"க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழ்"
காஞ்சீபுரம் ஸ்ரீ சிதம்பர முனிவர் எழுதியது
kshEtrakkOvaip piLLaittamiz
by kAncipuram Sri citampara munivar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. U.Ve. Swaminatha Iyer Library, Chennai for providing a scanned image file of this work.
We thank Mrs. Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation of this e-text.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
"க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழ்"
காஞ்சீபுரம் ஸ்ரீ சிதம்பர முனிவர் எழுதியது
Source:
ஸ்ரீ சுப்பிரமணியக்கடவுள் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழ்
காஞ்சீபுரம் ஸ்ரீ சிதம்பர முனிவர் எழுதியது
திருவாவடுதுறை ஆதீனம், 1955
ஸ்ரீ முருகன் அச்சகம், கும்பகோணம் வெளியீடு
இருபதாவது குருமஹாசந்நிதானம் ஸ்ரீ அம்பலவாணதேசிகமூர்த்திகள்
நான்காவது குருபூஜை வெளியீடு, சய-பங்குனி-திருவாதிரை.
சிவபரிபூரணம்- திருவிடைமருதூர் விக்ருதி-பங்குனி-திருவாதிரை. 1951.
முதற்குருபூசை 1952-கர-திருமந்திரசிந்தனை.
இரண்டாம் குருபூசை 1953-நந்தன- திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்.
மூன்றாம் குருபூசை 1954-விசய- ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள்.
--------------
உ - சிவமயம் - திருச்சிற்றம்பலம்
குருமரபு வாழ்த்து
“கயிலாய பரம்பரையில் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணை
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பாநு வாகிக்
குயிலாரும் பொழிற்றிருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் றிருமரபு நீடூழி தழைக மாதோ”
-- ஸ்ரீமாதவச் சிவஞானயோகிகள்.
இருபத்தொன்றாவது குருமஹாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணியதேசிக சுவாமிகள்.
---------
இப்புத்தகத்தில் அடங்கியவை.
1. முகவுரை.
2. அருணகிரி நாதர் திருப்புகழ்பெற்ற தலங்கள்.
3. க்ஷேத்திரக்கோவைப்பிள்ளைத்தமிழ்த் தலம் - செய்யுள் முதற்குறிப்பு- பாடல் எண்
4. சில தலங்களின் வரலாறு.
5. பிள்ளைத்தமிழ் நூல்.
6. குறிப்புரை முதலியன.
---------------------
1. முகவுரை.
உ - சிவமயம் - திருச்சிற்றம்பலம்
‘ஸ்ரீ சுப்பிரமணியக்கடவுள் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்' என்பது சுப்பிரமணியக்கடவுள் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள க்ஷேத்திரங்களைக் கோவைப்படுத்து எடுத்துக்கொண்டு பாடப்பட்டதொரு பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தமாம். இதனை இயற்றியவர் காஞ்சீபுரம்-ஸ்ரீ சிதம்பரமுனிவர் என்பவர்.
'பிள்ளைத்தமிழ்' என்பது தெய்வச் செந்தண்டமிழ்மொழிக்கு உரியனவாகக் கூறப்படும் தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றாம்.. இது பிள்ளைப்பாட்டு எனவும் வழங்கும். பாட்டுடைத்தலைவரைக் குழந்தையாகப் பாவித்துச் செவிலித்தாய் முதலியோர் காப்பு முதலிய பத்துப்பருவங்களுக்கு ஏற்ற செயல்களை எடுத்துக் கூறிப்பாராட்டுவதாகப் புலவர்பெருமக்களால் பாடப்படுவது இப்பிரபந்தம். இஃது ஆசிரியவிருத்தத்தால் இயற்றப்பெறும். கடவுளரையேனும், ஆசிரியரையேனும், உபகாரிகளையேனும் குழந்தையாகப்பாவித்துக் கவிஞர் பாடுவர். தத்துவங்கடந்த பழம்பொருளாகிய சிவபெருமானைப் பிள்ளைப்பருவத்தில் வைத்து இத்தகைய பிரபந்தங் கள் செய்வதில்லை. விநாயகக்கடவுள், முருகக்கடவுள், உமாதேவியார், திருமால் முதலிய தெய்வங்கட்கு உரியனவாகப் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்கள் பல உள்ளன. அநுமார் மீதும் பிள்ளைத்தமிழ் உண்டு. ஞானாசாரியரைப் பாராட்டிப் பாடியது ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ். உபகாரிகளைப் பாராட்டிப் பாடியன குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத்தமிழ் முதலியன. சமய குரவரைப் பாராட்டிப் பாடியது திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் முதலியன.
இப்பிரபந்தம், புறப்பொருள் வகையாகிய பாடாண் திணையில் “குழவிமருங்கினும் கிழவதாகும்” என்ற தொல்காப்பியச் சூத்திரத்தாற் கூறப்பட்ட காமப்பகுதியின் பாற்பட்டு மக்கட்குழவிக்கு உரித்தாக வழங்கப்படும். ஆயினும், ஒரோவழித் தெய்வத்தோற்றமாகிய மக்கட்குழவியின் பருவத்தை ஆரோபித்தலால் அக்குழவியோடு ஒற்றுமையுடைய தெய்வத்துக்கும் உரியதாக இது வழங்கப்படும். தமிழ் என்பது ஈண்டுப் பிரபந்தம் என்னும் பொருள் பயக்கும். இப்பொருள் பயத்தலை இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என வழங்கும் தொடரில் காணலாம்.
‘மக்கண்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ - திருக்குறள்.
தீண்டல் உடலுக்கு இன்பமும், கேட்டல் செவிக்கு இன்பமும் விளைத்தல்போல, குழந்தைகளின் இளம்பருவ விளையாட்டுக் காண்டலும் கண்ணுக்கு இன்பமாம் என்பதும் இதனால் போதரும். இதனை இவ்வாதீன குலதெய்வமெனப் பெரியோர்களால் போற்றப் பெற்று வரும் திராவிடமாபாடிய கர்த்தராகிய ஸ்ரீ மாதவச்சிவஞான யோகிகள் தாம் அருளிச்செய்த அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அவையடக்கச் செய்யுளில் வைத்து ''இளம்பருவ விளையாட்டை நோக்குழித் திருவுருவிடத்தாசை மிகுதியுண்டாம்'' என்று அருளிச் செய்தமை காண்க. பெறலரும் பிள்ளையைப் பெற்ற தாய் முதலியோர் "குறுகுறு நடந்து சிறுகை நீட்டி, இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்' விளையாடுதல் முதலிய குழவிச்செயல்களைக்கண்டு அநுபவிக்க அவரிடைத் தோன்றும் ஒரு தலையின்பமே இங்கே வைத்துக் கூறப்படுவது.
இனி, இஃது ஆண்பாற்பிள்ளைத்தமிழ், பெண்பாற்பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். பாட்டுடைத்தலைவராகிய குழந்தையைப் பாதுகாக்க வேண்டும் என்று அமைப்பது காப்புப்பருவம். திருமால் காத்தற்கடவுள் ஆகலின் இப்பருவத்தின் முதற் செய்யுளை அவரது காப்பாக அமைத்தல் தொன்றுதொட்ட மரபாம். குழந்தை பிறந்த ஏழாவது நாள் காப்பிடுதல் என்ற வழக்கத்தையொட்டி இலக்கிய வழக்கிலே இஃது அமைந்தது போலும்.
“இப்பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தம் மூன்றாம் மாதம் முதல் இருபத்தொன்றாம் மாதம் வரை ஒற்றித்த மாதமாகிய பத்துமாதங்களினும் கேட்பிக்கப்படும். அன்றியும், ஐந்தாம் ஆண்டினும் ஏழாம் ஆண்டினும் கேட்பினும் இழுக்காகாது” என்பர் வெண்பாப் பாட்டியலுடையார்.
"பிள்ளைப் பாட்டே தெள்ளிதிற் கிளப்பின்
மூன்று முதலா மூவே ழளவும்
ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே.”
“ஒன்று முத லையாண் டோ தினும் வரையார்''
- பன்னிருபாட்டியல்
"காப்பொடு செங்கீரை தால்சப் பாணி
யாப்புறு முத்தம் வருகவென் றன் முதல்
அம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர்
நம்பிய மற்றவை சுற்றத் தளவென
விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர்.”
- பன்னிருபாட்டியல்
“சாற்றரிய காப்புச்செங் கீரைதால் சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை-போற்றரிய
அம்புலியே யாய்ந்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து."
என வரும் பிள்ளைக்கவியுறுப்புக்களின் அடைவைக்கண்டு கொள்க. 'காப்புத்தால் செங்கீரை' என மேலே கண்ட முறை மாறியும் வரும் என்பர் பெரியோர். இம்முறையின் வைத்தே ஆண்பாற் பிள்ளைத்தமிழ் கூறப்படும். பெண்பாற் பிள்ளைத்தமிழாயின் இறுதி மூன்று உறுப்புக்களையும் நீக்கி அம்மானை, நீராடல், ஊசல் ஆகிய மூன்றனையும் சேர்த்துப் பத்துப் பருவமாக்குவர். பெண்பாற் பிள்ளைத் தமிழில் அம்மானையை நீக்கிக் கழங்காடுதலைக் கூறுவதும் உண்டு.
இனி,
“திருமா லானே திசைமுகன் கரிமுகன்
பொருவேல் முருகன் பருதி வடுகன்
எழுவகை மங்கையர் இந்திரன் சாத்தன்
நிதியவன் நீலி பதினொரு மூவர்
திருமகள் நாமகள் திகழ்மதி என்ப
மருவிய காப்பினுள் வருங்கட வுளரே.''
என்பது பன்னிருபாட்டியல். பெரும்பாலும் புலவர்கள் இம்முறை பற்றியே காப்புப் பருவத்தை அமைப்பர். சில பெரியோர் இம்முறையை மாற்றிப் பிறிதுமுறையையும் வகுத்துள்ளனர்.
1. காப்புப்பருவம்: இப்பிள்ளைத் தமிழாசிரியர் திருமால், சிவபிரான், உமையம்மை, கங்கை, விநாயகர், வயிரவர், வீரபத்திரர், பிரமன், காளி, முப்பத்துமுக்கோடிதேவர் இவரைக் காப்பாக அமைத்திருக்கின்றார். பாட்டுடைத்தலைவர் முருகவேள் ஆகலின் அக்கடவுளைக் காப்பிற் கூறிற்றிலர். இது மூன்றாந்திங்களிற் கூறப்படும்; இரண்டாந்திங்கள் என்பாரும் உளர்.
2. செங்கீரைப் பருவம்: இது பொருள் தெரியாத ஒலியை எழுப்பும் பருவத்தைக் குறித்தது' என்பர். கீர்- சொல். இதனை 'நிருத்த விசேடம்' என்பர் பெரியவாச்சான் பிள்ளை. இனி ஒரு காலைமுடக்கி, ஒருகாலை நீட்டி, இருகரங்களையும் நிலத்தில் ஊன்றித் தலைநிமிர்த்தி, முகம் அசைத்து ஆடும் பருவமே இஃதாம்.
“ஒருதா ளுந்தி யெழுந்திரு கையும் ஒருங்கு பதித்து நிமிர்ந்த
தருள்மொழி திருமுகம் அசைய அசைந்தினி தாடுக செங்கீரை”
என்பர் ஸ்ரீ குமரகுருபரசுவாமிகள்.
"இருகைமல ரும்புவி பதித்தொரு முழந்தாள்
இருத்தியொரு தாள்மேல்நிமிர்த்
திந்த்ரதிரு விற்கிடை தொடுத்தவெண் தரளநிரை
எய்ப்பநுதல் வேர்பொடிப்பத்
திருமுகம் நிமிர்த்தொரு குளந்தையமு தாம்பிகை
செங்கீரை யாடியருளே”
என்பர் ஸ்ரீ மாதவச் சிவஞானயோகிகள்.
"ஈனமக லனைய தா மரைபதித் தொரு தாள்
இருத்தியொரு தாளெடுத்தே
எழில்கனி கனிந்தமுக தாமரை மலர்ந் தசைய
இருமணிக் குழைவில்வீசத்
தேனமர் நறுங்குதலை சீர்ப்பமங் களவல்லி
செங்கீரை யாடியருளே''
என்பர் மகாவித்துவான் பிள்ளையவர்கள்.
இஃது ஐந்தாம் மாதத்திலே கூறப்படும்.
3. தாலப்பருவம்: குழந்தைகளைத் துயிலச்செய்வோர் தம் நாவை அசைத்துப் பாட்டுப்பாடுதல் வழக்கம். தாலாட்டு என்பது மருவித் தால் என நின்றது. ''தாலோ தாலேலோ'' என இப்பருவத்திலுள்ள பாடல்களின் இறுதி முடிக்கப்பெறும். இஃது எட்டாம் மாதத்தில் இயம்பப்படுவது.
4. சப்பாணிப்பருவம்: சப்பாணிகொட்டும்படி குழந்தையிடம் கூறுவதாக இப்பருவம் அமைக்கப்பெறும். கையோடு கை சேர்த்துக் கொட்டல் இது. ஸ : பாணி - சப்பாணி என்பர். இஃது ஒன்பதாம் மாதத்திற் கூறப்படும்.
5. முத்தப்பருவம்: தாயரும் பிறரும் 'முத்தம் தா' எனக் குழந்தையை வேண்டுவதாகக் கூறுதல் இப்பருவமரபு: இது 'பதினோராம்' மாதத்தில் கூறப்படும்.
6. வாரானைப்பருவம்: இப்பருவத்தில் தளர்நடையிட்டு வரும் குழவியை, வா என அழைப்பதாகச் சிறப்பிக்கப்படும். இது பன்னிரண்டாம் மாதத்தில் கூறப்படுவது என்பர்.
7. அம்புலிப்பருவம்: குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைப்பதாகக் கூறப்படுவது. இப்பருவத்தில் சாம, பேத, தான, தண்டம் முதலிய நால்வகை உபாயங்களாலும் சந்திரனை அழைக்கப்பெறும். இது பதினெட்டாம் மாதத்திலே கூறப் படும். அம்புலிப்பருவம் பாடுதல் கடினமானதாகலின் அம்புலி புலி எனக்கூறுவர் பெரியோர். புலமை அளவின் பெருமை அம்புலியால் அளக்கப்படும் போலும்.
8. சிற்றிற்பருவம்: இப்பருவத்திலே சிறுவீடுகட்டி விளையாடும் சிறுமியர் தம் சிற்றிலைப் பாட்டுடைத் தலைவர் காலால் அழிக்கும் காலத்தில் 'எங்கள் சிற்றிலை அழியா தொழிக' என் அவரை வேண்டுவதாகக் கூறப்படும். இஃது இரண்டாம் ஆண்டிற் கூறப் படுவதென்பர்.
9. சிறுபறைப்பருவம்: பாட்டுடைத்தலைவராகிய குழந்தையைச் சிறுபறை கொட்டியருளும்படி செவிலியர் வேண்டுவதாக இப்பருவம் அமைக்கப்பெறும். இது மூன்றாவது ஆண்டிலே மொழியப்பெறுவ தென்பர்.
10. சிறுதேர்ப்பருவம்: சிறுதேர் உருட்டி விளையாடும்படி பாட்டுடைத்தலைவராகிய குழவியைத் தாயர் வேண்டும் பருவம். இது நான்காம் ஆண்டில் நிகழ்வதென்பர்.
இனி, இந்த நூலாசிரியர் ஆன்றோர் ஆசாரம் பாதுகாத்தல் வேண்டி முதற்கண் விநாயக வணக்கம் செய்துகொள்ளுகிறார். அவ்விநாயகர் ஆனந்தவனத்தில்வளர் குஞ்சரக்கன்றாம். யானைகள் கிரிசரம், வனசரம், நதிசரம் என மூவகைப்படும். இந்த யானைக்கன்று வனசரம் ஆம். ஆனந்தவனம் – காசி. - அருணகிரிநாதர் ஒதும் திருப்புகழ் மாலையை மார்பில் அணிந்தவராகி ஒரு நூறு தலங்களில் எழுந்தருளி விளங்கும் குமரகுருவின் விஷயமாகப் பாடப்படும் 'நம் தமிழ்மாலை' தழைக என்று அஞ்சலிப்பாம் என விநாயகரை வேண்டுகின்றார். இங்கே நம் தமிழ்மாலை என்றது இப்பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்தையே ஆம். குஞ்சரக்கன்று என்றதற்கு ஏற்ப ஓங்காரவடிவு, நாதமுழக்கு, தத்துவமொடு அண்டமுண்ணல், விளையாட்டாடல் முதலியன கூறப்பட்டுள.
பின்பு காப்புப்பருவம் கூறத்தொடங்கிய ஆசிரியர் முதற்கண் கயிலாயத்திலிருந்து தொடர்ந்து கந்தமாதனத்தையும் உடன்கூறினார். அதன்பின் அறுமுகக்கடவுள் படைவீடுகளைத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரதேவர் கூறியருளியபடியே திருப்பரங்கிரி, திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்னும் முறையிலே ஆறு திருப்பதிகளையும் அமைத்தார். கயிலாய சிகரத்திலே சத்துச் சித்து வடிவாக எழுந்தருளியுள்ள சிவபிரான் உமையம்மை இவர்கட்கு இடையிலே ஆனந்த வடிவாக விளங்கும் கந்தசுவாமி மந்திர சிங்காதனத்தில் வீற்றிருந்தருளுவதை எண்ணி எண்ணி உருகுகின்றார் இவர்.
தலசம்பந்தமாகச் செய்யப்படும் பிரபந்தங்களில் தலவிசேடங்களையும் வரலாறுகளையும் அமைத்துப்பாடுதல் கவிஞர் இயல்பு. சில புலவர்கள் விசேட வரலாறுகளை அமைத்தலோடன்றிக் கற்பனைகளிலும் அவற்றை அமைத்துக்காட்டுவர். அவை புலவர்களின் புலமைத்திறத்தை அளந்து காட்டுவன. இவ்வாசிரியர் பெரும்பாலும் தலவிசேடங்களையே எடுத்தமைத்திருக்கின்றார். கற்பனைத் திறத்திலே. செல்வதைக்காட்டிலும் எளிய முறையிற் கல்வி கற்றோரும் பத்திபரவசத்தால் முருகவேளைத் துதித்துப் பயன் பெற வேண்டும் என்ற உள்ளக்கருத்து இவருக்கிருந்தது எனச்சொல்ல இடந்தருகின்றது. கற்பனையில் நுழைந்திருப்பின் ஏனைய புலவர்களில் இவர் தாழ்ந்தவரல்லர் என்பதையும் அங்கங்கே காணலாம்.
திருப்பரங்கிரியில் தெய்வயானையம்மையாரைத் திருமணஞ் செய்தமையும், திருச்செந்தூரில் (திருச்சீரலைவாய்) எழுந்தருளியிருந்து சிங்கமுகாசுரன், தாரகன், சூரபன்மன் முதலியோரை செயித்துத் தேவர் சிறை மீட்டமை முதலிய செய்திகளும் கூறப்பட்டுள்ளன. திருவாவினன்குடி (பழநி) யைக் கூறவந்தவர் முருகவேளை 'வரு வோர்கள் கேட்டவரம் வரையாமலே தினம் மகிழ்ந்து தந்தருள் வள்ளல்' என வாயாரப்புகழ்கின்றார். செத்துப் பிறக்கின்ற தெய்வங்களையும், பாரியே என்று கூறினும் கொடாத பொய்ம்மையாளராகிய மக்கட்பதடிகளையும் புகழ்ந்து சென்று இரந்துண்டு ஏங்கித் திரியும் புன்புலவர்கள் போலன்றித் தெய்வங்களின் மணவாளராக தேவதேவராக விளங்கும் முருகவேளையே வள்ளல் என அழைக்கின்றார். தேவரும் பிறரும் கஜமுகனுக்குச் செய்து வந்த குற்றேவல்களையும், வாய்புதைத்து நிற்றல் சிரத்தில் குட்டிக்கொள்ளுதல் முதலிய செயல்களையும் யானைமுகக் கடவுளாகிய விநாயகருக்குச் செலுத்தி வருதல் இதனுள் பேசப்பட்டிருக்கின்றது. திருச்செந்தூரில் வந்தருளும் முருகப்பிரானைக் கங்கை நாயகி காக்க என்னும் பகுதியில் கங்காதேவியின் தியானம் சிறப்பாக அமைந்திருத்தலையும் காணலாம். அவ்வம்மையார் அகலாமல் நிலை பெற்றிருக்கும் இடங்களையும் குறிப்பிடுகிறார்.
திருவேரகத்தில் உள்ள குமாரக்கடவுளுக்குச் சுவாமிநாதன் என்னும் பெயருண்மையும், அடியார்களுடைய பாச இருளையும் மோக இருளையும் மாற்றும் பொருட்டு அவர்கள் அன்பு நிறைந்த உள்ளத்தே ஞானப்பிரகாசத்தை வைத்தருளுதலும் சொல்லப்-பட்டிருக்கின்றன. சரியை கிரியா யோக ஞானபாதம்செயும் தன்னடியர் என அடியார்கள் சிறப்பிக்கப்படுகின்றனர். காலிற் சிலம்பு, கலகல எனவே கால வயிரவநாதர் வருதலால் கரிய எமனூர்திமணி வாயடைக்கும் என்பதும், கனவினும் நனவினும் வரும் கால வயிரவர் என்பதும் குறிப்பிடத்தக்கன. காசியில் கால பைரவரும், கனகசபையில் சுவர்ணபைரவரும் வீற்றிருத்தலைக் காட்டுகிறார். இப்பாடலில் பாசஇருளும் மோகவிருளும் எவ்வுயிரையும் தடுக்கும் என்றமையும் காண்க.
குன்றுதோறாடலில் முருகக் கடவுள் சீவகோடிகளை "ஐம்பாச அந்தகாரம் கெட அருளாம் மகோதயத்தால் ஆனந்த வெள்ளத்தழுத்தி” விளையாடுதலும், சிவபிரான் விழியில் ஆயிரந்திருமுகம் இரண்டாயிரம் செங்கைகளுடன் வீரபத்திரகுரு தோன்றித் தக்கன் முதலிய சிவத்துரோகிகளைத் தண்டித்து உலகத்தைப் பாதுகாத்தலும் விளக்கப் பட்டிருக்கின்றன.
பழமுதிர்சோலையில் பிராமணோத்தமர்களைக் கொண்டு வேதவேள்வியைச் செய்வித்து உலகத்தைப் பாதுகாத்தல் கூறப்படும். திருமால் திருவுந்தித்தாமரையில் பிரமதேவர் தோன்றல், கலைமகளை நாவில் வைத்திருத்தல், நான்குமுகமுடையராதல், பிரமாண்டத்தைப் படைத்தல் முதலியவற்றால் சிறப்பிக்கப்-பட்டிருக்கிறார்.
இவ்வாறு ஆறுபடைவீட்டுத் தலங்களையும் கூறிச் சிதம்பரம் காசியாகிய இருதலங்களில் வைத்து முறையே காளி முதலியோர் முப்பத்துமுக்கோடி தேவர்கள் காப்பையும் முடித்து இப்பருவத்தை ஒருவாறு நிறைவேற்றுகிறார். ஸ்ரீகுமர குருபரசுவாமிகளால் கந்தர் கலிவெண்பா (42-7) வில் கூறப்பட்ட திருமுகங்களின் செயல்களும், நக்கீரதேவரால் திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட திருமுகங்களின் செயல்களும் இதில் தழுவிக் கூறப்பட்டுள்ளமை இதனால் விளங்கும்.
திருச்சிற்றம்பலத்துள் மேலைக்கோபுரத்தே எழுந்தருளியுள்ள ஆறுமுகவேள் மூவாயிரவரால் பூசிக்கப்படுதல், சிவகாமசுந்தரி காணத் திருச்சிற்றம்பலமுடையார் அருளானந்த நடம் காட்டுதல் பேசப்படும். கலைமகள், திருமகள், சத்தமாதர்கள், துர்க்கை , வீர பத்திரகாளி முதலியோர் முருகனைப் புரக்க என ஒருசேரக் கூறப் படுகின்றனர். ஆயிரம் முகம், ஈராயிரம் கரம், மூவாயிரம் கண் காளிக்குள்ளனவாம்.
முப்பத்து ழுக்கோடி தேவர்கள் காப்பில் இந்திரன், உருத்திரர் (பதினொருவர்) மருத்துவர் (இருவர்) வசுக்கள் (எண்மர்) என்னும் முப்பத்துமுக்கோடி தெய்வங்களும் குமாரதெய்வத்தைக் காக்க என்றனர். இதனுள் அருக்கர் பன்னிருவரும் அந்தர்க்கத மாயினர் போலும்.
காசிச்செய்தி கூறுமிடத்து இறந்தோருக்கு உமையம்மையார் உத்தரீயத்தினால் வீசி இளைப்பாற்றலும், விசுவநாதர் வலச்செவியினுள் தாரகப் பிரமத்தை உபதேசித்தலும் குறித்துள்ளார். கங்கைமாநதி படிந்து சிவசாரூபம் பெறுதலும் ஐதிகமாகலின் உருத் திரர்மேல்வைத்து அதனை விளக்கினர். இதனை, '' பிரானென் றவர்க்கொரு பெண்ணோடு மோடிப் பெருங்கருணை, தராநின்ற காசித் தடம்பதியார்," என்னும் காசிக்கலம்பச் செய்யுள் வலியுறுத்தும்.
இரண்டாவது செங்கீரைப்பருவத்தில் திருவாரூரைப்பற்றிய செய்திகள் விராட் புருடனுக்கு மூலாதாரத்தலமாம் தென்கமலைநகர் எனவும், அத்தலத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியைக் குறித்துத் தியாகேசனுமை தவிசில் நடஞ்செய்கந்தனேஎனவும் கூறினர். கதிர்காமத்திலுள்ள மாணிக்ககங்கையாகிய தீர்த்தத்தில் முழுகி முருகவேளைத் தரிசிப்போர் ஊமை நீங்கலும், குருடர் கண்பார்த்திடலும், மலடிகள் மைந்தர் பெறலும் இயலும் என்பர். வேலா! குமரா! என்னும் அன்பரைக் கொடிய விலங்குகள் கிட்டாமல் அஞ்சியோடுவன என்பர். கந்தனே கண்கண்ட தெய்வம் என்பர். வேள்விமலை முருகனைக் கூறும்போது மேருகிரியில் நவவீரருடன் விளையாடினமையும், இந்திரன் முதலியோர் அறியாமையால் போர் செய்தமையும், குமார தெய்வம் விசுவரூபதரிசனம் தந்தமையும் கூறுகின்றார்.
வள்ளியூரைப் பேசும்போது வள்ளிநாயகியார் பிறப்பு வளர்ப்புக்களையும் முருகவேள் அவரை மணஞ்செய்து கொண்டமையையும் குறித்தார். கலைமுனிவனாக என்றதன் நயம் கருதத்தக்கது. விஷ்ணுமூர்த்தியின் கணநாதரில் ஒருவர் வேடனாக வந்து பிறந்தார் என்றார். பாவநாசத்தலத்து அகத்திய முனிவருக்கு அநுதினமும் இறைவர் மணக் கோலங்காட்டி நிற்கும் அற்புதச் செயலையும் விளக்கியுள்ளார். பதினாலு புவனமும் பாலிகையாகவும் உயிராகிய வித்து அங்குரிப்பதாகவும் கூறினமை காண்க.
வடசொற்களும் தொடர்களும்
தமிழ்நூற்புலமையுடைய இவ்வாசிரியர் வாக்கில் வடசொற்களும் சொற்றொடர்களும் கலந்தே வந்திருக்கின்றன. தமிழுக்கேற்பச் சில சொற்களைத் திரிக்காமல் சில தொடர்களையும் சொற்களையும் வழங்கியிருக்கிறார்.. அவற்றுட்சில வருமாறு :
சொற்கள்: பவம், சலராசி, ஆனனம், சொர்க்கம், உபயம், குடிலை, பவானி, வதனம், உத்தரீயம், ருத்திரர், சந்திரன், அச்சுதன் முதலியன.
சொற்றெடர்கள்: பரமநாடகம், பரப்பிரமவித்தை, சந்த்ராயுதகோடி, செகதலம், இபானனம், தாரகப்பிரமம், சண்டமாருதம், சிவத்ரோகம், சண்முகம், இந்த்ராதி, மகோதயம், திசாமுகம், கோகனகன், கற்பகாடவி, சடாடவி, உதயரவி, விராட்புருடன், புயாசலம், சராசரம், இமயாசலம், சந்த்ரசூரியர், கும்பமுனி, சித்ராநதி, திரிகூடாசலம், வச்ரபாணி, மாணிக்ககங்கை, கமலாசனம், சதுரானனன் என்பன.
நவரத்னமகர குண்டலம், சச்சிதானந்த அனந்த கல்யாணகுண சர்வக்கிய சூடாமணி, சர்வபரிபூரண பரப்பிரமம், தற்பரஞ்சோதி அசஞ்சலஅமோகம், அநாதி அகளங்கம், நிச்சய மகோதய அநந்தரவிசோதி, நிர்க்குண நிராதாரம், நிராம புராதன நிரஞ்சன சுகாதீத ஞேயமாமத்துவிதம், பணாமுடியுரகசயனன், மந்த்ரபதவன்னபுவனகலை, அதிபலமகாவீர, சததளப்பத்மாசனக்கடவுள், குணபூதரக் கடவுள், கனகமணி மந்த்ர சிங்காதனம், அதிபல மகாதுர்க்கை, அனந்தகல்யாணகுணம், உரககங்கணக்காப்பு என்பன போன்றவைகளும் உண்டு.
முருகக்கடவுள் இந்நூலுள் பல திருநாமங்களால் பாராட்டப் பெறுதல் காணலாம். அவைகளுள் சில: கந்தசுவாமி, கங்கைமைந்தன், குமரகுரு, கந்தன், கடம்பன், கங்கையுமை பார்வதி குழந்தை, ஆறுமுகமைந்தர், குகன், மயில்வாகனன், சுவாமிநாதன், சரவணத் துக்குழந்தை, ஆறுமுகவேள், வேலன், பன்னிருபுயாசலன், ஆறுமுக மெய்த்தெய்வம் முதலியன.
இந்நூலாசிரியராகிய காஞ்சீபுரம் -ஸ்ரீசிதம்பரமுனிவர் திராவிடமாபாடியகாரராகிய ஸ்ரீமாதவச் சிவஞானயோகிகள் மாணவர் பன்னிருவருள் ஒருவர். ஸ்ரீசுப்பிரமணியக் கடவுளிடத்தும், சுப்பிரமணிய பக்தர்களிடத்தும் அளவில்லாத பேரன்புடையவர். தமிழறி வுடன் வடமொழியறிவும் வாய்ந்தவர். இவர் திருவாவடுதுறையாதீனத்தைச் சேர்ந்தவராயினும் தருமபுரம், திருப்பனந்தாள் முதலிய திருமடத்துத் தலைவர்களிடம் உண்மையான அன்புடையவர் என்பதும் அங்கங்கே விளங்கிக் கிடக்கக் காணலாம். தருமையாதீனத்து ஞானகுரவர்கள் செய்த அற்புதச்செயல்களைப் பாராட்டுகிறார். காசிவாழும் சிவானந்த குமரகுருபரமுனி என வாயாரப் புகழ்கின்றார். சிலபல காரணங்களால் இவர் செங்குந்த மரபினர் என எண்ணப்படுகிறார். தலவரலாறுகளை நன்கு அறிந்து ஏற்றபடி அமைத்திருப்பது மிகச்சிறந்ததாகும். தலபுராணச் செய்திகளால் அறியக்கிடப்பன சிலவற்றையும் அமைத்துள்ளார். இப்பிள்ளைத்தமிழையன்றி இவர் காஞ்சி-காமாட்சியம்மை பிள்ளைத்தமிழொன்றும் செய்துள்ளார் என வரலாறு கூறும்.
இனி, தலவரலாற்றுள் விரித்தெழுதிய சில செய்திகளை இங்கே குறிப்பிடவில்லை. தெரிந்தவரையில் சிலபல தலங்களுக்கு விவரம் குறிக்கப்பட்டுள்ளது. சில நன்றாகத்தெரிந்து கொள்ள இயலாமையால் எழுதாமல் விடுபட்டன. அன்பர்கட்கு உபயோகமாகும் எனக்கருதித் திருப்புகழ் பெற்ற தலங்களின் அகராதியும் தலவரலாற்றுக் குறிப்பும் செய்யுள் முதற்குறிப்பகராதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தில் கட்டளையிட்டருளியபடி இச்சிறு நூலையும் அச்சிட்டு இருபதாவது குருமகாசந்நிதானம் நான்காவது குருபூசை விழாவில் இன்று வெளியிடலானேன். இப்போது இவ்வாதீன ஞானபீடத்து எழுந்தருளி விளங்கும் இருபத்தொன்றாவது குருமகாசந்நிதானம் திருப்பெயரும் தமிழ்த்தெய்வமாக விளங்கும் இப்பிள்ளைத்தமிழ்க்கு உரிய கடவுட் பெயரும் ஒன்றாக அமைந்தது யாவர்க்கும் இன்பஞ்செய்வதாம்; எளியேன் அத்தெய்வத்தை வாழ்த்துவதும் எங்கள் ஞானாசிரியரை வாழ்த்தி வணங்குவதும் பொருத்தமுடையதென்றே துணிந்தேன். பிழையுளதாயின் பொறுத்தருள்க.
இங்ஙனம், சித்தாந்தசைவமணி -
திருவாவடுதுறை த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை,
28-3-55. ஆதீனவித்துவான்.
--------------------
2. ஸ்ரீ அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்ற தலங்கள்
உ
அத்திக்கரை, அத்திப்பட்டு, அருக்கொணாமலை (சிலோன்), அவிநாசி- திருப்பூர்,
ஆண்டாகுப்பம்-பொன்னேரி, ஆய்க்குடி, ஆறு திருப்பதி, இஞ்சிகுடி-பேரளம்,
இந்தம்பலம், இரத்தினகிரி-வாட்போக்கி குழித்தலை, இராசகம்பீர வளகாட்டுமலை,
இராசபுரம்- சேலம், இராமேசுரம், இலஞ்சி- தென்காசி, இளையனார்வேலூர் – காஞ்சி,
உத்தரமேரூர் – செங்கற்பட்டு, ஊதிமலை-கோயம்புத்தூர், எட்டிகுடி-திருநெல்லிக்கா,
எண்கண்- திருமதிக்குன்றம், எழுகரைநாடு, ஒடுக்கத்துச் செறிவாய்.
கங்கைப்பதி - ஸ்ரீகாசி, கச்சிக்கச்சாலை – காஞ்சி, கச்சிமேற்றளி - காஞ்சி, கச்சியேகம்பம் - காஞ்சி,
கதித்தமலை - ஊற்றுக்குழி, கதிர்காமம் சிலோன், கந்தகோட்டம் காஞ்சி, கந்தன்குடி - அம்பகரத்தூர்,
கயை - கயா, கரியவனகர், கருவூர், கழுகுமலை -நல்லத்தம்புத்தூர், கன்னபுரம், காங்கேயம் - ஊற்றுக்குழி,
காமத்தூர், காவளூர் -ஐயன்பேட்டை, கீரனூர், குமரகோட்டம் - காஞ்சி, கும்பகோணம்,
குருடிமலை - துடியலூர், குறட்டி - புதுக்கோட்டை, குன்றக்குடி - காரைக்குடி, குன்றத்தூர் - பல்லாவரம்,
குன்றுதோறாடல், கூந்தலூர், கைலைமலை - கயிலை, கொங்கணகிரி - திருப்பூர், கொடுங்குன்றம்,
கொடும்பாளூர் - இராமநாதபுரம், கொடுமளூர், கொல்லிமலை - சேலம், கோசைநகர்.
சிக்கல், சிங்கைப்பதி, சிதம்பரம், சிவபுரம், சிவமலை - ஊற்றுக்குழி, ஸ்ரீசயிலம் (திருப்பருப்பதம்),
சீகாழி, சுவாமிமலை, சென்னிமலை - ஈங்கூர், சேயூர் - மதுராந்தகம், சேலம், தச்சூர், தஞ்சாவூர்,
தனிச்சயம் - சோழவந்தான், தான்றோன்றி, திரிசிராப்பள்ளி, திரிபுவனம், திரியம்பகபுரம், திருக்கடவூர்,
திருக்கருவைநல்லூர் - சங்கர நயினார்கோயில், திருக்கழுக்குன்றம் - செங்கற்பட்டு,
திருக்கற்குடி- (உய்யக்கொண்டான்) திரிசிராப்பள்ளி, திருக்காளத்தி, திருக்கானப்பேர்,
திருக்குடவாயில், திருக்குரங்காடுதுறை - ஆடுதுறை, திருக்குற்றாலம் - தென்காசி,
திருக்குளந்தைநகர் - கொடைக்கானல், திருக்கூடலையாற்றூர், திருக்கோடிக்குழகர் - அகத்தியான்பள்ளி,
திருக்கோணமலை -சிலோன், திருக்கோவலூர், திருச்சக்கரப்பள்ளி, திருச்சத்திமுத்தம்,
திருச்செங்காட்டங்குடி – நன்னிலம், திருச்செங்கோடு - சங்கரிதுர்க்கம், திருச்செந்தூர், திருத்தணிகை,
திருத்தவத்துறை - லாலுகுடி, திருத்துறையூர் - வரிஞ்சிப்பாக்கம், திருநல்லூர், திருநள்ளாறு,
திருநாகேச்சுரம், திருநாவலூர் – மாம்பலப்பட்டு, திருநெய்த்தானம் – தஞ்சை, திருநெல்வாயில் - சிதம்பரம்,
திருப்பதி, திருப்பந்தணைநல்லூர் – குற்றாலம், திருப்பரங்குன்றம், திருப்பராய்த்துறை - எழுமனூர்,
திருப்பழுவூர் - அரியலூர், திருப்பழையாறை - கும்பகோணம், திருப்பனந்தாள்- ஆடுதுறை,
திருப்பாண்டிக்கொடுமுடி, திருப்பாதிரிப்புலியூர், திருப்புக்கொளியூர் - அவிநாசி, திருப்புத்தூர் (காரைக்குடி), திருப்பூந்துருத்தி, திருப்பெருந்துறை - அரண்தாங்கி, திருப்பெரும்புலியூர் - தஞ்சை, திருப்பேரூர் - கோயம்புத்தூர், திருப்போரூர் - வண்டலூர், திருமயிலை
திருமயேந்திரப்பள்ளி - கொள்ளிடம், திருமலை, திருமலை – செங்கோட்டை, திருமாணிகுழி,
திருமாந்துறை – லாலுகுடி, திருமுருகன்பூண்டி – திருப்பூர், திருவக்கரை – மயிலம்,
திருவடதிருமுல்லைவாயில் – அம்பத்தூர், திருவடுகூர் - சின்ன பாபுசமுத்திரம், திருவண்ணாமலை,
திருவதிகை – பண்ணுருட்டி, திருவம்பர்மாகாளம் – பேரளம், திருவயலூர் – திரிசிரபுரம், திருவரத்துறை,
திருவலஞ்சுழி - சுவாமிமலை, திருவலிதாயம் - கொரட்டூர், திருவலிவலம் - திருவாரூர், திருவல்லம்,
திருவழுவூர் - இலந்தங்குடி, திருவாக்கூர், திருவாஞ்சியம் - நன்னிலம், திருவாடானை - சிவகங்கை,
திருவாமாத்தூர் - விழுப்புரம், திருவாமூர் - பண்ணுருட்டி, திருவாரூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை,
திருவானைக்கா, திருவான்மியூர் – சென்னை, திருவிடைக்கழி – திருக்கடவூர்,
திருவிடைமருதூர், திருவிராமேச்சுரம், திருவீழிமிழலை, திருவுத்தரகோசமங்கை,
திருவெஞ்சமாக்கூடல் - கருவூர், திருவெண்ணெய்நல்லூர், திருவேங்கடம், திருவேட்களம்,
திருவேற்காடு, திருவையாறு, திருவொற்றியூர், திருவோத்தூர், திலதைப்பதி, தென்கடம்பந்துறை – குழித்தலை,
தென்சேரிகிரி – கோயம்புத்தூர் தேவனூர்
நாகப்பட்டினம், நெடியம், நெடுங்களம், நெருவூர் பசுமலை,
பட்டாலியூர், பழநி, பழமுதிர்சோலை, பாகை, பாக்கம், பிரயாகை, புகழிமலை, பூவாளூர், பெரியமடம்,
பெருங்குடி, பெரும்புலியூர், பேரூர், பேறைநகர், பொதியமலை, பொது.
மதுராந்தகம், மதுரை,
மயிலம், மருதமலை – கோயம்புத்தூர், மருத்துவக்குடி, மாடம்பாக்கம்- தாம்பரம், ஸ்ரீமுட்டம், முள்வாய்,
மேருமலை, யாழ்ப்பாணாயன் பட்டினம், வயலூர், வயிரவிவளம் - பஞ்சாப், வலிவலம்,
வல்லக்கோட்டை – வண்டலூர், வள்ளிமலை - திருவல்லம், வள்ளியூர் - திருநெல்வேலிப் பாலம்,
வாலிகண்டபுரம், விஜயபுரம் – திருவாரூர், விஜயமங்கலம் – சிவகங்கை, விராலிமலை, விரிஞ்சிபுரம்,
வெள்ளிகரம் -வேப்பகுண்டா, வெள்ளிமலை – கோயம்புத்தூர், வேதாரணியம், வேப்பூர், வேலூர், வைத்தீசுவரன்கோயில்
______x-x-x-x-x-x ____
உ - சிவமயம் - திருச்சிற்றம்பலம்
3. க்ஷேத்திரக்கோவைப்பிள்ளைத்தமிழ்த் தலம்
செய்யுள் முதற்குறிப்பு- பாடல் எண்
தலம் | செய்யுள் முதற்குறிப்பு | பாடல் எண் |
அரிப்பாடி | உன்னருட் சந்நிதியில் | 92 |
ஆகமபுராணம் | விரிஞ்சன் பெருஞ்சிறை | 63 |
இரத்தினகிரி | பாக மிகுந்தே | 29 |
இராசையம்பதி | கருணைவடி வான | 34 |
இராமேச்சுரம் | சச்சிதா னந்தவ | 12 |
இலஞ்சி | குருவா யகத்திய | 17 |
உச்சினி-அவந்திகை | கற்பக மெனுங் | 97 |
எட்டிகுடி | இட்டமுறு | 55 |
எண்கண் | சீராரு மயில்காண | 51 |
எருக்கத்தம்புலியூர் | வைய முய்ய | 75 |
கங்கைகொண்ட சோழபுரம் | மங்கை பாகர் | 72 |
கஞ்சனூர் | அஞ்சுதிரு வயதிலே | 45 |
கதிர்காமம் | மாணிக்க நிறை | 13 |
கந்தகிரி | இந்த்ரன் வசுக்க | 23 |
கந்தமாதனம் | செங்கனக | 2 |
கயை | அறந்தவிரொர் | 99 |
கழுகுமலை | கடலேழை யும் | 20 |
கயிலாயம் | கயிலாய சிகரத்து | 1 |
காங்கேயம் | பூங்கமல | 40 |
காசி | உருவரா தென்று | 10 |
கார்த்திகைமலை | தவசு செய்தானை | 96 |
கீழ்வேளூர் | அண்டகோ டிகள் | 52 |
குமரகோட்டம் | பொன்குலவு | 86 |
கும்பகோணம் | சடந்தந்த வுடல் | 37 |
குன்றத்தூர் | காக்க நம்பி | 74 |
குன்றுதோறாடல் | குன்றுதோறாடலுட் | 7 |
கேதாரம் | அறம்பொருள்க ளின்பம் | 100 |
கொடுங்குன்று | ஊகந் திரிகா | 28 |
கரிவலம்வந்தநல்லூர் | மேலன் புடனிரம் | 48 |
சங்கரநயினார் கோயில் | ஒருவடிவி லொருபாதி | 47 |
சதுரகிரி | அகிலம் புகழும் | 26 |
சந்திரகுமாரகிரி | மிக்க புகழ் | 22 |
சிக்கல் | முக்கட்பு ராரியொடு | 54 |
சிதம்பரம் | சீரார் திருச்சிற் றம்பல | 9 |
சிவசுப்பிரமணியம் | அவனிக்கு ளே | 91 |
சீகாழி | முழுமதிக் கட | 64 |
சுவேதவனம் | தண்டரள | 65 |
செம்பொன்பள்ளி | தேசுமிகு தேவர் | 62 |
சென்னிமலை | சீராரும் ஆறுமுக | 32 |
சேய்ஞலூர் | இருமைத்தம் பி | 41 |
சையகிரி | ஐய னைமா முகத்தானை | 25 |
ஸ்ரீசயிலம் | உருச்சிகர | 95 |
தருமபுரம் | உம்பர்பணி | 60 |
நாகபட்டினம் | தாணுமா லயனுடன் | 53 |
பட்டீச்சுரம் | கீர்த்திமலி | 46 |
பழமுதிர்சோலை | ஏர்கொள்பழ | 8 |
பழனி | கரமைந் துடைய | 27 |
பாவநாசம் | பொன்பரவு | 16 |
பாவாலி | தாயினிலு மன்புடைய | 68 |
பிரம்பூர் | மரகதப் பச்சையொளி | 58 |
பிரயாகை | சறுவசக மும் | 98 |
புள்ளிருக்குவேளூர் | செவிகளொரு | 50 |
பேரூர் | தரைக்கண்ணு | 69 |
மதுரை | நாதன் விளையாட் | 21 |
மயிலம் | பொங்குந்தி ரைக்கடல் | 70 |
மாயூரம் | ஐந்தரு வெனுங்கற்ப | 59 |
திரிசிரபுரம் | நேயமா மானந்த | 33 |
திருக்கடவூர் | சக்கிரவாள | 66 |
திருக்கழுக்குன்றம் | உருக்கமுள | 82 |
திருக்காளத்தி | முன்கருணை | 89 |
திருக்கோகரணம் | ஏகநா யகன்கயிலை | 94 |
திருச்செங்கோடு | பொன்னிலகு | 31 |
திருச்செந்தூர் | செந்திலம் பதியில் | 4 |
திருத்தணிகை | ஒருத்தியென | 85 |
திருத்தருப்பூண்டி | இவனழைத் தானுனை | 67 |
திருநாரையூர் | முகில்போற் | 73 |
திருநாவலூர் | தேவ தேவன் | 77 |
திருநெல்வேலி | உட்டிரு விளக்கான | 19 |
திருப்பரங்கிரி | புவனமிரு | 3 |
திருப்பனந்தாள் | அனையுமைக் கருள் | 43 |
திருமறைக்காடு | ஒருமேரு கிரியேக | 56 |
திருமயிலை | உன்மலர்க் கை | 87 |
திருமலை | உம்பர்க்கும் | 18 |
திருமுருகன்பூண்டி | திருகன் மனத்து | 30 |
திருவாரூர் | உன்கருணை | 11 |
திருவிரிஞ்சை | உவமைதா மான | 83 |
திருவக்கரை | கார்மேவு | 90 |
திருவஞ்சைக்களம் | புகழ்கொண்ட | 93 |
திருவதிகை | மெய்யன் பாகி | 80 |
திருவருணை | தருப்பொலியு | 81 |
திருவலஞ்சுழி | மந்தர மெனுங்கிரியை | 39 |
திருவாதவூர் | எனையுமொரு | 49 |
திருவாப்பாடி | ஆலமணி கண்டரை | 42 |
திருவாமாத்தூர் | எம்பால் வந்தீ | 79 |
திருவாவடுதுறை | தேவாதி தேவன்சொல் | 44 |
திருவாவினன்குடி | திருவாவி னன்குடியி | 5 |
திருவானைக்கா | அம்புரா சிகளேழும் | 35 |
திருவிடைக்கழி | குருசரண ரொரு | 57 |
திருவிடைமருதூர் | திருவலஞ் சுழி | 38 |
திருவெண்ணெய் நல்லூர் | பொய்கண் டகன்ற | 78 |
திருவேரகம் | ஏரகத் தேயாறு | 6 |
திருவையாறு | மானுமழு வும் | 36 |
திருவொற்றியூர் | பொருளுற்ற | 88 |
வயலூர் | முற்று நிறைந்த | 71 |
வழுவூர் | குழுவுடைய | 61 |
வள்ளிமலை | இந்துவடி வாங் | 84 |
வள்ளியூர் | இருக்குமரி | 15 |
விராலிமலை | ஒண்பார் மறையோர் 24 |
விருத்தாசலம் | அத்தா வமரர் | 76 |
வேள்விமலை | முகமொன்று | 14 |
__________________&&&_________________
உ
சிவமயம் திருச்சிற்றம்பலம்
4. சில தலங்களின் வரலாறு
சீகாழி :
சுவாமி- பிரமபுரீசர், அம்பிகை- திருநிலைநாயகி. பிரமதீர்த்தம், கழுமலநதி. பன்னிரண்டு திருப்பெயருடைய தலம். திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அவதரித்த தலம். தேவாரம்: திருஞான-67, திருநாவு-3, சுந்தரர்-1 ஆக 71 பதிகம். பிரமன் பூசித்தது.
சீகாழித்தலபுராணம் 1550 செய்யுட்கள்: இயற்றினார் சீகாழி - அருணாசலக்கவிராயர் (1634-1701) பட்டினத்துப் பிள்ளையார் அருளிச்செய்த திருக்கழுமலமும்மணிக்கோவை, மகாவித்துவான் - மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய சீகாழிக்கோவை: காழியந்தாதி முதலியன இத்தல சம்பந்தமாக உள்ளன.
சுவேதவனம்: (திருவெண்காடு)
சுவாமி - சுவேதாரணியர், அம்பிகை - பிரமவித்தியாநாயகி. தீர்த்தம்- சோமசூரியாக்கினி தீர்த்தம் (முக்குளம்) தலவிருட்சம் - வடவால். தேவேந்திரன், வெள்ளையானை பூசித்தது. தேவாரம் -திருஞான-3, நாவுக்கர-2, சுந்தரர்-1. ஆக 6 பதிகங்கள், சைவ - எல்லப்பநாவலர் இயற்றிய புராணம் ஒன்றுண்டு, செய்யுட்டொகை-614.
புள்ளிருக்கு வேளூர்: (வைத்தீசுவரன் கோயில்)
சுவாமி - வயித்தியநாதர், அம்பிகை - தையனாயகி. தீர்த்தம் - சித்தாமிர்ததீர்த்தம், வேம்பு தல விருட்சம். வேதம், சடாயு, சம்பாதி, சூரியன், முருகவேள், இராமர், இலக்குமணர், முதலியோர் பூசித்தது.
வடுகநாத தேசிகர் இயற்றிய தலபுராணம் உண்டு. அப்புராணச் செய்யுட்டொகை - 1133. ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிச்செய்த முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், படிக்காசுப்புலவர் இயற்றிய புள்ளிருக்கு வேளூர்க்கலம்பகம் முதலிய பிரபந்தங்களும் உள்ளன.
திருநாரையூர்:
சுவாமி-சவுந்தரேசர், அம்பிகை - திரிபுரசுந்தரி. காருணிய தீர்த்தம். தலவிருட்சம்- புன்னாகம். நம்பியாண்டார் நம்பி விநாயகரைப் பூசித்துத் திருமுறை கண்டருளினார். நாரை பூசித்தது. தேவாரத்திருப்பதிகம்-திருஞான-3, திருநாவு- 2 ஆக 5. நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்த இத்தலத்து விநாயகர் திருவிரட்டைமணிமாலையுமுண்டு.
கஞ்சனூர்:
சுவாமி- அக்கினீசுவரர், அம்பிகை - கற்பகவல்லீ. அக்கினி தீர்த்தம், புரசு தல விருட்சம். திருநாவுக்கரசு தேவாரம்-1. அரதத்த சிவாசாரியர் அவதரித்த தலம்.
திருப்பனந்தாள்:
சுவாமி - செஞ்சடையப்பர், அம்பிகை - பெரியநாயகி. பிரமதீர்த்தம், பனை-தலவிருட்சம். தாடகை, குங்கிலியக்கலய நாயனார் வழிபாடுசெய்து, திருத்தொண்டாற்றியது. திருஞானசம்பந்தர் தேவாரத் திருப்பதிகம் - 1. ஸ்ரீ குமரகுருபரசுவாமிகள் ஸ்ரீ காசிமடம் இங்குள்ளது.
திருவாப்பாடி:
சுவாமி- பாலுகந்தநாதர், அம்பிகை - பெரியநாயகி. மண்ணியாறு தீர்த்தம். ஆத்தி தலவிருட்சம். திருநாவுக்கரசு திருநேரிசை-1. சேய்ஞலூர்ப் பிள்ளையார் சண்டேசபதம் பெற்ற தலம்.
சேய்ஞலூர் :
சுவாமி - கிரீசுரர், அம்பிகை - செகதாம்பாள். சத்த தீர்த்தம். திருஞானபதிகம்-1. முருகவேள் சூரனைச் சங்கரிக்க எழுந்தருளிவந்த காலத்துத் தங்கிச் சிவபிரானைப் பூசித்த தலம். சண்டேசுர நாயனார் அவதரித்த தலம்.
திருவையாறு:
சுவாமி - செம்பொற்சோதிநாதர், அம்பிகை அறம் வளர்த்த நாயகி. பஞ்சநதி தீர்த்தம், தெற்குப் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், திருநந்திதேவர் பூசித்தது. திருநாவுக்கரசு சுவாமிகளுக்குக் கயிலாயக்காட்சி தந்தருளியது, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக் காவிரியின் பெருக்கைத் தவிர்த்து அடியார் கூட்டத்துடன் வந்து தரிசிக்கச் செய்தது. சித்திரை விசாகத்தில் சப்தஸ்தான விழா. திருஞான-5, திருநாவு-12 சுந்தரர்-1 ஆக 18 பதிகங்கள். புராணம் உண்டு, பதிற்றுப் பத்தந்தாதி சிறந்த வாக்கு.
திருவானைக்கா:
சுவாமி - சம்புகேசுரர், அம்பிகை - அகிலாண்டநாயகி. தீர்த்தம் - காவிரி, வெண்ணாவல் மரம் தலவிருட்சம். வெள்ளை யானை, சிலந்தி பூசித்துப் பேறு பெற்ற தலம். பஞ்ச பூத தலத்தில் அப்புலிங்கம். நீறிட்டான் திருமதில் என்று ஒரு மதில் உள்ளது. ஞான -பதிகம்-3, நாவு- பதிகம் 3, சுந்தரர் பதிகம்-1 ஆக 7. கவிராக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்ப முனிவர் அருளிய புராணம் ஒன்று உண்டு; செய்யுட்டொகை - 1555. மகாவித்துவான்-பிள்ளையவர்கள் இயற்றிய ஸ்ரீ அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ், அகிலாண்டநாயகி மாலை முதலிய பிர பந்தங்களும் உள்ளன. திருவானைக்காவுலாவும் உண்டு.
இரத்தினகிரி: (சிவாயமலை, வாட்போக்கி)
சுவாமி - இரத்தினகிரீசுவார், அம்பிகை - சுரும்பார் குழலி. காவிரி தீர்த்தம், இடி பூசித்தது. காகம் அணுகாமலை என்று பேசப்படும், கோயில் உயரியமலை மேல் உள்ளது. சுமார் 1000 படிகள் இருக்கின்றன என்பர். மத்தியான தரிசனம் விசேடம். தல விருட்சம்-வேம்பு. முடித்தழும்பர் எனவும் சுவாமி திருநாமம் வழங்கும். திருநாவு- குறுந்தொகை-1. வாட்போக்கி நாதருலா, வாட்போக்கிக் கலம்பகம் முதலிய பிரபந்தங்கள் உள.
திருவாரூர்:
சுவாமி - வன்மீகநாதர், அம்பிகை - அல்லியங்கோதை. திருமூலட்டானம், பூங்கோயில் என்பன கோயிற்பெயர். இலக்குமி பூசித்த தலம். மனுவுக்கு அருள் செய்தவர், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காகப் பரவையார்பால் தூது சென்ற பழம்பதி. சத்தவிடங்கத்தலத்தில் முதன்மையானது. வீதிவிடங்கர்; அசபாநடனம். முசுகுந்தன் வழிபாடு செய்தது. கமலாலயம் என்னும் தீர்த்தம் கோயிலின் மேல்பால் உள்ளது. கோயில், குளம், செங்கழுநீர் ஓடை இவை ஒவ்வொன்றும் ஐந்துவேலி நிலப்பரப்பு என்பர். திருத்தொண்டத்தொகை பாடும் பொருட்டுத் “தில்லைவாழந்தணர்" எனச் சுந்தரமூர்த்திசுவாமிகளுக்கு இறைவர் அடி எடுத்துக்கொடுத்தருளியது. பிருதிவித்தலம். திருஞான-5, திருநாவு-21, சுந்தரர்-8 ஆகத் தேவாரத்திருப்பதிகம் 34. இத்தலத்துத் தேர் * ஆழித்தேர் எனப்பாராட்டப் பெற்றுள்ளது.
தலபுராணம் அளகைச் சம்பந்தமுனிவர் பாடியது. பிள்ளையவர்களால் பாடப்பட்ட திருவாரூர்த் தியாகராசலீலை சிறந்தது. திருவாரூர் உலா, திருவாரூர் மும்மணிக் கோவை, திருவாரூர் நான்மணிமலை, திருவாரூர்க்கோவை முதலிய பிரபந்தங்கள் இத்தல சம்பந்தமாக உள்ளன.
இராமேச்சுரம்:
சுவாமி - இராமநாதேசுவரர், அம்பிகை - மலைவளர் காதலி (பருவதவர்த்தனி). தீர்த்தம்- தனுக்கோடி முதலிய பலவுள. இராமர் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து பூசித்தது. திருஞான-2, திருநாவு-1 ஆக 3 பதிகங்கள். சேது புராணம், தேவையுலா முதலியன இத்தலசம்பந்தமாக உள்ளன.
திரிசிரபுரம்:
சுவாமி - தாயுமானேசுவார், செவ்வந்திநாதர், திருமலைக் கொழுந்து. அம்பிகை -மட்டுவார் குழலி, சுகந்தகுந்தளாம்பிகை. மேருவின் கொடுமுடிகள் மூன்றனுள் ஒன்று என்பர். மேற்குப்பார்த்த சந்திதி, கருப்பிணி ஒருத்திக்குத் தாயாக வந்து மருத்துவம் பார்த்த கடவுள் இவர். தீர்த்தம்-காவிரி, என்றுடையான், தீயதிலான் முதலியன. திருஞான-1, திருநாவு-1 ஆக இரண்டு பதிகங்கள். செவ்வந்திப்புராணம், சிராமலைக்கோவை, யமகவந்தாதி முதலியனவும் பிறவும் இத் தல சம்பந்தமான நூல்கள்.
திருமுருகன்பூண்டி:
இது முருகவேள் சிவபெருமானைப் பூசித்த தலங்களில் ஒன்று. சுவாமி - முருகேசுவரர், அம்பிகை - ஆவுடைநாயகி. ஆவுடைத்தீர்த்தம். சுந்தரர் பதிகம் -1. திருப்பூர் புகைவண்டி நிலயத்திலிருந்து வடமேற்கே சுமார் 8 மைல் தூரம் உள்ளது. அங்கிருந்து அவிநாசி 3 மைல் தொலைவு.
சென்னிமலை:
கொங்குநாடு, ஈங்கோய்மலைக்கு அருகில்தெற்கே 4கல். வாயுதேவனால் பறித்தெறியப்பட்ட மேருமலைச் சிகரம் விழுந்த இடம்: இஃது ஓர் கற்பத்தில் நடைபெற்றது. திரிசிராமலை, காளத்திமலை, திரிகோணமலை என்பன வேறு கற்பத்தில் பறித்தெறியப்பட்ட மூன்று சிகரங்கள் என்ப. திருமால், இலக்குமி, பிரமன், அகத்தியர், துர்க்கை, இந்திரன், முசுகுந்தன் முதலியோர் பூசித்த தலம். சிறுநல்லார், பெருநல்லார் (ஊர்வசி, திலோத்தமை) பூசித்தது. இயமனால் பூசிக்கப்பட்டது. கிள்ளிவளவன் எடுத்த கோயில். சிகரகிரி, கனககிரி, புஷ்பகிரி, மகுடகிரி என யுகந்தோறும் இது பெயர் பெறும். தண்டபாணி, வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியர் உண்டு. இயமதீர்த்தம், குமார தீர்த்தம், செங்கழு நீர்வாவி, இடும்பதீர்த்தம், பட்சி தீர்த்தம் முதலியன. 12 வருஷத்துக்கு ஒருமுறை மகாமகதீர்த்தம் இங்கே பெருகும். இடும்பனுக்கு வழிகாட்டியது, அருணகிரிநாதர் படிக்காசு பெற்றது.
திருப்பரங்கிரி:
சுவாமி - பரங்கிரிநாதர், அம்பிகை - ஆவுடைநாயகி, தீர்த்தம் - சரவணப்பொய்கை, சுப்பிரமணியர் தெய்வயானையம்மையாரை மணம் செய்த தலம். திருஞான-1, சுந்தரர்-1, ஆகப்பதிகம் 2. நிரம்பவழகிய தேசிகர் இயற்றிய புராணம் உண்டு .
சிதம்பரம்:
(கோயில்) சுவாமி - திருமூலநாதர், அம்பிகை - உமையம்மை. தீர்த்தம்- சிவகங்கை, பரமானந்த தீர்த்தம், தில்லை- தலவிருட்சம், மாணிக்கவாசகசுவாமிகள், திரு நீலகண்டநாயனார், திருநாளைப்போவார் நாயனார், மறைஞானசம்பந்த சிவாசாரியர், உமாபதிசிவம் முதலிய எண்ணிறந்தோர் முத்திபெற்ற தலம். திருஞான-2, திருநாவு-8, சுந்தரர்-1 ஆக-11, திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவை, திருவிசைப்பா திருப்பல்லாண்டு, பொன் வண்ணத்தந்தாதி, கோயில் நான்மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், கோயிற்புராணம், சிதம்பர்புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலிய புராணங்களும் ; சிதம்பரமும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, தில்லைக்கலம்பகம், புலியூர் வெண்பா, திருத்தில்லையமகவந்தாதி முதலிய நூல்களும் இத்தலசம்பந்தமாக உள்ளன. சிற்றம்பலமுடையார் அடியெடுத்துக் கொடுக்கத் திருத்தொண்டர் புராணத்தைச் சேக்கிழார் சுவாமிகள் அருளிச்செய்த தலம்.
திருநெல்வேலி:
சுவாமி நெல்லையப்பர், வேணுவனேசுரர், சாலிவாடீசுவரர், அனவரதநாதர். அம்பிகை- காந்திமதியம்மை. மூங்கில் தலவிருட்சம். தீர்த்தம்-தாமிரவருணி, பொற்றாமரை, கம்பாநதி முதலியன. திருஞானபதிகம்-1. தலபுராணம் உண்டு. ஐந்து சபைகளில் இது தாமிரசபை.
திருக்குற்றாலம்:
சுவாமி குற்றாலநாதர், குறும்பலாவீசுரர், அம்பிகை குழல்வாய்மொழியம்மை. தீர்த்தம்-சித்திராநதி. குறும்பலா தலவிருட்சம்; சிவசொரூபம். இதற்குத்திரிகூடமலை என்றும் பெயருண்டு. அகத்திய முனிவரால் விஷ்ணு வடிவத்தைச் சிவலிங்க வடிவமாகச் செய்யப்பட்ட தலம். நடராஜமூர்த்தி சித்திர வடிவில் எழுந்தருளியிருக்கிறார். இங்குள்ள சபை ஐந்து சபைகளில் சித்திரசபையாம். "குழல்வாய்மொழி மங்கைபங்கன் குற்றாலத்து" (திருக்கோவையார்-94) தென்காசியிலிருந்து 31/2 கல் தொலைவு. தலபுராணமும், பிரபங் தங்கள் பலவும் உள்ளன.
திருமலை:
தென்காசியிலிருந்து 8 மைல் ; மலை உயரமானது. தலவிருட்சம்-புளி. இது சம்பந்தமாகத் திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் ஒன்றுண்டு.
திருச்செங்கோடு:
கொடிமாடச்செங்குன்றூர்; நாககிரி எனவும் வழங்கும். சங்கரி துர்க்கத்திலிருந்து தென்கிழக்கில் 6 மைல். ஆலயம் உயர்ந்த மலைமேல் உள்ளது; மலையடிவாரத்தில் ஆறுமுக சுவாமி தேவியாருடன் கோயில் கொண்டு விளங்குகின்றார். மலைமேல் சுப்பிரமணிய சுவாமி சந்நிதி தனியாக உள்ளது; பெரிய திருவுருவம்: வெண்ணிறமாக இருக்கிறார், மலை சிவந்த நிறம். சுவாமி அர்த்தநாரீசுரர்-மேற்கு நோக்கிய இத்தல சம்பந்தமாக உள்ளன. சந்நிதி. அம்பிகை- பாகம் பிரியாளம்மை. சுவாமி பாதத்தில் ஒரு கங்கை ஊற்றுண்டு, திருஞான பதிகம்-1.
கும்பகோணம்: (குடந்தைமாநகர்)
சுவாமி-கும்பேசுவார். அம்பிகை-மங்களநாயகி. தீர்த்தம்-காவிரி, மகாமகதீர்த்தம். பொற்றாமரை முதலியன. உடைந்த அமுதகும்பத்தைச் சேர்த்துச் சிவலிங்க வடிவாக்கித் தம்மைத் தாமே பூசித்துக்காட்டியருளியது. சுவாமி கும்பம் போன்றவர். 12 வருஷத்துக்கு ஒருமுறை சிங்கராசியில் குரு வரும்போது மகாமக விசேடம் உள்ளது. தொண்டைநாட்டு அரசூர் சொக்கப்பப்புலவர் இயற்றிய புராணமும், அகோசமாதவர் இயற்றிய புராணமும் பழையன. மகாவித்துவான் பிள்ளையவர்கள் இயற்றிய புராணமும், மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், திருக்குடந்தைத் திரிபந்தாதிகளும், திருக்குடந்தைவெண்பா, கும்பேசர் குறவஞ்சி முதலிய பிரபந்தங்களும் இத்தல சம்பந்தமாக உள்ளன.
திருவிடைமருதூர்:
மத்தியார்ச்சுனம் இது. சுவாமி-மருதவாணர், மகாலிங்கேசுவரர்; அம்பிகை-பெருநலமாமுலையம்மை. தீர்த்தம் - காருணியாமிருக தீர்த்தம், காவிரித்துறை, தலவிருட்சம்- மருது, வரகுண பாண்டியருக்குப் பிரமகத்தியைப் போக்கி அவர் பணிவிடை கொண்டருளியது; அவர் மனைவியாரையும் அங்கீகரித்தது. திருஞான-பதிகம்-6, திருநாவு-பதிகம் 5, சுந்தரர்-பதிகம்-1 ஆக 12. மருதவன புராணம், பழைய திருவிடைமருதூர்ப் புராணம் ஆக இரண்டு தல புராணங்களும், திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவிடை மருதூர் உலா, திருவிடைமருதூர்த்திரிபந்தாதி, திருவிடை மருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி முதலிய பிரபந்தங்களும் இத்தல சம்பந்தமாகஉள்ளன.
இத்தலமூர்த்தி நடுவண் அமையப்பெற்று மற்றைத்தல மூர்த்திகள் பரிவாரங்களாக உள்ளன.
திருவலஞ்சுழி:
சுவாமி-கபர்த்தீசுவரர், அம்பிகை- பெரியநாயகி. இங்கே அமுதத்தால் அமையப்பெற்ற விநாயகர் விசேடம். அவர் திருமேனியில் பச்சைக் கருப்பூரப்பொடி சாத்தி வழிபடுதல் உண்டு. திருஞான-3, திருநாவு-3 ஆக ஐந்து தேவாரத் திருப்பதிகங்கள் உள்ளன. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை பதினோராந்திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது. விநாயகர் வெள்ளைவாரணப் பிள்ளையார் எனப் பெயர் பெறுவர்.
பட்டீச்சரம்:
சுவாமி- பட்டீச்சுரர், அம்பிகை- பால்வளை நாயகி. தீர்த்தம்-ஞான தீர்த்தம், திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்கு இறைவர் முத்துப்பந்தர் அருளிய தலம். திருஞான பதிகம்-1.
திருவாவடுதுறை:
சுவாமி-மாசிலாமணி ஈசுவரர், அம்பிகை- ஒப்பிலாமுலையம்மை. தீர்த்தம்- கோமுத்தி தீர்த்தம், காவிரி. தலவிருட்சம் -படர் அரசு. திருமூலதேவநாயனார் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்திலிருந்து திருமந்திரம் அருளிச்செய்தனர். திருஞானசம்பந்தர் பொற்கிழி பெற்றருளியதலம். பசுவடிவாக வந்த உமாதேவியாருக்குப் பசுவடிவை மாற்றியணைத்தெழுந்தருளியது. திருமாளிகைத்தேவர், திருமூலர் சந்நிதிகள் உண்டு. ஸ்ரீபஞ்சாக்கரதேசிக மூர்த்திகள் ஆதீனம் சிறப்பாக உள்ளது. திருஞான-பதிகம் 1, திருநாவு-பதிகம்-5, சுந்தரர் பதிகம்-2 ஆக 8. சேந்தனார் திருவிசைப்பாப் பெற்றது. தலபுராணம் இருக்கிறது. திருவாவடுதுறைக்கோவை, துறைசை யமகவந்தாதி, துறைசைச் சிலேடை வெண்பா முதலிய பிரபந்தங்களும் உள.
திருச்செம்பொன்பள்ளி: (செம்பொனார்கோயில்)
சுவாமி- சுவர்ணபுரீசுவரர், அம்பிகை- சுகந்தவனநாயகி. வீரபத்திர தீர்த்தம். திருஞான-பதிகம்-1, திருநாவு- 1 பதிகம் 2; ஆக-3.
திருக்கடவூர்:
சுவாமி- அமுதகடேசுரர், அம்பிகை- அபிராமியம்மை. அமுததீர்த்தம். வில்வம் தலவிருட்சம். அட்டவீரட்டத்தில் ஒன்று. மார்க்கண்டமுனிவர் பூசித்தது. திருஞான-1. நாவு-3, சுந்தரர்-1 ஆக 5. இயமசங்காரமூர்த்தி எழுந்தருளியுள்ளார். அபிராமியந்தாதி இத்தலத்துக்கு உரியது.
திருத்தருமபுரம்:
சுவாமி - யாழ்மூரிநாதர், அம்பிகை - மதுரமின்னாம்பிகை. விண்டுதீர்த்தம், பிரம தீர்த்தங்கள். திருஞான - யாழ்மூரிப் பதிகம்-1. இத்தலம் வேறு.
இப்பிரபந்தத்தில் கூறப்பட்ட திருத்தலம் வேறு; இது மாயூரத்துக்கு அணிமையிலுள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தர் ஆதீனமாம்.
திருவிடைக்கழி:
திருவிசைப்பாப் பெற்ற தலம். முருகவேள் இத்தலத்தில் திருக்குரா நீழற்கீழ் வீற்றிருந்தருளுகின்றார்.
ஸ்ரீகாசி: (வாரணாசி)
சுவாமி- விசுவநாதர், அம்பிகை - விசாலாட்சி, அன்ன பூரணி. தீர்த்தம்-கங்காநதி. இத்தலம் முத்தித்தலம் ஏழனுள் ஒன்று. உமாதேவியார் கைவிரலில் தோன்றிய கங்காநதி மணிகர்ணிகை முதலிய அநேக துறைகளோடு விளங்கப்பெறுவது. அங்கே இறப்பவர்களுக்கு விசுவநாதர் தாரக மந்திரத்தை உபதேசித்து முத்தியடைவிப்பர். கால வயிரவர் காவலுடன் கூடியது. காசிகண்டம், காசி ரகசியம், காசிக்கலம்பகம் முதலியன இத்தல சம்பந்தமாக உள்ளன. வைப்புத்தலம் இது.
திருவாதவூர்:
சமயகுரவர் நால்வருள் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் திருவவதாரம் செய்தருளிய தலம். சுவாமி- வாதபுரீசுவரர், அம்பிகை- உமாதேவியார். தீர்த்தம்- சிவகங்கை. மதுரை யிலிருந்து 27 கல்.
திருவிரிஞ்சை:
திருக்கரபுரம் என்னும் வைப்புத்தலம். பிரமன் பூசித்தலின் விரிஞ்சை எனவும், கரன் பூசித்ததாகலின் கரபுரம் எனவும் பெயர் பெற்றது. சுவாமி- மார்க்கசகாயர், அம்பிகை- மரகதவல்லி. தீர்த்தம்- சத்தி தீர்த்தம், பாலியாறு. விரிஞ்சிபுரம் ரெயில்வே ஸ்டேஷன். புராணமும், பிள்ளைத்தமிழும் உண்டு .
பிரம்பூர்:
இத்தலம் இப்பொழுது குமாரக்கடவுள் ஆலயமாய் விளங்குவது. சிவபெருமானும் பார்வதி தேவியாரும் அக் கோயிலினுள் வீற்றிருந்தருளுகின்றனர். சுவாமி-குமாரக் கடவுள், அம்பிகை-வள்ளியம்மையார், தெய்வயானையம்மையார். மங்கைநல்லூர் செயில்வே ஸ்டேஷனுக்கு 5 மைலில் உள்ளது.
கந்தமாதனம்: (திருச்செந்தூர்)
சுவாமி - கந்தசுவாமி, அம்பிகை - வள்ளியம்மையார், தெய்வயானையம்மையார். தீர்த்தம் - வதனாரம்பம் (சமுத்திரம்) வேலாயுதகூபம் (நாழிக்கிணறு).
ஸ்ரீசயிலம்:
இது மல்லிகார்ச்சுனம், சீபர்ப்பதம் எனவும் பெயர் பெறும். தலவிருட்சம் - மருது. மருதமரத்தைத் தல விருட்சமாகவுடைய தலங்கள் மூன்று: அவை- மல்லிகார்ச்சுனம், மத்தியார்ச்சுனம், புடார்ச்சுனம் என்பன. சுவாமி பருப்பதநாதர், ஸ்ரீசயிலநாதர், மல்லிகார்ச்சுனர்; அம்பிகை - பருப்பதநாயகி, மனோன்மணி, பிரமராம்பிகை. - கர்நூல் ஜில்லாவிலுள்ள நந்தியால் நிலையத்திலிருந்து வடகிழக்கில் உள்ளது. நந்தியால்- ஆத்மகூர் 32 மைல்,+பெத்தச்சரிவு 25 மைல் + ஸ்ரீசயிலம் சுமார் 10 மைல். கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரமானது. இது வீரசைவர்களுக்கு முக்கியதலம் என்பர். மகாசிவராத்திரி காலத்திலே திருவிழா நடைபெறும். திருஞான - பதிகம் 1, திருநாவு-1, சுந்தார்-1, ஆக-3. திருக்கோகரணம்:
பம்பாய் இராசதானியில் வடகன்னடம் ஜில்லாவில் உள்ளது. சுவாமி-கோகரணநாதர், மகாபலேச்சுரர், மேற்கு நோக்கிய சந்நிதி: கடற்கரை. ஆதிகோகர்ணேசுவரர் தனிச் சந்நிதியாக உள்ளது. அம்பிகை- கோகர்ணநாயகி. திருஞான-1, திருநாவு-1, ஆகத்திருப்பதிகம் 2. இராவணனால் குட்டுண்ட விநாயகர் சந்நிதி தனிக்கோயிலாக அமைந்துள்ளது. சேலம் பங்களூர்- தும்கூர் - அரிசிக்கரை-ஸ்ரீமுகா- சாகர் – தாளகுப்தா- ஷீர்ஷி-மதங்கேரி-கோகரணம்; இந்த வழியே எளிதான வழியாம்.
திருவஞ்சைக்களம்:
சுவாமி-அஞ்சைக்களத்தப்பர், அம்பிகை-உமையம்மையார். தீர்த்தம்-சிவகங்கை . சுந்தரர் பதிகம்-1. சேரநாடு. சுந்தரமூர்த்திசுவாமிகள் இங்கிருந்து அயிராவணத்தில் ஏறிக் கயிலாயம் சென்றனர்.
ஷோரனூர் - இருஞாலக்கடை - கருவப்படந்தை - திருவஞ்சைக்களம்; கொடுங்கோளூர்.
திருவெண்ணெய்நல்லூர்:
பண்ணுருட்டிப் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே திருக்கோவலூருக்குப் போகும்வழியில் 15 கல் தொலைவு. சுவாமி- தடுத்தாட்கொண்டநாதர், அம்பிகை-வேற்கணம்மை. தீர்த்தம் - பெண்ணைநதி. சுந்தரமூர்த்திசுவாமிகளைத் தடுத்தாட்கொண்டருளிய தலம். ஆலயம்- திருவருட்டுறை. ஸ்ரீமெய்கண்டதேவநாயனார் எழுந்தருளியுள்ள திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச்சொந்தமானது. சுந்தரர் பதி-1.
விருத்தாசலம்: (திருமுதுகுன்றம்)
சுவாமி - பழமலைநாதர், அம்பிகை - பெரியநாயகி. மணிமுத்தாநதி தீர்த்தம். வன்னி- தலவிருட்சம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவர் பால்பெற்ற பொன்னை இத்தலத்தில் ஆற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்தருளினர். திருஞான-7, திருநாவு-1, சுந்தரர்-3 ஆகப்பதிகம்-11. தலபுராணம் உண்டு. பழமலையந்தாதி, பழமலைக்கோவை முதலிய பிரபந்தங்களும் உள்ளன.
திருநாவலூர்:
சுவாமி- நாவலேசுரர், அம்பிகை-சுந்தரநாயகி. நாவல் தலவிருட்சம். சுந்தரமூர்த்திநாயனார் அவதாரத்தலம். தீர்த்தம்- கருட தீர்த்த ம். சுந்தரர் பதிகம்-1.
இலஞ்சி:
திருநெல்வேலியைச்சார்ந்த திருக்குற்றாலத்துக்கு வடக்கே உள்ளது. சுப்பிரமணியத்தலம், அகத்தியமுனிவரால் பிரதிட்டை செய்யப்பட்ட இருவாலுகேசர் என்னும் சிவலிங்கமூர்த்தி உள்ளது. பிரமதேவர் முதலியோர் பூசித்துப் பேறுபெற்றனர். தலவிருட்சம்- மகிழமரம். இலஞ்சியுலாப்பிரபந்தம் உண்டு.
வேள்விமலை:
நாஞ்சில்நாட்டில் உள்ளது என்பர்.
வள்ளியூர்:
தென்பாண்டி நாட்டில் உள்ள சுப்பிரமணிய ஸ்தலம்.
திருமலை:
இது திருக்குற்றாலத்துக்கு அருகேயுள்ள தலம்.
மாயூரம்:
தேவாரம் பெற்ற சிவதலம். காவிரிக்குத் தெற்கில் உள்ளது. திருமயிலாடுதுறை என்பதன் மரூஉ மயிலை என்பதாம். இது தென்மயிலை என்பர். சுவாமி-பிரமலிங்கம், வள்ளலார், கௌரீமாயூரநாதர், மாயூரநாதர் என்னும் திரு நாமமுடையவர். அம்பிகை - அபயப்பிரதாம்பிகை, அபயாம்பிகை, அஞ்சல்நாயகி என்னும் திருநாமங்கள். தல விருட்சம்-மா, உமாதேவியார் மயிலுருவம் கொண்டு பூசித்த தலம். வருஷந்தோறும் ஐப்பசிமீ அம்பிகையுடன் சுவாமி காவேரிக்கு எழுந்தருளி விருஷப தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளுவர். ஐப்பசிமீ அமாவாசை பகல் 15 நாழிகைக்கு இத்தீர்த்தத்தை எடுத்து வைத்தால் மிகத்தூய்மையுடன் பலவருடங்கள் இருக்கும். வடமொழியில் நான்குபுராணங்கள் உள்ளன. பொன் விளைந்த களத்தூர் ஆதியப்பநாவலர் (350 ஆண்டுகள் முன்பு) செய்த புராணமும், பிள்ளையவர்கள் செய்த புராணமும் தமிழில் உண்டு. அபயாம்பிகை பிள்ளைத்தமிழ், திருமயிலைத்திரிபந்தாதி, மயிலைச்சிலேடை முதலிய பிரபந்தங்களும் உள்ளன. திருஞான-2, திருநாவு-1 ஆக 3 பதிகங்கள்.
திருமயிலை: ( மயிலாப்பூர் )
சுவாமி - ஸ்ரீகபாலீசுரர். மயிலாப்பு என இதுமுற்காலத்து வழங்கியது. உமாதேவியார் மயிலுருவம் கொண்டு பூசித்தார். அம்பிகை-கற்பகவல்லி. விநாயகர் திருநாமம்- நடனவிநாயகர். முருகவேள்-சிங்காரவேலர். தலவிருட்சம்-புன்னை. தீர்த்தம் -சத்திகங்கை முதலிய பலஉள. பூம்பாவையின் என்பைத் திருஞானசம்பந்தர் பதிகம்பாடிப் பெண்ணாக்கிய பெருமையுடையது. இதனால் இறைவர் பூம்பாவையீசுவரர் என்னும் ஒரு திருநாமம் பெற்றார். திருஞான-1. திருமயிலையுலா, திரு மயிலைக்கலம்பகம், திருமயிலைவெண்பாமாலை, கபாலீசர் பஞ்சரத்தினம், கற்பகவல்லிமாலை, சிங்காரவேலர் கோவை, சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ், சிங்காரவேலர் வெண்பா முதலிய பிரபந்தங்கள் இத்தல சம்பந்தமாக உள்ளன.
சங்கரநயினார்கோயில்:
சுவாமி-சங்கரர், சங்கரலிங்கம், சங்கரநாராயணர், வன்மீகநாதர் : அம்பிகை-கோமதி, ஆவுடைநாயகி. இத்தலத்தின் வேறுபெயர் ராசை என்பது ; இது ஸ்ரீராஜபுரம் என்பதன் மரூஉ என்று தெரியவருகிறது. இத்தலத்து விருட்சம் புன்னை. நாகவனம் எனவும் இத்தலம் வழங்கும். நாகம்- புன்னை; தீர்த்தம்- நாகசுனை, தேவதீர்த்தம் என்பன. இத்தலத்து இறைவர் சங்கரரும் நாராயணரும் கலந்த திருவுருவம். சங்கன், பதுமன் என்னும் மாநாகர் இருவருள் ஒருவர் உண்மைப்பொருள் சிவபெருமான் என்றும், மற்றொருவர் திருமால் என்றும் வாதித்துக்கொண்டிருந்து பின்னர் வியாழ பகவானது ஏவலால் வந்து இத்தலத்தில் தவஞ்செய்ய, இருவரும் ஒருவர் என்பது அவர்களுக்குப் புலப்படச்செய்ததற்கு இறைவர் சங்கரநாராயணத் திருவுருவத்தைக் காட்டியருளினர் என்பது வரலாறு. சிவபெருமானுக்குரிய அறுபத்து நான்கு மூர்த்தங்களுள் சங்கரநாராயண மூர்த்தமும் ஒன்று. சங்கரன்கோயில் எனவும் வழங்கும். தென்பாண்டி நாட்டாருக்கு இது மிகவும் முக்கியமான ஸ்தலம். தமிழ்ப்புராணம் ஒன்றும், சங்கரலிங்கவுலா, சங்கரநயினார்கோயில் அந்தாதி முதலிய பிரபந்தங்களும் இத்தலத்துக்கு உள்ளன.
கரிவலம்வந்தநல்லூர்:
இது கருவை எனவும் வழங்கும். பாண்டி நாட்டில் உள்ள சிவ தலங்களில் ஒன்று. குலசேகரபாண்டியன் வேட்டையாடும்போது எதிர்ப்பட்ட ஒரு யானையைத் துரத்த, அது வேகமாகச் சிவபிரான் இருந்த புதரை வலமாகவந்து இறந்த பின்பு சிவகணமாகச் சென்றமையால் இத்தலம் அப்பெயர் பெற்றது என்பர். சுவாமி - பால்வண்ணநாதர், முக லிங்கர், திருக்களாவீசர் ; அம்பிகை-ஒப்பனையம்மை. தல விருட்சம்:- திருக்களா. இத்தல சம்பந்தமாக அதிவீரராம பாண்டியர் இயற்றிய திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி, திருக்கருவைவெண்பா அந்தாதி, திருக்கருவைக் கலித்துற யந்தாதி முதலிய பிரபந்தங்கள் உள்ளன. இவைகளை இயற்றிய ஆசிரியர் வரதுங்கராமபாண்டியர் எனவும் கூறுவர்.
திருவதிகை:
பண்ணுருட்டி நிலையத்திலிருந்து இது தென்கிழக்கில் சுமார் 2 மைல். கெடில நதியின் வடகரையில் உள்ளது. அட்டவீரட்டத்தலத்தில் ஒன்று; சுவாமி -வீரட்டேசுரர், அம்பிகை- திரிபுரசுந்தரி. தீர்த்தம் - கெடிலநதி. திரிபுரதகனத்தலம் என்பர். திலகவதியம்மையார் வழிபட்டது, திருநாவுக்கரசு சுவாமிகளுக்குச் சூலைநோயைக் கொடுத்தருளித் தீர்த்ததலம்; ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என்ற பதிகமே அந்நோயைத் தீர்த்தருளப் பாடியது. பிநாகபாணியாய்ச் சிவபெருமான் அம்மையாருடன் இங்கே எழுந்தருளிய காட்சி அழகியது. சரக்கொன்றை தலவிருட்சம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குச் சித்தவடமடத்திலே திருவடி சூட்டியது. ஆலயம் குணபாவீச்சுரம் என்பது, திருநாவுக்காசுசுவாமிகள் திருவுருவமும், திலகவதியார் திருவுருவமும் சிறப்பாக அமைந்துள்ளன. அதிகை தலம், வீரட்டானம் கோயில்.
திருவருணை:
திருவண்ணாமலை, அருணாசலம் முதலிய பெயர்கள் உள: சுவாமி-அண்ணாமலைநாதர், அம்மையார்-உண்ணாமுலையம்மை. தீர்த்தம்-சிவகங்கை, பிரமதீர்த்தம் முதலிய பல உள. சிவபெருமான் புத்திரவடிவங்கொண்டு வல்லாளனுக்கு உத்தரகிரியையும் செய்தார் என்பர். பிரமவிஷ்ணுக்கள் அடி-முடிதேடியுங் காணாத அக்கினிப்பிழம்பாகத் தோன்றிப்பின்பு அவர்களுக்கு அருள் செய்த தலம். அக்கினிமலை, சுவர்ணமலை, தாமிரமலை, கல்மலை என முறையே நான்கு யுகங்களிலும் காட்சியளிப்பது. பஞ்சபூத தலங்களில் தேயுத்தலம், நினைக்க முத்தியளிப்பது. கார்த்திகை மாதத்துக் கார்த்திகைநாளில் தீபதரிசனக்காட்சி பிரசித்தமானது. பார்வதிதேவியார் தவஞ்செய்து சிவபிரானுடைய இடப்பாகம் பெற்ற தலம். இரண்டாம்பிரகாரம் மேல்புறத்தில் விஷ்ணுமூர்த்தி புல்லாங்குழல் வாயில்வைத்து ஊதும் திருவுருவம் உள்ளது. திருஞான்-2, திருநாவு-3 ஆகத் தேவாரத்திருப்பதிகம்-5. ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் இத்தலத்தில் எழுந்தளியபோது திருவெம்பாவை, திருவம்மானை முதலிய பகுதிகள் செய்தருளினர். ஸ்ரீ அருணகிரிநாதர் அவதாரத்தலம். அருணாசல புராணமும், அருணையந்தாதி, அருணைக்கலம்பகம், சோணசைலமாலை, அருணகிரியந்தாதி முதலிய பிரபந்தங்களும் உண்டு. அருணகிரி புராணமும் இத்தலத்துக்குரியதே. அண்ணாமலை வெண்பா, அருணாசலேசுரர் சாரப்பிரபந்தம், அருணசலேசுரர் பதிகம், அண்ணாமலையார் வண்ணம், அண்ணாமலைச்தகம், அருணாசலசதகம், உண்ணாமுலையம்மன் சாதகம் முதலிய பல சில பிரபந்தங்களும் உள்ளன. இத்தலம் நடுநாட்டில் உள்ளது.
திருவாமாத்தூர்:
சுவாமி- அழகியநாயகர், மாதைநாதர், காமார்த்தேசுவரர்; அம்பிகை. அழகியநாயகி. தீர்த்த ம்- பதுமதீர்த்தம், பம்பைத்துறை, பிருங்கி, ஸ்ரீகாமர் பூசித்த தலம். பசுவும் பூசித்தது. வன்னி தலவிருட்சம், சுவாமி கிழக்குநோக்கியவர், அம்பிகை மேற்கு நோக்கியவர். திருவாமாத்தூர்க்கலம்பகம் இரட்டையர் பாடியது. திருஞான-2, திருநாவு-2, சுந்தரர்-1 ஆகப்பதிகம் 5. பசுக்களுக்குத் தாயாக இறைவர் அருளும் தலம்; பசுக்கள் - உயிர்வர்க்கங்கள். தசரதராமன் பூசித்த செய்தி “ராமனும் வழிபாடுசெய்ஈசன்" என்று திருக் குறுந்தொகையில் அப்பர் சுவாமிகள் அருளிச் செய்திருக்கிறார்கள். இத்தலம் விழுப்புரம் புகைவண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே சுமார் 3-மைல் அளவில் உள்ளதென்பர்.
எருக்கத்தம்புலியூர்:
விருத்தாசலத்துக்குக் தெற்கே 7-மைல். சுவாமி நீலகண்டர், அம்பிகை-நீலமலர்க்கண்ணி, தீர்த்தம்- நீலோற்பலதீர்த்தம், வெள்ளெருக்கு தலவிருட்சம். திருநீலகண்டப் பெரும்பாணர். திருவவதாரம் செய்த தலம். இராசேந்திரபட்டணம் என்பர். திருஞான-பதிகம் 1.
கொடுங்குன்று:
பிரான்மலை எனவழங்கும். மதுரைக்கு வடகிழக்கில் 42-மைல் தொலைவு. சுப்பிமணியர் சந்நிதி விசேடம். சுவாமி கொடுங்குன்றீசர், அம்பிகை- குயிலமுதாயகி. சுந்தர தீர்த்தம். மங்கைநாதர் மணவாளக்கோலம். திருஞான பதிகம்-1
நாகபட்டினம்:
நாகைக்காரோணம் என்பது சத்தவிடங்கத்தலங்களில் ஒன்று. சுவாமி-ஆதிபுராணேசுவரர் அம்பிகை- நீலாயதாட்சி. சுந்தரவிடங்கர்: புண்டரீகமகாருஷியை இறைவர் காயத்தோடு ஆரோகணம் செய்து கொண்ட தலம். அதனால் இறைவர் காயாரோகணர் என்னும் பெயர்பெற்றார். தீர்த்தம்தேவதீர்த்தம், சர்வதீர்த்தம், புண்டரீகதீர்த்தம், அக்கினி தீர்த்தம் முதலியன. தலவிருட்சம்- மா. திருஞான -2, திருநாவு-4, சுந்தரர்-1 ஆகத்திருப்பதிகங்கள்-3. நாகைக்காரோணபுராணம் மகாவித்துவான் பிள்ளையவர்களால் செய்யப்பெற்றது.
சிக்கல்:
சுவாமி- நவநீதநாதர் (வெண்ணெய்லிங்கேசுரர்), அம்பிகை- வேல் நெடுங்கண்ணி, தீர்த்தம்-பாற்குளம், தல விருட்சம்- மல்லிகை. வசிட்டர், காமதேனு பூசித்த தலம். சிங்காரவேலர் மிக அழகிய மூர்த்தி; கட்டுமலையின் மேல் அவர் சந்நிதியுள்ளது. இத்தலத்தில் சூரசங்காரவிழா மிக விசேடம். காமதேனுவின் பால்பெருகி எங்கும் வெண்ணெயாகப் படிந்து உறைந்திருந்தது, அதனைத்திரட்டி எடுத்து வசிட்டர் சிவலிங்க வடிவாக்கிப்பூசித்தார். அதனால் வெண்ணெய் லிங்கேசுரர் என்னும் நாமம் பெற்றார். அந்த லிங்கத்தை வேறிடத்திலே வைக்க எடுக்கும்போது அவ்விலிங்கமூர்த்தி வராமல் சிக்கிக்கொண்டபடியால் சிக்கல் என அவ்வூர் பெயர்பெற்றது என்பது வரலாறு,
கீழ்வேளூர்:
இது சுப்பிரமணியக்கடவுள் சிவபிரானைப் பூசித்த தலம். சுவாமி- கேடிலிநாதர், அக்ஷயலிங்கேசுவார், அம்பிகை-வனமுலைநாயகி, அகத்தியமுனிவருக்கு வலது திருவடி தரிசனம் தந்த சபாபதி மூர்த்தம். சிவஞான தீர்த்தம்; இலந்தை தல விருட்சம். திருஞான-பதிகம்-1, திருநாவு-பதிகம் 1 ஆக 2 இத்தலசம்பந்தமான உலா ஒன்றுண்டு..
பேரூர்:
சுவாமி-பட்டீசர், அம்பிகை- மரகதவல்லியம்மை. அரசம்பலவாணர். நாரதர், காலவன், காமதேனு முதலியோர் பூசித்தது, புராணம் உண்டு. வைப்புத்தலம். கோயம்புத் தூரிலிருந்து 2-கல்.
போருர்:
சுப்பிரமணியத்தலம். சமரபுரி எனவும் வழங்கும். திருப்போரூர்ச் சந்நிதிமுறை ஸ்ரீசிதம்பரசுவாமிகள் பாடியருளினர்.
திருவொற்றியூர்:
சுவாமி- மாணிக்கத்தியாகர், அம்பிகை- வடிவுடையம்மை. ஆதிபுரீசுவர் திரிபுரசுந்தரி எனவும் வழங்கும். ஸ்ரீ சுந்தரமூர்த்திசுவாமிகளுக்குச் சங்கிலியாரை மணம்புரிவித்த தலம். பிரமன் பூசித்தது. பிரமதீர்த்தம், தலவிருட்சம் மகிழமரம். திருஞான-1, திருநாவு-5, சுந்தரர்-2 ஆக 8 பதிகங்கள்.
திருக்கழுக்குன்றம்:
சுவாமி-வேதகிரீசுவரர், அம்பிகை- பெண்ணினல்லாள். தீர்த்தம்- பட்சிதீர்த்தம், நந்தீசுவரதீர்த்தம். கழுகுகள் பூசிக்கும் தலம். ஞான-1, நாவு-1, சுந்தரர்-1 ஆகப்பதிகம் 3. புராணம் உண்டு. திருக்கழுக்குன்றக் கோவை, திருக்கழுக்குன்றச் சிலேடைவெண்பா முதலிய பிரபந்தங்களும் உள.
திருவக்கரை:
சுவாமி -சந்திரசேகரர், அம்பிகை- வடிவாம்பிகை, அமுதாம்பிகை, வக்கிரன் என்னும் அசுரன் பூசித்த தலம். பிரமதீர்த்தம், சந்திர தீர்த்தம். தீருஞான பதிகம் 1.
எட்டிகுடி:
திருக்குவளை, திருவாய்மூர் இவைகளுக்கு மத்தியில் உள்ள சுப்பிரமணியத்தலம்.
எண்கண்:
கும்பகோணமிருந்து திருவாரூர் செல்லும் கற்சாலையில் திருவாரூர் குடவாயில் தலங்களுக்கு மத்தியில்உள்ளது. (9மைல், 5 மைல்). பிரமன் பூசித்த தலம். பிரமதீர்த்தம். தைப்பூச விசேஷம்.
திருவேரகம்: (சுவாமிமலை)
கும்பகோணத்திலிருந்து - 4மைல் மேற்கே உள்ளது. புகைவண்டி நிலயம் உண்டு.
கழுகுமலை:
கோயிற்பட்டியிலிருந்து மேற்கே கற்சாலை வழியில் 12 மைல்.
விராலிமலை:
குளத்தூர் ஸ்டேஷனிலிருந்து தென் மேற்கே கற்சாலைவழியில் 7 மைல் தூரம் உள்ளது.
----------x-x-x-x-x-------
உ
சிவமயம் - திருச்சிற்றம்பலம்
காஞ்சிபுரம் - சிதம்பரமுனிவர் அருளிச்செய்த
சுப்பிரமணியக் கடவுள் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழ்
விநாயகர்
ஓங்கார வடிவுகொண் டொருகுடிலை தனினாதம்
ஓங்குபிளி றாமுழக்கால்
ஓரைந்து கலைகளும் மந்த்ரபத வன்னமும்
உபாதான மூன்றிலைந்தேழ்
ஆங்கார முதலான தத்துவமொ டண்டமுண்
டாக்கமுத லைந்துவிளையாட்
டாடுமா னந்தவனம் வளர்குஞ் சரக்கன்றின்
அடிமலரை யஞ்சலிப்பாம்
ஊங்கார மொன்றிலே சூர்மாவை வென்றருளும்
ஒளிர்வேல னாறுமுகவன்
ஒரு பரம் பொருளெம்மை யாளருண கிரிநாதர்
ஓதுந்தி ருப்புகழெனும்
தாங்கார மணிமார்ப னம்புவியி லொருநூறு
தலமேவு குமரகுருவின்
தண்டைகிண் கிணியணி சரணங்கள் புகழுநந்
தமிழ்மாலை தழைகவென்றே.
_____________________
1. காப்புப் பருவம்
கயிலாயம் - விஷ்ணு
கயிலாய சிகரத்து விசுவபதி யுலகீன்ற
கருணையுமை வீற்றிருக்கும்
கனகமணி மந்த்ரசிங் காதனத் தேமேவு
கந்தசுவா மியைமுருகனைக்
குயிலான அதிமதுர மொழிகங்கை மைந்தனைக்
குணபூ தரக்கடவுளைக்
கோகனக னுக்குமுன் குடிலையுப தேசஞ்செய்
குமரகுரு வைப்புரக்க
மயலான பரையாதி யிச்சைஞா னக்கிரியை
வந்துதரு மேகசத்தி
மகிழ்சிவன் போககா லத்திற் பவானியாய்
வளர்கோப காலத்திலே
அயிலாரும் வேற்காளி யாயுத்த காலத்தில்
அதிபல மகாதுர்க்கையாய்
அகிலந் துதிக்குநா ளறிதுயில்கொள் ளரியாம்
அனந்தகல் யாணகுணமே. (1)
---------------------
கந்தமாதனம் - பரமசிவம்
செங்கனக மானசபை யம்பரக் கூத்தினன்
திங்களர வாறிதழி தும்பையைச் சூட்டினன்
திண்புவியில் நால்வர்புகழ் செந்தமிழ்ப் பாட்டினன்
சிம்புள்வடி வாகிநிறை யண்டரைக் காத்தவன்
தங்குமணி வாயுரக கங்கணக் காப்பினன்
சந்த்ரநிக ராகவொளிர் சங்கநற் றோட்டினன்
சம்புசன காதியர்க ளின்புறப் பார்த்தருள்
தந்தைகயி லாயனடி சிந்தைவைத் தேத்துதும்
மங்குல்படி வானவர்கள் பைந்தருத் தோப்பினுள்
மண்டுகுற மாதர்பயில் செந்தினைக் காட்டினுள்
வந்தவருள் மாதரனைக் கந்தனைக் கூக்குரல்
வண்டுநிமிர் தேனிறை கடம்பனைக் கீர்த்தியொண்
கங்கையுமை பார்வதிகு ழந்தையைப் பூவி லுறை
கஞ்சமல ரோன்மொழி யகந்தையைத் தீர்த்துநங்
கண்கள்களி கூரவரு மெந்தையைக் கோட்டுயர்
கந்தகிரி யாறுமுக மைந்தரைக் காக்கவே. (2)
-----
திருப்பரங்கிரி - உமையம்மை
புவனமிரு பத்துநா லிருநூறு முய்யவே
பூமேவு சதுமுகத்தோன்
புகழுஞ் சடங்குக ளியற்றப் புரந்தரன்
பூம்புனல் பொழிந்துநிற்பச்
சிவபரங் கிரியிலரு ளாறான னத்திலோர்
திருமுகத் தால்மகிழ்ந்தே
செகதன்னை யாகிவரு தெய்வானை யைமணஞ்
செய்குமர னைப்புரக்க
நவபேத முஞ்சத்தி பேதமுந் தானாகி
நாடுகுண் டலிசிலம்பாய்
நாதபர மானந்த மேசிலம் பொலியாக
ஞானவா னந்தவடிவாய்ப்
பவமகற் றும்பெரிய வத்துவித மாகவே
பரமநா டகநடிக்கும்
பரமசிவ சூரியன் திருவருட் கிரணமாம்
பரப்பிரம வித்தையுமையே. (3)
----
திருச்செந்தூர் - கங்கை
செந்திலம் பதியில்வந் தாறான னத்திலொரு
திருமுகத் தால்மகிழ்ந்தே
சிங்கனொடு தாருகன் சூரபத் மாமுதல்
தெவ்வரையெ லாஞ்செயித்தே
இந்தரன்முதல் முப்பத்து முக்கோடி தேவர்களும்
இருவருடன் முனிவரர்களும்
எல்லாரு மகிழவே தேவர்சிறை மீட்டருளும்
எந்தைகுக னைப்புரக்க
சந்த்ரா யுதங்கோடி யனையதிரு மேனியும்
சலராசி பொழிகும்பமேல்
தாங்குசெங் கைகளும் அபயமும் வரதமும்
தண்கருணை முகமிரங்க
அந்திவண் ணச்சடா மௌலியுங் காசியும்
அடியார்கண் ணுங்கருத்தும்
அகலாம னிறைகின்ற கங்கைநா யகியென்னும்
ஆனந்த அருள்வெள்ளமே. (4)
-----
திருவாவினன்குடி - விநாயகர்
திருவாவி னன்குடியி லாறான னத்திலொரு
திருமுகத் தால்மகிழ்ந்தே
செகதலப் பூமியந் தரசொர்க்க முத்தலந்
தேவரொடு மனிதராகி
வருவோர்கள் கேட்டவரம் வரையாம லேதினம்
மகிழ்ந்துதந் தருள்வள்ளலை
வளரண்ட கோடிகள் வளர்க்குமயில் வாகனனை
மைந்தனைத் தனிபுரக்க
உருவான தோன்முகனை வென்றஞான் றிந்திரனும்
உம்பர்களு மாலுமயனும்
ஓங்குதோன் முகனுக்கு நாங்கள்செய் குற்றேவல்
ஒருவனீ கைக்கொளென்று
மருவாரு மலர்தூவி யனைவருந் தங்கள் சிரம்
வாய்மூடிக் குட்டிநின்று
மதசலவி பானனத் தெந்தையரு ளென்னவே
வந்தருள்செய் கருணைமலையே. (5)
----
திருவேரகம் - வயிரவர்
ஏரகத் தேயாறு வதனத்து ளருள்பொழியும்
ஏகமா மானனத்தால்
எவ்வுயிரை யுந்தடுக் கும்பாச மோகமா
மேகவிருள் மாற்றவடியார்
நாரகத் தேநாக வட்டத்த னந்தாவி
நற்சோதி போலுதிக்கும்
ஞானப்பிர காசத்தை வைத்தருளு மொருசுவாமி
நாதனைத் தனிபுரக்க
தாரகப் பிரமவுப தேசஞ்செய் காசிபொற்
சபையாதி பதிகளுறைவோர்
சரியைகிரி யாயோக ஞானபா தஞ்செயும்
தன்னடிய ரைப்புரக்கக்
காரகத் தெமனூர்தி மணிவா யடைக்கக்
கனாவோடு நனவிலுந்தன்
காலிற்சி லம்புகல கலவென வேவரும்
காலவயி ரவநாதனே. (6)
குன்றுதோறாடல் - வீரபத்திரர்
குன்றுதோறாடலுட் குளிர்வதன் மாறனுட்
குறுநகைசெய் வதனமொன்றால்
கொண்டவகி லாண்டகோ டிகளினிறை வாஞ்சீவ
கோடிக ளிளைப்பாறவே
அன்றுதா னுறுபாச வைந்தந்த காரமற
அருளாம கோதயத்தால்
ஆனந்த வெள்ளத் தழுத்திவிளை யாடுமென்
அருள்முருக னைப்புரக்க
ஒன்றுதா னானசிவ னும்பர்நா யகன்விழியின்
ஓராயி ரந்திருமுகம்
உபயமெனு மாயிரஞ் செங்கையுட னேயுதித்
தொருசண்ட மாருதமெனச்
சென்றுதா ணுவைமறந் திடுதக்கன் முதலாம்
சிவத்ரோக முற்றபேரைச்
சிட்சித்து லோகத்தை ரட்சிக்க வேவந்த
செய்வீர பத்ரகுருவே. (7)
பழமுதிர்சோலை - பிரமன்
ஏர்கொள்பழ முதிர்சோலை மலையினுட் சண்முகத்
தேகமெனும் மதிமுகத்தால்
இந்த்ராதி யிமையோர்கள் சந்த்ரரொடு சூரியர்கள்
எண்டிசா முகநாயகர்
கூர்கொள்படை மனுமன்னர் வாழுமறை யோர்களைக்
கொண்டுமறை வேள்விசெய்யும்
குமரனைப் பாகீ ரதிச்சர வணத்துக்
குழந்தையைத் தனிபுரக்க
கார்கொள்திரு மேனியன் செங்கமல நாபிவரு
கான்முளை மலர்ந்தவெள்ளைக்
கமலாச னத்தம்மை குடிகொண்ட நாவினன்
கருணைபொழி சதுரானனன்
பார்கொள்பிர மாண்டமு மனந்தமுனி வரர்களும்
பகர்வரிய பழமறைகளும்
படைத்துவைத் துப்படிப் பித்திடும் சததளப்
பத்மாச னக்கடவுளே. (8)
சிதம்பரம் - காளி
சீரார் திருச்சிற் றம்பலத்துட் செம்பொன் மேலைக் கோபுரத்தே
திகழு மூவா யிரர்பூசை செய்யு மாறு முகவேளைக்
காரார் கூந்தற் சிவகாமி காண வருளா னந்தநடம்
காட்டும் பரம சிவனருளுங் கருணாநிதியைத் தனிபுரக்க
நீரார்வெண்டா மரையாளும் நெடியோன்செந் தாமரையாளும்
நிறைவாஞ் சத்த மாதாவும் நினைக்குந் துர்க்கை மாதாவும்
பாரார் தரிக்கு முகங்கரங்கண் பரவா யிரமீ ராயிரமேற்
பகரு மூவா யிரம் வீர பத்ர காளி யன்னையுமே. (9)
காசி - முப்பத்து முக்கோடி தேவர்கள்
உருவரா தென்றுதன் னெல்லைவட் டத்தினுள்
உற்றிருந் தேயிறந்தோர்க்
குத்தரீ யத்தினா லுமையிளைப் பாற்றவே
உம்பர்கோன் விசுவபதிவந்
தொருவலச் செவியினுட் டாரகப் பிரமத்தை
உபதேச மாயருளியும்
ஓரெட்டு வடிவுதரு காசிநகர் வேலவனை
யொருமுருக னைப்புரக்க
தருவெனுங் கற்பகா டவியரச னிந்த்ரனொடு
சங்காரச டாடவியில்வாழ்
தருதரங் கக்கங்கை மாநதி படிந்துசிவ
சாரூப முற்றவர்கள்போல்
முருகுவளர் கொன்றையணி கோடிபதி னொன்றென்னும்
முக்கணிமை யாதருத்ரர்
மொழிந்திடு மருத்துவர் வசுக்களெனு முப்பத்து
முக்கோடி தெய்வங்களே . (10)
-------------
2. செங்கீரைப் பருவம்
திருவாரூர்
உன்கருணை மெய்யாட வுதயரவி யொளியாட
உபயசர ணங்களாட
உயர்நாத மானசபை யொலியாட விந்துவாம்
ஓங்குமிகு தண்டையாட
மின்குலவு நவரத்ன மகரகுண் டலமாட
மிகுகருணை வதனமாட
வெற்றிவேல் தாங்குசெங் கையாட அருளாட
விமலமலர் நயனமாட
என்கண்ணி னிற்குமருள் நகையாட நுதலாட
இட்டவெண் ணீறாடவே
ஏரார் விராட்புருட னாறுதா னத்தே
இலங்குமூ லாதாரமாம்
தென்கமலை நகர்மேவு தேவாதி தேவனே
செங்கீரை யாடியருளே
தியாகேச னுமைதவிசி னடனஞ்செய் கந்தனே
செங்கீரை யாடியருளே. (11)
இராமேச்சுரம்
சச்சிதா னந்தவ னந்தகல் யாணகுண
சருவக்கிய சூடாமணி
சருவபரி பூரண பரப்பிரம மேபெரிய
தற்பரஞ் சோதிவடிவே
அச்சமொன் றில்லா வசஞ்சல வமோகமே
அகண்டபர ஞானவொளியே
அறிவினுக் கறிவே யனாதிய களங்கமே
அமுதமதி கோடியொளியே
நிச்சய மகோதய அனந்தரவி சோதியே
நிர்க்குண நிராதாரமே
நிராமய புராதன நிரஞ்சன சுகாதீத
ஞேயமாம் அத்துவிதமே
செச்சைமலர் மாலையணி பன்னிரு புயாசலா
செங்கீரை யாடியருளே
சேதுரா மேசுரங் குடிகொண்ட முருகனே
செங்கீரை யாடியருளே. (12)
கதிர்காமம்
மாணிக்க நிறைகங்கை யாடியுன் னைப்பணிய
வந்திடும் பூதலத்தோர்
வாயூமர் பாடவும் குருடர்கண் பார்த்திடவும்
மலடிகள்பின் மைந்தர்பெறவும்
காணிற்கு மாரவே லாவென்னு மன்பரைக்
கரடிபுலி யானைசிங்கம்
காலிற்ப ணிந்தஞ்சி யோடவும் கந்தனே
கண்கண்ட தெய்வமெனவே
ஆணிப்பொன் முத்திமண் டபமேவு கச்சியினுள்
அடியேனை யாண்டுகொண்டென்
ஆகத்தில் வந்தபிணி தீர்ந்திடவு முன்னிற்கும்
ஆறுமுக மெய்த்தெய்வமே
சேணிற் புலோமசை வளர்த்தபெண் பிடிகணவ
செங்கீரை யாடியருளே
தேவரொடு மனிதர்பணி கதிர்காம வேலனே
செங்கீரை யாடியருளே. (13)
வேள்விமலை
முகமொன்று கண்டுதமை யாளவரு மாறுமுக
மூர்த்தியென் றறியாமலே
முகிலூர்தி யாமிந்த்ரன் முதலான முப்பத்து
முக்கோடி யிமையோர்களும்
நகமென்ற மேருவினி லோர்வீர வாகுமுதல்
நவவீர ரோடுகூடி
நாதநீ விளையாடல் கண்டுபோர் புரியவரு
ஞானவா னந்தவடிவாய்
இகமொன்று பரமொன் றிரண்டும் கொடுக்கவே
இந்த்ரனிமை யோர்முனிவரர்
இணையடிகள் துதிசெய்து பூசித்து நின்றிட
இலங்குஞ் சராசரமொடு
செகதண்ட முழுதும்தன் வடிவென்று நின்றவா
செங்கீரை யாடியருளே
திகழ்வேள்வி மலைமேவு குமரகுரு நாதனே
செங்கீரை யாடியருளே. (14)
வள்ளியூர்
இருக்குமரி யச்சுத னோர்கார ணத்தால்
இலங்குகலை முனிவனாக
எழிற்றிரு மடந்தைபெண் மானாகி வரமகிழ்ந்
திருவருங் கூடவந்தாள்
உருக்கருணை யானவொரு பெண்பிள்ளை யாகமுன்
னொருகா ரணத்தால்வரும்
ஓராயி ரம்பணா முடியரக சயனற்
குகந்தகண நாதன்வேடன்
பெருக்குமலை வாழ்குறவன் வள்ளியென் றேயருட்
பேரிட்டெ டுக்கமகளாய்ப்
பின்செந் தினைப்புனங் காத்துவிளை யாடிப்
பெருங்குறப் பெண்ணெனவளர்
திருக்குமரி தனைமணஞ் செய்குமர நாயகா
செங்கீரை யாடியருளே
தெள்ளுபுகழ் வள்ளியூர் வள்ளிமண வாளனே
செங்கீரை யாடியருளே. (15)
பாவநாசம்
பொன்பரவு மிமையா சலத்தம்மை பால்வந்து
புகழ்திருக் கலியாணமுன்
பூரணன் செய்ததென வருளகத் தியர்தொழப்
பொழியநீ ரன்பொடிமவான்
இன்பமர் மறைச்சடங் கயன்வந்து செய்திடமுன்
இந்திராதி யோர்கள்வாழ்த்த
ஈரே ழெனும்புவன பாலிகையு ளுயிரா
மிலங்குவித் தங்குரிக்க
வன்பான இருளறச் சந்தரசூ ரியரெலாம்
வளரொளி விளக்கெடுப்ப
மங்கைநா யகனருள் மணக்கோல மனுதினமும்
மகிழ்வுடன் காட்டிநிற்கும்
தென்பாவ நாசத்து ளன்பான வேலனே
செங்கீரை யாடியருளே
திண்பொதிய மலைமேவு கும்பமுனி குருநாத
செங்கீரை யாடியருளே. (16)
இலஞ்சி
குருவா யகத்திய ருன்னைப் பணிந்திடக்
கூடும்வை ணவர்நாணவே
குளிர்சித் திராநதிக் குற்றால மாகுதிரி
கூடாச லப்பதிக்குள்
மருவாய் துழாய்மௌலி யுஞ்சங்கு சக்கரமும்
மணிவண்ண முங்காணவே
வளர்நெடிய மால்வடிவு குறுகுகுறு கென்றே
மகாலிங்க வடிவமாக்கிப்
பெருவான மதிநதி முடிக்குஞ் சடாடவிப்
பெம்மானை யம்மானிடம்
பிரியாத எந்தைதனை ஐந்தான னத்தனைப்
பெருமானை யர்ச்சியென்றே
திருவாய் மலர்ந்தருள்செய் தென்னிலஞ் சிக்குமர
செங்கீரை யாடியருளே
சிறியனே னறிவினுட் குடிகொண்ட தெய்வமே
செங்கீரை யாடியருளே. (17)
திருமலை
உம்பர்க்கும் விறல்வச்ர பாணிக்கும் அயனுக்கும்
உள்ளந் தெளிந்துதேற
உம்பர்நா யகனான சிவனுக்கும் அம்மைக்கும்
உள்ளமொடு கண்கள்குளிர
வம்பர்க்கு முதன்மையாம் அவுணர்க்கும் அவுணர்குல
மன்னர்க்கு முளநடுங்க
வந்துதன் னோடுவிளை யாடிடு மகாவீர
வாகுமுதல் வீரர்புகழ்
வெம்பொற் கொடுங்காளம் வாயாயி ரம்பொழிய
மிகுசேட னொருசாட்டையாய்
மேன்மே லுறச்சுற்றி யொருசெங் கரங்கொண்டு
மேதினியில் மேருகிரியாம்
செம்பொற் சிலம்புபம் பரமென்ன ஆட்டினோய்
செங்கீரை யாடியருளே
திருமலை யெனுங்காவி தருமலைக் குமானே
செங்கீரை யாடியருளே. (18)
திருநெல்வேலி
உட்டிரு விளக்கான அகரமு கரம்மகரம்
ஒளிரவிந்து நாதவடிவாய்
உயர்மந்த்ர பதவன்ன புவனதத் துவகலைகள்
ஓராறி னுக்குமுதலாம்
மட்டில்கு டிலைப்பொரு ணிரையுமுறை யுஞ்சொல்ல
மாட்டாத படியினாலே
மனத்தெழு மகந்தையா னானென்னும் வறுமைதனை
மாற்றியருள் வாழ்வுதரவே
எட்டிருங் கைக்கமல னைக்குட்டி யேபின்
இருஞ்சிறையி லிட்டுவைத்தே
இருநூ றெனுங்கணக் கோடுநா லாறாம்
எனும்புவன மண்டகோடி
சிட்டியுஞ் செய்துபின் அயன்சிறை விடுத்தவா
செங்கீரை யாடியருளே
செல்வந் தழைத்துவளர் நெல்வேலி வாழ்செட்டி
செங்கீரை யாடியருளே. (19)
கழுகுமலை
கடலேழை யும்பழைய கங்கைப் பெருக்கெனக்
காலிலொரு சிறுவிரலினால்
கடலொன் றெனச்செய்து கடையுகத் தேபுறக்
கடனீரை யுள்ளடக்கும்
வடவா முகாக்கினியை யுள்ளடக் கிப்பின்பு
வடவையை யெழுப்பியந்த
வாரிநீ ரைப்பெருக வைத்துவிளை யாடநீ
வானவர்கள் கண்டஞ்சியே
இடர்தீர அருளென் றிரப்பவே முன்போல
எழுகடலும் வடவையனலும்
இருந்தபடி யேயிருந் திடவைத்து வீரருடன்
எண்டிசையும் விளையாடல்செய்
திடமான அதிபல மகாவீர முருகனே
செங்கீரை யாடியருளே
தென்கழுகு மலைமேவு மின்குலவு வேலனே
செங்கீரை யாடியருளே. (20)
------------------
3. தாலப் பருவம்
மதுரை
நாதன் விளையாட் டறுபத்து நாலு நடத்தும் தமிழ்மதுரை
நாலா யிரத்து நானூற்று நாற்பத் தொன்ப தருட்புலவர்
ஓதும் தலைச்சங் கத்தினுக்கு முயர்நா னூற்று நாற்பதுடன்
ஒன்பதான தமிழ்ப்புலவ ரொழியா இடைச்சங் கத்தினுக்கும்
வேத னிகர்நக் கீரர்முதல் விரிவா நாற்பத் தொன்பதுபேர்
மேவும் கடைச்சங் கத்தினுக்கும் விதிசொல் குருவா மகத்தியற்கும்
ஆதி குருவா மாறுகுணத் தமலா தாலோ தாலேலோ
ஆல வாய்வா ழாறுமுகத் தையா தாலோ தாலேலோ. (21)
சந்திரகுமாரகிரி
மிக்க புகழ்நா ரதமுனிவன்
விண்ணோர் புடைசூழ் வேள்வியினில்
வெற்றிச் செங்கட் கிடாய்தோன்றி
விரிஞ்சன் முதலோர்க் கடங்காமல்
துக்க முறவே பாதாளம்
துலங்கு பூமி அந்தரமும்
சுவர்க்கம் புகழ்சத் தியலோகம்
துன்னுஞ் சக்ரா யுதனுலகம்
திக்கெ லாமும் புகுந்துலவத்
தீரன் வீர வாகுமுன்னே
சென்று பிடித்து வரவந்தச்
செங்கட் கிடாயை மகிழ்ந்தேறிச்
சக்ர வாள கிரிவலஞ்செய்
சதுரா தாலோ தாலேலோ
சந்த்ர குமார கிரிமேவுஞ்
சரணா தாலோ தாலேலோ. (22)
கந்தகிரி
இந்த்ரன் வசுக்க ளுருத்திரர்கள்
இமையா நாட்ட மருத்துவர்கள்
எமனக் கினிமா ருதநிருதி
இலங்கும் வருண னளகேசன்
சந்த்ர னொடுசூ ரியர்வந்து
தாமுன் விளையாட் டறியாமல்
சரமா மாரி பொழியவவை
தண்பூ மாரி யாய்க்கொண்டே
எந்தை மகிழ்ந்தே சரம்விடுப்ப
இளைத்தே யாறு முகப்பெரியோன்
என்றே யறிந்து பிழைபொறுத்திங்
கெமையா ளென்று பூசைசெய்யக்
கந்தகிரியில் மகிழ்ந் தருள்செய்
கண்ணே தாலோ தாலேலோ
கனகக் கிரிவாழ் குருநாதா
கந்தா தாலோ தாலேலோ. (23)
விராலிமலை
ஒண்பார் மறையோர் மாமகத்தில்
உயர்ந்த முனிவோர் அவியுண்ண
ஒங்குஞ் சுவர்க்கத் திந்திராணி
உபய விழிவேல் மையுண்ண
விண்பா லிமையோ ரமுதுண்ண
விண்ணோர் முதலாம் பெரியவர்க்கு
விரோதஞ் செய்யுந் தகுவர்தசை
மிகும்பேய் கூடி விருந்துண்ணப்
பண்பார் நீல மால்புகழப்
பாகீ ரதிவாழ் சரவணத்துள்
படிக வொளியாஞ் சிவனிடத்தில்
பச்சை யுமையாள் முலையொழுகும்
வெண்பா லுண்ட செவ்வாயா
வீரா தாலோ தாலேலோ
விராலி மலைக்குள் குழந்தைவடி.
வேலா தாலோ தாலேலோ. (24)
சையகிரி
ஐய னைமா முகத்தானை ஆறு முகநீ யாகிவர
அமரர் கோமான் புகலியினு ளரிய தவஞ்செய் தருச்சிக்கத்
துய்ய மலர்கொய் நந்தவனந் தூய்நீ ரின்றி வாடல்கண்டு
சோம னணிந்த சடாமௌலிச் சோதி கயிலா யத்தளித்த
மெய்யன் கும்ப முனிகடத்துள் மேவும் புனித தீர்த்தத்தை
மேலைங் கரத்தோன் கவிழ்த்தருள விரிகா விரிமா நதிபெருகும்
சைய கிரிவாழ் சண்முகனே சைவா தாலோ தாலேலோ
சதுமா மறைக்கும் முத்தமிழ்க்கும் தலைவா தாலோ தாலேலோ. (25)
சதுரகிரி
அகிலம் புகழும் சிவானந்த அமுதம் புசிக்கும் சித்தர்களும்
அட்டாங் கத்தா னாதவடி வான யோக சித்தர்களும்
உகிரா லூன்றிப் பருப்பதத்தை யுயரத் தூக்கும் சித்தர்களும்
ஓட்டைக் கல்லைப் பரிசித்தே யுயர்பொன் னாக்கும் சித்தர்களும்
செகதண் டங்கள் தமதுளத்தே தெரிசித் திருக்கும் சித்தர்களும்
திரிகா லங்கண் டணிமாதி செய்யும் சித்தர் களும்பணிந்து
மகிழுஞ் சதுர கிரிசுப்ர மணியா தாலோ தாலேலோ
மதுரை யெல்லாம் வல்லசித்தன் மைந்தா தாலோ தாலேலோ. (26)
பழனி
கரமைந் துடைய கணபதியும் கருணா நிதிநீ இருவருமாய்க்
கயிலைக் கிரிமேல் விளையாடக்கௌரி யுடன்வாழ் கண்ணு தல்கண்
டிரத மிகுந்த மாங்கனியொன் றேழு கடற்கு மெண்மலைக்கும்
இலங்கு நவகண் டங்களுக்கு மெயிலாம் சக்ர வாளத்தை
ஒருகைந் நொடிக்குள் வலம் வந்தோர்க்குகந்தே தருவோமென மூத்தோன்
உமைநா யகனை வலம்வரநீ யொருகைந் நொடிக்குள் செகதண்டம்
பரமன் மகிழ வலம்வந்த பாதா தாலோ தாலேலோ
பழனிப் பதியாய் குமரகுரு பரனே தாலோ தாலேலோ. (27)
கொடுங்குன்று
ஊகந் திரிகா லத்தியல்பு முணர்ந்த வுபய முனிவரர்கள்
ஒருசா பத்தாற் கழுக்குன்றி னுயர்ந்த கழுகாம் காரணப்பேர்
ஏகன் சம்பந் தப்பெருமான் இலங்குந் திருநா வுக்கரசிங்
கெனையாள் சுந்த ரப்பெருமா ளெழின்மா ணிக்க வாசகன்சொற்
பாகு நிகர்தே வாரங்கள் பகருந் திருவா சகங்களும்பொற்
பரமன் செவியி லேறமங்கை பாகா வென்று துதிசெய்து
கூகை வலஞ்செய் கொடுங்குன்றிற் குமரா தாலோ தாலேலோ
குருவே குணமாம் பொன்மேருக் குன்றே தாலோ தாலேலோ. (28)
இரத்தினகிரி
பாக மிகுந்தே தினந்திருமுன் பரிவாய் நடஞ்செய் தாசிதனைப்
பாராள் மன்னன் தன்பதிக்குப் பற்றார் பிடித்துக் கொடுபோகக்
காக மணுகா மலைக்கிலையோ காட்டுந் தெய்வீ கங்களிங்கே
கல்லை யோநான் கைதொழுதேன் காப்பா யென்பாள் காணவந்து
சோக மறவே யருள்செய்து துட்ட னாகும் மன்னவனைத்
தூரத் துரத்தும் பரமசிவன் துணைத்தாட் கமல முலகறிய
மேகம் வணங்கும் இரத்னகிரி வேலா தாலோ தாலேலோ
வெற்றிக் கலப மயிலேறும் வீரா தாலோ தாலேலோ. (29)
திருமுருகன்பூண்டி
திருகன் மனத்து வேடரெனத் திரளாம் பூத கணநாதர்
சேரர் பெருமான் கொடுத்தமிகு செம்பொன் னாடை யாபரணம்
வருகல் வழியி லெதிர்நின்று மறித்துப் பறித்துக் கொடுபோக
மதுர மாமுக் கனிதேன்பால் வானோ ரமுதைத் தானகைக்கும்
பருகும் பரமா னந்தமெனப் பதிகம் பாடும் சுந்தரர்க்குப்
பறித்த பொருள்க ளனைத்தினையும் பரிசு கொடுக்கும் பரமர்திரு
முருகன் பூண்டி யினிதுறையு முருகா தாலோ தாலேலோ
முக்கட் பெருமா னருளாறு முகனே தாலோ தாலேலோ. (30)
--------------
4. சப்பாணிப் பருவம்
திருச்செங்கோடு
பொன்னிலகு பாடகமும் அம்பொற் சிலம்பும்
புனைந்தபொற் சேவடிகளும்
புலியினதள் நீள்கலை யிரண்டுபரி வட்டம்
பொருந்தத் தரித்தவிடையும்
உன்னழுகை கேட்டுடன் பாலொழுகு மொருதனமும்
உமைவளை யழுந்துமார்பும்
உரககங் கணமிலகு செங்கையும் செம்பொன்வளை
யுற்றசெங் கையிணைகளும்
அன்னைத னிடப்புறம் பார்த்தருளு மொருவிழியும்
அங்கயற் கண்ணொன்றும்விண்
ஆறுதரு செஞ்சடையும் நீள்கருங் குழலும்நிறை
அம்மையுட னப்பனாகும்
தன்னிகரி லாவர்த்த நாரீசன் மைந்தனே
சப்பாணி கொட்டியருளே
சங்காழி மால்மருக செங்கோடு மகிழ்முருக
சப்பாணி கொட்டியருளே. (31)
சென்னிமலை
சீராரும் ஆறுமுக மதியசைய ஈராறு
திருநயன மலர்களசையச்
செம்பொனவ ரத்னமுடி யாறசைய வோராறு
செவ்வாயின் நகைகளசைய
ஈராறு மணிமகர குண்டல மிருந்தசைய
ஈராறு செவிகளசைய
ஈராறு வச்ரகே யூரங்க ளசையமணி
எழில்நுதற் சுட்டியசைய
ஓராறு நுதலிலிடு பொட்டசைய வெண்மைநீ
றொளிர்புண் டரங்களசைய
ஒப்பில்பொன் முப்புரியி னூலசைய மார்பசைய
உயர்தரள மாலையசையத்
தாரார் கடம்பசைய ஈராறு புயசயில
சப்பாணி கொட்டியருளே
தன்னிகரில் சென்னிமலை பன்னிருகை முருகனே
சப்பாணி கொட்டியருளே. (32)
திரிசிரபுரம்
நேயமா மானந்த னுலகுக் கனுக்கிரக
நிக்கிரக மாமிரண்டும்
நின்றுசெய் வானென்ப தறியவே செவ்வந்தி
நிறைமலரை வந்துதிருடும்
தீயுமா லமுமென்ன வருமன்னன் மாளவே
திரிபுர மெனச்செய்தவன்
சிகரகோ புரநெடுங் கோயிலைப் பார்த்தன்பு
திகழ்வணிக னொருவன்மனைவி
ஆயுமா மியுமெனக் கம்பிகா பதியுன்னை
யன்றிவே றில்லையென்னும்
அன்னைமக வைப்பெற் றெடுக்கவே முனமகிழ்ந்
தவளன்னை போல்வந்தருள்
தாயுமா னவனென் பிதாவுமா னவன்மகன்
சப்பாணி கொட்டியருளே
சராசர நிறையுஞ்சி ராமலையில் வேலனே
சப்பாணி கொட்டியருளே. (33)
இராசையம்பதி
கருணைவடி வானவ னுமைகங்கை நாயகன்
கயிலையினில் வீற்றிருக்கும்
கனகமணி மந்த்ரசிங் காதனத் தென்றும்
கவின்குழவி வடிவானவன்
கெருடவா கனனருள்செய் குறவர்மகள் குற்றேவல்
கேட்டருள வந்தஞான்று
கிளைநெடுங் கோலொன்று கொண்டுவரு நான்மறைக்
கிழவனெனும் வடிவானவன்
அருணகண மணியிலகு மிந்த்ரலோ கத்திலே
அயிராணி கற்பகத்தின்
அணிநிழலில் வைத்துமுன் விளையாடி மகிழ்தெய்வ
யானையை மணஞ்செய்தநாள்
தருணவடி வானவ னிராசையம் பதிமுருக
சப்பாணி கொட்டியருளே
தண்மதிக ளாறுநிகர் சண்முக சிகாமணி
சப்பாணி கொட்டியருளே. (34)
திருவானைக்கா
அம்புரா சிகளேழும் அட்டகுல கிரிகளும்
அணிசக்ர வாளமுங்கோள்
அண்டகோ டிகள்பெற் றளித்தருளு மென்னையாள்
அகிலாண்ட நாயகியயன்
உம்பரா தித்தரிந்த் ராதியோ ரர்ச்சனைசெய்
தோங்குசெழு நீர்த்திரளென
உயர்சதுர யுகநாற்பத் தெட்டான நெடுநாள்
உவப்புடன் பூசைகொண்ட
எம்பிரா னிமையவர்கள் கம்மியனும் நன்றுநன்
றென்னநீ றிட்டான்மதில்
இவ்வுலகு ளோர்வேலை செய்யவே தினமுநீ
றிட்டிருந் தருள்தேவர்கள்
தம்பிரான் புகழ்பெரிய சம்புநா தன்குமர
சப்பாணி கொட்டியருளே
தன்னிகரி லாததிரு வெண்ணாவல் வனமுருக
சப்பாணி கொட்டியருளே. (35)
திருவையாறு
மானுமழு வும்பொற் பிரம்புநீள் சுரிகையுமுன்
வைத்தகர நாலுமூன்று
மலர்நயன மும்சடா மௌலியும் பெறுநந்தி
மகிழ்பரம சிவனாகியே
பானுமணி வண்ணனய னாதியோ ரவனாணை
பரிபால னஞ்செய்யவே
பட்டாபி டேகமிட பத்தின்வாய் நீராதி
பஞ்சநதி யாற்செய்வன
வானவர்கள் மானுடர்கள் பூசைசெய் துய்யவே
மான்மழுவும் பிறையும்வேணி
வந்தபா கீரதியு மொருவன்னி நயனமும்
மறைத்துமுன் வந்துதன்னைத்
தானருச் சித்துமகிழ் சைவனா னவன்மதலை
சப்பாணி கொட்டியருளே
சாறணியை யாறதனி லாறான னத்தனே
சப்பாணி கொட்டியருளே. (36)
கும்பகோணம்
சடந்தந்த வுடல்விடில் தாரகப் பிரமஞ்சொல்
தம்பிரான் காசியெய்தித்
தரளமெறி யுந்தரங் கக்கங்கை விண்ணாறு
தாம்படிய வலியிலாத
இடங்கொள்தென் பூமண்ட லத்துளோ ரெல்லாரும்
எளிதாக மூழ்கவேபன்
னீராண்டி னுக்கொரு தரங்கயிலை நாயகன்
எம்பிரா னும்பர்கோமான்
மடந்தைபா கன்சடா டவியில்வாழ் கங்கைநதி
வாணிகா ளிந்தியாதி
மாநதிக ளாங்கோடி தோழியர்க ளுடன்வரு
மாமகத் தீர்த்தமென்னும்
தடந்தந்த புகழ்சேர் குடந்தைமா நகர்முருக
சப்பாணி கொட்டியருளே
சம்புசிவ சங்கரன் கும்பநா யகன் மதலை
சப்பாணி கொட்டியருளே. (37)
திருவிடைமருதூர்
திருவலஞ் சுழியைங்க ரத்தனா லயமெனத்
திருவேர கப்பதியெனும்
திருநகர முன்பொனா லயமெனச் சேய்ஞலூர்
திகழ்தண்டி யாலயமென
மருவுமா வடுதுறைவன் விடையினா லயமென்ன
வந்தசூரி யனாலயம்
மகிழ்சூரி யன்கோயி லாமெனச் சீகாழி
வடுகனா லயமாமெனப்
பெருகுசிற் சபைசபா பதியினா லயமெனப்
பேசுதிரு வாரூர்நகர்
பெரியநா யகர்கோயி லென்னவா னோர்களும்
பேணுமிவை மத்தியாகத்
தருமருத வனமகா லிங்கநா யகன்மதலை
சப்பாணி கொட்டியருளே
தந்தைவெண் காடர்புக ழெந்தைமுரு கேசனே
சப்பாணி கொட்டியருளே. (38)
திருவலஞ்சுழி
மந்தர மெனுங்கிரியை மத்தாக நிறுவியே
வாசுகியை நாணதாக்கி
மாலயனொ டிந்த்ராதி யமரரெல் லாங்கூடி
வளர்பயோ ததிகடையுநாள்
எந்தையைங் கரனைமுன் வணங்காம லதுசெய்ய
இயம்புமலை கீழிழுப்ப
இந்திராதி யோரறிந் தைங்கர விநாயகன்
இணையடிகள் பூசைசெய்ய
அந்தமந் தரகிரி சுழன்றமுத முதவவே
அன்புடன் பின்பவரெலாம்
அமுதமபி டேகிக்க வமுதநிற மாதலால்
அருள்வெள்ளை வாரணமெனும்
தந்திமுக வற்கிளவல் திருவலஞ் சுழிமுருக
சப்பாணி கொட்டியருளே
சந்திரசே கரனான அந்திவண் ணன்மதலை
சப்பாணி கொட்டியருளே. (39)
காங்கேயம்
பூங்கமல நயனன்சக் கராயுதமு நான்முகன்
பொற்கரந் தாங்குதண்டும்
பொன்னுலகு மன்னன்வச் சிராயுதமும் வயிரவன்
புகழ்முத் தலைச்சூலமும்
ஓங்குகா லாக்கினி யுதயமதி யொடுகோடி
உக்கிரப்பிர சண்டரவியின்
ஒளியுமொரு தம்மழுவு மொருவடிவ மாய்வந்த
ஓங்கார மானவடிவேல்
தீங்குசெயு மவுணரெல் லாரையுங் கொன்றே
செயங்கொண்டு வாகைசூடித்
தேவர்சிறை மீட்டருள்செ யென்றம்பி காநாதர்
செப்பிக்கொ டுத்தவருள்வேல்
தாங்குசெங் கையனே காங்கேயம் வாழ்முருக
சப்பாணி கொட்டியருளே
தானவர்கள் குலகால தேவர்குல தெய்வமே
சப்பாணி கொட்டியருளே. (40)
----------------
5. முத்தப்பருவம்
சேய்ஞலூர்
இருமைத்தம் பியர்க ளானநவ வீரருடன்
எழிலிலக் கம்வீரரும்
எண்ணவரு தொகையிரண் டாயிரம் வெள்ளமெனும்
ஏர்கொண்ட பூதகணமும்
பொருதுபடை கைக்கொண்ட நூற்றெட் டெனும்பெரிய
பூதப்ப டைத்தலைவரும்
பூங்கமல நயனனும் நான்முகனும் முனிவரும்
புரந்தரனும் வானோர்களும்
கருணைவடி வானநின் புடைசூழ வேபெரிய
காவேரி நாடுவாழ்க
கைவேலி னால்மண்ணி நதியழைத் தேதேவர்
கம்மியன் தான்படைத்த
திருநகர மாம்பெரிய சேய்ஞலூர் வாழ்முருக
செவ்வாயின் முத்தமருளே
சிவபூசை செய்தருட் படையொன்று பெற்றவன்
செவ்வாயின் முத்தமருளே. (41)
திருவாப்பாடி
ஆலமணி கண்டரை மண்ணிநதி வெண்மணலி
னாலமைத் தாத்திநீழல்
ஆன்பால் குடங்களின் நிரப்பிவைத் தங்குள்ள
அணிமலர்கள் கொய்துவைத்துக்
காலமிட மங்கறிந் தேபூசை செய்திடக்
கண்டுடன் வெகுண்டுபாலைக்
காலினா லிடறிக் கவிழ்த்திட்ட தாதைதன்
கால்களற வீசியழுவால்
ஞாலமொடு விண்ணுலகு மடிபரவு மீசர்தாம்
நம்பிள்ளை கணபதியருள்
ஞானவடி வேலனுக் கிளையவன்நீ யென்ன
நற்பேறு பெற்றுமறைசொல்
பாலதண் டீசராம் ஆப்பாடி மகிழ்முருக
பவளவாய் முத்தமருளே
பாலுகந் தாரிடப் பாலம்மை பாலக
பவளவாய் முத்தமருளே. (42)
திருப்பனந்தாள்
அனையுமைக் கருள்ஞான வுபதேசம் வைத்தவன்
அயனுக்கு மருள்செய்தவன்
அணிகேத கைக்குமருள் பைம்பொனாட்
டயிராவ தத்தையாண்டோன்
நினைவரிய தாடகைக் கருண்மேனி சாய்ந்தவன்
நிமிராமல் மன்னனுக்கு
நிறைகலய னாருக்கு முன்போல் நிமிர்ந்தவன்
நிறைகலைய னாரளித்த
தனையனுயிர் போனபின் மீட்டநா யகன்வாகை
சாத்துமறை யுடையாடனைத்
தானத்தி யேதரித் துக்கொண்டு நீண்டசெஞ்
சடைவேதி யன்புதல்வனே
பனைசையம் பதிமேவு தண்டீச ரையனே
பவளவாய் முத்தமருளே
பைம்பொனிற அயிராவ தப்பிள்ளை யார்தம்பி
பவளவாய் முத்தமருளே. (43)
திருவாவடுதுறை
தேவாதி தேவன்சொல் வேதாக மங்களைத்
திருமந்த்ர மாலையென்றே
திகழ்சமா தியிலிருந் துலகத்து ளருள்விழி
திறந்தாண் டினுக்கொன்றெனும்
பாவாக வேசொன்ன பரமசிவ னானகுரு
பணியோக அட்டாங்கமும்
பகர்வரிய சித்தியும் திரிகால ஞானமும்
பரிபக்கு வர்க்கருளுவோன்
சேவேறு மொருவனே பரமதத் துவமெனும்
திருமூல நாதன்மகிழூர்
திருவிசைப் பாவென்னும் அதிமதுர கவிபாடு
திருமாளி கைத்தேவர்வாழ்
காவேரி சூழ்ந்ததிரு வாவடுது றைக்குமர
கனிவாயின் முத்தமருளே
கங்கா நதிச்சரவ ணத்துவளர் காங்கேய
கனிவாயின் முத்தமருளே. (44)
கஞ்சனூர்
அஞ்சுதிரு வயதிலே சிவலிங்க பாண்டியன்
அன்புமிகு சேரசோழர்
அணிமுடியி லடிவைக்க ஈசனருள் பெற்றவன்
ஆறுசம யத்தோர்கள்முன்
கொஞ்சவறி வானவயி ணவனெனும் தன்தாதை
கொண்டல்வண் ணன்பொருளெனக்
கொல்லருலை காந்திடு மிருப்புமுக் காலியிற்
கொண்டாட வீற்றிருந்தே
நஞ்சயின் றருள்பரம சிவனே பரப்பிரமம்
நாரணன் முதலாயினோர்
நம்பரம ரடியரென் றேநாட்டி டும்சைவ
நாயக ராதத்தர்வாழ்
கஞ்சனூ ராண்டகோ வருள்குமர நாயக
கனிவாயின் முத்தமருளே
கண்ணனுக் கிளையகற் பகவல்லி மைந்தனே
கனிவாயின் முத்தமருளே. (45)
பட்டீச்சரம்
கீர்த்திமலி சீகாழி யுமைமுலைப் பாலுண்ட
கிண்கிணிக் காற்குழந்தை
கீதங்க ளானதமிழ் வேதங்கள் பாடுவோன்
கெங்கைநதி வெண்மைபோல
ஆர்த்துவரு திருநீற ணிந்திடும் தொண்டர்பதி
னாறாயி ரம்பேர்கள் சூழ்ந்
தணிகொள்நிழ லுக்குள்வர வங்கோடை வெயிலினால்
அரும்புசிறு முத்தமென்ன
வேர்த்தமுக மெய்குளிர வெண்ணிலவோ டிளவெயில்
விரித்தபவ ளக்காலின்மேல்
வெள்ளைமுத் தின்பந்தர் அருளியதில் வருமழகை
வெள்விடையொ துங்கிநிற்பப்
பார்த்துமகிழ் பட்டீச ரருள்குமர நாயகன்
பவளவாய் முத்தமருளே
பச்சைமால் மகிழ்முருக சச்சிதா நந்தவேள்
பவளவாய் முத்தமருளே. (46)
சங்கரநயினார் கோயில்
ஒருவடிவி லொருபாதி செம்பவள வன்னமும்
ஒருபாதி நீலநிறமும்
ஒருகையில் நீள்மழுவும் ஒருகையில் சக்கரமும்
ஒளிர்நாக குண்டலமுமேல்
வருமகர குண்டலமும் அருளெனுஞ் செந்தேன்
மலர்ந்தசெங் கமலவிழியும்
வளர்கமல நாயக னானதிரு நயனமும்
மகிழ்ந்தகங் காநதிநிறை
தருணசந் திரசடா மௌலியுமி ரத்தினநிறை
சம்புநதி யம்பொன்முடியும்
தண்டுளப முங்கொன்றை மாலையும் காணவே
சங்கர னாராயணன்
கருணையுட னின்றருளும் மாராசை முருகனே
கனிவாயின் முத்தமருளே
கார்வண்ணன் மருகனே கங்கைநா யகன்மதலை
கனிவாயின் முத்தமருளே. (47)
கரிவலம்வந்தநல்லூர்
மேலன் புடனிரம் பத்தேனை யாட்டியிடும்
மெய்யன்பர் விழிகுளிரவே
வெங்காள கூடமணி கண்டமும் முக்கண்ணும்
மிகுகருணை பொழிவதனமும்
வாலுழுவை யதளுடையும் வரதமும் அபயமும்
மழுவுமறி மானுமென்றும்
வைத்தசெங் கரதலமும் மணியுரக கங்கணமும்
மகிழ்ந்தருள்செய் குறுமுறுவலும்
காலின்வீ ரக்கழலும் வேதபரி புரமுமிரு
கமலபத முந்திங்கள்வாழ்
கங்கைச் சடாடவியு ஞானமெனு மாநதியும்
கண்கள்முன் காட்டிநிற்கும்
பால்வணன் மைந்தனே கருவையம் பதிமுருக
பவளவாய் முத்தமருளே
பகரும்வர துங்கரா மன்பணி பதாம்புயன்
பவளவாய் முத்தமருளே. (48)
திருவாதவூர்
எனையுமொரு பொருளெனத் திருவுளத் தெண்ணியே
என்கனவு முன்புவந்தே
இருந்தருள்செய் குருவடிவு காட்டியே கருணையுடன்
இணையடியென் முடிவைத்தவன்
உனைமுனம் பெற்றவ னொன்றொழிய வாயிரம்
உயர்ந்தகண நாதர்சூழ
ஒருபெருந் துறையினிற் குருந்தமர நீழலில்
உகந்துறையும் பரமநாதன்
வனசமல ரடிபெருகு மானந்த மதுவுண்டு
வண்டளி கடுப்பமதுர
வாசகம் கோவைபா டும்பெரிய மாணிக்க
வாசக னென்னும்ஞான
தினகரன் மகோதயஞ் செய்வாத புரிமுருக
திருவாயின் முத்தமருளே
தென்னவன் பிரமா யன்புகழ வருகுமர
திருவாயின் முத்தமருளே. (49)
புள்ளிருக்குவேளூர்
செவிகளொரு பன்னிரண் டுங்கேட்க அயனையும்
தேவர்பணி யுங்குருவையும்
தேவர்கோ னென்றசத மகனையும் செந்தமிழ்சொல்
தென்பொதிய மலைமுனியையும்
புவியில்நக் கீரனையும் அவ்வையையும் நீமுன்
புகழ்ந்தபொய் யாமொழியையும்
புகழ்கொண்ட அருணகிரி நாதரையும் வெகுசித்தர்
போற்றுகரு வூரரையும்
குவியுமன மறாச்சிறு புலவரையும் வருபுலவர்
கொண்டாடு நல்லபகழிக்
கூத்தரையும் வளர்காசி வாழுஞ்சி வானந்த
குமரகுரு பரமுனியையும்
கவிசொலென் றேயடி யெடுத்துக் கொடுத்தவன்
கனிவாயின் முத்தமருளே
கந்தனே புள்ளூரில் வந்தமுத் துக்குமர
கனிவாயின் முத்தமருளே (50)
-----------------
6. வாரானைப் பருவம்
எண்கண்
சீராரு மயில்காண வேல்காண அடல்கொண்ட
சேவற்ப தாகைகாணத்
திருமுகத் தாமரைக ளோராறு காணநின்
செம்பருதி மேனிகாண
ஓராறு நவரத்ன மணிமௌலி காணவுள்
ளுகந்துருகு நகைகள்காண
உபயபரி புரமறைகள் தண்டையொடு கிண்கிணி
ஒலிக்கும் பதங்கள்காணத்
தாரா றிரண்டுபுய சயிலங்கள் காணவே
தங்கமுப் புரிநூலணி
தடமார்பு காணவே ஈராறு செவியிலணி
தருகுண் டலங்கள்காண
ஈராறு கைகாண அடியர்முன் னோடிவரும்
எந்தைஎன் முன்வருகவே
எண்கண்ண னுக்கருள்செ யீராறு கண்ணனே
எண்கண்வே லவன்வருகவே. (51)
கீழ்வேளூர்
அண்டகோ டிகள் பணிய ஆயிர முகக்கங்கை
அபிடேக மஞ்சனமென
அணிமாலை மலர்பத் திரந்தருநந் தனவன
மாற்கற்ப காடவியென்னக்
கொண்டமேனியிலணி நறுஞ்சந் தனத்திரள்
கொடுப்பதம் பொதியமென்னக்
கொள்ளுமுப காரணங்கள் தந்திடும் பண்டாரி
குறைவறுகு பேரனென்னப்
பண்டுதான் மகிழ்பஞ்ச கவ்வியம் கொடுப்பது
பகர்காம தேனுவென்னப்
பணிவிடைகள் செய்வோர்கள் நவவீரர் முதலான
பலகோடி தேவரென்ன
மண்டுபே ரொளியான கேடிலியை யர்ச்சித்த
வள்ளிநா யகன்வருகவே
மாகாளி காத்தகீழ் வேளூரில் மாதவ
வளர்த்தவே லவன்வருகவே. (52)
நாகபட்டினம்
தாணுமா லயனுடன் மயேசுரர் சதாசிவர்
சச்சிதா னந்தசாந்தர்
தந்தநவ சத்தியருள் போகாங்க மூர்த்திகள்
தருமட்ட வித்தியேசுரர்
பேணுமெழு கோடிமா மந்திரே சுரரைந்து
பேதமா மாகேசுரர்
பேதமொன் றில்லாத நந்திமா காளர்சொல்
பிருங்கியுட னைங்கரத்தோன்
பூணிடபர் நீள்கௌரி தண்டியெண் டிசைநாதர்
போற்றுந்த சாயுதங்கள்
பூமண்ட லத்திலுள தெய்வங்கள் வேதங்கள்
புகழ்கொண்ட தேவர்முனிவர்
காணவரு சிவராச தானியெனு நாகைவரு
கந்தசுவா மிவருகவே
கைகண்ட அடியர்பணி மெய்கண்ட வேலவன்
கருணையங் கடல்வருகவே. (53)
சிக்கல்
முக்கட்பு ராரியொடு சக்கரா யுதக்கடவுள்
முண்டகத் தவிசிருந்தோன்
மூவரும் சிரகர கம்பிதஞ் செய்துநம்
முருகன்ப ராக்கிரமெனெனச்
சக்ரவா ளத்துடன் மிக்கநவ கண்டமும்
தருமட்ட குலகிரிகளும்
சத்தசா கரமும் கணத்தினிற் சுற்றிவரு
தாருகன் வாயினுதிரம்
கக்கிப் பதைத்துக் கிடந்தே யிருக்கக்
கடைக்கண் சிவந்தவேலன்
கற்பகா டவிதடவு மண்டபம் கோபுரம்
கனகமதில் நின்றிலங்கும்
சிக்கலம் பதிமேவு சிங்கார வேலனாம்
தேவர்நா யகன்வருகவே
திகழும்வெண் ணெய்ப்பிரா னொருபா லுறைந்தமெய்ச்
செல்விபா லகன்வருகவே. (54)
எட்டிகுடி
இட்டமுறு பூதப்ப டைத்தலை மாமோக
மென்னுநித் திரையொழியவே
இருவருட னிந்த்ராதி யிமையோர்கள் முகமலரும்
இதயகம லமுமலரவே
துட்டக்கிர வுஞ்சகிரி மாயையிரு ளழியவே
துங்கப்பிர சண்டகோடி
சூரியர்க ளுதயமென் வெற்றிவேல் விட்டருள்செய்
சுப்பிரமணி யன்வருகவே
மட்டுவிரி செந்தாம ரைத்தடஞ் சூழ்கழனி.
வளர்செந்நெல் கன்னல்நிகராம்
வளர்கன்னல் பூகநிக ராங்கமுகு தெங்கொக்கும்
வளர்தெங்கு வானளக்கும்
எட்டிகுடி வாழ்குமர இமையோர்கு ழாம்பணியும்
இருபதாம்பு யன்வருகவே
இபமா முகத்தனெனு மைங்கரவி நாயகற்
கிளையசண் முகன்வருகவே. (55)
திருமறைக்காடு
ஒருமேரு கிரியேக தந்தமென வெள்ளிமலை
ஒருகையிற் கொம்பென்னவே
உயர்சக்ர வாளகிரி அரைஞா ணெனச்சேடன்
உதரபந் தனமென்னவே
தருமிரவி ஈராறு முகபடா மணியெனச்
சந்திர னங்குசமெனச்
சலராசி யேழுமத சலமெனக் கடையுகச்
சண்டமா ருதமெனும்வளி
இருசெவி எறிந்திடும் காற்றெனக் கண்ணிலெரி
இலங்குகா லாக்கினியென
எங்கும்வடி வாய்நின்று திருமறைக் காட்டினில்
இராமர்பின் னேதொடர்ந்து
வரும்வீர கத்திதீர்த் தருள்செயும் விநாயகன்
மகிழ்சகோ தரன்வருகவே
மறைகணா ளும்பணியு முபயசர ணாம்புயன்
வள்ளிநா யகன்வருகவே. (56)
திருவிடைக்கழி
குருசரண ரொருநால்வர் போய்ப்போய்க் குழக்கன்று
கோவினைக் கூப்பிடுதல்போல்
கோயில்தொறு மூர்பெரிய விண்ணினை யளாவிடும்
கோடிதரு கயிலாயனைக்
கருணையுட னேகண்டு கண்டுசர்க் கரைநறை
கலந்தமுக் கனியின்மதுர
கவிபாடு கின்றகரு வூர்ச்சித் தரைக்கண்டு
கன்றின்முன் தாய்வருதல்போல்
ஒருவடிவு காட்டியே திருவிடைக் கழியினில்
உகந்தநம் மைப்பாடென
உல்லாச வானந்த வெள்ளத்துள் மூழ்கியவர்
உள்ளன்பு டன்பாடிய
திருவிசைப் பாமாலை சூடுமோ ரீராறு
திண்புயா சலன்வருகவே
திருக்குரா நீழலில் சிவஞான யோகமருள்
சித்தகுரு வேவருகவே. (57)
பிரம்பூர்
மரகதப் பச்சையொளி மயில்வாக னன்வருக
வளர்வெற்றி வேலன்வருக
வருகுக் குடத்துவசன் வருகவென் னைப்பெற்ற
வள்ளிமண வாளன்வருக
வரதவப யன்வருக தெய்வானை குமரி
மணவாளன் வருகவருக
மலைமக ளுடன்கங்கை யொருமக னெனப்பெற்று
மகிழுங் குழந்தை வருக !
பரவிந்து நாதமுதல் நவபேத மேவருக
பகரெண் குணத்தன்வருக
பரையா தி பஞ்சசத் திகள் கிரண ரவிவருக
பகாகண் டாகாரமாம்
பிரமமா மேகசிவ ஞானவா னந்தமெய்ப்
பெருவாழ்வு வருகவருக
பிரம்பூரி லடியர்க் கிரங்குசெவ் வேலனாம்
பெரியபெரு மாள்வருகவே. (58)
மாயூரம்
ஐந்தரு வெனுங்கற்ப கச்சோலை வருகஅறி
வானந்த வெள்ளம் வருக
அனந்தகல் யாணமே ருகிரி வருகவே
அங்கையா மலகம்வருக
சிந்தையில் மகோதயஞ் செய்திருளை நீக்கிடும்
சிவஞான பானுவருக
செனனவெப் பந்தணிக் குங்கோடி மதிவருக
தித்திக்கு மமுதம்வருக
எந்தையே வருகஎனை ஈன்றதா யேவருக
என்கண்மணி வருகவருக
எண்ணனந் தங்கோடி மன்மதா காரமாம்
என்றுமிளை யோன் வருகவே
மைந்தனே வருகமணி யேவருக வள்ளலே
வருகவைப் பேவருகவே
மாயூர நகர்மேவு கேயூர மணிபுய
மயூரவா கனன்வருகவே. (59)
தருமபுரம்
உம்பர்பணி யாரூர னருளினா லானந்த
ஒளிவடிவ மானகுரவன்
ஒருசெந்தி லம்பதியி லுன்னருளி னாற்பாடும்
உயர்குமர குருபரமுனிக்
கம்புயத் தாள்சென்னி சூடினோன் எலிபூஞை
அரவுபோத் துகுயில்கிளி
அத்துவித மாகவே சத்திநிரு வாணமெனும்
அருள்ஞான தீட்சைசெய்தோன்
எம்பவ மகற்றினோ னெண்ணிலா அடியவரை
இன்பவா ரிதியில்வைத்தோன்
எழில்வேள்வி மலையிலோ ரம்பையெங் கேயென்
றியம்பியே திருமுனிற்கும்
சம்பந்த னுக்கருள்செ யென்றுவள் ளிக்கருள்செய்
சைவநா யகன்வருகவே
தருமையம் பதிமுருக ஒருநாலு பாதமுந்
தருகுமர குருவருகவே (60)
-------------
7. அம்புலிப் பருவம்
வழுவூர்
குழுவுடைய பதினாறு கலைவடிவு சிவன்முனம்
குறைவறக் கேட்டிடுதலால்
குளிரமுத மதிநிலவு புலவனென் றென்றுநற்
குவலயங் கொண்டாடலால்
வழுவையம் பலவனருள் பெற்றவ னென்னலால்
வானவர்க ளெந்தநாளும்
வளரிளங் குழவியென விசுவநா தன்சடா
மகுடத்தில் விளையாடலால்
ஒழுகுமொளி யாலறிவி லிருளெலாம் நீக்கலால்
ஒப்பிலா இவனோடுனை
ஒப்பிட் டுரைப்பார்கள் கவிராச ராசர்கள்
உனக்கொத்த துணையிவன்காண்
அழகுவழு வூரினுறை உமைதரு குழந்தையுடன்
அம்புலீ யாடவாவே
அனந்தகல் யாணகுண னெங்கள்கும ரேசனுடன்
அம்புலீ யாடவாவே. (61)
செம்பொன்பள்ளி
தேசுமிகு தேவர்களி னொருவனீ இந்த்ராதி
தேவரெல் லாம்கூடியே
சிவபரப் பிரமமிவ னேயென்று பூசித்த
செம்பொற் பதாம்புயத்தோன்
வாசமல ரோனைமுன் குட்டியே சிறைவைத்து
மண்டுமண் டம்படைத்தோன்
மாலுமய னுந்தேடி அடிமுடிகள் காணாத
வளர்பரஞ் சோதிமைந்தன்
தாசரடி யார்தாச னெனவிருந் திடுமுனைத்
தன்பெருமை யறியாமலே
தனையொத்த பேரெனப் பிள்ளைவிளை யாட்டினைத்
தருமிளம் பருவத்தினால்
ஆசையோ டழைத்தன னெங்கள்கும ரேசனுடன்
அம்புலீ யாடவாவே
அழகுசெம் பொன்பள்ளி யாறான னத்தனுடன்
அம்புலீ யாடவாவே. (62)
ஆகமபுராணம்
விரிஞ்சன் பெருஞ்சிறை விடுத்தபெரு மாள்கருடன்
மேல்வரும் பெரியபெருமாள்
வேண்டவே தேவர்சிறை மீட்டபெரு மாள்மதுரை
மேவுசங் கப்பலகைவாழ்
கரைஞ்சவன் பானநக் கீரர்சிறை மீட்டவர்சொல்
கவிமாலை கொண்டபெருமாள்
காயப்பெ ருஞ்சிறை யொழிக்கவே உன்னையும்
காசிதனில் வைத்தபெருமாள்
பரஞ்சுட ரழைத்தவுடன் விளையாட வேமனம்
பதறிநீ யோடிவந்தால்
பயங்கொண்ட கட்செவியின் வெங்காள வல்லிருள்
பரந்தபற் பகுவாய்குறை
அருஞ்சிறை யொழித்தாள்வ னெங்கள் குமரேசனுடன்
அம்புலீ யாடவாவே
ஆகம புராணமலி யோகமுரு கேசனுடன்
அம்புலீ யாடவாவே. (63)
சீகாழி
முழுமதிக் கடவுளென வுளவிருட் கறையுடன்
முயற்கறையு மில்லானென
முடங்குமொரு கூனுமில் லானென்ன வொருசீவன்
முத்தனென வுன்னைவைப்பன்
குழவிவடி வானவன் தமிழ்மறை யுரைத்தவன்
கூடல்வரு கோமாறன்முன்
குறைமதி யொழித்தவன் நிறைமதி யளித்தவன்
கூனிமிர வேபாடினோன்
பழுதமண் கறையொழித் தோனின்ப வாரிதி
பரிந்துவிளை யாடவைத்தோன்
பரசமய கோளரிமெய் யெந்தைபர சிவனே
பரப்பிரம மெனநாட்டினோன்
அழுதன்னை யுமைமுலைப் பாலமுத முண்டவனோ
டம்புலீ யாடவாவே
அமரர்பணி காழிவரு குமரகுரு நாதனுடன்
அம்புலீ யாடவாவே. (64)
சுவேதவனம்
தண்டரள மெறிதிரைப் பாலாழி சததளத்
தாமரை சிங்காதனம்
தருகற்ப கக்காடு சங்கநிதி பத்மநிதி
தந்திடும் சிந்தாமணி
எண்டிசா முகமுடன் சந்திரசூ ரியர்கள்பதம்
இந்திரபு ரோகிதர்பதம்
ஈராறு ராசிபத மனுமன்னர் தம்பதம்
எண்ணிலா தோர்பதங்கள்
தொண்டுசெயு மன்பருக் கென்றே படைத்தனன்
தோன்றாத துணையாமிவன்
தோன்றுறுந் துணையென்ன முன்னின் றழைத்தனன்
துண்ணென்ன ஓடிவந்தால்
அண்டங் கொடுத்தருள்வ னெங்கள்கும ரேசனுடன்
அம்புலீ யாடவாவே
அவனிபுக ழுஞ்சுவே தவனமுறை வேலனுடன்
அம்புலீ யாடவாவே. (65)
திருக்கடவூர்
சக்கிரவா ளத்தையரை நொடியில்வலம் வந்தனன்
சலராசி யேழுமேக
சமுத்திரம தாக்கினான் விறலினால் வேள்விவரு
தகரைப் பிடித்தேறினான்
பக்கமுறு சேடனைச் சாட்டையென மேருகிரி
பம்பரம தாயாட்டினான்
பானுவின் தேரிலுனை வைத்துனது தேரின்மேற்
பானுவை எடுத்துவைத்தான்
திக்கெட்டும் வாழ்கிரி பிடித்தொன்ற னோடொன்று
சினமாக முட்டவிட்டான்
சேயுன்னை விளையாட வேயழைத் தானிவன்
திருமுன்வா ராதிருந்தால்
அக்கணம் கோபம்வைப் பானெங்கள் குமரனோ
டம்புலீ யாடவாவே
அருள்கால காலனுறை கடவூரில் வேலனுடன்
அம்புலீ யாடவாவே. (66)
திருத்தருப்பூண்டி
இவனழைத் தானுனைத் தன்னோடு விளையாட
இப்போது வாராவிடில்
ஏதிவன் திருவுளத் தெண்ணுமோ குற்றம்நீ
எங்கள்மேற் சொல்லவேண்டா
புவனநா யகனிவ னழைத்துமுன் வாராத
பொங்குவெஞ் சூரனுயிரைப்
புலிங்கமெறி கோபவட வைக்கிரைய தாக்கினோன்
புகழ்கொண்ட பானுகோபன்
உவரிநிகர் தானையந் தலைவரா மவுணர்கள்
உரங்கிழித் தேயுதிரநீர்
உகாந்தவெள் ளத்தைநிக ராகவே வைத்தவன்
உயர்வீர வாகுதேவன்
அவனையொரு தம்பிமகிழ் தூதனென ஆண்டவனொ
டம்புலீ யாடவாவே
அகத்திய ரருச்சித்த பூண்டிவரு வேலனுடன்
அம்புலீ யாடவாவே. (67)
பாவாலி
தாயினிலு மன்புடைய சண்முகன் காணிவன்
தன்னுடன் விளையாடநீ
சாமபே தத்துடன் யாவரும் விரும்பிவரு
தானமெல் லாமுரைத்தோம்
நீயிவன் தனையொரு குழந்தையென் றெண்ணிவா
னின்றுவா ராதிருந்தால்
நிருமலன் செய்தண்ட மோதுவோ மெங்கள் மேல்
நிட்டூர மோதவேண்டாம்
பாயுந்தி ரைக்கடல்க ளேழென்ன வுதிரம்
பரக்கவே பாரினின்று
பங்கயச் செங்கையொன் றாலண்ட முகடுறப்
பந்தாயெ டுத்தெறிந்தே
ஆயிரமு கங்களுள சிங்கனைக் கொன்றவன்
அம்புலீ யாடவாவே
அத்தனருள் பாவாலி முத்துக்கு மாரனுடன்
அம்புலீ யாடவாவே. (68)
பேரூர்
தரைக்கண்ணு மிந்திரன் கண்ணுமுன் கண்ணுமுயர்
சக்கிரவா ளத்தின்கணும்
தருமட்ட கிரியெனுங் குலகிரிக ளின்கணும்
சத்தசா கரநீர்க்கணும்
கரைக்கண்ணு மெண்டிசா முகமொடிர விக்கணும்
கருதுதண் மதியின்கணும்
காற்றுமுகி லின்கணு முடுக்கள்கண் ணும்பெரிய
கனகமா மேருவென்னும்
வரைக்கண்ணு மப்புறத் தண்டங்க ளின்கணும்
மயேந்திர புரத்தின்கணும்
மண்டும்பிர சண்டமா ருதமென்ன இடசாரி
வலசாரி யாகவந்தே
அரைக்கணிமை யிற்சூர பத்மனைக் கொன்றவனொ
டம்புலீ யாடவாவே
ஆராத கருணைமிகு பேரூரில் வேலனுடன்
அம்புலீ யாடவாவே. (69)
மயிலம்
பொங்குந்தி ரைக்கடல்க ளேழுமேழ் தீவுமுயர்
புகழ்பூத ரங்களெட்டும்
பொன்மேரு கிரியுமணி மயமாக நின்றிலகு
பூச்சக்கர வாளகிரியும்
மங்குல்தவ ழண்டமுக டுந்தலையும் வேறுமுற
வருசூரன் மாவானநாள்
வளரனந் தங்கோடி யண்டங்கள் தனதுருவின்
வருரோம முனையினிற்க
எங்குந்தன் வடிவென விசுவரூ பங்கொண்ட
ஏகநா யகன்பிரமமிங்
கிறப்பொடு பிறப்பிலான் நம்பிறவி மாற்றவே
ஈசனொரு மதலையானோன்
அங்கைகொண் டெட்டிப் பிடிக்குமுன் முருகனுடன்
அம்புலீ யாடவாவே
அயில்வேலன் மயிலம்வரு மயில்வா கனத்தனுடன்
அம்புலீ யாடவாவே (70)
-----------------
8. சிற்றிற் பருவம்
வயலூர்
முற்று நிறைந்த பரமசிவன்
முன்னே கலியா ணஞ்செய்த
முழுது முடையா ளேவல்செய்ய
முளரிப் பொகுட்டில் வீற்றிருந்தே
உற்ற வன்னக் கொடிநாட்டி
யொண்பா லன்னம் தமக்கேற
உகந்து சமைக்கும் பிரமன்முத
லுயிரா மனந்தந் தாதிகள்தாம்
பற்று மிகுந்து விளையாடப்
பாரா வார மேழுடுத்த
பாரேழ் முதலா நாதாந்தம்
பல்லா யிரமாங் கோடியண்டச்
சிற்றி லிழைத்த உமைமகனே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செந்நெல் மிகுந்த வயலூரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (71)
கங்கைகொண்டசோழபுரம்
மங்கை பாகர் பெருவுடையார்
மகிழக் கருவூர்ச் சித்தரவர்
வார ணாசி நிறைகங்கை
வானாற தற்குட் குடங்கள்வைப்ப
இங்கு ளாழ்ந்த விடத்துளந்த
இலக்க கங்கைக் குடங்கள்வர
எடுத்தே யாட்டி நிவேதனத்தை
இன்போ டருத்திச் சராசரங்கள்
எங்கு நிறைந்த படிகாட்ட
இலங்கு மகத்தாம் விமானஞ்செய்
எழிலார் சோழர் சித்தர்சென்னி
ஈசர் செங்கை வைத்தருளும்
கங்கை கொண்ட சோழபுரக்
கந்தா சிற்றில் சிதையேலே
கருணா நிதியே சிறியேஞ்செய்
கவினார் சிற்றில் சிதையேலே. (72)
திருநாரையூர்
முகில்போற் பொழியு மூவர்திரு
முறைகண் டெடுக்கச் சோழேசன்
முக்கா லத்தி னியல்புணர்ந்த
முத்தர் நம்பி யாண்டார்தாள்
புகழ வங்கே நிவேதித்த
பொற்பார் மோத காதியெல்லாம்
பொருந்தத் துதிக்கை யாலெடுத்துப்
பொசிக்க வவர்தாம் பின்கேட்க
மகிழைங் கரத்தோன் கனகசபை
வாயு திக்கி லிருக்குதென்றே
வந்தே யருளத் திருமுறையால்
வைய மெல்லாம் வாழவைத்துத்
திகழு நாரை யூர்க்குமரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தெய்வக் குறப்பெண் மணவாளா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (73)
குன்றத்தூர்
காக்க நம்பி யாரூரர்
கவினார் திருத்தொண்டத் தொகைக்குக்
காரார் சோலை நரரையூர்க்
கரிமா முகத்தோன் பொருளுரைக்க
ஆக்க மெழுபத் தின்மூவ
ரணிசேர் கதையெல் லாமடக்கி
அறைந்த நம்பி யந்தாதி
அரிய சிற்றம் பலத்துள்ளே
தூக்கும் பதத்தோன் திருவாக்குத்
தோன்ற வுலகெல் லாமென்று
சொல்ல வெல்லா மறிந்து
திருத்தொண்டர் புராணம் விரித்துரைத்த
சேக்கி ழார்வாழ் குன்றத்தூர்க்
சேயே சிற்றில் சிதையேலே
தெய்வ யானை மணவாள
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (74)
எருக்கத்தம்புலியூர்
வைய முய்ய மதுரேசன்
வந்து பலகை யிடப்பெற்றோர்
மறைநூற் சம்பந் தப்பெருமான்
வடிவா நீபா டும்பதிகம்
கையில் யாழ்கொண் டிசைபாடும்
கருணைக் கடலாம் திருநீல
கண்ட ராகும் பெரும்பாணர்
களிகூர்ந் திருந்த பதிக்குமரா
தையல் பாக னருள்பெறவே
தடமொன் றமைத்துத் தடமேல்பால்
தண்பூங் கோயில் சமைத்தருட்கை
தன்னால் மகிழ்ந்து சிவபூசை
செய்யு மெருக்கத் தம்புலியூர்ச்
சேயே சிற்றில் சிதையேலே
செந்தா மரைப்பூஞ் சிற்றடியால்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (75)
விருத்தாசலம்
அத்தா வமரர் தமக்கிடர்செய்
அறிவி லாக்கிர வுஞ்சகிரி
அசுரர் மடவார் சிறுவீட்டை
அழித்த தெனவே பரசமயர்
பித்தா பாச மொழிந்தீசன்
பெருமை புகழு மடவார்கள்
பெருகி வாழ நின்னடியார்
பெம்மா னின்னா லயங்களெல்லாம்
முத்தா நதியின் மணலாலே
முயன்றே யமைத்துத் திருக்கோயில்
முருகா உன்னை ஐங்கரனை
முக்கட் பெருமான் திருவடியைச்
சித்தா முமைகங் கையைப்பூசை
செய்வோஞ் சிற்றில் சிதையேலே
செல்வ விருத்த கிரிக்குமரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (76)
திருநாவலூர்
தேவ தேவன் சிவனையன்றித்
திருமா லயன்வா சவனமரர்
திருப்பாற் கடலைக் கடைந்திடவே
சினந்து வெங்கா ளந்துரத்த
ஆவி விடுமென் றரிபிரமர்
அமரர் கோமா னமரரெல்லாம்
அஞ்சி யோடி வந்திடுநாள்
அகில நாதன் திருக்கயிலை
மேவுங் கண்ணா டியிற்றோன்றி
வெங்கா ளத்தை யெடுத்தளித்த
விமல வருட்சுந் தரனுலகம்
விளங்கத் திருவ வதாரஞ்செய்
நாவ லூர்வாழ் குமரகுரு
நாதா சிற்றில் சிதையேலே
நாங்க ளுனக்கு வழியடியோம்
நாட்டுஞ் சிற்றில் சிதையேலே. (77)
திருவெண்ணெய்நல்லூர்
பொய்கண் டகன்ற அம்மையப்பர்
புகழ்சேர் மைந்தன் தனைவேண்டிப்
புகலிக் குழந்தை திருமுறையிற்
போற்றிக் கயிறு தனைச்சாத்திக்
கைகொண் டவர்கள் தொழுதேவெண்
காட்டின் திருப்பாட் டெடுத்துள்ளம்
களித்தே வந்து முக்குளநீர்
கண்டே படிந்தோர் பாலுதித்து
மைகொண் டிலங்கு மணிகண்டன்
வளருங் கயிலைத் திருநந்தி
மறையா கமத்தைக் குழந்தையெனும்
வடிவாய்த் தமிழ்செய் சுவேதவன
மெய்கண் டவன்வாழ் வெண்ணெய்நல்லூர்
வேலா சிற்றில் சிதையேலே
விளையாட் டோரைந் துடையாய்
விளங்குஞ் சிற்றில் சிதையேலே. (78)
திருவாமாத்தூர்
எம்பால் வந்தீ ரிரட்டையர்நீர்
எம்மைப் பாடு வீரென்றே
எம்மா னருளத் திருமுன்னே
இருந்தே கலம்ப கம்பாடச்
செம்பா கஞ்சேர் கலம்பகத்திற்
சிறந்த கங்கை மேற்கரையில்
திகழா லயங்கொண் டாரென்று
செப்பப் புலவ ரதேதென்ன
நம்பா நாங்க ளுரைத்தபடி
நதியைக் கீழ்பால் திருப்பென்ன
நாத னருளால் வடக்குவிட்டு
நண்ணுங் கீழ்பாற் பெருகிவரும்
பம்பா நதிசூழ் ஆமாத்தூர்ப்
பாலா சிற்றில் சிதையேலே
பச்சை மயில்வா கனனுன்னைப்
பணிவோஞ் சிற்றில் சிதையேலே. (79)
திருவதிகை
மெய்யன் பாகி யொருதாதி
விழவார் பழனத் துமாபதியே
விளங்கென் னுயிர்நா யகனென்று
விழிநீர் பொழியத் தினம்பாடிக்
கையில் வீணை யுடனுலகம்
காணக் கயிலை மேவியுமை
கணமா கச்சொன் மாலையென்றே
கல்லுங் கரையப் பதிகஞ்சொல்
ஐயன் திருநா வுக்கரசின்
அருட்கை யுழவா ரப்பணியும்
அம்மை யெமையாள் திலகவதி
யார்தம் பணியும் சிவன்திருமுன்
செய்யும் அதிகை மாநகர்வாழ்
சேயே சிற்றில் சிதையேலே
சேவற் கொடியாய் திருப்பதத்தால்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (80)
-------------
9. சிறுபறைப் பருவம்
திருவருணை
தருப்பொலியு மமரா பதிக்கர சானவன்
சபையில்நட ராசரங்கைத்
தமருகத் தெழுசத்த சூத்திர வியாகரண
சாகரம் தான்விரித்தோன்
பொருப்புயர் பரங்கிரியின் மறுகினன் மெய்க்கவிசொல்
பொய்யா மொழிப்புலவராய்ப்
பொன்போ லெனுங்கவியுன் முன்பாட வுன்பாடல்
பூவுலகி லேகொண்டுமேற்
கருப்பவ மகற்றவரும் அருணகிரி நாதராய்க்
கந்தநின் னருள்பெற்றபின்
கற்பகக் கனிரசக் கடலமுத வாரிதேன்
கடலென மகிழ்ந்துபாடும்
திருப்புகழ் முழக்கமணி ஈராறு செவியனே
சிறுபறை முழக்கியருளே
தென்னருணை வளர்கோ புரத்துவாழ் முருகனே
சிறுபறை முழக்கியருளே. (81)
திருக்கழுக்குன்றம்
உருக்கமுள வொருதாதி நாச்சிமுத் தென்னுமவள்
ஒருவை ணவன்பாடிய
உயர்கழுக் குன்றமா லைப்பிரபந் தத்தில்நா
ளொன்றினுக் கொருகவிதையாய்ச்
சருக்கரை கலந்தபா லமுதமென மலையின்மேல்
தம்பிரான் முன்புபாடச்
சண்டமா ருதமழையி னாற்றப்ப வொருதினம்
தாதிதான் பாடஈசன்
அருக்கனா யிரகோடி யெனவிடையில் வரவிடையின்
அடியைப் பிடிக்குமவளோ
டவளடி பிடிக்குமவ் வைணவனை யுங்கொண்டு
போய்க்கயிலை வாழவைக்கும்
திருக்கழுக் குன்றமெனும் வேதகிரி வருமுருக
சிறுபறை முழக்கியருளே
சிறியனேன் கேட்கவே யருணாத வொலியெனும்
சிறுபறை முழக்கியருளே. (82)
திருவிரிஞ்சை
உவமைதா மானசிறு மறையோ ரனேகரில்
ஒருவர்சிவ லோகமுறவே
உம்பர்கோன் பூசைக் கவர்க்கா ளிலாமையால்
ஊரிலுள் ளாரவர்மனை
யவள்முன்பு வந்துவந் துனதுமுறை பங்கிடென
அன்னையாள் முன்போயழ
அமலன்வளர் பாலனுக் கருள்செய்து முன்னூல்
அணிந்துநீ யின்றுநம்மைக்
குவலயத் தோர்முன்பு பூசைசெய் யென்னவே
குழந்தையெட் டாமல்நிற்பக்
குழந்தைவே லாயுத னுன்பூசை யென்னக்
குனிந்தவன் பூசைகொண்ட
சிவன்வாழ் விரிஞ்சிபுரம் வருகுமர நாயகா
சிறுபறை முழக்கியருளே
செகதண்ட நின்றுபணி தேவர்சே னாபதி
சிறுபறை முழக்கியருளே. (83)
வள்ளிமலை
இந்துவடி வாங்கருணை அன்னைசுந் தரவல்லி
எம்மையாள் அமுதவல்லி
என்றேப யோததியின் நாகமெத் தைக்குள்
இரட்சைபுரி வோன்மகளிராய்
வந்தமுத வல்லிமுன் னிந்திரன் மகளாக
மற்றிளைய வல்லிகுறவர்
மகளாய் வளர்ந்திட மறைக்கிழவ னென்னவே
வலியதண் டூன்றிவந்து
கொந்தலர் கடம்ப நீ கோடிமன் மதர்கள்நிகர்
குமரனென முன்னின்றவள்
குற்றேவல் செய்திடத் தோழியுட னுள்ளம்
குளிர்ந்தம்மை காத்திருந்த
செந்தினைப் புனம்வளரும் வள்ளிமலை வேலனே
சிறுபறை முழக்கியருளே
தெய்வக் குறத்தியொடு விளையாடி நின்றவன்
சிறுபறை முழக்கியருளே. (84)
திருத்தணிகை
ஒருத்தியென வள்ளிகலி யாணமும் செய்துபின்
னுற்றிருந் தருள்மாமலை
உமைக்கர னுரைத்ததென வள்ளிக் கனைத்தையும்
உகந்தே யுரைத்தருள்மலை
மருத்தங்கு நீலமலர் மூன்றுமுப் போதினும்
மகிழ்ந்தே தினந்தருமலை
வள்ளலுனை யர்ச்சித்து வாசவன் வெள்ளானை
வாங்கக் கொடுத்தருள்மலை
கருத்தங்கு பவமெலாந் தூரத்தி லேநின்று
கண்டோர்க் கொழித்தருள்மலை
கண்ணுதலை யெந்தைநீ சிவலிங்க வடிவினில்
கண்டுபூ சித்திடுமலை
திருத்தணி மலைக்குமர ஈராறு கைகொண்டு
சிறுபறை முழக்கியருளே
தினநீல மலர்மேவு பன்னிரு புயாசலா
சிறுபறை முழக்கியருளே. (85)
குமரகோட்டம்
பொன்குலவு மண்டமா யிரத்தெட்டை யாண்டதும்
பொன்னாட ரேவல்செய்யப்
புகழ்கொண்ட சூரபத் மாவா யிருந்ததும்
பொய்யென்று விட்டருளினால்
என்கண்ணி னடுவிலும் இமையோர்கள் முடிமேலும்
எந்தைதா ளின்கீழும்வந்
திறந்தநற் கற்பத்தில் நிற்குமயில் நின்றிட
இதற்குமுன் னின்றிடுமயில்
உன்கமல பாதத்தி லத்துவித மாகியே
உல்லாச ஆனந்தமாய்
ஒழியாம லேநிற்க வர்ச்சிக்க முத்தியருள்
உபயசர ணாம்புயத்தாய்
தென்கச்சி நகரிற்கு மாரகோட் டத்துவேள்
சிறுபறை முழக்கியருளே
செகத்தில்முப் பத்திரண் டறம்வளர்த் தவள் மகன்
சிறுபறை முழக்கியருளே. (86)
திருமயிலை
உன்மலர்க் கையிலங் கனிவாங்கி யேபுசித்
துலகநீ தியைவிளக்கி
ஓங்குமும் முடியரசர் வந்துபணி யப்புவி
யுலாமவ் வைக்கிளையவர்
கன்மமல மாயையிரு ளிரவிமுன் னிருளெனக்
காணாம லேயவன் மெய்க்
காளியுட னாடும்பிர சண்டதாண் டவனுண்மை
கண்டுமா லயனாதியோர்
நன்மையென வோதினார் நாட்டறம் பொருளின்ப
ஞானமா ரீரிரண்டும்
ஞாலத்து ளோரறிய வேதந் தமிழ்செய்த
ஞானவள் ளுவர்வாழ்பதி
தென்மயிலை யம்பதியில் வருகுமர நாயகா
சிறுபறை முழக்கியருளே.
திகழ்வாயி லாரென வெனக்கருள் விளங்கவே
சிறுபறை முழக்கியருளே. (87)
திருவொற்றியூர்
பொருளுற்ற வருட்குழவி வடிவாகி இடைமருதர்
புகாரெனுந் திகழ்காவிரிப்
பூம்பட் டினத்தெம்மை யாளும்வெண் காடர்தம்
புதல்வரென வேபுகுந்து
கருவுற்ற பாசமற மெய்க்குரவ னாகியே
கருணைக் கடைக்கண் வைத்துக்
காதற்ற வூசியும் வாராது காணுங்
கடைவழிக் கென்றருளவே
பருவத்தில் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசைப்
பற்றுக ளறத்துறந்த
பட்டினத் துப்பிள்ளை சிவலிங்க வடிவுறப்
பாடிடும் பாமாலைகொள்
திருவொற்றி யூர்மேவி வாழ்குமர நாயகா
சிறுபறை முழக்கியருளே
சிறியனே னாணவ விருட்பறவை யோடவே
சிறுபறை முழக்கியருளே. (88)
திருக்காளத்தி
முன்கருணை யாமலை சிலந்திகா ளன்யானை
மூவடிவ மாகியமலை
மூவரும் வலங்கொண்டு வந்துதே வாரங்கள்
முன்னின்று பாடியமலை
உன்கமல நயனவருள் பெற்றநக் கீரர்தாம்
உயர்முத்தி சேர்ந்திடுமலை
ஒருபிரமர் மணிகண்ட சித்தரா யாலயம்
உண்டாக்கி வைத்திடுமலை
பொன்குலவு மலர்கொண்டு வேடர்கண் ணப்பர்செய்
பூசையை யுகந்திடுமலை
புகழாத வைணவர்தம் விழிமறைத் துப்பின்பு
புகழவிழி தந்திடுமலை
தென்கயிலை யென்னவரு காளத்தி மலைமுருக
சிறுபறை முழக்கியருளே
செகதண்ட மீன்றஞா னாம்பிகை குமரனே
சிறுபறை முழக்கியருளே. (89)
திருவக்கரை
கார்மேவு மவுணக் கருங்கங்குல் விடியவே
கடவுளர்க ளொளிபெருகவே
கந்தநின் செயசங்கு கோதண்ட நாணொலி
கவின்றுடி முழக்கியதெனப்
பார்மேவு வெள்ளையுரு நீசரொடு பஞ்சமா
பாதகமி லேச்சரான
பகையிரு ளழிந்தோட உனதுசிவ சமயமாம்
பானுவந் துதயமாகக்
கூர்மேவு நகமுள்ள சேவற் கடுங்குரல்கள்
கொடியினின் முழங்கவீரக்
கோபமுள சித்திரக் கலாபமயில் வாகனம்
கூவுபே ரொலிமுழங்கச்
சீர்மேவு திருவக் கரைக்குமர வேலவா
சிறுபறை முழக்கியருளே
சிட்டபரி பாலனம் துட்டக் கிரகஞ்செய்
சிறுபறை முழக்கியருளே. (90)
--------------------
10. சிறுதேர்ப்பருவம்
சிவசுப்பிரமணியம்
அவனிக்கு ளேகுருடு மலடுசெவி டூமைமுடம்
அருவருத் திடவேமிக
அழுகிவரு குட்டங்கள் வாதபித் தஞ்சயம
சீரணமி ளைப்பொடிருமல்
நவமுற்ற கண்படல முன்மத்தம் வயிறுவலி
நாலாமு றைச்சுரமுதல்
நாலா யிரத்துமே னானூ றுடன்கூடும்
நாற்பதுட னெட்டுநோயும்
பவசத்த சாகரமு முற்றபே ரெவருமுன்
பத்தசன முண்டெறிந்த
பரிகலச் சேடத்தி னாலொழித் தானந்த
பரமசுக மாகவைக்கும்
சிவசுப்பிர மணியத்தில் வருசுப்பிர மணியனே
சிறுதே ருருட்டியருளே
தேர்ப்பிரம் பாற்பிணி யொழித்தருள் வைத்தியா
சிறுதேருருட்டியருளே. (91)
அரிப்பாடி
உன்னருட் சந்நிதியில் வாய்தற் கபாடமேல்
ஒண்திருக் காப்பின்றியே
உயர்பூசை செய்யத்தி றந்திருந் திடும்வேளை
யுஞ்சரித் திடும்வேளையும்
தன்னெல்லை வட்டத்தி லிரவிலும் பகலிலும்
சஞ்சரித் திடுமுயிர்களைத்
தரும்செம் மணிக்கண் சிவந்திடச் சீறிமுன்
தன்பலமெ லாங்காட்டியே
பன்னகம் பகுவாய் திறந்தோடி வந்துமேற்
பல்லழுந் தத்தீண்டினும்
பலவருத் தஞ்சோக மரணமொன் றின்றியே
பாரின்மேல் வாழவைக்கும்
தென்னரிப் பாடிவா ழொருகுமர நாயகா
சிறுதே ருருட்டியருளே
சேரர்மெய்ச் செங்கோல் செலுத்துமலை நாடனே
சிறுதே ருருட்டியருளே. (92)
திருவஞ்சைக்களம்
புகழ்கொண்ட மலைநா டதற்குளுன் னூரினில்
பூதநா யகனருளினால்
பூவுலகு தொழுமால காலசுந் தரரண்டர்
பொன்னுலகி லுவாவின்மேலும்
பகர்சேர மான்குதிரை மேலும்வட கயிலைமேற்
பரமசிவ னுங்கவுரியும்
பரமகுரு நின்னோடு வீற்றிருப் பதுதொழப்
பயணம்பு றப்படும்போ
தகிலத்து மாயைமூ விருளையு மறத்துறந்
தவர்பின் தொடர்ந்துபோனால்
அவர்க்கடிமை யாகலா மவர்பின்பு போகாமல்
அவமே யிரந்தலைந்தேன்
திகழுமஞ் சைச்களத் தப்பனரு ளாறுமுக
சிறுதே ருருட்டியருளே
சிறியனேன் விழிகாண இப்போது முருக
சிறுதே ருருட்டியருளே. (93)
திருக்கோகரணம்
ஏகநா யகன்கயிலை இமையவர்கள் தம்பிரான்
இராவண னுள்ளமகிழ
ஈந்துசிவ லிங்கமொன் றீதுதரை வையா
திலங்கையிற் கொடுபோவெனச்
சாகரத் தின்கரையில் வரும்வேளை யொருபிரம
சாரியாய் வாங்கியதனைத்
தரைவைக்க அதுசத்த பாதாளம் வேருறச்
சமர்செயுமி ராவணன்றன்
ஆகமொரு பந்தென வெடுத்தண்ட கூடமுற
அம்மானை யாடிவிளையா
டதிபலப ராக்கிரம விநாயகன் மகிழ்தம்பி
அம்பரவை ரத்தினாகரச்
சீகரம் வந்துலவு கோகரணம் வாழ்முருக
சிறுதே ருருட்டியருளே
சிவன் மகா லிங்கபெல லிங்கமூர்த் தியருள்குக
சிறுதே ருருட்டியருளே. (94)
ஸ்ரீசயிலம்
உருச்சிகர தரிசனஞ் செய்தோர் பிறப்பொழித்
துயர்முத்தி யுதவுசயிலம்
உனக்குமயில் தந்திடக் காசிபன் தனைமுன்னம்
உயிரினை விடுத்தசயிலம்
கருச்சுமையி தென்றுடலை யருவருத் திடுபெரியர்
காயங்கள் நீக்குசயிலம்
கந்தநீ கந்தையைப் பூசித்த சயிலமுன்
கங்கைசூழ் காசிமகிமை
அருச்சனை செயுந்தலைவி மகிழவே கும்பமுனி
அன்போ டுரைத்தசயிலம்
அனந்தமடி யார்சிறிய சிலையெலாம் சிவலிங்க
மாமென் றணிந்தசயிலம்
திருச்சயில மலைவா ழருட்டரும நாயகா
சிறுதே ருருட்டியருளே
தென்மருதி லிடைமருதில் வடமருதில் வாழ்முருக
சிறுதே ருருட்டியருளே. (95)
கார்த்திகைமலை
தவசு செய்தானை யர்ச்சித் திருந்தகிரி
தவசுநீ செய்திடுதலால்
தரைமாதர் விண்மாத ரொருவரணு காதகிரி
சகமறிய வும்புசித்துப்
பவமொழித் தருள்பெறவு மையநீ யுண்டசெம்
பவளவாய் நின்று வழியும்
பைம்பொனிமை யாசலத் துமையம்மை திருமுலைப்
பால்திரண் டேவளர்கிரி
அவனிபுகழ் காசிகண் டக்கதையை நீமுன்
பகத்தியர்க் கோதியகிரி
அம்பொதிய முனிபன்னி யுடனுன்ப தாம்புயம்
அர்ச்சித்து வாழ்த்தியகிரி
சிவசாமி கார்த்திகை யெனுங்கிரியில் வாழ்முருக
சிறுதே ருருட்டியருளே
சிவகாமி நாதர்பர தத்துவ மெனுங்குமர
சிறுதேருருட்டியருளே. (96)
உச்சினி- அவந்திகை
கற்பக மெனுங்காசி புரிகாஞ்சி புரிதுவா
ரகாபுரி அயோத்தியாபுரி
கருதுமது ராபுரி கவின்கொள்மா யாபுரி
கலந்தவோ ராறுபுரியோ
டற்புதமி குந்திடும் தன்னோடு சத்தபுரி
யாகியே நின்றருள்புரி
அரனருளி னாற்பஞ்ச பாண்டவர்கள் விக்கிரம
வாதித்த ரேயாதியாப்
பொற்புடைய மன்னவர்க ளாண்டபுரி வாகீசர்
போற்றுபுரி காளிதாசன்
போற்றுமா காளிபூ சித்தபுரி எண்ணிலாப்
புண்ணியர்கள் வாழ்ந்திடுபுரி
சிற்பரா நதிபெருக வந்திகா புரிமுருக
சிறுதே ருருட்டியருளே
செகமெலா முச்சினி யென்னவரு புரிமுருக
சிறுதே ருருட்டியருளே. (97)
பிரயாகை
சறுவசக மும்பெற்ற சங்கரி வலம்புரிச்
சங்கமாய் வந்ததீர்த்தம்
சகலமறை யாகமபு ராணசாத் திரமிருதி
தானுவந் தோதுதீர்த்தம்
குறுமுனிவன் முதலான முனிவரர்கள் கோடிபேர்
கொண்டாடி யாடுதீர்த்தம்
குளிர்மகர மாதத்தில் மனிதரும் தேவரும்
கூடியே மூழ்குதீர்த்தம்
நிறையுலகர் வலியவே காயங் கொடுத்தவர்
நினைந்தபொருள் வாங்குதீர்த்தம்
நினைவரிய பாதகர்கள் மூழ்கினா லவர்களையும்
நின்மலர்க ளாக்குதீர்த்தம்
திரிவேணி நிறையும் பிரயாகைநகர் முருகனே
சிறுதே ருருட்டியருளே
சீவனுடன் வாழ்பவர்கள் கேட்டவர மருள்முருக
சிறுதே ருருட்டியருளே. (98)
கயை
அறந்தவிரொர் பெரியகெய வசுரனது முடியின் மேல்
அம்பிகா நாதனுமையாள்
ஐங்கரன் அண்ணல்நீ யரியாதி பதினெண்மர்
அருளுடன் பாதம்வைத்து
நிறைந்ததல மீதென்ன நின்றதன் னெல்லையைமெய்
நீங்கினோர் கோத்திரத்தில்
நின்றவர்கள் மூவேழு தலைமுறையுள் ளோர்பிறர்
நினைத்துவந் தடிமிதித்தால்
இறந்தோர்கள் நாலேழு கோடியெனும் நரகத்
திருந்தாலும் மண்ணில்விண்ணில்
இறப்பொடு பிறப்புற் றிருந்தாலும் முத்திமலை
யேறவே யேணிவைக்கும்
சிறந்தபற் குனிநதி நிறைந்தகெயை வாழ்முருக
சிறுதே ருருட்டியருளே
செத்தவர்கள் பிறவாத முத்திதரு குமரனே
சிறுதே ருருட்டியருளே. (99)
கேதாரம்
அறம்பொருள்க ளின்பம்வீ டருணந்தி யாரூா
ராதியோர் மேவுகயிலை
யங்கிரிக் குத்தெற்கி லக்கமே யிருபதுடன்
ஐயாயி ரம்படியெனும்
நிறைந்தமலை யுண்டவையுள் முதன்மலையி தாதலால்
நின்னைக்க வானில்வைத்து
நீண்மந்திர சிங்கா தனத்தம்மை யுடன்மேவு
நிருமலன் வெள்ளிவெற்பில்
பிறந்திறந் துழலாம லானந்த அமுதுண்டு
பெருவாழ்வு பெற்றிருக்கப்
பேராசை யுற்றோர்ச ரீரத்து டன்வரப்
பெரியவருள் முத்திவாய்தல்
திறந்திருக் குஞ்சிவன் கேதாரம் வாழ்முருக
சிறுதே ருருட்டியருளே
தேகம்விட் டுன்சந்நி திக்கடிய னேன்வரச்
சிறுதே ருருட்டியருளே. (100)
ஸ்ரீ சுப்பிரமணியர் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
________
6. க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் - குறிப்புரை முதலியன
சிவமயம் - திருச்சிற்றம்பலம்
விநாயகர் : ஒங்காரவடிவு - பிரணவ வடிவம். குடிலை - பிரணவம், நாதம்-நாததத்துவம்.
சிவபிரான் ஆன்மாக்களிடத்து வைத்த அருளினாலே ஆன்மாக்களை இரட்சிக்க இச்சைமிகுந்து, குடிலையின் ஏகதேசத்தைக் கலக்க, அதிலிருந்து நாததத்துவமும் அதிலிருந்து விந்து தத்துவமும் தோன்றும். நாதம் முப்பத்தாறாம் தத்துவம் என்பது ஒடுக்க முறையில் ; தோற்றமுறையில் அது முதலாவது தத்துவம் ஆம். விந்துதத்துவம் முப்பத்தைந்தாவது.
நாதம் என்பது, இரண்டு எதிர்மறையான மின்சாரசத்திகள் (பாயும்சத்திX தாங்கும்சத்தி) ஒன்றொடொன்று சேரும்போது தொனியும் பிரகாசமும் (ஒலியும் ஒளியும்) தோன்றுவதுபோலச் சிவசூரியனுடைய கதிர் குடிலையில் வந்து பொருந்தியவுடன் உண்டாகிய தொனியேயாம். நாதத்திலிருந்து விந்து தோன்றும். தொனி ஆகாயத்தில் பரவுங்காலத்து வட்டவடிவாகவே பரவும். விந்து-புள்ளி, வட்டம். வரிவடிவில் புள்ளியிலிருந்து எழுத்துக்கள் தோன்றும்; தொனி வடிவில் ஒலிவட்டத்திலிருந்து எல்லா எழுத்துக்களும் தோன்றும்.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு"
என்பது திருக்குறள்.
இதனை நுனித்துணர்க. உபாதானம்-முதற்காரணம். சுத்தமாயை அசுத்தமாயை, பிரகிருதிமாயை என மாயை மூவகைப்படும். மா - ஒடுக்கம், யா-தோற்றம். உலகம் ஒடுங்கித் தோன்றுவதற்கு இடனாய் உள்ளது மாயை. ஆன்மாக்களுக்கு அறிவை மயக்கி விளக்குவதால் மாயை எனப்பட்டது. கலை- நிவிர்த்தி முதலிய ஐந்து. மந்திரம் பிரமமந்திரம் ஐந்தும், அங்கமந்திரம் ஆறும் ஆகிய பதினொரு மந்திரங்கள். பதம்-எண்பத்தொன்று. வன்னம்-எழுத்து ; ஐம்பத்தோரக்கரம். இவை சுத்தமாயாகாரியம். மந்திரம் என்பதற்கு சத்த கோடி மகாமந்திரம் எனவும் கொள்ளலாம். ஐந்து ஏழ்-சிவதத்துவம் ஐந்து, வித்தியா தத்துவம் எழு. ஆங்கார முதலான தத்துவம்-ஆன்ம தத்துவம் இருபத்து நான்கு எனக்கொள்க. ஆங்காரம் என்பது 22-ஆம்தத்துவம். அதற்குமேல் புத்தி, சித்தம் இரண்டுமாம். புருட தத்துவம் 25-வது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தும் இறைவருக்குத் திரு விளையாட்டாம். ஆனந்த வனம்- ஸ்ரீகாசி.
"திருவமர் காசி நாளும் சிவானந்த மளிக்கு மாற்றால்
பெருகுமா னந்த கானம் எனப்பெயர் பெற்ற தன்றே." - காசிகண்டம்.
குஞ்சரம் - யானை. குஞ்சரக்கன்று - விநாயகக் கடவுள். ஊங்காரம் - ஹூம் என எழுப்பும் ஒலி. சூர்மா - சூரனாகிய மாமரம். ஆரம்தாங்கு மணிமார்பன். முருகவேள் எழுந்தருளியுள்ள தலங்களினுள்ளே ஒரு நூறு தலம் என்க.
'தமிழ்மாலை தழைக என்று குஞ்சரக்கன்றின் அடிமலரை அஞ்சலிப்பாம்' என முடிபு செய்க.
-------------
1. காப்புப் பருவம்
1. (அடி-1) கயிலாய சிகரம் - கயிலாய மலையின் உச்சி. விசுவபதி - சிவபிரான். விசுவம் - உலகம், அதற்கு நாயகன் விசுவபதி. - கனகம் - பொன்.
(அடி-2) குணபூதரம் - குணமலை. கோகனகன் - பிரமதேவர். குடிலை -பிரணவப்பொருள்.
(அடி-3) பராசத்தி ஆதிசத்தி இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி எனச் சிவசத்தி ஒன்றே வியாபார பேதத்தால் இவ்வாறு நாம பேதத்தை அடைவதே அன்றி வஸ்து பேதமில்லை என்க. அஃது எப்படிப் போல என்னில், தீயினிடத்துள்ள உஷ்ணசக்தி ஒன்றே உலோகம், காஷ்டம், இலவணம், அன்னம் முதலிய விஷயபேதத்தினால் உருக்குகிறது கொளுத்துகிறது வெடிக்கிறது சமைக்கிறது போலாம். இவர் பஞ்சசத்திகள் எனப்படுவர்.
(அடி-3, 4) சிவசத்தி யொன்றே போககாலத்தில் பவானி எனவும், கோபகாலத்தில் காளி எனவும், யுத்த காலத்தில் மகாதுர்க்கை எனவும் பெயர் பெறும் என்க. அயில் - கூர்மை. அகிலம் - எல்லாம். அறிதுயில் - யோகநித்திரை.
2. (அடி-1) கனகமான சபை-பொன்னம்பலம். அம்பரம் - ஆகாயம் ; ஞானாகாசம். நால்வர்- திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் சமயகுரவர். செந்தமிழ்ப்பாட்டு - தேவார திருவாசகங்கள். சிம்புள் - எண்காற்புள், சரபம். அண்டர்-தேவர்.
(அடி-2) மணி தங்கு வாய் உரக கங்கணம் - இரத்தினங்கள் பொருந்திய வாயினையுடைய பாம்பாகிய கங்கணம். தந்தையாகிய கயிலாயன் என்க.
(அடி-3) மங்குல் - மேகம். வானவர் - தேவர். பைந்தருத்தோப்பு - கற்பகச் சோலை. கடம்பன் - கடப்பமலர்மாலையை யணிந்த கடவுள்.
(அடி-4) அகந்தை-செருக்கு. களிகூர - மகிழ்ச்சிமிக. கோட்டு உயர் கந்தகிரி - சிகரங்களால் உயர்ந்து விளங்கும் கந்தவெற்பு.
முடிபு: ஆறுமுக மைந்தரைக் காக்கத் தந்தைகயிலாயன் அடி சிந்தை வைத்து ஏத்துதும்.
3. (அடி-1) புவனங்கள் இருநூற்றிருபத்து நான்கு என்க. சதுமுகத்தோன் - பிரமதேவர். சடங்கு - திருமணச்சடங்குகள். புரந்தரன் - இந்திரன், ''புரந்தரன் பூம்புனல் பொழிந்து நிற்ப-" “வானவில்லைக் குழைக்குந் திருத்தாதை நீரொடு கொடுப்ப” (முத்துக்குமாரசுவாமிபிள்ளைத்தமிழ்)
(அடி-2) சிவபரங்கிரி- திருப்பரங்குன்று. ஆறு ஆனனம் - ஆறு திருமுகங்கள்.
(அடி-3) நவபேதம்- பிரமா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன் உருவம்; சதாசிவன் அருவுருவம்; விந்து, நாதம், சத்தி, சிவம் என்பன அருவம். குண்டலி - குண்டலிசத்தி. குண்டலி சிலம்பு, நாதபரமானந்தம் சிலம்பொலி, ஞானானந்தம் வடிவு என்க.
இவை இறைவனுக்கு உபசாரவடிவமே, உண்மை வடிவ மன்று. இதனை
" சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்திரன்தான் மாலயன் ஒன்றி னொன்றாய்
பவம்தரும் அருவம் நாலிங் குருவநா லுபயம் ஒன்றா
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்.''
-சிவஞானசித்தியார்.
''..... புகன்று, மெய்தரு சைவமாதி இருமூன்றும் வித்தையாதி
எய்துதத் துவங்க ளேயும் ஒன்றுமின் றெம்மி றைக்கே”
- சிவஞானசித்தியார்.
"தத்து வந்தலை கண்டறி வாரிலைத்
தத்து வந்தலை கண்டவர் கண்டிலர்
தத்து வந்தலை நின்றவர்க் கல்லது
தத்து வனலன் தண்புக லூரனே''
- திருநாவுக்கரசர்.
(அடி-4) பவம்- பிறப்பு. அத்துவிதம்- அத்வைதம். பரம நாடகம் - பரமானந்த தாண்டவம். சிவசூரியன், திருவருட்கிரணம்.
முடிபு: உமை, தெய்வானையை மணம் செய் குமரனைப் புரக்க. தெய்வயானையம்மையார் திருமணம் இதில் கூறப்பட்டது.
4. (அடி-1) சிங்கமுகாசுரன், தாருகாசுரன், சூரபன்மன் என்னும் மூவரும் சகோதரர்கள். தெவ்வர்-பகைவர்.
(அடி-3) அயுதங்கோடி- பதினாயிரங்கோடி. சலராசி - கடல். கங்காதேவியின் வெண்ணிறத்திருமேனி பதினாயிரங்கோடி சந்திரர் உதயம் போன்றதாம் என்க.
முடிபு: கங்கை நாயகி என்னும் ஆனந்த அருள் வெள்ளம் எந்தைகுகனைப்புரக்க.
5. (அடி-2) வரையாமல்-அளவில்லாமல்.
(அடி-3) தோல்முகன் - யானை முகத்தையுடைய கஜமுகாசுரன், ஞான்று-பொழுது. குற்றேவல் - பணிவிடை.
முடிபு: கருணை மலை மைந்தனைத் தனிபுரக்க.
6. (அடி-2) நார் அகத்தே - அன்புள்ள மனத்திலே. நாகவட்டம் - வானவட்டம்.
(அடி-3) தாரகப்பிரமம் - பிரணவம். பொற்சபை - பொன்னம்பலம்; சிதம்பரம்
7. (அடி-1) குறுநகை - புன்மூரல்.
(அடி-2) பாச ஐந்து அந்தகாரம்-ஆணவம், மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து மலவிருள்.
8. (அடி-1) எண் திசாமுக நாயகர் - அட்டதிக்குப்பாலகர்.
(அடி-3) கான்முளை - புத்திரன். சதுரானனன் - நான்முகன்.
(அடி-4) சததளம் - நூற்றிதழ். பத்மாசனம் - தாமரை மலராகிய பீடம்.
9. சரஸ்வதி, இலக்குமி, சத்தமாதர், துர்க்கை , பத்திரகாளி முதலியோர் பரமசிவன் அருளும் கருணாநிதியைப் புரக்க என்க.
10. (அடி 1-2) காசியில் இறந்த ஆன்மாக்களுக்கு உமையம்மையார் உத்தரீயத்தினால் இளைப்பாற்றல், சிவபெருமான் வலச்செவியில் தாரகப்பிரமத்தை உபதேசித்தல் கூறப்படும். எட்டு வடிவு - அட்டமூர்த்தம் : அவை - மண் நீர் அனல் வளி வான் சந்திரன் சூரியன் ஆன்மா என்பன.
முடிபு: முப்பத்து முக்கோடி தெய்வங்கள் முருகனைப் புரக்க என்க.
____________
2. செங்கீரைப்பருவம்
11. (அடி-1) உதயரவி - உதயசூரியர். உபயசரணம் - இரண்டு திருவடிகள்.
(அடி-2) விமலம்- குற்றமற்ற. நயனம்- கண்.
(அடி-4) தென்கமலை- அழகிய திருவாரூர். தேவாதி தேவன் ஈண்டு முருகவேள்.
12. (அடி-1) சச்சிதானந்தம்- சத்துச் சித்து ஆனந்தம் ஆகிய வடிவம். இதனை 'உண்மையறிவானந்தவுருவாகி'...என்று பரஞ்சோதி திருவிளையாடல் கூறும். உண்மையாவது: அநாதி நித்த மல பந்த ஆன்மாக்களைப்போல் ஆக்கக் கேடுகள் இன்றி நிலைபேறுடைய அநாதி சுத்த முத்தத்தன்மையுடையனாய் நிற்றல். அறிவாவது: ஆன்மாக்களிடத்தில் வியஞ்சகமாய் நின்று உணர்த்துமாறுபோல் தனக்கு ஓர் வியஞ்சகம் வேண்டாது விளங்கியும், விளக்கம் செய்தும் இயற்கை உணர்வினனாய் நிற்றல். வியஞ்சகம்- துணை. ஆனந்தமாவது: மலபோதத்தால் ஆன்மாக்கள் மலைவுற்றுச் சிற்றறிவால் அநுபவிக்கும் சிற்றின்பங்கள் போலாது ஆன்மாக்களுக்கு முத்தியின் கண் பேரின்பம் அளிக்கும் வாம்பில் இன்பமுடையனாய் நிற்றல். சத்து- உண்மை , சித்து- அறிவு, ஆனந்தம் - வரம்பில் இன்பம். "நித்தியானந்தபோதமாய்” (கந்தர் கலி வெண்பா) அனந்த கல்யாண குணம் - எல்லையில்லாத மங்கல குணங்கள். சர்வக்கியம் - முற்றுணர்வு. சூடாமணி - தலையிலணியும் மணி. சருவபரிபூரணம் - எல்லாப்பொருளிலும் எள்ளினுள் எண்ணெய் போலவும் பாலினுள் நெய்போலவும் நிறைந்து நிற்றல்.
(அடி-2) அசஞ்சலம் - சலனமின்மை . பரஞ்சோதி - பேரொளிப்பிழம்பு. அகளங்கம்-களங்கமின்மை . மதி - சந்திரன். அநாதி - ஆதியின்மை .
(அடி-3) ரவி- சூரியன். நிர்க்குணம் - மாயாகுணங்கள் இன்மை; எனவே அருட்குணங்களோடு கூடிவிளங்குதல் என்க; அவை எண்குணம். ஆமயம் - மலம்; அஃதின்மை நிராமயம். புராதன - "முன்னைப்பழம் பொருட்கு முன்னைப்பழம் பொருளே'' என்றபடி. அத்துவிதம் - இரண்டற்ற நிலை..
(அடி-4) செச்சை - வெட்சி. புயாசலம் - புயமலை.
13. (அடி-1) மாணிக்க கங்கை - ஒருதீர்த்த விசேடம். கதிர்காமவேலரைத் தரிசிப்போர் ஊமை நீங்கப்பெறுவர், குருடுபோம், மலடிகள் மைந்தரைப் பெறுவர் என்க.
(அடி-2) முருகவேள் நாமத்தைக்கூறி வழிச்செல்வோரை வனவிலங்குகள் துன்புறுத்தா என்பது. 'கந்தனே கண்கண்டதெய்வம்' என்பது குறிப்பிடத்தக்கது. “மெய்கண்ட தெய்வம் இத்தெய்வம் ” என முத்துக்குமாரசுவாமிபிள்ளைத்தமிழில் வருவது காண்க.
(அடி-3) இவ்வாசிரியர் காஞ்சிபுரத்தவர் என்பதும், இவருக்கு உடம்பில் ஒருவகை நோய் உள்ளதென்பதும், அந்நோய் நீங்குதற்குப் பெரிதும் வேண்டுகின்றார் என்பதும் இதனால் தெரிகிறது. முத்தி மண்டபம் காஞ்சீபுரத்தில் உள்ளது; இம்மண்டபம் மூன்று என்றும் அவை முறையே முத்தீச்சுரத்திற்கு எதிரிலும், சர்வதீர்த்தத்தின் பக்கத்திலும், திருவிராமேச்சுரத்தின் சந்நிதியிலும் உள்ளன என்று கூறுவர்.
(அடி-4) சேண் - விண்ணுலகு. புலோமசை - இந்திராணி. பெண்பிடி -தெய்வயானையம்மையார்.
14. (அடி-1) முகிலூர்தி - மேகவாகனம். இமையோர் - தேவர். இப்பாடலின் பொருள் கந்தபுராணம் - உற்பத்திகாண்டம் - திருவிளையாட்டுப்படலத்திற் காண்க.
15. (அடி-1) அச்சுதன்- திருமால். திருமடந்தை - இலக்குமி.
(அடி-2) ஓராயிரம் பணாமுடி உரகம் - ஆதிசேடன்; பணம்- படம், உரகம்- பாம்பு.
இப்பாடல் வள்ளியம்மையார் வரலாறு கூறும்.
16. (அடி-1) இமயாசலம் - இமயமலை. பூரணன் - சிவ பெருமான்.
இப்பாடல் அகத்தியருக்கு இறைவர் திருமணக்கோலங் காட்டி நிற்றல் கூறுகின்றது.
(அடி-4) கும்பமுனி- அகத்தியர். முருகவேள் அகத்தியருக்கு உபதேசித்தமையால் ‘கும்பமுனி குருநாத' என்றார்.
17. (அடி-1) சித்திராநதி - குற்றாலத்துத் தீர்த்த விசேடம்.
(அடி-2) மருவாய் - வாசனைபொருந்திய, மௌலி- கிரீடம், மணிவண்ணம்- நீலநிறம்.
(அடி-3) சடாடவி - சடைக்காடு, அம்மானிடம் பிரியாத- அழகிய மான்போன்ற உமாதேவியார் வாமபாகத்தினின்றும் நீங்காத; அந்தமான் இடக்கரத்தினின்றும் நீங்காத எனவும் பொருள் கொள்ளலாம். ஐந்து ஆனனம்- ஐந்து திருமுகம்.
18. (அடி-1) விறல்-வலிமை, வச்ரபாணி- வச்ராயுதத்தைக் கையிலேந்திய இந்திரன்.
(அடி-2) வம்பர்- வீணர். அவுணர்- இராக்கதர். பின் இரண்டடிகள் முருகவேள் திருவிளையாட்டைக் குறித்தன.
19. (அடி-1) அகரம் உகரம் மகரம் விந்து நாதம் என்பன ஐந்து ஓங்காரங்கள். "ஓதியவைந், தோங்காரத்துள்ளொளிக்கும் உள்ளொளியாய்" (கந்தர் கலிவெண்பா -58-9) ''ஓங்காரத்துள் ளொளிக்குள்ளே முருகன் உருவங்கண்டு" (கந்தரலங்காரம்) ஆறு - ஆறத்துவாக்களைக் குறித்தபடி.
மட்டில்- எல்லையில்லாத குடிலை- பிரணவம், நிரை- வரிசை. முறை- விதி. இப்பாடலின் கருத்து "-படைப்போன், அகந்தையுரைப்பமறை யாதி யெழுத்தொன் றுகந்த பிரணவத்தின் உண்மை புகன்றிலையால், சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙனென்று முனம், குட்டிச் சிறையிருந்தும் கோமானே'' எனக் கந்தர் கலிவெண்பாவிலும்; 'சிட்டி செய்வதித் தன்மையதோவெனாச் செவ்வேள், குட்டி னானயன் நான்குமா முடிகளும் குலுங்க" எனக் கந்தபுராணத்திலும் விரிவாகக் கூறியருளினமை காண்க.
(அடி-3) எட்டிருங்கைக் கமலன்- பிரமதேவர். இருநூற்றிருபத்து நான்கு புவனம் என்க.
20. இதுவும் குமாரக்கடவுள் திருவிளையாட்டுக் கூறுகின்றது.
__________________
3. தாலப்பருவம்
21. (அடி 1-3) நாதன் - சொக்கலிங்கமூர்த்தி, மதுரையில் தலைச்சங்கப்புலவர் - 4,449, இடைச்சங்கப்புலவர் - 449, கடைச் சங்கப்புலவர் நக்கீரர் முதலாக - 49 என முறையே குறித்தபடி. வேதன்- பிரமதேவர். மதுரை என்றது நகரத்தை
(அடி-4) ஆறு குணம் - ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்பன. அமலன் மலரகிதன். ஆலவாய் என்பது திருக்கோயில். இதனை, "கூடலாலவாய் ”, “மதுரையாலவாயிலாய்" (திருஞான-தேவா.) தென்கூடற்றிருவாலவாய்” (திருநாவு-தேவா.) “மதுரைத் திருவாலவாய்” (சொக்கநாதருலா) எனக்கூறுதல் காண்க.
22. இப்பாடலின் கருத்தைக் கந்தபுராணம்- தகரேறு படல வரலாற்றிற் காண்க. விரிஞ்சன்-பிரமதேவர். துங்கம்- பரிசுத்தம். “விருப்பா லளித்தநவ வீரருக்குள் முன்னோன், மருப்பாயும் தார் வீரவாகு- நெருப்பிலுதித், தங்கட் புவனம் அனைத்தும் அழித்துலவும், செங்கட் கிடாயதனைச் சென்றுகொணர்ந்- தெங்கோன், விடுக்குதியென் றுய்ப்பவதன் மீதிவர்ந் தெண்திக்கும், நடத்தி விளையாடும் நாதா” (கந்தர் கலிவெண்பா 88-90).
23. (அடி-1) நாட்டம்- கண். மாருதம்- வாயு. அளகேசன்- குபேரன்.
(அடி-2) சரம்- அம்பு. பூமாரி- பூமழை.
(அடி-4) கந்தகிரி - கந்தமாதன வெற்பு. இது கயிலையைச் சார்ந்துள்ளதும், முருகக்கடவுளுக்கு உரியதுமான மலை. தேவார வைப்புத்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது; 'கந்தமாதனம் கயிலைமலை கேதாரம்’ தேவாரம். கந்தபுராணம் திருவிளை யாட்டுப் படல வரலாறு காண்க.
24. (அடி-1) மாமகம்- பெருமை பொருந்திய யாகம்.
(அடி-2) தகுவர்- அரக்கர்.
முடிபு: அவியுண்ண, மையுண்ண, விருந்துண்ண வெண்பாலுண்ட செவ்வாயா.
25. (அடி-1) அமரர்கோமான்- இந்திரன், புகலி- சீகாழி.
(அடி-2) சோமன்- சந்திரன். சடாமௌலி- சடாமகுடம்.
(அடி-3) கும்பமுனி- அகத்தியர். இப்பாடலிற் கூறிய வரலாற்றைக் கந்தபுராணம், காவிரிநீங்குபடலத்திற்காண்க;
"சுரர்கு லாதிபன் தூய்மலர் நந்தனம்
பெருக வார்கடல் பெய்த வயிற்றினோன்
காக நீரைக் கவிழ்த்த மதகரி”
- பிரபுலிங்கலீலை.
26. சித்தர்களுடைய பலவகை நிலைகள் இதில்பேசப்பட்டுள. அட்டாங்கம்- இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன.
"இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியா காரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.”
-(திருமந்திரம்-552)
அணிமாதி- அணிமா, லகிமா, மகிமா, பிராத்தி, கரிமா, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. எல்லாம் வல்ல சித்தர் வரலாறு திருவிளையாடற் புராணத்திற் காண்க.
27. (அடி-2) இரதம்- சுவை. எயில்- மதில். சக்கரவாளம்- சக்கரவாளகிரி. எண்மலை-எட்டுமலை ; (அட்டகுல பருவதங்கள்)
(அடி-3) கைந்நொடி-ஒருமாத்திரை.
பிரமபுத்திரராகிய நாரத முனிவர் சிவபெருமானிடத்துக் கொடுத்த மாதுளம் (மாம்) பழத்தைப் பெறும்படி உலகத்தை வலம் வரவேண்டுமென்று முருகவேள் மயிலேறி வலம் வந்தார். அதற்குள் விநாயகக்கடவுள் தமது தந்தையாரை வலம்வந்து அக்கனியைப் பெற்றார். அதனைக்கண்ட முருகக்கடவுள் சினந்தவராய்த் திருக்கயிலையினின்றும் புறப்பட்டு இத்தலத்தின்கண் வந்து எழுந்தருளியிருந்தார். உமாதேவியார் இளையபிள்ளையாரைப் பிரிய உளங்கொள்ளாதவராய்ச் சிவபெருமானுடன் இத்தலத்தில் வந்து குமாரக்கடவுளை எடுத்தணைத்துக்கொண்டு “பழம் நீயே” உனக்கு வேறுமொரு பழமும் வேண்டுமோ? எனக்கூறிக் கோபத்தை மாற்றினர். அக்காரணத்தால் ‘பழநி’ எனப்பெயர் வந்தது. இதன் விரிவைப் பழநித்தல புராணம் திருவாவினன்குடிச் சருக்கத்தால் உணர்க.
இச்சரித்திரம் புராணங்களில் வேறுவிதமாகவும் சொல்லப் படும்.
''கூறுடை யாளும் குன்றாக் குணப்பெருங் குன்றும் ஞானப்
பேறுடைப் பழம் நீ என்னப் பெயரது மருவி எங்கள்
ஆறுமா முகவன் வைகும் நகரமும் அன்று தொட்டு
வீறுதொல் பழநி என்றே விளம்பின உலகம் மூன்றும்”
-(பழநித்தல புராணம்)
'பழநி' என்பது முருகவேளின் படைவீட்டுத் தலங்கள் ஆறனுள் ஒன்று. முற்காலத்தார் இதனைத் திருவாவினன்குடி என்றனர். திரு-இலக்குமி, ஆ-பசு; காமதேனு, இனன்- சூரியன் இவர்கள் பூசித்த தலம் ஆகலின் அப்பெயர் பெற்றது. கு- பூமி, டி-அக்கினி இவ்விருவரும் பூசித்தலின் 'குடி’ என்றும் கூறுவர். இத்தலத்துக்குச் சித்தன் வாழ்வு என்றும் பண்டையோர் கூறினர். சித்தன் - முருகக்கடவுள் திருநாமம் ஆயிரத்துள் ஒன்று என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.
இனி, பழம்- என்னும் சொற்றொடர் "அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும்" என்னும் தொல்காப்பியப்புள்ளிமயங்கியல் (19) சூத்திரவிதியால் மகரம் கெட்டுப் பழநீ எனப்புணர்ந்து 'நீயென் னொருபெயர் நெடுமுதல் குறுகும் ” என்ற உருபியல் சூத்திர(7) விதிப்படி பழநி என முடிந்தது என்பர் யாழ்ப்பாணத்து மகா வித்துவான் ஸ்ரீ நா. கதிரைவேற் பிள்ளையவர்கள்.
28. (அடி-1) உபயமுனிவார்கள்- ஆதி சம்பு என்னும் பெயருடைய இரண்டு முனிவர்கள்; இவர்கள் காசியப முனிவருடைய புதல்வர்கள். இரண்டு முனிவர்கள் முத்தியை விரும்பித் தவம் புரியச் சிவபெருமான் கலியுகத்தில் முத்தி பெறுவீர்கள் என்ன, இப்பொழுதே வேண்டுமென, மறுத்துக்கூறியதற்காக அவர் கட்டளைப்படி சம்பு, ஆதி என்னும் பெயருடைய இரண்டு கழுகுகளாகிப் பூசிக்கின்றனர் என்பது (கழுக்குன்றப் புராணம் - கங்காசலச் சருக்கம்) வாலாறு.
29. (அடி-1) பாகம்- பக்குவநிலை; அஃது இருவினையொப்பு மலபரிபாகம் சத்திநிபாதம். பரிவு - அன்பு. நடம்செய்- நர்த்தனம் செய்கின்ற. பற்றார்- பகைவர்.
(அடி-2) காகம் அணுகாமலை :-"தாதாரும், ஆகமெலி ஆயனுக்கா வன்றெரித்த நாண்முதலாய்க், காக மணுகாக் கனகிரியான்” (வாட்போக்கிநாதருலா-46) 'தூய தீம்பால், அறைபடரக் கவிழ்த்தவொரு காகத்தை முனிந்தனர்'', "ஒருகாகம் எரித்தனை'' (வாட்போக்கிக் கலம்பகம்)
(அடி-4) மேகம் வணங்கும் இரத்தினகிரி - "தொடி முழங்க மணியொலித்துத் துணை விபுரி பூசை கொலோ, இடி முழங்கப் புரிபூசை எஞ்ஞான்றும் இனிதுவப்பாய்'' (வாட்போக்கிக் கலம்பகம்)
30. திருகல் மனம்- மாறுபட்ட மனம். இப்பாடலில் கூறிய வரலாறு : சுந்தரமூர்த்தி நாயனார் கொடுங்கோளூரிலிருந்து திருவாரூருக்குச் செல்லும்பொழுது, சேரமான் பெருமாள் நாயனார் தம்முடைய களஞ்சியத்திலுள்ள பொன் இரத்தினம் ஆபரணம் வஸ்திரம் சுகந்தவர்க்கம் முதலிய திரவியங்களெல்லாம் பல ஆட்களின் மேலே சுமத்தி அந்தச் சுமையாட்களைச் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பரிசனத்துக்கு முன் செல்லும்படி அனுப்பினார். அவர்கள் திருமுருகன்பூண்டிக்குப் போகும் பொழுது வழியில் சிவபிரான் தம்முடைய பூதகணங்களை நோக்கி, சுந்தரனுடைய பண்டாரங்களைக் கவருங்கள் என்று ஆஞ்ஞாபிக்க, அவைகள் நாயனாருடைய சுமையாட்கள் வரும் வழியிலே வேடுவர்களாகிப்போய் அந்தத் திரவியங்கள் எல்லாவற்றையும் கவர்ந்து கொண்டன. அவர்கள் ஓடிப்போய் நாயனாருக்கு விண்ணப்பம் செய்ய, நாயனர் திருமுருகன் பூண்டியிலே சென்று திருக்கோயிலிலே பிரவேசித்து, சுவாமியை வணங்கி, “கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்” என்று திருப்பதிகமெடுத்துத் திருப்பாட்டு இறுதிதோறும் “எத் துக்கிங்கிருந்தீர் எம்பிரானிரே” என்று பாடியருளினார். உடனே வேடுவர்களாய் வந்த பூதகணங்கள் தாங்கள் பறித்த திரவியங்கள் எல்லாவற்றையும் திருக்கோயிலின் வாயிலிலே கொண்டுபோய்க் குவித்தன என்பது.
___________________________
4. சப்பாணிப்பருவம்.
31. (அடி-1) பாடகம் - மகளிர் காலில் அணியும் ஒருவகை ஆபரணம். அதள் - தோல். நீள்கலை - நீண்ட ஆடை.
(அடி-2) உரக கங்கணம் - பாம்பாகிய கங்கணம். விண் ஆறு - ஆகாயகங்கை.
(அடி-4) அர்த்த நாரீசன் - மாதொருபாதியன் ஆகிய சிவபெருமான். ஆழி - சக்கரம்.
இத்தலத்தில் இறைவர் அர்த்தநாரீசுவர மூர்த்தியாகக் காட்சி தருதலின் இவ்வாறு கூறினர்.
32. (அடி-2) கேயூரம்- தோள்வளை. நுதற்சுட்டி- நெற்றியிலணியப்படும் ஓர் ஆபரணம். நுதல் - நெற்றி.
(அடி-3) தரள மாலை - முத்துமாலை. புண்டரம் - திரி புண்டரம்.
(அடி-4) புயசயில - புயமலைகளையுடையவனே! விளி.
33. அநுக்கிரகம் - அறக்கருணை, நிக்கிரகம்- மறக்கருணை.
“நிறைபரன் உயிர்க்கு வைத்த நேசத்தின் நிலைமையாகும் - அறமலி இதஞ்செய் வோருக் கநுக்கிர கத்தைச் செய்வன் - மறமலி அகிதம் செய்யின் நிக்கிர கத்தை வைப்பன்”, “நிக்கிர கங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வ- தக்கிரமத்தால் குற்றம் அடித்துத்தீர்த் தச்சம் பண்ணி - இக்கிர மத்தினாலே ஈண்டறம் இயற்றி டென்பன்- எக்கிர மத்தினாலும், இறைசெயல் அருளே என்றும்.” (சிவஞான சித்தியார்-சூத்-2; அதி 2,)
(அடி-2) தீ- நெருப்பு. ஆலம்- நஞ்சு. அம்பிகாபதி- விளி.
34. (அடி-2) கெருடவாகனன் - திருமால். குற்றேவல் - சிறிய ஏவல்களை. ஞான்று - பொழுது. வள்ளி நாயகியார் முன் தண்டூன்றிக் கொண்டு எழுந்தருளிய கிழக்கோலத்தைக் குறிப்பித்தபடி. “.... நீடுமகிழ் வெய்தியவண் நின்றகும ரேசன், நாடுபுகழ் சைவ நெறி நற்றவ விருந்த, வேடமது கொண்டுவரும் வேடரெதிர் சென்றான்” (கந்தபுராணம் - வள்ளியம்மை திருமணப்படலம்); "தெய்வ மகக்கோல மேமுதிர் கிழக்கோல மாய்க்குற மடந்தைமுன் நடந்து மற்றத், திருக்கோல முடனொரு மணக்கோல மானவன்'' (முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்)
(அடி-3) அருண கண மணி - சிவந்த கூட்டமாகிய இரத்தினங்கள். அயிராணி-இந்திராணி.
(அடி-4) தருண வடிவு- கட்டிளம் பருவம்.
வள்ளிநாயகியாரிடத்துக் கிழக்கோலமும், தெய்வயானையம்மையாரிடத்து வாலிபவடிவமும் கொண்டுசென்றமை இதிற் குறித்தபடி.
35. (அடி-1) அம்புராசி- கடல், அளித்தருளும் அகிலாண்ட நாயகி, என்னையாள் அகிலாண்ட நாயகி என்க.
(அடி-2) செழுநீர்த்திரள்- "திருவானைக்காவுளானைச் செழுநீர்த்திரளைச்
சென்றாடினேனே” (தேவாரம்)
“போக்கறு தீர்த்தம் தன்னைப் பொள்ளெனத் திரட்டித் தேசு
தேக்கொளி யிலிங்க மாக்கித் திகழ்தர இருத்தி னாளால்" (திருவானைக்காப்பு-அகிலாண்ட -89).
“பூந்தடத்துத், தண்டுறையி னின்றுமையாள் தங்கோவைக் கங்கையுடன், கண்டுபிடிப் பாள்போற் கரபற்பம்- கொண்டு, திரட்டத் திரண்ட செழுநீர்த் திரளால், அருட்டிக்க வெண்ணாவ லானோன்" (திருவானைக்காவுலா-25, 26)
(அடி-3) இமையவர்கள் கம்மியன் - மயன். தேவர்கள் தம்பிரான் சிவபெருமான். நீறிட்டான் மதில்- "பெருவாழ் வுலகுக் கருளுவான் பிறங்குமதில் செய்திட நினைந்தான்.", "எல்லாம் வல்ல தன தியல்பும் ஈண்டும் கருமந் தமக்கியைய, எல்லார் தமக்கும் பயனுதவும் இயல்பும் விபூதி எனும்பெயரைப், புல்லா நின்ற திருநீற்றின் பொலிவும் விளங்கக் கூலிக்கு, நல்லா தரவின் நீறளிப்ப நயந்தார் நாவற் பெருமான்", "தெளிக்கும் திரு நீறே தத்தஞ் செய்கைக் கேற்பச் செழும் பொன்னாய்க், களிக்கும் வகை செய்தறன் கடைகள் கதுவா தொழிக்கும் பெருஞ்சிறப்பால், வெளிக்கணொருசித் தரைப் போல விளையாட்டயரும் அமுதேசற், கொழிக்கும் வகையின் றாயெவரும் உறுதியோடு பணிபுரிவார்'' (திருவானைக் காப்பு- திருநீற்று-10-11)
(அடி-4) சம்புநாதன்- வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருந்தருளும் பெருமான்.
36. இப்பாடலிற் கூறிய வாலாறு திருவையாற்றுப் புராணம் சிலாசமுனிச்சருக்கத்தானும், நந்திகேசுவரச் சருக்கத்தானும் அறிக.
(அடி-1) சிவசாரூபம் பெற்ற திருநந்திதேவர் நிலைகூறும்.
(அடி-2) இடபத்தின் வாய் நீராதி - "கங்கையினீர் கமலத்தோன் கமண்டலநீ ருமையம்மை, கொங்கையினீர் கொண்டனீர் குணநந்தி வாய் நுரைநீர், அங்கையினால் ஐயாறன் அபிடேகம் பண்ணினனே ” (நந்திகேசுவரச்)
(அடி-3, 4) இவ்வரலாறு சைவச் சருக்கத்தா லறிக. "ஐயா றதனிற் சைவ னாகியும்" (திருவாசகம்)
(அடி-4) மதலை - குமார ; விளி. சாறு - திருவிழா,
37. (அடி-1) சடம்- அறிவில்லாத. தாரகப்பிரணவம் சொல்- பிரணவமந்திரத்தை உபதேசித்தருளும். தம்பிரான்- சிவபிரான்; விசுவேசர். தரளம்- முத்து. தரங்கம்- அலை. கங்கை விண்ணாறு - கங்கையாகிய தெய்வ நதி.
(அடி-3) மடந்தைபாகர்- சிவபிரான் திருநாமம், பழைய கும்பகோணபுராணத்தில் மடந்தைபாகர் திருநடவாவுரைத்த சருக்கம் 535 செய்யுட்களால் இயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சடாடவிசடைக்காடு. கங்கைநதி வாணி காளிந்தியாதி மாநதிகள் - "கங்கையாளவள் கன்னியெனப்படும், கொங்கையாளுறையுங்குட மூக்கிலே", "யமுனை... கோதாவிரியுறையும் குடமூக்கிலே'', “சாமியோடு சரச்சுவதியவள், கோமியும் முறையுங் குடமூக்கிலே" “தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க், கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே" (தேவாரம்)
(அடி-4) மாமகத்தீர்த்தமென்னும் தடம் - மகாமகக்குளம்.
38. இப்பாடலிற்கண்ட பொருள் வருமாறு :- திருவிடைமருதூரை மகாலிங்கத்தலமாகக் கொண்டு விநாயகர் திருவலஞ்சுழி, முருகவேள் திருவேரகம், சண்டேசுவரர் திருச்சேய்ஞலூர், திரு நந்திதேவர் திருவாவடுதுறை, சூரியனாலயம் சூரியனார் கோயில், வயிரவக்கடவுள் சீகாழி, சபாபதி சிதம்பரம், சோமாஸ்கந்தர் திருவாரூர் எனப் பரிவாரமூர்த்திகள் இயல்பின் அமையப் பெற்று விளங்குவது என்பது. இதனை,
''........................................ ஒப்பேதும்
இல்லா வலஞ்சுழியே ஏரம்பன் வைப்பாக
மல்லே ரகமுருகன் வைப்பாக- நல்லார்சேர்
தண்மாட வாப்பாடி தண்டீசன் வைப்பாக
வண்மாந் துறையிரவி வைப்பாக- எண்மாறா
நன்காமர் தில்லை நடராசன் வைப்பாக
மன்காழி யேவடுகன் வைப்பாக- முன்காணும்
தென்னா வடுதுறையூர் சேவமர்வைப் பாவாரூர்
மன்னுசோ மாக்கந்தர் வைப்பாக- உன்னில்
தடைதவிரா லங்குடியா சாரியன்வைப் பாக
இடைமருதில் வீற்றிருக்கும் ஈசன்” -(திருவிடைமருதூருலா 131-136)
என்றது காண்க.
(அடி-2) விடை- திருநந்திதேவர். வடுகன் - வயிரவக் கடவுள்.
(அடி-3) பெரியநாயகர்-சோமாஸ்கந்தர். இப்பாடலில் தக்ஷிணாமூர்த்தி ஆலயம் ஆலங்குடி (இரும்பூளை)குறிக்கப்படவில்லை.
39. பயோததி -- திருப்பாற்கடல்; பயம்- பால், உததி-- கடல். வெள்ளைவாரணம் எனப்பிள்ளையார் திருநாமம் வந்த காரணம் கூறப்பட்டுளது.
40. (அடி-1) பூ கமல நயனன்- அழகிய தாமரை மலர் போலும் கண்களையுடைய விஷ்ணு மூர்த்தி.
(அடி-2) சக்கராயுதமும், தண்டும், வச்சிராயுதமும், சூலமும், மழுவும் ஒருவடிவமாய் வந்தவேல். ரவி- சூரியன். வடிவேல்- கூர்மையான வேலாயுதம்.
(அடி-3) வாகை- வெற்றிமாலை. அருள் செய் என்று அம்பிகாநாதர் கொடுத்தவேல்: அருள்வடிவமானவேல்.
(அடி-4) தானவர்- அசுரர். குலகால- குலத்துக்கெல்லாம் இயமனே ; விளி.
________________________
5. முத்தப்பருவம்.
41. (அடி-1) இருமைத்தம்பியர்- இரண்டுவகைப்பட்ட தம்பியர்; அவர் நவவீரர், இலக்கம் வீரர் எனப்படுவர். பூதகணம் இரண்டாயிரம் வெள்ளம், பூதப்படைத்தலைவர் நூற்றெண்மர்.
(அடி-3) காவேரி நாடு - சோழ நாடு, மண்ணிகதி- மண்ணியாறு;
சுப்பிரமணிய நதி என்பது அது. தேவர்கம்மியன்- மயன். சேய்--முருகவேள்.
இப்பாடலிற் கண்ட வரலாறு கந்தபுராணத்திற் காண்க
42. இப்பாடலிற் கண்டவரலாறு திருத்தொண்டர் புராணம் சண்டேசுர நாயனார் புராணத்தால் அறியலாம்.
'பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் தாதை, வோடைந்து பாய்ந்ததாளை வேர்த் தடிந்தான் தனக்குத், தாரடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்ததென்னே, சீரடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே ”- ஆளுடையபிள்ளையார்.
"தழைத்ததோ ராத்தி யின்கீழ்த் தாவர மணலாற் கூப்பி- அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு- பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்- குழைத்ததோர் அமுதமீந்தார் குறுக்கைவீரட்டனாரே”-- திருநாவுக்கரசு சுவாமிகள். சுந்தரமூர்த்திசுவாமிகள், மாணிக்கவாசகசுவாமிகள், சேந்தனார் முதலிய பெரியோர்களும் இதனைப் பாராட்டியுள்ளமை காண்க.
பாலுகந்தார்- சிவபெருமான் திருநாமம்.
43. உமாதேவியாருக்கு உபதேசம், பிரமனுக்கு அருளியது. கேதகை, அயிராவதம், தாடகைக்கு அருள்செய்தமை, குங்கிலியக்கலையருக்கு நிமிர்ந்தருளியது முதலிய அருட்செயல்கள் சிவபிரான் செய்தருளினார் என்பது காண்க. கலையனார் புதல்வனுயிர் மீட்ட வரலாறு தலபுராணக்கதை போலும்.
இறைவர் செஞ்சடைவேதியர், தலப்பிள்ளையார் அயிராவத கணபதி ஆண்டபிள்ளையார் என்பர்.
44. இப்பாடலில் திருமூலநாயனார் திருமந்திரமாலை அருளியதும், திருவிசைப்பா அருளிய திருமாளிகைத் தேவர் இங்கே எழுந்தருளியமையும் கூறப்படுகின்றன. ஆ அடு துறை பசுவடிவத்தை மாற்றியருளிய இடம். ஆன்மாக்களுக்குப் பசுத்தன்மையை நீக்கிப் பதித்தன்மையை அடைவிக்கும் தலம் - என்பது பெயர்க்காரணக் குறிப்பு: சே- இடபம்.
45. இச்செய்யுளில் அரதத்த சிவாசாரியர் வரலாறு கூறப்படும். பழுக்கக் காய்ச்சிய இருப்பு முக்காலியிலிருந்து சைவ ஸ்தாபனம் செய்தமை குறித்தல் காண்க. கஞ்சனூராண்டகோ- "கஞ்சனூராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே" திருத்தாண்டகம்.
(அடி-2) தாதை- தகப்பன். கொண்டல் வண்ணன்- மேக வண்ணனாகிய திருமால். கஞ்சு அயின்று - பிதாக்கொடுத்த விடத்தைக்குடித்து.
46. (அடி-1) தமிழ்வேதங்கள்- தேவாரத் திருப்பதிகம்,
(அடி-2) திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளுடன் எழுந்தருளிய தொண்டர் பதினாறாயிரம்பேர் எனக்குறிப்பித்தபடி.
இச்செய்யுள் சிவபெருமான் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருக்கு முத்துப்பந்தர் கொடுத்தருளியமை கூறுகின்றது.
திருஞான சம்பந்தப்பிள்ளையார் திருவலஞ்சுழியை அடைந்து சுவாமிதரிசனம் செய்துகொண்டிருக்கும் நாளிலே முதிர்வேனிற் காலம் வந்தது. அம்முதிர்வேனிற் காலத்திலே பிள்ளையார் திருவலஞ்சுழியினின்றும் நீங்கி, திருப்பழையாறைக்குப் போதற்கு அடியார்கள் உடன்செல்லச்சென்றருளி, திருவாறைமேற்றளியை அடைந்து வணங்கி, திருச்சத்திமுற்றத்திற் சென்று, சுவாமிதரிசனம் செய்துகொண்டு, திருப்பட்டீச்சரத்துக்குப் போகப் புறப்பட்டார். அப்பொழுது வெய்யில் வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டுப் பிள்ளையாருடைய திருமுடியின் மேலே சிவபூதம் முத்துப்பந்தரை எடுத்து, “பட்டீசர் எம்மை விடுத்தருள் புரிந்தார்” என்று சொல்லிற்று. அந்தச்சொல்லும் முத்துப் பந்தரும் ஆகாயத்திலே தோன்றப் பிள்ளையார் திருவருளைத் துதித்துப் பூமியிலே விழுந்து நமஸ்கரித்தார். பிள்ளையாருடைய பரிசனங்கள் அந்த முத்துப்பந்தரைக் காம்பிலே பிடித்தார்கள். பிள்ளையார் அந்த முத்துப்பந்தர் நிழற்றச் சென்று திருப்பட்டீச்சரத்தை அடைந்து சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனர் புராணம் 391-396 திருவிருத்தங்கள் நோக்கியுணர்க, 'விடையொதுங்கி நிற்பப்பார்த்து மகிழ்தலை' சந்நிதியில் சென்று தரிசித்துணர்க.
47. இத்தலத்திலே ஒருபாதி திருமால் வடிவும் மற்றைப்பாதி சிவபிரான் வடிவுமுமாகக் காட்சிதந்தருளியமை குறிப்பித்தபடி.
சங்கரநாராயணன் - சங்கரரும் நாராயணரும் கலந்த திருவுருவம். “சீரேறு திருமாலோர் பாகத்தான் காண்'', "திருமாலோர் பங்கத்தான் காண்” (தேவாரம்). "தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும், சூழரவும் பொன்னாணும் தோன் றுமால்- சூழும், திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கிரண்டுருவும் ஒன்றாய் இசைந்து" (திவ்- மூன்றம் திருவந்தாதி-63) “சங்கரநாரணனே" (கூழையந்தாதி-56). “ஒருபாற் புலித்தோலுடைதயங்க மற்றை, ஒருபாற்பொன் னாடை ஒளிர- ஒருபால், மழுவும் ஒருபால் வளையும் துலங்கத், தழுவும் உருவமைந்து' (சங்கரலிங்கவுலா-13-4): (யாப்பருங்கலவிருத்தி சூத் 2), மேற்கோள் பழைய உதாரணச் செய்யுளில் மருட்பாவுக்கு இம்மூர்த்தம் உவமையாகக் கூறப்பெற்றிருப்பதும் காண்க.
(அடி-1-3) சங்கரன் வடிவில்: செம்பவள வன்னம், நீள்மழு, நாககுண்டலம், கமலநாயகனான திருநயனம், கங்காநதிநிறை தருண சந்திர சடாமௌலி கொன்றைமாலை முதலியவை பொருந்தியுள்ளன.
நாராயணன் வடிவில்: நீலநிறம், சக்கரம், மகரகுண்டலம், செங்கமலவிழி, இரத்தினம் நிறைந்த சம்புநதி அம்பொன் முடி, தண்டுளபம் முதலியவை பொருந்தியுள்ளன.
(அடி-2) கமலநாயகன்- சூரியன். நயனம் - கண். சம்புநதி அம்பொன்- சாம்பூநதம் என்னும் பெயர்பெற்ற பொன். "நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழை" என்னும் திருமுருகாற்றுப்படை (வரி-18)க்குச் ‘சாம்பூநதமென்று நாவலோடடுத்துப்பெயர் பெற்ற பொன்னால் நிருமித்து விளங்குகின்ற பூணினையும்' எனவரைந்த நச்சினார்க்கினியர் உரைநோக்கியுணர்க. இது ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம் என்னும் நான்கு வகையான பொன்னுள் ஒன்று.
(அடி-4) மா ராசை- சங்கரநயினார் கோயில்; ஸ்ரீராசை ‘திருவனந்தரு சீராசை' என்றது காண்க. சங்கரநாராயணன்- சிவபிரான் திருநாமம். மதலை- புத்திரன்.
48. (அடி-1) வெம் காளகூடம்- கொடிய ஆலகாலவிடம், மணிகண்டம் - நீலகண்டம். முக்கண் - சோமசூரியாக்கினி ஆகிய மூன்று கண்கள்.
(அடி-2) உழுவை அதள் -புலித்தோல். மணி உரக கங்கணம் - இரத்தினத்தைத் தன்னகத்தே கொண்ட பாம்பாகிய கங்கணம் என்க.
(அடி-3) வேதபரிபுரம்- வேதச்சிலம்பு.
(அடி-4) பால்வண்ணன் - இத்தலத்து இறைவர் திருநாமம். வரதுங்கராம பாண்டியர் திருப்பணி செய்து வழிபட்ட தலம் என்பர்.
49. இவ்வாசிரியர் கனவில் இறைவர் அருள்செய்தமை குறிக்கப்படுகின்றது. தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது கணநாதர்கள் சூழத் திருப்பெருந்துறையில் குருந்த மரநீழலில் குருவடிவாக எழுந்தருளியமையும் மாணிக்கவாசக சுவாமிகளை ஆட்கொண்டமையும் சொல்லியபடி.
(அடி-3) வனசமலர்- தாமரைமலர். ஆனந்த மது - ஆனந்தத்தேன்.
(அடி-4) ஞான தினகரன் - ஞான சூரியன். வாதபுரி- திருவாதவூர். தென்னவன் பிரமராயன்- மாணிக்கவாசகசுவாமிகள்.
50. (அடி: 1-4) அயன்- பிரமதேவர். குரு - பிருகஸ்பதி பகவான். சதமகன்- இந்திரன். பொதியமலை முனி- அகத்தியர்.
நக்கீரர், அவ்வையார், பொய்யாமொழி, அருணகிரிநாதர், கருவூரர், சின்னப்புலவர் (?) பகழிக்கூத்தர், குமரகுருபரசுவாமிகள் முதலியோருக்குக் கவிபாட அடியெடுத்துக் கொடுத்த செய்திகளைத் தொகுத்துக் கூறியபடி. குமரகுருபரசுவாமிகள் முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்பாடும்படி 'பொன்பூத்த குடுமி' எனப் புள்ளிருக்குவேளூரில் அசரீரியாகக் கிடைத்த குறிப்பு பிரசித்தமானது.
-----------------------------------------
6. வாரானைப்பருவம்
51. (அடி-1) அடல்- வலிமை. பதாகை- கொடி, செம்பருதி- சிவந்த நிறத்தையுடைய சூரியன்.
(அடி-2) மௌலி- முடி. நகை- புன்சிரிப்பு. பரிபுரம்- சிலம்பு.
(அடி-4) எண்கண்ணன்- எட்டுக்கண்களையுடைய பிரமதேவர்.
52. (அடி-1) அபிடேகமஞ்சனம் - அபிடேக நீர்.
(அடி-2) பண்டாரி - கருவூலத்தையுடையவன்.
சுவாமி திருநாமம் - கேடிலிநாதர். சுப்பிரமணிய சுவாமி பூசித்த தலங்களுள் இதுவும் ஒன்று.
53. (அடி-1) தாணு - உருத்திரன். அட்டவித்தியேசுரர் - அனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகவுருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர், சீகண்டி என்னும் எண்மர். இவர் அதிகா ரமலம் ஒன்றே உடையவர்.
54. (அடி-1) புராரி - புரத்தையழித்தருளிய உருத்திரக் கடவுள். முண்டகத் தவிசு - கமலாசனம்.
(அடி-4) வெண்ணெய்ப்பிரான் - இத்தலத்துச்சிவபிரான் திருநாமம். இவர் வசிட்டமுனிவரால் பூசிக்கப்பட்டவர்.
55. மாமோகம் என்னும் நித்திரை - பானுகோபன் விட்ட மோகப்படையால் வந்த மயக்கம், இருவர் - பிரம விஷ்ணுக்கள்..
(அடி-3) மட்டு - தேன். கழனி - வயல். இவ்வடிகளிற் கூறிய பகுதி – “நெற்கரும்பெனக் கரும்பெலாம் நெடுங்கமுகென்ன வர்க்க வான்கமு கொலிகலித் தெங்கென வளர்ந்த,” (பரஞ்சோதி திருவிளையா - நகரப்) கன்னல்- கரும்பு. பூகம்- பாக்குமரம்.
(அடி-4) இபமாமுகத்தான் - விநாயக்கடவுள்.
56. (அடி-4) ஏக தந்தம் - ஒற்றைக்கொம்பு. வெள்ளிமலை - கயிலாயம். உதாபந்தனம் -அரைப்பட்டிகை.
(அடி-2) சலராசி - கடல். வளி - காற்று.
(அடி-3) வீரகத்திச்சேதக விநாயகர் என்பது இத்தல விநாயகர் திருநாமம்.
57. (அடி-1) குருசரணர் - சமய குரவர்.
(அடி-2) நறை - தேன். கனியின் - இன் ஒப்புப்பொருள். முருகவேள் தமது ஒப்பற்ற வடிவத்தைக்காட்டிநின்று கருவூர்ச் சித்தரைப்பாடப்பணித்தனர் என்பது வரலாறு.
58. (அடி-1) குக்குடத்துவசன் - கோழிக்கொடியையுடைய முருகவேள் : விளி.
(அடி-3) எண்குணத்தன்- 'கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்- தாளை வணங்காத் தலை” (குறள்-9.) எண்குணங்களாவன - தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங் களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை. 'பரையாதி பஞ்சசத்திகள் - பரை ஆதி இச்சை ஞானம் கிரியை ஆகிய ஐவகைச்சத்திகள்.
59. (அடி-1) ஐந்தரு -கற்பகம், மந்தாரம், பாரிசாதம், சந்தானம், அரிசந்தனம் என்பன. - அங்கை – ஆமலகம் - உள்ளங்கை நெல்லிக்கனி.
(அடி-3) மன்மத ஆகாரம் ஆம் - மன்மதர்களுடைய வடிவமாம். மன்மதாகாரம் தீர்க்க சந்தி.
(அடி-4) கேயூரம்-தோள்வளை. மயூரம்-மயில்.
60. (அடி-1) உம்பர் - தேவர்கள். ஆரூரன் - கமலை ஞானப் பிரகாசதேசிகர். அருளினால் ஒளிவடிவம் ஆன குரவன்- அக்குருவின் அருளுபதேசத்தினால் சிவஞானப்பிழம்பாகிய, தருமை ஆதீனத்து முதற்குரவர் குருஞானசம்பந்த தேசிகமூர்த்திகள். குமர குருபரமுனி - திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து முதற்பெருந்தலைவ ராகிய ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் .
(அடி-2) அம்புயத்தாள் சென்னி சூடினோன் - தருமையாதீனத்து நான்காவது குருமூர்த்தமாகிய ஸ்ரீமாசிலாமணி ஞானசம்பந்ததேசிகமூர்த்திகள். இவர்களே ஸ்ரீ குமர குருபர சுவாமிகளுக்கு அநுக்கிரகம் செய்தருளியவர்கள். எலி பூஞை அரவு போத்து குயில் கிளி அத்துவிதம் ஆகவே... தீட்சை செய்தோன் - இவ்வாதீனத்து 9-வது குருமூர்த்தமாகிய ஸ்ரீ திருநாவுக்கரசு தேசிகஞானசம்பந்தர். இவர்கள் “தருமபுர மடாலயத்தில் எழுந்த ருளியிருக்கும் காலத்தில் பூனைகள் கிளிகளுடனும், குயில்கள் செம்போத்துக்களுடனும், பாம்புகள் எலிகளுடனும் அஞ்ஞானத்தினால் போர் புரிந்துகொண்டு துன்பம் விளைத்தலைக் கண்ணுற்றுத் திருக்கடைக்கண் சாத்தி, அஞ்ஞானத்தை நீக்கி, மெய்ஞ்ஞானத்தை அருள, உடனே அவைகள் யாவும் பகைமை நீங்கித் திருவடிகளில் வந்து அடைக்கலம் புகுந்தன. ஞானதேசிகர் திருவடிதீக்கை புரிந்து. அவைகளைச் சிவகதியில் சேர்த்தருளினார்கள் என்பது வரலாறு. இதனை,
"கானமரும் கிள்ளையொடு குயில்செம்போத்துக்
கட்டரவம் பூனையெலி கதியிற் சேர
ஞானவருட் பார்வைபுரி நாதா போதா”
என வரும் இக்குரு மூர்த்திகள் வணக்கச்செய்யுளானும் அறியலாம். ஞான தீட்சை விவரங்களைச் சிவஞானபாடியத்துக் காண்க.
--------------
7. அம்புலிப்பருவம்
61. இச்செய்யுளில் சாம பேத தான தண்டம் என்னும் நால்வகை உபாயங்களுள் சாம உபாயம் கூறப்படுகிறது. சாமம் - ஒப்பு. சந்திரனுக்கும் முருகவேளுக்கும் சிலேடை.
(அடி-1) சிவபெருமான் முன்னம் பதினாறுகலைகளும் நிரம்பும்படி சந்திரன் அடைக்கலம்புக்குப் பெற்றகாரணத்தினால்,
பதினாறுகலை அளவுள்ள பிராசாதம் ஆகிய பிரணவமந்திரத்தைச் சிவபெருமான் முன்னம் முருகவேளிடத்துக் கேட்டகாரணத்தினால், மதிநிலவு புலவன் - சந்திரன் என்னும் பெயரையுடைய கடவுள், பூரணஞானத்தையுடையதெய்வம்: சங்கப்புலவராக எழுந் தளியிருந்ததைக் குறிக்கும். “நூலறிபுலவ" (திருமுருகு-261 அடி)
(அடி-2) வழுவை - வழுவூர் என்பதன் மரூஉ. அம்பலவன்-சிவபிரான். அருள்பெற்றவன் - அருளாற் பெறப்பட்டவன் முருகக்கடவுள், அருளைப்பெற்ற 'சந்திரன். இளங்குழவி - பிறைச் சந்திரன், இளையோன் : இளைய பிள்ளையார்.
(அடி-3) ஒளி - பிரகாசம், புகழ். அறிவு இல் இருள் - பொருள்களை அறிதற்கு இயலாத பூதஇருள், அறியாமையாகிய அஞ்ஞான இருள். ஒப்பிட்டுரைதல் - உவமித்துக் கூறுதல்.
62. இப்பாடலில் பேத உபாயம் கூறப்படும்.
(அடி-1) தேசு - பிரகாசம்.
சிவபெருமானின் முருகக்கடவுள் வேறல்லர் என்பது. "அறிவுளறிவை அறியுமவரும் அறிய அரிய பிரமமே (முத்துக்குமார- பிள்ளைத்- வருகைப் 9,)
(அடி-1) மலரோன் - பிரமதேவர். “சிட்டித்தொழில் அதனச் செய்வதெங்ங னென்று முனம், குட்டிச்சிறையிருத்தும் கோமானே" (கந்தர் கலிவெண்பா-94) – “சிட்டி செய்வதித் தன்மைய தோவெனாச் செவ்வேள், குட்டி னானயன் நான்குமா முடிகளும் குலுங்க" (கந்தபுரா-அயனைச்-14)
63. (அடி-1) பிரமதேவன். "மூவர், குறைமுடித்து விண்ணங் குடியேற்றித்தேவர், சிறைவிடுத் தாட்கொண்டளித்த தேவே" (கந்தர் கலி-104)
(அடி-2) கரைஞ்ச அன்பு - உருகிய அன்பு, சிறைமீட்டு அவர் சொல் கவிமாலை எனப்பிரிக்க. கவிமாலை - திருமுருகாற்றுப்படை. காயம் பெரு சிறை - உடம்பாகிய பெரிய சிறைக்கூடம்.
(அடி-3) கட்செவி - பாம்பு. வெங்காளம் - கொடியவிஷம்.
64. (அடி-1) முழுமதிக்கடவுள் - பூரணசந்திரன், நிறைந்த அறிவுடைய தெய்வம். உள இருட்கறை - மனதில் உள்ள அஞ்ஞானம் ஆகிய குற்றம், முயற்கறை - முயலாகிய களங்கம். முடங்கும் - வளைந்த.
(அடி-2), குழவிவடிவு - குழந்தைவடிவம்.
தமிழ்மறை - தமிழ்வேதமாகிய தேவாரம். கூடல்- நான்மாடக் கூடல் ஆகிய மதுரை. கோ மாறன்- அரசனாகிய பாண்டியன். குறைமதி - குறைந்த அறிவு. நிறைமதி -பூரணஞானம். கூன் - உடற்கூனும், மனக்கூனும்.
(அடி-3) பழுது அமண் - குற்றமுடைய சமணசமயம். இன்ப வாரிதி- இன்பக்கடல். பரிந்து - விரும்பி, பரசமய கோளரி - பரசமயங்களாகிய யானைகளுக்குச் சிங்கம் போல்பவர்.
65. இப்பாடலும் முற்கூறிய பாடலும் தான உபாயத்தைக் கூறுவன.
தேவர்பதங்களும், சங்கநிதி பத்மநிதிகளும் திருவடித்தொண்டு செய்பவருக்குரியவைகள் ஆகலின் விரைந்து வா, உனக்கு அண்டங்களையும் கொடுத்தருளுவன் என்கிறார்கள்.
66. முருகவேள் சிறுபிராயத்தில் திருவிளையாடல் செய்த போது அவர் செய்த காரியங்களை நினைத்துப்பார். நீ வராதிருந்தால் மிக்ககோபம் உண்டாம் ஆகலின் விளையாடவா என்கின்றனர். தண்ட உபாயம் கூறுவது. இது.
67. (அடி-2) புவன நாயகன் - உலகமுழுதுடையான். புலிங்கம் - தீப்பொறி
(அடி-3) உவரி - கடல். தானை - சேனை. உரம் - மார்பு. இதுவும் தண்ட உபாயமே கூறுகின்றது.
68, 69. தண்ட உபாயம் கூறுவன.
70. (அடி-1) பூதரம் - மலை.
(அடி-2) மங்குல் - மேகம்.
(அடி-3) விசுவரூபம் - திருப்பெரு வடிவம்.
------------------------------------
8. சிற்றிற்பருவம்
71. (அடி-1) முற்றும் நிறைந்த - எள்ளினுள் எண்ணெய் போலும், பாலினுள் நெய்போலும் முழுவதும் நிறைந்திருக்கும். முழுதும் உடையாள் - ஆன்மாக்களையெல்லாம் மீளா அடிமையாகவுடைய உமாதேவியார். முளரிப் பொகுட்டில் - தாமரைப்பூங் கொட்டையாகிய தவிசில்.
(அடி-3) அன்னக்கொடி - அன்னத்தை எழுதிக் கட்டிய துவசம். ஒள் பால் அன்னம் - ஒள்ளிய பால் போலும் நிறத்தையுடைய அன்னவாகனம். ஒள்ளிய பாலும் சோறும் என்பது மற்றொரு பொருள். உயிர் ஆம் அனந்தம் தாதிகள் - ஆன்மாக்கள் ஆகிய எல்லையில்லாத தோழிகள்.
(அடி-3) பாராவாரம் - கடல். பார்ஏழ் முதல் ஆம் நாத அந்தம் - பிருதிவிதத்துவம் முதல் நாததத்துவம் இறுதியாகவுள்ள.
(அடி-4) அண்டச் சிற்றில் - அண்டங்களாகிய சிற்றில்கள் என்க.
72. (அடி-1) மங்கைபாகராகிய பெருவுடையார் என்க. வாரணாசியின் கண் நிறைந்து தோன்றும் கங்கையாகிய சிறந்த நதி.
(அடி-3) மகத்தாம் விமானம் - பெரிய விமானம். சோழர் சென்னியிலும் சித்தர் சென்னியிலும் செங்கையை வைத்தருளும் ஈசர் கங்கைகொண்டசோழபுரம் என்க.
73. (அடி-1) முகில் போய் பொழியும் - மேகம் மழையைப் பொழிவது போல.
இப்பாடலின் வரலாறு திருமுறைகண்டபுராணத்திற்காண்க.
74. (அடி-1) நம்பி ஆரூரர் – சுந்தரமூர்த்திசுவாமிகள். கவின் - அழகு. கரிமாமுகத்தான் - பொல்லாப்பிள்ளையார்
(அடி-2) நம்பியந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்த திருத்தொண்டர் திருவந்தாதி.
(அடி-3) தூக்கும்பதத்தோன் - எடுத்த பொற்பாதத்தையுடைய நடராசர்.
(அடி-4) சேய் முருகக்கடவுள்
முதனூல் திருத்தொண்டத் தொகை, வழிநூல் திருத்தொண்டர் திருவந்தாதி, விரிநூல் திருத்தொண்டர் புராணம் என்க.
75. (அடி-1) வையம் – உலகம். இத்தலத்திலே முருகவேள் சிவபெருமானைப் பூசித்தருளினர் எனத்தெரிகிறது.
76. (அடி-2) பித்து - ஆபாசம் ஒழிந்து எனப்பிரிக்க. இப்பாடல் சிறுமியர் உள்ளப்பண்பை நன்கு விளக்குதல் காண்க.
77. ஆலாலசுந்தரர் வரலாறு கூறப்பட்டது.
78. புறச்சந்தான குரவருள் முதல்வராகிய ஸ்ரீ மெய்கண்டதேவர் அவதாரம்
செய்தற்குரிய காரணம் குறித்தபடி. திருப்பாட்டு ‘பேயடையா பிறி வெய்தும்' என்பது. சுவேதவனம் - திருவெண்காடு.
79. பச்சை மயில் வாகனன் - விளி.
ஆமாத்தூர்க்கலம்பகம்பாடி இரட்டைப் புலவர்கள் அரங்கேற்றிய போது நடைபெற்ற செய்தி கூறப்பட்டது.
80. முற்பகுதியில் கூறிய தாதி வரலாறு விளங்கவில்லை.
________________________
9. சிறுபறைப் பருவம்
81. இப்பாடலில் பொய்யாமொழிப்புலவர், அருணகிரிநாதர் முதலியோரைப் பாராட்டியருளினர்.
82. தலவரலாறு காண்க.
83. இப்பாடலும் இத்தலபுராண கதையைக் கூறுகின்றது. தேவர் சேனாபதி விளி.
84. (அடி-1) பயோததி - திருப்பாற்கடல். நாகமெத்தை - அரவணை.
இப்பாடல் தெய்வயானையம்மையார் இந்திரன் மகளாகவும், வள்ளியம்மையார் குறவர் மகளாகவும் வந்த வரலாறு குறிக்கிறது.
85. (அடி-2) ‘வைகல் தொறுமலர் மூன்று, கோலமர் காவியுயிர்த்தலினல்ல காத்திரி' (தணிகைப்புரா: புராணவரலா 59)
"கடவுட்சுனைக்குள்வளர் செய், கல்லார முப்போது மலர் தந்து கமழ் தரும்” (திருத்தணிகைத் திருவிருத்தம்-4.)
நீலமலர் - நீலோற்பலம். "வெறிவீசு காவி மலர்மூன்று நாளும் விரியும் விலங்கல்" (திருத்தணிகைப்பதிற்றுப்பத்தந்தாதி-20)
"காலை நண்பகன் மாலைமுப் போதும் - வைகல் வைகல் மலர்மூன்று தெரிக்கும் நீலப்பைஞ்சுனை’' (திருத்தணிகையாற்றுப்படை-224-6)
இப்பாடலிற் கூறிய வரலாறுகள் யாவும் தணிகைப்புராணத்தால் அறிக.
88. (அடி-1) புகார் - காவேரிப்பூம்பட்டினம். வெண்காடர் - பட்டினத்தடிகள்,
89. இதிற் கூறும் வரலாறுகள் சீகாளத்திப்புராணம், திருக்காளத்திப்புராணம் முதலிய நூல்களிற் காண்க.
90. (அடி-1) அவுணக் கருங்கங்குல் - இராக்கதர்களாகிய காரிருள். கோதண்டம் - வில், துடி - உடுக்கை.
_____________
10. சிறுதேர்ப்பருவம்
91. இப்பாடல் முருகபக்தர்கள் உச்சிட்டத்தையுண்டு உலகர் உடற்பிணியொழிந்து ஆனந்தம் பெறுவர் எனக் கூறுகின்றது. நோய்வகை கூறுவது காண்க. தேர்ப்பிரம்பால் பிணியொழித்தருளிய கதை புலப்படவில்லை.
93. (அடி-1) பூதநாயகன் - சிவபெருமான்.
94. விநாயகர் இராவணனைப் பந்தாடி வலிகெடுத்தமை கூறும். இராவணன் இறைவர்பால் பெற்றுவந்த இலிங்கத்தை இங்கேயே இருக்கச் செய்த வரலாறும் காண்க..
95, 96, 97. ஆம் பாடல்கள் அவ்வத்தல மகிமைகளை விரித்துரைப்பன.
98, 99 100. ஆம் பாடல்கள் பிரயாகை, கயை, கேதாரம் முதலிய இடங்களைக் கூறுவன. எளிய நடையில் உள்ளமையின் குறிப்புரை எழுதாமல் விடப்பட்டது. வரலாறுகள் விரியும் என அஞ்சி அவை எழுதப்படவில்லை.
க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் குறிப்புரை முற்றிற்று.
* * *
This file was last updated on 15 June 2020.
Feel free to send the corrections to the webmaster.