இந்திய இலக்கியச் சிற்பிகள் : உமறுப்புலவர்
எழுதியவர் : சி. நயனார் முகமது
intiya ilakkiyac ciRpikaL : umaRup pulavar
by ci. nayanAr mukamatu
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
இந்திய இலக்கியச் சிற்பிகள் : உமறுப்புலவர்
எழுதியவர் : சி. நயனார் முகமது
Source:
இந்திய இலக்கியச் சிற்பிகள்
உமறுப்புலவர்
சி. நயனார் முகமது
சாகித்திய அக்காதெமி
© சாகித்திய அக்காதெமி, முதல் வெளியீடு 2001
சாகித்திய அக்காதெமி
தலைமை அலுவலகம் : இரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புது தில்லி 110 001.
விற்பனை : ஸ்வாதி ' மந்திர் சாலை, புது தில்லி 110 001;
சி.ஐ.டி. வளாகம், டி.டி.டி.ஐ. அஞ்சல், தரமணி, சென்னை 600 113.
விலை : ரூ.25.00
Umaruppulavar : Monograph in Tamil by C. Nainar Mohammed,
Sahitya Akademi, New Delhi, 2001, Rs.25
ISBN 81-260-0895-4
Printed at: Mani Offset, 112/2, Bells Road, Triplicane, Chennai - 5.
-------------
பொருளடக்கம்
1. உமறுப்புலவரின் காலம்
2. வாழ்க்கை வரலாறு
3. சீறாப்புராணம்
4. விலாதத்துக் காண்டம்
5. நுப்புவத்துக் காண்டம்
6. ஹிஜரத்துக் காண்டம்
உமறுப்புலவரின் பிற நூல்கள்
முடிவுரை
----------------
1. உமறுப்புலவரின் காலம்
உமறுப் புலவரின் சிறப்பை அறிந்து கொள்ள அவர் பிறந்து வாழ்ந்த காலத்தை அறிவது அவசியமாகும். உமறுப்புலவரின் மரபில் வந்த புலவர் ஒருவர் இயற்றிய பாடல் இவர் உறிஜ்ரி 1052 ஷஅபான் மாதம் பிறை 9-இல் பிறந்தார் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. இது கி.பி. 1642 அக்டோபர் மாதம் 25-ஆம் தேதிக்கு நிகரானது என்று டாக்டர் ம.மு. உவைஸ் கணித்துள்ளார். இவர் இறந்தது உறிஜ்ரி 1115 (1703) ஆம் ஆண்டு. இது கொண்டு அவரின் காலத்தை உறிஜ்ரி 1052-1115 எனக்கொள்ளலாம். இது கி. பி. 1642 - 1703க்குச் சமமாகும். ஆதலின் உமறுப்புலவரின் காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் பிற் பகுதி எனலாம்.
இதற்கு இவரின் ஆசிரியர், சமகால வள்ளல், மார்க்கமேதை ஆகியோர் பற்றிய காலக் குறிப்புக்களும் அரண் செய்யக் காணலாம். வள்ளல் சீதக்காதி உமறுப்புலவரைச் சீறாப்புராணம் இயற்றும்படி கேட்டு ஆதரித்து வந்தார் என்பதில் வரலாற்று ஆசிரியர் அனைவரும் உடன் படுகின்றனர். இவ்வள்ளல் வாழ்ந்த காலம் கி.பி. 1650-க்குச் சற்று முந்தியதும் 1713-க்கு சற்று பிந்தியதும் ஆகும் என்று கேப்டன் அமீரலி நிறுவுகிறார். உமறுப்புலவர் மார்க்கமேதை செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் காப்பியம் இயற்றக் கருப்பொருள் கேட்டார் என்பர். இம்மார்க்க மேதை பற்றி உமறுப்புலவர் ஒருபாடலும் இயற்றிக் காப்பியத்தில் சேர்த்துள்ளார். இவரின் காலத்தை இவரின் மாணாக்கர் முகம்மது தீபியின் கவிகொண்டு கி.பி. 17-ஆம் நூற்றாண்டு எனக் கணிப்பர். உமறுப்புலவரின் ஆசிரியர் கடிகைமுத்துப் புலவரும் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர். ஆதலின் உமறுப்புலவரின் காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம்.
இக்காலப்பகுதியில் தமிழ் மொழி பொலிவு குன்றியிருந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் புகுந்து நிலையான இடத்தைப் பெற்றிருந்த வட மொழியுடன் தெலுங்கும் மராத்தியும் உருதும் காலூன்றிக் கொண்டிருந்த காலம். செஞ்சியில் மராட்டியர் ஆட்சி; தஞ்சையிலும் மதுரையிலும் நாயக்கர் ஆட்சிகள். தென்பாண்டிச் சீமையெங்கும் தெலுங்கு நாயக்கப் பாளையக்காரர்கள். போதாக்குறைக்குப் பறங்கியர்கள் தமிழக ஆதிக்கத்திற்குப் போட்டியிட்டுக் கொண்டிருந்தார்கள். பொருள் தரும் குறுநில மன்னர்கள் மீது காமச்சுவை மலிந்த கோவைகளும் உலாக்களும் தூதுகளும் புலவர்கள் பாடிக்-கொண்டிருந்தனர். தமிழன்னை புதியதொரு பேரிலக்கியம் தோன்றாதா என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாள். இச்சூழலில் தான் உமறுப்புலவர் தோன்றிச் செந்தமிழ்க் காப்பியம் இயற்றத் தொடங்கினார்.
--------------
2. வாழ்க்கை வரலாறு
சமயம் வளர்த்த தமிழ்
உயர் தனிச் செம்மொழியாகிய தமிழ் மொழிக்குச் சிறப்புகள் பல உண்டு. தொன்மையானது; சொல்வளம் மிக்கது; இனிமையானது; எளிமையானது; எழுத்து வழக்கும் பேச்சுவழக்கும் கொண்டது; இலக்கிய வளம் சான்றது; இலக்கண நலம் பொருந்தியது. இச்சிறப் புகள் மட்டுமல்லாமல் இங்குள்ள பெருஞ்சமயங்கள் அனைத்தும் வளர்க்கும் பெருமையும் கொண்டது. எனவேதான் "சமயந்தோறும் நின்ற தையள்" என்று போற்றப்படுகிறது.
தலைசிறந்த முஸ்லிம் புலவர்
சைவரும் வைணவரும் பௌத்தரும் கிறிஸ்தவரும் தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியது போல் இஸ்லாமியரும் இன்பத் தமிழுக்கு அரிய தொண்டாற்றி உள்ளனர். 26 இனிய தமிழ்க் காப்பியங்கள் இயற்றியதுடன் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்களும் படைத்துள்ளனர். இவற்றில் தமிழில் உள்ள பா வடிவங்கள், இலக்கிய வடிவங்கள் அவைத்தும் இடம் பெற் றுள்ளன. இவை மட்டுமல்லாமல் கிஸ்ஸா, நாமா, படைப்பபோர், மசாலா, முனாஜாத், நொண்டி நாடகம் முதலிய புதுவகை இலக் கியங்களையும் வழங்கித் தமிழ் மொழிக்கு வலிவும் பொலிவும் சேர்த்துள்ளனர். இவ்வாறு இனிய தமிழ் இலக்கியங்களைப் படைத் துள்ள முஸ்லிம் புலவருள் உமறுப்புலவர் தலைசிறந்தவர்.
அகச்சான்று இல்லை
திருத்தக்க தேவர், சேக்கிழார், கம்பர் போன்று உமறுப்புலவர் இலக்கிய வளம் கொண்ட காப்பியம் இயற்றியுள்ள பெருங் கவிஞராவார். தமிழ்நாட்டுப் புகழ் மிக்க கவிஞர்களுக்குத் தெளிவான வாழ்க்கை வரலாறு இல்லை . ஆனால் வழி வழியாக வழங்கி வரும் செவி வழிச் செய்திகளோ மிகுந்துள்ளன. உமறுப்புலவரும் இதற்கு விலக்கல்லர்.
இப்புலவர் பெருந்தகையின் வாழ்க்கை வரலாறு தெளிவாக வரையப்பட்டிலது. இவர் படைத்தனவாகக் கூறப்படும் நூல்களில் இவரைப்பற்றிய தெளிவான செய்திகள் இல்லை. பெரும்பாலும் பாயிரம் அல்லது கடவுள் வாழ்த்துப்பாடல் பகுதியில் புலவர்கள் தம் தந்தை, ஆதரித்த வள்ளல், நூலுக்குக் கருத்துரை வழங்கிய ஆசிரியர், முதல் நூல், தாம் இயற்றிய நூலின் பெயர், இயற்றிய காலம், அரங்கேற்றிய காலம், அவையடக்கம் முதலியவற்றுடன் தம் பெயரையும் குறிப்பிட்டிருப்பர். காப்பிய முடிவில் முத்திரைப் பாடலும் வாழ்த்துப்பாடலும் இடம் பெற்றிருக்கும். இவற்றிலும் அசிரியரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கும். ஆனால் சிந்தைக் கினிய சீறாவிலோ இவ்வகை வரலாற்றுச் செய்திகள் காணப் படவில்லை . இவர் இயற்றியனவாகக் கூறப்படும் சீதக்காதி திருமண வாழ்த்து, முது மொழிமாலை ஆகிய இலக்கியங்களிலும் இவரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் காணப்படவில்லை. அவர் காலத்துப் புலவர்களோ, அறிஞர்களோ இவரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய செய்திகளைத் தந்தாரல்லர். ஆனால் இவர் காலத்திற்கு ஒரிரு நூற்றாண்டுகளுக்குப் பின் இவரைப்பற்றி வழிவழியாக வழங்கிவரும் செவிவழிச் செய்திகள் பல தோன்றின.
செவிவழிச் செய்திகள்
சீறாப்புராணத்தைச் சரிபார்த்து முதன் முதலில் பதிப்பித்த செய்கப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவர் சீறாப்புராணம் பதிப்பித்த வரலாற்றை விளக்கமாகக் கூறுகிறாரே தவிர செந்தமிழ்ச் சீறாவை இயற்றிய உமறுப்புலவரின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறவில்லை . பல இஸ்லாமிய நூல்களைப் பதிப்பித்துப் புதுவடிவம் தந்துள்ள கண்ணகுமது மக்தூம் முகம்மதுப் புலவர் தாம் மூன்றா வதாகப் பதிப்பித்துள்ள சீறாப்புராணத்தில் "உமறுப்புலவர் பூர்வீகச் சரித்திரச் சுருக்கம்", "சீறாப்புராணம் செய்யப்பட்ட சரித்திரச் சுருக்கம்" என்னும் இருதலைப்புகளில் உமறுப்புலவரின் வாழ்க்கை வரலாற்றையும் சீறாப்புராண இலக்கிய வரலாற்றையும் தந்துள்ளார். பின்னர் வந்த இஸ்லாமிய நூலாசிரியர்கள் பெரும்பாலும் இவற்றைச் சுருக்கியும் பெருக்கியும் சிறிது மாற்றியும் கூறிவரலாயினர். இவற்றுள் ஒன்று வருமாறு :
நாயகம் அவர்களின் காலத்தில் வாழ்ந்து அவர்களின் வாழ்த்துப் பெற்ற கதிஜா-சகுது தம்பதியரின் வழித்தோன்றல் செய்கு பரிதத்தா என்பவர். இவர் கேரளாவிற்கு வந்து நறுமணப்பொருள் வாணிகம் செய்து வந்தார். இவரின் வழி வந்த செய்கு முகம்மது அலியார் எட்டைய புரத்தில் மாப்பிள்ளை நயினார் முகம்மது பிள்ளை என்பவருக்கு உறிஜ்ரி 1052 இல் உமறுப்புலவர் பிறந்தார் என்று ஒரு பழம்பாடல் கூறுகிறது. மாப்பிள்ளை, நயினார், பிள்ளை என்றபவற்றைச் சிறப்புப்பெயர்களாகக் கொண்டால் உமறுப் புலவரின் தந்தையின் பெயர் செய்கு முகம்மது ஆலிம் எனக் கொள்ளலாம், ஆர்ர சிறப்பு விகுதி பெற்றுச் செய்கு முகம்மது அலியார் என்றாகி அது செய்கு முதலியார் என்று மருவிற்று என்பர்.
எட்டையாபுரத்திற்கு அருகில் உள்ள நாகலாபுரத்தில் குடியேறி நறுமணப்பொருள் உற்பத்தி செய்து குறுநில மன்னர்களுக்கு விற்று வந்தார். இவரின் சிறந்த நறுமணப்பொருளை விரும்பி வாங்கிய எட்டையாபுரம் மன்னர் வேங்கடேச பூபதி கல்வியிலும் மெய்ஞானத்திலும் ஒழுக்கத்திலும் உயர்ந்து விளங்கிய செய்கு முகம்மதலியாரை எட்டையாபுரத்தில் தங்கும்படிச் செய்தார். அறிவுச் சான்ற இவ்வத்தர் வணிகருக்கு அரசவையில் பெரும் மதிப்பிருந்தது. அவைக்களப்புலவர் செந்தமிழ்ச் செல்வர் கடிகை முத்துப்புலவரின் நட்பும் கிடைத்தது. இக்காலத்தில் செய்கு முகம்மதலியாருக்கு உமறுபிறந்தார். விளையும் பயிர் முளையிலே என்னும் பழமொழிக் கேற்ப உமறுப்புலவர் பின்னால் தமிழ் மேதையாகத் திகழ்வதற்குரிய அறிகுறிகள் காணப்பட்டன. அறிவுக் கூர்மையும் எதனையும் துருவி ஆராயும் பார்வையும் கொண்ட கருவில் திருவுடைய உமறைக் கண்ட அவைக்களபுலவர் அவருக்குப் பாடம் சொல்லித்தர விழைந்து கேட்டார். செய்கு முகம்மதலியாரும் இசைவளிக்க இளைஞர் உமறு தமிழ்மேதை கடிகை முத்துப்புலவரிடம் தமிழ்ப் பாடங்கேட்டு வந்தார். கற்பன கற்று, கேட்பன கேட்டுப் புலமையிற் சிறந்து விளங்கினார்.
வாலை வாருதியால் வந்த சிறப்பு
இக்காலகட்டத்தில் தான் வாலை வாருதி என்னும் வடபுலப்புலவர் எட்டையாபுரம் வந்தார். பன்மொழிப் புலமையுடன் மந்திர தந்திரங்களில் வல்லமையும் பெற்றவர். பல அரசவைகளுக்குச் சென்று, அங்கிருந்த புலவர்களை வாதுக்கிழுத்து, வென்று ஆணவங்கொண்டவர். அவர் எட்டப்பர் அவைக்கும் வந்து அவைக்களப்புலவரை வாதுக்கிழுத்தார். மன்னரும் வாதுக்கு நாள் குறித்து அவைக்களப் புலவர் கடிகை முத்துப்புலவர் வந்திடுவார் என்று அறிவித்தார். ஆனால் அவைக்களப் புலவர் மந்திர தந்திரங்களில் வல்லவரான வாலைவாருதியுடன் வாது செய்ய விரும்பவில்லை. காய்ச்சலால் உடல் நலமும் குன்றியிருந்தார். வாதுக்குரிய நாளும் வந்தது. மன்னரும் பெருமக்களும் திரண்டனர். வாலைவாருதியும் வந்தார். ஆனால் அவைக்களப்புலவர் வரவில்லை. நோயுற்ற கடிகை முத்துப்புலவர் தயங்கினார். இதனையறிந்த மாணவர் உமறு ஆசிரியரிடம் உங்கள் சார்பாக நான் சென்று இறையருளால் வென்றுவருகிறேன் என்றார். உமறுவின் புலமைத் துடிப்பையும் அருள் திறத்தையும் அறிந்த அவைக்களப்-புலவர் தம் மாணவரை வாழ்த்தித் தமது அணிமணிகளை அணிவித்து அனுப்பினார். அரசர் அனுப்பிய பல்லக்கில் "ஏறிச்சென்று உடல் நலக்குறைவால் என் ஆசிரியர் வரவில்லை . அவர் சார்பில் வாதிட நான் வந்துள்ளேன்' என்றார். அரசரின் ஆணைப்படி வாது தொடங்கியது; பெரும் புலவர்களை யெல்லாம் வென்று ஆணவம் கொண்ட வாலைவாருதி தம் கடகத்தைச் சுழற்றினார், "வாலைவாருதி யென்றறியாயோ பிள்ளாய்" என்ற ஒலி எழுந்தது. இறையருளில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட உமறு எழுத்தாணியைத் தரையில் எறிந்தார், அது
சமரதுர கத்துங்க மனருஞ்ச பா சென்று
சரிசமாசனமீதிலே
அமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லும்
அமுதகவி ராஜனானே
திமிரபகை வரைவெண்ற பருதியெனு மெம் தெட்டத்
தீரனணி வாயில் வித்வான்
உமறுகுமு றிடிலண்ட முகடும்ப டீரென்னும்
உள்ளச்சம் வையும் பிள்ளாய்
என்று முழங்கியது. உமறுவின் அருட்திறத்தையும் கவிதையாற்றலையும் உள்ள உறுதியையும் உணர்ந்த வாலைவாருதி அஞ்சித் தோல்வியை ஒப்புக் கொண்டு தான் பிறரிடம் பெற்றுவந்த பரிசு களையும் பொருள்களையும் வழங்கினார். உமறுவின் திறங்கண்டு மகிழ்ந்த எட்டையாபுர மன்னரும் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். கடிகை முத்துப்புலவரின் விருப்பப்படி மானங்காத்த உமறை அவைக்களப்புலவராக நியமித்து மகிழ்ந்தார்.
காப்பியக் கவிஞரானார்
இச் செய்தி தமிழகம் எங்கும் பரவியது. எட்டையப்பரின் அவைக்கு வந்த வள்ளல் சீதக்காதி (செய்கு அப்துல் காதிர்) புலவரின் புலமைச் சிறப்பைக் கண்டு மகிழ்ந்து போற்றித் தம் ஊருக்கு வரும்படி அழைத்துத் தம் நெடுநாள் கனவாகிய நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வண்ணத் தமிழ்க் காப்பியமாக வடித்துத் தரும்படிக் கேட்டுக் கொண்டார். கரும்பு தின்னக் கூலியா? உமறுப்புலவரும் ஆர்வத்துடன் இசைந்தார். கீழக்கரையில் தங்கிக் காப்பியம் இயற்றும் முயற்சியில் ஈடுபட்டார். வள்ளல் சீதக்காதி காப்பியத்திற்குரிய கருப்பொருளைப் பெற்று வரும் பொருட்டு உமறுப்புலவரை மார்க்கமேதையும் அரபிக்கவிஞரும் ஆகிய செய்கு சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் அழைத்துச் சென்றார். தாடியின்றிக் கிருதா மீசையுடன் அணிமணிகள் பூண்டு, பஞ்சகச்சம் கட்டிக் காட்சியளித்த உமறுப்புலவரின் புறத்தோற்றம் கண்டு வெகுண்டு அப்பா உரைதர மறுத்துவிட்டார். இதனால் வருந்திய உமறுப்புலவர் பள்ளிவாயிலுக்குச் சென்று தொழுதுவிட்டு, "முகம்மது நபியை என்று காண்பேனோ?" என்று முடியும் 88 விருத்தங்களைப் [$] பாடிக் கண்ணயர்ந்து விட்டார். நபிகள் நாயகம் அவர்கள் புலவர் கனவில் வந்து "சதக்கிடம் செல்க; உரைதருவார், பாடுக" என்று கூறியதுடன், சதக்கத்துல்லா அப்பாவின் கனவிலும் தோன்றிப் 'புறத்தோற்றம் கண்டு மறுத்தீர், உமறின் அகம் சிறந்தது, அவருக்கு உரைதருக", என்று பணித்தார். காலைத் தொழுகைக்குப் பின்னர் சென்ற உமறை அப்பா அன்புடன் வரவேற்று உரைதர முற்பட்டார். வேலைப்பளு மிகுந்திருந்ததால் பறங்கிப் பேட் டையில் வாழ்ந்த தமது மாணாக்கர் கண்ணாட்டி வாப்பா என்னும் காலி முகம்மது தீபியிடம் உரை பெற ஏற்பாடு செய்தார். அவரும் உரைதந்து உதவினார். உமறுப்புலவரை உயிர்போல மதித்துப் போற்றிய வள்ளல் சீதக்காதி இறந்துவிட்டார். புரவல இழந்து தவித்த புலவரை அபுல்காசீம் என்னும் பறங்கிப்பேட்டைச் செல்வர் வரவேற்று ஆதரித்தார்; சீறாக்காப்பியம் சீராக வளர்ந்து வந்தது.
----
[$] இப்பாடல்களைத்திரட்டி முதுமொழிமாலை என்ற பெயரில் பதிப்பித்து
நூலாக வெளியிட்டுள்ளனர்.
அரங்கேற்றம்
அபுல் காசீம் ஆதரவில் வளர்ந்து வந்த சீறாப்புராணத்தின் சிறப்பு மக்கள் மத்தியில் பரவியது. செல்வர்கள் இக்காப்பிய அரங்கேற்றத்தைத் தாம் முன்னின்று செய்ய வேண்டும் என்று கேட்டனர். பெரும்பொருள் தருவதாகவும் கூறினார். இதனால் உமறிடம் ஒரு சபலம் ஏற்பட்டது. செல்வர் தரும் பெரும் பொருள் பெற்று, அறம் செய்து செல்வம் தேய்ந்த அபுல்காசீமுக்கும் ஒரு பகுதியைத் தரலாமே என்று எண்ணினார். இதனைக் காப்பியப் புரவலர் அபுல்காசீமிடம் கூறினார். புவரிலன் முகம் வாடியது. அன்றிரவு நபிகள் நாயகம் புரவலரின் கனவில் தோன்றிக் காட்சி தந்தார். உமறுப்புலவர் புரவலரிடம் சென்று காப்பிய அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். புரவலரும் மகிழ்ந்து ஆர்வமுடன் அரங்கேற்றத்திற்கு வேண்டுவன செய்ய முற்பட்டார்.
வீட்டின் முன் பந்தல் போடப்பட்டது. புது மணல் பரப்பப் பட்டது. மகர தோரணம் கட்டி அலங்கரித்தனர். புலவர்களுக்கும் அறிஞ்ஞர்களுக்கும், பெருமக்களுக்கும் அழைப்புகள் அனுப்பப் பட்டன. அனைவரும் திரளாகக்கூடினர். அரங்க மேடையில் சீறாப்பாடல்கள் இனிய குரலில் ஒருவர் பாடிவர உமறுப்புலவர் அரிய விளக்கம் கூறி மகிழ்விப்பார். இப்படிக் கடவுள் வாழ்த்து முதலாகக் கவியமுது வார்க்கப்பட்டது. அபுல்காசீமின் மனைவி சப்பாகு அம்மையார் தம் வீட்டு ஜன்னல் அருகிலிருந்து கவியமுதைப் பருகி வந்தார். அவரின் அருந்தவப் பாலகன் பாலமுது அருந்திக் கொண்டிருந்தான். அச்சமயத்தில் நபி அவதாரப்படலத்தில் 101-ஆம் பாடலைப் பாடகர் பாடத் தொடங்கினார். நெடுநேரம் பாடி வந்ததால் ஏற்பட்ட தளர்ச்சி போலும்.
தெள்ளமுதனைய முகம்மது நபியை சபா திரு மடிமிசைக் கொண்டார். என்று பாட வேண்டியதைக் கொன்றார் என்று பாடிவிட்டார். வெகுண்டெழுந்த உமறு "வையத்தை வாழ்விக்க வந்த வள்ளல் நபியைக் கொன்று விட்டாயே" என்று முழங்கித் தொடையில் ஓங்கி அடித்தார். இவ்வொலி அருகில் பாலருந்திக் கொண்டிருந்த குழந்தையைத் தாக்கியது. பால் புரையோடிக் குழந்தை இறந்து விட்டது. தமது அருமை மகன் உயிர் பிரிந்ததை அறிந்த அம்மையார் வேதனைப்பட்டார்; ஆனால் கதற வில்லை; பொங்கிப் பெருகி வந்த துயரத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு உயிர் பிரிந்த குழந்தையின் உடலைத் தொட்டிலில் போட்டு விட்டு அரங்கேற்றத்தில் ஈடுபட்டார்.
அரங்கேற்றம் நிறைவு பெற்றது. அனைவரும் உமறுப்புலவரைப் பாராட்டிப் பரிசளித்தனர், அகமகிழ்ந்த அபுல்காசீம் பணமும் நகையும் பரிசிலாக அளித்தார். எல்லாம் நிறைவேறியபின் சப்பாகு அம்மையார் தம் அருந்தவபுதல்வன் இறந்ததைக் கூறினார், அனைவரும் வருந்தினர். இது நடந்ததோ இல்லையோ? ஒரு முஸ்லிம் பெண்ணின் தமிழார்வத்தைப் புலப்படுத்துகிறது அன்றோ ?
இஃதன்றி இன்னொரு செய்தியும் உண்டு. பறங்கிப் பேட்டையைச் சேர்ந்த காதிர் அசனா மரைக்காயர் தாம் செய்துள்ள, "சீறாப்புராண நபியவதாரப்படம் உரைகடிலகம்" எனும் உரைநூலில் உமறுப்புலவர் பற்றிக் கூறுவன வருமாறு: எட்டையபுரத்து அரசவைப் புலவராகத் திகழ்ந்த உமறுப்புலவர் சீறாப்புராணம் பாட ஆர்வங்கொண்டு பறங்கிப்பேட்டையில் வாழ்ந்த கண்ணாட்டி லெபை என்ற மாமு நெய்னாப்பிள்ளை எனும் மார்க்க மேதையிடம் உரை வேண்டினார். உமறுப்புலவரின் புறத்தோற்றம் கண்ட அவர் உரைதர மறுத்தார். மனங்கலங்கிய உமறுப்புலவர் நாகூர் தற்கா சென்று இறைஞ்சிக் கேட்டார். "திருவினும் திருவாய்ப் பொருளினும் பொருளாய் " எனும் தொடர் ஒலித்தது. அதனை முதலாகக் கொண்டு திருவினுந் திருவாய் எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடிக் கொண்டு பறங்கிப்பேட்டை சென்று, கண்ணாட்டி வாப்பாவிடம் அப்பாடலைப் பாடிக் காட்டினார். உமறுப்புலவரின் கவித்திறங்கண்ட மார்க்க மேதை சீறாப்காப்பியத்திற்கு உரைத்திரட்டித் தந்தார். வள்ளல் அபுல்காசீம் ஆதரித்து வந்தார். உமறுப்புலவர் காப்பியம் இயற்றி அரங்கேற்றினார்.
நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றின் பிற்பகுதி உமறுப்புலவரின் சீறாப்புராணத்தில் இடம் பெறவில்லை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு பனி அகமது மரைக்காயர் எஞ்சிய பகுதியைப் பாடி, சீறாப்புராணம் - உறிஜ்ரத்துக் காண்டம் என்று பெயரிட்டார். பின்னர் இது "சின்னச்சிறா" எனத் தனிக் காப்பியமாக வழங்கப்பட்டடு வருகிறது.
புலவரின் நினைவு மண்டபம்
எட்டைய புரத்தில் உமறுப்புலவர் அடக்கமான இடத்தில் மண்டபம் எழுப்பி ஆண்டு தோறும் கந்தூரி விழாக் கொண்டாடி வரும்படி எட்டப்பர் ஏற்பாடு செய்தார். இடையில் தொய்வு ஏற்பட்டது. பிச்சைக் கோனார் என்பார் நினைவு மண்டபம் எழுப்பி உரூஸ்விழா நடத்தி வந்தார்.
படைத்த நூல்கள்
உமறுப்புலவர் இயற்றியதாகக் கூறப்படும் நூல்கள் சீறாப் புராணம், முதுமொழி மாலை, சீதக்காதி திருமண வாழ்த்து, சீதக்காதி பெயரில் கோவை ஆகியன. இவற்றுள் சீறாப்புராணம் இலக்கியத் தரம் மிகுந்த சிறந்த பேரிலக்கியமாகும். மற்ற மூன்றும் சிற்றிலக் கியங்கள்; இவற்றில் சீதக்காதி கோவை கிடைக்கவில்லை.
கம்பர் என்றதும் கம்பராமாயணம் முன் நிற்பது போல் உமறுப்பபுலவர் என்றதும் சீறாப்புராணம் நினைவிற்கு வரும். ஒரு புலவரின் வாழ்க்கை அவரின் காப்பியத்துள் பிரதிபலிக்கும்; ஆதலின் இங்கு வளமார்ந்த இலக்கியமான சீறாப்புராணம் கொண்டு உமறின் சிறப்பியல் புகழைக் காண்போமாக. காப்பியக் கதைப்போக்கில் உமறுப்புலவரின் சொல் நயம், பொருள் நயம், புலமைத்திறன், கற்பனை வளம், கவிதை நலம், வரலாற்று அறிவு, மொழிப்பற்று, நாட்டுப்பற்று முதலியவற்றைக் கண்டு மகிழ்வோமாக.
------------
3. சீறாப்புராணம்
"சீறத்து' என்னும் அரபிச் சொல்லின் தமிழ் வடிவம் சீறா, 'சீறத்' என்றால் வாழ்க்கை வரலாறு என்று பொருள். இப்பொதுச் சொல் காலப் போக்கில் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றையே குறித்தது. இது சீறத்துன்னபி என்ற அரபித்தொடரின் சுருங்கிய வடிவமாகும். புராண என்பது புனிதமான பழங்கதை அல்லது புனிதமான பழைய வரலாறு என்ற பொருள் தரும். புனிதமான நபிகள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியக் கருப்பொருளாகக் கொண்டது என்று பொருள் கொள்ளலாம்.
காப்பியத்தகுதி
சீறாப்புராணம் பொதுவான பெருங்காப்பிய அமைதிகளைப் பெற்றுள்ளது. சிறப்பாகத்தண்டியலங்காரம் வகுத்துள்ள காப்பியப் பண்புகளைக் கொண்டுள்ளது. வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் இவற்றில் குறைந்தது ஒன்று பெற்றுவர வேண்டும் என்று தண்டிலங்காரம் கூறும். கடவுள் வாழ்த்துப்படலத்தில் வந்துள்ள பாடல்கள் இம் மூன்றையும் கெண்டுள்ளன.
நிகரற்ற தலைவரைக் கொண்டிருக்க வேண்டும். உலகம் உய்ய உயர் நெறி காட்டிய உத்தம நபி தன்னேரில்லாத் தலைவர் ஆவார். இதனைக் காப்பியத்துள் பலவிடங்களில் பலர் கூற்றாகப் பாடி மகிழ்கிறார் உமறு . காட்டாக:
அறிவினில் குணத்தினில் எவர்க்கும் அன்பினில்
பொறுமையில் நன்னெறிப் புகலில் செய்கையில்
திறன் முகம் மதினொடும் உவமை செப்புதற்கு
எவருமிவ்வுலகில் இன்மையால் (மதியை அழைப்பித்த படலம் 73)
என்று அன்புடன் வளர்த்த பெரிய தந்தை ஆபூத்தாலிபு கூறுகிறார். மாமனார் குவைலிதோ " வடிவாலும் குணத்தாலும், முகம்மது நேர் மற்றோரில்லை " (மணம் பொருத்து படலம் 52) என்று போற்றுகிறார். மைசாறா, உறபீபரசர் முதலியோரும் நிகரற்ற தலைவராகவே குறிப்பிடுகின்றனர்.
பெருங்காப்பியம் அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள் கூறுதல் வேண்டும். சீறாப்புராணத்தை முதலில் பதிப்பித்த செய்கப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவர்.
"அறம் பொருள் இன்பம் வீடு
அனைத்தும் அடங்கிய
திறம் பெறும் காப்பியம்"
என்று சீறாப்புராணத்தைப் போற்றுகிறார். மலை, கடல், வளநகர் , பருவம், இருசுடர்த்தோற்றம் முதலிய வருணனைகள் ஆங்காங்கே அமைந்துள்ளன. மணம் புரிதல், பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல் முதலியன மரபுக்கேற்ற மாற்றங்களுடன் இடத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளன. ஆட்சி, தூது, முதலான அரசியல் செய்திகளும் கூறப்படுகின்றன.
வகுப்பும் தொகுப்பும்
இந்நூலின் கண் மூன்று காண்டங்களில் 92 படலங்களும் 27 பாடல்களும் உள்ளன. முதல் காண்டம் விலாதத்துக் காண்டம், இதில் நபிகள் நாயகம் அவர்களின் பிறப்பும் இளமையும் தொழில் முயற்சியும் மணமும் பற்றி 24 படலங்கள் அமைந்துள்ளன. 1240 விருத்தங்கள் உள்ளன. அடுத்தது நபுவ்வத்துக் காண்டம். இது நபிகள் - நாயகம் நபித்துவம் பெற்றதிலிருந்து கொடுமனக் குறைசிகள் இழைத்த கொடுமைகளைப்-பற்றியும், முஸ்லிம்களின் பொறுமை பற்றியும், இஸ்லாம் நிலை கொண்டது பற்றியும் கூறுகிறது. இதன் கண் 21 படலங்களும் 1014 பாடல்களும் உள்ளன. உறிஜ்ரத்துக் காகண்டத்தில் மக்காக் குறைஷிகளின் கொடுமையால் நபிகள் நாயகம் மக்காவை விட்டு மதினா மக்களின் அழைப்பேற்றுச்சென்று அங்குக்குடியேறியதிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை 47 படலங்களின் 2082 பாடல்களில் வர்ணக்கப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு நிறைவு பெறவில்லை. உறனிக்கூடத்தார் படலத்தில் நின்றுவிடுகிறது.
----------
4. விலாதத்துக் காண்டம்
விலாதத்துக் காண்டம் என்பதை முன்னரே கண்டோம். விலாதத் என்னும் அரபிச் சொல்லுக்குப் பிறப்பு என்பது பொருளாகும். இக்காண்டத்தில் நபிகள் நாயகம் அவர்களின் பிறப்பைக் கூறுவதுடன் இளமை, தொழில் முயற்சி, மணம் முதலியனவும் கூறப்படுகின்றன. அரிஸ்டாட்டில் என்கிற கிரேக்க அறிஞன் கூறும் காப்பியக் கொள்கைப்படி இம்முதல் காண்டம் சீறாப்புராணத்திற்குத் தேவையற்றது என்பர், இதற்கு அவர்கள் கூறும் காரணம் நபிகள் நாயகம் நபிப்பட்டம் பெற்றபின்னர் தான் போராட்டம் உருவாகியது. இதன் பின்னர் தான் அப்போராட்டம் தொடங்குகிறது. உமறுப் புலவரோ வாலிபப் பருவத்தில் வாணிபம் செய்யப்புறப்பட்ட திலிருந்தே போராட்டத்தைத் தொடங்கி விடுகிறார். அறிவு நுட்பத்தாலும் பண்பு நலத்தாலும் செயல் திறத்தாலும் சிறந்து விளங்கிய நபிகள் நாயகத்தின் மீது அபூஜகில் கேடு சூழ்கிறான், ஆதலின் சீறாவில் காப்பியத்தின் கருப்பொருளாகிய போராட்டம் இளமையிலேயே தொடங்கி விடுவதைக் காணமுடிகிறது. மேலும் காப்பியத்தின் நோக்கம் நபிகள் நாயகத்தின் சிறப்பியல்புகளை எடுத்துக் கூறுவதே. இதற்கு விலாதத்துக்காண்டம் சிறந்த களமாக அமைந்து விடுகிறது. இது மட்டுமன்றி இயற்கைப் புனைவும் அற்புத நிகழ்ச்சிகளும் இதில் விஞ்சி நின்று காப்பியத்திற்கு அழகூட்டுகின்றன. வாழ்க்கை வரலாறு கூறும் காப்பியமாதலின் பிறப்பு முதல் கூற வேண்டியது இன்றியமையாதது ஆகும்.
கடவுள் வாழ்த்து
காப்புச் செய்யுள் உருவமற்ற ஓரிறைவனைத் துதித்துக் காக்கும்படி வேண்டுவதாக அமைந்துள்ளது. இது முதன் முதலாகப் பதிப்பித்த செய்கு அப்துல் காதிறு நாயினார் லெப்பை ஆலிம் புலவரால் இயற்றப்பட்டது என்பர். கடவுள் வாழ்த்துப்படலத்தின் முதல் மூன்று பாடல்கள் உருவமற்ற ஓரிறைவனைப் பணிந்து வணங்குவதாக உள்ளன.
திருவினும் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த
மருவினு மருவா யணுவினுக்கணுவாய்
மதித்திடாப் பேரொளி யனத்தும்
பொருவினும் பொருவாய் வடிவினும் வடிவாய்ப்
பூதலத் துறைந்தபல் லுயுரின்
கருவினும் கருவாய்ப் பெருந்தலம் புரந்த
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே (கடவுள் வாழ்த்துப்படலம் - 1)
என்பது முதல் பாடலாகும், இப்பாடல் திரு என்னும் மங்கலச் சொல் கொண்டு தொடங்குகிறது. அழகு, செல்வம், கவரும் நலம், தெய்வத்தன்மை, என்றெல்லாம் பொருள் தரும் அரிய சொல். இத்தகு திருவினும் திருவாய், பொருளினும் பொருளாய், அறிவுத் தெளிவினும் தெளிவாய், சிறந்த நறுமணத்திலும் நறுமணமாய், மதித்தற்கரிய சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் முதலிய ஒளிகளனைத்தின் திரளாய், வடிவினும் வடிவாய், உலகத்தில் வாழும் பல்லுயிர்களின் கருவினும் கருவாய், இப்பேருலகைக் காக்கும் கருத்தனை நெஞ்சத்தில் பொருத்துதல் கருத்தாகும் என்னும் விழுமிய பொருளை இனிய முறையில் கூறுகிறார். திரு, பொருள், தெளிவு, மரு, பொருவு, வடிவு, கரு ஆகிய இனிய தமிழ்ச் சொற்கள் ஒன்வொன்றும் இருமுறை அடுக்கி வந்து ஓசை இன்பம் தருகின்றன. உருவமற்ற இறைவனை உயர்ந்த பண்புகளாகவே போற்றும் இஸ்லாமியக் கடவுள் கோட்பாட்டை இப்பாடல் விளக்குகிறது. இதன் கண் பயின்றுள்ள எல்லாச் சொற்களும் இனிய தமிழ்ச் சொற்களே.
அடுத்த பாடல் "சிறந்த" என்று தொடங்குகிறது. இறைவன் ஆசைகளைத் துறந்தவர்; இருதயத்தே கொலுவிருப்பதன்; தொடர்ந்து வரும் இன்பதுன்பங்கள் அற்றவன்; இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் எந்த அளவிற்குத் தன்னை மனதில் நினைக்கின்றனவோ அந்த அளவிற்கு அவ்வுயிரிடத்து உறைந்து அருள் புரிபவன்; பிறப்பு, இறப்பு என்றில்லாதவன் என்று இறை இயல்புகளை வருணித்துவிட்டு இத்தகு இறைவனை மறந்தவர்கள் மறுமையில் சுவர்க்கப் பதியை மறுப்பதுடன் இம்மையில் அறிவையும் மறந்தவர் ஆவர் என்று கூறுகிறார். இப்பாடலில் இறைவனை வணங்காதவர்களுக்கு உண்டாகும் கேடு கூறப்படுகிறது. இது உமறுப்புலவர் கடவுள் வாழ்த்தில் கண்ட புதுமையாகும்.
கடவுள் வாழ்த்திற்கு அடுத்து இரு பாடல்களில் நபிகள் நாயகத்திற்கு வாழ்த்துக் கூறுகிறார். அவற்றுள் நபிகள் நாயகத்தைத் துதிப்பவர்கள் பெறும் பலன்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். தெளராத், ஸபூர், இன்ஜீல், குர் ஆன், ஆகிய நான்கு வேதங்களை இயக்கும் பொறியாக உதித்தவர் நபிகள் நாயகம். அவரைத்துதிக்கும் நாவினைக் கொண்டவர்கள் கவிகளால் கூறப்படும் புகழைப் பெறுவார்கள்; மிகுந்த கவிகளை அடைவார்கள்; மெய்ப்பொருளை அறிவார்கள்; மனத்தில் தோன்றும் மாசுகளையும் செயல் கேடுகளையும் அகற்றிவிடுவார்கள் என்று வருபொருள் கூறுகிறார். தொடர்ந்து நபிமார்களுள் இறைவன் அருள் கொண்டு உலகில் சன்மார்க்கமும் தழைக்க வழிகாட்டிய முர்லான நபிமார்களையும் மற்றுமுள்ள நபிமார்களையும் நபிகள் நாயகத்துக்குப் பின் அவர்கள் பிரதிநிதியாக வழிநடத்திய தோழர்கள் நால்வரையும் நபியின் பெயரர் இருவரையும் சுவர்க்க நலம் பெற்ற 10 பேர்களையும் நாலிமாம்களையும் முகையதீன் அப்துல்காதீர் ஜிலானியையும் சதக்கத்துல்லா அப்பாவையும் பாடி அவர்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார். பின் வந்த முஸ்லிம் புலவர்கள் இதனை முன்மாதிரியாகக் கொண்டு இலக்கியம் படைத்து வந்துள்ளனர்.
மொழிப்பற்று
புலமை சான்ற கவிஞள் அவையடக்கம் பாடுவது காப்பிய மரபாகும். அவையடக்கப் பாடல்களில் தம்மைப் பிற புலவர்களோடு ஒப்பிட்டுத் தாம் அறிவில் குறைந்தவர் என்றும் தாம் பாடுவதைப் பிழை பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறுவார். இவாவாறு தாழ்த்திக் கொள்பவர் உயர்வு பெறுவாரன்றோ? அறிவினும் ஆய்விலும் சிறந்த செந்தமிழ்ப் புலவர் முன் தாம் பாடுவது, உலகங்களையெல்லாம் கட்டி ஆளும் சிறப்பு மிக்க மன்னன் முன் கூலி வேலை செய்தும் வாழ அறியாத ஏழை சரிசமமாக அமர்வதை ஒக்கும் என்றும், உலகமும் ஏழு கடல்களும் மலைகளும் பொடிபட அடிக்கின்ற சூறைக்காற்றின் முன் பசித்து இளைத்த சிற்றெறும்பு மூச்சு விட்டதை ஒக்கும் என்றும் இடி இடித்திடும் ஆவாரத்திற்கு முன் கைவிரல் நொடி நொடிப்பதை ஒக்கும் என்றும் கூறி அவையடக்கத்தில் உமறு தன் முத்திரையைப்பதித்து விடுகின்றார். இங்கு உமறின் மொழிப்பற்று வெளிப்படுவதைக் காணலாம்.
நாட்டுப்பற்று
கடவுள் வாழ்த்துப்படலத்திற்கு அடுத்து காப்பியத்தின் நாட்டுப் படலமும் நகரப் படலமும் இடம் பெறுகின்றன. இவற்றில் காப்பிய நாயகரின் நாட்டுவளமும் நகர வளமும் கூறப்படுகின்றன. நபிகள் நாயகம் பிறந்த நாடு அரேபியா; நாட்டுப்பற்று மிக்க உமறுப்புலவர் இதனை மறந்து அரேபியா பாலை நிலத்தைத் தமிழகத்து சோலையாகவே வர்ணித்து விடுகிறார். எனவே தான் டாக்டர் மு. வரதராசனார் உமறுப்புலவரின் வர்ணனையில் தமிழ் நாட்டையும் மதுரை மாநகரையும் காண்பதாகக் குறிப்பிடுகிறார்.
திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துக்குப்பின் வான் சிறப்பை வைத்துள்ளார். உமறுப்புலவரும் கடவுள் வாழ்த்துப்பாடியதும் மழைவளம் பாடுகிறார். நபிகள் நாயகத்தின் புகழ் உலகமெல்லாம் பரவி விண்ணையும் நிறைந்ததைப்போல வெண் மேகம் கடலில் படிந்து நீருண்டு கருங்கடல் எழுந்தது போல பாரெல்லாம் பரவி விண்ணில் சென்று படிந்தது எனப்பாடுகிறார்.
தருங்கொடை நயினார் கீர்த்தி
சகமெலாம் பரந்து மிஞ்சி
நெருங்கியே விசும்பில் அண்ட
முகடுற நிறைந்த வேபோல்
இருங்கன வெள்ளை மேகம்
இரைபசுங்கடல் வீழ்ந் துண்டோர்
கருங்கடல் எழுந்த தென்னக்
ககனிடை செறிந்து மீண்ட (நாட்டு -1)
அருள் பொழியும் காப்பிய நாயகர் நபிகள் நாயகத்தையே மழை பொழியும் மேகத்திற்கு உவமையாக்குகிறார். இது
நீறு அணிந்த கடவுள் நிறத்தவன்
ஆறு அணிந்து சென்றார்கள் மேய்ந்தகில்
சேறு அணிந்து மலைத்திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே
(கம்பராமாயணம் ஆற்று -1)
என்ற கம்பனின் பாடலை நினைவூட்டுகிறது. கருத்தெழுந்த கார்மேகம் காலூன்றி மலை முகடுகளை மூடுகிறது. மழைத்துளிகள் ஆலங்கட்டிகளுடன் செறிவாகப் பொழிகின்றன. ஆலங்கட்டிகளுடன் இந்திர கோபப்பூச்சிகளும் தரையில் கிடக்கின்றன. இது முத்தும் மாணிக்கமும் மழையாகப் பொழிந்தது போல் தோன்றுகின்றது என்கிறார் புலவர். சாரலைத் தாங்கவியலாமல் விலங்குகள் முகங்களை வயிற்றுடன் ஒட்டிக் கொண்டு ஓதுங்கி நிற்கின்றன. நடுக்கத்தால் பகையை மறந்து யானைகளும் சிங்கங்களும் மழைக்கு ஒதுங்கிச் சேர்ந்து நிற்கின்றன.
குறிஞ்சி நிலத்து விலங்குகளெல்லாம் குளிரால் நடுங்கின.
தந்தி, மான், மரை அணில் கொடுவரி, தகர் உடும்பு,
மந்தி சிங்களம், கவரிமான், அழுங்கு, தேவாங்கு, மு
ந்து, மான்மதம், எண்கு, செந்நாய், பணி முள்மா,
நந்தி, மிஞ்சிய விலங்கினம் கொடுகி மெய்நடுங்கும் (நாட்டுப். 5)
எனப்பதினெட்டு விலங்குகளை ஒரு பாடலில் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இவை யனைத்தும் தமிழ்நாட்டில் காணப்படும் விலங்குகள்.
மரங்களை மழைநீர் வேரோடு சாய்க்கிறது; விலங்கினங்களை வெருட்டி, பறவைகளைக் கலைத்து, கனிகளைத் சிதறிப் பெருகி வருகிறது. குறத்தியரின் பரன்களையும் குடிசைகளையும் தினையையும் வாரிக் கொண்டு வருகிறது. இதனை வெள்ளமாகிய விலைமகள் மணியையும் பொருளையும் வாரிக்கொண்டு செல்வது போன்றுள்ளது என்று உமறு சித்தரிக்கிறார். இங்கு கம்பர் தம் காப்பியத்தில் மலையிலிருந்து பொருட்கள் பலவற்றையும் அடித்துக் கொண்டு வரும் வெள்ளத்தை விலைமாதுக்கு ஒப்பிடவது நோக்கத்தக்கது.
தொடர்ந்து குறிஞ்சியில் பொழிந்து மழைநீர் அருவியாக வீழ்ந்து, ஆறாக ஓடி முல்லை , பாலை, மருதம், ஆகிய நிலங்களில் பாய்ந்து வந்து சேர்வதைப் பாடுகிறார். நானிலத்துக் கருப்பொருள்களாகிய மக்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், மலர்கள் முதலியவற்றை குறிப்பிடுகின்றார்.
நபிகள் நாயகம் உருவாக்கவிழைந்த நித்தனை, மது, பொய், கொலை, களவு முதலிய கேடுகளற்ற திருநாட்டைப் பாடி மகிழ்கிறார். பொன்னும். பொருளும் இப்படிக் குவிகின்றனவே இவற்றை என் செய்வது என்று சிந்திப்பதே அல்லாமல் வேறொரு நிந்தனை இல்லை. சோலையில் வண்டுகள் மது அருந்துவதன்றி மக்கள் மது அருந்துவதில்லை. காதலியின் ஊடலைத் தீர்க்கப் பொய் கூறுவதைத்தவிர வேறு பொய்யில்லை. வனத்திலே கனிந்துள்ள பழங்களைப் பறிப்பதல்லாது வேறு பறிப்பு (களவு) இல்லை என்று பாடுவதில் உமறின் வெளியீட்டுத்திறன் விளக்கம் பெறுகிறது.
இவ்வாறு அரேபியப் பாலைவனத்தைத் தமிழ்ச் சோலை நிலமாகக் காட்டிய உமறுப்புலவர் மக்க மாநகரத்தையும் தமிழ் மாநகரமாகக் காட்சிப் படுத்துகிறார்.
ஏழு உலகங்களுக்கும் கண் போன்றது இப்பூவுலகம், இதன் கருமணியாம் அரபு நாடு. இப்புலங்கொள் கன்மணிக்கு உள்ளுறை உயிராய் விளங்குகிறது மக்காநகரம் என்று கூறிய உமறுப்புலவர் மக்க மாநகரத்துக் கடைத்தெருவில் விலை மதிக்க முடியாத பொருட்கள் குவிந்து கிடப்பதாகவும் ஓங்கி உயர்ந்த மாட மாளிகைகள் சிறந்து விளங்குவதாகாவும் அவற்றின் மேல் கட்டப்பட்டுள்ள கொடிகள் சந்திரனனின் மறுவைத் துடைப்பது போல அசைந்தாடுவதாகவும் பாடுகிறார். இவ்வாறு தமிழ் மரபு போற்றிய உமறுப்புலவர் அங்குப்பள்ளி வாயில்கள் நிரம்ப உள்ளன; இளைஞர்கள் வேதம் பயிலும் ஓசையையும் அறவோர்கள் திக்கிர் செய்யும் ஓசையையும் பள்ளியில் வழிபாடு செய்துவிட்டு இருகையேந்திது ஆ கேட்கும் ஓசையும் அவரைப் பின் தொடர்ந்தோர் ஆமீன் கூறும் ஓசையும் முழங்குவதாகக் கூறுகிறார். இங்கு இரு மரபுகளும் இணைந்து வரும் இனிய வர்ணனையைக்கண்டு மகிழலாம். எனவே தான் டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை தமிழ்ப் பண்பாட்டையும் இஸ்லாமியப் பண்பாட்டையும் அவற்றின் தனித்தன்மை கெடாமல் உமறுப்புலவர் இணைக்கும் திறத்தைப் போற்றுகிறார்.
நன்றிப் பெருக்கு
காப்பியக்கவிஞர்கள் தங்களை ஆதரித்த வள்ளல்களைப் பற்றித் தம் காப்பியங்களுள் பாடுவது மரபாகும். கம்பர் சடையப்ப வள்ளலையும், புகழேந்தி சந்திரன் சுவர்க்கியையும் தங்களின் காப்பியங்களில் பாடி நன்றியைப் புலப்படுத்தியுள்ளனர். உமறுப்புலவரும் தம்மை ஆதரித்த வள்ளல் அபுல் காசிமைத் தம் காப்பியத்தில் 22 பாடல்களில் பாடி நன்றிப் பெருக்கை காட்டியுள்ளார். இதில் மருத நிலவளம் கூறவந்த உமறு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் வண்டிகள் எழுப்பும் ஒலியும், கரும்புத்தோட்டத்தில் முற்றிய கரும்பை வெட்டும் ஒலியும், பாக்குத் தோப்பில் பாக்கு மூட்டைகளைச் சுமப்பவர் எழுப்பும் ஒலியும் மிகுந்துள்ளன. இவ்வாரவாரம் அபுல் காசீம் மாளிகையில் விருந்துண்டு செல்வோர் ஒலியையும், கொடை பெற்றுச் செல்வோர் ஒலியையும் ஒத்திருக்கும் என்று கூறுகிறார்.
மகளிர் மட்டும் ஆடிக்களிக்கும் பொழிலாட்டும் புனலாட்டும் வருணிக்கப்படுகின்றன.
குலவரவு
பெயருக்கேற்ப இக்காப்பியம் புராண அமைதியையும் கொண்டுள்ளது. "குலவரவு காப்பிய யாப்பிற் புராணமேயாம்" என வச்சனந்திமாலை (23) புராண இலக்கணம் கூறுகிறது. இதன்படி உலகத்தோற்றமும், தேவர் அவதாரமும், குலவரவும் கூறுதல் வேண்டும். தலைமுறைப் படலத்தில் இவ்வமைதியினைக் காணலாம்.
இறைவன் படைத்த முதல் மனிதர் ஆதம்நபி ஆவார். இவரிலிருந்தே நபிகள் நாயகத்தின் தலைமுறை தொடங்குகிறது. ஆதத்தைப் படைக்க இறை ஆணையின்படி வானவர் இஸ்ராயீல் மண்ணை எடுத்து வந்தார். வானவர் தலைவர் ஜி புறயீலும் முகம்மது நபியின் ஒளியைப் பொருத்த மதினாவிலிருந்து மண் கொண்டு வந்தார். அந்த மண்ணை ஆதத்தின் முதுகோடு பொருத்தி அவ்வுருவத்தில் இறைவன் உயிரை ஊதினான். அவ்வுயிர் மூளையில் சென்றதும் தும்மல் உண்டானது. அவ்வுயிர் கலிமாவைக் கூறிக் கொண்டிருந்தது. பின்னர் உயிர் இருகண்களுக்கு இறங்கவே கண்கள் சுடர் பெற்று விழித்தன. சொர்க்க வாயிலின் மேல் லாயிலா ஹ இல்லல்லாஉற் முகம்மதுற்ற றசூலுல்லாஉற்" என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டன. ஆதம் இறைவனிடம் "இறைவா சொர்க்க வாசலுக்கு மேல் உன் பெயருடன் வேறு ஒரு பெயரும் எழுதப்பட்டுள்ளதே அவர் யார்?" என்று கேட்டார். அதற்கு இறைவன், ஆதமே உன் மரபில் ஒரு பிள்ளை நபிகள் நாயகமாய்த் தோன்றிச் சன்மார்க்கமாகிய தீனை வளர்க்கும். அவரின் பெயரே நீர் காண்பது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், சுவர்க்கம், மலை, பாதாளம்., வானவர் முதலாக உள்ள அனைத்தும் அந்த முகம்மதின் பொருட்டே படைக்கப்பட்டுள்ளன என்று கூறினான். இறைவனே புகழ்ந்து பாராட்டுவதைக்காட்டிலும் வேறொரு சிறப்பும் உண்டோ ?
ஆதம் நபியின் தலையிலிருந்த உயிர் உடம்புக்குள் பரவியது. அவரின் முதுகிலிருந்த முகமது நபியின் ஒளி நிலவொளியை மங்கச் செய்தது. இவ்வொளி பொருந்திய ஆதத்திற்கு வானவர் அனைவரையும் சுஜூது செய்யும்படி (பணியும்படி) இறைவன் ஆணையிட்டான். அஜாஸில் என்பான் நீங்கலாக வானவர் அனைவரும் வணங்கினார்கள். இங்கு முந்திய பாடலில் சுஜூது என்று குறிப்பிட்டு அடுத்த பாடலில் அதற்கு விளக்கம் தருகிறார். அரபு அறியாதவர்க்கு விளங்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வுத்தியைப் பலவிடங்களில் பயன்படுத்துகிறார். மக்களினம் தோன்றுவதற்காக ஆதத்துக்குத் துணையாக உறவ்வா அம்மையாரை இறைவன் படைத்தான். இருவரும் மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறு இனிது வாழ்ந்து வந்த காலத்தில் இறைவன் விதித்த விதியிலிருந்தது விலகியதால் அவரும் உறவ்வாவும் வானுலகிலிருந்து நில உலகிற்குத் தள்ளப்பட்டனர், வெவ்வேறு திசைகளில் அலைந்து திரிந்தனர். ஆதம் தாம் செய்த குற்றத்தைப் பொறுத்து மன்னிக்கும்படி தெளபா (மன்னிப்பு) கேட்டார் இறுதியில் இறைவன் மன்னித்து அறபா என்னும் மலையில் உறவ்வாவுடன் சேர்த்து வைத்தான், இவ்விருவரும் சேர்ந்து இனிது வாழும் நாளில் 41 குழந்தைகள் பெற்றனர். இறுதியில் பிறந்த குழந்தை சீது ஆவார். சீது நபி இடம் முகம்மது நபியின் ஒளி பொருந்தியது. இவ்வாறு ஆதும் நபி. சீது. இதுரீசு, நூஉஹு, இபுறாஹீம், இஸ்மாயில், முலறு, இல்யாசு ஆகிய நபிகள் முதல் அப்துல்லா ஈறாக உள்ள சான்றோர் வரை 50 பேரிடம் முகம்மது ஒளி தோன்றித் தொடர்ந்து வந்து ஆமினா வயிற்றில் கருவாகி உருவாகித் தோன்றியது என்பதை முறையாகக் கூறுகிறார்.
நூஉஹுநபி காலத்தில் ஏற்பட்ட பிரளயம் , இப்றாஉறீம் நபியை எறிந்த அக்னிக் குண்டம் பூம்பொழில் ஆனது, நபி இஸ்மாயிலை குர்பான் செய்ய முற்ப்பட்டது. கஃபத்துல்லாவை எடுத்துக் கட்டியது, அப்துல் முத்தலிபு தூர்ந்து போன ஜம்ஜம் கிணற்றில் நீர் பெருகச் செய்தது, முதலிய வரலாற்றுச் சிறப்பிற்குரிய நிகழ்ச்சிகளயும் உமறு வர்ணிக்கிறார்.
மக்கள் படைப்பின் வரலாறும் நபிகள் நாயகாத்தின் குலவரவும் நன்னெறிப்படுத்திய நபிமார்களின் சாதனைகளும் ஆதி ஆலயமாகிய கஃப்பத்துல்லா வரலாறும் புண்ணிய தீர்த்தமாகிய ஜம்ஜம் வரலாறும் இதில் கூறப்பட்டுள்ளன. இவை இஸ்லாமிய வரலாற்றில் உமறுப் புலவர் தேர்ந்த புலமை கொண்டவர் என்பதைப் புலப்படுத்து கின்றன.
பிறப்பும் சிறப்பும்
நபி அவரதாரப்படலம் உமறுப்புலவரின் கவிவீச்சுக்குரிய களமாக அமைந்துள்ளது. காப்பிய நாயகரிடம் புலவர் கொண்டுள்ள மதிப்பையும் மரியாதையையும் காட்டுகிறது. கற்பனை வளத்தாலும் உணர்ச்சிச் சிறப்பாலும் சொல்லாட்சித் திறத்தாலும் பாடல்கள் அருமையாக அமைந்துள்ளன. இப்படலதில் நாயகத்தின் தந்தை அப்துல்லாவையும் தாய் ஆமீனாவையும் அழகுற அறிமுகப் படுத்துகிறார். பலநாட்டு மன்னரும் வந்து பணிந்து வணங்கும் மக்கள் தலைவர் அப்துல்லா என்னும் பெயரார் என்று அப்துல்லாவை அறிமுகம் செய்கிறார்.
வரபதி யுலகெல்லாம் வாழ்த்தும் மக்கமா
புரபதிக் கதிபதி யென்னும் பூபதி
பரபதி யரசர்கள் பணிந் திறைஞ்சிய
நரபதி யப்துல்லா வென்னு நாமத்தார் (நபி அவதார 7)
'பதி' என்னும் சொல்லை ஆறிடங்களில் அமைத்து ஒளி நயத்தையும் சொல் நயத்தையும் பொருள் நயத்தையும் தோன்றச் செய்கிறார்.
அன்னை ஆமீனாவின் அறிமுகமும் இனிதமைந்துள்ளது. அறத்தின் உறையுள் ; அருளுக்குத் தாயகம், பொறுமையில் பூமிக்கு எட்டு மடங்; குலத்திற்கு ஒப்பில்லாமணி; சிறப்பிற்கு உவமையில்லாத செல்வி (திருமகள்) என்று பெண்மைக்குப் பெருமை தரும் சொல்லாட்சியால் சித்திரிக்கிறார். உவமை சிறந்த அப்பாடலைச் சுவைக்க வேண்டாமா?
அறத்தினுக் கில்லிட மருட்கோர் தாயகம்
பொறுத்திடும் பொறுமையின்ல் பூமிக்கெண் மடங்கு
உறைப்பெருங் குலத்திற்கு ஒப்பில்லா மணி
சிறப்பினுக் குவமையில் வாத செல்வியே (நபி அவதார. 11)
இத்தகு குலமயில் ஆமீனாவும் மோகனச் சித்திர அப்துல்லா வெனும் செம்மலும் ஒத்தினிது, அமுதுண்டு உறையும் நாளில் ஆமினா கருவுற்றார்.
நல்வழியில் செல்லும் அடியவரை சைத்தான் (சாத்தான்) கெடுத்துத் தீ நெறியில் செலுத்தி இறைவனுக்கு மாறு செய்கிறான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் உண்டு. இங்கு மக்களைத் தீய நெறியினின்றும் விலக்கி நன்னெறியில் நடந்த முகம்மது நபி தோன்ற இருப்பதறிந்து தனக்கு ஏற்பட இருக்கும் வீழ்ச்சியை உணர்ந்த சைத்தான் கவலை மிகுந்து வருந்துவதை அச்சச் சுவை தோன்றச் சித்திரிக்கிறார்.
ஒடுங்கி வாய் நீர் வற்றிட, நாவறட்சி தோன்ற, உடல் ஒடுங்க, ஐம் பொறிகள் அடங்க, நெஞ்சம் உடைந்து, நெருப்பிலிட்ட மெழுகாய் உருகினான், புலம்பினான், அடிக்கடி பெருமூச்சு விட்டுச் சுழன்றான் என்று கூறி,
கரைவன் ஏங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி
இரைவன், கன்னத்திற் கையைனைவத் திருந்தெழுந் திருப்பன்
தரையின் மேல் விழுந் தெனக்கிலை யினிச் சிங்கா சனமென்(று)
உரைம றந்திடக் கிடந்தனன் இருகண்ணீரொழுக (நபி அவதார். 22)
என்று பாடுகிறார். துன்பம் மிகுந்த நிலையில் சைத்தானின் மெய்ப்பாடு சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளதைக் கண்டு மகிழலாம்.
இஸ்லாம் முகம்மது நபியால் உண்டாக்கப்பட்ட மதம் அன்று; ஆதி மனிதர் ஆதம் நபி முதல் ஆயிரக்கணக்கான நபிமார்கள் வந்து வழிகாட்டிச் சென்றனர். இவருள் இறுதி நபியே முகம்மது. இந்த இஸ்லாமிய மரபைத் தலைமுறைப்படலத்தில் மட்டுமல்லாமல் நபி அவதாரப்படலத்திலும் புலப்படுத்துகிறார். அன்னை அமீனா சூலுற்றுறது, முதல் ஆதாம் நபி, இதுரீசு நபி, நூகு நபி, இபுறாஹீம் நபி. இசுமாயில் நபி, மூசா நபி, தாவூது நபி, சுலைமான் நபி , ஈசா நபி ஆகியோசர் கனவில் தோன்றிப் பிறக்க இருக்கும் குழந்தையின் சிறப்பினைக் கூறி வாழ்த்துகின்றனர்.
அன்னை ஆமீனா கருவுற்ற ஆறு மாதங்களில் அப்தூல் முத்தலிபு தம் மகன் அப்துல்லாவை அழைத்து ஷாம் நகர் சென்று வாணிபம் செய்து வரச் சொன்னார்; தந்தைச் சொல்லை ஏற்று ஷாம் சென்று வழியில் அபுவா என்ற இடத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார். அவரை அடக்கம் செய்து வந்த வணிகர் அவர் இறந்த செய்தியைக் கூறினார். கண்போன்ற கணவனை இழந்த ஆமீனா ஆற்றொணாத்துயரில் மூழ்கினார். மழையெனக் கண்ணீர் சொரிய கூந்தல் நிலத்தில் புரள, தாமரை முகத்தைக் காந்தல்கரங்கள் மூட மனமுடைந்து அழுதார் என்று உமறுப்புலவர் பாடுகிறார். கணவனை இழந்த ஆமீனாவைத் தேற்றி மாமனார் அப்தூல் முத்தலிபு ஆதரித்து வந்தார்.
இடமும் காலமும்
சீறாப்புராணம் வரலாறு படைத்த மாநபியின் வாழ்க்கை வரலாறு கூறும் காப்பியமாகும். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு துல்லியமாகப் பதியப்பட்டுள்ளது. ஆதலின் உமறுப்புலவர் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூறுவதில் ஆர்வம் காட்டுகிறார். நபிகள் நாயகத்தின் பிறப்பை காலம், இடம் முதலிய விவரங்களுடன் பாடுகிறார்.
யானைப்போர் நடந்து முடிந்த ஐம்பதாம் நாளில் றபீவுல் அவ்வல் மாதம் பனிரண்டாம் தேதி திங்கள் இரவில் வீடுகளுக்கெல்லாம் பேறாக வரும் செல்வமாய் மூவுலகும் புரக்க முகம்மது நபி பிறந்தனர் என்று கூறுவதில் ஆண்டு மாதம் நாள் நேரம் முதலியன குறிப்பிடப்படுகின்றன. தொடர்ந்து வரும் பாடலில் மக்கா நகரில் கஃபத்துல்லாவிற்கு வட கிழக்கில் ஜெம்றத்தில் உஸ்தா என்ற இடத்திலுள்ள பெரிய தந்தை அபுதாலிபு திருமனையில் முகம்மது நபி பிறந்தனரே என்று கூறுகிறார். இதில் இடம் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியதில் மனநிறைவு கொள்ளாத உமறு பலபாடல்களில் மகிழ்ச்சி பொங்கப் பாடுகிறார்.
மறுவிலா முழுமதி
நபிகள் நாயகம் அவர்களின் பிறப்புப் பற்றிக் கூறிய உமறுப்புலவர் அப்பிறப்பால் வரும் சிறப்புப் பற்றி அமுதனைய கவிகளால் பாடி மகிழ்கிறார். "பரந்துபட்ட உலகமெல்லாம் நெறிமுறைகள் தவறிவிட்டன; மருள் மதம் மிகுந்து விட்டது; துறவறம் தவறிவிட்டது; இல்லறம் மடிந்துவிட்டது; விளக்கில்லா வீடு போல் உலகம் இருளில் மூழ்கிக் கிடந்தது. இவற்றிற்குக் காரணமாகன குபிர் என்னும் குலத்தை அறுத்து அறநெறி விளக்க மறுவிலாது எழுந்த முழுமதி போல் முகம்மது நபி தோன்றினரே" என்று பாடுகிறார்.
நெறிநிலை திரியா மருண்மதம் மிகுந்து
நெடுநிலம் எங்கணும் பரந்து
துறவறம் தவறி இல்லறம் மடிந்து
சுடரிலா மனையது போல
குறைபடும் காலம் இருளெனும் குபிரின்
குலம் அறுத்தற் நெறி விளக்க
மறுவிலா தெழுந்த முழுமதிபோல
முகம்மது நபிபிறந் தனரே (நபி அவதார். 91.)
இப்பாடலில் இருண்டிருந்த உலகநிலை கூறி இருளெனும் குபிர்க் குலத்தை அறுக்க மறுவிலா தெழுந்த முழுமதிபோல முகம்மது நபி பிறந்தார் என்பதில் அமைந்துள்ள இல் பொருள் உவமையணி மகிழ்ந்தற்குரியது. முழுமதி என்று கூறினால் நபிகளிடம் மாசுண்டு என்றாகிவிடுமே என்றஞ்சிய உமறுப்புலவர் மறுவிலா தெழுந்த முழுமதி என்று குறிப்பிடுகிறார். குபிர்க் குலம் அகற்றி என்று கூறுவதில் மனநிறைவு காணாது அறுத்து என்று அழுத்தம் கொடுத்துக் கூறுகிறார். பிறந்த போதே நபி என்றழைத்துப் பெருமைப் படுத்துகிறார்.
உவம மாலை
சூரியன் வெயில் கொளுத்துகிறான். உயிர்கள் எல்லாம் துன்புறுகின்றன. அச்சமயம் தரு ஒன்று படர்ந்து தரும் நிழலாய் இழிவையும் கொலையையும் விளைத்திடும் பாவ நோயின் துன்பம் துடைத்திடும் அரிய மருந்தாய், தீன் என்னும் சன்மார்க்கப் பயிருக்கு ஒப்பற்ற செழிய மழையாய், குறைஷிகளின் திலகமாய் மாநிலத்திற்கு ஒப்பற்ற மணி விளக்காய் முகமது நபி பிறந்தனரே என்றும் பாடுகிறார். ஐந்து உவமைகளைத் தொடுத்து மாலையாக அணிவிக்கிறார். குறைஷிக் குலத் திலகமாகக் கூறுவதில் தமிழ் மரபைப் போற்றுகிறார். பாடல் உவம் மாலையாக அமைந்து விடுகிறது.
பானுவின் கதிரால் இடருறும் காலம்
படர்தரு தருநிழல் எனலாய்
ஈனமும் கொலையும் விளைத்திடும் பவநோய்
இடர்தவிர்த் திடும் அரு மருந்தாய்
தீன் எனும் பயிர்க்கோர் செழுமழை எனலாய்க்
குறைஷியின் திலதமே எனலாய்
மாநிலந்தனக்கோர் மணிவிளக் கெனலாய்
முகம்மது நபிபிறந் தனரே. (நபி அவதார். 92)
--
குபிர் = இறைமறுப்பு
கதிரவன் எழுந்தான். இது இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இதில் கற்பனை வளம் மிகுந்த உமறு தம் கருத்தினை ஏற்றி இனிய காட்சி ஒன்றை அமைத்துவிடுகிறார். பாருலகில் பரந்துள்ள குபிர் எனும் இருளும் வறுமை இருளும் ஒடுங்க முகமது நபி தோன்றினார் என்று எல்லையற்ற கடலில் குளித்துக் களித்து விரைவாக இருளை அகற்றி, சூரியன் தன் கதிர்களைப் பரப்பி எழுந்தான் என்று தற்குறிப்பேற்ற அணிநலம் திகழப்பாடுகிறார்.
இதில் பகலவன் விரைவில் எழுவதற்குக்காரணம் மருள் மதம் நீக்க மாநிலம் தழைக்கத் தோன்றியுள்ள முகம்மது நபியைக் கண்டு மகிழ்வதற்கு எனக் கொண்டு மகிழலாமல்லவா?
இவ்வாறு இன்பந்தோன்றப் பிறந்த நாயகக் குழந்தையை அன்னை ஆமினா இலகியக் கமலக் கரத்தில் ஏந்திக் கண்குளிரக் கண்டு பல்கலை அறிவும் கொடுப்பது போல் ஏழு நாட்கள் பாலமுது ஊட்டினார் என்று பொருள் சிறக்கப் பாடுகிறார். ஏழு நாட்களுக்
குப்பின் துவைபா என்ற மடக்கொடிபாலூட்டி வரலானார்.
அலிமா வீட்டில் நாயகம்
இந்நிலையில் குனைன் நகரில் கொடிய பஞ்சம் தோன்றித் துன்புறுத்தியது. ஆதலின் அந்நகர மக்களுக்குள் பலர் மக்கா சென்று அந்நகரச் செல்வர்களின் பாலர்களைப் பெற்று அவர்களுக்குக் பாலூட்டி, அதனால் பெறும் பொருள் கொண்டு பிழைக்க வந்தனர். அவர்களுடன் சென்ற அலிமாவும் அவர் கணவரும் பாலகரைத் தேடி அலைந்தனர். நாயகக் குழந்தையைக் கேட்டனர்; அன்னை அமினா தமது இரங்கத்தக்க ஏழ்மையைக் கூற முற்பட்டு, இக்குழந்தைக்குத் தந்தையில்லை; என் கையிலும் பொருளில்லை; நீங்கள் பொருள் எதிர்பார்த்து வந்துள்ளீர்கள்; பசித்து வந்துள்ளீர்கள்; உண்பதற்குத்தர உணவுமில்லை" என்று கூறி வருந்தினார். இதனைக் கேட்ட அலிமா கணவரிடம் வந்து நடந்ததைக் கூறினார். கணவர் ஆரிது தம் மனைவின் மனக்கவலையை மாற்ற முயன்று 'உலகில் நலன்களடைவதும் அடையாததும் இறைவன் விதிப்படியே ஆகும், நடுங்கி மனமுடைவது ஏன்? கடல் சூழ்ந்த உலகைப் புரப்பது இன்னார் எனச் சொல்லவும் அரிதே; எல்லாம் இறைவன் செயல்; வருந்துதல் கூடாது; இக்குழந்தையின் வாயிலாகவும் நலம் வரலாம்" என்று ஆறுதல் கூறினார். இவ்வாறு உமறுப்புலவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பொது நீதி கூறி காப்பியத்திற்குப் பொலிவூட்டுகிறார்.
இதனால் அலிமா நாயகக் குழந்தைக்குப் பாலூட்ட முற்பட்டார். நாயகக் குழந்தை மார்பகத்தில் வாய் வைத்ததும் அலிமாவின் உடல் பூரித்தது. சூம்பியிருந்த அவரின் மார்பகமும் செழித்தது; பாலமுது சுரந்தது. அன்னை ஆமினாவிடம் விடைபெற்றுத் தமதூருக்குச் சென்று பாலூட்டிச் சீராட்டி வளர்த்து வந்தார். அவ்வீட்டில் செல்வம் கொழித்தது. அவ்வூர் மகளிர் அடிக்கடி வந்து நாயகக்குழந்தையை மகிழ்வுடன் எடுப்பார்கள்; புகழ்ந்து போற்றுவார்கள்.
துண்டிடா விளக்கோ முழுமனிதானோ
சுவர்க்கத்திலி திலிருந்து வந்ததுவோ (அலிமா. 72)
என்று வியந்து கூறுவார்கள். ஐய அணியை அழகுறப்பயன் படுத்துகிறார் புலவர்.
ஒரு பகல் நாயகத் திருமேனியைக் கண்டால் வறுமை, நோய், கவலை, சிறுமை, தீவினை, தெறுபைக, உறுபவம் எல்லாம் விட்டகலும் என்று எதிர்மறையில்லும் புத்தி, செல்வம், உடல் பூரிப்பு ஆகிய மூன்றும் வளரும் என்று உடன் பாட்டிலும் கூறு உண்டாகும் பலன்களைப் பட்டியலிட்டக் காட்டுகிறார்.
நாயகக் குழந்தை சிறுகரம் நீட்டிக் குறு நடைபயின்றது; மழலை பொழிந்தது; நாளொரு மேனியாக வளரத் தொடங்கியது. பிள்ளைக்கனி தரும் இப்பேரின்ப நிகழ்ச்சிகளைப் பிள்ளைத் தமிழ் இலக்கியப் பாடல்களாக உமறு அருமையாகப் பாடுகிறார்.
எப்படி நடந்தார் தெரியுமா? உலகமெல்லாம் தீன் நெறியில் நடக்கவும், மனுமுறை நடக்கவும், அறவழி நடக்கவும், துன்பமற்று இன்பமே நடக்கவும், சொல்லற்கரிய செங்கோல் நடக்கவம், உலகெங்கும் உயர் குலமுறை நடக்கவும், அனைவரும் தம் சொற்படி நடக்கவும் நாயகக் குழந்தை நடந்தது என்று குறு நடை பயிலும் காட்சியைத் தீட்டிக் காட்டுகிறார்.
எந்நிலம் அனைத்தும் தீன்னெறி நடப்ப
துன்னிய அறத்தின் துறைவழி நடப்ப
இயல் பெறு மனுமுறை நடப்பத்
துன்மகற் (று) இன்பமே நடப்ப
பன்னருஞ் செங் கோல் உலகெலாம் நடப்ப
பாரினில் குலமுறை நடப்ப
மன்னியர் எவரும் சொற்படி நடப்ப
முகம்மது நபி நடந் தனரே (அலிமா. 86)
என்று உமறுபாடுவதில் பாநடை பீடுநடை போடுகிறது.
இரண்டாண்டுகள் ஆனது; அலிமாதம்பதியர் நாயகக் குழந்தையை எடுத்துக் கொண்டு மக்கா சென்று அன்னை ஆமினாவிடம் தந்தனர். அன்புத்தாய் இன்பக்குழந்தையை வாங்கி உச்சி மோந்து நெஞ்சோடணைத்து, முத்தமிட்டு, பிள்ளைக் கனி அமுதின் வளர்ச்சி கண்டு பெருமகிழ்ச்சி கொண்டார். அப்துல் முத்தலிபும் பெரும் பொருள் கை நிறையப் பெற்றது போலக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தார்.
நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் சிறு நிகழ்ச்சியையும் விட்டுவிடாமல் தொடர்புப்படுத்தி உமறு காப்பியத்தை நடத்திச் செல்கிறார், அலிமாவின் வீட்டில் வாழ்ந்து வரும் நாயகக் குழந்தைக்கு வயது மூன்றானது; ஆனால் ஆறு வயதுச் சிறுவர் போல் தோன்றினார். அடம்பிடித்து அலிமாவின் இரு மகன்களுடன் ஆடு மேய்த்து வரக் காட்டிற்குச் சென்றார். அங்கு வானவர் இருவர் வந்து நாயகக் சிறுவரைப் படுக்கவைத்து நெஞ்சைப் பிளந்து இருதயத்தில் இடம் பெற்றிருந்த கருப்பையும் கசடையும் அகற்றி, தூய எண்ணத்தையும், ஈமானையும் நல்லறிவையும் நிரப்பி நெஞ்சைத் தைத்தனர். பின்னர் நபித்துவ முத்திரையைப் பிடரியின் கீழ்ப் பொறித்தனர். உடனிருந்த சிறுவர்கள் அஞ்சி ஓடி அலிமாவிடம் சென்று கூறினர். பதைத்து வந்த அலிமா குழந்தை நன்னிலையில் இருப்பதைக் கண்டு களி கொண்டார்.
கண்ணின் மணியே எந்தன்
கருத்துறும் அறிவே காமர்
விண்ணில் குறைப டாமல்
விளங்கிய மதிய மேஎம்
மண்ணினுக் கரசே நந்தம்
மனைக்குறு செல்வ மேஇம்
புண்ணியப் பலனே என்னப்
பூங்கொடி எடுத்த ணைத்தார் (இலாஞ்சனை தரித்த 40)
என்று சொவிலித்தாயின் அன்புச் செயலையும் சிந்தையில் பொங்கிவரும் சிறந்த பாசத்தையும் உமறு பாடுகிறார். நாயகச் சிறுவர்க்கு ஐந்து வயது முடிந்து ஆறாம் வயது தொடங்கிய போது நாயகச் சிறுவரை அன்னை ஆமினாவிடம் அலிமா ஒப்படைத்தார்.
புனலாட்டு
நாயகச்சிறுவர் மக்காவில் வளரும் நாளில் ஆமினா தம் மகனைத் தமதூராகிய யாத்ரிபுக்கு அழைத்துச் சென்றார். உறவினர் உத்தமச் சிறுவரின் மீது அன்பைப் பொழிந்தனர், இவ்வன்பில் திளைத்து வந்த நாளில் நாயகச் சிறுவர் தம்மை யொத்த சிறுவர்களுடன் குளத்திற்குச் சென்று குளித்துக் களித்தார். இவ்வினிய காட்சியை உமறு அழகுற வர்ணிக்கிறார்.
குளத்தில் தண்ணீர் தெரியா வண்ணம் தாமரை இலைகளும் மலர்களும் நிரம்பிச் செறிந்து பரந்து கிடந்தன. இது முகம்மேது குளிக்கிறார் ஆதலால் தூசு முதலியன படிய விடக்கூடாது என்று போர்வையைப் போர்த்துக் காத்தது போல இருக்கிறதாம். குளத்துக் கரையிலுள்ள மரங்களிலிருந்து மலர்கள் நீர் மீது உதிர்ந்து கிடக்கின்றன. தென்றல் காற்றால் உண்டாகும் நீர் அலைகள் அப்பூக்களைக் கரையில் சேர்கின்றன. அக்காட்சி குளம் தன் அலைகளாகிய கரங்களால் நாயகச் சிறுவருக்குத் திறையாக முத்துக்களைக் கரையில் வாரிவழங்குவது போல் இருந்ததாம். குளத்து நீரில் அசைவு தோன்றியது. இறைத்தூதர் நம்மிடத்தில் மூழ்குகிறாரே அவர் மேனி குளிருமோ? என ஐயுற்றுக் குளம் அஞ்சி நடுங்குவது போன்றிருந்ததாம். தாமரை மொக்குகள் நீர் மேல் நிற்பது நாயகச் சிறுவர் குளிப்பதால் நாம் பெருமை பெற்றோம் என்னும் பெருமிதத்துடன் குளம் கையெடுத்துக் கும்பிடுவது போன்றிருந் ததாம், சிறுவர்கள் குளத்தில் குதித்து ஆடிய போது நீர் மேலெழுந்து கரையில் வழிந்தோடிய காட்சி அக்குளத்தின் அகத்தில் (மனதில்) எழுந்த மகிழ்ச்சி கட்டுக்கடங்காமல் பொங்கிப் புறத்தே வழிந்தது போன்றிருந்ததாம்; அலைகளால் குவளை, தாமரை முதலான மலர்கள் நீரினுள் மறைகின்றன. அவை நாயகச் சிறுவரின் கண்களுக்கும் முகத்திற்கும் ஒப்பாகோம் என்று நாணி மறைத்துக் கொண்டது போலிருந்ததாம். கரைகளில் மரங்கள் மீது தேனுண்ட வண்டுகள் பாடுவது, நான்காம் வேதமாகிய திருக்குர் ஆனைத் தர இருக்கும் முகம்மது வாழ்க என்று வாழ்த்துவது போன்றிருந்ததாம், குயிலினங் கள் கூவுவது அனைவரும் கலிமாச் சொல்லி நபிகள் நாயகத்திற்கு இணங்கி இப்பொழுதே ஈமான் கொள்ளுங்கள் என்றிசைப்பது போலிருந்ததாம். இயற்கை நிகழ்வுகளில் இத்தனை கருத்துக்களை ஏற்றி அற்புதமாகப்பாடுவதில் புலவரின் கற்பனை சிறகடித்து ஜிவ்வென உயரப்பறக்கிறது.
---
ஈமான் = நம்பிக்கை
புனலாடல் காப்பிய வர்ணனைகளுள் ஒன்றாகும். ஆடவரும் மகளிரும் சேர்ந்து புனலாடுவதும் அதனைப் பார்ப்பதும் இஸ்லாத்தில் தமை செய்யப்பட்டுள்ளன. ஆதலின் நாட்டுப் படலத்தில் மகளிர் மட்டும் குளித்து மகிழ்ந்து புனலாட இங்கு நாயகமும் இளைஞர்களும் புனலாடுவதாக இஸ்லாமிய மரபுக்கேற்ப உமறுப்புலவர் வர்ணித்துள்ளார்.
அன்னையின் மறைவு
மதினாவில் உறவினருடன் கூடி மகிழ்ந்த அன்னை ஆமீனாவும் நாயகச் சிறுவரும் மக்காவிற்குப் புறப்பட்டார்கள். வழியில் அபுவா என்னும் இடத்தில் அன்னை நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். சூலகத்தில் இருக்கும் போதே தந்தையை இழந்த நாயகச்சிறுவர் இப்போது தாயையும் இழந்து முழு அநாதையானார்.
பாட்டனார் அப்துல் முத்தலிபின் பொறுப்பில் நாயகச்சிறுவர் வளர்ந்து வந்தார். போதாத காலம் பாட்டனாரும் நோய்வாய்ப்பட்டு சில நாட்களில் இறந்து விட்டார். பெரிய தந்தை அபுதாலிபின் பாதுகாப்பில் வளர்ந்து வரலானார். அப்போது நாயகத்தின் வயது எட்டு, இரு திங்கள், பத்துநாள் என்று வயதைத் துல்லியமாகத் தருகிறார் புலவர்.
புகைறாவின் புத்திமதி
அபுதாலிபு வாணிகம் செய்ய ஷாம் நகர் செல்லப்புறப்பட்டார். நாயகச்சிறுவர் தாமும் வருவதாகக் கூறினார். நாயகச்சிறுவரின் இளமையைக் கருதியும் வழியின் அருமையைக் கருதியும் வளர்ப்புத் தந்தை தயங்கினார். நாயகச்சிறுவரோ மீண்டும் மீண்டும் கேட்கலானார். வேறு வழியின்றி ஷாமுக்கு அழைத்துச் சென்றார். நாயகத்திற்குத் தீங்கு ஏதும் வரக்கூடாதே என்ற கவலையால் துன்பமும் அவர் உடன் வருவதால் இன்பமும் கொண்டார். ஒரே கேணியில் உப்பு நீர் ஊற்றும் நண்ணீர் உற்றும் அமைந்தது போல அபுதாலிய உள்ளத்தில் துன்ப உணர்வும் இன்ப உணர்வும் பீறிட்டன என்று உவமை அழகுடன் பாடுகிறார். ஷாம் நகர் செல்லும் வழியில் பஸ்ராவில் பாடி இறங்கினர்; அங்கு புகையறா என்ற பாதிரியார் நாயகச்சிறுவரை நோக்கி, அபுதாலிபை அழைத்து, இச்சிறுவரை ஷாம் நகருக்கு அழைத்துச் செல்லாதீர்; அங்கு அவருக்குத் தீங்கு நேரும்; ஆதலின் அவரை மக்காவுக்கே திரும்ப அழைத்துச் செல்வீராக" என்று கூறினார். எனவே அபுத்தாலிபு நாயகச்சிறுவரை மக்காவிற்கு அனுப்பிவைத்தார். இவ்வாறு மூதறிஞர் நாயத்தின் சிறப்பைக் கூறிப் போற்றுவதை உமறு ஆங்காங்கே கூறிச் செல்கிறார்.
பொருள் முயற்சி
அபுத்தாலிபு அன்பில் திளைத்து வந்த நாயக இளைஞர்க்கு வயது 25. அறிவு, வெற்றி, அழகு , வீரம், திறன், உண்மை , கொடை, அன்பு ஆகியவை அவரிடம் குடி கொண்டிருந்தனவாம்.
பேரறிவு எவையும் செம்மை
பெருத்தொளிர் வனப்பும் வெற்றி
வீரமும் திறலும் உண்மை
விளங்கு வாசகமும் கல்விச்
சாரமும் பொறையும் மிக்க
தருமநற் குணமும் யார்க்கும்
வாரமும் முகம்மதின் பால்
வந்தடைந்த திருந்த தன்றே (பாதை போந்த 2)
என்று பாடி நாயக வாலிபரின் நலன்களை எல்லாம் உருவெடுக்கச் செய்து விடுகிறார். தலைமாந்தரின் உறுப்புக்களைக் காட்டிலும் பண்பு நலன்களை வர்ணிக்கும் உமறின் கொள்கை இங்கும் விளக்கம் பெறுகிறது. நபிகள் நாயகம் பள்ளி சென்று கல்வி கற்கவில்லை. ஆனால் பல்துறை அறிவும் சிறந்து பொருந்தியவர் ஆதலின் கல்வி' என்று கூறாமல் கல்விச்சாரம் (கல்வியால் பெறப்படும் அறிவு) என்று உமறு கூறும் நுட்பம் இங்குக் கருதற்பாலது.
பொருளின் பெருமை
வாலிபப் பருவம் எய்திய நாயகம் குடும்பப் பொறுப்பை உணர்ந்து பொருளீட்ட விரும்பினார். தமது பெரிய தந்தையை அணுகி 'தந்தையே! குடிப்பெருமை, குலப்பெருமை, பார் புகழும் அரசராதல், தாழ்ந்தவர், உயர்ந்தவராதல் மிகுபுகழ் எய்துதல் இவையனைத்தும் கையில் பொருள் உள்ள போது அன்றோ? பொருளில்லாது வாழ்தல் பேதைமை; ஆதலால் ஷாம் நகர் சென்று வாணிகம் செய்து பொருளீட்டி வர விரும்புகிறேன்" என்று கூறினார்.
குடித்தனப் பெருமை சேர்ந்த
குலத்தினுக் (கு) உயர்ந்த மேன்மை
படித்தலம் புகழும் செங்கோல்
பார்த்திபர் ஆதல் தேய்ந்து
மிடித்தவர் பெரியர் ஆதல்
மிகுபுகழ் கிடைத்தல் கையில்
பிடித்திடும் பொருளது அன்றிப்
பிறிதிலை உலகத் தன்றே.
எனப்பாடி பொருளறத்தைப் புலப்படுத்துகிறார். "பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்' என்னும் திருக்குறள் இங்கு விளக்கம் பெறுகிறது. திருத்தக்கதேவர் குன்றி போன்றவரையும் குன்றென ஆக்குவது பொருள் என்பார். அறம் பொருள் ஆகியவற்றின் நடுவணது எய்த ஏனைய இரண்டும் எய்தப்படும் என்று நாலடி கூறும். எனவே உமறுப்புலவர் ஆழ்ந்தகன்ற புலமையுடையவர் என்பதை இவை புலப்படுத்துகின்றன. குடும்ப வறுமையையும் காளையின் விருப்பத்தையும் எண்ணிய அபுதாலிபு மறுப்பாரோ? மகிழ்ந்து, ஏற்று அதற்கு வேண்டிய மூலதனம் பெற வேண்டுமே எனச்சிந்தித்தார்.
நாயகியின் சந்திப்பு
பொருளீட்டுவதில் ஆர்வம் கொண்ட அருமைத் தம்பியின் அருந்தவப் புலதல்வரை நோக்கி "மக்கா நகரில் தொழில் புரிவார்க்கெல்லாம் குன்றின் மேலிட்ட விளக்காக விளங்குபவர் குலைவிது. அவருக்குத் தலைமகள் ஒருவர் உண்டு. அவர் அழகும் அறிவும் அரும் பண்பும் ஒருங்கே பெற்றவர்; இம் மாநகரில் தொழில் செய்பவர்கள் அவரிடம் பொருள் பெற்று வாணிபம் செய்து வருவர். நாமும் சென்று அவரிடம் பொருள் பெற்று வாணிபம் செய்வோம் என்று ஆதரவுடன் கூறினார். மூலதனம் பெறுவது பற்றிப் பெரிய தந்தை கூறுவதில் கதிஜா நாயகியின் அறிமுகத்தை உமறு அருமையாக அமைத்து விடுகிறார். அது நாயகக் குமரரின் நெஞ்சத்தில் கதிஜா நாயகி மீது அன்பு தோன்றி வளரச் செய்துவிடுகிறது.
கதிஜா நாயகி வருங்காலத்தில் நாயகத்தை மணக்க இருப்பவரன் றோ? ஆதலின் நாயகத்தின் வாழ்க்கைத்துணைவியாக இருக்கம் தகுதிகள் அனைத்தும் இருப்பதாக அவரை அறிமுகம் செய்து வைக்கிறார். அதற்கு அபுத்தாலிபைப் பயன்படுத்துகிறார்.
கஜிதா நாயகி தேன்கடல் அமுது முதலான பல்வகை அமுதும் ஒன்றாய்த் திரண்டு வடிவெடுத்தனைய பாலை; நவமணிகள் ஒளியும் இம்மங்கை நல்லாரின் ஒளிக்ககு நிகராகாது. கற்பனை கடந்த நங்கையரின் அழகும் இவர் அழகுக்ககு ஒப்பாகாது என்று கூறிய புலவர், குவைவிது குலமெனும் விருட்சம் தோன்றி, சுற்றமெனும் கிளை இலைகள் தழைக்க, பவளச் செவ்வாய் என்ற மலரில் இனிமை எனும் தேன் சிந்தும் கனியினும் கனிந்த பாவை' என்று உருவக நலம் தோன்றப் பாடுகிறார். இவரின் அழகை இடையறாது பருக இமையா நாட்டம் பெற்றிலமே என்று பெண்டிரெல்லாம் ஏங்கினர் என்று நுட்பந்தோன்றப் பாடுகிறார்... ஒரு கற்புடைய பெண்ணை ஆடவர் பார்த்து ஏங்குவது அப்பெண்ணிற்குப் பெருமை தருவத அன்று, ஆதலின் பெண்களே விரும்பிப்பார்த்து ஏங்கும் அழகியாகக் காட்டிக் கஜிதா நாயகியின் கற்பின் சிறப்பைப் புலப்படுத்துகிறார்.
வணக்கம், அறிவு, பொறுமை, நல்லோர் பழக்கம், வறியவர்க்கு ஈதல், நிறைந்த கற்பு, இவற்றில் கலை வல்லவராலும் அவர்க்கு ஒப்பாக உரைத்தல் அரிதாகும் என்று தம் இயலாமையைக் கூறி நாயகியின் சிறப்பை நன்கு உணர்த்தி விடுகிறார்.
வணக்கமும் அறிவும் சேர்ந்த
மனந்த்துறும் பொறையும் நல்லோர்
இணக்கமும் வறியோர்க்கு ஈயும்
இரக்கமும் நிறைந்த கற்பும்
குணக்கலை வல்லோராலும்
குறித்தெடுத்து அவட் கொப்பாக
பணக்கடும் பாந்தள் பாரில்
பகருதற்கு அரிய அன்றே (பாதை போந்த. 18)
உமறுப்புலவர் என்று நாயகி அறிமுகத்தை நிறைவு செய்கிறார். நிகரில்லாத் தலைவியாகக் காட்டுகிறார். ஆயிரந்தலை கொண்ட ஆதிசேஷன் பற்றிய குறிப்பு தமிழ் மரபைக் காட்டும்.
ஆர்வமும் அடக்கமும்
இவ்வாறு கதிஜா பற்றி அன்பிற் சிறந்த அபுதாலிபு கூறியதனால் நாயகக் குமரரின் உள்ளத்தில் கதிஜா என்ற பெயரும் அவருடைய வடிவ ஓவியமும் உலா வரலாயின. நபிகள் நாயகம் ஆகும் தகையாளர் அல்லவா? ஆதலின் அவர் இதயத்தே தோன்றிய காதல் உணர்வை அறிவெனும் போர்வையால் போர்த்துத் தம் மனத்திலேயே அடக்கிக் கொண்டார் என்று பாடுகிறார்.
எனினும் கதிஜா திரு உருவைக் காண விரும்பினார். ஆதலின் நாயகிவீட்டுத் தெரு வழியே காலையும் மாலையும் சென்று வந்தார். அப்படிச் சென்று வரும் நாயக்குமரரை உறக்கத் என்னும் பெயர் கொண்ட கலைவல்லார் கண்டார், இவர் முன்னைய வேதங்களை உணர்ந்தவர். இவர் "பின்னாளில் இறைவனின் இறுதித் தூதராக ஒருவர் பிறப்பார்; என்று வேதங்களால் கூறப்பட்டவர் இவரோ" என்று கருதினார். கஜிதா நாயகியாரிடம் சென்று தாம் கண்ட புதுமையைக் கூறினார். "பெண்ணே பின்னாளில் மக்காவில் ஒரு நபி பிறப்பார், அவரால் தீன் நெறி தழைக்கும்; அவரின் உடலில் ஒளி திகழும், கஸ்தூரி மணம் கமழும், அவருடைய திருவடி நிலத்தில் பதியாது, அவரின் பிடரியின் கீழே நபிகளுக்கான முத்திரை பொறிக்கப்பட்டு இருக்கிறது. அவர் புருக்கான் என்னும் வேதம் அருளப்படுவார், மக்கா நகரில் குயில் மொழியும் கொவ்வைச் செவ்வாயும் கொடியிடையும் கொண்ட அழகுப் பெண் மணப்பாள்" என முன்னை மறைகள் கூறுகின்றன. இன்று நான் கண்டவர் அந்நபியின் மதிப்பைப் பெற்றவர்! என்றார் அவர் உரை கஜிதா நாயகியின் இதயத்தே வேலை செய்யத் தொடங்கியது.
அபுதாலிபின் கூற்று நபிகள் நாயகத்திடம் கதிஜா மீது எந்த அளவுக்கு விருப்பத்தை உண்டாக்கியதோ அந்த அளவிற்கு உறக்கத் கூறிய செய்தி கஜிதா நாயகியிடம் நபிகள் நாயகத்தின் மீது அன்பு கொள்ளச் செய்கிறது. ஒருவரை ஒருவர் விரும்பும்படி உரியவர்களின் அறிமுகம் செய்வதை ஓர் உத்தியாக உமறு ஆளுகிறார்.
இதயங்கலந்தனர்
உறக்கத்தின் நாயக அறிமுகம் நாயகியின் விழைவைத் தூண்டியது. அவரை அழைத்து வரச் சொன்னார். கஜிதாவைக் காண வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியதை நினைத்த நாயகம் மகிழ்வுடன் சென்றார். நாயகத்தைக் கண்ட நாயகி மனம் மிக மகிழ்ந்து மணித்தவிசில் அமரச் செய்தார். உச்சி முதல் உள்ளங்கால் வரை ஓடிச் சென்ற நாயகியின் கண்கள் நாயகரின் முகத்தில் பாய்ந்தன. அங்கிருந்து அகல முடியவில்லை . மனதிலே ஆவல் அதிகரித்தது. எனினும் நாயகியார் நாணம் என்ற போர்வை போர்த்திக் கற்பு என்ற வேலி கோயிக்காத்து வந்தார். ஆனால் அவரின் மனம் அவரிடம் இல்லாததை உணர்ந்து வருந்தினார் என்று உமறு காதல் உணர்வின் பெருக்கைச் சொல்லோவிய-மாகத் தீட்டிக் காட்டுகிறார்.
பார்த்த கண் பறித்து வாங்கப்
படாமையால் நறவம் சிந்தப்
பூத்தகொம்(பு) அனைய மெய்யில்
நாண் எனும் போர்வை போர்த்துக்
கூர்த்த (அ)வா வெளிப் படாமல்
கற்பெனும் வேலி கோலிச்
சேர்த்தன் உளங்கா ணாது
திருந்தினழ வருந்தி நின்றார் (பாதை போந்த 41)
என்று பாடுகிறார்.
கதிஜா நாயகியின் காதல் பெருக்கையும் நாணத்தையும் கற்பையும் கூறுவதில் உமறு கண்ணியம் போற்றுகிறார். இவ்வாறு இருவரும் இலயித்திருந்த போது உடனிருந்த மறைவல்லான் இருவர் நிலையினையும் உணர்ந்து நாயகி இடம் நாயகத்தை அவருடைய இல்லத்திற்கு அனுப்பலாமே என்று கூறினார். நாயகியும் விடை கொடுத்தார். நாயகரும் கதிஜா மீது காதல் கொண்டவர்தான். ஆயினும் அவர் "நோக்கியும் நோக்காததும்' போல ஒரு நொடியில் எழுந்து புறப்பட்டார். வழி தவறிய மக்களை நல்வழிப்படுத்திக் காப்பதற்குத் தோன்றிய வள்ளலல்லவா? காதலிலும் உயர்ந்த தரம் காட்டுகிறார்.
காக்குதற்(கு) உதித்த வள்ளல்
காரிகை வடிவைக் கண்ணால்
நோக்கியும் நோக்காதும் போல்
நொடியினில் எழுந்(து) அம்மாதின்
மாக்கடல் அனையகண்ணும்
மனமும்பின் தொடர்ந்து செல்ல
கோக்குக வீதி நீந்திக்
கொழுமனை இடத்திற் சார்ந்தார். (பாதை போந்த 44)
நாயகம் மட்டும் செல்லவில்லை . நாயகியின் கண்களும் மனமும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனவாம். கருத்தில் கவிஞர் காட்டும் கற்பனையைப் பாருங்கள். "வந்திருந்தவர் நபியே, நானும் இவர் மனைவியே" என்று நாயகி எண்ணினார். கண்கலந்த இருவரின் நெஞ்சங்களும் கலந்தன. இதனை அழகிய உருவகங்கொண்டு உமறு வர்ணிக்கிறார். நாயக நெஞ்சக் குளத்தில் அவரின் எண்ணமாகிய தாமரை நடுவில் பிடிநடைக் கஜிதா அன்னம் பெருமையுடன் வீற்றிருந்ததாம்.
வானத்து நட்சத்திரங்களைப் போல் உவமைகளை அள்ளித் தெளிக்கும் உமறு உருவகம் படைப்பதிலும் வல்லவராக விளங்குகிறார், வழிகாட்டியாகும் நாயகமும் நாயகியும் தம் தகுதிக்கேற்ப காதலிலும் கண்ணியங்காத்த திறனை உமறு புலப்படுத்துகிறார்.
நாயகி கண்ட கனவு
ஷாமுக்கு வணிகர்கள் புறப்பட ஆயத்தம் செய்கிறார்கள், நாமும் கஜிதாவிடம் சென்று பொருள் பெற்று வாணிகம் செய்யலாம் என்று அபுதாலிபு கூற , அன்பு மகன் நாயகமும் நாளை செல்வோம் என்று விடையிறுத்தார். அன்றிரவு கதிஜா நாயகி புதுமையான கனவென்று கண்டார். அதில் விண்ணிலே நட்சத்திரங்களுக்கு இடையிலே ஊர்ந்து சென்ற முழுநிலவு அந்நட்சத்திரங்களை விட்டு நெருங்கி வந்து கதிஜா நாயகியின் மடியிலே விளையாட, அதைத் தமது முந்தானையால் போர்த்தி மார்புடன் அணைத்து மகிழ்ந்தார்; இக்கனவுக் காட்சியை விடிந்ததும் உறக்கத்திடம் கூறினார். இதனைக் கேட்ட உறக்கத் "முகமது நபி உம்மை மணம் முடிக்க நாடி வருவார்" என்று கனவின் பயனைக் கூறினார். இதனைக் கேட்ட நாயகியின் உடலும் உள்ளமும் குளிர்ந்தன. காப்பியக் கவிஞர்கள் கனவைக் காப்பிய வளர்ச்சிக்கு உரிய ஓர் உத்தியாகக் கொள்வர். நாயக வரலாற்றில் கனவு பற்றிய செய்தி இருப்பதாகத் தெரியவில்லை . காப்பியக் கவிஞராகிய உமறு கனவுக் காட்சியைப் படைத்துக் காதல் காட்சிக்குக் கவர்ச்சி ஊட்டுகிறார்.
கனாப்பயனை அறிந்த கதிஜா நாயகி மகிழ்ந்திருக்கும் வேளையில் அபுதாலியும் நாயகமும் பொருள் கேட்க கதிஜா நாயகி வீட்டிற்கு வந்தனர்; கதிஜா அவர்களை மகிழ்வுடன் வரவேற்று, வந்த காரணம் கேட்டார். பெரிய தந்தை பேச ஆரம்பித்து "பெண்மணியே, என்னுடன் வந்திருக்கும் இவ்வாலிபர் என்னருமைத் தம்பியின் மகன் இவருக்குத் திருமணம் செய்ய வேண்டும்; இதற்காகவே வந்தேன். சிறிது பொருள் கடனாகத் தருவீர்களாலனால் இவரை ஷாம் நகருக்கு அனுப்புவேன். வாணிகத்தில் கிடைக்கும் பொருள் கொண்டு இவரின் திருமணத்தை நடத்துவோம். உமதருள் இருக்குமாயின் இவர் திருமணம் நிறைவேறும்" என்று கூறினார். அபுதாலிபு எதார்த்தமாகக் கூறியது இரட்டுற மொழிதலாக அமைந்து விட்டது. நாயகம் மீது காதல் கொண்டு கடிமணத்தை எதிர்பார்த்திருக்கும் நாயகியிடம் இப்படிக் கூறுவது நகைச் சுவையைத் தந்ததது. இதனைக் கேட்ட நாயகி விடுவாரா? "பெருந்தகையீர் மாதவத்தால் பெற்ற என் பொருள் அனைத்தும் தங்கள் மனைப்பொருள்களே, எளியேனும் உங்கள் சொற்படி நடப்பேன்; ஐயுறேல் எனப் போற்றி அன்பு கூட்டி உரைத்தார்.
இங்குப் பொருள் தருகிறேன் என்ற கருத்தும் உங்கள் மருமகளாக வர விரும்புகிறேன் என்ற விழைவும் பொருத்தி இன்பம் பயக்கிறன. இரட்டுற மொழியும் சொல்விளையாட்டில் உமறு வல்லவர் என்பதற்கு இவை சான்று பகர்கின்றன. அபுதாலிபிற்கும் நாயகத்திற்கும் நாயகி அறுசுவை விருந்து படைத்தார். உண்டு முடிந்ததும் நாயகி வாணிபம் செய்வதற்காகப் பெரும் பொருள் கொடுத்தார். ஷாம் நகர் வாணிபத்திற்கேற்ற பொருளடங்கிய இருநூறு பொதிகளை ஒட்டகங்கள் மீது ஏற்றும் படி செய்தார். வலிமை கொண்ட 20 பேரை உடன் அனுப்பினார். நாயகம் ஏறிச் செல்ல நல்ல ஒட்டகம் ஒன்றையும் தந்தார். கல்வியிற் சிறந்த தம் பணியாளர் மைசறாவையும் உடன் அனுப்பினார்.
பயண அனுபவங்கள்
கஜிதா நாயகி அனுப்பிய பொருட்களுடன் நாயகம் புறப்பட்டார். அபுபக்கர், சுபைறு. ஆரிது, அப்பாசு , அபுஜகில், ஆசு, உத்பா முதலியோரும் உடன் புறப்பட்டனர். வணிகக்குழுவிற்குத் தலைமை எற்று நடத்துபவர் யார்? என்ற வினா எழுந்தது; அருந்தவத்து அபுபக்கர் நாயகத்தின் பெயரை மொழிந்தார். அழுக்காறு கொண்ட அபூஜகிலோ, "முகமதுக்குத் தலைமை தாங்கும் தகுதி இல்லை நானே தலைமை ஏற்பேன்" என்று முன் சென்றான். வழியில் கட்டை ஒன்று அபுஜகில் ஏறிச் சென்ற ஒட்டகத்தின் காலை இடறி விட்டது; அவன் கீழே விழுந்து முகத்தில் அடிப்பட்டுக் குருதி வடிய நின்றான். அடுத்து உத்துபா என்பான் முன்னின்று நடத்திட முற்பட்டான்; வேங்கைப்புலியொன்று எதிரே வர அதைக்கண்டு அஞ்சிய உத்துபா கீழே விழுந்து விட்டான். அவனது ஒட்டகத்தைப் புலி கவர்ந்து செல்ல தலைமை தறிவிட்டான். அடுத்து ஆசு முன் சென்று நடத்தலானான் ஆசுவின் ஒட்டகம் பெண் ஒட்டகத்தை வானவரால் அனுப்பட்ட ஒரு பெண் ஒட்டகத்தை பின் தொடர்ந்து வழி தவறி ஒரு பாலை-வனத்திற்குள் சென்றது.
பாலை வர்ணனை
இவ்விடத்தில் உமறுப்புலவர் வெம்மை மிகுந்த வறண்ட பாலைவனத்தை அருமையாக வர்ணிக்கிறார். வடவைக் கனலின் கொழுந்து விளையாடும் களமோ? உலைக் களமோ? அக்னிதேவன் தன் படைகளுடன் பாடி இறங்கி இருக்கும் தலமோ? என்று கருதும் படியாக இருந்ததாம், இக்கொடிய பாலையின் மூவிலை நெடுவேல் காளி நெட்டுடல் கரும் பேய் ஏவல் செய்ய பாவையில் வீற்றிருக்கும் காளியைக் காட்சிப்படுத்தித் தமிழ் மரபைப் போற்றுகிறார். இக்கொடிய வணிகர்கள் செய்வதறியாது திகைத்தனர். அபுஜகில் இதற்கெல்லாம் முகம்மதுதான் காரணம் என்று குற்றம் சாட்டினான். தீங்கு ஏதும் அறியாத நாயகத்தைப் பற்றி இழிவு செய்ததால் "நீதியை வெறுத்த தறுகணான் அபுஜகில் " என்று வெகுன்றுரைக்கிறார்.
நாயகத்தலைமை
அபுபக்கர் முகம்மதைத் தலைவராகக் கொண்டால் நம் துயரமெல்லாம் நீங்கும், நல்வழி நடந்து விரைவில் ஷாம் நகரம் சேரலாம் என்று கூறினார். நாயகம் தலைமை ஏற்றார். ஜிப்புறயீல் ஒட்டகத்தை உரிய பாதையில் செலுத்தினார். பாலையில் அலைந்த வாணிகர்களுக்கு நீர் வேட்கை மிகுந்து ஏங்கினர். முகம்மது தம் ஒட்டகையின் கயிற்றை அசைத்தார். ஒட்டகை வலது காலைத்தூக்கி ஓங்கித்தரையில் மிதித்தது. அங்கு நீரூற்று கொப்பளித்துப் பெருகியோடியது; எல்லோரும் நீரைப் பருகி மகிழ்ந்தனர். இது நாயகம் நிகழ்த்திய அற்புதங்களுள் ஒன்று. அற்புதத்தைக்காட்டி வியப்புச்சுவை படைப்பதில் உமறு சிறந்து விளங்குகிறார். தொடர்ந்து பல அற்புதங்களை வர்ணித்து மகிழ்வதைக் காணலாம்.
அடுத்த நாள் வணிகச்சாத்து முன்னோக்கிச் சென்றபோது எதிர்ப்பட்ட மலைப்பாம்பை நாயகம் கொன்றார். தொடர்ந்து சென்று ஓர் இரவு துயின்ற போது வெள்ளப்-பெருக்கெடுத்துவர இருக்கும் ஆற்றைக் கனவில் கண்டு வணிகர்களை எழுப்பி அழைத்துக் கொண்டு மலைமீது ஏறிக்கொண்டார். வெள்ளப் பெருக்கிலிருந்து அனைவரும் காப்பாற்றப்பட்டனர். வணிகர்கள் நாயகத்தைப் புகழ்ந்தனர். மூன்று நாட்கள் தங்கியும் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. ஜிபுறயீல் கனவில் தோன்றி, நாளைக் காலையில் மான் ஒன்று இந்நதியின் குறுக்கே செல்லும் அந்த மானைப் பின்பற்றிக்கரை சேரலாம் என்று கூறினார். அவ்வாறே மான் ஒன்று நதியின் குறுக்கே நடக்கும் புதுமையைக் கண்டார். "வணக்கத்திற்குரிய நாயகன் ஒருவனே வேறில்லை " என்பதைக் கூறி நதி கடக்க விரும்புவார் வரலாம் என்று நாயகம் கூறினார். நன்றெனக்கூறி அவர் பின் சென்றவர் கரையேறினர். ஆனால் இதற்கிணங்காமல் உருவச்சிலையை நினைத்துக் கொண்டு சென்ற ஒருவன் அலைகளின் சுழற்ச்சியால் அடித்துச் செல்லப்பட்டான் என்று உமறுபாடுகிறார் நபிகள் நாயகத்தின் சொல் கேளாதவன் கரை சேரமாட்டான், அசையாத நம்பிக்கை கொண்டு அவர் சொல் கேட்பவர் நற்கதி அடைவார் என்ற இஸ்லாமியக் கொள்கையை உமறு புலப்படுத்துகிறார்.
மற்றொரு புதுமை
ஷாம் நகர் வழியில் புலியொன்று அவ்வழிச் செல்வோரை அடித் துத் தின்று வந்தது என்று கூறி அப்புலியின் தோற்றத்தைச் சித்திரிக் கிறார். நீண்ட வால் நிலம் புடைத்திட, உடல் நிமிர்ந்து, கால்கள்ளை மடிந்த்து, இரு விழிகளில் நெருப்புப் பொறி பறக்க, வெண்ணிறப்பற் கள் விளங்கிட, வாயில் புலால் நாற்றம் வீச சினத்தோடும் முள்ளடர்ந்த காட்டில் படுத்துக்கிடந்தது என்று வர்ணிக்கிறார்.
நீண்ட வால் நிலம் புடைத்திடக் கிடந்(து) உடல் நிமிர்ந்து
நீண்ட கால்மடித்(து) இருவிழி கனல்கள் கொப்பளிப்ப
பூண்ட வெள்ளெயி(று) இலங்கிட வாய் புலால் கமழ
வீண்டு முட்செறி வனத்திடை சினத்தோடும் இருக்கும் (புலி வசன நீதி - 3)
என்னும் பாடலில் புலியொன்று முன்னே தோன்றியது போன்ற காட்சியைக் காண முடிகிறது. இவ்வழியைத் தவிர வேறு வழியில்லை ; நபிகள் நாயகம் வேலுடன் அதனைக் கொல்லச் சென்றார், புலியோ வாலைக் குழைத்து உடல் நடுங்கி சலாம்' உரைத்து வணங்கியது. "நாயகமே உங்களைக் கண்டேன் களிகொண்டேன்; ஒப்பற்ற பலனைப் பெற்றேன்" என்று கூறியது இது கண்டு மகிழ்ந்த நாயகம் இன்று முதல் இவ்வழி வருவோர்க்கு இடரேதும் செய்யக்கூடாது என்று கூறினார். அவ்வாறே புலி சென்று விட்டது, இதனைத் தொடர்ந்து பல அற்புதங்கள் நடந்தன.
புதுமைகள் தொடர்ந்தன
நாயகம் இசுறா என்ற பாதிரியாரின் மனைக்கு வந்த போது நீண்ட காலமாக வறண்டிருந்த கிணற்றில் நீர் பெருகிற்று, பட்டமரம் துளிர்த்தது; இதனைக் கண்ட பாதிரி "ஈசா நபி கூறிய இறுதி நபி இவரே. கண்டேன், களி கொண்டேன்" என்று கூறி உயிர் நீத்து விட்டார். வழிப்பறி செய்யவந்த திருடர்களைத் திடீரென்று வெள்ளம் புரண்டு வந்த ஆறு தடுத்துவிட்டது; ஷாம் நகரம் நெருங்கியது வழிநெடுக இயற்கை வழங்கிய காட்சியைக் கண்டு சென்றனர்.
இயற்கை தந்த வரவேற்பு
தாமரைக்குளங்களையும் கரும்புக் கழனிகளையும் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தனர்; ஒரு சோலையுள் புகுந்தனர்; அங்கே இயற்கை தந்த வரவேற்பு மிகச்சிறந்ததாகும், குலை தள்ளிய வாழை மரங்கள் தலை வணங்கி வரவேற்றன. கனிந்து குலுங்கும் மாமரங்கள் வந்து கனியுண்டு செல்லுங்களேன் எனத் தளிர்க்கரம் கொண்டசைத்து
அழைத்தன; மயில்கள் தோகை விரித்துத் தன் கண்களால் விழித்து நாயகத்தின் அழகையெல்லாம் பருகின என்று கற்பனை நலந்தோன்ற உமறு வர்ணிக்கிறார்.
நெற்பயிரும் இல்லறமும்
இவ்வாறு இயற்கை வர்ணனையை எழிலுறச் செய்து காட்டிய உமறுப் புலவர் நெற்பயிர்க் காட்சியில் இல்லறக் காட்சியைத் தீட்டிக்காட்டுகிறார். நாற்றங்காலில் விதைக்கப்படும் நெல் நாற்றாக வளர்கிறது; இது பறிக்கப்பட்டுக் கழனியில் நடப்படுகிறது; தழைத்துக் கிளைத்து வளர்ந்து கதிரீனுகிறது; பால் பிடித்து முதிர்ந்த மணிகள் கொண்ட கதிராகித் தலை சாய்ந்துப்படிகின்றது என்று உமறின கற்பனையில் தோன்றிய நெற்பயிர் ஓர் இல்லறக் காட்சியைத் தந்து விடுகிறது; ஒரு வீட்டில் பிறந்த பெண் வளர்ந்து மணம் செய்து தரப்படுகிறாள்; புகுந்த வீட்டில் கணவனோடு வாழ்ந்து கருவுறு கிறாள், பேறுகாலத்தில் பெரிதும் வேதனைப்படுகிறாள், இதற்குக் காரணமான கணவனை வெறுக்காது அவனுக்குப் பணிந்து நிற்கிறாள்; எவ்வளவு பொருத்தமான உவமை! இவ்வாறு பார்க்கும் பொருள் களெல்லாம் உமறின் கற்பனை வண்ணம் பெற்றுச்சிறந்து விடுகின்றன.
அசைந்தாடும் கொடிகள்
இனிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு சென்ற வணிகச்சாத்து ஷாம் நகரை அடைந்தது; ஷாம் நகரின் மாளிகைகளில் கட்டப்பட்டக் கொடிகள் அசைந்தன; இதில் உமறின் கற்பனை உயர்ந்து பறந்து விடுகிறது. ஷாம் நகரப் பெருமக்களே; நாயகம் வருகிறார்; திரண்டு சென்று அவரை எதிர்கொண்டு அழைத்து வாருங்கள் என்று அந்நகரம் கையசைத்தது போன்றிருந்ததாம். மேலும் அக்கொடிகள் நாயகத்தை வரவேற்க மாடமாளிகைகளில் படிந்திருந்த தூசுகளைத் துடைத்துத் தூய்மை செய்ததைப் போன்றிருந்ததாம்.
இளங்கோவடிகள் மதுரை வரும் கோவலனும் கண்ணகியும் அடைய இருக்கும் துன்பங்கருதி வராதீர் என்று கோட்டையில் கட்டியிருந்த கொடிகள் மறித்துக் கைகாட்டியதாகக் கூறுவார். கம்பரோ விசுவாமித்திரரோடு இராம இலக்குவர் மிதிலையில் புகுந்த போது "இராம! சீதையை அடைவதற்கு விரைவாக வருக" என்று அந்நகர் கைநீட்டி வரவேற்றது போல் கொடிகள் அசைந்தன என்று பாடுவார். கொங்குவேள் தம் பெருங்கதையின் உச்சயினி நகரப்பெருமக்கள் நீராட்டு விழாக் கொண்டாட சிவிகை , யானை, தேர் ஆகியவற்றில் ஏறிப் பெருந்திரளாகச் சென்றதால் எழுந்த புழுதி ஞாயிற்றின் ஒளி மறைக்க அங்குக் கொடிகள் இப்புழுதியால் ஞாயிறு ஒளி மங்கிக் கெட்டழியுமே என்றிரங்கிப் புழுதிப்படலத்தைத் தடுத்துத் துடைப்பதாய் அசைந்தன என்று வர்ணிக்கிறார். மூவரும் ஒவ்வொரு கருத்தையே கூற உமறு மூன்று கருத்துக்களை இங்குக் கொடி அசைவில் ஏற்றிக்கூறுகிறார்.
பகைவர் சூழ்ச்சி
மதிற்புறத்தே விடுதிகள் அமைத்து நபிகள் நாகமும் மக்கா வணிகர்களும் தங்கினார்கள். சரக்குகள் இறக்கிவைக்கப்பட்டன. பாவம், வஞ்சனை, படுகொலை மனங்கொண்ட அபூஜகிலும் தங்கினான். நாயகத்தின் முகப்பொலிவைக் கண்ட அந்நகர மக்கள் விரும்பி வந்தனர். வணிகர் தங்கள் பொருளை நல்ல விலைக்கு விற்றுத் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கினர். அறந்திகழும் நபிகள் நாயகத்தை அந்நகரக் காபிர்களுள் சிலர் சந்தித்தனர். அவர்கள் நாயகத்தைக் கொல்லச் சதி செய்தனர். அது வரை விலை போகாதிருந்த மக்கா வணிகர்களின் பொருட்களை அதிக விலைக்கு வாங்கினர். விலைப்பொருள் பெற்றுக்கொள்ள நாயகத்தைத் தங்கள் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவருடன் மைசறாவும் சில மக்கா வணிகர்களும் சென்றனர்.
மன்னிக்கும் மாண்பு
ஷாம் நகர வீதிகளில் அழகுக் காட்சிகளைக் கண்டு காபிர்களின் இருப்பிடம் அடைந்தனர். நயவஞ்சகர்கள் அகத்தே கறுத்துப் புறத்தே போற்றி நாயகத்தை வரவேற்றனர். அவர்களின் திட்டப்படி பணம் கொண்டு வரச்செல்வது போன்று ஒருவன் மாடிக்குச் சென்று அங்குள்ளப் பாறாங்கல்லை நாயகத்தின் மீது தள்ள முயன்றான். அக்கல்லோ அவனைப் பற்றிக் கொண்டது. நெடுநேரமாயிற்றே கல்விழக்காணோமே என்று கவலை கொண்டு காபிர்கள் மேலே சென்று பார்த்து என்ன நடந்தது என்று கேட்டார்கள். அவன் நடந்ததைக் கூறினான். கல்லுடன் ஒட்டிய கையை விடுவிக்க அனைவரும் சேர்ந்து அதனைப் பற்றி இழுத்தனர். கல்லோடு கைமுறிந்து அற்று விட்டது. இந்நிலையில் மேலிருந்து வந்த காபிர்கள் நடந்ததைத் தரகரிடம் கூறினர். தரகர் அவர்களை நோக்கி "பாவிகளே இவ்வுலகில் உயர்ந்தோர்க்குத் தீமை செய்ய நினைத்தால் தம் குடியோடு கெடுவரே; தீமை செய்ய நினைத்தால் அத்தீமை நினைத்தவரையே அழிக்குமே! புன்மனச் சிறியோர் நல்லறிவாளருக்கு இழைத்த தீங்கு நீரினுள் நுழைந்த நெருப்புப்போல் அழியுமே என்று கூறி "இவர் இறைவனின் தூதரே, இவரைச் சரணடைவதே நாம் உய்யும் வழியாகும்" என்று அறிவு கொளுத்தினார். காபிர்களும் தாம் செய்த பாவத்தைப் பொறுத்தருள வேண்டினர், அருள் வடிவான நபிகள் நாயகம் அவர்களை மன்னித்து அறுபட்டக் கையைப் பொருந்தும்படி செய்தார் என நபிகள் நாயகத்தின் மன்னிக்கும் மாபெரும் பண்பை உமறுப்புலவர் அழகுறப் பாடுகிறார்.
கதிஜா நாயகிக்குக் கடிதம்.
வாணிபத்தைச் சிறப்பாகச் செய்து வளம் பெருக்கிய வணிகச்சாத்து நாடு திரும்பியது. வழியில் சோலையொன்றில் ஊசா என்ற கிறிஸ்துவப் பாதிரியாரைச் சந்தித்து, கதிஜா கண்டகனவின் பயனை மைசறா கேட்டார் "முகமது நபி இவர்தான், இவரைக் கதிஜா கடிமணம் புரிந்து கொள்ளுவார்" என்று ஊசா கூறினார்; மைசறா மக்கா நகர் விட்டுப் புறப்பட்டது முதல் ஊசா கூறியது வரையிலான அனைத்தையும் எழுதி கதிஜா நாயகிக்கு அனுப்பினார். வணிகச்சாத்து மக்காநகரம் நோக்கிப் புறப்பட்டது. இங்குக் கடிதத்தைக் காப்பிய வளர்ச்சிக்கு ஓர் உத்தியாக உமறுபயன்படுத்துகிறார்.
கதிஜா கண்டக்கனவு
ஒரு சோலையில் வணிகச்சாத்து வந்துதங்கியது, இவ்வாறு மக்கா விட்டு ஷாம் சென்று வாணிபம் செய்து வளம் பெருக்கித் திரும்பிய காலப்பகுதியில் கதிஜா நாயகி நாயகத்தின்பால் கொண்ட காதல் முதிர்ந்தது; நினைவெல்லாம் நாயகமாகவே இருந்தார். ஓரிரவு கனவொன்று கண்டார். அதில் வானவர்கள் வந்து, நாயத்திரு மேனிக்கு மாலை சூட்டி, அரியணையில் அமர்த்தி, ஒட்டகத்தின் மீதேற்றி, பலவகை இசைக்கருவிகள் முழங்க, கொடிகள் அசைந்தாட , வீரர்கள் அணிவகுக்க, விண்ணக மகளிர் இருபுறமும் திரண்டுவர உலா வந்தார். உலாகை கண்டு மகிழ ஆவல் கொண்டு கஜிதா கண்விழித்துப் பார்த்தார். நாயகத்தைக் காணாமல் துயருற்றார். அணிகலன்களை மறந்தார்; ஒப்பனை செய்யார்; விளையாடல்களை மறந்தார்; உணவையும் உறக்கத்தையும் விலக்கினார். தோழியரை நினையார்; நினைவெல்லாம் நாயகமாகவே இருந்தார். இதனை
பஞ்சணை பொருந்தார் இருவிழி துயிலார்
பழத்தொடு பாலமுது அருந்தார்
கொஞ்சும் மென்குதலைக் கிளியொடு மொழியார்
கொழு மடற் செவிக்கு இசை கொள்ளார்
கஞ்சமென் மலர்த்தாள் பெயர்த்திட உலவார்
கடிமலர் வாச நீர் ஆடார்
வஞ்சிநுண் இடையார் தம்மிடத்து உறையார்
முகம்மது மனத்திடத்து உறைந்தார். (கதிஜா கனவு. 19)
என்று பாடுகிறார்.
காதல் வாழ்வில் களவு, கற்பு என இரு நிலைகளைத் தமிழ் அகப் பொருள் பற்றிய இலக்கியங்கள் கொண்டுள்ளன. இம்மரபினைக் காப்பியக் கவிஞராகிய உமறு போற்றுவதைக் காண முடிகிறது. கதிஜா நாயகியார் கன்னிப்பெண் அல்லர்; ஏற்கனவே இருவரை மணந்து வாழ்விழந்தவர். வயதில் மூத்தவர். கட்டிளங்களையாகிய நாயகரை மறுமணம் செய்து கொள்ள விரும்பினார். சீர்திருத்தச் செம்மலாகிய நாயகரும் அவ்விருப்பத்தை ஏற்று மணந்தார். மனங்கலந்த இல்லறத்தை இனிது நடத்தினர் என்பது வரலாறு. கவிஞர் உமறே தமிழ் இலக்கிய மரபுப்படிக் கன்னிப்பெண்ணோ எனக்கருதும்படி காட்டிக் காதல் காட்சிகளைச் சுவைதருமாறு மிகச்சிறப்பாக வர்ணிக்கிறார். வரலாற்று நிகழ்ச்சிகளை அப்படியே கூறாமல் உமறுப்புலவர் போற்றுகிறார். இங்குத் திருமணத்திற்கு முன்பே கனிந்து வந்த காதலைக் கூறிக் களவுப் பகுதியை புகுத்தி விடுகிறார். கனவில் உலாக் கண்டு நனவில் காணாது வருந்திய கதிஜா மைசறா விடுத்த மடலைப் பெற்றார். கடிதம் நாயகியின் காதல் உணர்வை மேலும் தூண்டியது. அம்மடலைக் கண்ணில் ஒற்றி முத்தமிட்டார். மகிழ்ச்சிக்கடலில் திளைத்தார்.
மக்கா திரும்பினார்
நபிகள் நாயகம் மக்கா திரும்பினார். வளர்ப்புத்தந்தை அபுதாலிபு எதிர் கொண்டு வரவேற்று மகிழ்ந்தார். அவரின் மனைவி அன்னை பார்த்திமா இழந்த கண்களைத் திரும்பப் பெற்றது போல மகிழ்ந்தார். இருக்கையில் இருத்தி வண்ணப்பொடி கலந்த ஆரத்தி நீர் சுற்றிக் கண் திருஷ்டி கழித்து வரவேற்றார். ஆரத்தி எடுத்துக்கண்ணேறு கழிப்பது அரபு நாட்டு மரபன்று ஆதலின் இது உமறுப்புலவர் போற்றிய தமிழ் மரபுகளுள் ஒன்றாகும்.
நபிகள் நாயகத்தின் மீது பொறாமை கொண்ட அபுஜகிலும் நகரினுள் சென்றான். உமறு அபஜகிலைப் பற்றிக்கூற எண்ணும் போதெல்லாம் அவனுடைய தீய பண்புகள் தான் முன்னிற்கின்றன. ஆதலின் அவனைத் தீமையின் வடிவாகப்படைக்கிறார். "கொலை, படிறு, நிந்தை, களவு, கொடிய பாவம் ஆகிய மாபெரும் தீங்குகளெல்லாம் உருவானவன். சொல்லில் உறுதியில்லாதவன்; நம்பினவரைப் பகைத்து நன்றி கொன்றவன்; நஞ்சின் கொள்கலமோ என்று கருதத்தக்க மனத்தன்" என்று தீயவனாகக் காட்டுகிறார்.
மைசறா கதிஜா நாயகியைக் கண்டு பயணத்தில் நடந்த அற்புதங்கள் அனைத்தையும் விவரித்தார். "விண்ணகத்து அமரர் போற்றும் செவ்வியர், மானுட வடிவு கொண்ட நாயகர், அவரால் விழைந்த புதுமைகளெல்லாம் எடுத்தரைக்க ஒரு நா போதாது. ஆயிரம் நா உண்டாகுமானால் அதில் சிறிது எடுத்துரைப்பேன்' என்று நாயகத்தைப் போற்றிப் புகழ்ந்தார். இதனைக் கேட்ட நாயகியின் இருதயத்தே தோன்றியிருந்த காதல் மிகுந்து விடுகிறது. பிரிந்திருப்பதால் பெரிதும் துன்புற்றார், இதனால் அழகு மேனியில் பசலை பூத்தது.
நிச்சயார்த்தம்
இந் நிலையில் கதிஜா நாயகி இன்பக் கனவொன்று கண்டார். கணிகனை அழைத்துக் கனாப்பயன் கேட்டபோது நாயகம் உம்மை மணக்கப் போகிறார். அவர் ஈமானை உலகில் நிலைநிறுத்துவார். தீன் நெறியை உலகெங்கும் பரப்புவார். கனி போன்ற கலிமாவை வழங்குவார்" என்று கூறினார். உறக்கத் இக்கனவு பற்றிய செய்தியைக் குவைலிதிடமும் கூறினார். குவைலிதும் கேட்டு மகிழ்நாதார். ஒருநாள் மைசறாவிடம் கதிஜா நாயகி "இது வரை முகம்மது மணம் புரியாமல் இருப்பதேன்?" எனக் கேட்டுத் தம் விருப்பத்தைப் புலப்படுத்தினார். மைசறா நாயகத்திடம் சென்று நடந்ததைக் கூறினார். நாயகம் தமது கருத்தை உடனே வெளிப்படுத்த வில்லை. மைசறாவைத் தம் பெரிய தந்தையிடம் அழைத்துச் சென்றார். மைசறா கதிஜாவின் கனவு, குவைலிதின் மகிழ்ச்சி, நாயகி தம்மிடம் நவின்றது முதலிய அனைத்தையும் விளக்கினார். இது கேட்டு அபுதாலிபு மிகவும் மகிழ்ந்தார். தம் சகோதரர்கள் அனைவரையும் அழைத்து ஆலோசித்தார். "உடமையிலும் பணத்திலும் சாதி உயர்ச்சியிலும் அழகிலும் கதிஜாவிற்கு இணை எவருமில்லை " என்று கதிஜா நாயகியின் தகுதியைக் கூறி அவர் வீட்டிற்குச் சென்று பெண் கேட்போம் என்று கூறினார். சொல்லில் வல்ல உறம்ஸாவைத் தூதராக அனுப்பினார்.
உறம்ஸா குவைலிதிடம் சென்று, "பெருந்தகையே எங்கள் சகோதரர் அப்துல்லாவின் அருந்தவப்புதல்வர் முகம்மதுக்குத் திருமணம் முடிப்புது பற்றி வந்துள்ளேன். நம் குறைஷிக் குலத்தில் பலர் தம் பெண்ணைத் தர முன் வந்துள்ளனர். நீங்கள் நம் குலப் பெரியவரன்றோ ? ஆதலின் தங்களிடம் இத பற்றிக் கூறித் தங்கள் கருதுதைத் அறிந்து வருமாறு எங்கள் பெரியவர் அபுதாலிபு என்னை அனுப்பியுள்ளார்" என மிகவும் சாதூரியமாகப் பேசினார். பெண் கேட்டு வந்துள்ளேன் தருவீர்களா? என்று நேரடியாகக் கேட்காமல் குவைலிது மகிழும்படி மறைமுகமாகக் கேட்டார்.
குவைலிதும் செல்லாற்றலில் குறைந்து விடவில்லை. 'அழகிலும் குணத்திலும் நிகரற்றவர் முகம்மது; ஆதலால் பலரும் பெண் கொடுக்க முன் வருவர். என் மகள் கஜிதாவிற்குக் கடிமணம் புரிய விரும்புகிறேன். இதை நம் உறவினர்களிடம் கூறி அவர் கருத்தறிந்து கூறுங்கள்" என்று நளினமாகப் பேசினார். உமறு இருவர் பேச்சிலும் சொல் திறம் விஞ்சியுள்ளதைக் காட்டி சொல்விளையாட்டைப் புலப்படுத்தி வெளியீட்டு முறையில் சிறந்து விளங்குகிறார்.
குவைலிதிடம் விடைபெற்ற உறம்ஸா உடன் பிறந்தாரிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார். ஒருநாள் பெரியோர்கள் பலரும் குவைலிதின் மாளிகைக்குப் பெண் கேட்டுச் சென்றார்கள். குவைலிது மகிழ்வுடன் வரவேற்றார். இரு வீட்டாரின் ஒப்புதலறிந்து பெரியவர்கள் திருமண நாளினைக் குறித்தனர். மகிழ்ந்த குவைலிது வெற்றிலை, பாக்கு, ஏலம், கிராம்பு, தக்கோலம், கர்ப்பூரம், சந்தனம் ஆகியவற்றைப் பொற்கலத்தில் கொண்டு வந்து அனைவருக்கும் வழங்கினார். வருகிற திங்கள் கிழமை முகூர்த்தம் என்றறிவித்தனர். தமிழ்நாட்டு வெற்றிலை, பாக்கு, ஏலம், இலவங்கம், தக்கோலம், கர்ப்பூரம், சந்தனம் முதலிய மங்களப்பொருட்களும் வாசனைப் பொருட்களும் நிச்சயார்த்தச் சடங்குகளும் கூறப்படுகின்றன.
தித்திக்கும் திருமணம்
திருமணச் செய்தி நகரார்க்குத் தெரிவிக்கப்பட்டது. முரசறைவோன் யானை மீது முரசேற்றி "மக்கா நகர மக்களே, மகிழ்வுடன் வாழ்க அப்துல்லாவின் அருமை மகன் முகம்மதுக்குத் திருமணம்; ஆதலின் நகரை அலங்கரியுங்கள்" என்று அறிவித்தான். நாயகத்தின் திருமணம் பற்றி அறிந்த மக்காநகர மக்கள் விழாக் கோலம் பூண்டனர். நகரெங்கும் புதுப்பந்தல்கள் போட்டனர்; மகர தோரணங்கள் கட்டினர்; பாக்கு மரங்களைப் பழக்குலைகளுடன் நட்டனர்; கரும்புகளை நிறுத்தினர். இளநீர்க் குலைகளையும் பலாப்பழங்களையும் தொங்க விட்டனர். வண்ணப் பட்டாடைகளைக் கொய்து ஆங்காங்கே கட்டினர். வெண்தாமரைகளை உயர்த்தினர்; முல்லை, செண்பகம், செவ்வந்தி, செந்தாமரை, மல்லிகை, தாழை, மகிழம்பூ முதலிய மலர்களையும் சரங்களாகத் தொடுத்துக் கட்டினர்; நீலம், மரகதம், இரத்தினம், முதலிய மணிகளும் ஒளிவீசின.
பெண்கள் கூந்தலுக்கு அகிற்புகையூட்டி, பட்டாடை உடுத்தி, அணிமணிகள் பூண்டு ஒப்பனை செய்து அழகாகத் தோன்றி மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தனர். பசித்து வந்தவர்க்கு விருந்து படைத்தனர்; மறைவல்லார்க்கு ஆடைகள் வழங்கினர். ஈவதற்குப் பொருட்களை ஏந்தித் தெருத்தெருவாகத் தேடிச் சென்றாலும்
பெறுவதற்கு இரவலரைக் காணோம் என்று கூறி ஈதலில் கொண்ட ஆர்வமும் வறியவரைக்காணாத வளமும் புலப்படுத்துகின்றார்.
நாயகர் ஒருவர் மணங்காரணமாக நகரமே மணம் பெற்றது. அறிவு மிக்க ஒருவரால் அவரின் குடும்பத்தார் அனைவரும் நன்னிலை பெறுவர் என்ற பொது நீதி கூறி அது போல மக்காநகரமும் நபிகள் நாயகம் ஒருவர் மணத்தின் காரணமாக ஊரும் வீதியும் மாடமும் மணம் படைத்தன என்று பாடுகிறார். காப்பிய நிகழ்வுகளில் சுவை கெடாமல் நீதிகளைப் பொருத்தமாக எடுத்துக் கூறும் உத்தியில் உமறு சிறந்து விளங்குகிறார்.
மணமகன் ஒப்பனை
நாயக மணமகன் மணக்கோலம் பூண்டார். ஜம்ஜம் [*] கிணற்று நீரால் நீராடினார். சட்டையை அணிந்து கொண்டார். வயிரப்பிடி கொண்ட வாளினை இடையில் அணிந்தார். தோளில் செம்மணிமாலையும் முத்துமாலையும் நாயகத் திருமேனியில் வண்ணம் பெற்று ஒளிவீசின. வானவர் பூமாரி பொழிந்தனர். மன்னர் வாழ்த்தினர். மங்கல மடந்தையர் ஆரத்தி எடுக்க, மங்கல ஒலிகள் முழங்க நாயகம் குதிரையின் மீதேறி ஊர்வலம் புறப்பட்டார்.
---
[*] ஜம்ஜம் = புண்ணியத்தீர்த்தம்
நாயகத்திருமண ஊர்வலங்காண ஆண்களும் பெண்களும் அணியா திரண்டனர். மகளிர் கூட்டம் மிகுந்தது. பேதை, பெதும்மை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவ மகளிரும் வந்து மணமகன் அழகில் மனம் பறி கொடுத்தனர். மகளிருள் சிலர் இந்தச் சிறப்பு மிகுந்த மணக்கோலத்தைப் பார்க்க இவரை ஈன்ற தாய் இல்லையே என்று வருந்தினர். சிலர் நாயகத்தை மணக்கும் கதிஜா நாயகியை விடப் பேறுபெற்றவர் எவர் என்றனர். இப்படிப் பலரும் பலவாறாகப் பேசி மகிழ்ந்தனர். பாவலர்கள் வாழ்த்த, குவைலிது வீட்டின் முன் அலங்காரப் பந்தலில் மணமகன் நுழைந்தார். மகளிர் மணிவிளக்கு ஏந்தி, ஆரத்தி எடுக்க, மணமகன் குதிரை விட்டு இறங்கினார். பாவையர் அவர் பாதம் கழுவித் துடைத்தனர். முல்லை ,மருக்கொழுந்து முதலியவற்றைப் பாயலாகத்தூவி அவற்றின் மீது மணமகனை அழைத்துச் சென்று மணித்தவிசில் அமரச் செய்தனர்.
மாணெழில் மணமகள்
மணமகன் உலா வந்த வருணனையைப் பார்த்தோம். மணமகள் அலங்காரத்தைக் காண வேண்டாம்? மணமகளை மணநீரால் குளிப்பாட்டினர். அவரின் பொன்னிற மேனியில் வெண்ணிற ஆடை உடுத்தினர்; கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டினர்; கூந்தலை முடித்து மலர்களைச் சூட்டினர்; நெற்றியில் பட்டமும் சுட்டியும் கட்டினர். கண்ணில் கருமை தீட்டினர், காதுகளில் ஒளி திகழும் குழைகளையும் கழுத்தில் அணிகளையும் அணிவித்தனர். கையிலே வளையல், இடையில் பல்லட மேகலை, அடிகளில் சிலம்பு, சில்லரி, சதங்கை முதலிய வற்றையும் கைவிரல்களில் மோதிரங்களையும் அணிவித்தனர். பாதங்களில் செம்பஞ்சிக் குழம்பு, புனுகு, சாந்து முதலியவற்றை ஏந்திவர, வாழ்த்தொலிகள் எழ நாயகியை அழைத்து வந்து நாயகத்தின் அருகில் அமரச் செய்தனர்.
பேரழகு ஒழுகும் பெண்ணலங் கனியைப்
பிரசம் ஊறிய மொழிக் கரும்பை
ஆரணக் கடலுக்கு அமுத நாயகியை
அரிவையர் முறைமுறை வாழ்த்திப்
பாரினில் செறிந்த மலர் மிசை நடத்திப்
பல்லியம் முரசொடு கறங்க
வார் பொரு முலையார் முகம்மது மருங்கில்
மணித்தவி (சு) இடத்து இருத்தினரே (மணம் புரி, 111)
என நாயகியின் எழிலை இனிய சொல்லோவியமாகத் தீட்டி நபிகள் நாயகத்தின் அருகில் அமரச் செய்ததாகப் பாடுகிறார். இருவரும் அமர்த்திருத்த காட்சியைப் பொன்மலையில் பூத்த கொம்பு இருந்தது போலவும் அன்பாகிய தருவில் நிழலில் பொறையாகிய கிளி வீற்றிருந்தது போலவும் மணித்தவிசில் நாயகத்தின் அருகே கதிஜா நாயகி அமர்ந்திருந்தார் என உமவை நலந்தோன்ற வர்ணிக்கிறார்.
இன்பக்கடலில் திளைத்தனர்
இரு மண்வீட்டாரும் இசைந்துன 501 வெள்ளி மகர்[*] எனக் குறித்து திருமணச் சடங்கை நடத்திடுக என்றனர். பெரியவர்கள் இபுராஹீம் நபியியின் மார்க்கப்படி சடங்குகளை நடத்தினர். குவைலிது எழுந்து நாயகியின் கரத்தை நாயகத்தின் கரத்துடன் சேர்த்து, நிலவும் கதிரும் உள்ளவரை நீடு வாழ்க" என வாழ்த்தினார். மாதர் குரவை ஒலி
எழுப்பினர். மணமுரசும் ஆர்த்தது. அறிவாளர் வாழ்த்தினர். கவிஞர்கள் போற்றினர். நாயகம் நாயகியுடன் மணவறை புகுந்தார். அன்பு அலைதவழும் இன்பக் கடலில் திளைத்தனர்.
---
[*] திருமணத்தின் போது மணமகன் மணமகளுக்குதரும் அன்பளிப்பு
அவர்கள் வாழ்ந்த சிறப்பை உமறு தம் கூற்றாக :
மக்கமா நகரும் செல்வமும் வாழ
மறைவலோர் அறநெறி வாழத்
தக்கமெய்ப் புகழும் கிளைஞரும் வாழத்
தரணி நாற்றிசையினும் வாழ
மிக்க நன் னெறி நேர் முகம்மதுஞ் சிறந்த
விரைகமழ் மதுரம் ஊற்றிருந்த
இக்குமென் மொழியார் எனும் கதி ஜாவும்
இனிதுறப் பெரிது வாழ் திருந்தார். (மனம் புரி. 119)
திருமணம் செய்து இல்வாழ்க்கை நடத்துவது உடலின்பம் துய்ப்பதற்கும் இனவிருத்தி செய்வதற்கும் மட்டுமன்று. அன்பு கொண்டு உற்றார் உறவினரைப் பேணி, விருந்தோம்பி, வறியவர்க்கு ஈந்து இன்புறுத்தி மகிழ்வதற்காகவே. இதனால் தான் இல்வாழ்க்கையை இல்லறம் என்றும் அதுவே நல்லறம் என்றும் கூறுவர். திருவள்ளுவர் இதனைத் தெளிவுற விளக்குவார். இஸ்லாமிய மணக்கோட்பாடும் இஃதே. இரு நெறிகளையும் போற்றிய உமறுப்புலவர், நாயகமும் நாயகியும் மக்கா நகர் மக்கள் வாழ, செல்வம் செழித்து வாழ, மறைவல்லாரின் அறநெறி வாழ, தக்க மெய்ப்புகழ்க் கிளைகளும் வாழ, உலகமெல்லாம் வாழ, மிகுந்த நன்மை பொருந்திய நெறி விரும்பிய நாயகமும் மணங்கமழும் இனிமை ஊற்று இருந்த கரும்பு போன்ற இனிய மொழியுடைய கதிஜாநாயகியும் இனிமை பொருந்திப் பெரிது வாழ்ந்திருந்தார் என்று நயந்தோன்றப் பாடுகிறார். நாயகத்தின் அருமை பெருமைகளைக் கூற வந்த புலவர் அதுவரை நாயகம் நிகழ்த்திய வற்றுள் நான்கு அற்புதங்களைத் தொகுத்துக் கூறுகிறார். தொகுத்துக் கூறும் உத்தியில் உமறு சிறந்து விளங்குகிறார்.
அரவினை வதைத்த கரதல நயினார்
அருங்கரம் பொருத்திய நயினார்
பரல்செறி சுரத்திற் புனல்தரு நயினார்
பணிபணிந் திடவரு நயினார்.
வரியளியலம்பும் புயனபுல் காசீம்
மனத்துறை வரிசைநந் நயினார்
தெரிமலர் கதிஜா நாயகி நயினார்
செல்வமுற் றினிது வாழ்ந் திருந்தார்.
ஆறு இடங்களில் நயினார் என்ற பெயரைக் கூறி ஓசை இன்பம் பெறச் செய்து விடுகிறார். நயினார் என்பது நாயனார் என்ற தமிழ்ச் சொல்லின் மருஉ ஆகும்; தலைவர் எனும் பொருள் கொண்டது; இலக்கியம் இயற்ற உதவிய வள்ளலை நினைவு கூரவும் செய்கிறார்.
கஃபத்துல்லா
உலக முஸ்லிம்கள் அனைவரும் நோக்கித் தொழும் இலக்காக இருப்பது கஃபத்துல்லாவகும், அல்லாவின் இல்லம் என்ற பொருள் கொண்டது. ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் உறஜ்ஜுக்[*] காலத்தில் திரண்டு தொழும் சிறப்பிற்குரியது. இத்தகு சிறப்புக் கொண்ட இறையில்லத்தின் வரலாற்றை வரலாற்றுக்
குறிப்புகளோடு பாடுகிறார் உமறு.
----
[*] புனித யாத்திரை, இஸ்லாத்தின் ஐம் பெங்கடமைகளுள் ஒன்று.
----------
5. நுப்புவத்துக் காண்டம்
இரண்டாம் காண்டம் நுபுவ்வத்துக் காண்டம் என்று முன்னரே கண்டோம். நுபுவ்வத் என்ற அரபிச் சொல்லுக்குத் தீரர்க்கதரிசனம் என்பது பொருளாகும். அதர்மத்தில் சென்று அவதிப்படும் உலகம் உய்வதற்கு வழியில்லையா? என்ற சிந்தனையில் ஆழ்திருந்த நாயகம் நபிப்பட்டம் வழங்கப்பட்டு தீன்னெறி[*] பரப்பிய திறத்தைக் கூறுகிறது. இதன் கன் பழமை போற்றிய காபிர்கள் முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளும் அவற்றால் உறுதி தளராது படிப்படியாக தீன் நிலைகண்ட முஸ்லிம்களின் பொறுமையும் விளக்கப்படுகின்றன.
---
[*] இஸ்லாம் மார்க்கம்
நபிப்பட்டம்
நாயகம் இளமை முதற்கொண்டே குணநலம் மிகுந்து ஒழுக்க சீலத்தில் சிறந்து விளங்கினார். உண்மையானவராகவும் நம்பிக்கையுள்ளவராகவும் கருதிப் போற்றப்பட்டார். மனித நேயம் மிகுந்து துன்புறும் மக்கட்குத் துணையாகப் பணிபுரிந்தார். மக்கள் நன்னெறி தவறி தீய நெறியில் நடந்து அறியாமை இருளில் அவதிப்பட்டு வந்த இழிநிலை கண்டு நெஞ்சம் பதைத்தார்; துன்பக் கடலில் மூழ்கியவர்களை இன்பக்கரையில் சேர்க்க வழியில்லையா? என்ற சிந்தனையில் ஆழ்ந்தார்.
இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்து வருகையில் அவர் விழிமுன் ஒளி தோன்றி மறையும். கனவுகள் தோன்றும்; வீட்டில் இருந்து சிந்தித்து வந்த நாயகம் வெளியே சென்றார். மக்காவிற்கருகிலுள்ள உறிராமலைக்குச் சென்று வருவார். அங்கு நான்கு நாட்கள் இரண்டு நாட்கள் என்று தங்கித் தனித்திருந்து சிந்திப்பார். சில சமயங்களில் தமது மனைவி கதிஜா நாயகியையும் அழைத்துச் செல்வார். தனித்திருக்கும் போது ஒளி தோன்றுவதுடன் ஒருவகை ஒலியும் தோன்றும்.
வஹி[$] வந்தது
நாற்பதாம் வயதில் ரபீஉல் அவ்வல் 8 ஆம் பிறை சனிக்கிழமை இரவில் உறீரா மலைக்குகையில் நாயகம் தனித்திருக்கையில் ஒளிமயமான வானவர் தலைவர்ஜிப்ரயீல் தமது வண்ணச்சிறகுகளை ஒடுக்கி, மானிட வடிவில் தோன்றி, நாயகத்தை நோக்கி "மலையின் முகப்பில் நின்று கொண்டு இருக்கிறீர்களே' என்று கேட்டு மகிழ்ந்தார். ரபிஉல் அவ்வல் மாதம் 10ம் நாள் திங்கள் இரவில் ஜிப்ரயீல் தோன்றி நாயகம் எதிரில் நின்று இறைவன் ஸலாம் கூறியதாகக் கூறினார். வானத்துச் சிறந்த துகில் ஒன்றைக் கலிமா ஓதி நாயகத்தின் வலக்கரத்தில் வைத்துச் சிறந்த வேத நபி என்னும் பட்டத்தை இறைவன் இன்று உங்களுக்கு ஈந்தான் என்றுக் கூறி " வேதம் ஓதுக" என்று சொன்னார். "எழுத்தறிவு இல்லாதவன், வேதம் ஓதினேனல்லேன்" என்று நாயகம் நவின்றார். வானவர் தலைவரோ விட்டபாடில்லை. அவர் தம் இருகைகளால் நாயகத்தை
அணைத்துத் தழுவி 'ஓதுக" என்று கூறினார். நாயகமோ "சொல்லறியேன்" என்று பதிலிறுத்தார். வானவர் கோன் மீண்டும் அவ்வாறே இறுகப்புல்லி "இயம்புக" என்று கூற , நாயகம் கண்டும் கேட்டும் கற்றறியேன் " என்று பதில் கூறினார்.
---
[$] இறை உரை, கலிமா - இஸ்லாமிய மூல மந்திரம்.
மூன்றாம் முறையாக நன்றாக இறுகப் புல்லி மறைவசனம் இயம்புக என்றார். இம்முறை தழுவிய போது மறைநூலறிவு நாயகத்தின் உள்ளத்தில் ஊறியது. இந்தநிலையில் வானவர்கோன் "இக்குறவு" என்னும் அதிகாரத்தில் 'மாலம் யமலம்" என்பது வரையிலான நான்கு வசனங்கள் ஓதுக என்றார். நாயகம் அந்நான்கு வசனங்களையும் இனிமை கனிந்த இனச மொழியில் ஜிபுறயீல் செவி குளிரத் திருத்தமாக ஓதினார்.
இவ்வாறு இறைவன் தன் திருவசனத்தை அருள்வதை வஉறி என்று கூறுவர். நாயகமோ நடந்தது அனைத்தும் உண்மைதானா? என்று கலங்கினார், வீடு சென்றார், உடல் நடுங்கியது, குளிர் காய்ச்சல் தோன்றியது. நடை தளர்ந்தது, அச்சம் தோன்றியது. இந்நிலை கண்ட கதிஜா நாயகி நாயகத்தைப் பஞ்சணையில் படுக்க வைத்துப் போர்வை கொண்டு போர்த்தினார். 'ஆருயிரே! தங்களின் மனம் கலங்கும் வண்ணம் என்ன நடந்தது?" எனக் கேட்டார். மலையில் நடந்த நிகழ்ச்சிகளை நாயகம் கூறினார். நாயகியார் முன்னைய மறைமொழிகளை ஓர்ந்து நடந்தது நன்மைக்கே என்று கருதி மகிழ்ந்தார். 'எப்போதும் பிறர் நலம் போற்றி நன்னெறி வளர்க்கும் நாயகமே! உங்களுக்கு எவராலும் இடர் வராது" என்று கூறித் தேற்றினார். தம்முடைய கணவர்க்கு நபிப்பட்டம் கிடைத்திருப்பதறிந்து பெரிதும் மகிழ்ந்தார். பொழுதும் புலர்ந்தது.
இங்கு நன்னெறி போற்றி நடப்பவர் நாயகம் என்பதுடன் நன்னெறி நடப்போர்க்குத் தீமை நிகழாது என்னும் பொது நீதியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கதிரவன் தோன்றிக் காரிருளை அகற்றியதிலும் உமறுப்புலவரின் கற்பனை சிறந்து விடுகிறது. நாயகம் அறிவொளியாக அறியாமை இருளை இப்படித்தான் அகற்றுவார் என்பது போலக்கதிரவன் உதயமானான் என்று கூறி மகிழ்கிறார்.
நபிகள் நாயகம்
கதிஜா நாயகி கலைவல்லார் உறக்கத்தை அழைத்து நடந்தவற்றைக் கூறினார். ஓன்றுவிடாமல் கேட்ட கலைவல்லார் "நபிகள் நாயகமே! அஞ்ச வேண்டாம்; மலையில் உமக்கும் காட்சி தந்தவர் வானவர்கோன் ; ஜிபுறயீல் உங்களின் வலது கரத்தில் அவர் வைத்த துகில் நீங்கள் நபி என்பதற்குரிய சான்றாகும். உமக்கு உரைக்கப்பட்டது இறை வசனமாகும். உம் உடல் வருந்துமாறு ஜிபுறயீல் இறுகத் தழுவியது உமக்கு மூன்று முறை துன்பம் வந்து நீங்கும்; உம் இனத்தவரே உமக்குப் பெரும் பகையாய்த் தோன்றி உம்மை இவ்வூரை விட்டே நீங்குமாறு செய்வர்' என்று கூறினார். இதனைக் கேட்டு வருந்திய நாயகம் " எம் இனத்தார் பகை என்னை வந்து வருத்துமா? அல்லது அப்பகை அழிந்து போகுமா?" என்று கேட்டார். அதற்க்கு "நபிகள் நாயகமே! இதற்கு முன்னால் உலகில் தோன்றிய நபிகளுக்குத் துன்பம் நேராமல் இல்லை. ஆயினும் அவர்களுக்கு நேர்ந்த கொடிய துன்பம் உம்மை அணுகா. ஏனெனில் நீங்கள் நபிகளுக்கு எல்லாம் நபியாவீர் நபிகள் நாயகம் ஆவீர். மேலும் உமக்குப் பிறகு இவ்வுலகில் வேறுநபிகள் தோன்ற மாட்டார். நீரே இறுதி நபியாவீர் எனக்கூறி நாயகத்தையும் நாயகியையும் பணிந்து சென்றார். நாயகத்தை நபிகள் நாயகமாகக் காட்டி நபிப்பட்டம் பெற்ற படலத்தை நிறைவு செய்கிறார் உமறு. (நபிப்பட்டம் 54). இனி நாமும் நபிகள் நாயகம் என்றே அழைப்போமே.
தொழுகை தொடங்கியது
நபிப்பட்டம் இறைவனால் அருளப்பட்டது. அதனை வானவர்கோன் ஜிபுறயீல் வந்து தந்தார். உறக்கத் என்ற கலைவல்லார் அதனை உறுதி செய்தார். கதிஜா நாயகி அதனை ஏற்றுக் கொண்டார். நபி பற்றிக் கூற வந்த உமறு 'இறைவன் ஒருவன்தான் என்ற உண்மையை விளக்கி மாந்தர் அனைவரையும் நல்வழியில் நடக்க அழைத்திட இறைவன் அனுப்பிய தூதராவார்." என்று கூறுகிறார். (தொழுஐக வந்த. 1) தொடர்ந்து இஸ்லாம் என்றால் என்ன என்று கூற வந்த புலவர் இஸ்லாத்திற்கு ஒரு வரைவு விளக்கம் தந்து விடுகிறார்
"இறைவன் ஒருவன், முகம்மது அவனுடைய தூதர் " என்று உரைப்பது கலிமா; இதனை உறுதியாக ஏற்பது ஈமான் என்னும் நம்பிக்கை ; நம்பி ஏற்றதைச் செயல்படுத்துவது அமல் ஆகும். இவை மூன்றும் செம்மையாகப் பொருந்துவது இஸ்லாமாகும்' என்று கூறித் தெளிவுப்படுத்துகிறார்.
ஒருத்தன்நா யகன் அவற் குரிய தூதெனும்
அருந்தமே உரைகலிமாஅந் நின்னையப்
பொருத்தம் ஈமான் நடை பனைதலாம்
அமல் திருத்தமே இவையிசு லாமிற் சேர்தலே (தொழுகை வந்த ந 2)
எனச் சுருங்கச் சொல்லி விளக்குகிறார். உமறின் முத்திரைப் பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
கலிமா என்னும் அரபிச் சொல்லிற்கு உரைத்தல் என்பது பொரு ளாகும். முஸ்லிம்கள் அனைவரும் இம் மூலமந்திரத்தை மொழிந்தாக வேண்டும். உரைத்தலில் சிறந்தது இஸ்லாமிய மூலமந்திரத்தை மொழிதலாகும். ஆதலின் உரைத்தல் என்ற பொதுச்சொல் இதனையே குறிப்பதாயிற்று. உமறுப்புலவர் இத்திரண்ட கருத்தை உரைகலிமா என்று நுட்பமாகக் கூறுகிறார். பொருளையும் மூலத்தை தயும் பொருத்திக் கூறி விளங்க வைப்பதில் உமறின் சொல்லாட்சித் திறன் சிறந்து விளங்குகிறது.
நபித்துவம் பெற்றதை நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு மட்டும் மறைவாகக் கூறி வந்தார். அவர்களுள் சிலர் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்தனர். இவ்வாறு இஸ்லாத்தில் முதலில் இணைந்தவர் கதிஜா நாயகி ஆவார். அடுத்தடுத்து அபுபக்கர், அலி, சைது ஆகிய மூவர் இஸ்லாத்தை ஏற்றனர். தொடர்ந்து அப்துர்ரகுமான், சுபைறு, தல்உறா சஃது உதுமான் ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்தனர்.
இரண்டாம் வஉறி
நெடுநாட்களாக வஉறி (வேத வசனம் ) வரவில்லை . ஆதலின் நபிகள் நாயகம் மிகவும் வருந்தினார். மக்கள் ஐயுறுவார்களோ என்று கலங்கினார். இந்நிலையில் ஜிபுறயீல் தோன்றி "நீர்நபியே" என்று சொல்லிச் சென்றார். மீண்டும் வந்து "முஸம்மில்" என்னும் இறைவசனத்தை வழங்கினார். இஃது இறையருளிய இரண்டாவது வசனமாகும். இதனைக்கொண்டு வந்தஜிபுறயீல் நபிகளை ஓரிடத்திற்கு அழைத்துச்சென்று தொழுது காட்டிச் சென்றார். வீடு சென்ற நாயகம் கதிஜா நாயகிக்கும் அதுவரை இஸ்லாத்தில் சேர்ந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தொழுவது பற்றி விளக்கினார். செழிய தேனைவிட்டகலாத தேனீக்கள் போல இவர்கள் அவரருகே அமர்ந்து இறைவனைத் தொழுது மகிழ்ந்தனர். இதனைக் கூற வந்த உமறு,
"புடைவிட் டகலாச் செழுந்தேனைப்
பொருந்தும் சிறை வண்டெனத் தொழுதார்"
என்று உவமை நலந்தோன்றிப் பாடுகிறார். (தொழுகை. 42)
பழமை வாதிகளின் எதிர்ப்பு
பழமைவாதிகளாகிய கெடுமதி படைத்த காபிர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு " உமது செயல் முறைகேடானது; கஃபாவை வலம் வந்து குபல் என்ற தெய்வச்சிலையை வணங்குவது நம் முன்னோர் மரபு; அத்திரு நெறியை விடுத்துப் புறநெறி ஏற்றீர் : செய்யக் கூடாதவற்றைச் செய்கிறீர்; எங்கள் தெய்வங்களை இகழ்கிறீர் முன்னை வேதங்களைப் பழிக்கிறீர் இனத்தவரையே பகைக்கிறீர்ந் ரகம் சேர்வதன்றி நற்கதி அடைய மாட்டீர்" என்று ஏசினர். இதனைக் கேட்ட சஃது வருந்தினார். காபிர்களுக்குச் சமாதானம் கூற முற்பட்டார். அறியாமையில் மூழ்கிய அவர்கள் வீம்பு பேசினர்.
துன்பம் தொடர்ந்தது
பகைவர்கள் தொடர்ந்து இடுக்கண் செய்து வந்தனர். நபிகள் நாயகமும் தோழர்களும் துணிவுடன் ஏற்றுப் பல தெய்வ உருவ வழிபாட்டினால் வரும் கேடுகளைக் கூறி உண்மையான இறைவழி பாட்டின் சிறப்பினை விளக்கி வந்தனர். இதனை விரும்பாத உருவ வழிபாட்டினர் "நம் நெறியையும் முன்னோர் மரபையும் இகழ்ந்துரைக்கும் முகம்மதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அபூத்தாலிபிடம் சென்றனர். அபுதாலிபோ வெகுண்டு வந்தவரிடம் நயவுரை கூறித் திரும்பச் செய்தார். இது ஓயவில்லை தொடர்ந்து தம் கருத்துக்களை எடுத்துக்கூறிப் பூசலிட்டு வந்தனர். இவர்களைச் சமா தானப்படுத்துவதே அபுதாலிபின் அறன்றாட வேலையாகி விட்டது.
நபிகள் நாயகத்தின் செல்வாக்கு நாளொரு மேனியாக வளர்ந்து வருவதை அறிந்த மக்கத்துப் பகைவர்கள் எப்படியேனும் அவரை அடக்கி ஒடுக்க வேண்டும் என முடிவு கட்டினர். ஒரு நாள் அனைவரும் கூடிப் பேசி அபுதாலிபு இல்லம் சென்று "பெருந்தகையே, இனி எங்களால் பொறுக்க முடியாது. உமது தம்பி மகனைத் திருத்துவீராக; இன்றேல் எங்கள் கைவரிசையைக் காட்ட நேரிடும்" என எச்சரித்தனர். இம்முறையும் அபுதாலிபு அவர்களுக்கு சமாதானம் கூறி அனுப்பினார். அவர்களால் சும்மா இருக்கமுடியவில்லை.
காபிர்களால் வரும் தொல்லை தலைதூக்கியது, மீண்டும் காபிரளின் தலைவர்கள் அபுதாலிபிடம் வந்து "அழகான கலைவல்லான் அம்மாறா என்பானை உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்; இதற்குப் பதிலாக முகம்மதை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்" என்று கேட்டனர். உயிரினும் மேலாக மதிக்கும் வளர்ப்பு மகனை அத்தீயோர் சித்திரவதை செய்ய ஒருப்படுவாரா? அபுதாலிபு மறுத்துவிட்டார். கனன்று சென்றவர்கள் தீன்நெறி பற்றிப் பேசியவர்களைப் பிடித்துச் சென்று துன்புறுத்தினர். அபுதாலிபு இனத்தார் நாயகம் வெறுப்பதும் புத்திரர்களுக்கு இடர் வருவதும் சரியன்று என்று சிந்தித்து நபிகள் நாயகத்திடம் நடந்ததைக் கூறினார். தந்தை திருமுகம் நோக்கிப் பரிதியைக் கொணர்ந்து வலக்கரத்திலும் சந்திரனைக் கொணர்ந்து இடக்கரத்திலும் வைத்தாலும் இனத்தவர் ஒருங்கு திரண்டு ஒறுத்தாலும் "இறைவன் தூதன் நான்" எனக் கொண்டு தீன் நெறியை விளக்குவேன் என்று உறுதியாகக்கூறினார். அன்பு மகன் கண் கலங்கியக் கூறியதைக் கேட்ட அபுதாலிபு நபிகள் நாயகம் தன் புனிதப் பணியைத் தொடர்ந்து செய்யத் துணை நிற்பதாகக்கூறினார்; தீன் பயிர் தழைத்தது.
உறஜ்ஜுக் காலத்தில் மக்காவில் திரண்டு கூடும் மக்களிடம் சென்று முகம்மது மாயக்காரன், கவிஞன், கபடன், வஞ்சகன், பித்தன் என்று கூறிக்கேடு பயக்க வேண்டும் என்று பகைவர் முடிவெடுத்தனர், இம்மட்டோ , காபிர்களில் ஒருவன் நபிகள் நாயகத்தின் கழுத்தில் துணியைப் போட்டு இறுக்கினான். கஃபா சென்று தொழுது கொண்டிருந்த போது ஒட்டகத்தின் எலும்பு, குடல், குருதி, ஊன் முதலியவற்றை நபிகள் நாயகத்தின் உடலில் போட்டான். அக்கம் என்பான் ஓர் இழிசெயலைச் செய்தான்; நபிகள் நாயகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவன் தன் முகத்தைக் கோணலாக வலிப்பான்; அவரைப் பழித்துரைப்பான்; இரு உதடுகளையும் ஒரு பக்கக் கடைவாயில் சொருகிப் பிதுக்கி, முகத்தைச் சுழித்து வளைத்து, மூக்கின் துளைகள் விரியச் சிலிர்த்து, கழுத்து நரம்புகள் எல்லாம் மேலெழும்பிப் புடைக்க, வாயை அகலத்திறந்து, நாக்கை மேலும் கீழுமாகப் புரட்டி நாயகத்தைப் பழித்துக்காட்டினான். தீமை விதைத்தல் தீமைதானே விளையும் ? அவனோ பெற்றோரிடத்திலும் மனைவியிடத்திலும் உற்றாருற வினரிடத்திலும் வலிப்பதை நிறுத்த முடியவில்லை . "குறைவிலா நபியைப் பழித்த நிந்தனைக்காகக் குவலயம் பழித்திடத் திரிந்தான்" என்று நகை தோன்றப் பாடுகிறார். (தீனிலை கண்ட. 100) இளிவரல் சுவை இதில் இடம் பெறக்காணலாம்.
இந்த நிலையில் "நிறைபட வகுத்த கிளையனைத்தையும் தீனிலை பெற நிகழ்த்திடும்" என இறைவசனம் இறங்கியது நபிகள் நாயகமும் தம்மினத்தாரை சபா மலைக்கு அழைத்துச் சென்றார். மலை மீதமர்ந்து "இம்மலையில் பின்புறம் படையொன்று வந்துள்ளது என்று நான் உரைத்தால் நம்புவீர்களா?" என்று கேட்டார். அனைவரும் ஆம் என்று கூறி, அழைத்து வந்த காரணம் யாது என்று கேட்டனர், "நான் கூறி வரும் நன்னெறிக்கு ஈமான் கொள்க, இன்றேல் வேதனை வந்திடும்" என்று கூறினார். இது கேட்ட அபுலகப் "இதைக் கூறுவதற்காகவா எங்களை அழைத்து வந்துள்ளாய்" எனச் சினந்து புழுதியை வாரி நாயகத் திருமேனியில் எறிந்தான்.
காபிர்கள் தனித்தனியாகக் கொலைத் தொழில் விளைக்கத் தொடங்கினார்கள். நபிகள் நாயகத்தைப் பின்பற்றியவர்களைத் துன்புறுத்தினார்கள். இளைஞர் அம்மாறையும் அவர் தந்தை ஆசிறையும் தாய் சுமையாவையும் தமக்கையையும் பிடித்தனர்; அடித்தனர்; துடித்திடக் கயிற்றில் கட்டிக் கடும் வெயிலில் போட்டனர்; அச் செவ்வியரோ துயரக்கடலில் மூழ்கினும் தீனினை மறுத்திலர். அக்கொடுமனக் குறைஉஷிகளோ அவரை விட்டாரில்லை.
உறுக்கினார் செழுங்கரம் உரத்தொடு ஒன்றவே
இறுக்கினார் அடிக்கடி யெடுத்த தீவினை
முறுக்கினார் அல்லது மூட்டுந் தண்டனைக்
குறுக்கினார் இலைக்கொலைக் கொடு மையாளரே (தீனிலை கொண்ட. 128)
என்று பகைவர் செய்த கொடுமையைத் துன்ப உணர்ச்சி பொங்க வெகுளிச்சுவையும் தோன்றப் பாடுகிறார். நபிகள் நாயகம் துன்பத்தில் துடிக்கும் அச்சான்றோர்களைக் கண்டு ஆறுதல் கூறினார். அப்போது துன்புறுத்துவோரைப் பற்றி ஏதும் கூறாமல் 'வந்த துயரத்தைப் பொறுத்த மாண்பினால் சுவர்க்கம் உங்களுக்கு உரியதாயிற்று" என்று சொல்லிப் போந்தார். நபிகள் நாயகத்தின் பொறுக்கும் இயல்பினைப் புலப்படுத்துவதுடன் உமறு பொறுமை சுவர்க்கம் தரும் என்ற நீதியையும் உணர்த்தி விடுகிறார்.
சுமையா பகைவர் படுத்திய பாட்டைத் தாங்க முடியாமல் கணவனை நோக்குவார்; மகனை நோக்குவார்; இதயம் சோர்ந்த மகளை நோக்குவார்; விண்ணை நோக்குவார்; சொர்க்கம் நோக்குவார் என்று அவரின் துயரக்காட்சியை உமறு துன்பச் சுவை தோன்றச் சித்தரிக்கிறார். சுமையா இறந்து விடுகிறார். சித்திரவதை செய்யப்பட்ட சுமையாவின் துயரத்தை வர்ணித்த உமறு அவரின் சிறப்புகளை எடுத்துக் கூறுகிறார்.
யாசிறு மனைவி நல் லறிவுக் கில்லிடம்
மாசறத் தீன்பயிர் வளர்க்கும் வேலியார்
பாசமற்றவரிடர் பார்த்தி லேனெனக்
காசறு பொன்னகர் காணப் போயினார். (தீனிலை கொண்ட. 131 )
யாகிறின் மனைவி நல்லறிவின் உறைவிடம் ; வளரும் தீன் பயிர் காக்கும் ஒப்பற்ற வேலி; மனித நேயமற்றவர் செய்யும் கொடுமையைக் காணச் சகியேன் என்று சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் எனத் துன்பமும் ஆறுதலும் கலந்த உணர்ச்சி எழச் செய்து, உவமை நலம் தோன்றப்பாடுகிறார். இவ்வாறு இன்னுயிர் நீத்த சுமையா அம்மாறுக்கு மட்டும் தாயல்லர். நல்லவர் எல்லாருக்கும் தாயாவார் என்று சுவைபடப் பாடிக் களிக்கிறார். தொடர்ந்து பகைவர் செய்த கொடுமையால் யாசிறும் அவர் மகளும் இன்னலில் இடைந்திடைந்து இறந்து சோதியாய்ப் பொன்னுலகில் குடி புகப் போயினர் என்றும் பாடிப் புலம்பி ஆறுதல் அடைகிறார். இபுனு கலபென்பவன் ஈமான் கொண்ட பிலாலைச் சுடுமணலில் கிடத்திப் பெருங்கல்லை நெஞ்சில் நிறுத்திக் கொளுத்தும் வெயிலில் கொடுமைப்படுத்திய துயரக் காட்சியையும் வர்ணிக்கிறார். இப்படிக் கொடுமைப் படுத்தியபோதும் பிலால் இஸ்லாத்தை இன்னுயிரினும் மேலாகக் கருதினார். இக்கொடுமைகளைக் கண்டு அறஞ்சான்ற அபூபக்கர் பிலாலுக்கு விடுதலை பெற்றுத்தந்த செய்தியையும் உமறுபாடுகிறார்.
உறம்சாவின் வருகை
நபிகள் நாயகத்தை அபூஜகில் இழிவான சொற்களால் ஏசினான். பொறுமைக் களஞ்சியமாகிய நபிகள் நாயகம் மறுமொழி கூறாமல் போய்விட்டார். இந்நிகழ்ச்சியைக் காட்டிலிருந்து வந்த உறம்சாவிடம் பெண்ணொருத்தி கூறினார். சினங்கொண்ட உறம்சா அபூஜகிலை வில்லால் அடிக்க, காயம் ஏற்பட்டுக் குருதி வழிந்தது. தமது சகோதரரின் மகனான நபிகள் நாயகத்தின் நல்லியல்பும் சிறந்த கொள்கையும் உறுதியும் பகைவர் படுத்தும் பாடும் பொறுமையும் கண்டு மனம் நெகிழ்ந்த உறஸ்மா இஸ்லாத்தில் சேர்ந்தார். இஸ்லாம் நிலைகொண்டு வளர்ந்து வந்தது; காபிர்கள் கவலை கொண்டனர். முஸ்லிம்கள் சிந்தை மகிழ்ந்தனர்.
உமறு சுத்தாப் ஈமான் கொண்டார்
நபிகள் நாயகம் அவர்களுக்கு நபிப்பட்டம் வந்து நான்காண்டுகள் ஆயின. ஐந்தாமாண்டின் தொடக்கத்தில் ஓரிரவில் நபிகள் நாயகம் இறைவனை நெஞ்சுருகி இறைஞ்சி இரு கையேந்தி, "தீனிலை பெலனுற அடலரி உமறினை அல்லது புஜகிலினை எனக்காதரவாய்த் தந்தருள்வாயாக" எனக் கேட்டார். இந்நிலையில் கொடு மனக்குறை உஷிகளின் தலைவன் அபூஜகில் அவையில் பகைவர் திரண்டனர். மக்காநகரையும் குறைஉஷியர்களின் வீரத்தையும் புகழ்ந்து பேசிய அபூஜகில் நபிகள் நாயகத்தை இகழ்ந்துரைத்து அவரைக் கொன்று வருபவர்க்குத் தமது பொருள்களைப் பரிசாக வழங்கி அரசனாக்குவதாக அறிவித்தான். வீர உணர்வால் உந்தப்பட்ட உமறுகத்தாப் "நம் மரபு நெறியையும் நாம் வணங்கும் தெய்வங்களையும் பழிந்து நம் இனத்துள் பேதங்களை உண்டாக்கும் முகம்மதைக் கொன்று வருவேன் என்று வணங்கி உறைவாளினை உருவிச் சென்றார். வானவர் ஒருவர் இடப வடிவெடுத்து வழியில் வந்து உமறை விளித்து, "எங்குச் செல்கிறீர்கள்" என்று கேட்டதற்கு, உமறுகத்தாப், "முகம்மதின் உடலைத் துணித்திட" என வீறுடன் மொழிந்தார். "என்னை வென்றாயெனில் முகம்மதை வென்றதாகும்' என இடபம் கூறியது, நரபதி உமறு இருவிழி கனல் சிந்திட மந்திரக் கதிர் வாளெடுத்து வந்து எதிர்த்து நின்று வீசினார். இடபமோ கண்ணுக்குத் தோன்றும் மறையும்; உமறுகத்தாப் துரத்தியடருவார்; கரத்தை நோக்குவார்; வாளினை நோக்குவார், வீரத்தை நோக்குவார், கடுப்போடு இடபத்தினை நோக்குவார், மலைத்திட மனம் நோக்குவார் என்று வெகுளிச்சுவை பொங்க உமறுப்புலவர் பாடுகிறார். அபூஜகிலின் அவையடைந்து நடந்த புதுமைகளைக் கூறினார். அவன் கேட்டு நகைத்தான். முகம்மது இயற்றிய வஞ்சகச் செயல்களில் இஃதும் ஒன்று என்று கூறி நகைத்தான்.
இதனால் வீரர் உமறுகத்தாப் உந்தப்பட்டு, "முகம்மதைக் கொல்ல ஒளிதிகழும் வெற்றி வாள் ஏந்தினேன்" என்று கூறி நடந்தார். பின்னால் நடக்க இருப்பதை உணராதார் என்று உமறு நயம்படப்பாடுகிறார். அரபிகள் பலர் ஆலயத்தில் கூடி சுபாகு என்னும் தெய்வத்திடம் வேண்டினர்; உமறு கத்தாப் அங்கு வந்து சேர்ந்தார். அத்தெய்வம், "நாயகம் இறைவனின் உண்மைத்தூதர், நபிகளில் புகழின் மிக்கார்" என்று போற்றி அவர் சொற்படி நடப்பது நம் கடமையாகும், அவ்வாறு நடப்பவர் இவ்வுலகில் அரசராவதுடன் சொர்க்கத்திலும் சேர்வார்; என்னிடம் கேட்பது கேடாகும்" என்று கூறியது. இதனை இடபம் கூறியதோடு இணைத்துப்பார்த்த உமறுகத்தாப் நபிகள் நாயகத்தை நோக்கிச் செல்வதை விட்டுத் தன் சகோதரி பாத்திமாவின் வீட்டை நோக்கிச் சென்றார். இதனையறிந்த சகோதிரி குருவாகிய ஹப்பாப் என்பாரை மறைந்திருக்கச் செய்து கதவைத் திறந்து சகோதரரை வரவேற்றார். நபிகள் நாயகத்தை அவர்கள் பின்பற்றியதாலும் வேத வசனத்தை ஓதியதாலும் அவரின் கணவரைத் தாக்கினார். பாத்திமா இடைமறித்தார்; அடி அவரின் நெற்றியில் பட்டுக் காயம் ஏற்பட்டது; இரத்தம் சிந்தியது; இரத்தபாசம் விடுமா? உடன்பிறப்பின் உதிரம் உமறுகதாபைச் சிந்திக்க வைத்தது. ஏற்கனவே மாறிவந்த மன உணர்வு கிளர்ந்தெழுந்தது.
சகோதரர் உமறு, "வீட்டில் நீங்கள் அடிக்கடி ஓதிவருவது என்ன? அதனைத் தருக" என்று கேட்டார். உண்மை நிலை தெரியாத சகோதரி துப்புரவு இல்லாதவரிடம் புனித வேதவசனத்தைத் தரக்கூடாது" என்றார். இதனைக் கேட்ட உமறு குளத்திற்க்குச் சென்று நீராடி வந்து, தருக என்றார். 'முகம்மதே உண்மைத் தூதர்' என்ற வேதவசனத்தைப் பொறித்த ஏட்டினைத் தந்தார். உமறுகத்தாப் வாங்கித் திருவசனங்களில் ஒன்றைத் தெளிவுறத் தேர்ந்து வாசித்தார். மனமிக மகிழ்ந்து, மானுடர் மொழி இஃதன்று இறைவனின் மொழியே' என்று தெளிந்தார். நினைத்த வஞ்சகத்தை நீக்கினார். குறைபடுங்குபிரைக் குலத்தொடும் வெறுத்தார். ஆர்வம் மீதூர நபிகள் நாயகத்தைக் காணத்துடித்தார். அவர் தங்கியிருந்த அர்கமுடைய வீட்டிற்குச் சென்றார். தயக்கத்துடன் கதவு திறக்கப்பட்டது. நபிகள் எழுந்து சென்று தழுவி அவரின் கை பிடித்து, வந்த காரணம் யாதென்று கேட்டார். "சிறப்பிற்குரிய நபியே உமது கலிமா உரைப்படியே அரிய மறை தேர்ந்து ஈமான் கொண்டு, அறநெறியில் நடக்க ஆவல் கொண்டு வந்தேன்' என்று உணர்ச்சி வயப்பட்ட உமறுகத்தாப் கூறினார்.
வரிசை நபியே முகம்மதுவே
வானோர்க் கரசே புவிக்கரசே
உரிய தனியோன் முதற்தே
உமது கலிமா வுரைப்படியே
அரிய மறைதேர்ந் தீமான் கொண்(டு)
அறத்தா(று) ஒழுகும் படி கருத்திற்
கருதி யிவணி லடைந்தேனென் (று)
உரைத்தாருமறு கத்தாபே (உமறுகத்தாப் ஈமான். 90)
என்று உமறுகத்தாப் ஆவல் பெருக்குடன் கூறியதை உமறுப்புலவர் ஆர்வப்பெருக்குடன் பாடிக் களிக்கிறார். மகிழ்ந்த மாநபி பெரும் பேறு கிடைத்ததெனக் கருதி "அல்லாஉற் அக்பர்'[*] என தக்பீர் முழங்கினார். இடர்ப்பாட்டுக்கிடையே தீனநெறி சுடர் வீசியது.
---
[*] இறைவன் ஸரியவன்.
உடும்பு பேசியது
உமறுகத்தாப் ஈமான் கொண்டது இஸ்லாத்திற்கு எழுச்சியைத் தந்தது. நபிகள் நாயகம் தம் தோழாக்களுடன் கானகம் சென்றார். வேடன் ஒருவன் அரிதின் முயன்று பிடித்த உடும்புடன் நபிகள் நாயகத்திடம் வந்தான். நபி என்பதற்க்குச் சான்று தந்தால் இஸ்லாத்தை ஏற்பதாகக்கூறினான். நன்னெறி காட்டும் நபிகள் நாயகம், "நீ வேட்டையாடிக் கொண்டு வந்த உடும்பை என் முன் விடுக; அது சான்று பகரும்" என்றார். "விடுபட்ட உடும்பு நிற்குமா? என்று தயங்கிய வேடன் அப்படியே செய்தான். விடுதலை பெற்ற உடும்பு அகலாது நின்று வணங்கி, நீவீர் இறைவனின் தூதர்" என்றுரைத்தது. இதனைக் கண்டு வியந்த வேடன் இனிய கலிமாவைச் சொல்லி இசுலாமிலானான். உடும்பும் வணங்கிக் கானகம் சென்றது.
உத்து பாவின் உரையாடல்
உடும்பு பேசியதும் வேடன் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்தது விசுவாசிகளுக்கு மகிழ்வும் வலிவும் தந்தது. பகைவர்க்கோ இது ஆத்திரமூட்டியது. ஆதலின் குறைஉஷிப் பகைவர்கள் தமது வேத வசனங்களை இழிபடுத்தும் முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்று பேசினார்கள். இது மாமலையைக் கொசுக் கூட்டம் அழிப்போமென்பது போல் உள்ளது என்று உமறுப்புலவர் உவமை நயந் தோன்றக் கூறுகிறார். உத்பா என்னும் குறைஷி நான் உன் சமூகத்தை வென்று வருகிறேன் என்று கூறிச் சென்றான். நாள்தோறும் கிழக்கில் தோன்றி மேற்கில் செல்லும் சூரியனை இருகாலும் இல்லாத ஒருவன் தடுத்து நிறுத்த முயல்வது போலுள்ளது இது என உமறு உவமை நயந்தோன்றக் கூறி நகையாடு கிறார். ஆணவத்துடன் வந்த உத்பா நபிகள் நாயகத்திடம் உரையாடினான். புதிய வேதத்தில் ஒரு வசனம் ஓதும்படிக் கேட்டான். நபிகள் நாயகம் அதற்கிசைந்து பிஸ்மில்லா உறிர்ரஉற்மான் நிர்ரஉறீம் சொல்லி ஒரு வனசனத்தை ஓதி விளக்கினார். இனிய வேத கானத் தையும் அதன் பொருள் விளக்கத்தையும் கேட்டுக் கிறுகிறுத்துப் போன உத்பா யாதும் பேசாமல் எழுந்து போனான். சோர்ந்த முகத்துடன் சென்று வந்த உத்து பாவிடம் விவரம் கேட்டனர். அதற்கு உத்பா "அவையோரே! முகம்மதின் சொற்களுக்கு வானவராலும் மறுப்புரைக்க இயலாது" என்று கூறினான். இதனைக் கேட்ட குறைஉஷியர்கள், "அஃறிணைப் பொருள்களையே பேச வைத்து மாயம் செய்யும் முகம்மது உத்பாவை மயக்குவது அரிதோ?" என்று கூறி நகைத்தனர்.
உறபீபரசர் வந்தார்
கொடுமனக் குறைஉஷிகள் நாயகத்தின் மந்திர தந்திரங்களில் உத்துபாவும் வீழ்ந்து விட்டான் என்று பழித்தனர். அதிருப்தியடைந்த அபூஜகில் அவை கூட்டி நபிகள் நாயகத்தை ஒழித்துக்கட்ட வேறுவழிகளை ஆராய்நந்தார்கள். மக்கா நகர மக்களால் மட்டும் முகம்மதுதை வெல்ல முடியாது, அவன் மந்திர தந்திரம் கற்றவன். நாம் வணங்கும் தெய்வங்களும் நமக்குத்துணையாக இருக்கும் என்று கூற முடியாது. திமிஸ்கு நகர மன்னர் உறபீபு அரசர் எல்லா வகையிலும் உயர்ந்தவர். அவரை அழைத்து வந்து முகம்மதை அடக்க வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லை" என்றான். அவையோரும் இதனை ஏற்றனர்.
திமிஉஷ்க் மன்னரை அழைப்பதற்காக அவருக்கு விண்ணப்பம் ஒன்று வரைய முற்பட்டனர். "எங்கள் மக்காநகரில் முகம்மது என்றொருவன் தோன்றியுள்ளான். மாய மந்திர தந்திரங்களைக் கற்று மக்களை ஏமாற்றி வருகிறான் . கதிஜா என்னும் சீமாட்டியை மணந்து, அவரின் அளவிலாச் செல்வத்தை அடைந்து, தனக்கு நிகர் வேறு எவரும் இல்லை எனத் தருக்கித் திரிகிறான். இறைவன் ஒருவனே. அவனுக்கு இணையில்லை , நான் அவனுடைய தூதர், எனக்கு வேதம் அருளப்பெற்றுள்ளது எனப் புதுமை பேசுகிறான். பேச்சுத் திறத்தால் மக்களை மயக்கித் தன் பக்கம் சேர்த்துக் கொண்டான், நாம் போற்றி வணங்கும் தெய்வங்களை வெறும் உலோகங்கள் என்றும் கற்கள் என்றும் இழிவாகப் பேசுகிறான், செருக்குக் கொண்டு உற்றார் உறவினர்களை மதிப்பதில்லை. உலகிலுள்ள மன்னர்களையெல்லாம் வென்று தன் அடி பணியும்படி செய்யப்போவதாகக் கூறுகிறான். அவன் பேசுகிற சிலவற்றையெல்லாம் கூற வாய் கூசுகிறது. அவனை அடக்க எங்களால் முடியாது; தாங்கள் இங்கு வந்து காண்பீர்களானால் முகம்மதின் வஞ்சனைகள் அகலும்; துன்பங்கள் நீங்கும்' என்று நீண்ட கடிதம் எழுதி அனுப்பினர். இக்கடிதம் உறபீப் அரசர் அபூஜகிலின் கூட்டத்தார் மீது பரிவு கொண்டு நாயகத்தைத் தண்டிக்கத் தூண்டுவதாக எழுதப்பட்டது. ஒரு மன்னருக்கு விண்ணப்பிக்கும் கடிதம் எப்படி எழுதப்பட வேண்டுமோ அப்படி எழுதப்பட்டுள்ளது. உமறு கடிதத்தைத் தம் காப்பிய வளர்ச்சிக்குரிய உத்தியாகப் பயன்படுத்துகிறார்.
மன்னர் தம் படைகளுடனும் அவைப்பெருமக்களுடனும் மக்க மாநகர் புறப்பட்டார். இயற்கை வர்ணனையில் மிகுந்த ஆர்வங்காட்டும் உமறு இங்குத் தமிழ்நாட்டு நானில வர்ணனையை நன்கு அமைத்து விடுகிறார். இந்நிலவளங்கள் எல்லாம் கண்டு மக்காவிற்கு அருகில் வந்து அரசர் பரிவாரங்களுடன் தங்கினார்.
இந்தநிலையில் வானவர்கோன் ஜிபுறயில் நபிகள் காண விண்ணில் தோன்றினார். இறைவனின் சலாம் கூறி "நாயகமே உங்களுக்கு இறைவன் வெற்றிகளைத் தந்துள்ளான். விண்ணிலும் மண்ணிலும் முகம்மதைக் காட்டிலும் மேலான ஒன்றைப் படைக்கவில்லை எனத் தெரிவித்தான். இங்கே உற்பீரசர் படைகளுடன் தங்கியுள்ளார். மனிதர்கள் செய்ய முடியாதவற்றைச் செய்யும்படிக் கேட்பார். நீங்கள் அஞ்சத்தேவையில்லை. இறைவனிடம் இறைஞ்சுவீர்களாயின் அவை நிறைவேறும்" என்று சொல்லிச் சென்றார்.
மன்னர் மக்க மாநகருக்கு அருகில் இருக்கும் செய்தியை அபஜகிலுக்கும் அவனைச் சார்ந்தோர்க்கும் அனுப்பினார். அது கேட்டு மகிழ்ந்த அபுஜகில் ஊர்ப் பொதுமக்களை அழைத்துச் செய்தி அனுப்பினான். அவர்கள் அரசர் தங்கப் புதியதொரு மாளிகை அமைத்தனர். அரசரைக் காணிக்கையுடன் சென்று கண்டனர். அவர்களின் வேண்டுகோளின்படி அவர் அம்மாளிகைக்குச் சென்று தங்கினார்.
அபுஜகிலை நோக்கித் தம்மை அழைத்த காரணம் யாதெனக் கேட்டார். "மன்னரே, இங்கு முகம்மது என்பான் நமது தெய்வங்களையும் முன்னோர் நெறிகளையும் பழித்து அழித்துக் கொண்டு வருகிறான். செங்கோல் வேந்தே மூதறிஞ்ஞரே! பகைவரை அழித்தொழிக்கும் சிங்கமே நீங்கள் அறியாததொன்று மில்லை. நாங்கள் கூறியவற்றை நீங்கள் நேரில் காணலாம் " என்று அத்தீயவர்கள் ஒருசேரக் கூறினர்.
அபுதாலிபு அரசரைக் கண்டார்
அடுத்தநாள் காலையில் அபுதாலிபு மன்னரைக் காணப்புறப்பட்டுச் சென்று அரசரைப்பாராட்டினார். மகிழ்ந்த மன்னர் "மூத்த சான்றோரே! உம்மைப் போன்றவர்கள் உறவினர்களிடையே பகை தோன்றுவதைத் தடுக்க வேண்டாமா? உங்கள் தம்பி மகன், 'ஆண்டவன் ஒருவன், அவன் தனித்தவன், அவனின் தூதன் நான் எனக்கு வேதம் அருளப்பட்டுள்ளது, என்று கூறி முன்னோர் நெறியைப் பழிக்கிறார் நபி என்றால் அற்புதங்கள் நிகழ்த்த வேண்டாமா? என்று கேட்டு நபிகளுள் சிலர் நிகழ்த்திய
அற்புதங்களை விவரித்தார்.
உறபீபரசர் நபிகள் நாயகத்தை அழைத்துவர ஒரு தூதரை அனுப்பினார். நபிகள் நாயகத்திடம் தான் வந்த விவரம் கூறினான். நபிகள் நாயகம் குறைஉஷிப் பகைவர்கள் உறபீபரசருக்குக் கடிதம் அனுப்பி இருப்பதையும் தம்மை அழைத்திருப்பதையும் தம் இனிய துணைவி கதிஜா நாயகியிடம் கூறினார். நாயகி தம் கணவருக்குத் தீங்கு நேருமோ என்றஞ்சினார். அறவழியில் நடப்பவர்க்கு ஒரு நாளும் துன்பம் நேராது என்று கூறிப் புறப்பட்டார். அபூபக்கர், உமறு, அலியார் ஆகிய தோழர்களும் சென்றனர்.
உறபீபரசரைக் காணச் சென்ற நபிகள் நாயகத்தை "இறையருளாகிய அணிகலன் அணிந்து, திருமறை வசனங்களாகிய மாலை பூண்டு, பிஸ்மில்லாவாகிய வீரவாள் ஏந்தி முழுநிலவு புறப்பட்ட தெனப் புறப்பட்டார். தீன் எனும் கொடி முன்னே செல்ல, ஈமான் எனும் யானைப்படை அசைந்து வர, கலிமா என்னும் குதிரைப்படை துள்ளிச் செல்ல, இறையருளாகிய ஆட்படை அணிவகுத்து வர, தீன் தீன்! என்று முரசு முழங்கச் சென்றார் என்று உமறு உருவக அணிதோன்றக் கூறுகிறார்.
அபூஜகிலின் அச்சம்
நாயகத்தின் வருகை பற்றி அறிந்த அபூஜகில் உறபீபரசரிடம் "முகம்மதின் வாயில் தோன்றும் அனைத்தும் பொய்யே! மாய மந்திரங்களினால் யாரையும் வயப்படுத்தி விடுவான்; நபிகளைப் போல் வேடமிட்டு வருவான்; எதிர்ப்படுபவர் யாராயினும் அவர் நம்புமாறு பேசுவதில் வல்லவன்; ஆதலினால் அரசர் அவன் பேச்சை ஏற்கக் கூடாது" என்று கூறினான்.
இதனை உறபீபரசர் அப்படியே ஏற்கவில்லை . நடு நிலையாக உண்மை நிலை பற்றி உரைத்து 'இறைத்தூதர் செயல் இது. மாய வித்தைக்காரர் செயல் இது என்பதை அறிவுடையோர் அறிவர். நாம் முகம்மதின் செயல் தன்மையை இன்று சூரியன் மறையுமுன் கண்டறிவோம்" என்று கூறினார்.
அபுஜகிலின் பொய்யுரை கேட்டு வருந்திய அபுதாலிபு அதற்கு மறுப்புரையாக நபிகள் நாயகத்தை ஆதரித்துக்கூறினார். அரசே அறிவிலும் குணத்திலும் பொறுமையிலும் உண்மை சொல்வதிலும் நன்னெறி நடப்பதிலும் முகம்மதுக்கு நிகர் எவருமில்லை . அவர் என்றும் பொய் சொன்னதில்லை, மந்திர தந்திரம் கற்றவரல்லர், எப்போதும் யாரையும் குறை கூறியதில்லை அதிகம் சொல்லானேன்; சிறிது நேரத்தில் வந்துவிடுவார் நீங்களே கண்டு கேட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்" என்றார். உமறு இங்கு நபிகள் நாயகத்தின் நல்லியல்புகளையெல்லாம் தொகுத்துக் கூறித் தன்னேரில்லாத் தலைவராகக் காட்டுகிறார்.
நபிகள் நாயகம் வந்தார்
இந்நிலையில் நபிகள் நாயகம் வந்து மாளிகையில் நுழைந்தார்; அரசர் எழுந்து சென்று அவரை வரவேற்று, தம்மருகே அமரச் செய்து உரையாடலானார். இதனைக் கண்ட அபூஜகிலின் முகம் வாடியது; முகம்மதை ஒழிக்க அவர் எங்கே துணை செய்யப் போகிறார் என்று கலங்கினான். அரசரோடு வீற்றிருந்த நபிகள் நாயகத்தைக் கண்ட திமிஸ்கு மக்கள் தமக்குள் பலவாறு பேசிக் கொண்டனர். அருளொழுகும் கண்களும், அழகொளிரும் மேனியும், அங்க லட்சணங்களும், தெளிந்த கல்வியும், பொறுமையும் நிரம்பித் திகழும் நாயகத்தின் புகழ் அளவிடற்கரியது என்றார் சிலர்.
இறைவன் தூதரென்றும் தமக்கு வேதவசனம் இறங்கியது என்றும் தமது நெறியே நெறியென்றும் நபிகள் நாயகம் சொல்லுவதில் தவறில்லை அபூஜகில் கூறுவது வீண் பழியே என்றார் சிலர்.
அபூஜகலின் சொற்படி நடந்தால் சுவர்க்கப் பேற்றினை இழந்து நரகை அடைவோம் என்றார் சிலர்.
கண் கிடைத்த பயன் முகம்மதைக் காண்பதே; இவரைக் காணாத கண்கள் புண்களே. இவருக்கு அருளப்பட்ட திருக்குர் ஆனை விரும்பிப் பின்பற்றாதவர்கள் மனிதராகார் என்றார் சிலர்.
அபுஜகிலின் பேச்சைக் கேட்டு அரசர் முகம்மதுக்குத் தீங்கு செய்வாராயின் அரசரையும் அபூஜகிலையும் அழித்தொழிப்போம் என்றார் சிலர். நம் அரசர் மட்டுமல்லர், இவ்வுலகில் உள்ள அரசர்களெல்லாம் கூடி எதிர்த்தாலும் முகம்மதை வெற்றிக் கொள்ள முடியாது என்றார் சிலர்.
உறபீபரசரின் விருப்பம்
இவ்வாறு பலரும் நபிகள் நாயகத்தைப் புகழ்ந்தும் அபுஜகிலை வெறுத்தும் பலவாறு பேசியிருக்க அரசரோ நபிகள் நாயகத்திடம் அன்புடன் பேசினார். பகைவர் கூறிய கருத்துக்களை தொகுத்துக் கூறி "நபிகள் என்போர் தம்மை மக்கள் ஏற்கும்படி அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். நூகுநபி , இபுராஉறிம் நபி, மூசா நபி, ஈசா நபி ஆகியோர் பல அற்புதங்களைச் செய்து காட்டியுள்ளனர். முன்னைய நபிகளைப் போல நீங்களும் அற்புதங்களைச் செய்து காட்ட வேண்டாமா? என்று வினவினார். இதனைக் கேட்ட நபிகள் நாயகம் " நான் என்ன அற்புதத்தை நிகழ்த்திக்காட்ட வேண்டும் மென விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார். உறபீபரசரும் கூறலானார்.
"முகம்மதே நாளை அமாவாசை ; சூரியன் மறைந்து இரவு ஆரம்பிக்கும், வானம் முழுவதும் இருள் பரந்து மூடிக் கொள்ள வேண்டும், நீங்கள் இங்குள்ள அபூகுபைசு என்னும் மலையின் உச்சியில் நின்று கொண்டு கிழக்குக் கடலில் முழுமதியை எழச் செய்ய வேண்டும். அது வானத்தில் உயர்ந்து வந்து கஃபத்துல்லா மீது இறங்க வேண்டும்; பின்னர் தரைக்கு வந்து கஃபாவை ஏழுமுறை வலம் வந்து, அதனுள் நுழைந்து, இறைவனை வணங்கி, வெளிவந்து மக்கள் மத்தியில் நடந்து, மலைமீதேறி, உமதருகே நின்று "இறைவன் ஒருவனே; முகம்மது அவனுடைய திருத்தூதர்" என்று அனைவரும் கேட்கும்படிக் கூற வேண்டும். அதன் பின் முழுநிலவு உமது சட்டைக்குள் நுழைந்து இரு பிளவாகி ஒரு பகுதி வலக்கைச் சட்டை வழியாகவும் மற்றொன்று இடக்கைச் சட்டை வழியாகவும் வெளிவந்து, உம்முடன் நின்று ஒன்று கிழக்குக் கடலுக்கும் மற்றொன்று மேற்குக்கடலுக்கும் சென்று நிற்க வேண்டும்; பின்னர் அவை இரண்டும் சேர்ந்து முழுநிலவாகி "இறைவன் ஒருவன் நீவிர் அவன் தூதர் " என்பதற்க்குச் சான்று பகர வேண்டும். இவ்வற்புதத்தைச் செய்து முடிப்பீரானால் நானும் என்னைச் சேர்ந்தவர்களும் உம்மைப் பின்பற்றுவோம் என்று கூறினார்.
இறைவனை இறஞ்சினார்
இதனைக் கேட்ட நபிகள் நாயகம் கலங்காமல் "இவை மட்டும்தானா? இன்னும் கூற வேண்டியது உள்ளதா?" என்று கேட்டார். அரசர் இவ்வளவுதான் என்று கூற, நபிகள் நாயகம் விடைபெற்று வீட்டிற்குச் சென்றார். வீடு வந்த நபிகள் நாயகம் கதிஜா நாயகியிடம் அரசர் முன் நடந்தவற்றைக் கூறினார். நாயகியின் மனம் துணுக்குற்றது; இருகரங்களையும் ஏந்தி இறைவனிடம் இறைஞ்சினார். நபிகள் நாயம் இரண்டு ரக்அத் தொழுது வெற்றி தர இறைஞ்சினார், அப்போது ஜிபுறயீல் தோன்றி "நபிகள் நாயகமே உம் சொற்படி நடக்க நிலவிற்கு இறைவன் கட்டளையிட்டுள்ளான்" என்று கூறினார். மனக்கலக்கத்தோடு சென்ற அபுதாலிபு அவர் வீட்டு மதிலிலிருந்து "இறைவனருளால் அனைத்தும் இனிதே நிறைவேறும்' என்ற ஒலி எழுந்ததைக் கேட்டு மகிழ்ந்தார்.
அறம்பறப்பட்டது
அடுத்தநாள் நபிகள் நாயகம் தம் தோழர்களுடனும் உறவினர்களுடனும் புறப்பட்டார். இதனை உமறு, பாதகம், வஞ்சனை, குபிர் இருள் அனைத்தும் அழிந்துபோக அறம் பறப்பட்டது என்று பாடுகிறார். நபிகள் நாயகம் கஃபத்துல்லாவை வலம் வந்து வணங்கி, அங்கிருந்து அபூகுபைசுக் குன்றுக்குச் சென்றார். நிகழ இருக்கம் அதிசயத்தைக் காண மக்கள் திரண்டனர். உறபீபரசரும் அவருடன் வந்த பெருமக்களும் வந்து சேர்ந்தனர். கதிரவன் மேற்றிசைக்கடலில் மறைந்தான். இக்கதிரவன் மறைவில் பகல் முழுவதும் வானில் திரிந்ததால் ஏற்பட்ட களைப்பபைப் போக்க கதிர்க் கரங்களை ஊன்றிச் செந்நிறப் போர்வையைப் போர்த்திக் கொண்டு கடல் மெத்தையில் படுத்தது என்றும், அரசர் நிலவை இரு துண்டாக்கிக் கூறியது போல் எங்கே தன்னையும் இரு கூறக் கேட்டு விடுவாரோ என்றஞ்சி அவன் ஒளிந்து கொண்டது போன்றிருந்தது என்றும் சுவைபடத் தற்குறிப்பேற்ற அணியில் கூறுகிறார்.
அற்புதம் நிகழ்ந்தது
நபிகள் நாயகம் அபுகுபைசு மலை மீதிருந்து இறைவனை இறைஞ்சினார். இறைவன் கட்டளைப்படி விண்ணகமும் மண்ணகமும் இருள் சூழ்ந்தது, மக்கள் பதைபதைத்தனர். நிலவை அழைக்கும்படி உறபீபரசர் கூறினார். நபிகள் நாயகத்தின் கீர்த்தி மலர்ந்ததைப் போல் நிலவு கீழ்க்கடலில் உதயமாயிற்று; நபிகள் நாயகத்தையும் அரசரையும் மகிழச் செய்தது. குபிரர்களின் அகங்களையும் முகங்களையும் தீய்ந்திடச் செய்தது. அரசர் கூறியவாறே அற்புதம் நிகழ்ந்தது. இறுதியில் அந்நிலவு "முகம்மது இறை தூதரே" எனப் பகர்ந்தது.
உற்பீபரசரின் பாராட்டு
வியந்த உறபீபரசர் நபிகள் நாயகத்தின் திருவடிகளில் படிந்து, முத்தமிட்டு, "இறைவனின் தூதரே! பேரின்ப விளக்கே வானவர்க்கு அரசே பாவக்கடலைக் கடக்க உதவும் மரக்கலமே உமது சொல்லை ஏற்றவர் உயர்வு பெறுவர், மறுப்பவர் நரகம் பெறுவர் எனப் போற்றி நபிகள் நாயகத்தை அவர்தம் இல்லம் செல்ல வேண்டினார். விண்மதி கடலை அடைந்தது போல் நபிமதி முகம்மது இல்லம் சென்றடைந்தார். அபூஜகிலும் அவன் கூட்டத்தாரும் முகம் வாடினர். மனம் மருகச் செய்வதறியாது திகைத்தனர். "உறபீபரசரும் முகம்மது வலையில் வீழ்ந்து விட்டார்" என்று கூறித் தம்மைத்தாமே தேற்றிக் கொண்டனர்.
கேசாதிபாத வர்ணனை
நபிகள் நாயகம் தாம் விரும்பிய வண்ணம் முழுநிலவை அமாவாசையன்று அழைத்துப் பேசச் செய்த மறுநாள் தம்மிடம் வந்த உற்பீபரசரிடம் இஸ்லாத்தின் மூல மந்திரமாகிய கலிமாச் சொல்லும்படி சொன்னார். உறபீபரசர் அதனை மறுக்காமல், என்னிடம் ஒரு விண்ணப்பம் உள்ளது, அதனைக் கூறலாமா? என்று கேட்டார். குறிப்பறிந்து நபிகள் நாயகம் "உமது மகளுக்கு ஏற்பட்டுள்ள நோயை நீக்க வேண்டும் என்பதுதானே" என்று கேட்டார். நபிகள் நாயகத்தின் அருளாற்றலால் ஆட்கொள்ளப் பட்டிருந்த உறபீபரசர் இதனைக் கேட்டு மகிழ்ந்து போனார். ஏற்கனவே ஜீபுறயீல் கொண்டு வந்த இறை உரைப்படி அத்தசைக் கட்டியை கபத்துல்லாஹிற்குக் கொண்டு வரச்செய்தார். போர்வையை அதன் மீது போர்த்தி, ஜம்ஜம் கிணற்றுத் தண்ணீரைத் தெளித்தார். இறைவனிடம் கையேந்தி இறைஞ்சினார். என்ன ஆச்சரியம்! உயிரற்ற அத்தசைக்கட்டி அழகான பெண்ணாக உருவெடுத்தது.
காப்பியத்தில் அங்க வர்ணனை - சிறப்பாகப் பெண்கள் அங்க வர்ணனை இடம் பெறுதல் வேண்டும். முடிமுதல் அடிவரையிலான உறுப்பு நலன்களை அழகுற வர்ணிப்பதைக் கேசாதிபாத வர்ணனை என்பர். அடிமுதல் முடிவரை வர்ணிப்பதைப் பாதாதி கேசவர்ணனை என்பர். தெய்வ வர்ணனையில் இது ஆளப்படும். மானுடர்க்குக் கேசாதிபாத வர்ணனை போற்றப் படும். நாயகத்தோடு நெருங்கிய தொடர்புடைய பெண்கள் மதிப்பிற்குரியவர்கள். இத்தலை மாந்தர்களின் வர்ணனையில் காப்பிய மரபான அங்க வர்ணனையைச் செய்ய இயலவில்லை . ஆதலின் உமறுப்புலவர் கேசாதிபாத வர்ணனைக்கு இதனை அரிய களமாகக் கொண்டு தம் வர்ணனைத் திறத்தைப் புலப்படுத்துகிறார் என்று டாக்டர் எம். எம் உவைஸ் கூறுகிறார். நபிகள் நாயகம் நிகழ்த்திய அற்புதங்களுள் இது வரலாற்றிறஞர் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படாதது என்பது குறிப்பிடத்தக்கது.
தசைக்கட்டி பெண்ணாக எழுந்த அழகினை உமறு சொல்லோவியமாக்கி விடுகிறார்.
விண்ணகத்து அரம்பைக் குலத்தினும் வடிவாய்
விரிகடல் மகளினும் வியப்பாய்
மண்ணகத்து உறையும் எழுவகைப்பருவ
மடந்தையர் அணிந்திடும் மணியாய்க்
கண்ணினுக் (கு) அடங்காது அழகினைச் சுமந்த
கனியுரு வெடுத்த காட்சியதாய்
பெண்ணலங் கனிந்து நலன் எழில் பிறங்கப்
பெருநிலத் (து) எழுந்து நின்றனளே. (தசைக்கட்டியை. 17)
என்று பாடுகிறார்.
ஒவ்வோர் உறுப்பின் நலனையும் பொருத்தமான உவமைகளைக் கொண்டு நுணுக்கமாக வர்ணிக்கும் உமறுவின் நிறம் பாராட்டற்குரியது. முடி, நெற்றி, புருவங்கள், கண்கள், மூக்கு, இதழ்கள், முறுவல், மொழி, முகம், கழுத்து, தோள், கை, கைவிரல், நகம், தனம், வயிற்றின் மயிரொழுங்கு, இடை, தொடை, கணைக்கால், பாதம், குதி, புறந்தாள், கால்விரல் முதலிய உறுப்பு நலன்களை 18 பாடல்களில் சித்திரித்துள்ளார். இவற்றுள் சிலவற்றைப் பார்க்கலாம்.
முன்னர் அமாவாசை இரவில் முழுமதியை நபிகள் நாயகம் அழைத்தார். இந்த இருளிலும் கருமையான கூந்தல், கரிய மேகத்திலும் அடர்ந்து கருமணலிலும் மினு மினுத்தது; கொன்றைக்காய்க் கூட்டத்திலும் திரட்சி கொண்டு பாசிக் கொத்திலும் தழைத்து, மணம் மிகுந்து அழுந்தப் படிந்து நீண்டு தாழ்ந்து இளைஞர் கண்களை ஈர்க்கும் தன்மை கொண்டு இருளிலும் கரியதாக இலகிய கூந்தல் என்று வர்ணிக்கிறார்.
இரு பாடல்களில் அவரின் தனங்கள் பற்றிய வர்ணனை குறிப்பிடத்தக்கது; முலை அல்லது கொங்கை என்று கூறாது தனம் என்று கூறிச் சொல்லட்சியில் ஒரு தரத்தை நிறுவுகிறார்.
தடித்து, அடிபடர்ந்து, எழுந்து, பூரித்து, தளதளத்து, நுனிகறுத்து தவம் புரிவோரையும் நிலை குலையச் செய்வன கச்சினுள் அடங்காது திமிறி தேமல் படர்ந்து மதுக்கலசமோ? பேரிளம் குறும்பையோ? தாமரை மொக்குகளோ? என்று கூறத்தக்க தனங்கள் என்று வர்ணிக்கிறார். இறுதியில் தராசுத்தட்டு போன்ற வடிவமைப்புக் கொண்ட பரட்டினையும் மணிகள் பதித்த பந்தினையும் போன்ற குதிக்காலையும் ஞானியரும் போற்றும் படியான புறந்தாள்களையும் மாணிக்கக் கற்களைப் போன்ற விரல்களையும் கொண்ட பாதங்கள் என்று அடிகளை வர்ணித்து நிறைவு காணுகிறார்.
ஒவ்வோர் அங்கத்திலும் எத்தனை உவமைகள்!
இவ்வகை அங்க வர்ணனையிலும் நெறி திறம்பாது படிப்போர்க்கு அருவருப்பு ஏற்படாத வண்ணம் பாடுவதில் உமறு உயர்ந்து விளங்குகிறார். உமறின் வர்ணனையில் மரபு வழிப்பட்ட உவமைகளுடன் புதிய உவமைகளும் செறிந்து ஒளிர்கின்றன. ஆங்காங்கே ஒவ்வொன்றும் அழகு பெறுகிறது. இவ்வாறு உமறு கேசாதிபாத வர்ணனையில் தமது முத்திரையைப் பதித்துள்ளார்.
உறபீபு அரசர் அனுப்பிய அன்பளிப்பு
பூங்கொடி போல் நின்ற பாவையை திமி உஷ்கு மன்னரிடம் செல்கென நபிகள் நாயகம் நவின்றார். அம்மடந்தையும் மன்னரிடஞ் சென்று திருவடி வணங்கினாள். எழில் மகளைக் கண்ட மன்னர் இன்பக்கடலில் மூழ்கி "விண்ணகத்திலும் இல்லாத பதவி பெற்றனள், என் மனக்குறை நீங்கியது" என மகிழ்ந்தார், மகள் பின்வர நபிகள் நாயகத்தின் திருவடி பரவி, புகழ்ந்து சிறப்பளிக்கும் நெறிக்குரிய கலிமாவை ஓதினார்; தொடர்ந்து அமைச்சரும் படைவீரரும் மகளிரும் கலிமாக் கூறினர்.
திமிஉஷ்கு சென்ற மன்னர். அந்நகரப் பெருமக்களுக்கு சன்மார்க்க நெறிப் பயிற்சி தந்து இஸ்லாத்தில் ஆக்கினார். கஸ்தூரி மணங்கமழும் கருணை நபிக்கு ஆடை, ஆபரணங்கள், பொன், பட்டு முதலிய பொருட்களைப் பத்து ஒட்டகங்களில் ஏற்றிப் பரிசாக அனுப்பினார். பரிசுப் பொருட்களைச் சுமந்து ஒட்டகங்கள் வந்ததை அறிந்த அபூஜகில் உற்பீபரசர் நிதிக் குவையனைத்தும் தனக்கே அனுப்பினார் எனத் தடுத்துரைத்தான். அதனை அறிந்த நபிகள் நாயகம் தோழருடன் சென்று யாருக்கு அனுப்பப்பட்ட தென்பதைக் கொண்டு வந்தவரே கூறுவார். மறிப்பது தகாது என்றார். "யாருக்கு அனுப்பப்பட்டதென்பதைச் சுமந்து வந்த ஒட்டகை சான்று பகரும், நாளை வரை பொறுத்திரும்" என்று அபூஜகில் கூற அனைவரும் சென்றனர்.
அபூஜகில் ஆலயஞ்சென்று அங்குள்ள விக்கிரங்களுக்குதத் தூபமிட்டு, மாலை சூட்டி, வீழ்ந்து வணங்கி வந்து "ஒட்டகங்கள் தனக்குத்தானே இப்பரிசில் அனுப்பட்டப் பட்டன" என மூன்று முறை கேட்டும் அவ்வொட்டகங்கள் மூச்சுவிடவில்லை. இது கண்ட கூடியிருந்தோர் நபிகள் நாயகத்தை நோக்கி நீவிர் கேளும் என்றனர். அவ்வாறே நபிகள் நாயகம் ஒட்டகங்களை விளித்துக் கூறுக என்றுரைத்தார். உறபீபரசர் பொன், மணி முதலிய பரிசில்களை அனுப்பியது முகம்மதுக்கே என்று வாய்திறந்துரைத்தன. இப்புதுமை கண்ட பெருமக்கள் நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து போற்றினர், அபூஜகில் மதி மயங்கி, முகம் கறுத்து, வாய் வெளுத்து, தலை கவிழ்த்து, செயலிழந்து, திருந்திலா மனத்தொடும் சினத்தொடும் தன் கிளையோடும் போயினான் . நபிகள் நாயகம் அப்பரிசில் பொருட்களை முதியவர், மறையவர், இரவலர் முதலியோர்க்கு வழங்கி மகிழ்ந்தார்.
மானுக்குப்பிணை நின்றார்
ஒரு சமயம் நபிகள் நாயகம் நகர்ப்புறத்தை விட்டுச் சோலை சூழ்ந்த மலைப்பகுதிக்குச் சென்றார். அங்குச் சென்றபோது வலைக்குட்பட்ட மானோடு வேடன் நிற்பதைக்கண்டார். கசிந்துருகிய கருணை நபி சென்ற பாங்கினை உமறு நயந்தோன்ற வர்ணிக்கிறார்.
தளிரும் தேன் சிந்தும் மலரும் குலுங்கும் சோலையையும் நோக்கார், மலையிலிருந்து விழும் அருவியை நோக்கார். செறிந்துள்ள நிழலை நோக்கார். பேரீச்சம் பழக்காய்கள் மழையெனச் சொறிவதை நோக்கார். வலையுட்பட்ட மானையே நோக்கிச் சென்றார் என்று உமறு கூறுவதில் நபிகள் நாயகத்தின் இரக்க உணர்ச்சி நன்கு விளக்கப்படுகிறுது. அஃறிணைப் பொருள் என்றும் கருதாமல் மானுக்கிரங்கி அது கூறும் உரையைக் கேட்டார். "இறப்பதற்காக நான் வருந்தவில்லை, பிறந்தால் இறக்க வேண்டியது தானே; பல்லாண்டுகள் துன்புற்று இறப்பதைக்காட்டிலும் கடும்பசியால் வருந்தும் வேடன் ஒருவனின் பசி நீங்க இரையாகி இறப்பது மேலாகும்" என்று தத்துவம் பேசியமான் தான் வலையுள்பட்ட வரலாறு கூறத்தொடங்கியது.
கலையோடும் கன்றோடும் கூட்டத்துடன் மேய்ந்து கொண்டிருந்தேன் புலியொன்று முழங்கியது. சிதறி ஓடலானோம், அவ்வாறு ஓடிவந்த நான் வேடன் விரித்த வலையில் சிக்கிக் கொண்டேன். ஒன்றுமறியாத என் குட்டியைக்காண வேண்டும். பாலூட்டி வர வேண்டும். தாங்கள் பிணையாயிருந்து என்னை அவிழ்த்து விட்டால் விரைவில் சென்று
என் குட்டிக்குப்பால் கொடுத்துவிட்டு திரும்பி வந்து விடுவேன், கருணை காட்டுங்கள்" என்று வேண்டியது. இரக்கம் மிகுந்த நபிகள் நாயகம் வேடனிடம் "நான் பிணையா-யிருக்கிறேன் அவிழ்த்து விடுக" என்று கூறினார். கடினமானங் கொண்ட வேடன் சிரித்து விட்டான். "கட்டவிழ்த்து விட்ட மான் திரும்ப வருமா? எங்காவது நடந்ததுண்டா ? என வினாவினான். நபிகள் நாயகம் 'அவிழ்த்து விட்டால் அது வந்து விடும், இன்றேல் இரண்டு மான்கள் தருவேன்" என்றார். வரும் எனின் புதுமை காண்போம். வராவிடில் ஒன்றிற்கு இரண்டு மான்கள் பெறுவோம் என்று கருதிய வேடன் மானை அவிழ்த்து விட்டான். மகிழ்ந்த மான் காட்டிடத்தே ஓடி கலையைக் கூடியது. குட்டிக்குப்பால் கொடுத்துக் களித்தது. பின் தான் வந்த வரலாறு கூறிப் பிரிய விரும்பியது. கலை நகைத்தது. குட்டி தானும் வருவதாகக் கூறித் தாயுடன் துள்ளிக் குதித்துச் சென்றது. மான் தன் குட்டிகளோடு வருவதைக்கண்ட வேடன் மனம் நெகிழ்ந்து, நபிகள் நாயகத்தின் அருளாற்றலால் ஆட்கொள்ளப்பட்டு ஈமான் கொண்டான், இதனைக் கூற வந்த கவிஞர் "மானைக் கொண்டு வரப் போயீ மானைக் கொண்டகத்திற்புக்கான்" என்று சொல் நயந்தோன்றக் கூறுகிறார்.
வேடன் வருணனை அவன் குல மரபுக்கேற்ப அமைந்துள்ளது மானின் இரங்கத்தக்க நிலையும் நபிகள் நாயகத்தின் கருணை உள்ளமும் உள்ளத்தை நெகிழ்விக்கின்றன. "மானைக் கொண்டு வரப்போய் ஈமானைக் கொண்டகத்திற்புக்கான்' என்பதில் உமறின் சொல்லாட்சித்திறன் புலப்படுகிறது.
சமூக விலக்கு
நபிப்பட்டம் வந்த ஏழாம் ஆண்டில் முஉறர்ரம் முதலாம் பிறை இரவில் காபிர்கள் நபிகள் நாயகத்திற்கு ஆதரவாக இருக்கும் முத்தலிச்புக் கூட்டத்தாரைச் சமூக விலக்குச் செய்து அவர்களுடன் யாரும் வாணிபம் செய்யவோ சம்பந்தம் வைத்துக் கொள்ளவோ கூடாது; நெருப்பு நீர் முதலியப் பொருட்கள் தரக்கூடாது; இடம் கொடுக்கவும் கூடாது; அவர்களை நம் சமூகத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று ஒப்புமுறி எழுதிப் பலரும் கூடும் கஃபத்துல்லாவின் வாயிலில் தொங்க விட்டனர். முஸ்லிம்கள் அஞ்சாமல் ஒன்று கூடினர்.
இந்நாளில் மதினா நகரில் சுஜ்ரத் கூட்டத்தினரோடு பூசலிட்டுத் தோற்று வந்த அவுசுக் கூட்டத்தாரின் தூதர் நால்வர் மக்காவில் உதவி தேட வந்தனர். அவர்களை நபிகள் நாயகம் சந்தித்துப் பேசினார். நபிகள் நாயகத்தின் பேச்சில் அயாசு என்பார் மகிழ்ந்து மதினா சென்று தம் இனத்தாரிடம் சொல்லி ஈமான் கொள்ள ஏற்பாடு செய்தார். அவர் மதினா சென்றதும் நபிகள் நாயகத்தைக்கண்டு வந்த செய்தியைத் தம் கூட்டத்தாரிடம் கூறினார். அக்கூட்டத்தார் கேட்டு மகிழ்ந்தனர். அந்நிலையில் அவுசுக் கூட்டத்தாரிடம் வெற்றி பெற்றனர். பெற்ற வெற்றி நபிகள் நாயகத்தின் நல்லாசியால் ஏற்பட்டதென்று அவுசுக் கூட்டத்தார் நம்பினர். ஆறு பேரைத் தூதாக அனுபினர். அவர்கள் மக்கா நகருக்குச் சென்று மாநபியைக் கண்டு ஈமான் கொண்டனர்.
அக்காலகட்டத்தில் தான் இன்னொரு வரலாற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது. நபிப்பட்டம் வந்த எட்டாம் ஆண்டில் பாரசீகரும், உரோமரும் செய்த போரில் பாரசீகர் வென்றனர். உரோமர் தோற்றனர். இது குறைஉஷிப் பகைவர்களுக்கு மகிழ்வைத் தந்தது.
இதனைக்கேட்ட நபிகள் நாயகம் தீர்க்கதரிசனத்தால் பின்னாளில் உரோமர் பாரசீகரை வெல்வர் என்று குறிப்பிட்டார். குறை உஷிகள் மறுத்து 100 ஒட்டகங்களைப் பந்தயங்கட்டினர். இதனை எதிர்த்து நாயகத் தோழர் அபுபக்கர் 100 ஒட்டகங்களைத் தருவதாகக் கூறினார். அடுத்து நடந்த போரில் உரோமரிடம் பாரசீகர் தோற்றனர் என்ற
செய்தி வந்தது. இபுனுலகப் தன் தோல்வவியை ஒப்புக் கொண்டு 100 ஒட்டகங்களை அபுபக்கரிடம் தர அவர் அவற்றை நபிகள் நாயகத்தின் முன் நிறுத்தினார். அவரோ அவற்றை வறியவர்க்கு வழங்க சதக்காவாகக் கொடுத்து விட்டார். நபிகள் நாயகத்தின் தீர்க்க தரிசனத்தையும் தோழர்கள் கொண்ட நாயகப்பற்றையும் வறியவர்க்கு நபிகள் நாயகம் வழங்கி வந்த கொடைத்திறத்தையும் உமறு நன்கு புலப்படுத்துகிறார்.
ஆலயத்தின் வாயிலில் தொங்க விட்டிருந்த விலக்கு ஒப்புமுறி செல்லறிக்கப்பட்டிருந்தது. "அல்லாஉற்" என்ற பெயரைத்தவிர அனைத்துச் சொற்களும் அரிக்கப்பட்டிருந்தன. அவ்வொப்பு முறியை எழுதிய மன்சூர் என்பவரின் கையும் வழங்காமல் போயிற்று என்ற செய்தியைக் கவிஞர் நயந்தோன்ற வர்ணிக்கிறார்.
அறமெனும் சொல்லாட்சி அருமையாக அமைந்துள்ளது. உற்றம் என்ற அரபிச்சொல் தீயன விலக்கப்பட்ட கஃபத்துல்லா ஆலயப் பகுதியைக் குறிக்கும். தமிழ் இலக்கணப்படி அதற்கு அறம் என்று தமிழ் வடிவம் கொடுத்து, இனிய பொருளையும் பெறும்படி
செய்துவிடுகிறார்.
சிலை பேசியது
நபிகள் நாயகம் மக்காவில் மகிழ்ந்திருக்கும் நாளில் குசைது என்னும் அரபு வந்தார். மான் பேசியதையும் உடும்பு உரையாடியதையும் அமாவாசை இருட்டில் வெண்மதி தோன்றியதையும் கண்டு உம்மை ஏற்றுக் கொண்டார்கள். நான் அப்படி ஒன்றும் காணவில்லையே என்று கூறினார். இவற்றைக் கேட்ட நபிகள் நாயகம் நீங்கள் வழிபட்டு கூற குசைது விக்கிரத்தைக் கொண்டு வாரும் என்றார் அவ்விக்கிரத்தை அலங்கரித்துக் கொண்டு வந்து நபிகள் நாயகம் முன் வைத்தார். அதனை நோக்கி, நபிகள் நாயகம் "என் வரலாறும் எனக்களிக்கப்பட்ட நபித்துவமும் பற்றிக் கூறுக" என்று கேட்டார். அதற்கு அவ்விக்கிரம் "அல்லாவின் திருத்தூதர் வேதநபி முகம்மது என்று மனதில் கொள்ளார் பொல்லாத நரகம் அடைவார். அவரது அடிபணிந்து கலிமாவைப் போற்றிப் மனந்திருந்த அறிந்தவரே சிறந்த பெருஞ்சுவனமாள்வார்," என்று இயம்பிற்று, இதனைக் கேட்டுப் புலக்கமடைந்த குசைது கலிமாச் சொல்லி ஈமான் கொண்டு இஸ்லாமானார்.
துயர நிகழ்ச்சி
தீன் நெறி திசை தோறும் ஒளிவீசித் திகழ்ந்தது, நபிகள் நாயகம் மகிழ்ந்தார். இன்புற்றிருக்கும் இந்நிலையில் துன்பம் தோன்றியது. இதுகாறும் தம்மை வளர்த்து, பகைவர்களின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திப் பாதுகாத்து வந்த பெரிய தந்தை நோய்வாய்ப்பட்டார். நிலை கவலைக்கிடமாக இருந்தது. வளர்ப்புத் தந்தை பால் அன்பு கொண்ட நபிகள் நாயகம் அவரிடம் இறுதி நேரத்திலாவது கலிமாச் சொல்லி ஈடேற்றம் பெற வேண்டினார். அபூஜகில் இடைமறித்து இது நாள் வரை நம் முன்னோர் நெறி நின்ற தாங்கள் இப்போது தங்கள் தம்பி மகனுக்காக மாற்றிக் கொள்ளப் போகிறீர்களா? என்று கேட்டுத் தடுத்தான். அபுதாலிப்பு ஏதோ சொன்னார். அபூஜகிலும் அவனைச் சேர்ந்தோரும் போட்ட கூச்சலில் அவர் என்ன சொன்னார் என்பது அறிய முடியாது போயிற்று என்று உமறு கூறுகிறார். இது நடந்தது நாயகத்திற்கு நபிப்பட்டம் வந்த பத்து ஆண்டு எட்டு மாதம் பதினோராம் நாள் என்று தேதியைக் குறிப்பிட்டு வரலாற்றுக் காவியம் என்பதை உணர்த்தி விடுகிறார்.
அபுதாலிபின் மறைவு நபிகள் நாயகத்தைத் துயரில் ஆழ்த்தியது. எவருடனும் பேசாமலும் வெளியே செல்லாமலும் வருந்தியிருந்தார். அபுதாலிபு இறந்த மூன்றாம் நாளே குவைலிதின் திருமகளார், நபிகள் நாயகத்தின் மெய்த்துணைவியார் கஜிதா நாயகியார் சுவர்க்கலோக மாளிகையில் புகுந்தார் என்று துயரமும் மகிழ்வும் கலந்து வரப்பாடுகிறார். அபுதாலிபு மறைவு பற்றிக் கூறும் போது சுவர்க்கப் பேறு கூறாத உமறு கதிஜா நாயகியின் இறப்பில் சுவர்க்க மாளிகையில் புகுந்தார் என்று பாடுகிறார். உருவமற்ற ஓரிறை வழிபாட்டை நம்பி நற்காரியங்களைச் செய்து வந்தவர்களுக்குத்தான் சுவர்க்கம் உண்டு என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையைப் புலப்படுத்துகிறார். நாற்பொருள்களில் ஒன்றான வீட்டுப்பேறு இதில் இடம் பெறக்காணலாம்
தாயிஃப் நகரில் நாயகம்
நபிகள் நாயகம் தம்மைப் பேணிக் காத்து வந்த பெரிய தந்தையையும் உறுதுணையாக இருந்த அன்பு மனைவியையும் இழந்த துயரால் வருந்தியிருந்தார். ஆதரவற்று அவதியுற்றார் என்று நினைத்த பகைவர்கள் அவரை அழித்தொழிக்கும் நோக்கில் செயல்பட்டனர். ஆதலின் தாயிப் நகருக்குச் சென்று நன் நெறியைப்பரப்பப் புறப்பட்டார். அவ்வூரில் இப்து அப்துயாலில் என்பான் எதிர் கொண்டு வந்த காரணம் கேட்டான். தமக்கு நபிப்பட்டம் வந்ததையும் குர் ஆன் வேதம் இறங்கியதையும் கூறி அவனைக் கலிமாக் கூறி இஸ்லாத்தில் சேரும்படி சொன்னார். நன்கெனச் சிரம் கரம் அசைத்து, புதிய மாமறை என்பதற்கையமில்லை என்று குறிப்பிட்டு இருநாட்களில் தன் இனத்தாரோடு உம்மிடம் வந்து நன்னெறி படர்வேன் என்று கூறினான்.
வஞ்சம் கொண்ட அபுதுயாலில் சிறுவர்களை அழைத்துப் பைத்தியம் ஒருவன் செல்கிறான் இடைமறித்துக் கல்லால் அடியுங்கள் என்று சினந்து கூறினான். அவ்வாறே அவர்கள் நாயகத் திரு மேனியின் மீது கல்லைப் பொழிந்தனர். காலில் குருதி கொட்டியது. அச்சமயம் கிபுறயீல் தோன்றி மலையரசு வந்து தங்களுக்குத் தீங்கு செய்தவரை அழிப்பார் என்று கூறிச் சென்றார். அவ்வாறே தம்பாரித்த தோற்றத்தோடு மலையரசர் நபிகள் நாயகத்தின் முன் பணிவுடன் தோன்றி, "கலிமா உரைக்கடங்காத ஊர் எது?, பகைத்தவர் யார்? நீங்கள் விரும்பாத திசை எது? உங்களை வருந்தச் செய்தவர் யார்? கூறுங்கள் அவர்களிருக்குமிடத்தைக் கடலுக்குள் ஆழ்த்திவிடுகிறேன். ஓரு மலையில் அவரை அறைந்து விடுகிறேன், ஆணையிடுங்கள்" என்றார்.
அருள் உணர்ச்சி மிகுந்த நபிகள் நாயகம் அதற்குச் சம்மதிப்பாரோ? எனக்கு வந்த இடர்கள் இறைவனின் நாட்டப்படி வந்தன. உலகத்தோரைக் குறை கூறுவது மறை வழியன்று; சினத்தை மனத்திலடக்கிப் பொறுப்பது பெரியவர்களுக்கு உரியது. பவகவர்கள் இக்கணத்தில் வழிபடவில்லை என்றாலும் அவர்களின் வழித்தோன்றல்கள் நல்வழிப்படுவரே; திக்கெல்லாம் தீன்னெறி பரந்து நெறி முறை செய்யுமே " என்று கூறி "நும்மிடம் செல்க தேவைப்படும் போது அழைக்கிறேன். என்றார். இங்கு உமறு துன்பம் செய்தவர்களுக்கும் துன்பம் செய்யாது பொறுத்துக் கொள்ளும் நபிகள் நாயகத்தின் பொறுமை அறத்தை நயந்தோன்றப் புலப்படுத்துகிறார்.
அத்தாசு ஈமான் கொண்ட படலம்
தாயிப் நகர மக்களால் துன்புறுத்தப்பட்டு, மலையரசருடன் உரையாடி வந்த நபிகள் நாயகம் தாகத்தோடு தவித்திருந்தார். ஆபிற என்பாரின் மக்களுள் இருவர் வாடியிருந்த நபிகள் நாயகத்தைப்பார்த்து வீடு சென்று அத்தாசு என்ற வேலையாளைக் கூப்பிட்டு. இனிய முந்திரிக்கனியை எடுத்துக் கொடுத்து, நாயகத்திற்கு அளித்துப் பசியாறச் செய்வாயாக' என்று பணித்தனர் அவ்வாறே அத்தாசு இனிய கனிகளைத் தட்டில் எடுத்துச் சென்று நாயகத்தின் முன்வைத்தார். நபிகள் நாயகம் அத்தாசிடம் பெயரும் ஊரும் விசாரித்தார். நசுறானி (கிறிஸ்துவ) மார்க்கத்தில் உள்ளவன்; ஈனவா என்னும் ஊரினன்; றபிஆவின் சேவகன்; அத்தாசு என்னும் பெயரினன் என்று கூறினார். யூணு சுநபி வாழ்ந்த ஈனவா என்ற ஊரைச் சேர்ந்தவரா நீவிர் என்று நபிகள் நாயகம் கேட்ட போது வியந்து எப்படித் தெரியும் என்று அவர் கேட்க, அவரைப் போல் நானும் நபி ஆதலால் அறிவேன் என்று நபிகள் நாயகம் கூறினார். அதனைக் கேட்டதும் நெஞ்சம் நெகிழ்ந்து திருநபி இவரே என்று உணர்ந்து கலிமாச் சொல்லி ஈமான் கொண்டார். இதனை அறிந்த றபிஆவின் மக்கள் வருந்தினர். அத்தாசு மந்திரக் கலிமா ஒதி ஈமான் கொண்டு பாதம் துதித்து, மனவிருள் நீங்கிப், புதிய நல்லடியாராகிப் போனார் என்று முடிக்கிறார். மக்கள் மட்டுமல்லாமல் கண்ணுக்குத் தெரியாது வாழ்ந்து வரும் ஜின்கள் ஈமான் கொண்ட வரலாற்றையும் உமறு வர்ணிக்கிறார்.
காமா ஈமான் கொண்டார்
ஜின்கள் ஈமான் கொண்ட பின் இனிது வீற்றிருந்த நபிகள் நாயகம் திருமுன் காமா என்ற முதியவர் வந்தார். இவரைப் பற்றிய உமறின் வர்ணளன அற்புதமாக உள்ளது. நரைத்த முடி, திரைத்த உடல், புடைத்த நரம்பு, மழுங்கிய கண்பார்வை, பீழை திரண்ட விழி, சளி ஒழகும் முக்கு, அரையில் கிழிந்த உடை, அது சரிந்து அடிக்கடி விழ அதனைத் தடுக்கும் கை, கூனிக்குறுகிய உடல், காதடைப்பு ஒரு கையில் தடி, தலை கிடுகிடென்று ஆடத் தள்ளாடி நடந்து வந்து பற்கள் இல்லா உதட்டில் எச்சில் ஒழுக சொல்லமுடியாமல் சலாம் உரைத்தார் என்று இளிவரல் சுவையோடு முதுமையின் மெய்ப்பாடு தோன்றச் சித்திரிக்கிறார். ஒரு முதிய கிழவன் தள்ளாடி வருவது போன்ற காட்சியைப் படைக்கிறார். இவ்வாறு வந்தவரின் வரலாறு கேட்டு, தீய அவரின் கால் கட்டை நீக்கி நபிகள் நாயகம் மகிழ்விக்க அவர் கலிமாச் சொல்லி இஸ்லாமாகி தீன், என்று முழங்கிச் சென்றதாகக் கூறி இஸ்லாமிய மரபை உமறு போற்றுகிறார்.
அற்புத விருந்து
நபிகள் நாயகம் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினார். ஒரு நாள் அலியிடம் ஊரிலுள்ள அனைவருக்கும் விருந்திற்கு அழைப்பு விடுக்கும்படிக் கூறினார். அவ்வாறே அலி வீடுகளுக்குச் சென்று அழைப்பு விடுத்து வந்தார். 40 பேர் நபிகள் நாயகத்தின் வீட்டின் முற்றத்தில் வந்து கூடினர். ஒவ்வொருவரும் கழி பேரிரையர். விட்டில் இருப்பதோ ஒருபடி அரிசிச் சோறும் அரைப்படி பாலும் தான். இச்சிறிய உணவுப் பொருளைக் கொண்டு அனைவரையும் அமரச் செய்கிறாரே அற்புதம் ஒன்று நடக்கப் போகிறது என்று பேசிக்கொண்டனர். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் சோற்றையும் பாலையும் சிந்தை கூரப் பரிமாறினார். சர்க்கரையும் தேனும் போலச் சுவைத்தன. வயிறு புடைக்க உண்டு களித்தனர். சிறு அளவிலான உணவோ வழங்க வழங்க வளர்ந்து பெருகியது. உண்டபின் வெற்றிலை, பாக்கு, சந்தனம் அளித்தார். தாம்பூலம் தரித்துக் கொண்டு இறைவன் தூதர்க்கு இஃதெல்லாம் அரிதோ என்று கூறி, ஸலாம் சொல்லி விடை பெற்றனர். உமறு இங்கு ஓர் அற்புதத்தை வர்ணித்துக் காட்டி அதில் தமிழ் மரபையும் இஸ்லாமிய மரபையும் இணைத்து விளக்கிச் செல்கிறார்.
-------------
6. ஹிஜரத்துக் காண்டம்
ஹிஜரத் என்றால் இடப்பெயர்வு என்று பொருள்படும். நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குக் குடிபெயர்ந்தது பற்றிக் கூறுவது. மக்காக் குறைஷிகள் கடுமையாகத் தாக்கி வந்தனர்; மதினா வாசிகள் ஆதரவு தந்து தமதூருக்கு வந்து தீன்நெறி பரப்பும் படி வேண்டினர். இறை ஆணையும் வந்தது. ஆதலின் அவர்களின் அழைப்பை ஏற்று மதினா சென்றனர். அன்றிலிருந்து போராட்டம் வலுப்பெற்றது. போர்கள் நடைபெற்றன. பலர் இறந்தனர், எதிரிகள் வலுவிழந்தனர். இப்படிப் போராட்டம் மலிந்த களமாக இக்காண் டம் விளங்குகிறது. போர்களுக்கிடையே திருமண நிகழ்ச்சிகளையும் அற்புதங்களையும் வர்ணித்து உமறு காப்பியத்திற்குச் சுவையூட்டி விடுகிறார்.
மதினத்தார் ஈமான் கொண்டனர்
மதினத்தார் ஈமான் கொண்ட படலம் இக்காண்டத்தின் முதற் படலமாகும். நபிகள் நாயகம் மக்காவில் மகிழ்ந்திருந்த காலத்தில் ஹஜ்ஜு செய்ய 56 நாடுகளிலிருந்தும் மக்கா நகர் வந்து கூடினர். மதினத்தாரும் வந்தனர். அசு அது என்ற சான்றோர் 12 மதினாத் தாருடன் வந்து நபிகள் நாயகத்தை நோக்கிக் நாங்கள் ஷரீயத்தின் படி நடக்க விரும்புகிறோம் என்று கூறி, திருக்குர்ஆன் கற்றுத் தரவும் வழிமுறைகளைக் கூறவும் தக்க அறிஞர் ஒருவரைத் தங்களுடன் அனுப்பும்படி வேண்டினார். மதின மாநகர் சென்று மார்க்க நெறியில் ஒழுகிவரும் காலத்தில் ஒருநாள் அசுஅது முஸ்ஹிபுடன் புறநகரில் உள்ள சோலைக்குச் சென்று வாவியில் குளித்துத் தொழுதனர். இதனைக் கண்டு கொதித்தெழுந்த உசைது என்பாரைக் கண்டு மக்க மாநகரில் குழப்பம் உண்டாக்கிய முகம்மதைச் சேர்ந்தோர் இங்கும் வந்து குழப்பம் உண்டாக்க முற்ப்பட்டுள்ளனர். அவர்களிடம் சென்று அவர்களைக் கொன்று வரும்படிக் கூறினார். உருவிய வாளுடனும் பிதுங்கிய உதட்டுடனும் கடுங்கோபத்துடனும் சென்ற உசைது, அவர்கள் குர்ஆன் ஓதித் தொழுவதைக் கண்டும் கேட்டும் மனம் மாறினார்.
கோபம் தணிந்து அவர்களை வேறிடம் செல்லும்படிக் கூறினார். உசைதின் மனமாற்றத்தைப் புரிந்து மகிழ்ந்த -முஸ்ஹிபு திருக்குர்ஆன் வசனம் ஓதி இஸ்லாம் பற்றிக் கூறினார். இனிய கருத்துக்களால் உந்தப்பட்ட உசைது கலிமாச் சொல்லி சஃதின் தலைமைத் தகுதியைக் குறிப்பிட்டு அவரை உங்களிடம் வரச் சொல்கிறேன், நல்வழியில் திருப்புங்கள், தீன் நெறி வளர்ச்சியுறும் என்று கூறிச் சென்றார். சஃது என்பாரை கண்டு தந்திரத்தால் அங்கு அனுப்பினார். அங்குச் சென்றதும் தமது அண்ணனையும் உசைதை யும் சினங்கொண்டு வேறு நாடு செல்லும்படிக் கூறினார். அவரிடம் முஸ்கிபு இனிமையாக நல்வழிக் கருத்துக்களைக் கூற அவர் கலிமா ஓதி முஸ்லிமானார். அவ்விருவரையும் அவர் நகருக்கு அழைத்துச் சென்றார்; தமது தலைமயிைலுள்ள மதினத்தாரை அழைத்து இஸ்லாத்தின் சிறப்பைக் கூறி தீன் நெறிக்கு அழைத்தார். அவருக்கு வழிப்பட்ட அனைவரும் கலிமாச் சொல்லி தீனிவ் ஆயினர்.
மதினத்தார் தந்த வாக்குறுதி
நபிப்பட்டம் பெற்ற 13-ஆம் ஆண்டில் ஹஜ்ஜுக் காலத்தில் உலக நாடுகள் அனைத்திலுமிருந்தும் பக்தர்கள் மக்காவில் திரண்டார்கள். மதினாவிலிருந்தும் பெருமளவில் வந்தனர். இவருள் சஃது, அசுஅது, உசைது முதலிய முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் இருந்தனர். ஹஜ்ஜுக் கடமையை முடித்துவிட்டு ஓர் இரவில் மதினா முஸ்லிம்கள் அபுதாலிபு வீட்டில் நபிகள் நாயகத்தைச் சந்தித்தார்கள். இவர்கள் வந்திருப்பதை அறிந்த நபிகள் நாயகத்தின் சிறிய தந்தை அப்பாசும் அங்கு வந்தார். மதினா முஸ்லிம்களைப் பாராட்டிவிட்டு அவர்களை நோக்கி அப்பாஸ் கூறலானார்: 'என் சகோதரர் மகன் முகம்மது உலகிற்குத் திலகமானவர்; பிறந்த நாள் முதல் கண்ணைப் போல் போற்றி வருகிறோம், பகைவர்களுக்கு எதிராக எங்கள் மார்புகளையே கேடயங்களாக வைத்துக் காத்து வருகிறோம். முஸ் லிம்கள் ஆனது தொட்டு நீங்கள் காட்டிவரும் அன்பையும் ஆதரவை யும் கண்டு அவர் உங்களைப் பெரிதும் விரும்பிறார். அவர் மதினா வந்து தங்கவும் விரும்புகிறார். மதினாவில் அனைவரும் முஸ்லிம் கள் அல்லர். உங்களுக்கு எதிரானவர்களும் உள்ளனர். நபிகள் நாயகம் அங்கு வருவதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்கள் தொல்லை தருவார்களா? நீங்களே அறிவீர்கள்' என்று கூறினார்.
இதனைக் கேட்ட மதினத்தார், "பெருந்தகையீர் நபிகள் நாயகத்தை மதினாவிற்கு அரசராக்க வேண்டும் என்று விரும் புகிறோம். இதைச் செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் சொல்வார்களானால் அதனை மனமாரச் செய்து கீழ்ப்படிவோம், இஃது உறுதி"
என்றனர்.
நபிகள் நாயகம் நவின்றார்
மதினாத்தாரின் மறுமொழி கேட்டு மகிழ்ந்த நபிகள் நாயகம் திருக்குர் ஆன் நெறிமுறைகளையும் இஸ்லாமிய விதிமுறைகளையும் பரப்புவதற்கு மதினாவில் குடியேற விரும்புகிறேன். உங்கள் நேசமும் நம்பிக்கையும் என் விருப்பத்தை வலுப்படுத்துகின்றன. எனக்கு அணுவளவு துன்பம் நேர்ந்தாலும் அது உங்களுக்கு நேர்ந் ததாகவே கருத வேண்டும். நான் மதினா வருவது உறுதி" என்று கூறினார்.
மதினத்தாரின் வேண்டுகோள்
நபிகள் நாயகம் கூறியதைக் கேட்ட மதினாத்தாருள் பர்ரா என்பார் "மதினா மக்கள் வழிவழியாக வீரத்தில் சிறந்தவர்கள்; புகழுக்குடையவர்கள்; நீங்கள் வந்த பின் கண்டறிவீர்கள்; நீங்கள் வந்து சேர்ந்தால் உங்களுக்காக எங்கள் இரத்தம் சிந்துவோம்; இது உறுதி" என்றார். அனைவரும் ஆதரித்தனர். எனினும் சைதம் எனபார் எழுந்து மக்காவிலிருப்பவர்களும் நாங்களும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம். உங்களுடன் சேர்ந்தால் அவர்களின் தொடர்பு அற்றுப் போகும்; அது மட்டுமன்று அவர்களை அழிக்கவும் நேரும். அப்போது அவர்கள் உங்கள் உறவினர்கள் என்று நீங்கள் இரங்குவீர்களாயின் எங்கள் நிலை என்னாவது?" என்று கேட்டார்.
இதனைக் கேட்ட நபிகள் நாயம் கலிமாச் சொல்லி முஸ்லிம் ஆனவர் எனது உயிரினும் மேலானவர்; உறவும் நட்பும் அவர்களே; தீன் நெறி ஏற்காதவர் உறவினராயினும் அவர் எனக்குப் பகைவரே; ஆதலின் மலை சாய்ந்தாலும், நிலவு தெற்கு நோக்கிச் சென்றாலும், கடல் வற்றிக்காய்ந்தாலும், நிலம் புரண்டாலும் நான் சொன்னதிலிருந்து மாற மாட்டோம்' என்று உறுதி பெறக் கூறினார். தொடர்ந்து "முகமலரப் பேசி, நட்பும் பூண்டு, பின்பு நட்பைத் துறந்து பகைமை கொள்வது அறமன்று; தீயவர் நட்பை நீக்கி நல்லவர் நட்பைக் கொள்ளாதவர் கீழானவர் என்பது உலக வழக்கும் முடிவும் ஆகும். ஆதலால் என் சொல்லில் மாற மாட்டோம். நம்புங்கள்" என்று கூறினார். இவ்வாறு உமறு பொருத்தமான இடங்களில் சுவை கெடாமல் நீதிகளைக் கூறுவதில் சிறந்து விளங்குகிறார்.
நபிகள் நாயகம் மதினத்தவர்களில் 12 பேர்களை அழைத்து வரச் செய்து "நீங்கள் ஈமான் கொண்டுள்ள மதினா வாசிகளுக்குத் தலைவராவீர்கள்" என்று கூறி அவர்களுள் சஃபென்பாரை முன்னி லைப்படுத்தினார். உங்கள் இரு கூட்டத்தாரிடையே ஒற்றுமை வேண்டும். உம் குலத்தவரே உம்மை மறுத்துக் கூறினாலும் மக்கா குறைஷிகள் உங்களைத் தாக்கினாலும் வேற்று நாட்டவர்கள் படையெடுத்து வந்தாலும் வேறு துன்பம் எது வந்தாலும் உடலும் உயிரும் போல ஒன்றுபட்டு அனைவரும் நடக்க வேண்டும்" என்று கூறினார்.
இதுனைக் கேட்ட மதினத்தார், நபிகள் நாயகமே, உங்கள் உரையால் நாங்கள் அறிவு பெற்றோம்; மனநிறைவும் கொண்டோம்; நற்பேறும் பெற்றோம்; நாங்கள் இனி என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டனர். அப்போது ஜீப்பரயீல் காட்சி தந்து கூறியதற்கேற்ப அவர்களை விளித்து நீங்கள் அனைவரும் என்வலக்கரத்தில் உங்கள் கையை வைத்து உறுதி கூறுங்கள் என்றார். அவ்வாறே ஒவ்வொருவரும் பைஅத் செய்தார்கள். உமறு ஒரு நிகழ்ச்சியைக் காரண காரியத்தோடு ஒழுங்குறக் கூறிக் கதைப் பின்னலை நடத்தி முழுமை பெறச் செய்து விடுகிறார்.
குடி பெயர்தல்
நபிகள் நாயகம் மக்கா நகர் முஸ்லிம்களை அழைத்து "தோழர்களே மதினா வாசிகளை நமக்கு இறைவன் துணையாகத் தந்துள்ளான்; அவர்கள் உயிர்க்குயிராய் இருந்து தீன் நெறியைப் பலப்படுத்த முன்வந்துள்ளார்கள்; இது காறும் மக்காவில் நாம் பட்ட துன்பம் போதும்; இனி நாம் மதீனம் செல்வோம்; மதினா செல்ல இறைவனது ஆணை இன்னும் வரவில்லை ; வந்ததும் நான் வருவேன் நீங்கள் செல்லுங்கள்" என்று சொன்னார். முஸ்லிம்கள் அதனை ஏற்று இருவர், மூவர், ஒருவர் என எவர்க்கும் தெரியாமல் மதினா நகர் புறப்பட்டுச் சென்றனர்.
குறைஷிகளின் சதித்திட்டம்
இதனை அறிந்த அபூஜகில் கொதித்தெழுந்தான்; தம் கூட்டத்தாரை அழைத்தான் “முகம்மது தன் பெயரையும் இஸ்லாத் தையும் நிலை நாட்டிவிட்டான். நாம் பலராக இருந்தும் அவனை ஏதும் செய்யாது விட்டுவிட்டோம். ஒவ்வொருவரும் அவரவர்க்கு வந்த கேடு என்று கருதி முகம்மதை அடக்கியாக வேண்டும்; அனைவரும் ஒன்று பட்டு முயன்றால் இது நடக்க முடியாததன்று. மதினாவாசிகள் இவனை அரசனாக்கு வதாக உறுதியெடுத்துச் சென்றுள்ளார்கள். நம்மூர் முஸ்லிம்களும் மதினா சேர்ந்து விட்டனர்; முகம்மதும் மதினா செல்ல எண்ணியுள்ளான். அப்படிச் சென்று விட்டால் நம் சமயமும் ஆலயங்களும் அழிந்து போய்விடும்; ஆதலின் முகம்மதை மதினா புறப்படுமுன் ஒழிக்க வேண்டும்" என்று சொன்னான். ஆவேசத்தால் உந்தப்பட்ட அவையோரும் சரி என்றனர். சதித்திட்டத்தை உருவாக்கத் தொடங்கினர். பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறினர்; அபூஜகில், மக்கா நகரிலுள்ள ஒவ்வொரு குலத்தாரும் அவர்கள் சார்பாக ஒவ்வொருவரை அனுப்ப வேண்டும். எல்லோரும் சேர்ந்து முகம்மது மீது படைக்கலங்களைப் பாய்ச்சிக் கொன்று விட வேண்டும்; அப்படிச் செய்வோமாயின் தனிப்பட்ட எவர்க்கும் பழி வராது" என்று கூற அனைவரும் ஆமோதித்தனர்.
இந்நிலையில் மதினா செல்வதற்கு இறையாணை பிறந்தது; அது வரை பகைவர்கள் எவ்வளவு கொடுமை செய்தாலும் எதிர்த்துத் தாக்க நபிகள் நாயகத்திற்கு இறையாணை கிடைக்கவில்லை; இப்போது எதிர்த்துத் தாக்கவும் முதன் முதலாக இறையாணை வந்தது.
நபிப்பட்டம் பெற்றுப் பதினான்காம் ஆண்டு றபீஉல் அவ்வால் மாதம் திங்கள்கிழமை நபிகள் நாயகம் மதினா செல்ல முற்பட்டார். உக்பா , உத்பா, அபூஜகில் முதலான அனைவரும் வேலேந்தி முகம்மதின் இல்லத்திற்கு வந்தடைந்தனர்; வீட்டைச் சுற்றிலும் சூழ்ந்து காத்து வந்தனர்; தமக்குள் பலவாறும் பேசிக் கொண்டனர். இந்நிலையில் ஜிபுறயீல் தோன்றி ஸலாம் கூறி "இன்றிரவு உமது இல்லத்தில் உமது படுக்கையில் அலியைப் படுக்கவைத்து வெளியே வந்து காபிர்கன் முகத்தில் ஒரு கை மண்ணெடுத்து வீசித்தூவி விரைவில் செல்க" என்று கூறினார். அவ்வாறே சென்று அலியை நோக்கி மூன்று நாள் சென்று வருக" என்று கூறி வெளியே வந்து மண்ணெடுத்துக் காபிர்கள் முகங்களில் வீசினார். வெளியே வந்து அபூபக்கரிடம் நடந்த விபரம் கூறினார். அவரும் நபிகள் நாயகத் துடன் புறப்பட்டுச் சென்று தெளர் குகைக்குள் சென்றிருந்தார்கள். தூக்கம் நீங்கி விழித்த காபீர்கள் நாயகம் புறப்பட்டுச் சென்று விட்டதை அறிந்து பதறி எழுந்தனர்; முகத்தில் கிடந்த புழுதியையும் வாயில் புகுந்த புழுதியையும் துடைத்து இதென்ன கொடுமை எனக் கூறினர். அபூஜகிலும் கொதித்தெழுந்தான். ஆலயத்திலும் முஸ்லிம்களின் வீடுகளிலும் சோலைகளிலும் ஊரைச் சுற்றிலும் உள்ள காடுகளிலும் சென்று தேடி அவனைக் கொண்டு வருக என்று ஆணையிட்டான்.
நாம் மூவர்
நபிகள் நாயகம் தெளர் குகையில் இருந்த போது வாயிலில் சிலந்திகள் வலை பின்னின. புறாக்கள் கூடுகட்டி முட்டையிட்டு அடை காத்தன; தேடி வந்த காபிர்கள் குகை வாயிலில் நடமாடினர்; இதனையறிந்த அபுபக்கர் பகைவர்கள் பலர் வந்துள்ளனர், நாமோ இருவர் தான் என்று அஞ்சிக் கூறினார்; நபிகள் நாயகமோ பதைக்காமல் "நாம் இருவர் மட்டுமல்லர்; நம்மைச் சுற்றி இறைவனும் உண்டு' என்று கூறினார். இங்கு நபிகள் நாயகம் இறைவன் பால் கொண்ட நம்பிக்கையை உமறு நன்கு புலப்படுத்துகிறார். புறாக்கூடுகளையும் சிலந்தி வலைகளையும் கண்ட பகைவர்கள் இதனுள் யாரும் சென்றிருக்க இயலாது என்று கருதித் திரும்பிவிட்னர். முழையுள் புகுந்த சூரியனைப் போன்று நபிகள் நாயகம் இருந்தார் என்று அழகிய உவமையால் நபிகள் நாயகத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறார்.
"அபுல் காசீம் வள்ளல் முகம்மதின் புகழைப் போற்றி மகிழுமாறு, பகைவர்கள் நீங்கினர் என்று கருதிய பறவைகள் உள்ளம் பூரித்து ஒலித்தன" என்று தற்குறிப்பேற்ற அணியில் உமறு பாடி மகிழ்கிறார்.
சீறாக்காப்பியம் வளர்ந்து வருவதற்கு வேண்டுவன வழங்கி ஆதரித்த வள்ளல் அபுல்காசீம் சிறப்பை இங்கும் உவமமாகக் காட்டிச் சிறப்பிக்கிறார்.
விடமீட்ட அற்புதம்
கொடிய குறைஷிப் பகைவர்கள் தம்மைக் காணாமல் சென்றபின் நபிகள் நாயகம் அபூபக்கர் மடிமீது தலைவைத்து உறங்கினார். மலைக்குகையில் சிறு வளைகள் இருந்தன. பாம்பொன்று தலை நீட்டியது; நபிகள் நாயகத்தின் உறக்கத்திற்கு ஊறு நேராமல் போர்வையைக் கிழித்துப் பாம்பு தலை நீட்டும் ஒவ்வொரு பொந்தையும் அடைத்து வந்தார்; துணி தீர்ந்துவிட்டது, அடைக்கப் படாத ஒரு பொந்திலிருந்து அப்பாம்பு தலை காட்டியது; அடைக்கத் துணி இல்லாததால் தமது கால்பாதம் கொண்டு அடைத்தார். சீற்றங்கொண்ட அப்பாம்பு பாதத்தில் தீண்டியது. விடம் அவரின் உடலெங்கும் பரவியது; அபுபக்கர் மயக்க முற்றார்; கண்விழித்த நபிகள் நாயகம் காரணம் கேட்டார். நாயகத்தோழர் நடந்ததைக் கூறினார்.
விடத்தின் வேகம் உடம்பு முழுக்கப் பாய்ந்தது. நபிகள் நாயகத்தின் சொற்படி காலை வளையினின்றும் எடுத்தார். துருத்தி நீர் வெளிப்பட்டது போல் துளையிலிருந்து பாம்பு வெளிப்பட்டது; உடலை முடக்கி, சிரத்தை நிமிர்த்திய பாம்பினை நோக்கி "துன்புற்றுக் குகைக்குள் வந்தோம்; உனக்கு எந்தத்தீங்கும் செய்திலோம்; இப்படி வேதனைப்படத் தீண்டியதேன்? என்று கேட்டார். இதனைக் கேட்ட அரவம் ஸலாம் உரைத்து நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து கூறி, "தங்களைக் காண இங்குக் காத்திருந் தேன் . துளைகளின் வழி வந்த போது துணிகளால் அடைத்து வந்த அவர் கடைசித் துவாரத்தையும் தம் காலால் அடைத்துத் தடுத்தார். ஆத்திரமுற்ற நான் அவர் பாதத்தைத் தீண்டலானேன்" என்று கூறியது. "கண்டனை, நெடுங்காலம் உறவு கொண்டனை; துன்பமும் ஒழிந்தாய்; பலன் படைத்தனை. குலத்தோடும் உறைக" என்று நபிகள் நாயகம் கூறினார். குறை தீர்ந்து களி கூர்ந்த பாந்தள் கலிமாச் சொல்லி வளையுள் புகுந்தது. அரவம் சென்றதும் நபிகள் நாயகம் அபூபக்கரின் பாம்பின் கடிவாயில் தமது இதழ் நீர் எடுத்துத் தடவினார். உடலெங்கும் படர்ந்து வெவ்விடம் துடைத்தது; இருவரும் இனிதிருந்தார்கள்.
சுறாக்கத் தொடர்ந்தான்
தெளர் குகையில் மூன்று நாட்கள் தங்கிய நபிகள் நாயகம் நாலாம் நாள் கதிரவன் மறைந்த போது தங்கள் பயணத்தைத் தொடர் விரும்பினார். ஏற்கனவே திட்டமிட்டபடி ஒரு வேலையாள் இரு ஒட்டகங்களைக் கொண்டுவர ஒன்றில் நபிகள் நாயகமும் பிறிதொன்றில் அபூபக்கரும் ஆமிறு என்ற பணியாளும் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தனர். நச்சரவங்கள் நெளியும் காட்டில் குகையிலிருந்தெழும் சிங்கம் போல், வஞ்சகர் நெஞ்சம் போல் முட்கள் செறிந்திருக்கும் காட்டில் சென்றார்கள். நபிகள் நாயகத்தின் திருமேனி ஒளிவீச அதனைக் காட்டுச் சேவல்கள் கதிரவன் ஒளியென்று மயங்கிக் கூவினவாம். இருள் கூட்டம் இரிந்தோ டினவாம். கதிரவன் எழுந்தான். இதனைக் கொடையில் சிறந்த மக்கா மாநகரை விட்டு நபிகள் நாயகம் இக்கொடிய காட்டில் தோன்றியதன் காரணம் யாதோ? என்றஞ்சி எட்டிப் பார்ப்பது போல் கதிரவன் தோன்றினான் என்று உமறு சுவைபடப் பாடுகிறார்.
காட்டைக்கடந்து வந்த களைப்பு மிகவே ஒரு மலையருகில் நிழலில்லாத பாலை நிலத்தில் இறங்கிக் களைப்பாறி, ஆட்டுப்பால் பருகிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அபூபக்கர் பகைவர் எவரும் வருவாரோ என்று பார்த்த வண்ணம் வந்தார். வலக்கரத்தே வேலுடனும் நனைந்த மேலுடையுடனும் துருவிப்பார்க்கும் விழியுடனும் கள்ள மனங்கொண்ட சுறாக்கத் மிக வேகமாக வந்தான். இதனையறிந்த அபூபக்கர் அஞ்சினார். 'அபூஜகில் என்னைக் கொல் வதற்கு விடுத்த இரக்கமில்லாதவன்; இருப்பினும் என்ன? இவ்வாறு கலங்குதல் ஈமான் உணர்வையும் வீரத்தையும் நீக்கிவிடும். முடிவில் லாத இறைவன் ஒருவன்; நாமிருவர்; எதிர்த்து வருபவன் ஒருவன்; இவனால் என்ன செய்ய இயலும்" என்று நபிகள் நாயகம் கூறினார்.
சுறாக்கத் கனன்றெழும் கோபத்துடன் குதிரையை விரைவாகச் செலுத்திச் சீறி வந்தான். நபிகள் நாயகம் பூமியை நோக்கிப் பாதகன் பரியைப் பிடித்திடு என்று கூறினார். அவ்வாறே பூமி குதிரையின் நான்கு குளம்புகளையும் இருக்கிப் பிடித்தது. அது ஓவியக் குதிரையைப் போல் அசையாது நின்றது. சீற்றங்கொண்ட சுறாக்கத் குதிரையை அடியடி என்று அடித்து ஓட்டினான். இருகாலினாலும் புடைத்தான். குதிரையோ அசைந்த பாடில்லை. "நீண்ட தூரம் ஓடி வந்த களைப்போ? மிக வேகமாக ஓடிவந்ததினால் கால் பாதங்கள் முறிந்து விட்டனவோ? முகம்மதின் மாய வித்தையோ?" என்று கருதிய சுறாகத் தந்திரமாக நடித்து, முகமலர்ச்சி காட்டி உம்மை நான் தொடர மாட்டேன். குதிரையின் கால் பிடியை நீக்குக. என்று கெஞ்சினான். சத்தியமும் பொறுமையும் நீங்காத மனம் கொண்ட நபிகள் நாயகம் புத்தமுத மறைவிளைந்த திருவாய் மலர்ந்து நிலத்தை நோக்கிப் பிடியை விட்டு விடுக என்றார்.
"வஞ்சக நெஞ்சங்கொண்டவர்க்கு வேதத்தைத் தினந்தோறும் புகட்டினாலும் தன்தீய இயல்பு மாறாது" என்ற பழமொழிக்கொப்ப சுறாக்கத் தன் வன்மத்தை விட்டபாடில்லை; நபிகள் நாயகத்தைக் கொல்ல மீண்டும் விரைந்து வந்தான். நபிகள் நாயகமோ திருக்கண் நோக்கி மனந்தனில் புன்முறுவல் கொண்டு வெகுளாது முன்போல் பரியின் காலைப் பற்றுக என்றார். பூமி முன்னிலும் ஆழமாக இறுகப் பற்றியது கள்ளம், இருள், பழி, பாவம் மாறாத கொடிய சுறாக்கத் நபிகள் நாயகத்தை விளித்து, "சொல்லற்கரிய குற்றம் செய்தாலும் பொறுத்தருள்வது உமது மறை நெறியன்றோ ? விலக்கற்கரிய இத்தடை விடுத்தால் பகைக்கேன்" என்று கூற, நபிகள் நாயகம் துன்பம் செய்தவரையும் பொறுக்க வேண்டும் என்ற மறைமொழி கருதி, நிலத்தை நோக்கிப் பிடியை விடும்படி சொன்னார். பிடி தளர்ந்தது, ஆனால் அப்பாதகனின் எண்ணமோ தவிரவில்லை; நபிகள் நாயகத்தைக் கொல்ல மீண்டும் பாய்ந்தான். இது கண்டு அதிசயித்த நபிகள் நாயகம் "மீண்டும் என்னைக் கொல்ல வந்தவன் வீரமும் கோபமும் நடுங்கக் குதிரையின் காலைப் பற்றுக" என ஆணையிட பூமியும் முன்னினும் அழுந்தப் பற்றியது.
இச் சமயம் சுறாக்கத் மனம் வருந்தி, "தனியவன் திருத்தூதே! முமம்மதுவே! பொறைக்கடலே! என்று போற்றி என் போலும் சிறுவர் பழி அடுத்தடுத்து ஆயிரம் செய்தாலும் பொன்மனப் பெரியோர் பொறுப்பார் என்பதைத் தங்களிடம் கண்டறிந்தேன். சிறியோனை முன்போல் காத்தளிக்க வேண்டும்' என்று இறைஞ்சிக் கேட்டான். நபிகள் நாயகம் கால்பிடியை விடும்படி கூற பூமியும் விட்டது. மனந்திருந்திய சுறாக்கத் நபிகள் நாயகத்தின் தாள் பணிந்து, மக்கா திரும்பி நபிகள் நாயகத்தைத் தேடிவரும் பகைவர்க்கு நன்குரைத்து, பாசமுடன் கூட்டிப் பதி சேர்ந்தான். திரும்பத் திரும்ப கொடிய தீங்கிழைத்தவரையும் மன்னிக்கும் நபிகள் நாயகத்தின் கருணைத் திறத்தையும் உமறு சிறப்பாக விளக்குகிறார்.
மலட்டு ஆடு பால் சுரந்த அற்புதம்
சுறாக்கத் வலிமையுடைந்து வந்தவழி திரும்பிச் சென்றதும் நபிகள் நாயகமும் அபூபக்கரும் இறைவனைத் தொழுது அவ்விடம் விட்டுப் புறப்பட்டனர். பாலையைக் கடந்து முல்லை நிலத்தில் புகுந்தனர். இப்பகுதி தமிழிலக்கிய முல்லை நிலமாகக் காட்சியளிக்கிறது. ஒட்டகத்திலிருந்து இறங்கி அங்கு இளைப்பாறிச் செல்ல விரும்பினார். நபிகள் நாயகம் வறுமையால் வாடும் முதிய கிழவியின் மலட்டாட்டைக் கொண்டு வரச் செய்து பால் சுரந்து பெருகச் செய்தார். பாலைப் பருகி இருவரும் மகிழ்ந்தனர். ஆயர்கள் அதிசயித்து இஸ்லாத்தில் சேர்ந்தனர்.
மதீனம் அணுகினார்
ஆயர்பாடியை விட்டுத் தோழர் அபூபக்கருடன் நபிகள் நாயகம் ஒட்டகம் மீதேறிப் புறப்பட்டார். அவர் ஓட்டகத்தின் மீது ஏறிய காட்சி உதயகிரிமேல் சூரியன் தோன்றியது போல் இருந்தது என்று உவமை நயந்தோன்றக் கூறுகிறார். அப்போது மக்காவிலிருந்து புறப் பட்டு வந்த முஸ்லிம்கள் இழந்த கண்ணைத் திரும்பப் பெற்றது போல் பிரிந்திருந்த நபிகள் நாயகத்தைக் கண்டார்கள். ஒரு மாதம் சென்றபின் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வந்து சேர்ந்தனர். இது உடலைப் பிரிந்த உயிர் கூடியது போன்று இருந்தது என்று கூறுகிறார். நபிகள் நாயகம் வந்த காட்சியை விண்மின் நடுவில் வெண்மதி போலவும், வேங்கையின் நடுவில் சிங்கம் போலவும் நபிகள் நாயகம் தோழர்கள் சூழ நடந்தார் என்றும் உவமைகளைப் பெய்து பாடுகிறார். வாவிகளும் பொழில்களும் செறிந்த பொன்னகரென மதீனம் தோன்றியது எனக் கூறிய புலவர் தொடர்ந்து வரும் பாடல்களில் மாநகரின் சிறப்பியல்புகளை வர்ணிக்கிறார்.
இமயமென மாடங்கள் நிறைந்திருந்தன. கலைவல்லாரும் மறைவல்லாரும் விரும்பிய பொருள்களெல்லாம் பெறும் பெரும் புகழ் படைத்த நன்னகர்; பூரணப் புவியெனப் பொலிந்த பொன்னகர், திருமண மாளிகை போல் பொலிந்த திருநகர், பெரும்புகழ் நிலைநிறுத்திய அரசென விருந்த மாநகர் , அறிவார்ந்த அணிகொள் பெருநகர் என்று உமறு வர்ணிக்கிறார். தானமும் ஒழுக்கமும் தவமும் ஈகையும் பூத்த, வீரமும், வெற்றியும் ஊக்கமும் ஒளிரக் காய்த்து, நல்ல தீன் நெறி எனும் செல்வம் பழுத்த திருநகர் என்று உருவகப்படுத்திச் சிறப்பிக்கிறார். இந்நகரின் நடுவில் ஒரு வீட்டின் மாடத்திலிருந்து நபிகள் நாயகம் வருவதைக் கண்ட ஓரிளைஞன் நபிகள் நாயகம் வருகிறார் என்று கூவினான். ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்த மதினா முஸ்லிம்கள் கறா என்னும் இடத்திற்குச் சென்று ஆர்வமுடன் வரவேற்றனர். அன்சாரிகளின் கண்களாகிய தாமரைகள் நாயகக் கதிரவனைக் கண்டு மலர்ந்தன. நபிகள் நாயகம் தோழர்களை மார்புறத் தழுவி மகிழ்ந்தார். மக்காவிலிருந்து வந்த முஉறாஜிறீன் களும் அன்சாரிகளும் மகிழ்வுடன் கூடி காந்தமும் இரும்புமாயினர். மதீனநகரத்துப் பெருமக்களோடும் முஹாஜுதீன் களுடனும் இறைவன் அருளோடும் நபிகள் நாயகம் புறப்பட்டார்.
முதல் பள்ளிவாசல்
கறா என்னும் ஊரின் எல்லையைக் கடந்து ஒரு பாடியும் நடந்து பனி அமுறா வென்னும் கூட்டத்தாரைக் காண விரும்பி ஒரு வழியில் நடந்தனர். வாவியும் சோலையும் வாழைத்தோட்டமும் கண்டு றபீயுல் அவ்வல் 12 ஆம் பிறை திங்களில் குஃபாவை அடைந்து தங்கினார். அங்கு மக்காவிலிருந்து அலியும் வந்து சேர்ந்தார். நபிகள் நாயகம் அவரை மார்புறத்தழுவி மகிழ்ந்தார். இறைவனை வணங்குவதற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முதல் பள்ளி வாசல் ஆகும். அதில் நபிகள் நாயகம் ஜமாத் தொழுகை (கூட்டுத் தொழுகை) நடத்தினார். நபிகள் நாயகம் 14 நாட்கள் அங்குத் தங்கிவிட்டு பனுசலீம் கூட்டத்தார் வாழ்ந்த நாத்துனா என்ற ஊருக்குச் சென்றார். அங்கிருந்து புறப்பட்டு நபிகள் நாயகம் மதினா சென்றார்.
நாயகக் காதல்
அபூஜயூப் அன்சாரி இல்லத்தில் அனைவருக்கும் மறைமொழி கூறி மகிழ்ந்திருந்த போது அறத்தினில் புகுந்து அறிவினில் குடிகொண்ட திறத்தினர் உறம்மாறு ஒரு சிங்கமொத்த இளைஞருடன் வந்தார். நாயகத் திருமேனியைக் கண்டு மகிழ்ந்த இளைஞர் பணிந்து தாழ்ந்து வாய் புதைத்து சலாம் கூறி நின்றார். இவ்வி ளைஞரைப் பார்த்து "எழுஞாயிறு போன்ற வடிவமுடைய இவ்விளைஞர் யார்?" என்று நபிகள் நாயகம் உறப்பாறிடம் கேட்டார். உறப்பாறு வந்த வரலாறு கூறலானார்.
நான் வீட்டிலிருந்து உங்கள் பாதம் போற்றிக் கலிமா ஓதித் திருமறைப் பொருள் விளக்கினேன். செவியில் கேட்டு என்முன் தோன்றிச் சலாம் கூறி "இறை திருத்தூதர் வந்த வரலாறு விவரித்துரைத்தீர். சந்திர வதன வள்ளலின் தரிசனம் கண்டதுண்டோ ? அல்லது பிறர் கூறக் கேட்டதுதானோ? கூறுக" என்றார். நாள்தோறும் மாறாது கண்டு களித்து வருகிறவன் என்று நான் கூற அவர் உடனே நபிகள் நாயகத்தைத் தேடிச் சென்ற கால் இதுவோ என்று கூறி முகத்தை என் பாதத்தில் சேர்த்து மோந்து கொண்டார். அந்த அற்புத வடிவை நாளுங்கண்ட கண்கள் இவையோ என என் கண்களை ஒத்தி மெய்மயிர் சிலிர்த்து என்னைப் புகழ்ந்தார். நாயகப் பெயர் கேட்டு உள்ளக்களிப்புப் பெருகி நின்ற இவரை வரிசை மிக்கவர் என்று எண்ணித் தங்கள் திருமுன் அழைத்து வந்துள்ளேன்' என்று கூறினார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த நபிகள் நாயகம் இவர் எவ்வூரினர்? பெற்றோர் இட்ட பெயர் யாது? இங்கு வந்த காரணம் கூறுக" என்று கேட்டார். இவ்விளைஞர் தன் வரலாற்றைக் கூறத் தொடங்கினார்.
நபிகள் நாயகமே, யூதர் போற்றும் தெளராத்[*] வேதத்தில் வல்லவன் என் தந்தை, என் தாயும் தந்தையும் பிள்ளைப் பேறில்லாமல் தவமிருந்து என்னைப் பெற்றனர். கபுஉறாபு எனப் பெயர் சூட்டி உத்தமர் செல்வம் போன்றும், மனத்துக்கண் மாசில்லா பக்தர் செய்தவம் போன்றும் விண்ணில் தோன்றும் வெண்மதி போன்றும் செவ்விய பெற்றோர் உயிர் வைத்த உடம்பு போன்றும் நாள்தோறும் வளர்த்தார்கள். வேத வாசகம் புராண காவியம், விதிகள் யாவும் ஓத வசதிகள் செய்தனர். முன்னோர் தௌராத், ஸபூர், இஞ்சீல்[$] ஆகிய மூன்று வேதங்கள் பற்றிய நூல்கள், ஞான நூல்கள் போன்ற பல நூல்களைத் தொகுத்து வைத்த பேழைகள் நூற்றுக்கும் மேலிருக்கும். இவை பூட்டப் படாதிருந்தன. என் உள்ளம் விரும்பும் நூல்களை எடுத்துப் படித்து வந்தேன். படிப்பதைத் தவிர எனக்கு வேறு வேலையில்லை; இப்படிப் படித்து வந்த போது பூட்டியிருந்த ஒரு பேழையைத் திறந்து பார்த்தேன்.
---
[*] தௌராத் = முசா நபிக்கு வந்த வேதம், ஸபூர்ட் தாவூது நபிக்கு வந்த வேதம்.
[$] இஞ்சில் = ஈசா நபிக்கு வந்த பைபிள் வேதம்.
அப்பேழையுள் செப்பொன்று முத்திரையிடப் பட்டிருந்தது. இதில் என்ன இருக்கிறது என்று அறியும் ஆவல் மேலோங்கியது; தந்தையிடம் சென்று செப்பினுள் இருப்பதென்ன? என்று கேட்டேன். அவர் "மணிதிரளோ, நிதியோ, அணிகளன்களோ நீயறியாமல் இப்படி ஒளித்து வைக்கப்பட்டிருக்க வில்லை. மாயமும் கபடும் பொய்யும் மறையெனத் திரட்டி, முன்னோர் மார்க்கத்தைத் தாழ்த்திப் பேசி, தீயெனும் மதமுண்டாக்கிய ஒருவன் கதிரவனைப் போல் தோன்றுவான். அவன் நெறியால் மாந்தர்க்குள் அடுபகை பெரிதுண்டாகும் என்பதனைப் பெரியோர் ஆய்ந்து பேரும் புள்ளியும் பொறித்த சீட்டுதான் இது; நீ தீண்டவும் கூடாது" என்றார்.
எனக்கு அதனைக்காண வேண்டும் என்ற அவா முன்னிலும் பெருகிற்று; சில நாட்களுக்குப்பின் ஒரு நாள் என் தந்தை ஈச்சங்களைப் பெரிதும் அருந்தி, போதை மீதேறி மயங்கி-யிருந்தார்; தாயும் அருகில் இல்லை. ஆவலோடு அச்செப்பை எடுத்து முத்திரையை நீக்கி, சீட்டை நோக்கினேன். அதன் மேல் கலிமா பொறிக்கப்பட்டிருந்தது. வாசித்து ஓதி கல்வியும் சுவர்க்கமும் பெற்றோம் என்று கண்ணில் ஒத்திக்கொண்டேன். அதனைப் பிரித்து முகம்மது என்னும் பெயரும் வீறுஞ்சிறப்பும் மெய்ப்புதுமைப் பேறும் வாசித்தேன். அதில் இணையற்ற ஒளி தோன்றியது. கதிரவன்; நட்சத்திரங்கள்; மதியம் முதலியவற்றின் ஒளியும்; ஒப்பாகாது. கண்கள் கூசின. கலிமா என்னும் பக்தி வேர் உள்ளத்தில் ஊன்றியது. ஈமான் என்னும் பயிர் தழைத்தது தீன் என்னும் பேராசை மனதை நிரப்பியது; முகம்மதே, முகம்மதே என்று திருநபி திருநாமத்தைக் கூறலானேன். இதனைப் புலம்பல் எனக்கருதிய தாய் வருந்தி அங்குள்ள ஆடவரைக் கூவி அழைக்க, ஆடவர் கூடி விளைந்ததென்ன? என்று கேட்டனர். காரணம் அறியேன், பிதற்றுகிறான், பித்தோ? வஞ்சனைத் தொழிலோ? சூழ்ந்த தீங்குதான் என்ன என்று கூறுக" என்று சொன்னாள். இதற்கிடையில் தந்தை போதை தெளிந்தார். என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்.
மகனது நிலைகண்டு அஞ்சிய தந்தை கண்ணீர் சிந்தி "உனக்கு என்ன ஏற்பட்டது" என்று வினவ, உங்கள் திருப்பெயரை உள்ளத்தில் கொண்டு அங்கிருந்த அனைவருக்கும் தெரியும்படி நிகழ்ந்ததைக் கூறினேன். அறிவும் தருமபுத்தியும் புகழ்ப்பேறும் வேதமும் கலையும் ஞானவிளக்கமும் மறை நூலும் மைந்தர்க்குத் தருதல் தந்தையர் கடனாகும். மறைத்து வைத்தல் தக்கதன்று. இதயத்தளவில் இருக்கும் இறைதூதர் நன்னிலையைத் தரும் கலிமா பற்றிய ஏட்டைச் செப்பில் வைத்து நான் காணாதவாறு தடுத்ததேன்? என்று கேட்டேன். இது தந்தைக்கு வேம்பகாய்க் கசந்தது. கண்களிலிருந்து நெருப்புப்பொறி பறந்தது. பிள்ளைப் பாசம் போயிற்று, அகம், முகம், கை, கால் எனப்பாராது அலக்கழித்து அடித்தார், வசை மொழிபொழிந்தார். இருகைகொட்டி மூக்கில் விரல் வைப்பார். உதட்டை மடித்துக் கடிப்பார். உன் உயிரைக் கசக்கிப் போக்குவேன் எனச் சீறிப் புழுங்குவார், அழுங்குவார்; உற்றுப்பார்ப்பார்; உசாதடியை நீட்டி ஓங்குவார். உடலை நொறுக்குவேன் என்று கூறி மீசையைப் பலகால் முறுக்குவார்; வாளால் மோதுவார்; ஆடையை இறுக்குவார்; இருப்பார்; சினந்தெழுவார்; அருமையாகப் போற்றி வளர்த்தேன், நீயோ மாய முகம்மதைப் புகழ்கிறாய், பாவி இருந்தாலென்ன இறந்தா-லென்ன என்று இகழ்ந்தார்.
நானோ உதிரம் ஒழுக அடித்த போதும் அசைந்திலன், கடுஞ்சொல் பேசிலன்; நெஞ்சம் கலங்கிலன், உங்கள் நாமமே கூறினேன்; உங்கள் நாமம் புகழ்வதே எனக்கு வேலை, பங்கப் படுத்துவதே தந்தைக்கு வேலை. கண்ணீர் வடிப்பதே தாய்க்கு வேலை என்று தந்தை செய்த கொடுமையைப் பற்றி மகன் கண்ணீர் சிந்தியபடி கூறியதை உமறு துன்பச் சுவை தோன்றப்பாடுகிறார். உடனிருந்தோர் "தவறு செய்தால் பட்டும் படாமல் அடிக்க வேண்டும், தொடர்ந்து அடிப்பது சரியன்று" என்றனர். அவனோ நெறி நீங்கி குரு முகமதுக்கு ஈமான் கொண்டு விட்டான். இதனை விட்டுவிட்டு மன்னிப்பு கேட்டால் விடுவேன். இன்றேல் இல்லை என்று தந்தை கூறினார். அவர்கள் என்னை நோக்கி மக்காவில் தோன்றி முன்னோர் நெறிகளைப் பழித்து, தனக்குப் புதிய வேதம் வந்தது என்று பிதற்றித் திரிவதால் நம் பழிப்புக்கு ஆளாகியுள்ள அந்த முகமம்தின் பெயரைச் சொல்லாதே என்று கூறினர். அதற்கு "நான் முகமது ஒப்பற்றவர். அவரின் பாதங்கள் நிலத்தில் படுவதில்லை. கார்மேகம் குடைப் பிடித்து வருகிறது. அமாவாசை இருளில் முழுமதி தோன்றி அவரை இறைதூதர் என்று கூறிய பின் நபி என்பதற்கு வேறு சான்று வேண்டுமா? என் உயிர் போனாலும் கலிமா சொல்வதிலிருந்து மாறமாட்டேன்" என்று கூறினேன். இதனைக் கேட்ட ஊரார் இவனை இருட்டறையில் அடைத்து மூன்று நாட்களுக்கு ஒரு வேளை கசந்த சோறும் உவர் நீரும் கொடுத்துத் தண்டித்தால் மயக்கம் தெளிவான் என்றனர்.
கரிய முரட்டுக் கம்பளத்தை உடுக்கச் செய்தனர். இருட்டறையில் அடைத்தனர்; கசந்த உணவும் உவர் நீரும் தந்தனர். தங்கள் திருப்பெயர் கூறி உட்கொண்டேன். வானகத்தமுதோ, தேனோ என்று கூறும் வண்ணம் சுவைத்தன. ஒரு பிடி அமுதம் உட்கொண்டால் போதும் பத்து நாட்களுக்குப் பசிதீரும், உடல் பருத்தது, தாங்கள் மதினா வரப்போவதையறிந்து புறப்பட்டேன். இதனையறிந்து தந்தை தடுத்தார்; காலிலும் கையிலும் விலங்கு பூட்டி வழியில் வந்த இடையர்களிடம் கொடுத்துக் கடுமையாக வேலை வாங்கும்படி கூறினார். இடையர் தம் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று கொடுமைப் படுத்தினர். அச்சமயம் தாங்கள் மதினா வந்ததறிந்தேன். உங்கள் திருவடிகாண விழைந்தேன். கைகளையும் கால்களையும் பிணித்த விலங்குகள் உடைந்தன. ஆர்வம் மிகுந்து உறம்மாறிடம் சென்றேன். அவர் இங்கு அழைத்து வந்தார் என்று கூறி நாளும் காதலித்து இருந்த நெஞ்சும் கண்களும் களிப்புற்றுப் பாத பாங்கதீயத்தைக் கண்டேன், பருவரல் தவிரக் கண்டேன். தறும் பெரும் பேரின்பச் செல்வமும் கண்டேன் என்று கூறினார். இது கேட்டு நபிகள் நாயகம் மகிழ்ந்துருந்தது போல் ஜிபுவியில் வந்து சலாம் கூறி உலகில் ஐயூபு நபிகளோடு கலை தெரி கபுஉகாபை சமமாக வைத்தேன் என்றான் இறைவன்' என்று கூறிச் சென்றார். இதனை அனைவருக்கும் கூறி கபுஉகாபைத் தழுவிப் போற்றி, அவரைக் கொண்டு வந்த உறம்மாறை வாழ்த்தி நபிகள் நாயகம் மகிழ்ந்திருந்தார்.
இங்கு நாயகக் காதல் கொண்டு நைந்துருகிப் பேரிடர்களுக்கு ஆட்பட்டுத் துன்புற்று நபிகள் நாயகத்தைக் கண்டு கழி பேருவகை கொண்ட கபுஉகாபின் வரலாற்றை அழகிய முறையில் வர்ணிக்கிறார் புலவர். காதலுற்ற கபுஉகாபின் மெய்ப்பாடும் கடிந்து துன்புறுத்திய தந்தையின் மெய்ப்பாடும் இனிது வர்ணிக்கப் படுகின்றன.
விருந்தும் வியப்பும்
மதினா நகர் வரும் வழியில் ஒட்டகம் படுத்த இடத்தினை அபுநஜ்ஜார் கூட்டத்தா-ரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி அதில் வீடு கட்டுவது வரை அபூஜயூபு அன்சாரி வீட்டில் நபிகள் நாயகம் வசித்து வந்தார். நபிகள் நாயகம் ஒருநாள் உண்பதற்கு உணவு உண்டா என்று கேட்டார். அபூஐயூபு இருவர்க்குப் போதுமான உணவு உண்டு என்றார். நபிகள் நாயகம் ஊரில் சென்று விரும்பும் முக்கியமான 30 பேரை விருந்துக்கு அழைத்து வாருங்கள் என்றார். இருவர்க்குத் தானே உணவு இருக்கிறது. 30 பேரை அழைத்துவரச் சொல்கிறாரே என்ற தயக்கத்தோடு 30 பேரை அழைத்து வந்தார். அவ்வுணவை நபிகள் நாயகம் தமது திருக்கரத்தால் தொட்டுப் பரிமாறினார். வந்தவர்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டுப் புதுமையெனப் போற்றினர். கலிமாச் சொல்லி இஸ்லாமிலாயினர். அடுத்து ல பேரை அழைத்து வரச் செய்து விருந்து செய்தார். இவர்களும் வயிரார உண்டு வியந்து இஸ்லாமிலாயினர். அடுத்த 90 பேருக்கு விருந்து செய்தார். இவர்களும் வயிறார உண்டு வியந்து இஸ்லாமாயினர். இவ்வாறு 100 பேர் இஸ்லாமாயினர். நபிகள் நாயகம் தீன் நிலைநிறுவி பரிவு பெற்றார் என்று உமறு பாடுகிறார்.
பத்றுப்போர்
நபிகள் நாயகம் மக்காவில் வாழ்ந்த காலத்தில் குறைஷிப் பகைவர்கள் பல கொடுமைகளைச் செய்தனர். பைத்தியகாரன், சூனியக்காரன், கபடன், வஞ்சகன் என்றெல்லாம் பழித்துரைத்தனர். தொழும் பொழுது ஒட்டகையின் அழுகிய ஊன், இரத்தம், சாணம் முதலியவற்றைப் போட்டனர். கழுத்தில் துணியைப் போட்டு முறுக்கினர். சமூக விலக்குச் செய்தனர். கொன்றிட கொலைவாளை உருவினர். இப்படிக் கொடுமைகள் பல புரிந்தாலும் நபிகள் நாயகம் பொறுத்துக் கொண்டார். எதிர்த்துப் போரிடவில்லை. போரிட இறைவன் ஆணை வரவில்லை. மக்காவை விட்டு மதினாவிற்குக் குடி பெயர்ந்த நபிகள் நாயகம் கணிசமான அளவில் ஆதரவாளர்களைப் பெற்றார். தம்முள் பகைமை கொண்டு போரிட்டு வந்த அவுசு கசுரசு கூட்டத்தார் போரை வெறுத்து ஒற்றுமைப் படுத்தவல்ல தலைவராக நபிகள் நாயகத்தைக் கருதி ஏற்றனர், நபிகள் நாயகம் மதினாவாசிகளோடு செய்து கொண்ட உடன் பாட்டில் ஒரு பாதுகாப்பு சாசனத்தைப் பிரகடனம் செய்தார். இதன்படி அவுசு, கசுரசுக் கூட்டத்தாருடன் மதினா நகர யூதர்களும் மற்றுமுள்ள குடிமக்களும் நபிகள் நாயகத்தின் தலைமையை ஏற்றார்கள்.
மக்காக் குறைஷிகளோ நபிகள் நாயகத்தின் வளர்ச்சி கண்டு அஞ்சினர். தம்மைத் தாக்கி அழிப்பாரோ? தமது ஆலயத்தைத் தகர்ப்பாரோ? என்று கவலைப்பட்டனர், ஆதலின் வணிக வளமும் செல்வச் செருக்கும் கொண்ட மக்காக் குறைஷிகள் நபிகள் நாயகத்தைக் கொன்றொழிக்க முற்பட்டனர். நபிகள் நாயகம் அவர்களின் இப்போக்கிற்க்குக் காரணம் அவர்களின் வணிக வளம் தான் எனக்கருதினார். தங்களின் பழைய ஏற்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் மறுக்கும் நபிகள் நாயகத்தையும் புதுமை போற்றும் இஸ்லாமிய நெறியையும் அழித்திட முற்பட்டனர். இஃது அறத்திற்கும் மறத்திற்கும், புதுமைக்கும், பழமைக்கும், நடக்கும் போராட்டமாகும், இப்போராட்டத்தை உமறுப்புலவர் அருமையாக அமைத்துக் காட்டுகிறார்.
நபிகள் நாயகம் தமது வலிமையை வளர்த்துக் கொண்டார். ஓரிறைக் கோட்பாட்டிற்காக உயிரையும் கொடுக்க ஆயத்தமாக உள்ள தோழர்களை உருவாக்கினார். தம்மைத் தாக்க முற்படுவோரைப் போரிட்டுத் தடுக்க இறையாணையும் கிடைத்தவிட்டது. ஆதலின் தம்மை அழிப்பதற்காக மக்காக் குறைஷிகள் பயன்படுத்தவுள்ள வணிகர்களின் பொருளைக் கவரத் திட்டமிட்டார். எதிர்த்துப் போர் தொடுப்பராயின் தடுத்து நிறுத்தவும் தயாரானார்.
இந்நிலையில் ஒற்றர் அபுசுபியான் தலைமையில் உஷாம் நகர் சென்ற வணிகக்குழு திரும்பி வருவதாகக் கூறினார். இதனைத் தடுத்துப் பொருட்களைக் கவர நபிகள் நாயகம் முற்ப்பட்டார். அஞ்சிய அபுசுபியான் அபூஜகிலுக்கு நிலையை விளக்கிப் படை கொண்டு வந்து முஸ்லிம்களின் முயற்சியை முறியடிக் கவேண்டும் என்று செய்தியனுப்பினான். இதனையறிந்து வெகுண் டெழுந்த அபூஜகில் ஊரைக் கூட்டி உரையாற்றிப் போருணர்வு கிளர்ந்தொழச் செய்தான். படை திரண்டது, நபிகள் நாயகம் தோழர் களையழைத்து ஆலோசித்து அபூஜகிலை எதிர்த்துப் போர்க்கோலம் பூண்டார். முஸ்லிம் படை திரண்டது. பத்று மலைக்கருகில் முகாமிட்டார். நபிகள் நாயகம் போர்க்கோலம் பூண்டு தமது குதிரையைக் கொண்டு வரச் சொன்னார். அக்குதிரையின் ஆற்றலை வர்ணிக்கவந்த உமறு
தாவிடில் மனத்தை ஒக்கும்
தாக்கிடில் இடியே(று) ஒக்கும்
ஏவிடில் திகிரி ஒக்கும்
எதிர்த்தவர்க் (கு) எரியை ஒக்கும்
பூவிடத்து அடலின் வங்கூழ்
போன்றிடும் சக்பு என்று ஓதும்
மாவினைக் கொணர்மின் என்ன
முகம்மது சரணம் வைத்தார் (பத்று. 21)
என்று பாடுகிறார். குதிரையின் வேகம், தாக்கும் ஆற்றல், அதன் வெம்மை முதலியவற்றை இடியேறு, நெருப்பு, வலிய காற்று ஆகிய வங்கூழ் உவமங்கொண்டு அழகுபட விளக்குகிறார். இவ்வாற்றல் சான்ற குதிரையின் மீது நபிகள் நாயகம் ஏறிப்புறப்பட்டார். உபைதா, உறம்ஸா, அலி முதலியோர் தலைமை தாங்கிப் படையணிகளை நடத்திச் சென்றனர். மக்காவில் அபூஜகிலின் தலைமையில் குறைஷிகள் படை திரண்டு வந்த காட்சியை உமறுப்புலவர்,
கவிகையின் நெருக்கம் என்கோ
கவரியின் நெருக்கம் என்கோ
சிவிகையின் நெருக்கம் என்கோ
செழுங்கொடி நெருக்கம் என்கோ
குவிபரி நெருக்கம் என்கோ
கொற்றவர் நெருக்கம் என்கோ
சவுரியர் நெருக்கம் என்கோ
யாதெனச் சாற்று மாதோ (பத்று . 63)
என்று ஓசை நயந்தோன்றப் பாடுகிறார்.
இவ்வாறு புறப்பட்ட படை ஒரு காட்டிற்கருகில் பாடி கொண்டன. கதிரவன் மறைந்தது. ஏன் மறைந்தான் தெரியுமா? நபிகள் நாயகத்தை எதிர்க்க வந்த கொடியவர்களின் முகங்கான்பதை வெறுத்துச் சென்று விட்டானாம். இயற்க்கை நிகழ்ச்சியில் எத்தனை கற்பனை?
வீரர்களின் சாதனை
ஓரு வீரன் கையிலே இருந்த வேல் முதலிய படைக்கலன் களனைத்தையும் பகைவர் மீது செலுத்தி வேறு படைக்கலமின்றி இருந்தவன் அருகில் கிடந்த குதிரையின் காலை எடுத்துப் பகைவரை அடித்துச் சாய்த்தான். வேலும் வாளும் இழந்த வீரனொருவன் பகைவனால் அறுபட்ட தன் தோளையேடுத்து அவனையடித்துக் கொன்றான். அம்பறாத் தூணிலிருந்து அம்புகளை எய்து போரிட அம்புகள் தீர்ந்து போகவே தன் மார்பில் தைத்த அம்புகளை ஒவ்வொன்றாக எடுத்துத் தொடுத்துப் பகைவரைக் கொன்று குவித்தான். இரு கைகளையும் இழந்த வீரனோ இரு கால்களைக் கொண்டு தாக்கிப் பகைவரைக் கொன்றான். இவ்வாறு கடும் போர் செய்ததால் சைபத்து, ஓலிது, உத்பத்து ஆகிய மக்காக் குறைஷிகளின் அணித் தலைவர்கள் மடிந்தனர். பகைவர்கள் அஞ்சி ஓடினர். முஸ்லிம் வீரர்களுள் 14 பேர் வீரமரணம் அடைந்தனர். பகைவர் அணியில் 70 பேர் மாண்டனர். 73 பேர் சிறைப்படுத்தப்பட்டனர். பத்றுப் போர்க்களம் முஸ்லிம்கள் வசமாயிற்று.
மான உணர்ச்சி கொண்ட மாவீரன்
மக்காக் குறைஷிகளின் தலைவனான அபூஜகில் குற்றுயிராய்க் கிடந்தான். நபிகள் நாயகம் அனுப்பிய இப்னு மஸ்வூத், கண்கள் சிவக்க, உதட்டைக் கடித்துக் கொண்டு, உடலில் நிறைந்த புண்களிலிருந்து குருதியொழுக, நெட்டுயிர்ப்புடன் வீழ்ந்து கிடந்த அவனைக்கண்டு
வீரவெங்களிறே அடலரி ஏறே!
வீறற்பெருஞ் சமர்க்குறு புலியே!
பாரினிற் சிறந்த மக்காமாநகரில்
பரிவுறும் வீரற்கரசே (மதுறு. 232)
என்று விளித்து காரணக்குரிசில் முகம்மது நபியின் கட்டுனர மறைக் கலிமாவை ஈரமுற்றிசைத்து மனதில் இருத்தாது இடும் பெனும் இடர் விளைத்தனையே என்று இரங்கிக் கூறி, இனிய கலிமாவை உரைத்து இஸ்லாத்தைப் பொருந்தி தீனினை விரும்புவையாயின் நபிகள் நாயகத்திடத்துக் கொண்டு போய் துன்பந் துடைத்து உமது மக்களுக் குத் தலைமைபூணச் செய்வோம் என்று கூறினார். குற்றுயிராய்க் கிடக்கும் அந்நிலையிலும் அபூஜகில் தன்மானம் இழக்காமல் மனங்கொதித்து நகைத்து 'மறதியால் கலிமா உரையெனக் கூறினாய் இழிந்த சாதியில் தாழ்ந்த குலத்தவர்க்குரிய உறுதி கூறினை; உன்னைக் கொன்று தீர்க்கக்கூடியவர் என்னிடம் இல்லை, ஆதலின் இப்படிக் கூறின; "காலை செய்துவிடு' என்று இருவிழி சிவந்து வசையோடும் கூறினான் என்று உமறுப்புலவர் பாடுகிறார்.
இங்கு எதிர்த் தலைவனாகக் கொலைமனத்து அபூஜகில் நன்கு சித்தரிக்கப் படுகிறான். ஒரு காப்பியத்திற்குக் கருப்பொருள் மட்டும் மன்று, பாத்திரப்படைப்பும் முக்கியமானதாகும், தொடக்கத் திலிருந்து நபிகள் நாயகதிற்கு எதிர்த்தலைவனாகக் காட்டப் படுகிறான். நபிகள்கள் நாயகத்தின் புகழ் ஓங்க இவனிடத்து அவர்மீது கொண்ட பொறாமையும் அதனால் எழுந்த பகையும் ஓங்கி வளர்ந்தன. பத்றுப்போரும் தோன்றியது. குற்றுயிராய்க் கிடக்கும் போதும் மானம் பேசுகிறான். தன்னேவாரில்லாத தலைவராகிய நபிகள் நாயகத்திற்கு எதிராக அபூஜகில் நிகரற்ற பகைவனாகக் காட்டப் படுகிறான். இவனது வீழ்ச்சி நபிகள் நாயகத்தின் பகையின் வீழ்ச்சியாகவும் அமைந்து விடுகிறது. உமறு அபூஜகிலின் பாத்திரப் படைப்பை அரிய முறையில் மிகத் திறமையாக அமைத்துவிடுகிறார்.
பதறுப் போர்க்களக் காட்சிகளைப் படிக்கும் போது கலிங்கத்துப் பரணி, கம்பராமாயணம், சீவகசிந்தாமணி முதலிய இலக்கியங்களில் காணப்படும் போர்க்காட்சிகளும் நம் கண் முன் தோன்றுகின்றன. இவை தமிழ் இலக்கியங்களில் உமறுப்புலவர் ஆழ்ந்த பயிற்சியுடையவர் என்பதைக் காட்டுகின்றன. பாதை போந்த படலத்திலிருந்து இறப்பது வரை நபிகள் நாயகத்தின் மீது பொறாமை கொண்டு பகை வளர்த்துக் கொடுமை செய்துவந்த அபூஜகிலின் இறப்பு இஸ்லாத்திற்கு இருந்து வந்த தடை நீக்கமாயிற்று; நபிகள் நாயகமும் அவர் தம் தோழர்களும் கவலை நீக்கினர். இஸ்லாம் பரந்து சிறந்து விளங்கத் தொடங்கியது.
பாத்திமா திருமணம்
நபிகள் நாயகத்திற்கும் கஜிதா நாயகிக்கும் பிறந்த பெண்கள் ஜைனப், ருக்கையா, உம்முகுல்தும், பாத்திமா ஆகிய நால்வர் ஆவர், இவர்களுள் பாத்திமா சிறந்தவர்; பேறுகள் அனைத்தும் பெற்றவர்; பெண்ணலங்கள் அனைத்தும் ஒன்றாய்த் திரண்ட பெண்ணரசியாவார்; மின்னல் கொடி பெண்ணுருப் பெற்றதோ என ஒளி திகழ்பவர். உலகங்களெல்லாம் தீன் நெறி பரப்பும் அழகு நிலவாகத் திகழ்பவர் நபிகள் நாயகம் - அந்நினைவில் தோன்றிய ஒளிக்கற்றையாக விளங்குபர் பாத்திமா. காலை இளஞ்சூரியன் இவரின் பாதச்சிறப்பைக் கடனாகப் பெற்றான். இவரின் முக அழகைப் பெற்றிலோமே என மனமுருகி நிலவு நாளுக்கு நாள் தேய்ந்து போயிற்று. கற்புக்கரசியாய்த் திகழும் அப்பாவையைத் தவம், கற்பு, புகழ், எனும் நற்பண்புகள் வணங்கி நின்றன. வாய்மை தவறா வாக்கும் உயர்ந்த அறமும் அவரின் ஏவல் கேட்டு நடந்தன. விண்ணுலக மாதருக்கும் மண்ணுலக மகளிர்க்கும் இவரே தலைவி என இறைவன் படைத்தான் என்றால் இவரின் திறன் கூற வல்லார் யார்? எனக் கேட்டு உமறு பாத்திமாவின் சிறப்பை யெல்லாம் இனிமை தோன்ற வர்ணிக்கிறார்.
இத்தகு பாத்திமாவைத் தங்கட்கு மணம் செய்து கொடுத்தால் பொன்னணிகளும் முத்து வடங்களும் பொற்காசுகளும் தருவதாகக் கூறினர் பலர். இறைவன் நாட்டப்படி நடக்கும் என்று நபிகள் நாயகம் கூறிவிட்டார். இந்நிலையில் அலி தம்விருப்பம் என்னா குமோ என்று கவலை கொண்டார். வளைந்த வில் புருவம், வாள் கண், கொடி போன்ற இடை, கரிய கூந்தல், கனியிதழ், வெண்பற்கள் கொண்ட பாத்திமாவை விரும்பி வேறு நினைவையும் நித்திரை யையும் துறந்து குழியிடைப்பட்ட களிறு போன்று வேட்கையில் நலிந்தார் அலி என்று உவம நலந்தோன்ற விளக்குகிறார். நபிகள் நாயகத்தை அணுகி தம் விருப்பத்தைக் கூறினார். மகிழ்ந்த நபிகள் நாயகம் தம் மகளின் இசைவைக் கேட்டார், அவரும் மௌனத்தின் மூலம் தம் விருப்பத்தைத் தெரிவிதார், திருமணம் முடிவு செய்யப்பட்டது. மகர் 500 தீர்கம் என்று தீர்மானிக்கப்பட்டுத் திருமண ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. வள்ளுவன் ஒட்டகத்தின் மீதேறி மண முரசடித்து திருமண அறிவிப்புச் செய்தான். இஞ்குத் தமிழ் நாட்டு வள்ளுவனையும், ஒட்டகத்தையும் சேர்த்து இரு மரபுகளையும் உமறு இணைப்பதைக் காணலாம்.
காப்பிய மரபிற்கேற்ப மணமகன் உலா வருகிறார். மகளிர் கூடி மனம் பறிகொடுக்-கின்றனர். பேதை, பெதும்பை, மங்கை மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண், ஆகிய ஏழு பருவ மகளிர் மணமகனின் அழகில் மயங்கி உருகுவதை உமறு இங்கும் வர்ணிக்கிறார், திருமணம் சொர்க்கத்தில் முடிவு செய்யப் படுகிறது என்பது பழமொழியாகும். பாத்திமா-அலியார் திருமணம் முதலில் சொர்க்கத்தில் நடந்ததாக உமறு வர்ணிக்கிறார். மணமகளுக்கு மணவினைப் பொருளாகப் பணம் தருவது இஸ்லாமிய விதியாகும். பாத்திமா பிறர் நலம் போற்றும் பண்பை உமறு அழகுற வர்ணிக்கிறார். திருமணம் சிறப்பாக முடிந்தது. மறுநாள் காலையில் மகளைப் பார்க்க நபிகள் நாயகம் தோழர்களுடன் சென்றார். மகள் பழைய சட்டையுடன் இருந்ததைக் கண்டு புதுச்சட்டை எங்கே என்று கேட்டார். ஒரு பக்கீர் வெறும் மேனியுடன் வந்து பசி தீர உணவும் குளிர் நீங்க உடையும் கேட்டார். உணவளித்துப் புதுச்சட்டையும் கொடுத்து அனுப்பிவிட்டேன் என்றார். மணப்பெண்ணாகிய நீ புதுச்சட்டையை அணிந்து கொண்டு பழைய சட்டையை அப்பக் கீருக்குக் கொடுத்திருக்கலாமே என்று தந்தை கூறினார். மகளோ நாம் விரும்பும் அழகான பொருள்களையே அல்லாஉறீவுக்காக ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறிய வண்ணமே செய்தேன் என்று பதில் கூறினார். இதனைக் கேட்டதும் தந்தை சிந்தை மகிழ்ந்தார். இது உமறுப்புலவர் ஹதீதுக் கலையில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பதைப் புலப்படுத்துகிறது.
உலகம் போற்றும் உத்தமத் திருநபி தம் மகளுக்கு அளித்த சீர்வரிசை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? ஒரு பீங்கான் தட்டு, ஒரு பாய், ஒரு தலையணை, ஒரு கம்பளம், ஒரு திரிகை அவ்வளவுதான். எடுத்துச் சென்றவர்கள் யார் தெரியுமா? நபிகள் நாயகம், அபூபக்கர், உதுமான், உசாமா. எளிய பொருட்கள் எடுத்துச் சென்ற பெரியவர்களால் அரிய பொருட்களாகிவிட்டன. இவ்வாறு பொருட்களைக் கொண்டுவந்த நபிகள் நாயகமும் தோழர்களும் அலியார் வீடு வந்து அவற்றைக் கொடுத்துவிட்டு அலியையும் பாத்திமாவையும் வாழ்த்திப் புறப்பட்டனர். நபிகள் நாயகம் அவர்களைப் "பாலும், நீரும் கலந்திருப்பது போல ஒலிகடற் புவியில் நீடு வாழ்க" என வாழ்த்தி வீடு சென்றார் எனப் பாடுகிறார் புலவர்.
உவமை எல்லோரும் அறிந்த எளிதில் புரியக்கூடியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் விளக்க வந்த பொருளின் சிறப்பு தொளிவாகும். இங்குக் கூறப்பட்ட உவமை எல்லோரும் அறிந்த பாலும் நீரும் தான். இவை இரண்டும் ஒன்றாகவே இருக்கும். இவை இரண்டும் பிரிக்க முடியாதவாறு இருண்டறக்கலந்து விடும்; வண்ணத்திலும் சுவையிலும் சுஒன்றாகவே இருக்கும். பாலைக் கொதிக்க வைக்கும் போது பொங்கி இறக்கியதும் ஆவியாகப் பிரிக்கப்படும் போது பிரிவுத்துயரம் பொறுக்காமல் பாத்திரத் திலிருந்து வழிந்து நெருப்பை அணைத்துவிடுகிறது. எளிய இனிய இவ் உவமை கொண்டு இணைபிரியா மணவாழ்வை நாயக மொழியாக இனிது விளக்கிவிடுகிறார் உமறு.
போர் நிகழ்ச்சியை வீரம் தோன்ற வர்ணித்த உமறு திருமண நிகழ்சியை இனிமை தோன்ற விளகுகிறார். இவ்வாறே உமறு தொடர்ந்து நடந்துவரும் போர்களை அடுத்துர் பல்வேறு இனிய நிகழ்ச்சிகளை விளக்கிச் சுவை மாற்றம் தந்து படிப்போர்க்குச் சோர்வு தட்டாமல் செய்து விடுகிறார்.
முஸ்லிம்களை குறிப்பாகப் பெண்களை இழிவாக நடத்திய பனிகைகனுகா என்ற யூதர் கூட்டம் அடக்கப்பட்டு நாடு கடத்தப் பட்டது. பத்றுப்போரில் தங்களின் தலைவர்களைக் கொன்று வீரர்களைச் சிறைப்பிடித்துத் தாங்கொண்ணாத துயரம் விளைத்த முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டுமென்று அக்கூட்டத்தார் துடித்தனர். மக்க மாநகரக் குறைஉஷிகள் முஸ்லிம்களைத் தாக்கித் தகர்க்கப் படையெடுத்து சவீக்கு என்னுமிடத்தில் பாசறை அமைத்தனர். முஸ்லிம்கள் படை வந்ததும் அஞ்சிக் குதிரை களையும், உணவுப்பொருள்களையும் படைக்கலங்களையும் போட் டுவிட்டு ஓடினர். நபிகள்கள் நாயகம் பகைவர் விட்டுச் சென்ற பொருட்களையெல்லாம் எடுத்து வரச் செய்து எல்லோருக்கும் பகிர்ந் தளித்தார். இதனை வறியராக இருந்த முஸ்லிம்கள் அபூசுபியான் செய்த கொடையால் வலியராயினர் என்று நகைச்சுவை தோன்றக் கூறுகிறார் உமறு. குதிரி என்ற இடத்தில் பனிசுலைம் கூட்டத்தினர் முஸ்லிம்களை வெறுதுத் துன்புறுத்தினர். இதனை அறிந்த முஸ்லிம்கள் அவர்களைத் தாக்கி வெற்றி கொண்டனர். தீயம்று என்னுமிடத்தில் முஸ்லிம்களை எதிர்க்க சக்தியற்று அபுசுபியான் கூட்டத்தினர் தோற்று ஓடினர். முஸ்லிம்களுக்குத் துன்பம் செய் துவந்த அபிராபிகு அழிக்கப்பட்டான்.
இவ்வாறு நிகழ்ந்த சிறு போர்க்களைப் பற்றி வர்ணித்து வந்த உமறுப்புலவர் நபிகள் நாயக வீட்டுத்திருமணங்களை வர்ணிக்கிறார்.
நபிகள் நாயகம் திருமணம் செய்து கொண்ட மனைவியருள் ஒருவரைத்தவிர அனைவரும் விதலையரே, பாதுகாப்பிற்கு ஆளில்லா இவ்விதவைகளைப் பரிவு கொண்டு திருமணம் செய்து பாதுகாப்பளித்து வந்தார். உறிஜ்ரி மூன்றாம் ஆண்டில் நடந்த திருமணம் பற்றி கூறவந்த உமறுப்புலவர் கலிமா என்னும் விதையை இப்பூவுலகில் விதைத்து தீன் எனும் பயிரை விளைத்த முகம்மது நபி மக்காமாநகரிலிருந்து மதினா வந்து சேர்ந்த மூன்றாம் ஆண்டில் அவர் குடும்பத்தில் நடந்தவற்றுள் முக்கியமானவற்றைக் கூறுவோம் என்று தொடங்குவதில் இலக்கிய நயம் பொருந்தியுள் ளதைக் காணலாம்.
நாயகத்தோழர் உமறு கத்தாபின் மகள் உறஃப்ஸா உருவ நலனும் பண்பு நலனும் ஒரு சேரப் பெற்ற பெண்ணரசி ஆவார். இவர் ஒரு கைம்பெண், இவருக்கு வாழ்வு தர முற்பட்டு அபூபக்கர், உஸ்மான் ஆகியோரை அடுத்ததுத்துக் கேட்டார். அவர்கள் முன்வரவில்லை, நபிகள் நாயகத்திடம் முறையிட அவர் தாமே மணந்து அவருக்கு வாழ்வளித்தார்.
இதே ஆண்டில் ரமலான் மாதம் பதினைந்தாம் நாள் நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமாவிற்கு அழகிய மகன் பிறந்தான். அவனுக்கு "உறஸன்' (அழகன்) என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். இங்குக் குழந்தை பிறந்தால், நடக்கும் இஸ்லாமியச் சடங்குகளை வர்ணிக்கிறார்.
வளர்ந்து வந்த உணவு
ஒருநாள் நபிகள் நாயகம் தம் தோழர்களுடன் பள்ளிவாசலில் பசியுடன் இருப்பதை உற்றுநோக்கிய அபூதல் உறா தம் வீட்டிற்கு வந்து பசியாற வீட்டிலிருந்த மூன்று ரொட்டிகளை மகன் அனஸ் மூலம் கொடுத்தனுப்பினார். அவரைப் பார்த்ததும் நபிகள் நாயகம் அவர் வந்த நோக்கத்தைத் கூறி அவரையும் அழைத்துக் கொண்டு தோழர்களுடன் அபூதல் உறா வீட்டிற்கு வந்தார். பசியாறுவதற்கு ஒன்றுமில்லை என்று கணவரும் மனைவியும் வருந்தினர். உள்ளதை அனுப்பும் படி நபிகள் நாயகம் கூறினார். அனஸ் மூலம் கொடுத்தனுப்பிய மூன்று ரொட்டியில் அம்மையார் நெய்யூற்றி அனுப்பினார். அம்மூன்று ரொட்டிகளைச் சிறு துண்டுகளாக்கித் தோழர்களில் பத்துப்பேரை உண்ணும்படிக் கூறினார். அப்பத்துப் பேரும் வயிறார உண்டார்கள். ரொட்டித் துண்டுகள் குறைய வில்லை. அடுத்துப் பத்துப் பேரை உண்ணும்படிக் கூறினார். இவர்களும் வயிறு நிரம்பத் தின்றார்கள். இப்படிப் பத்துப் பத்தப் பேராக எண்பது பேர் உண்டார்கள். எனினும் உணவு குறையவில்லை ... அபூதல் உறாவையும் அவர் வீட்டிலுள்ள அனைவரையும் உண்ணும்படிக் கூறினார். அவர்களும் உண்டு மகிழ்ந்து வியந்தனர். இவ்வாறு அற்புதச் சுவையூட்டிக் காப்பிய ஓட்டத்திற்கு கவர்ச்சியைத்தருவதுடன் காப்பிய நாயகரின் அருளாற்றலையும் உணரும்படியும் செய்கிறார் உமறு.
உகதுப்போர்
காப்பியத்தில் கருவாகிய போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. பத்றுப்போரில் ஏற்பட்ட இழப்புப் பகைவர்களைச் சும்மாயிருக்கவிடவில்லை. பழிவாங்கும் உணர்ச்சி அவர்களைப் பிடர் பிடித்து உந்தியது. அபுசுபியான், கூடியிருந்தவர்கள் உள்ளத்தில் பழிவாங்கும் உணர்ச்சி பொங்கியெழும்படி உரையாற்றினான். அபூஜகிலின் மகன் தன் தந்தையின் இறப்பிற்குப் பழி தீர்க்கமுடியும் என்றான். பெரும்படை திரட்டினர். அபுசுபியானும் இக்ரிமாவும் காலிதும் மூன்று அணிகளின் தலைமையை ஏற்றுப் புறப்பட்டனர்.
ஊழித்தீ ஒன்றோடொன்று மோதுவது போன்று படைகள் மோதின; அம்பு எய்தனர்; வேல் எறிந்தனர்; தடி கொண்டு அடித்தனர்; கவன் கல் எறிந்தனர்; ஈட்டியால் குத்தினர்; வாளால் அறுத்தனர்; வீரம் பேசி வசைகள் பொழிந்தனர்; உடல்களைப் பிளந்தனர்; தலைகளைக் கொய்ந்தனர் என்று உமறு இலக்கிய நயந்தோன்றப் பாடுகிறார்.
முஸ்லிம்கள் முன்னேறினர். பகைவர்கள் படைக்கலன்களையும் பிற பொருட்களையும் விட்டுச் சென்றனர். அவற்றை முஸ்லிம்கள் சேகரிப்பதில் ஈடுபடலாயினர். உகது மலைக் கணவாயின் பாதுகாப்பில் இருந்த முஸ்லிம் படைவீரர்கள்களில் பலர் நபிகள் நாயகத்தின் சொல்லினை மீறிக் கணவாயை விட்டு வந்து கொள்ளைப் பொருள் பொருக்குவதில் ஈடுபட்டனர். போர்க் கலையில் வல்ல காலித் பாதுகாப்பற்ற கணவாயின் வழியாகப்படை கொண்டு வந்து முஸ்லிம் படைகளைப் பின்புறமாகத் தாக்கினான். இருபுறமும் தாக்கப்பட்ட முஸ்லிம் அணிக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. தலைவர்களில் 14 பேர் மாண்டனர், பலர் காயமடைந் தனர். நபிகள் நாயகம் கொல்லப்பட்டார் என்ற வதந்திகள் பரவின. எனினும் முஸ்லிகள் நபிகள் நாயகத்தின் உறுதியால் தொடர்ந்து போரிட்டனர். இது கண்டஞ்சிய அபுசுபியானும் பிறரும் மக்கா நோக்கிப் புறப்பட்டனர். இவ்வாறு பகைவர்கள் தோற்றோடத் தொடங்கியதும் முஸ்லிம் வீரர்கள் அப்பகைவர் களத்தில் விட்டுச் சென்ற குதிரைகளையும் பொருட்களையும் சூறையாடினர்.
இலக்கிய நலம் கனிந்த பாடல்கள் பல உள்ளன. பகைப்படை அணிவகுத்துச் சென்றது அப்படையில் வரிகள் அசைந்தன. அதில் கவிஞர் தம் கருத்தை ஏற்றி முகம்மதை எதிர்த்துச் செல்லாதீர்கள், திரும்பி விடுங்கள்" என்று கைமறித்துக் காட்டியது போல இருந்தது என்று கூறுகிறார். அப்பகைவர்கள், போர் முரசு உடனே வாருங்கள் வாருங்கள் என வானவர்களுக்கு உரைத்தது போல் இருந்தது என்கிறார். கொடி அசைவிலும் முரசொலியிலும் தீயவர்கள் படையெடுப்பைத் தடுத்துக் கூறுவது போன்றிருந்ததாகவும் புலவர் கூறுவதில் தற்குறிப்பேற்ற அணி இடம் பெற்றுள்ளதைக் காணலாம் இவ்வாறே முஸ்லிம்கள் அணிவகுத்துச் சென்ற போது கவரி அசையும் தோற்றத்தைப் பகைவரை எதிர்த்துச் செல்லுங்கள், செல்லுங்கள் என்று கையசைத்ததாகவும், இசைக்கருவிகள் முஸ்லிம் படைகளே கொடிய குறைஉஷிகளைக் கொல்லுங்கள் கொல்லுங்கள்" என்று உரைத்தது போலவும் ஒலித்தன என்றும் "அசைந்தாடும் கொடிகள் இப்படை வெல்லும் வெல்லும் " என்று குதித்தாடின என்றும் பாடு வதில் உவமையும் தற்குறிப்பேற்ற உத்தியும் சிறந்தமைந்துள்ளன.
அல்லும் கல்லும் ஒத்தனமனக் குபிரவர் படையில்
செல்லும் செல்லும் என்று ஏவின சிவிநியின் திரள்கள்
கொல்லும் கொல்லும் என்று உரைத்தன பல்லியம் குமுறல்
வெல்லும் வெல்லும் என்று ஆடின விடுநெடுங்கொடிகள் (உகது. 96)
இப்பாடலில் செல்லும்: செல்லும்; கொல்லும் ; கொல்லும் ; வெல்லும் வெல்லும், எனச் சொற்கள் அடுக்கிவந்து ஓசை இன்பந்தருகின்றன. இது போன்ற ஒலி நயம் பொருந்திய பாடல்கள் பல உள்ளன.
அமுறா
மக்காநகரக் குறைஉஷி வீரர்கள் மட்டுமல்லாமல் சுற்றிலும் இருந்த வீரர்களைத் திரட்டிச் சென்று போரிட்ட போதும் அதில் வெற்றி காண முடிய வில்லையே என்று மக்கா சென்ற அபுசுபியான் வேதனைப்பட்டான். "நமக்குச் செல்வம் இருந்தும் படைப்பலம் இருந்தும் பயனில்லையே புறங்காட்டி ஓடி வந்து கவலைப்படுவதில் பயனில்லை. மீண்டும் ஒருமுறை முகம்மதை எதிர்த்துப் போர்தொடுத்து அவனை அடக்கி வரவேண்டும்" என்று விரும்பினான். முன்னர்ப் போரிட்ட வீரர்களையெல்லாம் திரட்டினான். மதினா நோக்கிப் புறப்பட்டு இறௌகா என்னும் இடத்தில் பாடியிறங்கினான். இதனையறிந்த நபிகள் நாயகம் படைத் திரட்டிப் புறப்பட்டு அமுறா என்னும் இடத்தில் முகாமிட்டார். அமுறாவில் இருந்த மகபது என்ற குசையிக் கூட்டத்தலைவர் இருசாரார்க்கம் வேண்டியவர். நபிகள் நாயகத்தைச் சந்தித்து விட்டு அபூசூபியான் இடம் சென்று "முன்னரே உமது அணித்தலைவர்களைப் போரில் இழந்தாய்; பழி சுமந்தாய்; அளவற்ற நிதியை விட்டுச் சென்றாய்; பிழை செய்தாய்; இன்னும் உம்மினத்தாரை விண்ணில் ஏற்ற விரும்புகிறாய் ஒழுங்காக ஊர் போய்ச் சேர்வாயாக" என்று அவன் மனதில் படும்படி எடுத்துச் சொன்னார். உறுதியற்ற உள்ளங்கொண்ட அவன் நிற்பானா? பொருள்களை-யெல்லாம் போட்டு விட்டுச் சென்றான்.
ககுபு
யூதர்கள் சிலர் நபிகள் நாயகத்தை ஒழித்துக்கட்ட முயன்றனர்; அவருள் ககுபு என்ற வஞ்சகனும் ஒருவன். சுகுறா என்னும் நகரில் வாழ்ந்து வந்தான். நளிர் கூட்டத்தின் தலைவன். தீமைகள் பல செய்து வந்தான். மக்காக் குறைஉஷிகளுடன் சேர்ந்து முஸ்லிம்களுக்குத் தொல்லை கொடுத்துவந்தான். இதனையறிந்த நபிகள் நாயகம் படையெடுத்துச்சென்று சுகுறா கோட்டையை முற்றுகையிட்டார். ககுபு கோட்டைச்சுவர் மீதிருந்த பெருங்கல்லைத் தள்ளி நபிகள் நாயகத்தைத் கொல்ல முயன்றான். இதனின்றும் ஒதுங்கி நபிகள் நாயகம் தப்பித்துக் கொண்டார். நயவஞ்கனான கபுகு நபிகள் நாயகத்திடம் வந்து வஞ்சகமுடன் பணிந்தான். நபிகள் நாயகம் அவனை மன்னித்தார். ஆனால் வஞ்சகன் கபுகு வாக்குத் தவறி ஏமாற்ற முயன்றன். இதனைக் கூற வந்த உமறு பெரியவர்கள் ஆயிரம் நன்மை செய்ததாலும் கீழானவர்கள் செய்நன்றி மறந்து துன்பமே செய்யக் கருதுவர் என்பதற்குச் சான்றாக உள்ளான் என்று பாடுகிறார்,
மக்காக் குறைஷிகளைக் கண்டு அவர்களின் ஆதரவு பெற்று முஸ்லிம்களைத் தாக்க முயன்றான்; முஸ்லிம்களைக் கண்டால் வெகுண்டெழுந்தான். ஆதலின் இக் கொடியவன் இருந்தால் நல்லறம் வாய்க்காது; அவனைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று கருதி தோழர்களிடம் நபிகள் நாயகம் கூறினார். அவ்வளவு தான் முகம்மது இப்னு சல்மா என்ற வீரர் அவனைக் கொன்றுவர விரும்பி நபிகள் நாயகத்தின் ஆசிபெற்றுச் சென்று தந்திரமாக அவன் பள்ளியறை சென்று அக்கொடியவனைக் கொன்று தீர்த்தார்.
வஞ்சகன் ஓழிந்ததும் நளிர் கூட்டத்தாரை அடக்க நபிகள் நாயகம் படை கொண்டு சென்று சுகுறியை முற்றுகையிட்டனர். மதினா யூதர்களோ, மக்காக் குறைஉஷிகளோ யாரும் சுகுபு கூட்டத்தாருக்குத் துணைவரவில்லை . முற்றுகை 21 நாட்கள் நீடித்தது. சுகுறா யூதர்கள் பணிந்து அமைதித் தூது அனுப்பினர். அதன் படி நபிகள் நாயகம் அவர்கள் உடுத்திய ஆடைகள் தவிர வேறு எதையும் எடுக்காமல் கோட்டையை விட்டு அவர்கள் விரும்பும் இடங்களுக்குச் செல் லலாம் என்று கூறினார். அவர்களும் உடன் பட்டனர். இரக்கமுள்ள நபிகள் நாயகம் அவர்களுக்கு ஐந்து ஒட்டகங்களையும் சுமக்கத்தக்க உணவுப்பொருட்களையும் கொடுத்தனுப்பினார். சுகுறாவை விட்டுப் புறப்பட்ட யூதர்கள் ஷாம் நகரத்திற்கும் கைபருக்கும் சென்றனர். நபிகள் நாயகம் அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை ஏழை எளியவர்களுக்குக் கொடுத்துவிட்டார்.
சுகுறாப்போரில் அஞ்சி ஓடிய அபூசுபியான் பத்றுச் சந்தைக்கு வந்ததால் ஒருகை பார்த்துவிடுவோம் என்று கூறிச் சென்றான், அவ்வாறே பழி வாங்கத்துடித்த அபுசுபியான் பத்றுக்குப் படை கொண்டு வந்தான். நபிகள் நாயகம் அவனைச் சந்திக்கப் படைதிரட்டிப் புறப்பட்டார். முஸ்லிம் படை அல்லாகு அக்பர் என்ற முழக்கத்தை எழுப்பி ஆரவாரத்துடன் வருவதை அறிந்த அபுசுபியான் அஞ்சி வழக்கப்படி போர்க் கருவிகளையும் உணவுப் பொருள்களையும் வாகனங்களையும் விட்டுச் சென்றான்.
போர்க்காலத் தொழுகை
தாத்துற்றகாக்கு என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கத்பான் கூட்டத்தினர். முஸ்லிம்களுக்குப் பல்வேறு துன்பங்களைத் தந்து வந்தனர். ஆதலின் அக்கூட்டத்தாரை அடக்கும் பொருட்டு நபிகள் நாயகம் படையுடன் புறப்பட்டார். பாலைவனத்தைக் கடந்து வந்து நசுத் என்னும் இடத்தில் முகாமிட்டனர். இதனையறிந்த கத்பான் கூட்டத்தினரும் பெரும்படையுடன் அங்கு வந்தனர். போர் தொடங்குமுன் தொழுகை நேரம் நெருங்கவே முஸ்லிம் வீரர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இதனைக்கண்ட பகைவீரன் தம் படையினரிடத்துச் சென்று முஸ்லிம் படையினர் வரிசையாக நின்று மெய்மறந்து தொழுது கொண்டுள்ளனர்; இவ்வேளையில் அவர்களைத் தாக்கினால் அவர்களைக் கொன்று குவித்துவிடலாம் என்று சொன்னான்; அவர்கள் வந்து சேர்வதற்குள் முஸ்லிம் வீரர்கள் தொழுகையை முடித்துவிட்டு ஆயத்த நிலையில் இருந்தனர். இதனைக்கண்ட அப்பகைவர்கள் அடுத்துவரும் தொழுகை நேரத்தில் தாக்கிவிடலாம் என்று கூறிச்சென்றனர். அசர் தொழுகை நேரம் வந்தது, திருக்குர் ஆன் வசனம் இறங்கியது.
அதற்கேற்ப நபிகள் நாயகம் தமது படைவீரர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவினர் தம்மைப் பினபற்றி இரண்டு ரக்அத் தொழச்செய்தனர். மற்றொரு பிரிவினர் ஆயத்த நிலையில் காவல் காத்திருந்தனர். அடுத்த இரண்டு ரக்அத்தைக் காத்திருந்த பிரிவினர் நபிகள் நாயகத்தைப்பின்பற்றித் தொழ முந்திய பிரிவினர் காத்திருந்தனர். அனைவரும் ஒரு சேரத் தொழுவர் என்று எதிர் பார்த்திருந்த பகைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முஸ்லிம்களின் தொழுகை கண்டு வியந்த பகைவர் அஞ்சி ஓடி மறைந்தனர்.
அல்லாஉற் காப்பான்
நானில வர்ணணையில் தமிழ்நாட்டுச் சாயலைக்காட்டி வந்த உமறு ஆங்காங்கு அரபு நாட்டுப் பாலைவனத்தையும் வர்ணிக்கத் தவறவில்;ை வெப்பம் மிகுந்த வறண்ட பாலைக் காட்சிகளைக் காட்டுகிறார்; தமிழ்நாட்டுப் பாலைநிலத் தெய்வமான காளியின் விளையாட்டைக் காட்டுகிறார். இக்கொடிய பாலைநிலத்தைக் கடந்து ஒரு சோலையுள் புகுந்தனர்; கடுமையான வெயிலின் களைத் துப்போன முஸ்லிம் வீரர்கள் வாள்களை அருகில் வைத்துவிட்டு ஆங்காங்குக் காணப்பட்ட மரநிழலில் துணியை விரித்துப் படுத்து அயர்ந்து தூக்கினர். நபிகள் நாயகமும் ஒரு மரநிழலில் தனியாகத் துயிலலானார்.
நபிகள் நாயகத்தை எப்படியாவது கொல்வேன் என்று சூளுரைத்த ஓர் அரபி நபிகள் நாயகத்தைத் துயிலும் நிலையில் கண்டான்; தனியாகத் தூங்குகிறார், நல்ல தருணம் என்று கருதி நபிகள் நாயகத்தின் வாளை எடுத்து உறையினின்றும் உருவி உயர்த்திப் பிடித்துக்கொண்டு விழித்த நபிகள் நாயகத்தை நோக்கி "நான் உம்மை இரு துண்டாக வெட்டுவேன் உன்னைக்காப்பது யார்?" என்று கேட்டான். நபிகள் நாயகம் வாள் உன்கையில் உள்ளது. வலிமை மிகுந்த எம் வீரர்கள் உறங்குகிறார்கள் ; நீ இவ்வாறு பேசிவிட்டாய். அல்லாஹ்வே என்னைக் காப்பான் என்று கூறினார். 'அல்லா உற்" என்ற பெயரைக் கேட்டதும் அப்பாதகனின் நெஞ்சம் நடுங்கியது. கையிலிருந்த வாள் கீழே விழுந்தது; அவ்வாளை நபிகள் நாயகம் எடுத்துக் கொண்டு இப்போது உன்னைக்காப்பது யார்? என்று கேட்டார். அவன் அஞ்சி நடுங்கினான். " பெரும்பிழை செய்த என்னை இறைவனுக்காகப் பொறுத்தருள வேண்டும்" என்று கூறி அவரின் திருவடி பணிந்தானர்.
உறக்கதிலிருந்த வீரர்கள் எழுந்தனர். அவர்களிடம் நடந்ததை நபிகள் நாயகம் கூறினார். "இத்தகையோர்க்கு இரக்கங்காட்டுவது தீமையைத்தரும். ஆதலின் இவனைக் கொன்று விட வேண்டும்" என்று கூறினர். நபிகள் நாயகமோ "நீங்கள் கூறுறவது உண்மையே; எனினும் கொல்ல வந்தோராயினும் அஞ்சி அடைக்கலம் புகுந்தால் காப்பதுதானே முறை. வாளைக் கீழே போட்டுப் புலம்பி நிற்கும் கோழையை வெட்டுவது வீரமாகுமா? அவனுக்கு அடைக்கலம் தந்து ஆதரிப்பதே புகழைத்தரும். அன்பெனும் பயிருக்கு வேலியா கவும் துன்பம் தீர்க்கும் மருந்தாகவும் இருப்பது பொறுமையே ஆகும்" என்று கூறி அப்பகைவனை மன்னித்தருளினார்.
பகைவனின் வஞ்சகத் தொழிலையும் அப்பகைவனுக்கும் அருளும் நபிகள் நாயகத்தின் கருணைத்திறத்தையும் உமறு அழகுப்பட கவிநயம் கனியப் பாடுகிறார்.
அகழ்ப்போர்
ககுபு கொல்லப்பட்டான். அவனுடைய சுற்றத்தினர் சுகுறாவிலிருந்து வெளியேறி ஷாமில் குடியேறினர் என்பதைக் கண்டோம். அங்கு அவர்களுக்குத்தலைவனான குயை என்பான் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவர்களைத் தூண்டி வந்தான். "யூதர்களே, ஈடில்லாத சுகுறாவில் நாம் இன்பமாக வாழ்ந்து வந்தோம். வீரமும் தீரமும் வாய்ந்து வந்த நம் தலைவன் சுகுபை முகம்மது கொன்று வீழ்த்தினான். நம்மையும் நம் ஊரைவிட்டு விரட்டி விட்டான். அவனைக் கொல்லாது பேடிகளைப் போல அடங்கிக் கிடப்பது முறையாகுமா? யூதர்கள் துணிவும் அறிவும் இனப் பெருமையும் கொண்டவர்கள் என்று உலகம் கூறும்; ஆனால் நாமோ நாட்டைத் துறந்து, நாணத்தைத் துறந்து, வீரத்தைத் துறந்து, உற்றார் உறவினர்களைத்துறந்து ஊரைவிட்டே ஓடிவிட்டோம்; வேலையும் வில்லையும் வீசி எறிந்த கைகள் நம் கைகள்; பயந்தோடி வந்த கால்கள் நம் கால்கள்; எதிரிகளுக்குப் புறங்காட்டின நம் முதுகுகள்; துயரத்தால் புலம்புகின்றன நம் வாய்கள்; இவற்றை நினைத்துப் பார்க்கவும் முடியாது; இன்றே போர் தொடுத்துப் பழிக்குப்பழி வாங்குவேன்" என்றெல்லாம் பேசி யூதர்களுக்குப் பழிவாங்கும் உணர்வைக் கிளர்த்தெழச் செய்தான். போர் உணர்ச்சியைத் கிளறிவிடும் வீர உரை ஆற்றுவதை ஓர் உத்தியாகக்
காட்டுவதில் உமறு சிறந்து விளங்குகிறார்.
இத்துடன் நின்றாவனல்லன் அக்கொடியவன்; மக்கா நகர் சென்று அபுசுபியானைக் கண்டு அஞ்சக்கூடிய குறைஷிகளிடமும் உணர்ச்சி மிக்க உரையாற்றிப் பழி வாங்கக் கிளர்ந்தெழச் செய்தான், அயிலான் என்னும் ஊர் சென்று கைசுக்கூட்டத்தாரை நபிகள் நாயகத்திற்கு எதிராகத் தூண்டிவிட்டான். அடுத்து பனிகுறைலாக்களிடம் சென்று நயம்படப் பேசி நபிகள் நாயகத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறித் தன்னுடன் சேரும்படி செய்தான். இவ்வாறு யூதர்கள் குறைஉஷிகள், கைசுக்கூட்டத்தார், பனிகுறைலா ஆகிய இனத்தாரை எல்லாம் தூண்டி விட்டுப் பெரும்படை திரட்டி மதினா நோக்கிப் புறப்பட்டான்.
முதல் நாள் போர்
பத்தாயிரம் பேர் கொண்ட பகைவர் படை புறப்பட்டது. வழியிலிருந்த நகரங்களை-யெல்லாம் நாசப்படுத்தினர். கனி மரங் களை எல்லாம் வெட்டி வீழ்த்தினர். மதினாவிற்கு எப்பொருளும் போகாது தடுத்தனர். நபிகள் நாயகமும் அவர்களைச் சேர்ந்த முவாயிரம் வீரர்ளும் மதினா நகரினுள் இருந்து அகழ்வெட்டிச் சுற்றிலும் காக்கும் முயற்சியில் ஈடுபட்டார். போர் முண்டது. முஸ்லிம்கள் தற்காப்புப் பணியில் இருந்ததால் சேதம் குறைவே. பகைவர்கள் முன்னேறி வந்து அகழி இருக்கும் புதுமை கண்டு வியந்தனர். அகழியைக் கடக்க அவர்கள் முயன்ற போது சஃதும் அலியும் சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
உட்பகை தோன்றியது
பகைத்து நின்ற கத்பான் கூட்டத்தைச் சேர்ந்த நுகைமு என்பார் உண்மை நிலை உணர்ந்து படையிலிருந்து விலகி முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டணித் தலைவர்களிடையே உட்பகை தோன்றச் செய்தார். கூட்டணி கலகலத்தது.
இரண்டாம் நாள் போர்
இயற்கையும் சேர்ந்து கொண்டது. மறுநாள் காலை பகைவர் கலங்கும் வண்ணம் காரிருள் பரவியது. இது காபிர் செய்த பாவம் திரண்டது போல் தோன்றியது என்கிறார் உமறு. பெருங்காற்றும் வீசியது. கடுங்குளிரும் சேர்ந்து கொண்டது. மழை நீர்த்துளிகள் காற்றின் விசையினால் கற்களைப் போல் காபிர்களைத் தாக்கின. அவர்களின் குதிரை ஒட்டகங்கள் எல்லாம் கத்திக்கிட்டுத் தாறு மாறாய் திரிந்தன. வீரர்கள் தங்களுக்குத் துன்பகாலம் நெருங்கி விட்டதோ என்று கலங்கினர். வேறு சிலர் ஓடிப்போய்ப் பிழைப்போம் என்று கூறினர்.
அபுசுபியான் விடியும் முன்னே கிளம்புவோம் என்று குதிரை மீதேறிச் செலுத்தினான். குதிரை நகரவில்லை . காரணம் கட்டவிழ்த் துவிடவில்லை. கவலை மிகுதி சிந்தனையைச் சிதைத்துவிட்டது. கட்டவிழ்த்து தலைதெரிக்க ஒடினான் என்று நகைச்சுவை தோன்ற உமறு பாடுகிறார். பகைவர் பயந்து அவரவர் நாட்டிற்கு ஓடினர். நாயகத்தை எதிர்த்துக் காபிர்கள் எடுத்த போர்களில் இஃது இறுதியானது எனலாம். பல கூட்டத்தாரும் சேர்ந்து திட்டமிட்டுத் திரட்டிய பத்தாயிரம் பேர் கொண்ட கூட்டணி முனைந்து தாக்க முடியாமல் முறிந்து போயிற்று. இதன் பிறகு இப்படிப் பல இனத்தவரும் சேர்ந்து படையெடுக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
ஒப்பற்ற உடன்படிக்கை
இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் உறஜ்ஜு நிறைவானது. வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒரு முறையாவது மக்கா சென்று இக்கடமையை நிறைவேற்ற வேண்டும். உறஜ்ஜு நபிகள் நாயகத்திற்கு முன்பிருந்தே நடந்த வரும் நிகழ்ச்சி என்றாலும் நபிகள் நாயகம் இக்கடமையை முறைப்படுத்தி நிறைவு படுத்தியுள்ளார். உறிஜ்ரி ஆறாம் ஆண்டு துல்காயிதா மாதத்தில் மக்கா சென்று உறஜ்ஜு உம்ரா செய்ய விரும்பித் தம் தோழர்களை அழைத்துவரச் சொன்னார். 1400 தோழர்கள் திரண்டனர். திரும்பி வரும்வரை நுமைலா என்பாரை மதினாவில் இருந்து ஆட்சி நடத்த நியமித்தார். குர்பான் கொடுக்க குறையொன்றும் இல்லாத 70 ஒட்டகங்களைக் கொண்டு வரச் செய்தார். தமது கஸ்லா என்னும் ஒட்டகத்தின் மீது ஏறிப் புறப்பட்டார். தோழர்கள் பின் சென்றனர்.
பாலைவனத்தையும் மலைகளையும் ஆறுகளையும் கடந்து மக்கா நோக்கிச் சென்றார். மக்கா செல்லும் வழியில் முஸ்லிம்களைத் தடுத்து நிறுத்த வந்த காலித் அஞ்சி ஒடி விட்டான். முஸ்லிம்களின் வருகை பற்றிய செய்தியே பகைவர்களை நடுங்கச் செய்தது என்ற உணர்வை உமறு நன்கு புலப்படுத்துகிறார். பகைவர்களின் இடையூறை அகற்றி நபிகள் நாயகம் தனிய்யா என்னும் மலைக்கணவாய் வழியே சென்று கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் இவர்ந்து வந்து ஒட்டகம் தரையில் படுத்தது; அதட்டி எழப்பியும் எழந்தபாடில்லை. அல்லாஉற்வின் ஆணையால் தான் படுத்திக்கும் என்று கருதினார்.
நபிகள் நாயகம், திருமறையை ஏற்றுக் கொள்ளாத பகைவர்கள் எவ்வித உறுதிமொழி கேட்டாலும் இம்முறை தருவேன், இறைவன் மேல் ஆணை என்று கூறினார். ஒட்டகம் திடுமென எழந்தது. நபிகள் நாயகமும் தோழர்களும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து மக்கா விற்கு அருகிலுள்ள ஹுதைபியா என்ற இடத்தில் தங்கினர். இங்கு வறட்சி மிகுந்திருந்தது. தண்ணீர் கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் தவித்தனர். நபிகள் நாயகம் தம் அம்புறாத் துணியிலிருந்து ஒன்றை எடுத்து வறண்ட குளத்தின் நடுவே ஊன்றச் செய்தார். அவ்விடத்திலிருந்து நீர் ஊறிப் பெருகியது. எவ்வாறு பெருகியது தெரியுமா? வரையாது வழங்கும் வள்ளல்களிடம் வளரும் செல்வம் போலவும் நன்னெறியாம் இஸ்லாம் வளர்ந்து வந்தது போலவும் வருவோர்க்கு அருள் செய்யும் நபிகள் நாயகத்தின் கருணை போலவும் பெருகியதாம். முன்று உலமைகளைத் கொடுத்து நிறைவுபடுத்திச் சிறப்பிக்கிறார். பயணிகள் நீர்வேட்கை தீரப் பருகினர். விலங்குகட்கும் ஊட்டினர். அங்கேயே பாடிவீடு
அமைத்துத் தங்கினர்.
இருசாரார் நட்பும் பெற்ற புதையில் என்ற குறைஷி நபிகள் நாயகத்திடம் வந்து பேசினார். தொடர்ந்து உறுவா என்பார் வந்து நபிகள் நாயகத்திற்கு அவர்தம் தோழர்கள் காட்டும் மதிப்பையும் மரியாதையையும் கண்டு வியந்து குறை உஷிப் பகைவர்களிடம் திரும்பினார்; அவர்களிடம் "என் குலத்தாரே நபிகள் நாயகம் புதையிலிடம் கூறியதையே என்னிடமும் சொன்னார். முகம்மது மேலானவர். அவர் உமிழும் எச்சிலைக் கைகளில் ஏந்திக் கஸ்துரி யாகக் கருதி உடலில் பூசிக்கொள்ள அவரைச் சூழ்ந்து பலர் நிற்கின் றனர். அவர் உலு[*] செய்யும் தண்ணீரைப் பருகுவதற்காக நெருங்கி நிற்பர் பலர். அவர் ஒன்றைச் செய்யச் சொன்னால் அதனைத் தங் களுக்குக் கிடைத்த பேறாகக் கருதிச் செய்ய ஆர்வங்கொண்டு கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பார் பலர்" என்று வியந்து கூறி அவரோடு உறவு கொண்டு வாழ்வதே நமக்கு உயர்வாகும் என்றார்.
----
[*] உலு = தொழவதற்காக கைகால் முகம் காது முதலியவற்றைச் சுத்தி செய்தல்.
உமறு உறுவா கூற்றாக நபிகள் நாயகத்திடம் அவர்தம் தோழர்கள் கொண்டிருந்த ஒப்பற்ற மதிப்பையும் மரியாதையையும் அழகுறப் பாடுகிறார். உறுவா கூறியதைக் கேட்ட கனானி என்பான் நபிகள் நாயகத்தைக் கண்டு உரையாடினான். அப்போது சுகைல் என்பான் வந்து வெறும் பேச்சு வேண்டாம் செயல்பற்றிப் பேசி ஒர் உடன்பாட்டிற்கு வருவோம் என்றான். நபிகள் நாயகமும் இதனை ஏற்று உடன்படிக்கையை ஆயத்தம் செய்ய முற்பட்டு அலியை அழைத்து பிஸ்மில்லா உறிர்ரஉற் மாவிர்ரஉறீம் என்ற முதல் வசனத்தை எழதும்படி கூறினார். சுகைல் இடைமறித்துத் தனது குலமரபுப்படி எழுதச் சொன்னான். அவ்வாறே பிஸ்மிக்கல்லா
உஹும்ம (அல்லாஉற்வே உன் பெயரால்) என்று நபிகள் நாயகம் எழுதச் சொன்னார். அடுத்து, இறைத்தூதர் முகம்மது செய்து கொண்ட உடன்படிக்கை என்று எழதும்படி நபிகள் நாயகம் கூறினார்.
சுகையிலோ முகம்மதே உம்மை இறைத்துதராக நாங்கள் ஏற்றுக்கொண்டால் இந்தப் பகையும் துன்பமும் வரமாட்டாவே என்று கூறி அதுவும் உடன் படிக்கையில் இடம் பெறக்கூடாது என்று மறுத்தான். சமாதானத்தில் ஆர்வங் கொண்ட நபிகள் நாயகம் இறைத்தூர் என்பதை அழிக்கும்படி செய்து அப்துல்லா மகன் முகம்மது செய்து கொண்ட உடன்படிக்கை; அதன்படி அவரும் அவருடன் வந்தவர்களும் உம்றா செய்து திரும்ப மக்கத்துள்ளோர் வழிவிட வேண்டும் என்று எழுதச் சொன்னார். சுகையிலோ இம்மொழி பொருந்தாது என்று கூறி இந்த ஆண்டு திரும்பிச் சென்று அடுத்த ஆண்டு வந்து உறஜ்ஜும் உம்ராவும் செய்யலாம் என்று எழுதச் சொன்னான். நபிகள் நாயகம் பயணத்தின் போது படுத்த ஒட்டகத்திடம் தாம் கூறியதை நினைவு கூர்ந்தார். அப்படியே எழுதுக என்று கூறினார். இவ்வாறு எழதிய உடன்படிக்கைப் பத்திரத்தை நபிகள் நாயகம் சுகைலிடம் கொடுத்தார் என்று உமறு பாடுகிறார்.
உறதைபியா உடன்படிக்கையில் ஆறு கருத்துகள் உள்ளன. இவற்றை எல்லாம் ஒன்று விடாமல் உமறு கூறவில்லை. தலைமையான செய்தியை மட்டும் எடுத்துக் கூறிக் காப்பியத்திற்குச் சுவையூட்டுகிறார்.
விட்டுக் கொடுத்ததன் விளைவு
பல நிலைகளில் விட்டுக்கொடுத்து உடன்படிக்கை செய்து கொண்டதற்கேற்ப அவ்வாண்டு மக்கா செல்லாமல் உறதைபியா விலேயே 70 ஒட்டகங்களைக் குர்பான் செய்து, தலைமுடி இறக்கி, உம்றாக் கடமையை நிறைவேற்றினர். மதினா திரும்பும் வழியில் இவ்வுடன்படிக்கை வாயிலாக வெற்றி என்ற இறைவசனம் இறங்கிற்று.
உறதைபியா உடன்படிக்கையின் விளைவாக முஸ்லிம்களின் பகைவர்களாக இருந்த பலர் இஸ்லாத்தில் சேர்ந்தனர். இவர்களுள் குறிப்படத்தக்கவர் பின்னாளில் மாபெரும் வெற்றி விரராகத் திகழ்ந்த காலித்பின்வலிது, அம்று இப்னு ஆஸ், அபூதாலிபின் மகன் உக்கையில், தல்உறாவின் மகன் உதுமான் ஆகியோர். இவர்களைத் தொடர்ந்து மக்காக் குறைஷிகளில் பலர் அணியாக வந்து இஸ்லாத்தைத் தழுவினர்.
ஆனிரை மீட்டினர்
பகைவரின் குறம்பு நடக்காமல் இல்லை . ஒரு நாள் நபிகள் நாயகம் சல்மா என்பாரையழைத்து நபாகு என்பவருடன் காபா என்னும் புல்தரையில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டு வருக என்று அனுப்பினார். அவ்வாறு அவர்கள் மேய்த்துக் கொண்டிருந்த போது கத்பான் கூட்டத்தலைவன் உத்பா, உபைனா, அப்துல் றகுமான் மற்றும் 40 குதிரை வீரர்கள் வந்து காபா புல்தரையில் மேய்ந்திருந்த ஆநிரைகளைக் கவர்ந்து சென்றனர். நுபாகுவை அனுப்பி நபிகள் நாயகத்திடம் இது பற்றித் தெரிவிக்கும்படிக் கூறினார். சல்மா அம்புமாரி பொழிந்து பகைவீரர்களைக் கடுமையாகத் தாக்கினார். தோல்வியுற்ற பகைவர்கள் ஆநிரைகளை விட்டு விட்டு ஓடினர். சல்மா நிகழ்த்திய போர்த்திறத்தை நபிகள் நாயகம் பாராட்டினார்.
தமிழ் மரபுகளைப் போற்றும் உமறு குறிஞ்சி, முல்லை , பாலை, மருதம், நெய்தல் முதலிய நிலங்களின் வர்ணனையை ஒரு பாடலில் அடக்கிக் கூறுகிறார். தமிழ் மறவர்கள் போர் செய்யும் போது அணிந்து கொள்ளும் வெட்சி, தும்பை ஆகிய மலர்கனை அரபு நாட்டு மக்களுக்கு அளித்து அழ கூட்டுகிறார்.
வஞ்சகர் வீழ்ந்தனர்
இஸ்லாம் பல இடங்களிலும் பரவி வந்தது. மதின மாநகரில் இருந்து நபிகள் நாயகம் நல்லாட்சி புரிந்து வந்தார். ஒரு நாள் உறனிக் கட்டத்தாருள் எட்டுப்பேர் நபிகள் நாயகத்திடம் வந்தனர். நபிகள் நாயகமே "நாங்கள் இஸ்லாத்தில் சேர விரும்பி வந்துள்ளோம். கலிமாச் சொல்லித் தந்து அருளுங்கள்" என்று நயவஞ்சகமாகக் கேட்டனர். நபிகள் நாயகம் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார். நல்லோர் போல் நடித்து வந்த அந்தயவஞ்சர்களைத் தொழுநோய் பற்றிக் கொண்டது. வருந்தி வந்த இக்கயவர்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆட்டுக் கிடையைத் திருட்டுத் தனமாக ஒட்டிச் சென்று விட்டனர். முஸ்லிம்கள் அவர்களை விட்டுவில்லை . துரத்திச் சென்று பிடித்து வந்தனர். நயவஞ்சகம் கொண்டு திருடிய அத்தீயவர்களுக்கு மாறுகை மாறுகால் வாங்கிவி டும்படி நபிகள் நாயகம் ஆணையிட்டார். திருட்டிற்குரிய இஸ்லா மியத் தண்டனையை உமறுப்புலவர் இதில் புலப்படுத்தி விடுகிறார்.
இவ்வாறு வளர்ந்து வந்த சீறா காப்பியம் இந்நிகழ்ச்சியோடு நின்று விடுகிறது. காரணம் யாதென்று தெரியவில்லை . உமறு பாடிய பேரிலக்கியத்தின் பிற்பகுதி அழிந்து விட்டதோ? சீறா பாடி வந்த உமறு இந்நிலையில் இறந்து விட்டாரோ? தெரியவில்லை. ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பனி அகுமது என்பவர் உமறுப்புலவரின் சீறாப்புரானத்தில் இடம் பெறாத பகுதியைப் பாடி நிறைவு செய்துள்ளார். இதற்கு ஆசிரியர் இட்ட பெயர் சீறாப்புரானம் - உறிகறத்துக் காண்டம் என்பதாகும். இது நபிகள் நாயகத்தின் இறுதிப் பகுதியாக இருப்பினும் தனியொரு காப்பியமாகக் கொள்ளப்பட்டுச் சின்ன சீறா என்று அழைக்கப்பட்டு வருகிறது.
--------------
7. உமறுப்புலவரின் பிற நூல்கள்
சீறாப்புராணத்தின் சிறப்பியல்புகளையும் உமறுப்புலவரின் கவித் திறத்தையும் கண்டோம். இங்கு அவர் இயற்றியனவாகக் கருதப்படும் வேறு இரு நூல்களைப் பற்றிக் காணலாம்.
முதுமொழி மாலை
இந்நூல் சீறாப்புராணத்தோடு தொடர்புடையது. வள்ளல் சீதக்காதியின் விழைவை ஏற்று உமறு காப்பியம் இயற்ற முற்பட்டார். வள்ளல் மார்க்கமேதை சதக்கத்துல்லா அப்பாவிடம் உமறை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி நாயகக் காப்பியத்திற்கு வேண்டிய கருப்பொருள் தந்துதவ வேண்டினார். மார்க்கமேதையோ உமறுப்புலவரின் புறத்தோற்றங்கண்டு கருப்பொருள் தர மறுத் துவிட்டார். இதனால் உள்ளம் உடைந்த உமறு பள்ளிவாசலுக்குச் சென்று இறைவனைத் தொழது இறைஞ்சிவிட்டு முகம்மது நபியை என்று காண்குவனே என்று முடியும் 87 பாடல்களை மனமுருகப்பாடி இறுதிப் பாடலில் நபியைக் கண்களால் என்று காண்குவனே என்று கசிந்துருகிக் கண்ணயர்ந்துவிட்டர். புலவரின் வேட்கையைத் தீர்க்க நபிகள் நாயகம் அவர் கனவில் காட்சி தந்தார் என்று ஒரு செவிவழிச் செய்தி வழங்கிவருகிறது. இப்படிப் பாடிய பாடல்களின் தொகுப்பே இந்நூல்.
இப்பாடல்களில் மாணிக்கவாசகர் பாடல்களிலும் இராமலிங்க அடிளாரின் பாடல்களின்லும் பயின்று வரும் உருக்கமும் இனிமையும் அமைந்திருப்பதைக் காணலாம். காட்டாக ஒரு பாடல் :
நானில வாழ்வை நான்மறை வாழ்வை
நபிகளின் வாழ்வை என்னிதயத்
தானில வாழ்வைத் தபோதனர் வாழ்வைச்
சான்றவர் வாழ்வை மேலோகப்
பானில வாழ்வைப் பாவக வாழ்வைப்
பதிமதீனா நகர் வாழ்வைக்
கானில வாழ்வை முகம்மது நபியைக்
கண்களால் என்று காண்குவனே!
இப்பாடலில் நபிகள் நாயகத்தைக் காண வேண்டும் என்ற ஏக்கம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்.
ஒரு பாடலில் இறைவனை வஞ்ச வெளியாகவும் பேரொளியாகவும் அருவமாகவும் உருவமாகவும் பல்லுயிராகவும் ஆகி, முக்குணங்களாகி உலகைப் படைத்தளிக்கிறான் என்று தத்துவ நுட்பந்தோன்றக் கூறுகிறார்.
இந்நூலில் வடசொற்கள் மிகுந்துள்ளன. சீறாப்புராணத்தில் காணப்படும் இயற்கைப் புனைவும் கற்பனை வளமும் இதில் காணப்படவில்லை . காரணம் இது நபிகள் நாயகத்தைக் காணும் வேட்கையில் எழுந்த உணர்ச்சிப் பெருக்கின் வடிவமாகும்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள நபிகள் நாயகத்தைக் குறிக்கும் தொடர்கள் அவருக்குரிய நாமா வளியோ என எண்ணத் தூண்டுகின்றன.
வளமான தொடர்களுள் சில:
மாதவக் கொழுந்து.
கதிதரும் வழித்துணை மருந்து
மறைவளம் பழுத்த நாவேந்து
இறையருள் பழத்த கனி
தொண்டர்க் கெளிதாய்த் தோன்றும் சுடர்க்கொழந்து
சீத்க்காதி திருமண வாழ்த்து :
வள்ளல் சீதக்காதியின் திருமணம் பற்றிதாகும். எட்டையாபுரத்து உமறு கத்தாப் புலவர் இயற்றியது எனப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பிலும் கவித்திறத்திலும் கற்பனை வளத்திலும் இது சீறாப்புராணம் போன்றில்லை. முதுமொழிமாலையில் உள்ள சொல்லாட்சித் தரமும் கவிதை உணர்ச்சிச் சிறப்பும் இதில் காணப்படவில்லை . கவிதை நடையிலும் இது சீறாப்புராண ஆசிரியர் பாடியதுதானா? என்று எண்ணத் தோன்றுகிறது. அம்மானை வகைச் செய்யுளில் அமைந்துள்ளது.
---------------
முடிவுரை
இதுகாறும் உமறுப்புலவரின் காலம், வாழ்க்கை வரலாறு அவர் இயற்றிய நூல்கள் ஆகியன பற்றிப் பார்த்தோம். இந்நூல்களுள் சீறாப்புராணம் தலையாயது என்று கூறி அதில் காணப்படும் காப்பிய அமைதிகளையும் இலக்கிய நயங்களையும் கண்டோம். உமறுப்புலவர் புலமை மிகுந்தவர்; கற்பனை சிறந்தவர்; விழுமிய கவிதை உணர்ச்சியில் உயர்ந்தவர் ; வெளியீட்டு முறையில் வல்லவர்; பெருங்காப்பிய நெறிகளைப் போற்றிய பெருங்கவிஞர், நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவர். இஸ்லாமிய மரபுகளையும் தமிழ் மரபுகளையும் இணைத்து மகிழும் இனிய தமிழ்ப்புலவர் எனத் தெரிந்தோம்.
இச்சிறந்த புலவரைப் போற்றிப் பாராட்டியவர்கள் பலர். அவருள் தவத்திரு சுத்தானந்த பாரதியார், "செந்தமிழ்ப் பாவலன், சீறாப்புராணம் தந்த நற்புலவன், சிந்தனைக் கினியோன், உரைசால் வித்வான், அருமை அளவிலதாம்" என்று போற்றுகிறார்.
மகுதூம் முகம்மதுப் புலவர் 'உந்திய புகழ் பெற்றோங்கும் உமறெனும் புலவர்" என்று புகழ்கின்றார். இறையருள் கவிமனி கா. அப்துல் கபூர், "செந்தமிழ்ச்சிறா சிறப்புடன் ஈந்த விந்தையார்" என்று பாராட்டுகிறார்.
செந்தமுத்தமிழ் தெரியுங் கல்வித் தலைவர் மகிழ் உமறுப்புலவர்" என்று சீதக்காதி நொண்டி நாடகம் சிறப்பிக்கிறது.
இத்தகு சிறந்த புலவரை நாம் எல்லோரும் போற்றுவோமாக.
----------------
உமறுப்புலவர்
உமறுப்புலவர் (1642 - 1703) இஸ்லாமியக் கம்பர் என்று புகழப்படும் பெரும்புலவர். கடிகைமுத்துப்புலவர் இவருக்குத்தமிழ் பயிற்றுவித்த ஆசிரியர். எட்டயபுரம் சமீன் ஆஸ்தானப் புலவராக விளங்கினார். வள்ளல் சீதக்காதி தந்த பேரூக்கத்தினால் "சீறாப் புராணம்" பாடினார். நபிகள் நாயகத்தின் வரலாறு கூறும் வண்ணத் தமிழ்க் காப்பியமாகிய இது இஸ்லாமிய இலக்கியங்களில் தலையாய ஒன்றாகப் போற்றப் படுகிறது. கவிநயமும் இனிய சொல்லாட்சியும் அருளுணர்வும் கலந்த தேன்பாகு போன்றது இவரது விருத்தப்படைப்பு. இஸ்லாமிய மரபுகளையும் தமிழ்மரபுகளையும் இணைத்து வழங்கிய சிந்தனைக்கினியவர் உமறுப்புலவர்.
இந்த நற்புலவரின் வாழ்க்கை நோக்கையும் படைப்புப் போக்கையும் திறம்பட வடித்தளித்துள்ளார் பேராசிரியர் நயினார் முகமது. இவர் திருச்சியில் ஜமால் முகமது கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி நற்றமிழ் பயிற்றி ஓய்வுபெற்றுள்ளார். பல ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியவர். பெரிதும் போற்றப்பெறும் தமிழ் வலவர். சீறாப்புராணத்தின் சிறப்பியல்புகளையும் உமறுப்புலவரின் திறத்தையும் இந்நூலில் தெளிவுறக் காணலாம்.
----------
This file was last updated on 8 June 2020.
Feel free to send the corrections to the Webmaster.