"இந்திய இலக்கியச் சிற்பிகள்:
ஔவையார்"
ஆசிரியர்: தமிழண்ணல்
intiya ilakkiyac ciRpikaL: auvaiyAr
by tamizaNNal
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
"இந்திய இலக்கியச் சிற்பிகள் : ஔவையார்"
தமிழண்ணல்
Source:
இந்திய இலக்கியச் சிற்பிகள் - ஒளவையார்
தமிழண்ணல்
சாகித்திய அக்காதெமி
© சாகித்திய அக்காதெமி முதல் பதிப்பு 1998
ISBN 81-260-0057-0
சாகித்திய அக்காதெமி,
தலைமை அலுவலகம் ரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புது தில்லி 110 001.
விற்பனை 'குணா பில்டிங்' 304-305, அண்ணா சாலை, சென்னை 600 018.
விலை ரூ.25
அச்சிட்டோர்: எமரெல்ட் அச்சீட்டகம், சென்னை.
Avvaiyar-Monograph in Tamil by Rm. Periakaruppan 'Tamizhannal'
Sahitya Akadcmi, New Delhi, 1998, Rs.25
---------
முன்னுரை
ஒளவையார் உலகப் பெண்பாற் புலவர்களில் தலைசிறந்தவர். தமிழர்களின்
உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீங்கா இடம் பெற்றவர். சங்ககால ஒளவையாரும்
இடைக்காலத்தில் சோழப் பேரரசு சிறந்து விளங்கிய போது தோன்றிய நீதிநூல் ஒளவையாரும் ஆகிய இருவருமே மிகுந்த சிறப்புக்குரியவர்கள். நீதிநூல் ஒளவையார் புகழ் தமிழகம் முழுவதும் பரவி, கற்றோரேயன்றி மற்றோரும் நினைவில் வைத்துக் கொண்டாடும்படி அமைந்தது. அதற்கு அவர் பாடிய எளிமைமிகுந்த ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போலும் நீதி நூல்களே காரணமாகும். அவர் பாடல்களில் அமைந்த நெஞ்சில் ஆழப் பதியும்படியான கருத்தும் வடிவமும் நிறைந்த சிறுசிறு தொடர்களே அவரை அடிக்கடி நினைப்பூட்டுகின்றன. அதனுடன் அவர் பாடிய தனிப்பாடல்களும் மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றன. அவரது புலமை, பாப்புனையும் திறன், எளியோரிடமும் கலந்து பழகி மக்கள் கவிஞராக விளங்கியமை என்பனவற்றால் பல கதைகளும் கற்பனை நிகழ்ச்சிகளும் மக்களால் சொல்லப்பட்டு வாய்மொழியாக வழங்கலாயின. அவர் இயற்றியன வல்லாத சில பாடல்களும் நூல்களும் அவரோடு தொடர்பு படுத்தப்பட்டும் காலப்போக்கில் கதைகள் பல வழங்கலாயின.
இந்நூல் ஒளவையார் பற்றிய ஒரு முழுமையான பார்வையைத் தருவதுடன், சங்க கால ஒளவையார், நீதிநூல் ஒளவையார் ஆகிய இருவர் பற்றிச் சிறப்பாக எடுத்து மொழிகிறது.
'தமிழ் நாவலர் சரிதை', 'புலவர்புராணம்', 'விநோதரசமஞ்சரி', 'பாவலர் சரித்திர தீபகம்' போலும் பல நூல்களில் ஒளவை வரலாறு காணப்படுகிறது. வாய்மொழியாக வழங்கியவற்றின் தொகுப்பாதலால், இக்கதைகளில் சிறு சிறு மாற்றங்களையும் காணலாம். இன்னும் ஏட்டிலேறாத ஒளவைக் கதைகளும் மக்களிடையே வழங்குகின்றன.
தனிச் செய்யுட் சிந்தாமணி , தனிப்பாடல் திரட்டு ஆகியவற்றில், ஒளவையின் தனிப்பாடல்கள் பல அவற்றிற்குரிய பின்னணிக் கதைகளோடு தரப்பட்டுள்ளன.
ஒளவை வரலாற்றை முதன் முதலாக வரன்முறையோடு எழுத முயன்றவர், எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை ஆவார். அவர் ’நீதி நூல் திரட்டு' என்ற நூலின் கண் 1906 -இல் 'ஒளவையார் சரித்திரம்' என்ற பெயரால் 78 பக்கங்களில் ஒரு முன்னுரை எழுதியுள்ளார். அது தனிநூலாகவும் வெளிவந்துள்ளது. மிக விரிவாகத் ’தமிழ் இலக்கிய வரலாற்’றை எழுதிய அறிஞர் மு. அருணாசலம், ’சைவ இலக்கிய வரலாறு' எழுதிய ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை போல்வார் பலர் ஒளவையார்கள் பற்றிய வரலாறுகளை விரிவாகத் தந்துள்ளனர். முனைவர் ந. சுப்பிரமணியன் 1992இல், சங்க இலக்கியத்தில் காணப்படும் 59 பாடல்களையும் உரையுடன் பதிப்பித்து, அதில் சங்க கால ஒளவையின் வரலாற்றை ஆராய்ச்சி முன்னுரையாகத் தந்துள்ளார்.
இவ்வாறு வரலாறாகவும் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் ஒளவை பற்றிய ஆய்வுகள் மிகுதியாக வெளிவந்துள்ளன. இந்நூல் ஒளவையின் அறிவு, அனுபவம், புலமை, திறமை, சாதுரியம் யாவற்றையும் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் நல்லதோர் அறிமுக நூலாக எழுதப்பட்டுள்ளது.
அதியமான் நெடுமான் அஞ்சி கொடுத்த நெல்லிக்கனியால் மட்டுமல்லாமல், தம் பாட்டுத் திறத்தாலும் வையம் உள்ளளவும் வாழும் சிறப்புப் பெற்ற ஒளவைப் பெருமாட்டியைப் பற்றி எழுதக் கிடைத்தது ஒரு பெரும் பேறேயாகும். இவ்வாய்ப்பினை நல்கிய சாகித்திய அக்காதெமிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
மதுரை - 625020 தமிழண்ணல்
----------------
உள்ளுறை
1. ஒளவையார்
2. சங்க கால ஒளவையார்
3. நீதிநூல் ஒளவையார்
4. ஒளவைக்கதைகள்
பின்னிணைப்பு
1. ஆத்திசூடி
2. கொன்றை வேந்தன்
------------
"தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஒளவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?" என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், 'மற்ற செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்' என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
- பாரதியார்.[*]
--
[*] பாரதியார் கட்டுரைகள், பக். 160-161.
------------
1. ஒளவையார்
தமிழ் கூறும் நல்லுலகில் ஒளவை எனும் பெயரை அறியாதார் இலர். இளஞ்சிறார் முதல் அகவை முதிர்ந்த பெரியோர் வரை; கல்வியறிவில்லாத மக்கள் முதல் கற்றுத் துறைபோகிய சான்றோர் வரை ஒளவை என்றால் மதிப்போடும் மகிழ்வோடும் சொல்லி, அவரது அறிவுரைகளை எடுத்து மொழியக் காணலாம்.
அ ஆ என அரிச்சுவடியைக் கற்பிக்கத் தொடங்கும் போதே சின்னஞ்சிறுவர்க்கு ஒள எழுத்தை அறிமுகப்படுத்த ஒளவை எனச் சொல்லித் தருவது தொன்று தொட்டு வரும் பெருவழக்காகும்.
அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
செய்வன திருந்தச்செய்
இணக்கமறிந்து இணங்கு
கிட்டாதாயின் வெட்டென மற
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
இவை பழமொழிகள் போல் மக்களிடையே அன்றாட நடைமுறை வாழ்வில் பயன்படுபவை. ஒளவை தந்த அரிய கருத்துக் கருவூலங்களாம் இவ்வறிவுத் தொடர்கள், கல்லாதார் நாவிலும் களிநடம்புரியக் காணலாம்!
ஒளவையார் சங்க காலத்தில் மிகவும் புகழ்பெற்ற பெண்பாற் புலவராகத் திகழ்ந்துள்ளார். அதனால் தமிழகத்தில் வழிவழியாகச் சிறப்புடைய பெண்பாற்புலவர் பலர் ஒளவை என்றே அழைக் கப்பட்டு வந்துள்ளனர். நூற்றாண்டு வரிசையில் மிக விரிவாகத் 'தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய அறிஞர் மு. அருணாசலம் ஆறு ஒளவையார்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். சான்றோர் மு.வரதராசனார் தமது இலக்கிய வரலாற்றில் பல ஒளவையார்கள் காலந்தோறும் வாழ்ந்து வந்துள்ளமையைச் சுட்டிக் காட்டுகிறார். சோழர் காலமாகிய இடைக்காலத்தில் வாழ்ந்து, நீதிநூல்கள் பாடிய ஒளவையாரே, அனைவரிலும் மிக்க பெரும்புகழ் பெற்றவர். அவரை ஒட்டியே செவிவழிக் கதைகள் பல கட்டப்பட்டு, வாய் மொழியாக மக்களிடையே வழங்கலாயின. ஏனைய ஒளவையார்கள் எல்லாம் 'வினாயகரகவல்', 'ஞானக்குறள்', அசதிக்கோவை', 'பந்தனந்தாதி' என இவ்வாறு தனி நூல்களால் அறியப்படுகின்றவர் ஆவர். 'விநோதரச மஞ்சரி', தனிப்பாடல் திரட்டு', 'தனிச்செய்யுட் சிந்தாமணி', 'தமிழ் நாவலர் சரிதை', 'புலவர் புராணம்' போன்றவை ஒளவை தொடர்பான கதைகளைக் கூறி, அக்கதைப் பின்னணியில் ஒளவை பாடிய பாடல்களையும் தருகின்றன. இக்கதைகள் நூலுக்கு நூல் சிறுசிறு வேறுபாடுகளுடன் காணப்படும். பெரும்பகுதி புகழ்படைத்த நீதிநூல் ஒளவையின் தொடர்புடையனவாய் விளங்கினும் ஏனைய ஒளவைகளின் வரலாற்றை இணைத்தும் கூறப்படும். இவற்றில் எதுவுண்மை, எது கற்பனை எனப் பிரித்தறிவது கடினம். பாடல்களை வைத்துக் கொண்டு, அவற்றின் பின்னணியைப் புலவர்கள் கதை நிகழ்ச்சிகளாகக் கற்பனை செய்து கூறிய பாங்கும் சில பாடற்கதைகளில் காணப்படுகிறது. இன்னும் ஏட்டிலேறாது வழங்கி வரும் ஒளவைக் கதைகளும் பல உள. எங்ஙனமாயினும் இவை சுவைமிக்கவையாய், அறிவுக்கு விருந்தாய், உலகியலறிவு பொருந்தியவையாய் விளங்குதலால் மக்கள் இவற்றைச் சொல்லிச் சொல்லி மகிழ்கின்றனர்.
இங்ஙனம் ஒரு புலவர் பெற்ற புகழ் காரணமாகப் பின் வருபவர்கட்கு அதே பெயரை இட்டு வழங்குவதில் வியப்பொன்று மில்லை. கபிலர், பரணர், நக்கீரர், பட்டினத்தார் போலும் புகழ்பெற்ற புலவர்கள் பெயரால் பலர் வாழ்ந்துள்ளமை நாம் அறிந்ததே-யாகும். இத்தகைய ஒளவையார்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை ஒருமுகப்படுத்திச் சுருங்கக் கூறுமுகத் தான், இந்நூலுள் மூன்று தலைப்புக்களில் அவை எடுத்து மொழியப்படுகின்றன.
சங்க கால ஒளவை
நீதிநூல் ஒளவை
ஒளவைக் கதைகள்
இவ் ஒளவையார்களிடையே சிற்சில வேறுபாடுகள் காணப் படுதல் இயல்பே. எனினும் பல கூறுகளில் ஒற்றுமைத் தொடர்ச்சி காணப்படுவது வியப்பைத் தருகிறது.
ஒளவை பெயரால் அமைந்த தொடர்கள், பாடல்கள் எல்லாமே திட்பநுட்பமுடையவை; உலகியலறிவு சார்ந்தவை; பட்டறிவு முத்திரைகள் பதிந்தவை; எல்லோர் நாவிலும் எளிதில் ஒலிக்கப்படுபவை.
ஒளவையார் அனைவருமே வேந்தர்களைவிடவும் எளிய வள்ளல்களையே போற்றுபவர்கள்; மக்களிடையே மக்களாக வாழும் மனப்பாங்குடையவர்கள்; நன்றியுணர்வு மிக்கவர்கள்; நல்லவர்களைப் போற்றியும் அல்லாதவர்களைத் தூற்றியும் அஞ்சாமல் வாழ்ந்தவர்கள்.
சங்க கால ஒளவை, நீதிநூல் ஒளவை யாவரும் சிவநெறிச் சார்புடன் காணப்-படுகின்றனர்.
புலமைத் திறத்தில் ஈடும் எடுப்புமில்லாதவர்களாகவே விளங்குகின்றனர்.
இங்ஙனம் பெண்ணினத்திற்கே சிறப்புக் தேடும் வகையில் ஒளவை வரலாறு அமைகிறது. உலகப் பெண்பாற் புலவர்களிடையே தமிழ் ஒளவைக்குச் சிறப்பிடம் உண்டு என்று அறிஞர்கள் போற்றுகின்றனர். கிரேக்கப் பெரும் புலவராகிய 'சாபோ' (Sappho) எனப்படும் பெண்பாற்கவிஞருடன் தமிழ் ஒளவையை ஒப்பிட்டுத் திறனாய்ந்து கூறுகின்றனர். ஆயிரம் ஆண்பாற்புலவர்கள் இருப்பினும் அவர்களுக்கெல்லாம் ஈடு கொடுக்கும் வகையில், ஒளவைப் பெருமாட்டி புலமையாலும் பண்பாலும் சிறந்து விளங்கியமை போற்றுதற்குரிய சிறப்பேயாகும்.
இன்று நாம் மக்களுக்காக, மக்களுள் ஒருவராக, மக்களையே மிகுதியும் மதித்துப் பாடும் புலவர்களை மக்கள் கவிஞர் எனப் போற்றுகிறோம். அதனோடு மக்களுக்கெல்லாம் விளங்கும்படி எளிய தமிழில் பாடுகிறவர் என்ற சிறப்பையும் எடுத்துக் கூறு கிறோம். ஒளவையாரும் 'மக்கள் பாவலராகவே' திகழ்ந்துள்ளமை அறிந்தின் புறத்தக்கதாகும்.
சங்க ஒளவையும் நீதி நூல் ஒளவையும் என இருவரே வாழ்ந்தனர் என்ற கருத்துப் பலருக்கு உண்டு. இவ்விருவரும் வளர்த்த புகழே மற்ற பலரையும் இப்பெயரால் அழைக்கத் தூண்டியிருக்க வேண்டும். ஆயின் ஒரு குறிக்கத் தகுந்த வேறுபாடு; சங்க ஒளவை கபிலர், பரணர், வெள்ளி வீதியார் போலும் தம் சமகாலப் புலவர்களைப் பெருமிதத்தோடும் பரிவோடும் குறிப்பிடுகிறார்; இடைக்கால ஒளவையார் அக்காலச் சூழலுக்கேற்பப் புலமைச்செருக்குடன் போட்டியும் விவாதமும் விளைவிப்பவராகக் காணப்படுகிறார். இவ்விரண்டு ஒளவையார்களே உண்மையாக வாழ்ந்தனர் என்று கூறலாம். ஏனைய ஒளவைப் பெயருடையார் யாவரும் இவர்களது புகழ் ஒளியில் பூத்த நறுமலர்களாகவே எண்ணத்தக்கவராவர்.
ஔவை: பெயர்ப் பொருள்
ஒள என்ற எழுத்தை 'அவ்' என எழுதினும் ஒரே ஒலிப்புத்தான். ஆகவே 'அவ்வை' என எழுத்துப்போலியாக எழுதலாம். தொன்மை வடிவம் ஒளவையே. இவைகூட்டொலிகள் அல்ல; எழுத்துப்போலி பற்றியன என அறிதல் வேண்டும்.
பைத்தியம் - பயித்தியம்: இவ்வாறு அகர, இகரம், ஐகாரமாகும். கௌதமன் - கவுதமன்; இவ்வாறு அகர உகரம் ஒளகாரமாகும். இவையும் ஒலி ஒத்திசைக்கும் எழுத்துப்போலி பற்றியனவே. மூதறிஞர் வ.சுப.மா. தம் தொல்காப்பியவுரையில் இதை நன்கு விளக்கியுள்ளார். 'ஒளவை' என்பதே பழைய வடிவம்; 'அவ்வை' பிற்பட்ட வழக்கு. எழுத்துப் போலியால் அமைந்தது. இதில் தவறொன்றுமில்லை. இதற்காகப் பழைய வடிவமே வேண்டாமெனல் தக்கதன்று.
’ஒளவை' என்ற சொற்பொருளாக தாய், மூதாட்டி, பெண்துறவி, தவப்பெண் என்றெல்லாம் அகராதிகள் பொருள் கூறும். அம்மை, அவ்வை ஒருபொருட்சொற்களே. தெலுங்கு, கன்னடம், துளு முதலிய திராவிட மொழிகளில் அவ்வா, அவ்வை, அவ்வாள் எனப் பலவாறு திரிந்து வழங்கும். அவை பிற்பட்ட எழுத்துப் போலியைப் பின்பற்றிய வழக்காறுகள்.
ஒரு பெண்ணுக்கு மரியாதை தரும் அடைமொழியாகவும் இது கன்னடத்தில் வழங்கியதை, 'திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி' குறிப்பிடுகிறது. ஒளவையை ஆதரித்த அதியமானது தகடூர் இன்றைய தருமபுரி என்பர். அவ்வூர் கன்னட மாநிலத்தின் எல்லை யில் உளது. "ஒளவையார் கன்னட நாட்டிலும் சஞ்சரித்ததாக அந்நாட்டு விருத்தாந்தங்களால் தெரிகிறதென்பர்”, என எஸ். அனவரத விநாயகம் பிள்ளை குறிப்பிடுகின்றார். [1] எனவே சங்க காலத்தில் மதிப்புணர்த்தும் அடைமொழியாகவே வழங்கியிருக்க வேண்டும். காரைக்கால் அம்மையார் என்பது போல் இன்ன ஒளவையார் என இயற்பெயருடன் வழங்கியிருக்கக்கூடிய இதில், இப்போது இயற்பெயர் மறைந்து சிறப்புணர்த்திய அடைமொழியே பெயராகி விட்டது. ஒளவைப் பாட்டி என்றாலும் பாட்டுப்பாடும் பாடினி என்றாகுமே தவிர, அகவை முதிர்ச்சியைச் சுட்டாது. சங்க காலத்தில் 'பாட்டியர்' என்றால், பாட்டுப்பாடும் பாடினியர் என்பது பொருள்.
----
[1]. நீதி நூற்றிரட்டு, 1906. ப. 18.
காலப்போக்கில் ’அவ்வை' என்பதற்கு அம்மை, அன்னை என்ற பொருளுமிருந்ததால், தாய், தந்தையின் தாய் அல்லது பாட்டி எனப் பொருள்கள் நீளலாயின. பொருளுக்கேற்ப ஒளவையின் உருவமும் கற்பனை செய்யப்பட்டது. சமண சமயத்தவர் தம் சமயப் பெண்துறவியரை 'ஒளவை' என அழைக்கலாயினர். நிகண்டுகள் 'அவ்வை' என்பது நோற்பவள் பெயர்; தவம் செய்யும் பெண் என்பதாகப் பொருள் கூறின. இவையாவும் சொற்பொருள் வளர்ச்சியே.
"மணம் செய்துகொள்ளாதிருந்து பருவத்தால் முதிர்ச்சி பெற்றுத் தவக்கோலம் தாங்கி, கல்வி கேள்விகளில் மேம்பட்டு விளங்கிய பெண்டிரை இயற்பெயர் சுட்டாது, அவ்வை என்று வழங்கினர் போலும்",
என மு. அருணாசலம் கருதுகின்றார்.[2] இன்று ஒளவை என்றதும் மதிப்பு மிக்க, முதிர்ச்சி பெற்றதவமகள் ஒருத்தியின் திருத்தோற்றமே கண்முன் நிற்கிறது. மேலும் ஒளவையின் பெருமை இன்றளவும் நிலைபெற்று, இந்நூற்றாண்டின் மகாகவி எனப் போற்றப்படும் சி.சுப்பிரமணிய பாரதியாரின் மனத்தையும் ஈர்த்துளது.
சான்றோர் மு.வ. இதுபற்றிக் குறிப்பிடும் பொழுது, "இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியாரும் இவருடைய முறையைப் பின்பற்றி, இவர் நூலின் பெயரையே போற்றி, புதிய ஆத்திசூடி இயற்றினார் என்றால், இவர் காட்டிய வழி எவ்வளவு போற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதை உணரலாம்", என்று எழுதியுள்ளார்[3]. இன்று பாவேந்தர் பாரதிதாசன் முதல், கவிஞர் பலர் புதிய ஆத்திசூடிகளையும், ஆய்வுசூடி, தமிழ்சூடி என இன வகைகளாகவும் பாடியுள்ளனர். இதனால் ஒளவையின் புதுமை படைக்கும் புலமைத்திறமும் ஆளுமை நீட்சியுமே புலனாகின்றன.
----
[2] தமிழ் இலக்கிய வரலாறு - பன்னிரண்டாம் நூற்றாண்டு - முதல் பாகம், 1973, ப. 445.
[3]. தமிழ் இலக்கிய வரலாறு, 1980.ப. 181
பாணர்குலம்
சங்க கால ஒளவையைப் பாணர் குலமென்றே கருத, நிரம்ப வாய்ப்புளது. அவர் விறலியாற்றுப்படைத் துறையில் ஒரு புறப்பாட்டைப் புனைந்துள்ளார் (103). அதை அடிப்படையாக வைத்து அவரை விறலி எனக் கூறவியலாது. அது கவிமரபாகு மென்பர்.
தானைமறம் என்னும் துறையில், ஒளவை அஞ்சியைப் பாடிய புறப்பாட்டில், எதிரே நிற்கும் வேந்தன் தம்மை வினவுவதாகவும் தாம் அதற்கு விடை சொல்வதாகவும் பாடியுள்ளார். தம்மை வேந்தன் வாணுதல் 'விறலி' என அழைத்து, நும் நாட்டில் வீரரும் உளரோ?'
என வினவுவதாகக் கூறி, 'என் ஐயும் உளனே' என்று அஞ்சியைக் கூறி முடிக்கின்றார். இதனை அத்துணை எளிதாகக் கவிமரபு என்று ஒதுக்க முடியவில்லை .
அதியமான் பரிசில் நீட்டித்தபொழுது வரிசைக்கு வருந்தும் 'பரிசில் வாழ்க்கை' பற்றிக் குறிப்பிடுகிறார். அவ்வாழ்க்கை பாணர், புலவர் எல்லார்க்கும் பொதுவானதாகும். அதில் காவினெம்கலனே! 'சுருக்கினெம் கலப்பை' எனப் பாணருடன் பாடினியாகத் தாம் வாழ்ந்ததையே அவர் வெளிப்படுத்துகிறார்.
அன்று புலமையாளர் குலவேறுபாடு, தொழில் வேறுபாடு இன்றிப் பல சமுதாய மக்களிடமிருந்தும் வெளிப்பட்டுள்ளனர். குறமகள், மருத்துவன், இளம்பாலாசிரியன், குயத்தியார், கணியன் எனவரும் அடைமொழிகள் வெவ்வேறு வகையான தொழில் அடிப்படைக்குலங்களிலிருந்து புலவர்கள் தோன்றியதைக் காட்டும். ஒளவையார் பாணர் குலத்தினின்றும் தோன்றி வளர்ந்த பெரும் புலவர்களுள் ஒருவராகக் காணப்படுகின்றார்.
இடைக்கால ஒளவையும் நாடோடியாய், மக்களொடு கலந்து பழகிக் கூழுண்டு, குடிசையில் தங்கி வாழ்ந்தவராகவே காணப்படுகின்றார்.
ஒளவைகள் பலராயினும் பொதுத்தன்மைகள் பலவற்றால், ஒருவரே என்றெண்ணும்-படியான உருக்காட்சி' (Image) ஒன்று உருவானதற்கு, வேற்றுமையிடையே மிகுந்து காணப்பட்ட இவ்வொற்றுமைகளே அடிப்படைக் காரணங்களாகும்.
சங்க கால ஒளவை பரணர், வெள்ளி வீதியாரைக் குறிப்பிடு வதுடன், பாரியின் பறம்புமலையிலுள்ளாரைக் காக்க, கபிலர் கிளிகளைப் பழக்கி, பறம்பு மலைக்கு அப்பாலிருந்த தினைப் புனங்களிலிருந்து கதிர்களைக் கொத்தி வருமாறு பழக்கியதையும் குறித்துள்ளார். ஒளவையாரை ஆதரித்த அதியமான் நெடுமான் அஞ்சி ஏழுவள்ளல்களுள் ஒருவன். குமணனைப் பாடிய பெருஞ்சித்திரனார், அதியன் முதலிய எழுவரும் மாய்ந்த பிறகு தாம் குமணனைத் தேடி வந்ததாகப் பாடுகிறார். ஒளவையார் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியை, பிற இரு வேந்தர்களுடனும் கண்டு வாழ்த்திப் பாடியுள்ளார். இப்பாண்டியன் அகநானூற்றைத் தொகுப் பித்தவன். கடைச்சங்கத்து இறுதியில் உக்கிரப் பெருவழுதி இருந்ததாக இறையனாரகப்பொருள் உரை கூறும். இவற்றால் சங்க ஒளவை கடைச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் எனலாம்.
சங்ககாலம் கிறித்துவுக்குச் சில நூற்றாண்டுகள் முன்பு தொடங்கி, கிறித்துவின் தொடக்க காலம் வரை நீடித்தது என்று கோடலே சாலப்பொருத்தமுடையதாகும்.
----------
2. சங்க கால ஒளவையார்
காலந்தோறும் ஒளவையார் புகழ் விளங்கத் தொடங்கி வைத்தவர் சங்ககால ஒளவையாரே ஆவார். சோழர்கால நீதி நூல் ஒளவை ஒப்பற்ற பெரும்புகழுக்கு உரியராக விளங்கினாரெனினும், அப்பெரும் புகழைத் தோற்றுவித்தவர் சங்க ஒளவையே என்பது மிகையன்று.
ஒளவையின் வாக்கும் வாழ்வும் பெருமிதமுடையனவாய்க் காணப்படுகின்றன. அவர் மூவேந்தர்களை நாடி, அவர்கள் அரண்மனைகளில் தங்கி வாழ விரும்பினாரல்லவர். அதியமான் நெடுமான் அஞ்சி சிறுகுறுநில மன்னனேயாயினும், அவனிடம் நட்புப் பூண்டு அவனது அவைக்களப் புலவராய் இறுதிவரை திகழ்ந்தனர். அவன் சேரவேந்தனொடு பொருது நின்ற காலத்திலும், அவர் தம் தலைவனுக்காகவே வீரம் செறிந்த பாடல்களைப் பாடினார். மூவேந்தரும் பல ஆண்டுகள் முற்றுகையிட்ட காலத்தும், தம் நண்பன் பாரியைப் பிரியாது நின்ற கபிலர் போலவே, ஒளவையும் அஞ்சியின் உடனிருந்து அவனுடைய இறுதிக்காலம் வரை அயராது துணைநின்றார். மேலும் அஞ்சியைத் தவிர நாஞ்சில் வள்ளுவன், முடியன் போலும் சிறிய வள்ளல்களையே நாடிச் சென்று, எளிய வாழ்க்கையே வாழ்ந்துள்ளார். மனித நேயமும் பண்பாடும் போற்றிய காரணத்தால், தமிழகம் முழுவதும் ஒளவையின் புகழ் பரவலாயிற்று. அன்று முதல் இன்றுவரை ஒளவை என்னும் பெயர் பெண்குலத்திற்கே முடிமணியாய்ச் சிறப்புற்றுத் திகழ்கிறது. அவரது புலமையும் பாட்டுத்திறமும் பண்பாடும் அவரை உலகப் பாவலர்வரிசையில் வைத்தெண்ணுமாறு அத்துணை வலுவுடனும் பொலிவுடனும் திகழ்கின்றன.
சங்கப்பாடல்கள்
ஒளவையார் பாடியனவாக சங்க இலக்கியத்துள் 5 பாடல்கள் கிடைக்கின்றன. அவற்றுள் அகப்பாடல்கள் 26, புறப்பாடல்கள் 33.
பாடலால் பெயர் பெற்ற கலித்தொகை, பரிபாடலிலோ; தொகுதிப் பாடல்களடங்கிய ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்திலோ; நீண்ட பாடல்களடங்கிய பத்துப்பாட்டிலோ அவர்தம் பாடல்கள் காணப்படவில்லை. உதிரிப் பாடல்களின் தொகைகளாகிய குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு ஆகிய நான்கு தொகைகளில் மட்டுமே அவர் பாடல்கள் காணப்படுகின்றன. இது 'தனிப்பாடல் திரட்டு' நூலில் காணப்படும் ஒளவையின் மனப்போக்கை ஒத்திருக்கிறது. அதாவது சங்க கால ஒளவையும் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைக்கும் உணர்வுக்கும் ஏற்பப் பாடிய தனிப்பாடற் புலவராகவே', விளங்கினார் என அறிகிறோம்.
அகப் பாடல்களில் குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, அகநானூற்றில் 4 ஆக 26. அவற்றுள்ளும் பாலைத்திணை 9, முல்லைத்திணை 5, மற்ற குறிஞ்சி மருதம் நெய்தலில் தலைக்கு 4. கூற்றுவரிசைப்படி தலைவிக்கு 15, தோழிக்கு 6, தலைவனுக்கு 3, செவிலிக்கு 1, கண்டோர்க்கு 1. இப்பாடல்கள் அனைத்தும் அகச் செய்திகளை அழகாகவும் அழுத்தமாகவும் புனைகின்றன. புறப்பாடல்களில் 22 பாடல்கள் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றியன. மூன்று பாடல்கள் அவன் மகன் பொகுட்டெழினி பற்றியன. இவை தவிர அவர் நாஞ்சில் வள்ளுவனைப் பாடிய தொன்றும், மூவேந்தர்களும் ஒருசமயம் ஒருங்கிருக்கக் கண்டபோது அவர்களை வாழ்த்திப் பாடியதொன்றும் உள. இவை இரண்டுமே அஞ்சியல்லாத மற்றைய மன்னர்கள் பற்றியவை. ஏனைய ஆறுபாடல்களும் பொதுவான திணை, துறை - அமைந்தவை. இவற்றிலிருந்து ஒளவையார் அஞ்சியின் உயிர்நண்பராய், அவைக்களப் புலவராய் வாழ்நாள் முழுவதும் இருந்தாரென்பது பெறப்படும்.
திணை அடிப்படையில் பார்த்தால் வெட்சி 1, கரந்தை 2, தும்பை 6, வாகை 7, பாடாண் 13, பொதுவியல் 4. இவருடைய புறப்பாடல்கள் பெரிதும் போர்த்துறை சார்ந்தனவாகவே காணப் படுகின்றன.
இவர்தம் அகப்பாடல்கள் 26 இல் 8 பாடல்களில் மட்டுமே புறச்செய்திகளைப் புகுத்தியுள்ளார். அஞ்சியைப் பற்றியே மூன்று பாடல்களிலும் முடியன் என்னும் தலைவன், வாய்மொழிக் கோசர், பசும்பூட் பொறையன் - பாரியின் பறம்பு மலை, கிள்ளிவளவனது கோவில் வெண்ணி, வெள்ளி வீதியார், மகளிர் கார்த்திகை விளக்கு ஏற்றி விழாவயர்தல் ஆகியன பற்றி ஏனைய ஐந்து பாடல்களிலும் புறச்செய்திகள் இடம் பெறுகின்றன.
அதியமான் நெடுமான் அஞ்சி
பனம்பூ மாலையையே தனக்கும் அடையாள மாலையாக வுடைய அதியர் குடியில் பிறந்தவன் நெடுமான் அஞ்சி. பெயருக் கேற்ற நெடிய தோற்றமும் அகன்ற மார்பும் தாள்தொடு தடக்கையும் கற்பனை கடந்த உடல் வலிமையும் உடையவன் அஞ்சி. போர் விருப்பமும் விளையாட்டாகப் போரில் ஈடுபட்டு அதிலேயே திளைக்கும் பழக்கமும் எளியவர்கட்கு உதவும் ஈரநெஞ்சமும் தன்னிடமுள்ளதெல்லாம் வாரி வழங்கும் கொடை நெஞ்சமும் உடையவன். அவனிடம் மறக்குணமிக்க மழவர்படை இருந்தது. அவனது தகடூர் இன்றைய தருமபுரி ஆகும். ஆண்டுள்ள குதிரை மலையும் அவனுக்கு உரிமையுடைத்தாகும்.
அன்று தமிழகத்தில் ஏழு வள்ளல்கள் என எண்ணி மக்களால் போற்றப்பட்டவர்களில் அதியனும் ஒருவனாவான். மூவேந்தர்கள் பேராற்றலுடனும் பெருங்கொடைப் பண்புடனும் திகழ்ந்தன ராயினும், வள்ளல்கள் எனத் தமிழ்ப் புலவர்கள் இனங்கண்டு போற்றிய எழுவருமே குறுநிலத் தலைவர்களாக இருத்தல் சிந்தித்தற்குரியதாகும். பேகன், பாரி, காரி, ஓரி, ஆய், நள்ளி, அதியன் எனும் எழுவரும் குறுநில மன்னர்களாக இருந்தும், தங்கள் வாய்ப்பு வசதிகட்கு அப்பாற்பட்டும், கொடைமடம் பட்டு வாரி வழங்கியமையால் மக்களால் பெரிதும் போற்றப்பட்டுள்ளனர்.
சிறுபாணாற்றுப் படையில் நல்லூர் நத்தத்தனார் இவ்வேழு வள்ளல்களையும் வரிசைப்படுத்தும் போது, அதியனைக் குறிப் பிடுகிறார்.
’மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவுக் கடல்தானை அதிகனும்' (99 - 103)
இவ்வேழு வள்ளல்களையும், குமண வள்ளலைப் பாடும் போது பெருஞ்சித்திரனாரும் குறிப்பிடுகின்றார். அவர்,
'ஊராது ஏந்திய குதிரை, கூர்வேல்,
கூவிளங்கண்ணிக் கொடும்பூண் எழினியும்' (புறம். 158)
என்று அதியனை அங்கு சிறப்பிக்கின்றார். இவ்வெழுவரும் வியப்புத் தோன்றுமாறு கொடைமடம்பட்டுக் கொடுத்ததால் சிறப்பித்துச் சுட்டப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது. நத்தத்தனார் 'மயிலுக்குப் போர்வை ஈந்த பேகன்' என்றும், 'முல்லைக்குத் தேர் ஈந்த பாரி' என்றும் இவ்வாறு குறிப்பிடுதலால் இதை அறியலாம். இவ்வகையில் அதியன் ஒளவைக்குக் கிடைத்தற்கரிய நெல்லிக்கனி கொடுத்ததால் பெரும்புகழ் பெற்றான் என அறிகின்றோம்.
அவைக்களப்புலவர்
அஞ்சியின் திருவோலக்கத்தை ஒளவை சிறப்பாகக் குறிப்பிடுகின்றார்.
’ஓங்குசெலல்
கடும்பகட்டு யானை நெடுமான் அஞ்சி
ஈர நெஞ்சம் ஓடிச் சேண்விளங்கத்
தேர்வீச இருக்கை போல' (நற். 381)
ஆண்டு இவர் அவைக்களப் புலவராய் வாழ்நாளிற் பெரும்பகுதி கழித்தமையால் என் ஐ' (என் தலைவன்) என்றே உரிமையுடன் பாடுகின்றார்.
முழவுத்தோள் என் ஐ' (புறம்.88)
'என் ஐ' (புறம்.89)
'என் ஐ இளையோற்கு' (என் தலைவனின் மகனுக்கு) (96) என இவ்வாறு சுட்டுமிடங்களும் இறுதியில் பாடிய கையறுநிலைப் பாடல்களும் இவர்களது நட்பின் சிறப்பைக் காட்டுகின்றன.
கொடைக்குணம்
அஞ்சியின் ஈரநெஞ்சமும் கொடைப் பண்பும் தனிச்சிறப்புடன் பேசப்படுகின்றன. மிக எளியவர்கட்கும் உதவுவது இவன் இயல்பு. அதனால் மடவோர் மகிழ்துணை (புறம்.315) என்றும் இல்லோர் ஒக்கல் தலைவன் (95) என்றும் பட்டம் சூட்டுகிறார் பாட்டுக்கு அரசியார்.
அவன் கூடுதலாக இருந்தால்தான் தான் உண்பானாம் (315). மிகுதியாக இருக்கும்போது விருந்து கொடுத்து, சுருங்கியபோது இருப்பதைப் பகிர்ந்து உண்பானாம் (95). தனக்குத் துன்பம் சூழ்ந்த காலத்தும் பிறரைப் போற்றுவதில் ஆர்வமுள்ளவனாம் (103). தன் வாழ்வில் ஏற்படும் மேடுபள்ளங்களைப் பொருட்படுத்தாது, பிறர்க்கு ஈவதிலும் உணவு தந்து உபசரிப்பதிலும் கருத்தாக இருந்தமையானும் ஏழை எளியவர் எல்லோர்க்கும் எப்போதும் உதவியமையானும் இவனது புகழ் எல்லையின்றி எங்கும் பரவியது.
பாரி பணைகெழு வேந்தரை இறந்தும் இரவலர்க்கு ஈந்தான் என்பதே, அவன் முடிகெழு வேந்தர் மூவருக்கும் பகையாக நேர்ந்தது. அதியனும் கடவர்மீதும் இரப்போர்க்கு ஈயும்' நெடுமான் அஞ்சியாகப் போற்றப்படுகின்றான் (315). அண்ணல் யானை வேந்தர் பலர் இருப்பினும், அவரினும் இவனே வாடுபசி போக்கும் பாடுபெறு தோன்றலாக அறியப்பட்டான் (390). இதனால் வேந்தரின் பொறாமைக்கு இவன் ஆளாயினமை புலப்படுகிறது. அதிலும் சேரர்குடிச் சிறு மன்னனாகிய இவன், அக்குடி சார்ந்த பெருநில வேந்தரினும் பெரும்புகழ் பெற்றது அச்சேரவேந்தர்க்குத் தாங்க வொண்ணாததாகி விடுகிறது.
போர் மறவன்
இங்ஙனம் எளியோர்க்கும் எளியனாய்த் திகழ்ந்த இவன் போரிடுவதில், அரியவர்க்கும் அரிய போர் மறவனாகவே திகழ்ந்தான். எம்முளும் உளன் ஒரு பொருநன்' என இவனை ஒரு போர் வீரனாகவே அறிமுகப்படுத்துகிறார் கவியரசியார்.
இவன் நெடுமான் (நெடுமகன்) எனும் பெயருக்கு ஏற்ப உயரமான தோற்றமுடையவன். 'அம் பகட்டு மார்பினையும் முழவுத் தோள்களையும் ' உடையவன் (88). நுண்ணிய வேலைப் பாடமைந்த ஒளிவீசும் அணிகலன்கள் அவன் மார்பிற்கிடந்து, அசைந்து அழகு செய்தமை அடிக்கடி பேசப்படுகிறது. எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கையை உடையவன்' (90).
இவன் நிகரற்ற உடல் வலிமையுடையவனாகத் திகழ்ந்தமை பல பாடல்களில், அழுத்தமுற ஓவியம் போலச் சித்தரித்தும் சிற்பம் போல வடித்தும் காட்டப்படுகிறது. ஒருநாளில் எட்டுத்தேர் செய்யும் தச்சன், ஒரு மாதம் முழுவதும் மிக முயன்று செய்த ஒரே ஒரு சக்கரம் எத்துணைவலிவும் பொலிவும் உடையதாக இருக்குமோ அத்துணை வலிமையுடையவன் (87). வரிமணல் ஞெமர, கற்பக நடக்கும் பெருமிதப் பகடு ' அன்னான் (90). நீர்த்துறை படியும் பெருங்களிறு போல்பவன்' (94). களிறு அட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கராஅத்து' அன்னவன் (104). இத்தகைய இவன் போரடு திருவில் பொலந்தார் அஞ்சி' என்றே போற்றப்படுகின்றான் (91). போர்செய்து பெறும் வெற்றியாகிய வீரச்செல்வத்தை உடையவன் இவன்.
ஊர்நடுவேயுள்ள பொதுமன்றின்கண் நிற்கும் மரத்தில் தண்ணுமை ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கிறது. அதில் எதிர்பாராது காற்று வீசுவதால், கொம்பு குச்சி ஏதேனும் பட்டு அதனாலாம் ஓசை கேட்டாலும், போர்ப்பறைதான் முழங்குகிறதோ என எண்ணிப் போருக்குப் புறப்படும் வீரவுணர்வுடைய தலைவன் இவன்.
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அதுபோர் என்னும் தலைவன் (89)
என ஒளவை பாடுகிறார்.
ஒருவரது தோற்றத்தை ஒளிப்படமாய்ப் பதிவு செய்யலாம். ஒருவரது மனநிலையை, இயல்பைப் படம் போல மனத்திற்குத் தோன்றுமாறு பதிவு செய்ய முடியுமா? முடியும். சங்க இலக்கியம் அதைச் செய்கிறது.
பொருள்களுக்கு நிலையியல் ஆற்றல், இயங்குநிலை ஆற்றல் என இரண்டு உண்டல்லவா? மலைமீது கிடக்கும் ஒரு பாறைக்கல் அங்கேயே கிடக்கும் போது, துணிதுவைக்கும் கல் போல் அசையாது கிடக்கும். அதுவே கீழே உருளத் தொடங்கினால் எத்தனை சிதைவுகளை ஏற்படுத்தும் அஞ்சிக்கும் ஓர் இயல்புண்டு. பொதுவாக இருக்கும் போது, தண்ணீர் ஓடுவது போல் இனிமையான சாயல் தான் : ஆனால் போரென்று கேட்டுப் புறப்பட்டு விடுவானானால், காட்டுத்தீ சீற்றத்தோடு கனைத்துக் கொண்டு காடு முழுவதும் பற்றி எரிவது போல் பகைவர்களை அழித்து ஒழிப்பான்.
அக்காலத்தில் வீட்டு முன் இறப்பில் தீக்கடைகோல் (ஞெலிகோல்) செருகியிருக்கும், அப்போது அதன் ஆற்றல் யாராலும் சிறிதும் உணரப்படாது. அதே தீக்கடைய உதவும் மூங்கிற் கோல்களை ஒன்றுடன் ஒன்று உராய்ந்து சுழற்றினால், சத்தமிட்டுக் கொண்டு நெருப்புப் பொறிகள் வெளிப்படும். அஞ்சிக்குத் தீக்கடை கோலை, ஒளவை உவமை சொல்வது அவரது தனிச்சிந்தனையாற்றலைக் காட்டுகிறது.
இல்லிறைச் செரீஇய ஞெலி கோல் போலத்
தோன்றா திருக்கவும் வல்லன்; மற்றதன்
கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன்தான் தோன்றுங்காலே' (புறம்.315)
(இறை - இறப்பு. கான்றுபடு கனைஎரி - கக்கப்பட்டு ஓசையுடன் வெளிப்படும் நெருப்பு)
தோன்றாத காலத்து அமைதியுடனும், தோன்றும் போது மிகுந்த ஆற்றலுடனும் தோன்றுவான் என்ற இக்கருத்தை,
'தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று' (236)
என்ற குறட்கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அக்குறளுக்கு இது விளக்கம் போல் உளது. முன்பு சுட்டியது போல தச்சன் செய்யும் தேர்ச்சக்கரத்தை, அஞ்சியின் உடல் வலிமைக்குச் சொன்னதும் மிக அரியதோர் உவமையாகும். உருண்டுதிரண்ட தோள்வலிமையைப் பொதுவாகக் கணையமரத்தை உவமை சொல்லி விளக்குவர். ஒளவையும் எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக்கை' (90) என்று கூறுகிறார். ஆயினும் தேர்ச்சக்கரவுவமை முற்றிலும் புதுமையுடையதாகும்.
’எம்முளும் உளனொரு பொருநன், வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே' (87)
நெல்லிக்கனி
ஒளவைக்கு அதியன் ஈந்த நெல்லிக்கனி , உலகப் புகழுக்கு உரியதாயிற்று. அதியனைப் புகழ் பெற்ற ஏழு வள்ளல்களுள் ஒருவனாக ஆக்கியதும் அந்நிகழ்ச்சியே. ஒருமுறை மலைப் பிளவு களிடையே எளிதில் மனிதர் புகமுடியாத இடத்தில், நெல்லிக் கனி கிடைத்தது. அதனை உண்டார் நெடுநாள் வாழ்வர் என ஆண்டுள்ளோர் கூறினர். அதனைத் தான் உண்ணுதலினும் பைந் தமிழ்ப் புலமைப் பெருமாட்டியாகிய ஒளவை உண்ணுதலே தக்கது; அதனால் தமிழும் தமிழரும் பெருநன்மையடைவர் எனக் கருதிய அஞ்சி, அதனை அரண்மனைக்குக் கொண்டு வந்தான். முதலில் ஒளவையிடம் அதன் சிறப்பைக் கூறாமல், 'இந்நெல்லிக் கனியை உண்ணுங்கள்' எனக் கொடுத்தான். ஒளவையும் அதனை இயல்பான கனிகளுள் ஒன்றெனவே கருதி உண்டனர். பிறகுதான் அஞ்சி அதன் பெருமையைக் கூறினான். முதலிலேயே உண்மையைச் சொன்னால் ஒளவை தாமுண்ணாமல் தனக்குத் தந்து வற்புறுத்தியிருப்பார் என எண்ணினான் போலும். தமிழும் தமிழ் இலக்கியமும் பண்பாடும் நிலைபெறவேண்டுமேல் அரசோச்சுவோரினும் அறிஞரே முக்கியமானவர் என உணர்த்திய , அஞ்சியின் இச்செயற்பாடுதான் ஒளவையின் உள்ளத்தை நெகிழ்வித்தது. தான் நெடுநாள் வாழ்வதிலும் ஒளவையே நீண்ட காலம் வாழ வேண்டுமென எண்ணிய அஞ்சியின் அன்பையும் பாசத்தையும் நற் பண்பையும் எண்ணியெண்ணி வியந்தார் அப்புலமைப் பெரு மாட்டி. உடனே அவர் உள்ளத்தினின்றும் ஒரு வாழ்த்துப்பா பிறந்தது!
'வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயோ
தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறி இலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையோ (புறம்.91)
(நறவு-மது. தொன்னிலை - பல காலமாக யாரும் உட்போயறி யாத பழைய இடம். விடர்- பள்ளத்தாக்கு, மலைப் பிளவு. ஆதல் - அதனாலாம் நன்மை. அகத்து அடக்கி- இரகசியமாக்கி மனத்துள் அடக்கிக்கொண்டு.)
அதியன் அன்று அக்கனியைத் தானே உண்டிருந்தால் அந்நிகழ்ச்சி அன்றே, அக்கணமே அவனொடு மறைந்திருக்கும். 'ஆதலை உள்ளத்துள் அடக்கி' ஒளவைக்குக் கொடுத்ததால், இப் பாடல் வழி அஞ்சிதான் சாதலை' அறியாதவனாயினான். "தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்?" என்ற (கோயில் திருப்பதிகம் 10) மணிவாசகர் வாக்கு இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.
தந்தையும் தவமகனும்
தனக்கு மகன் பிறந்ததாகக் கேள்விப்பட்டதும், போர்க்களத்தி லிருந்தவாறே, நேரே குழந்தை பிறந்த இடத்திற்கே வந்து, மனைவியையும் அருகே படுத்திருக்கும் பச்சிளங் குழந்தையையும் அஞ்சி பார்க்கின்றான். தவமிருந்து பெற்ற மைந்தனாதலால், உள்ளத்துள் எவ்வளவு மகிழ்ச்சி பொங்கி, முகம் மலர்ந்து, கண்கள் கனிந்து, இனிமையாய்க் காணப்படும். இவனோ போருடுப்புக் களையும் கழற்றாமல் அல்லவா வந்து நிற்கின்றான்?
நல்ல நேரமல்லவா? கணத்தை நழுவவிடாமல், ஓர் ஒளிப்படம் எடுத்துப் பாட்டு வடிவில் பதிவு செய்கிறார் பாவலர் பெருமகள்.
'கையது வேலே காலன புனைகழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
என்று தொடங்கும் போதே, இராணுவ அணிவகுப்பு உடையுடன் சண்டை செய்த வேகத்தோடு , வந்து நிற்கும் ஒரு பெருவீரனை நம் கண்முன்னர்க் காட்டுகிறார் ஒளவையார்.
பனம் பூமாலை, வெட்சி மாமலர், வேங்கைமலர் - இவற்றைச் சூடிக்கொண்டு, கோடுகள் வரிவரியாய்க் கிடக்கும் புலியுடன் பொருது வந்த வலிமை வாய்ந்த யானை போல , ஈன்றணிமைக் கட்டிலின் எதிரே நிற்கின்றான் அஞ்சி.
'செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பானாவே' (புறம். 100)
பகைவர்களைச் சீற்றத்தோடு பார்த்துப் பார்த்துச் சிவந்து போன கண், இப்போது, அவன் தன் சிறுவனை நோக்கி நின்ற பொழுதும் அச்சிவப்புக் கொஞ்சங்கூடக் குறையவில்லையாம். இக்காட்சியில் எதை அணிமைக் காட்சியில் காட்டினால், அஞ்சியின் போராற்றல் பளிச்செனப்புலனாகுமெனச்சிந்தித்து, கண்சிவப்பைக் கண்ணருகே கொண்டு வந்து காட்டுகிறார் பெருமாட்டி. இத்தகைய காட்சிப் படப்பிடிப்புக்களால் சங்கப்புலவர்கள் ஓரிரு பாடல்கள் மூலமே காலத்தால் அழியாத சிறப்பைப் பெற்றுவிடுகின்றனர்.
தூய தமிழ்த் தூதுவர்
நல்லிசைப் புலமை மெல்லியலாராகிய ஒளவையார் கற்றவரும் மற்றவரும் போற்றிக் கற்கும்படியான பாடல்களையே பாடியுள்ளார்.
அதியமான் அஞ்சி, ஒரு முறை தன்னுடன் போர்செயப் புறப்பட்ட தொண்டைமானிடம் ஒளவையைத் தூதனுப்பினான். குறுநில மன்னர்களாகிய தமக்குள் பகைமை மூளாதிருக்க, அஞ்சி காஞ்சி மன்னனிடம் தூதனுப்பினான் போலும்.
ஒளவையார் தூது செல்வதற்கு வேண்டியனவாகத் திருவள்ளுவர் கூறிய பண்பு நலன்கள் யாவும் வாய்க்கப் பெற்றவர்.
’அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று' (682)
’தொகச் சொல்லித் தூவாத நீக்கி
நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது (681)
தொண்டைமான் ஒளவையை வரவேற்றுத் தன் படைக்கலக் கொட்டிலைக் காட்டினான். பளபளவென்று ஒளிவீசும் ஆயுதங்களை அழகு செய்து, மாலை சூட்டி அடுக்கி வைத்திருந்த காட்சியைக் கண்டதும், ஒளவை அயர்ந்து போவார் எனத் தொண்டையர்கோன் எண்ணியிருக்கக்கூடும்.
"இவை மயில் தோகை மாலையெல்லாம் அணியப் பெற்று, நன்கு விளக்கி நெய்பூசி, காப்புடைய கொட்டத்தில் கண்கவருமாறு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன!
ஆனால் அங்குள்ள அஞ்சியின் படைக்கலன்களோ போர்க்களத்தில் பயன்பட்டு, பகைவர்களைக் குத்தியதால், கொம்பும் நுனியும் சிதைந்து, கொல்லனுடைய உலைக்களத்தில் செப்பனிடப் போடப்பட்டுக் கிடக்கின்றன!
இருந்தால் விருந்தளித்து, இல்லாவிட்டால் இருப்பதைப் பகிர்ந்துண்டு, கைப்பொருள் இல்லாத ஏழைச் சுற்றத்தின் தலைவனாக விளங்கும் அண்ணல் எம் கோமான் அஞ்சியின் கூரிய வேலின் நிலைமை அத்தகையதாகும் !" - ஒளவையின் தூதுரை
அவ்வளவேயாம்.
’இவ்வே
பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே!
அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ! என்றும்
உண்டாயின் பதங்கொடுத்து
இல்லாயின் உடனுண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே! (95)
(நோன்காழ் - வலிய காம்புப்பகுதி. கொற்றுறைக் குற்றில் - கொல்லனது பணிசெய்யுமிடமாகிய உலைக்களம். பதம் - உணவு )
இதில் சொல்லாமற் சொல்லியவை வஞ்சப் புகழ்ச்சியாகும். இங்கே தம் தலைவனைப் 'பழிப்பது போலப் புகழ்கிறார்' ஒளவையார். நகைச்சுவையும் கிண்டலும் உள்ளன. "தொண்டைமானே! நீ அடிக்கடி போர் செய்து பழக்கப் பட்ட வனல்லன். அதனால் படைக்கலன்களை அடுக்கி வைத்து அழகு பார்க்கிறாய் அஞ்சிக்கோ போருடற்றுவதே வாழ்வாகும். அவனுடைய வேலும் அம்பும் வாளும் பகைவர்களைக் குத்தி, அதனால் முனை மழுங்கியும் ஒடிந்தும் போய் எப்பொழுதும் கொல்லனது உலைக்களத்தில் செப்பனிடுமாறு குவிந்து கிடக்கும்! அவ்வளவு போர்த் திறமையும் பழக்கமும் மிக்கவன் அவன். அவனுடன் வீணே பகைத்துக் கொண்டு அழியாதே!" என அவர் திட்பநுட்பமாகவும் திட்டவட்டமாகவும் கூறியுள்ள திறம் காலங்காலமாக அறிஞர்களால் போற்றப்படுகிறது. 'இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு , உறுதி பயப்பதாம் தூது' (690) என்பதற்கு ஒப்ப, ஒளவையின் அஞ்சாமையும் சாதுரியமும் புலமையும் இதனால் புலனாகின்றன.
திருக்கோவலூர் வெற்றி
மலையமான் திருமுடிக்காரி ஓரியின் கொல்லிமலைப் பகுதியை வென்று, சேர மன்னனுக்குக் கொடுத்தான். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையுடன் பகைமை கொண்டிருந்த அதியமான் அஞ்சி இதனால் ஆத்திரப்பட்டு, அம்மலையமானது திருக்கோவலூர் மீது படையெடுத்து, அம்மன்னனை வென்று அவ்வூரை அழித்தான். மலையமான் சேரலுக்குத் துணைபோவான் என எண்ணி முன்கூட்டியே அவனை வென்று ஒழித்தான்.
அஞ்சியின் முன்னோர் பல சிறப்புக்களை உடையவர்கள் ஆவர். முன்னோரைப் பேணித் தேவர்கட்கு ஆவுதி அருத்தினார்கள். வெளிநாட்டிலிருந்து கரும்புப் பயிரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தார்கள். நிலவுலகையே வளைத்து ஆண்டார்கள்.
அவனுடைய முன்னோர் பனம் பூமாலை அணிந்து, ஏழு மன்னர்களை வென்றதற்கு அடையாளமாக ஏழிலாஞ்சனை' எனும் இலச்சினை பொறித்த சின்னத்தை உடையவர்கள். அதனை உடைய அரசவுரிமையைப் பெற்ற அஞ்சி , தானும் ஏழுமன்னர்களோடு போரிட்டு வெற்றி கொண்டான். அதைப் பாட வந்த ஒளவை, "அன்றும் அஞ்சி தன்னைப் பாடுவார்க்குப் பாட அரியவனாய் மிகவுயர்ந்து நின்றான். இன்றும், பகைமிகுந்த கோவலூரை அழித்த, அவனது தோளை, பரணன் எனும் பெரும்புலவன் தனது நாவன்மையால் புகழ்ந்து பாடினான்" (மற்றவர்களால் பாடுதல் அரிதாகியிருக்கும் என்பதாம் ) என்று புகழ்ந்துரைத்தார்.
’அரும்பெறல் மரபின் கரும்பு இவண்தந்தும்’ (99) என இங்கும், ’அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்ன, கரும்பு இவண்தந்தோன் பெரும் பிறங்கடை (வழித்தோன்றல்)' (392) என்று பிறகும் அஞ்சியின் முன்னோர் தமிழகத்திற்குக் கரும்புப் பயிரைக் கொணர்ந்த செய்தி, ஒளவையார் பாடல்களால் மட்டுமே அறியப்படுகிறது. இதனை விண்ணுலகத்திலிருந்து கரும்பு கொணர்ந்ததாக' உரையாசிரியர்கள் எழுதியுள்ளனர். மொரீசியசு போலும் தீவுகளிலிருந்து, நெடுஞ்சேய்மை சென்று கரும்பு கொண்டு வந்ததையே இவ்வாறு கற்பனை செய்துள்ளனர். அன்றும் பாடுநர்க்கு அரியை, இன்றும் பரணன் பாடினன் மற்கொல்' எனப் பரணர் பாடியதை வியப்பாகவும் பெருமையாகவும் குறிப்பிடுதல் கருதற்பாலது. தம் போலும் புலவர்களை இவர் மதிப்போடும் அன்போடும் கருதுதல் இதனால் உணரப்படுகிறது.
சேரவேந்தனுடன் போர்
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் அஞ்சிக்கும் இடையே பகைமை புகைந்து கொண்டே இருந்தது. சேரனின் நண்பனான மலையமான் திருமுடிக்காரி என்பானும் ஏழுவள்ளல் களுள் ஒருவனே. பெருவீரன் என்பது மட்டுமன்றி, அவன் படைத்துணையாக யார் பக்கம் சென்றாலும் அவர்களே வெற்றி பெறுவர். இதனால் அவனைத் தத்தம் பக்கம் அழைத்துக் கொள்ள வேந்தர்களிடையே கடும் போட்டி இருந்தது. இக்காரி, ஓரியைக் கொன்று கொல்லிமலையைச் சேரனுக்குத் தந்ததால், சமயம் பார்த்து, காரியினது கோவலூர் மீது படையெடுத்து அஞ்சி அவ்வூரை அழித்துவிட்டான். இதைக் கண்ட பெருஞ்சேரல் இரும்பொறை, அஞ்சி மீது கடுஞ்சினம் கொண்டு, தகடூர் மீது படையெடுத்தான். இவர்களது போர் நெடு நாட்கள் நடந்ததாகத் தெரிகிறது.
இரும்பொறை தகடூரைச் சுற்றி வளைத்துக் கொண்டாலும், அஞ்சியை நெருங்க முடியவில்லை.
ஓரி, காரி, அதியன் மூவரும் ஏழு வள்ளல்களாகப் புகழ்பெற்றவர்களுள் மூவரேயாயிலும், இங்ஙனம் உட்பூசலால் ஒருவரை ஒருவர் அழித்தும் ஆபத்தில் சிக்கிக் கொண்டும் அல்லற்பட்டுள்ளனர். அன்று இவர்கள் அனைவரும் தம்முள் ஒற்றுமையின்றித் தமிழகம் சீர்குலையத் தொடங்கிய வரலாற்றைத்தான் சங்க இலக்கியம் காட்டுகிறது.
போர் என்பது அக்காலத்தில் வாழ்வின் ஒரு பகுதியாகவும் சிலருக்குப் போரே வாழ்வாகவும் அமைந்திருந்தன. அதனால் ஒரு மாவீரனை அவனது வீரத்தைப் பாராட்டியும், அவன் வெற்றியைச் சிறப்பித்தும், அவன் தோற்று மடியின் இரங்கியும் பாடினரேயன்றி, வென்று அழித்தவனைத் திட்டியோ, வசை கூறியோ பாடும் வழக்காறு இல்லை. ஒளவையாரும் தகடூரை முற்றுகையிட்ட பெருஞ்சேரலைப் பெயர்குறித்து யாண்டும் பாடாமல், பொதுப் படப் பகைப் படைகளைப் பார்த்து, "எம் தலைவனுடன் போர் செய்ய முந்தாதீர்; என் சொல்லைக் கேட்காது முந்தினால் அழிந்து போவீர்!" என்று இவ்வாறு பல பாடல்களில் எச்சரிக்கை செய்கின்றார்.
உறுதி மாறா நட்பு
பகைவர்க்கு விழிப்புணர்த்தும் அஞ்சாநெஞ்சம்
என்றும் தம் தலைவனாகிய அஞ்சி பக்கமே நின்று, அவன் உயர்விலும் தாழ்விலும் துணைநின்றவர் ஒளவையார். பெரு வேந்தர் களாயிற்றே என்று, அவர் எதிரிகளுடன் இசைந்தோ, பணிந்தோ போனதில்லை. அஃதொரு பெருமிதமான வாழ்வு. பாரியுடன் இணைந்து இறுதிவரை நின்ற கபிலர் பெருமானின் நட்புப் போன்றது அது.
ஒளவையார் அஞ்சியிடம் ஒரு குழந்தை போற் பழகியிருக்கிறார். தொடக்க காலத்திற்போலும்; அஞ்சி கொடை வழங்கக் காலந்தாழ்த்துகின்றான். பாட்டரசியார் சீற்றம் எல்லை கடக்கிறது. சங்கப் புலவராகிய அவர் தமது பெருமிதம் தோன்றப் பேசுகிறார். அஞ்சியின் அரண்மனை வாயில்காப்போனை விளித்துத் தொடங்கும் அப்பாடல், அக்காலத் தமிழ்ப் புலவர்களின் அண்ணாந்து ஏந்திய செம்மலை' விளக்குகிறது.
‘வாயி லோயே வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!'
தமது அறிவாண்மையால், வள்ளல்களின் செவிகளில் தமது சிறந்த வாய்மொழிகளை விதைத்து, தாம் நினைத்ததை நினைத்தவாறே அறுவடை செய்துவிடும் வலிய நெஞ்சம் படைத்தவர்களாம் புலவர்கள். ஆம், தாம் நினைத்ததை விளைவிக்கும் சொல்லேருழவர்கள் இவர்கள்! இவர்களுக்குத் தம் புலமைச் சிறப்பறிந்து பிறர் போற்ற வேண்டும். அதற்கே இவர்கள் விரும்பி அடைய வேண்டுமென வருந்தி முயல்வார்கள். உலகிற் பிறந்த கலைஞர், யாவரேயாயினும் இம்மனநிலையே மேலோங்கி நிற்கக் காணலாம்.
’கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல்? என்அறி யலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே?
அதனால்
காவினெம் கலனே! சுருக்கினெம் கலப்பை
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே' (206)
சீற்றத்தோடு வரும் பேச்சுநடை, அப்படியே பாட்டுச் சித்திரமாவதைப் படித்துப் படித்துப் பார்க்க வேண்டும். பொருள் சொல்லிப் பயனில்லை. விறகு வெட்டி, கோடரியைத் தோளில் போட்டுக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள் போனால், அவனுக்கு மரத்துக்கா பஞ்சம்? எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!' ஆம், ஒருவர் தயவில் மட்டுமா உலகம் வாழ்கிறது?
இவ்வாறு பிணக்கத்தோடு தொடங்கிய நட்பு , பிறகு எப்படியெல்லாம் மாறி, உறுதிப்படுகிறது அஞ்சி காலந்தாழ்த்தது, தம்மை அவனருகே மேலும் சில நாள் தங்கவைத்தற் பொருட்டே எனவும் அவன் இரவலர்க்குப் பரிசில் நல்குவது உறுதி எனவும் கண்ட அவர், அவனை மனமார வாழ்த்திப் பிறிதொரு முறை பாடுகிறார்.
’ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ !
இழை அணி யானை இயல்தேர் அஞ்சி
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும் நீட்டாதாயினும்
களிறுதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யாகாதே!
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்கவன் தாளே' (101)
தம் நெஞ்சம் அவசரப்பட்டுப் பரிசிலுக்கு ஏக்கற்று, ஏதேதோ கருதி விட்டதற்காக வருந்துகிறார் ஒளவையார். அருந்த ஏமாந்த பரிசிலுக்கு ஆசையால் ஏக்கற்ற பரிசில் தருகிற காலம் நீட்டித்தாலும் நீட்டாவிட்டாலும் பரிசில் கிடைப்பதென்னவோ உறுதி. யானைக்குக் கவள உணவை உருட்டிப் பாகன் போடும் போது, யானை ஆவென வாயைத் திறந்து, ஒரு பருக்கை சிதறாமல் ஏற்றுக் கொள்ளுமாம். பரிசிலும் சிந்தாமல் சிதறாமல் வேண்டியதனைத்தும் முழுமையாகக் கிடைக்கும் என்பதற்கு எவ்வளவு நுட்பமான உவமை கூறுகிறார் பாருங்கள்! ஒளவை பாடல்களாக இன்று கிடைக்கும் 5 சங்கப் பாடல்களில் மட்டும் இடம்பெறும் உவமை களைப் பலகோணத்தில் ஆராய்ந்தாலே அப் பெருமாட்டியின் புலமைத்திறமும் அன்றைய சமுதாய நடைமுறைகளும் இனிது விளங்கும்.
அன்று தொட்டு ஒளவை அதியமானிடம் ஒரு குழந்தை போலப் பழகியிருக்கிறார். அவனுடைய அருள் மழையில் நனைந்திருக் கிறார். இத்துணைப் பெரியவராகிய அவர், தமது அகவை முதிர்ந்த காலத்தேதான் தகடூர் சென்றார் போலும்!. அதியமான் அஞ்சி நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல், ஒளவைக்குக் கொடுக்க நினைத்ததற்கும் ஒளவையின் அகவை முதிர்ச்சியே காரணமாதல் வேண்டும். ஏனெனில், அவர் மேலும் பலநாள் வாழவேண்டுமென்ற எண்ணத்தை அவரது அகவை முதிர்ச்சியும் தளர்ச்சியுமே அவனுள் ஏற்படுத்தியிருக்கும். அவர் குடும்ப வாழ்வில் மிகவும் அல்லற்பட்டு, உழன்று, அமைதி தேடியே அங்கு சென்றிருக்க வேண்டும். தம்மை மிகுந்த அருள் உள்ளத்தோடு இரக்கங்காட்டி ஆதரித்த அப்பெருவள்ளலை, இப்புலமைப் பெருமாட்டி மிக எளிமை தோன்ற, தம்மை ஒரு குழந்தை போல் பாவித்து ஒரு பாடல் பாடியுள்ளார். பல கோட்டைகளை வெற்றி கொண்ட நெடுமான் அஞ்சி தமக்கு அருள் செய்ததாலேதான் அவர்தம் வாய்ச்சொற்கள் மிக்க சிறப்புடையனவாயினவாம்!
குழந்தைகள் மழலைப்பேச்சில் என்ன இருக்கிறது? அவை யாழிசையை ஒத்தனவா? காலத்தொடு பொருந்திய கருத் துள்ளனவா? பொருள் விளங்குவனவா? அல்லவே. ஆயினும் தந்தையிடம் அவை மிக இனிமையும் பொருளுமுடையன போல் போற்றப்படுவதற்குக் காரணம் என்ன? தந்தையரின் பற்றும் பாசமும்தானே அதற்குக் காரணம்!
'என் வாய்ச் சொல்லும் அஞ்சியிடம் அத்தகையனவே' என்று கூறுகிறார் ஒளவை:
'யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா வாயினும் தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி நீ அருளன் மாறே' (92)
மாணிக்கவாசகர்தம் வார்த்தை இறைவனைப்பற்றியதாதலால், 'மணிவார்த்தை' ஆகிறது என்பார். ஒளவையார் அதியமான் மதிப்பதால்தான், தம் சொற்கள் பொருளும் இனிமையும் உடையனவாகின்றன என்று கூறுகிறார். இக்கருத்தினை ஒட்டியதாக
ஒரு திருக்குறள் நம் நினைவிலோடுகிறது.
’குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்' (66)
இத்தகைய அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமான ஒளவையார், தகடூரை எதிரிப்படைகள் சூழ்ந்தபோது, வெகுண்டெழுந்தார். அஞ்சிக்குப் பாண்டியனும் சோழனும் உதவிப்படை அனுப்பினர் என்றே தெரிகிறது. இருப்பினும் தகடூர் முற்றுகை நீடிக்கிறது.
’களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போரெதிர்ந்து:' (87); ’யாவிராயினும் கூழைதார் கொண்டு , யாம் பொருதும் என்றல் ஓம்புமின்:' (88), எனத் திரும்பத் திரும்ப எச்சரிக்கை செய்கிறார், ஒளவையார். அவனொடு பகைத்ததால் பல நாடுகள் முன்பு பாழாயினதையும், பல மன்னர்கள் அழிந்து போனதையும் நினைப் பூட்டுகிறார். அவனுடன் பகைத்தோர் உய்தல் அரிது. பொருநரும் உளரோநும் அகன்தலை நாட்டு என, வினவலானாப் பொருபடை வேந்தே! என விளித்து, இவர் அஞ்சியின் வீரத்தை எடுத்துரைக் கிறார், (89). இப்பாடலில் 'வேந்தே' என அழைத்திருப்பதால், இது முற்றுகையிட்டிருந்த சேரவேந்தனிடம் ஒளவை தூது சென்று சொல்லியதாகவே இருத்தல் வேண்டுமென ஆ. பூவராகம் பிள்ளை கருதுகிறார்.[1]
----
[1]. புலவர் பெருமை, சென்னை , 1949, ப. 41.
அஞ்சிக்கு ஊக்கமூட்டுதல்
நன்றி மறவா நெஞ்சினராகிய ஒளவையார், போர் கடுமையுற்ற பொழுது, அவனுக்கு ஊக்கவுரைகள் சொல்லி மனந்தளராமல் போர் செய்யத் தூண்டுகிறார். "புலிக்குச் சினம் வந்தால் எதிர்த்து நிற்கும் மான் கூட்டம் உண்டா? ஞாயிறு பொங்கியெழுந்தால் இருள் இருக்குமா? பெருமிதப் பகடு (காளை) மூக்கூன்றியும், தாள் தவழ்ந்தும் முயன்றால், எந்தத் துறையிலும் ஏறி விடாதோ? மழவர் படைக்குத் தலைவனே! எதிர்த்து நிற்கும் பொருநரும் உளரோ நீ களம் புகினே?" என்று (90) வினவுகின்றார். எதிரே எண்ணிக்கையில் மிகப்பெரிய படை சூழ்ந்து கொண்டு நின்றதால், திகைத்த அதியனை இங்ஙனம் ஊக்கப்படுத்துகிறார், ஒளவையார்.
அஞ்சியின் படைமறவர்களையும் ஒளவையார் உற்சாக மூட்டுகிறார். அஞ்சியின் கவசம் போல நின்று காக்கும் வீரர்களைக் குடிநிலையுரைத்தல்' என்ற துறையில் பாராட்டிப்பாடுகிறார், (290) ஒரு போர்வீரனைப் பற்றி உவகைக் கலுழ்ச்சித் துறையில் இவர் பாடியுள்ளது கருத்தை ஈர்க்கிறது. கூட்டமாய் வந்த படையைத் தடுத்து, அப்படைக் கூட்டத்திடையே அகப்பட்டு, வெட்டுண்டு சிதைந்து போன தன் மகனது உடலைக் கண்ட தாய்க்கு, அவள் அகவை முதிர்ந்தவளேயாயினும் அன்பாலும் பெற்ற பாசத்தாலும்
வாடு முலை ஊறிச்சுரந்தன என்று பாடுகிறார் (311)
’ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்' (69)
அல்லவா? அதியமான் நெடுமான் அஞ்சி கடும் போர் செய்தும் பயனில்லை. பகைப்படைப் பெருக்குமே காரணம். அவன் உடம்பெல்லாம் புண்பட்ட நிலையிலும், பின்வாங்காது போர் உடற்றினான், அப்போதும் அஞ்சியின் மனம் தளராதிருக்கப் பாடுகிறார், ஒளவை. 'பெருந்தகையே! உன்னை எதிர்த்து வந்த பெருமையிழந்த மன்னர்கள் புறமுதுகிட்டோடித் தப்பித்தால், நோய்வாய்ப்பட்டு அவருடல் அழிய நேரும். நீ அதற்கு விடுவதில்லை. சுற்றி வளைத்து வெட்டிச் சாய்ப்பாய் அதனால் அவர்களை அருகம்புல்லிலே கிடத்தி , வீரர் செல்லும் துறக்கத்திற்கு நீரும் செல்க' என வாளால் வெட்டப்படுதலைத் தவிர்த்தனர். அவ்வாறு யானைப் படையையும் அழித்து, நீ விழுப்புண்பட்டு நிற்கின்றாய்! நீ புண்பட்டதாலன்றோ அவர்களுக்கு வீரசொர்க்கம் கிடைத்தது!' - இவ்வாறு ஒளவை புண்பட்ட நிலையிலும் அஞ்சியைப் புகழ்ந்து ஊக்கமுறச் செய்கின்றார். பலர் குறைதீர்த்த மலர்தார் அண்ணலுக்குக் கடைசிநேரத்தில் ஒருவருமில்லாதநிலை வந்ததையும் சுட்டிக்கூறி, வருந்திப் பாடுகிறார் (311) அவர். படையெல்லாம் அழிந்து, தனித்து நின்றும் போரிட்டான் போலும்.
இங்ஙனம் மிகுதியான யானைப் படைகளையும் படைப் பெருக்கத்தையும் உடையவனான பெருஞ்சேரலிரும் பொறை, தகடூரை அழித்து அஞ்சியை வெற்றி கொண்ட செய்தியைப் பதிற்றுப்பத்து எட்டாம் பத்தாலும் அறிகிறோம்.
கண்ணீரில் மலர்ந்த கவிதை
அஞ்சி இறந்தபோது, கண்ணீர் ஆறாகப் பெருக, ஒளவை பாடிய கையறுநிலைப் பாடல்கள் மூன்று புறநானூற்றில் காணப்படு கின்றன.
அவன் உடல் எரியூட்டப்படுகிறது. நெருப்புக் கூவிக்கூவி மேலெழுந்து எரிகிறது. ஒளவை அதைப் பார்த்து நெஞ்சம் வெந்து பாடுகிறார். "இந்த ஈமத்தீ சற்றே குறைவாக உடம்போடு ஒட்டி எரிந்தாலும் எரியட்டும்! அல்லது ஆகாயம் அளாவ மேலே நீண்டு எரிந்தாலும் எரியட்டும்! எவ்வாறாயினும் திங்களனைய வெண் கொற்றக்குடையின் கீழ் ஞாயிறு போலிருந்து அரசாண்டவனுடைய புகழை எரிக்க இதனால் முடியாது!" என்று சொல்லும் போது திங்களையும் ஞாயிற்றையும் நெருப்பு என்ன செய்ய முடியும் எனவும் பூதவுடலை எரிக்கலாம், புகழுடலை எரிக்க முடியுமா எனவும் அவர் கேட்கும் கேள்விகள் நம் நெஞ்சையும் துளைக்கின்றன (231)
தாமும் அஞ்சியுடன் போயிருக்க வேண்டுமென ஒரு பாடலில் அரற்றுகிறார், ஒளவையார். 'இல்லாகியரோ காலை மாலை; அல்லாகியர் யான் வாழும் நாளே!" அழுகையுணர்வு அவ்வாறே பாட்டாவதைப் பார்க்கிறோம். அகமாயினும் புறமாயினும், உணர்வு தோற்றியவாறே பாடலமைப்பும் உருவாவதை, இக்கையறுநிலைப் பாடல்கள் நன்கு காட்டுகின்றன. சிறியகட் பெறினே' என அடுத்துவரும் பாடல், ஒப்பாரியாகவே உருவாகிறது. இணைக் குறளாசிரியம், வஞ்சியடி மிடைந்த ஆசிரியம் என்பன எல்லாம் யாப்பு வடிவமென, இலக்கணிகள் விளக்குவன. சங்கப் புலவன் உணர்வையே பாட்டாக வடிப்பதால், ஒரே ஆசிரியம் நூறு நடைவேறுபாடுகளுடன் வெளிப்படுகிறது. புதுக்கவிஞர்கள் இலக்கணத்திற்குக் கட்டுப்படாதே என முழங்குவர். சங்கப் பாக்களும் இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டு, அதன்வழிப்பாடலாகப் பரிணமிக்கவில்லை. பாடல்கள் கருத்து வழிப்பட்ட வடிவின வாகவே உருவாயின. பாடற்கருத்து அல்லது உணர்வுக்கும் பாடலின் வடிவிற்கும், பண்ணுக்கும் பாட்டுக்குமுள்ளது போன்ற உறவு இருந்தது. அந்த உணர்வே பாடலுக்கு வடிவமைப்பைத் தந்தது.
"மது சிறிதளவே இருந்தால் எமக்குத் தந்துவிடுவான்! கூடுதலாக இருந்தால் முதலில் நாங்கள் உண்டு பாடப் பிறகு தான் மகிழ்ந்து உண்பான் ஐயோ அந்த இன்ப நாட்கள் போயினவே!
சிறிய விருந்தாயினும் பல உணவுக்கலங்கள் வரிசையாக இருக்கும்! பெரிய விருந்தாயினும் பல கலங்கள் வரிசையாக இருக்கும்! புலாலுணவு விருந்துகளை எமக்குத் தந்து, அம்பும் வேலும் தைக்கும் போர்முனைகளில் எல்லாம் அவன் போய் நிற்பானே/ அந்த இன்ப வாழ்வுகள் அற்றுப் போயினவே!
என் தலையை நரந்தம் மணக்கும் கையால் வருடிக் கொடுப்பான். அவன் மார்பில் ஊடுருவிய வேல், பாணர் கையிலிருந்த மண்டைப் பாத்திரத்தில் ஊடுருவி, இரப்போர் கையுள் உருவி, புரக்கப்படுவோர் கண்களில் நீர் நிறைந்து பார்வையை மறைக்க, அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில் போய்த் தைத்து நின்றது.
ஆசாகு எந்தை இப்போது எங்கே இருக்கின்றானோ? (ஆசு - பற்றுக்கோடு) இனி இவ்வுலகில் பாடுவோருமில்லை ; பாடுவோர்க்கு ஒன்று ஈவோருமில்லை!
பகன்றைப் பூ சூடப்படாமலே வாடியுதிர்வதுபோல், பிறர்க்கு ஒன்று ஈயாமலே மாயும் உயிர்கள் இவ்வுலகில் நிரம்பவுள்ளன! (ஈயும் அஞ்சி மறைந்தனனே)"
- ஆசிரியப்பாவே ஒப்பாரி வைப்பதைப் பாட்டைப் படிப்போர் ஒவ்வொருவரும் இன்றும் உணர்கின்றனர். இணைக்குறளாசிரியம் என்பதை விட இதை ஒப்பாரி ஆசிரியம்' என்றால் மிகவும் பொருந்தும்.
'சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே !
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே!
சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தான் மன்னே!
என்பொடு தடிப்படு வழியெல்லாம் எமக்கீயும்மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான் நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன்கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே!
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளைஉரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல்நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அருநிறத்து இயங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப்
பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே' (235)
நாம் ஒருவரை இழந்தபோது, பழைய நினைவுகள் மனத் திரையில் ஓடி, நம் துக்கத்தை அதிகப்படுத்துமல்லவா? ஒளவையின் அப்போதைய மனநிலை, அப்படியே சொல்லாற் பிடித்த ஒளிப் படமாகியிருக்கிறது. இதில் புனைவியல் ஏதும் இல்லை ; நடப் பியலாய்த் துக்கத்தை அப்படியே வெளிப்படுத்துகிறது. பாணர் கையிலுள்ள பாத்திரம் தொட்டு, புலவர் நா வரை சென்று, அஞ்சி மார்பில் பாய்ந்த அம்பு ஊடுருவியதாகச் சொல்வதில் கூட எவ்வளவு உண்மை இருக்கிறது. அந்த உண்மையைத்தானே, இக்கற்பனை
அழுத்தமாய்ச் சொல்கிறது?
பொகுட்டெழினி
அஞ்சியின் மகன் பொகுட்டெழினியை ஒளவை பாடியனவா கவும் மூன்று பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன. அஞ்சி போலவே அவனும் பேராற்றலும் கொடைத்திறனும் மிக்கவனாகத் திகழ்ந்துள்ளான்.
உமணர்கள் உப்பேற்றிய வண்டிகளை ஓட்டிக் கொண்டு, நெடுஞ்சேய்மைக்குச் செல்வார்கள். எருதுகள் இளமையாய் இருந்து, பண்டம் மிகக் கூடுதலாக ஏற்றி பள்ளம் மேடுகளில் வண்டியை ஓட்டிப் போகும் பொழுது எதுவும் நேரலாம்தானே? அதனால் உமணர்கள் தம் வண்டிகளில் அச்சு மரத்திற்குக் கீழே வேறு ஒரு சேம் அச்சினைக் கட்டி எடுத்துக்கொண்டு செல்வார்களாம். பொகுட்டெழினி தன் தந்தை எழினிக்கு (அஞ்சிக்கு) அத்தகை யவனாக விளங்குகின்றான் என்று மிக அரிய நுட்பமான உவமை ஒன்றைத் தேடிப் பிடித்துச் சொல்கிற ஒளவையின் புலமையும் பட்டறிவும் நம்மை வியக்க வைக்கின்றன. உமணர்கீழ்மரத்து யாத்த சேமவச்சு அன்ன நெடியோய் (102) என்பது அவர் வாக்கு. இன்று காருக்குச் சேமச் சக்கரம் (Stepney) தேவைப்படுவதை இது நினைவூட்டுகிறது.
நாஞ்சில் வள்ளுவன்
அஞ்சியைத் தவிர நாஞ்சில் வள்ளுவன் என்னும் குறுநிலத் தலைவனை மட்டுமே ஒளவையார் பாடியுள்ளார். தாம் உண்ண விரும்பிய அடகு (கீரை) உணவுக்குத் துணையாகச் சிறிது அரிசி வேண்டிய பொழுது, நாஞ்சிற் பொருநன் மிகப் பெரிய யானையைப் பரிசளித்தானாம். அவன் என்னை நினையாமல், தன்னை நினைத்துக் கொண்டு இதைச் செய்துள்ளான்' என வியந்தும் பெரியோர்களிடம் இத்தகைய கொடை மடமும் உண்டு போலும்' எனப் புகழ்ந்தும் பாடுகின்றார் ஒளவையார் (140)
மூவேந்தர்
மூவேந்தர்களைத் தனித்து, நேர்நின்று இரந்து புகழ்ந்து பாடாத ஒளவையார், ஒருமுறை சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒன்றாக ஓரிடத்தில் இருக்கக் கண்டு, அவர்களது ஒற்றுமையைப் பாராட்டி வாழ்த்தி ஒரு பாடல் பாடியுள்ளார் (367).
தமிழக வேந்தர்கள் ஒருவருக்கொருவர் பொறாமையும் பூசலும் கொண்டு போர் நிகழ்த்தி அழிந்தது, அவருக்கு மிக வருத்தத்தைத் தந்திருக்கிறது.
மூவேந்தர்கள் ஒவ்வொருவரே சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்டனர் என்பது மிக அரிதாகவே நடந்தது; ஒரே சமயத்தில் தாயத்தார் பலர் நாட்டின் பல பகுதிகளை ஆள்வதென்பது பெருவழக்காக இருந்துள்ளது.
இம்மூவேந்தர் தவிரப் பிறர் சிலர் தம்முள் பகைமை பாராட்டிப் பிரிந்திருக்கலாம். இவர்கள் மட்டுமாவது ஒற்றமையாய் இருந்தது, அவருக்கு மன ஆறுதலைத் தந்தது.
அந்தணர் வளர்க்கும் முத்தீப் போல, இம்மூவரும் காட்சிக்கு இனிமைதரக் கூடியிருந்தது கண்டு ஒளவை மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார். அதனால் அவர்கட்குப்பல அறவுரைகளையும் கூறி வாழ்த்துகின்றார்.
"நம் வாழ்க்கை மிகக் குறுகியது;
எல்லை வரையறுக்கப்பட்டது.
இதை நாம் இன்பத்தோடு வாழவேண்டும்.
துறக்கவுலகை நாம் விரும்பினாலும் அது முன்பு தவம் செய்தவர்கட்கே இப்போது கிடைக்கும்.
வீணாக எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டுப் பயனில்லை.
இரந்துநிற்கும் பார்ப்பார்க்கு
அவர் கைநிறைய பூவும் பொன்னும் சொரிந்து
தாரைவார்த்துக் கொடுத்து, மகளிர் ஊற்றித்தரும்
மதுவை உண்டு,
இரவலர்க்குப் பொன்னணிகளைக் குறைவின்றிக்
கொடுத்து,
'வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்'
நம்மை
'வாழச் செய்த நல்வினையே நமக்கு வழித்
துணையாகும். ஆகவே அந்தணர் வளர்க்கும் முத்தீப்
போல, ஒருங்கிருந்த வேந்தர்களே
நீங்கள் வானத்து
விண்மீன்களினும் மாமழை நீர்த்துளிகளினும்
நீண்டநாட்கள் வாழ்வீர்களாக!"
இவ்வாறு வாழ்த்துவதன் மூலம் அக்கால வேந்தர் நிலையை நமக்கு நன்கு உணர்த்துகிறார், ஒளவையார்.
பொருண்மொழிக்காஞ்சி
உலகியலை எடுத்துக்காட்டி, என்றும் நிலையான அறவுரைகளைக் கூறுவதே பொருண்மொழிக்காஞ்சி எனப்படும்.
ஒளவையார் இத்துறையில் ஒரே ஒரு பாடல் மட்டும் பாடியுள்ளார். அது நிலையான ஓருண்மையை நம்மிடம் வாதிப்பதற்கு என முன்மொழிவது போல் உளது.
நாடோ, காடோ, பள்ளமோ, மேடோ எதுவானாலும் அவற்றாலெல்லாம் நிலம் நல்லது, கெட்டது ஆவதில்லை. எங்கு ஆடவர்கள் நல்லவர்களாக உள்ளனரோ, அங்கு நிலனே நீயும் நல்லை வாழிய!
இவ்வாறு ஒரு பெண்பாற் புலவர் ஆணாதிக்கம்' கொண்ட உலகைப் பார்த்து, அன்றே அறைகூவியுள்ளார்.
இயற்கையால் நன்மைதான் விளையும். பெண்களாலும் உலகிற்கு நன்மையே உளதாகும். தம்மையும் கெடுத்துக் கொண்டு, பிறரையும் கெடுப்பவர்கள் ஆடவர்களே. அதனால் ஆடவர் நல்லவராயிருந்தால், உலகமும் நல்லதாக இருக்கும், அவர்கள் கெட்டவரானால் உலகமும் கெட்டழியும்!
’ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பதை இது மறுக்கிது.
'நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (187)
இதற்கு மக்கள் எனப் பொதுவாகப் பொருள் கொண்டு, எங்கே மக்கள் நல்லவரோ அங்கே உலகமும் நல்லதாக இருக்கும் எனப் பொருள் கொள்ளலாம். ஆயினும் பாடலில் ஆளும் உரிமையைக் கையில் எடுத்துக் கொண்டு வலிமையால் ஆட்டிப் படைக்கும் ஆடவரையே, அவர் நயமாக இடித்துப் பேசுகிறார்.
ஆடவர் என்பதற்கு வலிமையுடையோர் - வெற்றியை ஆளும் திறனுடையோர் - என்று கொண்டால், காரணப் பெயராய் இருசாராரிலும் தலைமை தாங்குவோரைக் குறிக்க வாய்ப்புள்ளது. ஒரு நாடு சிறந்த நாடெனப் பெயர் பெறுவதற்கு, மக்களுக்கு வழிகாட்டவல்ல இவர்களே காரணம் எனக் கருதலாம். எங்ஙனமாயினும் உலகளாவிய கருத்தரங்கொன்று வைத்துப் பலர்கூடி விவாதிப்பதற்குரிய செய்தியை ' ஒளவையார் நான்கே அடிகளில் கூறிச் சென்றுள்ளார்.
அகப்பாடல்களின் அழகும் சிறப்பும்
ஒளவையின் சங்க அகப்பாடல்கள் 26 என முன்பு சுட்டப்பட்டது. அவை எளிமையும் அழகும் ஒருங்கமைந்தன; காம உணர்வை அழுத்தமாய் வெளிப்படுத்துவன. உவமை அழகிலும் அவை அவரது புறப்பாடல்கட்கு ஈடாய் விளங்குகின்றன.
அறத்தொடுநிலை
அறத்தொடு நிலையில் பல பாடல்கள் உளவாயினும், ஒளவையின் குறுந்தொகைப் பாடல் ஒன்று எளிமையிலும் அழகிலும் விஞ்சி நிற்கிறது.
'அகவன் மகளே அகவன் மகளே!
மனவுக்கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே’
கட்டுவிச்சியே! கட்டுவிச்சியே! கழுத்தில் அணிந்திருக்கும் சங்கு. மாலை போலவே தலைமுடியும் வெளுத்திருக்கும் கட்டுவிச்சியே!' எனப் பாடல் தொடங்குகிறது.
மகள் ஒரு மாதிரியாக இருக்கிறாளே என்பதற்காகத் தாய் கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்கிறாள். இது சமயம் உண்மையை வெளிப்படுத்த விரும்பும் தோழி , குறிசொல்லத் தொடங்கப் போகும் அக்குறத்தியிடம்,
’பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே' குறு.23
என்று கூறுகிறாள். குறத்தி பொதுவாகத் தன் மலைவளம், தெய்வத்தைப் பற்றியெல்லாம் பாடிவிட்டுத்தான், குறிசொல்லத் தொடங்குவாள். அன்றும் குறத்தி அம்மலைப் பாட்டைப் பாடி முடித்தாள். முடித்ததுதான் தாமதம், தோழி குறுக்கிட்டு , "நீ பாடிய பாட்டையே, அந்த உயரமான குன்றத்தைப் பாடிய பாட்டையே திரும்பவும் பாடு" என்றாள். ஏன்? அந்த மலைநாடன்தான் தலைவியின் காதலன். அதனால் அந்த மலை பற்றிய பாடலைக் கேட்டாலே, தலைவி ஆறுதலடைவாள்; நோய் நீங்கும். பிறகு குறியெல்லாம் எதற்கு? அதனால் தோழி , குறிசொல்வதை நிறுத்துமாறு குறிப்பாக உணர்த்தி, அந்தப் பாடலையே திரும்பப் பாடு என்று கூறுகிறாள். அவர்' குன்றம் என்றதனாலும், மலைவளத்தைப் பாடினாலே போதும் என்றதனாலும் தாய்க்கும் செவிலிக்கும் ஐயம் தோன்றி உண்மை உணர்கின்றனர். ஒரு பெரிய நாடகத்தையே, ஒரு சிறு பாடலுள் நடத்திக் காட்டும் அழகும், பாடலின் எளிமையும் நம் மனத்தைக் கவர்கின்றன.
நடையழகு
பொருள் தேடிவந்த தலைவனிடம் தோழி, 'நீங்கள் தொலை நாட்டில் இருந்தபொழுது, எங்களை நினைத்துப் பார்த்ததுண்டா ?" எனக் கேட்கிறாள். அதற்குத் தலைவன் "என் செய்வது? உலகில் வாழ வேண்டுமென்றால், இப்படி அல்லற்படத்தான் வேண்டியுளது!" எனவிடை கூறுகிறான்.
’உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து
மருண்டனென் அல்லெனோ உலகத்துப் பண்பே...' (குறு. 99)
அந்தாதி போலப் பாடும் இது வாய்மொழி இலக்கியப் பண்புடையது. அதனால் தொடைநலமும் நடைநலமும் பாட்டுக்கு அழகு சேர்க்கின்றன.
சென்ற காரியம் முடிந்து தலைவன் வீடு திரும்புகையில், தன் ஊருள்ள திசைப் பக்கம் மழை தொடங்கிவிட்டதைப் பார்த்து, பாகனை விரைந்து தேரைச் செலுத்துமாறு தூண்டுகிறான். தலைவி அங்கே வருந்திக்கொண்டு நிற்பாள் என்பதை, சொற்பொருட் பின்வரும் நிலையணியால், திரும்பத் திரும்ப ஒரே சொல்லைப் பெய்து நடையழகு தோன்றக் கூறச் செய்கின்றார் ஒளவையார்.
’.... பெயல் தொடங்கினவே பெய்யா வானம்
நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆயிழை அதனெதிர்
குழல் தொடங்கினரே கோவலர்..... (குறு.37)
தொடங்கிவிட்டது, தொடங்கிவிட்டது என்று மனம் பரபரக்கும் அல்லவா? பாடலும் அவ்வுணர்வையே சொல்கிறது.
ஒரு தலைவன் இளமகள் ஒருத்தியைக் காண்கின்றான். அவள் அழகின் மிகுதி கண்டு, தலைவன் அவளை வரைந்து கொண்டு விடுவான் என எண்ணிய தலைவி, 'நாம் முன்னதாகத் தலைவனைக் காத்துக் கொள்ளாமற் போனோமே' என்று தோழியிடம் வருந்திப் பேசுகிறாள். தலைவனுக்கு வேண்டியவர்கள் கேட்கும் படியாக, அவனை இடித்துப் பேசும் இடம் இது.
’...... யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையா மையோ அரிதே; வரையின்
வரை போல் யானை வாய்மொழி முடியன்
வரைவேய் புரையும் நற்றோள்
அளிய தோழி! தொலையுந பலவே!' (நற்.30)
மலைபோலும் யானைகளையுடைய முடியனின் மலை மூங்கிலை ஒக்கும் நல்ல தோள், அழகை இழக்கும் எனத் தலைவி வருந்தும் பாடலில் வரை' எனும் சொல் சொற்பின் வருநிலையணி' யாகத் திரும்பத் திரும்ப வந்து அழகு கூட்டுவது, பாடலையும் திரும்பத் திரும்பப்படித்துப் பார்த்தால் புலனாகும்!
பேச்சுநடை
சங்கப்பாடல்களில் பெரும்பாலும் நாம் இன்று பேசிக் கொள்வது போன்ற பேச்சு நடை அப்படியே அமைந்திருக்கும். நாம் ஒன்றைச் சொல்லத் தொடங்கினால், எவ்வாறு தொடங்குவோம், எவ்வாறு நீட்டுவோம், எவ்வாறு முடிப்போம்? இந்நடை பாடலிலும் அமைந்திருக்கும்.
தலைவன் பிரியப் போவதாகச் சொன்னான். அதை நயமாகத் தோழி தலைவியிடம் கூறும் விதத்தைப் பாருங்கள்!
நிரம்பச் சிரிக்கத்தக்க ஒரு செய்தி
தெரியுமா தோழி!
ஒருநாள் பிரிந்தாலும் உயிர்வாடும் நாம்
இங்கிருக்க அவர் எங்கோ போகப் போகிறாராம்!
அவர் வினைமுடித்து வரும் வரை நாம்
இங்கே வாழ்ந்து கொண்டிருப்போமாம்!
அதுமட்டுமா இன்னங்கேள்!
இடியுடன் மழை பொழியும் நடுயாமத்திலும்
நாம் தனியே பொறுத்திருப்போமாம்!
இது வேடிக்கையாய் இல்லை?
மீண்டும் பாடலைப் படித்துப் பாருங்கள். நாம் இன்றும் பேசுவது போலவே பாட்டும் பேசுவது புலப்படும்.
'பெருநகை கேளாய் தோழி! காதலர்
ஒருநாள் கழியினும் உயிர்வேறு படூஉம்
பொம்ம லோதி நம்மிவண் ஒழியச்
செல்ப என்பதாமே சென்று
தம்வினை முற்றி வரூஉம்வரை நம்மனை
வாழ்தும் என்ப நாமே அதன்தலைக்
கேழ்கிளர் உத்தி அரவுத்தலை பனிப்பப்
படுமழை உருமின் உரற்று குரல்
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே' (நற். 129)
புனைவியல் பாங்கு: முற்றுருவகம்
செவ்வியல் இலக்கியம் தொன்மையானது. அதிலிருந்துதான் நடப்பியலும் புனைவியலும் பிரிந்து, பிறகு எத்தனையோ பிரிவு களாக அவதாரம் எடுத்தன.
சங்கப்பாடல்களில் நடப்பியல் முழுவதுமாக அமைதல் - நடப்பியல் புனைவியல் கலந்தமைதல் - புனைவியல் நடப்பியல் கலந்தமைதல் - புனைவியலாகவே அமைதல் என நான்கு வகைப்பாடுகளைக் காணலாம்.
பிரிந்த காதலர் வரவில்லை . கார் போய், கூதிர் போய், முன்பனிக்காலம் வந்துவிட்டது.
'நம்மனத்து அன்ன மென்மை இன்மையின்
நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ ?'
"பெண்களாகிய நம் உலகமே, இந்த ஆண்கள் உலகத்தி னின்றும் வேறு பட்டது. மேலும் நம்முடைய மனத்தின் மென்மை அவர்களுக்குக் கிடையாது. நம்மை நினைந்து அவர் வாராததனால், ஊரெங்கும் அலராகிவிட்டது; பழிச்சொல் பரவி விட்டது. இந் நிலையிலும் வாராதிருப்பவரைப் பற்றி என்னவென்று சொல்வது?" - தலைவி இவ்வாறு வருந்தும் பொழுது, ஊரார் தூற்றும் அலரை ஒரு முற்றுருவகமாகக் கூறுகிறாள்.
"வாடைக்காற்று எல்லை கடந்து வீசுவதால், முலையின்கண் வேட்கை நோயாகிய வளரும் இளைய முளை தோன்றியது. அது வருந்தும் நெஞ்சத்தே வருத்தமாகிய அடியாய் நீண்டது. ஊரார் பேசிய அம்பலாகிய கிளைகள் விரிந்தன. அது புலவரால் புகழப்படும் நாணமில்லாத மரமாக வளர்ந்து, நிலம் முழுவதையும் கவித்து, அலராகிய அரும்புகளைச் சொரிந்தது. இந்நிலையிலும் அவர் வந்திலர்" என்பது கருத்து.
"தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு
முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத்திறன் நீடி
ஊரோர் எடுத்த அம்பல் அஞ்சினை
ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப்
புலவர் புகழ்ந்த நாணில் பெருமரம்
நிலவரை எல்லாம் நிழற்றி
அலர்அரும்பு ஊழ்ப்ப வும் வாரா தோரே' (அகம். 273)
அலர் தூற்றுவதை, புலவர் புகழ்ந்த நாரில் பெருமரமாகக் கூறும் இது, முற்றுருவகமாகும்.
தன்னுணர்ச்சி வெளிப்பாடு
மிக நுண்மையான மனவுணர்வுகளைப் படம்பிடித்துக் காலத்தால் அழியாமல் காப்பன சங்கப்பாடல்கள். ஒரு மன உணர்வை வெளிப்படுத்த வரும் பின்னணிகளே வாழ்வு நிகழ்ச்சிகள், இயற்கைப் பின்னணியாவும். அகப் பாடல்களில் இவ் அனுபவங் களைப் பெயர் சுட்டாமல் சொல்வது மரபு.
இராமாயணம் போலும் பெருங்காப்பியங்களைப் படிக்கும் போது, அக்கால அரசர்கள் தம்மை இராமன் என்றும் இலக்குவன் என்றும் தம் பகைவரை இராவணன் முதலியோரென்றும் கருதிக் கொள்வராம். பெயரே சுட்டாத சங்கப்பாடல்களைப் படிக்கும் போதும் அதுபோலப் படிக்கும் ஒவ்வொருவரும் தம்மைக் காதலனாக, காதலியாக, பாங்கனாக எண்ணியுணர வாய்ப்புள்ளது. எனவேதான், சங்க அகப்பாடல்கள் 'தூய தன்னுணர்ச்சிப் பாடல் களாகின்றன. ஒரு தலைவியின் பிரிவுத்துயரை ஆண் பாடும் போதும் அதுபோல் ஒரு பெண்பாற் புலவர் தலைவன் ஒருவனின் காம வேட்கையை எழுதும் பொழுதும், அவ்வுணர்வுகளைத் தாம் நன்கு உணர்ந்தே எழுதுகின்றனர். ஆயினும் பல அகப்பாடல்களைப் பாடிய புலவர்கள் தம் வாழ்வில் நடந்த பட்டறிவையே அங்ஙனம் பொதுப்படவும் பாடியிருக்கலாம். தாம் அனுபவித்ததைப் பாடுவது எளிது என்பது மட்டுமன்றி, அவ்வனுபவம் தம்மை மீறிச் சிலபோதேனும் வெளிப்படும் என்பதும் உண்மைதானே?
ஒளவையாரின் காதல் பாடல்கள், அவர் சொந்த வாழ்வில் ஏற்பட்ட விளைவுகளின் தாக்கத்தால் உருவானவை போலும் என்று எண்ண வைக்கின்றன. அவரது காதல் வாழ்வு வெற்றியாக அமைய வில்லை என்று தெரிகிறது. அதனால் அவர்தம் இளமைக் காலத்தில் மிகவும் அல்லற்பட்டிருப்பார் போலும்.
ஒளவையின் அகப் பாடல்கள் பிரிந்த தலைமகன் திரும்பாமை பற்றியும் பேசுகின்றன. இங்ஙனம் அழுந்திய காம வேட்கையை அவை புலப்படுத்துதல், அவரது பல பாடல்களில் வெளிப்படுகின்றது.
ஒளவையார் தலைமகன் கூற்றாகப் பாடிய அகப்பாடல் ஒன்றில்,
'நெறிப்படு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவயர்ந்திசினால் யானே' (அகம். 147)
எனப் பிரிந்து சென்ற தலைவன் உள்ளவிடத்திற்கு, நடந்தே தேடிப்போக விரும்பும் வெள்ளிவீதியின் வேட்கையைக் கூறி யுள்ளார். இங்ஙனம் வெள்ளி வீதியின் அகவாழ்வைப் புறமாக்கிய ஒளவையும் அதுபோன்ற நிலைமைக்கு ஆளானவரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதற்கு இசைவாக ஒளவையின் அகப்பாடல் பல, ஏமாற்றமுற்ற காதல் வேட்கையின் நிறைவேறா உணர்வுகளாக வெளிப்படுகின்றன.
இத்தகைய நிலை சிலபோது ஏற்படவே செய்யும்.
பிறருணர்வைத் தம் உணர்வாகக் கொண்டு பாடுவதிலும், தாமே நுகர்ந்த உணர்வுகளை வெளியிடும் போது அவை மேலும் அழுத்தமும் நடப்பியலும் அழுந்தப் பொருந்தி வெளிப் படுமல்லவா? ஏனென்றால் பல புலவர்கள் இங்ஙனம் தாமே அனுபவித்தவற்றைப் பாடியிருப்பர். அல்லது தமக்கு மிக நெருங்கியவர்களின் அனுபவங்களை அருகிருந்து கண்டுங் கேட்டும் தாமும் சேர்ந்து உழன்றும் விடுபட்டும் அப்பட்டறிவால் பாடி யிருப்பர்.
இதனால் அகம்' அகமாகாது போய்விடாது. ஆயினும் இலக்கியக் கோட்பாடு என்ற அளவுகோலில், அது மாற்றுக்குறைதல் கூடும். சொந்த வாழ்வின் உணர்வென்று கண்டுகொள்ள முடியாத புலவர் பாடல்கள் மட்டும், மாற்றுக் கூடிவிடுமா என்ன? இஃது ஆராயத்தக்கதே!
ஒளவை பாடலில் வரும் காதல் அனுபவங்களைப் பார்த்தால், பிரிவுத் துயரால் வாடும் பெண்ணின் மன நிலை கொதிப்போடு வெளிப்படுகிறது. அதனுடன் தலைவனின் 'நன்றி' மறந்த தன்மையும் புலப்படுகிறது.
ஒரு தலைவி, வெள்ளிவீதியாரைப் போலத் தலைவனைத் தேடி, வழியெலாம் சுற்றி அலையலாமா என்று சிந்திக்கின்றாள் எனப் பார்த்தோம். மற்றொருத்தி 'சென்றவன் திரும்பாமல் போனானே, இவள் கதி என்னாகும்?" என்று ஊர் முழுவதும் அலர் தூற்றுமாறு, பிரிந்தவன் திரும்பாததால் 'சுரன் இறந்து, அழிநீர் மீன்பெயர்ந்தாங்கு அவர், வழிநடைச் சேறல் வலித்திசின் யானே" என்று புறப்பட ஆயத்தமாகின்றாள் (அகம். 303).
தலைவனது பிரிவால் மெய்ம்மலி காமத்துடன் தான் அல்லற்பட்டதை ஒருத்தி வெளிப்படையாகக் கூறுகிறாள் (நற். 187). ஒரு தலைவி தலைவன் பிரிந்து நெடுநாளாய்த் திரும்பாமல் தன்னை வருத்தியதால், அவனைச் சான்றோன் அல்லன்' என்று வசைகூறுகிறாள்.
'உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின்எம் அளவைத் தன்றே! வருத்தி
வான்தோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே' (குறு. 102)
மற்றுமொரு பாடல், இங்ஙனம் 'மெய்ம்மலி காமத்தால்', வானளவு பொங்கியெழுந்த உணர்ச்சி தன்னை வருத்த, ஒருத்தி இரவெல்லாம் உறங்காமல் துடித்ததை, அத்துடிப்புணர்வின் வடிவமாகவே தருகிறது.
'முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ ஒல்லெனக் கூவுவேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே ' (குறு.23)
இரவெல்லாம் உறக்கமின்றி, ஒரு மனம் தன்னந்தனியே தத்தளிப்பதை இப்பாடல் உள்ளவாறே புனைந்து, அதற்கேற்ற சொல்நடையுடன் தருவது ஒளவைக்குரிய தனித்திறனாகும். சிறியகட் பெறினே' என்ற புறப்பாடலை இதனுடன் இணைத்துப் பார்ப்பின், அத்திறன் நன்கு புலனாகும்.
காதலரால் கைவிடப்பட்டு , நெடுநாள் தனித்து வாழ நேர்ந்த மகளிரது மனநிலையையும் அவரது அகப்பாடல் சில காட்டு கின்றன.
'நீடிய மராஅத்த தோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் ஈண்டு கடைக் கொளலே' (குறு.99)
"மரக்கிளைகளைத் தொட்டுக்கொண்டு ஓடிய பெருவெள்ளம் பள்ளத்துள்ளே கையால் இறைத்துப் பருகுமாறு வற்றிப் போனது போல, என்னுள் எழுந்த அவ்வளவு மிகுதியான காமவுணர்வு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப் போய் ஒழிந்தது" எனத் தலைவன் கூற்றாக, காமவுணர்வின் அழிவை அழுத்தமாய்க் கூறுகிறார் அவர்.
நெடுங்காலமாகத் திருமணமின்றியே இருந்து, ஒரு பெண் அகவை முதிர்வதை ஒரு பாடல் மிகுந்த அவலத்தோடு புனைகிறது.
'எந்தை
வேறுபன்னாட்டுக் கால்தர வந்த
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக்
கலிமடைக்கள்ளின் சாடி அன்னஎம்
இளநலம் இற்கடை ஒழியச்
சேறும் வாழியோ முதிர்கம் யாமே' (நற். 295)
'பல்வேறு நாடுகளிலிருந்து, காற்றால் கொண்டுவரப்பட்ட பல தொழிற் சிறப்புடைய நாவாய்கள் வந்து நிற்கும் எம் தந்தையின் பெரிய துறைமுகத்தின் கண்ணே கொண்டுவரப்பட்ட கட்சாடிகளில் உள்ள கள், நெடுங்காலம் உள்ளே மடுத்து வைத்ததால், செருக்குமிக்குத் தோன்றும். அதுபோல எம் இளமையும் அழகும் வீட்டினுள்ளேயே கிடந்து பயன்படாது ஒழியட்டும். எம் அகவையும் கூடி, யாம் இங்ஙனமே முதிர்ந்து ஒழிவோமாக!'
ஒளவையார் இவற்றைத் தம் அனுபவத்தாலேதான் பாடி இருக்க வேண்டுமென்ப-தில்லை. ஆயினும் இவற்றால் அவரது சொந்த மனநிலையும் புலப்படுகிறது என்று எண்ண, அவர் 'வெள்ளிவீதியைப் போல' என்று சொன்ன உவமைதான் தூண்டுகிறது.
எங்ஙனமேனும் பாலியல் மனவுணர்கள் கொதித்து வெளிப் படுவதைச் சில பாடல்களின் குரல்கள் ஓங்கி ஒலித்துக்காட்டவே செய்கின்றன. ஒளவை புறப்பாடல் புலவரென்று போற்றப் பட்டாலும், அவரது அகப்பாடல்கள் உவமைத் திறத்தாலும் உணர்ச்சிப் பெருக்காலும் அவற்றுக்கு ஒப்பாகவே திகழ்கின்றன எனலாம்.
சிறப்புடைச் செய்திகள்
ஔவையார் நாடறிந்த பெரும்புலவர்; அதனுடன் நாட்டையும் நன்கறிந்த புலவராகக் காணப்படுகிறார். தமது பாடல்களில் அரிய, பெரிய செய்திகளை அவர் இணைத்து வைத்துள்ளார். அவற்றைத் தொகுத்து நோக்கும் பொழுது அவருடைய உலகியலறிவும், பிறர் காணாததைக் கண்டு சொல்லும் பெருநுட்பத்திறனும் தெளிவுபடுகின்றன.
அதியனின் முன்னோர் இந்நாட்டில் கரும்பு கொண்டு வந்த செய்தி குறிப்பிடத் தக்கது. ஒளவையார், நிலைத்து வானுற ஓங்கி நிற்கும் இமயத்தைக் குறிப்பிடுகிறார். முன்னையோர் வீரர்களாய் இறந்தார்க்கு நடுகல் நட்டும் வழிபட்டும் பேணும் மரபை விளக்குகிறார். தேவர்கட்கு ஆவுதி பெய்து, வேள்வி செய்தலில் தமிழ்நாட்டு மன்னர்கள் பெருவிருப்பங்கொண்டு, போட்டி போட்டுக்கொண்டு, வடநாட்டு மன்னர்களையும் விஞ்சிச் செயற் பட்டுள்ளனர். இரக்கும் பார்ப்பனர்க்குத் தம் கொடைக் குணம் மிக்க கைநிறையப் பூவும் பொன்னும் சொரிந்து போற்றியுள்ளனர். பார்ப்பனர் இருபிறப்பாளர் எனவும் நிலையான கோட் பாடுடையவர் எனவும் சிறப்பித்துக் கூறப்படுகின்றனர். அவர்கள் வளர்க்கும் யாகத்தீ முத்தீ எனக்கூறப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து, பல்வேறு தொழில்நுட்பமுடைய நாவாய்கள், தமிழகக் கடற்கரைகளில் வந்து நின்றன. அவை காற்றால் செலுத்தப்படும் கலங்களாகும். அவற்றில் நெடுநாளாய் அடைக்கப்பட்டுப் போதை மிகுந்த கள்சாடிகள் வந்தன. அவற்றைப் பொற்கலத்தில் ஏந்தி, மகளிர் தரத்தர, மன்னர்கள் பருகி மகிழ்ந்தனர். சாடிக்கள், நாரரி தேறல் என அவை பலவகைப்படுவன.
போரில் விழுப்புண்பட்டு இறந்தால் துறக்கம் புகுவர் என்ற எண்ணம் - நம்பிக்கை - வேரூன்றி இருந்தது. நோய்வாய்ப்பட்டு இறந்தால் துறக்கம்புக இயலாதாகையால், அவர்களை அறுகம் புல்லில் கிடத்தி, மார்பில் வாளால் போழ்ந்து, பிறகு அடக்கம் செய்தனர். அவ்வாறு செய்வதால் அக்குறை நீங்குகிற தென்று கருதினர். அச்சடங்கையும் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் களாகிய அந்தணர்களே செய்தனர். அவர்கள் மிக உயர்வாக மதிக்கப் பட்டமை புலனாகிறது.
உமணர் நீண்டதூர நாடுகட்கு உப்பு வண்டிகளை ஓட்டிப் போவராதலின், இடையே அச்சு முறிந்தால் என்ன செய்வதென்று சேமவச்சு ஒன்றை, வண்டியின் கீழே கட்டிவைத்துக் கொண்டு சென்றனர். தச்சர் தேர் செய்வதில் மிக வல்லமை-யுடையவராய் இருந்தனர். 'மரங்கொல் தச்சர்'- மரத்தை வெட்டிச் செய்பவர் குறிப் பிடப்படுகின்றனர். பொற்கொல்லரும் வினைத்திறன் மிக்கு விளங்கினர்.
பகைவர்களை வென்றதற்கு அடையாளமாக, அவர்களின் சின்னங்கள் பொறித்த இலச்சினையை அணிந்துகொள்வது, மன்னர் களிடையே காணப்பட்ட வழக்காறாகும்.
சிவ வழிபாட்டின் தொன்மையும் நன்கறியப்படுகிறது. 'நீலமணி மிடற்று' ஒருவன் என்று, அம் முழுமுதல் சுட்டப்படுதல் காண்கிறோம். மகளிர் திருக்கார்த்திகையில் வரிசைவரிசையாக விளக்கேற்றி வைக்கும் அழகைப் பெண்பாற் புலவராகிய ஒளவையார் சிறப்பானதொரு உவமையில் வைத்துக் கூறுகிறார். அக்காலத்து உடை, உணவு, மதுவுண்ணல் போலும் பழக்கங்கள் பற்றியும் ஒளவையின் பாடலால் அறிகிறோம்.
கிரேக்கப் பெண்பாற்கவிஞரும் ஒளவையும்
கிரேக்க இலக்கியவழி இருபது பெண்பாற்புலவர்கள் அறியப்படுகின்றனர் என்பர்.[2] அவர்களுள் காலத்தால் முற்பட்டவர் சாஃபோ (sappho) எனப்படும் பெண்பாற் புலவரேயாவார். பெருமையிலும் அவரே முதலாமவர் என்று பாராட்டுகின்றனர். பின்வந்த பாவலர் பலருக்கு அவரே வழிகாட்டியாய் அமைந்த சீர்மையும் சிறப்பும் விரித்துப் பேசப்படுகின்றன.
சங்ககாலப் புலவர்களுள் பெண்புலவர்கள் முப்பது பேர் இருந்தார்கள். அவர்களுள் ஒளவையார் மிகுந்த புகழுக்குரியவராகத் திகழ்ந்தார் என்று சான்றோர் மு. வ. குறிப்பிடுதல் இவண் ஒப்பிடற்பாலதாகும்.[3]
---
[2]. F.A. Wright, The Poets of the Greek Anthology, London, p.79.
[3]. தமிழ் இலக்கிய வரலாறு, புதுதில்லி , ப. 180.
சாஃபோ தனிப்பட்டவர் தன்னுணர்ச்சியைப் பாடுவதைச் செம்மை நிலைக்குக் கொணர்ந்தார். தம் சொந்த உணர்வுகளை, வாழ்வில் தாம் அனுபவித்தவற்றை அவர் பாடினார். ஒளவையும் தம் அகப்பாடல்களில், தம் சொந்த உணர்வுகளை வெளிப் படுத்தியுள்ளமை காண்கிறோம்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டினராகிய இக்கிரேக்க ஒளவையாரைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. இவர் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர், சிறுமியர்க்கு இசையும் பாட்டும் கற்பித்தவர், ஓர் ஆட்டிடையனைக் காதலித்துக் கைகூடாமல் மலையுச்சியிலிருந்து விழுந்து இறந்தவர். இவ்வாறு இவரைப் பற்றிச் செவி வழியாக வழங்கும் கதைகள் பலவாகும். எந்த அளவு அவை உண்மை யானவை என்பது இன்னும் ஐயமாகவே உளது என்பர். இடைக்காலத்தே ஒளவை பற்றி எழுந்த கதைகளையே இங்கு நினைக்க வேண்டியுள்ளது.
சாஃபோ கிரேக்க இலக்கியத்தில் தன்னிகரற்ற தனிப்பாட்டு' வல்லுநர் என்று போற்றப்படுகின்றார். அதாவது இவர் குழு இசைப்பாடல்களைப் பாடவில்லை. தனித்துப் பாடும் பாடல் களையே பாடி, செவ்விய நிலைக்குக் கொண்டு சென்றார். இவர் பதினைந்து வகையான யாப்பு வகைகளைப் பயன்படுத்தியுள்ளார். இவருடைய ஒவ்வொரு சொல்லாட்சியும் தனிப்பட்ட நயம் மிக்க தென்பர். இவருடைய பாடல்கள் தனித்தன்மையை வெளிப் படுத்துபவை. தன்னுடன் ஒட்டியவை; தன்னை வெளிப் படுத்துபவை. பெரும்பாலும் காதல் பற்றி இவர் புனைந்துள்ளார். பல பாடல்களில் இவர் இளம்பெண்களை விளித்தே பாடியுள்ளார். இவர் பாடியனவாகப் பல துணுக்குகளும் ஒரே ஒரு முழுப்பாடலும் கிடைத்துள்ளன. அப்பாடல் அழகுத் தெய்வத்திற்குப் போற்றிப் பாடல் (Ode to Aphrodite) என்பதாகும். இதில் தலைவன் ஒருவன் ஒரு பெண்ணின் காதலை அடைவதற்கு அழகுத் தெய்வத்தின் உதவியை வேண்டுகின்றான். மேலும் திருமணப் பாட்டுக்கள், தோழர்களுக்கு விடைதரு விழாப் பாடல்கள், மகளிர் அழகுப் புனைவுகள், அவலப் பாடல்கள், காதல் பிரிவுத் துயரப் பாடல்கள் பலவும் இவரால் பாடப்பட்டுள்ளன.
"ஒளவையார் போலப் பெரும் புகழுக்குரிய பெண்பாற் புலவராகிய இவரது பாடல்களிற் காணப்படும் அவலக் கூறு ஆழமானது. ஒளவையாரின் அகப்பாடல்களிற் காணப்படும் அவலக் கூறு இதனுடன் ஒப்பிடற்பாலதாகும்."[4]
----
[4]. தமிழண்ண ல், சங்க இலக்கிய ஒப்பீடு 11, மதுரை 1979, ப.98
சாஃபோ தம் நிறைவுறாக் காதலையும் மற்றொருத்தி மனம் மகிழ்ந்திருத்தலையும் ஒரு பாடலில் புனைகின்றார். அதில் ஒரு பெண்ணின் அவலநிலை நன்கு படம்பிடித்துக் காட்டப்படுகிறது.
'கடவுளருக்கு நிகராகக் காட்சி தருகின்றான்!
நினக்கெதிர் அமர்ந்து இனியநின் குரல் கேட்டுப்
புன்னகை கொண்டு பொலிகிறான் அவனே!
என் நெஞ்சினுள் இதயம் சிறகடிப்பது போல்
துடிதுடிப்பதை நான் உணர்கின்றேனே!
ஏனெனில்
உன்னை நோக்கும் ஒவ்வொரு கணமும்
என் நா அசையாது; அமைதியைக் கைக்கொளும்!
உடனே,
என்னுடல் முழுவதும் கனல்பற்றி எரியும்.
கண்எதும் காணாக் கடுந்துய ரெய்தும்.
செவிகள் இரையும். வியர்வை வழியும்.
நடுநடுக் குறும் என் உடல் முழுவதும்மே !
புல்லினும் வெளுத்துப் போகுமென் மேனி,
சாவெனை அணுகிய தோவென மயங்குவன்!
என்செய? எதையும் தாங்கிட ....[5]
அணிநலன் இன்றியே இப்பாடல், அவலப் பிழிவாக விளங்கு வதைப் பலரும் பாராட்டுகின்றனர். குறுந்தொகையில் முட்டுவேன் கொல்? தாக்குவேன்கொல்?' எனத் தொடங்கும் பிரிவு அவலப் பாடலை (28) இதனுடன் ஒப்பிடலாம்.
---
[5] . மேலது, ப.103
சங்கத் தொகை நூல்களின் பாடல்கள் சிலவற்றின் ஆசிரியரான ஒளவையார் உலகப் பெரும் புகழ் பெற்ற பெண்பாற் புலவர்களோடு ஒப்பு நோக்கத்தக்கவர். பண்டைக் கிரேக்க நாட்டுப் பெண்பாற் புலவரான, ஸாபோ (Sappho), பிரௌனிங் (Elizabeth Barret Browning), கிரஸ்டினா ஜார்ஜினா ரோஸெடி (Christina Georgina Rossetti) மற்றும் எமிலி டிக்கின்ஸ ன் (Emily Dickinson) என்போர் வாழ்ந்திருந்த காலம் வரை பெண்பாற்புலவர்களின் பன்னாட்டு ஒப்பிலக்கிய ஆய்வு ஒன்றைச் சீர்பெறச் செய்தால் ஒளவையார் தலைசிறந்த நிலையில் நிற்பார் என்பதைப் பல இலக்கியங்களையும் கற்றவர்கள் தடையின்றிக் கூறுவர்', என வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் ந. சுப்பிரமணியன் கூறுகிறார்.[6]
---
[6]. ஒளவையார், உடுமலை, 1992. ப. 9.
---
3. நீதிநூல் ஒளவையார்
சங்ககால ஒளவை பெற்ற புகழினும் மிகுபுகழ் பெற்றவர் இடைக்காலத்தில் வாழ்ந்து, நீதிநூல்கள் பாடித் தமிழர் உள்ளந்தோறும் இடம்பெற்ற ஒளவை ஆவார். இவரைச் சோழர்கால ஒளவை எனவும் கூறுவர். நல்வழியில் இவர் மூவர் தமிழையும்' குறிப்பிடுதலால், சுந்தரர் காலமாகிய கி. பி. 9 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்பது தெளிவு. கொன்றை வேந்தனின் இறை வணக்கச் செய்யுளாகிய , கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை, என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே' என்பதைத் தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய பேராசிரியர், நச்சினார்க்கினியர் இருவரும் குறிப்பிடுவதோடு (தொல். பொருள். 461), இளம்பூரணரும் பண்ணத்திக்கு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார் (ஷ.483). பேராசிரியர் அட்டாலும்...' என்று தொடங்கும் மூதுரைப் பாடலையும் காட்டாகக் காட்டி யுள்ளார் (ஷ384). இவ்வுரை ஆசிரியர்களுள் காலத்தால் முற்பட்ட இளம்பூரணர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டிற்குரியவர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் முறையே 13, 14-ஆம் நூற்றாண்டுகட்குரியவர் ஆவர்.
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் மீது பாடப்பட்ட (கி.பி. 1178-1218), குலோத்துங்க சோழன் கோவை' நல்வழிப் பாட்டொன்றை ஆள்கிறது. 'இட்டார் எப்போதும் இடுவார், இடார் என்றும் இட்டுண்கிலார், பட்டாங்கில் உள்ள படியிதன்றோ' என்பது 'இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர், பட்டாங்கில் உள்ளபடி' என்ற 'நல்வழிப்பாடலை அடியொற்றியுளது [1].
----
[1]. மு. அருணாசலம், த.இ. வரலாறு - பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், திருச்சிற்றம்பலம், 1973, ப.06.
கி.பி. 11-ஆம் நூற்றாண்டினதென்று எண்ணப்படும் யாப்பருங்கல விருத்தியுரையும், கொன்றை வேய்ந்த ... ' எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்தை, செந்துறை வெள்ளைப் பா என எடுத்துக் காட்டுகிறது (சூ.63). இவற்றால் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நான்கு நீதி நூல்களையும் பாடிய இடைக்கால ஒளவையார், சோழப் பேரரசு சிறப்புற்றுத் திகழ்ந்த கி. பி. பத்தாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தவர் என்பது போதரும்.
ஒளவைக் கருத்து மரபு
முற்கால, இடைக்கால ஒளவையார்களிடையே , அவர்கள் வாழ்ந்த கால இடப் பின்னணியால் வேறுபாடுகள் உளவாயின. முன்னவர்க்குக் கள்ளும் புலாலும் வெறுக்கத்தக்கனவல்ல; அவை இயல்பான வாழ்வாகக் கருதப்பட்ட தொடக்க காலத்தவர் அவர். பின்னவரோ புலால், கள் இரண்டையும் தவிர்க்கப் பாடுபவர். ஆயினும் எளிமை, எளியோர் பக்கமே சார்ந்துதவுதல், மாறாத நன்றியுடைமை, நீதிக் கருத்துக்களை அழகுற மனத்தில் பதியுமாறு எடுத்து மொழிதல் இவற்றில் இருவரிடையேயும் ஒரு கருத்துமரபுத் தொடர்ச்சியும் காணப்படுகிறது.
'நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே' (புறம். 187)
என, மண்ணுலகம் தன்மீது வாழும் ஆண் மக்களாலேயே நல்லதாகவும் தீயதாகவும் மாறுகிறது என்று, அடிப்படை உண்மையொன்றை, இப்பாடல் வழி ஒளவை தாம் மொழிவது அற மொழிகின்றார். நன்மை தீமை விளைவுகட்கு ஆடவரே பொறுப்பென , இவ்வுலகப் பெரும் பெண் பாவலர் அடித்துக் கூறுவது முன்னரும் விளக்கிக் கூறப்பட்டது.
புறநானூற்றில், மூவேந்தரும் ஒருங்கிருக்கக் கண்டவிடத்து ஒளவையார் மகிழ்ந்து, யானறிந்தவரை இதுதான் அறம் ; இதுபோல வாழ வேண்டும்' எனக் கூறிக் கரையும் அறங்கள் கருத்திற் கொள்ளற் பாலனவாகும்.
'நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா
வேற்றோ ராயினும் நோற்றோர்க்கு ஒழியும்
நாரரி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழச் செய்த நல்வினை யல்லது
ஆழுங்காலைப் புணைபிறிதில்லை ! (புறம். 367)
எத்தகைய நீதிகள் என எண்ணிப் பார்க்க வைப்பவை இவை. தேவலோகமே நம்முடையதாயினும் அவற்றை நாம் நுகரக் கொடுத்து வைப்பதில்லை. தொடர்பே இல்லாதவராயினும், தவமுடையார் அவற்றை நுகருமாறு போய்ச் சேரும்!
தேறல் எனும் தெளிந்த மதுவையுண்டு, உண்டு உடுத்து மகிழ்ந்து இரவலர்க்கு அள்ளி அள்ளிக் கொடுத்து, நமக்கென வரையறுக்கப்பட்ட - எல்லை வகுக்கப்பட்ட - வாழ்நாளை வாழ்ந்து இன்புற வேண்டும்!
நம்மை வாழவைக்கும் நல்வினையே, நாம் காலவெள்ளத்தில் மூழ்குங்காலத்தே, புணையாக உதவும். அது தவிர வேறு துணை இல்லை.
இவ்வாறு காட்டப் பெற்ற சங்க ஒளவையின் அறவுரைகள், நீதிநூல் பாடிய ஒளவைக்குத் தோற்றுவாய் போலவுள்ளன. குறுந்தொகையில் தன் சொற்கேளாத தனது நெஞ்சை, ஒரு தலைமகன் கடிந்து கூறுவதாக ஓரிடம் வருகிறது. நல்லுரை இகந்து புல்லுரை தாஅய்', அந்நெஞ்சு உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிதவாவுறுகிறது. (29). ஒளவை இங்கு நல்லுரை எனச் சுட்டுவது காணலாம். நல்வழியாய் மூதுரையாய் அறவுரைகளைப் பாடிய ஒளவை, முன்னைய ஒளவையைப் பற்றியும் நன்கு உணர்ந்திருந்தார் என்றே தோற்றுகிறது.
நான்கு நீதி நூல்கள்
ஒளவை படைத்தன நான்கு நீதி நூல்கள். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்னுமிவை, தமிழ் நீதி நூல்களில் முடிமணிகள் என ஒளிவீசித்திகழ்கின்றன. தமிழில் சமணச்சார்புடன் தோன்றிய நீதிநூல்கள் பலவுள. ஒளவை சிவநெறிச்சார்புடன் தம் நூல்களை யாத்துள்ளார். இளஞ்சிறாரும் படிக்குமாறு ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் படைக்கப் பட்டுள்ளன. தமிழ் அகரவரிசையைப் பின்பற்றியதால் கல்வி கற்கத் தொடங்கும் இளம்பருவம் தொட்டே ஒளவை அறிமுகமாகிவிடுகின்றார். சிலர் இவற்றில் கூறப்படும் அறங்கள் கடினமானவை; பெரியவர்கட்கே பயன்படுபவை எனவும், அதனால் சிறுவர், சிறுமியர்க்கு இவை சுமையாகுமெனவும் வாதிடுவர்.
எதிர்காலத்திற்கு வேண்டுமெனப் பொருளை நாம் இளமையிலேயே சேமித்து வைத்துக் கொள்வதில்லையா? நெடுஞ் சேய்மைக்குப் பயணம் புறப்படுபவன் மறுநாளுக்கும் மூன்றாம் நாளுக்கும் தேவைப்படுவனவற்றையும் பயணம் முழுவதற்கும் பயன்படுவன-வற்றையும், அங்ஙனம் புறப் படுமுன்பே ஆக்கிப் படைத்துச் சேமித்து வைத்துக் கொள்வது உண்டல்லவா?
இளையோர்க்கும் இவ் அறநூல்கள் தரும் நீதிகள் அவ்வப்போது வாழ்நாள் பயணத்தில் பயன்படக் கூடியனவேயாம். இதையுணர்ந்தே ஒளவையார் தொடக்கத்தே படிக்க வேண்டிய ஆத்திசூடி, கொன்றை வேந்தனைத் தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் அமைத்தார். இம்முறை நினைவிற்கொள்ளத் துணையாயிற்று. ஆத்திசூடி சொற்சீரடிகளையுடையதாய், நூற்பாக்கள் போலவமைந்து சிறுசிறு தொடர்களாய் அமைந்தது. இது மிக அரிய கருத்தையும் எளிதாய்ச் சொல்ல வாய்ப்பாயிற்று. கொன்றை வேந்தன் நான்கு சீர் கொண்ட ஓரடிப் பாடல் போல் ஆகி, வழியெதுகையைக் கொண்டமைந்தமை படிக்கவும் மனத்தில் பதியவும் உதவியாயிற்று.
தமிழில் நீதிநூல்கள் பலவாயினும் இங்ஙனம் சொல்லவந்த புதிய நெறிமுறையால், இவை இரண்டும் இன்றளவும் மக்கள் நடுவே பேரரசோச்சும் சீரிய அற ஆட்சி நூல்களாயின.
ஆத்திசூடி
ஆத்திமாலையைச் சூடியவன் சிவபெருமான். இளமையிற்கல், அறனை மறவேல், ஓதுவதொழியேல் என இருசொல் தொடர்களாய் வருவதற்கேற்ப ஆத்தி சூடி' எனக் கடவுள் வாழ்த்தைத் தொடங்கி, அதுவே பெயராய் அமைந்தமை பொருத்தமுடையதாம். ஆத்திசூடி அமர்ந்த தேவன் -ஆத்திமாலையைச் சூடி வீற்றிருக்கும் சிவபெருமான். அவனை ஏத்தி ஏத்தித் தொழுதல்தான் அருச்சனையாகும். நூலுக்கேற்பக் கடவுள் வாழ்த்தும் சிறிதாய்ச் செவ்விதாய் அமைந்துள்ளது.
ஆத்திசூடி 108 தொடர்களால் ஆனது. உயிர்12, ஆய்தம் 1, மெய், 18, க, ச, த, ந, ப, ம, வ எனும் ஏழு வரிசையிலும் ஒளகாரமேறிய மெய்கள் நீங்கலாக ஒருவரிசைக்குப் பதினொன்று வீதம் (7 X 11 = 77) என இவை கூடி 108 ஆகும். மெய் பதினெட்டும் அகரமேறிய மெய்களாகவே அமைவன.
'கண்டொன்று சொல்லேல்'
'ஙப்போல் வளை'
'சனிநீராடு'
'ஞயம்படவுரை'
என க், ங், ச், ஞ் என வரவேண்டிய மெய்கள் அகரமேறி வந்தன. மொழிக்கு முதலில் வாராத ட், ண், ய், ர், ல், ழ், ள், ற், ன் என்பனவற்றை என்ன செய்வது? ஒளவை நல்லதோர் உத்தியைக் கையாண்டு, எளிமையைக் காப்பாற்றுகிறார்.
'இடம்பட வீடெடேல்' (ட்- இட்)
'இணக்கமறிந்திணங்கு' (ண்-இண்)
'இயல்பலாதன செயேல்' (ய -இய்)
'அரவ மாட்டேல்' (ர் - அர்)
'இலவம் பஞ்சில் துயில் (ல்-இல்)
'அழகலாதன செயேல்' (ழ் - அழ்)
'அறனை மறவேல்' (ற் - அற்)
'இளமையிற்கள்' (ள்-இள்)
'அனந்த லாடேல்' (ன் - அன்)
இவ்வாறு மொழிக்கு முதலில் வாராத மெய்களுக்கு முன்னே அகரம் அல்லது இகரத்தைச் சேர்த்துக்கொண்டு, அவற்றையும் மொழி முதலாக்கி அறங்கூறியுள்ளார் ஒளவையார்.
ககர வரிசை முதலாக வகரவரிசை ஈறாக ஏழுவரிசையிலும் கௌ, சௌ, தௌ, நௌ எனவரும் இறுதி உயிர்மெய்களை விடுத்து, ஏனைய பகினோர் உயிர்மெய்களுக்கும் அமையுமாறு பாடியுள்ளார் ஒளவையார். தமிழில் உயிர் பன்னிரண்டும் மொழிக்கு முதலாகும். ஆய்தம் மொழி முதலாகாதென்பதால் அஃகம் சுருக்கேல்' என்று அகரம் சேர்த்துக் கூறிவிட்டார் அவர். மொழி முதலாகாத மெய்கள் ஒன்பதனுக்கும் இவ்வாறே இகரத்தையோ அகரத்தையோ முதலிற் சேர்த்து, முற்காட்டியவாறு கூறினார் அவர்.
தமிழில் க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங எனும் பத்து மெய்களும் மொழி முதலாகுமென்பது இலக்கணம். இவற்றுள் கசத நபமவ என ஏழு மெய்வரைக்கும் எடுத்துக்கொண்ட ஒளவையார் ய ஞ ங மூன்றையும், அவை சில எழுத்துக்களுடன் மட்டுமே மொழி முதலாவதால் விட்டுவிட்டார். இறுதியிலுள்ள வகரத்திலும் வு, வூ, வொ, வோ எனும் நான்கும் மொழி முதலாகா . அவற்றை முறையே,
'உத்தமனாயிரு' (வுத்தமனாயிரு)
'ஊருடன் கூடிவாழ்' (வூருடன் கூடிவாழ் )
'ஒன்னாரைத் தேறேல்' (வொன்னாரைத் தேறேல்)
'ஓரஞ் சொல்லேல்' (வோரஞ் சொல்லேல் )
என உயிராகக் கூறியே, உடம்படுமெய்யாய் வரும் வகர வரிசையை நிறைவு செய்துள்ளார் ஒளவையார். சிலர் அம்ம' என்பதை, முன்னதாகத் தனிச் சீராய்ச் சேர்த்துப் பதிப்பித்ததுண்டு.
'அம்ம வுத்தமனாயிரு' என, உடம்படுமெய்யாய் வு வருமென அவர்கள் கருதினர்.
எங்ஙனமாயினும் தமிழ் அகர வரிசையில் மொழி முதலான வற்றை எந்த அளவு நெறிப்படி பயன்படுத்தமுடியுமோ, அந்த அளவு பயன்படுத்தி நமக்கு அரியதொரு சிறுவர் இலக்கியமாக இதைப் படைத்துத் தந்துள்ளார் ஒளவையார் எனலாம்.
வாழ்வியல் நூல்
தமிழ் நீதிநூல்கள் பல, பட்டறிவு முதிர்ச்சியால் அகவை முதிர்ந்தார் ஒருவர் ஏனையோர்க்கு அன்றாடம் நலமாக வாழும் முறைகளை உணர்த்துவது போன்ற வாழ்வியல் நூல்களாகவே யாக்கப்பட்டுள்ளன. ஒளவை நூல்கள் இந்நோக்கிலேயே பெரும்பகுதியமைந்தன.
'அஃகம் சுருக்கேல்' (தானியம், உணவுப் பண்டங்களை எடை குறைத்து ஏமாற்றி விற்காதே)
'சனி நீராடு'
'இடம்பட வீடெடேல்' (சிறுகக் கட்டிப் பெருகவாழ் என்பதாம் )
'அரவமாட்டேல்' (சிறுவர்கள் விளையாட்டாகவும் பாம்பினை ஆட்டி விளையாடல் கூடாதாம்.)
'இலவம் பஞ்சில் துயில்' (இஃது அறமா? அனுபவமா?)
'நீர்விளையாடேல்' (சிறுவர் நீரைக் கண்டால் தம்மை மறந்து ஆடுவர்)
'நுண்மை நுகரேல்' (சிறுவர் சின்னச்சின்னத் தின்பண்டங்களை வாங்கித் தின்று நோய்வாய்ப்படுவர்)
'நோய்க்கிடங் கொடேல்'
'மீதூண் விரும்பேல்' (உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
எப்போதும் மென்மையை விரும்புபவர்
உடம்பு இளைப்பதற்கு மருந்து முண்பர்
அல்லவா? இங்கு நெடிது நாள் வாழ விரும்பும்
அனைவருக்கும் மிக அதிகமாகச் சாப்பிடுவதை
விரும்பாதீர்' என்று போதிக்கின்றார்.)
சிறிய நூலேயாயினும் உடனே பயன்படுவன, அகவை முதிரமுதிரப் பயன்படுபவை, சிறார்க்குரியவை, அரசியல் சார்ந்தவை எனப் பகுத்து நோக்கி, கால இடப் பின்னணியோடு கருதவேண்டிய நீதிகள் பலவாகும். சிற்சில நீதிகளே அனை வருக்கும் அனைத்துக் காலத்திற்கும் பொதுவாகும்.
திறக்குறளிலும் பொதுமை என்பதற்குச் சில எல்லைகள், வரையறைகள் உள. கண்ணை மூடிக்கொண்டு, எல்லாம் எல்லார்க் கும் எப்போதும்' என்று கழறுவன பேச்சிற்கு அழகுதரும்; நடை முறைக்கு ஒத்துவரா. பொதுமைக் கோட்பாட்டை இடம் நோக்கிக் கொள்ள வேண்டும்.
'முனைமுகத்து நில்லேல், மூர்க்கரோடு இணங்கேல்', 'போர்த் தொழில் புரியேல்' என்பன கருதற்பாலன. போர்வீர னல்லாத ஒருவன் போர்முனையில் போய் நிற்பது தவறு. கலகம் நடக்குமிடத்திற்குக் காவலன் போகலாம், கையில் ஆயுதமில்லாதான் போகலாமா? போரைத் தொழிலாகக் கொண்டு வாழலாமா? சில கட்சிகள்-சில அரசுகள் இதை ஒரு 'கூலி தரும் தொழில்' ஆக்கி விட்டன. மாற்றானுக்கு இடங்கொடேல்' என்பவர், முனை முகத்து நில்லேல்' என்பதை, எத்தகைய சூழலில் கூறியிருப்பார் எனச் சிந்தியுங்கள்.
தன் முன்னேற்றச்சூடிகள்
பல ஆத்திசூடிகள் ஒருவன் தன்னம்பிக்கையோடு முன்னேற்ற மடையப் பின்பற்ற வேண்டியன. தன்னுறுதி, தன்முயற்சியை வளர்ப்பன. ஒருவனது ஆளுமை மேம்பாட்டிற்கு உதவுவன.
'உடையது விளம்பேல்'
இதனுடன் வல்லமை பேசேல்' என்பதையும் இணைத்து நோக்குங்கள். ஒருவன் தன்னிடமிருப்பதை, தனதாற்றலை, பொருள் வலிமையை விளம்பரப்படுத்துவது போல் பலரறியச் சொல்லுதல் கூடாது. காரியத்தில் காட்ட வேண்டுமே தவிர வாய்ப் பந்தல் போடக் கூடாது. வாய்வீச்சு காரியத்தைக் கெடுத்துவிடும்.
'நைவினை நணுகேல்', 'தோற்பன தொடரேல்' என்பன விழிப்புணர்த்துவன. 'தூக்கி வினைசெய்', 'செய்வன திருந்தச் செய்' என்பன ஒருவன் முன்னேற வழிவகுப்பன. பூமி திருத்தி உண் தன் உழைப்பை நம்பச் சொல்கிறது. 'பொருள்தனைப் போற்றி வாழ்' காசைக் கண்டபடி விட்டுவிடாமல் காப்பாற்றத் தூண்டுகிறது.
'தக்கோன் எனத்திரி', 'பீடுபெற நில்', 'நேர்பட ஒழுகு', 'மனந்தடுமாறேல்' முதலியன ஒருவனது ஆளுமையை வளர்ப்பன.
பழகும் பண்பாடுகள்
அன்றாட வாழ்வில், தொழிலில், நிருவாகத்தில், அரசியலில், ஆணும் பெண்ணுமாய்க் கலந்து பழகுவதில் பின்பற்ற வேண்டிய பண்பாடுகள் பலவாகும். அவற்றைத் திரும்பத் திரும்ப அழுத்தமாகக் கூறுகிறது, ஆத்திசூடி.
'இணக்கமறிந்து இணங்கு' என்பது இதில் கருதவேண்டிய ஒன்றாகும். உலகில் பிறருடன் பழகும் பொழுது, நாம் அவருடன் இணங்கத்தக்க பண்புகளும் அவரிடம் இருக்கும்; அவர் நம்முடன் இணங்கத்தக்க இயல்புகளும் நம்மிடமிருக்கும். எனவே முற்றிலும் இருவர் கருத்தும் ஒரேமாதிரியாய் எல்லா நேரத்தும் எல்லா இடத்தும் அமையா. அதனால் இணக்கமறிந்து இணங்கவேண்டும்.
யார் யாருடன் எவ்வாறு, எந்த அளவு, எச்சூழலில், எந்த எந்த நிலைகளில் இணங்க முடியுமோ, அந்தந்த அளவு இணங்கி வாழ்வதாலேதான் உலகியல் நடக்கிறது. இதனை ஒரு வரையறைத் திட்டமாகக் கொண்டு ( Formula) துறைதோறும் இணைத்துப் பார்க்க இடமுண்டு. குடும்பத்திலும் கணவன் - மனைவி இருவரும் இணக்கமறிந்து இணங்கிப் போக வேண்டும். அலுவலகத்தில் பலர் கூடி வேலை பார்க்குமிடத்தும் அவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும்.
இருவர் பழகுமிடத்து, உரையாடலும் பேசுதலும் எடுத்துரைத்தலும் வாதித்தலும் சான்று பகர்தலும் சொற்பொழிதலும் என வாய்ப் பேச்சுக்குரிய இடம் மிகப் பலவாகும். 108 சூடிகளைக் கொண்ட இச்சிறுநூலில், பேச்சுத் தொடர்பு பற்றி 16 சூடிகள் உள. உடையது விளம்பேல், வல்லமை பேசேல்', வாது முற்கூறேல்' என்பன தற்காப்புப் பற்றியன. கண்டொன்று சொல்லேல், வஞ்சகம் பேசேல்', ஓரஞ்சொல்லேல், பழிப்பன பகரேல் என்பன தீங்கு மொழிதல் கூடாதென்பன. ஞயம்பட உரை', மொழிவது அறமொழி' என்பன பேச்சுத் திறம்படப் பேசுக என வழிகாட்டுவன. சொற் சோர்பு படேல்', பிழைபடப் பேசேல்' என்பன பேச்சில் பிழை நேர்தல் நம்மைத் தோல்வியுறவைக்கும் என்று கூறுவன. 'நொய்ய உரையேல்' (அற்பமானவற்றைப் பேசாதே), சித்திரம் பேசேல்' (வாக்குச் சாதுரியத்தை மிகைப்படப் பயன்படுத்திப் பேசுதல்), சுளிக்கச் சொல்லேல்' (கேட்பவர் முகம் சுளித்து வருந்துமாறு பேசுதல்), மிகைப்படச் சொல்லேல் (எதையும் ஆயிரம் காலேமாகாணி என்பதுபோல் மிகையாகத் தோற்றும்படி பேசுதல்), 'வெட்டெனப் பேசேல்' (வெட்டொன்று துண்டு இரண்டெனத் துண்டித்துப் பேசுதல்) என்பன பிறர் மனம் நோகுமாறும் வெறுக்குமாறும் பேசாமல் காப்பாற்றும் முயற்சி யாகும்.
இங்ஙனம் சிறிய இவ் ஆத்திசூடி மேலும் மேலும் எண்ணிப் பார்க்கத் தக்க அறிவுரைகள் அடங்கியதாகும்.
கல்வியும் நடைமுறை வாழ்வும்
'எண்ணெழுத் திகழேல்', 'ஓதுவ தொழியேல்', 'இளமையிற்கல்' 'நூல்பல கல்' 'வித்தை விரும்பு' எனக் கல்வியைப் பல கோணங்களில் வற்புறுத்துகிறார் ஒளவையார்.
'மெல்லினல்லாள் தோள் சேர்' என்பது மனைவியிடம் கூடி வாழச் சொல்கிறது. 'மைவிழியார் மனையகல்' என்பது பரத்தை யர்கள் வாழும் வீட்டுப் பக்கமும் போகாதே என எச்சரிக்கிறது. 'தையல் சொற் கேளேல்' என்பது, அரசியலில் காமவயப்பட்டு, பெண் சொற்கேட்டு ஆடி, நாட்டைச் சீர்குலைப்பவர்களுக்குக் கூறியது. திருக்குறளில் 'பெண்வழிச் சேறல்' என்ற அதிகாரம் அரசியல் சார்ந்த நட்பியலில் வைக்கப் பட்டிருப்பது சிந்தனைக் குரியது. வசந்த சேனை போல நாட்டையே, காமவயப் பட்ட மன்னனைக் கொண்டு , ஆட்டிப் படைத்தவர்கள் உண்டு. அது கூடாதென்பதை மனங்கொண்டு கூறிய அறம் அது.
ஙகர மெய் ஒன்றே பயன்பட்டு, உயிர்மெய்யில் ஙகர வரிசையைக் காப்பாற்றுகிறது. அகர வரிசைப்படி அமைந்த சூடி நூலில், ஙகரம் போல், சுற்றத்தைக் காப்பாற்றி வாழ் என உவமை சொல்லியிருப்பது ஒளவையின் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுகிறது. அகர வரிசைப்படி அமைந்ததொரு நூலில் ஙப்போல் என உவமை வந்திருப்பது பொருத்தமே. சங்க ஒளவையாயினும் இடைக்கால ஒளவையாயினும் உவமையில் ஒரு தனித்தன்மை இருக்கும்.
'கைவினைகரவேல்' என்ற தொடர், பல கைத்தொழில்கள், கை மருத்துவம் போல்வன பிறரறியாமல் மறைக்கப்பட்டதால், காலப் போக்கில் மறைந்தொழிந்ததை நினைப்பூட்டி, அங்ஙனம் மறைக்காதீர் என நாட்டு நலம் கருதிப் பேசுகிறது.
'வேண்டி வினைசெயேல்' என்பது சதித் திட்டமிட்டு ஏதேனும் ஒன்றை அடைவான் வேண்டி, காரியங்களைப் பிறர் நலங்கருதிச் செய்வதுபோல் காட்டிச் செய்வதைக் கண்டிக்கிறது. நம் அரசியல் வாதிகள் ஏழைகளுக்காக விடுகிற கண்ணீர், சில நாடகபாணிச் செயல்கள் எல்லாம் அவர்களுடைய வாக்குகளை ஏமாற்றி வாங்குவதற்கேயன்றோ? இதுவே வேண்டி வினை செய்வதாகும்'. இதனால் பொதுநலம் அழியும் என்பதுறுதி.
தொடை நயமும் ஓசை நயமும்
சூடிகள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு சொற்சீர்களால் ஆனவை. சொல்லே சீராக நிற்பதுதான் சொற்சீர். கல், மற என ஓரசையாயினும் இலவம், நன்றி, இடம்பட என ஈரசையாயினும் திருந்தச் செய், புகழ்ந்தாரை எனச் சிலபோது மூவசையாயினும் சொல்வடிவங்களாகவே நிற்பன இவை. பெரிதும் மோனை நயம் அமையக் கூறினும், பொருட்சிறப்புக்கே முதலிடம் தந்து மோனையைக் கைவிடவும் காண்கிறோம். கைவினை கரவேல் என்றாலும் 'நன்றி மறவேல்' என்றாலும் தொடை நயத்துடன், சமனிலையாய் இசைக்கும் ஓசைச் சந்த நயமே ஆத்திசூடியின் உயிர்நாடியாக ஒலிக்கிறது.
ஆத்திசூடி வெண்பா, ஆத்திசூடிப் புராணம் என்று பல நூல்கள் இதன் விளக்க நூல்களாகத் தோன்றின. பாரதியார் முதல் பல பாவலர்கள் புதிய ஆத்திசூடிகள் பாடியுள்ளனர். இவை அனைத்தும் இம்முதல் சூடி 'யின் சிறப்பேயாகும்.
கொன்றை வேந்தன்
பழைய உரைமேற்கோள்கள் அனைத்திலும்,
'கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே'
என்றே காணப்படுகிறது. கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானையே இது குறிக்கும். ஆத்தி, கொன்றை என அழுத்தமுறத் தொடங்கப் பெற்ற இவை, சிவவணக்கங்களேயன்றிப் பிள்ளையார் வணக்கங்கள் ஆகா. இவற்றையும் வினாயக வணக்கமாக்க முயலுதல் கவிப்போக்குக்கு இயைபுடையதாய் இல்லை. கொன்றை வேய்ந்த செல்வன்' என்ற தொடரே, கொன்றை வேந்தன் எனச் சுருக்கங்கருதி ஆளப்பட்டு நூற் பெயரானது. சிலர் இதை அன்னையும் பிதா' என முதல் அடியைக் கொண்டும் பெயரிட்டு அழைத்துள்ளனர். இவ்விரண்டு கடவுள் வாழ்த்துக்களிலும் ஏத்தித் தொழுதல்' ஒருபடித்தாக இருப்பதும் கருதத்தக்கது.
'திருமாலுக்கடிமை செய்', 'சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு' என்று கூறும் இந்நூல்கள் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் எனச் சிவப்பெயரால் தொடங்கி, அவ்வாறே அழைக்கப்பட்டமை வியப் பன்று. மேலும் நீதிநூல் வரலாற்றில் சமணச் சார்புக்கு அதிக இடமிருந்ததை, ஒளவையின் வாக்குகளே மாற்றியமைத்தன என்பதும் நினைவுகூர்தற்குரியது.
கொன்றை வேந்தனும் ஆத்திசூடி போல் தமிழ்மொழி முதல் எழுத்துக்களின் வரிசைப்படி அமைந்ததாகும். முன்னே சூடிக்குச் சொன்னபடி அமையினும், மெய் பதினெட்டும் தனியே அங்கு இடம்பெற , கொன்றையில் அவற்றினை விட்டுவிட்டார் ஒளவையார். உயிர் 12, ஆய்தம் 1, ககர வரிசை 12, ச, த, ந, ப, ம, வ வரிசைகள் ஒவ்வொன்றும் 11 (6X 11 = 66) ஆக 91.
கொன்றை வேந்தன் நான்கு சொற்சீர் கொண்ட முழு அடிகளால் ஆனது. நாற்சீர் கொண்டது அடியெனப்படும். இதனால் ஐந்தில் மட்டும் பொழிப்பு மோனை அமைய, எஞ்சிய அனைத்தும் வழியெதுகையமைந்து இன்னிசை நயம்பட வழங்குகின்றன. அதனால் ஒருமுறை சொன்னாலே நினைவில் நிற்கும் கட்டமைப்பு முடையதாகிறது.
சிலபோது இக்கட்டமைப்பு பழமொழிகளை ஒத்திருக்கக் காணலாம். ஆடிக்காத்தில் அம்மியும் பறக்கும்', அகல இருந்தால் நிகள உறவு', 'கிட்ட இருந்தால் முட்டப் பகை' என்னும் பழமொழிகளைக் காண்க. இதனால் பல கொன்றை சூடிகளைக் கல்லாதோர் வாக்கிலும் பெருவழக்காகக் காணலாம்.
'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'
'கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை'
'கிட்டாதாயின் வெட்டென மற'
'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை '
'சூதும் வாதும் வேதனை செய்யும்'
'திரைகடலோடியும் திரவியம் தேடு'
'நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை'
இவ்வாறே சொல்லிப் பார்த்தால், மக்கள் மனத்தில் பதிந்து, நீங்கா நினைவில் நின்று, நாவில் களிநடம்புரியும் இத்தொடர்களின் அருமை புலனாகும்.
சில கொன்றை சூடிகள் ஆத்திசூடியின் விரிவாகவும் விளக்கமாகவும் அமையக் காணலாம்.
'நைபவர் எனினும் நொய்ய உரையேல்'
'மைவிழி யார்தம் மனை அகன் றொழுகு'
இவை 'நொய்யவுரையேல்', 'மைவிழியார் மனையகல்' என்ற ஆத்தி சூடிகளின் விரிவாகவும் விளக்கமாகவும் அமைதல் காணலாம். ஆத்திசூடி, கொன்றை வேந்தன் இரண்டையும் முழுவதும் ஒப்பிட்டுக் கற்பார்க்கு மேலும் தெளிவுபெற வாய்ப்புண்டு.
குறள் வழிமரபு
இவை பல திருக்குறட் சிந்தனைவழிப்பட்டவை. சொல் லாலும் தொடராலும் திருக்குறளை நினைப்பூட்டுமிடங்கள் பலவாகும்.
'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு (392)
இதனை இரத்தினச் சுருக்கமாக்கி, 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' எனும் கொன்றைசூடி; 'எண்ணெழுத் திகழேல்' என இன்னும் சுருக்கும் ஆத்திசூடி.
'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்' (219)
'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது, குறட்கருத்தை எத்துணை அழகாகப் பொருளையும் விடாமல் சுருக்கித் தருகிறது.
'ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்'
என்ற கொன்றைசூடி, 'மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான், பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்' (134) என்ற குறட் கருத்தின் பிழிவாயமைதல் ஒப்பிட்டுப் படித்து மகிழத்தக்கதன்றோ ? இதுபோலும் குறள்வழிச் சூடிகள் இரண்டிலும் நிரம்பக் காணப்படுகின்றன.
உலகியல்
ஆத்திசூடி போலவே கொன்றை வேந்தனிலும் உலகியலும் நடப்பு வாழ்வியலும் உணர்த்தும் சூடிகள் பலவாகும்.
'சேமம் புகினும் யாமத்துறங்கு'
ஏதேனும் நற்காரியத்திற்காக இரவு முழுதும் விழிக்க நேரிட்டாலும் நடு யாமத்தில், சிறிது நேரமாவது கண்ணயர வேண்டுமாம்.
'தோழனோடும் ஏழமை பேசேல்'
நம் தோழன்தானே என்று நம் இயலாமை, எளிமை, வறுமை முதலியவற்றைப் பேசுதல் கூடாது. அதனால் நம் மதிப்புக்குறையும்; காரியங்கெடும்.
'தேடாது அழிக்கின் பாடாய் முடியும்'
முதலைக் காலி செய்தால் வாழ்க்கை தள்ளாடும்.
'போனகம் என்பது தானுழந்து உண்டல்'
தான் வருந்தியுழைத்துத் தேடியதை உண்ணும் போதுதான் அது இனிய உணவாக இருக்கும்.
'தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ண லின் ஊங்கினிய தில் (105)
என்ற வள்ளுவர் வாக்கின் எளிமையாக்கமே கொன்றை சூடியாதல் காண்க. வளவ னாயினும் அளவறிந்து அழித்து உண் என்று செல்வத்தைச் சிதறவிடாது காப்பாற்றச் சொல்கிறார் ஒளவையார். அஃகமும் (உணவுப்பொருள்கள்) காசும் சிக்கெனத் தேடு' எனத் தூண்டுகிறாரே!
'நீரகம் பொருந்திய ஊரகத்திரு'
'பாலோ டாயினும் காலமறிந்துண்'
'மெத்தையில் படுத்தல் நித்திரைக் கழகு'
'ஒத்தவிடத்து நித்திரைகொள்'
இவை போல்வன நீதி வாக்கியங்கள் என்பதைவிட, அனுபவ முடையார் இளையோர்க்கு நலமாக வாழ வழிகாட்டுவனபோல் உள்ளன. காடும் மேடும் சுற்றித் திரிந்தவர் இலவம் பஞ்சில் துயில் வும், மெத்தையிற்படுக்கவும் தூண்டுகிறார். புதிய இட மாயினும் மனத்திற்குப் பொருந்திய இடத்திலேதான் உறக்கம் வரும். இயல் பான இம்மனநிலையையே இது காட்டுகிறது. வீட்டினுள்ளேயே இடம்மாறிப் படுத்தால் நமக்கு உறக்கம் கெடுவதுண்டல்லவா?
'கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு'
கவிநயம் மிக்க தொடரிது. கோட்செவி - கோள் கேட்கும் செவி. குறளை - பிறர் மீது சொன்ன கோள். இரண்டும் சேர்வது காற்றுடன் நெருப்புச் சேர்வது போலாம். பற்றி எரிந்து பெருகி அழியும் என்பதாம்.
'பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்'
மடம் என்பதிது. தெரிந்தும் தெரியாதது போல் இருக்கும் நிறையுடைமை. ஆண்களும் முந்திரிக்கொட்டை போலாது இவ்வாறு அடக்கமுடையராதல் நல்லதே. ஆனால் பெண்களுக்கு இது இயல்பாக அமைந்தது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன பெண்கள் தன்னைத்தான் கொண்டொழுகும்' தற்காப்புக் கருவிகள். பின்னாளில் அவை தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டன.
'சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்'
'சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்'
'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'
'தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை'
இங்ஙனம் அடுத்தடுத்து வருபவற்றில் ஓர் இயைபிருத்தலையும் காணலாம்.
புதுமை
கொன்றை வேந்தனில் பல புதுமைகளும் மானுட முன்னேற்றச் சிந்தனைகளும் நிரம்பவுள. இருள் சூழ்ந்த உலகில் வாழ்வாங்கு வாழ விரும்புவார்க்கு ஒளி நல்கும் சின்னஞ்சிறு கைவிளக்குகள் இவை எனலாம்.
'கற்பெனப் படுவது சொல்திறம்பாமை'
கல் - மனத்திண்மை , உறுதி. சொன்ன சொல் மாறாது நடத்தலே கற்பாகும். ஒருவனைப் பற்றி ஓரகத்திரு' - என்பது கன்னிப் பெண்ணுக்குச் சொல்லப்பட்டது. திருமணமே வேண்டாமென்று சுதந்திரமாக இன்று வாழ நினைக்கும் பெண்கள் படித்து மனனம் செய்யவேண்டிய வாசகம் இது.
'கிட்டாதாயின் வெட்டென மற'
நம்மைப் புதுப்பித்துக் கொள்ள, புதிய வேறு திசையில் ஊக்கப்படுத்த உதவுவது. 'தோற்பன தொடரேல்' என்ற சூடியை எண்ணுக.
'சீரைத் தேடின் ஏரைத் தேடு'
'தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது'
'மேழிச் செல்வம் கோழை படாது'
ஒளவைக்கு உழவிலும் உழைப்பிலும் இருந்த பெருநம்பிக்கை பல இடங்களில் வெளிப்படுகிறது...
'பிரம் பேணி பாரந்தாங்கும்'
பீர்-தாய்ப்பால். தாய்ப்பாலால் பேணி வளர்க்கப்பட்டவன் உடலுறுதியுள்ளவன் ஆவானாம், எந்தச் சுமையையும் தாங்கும் வலிமை பெறுவானாம்.
'பையச் சென்றால் வையம் தாங்கும்'
பதறாமல் காரியமாற்றினால், வையமே அவனை ஏற்றுப் போற்றும். பதறாத காரியம் சிதறாது அல்லவா? எறும்பூரக் கற்குழியும் தானே? பைய நடந்தால் பாதச்சுவடுகள் மண்ணிற் பதியும். அமைதியாய் வாழ்வோரே அழுத்தமான வாழ்வு வாழ்வர்.
'மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது'
ஒரு நாட்டிற்குச் சரியான தலைமகன் வாய்க்கவில்லையேல் நாடு அல்லற்பட்டு, அலைக்கழியும் என்பதாம். மீகாமன் என்பவன் மரக்கலத்தை ஓட்டவல்ல கலைகற்ற, அனுபவமுள்ள ஒருவனாவான்: நினைத்தவரெல்லாம் மீகாமனாக முடியாது; கப்பல் கவிழ்ந்துவிடும். நாட்டை நல்லதிசையிற் செலுத்தவும் தக்க மீகாமன் வேண்டுமென்பது இதனால் பெறப்பட்டது.
இங்ஙனம் கொன்றை வேந்தனில் பல சூடிகள் மக்கள் நினைவலைகளில் ஓடும் நிழற்படங்களாயின. அதற்கு அவற்றின் சமனிலைப் பாடான இன்னோசை அமைப்பும், அன்றாட வாழ் வியல் சார்ந்த பட்டறிவுக்கருத்துரைகளுமே காரணமாகும்.
மூதுரை
காட்சி, கருதல், உவமை முதலிய அளவைகளால் ஒரு கருத்தை ஆய்ந்து நிலைநாட்டுதல், காலத்தால் முற்பட்ட அளவை நூன் முறைகளாகும். நீதி நூலார் தாம் கூறவந்த அறக் கருத்துக்கள் உண்மையானவை, பயனை விளைவிப்பவை என்பவற்றை நிலை நாட்ட இவ் அளவைகளையும் பயன்படுத்தினர். இதனால் அவர்களது கவிதை வளமும் கருத்து வளமும் சிறந்தன.
இயற்கையைக் காட்டி அறத்தைச் சொல்வதும் உலகியலில் பழகிப்போன ஒன்றை உவமை சொல்லி நீதியை நிலைநாட்டுவதும் கண்டு கேட்டிருந்தும் நன்கு உணராத புதுப்புதுச் செய்திகளைச் சான்றாக்கி அறங்கூறி நம்மை வியக்க வைப்பதும் தமிழ் நீதிநூல்களின் போக்காகும்.
செய்ந்நன்றியை வற்புறுத்துவர். மூதுரை, பெயருக்கேற்ப அறிவு அனுபவ முதிர்ச்சிகளைக் காட்டுவதாகலின், நன்மை செய்தவன் அதற்குப் பதிலாக எதிர் நன்றியை எதிர்பார்க்க வேண்டு மென்பதில்லை எனக் கூறுகிறது. ஏனெனில் அதன் பயன் என்றே னும் ஒரு நாள் திரும்பத் தானே வந்து சேரும்; அது வேறுவழியிலும் வந்து சேரும். தென்னைமரம் அடிவேர்களின் வழி உறிஞ்சிய தண்ணீரை, அதன் வழியாகவே திரும்பத் தருவதில்லை. மேலே உச்சியில் இளநீர்களாகத் திரும்பத் தருகிறது. சாதாரண நீரைப் பருகி, இனிய இளநீரைத் தருகிறது. நாம் பிறர்க்குச் செய்த நன்மைகளின் பயன்களும் அவ்வாறுதாமே விளையும் என்பதாம்.
'நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.'
மூதுரை முதுமை + உரை ஆகும். இங்கு முதுமை முதிர்ச்சி. முதுமை அறிவுடைமையுமாம். முன்பு சிறுமுதுக்குறைவி' என்றால் இளமையிலேயே அறிவு மிக்கவள் என்று பொருள். 30 பாடல்கள் கொண்டது மூதுரை. விநாயகர் வணக்கம் வாக்குண்டாம்' என்று தொடங்குகிறது. நல்வழி 40 பாடல்கள் கொண்டது. அதன் கடவுள் வாழ்த்தும் வினாயக வணக்கமே. மூதுரை கடவுள் வணக்கத்தின் முதற்சீரின் அடிப்படையில் வாக்குண்டாம்' என்றும் அழைக் கப்பட்டது. முன்னைய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் இரண்டும் சிவவணக்கமாய் அமைய, இவை இரண்டும் வினாயக வணக்கமாய் அமைகின்றன. இதனால் இவை வேறு வேறு ஆசிரியர்களால் பாடப்பட்டனவோ என்ற ஐயமும் உண்டாகிறது. மூதுரை உலகியல் கூறி அறங்கரைகிறது. நல்வழி 'போகிற வழிக்குப் புண்ணியம் தேடுவது போல' நிலையாமை, ஊழ்வினை, உலக வெறுப்பு, வீடுபேற்றுக்கு வழி என இவ்வாறு பெரிதும் ஆன்மிகத் தொடர்பானவற்றைப் பேசுகிறது.
'நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை'
இவ்வெண்பாக்கருத்து, மக்களிடம் அடிக்கடி பேசப்படுதலைக் கேட்கிறோம். நெல்லுக்கு இறைத்தநீர் சிறிதேனும் புல்லுக்கும் பொசிகிறதாம்! நல்லவர் இருந்தால் அவ்வூரில் மழை பொழியும் என்ற நம்பிக்கை உளது. அவரால் எல்லோரும் பயனடைவர் என இது கூறுகிறது. 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்ற புறப்பாட்டு (18) தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மையானே' எனச் செப்புவதை இவண் ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.
இடைக்கால உரையாசிரியர்கள் பலர் இப்பாடல்களில் ஈடுபட்டு எடுத்துக் காட்டியுள்ளனர். மக்கள் பழமொழி போல் வழங்கி, இவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். பள்ளிப் பிள்ளை கட்குத் தொடக்க வகுப்புக்களில் பாடமாய் விளங்கியதால், இவை 'கல் மேல் எழுத்துப்போல்' நெஞ்சிற் பதிந்து அவ்வப்போது எடுத்துக் காட்டப்பட்டு வந்துள்ளன.
ஒளவை தமிழ் மக்களின் வீட்டுப்பெயராய்ப் புகழ் பெற்றதற்கு இந்நீதி நூல்களே காரணமாகும்.
'கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி'
வான் கோழி எனப் போலிகளைப் பரிகசிக்கும் பழக்கம் எத் துணை ஆழமாகப் பரவியிருக்கிறது தெரியுமா? வான்கோழி மிகப் பிற்காலத்தில் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டதென்பதால், இப்பாடல்கள் பிற்காலத்தன என்பது சிலர் கருத்து. இதுகுறித்து அறிஞர் மு. அருணாசலம் குறிப்பிடுவது வருமாறு: ஆங்கிலேயர் இந்தியா வந்தது 16-ஆம் நூற்றாண்டில்; அதன் பின்தான் டர்கி' எனப் பெயருள்ள இப்பறவை இந்நாடு வந்தது. ஆகவே இப்பாடலுள்ள நூல் மிகவும் பிற்காலத்தது என்பது ஒரு சாரார் கூற்று. உண்மை வேறு. டர்கி என்பது துருக்கி . துருக்கியர் இந்தியா வந்தது 10-ஆம் நூற்றாண்டு என்பர். அப்போதே இப்பறவையும் துருக்கியர் வழியாக இங்கு வந்திருத்தல் வேண்டும்.[2]
----
[2] த. இ. வரலாறு, ஷெ.நூல், ப.502.
'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது' (29)
சான்றோர்தம் கோபத்தைப் பிறர் தாங்கிக் கொள்ளுதல் அரிது என்றும், அக்கோபம் கணப்பொழுதில் மாறிவிடும் என்றும் இதற்கு இருவகையாகப் பொருள் கூறுவர். இரண்டாவது பொருளே சிறந்தது என்பது போல் மூதுரை விளக்குகிறது.
'கற்பிளவோடு ஒப்பர் கயவர், கடுஞ்சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்'
கல் பிளந்தால் சேராது; பொன் பிளந்தால் பின்பு இணைக்க முடியும்; சான்றோர் சினமோ தண்ணீரில் அம்பு பாய்ந்து உண்டாக்கிய வடு உடனே மறைவதுபோல், மறைந்துவிடும். கற்பிளவு போன்றவர்கயவர்; பொற்பிளவு போன்றவர் இடையாவர். தலையாய சான்றோர் பிரிந்த அப்பொழுதே கூடுவர். அவர் சினம் உடனே தணிந்துவிடும்.
'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்'. 'கற்பு இலா மூர்க்கரை மூர்க்கரே முகப்பர்.' இங்கு கற்பு என்பது மனத்திண்மை என்ற பொருளில் - வந்துள்ளது. ஒளவையார் கற்பெனப் படுவது சொல்திறம்பாமை' எனக் குறித்ததும் காணலாம். அவர் ஒரு புதுமைச் சிந்தனையாளர்; புரட்சிச் சிந்தனையாளர் என்பதற்கு இவை சான்றாவன. மன்னனுக்குத் தன் தேசம் அல்லால் சிறப்பில்லை. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
உடன்பிறந்தே கொல்லும் வியாதி. உடன்பிறவாமாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும். அற்ற குளத்தினின்றும் அறுநீர்ப் பறவைபோல், செல்வம் போனதும் நம்மைவிட்டுப் போவாரே பலராவர்!
அடக்கமுடையாரை அறிவிலர் என்றெண்ணக் கூடாது. ஏனெனில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும், வாடி இருக்குமாம் கொக்கு. கவையாகிக் கொம்பாகிக் காட்டிலே நிற்பவை நல்ல மரங்கள் அல்ல; சபை நடுவே அரசாணையாம் நீட்டோலையை
வாசிக்கின்றவனது குறிப்பறிய மாட்டாதவனே நல்ல மரமாவான்!
பழுக்கக் காய்ச்சினாலும் பால் சுவை குறைவதில்லை. சங்கு சுட்டாலும் வெண்மை நிறமே தரும். மேன்மக்கள் கெட்டாலும் மேன்மக்களே. அவர்களுடன்தான் நட்புக்கொள்ள வேண்டும். கீழ்மக்களுடன் நட்புக்கொண்டால் அவர்கள் நெடுநாள் நண்பர்களாக விளங்கமாட்டார்கள். இவ்வாறு வரும் மூதுரைகள்
ஒவ்வொன்றும் மிகப் பயனுடையவை ஆகும்.
நல்வழி
நாற்பது பாடல்களையுடைய நல்வழியின் கடவுள் வணக்கப் பாடலில் ஒளவையார், பிள்ளையாரிடம் சங்கத் தமிழ் மூன்றும் தா எனக் கேட்கிறார். எனவே இவர் சங்க கால ஒளவையார் அல்லரென்பது தெளிவு.
நல்வழியும் மக்களிடையே எளிதில் வழங்கி, என்றென்றும் நினைவு கொள்ளும்படியான பாடல்கள் அடங்கியது. 'சாதி இரண்டொழிய வேறில்லை' என்பதைச் சாதிக்குள்ளே உழல்பவரெல்லாம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்', துஞ்சுவதே மாந்தர் தொழில்' என்றும், சாந்துணையும் சஞ்சலமேதான்', என்றும் பாடுவதாலும் வினைப்பயன், விதி என ஆறுதல் தேடும் வார்த்தைகளையே கூறுவதாலும் நல்வழி ஒளவையாரின் அகவை முதிர்ந்த காலத்தில் பாடப்பட்டது போலும்!
'நீறு இல்லா நெற்றி பாழ்'; 'சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' எனத் தெளிவாகச் சிவநெறியைப் பாடுகிறார் ஒளவையார்.
'தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகமென்றுணர்.'
இவர் தமிழ் நூல்களிடத்தும் வடமொழிச் சாத்திரங்களிலும் கொண்டிருந்த பற்றும் பயிற்சியும் இதனால் விளங்கும்.
'ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்!'
'பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்து
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்!'
'பசிவந்திடப் பத்தும் பறந்து போம்'
'இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று'
கேட்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நாவிலும் எதிரொலித்த வண்ணமிருக்கும் இத்தகைய அடிகள் பலவாகும்.
'பத்தும் பறந்து போகும்' என்றால் எவை பத்தும் என அறியாதாரும் இத்தொடரைச் சொல்லிய வண்ணம் உள்ளனர்.
'மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் போம் பறந்து.'
'ஏவா மக்கள் மூவா மருந்து' என்ற கொன்றை வேந்தனுக்கு விளக்கம் தருகிறது ஒரு நல்வழிப்பாடல்.
'பூவாதே காய்க்கும் மரமுமுள; மக்களும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே; தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு'.
எதையும் மிக அழுத்தமாக, ஆணி அறைந்தாற் போற் சொல்வது 'நல்வழி' இயல்பு.
'நண்டு சிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் – ஒண்தொடீஇ!
போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்'
நாசமுறுகிற காலத்திலேதான் இவை கருவை உண்டாக்கிக் கொள்ளுமாம். அதாவது கருத்தோன்றினாலே தாய் நண்டு முதலியன அழியப் போகின்றன என்று உறுதியாகிறது. இது பிற்காலத்தில் பலரால் எத்தனையோ இடங்களில் எடுத்தாளப்-படுகிறது.
எல்லாச் சமயத்தவர்க்கும் உடன்பாடான பொதுக்கருத்து எது என்பதைச் சொல்லித்தான் நல்வழி தொடங்குகிறது.
'புண்ணியம் ஆம்; பாவம் போம்!'
எனவே, எச்சமயத்தோர் சொல்லும் 'தீது ஒழிய நன்மை செயல்!' என்பதேயாம்.
'போன பிறப்பில் - போன நாட்களில் - செய்த அவையே மண்ணில் பிறந்தார்க்குச் சேமித்து வைத்த பொருளாகும்!' இதனையே அன்று இடார்க்கு இன்று வெறும் பானை பொங்குமோ மேல்?' என்றும் வினாவெழுப்பிக் கேட்கின்றார். புண்ணியத்தை அறத்தை- நன்மையைச் சேமித்து வைத்துக் கொள்ளச் சொல்கிறார்.
'ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு..'
சிலருக்கு இதமாய்ச் சொன்னால் சென்று சேராது; நன்கு உறைக்கும் படி அடித்துச் சொல்லவேண்டும். நல்வழிப் பாடல்கள் அறத்தை அறைந்து, நம்மை நல்வழியில் பிடர்பிடித்து உந்துபவை!
'தாம்தாம் செய்தவினைதாமே அனுபவிப்பர்'
'உள்ள தொழிய, ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா'
என வினைப் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டுமென்ற விதியை நல்வழி அடிக்கடி நினைவூட்டுகிறது.
முன்னைய திருக்குறளும் பிற அற நூல்களும் சொல்லிய அறங்களையே சொன்னாலும், அதை எளியமுறையில் இது சொல்கிறது. பாமர மக்களும் கேட்டு அறிந்து மனத்தில் பதிவித்துச் சொல்லிச் சொல்லிப் பழகுமாறமைந்தவை ஒளவை வாக்குகள்!
அதனால்தான் ஒளவை வாக்கு தெய்வவாக்கு' என்றனர் மக்கள்! இங்ஙனம் நீதி நூல்களில் மட்டுமல்லாமல், ஒளவையார் அவ்வப்போது தனிப்பாடல்களாகப் பாடியன என்று காணப் படுவனவும் சிறந்த நீதியுரைக்கும் வெண்பாக்களாகக் காணப் படுகின்றன. அவற்றை ஒளவையார் வரலாறு கூறும் நூல்களிலும் தனிப்பாடல் திரட்டிலும் படித்து மகிழலாம்.
நீதிவெண்பாக்கள்
உலகில் தலையாய சிலர் பூவாமலே காய்க்கும் பலாப்போல வெளியே சொல்லாமலே நன்மை செய்வர். சிலர் பூத்துக் காய்க்கும் மாமரத்தைப் போலச் சொல்லிவிட்டுப்பிறகு சொல்லியவாறு உதவி செய்வர். கடையாயவரோ பூத்தும் காய்க்காத பாதிரி மரத்தைப்
போலச் சொல்லிவிட்டுப் பிறகு செய்யாமலே விட்டுவிடுவர்.
'சொல்லாம லேபெரியர் சொல்லிச் சிறியர்செய்வர்
சொல்லியும் செய்யார் கயவரே - நல்ல
குலாமாலை வேற்கண்ணாய்! கூறுவமை நாடின்
பலாமாவைப் பாதிரியைப்பார்"
சில பண்புகளும் கல்வியும் தனித்திறன்களும் எவ்வாற மைகின்றன என்பதை ஒரு வெண்பா தெளிவாக விளக்குகிறது.
'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்..'
யாருக்கும் யாரும் இளைத்தவரல்லர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறனுண்டு. யாரும் நாம் இதில் வல்லவரல்லவே' எனச் சோர்வடைய வேண்டியதில்லை. நமக்கு எது கைவரும் துறை எனக் கண்டுபிடிக்க வேண்டும். ஊற்றுள்ள இடத்தைக் கண்டு பிடித்து விட்டால், பிறகு தண்ணீருக்குக் குறைவே இல்லை. பலர் ஊற்றிருக்குமிடம் தெரியாமல்தான் ஏழையாய் இருக்கிறார்கள்.
'வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது'
எளிய பேச்சுநடைத் தமிழில், மரபு வழுவாமல் கவிபாட முதன் முதலில் கற்றுத் தந்தவர் ஒளவையேயாவார். கற்றோரவையில் பேசுதல் எளிதன்று.
'காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி'
யார் யாரை எவ்விடத்தில் புகழ்தல் வேண்டும்? வேலைக் காரனை வேலை முடிவில்தான் பாராட்ட வேண்டும். முதலிலேயே பாராட்டத் தொடங்கிவிட்டால் வேலை பழுதாய்விடும். இது அனு பவம். பிள்ளைகளை நெஞ்சினுள் மட்டுமே பாராட்ட வேண்டும். வெளிப்படச் சொன்னால் தலைக்குமேல் ஏறிவிடுவர். மேலும் அவர்கள் முன்னேற்றமும் தடைப்படும்.
'நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்,
ஆசானை எவ்விடத்தும் அப்படியே, - வாச
மனையாளைப் பஞ்சணையில், மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலைமுடி வில்"
எதற்கு அல்லது எவர்க்கு எது கடினம் என்பதை ஒரு பாட்டு அழகாகச் சொல்கிறது. பிள்ளைத் தமிழில் அம்புலிப் பருவம் பாடுவது, புலியைக் கண்டது போல் அச்சந்தருவதாகும். உலாப் பிரபந்தத்தில் பெதும்பைப் பருவம் பாடுவது கடினம். ஆசுகவி வண்ணம் பாடுவது கடினம். வெண்பாப் பாடுவது புலவர் எல்லோர்க்கும் புலிபோல்வதாம்.
'காசினியில் பிள்ளைக் கவிக்கு அம் புலிபுலியாம்,
பேசும் உலாவில் பெதும்பை புலி-ஆசு
வலவர்க்கு வண்ணம் புலியாம்மற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பாப் புலி.
அறம், பொருள், இன்பம், வீடு நான்கும் வர ஒளவை ஒரு பாடல் புனைந்துள்ளார். அதில் காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என வருவது பலரது நெஞ்சையும் ஈர்க்கும் தொடராகும். அதுபோல் தமிழக நாடுகளின் தனிச்சிறப்பைக் கூறும் பாடல் ஒன்று அனைவராலும் அடிக்கடி எடுத்தாளப்படுவதாகும்.
'வேழ முடைத்து மலைநாடு, மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்துத் தெண்ணீர் வயல்தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து'
ஒருவன் மனைவி இறந்தபின் வாழ நேர்ந்தால், அவனுக்கு எப்பயனுமின்றி எல்லாச் சுகமும் போய்விடுமாம். கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்' என்றார் இளங்கோவடிகள். ஒளவையார் 'மனைவியை இழந்தான் மாண் - பயன் அனைத்தையும் இழப்பான்' என்று கூறுகிறார்.
'தாயோடு அறுசுவைபோம்; தந்தையொடு கல்விபோம்;
சேயோடு தான் பெற்ற செல்வம் போம் - ஆயவாழ்வு
உற்றாருடன் போம்; உடன்பிறப்பால் தோள்வலி போம்;
பொற்றாலி யோடெவையும் போம்!'
வாழ்க்கைக் கடலில் மூழ்கி முக்குளித்து எடுத்த, பட்டறிவு முத்துக்களாக இவை விளங்குவதால், மக்கள் ஒளவையாரைத்தங்கள் பாவலராகவே மதித்துப் போற்றுவாராயினர். இத்தகைய பாடல்கள் பலவாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில், முதன் முதலாக - முதன்மையுற மக்களுடன் பழகி, கூழுக்கும் பாடி, எளியவருடன் கூடியுறைந்த ஒளவையார் இன்றும் புலவர்களைவிட, பொது மக்களிடம்தான் கூடுதலாக வலம் வருகிறார். தமிழையும் இலக்கியத்தையும் பொது மக்களிடம் ஊடுருவுமாறு கொண்டு சென்ற மிகச் சில கவிஞர்களில் ஒளவையாரே முன்னோடியாவார் தேசக்கவி சி. சுப்பிரமணிய பாரதியாருக்கு ஒளவையார் மீது அளவற்ற பற்றும் பாசமும் ஏற்பட்டதற்கு இவ்வுணர்வுகளே காரணமாகும்.
--------------
4. ஒளவைக் கதைகள்
சங்க ஒளவையும் நீதிநூல் ஒளவையும் பெற்ற பெரும்புகழால், தமிழகத்தில் கற்றவர் கல்லாதார் அனைவரிடத்திலும் ஒளவை பற்றிய சுவையான கதைகள் பல வழங்கலாயின. தனிப்பாடல் திரட்டு', தனிச்செய்யுட் சிந்தாமணி', தமிழ் நாவலர் சரிதை', விநோதரசமஞ்சரி', புலவர் புராணம்', சதக நூல்கள் ஆகிய வற்றிலும், ஒளவையார் சரித்திரம்', 'பன்னிருபுலவர் சரித்திரம்', 'பாவலர் சரித்திர தீபகம்' போலும் பழைய வரலாற்று நூல்களிலும் ஒளவைக்கதைகள் பலவற்றை அறிகிறோம்.
நெல்லிக்கனி பெற்றது; முருகப்பெருமானிடம் சுட்டபழம் சுடாத பழம் பற்றிக் கேட்டது; கூழைப்பலாத் தழைக்கப்பாடியது; கொண்டானை ஆட்டிப் படைத்தவளை வசைப்பாட்டுப் புனைந்து திட்டியது எனவும் பல்வேறு நிகழ்ச்சிப் பின்னணியில் பாடியன எனவும் இவ்வாறு மக்கள் வாய்மொழியில் வழங்கிய கதைகள் எண்ணற்றனவாகும். இவற்றுட் சிலவே ஏட்டில் எழுதப் பட்டு வந்துள்ளனவெனினும், வாய்மொழிக்கேயுரிய மாற்றங்கள், திரிபு கள் கொண்டு இக்கதைகள் பல பாட வேறுபாடுகளுடன் காணப் படுகின்றன. எனவே, மூல உண்மை யாதென அறிதல் கடினமாகும்; உண்மையே அன்று என மறுப்பது அதைவிடக் கடினமாகும்!
அவ்வப்போது நிகழ்ந்த சில உண்மைகளைச் சுற்றிப் புனையப் பட்ட கட்டுக்கதைகளிவை என்பது தெற்றெனப் புலனாகும். எனினும் சுவைமிகுந்த கதைகளாதலின், அனைவர் மனத்தையும் ஈர்த்து, பசுமரத்தாணிபோற் பதிந்து அறிவையும் அனுபவத்தையும் பெருக்கி வருகின்றன.
சில பாடல்கள் சுவையுடனிருந்தமையின், அவற்றுக்கான பின்புலம் பிறகு புனையப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன. ஒளவை பாடாமல், பிறர்பாடி ஒளவை மேல் ஏற்றியுரைக்கப்பட்டன எனக் கருதுமாறும் சிலவுள. எனினும் இவற்றுள் தேர்ந்தெடுத்த சில கதைகளும் பாடல்களும் பயன்படுமாறமைந்த பட்டறிவுடையவை; அறிவுக்கூர்மை மிக்கவை; அனுபவ முதிர்ச்சியுடையவை. இவை, சொற்சாதுரியம் காட்டும் இலக்கியச் சுவையுடையன. அரிச்சுவடி படிக்கும் சிறார் முதல் அகவை முதிர்ந்த பெரியோர் வரை இக்கதைகளைச் சொல்லிச் சொல்லி இன்புறுதல் அதனாலேயாம்.
இவற்றுட் சில சங்ககால வேந்தர்களையும், வள்ளல்களையும் தொடர்பு படுத்துவன. வேறுசில இடைக்காலக் குறுநிலத் தலைவர்கள், நாயன்மார்களோடு தொடர்புபடுத்திப் புனையப் பட்டன. ஏழை எளிய மக்களுடன் தொடர்புறுத்திப் புனையப் பட்டவையும் பல கதைகள் உள.
இங்ஙனம் பல்வேறு காலங்களோடும் தொடர்புடைய கதைகளாக இருப்பதால், காலந்தோறும் ஒளவையார்கள் பலர் வாழ்ந்து வந்துள்ளனர் எனவும் அவர்தம் கதைகள் எல்லாம் இங்ஙனம் இணைத்துக் கூறப்படுகின்றன போலும் என்றும் எண்ண இடமேற்படுகிறது.
'அபிதான சிந்தாமணி' தந்த ஆ. சிங்காரவேலு முதலியார், 'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர்' பற்றி எழுதிய வி.கனகசபைப் பிள்ளை போல்வார் ஔவையார் ஒருவரே எனக் கொண்டனர்.
நூற்றாண்டு வரிசையில் தமிழ் இலக்கிய வரலாறு படைத்த மு. அருணாசலம் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் ஆறு ஒளவையார்கள் பற்றி விளக்குகின்றார்.
சங்க கால ஒளவை, இடைக்கால நீதிநூல் ஒளவை என ஒளவையார் இருவரே என்பது பலரது கருத்தாகும்.
சங்ககால ஒளவை பற்றிச்சங்கப்பாடல்களின் வழித் தெளிவாக அறிகிறோம்.
நீதிநூல்கள் பாடிய இடைக்கால ஒளவையும் சோழப் பேரரசுக் காலத்தில், மிகுபுகழ்பெற்று வாழ்ந்துள்ளார். அவர் பாடிய நீதி நூல்கள் தவிர, தனிப்பாடல்கள் பலவும் தரத்தாலும் அமைப்பாலும் அவர் பாடியனவாகவே தோற்றுகின்றன. அவரது மிகப்பெரும்புகழ் காரணமாகவும் இடைக்காலச் சூழல் காரணமாகவும் அவரைப்பற்றி, முன்னைய ஒளவையையும் இணைத்துப் பல கற்பனைக் கதைகள் தோன்றலாயின. இவ்விடைக்கால ஒளவையார் பாடாத நூல்களும் உதிரிப்பாடல்களும் சிற்சில அவர் மேல் ஏற்றியுரைக்கப்பட்டன.
திவாகரம் குறிப்பிடும் ஒளவையார்
திவாகர முனிவர் அம்பர் நகர்க்கு அரசனாகிய சேந்தன் வேண்டுகோளால் செய்தது 'திவாகர நிகண்டு'. அதில் மூன்றாம் விலங்கின் பெயர்த் தொகுதி இறுதியில்,
'அவ்வை பாடிய அம்பர் கிழவன்
தேன்தார்ச் சேந்தன் தெரிசொல் திவாகரத்துள்....'
என வருகிறது. காலத்தால் முற்பட்ட நிகண்டு இது. இதன் காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு என்பர். இவரைப் பற்றி வேறு குறிப்புக் கிடைக்கவில்லை. சேந்தனைப் பாடியதாகத் திவாகர முனிவர் குறிப்பதால், இவர் சமணராய் இருக்கவும் வாய்ப்புண்டு.
நச்சினார்க்கினியர் குறிப்பிடும் ஒளவையார்
திருவாவினன்குடி பற்றிய திருமுருகாற்றுப்படைப் பகுதிக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் கீழ்வருமாறு குறிப்பிடக் காண்கிறோம் :
"இனிச் சித்தன் வாழ்வு என்று சொல்லுகின்றவூர் முற்காலத்து ஆவி நன்குடி என்று பெயர் பெற்றதென்றுமாம். அது,
நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன் வாழ்வு
இல்லந் தொறும் மூன்று எரியுடைத்து - நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்
என்று ஒளவையார் கூறியதனாலுணர்க. சித்தன் என்பது பிள்ளை யாருக்குத் திருநாமம்."
இதில், 'நல்லம்பர்' எனக் குறிக்கப்பட்டது, திவாகரம் கூறும் சேந்தனது அம்பர்தானா என ஆராய்தல் வேண்டும். நச்சினார்க்கினியர் பேராசிரியருக்கும் பிற்பட்டவர். 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினர் என்பர். இவர் நீதி நூல்கள் பாடிய ஒளவையாராக இருக்கவும் வாய்ப்புண்டு.
அசதிக்கோவை ஒளவையார்
கொங்குநாட்டில் ஐவேலி என்ற ஊரைத் தலைமையாகக் கொண்டு ஆண்ட அசதி' என்ற ஆயர்குலத் தலைமகனைப் பற்றிப் பாடியது என்பர். இந்நூலில் சில பாடல்கள் கிடைக்கின்றன. பாடல்கள் இலக்கிய நயத்துடன் தரமாகக் காணப்படுகின்றன.
சிலர் இந்நூல் தோன்றிய வரலாற்றைக் கதையாகவும் புனைந்து கூறியுள்ளனர். ஒரு சமயம் காட்டுவழியே பசியோடு போய்க் கொண்டிருந்த ஒளவைக்கு, ஆட்டிடையன் ஒருவன் தன் கஞ்சியைக் கொடுத்து, அவர் பசியைப் போக்கித் தான் பட்டினி கிடந்தானாம். அவன் மீது நன்றியும் பரிவும் கொண்ட ஒளவையார், 'உன் ஊரென்ன, பேரென்ன?' என வினவியபொழுது, அவன் அசதியாக இருக்கிறது' என்றானாம். (அசதி - மறதி). இப்படியும் ஓர் அசடன் உண்டா என வியந்து, ஒளவையார் அவன் மீது அசதிக் கோவை பாடினாராம். இது புனை கதையே என்பதில் ஐயமில்லை. ஒளவை பற்றிக்கதை புனைவதில் மக்களுக்கு இருந்த ஆர்வம் புலனாகிறது.
'ஆய்ப்பாடி ஆயர்தம் ஐவேல் அசதி அணிவரையில்
கோப்பாம் இவள்எழிற் கொங்கைக்குத் தோற்(று) இபக் கோடிரண்டும்
சீப்பாய் சிணுக்கரியாய் சிமிழாய்ச்சின்ன மோதிரமாய்
காப்பாய், சதுரங்க மாய்ப்பல்லக்காகிக் கடைப்பட்டவே.'
தலைவியின் மார்பகங்களுக்குத் தோற்றுப்போன யானைத் தந்தம் இரண்டும் (இபக் கோடு இரண்டும் ) சீப்பாகவும், சிணுக் கெடுப்பதாகவும், சிமிழாகவும், சின்ன மோதிரமாகவும், கைக்காப் பாகவும், சதுரங்கப் பலகையாகவும், பல்லக்காகவும் ஆகிக் கடைப் பட்டுப் போயினவாம் பாடல் பிற்காலத்தது என்பதையே காட்டுகிறது.
'அற்றாரைத் தாங்கிய ஐவேல் அசதி அணிவரைமேல்,
முற்றா முகிழ்முலை எவ்வாறு சென்றனள்? முத்தமிழ் நூல்
கற்றார்ப் பிரிவும் கல் லாதவர் ஈட்டமும்கைப் பொருள்கள்
அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே'
மிக அழகான ஓட்டமுள்ள பாடல்கள் இவை. சிலவே கிடைக்கப் பெறுகின்றன. "அசதிக் கோவை மிகவும் சிறப்பான இலக்கிய நயம் பொருந்திய நூல் என்பதில் ஐயமில்லை . அவ்வை யாருடைய பெரும் புலமைக்குச் சான்றாகவே இந்நூல் உளது" என்பார் மு. அருணாசலம்.[1]
-----
[1]. மு. நூல், ப. 511.
ஞானக் குறள் ஒளவையார்
ஔவைக்குறள்' என்றும் ஞானக்குறள்' என்றும் வழங்கும் 310 குறட்பாக்களால் ஆன மெய்ப்பொருள் யோகம் ஞானம் போன்றவற்றைப் பாடிய சிறுநூலொன்றுளது. இதனைப் பாடியவர் சித்தர்கள் மரபைப் பின்பற்றியவராகக் காணப்படுகிறார்.
வினாயகரகவல்
சேரமான் பெருமாளும் சுந்தரரும் கைலாயம் செல்லும் போது ஒளவையாரையும் அழைத்தனராம். அவர் அப்போது வினாயகர் பூசை செய்து கொண்டிருந்ததால், அதை விரைந்து முடிக்க முயலவே, வினாயகர் பதறாதோ நிதானமாய்ப் பூசைசெய்! அவ்விருவர்க்கும் முன்னதாகவே உன்னைக் கைலாயம் சேர்க்கிறேன்' என்றாராம். அதன்படி வினாயகரகவல் பாடி வணங்கிய ஒளவையை, வினாயகப் பெருமான் முன்னதாகக் கைலாயம் சேர்த்தார் என்பது கதை. வினாயகரகவலையும் ஞானக்குறளையும் பாடியவர் ஒரே ஒளவையார்தான் எனவும் கருதுகின்றனர்.
பந்தனந்தாதியும் ஒளவையாரும்
காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த வணிகனாகிய பந்தன்மீது பாடப் பட்டது பந்தனந்தாதி. பந்தன் என்ற வணிகன் நாகலோகம் சென்று நாகராசனிடம் மேலே போர்த்துக் கொண்டால் என்றும் இளமைதரும் பொற்படாம் ஒன்றையும் உண்டால் நெடுங்காலம் வாழவைக்கும் நெல்லிக்கனி ஒன்றையும் பெற்று வந்தான். நெல்லிக்கனியில் பாதியைக் தன் வேந்தனுக்குத் தந்து, மீதமிருந்ததை ஒளவைக்குத் தந்தானாம். பொற்படாத்தையும் ஒளவைக்குப் போர்த்தினானாம். அவனது ஆர்வத்தையும் கொடைக் குணத்தையும் பாராட்டி ஒளவையார் நூறு வெண்பாக்களை அந்தாதியாகப் பாடினார் என்று கூறப்படுகிறது. இது வேறு ஒருவர் பாடி ஒளவை பாடியதாகக் கதை புனையப்பட்ட ஒன்றே என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
கிடைக்கப்பெறாத நூல்கள்
'கல்வியொழுக்கம்', 'நன்னூற்கோவை', 'அருந்தமிழ்மாலை', 'தரிசனப்பத்து', 'நான்மணி மாலை', 'பிடக நிகண்டு' முதலிய நூல்களையும் ஒளவை எழுதியன என்று குறிப்புக்கள் ஆங்காங்குக் காணப்படினும் இவை அனைத்தும் இன்று முற்றிலும் கிடைக்கப் பெறவில்லை.
'கல்வியொழுக்கம்' என்ற நூலைப்பற்றிச் செந்தமிழ் இதழில் ஒரு சிறு குறிப்பு வெளிவந்ததாம். "இது மொழிக்கு முதலாம் எழுத்துக்களின் அடைவே நாற்சீரடியான் வருவது. 'ஈட்டிய பொருளின் எழுத்தே உடைமை'. 'சிறுமையில் கல்வி சிலையில் எழுத்தே" இவ்வாறு ஓரிரு உதாரணமும் காட்டினும் இந்நூல் இன்று கிடைக்க-வில்லை![2]
---
[2] மு. அருணாசலம். மு. நூல், ப.488
சுவைமிகுந்த கதைகளும் நயம் நிறைந்த பாடல்களும்
ஒளவையார் பற்றிய செவிவழிக் கதைகள் பல வழங்கி வருவதாக முன்னர்க் கூறினோமல்லவா? அவற்றுள் சிறப்புடைய கதைகள் சிலவற்றை, அச்சூழலில் ஒளவை பாடிய அருந்தமிழ்ப் பாடல்களுடன் காண்போம்.
வரப்புயர்...
குலோத்துங்க சோழன் முடிசூடிய போது ஒளவை வரப்புயர...' என்று வாழ்த்தி அமர்ந்தாராம். அவையோர் ஒன்றும் விளங்காமல் விழிக்கவே ஒளவை தொடர்ந்து, தம் வாழ்த்தைக் கூறி முடித்தாராம்.
'வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயரும்!
உழவு, தொழில் இவற்றின் இன்றியமையாமையை ஆள் வோர்க்கு எவ்வளவு நுட்பமாக ஒளவையார் உணர்த்துகிறார்?
குழந்தைகள் மனத்தில் இது பதிந்தால், நாடு உயருமென்பதற்கு ஐயம் உண்டோ ? அந்தாதியாக அமையுமிது, வாய்மொழி இலக்கியப் பண்புடையது. ஒரு முறை கேட்டார்க்கும் மனத்தை விட்டகலாது.
செம்பொருள் அங்கதம்
நேரே வெளிப்படையாக வசைபாடுவது செம்பொருள் அங்கதம் எனப்படும். தொல்காப்பியத்தில், செய்யுளியல் உரையில் இதை விளக்குமிடத்துப் பேராசிரியர், ஏழிற் கோவை அவ்வை முனிந்து பாடியது' எனச் சுட்டிக்கூறிக் கீழ்வரும் பாடலை எடுத்துக் காட்டுகிறார். (தொல். பொருள். 437)
'இருள்தீர் மணிவிளக்கத்து ஏழிலார் கோவே
குருடேயுமன்றுநின் குற்றம் - மருள்தேயும்
பாட்டும் உரையும் பயிலாதனவிரண்டு
ஓட்டைச் செவியும் உள.'
பல்குன்றக் கோட்டம் என்ற ஏழிற்குன்றம் சென்றிருந்தபோது, அம்மலைக்குரிய நன்னன் இவரது அருமை அறியாது பாரா முகமாயிருக்க, அதனைப் பொறுக்கலாற்றாது இம்மெல்லியற் புலவர் முனிந்து பாடியது இது என்பர்.
பேராசிரியர் மேலே கண்ட பாடலையடுத்துக் கீழ்வரும் பாடலையும் எடுத்துக்காட்டுகின்றார், செம்பொருள் அங்கதத்திற்கு. ஆனால், பாடியவர் பெயரைக் குறித்தாரிலர். தமிழ் நாவலர் சரிதை இதனையும் ஒளவை பாடல் என்றே குறிப்பிடுகிறது.
'எம் இகழ் வோரவர் தம் இகழ் வோரே
எம் இகழாதவர் தம் இகழாரே
தம்புகழ் இகழ்வோர் எம்புகழ் இகழ்வோர்
பாரி ஓரி நள்ளி எழினி
ஆஅய் பேகன் பெருந்தோள் மலையனென்று
எழுவருள் ஒருவனும் அல்லை ; அதனால்
நின்னை நோவது எவனோ?
அட்டார்க்கு உதவாக் கட்டி போல
நீயும் உளையே நின்அன்னோர்க்கே
யானும் உளனே தீம்பாலோர்க்கே
குருகினும் வெளியோய் தேஎத்துப்
பருகுபால் அன்னஎன் சொல்லுகுத் தேனே'
இதிலிடம் பெறும் கட்டி என்பானைப் பரணர் அகநானூற்றில் குறித்தலால், இப்பாட்டும் சங்க காலத்தது ஆகலாம் என்றும், காணாமல் போன புறநானூற்றுப் பாடல்களில் இதுவும் ஒன்றாகலாம் என்றும், மு. அருணாசலம் கருதுகிறார்[3]. இப்பாடலும் 'எழுவருள் ஒருவனுமல்லை ' என்று பாடியதனால், முற்கூறிய நன்னனையே ஒளவை பாடியது போலும்', என்று எஸ். அனவரதநாயகம் பிள்ளைகருதுகின்றார் [4].
----
[3]. முந்து நூல், பக். 450 - 451.
[4]. முந்துநூல், பக். 77.
அங்கவை சங்கவை கதை
இவ்விருவரும் பாரியின் மகளிர் என்றும் இவர்களை மணம் முடிப்பதற்காக ஒளவை அழைத்துச் சென்று மலையரசனுக்கு மணம் முடித்தார் என்றும் கூறப்படுவது கற்பனையேயாகும். பாரி மகளிரைக் கபிலர் அழைத்துச் சென்று மணம் முடிக்க முயன்றதாகப் புறநானூறு கூறுகிறது.
இடைக்காலத்தில் பெண்ணையாற்றங்கரையில் திருக்கோவ லூர் அருகே பாரிசாலன் என்ற மன்னனின் பெண்களாகப் பிறந்து வளர்ந்த இருவரே அங்கவை, சங்கவை என்றும் இவர்கள் தந்தையை இழந்து பெண்ணை ஆற்றங்கரையில் குடிசை ஒன்றில் வாழ்ந்தன ரென்றும் இவர்களுக்கு ஒளவை மணம் செய்துவைத்தார் என்றும் இக்கதையை மாற்றியும் கூறியுள்ளனர்.
ஒருநாள் ஒளவை மழையில் நனைந்து, குளிரில் நடுங்கி, குடிசைக்கு வரவே இப்பாரிமகளிர் தங்கள் நீலச்சிற்றாடையை ஒளவைக்குக் கொடுத்தனர். கேழ்வரகுக்களியும் கீரைக்கறியும் சமைத்துப் போட்டனர். இதனால் ஒளவை மனம் மகிழ்ந்து அவர்கள் தந்த ஆடையையும் உணவையும் சிறப்பித்துப் பாடினார்.
'பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் - சேரமான்
வாராய் என அழைத்த வாய்மையும் இம்மூன்றும்
நீலச்சிற்றாடைக்கு நேர்'
மன்னர்கள் செய்த உபசாரங்கள் எல்லாம் இந்த நீலச் சிற்றாடைக்கு நிகர் என்கிறார் ஒளவையார். காலமறிந்து செய்ததால் இச்சிறிய உதவி பேருதவியாயிற்று. பாரி பரிசில் கொடுத்தனுப்பி விட்டு, அவனே பிறகு ஆள்வைத்து அப்பரிசிலைப் பறித்துவரச் செய்வானாம். புலவரை மீட்டும் தன்னிடம் வந்து தங்கவைக்கும் தந்திரம் அது. காரி களைக்கொட்டைக் கொடுத்து வேலை செய்யச் சொல்லி, அதன் பிறகே பரிசளிப்பானாம். சேரமான் ஒளவை அரண்மனைக்குள் வருவதறிந்ததும், எழுந்து போய்விடுவானாம். தனக்கு ஒளவையை வரவேற்கத் தகுதி இல்லை என்று கருதிய அவனது எளிமையே காரணமாம். இவை எல்லாம் இச்சிறிய மகளிர் தந்த நீலச்சிற்றாடைக்கு நிகராகும் எனத் தம்மைக் குளிரினின்றும் காப்பாற்றிய மகளிரைப் பாராட்டுகிறார் ஒளவையார். மேலும் அவர்கள் தந்த கீரை உணவை அவர் பாராட்டும் பாங்கும், அவரைப் பலமடங்கு உயர்த்துக் காட்டுகிறது. சங்க ஒளவை நாஞ்சில் வள்ளுவனிடம் அடகுணவுக்குச் சிறிது அரிசி கேட்ட வரலாறு நினைவுக்கு வருகிறது.
'வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த - பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செறிந்தகை யார்'
பின்னர் அம்மகளிர் இருவருக்கும் திருமணம் முடிக்க மலையரசன் தெய்வீகனிடம் கூற, அவனும் இசைகின்றான். வினாயகக் கடவுளை அழைத்து எல்லோருக்கும் கண்ணால் ஓலை கடிதின் எழுத வேண்டுகிறார். மூவேந்தர்க்கும் பதினெட்டாம் நாள் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு வருமாறு அழைப்புப் பாடல்கள் அனுப்பப்படுகின்றன. இதற்காகத் திருக்கோலூரில் பொன்மாரி பெய்யும்படியும் பெண்ணையாற்றில் பாலும் நெய்யும் பெருகி வருமாறும் பாடி அவ்வாறே வரச்செய்கிறார். மழை பொன்னாகவும் பருத்தி ஆடையாகவும் வயல் அரிசியாகவும் தரும் ஊரே திருக் கோவலூர் என்று பாடி அவ்வாறே நிகழச் செய்கிறார் ஒளவையார். திருமணத்திற்கு வந்த மூவேந்தர்களும், காய்ந்த பனைத்துண்டம் ஒன்றைக்காட்டி, அதைத் தவிர்க்கப் பாடமுடியுமா என வினவ, உடனே ஒரு பாட்டுப்பாட அத்துண்டம் தவிர்த்துப் பனைமரமாகிப் பனம்பழம் தந்ததாம்.
'திங்கள் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக்கு அறுகிட வந்துநின்றார்மணப் பந்தலிலே
சங்கொக்க வெண்குருத்து ஈன்றுபச் சோலை சலசலத்து
நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழம்தர வேண்டும் பனந்துண்டமே'
வாக்குப் பலிக்கும் வரகவியாக ஒளவை இடைக்கால மக்களால் நம்பப் பெற்றிருக்கிறார். அவரால் சில அற்புத நிகழ்ச்சிகள் இவ்வாறு நிகழ்த்தப்பட்டுள்ளன. அவை செவிவழிக் கதைகளாக வழங்குகின்றன.
அதுசமயம் சேரமானிடம் அப்பெண்களுக்காக ஆடு ஒன்று கேட்க, அவன் பொன்னாலான ஆடு ஒன்றையே தந்தானாம்.
'சிரப்பாய் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்பாடு யான் கேட்கப் பொன்ஆடு ஒன்றீந்தான்
இரப்பவர் என் பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவர் தங்கொடையின் சீர்'
பின்னர் மணமக்களை இன்றுபோல் என்றுமிரும்' என்று வாழ்த்தியதாகக் கதை முடிகிறது. இக்கதையில் முற்காலப் பிற்கால நிகழ்ச்சிகள் இணைவதும், நூலுக்கு நூல் கதை சற்று வேறுபாடாகக் கூறப்படுவதும் இவற்றைப் பொய்யென்று தள்ளவும் முடியாமல் உண்மையென்று கொள்ளவும் முடியாமல் செய்துவிடுகின்றன. இவை யெல்லாம் ஒளவை பாமர மக்களிடம் பெற்றிருந்த பெரும் புகழைக் காட்டுவன. இவை சில உண்மை நிகழ்வுகளைச் சுற்றிக் காலந்தோறும் கட்டப்பட்ட கதைகளின் வளர்ச்சிகளாய்த் தோற்று கின்றன.
கூழைப்பலாத்தழைக்கப் பாடிய கதை
ஒரு குறவன் தான் அருமையாய் வளர்த்த பலா மரத்தைப் போற்றிக்காக்குமாறு சொல்லிவிட்டு அயலூர் சென்றான். அவனுக்கு இருமனைவியர்; இளையாளிடம் அவனுக்கு மோகம் அதிகம். அச் செருக்கால் அவள், மூத்தாள் மேல் பழிபோட எண்ணி, பலாமரத்தை அரைகுறையாய் வெட்டிப் போட்டாள். மூத்தாள் தன்மேல் பழிவருமே என அஞ்சிக் கொண்டிருந்தாள். அது சமயம் அவ் வழியாக வந்த ஒளவை நடந்ததைக் கேள்விப்பட்டு, மூத்தாள் மேல் இரக்கப்பட்டுக் கூழைப்பலா தழைக்க வேண்டுமென்று ஒரு வெண்பாப் பாடினாள்.
'கூரிய வாளால் குறைத்திட்ட கூன்பலா
ஓரிதழாய், கன்றாய், உயர்மரமாய்ச்- சீரியதோர்
வண்டு போல் கொட்டையாய் வண்காயாய்த் தின்பழமாய்ப்
பண்டு போல் நிற்கப் பலா.'
இதைக் கண்டு மகிழ்ந்த குறத்தி, ஒளவையை அன்புடன் உபசரித்து, ஒரு கந்தையில் தினையரிசியை முடிந்து கொடுத்து வழி யனுப்பிவைத்தாள்.
ஒளவை நெடுந்தூரம் நடந்து சோழமன்னன் வாயிலை அடைந்தாள். அவன் எங்ஙனம் வந்தீர்? ' என வினவவே, தாம் நடந்தே வந்த கதையை ஒளவை கூறினாள்.
'கால் நொந்தே நொந்தேன் கடுகி வழிநடந்தேன்
யான்வந்த தூரம் எளிதன்று - கூனன்
கருந்தேனுக்கு அண்ணாந்த காவிரிசூழ் நாடா!
இருந்தேனுக்கு எங்கே இடம்?'
என்று ஒளவை விடையிறுத்தார். அது சமயம் ஒளவை கை யிலிருந்த தினை முடிச்சைப்பார்த்து, 'இது என்ன?' என்று அரசர் வினவினார். அதற்கு அவள் தன் எளிமை தோன்றக்கவி பாடினாள்.
'கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும்
மூழக்கு உழக்குத் தினைதந்தாள்- சோழகேள்
உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒருகவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம்'
(மூழக்கு மூவுழக்கு. மூவுழக்கும் உழக்கும் சேர ஒரு சிறு படி)
இதைக் கேட்ட மன்னன் மகிழ்ந்து மதிப்புயர்ந்த பட்டாடை ஒன்றைப் பரிசளித்தான். ஒளவையார் பட்டாடையைப் பரிசளித்த மன்னன், முற்கூறிய தினை முடிச்சோடு ஒப்பிட்டுத் தன் கொடை பெரிதெனத் தற்பெருமை கொண்டு விடலாகாதென நினைத்தார். உடனேதம் பாடலின் பெருமையை மன்னனுக்கு எடுத்துரைத்தார்.
'நூற்றுப்பத்தாயிரம் பொன் பெறினும் நூற்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும் - மாற்றலரைப்
பொன்றப்பொரு தடக்கைப் போர்வேல் அகளங்கா
என்றும் கிழியாதென் பாட்டு..'
கம்பரும் ஒளவையாரும்
தாம் வாழ்ந்த காலத்தில் மிகுந்த பெருமிதத்தோடு வாழ்ந்தவர் கம்பர் என்று தெரிகிறது. அவருக்கு மன்னனும் மக்களும் பொன்னும் பொருளும் தந்து போற்றினர்.
ஒளவை 'உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை' எனப் பாடி, ஏழை எளியோருடன் இணைந்து வாழ்ந்தவர். சங்க கால ஒளவையும் மூவேந்தர்களை அதிகம் அண்டாமல், அதியமான் அஞ்சியின் அவைப்புலவராகவே வாழ்நாள் எல்லாம் திகழ்ந்தார். நாஞ்சில் வள்ளுவனிடம் 'சிறிது அரிசி' தான் கேட்கிறார். இச் சோழர் கால ஒளவையாரும் தாசி தந்த கஞ்சியினையும் இளம்மகளிர் தந்த கீரைக்கறியுணவையும் குறத்தி தந்த கூழையும் உண்டு மகிழ்ந்து பாடியுள்ளார். மன்னர்கள் தந்த பரிசில்களைக் கூட அத்துணை மதித்தாரிலர்.
இதனால் மக்கள் கம்பரையும் ஒளவையையும் பற்றிப் பல கதைகள் புனைந்து வழங்கி வரலாயினர்.
'காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி
ஆசுக்குக்காளமுகில் ஆவனே - தேசுபெறும்
ஊழுக்குக்கூத்தன் உவக்கப் புகழேந்தி
கூழுக்கிங்கு ஒளவை எனக்கூறு'
மக்களிடையே இருந்த மனப்பான்மையில் இத்தனிப்பாடல் உருப்பெற்றுளது. ஒளவை கூழுக்குப் பாடி' என்பது பழமொழி.
கம்பரிடம் 'சிலம்பி' என்ற தாசி தன்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுமாறு கேட்டபோது, கம்பர் ஒரு பாட்டுக்கு ஆயிரம் பொன் கேட்டாராம். அவள் தன்னிடமிருந்த எல்லாப் பொருளையும் சேர்த்து, ஐந்நூறு பொன்னே தேறியதால் அதைக் கொடுத்தாள். கம்பர்,
'தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே'
என்று, அரைப் பாட்டு மட்டும் பாடி, அதை அவளது வீட்டுச் சுவரில் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாராம். ஒரு நாள் அந்த வழியாக வந்த ஒளவை, அயர்ச்சியுடன் அத்தாசி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார். அப்போது, தாசியானவள் ஒளவை மீது இரக்கப்பட்டு, உள்ளே அழைத்துத் தனக்கு வைத்திருந்த கூழைக் கொடுத்து உதவினாள். களைப்புத் தீர்ந்த ஒளவை, சுவர் மீது காணப்பட்ட அரைப்பாடலைக் கண்டு, விவரமறிந்து உடனே அப்பாடலை நிரப்பினாராம்.
'- பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு .'
உடனே தாசி வீடு பொன்னாலும் பொருளாலும் நிறைந்ததாம் இதனால் கம்பருக்கும் ஒளவைக்கும் புலமைப் போட்டி வளர்ந்தது.
ஒருமுறை வயலோரமாகப் போய்க்கொண்டிருந்த ஒளவை யைப் பார்த்து, கம்பர் குறும்பாக,
'ஒருகாலில் நாலிலைப் பந்தலடி'
என்றார். ஒளவை விடை தெரியாது வெட்கப்படட்டும் என்றே, கம்பர் அடி போட்டு விவாதத்தைத் தொடங்கினார். ஒளவையோ கணமும் தாமதியாமல்,
ஆரையடா சொன்னாய் அது என்றார். ஆரைக் கீரைதான் ஒரு தண்டில் நான்கே இலைகளுடன் நீர்நிலை ஓரங்களில் நிற்கும். ஆரையடா' என்பது இருபொருள்தருதல் காணலாம். ஒளவை வெறுமனே அதைச் சொல்லிவிடவில்லை. ஒரு வசைப்பாட்டுப் பாடியே சொன்னார்.
'எட்டேகால் லட்சணமே எமனேறும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே!
ஆரையடா சொன்னாய் அது.
அவலட்சணமே, எருமையே, கழுதையே, குட்டிச் சுவரே, குரங்கே இதைவிட வேறு என்னவசை வேண்டும்?
ஆடம்பரம் செய்பவர்களையே உலகம் மதிக்கும். எளிய பழக்கம், தோற்றமுடையவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. கம்பர் பொன்னுக்குப் பாடுபவராதலால் அவரைச் சிலர்மிகப் பெரிய கவி எனக் கொண்டாடினர். அதைப் பார்த்த ஒளவையார் கவிதை வேம்பாக, நஞ்சாக இருந்தாலும் பட்டொளி வீசும் பாவலர்களையே கொண்டாடும் உலகை நையாண்டி செய்து ஒரு பாடல் பாடினார்.
'விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம் பேனும் நன்று'
கம்பர் காலம் கி.பி. 9 - ஆம் நூற்றாண்டு என்பர். ஒளவை அவருக்குப் பிற்பட்டவராதல் வேண்டும். ஒட்டக்கூத்தர், புகழேந்தி இருவரும் பனிரண்டாம் நூற்றாண்டினர். கம்பர் பனிரண்டாம் நூற்றாண்டினரே என்ற கருத்தும் உண்டு. நீதிநூல் பாடிய சோழர்கால ஒளவையும் இந்நூற்றாண்டினரே என்பாரும் உளர். எங்ஙன மாயினும் இம்மூவரிடையேயும் நடந்தனவாக, புலமைப் போட்டிகள், பொறாமைப் பூசல்கள் பற்றிய சுவையான கதைகள் பல வழங்கிவருகின்றன. இவையெல்லாம் இடைக்காலப் புலவர் களிடையே காணப்பட்ட பொதுவான புலமைச் செருக்கு, போட்டி மனப்பான்மை ஆகியவற்றையே புலப்படுத்துகின்றன.
அன்பில்லாள் இட்ட அமுது
ஒளவைக்கதைகளில் இது ஒரு புகழ்பெற்ற கதை.
ஒருமுறை ஒளவையார் வழிநடந்த வருத்தத்துடன் ஒரு குடியானவன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார். அவருக்குக் கடும்பசி. அக்குடியானவன் மிகவும் சாது; பெண்டாட்டிக்கு அஞ்சி நடுங்குகிறவன். அவன் மனைவியோ கொடிய குணமுடையவள்; எச்சிற்கையால் காக்காய் விரட்டாதவள்.
அதுசமயம் எதிர்பாராது குடியானவன் வீட்டைவிட்டு வெளியேறுவதைப் பார்த்த ஒளவையார், தம் பசிக்குச் சிறிது கூழ்கிடைக்குமா என்று கேட்டார். அவனுக்குக் கிழவியின் மீது இரக்கமுண்டாயிற்று. அவன் உள்ளே சென்று, தன் மனைவியின் அருகமர்ந்து, இன்சொல் பேசி, தலைவாரிக்கொண்டிருந்த அவளுக்குப் பேன் பார்த்து, ஈருருவி, அச்சத்தோடு கூடிய தயக்கத்துடன் ஒரு பழுத்த கிழவி பசியோடு வந்திருக்கிறாள் என்றாள். என்றதுதான் தாமதம், உன் பவுசுக்கு விருந்து ஒரு கேடா' என்று கூவிப் பேய்போல் ஆடி, பழைய முறத்தால் அவனைச் சாடி ஓட ஓட விரட்டினாள். இதனைப் பார்த்த ஒளவை அவன் மீது இரக்கம் கொண்டார்.
'இருந்து முகந்திருத்தி ஈரொடு போன் வாங்கி
விருந்து வந்த தென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்.'
பாடலைக் கேட்டதும் அந்த அடங்காப் பிடாரியும் சற்றே அயர்ந்து போனாள். அதனால் ஒருவாறு உடன்பட்டு, அன்னமிட ஒளவையை அழைத்தாள் அவள்.
'காணக்கண் கூசுதே, கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது'
எனப் பாடி, அவ்வுணவை உண்ணத் தயங்கினார். அக் குடியான வனைப் பார்த்து, இங்ஙனம் வாழ்வதைவிட நெருப்பிலே விழலாம், துறவு மேற்கொள்ளலாம் என்று இடித்துரைத்தார்.
'சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு
கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே- தொண்டா!
செருப்படிதான் செல்லாஉன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்'
'பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம்-சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளே யாமாயின்
கூறாமல் சன்யாசம் கொள்!'
அவனை இவ்வாறு சன்னியாசியாகிப் போ என்று திட்டிய பின், அவளைப் படைத்த பிரமனையும் கடிந்து பாடுகின்றார்.
'அற்றதலை போக அறாததலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ? - வற்றும்
மரம் அனை யாட்குஇந்த மகனை வகுத்த
பிரமனையான் காணப் பெறின்'
உணர்ச்சிகளைக் கொட்டும்படி சொற்கள் மிக எளிமையாய் வந்தமையக் காண்கின்றோம்.
இன்றும் குடும்பங்களில் மனவேறுபாடுகள் வரும்போது 'கூறாமல் சன்யாசங் கொள்வது பற்றிய நகையாடல்கள் இடம்பெறக் காணலாம்.
நான்கு கோடிக்குப் பாடல்கள்
ஒளவையின் தனிப்பாடல்களில் மிகுபுகழ் பெற்றவை அவர் பாடிய நான்கு கோடிப் பாடல்கள் ஆகும்!
ஒருமுறை சோழ மன்னன் தன் அவைக்களப் புலவர்களை அழைத்து, நாளை விடிவதற்குள் நான்கு கோடிக்குப் பாடல்கள் பாடிவர வேண்டும்' என்று கட்டளை-யிட்டான். புலவர்கள் என்ன செய்வதென்று அறியாது மயங்கி, இரவெல்லாம் உறங்காதிருந்தனர். மறுநாட்காலையில் அங்கு வந்த ஒளவையார் புலவர்களைத் தேற்றி, அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு சென்று, மன்னன் முன் நான்கு பொருள் பொதிந்த கோடிப் பாடல்களைப் பாடினார்.
'மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்'
'உண்ணீர் உண்ணீரென்று உபசாரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்'
'கோடி கொடுத்தும் குடிப்பிறவார் தம்மோடு
கூடாமை கோடி பெறும்'
'கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்'
இச்சாதுரியம் மிக்க பாடல்களில், 'கோடிப் பொருள் குறைவற நிரம்பியிருப்பதைக் கண்ட மன்னன் ஒளவையைப் பாராட்டிப் பரிசளித்ததோடு, புலவர்கள் அனைவருக்கும் பரிசளித்து மகிழ் வித்தான்.
பொற்குவியலிட்ட ஊஞ்சல் அற்றுவிழப் பாடியது
பாண்டிய மன்னன் தன் அரண்மனை முற்றத்தில் பொற் சங்கிலி களால் ஊஞ்சலமைத்து, அதில் பொற்குவியலை இட்டு வைத்து இதன் நான்கு சங்கிலியும் அற்றுவிழுமாறு யாரேனும் பாடுவரேல், அவருக்குப் பொற்குவியலையும் தந்து பெருஞ்சிறப்பும் செய்வோம் என ஒரு போட்டியை அமைத்தான். யாரும் அவ்வாறு பாடி அற்று விழச் செய்ய முடியவில்லை . ஒளவை காரண காரியத் தோடு பாடி, நான்கு பாடல்களால் நான்கு சங்கிலிகளும் அற்றுவிழச் செய்தார்.
'ஆர்த்தசபை நூற்றொருவர்; ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த்
தண்தா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயின் உண்டென்றறு'
'தண்டாமல் ஈவது தாளாண்மை; தண்டி
அடுத்தக்கால் ஈவது வண்மை ; - அடுத்தடுத்துப்
பின்சென்றால் ஈவது காற்கூலி; பின்சென்றும்
ஈயான் எச்சம் போல் அறு'
'உள்ள வழக்கிருக்க, ஊரார் பொதுவிருக்க;
தள்ளி வழக்கதனைத் தான் பேசி- எள்ளளவும்
கைக்கூலி தான்வாங்கும் காலறுவான் தன்கிளையும்
எச்சம் அறும் என்றால் அறு'
'வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடி
வழக்கை அழிவழக்குச் செய்தோன்-வழக்கிழந்தோன்
சுற்றமும் தானும் தொடர்ந்தழுத கண்ணீரால்
எச்சம் அறும் என்றால் அறு'
உலகில் அழிவழக்குப் பேசியும், தொடர்ந்து வலியவரைச் கூடி எளியவர்க்கு எதிராக வழக்காடி அவர்களை வாட்டியும் துன்புறுத்துவார் பலராவர். அவர்கள் மீது கடுஞ்சீற்றம் கொண்டு, அவர்களின் கிளையும் எச்சமும் அற்றொழியப்பாடுகிறார், அறநெறி ஒளவையார்.
இவ்வாறு ஒவ்வொரு வெண்பாப் பாடி முடித்ததும் ஒவ்வொரு சங்கிலியாய் அற்றுவிழ, ஊஞ்சல் கீழே விழுந்ததாம். மன்னன் அப்பொற் குவியலைக் கொடுத்து, ஒளவைக்குப் பெரும் சிறப்புச் செய்தான். ஒளவை அப் பொற்குவியலுக்கு ஆசைப்பட்டு, இயலாமல் நின்ற புலவர்கட்கு அதைப் பங்கிட்டுத் தந்தார்.
பேயை அடித்துத் துரத்திய பேய்ப்பாட்டு
நடந்துவந்த களைப்புத்தீர ஒளவை ஓருரில், இங்கு படுக்க இடமுளதோ?' என வினவினார். 'ஊர்ப்புறத்தே சாவடி ஒன்றுளது. ஆனால் அங்கு படுக்க வருபவர்களை அங்குள்ள பேய் அடித்துக் கொன்றுவிடும் என்றனர். ஒளவையார் பேயைப் பேய் அடிக்குமா?' என்று கூறிவிட்டு , அச்சாவடிக்கே சென்று படுத்துறங்கினார். வெளியே போயிருந்த பெண் பேய் முதற் சாமத்திறுதியில் வந்து எற்றெற் றெற்று என்று முழங்கி அச்சுறுத்தியது. ஒளவை சினந்து பாடவே, அது பின்வாங்கி ஓடியது.
'வெண்பா இருகாலிற் கல்லானை; வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று'
இதைக் கேட்டு ஓடியபேய் பிறகு இரண்டு, மூன்று, நான்காம் சாமங்களிலும் மீண்டும் மீண்டும் வந்து அச்சுறுத்தவே, ஒளவையும் ஒவ்வொரு சாமத்திலும் ஒரு வெண்பாப் பாடிப் பேயை விரட்டியடித்தார்.
'கருங்குளவி, சூரைத்தூறு ஈச்சங்கனி போல்
வருந்தினர்க்கு ஒன்று ஈயாதான் வாழ்க்கை - அரும்பகலே
இச்சித் திருந்த பொருள் தாயத்தார் கொள்வரே
எற்றோமற் றெற்றோமற் றெற்று'
'வான முளதால் மழையுளதால் மண்ணுலகில்
தான முளதால் தயையுளதால் -ஆனபொழுது
எய்த்தோம் இளைத்தோம் என்று ஏமாந்திருப்பாரை
ஏற்றோமற் றெற்றோமற் றெற்று'
'எண்ணாயிரத்தாண்டு நீரில் கிடந்தாலும்
உள்ளீரம் பற்றாக் கிடையே போல் - பெண்ணாவார்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற் சாராரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று'
இங்ஙனம் நான்காம் சாமத்தும் பாடவே, அஞ்சியோடிய பேய் ஒளவையைச் சரண் புகுந்தது. ஒளவை உன் வரலாறென்ன' என்று வினவவே , அப்பெண் பேய் நடந்ததைக் கூறியது. ஓர் அரசிளங் குமரன் அவ்வூர் வழியே வந்தவன், கன்னி மாடத்தில் நின்ற அரச குமரியைக் கண்டான். அரசகுமாரி தன் காதோலையில் நகத்தால், ஊர்ப் புறத்தே சாவடியில் நள்ளிரவில் சந்திக்க வருக' என்று எழுதிக் கீழே போட்டாள். எழுதப் படிக்கத் தெரியாத அவன், அதனை ஒரு குட்டரோகியிடம் காட்ட, அவன் அரசகுமாரனை ஊரைவிட்டு ஓடச் சொல்லி எழுதியிருப்பதாகக் கூறி ஏமாற்றி, நள்ளிரவில் வந்த அரச குமாரியுடன் தான் கூடினான். உண்மையறிந்த அரசகுமாரி அருவருப் பெய்தி பேயாயினாள். இதனைக் கேட்ட ஒளவை இரக்கங் கொண்டு, அரசகுமாரியும் அவ்வாறே தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அரசகுமாரனும் மீட்டும் உறையூரில் பிறந்து, ஒருவரை ஒருவர் காதலித்து மணமுடித்து வாழ அருள்செய்து அங்கிருந்து போயினர்.
இவற்றில், வெண்பா கற்பதற்கும் நினைவில் வைக்கவும், மிக எளிதானதென்ற குறிப்புக் காணப்படுகிறது. தம் நீதி நூல்களில் இரண்டினையும் தனிப்பாடல்களையும் ஒளவை வெண்பாவில் பாடியதன் காரணம் விளங்குகிறது.
ஒளவையும் முருகக் கடவுளும்
ஒருநாள் ஒளவை காட்டுவழியே போய்க் கொண்டிருந்தார். அப்போது முருகக் கடவுள் ஒளவைப் பெருமாட்டியுடன் சிறு பிள்ளையாய்ச் சிறுபோது விளையாடவும் ஒளவையின் பெருமையை உலகறியச் செய்யவும் வேண்டி ஒரு மாடு மேய்ப் பானைப் போல வந்து, வழியிடை நின்ற நாவல் மரத்திலேறி யிருந்தார். ஒளவை அருகே வந்ததும், அப்பையனைப் பார்த்து சில நாவல்பழங்களை உதிர்த்துப் போடுமாறு வேண்டினார். அவன் பாட்டி சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று கேட்டான். பாட்டி அவன் சொல்வதறியாது திகைத்தாள். பிறகு சுடாத பழமே போடு' என்றாள். அவன் கிளையை அசைத்துப் பழங்கள் உதிரச் செய்தான். பாட்டி கனிந்த பழங்களை எடுத்து, அவற்றில் ஒட்டியிருந்த மண்ணைப் போக்கித் தின்பதற்காக வாயால் ஊதினாள். இதைக் கண்ட பையன், பாட்டி! சுடாத பழம் கேட்ட நீ சுட்ட பழத்தைத் தின்னப் போகிறாயே. சுட்டுவிடப் போகிறது. வாயால் நன்றாக ஊதிவிட்டுச் சாப்பிடு!" என்று கிண்டல் செய்தான். பிறகுதான் ஒளவைக்கே அவன் கேட்டதன் பொருள் விளங்கிற்று. உடனே தம் அறியாமைக்கு இரங்கி அவர் ஒரு பாட்டுப் பாடினார்.
'கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவும் துஞ்சாதென் கண்!'
இதைக் கேட்ட முருகப்பெருமான் தன் வடிவிற் காட்சியளித்து, ஒளவைக்கு அருள் செய்ததுடன், 'ஒளவையே! உலகம் நினைவிற்கொள்ளும்படியான சில நீதிகளைப் பாடியருளுங்கள்" என வேண்டினார்.
ஒளவை சிறிது தயங்கிநின்றாள். முருகப் பெருமான் குறிப்புணர்ந்து "ஒளவையே! உலகில் கொடியது எது? இனியது எது? பெரியது எது? அரியது எது? இந் நான்கையும் தெளிவாகச் சொல்லுங்கள்" என்று விளக்கமாகக் கேட்டார். ஒளவையும் நான்கு பாடல் பாடிஇந்நான்கு கருத்துக்களையும் உலகோர் மனங்கொள்ளுமாறு நன்கு விளக்கினார்.
கொடியது
'கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே!'
இனியது
'இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே!'
பெரியது
'பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியில் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்
இறைவரோ தொண்டருள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!'
அரியது
'அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிட ராதல் அரிது
மானிட ராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்து காலையும்
தானமும் தவமும் தாம் செயல் அரிது
தானமும் தவமும் தாம் செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந்திடுமே!'
இவற்றைக் கேட்டு முருகன் மகிழ்வெய்தி ஒளவையை வாழ்த்தி மறைந்தனர் என்பர். 'தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே', 'அரிது அரிது மானிடராதல் அரிது' என்ற வாசகங்கள் அடிக்கடி கேட்கப்படுவனவாகும். பாடல்களில் ஆடூஉ முன்னிலை, மகடூஉ முன்னிலை என வருவதுண்டு. யாரையேனும் அழைத்துச் சொல்வதுபோல் அவை அமையும். இவையும் வேலவனை அழைத்துச் சொல்வதுபோல் பாடப்பட்ட நீதிப் பாடல்களே. இவற்றின் அருமை பாராட்டிய மக்கள், இங்ஙனமெல்லாம் கதை புனைந்தனராதல் வேண்டும். இப்பாடல்களிலெல்லாம் உள்ள வாய்மொழி இலக்கியப் பாங்கு , இவற்றுக்குச் சுவையையும் வாழ்வையும் நல்குகின்றன எனலாம்.
தகுதியிலாதானைப் பாட மறுத்தது
இதுபோல் ஒளவை பற்றிய கதைகளும் அவர் பாடியன வாகக் கூறப்படும் பாடல்களும் பலவாகும். ஒளவையார் அவ்வப் போது பாடியன என்று கருதத் தகுந்த சில பாடல்களை மட்டும் இங்குக் காண்போம்.
வீரமும் ஈரமும் இல்லா ஒருவன் தன்னைப் புகழ்ந்து பாடு மாறு கேட்ட பொழுது, அவனை இகழ்ந்து பாடியது:
'மூவர் கோவையும் மூவிளங் கோவையும்
பாடிய எந்தம் பனுவல் வாயால்
என்னையும் பாடுக என்றனை
எங்ஙனம் பாடுதும்யாம்
களிறுபடு செங்களம் கண்ணிற் காணீர்
வெளிறுபடு நல்யாழ் விருப்பமாய்க் கேளீர்
இலவ வாய்ச்சியர் இளமுலை புல்லீர்
புலவர் வாய்ச்சொல் புலம்பலுக்கு இரங்கலீர்
ஊடீர் உண்ணீர் கோடீர் கொள்ளீர்
ஓவாக் கானத்து உயர்மரந் தன்னில்
தாவாக் கனியில் தோன்றி னீரே'
(உடீர் ஊடீரானதும் கொடீர் கோடீரானதும் ஓசைக்காக வந்த நீட்டல் விகாரம்)
இல்லை என்பது இனிது
கொடை வேண்டி வருபவர்க்கு நாளை என்பதிலும் பிறகு வருக என்பதிலும் இல்லை என்பதே இனிது.
'வாதக்கோன் நாளையென்றான் மற்றைக்கோன் பின்னையென்றான்
ஏதக்கோன் யாதேனும் இல்லையென்றான் - ஓதக்கேள்
வாதக்கோன் சொல்லதிலும் மற்றைக்கோன் சொல்லதிலும்
ஏதக்கோன் சொல்லே இனிது'
இதற்குத் தத்துவப் பொருள் உரைப்பாருமுண்டு. வாதநாடி அடங்கினால் ஒரு நாளிலும் பித்தநாடி அடங்கினால் ஒரு நாழிகையிலும் சிலோத்தும நாடி அடங்கினால் ஒரு கணப் பொழு திலும் உயிர் நீங்கும் என விளக்குவர்.
கற்றது கைம்மண்ணளவு
கற்றது கைம்மண்ணளவேயாம். அறிதோறு அறியாமை கண்டற்றால்' என்றார் வள்ளுவர். புலமைச் செருக்கை அடக்கும் பாடல் இது.
'கற்றதுகைம் மண்ணளவு கல்லாதது உலகளவென்று
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும்பந் தயங்கூற வேண்டா புலவீர்
எறும்புந்தன் கையால்எண் சாண்!'
ஒளவையின் உலகப்புகழ்
அமெரிக்க நாட்டின் மிச்சிகனில் பிரிமாண்ட் அரசுப் பொது உயர்நிலைப் பள்ளியில், வானியல்துறை ஒன்றுளது. அத்துறை சார்ந்த உலகளாவிய கல்விக்கு, கணினி வழி படிக்க இன்டர் நெட்டிலும் தக்க ஏற்பாடுகள் உள. அப்பள்ளியின் குறிக்கோள் வாசகமாக ஒளவையின் "கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு' என்ற தொடர் தேர்ந்தெடுக்கப்பெற்று விளங்குகிறது. இதைக் கணினி வழியாகவும் அறியலாம். அதன் ஆங்கில ஆக்கம் அங்கு இவ்வாறுளது:
"WHAT WE HAVE LEARNT IS LIKE A HANDFUL OF EARTH;
WHAT WE HAVE YET TO LEARN IS LIKE THE WHOLE WORLD".
- Avvaiyar
அறிவியல் கண்காட்சி தொடர்பான வேறுசில இடங்களிலும் ஒளவையின் இவ்வாசகம் அமெரிக்காவில் காணப்படுகிறது.
சோமன் கொடை வளம்
சோமன் எனும் வள்ளலின் சிறப்பைப் புனைந்துள்ளார்.
'நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையில் காண்மின் - பழகுதமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டில்; சோமன் கொடையருமை
புல்லரிடத் தேயறிமின் போய்'
முல்லானே நல்லான்
முல்லான் எனும் வள்ளலைப் பாடிய போது மானுடப் பண்பையே சித்தரிக்கக் காண்கிறோம்.
'காலையில் ஒன்றாவர் கடும்பகலில் ஒன்றாவர்
மாலையில் ஒன்றாவர் மனிதரெலாம் - சாலவே
முல்லானைப் போல முகமும்அக முமலர்ந்து
நல்லானைக் கண்டறியோம் நாம்.'
கோரைக்கால் ஆழ்வான் கொடை தேய்ந்தவிதம்
கோரைக்கால் என்னும் ஊரிலிருந்த ஆழ்வான் என்பவன் மிகவும் கஞ்சன். எதுவும் ஈயாத அவன் வாயால் பெரிதாகப் பேசுவான். கரி (யானை) என்பான்; அது பரி (குதிரை) ஆகும். பிறகு அது எருமையாகி, காளை மாடாகி, ஒரு முழத் துணியாகத் திரிதிரியாய்ச் சுருங்கி, தேரையின் கால் போலானது; எம் காலும் தேய்ந்து போனது.
'கரியாய்ப் பரியாகிக் கார்எருமை தானாய்
எருதாய் முழப்புடைவை யாகித் - திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை'
பெரிய திருமண விருந்து
பொதுவாகத் திருமண விருந்துகளில், சோறுண்பது கடினமான செயலாகும். ஒரே சமயத்தில் பலரும் முண்டியடித்து ஓடி நெருக்குவது வேடிக்கையாக இருக்கும். அதுவும் பெரிய செல்வர் வீட்டுத் திருமணமென்றால், பலருக்கு உணவு கிடைப்பது அரிதாகும். ஒளவை ஒருமுறை பாண்டிய மன்னனது திருமணத்திற்குப் போய், நெருக்குண்டு சோறுண்ணாமல் தவித்துள்ளார். அதை விளக்கும் பாடல் இது:
'வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக் கேள் - அண்டி
நெருக்குண்டேன்; தள்ளுண்டேன்; நீள்பசியினாலே
சுருக்குண்டேன் சோறுண்டிலேன்.'
உண்டு என்ற துணைவினை இங்கு ஒளவைக்கு நகைச் சுவையாகப் பாட உதவி செய்திருக்கிறது. நெருக்குண்டும் தள்ளுண்டும் சுருக்குண்டும் சோறுண்டிலா அவலம் சிரிப்பை விளைவிக்கிறதல்லவா!
யார்யார் கெட்டுப்போவர்
ஒரு பாடலில் யார் யார் கெட்டுப்போவர் என்று வரிசைப்படுத்திக் கூறுகிறார்:
'நிட்டூரமாக நிதிதேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரவலனும் - முட்டவே
கூசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
வேசியும் கெட்டு விடும்.'
இரவலன் போடப்பட்ட பிச்சையை அது சிறிதாயினும் மெச்சி ஏற்க வேண்டுமே தவிர, வாய்த்துடுக்காகப் பேசக் கூடாதாம். கற்புடையவள் கூச்சப்படும் குணமுடையவளாக இல்லா விட்டாலும் வேசி கூச்சப்படுபவளாக இருந்தாலும் வாழ்வு சிறக்க மாட்டார்களாம்!
திருக்குறள் மதிப்பீடு
'திருவள்ளுவ மாலை' யில் புலவர் பலர் பெயரால், வெண்பா யாப்பில், மிகச் சிறந்த குறட்திறனாய்வுப் பாடல்கள் காணப்படுகின்றன. இடைக்காடனார் மட்டும் குறள் வெண்பாவாலேயே குறளின் பெருமையை விளக்கினார்.
'கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்'
ஒளவையார் இதனைக் கண்டு மனம் மகிழ்ந்து, அக்குறள் வெண்பாவிலேயே ஒரு சொல்லை மட்டும் மாற்றித் தமது பாராட்டுரையை வழங்கினார்.
'அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்'
இவ்வாறு ஒளவையார் பாடியனவாகவும் அவரைப் பற்றிய கதைகளாகவும் வழங்குவன யாவும், ஒளவையார் தமிழ் மக்கள் மனத்தில் பெற்றிருந்த நிலையான இடத்தையே நமக்கு நினைப் பூட்டுகின்றன.
--------------------
பின்னிணைப்பு - ஆத்திசூடி
இளஞ்சிறார் முதல் பெரியோர் வரை பயன்படுவன இவை. தமிழ் அகரவரிசையில் மொழி முதலாம் எழுத்துக்களின் வரிசைப்படி அமைந்ததால், அரிச்சுவடி கற்கும் இளஞ்சிறார்க்கு இது நல்ல துணைநூலுமாகின்றது. பேரறங்களைச் சிறிய தொடர்களால் மிகச் சுருங்கச் சொல்லுமிவை, கற்பார்க்கு நவில் தொறும் புதுப்புதுக் கருத்துக்களைத் தந்து பயன்படுகின்றன.
கடவுள் வாழ்த்து
ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி
ஏத்தித் தொழுவோம், யாமே.
மொழிமுதல் எழுத்துக்கள் நூல்
அ -- அறம் செய விரும்பு
ஆ -- ஆறுவது சினம்
இ -- இயல்வது கரவேல்
ஈ -- ஈவது விலக்கேல்
உ -- உடையது விளம்பேல்
ஊ -- ஊக்கமது கைவிடேல்
எ -- எண், எழுத்து இகழேல்
ஏ -- ஏற்பது இகழ்ச்சி
ஐ -- ஐயம் இட்டு, உண்
ஒ -- ஒப்புரவு ஒழுகு
ஓ -- ஓதுவது ஒழியேல்
ஔ -- [1]ஒளவியம் பேசேல்
ஃ -- [2]அஃகம் சுருக்கேல்
க் -- கண்டு ஒன்று சொல்லேல்
ங் -- ஙப்போல் வளை
ச் -- சனி நீராடு
ஞ் -- ஞயம்பட உரை
(இ)ட் -- இடம்பட வீடு எடேல்
(இ)ண் -- இணக்கம் அறிந்து இணங்கு
த் -- தந்தைதாய் பேண்
ந் -- நன்றி மறவேல்
ப் -- பருவத்தே பயிர் செய்
ம் -- [3]மன்று பறித்து உண்ணேல்
(இ)ய் -- இயல்பு அலாதன செயேல்
(இ)ர் -- அரவம் ஆட்டேல்
(இ)ல் -- இலவம் பஞ்சில் துயில்
வ் -- வஞ்சகம் பேசேல்
(இ)ழ் -- அழகு அலாதன செயேல்
(இ)ள் -- இளமையில் கல்
(இ)ற் -- அறனை மறவேல்
(இ)ன் -- [4]அனந்தல் ஆடேல்
க -- கடிவது மற
கா -- காப்பது விரதம்
கி -- கிழமைப்பட வாழ்
கீ -- கீழ்மை அகற்று
கு -- குணமது கைவிடேல்
கூ -- கூடிப்பிரியேல்
கெ -- கெடுப்பது ஒழி
கே -- கேள்வி முயல்
கை -- கைவினை கரவேல்
கொ -- கொள்ளை விரும்பேல்
கோ -- [5]கோது ஆட்டு ஒழி
ச -- சக்கர நெறி நில்
சா -- சான்றோர் இனத்து இரு
சி -- சித்திரம் பேசேல்
சீ -- சீர்மை மறவேல்
சு -- சுளிக்கச் சொல்லேல்
சூ -- சூது விரும்பேல்
செ -- செய்வன திருந்தச் செய்
சே -- சேர் இடம் அறிந்து, சேர்
சை -- சை எனத் திரியேல்
சொ -- சொல் சோர்வுபடேல்
சோ -- சோம்பித் திரியேல்
த -- தக்கோன் எனத் திரி
த -- தானமது விரும்பு
தி -- திருமாலுக்கு அடிமை செய்
தீ -- தீவினை அகற்று
து -- துன்பத்திற்கு இடம் கொடேல்
தூ -- தூக்கி, வினை செய்
தெ -- தெய்வம் இகழேல்
தே -- தேசத்தோடு ஒத்து வாழ்
தை -- [6]தையல் சொல் கேளேல்
தொ -- தொன்மை மறவேல்
தோ -- தோற்பன தொடரேல்
ந -- நன்மை கடைப்பிடி
நா -- நாடு ஒப்பன செய்
நி -- நிலையில் பிரியேல்
நீ -- நீர் விளையாடேல்
நு -- நுண்மை நுகரேல்
நூ -- நூல் பலகல்
நெ -- நெற்பயிர் விளை
நே -- நேர்பட ஒழுகு
நை -- நைவினை நணுகேல்
நொ -- [7]நொய்ய உரையேல்
நோ -- நோய்க்கு இடம் கொடேல்
ப -- பழிப்பன பகரேல்
பா -- பாம்பொடு பழகேல்
பி -- பிழைபடச் சொல்லேல்
பீ -- பீடு பெற நில்
பு -- புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
பூ -- பூமி திருத்தி உண்
பெ -- பெரியோரைத் துணைக் கொள்
பே -- பேதைமை அகற்று
பை -- [8]பையலோடு இணங்கேல்
பொ -- பொருள்தனைப் போற்றி, வாழ்
போ -- போர்த்தொழில் புரியேல்
ம -- மனம் தடுமாறேல்
மா -- மாற்றானுக்கு இடம் கொடேல்
மி -- மிகைபடச் சொல்லேல்
மீ -- மீதூண் விரும்பேல்
மு -- [9]முனைமுகத்து நில்லேல்
மூ -- மூர்க்கரோடு இணங்கேல்
மெ -- மெல்இல் நல்லாள் தோள் சேர்[10]
மே -- மேன்மக்கள் சொல் கேள்
மை -- [11]மைவிழியார் மனை அகல்
மொ -- மொழிவது அற மொழி
மோ -- மோகத்தை முனி
வ -- வல்லமை பேசேல்
வா -- வாது முன்கூறேல்
வி -- வித்தை விரும்பு
வீ -- வீடு பெற நில்
வு(உ) -- உத்தமனாய் இரு
வூ(ஊ) -- ஊருடன் கூடி, வாழ்
வெ -- வெட்டெனப் பேசேல்
வே -- வேண்டி, வினை செயேல்
வை -- வைகறைத் துயில் எழு
வொ(ஓ) -- ஒன்னாரைத் தேறேல்
வோ (ஓ) -- ஓரம் சொல்லேல்
----
[1]. பொறாமை [2]. தானியம் [3]. நீதிமன்றம்
[4]. உறக்கம் [5]. தீயவிளையாட்டு
[6]. காமத்தால் பெண் வமிச்செல்லாகே. [7]. பிறர் துன்புறுமாறு
[8]. சிற்றினத்தாரொடு [9]. போர்ப்பழக்கம் இல்லாமல் போர்முனையில் நில்லாதே,
[10]. மனைவி, [11]. வேசியர்
---------------
கொன்றை வேந்தன்
கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடி இணை
என்றும் ஏத்தித் தொழுவோம், யாமே.
நூல்
அ -- அன்னையும் பிதாவும் முன் அறிதெய்வம்
ஆ -- ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இ -- இல்லறம் அல்லது நல் அறம் அன்று
ஈ -- ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
உ -- உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
ஊ -- ஊருடன் பகைக்கின், வேருடன் கெடும்
எ -- எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
ஏ -- ஏவா மக்கள் மூவாமருந்து
ஐ -- ஐயம் புகினும், செய்வன செய்
ஒ -- ஒருவனைப் பற்றி, ஓர் அகத்து இரு
ஓ -- ஓதலின் நன்றே, வேதியர்க்கு ஒழுக்கம்
ஒள -- ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
ஃ -- அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
க -- கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை
கா -- காவல்தானே பாவையர்க்கு அழகு
கி -- கிட்டாதாயின் வெட்டென மற
கீ -- கீழோர் ஆயினும், தாழ உரை
கு -- குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லை
கூ -- கூர் அம்பு ஆயினும், வீரியம் பேசேல்
கெ -- கெடுவது செய்யின், விடுவது கருமம்
கே -- கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
கை -- கைப்பொருள்தன்னின், மெய்ப்பொருள் கல்வி
கொ -- கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
கோ -- கோட் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
கௌ -- கௌவை சொல்லின், எவ்வருக்கும் பகை
ச -- சந்ததிக்கு அழகு , [1]வந்தி செய்யாமை
சா -- சான்றோர்' என்கை, ஈன்றோர்க்கு அழகு
சி -- சிவத்தைப் பேணின், தவத்திற்கு அழகு
சீ -- சீரைத் தேடின், ஏரைத் தேடு சுற்றத்திற்கு அழகு
சூ -- சூழ இருத்தல் சூதும் வாதும் வேதனை செய்யும்
செ -- செய்தவம் மறந்தால் [2]கைதவம் ஆளும்
சே -- சேமம் புகினும் , யாமத்து உறங்கு
சை -- [3]சை ஒத்து இருந்தால், ஐயம் இட்டு உண்
சொ -- சொக்கர் என்பவர்[4] அத்தம் பெறுவர்
சோ -- சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
த -- தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தா -- தாயின் சிறந்த ஒரு கோயிலும் இல்லை
தி -- திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தீ -- தீராக்கோபம் போரா முடியும்
து -- துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
தூ -- தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
தெ -- தெய்வம் சீறின் [5]கைதவம் மாளும்
தே -- தேடாது அழிக்கின், பாடாய் முடியும்
தை -- தையும் மாசியும் [6]வை அகத்து உறங்கு
தொ -- தொழுது ஊண் சுவையின், உழுது ஊண் இனிது
தோ -- தோழனோடும் ஏழைமை பேசேல்
ந -- நல் இணக்கம் அல்லது அல்லற்படுத்தும்
நா -- நாடு எங்கும் வாழ, கேடு ஒன்றும் இல்லை
நி -- நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
நீ -- நீர் அகம் பொருந்திய ஊரகத்து இரு
நு -- நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
நூ -- நூல் முறை தெரிந்து, சீலத்து ஒழுகு
நெ -- நெஞ்சை ஒளித்து ஒருவஞ்சகம் இல்லை
நே -- நேரா நோன்பு சீராகாது
நை -- நைபவர் எனினும், நொய்ய உரையேல்
நொ -- நொய்பவர் என்பவர் வெய்யவர் ஆவர்
நோ -- நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை
ப -- பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
பா -- பாலோடு ஆயினும், காலம் அறிந்து உண்
பி -- பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
பீ -- [7]பீரம் பேணி பாரம் தாங்கும்
பு -- புலையும் கொலையும் களவும் தவிர்
பூ -- பூரியோர்க்கு இல்லை , சீரிய ஒழுக்கம்
பெ -- [8]பெற்றோர்க்கு இல்லை, சுற்றமும் சினமும்
பே -- [9]பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
பை -- பையச்சென்றால், வையம் தாங்கும்
பொ -- பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
போ -- போனகம் என்பது தான் உழந்து உண்டல்
ம -- மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
மா -- மாரி அல்லது காரியம் இல்லை
மி -- மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
மீ -- மீகாமன் இல்லாமரக்கலம் ஓடாது
மு -- முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
மூ -- மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்
மெ -- மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
மே -- மேழிச் செல்வம் கோழைப்படாது
மை -- மைவிழியார்தம் மனை அகன்று ஒழுகு
மொ -- [10]மொழிவது மறுக்கின், அழிவது கருமம்
மோ -- மோனம் என்பது ஞானாவரம்பு
வ -- வளவன் ஆயினும் அளவு அறிந்து, அழித்து, உண்
வா -- வானம் சுருங்கின், தானம் சுருங்கும்
வி -- விருந்து இலோர்க்கு இல்லை, பொருந்திய ஒழுக்கம்
வீ -- வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும்
வு(உ) -- உரவோர் என்கை இரவாது இருத்தல்
வூ(ஊ) -- ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
வெ -- வெள்ளைக்கு இல்லை, கள்ளச் சிந்தை
வே -- வேந்தன் சீறின், ஆம் துணை இல்லை
வை -- வையம் தோறும் தெய்வம் தொழு
வொ(ஓ) -- ஒத்த இடத்து நித்திரை கொள்
வோ(ஓ) -- ஓதாதார்க்கு இல்லை, உணர்வொடும் ஒழுக்கம்
-----------
[1]. வந்தி - மலடு. மனைவியை மலடாக்காது கூடி வாழ்தல் வேண்டும்
[2]. இழப்பு, வருத்தம். [3]. சை - பொருள். [4]. செல்வம்
[5]. கைகூடியிருந்த தவம் [6]. வைக்கோல் வேய்ந்த வீடு
[7]. பீர் - தாய்ப்பால் - தாய்ப்பால் பருகி வளர்ந்தவன். [8]. ஞானம் பெற்றவர்க்கு
[9]. அறிந்தும் அறியாதார் போலிருக்கும் மடம் [10]. பெரியோர் கூறும் அறிவுரை
--------------
பின் அட்டை பக்கம் - ஒளவையார்
தமிழ் இலக்கியத்தில் ஒளவையார் என்ற பெயர், மிகு புகழ் பெற்றது. சின்னஞ் சிறியவர் முதல் அகவை முதிர்ந்த பெரியவர்கள் வரை அன்போடும் மதிப்போடும் உச்சரிக்கும் பெயர் ஔவையார். சங்க கால ஔவையார் தன்னிகரில்லாப் பெண்பாற் புலவராய்த் திகழ்ந்தமையால், பின்னால் வந்த புகழ் பெற்ற பெண்பாற் புலவர்கள் பலரும் ஔவையார் என்றே அழைக்கப்பட்டனர்.
இந்நூலில் சங்க கால ஒளவையாரைப் பற்றியும் நீதி நூல் பாடிய தனிப்பாடல் பெரும்புலவராம் இடைக்கால ஒளவையாரைப் பற்றியும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவையான செய்திகள் சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஒளவையார் ஒருவரோ, பலரோ எவ்வாறாயினும் ஒளவைக் கவி மரபு என்பது ஒரு தன்மையாகவே காணப்படுகிறது.
பெருமிதம் மிக்க ஔவைப் பாட்டியின் பெரும் புலமையும் தெளிந்த அறவுரைகளும் இன்றைய வளரும் இளையோர்க்கு அரும் பெறல் அமிழ்தமாகும். ஆத்திசூடி, கொன்றை வேந்தன் இரண்டும் வாழ்க்கைப் பயணம் முழுவதும் பயன்படும் அறவுரைக் கட்டுச்சோறாகும் என்பதால் அவை பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.
'தமிழண்ணல்' என்று பெருமையாக அழைக்கப்படும் இவர் 12.8.1928இல் இன்றைய சிவகங்கை மாவட்ட நெற்குப்பையில் பிறந்தார். இவரது இயற்பெயர் இராம. பெரியகருப்பன். சங்க இலக்கியமரபு பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகத் தமிழ்த்துறைகளில் 41 ஆண்டுகள் ஆசிரியப் பணி ஆற்றியவர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, சிறந்த நூற் பரிசு, திரு.வி.க. விருது பெற்றவர். பல்கலைக் கழக மானியக் குழுவால் தேசியப் பேராசிரியர், சிறப்பு நிலைப் பேராசிரியர் எனச் சிறப்பிக்கப் பெற்றவர்.
-------
This file was last updated on 6 June 2020.
Feel free to send the corrections to the webmaster.