைத் தடுத்துப் பேசினான்.
"ஆமாம்; இன்று கிருத்திகை போய்விட்டு வருவது வழக்கம்"
முன்னைவிட அவள் வார்த்தைகள் சற்று உஷ்ணமாகவே வெளி வந்தன.
”இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?" என்று கேலியாகக் கேட்டான் மூர்த்தி.
”எதில்?" - பவானி திகைத்துப் போய்க் கேட்டாள்.
”கோவிலுக்குப் போகிறதில், அங்கே அவர்கள் இது தான் கடவுள் என்று சொல்லிக் காட்டும் உருவத்தை வணங்குவதில்."
பவானி, கூட்டத்தில் இருந்த நடராஜனின் உருவத்தை ஏறிட்டுப் பார்த்தாள். என்றும் எப்பொழுதும் நிலவும் அந்தப் புன்னகையைக் கவனித்தாள். பிறகு அழுத்தமாக ”உங்களுக்குப் பெற்றோர் இருக்கிறார்களா?" என்று கேட்டாள்.
"ஏன்? அப்பா போய் ரொம்ப காலம் ஆகிவிட்டது. அம்மா சமீபத்தில் நாலைந்து வருஷங்களுக்கு முன்பு தான் காலமாகி விட்டாள்" என்றான் மூர்த்தி.
”அப்படியா? அந்த அம்மாள் தான் உங்கள் தாயார் என்று எப்படி நிச்சயமாகச் சொல்வீர்கள்?"
மூர்த்தியின் முகம் வெளிறியது. ”என்ன? நீங்கள் என்ன சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள்?" என்றான்.
பவானிக்கு கோபம் வந்தது.
”சம்பந்தத்துடன் தான் பேசுகிறேன். பிறந்த தினத்திலிருந்து பார்த்து வந்தாலும். தாயின் அன்பணைப்பிலே வளர்ந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் கர்ப்பத்தில், அவள் ரத்தத்தினாலும் வளர்ந்ததனால் அந்த நம்பிக்கை வேரூன்றி விட்டதல்லவா? அதைப் போலவே இறைவன் என்னும் மகாசக்தியும் தாயைப் போன்றதுதான். அதைவிட மேலானது. பெற்ற தாய் மகவை மறக்கும் காலமும் உண்டு. ஆனால் நம்மைப் படைத்த ஆண்டவன் நம்மை மறந்தான் என்கிற பேச்சே கிடையாது. கோவில். கடவுள் பக்தி, அரிய பண் பாடு. சீலம், சத்தியம், நேர்மையாவும் நம் உள்ளத்திலே தாயன்பைப் போல வளர்ந்து வேரூன்றி இருக்கிறது. கண்டதைப் படித்து விட்டு, கண்டவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டு, குதர்க்கம் பண்ணாதீர்கள்!" என்று சொல்லிக் கொண்டே பவானி கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு வீதியில் இறங்கிக் கோவிலை நோக்கி நடந்தாள்.
'வெறிச்' சென்று கிடந்த அந்த வீட்டைப் பார்த்தான் மூர்த்தி. கூடத்திலிருந்த நடராஜப் பெருமான் அவனைப் பார்த்துச் சிரித்தார்.
திறந்து கிடந்த கொல்லைப் பக்கமாக பார்வதி பாலுவுடன் உள்ளே வந்தாள். அவள் கையில் ஒரு பாத்திரத்தில் வெண் பொங்கலும், இன்னொரு கையில் மாங்காய் ஊறுகாய் ஜாடியும் இருந்தது.
”பவானி, பவானி, இன்று கிருத்திகை ஆயிற்றே. ராத்திரி நீ சாப்பிடமாட்டாய் என்று நினைவு வந்தது. இதை எடுத்துக் கொண்டு வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள் பார்வதி. அங்கே மூர்த்தி நிற்பதைப் பார்த்ததும், ”நீ எங்கேடா இங்கு வந்தாய்? எங்காவது வெளியே போய் இருக்கிறாயாக்கும் என்றல்லவா நினைத்தேன்? பவானி எங்கே?" என்று கேட்டாள்.
மூர்த்திக்கு நடுக்கம் கண்டது. ”நீ எங்கேடா இங்கு வந்தாய்?' என்ற கேள்வி என்ன சாமானிய மானதா?
’உனக்கு இங்கே என்ன வேலை’ என்கிற அர்த்தம் அதில் புதைந்து கிடந்தது. பார்வதி சமையலறைக்குள் சென்று தான் கொண்டு வந்தவைகளை வைத்து விட்டுத் திரும்பியதும் மூர்த்தி சமாளித்துக் கொண்டு, "நான் பாலுவைத் தேடிக் கொண்டு வந்தேன் மாமி. நான் உள்ளே வரும் போது பவானி கொல்லைப் பக்கமாகவே கோவிலுக்குப் போவதைப் பார்த்தேன்" என்றான்.
”கோவிலுக்குப் போனாளா? என்னைக் கூப்பிடாமல் போகமாட்டாளே?" என்று ஒரு கணம் தயங்கியபடி யோசித்தாள் பார்வதி. பிறகு என்னவோ நினைத்துக் சொண்டவளாக அவனைப் பார்த்து, "சரி. நானும் இப்படியே கோவிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டுக் கோவிலுக்குச் சென்றாள்.
மூர்த்தி சிந்தனை நிறைந்த மனத்துடன் வீட்டை அடைந்தான். அவன் மனத்திலே பல போராட்டங்கள் நடந்தன. கோவிலுக்குச் சென்ற பவானி பார்வதி மாமியிடம் தன்னைப் பற்றி ஏதாவது சொல்லி விடுவாளோ என்று அஞ்சினான். அதைத் தெரிந்து கொண்டு மாமா, "ஏண்டா! அந்த வீட்டுக்குள் உனக்கு என்னடா வேலை? மறுபடியும் உன் புத்தியைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டாயே' என்று ஏதாவது சொல்லி விட்டால் என்ன பண்ணுவது என்று மனத்துக்குள் வேதனைப்பட்டான்.
ஆனால் பெருந்தன்மையும், நிதான புத்தியுமுடைய பவானி கோவிலுக்குச் சென்றவுடன் முதலில் விநாயகப் பெருமானுடைய சன்னிதிக்குச் சென்று அவனைத் தோத்திரம் செய்து வணங்கினாள். அன்று கிருத்திகை யாதலால் மூலஸ்தானத்தில் அதிகக் கூட்டம். அங்கே நின்று உலகெலாமுணர்ந்து ஓதற்கரிய பரம் பொருளை மன முருகித் துதித்தாள்.
வீட்டிலே அரைமணிக்கு முன்னால் நடந்த சம்பவங்களை அவள் அநேகமாக மறந்துவிட்டாள். அவள் உள்ளத் தெளிவுடன் முருகனின் சமூகத்தை அடைந்தவுடன், ”பவானி! என்னைக் கூப்பிடாமல் கோவிலுக்கு வந்துவிட்டாயே! உன்னை வீட்டில் போய்த் தேடிய பிறகுதான் நீ இங்கு வந்திருப்பது தெரிந்தது. மூர்த்தி சொன்னான்" என்றாள் பார்வதி.
ஒரு கணம் பவானிக்கு மூர்த்தியின் பேச்சுக்கள் நினைவுக்கு வந்தன. அரையிலே பச்சைப்பட்டு தரித்து நவரத்தினங்களால் ஆன ஆபரணங்களை அணிந்து, கையிலே தாங்கியிருக்கும் சக்தி வேலுடன் கந்தவேல் நிற்கும் கண்கொள்ளாக் காட்சியை அவன் பார்க்காததனால் தான் 'கோவிலிலே என்ன இருக்கிறது?' என்று கேட்டான். கோவிலில் இல்லாத அழகு. இன்பம். வேறு எங்கே இருக்கிறது?
ஹும்....... பாவம்! சிறு பிள்ளை ! கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்ததனால், இப்படிக் கண்டபடி பேசிக் கொண்டு அசட்டுத்தனமாக நடக்கிறார் பாவம்! என்று மனத்துக்குள் அனுதாபப்பட்டாள் பவானி. மூர்த்தியைப் போலத் தான் பாலுவை வளர்க்கக் கூடாது.
கொஞ்சம் கண்டிப்பும், மிரட்டலும் அவசியம் தான் என்று நினைத்துக் கொண்டாள்.
சன்னிதியில் தீபாராதனை நடந்தது. விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு பவானியும் பார்வதியும் வெளியே பிராகாரத்தை அடைந்தார்கள்.
யார் முதலிலே பேசுவது. எதைப் பற்றிப் பேசுவது என்று தோன்றாமல் இருவரும் மௌனமாகவே பிரதட்சிணம் செய்தார்கள். ’மூர்த்தி உன் வீட்டுக்கு வந்திருந்தாளா? அவன் ஒரு மாதிரிப் பையன்' என்று சொல்லிப் பவானியை எச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் பார்வதிக்கு எண்ணங்கள் தோன்றின. ஆனால் யாரைப் பற்றியும் அவதூறாகச் சட்டென்று பேசி விடக்கூடாது என்று தன் மனத்தை அடக்கிக் கொண்டாள் அவள். மூர்த்தி வந்திருந்தான். வருவதைப் பற்றித் தவறில்லை. ஆனால் உலகம் அதைத் தெரிந்து கொண்டு பேசுமா? எனக்குக் கவலையாக இருக்கிறது! என்று பார்வதியிடம் கூறிவிட வேண்டும் என்று பவானி பன்முறை முயன்று தன்னையே அடக்கிக் கொண்டாள். 'சொந்த மருமகனைப் பற்றி மாமியிடமே அவதூறாகப் பேசி விடலாமா?' என்று நினைத்து பவானி எதுவுமே பேசவில்லை.
---------
1.15. குற்றமுள்ள நெஞ்சு
குற்றம் செய்தவனுடைய நெஞ்சிலே நிறைந்து இருக்கும் பயமானது ஒருவித விசித்திரத் தன்மையுடையது. ஒவ்வொரு நிமிஷமும் அது அவனை ’நீ ஒரு குற்றவாளி' என்று எச்சரித்துக் கொண்டே இருக்கும். நல்லதையோ கெடுதலையோ செய்யும்படித் தூண்டுவது பானம்தான். எச்சரிப்பதும் மனமேதான்.
பார்வதியும் கோவிலுக்குப் போன பிறகு மூர்த்தி திறந்த கொல்லைக் கதவைச் சாத்திக்கொண்டு தெருவில் இறங்கிக் கோவிலை நோக்கி நடந்தான். பிராகாரத்தை அவர்கள் சுற்றி வரும் போது, திருடனைப் போல பெரிய கல்தூண்களுக்குப் பின்னால் மறைந்திருந்து பவானியையும் பார்வதியையும் கவனித்தான். எதிர்பார்த்தது என்ன? பார்வதியைப் பவானி கோவிலில் சந்தித்தால் தனியாக ஒரு இடம் தேடிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து பார்வதியிடம் மூர்த்தியைப் பற்றிச் சொல்லி அழுவாள் என்று நினைத்திருந்தான். ஆனால், ஒன்றுமே நடவாதது போல் பவானி அமைதியாக ஒவ்வொரு சன்னிதியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருவது அவனுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.
பவானியும் பார்வதியும் வீடு திரும்பும் போது இரவு ஏழரை மணி இருக்கும். கல்யாணராமன் பவானியின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பாலுவுக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தார். அவர்கள் வீட்டை அடைவதற்கு முன்பே மூர்த்தி வேறொரு சந்தில் புகுந்து, அங்கே வந்து பாலுவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டான். பள்ளிக்கூடம் விடுமுறை ஆதலால், கல்யாணம் சில கதைகளைப் பாலுவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.
”காந்தி மகாத்மா சிறு பையனாக இருந்தபோது தான் மாமிசம் சாப்பிட்டால் உடம்பு வலுவாகி வெள்ளைக் காரர்களை இந்த நாட்டை விட்டு விரட்டி விடலாம் என்று நினைத்து ரகசியமாகத் தன் நண்பனுடன் மாமிசம் சாப்பிட்டார். ஆனால் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் அவர் இப்படிச் செய்வது அவருக்கே பிடிக்கவில்லை. எத்தனையோ இரவுகள் இதைப்பற்றி நினைத்துக் கொண்டு தூங்கவே மாட்டாராம்" என்றார் கல்யாணம்.
”அப்படியானால் கெட்ட காரியங்களையும், மனசுக்குப் பிடிக்காதவைகளையும் செய்தால் தூக்கம் வராதா மாமா?" என்று கேட்டான் பாலு.
”ஆமாம் பாலு! திருடன் நிம்மதியாகத் தூங்க மாட்டான். அப்படித் தூங்கினாலும், அவனைப் போலீஸார் பிடித்துக் கொண்டு போவதாகவும், சிறையில் கல் உடைப்ப-தாகவுமே அவன் கனவு கண்டு கொண்டிருப்பான். அவனவன் செய்கைகளைப் பொறுத்தே இருக்கிறது உள்ளத்துக்குக் கிடைக்கும் ஆறுதல்" என்றார் கல்யாணம்.
இந்த உபதேசங்களைக் கேட்கவே பிடிக்கவில்லை மூர்த்திக்கு. ‘வயசான இந்தக் கிழங்களே இப்படித்தான் பெரிய சாமியார் மாதிரி வேதாந்த பாடம் சொல்லிக் கொடுக்கிறார் குழந்தைப் பையனுக்கு’ என்று நினைத்தான் மூர்த்தி.
அப்பொழுது பவானி வீட்டை அடைந்தாள். "இன்றைக்கு என்ன அம்மா கோவிலில் ரொம்ப நாழிகை இருந்து விட்டாய்? ஏதாவது உற்சவமா என்ன?" என்று கேட்டார் கல்யாணம்.
"வீட்டில் இருப்பதைவிட அங்கே இருந்தால் எவ்வளவோ ஆறுதலாக இருக்கிறது மாமா. உலகத்திலே எனக்குச் சில கடமைகள் இருப்பதால் வீடு என்றும் வாசல் என்றும் இருந்து பார்த்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் இப்படியே எங்காவது புண்ணிய ஸ்தலங்களாகப் பார்த்து வட்டு வரலாம்" என்றாள் பவானி.
கல்யாணராமன் சிரித்தார். ”ஒவ்வொருவரும் இப்படி விரக்தியடைந்து கிளம்பி விட முடியுமா? அதைச் சரியென்றும் நான் சொல்ல மாட்டேன். உனக்கு வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே" என்றார்.
"எனக்கா? வாழ்க்கையில் எனக்கு என்ன மாமா தேவை? காலை மலர்ந்து பகலாவதற்குள் கருகிப் போன என் வாழ்க்கையில் இன்னும் என்னவோ பாக்கி இருக்கிற மாதிரிச் சொல்லுகிறீர்களே!"
”அப்படியெல்லாம் மனசை அலட்டிக் கொள்ளக் கூடாதம்மா. பாலு படித்துப் பெரியவனாகிவிட்டால் அப்புறம் உனக்கு வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் இருக்கப் போகிறது!" என்றார் கல்யாணம்.
தன்னுடைய தாய் திடீரென்று கலகல வென்று பேசிக் கொண்டிருப்பது பாலுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
”கதை கேட்டு அலுத்து விட்டது மாமா. வேறே ஏதாவது விளையாட்டுச் சொல்லிக் கொடுங்கள்" என்று .
அவன் கல்யாணராமனைப் பார்த்துக் கேட்டவுடன், மூர்த்தி அவனைப் பார்த்து “உனக்கு என்ன விளையாட்டு தெரியும் சொல். நானும் நீயும் விளையாடலாம்" என்று கேட்டான்.
பாலுவுக்கு உற்சாகம் பொங்கி வந்தது.
"ஒரு வாரமாக சேஷாத்திரி வீட்டில் கேரம் ஆடிப் பழகி இருக்கிறேன். அந்த ஆட்டம் நன்றாக இருக்கிறது. விளையாடலாமா?" என்றான்.
பார்வதியும் அடுப்பங்கரை வேலைகளை முடித்துக் கொண்டு தெருத் திண்ணையில் வந்து உட்கார்ந்தாள். பாலு சொல்லியதைக் கேட்டவுடன் அவள், "ஆமாம் மூர்த்தி! ’கேரம்' பலகை மச்சில் தூசு படிந்து கொண்டு கிடக்கிறது. நாளைக்கு அதை எடுத்து பாலுவுக்குக் கொடு" என்று கூறினாள்.
பாலுவுக்கு அப்பொழுதே அந்தப் பலகையை எடுத்து வைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அன்று இரவு முழுவதும் அவனுக்குச் சரியான தூக்கமே இல்லை.
--------
1.16. டவுன் பஸ்
அடுத்த நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் பலானிக்குப் பாலுவை அழைத்துப் போய் வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு வரவேண்டும் என்கிற விஷயம் நினைவுக்கு வந்தது. ஆனால் பாலு படுக்கையை விட்டு எழும் போதே கேரம் பலகையைப் பற்றி நினைத்துக் கொண்டே எழுந்தான். அம்மாக்குத் தெரியாமல் மூர்த்தி மாமாவைப் பார்த்து அந்தப் பலகையை வாங்கி வந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். எழுந்திருந்து பல் தேய்த்து முடிப்பதற்குள் பாவனி அவனைப் பல தடவைகள் 'எத்தனை மணிக்குப் பள்ளிக்கூடம் போகவேண்டும்' என்று கேட்டு விட்டாள்.
பாலு நிதானமாகப் பற் பொடியை இடது கையில் வைத்துக் கொண்டு மதில் சுவர் ஓரமாகப் போய் அடுத்த வீட்டில் எட்டிப் பார்த்தான். மூர்த்தியும், பற்பசையும் ’பிரஷ்' ஷையும் கையில் எடுத்துக்கொண்டு "என்னடா விஷயம்?" என்று கேட்டுக் கொண்டு பவழ மல்லிகை மரத்தடியில் வந்து நின்றான். பாலு பயத்துடன் உள்புறம் பார்த்து விட்டு, "மூர்த்தி மாமா! கேரம் பல கையை மச்சிலிருந்து எடுத்துத் தருகிறீர்களா?" என்று கேட்டான்.
"ஓ! எடுத்துத் தரேன்."
"..என்னோடு யார் ஆடுவார்கள்?' '
*பூ! பிரமாதம்! நான் ஆடிவிட்டுப் போகிறேன். இதற்காகக் கவலைப்படுவாயோ?" என்று கேலியாகக் கூறிவிட்டுச் சிரித்தாள் மூர்த்தி.
அதற்குள் சமையலடையிலிருந்து பவானி பாலுவை அழைத்தாள்.
”இன்றைக்கு என்ன... அழுது வடிகிறாய்? பள்ளிக் கூடம் போக வேண்டுமென்றால் உனக்கு அழுகை தான் போ" என்று கூறியதைக் கேட்டதும் மூர்த்தி, ' ஏண்டா இன்று பள்ளிக்கூடத்துக்குப் போகிறாயா என்ன?" என்று விசாடத்தான்.
"போகவேண்டும் மாமா. அம்மாவும் தானும் போய் வரவேண்டும். அதுக்காகத்தான் அம்மா ஓடுர அடர்க்களப் படுத்துகிறான்"
அதற்கு மேல் மூர்த்திக்கு அங்கே இருப்புக் கொள்ள வில்லை. அவசரமாகப் பல் தேய்த்து விட்டு உள்ளே சென்று காப்பி அருந்தினான். முதல் வேலையாகப் பரணில் கிடந்த 'கேரம்' பலகையை எடுத்துக் கீழே வைத்து விட்டுச் சமையலறைக்குள் சென்று பார்வதியிடம்,
"மாமி! இன்றைக்கு நான் டவுன் வரைக்கும் போக வேண்டிய வேலை இருக்கிறது. சாட்டாட்டுக்கு வரமாட்டேன். எனக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டாம்" என்றான். அதைக் கேட்ட பார்வதி, ”ஏண்டா அட்டா! திருச்சி வரைக்கும். 'காம்ப்’ போகவேண்டியிருக்கும் என்று நேற்று ராத்திரி சொன்னாயே?" என்று கேட்டாள்.
"நாளைக்குப் போகலாம் என்று இருக்கிறேன் மாமி" என்று சுருக்கமாகக் கூறிவிட்டு, அவன் குளித்து உடை அணிந்து கொண்டு கிளம்பும்போது காலை ஒன்பது மணி ஆகிவிட்டது.
பவானியும் பாலுவும் சாப்பிட்டு விட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு கல்யாணராமன் வீட்டுக்குள் வந்தார்கள். அப்பொழுது தான் ஸ்நானம் செய்து விட்டுப் பூஜையில் ஈடுபட்டிருந்த கல்யாணம் ”என்னம்மா வெயில் ஏறி விட்டதே! காலையில் சீக்கிரமே கிளம்பி இருக்க வேண்டும்" என்றார்.
பிறகு பள்ளிக்கூடத்தில் சீக்கிரமே வேலைகளை முடித்துக் கொண்டு வந்து விடும்படியாகக் கூறினார். இருவரும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தார்கள்.
பசுமலை பஸ் ஸ்டாண்ட் குளத்தங்கரையின் சமீபத்தில் இருந்தது. குளத்தைச் சுற்றிப் பெரிதும் சிறிதுமாக வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் கல்பெஞ்சுகள் போட்டிருந்தார்கள். சுமை தாங்கிகளும் இருந்தன. தாக சாந்திக்காக அங்கே இரண்டு மூன்று இள நீர்க் கடைகளும், ஒரு சோடாக் கடையும் இருந்தன. அதைத் தவிர கிழவி ஒருத்தி விற்கும் பனஞ்சாறுக்கு அங்கே ஏகப் பட்ட கிராக்கி.
பவானியும் பாலுவும் அங்கே வந்து சேர்ந்தபோது மணி பதினொன்றாகி விட்டது. ஒன்பதரை மணி பஸ் கிளம்பி டவுனுக்குப் போய்விட்டது. அடுத்த பஸ் பதினான்றே காலுக்கு வரும் என்று சோடாக் கடைக்காரர் அறிவித்தார். மரத்தடியில் கிடந்த பெஞ்சில் இருவரும் உட்கார்ந்தார்கள் .
மினு மினு வென்று பசுமையாக இருக்கும் இள நீர்க் காய்களைச் 'சதக் சதக்' கென்று சீவி இள நீரைக் கண்ணாடி ட்ம்ளரில் கவிழ்த்து நிரப்பி அவன் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பாலு கவனித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான். இளநீர்க் காய்களில் இருக்கும் இளந் தேங்காயைத் தின்று, இனிப்பான அந்த நீரைச் சாப்பிடும் அவர்களை அவன் மாறி மாறிக் கவனித்துக் கொண்டிருந்தான். தானும் அந்த மாதிரிச் சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு சையாக இருந்தது . பவானியும் பாலு அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.
”உனக்கு வேணுமாடா? சாப்பிடுகிறாயா?" என்று கேட்டாள்,
"நீயும் சாப்பிடு அம்மா !" என்றான் அவன்.
"நான் என்ன குழந்தையா. வழியில் பார்க்கிறதை யெல்லாம் வாங்கிச் சாப்பிட?" என்றாள் பவானி.
இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரன் மடமட வென்று இரண்டு இள நீரைச் சீவிக் கண்ணாடி டம்ளர்களில் நிரப்பினான்.
"சாப்பிடுங்க அம்மா, குழந்தை சொல்லுது'* என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் கொடுத்தான்.
இருவரும் சாப்பிட்டனர். சில்லறை கொடுப்பதற்காகப் பவானி தன் கைப் பையைத் திறந்தபோது, ”வேண்டாம் நான் கொடுத்து விட்டேன்" என்று சொல்லிக் கொண்டு மூர்த்தி அவள் எதிரில் வந்து நின்றான். பவானியின் திகைப்பு அடங்குவதற்கு முன்பு *மூர்த்தி மாமா, மூர்த்தி மாமா 'கேரம்' பலகையை படுத்தாச்சா?’ என்று கேட்டுக் கொண்டே பாலு அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
பஸ் வரும் சத்தம் கேட்டு அங்கிருந்த பிரயாணிகள் எல்லோரும் சுறுசுறுப்படைந்தனர்.
பாலுவின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு மூர்த்தி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். திகைத்த உள்ளத்துடன் பவானி பேச முடியாடல் பஸ்ஸில் ஏறினாள். பள்ளிக்-கூடத்துக்குப் போகிறோமே என்று அவள் அன்று சற்று நாகரிகமாக உடுத்திக் கொண்டிருந்தாள். தினம் தலையை வாரி முடிந்து கொள்கறவள் இன்று 'பிச்சோடா' போட்டுக் கொண்டிருந்தாள். கறுப்புக் கரை போட்ட வெள்ளை மில் புடவை கட்டி இருந்தாள். சாதாரணமாக பார்க்கும் போதே எடுப்பாகத் தோற்றமளிக்கும் பவானிக்கு அவை விசேஷ அலங்காரங்களாக அமைந்த மாதிரி இருந்தன, கட்டுக்குள் அடங்காமல் அவள் முன் நெற்றியில் கூந்தல் சுருள்கள் சுருண்டு விழுந்து கொண்டிருந்தன. அவைகளை அவள் எத்தனை முறைகள் கோதிவிட்டுக் கொண்டாலும், மீண்டும் நெற்றியில் விழுந்து அவள் அழகை அதிகப்படுத்தின.
பஸ் புறப்பட்டது. டிக்கட் கொடுக்கிறவரிடம் மூர்த்தி ரூபாயைக் கொடுத்து மூன்று டிக்கெட்டுகள் வாங்கினான். பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் பவானி, பாலு. மூவரும் ஒரு பக்கத்தில் உட்கார வேண்டியிருந்தது. பாலுவுக்கு ஒரு பக்கத்தில் பவானி உட்கார்ந்தாள். இன்னொரு பக்கத்தில் மூர்த்தி உட்கார்ந்தான். பவானிக்கு இவையெல்லாம் சற்றும் எதிர்பாராத சம்பவங்கள்.
மூர்த்தி தடவியிருந்த மருக்கொழுந்து செண்ட்டின் மணம் ’கம்' மென்று நாசியைத் துளைத்தது. பவானி கழுத்து வலியெடுக்கிறமாதிரி ஜன்னல் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். பாலு மட்டும் தொணதொண வென்று ஏதோ மூர்த்தியுடன் பேசிக்கொண்டிருந்தான்.
பஸ் அடுத்த கிராமத்தின் 'ஸ்டாண்டில்' வந்து நின்றது. அங்கேயும் சிற்றுண்டிக் கடைகளும், இளநீர்க் கடைகளும் இருந்தன. அந்த இளநீர்க் கடைக்காரன் கொஞ்சம் வியாபார தந்திரம் தெரிந்தவன். நல்ல வெயிலுக்கு இளநீரில் ஐஸைப் போட்டுக் கொடுத்தான் எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டார்கள். மூர்த்தி பாலுவுக்கு ஒரு டம்ளர் வாங்கிக் கொடுத்துத் தானும் அருந்தினான்.
"உங்க தங்கச்சிக்கும் வாங்கித் தாங்க சார்!' என்றான் கடைக்காரன் மூர்த்தியிடம் பவானியை பார்த்து.
"நோ. நோ! தங்கச்சியா?" என்று அசடு வழியச் சொல்லிவிட்டு, "நீங்கள் சாப்பிடு-கிறீர்களா?" என்று கேட்டான் பவானியிடம்.
பவானி, 'வேண்டாம்' என்கிற பாவனையாகத் தலையை அசைத்தாள்.
வண்டியில் உட்கார்ந்திருந்த ஒரு ஸ்திரீ பவானியைக் கவனித்தாள்.
"ஏனம்மா! அவர் உன் அண்ணா தானே?" என்று கேட்டாள்.
பவானிக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. 'ஆமாம்' என்று சொல்லி வைப்பதில் என்ன தவறு என்று நினைத்தாள். ஆகவே அவள். 'ஆமாம் அம்மா. அவர் என் அண்ணன் தான்" என்றாள் அவளிடம்.
"அது தானே பார்த்தேன். பின்னே ஏனம்மா நீர் சாப்பிடலே நீ" என்று கேட்டாள் அந்தப் பெண்.
"வரும்போது தான் சாப்பிட்டு வந்தேன்" என்று நருக்கமாகவே பதிலளித்தாள் பவானி.
வயது வந்த ஒரு வாலிபனும் பெண்ணும் பழகுவைத பலகம் எப்படியெல்லாம் வேவு பார்க்கிறது? அவன் உன் அண்ணனா, மாமனா, தம்பியா என்று கேட்டுச் சமாதானம் அடைகிறது. அண்ணன், தம்பி என்று சொல்லி விட்டால் திருப்தியுடன் தலையை ஆட்டி அத்தச் சகோதர அன்பை ஆமோதிக்கிறது. மாமன் அத்தை மகன் என்று சொல்லி விட்டால் ’உன் புருஷன் எங்கே? ஓகோ, வேறு ஊரில் இருக்கிறாரோ? ஏதோ அலுவலாக இவர்களுடன் போகிறாயோ' என்றெல்லாம் திருப்தியடையப் பார்க்கிறது. யாரோ அன்னியனுடன் ஒரு பெண் பழகுகிறாள் என்றால் அதைப்பற்றி இல்லா ததும் பொல்லாதததும் புனைந்து பேசவோ தயங்குவ இல்லை .
பஸ் கிளம்புவதற்கு அறிகுறியாக டிக்கெட் கொடுப்பவர் பஸ்ஸுக்குள் ஏறிச் சில்லறை கேட்க ஆரம்பித்தார். வெளியே நின்றிருந்த மூர்த்தி உள்ளே வந்து உட்கார்ந்தான். பஸ் டவுனை அடையும் வரை அவன் எவ்வளவோ முயன்றும் பவானி அவனுடன் முகம்
கொடுத்துப் பேசவில்லை.
--------------
1. 17. பஸ் நகர்ந்தது
டவுனில் முனிசிபல் ஹைஸ்கூலில் பாலுவைச் சேர்க்க வேண்டிய விவரங்களை விசாரித்துக் கொண்டு. பவானியும் பாலுவும் பசுமலை திரும்பும்போது மாலை ஆறு மணி ஆகி விட்டது. அன்று பகல் டவுனில் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கிச் சற்று தூரம் நடந்து சென்றதும் பவானி ஒரு மரத்தடியில் தயங்கி நின்றாள். பிறகு தைரியத்துடன் மூர்த்தியைப் பார்த்து "நீங்கள் எங்களுக்காக வருகிறீர்களா? இல்லை, உங்களுக்கு ஏதாவது சொந்த வேலை இருக்கிறதா?" என்று கேட்டாள்.
மூர்த்தி உதட்டைப் பற்களால் அழுத்திக் கடித்துக் கொண்டே பவானியைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரித்தான். கபடமும் வஞ்சமும் நிறைந்த அந்த சிரிப்பைப் பார்த்ததும், பவானி மனம் வெறுத்து தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள். விதவை பவானி யாருக்காக வாழ்கிறாள்? பாலுவுக்காக. அந்தக் குழந்தை படித்து முன்னுக்கு வந்தால் தான் தனக்கு இன்பம் உ.ண்டு என்று கருதுகிறவள். அவனுக்காகவே உற்றார் உறவினரை விட்டு ஒதுங்கி வாழ முயன்றவள். பின்னால் மூர்த்தி தொடர்ந்து வந்தால் அவள் வாழ்க்கை என்ன ஆவது?
அருகில் நின்றிருந்த பாலுவின் கையைக் கெட்டி யாகப் பற்றிக்கொண்டு பவானி குமுறும் மனத்துடன், ”நான் வருகிறேன். எனக்காக நீங்கள் இவ்வளவு சிரமப் பட வேண்டாம். எனக்குத் துணை அவசியமாக இருந்தால் கல்யாண மாமாவை அழைத்து வந்திருப்பேனே! என் தகப்பனாருக்குச் சமானமாக இருக்கும் அவர் எனக்கு உதவி புரிவதையே பசுமலையில் உள்ளவர்கள் வம்பு பேசுகிறார்கள். அதனால் தான் நான் அவரையும் இன்று வரும்படி அழைக்கவில்லை" என்று சொல்லி விட்டு இரண்டடி முன்னால் நடந்தான்.
மரத்தடியில் வாயில் சிகரெட்டைப் புகைத்தபடி நின்றிருந்த மூர்த்தி சிகரெட் துண்டை கீழே எறிந்து காலினால் அழுத்தித் தேய்த்தான். நெற்றியில் முத்து முத்தாக அரும்பி இருந்த வியர்வைத் துளிகளைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே பவானியும், பாலுவும் செல்லும் திசையைப் பார்த்துக்கொண்டு நின்றான் அவன்.
அவனிடம் இதுவரையில் யாரும் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டதில்லை. பம்பாயிலே பல வருஷங்கள் இருந்திருக்கிறான். பல குடும்பங்களுடன் பழக இருக்கிறான். அங்கே யெல்லாம் பலதரப்பட்ட பெண்களுடன் அவனுக்குப் பழக்கம் உண்டு. ஊரிலே நல்ல சினிமாவாக வந்தால் அவன் தனக்குத் தெரிந்த குடும்பப் பெண்களை அழைத்துப் போகத் தவற மாட்டான். முதல் வகுப்பு டிக்கட வாங்கி சினிமா பார்த்த பிறகு டாக்சியில் அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவான். சிரிப்பும் வேடிக்கையுமாக அவர்களுடன் பொழுது போக்குவது ஒரு நாகரிகம் என்று அவன் கருதினானோ என்னவோ!
மூர்த்திக்கு மங்கள தாஸ் என்கிற குஜராத்தி வியாபாரியின் மகள் தமயந்தி நினைவுக்கு வந்தாள். செக்கச் செவேல் என்று செவ்வாழைத் தண்டு மாதிரி வாளிப்பான கைகளும், உருண்டை முகமும் உடைய அவளோடு எத்தனை இடங்களுக்குப் போயிருக்கிறான்? 'மரீன' கடற்கரையிலே அந்த நீண்ட பாலத்தில் அவனும் அவளும் எத்தனை பெளர்ணமி இரவுகள் கை கோத்து உலாவி இருக்கிறார்கள்!
பெண்களை விளையாட்டுப் பொம்மைகளாகவும் அலங்காரப் பொருள்களாகவும் தன் உல்லாச வாழ்க்கைக்கு ஒரு கருவியாகவும் நினைத்து இறுமாந்திருந்த மூர்த்தியின் மனம், பவானியின் உதாசீனத்தை நினைத்துப் பொருமியது.
ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டுவிட்டு மூர்த்தி மறுபடியும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். அங்கிருந்து பஸ் ஒன்று புறப்பட்டுக் கொண்டிருந்தது. அடுத்த ஊர் வரையில் அவன் ஓர் அலுவலாகச் செல்ல வேண்டியிருந்ததால் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். பஸ் முனிசியல் கட்டிடத்தின் மணிக் கூண்டைச் சுற்றிக் கொண்டு, முனிசிபல் ஹைஸ்கூலுக்கு வந்து சேர்ந்தது. பள்ளிக்கூடத்தின் தாழ்வாரத்தில் போட்டிருந்த பெஞ்சில் பவானியும் பாலுவும் உட்கார்ந்திருந்தனர். மூர்த்தி ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். அங்கே கூடியிருந்த பல பேரை விட்டு அவன் பார்வை பவானியின் மேல் சென்றது. அடக்கமே உருவாக அமர்ந்திருந்த அவளது கவர்ச்சி-கரமான தோற்றம், அவன் மனத்தில் பல எண்ணங்களை எழுப்பிவிட்டது.
"அந்த உருண்டை மூஞ்சி தமயந்தியும், பள்ளக் கண்களையுடைய ரோகிணியும் இந்தப் பவானியின் முன்பு எம்மாத்திரம்?" என்று மூர்த்தி நினைத்தான்.
இவள் விதவையானால்தான் என்ன? விதவைக்கு வாழ்வே இல்லையா? அவர்கள் மறுமணம் செய்து கொண்டு வாழத்தான் சட்டமும், சமூகமும் இடங் கொடுக்கிறதே! ஆனால் பவானியின் உள்ளத்திலே என்ன இருக்கிறது? மென்மையான உடலையும் கவர்ச்சி கரமான தோற்றத்தையும் உடைய அவள் உள்ளம் கற்பாறையைவிடக் கடினம் வாய்ந்தது. அங்கே கருணைக்கும், அன்புக்கும் தான் இடம் உண்டு. ஆனால் சுய கௌரவத்துக்கு இழுக்கோ அவமானமோ ஏற்பட அந்த மனம் இடங் கொடுக்காது என்பதை மூர்த்தி அறிய வில்லை.
சற்றும் எதிர்பாராத விதமாகப் பவானி, பள்ளிக் நடத்துக்கு வெளியே நின்றிருந்த பஸ்ஸைப் பார்த்தாள். தற்செயலாக அவள் பார்வை மூர்த்தியின் மேல் சென்றது. சோகமும் கருணையும் ததும்பும் அவள் கண்கள் ஒரு வினாடி நெருப்புத் துண்டங்களாக ஜ்வலித்தன. அலட்சியமும் வெறுப்பும் நிறைந்த பார்வை ஒன்றை அவன் மீது வீசிவிட்டுப் பவானி முகத்தை வேறுபுறம் இருப்பிக் கொண்டாள்.
மூர்த்தி புன்முறுவல் பூத்தான். அவளுடைய அலட்சியத்தையும் வெறுப்பையும் பார்த்துத் தனக்குள் நகைத்துக் கொண்டான்.
கண்டக்டர் விசில் கொடுக்கவும் பஸ் இடத்தை விட்டு நகர்ந்தது.
--------------
1. 18. சீர்திருத்தவாதி .....!
'கேரம்' பலகையை வெளியே எடுத்து வைத்துவிட்டு மூர்த்தி வெளியூர் போனது பாலுவுக்குப் பிடிக்கவில்லை. இன்னும் பத்து நாட்களில் பள்ளிக்கூடம் திறந்து விடுவார்கள். பிறகு பள்ளிக்கூடம் போகவும் பாடங்களைப் படிக்கவுமே பொழுது சரியாகிவிடும். மூர்த்தியுடன் விளையாடலாம் என்று நினைத்திருந்தான் பாலு. அவனும் ஊரில் இல்லாமல் போகவே அவனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை .
உள்ளே பவானி ரவா தோசை வார்த்துக் கொண்டிருந்தாள். 'கமகம' வென்று வாசனை வீசியது. மாலை சுமார் மூன்று மணி இருக்கலாம். பாலு கால்களைச் சப்பணம் கட்டிக்கொண்டு, வெறிச்சோடிக் கிடந்த தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தான், கல்யாணமும் பார்வதியும், யாரோ உறவினர் வீட்டுக் கல்யாணத்திற்காகப் போயிருந்தனர். அவர்கள் போய் நான்கு தினங்கள் ஆயின. கதவைப் பூட்டிச் சாவியை மூர்த்தி வந்தால் கொடுத்து விடும்படி பார்வதி பவானியிடம் கொடுத்து விட்டுப் போயிருந்தாள்.
"அவன் என்றைக்கு வருகிறானோ" என்று கூறி விட்டு. .. நான் வந்த பிறகு பாலுவைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம் அம்மா. ஜாக்கிரதையாக இரு" என்று கூறிவிட்டுக் கல்யாணம் புறப்பட்டார்.
"சே! சே! இதென்ன ஊர்? பகல் நேரங்களிலேயே பாழ் அடைந்து கிடக்கிறதே" என்று மனத்துள் அலுத்துக் கொண்டான் பாலு.
அடுப்பங்கரையில் அடுப்பு அணைக்கப்படும் சத்தம் கேட்டது . தட்டில் தோசைகளை எடுத்துக்கொண்டு பவானி பாலுவைத் தேடிக் கொண்டு கூடத்துக்கு வந்தாள். பின்னர், தெருப்பக்கம் சென்று பார்த்தாள். திண்ணையில் உட்கார்ந்திருக்கும் பாலுவைப் பார்த்து. ”பாலு எழுந்திருந்து உள்ளே வந்து தோசை சாப்பிடு" என்று அழைத்தாள்.
கூடத்தில் தோசைத்தட்டின் எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டான் பாலு. பவானி கடைந் தெடுத்த வெண்ணெயை உருட்டி எடுத்து வந்து அவன் தட்டில் போட்டாள். அவன் தோசைகளை விரும்பிச் சாப்பிட்ட... தாகம் பவானிக்குத் தோன்றவில்லை.
"என்னடா உனக்கு? உடம்பு ஏதாவது சரியில்லையா என்ன?" என்று கேட்டுக் கொண்டே. பவானி அவன் நெற்றியிலும் மார்பிலும் கை வைத்துப் பார்த்தாள். தாயின் முகத்தில் வேதசை வருவதைக் கவனித்த பாலு. கண்களில் நீர் ததும்ப, ”எனக்கு இந்த ஊரில் பொழுதே போகவில்லை அம்மா. நாள் பூராவும் இப்படிக் கொட்டு கொட்டென்று எப்படி உட்கார்ந்திருக்க முடியும்?" என்று கேட்டான்.
பவானிக்கு வருத்தமாக இருந்தது. பாலுவின் அப்பா இருந்தால் அவனை அழைத்துக் கொண்டு நாலு இடங்களுக்குப் போய் வருவார். அத்தை என்றும் சித்தப்பா பெரியப்பா என்றும் சீராட்டப் பலர் வருவார்கள். விடுமுறைக்காக அவர்கள் வீட்டுக்குப் போய் வருவான். தகப்பனைச் சேர்ந்த குடும்பத்தினருடன் தொடர்பு அறுந்து போன மாதிரிதான். வாசு இறந்தபோது வந்துபோனவர்கள், பிறகு பாலுவைப் பற்றி விசாரிக்கவே இல்லை .
எதிரிலே உட்கார்ந்திருக்கும் மகனின் முகவாயை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தாள் பவானி. அவன் கன்னங்கள் இரண்டையும் கையால் வருடிக் கொண்டே ”எண்டா லீவுக்கு உன் மாமா வீட்டுக்குப் போய்விட்டு வாயேன். அங்கே சுமதி கூட இருக்கிறாள் உன்னுடன் விளையாட என்று சொன்னேனே! நீதான் நானும் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாய்" என்றாள்.
பாலு பதிலளிப்பதற்கு முன் கொல்லைப் பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. கல்யாணராமன் வீட்டில் மாடு கறப்பதற்காக ஆள் வந்திருக்கிறான் என்பது தெரிந்ததும், பவானி கூடத்தை விட்டு எழுந்து கொல்லைப் பக்கம் சென்றாள்.
அதே சமயம் வாசற் கதவைத் திறந்து கொண்டு மூர்த்தி உள்ளே வந்தான். சோர்ந்து கிடந்த பாலுவின் உள்ளம் துள்ளி எழுந்தது. ”மூர்த்தி மாமா! வந்து விட்டீர்களா? எனக்கு நீங்கள் இல்லாமல் பொழுதே போகவில்லை. இந்தாருங்கள் சாவி. மாமாவும், மாமியும் கல்யாணத்துக்குப்போய் இருக்கிறார்கள். நாளைக்கு வாருவார்கள்" என்று பொரிந்து தள்ளிக் கொண்டே, கூடத்தில் ஆணியில் மாட்டியிருந்த சாவியை எடுத்து அவனிடம் கொடுத்தான்.
கையில் பால் செம்புடன் உள்ளே வந்த பவானி ஒரு கணம் அவனைப் பார்த்துத் தயங்கி நின்றாள்.
"போய்க் குளித்து விட்டு வாருங்கள் மாமா, தோசை தின்னலாம்" என்றான் பாலு. குழந்தைப் பருவத்தைப் போலும், குழந்தை உள்ளங்களைப் போலும் களங்கமற்றவை வேறு எதுவுமே இருக்க முடியாது. தாயின் மனத்திலே கொந்தளிக்கும் எண்ணங் களையோ மூர்த்தியின் மனத்தில் இருக்கும் நஞ்சுகலந்த அன்பைப் பற்றியோ பாலு அறிய மாட்டான்.
மூர்த்தி சாவியைச் சுழற்றிக் கொண்டே கல்யாணத்தின் வீட்டை அடைந்தான். கதவைத் திறந்து நேராகக் கிணற்றடிக்குச் சென்று ஸ்நானம் செய்து விட்டு, வாசனைத் தைலம் தடவி தலை வாரி, ஊரிலிருந்து வரும் போது வாங்கி வந்த பழங்களை எடுத்துக் கொண்டு பவானியின் வீட்டுக்கு வந்தான்.
கூடத்துப் பெஞ்சில் தட்டில் தோசைகளும், சுடச் சுடக் காப்பியும் வைக்கப் பட்டிருந்தன. பழங்களைப் பாலுவிடம் கொடுத்துவிட்டு மூர்த்தி சிற்றுண்டி அருந்தினான் .
பவானி சமயலறையை விட்டு வெளியே வந்தாள். வெறுமனே சாத்தியிருந்த தெருக் கதவை நன்றாகத் திறந்தவாறு சேஷாத்திரி உள்ளே வந்தார். பெஞ்சியிலே உட்கார்ந்து பல்லை இளிக்கும் மூர்த்தியையும், கையில் தோசையுடன் மிரண்டு பார்க்கும் பவானியையும் பார்த்தார். ஊஞ்சலில் இருந்த பழங்களைப் பார்த்தார்.
"ஹும்..." என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.
பவானிக்குத் தைரியம் ஏற்பட்டது. ”வாருங்கள், எங்கே, இவ்வளவு தூரம்?” என்று கேட்டுக் கொண்டே மூர்த்தியின் தட்டில் தோசையை வைத்து விட்டு அவரை உட்காரும்படி கூறினாள்.
"ஒன்றுமில்லை. உன் பிள்ளையைப் பத்து நாட்களாக அந்தப் பக்கம் காணோம். உடம்பு ஏதாவது சரியில்லையோ என்று பார்த்துப் போக வந்தேன். ஹைஸ் கூலில் தானே சேர்க்கப் போகிறாய்?" என்று கேட்டார் சேஷாத்ரி.
"உடம்பு ஒன்றுமில்லையே! நான் தான் வெயிலில் அலைய வேண்டாம் என்று சொன்னேன். ஹைஸ்கூலில் தான் சேர்க்க வேண்டும்" என்றாள் பவானி.
சேஷாத்திரி மூர்த்தியைக் கவனித்தார்.
"ஏண்டா ! நீ கல்யாணத்தின் மருமகன் தானே? உனக்கு கல்யாணம் ஆயிற்றோ ?" என்று விசாரித்தார்.
"இல்லை சார்" என்றான் மூர்த்தி.
"என்னடா இல்லை? என் பெரிய பிள்ளை ராமுவின் ஈடுடா நீ. அவனுக்கு நாலு குழந்தைகள் இருக்கிறார்கள். நீ பிரம்மச்சாரியாய் ஊரைச் சுற்றிக் கொண்டு, வரட்டும் அந்தக் கல்யாணம்! ‘உன் மருமகன் என்னடா பச்சைக் குழந்தையா?' என்று கேட்கிறேன்."
”கேளுங்கள் சார்" என்றான் மூர்த்தி கைக்குட்டையினால் வாயைத் துடைத்துக் கொண்டு.
*கேட்கிறேண்டா! கேட்கிறதோடு விட மாட்டேன் என் பேத்தி ஒருத்தி இருக்கிறாள். பத்தாவது படித்திருக்கிறாள். வீட்டு வேலைகளும் செய்யத் தெரியும். அவளை உனக்கு முடிச்சுப் போட்டு விட்டுத்தான் மறு வேலை. ஆமாம்..." என்றார் அவர். பிறகு ”ஜாதகம் கீதகம் இருக்கிறதா! இல்லை கிழித் தெறிந்து விட்டாயா!" என்று கேட்டார்.
மூர்த்தி ஊஞ்சல் பலகையிலே இருந்த ஆப்பிள் ஒன்றை எடுத்துச் சாவிக் கொத்தில் இருந்த பேனாக் கத்தியால் சீவித் துண்டங்களாக நறுக்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் பதில் கூறாமல் இருந்தால் எதிரே இருப்பவர் தானாகவே எழுந்து போய் விடுவார் என்று எதிர்பார்த்துத் தான் அவன் மௌனமாக இருந்தான். சேஷாத்திரி இவனுடைய அலட்சியத்தை மதிப்பவராக இல்லை.
"என்னடா. பதில் பேச மாட்டேன் என்கிறாய்? பம்பாய், கல்கத்தா எல்லாம் போயிருந்தாயே, அங்கே யாரையாவது ரிஜிஸ்தர் கலியாணம் செய்து கொண்டு விட்டாயா என்ன?"
மூர்த்தி தலை நிமிர்த்தி அவரைப் பார்த்தான். "அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன். சார்! சீர்திருத்தம் என்று வாயால் பேசி விட்டால் போதுமா! செய்கையாலும் காட்டித் தானே ஆக வேண்டும்?"
"ஓ! அப்படியா? நீ பெரிய சீர்திருத்த வாதியோ? சீர்திருத்தம் பண்ணுவதிலும் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும் அப்பா. அதிலே சுயநலம் கலந்து விட்டால் அப்புறம் உருப்பட்டாற் போலத்தான்!" என்றார் அவர் சற்று காரமாகவே. மூர்த்தியின் முகம் கோபத்தால் சிவந்தது.
”சார்! எதையோ பேச வந்து சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள். நீங்கள் இங்கே வந்ததே வேறு விஷயம். அநாவசியமாக என்னை வம்புக்கு இழுக்காதீர்கள்..."
சேஷாத்திரி துள்ளி எழுந்தார்.
"என்னடா பிரமாதமாக அவசியத்தையும் அநாவசியத்தையும் கண்டு விட்டாய்? உன்னைப்பற்றி எனக்குத் தெரியுமடா! மேட்டுத் தெருவில் இருந்தாளே பாலம்பாள். அவள் பெண்ணிடம் நீ எப்படி நடந்து கொண்டாய்? அந்தப் பெண்ணின் கல்யாணத்தின் போது என்ன வெல்லாம் கடிதமாக எழுதினாய் என்றெல்லாம் எனக்குத் தெரியும்! எனக்குத் தெரிந்து பிறந்த பையன் நீ! சீர்திருத்தத்தைப் பற்றிப் பேச வந்து விட்டான்!"
பவானி அப்படியே நின்றவள் நின்றவள் தான்!
மேட்டுத்தெரு பாலம்மாளின் பெண்ணிடம் மூர்த்தி நடந்து கொண்ட விதம் என்ன என்கிற விவரம் பூராவும் பவானி அறிந்து கொள்ள ஆசைப்படவில்லை. மாங்காயை ஒரு ஓரத்தில் கடித்தவுடன் புளிப்போ இனிப்போ உடனே தெரிந்து போகிறது.
சே! இவன் இவ்வளவு தானா? என்று அவள் தீர்மானித்து மூர்த்தியைப்பற்றி எடை போட்டுத்தான் வைத்திருந்தாள். அந்தத் தீர்மானம் ஏகமனதாக அவள் இதயத்திலே நிறைவேறிற்று.
பாலு வந்து இடையில் கல்யாணமும் பார்வதியும் வந்து விட்ட செய்தியைச் சொல்லாமல் இருந்திருந்தால் அந்தக் கிழவர் சேஷாத்திரியும், இளைஞன் மூர்த்தியும்
கை கலந்திருப்பார்கள்.
மூர்த்தி அவசரமாக எழுந்து வெளியே போனான். ”அம்மா பவானி!" என்றார் சேஷாத்திரி.
"நீ இப்படி இந்த அறியாப் பிள்ளையை வைத்துக் கொண்டு தனியாக வாழ்வேன் என்று பிடிவாதம் பிடிப்பது சரியில்லை. நாகராஜனிடம் போய் இழப்பது தான் சிறந்தது" என்று கூறிவிட்டு வெளியே போய் விட்டார் அவர்.
சேஷாத்திரி ஏன் திடீரென்று வந்தார்? பாலுவைப் பற்றி விசாரித்துப் போக வந்தாரா? மூர்த்தி தன் வீட்டினுள் நுழைந்ததைப் பார்த்து விட்டுத்தான் தன்னை எச்சரிக்க வந்திருக்கிறார் என்பது பவானிக்குப் புரிந்து விட்டது.
சிலையைப் போல அவள் கூடத்தில் மாட்டி இருந்த நடராஜப் பெருமானின் படத்தின் முன்பு சென்று உட் கார்ந்து விட்டாள்.
----------
1.19. தந்தி வந்தது
அடுத்த நாள் பொழுது விடிந்தது. வழக்கம்போல் அப்பொழுது நகர்ந்து அதற்கு அடுத்த நாளும் உதயமாகியது. பார்வதி மட்டும் கல்யாண வீட்டிலிருந்து கொண்டுவந்த பலகாரங்களை எடுத்து வந்து பாலுவுக்குக் கொடுத்தாள். கல்யாணம் நடந்த விமரிசைகளைப் பற்றிப் பவானியிடம் கூறினாள். எல்லாவற்றையும் கூறிவிட்டு, ”கல்யாணம் பண்ணிக் கொண்ட பெண்ணும், பிள்ளையும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார்கள். அவர்களின் காதலின் உறுதியைது. ஆழத்தை, பண்பைக் கண்டு இரு தரப்பினரும் உடன்பட்டுக் கல்யாணம் நடந்ததாம்" என்று முடித்தாள் பார்வதி.
நேற்றைக்கு முந்திய நாள் சேஷாத்திரியும், மூர்த்தியும் வாதித்துச் சண்டையிட்ட சீர்திருத்தத்தைப் பற்றிப் பவானி நினைத்துப் பார்த்தாள். ’சீர்திருத்தம் என்கிற பெயரிலே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லி, அந்தப் பெண்களுடன் ஒருவரைப் பற்றி ஒருவருக்குத் தெரியாமல் அழைத்துக் கொண்டு, ஊரில் கண்ட இடங்களில் திரிந்து வரும் ஜோடிகள் செய்வது சீர்திருத்தமா?’ என்று பவானி உள்ளம் குமுறினாள்.
"பவானி! ஏன் என்னவோ போல இருக்கிறாய்?” என்று பார்வதி அவளை அன்புடன் விசாரித்தாள்.
பவானி மூர்த்தியைப் பற்றி மறுபடியும் பேச விரும்ப வில்லை. ஆகவே அவள் வெகு 'சாமர்த்தியமாக’ “எனக்கு மூன்று நாட்களாகவே உடம்பு சரியில்லை!" என்று கூறினாள்.
”அப்படியா? அதுதானே பார்த்தேன். உடம்பு சரியில்லை என்று என்னிடம் சொல்ல மாட்டாயோ? நீ என்றும் அலைந்து வேலை செய்யவேண்டும்? ராத்திரி நீ ஒன்றும் சமைக்க வேண்டாம். பாலுவும். நீயும் நம் வீட்டிலேயே சாப்பிட்டு விடலாம்" என்று அன்புடன் கூறினாள் பார்வதி.
தெருவில் அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த கல்யாணம் பவானியை இரைந்து கூப்பிட்டார். இருவரும் எழுந்து வாசலுக்கு வந்தனர். கல்யாணத்தின் கையில் இருந்த தந்திக் காகிதத்தையும், கவர் ஒன்றையும் பார்த்துத் திடுக்கிட்டார்கள் இருவரும்.
”பவானி! இந்தா! உன் தமையன் தந்தி அடித்துக் கடிதமும் போட்டிருக்கிறான். உன் மன்னிக்கு உடம்பு சரியில்லையாம். உடனே உன்னைச் சென்னைக்குப் புறப்படச் சொல்லி இருக்கிறது. மற்ற விவரங்கள் கடிதத்தில் இருக்கும். படித்துப் பாரம்மா!" என்று
அவளிடம் கடிதத்தையும் தந்தியையும் கொடுத்தார்.
பவானி கைகள் நடுங்க கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். அதில் கோமதிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு ரொம்பவும் அபாயகரமான நிலையில் ஆஸ்பத்திரியில் கிடப்பதாகவும், வீட்டையும் குழந்தை சுமதியையும் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை யென்றும் பவானியை உடனே புறப்பட்டு வரச் சொல்லியும் எழுதி இருந்தான் நாகராஜன்,
பவானியின் உள்ளத்தில் இருந்த பழைய சோர்வெல்லாம் எங்கேயோ போய்விட்டது. புதிய கவலை பரபரப்பு. அவள் உள்ளத்தில் குடி கொண்டது.
"என்ன மாமா செய்வது?" என்று கேட்டாள் கல்யாணத்தைப் பார்த்து.
”என்னம்மா இப்படிக் கேட்கிறாய்? உடன் பிறந்தவன் உன் உதவியை நாடி எழுதி இருக்கிறான். நீ போய்த் தான் ஆக வேண்டும்."
”பாவுலுக்குப் பள்ளிக்கூடம் திறக்க இன்னும் ஆறு தினங்கள் தானே இருக்கின்றன?"
”அதைப்பற்றிப் பிறகு யோசித்துக் கொள்ளலாம். நீ நாளைக்கே புறப்பட்டு விடு" என்றார் கண்டிப்பாக.
வெளியே போயிருந்த பாலு வீட்டுக்கு வந்ததும் பவானி விஷயத்தைச் சொன்னாள். ’பாவம் சுமதி' என்றான் அவன்.
பவானியும் ஆசையுடன் அவன் தலையைக் கோதி விட்டு, ”பாலு! நீ எங்கேயும் வெளியே போய் விடாதேடா. சாமான்களை யெல்லாம் கட்டி ஓர் அறையில் போட்டுவிட வேண்டும் வருவதற்கு நாள் ஆனாலும் ஆகலாம். கூடமாட எனக்கு ஒத்தாசை பண்ணுகிறாயா?" என்று கேட்டாள்.
தாயும் மகனுமாக வீட்டை ஒழித்துத்துப்புரவு செய் தார்கள். பாத்திரம். பண்டங்களைப் பெட்டியில் போட்டுப் பூட்டி ஒரு சிறு அறையில் வைத்தார்கள். கூடத்திலே இருந்த படங்களை யெல்லாம் கழற்றித் துடைத்து வைத்தான் பாலு.
பவானி கூடத்துப் பக்கம் வந்தவள் சுவரை அண்ணாந்து பார்த்தாள். பார்த்தவள் திடுக்கிட்டு ”எங்கேயடா நடராஜரின் படம்?" என்று கேட்டாள். சுருட்டி வைத்திருந்த சாக்குப் பையிலிருந்து படத்தை எடுத்துக் கொடுத்தான் பாலு. பவானி அதை வாங்கி மார்புடன் அணைத்துக் கொண்டாள். ”இதை மட்டும் நாம் எடுத்துப் போகலாம் பாலு" என்று கூறிவிட்டுப் படத்தைப் பத்திரமாகத் தன் பெட்டியில் வைத்துப் பூட்டினாள்.
இதற்குள் மாலையும் நெருங்கி வந்தது. பவானியும் பாலுவும் ஊருக்குப் போவதால் அன்றும் மறு நாளும் தங்கள் வீட்டிலேயே சாப்பாடு என்று பார்வதி சொல்லி விட்டாள். சாமான்களைக் கட்டி வைத்த பிறகு பவானிக்கும் பொழுது போகவில்லை. தெருவிலே நின்று தூரத்தில் தெரியும் பசுபதி கோவிலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மாலைக் கதிரவன் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது கோபுரம்.
'நாளை இந்நேரம் சென்னையில் இருப்பேன்' என்கிற எண்ணம் அவள் மனத்தை வேதனையில் ஆழ்த்தியது. ஐந்தாறு வருஷங்களுக்கு மேலாகப் பழகிப் போயிருந்த அவ்வூரை விட்டுச் செல்ல அவளுக்கு வருத்தமாக இருந்தது.
முன்பு ஒருதரம் அவள் சென்னை போயிருந்தபோது எழும்பூரில் ரயிலை விட்டு இறங்கியதும் ஒரு பரிதாபமான காட்சியைக் கண்டாள். பரிதாபம் மட்டும் அல்ல. வெட்கப்படவும், அருவருப்படையவும் வேண்டிய காட்சி அது.
கர்ப்ப ஸ்திரீ ஒருத்தி தனக்குப் பிரசவ வேதனை கண்டிருப்பதாக முக்கி முனகிக் கொண்டிருந்தாள். அவளோடு இன்னும் இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அவள் உண்மையான கர்ப்பஸ்திரீதான்! வயிற்றில் துணிகளைச் சுற்றிக் கொண்டிருக்க-வில்லை. ஆனால் அவளைப் பாசாங்குக்காரி என்று ஏசி பலர் உதாசீனம் செய்தனர். கேலியாகப் பேசினர். சிலர் இரக்கப்பட்டுப் பொருள் உதவியும் புரிந்தார்கள்.
அப்பொழுது அவளையும் அவள் கணவன் வாசுவை யும் அழைத்துப் போக நாகராஜன் ரயிலடிக்கு வந்திருந்தான்.
“அண்ணா ! அவளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது" என்று தயங்கினாள் பவானி.
”நீ ஒரு பைத்தியம்!" என்றான் நாகராஜன்.
”இந்த நகரத்திலே இம் மாதிரிக் காட்சிகள் சர்வ சகஜமானவை. உனக்குப் புதிதாக இருப்பதால் நீ இதை எல்லாம் பார்த்துப் பரிதாபப்படுகிறாய். எங்களுக்குக் கவனிக்கவே பொழுதில்லை" என்று கூறி நகைத்தான் நாகராஜன்.
”அண்ணா ! சமுதாயத்தின் வளர்ச்சியிலேதான் தேசத்தின் பெருமை அடங்கியிருக்கிறது. அழகு மிகுத்த இந்த சென்னையிலே அவதியுறும் பல காட்சிகளைப் பார்க்க வேண்டி இருக்கிறதே. சமூகம் வளர்ந்து வருகிறதா? செடிகளின் வேரிலே புழு வைத்தால் செடி வதங்கச் சில காலம் ஆகுமாமே. அப்படிச் சமூகத்தின் வேரிலே, வேர்ச் செல் தோன்றி அரித்து வருவதற்கு இவை யாவும் அத்தாட்சியோ என்னவோ" என்றாள் பவானி, டாக்சியில் உட்கார்ந்து அந்த கர்ப்ப ஸ்திரீயைப் பார்த்துக் கொண்டே.
நாகராஜன், பதில் ஒன்றும் கூறவில்லை. பவானி கணவனைக் கேட்டு எட்டணாக் காசை வாங்கிக் கொடுத்தாள் அந்தப் பெண்ணிடம். அவள் உள்ளம் சோர்ந்து விட்டது. எந்த விதத்திலாவது இம்மாதிரி அபலைப் பெண்களுக்கு உதவி புரிய மாட்டோமா என்று ஏங்கினாள்.
அப்புறம் அவள் சென்னைப் பக்கமே போகவில்லை. இப்பெழுது அந்த நகரத்திலே பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். பஞ்சமும் பிணியும் கொஞ்சமாவது குமைந்திருக்கும். பெண்கள் இன்பமாக வாழ்வார்கள் என்றெல்லாம் நினைத்தாள். தெருவிலே விளக்கேற்றி விட்டார்கள். கோவிலிலிருந்து மணியின் நாதம் கேட்டது.
”பவானி கால் கடுக்க அரை மணியாய் நிற்கிறாயே? நாளைக்குத் தான் நீ ஊருக்குப் போகிறாய், திரும்பி வர இன்னும் எத்தனை மாசங்கள் ஆகுமோ? உள்ளே வந்து "ட்கா ரேன்" என்று பார்வதி அவளை அழைத்தாள்.
---------------
1. 20. மூர்த்தியின் ஏமாற்றம்
பசுமலை ரயில் நிலையத்துக்குப் பாசஞ்சர் வண்டி காலை பத்தரை மனிக்கு வருவது வழக்கம். சாதாரணமாகவே பத்தரை மணி வண்டி. பன்னிரண்டு மணிக்குத் தான் வரும். பத்தரை மணி வண்டியைப் பிடிக்க ரயிலடிக்குப் பதினொன்றரை மணிக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள்,
பார்வதி, பவானி- பாலுவிற்காகச் சிறந்த விருந்து ஒன்று தயாரித்தாள். பரிந்து பரிந்து உபசரித்தாள். பவானியின் மனநிலை விருந்துண்ணும் நிலையில் இல்லை. 'கோமதியின் உடல் நிலை எப்படி இருக்கிறதோ' என்று கவலைப் பட்டுக் கொண்டேயிருந்தாள்.
"அதெல்லாம் ஒன்றும் இருக்காது. அவ்வளவு பெரிய நகரத்தில் வைத்தியர்களுக்கும் அவர்கள் திறமைக்கும் பஞ்சமா என்ன? நிதானமாகச் சாப்பிடு" என்று உபசரித்தாள் பார்வதி.
பாலு ஊரில் ஒரு பையன் பாக்கியில்லாமல் தான் சென்னைக்குப் போவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டான்.
”ஒரு வேலை அங்கேயே சேர்ந்து படிக்க ஆரம்பித்து விடுவேன். மாமாவுக்குக் கார் இருக்கிறது. எங்கள் சுமதி ரிக்ஷாவில் பள்ளிக்கூடம் போவாள் " என்றெல்லாம் அவர்களிடம் பெருமைப் பட்டுக் கொண்டான். ஒவ்வொருவரும் அவனுக்குத் தத்தம் நினைவாக ஒருபொருளைப் பரிசாகக் கொடுத்தனர். கோலிகளும், பம்பரங்களும், கதைப் புத்தகங்களும் ஏகப்பட்டவை பாலுவுக்கு கிடைத்தன.
பவானி ஊருக்குக் கிளம்பும் விஷயம் சேஷாத்ரிக்கு எட்டியது. அந்தக் கிழவர் இரண்டு சீப்பு வாழைப் பழங்களுடன் பாலுவைப் பார்க்க வந்தார்.
”ஏனம்மா! நாலு தினங்களுக்கு முன்பு உன்னிடம் சொன்ன வார்த்தை இவ்வளவு சீக்கிரம் பலித்து விட்டது பார். நல்ல பெண் நீ. அடக்கத்துக்கும் பண்புக்கும் உதாரணமாக இருந்தாய். ஊருக்குப் போகிறாயே என்று தான் இருக்கிறது. பையனை ஜாக்கிரதையாகப் பார்த் துக்கொள். சௌக்கியமாக போய் வா" என்று விடை கொடுத்தார்.
தெருவில் மாட்டு வண்டி வந்து நின்றது. பவானி கல்யாணராமனையும், பார்வதியையும் வணங்கினாள். கல்யாணம் உணர்ச்சிப் பெருக்கால் கண்களைச் சிறிது நேரம் மூடியபடியே இருந்தார்.
”உனக்கு எந்தவிதமான ஆசியை நான் வழங்குவது அம்மா? இந்த ஊருக்கு வரும் போது மஞ்சள் குங்குமத்துடன் வந்தாய். நோயாளிக் கணவனுக்காக உயிருக்கு மன்றாடினாய். மலர வேண்டிய உன் வாழ்வு கருகி விட்டதே என்று நான் மனதுக்குள் மாய்ந்து போனேன். இருண்டு போன உன் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்ட உன் மகன் பாலு இருக்கிறான். அவனை ஜாக்கிரதை யாகப் பார்த்துக் கொள். நீ எப்பொழுது இந்த ஊரை நாடி வந்தாலும் என் வீட்டிற்கு வரலாம்" என்றார் அவர்.
பவானி பேச முடியாமல் திணறினாள். பார்வதியை நீர் பெருகும் விழிகளால் பார்த்தாள். 'மாமி' என்று அழைக்கிறவள். 'அம்மா' என்று கூப்பிட்டாள். அவளை அப்படியே அணைத்துக் கொண்டு குலுங்கக் குலுங்க அழுதாள்.
”பவானி பைத்தியம், பைத்தியம். ஏன் இப்படி அழுகிறாய்?" என்று பார்வதி அவளைத் தேற்றினாள்.
”இந்த மாதிரி மாசில்லாத அன்பை நான் சென்னையில் எங்கே பார்க்கப் போகிறேன்?" பவானி அழுது கொண்டே பார்வதியை இவ்விதம் கேட்டாள்.
"நீ பைத்தியம் தான் போ! உன் மனசிலே அன்பு நிறைந்திருக்கும் போது பிறத்தியார் உள்ளத்திலும் அன்பு தான் நிறைந்திருக்கும். உன்னை வெறுப்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்" என்றாள் பார்வதி. பிறகு இருவரும் அழுகையையும் பேச்சையும் நிறுத்தி விட்டு மூட்டை முடிச்சுக்களை வண்டியில் ஏற்றுவதற்கு முனைந்தனர்.
"ரயிலடிக்கு நானும் வருகிறேனே" என்று கல்யாணம் அவளைக் கேட்டார்.
”வேண்டாம். மாமா! ஊருக்குப் போய்விட்டு வந்ததிலிருந்து உங்களுக்கு உடம்பு சரியில்லை. இன்று தான் தலைக்கு ஜலம் விட்டுக் கொண்டீர்கள். அலைய வேண்டாம்" என்று பவானி தடுத்து விட்டாள்.
பாலு மட்டும் உற்சாகத்துடன் இருந்தான். புது ஊரைப் பார்க்கப் போகிறோம் என்கிற களிப்பு அவன் முகத்தில் படர்ந்திருந்தது.
வண்டி தெருக்கோடியைக் கடந்து பசுபதி கோவி லைத் தாண்டிச் செல்ல ஆரம்பித்தது.
ஆடி அசைந்து போகும் வண்டியில் பவானி சிந்த னையே உருவாக உட்கார்ந்திருந்தாள். நோயாளி வாசுவை அழைத்துக்கொண்டு இப்படித்தான் ஒரு நாள் அந்த ஊருக்குள் வந்தாள். இன்று பாலுவை அழைத்துக் கொண்டு மறுபடியும் ஊரைவிட்டுப் போகிறாள்.
பசுபதி கோவில் கோபுர வாயிலை வண்டி அடைந்த போது உள்ளே கொடிக் கம்பத்தைத் தாண்டி இருக்கும் மூலஸ்தானம் தெரிந்தது. பவானி கையெடுத்து வணங்கினாள்.
பாலுவும் கோவிலை அரைகுறையாகப் பார்த்துக் கொண்டே கன்னத்தில் போட்டுக் கொண்டான். அவன் பார்வை தெருக் கோடியில் வரும் மூர்த்தியின் மேல் இருந்தது.
”அம்மா! அதோ மூர்த்தி மாமா வரார்" என்றான் உற்சாகம் பொங்க.
"வரட்டும்" என்றாள் பவானி அமைதியாக. சைக்கிளில் வேகமாக வந்த மூர்த்தி வண்டியை நெருங்கியதும் வேகத்தைக் குறைத்துக் கொண்டு 'மதராஸ் போகிறீர்களாமே........ டிக்கெட் வாங்கிக் கொடுத்து ரயில் ஏற்றிவிட்டு வரச் சொல்லி மாமா அனுப்பினார்" என்றான்.
”எதற்கு உங்களுக்கு வீண் சிரமம்?" என்று கூறிய பவானி அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டு விட்டாள்.
ரயிலடியை அடையும்போது மணி பத்தாகி விட்டது . "வண்டி பன்னிரண்டரைக்குத்தான் வரும்" என்று ஸ்டேஷன் மாஸ்டர் அறிவித்தார். சாமான்களை யெல்லாம் ஒரு பக்கமாக வைத்து விட்டு எல்லோரும் பெஞ்சியில் உட்கார்ந்தார்கள்.
'டிக்கெட்தான் வாங்கியாகி விட்டதே நீங்கள் போங்கள்' என்று மூர்த்தியிடம் சொல்லப் பவானிக்குத் தைரியமில்லை.
"பாலு நீ இனிமேல் அங்கேதானே படிக்கப் போகிறாய்?" என்று பேச்சை ஆரம்பித்தான் மூர்த்தி.
”ஆமாம்! மாமா... எங்க மாமாவுக்கு கார் இருக்கிறது. மாமா பெண் சுமதிக்கு ரிக்ஷா இருக்கிறது. எதில் வேண்டுமானாலும் பள்ளிக்கூடம் போகலாம்" என்றான் பாலு பெருமை தொனிக்க.
”பேசாமல் இருடா நீயும் உன் பெருமையும்!" என்று அதட்டினாள் பவானி.
”சொல்லட்டும். அவனை அதட்டாதீர்கள்" என்றான் மூர்த்தி புன்முறுவலுடன். பிறகு எதையோ நினைத்துக் கொண்டவனாக. அந்தக் கிழவர் சீர்திருத்தவாதிகளைப் பற்றிக் கேலி பண்ணினாரே. இவரை யார் பேசச் சொல்லிக் கூப்பிட்டார்கள்?" என்று பழைய கதையைக் கிளப்பினான்.
"அவருடைய அபிப்பிராயம் அவ்விதம் இருந்தது. அதைச் சரியென்று எல்லோரும் ஆமோதிக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லையே!" என்றாள் பவானி.
”இன்று நீங்கள் ரயிலுக்குக் கிளம்பிய பிறகு என்னைப் பார்த்து விட்டு மறுபடியும் எங்கள் வீட்டுக்கு வந்தார். தன் பேத்தியின் ஜாதகத்தைக் கொடுத்து விட்டு. மாமாவிடம் என் ஜாதகத்தைக் கேட்டார். அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?" என்று கேட்டான் மூர்த்தி.
" என்ன நடந்தது?" என்று தன் அகன்ற விழிகளை கல விழித்துக் கேட்டாள் பவானி.
”ஒன்றும் அசம்பாவிதமாக நடக்கவில்லை. பயந்து விடாதீர்கள். மாமா என்னைக் கூப்பிட்டு என் ஜாதகத்தைக் கேட்டார்”.
”ஜாதகத்தை எடுத்து வந்து அவர்கள் எதிரிலேயே கிழித்துப் போட்டேன்! எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நான் சீர்திருத்தவாதி. சீர்திருத்தமணம் செய்து கொள்ளப் போகிறேன்" என்றேன்.
”பார்த்தாயாடா கல்யாணம்?" என்று ஆரம்பித்தார் கிழவர்.
”பார்க்கிறது என்ன சார். பார்க்கத்தான் போகி றீர்கள். ஜாதி விட்டுக் கலியாணம் பண்ணிக் கொள்கிறது ஒருவிதமான சீர்திருத்தம். நம் நாட்டிலே வாடும் ஆயிரக் கணக்கான விதவைகளை மறுமணம் செய்து கொண்டு வாழவைப்பதும் ஒரு சீர்திருத்தம்தான். நான் ஒரு விதவையை மறுமணம் செய்து கொண்டாலும் நீங்கள் ஆச்சரியம் அடைய வேண்டாம் என்றேன்" என்று கூறி முடித்தான் மூர்த்தி.
ரயிலடி நிசப்தமாக இருந்தது. அங்கே அன்று கூட்டமே இல்லை. பவானி பற்களைக் கடித்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள். பாழும் ரயில் சீக்கிரம் வராதா என்று வேதனைப் பட்டாள். இந்த அதிகப் பிரசங்கியின் பேச்சிலிருந்து விடுபட்டு எப்பொழுது ரயில் ஏறுவோம் என்று ஆத்திரப்பட்டாள். வாழ்க்கையில் நேர்மையைப் பற்றி அறியாதவர்கள் முதலில் தன் வாழ்க்கையைச் சீர்திருத்தம் பண்ணிக் கொண்டல்லவா சமூகத் தொண்டு என்கிற புனிதமான சீர்திருத்தத்தில் இறங்க வேண்டும்? சே! இவனைப் போய் ரயிலடிக்கு அனுப்பினாரே கல்யாணம் மாமா என்று வேதனை பொங்க பொழுது ஒரு பாரமாய் உட்கார்ந்திருந்தாள் பவானி.
அவுட்டரில் கை காட்டி இறங்கியது. புஸ் புஸ் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே வண்டி வந்து நின் மது. சாமான்களை ஏற்றி விட்டுப் பாலுவுடன் பவானி பெட்டியில் ஏறிக் கொண்டாள்.
வண்டிக்குள் கூட்டம் அதிகமில்லை. ஜன்னல் ஓரத் தில் ஒரு பெண் மூன்று குழந்தைகளுடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள். இன்னும் சில பேர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
”பாலு! போய்விட்டு வருகிறாயா?" என்று கேட்டான் மூர்த்தி.
"நான் வருகிறேன். உங்கள் மாமாவிடமும் மாமியிடமும் சொல்லுங்கள்" என்றாள் பவானி, வெறுப்பை எல்லாம் அடக்கிக் கொண்டு.
”சென்னையில் உங்கள் விலாசம்?"
மூர்த்தி கபடமாகச் சிரித்துக் கொண்டே பவானியை இவ்விதம் கேட்டான்.
பவானி துணிச்சலுடன் முகத்தைத் திருப்பிக் கொண் டாள். அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்து 'நீங்கள் சென்னைக்குப் போகிறீர்களா?" என்று கேட்டாள்.
அந்தப் பெண் பதில் கூறுவதற்கு முன்பு ரயில்கிளம்பி விட்டது. ஜன்னல் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு மூர்த்தி வாடிய முகத்துடன் நடந்து வந்தான். ஜேபியிலிருந்து கைக்குட்டையை எடுத்து ஆட்டினான். தன்னையே வெறித்துப் பார்க்கும் அவனைப் பார்க்க விரும்பாத பவானி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
பசுமலையின் கோவில் கோபுரம் தெரிந்தது. அது வும் மறைந்து கொண்டே வந்தது. பவானிக்கு மனத்தில் ஏற்பட்டிருந்த வெறுப்பு அடங்கி வண்டிக்குள் இருந்த வர்களைக் கவனிக்கச் சிறிது நேரம் பிடித்தது.
முதல் பாகம் முற்றிற்று.
--------------
இரண்டாம் பாகம்
2.1. கதம்பச் சரம்
மாலை சுமார் நான்கு மணி இருக்கலாம். தோட்டக்காரன் கோபாலன் கூடை நிறைய ஜாதி அரும்புகளையும், கனகாம்பரத்தையும் பறித்து வந்து, கொல்லைத் தாழ்வாரத்தில் உட்கார்ந்த பவானியின் முன்பு வைத்தான். வாழை நாரைத் தொட்டித் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து வந்து கொடுத்தான். தூணுக்கு அப்பால் நின்று கொண்டு “அம்மா" என்று கூப்பிட்டுவிட்டுத் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான்.
பவானி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு "என்னப்பா வேணும் உனக்கு?" என்று கேட்டாள்.
”சின்னக் குழந்தையைப் பள்ளிக்கூடத்திலேருந்து வீட்டுக்கு அழைத்து வந்தாச்சு செடிகளுக்கு தண்ணி ஊத்தியாச்சு. மாட்டுக்குத் தீனிவைச்சாச்சு" என்று தன்னுடைய வேலைகள் முடிந்து விட்டதை அறிவித்தான் கோபாலன் .
”சரி உனக்கு என்ன வேணும் என்று சொல்லேன்?" என்று கேட்டாள் பவானி.
கோபாலன் மறுபடியும் தலையைச் சொறிந்நான். ”வீட்டிலே அது சினிமா பார்க்கணும்னு ஒரு வாரமா கேட்டுக்கிட்டு இருக்குது. சாயங்கால ஆட்டத்துக்குப் போகலாம்னு..."
”இருக்கிறயாக்கும்! சரி எதுக்கும் மாடியிலே போய் அம்மாவைக் கேட்டுக்கோ போ..."
இவ்விதம் கூறிவிட்டு, வாழை நாரைக் கிழித்துப் பூ தொடுக்க ஆரம்பித்தாள் பவானி. மாடி அறையிலே அவள் மன்னி கோமதி கோபாலனுக்கு உத்தரவு போடுவது கேட்டது.
"சினிமாவுக்குப் போகிறது இருக்கட்டும், முதலிலே டாக்டர் வீட்டுக்குப் போய் ’இன்றைக்கு என்னாலே அங்கே வரமுடியவில்லை. அவரையே கொஞ்சம் வந்து பார்த்து விட்டுப் போகச் சொன்னாங்க’ என்று சொல்லி விட்டு வா" என்றாள் கோமதி.
அப்புறம் எதையோ நினைத்துக் கொண்டவளாக ”கோபாலா! பூப்பறித்து விட்டாயோ? அம்மாவைக் கேட்டு டாக்டர் தங்கச்சிக்கும் மகளுக்கும் கொஞ்சம் பூ வாங்கிப் போய்க் கொடு" என்றாள்.
கோபாலன் மாடியிலிருந்து கீழே வந்தான். “அம்மா, டாக்டர் வீட்டுக்குப் பூதரச் சொன்னாங்க" என்று சோர்ந்த முகத்துடன் பவானியிடமிருந்து பூச்சரத்தை வாங்கி எடுத்துக் கொண்டு டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டை நோக்கி நடந்தான்.
கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அருகில் செல்லும் நீளமான தெருவின் கோடியில் இருக்கும் பங்களா டாக்டர் ஸ்ரீதரனுடையது. வாயில் சுவரில் ஒரு புறத்தில் டாக்டர் ஸ்ரீதரன் எம். பி. பி. எஸ். என்கிற பெயரையும், மறுபுறத்தில் ஜெயஸ்ரீ' என்கிற வீட்டுப் பெயரையும் காணலாம்.
டாக்டர் வெளியே போகவில்லை. வீட்டில் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக அவருடைய கார் ’போர்டிகோ'வில் நின்றிருந்தது. ஒன்றிரண்டு நோயாளிகளும் வெளிப்பக்கம் தாழ்வாரத்தில் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தனர்.
கோபாலன் வராந்தாவில் இருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். டாக்டர் ஸ்ரீதரன் நோயாளி ஒருவரைப் பரிசோதனை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. வாசல் பக்கத்திலிருந்து மாடிக்குச் செல்ல படிகள் இருந்தன. மாடியிலிருந்து மெல்லியதாக ரேடியோ இசை கேட்டுக் கொண்டிருக்கவே மாடிக்குப் போனான் கோபாலன்.
அங்கே இருந்த சோபா ஒன்றில் ஸ்ரீதரனின் தங்கை ராதாவும் ஸ்ரீதரனின் மகள் ஜெயஸ்ரீயும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரில் இருந்த மேஜை மீது கிடந்த பத்திரிகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள் ராதா. கோபாலன் தயங்கிக் கொண்டே ஹாலுக்குள் நுழைந்தான்.
”அம்மா கொடுத்தாங்க" என்று சொல்லிவிட்டு, பூச்சரத்தை மேஜை மீது வைத்து விட்டு நின்றான் கோபாலன.
”அம்மாவுக்கு உடம்பு எப்படி இருக்கு கோபாலா? பூவெல்லாம் தொடுக்க ஆரம்பிச்-சுட்டாங்க போலிருக்கே!" என்று கேட்டுக்கொண்டே ராதா பூச்சரத்தை. எடுத்துக் கத்தரித்து ஜெயஸ்ரீக்கு வைத்துவிட்டுத் தானும் சூட்டிக் கொண்டாள்.
"அவங்க உடம்பு கொஞ்சம் சுமாருங்க. பூ அவங்க கட்டல்லீங்க. ஊரிலிருந்து ஐயாவோட தங்கச்சி வந்திருக்காங்களே, அந்த அம்மா கட்டினாங்க" என்றான் கோபாலன்.
”ஜோராய்க் கட்டி இருக்காங்க. கனகாம்பரம், அதன் பக்கத்தில் ஜாதி, அதன் பக்கத்தில் தவனம், அப்புறம் ரோஜா என்று அழகான கதம்பமாகக் கட்டியிருக்காங்க. நம்ப வீட்டிலேயும் ஏகப்பட்ட பூதான் பூக்கிறது. இந்த மாதிரி எனக்குக் கட்டத் தெரிய-வில்லையே!" என்று ராதா, அந்தக் கதம்பச் சரத்தைப் புகழ்ந்து பேசினாள். பிறகு ரேடியோவை மூடிவிட்டு "நீ எங்கே வந்தே?" என்று விசாரித்தாள்.
”ஐயாவைப் பார்க்க வந்தேம்மா. அம்மாவுக்கு இன்னிக்கு இங்கே வரமுடிய-வில்லையாம். ஊசி போட டாக்டர் ஐயாவையே அங்கே வரச் சொன்னாங்க..."
"சரி ஐயா உள்ளே வந்ததும் தகவலைச் சொல்லுகிறேன்" என்று கூறிவிட்டு ராதா மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள்.
வெளியிலே இருந்த ஒன்றிரண்டு நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து அனுப்பிவிட்டு ஸ்ரீதரன் உள்ளே வந்தார். கைகளை அலம்பிக் கொண்டு மேஜை அருகில் உட்கார்ந்தார் அவர்.
ஜெயஸ்ரீ மாடிப்படிகளில் குதித்து இறங்கி வந்தாள் ”அப்பா! அப்பா! உன்னோட நானும் சுமதி வீட்டுக்கு வரேன்" என்று தன் தகப்பனாரைப் பார்த்துக் கேட் டாள் அந்தப் பெண்.
ஸ்ரீதரன் மகளைத் தம் அருகில் இழுத்து மடியில் உட்கார்த்திக் கொண்டார். ஆசையுடன் அவள் முகத்தைப் பார்த்து, 'ஏனம்மா! நான் ' பேஷண்டை'ப் பார்க்கப் போனால் நீயும் கூட வருவதாவது?" என்று கேட்டார் கொஞ்சலாக.
இதற்குள் சமையலறையிலிருந்து தட்டுக்களில் சிற்றுண்டியும் ’டீ' யும் எடுத்துக் கொண்டு சமையற்காரர் சுவாமிநாதன் வெளியே வந்தார். மேஜை மீது வைத்து விட்டுக் குளிர்ந்த ஜலமும் கொண்டு வந்து வைத்தார். ”குழந்தை என்ன சொல்கிறாள்?" என்று கேட்டார்.
”உம் சரி, நீயே கேளு சுவாமியை! ஒரு டாக்டர் வைத்தியம் பண்ணுவதற்காக நோயாளிகள் வீட்டுக்குப் போனால் கூடவே தம் குழந்தையையும் அழைத்துப் போவாரா என்று கேட்டுப் பாரேன்" என்று குழந்தை யிடம் கூறிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் ஸ்ரீதரன்.
"நான் எல்லோர் வீட்டுக்கும் வருகிறேன் என்று சொல்லவில்லையே அப்பா. அங்கே என் சிநேகிதி சுமதி இருக்கிறாள். அவளைப் பார்க்க வருகிறேன் என்றேன்" என்று அவள் தன் காதுகளில் இருந்த ஜிமிக்கி அசைந்தாடக் கூறி முடித்தாள்.
"என்ன சுவாமி! இவளுக்கு இந்த ஆனியோடு ஒன்பது வயசு பூர்த்தியாகிறது. ஆனால் எப்படிச் சாதுர்யமாகப் பேசுகிறாள் பார்த்தீரா? இவள் தொட்டிலில் உதைத்துக் கொண்டு பாலுக்காக அழுததை நீர் பார்த்திருக்கிறீர். எண்ணெய் தேய்த்துக் கொள்ள இந்த வீட்டைடச் சுற்றி உம்மைத் திணற அடித்தவள் இவள். வக்கணையாகப் பேசத் தெரிந்துவிட்ட....து இப்போது!" என்று ஸ்ரீதரனைப் பார்த்துப் பாதிச் சிரிப்பும் பாதிக் கேலியுமாகச் சொல்லி முடித்தார்.
சுவாமிநாதன் தம் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார். பிறகு நிதானமாக. இன்னொரு பத்து வருஷங்களைத் தள்ளிப் போட்டுப் பாருங்கள். குழந்தைக்குக் கல்யாணம் ஆகிவிடும். இன்னொரு குழந்தையும் இந்த வீட்டிலே குதிபோடும். நீங்களும் தாத்தா ஆகிவிடுவீர்கள்! ஆனால் உங்கள் சம்சாரம்தான் ஒன்றையும் இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை" என்றார். ஸ்ரீதரன் அப்படியே பிரமை பிடித்தவர் மாதிரி உட்கார்ந்திருந்தார்.
------------
2. 2. டாக்டர் ஸ்ரீதரன்
டாக்டர் ஸ்ரீதரனுக்கு இப்பொழுது வயது முப்பத்தி ஐந்து - சென்னை நகரின் பிரபல டாக்டர்களில் அவரும் ஒருவர். மாதம் ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் வரும்படி வந்தது. மனைவி இறந்து போய் எட்டு வருஷங்கள் ஆகின்றன. மறுமணம் செய்து கொள்ளும் எண்ணமா அதை தூண்டி நடத்தி வைப்பவர்களையோ ஒன்றையும் அடையக் கொடுத்து வைக்காதவர் ஸ்ரீதரன். உடன் பிறந்த தங்கையும், மகள் ஜெயஸ்ரீயும் தவிர, அவருடைய லட்சிய மெல்லாம் வைத்தியத் தொழிலில் இருந்தது. அவருடைய அன்பு மனைவி இறந்து போன பிறகு அந்த லட்சியம் வலுப்பெற்றது. அவளை அடியோடு மறந்து விட்டு வேறொருத்தியை மணந்து வாழ விரும்பவில்லை. மண வாழ்க்கையின் சுவையை அவர் நான்கே வருஷங்களில் அனுபவித்து முடித்து விட்டார்.
ஜெயஸ்ரீயின் தாய் பத்மாவுக்கு அழகும் குணமும் ஒருங்கே பொருந்தி இருந்தன. பிறந்த வீட்டிலிருந்து அவள் கொண்டுவந்த சீதனப் பொருள்களில் சுவாமி நாதனும் ஒருவர். பத்மாவுக்குத் துணையாக ஒத்தாசை புரியவந்த அந்தக்கிழவர் பத்மா இவ்வளவு சடுதியில் மறைந்து போவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் போன பிறகு ஒரு தினம் சுவாமிநாதன் தம் மூட்டையை எடுத்துக் கொண்டு ஸ்ரீதரனைப் பார்க்க வந்தார்.
"என்ன? எங்கே கிளம்புகிறீர்கள்?" என்று கேட்டார் ஸ்ரீதரன்.
"எனக்கு இங்கே என்ன பாக்கி இருக்கிறது? மகாலட்சுமி மாதிரி இருந்தவள் போய்விட்டாள்!" என்று கண்ணீர் பெருகக் கூறினார் சுவாமி.
ஸ்ரீதரன் நாற்காலியை விட்டு எழுந்து வந்தார். அவர் கைகளைப் பற்றிக் கொண்டு ”சுவாமி! உமக்கு இங்கேதான் இனிமேல் முக்கியமான வேலைகள் பாக்கி இருக்கின்றன. அவள் போய் விட்டாள். நீரும் போய் விட்டால் இந்தக் குழந்தையை யார் வளர்ப்பார்கள்?"
குழந்தை ஜெயஸ்ரீ விண் விண் என்று தொட்டிலை உதைத்துக் கொண்டு படுத்திருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் பால் புகட்ட வேண்டும். தொட்டிலையும் அதில் கிடந்த குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தார் சுவாமி.
தாயின் பராமரிப்பிலே வளரவேண்டிய மகவு அந்தப் பாக்கியத்தை இழந்து வாடுகிறது. தாமும் அதை உதறித் தள்ளி விட்டுப் போய்விட்டால்? அந்த நினைவே தம்மைச் சுட்டுப் பொசுக்கிவிடும் என்று தோன்றியது சுவாமிக்கு. மூட்டையைக் கொண்டு போய் பரணில் வைத்தார். குழந்தை ஜெயஸ்ரீயும் ராதாவும் அவர் பராமரிப்பில் வளர்ந்து வருகிறவர்கள் தான். ஏன்? டாக்டர் ஸ்ரீதரனைக் கூட அவர்தான் வளர்த்து வருகிறார்.
”இன்றைக்குச் சனிக்கிழமை. வென்னீர் போட்டு வைக்கிறேன். டிஸ்பென்சரியிலிருந்து வந்ததும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள்" என்று கண்டிப் பாக உத்தரவு போடுவார் சுவாமி. வீட்டுக்கு அவரைப் பெரியவராக ஆக்கியிருந்தார் டாக்டர்.
ஸ்ரீதரனுக்கு ஒரு பெரிய பொறுப்புக் காத்துக் கிடந்தது. இருபது வயதை அடைந்த அவர் தங்கை ராதாவைச் சரியான இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டால், அவர் நெஞ்சிலே இருக்கும் பாதிப் பளு இறங்கிவிடும். ஜெயஸ்ரீயைப் பற்றி இப்போதைக்குக் கவலை இல்லை.
டாக்டரின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்த சுவாமி, ”டாக்டர்! யாருடைய வீட்டுக்கோ போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே நேரமாக-வில்லையா?" என்று கேட்டு அவருடைய சிந்தனைகளுக்கு ஒரு முடிவை ஏற்படுத்தினார்.
ஸ்ரீதரன் தம் கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு காரில் போய் உட்கார்ந்தார். மாமரத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் ஜெயஸ்ரீ மட்டும் உட்கார்ந்து ஆடி கொண்டிருந்தாள். குழந்தை தனியாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு... ”ஜெயஸ்ரீ! நீயும் என்னோடு வருகிறாயா அம்மா? உன் அத்தை எங்கே?" என்று கேட்டார் காரின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு.
ஜெயஸ்ரீ ஊஞ்சலை நிறுத்தினாள். பிறகு பலமாகக் கைகளை ஆட்டி. நான் வரல்லேப்பா. அத்தை கிளப்புக்குப் போயிருக்கா. நான் மாமாகிட்டே கதை கேட்கப் போறேன். தான் வரலை. நீ போகலாம்... டா....... டா........" என்று கையை அசைத்துத் தகப்பனாருக்கு விடை கொடுத்தாள் அந்தப் பெண்!
ஸ்ரீதரன் தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டார். குழந்தையின் மனம் எவ்வளவு நுட்பமானது. போகிற இடத்துக் கெல்லாம் நீ வர முடியுமா என்று தாம் சற்று முன் கேட்டதைப் புரிந்து கொண்டு, எவ்வளவு சமர்த்தாக நடந்து கொள்கிறாள் ஜெயஸ்ரீ என்று மனதுக்குள் வியப்பும் திகைப்பும் அடைந்தார்.
காரை வெளியில் நிறுத்தி விட்டு அவர் உள்ளே நுழைந்ததும் நாகராஜனின் மகள் சுமதி எதிரே ஓடி வந்தாள். கைகளைக் குவித்து அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு , ”டாக்டர், ஜெயஸ்ரீ வரவில்லையா?" என்று கேட்டாள்.
”முதலில் வருகிறேன் என்று தான் சொன்னாள் அம்மா. பிறகு வரவில்லை என்று சொல்லி விட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை போ. காரணம் என்னவாக இருக்கும்? நீ சொல் பார்க்கலாம்.........? ரைட்... அம்மா எங்கே? மாடியில் இருக்கிறாளா?" என்று கேட்டுக் கொண்டே படிகளில் ஏறி மாடிக்குச் சென்றார்
ஸ்ரீ தரன்.
சுமதி குதித்துக் கொண்டு உள்ளே ஓடினாள். “அத்தை! அத்தை! டாக்டர் மாமா வந்திருக்கிறார். கை அலம்ப சோப்பும், வென்னீரும் வேண்டுமாம்" என்று கூவிக் கொண்டே சமையல் அறைக்குள் சென்றாள் அவள்.
பவானி ஒரு பீங்கான் பாத்திரத்தில் வென்னீரை ஊற்றி வைத்தாள். சோப்பை நறுக்கி எடுத்துக் கொண்டே, “சுமதி! உன்னாலே இவற்றை எடுத்துப் போய் மாடி:பில் கொடுக்க முடியுமா?" என்று கேட்டாள். சிறிது நின்று யோசித்து விட்டு, ”அந்த கோபாலன் பொருந்தி வேலை செய்கிறதில்லை. பெண்டாட்டியை சினிமாவுக்கு அழைத்துப் போகிற ஜோரில் பாதி வேலைகளைப் போட்டு விட்டுப் போய் விட்டான். வென்னீர் சுடப் போகிறது. நானே எடுத்து வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டு மாடிக்குப் போனாள் பவானி.
கோமதியின் உடம்பு பவானி வந்த பிறகு எவ்வளவோ தேறியிருந்தது. வெள்ளை வெளேர் என்று வெளுத்துப் போயிருந்த கன்னங்களில் செம்மை படர ஆரம்பித்திருந்தது. நாலைந்து பவுண்ட் நிறை கூட ஏறி இருப்பதாக ஸ்ரீதரன் கூறினார். கை - நாடியைப் பரிசோதித்து விட்டு அவர், ”பலவீனம் ரொம்பவும் குறைந்து விட்டது. இன்னும் மூன்று ஊசிகள் போட்டால் போதும். பிறகு தேவையில்லை. மாடியிலேயே இப்படி அடைந்து கிடக்காதீர்கள், காற்றோட் டமாக வெளியிலே உலாவ வேண்டும். சிறுசிறு வேலைகள் செய்தாலும் குற்றமில்லை. இப்படிக் காற்றாட வெளியில் போய் விட்டு வருகிறது தானே! நாகராஜன் எங்கே? ஊரில் இல்லையா?" என்று கேட்டார் ஸ்ரீதரன். இப்படிப் பேசிக் கொண்டே ஊசியையும் ஏற்றினார். பச்சைக் கவனித்துக் கொண்டிருந்த கோமதிக்குக் கூட அவர் எப்பொழுது குத்தினார் என்பது புரியாமல் போய் விட்டது.
கை அலம்ப வென்னீர் கொண்டு வந்த பவானி அதை அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு ஒதுங்கி நின்றாள்.
பிறகு மெதுவான குரலில். ”இந்த வாரத்தில் இன்னொரு தரம் தலைக்கு ஜலம் விடலாமா? சாப்பாடு பிடிக்க வேயில்லையே. சரியாகவே மன்னி சாப்பிடுகிற தில்லை " என்று கூறினாள்.
ஸ்ரீதரன் கைகளைத் துண்டினால் துடைத்துக் கொண்டே பவானியை ஏறிட்டுப் பார்த்தார்.
’நாகராஜனுக்கு இப்படி ஒரு விதவைத் தங்கையா? வியாபாரத்தில் பணம் ஒன்றையே குறியாக வைத்து வாழ்க்கையில் மனைவி குழந்தைகளைக் கூடக் கவனிக்க அவகாசமில்லாமல் திரிபவனுக்கு இப்படி ஒரு உடன் பிறந்தவளா?' என்றுதான் ஆச்சரியம் அடைந்தார் ஸ்ரீதரன்.
"ஓ! தாராளமாய் ஸ்நானம் செய்யலாம். உடம்புக்கு ஒன்றுமில்லை. கொஞ்சம் ரத்தக் குறைவு. அதுவும் நாளடைவில் சரியாகி விடும்" என்று கூறிவிட்டு "நான் வருகிறேன் அம்மா" என்று சொல்லிக் கொண்டே மாடிப்படிகளில் இறங்கிச் சென்று காரில் உட்கார்ந்து காரைச் செலுத்த ஆரம்பித்தார்.
மாடி 'பால்கனி’யில் கை அலம்பிய நீரைக் கீழே மாற்றுவதற்காக வந்த பவானியின் பார்வை, ஸ்ரீதரனின் பார்வையைச் சந்தித்து மீண்டது.
--------------
2. 3. உடலும் உள்ளமும்
ஒன்றுமில்லாததற்கெல்லாம் பிரமாதப்படுத்துவது சிலருடைய பிறவிக்குணம். நன்றாக ஆரோக்கியமாகவே இருப்பார்கள்; பாலும் பழமும் வெண்ணெயும் ரொட்டியும் சாப்பிடுவார்கள். கன்னத்திலேயும், கண்களிலேயும் ஆரோக்கியத்தின் செம்மை படர்ந்திருக் கும். மகிழ்ச்சி துள்ள வேண்டிய முகத்தைச் சோர்வாக வைத்துக் கொண்டு எனக்கு உடம்பு சரியில்லை, வயிற்றில் வலி. சாப்பாடு பிடிக்கவில்லை. இரண்டு வாய் சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடுகிறது" என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
”போன பிரசவத்தின்போது உடம்பு கெட்டுப் போய் விட்டது. திரும்பவும் தேறவில்லை. குழந்தைக்குக் கூட நான் பால் கொடுப்பதில்லை. 'உடம்புக்கு ஆகாது . பாலை நிறுத்தி விடு' என்று டாக்டர் சொல்லி விட்டார். புட்டிப்பால்தான் கொடுக்கிறேன்" என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் தாய்மார்கள் அநேகம் பேர் உண்டு. இவர்களைப் பார்த்தால் வியாதியஸ்தர் கள் மாதிரி இருக்க மாட்டார்கள். தாங்கள் பெற்ற மகவுக்குப் பாலூட்டினால் தங்களுடைய அழகு குறைந்து போகும் என்கிற ஒரு வித அசட்டு மனப்பான்மை உடையவர்கள் இவர்கள்.
டாக்டர் ஸ்ரீதரன் சென்ற பிறகு, கோமதி ’உஸ்' என்று கூறிக் கொண்டே படுக்கையில் சாய்ந்தாள். "அப்பா அவர் போட்ட ஊசி எப்படி வலிக்கிறது!" என்று சொல்லிக் கொண்டு கைகளைத் தடவிக் கொண்டாள்.
பால்கனியை விட்டு வந்த பவானி தன்னுடைய மன்னி படுக்கையில் ஆயாசமாகச் சாய்ந்து இருப்பதைப் பார்த்து அன்புடன் அவள் அருகில் வந்து, ”மன்னீ! ஏதாவது சூடாகச் சாப்பிடுகிறாயா? புதுப் பால் கறந்து விட்டான். காய்ச்சி வைத்திருக்கிறேன். ஓவல்டின் போட்டுக் கொண்டு வரட்டுமா?" என்று கேட்டாள்.
”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் பவானி எனக்குப் பசியே இல்லை" என்றாள் கோமதி.
பவானி சிறிது தயங்கிக் கொண்டே நின்றாள். பிறகு சற்றுப் பயத்துடன். "கீழே இறங்கி வாயேன் மன்னி. இன்றைக்கு வெள்ளிக்கிழமை, கைகால்களை அலம்பிக் கொண்டு சுவாமி படத்துக்கு விளக்கேற்றி நமஸ்காரம் செய்யேன். சற்றுக் காற்றாட ஊஞ்சலில் உட்காரேன். இப்படி நாள் கணக்கில் இந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தால் மனசு தான் என்னத்திற்கு ஆகும்?" என்று அழைத்தாள்.
கோமதிக்கு முதலில் அலுப்பாகவும் வேண்டா வெறுப்பாகவும் இருந்தது. பவானி சொல்லுகிறாளே என்று நினைத்துக் கீழே இறங்கி வந்தாள்.
கூடத்தில் ரேடியோ மேஜை மீது முன்னைப் போல் பத்திரிகைகளும் கிழிந்த துணிகளுமாக இராமல் துப்புரவாக வைக்கப்பட்டிருந்தது. அதற்கடுத்த பூஜைக் கூடத்திலிருந்து மலர்களின் நறுமணம் ’கம்' மென்று வீசியது. பலவித மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைப் படங்களுக்குச் சாத்தி இருந்தாள்.
அந்த வீட்டில் சமையலுக்கு ஆள் கிடையாது. மாதத்தில் அநேக நாட்கள் ஹோட்டலிலிருந்து எடுப்புச் சாப்பாடு வந்து விடும். அதைக் குழந்தைக்குப் போட்டுத் தானும் சாப்பிடவே கோமதிக்கு அலுப்பாக இருக்கும். மின்சார அடுப்பில் காலையில் பாலைக்காய்ச்சி, தானே காட்பி போட்டுக் கொண்டு விடுவான் நாகராஜன். மனைவி எழுந்து போட்டுக் கொடுக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான். அவள் படுக்கையை விட்டு எழுந்து வருவதற்குக் காலை சுமார் ஏழு மணி ஆகும். பால்காரன் பாலைக் கறந்து வைத்து விட்டுப் போய் விடுவான். வேலைக்காரி சுமதிக்குத் தலைவாரிப் பின்னி குளிப்பாட்டி உடை அணிவித்து விடுவாள். சில நாட் களி வேலைக்காரி கொடுக்கும் ஆகாரத்தைச் சாப்பிட்டு சுமதி 'கான்வெண்டு'க்குப் போய் விடுவாள். தலை வாரிப் பூச்சூட்டி, மை தீட்டிப் பொட்டிட்டு மகிழ வேண்டிய தாய் உள்ளம் உறங்கிக் கிடந்தால், அந்தக் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி என்ன சொல்ல முடியும்?
கோமதி சுபாவத்தில் கொஞ்சம் நோயாளி. 'நோய் பீடிப்பது உடலையே தவிர உள்ளத்தை அல்ல' என்று அதை உதறித் தள்ளும் சுபாவத்தைப் படைத்தவள் அல்ல, தலையை வலிக்கிறதா? அது சாதாரணத் தலைவலி என்று இருந்து விடமாட்டாள். நரம்புத் தளர்ச்சியினால் வந்த தலைவலியா ‘மெனிஞ்ஜைடிஸ்’ என்கிற பயங்கர வியாதியின் ஆரம்பமா என்றெல்லாம் மண்டையைப் பிளந்து கொள்வாள். வீட்டில் ’போன்' இருந்தது. தானாகவே ’போன்' செய்வாள் டாக்டருக்கு.
”தலைவலிதானே? சூடாகக் காப்பி சாப்பிடுங்கள். குளிர்ந்த காற்றில் உலாவுங்கள், சரியாகி விடும்" என்று டாக்டர் கூறினால், அதைச் சரியென்று ஆமோதித்து விடமாட்டாள் கோமதி.
”நரம்புத் தளர்ச்சியினால் ஏற்பட்ட தலைவலி யானால் அதற்குக் காப்பி நல்லதா? சீதளத்தினால் வந்த தலைவலியானால் குளிர்ந்த காற்று உடம்புக்கு ஆகுமா?" என்று கேட்பாள் டாக்டரை.
தன்னுடைய ஆரோக்கியத்தில் இப்படித் திடமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளாமல் அரைகுறை யாக எதையாவது படித்தும் கேட்டும் அவள் தினசரி நோயாளியாக மாறிவிட்டிருந்தாள்.
மனைவி ஒரு வியாதிக்காரி. ஆண்களின் மனம் ரீங் காரமிடும் வண்டைப் போன்றது. மலர்ந்த மலர்களிலே மதுவும் அழகும் இருக்கின்றனவா என்று சோதனை போடும் தன்மையை உடையது வண்டு.
வாயிற்படி ஏறும் போதே சிரித்துக் கொண்டு வரவேற்கும் மனைவி சதா கட்டிலில் படுத்துக்கொண்டு முனகியவாறு இருந்தால் எந்தக் கணவன்தான் அலுத்துக் கொள்ள மாட்டான்?
பணத்தை மதியாமல் நாகராஜன் புட்டி புட்டியாக மருந்துகள் வாங்கினான். அவள் வாய் அசைப்பதற்கு முன் பணிபுரிய அந்த வீட்டில் மூன்று வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில் இருப்பவர்கள் மூன்று பேர்! வேலையாட்கள் மூன்று பேர்!
கோமதியின் உடல் நிலையை விட மனோநிலையைச் சரியாகப் புரிந்து கொண்டவர் டாக்டர் ஸ்ரீதரன். உடலில் ஏற்பட்டிருக்கும் வியாதிகளுக்கு வைத்தியர்களால் சிகிச்சை செய்ய முடியும். உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் நோய்க்கு அவர்களால் என்ன செய்ய முடியும்?
”கோமதி அம்மா உங்களை வரச் சொன்னாங்க" என்று டாக்டர் வீட்டுக்கு, நாகராஜன் வீட்டைச் சேர்ந்த வேலைக்காரர்கள் யார் வந்து அழைத்தாலும் டாக்டர் ஸ்ரீதரன் பதறிக் கொண்டு போக மாட்டார்.
"அம்மாவுக்கு என்ன உடம்பு?" என்று கேட்பார்.
"ஒண்ணுமில்லீங்க, ஏதோ உ.டம்பு சரியில்லையாம். வரச் சொன்னாங்க" என்பான் வேலையாள்.
"பேசிக் கொண்டு நடமாடிக் கொண்டு தானே இருக்காங்க?"
”ஆமாங்க, இன்னிக்கு எங்க சம்பளம்கூட அம்மா தான் குடுத்தாங்க"
ஸ்ரீதரன் மனதுக்குள் சிரித்துக் கொண்டு, ”வரேன் என்று சொல்லப்பா" என்று அவனை அனுப்பி விடுவார். அன்று போக மாட்டார். நாலு தினங்களுக்கு அப்புறம் தான் போய்ப் பார்த்து வருவார்.
இப்படித்தான் ஒரு மாசத்துக்கு முன்பு இரவு இரண்டு மணிக்கு நாகராஜன் டாக்டரைக் கூப்பிட்டான் போனில்.
”ரொம்பவும் ஆபத்தாக இருக்கிறது. மயக்கம் தான். கருச்சிதைவு என்று நினைக்கிறேன். என்ன செய்வது?" என்று கேட்டான்.
"கருச்சிதைவா? நான் எதிர்பார்த்தேன் மிஸ்டர் நாகராஜன் உங்கள் மனைவிக்கு உடல் உழைப்பு போதாது. கர்ப்ப ஸ்திரீகள் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் இருப்பது நல்லதில்லை. அதே சமயத்தில் அதிகமாக உடம்பை அலட்டிக் கொள்ளவும் கூடாது இப்பொழுது என்ன செய்வது? ஆசுபத்திரிக்குப் போன் பண்ணுகிறேன். ’அட்மிட்' செய்து விடுங்கள்" என்றார்.
அதற்கப்புறம் தான் வீடு இருக்கும் அவல நிலையைப் பார்த்து நாகராஜன் பவானியை வரவழைத்தான். அவள் வந்த பிறகு வீட்டிற்கு ஒரு அழகு. சோபை எல்லாமே வந்து விட்டது. இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை' என்பார்கள். அந்த இல்லாளும் அமைய வேண்டிய முறையில் அமைந்தால் தான் உண்டு. இல்லாவிட்டால் அந்த வீட்டில் ஆசை. அன்பு, காதல். இன்பம் ஒன்றுமே இல்லைதான்!
தன்னுடைய மன்னி இப்படி ஏன் இருக்கிறாள் என்று வியந்தாள் பவானி.
கொல்லையில் சென்று கால் அலம்பிக் கொண்டு வந்த கோமதி கூடத்து சோபாவில் சென்று உட்கார்ந்தார். இதற்குள் பவானி ஓவல்டின் கரைத்து எடுத்து வந்தாள். அதைச் சாப்பிடும் வரை பவானி கோமதியுடன் ஒன்றுமே பேசவில்லை. அவள் சாப்பிட்டு முடித்ததும் அவள் அருகில் உட்கார்ந்து "ஏன் மன்னி அண்ணா மாசத்தில் வீட்டில் எத்தனை நாளைக்கு இருப்பான்? நான் வந்ததிலிருந்து சேர்ந்தாற்போல் அவனை நாலு நாட்கள் கூட வீட்டில் பார்க்க முடியவில்லையே?" என்று கேட்டாள்.
கோமதி பவானியை ஒரு தினுசாகப் பார்த்தாள். பிறகு வறண்ட குரலில், ”ஏன் அப்படிக் கேட்கிறாய் பவானி? மாசத்துக்கு நாலைந்து நாட்களுக்கு மேல் உன் அண்ணா வீட்டில் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அந்த சமயங்களில் அவருக்குத் தன் ' பிஸினஸ்' அலுவலா கவே பிறருடன் ' போனில் பேசுவதற்குச் சரியாக இருக்கும்" என்றாள்.
மனதில் இருந்த ஏக்கமும் வருத்தமும் அவள் குரலில் பிரதிபலித்தன. அழகுள்ள மனைவி, ஆசைக் குழந்தை, சுகவாழ்வு எதையும் கவனிக்காமல் ’வேலை வேலை' என்று எதையோ லட்சியமாக வைத்துக் கொண்டு நாகராஜன் நடந்து கொண்டான்.
இவையெல்லாமே வேடிக்கையாகவும் விசித்திர மாகவும் இருந்தன பவானிக்கு.
-----------
2. 4. கிழவரின் கண்ணீர்
மனித வாழ்க்கையில் நடப்பவை யாவுமே வேடிக்கை என்றோ விசித்திர மென்றோ தள்ளிவிட முடியாது. ’கஷ்டங்களைச் சிரிப்பினாலேயே வெல்ல வேண்டும்' என்று வாயளவில் சொல்லி விடலாம். செய்கையிலே காண்பது அரிது. சிற்சில விஷயங்களை மிகைப் படுத்தாமல் சிலவற்றை வேண்டுமானால் ஒதுக்கி வாழ முயற்சிக்கலாம். ஆனால், அதி முக்கியமான விஷயங்களைச் செய்யமுன்பு ஆலோசித்துதான் ஆகவேண்டும்.
டாக்டர் ஸ்ரீதரன் சிறந்த அறிவாளி. வைத்திய மேதை. ஒரு டாக்டரின் வாழ்க்கையில் அலகாசச்தைக் காண்பது அரிது. அதுவும் பொறுப்பு உள்ள, திறமையுள்ள டாக்டருக்கு ஓய்வு கிடைக்கிறதா என்பது சந்தேகம், ஸ்ரீதரனின் மருத்துவ சாலையில், காலையிலும் மாலையிலும் கூடும் கூட்டத்தைப் பார்த்தே இதை அறிந்து கொள்ளலாம். ஒட்டி உலர்ந்த உடம்புடன் வரும் தாய் மார்கள், கன்னங்கள் ஒட்டி எலும்பு தெரியும்படி ஆடவர்கள், நோஞ்சான் குழந்தைகள், அளவுக்கு மீறிய சுகவாசத்தால் பருத்த உடல் கொண்ட பெண்கள், ஆண்கள். இப்படி ஏதோ ஒரு நோயைச் சொல்லிக் கொண்டு கூட்டம் நெரிந்தது.
அந்த நோயாளிகளில் பாதிக்கு மேல் குழந்தைகள் இருந்தார்கள். மாம்பழக் கதுப்புப் போன்ற கன்னங்களையும் நீலோற்பல விழிகளையும், முகத்திலே துள்ளி விளையாடும் சிரிப்பையும் அடைந்திருக்க வேண்டிய அவர்கள் நோய்களுக்கு இரையாகிவிடும் கொடுமையைத் தான் டாக்டர் ஸ்ரீதரனால் சகிக்க முடிய வில்லை.
இப்படி அல்லும் பகலும் பிறர் நலனைக் கருத்தில் கொண்டு வாழும் ஸ்ரீதரனால் தன்னுடைய குடும்பத்தில் அதிக அக்கறை செலுத்த முடியவில்லை. குடும்பப் பொறுப்பு பூராவும் சுவாமிநாதனே ஏற்று நடத்தி வந்தார். மாதாந்தரம் வாங்க வேண்டிய சாமான்கள் இதர செலவுகள் யாவும் அவருடைய மேற்பார்வையில் நடந்து வந்தன. குழந்தை ஜெயஸ்ரீயை விட அவர் அன்பு செலுத்தியது ராதாவிடம் தான். தாயையும் தந்தையையும் இழந்து சகோதரன் ஒருவனையே ஆதாரமாகக் கொண்டு வாழும் அந்தப் பெண்ணிடம் அவருக்கு அலாதி அன்பு ஏற்பட்டது. அத்துடன் ராதா வயது வந்த பெண். அவளைத் தக்கபடி காப்பாற்றித் தகுந்த இடத்தில் கல்யாணம் பண்ணித் தரவேண்டும் என்கிற கவலையும் பட்டு வந்தார் சுவாமிநாதன். அவர் வாழக்கையை விளையாட்டாகவும் விசித்திரமாகவும் கருதுபவர் அல்ல. எதையும் தீர ஆலோசித்தே செய்ய வேண்டும் என்கிற கொள்கையை உடையவர்.
அன்று மாலை ஆறு மணிக்கு வெளியே சென்ற ராதா இரவு ஒன்பது மணி வரையில் வீடு திரும்பவில்லை. வாசல் ’கேட்'டுக்கும், உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தார் சுவாமிநாதன். ஸ்ரீதரன் யாரோ நோயாளியைப் பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தார். ஜெயஸ்ரீ படுத்துத் தூங்கி விட்டாள். ’இந்த இடத்துக்குப் போகிறேன் என்று ஒரு பெண் சொல்லி விட்டுப் போகாதோ' என்று சுவாமிநாதன் தமக்குள் பல முறைகள் சொல்லிக் கொண்டார். ’வயசு வந்த பெண். என்ன தான் பி.ஏ. படித்திருந்தாலும், இவ்வளவு துணிச் சல் ஆகாது' என்று தான் அவருக்குத் தோன்றியது.
தெருவுக்கும் உள்ளுக்குமாக அலைந்து அலைந்து கால்கள் சோர்ந்து போய் உள்ளே வந்து உட்கார்ந்தார் சுவாமிநாதன். வெளியே சென்றிருந்த ஸ்ரீதரனும் வந்து விட்டார். காரைக் கொண்டு போய் ஷெட்டில் விட்டு விட்டு ஹாலுக்குள் நுழைந்தபோது பெஞ்சில் கவலை யுடன் உட்கார்ந்திருந்த சுவாமி நாதனைப் பார்த்தார்.
"என்ன சுவாமி, எனக்காகவா காத்துக் கொண் டிருக்கிறீர்கள்? சாயங்காலம் சாப்பிட்ட சிற்றுண்டியே வயிறு நிறைந்திருக்கிறது எனக்குப் பசியே இல்லை. ஒரு டம்ளர் பால் மட்டும் கொடுங்கள் போதும். ஜெயஸ்ரீயும், ராதாவும் தூங்கிப் போய்விட்டார்களா?" என்று கேட்டார்.
”ராதாவா? அவள் சாயங்காலம் வெளியே போனவள்தான். இன்னும் வரவே இல்லையே? எங்கே போனாள் என்று உங்களுக்கு தெரியுமா?" என்று கவலையுடன் விசாரித்தார் சுவாமிநாதன்.
"எனக்குத் தெரியாதே!" என்றார் ஸ்ரீதரன். "எங்கே போயிருப்பாள்? யாராவது சினேகிதியின் வீட்டுக்குப் போயிருக்கலாம். வந்து விடுவாள்" என்று சொல்லிக் கொண்டே மாடிக்குச் சென்றார் ஸ்ரீதரன்.
சுமார் பத்து மணிக்கு ராதா வீடு வந்து சேர்ந்தாள். சோர்ந்த முகத்துடனும் கவலையுடனும் தனக்காக வழி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் சுவாமி நாதன் எதிரில் வந்து நின்றாள். ஏதோ டிராமாவிற்கோ நடனத்துக்கோ அவள் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருந்த மாதிரி இருந்தது அவள் அலங்காரம். நெற்றியில் வகிட்டுக்கருகில் கட்டியிருந்த பதக்கமும், காதுகளில் ஆடும் ஜிமிக்கியும், காதளவு மை தீட்டிய கண்களும் அவளை ஒரு கோபிகையாகத் தோன்றச் செய்தன.
"என்னம்மா குழந்தை! என்ன வேஷம் இது?" என்றார் சுவாமி நாதன்.
”வேஷம் தான்! நாங்கள் எல்லோரும் டிராமா போடுகிறோம். அதற்காக நானும் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் காண்பிக்க வேண்டும் என்று தான் வேஷத்தைக் கலைக்காமல் என் சினேகிதியின் காரில் வந்தேன். இன்றைக்கு 'ரிகர்ஸல்' ஆயிற்று. இன்னும் நாலு நாளில் டிராமா இருக்கிறது. நீங்களும் வருகிறீர்களா?" என்று கேட்டாள் ராதா.
சுவாமி நாதனுக்கு அவளை என்ன சொல்வது என்றே புரியவில்லை. சிறிது நேரம் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றார். பிறகு நிதானமா "அதெல்லாம் சரிதான். இப்படி நீ இரவு பத்து மணி வரைக்கும் வெளியே சுற்றி விட்டு வரலாமா? சாப்பிட வேண்டாமா? வேளையில் சாப்பிட வில்லை யென்றால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்று தம் கருத்தை நாசூக்காக அறிவித்தார் சுவாமிநாதன்.
கீழே பேச்சுக்குரல் கேட்கவே மாடியிலிருந்து ஸ்ரீதரன் கீழே இறங்கிவந்தார். கூடத்தில் ஒளிரும் மெர்க் குரி விளக்கின் ஒளியில் அழகுப்பிம்பமாக நிற்கும் ராதையைப் பார்த்தார் ஸ்ரீதரன். தன் சகோதரி இப்படி ஒப் பற்ற எழிலுடன் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியது.
"என்ன சொல்கிறார் சுவாமி? நேரம் கழித்து வீடு திரும்பலாமா என்று கேட்கிறா-ராக்கும்?" என்று சிரித்துக் கொண்டே கூறியவாறு ஸ்ரீதரன் தங்கையின் அருகில் வந்து நின்றார்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை. வேளையில் சாப்பிடா விட்டால் உடம்புக்கு ஆகாதாம். அதைப் பற்றித் தான் கவலைப்படுகிறார் அண்ணா" என்றாள் ராதா சிரித்துக் கொண்டே.
சுவாமி நாதன் ஒரு பாத்திரத்தில் தயிர் சாதத்தைப் பிசைந்து கொண்டு எலுமிச்சை ஊறுகாயும் கொண்டு வந்தார். ராதையை அங்கிருந்த சோபாவில் உட்காரச் சொல்லி, ஒவ்வொரு பிடியாகச் சாதத்தை எடுத்து அவள் கையில் வைத்தார்.
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற ஸ்ரீதரன், “என்னம்மா ராதா! உனக்குக் கல்யாணமாகி விட்டால் இந்தக் கிழவர் இங்கே இருக்க மாட்டார். உன்னுடன் வந்து விடுவார் ! அப்புறம் என்பாடும் ஜெயஸ்ரீயின் பாடும்தான் திண்டாட்டமாகி விடும்" என்றார் வேடிக்கையாக.
தலையைக் குனிந்து கொண்டிருந்த சுவாமிநாதன் திமிர்ந்து ஸ்ரீதரனைப் பார்த்தார்.
“நான் அவளுடன் புக்ககம் போகிறது இருக்கட்டும். முதலில் இந்த வருஷம் ராதாவுக்குக் கல்யாணம் பண்ணி விட வேண்டும்; நல்ல இடமாக வந்தால் பாருங்கள்" என்றார்.
கலகலவென்று சிரித்துக் கொண்டே ராதா உட் கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தாள். அவள் இப்படி. ஒன்றும் அறியாத பெண்ணாக வெகுளியாக இருப்பதை நினைத்து சுவாமிநாதன் வருந்தினார், ஒரு சொட்டுக் கண்ணீர் திரண்டு அவர் கண்களின் முனையில் தேங்கி நின்றது.
------------
2. 5. குரங்கு மூஞ்சி பாலு....!
ஒருநாள் பிற்பகல் மூன்று மணிக்கு டாக்டர் ஸ்ரீதரனும், ராதாவும் நாகராஜனின் வீட்டிற்கு வந்தார்கள், தெருப் பக்கத்து அறையில் மேஜைமீது கட்டுக் காகிதங்களை வைத்துக் கொண்டு நாகராஜன் உட்கார்ந்திருந் தான் . கூடத்து சோபாவில் சாய்ந்து கொண்டு கோமதி புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். பவானி உள்ளே வேலையாக இருந்தாள். வீடு நிசப்தமாக 'வெறிச்' சென்று கிடந்தது.
டாக்டரும், ராதாவும் வருவதைக் கவனித்த கோமதி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். வாயிற்படி அரு கில் வந்து நின்று சிரித்துக் கொண்டே “வா ராதா! என்னவோ நீங்கள் எல்லாம் டிராமா போடுகிறீர்களாமே? சுமதி சொன்னாள். அவள் தான் அதில் கிருஷ்ணனாம். நீ மீராவாக வருகிறாயாம், எனக்கு இலவசமாக டிக்கெட் உண்டோ இல்லையோ?" என்று கேட்டாள்.
கையிலிருந்த அழகுப் பையைச் சுழட்டிக் கொடே ராதா புன்முறுவலுடன் உள்ளே வந்தாள். இதற்குள் அறையைவிட்டு உவளியே வந்த நாகராஜனைப் பார்த்து வணக்கம் செலுத்திவிட்டுச் சோபாவில் அமர்ந்தாள் ராதா.
”என்ன டாக்டர்! இப்படி விச்ராந்தியாக உங்களைப் பார்ப்பதே அபூர்வமாயிற்றே! சௌக்கியம் தானே?" என்று கேட்டான் நாகராஜன்.
”சௌக்கியந்தான் மிஸ்டர் நாகராஜன். பள்ளிக்கூட டிராமாவுக்கு டிக்கட்டுகள் விற்க வேண்டுமாம். என்னையும் கூட வரும்படி, நச்சரித்து விட்டாள் ராதா. இனிமேல் உங்கள் பாடு அவள் பாடு. நீங்கள் பணம் கொடுத்தே டிக்கட்டுகள் வாங்குவீர்களோ, அல்லது படங்கள் மனைவி கூறிய மாதிரி அவளே இலவசமாக டிக்கட்டுகள் கொடுப்பாளோ எனக்குத் தெரியாது" என்று கூறிவிட்டு ஸ்ரீதரன் தமக்கே உரித்தான முறையில் கட கட வென்று சிரித்தார்.
யாரோ நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து பவானி தட்டுக்களில் பழங்களும், காப்பியும் கொண்டு வந்து கூடத்தில் இருந்த மேஜை மீது வைத்தாள். பிறகு டாக்டரைப் பார்த்துப் புன்முறுவலுடன் வணக்கம் செலுத்திவிட்டு, அருகிலிருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.
தன் அருகில் உட்கார்ந்திருந்த ராதாவைக் காண்பித்துக் கோமதி பவானிக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தாள்.
நாகராஜன் தனக்கு அவசர வேலை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டான். டாக்டர் ஸ்ரீதரன் தாம் நேராக 'டிஸ்பென்சரி'க்குப் போய்விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு ராதாவிடமும் கோமதியிடமும் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.
ஆண்களை விடப் பெண்கள் சீக்கிரம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு நண்பர்களாகி விடுவார்கள். கூடத்தில் உட்கார்ந்திருந்த கோமதியும் பவானியும் ராதாவும் நெடுநாள் பழகியவர்களைப் போலப் பேச ஆரம்பித்தார்கள் . பவானியை நாடகத்துக்கு வரச் சொல்லி ராதா மிகவும் வற்புறுத்தினாள். மூன்று டிக் கட்டுக்களைக் கிழித்துக் கொடுத்து விட்டு நாகராஜனிடம் முப்பது ரூபாய்கள் வாங்கிக்கொண்டு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டுக் கிளம்பினாள் அந்தப் பெண். அவள் இருந்த சிறிது நேரம் வரை அங்கு கலகலவென்று சிரிப்பும், பேச்சுமாக இருந்தது. அவள் போன பிறகு பவானி, 'என் மன்னி! பெண் துரு துருவென்று நன்றாக இருக்கிறாள் இல்லையா? ரொம்பவும் வெகுளியான சுபாவம்" என்று தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தாள்.
”த்சூ......” என்று சூள் கொட்டினாள் கோமதி. ”என்ன சுபாவமோ? வீட்டிலே அரை மணிகூ:-- த் தங்கு கிறதில்லையாம். காலையில் ஒரு உடை. நடுப்பகலில் வேறு உடை. மாலையில் ஒரு அலங்கரம் என்று உடுத்திக் கொண்டு ஊரைச் சுற்றி வருகிறது. வயசுப் பெண் ஆயிற்றே என்று கவலைப்பட யார் இருக்கிறார்கள்? டாக்டருக்கு அவர் வேலை தான் சரியாக இருக்கிறது. அத்துடன் ஆண்களுக்குப் பெண் குழந்தைகளை வளர்க் கும் விதம் தெரியுமா என்ன?" என்றாள் கோமதி,
பவானியின் மனம் உண்மையில் ராதாவுக்காக இரக்கப்பட்டது. இளமையும் அழகும் படிப்பும் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் வராமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டாள்.
”இங்கே அடிக்கடி வருவது வழக்கமா?" என்று விசாரித்தாள் பவானி கோமதியை.
”அதெல்லாம் ஒன்றுமில்லை. எப்பொழுதாவது வருவாள். நான் என்ன பி.ஏ. வா படித்திருக்கிறேன்? அவளுக்கென்று படித்த சிநேகிதிகள் ஏகப்பட்டவர்கள் இருக்கிறார்கள்" என்றாள் கோமதி அலட்சியமாக,
படித்தவர்கள் படித்தவர்களுடன் தான் பழக வேண்டும். படித்தவர்கள் படிக்காதவர்-களுடன் பழகுவதோ பேசுவதோ கூடாது. ஏன் இப்படி எல்லாம் வித்தியாசங்களை நாமே வகுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் பவானிக்குப் புரியவில்லை .
சிந்தனை தோய்ந்த மனத்துடன் பவானி கொல்லைத் தாழ்வாரத்தில் போய் உட்கார்ந்தாள். அவள் மனத் திரையை விட்டு மூர்த்தியோ அவனுடைய செயல்களோ மறையவே இல்லை. பட்டண வாசத்தில் சாரி சாரியாக ஒரு அலுவலுமின்றித் திரிந்து வரும் ஆண்களையும் அவர்கள் நடுவில் ராதாவைப்போன்ற இளம்பெண்களின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் பவானி.
அப்போது பள்ளிக்கூடத்திலிருந்து பாலு வந்தான். கண்கள் சிவந்து உதடுகள் துடிக்க சோர்ந்த முகத்துடன் வரும் அவனைப் பார்த்துப் பவானி திடுக்கிட்டாள். "என்னடா பாலு! என்ன ஆயிற்று?" என்று கேட்டாள் பதறியவாறு. பாலு தாயின் அருகில் வந்து உட்கார்ந்தான். அழுது கொண்டே பையிலிருந்த புத்தகங்களை வெளியே எடுத்தான். அதில் இருந்த கணக்கு நோட்டுப் புத்தகத்தில் இருந்த ஒரு சித்திரத்தைத் தாயிடம் காண்பித்தான். பூசனிக்காய் போன்ற உடலில் மாங்காயைப் போன்ற தலையும் கொட்டையாக விழிகளுமாக வரையப்பட்டிருந்தது கீழே அந்தச் சித்திரத்திற்கு விளக்கமும் தரப்பட்டிருந்தது . "குரங்கு மூஞ்சிபாலு! உன்னோடே பேச மாட்டேன்!" என்று எழுதியிருந்தது. எழுதியவர் தம் பெயரையும் போட்டிருந்தார். இந்தப் பிரபல ஓவியர் வேறு யாருமில்லை சுமதி தான்.
பவானி இதைப்பார்த்ததும் 'பக்' கென்று சிரித்து விட்டாள். அம்மா சிரிப்பதைப் பார்த்ததும் பாலுவுக்கு அழுகை அதிகமாக வந்தது.
”பாலு, இதெல்லாம் விளையாட்டுக்குப் போட்டிருக்கிற படம் அப்பா. உன் முகம் குரங்கு மாதிரி இல்லை யென்பது உனக்குத் தெரியாதா? சே! சே! சுமதி உன்னை விடசின்னவள். அவள் பேரில் கோபித்துக் கொண்டு அழலாமா? வா, டிபன் சாப்பிட்டுவிட்டு விளையாடப் போகலாம்..." என்று கூறி அவனைத் தேற்றினாள். ஆனால் பாலுவின் உள்ளம் பொருமிக் கொண்டே இருந்தது. "ஆகட்டும், அந்த சுமதியை விட்டேனாபார்!" என்று கருவிக்கொண்டே யிருந்தான்.
சுமதி அன்று பள்ளிக்கூடத்திலிருந்து நேரம் கழித்து வந்தாள். வந்தவள் உற்சாகம் பொங்கப் பாலுவை அழைத்தாள்.
சுமதி அவன் அந்தப்புறம் திரும்பினால் அப்படிப் போய் நின்றாள். இந்தப் பக்கம் பார்த்தால் எதிரில் வந்து நின்றாள்.
"சீ! போ. நான் தான் குரங்கு மூஞ்சியாச்சே. என்னோட பேச மாட்டேன் என்று எழுதினாயே. ஏன் பேச வந்தாய்? வெட்கமில்லை, மானமில்லை, வெள்ளைக் கத்தரிக்காய்' என்று கூச்சல் போட்டான் பாலு.
”பாலு" என்று கண்ணீர் பொங்க அழைத்தாள் சுமதி. ”டேய்! டேய்! நான் தெரியாமல் எழுதினேன். என்னை மன்னித்துக் கொள்ளடா" என்றாள் கண்ணீருக்கடையில். ஆசையுடன் அவன் கரங்களைப் பற்றிக் காண்டு அவள் கெஞ்சும் காட்சியைப் பவானி பார்த்து உவகை யெய்தினாள். அவள் மனத்திலே பற்பல கனவுகள் தோன்றின.
-----------
2. 6. பழிக்குப் பழி
சுமதியை விட பாலு மூன்று வயசு மூத்தவன் . பெண் குழந்தையாகிய சுமதியின் உள்ளத்தில் நிறைந்திருந்த கருணையும், மென்மையும் அவனிடத்தில் அவ்வளவாக இல்லை. இந்தப் பெண் இத்தனூண்டு இருந்து கொண்டு என் நோட்டிலே ’குரங்கு மூஞ்சி' என்று எழுதிப் படம் வேறு போட்டாளே! இவளை எப்படியாவது பழிவாங்கியே தீரவேண்டும்' என்றெல்லாம் கழுவிக் கொண்டேயிருந்தான். சுமதியும் ஜெயஸ்ரீயும் ஒரே வகுப்பில் இருக்கிறவர்கள், ஜெயரீயின் நோட்டுப் புத்தகங்களை இவள் வாங்கி வருவாள். ஏதாவது ’நோட்ஸ்' எழுதிக் கொண்டு திருப்பித் தந்து விடுவாள். பாலு சமயம் பார்த்துக் கொண்டிருந்தான் பழிவாங்க.
அடுத்த நாள் பள்ளிக்கூடம் விட்டதும் சுமதியுடன் ஜெயஸ்ரீ இவர்கள் வீட்டுக்கு வந்தாள். இருவரும் வேடிக்கையாகச் சிரித்துப் பேசிக் கொண்டே அத்தை பவானி கொடுத்த சிற்றுண்டியைச் சாப்பிட்டார்கள்.
பவானி பெண்கள் இருவருக்கும் தலைவாரிப் பின்னிப் பூச்சூட்டினாள். குதூகலத்துடன் சிரித்துக் கொண்டே..... அவர்கள் வெளியே போனார்கள்,
பாலு அவர்கள் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மெள்ளப் பதுங்கிப் பதுங்கி வெளியே ஹாலுக்கு வந்தான். மேஜை மீது கிடந்த சுமதியின் பள்ளிப் பையைத் திறந்து ஜெயஸ்ரீயின் நோட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்தான். அழகாக முத்துக்கள் கோத்தது போல் எழுதியிருந்த அவள் பாடங்களில் நான்கைந்து தாள்களைக் கிழித்துப் போட்டான்.
" உம்” என்று ஒரு முறை தொண்டையைக் கனைத்தான். போர்க் களத்திலே பழிக்குப் பழி வாங்கிய வெற்றி வீரபாது சிரிப்பு ஒன்று அவன் தொண்டைக்குள் ளிருந்து வெளிப்பட்டது. பிறகு சுமதியின் நோட்டுப் புத்தகம் ஒன்றில் 'சுமதீ! ’ஸயன்ஸ்' நோட்ஸ் எப்படி எழுதிக் கொள்வாய் பார்க்கலாம்?--பாலு" என்று எழுதி வைத்தான்.
அன்றிரவு அவன் சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரமே தூங்கி விட்டான்.
அடுத்த நாள் காலை பாலுவும் சுமதியும் ஒன்றாகவே காப்பி சாப்பிட்டார்கள். சுமதி எவ்வளவோ பேச முயன்றும் பாலு விறைப்பாகவே நடந்து கொண்டான். இருவரும் கூடத்தில் இருந்த மேஜையருகில் உட்கார்ந்து வீட்டுப் பாடங்களை எழுத ஆரம்பித்தார்கள். ஜெயஸ்ரீயின் விஞ்ஞான நோட்டுப் புத்தகம் ஏ ஏடாகக் கிழிந்து கிடந்தது. அவசர அவசரமாக எல்லாப் புத்தகங்களையும் பார்வையிட்டாள். பாலு எழுதிவைத்திருந்த குறிப்பும் அவள் கண்ணில் பட்டது. சுமதிக்கு ஒரே சமயத்தில் கோபமும் பக்கமும் போட்டி போட்டுக் கொண்டு கிளம்பின. அழுதவாறு, கிழிந்த நோட்டுப் புத்தகத்துடன் அவள் மாடிக்குச் சென்றாள்.
இந்தச் சமயம் பார்த்து அத்தையிடம் போகாமல் அம்மாவிடம் போகிறது. மாமி கோமதி என்ன சொல்லுவாளோ என்று பயந்தான் பாலு. பசுமலையில் பவானியிடம் விசிறிக் காப்பால் பட்ட அடிகள் அவனுக்கு நினைவு வந்தது. யார் கண்ணிலும் படாமல் பள்ளிக் கூடம் போய் விட வேண்டும் என்று அவன் முயன்ற போது கோதி மாடிப் படிகளில் அவசரமாக இறங்கி வந்தாள். அவன் கிழித்துப் போட்ட நோட்டுப் புத்தகத் காதர், கையில் பிடித்துக் கொண்டே, "ஏண்டா பாலு இ து உன் வேலையா?' என்று இரைந்தாள்.
வியாதிக்காரியான தன் மாமிக்குக் குரல் இவ்வளவு கபளீரென்று இருந்து பாலு பார்த்ததில்லை. அவள் அவ்வளவு அவசரமாக மாடிப் படிகளில் இறங்கி வந்த தையும் அவன் கண்டதில்லை; ஆகவே வியப்புடனும் பயத்துடனும், “ஆமாம் மாமி! தெரியாமல் கிழித்து விட்டேன். இனிமேல் செய்ய மாட்டேன். அவள் மாதிரம் என்னைக் குரங்கு மூஞ்சி என்று படம் போடலாமா?" என்று கேட்டான்.
”அவள் உன் புத்தகத்தில் தானே போட்டாள்? உன்னைப் போல் ஊரார் புத்தகத்தைக் கிழித்துப் போட வில்லையே. சே! சே! பதிமூன்று வயசுப் பையனுக்கு வகையாக இருக்கத் தெரியவில்லையே" என்று இரைந்தாள் கோமதி.
அம்மா இப்படி இரைந்து பாலுவைக் கோபித்துக் கொள்வாள் என்பது சுமதிக்குத் தெரியாது. தெரிந்திருந்தாள் அவனைப் பற்றி அம்மாவிடம் புகார் செய்திருக்க மாட்டாள்.
உள்ளே இருந்த பவானியைப் பார்த்ததும் கோமதிக்கு கோபம் அதிகமாக வந்தது.
”இதோ பார் பவானி! உன் பிள்ளை. டாக்டர் ரீதரனின் பெண் ஜெயஸ்ரீயின் நோட்டுப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டிருக்கிறான். அவர்கள் வீட்டிலிருந்து யாராவது வந்து கேட்டால் நீ என்ன பதில் சொல்லு வாயோ எனக்குத் தெரியாது அம்மா' என்று கூறியவாறு அந்த நோட்டுப் புத்தகத்தை வீசிக் கூடத்தில் எறிந்து விட்டுப் போனாள்.
கீழே கிடந்த நோட்டுப் புத்தகத்தையும், பாலுவையும் மாறி மாறிப் பார்த்தாள் பவானி. அவனுடன் அவளுக்குப் பேசவே பிடிக்கவில்லை. கண்ணியமும் கௌரவமும் வாய்ந்த டாக்டர் வீட்டாருடன் இவனால் விரோதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினாள்.
நெஞ்சிலே நிறைந்திருந்த கவலையும் பயமும் அவளுக்கு ஒரு வித அசட்டுத் தைரியத்தை அளித்தன. கிழிந்த அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு டாக்டர்
ஸ்ரீதரன் வீட்டை நோக்கி நடந்தாள்.
அன்று அதிகாலையிலேயே ஸ்ரீதரன் வெளியே போய் விட்டார். ராதாவும் அன்று மாலை நடக்கவிருந்த டிராமாவுக்கா ஏற்பாடுகள் செய்வதற்காக வெளியே சென்றிருந்தாள்,
வீட்டுக் கூடத்தில் சுவாமிநாதன் மட்டும் உட்கார்ந்திருந்தார். ஜெயஸ்ரீ பள்ளிக்கூடம் போவதற்காகக் கிளம்பி வந்தவள், பவானியைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். பிறகு, "வீட்டிலே யாருமே இல்லையே, அத்தை ராதா கூட வெளியே போயிருக்கிறாளே" என்று தெரிவித்தான்.
பவானி ஆசையுடன் அந்தக் குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டாள். வருத்தம் நிறைந்த குரலில் ”ஜெயஸ்ரீ! பாலு ஒரு தவறு செய்து விட்டான். சுமதியோடு சண்டை பிடித்துக் கொண்டு உன் நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து வட்ட்டானம்மா...." என்றாள்.
ஜெயஸ்ரீக்கு வருத்தமாகத்தான் இருந்தது . இருந்தாலும் அந்தப் பெண் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ”பரவாயில்லை. அதனால் என்ன? வேறு யாரிடமாவது வாங்கி எழுதிக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு அவசரமாகப் போய்விட்டாள்.
அப்போது சுவாமிநாதன் வெளியே வந்தார். யாரை பார்க்க வேண்டும்? டாக்டர் வெளியே போயிருக்கிறார். ராதாவும் வீட்டில் இல்லை" என்று கூறியபடி பவானியைக் கவனித்தார் அவர்.
பவானி முதலில் சிறிது தயங்கினாள். அப்புறம் ஜெயஸ்ரீயைப் பார்க்க வந்தேன்" என்றாள்.
”நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள் அம்மா?" என்று சுவாமிநாதன் விசாரிக்கவும் பவானி, விவரங்களைக் கூறினாள்.
சுவாமிநாதன் சிரித்தார். "குழந்தைகள் அப்படித் தான் ஒன்றோடொன்று சண்டை பிடித்துக் கொள்ளும். விரோதத்தை மனசிலே வைத்துக் கொள்ள மட்டும் அவர்களுக்குத் தெரியாது" என்று கூறி விட்டு, 'நாகராஜனுக்கு ஒரு தங்கை இருப்பதாகவே எனக்குத் தெரியாது..." என்று சொல்லிப் பேச்சை முடிக்காமல் நிறுத்தினார் அவர்.
அந்த இளம் பெண் ஒரு விதவை என்பதை அவர் தெரிந்து கொண்டபோது, அவருடைய உள்ளம் வாடி வருந்தியது.
---------------
2. 7. சென்னையில் மூர்த்தி
அன்று மாலையில் மியூஸியம் தியேட்டரில் கூட்டம் நெரிந்தது. சென்னையில் இருக்கும் பிரபல பெண்கள் கல்லூரி மாணவிகளால் நடத்தப்படும் பக்தை மீராவின் நாடகம் அங்கு நடத்த ஏற்பாடு ஆகியிருந்தது. வசூலாகும் பணத்தை காசநோய் நிவாரணத்துக்கு அளிப்பதாக அவர்கள் அறிவித்திருந்தபடியால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. முதல் வகுப்பிலிருந்து கடைசி வகுப்புவரையில் இடமில்லாமல் ரசிகர்கள் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
இரண்டாவது வகுப்பில் நாகராஜனும் கோமதியும் உட்கார்ந்திருந்தார்கள். நாகராஜன் சற்றைக்கொரு தரம் தன் கைக்கெடியாரத்தைப் பார்ப்பதும், பிறகு மனைவியின் பக்கம் திரும்பி ஏதோ முணுமுணுப்பதுமாக இருந்தான். கோமதி முகத்தில் கோபம் பொங்க உட்கார்ந்திருந்தாள்.
வீட்டை விட்டு அவர்கள் புறப்படும் போது ஒரு சின்னஞ்சிறு தகராறு நடந்தது. கணவனுடன் டிராமாவுக்குச் செல்ல வேண்டும் என்று கோமதிக்கு ஆசை அவனும் அவமாகச் சேர்ந்து எங்குமே வெளியே போவதேயில்லை. நாகராஜனுக்குத் தன் 'பிஸினஸ்* ஒன்றேதான் லட்சியம். இந்த மாசத்தில் இருபதினாயிரத்துக்கு பிஸினஸ் போயிருக்கிறது. ”நான் கவனிக்கா விட்டால் அதில் கால் பங்குக்கூட நடந்திருக்காது" என்று மனைவியிடம் பெருமைப்பட்டுக் கொள்வான்.
பணம் ஏராளமாக வருகிறது. வீட்டில் கார் இருக்கிறது. வேலையாட்கள் இருக்கிறார்கள். இதனால் எல்லாம் கோபதிக்கு மனத்தில் திருப்தி ஏற்படவில்லை. வாழ்க்கையில் திருப்தியடையப் பணம் மட்டும் இருந்து விட்டால் போதுமா? அன்பும் ஆரோக்கியமும் சீரிய பண்பும் சேர்ந்தால்தானே அந்தப் பணத்தின் மதிப்பும் உயர்ந்து பிரகாசிக்கும்? மாசத்தில் இருபது நாட்கள் கணவனும் மனைவியும் சரியாகப் பேசக்கூட அவகாச மில்லாமல் நாகராஜன் வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பான். மிகுதி நாட்கள் வீட்டில் இருந்தாலும் மனைவி மகளுடன் பேசுவதற்கு அவனுக்கு அவகாசம் இருக்காது. மாதாந்தரச் செலவுகள், புடைவைக் கடை பில்கள், டாக்டர் பில்கள். அவன் மேஜைமீது வைக்கப் பட்டிருக்கும். அவற்றுக்கு 'செக்' கிழித்துக் கையெழுத்துப் போட்டு குமாஸ்தா மூலமாக அனுப்பி விடுவான் .
மனைவி எழிலரசியாக அலங்காரம் பண்ணிக் கொண்டு நின்றாலும் கவனிக்க அவனுக்கு அவகாசம் இருக்காது. மகள் பள்ளிக்கூடத்தில் பரிசுகள் வாங்கிக் கெட்டிக்காரியாக விளங்கினாலும் பெருமைப்பட அவன் கொடுத்து வைத்தவனல்ல. இக்காரணங்களே கோமதியை ஒரு நிரந்தர நோயாளி ஆக்கிவிட்டன. வெளியார் அந்தத் தம்பதியைப் பற்றிப் பெருமையாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு தடவை பெங்களூர் போய்விட்டு வந்த நாகராஜன் புடவை ஒன்று வாங்கி வந்தான். உடல் தெரியும்படி அவ்வளவு மெல்லியதாக இருந்தது அப்புடவை. உடலெங்கும் ஜரிகைப் பூக்கள் வைத்து தைக்கப்பட்டிருந்தது. ”இந்தப் புடவையை உடுத்திக் கொண்டு என்னோடு என் நண்பர் வீட்டுக் கல்யாணத்துக்கு வா" என்று அழைத்தான் நாகராஜன்.
புடவையைப் பார்த்தவுடன் கோமதியின் மனத்தில் ஓர் அருவருப்பு ஏற்பட்டது. அவள் அதுவரையில் அம் மாதிரி உடுத்திக் கொண்டதில்லை. கணவன் சொல்கிறாரே என்று மனைவி எதை வேண்டுமானாலும் செய்து விட முடியுமா? நன்மை தீமையை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது தான் சிறந்தது.
கோமதி அதை உடுத்திக் கொண்டு வர மறுத்தாள். அத்தி பூத்தாற் போல் தன்னன உடன் வரும்படி அழைக்கும் கணவனின் அன்பை உதறுகிறோமே என்று கோமதி மனம் வருந்தினாள். இருந்தாலும் சுய கௌரவத்தை இழக்க, அவள் விரும்பவில்லை . அன்று அவனுடன் அவள் கல்யாணத்துக்குப் போகவில்லை.
நாகராஜன் மனைவியைப் பற்றி வேறு விதமாக நினைத்துக் கொண்டான். அவள் ஒரு ஜடம் என்பது அவன் அபிப்பிராயம். அதன் பிற, அவளை அவன் வெளியே அழைத்துச் செல்லவேயில்லை.
அன்று பகல் சாப்பாட்டிற்கு அப்புறம் கோமதி டிராமா டிக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு நாகராஜனின் அறைக்குள் துழைந்தாள். ஈமலும் மின்சார விசிறியின் கீழ் உட்கார்ந்திருக்கும் அவர் அருகில் தயங்கியபடி நின்றாள் , பிறகு தைரியத்தை வரவழித்துக் கொண்டு ”இன்றைக்கு டிராமாவுக்குப் போகலாமா வருகிறீர்களா?" என்று கேட்டாள்.
நாகராஜன் சிறிது நேரம் 'பைல்'களைப் புரட்டிக் கொண்டிருந்தான். பிறகு கோமதியை நிமிர்ந்து பார்த்து "என்ன கேட்டாய்?" என்று விசாரித்தான்.
கோமதிக்கு ஆத்திரம் வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல், "டிராமாவுக்குப் போகலாமா என்றேன்?" என்றாள்.
"ஓ! பேஷாய்ப் போயேன். நான் வெளியே போக ’டாக்ஸி' வைத்துக் கொள்கிறேன்."
”இல்லை ........ நீங்களும் வாருங்களேன் என்னோடு!" என்றாள் கோமதி முகத்தில் வெட்கம் படர.
”பார்த்தாயா? என்னைப் போய்க் கூப்பிடுகிறாயே எனக்கு ’பிஸினஸ்' விஷயமாய் ஒருத்தரை ஹோட்டல் ’பிரகாஷில்' இன்று இரவு எட்டு மணிக்குச் சந்தித்தாக வேண்டும், முன்னாடியே போய்ப் பார்த்தாலும் தேவலை."
கோமதிக்கு முன்பு அடங்கிப் போன ஆத்திரம் மீண்டும் கிளம்பியது .
“உங்களுக்கு என்றைக்கும் தான் 'பிஸினஸ்" இருக்கிறது! அப்படி என்ன முழுகிப் போகிறதோ தெரியவில்லை. சம்பாதித்த மட்டும் போதுமே" என்று கூறி விட்டு அருகில் கிடந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
"நோ, நோ, கோமதி! உனக்கு வியாபார விஷயம் எல்லாம் தெரியாது, ஒரு நிமிஷம் அருந்திருந்தாலும் போச்சு!"
“போகட்டும் போங்கள்! நான் இந்தத் தடவை சாகப் பிழைக்க ஆஸ்பத்திரியில் கிடந்தேன். பிழைத்து வீட்டுக்கு வந்த நா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டோ கூட எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை எனக்கு. உடம்பு தேறட்டும் என்று இருக்கிறேன். நீங்கள் வந்து தான் ஆக வேண்டும்......"
என்னதான் பணத்துக்கு அடிமையாக இருந் தாலும் அவனால் மனைவியின் இந்த வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை.
அரை மனத்துடன் நாடகத்துக்கப் புறப்பட்டான் நாகராஜன். சுமதி முன்னதாகவே ஜெயஸ்ரீயுடன் போய் விட்டாள். அவள் பாலகிருஷ்ணனாக டிராமாவில் நடிக்க வேண்டும்.
”ஒரு டிக்கெட் வீணாகப் போகிறதே. பவானி நீ வருகிறாயா அம்மா!" என்று கேட்டான் நாகராஜன்.
”நாடகத்துக்கா? வேண்டாம் அண்ணா நீயும் மன்னி யும்போய் வாருங்கள். கோபாலன் எனக்குத் துணை இருப்பதாகச் சொல்லுகிறான். அவன் மனைவியும் இங்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாள்" என்றாள்.
”உம்...சரி...பாலு எங்கே? அவனாவது வரட்டும்!" என்றான் நாகராஜன்.
”பாலுவா?" என்றாள் கோமதி கோபத்துடன். அவள் முகம் கோபத்தால் சிவந்தது.
"அவன் ஒருத்தர் எதிரிலும் வரமாட்டான். அவள் காலையில் பண்ணின விஷமத்துக்கு டிராமா ஒன்றுதான் அவனுக்குக் குறைச்சலாக இருக்கிறது!"
நாகராஜன் லினன் ஸ்லாக் ஷர்ட்டை உதறிப் போட்டுக் கொண்டு . ’ சரி நீயாவது சீக்கிரம் கிளம்பு' என்றான் அலுப்புடன். இருவரும் காரில் ஏறிக் கொண்டு நாடகம் பார்க்கப் புறப்பட்டார்கள்.
மாடி வராந்தாவில் நின்று தன்னை நாடகத்துக்கு அழைத்துப் போகாமல் வெளியே செல்லும் தன் மாமா மாமியைக் கவனித்தான் பாலு அந்தப் பிஞ்சு மனத்திலே ஏமாற்றம், ஏக்கம், துக்கம் முதலியவை நிறைந்திருந்தன. கண்களிலிருந்து வழியும் கண்ணீருடன் தொலைவில் செல்லும் காரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் பாலு. நோட்டுப் புத்தகத்தைக் கிழித்ததை ஜெயஸ்ரீ பொருட் படுத்தவில்லை. 'பாலு! நீ டிராமாவுக்கு வருவாயில்லையா?' என்று அவனைப் பார்த்துப் பள்ளிக்குச் செல்லும் பொழுது கேட்டாள். ஆனால் பெரியவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள். ஒரு குழந்தை செய்த அற்பத் தவறை மகத்தானதாக நினைத்துப் பெரிதாக்க அதற்கு தண்டனையும் அளித்து விட்டார்கள்.
பவானியின் மனமும் வருந்தியது. 'தனக்கெதற்கு நாடகமும் இன்னொன்றும்? வாழ்க்கையிலே நாடகம் ஆரம்பித்து, நடித்து முடித்து வெளியேறிய நடிகையாகி விட்டோமே நாம்! நம்மைக் கூப்பிட்டார்களே! ஒன்றும் தெரியாத சிறு பையன். அவளை மன்னித்து அழைத்துப் போக அவர்களுக்கு மனமில்லையே' என்று வருந்தினாள் அவள்.
”பாலு! நீ சமர்த்தாகப் படித்துப் பெரியவனாகி சுதந்திரமாக இருக்கும் போது இதைப்போல எவ்வளவோ நாடகங்கள் பார்க்கலாம் அப்பா. வா, கை கால்களை அலம்பிக்கொண்டு கீதை சுலோகங்களைச் சொல், கேட்கிறேன்" என்று மகனைக் கையைப்பற்றி அழைத்துக்கொண்டு கீழே வந்தாள் பவானி.
அங்கே மியூஸியம் தியேட்டரில் நாகராஜனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கோமதியைத் தனியாக விட்டு விட்டு நான் போய் அவரைப் பார்த்துவிட்டு நேராக வீட்டுக்குப் போய் விடுவேன். காரை அனுப்புகிறேன், நீ சுமதியை அழைத்துக் கொண்டு வந்து விடு" என்று கூறிவிட்டு, திரை தூக்கிச் சில காட்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது வெளியே எழுந்துபோய் விட்டான்.
மஞ்சத்திலே சாய்ந்து படுத்திருக்கிறாள் பக்த மீரா. மேவாரின் மகாராணி அவள். இட்டதைச் செய்ய ஆயிரம் பேர் காத்துக் கிடந்தார்கள். பெட்டி பெட்டியாக அணிகளும் ஆடைகளும் கேட்பாரற்றுக் கிடந்தன. அவள் எண்ணும் எண்ணமெல்லாம் அந்தக் கண்ணனைப் பற்றித்தான். அவள் பார்க்குமிடங்களில் எல்லாம் அவன் தெரிந்தான். மகாராஜா தம் மனைவியைக் காண அந்தப்புரம் வருகிறார். அழகே உருவான மீரா பதறி எழுந்து பதிக்கு மரியாதை செய்கிறாள் . அவர் மனைவியிடம் இன்பமாகப் பேசுகிறார். ஆனால் அவள் செவிகளிலே கண்ணனின் வேய்ங்குழல் இசை கேட்கிறது. மஞ்சத்திலிருந்து எழுந்து அரண்மனைப் பூங்காவினுள் பாய்ந்து ஓடுகிறாள். அங்கே நீலவானில் மிதந்து செல்லும் வெண்ணிலவில் கண்ணன் தெரிகிறான். மலர் செறிந்த மரங்களின் ரகத வண்ணத்தில் தோன்று கிறான் கண்ணன். தடாகத்திலே கண்ணன். மீராவின் இதயம் முழுவதும் அவன் உருவமே வியாபித்து திருக் கிறது. மீரா மயங்கிக் கீழே விழுகிறாள்.
பக்த மீராவாக வந்த ராதையின் எழிலும் நடிப்பும் சபையோரைப் பரவசப்படுத்தி விட்டன. பலமான கர கோஷம் எழுந்தது சபையில்.
நாடகம் முடிந்தது. அநேகமாக எல்லோரும் வெளியே போய்விட்டார்கள். நாடகத்தில் நடித்த பெண்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மட்டும் இருந்தார்கள்.
வேஷத்தைக் கலைத்துவிட்டு ராதா வெளியே வந்தாள். சுவாமிநாதன் நின்று கொண்டிருந்தார். ”போகலாமா அம்மா?" என்று கேட்டார். எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தாள் ராதா. அங்கே ஒரு சிறு கூட்டம் நின்றிருந்தது. ஐந்தாறு வாலிபர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள்.
'வொண்டர் புல் ஆச்ஷன்!" என்றான் ஒருவன் .
"மார்வெலஸ்!" என்றான் இன்னொருவன்.
"ரொம்பவும் பிரமாதமாக இருந்தது உங்கள் நடிப்பு" என்று, தான் தமிழன் என்பதை மறந்து விடாமல் தமிழிலேயே பேசித் தன் உற்சாகத்தைத் தெரிவித்தான் மற்றொருவன்.
கடைசியில் இருந்த வாலிபன் முன்னே வந்தான். “என்னைத் தெரிகிறதா? நேற்று கோடம்பாக்கம் ஹாஸ்டலில் டிக்கட் விற்க வந்தீர்களே. உங்கள் நடிப்பைப் பார்த்த மூன்று மணி நேரமும் நான் மீராவின் காலத்தில் வசித்தவன் மாதிரி இருந்தேன். கங்க்ராஜு லேஷன்ஸ்" என்றான் அவன். அவன் வேறுயாருமில்லை மூர்த்தி தான்!
சுவாமிநாதனுக்கு இவர்கள் உற்சாகம் ஒன்றும் வேண்டிருக்கவில்லை. வா அம்மா. மணி பதினொன்று ஆகப்போகிறது" என்று சொல்லிக்கொண்டே அவளை அழைத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தார் அவர்.
--------------
2. 8. சந்திப்பு
மூர்த்தி சென்னைக்கு வந்து விட்டான் என்பது நாம் ஆச்சரியமோ பரபரப்போ அடைய வேண்டி தில்லை. பசுமலையில் சுமார் நான்கைந்து மாதங்கள் அவன் தங்கியிருந்த-தற்குக் காரணமே பவானி தான். அந்த இளம் பெண்ணின் மனத்தைக் கெடுத்து தன் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவே மூர்த்தி அங்கு தங்கியிருந்தான். வயது சென்ற மாமாவுக்காகவோ மாமிக்காகவோ அங்கு இல்லை.
பசுமலை ரயில் நிலையத்தை விட்டு பவானி புறப் பட்டு வந்த பாசஞ்சர் வண்டி கிளம்பிப்போன பிறகு சோர்ந்த மனத்துடன் மூர்த்தி வீட்டுக்கு வந்தான். பூட்டப்பட்டுக் கிடந்த பவானியின் வீட்டு வாசலை ஏக்கத்துடன் பார்த்தான். அவள் தினமும் மாலை வேளைகளில் மல்லிகைப் பூப்பறிக்கும் மல்லிகைப் பந்தலின் கீழ் பெருமூச்சுடன் சிறிது நேரம் நின்றான். ஆனால் உறுதியும், வைராக்கியமும், நெஞ்சழுத்தமும் நிறைந்த அவள் தோற்றத்தைப் பற்றி ஒரு கணம் சிந்தித்தான் மூர்த்தி. கருணையே வடிவமாக விளங்கும் அந்தக் கண்கள் நடராஜப் பெருமானின் படத்தை நோக்குங்கால் கசிந்து கண் மல்கித் தம் அன்பை வெளியிட்டதைக் கவனித்திருக்கிறான். அதே கண்கள் நெருப்புத் துண்டங்களாக ஜ்வலித்ததையும் பார்த்தான்.
திடசித்தம் நிறைந்த அந்தப்பெண் எங்கே இருந்தாலும் ஏமாற மாட்டாள் என்பது அவனுக்கு பொங்கிவிட்டது. ஆகவே இனி அவளைப் பற்றி சிந்திப்பதில் பலனில்லை என்பது அவனுக்குத் தெள்ளெனத் தெரிந்து போயிற்று.
பவானி ஊருக்குச் சென்று இரண்டு தினங்கள் கழித்து மூர்த்தி தனக்குச் சென்னையில் முக்கியமான அலுவகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டான். சென்னையில் அவன் தங்குவதற்கு உறவினர் யாரும் கிடையாது. கல்கத்தா ஆபீசில் அவனுடன் வேலை பார்த்து வந்த நண்பர் ஒருவரின் சகோதரன் கோடம் பாக்கம் ஹாஸ்டல் ஒன்றில் இருந்து கொண்டு படித்து வந்தான்.
எழும்பூரில் இறங்கியதும், அவன் நினைவு வரவே மூர்த்தி நேராக கோடம்பாக்கம் சென்று ஹாஸ்டலில் அந்தப் பிள்ளையைப் பற்றி விசாரித்தான். தகவலும் கிடைத்தது. தன் பெட்டி படுக்கையை அங்கே வைத்து விட்டு, ஸ்நானம் செய்து காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டான் மூர்த்தி. பிறகு கம்பெனி வேலையாக சைனா பஜாருக்குச் சென்று விட்டு இரவு மவுண்ட்ரோட் ஹோட்டல் ஒன்றில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு வந்தான்.
அடுத்த நாள் அவனும், அவன் நண்பனும் வெளியில் எங்கும் போகவில்லை. அன்று சனிக்கிழமை. விடுமுறை நாள். நண்பர்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வாயில் இருந்த சிகரெட்டைப் புகைத்தபடி மூர்த்தி, தன்னுடைய அகில இந்திய விஜயத்தைப் பற்றி அளந்து கொண்டிருந்தன்! பார்த்த இடங்கள் பாதி இருந்தால், பார்க்காத இடங்களையும் அவன் வர்ணித்தபோது தேர்ந்த ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய கற்பா சக்தி இப்படி ஒருவனிடம் வீணாக விரயமாகிறதே என்று தான் எண்ணத் தோன்றும். ஹாஸ்டல் அறைகளில் திடீரென்று நிசப்தம் நிலவியது,
நாலைந்து பெண்கள், அழகாக உடுத்திக் கொண்டு கல கல வென்று பேசியபடி வந்தார்கள். ஒவ்வொரு அறையாக நுழைந்து அங்கிருந்த மாணவர்களிடம் பேசி -டி.ராமாவுக்கு டிக்கெட் வாங்கிக் கொள்ளும்படிக் கேட்டார்கள். கடைசியாக மூர்த்தி இருந்த அறைக்குள் நுழைந்தார்கள் அவர்கள், அவர்களில் ஒரு பெண் படிப்படியாக இருக்கும் கூந்தலை இரட்டைப் பின்னல்களாகப் பின்னி, பாதியில் வெண்ணிற ரிப்பனால் கட்டியிருந்தாள். காதுகளில் ஜிலு ஜிலு வென்று பிரகாசிக்கும் வைரத் தோடும், வைர ஜிமிக்கிகளும் அணிந்திருந்தாள். மூக்கில் ஒன்றும் ஆபரணம் இல்லை. நெற்றியில் வட்ட வடிவ மாகப் பெரிய அளவில் பொட்டு வைத்து. அதன் கீழே சிறிய பொட்டொன்று வைத்திருந்தாள். ரோஜா வண்ணத்தில் ’ஷிபான்' புடவையும், முழங்கை வரையில் கை வைக்கப்பட்டிருந்த சோளியும் அணிந்திருந்தாள் அவள். துரு துரு வென்று அவள் முகம் பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தது. கண்களைச் சுழற்றி அவள் புன்னகை புரிந்தவாறு மூர்த்தியையும், அவன் நண்பனையும் கைகுவித்து வணங்கினாள்.
”காசநோய் நிவாரணத்துக்காக டிராமா போகிறோம். இவர்கள் எல்லாம் பி. ஏ. படிக்கும் மாணவிகள் இரண்டு டிக்கெட்டுக்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்” என்றாள் அவள்.
அவர்கள் பதிலையும் எதிர்பாராமல் இரண்டு ஐந்து ரூபாய் டிக்கெட்டுகளைக் கிழித்து மேஜை மீது வைத்தாள் அந்தப் பெண். மூர்த்தி பர்ஸைத் திறந்து நண்பனுக்கும் சேர்த்து பத்து ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினான்.
”அடேடே! எனக்கெதற்கப்பா வாங்கினாய்? என்றான் நண்பன்.
”பரவாயில்லை, போய் விட்டு வரலாம்" என்று மூர்த்தி சிரித்துக் கொண்டே கூறினான்.
பெண்கள் விடை பெற்றுக் கொண்டு அந்த அறை மயக் கடக்கும் போது ஒருத்தி சொன்னாள். ”அடி ராதா! நீ வந்திருக்காவிட்டால் எங்களால் பத்து டிக்கெட்டுகள் கூடவிற்றிருக்க முடியாது. கெட்டிக் காரியடி நீ!"
ராதா கல கலவென்று சிரித்தாள். ”பூ! இதென்ன பிரமாதம்? நீ தான் கட்டுப் பெட்டி மாதிரி தலையை குனிந்து கொண்டு நின்றாய், பேசுகிற விதத்தில் பேசினால் ஒருவர் இரண்டு டிக்கெட்டுகள் என்ன நாலைந்து டிக்கெட்டுகள் கூட வாங்கிக் கொள்வார்"
என்றாள்.
”இருந்தாலும். ராதாவின் கண்களுக்கு அடிமை ஆகாமல் ஒருத்தர் இருக்க முடியுமா?" என்று சொல்லிக் கொண்டே மற்றொரு பெண் செல்லமாக ராதாவின் கன்னத்தில் தட்டினாள்.
”சீ! போடி?" என்று சொல்லிக் கொண்டே ராதா மறுபடியும் கலகலவென்று சிரித்தாள். மூர்த்தி ஜன்னல் ஓரமாக நின்று கீழே தோட்டத்தில் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்லும் அந்தப் பெண்களின் மத்தியில் போய் ராதாவைக் கண் இமைக்காமல் பார்த்தான். அவர்கள் அவன் பார்வையை விட்டு மறைந்ததும் அறைக்குள் திரும்பி, ”கோபி! கட்டாயம் இந்த டிராமாவை 'மிஸ்' பண்ணக்கூடாதுடா!?" என்று சொல்லிக் கொண்டே டிக்கட்டுடன் அவர்கள் கொடுத்த நாடக நோட்டீசை எடுத்துப் பார்த்தான், நடிப்பவர்களின் பெயர்கள் வரிசையாகக் காணப்பட்டன. முதலில் மிஸ் ராதா, பி. ஏ. மீரா' என்று போடப்பட்டிருந்தது.
மனிதன் சிந்திக்கும் சிந்தனைகள், செய்கைகள் யாவுமே புனிதமானவை என்று சொல்ல முடியாது. தன்னால் கூடுமான வரையில் நல்லவைகளையே செய்து நினைத்து வாழ்ந்தானாகில் அவன் வாழ்க்கையில் ஓரளவு உண்மையாக வாழ்ந்தவன் என்று சொல்லலாம். அப்படி இராமல் அவன் எண்ணும் எண்ணமெல்லாம், செய்யும் செய்கைகள் எல்லாம் பிறர் மனத்தை நோகச் செய்வனவாகவும் இழிவானவை-களாகவுமே இருந்தால் 'மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே' என்று வேண்டி அவன் மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியமே இல்லை.
மூர்த்தியின் மனம் சடுதியில் இப்படிப் பல விதங்களாக மாறும் இயல்பை அடைந்து விட்டது. பிறகு தான் அவன் தன் நண்பனுடன் நாடகம் பார்க்க வந்தான். வந்த இடத்தில் ராதாவிடம் தன் சந்தோஷத்தையும் அறிவித்தான். அதற்குப் பதிலாகக் கிடைத்த அவள் புன்சிரிப்பை அவன் விலை மதிக்க முடியாத *கோஹினூர்' வைரத்துக்கு ஒப்பிட்டான். அதைப் பற்றியே அவன் சிந்தித்துக் கொண்டு சென்னையை வலம் வந்து கொண்டிருந்தான்.
------------
2. 9. கோமதியின் குறை
ஹாலில் இருந்த புத்தர் சிலையைத் துடைத்து வைத்து விட்டு, தோட்டத்தில் மலர்ந்திருந்த பெரிய ரோஜா மலரை எடுத்து வந்து சிலையின் பாதங்களில் வைத்தாள் பவானி. கீழே கம்பளத்தில் உட்கார்ந்து பாலுவுடன் ' கேரம்' ஆடிக் கொண்டிருந்த சுமதி "அத்தை! நீ ஏன் அன்றைக்கு டிராமாவுக்கு வரவில்லை. பாதியில் அப்பா, அம்மாவைத் தனியாக விட்டு விட்டு எழுந்து போய்விட்டாராமே . அம்மா சொன்னாள். நீ ஏன் அத்தை எப்பொழுதும் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? சுவாமிக்குப் பூஜை பண்ணுகிறாய். எங்களுக் கெல்லாம் வேலை செய்கிறாய். அம்மா கூடச் சொல்கிறாள். 'பவானி வராவிட்டால் என் உடம்பு தேறி இருக்காது. பாவம்! அவளைப் பார்த்தால் என் மனசு சங்கடப்படுகிறது' என்று. இனிமேல் என்னோடு வெளியே வாயேன் அத்தை. ஜெயஸ்ரீயின் வீட்டுக்குப் போகும் போது வருகிறாயா?" என்று கேட்டாள். பேச்சின் இடையில் அந்தக்குழந்தையின் குரல் கம்மிற்று. பளபளக்கும் அவள் விழிகளில் கண்ணீர் திரண்டு நின்றது.
பவானி வாஞ்சையுடன் சுமதியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். ஆசையுடன் அவள் தலையை வருடினாள். அப்புறம். 'கண்ணே ! பிறருக்கு உபகாரமாக இருக்க வேண்டும் என்பது ஒன்றுதான் என் ஆசை. வேறு ஆசைகளோ விருப்பங்களோ எதுவும் எனக்கில்லை. உனக்குத் தலைவாரிப் பின்னி மலர் சூட்டிப் பொட்டு வைத்தால் என் மனத்திலே ஆனந்தம் பொங்குகிறது. நல்ல உணவாகச் சமைத்து எல்லோருக்கும் பரிமாறினால் அவர்கள் சாப்பிட்டுப் பசி தீர்ந்தவுடன் என் வயிறு திருப்தியால் நிறைந்து விடுகிறது.
”இங்கே பார் சுமதி! இந்த மகானைப் பற்றி நீ உன் சரித்திரப் புத்தகத்தில் படித்திருப்பாய். பிறருடைய துன்பங்களுக்காக இரக்கப்பட்டு அன்பையும். அஹிம்சை யையும் தம் லட்சியமாகக் கொண்டு அரச போகத்தைத் துறந்தவரல்லவா இவர்?" என்று அருகில் மேஜை மீது இருந்த புத்தர் சிலையைக் காட்டிப் பேசினாள் பவானி. சுமதியும் பாலுவும் திறந்த வாய் மூடாமல் பவானி சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். புத்தரையும் காந்தி அடிகளையும் போற்றி வணங்குவதால் தான் அத்தை இவ்வளவு நல்லவளாக இருக்கிறாள் என்று சுமதி நினைத்துக்கொண்டாள்.
"அத்தை! அத்தை!" என்று சொல்லிக் கொண்டே சுமதி அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் இரண்டு முத்தங்கள் கொடுத்தாள்.
சுமதி தன் அம்மாவை முத்தமிடுவதைப் பார்த்து ”ஹே! ஹே!" என்று சிரித்தான் பாலு.
"எதற்கெடுத்தாலும் சிரிப்புத் தாண்டா உனக்கு" என்று பவானி அவனைக் கோபித்துக் கொண்டாள்.
மாடியில் இருந்த கோமதி கீழே இறங்கி வந்தாள். மூன்று நாட்களாக அவளுக்கு மறுபடியும் உடம்பு சரியில்லை. நாடகத்தில் நாகராஜன் பாதியில் அவளை விட்டு விட்டு எழுந்து போனவுடன் மனம் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் கோமதி. நாடகத்தில் பல ரசமான காட்சிகள், நடனங்கள், சம்பாஷணைகள், பாட்டுக்கள் இருந்தும் அவளால் ஒன்றையுமே ரசிக்க முடியவில்லை. 'எதற்காக வந்தோம்' என்று அலுத்துக் கொண்டாள். ஜோடி ஜோடியாக உட்கார்ந்து நாடகம் பார்க்கும் தம்பதிகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள் கோமதி. கடைசிக் காட்சி நடந்து கொண்டிருந்தபோது. அலுப்புடன் வெளியே வந்து பார்த்தாள். நாகராஜனே காருடன் வந்திருந்தான். நாடகம் முடிவதற்கு முன்பே மனைவி வெளியே வந்து விடவே, "என்ன? ஒன்றும் நன்றாக இல்லையா? எனக்கு அப்பொழுதே தெரியும்”, என்று ஆரம்பித்தான் அவன்.
"எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது; எனக்குத் தான் இருக்கப் பிடிக்கவில்லை. பிறந்த இடத்தில் தான் ஒண்டியாகப் பிறந்தேன் என்றால், புகுந்த இடத்திலும் ஒண்டிக் கட்டைதான்!" என்றாள் நிஷ்டூரமாக.
"யார் அப்படிச் சொன்னது?" என்றான் நாகராஜன் காரை 'ஸ்டார்ட்' செய்து கொண்டே. கோமதி பதில் ஒன்றும் கூறாமல் முகத்தை 'உர்' ரென்று வைத்துக் கொண்டிருந்தாள். மனைவியைத் திரும்பிப் பார்த்தான் நாகராஜன்.
"கோமு! ஒரு நெக்லெஸ் விலைக்கு வந்திருக்கிறது. எட்டாரத்க்குள் அடங்குமாம். பழைய வைரமாம். வாங்கிப் போட்டு வைத்தால் மேலே மூன்று நாலு வந்தால் விற்று விடலாம்!"
"அதை வாங்குவானேன், பிறகு விற்பானேன்? வாங்காமலேயே இருந்து விட்டால் அலுப்பே இல்லை."
"அட, போட்டுக் கொள்கிற வேளையில் போட்டுக் கொள்ளேன். மேலே மூவாயிரம் கிடைத்தால் நமக்குத் தானே லாபம்! விற்கிறவருக்கு ரொம்பப் பணமுடையாம்."
கோமதிக்கு இந்த வியாபாரப் பேச்சே பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்த பிறகு, பவானி பரிமாறிய உணவைச் சாப்பிட்டு விட்டு மாடிக்குப் போய் விட்டாள். பளபள வென்று மின்னும் வைர 'நெக்லெஸை' எடுத்துக் கொண்டு நாகராஜன் மாடிக்கு வந்தான். கோமதி அயர்ந்து துங்கிக் கொண்டிருந்தாள்.
அதற்கப்புறம் நாகராஜன் அந்த நகையை வாங்கினானா என்பதை கோமதியும் கேட்கவில்லை. அவனும் ஒன்றும் கூறவில்லை. வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டான்.
மாடியில் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப்போன கோமதி கீழே இறங்கி வந்து டாக்டர் ஸ்ரீதரன் வீட்டுக்கு போன்' செய்து, "ராதா இருக்கிறாளா?" என்று விசாரித்தாள். ”அவள் வெளியே போயிருக்கிறாள். கச்சேரிக்கு" என்று சுவாமிநாதன் தெரிவித்தார். அத்துடன், * நீங்கள் சௌக்கியந்தானே அம்மா?" என்றும் விசாரித்தார் அவர்.
"உம்... சௌக்கியத்துக்கு ஒரு குறைவும் இல்லை " என்று அலுப்புடன் கோமதி சொல்லிக் கொண்டே ’ரிஸீவரை' போனில் வைத்தாள்.
------------
2. 10. கண்டான் ராதாவை .....
அன்றிரவு நாடகம் பார்த்து விட்டு வந்த மூர்த்திக்கு வேறு எதிலும் மனம் செல்லவில்லை. ராதையின் எழில் உருவம் அவன் மனத்தில் நிறைந்திருந்தது. தன்னைக் கோபிகையாக பாவித்துக் கொண்டு மீரா கண்ணனுடன் கனவில் விளையாடிய காட்சி அவன் மனத்தில் பதிந்து போயிற்று. அவளுடைய அழகிய முகத்தில் எத்தனை விதமான பாவங்கள் வெளிப்பட்டன! அவள் கணீர், கணீர் என்று பேசியும் பாடியும் சபையோரிடம் வாங்கிய பாராட்டுக்களை நினைத்து மூர்த்தி மனம் களித்தான். எல்லோரும் தான் சிரிக்கிறார்கள். ஆனால் ராதா சிரித்தால் அதில் ஒரு தனி அழகு இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. இப்படி எதையோ நினைத்துக் கொண்டு அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலவும் மூர்த்தியை அவன் நண்பன் கோபி கவனித்தான்.
"என்னப்பா இது! குட்டி போட்ட பூனை மாதிரி அலைகிறாயே, சரியாகச் சாப்பிடுகிற-தில்லை, தூங்குகிற தில்லை. மூன்று நாட்களாக ஆபீஸ் வேலைக்கு மட்டம் வேறே!" என்று கேலி செய்தான் கோபி.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை அப்பா, அந்தப் பெண் யார்? எங்கிருக்கிறாள் என்பது ஒன்றும் தெரிய வில்லையே?" என்று கூறினான் மூர்த்தி. கோபிக்கும் அந்த விவரங்கள் ஒன்றும் தெரியாது.
"ஓஹோ! அதுதானா விடியம்? என்னவோ என்று பார்த்தேன்" என்று கூறிவிட்டு அவன் காலேஜூக்குப் புறப்பட்டார்.
மூர்த்திக்குத் தனியாக அந்த அறையில் இருப்புக் கொள்ளவில்லை. உடுத்திக் கொண்டு வெளியே புறப் பட்டான். நேராக சைனா பஜாருக்குச் சென்று தன் காரியாலயத்தில் நுழைந்து, டெலிபோன் அறைக்குள் சென்றான். ஜேபியிலிருந்த நாடக நோட்டீசை எடுத்து எந்தக் கல்லூரி மாணவியர் அன்று நாடகம் போட்டார்கள் என்று கவனித்து விட்டு, அந்தக் கல்லூரிக்குப் 'போன்' செய்தாள்.
காலேஜ் பிரின்ஸிபால் பேசினார்.
"நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. அதைப் பாராட்டிச் சொல்லவே தங்களை அழைத்தேன். ஹூம்... நாடகத்தில் மீராவாக நடித்தாளே அந்தப் பெண் யார்? எந்த வகுப்பில் படிக்கிறாள்?" என்று நாசூக்காக விசாரித்தான் மூர்த்தி.
"ஐஸீ. அவரை, மிஸ் ராதாவைத் தானே கேட்கிறீர்கள்? அவள் எங்கள் கல்லூரியின் பழைய மாணவி. சென்ற வருஷம் தான் படித்து பி. ஏ, பாஸ் செய்திருக்கிறாள். சூடிகையான பெண், எஸ்... எஸ்... டாக்டர் ஸ்ரீதரன் இருக்கிறாரே. அவருடைய தங்கை."
மூர்த்திக்கு இதற்குமேல் விவரங்கள் தேவை இல்லை. தேவையாக இருந்தாலும், ஒவ்வொன்றையும் விசாரித்தால் நன்றாக இராதென்று நினைத்துக்கொண்டு "போனை' வைத்து விட்டு வெளியே வந்தான். அவனுக்கு இருந்த உற்சாகத்தில் அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் நுழைந்து 'ஐஸ்க்ரீம்' வரவழைத்துச் சாப்பிட்டான். நேராக டவுனில் இருந்து கோடம்பாக்கம் செல்லும் பஸ்ஸில் புறப்பட்டான்.
வடபழனி செல்லும் பாதையில் பஸ்ஸிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தான் அவன். கொஞ்ச தூரம் சென்றதும், ஒரு சிறிய காம்பவுண்டுக்குள் இருந்த கட்டடத்தின் வாசலில் போர்டு ஒன்று தொங்குவதைக் கவனித்தான். 'டாக்டர் ஸ்ரீதரன் எம். பி. பி. எஸ் . மருத்துவ சாலை' என்று போட்டிருந்தது. பகல் வேளையானதால் கதவு பூட்டப்-பட்டிருந்தது. தாழ்வாரத்தில் இருந்த பெஞ்சியில் காவல்காரன் மட்டம் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். மெதுவாகக் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்று “ஐயா! ஐயா!" என்று அவனை எழுப்பினான் மூர்த்தி.
அவனுக்கு நல்ல தூக்கம். ”பகல் வேளைகளில் டாக்டர் இங்கே வரமாட்டார் ஐயா! வீட்டிலே போய்ப் பாரு" என்று சொல்லிக்கொண்டே திரும்பிப் பார்த்துத் தூங்க ஆரம்பித்தான் அவன்.
"அங்கேதான் போகிறேன். விலாசம் சொல் ஐயா" என்று மறுபடியும் அவனை எழுப்பிக் கேட்டான் மூர்த்தி. காவல்காரனுக்குத் தூக்கம் தெளிந்து விட்டது.
"என்னய்யா சும்மாத் தொந்தரவு பண்றீங்க! ரயில்வே லயன் ஓரமாப் போவுது பாருங்க ரோடு. அந்த ரோடு கடைசியிலே இருக்குதுங்க அவர் பங்களா" என்று கூறிவிட்டு, சட்டைப் பையில் இருந்த பீடித் துண்டைப் பற்ற வைத்துப் புகைவிட ஆரம்பித்தான் அவன்.
அப்பொழுது நடுப்பகல் வேளை. தெருக்கள் எல்லாம் நிசப்தமாக இருந்தன. சில வீடுகளிலிருந்து வானொலியில் மத்தியான இசை கேட்டுக் கொண்டிருந் சூது. பெண்கள் சிலர் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தெருவில் சில பையன்கள் ஐஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
மூர்த்தி தெருவிலே வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தான். ஒரு வீட்டு வாசலில் 'அறை வாடகைக் விடப்படும்' என்ற விளம்பரம் காணப்பட்டது . கதவை தட்டிக் கூப்பிட்டு விசாரித்தான். ஐம்பது வயசு மதிக்கும்படியான ஒரு பெண்மணி கதவைத் திறந்து கொண்ட வெளியே வந்தாள். ”என்ன வேண்டும்?" என விசாரித்தாள்.
மூர்த்தி தனக்கு ஓர் அறை தேவையாக இருப்பதாகக் கூறினான். அறையைத் திறந்து காண்பித்தாள் அந்த அம்மாள். அறை விசாலமாகவும் காற்றோட்டத்துடனும் இருந்தது. மாதம் பதினைந்து ரூபாய் வாடகையென்றும் லைட்டுக்காக இரண்டு ரூபாய் தனியாகக் கொடுத்து விட வேண்டும் என்றும் அறிவித்தாள் அவள். ஒரு மாதத்திய வாடகையை முன் பணமாகக் கொடுத்து விட்டு மூர்த்தி அங்கிருந்து கிளம்பினான்.
நேராக அதே தெரு வழியாகச் சென்று தெருக் கோடியை அடைந்தான் அவன். அங்கே பெரிய பங்களா ஒன்று காணப்பட்டது. வாசலில் டாக்டர் ஸ்ரீதரன் என்று ஒரு புறமும், மறுபக்கத்தில் ஜெயஸ்ரீ என்று வீட்டின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. பங்களாவின் வாசலில் இருந்து உள்ளே கவனித்தான் மூர்த்தி. வீட்டிலே சந்தடி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டிலிருந்து யாராவது வெளியே வருகிறார்களா என்று கவனித்தான் மூர்த்தி. இப்படியும் அப்படியும் ஏதோ ஒரு வீடு தேடுகிற மாதிரி மதில் சுவர் ஓரமாக நடந்தவாறு கவனித்துக் கொண்டிருந்தான். அரைமணி நேரம் ஆகியும் ஒருவரும் வெளியே வரவில்லை . அலுத்துப் போய்ச் சோர்ந்த உள்ளத்துடன் அவன் திரும்புகிற போது, மாடியிலிருந்து ஒரு குரல் தெளிவாகக் கேட்டது.
"ராமையா ! வெட்டி வேர் தட்டிகளுக்குத் தண்ணீர் ஊற்றவில்லையா?" என்று கூறியவாறு ராதா 'பால்கனி' பக்கமாக வந்து தோட்டத்தில் மாமரத்தின் கீழ் சிமிட்டிபெஞ்சியில் படுத்திருந்த தோட்டக்காரனைக் கூப்பிட்டாள். வெள்ளைப் புடவை உடுத்தி, ஸ்நானம் செய்த கூந்தலைப் பின்னல் போடாமல் முதுகில் புரள விட்டுக் கொண்டு அவள் அங்கு நின்ற காட்சி அழகாக இருந்தது.
ராமையா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ராதாவின் குரல் கேட்டு சுவாமிநாதன் வெளியே வந்தார்.
"ராமையா! அம்மா கூப்பிடறாங்க பார். எழுந்திரு' ' என்று அவனை எழுப்பினார்.
”யார் இந்த வழுக்கைத் தலை ஆசாமி?" என்று யோசித்தான் மூர்த்தி. நெற்றியில் பளிச்சிட்ட திரு நீறும் அவருடைய வெள்ளை வேஷ்டியும், மேல் துண்டும் அவ ருக்கு எந்த விதமான உருவமும் கொடுக்கவில்லை. கண்டிப்பாக அவர் டாக்டராக இருக்கமுடியாது என்று தீர்மானித்தான் அவன். ராதாவின் தந்தையாக இருக்கலாம் என்று தோன்றியது. ’யாருமில்லாத ஒரு பங்களாவுக்குள் இந்த மோகினி இருந்தால், அவளை அடைவது எவ்வளவு சுலபம்? இப்படிக் காவல்காரனும், வழுக்கைத் தலையருமாக ஒருவர் மாற்றி ஒருவர் எதற்காக இருக்க வேண்டும்?’ என்று மூர்த்தி நினைத்துக் கொண்டே ராதாவின் வீட்டைக் கண்டு பிடித்த மகிழ்ச்சியுடன் மெதுவாக ஹாஸ்டலை நோக்கி நடந்தான்.
-----------------
2. 11. கண்ணீர் சுரந்தது
அவன் ஹாஸ்டலை அடையும் போது பிற்பகல் சுமார் மூன்று மணி இருக்கலாம். அங்கும் நிசப்தமாகத் தான் இருந்தது. இடைவேளைச் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு மாணவர்கள் இன்னும் யாரும் வரவில்லை. நேராகக் கோபியின் அறைக்குச் சென்று கதவைத் திறந்து உள்ளே சென்றான் மூர்த்தி. ஜன்னல் ஓரமாகச் சாய்வு நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு படுத்தான். அப்படியே தூங்கியும் போனான். அவன் கண் விழித்துப் பார்த்தபோது, மாலை சுமார் ஐந்தரை மணிக்கு மேல் ஆகியிருந்தது. கோபி காலேஜிலிருந்து வந்து உடை மாற்றிக்கொண்டு கையில் ’டென்னிஸ்' மட்டையுடன் வெளியே புறப்படத் தயாராக நின்றான்.
“என்னடா அப்பா பட்டப்பகலிலே இப்படித் தூக்கம்? உன் ஆபீசிலே உனக்குத் தண்டச் சம்பளம் கொடுக்கிறார்களாடா? இந்த மாசத்தில் நாலு நாள் இதோட மட்டம் போட்டிருக்கிறாய்? கொடுத்து வைத்த மகராசன் நீ" என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு கோபி, ”எங்கேயாவது வெளியே போகிறாயா? இல்லை. தூக்கத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப் போகிறாயா?" என்று கேட்டான்.
சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்த மூர்த்தி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டே "கோபி! எனக்கு ஓர் அறை வாடகைக்குக் கிடைத்து விட்டது. ரெயில்வே லயனுக்கு ஓரமாக ஒரு ரோடு போகிறதே, அங்கே நாற்பந்தைந்தாம் எண் உள்ள வீட்டில் மாடியில் இருக்கிறது அறை. தெற்குப் பக்கம் இரண்டு ஜன்னல்கள் இருக்கின்றன. சுகமாகக் காற்று வரும். ஏழு மணிக்கு மேல் அங்கே போய் விடுகிறேன் . உனக்கு ரொம்ப ’தாங்க்ஸ்' அப்பா. பத்து நாட்களாய் என்னை வைத்துக் கொண்டு சமாளித்தாய்!" என்று! கூறினான்.
"அடேடோ அப்படியா? என் பரீட்சை பிழைத்தது போ! நீயானால் அங்கே நாடகத்துக்கு வா, இங்க கச்சேரிக்கு வா என்று என்னையும் இழுத்துக் கொண்டு கிளம்புகிறாய். போய்விட்டு வந்த பிறகு அதைப் பற்றிப் பேசியே மண்டையைத் துளைத்து விடுகிறாய். சரி. அடிக்கடி வந்து போய்க் கொண்டிரு" என்று கூறியவாறு கோபி வெளியே கிளம்பினான். அவன் திரும்பி வருவதற்குள் மூர்த்தி போவதனால் அறையைப் பூட்டிச் சாவியை அடுத்த அறையில் கொடுத்து விட்டுப் போகும்படி கூறிவிட்டுச் சென்றான் கோபி.
அவன் அறையை விட்டுச் சென்றதும், மூர்த்தி எழுந்திருந்து கீழே சென்று ஹாஸ்டலில் சிற்றுண்டியும். காப்பியும் சாப்பிட்டு விட்டு வந்தான். பிறகு . சோப்புத் தேய்த்து முகம் கழுவி, வாசனை வீசும் பவுடர் பூசிக் கொண்டான், தலைக்கு வாசனைத் தைலம் தடவி தலைவாரிக் கொண்டு, உடை அணிந்து கொண்டான். பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக்கொண்டு அவன் புறப்படும்போது மணி சரியாக ஏழு அடித்து விட்டது. கோடம்பாக்கம் ரோட்டில் அவன் பார்த்திருந்த அறைக்குச் சென்று சாமான்களை வைத்து விட்டு இரவுச் சாப்பாட்டுக்காக மாம்பலம் பாண்டிபஜாரை நோக்கிப் போனான் மூர்த்தி.
கல கலவென்று இரவு ஒன்பது மணி வரையிலும் கூடச் சந்தடியாக இருக்கும் அந்தக் கடைத் தெருவில் இருந்த ஒரு வளையல் கடையின் முன்பாக ஒரு ரிக்ஷா வந்து நின்றது. அதிலிருந்து ராதா இறங்கினாள். கை யிலிருந்த வெல்வெட் பையைச் சுழற்றிக் கொண்டே அவள் கடைக்குள் நுழைவதை பார்த்தி கவனித்தான். நடைபாதையில் பின்கள், பித்தான்கள் 'கிளிப்'புகள் விற்கும் ஒரு கடை அருகில் நின்று ஏதோ வியாபாரம் செய்பவனைப் போல் வளையல் கடையைக் கவனித்துக் கொண்டு நின்றான் மூர்த்தி. ராதா உதட்டுச் சாய புட்டி ஒன்று வாங்கினாள். ஜிலு ஜிலு வென்ற சுடர் விடும் போலிக் கற்களால் செய்த மாலை ஒன்றை எடுத்துப் பார்த்தாள்.
நட்சத்திரங்கள் போல் செய்த மாலையின் நடுவில் சிவப்பு ஒற்றைக் கல் வைத்து பதக்கம் காணப்பட்டது. மாலையைத் தன் கழுத்தில் பதி வைத்துப் பார்த்துக் கொண்டாள் ராதா. எதிரே கண்ணாடியில் அவள் உருவம் தெரிந்தது. சங்கு போன்ற வெண்ணிறமான அவள் கழுத்துக்கு அது எடுப்பாகவே இருந்தது. மற்றும் சில கண்ணாடி வளையல்களும் ரிப்பன்களும் வாங்கிக் கொண்டு, பில் பதினைந்து ரூபாயையும் மேஜை மீது வைத்து விட்டு ரசீது பெற்றுக் கொண்டாள் ராதா.
அவள் கடையைவிட்டு இறங்கி வரும் போது மூர்த்தி அருகில் இருந்த சோடா கடைப் பக்கம் சென்று நின்றான். கலர் ஒன்று வாங்கிச் சாப்பிட்டவாறு தன் முதுகுப் புறத்தை அவள் பக்கமாகத் திருப்பிக்கொண்டு நின்றான். அவள் மறுபடியும் ரிக்ஷாவில் ஏறி 'பனகல் பார்க்' வழியாகச் செல்லுவதைக் கவனித்தான்.
அன்று அதற்கு மேல் அவன் அவளைத் தொடர்ந்து செல்ல விரும்பாமல். அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தன் அறைக்குத் திரும்பினான் மூர்த்தி.
'பனகல் பார்க்கைக் கடந்து சென்ற ரிக்ஷா உஸ்மான் ரோடு பக்கமாகக் கோடம்பாக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மணி சுமார் எட்டுக்கு மேல் ஆகியிருக்கலாம். தெருவிலே பெண்களின் கூட்டம் குறைந்து விட்டது. காரியாலயங் களிலிருந்து நேரம் சென்று வீடு திரும்பும் ஆடவர் சிலரேதான் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தனர். இருபுறமும் மரங்கள் கவிந்திருந்த அந்தச் சாலையில் போகப் போக ஜனக்கூட்டம் அதிகமாக இல்லை. தன்னைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்ட ராதாவுக்குச் சற்று பயமாகத் தான் இருந்தது. தெரியாத்தனமாக அவள் அன்று கைகளில் நாலைந்து தங்க வளையல்களையும் கழுத்தில் முத்து ’நெக்லெஸை' யும் அணிந்து கொண்டு கிளம்பி வந்து விட்டாள்,
இரவு வேளையில் தனியாக ரிஷாவில் போவதை விட நடந்து செல்லலாமே என்று கூட அவளுக்குத் தோன்றியது. உள்ளத்தில் பரபரப்பும், பயமும் அதிகம் ஆக ஆக. அவள் உடல் பூராவும் வேர்த்துக் கொட்டியது . எதிரே கொஞ்ச தூரத்தில் யாரோ ஒருவர் வந்து கொண்டிருந்தார். கையில் ஒரு பிரம்பு வைத்திருந்தார் அவர். வழியில் போகிறவர் வருகிறவர்களை வெகு கூர்மையாகப் பார்த்துக்கொண்டே வந்தார் அவர். ராதா தன் இதயத் துடிப்பு நின்று விடுமோ என்று அஞ்சினாள். அவள் மனம் அப்படி வேகமாக அடித்துக் கொண்டது. பிரம்பு மனிதர் பக்கத்தில் வந்து விட்டார். வண்டிக்குள் உற்றுப் பார்த்துவிட்டு, ”என்ன அம்மா இது? வேளை சமயம் இல்லாமல் கடைக்குக் கிளம்பி விடுகிறாய் நீ!" என்று அதட்டிக்கொண்டே ரிக்ஷாவை மேலே போக விடாமல் நிறுத்தினார் சுவாமிநாதன்.
"நீங்களா?" என்றாள் ராதா, பெருமூச்சு விட்டபடி.
"நான் தான்! அம்மா எங்கேடா காணோம். இப்போ இருந்தாங்களே என்று ராமையாவைக் கேட்டால். 'பாண்டி பஜாருக்குப் போச்சு வளையல் வாங்கியாற' என்கிறான். இந்தக் காலத்துப் பெண்களுக்கு எதை நினைத்துக் கொண்டாலும் உடனே ஆக வேண்டும் என்கிற சுபாவம்தான் அதிகமாக இருக்கிறது. இப்படி எட்டு மணிக்குமேல் வளையல் வாங்க ஒண்டியாகக் கடைத் தெருவுக்குப் போவது அவசியமா என்று நினத்துப் பார்க்கிறதில்லை. வீட்டிலே யாருக்காவது ஆபத்தா? ஏதாவது மருந்து தேவையா? சமயம் பார்க்காமல் போக வேண்டியதுதான். இப்படி வளையலும் ரிப்பனும் வாங்க..." சுவாமிநாத சற்றுக் கடிந்தவாறு இவ்விதம் கூறிவிட்டு, நீ ரிக்ஷாவில் வருகிறாயா? நான் கூடவே நடந்து வாறேன்" என்று கேட்டார்.
"வேண்டாம், வேண்டாம்! இந்தா அப்பா உன் கூலி" என்று ரிக்ஷாக்காரனுக்குப் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு, சுவாமிநாதனுடன் ராதா நடந்தே வீடு சென்றாள்.
வீட்டுக்குள் செல்லும் வரையில் பேசாமல் இருந்த ராதா, சற்று பயத்துடன், ”அண்ணா வந்து விட்டாரா?" என்று கேட்டாள்.
"இல்லை அம்மா. வக்கீல் வேதாந்தத்தின் மனைவிக்கு உடம்பு அதிகமாக இருக்கிறதாம். அவருடைய பெண் டாக்டர் காமாட்சி இவரை வந்து பார்த்து விட்டுப் போகும்படி போன் செய்தாள். போயிருக்கிறார்" என்றார் சுவாமி நாதன்.
ராதா அங்கே இருந்த சோபாவில் உட்கார்ந்தாள். கைப் பையைத் திறந்து அன்று வாங்கிய மாலையை எடுத்து அருகில் இருந்த மேஜைமீது வைத்தாள். ' இதைப் பாருங்கள்! பத்தாயிரம் இருபதினாயிரம் கொடுத்து வாங்கும் வைர மாலை இதனிடம் தோற்றுப் போக வேண்டியதுதான். எப்படி ஜ்வலிக்கிறது பாருங்கள்!" என்று சுவாமி நாதனிடம் காட்டினாள்.
சுவாமி நாதன் சிரித்தார். கையில் இருந்த பிரம்பை ஆணியில் மாட்டினார். ராதாவின் அருகில் வந்து உட்கார்ந்தார்.
"இது ஜ்வலித்து விட்டால் மட்டும் நிஜ வைரத்தோடு இதை ஒப்பிட்டு விட முடியுமா ராதா? நான்கு நாளைக்குத் தண்ணீர் பட்டால் மங்கிக் கறுத்துப் போகுமே. வைரம் மாதிரி என்றைக்கும் நிரந்தரமான ஒளியோடு இது இருக்குமா என்ன? போயும் போயும் இதன் மேல் உனக்கு ஆசை போயிற்றே! வீட்டிலே வேறு மாலையே இல்லையா என்ன? அதையெல்லாம் பெட்டி யில் வைத்துப் பூட்டிவிட்டு. இதைப் போய் வாங்கி யிருக்கிறாயே அம்மா, உனக்கு ஒன்றுமே தெரியவில்லை போ ..."
சுவாமி நாதனின் சுபாவத்தை ராதா நன்றாக அறிவாள். "அசடு அசடு" என்பார். அவருக்குக் கோடம் வந்திருக்கிறது என்று அதற்குப் பொருள்.
அவர் கூறியதைக் கேட்ட ராதா கல கலவென்று சிரித்தாள். கழுத்தில் ஏற்கெனவே அணிந்திருந்த முத்து மாலையைக் கழற்றிவிட்டு, புதிதாக வாங்கி வந்த மாலையை அணிந்து கொண்டு அவர் எதிரில் வந்து நின்றாள் அவள்.
வசந்த காலத்துப் பௌர்ணமி இரவில் மலர்ந்த மல்லிகையைப் போல் அவள் அழகு பிரதிபலித்தது. ’இப்படி அழகும், அறியாமையும், வெகுளித்தனமும் நிறைந்த இந்தப் பெண்ணுக்குத் தகுந்த கணவன் வாய்க்க வேண்டுமோ' என்று சுவாமிநாதன் கவலைப்பட்டார்.
அவரையறியாமல் அவர் கண்களில் நீர் சுரந்தது.
---------------
2. 12. வக்கீல் வேதாந்தம்
வக்கீல் வேதாந்தத்தின் வீடு மயிலாப்பூரில் இருந்தது. சென்ற இருபத்தைந்து முப்பது வருடங்களில் சென்னை நகரில் பிரபலம் அடைந்திருந்த வக்கீல்களில் வேதாந்தமும் ஒருவர்.
தொழில் முறையில் அவர் எவ்வளவு பிரபலம் அடைந்திருந்தாலும், வாழ்க்கையில் நம்முடைய பழைய வழக்கங்களை விட மனமில்லாதவர். அவருடைய மனைவி சுப்புலட்சுமி, கணவன் எதிரில் நின்றுகூடப் பேசமாட்டாள். வேளைக்கொரு உடையும், நாளைக் கொரு நகையுமாக மாறி வரும் இந்தக் காலத்தில் அந்த அம்மாள் பழைய கெட்டிக் கொலுசும், கடியாரச் சங்கிலியும் செயின் அட்டிகையும் இருபத்தைந்து வருஷங்களாக அழித்துப் பண்ணிப் போட்டுக் கொள்ளாமல் இருப்பதே. அவர்கள் பழைமைக்கு மரியாதை தருபவர்கள் என்பதற்கு அடையாளம், அவர்கள் வீட்டில் செல்வம் கொழித்த அளவு சந்தான பாக்கியம் ஏற்படவில்லை. ஒரு பெண் குழந்தைக்கு அப்புரம் அவர்கள் செய்த தவங்களும் நோன்புகளும் ஒன்றும் பலிக்கவில்லை . காமாட்சி அவர்களின் ஒரே மகள். சங்கீதம். வடமொழி, நாட்டியம். பத்திரிகைத் தொழில் யாவும் வளர்ந்து வரும் மயிலாப் பூரில் காமாட்சியின் படிப்பை அவர்கள் மூன்றாவது படிவத்தோடு நிறுத்தி விட்டு. பதினான்கு வயசு பூர்த்தி யடைந்தவுடன், கல்யாணமும் பண்ணிக் கொடுத்து விட்டார்கள்.
எவ்வளவோ ஆடம்பரமாக, பெருமையாக நடந்தது அந்தக் கல்யாணம். மருமகன் செக்கச் செவேலென்று ராஜா போல இருப்பதாகத் தம்பதி இருவரும் மனம் பூரித்துப் போனார்கள். மருமகன் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்று வேதாந்தம் சம்பந்தி விட்டாரைக் கேட்டார். அவர்களும் அனுமதி கொடுத்து அனுப்பினார்கள்.
அன்று, அதாவது சுமார் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு காமாட்சிக்கு வாழ்க்கையின் முதல் நாள். பதினாறு வயதுப் பெண் அந்த நாளை எவ்வளவோ ஆவல்களுடனும், கனவுகளுடனும் எதிர்பார்த்திருப்பாள். அவளுடைய கணவன் வீட்டிலேயே இருந்தாலும் நாள், நட்சத்திரம் முதலியவற்றில் பற்று மிகுந்த பெரியவர்கள் அவர்களைப் பிரித்தே வைத்திருந்தார்கள். கணவனிடம் மனைவி நெருங்கிப் பழக அவர்கள் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. கணவனுக்குத் தரும் காப்பியைக் காமாட்சி தலையைக் குனிந்து கொண்டே எடுத்துச் சென்று மேஜை மீது வைத்து விட்டுத் திரும்பி வருவாள். அவனும் மனைவியுடன் பேச வேண்டும் பழக வேண்டும் என்கிற ஆவலைக் காண்பித்து கொள்ள வேயில்லை. இப்படி இருக்கையில் பெரியவர்களாகவே அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார்கள். காமாட்சிக்கு அன்று விசேஷமாக அலங்காரம் செய்திருந்தார்கள், பூக்கடையிலிருந்து வாங்கி வந்த ஜாதி அரும்பு களைப் பின்னலில் வைத்துத் தைத்திருந்தார்கள். காதுகளில் வைரக் கம்மல்களும், புல்லாக்கும், ஒட்டியாணமும் கழுத்தில் ஐந்தாறு வடங்கள் சங்கிலியும், காஞ்சிபுரம் பட்டுப் புடவையும் அணிந்து காமாட்சி தன் கணவனை நேருக்கு நேர் சந்திக்கப் புறப்பட்டாள்.
மாடியில் இருந்த அந்த அறையில் அவள் நுழைந்த போது, அவள் கணவன் உள்ளே சாய்வு நாற்காலியில் படுத்து அரைத் தூக்கத்தில் இருந்தான். காமாட்சி மெல்ல மெல்ல அடி வைத்து உள்ளே சென்றாள்; கணவன் பேசாமல் இருக்கவே, தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். பிறகு மெதுவான குரலில் ”எழுந்திருங்கள். முதுகை வலிக்கப் போகிறது. படுக்கையில் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள்" என்று அவனை எழுப்பினாள்.
அவன் கண் விழித்தான். எதிரில் அழகே உருவமாக நிற்கும் காமாட்சியைக் கண்டான். அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது. ”காமாட்சி" என்று ஆதுரத்துடன் அழைத்து. அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.
'உன்னை ஏமாற்றி விட்டேன்! உன்னுடன் நான் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன். நிரந்தர நோயாளி. உளுத்துப்போன இந்த உடல் அதிக நாள் இருக்கப் போவதில்லை. வெளிப்பார்வைக்கு நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இருந்தாலும். காச நோய் என்னுடைய உடலை அரித்துக்கொண்டே வருகிறது. சீக்கிரத்தில் எல்லோரும் அதைப் புரிந்து கொள்வீர்கள்" என்றான்.
காமாட்சி கல்லாக உணர்வற்று நின்றாள். பதி னைந்து வருஷங்களுக்கு முன்பு காச நோயிலிருந்து மனித சமுதாயத்துக்கு விடுதலை கிடையாது என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். அந்த எண்ணமே அநேகம் பேரை- ஆரம்ப நோயாளிகளைக் கூட பலிவாங்கிவிட்டது.
அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது .
"பணத்துக்காக வியாதியை மறைத்து வைத்து விட்டார்கள் என்னைப் பெற்றவர்கள்" என்றான் வேதனையுடன்.
”அழாதீர்கள்" என்றாள் காமாட்சி, "இதற்காக அழுவார்களா? நல்ல வைத்தியமாகப் பார்த்தால் போயிற்று. நாளைக்கே அப்பாவிடம் சொல்லி நல்ல வைத்தியரை வரவழைக்கிறேன். இந்தப் பாலைச் சாப்பிட்டு விட்டுத் தூங்குங்கள்." ஆதரவுடன் அவன் கரங்களைப் பற்றிக் கட்டிலுக்கு அழைத்துப் போய்ப் படுக்க வைத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் தூங்கிப் போனான்.
திறந்த மாடியிலே வந்து நின்றாள் அவள். வெளியே கபாலியின் கோபுரமும் குளமும் தெரிந்தன. பிறந்து புத்தி தெரிந்த நாட்களாய் யாருக்குமே தீங்கு எண்ணாதவள் அவள். அவள் வாழ்க்கை ஒரு சோக கீதமாக மாறப் போகிறது என்பதை நினைத்துப் பார்க்கையில் அவள் உள்ளமெல்லாம் எரிந்தது.
பொழுது விடிந்ததும் கீழே இறங்கி வந்த மகளை நோக்கினாள் சுப்புலட்சுமி. பின்னலில் தைத்திருந்த மலர்கள் வாடாமல், நலுங்காமல் இருந்தன, கண்களின் ஓரத்தில் மட்டும் சிறிது மை கரைந்திருந்தது. தலை குனிந்தவாறு கொல்லைப் பக்கம் சென்ற காமாட்சி திரும்பி வந்து.... ”அம்மா! அப்பா எங்கே?" என்று கேட்டாள்.
"ஏனம்மா! இங்கே தானே இருந்தார்" என்றாள் சுப்புலட்சுமி.
வேதாந்தம் காப்பி சாப்பிட உள்ளே வந்தார்.
”குழந்தை உங்களைத் தேடினாளே!" என்று சொல்லிக்கொண்டே சுப்புலட்சுமி இரண்டு தம்ளர்களில் காப்பி கொண்டு வந்து வைத்தாள். இந்தாம்மா! நீ சாப்பிட்டு விட்டு உன் புருஷனுக்கும் கொண்டுபோய்க் கொடு" என்றாள்.
தகப்பனார் காப்பி அருந்துகிற வரைக்கும் மகள் ஒன்றும் பேசவில்லை. அவர் அருகில் சென்று நின்று 'அப்பா! அவருக்கு உடம்பு சரியில்லையாம், நம்ப டாக்டரை அழைத்து வந்து காண்பியுங்கள்." இதைச் சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு அழுகை வந்து விட்டது.
"என்னம்மா உடம்புக்கு? தலை வலியா? ஜுரமா?" என்று பதறியவாறு கேட்டுக் கொண்டே சமையல் அறையை விட்டு வெளியே நடந்தார் வேதாந்தம். அவசரமாக மாடிப் படிகளில் ஏறி அவர் உள்ளே போவதற்குள் காமாட்சி அவர் முன்னால் வந்து நின்றாள்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை அப்பா. அவருக்கு காசமாம். கல்யாணத்துக்கு முந்தியே இருந்ததாம்....."
வேதாந்தம் முகத்தைச் சுளித்துக் கொண்டார். தலையில் பெரிய கல் ஒன்று விழுந்து விட்டது என்பது அவருக்குத் தெரிந்து போயிற்று. பெற்றோருக்கு ஒரே பிள்ளை . பணங்காசு அதிகம் கிடையாது. நமக்கு அடங்கிய மருமகனாக வீட்டோடு இருப்பான். தள்ளாத வயசில் அவனும், மகளும் ஆதரவாக நம்மைப் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணியிருந்த எண்ணமெல்லாம் ஒரு விநாடியில் மறைந்து போயின.
பாதிப்படி ஏறியவர் திரும்பி விட்டார். டாக்டர் ஸ்ரீதரனுக்கு போன்' செய்தார். அப்பொழுது டாக்டர் ஸ்ரீதரன் இளைஞன். வைத்தியக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வந்து ஆறு மாதங்கள் ஆகி யிருந்தன. இவர்கள் குடும்பத்தில் சில்லறை வியாதிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தான்.
அவனுக்குத் தெரிந்த பிரபல வைத்தியர்களை அழைத்துவந்து நல்ல முறையில் வைத்தியம் செய்து பார்த்தான் ஸ்ரீதரன்.
பலன் பூஜ்யமாகி விட்டது. காமாட்சி விதவை யானாள். அவர்கள் கல்யாணத்தை ஆமோதித்து நடத்திய அதே சமூகம், இந்தச் சம்பவத்தையும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தது.
”அதிர்ச்சி வைத்தியம்' என்று வைத்திய முறையிலே ஒன்று இருப்பதாகப் படிக்கிறோம். வேதாந்தம் அடியோடு மாறிப் போனார். அவரிடம் இருந்த பழைமை எண்ணங்கள், அசட்டுத் தனங்கள். அதைரியம் யாவும் மறைந்து போயின. காமாட்சியை மேலும் 'இண்டர் மீடியட்' வரை படிக்க வைத்து. வைத்தியக் கல்லூரியில் சேர்த்தார். மருமகனின் மறைவு. மகள் நிற்கும் நிலைமை, சமூகத்தின் சுயநலம் யாவும் சேர்ந்து அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தன.
இப்பொழுது டாக்டர் காமாட்சி, ஸ்ரீதரனின் சக டாக்டர். வேதாந்தம் மாறினாரே தவிர, சுப்புலட்சுமி மாறவில்லை. மனம் இடிந்தவள் இடிந்தவள் தான்.
சுவாமிநாதன் ராதாவிடம் கூறியபடி அன்று சுப்புலெட்சுமியின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதற்காகத் தன் நண்பரை டாக்டர் காமாட்சி அழைத்திருந்தாள்.
---------------
2. 13. ராதாவுக்குத் தெரிந்தவர்
அன்றிரவு டாக்டர் ஸ்ரீதரன் வீட்டுக்கு வரும் போது இரவு ஒரு மணி ஆகிவிட்டது. அவரால் முடிந்த வரையில் சுப்புலட்சுமிக்கு வைத்தியம் செய்து பார்த்தார். தான் பிழைத்து எழ வேண்டும் என்கிற ஆசை அவள் மனத்தை விட்டுப் போய் பலகாலம் ஆயிற்று. ஊசிகளுக்கும் மருந்துகளுக்கும் அந்த மனத்தின் அபிப்பிராயத்தை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. ’குழந்தை குழந்தை!’ என்று வீட்டைச் சுற்றி வளைய வந்த ஒரு ஜீவன் மறைந்து போவதில் டாக்டர் காமாட்சிக்குத் தான் வருத்தம். தன் அம்மா இனிமேல் பிழைக்க மாட்டாள் என்பது தெரிந்திருந்தும் அவளைப் பிழைக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அந்த அறியாமையை நினைத்து அவள் மனத்துள் சிரித்துக் கொண்டாள்.
இரவு மூன்று மணிக்கு டாக்டர் காமாட்சி ஸ்ரீதரனுடன் 'போனில்' பேசினாள். "விளக்கு அணையும் தறுவாயில் இருக்கிறது. அம்மா ரொம்பவும் சிரமப்படுகிறாள். ஊசிகளையும், மருந்துகளையும் நிறுத்தி விட்டேன். அவள் இது வரையில் ஆராதித்து வந்த கற்பகாம்பிகை ஸ்தோத்திரங்களை மாத்திரம் சொல்லி வருகிறேன் ......." ’போனில்' பேசிய குரலில் தெளிவு இல்லை. துக்கமும் துயரமும் இழையோடின. அவள் டாக்டர் ஆனதால் சமாளிக்க முடிந்தது.
பொழுது விடிவதற்குள் சுப்புலட்சுமி போய் விட்டாள். நான் இனிமேல் ’தனி' என்று 'போன்' மூலம் வேதாந்தம் அறிவித்தார். அதிகாலையில் எழுந்து குளித்துக் காலைச் சிற்றுண்டிக்காக வரும் டாக்டர் ஸ்ரீதரன் தம் அறையிலேயே சிந்தனையில் மூழ்கி உட்கார்ந்திருந்தார்.
சுவாமிநாதன் வியப்புடன் மாடிப் படியேறி மேலே சென்று உள்ளே எட்டிப் பார்த்தார்.
“டாக்டர் உடம்பு சரியில்லையா என்ன?" என்று விசாரித்தார்.
"உடம்புக்கு ஒன்றுமில்லை. மனசுதான் சரியாக இல்லை" என்று சொல்லிக் கொண்டே, தம் கடமைகளில் நினைவு வந்தவராக அவர் கீழே இறங்கி வந்து தம் அலுவல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.
ராதா விழித்தெழுந்து உள்ளே வந்ததும் சுவாமி நாதன் "ஏனம்மா! அண்ணா ஒரு மாதிரியாக இருக்கிறார்? டாக்டர் காமாட்சியின் தாய் போய் விட்டாளாம். பாவம் அந்தப்பெண்ணுக்கு இனிமேல் யார் ஆதரவு? தகப்பனாருக்கும் வயசு ஆயிற்று. பாவம், அவளுக்கும் சிறு வயசு. தனியாக இருக்க வேண்டும்........."
ராதாவுக்கு இந்த விஷயங்களெல்லாம் ஒன்றும் சுவாரசியப்படவில்லை. ’தனியாக வாழ்வது என்றால் இவருக்கு ஏன் பிடிக்கவில்லை?' என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை . சலிப்புடன் எழுந்து அவள் தோட்டத்துக்குப் போய் விட்டாள். ஸ்ரீதரன் தம் காலை அலுவல்களை முடித்துக் கொண்டு ’டிஸ்பென் ஸரி'க்குப் போய் விட்டார்.
அதற்கப்புறம் பல நாட்கள் வரையில் அந்த வீட்டில் எதுவுமே நடக்கவில்லை. பதினைந்து தினங்களுக்கு அப்புறம் ஒரு நாள் மாலை. ராதா கோகலே ஹாலில் நடக்கவிருந்த சங்கீதக் கச்சேரி ஒன்றுக்கு புறப்பட்டாள்.
"உன்னோடு யார் வருகிறார்கள்?" என்று விசாரித்தார் சுவாமிநாதன்.
”ஏன்?" என்று புருவத்தை சுளித்துக் கொண்டே கேட்டாள் ராதா.
”தனியாகவா நீ திரும்பி வருவாய் என்று கேட்கிறேன்?"
’இதென்ன அசட்டுக் கேள்வி? தனியாகத் திரும்பி வந்தால் என்னவாம்’ என்று கேட்டு விட ராதா துடித்தாள் . ஆனால் அவளை அப்படிக் கேட்க விடாமல் ஏதோ ஒன்று தடுத்து விட்டது.
"எனக்குத் தெரிந்தவர்கள் யாராவது வருவார்கள். அவர்கள் கூட வந்து விவேன்" என்று கூறிவிட்டு அவர் பதிலை எதிர்பாராமல் ராதா வெளியே சென்று விட்டாள்.
தெரு வழியே நடந்து சென்று கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்தாள். ரயில் வந்ததும் அதில் ஏறி உட்கார்ந்து கோட்டை நிலையத்தில் இறங்கி ஒரு ரிக்ஷா வைத்துக் கொண்டாள். அப்பொழுது மாலை சுமார் நாலரை மணி இருக்கலாம். ஹைக்கோர்ட்டுக்கு எதிரில் இருந்த ஹோட்டல் ஒன்றிலிருந்து மூர்த்தியும், கோபியும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
சென்னை நகரின் ஜனத்திரளில் அரண்மனைக்காரத் தெரு வழியே செல்லும் ரிக்ஷாவில் ராதா உட்கார்ந்திருப்பது மூர்த்தியின் தீட்சண்யயான கண்களுக்குத் தெரிந்தது.
”கோபி ஒரு நிமிஷம். நான் தம்புச் செட்டித் தெருவில் ஒருவரைப் பார்க்கவேண்டும். இப்படியே பீச் ஸ்டேஷனுக்கு நடந்து போய்க்கொண்டிரு, வந்து விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவசரமாகச் சென்று அந்தக் கூட்டத்தில் மறைந்து போனான்
மூர்த்தி.
கச்சேரி ஆரம்பமாகிவிட்டது. அன்று ஏனோ அதிகக் கூட்டம் இல்லை. ராதாவுக்கு வெகு சமீபமாக மூர்த்தி ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டுபோய் உட்கார்ந் தான். சங்கீதத்திலேயே கவனமாக இருந்த ராதா அவனைக் கவனிக்கவில்லை. அத்துடன் அங்கே அவளுக்குத் தெரிந்தவர்கள் அநேகம் பேர் இருந்தார்கள். பாகவதர் பாடும் ஒவ்வொரு ராகத்தைப் பற்றியும் கீர்த்தனங்களின் அர்த்த விசேஷத்தைப் பற்றியும் அருகில் இருந்தவர்களுடன் பேசிக் கொண்டே சங்கீதத்தை அனுபவித்தாள் ராதா.
அன்று, ராகம், தானம் பல்லவியை ஒன்றரை மணி நேரம் பாடினார் வித்வான், அதற்கப்புறம் சில்லறை உருப் படிகள் பாடப்பட்டன. 'மாயம் வல்லவன் கண்ணனென்று என் தாயும் வந்து சொன்ன துண்டு' என்கிற உருப்படியைப் பாடிய போது ராதா கல கல வென்று சிரித்து விட்டாள். அவள் மனத்திலே சிரிப்பை மூட்டிச் சிரிக்கச் செய்தவன் கண்ணன். ஆனால் மூர்த்தி அதை வேறுவிதமாகப் புரிந்து கொண்டான். ' உணர்ச்சிகளுக்கு சீக்கிரமாக அடிமையாகி விடுகிறவள் இந்தப் பெண், பாட்டைக் கேட்டுச் சிரிக்கிறாள்; பேசும் போது சிரிக்கிறாள். தெருவில் நடந்து செல்லும்போதும் சிரிக்கிறாள். இவளிடம் உறுதியும் கண்டிப்பும் இருக்காது. பவானியைப்போல் இவள் நெஞ்சழுத்தம் வாய்ந்தவள் இல்லை' என்பதை மூர்த்தி சுலபமாகப் புரிந்து கொண்டான்.
வித்வான் மங்களம் பாடி முடிக்கும் போது மணி சரியாக ஒன்பதே முக்கால்; கூட்டம் திமுதிமுவென்று வெளியே வந்தது. காரில் வந்தவர்கள் போய் விட்டார்கள்.
கோடம்பாக்கம் செல்லும் பஸ் போய் விட்டது என்று ரிக்ஷாக்காரன் ஒருவன் தெரிவித்தான். "இரண்டு ரூபாய் கொடுங்க அம்மா. வீட்டிலேயே கொண்டு போய் இறக்கிடறேன்" என்று வேறு அவன் யோசனை கூறினான்.
இந்த அகாலத்தில் ரிக்ஷாவில் போனால் சுவாமிநாதன் கோபிப்பார் என்பது ராதாவுக்குத் தெரியும். அவளுக்குப் போவதற்கு தைரியம் உண்டு. நடுவில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் 'ஓ' வென்று கத்தலாம். ’உதவி- உதவி' என்று கூக்குரல் போடலாம். முடிந்தால் அருகில் சாலை ஓரத்தில் இருக்கும் வீட்டில் போய் உதவி கேட்கலாம் - என்றெல்லாம் அசட்டுத் தைரியம் அவள் மனதில் நிறைந் திருந்தது. பட்டப் பகலைப்போல் விளக்குகள் எரியும் போது என்னதான் நேர்ந்து விடுமென்று வேறு தோன்றி யது. ஆனால் சுவாமிநாதன் அன்றே சொன்னார்: அகாலத்தில் அப்படி எல்லாம் தனியாக வரக்கூடாதும்மா என்று. அந்தக் கிழவருக்கு யார் பதில் சொல்ல முடியும்?
தயங்கியபடி நின்ற ராதாவின் அருகில் மூர்த்தி வந்து நின்றான். கைகளைக் குவித்து வணக்கம் செலுத்தினான்.
"என்னை நினைவிருக்கிறதா?" என்று கேட்டான். ராதா தன் பெரிய விழிகளைச் சுழற்றியவாறு ஒருகணம் யோசனை செய்தாள்.
"அன்று நீங்கள் மியூஸியம் தியேட்டரில் போட்ட நாடகத்துக்கு நான் வந்திருந்தேனே........"
"எஸ்... எஸ்" என்றாள் ராதா. பிறகு . "நீங்கள் எதுவரைக்கும் போகிறீர்கள்!" என்று விசாரித்தாள்.
”நானா? கோடம்பாக்கத்தில் இருக்கிறேன். ஆமாம். நீங்கள் டாக்டர் ஸ்ரீதரனின் தங்கைதானே? உங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறேனே. ஏன் கேட்கிறீர்கள்? உங்களோடு யாரும் வரவில்லையா?......"
ராதா தலையைக் குனிந்து கொண்டு நின்றாள். பிறகு மெதுவாக. ”எனக்கு பாட்டுப் பைத்தியம் அதிகம் உண்டு, என்னவோ இந்தக் கலைகளில் ஒரு அலாதி ஆசை எனக்கு. திரும்பி எப்படி வருவது என்று யோசிக்காமல் வந்து விட்டேன்."
அருகில் சென்று கொண்டிருந்த 'டாக்ஸி'யைக் கை தட்டி அழைத்தான் மூர்த்தி.
”அதனால் என்ன? நான் துணைக்கு வருகிறேன். வீட்டிலே கார் இருக்குமே....."
"அண்ணாவுக்கு வெளியே போக வேண்டியிருந்திருக்கும். திரும்பி வந்திருக்க மாட்டார். இல்லா விட்டால் கார் வந்திருக்கும்....."
காரின் பின் ஸீட்டில் ராதா உட்கார்ந்திருந்தாள். இரவ வேளையில் இப்படித் தனியாகப் பிற ஆடவனுடன் செல்கிறோமே என்பதை அந்தப் பேதைப் பெண் உணரவில்லை . இம்மாதிரி ஒரு தைரியம் நம் நாட்டுப் பெண்களுக்குத் தேவைதானா? தாய்க்குலத்தில் கற்பு, பண்பு. அடக்கம், பொறுமை இவற்றைப் பக்க பலமாகக் கொண்டு நம் சமுதாயம் சீரிய முறையில் இயங்க வேண்டு மென்றால் இத்தகைய நாகரிகம்' தேவையா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கத்தான் வேண்டும்.
எத்தனையோ இரவுகளைப் போல் சுவாமிநாதன் ராதா இன்னும் வரவில்லையே என்று வாயிற்படியில் காத்துக் கொண்டிருந்தார். தெருவில் கார் வந்து நின்றது அதிலிருந்து ராதா இறங்கினாள். ’வணக்கம். தாங்க்ஸ்’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள். மூர்த்தியும் அங்கே இறங்கிக் கொண்டு 'டாக்ஸி' காரருக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பினான்.
சுவாமி நாதன் தெரு வெளிச்சத்தில் மூர்த்தியின் முகத்தைக் கவனித்தார். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்றார்கள் பெரியவர்கள்.
அந்த முகத்திலே தெளிவு இல்லை; அந்தக் கண்களில் உண்மையும், நேர்மையும் இல்லை. ஒரு வேளை அவ ருடைய ஊகம் தவறாகக்கூட இருக்கலாம். என்னவோ அவருக்கு அவனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
உள்ளே சென்றவர், "யாரம்மா அந்தப் பிள்ளை?" என்று கேட்டார். அவள் பெண்கள் கல்லூரியில் படித்துத் தேறிய மாணவி ஆதலால், ஓர் ஆடவன் அவளுக்கு நண்பனாக இருக்கமுடியாது என்பது அவர் தீர்மானம். இதுவரையில் இப்படி யாரும் அவளுடன் வந்த தில்லையே .
”தெரிந்தவர்" என்று பதில் கூறினாள் ராதா.
"என்ன அம்மா சொல்லுகிறாய்? நமக்கு ஏதாவது உறவா? அப்படி யாரும் இதுவரையில் இங்கு வந்ததே யில்லையே?...."
”உறவு என்று சொன்னேனா. தெரிந்தவர் என்று தானே சொல்கிறேன்!"
ராதாவுக்கு அவர் ஏதோ சந்தேகமாகக் கேட்கிறார் என்பது விளங்கிவிட்டது. கோபம் வர, அவள் பெரு மூச்சு விட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.
சுவாமிநாதனுக்கோ சரிவரப் பேசத் தெரியாமல் ’இருந்த பொழுதிலிருந்து வளர்த்த குழந்தை என்னிடமே மறைத்துப் பேசுகிறாளே’ என்று கோபம் வந்தது. 'இருக்கட்டும். அவளும் வயசு வந்த பெண், படித்தவள். நல்லது கெட்டதை ஆராயும் திறமை படைத்தவள் நாமும் அவசரப்படக்கூடாது' என்று நினைத்து அவர் அத்துடன் அன்று விட்டு விட்டார்.
ஸ்ரீதரனுடைய போக்கே அலாதியாக இருந்தது. வீட்டிலே அவர் மனத்தைக் கவர மனைவி இல்லை. ஒரே பெண் குழந்தை. ஸ்ரீதரன் வீட்டில் இருக்கும் சமயங்களில் ஜெயஸ்ரீ பள்ளிக்கூடம் போய் விடுவாள்.
இரவில் ஸ்ரீதரன் வீட்டுக்கு வரு முன்னே படுத்துத் தூங்கிப் போவாள் ஜெயஸ்ரீ.
ராதா பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாள். அவளை நன்றாகப் படிக்க வைத்து விட்டார் அவர். தகுந்த இடமாகப் பார்த்துக் கலியாணம் பண்ணிக் கொடுத்து விட்டால் அவள் புருஷன் வீட்டுக்குப் போய் விடுவாள்; வீட்டைச் சுற்றிச் சுற்றி வரும் பொறுப்புகள் அதிகம் இல்லை. ஆகவே தன் சகோதரியைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ அவள் சுதந்திரத்தில் தலையிடவோ ஸ்ரீதரனுக்கு அவகாசம் இல்லை. ஆசையும் இல்லை .
தாமரை இலைத் தண்ணீரைப் போல இருந்தது அவர் வாழ்க்கை . அத்துடன் இந்த விஷயங்களிலெல்லாம் பெண்களுக்கு இருக்கிற அனுபவம் ஆண்களுக்குப் போதாது. சுவாமிநாதன் நாலும் தெரிந்தவர். உலசு விவகாரங்களில் அடிபட்டவர். ஆகவே, அவர் தான் ராதாவைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட்டார். *சமயம் வாய்க்கும்போது ஸ்ரீதரனிடம் சொல்லி விரைவிலேயே அவளுக்குக் கலியாணத்தைப் பண்ணி வைத்து விடவேண்டும்' என்று தீர்மானித்துக் கொண்டார்.
------------
2.14 டாக்டர் வீட்டில் பவானி
அப்பொழுது புரட்டாசி மாதம். எல்லோர் வீட்டிலும் கொலு வைத்திருந்தார்கள். சுமதியின் வீட்டிலும் பொம்மைக் கொலு வைக்கப்பட்டிருந்தது. பவானி இந்தப் பண்டிடையை வெகு உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்று நினைத்து, தினமும் வித விதமாகச் சுமதியை அலங்கரித்தாள். தினுசு தினுசாகப் பலகாரங்கள் செய்தாள். இரவு பத்து மணி வரையில் குழந்தைகள் வீடு வீடாகச் சென்று சுண்டலும், பழங் களும் வாங்கி வந்தனர். கோவிலுக்குப் போகும் ஸ்திரீகளின் கூட்டம் தெருக்களில் நிறைந்திருந்தது. அங்கங்கே சங்கீதக் கச்சேரிகள் நடந்தன. எல்லோர் வீட்டிலிருந்தும் கணீரென்று பாட்டுக்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. சுமதியுடன். பாலுவும், ஊர் அழைக்கச் சென்றான். கொஞ்சம் பெரியவனாக பாலு இப்போது வளர்ந்திருந்தாலும், பழைய துடுக்குத் தனங்கள் அவனை விட்டுப் போகவில்லை.
“இங்கே பார் சுமதி! கொட்டை கொட்டையாகக் கண்களை வைத்துக் கொண்டு நிற்கிறதே இந்த வெள்ளைக்கார பொம்மை, அது உன்னைப் போலவே இருக்கிறது" என்றான் பாலு சிரித்துக் கொண்டே.
"என் மூஞ்சி இப்படித்தானாடா யிருக்கிறது?" என்று சுமதி கோபித்துக் கொண்டு கேட்டாள்.
”இல்லை சுமதி! உன் கண்கள் அப்படித்தானே இருக்கு?" சுமதிக்கு பாலுவுடன் பிறத்தியார் வீட்டில் சண்டை போட்டுக் கொள்ளப் பிடிக்கவில்லை, ”சரி, வாடா பாலு!" என்று சொல்லிக் கொண்டே சுமதி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. கறுத்த மேகங்கள் வானவெளி எங்கும் திரண்டு இருந்தன. ' பளீர் பளீர்!' என்று மின்னல்கள் கீற்றுக் கீற்றாக வானத்தில் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரை பளிச்சிட்டன. பேய்க் காற்று ஒன்று சுழன்று சுழன்று அடித்தது . சட சடவென்று மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன.
பாலு பின்னால் வருகிறானா என்பதைக் கூடக் கவனியாமல் சுமதி விடு விடுவென்று நடந்து வீட்டுக்குப் போய் விட்டாள். பாலு, மழை பெய்வதைச் சிறிது நேரம் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ஒரு மரத்தடியில் நின்றான். பிறகு, மழை பலத்து விடவே அவசரமாக வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவர்கள் வீட்டு வாசலில் வாழைப்பழத் தோல்கள் மழை நீரில் நனைந்து கொண்டே இருந்தன. ஓடுகிற வேகத்தில் பாலு அவற்றில் சறுக்கிக் கீழே விழுந்தான். கீழே மண்ணில் புதைந்து கிடந்த சிறு கூழாங்கல்-கூர்மையானது-அவன் நெற்றியில் குத்தி விட்டது. ரத்தம் குபுகுபுவென்று வடித்தது.
தெருவில் பாலு வருகிறானா என்று பார்க்க வந்த பவானி, இதைப் பார்த்ததும் திகைத்து விட்டாள். அப்படியே அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்தாள். வீட்டில் கோமதி இல்லை, மஞ்சள் குங்குமத்துக்காக யார் வீட்டுக்கோ போயிருந்தாள். நெற்றியில் வடியும் ரத்தத்தை அலம்பி, ஒரு ஈரத் துணியால் சுற்றிக் கட்டினாள். வெளியே மழை மிகவும் குறைந்திருந்தது ; சிறு தூறல்கள் மட்டுமே விழுந்து கொண்டு இருந்தன.
”சுமதி! பாலுவை நான் டாக்டர் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். வீட்டைப் பார்த்துக் கொள்', என்று கூறிவிட்டுப் பவானி, அவனை அழைத்துக் கொண்டு டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டை அடைந்தாள்.
ஸ்ரீதரனின் வீட்டில் ஜெயஸ்ரீ, பாலுவைப் பார்த்ததும் .. ”என்னடா பாலு! நெற்றியிலே என்ன?" என்று கேட்டாள்.
”மழையிலே ஓடி வந்தேன். விழுந்து விட்டேன்”', என்றான் பாலு.
அவனுக்குத் தலையை 'விண் விண்' என்று வலித்தது. ஜெயஸ்ரீ ஓடிப் போய் உள்ளே இருந்த தன் தகப்பனாரை அழைத்து வந்தாள். நெற்றிக் காயத்துக்கு மருந்து வைத்துக் கட்டினார் டாக்டர் ஸ்ரீதரன். பிறகு கைகளை அலம்பிக் கொண்டே, "இந்த ஊருக்கு நீங்கள் வந்து ஒரு வருஷமாகிறது. நம் வீட்டுப் பக்கமே வருவதில்லை. பாலு அடிபட்டுக் கொண்டதால் இன்று வந்திருக்கிறார்கள்? வெளியிலேயே அதிகமாக எங்கேயும் போக மாட்டீர்களோ?" என்று கேட்டார்.
”போவதில்லை. வீட்டிலேயே வேலை சரியாகப் போய் விடுகிறது. ஒழிந்த வேளைகளில் எதையாவது படித்துக் கொண்டே இருப்பேன்" என்றாள் பவானி.
பவானி வீட்டைச் சுற்று முற்றும் கவனித்தாள். அந்தச் சுவரில் பெரிய அளவில் ஒரு பெண்மணியின் படம் மாட்டப்பட்டிருந்தது. சாந்தமும், புன்னகையும் தவழும் அவள் முகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. ஸ்ரீதரனின் மனைவியின் படம் என்று பவானி ஊகித்துக் கொண்டாள்.
தயக்கத்துடன் பாலுவின் பக்கத்தில் நிற்கும் பவானியைப் பார்த்து ஸ்ரீதரன். ”வாருங்கள். உள்ளே போகலாம். இந்த வீட்டில் ஒரு பெரியவர் இருக்கிறார். அவரும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்" என்று கூறியவாறு முன்னே சென்றார். ஆஜானுபாஹுவான அவர் தோற்றத்தைப் பார்த்து வியந்தாள் பவானி. நல்ல சிவந்த நிறம். உயரத்துக் கேற்ற பருமன்; நீண்ட கூர்மையான நாசி, ஆழ்ந்து சிந்திக்கும் அமைதியான கண்கள். குழந்தையைப் போன்ற களங்கமில்லாத மனம்.
சாப்பிடும் கூடத்தை மூவரும் அடைந்தார்கள். இதற்குள்ளாகவே ஜெயஸ்ரீ, பவானி வந்திருப்பதைச் சுவாமிநாதனுக்குத் தெரிவித்து விட்டாள். அவள் வருவதைக் கவனித்த சுவாமிநாதன் ’வாம்மா ! நீ இந்தப் பக்கமே வருவதில்லையே' என்று அழைத்துப் பேசினார். கொஞ்சம் ஓவல்டின் கரைத்து மேஜை மீது தயாராக இரண்டு தம்ளர்களில் வைத்திருந்தார். ”சாப்பிடு குழந்தை" என்று பாலுவிடமும் பவானி யிடமும் கொடுத்தார்.
”எதற்கு? அதுவும் மணி எட்டடிக்கப் போகிறது. வேளை சமயம் இல்லாமல் சாப்பிடுவதா?" என்று சிரித்துக் கொண்டே கூறினாள் பவானி.
சுவாமிநாதன் அதற்குப் பதில் சொன்னார் : ”இல்லாவிட்டால் நீ சாவகாசமாய் எங்கே எங்கள் வீட்டுக்கு வரப் போகிறாய்? நீ தான் வெளியில் அதிகம் வருவதே இல்லையே..... அதுவும் நல்லது தான் அம்மா. கண்ட வேளைகளில் பெண்கள் வெளியில் திரியாமல் இருந்தால் தான் அவர்களுக்கு மதிப்பும், கௌரவமும் அதிகம் ஏற்படும்..."
பவானி ஒன்றும் பேசாமல் சுவாமிநாதன் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். பிறகு. ”நான் வருகிறேன். ராதா எங்கே காணோம்? நம் வீட்டுப் பக்கமே வருவதில்லை. அவளைப் பார்த்து மூன்று நான்கு மாசங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மன்னிகூட அவள் வருவதில்லை என்று குறைப்படுகிறாள்" என்று கூறியவாறு கிளம்பினாள்.
சுவாமி நாதனின் முகம் வாட்டமடைந்தது. ”ராதாவா? அவளுக்கு ஏகப்பட்ட அலுவல்! அவள் இல்லாமல் ஊரில் ஒரு நாடகம், சங்கீதக் கச்சேரி, சினிமா சங்கங்கள், கடற்கரை ஒன்றும் வளராதாம். எங்கே யாவது எதற்காவது போயிருப்பாள். அவளை இப்படியே விடக் கூடாதம்மா. சீக்கிரத்திலேயே ஒரு கல்யாணத்தை பண்ணி ஆக வேண்டும்" என்றார் சுவாமிநாதன்.
"அதுவும் சாமானியமாக நடந்து விடுகிற காரியமா சுவாமி? ராதாவுக்கு ஒரு புருஷனைத் தேடிப் பிடித்து நீங்களும், நானும் கல்யாணம் பண்ணி வைத்துவிட முடியுமா? அவளே தேர்ந்தெடுத்துச் சொல்லப் போகிற வனைத்தான் நாம் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கும்படி இருக்கும்" என்றார் ஸ்ரீதரன்.
”அவ்வளவு தூரம் அந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? நீங்கள் இதுவரைக்கும் கொடுத்திருக்கிற செல்லம் போதும். அந்த அளவுக்கு வேறு இடம் கொடுத்து விடாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார் சுவாமிநாதன்.
பவானி வீடு திரும்பும் போது ராதாவைப் பற்றிப் பலவிதமாக எண்ணமிட்டாள். பாவம், அந்தப் பெண்ணைச் சரியான முறையில் வளர்க்கத் தாயும் தந்தையும் இல்லை. உடன் பிறந்தவர் தம் தொழில் ஒன்றையே பிரதானமாகக் கொண்டவர். அத்துடன் குடும்ப வாழ்க்கையில் அவ்வளவு அனுபவம் அடையாதவர். நல்ல இடத்தில் ராதா வாழ்க்கைப்பட்டுச் சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்தாள்.
-----------
2. 15. காதல் வேகம் ...!
இங்கே வீட்டில், சுவாமிநாதன் ராதாவைப் பற்றிக் கவலையுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சென்னை நகரின் பிரபலமான ஹோட்டல் அறை ஒன்றில் ராதாவும் மூர்த்தியும் உட்கார்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . அடையாறு பக்கம் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்கக் கிளம்பியவர்கள், மழை பிடித்துக் கொள்ளவே நேராக டவுனுக்குச் சென்று, ஹோட்டல் ஒன்றில் நுழைந்தார்கள். அங்கே விதம் விதமாகத் திரியும் ’நாகரிகம்' மிகுந்த ஆடவர்களும், பெண்களும் கூட்டங் கூட்டமாக வளைய வந்தனர். பீங்கான் கோப் பைகளின் சத்தமும், கலீரென்று எழும் சிரிப்பும், 'கம்' மென்று எழும் வாசனையும் அதை சுவர்க்க லோகமாக மாற்றி இருந்தது . அண்மையில் சாக்கடை ஓரங்களில், மழைத் தண்ணீர் சொட்ட வாடும் மக்களும் இருக்கிறார் கள் என்பதை ஹோட்டலுக்குள் இருந்த ஒரு சிறு கூட்டம் அறவே மறந்து இருந்தது என்று கூடச் சொல்லலாம்.
மூர்த்தியும் ராதாவும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். சற்றுத் தொலைவில் நாகராஜன் தன் வியாபார நண்பருடன் பேசிக்கொண்டே ஒரு மேஜை அருகில் உட்கார்ந்திருந்தான். ராதா இரண்டடி பின் வாங்கினான்.
"இப்படி வாருங்கள். அவர் என் அண்ணாவுக்குத் தெரிந்தவர். நாம் இப்படி வெளியில் சுற்றுவதைப் பார்த்தால் ஏதாவது..." என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றாள் ராதா மறுபடியும்.
"ஓகோ! யார் அவர்?" என்று கேட்டான் மூர்த்தி.
'கோடம்பாக்கத்தில் தான் இருக்கிறார். ரொம்பவும் தெரிந்தவர்: அவர் மனைவி ஒரு நிரந்தர நோயாளி. அவருக்கு ஒரு தங்கை இருக்கிறாள். விதவை. பார்ப்ப தற்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள்....பாவம்..."
"அப்படியா? இவ்வளவு 'சோஷியலாக' இருக்கிற மனுஷர், தங்கைக்கு ஏன் மறுமணம் செய்து வைக்கக் கூடாது?" |
"அவர் செய்து வைத்தாலும், தங்கை சம்மதிக்க பாட்டாளே. அவள் என்னவோ இப்பொழுதே அறுபது வயசு பாட்டி மாதிரி பூஜையும், பக்தியும் பிரமாதப் படுத்துகிறாள். எனக்கு அதெல்லாம் கட்டோடு பிடிப்பதில்லை .. "
"பிடிக்காவிட்டால் போகிறது."
”உனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே.... இனிமேல் தானே ஆகப்போகிறது. பிறகு தான் பக்தி, அது இது என்று ஏற்படும்."
ராதா. வாசல் திரையைத் தள்ளிக் கொண்டே வெளியே எட்டிப் பார்த்தாள். நாகராஜன் அங்குமில்லை.
"வாருங்கள் போகலாம்..." என்று கூறியதும் மூர்த்தியும், அவளும் வெளியே வந்தார்கள். மழை பெய்து தரையில் ஒரு ஓரமாக ஜலம் தேங்கிக் கொண் டிருந்தது . தவறிப் போய் ராதா தண்ணீரில் காலை வைத்துவிட்டாள். 'ஐயையோ!" என்று சொல்லிக் கொண்டே அவள் தண்ணீரைத் தாண்டப் போக மூர்த்தி அவள் கீழே விழுந்து விடப் போகிறாளே என்று கைகளைப் பலமாகப் பிடித்துக் கொண்டான்.
வெகு சமீபத்தில், வக்கீல் வேதாந்தத்தின் கார் நின்று கொண்டிருந்தது. பழக்கமான குரல் அருகில் கேட்கவே. டாக்டர் காமாட்சி வெளியே எட்டிப் பார்த்தாள். ராதாவை அவளுக்குத் தெரியும். 'என்ன அப்பா இது? டாக்டர் ஸ்ரீதரனின் தங்கை தானே, அந்தப் பெண்? கூட இருக்கிற பையன் யார் என்று தெரியவில்லையே? உம்... ”
வேதாந்தம் வெளியே பார்த்தார். மூர்த்தியும் ராதாவும் தொலைவில் சென்று விட்டார்கள்.
"அவள் தான் அம்மா! அந்தப் பையன் யார் என்று தெரியவில்லையே! அறியாத பெண் இப்படி இந்த ஊரில் தெருவில் ... டாக்டர் ஸ்ரீதரனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. வயசு வந்த பெண்ணை எதற்கு வீட்டில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? பணமா இல்லை? காலாகாலத்தில் கல்யாணத்தைப் பண்ணி விடுவது தானே... அவன் யாராக இருக்கும்?..." என்று திருப்பித் திருப்பிக் கேட்டார் வேதாந்தம்.
"யாரோ" என்று சற்று கோபத்துடன் சொன்னாள்.
விஷயம் விபரீதமாக வளர்ந்து கொண்டே போயிற்று. வீட்டாருக்குத் தெரியாமல் ராதாவும், மூர்த்தியும் கடற்கரையில் சந்தித்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். நாடகம் பார்த்தார்கள். ஹோட்டலுக்குப் போனார்கள். இவர்களின் காதல் - நாடகம் ரகசியமாக நடக்கிறது என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
சென்னையில் தன் தமையனைத் தெரிந்தவர்கள் அநேகர் என்பதை ராதா அறவே மறந்து போனாள். காதலின் வேகம் எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுமோ என்னவோ ! மூர்த்திக்குக் கவலை இல்லை. அவனை அந்த ஊரில் தெரிந்தவர்கள் கோபியும் அவன் காரியாலயத்தைச் சேர்ந்த ஒரிருவரும்தான்.
டாக்ஸியில் போய்க் கொண்டிருக்கும் போது மூர்த்தியை ராதா கேட்டாள்: ”நீங்கள் எங்கள் வீட்டுக்கு ஒரு நாள் வாருங்களேன். அண்ணாவுக்கு அறிமுகப் படுத்துகிறேன்" என்றாள்.
”எதற்கு?" என்றான் மூர்த்தி.
"எதற்கா? நாம் இப்படியே இருந்து விட முடியுமா? நாலு பேர் அறியக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டாமா? இப்படி ஒளிந்து ஒளிந்து நடப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை ..."
”கல்யாணமா? அதற்கு இப்போது என்ன அவசரம்?" ராதா கலீரென்று சிரித்தாள். பின்னே அறுபது வயசிலா கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள்?"
"வருகிறேன் ராதா! உன் வீட்டில் இருக்கிறாரே அந்தக் கிழவர், அவரைக் கண்டாலே எனக்குப் பிடிக்க வில்லை !"
”உங்களுக்கு. என்னைத்தானே பிடிக்க வேண்டும்! அந்தக் கிழவரை இல்லையே? அவர் பாட்டுக்கு இருந்து விட்டுப் போகிறார்" என்றாள் ராதா சிரிப்புக்கிடையே.
முன்னைப் போல கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கவில்லை. வீட்டுக்குச் சற்றுத் தொலை விலேயே நின்றது ராதா இறங்கினாள். பிறகு . 'டாடா' ’பை பை' என்று கைக் குட்டையை ஆட்டிக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள்.
இதைக் ' காம்பவுண்ட்' சுவர் ஓரமாக மறைந்திருந்து கவனித்த சுவாமிநாதன், ராதா உள்ளே சென்றதும் பின்னால் சன்றார்.
”எங்கேயம்மா போய்விட்டு வருகிறாய்?" என்று கேட்டார்.
”கொலுவுக்கு. வருகிற வழியிலேயே சுண்டலை எல்லாம் தின்று விட்டேன்!" என்று பச்சையாகப் புளுகினாள் ராதா.
காதலின் வேகம் அப்படிப் பட்டது போலும்!
--------------
2. 16. செல்வப்பெண் ராதா
வக்கீல் வேதாந்தம் தம் வீட்டு அறையில் மேலும் கீழுமாக உலாவிக் கொண்டிருந்தார். பத்து தினங்களுக்கு முன்பு ஹோட்டல் வாசலில் ராதாவையும், மூர்த்தியையும் பார்த்த அவர். அதன் பிறகு ஒரு சினிமாவிலும் மெரினா கடற்கரையிலும், வேறொரு ஹோட்டலிலும் பார்த்து விட்டார். அந்தப் பிள்ளை யார்?" என்று எப்படியாவது விசாரித்துத் தகவல் சேகரிக்க முயன்றார். இதற்குள் ஊரில் ராதாவைப் பற்றிப் பல தினுசாகப் பேச்சுக்கள் அடிப்பட்டன. அதனால் மேலும் அவர் இதைப்பற்றி யாரிடமும் விசாரிக்கக் கூடாது என்று தீர்மானித்து. தாமே டாக்டர் ஸ்ரீதரனிடம் இதைப் பற்றிப் பேசி ஒரு ஏற்பாடு செய்யவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். இதை அவர் தம் மகளிடம் கூறியதும், ”அப்படித்தான் செய்ய வேண்டும் அப்பா ! நீங்களே இதைப் பற்றி அவரிடம் சொல்லுங்கள். நான் கூறினால் அவ்வளவு நன்றாக இருக்காது. நீங்கள் வயதிலும், அனுபவத்திலும் பெரியவர். நீங்கள் சொல்வது தான் நல்லது" என்றாள் காமாட்சி.
வேதாந்தத்துக்கு அவள் கூறுவது சரியென்று தோன் றியது. ஆகவே காரில் டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டை நோக்கிக் கிளம்பினார் அவர், அங்கு அவர் போய்ச் சேர்ந்தபோது டாக்டர் வீட்டில் இல்லை. சுவாமி நாதன் மட்டுமே உட்கார்ந்திருந்தார். சில மாதங்களுக்கு முன் பார்த்தபோது அவர் தெம்பாகவும் திடமாகவும் காணப்பட்டார். திடீரென்று வயசு அதிகமாகி விட்டவர் போல் அவர் தோற்றத்தில் ஒரு மாறுதல் ஏற்பட் டிருந்தது. வேதாந்தத்தைப் பார்த்ததும் அவர் வாருங்கள். ரொம்ப நாளாயிற்று உங்களைப் பார்த்து" என்று வரவேற்று. அவரை உட்காரும்படி கூறினார்.
"எங்கே இப்படி? டாக்டரைப் பார்க்க வந்தீர்களா? வீட்டில் மகள் சௌக்கியந்தானே?" என்று விசாரித்தார் சுவாமிநாதன்.
" எல்லோரும் சௌக்கியமாகத்தான் இருக்கிறோம். டாக்டரைப் பார்க்க வேண்டும் என்றுதான் வந்தேன். சில விஷயங்கள் பேச வேண்டும்..."
”அவர் எங்கே வீட்டிலிருக்கிறார்? குடும்பப் பொறுப்பு ஒன்றையுமே அவர் வகிக்கிறதில்லை. ’நீ என்ன செய்கிறாய்? குடும்பத்துக்கு எவ்வளவு செலவாகிறது' என்றெல்லாம் கேட்பதில்லை. நானாகவே வரவு செலவை அவரிடம் ஒப்பித்தால் இருக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ன அவசரம் இப்போது என்கிறார்."
வேதாந்தம் யோசனையில் மூழ்கி உட்கார்ந்திருந்தார். பிறகு. ஆமாம். வயசு தங்கை ஒருத்தி வீட்டில் இருக்கிறாளே இதையெல்லாம் அவளைக் கவனிக்கச் சொல்லக் கூடாதா?" என்று கேட்டார்.
"ராதாவா? அந்தப் பெண், தான் ஒரு குடும்பத்தில் பிறந்தவள் என்றோ , அதைப் பற்றிய பொறுப்பு தனக்கு உண்டு என்றோ நடந்து கொள்ளவில்லை. இஷ்டப்படி வெளியில் போகிறதும், வருகிறதும்." சுவாமிநாதன் இவ்விதம் ராதாவைப் பற்றித்தானே அன்னியரிடம் கூறியதை நினைத்து மனதுக்குள் வருந்தினார்.
"அதைத்தான் கேட்க வந்தேன் ஐயா! வயசு வந்த பெண்ணை ஒரு இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடவேண்டும் - வீட்டிலே அதைப் போற்றி வளர்க்க- அதாவது நாலும் தெரியும்படி வளர்க்க- எப்பொழுது ஒரு பெண் துணை இல்லையோ நாம் ஏன் அதைக் கன்னியாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?" வேதாந்தம், சிறிது உணர்ச்சி வசப்பட்டே பேசினார்.
"டாக்டருக்கு அந்த எண்ணமே இன்னும் ஏற்பட வில்லை. தம் மகள் ஜெயஸ்ரீயைப் போல் ராதாவும் ஒரு குழந்தை என்கிற நினைவு அவருக்கு."
வேதாந்தம் விஷயத்தைப் பச்சையாகக் கூறவில்லை. யாரோ ஒரு பிள்ளையுடன் அந்தக் குழந்தையைப் பார்த்தேன். ஒரு இடத்தில் மட்டும் இல்லை. பல இடங்களிலும் பார்த்தேன். என் மனசுக்கு ஒன்றும் சரி யாகத் தோன்றவில்லை.
சுவாமிநாதன் மௌனமாகவே உட்கார்ந்திருந்தார். அவர் மனத்தில் வேதனை நிறைந்திருக்கிறது. பேச முடியாமல் உணர்ச்சிகளை மனத்தில் புதைத்துக் கொண்டு அவர் உட்கார்ந்திருக்கிறார் என்பது வேதாந்தத்துக்குப் புரிந்தது.
“நான் இப்படிச் சொல்கிறேனே என்று வருத்தப் படாதீர்கள். டாக்டருடைய குடும்ப நண்பன் நான். அவரைச் சிறு பிராயத்திலிருந்து அறிந்தவன். இந்தக் குழந்தை ராதாவுக்கு காப்பிட்ட அன்று என் மனைவி வந்திருக்கிறாள் இந்த வீட்டுக்கு!"
“அப்படியெல்லாம் உங்களை நான் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை. மனசைச் சங்கடப்படுத்தும் விஷயமாக இருக்கவே எனக்கு வருத்தமாக இருக்கிறது. டாக்டர் வந்ததும் அவரிடம் கூறி ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்" என்றார் சுவாமிநாதன். வேதாந்தம் மனத்தில் இருந்த பாரம் நீங்கப்பட்டவராகக் கிளம்பிச் சென்றார்.
சுவாமிநாதன் அந்த வீட்டுச் சமையற்காரர் மட்டும் அல்ல. அந்தக் குடும்பத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்தரமான ஒரு நண்பர் அவர். வீட்டிலே பெண் துணை இல்லாமல் இருக்கையில் தாயும் தந்தையுமாக இருந்து. இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து வருகிறவர். 'கல்லூரியில் சிறு சம்பவம் நடந்தாலும். தன்னிடம் ஒன்றுவிடாமல் கூறும் ராதாதான் எப்படி மாறிவிட் டாள். ஒவ்வொன்றையும் மறைக்க அவளுக்குச் சாமர்த் தியம் வந்து விட்டது. இப்படி மறைத்து வைத்துப் பாழும் பெண் ஏதாவது ஆபத்தில், மானக்கேட்டில் சிக்கிக் கொண்டுவிட்டால் என்ன பண்ணுவது? டாக்டர் பூதானின் நற்பெயரும், அவன் புகழும் என்னாவது? ராதாவின் வாழ்க்கை தான் என்ன ஆகும்?" என்று (வேதனை துடிக்க நினைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார் அவர்.
வெளியே சென்றிருந்த டாக்டர் வீட்டுக்கு வந்ததும் சுவாமி நாதன் உற்சாகம் இல்லாமலேயே அவருக்கு உணவு பரிமாறினார். தினம் டிஸ் பென்ஸரி'க்கு வரும் நோயாளிகளைப் பற்றியும் மற்ற விஷயங்களையும் விசாரித்து உற்சாகத்துடன் பேசும் சுவாமிநாதன், மௌனமாக எதிலுமே அக்கறை இல்லாதவரைப்போல இருப்பதைப் பார்த்து ஸ்ரீதரன், "ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்?" என்று விசாரித்தார்.
சுவாமிநாதன் வேதாந்தம் வந்து போனதை அறிவித்தார். பிறகு அவர் ராதாவைப் பற்றிச் சொல்லியதையும் நாசூக்காகக் குறிப்பிட்டார். ”இப்படியே நாம் இருந்து விட்டால் ராதாவின் கதி எப்படி ஆதமோ" என்று வருத்தம் தொனிக்க அவர் கூறியபோது ஸ்ரீதரனே சுவாமிநாதன் ராதாவிடம் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை நினைத்து ஆச்சரியம் அடைந்தார். அந்த ஆச்சரியம் சடுதியில் மறைந்து விட்டது. தான் இவ்வளவு காலம் வரையில் ராதாவின் கல்யாண விஷயத்தில் அக்கறை செலுத்தாது இருந்த தவறை உணர்த்து ராதாவையே அவள் விரும்பும் பிள்ளையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள அவளைத் தேடிச் சென்றார்.
மாடி அறையில் ராதா சோபா ஒன்றில் ஒய்யாரமாகச் சாய்ந்திருந்தாள். தலை நிறையச் சூடி இருந்த மல்லிகை மலர்களின் மனம் 'கம்' மென்று எழுந்தது. வெள்ளையில் சரிகைக்கரை போட்டிருந்த படவை உடுத்தி, இளம் சிவப்பு வர்ணச் 'சோளி' அணிந்திருந்தாள் அவள். முதுகில் புரளும் பின்னலை எடுத்து முன்புறம் போட்டு, அதில் கட்டியிருந்த ரிப்பனை முறுக்கிய படி மெல்லிய குரலில் பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தாள் அவள்.
காதலெனும் தீவினிலே ராதே ! ராதே - அன்று
கண்டெடுத்த பெண்மணியே ராதே ! ராதே!
காதலெனும் சோலையிலே ராதே ! ராதே - நின்ற
கற்பகமாம் பூந்தருவே ராதே ! ராதே!
என்னும் பாட்டு மெதுவாக இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது .
ஸ்ரீதரன் சிறிது நேரம் பாட்டில் லயித்து அங்கேயே நின்றிருந்தார். பாட்டு முடிந்ததும் அறைக்குள் சென்று, அவள் எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தார்.
திடீரென்று அண்ணா வந்ததை அறிந்ததும் ராதா திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள். அவள் சற்று முன் பாடிய பாட்டை நினைத்தபோது அவளுக்கே வெட்கமாக இருந்தது.
ஸ்ரீதரன் தன் சகோதரியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே ”என்ன அம்மா! என்னைக் கண்டதும் பாட்டை நிறுத்தி விட்டாய்?" என்று கேட்டார்.
”பாட்டா?... என்னவோ அந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது."
”என்ன பாட்டு அது? 'காதலெனுந் தீவினிலே ராதே ராதே!' என்ற பாட்டல்லவா? காதலைப் பற்றிக் கூட உனக்குத் தெரிந்து விட்டது!"
”போங்கள் அண்ணா! என்னைக் கேலி செய்யாதீர்கள்!" என்றாள் ராதா. அவள் முகம் வெட்கத்தால் சிவந்து காணப்பட்டது.
"எனம்மா சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ணி விடலாம் என்று நினைக்கிறேன். உன்னைப் பற்றி ஒரு விஷயமும் கேள்விப் பட்டேன் ..”
"என்ன?" என்பது போல் ராதா அவரைப் பார்த்தாள்.
”நீ யாருடனோ சிநேகிதமாக இருக்கிறாயாம். அடிக்கடி அவனுடன் வெளியில் போவதாகக் கேள்விப் பட்டேன்..."
ஸ்ரீதரன் விஷயத்தை மறைக்காமல், சுற்றி வளைத்துப் பேசாமல், நேராகவே கேட்டுவிட்டார்.
ராதா முதலில் பதில் கூறவே தயங்கினாள். பிறகு வெட்கத்தோடு தலையைக் குனிந்து கொண்டு. ”வாஸ்தவம் தான் அண்ணா ! அவரை எனக்குப் பிடித்திருக்கிறது..." என்றாள்.
"சரிதான் அம்மா ! அந்த ' அவர்' யார் என்ன வென்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். நம் வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பது தானே?"
ராதா தனக்குள் மெதுவாகக் சிரித்துக்கொண்டாள். ”ஆகட்டும் அண்ணா , சீக்கிரமே அழைத்து வருகிறேன்." ஸ்ரீதரன் அறையை விட்டு வெளியே போனதும் ராதாவின் உற்சாகம் கரை புரண்டு ஓட ஆரம்பித்தது.
”மாதரசே செல்வப் பெண்ணே ராதே! ராதோ..."
என்று தொடர்ந்து பாட ஆரம்பித்தாள். அவள் செல்வப் பெண் என்பதை நினைத்தபோது அவள் மனம் இறுமாப்பு அடைந்தது. தன்னைத் தேடி. தன் மனத்தில் வரித்திருப்பவனைப் பற்றிய விவரங்களை அறிய வந்த ஸ்ரீதரனுக்குத் தான் செல்வத் தங்கைதான் என்று நினைத்து ஆனந்தமடைந்தாள்.
------------
2. 17. கபடச் சிரிப்பு
சுமதி அன்று பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போதே சோர்வுடன் வந்தாள். நேராக மாடிக்குச் சென்று கட்டிலில் படுத்து விட்டாள் அவள். மணி ஐந்தரைக்கு மேல் ஆகியும் சுமதி பள்ளிக்கூடத்திலிருந்து வரவில்லையே என்ற கவலையினால் பவானி தோட்டக்காரன் கோபாலனை விசாரித்தாள். மாலை நாலரை மணிக்கே சுமதி வந்து விட்டதாகக் தெரிவித்தான் அவன். கோமதி துணிமணிகள் வாங்க கடைத்தெருவுக்குச் சென்றிருந்தாள். பவானி. உள்ளம் வாட மாடியில் சென்று பார்த்தாள் அங்கே கட்டிலில் படுத்திருந்தாள் சுமதி. மெதுவாக அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் பவானி. உடம்பு நெருப்பாகச் சுட்டது. லேசான முனகலுடன் சுமதி கண்ணை மூடிப் படுத்திருந்தாள். 'நாலைந்து நாட்களாகச் சரிவரச் சாப்பிடாமல். எதிலும் உற்சாகம் இல்லாமல் அவள் இருந்தது பவானிக்கு அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. இதைப்பற்றி கோமதியிடம் அவள் இரண்டு மூன்று தடவைகள் சொன்னாள். "எல்லாம் சாப்பிடுவாள் இதற்கெல்லாம் ஒரு வைத்தியமா?" என்று கூறிவிட்டு கோமதி அலட்சியமாக இருந்து விட்டாள்.
பவானி, கட்டிலில் கிடந்த போர்வையை எடுத்து உதறிச் சுமதிக்குப் போர்த்தி விட்டாள்.
கீழே சென்று சிறிது காப்பியைச் சுட வைத்து எடுத்து வந்தாள். மெதுவாக, “சுமதி! சுமதி! இதைச் சாப்படு அம்மா. உனக்கு உடம்புக்கு என்ன?" என்று கேட்டாள்.
யாரோ கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் இருந்தது சுமதி பேசிய வார்த்தைகள். "அத்தை! எனக்குத் தலையை வலிக்கிறது. எங்கோ போகிற மாதிரி இருக்கிறது அத்தை. டாக்டரை வர வழையேன்...."
பவானி அவசரமாக டாக்டர் ஸ்ரீதரனைப் போனில் கூப்பிட்டாள். ”குழந்தைக்கு ஜுரம் அடிக்கிறது. நூற்று மூன்றுக்கு மேலே இருக்கலாம். உடனே வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாள்.
காலையில் டாக்டரிடம் சுவாமி நாதன் ராதாவின் விஷயத்தைக் கூறினார். அன்று மாலையே அவர்கள் வீட்டுக்கு ராதா. மூர்த்தியை யாரும் எதிர்பாராத விதமாக அழைத்து வந்தாள்.
"அண்ணா ! இவர் தான் மூர்த்தி என்கிறவர்" என்று கூறி, அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தைப் பற்றியும் தெரிவித்தாள். டாக்டர் ஸ்ரீதரன் மூர்த்தியை ஒரு கணம் நிதானித்து நிமிர்ந்து பார்த்தார்.
'உட்காருங்கள். நீங்கள் இருப்பது சென்னையிலா? பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்?" என்றும் விசாரித்தார்.
இதற்குள் சுவாமிநாதன் ஆவலே உருவாக அவசரத்துடன் ஹாலுக்கு வந்தார். ஆசையுடனும், ஆர்வத்துட னும் தான் வளர்த்த ராதாவின் கரம்பிடிக்கப் போகும் புருஷனைப் பார்த்தார். டாக்டர் ஸ்ரீதரனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்த மூர்த்தி, சுவாமிநாதனைப் பார்த்த தும் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.
"ஆமாம், உங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் இருக்கிறார்களா? கல்யாண விஷயமாக யாரைக் கலந்து பேச வேண்டும்? விலாசம் கொடுங்கள். எழுதுகிறேன்" என்று கேட்டார் ஸ்ரீதரன்.
மூர்த்தி ஒரு மாதிரியாகச் சிரித்தான்.
"எனக்குத் தாய் தந்தை இல்லை. மாமாவும் மாமியும் பசுமலையில் இருக்கிறார்கள். அவர்கள் தான் நெருங்கிய உறவினர்கள்."
"சரி, அவருக்கே எழுதுகிறேன்."
"அதுவும் அவசியமில்லை. மாமா அநேகமாக என் விவகாரங்களில் தலையிட மாட்டார். உனக்குப் பிடித்த பெண்ணாக வந்தால் சொல். கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று தான் சொல்லுவார்."
"அப்போ உங்கள் மனசுக்கு எங்கள் ராதாவைப் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள்" என்றார் டாக்டர் ஸ்ரீதரன். சிரித்துக் கொண்டு எதிரில் உட்கார்ந்திருந்த ராதாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. மேஜை மீது சிற்றுண்டி வைக்கப்பட்டிருந்தது.
நல்ல இடமாகப் பார்த்துக் கல்யாணம் பண்ண வேண்டும். தகுந்த இடத்தில் அவளை ஒப்புவித்து விட வேண்டும் என்றெல்லாம் சுவாமிநாதன் மனத்தில் ஓயாமல் நினைத்துக் கொண்டிருந்தவர். வாயைத் திறந்தும் பல முறைகள் சொல்லி இருக்கிறார். கண் இமைப்பதற்குள் ராதாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகி விட்டது. அடுத்த பத்து தினங்களுக்குள் அவளுக்குக் கல்யாணமாகி விடும். ஆனால் ராதா, மாமியார் வீடு என்று போகத் தேவை இல்லை. மூர்த்தி அவர்களுட னேயே இருந்து விடுவான் என்றெல்லாம் சுவாமிநாதன் நினைத்துக் கொண்டார். ராதாவும் அவர் கணவனும் தன்னுடனேயே இருப்பார்கள் என்பதில் அவருக்கு பரம திருப்தி.
"பலகாரத்தைச் சாப்பிடுங்கள்" என்று உபசரித்தார் சுவாமிநாதன்.
ஹாலில் அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் பவானி, டாக்டர் ஸ்ரீதரனைப் 'போனில்' அழைத்தாள் அவர் அவசரமாக எழுந்து உள்ளே சென்று தம் கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டார்.
நாகராஜன் வீட்டிலிருந்து ' போன்' வந்திருக்கிறது. சுமதிக்கு ஜுரமாம். பவானிதான் 'போன்’ பண்ணியிருக்கிறாள். நான் அப்படியே இன்னும் சில நோயாளிகளைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கூறி, மூர்த்தியிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார் டாக்டர்.
'பவானி' என்கிற பெயர் மூர்த்தியின் மனத்தில் ஒரு வித அதிர்ச்சியைத் தந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த காப்பியை பாதி அப்படியே வைத்துவிட்டுச் சிறிது யோசித்தான். சென்னை நகரிலே எத்தனையோ பவானிகள் இருப்பார்கள். இதென்ன பைத்தியக்காரத் தனம் என்றுகூட அவன் நினைத்தான். இருந்தாலும் அந்தப் பெயர் அவன் மனத்தில் ஒருவித அச்சத்தையும் சலனத்தையும் உண்டாக்கியது.
செல்வமும் சீரும் நிரம்பிய இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஏதாவது தடங்கல் நேர்ந்து விடுமோ என்று அஞ்சினான் மூர்த்தி.
"என்ன, யோசனை பலமாக இருக்கிறது?" என்று கேட்டுக் கொண்டே ராதா அவன் அருகில் வந்து நின்றாள். சுவாமிநாதன் ஏதோ அலுவலாக எழுந்து உள்ளே சென்று விட்டார்.
மூர்த்தியின் கம்பீரமான உருவத்தைப் பார்த்துப் பரவசமெய்தினாள் அந்தப் பேதைப் பெண். அவனுடைய ஆழ்ந்த பார்வையும், கபடச் சிரிப்பும் அவள் மனதுக்குப் பிடித்துப் போயிற்று. அவன் மேல் உண்மையான அன்பு - அதாவது காதல் - ஏற்பட்டது
அவளுக்கு.
காதலர்கள் இருவரும் அந்த வீட்டுத் தோட்டத்து ஊஞ்சலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வெகு நேரம்.
நாகராஜனின் வீட்டில் சுமதிக்கு டாக்டர் ஸ்ரீதரன் வந்து பார்த்தபோது ஜுரம் அதிகமாகத்தான் இருந்தது. மருந்து கொடுத்துவிட்டு. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி பவானியிடம் கூறினார் அவர்.
முதலில் சாதாரண ஜுரம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். நாலைந்து நாட்களுக்கு அப்புறம் ஜுரத்தின் வேகம் அதிகமாயிற்று. தன் நினைவை இழந்து படுக்கையில் கிழித்த நார் போல் கிடந்த சுமதியைப் பவானியும், கோமதியும் நாகராஜனும் கவலையுடன் பார்த்தார்கள்.
ஸ்ரீதரன் 'டைபாய்ட்' ஜூரமாக இருக்கலாம் என்று அபிப்பிராயப் பட்டார். கோமதி வெல வெலத்துப் போய்விட்டாள். அவளுக்குத் தலையைச் சுற்றி மயக்கம் வரும் போல் ஆகி விட்டது.
"அதனால் ஒன்றும் பயமில்லை. மூன்றாவது வாரம் இறங்கிவிடும். பயப்படாதீர்கள்" என்று தைரியம் கூறினார் டாக்டர்.
பவானியின் மனத்தில் சொல்ல முடியாத வேதனை நிரம்பியிருந்தது. வியாதிக்-காரர்களைப் படுக்கையில் படுக்கவைத்துச் சிசுருஷை செய்யவே அவள் பிறந்தவள் போலும்! கணவன் வாசுவைப் பல மாதங்கள் படுக்கையில் வைத்துப் பணிவிடை செய்தாள். அதன் பிறகு கோமதியை மூன்று மாதங்கள் வரையில் கவனித்துக் கொண்டாள். இப்பொழுது சுமதி கிடக்கிறாள். "இந்தப் பாழும் கையினால் யாருக்கும் ஒன்றும் நேரக் கூடாதே!" என்று பவானி மனதுக்குள் குமைந்து போனாள்.
அப்பொழுது இரண்டாவது வாரம் ஆரம்பம். ஜூரம் மும்முரமாக இருந்தது. நோயாளியின் அருகில் அருந்து அல்லும் பகலும் பணி புரிய ஒருவர் தேவை என்பது டாக்டர் ஸ்ரீதரனின் அபிப்பிராயம். இதை அவர் கூறிய போது நாகராஜனும் கோமதியும் ஒரு 'நர்ஸை' ஏற்பாடு செய்யும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், ஜுரவேகத்தில் பிதற்றும் போது கூட அந்தப் பெண், ”அத்தை அத்தை” என்று அழைப்பதைக் கவனித்த டாக்டர். அருகில் நிற்கும் பவானியைப் பார்த்தார். "ஏனம்மா குழந்தை உங்களிடம் அதிகப் பிரியம் போல் தோன்றுகிறதே, உங்களால் அவளைக் கவனித்துக்கொள்ள முடியுமா? இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்து விடலாமா?" என்று கேட்டார்.
பவானி நீர் நிறைந்த கண்களுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். "நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறீர்களோ, அதன் படியே நடந்து கொள்கிறேன். குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டாம்..." என்றாள்.
தன் தமையனின் குலவிளக்கு அணையாமல் இருக்க வேண்டும் ; அந்த வீட்டிலே இன்பம் நிறைய வேண்டும் என்கிற எண்ணம் ஒன்றே பவானியை நர்ஸாக மாற்றி யது. படித்து அவள் அந்தத் தொழிலுக்கு வரா விட்டா லும், மனத்தில் இருந்த ஆவப் அவளை அத் தொழிலைச் சீக்கிரம் கற்றுக் கொள்ளும்படிச் செய்தது.
பவானி நோயாளியின் அறைக்கு அடுத்த தாழ்வாரத்தில் தனக்கென்று படுக்கை அமைத்துக் கொண்டாள். மாடியை விட்டு அவள் கீழே போவதில்லை. பாலுவைக் கூடப் பாராமல் சுமதியின் அருகிலேயே இருந்து கவனித்து வந்தாள்.
--------------------
2. 18. ராதாவின் கல்யாணம்
ராதாவின் கல்யாண வைபவங்கள் அமர்க்களமாக நடைபெற்றன. பசுமலையிலிருந்து கல்யாணராமன். டாக்டர் ஸ்ரீதரனுக்கு கடிதம் எழுதியிருந்தார். 'பெண்ணும் பிள்ளையும் மனம் ஒப்பிக் கல்யாணம் செய்து கொள்கிறபடியால், பெரியவர்களாகிய நாம் அதை உடன் இருந்து நடத்த வேண்டியது ஒன்று தான் செய்யக் கூடியது. மிகவும் சந்தோஷம். நாங்கள் அவசியம் வருகிறோம்'- என்று கடிதம் வந்தது. பிள்ளையைச் சேர்ந்தவர்களில் பெரியவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். பரவாயில்லை என்று சுவாமிநாதனுக்கு ஒரு மகிழ்ச்சி .
இந்தக் கல்யாண ஏற்பாட்டில் நாகராஜன் வீட்டார் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால், எத்தனையோ இரவுகள் பவானி, டாக்டர் ஸ்ரீதரனுடன் போனில் பேசினாள்.
'குழந்தை தூங்காமல் ரொம்பவும் சிரமப்படுகிறாள். என்ன செய்வது?' என்று யோசனை' கேட்டிருக்கிறாள். அவர் கூறியபடியே செய்ததாகவும் பதில் கூறுவாள் பவானி. இந்நிலையில் கோமதியும் நாகராஜனும் மனமிடிந்து உட்கார்ந்திருந்தார்கள். யார் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே இவர்கள் வீட்டுக்குத் தெரிய வில்லை.
மூன்றாவது வாரம் ஆரம்பித்த பிறகு சுமதியின் நிலையில் மாறுதல் ஏற்பட்டது. ஜுரம் தணிந்து கொண்டே வந்தது. கண்ணை விழித்துத் தன் அருகில் நிற்பவர்களைப் பார்த்தாள் அந்தப் பெண். ஜன்னல் ஓரமாக நின்று கவனித்த பாலுவை அவள் கண்கள் கவனித்தன.
"அத்தை, அத்தை !" என்று பலஹீனமான குரலில் கூப்பிட்டாள் அவள்.
"பாலுவை நான் இனிமேல் ஒன்றும் சொல்ல மாட்டேன் அத்தை. அவன் மனசை நோக வைத்தேன், அதற்கு அனுபவித்து விட்டேன்" என்றாள். பெரிய பாட்டி மாதிரி. அந்தப் பன்னிரண்டு வயசுப் பெண்.
பாலுவிற்கு அறைக்குள் ஓடிப் போய்ச் சுமதியின் முகத்தைப் பரிவுடன் தடவிக் கொடுத்து ஆறுதல் கூற வேண்டும் என்று ஆசை. இரண்டடி வைத்து முன்னால் வந்தவனைப் பவானி தடுத்தாள். பாலு! இந்த அறைக்குள் யாரும் வரக்கூடாது அப்பா! ஒருத்திக்கு வந்து படுகிற பாடு போதும்" என்றாள்.
நோயாளியைக் கவனிக்க வந்த டாக்டர். பவானி சொல்வதைக்கேட்டுச் சிறிது அப்படியே நின்றார். மூன்று வாரங்கள் வரையில் கருமமே கண்ணாக இருந்த பவானியைக் கவனித்தார் ஸ்ரீதரன். கொழுகொழுவென்றிருந்த அவள் கன்னங்களின் திரட்சியில் சிறு வாட்டம் கண்டு சுருங்கியிருந்தது. அவளுடைய கருநீல விழிகள்
தூக்கமின்மையால் சிவந்திருந்தன.
"பவானி! இனிமேல் நீங்கள் உங்கள் உடம்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நோயாளி தூங்கும் போது நீங்கள் விழித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நன்றாகத் தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
"குழந்தை இனிமேல் பிழைத்து விடுவாள் இல்லையா டாக்டர்?" என்று கேட்டாள் பவானி.
"பிழைத்து விடுவாள் அம்மா. உங்கள் கைராசி ரொம்பவும் நல்லது."
புன்முறுவலுடன் இப்படிக் கூறிய டாக்டரின் முகத்தைப் பார்த்தாள் பவானி. தெளிவான அந்த முகம் ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருக்கிற மாதிரி தோன்றியது.
அங்கிருந்த ’பேஸினி'ல் கை அலம்பிக் கொண்டே பவானி கொடுத்த துண்டை வாங்கி கைகளை துடைத்து கொண்டார் அவர்.
பொறுமையும் அன்பும் அழகும் உருவான அந்தப் பெண்ணினுடைய சோகச் சித்திரத்தை அவர் மலர் ஆராய்வதில் சிறிது நேரம் சென்றது. இந்தப் பெண்ணின் வாழ்க்கை இப்படியே கழிய வேண்டியது தானா? தமையன் வீட்டுக்கு உழைக்கிறாள். தனக்காக இல்லா பிறருக்காக உழைக்கும் உழைப்பில் இன்பம் காணுகிறாள். பவானியின் உள்ளம் எவ்வளவு விசாலமானது? மாசு மருவற்று இருக்கும் இந்த உள்ளத்தில் 'தனக்கு' என்கிற எண்ணமே இருக்காதா? எத்தனை பெண்கள் இந்தப் பவானியைப்போல நம் நாட்டில் இருக்கிறார்கள்? பெண் என்றால் தியாகம் என்பது தான் பொருளோ?'
கையை மறுபடி மறுபடி அழுத்தித் துடைத்துக் கொண்டே நிற்கும் ஸ்ரீதரனின் முகத்தைப் பார்த்த பவானி, "டாக்டர்!" என்று அழைத்தாள்.
"பவானி உங்களுடன் நான் சாவகாசமாகச் சில! விஷயங்கள் பேசவேண்டும். ஒன்று சொல்ல மறந்து விட்டேன், அடுத்த திங்கட்கிழமை ராதாவுக்கு கல்யாணம். பத்திரிகை வரும். நீங்கள் எல்லோரும் வரவேண்டும். அதற்குள் சுமதிக்கு உடம்பு சரியாகிவிடும். ஆனால் படுக்கையை விட்டு எழுந்திருக்கக்கூடாது”, என்றார் ஸ்ரீதரன்.
அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் வரையில் அவர் வரவில்லை. கல்யாணப் பத்திரிகை மட்டும் வந்தது. மேஜைமீது கிடந்த அந்தப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள் பவானி.
"சௌ. ராதாவை.... சி. சாம்பமூர்த்திக்கு"
விவாகம் செய்து வைப்பதாக இருந்தது. பிள்ளையின் காலஞ் சென்ற தகப்பனாரின் பெயர் மட்டும் காணப் பட்டது. இன்னொரு முக்கியமான விஷயத்தைப்பற்றிக் குறிப்பிட வேண்டும். மூர்த்தி வேலை பார்த்து வந்த ஸ்தாபனத்தைப் பற்றிப் பவானிக்கு ஒன்றும் தெரியாது. ஆகவே சாம்பமூர்த்தியும் மூர்த்தியும் ஒருவர் தான் என்கிற சந்தேகம் பவானிக்கு ஏற்படவே இல்லை.
அன்று மாப்பிள்ளை அழைப்பு . வீட்டிலே எதுவாக இருந்தாலும் ஸ்ரீதரன் டிஸ்பென்சரிக்குப் போகாமல் இருக்க மாட்டார். அன்று காலையிலும் அவர் டிஸ்பென்சரிக்குப் போகும் போது நாகராஜன் வீட்டுக்கு வந்தார். அவசரமாகக் கூடத்தில் நின்று கொண்டே. "வீட்டில் யாரும் பெண்கள் பெரியவர்களாக இல்லை. இருந்தால் வந்து அழைத்திருப்பார்கள். நீங்கள் எல்லோரும் அவசியம் கல்யாணத்துக்கு வர வேண்டும்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
இரவு ஏழு மணிக்கு மேல் மாப்பிள்ளையை ஊர்வலமாகக் காரில் அழைத்து வந்தார்கள். நாகராஜன் வீட்டு வழியாக ஊர்வலம் வருவது தெரிந்ததும், பவானி கோமதி இருவரும் மாடியிலிருந்து ஊர்வலத்தைப் பார்த்தார்கள். ஊர்வலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அருகில் வரவர பவானி மணமகனைக் கூர்ந்து கவனித்தாள். பசுமலையில் சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன்பு பார்த்த மூர்த்தியேதான் இவன்!
”ஆஹா! மனித வாழ்க்கையில் தான் எத்தகைய அதிசயங்கள் நடைபெறுகின்றன. இதில் மூர்த்திக்கு ஏற்பட்ட அதிர்ஷ்டம் தான் என்ன? பணக்கார இடத்தில் படித்த- அழகிய- யுவதியைக் கைப்பிடிக்கும் பாக்கியம் இவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு அதிசயமான விஷயம்? டாக்டர் ஸ்ரீதரன் இந்த மாப்பிள்ளையை எங்கே தேடிப் பிடித்தார்?" என்றெல்லாம் எண்ணை வியந்தாள் பவானி.
"பவானி. மாப்பிள்ளை நன்றாகத்தான் இருக்கிறான்" என்று கோமதி தன் அபிப்பிராயத்தை தெரிவித்தாள்.
ஊர்வலம் மெல்ல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கூட்டத்தில் பார்வதி அம்மாளின் தலை தெரிந்தது . பசுமலையில் தன்னிடம் தாயை விட அன்பாக இருந்த அந்த அம்மாளைப் பார்த்துப் பேசவேண்டும் என்று பவானி ஆசைப்பட்டாள்.
கல்யாணராமன் ஸ்ரீதரனுடன் பேசிச் சிரித்தவாறு சென்றார். இடையில் ஜெயஸ்ரீ பட்டுப் பாவாடையும் தாவணியும் அணிந்து இவர்கள் வீட்டுக்கு வந்தாள். நேராக மாடிக்கு வந்து “மாமி , சுமதி எப்படி இருக்கிறாள்?" என்று விசாரித்தாள். அறைக்குள் எட்டிப் பார்த்து விட்டு, அடுத்த அறையில் உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்த பாலுவைப் பார்த்தாள். பாலு முன்னைவிட இப்போது உயர்ந்து இருந்தான்.
"பாலு. எங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு வாயேன்" என்று அழைத்த ஜெயஸ்ரீயை ஏறிட்டுப் பார்த்தான் அவன் . ஜெயஸ்ரீயும் வளர்ந்து தான் இருந்தாள்.
“உங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்தால் என்ன தருவாய் ஜெயஸ்ரீ?"
”ஆமாம்.குறும்பைப் பார். கல்யாணத்துக்கு வந்தால் என்ன கிடைக்கும்? லட்டும் பாயசமும் கிடைக்கும் ...... நாளைக்கு உனக்கும் சுமதிக்கும் கல்யாணம் ஆகும்போது எனக்கு என்ன தருவாய்?" பின்னலில் வைத்துப் பின்னப்பட்டிருந்த பட்டுக் குஞ்சலங்களை முறுக்கியபடி சிரித்துக் கொண்டே கேட்டாள் ஜெயஸ்ரீ.
குழந்தைகளின் பேச்சுக்கு அர்த்தம் கிடையாதுதான். இருந்தாலும் அறைக்குள் இவற்றைக் கேட்டுக் கொண் டிருந்த பவானிக்கு. ஜெயஸ்ரீ கூறியதைக் கேட்டதும் ஆனந்தம் பொங்கியது.
இதற்குள்ளாக ஜெயஸ்ரீயைக் காணவில்லை என்று ஊர்வலத்தில் யாரோ தேடினார்கள். சிறகடித்துப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியைப் போல் துள்ளி ஓடும் ஜெயஸ்ரீயை ஜன்னல் வழியாகப் பாலு கவனித்தான். ஜெயஸ்ரீயை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ’நல்ல பெண்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அவன்.
----------------
2. 19 கல்யாணம் முடிந்தது
கல்யாண வீட்டில் சாப்பிடும் கூடத்தில் ஒரு அறையில் பவானி. கல்யாணராமன், பார்வதியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
”உங்கள் மருமகன் அதிர்ஷ்டக்காரர். நல்ல இடத்தில் பெண் கிடைத்தது. டாக்டர் ஸ்ரீதரனைப் போல் நல்ல மனிதர்கள் அநேகர் இருக்க மாட்டார்கள்” என்றாள் பவானி.
”கிடைத்ததை வைத்துக் கொண்டு நன்றாக வாழ்ந்தானானால் அவனுக்குச் சுகம் உண்டு" என்றார் கல்யாணராமன்.
”படித்த பெண்ணாயிற்றே! புருஷனைத் திருத்திக் கொண்டு போகிறாள் ' என்றாள் பார்வதி. எல்லோரும் மிகவும் தணிந்த குரலில் பேசினார்கள். பவானி மூர்த்தியைப் பற்றிப் பசுமலையிலேயே அவர்களிடம் ஒன்றும் சொல்லியதில்லை. அவர்களும் பேசியதில்லை. இத்தனை நாட்களைப் போல் மூர்த்தி ஒண்டிக் கட்டை அல்ல. இல்வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கும் அவன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் கண்டுதான் ஆகவேண்டும் என்று எர்லோரும் தீர்மானித்தார்கள்.
கல்யாணம் இனிதாக நடந்து முடிந்தது.
கல்யாண வீட்டில் பவானி, பார்வதியுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த சுவாமிநாதன் அவளைத் தனியாக அழைத்துக் கேட்டார். "ஏனம்மா இவர்கள் உனக்கு ஏற்கெனவே தெரிந்தவர்களா? நம் வீட்டு மாப்பிள்ளையையும் உனக்குத் தெரியுமா?" என்று விசாரித்தார் பிள்ளையாண்டான் எப்படி?" என்றும் கேட்டார்.
பவானி தயக்கத்துடன் பதில் கூறினாள். "ஏற்கெனவே பசுமலையில் எனக்குத் தெரிந்தவர்கள் தான். மூர்த்தியைப் பற்றி நான் என்ன சொல்ல இருக்கிறது? மனிதன் புனிதமே உருவானவன் என்றோ குற்றங்களையே செய்ய மாட்டான் என்றோ நாம் நினைப்பது தவறு, பல்வேறு சந்தர்ப்பங்கள் அவனைக் குற்றவாளி ஆக்குகின்றன. அவன் திருந்தி வாழவும் சந்தர்ப்பம் இருக்கிறது. ராதா படித்த பெண். கணவனை ஒழுங்கான பாதைக்கு அவள் திருப்பலாம். இல்லாவிடில் மூர்த்தியே இதற்குள் திருந்தி இருக்கலாம். நடந்த நடந்து விட்டது. குற்றச் சாட்டுக்களையும் குழப்பங்களையும் அதிகப்படுத்தாமல் மூடிக்கொண்டு போவதுதான் நல்லது" என்றாள்.
சுவாமிநாதன் பரந்த நோக்கம் கொண்ட அந்தப் பெண்ணைப் பற்றி வியப்பும் திகைப்பும் கொண்டார். பவானியிடத்தில் அவருக்கு அலாதி விசுவாசமும் மரியாதையும் ஏற்பட்டன.
கல்யாணம் நடந்து முடிந்ததும் மூர்த்தி, ராதாவை அழைத்துக் கொண்டு பல ஊர்களுக்கும் சென்று வந்தான். நாடகத்தில் பார்த்த பெண்ணை மணந்து கொண்ட அவன் சாமர்த்தியத்தை கோபி மெச்சிக் கொள்ளாமல் இல்லை .
ராதாவுக்குக் கல்யாணம் நடந்ததில் வக்கீல் வேதாந்தமும், டாக்டர் காமாட்சியும் சந்தோஷப் பட்டார்கள். சுவாமிநாதன் வேதாந்தத்தினிடம், சமயத்தில் நீங்கள் எச்சரிக்காமல் இருந்திருந்தால் ராதாவின் வாழ்க்கை எப்படி எல்காம் மாறி இருக்குமோ!" என்று கூறினார். நல்லதொன்றைச் செய்ய நாலு பேர்களுடைய தயவு எப்படி பயன்படுகிறது என்பதைக் கண்டு கொண்டார் அவர்.
------------
2. 20. மாமரமும் மாங்கனியும்
ஒரு தோட்டம் இருக்கிறது. அதில் உயர்ந்த ஜாதி மாமரம் ஒன்று உண்டு. அம்மரத்தில் அபூர்வமாக அந்த வருஷம் நாலைந்து பழங்கள் தான் பழுத்தன. காய்கள் சிறியவையாக இருந்த முதற்கொண்டே மரத்தின் சொந்தக்காரர் அந்தப் பழத்தின் சுவையை அனுபவிக்க ஆவலுடன் இருக்கிறார். அணிற் பிள்ளைகள் கடித்துப் போடாமல் பார்த்துக் கொள்கிறார். காய்கள் மஞ்சள் நிறம் காணும் போது கட்டும் காவலும் அதிகமாகிறது. கடைசியாகப் பழம் சாப்பிடுவதற்குத் தயாராக இருப்ப தாகத் தோட்டக்காரன் கூறுகிறான் , அவன் பறித்து வந்து கொடுத்த பழங்களைக் கடவுளுக்குப் படைத்து விட்டுத் தான் அவர் உண்கிறார். அதன் சுவையைப் பூராவும் அவரால் அனுபவிக்க முடிகிறது.
இதைப் போலத்தான் இல்லற வாழ்வும் இருக்கிறது. மகனோ, மகளோ , தகுந்த வயதை அடைந்ததும் பெற்றோர் மணமுடித்து வைக்கிறார்கள். காதலனும் காதலியும் மனம் விட்டு ஒருவரோடொருவர் பேசுவதற்குச் சட்டென்று பெரியவர்கள் சந்தர்ப்பம் அளிப்பதில்லை. கல்யாணம் முடிந்தவு டன் ஆடிக்கு மருமகனை அழைக்கிறார்கள். பிறகு தீபாவளி வருகிறது. பின்னர் தைப்பொங்கல் வருகிறது. கணவனும் மனைவி யும் படிப்படியாக மனம் விட்டுப் பழகுகிறார்கள். அன்பு நிதானமாக மாம்பழத்தின் சுவையைப் போல வளருகிறது.
ராதாவும் மூர்த்தியும் கல்யாணம் பண்ணிக்கொண்ட விதமே அலாதியானது. பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் தம்பதிகள் பழக வேண்டிய முறையில் ஆறே மாதங்களில் அவர்கள் பழகினார்கள்; பேசினார்கள். 'சீ! வாழ்க்கை என்பது இதுதானோ? இதற்குத்தான் கல்யாணம் என்கிற கால்கட்டைக் கட்டிக் கொண்டோமா?' என்று மூர்த்தி பல தடவைகள் நினைத்தான்.
ராதாவுக்கும் அவனுக்கும் கல்யாணமாகி ஏழெட்டு மாதங்களுக்குள் மூர்த்தியின் நடத்தையில் பல மாறுதல்களைக் கண்டாள் ராதா. மாதம் அவன் சம்பளத்துக்கு அந்த வீட்டில் செலவு இல்லை. அவனுடைய தேவைகள் அனைத்தையும் ராதா கவனித்துக் கொண்டாள். அவனுக்கென்று பிரத்யேகமான அறை. அந்த அறைக்கு அடுத்தாற் போல் ஸ்நானம் செய்ய அறை இருந்தது. மாடியிலேயே சகல வசதிகளும் நிரம்பி இருந்தன. சாப்பிடும் போது சில நாட்களில் மூர்த்தி கீழே வருவான். அவன் அதிகமாகத் தன் மைத்துனர் ஸ்ரீதரனுடன் பேசுவதில்லை. இருவரும் வெளியே செல்லும்போது தோட்டத்தில் சந்தித்துக் கொள்வார்கள்.
”ஆபீசுக்குக் கிளம்பியாயிற்றா?" என்று சிரித்த வாறு ஸ்ரீதரன் கேட்பார். மூர்த்தி புன்னகையுடன் தலையை ஆட்டிவிட்டுப் போய்விடுவான் .
இப்படியே ஒரு வருஷம் ஆயிற்று.
மூர்த்தியின் நடத்தையில் அவ்வப்போது சில மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அடிக்கடி பம்பாய்க்கும், கல்கத்தாவுக்கும் அவன் பணம் அனுப்பி வருவது ராதாவுக்குத் தெரிந்தது. 'அங்கே உறவினர் யாருமே இல்லையே, இவர் யாருக்குப் பணம் அனுப்புகிறார்?' என்று யோசித்துப் பார்த்தாள் அவள். மூர்த்தி குளிப்பதற்குப் போயிருந்த போது அவன் சொக்காய் ஜேபியில் இருந்த சில முக்கியமான காகிதங்களை எடுத்துப் பார்த்தாள். நாலைந்து மணியார்டர் ரசீதுகள் இருந்தன. பம்பாய்க்கு இரண்டும் கல்கத்தாவுக்கு மூன்றும் அனுப்பப் பட்டிருந்தன. பம்பாயிலிருந்து வந்த ரசீதுகளில் தமயந்தி என்றும் ரோகிணி என்றும் கையெழுத்துக்கள் காணப்பட்டன. கல்கத்தாவில் ஒரு புடவைக் கடையின் பெயர் மற்றொரு ரசீதில் காணப்பட்டது. இன்னொன்றில் நகைக் கடையின் பெயர்.
ராதா பிரமை பிடித்தவள் போல் நின்றாள். தன்னுடைய படிப்பு. அழகு. சாதுர்யம் யாவும் ஒரு சூதாடியிடம் பணயம் வைக்கப்பட்டது போல இருந்தது. வெளியூர்களிலும் இவருக்குப் பெண்களிடம் சிநேகமா?
ராதா தன்னைச் சுதாரித்துக்கொண்டாள். அவசரப் பட்டு வெளியே சொன்னால் விஷயம் ஆபாசமாகிவிடும். அவர் போக்கில் விட்டுத் திருப்ப வேண்டும் என்று தீர்மானித்தாள்.
அன்று இரவு மூர்த்தி வீடு திரும்பும் போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. சுவாமிநாதன் ”உன் புருஷனை இன்னும் காணவில்லையே? எங்கே போயிருக்கிறான்?" என்று ராதாவை விசாரித்தார்.
"எங்கே போனாரோ, எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது. உங்களுக்குத் தூக்கம் வந்தால் போய்த் தூங்குங்கள்."
ராதாவுக்குத் திரும்பத் திரும்ப காலையில் பார்த்த ரசீதுகளின் நினைவே வந்தது. சபலம் நிறைந்த ஓர் ஆணின் மனத்தைப் பற்றிப் பெண்ணால் என்ன புரிந்து கொள்ள முடியும்? வண்டின் குணத்தை மலர்கள் புரிந்து கொண்டிருந்தால், மறுநாள் அந்த வண்டைத் தங்களிடம் அணுக விடுமா என்ன?
கடைசியாக மூர்த்தி வீடு திரும்பினான். நேராகத் தன் அறைக்குள் சென்று சோபாவில் உட்கார்ந்தான் அவன்.
வாசற்படியில் நின்று அவனைப் பார்த்து. ”என்ன. சாப்பிட வருகிறீர்களா?" என்று மட்டுமே கேட்டாள் ராதா.
அவன் தன் இரு கைகளால் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தி-ருந்தான். பதில் ஒன்றும் பேசவில்லை .
ராதா உள்ளே வந்தாள்.
“என்ன இது? இரவு பன்னிரண்டு மணி வரையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் என் அண்ணா என்ன நினைத்துக் கொள்ள மாட்டார்? நாம் இருக்கிறது அவர் வீட்டில் ஞாபகமிருக்கிறதா?" என்று கேட்டாள்.
"நீ சொன்ன பிறகுதான் தெரிகிறது. யார் வீட்டில் இருக்கிறோமென்று, ஏதேது பேச்சு ஜோராக வருகின்ற து?"
கணவனுக்குக் கோபம் வந்திருக்கிறதென்று புரிந்து கொண்டாள் ராதா. சட்டென்று தணிந்து போனாள். "ஆமாம் உங்களுக்கு என்ன கஷ்டம்? ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறீர்கள்?" என்று கேட்டுச் கொண்டே சோபாவின் பிடியில் உட்கார்ந்து கொண்டாள் அவள்.
"எப்படி?" என்று ஒன்றும் புரியாதவனைப் போலக் கேட்டான் அவன்.
”முதலில் சாப்பிட வாருங்கள். அப்புறம் பேசலாம்.”
சாப்பிட்ட பிறகு, இருவருமே முன்பு பேசியவற்றை அடியோடு மறந்து போனார்கள். தமயந்தியும் ரோகிணியும் யார்? என்று அவனைக் கேட்டுவிடப் பல முலைகள் முயன்றாள் ராதா. கேட்டிருக்கலாம்; கேட்பதில் தவறில்லை. ஆனால் வீட்டிலே சுவாமி நாதன் இருந்தார். மாடியின் இன்னொரு பக்கத்தில் ஸ்ரீதரன் படுத்திருந்தார். தோட்டத்தில் குடிசையில் ராமய்யா படுத்திருந்தான். இவர்கள் எல்லோருக்கும் இந்த விஷயங்கள் தெரிந்து விட்டால் என்ன செய்வது?
ஒன்றுக்குப் பத்தாகக் கற்பனை கலந்து அவை கோடம்பாக்கம் முழுவதும் பரவுமே! கௌரவமும் கண்ணியமும் வாய்ந்த டாக்டர் ஸ்ரீதரனின் தங்கை புருஷன் ஸ்திரீலோலன் என்று எல்லோரும் ஏசுவார்களே என்றுதான் ராதாவின் வாய் அடைத்துக் கிடந்தது. உள்ளம் குமுற ஆரம்பித்தது. மூர்த்தி தூங்கிய பிறகு கூட அவளுக்குத் தூக்கம் வரவில்லை. வெகு நேரம் வரையில் விழித்திருந்து விட்டு தூங்கப் போனாள் ராதா.
அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து கீழே இறங்கி வந்த ஸ்ரீதரன், சுவாமி நாதனைப் பார்த்து ”இரவு மூர்த்தி எத்தனை மணிக்கு வந்தான்? விளக்கு வெகு நேரம் வரையில் எரிந்து கொண்டிருந்ததே?”, என்று விசாரித்தார்.
சுவாமிநாதன் தயக்கத்துடன் பேசாமல் இருந்தார். பிறகு மெதுவாக “நான் தூங்கி விட்டேன். பதினொன் றரை மணிக்குமேல் இருக்கும். நாலைந்து மாசங்களாக அந்தப்பிள்ளை இப்படித்தான் கண்ட வேளைகளில் வருகிறான்" என்றார்.
ஸ்ரீதரன் சிறிது நேரம் யோசித்தபடி நின்றார். ”இதையெல்லாம் நாம் காதில் போட்டுக் கொண்டால் நன்றாக இராது. பார்க்கலாம்..." என்று கூறியவாறு தம் அலுவல்களைக் கவனிக்கச் சென்றார்.
------------
2. 21. பணமேதான் ஜீவநாடி
பல மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதரன் பவானியிடம் உங்களிடம் சில விஷயங்கள் தனியாகப் பேச வேண்டும் என்று தெரிவித்திருந்தார் அல்லவா? அதன் பிறகுதான் ராதாவுக்குக் கல்யாணம் நடந்தது. புது மாப்பிள்ளை வந்த மகிழ்ச்சியில் கொஞ்சம் திளைத்தார் ஸ்ரீதரன் . இரண்டு மாதங்கள் ஜெயஸ்ரீயுடன் வெளியூர்களுக்குச் சென்றிருந்தார் அவர்.
திரும்பி வந்ததும் ஓய்ச்சல் ஒழிவில்லாமல் வேலைகளில் ஈடுபட்டார். அப்பொழு-தெல்லாம் ஒன்றிரண்டு தடவைகள் தான் பவானியை அவர் பார்க்க நேர்ந்தது. அப்பொழுதெல்லாம் அவருக்கு அவளிடம் நிதானமாகப் பேசச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
அன்று என்னவோ அவருக்கு ஒழிவாக இருந்தது. மாடியில் ராதாவும் மூர்த்தியும் 'செஸ்' விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஜெயஸ்ரீ தோட்டக்காரன் ராமய்யாவுடன் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சுவாமிநாதனுக்கு உடம்பு முன்னைப் போல் இல்லை. வேலைகள் முடிந்து விட்டால் படுத்துத் தூங்கப் போய் விடுவார் அவர்.
ஸ்ரீதரன் தெரு வராந்தாவில் சோபாவில் உட்கார்ந்து யோசனையில் மூழ்கியிருந்தார். கல்யாணத்துக்கு முன்பே ராதா அவரிடம் நெருங்கிப் பழகுவதில்லை. இப்போது அவள் தன் அண்ணாவுடன் அதிகமாகப் பேசி எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன.
ஜெயஸ்ரீ வளர வளர தகப்பனாரிடம் பிரத்தியேக மரியாதை காண்பித்தாள். ஏதாவது கேட்டால் பாத்திரம் பதில் கூறுவது. இல்லாவிட்டால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள்.
டாக்டர் காமாட்சியைப் பார்த்து சிறிது நேரம் பேசிவரலாம் என்று நினைத்தார். அவர் அன்று கிராம் சேவிகா சங்கத்தில் பேசப்போவதாகக் கூறியது நினைவுக்கு வந்தது. எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பவானியின் வீட்டு கோபாலன் தன் குழந்தையை எடுத்துக் கொண்டு ராமய்யாவைப் பார்க்க வந்தான். டாக்டரை அங்கு பார்த்து விட்டு வணக்கம் செலுத்தினான்.
”ஏனப்பா! உன் குழந்தையா? என்ன பெயர் வைத்திருக்கிறாய்?" என்று கேட்டார் ஸ்ரீதரன்.
"நடராஜன் என்று பெயர். பவானி அம்மாதான் வெச்சாங்க. அந்த அம்மாவுக்கு அந்தப் பெயரிலே ஒரு பைத்தியம்."
”நல்ல பெயர்தான் அப்பா" என்று கூறிவிட்டு டாக்டர் பவானியின் வீட்டுக்குக் கிளம்பினார் பல மாதங்களுக்கு முன்பு தான் சொன்னதை நினைத்துக் கொண்டு,
நாகராஜனின் வீடு நிசப்தமாக இருந்தது. அன்று தம்பதி இருவரும் ஏதோ சினிமாவுக்குப் போயிருந்தார்கள். அதற்கு முன்பாக ஏகப்பட்ட தகராறுகள் சில்லறைச் சண்டைகள்.
"மன்னியை அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போய் விட்டு வாயேன் அண்ணா ?" என்று பவானி கோமதிக்காகப் பரிந்து பேசினாள்.
”நீதான் போயேன் மன்னியை அழைத்துக் கொண்டு. நான் ’பிஸினஸ்' விஷயமாக ஒருத்தரைப் பார்க்க வேண்டும்" என்றான் அவன்.
பவானி பக் கென்று சிரித்தாள்.
”நல்ல பிஸினஸ்! பணம் எதற்கண்ணா சம்பாதிப் பது? வாழ்க்கையை அனுபவிக்கத்-தானே?"
நாகராஜன் தன் ஈழல் நாற்காலியில் இப்படியும் அப்படியுமாக மூன்று முறைகள் சுழன்றான்.
"இப்போது நாம் என்ன பணத்தை சம்பாதித்து அனுபவிக்காமல் தான் இருக்கிறோமா! மேலே மின்சார விசிறி சுழல்கிறது. கூடத்தில் ரேடியோ பாடுகிறது. ப்ரிஜி டேடர் வாங்கிப் போட்டிருக்கிறேன். வைர நெக்லெஸ் வாங்கி இருக்கிறேன்."
"ஆமாம் இத்தனையும் வைத்துக் கொண்டு சிறை வாசம் பண்ணச் சொல்கிறீர்-களாக்கும்! நாலு இடங்களுக்குப் போய் வந்தால் தான் மனசுக்குத் தெம்பு. எங்கே, என்னைப் பார்த்துச் சொல்லுங்கள். பக்கத்தில் இருக்கிறதே வடபழனி ஆண்டவன் கோயில், ஒரு நாளாவது எதற்காவது போனதுண்டா? நீங்கள் திருவல்லிக்கேணியில் மெரினாவுக்கு ஒருநாள் போயிருக்கிறீர்களா? ப்ரிஜிடேரும், சிரிஜிடேரும் யாருக்கு வேண்டும் இங்கே?" என்று பேசினாள் கோமதி.
நாகராஜன் சிரித்தான்.
"அடேடே! வக்கீல் வேதாந்தம் தம் ப்ராக்டினை விட்டு விட்டாராம். அவருக்குப் பதிலாக நீ போகிறாயா கோர்ட்டுக்கு? எல்லா வேலைகளுக்கும் தான் நீங்கள் போகலாமே இந்தக் காலத்தில் !" என்று கேட்டான்.
மறுபடியும் மனைவியிடம் அவன் பிடிவாதம் தோற்றது. அன்று அவர்கள் சுமதி, பாலு இருவரையும் அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போனார்கள்.
தெருவில் கார் வந்து நின்றது. ஸ்ரீதரன் இறங்கி உள்ளே வந்தார். கூடத்தில் பவானி மட்டும் உட்கார்ந்திருந்தாள். டாக்டரைப் பார்த்ததும் எழுந்து நின்று உள்ளே வரும்படி அழைத்தாள்.
ஸ்ரீதரன் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரம் வரையில் பேசாமல் இருந்து விட்டு "எங்கே ஒருத்தரையும் வீட்டில் காணோம்?" என்று கேட்டார்.
"அண்ணாவும் மன்னியும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள்."
”பாலு எப்படி இருக்கிறான்? முன்னைப் போல அவன் எங்கள் வீட்டுக்குக் கூட அடிக்கடி வருவதில்லை. பெரியவனாகி விட்டான் இல்லையா?" என்று விசாரித்தார் அவர்.
”ஆமாம், அவன் பசுமலையில் இருந்த போது என்னை என்ன பாடுபடுத்தி வைத்தான்! சதா சண்டை தான். இப்பத்தான் ஒரு வருஷமாக ரொம்பவும் சாதுவாகப் போய் விட்டான். படிப்பில் அக்கறை ஏற்பட்டிருக்கிறது."
"வயசாகிக் கொண்டு வருகிறது பாருங்கள். இனிமேல் புத்திசாலியாக மாறவேண்டியது தானே" பவானிக்கு டாக்டர் ஸ்ரீதரன் தன் மகனைப் புத்திசாலி என்று கூறியதில் ஆனந்தம் ஏற்பட்டது. பெயரும் புகழும் பெற்றுள்ள அவர் ஒரு குணவான். நலல வருமானமும், இஷ்டப்படி வாழ சுதந்திரமும் இருக்கும் போதும் டாக்டர் ஸ்ரீதரன் கட்டுப்பாடுடனே வாழ்ந்து வந்தார். எந்தப் பெண்ணையும் தாயாகவும் சகோதரியாகவும் காணும் பக்குவமான மனநிலை அவருக்கு ஏற்பட்டிருந் தது. அப்படிப்பட்டவரின் வாயால் பாலுவைப் புத்திசாலி என்று அழைப்பது ஓர் ஆசி மாதிரி இருந்தது அவளுக்கு.
கூடத்தில் மாட்டியிருந்த கடிகாரம் 'டிக்' 'டிக்' என்று சப்தித்துக் கொண்டிருந்தது. பவானி கையில் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே இருந்தாள்.
"என்ன படித்துக் கொண்டிருந்தீர்கள்?"
”காரைக்கால் அம்மையாரின் சரிதம். பக்தியால் பரமனுடன் பேசி மாங்கனி பெற்றவளின் மனசைப் பற்றி, பண்பைப் பற்றி வியந்து கொண்டே இருந்தேன். எனக்கு இந்தப் பையன் இராமல் இருந்தால் நான் எங்காவது புண்ணிய ஸ்தலங்களுக்குப் போயிருப்பேன்..."
அவளுடைய நீல நிற விழிகள் ஹாலில் இருந்த புத்தர் சிலை மீது பதிந்து இருந்தன.
”அம்மா பவானி!" என்று அழைத்தார் டாக்டர் ஸ்ரீதரன் .
”உங்களுடைய உயர்ந்த நோக்கங்களும் உன்னத லட்சியங்களும் போற்றப்ப - வேண்டியவையே. இருந்தாலும், ஆண்டவனிடம் காரைக்கால் அம்மையாரைப் போல் பக்தி செலுத்தி அதற்கேற்ற முறையில் வாழ்க்கை முறையை வகுத்துக் கொள்வது இந்தக் காலத்தில் முடியாது. ஓர் இளம் பெண் - அழகானவள் - துணையற்றவள்-ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தால் ஆபத்துக்கள் வருவது நிச்சயம். ’துணையில்லாதவள்’ என்னும் போதே சமூகம் அவளைச் சாதாரணமாகப் பார்ப்பதில்லை. அனுதாபத்துடன் பார்க்கிறது. சுய நலத்துடன் பார்க்கிறது என்று கூடச் சொல்லலாம். ஆண்டவனிடம் செலுத்தும் பக்திக்குச் சமமாக ஒன்று இருக்கிறது. நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவிகள் புரிவது. பிறர் இன்னல்களை நம்முடைய-தாகப் பாவித்து அவர்களுக்குச் சேவை புரிவது. இதிலே மனசுக்கு மகத்தான ஆறுதல் கிடைக்கும். அதற்கு உதாரணமாக நான் இருக்கிறேன். மனைவியை இழந்து பதினைந்து வருஷங்கள் ஆயின. இருந்தும் எனக்கு மனசிலே ஆறுதல் இருக்கிறது. வாழ்க்கையில் இன்பம் இருக்கிறது. காரணம் பிறருக்குச் சேவை செய்வது என் வாழ்க்கையின் லட்சியமாக இருப்பதால் தான்..."
பவானி பணிவுடன் எழுந்து நின்றாள். "டாக்டர்! அன்றொரு நான் என்னிடம் ஏதோ பேச ஆசைப் படுவதாகக் கூறினீர்கள் ....."
”அதைத் தான் கேட்க வந்தேன் அம்மா. நாகராஜனிடமே இதைப் பற்றிக் கேட்க இருந்தேன். அவர் ஊரிலேயே இருப்பதில்லை. ராதாவின் கல்யாணத் தன்று அவரைப் பார்த்தேன். மறுபடி பார்க்க முடியவில்லை. சுமதிக்கு ஜுரம் வந்த போது நீங்கள் நர்ஸாகப் பணி புரிந்தது என் மனத்தை விட்டு நீங்கவில்லை. தமையன் குழந்தையைக் காப்பாற்றி விட்டீர்கள். ஆனால் இம் மாதிரியான சேவையைப்பெற எத்தனையோ குழந்தைகள், பெரியவர்கள், தாய்மார்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் ’நர்ஸ்' தொழிலுக்குப் படிக்கக் கூடாது?"
ஸ்ரீதரன் தாம் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டார் பவானி கொஞ்ச நேரம் மெளனத்தில் ஆழ்ந்திருந்தாள்.
தமையனின் குலவிளக்கு அணையாமல் இருக்க வேண்டும் என்று அன்று நினைத்தாள் அவள். அம்மாதிரி எத்தனை குலவிளக்குகள், தாய்மார்கள். குடும்பத் தலைவர்கள் ஆஸ்பத்திரிகளில் வியாதியுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? ஒவ்வொருவரும் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையிலே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சேவை செய்வது எவ்வளவு மகத்தானது என்று சிந்தித்துப் பார்த்தாள் பவானி.
"டாக்டர்! அண்ணாவிடம் கேட்டுச் சொல்கிறேன் . அதற்கும் நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாள் அவள்.
டாக்டர் ஸ்ரீதரன் காரில் வீட்டுக்குத் திரும்பும் போது மன நிறைவுடன் திரும்பினார். பவானியைப்பற்றி ஓர் உயர்ந்த எண்ணம் அவர் மனத்தில் ஏற்பட்டது.
--------------
2. 22. ஆண்டவனின் குரல்
டாக்டர் ஸ்ரீதரனின் யோசனையைப் பவானி தன் தமையனிடத்திலும் மன்னி-யிடத்திலும் தெரிவித்தாள். தனக்கும் அதில் ஆவல் இருப்பதாகச் சொன்னாள். இந்த விஷயத்தைப் பற்றி விசாரிக்க நாகராஜன் ஸ்ரீதரனின் வீட்டுக்குச் சென்றான்.
”அவளுடைய பணம் ஐந்தாயிரம் என்னிடம் இருந்தது. அது இப்பொழுது பத்தாயிரமாக வளர்ந்திருக்கிறது. அதில் கிடைக்கும் வட்டியைக் கூட நான் அவளுக்காகச் செலவழிப்பதில்லை. 'எல்லாச் செலவு களையும் நானே பார்த்துக் கொள்கிறேன். பாலுவின் படிப்பின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவள் வேலைக்குப் போய்த் தான் ஆகவேண்டும் என்பதில்லை. எவ்வளவோ வசதிகளுடன் சந்தோஷமாக இருக்கலாம்" என்றான் நாகராஜன்.
தமையனுடன் பவானியும் சென்றிருந்தாள்.
"அண்ணா ! உன்னுடன் இருப்பதில் எனக்கு எந்த விதமான குறையும் இல்லை. மற்றப் பெண்களுக்கு குடும்பம் குழந்தைகள் என்றெல்லாம் கடமைகள் இன்பங்கள் இருக்கின்றன. என்னுடைய மனசிலே சூன்யம் நிறைந்து போகாமல் இருக்கவே இப்படி என் பொழுதைக் கழிக்க விரும்புகிறேன் அண்ணா " என்றாள் பவானி.
நாகராஜன் எந்த விஷயத்தையுமே ஆழ்ந்து நோக்குபவன் அல்ல. ஆகவே தங்கையின் அபிப்பிராயத்தை ஆமோதித்தான்.
அடுத்த சில நாட்களில் பவானி நர்ஸ்கள் கல்லூரியில் சேர்ந்தாள். முதல் நாள் அவள் கல்லூரியிலிருந்து திரும்பியதும் சுமதி, அத்தையின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்னென்ன புத்தகங்கள் படிக்கிறாள், நோட்டுப் புத்தகங்கள் எத்தனை வாங்கி இருக்கிறாள் என்று அறியும் ஆவலுடன் கூடத்தில் உட்கார்ந்து இருந்தாள் அந்தப் பெண்.
அவள் எதிர்பார்த்தபடி பவானி ஒரு சுமைப் புஸ்தகங்களைத் தூக்கிக்கொண்டு வரவில்லை. "அத்தை பெரிய வகுப்பிலே படித்தால் புத்தகச் சுமை குறைந்து போகுமா?" என்று விசாரித்தாள்.
”ஏனம்மா அப்படி கேட்கிறாய்? தினம் இரண்டு மூன்று புத்தகங்கள் கொண்டு போனால் போதும். அவசியமானவற்றை நோட்டுப் புத்தகம் ஒன்றில் குறித்துக் கொண்டு வருவேன்" என்றாள் பவானி சிரித்துக் கொண்டு.
”எனக்கு இருக்கும் புத்தகங்களைச் சுமந்து கொண்டு போயே என் முதுகு வளைந்து விட்டது அத்தை" என்று கூறி முதுகை வளைத்து அவள் எதிரில் நடந்து காண்பித் தாள் சுமதி.
கூடத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள். கோமதி உள்ளேயிருந்து பவானிக்குச் சிற்றுண்டியும் காப்பியும் கொண்டு வந்து கொடுத்தாள். பவானி அந்த வீட்டுக்கு வந்த பிறகு கோமதியின் குணத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. படிப்படியாக அவளிடமிருந்த சோம்பல் நீங்கிவிட்டது. 'தான் ஒரு நோயாளி' என்று சதா டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தவள், இப்போது தெம்புடன் இருந்தாள். வீட்டில் ஓடி ஆடி வேலைகளை செய்வதால் உடலுக்குத் தெம்பும் உள்ளத்துக்கு மகிழ்ச்சியும் ஏற்படுவதை உணர்ந்தாள். பவானிக்கு மன்னியின் திறமையைப் பார்க்கும் போது சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்தது.
சிற்றுண்டி சாப்பிட்டு முடித்த பிறகு உடை மாற்றிக் கொண்டு கொல்லையில் மலர்ந்திருந்த மலர்களை மாலையாகத் தொடுத்து படங்களுக்குப் போட்டாள் பவானி. அவள் உள்ளத்திலே உவகையும், களிப்பும் நிரம்பி இருந்தன.
கண்ணை மூடிக்கொண்டு தன் இஷ்ட தெய்வமாகிய நடராஜப் பெருமானின் படத்தின் முன்பு கரங்குவித்து நின்றிருந்தாள் பவானி. அமைதி நிலவும் அப்பெரு மானின் முகத்தில் இருக்கும் புன்னகையைக் கவனித்தாள் ஒரு விநாடி. கண்களைத் திறந்து, டாக்டர் ஸ்ரீதரனுக்கு அந்த அமைதியும், கருணையும் இருப்பதாக அவள் மனத்துக்குத் தோன்றியது.
"அம்மா பவானி!" என்று அவர் அழைத்த குரலில் ஆண்டவனின் குரலும் கேட்டது அன்று. தான் நம்பி இருக்கும் நடராஜன் தான் தன்னை இந்தத் தொழில் செய்யும்படிப் பணித்திருக்கிறான் என்று பவானிச்குத் தோன்றியது.
டாக்டர் ஸ்ரீதரனைப்பற்றி அவள் மனத்திலே ஓர் உயர் தரமான எண்ணம் எழுந்தது. அவ்வெண்ணம் தன்னை ஈன்ற அன்னையிடத்திலும் தந்தையிடத்திலும் காட்ட வேண்டிய பக்தியை விட ஒரு படி உயர்வாகத் தாற்றமளித்தது. அந்தப் புனிதமான எண்ணம் எழுப்பும் இன்பத்தில் லயித்திருந்தாள் பவானி.
--------
2. 23. பெண்மையின் பலஹீனம்
ஸ்ரீதரனின் மனசில் கெட்டவை நிற்பதில்லை. நல்லவைகள் நிலைத்து நின்று. உருவாகிப் பயன் பெற்று நிலவும். மூர்த்தியைப்பற்றி அவர் மனசிலே ஒன்றுமே இல்லை. தங்கையின் கணவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது ஒன்றும் அவருக்கு விளங்கவில்லை. அதைப்பற்றி அவர் அக்கறை காட்டும்படி ராதாவும் நடந்து கொள்ள வில்லை. 'கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவ்வளவு தான் நமக்கு வேண்டியது என்று இருந்து விட்டார். மூர்த்திக்கு என்ன சம்பளம் வருகிறது? அதை அவன் எப்படி செலவழிக் கிறான்? என்றெல்லாம் அவர் ஏன் ஆராயப் போகிறார்? தங்கைக்கு வேண்டிய புடவைகள், இதர சாமான்களை ஜெயஸ்ரீக்கு வாங்கும்போது வாங்கித் தந்து விடுவார். சில சமயங்களில் அவர்களே வாங்கி வந்து 'பில்'லை மட்டும் அவர் மேஜைக்கு அனுப்பி விடுவதும் உண்டு.
டாக்டர் காமாட்சியிடமும் அவர் இதைப்பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டார். "என் எதிரில் ராதா அவள் கணவனுடன் பேசியே பார்த்ததில்லை. இருவரும் வெட்கப்பட்டுக் கொண்டு என்னைக்கண்டதும் விலகிப் போய் விடுகிறார்கள்" என்றார்.
"அப்படியா? கல்யாணத்துக்கு முன்பு ரொம்பவும் நெருங்கிப் பழகியவர்கள் ஆயிற்றே! இப்படி இருப்பது அதிசயம் தான்" என்றாள் காமாட்சி.
இந்த விஷயத்தை அவள் தன் தகப்பனாரிடம் கூறிய போது அவர் ஆச்சரியம் அடையவில்லை. என்னவோ, அந்தப் பிள்ளையிடம் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று அசுவாரசியமாகப் பதிலளித்தார்.
சுவாமிநாதனுக்கு மட்டும் மனசிலே ஏதோ ஒரு சந்தேகம் சூழ்ந்து கொண்டிருந்தது. பல இரவுகள் மாடியில் ராதா மெதுவாக விசும்பும் குரலை அவர் கேட்டிருக்கிறார். அவளுடைய கண்கள் சிவந்து முகம் வீங்கி இருந்ததையும் அவர் பார்த்தார்.
"ஏனம்மா! உடம்பு சரியில்லையா?" என்று கூட விசாரித்தார்.
”ஆமாம். நேற்றிலிருந்து ஜலதோஷம்" என்றாள் ராதா.
”ஏதாவது மருந்து சாப்பிடேன்!"
“சாப்பிட்டேன். அண்ணாவின் அலமாரியைத் திறந்து எடுத்துக் காலையிலேயே சாப்பிட்டேனே."
அவள் எதுவும் சாப்பிடவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். தினம் மூன்று வேளைகள் தலைவாரிப் பின்னிக் கொள்கிறவள் சேர்ந்தாற் போல் இரண்டு நாட்கள் தலைவாரிக் கொள்ளவே இல்லை.
"இன்று வெள்ளிக்கிழமை, தலையைப் பின்னி பூ வைத்துக் கொள் அம்மா" என்று சுவாமிநாதன் புஷ்பச் சரத்தை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார். அதை மேஜை மீது வைத்து விட்டுக் கவனியாதவள் போல் இருந்தாள் ராதா.
தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும், விதம் வித மாக உடுத்துவதிலும் விருப்பமுடைய ராதா, இப்படி எதிலும் பற்றில்லாமல் இருப்பது வேதனையாக இருந்தது.
குறுகிய காலத்தில் ராதாவின் போக்கில் பெருத்த மாறுதல் ஏற்பட்டிருந்தது. வெளியில் எதையும் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தாள் அவள். ஒரு தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மூர்த்தியிடம் அவள், ”நீங்கள் இப்படியே இருந்தால் எப்படி?" என்று கேட்டேவிட்டாள்.
"நான் எப்படி இருக்கிறேன்?" என்று அலட்சிய மாகக் கேட்டான் மூர்த்தி.
”நமக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வருஷங்கள் ஆகின்றன. ஒரு நாளாவது உங்கள் சம்பாத்தியத்திலிருந்து எனக்கு ஒரு புடவை வாங்கித் தந்திருக்கிறீர்களா ?”
"பூ! இதற்கென்ன பிரமாதம்! வாங்கினால் போச்சு! நீ என்னைக் கேட்கவில்லை. நானும் வாங்கித் தரவில்லை.
’அப்படியானால், எங்கெங்கோ இருப்பவர்களுக் கெல்லாம் பணம் அனுப்புகிறாரே, அவர்கள் கேட்டு வாங்கிக் கொள்வார்கள் போல் இருக்கிறது' என்று ராதா நினைத்துக் கொண்டாள். பேசாமல் நிற்கும் மனைவியைப் பார்த்தான் மூர்த்தி. பரிவோடு அவள் அருகில் வந்து நின்று, 'ராதா! எனக்கு ஆபீசில் ஒரு தொல்லை ஏற்பட்டிருக்கிறது. வெளியூர் போய் வரும் போது பீஸ் கணக்குகளில் பிசகு நேர்ந்து விட்டது. அதைச் சரிக்கட்டுவதற்குப் பணம் வேண்டும்..." என்று கேட்டான்.
”அண்ணாவைக் கேட்கச் சொல்கிறீர்களா? அது மட்டும் என்னால் முடியாது. தேவையானால் என் நகைகளில் ஏதாவது கொடுக்கிறேன்..."
“உன்னுடைய நகையா?" மூர்த்தி சிறிது நேரம் யோசிப்பவன் போல் தயங்கினான். வேதனை படர்ந்திருக்கும் அவன் முகத்தைப் பார்த்த ராதா தன்னுடைய பீரோவைத் திறந்து முத்தும் செம்பும் பதித்த மாலை ஒன்றை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.
”தயவு செய்து இதைச் சென்னையில் விற்காதீர்கள்! அடுத்த தடவை நீங்கள் வெளியூர் போகும்போது விற்று விடுங்கள்" என்றாள்.
மூர்த்தி மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டான். பெண்களுக்கே உரித்தான பலஹீனம் - அதாவது கணவன் ஆபத்தில் இருக்கிறான் என்பதை அறிந்ததும் ஏற்படும் தாராளம் படித்த பெண்ணாகிய ராதாவுக்கும் உண்டாயிற்று . நாலு பேர்களுக்கு வெளியில் தெரியாமல் தன்னுடைய குற்றங்களை மறைத்து விட வேண்டும் என்கிற ஆவலால் உந்தப்பட்டு குற்றங்களை மேலும் செய்யத் தூண்டுவதும் ஒரு பலஹீனம் தான்.
கணவன் உண்மையிலேயே ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறானா? அந்தத் தவறு ஏதேச்சையாசு ஏற்பட்டதா? வேண்டுமென்று செய்ததா? இவ்வாறெல்லாம் பெண்கள் யோசிக்க மாட்டார்கள். உன் கணவன் ’அயோக்கியன்' என்று யாராவது சொன்னாலும் பொறுக்க மாட்டார்கள், ஏதோ ஒரு பத்தி, உயர்ந்த பண்பு அவர்களை ஆட்கொண்டி-ருப்பதால்தான் அவர்கள் இவ்வளவு தியாகிகளாக இருக்க வேண்டும்.
ஒரு தடவை நகையைக் கொடுத்துப் பழக்கம் ஏற்படுத்திய பிறகு அதே வாடிக்கையாகப் போய்விட்டது. அவளைக் கேட்காமலேயே நகைகளை எடுத்துப் போனான் மூர்த்தி. பண்டிகை பருவங்களில் எங்கே போனாலும் அவள் முன்பே அதிகமாக நகை போட்டுக் கொள்ள மாட்டாள். ஆகவே அதைப் பற்றி யாருமே கவனிக்கவில்லை. கணவனுடைய நடத்தை தெரிந்த பிறகு. அந்த உள்ளத்தில் அபரிமிதமான கசப்பு அவளிடத்தில் வளர்ந்து வந்தது. இருவரும் பேசுவதுகூட நின்று போயிற்று.
ஒரு தினம் ராதா வெளியில் செல்லுவதற்காக ஆடை அணிகள் அணிந்து கொள்ளத் தன் பீரோவைத் திறந்தாள். நகைப் பெட்டியைத் திறந்தபோது அதனுள்ளிருந்த ஒரு ஜோடி வைர வளையல்களைக் காண வில்லை. அந்த வளையல்கள் அவளுடையவை அல்ல. கல்யாணத்தன்று ஸ்ரீதரன் அவளுக்குக் கொடுத்தார். "ராதா! இவை நம் தாயினுடையவை. அவள் முகம் உனக்குத் தெரியாது. ஆகவே அவள் ஞாபகமாக வைத்துக் கொள்" என்றார். முகூர்த்தத்தன்று மாலை அவள் 'ரிஸப்ஷனு'க்குக் கிளம்பும்போது, அவள் கையில் வளையல் பெட்டியைக் கொடுத்துக் கொண்டே.
அந்தப் புராதன சொத்துதான் இப்போது மாயமாக மறைந்து விட்டது.
ராதாவின் உடல் வியர்த்தது. பரபரக்க பீரோ பூராவும் தேடினாள். அங்கிருந்த மேஜை பூராவும் குடைந்தாள். கணவனின் நிஜார் பைகளில் பார்த்தாள். அவனுடைய கோட்டுப் பைகளில் தேடினாள். ஆனால் அவள் தேடிய வஸ்து அகப்படாமல் வேறொரு வஸ்து அகப்பட்டது. அது ஒரு கடிதம்.
ஆங்கிலத்தில் முத்து முத்தான கையெழுத்துக்களில் ஒரு பெண் மூர்த்திக்குக் கடிதம் எழுதியிருந்தாள். அதில் மூர்த்தி நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வந்து போனவன் அவளை வந்து மணப்பதாகக் கூறிச் சென்றதாகவும் இதுவரையில் தகவல் தெரியாமல் போகவே, காரியாலயவிலாசத்துக்கு அவள் கடிதம் எழுதுவதாகவும் விரைவில் பம்பாய் வரும்படியும் அந்தப் பெண் எழுதி இருந்தாள். இல்லாவிடில், சீக்கிரமே தான் சென்னை வருவதாகக் குறிப்பிட்டு இருந்தாள். பெண்ணின் பெயர் தமயந்தி என்றிருந்தது.
இக்கடிதத்தை ராதா பார்ப்பதற்கு முதல் நாள் அவன் அணிந்து சென்றிருந்த கோட்டுப் பையில் ஒரு இன்ஷர் ரசீது காணப்பட்டது. தமயந்தி பெயருக்கு ஐந்நூறு ரூபாய்கள் அனுப்பியிருந்தான் மூர்த்தி. கடிதம் அதற்குப் பத்து தினங்கள் முந்திய தேதியுடன் வந்திருந்தது.
ராதாவின் கண்கள் கண்ணீரைப் பெருக்கவில்லை. காய்ப்புக் காய்த்துப் போன தசை மாதிரி அவள் நெஞ்சம் காய்த்துவிட்டது. யோசித்தபடியே வெகு நேரம் உட்கார்ந்தி-ருந்தாள் அவள். எவனை உயர்ந்தவன், அன்பு நிறைந்தவன் என்று நம்பி ஏமாந்து தன் உள்ளத்தை அர்ப்பணித்து மணந்தாளோ அவன்-- அவள் கணவன் --கயவன் , ஸ்திரீலோலன், அதற்காக இழிவான செயலில் இறங்குபவன் என்பதை அவள் உணர்ந்தபோது ராதா விவரிக்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து போனாள். சற்று முன் கல்லாக உட்கார்ந்திருந்தவளின் கண்களி லிருந்து அருவியைப் போல் கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது.
-----------
2. 24. உண்மைச் சொரூபம்
தெரு விளக்குகள் எல்லாம் ’பளிச்' சென்று எரிந்தன. மாடியில் இருந்த வராந்தாக்களின் விளக்குகளைப் போட்டு விட்டு ராமையா ராதாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தான். பித்துப் பிடித்தவள் போல உட்கார்ந்திருக்கும் அவளைப் பார்த்துவிட்டு. * அம்மா! இருட்டிலே உட்கார்ந்து இருக்கீங்களே. விளக்குப் போடலீங்களா? நான் போடட்டுமா?" என்று கேட் டான்.
”வேண்டாம் ராமையா எனக்குத் தலைவலி. வேண்டும் பொழுது நான் விளக்கைப் போட்டுக் கொள்கிறேன். நீ போ" என்றாள் ராதா. தன்னை ஒருவாறு சுதாரித்துக் கொண்டு, அவன் சென்றதும் அவசரமாக ஸ்நான அறைக்குள் சென்று முகம் கழுவித் தலை வாரிப் பின்னிக் கொண்டாள். மனசில் புதைந்து கிடந்த துக்கங்களை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள். ராதாவைச் சற்று நேரம் காணவில்லை யென்றால் தேடிக் கொண்டு வரும் சுவாமிநாதன் அன்று மத்தியானத்தி-லிருந்து மாடிப் பக்கமே வரவில்லை.
நேராகச் சமையற்கட்டுக்குச் சென்று பார்த்தாள் ராதா. அங்கே சாப்பிடும் கூடத்தில் இருந்த பெஞ்சியில் அந்தக் கிழவர் படுத்திருந்தார்.
சாயங்கால வேளைகளில் திருநீறு அணிந்து கடவுளைத் துதிக்கும் அவர். அன்று படுத்துக் கிடந்தது ராதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அருகில் சென்று குனிந்து பார்த்து விட்டு, ”மாமா" என்று அழைத்தவாறு அவர் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள், ஜுரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை . நினைவே இல்லாமல் படுத்திருந்தார் அவர். திடீர் திடீர் என்று அவர் படுத்துக் கொள்வதும், சரிவரச் சாப்பிடாமல் இருந்ததும் ராதாவுக்கு நினைவுக்கு வந்தது . அவசரமாகப் போனை எடுத்து ஸ்ரீதரனின் மருத்துவ சாலைக்குப் ’போன்' செய்தாள். சிறிய நேரத்துக்
கெல்லாம் டாக்டர் வந்து சேர்ந்தார்.
சுவாமிநாதனைப் பரிசோதித்து விட்டு, அவருக்கு ரத்த அழுத்த வியாதி ஏற்பட்டிருக்-கிறதென்றும், நல்ல ஒய்வு கொடுக்க வேண்டும் என்றும் அபிப்பிராயப் பட்டார்.
அன்று தான் ராதாவுக்குக் குடும்பம் என்றால் என்ன என்பது புரிந்தது. அடுப்பங்கரையில் பாதிச்சமையல் அப்படியே கிடந்தது. உள்ளே சென்ற ராதா பிரமித்து நின்றாள். ஒருவழியாகச் சமையலை முடித்துப் பாலைக் காய்ச்சி வைப்பதற்குள் அவளுக்குத் திணறி விட்டது.
சூடான பாலை டம்ளரில் எடுத்து வந்து சுவாமிநாதன் அருகில் வந்தாள். அவர் அப்போது தான் கண் விழித்திருந்தார். அருகில் வந்து நிற்கும் ராதாவைப் பார்த்தார் அவர்.
"என்னம்மா இது?" என்று கேட்டுக் கொண்டே மெள்ள எழுந்தார். ராதா அவர் அருகில் உட்கார்ந்தாள்.
"ஒன்றுமில்லை. இந்தப் பாலைச் சாப்பிடுங்கள். நீங்கள் எழுந்திருந்து ஒன்றும் செய்ய வேண்டாம்.”
”நீயாகவே எல்லா வேலைகளையும் செய்தாயா? உனக்கு வழக்கமில்லையே அம்மா..."
”வழக்கப்படுத்திக் கொண்டால் வருகிறது ...."
'ராதாவா இப்படிப் பேசுகிறாள்!' என்று வியந்தார் அவர்.
இதற்குள் டாக்டர் ஸ்ரீதரன் அங்கு வந்தார். அடுத்த நாளிலிருந்து வேறு ஒருவர் வீட்டுக்கு வருவதாகவும், எல்லா வேலைகளையும் அவரே செய்து விடுவார் என்றும், சுவாமிநாதன் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்றும் தெரிவித்தார்.
சுவாமிநாதன் அந்தக் குடும்பத்தினரின் அன்பைக் கண்டு வியந்தார். தம்மிடம் அவர்கள் கொண்டிருந்த அன்பின் ஆழத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே மெய்ம்மறந்திருந்தார் அவர்.
அன்றிரவு எட்டு மணிக்கு மூர்த்தி காரியாலயத்திலிருந்து வீடு திரும்பினான், மாடிக்குச் சென்று அவசரமாகத் தன் பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டான். முகம் கழுவி, தலையை வாரி. மறுபடியும் உடுத்திக் கொண்டிருக்கும் போது ராதா மாடிக்கு வந்தாள். கணவன் எங்கோ போபதற்குத் தயார் செய்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் ”எங்கே புறப்படு கிறீர்கள்?" என்று கேட்டாள்.
"கல்கத்தாவுக்குப் போகிறேன்" என்றான் மூர்த்தி.
”என்ன விஷயம்? காலையில் என்னிடம் சொல்லவே இல்லையே..."
”உன்னிடம் சொல்லி விட்டுத்தான் நான் எதையும் செய்யவேண்டுமா?"
“அப்படிச் சொல்லவில்லையே. எனக்குத் தெரிந்தும் சில காரியங்களை நீங்கள் செய்யலாமே..."
”அப்படி உனக்குத் தெரியாமல் என்ன செய்துட்டேனாம்...?"
ராதாவுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. ”’நீங்கள்..” என்று தடுமாறினாள் சிறிது நேரம்.
”சொல்லேன். நீ படித்தவள்! என் தயவு உனக்கெதற்கு...? உன்னை வைத்துக் காப்பாற்ற நிறையச் சம்பாதிக்கும் தமையன் இருக்கிறார். உன்னிடம் அன்பு செலுத்த அந்தச் சுவாமிநாதன் வேறு இருக்கிறார்”.
”யார் இருந்தால் எனக்கு என்ன பிரயோசனம்? ஒழுங்காக இருக்க வேண்டியவர் சரியாக இருப்பது தான் எனக்கு முக்கியம்......"
”சுற்றி வளைத்துப் பேசுகிறாய் ராதா? சொல்ல வந்ததைச் சொல்லி விடு..." என்று சொல்லியவாறு மூர்த்தி அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான்.
ராதாவுக்கு துணிச்சல் ஏற்பட்டது.
"என்னுடைய வைர வளையல்களைக் காணோம்! மத்தியானம் பூராவும் தேடினேன்! அந்த நகை குடும்பச் சொத்து. அண்ணா அதை எனக்குக் கொடுக்க இஷ்டமில்லை யென்றால் ஜெயஸ்ரீக்கு கொடுத்திருக்கலாம். அவர் அப்படிச் செய்யாமல், எனக்குக் கொடுத்தார். அதை இழக்க நான் சம்மதப்பட வில்லை."
மூர்த்தி திகைத்து நின்றான். சட்டென்று தன் பெட்டியைத் திறந்து கத்தை கத்தையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து வெளியே எறிந்தான்.
”உன் வைர வளையல்களை விற்ற பணம் தான் இது. இந்தா! இதை எடுத்துப் போய் மறுபடியும் நீ வைர வளையல் வாங்கிக் கொள்ளலாம்" என்று கூறியவாறு கையில் ஒரு சிறு பெட்டியுடன் வீட்டை விட்டுப் புறப் பட்டான் மூர்த்தி. மாடியின் பின்புறமாக இறங்கி அவன் வேகமாகச் சென்று மற்றொரு ’கேட்' வழியாக வெளியில் செல்வதைக் கவனித்தாள் ராதா. கீழே கிடந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவசரமாக எண்ணிப் பார்த்தாள் அவள். மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய்கள் இருந்தன; அந்த நகை குறைந்தது ஐயாயிரம் பெறுமே.
புதிதாக வாங்கப் போனால் மேலேயே ஆகலாம். மூர்த்தி தன் கைச் செலவுக்குச் சில நூறுகளை வைத்துக் கொண்டு தான் பாக்கியை வீசி எறிந்து விட்டுப் போயிருக்க வேண்டும் என்று ஊகித்தாள் அவள். மிச்சப் பணமாவது மிகுந்ததே என்று தான் அவள் நினைத்தாள். ’எந்தத் தமயந்தியோ, ரோகிணியோ அடைந்துவிட்டுப் போகட்டும்' என்று தியாகம் புரிய அவள் சித்தமாக இல்லை. நோட்டுக்களை எடுத்து, பீரோவில் வைத்துப் பூட்டினாள். சுவாமிநாதன் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வர அவள் கீழே வந்தபோது அவர் நிம்மதியாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
ஜெயஸ்ரீக்கும் ஸ்ரீதரனுக்கும் உணவு பரிமாறி விட்டு ராதா தான் சாப்பிடாமலேயே மாடிக்குச் சென்றாள். மாடி வராந்தாவில் ஸ்ரீதரன் அவளைப் பார்த்து "ராதா! உன் புருஷன் இன்னும் வீட்டுக்கு வரவில்லையா? சற்று முன் உன் அறையில் பேச்சுக் குரல் கேட்டதே. வந்து விட்டான் என்றல்லவா நினைத்தேன்?" என்று கேட்டார்.
”வந்திருந்தார் அண்ணா, அவசரமாக வெளி யூருக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு உடனே புறப்பட்டுப் போய்விட்டார்..."
"சாப்பிட்டானா?"
"இல்லை, பசிக்கவில்லை என்று சொன்னார்….”
ராதா வெகு சாமர்த்தியமாக நடந்தவற்றை மறைத்துக் கூறினாள். அதற்கு மேல் ஸ்ரீதரன் பேச்சை வளர்த்தவில்லை.
தன் அறைக்குள் சென்ற ராதா சிறிது நேரம் மேஜை அருகில் உட்கார்ந்து ஏதோ புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதுவுமே செய்யத் தோன்ற-வில்லை. கணவன் வெளியே கோபமாகச் சென்ற போது அவள் அதைப் பொருட் படுத்தவில்லை. அவன் சென்ற பிறகுதான், தான் செய்த தவறை உணர்ந்தாள். கோபத்தினால் அவன் ஏதாவது இசைகேடாக நடந்து கொண்டானானால் என்ன பண்ணுவது என்று பயந்தாள் ராதா, அங்கிருந்து எழுந்து சென்று பீரோவைத் திறந்து பார்த்தாள், அவள் வைத்த இடத்திலேயே அந்த ரூபாய் நோட்டுக்கள் காணப்பட்டன. பெரியவர்கள் எவ்வளவோ ஆசையுடன், சிரமப்பட்டுச் செய்த வளையல்களை ஒரு நொடியில் விற்றது மல்லாடல், வேண்டுமானால் வளையல்களைத் திரும்பவும் வாங்கிக் கொள்' என்று வீராப்புப் பேச்சு வேறே அவருக்கு வேண்டியிருக்கிறதா என்று அவள் யோசித்தாள்.
இப்படிப் பலவாறாக எண்ணமிட்டுக் கொண்டே அன்றிரவைக் கழித்தாள்.
------------
2. 25. பொம்மைக் குதிரை
மனிதனை விருத்தாப்பியம் அணுகும்போது அவன் பால்யத்தில் எப்படியெல்லாம் இருந்தான் என்பதைச் சிந்தித்துப் பார்த்துக் கொள்கிறான். சிறு பிராயத்தில் அவன் விளையாடிய விளையாட்டுக்கள். பிறகு அவன் கல்வி பயின்று, மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்தியது, மக்களைப் பெற்று வளர்த்தது. யாவும் ஒன்றன் பின் ஒன்றாக அவன் நினைவுக்கு வருகின்றன. தன் மனசில் இருப்பதை யாரிடமாவது கூறி ஆறுதல் பெற விரும்புகிறான்.
வக்கீல் வேதாந்தம் எழுபது வயசை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார். அதிகமாக வெளியே போவதில்லை. சட்டப் புஸ்தகங்களும் அந்தத் தொழிலும் அவருக்கு அலுத்துப் போய் நாலைந்து வருஷங்கள் ஆயின. எதிலும் ஒரு சலிப்பு. உலகத்தில் வாழ்ந்தும், அந்த வாழ்க்கையில் தாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமை ஒன்றைத் தவற விட்டு விட்ட மனப்பான்மை யாவும் அவரிடம் காணப்பட்டன.
டாக்டர் காமாட்சி உற்சாகமாகத்தான் இருந்தாள். தொழில் முறையில் அவள் பெயர் மிகவும் பிரபலமாக இருந்தது. ஏற்கெனவே தகப்பனாரின் சொத்து ஏகப் பட்டது இருந்தது. அத்துடன் அவளுக்கே வருமானம் அதிகமாக வர ஆரம்பித்தது. ஏழைகளுக்கு இலவசமாக னைத்தியம் செய்தாள்.
அந்தச் சேவையிலேயே அவள் மனம் இன்பத்தையும். அமைதியையும் அடைந்திருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று அவள் மனத்தை வருத்திக் கொண்டிருந்தது . தள்ளாத கிழவரான தன் தகப்பனார் இப்படி ஒண்டிக் கட்டையாக அவ்வளவு பெரிய வீட்டில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கும்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தம் அவளுக்கு ஏற்பட்டது. அந்த வயசிலே பேரன்களும். பேத்திகளும் . அந்த வீட்டில் விளையாடி, அவர்களுடன் இன்பமாகப் பொழுகைக் கழிக்க வேண்டியவர். இப்படி நடமாடும் பொம்மையாக அவர் வாழ்க்கை அமைந்து விட்டதே என்று அவள் வருந்துவாள். தனக்கு ஒழிவு ஏற்படும் (போதெல்லாம் தகப்பனாரின் அருகிலேயே இருந்து வேடிக்கையாகப் பேசி அவருக்கு ஆனந்த மூட்டுவாள்.
ஒரு தினம் காமாட்சி வெளியிலிருந்து வரும்போது ஒரு குதிரைப் பொம்மையை வாங்கி வந்தாள். காரை விட்டு மகள் இநங்குவதை வேதாந்தம் தாழ்வாரத்தில் நின்று கவனித்தார். ஒரு கையில் குதிரைப் பொம்மையை எடுத்து வந்து கூடத்தில் வைத்து, ”அப்பா! இங்கே பாருங்கள்? இது எப்படியெல்லாம் ஆடுகிறது?" என்று அவரை அழைத்துக் காண்பித்தாள்.
வேதாந்தம் அவளையும் குதிரையையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் மனத்தை வேதனை பிழிந்தெடுத்தது. இப்படியெல்லாம் நாலு குழந்தைகளைப் பெற்றெடுத்து விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்து மகிழ வேண்டிய பெண் அல்லவா இவள்? பாவி! அவள் வாழ்க்கையை நான் எப்படிப் பாழாக்கி விட்டேன்!' என்று இடிந்து போய் கூடத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார் அவர்.
”ஏனப்பா பேச மாட்டேன் என்கிறீர்கள்?" என்று ஒரு குழந்தையைப் போலக் கேட்டாள் காமாட்சி குதிரையை இப்படியும் அப்படியும் ஆட்டிக்கொண்டே.
”யாருக்காக அம்மா இதை வாங்கி இருக்கிறாய்?"
”நமக்குத் தான் இருக்கட்டுமே! நாலு நாளைக்கு வைத்துக்கொண்டிருப்பது. அப்புறம் எங்கள் ஆஸ்பத்திரியில் குழந்தைகள் விடுதிக்குக் கொடுத்து விடுகிறேன்..."
தகப்பனாரை இப்படி யெல்லாம் மகிழ்விக்க வேண்டும் என்று மகள் ஆசைப்பட்டாள். பெண்ணின் மனசிலே இப்படியெல்லாம் ஆசைகள் எழுகின்றனவே அந்த ஆசைகளை அவள் எப்படி நிறைவேற்றிக்கொள்ள முடியும்?' என்று தகப்பனார் மனத்துக்குள் குமைந்தார்.
அந்தக் குதிரை கூடத்திலேயே ஐந்தாறு நாள் கிடந்தது. ஒரு தினம் காமாட்சி அதை எடுத்துத் தன் கார் டிரைவரின் குழந்தையிடம் கொடுத்து விட்டாள்.
"என்னம்மா இது? பொம்மையை வாங்கி வந்தாய்? ஏன் திரும்பக் கொடுத்து விட்டாய்" என்று கேட்டார் வேதாந்தம்.
”எந்தெந்தப் பொருள் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருந்தால் தான் அதன் தரம் உயரும் அப்பா. நான் என்ன விளையாட்டுக் குழந்தையா?"
"எனக்கென்ன குழந்தைகள் இருந்து பாழாய்ப் போகிறது!' என்கிற வருத்தம் அவள் குரலில் தொனித்த மாதிரி இருந்தது அவருக்கு.
"மகா பாவி நான்!" என்று தமக்குள்ளேயே மறுகினார் அந்தக் கிழவர்.
தகப்பனாரின் மனத்தில் தன்னைப் பற்றி ஏதோ போராட்டம் நடக்கிறது என்பதைக் காமாட்சி அறியவே இல்லை. எப்பொழுதும் போலவே அவள் தன் அலுவல் களில் ஈடுபட்டிருந்தாள்.
ஒரு தினம் பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு மேல் டாக்டர் ஸ்ரீதரன் அவர்கள் வீட்டுக்கு வந்தார். அவருடன் ஜெயஸ்ரீயும் வந்திருந்தாள். கூடத்தில் உட்கார்ந்திருந்த வேதாந்தம் சிறிது நேரம் ஜெயஸ்ரீயை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
”உங்கள் பெண்ணா?" என்று கேட்டார் அவர் டாக்டரைப் பார்த்து.
"ஆமாம். ஜெயஸ்ரீ தான். உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா! நன்றாக வளர்ந்திருக்கிறாள்" என்று சொல்லிக் கொண்டே ”ஏனம்மா! இந்தத் தாத்தாவை உனக்கு தெரியுமா!" என்று கேட்டார்.
”தெரியாமல் என்ன அப்பா? வக்கீல் தாத்தா தானே? நாலைந்து வருஷத்துக்கு முன்னே எனக்கு இவர் ’லேடி' பொம்மை வாங்கித் தரவில்லையா? அதை இன்னமும் வைத்திருக்கிறேனே!" என்றாள் ஜெயஸ்ரீ. காமாட்சி இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவள் எழுந்திருந்து உள்ளே போனாள். அழகிய குழந்தைப் பொம்மை ஒன்றை எடுத்து வந்தாள்.
"இந்தா அம்மா! இதையும் வைத்துக்கொள்" என்று கூறி ஜெயஸ்ரீயிடம் கொடுத்தாள் அதை.
ஜெயஸ்ரீக்குத் தயக்கமாக இருந்தது. ’பொம்மை வைத்துக் கொண்டு விளையாடும் வயசெல்லாம் தாண்டி விட்டதே இது நமக்கெதற்கு' என்று அவள் யோசித்துக் கொண்டு சற்றுத் தயக்கத்துடன் கையை நீட்டினாள் பொம்மையை வாங்க.
வேதாந்தம் இதை பார்த்துக் கொண்டே உட்கார்ந் திருந்தார். பிறகு டாக்டரின் பக்கம் திரும்பி, ”டாக்டர்! காமாட்சிக்கு ஆறு மாசங்களாக ஒரு பைத்தியம். விளையாட்டுப் பொம்மைகள், சிறு கார்கள். குழந்தை சைக்கிள் . என்று இப்படி வாங்கி வருகிறாள். இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் வைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு தனக்குத் தோன்றியவர்களுக்கு அவற்றைக் கொடுத்து விடுகிறாள். அவளுடைய இந்தப் போக்கு எனக்குப் புரியவே இல்லை ...."
காமாட்சி தகப்பனார் கூறியதைக் கேட்டபடி முறுவலித்துக் கொண்டே நின்றாள்.
டாக்டர் ஸ்ரீதரன் இதற்குப் பதில் அளித்தார் :
”மனிதனுடைய மனம், சிந்தனையெல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருந்தார். பல ரகச் சீட்டுக் கட்டுகளை வாங்கி மேஜை மீது வைத்திருப்பார். அப்படி அவருக்குச் சீட்டாட்டம் நன்றாகத் தெரியும் என்றோ அதில் விருப்பம் கொண்டவர் என்றோ கூற முடியாது. யாராவது குழந்தைசள் வந்து கேட்டாலும் கொடுத்து விடுவார். எதற்கு வாங்குகிறார். எதற்காகக் கொடுக்கிறார் என்பது பலருக்குப் புரியாது. இப்படி ஒரு போக்கு" என்றார்.
வேதாந்தம் தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந் திருந்தார்.
----------
2. 26. அவசர முடிவு
சுவாமிநாதனின் உடல் நிலையில் மாறுதல் எதுவும் அதிகமாக ஏற்பட வில்லை. நாடி நடந்தால் ஆயாசமும் கிறுகிறுப்பும் அவருக்கு ஏற்பட்டது. வீட்டில் சமையலைக் கவனித்துக் கொள்ள வேறொருவர் வந்திருந்தார்.
மனைவியிடம் கோபித்துக் கொண்டு போன மூர்த்தியிடமிருந்து மூன்று நான்கு மாதங்கள் வரையில் தகவலே தெரியாமல் இருந்தது. முதலில் சில நாட்கள் வரையில் ராதா அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. "அவர் தான் முதலில் கடிதம் எழுதட்டுமே. தவறு அவர் பேரில்தானே இருக்கிறது?' என்று வீராப்புடன் மௌனம் சாதித்து வந்தாள். பால்யத்திலிருந்து கூடப் பிறந்த தமையனிடம் கூட மனம் விட்டுப் பழகாமல் போகவே தன் மனசில் இருக்கும் குறைகளை யாரிடம் வெளி யிடுவது என்பது புரியாமல் அவள் திகைத்து. தன் துயரத்தைத் தானே விழுங்கிக் கொள்ள நேர்ந்தது.
அவள் வேளா வேளைக்குச் சாப்பிடாமல் எதிலும் பற்றில்லாமல் இருப்பதை சுவாமிநாதன் தான் கவனித்தார். வாழைக் குருத்துப் போல் மழமழவென்று வாளிப் பாக வளர்ந்திருந்த அந்தப் பெண் நிறம் மாறி இளைத்துப் போய் இருப்பது அவர் மனத்தைப் பிழிந் தெடுத்தது. ராதா குழந்தையாக வளர்ந்து பெரியவள் ஆனது. வீட்டில் சர்வ சுதந்திரத்துடன் அவள் இருந்தது ஸ்ரீதரன் தன் சகோதரியிடம் வைத்திருக்கும் அலாதி அன்பு. இவை யாவும் அவர் சிந்தனையைத் தூண்டி விட்டன.
கூடத்தில் ஒரு பெஞ்சியில் படுத்துக்கொண்டே சுவாமி நாதன் சிந்தனையில் மூழ்கி இருந்தார். மாடியில் ராதாவும் யோசனையில் மூழ்கி, தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையுமே மறந்திருந்தாள்.
கல்யாணம் ஆவதற்கு முன்பு அந்த வீட்டில் அவளுக்கு இருந்த சுதந்திரம், உரிமை யாவும் இப்பொழுது பறிபோய் விட்ட மாதிரி ஒருவித உணர்ச்சி அவளைப் பிடித்து வாட்டியது. அந்த வீட்டிலே வெட்டியாக உட்கார்ந்து தண்டச் சாப்பாடு சாப்பிடு-வதாகவே ராதா நினனத்தாள். மற்றப் பெண்களைப் போல அவள் மனதிலும் பல ஆசைகள் தளிர் விட்டன. கணவன் சம்பாதித்து வருவதை வைத்துக் கொண்டு அழகாக செட்டாக, இன்பமாகக் குடித்தனம் நடத்த வேண்டும். வேளா வேளைக்குச் சமைத்துக் கணவனுக்குப் போட்டு அவனைக் காரியாலயம் அனுப்ப வாசலில் வந்து வழி அனுப்பி, மாலையில் அவன் வீடு திரும்புவதை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்க வேண்டும் என்று விரும்பினாள் ராதா.
கணவனுடன் கடற்கரை செல்ல வேண்டும்; நாடகம் பார்க்க வேண்டும்; கோவிலுக்குப் போக வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக 'காதல் இருவர் கருத்தொருமித்து' இல்லறம் நடத்த வேண்டும் என்கிற ஆவள் அவல் மனதை சூழ்ந்து கொண்டு வாட்டியது.
தனக்கும் மூர்த்திக்கும் இடையில் பல மைல்கள் தூரம் இருப்பதையும் மறந்து ராதா சிந்தனையின் வசப்பட்டவளாகச் சட்டென்று பீரோவைத் திறந்து தன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத்தாள். இனிமேல் அந்த வீட்டில் இருக்க விருப்பமில்லாதவள் போல் அவளுடைய முக்கியமான வஸ்துக்கள் யாவையும் பெட்டியில் வைத்துப் பூட்டினாள். அந்த வினாடி அவள் மனத்தில் அந்த வீட்டுக்கும். அவளுக்கும் சம்பந்த மில்லாத ஓர் உணர்ச்சி தோன்றியது. உடனே எப்படி யாவது மூர்த்தியின் இருப்பிடத்துக்குச் சென்று விட வேண்டும் என்கிற ஆசை அவள் மனதில் எழுந்தது.
கடைசியாகப் பணப் பையில் ரூபாயை எடுத்து அவள் வைத்துக் கொண்டிருக்கும் போது அறையின் வாசற்படியில் சுவாமிநாதன் தள்ளாடிக் கொண்டே வந்து நின்றார்.
"என்னம்மா ! எங்கே கிளம்புகிறாய். பெட்டி எல்லாம் எடுத்துத் தயாராக வைத்திருக்கிறாயே? உன் புருஷனிடமிருந்து ஏதாவது கடிதம் வந்ததா?" என்று விசாரித்தார்.
ராதா சிறிது நேரம் சிலை மாதிரி நின்றாள். கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. நெஞ்சிலே துயரச் சுமை பாரமாக அழுத்தியது. விவரிக்க முடியாத ஒரு கலக்கம் அவள் உள்ளத்தைச் சூழ்ந்து கொண்டிருந்தது.
சுவாமிநாதன் தள்ளாடிக் கொண்டே உள்ளே வந்தார்.
"ராதா! உன்னைப் பார்த்தால் என் வயிற்றைச் சங்கடம் செய்கிறது. எவ்வளவோ விஷயங்களை நீ என்னிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறாய். துயரங்களை மனசில் வைத்துப் பூட்டி வைத்தால் மட்டும் அவை வெளியே தெரியாமல் போய் விடுமா? உன் மனம் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது என்பதை உன் முகமே காட்டி விடுகிறதே! வயசிலும் அனுபவத்திலும் பெரியவனாகிய என்னை நீ ஏமாற்றிக் கொண்டே இருக்கிறாய்...."
மேல் மூச்சு வாங்க சுவாமிநாதன் பேசி முடிப்பதற்குள் ராதா தேம்பித் தேம்பி அழுதாள். பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ”அவரிடமிருந்து கடிதமே வரவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை " என்றாள்.
கணவனின் நன்மையில் அவன் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் காண்பிக்க வேண்டிய அக்கறையில் ராதா தவறி விட்டாள் என்பது சுவாமிநாதனுக்கு விளங்கியது. 'இந்தப் பெண் எதற்காக அவசரப்பட்டு விவாகம் செய்து கொண்டாள்?' என்னும் அளவுக்கு அவர் மனம் வருந்தியது.தன் துயரை எல்லாம் அவள் கண்ணீராக வடிக்கும் வரையில் சுவாமிநாதன் ஒன்றும் பேசவில்லை. ராதா ஒருவழியாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சமாதானம் அடைந்தவுடன், "ஏனம்மா! மூர்த்தியின் விலாசம் தெரியாமல் நீ எங்கே கிளம்புவதாக இருந் தாய்?" என்று கேட்டார்.
ராதா தன் எதிரில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பெட்டியைப் பார்த்தாள். அவள் எங்கே போகிறாள்? அப்படித்தான் மூர்த்தியின் காரியாலயம் மூலமாக அவள் இருப்பிடத்தை அறிந்து கொண்டாலும், ”நீ ஏன் வந்தாய்? உன்னை யார் வரச் சொன்னது?" என்று அவன் கேட்டால், மறுபடியும் ராதா இந்த இடத்துக்குத் தானே வர வேண்டும்? ஒன்றையும் யோசியாமல் அவசரத்தில் செய்த முடிவைப் போல அவள் பெட்டியில் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டது அவளுக்கே வியப்பை அளித்தது.
அவள் ஒன்றும் கூறாமல் இருக்கவே, சுவாமிநாதனுக்கு அவளுடைய மன நிலை புரிந்தது. பிறந்த வீட்டிலும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை யில் தான் சுதந்திரம் உண்டு. அங்கே எவ்வளவு இன்ப மாகவும், சுதந்திரமாகவும், அவர்களுடைய பொழுது கழிந்தாலும், அதை அவர்கள் விரும்புவதில்லை. கணவனின் ஆதரவில், அவன் அன்பில் தங்ளை அர்ப்பணிக்கவே பெண்களின் உள்ளங்கள் ஆசைப்படுகின்றன என்பதை உணர்ந்து கொண்டார்.
ராதா பெட்டியைத் திறந்து மறுபடியும் ஒவ்வொரு துணியாக எடுத்துப் பீரோவுக்குள் வைத்தாள். படிப்படியாக அவள் மனம் நிதானமடைய ஆரம்பித்தது. கீழே டாக்டர் ஸ்ரீதரன், வெளியே போயிருந்தவர் வீடு திரும்பி விட்டார் என்பதற்கு அடையாளமாக அவருடைய காரின் ஒலி கேட்டது.
------------
2. 27. முக்கியமான விஷயம்
டாக்டர் ஸ்ரீதரன் காமாட்சியின் வீட்டுக்குத் தன் மகளுடன் சென்று வந்த பிறகு, வக்கீல் வேதாந்தத்தின் மனம் அமைதியாக இல்லை. ஸ்ரீதரனின் மிடுக்கான தோற்றம், அன்பு நிறைந்த பேச்சு, திறமையாவும் அவர் மனத்தைக் கவர்ந்தன. இவ்வளவு நற்குணங்கள் பொருந்திய ஆண்பிள்ளை, மறுமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவருக்கு விந்தையாக இருந்தது. தொழில் முலாயில் பல வருஷங்களாக தம்முடைய மகளும், ஸ்ரீதரனும் பாதி வருவதை அவர் அறிவார். ஆகவே அவர் மனதில் ஒரு விசித்திர எண்ணம் வேர் விட்டு ஊன்றி முளைக்கத் தோண்றியது. எப்படியாவது ஸ்ரீதரனை தனிமையில் சந்தித்து, தாது மகளை மறுமணம் செய்து கொள்ளும்படி கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். தம்முடைய தீர்மானம் சரியா, தவறா. அதன்படி காமாட்சியும், ஸ்ரீதரனும் நடந்து கொள்வார்களா என்பதையெல்லாம் அவர்
யோசித்துப் பார்க்கவில்லை.
ஒரு தினம் பிற்பகல் சுமார் ஒரு மணிக்கு வேதாந்தம் ஸ்ரீதரனின் வீட்டுக்குப் போனார். பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஸ்ரீதரன் முன் கூடத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஏதோ ஒரு வைத்தியப் புஸ்தகத்தைப் படித்துக் கொணடிருந்தார். புதிதாக வந்த சமையற்காரர் பகல் பொழுதை கழிப்பதற்காக வெளியே போய் விட்டார். சுவாமிநாதனுக்கு வீட்டில் வேலை ஒன்றும் கிடையாது. அதிகமாக நடமாட்டம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது டாக்டரின் உத்தரவு. பொழுது தேய்கிறதோ அல்லது வளர்கிறதோ அவர் மட்டும் அந்த இரண்டாங்கட்டு பெஞ்சியில் படுத்துக் கிடக்க வேண்டும். எதிரே திறந்தவெளி. அங்கே வாழைப் புதர்கள் மண்டிக் கிடந்தன. சற்றுத் தள்ளி ஒரு பெரிய வேப்பமரம் குளிர்ந்த காற்றை வீசிக் கொண்டு நின்றது. தோட்டக்கார ராமையா, மண்வெட்டியால் பாத்திகள் வெட்டும் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
மாடியில் ராதா தன் அறைக்குள் அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். அவள் மனத்துள் பிருமாண்ட மான கல்கத்தா நகரம் தோன்றியது. அதன் தெருக்களில் மூர்த்தி அலைவது தெரிந்தது. அவன் பக்கத்தில் ஒரு வங்காளிப் பெண் விசுக் விசுக் கென்று நடை போட்டுக் கொண்டு வந்தாள். மூக்கும் விழியுமாக கொடியைப் போலத் துவண்டு அவள் நடந்து வருவது தனி அழகாக இருந்தது. ராதாவின் உள்ளும் புறமும் அனலாகத் தகித்தது . மறுபடியும் ஒரு காட்சி! கல்கத்தாவின் இரவு ’விடுதி' களில் மூர்த்தி மயங்கிக் கிடக்கும் காட்சி அது. ராதா தனக்குள் பேசிக் கொண்டான். பஞ்சமா பாதகங்களில் இரண்டைத் தன் கணவன் செய்து விட்டதாக அவள் மனம் புலம்ப ஆரம் பிக்கிறது. எப்படியும் அவனைக் கண்டு பிடித்து நல்வழிப் படுத்த வேண்டும் என்று மனம் துடிக்கிறது. அதற்கு வேண்டிய ஆற்றலும், துணிவும் தன்னிடம் இருக்கின்ற னவா என்று ராதா யோசிக்கிறாள். தூக்கத்தில்கூட ராதாவின் கண் இமை ஓரங்களிலிருந்து கண்ணீர் கசிகிறது.
ஸ்ரீதரன் கையிலிருந்த புஸ்தகத்தை மார்பின் மீது வைத்துக் கொண்டு அப்படியே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தார். வேதாந்தம், காரை விட்டு இறங்கி உள்ளே சென்று டாக்டரின் எதிரில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார். சட்டென்று விழித்துக் கொண்ட ஸ்ரீதரன். வேதாந்தத்தை வரவேற்று விட்டு, ”என்ன ஸார்! இப்படி நடு மத்தியான வேளையில் வந்திருக்கிறீர்கள்? வெயில் நேரத்தில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டீர்களே?" என்று கேட்டார்.
வேதாந்தம் அசட்டுச் சிரிப்பு சிரித்தார். அவர் ஒன்றும் கூறாமல் இருக்கவே மறுபடியும் ஸ்ரீதரன் “என்ன ஸார்! பேசமாட்டேன் என்கிறீர்கள்? வந்த விஷயம் என்ன? சொல்லுங்கள்" என்று வற்புறுத்தினார்.
வேதாந்தம் தம் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார். ”ஒன்றுமில்லை டாக்டர்... மிகவும் முக்கியமான விஷயமாக உங்களைப் பார்த்துப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தேன்....” என்று இழுத்தார். ஸ்ரீதரன் தம் இருக்கையில் எழுந்து உட்கார்ந்தார். ”சரி சொல்லுங்கள். இங்கே என்னையும், உங்களையும் தவிர வேறு யாரும் இல்லை" என்று கூறினார். வேதாந்தம் வீட்டை விட்டுக் கிளம்பும்போது
ஏதோ ஓர் அசட்டுத் தைரியத்துடன் கிளம்பினார். தனக்குப் பிறகு காமாட்சியின் தனி வாழ்க்கை. எப்படி யெல்லாமோ வாழ வேண்டிய பெண் மணமிழந்து தனி மரமாக நிற்கும் அவலக்கோலம் யாவும் அவர் மனத்தை நெகிழச் செய்து அவரை ஓர் அவசர முடிவுக்கு அழைத்துச் சென்றது. ஸ்ரீதரனின் வீட்டினுள் நுழைந்தவுடன் அவருக்குத் தாம் தீர்மானித்துக் கொண்டு வந்த விஷயத்திலேயே சந்தேகம் ஏற்பட்டது. ”காமாட்சிக்குக் கிட்டத்தட்ட முப்பது வயது ஆகிறதே அவள் என்ன சின்னக் குழந்தையா, அவளைக் கேட்காமல் நாம் எந்த விஷயத்திலும் இறங்க முடியுமா?" என்கிற சந்தேகம் தான் அது.
’ஸ்ரீதரன் மட்டும் என்ன? வயசில் சிறியவரா? நாற்பது வயசுக்கு மேல், அதுவும் மனைவி இறந்து பல வருஷங்கள் கழித்து அவருக்கு மறு மணத்தில் ஆவல் ஏற்படப் போகிறதா? அந்த ஆவல் பால்யத்திலேயே - எழுந்திருக்க வேண்டியதல்லவா?'
’சரி வந்தது வந்தாகி விட்டது. ஏதாவது பொய்யைச் சொல்லி விட்டுப் போய் விடுவோம். இதற்குத் தான் அதிகமாக வயசானவர்களை பாவம்! வயசாகி விட்டது . இனிமேல் அவர் சற்று முன்னே பின்னே தான் இருப்பார் என்று சொல்கிறார்கள் போல் இருக்கிறது' என்று பலவாறு எண்ணமிட்டுக் கொண்டே வேதாந்தம் உட்கார்ந்திருந்தார். ஆனால், ஸ்ரீதரன் விழித்துக்கொண்டு, "என்ன! எங்கே வந்தீர்கள்?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தவுடன் வேதாந்தம் தாம் சொல்ல வந்ததை மறைக்க முடியாமல் சிறிது நேரம் திண்டாடிப் போனார்.
எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்லிப் பழக்க மடையாதவர்கள் யாவருக்குமே இந்தத் திண்டாட்டம் ஏற்படுவதுண்டு. விஷயத்தை மறைக்கப் போய் எக்கச் சக்கமாக அகப்பட்டுக் கொள்வார்கள். வேதாந்தத்துக்கு. பொய் சொல்லிப் பழக்கமே இல்லை. கட்சிக்காரர்களுக்காக நீதி ஸ்தலத்தில் வாதாடும் போது கூட கூடுமான வரையில் நியாயத்தையும் உண்மையையும் பின் பற்றியே சென்றவர் - அப்படிப்பட்டவர் அற்ப சொற்பத்துக்காக எதற்குப் பொய் சொல்லப் போகிறார்? அவர் மனசிலே ஓர் எண்ணம் எழுந்து விட்டது. அது சரியா தவறா என் றெல்லாம் அவர் சிந்தித்துப் பார்க்கவில்லை. இப்பொழுது அதை மறைத்துப் பேசுவானேன் என்ற தீர்மானத்துடன் வேதாந்தம் தம் அச்சங்களை உதறிவிட்டு விஷயத்தைக் கூறினார் ஸ்ரீதரனிடம்.
”எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தையின் அபிப்பிராயமும் உங்கள் அபிப்பிராயமும் எப்படி இருக்கிறதோ? காமாட்சி என் மகள் தான் இருந்தாலும் ஒரு பெண்ணின் மனத்தை அறிவது மிகவும் கஷ்டமான விஷயம். தகப்பனாக இருந்தாலும், உடன் பிறப்பாக இருந்தாலும் ஒரு பெண்ணின் மனசை லேசில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு வேளை அவள் தாய்? உயிருடன் இருந்தால் அவளைப் புரிந்து கொண்டிருக்கலாம்" என்றார்.
ஸ்ரீதரன் சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. அவருடைய மௌனம் வேதாந்தத்துக்கு அச்சத்தைக் கொடுத்தது. ’சொல்லத் தகாததைச் சொல்லிக் கேட்கத் தகாததைக் கேட்டு விட்டோமோ என்னவோ' என்று பயந்தார். பிறகு ஏதாவது ஒன்றைப் பேசித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் பேரில், "டாக்டர்! நான் கூறியதில் தவறு இருக்கலாம். எனக்குப் பிறகு காமாட்சியின் தனிமையைப் பற்றி நினைத்துத் தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். அவள் தனியாக இந்த உலகத்தில் தன் வாழ்க்கையை எப்படி நடத்துவாள் என்கிற வேதனை தாங்காமல் உங்களை வந்து இப்படிக் கேட்கிறேன். அந்த வேதனை என்னை அல்லும் பகலும் நிம்மதியை இழக்கச் செய்து அவதிக்கு ஆளாக்கி விட்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு. சாகும் நாடகளிலாவது நிம்மதியுடன் போக வேண்டும் என்ற ஆவலினால் உங்களைத் தேடி வந்தேன்" என்றார் வேதாந்தம் படபடக்கும் குரலில்.
வயோதிகத்தினால் ஆட்டம் கண்டிருந்த அவர் உடல் மேலும் நடுங்கியது. நிலை கொள்ளாமல் தவித்தார்.
ஸ்ரீதரன் புன்முறுவலுடன் வேதாந்தத்தின் கரங்களைப் பற்றிக் கொண்டார். பிறகு நிதானமாக, ”பதட்டமடையாதீர்கள். நீங்கள் கூறியதில் எதுவுமே தவறில்லை. காமாட்சி தனியாக இந்த உலகத்தில் இருக்கிறாள் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். படித்துப் பட்டம் பெற்று அறிவும் திறமையும் ஒருங்கே அமைந்தவள் உங்கள் மகள். அவளுடைய தொழில் ஒன்றே அவளுக்குத் துணையாக இருக்கிறது. அப்படி அவள் ஒன்றும் சிறு பிராயத்தவள் இல்லை. காமாட்சிக்கு வயது முப்பது இருக்காதா?" என்று கேட் டார்.
”ஆமாம்" என்கிற பாவனையில் தலையை அசைத்தார் வேதாந்தம்.
"தன்னுடைய மறுமணத்தைப் பற்றி அவள் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்திருப்பாளே, இவ்வளவு நாட்கள் அதில் விருப்பம் செலுத்தாமல் இருக்கும் போதே அவளுடைய மனம் உங்களுக்கு விளங்கி இருக்க வேண்டுமே...."
வேதாந்தத்துக்கு அவர் மகளின் குணச்சிறப்புகளைப் பற்றி பிறத்தியார் கூற வேண்டி இருந்தது. வரும்போது அவருடன் கூட இருந்த அதைரியம், அவநம்பிக்கை . பலஹீனம் யாவும் பறந்து போய்விட்டன. ஒருவிதமான அசட்டுச் சிரிப்புடன் அவர் ஸ்ரீதரனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு காரில் போய் உட்கார்ந்தார்.
-------------
2. 28. சலனம்
யோசனை கேட்க வந்தவரின் மனசில் தெளிவை ஏற்படுத்தினார் ஸ்ரீதரன். வேதாந்தத்தின் கார் சென்றவுடன் சிறிது சிறிதாக அவர் மனம் இருள ஆரம்பித்தது. மனம் பல விதமான எண்ணங்களை அசை போட ஆரம்பித்தது.
காமாட்சியின் வருங்காலத்தைப் பற்றி வேதாந்தம் கவலைப் பட்டுக் கொண்டு வந்து போனதை நினைத்தவுடன் அவர் மனக்கண் முன் பவானி வந்து நின்றாள். சலனமற்ற அவள் முகபாவத்திலிருந்து அவரால் எதுவுமே கண்டு பிடிக்க முடியவில்லை. மலையிலிருந்து குதித்துப் பெருகும் ஆறு, சமவெளியில் வெகு நிதானமாக மென்னடை பழகிச் செல்வதைப் போல் ஒருவித நிதானம் அவளிடம் குடி கொண்டிருந்தது. அடக்கமும், பண்பும் உருவான பவானியைப் பற்றி ஒரே ஒரு சமயம் அவர் மனத்தில் சஞ்சலம் எழுந்ததுண்டு. நாகராஜன் வீட்டில் முதன் முதலாக அவளைப் பார்த்த அன்று அவர் மனத்திலே ஏதோ ஓர் ஆசை முளைத்து எழுந்தது. அன்று அவளைப் பற்றி. பூராவும் அறிந்து கொள்ளாத நிலையில் ஸ்ரீதரன் இருந்தார். பிறகு படிப்படியாகப் பவானியைப் பற்றிப் புரிந்து கொண்டார். பெண்களுக்கு இருக்கவேண்டிய குணச் சிறப்புகள் யாவும் அவளிடத்தில் இருப்பதைக் கண்டார். அன்று அவர் மனத்துள் எழுந்த ஆசைக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் அதன் விளைவுகள் என்னவாகியிருக்கும் என்றும் சொல்ல முடியவில்லை. ஸ்ரீதரன் உள்ளத் திண்மை வாய்ந்தவர். சட்டென்று எழுந்த ஓர் ஆசைக்குப் பிரதானம் கொடுக்காமல் அதை அடக்கிக் கொண்டு விட்டார். எல்ல வற்றிற்கும் மேலாக பாலுவைப் பார்த்ததும் பவானியிடம் அவருக்கு அலாதி அனுதாபமே ஏற்பட்டது. அந்தக் குழந்தையின் நலனுக்காக அவள் தன் சுகத்தையெல்லாம் உதறி விட்டுப் பிறருக்கு வேலை செய்வதைக் கவனித்தார். பிறருடைய சேவையில் அவள் இன்பம் காணுவது ஒன்று தான் அவருடைய மனத்தை வெகுவாகக் கவர்ந்து விட்டது.
காமாட்சியைப் பற்றி அவர் அன்றும், இன்றும் ஒரே எண்ணத்தை வளர்த்துக் கொண்டவர். ஆகவே வேதாந்தம் அப்படிக் கேட்டவுடன் அவருக்குக் கோபமோ, மனத்தாங்கலோ எழவிலலை. பாவம்! வயசான மனிதர்! அதனால் தான். அவர் இப்படிக் கேட்க நேரிட்டது என்று ஸ்ரீதரனுக்குத் தோன்றியது.
சற்று முன் இருண்டிருந்த அவர் மனத்தில் ஒளி பிறந்தது. வேதாந்தம் வந்தது. புதுச் செய்தி ஒன்றைப் பிரஸ்தாபித்தது. பவானியைப் பற்றிய எண்ணங்கள் காமாட்சியைப் பற்றிய முடிவு, எதுவுமே அவர் மனதில் நிலைக்கவில்லை. இவ்வளவு காலம் தாம் ஆற்றி வரும் பணியை. அந்த மகத்தான கடமையைத் தொடர்ந்து ஆற்றவே ஸ்ரீதரன் விரும்பினார். அந்த விருப்பம் அவர் மனத்தில் பலமாக எழுந்ததும், அவர் உள்ளம் தெளிவு பெற்றது. நிம்மதியுடன் அப்படியே உறங்கிப்போனார்.
அங்கிருந்து கிளம்பிய வேதாந்தம் நேராக வீட்டுக்குச் செல்லவில்லை. தமது நண்பர்களுடைய வீட்டுக்குப் போனார். அங்கு அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு பலதரப்பட்டதாக இருந்தாலும் அவர் மனம் திரும்பத் திரும்ப அன்று பகல் ஸ்ரீதரனிடம் அவர் கேட்ட விஷயத்துக்கே தாவிக் கொண்டிருந்தது. சுமார் நான்கு மணிக்கு கடற் கரைக்குச் சென்று. அப்படியே காரில் சாய்ந்து கடற் காற்றை அனுபவித்தார். தேகத்தில் வெப்பம் ஏற்பட் டிருந்ததால் அதைத் தணிக்கக் குளிர்ந்த காற்றும், சுக சாதனங்களும் பயன் படலாம். உள்ளத்திலே வெம்மை சுழன்று மோதிக் கொண்டிருக்கும்போது அதைத் தணிக்கும் வல்லமை குளிர்காற்றுக்குக் கூட இருக்காது. "என்றுமில்லாமல் நல்ல பகல் வேளையில் வீட்டைவிட்டு கிளம்பி இப்படிச் சுற்றுகிறாரே ஐயா' என்று கவலைப் பட்டான் டிரைவர்.
”ஏன் ஸார்! உங்களுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லையே. என்னவோ போல இருக்கீங்களே” என்று விசாரித்தான்.
”அதெல்லாம் ஒன்றும் இல்லை அப்பா? நீ பயந்து விடாதே” என்றார் வேதாந்தம்.
ஏறக்குறைய இருபது வருஷங்களாக அவரிடம் வேலை செய்து வரும் அந்த ஆசாமிக்கு அவர்கள் குடும்பத்தைப் பற்றித் தெரிந்து தான் இருந்தது. 'ஐயாவுக்குத் தம் மகளைப் பற்றிக் கவலை இருக்காதா?' என்று நினைத்துக் கொண்டான்.
மனத்தில் ஏற்பட்டிருக்கும் அந்த உளைச்சல் முழுவதும் நீங்கப் பெறாதவராக வேதாந்தம் மாலை ஆறு மணிக்கு மேல் தம் வீட்டுக்குக் கிளம்பினார் .
-------------
2. 29. குழந்தையின் குரல்
காரில் வந்து இறங்கிய வேதாந்தம் வாசல் வராந்தாவில் இருந்த மாடிப்படிகள் வழியாக ஏறி மாடியை அடைந்தார். அங்கு கிடந்த சோபா ஒன்றில் சாய்ந்து மின் விசிறியைச் சுழல விட்டுப் பெரு மூச்சு விட்டார் அவர். கடந்த சில வருஷங்களாக மனதில் சிறைப்படுத்தி வைத்திருந்த எண்ணங்களுக்கு விடுதலை அளித்த நிம்மதி அவர் நெஞ்சில் நிறைந்திருந்தாலும், கூடவே ஒரு காரணமற்ற பயம் சூழ்ந்து கொண்டிருந்தது. மாலையோ, நாளையோ காமாட்சி, டாக்டர் ஸ்ரீதரனைச் சந்தித்தால் அவர் தன்னைப் பற்றிக் காமாட்சியிடம் ஏதும் கூறிவிடுவாரோ என்று அஞ்சினார். இந்தச் செய்தியை முன்னாடியே காமாட்சியிடம் கூறி விடுவது நல்லது என்று அவருக்குத் தோன்றவே அவசரமாக மாடியிலிருந்து கீழே வருவதற்குக் கிளம்பினார்.
அப்போது. கீழேயிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. பிறந்து சில நாட்கள் ஆகியிருக்க வேண்டும். ’குவா குவா' என்ற அந்த ஒலி இன்பமாக அவர் செவிகளில் வந்து விழுந்தது . 'யாரேனும் உறவினர்கள் குழந்தையுடன் வீட்டுக்கு வந்திருக்கிறார்-களோ?' என்று நினைத்தார்.
இதற்குள் கீழே இருந்து அவர் மகளின் குரல் தெளிவாகக் கேட்டது.
”சொக்கம்மா! குழந்தை அழுகிறது பார். கொஞ்சம் தொட்டிலை ஆட்டு. இதோ பாலைப் புட்டியில் ஊற்றிக் கொண்டு வருகிறேன்" என்றாள்.
வேதாந்தம் வியப்பும் திகைப்பும் அடைந்தவராக மாடிப்படிகளில் சற்று வேகமாகவே இறங்கிக் கீழே வந்தார். கூடத்துக்கு அடுத்தாற் போல் இருக்கும் காமாட்சியின் அறையில் ஒரு 'ஸ்டாண்டு' தொட்டில் இருந்தது. அதைச் சுற்றிக் கொசுவலை கட்டியிருந்தது. தொட்டிலின் அருகில் காமாட்சி ஒரு சிறு பெஞ்சியின் மீது உட்கார்ந்து குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
வேதாந்தம் தம் மகளின் அருகே வந்தார். மிகவும் அதிசயத்துடன் ஒரு நூதனப் பொருளைப் பார்ப்பதைப் போல் தொட்டிலுக்குள் குனிந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டே, “ என்ன அம்மா இது?" என்று தம் மகளைப் பார்த்துக் கேட்டார்.
”குழந்தை அப்பா ......" என்றாள் காமாட்சி. "அது தெரிகிறது. இது யார் குழந்தை அம்மா?" என்று கேட்டார் ஆச்சரியத்தால் தம் கண்கள் மலர.
”நம் வீட்டுக் குழந்தை அப்பா. இனிமேல் இவளுக்கு இந்த வீட்டிலே சொந்தம் உண்டு" என்றாள் காமாட்சி.
வேதாந்தம் அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.
"அம்மா, காமாட்சி. கொஞ்சம் எனக்குப் புரியும் படியாகத்தான் சொல்லேன். மூக்கும் விழியுமாக சந்திர பிம்பம் போல இருக்கும் இந்தக் குழந்தை பிறந்தவுடனேயே பெற்றவர்களை இழந்த துர்பாக்கியசாலியா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!"
தொட்டிலில் இருந்த குழந்தைப் பாலை பருகிய வுடன் அப்படியே அயர்ந்து தூங்கி விட்டது. அதன் வாய் அருகே கசிந்திருந்த பாலை மெதுவாகத் துடைத்து விட்டு, மேலே கட்டி இருந்த கொசுவலையை அவிழ்த்துத் தொங்க விட்டாள் காமாட்சி. பிறகு தன் தகப்பனாரின் எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.
"அப்பா! இந்தக் குழந்தை பிறந்து இன்று பதினோரு நாட்கள் ஆகின்றன. இன்று பகல் பன்னிரண்டு மணி வரைக்கும் இதற்கும் இதன் தாய்க்கும் சம்பந்தம் இருந்தது. பிறகு அந்த சம்பந்தம் நீங்கி விட்டது. இனி மேல் நான்தான் இந்தக் குழந்தைக்குத் தாய்" என்றாள். இதைக் கேட்ட வேதாந்தத்தின் உள்ளம் பரபரப் படைந்தது.
"ஏனம்மா ! குழந்தையின் தாய் இறந்து விட்டாளா? தகப்பன் குழந்தையைக் கவனிக்கவில்லையா? வேறு உற்றார் உறவினர் இந்தக் குழந்தைக்கு யாரும்
இல்லையா?"
காமாட்சியின் கண்கள் கலங்கி இருந்தன. அன்று காலை ஆஸ்பத்திரியில் நிகழ்ந்த சம்பவங்கள் வரிசையாக அவள் மனக் கண் முன்பு தோன்றின. அந்த வார்டு'க்கு அவள் தான் டாக்டராக இருந்தாள். அவள் மேற் பார்வையில், பொறுப்பில் தான் நோயாளிகள், பிரசவித்தவர்கள் உள்ளே தங்கியிருக்கவும். வெளியே செல்லவும் முடியும்.
காலையில் ஒவ்வொரு படுக்கையாகச் சென்று, பிரசவித்தவர்களில் வீடு செல்ல வேண்டிய பெண்களைச் சீட்டு எழுதி அனுப்பிக் கொண்டிருந்தாள். அன்று அந்த விடுதியில் சுமார் பத்து பெண்கள் தங்கள் குழந்தை களுடன் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு பெண்ணாக அவளுக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியே சென்றனர். அன்புடனும், ஆசையுடனும் பெருமிதத் துடனும் அந்தத் தாய்மார்கள் தாங்கள் பெற்ற செல்வங்களை அள்ளி அணைத்துச் செல்வதைக் காமாட்சி கவனித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.
கடைசியாக ஒரு பெண் தயங்கித் தயங்கிக் குழந்தையுடன் அவள் அருகில் வந்தாள்.
”ஏனம்மா! உன்னைச் சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லையா? உன் புருஷனின் பெயரென்ன?" என்று விசாரித்தாள் காமாட்சி. அவள் பதில் கூறு முன் தானே மேஜை மீது கிடந்த விவரங்கள் அடங்கிய புஸ்தகத்தை கவனித்தாள். அதில் அவளுடைய புருஷனின் பெயரைக் காணவில்லை. வேலப்பன் - சகோதரன் என்கிற விவரம் மட்டுமே காணப்பட்டது.
"உன் அண்ணன் கூடவா வரவில்லை?" என்று திரும்பவும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டாள்.
”அவர் என் அண்ணன் இல்லை அம்மா. அந்த சமயத்தில் நாதியற்றுக் கிடந்த என்னை மனமிரங்கி இந்த ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தார். தகவல் கேட்டவர்களுக்கு தன்னை என்னுடைய அண்ணன் என்று கூறி இருக்க வேண்டும். எனக்கு யாருமே இல்லை டாக்டர் அம்மா ...."
சமூகத்தில் எந்த வெறியனுடைய ஆசைக்கோ பலியான புத்தியற்ற பெண் அவள் என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்டாள் காமாட்சி. சமூகத்திலே பரவி இருக்கும் இந்தக் கொடுமைகளை நினைத்து அவள் மனம் சொல்லொணாத் துயரை அடைந்தது. தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு. "சரி, நீ என்ன செய்யப் போகிறாய்? எங்கே போகப் போகிறாய்?" என்று அவளை விசாரித்தாள்.
அந்தப் பெண் கண்ணீரை மாலை மாலையாக உகுத்தாள். கருவிலே அந்தக் குழந்தையை ஏற்ற விநாடியிலிருந்து அவள் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த துயர மனைத்தும் கரைந்து கரைந்து கண்ணீராக பெருகியது.
”இந்தக் குழந்தை உனக்கு வேண்டுமா? அதை நீ சரியாக வளர்ப்பாயா?"
அந்தப் பெண் தலைகுனிந்து மௌனமாக நின்றிருந்தாள். காமாட்சியின் முன்பு நடைபாதைகளிலே, மதகுகளின் ஓரங்களிலே, கடற்கரையின் மணலிலே பால் மணம் மாறாத மதலைகள் எறியப்பட்டும், கிடத்தப் பட்டும் இருக்கும் கோரங்கள் நர்த்தனம் புரிந்தன. காமாட்சி சட்டென்று அவள் பக்கம் திரும்பி ”இந்தக் குழந்தை எனக்கு வேண்டும். தருகிறாயா" என்று கேட்டாள்.
குழந்தையின் தாய் நன்றி நிறைந்த கண்களுடன் காமாட்சியை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு மெதுவாக அருகில் இருந்த மேஜை மீது குழந்தையைக் கிடத்தினாள். பத்து மாதங்களாக அது அவள் வயிற்றில் பெரிய சுமையாக இருந்தது. அது அவள் கைக்கு வந்த பிறகு அதன் பாரத்தை அவளால் தாங்க முடியவில்லை. தாய்ப்பாசம் தாயன்புகூட அந்த இடத்திலே காய்ந்து விட்டது. எல்லாமே ஒழுங்கான முறையிலும், நேர்மையிலும் இருந்தால் தான் பாசம், அன்பு, கடமை யாவும் தளிர் விடும். இல்லாவிடில் காய்ந்து சருகாக வேண்டியது தான்.
”நான் போய் வருகிறேன் அம்மா” என்று அந்தப் பெண் அவளிடம் வாயால் கூறி விடைபெறவில்லை. அவளுடைய கலங்கிய கண்களிலிருந்தும், பார்க்கும் பார்வையிலிருந்தும் காமாட்சி அவள் தன்னிடம் விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறாள் என்பதை உணர்ந்தாள்.
மேஜை மீது படுத்திருந்த குழந்தையின் பூப்போன்ற கன்னங்களில் அந்தப் பெண் ஒரு முத்தம் அளித்தாள். ரகசியமாக, தகாத முறையில் தாய்மைப் பதவியை ஏற்று கொண்ட அவளுடைய முதல்-கடைசி-முத்தமாக அது அமைந்தது.
”போய் வா அம்மா.... இனிமேலாவது ஒழுங்காக இரு" என்றெல்லாம் காமாட்சி அவளுக்கு உபதேசிக்க வில்லை. சுட்ட மண்ணை ஒட்ட வைக்கும் முயற்சியாக அது முடிந்தாலும் முடியக்கூடும். ஆகவே, அவள் அந்த பெண்ணின் கைச்செலவுக்கென்று ஏதோ கொஞ்சம் பணத்தைக் கொடுத்தாள். குழந்தைக்கு விலை என்று காமாட்சி நினைத்துத் தரவில்லை. ஒருவேளை அந்தப் பெண் அப்படி நினைத்திருக்கலாம்.
அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து போய் இருந்த தம் மகளை வேதாந்தம் கண் கொட்டாமல் கவனித்தார். அவளாகவே பேசட்டும் என்று அவர் அவளை ஒன்றும் கேட்கவில்லை.
சிந்தனையிலிருந்து விடுபட்டு காமாட்சி மேற் கூறிய சம்பவங்களை ஒன்று விடாமல் தகப்பனாரிடம் கூறவும், அவர் வியப்பு மேலிட, தம் மகளின் உதார குணத்தையும், சேவை மனப்பான்மையையும் நினைத்து மகிழ்ந்தார்.
பகல் பொழுது தாம் பட்ட அவஸ்தையும், அதை மறக்கப் பற்பல இடங்களுக்கு அலைந்து திரிந்ததையும் நினைத்துத் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.
தகப்பனார் பதில் ஒன்றும் கூறாமல் இருப்பதைப் பார்த்த காமாட்சி “ஏனப்பா! ஒன்றுமே பேசவில்லை! அதோடு நீங்கள் மத்தியானம் வீட்டை விட்டு கிளம்பி இப்பொழுது தான் வருகிறீர்கள் போல இருக்கிறதே" என்று விசாரித்தாள்.
"ஆமாம். அம்மா! என்னவோ ஒரு பைத்தியம் -மாதிரி எதையோ நினைத்துக் கொண்டு அலைந்துவிட்டு வந்தேன். "
"எங்கே போய் இருந்தீர்கள்?"
வேதாந்தம் மத்தியானம் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, ஸ்ரீதரன் கூறிய பதிலையும் சொன்னார்.
"என்ன அப்பா இது? உண்மையிலேயே பைத்தியக் காரத்தனம் தான் செய்திருக்கிறீர்கள். எனக்கு அந்த மாதிரி ஆசையெல்லாம் கிடையாது. என் மனசைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்களே ...."
"இல்லை அம்மா. சில மாதங்களாக நீ விளையாட்டுச் சாமான்களை வாங்கி வருவதும், பிறர் குழந்தைகளுக்குக் கொடுப்பதும் என்னை என்னவெல்லாமோ யோசிக்கச் செய்து விட்டது...?"
”அதனால் எனக்கு மறுமணம் செய்து வைத்துக் குழந்தை குட்டிகளுடன் பார்க்க ஆசைப்பட்டீர்கள். அப்படித்தானே?" என்றாள் காமாட்சி.
வேதாந்தம் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டார்.
"அப்பா!" என்று ஆசையுடன் அழைத்த அவள் அவர் அருகில் வந்து வற்றி உலர்ந்து போன அவர் கரங்கள் இரண்டையும் பற்றிக் கொண்டாள்.
"இங்கே பாருங்கள்! அன்று உங்கள் மருமகன் என்னிடம், ”காமாட்சி! உன்னை நான் ஏமாற்றி விட்டேன்' என்று அரற்றினார். அந்த ஏமாற்றம் என் உள்ளத்தைக் கல்லாக மாற்றி விட்டது. இனிமேல் நான் எதையும் எதிர்பார்க்கப் போவதுமில்லை. ஏமாறப் போவதுமில்லை. குடும்ப வாழ்க்கையில் ஒரு பெண் காண வேண்டிய இன்ப துன்பங்கள் அனைத்தையும் என் தொழிலில் பார்க்கிறேன். கட்டிய கணவனால் கைவிடப் பட்டவளின் துயரைப் பார்த்திருக்கிறேன். மகப்பேறு இல்லை என்று வருந்தும் தாயைப் பார்க்கிறேன் , பெற்ற மகவை இழந்து துடிக்கும் அன்னையைப் பார்க் கிறேன். இவர்களின் துயரங்களில் ஓர் அணுவையாவது துடைக்கும் மகத்தான பேற்றை நான் அடைந்தால் போதும் .."
வேதாந்தம் உபதேசம் கேட்கும் சிஷ்யனின் நிலையில் தம் மகளின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். உபதேசிப்பது தந்தையாக இருந்தால் என்ன? மகனாகவோ அல்லது மகளாகவோ தான் இருந்தால் என்ன ?
”இன்று நீங்களும் நானும் சேர்ந்தே சாப்பிடலாம். தினம் தான் அப்படி முடிகிறதில்லை. அதோடு உங்கள் பேத்தி இனிமேல் விழித்துக் கொண்டு அழுவாள். வாருங்கள்" என்று அழைத்தாள் காமாட்சி. வேதாந்தம் சிரித்தார். அந்தச் சிரிப்பில் உள்ளத்து நிறைவைக் காண முடிந்தது.
------------
2. 30. காதல் அரும்பியது
குழந்தை பாலுவுக்காகப் பவானி சென்னை வந்தாள். பசுமலையில் ஊரார் அவளைக் கண்ட விதமாகப் பேசி ஏசுவதைப் பொறுக்க முடியாமல் அவன் நற் பெயரெடுத்து, நல்வாழ்வு வாழவேண்டும் என்கிற எண்ணம் அவள் மனத்துள் எழுந்தது. பாலு சென்னை வந்த பிறகு படிப்படியாக அவன் குணத்தில் மாறுதல் ஏற்பட்டது. 'பசுமலையில் இருந்த பாலுவா இவன்!' என்று பெற்ற தாயே வியந்து போற்றும்படியாக அவன் நடந்து கொள்ள ஆரம்பித்தான். முன்னைப் போல அவன் இப்பொழுது சுமதியுடன் காரணமின்றிச் சண்டை பிடிக்க முடியாது. ஏனெனில், அவளும் இவன் வம்புக்கு வருவதில்லை. ஆனால், அவனால் மட்டும் அந்தச் சிறு சம்பவத்தை மறக்க முடியவில்லை . சுமதியின் பேரில் கோபித்துக் கொண்டு ஜெயஸ்ரீயின் புஸ்தகத்தைக் கிழித்தவன் அல்லவா!?
அதன் பிறகு எத்தனையோ முறைகள் அவன் ஜெயஸ்ரீயைப் பல இடங்களில் சந்தித்திருக்கிறான். அவளுடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியும் இருக்கிறான். ஆனால், அந்த சம்பவத்தைப்பற்றி பிரஸ்தாபித்து ..இப்படிச் செய்தது என் தவறு தான்" என்று அவளிடம் கூறிவிட வேண்டும் என்கிற ஆசை அவன் உள்ளத்தில் மேலோங்கி இருந்தது. ஆனால், அதற்குப் போதிய துணிச்சலோ வயதோஏற்படவில்லை. அத்துடன் ஜெயஸ்ரீ ராதாவைப்போல எல்லோருடனும் சகஜமாகப் பழகும் நிலையில் இல்லை. அதாவது எப்பொழுதும் ஒருவித சங்கோஜம் அவளிடம் நிலைத் திருந்தது. சுமதியைத் தேடிக் கொண்டு அவள் அங்கு வரும்போதெல்லாம் பாலு இருப்பதைப் பார்த்திருக்கிறாள். நீண்ட அவள் கருவிழிகள் இரண்டும் சஞ்சலத்தால் சுற்றிச் சுழன்று அவனைச் சரியாகப் பார்க்க விடாமல் அடித்து விடும். ஏதோ ஒரு வெட்கம். கூடவே ஒரு பயம் எல்லாமாகச் சேர்ந்து கொள்ளும். அவள் அந்த இடத்தில் நிற்காமல் விறுவிறு என்று சுமதியைத் தேடிக் கொண்டு போய் விடுவாள்.
'என்ன இப்படி விழுந்தடித்துக் கொண்டு வருகிறாய். கூடத்தில் எதைப் பார்த்துவிட்டு இப்படிப் பயப்படு கிறாயாம்!' என்று உரத்த குரலில் கேட்டுக் கொண்டே சுமதி கூடத்தை எட்டிப் பார்த்து விட்டு. ’ஹே! ஹோ பாலுவைப் பார்த்துவிட்டா இப்படிப் பயப்படுகிறாய்?' என்று அவளைக் கேலி செய்வாள்.
ஜெயஸ்ரீக்கு மேலும் வெட்கமாகப் போய் விடும்.
“ஐயே! சும்மா இருடி அம்மா. நீ போடுகிற கூச்சல் எட்டுத் தெருவுகளுக்குக் கேட்கும் போல் இருக்கிறதே. இதற்குத்தான் இங்கே நான் வருகிறதில்லை..." என்பாள். சுமதிக்கு இவளுடைய நாணத்தைப் பார்த்து மேலும் இவளை நையாண்டி செய்யத் தோன்றும்.
”வந்தால் என்னவாம்! எங்கள் பாலு என்ன, நீ பயப்படும்படியாக அவ்வளவு மோசமாகவா இருக்கிறான்? செக்கச் செவேல் என்று ராஜா மாதிரி அவனும் அவன் கிராப்பும்! போடி பைத்தியக்காரி. வீண் வேஷம் போடுகிறாய்"
இவர்கள் பேச்சை ஒன்றுவிடாமல் ரசிப்பான் பாலு. மெதுவாக பூமி அதிராமல் மென்னடை போட்டுக் கொண்டே சற்று முன் வந்த சுந்தரியின் முக லாவண்யத் தில் அவன் தன்னையே மறந்திருப்பான். உலகத்தில் எவ்வளவோ பெண்கள் இருக்கிறார்கள். அவனுடன் எத்தனையோ பெண்கள் படிக்கிறார்கள் இப்படி ஒரு மென்மை, இம்மாதிரி ஓர் அடக்கம், இம்மாதிரி ஓர் அழகு அவர்களிடத்தில் அவன் காணவில்லை . காதல் கொண்டு கல்யாணம் செய்து கொள்ளும் வயதை அவன் பூராவாக அடைந்திராவிடிலும் அவன் மனத்தே அரும்பி இருக்கும் அந்தக் காதல் நாளடைவில் மலர்ந்து மணம் வீசினால் போதும் என்று தான் அவன் நினைத்தான். அதை அந்த புனிதமான காதலை அவன் அம்பலப்படுத்த விரும்பவில்லை. தன் இதயத்துள் வைத்துப் பூட்டிப் பாதுகாக்கவே விரும்பினான்.
ஜெயஸ்ரீக்குத் தன் பாட விஷயமாகப் பல சந்தேகங்கள் எழும். பாலுவைக் கேட்டால் விளக்கித் தருவான் என்பதும் தெரியும். இருந்தாலும் கேட்பதற்குத் துணிச்சல் இருக்காது.
”சுமதி! இதைப்பற்றி நீயே கேட்டுச் சொல்லி விடேன்" என்று சுமதியைத்தான் தொந்தரவு செய்வாள் அவள். ”ஏனோ அம்மா! உங்கள் இருவருக்கும் நடுவில் நான் வக்காலத்து வாங்க வேண்டு மாக்கும் ஊஹும்! முடியாது நீதான் கேட்க வேண்டும்?" என்று கூறி இருந்த இடத்தை விட்டு அசைய மாட்டாள் சுமதி.
இதற்குள் பவானி வீட்டில் இருந்தால்... "எங்கே அம்மா வந்தாய் ஜெயஸ்ரீ?" என்று விசாரிப்பாள்.
”நீங்கள் சும்மா இருங்கள் அத்தை. அவளுக்குப் பாலுவிடம் ஏதோ பாடம் கேட்க வேண்டுமாம்!"
”கேளேன் அம்மா. அங்கே கூடத்தில் தானே இருக் கிறான்?”
தன் உள்ளத்தில் அரும்பியிருக்கும் காதல் அரும்பின் தேவதை இப்படித் திக்கித் திணறி அவதிப்படுவதைப் பார்க்க அவன் உள்ளம் சகிப்பதில்லை.
”என்ன அம்மா அது?” என்று கேட்டுக் கொண்டே வந்து மேஜை அருகில் உட்கார்ந்து அவள் சந்தேகங்களை விளக்குவான் பாலு. அப்பொழுது அந்தப் பெண்ணின் கண்களை அவன் எவ்வளவு தான் சந்திக்க முயன்றாலும் அந்த நயனத் தாமரைகள் பூமியை விட்டுப் பெயராமல் நிலைத்து நின்றுவிடும்.
”புரிகிறதா?" என்று கேட்பான்.
”உம்....”
"எங்கே, திரும்பவும் நான் சொன்னதைச் சொல் பார்க்கலாம்?" என்று கூறி மேஜை மீது கிடந்த புஸ்தகத்தை மூடி விடுவான் பாலு. அப்பொழுதாவது அவள் தலை நிமிர்ந்து தன்னைப் பார்க்கக் கூடும் என்கிற ஆசை அவனுக்கு.
ஜெயஸ்ரீயின் முகத் தாமரையில் முத்து முத்தாக வேர்வைத் துளிகள் அரும்பி கன்னங்கள் சிவப்பேற கிடுகிடு என்று அந்தப் பதிலை ஒப்பித்து விட்டுத் தலையைக் குனிந்து கொள்வாள்.
”அப்பாடா! இதற்கா இவ்வளவு பயம்?' பாலு மேலும் அவளைப் பயப்பட வைக்காமல் அங்கிருந்து சென்று விடுவான்.
இவர்கள் உள்ளத்தில் அரும்பி இருக்கும் காதலைப் பற்றிச் சுமதிக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.
------------
2. 31. உள்ளத்துக்கு வைத்தியன்!
ராதாவின் வாழ்க்கையில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்தன. திறந்த வெளியிலே சிறகடித்துப் பறக்கும் வானம்பாடியைப் போல அவள் தன் கல்லூரி நாட்களில் இருந்து வந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். படிப்பு முடிந்த பிறகு கூட அவள் படித்து வந்த கல்லூரி யோடு அவளுக்குத் தொடர்பு இருந்து கொண்டே வந்தது. கலை விழா, நாடகம், சொற் பொழிவு யாவற்றிலும் ராதா முதன்மையாக நின்று உழைத்து வந்தாள். அவளை மணந்து கொள்ள எவ்வளவோ வாலிபர்கள் தவம் கிடந்தார்கள். அழகும், படிப்பும். செல்வமும் நிரம்பிய அந்தப் பெண்ணிடம் அவர்களுக் கெல்லாம் ஒரு பிரமை: ஸ்ரீதரனும் அவளை நல்ல இடத் தில் வாழ்க்கைப்படுத்த வேண்டும் என்றுதான் விரும்பினார். படித்தவனாகவும் சொத்துள்ளவனாகவும் மருமகன் தேட இருந்தார்.
ஆனால், விதியின் செயல் வேறாக இருந்தது. அவள் பார்வையில் பட்ட மற்றவர்களைவிட. மூர்த்தி அவளுக்குச் சிறந்தவனாகத் தோன்றினான். அவனிடத் தில் தன் மனதைப் பறிகொடுத்தாள். அவனிடமிருந்து அவள் செல்வத்தையோ, போக பாக்கியங்களையோ எதிர்பார்க்கவில்லை. உண்மையான அன்பு ஒன்றைத் தான் எதிர்பார்த்தாள். கணவனும் மனைவியும் அன்பிலே லயித்து விட்டால் மற்ற சிறு பூசல்கள் யாவும் மறைந்து விடும். அந்தப் பிடிப்பு - அதாவது காதல்-- அவர் களிடம் ஏற்படவில்லை .
ராதாவுக்கு தனிமை உணர்ச்சி ஏற்பட்டது. உலகத்தில் தான் தனியாக இருப்பது போல் தோன்றியது. நெஞ்சில் சுமக்க முடியாமல் துயரச் சுமைகளைச் சுமந்து கொண்டு இருந்தாள். அவற்றைக் கீழே இறக்க அன்புள்ளம் கொண்டவர் யாராவது தேவை. அது யார்? யாருமே இல்லை என்று தான் அவள் மனம் விடை பகர்ந்தது.
அன்று வழக்கம் போலத்தான் சூரியோதயம் ஆயிற்று. வாள் வெளியில் களங்கம் இல்லை. நிர்மலமான ஆகாயத்தில் பொன்னிறம் காட்டிக் கொண்டு கதிரவன் விசையாக எழும்பி வந்தான். வாழ்த்தி வரவேற்க வேண்டிய காலைப் பொழுது. இளமையும் இன்பமும் ததும்பும் அக்காலை வேளையில். ராதா மெல்லக் கண் களை விழித்துப் பார்த்தாள். அவள் மனசில்- அதாவது தூங்கும்போது - ஒரு சலனம் ஏற்பட்டது. திடீரென்று விழித்துக் கொள்வாளாம் ராதா. அவள் படுக்கை அருகில் மூர்த்தி அமர்ந்து அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பானாம். 'வந்து விட்டீர்களா? எங்கே என் மேல் கோபித்துக் கொண்டு , வராமல் இருந்து விடுவீர்களோ என்று பயந்தேன்! ' என்று கேட்டுக் கொண்டே எழுவாளாம் ராதா. அப்புறம் அவனுடன் இல்லறம் நடத்துவது. அதன் பிறகு இடுப் பிலே ஒரு தங்கக் குழந்தை !
ராதா புன் முறுவல் பூத்துக்கொண்டே கண் விழித்தாள். நினைக்கும் போது இனிக்கும் நினைவுகள் நடக்காமற் போனால் கசக்கத் தானே செய்யும்?
அவள் எதிரில் வெற்று நாற்காலி கிடந்தது. பல இரவுகள். அநேக நாட்கள் அந்த நாற்காலிக்கு வேலையே இல்லை. மூர்த்தி அதில் தான் உட்காருவான். அவன் வெளியூர் போன பிறகு அதில் யாருமே உட்காரு வதில்லை. கணவன் திரும்பவும் அதில் வந்து உட்கார வேண்டும் என்று அந்தப் பேதைக்கு ஆசை.
கீழே இறங்கி வந்து தன் அலுவல்களை முடித்துக் கொண்ட ராதா. சுவாமி நாதனின் இருப்பிடத்துக்கு வந்தாள். அந்தக் கிழவர் அன்று என்றுமில்லாத உற்சாகத்துடன் காலையி லேயே குளித்து விட்டு, திருநீறு அணிந்து உட்கார்ந்திருந்தார்.
”என்ன இதற்குள்ளாகவே குளித்து விட்டீர்களா?'” என்று விசாரித்தவாறு ராதா அவர் அருகில் சென்று அடர்ந்தாள்.
”குளித்து விட்டேன் அம்மா. நேற்றிலிருந்து எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது..."
”அப்படியா? என்ன அது?"
”இந்த உடம்பை இத்தனை காலம் காப்பாற்றியாகி விட்டது. ஜலதோஷம் பிடித்தாலும் ஆயிரம் மாத்திரைகளை விழுங்கி உயிரைப் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்தாயிற்று. அதைப் பற்றிக் கவனிக்கவே உன் அண்ணன் இருக்கிறார். உள்ளத்துக்கு ஒரு வைத்தியனைத் தேட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அவனை இனிமேல் நினைத்து அதற்கு வேண்டியதைச் செய்து கொள்ள வேண்டும். மருந்து சாப்பிடுவதைக் கூட நேற்றிலிருந்து நிறுத்தி விட்டேன் அம்மா..." என்றார் அவர்.
”அடடா! உங்களுக்கு மருந்தை நிறுத்தினால் கிறு கிறுப்பு அதிகமாகி விடாதா? அண்ணாவுக்குத் தெரிந்தால் கோபித்துக் கொள்வாரே......'
சுவாமி நாதன் வறட்சியாகச் சிரித்தார்.
”கோபித்துக் கொள்ளட்டும். ஒரு தினம் இரண்டு தினங்கள் கோபம் வரும். அப்புறம் சரியாகி விடும்." ராதா மேலும் பேசவில்லை. ரத்த அழுத்தம் உள்ளவ ரிடம் அதிகமாகப் பேசி அயர்வைத் தரக் கூடாது என்று நினைத்து அங்கிருந்து சென்று விட்டாள்.
ஸ்ரீதரன் அன்று பகல் வைத்தியசாலையிலிருந்து சீக்கிரமே திரும்பி விட்டார். என்றுமில்லாமல் அவர் அன்று ராதாவையும் தம்முடன் சாப்பிட அழைத்தார். இருவரும் சாப்பிடும் இடத்தை அடைவதற்கு முன் தபால்காரர் ராதாவின் பெயருக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போனார். கடிதத்தின் மேலுறையில் இருந்த முத்திரையில் ’கல்கத்தா' என்று இருப்பதைப் பார்த்த ராதாவின் உள்ளம் ஒரு கணம் மகிழ்ச்சியால் துள்ளியது. அவசரமாக மாடிக்குச் சென்று கடிதத்தைப் பார்த்தாள். முதல் வரியில் ’அன்புள்ள ராதாவுக்கு' என்றிருந்தது. தன் வாழ்வில் அன்றே அன்பு உதயமாகி விட்டதாகக் கருதினாள் அந்தப் பேதை.
’இந்தக் கடிதம் உன்னை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தக் கூடும். நான் எவ்வளவோ பாவங்கள் செய்திருக்கிறேன். செய்யும் போது அவை அற்பமாக இருந்தன. அவை எனக்கு இன்பத்தையும் அளித்தன. ஆனால், அதன் விளைவுகள் இப்பொழுது பிரும்மாண்டமாகப் பேய் உருக்கொண்டு என் முன் நிற்கும்போது நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். சுருங்கச் சொல்லி விடுகிறேன். நான் என்னை ஏமாற்றிக் கொண்டதல்லாமல், உன்னையும் ஏமாற்றிவிட்டேன் ராதா! நான் ஒரு கடன்காரன். அதுவும் அற்ப சொற்ப மான குற்றத்தை நான் செய்யவில்லை. என்னை முழுவதுமாக நம்பி என் காரியாலயத்தினர் அளித்த பெருந் தொகையைக் கையாடி விட்டேன். இன்னும் சில மணி நேரங்களிலே நான் சட்டத்தின் முன்பு நிற்க வேண்டி இருக்கும் ...........'
ராதாவின் கண்கள் இருண்டன. கடிதத்தில் இருந்த எழுத்துக்கள் மங்கி மறைந்து கொண்டே வந்தன. கல்கத்தாவில் பிரும்மாண்டமான தெருக்களில் மூர்த்தி
கை விலங்கிடப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை அவள் மனம் கண்டது. உயர் நீதி மன்றத்தில் தன் கணவன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு இருப்பதையும் கற்பனை செய்து பார்த்தாள்.
பெண்ணின் மனத்தை மிருதுவான மலருக்கு உவமையாகக் கூறுவார்கள். ஆனால் தாங்க முடியாத துயரம், நடக்க முடியாத சம்பவம். கேட்கத் தகாத சொற்கள் இவற்றை அவள் தாங்கியும் கேட்டும் பார்த்தும் அனு பவிக்கும்போது உறுதிவாய்ந்த கற்பாறையாக அவள் மனம் மாறிவிடுகிறது.
ராதா கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டே அப்படியே உட்கார்ந்து விட்டாள். கீழே ஸ்ரீதரன் தம் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மாடிக்கு வந்தார். நேராக ராதாவின் அறைக்குச் சென்று உள்ளே எட்டிப் பார்த்தார்,
கையில் கடிதத்துடன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்ததும் அருகில் சென்று ”என்ன அம்மா அது? யார் எழுதி இருக்கிறார்கள்? உன் புருஷன் சௌக்கியம் தானே?" என்று விசாரித்தார். அந்த விநாடியில் ராதாவின் உள்ளத்தில் பல யோசனைகள் தோன்றின. 'இது நாள் வரையில் தன் கணவனைப் பற்றி அவரிடம் கூறாமலே இருந்து விட்டு, திடீரென்று இந்தச் செய்தியைப் பற்றிச் சொன்னால் அவர் தன்னைப் பற்றி என்ன நினைக்க மாட்டார்?' என்று ராதாவுக்குத் தோன்றியது. கையில் இருக்கும் கடிதமோ, நடக்கக் கூடாத விஷயத்தைத் தாங்கி இருக்கும் கடிதம். அதைப் பிறர் படிப்பதற்காகக் கொடுப்பதும் நல்லதல்ல. ஆத்திரப்பட்டுத் தான் தேடிக் கொண்ட வினையின் விளைவைத் தானே அனு பவிக்க உறுதி கொண்டாள் அந்தப் பேதை.
தன் மனப் பாரத்தை மறைத்துக் கொண்டு சட்டென்று அவர் பக்கம் திரும்பி, 'அவர்தான் எழுதி யிருக்கிறார் அண்ணா . இத்தனை நாட்கள் அவர் ஹிமாசலப் பிரதேசத்தில் இருந்தாராம். அங்கே 'காம்ப்' சென்றிருந்தவருக்கு மலைக்காய்ச்சல் வந்து விட்டதாம் இப்பொழுது குணமாகி இருப்பதாக எழுதி இருக்கிறார்" என்றாள்.
”இது என்ன அம்மா வேலை? சாப்பாடு வேளைக்கில்லாமல் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு தேக ஆரோக்கியத்தையும் குறைத்துக் கொள்வது ஒன்று தான் லாபம் . பேசாமல் வேலையை ராஜிநாமா செய்து விட்டு இங்கே வந்து விடச் சொல். நான் நல்ல வேலையாகப் பார்த்துக் கொடுக்கிறேன்."
ராதா சரியென்று தலை யசைத்தாள். மறுபடியும் அவள் அண்ணாவின் முன்பு அவள் கணவன் ஒரு கௌரவ மனிதனாக வருவானா என்பது அவளுக்கே தெரியாது.
ஸ்ரீதரன் அங்கிருந்து சென்றதும் ராதா அக்கடிதத்தை மறுபடியும் படித்தாள். எவ்வளவோ கெளரவமும், கண்ணியமும் வாய்ந்த மனிதருக்கு அவள் சகோதரியாக இருந்தாலும், அவருடைய பெருங் குணங்கள் இவளை அடையவில்லை. சிப்பியின் வயிற்றில் முத்துக் கள் விளைகின்றன. பளபள வென்று மின்னும் கருநாக மும் தன்னுள நஞ்சை வைத்துக் கொண்டிருக்கிறது. வெறும் சிப்பியாயிற்றே, இதனுள் என்ன பிரமாதமாக இருக்கப் போகிறது என்று அதை நாம் உதாசீனம் செய்ய முடியாது. மென்மையும், பளபளப்பும் கொண்ட கருநாகத்தின் அழகை மெச்சி அதை அணைத்துக் கொள்ளவும் முடியாது . நற்குணங்கள் ஒவ்வொரு வருக்கும் பிறவியிலேயே அமையவேண்டும்.
ராதா ஆரம்பத்திலிருந்தே தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறாதவள். மூர்த்தியைப் பற்றியும் தன் தமையனிடம் கூறவில்லை. தன் விரும்பம் போல் செய்து கொண்ட மணம் ஆயிற்றே; கணவரிடம் இருக்கும் குறைபாடுகளை அம்பலப்படுத்தினால் இகழ்ச்சியில் வந்து முடிந்துவிடுமே என்கிற பலவீனம் தான் இதற்குக் காரணமாக அமைந்தது. இந்தப் பலவீனம் நாளடைவில் வளர்ந்து, எதையும் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் ஆற்றலை அவளுக்கு அளித்தது.
கடிதத்தை எடுத்துப் பத்திரமாகப் பீரோவில் வைத்துப் பூட்டிய ராதா, அங்கே உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் தோட்டத்துக்குள் சென்றாள்.
--------------
2. 32. குற்றச்சாட்டு
கதையின் முதல் பாகத்தில் முக்கிய இடம் பெற்ற பசுமலை கிராமத்தைப் பற்றி நாம் நினைவுபடுத்திக் கொள்வோம். மப்பும் மந்தாரமும் நிறைந்த மத்தியான வேளை: கல்யாணராமனும், பார்வதியும் முன்னைவிட வயது சென்றவர்களாக இருந்தார்கள். இருவரிடமும் எந்தவிதமான மாறுதல்களும் ஏற்படவில்லை. அன்று அவர்கள் வீட்டில் ஏதோ விசேஷம் நடந்தது. சாப்பாட் டுக்குப் பிறகு வெற்றிலைத் தட்டை எடுத்து வந்து கூடத்தில் உட்கார்ந்திருந்த தன் கணவரின் அருகில் வைத்து விட்டு உட்கார்ந்தாள் பார்வதி. கணவரிடம் வெற்றிலையை மடித்துக் கொடுத்துக்கொண்டே “எனக்கு என்னவோ இந்த மாதிரி தனியாக இருப்பது பிடிக்கவில்லை. எங்காவது நாலு ஊர்களுக்குப் போய் வரலாமே?" என்று கேட்டாள்.
கல்யாணம் மெதுவாகச் சிரித்தார்.
"ஊர் ஊராகப் போகிற வயசா நமக்கு? தலையைக் காலை வலித்தால், முன் பின் தெரியாத ஊர்களில் உன்னையும் என்னையும் யார் கவனிப்பார்கள்?"
"போகிற இடத்தில் நமக்கு வியாதி வரவேண்டுமா என்ன? முதலில் பட்டணம் போகலாம். அங்கே நம் மூர்த்தியையும், அவன் மனைவியையும் பார்த்துவிட்டு அப்புறம் எங்காவது போகலாம்.
கல்யாணம், பார்வதியை உற்றுப் பார்த்தார்.
”ஏன்? மூர்த்தியும் ராதாவும் தான் உனக்கு உயர்வாகப் போய்விட்டார்களா? பவானியையும் பாலுவை யும் மறந்து விட்டாயாக்கும்?" என்றார்.
”அவளை நான் மறந்தா போனேன்? வாரம் தவறினாலும் பவானி எனக்குக் கடிதம் போடத் தவறுவதில்லையே! பாலு பெரியவனாக வளர்ந்து விட்டானாம். பசுமலைக்கு வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறானாம்...."
"அதெல்லாம் சரி. மூர்த்தியைப் பற்றி ஏழெட்டு மாசங்களாக ஒரு தகவலும் தெரியவில்லையே! அவன் ஊரில் இல்லை என்றும் அவன் மனைவி மாத்திரம் அங்கே இருப்பதாகவும் யாரோ சொன்னார்கள். சேஷாத்திரியின் பிள்ளை ராமு வந்திருக்கிறானே கல்கத்தாவிலிருந்து. அவனைக் கேட்டால் விவரம் ஏதாவது தெரியும்."
பார்வதி வெற்றிலைத் தட்டை நகர்த்தி வைத்து விட்டு எழுந்தாள்.
”எனக்கு வேலைகள் முடிந்துவிட்டன. நானே போய்த் தகவல் கேட்டு வருகிறேன்" என்று சொல்லியவாறு சேஷாத்திரியின் வீட்டுக்குப் போனாள் பார்வதி.
அவள் அங்கிருந்து திரும்ப அரைமணி நேரமே பிடித்தது. இவ்வளவு சடுதியில் திரும்பிவிட்ட தன் மனைவியைப் பார்த்த கல்யாணம் திகைப்பு மேலிட "என்ன அவசரமாக வந்து விட்டாய்? வீட்டில் ராமு இல்லையா?" என்று கேட்டார்.
”இருந்தான். இல்லாமல் என்ன?"
“ஏதாவது சொன்னானா? கேட்டாயா?"
”சொன்னான். உங்கள் தங்கைக்கு இந்த மாதிரி ஒரு பிள்ளை பிறந்திருக்க வேண்டாம். அவள் புண்ணிய சாலி. இதையெல்லாம் கேட்டும் பார்த்தும் கஷ்டப் படாமல் கண்ணை மூடிவிட்டாள்."
கல்யாணம் பதட்டமே அடையவில்லை. பொறுமையுடன் உட்கார்ந்திருந்தார்.
”மூர்த்திக்கு வேலை போய்விட்டதாம். அதோடு இல்லை. சொல்லவே மானக் கேடாக இருக்கிறது . ஆபீஸ் பணத்தைக் கையாண்டு விட்டதாக அவனைப் போலீசில் பிடித்து அடைத்து வைத்தார்களாம்."
பார்வதி வளர்த்த பாசத்தினால் மளமளவென்று கண்ணீர் பெருக்கினாள்.
"ஹும்.......... ஈசுவரா!" என்று பெருமூச்சு விட்டார் கல்யாணராமன்.
”சம்பந்தி வீட்டார் இதை நமக்குத் தெரிவிக்க வில்லை பார்த்தீர்களா? எனக்கு அப்பொழுதே தெரியும். ரொம்பப் பெரிய இடத்தில் கல்யாணம் செய்திருக்கிறான். இவனை அவர்கள் மதிக்கமாட்டார்கள் என் பது எனக்குத் தெரியும்." பெண்களின் சுபாவப்படி பார்வதி சம்பந்தி வீட்டார் மீது குற்றம் சாட்டிப் பேச ஆரம்பித்தாள்.
”கொஞ்சம் பேசாமல் இரு. தனக்கு இருக்கும் கஷ்ட சுகங்களைப் பிறரிடம் சொல்லி அதை நீக்கிக் கொள்ள அவன் முனைந்திருக்க மாட்டான். டாக்டருக்கே இதைப்பற்றித் தெரிந்திருக்காது. தெரிந்திருந் தால் கூடப் பிறந்தவளுக்காகவாவது அவர் ஏதாவது செய்திருக்க மாட்டாரா? விட்டுக் கொடுப்பாரா?"
"ஆமாம் தாயும் தகப்பனும் இருக்கிற மாதிரி வருமா இதெல்லாம்?" என்று சலித்தவாறு பேசினாள் பார்வதி. அவளுடன் பேச்சுக் கொடுப்பதில் பலனில்லை என்று தெரிந்த கல்யாணம் தாமே விவரங்களை அறிந்து வர ராமுவைத் தேடிப் போனார்.
ராமு கூறியவற்றைக் கேட்ட பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் அவர் அன்றே தபாலில் ஸ்ரீதரனுக்கு இதைப்பற்றி விசாரித்துக் கடிதம் எழுதினார்.
----------
2. 33. அவள் செய்த பாக்கியம்
பிறருடைய வாழ்க்கையில் நேரிடும் இன்னல்கள் நம்மை அவ்வளவாக வருத்துவதில்லை. அப்படிச் சிறிது கலக்கம் ஏற்பட்டாலும் அது நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிவதில்லை; ஸ்ரீதரன் தம் கண்களால் எத்தனையோ துயரங்களைப் பார்த்தவர். எவ்வளவோ அவமானங் களைப் பற்றிக் கேட்டவர். ஆனால் அவரை அவை அவ்வளவாக வருத்தவில்லை.
அன்று வைத்திய சாலையில் அவர் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. வீட்டுக்குப் புறப்படும் போது அதை ஜேபியில் வைத்துக் கொண்டு கிளம்பினார். வீட்டிற்கு வந்ததும். தம் ஜேபியில் இருந்த கடிதத்தைப் பற்றி மறந்து விட்டார். சாப்பிட்டு விட்டு ஓய்வு பெறும் போதுதான் காலையில் ஜேபியில் வைத்த கடிதத்தைப் பற்றி நினைவு வந்து அதை எடுத்துப் படித்தார். அவர் முகபாவம். சட்டென்று மாறிக் கொண்டே வந்தது. மிகுந்த வேதனையுடன் அப்படியே சமைந்து உட்கார்ந்து விட்டார் அவர்.
விஷயம் முற்றிப் போகும் வரை அசட்டுத் தைரியத் துடன் தன்னிடம் யாவற்றையும் மறைத்து வைத்த ராதாவைக் குற்றம் சொல்வதா? இம்மாதிரி ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்து மணந்து கொண்டவளை பற்றி என்ன சொல்வது?
விதியின் கொடூரமான பிடிக்குள் அகப்பட்டுத் தன் சகோதரி தவிப்பதைக் கண்ட ஸ்ரீதரன். அவளிடமிருந்து உண்மையை அறிய அவளைத் தேடிச் சென்றார்.
அவள் மிகவும் இளைத்திருப்பதை அன்றுதான் ஸ்ரீதரன் கவனித்தார். கையில் கடிதத்துடன் பரபரப் படைந்து காணப்பட்ட தமையனைக் கவனித்த ராதா ஒன்றும் பேசாமல் இருக்கவே, ”ராதா! உன் புருஷன் வேலையில் இருப்பதாக என்னிடம் நீ சொன்னதெல்லாம் பொய்தானே?" என்று கேட்டார் வருத்தம் தொனிக்கும் குரலில்.
அவருக்கு உண்மை தெரிந்து விட்டது என்பதை அறிந்த அவள் ”ஆமாம் அண்ணா ! அவரைப் பற்றி சமீப காலத்து விவரங்கள் எனக்குத் தெரியாது. உங்களுக்கு ஏதாவது கடிதம் எழுதினாரா?" என்று கேட்டாள் கண்களில் கண்ணீர் பெருக.
"எனக்கு ஏன் அவன் கடிதம் போடப் போகிறான்? அவனைப்பற்றி இன்று வரையில் எனக்கு ஏதாவது தெரிந்திருந்தால் தானே? நீதான் எல்லாவற்றையும் மறைத்து விட்டாயே, அவன் சிறைக்குப் போவதைக் கூடப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டாய், அவ்வளவு தன் மானம் உடையவள் நீ. உடன் பிறந்தவனிடம் கூட விஷயமெல்லாவற்றையும் ஒளித்து விட்டாயே?" மூர்த்தி யால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சகிக்க முடியாமல் வெறுப்புடன் தன் சகோதரியைச் சுட்டுப் பொசுக்குவது போல் பார்த்தார் ஸ்ரீதரன்.
”அண்ணா! என்னை ஒன்றும் சொல்லாதீர்கள். தாய் தந்தையின் முகம் தெரியாமல் இருந்த பாவியை தாயும், தந்தையுமாக இருந்து வளர்த்த உங்களிடம் நான் நடந்து கொண்ட முறையை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அண்ணா! அவர் எத்தனையோ தவறுகள் செய்திருக்கிறார். அவருக்கு எத்தனையோ பெண்களிடம் நட்பு. அதற்காக பணம் தேவைப்பட்டது. என் நகைகளைக் கூட விற்று எடுத்துக் கொண்டிருக்கிறார். என் நகைப் பெட்டியை என் அனுமதி இல்லாமல் திறந்து எடுத்துப் போயிருக்கிறார். இதைத் திருட்டு என்றுகூடச் சொல்லலாம்?" ராதா ஸ்ரீதரின் கரங்களைத் தன் கண்களில் புதைத்துக் கொண்டு கோவென்று கதறினாள்.
அந்தப் பிரபல டாக்டர் தம் கடமையே கண்ணாகக் கருதுபவர். சமூகத்தில் மிக உயர்ந்தவராக எல்லோராலும் மதிக்கப் பெற்றவர். எப்பொழுதும் மனதில் உயர்வான எண்ணங்களையே வைத்திருப்பவர், யாரோ ஒருவன் புரிந்த குற்றத்திற்கு அவர் தலை குனிய வேண்டி இருந்தது. உண்மையிலேயே டாக்டர் ஸ்ரீதரன் தம் தலையைக் குனிந்து கொண்டார். நீதிபதியின் முன்பு மூர்த்தி தலை குனிந்தானோ இல்லையோ. ஸ்ரீதரன் இப்போது தம் வீட்டில் தலை குனிந்து உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கி இருந்தார்.
ஆத்திரம் அடங்கியவுடன் ஸ்ரீதரன், 'இனிமேல் நான் என்ன அம்மா செய்ய முடியும்? விசாரணைக்கு முன்பாவது ஏதாவது செய்திருக்கலாம். விசாரணை யெல்லாம் முடிந்து விட்டதாம். குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டானாம் உன் புருஷன். தண்டனையும் சற்றுக் கடுமையாகத்தான் இயக்கும் என்று அவன் மாமா கல்யாணராமன் தகவல் விசாரித்து எனக்கு எழுதியிருக்கிறார். ' விஷயத்தை இவ்வளவு தூரத்துக்குக் கொண்டு வந்து விட்டீர்களே! உங்கள் செல்வாக்கைப் பயன் படுத்தி இருக்கலாமே. ஒரு வேளை உங்களுக்கே தெரியாதோ?' என்று கேட்டிருக்கிறார். என் செல்வாக்கை நான் உபயோகிப்பதா? பணக்காரர்கள் எல்லாம் செல்வாக்கை உபயோகித்துக் கொண்டே இருந்தால், நீதியின் முனை மழுங்க வேண்டியது தான். அவன் தலை யெழுத்து! நீ செய்த பாக்கியம் இப்படி இருக்கிறது!" என்றார்.
ராதா சிலை மாதிரி நின்றிருந்தாள். அவள் எதுவுமே பேசவில்லை. பேச்சுக்கும் செயலுக்கும் அப்பாற்பட்ட நிலையில் அவள் இருந்தாள்.
--------------
2. 34. தொழிலும் கடமையும்
"பார்த்தா ! மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. பெற்றிராத பேறுமில்லை: எனினும், நான் தொழிலிலே தான் இயங்குகிறேன், ஆதலால் எப் போதும் பற்று நீங்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாடல் தொழில் செய்து கொண் டிருக்கும் மனிதன் பரம் பொருளை எய்துகிறான்."
கீதையின் இந்த அரும்பெரும் உரை சுவாமி நாதனுக்கு மனப் பாடம். சுமார் இருபது. இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீதரனின் வீட்டை அடைந்த அவர் தம்முடன் பிரமாதமான மூட்டை முடிச்சுக்கள் ஒன்றும் கொண்டு வரவில்லை. பிரம்பால் ஆன பெட்டி ஒன்றில் மாற்றிக் கட்டுவதற்காக வேட்டி இரண்டும் துண்டுகள் இரண்டுமே இருந்தன. பழனி ஆண்டவன் திரு நீறு கமகமவென்று ஒரு பொட்டலத்தில் மணம் வீசிக் கொண்டு இருந்தது. சிறிய வால்மீகி ராமாயண புத்தகம் ஒன்றும், பகவத் கீதை மொழி பெயர்ப்பு ஒன்றும் இருந்தன. அப்பொழுது அவருக்கு வெள்ளெழுத்து ஆரம் டமாகி விட்டதால் வெள்ளெழுத்துக் கண்ணாடியும் வைத்திருந்தார்.
அன்று அவர் தனியாகத்தான் வந்தார். இன்றும் தனியாகத்தான் இருக்கிறார். நாளை தனியாகத்தான் போகப் போகிறார். ஸ்ரீதரன் தம் இளம் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்த சொற்ப காலத்தைப் பார்த்துப் பிரும்மானந்தம் கொண்டவர் அவர். கணவன் மனைவி முப்பது வருடங்கள் இருந்து வாழ்ந்து காண வேண்டிய மன ஒற்றுமையை, அன்பை அவர்களிடம் மிகக் குறுகிய காலத்தில் கண்டவர். ராதா சிறு பெண்ணாக மிகச் சிறியவளாக பாவாடை கட்டுவதிலிருந்து படுக்கை போடு வது வரை அவர் துணையால், உழைப்பால் வளர்ந்தவள். ஜெயஸ்ரீக்குப் பால் புகட்டியதே அவர் தான். அவளும் பெரியவளாக வளர்ந்து விட்டாள். தாயைப் போன்ற குணங்களும், தந்தையைப் போன்ற கல்வி அறிவும் அவளுக்கு ஏற்பட்டு வருவதை மிக மகிழ்ச்சி யுடன் பார்த்தவர் கிழவர். இந்த மனிதர் தனக்கென்று அந்த வீட்டில் ஒரு விதமான உரிமையையும் ஸ்தாபித்துக் கொண்டவர் அல்ல.
அவர் வந்து முதல் மாதம் முடிந்ததும், டாக்டர் ஸ்ரீதரன் அவரிடம் முப்பது ரூபாய்களை மாதச் சம்பளம் என்று சொல்லிக் கொடுக்கப் போனார்.
”உங்களிடம்தான் இருக்கட்டும்? தேவைப்பட்ட போது வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறி விட்டார் சுவாமிநாதன்.
ஏதோ ஒன்றிரண்டு தடவைகள் சில நூறு ரூபாய்கள் வாங்கி எங்கோ ஆதரவு இல்லாமல் தவிக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரிக்கு அனுப்பி வைத்தார். பிறகு அவர் ஒன்றும் கேட்கவில்லை. ஸ்ரீதரன் மட்டும் சுவாமிநாதன் பேரில் பாங்கில் மாதா மாதம் பணம் கட்டி வந்தார். சில ஆயிரங்கள் அவர் பேரில் சேர்ந்திருந்தன.
சில நாட்களுக்கு முன்பு வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் யாவையும் சுவாமிநாதன் ஒரு வரும் கூறாமலேயே அறிந்து கொண்டார்.
"என்ன ஐயா ஊரெல்லாம் பேசிக்கறாங்களே. நம்ப மூர்த்தி ஐயா ஏதோ தண்டாவில் மாட்டிக் கிட்டா ராமே..." என்று தோட்டக்காரன் ராமையா அவரை விசாரித்தான்.
"எனக்கு ஒன்றும் தெரியாதப்பா..." என்றார் அவர். தமது கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.
"இந்த மாதிரி கவுரவம் வாய்ந்த மனிதருக்கு வந்து வாய்த்தானே! எங்கே பார்த்தாலும் அவனைப் பற்றித் தான் பேச்சு" என்றார் புது சமையற்காரர்.
அப்புறம் கார் டிரைவர் அவரிடம் தன் மனத்தாங்கலை வெளியிட்டார். வைத்தியசாலை - கம்பவுண்டர்' வந்து கூறி அலுத்துக் கொண்டார்.
டாக்டர் மட்டும் ஏதும் கூறவில்லை . ஆனால் அவர் உள்ளம் குமுறிக்கொண்டு இருக்கிறது என்பது சுவாமி நாதனுக்குத் தெரிந்து விட்டது.
ராதா தன் எதிரில் வரும் போதெல்லாம் சுவாமிநாதன் கோபமும், வருத்தமும் அடைந்தார். ஒரு பெண்ணால் ஒரு குடும்பத்துக்கு எவ்வளவோ நன்மைகள் விளைய வேண்டியிருக்க, அவமானம் நேர்ந்து விட்டதே என்பதுதான் அவர் வருத்தத்துக்குக் காரணம்.
அந்தக் குடும்பத்தின் நலன் ஒன்றிலேயே கருத் துடைய சுவாமி நாதனுக்கு மூர்த்தியைப் பற்றித் தெரிந்ததும், ஏதோ எக்கச்சக்கமாக நடக்கப் போகிறது என்பதை முன்பே அறிந்தவர் போல் வாய் திறவாமல் மௌனமாக இருந்தார்.
அவராகவே ஏதாவது கேட்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். . எனக்கு இனிமேல் எதுவும் புதிதாகத் தெரியவேண்டாம்' என்று சொல்வது போல் இருந்தது அவர் மௌனம்.
தோட்டக்கார ராமையா மட்டும், "என்ன ஐயா இப்படி ஆகிவிட்டது? நம்ப ஐயா குணத்துக்கும். ராதா அம்மாவின் செல்வாக்குக்கும் இப்படி ஒரு தலை குனிவு ஏற்பட வேண்டுமா!" என்று அவரிடம் கூறி அங்கலாய்த்தான்.
”ராமையா! எனக்கு அப்பவே தெரியும். கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் விழுகிற மாதிரி இந்தப் பெண் தானாகத் தேடிக் கொண்ட வினை அப்பா இது. இனிமேல் சட்டியா பானையா மாற்றிக் கொள்வதற்கு? ஆயுள் பூராவும் அவதிப்பட வேண்டியது தான் போ ..."
"ஐயா! உங்க வாயால் அப்படிச் சொல்லாதீங்க. ராதா அம்மா வளர நீங்க எவ்ளவோ கஷ்டப்பட்டீங்க. மனம் நிறைஞ்ச வார்த்தையா ஏதாவது சொல்லுங்க. பாவம்! பின்னாலாவது அந்தப் பெண் சுகமாக இருக்கட்டும்" என்றான் ராமையா. ”படித்த பெண் தவறி நடக்கமாட்டாள். அவள் சுதந்திரத்தில் தலையிடக் கூடாதென்று டாக்டர் அவளைக் கவனிக்காமல் விட்டு விட்டார் அப்பா. பவானி அம்மாவை உனக்குத் தெரியாதா? அந்தப் பெண். பாவம் எப்படியெல்லாம் இருக்க வேண்டியவள். அவளுக்கு நல்ல முறையில் வாழ யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்? இந்த வருஷம் படிப்பு முடிந்து விடுமாம். பாலுவும் படிக்கிறான். இனி மேல் அவர்களைப் பற்றிக் கவலை இல்லை."
அவர்கள் அந்த வீட்டின் உப்பைத் தின்று உடலை வளர்த்தவர்கள். ஆகவே தங்களுக்குள்ளேயே குமைந்து போய் பேசிக் கொண்டார்கள். வெளியாரிடம் ஒரு வார்த்தை கூட மூச்சு விடவில்லை. வேலைக்காரர் களில் இப்படி ஒரு ரகம் உண்டு. நடக்காத விஷயங்களைக் கயிறு திரித்துக் கூறி கதை பேசுபவர்களும் உண்டு. இதில் எஜமானர்களுக்கும், ஊழியர்களுக்கும் இருக்கும் நல்ல அபிப்பிராயமும் அடங்கி இருக்கிறது.
ஸ்ரீதரனின் குடும்பத்தில் வேலை பார்ப்பவர் ஒவ் வொருவரையும் அந்தக் குடும்பத்தினர் மாதிரியே அவர் பாவித்து வந்தார். இதனால் தான் அவர்களிடையே நல்ல அபிப்பிராயமே நிலவி வந்தது.
------------
2. 35. இருளுக்குப் பின் ஒளி
உள்ளத்துக்கும் வைத்தியம் அவசியம் என்று சுவாமிநாதன் ராதாவிடம் கூறினார் அல்லவா? கடந்த சில மாதங்களாக, அவர் தம் மனத்தைப் புற விஷயங்களில் அதிகம் செலுத்தாமலேயே இருந்து வந்தார். கடலின் அலைகளைப் போல உலகத்தில் நடக்கும் விஷயங்களுக்கு ஓய்ச்சல் ஒழிவு இருப்பதில்லை. பிறப்பு, இறப்பு, பருவங்கள். பண்டிகைகள், உதயம். அஸ்தமனம் யாவும் இந்த உலகில் நடப்பவை. யார் இருந்தாலும் இல்லாவிடினும் அவற்றிற்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது. தம்முடைய கடமைகளைச் செய்து கொண்டே இருக்கும். சுவாமிநாதன். சதா ராம தாயத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். தாரக மந்திரமாகிய அந்த நாம அவருக்கு உடல் வலிமையை அளிக்காவிடினும், உள்ளத்துக்கு ஒளியும் தைரியமும் அளித்து வந்தது. உட்காரும் போதும் நிற்கும் போதும், நடக்கும் போதும் "ஹரே! ராமா!" என்று அழைத்து ஆறுதல் அடைந்தார். உலகில் இருப்பவர்கள் யாவரினும் இனியனாகிய ஒருவன் அவர் “ராமா!" என்று அழைத்தவுடன் தம் அருகில் வந்து நின்று 'ஏன்?' என்று இதமாகக் கேட்பது போன்ற அமைதியை அவர் உள்ளம் அடைந்தது. அதனால் தான் மூர்த்தியைப் பற்றி அவர் கேள்விப் பட்டதும் அந்த உள்ளம் அதிகமாகத் துயர் அடைய வில்லை. 'ஹே! ராமா! இதுவும் உன் செயல்தான் அப்பா' என்று ஒரு வார்த்தையில் உள்ளத்துக்கு ஆறுதல் தேடித் தந்தார். இருந்தாலும் உலக பந்தங்களிலிருந்து சாமானியமாக மனம் விடுதலை அடைவதில்லை. அந்தச் செய்தி அவர் உடல் நலத்தை வெகுவாகப் பாதித்து விட்டது. சில தினங்கள் வரையில் உட்காரும் சக்தியைப் பெற்றிருந்தவர் அந்தச் சக்தியையும் இழந்து விட்டார்.
அதிகாலையில் எழுந்து பிறருக்குச் சிரமம் தராமல் தன் வேலைகளைத் தானே செய்து வந்த சுவாமிநாதன் அன்று விடிந்ததிலிருந்து தம் படுக்கையை விட்டு எழவே இல்லை. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அவரைப் பார்க்க வந்த ஸ்ரீதரன் நொடியில் விஷயத்தைப் புரிந்து கொண்டார். சுவாமிநாதன் இனி அதிக நேரம் இருக்க மாட்டார் என்பது தெரிந்து போயிற்று.
மெல்லக் கண்களைத் திறந்து தன்னைப் பார்க்கும் அவரைப் பார்த்து, ”உங்களுக்கு என்ன வேண்டும் ஏதாவது சாப்பிடுகிறீர்களா?" என்று விசாரித்தார் ஸ்ரீதரன்.
”வேண்டாம் வேண்டியதை சாப்பிட்டு விட்டேன்..." ஸ்ரீதரன் அவர் அருகில் தம் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார்.
”உங்கள் ஒன்று விட்ட தங்கைக்குத் தந்தி அடிக்கவா? உங்கள் பணத்தை அவர்களுக்கு அனுப்பி விடுகிறேன்..."
சுவாமிநாதன் மிகுந்த வேதனையுடன் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.
”அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ராதாவைக் கூப்பிடுங்கள்..." திணறிக் கொண்டே பேசினார் அவர்.
ராதா ஏதோ குற்றம் புரிந்தவளைப் போல அவர் அருகில் வந்து உட்கார்ந்தாள். நடுங்கும் தன் கரங்களால் அவள் மிருதுவான கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டார் சுவாமிநாதன்.
"அம்மா! இனிமேல் நீ நன்றாக இருப்பாய். உலகத்தில் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும். இருளுக்கு அப்புறம் ஒளிதானே? நீ உன் புருஷனுடன் ஆனந்தமாக இருக்கும் போது நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அவன் இனிமேல் திருந்தி விடுவான். எல்லோரும் சந்தோஷமாக இருப்பீர்கள் ....."
சுவாமிநாதன் அதற்கு மேல் பேசவில்லை . அவர் வாய் உலக விஷயங்களைப் பேச மறந்தது போல் அசையாமல் இருந்தது. அவர் முகத்தில் துயரம், துன்பம் ஒன்றும் இல்லை. அசாதாரணமான ஓர் அமைதி. புன்னகை நிரம்பி இருந்தது. சுவாமிநாதன் தம் கடமை களைச் சரிவரச் செய்த நிம்மதியில் அவர் இடையறாது துதித்து வந்த ஸ்ரீராமனது திருவடிகளை அடைந்து விட்டார்.
டாக்டர் ஸ்ரீதரனின் கண்களிலிருந்து அருவி போலக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. தேம்பியும் புலம்பியும் தன் சகோதரியை அணைத்தவாறு டாக்டர் வெளியே சென்றார்.
------------
2. 36. நம்பிக்கை
நல்ல மனசுடன் அன்று சுவாமிநாதன் செய்த ஆசியிலே அந்தக் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவருடைய பிரம்புப் பெட்டி ராமாயணப்புத்தகம் மூக்குக் கண்ணாடி விபூதிப்பை யாவும் அவருடைய அறையிலே வைக்கப்பட்டன. அந்தக் கிழவர் எப்பொழுதோ தெரியாமல் காமிராவின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்ட போது எடுத்த போட்டோவைப் பெரிதாக்கி அறையில் மாட்டி வைத்தார்கள்.
ஸ்ரீதரனின் உள்ளமும் இனி மூர்த்தி விடுதலை அடைந்து வந்து விட்டால் திருத்தி விடுவான் என்று சொல்லியது. ராதாவும் அவ்விதமே நம்பினாள்.
ஒரு நாள் மாலை பவானி டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டுக்கு வந்தாள். சமீபத்தில் அவள் பரீட்சையில் தேர்வு பெற்று விட்டாள். அதை ஸ்ரீதரனிடம் கூறி ஏதாவது ஆலோசனை கேட்டுப் போகலாம் என்று வந்திருந்தாள் பவானி.
இடையில் அந்தக் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவையும் அறிந்தவள் அவள். எதிலும் அக்கறை காண்பித்துக் கொள்ளாத அவள் தமையன் நாகராஜன், திடும் என்று மூர்த்தியைப் பற்றி வீட்டில் வந்து கூறியதும் பவானிக்குப் பெரிதும் வருத்தம் ஏற்பட்டது. மூர்த்தியின் குணங்களைப் பற்றிப் படிப்படியாக அவள் நினைத்துப் பார்த்தாள். ஒருத்தியை மணந்து கொண்ட பிறகும் மாறாதவன். அன்று அவளிடம் எப்படியெல்லாம் நடந்து கொண்டான்.
”கோவிலுக்கா போகிறீர்கள்?' என்று அவன் கேட்டுச் சிரித்ததும், தன்னையும் பாலுவையும் தொடர்ந்து டவுன் பஸ்ஸில் அவன் வந்ததும் பிறகு ஒரு நாள் சேஷாத்ரியுடன் அவன் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசி, அவரிடம் 'வாங்கிக் கட்டிக்' கொண்டதையும், கடைசியாக ரயிலடிக்குவந்து தன்னிடம் நயவஞ்சகமாக விலாசம் கேட்டதையும் நினைத்துப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள் பவானி.
இப்படிப்பட்டவனிடம் ஓர் அணுவளவு தான் பிசகி நடந்திருந்தாலும், என்னவெல்லாம் நேர்ந்திருக்குமோ என்கிற கலக்கம் அவள் மனத்தில் ஏற்பட்டது . ராதாவிடம் அவளுக்கு அனுதாபம் ஏற்பட்டது. நாடகத்துக்கு அவள் டிக்கட் விற்க வந்தபோது இருந்த நிலைமையை யும் இப்பொழுது இருந்த நிலைமையையும் நினைத்துப் பார்த்து வருந்தினாள் அவள். இதைப்பற்றி அனுதாபத் துடன் அவள் தன் மன்னி கோமதியிடம் கூறியபோது 'ஆமாம். நீதான் அவளுக்காகக் கரைந்து போகிறாய். நல்ல இடமாக ”டாக்டர் பார்த்துக் கல்யாணம்பண்ணி வைத்திருக்க மாட்டாரா? எத்தனை பிள்ளைகள் கண்ணியமாக, கௌரவமாக இல்லை . அவனுடன் சுற்றி அவள் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டாள். விஷயம் மிஞ்சிப்போன பிறகு என்ன செய்ய முடியும்? அவனுக்கே கல்யாணத்தைப் பண்ணிவைத்தார். அப்புறமாவது புருஷனைக் கவனித்துக் கொஞ்சமாவது திருத்தி இருக்கலாம். ஒருத்தர் விவகாரங்களில் இன்னொருத்தர் தலையிடக்கூடாது என்கிற நாகரிகம் புருஷன் மனைவி வரையில் பரவி விட்டதாக்கும். ராதா அவன் போகிற வழிக் கெல்லாம் வளைந்து கொடுத்து அவனுக்கு உடந்தையாக அவளும் ஆடி இருக்கிறாள். அவள் அண்ணா கொடுத்த வைர வளையல்களை விற்கிற வரையில் அவளுக்கே தெரியவில்லை பார்!" என்று கோமதி ராதாவின் பேரில் குற்றத்தைச் சுமத்திப் பேசினாள்.
மன்னியின் கடுமையான வார்த்தைகளைக் கேட்ட பவானியின் மனம் ராதாவுக்காக மேலும் இரங்கியது. அவளைத் தனிமையில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்று நினைத்திருந்தாள். அதற்காக அவர்கள் வீட்டுக் குப்போய்ப் பேசுவதும் சிறந்த முறையாகப் பவானிக்குத் தோன்றவில்லை. ஆகவே சில நாட்கள் வரையில் சும்மா இருந்து விட்டாள். இடையில் சுவாமிநாதன் காலமாகி விட்டார் என்கிற செய்தி தெரியவந்தது. டாக்டரின் குடும்பத்தைத் தாங்கிவந்த பெரிய தூண் ஒன்று நிலை பெயர்ந்த மாதிரி இருந்தது அந்தச் செய்தி.
"ராதா, ராதா என்று அவள் மீது உயிராக இருந்தார் அந்த மனிதர். அவள் சுகத்தோடு வாழ்வதை அவர் இருந்து பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை! பாவம்..." என்று நாகராஜனும் கோமதியும் வருந்தினார்கள்.
கோமதி இப்பொழுது நோயாளி அல்ல. தன் குடும்பத்தைத்தானே நிர்வகிக்கும் பொறுப்பு அவளிடம் ஏற்பட்டிருந்தது. அத்தை வராவிட்டால் நீ எப்பொழு தும் படுக்கையில் தான் இருந்திருப்பாய். நாத்திக்குப் பயந்துகொண்டு குடும்ப வேலைகளைக் கவனிக்கவே வலிவும் உற்சாகமும் உனக்கு ஏற்பட்டு விட்டது" என்று கேலி செய்தாள் சுமதி.
”நீ இவ்வளவு கெட்டிக்காரியாக இருப்பதும் உன் அத்தையால் தான். அதை மறந்து விடாதே" என்றாள் கோமதி.
”என் சயன்ஸ் நோட்டுப் புஸ்தகம் எங்கே சுமதி? நீ எடுத்தாயா அதை?" என்று கேட்டுக்கொண்டே வந்தான் பாலு.
“நான் எதற்கப்பா அதையெல்லாம் எடுக்கிறேன்? நீ தானே நேற்று ஜெயஸ்ரீயிடம் கொடுத்தாய்! துரைக்கு மறந்து போச்சு போலிருக்கு. அவ்வளவு மயக்கம் இப் பொழுதிலிருந்தே" என்றாள் சிரித்துக்கொண்டே சுமதி.
பாலு சுமதியைக் கோபத்துடன் பார்த்தான்.
”எங்கே மறுபடியும் என்னைப்பற்றி - குரங்கு மூஞ்சி பாலு' என்று எழுதியிருப்பாயோ என்கிற சந்தேகம் வந்துவிட்டது!"
பவானி இவர்கள் இருவரும் விளையாட்டாகச் சண்டையிடுவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தவள் திடீரென்று, 'பாலு! நான் டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டுக்குப் போகிறேன். அப்படியே உன் நோட்டுப் புஸ்தகத்தை வாங்கி வருகிறேன" என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.
அவள் டாக்டர் வீட்டுக்கு வந்ததும் வீடு வெறிச் சென்று கிடந்தது. முன்பிருந்த களையும், அழகும் அந்த வீட்டில் காணப்படவில்லை. கூடத்தில் ஒருவரும் இராமற் போகவே, பவானி இரண்டாங் கட்டுக்குச் சென்றாள்.
அங்கே உட்கார்ந்திருந்த ராதாவைப் பார்த்ததும் அவள் திடுக்கிட்டுப் போனாள். இளமையின் எழிலோடு விளங்கிய அந்தப் பெண் இப்போது நிறம்மாறி இளைத் துப் போய் இருப்பதைப் பார்த்ததும் அவளுக்குத் துயரம் ஏற்பட்டது.
”வாருங்கள். அண்ணா சற்றைக்கெல்லாம் வந்து விடுவார். உங்களுக்குப் பரீட்சை ’பாஸ்' ஆகிவிட்டதாமே! டாக்டர் காமாட்சி நேற்று வந்திருந்தார். அவர் தான் சொன்னார். மேலே என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டாள் ராதா.
மனதுக்குள் குவிந்து போயிருக்கும் துயரச் சுமையை மறைத்துக்கொண்டு பேசும் ராதாவின் அருகில் உட்கார்ந்தாள் பவானி.
சிறிது நேரம் வரையில் இருவரும் ஒன்றுமே பேச வில்லை. பிறகு பவானியே பேச ஆரம்பித்தாள்.
”சுவாமிநாதன் போன பிறகு உன்னை நான் பார்க்கவே இல்லை. பாவம். நல்ல மனுஷர்...." என்று அனுதாபம் தெரிவித்தாள்.
ராதா மள மளவென்று கண்ணீர் பெருக்கினாள்.
”நல்ல மனிதர் என்பதை நான் அன்றே புரிந்து கொண்டு. அவர் சொன்னபடி கேட்டிருந்தால் என் நிலையே வேறாக இருக்கும். அவரை நான் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. நம்மை வளர்த்த பாசத்தினால் நம்மிடம் அளவுக்கு மீறிய சலுகை காண்பிக்கிறார், வேண்டாத விஷயங்களில் தலையிடுகிறார் என்று நினைத்து அவர் மீது எனக்கு வெறுப்பும் கோபமும் தான் அப்போது உண்டாயிற்று."
பவானி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"இனிமேல் எனக்கு என்ன கௌரவம் இருக்கிறது? படித்த படிப்பும், மற்றவைகளில் இருந்த சாமர்த்தியமும் வீணாகிப்போன மாதிரிதான். நான் வெளியிலேயே போகிறதில்லை. வெறுமனே வேதாந்த புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்."
பவானி லேசாகச் சிரித்தாள்.
”ராதா, எனக்கு விவரங்கள் யாவும் தெரியும். வெறுமனே வேதாந்தப் புத்தகங்களைப் படித்துவிட் டால் நீயும் நானும் ஞானிகள் ஆகிவிட முடியுமா? ஆசா பாசங்களை லவலேசமும் துறக்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். அன்று உன் கணவன் வைர வளை யல்களை விற்றதும் நீ வெகுண்டு அழுதாயாம், 'என்னுடைய பிறந்த வீட்டாரால் கொடுக்கப்பட்ட நகை ஆயிற்றே' என்றாயாம். உன்னுடையது என்கிற அகங்காரம் உன்னை விட்டு மறையாமல் இருக்கும்போது வேதாந்த புத்தகங்களைப் படித்துவிட்டால் மட்டும் மனத்திலே தெளிவு வந்து விடுமா? எல்லோரும் ஞானிகளாகவும், வேதாந்திகளாகவும் மாறிவிடுவது அவ்வளவு எளிதல்ல. கூடுமானவரையில் உலகத்தோடு ஒட்டிய வாழ்க்கையைத்தான் நாம் வாழ முடியும்..."
பவானி தன்னைப்பற்றிய விவரங்கள் யாவும் அறிந் திருக்கிறாள் என்பதை உணர்ந்ததும் ராதாவுக்கு வெட்கமும் துயரமும் ஏற்பட்டன.
ராதா மனத்துக்குள் வருந்துகிறாள் என்பது தெரிந் ததும் பவானி பேச்சை வேறு வழிகளில் மாற்றினாள்.
---------------
2. 37. மகிழ்ச்சி வெள்ளம்
பவானி அன்று ஸ்ரீதரனைச் சந்திக்க முடியாமல், வீட்டுக்குப் புறப்பட்டாள். அவள் அங்கு வந்திருந்த சிலமணி நேரங்கள் ராதாவுக்கு எவ்வளவோ நிம்மதியையும் இன்பத்தையும் அளித்தன! வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தோல்வியைக் கண்ட பவானி, அந்தத்தோல்வியை உதறித் தள்ளி மிதித்து. வெற்றிப் பாதையில் போவதைக் கண்ட ராதாவின் உள்ளம் பவானியைப் பற்றி உயர்வாக மதிப்பிட்டது.
மாலையில் வீடு திரும்பிய ஸ்ரீதரனிடம் ராதா பவானி வந்து போனதை அறிவித்தாள். "வந்தவளை நான் வரும் வரை இருக்கச் சொல்லக்கூடாதா? முக்கியமான ஒரு விஷயம் பற்றிப் பேச அவர்கள் வீட்டுக்கே நான் செல்ல இருந்தேன்..." என்றார் ஸ்ரீதரன்.
”என்ன அண்ணா" என்று கேட்டாள் ராதா.
”முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பசுமலையில் காச நோய் வைத்தியசாலை-யொன்று கட்டி முடித்து, சமீபத்தில் நமது பிரதம மந்திரி ஆரம்பித்து வைத்தார். அதில் கூடிய விரைவில் பவானி நர்ஸாகப் பணி புரியச் செல்ல வேண்டி இருக்கும் என்று என் நண்பர் ஒருவர் கூறினார்."
”மறுபடியும் பவானி பசுமலைக்குப் போக விரும்புவாளா அண்ணா ? அவள் நெஞ்சில் ஆறாத கனலை மூட்டி விட்ட ஊர் அல்லவா அது?"
ஸ்ரீதரன் சிரித்தார். "ராதா! இங்கே தான் நீ பவானியைத் தவறாக மதிப்பிட்டிருக்கிறாய். நீறு பூத்த நெருப்பு மாதிரி, அவள் தன் துயரங்களைப் பல வருஷங்களுக்கு முன்பே மனத்தின் அடித்தளத்தில் புதைத்து விட்டாள். அதை ஊதி எரியச் செய்ய மாட்டாள் அவள். நடந்து போன துயரங்களைப் பற்றி நினைப்பதும் அதை பற்றியே பேசுவதும் மனத்தை எவ்வளவு தூரம் கெடுத்து விடுகிறது என்பது உனக்குத் தெரியாது. பவானி தன் துயரங்களுக்கு ஓர் உருவம் கொடுக்க முயற்சிக்க வில்லை' ' என்றார். ராதாவுக்குப் பவானியைப் பற்றிய செய்திகள் யாவுமே வியப்பை அளித்தன.
அதன் பிறகு பவானி ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பாக அவளுக்கு அவர்கள் வீட்டில் விருந்தளிக்க வேண்டும் என்று அண்ணனும் தங்கையும் தீர்மானித்தார்கள்.
பவானி, பசுமலைக்குச் செல்ல வேண்டும் என்கிற செய்தியை நாகராஜன் வீட்டில் யாருமே வரவேற்க வில்லை.
சர்க்கார் உத்தரவைப் பவானி நாகராஜனிடம் காண்பித்ததும் அவன் பெரிய குரலில், "கோமதி இங்கே வாயேன். நீயும் மூட்டை முடிச்சுகளைக் கட்டு" என்று அழைத்துக் கூறினான்.
”எதற்கு? எங்கே போவதற்கு என்று சொல்ல வில்லையே? இனிமேல் துரை மிஸஸ் இல்லாமல் வெளியே கிளம்பமாட்டீர்களோ?" என்று கேலி செய்தாள்.
”உன் நாத்தனார் ஊருக்குக் கிளம்புகிறாளாம். அவள் இல்லாமல் நீ இந்த வீட்டில் இருந்தால் தலை சுற்றல், மயக்கம், அஜீரணம் எல்லாம் உனக்கு வந்து விடுமே! அப்பா! உன்னோடும், உன் வியாதிகளோடும் மருந்துப் பட்டியல்களோடும் நான் பட்டபாடு எனக்கல்லவா தெரியும்?" என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தான். ”என்ன அண்ணா இது? என்னால் தான் உலகமே நடக்கிற மாதிரி நீ பேசுகிறாய்?" என்று கேட்டாள் பவானி சிரித்துக் கொண்டே.
"மாமா. அம்மா பசுமலைக்குப் போனாலும், நான் இங்கேதான் இருந்தாக வேண்டும். இந்த ஊரில் விசிறிகளுக்கெல்லாம் காம்புகள் நீளம்' ' என்று கூறியவாறே பாலு தன் முதுகைத் தடவிக் கொண்டான்.
”இது ஒரு நொண்டிச் சாக்கு இவனுக்கு. நீ சென்னையை விட்டுப் போகமாட்டாய் அப்பா. தினம் ஜெயஸ்ரீயை காலேஜ் பஸ்ஸில் ஏற்றிவிட்டுத்தான் நீ காலேஜுக்குப் போகிறாயாமே?....' 'சுமதி சமயம் பார்த்து குட்டை உடைத்து விட்டாள்.
என்ன பேசுவது என்று புரிமாமல் பாலு திகைத்தான். அங்கிருந்த பெரியவர்கள் யாவரும் அர்த்த புஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பவானியின் உள்ளத்திலே மகிழ்ச்சி வெள்ளம் அலைமோதியது.
அச்சமயம் தோட்டக்கார கோபாலன் டாக்டர் ஸ்ரீதரனும் ஜெயஸ்ரீயும் வந்திருப்பதை அறிவித்தான்.
டாக்டரைக் கண்ட பவானி தன் இரு கைகளையும் கூப்பி வணங்கினாள்.
”நாகராஜன் நீங்கள் அதிர்ஷ்டசாலி , உங்கள் தங்கைக்கு ஆரம்பத்திலேயே நல்ல சான்ஸ் கிடைத்து விட்டது. பலர் பணிபுரியும் ஓர் ஆஸ்பத்திரியில் ஒருவர் எவ்வளவுதான் திறமையாகச் சேவை செய்தாலும் அவர்களுடைய திறமை வெளிப்பட நாளாகும். ஒரு குடும்பத்தில் இருக்கும் மருமகள் எவ்வளவு தான் குடும்ப நிர்வாகத்தில் திறமைசாலியாக இருந்தாலும், அங்கிருக்கும் மாமியார். நாத்திகள். ஓரகத்திகள் இவர்களை மீறி அவள் திறமை வெளியாகப் பல வருஷங்கள் ஆகும்.
"அதே மருமகள் தனிக்குடித்தனம் நடத்தினால் சில மாதங்களில் அவளுடைய சாமர்த்தியத்தை மாமியாரே மெச்சுவாள். பசுமலை ஆஸ்பத்திரியில் தற்சமயம் அதிகமான நர்ஸ்கள் கிடையாது. அங்கிருப்பவர்களுக்குப் பவானி தலைவியாகப் போகிறாள். என்ன அம்மா பவானி? நீங்கள் ஒன்றுமே பேசவில்லை?” , என்று கேட்டார் ஸ்ரீதரன்.
எப்பொழுதுமே படபடவென்று பேசத் தெரியாத பவானி மிகவும் விநயமாக, ”உங்களுக்கு எல்லாம் தெரியும். நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது?" என்று கூறினாள்,
டாக்டர் ஸ்ரீதரன் அவளையும் மற்றவர்களையும் அடுத்த நாள் தமது வீட்டில் நடக்கும் விருந்துக்கு வரும்படி அழைத்தார். ”ஜெயஸ்ரீ! சுமதியை நீயே கூப்பிட்டு விடு அம்மா!' ' என்றார் ஸ்ரீதரன் வீட்டுக்குக் கிளம்பும் போது.
சுமதி அவசரமாக அவர் எதிரில் வந்து நின்றாள். பிறகு கணீரென்ற குரலில். ”டாக்டர் மாமா! அவள் என்னை அழைக்க இங்கே வரவில்லை" என்றாள்.
அங்கு நின்றிருந்தவர்கள் மனத்தில் பலவித குழப்பங்கள் ஏற்பட்டன. எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீதரனும் அவளை வியப்புடன் பார்த்தார்.
”அவள்.... வந்து... அவள்... பாலுவை பர்ஸனலாக அழைக்க வந்திருக்கிறாள்!" என்று கூறி விட்டு ஓட்டமாக மாடிப்படிகளில் ஏறிச் சென்றுவிட்டாள் சுமதி.
கன்னம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்கள் மருள ஜெயஸ்ரீ தன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள் .டாக்டர் ஸ்ரீதரன் ஆசையுடன் தம் மகளை அணைத்தவாறு காருக்குள் சென்று உட்கார்ந்தார்.
அவர் மனம் காதலைப் பற்றி தீவிரமாக நினைக்க ஆரம்பித்தது. இப்படித்தான் ஒரு நாள் ராதாவும் - மூர்த்தியைக் காதலிப்பதாகச் சொன்னாள். அந்தக் காதல் எப்பொழுது. எந்த இடத்தில், எந்தச் சமயத்தில் உதயமாகிறது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடி யாது போலும் என்று நகைத்தார் அவர். 'தகாத இடத் தில் ஒரு ஜோடிக்கு முடிச்சுப்போட்டு வேடிக்கை பார்ப் பதில் பிரும்மாவுக்கு ஆசை. தகுந்த இடத்தில் காதலை வளர்த்துப் பிரித்து வைப்பதில் அவனுக்கு ஓர் ஆனந்தம். காதல் பாதையிலே வெற்றி கண்டவர்கள் அபூர்வம். ரோமியோவும். ஜுலியட்டும். சகுந்தலையும் துஷ்யந்த னும், லைலாவும் கயஸும் அந்தப் பாதையின் கரடுமுரடு களை அனுபவித்து வெற்றியையும் கண்டவர்கள். ராதா முதலில் வெற்றியைக் காணவில்லை. தோல்வியைத்தான் கண்டிருக்கிறாள். ஜெயஸ்ரீ எப்படியோ?' என்று நினைத் துக் கொண்டே காரைச் செலுத்திக் கொண்டு வந்தார்.
பேசாமல் திகைத்துப் போய் அருகில் உட்கார்ந்திருக்கும் தமது மகளைப் பார்த்து, 'அம்மா! ஜெயஸ்ரீ! பாலுவை உனக்குப் பிடித்திருக்கிறதா? அவன் படிப்பு முடிய இன்னும் இரண்டு வருஷங்கள் பாக்கி இருக்கின் றதே. அதன் பிறகு உங்கள் கல்யாணத்தை முடித்து விடலாம் என்று இருக்கிறேன்" என்றார்.
ஜெயஸ்ரீ பதில் ஒன்றும் கூறவில்லை. மிகுந்த நாணத் துடன் தன் புடவைத் தலைப்பை முறுக்கியபடி உட்கார்ந் திருந்தாள்.
இப்படித்தான் ஸ்ரீதரனின் மனைவி பத்மா முதலில் அவருடன் பேசவும் தயங்கித் தலை குனிந்து நின்றிருந் தாள் . அவர் மனம் பல வருஷங்களுக்கு முன்பு அவருடன் பழகிய மனைவியை மனக்கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தியது. அந்த நிகழ்ச்சி, அந்த நாள், யாவுமே அவர் மனத்துள் பதிந்து போன அழியா ஓவியமாகத் திகழ்ந்த து.
-----------
2. 38. கல்யாணப் பேச்சு
நிலவின் அமுத வெள்ளத்தில் மூழ்கியிருந்த தோட்டத்தில் விருந்து நடைபெற்றது. அங்கங்கே வர்ணவிளக்குகள் சுடர் விட்டன. ஆனால் கூட்டம் - அதாவது விருந்தினர்கள் - அதிகம் இல்லை. பவானியுடன் படித்தவர்கள் டாக்டர் காமாட்சி. இன்னும் சில முக்கியமான நண்பர்கள் மட்டுமே வந்திருந்தனர். ராதாதான் பெண்களை வரவேற்க நின்றிருந்தாள். உள்ளத்தில் கொண்டிருந்த துயரத் தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தாள் என்றும் சொல்லலாம். அந்தப் பெண் ஊராருக்குப் பயந்து கொண்டு சில மாதங்கள் வெளியில் எங்குமே போகாமலிருந்தாள். படிப்படியாக அவள் மனம் மாற ஆரம்பித்தது. அவள் அப்படி வீட்டோடு அடைபட்டுக் கிடப்பதால், மூர்த்தியின் தரம் சமூகத்தின் கண்களில் உயர்ந்து காணப்படாது என்கிற உண்மையை ராதா புரிந்து கொண்டாள். அவன் புரிந்த குற்றங்கள் எல்லோருக்கும் தெரியும். இனி தான் மட்டும் வீட்டி னுள் பதுங்கிக் கிடப்பதில் என்ன லாபம் என்று தீர்மானித்து ராதா அவ்வப் போது வெளியில் போய் வர ஆரம்பித்தாள். பவானிக்காக விருந்து நடப்பதை எண்ணி ராதா அகமலர்ச்சியுடன் அதில் கலந்து கொண்டாள்.
விருந்து அமர்க்களமாக நடந்தது. பவானிக்கு இவை யாவுமே புதுமையாக இருந்தன. சங்கோஜத்தினால் அவள் குன்றிப் போனாள்.
கூட்டத்தைப் பார்த்துப் பிரமித்து உட்கார்ந்திருந்த அவள் அருகில் காமாட்சி வந்தாள். அன்புடன் அருகில் உட்கார்ந்து, 'பவானி! நீங்களும் டாக்டரும் சம்பந்திகள் ஆகப் போகிறீர்களாமே?" என்று விசாரித்தாள்.
”ஆமாம் டாக்டர். எனக்கு நேற்று வரையில் ஒன்று தெரியாது! நேற்று ராத்திரி அண்ணா வெளியே போய்விட்டு வந்ததும், விஷயத்தை என்னிடம் சொன்னார்" என்றாள் பவானி.
பெண்மணிகள் இருவர் முகத்திலும் சந்தோஷம் நியாபியிருந்தது. விருந்து முடிந்ததும், முக்கியஸ்தர்கள் வீட்டாரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள். மிஞ்சியிருந்தவர்கள் மிகச் சிலரே. தோட்டத்தில் ஒரு கல் பெஞ்சியில் நான்கைந்து பேர்கள் உட்கார்ந்தார்கள். நாகராஜன் அருகில் கிடந்த மேஜை இருந்த வெற்றிலைத் தட்டிலிருந்து ’பீடா' ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான். அவன் பீடாவை கையில் எடுத்ததும் டாக்டர் காமாட்சி அவனைப் பாடத்துச் சிரித்தாள்.
”மிஸ்டர் நாகராஜன்! நீங்கள் இத்துடன் ஆறு தடவைகள் பீடாவை மென்று விட்டீர்கள்" என்றாள்.
”எப்படி அவ்வளவு கணக்காகச் சொல்லுகிறீர்கள்?" என்று ஸ்ரீதரன் கேட்டார்.
”இங்கு இருக்கும் ஒவ்வொருவரையும் நான் கவனித்து வருகிறேன். பவானி இந்த விருந்தில் சரியாகவே சாப்பிடவில்லை. ராதா இலையில் உட்கார்ந்ததைப் பார்த்தேன். மறுபடியும் திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் கை அலம்பிக் கொண்டு வந்து விட்டாள். நாகராஜ்ன் வெறுமனே பீடாவை மென்றே வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார். ஜெயஸ்ரீதான் கல்யாணப் பெண் ஆயிற்றே! அவளுக்குச் சாப்பாட்டின் மீது நினைவே இல்லை. கோமதிக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. நாத்தி ஊருக்குப் போவதைப் பற்றிக் கவலையில் மூழ்கி இருக்கிறாள்" என்றாள் காமாட்சி.
பவானி ஊருக்குப் போவதைப் பற்றி கோமதி ஒருத்திக்கு மட்டும் துயரம் ஏற்பட வில்லை. எல்லாருமே மனம் வருந்தினர்.
கடைசியாக பவானி, டாக்டர் ஸ்ரீதரனிடம் தான் ஊருக்குப் போய் வருவதாக அறிவித்துக் கொண்டாள்.
ஸ்ரீதரன் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தார். ஒரு விநாடிக்குள் அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மறந்தார். ஆழ்கடலுக்குள்ளே முழுகி எழுந்து முத்துக் குளிப்பவன் கையில் பலரகச் சிப்பிகள் கிடைக்கின்றன. அவற்றிலே ஒரு சிப்பிக்குள்ளிருந்து அழகிய முத்தைக் கண்டு பிடிக்கிறார்கள். அப்புறம் அந்த முத்து சமூகத்திலே ஓர் உயர்ந்த ஸ்தானத்தை அடைகிறது. சமூகத்தில் கணவனை இழந்தவர்கள், கணவனால் புறக்கணிக்கப்பட்டவர்கள், வாழ வகை தெரியாத வர்கள், வாழ்க்கைச் சூதில் தம்மையே சூதாட்டக் காய் களாக வைத்து இழந்தவர்கள் என்று எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் இந்த உலகத்தில் வாழ வேண்டியவர்கள் தாம்.
அவர்களுக்கு உலக வாழ்வு இருண்டு போகாமல் இருக்க அநேக உழைப்பாளிகள் தேவை. அந்தத் தொண்டர்களின் உள்ளம் மாசு மருவற்று இருக்க வேண்டும். தன்னுடையது என்கிற பற்று நீங்க வேண் டும். அவளுடைய கண்ணீரைத் துடைக்க அவர்கள் உள்ளம் பண்பட்டிருக்க வேண்டும். நோயிலும் துன்பத் திலும் இன்னல்களிலும் பங்கெடுத்துக்கொண்டு ஆற்றும் பணியே கடவுள் பணி என்னும் உண்மையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய பல நல்முத்துக்களை இந்தப் பாரத நாடு ஈன்றிருக் கிறது. அவர்கள் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் ஆழ் கடலின் கீழ் ஒளிந்து வாழும் முத்துச் சிப்பிகளைப் போல மறைந்து கிடக்கிறார்கள். அவர்களில் ஒரு முத்துச்சிப்பியைத் தான் ஸ்ரீதரன் கண்டெடுத்து உலகப் பணிக்கு அர்ப்பணிக்க முன் வந்தார்.
அந்த ஆனந்தத்தில் லயித்து அவர் தம்மையே மறந்திருந்தார்.
”டாக்டர்! நாளைக்கு நான் பசுமலைக்குக் கிளம்புறேன்..." பவானி உள்ளம் நெகிழ மறுபடியும் டாக்டரிடம் பேசினாள்.
”போய் வருகிறீர்களா? சற்று முன் நீங்கள் என்னிடம் சொல்லிக்கொண்டபோது நான் ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தேன்" என்றார் அவர்.
ராதா அவர் அருகில் வந்து நின்றாள்.
"அண்ணா ! நானும் பவானியுடன் பசுமலைக்குப் போகிறேன். சில வருஷங்கள் அங்கே இருக்கிறேன்" என்றாள்.
"ஏன் அப்படி?" என்று கேட்டார் அவர்.
“இல்லை அண்ணா ! அவர் இல்லாமல் இந்த வீட்டில் எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை. சில காலம் நான் என்னை மறந்து இருக்க ஆசைப்படுகிறேன்."
ஸ்ரீதரன் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. விருந்தினர் யாவரும் தத்தம் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள். ஸ்ரீதரனும் ராதாவும் அன்று இரவு வெகு நேரம் வரை தூங்கவில்லை. பவானியின் சிறப்பான குணங்களைப்பற்றி அவர் தம் தங்கையிடம் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.
"ராதா அவளை என் மனம் ஓர் உயர்ந்த முத்துக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறது. இத்தகைய நற்குணங்கள் நிரம்பிய பெண்மணிகள் எத்தனை பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் தெரியுமா?" என்று சிலாகித்துப் பேசினார் அவர்.
ராதா வாய் திறவாமல் அவர் கூறுவதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.
-----------
2. 39. முத்துச்சிப்பி
ரயிலில் பவானியும், ராதாவும் உட்கார்ந்திருந்தார்கள். நானும் மதுரை செல்வதற்காக அன்று அதே ரயிலில் பிரயாணப்பட்டேன். எழும்பூர் ரயில் நிலையத்தில் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு சிறு கூட்டம் என் பெட்டியின் அருகில் வந்து நின்றது. தூய வெள்ளை ஆடை உடுத்திய இரு பெண்கள் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். நடுத்தர வயதை உடைய ஒருத்தி மங்கலத்தை இழந்தவள் என்பதை அவள் நெற்றியே எனக்குக் காட்டி விட்டது. இன்னொருத்தி இளம் பெண்: வந்திருந்த கூட்டம் குதூகலமாகச் சிரித்து அவர் களுடன் பேசியது . சுருண்ட கேசமும் அகன்ற விழிகளும் உடைய வாலிபன் ஒருவன் நடுத்தர வயதினனான பெண் மணியிடம், "அம்மா அடிக்கடி கடிதம் போடு" என்று கேட்டுக் கொண்டான்.
”அத்தை ! திரும்பவும் நீங்கள் சமீபத்தில் இங்கு வராவிட்டால், நான் பசுமலைக்கே வந்து விடுவேன்" என்று ஒரு பெண் பயமுறுத்தினாள்.
”பவானி! கல்யாணராமனையும், பார்வதியையும் நாங்கள் மிகவும் விசாரித்ததாகச் சொல் அம்மா" என்று தம்பதி இருவர் கேட்டுக் கொண்டனர். டாக்டரைப் போல் தோற்றமளித்த பெண்மணி ஒருத்தி. பவானி யிடம் ஒரு புத்தகத்தை அளித்தாள். 'ஆசிய ஜோதி' என்னும் தலைப்பு புத்தகத்தின் மீது அழகாக அச்சிடப் பட்டிருந்தது. அவள் இடுப்பில் இருந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை, உலகத்தின் இன்பங்களை-யெல்லாம் தன் பொக்கை வாய்ச் சிரிப்பால் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
சென்னையில் பிரபல டாக்டரான ஸ்ரீதரன் தம் மகளுடன் காரிலேயே ரயில் நிலையத்துக்குள் அவசரமாக வந்தார்.
"என்ன அம்மா ! நீங்கள் எந்த மட்டும்?" என்று அன்னை விசாரித்தார்.
”மதுரைக்குப் போகிறேன்..." என்றேன்.
”அப்போது உங்களுக்குப் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்து விட்டது" என்றார் அவர். வண்டிக்குள் உட்கார்ந்திருந்த இரு பெண்களையும் பார்த்து.
”இவள் உங்கள் பெண் ஜெயஸ்ரீதானே? பார்த்து நாள் ஆயிற்று."
”ஆமாம், பெரியவளாக வளர்ந்து விட்டாள். கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் ..."
"அப்படியா? மிகவும் சந்தோஷம். வரன் தகைந்து விட்டதா?" என்றேன்.
”அநேகமாகத் தகைந்த மாதிரிதான்" என்று கூறி விட்டு .. போலு! இங்கே வா" என்று அழைத்தார் அவர்.
சுருண்ட கேசத்தையுடைய அந்த அழகிய வாலிபன் பெட்டிக்குள் வந்தான்.
"இவன் தான் அம்மா எனக்கு வரப்போகும் மருமகன். அந்த அம்மாள் தான் இவன் தாய். அந்தப் பெண் என் தங்கை" என்று அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் டாக்டர்.
ரயில் கிளம்புவதற்கு அறிகுறியாக கார்டு பச்சைக் கொடியை உயர்த்திப் பிடித்து ஆட்டினார். வெளியே நின்றிருந்தவர்களின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந் தது. பவானி தன் கைகள் இரண்டையும் கூப்பி அனைவ ரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தாள்.
ரயில் வேகமாக நகரத் தொடங்கியது. மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை என்று ஊர்கள் நகர்ந்து கொண்டே வந்தன. தாம்பரத்தையும் தாண்டி ரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
என் எதிரில் உட்கார்ந்திருந்த பவானி என்னைப் பார்த்து “ஏதாவது பள்ளிக்கூடத்தில் வேலையாக இருக்கிறீர்களா? கையில் ஏகப்பட்ட காகிதங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே! பரீட்சை விடைத்தாள்களா அவை?" என்று கேட்டாள்.
நான் லேசாகச் சிரித்தேன்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. ஏதாவது இப்படி மனசில் தோன்றுவதை எழுதப் பார்க்கிறேன்" என்றேன்.
பவானி சிறிது நேரம் ஏதோ யோசித்தாள். பிறகு அவன் அருகில் வந்து உட்கார்ந்து, அம்மா! எனக்குத் தெரிந்த ஓர் அனுபவத்தைக் கூறுகிறேன். எழுதிப் பாருங்கள்" என்றாள்.
பவானியை முந்திக்கொண்டு அந்த இளம் பெண் ராதா கதை சொல்ல ஆரம்பித்தாள். கதை வளர்ந்து கொண்டே வந்தது. இருவரும் மாறிமாறிக் கூறினார்கள்.
பசுமலையின் அழகிய கோபுரம் என் கண் முன்னே தெரிந்தது.
சீறி எழுந்து அலைமோதும் கடலுக்குள் பாய்ந்து சென்ற ஒருவன் கடலின் அடித்தளத்தில் துழாவித் துருவிக் கண்டு பிடித்தான் ஒரு முத்துச் சிப்பியை. முத்தை வெளியில் எடுத்தான். பசுமையும் நீலமும் வெண்மையும் கலந்த அந்த முத்துக்குத்தான் எவ்வளவு ஒளி? அதைப் பத்திரமாகக் கையில் எடுத்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தான் அவன்.
குருக்கள் கர்ப்பூரம் காட்டிக்கொண்டிருந்தார் இறைவனுக்கு. தகதகவென்று அவன் அளித்த முத்து இறைவனின் நெற்றியில் துலங்கிக் கொண்டிருந்தது. கடலின் ஆழத்தில் ஒளிந்திருந்து அது செய்த தவம் அன்று பலித்தது.
பொழுது விடிந்தது. சொக்கநாதர்- மீனாட்சியின் ஆலயம் தெரிந்தது.
பவானியும், ராதாவும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.இளம்பரிதியில் பவானியின் முகம் முத்தைப் பாலப் பிரகாசித்தது.
கற்பனையில் நான் கண்ட முத்துச் சிப்பி முழு பருவத்துடன் என் முன் துயின்று கொண்டிருந்தாள்
(முற்றும்)
-----------
This file was last updated on 18 April 2020.
Feel free to send the corrections to the Webmaster.