சாமியாடிகள் (நாவல்)
பாகம் 1 (அத்தியாயம் 1-16)
சு. சமுத்திரம்
cAmiyATikaL (novel)
part 1, chapters 1-16
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சாமியாடிகள் (நாவல்)
பாகம் 1 (அத்தியாயம் 1-20)
சு. சமுத்திரம்
Source:
சாமியாடிகள் (நாவல்)
சு. சமுத்திரம்
திருவரசு புத்தக நிலையம்,
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017
முதற் பதிப்பு: டிசம்பர் 1991; இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2000
உரிமை : ஆசிரியருக்கே.
விலை ரூ. 60.00
பதிப்பு : ஏகலைவன் பதிப்பகம், சென்னை 600 041
--------------
என்னுரை
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நாவல் இது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தினகரன்’ நாளிதழில் தொடர்கதையாக வெளியானது. தினகரன் ஆசிரியர் திரு கே.பி. கந்தசாமி அவர்களுக்கும், என்னிடம் இந்த தொடருக்கு ஏற்பட்ட தாக்கங்களை அவ்வப்போது தெரிவித்த நண்பர் சின்னராசுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இன்னும் நமது மனம் உள்வாங்கிக் கொள்ளாத சென்ற நூற்றாண்டான இருபதாம் நூற்றாண்டில் மருத்துவத்துறையில், உடலை ஊடுறுவி அதன் உறுப்புக்களை கண்ணாடியில் பார்ப்பதுபோல் பார்க்க வைக்கும் ‘ஸ்கேனிங்’ என்ற முறையும், உடனடியாகப் படம் பிடித்து, உடனடியாக படம் பிடித்தவரிடமே அவரது உருவத்தையும் பேச்சையும் திரையில் காட்டும் வீடியோ முறைமையும் , இன்டர்நெட் இணையமும் சமூக முறைமையையே தலைகீழாகப் புரட்டி விட்டது என்று சொல்லலாம். இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகள் சமூகத்தில் மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்தாமல் அடியோடு மனோவேகத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டன.
இப்படிப்பட்ட இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகளில், வீடியோ - சமூகத்தில் நல்லதும் கெட்டதுமான பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது, இன்றையக் கிராமங்களில் எப்படி நிகழ்கிறது என்பதை விளக்கும் படைப்புதான் ‘என்னுரை - சாமியாடிகள்’ என்ற இந்த புதினம் என்றாலும் இதில் வீடியோ - ஆடியோ தாக்கம் இலைமறைவு காய்மறைவாகக் காட்டப்பட்டு, இதன் விளைவுகளால் ஏற்பட்ட கதையம்சமே இந்தப் புதினத்தில் மேலோங்கி நிற்கிறது. பிரபல விமர்சகரும் பொதுவுடைமைச் சிந்தனையாளருமான தொ.மு.சி. அவர்கள், இந்த நாவல் வீடியோ ஆடியோவான விஞ்ஞானத் தாக்கத்தின் நல்ல அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார். இது ஒரளவு உண்மையே. எடுத்த எடுப்பில் கிராமங்களைத் திணறடித்த இந்தத் தாக்கத்தை சித்தரிப்பதில் இதன் நல்ல அம்சங்கள் நழுவிப் போயின. என்றாலும், எந்தப் பதிப்பிலும் எழுதியது எழுதியபடி இருக்கவேண்டும் என்பதால் இந்த நாவலை அவர் குறிப்பிட்டதுபோல் மாற்றி அமைக்கவில்லை.
இன்றையக் கிராமங்களில், அம்மன் கொடைகள் என்பவை கிராம தேவதைகளுக்குக் காட்டப்படும் சலுகைகளாக மாறிவிட்டன. இவற்றில் பயபக்தி என்பது கடந்த காலமாகி விட்டது. இந்த திருவிழாக்களில் ‘டெக்கில்’ படம் போடுவதே பிரதானமாகி விட்டது. என்னுரை - சாமியாடிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஏதோ ஒப்புக்கு ஆடி அடங்கவேண்டும். இவர்களை சீரியஸாக எடுத்துக் கொண்ட காலம் மலையேறி விட்டது. இவர்களும் அதை உணர்ந்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் சாமியாட்டத்தை முடித்து விடுகிறார்கள். கிராம தேவதைகள், கிராம மக்கள் அனைவருக்கும் பொதுமையானது என்பதுபோய் ஒவ்வொரு பங்காளிக் கூட்டமும், தத்தம் கிராம தேவதைகளை தங்களது சுயமரியாதையோடு இணைத்துக் கொள்கிறது. இதனால் பங்காளிக் கூட்டங்களுக்கு இடையே, மோதல்களும் கெளரவப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இது, வீடியோ ஆடியோ கலாச்சாரம் தொடுத்த முதல் தாக்குதல்.
இரண்டாவதாக, கிராமிய பேச்சு வழக்கை தொலைக்காட்சித் தமிழ் வழக்கு துரத்திக் கொண்டிருக்கிறது. அண்ணாச்சி என்ற மண்வாசனை வார்த்தை ‘அண்ணே’வாகி விட்டது. ‘மயினி’ என்பது ‘அண்ணி’ ஆகிவிட்டது. ‘வளத்தம்மா’, ‘அய்யாமை’ என்ற பொருள் பொதிந்த உறவாடல் வார்த்தைகள் ‘பாட்டி’ என்று நேரிலும், ‘பெரிசு’ என்று மறைமுகமாகவும் பேச்சு வழக்காகி விட்டது. தொலைக்காட்சி திரைப்படங்களும் வீடியோவில் காட்டப்படும் திரைப்படங்களும் அன்றாடப் பொழுதுபோக்காகி விட்டது. ஆக மொத்தத்தில் கிராமத்து இளைஞர்களுக்கு வாழ்க்கைக்கும், வீடியோ திரைப்படங்களுக்கும் இடையே வேற்றுமை காணமுடியாமல் போய்விட்டது.
இதனால் ஏற்படும் குடும்ப, சமூகச் சிக்கல்களை, இந்த நாவல் கதைப் பின்னலாகக் கொண்டு வந்துள்ளது. கிராமங்களில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் ஊடுறுவிய முதலாவது காலக்கட்டத்திலேயே இது எழுதப்பட்டதால், இந்தப் புதினத்தில் கதை மேலோங்கியும், வீடியோ ஆடியோ தாக்கம் கீழோங்கியும் உள்ளன. இந்த வலைப் பின்னலில் குடும்பத்தைத் தவிர வேறு எதையுமே நினைத்துப் பார்க்காத கோலவடிவு என்ற இளம்பெண்ணை, நாலும் தெரிந்த அலங்காரி என்பவள் எப்படி தனது பேச்சுத் திறமையால் மயக்கி துளசிங்கத்திடம் இணைத்து விடுகிறான் என்பதுதான் கதை. இதனால் ஏற்படும் குடும்பச் சிக்கல்களும், பங்காளிச் சண்டைகளும் யதார்த்தத்தில் ஒரு இம்மிகூட பிசகாமல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த நாவலின் நாயகியான கோலவடிவை, கிராமத்தை விட்டு வெளியேறச் செய்து, சுயநலமிகளிடம் சிக்கி வேறு வழியில்லாமல் விலைமகளாக ஆக்கவேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், மனம் கேட்கவில்லை. ஒரு எழுத்தாளன், துவக்கத்தில் பாத்திரங்களைப் படைப்பான். குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் அந்தப் பாத்திரங்களே, ‘இப்படி இப்படி எங்களை படைப்பாயாக...’ என்று எழுத்தாளனுக்கு ஆணையிடும் என்று மகத்தான விமர்சகரான காலஞ்சென்ற பொதுவுடைமைத் தத்துவ சிந்தனையாளர் தோழர் ஆர்.கே. கண்ணன் அவர்கள் என்னிடம் அடிக்கடி கூறுவார். அப்படி அவர் குறிப்பிட்டது, இந்த நாவலில் என்னை அறியாமலேயே, என் விருப்பத்திற்கு எதிராகவே நிறைவேறி விட்டது உண்மைதான். இந்த நாவலில் கோலவடிவே, ‘என் முடிவை இப்படித்தான் விளக்கியாக வேண்டும்’ என்று எனக்கு ஆணையிட்டு விட்டாள். அந்த ஆணையை என்னால் மீற முடியவில்லை. இது, ஒரு படைப்பியல் விசித்திரம். படைப்பாளி நினைத்தும் அவன் நினைத்ததுபோல் எழுத முடியாது என்பதற்கு நானே ஒரு உதாரணமாகி விட்டேன்.
கிராமத்தில் நிகழும் வீடியோ ஆடியோ கலாச்சாரத்தையும், சொல்வடைகளின் மாற்றத்தையும் முதன்முதலாக வாசகர் கவனத்திற்கு கொண்டு வந்த முதலாவது நாவல் இது என்று குறிப்பிடலாம். இந்த நாவலை பிரசுரத்திற்கு எடுத்துக்கொண்ட பெரியவர் திரு நாவுக்கரசு அவர்களுக்கும், அவரது அசல் நகல்களாக விளங்கும் அருமை புதல்வர்க்ள ராமு, சோமு ஆகியோருக்கும் இந்த நாவலின் வெற்றி உரித்தாகும்.
கிராமமே சாமியாடுகிறது
பீடம் தெரியாமல் சாமி ஆடுகிறான்' என்பது அன்றைய கிராமத்துப் பழமொழி. அதாவது ஒருத்தர், தனது செயலைப் பற்றியோ அதன் பின் விளைவுகளைப் பற்றியோ புரியாத பேதை என்கிற பொருளில் இந்தப் பழமொழி வந்திருக்கவேண்டும். இது முன்பு பொருந்தியதோ இல்லையோ, இப்போது பொருந்துகிறது.
இந்த நாவலின் தலைப்பிற்கேற்ப நவீன கலாச்சார ஊடுறுவலால் கோவில்களில் மட்டும் இப்போது சாமியாட்டம் நடைபெறவில்லை. கிராமமே சாமி ஆடுகிறது. ஆமை புகுந்த வீடு போலான தொலைக்காட்சி வரவழைப்பு எங்கே கொண்டு போகும் என்பது புரியாமலே எல்லோருமே பீடம் தெரியாமல் சாமி ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். வேப்பிலை அடிக்கத்தான் ஆளில்லை.
இந்த நாவலில், சாதிச் சண்டைகள் சித்தரிக்கப்படவில்லை. ஆனாலும், இதில் வரும் பங்காளிக் கூட்டங்களின் மோதல்களும் இவற்றைப் போன்றதே. ஆக, கலவரத்திற்கு சாதி மட்டுமே காரணமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை. இந்த நாவல் சொல்லாமல் சொல்கிறது.
நல்ல நூல்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகங்களில் ஒன்றான திருவரசு புத்தக நிலையம், இந்த நாவலை புதுப்பித்து வெளியிடுவது இந்தப் படைப்பிற்கும் எனக்கும் கிடைத்த ஒரு இலக்கியக் கௌரவம்.
சு. சமுத்திரம்
--------
சாமியாடிகள் - அத்தியாயம்- 1
அந்த ஆலமரத்தின் அடியில், அத்தனை பெண்களும் கையும் பீடி இலையுமாய், வாயும் பேச்சுமாய், தட்டும் மடியுமாய், தலையில் வைத்த பூக்கள், அவர்களின் தளிர்மேனி செடியில் பூத்து நிற்பதுபோல் பொலிவு காட்ட, முன்னாலும் பின்னாலும் லேசாய் ஆடியாடி, முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருந்தனர்.
சட்டாம்பட்டியின் ‘கிழக்கு ஊரின்’ மேற்கு பக்கமாய் உள்ள காளி கோயிலுக்கு முன்னால், அம்மனே நிரந்தரி என்று சொல்வதை நிரந்தரப்படுத்துவது போல் குடை பிடித்து தோற்றம் காட்டும் அந்த ஆல், மேலே சிறகாட்டும் பறவைகளும், கீழே உடம்பாட்டும் பெண்களுமாய் கலகலத்தது. அந்த ஆலமரமே ஒரு ஆளாகி, டி.வி. மகாபாரதத்தில் வந்ததே ‘காலம்’, அதுபோல், ஊருக்கு எதையோ உபதேசித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது விழுதுகளே சடை முடியாக, உச்சி இலை தழைகளே தலை முடியாக, ஆலம்பழங்களே உத்திராட்சக் கொட்டைகளாக, அந்த ஆல ரிஷி எல்லோரையும் ஆட்டுவித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமையைக் கொடுத்தது. இந்த மரம் அங்கே இருப்பவர்கள் பிறப்பதற்கு முன்பே பிறந்த மரம். ஒருவேளை அவர்கள் இறந்த பிறகும் இருக்கும் மரம். இப்படிப்பட்ட இந்த மரத்திற்குக் கீழே -
அந்த ஆலின் அடிவாரத்தை மாலையிட்டு மரியாதை செலுத்துவதுபோல, பதினெட்டு இருபது பெண் பூக்கள் மாலை வடிவத்தில் அமர்ந்து பீடி இலைகளைக் கத்தரித்தும், சதுரஞ்சதுரமாகச் சித்தரித்தும், வெட்டியும், சுருட்டியும், கட்டியும் கைகளை இயக்கத்தில் விட்டார்கள். செண்பகப் பூப்போன்ற தங்கநிற முத்தம்மா, குண்டுமல்லி போன்ற தடிச்சி வாடாப்பூ, தங்கரளி போல்-பாவாடை குடைபோல் சுழலும் சந்திரா, கூர்மையான பற்களைக் கொண்ட ரோசாப்பூ மாதிரியான ராசகிளி ஆகிய பெண்மாலைக்கு இடையிடையே இட்டு நிரப்பப்பட்ட இலைபோல தங்கம்மா, அலங்காரி ஆகிய நடுத்தர-வயதுப் பெண்கள்... வானவில்லே பெண் வில்லாய்ப் பிறப்பெடுத்தது போன்ற அந்தப் பகற்பொழுதில் -
பீடி இலைகளைச் சதுரஞ்சதுரமாக வெட்டிக் கொண்டிருந்த சந்திரா, எதிரே பீடி இலைகளைத் தூக்கி நிரப்பி அவசர அவசரமாகச் சுருட்டும் தாயம்மாவைப் பார்த்து அதட்டலான அன்போடு கேட்டாள்.
“என்னத்தே... ஒரு நாளும் இல்லாத திருநாளா இப்படிச் சுத்துற. கை உடம்ப விட்டு கழண்டுடப் போவுது...”
“ஒனக்கென்ன பேசமாட்டே... ஒனக்கு பீடி சுத்தறது பொழுது போக்கு. எனக்கோ ஒரு நாள் பொழுதப் போக்குறது... அவனவன் கம்பெனிக் கடைகள்ல தீபாவளி போனஸ், பொங்கல் பரிசுன்னு வாங்குறானுவ... நாம என்னடான்னா பீடி மொதலாளிக்கு போடு வண்டலுன்னு நாமே போனசு கொடுக்கோம்... இதைக் கேக்க நாதியில்லே...”
தாயம்மா அத்தைக்குப், ‘பாவாடைத் தாவணி’ சந்திரா பதில் சொல்ல யோசித்தபோது, பிள்ளைக்குட்டி பெற்றாலும், அந்த வார்த்தைகளின் இரண்டாவது வார்த்தைக்கு உரியவள் போல் தோன்றிய அலங்காரி, அலட்டிக்காமலே குறுக்கிட்டாள்.
“வேற எதையாவது பேசுங்க, தெனமும் பொழப்பப் பத்தியே பேசிப் பேசி அலுத்துப் போச்சு... இப்போ புதுசா வந்திருக்கிற சினிமாவுல எது நல்லா இருக்காம்?”
“நம்ம கோணச்சத்திரத்துக்கு வார படமெல்லாம் டப்பாப் படம்தானே...”
“ஆமாமா... அந்தக் ‘கொள்ளயில போவான்’ தியேட்டர்ல எந்தப் படம் வந்தாலும் அது நட்டுக் கழண்ட படமாகத்தான் இருக்கும்...”
“நான் தென்காசியிலயும் திருநெல்வேலியிலயும் ஓடுற சினிமாவச் சொன்னேன்...”
“நீதான் பாத்துட்டு வந்து சொல்லேன்... அங்க போறது ஒனக்கு ஒண்ணும் புதிசில்லியே மயினி...”
அலங்காரி, வெள்ளை வெளேர் முத்தம்மா தன்னைக் கிண்டல் செய்வதாக நினைத்து, திட்டப் போனாள். இதற்குள் ஒரு எட்டு வயதுப் பயல் எங்கிருந்தோ வந்தவன் போல் வந்தான். ஒரு ஆல விழுதை எட்டிக் குதித்துப் பிடித்தபடி அங்கும் இங்குமாக ஆடினான். தாயம்மாவின் தலைக்கு மேலே போகும்போது, கால்களைச் சுருட்டிக் கொண்டான். தாயம்மா பயத்தில் தலையை நிமிர்த்திய போது, அவன் காலில் அவள் தலைமுடி சிக்கி, அவளைத் தரையோடு தரையாக இழுத்துப் போட்டது. உடனே அந்தப் பயல், விழுதை விட்டுவிட்டு, விழுந்தடித்து ஓடிய வேகத்தில், தாயம்மாவின் பீடித்தட்டு குப்புற விழுந்தது. இலைகள் பட்டம் பறப்பதுபோல் ஆகாயத்தில் பறந்தன. பீடித் துகள்கள் மண் தூள்களுடன் கலந்து மாயமாயின. தாயம்மா ஒப்பாரியிட்டாள்.
“ஐயோ... என் அறுபது வண்டலு இலயும் போச்சே... பீடிக்கடைக்காரனுக்கு என்ன சொல்லுவேன்... ஏது சொல்லுவேன்... காஞ்சான் மகன் பண்ணுன வேலையைப் பாருங்க... எலே நாய்க்கு பெறந்த நாயே... இப்போ ஓடிட்டாலும், அப்புறம் வரத்தானே போறே...”
அந்தப் பயலைப் பிடிப்பதற்காக, நான்கு பெண்கள் எழுந்து, அவர்களில் மூவர் சேலைகளை இறுக்கிக் கட்ட, மூவரில் ஒருத்தி, கோழி, பருந்தை நோக்கி பாய்ந்து பிடிப்பதுபோல் சிறிது ஓடிவிட்டு, பிறகு மூச்சு முட்டி நின்றாள். தாயம்மாவுக்கு வேண்டாதவர்கள் உட்பட எல்லோருமே, அவளை பரிதாபமாய்ப் பார்த்தார்கள்.
தாயம்மா கத்தக்கூட திராணி இல்லாமல் தலையில் கை வைத்து, குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தபோது, அவளுக்கு உறவுப் பெண்ணான சந்திரா ஆறுதல் சொன்னாள்.
“ஏன் சித்தி அழுவுறே... நாங்க ஆளுக்குக் கொஞ்சம் இலயும் பேருக்குக் கொஞ்சம் தூளும் தாறோம்... எமுளா பாக்கிய. சித்திக்குக் கொடுங்கழா...”
எல்லாப் பெண்களும் கை நிறைய இலை எடுத்து விரல் நிறையத் தூளெடுத்து தாயம்மாவின் தட்டில் போடப் போனபோது, அலங்காரி இக்கன்னா போட்டுப் பேசினாள்.
“அவளுக்கு தைரியம் இருந்தா காஞ்சான் மச்சான் கிட்டப்போயி அவரு பய பண்ணுன கோலத்தச் சொல்லி நஷ்டஈடு கேட்கட்டும்... அந்த நொறுங்குவான் பண்ணுன காரியத்துக்கு நாம ஏன் அபராதம் கட்டுறது மாதிரி இல கொடுக்கணும்...”
“சரி. நீங்க போடாட்டா இருங்க... நாங்க போடுறோம்... மேயுற மாட்டை நக்குற மாடு கெடுக்குமாம்...”
“இந்த பாரு சந்திரா... மாடு கீடுன்னு பேசுனே மரியாதை கேட்டுப் போவும்...”
“மாடு நல்ல சீவன்... கண்டவன் பின்னால எல்லாம் போவாது...”
“அப்போ நான் கண்டவன் பின்னால போறவ...”
“அப்படித்தான் வேணுமுன்னா வச்சுக்கங்க...”
“ஏழா, சந்திரா, வரம்பு மீறிப் பேசாத...”
“பின்ன என்ன வாடாப்பூ அத்தை...? தாயம்மா சித்தி நம்மள்ல ஒருத்தி... அந்த தூம மவனால... அவ்வளவு இலயையும், தூளயும் பறிகொடுத்துட்டு அந்தரத்திலே நிக்கா... ஆளுக்கு கொஞ்சம் இல கொடுத்தா தேய்ஞ்சா போயிடுவோம்... சீ... அறுத்த கைக்கு சுண்ணாம்பு வக்காத ஆளுங்க...”
“வேணுமுன்னா ஒன் கைய அறுத்துக் காட்டு... நான் சுண்ணாம்பு வக்கேன்...”
பாவாடை தாவணி சந்திராவுக்கும், பழுத்த இலை போல் புடவை கட்டிய அலங்காரிக்கும், இடையே தூள் கிளப்ப நடந்த வாய்ச் சண்டையை எல்லாப் பெண்களும் ரசித்துக் கொண்டே இருந்தார்கள். சற்றுத் தொலைவாய் உட்கார்ந்திருந்த தாயம்மாவின் அருகே கிடந்த தட்டில், இலையையும், தூளையும் எடுத்துப் போடப் போனார்கள். ஆனால் தாயம்மா திட்டவட்டமாகச் சொன்னபடியே எழுந்தாள்.
“எனக்கு எவளும் பிச்சை போட வேண்டாம். இந்தப் பேச்சை வாங்கிக்கிட்டு அந்த இலய வாங்குறது ஒவ்வோருத்திய மாதிரி அடுத்தவனுக்கு முந்தானை விரிக்கதுக்கு சமம்...”
சோர்ந்துபோய் நடந்த தாயம்மாவை, எல்லாப் பெண்களும் தாளமுடியாமல் பார்த்துவிட்டு, பிறகு தத்தம் தட்டருகே வந்து உட்கார்ந்தார்கள். தாயம்மா போவதை சட்டை செய்யாததுபோல் குறுஞ் சிரிப்புடன் அலங்காரி பீடி இலை ஒன்றைக் கசக்கிப் போட்டபடியே தனக்குத் தானே பேசிக்கொள்வது போல் பேசினாள். “தனக்குப் போவத்தான் தானம்... பிச்சை போடறதுக்கு நாம ஒண்ணும் பெரிய இடம் இல்ல...”
சந்திராவுக்குக் கோபம் வெப்பமாகியது.
“இந்தா பாரு... எங்க சித்தி... ஒங்கிட்ட என்ன பிச்சையா கேட்டா? பேச்சை விடேன்... கடைசியில ஒன் புத்தியக் காட்டிட்டே பாத்தியா?”
“எம் புத்திய என்னத்தடி கண்டே? நான் அந்த மனுஷன்கூட இந்த ஊருக்கு ஓடி வந்ததுலே என்ன தப்பு? ஊர் ஒலகத்துல செய்யாததையா செய்துப்புட்டேன்?”
“நான் அதை நினைச்சு சொல்லலே. ஆனாலும் இப்போ சொல்லுறேன்... ஓடிப்போறது தப்புன்னாலும், அது பெரிய தப்பில்ல... ஓடி வந்தவன் முதுகுக்குப் பின்னாலயே பிறத்தியாரோட ஒய்யாரஞ் செய்யுறதுதான் தப்பு...”
“அப்போ நான் கண்டவனை எல்லாம் வீட்டுக்குள்ள விட்டு கதவை அடைக்கேன்னு சொல்றீயா?”
“குத்தமுள்ள மனசு குறுகுறுக்குமாம்.”
“அப்போ ஒங்க வம்சம் ரொம்ப யோக்கியமுன்னு நெனப்போ?”
“நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் எங்க கரும்பட்டையான் குடும்பம் கவுரிமானுக மாதிரிதான்... எங்க குடும்பத்துல எவளாவது ஒருத்தி எவன் கூடயாவது ஓடிப்போயிருக்காளான்னு ஒரு விரல மடக்கு பார்க்கலாம்...”
“எந்த சோளத்தட்டைக்குள்ள என்ன நடக்குதோ? எந்தக் கரும்புத் தோட்டத்துக்குள்ள என்ன குறும்பு நடக்குதோ...?”
“ஒவ்வொரு சோளத் தட்டையா விலக்கிப் பாரு... ஒவ்வொரு கரும்பா பிரிச்சுப் பாரு... எங்க கரும்பட்டையான் குடும்பத்துப் பெண்ணுல ஒருத்தியக் கூட கையுங் களவுமா பிடிக்க முடியாது. ஒவ்வொருத்தியள போல பட்டப்பகலுல பப்ளிக்கா ஒருத்தனோட சைக்கிள்ல உட்காந்து வரல... அப்புறம் சைக்கிள்காரன ஒப்புக்கு வச்சுட்டு இன்னொருத்தன் பைக்ல ஏறல...”
அலங்காரி நிலைகுலைந்தவள் போல், ஆல விழுதைப் பிடித்துக் கொண்டாள். அங்கிருந்த பெண்களும் சந்திராவை அதட்டவில்லை. என்றாலும், இந்த அலங்காரி வாழ்க்கைப்பட்ட செம்பட்டையான் குடும்பத்துப் பெண்களுக்கு அலங்காரியின் ‘சங்கதி’ தெரிந்தும், லேசாய் கோபம் வந்தது. அதேசமயம் அவளுக்கு வக்காலத்து வாங்குவது தாங்களும் அவளைப்போல் ஆகத்தயார் என்று அறிவிப்பதுபோல் ஆகிவிடும் என்று சும்மா இருந்தார்கள். ஒருவேளை இதற்குமேல் சந்திரா பேசியிருந்தால், ஏதாவது சொல்லி இருப்பார்கள். சந்திரா வாயைப் பூட்டிக்கொண்டாள். அந்தப் பெண்களுக்கு இடையே இப்போது மெளனம் கொடுங்கோல் புரிந்தது.
அலங்காரிக்கு வழக்கம்போல் தொண்டை கனத்தது. அதற்குள் முள் போன்ற ஏதோ ஒன்று, மேலும் கீழுமாய் முகமெங்கும் பாய்ந்து, இறுதியில் முன் நெற்றியைக் குத்தியது. முகமெங்கும் இருட்டு மொய்த்தது. சாதாரண ஒரு சிரிப்பைக் கூட தற்செயலாய் பார்ப்பதையே, கண்டனக் கணையாகக் காண்பவள்... சண்டை சச்சரவு வரும்போது, சில பெண்கள் ‘ஒன் பவுசு... தெரியாதா’ என்று இறுதி ஆயுதத்தைப் பயன்படுத்திப் பேசுகிறபோது, வாயை நிராயுதபாணியாக்கி கேட்டு, தலையில் மாறி மாறி அடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி, புருஷனைத் திட்டுபவள்... இப்போது, ஓடி ஒளிய இடமில்லாமல் தவித்தாள். அந்தத் தவிப்பில் தனக்குத்தானே பேசிக் கொண்டாள்... அது ஒரு சபதமாகும் என்று நினைக்காமல்தான், தனக்குத்தானே சூளுரைத்தாள். அலங்காரி தனக்குத்தானே தனக்குள்ளேயே பேசிக் கொண்டாள்.
“நான் மட்டும் ஓடி வந்ததாலே தானே இந்த ஏச்சுப் பேச்சு? நான் ஓடி வந்த பெறகு பிறந்த இந்தச் சந்திரா பயமவள் எப்படிப் பேசுறாள்? இவங்க குடும்பத்திலயும் ஒருத்திய நான் ஓட வச்சா இப்படிப் பேசுவாளா...? வச்சா என்ன வச்சா? ஓட வச்சே காட்டணும்... கரும் பட்டையான் குடும்பத்த கரும்புள்ளி செம்புள்ளி குத்துறது மாதிரி செய்து காட்டணும்...”
அலங்காரி அங்குமிங்குமாய் திரும்பினாள். மேற்குப் பக்கத்திலிருந்து செம்பட்டையான் குடும்பத்தைச் சேர்ந்த துளசிங்கம் கையில் ஒரு கம்போடு வந்தான். கிழக்குப் பக்கத்திலிருந்து கரும்பட்டையான் குடும்பத்தைச் சேர்ந்த கோலவடிவு கையில் ஒரு கூடையோடு வந்தாள்.
-------------
அத்தியாயம்- 2
இருபுறமும் இருந்து வந்த துளசிங்கமும், கோலவடிவும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எதிரெதிராய் வந்து நின்றார்கள். துளசிங்கம், அவளை லேசாகப் பார்த்து விட்டுக் கையில் இருந்த கம்பைத் தலைக்கு மேலே தூக்கி, சிவப்பு வைரங்களாய் மின்னிய ஆலம்பழங்களை அடித்தடித்து விழத்தட்டினான். அப்படி அடித்ததில் ஓரிரு பழங்கள் கோலவடிவின் முன் நெற்றியில் மரகதக் கற்கள் போல் பதிந்தன. அவள், அவற்றை எடுத்து தூர வீசியபடியே, அவனை முகஞ்சுழித்துப் பார்த்தாள். துளசிங்கம், சித்திக்காரி அலங்காரியிடம் எதையோ பேசப் போனான். கோலவடிவு தன் சித்தப்பா மகள் சந்திராவிடம் எதையோ கேட்கப் போவதுபோல் மேலுதட்டை கீழுதட்டால் ஈரப்படுத்த அவற்றை பிரிக்கப் போனாள்.
அலங்காரி இலைகளை மூடியிருந்த ஈரக் கோணித்துண்டை எடுத்து உதறுவதுபோல் உதறி, அந்த இருவரையும் ஓரங்கட்டிப் பார்த்தாள். அவள் எதையும், எவரையும் சாய்க்கப் போவதுபோல் சாய்த்துப் பார்ப்பவள். காக்கா பார்க்குமே அப்படிப்பட்ட பார்வைக்காரி. இதனால், ஊரில் இவள் இருக்கும்போது, சித்தி என்றும், அக்கா என்றும் உண்மையான அன்போடு அழைப்பவர்கள்கூட, அவள் இல்லாதபோது, ‘காக்காக் கண்ணி’ என்பார்கள். ஆலமரத்தில் உட்கார்ந்திருக்கும் எந்த காக்காயாவது எச்சம் போடும்போது, இந்த அலங்காரி, “பய காக்காவ பாருங்க” என்பாள். எல்லோரும், காக்காவை ஒப்புக்குப் பார்த்துவிட்டு, அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பாய் சிரிப்பார்கள். அலங்காரிக்கு கண்தான் காக்காக் கண்ணே தவிர, உடம்பு என்னமோ, கருடன் மாதிரி பறக்க முடியும் என்பது போன்ற லேசாய்த் தட்டையான உடம்பு. தடிப்போ ஒல்லியோ இல்லாத பிடிபடாத அழகைச் சுமக்கும் பிடிப்பான உடம்பு. நாற்பது வயதிலும் நளினம் குறையாத தோரணை. அதேசமயம், மதுக்குள் ஏதோ ஒன்று குடைவது போன்ற முகப் புழுக்கம்.
வாடாப்பூ எதேச்சையாகச் சொல்வதுபோல் சொன்னாள்.
“ஏன் ரெண்டு பேரும் சொல்லிவச்சது மாதிரி நிக்கிய... ஒக்காருங்களேன். நாங்க படுற பாட்டைத்தான் கொஞ்சம் பாருங்களேன்... ஏழா சந்திரா, அந்தப் பாயைத் தா... துளசிங்கம் உட்காரட்டும்... கோலவடிவு நீயும் உட்காரேன்...”
அலங்காரியை வரம்பிற்கு மீறித் திட்டிவிட்டோமோ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டதால் தப்புத் தப்பாய் பீடி சுற்றிய சந்திரா, அவளுக்கு சலுகை காட்டுவது போல், அந்த இரண்டு சதுரடிப்பாயைத் துளசிங்கம் நின்ற பக்கமாக வீசினாள். அவன், உடனே அதை எடுத்து ஆலமரக் கிளைபோல் நீண்ட வேரில் மடித்துப் போட்டு உட்கார்ந்தான். கோலவடிவு அப்படியே நின்றாள்.
அலங்காரி புதிய வரவுகளான இருவரையும் நோட்டமிட்டுப் பார்த்தாள். இரும்பைச் சிலையாக்கி, அதில் எண்ணெய் தேய்த்துவிட்டது போன்ற துளசிங்கத்தை, துள்ளிவிழப் போகும் ஆமணக்குக் செடி ஒய்யாரத்தில் தோன்றிய கோலவடிவுடன் ஒப்பிட்டுக் கொண்டாள். அவனின் முடிகுறைந்த வட்டக்கிராப்பையும், அவளின் கோதி முடிந்த மல்லிகைப்பூ கொண்டையையும், மனதுக்குள் ஒன்று சேர்த்து வைத்துப் பார்த்தாள். ஒரு அழுத்தத்தை, ஒரு மென்மையுடன் இணைத்துப் பார்த்ததில் அவளுக்குக் கணவனால் கிடைக்காத சுகம் கிடைத்தது. இப்போது, தன் மனதில் தோன்றிய சபதத்தைக்கூட மறந்து, அந்த இருவரையும் இயல்பாக இணைத்துப் பார்த்து ஆனந்தப்பட்டாள். சந்திாா, அலங்காரியை தாஜா செய்வதுபோல் கேட்டாள்.
“அத்த, ஒங்க மச்சான் மகன் ஊமையா?”
அலங்காரிக்கு இப்போது மனம் லேசாய் சுகப்பட்டது. அவளும் இயல்பாகவே திருப்பிக் கேட்டாள்.
“ஆமாண்டி என் மருமவளே... அதே கேள்விய அத்த திருப்பிக் கேக்கேன், ஒன் பெரியப்பா மகள் கோலவடிவுக்கு வாய் பேச வராதோ...”
கோலவடிவும், துளசிங்கமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். துளசிங்கம், லேசாய் வளைந்த தன் மூக்கு நுனியை ஆள் காட்டி விரலால் அடித்தபடியே, கோலவடிவையும், சந்திராவையும் பொதுப்படையாய்ப் பார்த்தபடியே பேசினான்.
“நான் பேச ஆரம்பிச்சால்... ஒங்க காது தாங்காது... கம்மலு அறுந்து என் கையில விழும். அப்படிச் சிரிப்பிங்க...”
“ஒமக்கு மங்கலமா பேச வராதோ... ஆயிரந்தான் இருந்தாலும் நீங்க அதிக நாளாய் டவுனுல இருந்தவருல்லா... கிராமத்து நாகரிகம் வராதுதான்.”
“என் மவன அப்பிடிப் பேசாத... சந்திரா... நம்ம ஊர்ல... மூட்டை தூக்கி வண்டியடிச்சு... கடைசியல வக்குல்லாம மெட்ராசுக்கு போன பய மவனுவல்லாம் அங்க எச்சிப் பாத்திரத்தை கழுவுனாலும், ஊருக்கு வந்து கண்ணுல கறுப்புக் கண்ணாடியை போட்டுக்கிட்டு வாயில சிகரெட்ட ஊதிக்கிட்டு ஒரு நாளுலயே நேரம் போவமாட்டக்குன்ன துள்ளறதப் பார்க்கும்போது... எங்க துளசிங்கம் ஊருக்கு வந்த ரெண்டு வருஷத்துல ஒரு நாள் ஒரு பொழுதுகூட ஊர விட்டுப் போகணுமுன்னு நினைக்கல... பிள்ள... ஏண்டா துளசிங்கம்... ஒன்னத் தாய்யா... ஒன் உரக்கடை எப்படிடா இருக்கு...?”
துளசிங்கம் கையில் இருந்த கம்பைத் தன் மார்போடு மார்பாய்ச் சாத்திவிட்டுச் சிறிது எரிச்சலோடு பதிலளித்தான்.
“என்ன சித்தி நேத்துத்தான் உரக்கடையைப் பத்தி ராமாயணம் மாதிரி கேட்டே... நானும் மகாபாரதம் மாதிரி பதில் சொன்னேன்... இப்பவும் கேட்டா எப்படி...”
“ஒரு நாளைக்குள்ள உரக்கடை உசந்திருக்கலாமில்லியா... ஏதோ தெரியாமக் கேட்டுட்டேன். தப்புத் தாம்பா... நான்னா... எல்லோருக்கும் இளக்காரந்தான்...”
“இப்படித்தான் எங்க சித்திக்கு மூக்குக்கு மேல கோபம் வந்துடும்... சித்தி இன்னொரு நல்ல செய்தி... சிமெண்டுக்கும் ஏஜென்சி கிடச்சுட்டு... உரக்கடை பக்கத்துலயே தனிக்கடை போடப் போறேன்... இதைச் சொல்லத்தான்... இப்போ வந்தேன்...”
“பாத்தியா... அப்போ... சித்தி கேட்டதுல தப்பில்லியே...?”
துளசிங்கம் அலங்காரிச் சித்தியின் முதுகைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்தபோது வெள்ளை வெளேர் முத்தம்மா ஆச்சரியமாகக் கேட்டாள்.
“துளசி மச்சான்...”
“ஏழா... ஒனக்கு அவன் அண்ணாச்சி முறை வேணும்... ஒங்க தாத்தாவோட அம்மாவும், அவன் தாத்தாவோட அம்மாவும் சின்னம்மா பெரியம்மா மக்கள்... ஆசைக்காக உறவை மாத்தப்படாது...”
“ஏதோ ஒரு முறை... துளசி... ஒம்மத்தான்... மொத்தம்... நீரு எவ்வளவு இடம் சுத்தியிருப்பியரு...”
“எண்டா பராக்கு பாக்கது மாதிரி பாக்கே... எல்லாப் பொட்டப் பிள்ளியளும் ஆவலோட முகத்த நிமித்துறாளுவ பாரு... ஒன் பவுசத்தான் சொல்லிக் காட்டேன்...”
துளசிங்கம், ஒரு குட்டிப் பிரசங்கம் செய்யப் போகிறவன்போல், மார்பில் சாத்திய கம்பை நிமிர்த்தி மைக் மாதிரி பிடித்துக் கொண்டான். பிறகு எல்லோரையும் பொதுப்படையாகவும், கோலவடிவைக் குறிப்பாயும் பார்த்தபடி பேசப் போனான்.
“பத்து வயசில... எங்கப்பா என்னை...”
“ஆமாம்... மச்சான் தப்பா நினைக்கப்படாது... ஒங்கப்பாவை ஏன் எல்லோரும் எலி டாக்டர்னு சொல்லுதாவ...”
அலங்காரி, பொய்க் கோபத்துடன் அதட்டினாள்.
“ஏய் முத்தம்மா... வாயைக் கிழிச்சுப்புடுவன் கிழிச்சி... என் மச்சானை என் முன்னால வச்சே... எலி டாக்டருன்னு சொல்லுற அளவுக்கு தைரியம் வந்துட்டோ... ஏதோ சின்ன வயசுல... என் மச்சானை... அப்படி ஒருத்தன் மசக்கிப்புட்டான்... அப்போ மச்சானுக்கு ஏழு வயசாம்... ஒரு ஜோஸ்யக்காரன் அவருகிட்ட காலணா வாங்கிக்கிட்டு... நீ பிற்காலத்துல டாக்டரா வருவடான்னு சொல்லிட்டுப் போயிட்டானாம். இந்த கூறு கெட்ட மனுஷனும் அதை நம்பி, ஒரு செத்த எலியை தூக்கி வச்சுக்கிட்டு... ‘நான் டாக்டரு. இந்த எலியை ஊசி போட்டு பிழைக்க வைக்கேன் பார்’னு சொல்லி அந்த எலியை கோணி ஊசியை வச்சி... குத்தோ குத்துன்னு குத்துனாராம்... இந்த சட்டாம்பட்டிக்காரங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணுமா... வக்கணை வச்சுட்டானுவ... எலி டாக்டர்னு...”
அலங்காரி நாடக பாணியில் பேசுவதை வாயாடாமல் கேட்ட பெண்கள் கலகலப்பாய்ச் சிரித்தார்கள். கோல வடிவு, துளசிங்கத்தைப் பார்த்தபடி குறுஞ்சிரிப்பாய்ச் சிரித்தாள். உடனே அவன், தான் சிப்பி வயிற்றில் பிறந்த முத்து என்பதை நிரூபிப்பது போல் பேசினான்.
“எங்கப்பன் கதையை விட்டுவிட்டு, என் கதையைக் கேளுங்க... பதினைந்து வயசுல சிகரெட்டு பிடிச்சேன்னு எங்கப்பா என்னை அடிச்சிட்டாரு. நான் வீட்ல இருந்த நூறு ரூபாயை எடுத்துக்கிட்டு டில்லி போனேன்... கரோல்பாக்குல காய்கறிக்கடை போட்டேன்... தேறல... கல்கத்தா போனேன்... ஹோட்டல்ல சர்வரா இருந்தேன்... முடியல... அப்புறம் பம்பாய்க்கு வந்து தாராவில நம்ம தமிழ் ஆள்கள் பகுதியில் இருந்தேன். ஆட்டோ ரிக்ஷா ஓட்டிக்கிட்டே, இந்திப் படங்கள்ல ஸ்டண்ட் வேடங்கள்ல நடிச்சேன்...”
“ஒமக்கு ரஜினிகாந்த், கார்த்திக் மாதிரி சண்டை போடத் தெரியுமா?”
“அவங்களுக்கு என்னை மாதிரி சண்டை போடத் தெரியுமான்னு கேளு... அமிதாப்பச்சனுக்கே ஸ்டண்ட் ரோலுக்கு நான்தான் டூப்... சிலம்பு, கத்தி, குஸ்தி... எல்லாம் அத்துபடி, இந்த ஊர்ல எவன வேணுமுன்னாலும் வரச்சொல்லு...”
எல்லாப்பெண்களும் அவனை அதிசயித்துப் பார்த்தார்கள். கோலவடிவு, முன்பு அவன் ஸ்போர்ட் பேண்ட்டையும், டி சர்ட்டையும் பார்த்து, அவனை வான்கோழியாக நினைத்து மனதுக்குள் வைதவள்; இப்போது அவன் உடையையும், உடைக்குள்ளே இருந்த உடம்பையும் ரசித்துப் பார்த்துவிட்டு, தன்னைத்தானே திட்டிக்கொள்வதுபோல் மெல்ல முனங்கினாள். அலங்காரி அவனை ஏறிட்டுப் பார்க்காமலே கேட்டாள்.
“திருஷ்டி பட்டுடப் போவதுடா... இதுக்கு மேல எதுவும் சொல்லாத...”
“எத்தே. உங்க மவன நாங்க தின்னுட மாட்டோம்... அப்போ மச்சான் ஒமக்கு எல்லா சினிமா நடிகரும் பழக்கம் இருக்குமுல்ல...”
“பழக்கம் இருக்குமா... எல்லாரும் என்னைப் பார்த்து மாஸ்டர் மாஸ்டர்னுதான் கூப்பிடுவாங்க.”
“ஒம்ம உடம்புக்கு நீரும் சினிமாவுல நடிச்சிருக்கணும்... இந்த ஊருக்கு வந்திருக்கப்படாது...”
“கரெக்டா சொன்னே... ஆனால் நான் எங்கப்பா மாதிரி எலி டாக்டரா இருக்க விரும்பல... புலி டாக்டரா இருக்க விரும்பறேன்... ஸ்டண்ட் தொழிலுல நடிச்சு நடிச்சு அலுத்துப் போச்சு... இனிமேல் நடிச்சால் ஹிரோ... இல்லன்னா வில்லன்... சின்னச் சின்ன வேடத்துல நடிக்கப் பிடிக்கல... அதான் ஊருக்கு வந்துட்டேன்... இப்போ மூணு லட்சம் சம்பாதிச்சாச்சு... ஒரு காலத்துல சினிமா எடுக்கத்தான் போறேன்...”
“அப்போ பேசாம நம்ம ஊர்லயே ஒருத்திய கதாநாயகியாய் போடணும்.”
“நீயே சொல்லு... யாரைப் போடலாம்...”
“இந்தக் கேள்வியே கேக்கப்படாதுடா... நம்ம கோலவடிவை பக்கத்துல வச்சுக்கிட்டே கதாநாயகிக்கு ஆள் தேடுறது... கோலத்தோட அழக அவமானப்படுத்துறது மாதிரி... பாருடா... அவள் எப்படி வெட்கப்படுறாள்னு... பாரு, அதுலே எவ்வளவு அழகு இருக்குன்னு பாரு... இவள்தாண்டா ஒனக்கு கதாநாயகி...”
துளசிங்கத்தோடு சேர்ந்து எல்லோரும் கோலவடிவைப் புதிய கோணத்தில் பார்த்தார்கள். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தது போல், அவள் சந்தோஷப்படவில்லை. துளசிங்கத்தைக் கோபமாய்ப் பார்த்தபடியே, அலங்காரியிடம் சினந்து பேசினாள்.
“அலங்காரி அத்தே... ஒங்க மனசுல என்னதான் நெனச்சுக் கிட்டே...? என்னைப்பத்தி... எவ்வளவு தப்புக் கணக்கு போட்டுட்டே... எங்கப்பாகிட்ட சொல்லுறேன் பாரு...”
எதற்கும் ஆடாத அலங்காரி, கொஞ்சம் ஆடித்தான் போனாள். அந்த மாற்றத்தைக் காட்டுவதுபோல், ஆலமரத்தின் கைபோலான ஒரு விழுதின் விரலைப் பிடித்தபடியே, கோலவடிவைப் புரியாதவள் போல் பார்த்தாள். அவளுக்குக் கொஞ்சம் பயமெடுத்தது. இந்தக் கோலவடிவின் தந்தை பழனிச்சாமி, கரும்பட்டையான் குடும்பத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படாத - தேர்ந்தெடுக்க அவசியமில்லாத - தலைவர். வம்புச் சண்டைக்கும் போகவும் மாட்டார். வந்த சண்டையை விடவும் மாட்டார். அதோடு, இவள் வீட்டு வாசல் கதவைத் தட்டாத ஒரே ஒரு பெரிய மனிதர் அவர்தான். அலங்காரி ஒரு தடவை லிமிட்டை அதிகமாகத் தாண்டுகிறாள் என்று நினைத்து, அவள் வாழ்க்கைப்பட்ட செம்பட்டையான் குடும்பத்து சொக்காரர்கள், அவளை அடிக்கப்போன போது, ‘கண்ணால் காணாமல், காதால் கேளாமல், தீர விசாரிக்காமல் ஒரு பெண் மேல பழி போடப்படாதுடா... எம்மாளு நீயும் பழி வாராது மாதிரி நடக்கப்படாது’ என்று அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்தவர். அவர் சொன்ன சொல்லுக்கு மதிப்பு கொடுத்தோ, அல்லது அடிக்க வந்த சொக்காரர்களில் பலர் அவளது ராத்திரியாட்ட சொக்கட்டான்கள் என்பதாலோ, அவளை அடிக்காமலே போய்விட்டார்கள்.
என்றாலும் இந்த பங்காளிப் பயல்கள் எதிர்காலத்தில் அவளை அடிக்க, பிடிக்க வரமாட்டார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது... அப்போதெல்லாம் இந்தப் பழனிச்சாமிதான் அவளுக்குப் பாதுகாப்பாக இருப்பார் காரணம் பழனிச்சாமியின் கண் இவள் நடத்தையை ஒருவேளை பார்த்து விட்டாலும், அவர் காதில் எதையாவது சொல்லி மழுப்பிவிடலாம். காதால் கேட்டாலும், அவர் கண்ணை, தன் கண்ணிரால் மறைத்துவிடலாம். தீர விசாரணை என்பது, இந்தச் சட்டாம்பட்டியில் நடக்காத காரியம். விவகாரம் என்று வந்துவிட்டால், சின்னய்யா மகன் என்ன நியாயத்தைச் சொல்வானோ, அதற்கு எதிர் அநியாயத்தை பேசுபவன் பெரியய்யா மகன். இவன்களுக்கு எது நியாயம் என்பது முக்கியமில்லை. எவன் நியாயம் பேசுகிறான் என்பதே முக்கியம். ஆகையால், அலங்காரி, கோலவடிவைப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பாய்ச் சிரித்துவிட்டு, "என் அண்ணாச்சி... மவளே... உட்காரே முழா...” என்றாள்.
அங்கிருந்த பீடிப் பெண்கள் பலருக்கு, அலங்காரி மீது கோபம் கோபமாய் வந்தது. ஒவ்வொருத்தியும் தன்னையே கதாநாயகியாக நினைத்துக் கொண்டிருப்பவள். அந்த நினைப்பிலேயே, நடக்கும்போது ஒரு குலுக்கலோடும், இருக்கும்போது ஒரு சிணுங்கலோடும், எழும்போது ஒரு முகவெட்டோடும், பேசும்போதுகூட ஒரு சினிமாப் பாட்டைப் பின்னணியாக முனங்கிக் கொண்டே பேசுகிறவர்கள் இவள்கள். அப்படிப்பட்ட நாயகிக் குணங்களில் ஒன்றுகூட இல்லாத கோலவடிவை, அலங்காரி கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தது அவள்களுக்கு அதிகப்படியாகத் தெரிந்தது. இந்தக் கோபத்தை முத்தம்மா, வக்கிரமாய்க் காட்டினாள். மனதுக்குள், ஒரு ஐ.நா. சபையையே குடியிருக்க வைத்திருப்பவள்.
“ஏய் சித்தி... பேச்சுக்கும் ஒரு வரைமுறை வேண்டாம்... என்ன பேச்சு பேசிட்டே... செத்த பேச்சு... அதுவும் ஒரு முழுத்த பொம்புள பிள்ளயப் பார்த்தா இப்டி சொல்லுறது... இப்போ அவளச் சொன்னே... நாளைக்கு எங்களச் சொல்லமாட்டேன்னு என்ன நிச்சயம்...”
“இடையர் பொறுத்தாலும் இடக்குடி நாய் பொறுக்காதாம்... கோலவடிவே நான் சொன்னதுக்கு லேசா கோபப்பட்டுட்டு இப்போ சும்மா இருக்காள். ஒங்களுக்கு என்னடி... வந்துட்டு”
அமைதியாய் உட்கார்ந்திருந்த கோலவடிவுக்கு மீண்டும் கோபம் வந்தது. ‘லேசா கோபப்பட்டேன்... என்கிறாளே... லேசா இல்ல... இல்ல... நான் நெசமாகவே கோபப்பட்டனாக்கும்... அலங்காரிக்கு அது தெரியாமப் போச்சின்னா தெரியப்படுத்தணும்...’
“ஏய் அலங்காரி... அத்தே... என்ன சொன்ன...? நான் லேசர் கோபப்பட்டேனா...? அப்படியே இருக்கட்டும்... எங்கப்பா முழுசா கோபப்படுவாரு... அப்போ தெரியும் ஒனக்கு... என்னை என்ன சினிமாக்காரின்னு நெனச்சியா...? என்னப் பாக்கத்துக்கு ஒனக்கு என்ன தளுக்கி... மினுக்கியா தெரியுதா...?”
அலங்காரி சரணடைகிறவள் போல், மடியில் கிடந்த பீடித்தட்டைக் கீழே தள்ளிப் போட்டுவிட்டு, தன்னிலை விளக்கமாகவும், அவளைச் சமாதானப்படுத்துவது போலவும் பேசினாள்.
“ஒன் மேல இருக்கிற பாசத்துல பேசிட்டேன்... மருமகள் என்கிற உரிமையில பேசிட்டேன்... வேற தப்பான எண்ணத்துல பேசல... துளசிங்கம் சினிமாப்படம் எடுக்கவும் வேண்டாம்... அப்படியே எடுத்தாலும் நீ அவன்கூட நடிக்கவும் வேண்டாம்... ஆளை விடும்மா...”
இன்னொருத்தி இடைமறித்தாள்.
“எம்மாடி... சினிமா வந்த பிறவுதான் தகராறு வரும்... துளசிங்கம் மச்சான், படம் எடுக்கதுக்கு முன்னாலேயே தகராறு வருது பாருங்க...”
அந்தப் பெண்களில் எவளும் இடைமறித்துப் பேசிய தமாஷை ரசித்துச் சிரிக்கவில்லை. தன்னைத்தான் கதாநாயகி என்று துளசிங்கமோ அல்லது அவன் சித்திக்காரியோ தேர்ந்தெடுக்கும் வரை சிரிப்பதில்லை என்று உறுதி பூண்டவர்கள் போல் வாய்களைப் பற்கதவுகளால் அடைத்தார்கள். இவர்களில் தனி ரகம் பாஷாடை சந்திரா. இந்த ஒரு விவகாரத்திற்கு கோபப்பட வேண்டுமா அல்லது சிரிக்க வேண்டுமா என்று அவள் குழம்பும்போது, அவளுக்கு வேண்டியவர்கள், அந்த விவகாரத்தில் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொள்வாள். பெரியப்பர் மகள் கோலவடிவு கதாநாயகி தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபோது அதை ஏற்று, ரசித்துச் சிரித்தவள், இப்போது கோலவடிவே கோபப்பட்டதால், அந்தத் தேர்வு மோசம் என்றும், ஆகையால் தானும் கோபப்பட்டுச் சொக்கார பலத்தைக் காட்ட வேண்டும் என்று கத்தினாள்.
“ஆனாலும் ஒங்களுக்கு இவ்வளவு அடாவடி ஆகப்படாது அலங்காரி அத்தே... எங்க அக்காவைப் பார்க்கக் குலுக்கி மினுக்குகிற சினிமாக்காரி மாதிரியா தெரியுது... வாலிபப் பயலுவ கூட டூயட் பாடுற மாதிரியா தெரியுது... இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால்... எங்கக்காவைப் பத்தி என்னவோ சொல்லுவே போலுக்கு... எங்கக்கா ஒன்னை மாதிரி சிலுக்குறாளா... இல்ல மினுக்குறாளா...”
கோலவடிவுக்கும் சித்தப்பா மகள் சந்திரா பேசுவது அதிகப்படியாகத் தெரிந்தது. ஆனால், அந்தச் சமயத்தில் அவளைக் கட்டுப்படுத்துவது, தான் கதாநாயகியாக நடிப்பதில்லை என்ற முடிவை, கல்யாணமான நடிகைகள் மறுபரிசீலனை செய்கிறார்களே, அப்படி மறுபரிசீலனையாய் கருதப்படும் என்று பயந்துபோய் சும்மா இருந்தாள். ஆனால் அலங்காரியால் அப்படிச் சும்மா இருக்க முடிய வில்லை. லேசாய்க் கோபமும் வந்தது. அதைப் பேச்சாக மாற்றினாள்.
“ரொம்பத்தான் துள்ளாத சந்திரா... போன வருஷம் பள்ளிக்கூடத்து நாடகத்துல கதாநாயகன் மார்புல கண்ணை மூடிக்கிட்டு சாய்ஞ்சு கிடந்தே... சிங்காரன் விசிலடிச்சப்போகூட டயலாக்க மறந்து அப்பிடியே கிடந்த...”
“அது பொம்புள போட்ட ஆம்புள வேடம்... அதுல என்ன தப்பு?”
“நீ பொம்புள கிட்டயே அப்படினன்னா...”
“என்னழா... வாய் ரொம்ப நீளுது? ஒன் புத்திய மாதிரி எல்லோரையும் நெனச்சிட்ட பாரு... இப்பவே எங்க பெரியப்பாகிட்ட சொல்லி ஒன் நாக்க வெட்டிப் போடச் சொல்லுதேன் பாரு... கோலக்கா எழுந்திரு...”
“சரியம்மா... தெரியாமச் சொல்லிப்புட்டேன்... இந்தப் பேச்சு விட்டுட்டு அடுத்த பேச்சு பேசலாம்.”
அந்தப் பெண்களுக்குள் நடந்த ஏடாகோடமான பேச்சை ரசித்துக் கேட்பது போலவும், அதைப் பொருட்படுத்தாதது போலவும், கையில் இருந்த கம்பால் ஆலவேரில் சாரிசாரியாச் சென்ற எறும்புகளை இடித்து இடித்துக் கொன்று குவித்துக் கொண்டிருந்த துளசிங்கத்திற்கு ஆவேசம் வந்தது... கோலவடிவு மேல் மெலிதாகவும், சந்திராமேல் பலமாகவும் வந்தது. சித்திக்குச் சொல்வது மாதிரிச் சொன்னான்.
“நம்ம கண்ணு முன்னாலயே அம்மணமாத் திரிஞ்ச சின்னப் பொண்ணு இந்தச் சந்திரா... ஏதோ பீர்க்கங்கா மாதிரி வளர்ந்துட்டாள்... பெரியவள் என்கிற நெனப்புல குதிக்காள்... போயும் போயும்... அவள் கிட்ட போயி... மன்னிப்புக் கேட்ட பாரு... அவளுக்கு உடம்பு வளர்ந்த அளவுக்கு அறிவு வளராமப் போச்சு... இல்லன்னா இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி ஆடமாட்டாள்...”
“இந்தா பாரும்... ஒமக்கும் எனக்கும் பேச்சில்லே... போயும் போயுமுன்னு பேசுதியரே... நான் என்ன தெருவுலயா கிடக்கேன்... ஆடுறேன்னு வேற சொல்லுதியரு... என்னைப் பார்த்தா ஆட்டக்காரி மாதிரியா இருக்குது... ஒம்ம அக்காவப் போய் ஆடச் சொல்லும்... ஒம்ம தங்கச்சியப் போயி ஆடச் சொல்லும்... இல்லன்னா இந்த மூளி அலங்காரி மூதேவி சண்டாளியப் போய் ஆடச்சொல்லும்... நான் எதுக்கு ஆடணும்...”
“நீ ஆடாண்டாம்... ஆடுனாலும் அசிங்கமாத்தான் இருக்கும்...”
“இதோ பாரு... துளசிங்கம்... இதுக்கு மேல பேசினே... எனக்குக் கெட்ட கோபம் வரும்...”
“நீ சின்னப் பொண்ணாச்சேன்னு பாக்கேன். இல்லன்னா என்னை, நீ நான்னு பேசுறதுக்கு நடக்குற சங்கதியே வேற... என்ன நடந்து போச்சுன்னு இப்டி குதிக்கே.”
“எங்கக்காவ எப்படி சினிமாக் கதாநாயகின்னு சொல்லலாம்...? சும்மா கண்டபடி பேசுறதுக்கு திறந்து கெடக்கோ...”
“சரி, எங்க சித்தி சொன்னதையே நான் திருப்பிச் சொல்லுறேன்... இதோ இருக்காளே... இந்தக் கோலவடிவு, சினிமாவுல வார கதாநாயகி மாதிரியா இருக்காள்...? தமிழுக்குத் தமிழ் கதாநாயகி மாதிரியும், இந்திக்கு இந்தி கதாநாயகி மாதிரியும் இருக்காள்... சரி... சொல்லிட்டேன். இப்போ என்ன செய்யணுமோ அதைச் செய்துக்கோ...”
“ஏய் கோலவடிவு... எக்கா... ஒன்னத்தான்... எழுந்திரு... இப்பவே நம்ம குடும்பத்துக்காரங்ககிட்ட சொல்லுவோம்... எழுந்திரு... என் குத்துக்கல்லு மாதிரி இருக்கே...”
“நீயே நான் சொன்னதைப் போய் சொல்லுறியா... இல்ல... நானே ஒன் குடும்பத்துக்காரன்கிட்ட வந்து சொல்லணுமா... இன்னொரு தடவை வேணுமுன்னா சொல்லுறேன்... நல்லா கேட்டுக்க... இந்த கோலவடிவு...”
“எக்கா... எக்கா எழுந்திரு... இவன ரெண்டுல ஒண்ணு பாத்துடனும்... நீ இப்போ எழுந்திருக்காட்டால், இந்த துளசிங்கம் சொன்னதல்லாம் ஒனக்குச் சரின்னு அர்த்தம்...”
கோலவடிவு பயந்து போயும், பதறிப் போயும் எழுந்தாள். அத்தனைப் பெண்களும் பரபரப்பானார்கள். சிலர் எழுந்து விட்டார்கள். ஏதோ சொல்லப் போனார்கள். அதற்குள் கோலவடிவின் கையை இழுத்துக்கொண்டு போகப் போன சந்திரா சட்டென்று நின்றாள். கிழக்குத் திசையையே பார்த்தபடி நின்றாள். அவள் பார்த்த திசையை அனைவரும் பார்த்தார்கள். பயந்து பார்த்தார்கள். படபடப்பாய் பார்த்தார்கள். அங்கிருந்து -
திருமலை வந்து கொண்டிருந்தான். தோளிலே மண்வெட்டி கிடந்தது. அதன் இரும்பு வாய் அவன் தோளைப் பற்றிக் கிடக்க, கம்புக் கணை அவன் கையோடு கையாய்த் தொங்கியது. இடது கையில் ஒரு வெட்டரிவாள். அவனுக்கு இருபத்து மூன்று வயதிருக்கலாம். செம்மண் நிறம். சுட்ட செங்கல் லாவகம் வெட்டரிவாளுக்கும் அவன் கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. மண்வெட்டி கணைக்கும் அவன் கைக்கும் வேறுபாடு தோன்றவில்லை. எல்லாப் பெண்களும் நடுங்கினார்கள். முத்தம்மா சந்திராவைக் கெஞ்சினாள்.
“ஏய் சந்திரா... நீ நல்லா இருப்ப... கோலவடிவு அண்ணாச்சி கிட்ட சொல்லாத. விளையாட்டு விளையாட்டாவே இருக்கட்டும். வினையாயிடப்படாது... இல்லன்னா குத்துப்பழி வெட்டுப்பழி வரும்... கோலவடிவு... நீயாவது இந்த குறுமுட்ட பொண்ணுகிட்ட சொல்லு...”
கோலவடிவும் சந்திராவைச் சமாதானம் செய்யப்போனாள். ஆனால் அதற்குள் சந்திரா முந்திக் கொண்டாள். கைகளை ஆட்டி ஆட்டி காட்டுக் கத்தலாய் கத்தினாள்.
“எண்ணே... எண்ணே... சீக்கிரமா வா... இந்த துளசிங்கம் எங்கள அவமானமாய் பேசுறான்... சீக்கிரமா வாண்ணா...”
திருமலை வேகவேகமாய் ஓடி வந்தான். துளசிங்கமும் அவனைச் சந்திக்க தயாராய் இருப்பதுபோல், கைகளை மார்பில் மடித்துப் போட்டு, வீறாப்பாய் நின்றான். பெண்களோ, “எய்யோ... எய்யோ...’ என்று புலம்பினார்கள்... அந்தப் புலம்பல் திருமலைக்கும் அந்த இடத்திற்கும் இடைவெளி குறையக் குறைய வலுத்தது... அந்தச் சத்தத்தைக் கேட்டுப் பயந்துபோய், ஆலமரத்தில் இருந்த எல்லாப் பறவைகளும் அஞ்சிப் பறந்தன... அவை எழுந்த வேகத்தில் அந்த ஆலமரத்தின் உச்சிக் கொம்புகள் ஆட்டம் கண்டதுபோல் ஆடின... திருமலையும் நெருங்கிவிட்டான். துளசிங்கமும் தயாராகிவிட்டான்.
வேகமாக நடந்து வந்த திருமலை அந்தப் பெண்களின் கூச்சலாலும், சந்திராவின் கைவீச்சு பலமாக ஓங்கியதாலும், ஓட்டமாக வந்தான். மூச்சிழுப்பைக் கட்டுப்படுத்துவது போலவும், அதை வெளிக்காட்டாதது போலவும், ஆல விழுதைப் பிடித்தபடி, பிறகு அதன் நுனியைக் கையில் சுருட்டி வைத்தபடி, எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தான். எதிரே கையைக் கட்டிக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்தபடி, அலட்சியமாய் நிற்பதாய்க் காட்டிக் கொண்ட துளசிங்கத்திடம் குசலம் விசாரிக்கப் போனான்.
அப்போது...
சந்திரா, பெரியப்பா மகனைப் பார்த்து, நடந்ததைச் சொல்லப் போனாள். கோலவடிவு அங்கே நிற்கப் பிடிக்காததுபோல், சற்றுத் தனியாய்ப் போய்நின்று கொண்டாள். அவசர அவசரமாகச் சொல்லப்போன சந்திராவின் கையை ஒருத்தி பிடித்தபடியே, “ஏதோ கோபம்... பாவம்... பழி... ஒரு கொலயோ, ரெண்டு கொலயோ விழுறதுக்கு பொறுப்பாளி ஆலாத” என்றாள். உடனே சந்திராவுக்கு ஒரு சந்தேகம். தான் சொல்லப் போவதோ, அல்லது கிரகித்துக் கொண்டதோ தப்பாக இருக்கலாம் என்ற நினைப்பு... ஆகையால் அவள் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பதுபோல் உதட்டைக் கடித்தபோது சஸ்பென்ஸ் தாங்கமுடியாத திருமலை அவளை அதட்டினான்.
“என்ன நடந்ததுன்னு சொல்லுழா... ஏமுழா... பயப்படுறே... நான் இருக்கும்போது, நீ எதற்குப் பயப்படணும்... சும்மாச் சொல்லு...”
சந்திரா இப்போது தனக்குப் பயமில்லை என்பதை நிரூபிப்பதற்காகவே சொல்லப் போனாள். இதற்குள் அலங்காரி, முந்திக் கொண்டு பேசினாள்.
“மம்பெட்டிய கீழே போட்டுட்டு உட்காறேன் மணி... வயலுக்கு காலயிலயே போயிட்டியோ...”
“எமுழா சந்திரா... சொல்லேமுழா...”
“நானே சொல்லுதேன் ராசா... எங்க மச்சான் மவன் துளசிங்கம், அவனைத்தான் ஒனக்குத் தெரியுமே... சினிமா கிறுக்கன்னு... ஏதோ ஒரு சினிமாப்படம் எடுக்கப் போறதைச் சொன்னான். உடனே நான்... இந்த அத்ததான், நம்ம கோலவடிவு கதாநாயகியாய் நடிக்கணுமுன்னு சொன்னேன். ஒன் தங்கச்சி எனக்கு மருமவள் முறையாச்சே என்கிற உரிமையில சொல்லிப் புட்டேன்... அப்படிச் சொன்னது அத்தைக்கு இப்போகூட தப்பாத் தெரியல... தப்புன்னா தப்புன்னு சொல்லு... இனிமேல் சொல்ல மாட்டேன்... நேத்து ஒங்க வீட்டுக்கு நாலைஞ்சு வெள்ளச் சட்டைக்காரங்க வந்திருக்காங்களே... யாரு ராசா அவங்க... பழனிச்சாமி அண்ணாச்சிய விலக்குத் தீர்த்து விவகாரம் பேச கூப்புட்டாங்களா... ஒங்கப்பா வழக்காளியா இருக்கதுல இந்த ஊரே பெருமப்படுது ராசா... உட்காறேன்...”
சந்திராவால் பொறுக்க முடியவில்லை. முட்டாளாகிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது. சுய மரியாதைக்கு வில்லங்கம் ஏற்பட்டிருப்பது போன்ற அவமானம். அண்ணனிடம் கோபங் கோபமாய்ப் பேசத் துவங்கி, பிறகு அந்தப் பேச்சை அழுதழுது முடித்தாள்.
“நம்பாத அண்ணா... நம்பாத... அலங்காரி அத்த மழுப்புறாள்... சரி அவதான் புத்தியக் காட்டிட்டான்னா இந்த, துளசிங்கம் என்ன சொன்னான் தெரியுமா? நம்ம கோலவடிவு தமிழுக்கு தமிழ் கதாநாயகியாயும், இந்திக்கு இந்திக் கதாநாயகியாயும் இருக்காளாம். நான் தட்டிக் கேட்ட பிறகும் திமுறுல சொல்றான் அண்ணா...”
திருமலை வெட்டரிவாள் கையோடும், மண்வெட்டித் தோளோடும் துளசிங்கம் நின்ற இடத்தை நோக்கி நடந்தான். அவனோ, இவன் ஒரு தூசி என்பது போல், அலட்டிக்காமல் நின்றான். இப்போது இருந்த பெண்கள் கூட எழுந்து விட்டார்கள். சிலர் இருவருக்கும் இடையே போய் நிற்கப் போனார்கள். பிறகு, திருமலை கவிழ்த்திப் பிடித்த வெட்டரிவாளை நிமிர்த்திப் பிடிப்பதைப் பார்த்துவிட்டு, நடுங்கிப்போய் நின்றார்கள். ஒருத்தி ஊரில் போய்ச் சொல்லலாம் என்பதுபோல் இன்னொருத்தியைப் பிடித்திழுத்தாள்.
துளசிங்கத்தை நெருங்கிய திருமலை, போர்ப்பரணி பாடினான்.
“ஒன் மனசுல. என்னடா நெனப்பு...?”
“அனாவசியமாய் பேசாதடா... ஒன்னால ஆனதைப் பாருடா...”
“என் தங்கச்சிய அவமானமாப் பேசுனதுமில்லாம திமுறா ஒனக்கு...”
“பாசத்துக்கு அடிமையாகிறவன் பைத்தியக்காரன்... ஒனக்குப் பதில் சொல்லி என்னை அவமானப்படுத்த நான் விரும்பல... ஒன்னால ஆனதைப் பாரு... முதல் அடி ஒன் அடியாவே இருக்கட்டும்...”
திருமலைக்கு அவன் மூளை ஆணையிடாமல், கையில் இருந்த அரிவாள் ஆணையிடத் துவங்கியது. அவன் வலது கையால் அரிவாளைத் தூக்கிப் பிடித்து, இடது கையில் துளசிங்கத்தின் தோளைத் தொடப்போனான். துளசிங்கம் சற்றே விலகி, சினிமாப் பாணியில் சட்டையைக் கழட்டி, அதை திருமலையில் முகத்தில் வீசி, அரிவாளை மறைத்து, அவனை திசையறியாமல், திக்கு முக்காடாய் செய்யப்போனான். இதற்குள், அலங்காரி, திருமலைக்கு முன்னால் வந்து அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள். மற்றப் பெண்களும், அந்தச் சமயத்தில், இருவருக்கும் இடையே உள்ள சின்ன இடைவெளியை இட்டு நிரப்பினார்கள். கோலவடிவு, அழப்போனாள். அங்கே ஓடிப்போய் அண்ணனைத் தடுக்கப் போனாள். ஆனால் ‘பயமில்லாத’ சந்திரா, வடிவை புல்லுக்கட்டைப் பிடிப்பதுபோல் தூக்கிப் பிடித்தாள். அலங்காரி, கும்பிட்ட கையை நிமிர்த்தாமலே, திருமலையிடம் கெஞ்சினாள்.
“சாமி சத்தியமாய் சொல்லுதேன்... ராசா... இந்த துளசிங்கம் பயல்... அத்தை மகளாச்சேன்னு சொம்மா விளையாட்டுக்குத்தான் சொன்னான்... இந்தச் சந்திராவால இப்டி வினையாகுமுன்னு நெனச்சா... அவன் சொல்லியிருக்கவே மாட்டான்... அத்தப் பெண்ண கிண்டலா பேசுறது... மாமா மவனுவ எல்லாரும் செய்யுறதுதான... மணி... இதுக்குப் போயி...”
“இந்தப் பயலோட அப்பா... எனக்கு மாமா மொறதான் வேணும்... இதனால் இவன் தங்கச்சி புஷ்பமும், எனக்கு மாமா பொண்ணுதான்... அதுக்குன்னு அவளப் போயி... நான் தூக்கிட்டு வரட்டுமா... இல்ல வயலு வரப்புக்கு போவும்போது, நானே அவளோட இடையில கையப் போட்டு டான்ஸ் ஆடலாமா... எதுக்கும் ஒரு வரைமுறை இருக்குல்லா...”
“துளசிங்கத்துக்காவ நான் மன்னாப்பு கேட்டுக்கிறேன்... ராசா... கொஞ்சம் பின்னால போப்பா...”
அலங்காரி திருமலையைச் செல்லமாகப் பின்னுக்குத் தள்ளினபோது, துளசிங்கம் சிறிது முன்னுக்கு வந்து சூளுரைத்தான்.
“நீ ஏன் சித்தி மன்னிப்புக் கேக்கே... இந்தாப்பா... திருமலை... ஒன்னால என்ன செய்ய முடியுமோ... அதச் செய்... நாம ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துல ஒண்ணாப் படிச்சோமேன்னு சும்மா இருக்கேன்... இல்லாட்டா இந்நேரம்...”
“ஓகோ... அய்யா... என்னை புண்ணியத்துக்குத்தான் விட்டு வச்சிருக்கியோ... அதையும் பாத்துடலாம்...”
அலங்காரியால் ஒரளவு சமாதானப்பட்டுத் தணிந்த திருமலை, இப்போது அனல் கட்டையில் பிடித்த தீ போல் பீறிட்டு, அவளை ஒரு பக்கமாகத் தள்ளி விட்டுவிட்டு துளசிங்கத்தை நெருங்கினான். அரிவாள் கையில் இருந்தாலும், அதனால் அவனை வெட்டத் தயங்கினான் திருமலை. துளசிங்கம் தொலைவில் சென்று, ஒரு பெரிய கருங்கல்லைத் தூக்கி வைத்துக் கொண்டு நின்றான். இவன் அவன் கழுத்துக்கும், அவன் இவன் தலைக்கும் ஒருவரை ஒருவர் நெருங்காமலே குறி வைத்தார்கள். எல்லாப் பெண்களும், “எம்மோ... எம்மோ” என்று கூக்குரலிட்டு அந்த இருவரையுமே சுற்றிச் சுற்றி வந்தார்கள், காகங்கள் கத்தின. குருவிகள் கீச்கீச் என்றன... சந்திராவுக்கும், பயமெடுத்துக் கைகால் உதறியது. அந்தச் சமயத்தில், சந்திராவின் பிடியில் இருந்த கோலவடிவு அவளை உதறிவிட்டு ஓடி வந்தாள். பெண்கள் வட்டத்தில் இரண்டு பெண்களை இரண்டு கைகளாலும் தள்ளிவிட்டபடியே, அண்ணனுக்கு அரணாக நிற்பதுபோல், அவன் பக்கமாகத் திரும்பினாள். அப்படியும், அவன் தலை மறையாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, குதிகாலில் நின்றபடி, அண்ணனின் தலையில் தனது கையைப் பரப்பி மறைத்தாள். துளசிங்கத்தை அலங்காரி பிடித்துக் கொண்டாள்... அவன் கையையும், அது பிடித்த கல்லையும் கீழே இழுத்தாள்.
முத்தம்மா, ரெண்டு குடும்பங்களையும் சேராதவள். ஆகையால், தான் பேசுவதே நியாயம் என்று நம்பி, அடித் தொண்டையில் குரலிட்டாள்.
“திருமலை அண்ணாச்சி... நீ நடந்ததை தீர விசாரிக்காம அடிக்கப் போறதும் தப்பு. துளசிங்கம்... அண்ணாச்சி... நீ நடந்ததைச் சொல்லாததும் தப்பு... எல்லாத்தையும் விட பெரிய தப்பு... இந்தப் பக்கம் ஆம்புளையள இருக்க விடுறது...”
அலங்காரியும் அரசியல்வாதியானாள்.
“ரெண்டு பேருமே மாமா மச்சான்... ஒண்ணுக்குள்ள ஒண்ணு... கண்ணுக்குள்ள கண்ணு... ஒரு கண்ணு இன்னொரு கண்ணை முறைச்சா எப்டி... ஒரு கையி இன்னொரு கைய அடிச்சா எப்டி... ஒரு காலு... இன்னொரு கால உதச்சா எப்டி...”
அலங்காரி இப்படியே பேசிக் கொண்டே போயிருப்பாள்... ஆனால், சந்திராவால் பொறுக்க முடியவில்லை... கோலவடிவக்காவை, அலங்காரி அப்படி விமர்சனம் செய்ததையும், துளசிங்கம் அப்படி அந்த விமர்சனத்திற்கு அழுத்தம் செய்ததையும், திருமலை தப்பு என்று ஏற்றுக் கொண்டு சண்டைக்குப் போனதால், தான் தப்பாகச் சொல்லவில்லை என்று சந்திரா நினைத்தாள். அதோடு திருமலை அண்ணன், துளசிங்கத்தை அடிக்காமல் போய் விடுவானோ என்ற சந்தேகம். அவன் துளசிங்கத்தைச் ஜெயித்தால்தான், தான் அலங்காரியைத் தோற்கடித்ததற்குச் சமம் என்று நினைத்தாள். இத்துடன் அவள் உடம்பில் ஓடிய இயல்பான கரும்பட்டையான் ரத்தம் கொதித்தது. கொஞ்ச நஞ்ச அமைதியை குரோதச் சூறாவளியாய் மாற்றப் போனாள்.
“எண்ணா... நான்தான் பெரிய வீராதிவீரன்னு இவனுக்கு நெனப்பு... இந்த ஊரில எவனை வேணுமுன்னாலும் என்கிட்டே வரச் சொல்லுன்னு சவடால் அடிக்கான்...”
திருமலை துளசிங்கத்தை மீண்டும் பகையாக்கிப் பார்த்தான். அவள் அப்படிச் சொன்னது, இவனையே சவாலுக்குக் கூப்பிடுவது போல் தோன்றியது... அரிவாளை எடுத்துக் கீழே எறிந்தான்... மண்வெட்டியைத் தூக்கிக் கீழே போட்டான்... வெற்றுடம்புடன் துளசிங்கத்தை முறைத்தபடியே சவாலிட்டான்.
“சினிமாவுல ஒருத்தன வீரனாக காட்டுறதுக்காவ... இருபது பேரை தெம்மாடியாய் காட்டிக் காட்டி, சினிமாக்காரனுவ நம்மை நாட்டையே கெடுத்துப்புட்டானுவ... இந்த இடம் சினிமா எடுக்கிற இடம் இல்ல... எங்க கரும்பட்டையான் வம்சத்து மூதாதையர் இளவட்டக் கல்லு தூக்குன இடம்... சிலம்பாடுன பூமி... வாறியா... ஒத்தைக்கு ஒத்தையா போட்டுப் பார்க்கலாம்...”
“சரி... போட்டுப் பாத்துடலாம்... சினிமாவுல சண்டை கத்துக் கிட்டதால சொல்லல... எங்க செம்பட்டையான் குடும்பத்து ரத்தம் இந்த உடம்புல ஓடுறதால... சொல்லுறேன்... எப்போ வச்சுக்கலாம்... எந்தக் கிழமையில வச்சுக்கலாம்...”
“எப்போ என்ன எப்போ... இப்போ வச்சுக்கலாம்... நாளும் கிழமையும் பேடிப் பயலுக்குத்தான்...”
“யாருடா பேடி..."
“வேறயாரு... நீதான்...”
இருவரும் மீண்டும் மோதப் போனார்கள். இதற்கிடையே ஒரு இளம்பெண் ஓடோடி வந்தாள். அருகே இருந்த பருத்திக் காட்டில் இருந்து பாய்ந்து வந்தாள். திருமலையின் முன்னால் போய் நின்று, “ஒரு அடி நகர்ந்திரு... அப்புறம் தெரியும் சேதி” என்று எச்சரித்தாள்.
எல்லோரும், ‘வாராதது போல்’ வந்த அந்தப் பெண்ணையே பார்த்தார்கள். மாம்பழச் சிவப்பு. தக்காளி நிறப் புடவை. நாகப்பழக் கண்கள். அழுத்தம் திருத்தமான பார்வை. அனாவசியமான தோரணை, துள்ளும் கன்றுக்குட்டி மாதிரியான லாவகம், தன்னை மீறி எதுவும் நடந்துவிட முடியாது என்பது போன்ற குறுஞ்சிரிப்பு... அவள் தலையை ஆட்டி ஆட்டிப் பேசும்போது, கண்கள் ஊஞ்சலாட, கம்மல்கள் வெளிச்சம்போட, இன்னதென்று சொல்ல முடியாத அதே சமயம் எல்லோராலும் இனங்காணக்கூடிய கவர்ச்சிக்காரி; பீடித் தட்டை குழந்தையைச் சுமப்பதுபோல் இடுப்பில் வைத்து பிடித்தபடி ஒயிலாக நின்றாள்.
அவளையே பார்த்த பெண்கள், அந்த நேரத்திற்குள் அந்தத் தடியன்கள் இருவரும் ஏதாவது செய்துவிடப்படாதே என்பதுபோல், அவர்களையும் பார்த்தார்கள். அவன்களோ, இவள்கள் தங்களைப் பார்த்தால்தான் சண்டை வரும் என்பதுபோல், முன் வைத்த கால்களை பின் வாங்காமல், அதே சமயம் உடம்புகளைப் பின்னிழுத்தபடி நின்றார்கள். திருமலை, பத்திரகாளி வந்ததும் கோபம் தணிந்த வீரபத்திர சாமி போல, துளசிங்கத்தை முறைத்த கண்களை, அவள் மேல் போட்டபடியே பேசினான்.
“நீ இதுல தலையிடாதே ரஞ்சிதம்... இந்தப் பய என் தங்கச்சி கோலவடிவ அவமானமாய் பேசியிருக்கான்...”
“அப்டி என்ன பேசிட்டார்...”
“என் தங்கச்சி சினிமாவுல கதாநாயகியாய் நடிக்கலாமாம். தமிழுக்கு தமிழ் கதாநாயகியாம். இங்கிலீசுக்கு இங்கிலீசு கதாநாயகியாம்...”
“எண்ணே... இங்லீஸ்னு சொல்லல... இந்தின்னு சொன்னான்...”
“ஒரு வயசுப் பொண்ணுகிட்ட பேசற பேச்சா இது... இவன நான் விடப் போறதில்ல... நீ பேசாம அந்தப் பக்கமா போ...”
“பொட்டப்பிள்ளியள கிண்டல் பண்ணுறவன விடப்படாதுன்னா, ஒம்மையும் விடப்படாது.”
“நீ என்னே சொல்லுறே...”
“நீரே... நெனச்சிப் பாரும்.”
“டேய் துளசிங்கம்... இந்த ரஞ்சிதம் அடுத்த சாதிப் பொண்ணா இருந்தாலும் நியாயம் பேசுறவள். அவள் முகத்துக்காவத்தான் நான் ஒன்னை விட்டு வைக்கேன்...”
“இதே வார்த்தைய நானும் சொன்னதா நெனச்சுக்க...”
“ஆனால் இனும ஒரு தடவ என் தங்கச்சியப் பத்தி அப்டிப் பேசினே... ஒன்னை விடப்போறதில்ல...”
“எவண்டா இவன் கிறுக்கன்... ஊருல எனக்கு என்ன வேற வேல வெட்டி இல்லியா...”
“சரி இதோட பேச்சை விடுங்க... மகனே துளசிங்கம் பழையபடி உட்காரு... மருமவனே திருமல... நீயும் உட்காரு... எப்பாடா எனக்கு இப்பதான் போன உயிரு திரும்ப வந்தது... ஏய் பொண்ணு ரஞ்சிதம், அது என்ன பிள்ள, ‘நீரே நெனச்சிப் பாரும்’.”
“யார்கிட்ட சொன்னாலும் ஒங்ககிட்ட சொல்லுவேனா...”
“சரி. லேசா விடுகதை மாதிரிச் சொல்லு...”
“எம்மாடி நான் ஊரச் சொன்னால் பேரக் கண்டுபிடிப்பீக... பேரச் சொன்னால் ஊரைக் கண்டு பிடிப்பீக... பொல்லாத ஆளாச்சே நீங்க...”
“சும்மா பவுசு பண்ணாம சொல்லும்மா...”
“என்னைக்குமே கைய மூடி வச்சாத்தான் மரியாதி... திறந்து காட்டினா வெறுங்கையுன்னு ஆயிடும்...”
“எப்பா நீ கஷாயம் தட்டுற உரலையே கஷாயம் போட்டு குடிக்கிறவளாச்சே."
“குடிக்கிறதுன்னதும் ஞாபகம் வந்துட்டு... ஏய்யா துளசி... திருமலை... பெரிய வீராதிவீரங்க மாதிரி துள்ளுறிய... பட்டப்பகலுலே பட்டச்சாராயம் காய்ச்சி ஊரைக் கெடுக்கிறான் அந்த பெருமாள் சாமி... அவனைத் தட்டிக் கேட்கப்படாதா...”
“எங்க சாதி ஆம்புளைய அவன் இவன்னு பேசப்படாது...”
“ஒங்க சாதியா இருந்தாலும், எங்க சாதியா இருந்தாலும்... எவன் காய்ச்சினாலும் குடி... குடியக் கெடுக்குமுல்லா... ஒங்க சாதி... எங்க சாதின்னு மனுஷங்களில இருக்கு... ஆனால் மனுஷனாய் இல்லாத இந்த பெருமாள்சாமி காய்ச்சுற கருவேலம்பட்டையில சாதி இல்ல... யார் எக்கேடு கெட்டாலும் தான் மட்டும் சம்பாதிக்கணும்... என்கிற சாதிதான் இருக்குது...”
எல்லாப் பெண்களும் ரஞ்சிதத்தை வியந்து பார்த்தார்கள். ஆணவம் இல்லாத தன்னம்பிக்கை... பிச்சைக்காரத்தனம் இல்லாத அடக்கம்... வாயாடி என்றோ ஊமை என்றோ சொல்ல முடியாத அளவிற்கு வரம்புகட்டி நிற்பவள்... அத்தனை பெண்களும் இயல்பு நிலைக்கு வந்தார்கள். கோலவடிவுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்... ஆனால் சந்திரா அலங்காரியிடம் தோற்றுப் போனதாக நினைத்தாள். இந்த ரஞ்சிதத்தை ஜெயித்து, அந்தத் தோல்வியைச் சரிகட்டப் போவதுபோல் கேட்டாள்.
“எம்மாளு... ரஞ்சிதம்... எங்கண்ணாச்சிய தட்டிக் கேட்டது மாதிரி துளசிங்கம் மச்சானை ஏன் தட்டிக் கேக்கலே... எங்கண்ணாச்சின்னா இளக்காரமா...”
“நீயே அவரத் தடுத்திருக்கணும்... நீ செய்ய வேண்டியதத்தான் நான் செய்தேன்.”
“இவளா... இவள்... சும்மா கிடக்கிற சங்க ஊதிக்கெடுப்பா... நம்ம ரஞ்சிதம் மட்டும் வராட்டா... குத்துப்பழி வெட்டுப்பழி வந்திருக்கும்... ஒனக்கென்ன... டவுன்ல ஆஸ்பத்திரியில அண்ணன் கிடந்தா... அவரப் பார்க்கிற சாக்குல டவுனுக்குப் போகலாமுன்னு நெனச்சிருப்பே... ஆனாலும் இந்த வயசுல இந்தப் புத்தி ஆவாதும்மா... மருமவனே திருமல... அத்தை சுத்தன பீடியக் குடிச்சுப் பாரேன்...”
அலங்காரி ‘பேலன்ஸ்’ செய்து பேசியதால்... திருமலை சும்மாவே நின்றான். துளசிங்கம் அங்கிருந்து, தான் முதலில் போனால் அது தோல்வியாகும் என்று அவனே ஒரு அனுமானம் போட்டுக் கொண்டவன் போல், அங்கேயே நின்றான். அண்ணாச்சி, அலங்காரியைத் தட்டிக் கேட்காததில் ஆத்திரப்பட்ட சந்திரா, எழுந்தாள். “இனுமே நீங்களும் வேண்டாம்... ஒங்க வாடையும் வேண்டாம்” என்று சொன்னபடியே பீடித்தட்டைத் தூக்கிக் கொண்டு நடந்தாள். பிறகு, திரும்பி வந்து, கோலவடிவின் கையைப் பிடித்துத் தூக்கினாள். அவள் அங்கிருந்து போக விரும்பாதவள் போல், சந்திராவின் கையைப் பிடித்துக் கீழே உட்காரும்படி இழுத்தாள். உடனே சந்திரா, “ஒனக்காவ நான் சண்டை போட்டு எனக்குத்தான் கெட்டப்பேரு... உனக்கும் கதாநாயகியா நடிக்க ஆச” என்று சொன்னபடியே ஓடினாள். சிறிது நேரம் அங்கிருந்த கோலவடிவு, அப்படி ஒரு ஆசை தனக்கில்லை என்பதைக் காட்டும் வகையில், “ஏய் சந்திரா... சந்திரா... நில்லுழா” என்று கத்தியபடியே ஓடினாள்.
காகங்கள் மீண்டும் அந்த ஆலில் அமர்ந்தன. சிட்டுக் குருவிகள் பண்ணையாட்கள் போல், காகங்களிடம் இருந்து சிறிது மரியாதையான இடைவெளியில் உட்கார்ந்தன. ஒரு அணில், சிட்டுக் குருவியை இடம் கேட்டுத் துரத்தியது. ஒரு காகம், அந்த அணிலை இரை கேட்டுத் துரத்தியது. ஆனாலும் எந்தப் பறவைக் கொலையும் விழவில்லை. பெண்கள் மத்தியில் மீண்டும் முனகல் பாட்டுக்கள். துளசிங்கமும், திருமலையும் அந்த பெண்கள் கூட்டத்தின் துவாரக பாலகர்கள் போல் நின்றார்கள். ரஞ்சிதம், முத்தம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவளுக்குப் பீடி சுற்றிப் போட்டாள்.
இந்தச் சமயத்தில், பீடி இலையையும் தூளையும் இழந்த தாயம்மாவும், காஞ்சானும் அங்கே ஓடி வந்தார்கள். இந்தக் காஞ்சானுக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். அவர் உடம்பில் சட்டை மாட்டி எவரும் பார்த்ததில்லை. ஒரு துண்டு மட்டும் தோளில் கிடக்கும். அதுவும் கைக்குட்டை மாதிரியான துண்டு. இப்படிச் சட்டை இல்லாமல் வெயில்பட்டு, அவர் கறுத்த உடம்பு, சூரிய ஒளியைப் பிரதிபலிக்காமல் உள்வாங்கிக் கொண்டதால், அவர் உடம்பு காய்ந்த கருவ மரம் போல் காட்சி காட்டும். அவருக்குக் கையளவுகூட வயிறு கிடையாது... முன்பக்கமும், பின்பக்கமும் ஒரே பக்கம் என்பது போன்ற ‘ஒட்டியான’ வயிறு. போதாக் குறைக்கு உடம்பு லேசாய்க் கூன் போட்டு உள்வாங்கி இருக்கும். இதனால் இவரை, ஊரில் காஞ்சான் என்பார்கள். ஆனாலும் இந்த மனிதர் வக்கணையில்தான், காஞ்சான், வசதியில் ஏகப்பட்டவர்.
தாயம்மா, காஞ்சானுக்கு எதிப்புறமாய் நின்றபடியே முறையிட்டாள்.
“பாருங்க... இவர் மகன்தான் என் பீடித்தட்ட தட்டி விட்டுட்டுப் போனான். இலைக்கும் தூளுக்கும் காசு கேட்டா... என்னென்னவோ பேசுறார்.”
“எனக்கு கறிவேப்புல மாதிரி இருக்க ஒரே ஒரு பயலயும் ஆல மரத்துல இருந்து கீழே தள்ளிப் போட்டதுமில்லாம காசு கேட்குறியோ... காசு... இப்ப என் பையனுக்கு வருமப்பிடி மாதிரி வந்துட்டு... வைத்தியர் கிட்ட காட்டணும்... தாயம்மாகிட்ட காசு வாங்கித் தாறியளா... இல்ல நானே வசூலிச்சுக்கட்டுமா...”
தாயம்மா புலம்பினாள்.
“பாருங்க இந்த மனுஷன் பேசுற அநியாயத்த... நான் சட்டம் பேசறேன்னு ஏற்கனவே பீடி ஏஜெண்ட் துரைச்சாமி எனக்கு நாள் பார்த்துக்கிட்டு இருக்கான். இப்போ கொடுத்த இலைக்கும் தூளுக்கும் பீடி போடாட்டா. அப்புறம் பீடிய சுத்த முடியாமப் பண்ணிடுவான்...”
“இப்போ என் பயல் கால் பிசகியோ... கை பிசகியோ... கட்டுலுல கிடக்கான், அதுக்கு அவளை பதில் சொல்லச் சொல்லுங்க... அஞ்சு பத்து ரூபாயாவது வேணும்...”
அலங்காரி விலக்குத் தீர்த்தாள்.
“மச்சான் அப்படிச் சொல்லப்படாது. அவளுக்கு ஏதாவது கொடுக்கணும்...”
“அப்போ என் பையன் ஒத்தக் கையி பிசகி கிடக்கானே.”
“பிசகுன கைய ஒடிச்சிடும்... சரியாப் போயிடும்...”
“ஆளப் பாரும்... ஆமா... மாமா... ஒம்மா கல்யாணத்துலயாவது சட்டை போட்டுட்டுப் போனீரா...”
துளசிங்கம் முதலாவதாகவும், திருமலை இரண்டாவதாகவும் காஞ்சானைக் கிண்டல் செய்ததைக் கேட்ட ரஞ்சிதம் கருத்துத் தெரிவித்தாள்.
“இனிமேல் நீங்க ரெண்டுபேரும் இப்டித்தான் பொதுக் காரியத்துல ஒண்ணா நிக்கணும்... தாயம்மாவுக்கு அவருகிட்ட ஏதாவது வாங்கிக் கொடுங்க... இனிமேலாவது சண்டையை விடுங்க... சரி அவரு கிட்ட வசூலிச்சு...”
காஞ்சான் வசூல் பேச்சை மாற்ற நினைத்துப் பேசினார்.
“ஏன்... இவனுகளுக்குள்ள என்ன ஆச்சு...”
ரஞ்சிதம் எவ்வளவோ, கண்ணடித்துப் பார்த்தும், வாடாப்பூ கேட்கவில்லை. காஞ்சானிடம், நடந்ததை அப்படியே ஒப்பித்தாள். தாயம்மாவுக்கு நஷ்டஈடு கொடுக்கும்படி சொன்ன அலங்காரி மீது கோபப்பட காஞ்சான், சும்மாக் கிடந்த சங்கை, ஊதிக் கெடுத்தார். பேச்சை திசை திருப்பியதுமாச்சு... அலங்காரிக்கு பதிலடி கொடுத்தது போலவும் ஆச்சு...
“எம்மா... அலங்காரி... எங்க செம்பட்டையான் குடும்பமும்... இவங்க கரும்பட்டையான் குடும்பமும் தாயா பிள்ளியா இருக்கது... ஒனக்குப் பிடிக்கலியா ஒன் சோலிக் கழுதய பாத்துட்டு இருக்க வேண்டியதுதான... ரெண்டு குடும்பத்தையும் உண்டு இல்லன்னு ஆக்கிடாத தாயி... சரி... நான் வாறேன்... என் மவனுக்கு ஒத்தக் கையி...”
அலங்காரியின் முகம் சுண்டியது... மனதுக்குள் படிந்த நிழல் கண்ணுக்குள் இருளானது. கையில் இருந்த பீடி இலையை, கோபங் கோபமாய் கிழித்துப் போட்டாள்.
-------------
அத்தியாயம்- 3
அந்த வீடு வெளியே பார்ப்பதற்கு ‘அப்பாவி’ மாதிரி தெரிந்தாலும் உள்ளே அசகாயசூரத்தனமாய் இருக்கும். இரண்டு பக்கமும் வியாபித்த வெளித் திண்ணைகளைத் தாண்டி வாசலைத் தாண்டிப் போனால் பெரிய முற்றம், ஒரு பக்கம் சைக்கிள்களும் மோட்டார் பைக்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒடுங்கிய ஒரு பாதை வழியாகச் சென்று ஒரு கதவை இழுத்தாலோ திறந்தாலோ இன்னொரு மிகப்பெரிய ஓட்டுக் கொட்டகை, அதில் பத்து பதினைந்து பால் மாடுகள். அவற்றில் நான்கு ஜெர்சிகள். கொட்டகைக்கு அருகே சாண எரிவாயு கிடங்கு. அவற்றைப் பயன்படுத்தி மின்னும் மங்கலான மின்விளக்குகள்.
பழனிச்சாமி, வீட்டின் விசாலமான வராண்டாவில் ஒரு தேக்குக் கட்டிலில் எந்தப் புராண நூலையோ படித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி பாக்கியம், அவருக்கு எதிரே தரையில் உட்காந்து, எதையோ புடைத்துக் கொண்டிருந்தாள். வெளியே இருந்து சந்திராவும், கோலவடிவும் வந்து உள்ளறைக்குள் போனார்கள். சிறிது நேரத்தில் இருவரும் வெளியே வந்து முற்றத்தில் ஒரு பாயைப் போட்டு அமர்ந்தார்கள்... சந்திரா, சுவரில் சாய்ந்தபடியே பீடி சுற்றும் கலையைக் கோலவடிவிற்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ‘பழுப்பு இலய... எடுக்கப்படாது... வெட்டும்போது கத்தரிய ஆட்டப்படாது... சுருட்டும்போது... அடி பெரிசாயும்... நுனி சிறிதாயும் இருக்கணும்... அப்டில்ல... இப்டி...’
மத்தியான வேளை.
வைரப்பட்ட உடம்பில் ‘தங்கப்பட்ட’ கழுத்தைச் சாய்த்து வைத்த பழனிச்சாமி, கட்டிலின் பக்கம் போனார். அறுபது வயதுக்காரர். அடாவடியில்லாத பார்வை, வயிறும் மார்பும் ஒரே மாதிரி இருந்தன. பற்கள் தடித்திருந்தாலும், வெள்ளை வெள்ளையாக மின்னின. அணில் வால் மாதிரியான லேசாய் வெள்ளைப்பட்ட கறுப்பு மீசை... மாநிற மேனி... உருண்டு திரண்ட கண்கள். மொத்தத்தில், அவரைப் பார்த்தால், ஒரு பயபக்தி ஏற்படும்.
திடீரென்று நான்கைந்து பேர் திபுதிபு என்று வந்தார்கள். ஒருவர் மட்டும் கட்டிலில் உட்கார்ந்தார். இன்னொருவர் அதில் உட்காரப் போனார், பிறகு என்ன நினைத்தாரோ, அந்தக் கட்டிலுக்கு எதிரே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார். எதிர் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ‘குள்ளக் கத்தரிக்காய்’ ராமசாமி பீடிகையோடு பேசினார்.
“இந்தச் சின்னப்பய மக்கள் சின்னத்தனமாய் போயிட்டாங்க... வரவர மட்டு மரியாதி இல்லாமப் போச்சு...”
“மட்டு மரியாதி இல்லாட்டா போட்டும்... பெரியவிய சொல்லுறதக் கேட்கணுமுல்லா.”
“மட்டு மரியாதி இருந்தா தானே... பெரியவய சொல்லுக்கு மதிப்பு கொடுக்கணும் என்கிற நெனப்பு வரும்...”
பழனிச்சாமி, அவர்களிடம் வாய்விட்டுக் கேட்காமல் கண் விட்டுப் பார்த்தார். ‘குள்ளக் கத்திரிக்காய்’ ராமசாமி, காளை மாடு வாலை ஆட்டுவது மாதிரி தலையை ஆட்டிக் கொண்டே சொன்னார்.
“நம்ம காளியம்மன் கோவிலயும் , பேச்சியம்மன் கோயிலாக்கணுமுன்னு பாக்காங்க... பக்கிப் பயலுவ...”
கட்டிலில் இருந்த பழனிச்சாமியின் சின்னம்மா மகன் அருணாசலம், ராமசாமியை விரட்டினார்.
“வெத்திலயத் துப்பிட்டு... விளக்கமாச் சொல்லேமில... மாடு புல்லை சுவைக்கது மாதிரி வெத்திலய இப்டியா திங்கது... ஆதியோட அந்தமாச் சொல்லு...”
“சொல்லுதேன். பழனிச்சாமி அண்ணாச்சி... கோபப்படாமக் கேக்கணும்... நம்ம குடும்பத்துச் சின்னப்பய மொவனுவ, இந்த ஆடில காளியாத்தாவுக்கு அம்மன் கொடை கொடுக்கயில... டெக்குல சினிமா... நான் சொல்லல... சின்னப்பய மவனுவதான் டெக்குல சினிமாப் படம் போடணுமுன்னு சொல்லுதாங்க... ‘நாம பரம்பரை பரம்பரையாய் அம்மனை பயபக்தியோட கும்புடுறவங்கடா... வீடியோ சினிமா வேண்டவே வேண்டா’ன்னு சொன்னேன். கேக்க மாட்டேன்னு ஒத்தக் காலுலயே நிக்காங்க... காலம் கலிகாலமாப் போச்சு.”
பழனிச்சாமி, நிமிர்ந்து உட்கார்ந்தார். கட்டிலில் இருந்து எழுந்து முற்றத்திற்குப் போய் ஒரு ஓரமாய் காறித் துப்பிட்டுக் கட்டிலுக்கு வந்தார். நிதானமாகக் கேட்டார்.
“அப்புறம் என்ன கேட்டாங்க... ரிக்கார்ட் டான்ஸ்... கேட்டிருப்பாங்களே... வில்லுலயும், பொம்புள வில்லு வேணுமுன்னு சொல்லியிருப்பாங்களே... எவளாவது சினிமா நடிகை கோவில் கொடியை ஏத்தி வைக்கணுமுன்னும் சொல்லியிருப்பாங்களே...”
“அண்ணாச்சி நேரில கேட்டது மாதிரியே சொல்றியளே... அப்படியும் கேட்டாங்கதான்.”
பழனிச்சாமி மனைவி பாக்கியம், முறத்தைக் கீழே வைத்துவிட்டு, ராமசாமியைப் பார்த்து சிரித்தபடியே கேட்டாள்.
“ஏய் கொழுந்தா... ஒங்க அண்ணாச்சி குணம் தெரிஞ்சும் நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற பாரு... அவிய இழுத்து இழுத்து கேட்கிறதுல இருந்தே ஒன்னை எடக்கு மடக்கில சிக்க வைக்கது தெரியல...”
“நீ செத்தே சும்மா இரு பாக்கியம்... டேய் ராமசாமி... எந்த செறுக்கி மகன்ல... இப்படிக் கேட்டது...? போகிற போக்கைப் பார்த்தால் அம்மனையே வீடியோ படத்துல நடிக்கச் சொல்லுவாங்க போலுக்கு... நீ அவனுவளுக்கு என்ன பதில் சொன்ன...”
“ஒங்களக் கேட்டுச் சொல்றேன்னு சொன்னேன்...”
“எல்லாமே என்னக் கேட்டுத்தான் செய்யுறியோ... இவளும் நம்ம பொம்பளப் பிள்ளியளும் இல்லாட்டா ஒன்ன நல்லாக் கேட்பேன்...”
“சும்மாக் கிடங்க... ஒங்கள மீறி போவாங்களா... எப்பா மாருங்களா... அவிச்ச மொச்சக் கொட்டை வேணுமா... தாளிச்ச ஏழலைக் கிழங்கு வேணுமா...”
“ரெண்டையும் கொண்டு வாங்களேன்... மயினி...”
பாக்கியம் வீட்டுக்குள் போய்விட்டாள். கட்டிலில் உட்கார்ந்திருந்த அருணாசலம் கேட்டார்.
“நீங்க என்ன அண்ணாச்சி சொல்லுறிய...”
“ஒன்னை தோல்வாயன்னு ஊர்ல சொல்லுறது சரியா இருக்குடா... இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு, ஒங்களுக்கே தெரியவேண்டாம்... அடிமுடி தெரியாத அம்மன் நம்ம அம்மன்... இந்த சட்டாம்பட்டி தோன்றதுக்கு முன்னாலயே இருக்கிற அம்மன் நம்ம அம்மன்... கண்கண்ட தெய்வம்... கூப்பிட்ட குரலுக்கு பூவப் போட்டோ கெளளி மூலமோ குரல் கொடுக்கற தாய். அந்தத் தாய அவமானப்படுத்தறது மாதிரி வீடியோ படமுன்னும், ரிக்கார்ட் டான்சும் போடணுமுன்னா என்னடா அர்த்தம்... இதைவிட அம்மன் கோவில இழுத்து மூடலாம்...”
“செம்பட்டையாம் குடும்பத்து பயலுவ... வீடியோ படம் போடப் போறாங்களாம்... டான்ஸ்காரியக் கூட்டி வரப் போறாங்களாம்... நாம மட்டும் சும்மா இருக்காலாமான்னு நம்ம குடும்பத்துச் சின்னப்பய மவனுவ...”
“செம்பட்டையானுவளும், நாம் கரும்பட்டையானும் ஒண்ணாடா... அவன் வீடியோ டான்ஸ் வச்சா... நாம் வைக்கணுமுன்னு கட்டாயமா... போட்டி நல்லதாகவும் இருக்கணும்... நல்லதுலயும் இருக்கணும்... கெட்டதுல வந்தால் கெட்டதுலதான் முடியும்...”
“நம்ம குடும்பத்து சின்னப்பய மவனுவ...”
“எந்தச் செறுக்கி மவனாவது பேசணுமுன்னா எங்ககிட்ட வந்து பேசச் சொல்லு... ஒங்க ஆசையை அவங்க மூலம் சொல்லப்படாது...”
“அய்யோ அண்ணாச்சி... நாங்களும் ஒங்கள மாதிரி பழைய காலத்து ஆட்களாச்சே, நெனச்சிகூட பார்ப்போமா... சின்னப்பய மவனுவதான்...”
இதற்குள் பாக்கியம், கிண்ணம், தாலா, தட்டு ஆகியவற்றில் மொச்சைக் கொட்டையையும் ஏழலைக் கிழங்குத் துண்டுகளையும் கொண்டு வந்து, ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தபடியே, அபிப்ராயம் சொன்னாள்.
“எந்தப் பய என்ன சொன்னான்னு திட்டவட்டமாச் சொல்லு... ஒங்க அண்ணாச்சி திட்டம் பண்ணிக்குவாரு...”
“வேற யாரு... இந்தச் சின்னப்பய மவனுக்குத் தலைவரே... நம்ம திருமலைதான்...”
மோட்டார் பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்த திருமலை, வேஸ்ட் துணியைப் பார்க்கிற சாக்கில் தந்தையைப் பார்த்தான்... அவர் மனைவியிடம் பதில் சொன்னார்.
“இந்தா பாக்கியம்... அவன்கிட்டே கோவில் பேரேட்ட கொடுத்துடு டான்ஸோ, சினிமாவோ எது வேணுமுன்னாலும் போட்டுக்கட்டும்... தலை இருக்கிற இடத்துக்கு அவனுக்கு கழுத்து வந்துட்டு... அதனால இனிமே என் தல, கழுத்து இருக்கிற இடத்துக்குப் போய் குனியணும்... எடுத்தா பிள்ள... கோவில் கணக்கு வழக்கு பேரேட்ட...”
திருமலை, மோட்டார் பைக் சக்கரத்திற்குள் முகத்தை மறைத்துக் கொண்டே முனங்கிப் பேசினான்.
“நான் ஒண்ணும் அப்டிப் பேசல. சின்னய்யாகிட்ட அப்டி ஒரு அபிப்ராயம் இருக்குதுன்னுதான் சொன்னேன்... அதுவே என் அபிப்பிராயமுன்னு சொன்னனா... எய்யா ஒம்ம ஆசைக்கி என்ன மாட்ட வைக்கியரு...”
இதற்குள் சந்திராவின் தந்தை அருணாசலமும், அம்மா பேச்சியும் அங்கே வந்து, முற்றத்தில் நின்றார்கள். பிறகு, சந்திரா, கோலவடிவு உட்கார்ந்திருந்த பாயில், அப்பாக்காரர் உட்கார்ந்து இருந்தார். அம்மாக்காரி உள்ளே போனாள். மகன் திருமலை, இன்னும் தன்னை மீறிப் போகவில்லை என்பதை மனசுக்குள் ரசித்துக் கொண்ட பழனிச்சாமி, இன்னொன்றைக் கேட்டார்.
“ஆலமரத்துப் பக்கம் ஒனக்கும் துளசிங்கத்துக்கும் ஏதோ தகராறுன்னு காஞ்சான் சொன்னாரு... என்ன விஷயம்...”
“சொல்லும்படியா ஒண்ணுமில்ல... சும்மா விளையாட்டுக்கு பேசிக்கிட்டு இருந்தோம்.”
ஒரு பீடியை உருட்டி, தூளைத் திணித்து, குச்சியால், அடைத்து விட்டு, அதை நூலில் எப்படிக் கட்ட வேண்டும் என்று கோலவடிவுக்கு மீண்டும் சொல்லிக் கொடுக்கப்போன சந்திரா, அந்த பீடியைக் கீழே போட்டாள்... பீடித்தட்டை காலால் உதைத்துக் கீழே தள்ளியபடியே, வராண்டாவிற்கு எதிரே நின்றபடி இதமாகவோ, மிதமாகவோ பேசாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட குரலில் சொன்னாள்.
“அண்ணா... பொய் சொல்லுதான்... பெரியப்பா... கரும்பட்டையான் குடும்பத்து அலங்காரி, நம்ம கோலவடிவு துளசிங்கம் பயலோட கதாநாயகியாய் நடிக்கணுமுன்னு இளப்பமாய் சொல்லுதா... துளசிங்கம் என்னடான்னா கோலவடிவு தமிழ்க்கு தமிழ் கதாநாயகியாவும், இந்திக்கு இந்திக்காரியாகவும் இருக்கான்னு வீம்புக்குச் சொல்லு தான்... இவன்கிட்ட நான் எல்லாத்தையும் சொன்னால், திருமலை அண்ணன் துள்ளுறது மாதிரி துள்ளிட்டு எவளோ... ஒரு மூதேவி பேச்சக்கேட்டு, இடிச்ச புளி மாதிரி நிக்கான்...”
பழனிச்சாமியின் தம்பியும், சந்திராவின் தந்தையுமான அருணாசலத்திற்குக் கரும்பட்டையான் குடும்ப ரத்தம் கொதித்தது. அண்ணன் மகனைச் சாடினார்.
“நீயல்லாம் எதுக்குல இந்த உடம்ப வச்சுக்கிட்டு இருக்கணும்...? நம்ம பொண்ண செறுக்கி மவன் சினிமாக்காரியா நெனச்சி பேசியிருக்கான், நீ பாட்டுக்கு வந்துட்ட பாரு... நீ கரும்பட்டையான்னு சொல்லிக்கதுக்கு வெட்கப்படணும்... ஒன்னை என் அண்ணாச்சி மகன்னு சொல்றதுக்கு நான் வெட்கப்படணும்...”
அங்கே இருந்தால், இன்னும் ஏதாவத பேச வேண்டியதுவரும் என்றும், அதைத் தவிர்க்க நினைத்தவர் போலவும், அருணாசலம், வீட்டுக்கு வெளியே வந்தார். அந்தச் சமயம் பார்த்து, அந்த வீட்டுக்கு அருகே ஓடிய வண்டிப்பாதை வழியாய் போன அலங்காரியைப் பார்த்து விட்டார். அவளை இதமாக வரவழைத்து, பலமாக திட்டித் தீர்ப்பது என்று தீர்மானித்தார்.
“ஏழா... அலங்காரி... கொஞ்சம்... இங்க வா...”
அலங்காரி மாராப்புச் சேலையை இழுத்து மூடி, இடுப்பில் இருந்து முழங்கால் வரை புடவையைத் தட்டி விட்டபடி சாதாரணமாக வந்தாள். வாசல் படிக்கட்டில் நின்ற அருணாச்சலம், அவள் நெருங்க நெருங்க, தனது பற்களை நெருக்கிக் கடித்தார். ஆசாமிக்கு நாற்பது வயதிருக்கும். அவர் உடம்பில், ரத்தத்திற்கு பதிலாக சாராயமே ஒடவேண்டும். நரிக்குறவர் மாதிரி உறுதியான தோற்றம். குத்திட்ட மீசை. மதுரையில் ஏதோ ஒரு ஆஸ்பத்திரியில் போட்டு, எப்படியோ சாராயப் பழக்கத்தை அவரிடமிருந்து பிரித்து மூன்று மாசமாகிறது. ஆனால் நேற்றில் இருந்தே லேசான குடி ஆசை. இன்றைக்கோ அதுவே பலமாகிவிட்டது. அந்த ஆசையை நிறைவேற்றினால் எல்லோரும் நாயே பேயே என்று பேசுவார்கள் என்பது தெரிந்து வெறும் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். இப்போதோ அலங்காரி கிடைத்து விட்டாள்.
அருணாசலத்தின் குணாதிசயங்களைத் தெரிந்து வைத்திருந்த அவர் மனைவி பேச்சியம்மா, ஆசாமியை நோட்டம் போடுவதற்காக விடுவிடுவென்று வாசல் படிக்கு வந்து, அவரது தார்ப்பாய்ச்சிய வேட்டியைப் பிடித்து உள்ளே இழுத்தாள். வெளியே அவர் அலங்காரியை ஏடாகோடமாகப் பேசிவிடக்கூடாது என்பதைவிட, இந்த அலங்காரியைத் தானே விரட்ட வேண்டும் என்ற எண்ணம். இவளும், அலங்காளியும் ஒரே தாய்க் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பழைய பகை ஒன்று கணக்கு முடிக்கப்படாமல் இருந்தது.
அருணாசலம் மனைவியின் வலுவால் இழுக்கப்படாமல், வேட்டி அவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தால் அப்படியே நின்றார்... அதைப் பார்த்த அலங்காரியும், குறுஞ்சிரிப்போடு வந்தாள். அருணாசலம், அவளிடம் நெருங்கி வந்தார்... “என்னழா... செறுக்கி பலவட்ற” என்ற வசவு மொழிகளைச் சுமந்து நின்ற அவரது வாயை, அலங்காரி பார்த்த பார்வையும், சிரித்த சிரிப்பும், அடைத்துவிட்டன... ஏதோ ஒரு கிறக்க சுகத்தில், என்ன பேசுவது என்று தெரியாமல் அவர் விழித்தபோது, அவரது அருமை மனைவி பேச்சியம்மா, முன்னேறினாள். வெடவெடத்த உடம்புக்காரி... தலைமுடி நான்கு பக்கமும் மொக்கையாக நிற்பதால் அவளை பம்பை என்பார்கள். எவ்வளவு படி எண்ணெய் தேய்த்து, எவ்வளவு பெரிய சீப்பால் வாரினாலும், அவள் தலையில் முன்பக்க, பின்பக்க தலைமுடியை ஒன்றும் செய்துவிட முடியாது. அசல் கரடி முடி.
‘பம்பை’, அலங்காரி முன் வந்து அரட்டினாள்.
“ஆமாடி கேட்க ஆளில்லன்னு ஒனக்கு எண்ணமா...”
“என்ன தங்கச்சி சொல்லுதே...”
“தங்கச்சி பொல்லாத தங்கச்சி... எங்கப்பன் என்ன ஒங்கம்மாவை வச்சுட்டு இருந்தானா...”
“எங்கப்பன் ஒங்கம்மாவை வச்சுட்டு இருந்தாலும்... நீ எனக்கு தங்கச்சிதான்... ஆனால் நான் அப்படி நாகரீகக் குறைவா பேச மாட்டேன்.”
“நாகரிகம்... தூ நாயே... ஒனக்கா நாகரிகம்... பட்டப்பகலுலயே அடுத்தவனுக்கு முந்தாணி விரிக்கிற எச்சிக்கல இரப்பாளி... வந்தட்டி... மஞ்சக் கடஞ்சா...”
“இந்தா பாரு தங்கச்சி... மரியாதி குடுத்து மரியாதி வாங்கு.”
“மரியாதைய வாங்கவும் ஒரு தகுதி வேண்டாம்...? ஒனக்கு எதுக்குழா மரியாதி... எதுக்குழா என் மச்சான் மகள் கோலவடிவை சினிமாக்காரின்னு சொல்லுரே... சினிமாவுல நடிக்க ஆச இருந்தால் நீ நடி... ஊர்ல கண்ட கண்டவங்ககூட எல்லாம் நடிக்கிற ஒனக்குத்தான் நடிப்பு நல்லா வருமே... எங்க குலமான் கண்ணு கோலத்தை எப்படிமா சொல்லலாம்... ஒன்னை மாதிரி கண்டவன் கிட்டயெல்லாம் பல்லு இளிக்கிறவள்தான் சினிமாவுல நடிக்கணும்... என் ராசாத்தி கோலவடிவு ஏன் நடிக்கணும்...”
“அற்ப விஷயத்த பெரிசாக்குறே...”
“யாருழா அற்பம்... இன்னொரு தடவ சொல்லு...”
“ஒனக்கு காது கேக்காட்டா நான் என்ன பண்ணுறது...”
“எனக்கு அப்படியே காது கேக்காட்டாலும், ஊர்ல நீ ஆடுற ஆட்டமும் போடுற போடும் நல்லாவே கேக்குது...”
“எதையும் ருசிப்படுத்தாம பேசாத தங்கச்சி... ஒனக்கும் ஒரு பொண்ணு இருக்காள்...”
“என் பொண்ணுக்கு சாபமாழா போடுற சண்டாளி... கடைசில ஒன் புத்தியக் காட்டிட்ட பாத்தியா...”
“என் புத்திய அப்டி என்னத்த கண்டுட்ட பெரிசா...”
“நம்ம ஊர்ல கல்யாணம் ஆகுமுன்னே ஆட்டம் போட்டு ஒரு கள்ளப்பிள்ள கழிச்ச. கழுத்துல மஞ்சக் கயிறு விழுந்த பிறகாவது சும்மா இருக்கலாம். இருந்தியா... கல்யாணம் ஆன ஆறாவது மாசத்துலேயே காஞ்சான் அண்ணாச்சிய காலி பண்ணுனே... வெளியூரிலே இருந்து வந்த மிளவத்தல் வியாபாரிய மடக்கிப் போட்டு காசு பறிச்சே... எங்கேயோ இருந்து வந்த டெய்லரை... மொட்டையடிச்சே... ஒயர்மேன ஓட்டாண்டியாக்குன... செம்பட்டையான் குடும்ப மானம் பொறுக்காம குதியோ குதின்னு குதிச்ச எலி டாக்டரையும் மடக்கிப் போட்டே... நல்ல வேளையா ஒன் பொண்ணு டவுன்ல வேல கிடச்சதும் ஒன்கிட்ட வராம தப்பிச்சுட்டா... இல்லாட்டா அவளையும் எவன்கிட்டயாவது...”
அலங்காரி குன்றிப் போனாள். இப்படிப்பட்ட அர்த்தத்தில்தான், இந்தச் சந்திராவும் பேசினாள். ஆனால், இந்த பேச்சியம்மாவைப் போல் எவளும் இப்படி லிஸ்டைப் படித்ததில்லை. அந்த லிஸ்டைவிட, அவள் லிஸ்ட் பெரிதுதான்... என்றாலும் அங்கே அம்மணமாக இருப்பது போல் உணர்ந்தாள். இந்தப் பேச்சியம்மா, கோலவடிவை, தான் கதாநாயகியாக்க மேற்கொண்ட முயற்சிக்காகப் பேசவில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். இருவரும் திருமணமாகாமல் கட்டாம்பட்டியில் குமரிகளாய்ச் சுத்தியபோது, பேச்சியம்மா, மாமா மகன் முறை வேண்டிய ஒரு வாத்தியாரைக் காதலித்து, தொட்டதுண்டு. கெட்டதுண்டு. அலங்காரிக்கும், வயசுக் கோளாறா... அதே அந்த வாத்தியாரை இந்த அலங்காளி பயன்படுத்தினாளா... அல்லது அந்த வாத்தியார் பயன்படுத்தினாரா என்பதைச் சொல்ல முடியாது. எப்படியோ ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொண்டதில், பேச்சியம்மா காதல் அறுபட்டு, கடைசியில் காதறுந்த ஊசி போல் ஊசிப் போனது, கடைசியில் பேச்சியின் கழுத்தில் அருணாசலம் கயிறு போட்டார். இந்தப் பழைய பகையைக் கோலவடிவு நிகழ்ச்சி மூலம் பேச்சியம்மா புதுப்பிக்கிறாள் என்பது அலங்காரிக்குத் தெரியும்... ஆனால் வெளியில் சொல்ல முடியாது... அதுவும் இந்த வீட்டில் வைத்து சொல்லமுடியாது... கொலையே விழும்... அப்புறம் வேண்டுமானால் துளசிங்கத்தை வைத்து, ‘அந்த’ விவகாரத்தைச் சொல்ல வைக்கலாம்... ஆனால் இப்போ...
ஓடுற நாயைக் கண்டால் விரட்டுற நாய்க்குத் தொக்கு என்பதுபோல், அலங்காரியின் மெளனம் பேச்சியம்மாவை இன்னும் அதிகமாகப் பேச வைத்தது.
“பதில் சொல்லேமிழா... பத்தினி... கண்டவன் பின்னாலல்லாம் சுத்துற நாயி நீ... இப்படி இருக்கயில எங்க மச்சான் மவளை சினிமாக்காரின்னு சொல்லுறதுக்கு எத்தனாவது சட்டத்துலழா இடமிருக்கு...? சொல்லுழா... கைகேயி... சொல்லுழ கூனி... சொல்லுழா சூர்ப்பனகை...”
குன்றிப்போய் நின்ற அலங்காரி திடீரென்று தன் தலையிலே பட்டுப்பட்டென்று அடித்துக் கொண்டாள்... வாயிலும் வயிற்றிலும் மாறிமாறி அடித்து, நிசமாவே புலம்பினாள்.
“கடவுளே... கடவுளே... இவ்வளவு பேச்சையும் கேட்கணுமுன்னு ஆண்டவன் விதிச்சுட்டானே... இனிமேல் நான் இருந்ததுலயும் சேத்தி இல்ல... செத்ததுலயும் சேத்தி இல்ல. அய்யோ... அம்மோ... என்னமா கேக்குறாள். அடைக்கலமுன்னு வந்தவளை இப்டிப் பேசிட்டாளே... இவ்வளத்தையும் கேட்டுட்டு நான் உயிரோட இருக்கணுமா...”
அழுகைச் சத்தம் கேட்டு, கோலவடிவும், சந்திராவும் ஓடி வந்தார்கள். அப்படியும் பேச்சி, வசவை விடவில்லை.
கோலவடிவு, அலங்காரியையே பரிதாபமாகப் பார்த்தாள்... அவளிடம் பேசப் போன சந்திராவை ஒரு இடி இடித்து தள்ளிவிட்டு, அழுகிறவளை, அழப்போகிறவள்போல் பார்த்தாள். நடந்ததைப் புரிந்து கொண்ட சந்திராவிற்கே பாவமாக இருந்தது. அம்மாவைத் திட்டப் போனாள். இதற்குள் வராண்டாவில் பேசிக் கொண்டிருந்த பழனிச்சாமியும், மற்றவர்களும், அவள் அழுகைச் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே தாவினார்கள். இரண்டே இரண்டு நிமிடத்தில் நடந்து முடிந்த இந்த வசவு அவர்கள் காதுகளை மெய்யாகவே எட்டவில்லை. பழனிச்சாமி பதறியடித்துக் கேட்டார்.
“என்ன அலங்காரி... திடுதிப்புன்னு இப்டி அழுவறே...?”
கோலவடிவால் பொறுக்க முடியவில்லை.
“எப்பா... அலங்காரி அத்தையை நம்ம சித்தி அசிங்கம் அசிங்கமாப் பேசிட்டா... அதுவும் அளவுக்கு மேல, அவன்கூட இவன் கூடன்னு பேருகளச் சொல்லிச் சொல்லி...”
“ஏழா கோலவடிவு... நல்லதுக்குக் காலமில்ல... என்கிறது சரியாத்தான் இருக்குது... நான் மச்சான் மகளை சினிமாக்காரின்னு பேசிட்டாளேன்னு வயித் தெரிச்சலை பேசுனால். நீ அவளுக்காக வக்காலத்து வாங்குறே... ஏழா... சந்திரா... எழுந்திரு... பாவி மனுசா... இன்னுமா ஒமக்கு இந்த ஊட்ல வேலை...”
பேச்சியம்மா கணக்குத் தீர்ந்த திருப்தியுடனும், அதேசமயம், சொந்தக்காரியான கோலவடிவிடம், புதிய கணக்கைத் திறந்த அதிருப்தியுடனும், சந்திரா சகிதமாய்ப் போய்விட்டாள். அந்தப் ‘பாவி மனுஷன்’ அருணாசலமும், நரசிம்ம அவதாரம்போல் வாசலுக்கு உள்ளேயும், வெளியேயுமாய் இல்லாமல், வாசற்படியில் நின்று, பிறகு நிலைகுலைந்து நடந்தார். பேச்சியம்மாவின் நட்பு, அவளது பகையை விட மோசமானது என்பது தெரிந்ததுபோல, அவள் குடும்பத்தோடு போனதை யாரும் கண்டுக்கவில்லை.
பழனிச்சாமி, அலங்காரியின் பக்கமாக வந்து நின்று, ஆறுதலாகவும், சூசகமாகவும் பேசினார்.
“அவள் அறிவில்லாதவள். அவள் பேச்ச பெரிசா எடுத்தா நாமதான் சிறிசாப் போயிடுவோம்... ஆனால அண்ணாச்சி சொல்ற அர்த்தத்த புரிஞ்சுக்க... நாமல்லாம் வாழ்ந்து முடிஞ்சவங்க... நம்ம பிள்ளியளுக்கு நம்ம சொத்தவிட நம்ம பேருதான் பக்கபலமாக இருக்கும். ஒனக்கும் வயசாயிட்டு... அஞ்சுல வளையாதது ஐம்பதுல வளையணும்... கோலவடிவை நீ அப்டி கேட்டிருக்கப்படாது. எம் பொண்ணுன்னு நான் பூசி மழுப்பி பேசல... இன்னொருத்தன்கூட வாழப் போறவளுக்கு சினிமாவுல நடிக்கணுமுன்னு... ஒரு எண்ணம் வரப்படாது... பாரு... ஆனால் அதுக்காக பேச்சியம்மா ஒன்னை அப்படி பேசக்கூடாதுதான்... பாக்கியம், தங்கச்சிக்கு மோர் கொடு... ஏழா கோலவடிவு... ஆலமரம் பக்கம் போனே... திருமலைய, அங்கேயே ஒன்னை வெட்டிப் புதைக்கச் சொல்லியிருக்கேன்...”
பாக்கியம் மோர் கொடுக்கும் எண்ணம் இன்றிப் பேசாது இருந்தாள். அதை அலங்காரி வேறுவிதமாக எடுத்துக் கொண்டாள்... ‘பழனிச்சாமி குடும்பத்தின் சம்மதத்தின் பேரில்தான், பேச்சியம்மா பேசியிருக்கிறாள்... அவள் பேசுவது... இவங்க பேசுவது மாதிரித்தான்... இருக்கட்டும், இருக்கட்டும்...’
ஆயிரந்தான் சொன்னாலும், அலங்காரி, பழிவாங்கும் உணர்வை விட, அவமானப்பட்ட உணர்வுடன் குலுங்கிக் குலுங்கி அழுதபடி போனாள்.
அலங்காரி போவதையே பார்த்துக் கொண்டிருந்த கோல வடிவிற்கும் கண்ணீர் கொப்பளித்ததது. அவள் சிந்திய கண்ணீரே ஆவியாகி, இவள் கண்களில் மேகமாகி, பெருமூச்சுக் காற்றால் தொடப்பட்டு, நீராகி விழுவது போலிருந்தது. அவள்பட்ட அவமானத்தை நினைத்து நினைத்து மருகுகிறாள்... பாவம்... அலங்காரி... அவள் மனசு எப்படித் துடிக்குதோ... எப்படித் தவிக்குதோ... பேச்சியம்மா சித்தி சொன்னதை யார் கிட்டயும் சொல்லி ஆறுதல் தேட முடியாது.
கோலவடிவு சுற்றும் முற்றும் பார்த்தாள். திருமலை சாப்பிட உட்கார்ந்தான். அப்பா சொந்தக்காரர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். ‘ஒரு எட்டு நடந்து, அலங்காரி அத்தைக்கு ஆறுதல் சொன்னால் என்ன... அதனால் அவள் மனசு திருப்திப்படுதோ... இல்லியோ... என் மனசு திருப்திப்படும்... படுதோ... படலியோ... அலங்காரி அத்தை கண்ணைத் துடைச்சு அதுவழியா நெஞ்சைத் துடைக்கணும்...’
கோலவடிவு மெல்ல எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து, வேகமாய் நடந்தாள். அலங்காரியைச் சீக்கிரம் பார்க்க வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழியான ஒரு ஒற்றையடிப்பாதை வழியாக நடந்தாள்.
அலங்காரியின் அழுகையை நிறுத்தினால்தான், தனது அழுகை நிற்கும் போல் தோன்றியது. திக்கற்று ஒருத்தி புலம்பும்போது, நான்கு திக்குகளுமே திசையறியாது புலம்புவதுபோல் தோற்றம் காட்டுகிறது. மானுடம், நரைபட்டு போனது போல் காட்டுகிறது.
கோலவடிவுக்கு, இந்த மாதிரியான சிந்தனை, அவள் புத்தித் தகுதிக்கு ஏற்ப, இதே தாக்கத்தில் வேறுவிதமாய் உட்புகுந்தது.
“இல்லாதவன் பெண்டாட்டி... எல்லாருக்கும் அண்ணிதான்... அழுகிறவள் அலங்காரி அத்தை அல்ல... புருஷன் பலம் இல்லாத... சொத்துபத்து இல்லாத அத்த... பொம்புளயோட அழுகை... இவங்க அழுகை நிக்காட்டால் ஊரு சிரிக்க முடியாது... உறவுக்கு அர்த்தம் கிடையாது... பாவம் அத்தே...”
கோலவடிவு, ஞானவடிவாய் நடந்தாள்.
--------------
அத்தியாயம்- 4
ஆண்டுக்கு ஒரு தடவையோ அல்லது இரு தடவையோ காற்று தவிர எதுவும் உட்புகாத காட்டுப் பகுதிக்குச் சென்று, மனித சஞ்சாரங்களை மறந்து, ஒருத்தர் தனது கடந்த கால நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் மனதுக்குக் கொண்டுவந்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அனுபவம் முக்கியமல்ல... அனுபவத்தில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்வதே முக்கியம் என்பார்கள்.
இந்த மாதிரியான பொன்மொழிகளோ அல்லது அனுபவப் பரிசீலனையோ செய்தாக வேண்டும் என்பதோ அலங்காரிக்குத் தெரியாது... ஆனாலும், அந்தப் பருத்திக் காட்டிற்குள் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருந்தாள்... ஆகாயத்தை மறைக்கும் அடர்த்தியான புளியந்தோப்பிற்கு கிழக்கே உள்ள பருத்திக் காட்டில் அவள் முன் கையைத் தொடையில் ஊன்றி, மோவாயை உள்ளங்கையில் போட்டுத் தனது வாழ்க்கை நிகழ்ச்சிகளை அசை போட்டுக் கொண்டிருந்தாாள். விடலைப் பெண்கள் போல் வெடித்து நின்ற பருத்திச் செடிகள்... வாழ்வுக்கு முடிவுரை கூறும் நிலையில் இருப்போரின் கணக்கை காட்டுவதுபோல், பருத்திச் செடி இலைகளிலும், வாய்க்காலோரம் இருந்த ஆமணக்குச் செடிகளிலும் சிதறுண்டு கிடந்த பருத்தி இலைகள்... சவலைக் குழந்தைகளைப் போல குறும்பல்களைக் கழித்துக் கொண்டிருந்த சரல் கேட்டு செவ்விளனித் தென்னைகள்... அவள் உடம்பை வருடிக் கொடுத்த அகத்திக்கீரைச் செடிகள்... அவளுக்கு இதமான மெத்தை விரிப்பு இருக்கையைக் கொடுத்த பசும்புல் பரப்பு...
அலங்காரி அனைத்தையும் மறந்து தனக்குள்ளே தன்னைத் தேடிக் கொண்டிருந்தாள். அப்படித் தேடித்தேடித் தான் தேட வேண்டியது அவசியமா என்ற கேள்வியும் கூடவே பிறந்தது. உடன் பிறந்து கொல்லும் நோய் மாதிரி, அவள் அம்மா, ஒரு பணக்காரக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டாள். முப்பது வயது வித்தியாசம். மனைவியை அடிதடி மூலம் மட்டுமே ஆண்மையை நிரூபிக்க நினைத்தவர் கிழட்டு அப்பா. ஆண்மைக் குறைவாலும், வயது முதிர்ச்சியாலும் இளம் மனைவியைச் சந்தேகப்பட்டவர்... கெட்ட பேர் வாங்குறதே வாங்குறோம்... கெட்டுப்போயே வாங்குவோம் என்று திடப்பட்ட தாய்க்காரி, அவளுக்கும் அவளது ஆசை நாயகர்களுக்கும், பெற்ற மகளான தானே காவல் காக்க வேண்டிய கொடுமை...
இத்தகைய சம்போவ சம்பவங்களைக் காணும்போதும், அம்மா தன்மீது பாயும் போதும், ஏதாவது ஒரு இடத்தில் ஒளிந்து பீடி குடித்த அனுபவங்கள்... அப்பன்காரனே ஒரு நாள் அவளைக் கையும் களவுமாய்ப் பிடித்து, தெருவுக்கு இழுத்து வந்து, அவளை உதை உதை என்று உதைத்து, அவள் துண்டுப் பீடியை ஊராருக்குக் காட்டி, அவள் மனசைத் துண்டு போட்ட சிறுமை... பீடியை விட்டவளுக்கு, அம்மாவின் விளையாட்டு நிகழ்ச்சிகளின் போதும், அப்பாவின் கொடுமையான செயல்களின் போதும், யாரோ தன் தலையை வருடிக் கொடுப்பது போன்ற கற்பனை... எவனோ ஒருத்தன் தன்னை மடியில் போட்டு, உச்சிமோந்து, தட்டிக் கொடுத்து, ஆதரவு கொடுப்பது போன்ற அறியாப் பருவத்தின் புரியாத சிந்தனைகள்...
கோபம் வரும்போதோ... வருத்தம் வரும்போதோ பீடி பிடிப்பது போல், மதுபானம் அருந்துவதுபோல், இவளுக்கு அத்தகைய சந்தர்ப்பங்களில் பாலுணர்வுக் கற்பனையே ஒரு ‘போதை’ ஆகிவிட்டது. அம்மா, கன்னத்தைக் கிள்ளிய வலியிலும், உறவுப் பிணியில் துடிக்கும் போதும், எவனோ ஒருத்தன் - ஒரு ராஜபுத்திரன் அவள் கன்னத்தை வருடிக் கொடுப்பது போன்ற எண்ணம். இப்படி மூச்சு விடுவது எப்படி இயல்போ, அப்படி எவனோ ஒருத்தன் அவளுக்குச் செய்கிற கற்பனைக் காதல் சிகிச்சை இயல்பாகிவிட்டது. புகை பிடிப்பவனுக்கு இன்ன சிகரெட் என்று இருக்கலாம்... இவளுக்கோ இன்னவன் என்று இல்லை. ஒரு கொடுமையான அனுபவத்திற்கு முன்னால் எந்த வாலிபனைப் பார்த்திருப்பாளோ அவனே, அவளது சேவகன்... அவனே அவளது ராஜபுத்திரன்... இப்படிப்பட்ட விபரீதக் கற்பனையால், பலரிடம் சிக்கிய பிறகு, எவனையும் சிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். இப்போதுகூட அவள், தன் உடல்வாகில் ஏதோ கோளாறு என்று எண்ணி, கண்டவனை எல்லாம் போட்டுக் கதவைச் சாத்துவதாக நினைக்கிறாள்... அவள் பிரச்சினை உடலைப் பற்றியது அல்ல... மனதைப் பற்றியது என்று புரியாதவள்... காலில் உள்ள புண்ணுக்குத் தொடையில் நெறிக்கட்டுவது போல், காயங்கள் பாலுணர்வு நெறியாகப்படுத்துறது என்பதை யார் சொல்வது?
அலங்காளி, அங்குமிங்குமாய்ப் பார்த்தாள். இப்போது அவளுக்குத் தேவை ஒரு ஆண்... அது, அவள் கணவனாக இருந்தாலும் கவலை இல்லை. எழுந்து நின்ற அலங்காரி, மேற்கே உள்ள புளியந்தோப்பை ஊருருவிப் பார்த்தாள். கிழக்கே உள்ள கரும்புத் தோட்டத்தை ஏறிட்டுப் பார்த்தாள். வடக்கே பனங்காடு... தெற்கே பஸ் ரோடு, அவளுக்குத் தெரிந்த - அவளைத் தொட்ட காஞ்சானைக் காணோம்... எலி டாக்டரைக் காணோம்... மிளகுவத்தல் வியாபாரியைக் காணோம்... பீடி ஏஜெண்ட் பால் பாண்டியைக் காணோம்... எவன் மடியும் எட்டவில்லை... எவன் கையும் தலையைக் கோதிவிட இல்லை...
அலங்காரிக்குப் பாலுணர்வுப் பாசாங்கு ஏக்கம், பழிவாங்கும் எண்ணமாக மாற்றமெடுத்தது. ஊருக்கெல்லாம் நியாயம் பேசும் பழனிச்சாமி, அவர் தம்பி மனைவி பேச்சியம்மாவை ஏவி விட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதவன் போல் நடித்தான். அவன் பொண்டாட்டி பாக்கியம், கொழுந்தன் பொண்டாட்டி திட்டுறது சரி என்பதுபோல் மோர் கொடுக்காமல் அலட்சியப்படுத்தினாள்... திருமலைப் பயலோ, ஒரு வார்த்தை தட்டிக் கேட்கவில்லை. கரும் பட்டையான் பயல்களில் ஒருத்தன்கூட, அப்போதைக்காவது அனாதரவாய் நின்ற தன்மேல் கருணை காட்டவில்லை. சொக்காரப் பயல்களான செம்பட்டையான்களோ கேட்கப் போவதில்லை... இதே கேள்வியைப் பேச்சியம்மா, காஞ்சான் பொண்டாட்டியை கேட்டிருந்தாலோ, தன்னுடைய இன்னொரு மச்சானின் மகளான தாயம்மாவைக் கேட்டிருந்தாலோ, இந்நேரம் கொலை கொலையாய் விழுந்திருக்கும்... என்னைக் கேட்டால் யாரும் கேட்க மாட்டாங்க... நானேதான் கேட்கணும்... ஒத்தைக்கு ஒத்தையாய்... அதுவும் ஒரு பொம்புளை எப்படிக் கேட்க முடியும்... பழனிச்சாமிக்கு சோடியாக முடியுமா... பேச்சியம்மாவுக்கு நான் எதிரியாகிற தகுதி... எனக்கு இருக்குதா... ஒரே ஒருத்தர் கிட்டதான் முறையிட முடியும்... ஆறுதல் சொல்ல அவரால் மட்டுமே முடியும்... மலையாள மந்திரவாதி மகளைக் கற்பழித்து, அப்புறம் காவு வாங்கி இசக்கியாக்கினாரே, சுடலை மாடசாமி... அவர் தன்னையும் கற்பழிக்கட்டும்... காவாக்கட்டும்... ஆனால் கரும்பட்டையான் குடும்பத்த பழிவாங்க வேண்டும்... ஒருத்தியையாவது என்னைப் போல் ஆக்க வேண்டும்... அவர் ஆக்கிக் காட்டவேண்டும்...
அலங்காரி சம்மணம் போட்டு உட்கார்ந்தாள். முதுகை நிமிர்த்தி நேராக உட்கார்ந்தாள்... கண்களை மூடியபடி, வில்லுப் பாட்டாளி பாடிய பாடலை, மனதுக்குள் பாடினாள்.
“தூக்கி வைக்கும் கால்களுக்கு... சுடலைக்கு
துத்திப்பூவு சல்லடமாம்,
எடுத்து வைக்கும் கால்களுக்கு... சுடலைக்கு
எருக்கலம்பூ சல்லடமாம்...
சல்லடமும் குல்லாயுமாய்... சுடலையே
சங்கடத்தை போக்க வாரும்...”
ஒப்பாரிபோல், பாடி முடித்த அலங்காரி சத்தம் போட்டே வரம் கேட்டாள்.
“சுடலைமாடா... சுடலைமாடா... திக்கில்லாத எனக்கு நீதான் தெய்வமடா... கரும்பட்டையான் குடும்பத்த நான் பழிவாங்கி ஆகணும்... உன்மூலம் நானோ, என் மூலம் நீயோ ஒருத்திய காவு வாங்கி... இசக்கியாக்கணும்... அப்படி நீ ஆக்குனால்... சந்தையில விற்கதுக்காவ வளக்குற என் கிடாவை ஒனக்கு வெட்டுறேன். ஒரு பானை பொங்கல் படைக்கேன்... எள்ளு புண்ணாக்கு... ஏராளம் வைக்கேன்... நீயே கதி... நீயே அடைக்கலம்...”
அலங்காரி சுடலை மாடனைத் தியானித்தபடி, கைகால்களை ஆட்டாமல், அசைக்காமல் அப்படியே இருந்தாள்... வெட்டரிவாள், குறுக்குத்தடி, குல்லாய் ஆகியவற்றுடன் கூடிய சுடலைமாட சாமியைக் கும்பிட்டபடியே, கரும்பட்டையான் குடும்பத்தைத் திட்டினாள். அப்போது...
அவள் தோளை யாரோ தொடுவது போலிருந்தது... காஞ்சானோ, எலி டாக்டரோ என்று கண் விழித்தாள்... கோலவடிவு...! அவள் தோளைத் தொட்டபடி குனிந்து நின்றாள்... பிறகு, அந்த தோளையே பற்றுக்கோலாகப் பிடித்து கீழே உட்கார்ந்து விம்மினாள். அலங்காரியைக் கட்டிப் பிடித்து அழுதாள்.
“ஒங்கள பேச்சியம்மா சித்தி... அப்படிப் பேசுனதுல... எனக்கு சம்மதமில்ல... அத்தே... எல்லாம் என்னால வந்ததுன்னு நினைக்கும் போது, மனசு கேட்க மாட்டேன்குது... அத்தே... ஒங்கள எல்லாருமா... நாயப் பேசுனது மாதிரி பேசிட்டாவுளே... அத்தே... என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க அத்தே...”
அலங்காரி கோலவடிவை ஒரு கணம் பார்த்துவிட்டு, மறுகணம் ஆகாயத்தை நோக்கி, கையெடுத்துக் கும்பிட்டாள்.
“என்னை எதுக்கு அத்தை கும்பிடுதிய... எங்க சித்தியும் சந்திராவும் ஒங்கள பேசியிருக்கப் பேச்சுக்கு... நான்தான் அத்தே... ஒங்க காலுல விழுந்து புரளணும்... லேசா சிரிங்க அத்தை... நீங்க சிரிக்கணும்... சிரிச்சே ஆகணும்... என்னை அப்பிடி கும்பிடாதிங்க... அத்தே... ஒங்கள இப்போ பார்த்தபிறவுதான்... அதுவும் அந்தச் சிரிப்போடு பார்த்த பிறவுதான்... மனசு லேசாகுது அத்த...”
அலங்காரி கோலவடிவை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவள் வளர்க்கும் பலிகிடாவை அணைப்பாளே அப்படி! பிறகு அவள் மனத்தைத் தட்டிக் கொடுத்துப் பேசினாள்.
“ஒன்னை இப்போ பார்க்கும்போது அத்தைக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமா... நீ ஒருத்தி இந்த சனத்துல சொன்ன ஆறுதல்... ஒரு கோடி பேரு சொன்னதுக்குச் சமம்... நீ இப்பிடி... ஆறுதல் சொல்லுறதுக்காகவே இந்த அத்தய எல்லாரும் திட்டணும் போல தோணுது...”
“வேண்டாம் அத்த... நீங்க தூக்குப் போட்டுச் சாவியளோ இல்ல... கிணத்துல விழுந்து உயிர மாப்பியளோன்னு பயந்து வந்தேன்.”
“இந்தக் கிணத்துல விழணுமுன்னுதான் வந்தேன்... நீ மட்டும் வராவிட்டால் விழுந்திருப்பேன்...”
“அப்படில்லாம் செய்திடாதிய... அத்த, பாவம்... துளசிங்கம் மச்சான் சாதாரணமா பேகனதுக்கு எங்கண்ணாச்சி நல்லா திட்டிட்டான். அவரு கிட்டயும் என்னைத் தப்பா நினைக்கப்படாதுன்னு சொல்லிடுங்க... அத்தே... அப்போ நான் போறேன் அத்தே...”
“ஏன் இப்டிப் பயப்படுறே... அத்தக்கிட்ட நிற்கிறதுக்குப் பயமா...”
“ஆயிரந்தான் இருந்தாலும் இப்போதைக்கு நீங்க எங்க குடும்பத்துக்கு சண்டைக்காரி... ஒங்ககிட்ட பேச வந்தது தெரிஞ்சா எங்கண்ணாச்சி என்னை வெட்டிப் போட்டுடுவான்... அதுக்காவ எங்கப்பா அண்ணாச்சிய அடிக்கப் போவாரு - அவரு, வெட்டுறதுக்கு அண்ணாச்சி என் உடம்புல இடம் வைக்கிலியேன்னு...”
“பரவாயில்லியே... நல்ல பேசுறியே...”
“சரி... நான் வாறேன் அத்த...”
கோலவடிவு எழுந்தாள்... அவளை வழியனுப்புவதற்காக அலங்காரியும், எழுந்தாள்... அப்படி எழும்போது துளசிங்கம் வடக்குப் பக்கமாக உள்ள பனங்காட்டில் இருந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
அலங்காரி மனத்தில் ஒரு பழியுணர்வு... ஆனாலும் மனசு கேட்கவில்லை. பேச்சியம்மா திட்டும்போது, எதிர்ப்பது மாதிரி பேசியவள், ஒரு பாவமும் அறியாத அப்பாவி... இப்போ நான் கலங்குறதைப் பாத்துட்டு கலங்குறவள்... ‘இந்த பச்ச மழலையப் போய்... ஏன் கூடாது... படுகளத்துல ஒப்பாரி கூடாது... அதோட... இவளை... நான் ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணல... துளசிங்கம் கூட சேர்த்து வச்சி... பேச்சி தலய மொட்டையடிக்கப் போறேன்... பழனிச்சாமிய... படுத்த படுக்கையாக்கப் போறேன்... எவளும்... சந்தர்ப்பம் கிடைச்சால் ஓடிப் போறவள்தான்னு நிரூபிக்கப் போறேன்... இதனால... இந்த கோலத்தோட வாழ்க்க பாதிக்காது... துளசிங்கம் என்ன மட்டமா... கரும்பட்டையான் வகையறான்னா கற்புக்கரசின்னு பய மவளுவ... மார் தட்டுறவளே... அப்படி தட்டுற கையத்தான் தடுக்கப் போறேன்... அதோட... இது சுடலைமாடன்... உத்தரவு...”
அலங்காரி பழியைச் சுடலைமீது போட்டுவிட்டு, கோலவடிவை, தனது ஆட்டைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். பிறகு “ஒரு விஷயம்... ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும் உட்காரு” என்றாள். கோலவடிவு உட்கார்ந்தபோது, அலங்காரி, தலையைச் சொறிகிற சாக்கில், துளசிங்கத்தை அருகே வரும்படி சைகை செய்தாள்... அவனும் அந்தக் கையாட்டத்தைக் கண்டவன்போல் நடையை ஓட்டமாக்கி வந்தான்.
பச்சைநிற வெட்டுக்கிளி ஒன்று தத்தித் தத்திக் குதித்து, அலங்காரியின் பாதத்திற்குள் சிக்கியது. வேலிக்காத்தான் பூ ஒன்றை, ஒரு ஓணான் கடித்துக் கீழே போட்டது... காகம் ஒன்று தங்கரளிச் செடியில் ஏறிய அணிலின் குஞ்சைக் கொத்திவிட்டுப் போய்விட்டது... வேதனை தாளாத அந்த அணில் மூக்கில் ரத்தம் சொட்ட அங்குமிங்குமாய்த் துடித்தது.
அலங்காரி கோலவடிவை ஒட்டினாற்போல் உட்கார்ந்திருந்தாள். ஐந்தாறு சின்னச் சின்னக் கற்களாகப் பொறுக்கி எடுத்து, அவற்றை வலது புறங்கையில் வைத்து, அப்படியே கையை மாற்றிக் கற்களை உள்ளங்கைக்குக் கொண்டு வந்தாள். அவள் ஏதோ பெரிய விஷயத்தைச் சொல்லப் போவதாக நினைத்த கோலவடிவு அவசர அவசரமாய்க் கேட்டாள்.
“எத்த, ஏதோ சொல்லணுமுன்னு சொன்னியே...”
“அத மறந்துட்டேன் பாரு... ஏம்மா கோலம்... என் படிப்ப பத்தாவதோட முடிச்சுட்டே...? நீதான் பள்ளிக்கூடத்துலயே பஸ்ட்ல வந்தியாம்.”
“அந்த அநியாயத்த ஏன் அத்த கேட்கிறிய... பத்தாவது வகுப்புல எல்லா பாடத்துலயும் நான்தான் பஸ்ட்... பிளஸ்டூவுல சேரப் போனேன்... கோணச் சத்திரத்துல பள்ளிக்கூடம் இருக்கதால அப்பாவும் சரின்னுட்டாரு... ஆனால் எங்கம்மா வயசுப் பொண்ணுக்கு படிப்பு வேண்டான்னுட்டாள். பேச்சியம்மா சித்தியும் ஒத்துப் பாடிட்டாள்...”
“அவளுக்கு அவள் மகள் சந்திரா படிக்காமப் போனதால நீயும் படிக்கக்கூடாதுன்னு நல்லெண்ணம் வந்திருக்கு...”
“என்ன எழவோ... அப்போ என்கூட படிச்சவங்க - இப்போ காலேஜ்ல பி.ஏ., பிஎஸ்ஸி. படிக்கிறாவ... அவளுவளப் பார்க்கும் போதுல்லாம் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்னுது... அம்மாவ திட்டித் தீர்த்துடணும் போல வருது.”
“அம்மாவோ... அப்பாவோ... ஒருத்தி தன்னோட வாழ்க்கையை தான்தான் அமைச்சுக்கிடணும்...”
“நான் வர்றேன் அத்த... வீட்ல தேடுனாலும் தேடுவாங்க...”
“குறையும் கேட்டுட்டுப் போம்மா... அத்த சொல்றேன்னு தப்பா நினைக்காத... நீ வயல் வரப்புக்கு போகாத பொண்ணு... ஒனக்கு ஒங்க வயலு முழுதும் எங்க இருக்குதுன்னு தெரியாதுதான்... அப்படிப் பட்ட நீ விவசாயிக்கு வாழ்க்கப்பட்டியானால்... அவன் எவ்வளவுதான் பணக்காரனாய் இருந்தாலும் வயல் வேலைக்குப் போயாகணும்... அதே புருஷன் கடை கண்ணி வச்சிருக்கவனாயும் நாடுநகர் சுத்தப் பார்த்தவனாயும் இருந்தால் முற்றத்து வெயிலுகூட முதுகுல படாம வாழலாம்.”
“எங்கப்பாவுக்கு இதுல்லாம் தெரியாமலா இருக்கும்...? நான் வாறேன் அத்த...”
“செத்தே இரும்மா... எதுல குறை வச்சாலும் புத்தியில மட்டும் குற்றம் குறை வைக்கப்படாது... ஒங்கப்பா ஒன்னை நல்ல இடத்துல வைக்க ஆசைப்படுவார்தான்... ஆனால் நல்ல இடம் என்கிறத தீர்மானிக்கிறதுலதான் கோளாறு வாரதுண்டு... மொத்தத்துல... இந்த அத்த விரும்புறது ஒனக்கு புருஷனா வாரவன் வேட்டி சட்டையே போடப்படாது...”
“என்னத்த நீங்க...”
“பேண்ட் சட்டை போட்டவனாய் இருக்கணுமுன்னு சொல்ல வந்தேன்... சிரிப்பப் பாரு... நீ சிரிக்கும்போது தாமரைப்பூ விரிஞ்சது மாதிரி இருக்குது. சரி புறப்படு... ஒனக்கும் நேரமாயிட்டு... என்ன காலடிச் சத்தம்? யார் வாரது...”
“துளசிங்கம் மச்சான் வாரார்... அவர் கிட்ட எங்கண்ணா தப்பா நடந்ததுக்கு நான் ரொம்ப ரொம்ப வருத்தப்படுறதாய் சொல்லுங்க அத்தே...”
“இதோ அவனே வந்துட்டான்... நீ சொல்லு... என்ன துளசிங்கம் கோலத்த அப்படிக் பாக்கே...”
“இந்தப் பொண்ணு இங்க எதுக்காக வந்தாள், இழுத்த சண்டை போதாதுன்னா...”
“நான் வாறேன் அத்த...”
“ஒரு நிமிஷம்மா... ஏண்டா துளசிங்கம்... ஒனக்கு ஏன் தராதரம் தெரிய மாட்டேக்கு...? பாவம் கோலவடிவு... ஆலமரத்துச் சண்டைக்காவ ரொம்ப வருத்தப்படுறாள்... ஒன்னை அவங்க அண்ணாச்சி அப்படித் திட்டுனதுக்கு துடியாய் துடிக்காள்... நீ என்னடான்னா அவள் மனசு புரியாம எரியற நெருப்புல எண்ணெய்ய ஊத்துற...”
“ஆனால் அந்த நெருப்ப வச்சது கோலவடிவுதானே...”
“சரி அப்படியே வச்சுக்க... இப்போ பத்தவச்சங்களே நெருப்பு அணைக்கும்போது... நீ எண்ணெய ஊத்துனால் எப்டி... பாவம் கோலம்... ஒன் மனசு உடஞ்சு போனதுக்காவ ஆளே உடஞ்சுட்டாள்...”
“நீ இட்டுக்கட்டிப் பேசுனாலும் பேசுவே... சித்தி... கோலவடிவே சொன்னாத்தான் நான் நம்புவேன்...”
“சரிப்பா, நீ என்னை நம்பாண்டாம்... ஒன் மாமா மகளே சொல்லுவாள்... கோலவடிவு ஒன்னத்தான்... நான் சொன்னது நிசமுன்னு ஒரு வார்த்த சொல்லிட்டு அப்டியே ஓடு... ஒனக்கும் நேரமாகுது பாரு...”
“ரொம்பவும் பிகு பண்ணாத... கோலம்... சித்தி சொல்லுறது நிசமான்னு சொல்லு. அடடே என் இப்டி வெட்கப்படுற... சரி என்னை நேருக்கு நேராய் பாரு... நானே ஒன் முகத்துல இருந்து தெரிஞ்சுக்கிறேன்...”
கோலவடிவு, கண்களைக் கீழே போட்டு மேலே நிமிர்த்தினாள்... துளசிங்கம் அரைவட்டமாகத் தோன்றினான்... உடனே துளசிங்கம், “சொல்லு... சொல்லு...” என்றான். அப்படியும் அவள் திரும்பவில்லை... உடனே சலிப்போடு, “சரி... நீ சொல்லவும் வேண்டாம்... நான் கேக்கவும் வேண்டாம்... நான் வாறேன் சித்தி... இப்போ உரமூட்டை வார நேரம்” என்றான்.
கோலவடிவு அவன் போய்விடக்கூடாதே என்பது போல், தலையை நிமித்தினாள். அவனை நேருக்கு நேராய் பார்த்துவிட்டு முகத்தை இரு கைகளினாலும் மூடி, மறைத்துக் கொண்டாள். பிறகு விரல்களை அகலமாக்கி அவற்றின் இடைவெளிக்கு இடையே அவனைப் பார்த்தாள். இலைதழை மாதிரியான சட்டை... ராணுவ வீரர்கள் போடுவது மாதிரி... இரண்டு பைகள்... தோள்பட்டையில் இருந்து மார்வு வரைக்கும் பச்சை நிறப் பட்டை... தங்க நிறத்திலான பித்தான்கள்... இறுக்கமான பேண்ட்... சிமெண்ட் கலர் பளபளக்கும் பெல்ட்... கண்ணைக் கூச வைக்கும் கடிகாரம்...
அலங்காரி உற்சாகப்படுத்தினாள்.
“ஒன் மச்சான் கிட்டே சொல்லேன்... கோலம், இல்லாட்டி என்னை பொய் சொல்லியா நெனச்சுடப் போறான்...”
கோலவடிவு அத்தையைப் பார்ப்பதுபோல், அவளது மச்சான் மகனைப் பார்த்தாள். பிறகு குழந்தைகள் எழுத்துக்கூட்டி ஒப்பிப்பது போல் ஒப்பித்தாள்.
“அ...த்...தை... நி...ச...ம்...”
“அத்தை நிசம்தான். ஆனால் அவங்க பேசுவது...”
“நி...ச...ம்...”
“இப்பத்தான் தமிழே கத்துக்கிறியா...?”
“போடா... போடா... பொக்கி... அவள ரொம்பத்தான் கேலி செய்யுறே...”
“ஆனால் நான் நிசமாவே சொல்லுதேன் சித்தி. திருமலை என்ன நெருங்கும்போது அவனை ஒரே போடாய் போட்டிருப்பேன்... ஆனால் தற்செயலாய் இவள் முகத்தைப் பார்த்தேன்... சரி... நாம செத்தாலும்... பரவாயில்ல... இவள் அண்ணா, சாவப்படாதுன்னு அப்படியே நின்னேன்... இல்லாட்டா பந்தாடியிருப்பேன்...”
கோலவடிவு அவனை நன்றியுடன் பார்த்தாள். ஆனாலும் சவடாலாக இப்போது தைரியப்பட்டும் பேசினாள்.
“பந்தாடுறதுக்கு எங்கண்ணா கையில என்ன வளையலா போட்டிருக்காரு...?”
“பாத்தியா சித்தி... அவளுக்கு வார கோபத்த...”
“கரும்பட்டியான் குடும்ப ரத்தமாச்சே... சும்மாவா...”
“நீ சொல்றதும் சரிதான் சித்தி... திருமலை அரிவாளோடும், நான் கல்லோடயும் நிற்கும்போது இவள் அண்ணா தலையைத்தான் மறச்சாள்... என்னைப் பத்திக் கவலப்படல...”
கோலவடிவு மென்று விழுங்கிப் பேசினாள்...
“அண்ணா தலய மறச்சி... அரிவாளையும் மறச்சுட்டா... அதுல ஒங்க மச்சான் மவனுக்கும் லாபந்தான அத்த...”
“சரியாச் சொன்னே...”
“ஆனால் ஒன்னுடா... துளசிங்கம், நம்ம கோலவடிவு ஆயிரத்துல... ஒருத்திடா. அவளவள் வாயில கெட்ட வார்த்தைகளை சுமந்துகிட்டுத் திரியும்போது இவள் வாயில தப்பித் தவறிக்கூட ஒரு வார்த்த வராதுடா...”
“பழகிப் பாத்தாத்தான் தெரியும்...”
“போடா போக்கிரி... கோலவடிவு கோலவடிவுதான்... கொஞ்ச நேரத்துக்கு முன்னால இவள் வீட்லயே இவள் கண்ணு முன்னாலேயே இவளோட சித்தப்பா பொண்டாட்டி பேச்சியம்மா என்னை அவன் கிட்டே போனே... இவன்கிட்டே போனேன்னு கண்டபடி திட்டிட்டா...”
“ஒனக்கு மூள இருக்குதா சித்தி... ஒரு வார்த்த எனக்கு சொல்லி அனுப்ப வேண்டியதுதான? அவள் கொண்டைய தலையில் இருந்து எடுத்திருக்க மாட்டேன்...”
“நீயுல்லாம் இப்படி முரடனாய் இருந்து எப்படித்தான் குப்ப கொட்டப் போறியோ... மனுஷனுக்கு பொறுமை வேணுண்டா... எப்பவுமே... சொல்லுறத ஒருத்தர் பதட்டப்படாமல் முழுசா கேட்டுட்டு அப்புறமாத்தான் பதில் சொல்லணும். பாதி கேட்ட உடனே பதில் சொல்லுறது அரை கிணறு தாண்டுறது மாதிரி... பேச்சியம்மா பேசுன ஏச்சுல நான் ஆத்துல விழலாமா... குளத்துல விழலாமான்னு அழுதுகிட்டே வந்து இங்கே உட்கார்ந்தேன்... என் ராசாத்தி எனக்கு ஆறுதல் சொல்றதுக்காவ இங்கே ஒடி வந்தாள்... எவள்டா இப்டி வருவாள்... பாலைப் பாக்கதா... பால் காய்ச்ச பானையப் பாக்கதா... என் ராசாத்தி... ஒனக்காவ... நானும், இவனும் எவ்வளவு அவமானத்த வேணுமுன்னாலும் தாங்கிப்போம்...”
அலங்காரி கோலவடிவைக் கட்டிப்பிடித்து நான்கைந்து தடவை முத்தமிட்டாள். பிறகு “ஏண்டா நான் அவளை கொஞ்சுறத நீ பார்க்கே... அவளை நான் முத்தமிட்டா ஒனக்கென்னடா” என்றாள் குறும்பாக...
“நான் வாறேன் அத்த... வாறேன்.”
“மச்சான்னு சொல்லு... இல்லாட்டா துளசிங்கமுன்னு சொல்லு...”
“துளசிங்கம் மச்சான்னு சொல்லுவாள்...”
கோலவடிவு எதும் பேசாமல் நின்ற இடத்துலயே நின்றாள். அலங்காரி கோலத்தின் தலையை வருடிவிட்டபடியே சொன்னாள்.
“அத்தையும் ஒன் கூடவே வாறேன்... ஒரு நிமிஷம் நில்லு... இதோ வந்துட்டேன்...”
அலங்காரி எங்கேயோ ஒதுங்கப் போவதுபோல் போனாள். கோலவடிவும் துளசிங்கமும் தனித்து நின்றார்கள்.
--------------
அத்தியாயம்- 5
அலங்காரியின் வீடு நிசமாகவே சின்ன வீடுதான். அதேசமயம் செட்டான வீடு. கிழக்குப் பக்கம் ஊராட்சி ஒன்றிய காண்டிராக்டர் ஒருவரின் இரண்டு மாடிக் கட்டிடச் சுவரே இவள் வீட்டுக்கு அரண் மாதிரி. தெற்குப் பக்கத்தில் பாதியளவு சமையல்கட்டும், மீதியில் மாட்டுத் தொழுவமும். மேற்குப் பக்கம் இவளே ஒரு காம்பவுண்ட் சுவரை ஆளுயுரத்திற்குக் கட்டிவிட்டாள். எலி வளை மாதிரி வெளியே தெரிந்தாலும், உள்ளே போகப் போக உறுதியாக இருக்கும் விசாலமான வீடு. அந்த வீட்டுக்குள் எலி வளைவுக்குள் வருவது மாதிரிதான் ஒடுசலான வாசல் வழியாய் வரவேண்டும். இதர வீடுகளைப் போல் இல்லாமல், அந்தத் தெருக் கதவும் சாத்தப்பட்டே இருக்கும்.
அலங்காரி குளிப்பாட்டிய தலைமுடியைக் கோதிவிட்டபடியே, துளசிங்கத்தைப் பார்த்துக் கண்சிமிட்டியபடியே கேட்டாள்.
“கோலவடிவ என்னடா பண்ணுனே... அப்டி தலைதெறிக்க ஒடுறாள்...”
“சனியனுக்கு ரம்பன்னு நெனப்பு... பேச வாயெடுக்கதுக்கு முன்னாலயே ஒடிட்டாள்... நான் பாம்பாயிலயும், மெட்ராஸ்லயும் பாக்காத பொண்ணுவளா... தொட்டா... தொட்டவன் கை கறுப்பா இருந்தாலும் சிவக்கும்... அப்டி சிவப்பு பொண்ணுங்கள ஆயிரக் கணக்குல பாத்தாச்சு...”
“ஒரு தாயி கிட்ட பேசுற பேச்சாடா இது... நான் ஒன் அப்பா கூடப் பிறந்த சித்தப்பாவோட பொண்டாட்டிடா. பெத்த தாய்க்குச் சமமானவடா...”
துளசிங்கம் அந்த ‘தார்சாவில்’ நாற்காலியில் உட்கார்ந்து, பனை மரத்து தூணைப் பிடித்தபடியே, உள்ளே பனை நார்க்கட்டிலில் குறட்டை விட்டுக் கொண்டிருந்த சித்தப்பா சீமைச்சாமியையே பார்த்தான். நோஞ்சான் உடம்பு... குச்சிக் கால்... குச்சிக் கை... அலங்காரிச் சித்தியின் ஒரு காலளவுக்கு அவர் உடம்பு. அவரையே பார்த்த துளசிங்கம் சித்தியைக் கூர்மையாகப் பார்த்தான். அவள் மீது கோபமும் வந்தது... கூடவே பரிதாபமும் வந்தது... கூர்மைப் பார்வையை விலக்கி, லேசாய் சிரித்தான்... அவளும் அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்டவள் போல், அவன் கண்களைத் தவிர்த்து முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டாள். தாய்க்காரி, எந்த மகனுக்கும் எவளையும் பிடித்துக் கொடுக்க மாட்டாள்... கண்டிப்பாளே தவிர, காதல் பாதை வகுக்கமாட்டாள்... அதற்கு அலங்காரி சித்தி மாதிரி பல அனுபவங்களும், அலங்கோலங்களும் தேவை...
அலங்காரி முழுசும் நனைந்த தைரியசாலியானாலும், அந்தச் சமயத்தில் துளசிங்கத்தை ஏறிட்டுப் பார்க்கவே அவளுக்குக் கூச்சமாக இருந்தது. முகத்தை அவன் பக்கமாய் திருப்பாமலே விளக்கமளித்தாள்.
“நம்ம தோட்டத்துப் பக்கமா சட்டம் பேசுற ரஞ்சிதம் வந்துகிட்டு இருக்காள். அதப் பார்த்துட்டுத்தான் கோலவடிவு ஓடியிருப்பாள். அவள விட்டுப் பிடிச்சா சரியாகிவிடும்...”
“அவளை விட்டும் பிடிக்காண்டாம்... விடாமலும் பிடிக்காண்டாம்... சரி நான் வரட்டுமா...”
“வந்ததும் வராததுமா புறப்படுறே... கோலவடிவைப் பத்தி சித்திக்கிட்ட கேட்க வந்தியோன்னு நினைச்சேன்...”
“நீ வேற... இந்தச் சித்தி முகத்த ஒரு நாளைக்கு பாக்காட்டால் எனக்கு என்னமோ மாதிரி இருக்கும். இன்னைக்கு சிமெண்டுக்கு தனிக்கடை போடுறேன்... ஒன் தரிசனம் இல்லாம போட்டா நல்லா இருக்குமா...”
“நீயாவது இந்த சித்திக்கிட்ட பெத்த பிள்ளை மாதிரி நடக்கியப்பா... அதுவும் பெத்த மவளே போன பிறவு...”
“நான் எப்பவும் ஒன்கிட்ட நல்லாத்தான் இருப்பேன் சித்தி. பம்பாயிலயும் சென்னையிலயும் பல எக்ஸ்டிரா பெண்களைப் பார்த்தவன் நான். நான் ஒண்னும் ‘அதை’ பெரிசா எடுத்துக்கிறது இல்ல... இப்டி எப்படியோ இருந்த பல பெண்ணுங்க... இப்போ தங்கள மாத்திக்கிட்டு பேரும் புகழுமா இருக்காளுவ. அதனால நாமும் நம்மள மாத்திக்கிடணும்...”
அலங்காரி வாயடைத்து நின்றபோது, கதவு தட்டப்பட்டது. துளசிங்கம் கதவைத் திறப்பதற்காக நடக்கப்போனான். அவள் அவன் கையைப் பிடித்துத் தடுத்த படியே உள்ளே முகம் நோக்கி கத்தினாள்...
“ஒம்மத்தான் யோவ்... தூங்குமூஞ்சி... பண்டாரம்... என் பிள்ள நிக்கான்... இல்லன்னா நல்லா கேட்பேன்... எந்திரும்... யாரோ வாசல் கதவ தட்டுறது காதுல விழல... துப்புக்கெட்ட மனுஷன்... எழுந்துருமே...”
அந்தத் ‘தட்டுக்கெட்ட’ மனுஷன் எழுந்திருக்கவில்லை. உடனே அலங்காரி ஒரு டம்ளரில் இருந்த தண்ணிரை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்... சீமைச்சாமி முகத்தில் விழுந்த நீர் மூக்குக்குள் போக, அலறியடித்து எழுந்தார். அலங்காரி, அவர் முதுகைப் பிடித்து, வெளிக்கதவின் திசை நோக்கித் தள்ளினாள்... அவரும், அவிழ்ந்த வேட்டியைக் கட்டிக் கொண்டிருந்தால், அவள் ஆணையை நிறை வேற்ற நேரமாகும் என்று நினைத்தவர் போல் வேட்டியைக் கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டே ஓடினார்... கதவைத் திறக்கும்போது மட்டும் வேட்டிச் சுருக்கத்தை இடது கையில் பிடித்துக் கொண்டார்.
உள்ளே வந்த எலி டாக்டர், மகன் துளசிங்கத்தை எதிர்பார்க்க வில்லை. தலைக்கும், கழுத்துக்கும் வித்தியாசம் காணமுடியாத தோற்றம்... வேட்டிக் கரையை, இரண்டு கால்களுக்கும் மத்தியில் நெருங்கோடாய் வைத்துக் கொள்வதில் சமர்த்தர். தன்னைத் தானே வாரிக் கொள்ளும் தலைமுடி...
வெளிக்கதவில் இருந்து நூறடி தூரம் நடந்து தார்சாவுக்கு வந்த எலி டாக்டர், சாக்குப் போக்காய் பேசினார்.
“ஒன்ன எங்கெல்லாம் தேடுறதுடா... உரக்கடைய வேலக்காரப் பயலுவ கிட்ட விட்டுட்டு வந்தா... கடைதான் உருப்படுமா... நீதான் உருப்படுவியா.”
“ஒம்ம சோலிக் கழுதயப் பார்த்துட்டு சும்மா கிடயும்... கடையை எப்டிப் பாக்கணுமுன்னு எனக்குத் தெரியும்... பெரிசா கடை கொடுத்துட்டவர் மாதிரி பேசுறாரு... புத்தி கெட்ட மனுஷங்க... மகன் புதுசா ஒரு கடை திறக்கானேன்னு ஒரு நெனப்பு கிடையாது. கடைப் பக்கம் போவோமுன்னு ஒரு எண்ணம் வர்ல... அப்பாவாம் அப்பா... பெரிய அப்பா...”
துளசிங்கம் வேகமாக வெளியேறினான்... எதிரே வந்த கோழியைக் காலால் எத்தியபடியே போனான்... அலங்காரிக்கு மனம் கோணியது. முகம் கோணியது... அந்தச் சமயம் பார்த்து, வந்த கணவனிடம் கோபத்தைக் காட்டினாள்.
“புத்தி கெட்ட மனுஷா... கதவ ஏன் தாழி மாதிரி திறந்து வச்சுட்டு வாறீரு... நல்லா பூட்டும்...”
சீமைச்சாமி இன்னும் வேட்டியைக் கட்டாமலே கதவைத் தாழிட்டுவிட்டு, மனைவி இருந்த பக்கம் ஓடிவந்து, ஈரம்பட்ட முகத்தை, இரண்டு தோள்களிலும் வைத்துத் தேய்த்தபடியே எலி டாக்டர் முகத்துக்கு எதிராக நின்று வேஷ்டியைக் கட்டப் போனார்... டாக்டர் கத்தினார்...
“ஒனக்கு மூளை இருக்காடா... முட்டப்பயலே... ஒதுக்குப்புறமா போயி வேட்டிய கட்டேமுல... புத்திகெட்ட பயல...”
“இது புத்தி சரியா இருந்தா நான் ஏன் சீரழியுறேன்.”
“என்ன அலங்காரி... ஒன் பேச்சு ஒரு மாதிரி இருக்குது...”
“என் பேச்சு எப்பவுமே ஒரு மாதிரிதான். யாரு கதவத் தட்டுறது... யோவ் தட்டுக் கெட்ட மனுஷா... கதவத் திறந்துட்டு பூட்டும்... அப்டியே தோட்டத்துக்குப் போயி ஆட்டுக்கு புல்லு வெட்டிட்டு வாரும்...”
“கதவப் பூட்டிட்டு எப்டி வெளில போறது...”
“என் தலையெழுத்து... எழுதாக்குறைக்கு அழுதா முடியாது... சரி வாரவரு கதவப் பாத்துக்குவாரு... நீரு போயித் தொலையும்...”
சீமைச்சாமி திறந்துவிட்ட கதவு வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார் காஞ்சான்... எலி டாக்டரைப் பார்த்துத் திடுக்கிட வில்லையானாலும், சங்கடப்பட்டார். எல்லாருக்குமே ‘ரகசியமாய்’ தெரிந்த விஷயங்களை பகிரங்கமாச் சொல்ல முடியுமா என்ன... காஞ்சான் தார்சாவுக்கு வந்து, பெஞ்சில் எலி டாக்டர் பக்கத்தில் உட்கார்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வெளியேற்றுவதில் ஈடுபட்டார்கள்.
“சிமெண்ட் கடை போடப்போறேன்... அப்பாவக் காணுமேன்னு ஒன் மவன் துளசிங்கம் ஊரு பூராவும் ஒன்னைத் தேடிக்கிட்டு இருக்கான். நீ இங்க வந்து ஜம்முன்னு இருக்கே...”
“இன்னக்கி வயலுல நடுவைன்னு சொன்னே... வேலையாட்கள மேல் பாக்கதுக்காவ போகாண்டாமா... நீ போகாட்டால் திருட்டுப் பய பிள்ளிய சரியா நடாது... நாத்து தண்ணிலயே முங்கிப் போகும்...”
“இந்த வயசுக்கு மேல நம்மால வேல பாக்க முடியாது... பயலுவ எதுக்கு இருக்கான். கவனிச்சுக்கு வாங்க...”
“ஒன்னை கவனிச்சுட்டுத்தான் இருக்காங்க...”
“தன்னை மெச்சிக்கிட்டாம் தவிட்டுக் கொழுக்கட்டை... ஈயத்தைப் பார்த்து இழிச்சுதாம் பித்தள...”
அவர்கள் பேசுவதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த அலங்காரி, அவர்களில் அப்போதைக்கு எவரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பிரச்சினை இல்லை... துளசிங்கம் சொல்ல வேண்டியதச் சூட்சகமாகச் சொல்லிவிட்டான்... எவரைப் பகைத்தாலும் அவனைப் பகைக்கப்படாது... இந்த மனுஷனை அவன் கண்ணுமுன்னால் கடைசில காட்டினால்தான் சித்தி திருந்திட்டாள்னு நினைக் காட்டாலும், திருந்தி வாரான்னு நினைப்பான்...
அலங்காரி சாமர்த்தியமாகப் பேசினாள்...
“மச்சான் நம்ம பையன் சிமெண்ட் கடை போடுறாமுல்லா... நீரு பெத்தப்பன்... கற்பூரம் ஏத்தும்போது நிக்காண்டாமா...”
“நீயும் சொந்தச் சித்திதானே... நீயும் வா...”
“நான் வரத்தயார்... ஆனால் ஒம்ம பொண்டாட்டி... சரியான தாடகையாச்சே... நான் அங்க வந்தால் ஆடமாட்டாள்? ஒமக்கும் அவளத் தட்டிக் கேட்க துப்பு கிடையாது...”
எலி டாக்டர் புரிந்து கொண்டார். புறப்பட்டார். இன்னும் அங்கே இருந்தால் பெண்டாட்டியைப் பற்றி என்னவெல்லாமோ பேசுவாள். ‘கடைசில இந்தக் காஞ்சான் பயலவிட நான் கழிவாய் போயிட்டேனே...’
தெருக்கதவை நோக்கி நடந்த எலி டாக்டர், காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினார், காஞ்சானை சந்தோஷமாகக் கேட்டார்.
“நீயும் என் மகன் உரக் கடைக்கு வாரதுல சந்தோஷம்...”
“நான் அதுக்கு வர்ல... ஒன்னை அனுப்பிட்டு கதவைப் பூட்டுறதுக்கு வந்தேன்...”
எலி டாக்டரை அனுப்பிவிட்டு கதவையும் தாழிட்டு விட்டு, மீண்டும் அலங்காளியிடம் வந்த காஞ்சான் பல்லை இளித்தார்... அலங்காரி, அவரை, ஏற இறங்கப் பார்த்தாள்... “ஏய் காஞ்சான்! அந்த ஆலமரத்தடி விஷயத்துல என்னை என்னமாப் பேசுனே... மறந்துட்டேன்னா நெனச்சே... தாய் பிள்ளையா இருக்க ஒங்களா நானா கெடுக்கேன்? இரு... இரு...”
வாழ்க்கையில் மேலும் முன்னேறுவதற்கு ஏற்கனவே முன்னேறிய அனுபவத்தில் ஒவ்வொருவருக்கும் தனக்கு என்று ஒரு வழியமைத்துக் கொள்வார்களே, அதுபோல், அலங்காரியோ தனக்கென்று இருவேறு தனிப்பார்வைகளை வகுத்திருந்தாள்... தலையை லேசாய்ச் சாய்த்து உதடுகளை முத்தமிடப் போவதுபோல் குவித்து, தலை முடியைத் தோள் வழியாக மார்பிலே போட்டுக் கொண்டு கண்களை அகலமாக்கி, இப்போதுதான் புதுசாய்ப் பார்ப்பது போலவும் பார்ப்பாள்... அப்படிப் பார்த்தால் அது படுக்கையறைப் பார்வை என்று பொருள்... இல்லையானால், கழுத்தை முன்னால் நீட்டி கண்களை இடுக்கி, இடுப்பு மேல் கைபோட்டு பார்ப்பாள். இது இளக்காரப் பார்வை...
அலங்காரி இப்போது இரண்டாவது ரகப் பார்வையில் நின்றபடி, காஞ்சானுக்கு ஆணையிட்டாள்.
“மொதல்ல... தெருக்கதவ நல்லா திறந்து வச்சுட்டு வாரும்...”
“ஏன் பிள்ள... புதுப் பேச்சு...”
“நான் புலி போல நம்பற மனுஷன்... எலிபோல ஆகும்போது... நானும் மாறித்தான் ஆகணும்... சரி... சரி... கதவத் திறவும்... ஒம்ம என் புருஷனோட பெரியப்பா மவன்னுதான் இப்போ பேசுறேன்... ‘அது’ன்னு நினைச்சுப் பேசல. நீரு கதவைத் திறக்கியரா நான் திறக்கட்டுமா... கையை விடும்...”
“ஒனக்காவ ஆசையோட திருநெல்வேலி அல்வா வாங்கிட்டு வந்திருக்கேன். மெட்ராஸ் போயிருக்கிற இசக்கிப் பயகிட்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவ வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்...”
“என்னை என்ன தாசின்னு நினைச்சிரா... அப்படி நெனச்சா இப்பவே இடத்தைக் காலி பண்ணும்... எங்க அக்கா அதான் ஒம்ம பெண்டாட்டி எப்போ ஒரு காலத்தில் ‘காஞ்சானுக்கு என்னைக் கட்டி வச்சிட்டாங்கன்னு பட்டி தொட்டி பதினாறுக்கும் கேட்கும் படியா தமுக்கடிச்சாள்னு கேள்விப்பட்டனோ, அந்த பரிதாபத்துலதான் ஒம்ம மேல ஆச வச்சது... காசு பணத்த நினைச்சில்ல...”
“நான் அப்படிச் சொன்னனா... அந்தச் செறுக்கி எனக்கு கொடுத்த சூட்டுக்கு நீதான் மருந்துன்னு எனக்குத் தெரியாதா...”
“எங்கக்கா சொன்னது சரிதான்னு நினைக்கேன்... நீருதான் ஒம்ம புத்தியக் காட்டிட்டியரே... பேசாம போவும்... எங்க தாயா பிள்ளையா பழகுதியரோ... அங்க போவும்... ஒம்ம ஒட்டும் வேண்டாம்... உறவும் வேண்டாம்... சரி... சரி... கதவத் திறக்கணும்... கைய விடும்... வண்ணார் செய்தது தண்ணியோடயாம்... இந்த அலங்காரி அன்பும் அப்படித்தான்...”
“சரி... இப்போ உள்ளே வா... அப்புறம் விவரமாய் பேசலாம்...”
“மொதல்ல எல்லாத்தையும் விவரமா பேசியாகணும்...”
“விவரமாத்தான் சொல்லித் தொலையேன்...”
“பச்சப் பிள்ள புரியாது... அந்த ஆலமரத்தடியில என்ன சொன்னிரு...? அதயும் அந்த திருமலைப் பயல் முன்னால... செம்பட்டையான் குடும்பமும், கரும்பட்டையான் குடும்பமும் தாயாப் பிள்ளியா பழகுற குடும்பங்க... ரெண்டு குடும்பத்தையும் உண்டு இல்லன்னு ஆக்கிடாதன்னு... இந்த வாய்தானே சொல்லிச்சு... இப்போ ஏன்... அது இப்டி இளிக்குது...”
“பயித்தியாரப் பய மகளா இருக்கியே... நான் எதுக்குச் சொன்னேன்னு யோசித்துப் பாத்தியா... ஒனக்கும், எனக்கும் இஸ்க்கு, தொஸ்க்கு இருக்குமுன்னு ஊரில ஒரு சந்தேகம்... அப்டில்லாம் கிடையாது என்கிறத சொல்லாமச் சொல்லுறது மாதிரிதான் நான் அப்டிச் பேசுனேன்... வேற அர்த்தத்தில இல்ல...”
“ஒமக்கென்ன... கொஞ்சுறதுக்கு ஒரு இடம்... குலைக்கிறதுக்கு ஒரு இடம்... கடைசியில எனக்குத்தான் யாருமில்ல...”
“ஒன்மேல ஒரு தூசிபட பொறுப்பேனா...”
“நிசந்தான்... தூசிபட சம்மதிக்க மாட்டியரு... ஏன்னா... அந்தச் சாக்குல தூசியத் தட்டுறது மாதிரி என்னத் தட்டலாம் பாரும்... கடைசில ஒம்மால நான்தான் அவமானப்பட்டேன்...”
“விஷயம் சொல்லு... கண்ணு... என் ராசாத்தி இல்ல...”
“பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... ஒமக்கென்ன, அந்த ஆலமரத்தடில அப்டிப் பேசிப்பிட்டீரு. என்னை நீரே அப்பிடிப் பேசிட்டாதாலே யாரு வேணுமுன்னாலும் எப்படி வேணுமுன்னாலும் ஏசலாமுன்னு ஆயிப் போச்சு... நான் பழனிச்சாமி அண்ணாச்சி... சீ... எவன் அண்ணாச்சி... பழனிச்சாமி வீட்டு வழியா சிவனேன்னு போய்க்கிட்டு இருக்கேன்... பேச்சியம்மா புருஷன், வீட்டுக்குள்ள கூப்பிட்டு வச்சு ஏதோ கேட்கப் போனான்... அதுக்குள்ள அவன் பெண்டாட்டி பேச்சி என்னை அவன்கூட போனவள், இவன்கூட போனவள், அவளே... இவளேன்னு கண்டபடி திட்டிட்டா...”
“செறுக்கிய கொண்டச் சிரைக்கணும்... இவள் மட்டும் கல்யாணம் ஆவுறதுக்கு முன்னால யோக்கியமா? நீ அவள் நாக்கைப் பிடுங்குறது மாதிரி கேட்டிருக்கணும்...”
“நான் அப்டிக் கேட்டிருந்தால் அங்கேயே என்னை ஒரே நொறுக்காய் நொறுக்கியிருப்பாங்க... நீரும் அங்க வந்து நான்தான் ரெண்டு குடும்பத்தையும் துண்டு போடுறதாச் சொல்லியிருப்பியரு... ஒம்மால நான் பட்ட அவமானம் போதுமுய்யா...”
“என் ரத்தம் எப்டிக் கொதிக்குது தெரியுமா... பழனிச்சாமி மச்சான் தட்டிக் கேட்கலியா...”
“சரியான ஆள். கிள்ளி மனுஷன்... பேச்சியம்மாவையும் கிள்ளி விட்டு, என்னையும் தாலாட்டுற மாதிரிப் பேசுறாரு... கடைசில ஒம்மப் பார்த்து அறைக்குள்ளதான் ஆசையோட வெட்கப்பட்டேன்னா... இப்போ அம்பலத்துலயும் வெட்கப்பட வேண்டியதாப் போச்சு... என்ன பேச்சை பேசிட்டா...”
“இருக்கட்டும்... இருக்கட்டும்... அவள ஒன் காலுல விழ வைக்கேன்...”
“அந்தக் குடும்பமே என் காலுல விழத்தான் போவுது... ஆனால் ஒம்மால இல்ல... நம்ம குலதெய்வம் சுடலமாட சாமியால...”
“என்ன பிள்ள உளறுற...”
“அது கிடக்கட்டும்... நம்ம சுடலைக்கு எப்போ கொடை கொடுக்கோம்...”
“தெரியாதது மாதிரி கேட்கிறீயே... ஆடிக் கடைசி வெள்ளியில...”
“அத மொதல் வெள்ளியில கொடுத்தா என்ன...”
“அது முடியாதே... கரும்பட்டையான் குலதெய்வம் காளியம்மனுக்கு முதல் வெள்ளியில வழக்கமாக கொடுக்காங்க...”
“அவங்க வழக்கம் கிடக்கட்டும்... அந்த வழக்கத்த ஒடச்சி... நம்ம மாடனுக்கு ஏன் முதல் வெள்ளியில கொடுக்கப்படாது... ஏதும் சட்டமா... தர்மமா...”
“கொடுக்கக்கூடாதுன்னு இல்ல... பரம்பர பரம்பரையாய் வருகிற வழக்கம்...”
“அப்போ... குடுமி வச்சாங்க... இப்போ இருக்கா... அப்போ நாட்டாண்மைன்னு தனி அந்தஸ்து தனிப்பங்கு இருந்துது... இப்போ இருக்கா... பரம்பரை பரம்பரையாய் ஒரு அடிமைப் பழக்கத்த மாத்தப் படாதுன்னு சட்டமா...”
“தாயா பிள்ளையா பழகிட்டோம்...”
“நாமதான் தாயா பழகுறோம்... அவங்க ஒண்ணும் பிள்ளையா பழகல... அப்படி நினைச்சா என்னை இப்டி பேசியிருப்பாளா...”
“ஒன் கோபமும் நியாயமும் புரியது... அதோட காளியம்மான் தாய். சுடலை அவளோட பிள்ளை... அம்மாவுக்கு விசேஷம் முதல்ல... நடக்கதுதானே முறை...”
“பிள்ளை தலையெடுத்தால் தாய் ஒதுங்கிக்கணும்... இதுவரைக்கும் பையத்தியாரங்களாய் இருந்த செம்பட்டையான் கூட்டம் ஒதுங்கணும்...”
“சரி அவங்ககிட்டே பேசிப் பார்ப்போம்... இப்போ உள்ளே வா...”
அலங்காரி, இப்போது முதலாவது பார்வையை வீசினாள். தலை முடியை பின்னால் தோள்வழியாய் போட்டு, கண்களை அகலப்படுத்தி, வாயைக் குவித்து, காஞ்சான் தோளிலே செல்லமாக கைபோட்டு, அவர் காதைப் பிடித்துத் திருகியபடியே உபதேசித்தாள்,
“இந்த ஊர்ல அவங்க குடும்பந்தே உசத்தின்னு அந்த கரும் பட்டையான் பயலுவளுக்கு ஒரு நெனப்பு... வரப்போற பஞ்சாயத்து தேர்தல்ல கூட பழனிச்சாமி தான் தலைவருன்னு இப்பவே பேசுறாங்க... நாம் நம்ம துளசிங்கத்தையும் யோசிச்சுப் பாருங்கன்னு சொல்றதுக்குக்கூட வக்கில்லாம இருக்கோம்... ஊர்ல குளத்து மீன் பங்காகட்டும், வழக்கு வம்பு விவகாரமாகட்டும், கரும்பட்டையான் குடும்பம்தான் முன்னால நிக்குது... அதுவும் நெஞ்ச நிமிர்த்தி நிகருல்லன்னு நெனப்புல... இதுக்குல்லாம் காரணம் அவங்க குலதெய்வத்துக்கு முதல்ல அம்மன் கொடை கொடுக்கிறதாலதான் நாமே நம்ம தெய்வத்தை பின்னால நினைக்கதாலதான் இப்டிக் கிடக்கோம்... இந்த வழக்கத்தை மாத்துனாத்தான் அவங்க திமிறு அடங்கும்... ‘காஞ்சான் பயல நீ வச்சுக்கிட்டு இருக்கது எனக்குத் தெரியாதாடி’ன்னு பேச்சி என்னப் பார்த்து ஒரு பேச்சுப் பேசிட்டாள்... நீரு பயலாம்... அதுவும் காஞ்சான் பயலாம்... சுப்பிரமணியன்னு நெசப் பேரச் சொல்லுறது? பயலாம்... காஞ்சான் பயலாம்...”
“நீ சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்குது... அந்தப் பயலுவளும் நம்மள தெம்மாடின்னுதான் நெனக்காங்க... இல்லாட்டா இந்தக் குடும்பத்துக்கே பெரிய மனுஷனான என்னை அப்படி பேசியிருக்கமாட்டாள்... சரி... இப்போ என்ன செய்யனுமுன்னு சொல்லுதே...”
“விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னு என் புருஷன் கேணையன் கேள்வி கேட்டது மாதிரி இருக்கு... இந்த ஆடி மாத முதல் வெள்ளில நம்ம மாடனுக்கு கொடை கொடுக்கணும்... என்ன சொல்லுதீரு...”
“பரம்பர பழக்கத்தை மாத்தப்படாதுன்னு கரும்பட்டையான் பயலுவ தகராறுக்கு வந்தால்...”
“இதோ என் கையில பத்து வளையல் கிடக்குது... நம்ம குடும்பத்து பொம்பிளய கிட்ட போனால் நூறு வளையல் சேரும்... செம்பட்டையான் ஒவ்வொருத்தனும் இதைப் போட்டுக்கங்க... வேட்டியைத் தூக்கி முந்தானையாப் போட்டுக்கங்க...”
“சரிப்பா... அவங்க அம்மனுக்கு முதல் வெள்ளில கொடை கொடுத்தாலும் நம்ம மாடனுக்கும் முதல் வெள்ளிய கொடை... நீ உள்ளே வா...”
“சவடால் பேச்சில இருக்கப்படாது... இது நீரு மட்டும் செய்யுற காரியமில்ல... ஆடி பிறக்க இன்னும் பதினைந்து நாள்தான் இருக்குது... இப்பவே போய் நம்ம குடும்பத்து ஆட்கள முடிச்சுட்டு வாரும்... அப்படி முடிச்சிட்டியரு... எலி டாக்டர, கிட்டவே சேக்கமாட்டேன்... இல்லாட்டா வேற மாதிரி... சரி புறப்படும்... இந்தக் கிணத்துத் தண்ணி இங்கதான் இருக்கும்...”
அலங்காரி காஞ்சானின் கையைப் பிடித்து இழுத்து, கதவருகே கொண்டு வந்து, கதவைத் திறந்தாள். தெருவுக்கு வந்த காஞ்சான் ஏமாற்றத்தை ஆவேசமாக மாற்றிக் கொண்டு நடை போட்டார்.
-------------
அத்தியாயம்- 6
‘குளத்தடி’ வயல், வசதியுள்ள குடும்பத்தின் மூத்த குழந்தை மாதிரி; குளத்தின் பெரிய வாய்க்காலில் உருண்டோடும் நீரைக் கிளை வாய்க்கால் மூலம் உள்வாங்கி செழித்துக் கொழித்த நிலம். அந்த குளத்தின் முக்கிய கால்வாயின் தண்ணிர் முதலில் இந்த வயலில் பாய்ந்தாக வேண்டிய இடத்தில் உள்ள இடம். தங்க விதைகளை விதைத்ததுபோல் நெற்பயிர்கள் கதிர் சூல்களோடு பொன்மயமாய் மின்னி, தள்ளாடித் தள்ளாடி ஆடின. அந்த கர்ப்பிணிப் பெண்களுக்குத் தென்னை மரங்கள் காவல் காத்தன. ஆமணக்குச் செடிகள் சாமரம் வீசின.
வயல் ஓரமாய் உள்ள கிணற்றில் பம்ப் செட்டில் இருந்து தண்ணிர் பாளம் பாளமாய்ப் பாய்ந்தது, ஒளி வெள்ளம் போன்ற முழுவீச்சு குட்டி அருவி ஒன்று கொட்டிக் கொட்டிக் கமலைக் கிடங்கைக் கடலாக்கிக் கொண்டிருந்தது. சேலை, பாவாடைகளைத் துவைத்து முடித்துச் சரல் மேட்டில் உலர்த்திவிட்டு, முகமெங்கும் மஞ்சளும், உடலெங்கும் சோப்புமாய் நின்ற கோலவடிவு, பின்னலை அவிழ்த்துப் பின்புறமாய்க் கையைக் கொண்டு போய்த் தலைமுடியை தட்டிவிட்டு, தகரக்குழாய் வழியாகப் பாய்ந்த தண்ணிருக்குள் தலையைக் கொடுத்தாள். அப்படியே மல்லாந்து கிணத்துச் சுவரில் சாய்ந்தபடி கால்களை நீட்டி, கைகளைப் பரப்பி மேலே இருந்து கொட்டிய நீரைச் சிணுங்கிச் சிணுங்கி அதைக் கடிப்பது போல் கடித்து, வாய்க்குள் வந்த நீரைச் செல்லஞ் செல்லமாய்க் கொப்பளித்து, கடலலை போல், வேக வேகமாய்ப் பாய்ந்த நீர், தன் மேனியில் பட்டு, பூப்பூவாய்ச் சிதறுவதை ரசித்தபடியே குளித்துக் கொண்டிருந்தபோது...
கோலவடிவு, ஆள் அரவம் கேட்டு, திடுக்கிட்டுத் திரும்பினாள். அந்த அச்சத்தைக் காட்டுவதுபோல் ஊசியாய் ஒன்றான உதடுகள், சிவப்புச் சிப்பியாய் மலர்ந்தன. அலங்காரி, தோளில் புடவைகளை முதுகுப் பக்கமும், மார்புப் பக்கமும் தொங்கப்போட்டு வலது கையில் கலர் கலராக ஜாக்கெட்டுக்களையும், வெள்ளைப் பாவாடைகளையும், ஈரஞ் சொட்டச் சொட்ட இடுப்போடு சேர்த்து அணைத்தபடி, கோலவடிவின் மேல் ஒரு ஈரப் பார்வையை வீசியபடி கேட்டாள்.
“ஒன்ன மாதிரி பெரிய இடத்துப் பொண்ணுவ இப்டிப் பட்டப் பகலுல பப்ளிக்கா குளிச்சா நல்லதாம்மா...”
“போங்கத்த... பொல்லாத பெரிய இடம்... பெரிய இடமுன்னு நம்மள நாமே சின்ன இடத்துல பூட்டிக்கது தப்பு...”
“அப்போ அத்தைய மாதிரி குளத்துல வந்து குளிக்கது...”
“குற்றாலத்து பெரிய அருவில குளிச்சாச்சு... ஐந்தருவில ஆடியாச்சு. நம்ம குளத்துல நீச்சல் அடிச்சாச்சு. ஆனால் எங்க பம்பு செட்டு தண்ணில தலையைக் கொடுக்கிற சுகம் வேற எதுலயும் வர்ல அத்தே... நீங்களும் ஒரு தடவ இதுல குளிச்சுப் பார்த்தா தெரியும்...”
“எல்லா வயலுலயும் குளத்துத் தண்ணி பாயுது... அதனால பம்ப் செட்டுக்கு வேலயில்ல. ஒங்க கிணத்துல அதுவும் குளத்தடிக் கிணத்துல இப்டி பம்ப்செட்ட போட்டு தண்ணிய கொட்ட வச்சால் பார்க்கவங்க என்ன நெனப்பாங்க...”
“அது அவங்க கண்ணோட கோளாறு...”
“ஒங்க அண்ணாச்சி திருமலை பார்த்தாமுன்னால்...”
“எங்கண்ணாச்சி கோபம் வச்சிருக்கிற மனசுல குணத்தையும் வச்சிருக்கவன்... அவன்தான் அப்பாவுக்குத் தெரியாம பம்ப் செட் சாவியைக் கொடுத்தான்...”
“ஒன்பாடு லக்கிதான்...”
கோலவடிவு குளித்து முடித்துவிட்டு, கீழே தொங்கிய முந்தானைச் சேலையைக் கசக்கிப் பிழிந்துவிட்டு, அதை வைத்தே தலையைத் தேய்த்துவிட்டு பம்ப் செட்டு அறைக்குள் போனாள். கால்மணி நேரம் கழித்து, மாம்பழ டிசைன் போட்ட புடவையோடும், மஞ்சள் கலர் ஜாக்கெட்டோடும் வெளி வந்தாள்.
“ஒங்கள ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேனா அத்த...”
“அப்படில்லாம் இல்ல... இந்த அழகுக் கோலத்த கண்ணுல பார்க்கதுக்கு எவ்வளவு நேரமுன்னாலும் கால நிறுத்தி வைக்கலாம்.”
“நல்லாத்தான் பேசுறிய...”
“ஆமா... ஒன் சேலையில ஈரம் தெரியல...”
“எப்டித் தெரியும்... வண்ணான் வெளுத்த புடவை... எனக்கு ஈரப் புடவையோட ஊரு வழியா நடக்கதுக்கு ஒரு மாதிரி இருக்கும்... துணி அப்படியே உடம்பு முழுசும் ஒட்டி சீ... அதனாலதான் குளிக்க வரும்போதெல்லாம் கூடவே ஒரு சேலயக் கொண்டு வந்துடுறது...”
கோலவடிவு, குளிக்கும்போது உடுத்த சேலையை, ரெண்டு தப்புத் தப்பிவிட்டு அதை சால் மேட்டில், ‘காயப்’ போட்டுவிட்டு, அதே மேட்டில் காய்ந்து கொண்டிருந்த துணிமணிகளை ஒவ்வொன்றாய் எடுத்து, அடுக்கிக் கொண்டிருந்தபோது, அலங்காரி அத்தை அங்கேயே, பூடகமாய்க் கேட்டாள்.
“மேலத் தெருவுல காத்துக் கருப்பன் குடும்பத்தச் சேர்ந்த அக்கினி ராசாவப்பத்தி நீ என்ன நெனக்கே...”
“ராமையா மாமா மகன்தானே... நல்லவனாச்சே... தானுண்டு... தன் வயலுண்டுன்னு இருக்கிறவன்... வம்பு தும்பு கிடையாதவன்னு அப்பா சொல்லுவார்... எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாதாம்...”
“ஓங்கப்பா சொன்னால் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்... பரவாயில்ல... ஒனக்குக் பிடிச்சவனே புருஷனா அமையுறதுல எனக்கு சந்தோஷம்...”
“என்ன அத்த சொல்லுதிய...”
“ஒன்னை அக்கினி ராசாவுக்கு கட்டி வைக்கறதா... ஒரு பேச்சு... அடிபடுது... அவங்களே ஒன்னைத் தரச் சொல்லி கேட்டாங்களாம்...”
“அய்யய்யோ... எங்கப்பா சம்மதிக்க மாட்டாரு... அவரு சம்மதிச்சாலும், நான் சம்மதிக்க மாட்டேன்...”
“என்ன கோலம்... அலங்கோலமாய் பேசுற... நீதான் அவனை நல்லவன்னு சொன்னே... கெட்ட பழக்கம் இல்லாதவன்னு சொன்னே...”
“நல்லவங்களா இருக்கிறவங்களை எல்லாம் ஒருத்தி விரும்பணுமுன்னு இல்ல. கெட்ட பழக்கம் இல்லாமல் இருக்கதுல சந்தோஷந்தான்... ஆனால் அதுவே நல்ல பழக்கமா ஆயிடாது...”
“அப்போ நல்ல பழக்கமுன்னா எதுதான்...”
“நாலுபேர் கிட்ட கலகலப்பா பேசணும்... அதுவோ வெத்துப் பேச்சாவப்படாது... சிரிக்கச் சிரிக்கப் பேசணும்... அதேசமயம் சிரிப்பாய் சிரிக்கும்படியாய் உளறப்படாது... கிண்டலா பேசணும்... அதுவே இளக்காரமா ஆயிடப்படாது... நாலு நாடு சுத்தியிருக்கணும்... அதேசமயம் நம்ம ஊர மறக்கவும் படாது... வம்புச் சண்டைக்குப் போகாத சாதுவா இருக்கணும்... அதேசமயம் வந்த சண்டைக்கும் பயந்து போகாத வீரம் இருக்கணும்... மினுக்கி மினுக்கி உடுக்கவும் படாது... அதேசமயம் உடம்புல ஒண்ணுமே இல்லாதது மாதிரி இந்த அக்னி ராசா போல வேட்டிய தார்ப்பாச்சு காய்ப்பு பிடிச்ச முட்டுக் காலுகள காட்டப்படாது... நல்லவனா இருக்கணும்... ஆனால் அப்பாவியாய் இருக்கப்படாது.”
“எம்மாடி, என்னமா பேசுறே... நான் ஒன்ன ஊமைன்னு நெனச்சேன்... ஒன் நெஞ்சில இத்தனை சங்கதியளும் இருக்குதுன்னு யாருக்கும் தெரியாது... நீ சொல்ற தகுதியெல்லாம் எங்க மச்சான் மகன் துளசிங்கத்துட்டதான் இருக்குது...”
“நான் யாரையும் குறிப்பாச் சொல்லல. ஒருத்தரைப் பார்க்கும் போது அப்படிப் பார்த்தவங்க மனசுல பயத்தையும் தரப்படாது... பாவமா இருக்கேன்னு பாக்கவங்க நினைக்கறது மாதிரியும் இருக்கப்படாது... அக்னி ராசாவப் பார்க்கும்போது பாவமாத்தான் தெரியும்...”
“எங்க துளசிங்கத்தைப் பாக்க பயம் வருமோ...”
“சீ... அப்டில்லாம் இல்ல... எத்த... இந்த கல்யாணப் பேச்சப் பற்றி கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க... எனக்குப் பயமா இருக்கு... நல்லவன் என்கிற ஒரே காரணத்துக்காவ அப்பா அவனை என் தலையில கட்டப்படாது...”
“ஒன் நிலம எனக்குப் புரியதும்மா... பொண்டாட்டிகிட்ட ஒருத்தர் ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்கப்படாது... போக்கிரியா இருக்கணும்... போக்கிரின்னு அத்தை எந்த அர்த்தத்துல சொல்லுதேன்னு புரியுதா... அடடே... வெட்கத்தப் பாரு... நீ புத்திசாலி... நான்தான் முட்டாள்... ஏமாந்துட்டேன் ஒரேயடியாய்...”
“யார்கிட்டே...”
“வேறு யார் கிட்டே... என் புருஷன் கிட்டதான்... வெட்டாம்பட்டில விளையாட்டுத்தனமா திரிஞ்சு கடைசில... வினையாயிட்டேன்... கட்டிக்க வந்த வெளியூர் பயலுகள உள்ளூர் பயலுவ கலச்சி விட்டுட்டாங்க... கடைசில எங்கம்மா, ‘இவள் கல்யாணமாவாமலே கிழவியாய் ஆயிடுவா போலிருக்கே. குருடோ, செவிடோ. நொண்டியோ, முடமோ எவனயாவது ஒருத்தன இழுத்துட்டு ஓடிப்போனாக்கூட சந்தோஷப்படுவே’ன்னு என் காதுபடவே இன்னொரு கிழவிகிட்டச் சொன்னாள். அந்தச் சமயம் பார்த்து இந்த ஆணுல அழகு மன்னன் அர்ச்சுன ராசதுரை... அதான் என் வீட்டுப் பேக்கன் கத்தரிக்காய் விற்க வந்தாரு... ஒனக்கு அக்னி ராசா எப்டித் தெரியுதோ அப்டித்தான் இந்த சீமையிலேயே இல்லாத சாமி... எனக்கு பாவமாகத் தெரிஞ்சது... சும்மா சொல்லப்படாது... என்னை சைக்கிள்ல தூக்கிட்டு வந்த அளவுக்கு நல்ல மனுஷன்தான்... ஆனால் கட்டிக் காக்கத் தெரியாத தெம்மாடி... சரியான டப்பா... பாவம் பாத்து பாவப்பட்டேன்... பாவியாவே ஆயிட்டேன்... எனக்கு வந்த நிலம ஒனக்கு வரப்படாது...”
கோலவடிவிற்கு உடம்பெல்லாம் நடுங்கியது. கையில் மடித்து வைத்த துணிகள் கீழே விழுந்து மண்ணை அப்பின. அலங்காரி, அவற்றை வாங்கி மீண்டும் தண்ணிரில் நனைத்துப் பிழிந்தாள். அவற்றைத் தோளில் போட்டபடியே, ஒவ்வொன்றாய் எடுத்து உதறினாள். அப்போது குளத்துக் கரையைப் பார்த்து விட்டாள்.
“எப்பாவு... துளசிங்கம்... இங்க வாடா...”
“நீ வாட... உடனே வா...”
“எப்பவுமே அவசரம்... இங்க வாடா...”
கோலவடிவுக்கு அத்தையின் குரல் வலுத்தும், துளசிங்கம் குரல் சிறுத்தும் கேட்டன. வேறொரு சமயமாக இருந்தால், “ஆம்புள இங்கே எதுக்கு” என்றிருப்பாள். இப்போது ஒருவேளை அக்னி ராசாவுக்குக் கழுத்தை நீட்ட வேண்டியதிருக்குமோ என்று கழுத்தோடு சேர்த்துத் தலை சுழல நின்ற கோலவடிவு, அப்படியும் பேசவில்லை, இப்படியும் பேசவில்லை.
துளசிங்கம் உருண்டோடி வருவதுபோல் ஓடோடி வந்தான். அவளருகே வந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றபடியே, ஒரு வரியின் கால்புள்ளி, அரைப்புள்ளி மாதிரி மூச்சு வாங்கிப் பேசப் போனான். வழக்கம் போல் அலங்காரி, முந்திப் பேசினாள்.
“ஒன்ன நான்தான் கடிச்சு தின்னுவனா... இல்ல... இந்தக் கோலவடிவுதான் கடிச்சுத் தின்னுடுவாளா... ஏண்டா இப்டி வரமாட்டேன்னே...”
“தலைக்கு மேல ஆயிரம் வேலை இருக்குது... இப்பவே மெட்ராஸ் போறேன்... சிமெண்ட் கம்பெனி ஏஜெண்ட்களோட கூட்டம் நடக்குது... ஒன்கிட்ட சொல்லாமப் போக முடியுமா... அதுக்கு வரதுக்கு பத்து நாளு ஆகும்... ஒன் வீட்டுக்குப் போனேன்... நீ குளிக்கிற மதகுக்கு வந்தேன்... சித்தியப் பார்க்காமல் போகப் போறேமேன்னு கவலையோட கரையில நடந்தால் ஒன் குரல் கேட்குது... இதோ சிமெண்ட் கடையில சாமி கும்பிட்ட குங்குமம்... சீக்கிரமா... வாங்கு... நேரமில்ல...”
“ரெயிலுக்குத்தான் இன்னும் நேரமிருக்கே... ஏன் இப்டி பட்டையில போட்ட நண்டு மாதிரி துடிக்கே...?”
“ரெயிலுக்கு நேரம் இருந்தாலும் திருமலை இங்க வாரதுக்கு அதிக நேரம் இல்ல. ‘என் வயலுக்குள்ள ஒனக்கென்னடா வேலை... என் தங்கச்சி நிற்கான்னு தானே போனே’ன்னு வம்புக்கு வருவான்...”
“ஒன்னை மாதிரி அவனும் முன்கோபி... ஒன்னை மாதிரி அவனும் நல்லவன்... சரி... சரி... குங்குமத்த தா...”
“நான் மட்டும் வச்சிக்கிட்டா எப்படி...? அவளுக்கும் கொடு... நீயே அவள் நெற்றில வைடா...”
“ஒனக்கு வேற வேல இல்ல... வேற வினயே வேண்டாம்...”
“நாலு நாடு சுத்தியும் கடைசில ஒன் சட்டாம்பட்டி புத்தி ஒன்னவிட்டுப் போக மாட்டேங்கே... கொளுந்தியா நெற்றியில குங்குமம் வச்சால் என்ன தப்பு... ஒன்னைவிட வயசுல சின்னவள்... அவள் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்... அவளை வாழ்த்துற மாதிரிதான் உன்னை வைக்கச் சொல்லுதேன்...”
துளசிங்கம் கோலவடிவைப் ஏறிட்டுப் பார்த்தான்... அவளோ, தரையில் பெருவிரலை வைத்துக் கிறுக்கிக் கொண்டிருந்தாள்.
எப்படிப்பட்ட பாட்டாக இருந்தாலும், அது சினிமாப் பாட்டாக வந்துவிட்டால் போதும் என்று நினைக்கும் கவிஞனைப் போல, பிரசுரமாவதாய் இருந்தால் எவ்வளவு மோசமாகவும் எழுதத் தயாராகும் எழுத்தாளியைப் போல, அலங்காரி தான் நடத்த நினைத்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டும் வகையில் தன்னைத்தானே பிரமிப்பாய் பார்த்தபடி, பெருமிதமாய் நின்றாள்... இப்போது அவளுக்குக் கோல வடிவு, துளசிங்கம், பேச்சியம்மா, முதலிய ஆட்களைப் பற்றிய எண்ணமே இல்லை. ஒரு மொழியின் எழுத்துக்களைப் படித்துவிட்டு, அவற்றை மனதுக்குள் சேகரித்து விட்டு மறந்து விடுவோமே, அப்படி ஆண்டவன் எழுதும் தலையெழுத்துப் போல், தானும் தன்னாலேயே அழிக்க முடியாத ஒரு எழுத்தைத் தலையெழுத்துக்கு மேல், தலையாய எழுத்தால் எழுத முடியும் என்ற பெருமிதத்தில் கோலவடிவை உற்றுப் பார்த்தாள்... அன்று ஆலமரத்தடியில் அவள் எதிர்த்துப் பேசியதுபோல், ஒருவேளை இன்றும் எதிர்த்துப் பேசலாம் ஒன்று ஓரளவு பயந்தவளுக்கு, கோலவடிவின் மெளனம் மனதைக் கொடி கட்டிப் பறக்கச் செய்தது... கோலவடிவின் முதுகைப் பிடித்து, துளசிங்கம் பக்கமாகத் தள்ளி விட்டபடியே பேசினாள்.
“இதுல யோசிக்கதுக்கு என்ன இருக்கு கோலம்...? குளிச்சிட்டு லட்சுமி மாதிரி தெரியுற ஒன் முகத்துல குங்குமம் வச்சால், நீ மகாலட்சுமி மாதிரி தெரிவே... துளசிங்கம் காத்திருக்கான் பாரு... ஆயிரத்தெட்டு வேலைய விட்டுட்டு ஒனக்காவ நிக்கான் பாரு... நீ நிமுத்துனாதான அவன் குங்குமம் வைக்க முடியும்... காலங்காத்தால எதை வேணுமுன்னாலும் வேண்டாமுன்னு சொல்லலாம்... குங்குமத்த அப்டித் தட்டலாமா... சும்மாத்தான் வைக்கப்போறான்... தலய நிமுத்து கோலம்...”
கோலவடிவு கோடு போட்டுக் கொண்டிருந்த பெருவிரல் சுழற்சியை நிறுத்தாமல், மனதுக்குள் சுழன்று கொண்டிருந்தாள்... ‘குங்குமம் வைக்கிறது நல்லதுதான்... ஆனால் இவர்... இவரு எப்டி வைக்கலாம்... எப்டி என்னைத் தொடவிடலாம்... விடப்படாது... கூடவே கூடாது... பாவம் தப்பா நெனப்பாரோ... தப்பா நெனப்பாரேன்னு தப்பு செய்ய முடியுமா...? வேணுமுன்னா அவரு கைபடாமல் வைக்க முடியுமுன்னா வைக்கட்டும்... அதெப்டி முடியும்... இதை அத்தை சொல்லுறதுல ஒரு அர்த்தம் இருக்கே... சி நேருக்கு நேரா... அவரு ஒன்னும் வைக்கப்படாதுன்னு எப்டிச் சொல்றதாம்... தயவு தாட்சண்யமுன்னு ஒன்று இருக்குதுல்லா... அவரு குங்குமம் வைக்கிறதால வேற அர்த்தம் எப்டி வரும்... வரவே வராது... வரவிடவும் படாது... அதுக்காக ஒரு ஆம்புள அதுவும் வாலிபன் ஒரு பொம்புளைக்கு அதுவும் சின்னஞ்சிறுசுக்கு... சீ...’
துளசிங்கத்திற்குக் கொஞ்சம் எரிச்சல் வந்தது... சற்று அவசரம் வந்தது... அந்த இரண்டும் கலக்கப் பேசினான்...
“எனக்கு நேரமாவுது சித்தி... நீயே அவளுக்கு வச்சிவிடு... நான் வாறேன் சித்தி...”
கோலவடிவு அவனை அவசர அவசரமாக ஏறிட்டுப் பார்த்தாள்... பார்த்த விழிகளை முகத்தைத் தாவிப் பார்த்தபடியே நின்றன.. அலங்காரி அந்தச் சூழ்நிலையைச் சொல்லிக் காட்டினாள்.
“ஒனக்கு மூளையே கிடையாதுடா... ஒரு பொண்ணோட கண்ணசைவில இருந்தே அவளோட மனசைப் புரிஞ்சுக்கத் தெரியல... அதுவும் சரிதான். முன்னப்பின்ன எந்த பெண்ணோடவும் பழகியிருந்தால் தானே ஒனக்குத் தெரியும்... நீதான் ஏகப் பொண்ணு விரதனாச்சே... சரிப்பா... நம்ம கோலவடிவு என்கிற நெனப்புல... அவள் நல்லா இருக்கணும் என்கிற எண்ணத்துல வைடா... குங்குமத்த வைடா கூறுகெட்ட குப்பா...”
இடது உள்ளங்கையில் ஆலிலைமேல் இருந்த குங்குமத்தை, ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் இணைத்து எடுத்து, அவன் கரம் கோலவடிவின் நெற்றியில் போகப் போனபோது அவள் சிரித்துக் கொண்டே குனிந்தாள். சிணுங்கிக் கொண்டே பின்வாங்கினாள். அலங்காரி அவள் முதுகைப் பிடித்து நகர்த்தி, மோவாயைச் சற்று தூக்கி விட்டுவிட்டுக் கையை எடுத்தாள். அந்த முகம் உயராமலும், தாழாமலும் இருந்ததில் அவன் சந்தோஷப்பட்டபோது...
துளசிங்கம் வலது கையில் நான்கு விரல்களைக் கோலவடிவின் தலையில் பரப்பிக் கொண்டு பெருவிரலால், அவள் நெற்றியை அழுத்தினான்... அந்தக் குங்குமப் பதிவை வட்டமாய்ப் பிரசுரிப்பது போல், பெருவிரலை அவள் நெற்றிப் பொட்டில் லேசாக சுழலவிட்டு, கரத்தை எடுத்தான். உடனே அலங்காரி குலவையிட்டாள். எங்கேயோ பார்த்த காகம் எழுந்து பறந்தோடும்படி வாய்க்குள் நாக்கை மணியடிப்பதுபோல் சுற்றிவிட்டு, “இனிமே கோலவடிவுக்கு நல்ல காலம்தான்” என்று சொல்லி லேசாய் நிறுத்திவிட்டு, “கோலம் இனிமேல் யார்கிட்ட வாழ்க்கைப்பட்டாலும் அது நல்லாவே அமையும்” என்றாள் எச்சரிக்கையாக.
கோலவடிவு, அங்குமிங்குமாய்ப் பார்த்தாள்... கரையில் யாரையும் காணோம்... கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காணோம்... அவரு என்ன தொட்டத... ஏய் அவரு எங்கே தொட்டாரு... குங்குமம் வச்சாரு... பூசாரி வைக்கது மாதிரி... அவ்வளவுதான்... சரி போவட்டும்... நல்ல வேள... யாரும் பாக்கல... குங்குமம் வச்சதும் நல்லவேள... யாரும் பாக்காததும் நல்லவேள...
கோலவடிவு ஆடாது அசையாது சிரித்து நின்றாள்... மீண்டும் பெருவிரலால் தரை கிழித்து கவிழ்ந்த தலையில் நிமிர முயன்ற கண்களை அரைவட்டம் போடவைத்து, குங்குமம் வைத்தவனை சூட்சமச் சிரிப்போடு பார்த்தாள். அலங்காரி விளக்கினாள்.
“ஏய் மவனே... துளசிங்கம்... என் மருமகள்... என் ராசாத்திக்கு இந்த குங்குமம் எவ்வளவு அழகா இருக்குன்னு பாருடா... ஒரேடியாய் சிமிண்டு உரமுன்னு அலையாதடா... அழக ரசிக்கவும் பழகிக்கடா... என் ராசாத்திக்கு குங்குமம் நெருப்பு நிலா மாதிரி இருக்கதப் பாரு... குங்குமத்துக்கு மத்தில வெத்து இடம் இருந்தா அது விளங்காதுன்னு அர்த்தம்... நம்ம கோலத்துக்கு முழுசா இருக்கு... அதிர்ஷ்டக்காரி... பாருடா... எப்டி இருக்குன்னு...”
“நீயே பார்த்துக்கிட்டு இரு... எனக்கு ரயிலுக்கு நேரமாயிட்டு... நான் வாறேன்...”
கோலவடிவு தலையை நிமிர்த்தியபோது, துளசிங்கம் கிணற்றைத் தாண்டி போய் வாய்க்கால் பக்கம் போய்விட்டான். அவளுக்குக் கோபம்... போறேன்னு என்கிட்ட சொல்லலியே... சித்தி போறேன்னு சொல்லாம போறேன்னு பொதுப்படையாச் சொன்னதுல இருந்து அவரு எனக்கும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கார்னு அர்த்தம்... அய்யய்யோ நான் என்னெல்லாமோ நினைக்கேனே... ஏதோ முகத்த நிமுத்துனேன்... ஏதோ குங்குமம் வச்சார். அதோட சரி... அதுக்கு மேல... அர்த்தப் படுத்துதல்... அது... தப்பு... தப்பு...
அலங்காரிக்கு கொஞ்சம் பயம் வந்தது... கோலவடிவை, ஒரு பக்கமாய் சாய்த்து பிடித்து அணைத்தபடியே கெஞ்சுவதுபோல் கேட்டாள்.
“வீட்ல குங்குமம் வச்சத சொல்லுவியோ... எப்பா... என் ராசாத்தி எப்படி இருக்காள்...? இப்ப தான் பிறந்த குழந்தை மாதிரி... இந்த ஊரு நாகரீகம் இல்லாதது பாரு... நல்லுக்கும் கெட்டதுக்கும் வித்தியாசம் பாராதது பாரு... அதனால்தான் சொன்னே... சொல்லமாட்டல்லா...”
அலங்காரி, அவள் முகத்தை நிமிர்த்தப் போனபோது, கோலவடிவு அவள் பிடியில் இருந்து திமிறி, விலகி, நின்று கொண்டாள்... குங்குமம் அழிஞ்சுடப்படாதே... கலையுறது சகசந்தான்; ஆனால் காலங்காத்தாலயே கலையப்படாதே...
பம்ப் செட்டில் தண்ணிர் பீறிட்டுப் பாய்ந்தது... ஸ்விட்சை ஆப் செய்யப் போன கோலவடிவு, சரல் மேட்டில் கிடந்த மூங்கில் கழியை எடுத்து, தூர நின்றபடியே ஸ்விட்சை நிறுத்தினாள்... இல்லையானால், தண்ணிருக்குப் பக்கத்துல போயி, அது நெத்தில தெறிச்சு குங்குமம் கரைஞ்சு... சீ... கரையத்தான் செய்யும்... ஆனால் மத்தில கரைஞ்சு வட்டக்கோடு போட்டது மாதிரி இருக்க அபசகுனமுன்னு அத்த சொல்றாளே... அதுக்காகத்தான் வேற எதுக்காகவும் இல்ல... ஆமா... இல்ல... இல்ல... இல்லவே இல்லை...
அலங்காரி, இந்தச் சமயம் பார்த்து, தனது தோளில் கிடந்த புடவையை எடுத்து, உதறினாள்... அதிலிருந்த தண்ணிர் கோலவடிவின் முகத்தல் தெறித்தது... கோலம் ஆடிப்போய்விட்டாள்... குங்குமம் கரைந்திருக்குமோ, அத்தைகிட்ட கேட்போமா? வேண்டாம்... முகத்த நிமுத்துவோம்... அழிஞ்சிருந்தா அத்தயே சொல்லுவாளே... குங்குமம் வைக்கும்போது நாலு விரலால தலையை எப்டி தட்டுனாரு... தட்டலடி தட்டல... ஒனக்கு தட்டுனது மாதிரி தெரிஞ்சுது... அவரு ஒண்ணும் தட்டல...
கோலவடிவு அலங்காரிக்கு முன்னால் போய் நின்றாள். முகத்தை நிமிர்த்திக் காட்டினாள். அவளோ தன் பணி அப்போதைக்கு முடிந்து விட்ட திருப்தியில், உதறிய சேலையை வளைத்து இடது கையில் குறுக்காய்ப் போட்டபடி இப்போது பாவாடையை உதறினாள். அத்தையிடமிருந்து துள்ளிக் குதித்த கோலவடிவு கையோடு கண்ணாடி கொண்டு வராததுக்காக வருந்தினாள். பிறகு ஒரு யுக்தி வந்த மகிழ்ச்சியில் கமலைக் கிடக்கில் குனிந்து பார்த்தாள். அதில் தங்கி நின்ற நீரில், அவள் முகம் தெரிந்தது. குங்குமத்தோடு... இடையிடையே வட்ட வட்ட சின்னச் சின்ன கண்ணாடி பதிச்ச புடவ அதை வாங்கணும்... கோணச்சத்திரத்துல கிடைக்காதே... மெட்ராஸ்ல துளசிங்கம் மச்சானை வாங்கி... அடியே கோலம்... ஒனக்கு கொழுப்பு ஜாஸ்திடி...
“நாம போவோமா ராசாத்தி... ஒன் மச்சான் வச்ச குங்குமம் ஒனக்கு எப்டி ஜொலிக்குது தெரியுமா... யாரு கிட்டயும் விளையாட்டுப் போல சொல்லிடமாட்டியே... அடி என் மல்லிகப்பூவே... ஒன்னப்பத்தி எனக்குத் தெரியாதா... ஆனாலும் சும்மா கேட்டேன்...”
கோலவடிவும், அலங்காரியும் இணைந்து நடந்தார்கள். வாய்க்கால் வரப்பிற்கு வந்தபோது, ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். கோலம் கண்ணில் படர்ந்த முடியை ஒதுக்கினாள். பிறகு பயந்தவள் போல், ஒதுக்கிய கரத்தை உற்றுப் பார்த்தாள். அங்குமிங்குமாய் ஆட்டிப் பார்த்தாள் கையில் குங்குமம் தெரியல. முடியை ஒதுக்குற வேகத்துல நல்ல வேள கையி குங்குமத்துக் கிட்ட போகல... ஒருவேளை மேல் பக்கமா உச்சந்தலைக்குப் போய் இருக்குமோ... இருக்காது... இருக்காது... எப்படிப்பட்ட குங்குமம் இது... அய்யய்யோ... அவரு வச்சார்னு சொல்லல... கலப்புல்லாத குங்குமமுன்னு சொல்ல வந்தேன்... அவ்வளவுதான்... அவ்வளவேதான்...
இருவரும் கரையில் ஏறினார்கள். காற்றில், கோலவடிவின் தலைமுடி, சரியாக நெற்றியில், அந்தக் குங்குமப் பொட்டின் மேல் விழுந்தது... முடியைத் தொட்டால் குங்குமம் போயிடும்... தொடாட்டா ஒருவேள முடியே கலச்சிடப்படாதே... அத்தை கிட்டே சொல்லி அந்த முடிய பதமா எடுக்கச் சொல்லுவோமா... சீ... தப்பு... தப்பில்ல... சரிதான்... ஆனால் அத்தை தப்பா நினைக்கப்படாது... குங்குமத்துக்கே இப்படி குதிக்காளேன்னு நெனச்சிடப்படாது...
கோலவடிவு, குங்குமமாய்ச் சிரித்தபடி, அலங்காரிக்கு இணையாக நடந்தவள், சற்றே பின்னடைந்தாள்; தலையை அங்குமிங்குமாய் ஆட்டி, நெற்றியில் பட்ட முடியை தலைக்குக் கொண்டு போக சர்க்கஸ் செய்து பார்த்தாள்... இதனால், மேலும் ஒரு கற்றைத் தலைமுடி நெற்றியில் வந்து விழுந்ததுதான் மிச்சம்... இணையாக நடந்து கோலவடிவு, எங்கே என்பது போல அலங்காரி திரும்பிப் பார்த்தாள்... அவளையும் பார்த்தாள்... அவளுக்குப் பின்னால் அக்னி ராசாவின் தந்தை ராமையாவையும் பார்த்தாள்... பின்னர் நின்ற இடத்தில் நின்றபடியே பேசினாள்.
“கோலம்... அதோ ஒன்னக் கட்டிக்கப் போறதா பேச்சு அடிபடுற அக்கினி ராசாவோட அப்பா ராமையா... வாராரு... நான் நைஸாாப் பேசி... ஊசாட்டம் பாக்கேன்... நீ வீட்டுக்குப் போ...”
“அத்த கல்யாணம் நடக்கப்படாது...”
“அத்தை எதுக்கு இருக்கேன்... நீ தைரியமாய் வீட்டுக்குப் போ...”
கோலவடிவு முன்னேறினாள். காலில் முள்பட்டிருப்பது போல், ஒரு காலைத் தூக்க முடியாமல் தூக்கி அதை இடுப்போடு சேர்த்து இணைத்தபடியே நின்ற அலங்காரி, ராமையா வந்ததும் காலைக் கிழே போட்டாள். கூனையைத் தலையில் சுமந்து, அகத்திக் கீரையைக் கையில் பிடித்தபடியே வந்த ராமையாவிடம் பேச்சுக் கொடுத்தாள். இந்த ராமையா மச்சான் யாருடனும் பேச மாட்டார். பெண்ணென்றால் காத தூரம் ஒடுவார். ஆனால் அவருக்கும் இந்த அலங்காரியிடம் ஒரு சின்னச் சபலம்.
“வயலுக்கு போயிட்டா வாரீரு மச்சான்...”
“பாத்தா எப்டிப் பிள்ள தெரியுது...”
“மைனர் மாதிரி தெரியுது... போவட்டும்... என் மகன் அக்கினி ராசாவுக்கு எப்போ கல்யாணத்த வைக்கப் போறிரு...”
“இந்த ஆவணில முடிச்சுடணும்... ஏதாவது துப்பு இருந்தா சொல்லு...”
“இடுப்புல புள்ளய வச்சுட்டு எங்கெல்லாமோ தேடுனாளாம்... பழனிச்சாமி அண்ணாச்சி மகள் கோலவடிவு எதுக்கு இருக்காள்...?”
“ஆமாம். அதுவும் நல்ல யோசனைதான்... ஆனால் அவள் பத்து படிச்சியிருக்காள்... இந்தப் பயமவனுக்கு கையெழுத்துப் போடவே வராது.”
“வாராண்டாம்... எதுக்கு வரணும்... இந்தக் காலத்துல பொம்புள எண்ணிக்க கூடிப்போச்சு... அதனால காலேஜ் படிச்ச பொண்ணு கூட கார் டிரைவர கட்டுறாள்... சாண் பிள்ள ஆனாலும்... ஆண்பிள்ள ஆண்பிள்ளதான்... ஒங்க குடும்பம் பெரிய குடும்பம்... கோலவடிவுதான் அதக் கட்டிக் காப்பாத்த முடியும்...”
“இந்த நெனப்பு எனக்கு வராமப் போயிட்டு பாரு... இனிமேல் என் மகன் அக்னிராசாதான் மாப்பிள்ள... கோலவடிவுதான் பொண்ணு...”
அலங்காரி அதை ஆமோதிப்பவள் போல் இப்போதும் குலவையிட்டாள் - செத்த வீட்டில் சங்கு ஊதுவது மாதிரி...
--------------
அத்தியாயம்- 7
அதே ஆலமர அடிவாரம்.
சூரியன் வெளியே உள்ளவர்களைச் சுடப்போவது போல் பார்த்தாலும், அந்த மரத்தடிப் பெண்களை, கிளைகளுக்குள்ளும், இலை தழைகளுக்குள்ளும் மறைந்திருந்து சுகமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாப் பெண்களும், மத்தியில் ஒரு ரேடியோ டிரான்ஸிஸ்டரை வைத்து ‘மச்சானைப் பாத்தீங்களா’வை ரசித்துக் கேட்டுக் கொண்டிந்தார்கள். அந்தப் பாடலுக்கு ஏற்ப, பட்டும் படாமலும், இருந்த இடத்தில் இருந்தபடியே ஆடினார்கள். அந்த பாட்டோடு பாட்டாய்ப் பாடி, தங்கள் குரலைவிடப் பாடியவள் குரல் அப்படி ஒன்றும் பெரிசா இல்லை என்பதுபோல் நினைத்துக் கொண்டு சில பெண்கள் அந்தப் பாட்டின் ஒரு வரிக்கு அடுத்த வரியைப் பாடினார்கள்.
“ஏமுழா... ரோசாப்பூ... சினிமாப் பாட்ட கேக்கவிடேமிழா. நீ பாடுறதவிட கழுத கனச்சால் நல்லா இருக்கும்.”
“நீ குட்டிச்சுவர் பக்கத்துல நிக்கிறவ. ஒனக்கு அப்படித்தான் தெரியும். அதோட ஒன் குரல விட என் குரலு மோசமில்ல."
வாடாப்பூவும், ரோசாப்பூவும் சங்கீதத்தைச் சண்டையாக்கப் போனபோது, அலங்காரி இன்னொரு பெண்ணோடு வந்து பேசிக் கொண்டே உட்கார்ந்தாள்.
“நம்ம ரோசாப்பூ குரலுக்கு ஏதுழா ஈடு. எங்க துளசிங்கத்துக் கிட்ட சொல்லி அவள சினிமாவுல பின்னணிப் பாடகியாய் போடலாமுன்னு யோசித்துக்கிட்டு இருக்கேன்.”
“இவ பாடுனான்னா ரேடியோ பெட்டியே வெடிச்சிப் போவும்.”
“இப்படித்தான் சுசீலாவயும் சொன்னாவுளாம். சானகியவும் நெனச்சாவளாம் வேணுமுன்னால் பாரேன். துளசிங்கம் வரட்டும்.”
“இது என்ன புதுசா லீலாவதிய கூட்டிட்டு வந்திருக்கே.”
“ஏன் வரப்படாதா. மேலத்தெருக்காரிவ வரும்போது, கீழத் தெருக்காரி வரப்படாதா.”
“ஒரே ஊரையும் ஏன் சித்தி துண்டு போடுற? ஒரு நாளும் வராதவளாச்சேன்னு கேட்டோம்.”
“நேத்து இங்க முழுசா வரலியா. இன்னைக்கு வேற கடையில பீடி போடணுமா. என் கொழுந்தன் மவளுக்கு சுத்தத் தெரியும். சொல்லிக் கொடுத்திருக்கேன். அதனால கும்புட்டுக் கூத்தாடி கூட்டியாந்திருக்கேன்.”
“பீடி நல்லா இல்லாட்டா. ஏசெண்டு பீடிகள கழிச்சிடப் போறான். அப்புறம் நஷ்டம் ஒனக்குத் தான்.”
“என்ன அம்மாளு அப்படிப் பேசுறே. பீடி ஏசெண்டு பால்பாண்டிக்கு இவிய பீடியக் கழிக்கிற தைரியம் வருமா.”
இப்படிச் சொன்ன ராசகிளி ஏன் சொன்னோம் என்பது மாதிரி நாக்கைக் கடித்தபோது, இந்தப் பெண்கள் அவளைச் சூதோடு பார்த்துவிட்டு, வாயற்றவர்கள் போல் பேச்சுக்குத் திடீர் பிரேக் போட்டதால், அப்படிப் போடப்படும் வாகனச் சக்கரம் மாதிரி இவர்கள் நாக்குகளும் குளறியபடியே உளறின. இதைப் புரிந்து கொண்ட அலங்காரி, சந்திராவைப் பார்த்துப் பேச்சை மாற்றினாள்.
“சந்திரா... என் மருமவளே... ஒன்ன பழையபடியும் இங்க பாக்கதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.”
சந்திரா, அலங்காரி அத்தையை வைத்தகண் வைத்தபடி பார்த்தாள். அம்மா எப்படித் திட்டினாலும் இந்த அத்தை மனசில வச்சுக்கலியே. என்கிட்ட கொஞ்சங்கூட கோபத்தக் காட்டலியே. இந்த, கோலவடிவுக்காவ, அம்மா அத்தைய அப்டிப் பேசியிருக்கப் படாது. கடைசில எந்தக் கோலவடிவுக்காவ பேசுனேனோ, அந்தக் கோலவடிவே கால வாரிட்டாளே.
“மருமவளே சந்திரா. அத்தைக்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு கோவமா.”
“இல்லத்தே... இல்ல. எனக்குப் புத்தி வந்துட்டு. எந்த நாயி சந்தைக்குப்போனா நமக்கென்ன. நீங்க. எதையும் மனசுல எடுத்துக்காதிய அத்தே.”
“அப்டி எடுத்திருந்தா ஒன்கிட்ட பேசுவனா.”
அலங்காரி கொழுந்தன் மகள் லீலாவதியின் விலாவில் இடித்தாள். “சொல்லிக் கொடுத்ததை சரியாய் செய்யேமிழா. எருமைமாடு” என்றாள் ரகசியமாக. வானொலிச் சினிமாப் பாட்டில் மெய்மறந்து போன லிலாவதி, சித்தி இடித்த இடி தாங்க முடியாமல் விழித்தாள். எல்லாப் பெண்களும் பீடி சுற்றுவது பற்றி, அவள் சொல்லிக் கொடுத்ததாக நினைத்தபோது அவள் புரிந்து கொண்டாள். நேத்து ராத்திரி சித்திக் சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஒப்பித்தாக வேண்டும். இல்லாட்டா நம்ம விவகாரத்த சித்தி அவுத்து விட்டுடுவாள்.
என்றாலும் எதிர்கால அலங்காரியாய் ஆவதற்குரிய அத்தனை தகுதிகளும் தன்னிடம் இருப்பதுபோல், லீலாவதி சாமர்த்தியமாகப் பேசினாள்.
“அப்படிச் சுத்து. இப்படிச் சுத்துன்னு சொல்லேன் சித்தி. இதுக்குப் போயி ஏன் எருமைமாடுன்னு ஒரு வாயில்லா சீவன வையுறே. இதோ பார்... நல்லாத்தானே சுத்தியிருக்கேன். நல்லா இருக்கதை தலையாட்டித் தான் சொல்லுவே. வாயால சொல்ல மாட்டே. ஆமா ஒங்களுக்குத் தெரியாதா... நம்ம ராமையா பெரியய்யா மவனுக்கும் பழனிச்சாமி மாமா மகள் கோலவடிவுக்கும் கல்யாணம் நடக்கப் போவுதாமே. ரெண்டு வீட்லயும் தீர்மானம் செய்தாச்சாம். இனிமே கை நனைக்க வேண்டியதுதான் மிச்சமாம்; சித்தி இந்தப் பீடியாவது நல்லா இருக்குதா. சித்தி...”
“நான் சொல்லிக் கொடுத்ததாச்சே... நல்லா இல்லாம இருக்குமா.”
“என்ன சொன்ன... கோலவடிவுக்கும் அக்னி ராசாவுக்குமா... இருக்காது.”
“ஏன் இருக்காது. கோலவடிவுக்கு அறுபது பவுன் நகை செய்திருக்கு. முப்பதாயிரம் சருள் கொடுப்பாங்க. அக்னி ராசாவுக்கு அவரு பங்குக்கே மூணுகோட்டை விதப்பாடு இருக்குது. ராமையா, காத்துக்கருப்பன் குடும்பத்துல பெரிய ஆளு. பழனிச்சாமி மாமா கரும்பட்டையான் கூட்டத்துல முதல் தல. ஏன் கூடாது...”
“எப்படி இருந்தா எனக்கென்ன. இருக்காட்டா எனக்கென்ன. கொடுப்பார் இஷ்டம். கொள்ளுவார் இஷ்டம். ஆனாலும்...”
எல்லாப் பெண்களும், ஆச்சரியப்பட்டபோது, சந்திரா கத்திரித்த இலையைக் கீழே போடாமலே யோசித்தாள். கோலவடிவு மேல் அவளுக்கு ஆயிரந்தான் கோபம் இருந்தாலும் அவளை அந்தப் ‘பெத்தட்டி’ அக்னி ராசாவோடு சேர்த்துப் பார்க்க முடியவில்லை. அதை விட அக்காவை வெட்டிப் போட்டுடலாம். அதோடு அக்கினி ராசாவுக்குக் கோலவடிவு போயிட்டால், அந்த அக்கினிய விட மோசமான அவன் தம்பி ‘பல்லனுக்கு’ என்னைக்கூட கட்டி குடுக்கலாமே. இந்தப் பேச்சு இருக்கோ இல்லியோ. இருக்கப் படாது. பெரியப்பா சம்மதிக்கவே மாட்டார். ஒரு வேள ராமய்யா மாமாவுக்கு அப்டி ஒரு ஆச இருக்கும். இந்த அக்கினி ராசாவுக்குத்தான் ஆச கீசன்னு எதுவுமே கிடையாதே.
சந்திரா, பதிலளிப்பது மாதிரியல்ல, பதிலடிப்பது போல் பேசினாள்.
“ஆலம்பழத்த அண்டங்காக்கா கொத்தவிட மாட்டோம். படியாத முட்டாளுக்கு படிச்சவள குடுப்பமாக்கும். போயும் போயும் அக்கினி ராசா, கோலவடிவுக்கா? எங்க அக்கா மலைன்னா, அவரு மடு. வெத்துப் பேச்சு பேசாதிய. எங்கக்கா கால்தூசிக்கு அக்கினி ராசா பெறமாட்டார்.”
அந்தப் பெண் கும்பலில் மேலத் தெருவைச் சேர்ந்த அக்கினி ராசாவின் சொக்காரப் பெண்கள் இருந்தார்கள். அந்த ராசாவைப் பற்றி அவள் சொன்னது சரிதான் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள், அங்கே விட்டுக் கொடுக்கத் தயாராய் இல்லை.
“எங்க அக்கினி ராசா கால்தூசிக்கு ஒங்க கோலவடிவு பெற மாட்டாள். சும்மா ஒனக்குத்தான் பேசத் தெரியுமுன்னு பேசாதே. எனக்கும் பேசத் தெரியும். ஒங்க பெரியப்பா மகன் திருமலை என் கால்தூசிக்கு பெறமாட்டான்.”
“சரி... சரி... யாரையும் யாரும் கழிச்சுப் பேசப்படாது. ஒவ்வொருத் தரும் அவரோடு அப்பன் அம்மாவுக்க பிறந்தது மாதிரி இருப்பாவ.”
மேல ஊரும் கீழ ஊரும் மோதிக் கொண்டு கிளிகள் போல கத்தியபோது அலங்காரி மகிழ்ந்து போனாள். ஆக, அக்கினிராசா, கோலவடிவு கல்யாணப் பேச்சு சம்பந்தப்பட்ட குடும்பங்களில் அடிபடுதோ இல்லையோ சந்திக்கு வந்துவிட்டது. இந்தப் பெண்களே இந்தச் சேதியைத் தெருத்தெருவாய், வீடு வீடாய், ஆள் ஆளாய்ப் பரப்பி விடுவார்கள். இந்த முட்டாப்பய மவள் லீலாவதி இதுக்குமேல எதுக்கு இருக்காள். அதுவும் கழிவு பீடியாய் சுத்துக்கிட்டு.
சந்திராவால் தாள முடியவில்லை. மீண்டும் எகிறினாள்.
“எங்கண்ணாச்சிய சொன்ன ஒன் வாய...”
“நிறுத்துங்கழா... நிறுத்துங்க... இனிமேல் எது பேசினாலும் வெறும் பேச்சுத்தான் பேசணும். நம்ம துளசிங்கம் தம்பி வந்தாலாவது அவன் வாயைக் கிளறி, கமலகாசன் சரிகாவ பண்ணிக்கிட்டது, கார்த்திக் ஸ்ரீபிரியாவை கைவிட்டது, இந்த மாதிரி முக்கியமான விஷயங்களைப் பேசலாம். இத விட்டுட்டு வெட்டிப் பேச்சா பேசி அடிதடி வரும்போலுக்கு...”
அந்தப் பெண்கள் மத்தியில் இருந்தாலும், எங்கேயோ இருப்பதுபோல் இருந்த ரஞ்சிதம், பீடி சுத்துவதை நிறுத்திவிட்டு, உரக்கப் பேசினாள்.
“சினிமாக்காரங்களப் பத்தியும், சினிமாக்களப் பத்தியும் பேசிப் பேசியே நம்ம வாழ்க்க சினிமாவாப் போச்சு. சினிமாவே வாழ்க்கையாச்சு. நம்மை மாதிரி ஏமாளிவ இருக்கதாலதான் அவங்களோட அற்ப விஷயங்களை பெரிசா எழுதி நம்மளயும் பேச வைக்கானுவ. அவனுகளுக்காவது காசு கிடைக்குது. நமக்குத் தான் சினிமாக்காரங்களை பேசிப் பேசி உள்ளூர் பிரச்சினை மறந்து போச்சு. சதா சினிமாக்காரனயும், சினிமாக் காரியயும் நெனச்சு நெனச்சு நம்ம ஊரில நடக்கிற அக்கிரமம் அநியாயத்தை பேசக்கூட மாட்டக்கோம்.”
“அப்படி என்ன பெரிசா அக்கிரமம் நடக்கு.”
“இதைக்கூட சொல்லிக் காட்ட வேண்டியதிருக்கு. முந்தா நாள் ஐயங்கண்ணு பெரியவர, அவரு மகனும் மருமவளும் செருப்ப வச்சே அடிச்சாங்க. தட்டிக் கேட்டமா...? மலையப்புரத்தா பாட்டிய அவன் மகன் பட்டினி போடுறான். கேட்டோமோ... மாட்டோம். நமக்கு சினிமா நடிகை காதல் தோல்வி முக்கியம். பாவம்... இந்த ஐயங்கண்ணு தாத்தா செருப்பால அடிபட்டா என்ன... பெருக்கு மாறால அடிபட்டா என்ன... சினிமாவுல ஒரு சம்பவத்தக் காட்டினாத்தான் நமக்கு அழுக வரும். அப்பவும் கோபம் வராது...”
எல்லாப் பெண்களும் ரஞ்சிதத்தைச் சங்கடமாய்ப் பார்த்தபோது, தாயம்மா, ரஞ்சிதம் பேசியதை வழி மொழிந்தாள்.
“ரஞ்சிதம் அடுத்த சாதியா இருந்தாலும் அவள் சொல்லுறது நூத்துல ஒரு வார்த்த. நாம் எதுக்காவ போடு வண்டல கொடுக்கணும்... ஏசெண்டு எதுக்காவ பழுத்த இலய கொடுக்கணும். நல்ல பீடிய கழிக்கணும்... கூலிய எதுக்காவ குறைக்கணும்...”
“இந்த பாரு... சும்மா கேபி சுந்தரம்பா மாதிரி பாடிக்கிட்டே இருக்காத. கேட்கணுமுன்னா ஏசெண்டு கிட்ட கேளு. நாங்களும் ஒனக்கு சப்போர்ட்டு செய்யுறோம். அவன் பண்றதும் அக்கிரமந்தான்.”
ரஞ்சிதம் ஆனந்தப்பட்டாள். மகிழ்ச்சி தாள முடியாமல், பிடித்தட்டில் மேளம் அடித்தாள். பிறகு அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள்.
“ஓங்களுக்கு அந்த பால்பாண்டி ஏதாவது ஒரு வகையில உறவு. அதனால யோசனை வரும். அதனால், நானே மொதல்ல கேக்கேன். அப்புறம் நீங்க பேசுங்க. அலங்காரியம்மமா எதுக்கு எழுந்து நிற்கீக.”
“எங்க வீட்டுக்காரர் வயலுல இருந்து வந்திருப்பாரு. பச்சக் குழந்தை மாதிரி பசில துடிப்பாரு. அவரு துடிச்சால் என்னாலதான் பொறுக்க முடியுமா. போயி சோறு போட்டுட்டு வாறேன். ஏய் லீலாவதி சோலி முடிஞ்சுட்டு. எழுந்திரு.”
அலங்காரியும், லீலாவதியும், போய்க் கொண்டிருந்தபோது தாயம்மா வர்ணனை கொடுத்தாள்.
“ஆடு நனையுதேன்னு ஒநாய் கவலைப்பட்டுதாம். புருஷனுக்குல்லா சோறு போடப் போறாளாம். நல்லா போட்டாளே. கள்ளப் புருஷன் கிட்ட...”
“எந்தக் கள்ளப் புருஷன்... எத்தனையோ...”
“பீடி ஏசெண்டு கிட்ட இங்க நடந்ததை ஓடிப்போபி சொல்லப் போறாள்.”
“சரி... எசெண்டு நாம சொல்லுறத அவள் மூலம் தெரிஞ்சுக் கிட்டா நமக்கும் பேச்சு மிச்சம்தானே. ஆனாலும் எங்க குடும்பத்துக்கு வந்த அலங்காரி பெரியம்மய இனிமே அப்டிப் பேசப்படாது...”
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெண்கள் அணிவகுக்காத குறையாக, பிடிக் கடைக்குப் போனார்கள். மேல, கீழ ஊருகளுக்கு மத்தியில் இருக்கும் கடை. அரங்கு அரங்கான அறைகள். வராண்டாவைத் தாண்டிய முதல் அறையில், இன்னொரு மார்க் பீடியை பிடித்தும், குடித்தும் அமர்க்களமாய் இருந்த ஏஜெண்ட் அதட்டினான்.
“என்ன இப்படி வரிசையா வந்து நிற்கிய. ஏதோ சொல்லப் போறிய போலுக்கு. என்ன விஷயம் ரஞ்சிதம்.”
“நீங்களே கேட்டதால எனக்கு சந்தோஷம். இனிமேல் போடு வண்டலு கேட்கப்படாது. கலியையும் கட்டணும். பீடிய கழிக்கதோ, பழுப்பு இலய கொடுக்கதோ கூடாது.”
“ஒன் சாதி புத்திய காட்டிட்ட பாத்தியா...”
“நீங்கதான் காட்டுதீங்க...”
“என்னடி சொன்ன முடிச்சிமாறி. ஒங்களத்தான் பிள்ளியளா... நான் நம்மோட சாதிப்புத்திய காட்டுறதா இந்த கண்டார முண்ட சொல்லுதாள்... நீங்க சாதி பொண்ணுவளா... இல்ல சாதி கெட்ட பொண்ணுவளான்னு தெரியணும். சாதிக்காரியாய் இருந்தால் கடைக்குள்ள வாங்க. பலசாதின்னா அவளோடயே நில்லுங்க...”
ரஞ்சிதம் பயமின்றி சொன்னவனை நேருக்கு நோாய்ப் பார்த்தாள். பிறகு அந்தப் பெண்களையே பார்த்தாள் - அவர்கள் எடுக்கும் முடிவில்தான் தனது எதிர்காலமே அடங்கி இருப்பது போல.
-------------
அத்தியாயம்- 8
சட்டாம்பட்டியின் முகப்பில் உள்ள முருகன் கோவில், ஊருக்கு வருகிறவர்களும், போகிறவர்களும் இந்தக் கோவிலைப் பார்க்காமல் போக முடியாது. அவ்வளவு கம்பீரமான கோவில். கோபுரக் கோவிலாக இல்லையென்றாலும், அழகு, கம்பீரம், வீரம், நளினம் கொண்ட கலவையில் தோய்ந்தெடுத்தது போன்ற முருகன்சிலை. கையில் தண்டத்தோடு தனித்திருக்கும் முருகன், தனிச்சிலை. அருணகிரிநாதரின் பாடல்பெற்ற தலமாகக் கூறப்படுவதுண்டு. இந்தக் கோவிலுக்கு எல்லோரும் வருவார்கள் என்றாலும், இதன் பராமரிப்பு சட்டாம்பட்டி சைவப் பிள்ளைகளின் பொறுப்பில்தான் உள்ளது. சில மாதங்களாக கோவிலை ஊரே எடுத்துக் கொள்ள வேண்டும் - என்று பேச்சு. அப்போதானே கோயில் நிலத்த ஊர்ப் பெரிய மனிதர்களும் அமுக்கலாம். பெரிய மனிதர்கள் சூட்சகமாகச் சொன்னதை, சின்ன மனிதர்கள் இப்போது ஊரெங்கும் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
ரஞ்சிதம் கோவிலுக்குள் மயில் சிலைக்கு அப்பால் உள்ள கல் தூணில் சாய்ந்தபடியே அந்த ஆண்டிச் சிலையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே ஒரு தட்டு. அதே பீடித்தட்டு. ஆனால் இப்போது பீடிகளோ, இலைகளோ இல்லை. முல்லைப்பூ மாலை, சுருள் சுருளாய்ப் பாம்புபோல் மடித்து வைக்கப்பட்டிருந்தது. கதம்பம் கண்ணுக்கினிய தோற்றத்துடன் முல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தது. சிவப்பு, வெள்ளை ரோஜாக்கள் தனித்தனியாகத் தட்டிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தட்டின் எஞ்சிய பகுதியில், மருவு மருக்கொழுந்து, எலுமிச்சம் பழங்கள். இன்னொரு சின்னத் தட்டில் ஜரிகைக் காகிதக் கற்பூரத் துண்டுகள், ஊதுபத்திகள். இப்போதைக்கு அந்தப் பூ விற்பனைக்கு அவள் ஒருத்திதான் ஏகபோக முதலாளி. தொழிலாளிகளாய்ப் போராட்டம் துவங்கி, முதலாளியாய் முடிந்து போனவள். திருமலை அவளைப் பார்த்து திடுக்கிட்டுக் கேட்டான்.
“என்ன ரஞ்சிதம் இப்டி பண்ணிட்டே? பரவாயில்ல. பீடியைவிட பூவைத் தொடுறது நல்லதுதான். ஆனாலும் இப்படித் தனி ஆளாய் போனபிறகும், எப்பவும் குளிச்சது மாதிரியே, ஒன்னால எப்படித்தான் இருக்க முடியுமோ. ஒன்னை மாதிரி ‘சுத்தம்’ எவளாலயும் முடியாது ரஞ்சிதம்”
“நான் சுத்தமாய் இருக்கதுதான் ஒங்களுக்குப் பெரிசா தெரியது. பீடி ஏசெண்ட் பால்பாண்டி அசுத்தமாய் பேசினது, ஒரு விஷயமாகப் படல... என்ன...”
“நானும் கேள்விப்பட்டேன் ரஞ்சி...”
“ரஞ்சிதம்...”
“கேள்விப்பட்டேன் ரஞ்சிதம். அந்தப் பய ஒன்னை ரொம்ப அவமானமாப் பேசிட்டானாமே. அலங்காரிய வச்சிக்கிட்டு இருக்கவன்... அந்தப் பன்னாடைப் பயல்கிட்டே கெட்ட வார்த்தைய தவிர வேற எதையும் எதிர்பார்க்க முடியாது. சரி... விட்டுத் தள்ளு, கழுதய...”
“கழுதய விட்டுத் தள்ளிடலாம். ஆனால் ஒரு வயசுக்கு வந்த பெண்ண, அதுவும் ஊருல மைனாரிட்டி சாதில இருக்கிற என்னை வாடி போடின்னும் தாசின்னும் பேசுவதை எப்டி விட முடியும்...”
“அவன் கிடக்கான்...”
“ஓங்க தங்கை கோலவடிவ சும்மா கதாநாயகின்னு சொன்னதுக்கே என்ன குதி குதிச்சீங்க. ஆனால் என்னை அவன் அவமானமாய் பேசுவதை சாதாரணமாய் எடுத்துக்கிட்டிங்க. என்ன பிரண்டு நீங்க...?”
“சரிம்மா, தப்புதான்... என்ன நடந்ததுன்னு சொல்லு...?”
“சொல்லுதேன்... ஓங்க கிட்டே சொல்லி, எதுவும் ஆகப் போறதுல்லே. யார்கிட்டயாவது ஒருத்தர் கிட்டே சொல்லாட்டா என் தலையே வெடிச்சுடும் போலிருக்கு. அதனால சொல்லுதேன். அப்ப ஒங்களுக்கும் துளசிங்கத்துக்கும் ஏற்பட்ட சண்டையில நீங்க என்னை ரயில்வே கேட்டுல வச்சு சினிமாவுக்குக் கூப்புட்டதை காரணமா வச்சு, அதை சொல்லப் போறதாய் மிரட்டி, என்னையறியாமலே எப்டி விவகாரத்தை தீர்த்து வச்சேனோ அப்படி நீங்களும் ஒங்கள அறியாமல்...”
“சட்டு புட்டுன்னு சொல்லேன்...”
“பார்த்தீங்களா நான் பேசுறதை நீங்க காது கொடுத்து கேட்கிறதையே எனக்கு உபகாரம் செய்ததாய் நினைக்கீங்க.”
“தப்புத்தாம்மா... தப்புத்தான். தோப்புக்கரணம் வேணுமுன்னாலும் போடுறேன்.”
“நான் பீடி ஏசெண்டுகிட்ட எங்களோட குறையச் சொன்னேன். உடனே அவரு நான், என் சாதிப் புத்தியக் காட்டிட்டதா சொன்னாரு. நான் அவரு, அவரோட வர்க்க புத்திய...”
“அப்படின்னா...”
“அது ஒங்களுக்கும் புரியாது... ஆனாலும் சொல்லுதேன். அவரு தன்னை முதலாளியா அனுமானிச்சு, அதுக்குரிய முதலாளியத்துவ புத்தியக் காட்டுறார்னு சொல்லுறதுக்காவ சாதிப் புத்தின்னு அவரு சொன்னதும், நீங்கதான் காட்டுறீங்கன்னு சொன்னேன். அந்த ஆசாமி, ரொம்பக் கெட்டிக்காரன். உடனே அவன் ஒங்க சாதி முழுசயுமே குற்றம் சொல்லுறதாய் விஷயத்தை திரிச்சி விஷமாக்கிட்டான். சக தோழிகளுக்கு சாதிவெறிய வேற ஊட்டிட்டாரு. அவள்களும், ரஞ்சிதம் நீ எது வேணுமுன்னாலும் பேசியிருக்கலாம். ஆனால் எங்க சாதிய மட்டமாப் பேசியிருக்கப்படாதுன்னு என்னையே திட்டிட்டு, என்னை தனியா நிற்க வச்சுட்டு உள்ளே போயிட்டாளுவ. பீடி ஏசெண்டு இன்னுந் திட்டினான்... செருக்கியாம்... தேவடியாளாம்... ஊருல நான் இருக்க முடியாதுன்னு சொன்னான். என்னால தட்டத்தான் மாத்த முடிஞ்சுதே தவிர அநியாயத்த மாத்த முடியல...”
“இதை கேட்டதுக்கே என் ரத்தம் இப்படிக் கொதிக்குது. ஆனால் நீ எப்படி இப்டி சிரிச்சுக்கிட்டே பேச முடியுது.”
“அப்படிக் கேளுங்க... இதைவிட மோசமான அர்த்தத்துல பேசப்பபட்ட நாகரிகமான வார்த்தைகள கேட்டுப் பழக்கமுன்னு அர்த்தம். ஒங்களுக்கே தெரியும் நாங்க சைவப் பிள்ள மாருங்க...”
“அதனாலதான் என் தமிழ் ஓங்க தமிழைவிட வித்தியாசமா இருக்குதுல்லா...?”
“தமிழ் ஒன்னுதான்... கொச்சையா பேசுறோம். அந்தக் கொச்சையுல ஒங்கது முழுப் பச்சை... எங்கது பாதிப்பச்சை... அதை விடுங்க... எங்காட்கள் டவுனுக்குப் போயிட்டாங்க. பிளஸ்டு படிச்ச என்னை, மெட்ராஸ்ல வேலை பார்க்கிற அண்ணன் கூப்பிட்டான். காலேஜ்ல படிக்க வைக்கப் போறார்னு போனேன். சமையல்காரியாய் வேலை கொடுத்தார். அண்ணி சாடை மாடையாய் திட்டி, நேரடியாதிட்டி, எதிர்வீட்டு கிறுக்கன் ஒருத்தனோட காரணமில்லாம சம்பந்தப்படுத்தி, கடைசில நானே இங்கே வரும்படியாய் செய்துட்டாள். அண்ணா ஒப்புக்கு பணம் அனுப்புறார். உப்புக்காவது உதவுது...”
“நீயே மெட்ராஸ்ல வேலை தேடி இருக்கலாமே...”
“பார்வேட் கம்யூனிட்டின்னு பிறந்துட்ட கிராமத்துப் பெண்ணு எனக்கு சலுகை கிடையாதே. பொதுவா மேல் சாதியில் இருக்கிற பிராமணர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடுறதாய் கதை வருது. நாவல் வருது. டிவியில் நாடகம் வருது. அவங்கள மாதிரியே நாங்களும் ஒரு காலத்துல ஆச்சாரமாய் இருந்தவங்க. இப்போ மேல்சாதி முத்திரையோட மோசமா கஷ்டப்படுறோம். பிராமணர்களுக்காவது நாடு முழுதும் சொல்லிக்க அவங்க சாதி எல்லா மொழிலயும் மாகாணத்துலயும் இருக்குது. எங்க சாதி அப்படி இல்ல... இந்த பிரச்சினையை எடுத்துச் சொல்லவும் நாதியில்ல...”
“கடைசில ஒனக்கும் சாதிப் பத்து இருக்கத்தான் செய்யுது...”
“எதால பாதிக்கப்படுறோமோ. அதுமேல ஒரு சிந்தன வரது இயற்கை. சாதியால பாதிக்கப்படும் போது நான் சாதிக்காரியாய் ஆயிடுறேன். பீடித் தொழிலாளிப் பெண்ணாய் பாதிக்கப்படும்போது, ஒரு தொழிலாளி பெண்ணாய் இல்ல, ஒரு தொழிலாளியாய் மாறிடுறேன். சாதிக்கட்டை விட்டு, சாதியற்ற மனித சாதி கட்டுக்குள்ளே போகிறதுக்கு முயற்சி செய்யுறேன். இதனால்தான் பீடி ஏசெண்ட திட்டுனதுக்கு சம்மதிச்ச தோழிகள் மேல கோபம் வரலை. குட்டாம்பட்டில ‘கண்ணாடிக்காரர்’ பீடி சுத்தும் பெண்களுக்கு சங்கம் வச்சுருக்கது மாதிரி நானும் வைக்கத்தான் போறேன்.”
“அய்யய்யோ சங்கமா...”
“என் ஊர்ல. உருப்படாத பயல்க எல்லாம் உதவாக்கரை சினிமாப் பயல்களுக்கு சங்கம் வைக்கும்போது, நான் ஏன் வைக்கப்படாது.”
“அப்படின்னா நீ பழையபடியும் அங்கே போய் பீடி சுத்தணும்...”
“நான் தயார். ஆனால் இப்போதைக்கு சாதி மயக்கத்துல இருக்கும் தோழிகள் அந்த மயக்கம் கலைஞ்சதும். அவங்க என்னை கூப்பிட வேண்டியதில்ல. நானே போய்ச் சேருவேன்.”
“ஒன் கஷ்டத்தை கேட்கிறதுக்கு மனசுக்கு கஷ்டமாய் இருக்கு. நான் உயிரோட இருக்கது வரைக்கும் நீ சிரமப்படக்கூடாது. இந்தா நூறு ரூபாய். ஒன்மேல தான் சதா எனக்கு நெனப்பு ரஞ்சிதம். நீ இல்லாமல் என்னால வாழ முடியாது ரஞ்சி. அட கடவுளே... எப்ப பார்த்தாலும் ஒன் முகந்தான் கண்ணு முன்னால நிக்குது. இந்த ரூபாய் என் அன்பு காணிக்கை. நான் இருக்கிற வரைக்கும் நீ கவலைப்படக்கூடாது... கஷ்டப்படக்கூடாது...”
“அதாவது நீங்க என்னை ‘வைப்பாட்டியாய்’ வச்சுக்குவீங்க... காலமெல்லாம்...”
“என்ன ரஞ்சிதம்... நான் ஒன்னை அப்படி நினைச்சுப் பார்க்கவே முடியாது. ஏதோ ஒரு அன்பு... காதலுன்னு வச்சுக்கயேன்... நீ என் ஆயுசுவரைக்கும் துணையாய் இருக்கணுமுன்னு ஏதோ ஒரு ஆசை.”
“மொதல்ல, ஏதோ என்கிற வார்த்தைய எடுங்க. நான் ஆயுள் வரைக்கும் ஒங்களுக்கு துணையாய் இருக்கத் தயார். நீங்க ரயில்வே கேட்ல கேட்டதை அதனாலதான் பெரிசா எடுத்துக்கலே. ஒங்களை நானும் விரும்புறேன்... நேசிக்கிறேன்...”
“நான் கொடுத்து வச்சவன்...”
“முதல்ல என் தோளில இருக்கிற கைய எடுங்க. அதுக்கு முன்னால நான் சொல்றதைச் செய்யுங்க. இதோ இருக்கு மஞ்சள்துண்டு. இதோ இருக்கு மந்திரிக்கிறதுக்காக நான் விற்கிற கயிறு. இந்த கயித்துல. மஞ்சள் துண்டைக் கட்டி, இந்த முருகன் சாட்சியாய் என் கழுத்துல கட்டுங்க. உடனே என்னை ஒங்க வீட்டுக்கு கூட்டிப் போங்க. ஒங்க அப்பாகிட்ட ஒங்களால பேச முடியாட்டாலும் நானே பேசிக்கிறேன்.”
“அதெப்படி... திடுதிப்புன்னு யோசிக்காமல்...?”
“என்னை எப்படி யோசித்து விரும்பலியோ. அப்படி யோசிக்காம தாலியக் கட்டுங்க... காதலிக்கதுக்கு யோசிக்கப்படாது. கல்யாணத்துக்கு மட்டும் யோசிக்கணுமா. ஒங்கள மாதிரிதான் நம்ம நாட்ல, பல காதலர்கள் காதலிகள். காதல் என்பது வாழ்க்கைக்காக போடப்பட்ட வழி. இந்த பிரதான வழியில் குறுக்கு வழிகள், தற்கொலை வழிகள், கொலை வழிகள்னு பல கிளை வழிகள் இருக்கு. இவற்றை விட்டுட்டு பிரதான வழியில் போனால் தான் வாழ்க்கையைச் சுவைக்க முடியும். இல்லன்னா சுமக்கணும். எல்லாப் பெண்களும், தங்களோட காதல் வெளிப்பாட்டைக் காட்டுறதுக்கு முன்னால, இப்போ நான் ஒங்ககிட்ட கேட்கிற கேள்வியை கேட்டிருந்தால் ஒன்னு காதலே வந்திருக்காது. இல்லன்னா தோல்வி என்பதே வந்திருக்காது. இந்த பிரதான வழியில் தெரிகிற வாழ்க்கை வீட்டைப் பார்த்தால், கிளை வழிகளில் இருக்கிற கிணறோ, குளமோ, குட்டையோ, கத்தியோ, கம்போ தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. நான் இல்லாமல் ஓங்களால் வாழ முடியாதுன்னா, இதோ என் கழுத்து. நான் கழுத்துக்கு முதலிடம் கொடுக்கிறவள். கன்னத்துக்கு இரண்டாவது இடம்... என்ன சம்மதமா... எனக்குச் சம்மதம்...”
திருமலை தடுமாறிப் போனான். அந்த ஆடிக்காற்றிலும் அவன் உடம்பு வியர்த்தது. அவனால் நேருக்கு நேராய்ப் பார்க்க முடியவில்லை. எதையுமே விஞ்ஞான பூர்வமாய் சிந்திக்கும்போது அது தன்னையே தனக்கு அடையாளம் காட்டிவிடுகிறது. அந்த அடையாளம் சில சமயம் பிடிப்பதில்லை. பிடிபடுவதும் இல்லை.
திருமலை ஏதோ தப்பு செய்துவிட்டவன் போல், ரஞ்சிதத்திடம் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினான். தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தையும், பிடறியையும் துடைத்தபடி நடந்தான். காலில்பட்ட ஒரு டப்பாவை தூக்கியெறிந்தான். கண்ணில் பட்ட ஒரு நாயை கல்லால் அடித்தான். எதிரே குசலம் விசாரிக்க வந்தவர்களைக் குற்றவாளிகள் போல் பார்த்தபடி நடந்தான். இந்தத் துளசிங்கம் எப்டி குதிக்கான். அவனை மாதிரி நாமும் குதிக்கணுமுன்னால், ஒரு கடை போடணுமுன்னும், அதுக்காக முருகன், அப்பா மனசுக்குள்ளே போகணுமுன்னும் முருகன் கிட்டே போனால், அந்த சண்டாளப் பயல் அவனை மாதிரியே என்னை ஆக்கிட்டான்.
திருமலை, குரோதங் குரோதமாய் பார்த்து, கோபங் கோபமாய் நடந்து, துளசிங்கம் கடை முன்னால் வந்து நின்றான், ஆங்காரமாக, ஆவேசமாக. அங்கே நின்ற ஒரு சிறுவன் காதில் எதையோ சொன்னான். அந்தச் சிறுவன் அந்தக் கடைக்குப் போய், மீண்டும் திரும்பி வந்து திருமலையிடம் ஒப்பித்தான்.
“ஒமக்கு சிமெண்டு கொடுக்க மாட்டாராம். துளசிங்கம் அண்ணாச்சியே சொல்லிட்டார். கடைன்னா எல்லாருக்கும் பொதுதான...? ஒமக்கு மட்டும் எப்டி இல்லன்னு சொல்லலாம் மச்சான்...?”
திருமலை அந்தச் சிறுவனைப் பிடித்து தள்ளியபடியே தலையாட்டினான். பிறகு, துளசிங்கம் கடையை நோக்கி, அழுத்தம் திருத்தமாக நடந்தான்.
------------
அத்தியாயம்- 9
அந்த முக்கிய வீதி மட்டும் இல்லையானால், சட்டாம்பட்டி, சாதாரணமானப் பட்டியாகி இருக்கும். ஆனால் அந்த ஊரின் மேல்பக்கம், கிட்டத்தட்ட ஊரின் வேலி போல இருந்த, அந்தச் தார்ச்சாலையில், திருவள்ளுவர் பஸ்களும், கட்டபொம்மன் பஸ்களும் ஓடிக் கொண்டிருந்தன. இந்தப் பட்டியில், இந்தச் சாலையில் நின்று படிக்கட்டுகள் வழியாக பஸ்ஸுக்குள் ஏறிவிட்டால் ஒருத்தர் மதுரையில் இறங்கலாம், இன்னொருத்தர் நாகர்கோயிலில் ஒரு தூக்கம் தூங்கிட்டு எழலாம். இந்தச் சாலையில்தான் துளசிங்கத்தின் உரக்கடையும் சிமெண்ட் கடையும் பக்கத்தில் பக்கமாய் உள்ளன. எதிர்ப்பக்கம் பஸ் ஸ்டாண்ட். நான்கைந்து பெட்டிக் கடைகள் ஒரு சில தேநீர் கடைகள் வரிசையாய் இருந்தன. இவன் கடைகளுக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் வாடகை சைக்கிள் கடைகள். ஒரு வாசகசாலை. உருப்படாத ஒரு நடிகனுக்கு உள்ளூர் உதவாக்கரைப் பயல்கள் வைத்திருக்கும் ரசிகர் மன்றம். சில அரசியல் கட்சிகளின் கிழிந்துபோன கொடிகள்.
துளசிங்கம், வேலையாட்கள் சிமெண்ட் மூட்டைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்குவதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த அளவிற்கு சிமெண்ட் மூட்டைகள் விற்காததால், வேலையாட்களைத் திட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று திருமலை கடைக்கு முன்னால் வந்து நிற்பதை, அவன் பார்க்கவில்லை. இருவருக்கும் இடையே உள்ள பழைய தகராறையும், அப்போது தூதுப்பயலுக்கு இருவரும் சொல்லி அனுப்பிய செய்தியையும், எதிர் செய்தியையும் தெரிந்து வைத்திருந்த வேலையாட்கள், மூட்டைகளை அடுக்காமல் திருமலையை அடுக்கடுக்காய் பார்த்தபோது, வேலை தடைப்பட்டதைப் பார்த்து துளசிங்கம் அவர்கள் பார்வை நிலைத்த இடத்தில் பார்த்தபோது .
திருமலை வேட்டியைத் தார்ப் பாய்த்துக் கொண்டு சிம்ம கர்ஜனை போட்டான்.
“எனக்கு எப்டிடா நீ சிமெண்ட் இல்லன்னு சொல்லலாம்?”
“நீ எப்டிடா கேட்கிற விதமா கேட்காமல் இருக்கலாம்?”
“நான் எப்படிக் கேட்டா ஒனக்கென்னடா...? ஒனக்குத் தேவை பணம்தானடா...?”
“அதுக்கு ஒன் காலுல சிமெண்ட் மூட்டையை போட்டுட்டு கும்பிட முடியுமா? ஒனக்கு சிமெண்ட் வேணுமுன்னா என் கடையில வந்து தான் கேட்கணும். தெருவுல வந்து கொடுக்க நான் ஒன் வேலைக்காரன் இல்ல.”
“நீ இந்த ஊருக்கு நல்ல முறையில எல்லாருக்கும் சிமெண்ட் கொடுக்கறதுக்காக ஒனக்கு ஏஜென்சி கொடுத்திருக்காங்க. நீ எடுக்காட்டா நான் எடுத்திருப்பேன். அதனால நீ எனக்கு இப்பவே இந்த இடத்துலயே சிமெண்ட் மூட்டய தந்தாகணும். இல்லன்னா, நான் உன்னை விடப்போறதாய் இல்ல.”
“நீ இவ்வளவு சொன்ன மட்டும் நான் ஒனக்கு சிமெண்ட் தரப்போறதாய் இல்ல. எப்போ தந்தாலும் தருவேன். ஆனால் இப்போ தலையே போனாலும் தரவே மாட்டேன்.”
“தராட்டா எடுப்பேன்.”
“எடுக்கிற கைய ஒடிப்பேன்.”
“பாத்துப்புடலாண்டா.”
“பாத்துக்கிட்டே இருடா.”
வேலையாட்கள் செம்பட்டையான் கரும்பட்டையான் ஆகிய இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆகையால், தத்தம் சேவல்களுக்கு ஆதரவாய் உடம்பை நிமிர்த்தியபோது -
திருமலை, இரும்புக் கால்களை எட்டாக்கிக் கடைக்குள் நுழையப் போனான். துளசிங்கம் தனது குஸ்திக் கைகளால் அவனை மல்லாக்கத் தள்ளியபோது, கீழே விழப்போன திருமலையை, கரும்பட்டையான் வேலையாள் தாங்கிக் கொண்டான். அந்த ஆத்திரத்தில் திருமலை, துளசிங்கம் வயிற்றில் காலால் உதைத்தான். அந்த வலியை ‘எம்மா’ என்று சொல்லித் தாங்கிக் கொண்ட துளசிங்கம், திருமலை மேல் பாய்ந்தான். இருவரும் நின்று கொண்டே அடித்தார்கள். விழுந்து கொண்டே உதைத்தார்கள். எழுந்து கொண்டே ஒருவர் முகத்தில் ஒருவர் குத்திக் கொண்டார்கள். பிறகு கட்டிப் பிடித்து உருண்டார்கள். சிமெண்ட் மூட்டைக்குள் சிக்கியபடியே சுழன்று, வாசல் வழியாகப் புரண்டு, சாலையோரமாக பந்து போல் உருண்டு, நாய் போல குலைத்து, நரிபோல ஊளையிட்டு, நண்டு போல சுருண்டு, நடு ரோட்டிற்கு வந்தார்கள். நல்ல வேளையாக அப்போது பஸ்கள் வரவில்லை. வேலையாட்களுக்கோ வாலி-சுக்ரீவன் போரைப் பார்த்துக் கொண்டு நின்ற ராமனின் நிலை. இருவரும் உருண்டு சுருண்டதில், எவன் துளசிங்கம், எவன் திருமலை என்று தெரியவில்லை. திருமலை துளசிங்கத்தை கீழே போட்டு மேலே வரும்போது, செம்பட்டையான் ஆட்கள் அவன் கழுத்தைப் பிடிக்க குனியும் போதே, திருமலை கீழேயும், துளசிங்கம் மேலேயும் வந்துவிடுவான். துளசிங்கம் மேலே தோன்றும்போது, அவனை அந்தரத்தில் தூக்கிப் போட நினைத்த கரும்பட்டையான்கள் அதற்குள் திருமலை மேலே வந்ததைப் பார்த்து, குனிந்த உடம்பை நிமிர்த்தினார்கள்.
அந்தச் சாலைவாசிகள், அனைவருமே கூடிவிட்டார்கள். சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, யார் தோற்கிறான் என்பதை கண்டு பிடிக்க அதிக நேரம் ஆகும் என்பதாலும் எவன் படுக்கிறான் என்று தெரிவதற்குள், தத்தம் கடை வியாபாரம் படுத்துவிடும் என்பதாலும், இருவரையும் பிரித்து விட்டார்கள். பிரிந்தவர்கள் சிறிது பின்வாங்கி நின்றபோது பிரிபட்டவர்கள் மீண்டும் பிணையப் போனார்கள். ஒருவருக்கு அலுத்து விட்டது. காண்டிராக்டர் தாமோதரன் பிரித்த ஆட்களை விலக்கித் தள்ளிவிட்டு, இருவரின் கைகளையும் பிடித்து நேருக்கு நேராய் நிறுத்திவிட்டு, கத்தினார்.
“நாங்க யாரும் ஒங்கள பிடிக்க மாட்டோம். உம் பாயுங்க. எவனாவது ஒருவன் கீழே விழுறது வரைக்கும் சும்மாவே இருக்கோம். டேய் ஆஸ்பத்திரிக்கு ஒரு வண்டிய ரெடி பண்ணி வையுங்கடா.”
தாமோதரன், வேறு யாரையோ சொல்வது மாதிரியும், அதுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும் துளசிங்கமும், திருமலையும் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க நிற்கிறார்கள். மற்போரைச் சொற்போராக்குகிறார்கள். திருமலையின் காதில் ரத்தம் ஒழுகியது, துளசிங்கம் கடித்த கடி. ரத்தச் சொட்டுக்களோடு பேசினான்.
“செறுக்கி மவன். சிமெண்ட் கேட்டா தர மாட்டாங்கான். எனக்கு இப்போ ரெண்டு மூட்ட சிமெண்ட் வேணும். வாங்காமப் போக மாட்டேன். செறுக்கி மவன் சரியான நாயி. எப்டி கடிச்சிருக்கான் பாருங்க.”
திருமலை கொடுத்த அடியில், கை வளைத்து நின்ற துளசிங்கம், வளையாத வலது கையை ஆட்டியபடியே பதிலளித்தான்.
“நான் நாயின்னா இவன் வெட்டியான். என் கைய எப்டி வளச்சிருக்கான் பாருங்க. சிமெண்ட் அவனுக்கு இனிமேல் எப்பவும் கிடையாது. வேணுமுன்னால் புகார் பண்ணிக்கட்டும்.”
இதற்குள் ஊரே கூடிவிட்டது. பாக்கியம், திருமலை காதில் பெருக்கெடுத்த ரத்தத்தை முந்தானை சேலையால் துடைத்தபடியே ஒப்பாரியிட்டாள். கோலவடிவு, அம்மாவுக்கும் தாயம்மாவுக்கும் பின்னால் நின்று கைகளைப் பிசைந்தாள். ரஞ்சிதம் நெற்றிச் சுருக்கங்களோடு நின்றாள். சந்திரா, துளசிங்கத்தை நாயே, பேயே என்று திட்ட, துளசிங்கத்தின் அம்மா அன்னம்மா எதிர்திட்டு போட்டாள். அலங்காரி, துளசிங்கத்தின் கையைத் தடவி விட்டபடியே, “என் ராசா ராசா” என்று கத்தினாள். இதற்குள் கரும்பட்டையான்களும், செம்பட்டையான்களும் அணிவகுத்தும் ஆர்ப்பரித்தும் பேசினார்கள்.
“சிமெண்ட் வாங்க விடமாட்டோம்.”
“தராத சிமெண்ட் எடுக்காம விடமாட்டோம்.”
“செம்பட்டையான் கடைக்குள்ள வந்து சிமெண்ட் எடுக்கணு முன்னால் அந்தக் கடையே கரும்பட்டையான்களுக்கு சமாதியாயிடும்.”
“கரும்பட்டையான் வம்சத்துக்கு முன் வச்ச காலை பின் வச்சு பழக்கமில்ல. அந்தப் பழக்கத்தை மாத்திக்கவும் தயாராய் இல்ல.”
“சரி வந்து பாருங்க.”
இந்த சண்டைக்கு மூன்றாவது கனபரிமாணமாக, ‘காத்துக் கருப்பன் குடும்பத்து’ அதே அந்த ராமையா கோபாவேசமாகப் பேசினார். சூதுவாதில்லாத மனிதர்தான். கோலவடிவை, அக்னி ராசாவுக்கு திருமணம் செய்யும் உறுதியோடு அவர் பேசவில்லைதான். ஆனாலும் பழனிச்சாமி மச்சான் மேல் புதிதாக வந்த பாசம் அவரை இப்படிப் பேச வைத்தது.
“ஏய் துளசிங்கம்! நீ பேசுறது அக்கிரமண்டா. ஒன் கடை உரத்த வயலுல போட்டு இப்போ பயிரெல்லாம் சாவியா போயிட்டு.”
“சிமெண்டுக்கும், உரத்துக்கும் என்ன சம்பந்தம்.”
“எங்க அண்ணாச்சிய பேச விடுடா. பேமானிப்பயல... அவரு யாரோடயும் பேசாதவர். இப்பவாவது பேசட்டும்.”
“ஒரே வார்த்ததான் பேசப் போறேன். துளசிங்கம் கடை பொதுக் கடை. சாமியை நம்பாதவன் கற்பூரம் விற்கதுமாதிரி இவன் பிடிக்காத திருமலைக்கும் சிமெண்ட் மூட்டைய கொடுத்தாகணும். இல்லன்னா கடையை உடைச்சாகணும்.”
காத்துக் கருப்பன்கள் ‘பைத்தியார தர்மரு’ ராமய்யாண்ணன் பின்னால் கச்சைக் கட்டி, அவரின் இச்சையை நிறைவேற்றத் துடித்தார்கள். ஆனானப்பட்ட அதிகாரிகளையே கெஞ்சியும், மிஞ்சியும் மடக்கிப் போடும் ஒத்தை வீடு காண்டிராக்டர் தாமோதரன் விவகாரியானார்.
“டேய் துளசிங்கம் போனால் போவட்டும். திருமலைக்கு ஒரு மூட்டை சிமெண்டையாவது கொடு.”
“இதைவிட என் உயிரக் கேளும் தாரேன்.”
“உயிரும் இப்போ போகத்தான் போகுது.”
ரஞ்சிதம் அடிமேலடியாய் நடந்து, கூட்டதுக்கு முன்னால் வந்து தீர்ப்பளிப்பவள்போல் பேசினாள்.
“நான் எல்லாருக்கும் பொதுப்பிள்ள, அடுத்த சாதி அற்பம். நான் சொல்லுறதக் கேளுங்க. நம்ம யூனியன் காண்டிராக்டர் அய்யா தாமோதரன், முருகன் கோயில் முகப்பு கட்டுறதுக்கு உபயமாய் பத்து மூட்டை சிமெண்ட் வாங்கி துளசிங்கம் கடையிலேயே போட்டிருக்கார். அதுல எத்தன மூட்டை சிமெண்ட வேணுமுன்னாலும் திருமலை அவருகிட்டயே பணத்தக் கொடுத்துட்டு, எடுத்துக்கட்டும். தாமோதரய்யா தன்னோட சிமெண்ட் மூட்டைய எடுத்துக் கொடுப்பாரு. இதனால துளசிங்கம் மானமும் போகல. திருமலை மானமும் போகல. சிமெண்ட் மூட்டதான் போவுது.”
“ரஞ்சிதம் ஒன்னை கொழும்புக்கு அனுப்பி வைக்கணும்.”
அந்தத் தீர்ப்பால் எல்லோருக்கும் திருப்தி. ஒரு சில கர்நாடக விவகாரிகள்தான் மனதுக்குள் முனங்கிக் கொண்டார்கள். “போயும் போயும் ஒரு ஒத்தை வீட்டுப் பொண்ணு அடுத்த சாதிக்காரி... சொக்காரப் பலம் இல்லாத ரஞ்சிதமா இந்த வழக்க தீர்த்து வைக்கணும். நாங்க எதுக்கு இருக்கோம்?”
விவகாரம் தீர்ந்து கொண்டிருந்த போது, அக்கினி ராசாவின் அப்பா ராமய்யாதான் தனது சுபாவத்திற்கு மாறாக விடாப்பிடியாகப் பேசினார்.
“அதுல்லாம் முடியாது. தாமோதரன் சிமெண்ட் விற்றுப் போன சிமெண்ட். துளசிங்கந்தான் அவன் கையால வேற சிமெண்ட்ட கொடுக்கணும்.”
தாமோதரன், ராமய்யாவின் மோவாயைத் தூக்கி, தன் உள்ளங்கையில் தாங்கிக் கொண்டே மன்றாடினார்.
“போவட்டும் மச்சான். போவட்டும் ரெண்டு தரப்புமே சம்மதிச் சுட்டாங்க. நமக்கென்ன வம்பு. டேய் துளசிங்கம். என் சிமெண்ட் மூட்டையை தனியா ஒதுக்கு. இந்தாடா திருமலை நூற்றி எண்பத்து நாலு ரூபாயும் முப்பது பைசாவையும் எடு. என்கிட்டயே கொடு. சிமெண்ட்டோட விலை. வயசுப் பொண்ணு வளத்தி மாதிரி கூடிக்கிட்டே போவுது. இன்னைய ரேட்டுப்படி. மீதிக் கணக்கு அப்புறம் பார்த்துக்கலாம்.”
“ஆமா தெரியாமத்தான் கேக்கேன், நீரு விவகாரியா, இல்ல வியாபாரியா, மாப்பிள்ளே.”
திருமலை சட்டைப் பையைத் துழாவினான். வேட்டியைத் தூக்கி, டவுசர் பைக்குள் கைவிட்டான். அப்போதுதான் அவனுக்கு உறைத்தது, வெறும் கையில் முழம் போட்டிருக்கான். இந்தச் சமயத்தில் யாரிடமாவது பணம் கேட்டால், தான் துளசிங்கத்திடம் வம்புச் சண்டைக்குப் போனதாக அர்த்தமாகிவிடும். திருமலை என்ன செய்வது என்று புரியாமல் விழித்தபோது, துளசிங்கம் புரிந்து கொண்டான். திருமலை வம்புச் சண்டைக்கே வந்தவன் என்பதை நிரூபிப்பதற்காக, அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சபையிடம் முறையிடப் போனபோது -
திருமலை அண்ணாவின் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்ட கோலவடிவு, அண்ணனின் அருகே வந்து, முந்தானையில் மடித்து வைத்திருந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை திருமலையின் கையில் லாவகமாகத் திணித்தாள். உடனே அவன், அந்த நோட்டுக்களை பத்து ரூபாய் நோட்டாக பயந்து பார்த்து, பிறகு சந்தோஷப்பட்டு தாமோதரனிடம் நீட்டினான்.
துளசிங்கம், கோலவடிவை, பற்களைக் கடித்துப் பார்த்தான்.
--------------
அத்தியாயம்- 10
கோலவடிவு, மீண்டும் அதே அந்த குளத்தடி வயல், பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்தாள். ஏதோ குளிக்க வேண்டுமே என்பதற்காக குளிப்பதுபோல், தண்ணிருக்குள் தலையைக் கொடுக்காமல், ‘காக்கா’ குளியலாகக் குளித்துக் கொண்டிருந்தாள். சோப்புத் தேய்க்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் எழுந்தாள். கண்கள் குளத்துக் கரையைப் பார்த்தன. அவளுக்கே தெரியும், அலங்காளி வரமாட்டாள் என்று. ஆனாலும் ஒரு சபலம். அலங்காரி அத்தை வந்தாலும் வருவாள். அவளைத் தேடி துளசிங்கமும் வந்தாலும் வருவார். அத்தையைத் தேடியா, இல்லை தன்னைத் தேடியா. கோலம், பம்ப் செட் அறைக்குள் துணி மாற்றியபடியே, தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
“பாவம் துளசிங்கம்... அண்ணா அவரு கைய திருகிப் போட்டானே. இப்போ கையி எப்படி இருக்கோ...? அவரு மட்டும் என்னவாம்... அண்ணா காதக் கடிக்க... ஊசி போட்டோமே... வேண்டாத சண்டை எனக்காவ இவரு விட்டுக் கொடுத்திருக்கலாம். நான் ரெண்டு கையை பிசைந்தது ரெண்டு பேருக்காவன்னு அவருக்குத் தெரியுமோ என்னவோ. என்னையும் சண்டைக்காரியாய் நினைக்கப் போறாரு. அப்படி நெணக்கப் படாதுன்னு அலங்காரி அத்தேகிட்ட சொல்லணும். முடியுமானால் அவரு கிட்டயே... அதெப்படி முடியும்... ஏன்... வாயாலதான் பேச முடியுமா... கண்ணால பேச முடியாதா... இந்தச் சண்டையால அவர நெனக்கக்கூட எனக்கு தகுதியில்லாம போயிட்டே. நல்ல வேளை அப்பா அண்ணாவைத்தான் திட்டுனாரு. அடிக்கக்கூட போயிட்டாரு. துளசிங்கம் நல்ல பையன்னு வேற சர்ட்டிபிகேட் கொடுத்தாரு. அலங்காரி அத்தைகிட்ட சொல்லணும். அந்த அத்தைக்கு மூள இல்ல. நான் இங்க இருப்பேன்னு தெரிஞ்சு வரவேண்டாம்... அத்தைக்குத் தான் மூள இல்ல... அவருக்குமா... சீச்சி... இதுக்குமேல நினைக்கறது இன்னும் கோபம் ஆறாத எங்கண்ணாவ அவமானப் படுத்தறது மாதிரி.”
கோலவடிவு, மத்தாப்பு மனதைக் கல்லாக்கிக் கொண்டாள். ஈரப் புடவையைப் பிழிந்து, மூன்றாக மடித்துத் தோளில் போட்டுக் கொண்டு, புறப்பட்டாள். அடடே என்ன சத்தம்... ராமையா மாமா சத்தம்... துளசிங்கம் மச்சான் சத்தம்...
கோலம் முதலில் ஆனந்தக் கோலமானாள். பின்னர், அப்படியே சோகக் கோலமானாள்.
ராமையா வயல், துளசிங்கம் வயலுக்கும் பக்கத்து வயல். இங்கிருந்தபடியே பேசினால் அங்கே கேட்கும். அந்த வயல் நெற்பயிரைத் துளசிங்கமும், ராமையாவும் கூடவே அக்கினி ராசாவும் சுற்றிச் சுற்றிப் பாக்காவ. கைகளை ஆட்டி ஆட்டி பேசுதாவ. இது என்ன? ராமய்யா மாமா துளசிங்கத்தை அடிக்கப்போறது மாதிரி துள்ளுறாரே. மாமா அவர திட்டாதயும், திட்டப்படாது.
இப்போது அவர்கள், அந்த வயலின் கிணத்து மேட்டுக்கு வந்து, கோபங் கோபமாய் பேசிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. துளசிங்கம் மச்சான் இடது கையில், பிளாஸ்திரி போடப்பட்டு, அது ஒரு துணிக்கட்டில் தொங்கியது. அடக்கடவுளே... ஆனாலும் எங்கண்ணா மோசம். அடிச்சாலும் இப்படியா... பாவம்... எப்டி துடிக்காரோ...? எப்படி வலிக்குதோ...?
கோலவடிவுக்கு அந்தப் பக்கம் போக வேண்டும் போலிருந்தது. அவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் போலிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, துளசிங்கம் மச்சான் கை பிசகியிருக்கா, இல்ல ஒடிஞ்சிருக்கான்னு தெரிஞ்சுக்கணும். கடவுளே... கடவுளே பிசகி இருக்கணும்... ஒடிஞ்சிருக்கப்படாது. இந்தப் பாவி நெத்தியில எந்த நேரம் குங்குமம் வச்சாரோ, கை ஒடஞ்சிட்டே. ஒடச்சிட்டானே... நாசமாப் போறவன்... கடவுளே... கடவுளே... ஒடிச்சவன் எங்கண்ணன்னு தெரியாம திட்டிட்டேன் பாரு. சரி... இப்போ அந்தப் பக்கம் போகணும். எப்டி போறது... போறதுல தப்பில்ல. பழைய சண்டை விஷயமாயும் ரெண்டு பேரும் பேசலாமுல்லா.
கோலவடிவு யோசித்தாள். அங்கிருந்தபடியே அந்த வயலுக்குத் தாவிக் குதிக்கப் போகிறவள்போல், முன் பாதங்களை அழுத்தினாள். அடடே... ராமய்யா மாமா... கிணத்து மேட்டுல ஒரு ரோசாச் செடி இருக்கே. நாலைஞ்சு பூ இருக்கே. தலையில வச்சால் எப்டி இருக்கும். யாரும் எப்படியும் போவட்டும். நாம் பூப்பறிக்கத்தானே போறோம்.”
கோலவடிவு நடக்க முடியாதவள் போல் நடந்தாள். தன்னை நம்ப முடியாதவள் போல் நடை போட்டாள். ஒத்தைப் பரப்பில், கைகளை அங்குமிங்குமாய் ஆட்டி, சர்க்கஸ்காரி போல் நிதானமாய் நடந்து, ராமையா மாமாவின் வயலுக்கு வந்துவிட்டாள். அக்கினி ராசா பராக்குப் பார்த்துட்டு இருந்தான். துளசிங்கமும், ராமையாவும், காரசாரமாகப் பேசினார்கள். அக்கினி ராசா, அவளைப் பார்த்தான். என்னம்மான்னு கேட்க திராணி இல்லை. அப்பா முகத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.
கோலவடிவே அவர்கள் கவனத்தைக் கலைத்தாள்.
“மாமா... இந்த ரோசாப் பூவை நான் பறிச்சுக்கட்டுமா...? நல்ல பூவு...”
துளசிங்கத்திடம் வாயெல்லாம் பல்லாகக் கடித்துக் குத்திப் பேசிய ராமையாவுக்குக் கோலவடிவைக் கண்டதும், பல்லெல்லாம் வாயாகிவிட்டது. பய மவளுக்கும் அக்கினி ராசாவக் கட்டிக்க ஆசதான். இவள் சம்மதிக்காம கல்யாணம் நடக்காதேன்னு இனுமப் பயப்படவேண்டாம்.
ராமையா, அவளை மகளைப் பாாப்பதுபோல் பார்த்துத் தந்தை போல் பேசினார்.
“ஒனக்குல்லாத பூவாம்மா. நீ பறிக்காத... முள்ளு குத்தும். எல அக்கினி ராசா. வேட்டிய எடுத்து கால் வரைக்கும் இழுத்துப் போடுல. மூதேவி... மாமா மவளுக்கு பூப்பறிச்சுக் கொடுடா. எல்லாப் பூவையும் பறிச்சுக் கொடுடா...”
அக்கினி ராசாவுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. அவனுக்கும் இந்தக் கல்யாணப் பேச்சு தெரிந்திருக்க வேண்டும். அவளை ஆவலோடு பார்த்தான். அனுமான் சஞ்சீவி மலையத் தூக்கியது மாதிரி, பூக்கள் மொய்த்த அந்த ரோசாச் செடியையே வேருடன் பிடுங்குவது போல் பூக்களைப் பறித்தான். மூன்று பூக்கள், ஒரு மொட்டு, நான்கையும் அவளிடம் நீட்டிவிட்டு, ஏதோ பேசப்போனான். பிறகு அவனுக்கு வெட்கம் வந்தது. ஒடிப்போய் துளசிங்கம் பக்கத்தில் நின்று கொண்டான்.
கோலவடிவு, அக்கினி ராசாவைப் பாவமாகப் பார்த்தாள். துளசிங்கத்தையும் ‘பாவமாகப்’ பார்த்தாள். அவனோ, அவள் பக்கம் சட்டென்று திரும்பிவிட்டு, அதே வேகத்தில் முகத்தை ராமையாவின் முன்னால் நிறுத்தினான். கோலவடிவு, தலையில் பூ வைக்கும் சாக்கில் அங்கேயே நின்றாள். அவள் போகட்டும் என்று பேச்சை நிறுத்திய துளசிங்கம், பிறகு அவள் ஒரு பொருட்டல்ல என்பதாய்ப் பேச்சை விட்ட இடத்தில் இருந்து துவங்கினான்.
“ஒமக்கு எப்டி சின்னய்யா நஷ்ட ஈடு கொடுக்க முடியும்.”
“என்னடா பேச்சுப் பேசற. ஒன் உரத்த வாங்கி, இந்த ஆறு மரக்கால் விதப்பாடு அவ்வளத்துலயும் போட்டேன். மற்ற வயலுல நெல்லுப் பயிருவ. குட்டையாய் நிக்கும்போது என் வயலுல பயிரு நெட்டையா சிலுசிலுன்னு வளர்ந்ததுல சந்தோஷப்பட்டேன். இப்போ பயிருல்லாம் சாவியாய் போயிட்டேடா. இவ்வளவுக்கும் மத்த வயலுக்காரங்க மாதிரிதான் தண்ணி பாய்ச்சுனேன். பூச்சி மருந்து அடிச்சேன். எல்லா பயிரும் நெல்லுக் கதிரச் சுமக்கும் போது, என் நெற்பயிரு மலடி மாதிரி சாவியாயிட்டடா. ஒன் உரத்துலதான் ஏதோ மிஸ்டேக்கு...”
“சரி, கத்தாதேயும்... எனக்கு மறந்து போச்சு. என்ன உரம் வாங்கினிரு.”
“பொட்டாசியம்... சீம உரம்...”
“ஒ... அதுவா... இப்போ நல்லா ஞாபகம் வருது. அந்த உரத்தோட யூரியா உரத்த கலந்து போடணுமுன்னு அக்கினி ராசா கிட்டே முருகன் கோவில் முன்னால் சொன்னேன். இல்லியா அக்கினி.”
அக்கினி, ஆமாம் என்பதுபோல் தலையாட்டினான். உடனே, துளசிங்கம், “ஒம்ம மகன் கிட்டயே விசாரியும்” என்றபோது, அப்பா கேட்டால் மட்டுமே பேசும் அக்கினி பேசாமல் இருந்தான்.
“துளசிங்கம் சொல்லுறது நிசமாடா.”
“ஆமா... பொட்டாசியம் உரத்த, யூரியா உரத்தோட போடாட்டா பயிரு பொண்ணு மாதிரி வளரும். ஆனால் சமையாது. அதாவது வயசுக்கு வராதுன்னு துளசி சொன்னது வாஸ்தவந்தான். நான் ஒம்ம கிட்ட சொல்லல. செலவாகுமேன்னு...”
“போபும் போயும் எனக்கு வந்து மகனா வாய்ச்சே பாரு. நீயுல்லாம் ஒரு சம்சாரியா. செலவாகுமுன்னா நெனச்சே? வயல நட்டால் செலவாகும். நடாமல் இருப்பமோ? பம்பு செட் போட்டா கரெண்ட் செலவாகும். போடாம வைப்பமா? பூச்சி மருந்தடிச்சா செலவாவும். அடிக்காம இருப்பமா? நீயுல்லாம் ஒரு விவசாயியாக்கும். ஏடே துளசிங்கம். ஒன்ன நான் திட்டுவது தப்புத்தான், முட்டாத் தனந்தான். தப்பா எடுத்துக்காதடே.”
“தலையை வெட்டிட்டு தப்புன்னு சொல்லும். எனக்குத் தெரியும், நீங்க எல்லாரும் என்னை இப்டி கரிச்சுச் கொட்டுவியங்கன்னு. பண்டாரம் பரதேசியாய் போனவன், அதுவும் உப்புக்கும் உதவாத எலி டாக்டர் மகன், நல்லா சம்பாதிக்கானேன்னு பொறாம. ஆனால் ஒண்ணு சொல்லுறேன். இந்த ஊரே சேர்ந்தாலும் என்னை துரத்த முடியாது. ஒங்களால மிரட்ட முடியும். ஆனால் விரட்ட முடியாது.”
துளசிங்கம், போகப் போகிறவன்போல், செருப்பு போடப் போனான். அதைப் பார்த்த கோலவடிவு, ராமையா மாமா வயல் வழியாகச் சின்ன வாய்க்கால் வரப்பில் நடந்தாள். ராமையா, அக்கினி ராசாவை அடித்திருப்பார். பிறகு மருமகள் கோலவடிவுக்கும் அந்தப் பழக்கம் வந்துவிடக்கூடாதே என்று பல்லை மட்டும் கடித்தார். துளசிங்கத்திடம், “வைக்கோலாவது வருமா. அதை மாட்டுக்குப் போடலாமா” என்று கேட்கப் போனவர், மருமகளுக்குக் கேட்கும்படியாய் அவன் இன்னும் ஏடா கோடமாய் பேசிவிடப் படாதே என்று பயந்து போனார்.
அந்த வயலைவிட்டு அடுத்த வயல் சென்ற கோலவடிவு திரும்பிப் பார்த்தாள். துளசிங்கம் வந்து கொண்டிருந்தான். வேட்டி சட்டையோடு அல்ல. பொம்மைச் சட்டையோடும், பாவாடை மாதிரி அகலமான பேண்ட்டோடும். கோலவடிவு அவனுக்குப் பயந்து நடப்பவள் போல் நடந்தாள். பிறகு இன்னொரு வாய்க்காலுக்கு வந்ததும் பதுங்கி நின்றாள். சே... காலெல்லாம் ஒரே சகதி. வாய்க்காலுல காலக் கழுவணும். எப்படி அப்புது... எம்மாடி...
கோலவடிவு, கால்களைக் கழுவிக் கொண்டிருக்கும் போது, துளசிங்கம் வந்துவிட்டான். அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு, திரும்பிப் பார்க்காமலே நடந்தான். கோலவடிவு கழுவிய ஒரு காலோடும், கழுவாத இன்னொரு காலோடும் ஓடினாள். அவன் முகத்தைப் பின்னோக்கிச் செலுத்துவதற்காக இருமினாள்... செருமினாள்... அவன் திரும்பியதும் நாணத்தோடு நின்றாள். அவன் மீண்டும் நடக்கப் போனான். அவள், வார்த்தைகளால் இடைமறித்தாள்.
“அலங்காரி அத்தையக் காணோம்...”
“கூட்டிட்டு வா காட்டுறேன்... பாசம் ரொம்பத்தான் பொங்குதோ.”
“ஒம்ம கையி...”
“ஏன் முழுசா உடையலன்னு கேட்கியா? கையில பணமில்லாமலே சிமெண்ட் கேட்டு வம்புக்கு வந்த அண்ணன் கையில ரூபாய் திணிச்சத நான் மறக்கல... எம்மாளு... ஒனக்குக் கோடி கும்பிடு. இந்த வம்பு தும்புக்கு மூலமே நீதான். எங்க அலங்காரி சித்தி வியைாட்டுக்குச் சொன்னத. நீ பெரிசு படுத்தாம இருந்திருந்தால் எனக்கு கையும் ஒடிஞ்சிருக்காது. ஒங்கண்ணாவுக்கு காதும் கிழிஞ்சிருக்காது. இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ. ஒன்ன நல்ல பொண்ணுன்னு நெனச்சேன் பாரு, என்னை...”
துளசிங்கம், அவள் இதயத்தை இட்டு நிரப்பாதது போல், சொல்ல வந்ததையும் சொல்லி முடிக்காமலே வேறு பக்கமாக நடந்தான்.
அவனையே பார்த்து நின்ற கோலவடிவிற்கு விக்கல் வந்தது. அது விம்மலாகியது... வெடிச் சத்தமாகியது... கசிவாகியது... கண்ணிராகியது.
‘கை ஒடிஞ்சுட்டாமே... ஒடிஞ்சுட்டாமே... என் மனசு அவருக்குப் புரியலியே... நான் எப்பவும் நல்ல பொண்ணுதான். அவருகிட்ட யார் சொல்லுறது... நாம் சொல்ல முடியாது. அப்படியே சொல்லத் தயாராய் இருக்கதுக்கு அவரு கேட்கத் தயாராய் இல்ல. அத்தே... அலங்காரி அத்தை... எங்கத்தே போயிட்டே... எப்பத்தே வருவே...’
கோலவடிவு குளத்துக்கரை வழியாக நடந்தாள். போனவாரம் அவன் வைத்த குங்குமம் கலையப்படாமல் ஆனந்த அதிர்ச்சியுடன் போன அதே கரையில், தள்ளாடித் தள்ளாடி தானாய் நடக்காமல் யாரோ நடத்துவதுபோல் நடந்தாள்.
எப்படித்தான் வீட்டுக்கு வந்தாளோ. வழியறியாமலே, பழக்கப் பட்ட காரணத்தால் வந்துவிட்டாள். தெரு வாசல் கதவை திறந்துவிட்டு, நுழையப் போனாள். அப்பா ஏன் சித்தப்பா கிட்டே இப்படிக் கத்துறார்.
“அதெப்டிடா... அக்கினி ராசாவோட கோலவடிவு... நெனச்சுக் கூடப் பாக்க முடியாதுப்பா.”
“ஏன் முடியாது... திருமலைக்கும் துளசிங்கம் செறுக்கி மவனுக்கும் நடந்த சண்டையில, ராமையா மச்சான் நம்ம பக்கம் நின்னாரு. இதனாலதான் துளசிங்கம் பயலும் இறங்கி வந்தான். அதோட காத்துக் கருப்பன் குடும்பம் நம்ம அம்மா பிறந்த குடும்பம். ஆள்பலம் உள்ள குடும்பம்.”
“சரி யோசிக்கேன்... யோசிக்கேன்...”
“யோசிக்க யோசிக்க கோலவடிவுதான் கொடுத்து வச்சவள்னு வரும்...”
அப்பாவின் முதலாவது பதிலில் முழு வெற்றி கண்டவள்போல் நிமிர்ந்த கோலவடிவு, அவரது இரண்டாவது பதிலில் துவண்டாள். தோளில் கிடந்த அந்த சேலை போல் கண்ணிரால் ஈரம்பட்டு நிலைப்படியில் சாய்ந்தாள். அப்பா சம்மதிக்க மாட்டார். ஒருவேளை அப்படி சம்மதிச்சுட்டால் வருமுன் காக்கணுமே.
“அலங்காரி அத்தே... நீதான் என்னைக் காப்பாத்தணும்.”
--------------
அத்தியாயம்- 11
கோலவடிவு குமுறியபடியே நின்றாள்.
அக்னி ராசாவுக்கு, தான் மனைவியாகும் சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அந்த ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் தனது இடது தோளை வலக்கரத்தால் பிடித்து அழுத்தினாள். அந்தத் தோளில் தொங்கிய ஈரப்புடவை, கசங்கிப் போய் அவளுக்காகக் கண்ணிர் சிந்துவது போல் தண்ணீர் சொட்டுச் சொட்டாக அவள் கை வழியாக உருண்டோடியது. அவளுக்கு, இப்போதே அலங்காரி அத்தையின் வீட்டுக்குப் போய் அவள் தோளில் கை பின்னி, மார்பிலே தலைபோட்டு, அழவேண்டும் போல் இருந்தது. அதற்காகத் திரும்பக்கூடப் போனாள். அது எப்டி முடியும்? அலங்காரி அத்தை வீட்டுக்கு ஆம்புளைங்க போனால் சந்தேகம் வராது. அத்தனையும் இடக்கு மடக்குங்க. ஆனால் ஒரு பொம்பிளை போனால் சந்தேகம் வரும். அந்த அளவுக்குக் கொடிகட்டிப் பறக்கும் அத்தை வீட்டுக்கு, இப்போ மட்டுமல்ல எப்போதும் போக முடியாது. ஆனால் அத்தைய பார்த்துத்தான் ஆகணும்.
கோலவடிவு வீட்டு வாசல் படியைத் தாண்டப் போனாள். அதற்குள் சிறிது மெளனப்பட்ட வீட்டில் அம்மாவின் சத்தம் கேட்டது.
“ஊர்ல எவளப் பார்த்தாலும், எவனப் பார்த்தாலும் அக்னி ராசாவுக்கும், கோலவடிவுக்கும் கல்யாணமாமே கல்யாணமாமேன்னு கேள்விமேல் கேள்வியாய் கேக்காங்க. எனக்கு பதில் சொல்லமுடியல. இந்தப் பேச்சு எப்படி வந்தது.”
“இதுவே ஒரு நல்ல சகுனமுன்னு நெனச்சுக்கணும். மயினி.”
“சகுனம்... நல்ல சகுனம்... பூனய மடில வச்சுப் பார்த்த சகுனம். அதுவும் நாம தீர்மானம் செய்யுறதுக்கு முன்னாலயே ஊர் தீர்மானம் பண்ணுது. ஒம்மத்தான்... திருமலை ஏதோ ஒங்க கிட்ட பேசணுமாம். நீயே சொல்லேண்டா...”
கோலவடிவுக்கு, போய்ப் போய் வந்த உயிர், இப்போது போகாமலேயே அவள் உடலில் முழுமையாக நின்றது. அண்ணா, நமக்காக அப்பாகிட்ட சண்டை போடப் போறான். அவன் போடுற சத்தத்துல. இந்த செத்த பேச்சு இன்னயோட முடியணும்.
கோலவடிவு வீட்டுக்குள் நுழைந்தாள். இருபது எட்டுக்கள் போட்டு நடக்க வேண்டிய தூரத்தைப் பத்தே எட்டாகத் தாவி, தனக்கு எதுவுமே தெரியாததுபோல, குறுக்காகக் கட்டிய கொடியில் சேலையைப் பரப்பிப் போட்டபடியே, அண்ணா திருமலையைப் பட்டும், படாமலும் பார்த்தாள். ‘சீக்கிரம் பேசு அண்ணா... அப்பாகிட்ட பேச பயந்தான் வரும். அதுக்காவ இப்படியா யோசிக்கது. பேசுண்ணா... பேசு... அக்னிராசா, அருமத் தங்கைக்கு ஆவாதுன்னு அடிச்சுப் பேசு. நீ முடிக்குமுன்ன கல்யாணமே நடந்துரும் போலுக்கே...’
அப்பாவை நேருக்கு நேராய்ப் பார்க்கப் பயந்தது போல, அம்மாவைப் பார்த்து அவள் வழியாகத் தன்னைப் பார்த்த மகன் திருமலையை நோட்டம் விட்டார். பிறகு, இவரும் ‘அம்மா’ வழியாகவே மகனைப் பார்த்துவிட்டு, மனைவியிடம் கேட்பதுபோல் மகனிடம் கேட்டார். அவன் காதில் கடுக்கன் மாதிரி போடப்பட்ட பிளாஸ்டரைப் பார்த்ததும் கோபம் வந்தது.
“என்ன சொல்லப் போறானாம். அம்மன் கொடை விஷயத்துல சினிமாப்படம் போடணும்னு சொல்லப் போறானா. இல்ல காத கடிக்க கொடுத்தது மாதிரி மூக்கையும் கொடுக்கப் போறானாமா...”
“அவன் ரெண்டையும் சொல்ல வர்ல...”
“பிறகு சொல்லறதுக்கு எதுவுமே இல்லியே...”
“கோபப்படாம கேளுங்க. அவன் சொல்ல நினைக்கதைத்தான் நான் சொல்லுறேன். நானாச் சொல்லல...”
“நீ எப்பதான் இப்டி நீட்டி முழக்கிப் பேசுறதை விடப் போறியோ?”
“திருமலைக்கு விவசாயம் பார்த்து அலுத்துப் போச்சாம். அழுக்கு வேட்டியோட அலையுறது பிடிக்கலையாம். அதனாலதான் துளசிங்கத்துக்கு இவனைப் பார்த்தா இளக்காரமாம். அதனால இவனும் ஒரு கடை வைக்கணுமாம். கோணச் சத்திரத்துல இல்லன்னா. நம்ம ஊரு கார் ரோட்ல கமிஷன் கடை வைக்கணுமாம். துளசிங்கம் மாதிரி ஆயிரக் கணக்குல சம்பாதிக்கணுமாம்.”
“இதை சொல்லப்படாதுன்னு நீயே சொல்லப்படாதா... பாக்கியம்...”
“நான் இவன்கிட்டே எவ்வளவோ சொல்லிட்டேன். துளசிங்கப் பயல், அர்த்த ராத்திரில குடை பிடிக்கிறவன். ஆயிரக் கணக்குல சம்பாதிச்சாலும் கடைசில அரியப்புரம் தங்கமுத்து மாதிரி சினிமா எடுக்கேன்னு மெட்ராஸ் போயி, சம்பாதிச்ச பணத்தை எல்லாம் நாசமாக்கப் போறான்னு சொல்லியாச்சு.”
“துளசிங்கமும், நல்லா இருக்கணுமுன்னு நீ நினைக்கணும். நாடெல்லாம் வாழ கேடு ஒன்னும் இல்லை. அதோட துளசிங்கம், நீ நெனக்கது மாதிரி ஏமாளி இல்ல. கெட்டிக்கார பய. வேணுமுன்னால் பாரு. பணத்த மேலும் மேலும் சேப்பானே தவிர, சிதைக்க மாட்டான்.”
“அப்போ... அவன் உசத்தி... நம்ம பிள்ள மட்டமா...?”
“ஒருத்தன உசத்தியாய்ப் பேசுறதாலேயே, இன்னொருத்தன் தாழ்த்தின்னு அர்த்தமில்ல. இவன் அவனவிட ஒருபடி அதிகமுன்னு எனக்குத் தெரியும. நான் வயல் வேலைய கவனிச்சு எவ்வளவோ நாளாச்சு. இவன்தானே கட்டிக் காத்து வாரான். இவனுக்கு என்ன குற... மோட்டார் பைக் வச்சுருக்கான்... எங்கே வேணுமுன்னாலும் போகலாம்.”
“ஆனாலும் அவன் கொஞ்சம் மரியாதையோட...”
“நீயே அவனுக்கு சொல்லிக் கொடுப்பே போலுக்கே, பாக்கியம். வியாபாரிக்கு மரியாதன்னா நெனக்கே, அதான் இல்ல. இந்தப் பயலுவ அறைக்குள்ள கண்டவன் காலுல்லாம் விழுந்துட்டு, வெளில மேனா மினுக்கியாய் அலையுற பயலுவ. இவனுக்கு கமிஷன் கடை வைக்கேன்னு வச்சுக்க. வைக்கது ஒன்னும் பெரிசில்ல நமக்கு. ஆனால் அப்டி வச்சுட்டா -போலீஸ்காரன் திருட்டு நெல்ல வாங்கிட்டோமுன்னு சும்மா சும்மா வந்து தொல்லை பண்ணிக்கிட்டு, மாமுலுக்கு வருவான். வரி ஆபீஸர் வருவான். லைசென்ஸ் பாக்க வாறேன்னு யூனியன்காரன் வருவான். இவன் ஒவ்வொருத்தன் கையில இல்ல, காலுல பணத்த வைக்கணும். அவனுவ அதட்டுற அதட்டலுக்கு காது கொடுத்து கேட்டு, கொடுக்கிற லஞ்சத்தையும் பிச்சக்காரன் மாதிரி கொடுக்கணும். ஒருத்தனுக்கு பணம் கொடுக்கிறது தப்புல்ல. அதையே கும்பிட்டுக் கும்பிட்டு லஞ்சமா கொடுத்தா அது அடிமைத்தனம். அந்தக் காலத்து குட்டி ராசாக்க பெரிய ராசாவுக்கு கப்பம் கட்டுறது மாதிரி. விவசாயிக்கு அப்டி இல்ல. எந்தப் பயலுக்கும் பதில் சொல்லத் தேவையில்ல. இந்தக் கவுரவம் எவனுக்கும் வராதுன்னு இவனுக்குச் சொல்லு.”
“விவசாயத்தையும், வியாபாரத்தையும் ஒண்ணா கவனிச்சுக்கிட்டு.”
“இந்தா பாரு... நீ இப்டிப் பேசுனால், இவன் ஒரு நாளைக்கு வீட்ல இருக்கிற பணத்தை எடுத்துக்கிட்டு மெட்ராஸுக்கோ, மதுரைக்கோ ஓடி சீரழியப் போறான். அதுதான் நடக்கணுமுன்னு நீ நெனச்சால் அப்புறம் ஒன் இஷ்டம். என்னைப் பொறுத்த அளவுல இந்தப் பிலாக்கணம் இதோட முடியுது. சரி சீக்கிரமா காபிக்கு ஏற்பாடு பண்ணு. வரி போடுறதுக்கு ஆளுங்க வர்ற சமயம்.”
பழனிச்சாமி, தனது காதுகளைத் திருகினார். ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அவர் அப்படித்தான். திருமலை, உம்மென்று இருந்தான். பாக்கியம் தனக்குள்ளே முனங்கினாள். கோலவடிவு அந்தக் கயிற்றுக் கொடியைக் கீழே இழுத்துப் போட்டபடியே அண்ணாவை ஏமாற்றத்தோடு பார்த்தாள். அம்மாவை, கோபமாகப் பார்த்தாள். அவனுக்காவ எப்டி பேசுறாள். எனக்காவ ஒரு வார்த்த பேசுதாளா. பொண்ணுன்னு வந்துட்டா அம்மாவக்குக்கூட இளக்காரந்தான். அக்னி ராசாவாம் அக்னி ராசா. எரிஞ்சு எரிஞ்சே அணைஞ்சு போற அக்னி.
பாக்கியம் மகள் பக்கத்திற்கு வந்து தனது கோபத்தைக் காட்டினாள்.
“இவ்வளவு தண்டில இருக்கியே...? ஒனக்கு மூள இருக்கா...? தடிமாடு... கொடிய இப்டி பிடிச்சா இழுக்கது...? இன்னா பாரு... அறுந்துட்டு...”
கோலவடிவு பற்றிய கயிற்றுக்கொடி இரண்டாக அறுந்து, அவள் ஒரு பக்கத்து முனையைத் தன்னை யறியாமலேயே பிடித்துக் கொண்டு இழுத்திருக்கிறாள். அவளுக்கே தெரியவில்லை. கீழே விழுந்த ஈரச்சேலையையும், காய்ந்த பாவாடையையும் எடுக்கப் போனபோது, அம்மா விரட்டினாள்.
“குளிச்சுட்டு வாரதுக்கு இவ்வளவு நேரமாழா. இனிமேல் பம்ப்செட் பக்கம் போ... ஒன் கால ஒடிச்சுப் புடுறேன். டேய் திருமலை... சாப்புடு ராசா... எமுழா இவ்வளவு நேரம்...”
கோலவடிவு அம்மாவின் திட்டிற்கு வருத்தப்படவில்லை. வழக்கத்திற்கு மாறாக சந்தோஷப்பட்டாள். ஒரு ‘விஷயத்த’ சொல்லப் போறாளே.
“ராமய்யா மாமா வயலுல ஒரு சண்டம்மா... துளசிங்கத்துக்கும், அவருக்கும் அடிதடி வராத குறை. அப்புறம் ரெண்டு பேரும் இணஞ்சி போயிட்டாங்க. இந்த அக்னிராசாவுக்கு ஒண்ணுமே தெரியலம்மா. துளசிங்கம், வயலுல வாங்குன உரத்தோட இன்னொரு உரத்த கலந்து போடச் சொன்னாராம். இந்த அக்னி ராசா, சரியான அசமந்தமா... பொட்டாசியம் உரத்த, யூரியா உரத்தோட கலந்து, போடாம வயலயே சாவியாக்கிட்டாராம். ராமய்யா மாமா துளசிங்கம் சண்டையில, தனக்கு சம்பந்தம் இல்லாதது மாதிரி நிக்காரு அக்னிராசா.”
“அக்னி ராசா, உத்தமன்... யோக்கியன்... அப்படித்தான் நிப்பான். துளசிங்கம் மாதிரி அவன் என்ன காவாலிப் பயலா...? பரம்பர பணக்காரன்.”
கோலவடிவு குன்றிப் போனாள். அறுந்த கொடியைக் கட்டாமல், விழுந்த சேலையை எடுக்காமல், இயக்கமின்றி நின்றாள். இந்தச் சமயத்தில், இருபது இருபத்தைந்து சொக்காரக் கரும்பட்டையான்கள் அவர்களில் ஒருவர் திருமலையைப் பார்த்துக் கேட்டார்.
“ஒங்க வயலுல பம்ப் செட் ஓடிக்கிட்டு இருக்குது. நீ இங்கே இருக்கே.”
கோலவடிவு கைகளை உதறியபோது பாக்கியம் கூப்பாடு போட்டாள்.
“பம்ப் செட்ட ஆப்பு செய்யாம வந்துட்டியா...? எரும மாடு மாதிரி தலை ஆட்டுறாள் பாரு. போழா... சீக்கிரமா வயலுக்குப் போய் ஆப் பண்ணிட்டு வா. இந்நேரம் வயலே மூழ்கியிருக்கும். ஓடுழா... வரவர ஏன்தான் இப்டி பித்துப் பிடிச்சுப் போறியோ...? ஓடுழா... இல்லன்னா வயலு குளமாயிடும்.”
உள்ளே இருந்தவர்கள் பழனிச்சாமி இருந்த தார்சாவுக்குள் போய், பெஞ்சுகளையும் நாற்காலிகளையும் தரையையும் இடமில்லாதபடி நிரப்பினார்கள். பழனிச்சாமி சுவரில் சாய்ந்த தலையை நிமிர்த்தியபடியே கேட்டார்.
“எந்தப் பய மவனுகளோ... நம்ம அம்மனுக்கு முன்னால வீடியோ படம் போடணுமுன்னு சொல்லுதாங்களாமே. எந்தப் பயன்னாலும் இப்பவே சொல்லட்டும்...”
“ஒங்க பேச்சுக்கு எதிர்ப்பேச்சு உண்டா. வில்லுல தான் கொஞ்சம்...”
“வில்லுலயும் பொம்புள வில்லு கிடையாது. நம்ம அரியப்புரம் வெற்றிக்குமார் வில்லுதான். அவங்க கிடைக்காட்டாதான் அடுத்த வில்லு.”
“அப்புறம் மேலும்...”
“செட்டு மேளம் வைப்போம். நம்ம ஊரு கணேசன் ரெண்டு தட்டு தட்டட்டும். இந்தத் தடவ குற்றாலத்துல மட்டும் தண்ணி கொண்டு வந்தால் போதாது, தோரணமலை முருகன் கோயில் சுனையில் இருந்தும் நீரெடுக்கணும்.”
“அப்புறம் வரி எவ்வளவு அண்ணாச்சி.”
“ஐம்பது ரூபாய் வரி போதும்.”
“எப்டி போதும். இந்த வருஷம் சப்பரம் விடணும். ரிப்பேர் பாக்கவே ஆயிரம் ரூபாய்க்கு மேல ஆவும்.”
“ஒனக்கு மூள இருக்காடா. கொத்துகுறைக்கு அண்ணாச்சி கொடுத்துட்டுப் போறார். அம்பது ரூபாய் வளியே அதிகம்.”
“சரி... சரி... ஐம்பது ரூபாய். சப்பரத்த பழுது பார்த்து அலங்காரம் செய்யுற செலவு என் பொறுப்பு. இன்னும் ஏதும் பாக்கி இருக்கா பேசுறதுக்கு...? பாக்கியம் காபி கொண்டு வா. திங்கறதுக்கு மொச்சக்கொட்டை பாசிப் பருப்பு எது இருந்தாலும் சீக்கிரம்... சிக்கிரம்...”
வீட்டுக்குள் தட்டுமுட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது பற்குணம் ஓடி வந்தார். மேலத்தெரு ராமய்யாவின் தம்பி வம்புச் சண்டைக்கு பழக்கப்பட்டதால் ‘வாலன்’ என்று வக்கணை பெற்றவர், முற்றத்தில் நின்றபடியே ஊளையிடுவது போல் பேசினார்.
“ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா... செம்பட்டையான் குடும்பத்துலயும் சுடலைமாடனுக்கு இப்போ ‘வரி’ போடுதாங்க. செறுக்கி மவனுவளுக்கு திமிரப் பாருங்க. நீங்க விசேஷம் வச்சிருக்கிற நாளையிலேயே அவங்களும் வைக்கப் போறாங்களாம்...”
“வாங்கடா... புறப்படலாம்... நம்ம வைக்கிற வெள்ளில வைக்காண்டாமுன்னு கெஞ்சிப் பார்ப்போம். மிஞ்சுனாங்கன்னா சுடலைமாடன் கோயிலயே தரமட்டமாக்கிடணும். கரும்பட்டை யானுவளப் பத்தி என்னதான் நினைச்சுக்கிட்டாங்க தெத்துவாளிப் பயலுவ...”
எல்லோரும் எழுந்தார்கள். திருமலையும் திமிறியபடியே எழுந்தான்.
-------------
அத்தியாயம்- 12
கோலவடிவுக்கு, அந்த திண்டாட்டத்திலும், ஒரு கொண்டாட்டம்.
சொக்காரன்மார், உட்காருவதற்கு முன்பே கோலவடிவு வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டாள். அந்தக் குழப்பத்திலும் சிறிது தெளிவு ஏற்பட்டது. வழியில் அலங்காரியைப் பார்க்கலாம், அல்லது அவள் மச்சான் மகனைப் பார்க்கலாம் என்ற மனவோட்டத்தோடு உடலோட்டமாய் ஓடினாள். ஆனாலும் அவர்களை கடைகள் பக்கம் காணோம். பீடிக்கடைப் பக்கம் பேச்சில்லை. குளத்துக்கரையில் அலங்காரி இல்லாத பெண்கள் கூட்டமும், துளசிங்கம் இல்லாத ஆண் கூட்டமுமாகப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தன.
வயலுக்குள் வந்த கோலம், பம்ப்செட்டை நிறுத்தாமல் வெள்ளப்பெருக்காகிக் கரையுடைந்த வாய்க்காலையும், எல்லைபோய் இரண்டறக் கலந்த சின்னச் சின்ன மிளகாய் பாத்திகளையும் வாயகலப் பார்த்தாள். பின்னர் பம்ப்செட் வெள்ளத்தை உற்றுப் பார்த்தாள். இதோ இந்த பம்ப் செட் மேளதாளத்தோடு, அலங்காரி அத்தையின் குலவையோடு, அதோ அந்த குருவிகள் ‘கெட்டி மேளம், கெட்டி மேளம்’ என்று கூறுவது போல் கூவிய காச்சள் மூச்சா சத்தத்தோடு இவற்றின் சகல சாட்சியங்களுடனும் துளசிங்கம் மச்சான் குங்குமம் வைத்தார். சைபர் மாதிரியான பெயிலு குங்குமம் அல்ல. தடிச்ச குங்குமம்...
கோலவடிவு, சுயநினைவுக்கு வந்து, பம்ப் செட்டை ‘ஆப்’ செய்துவிட்டு, எதிர்த்திசையை எதோ ஒரு திசையாக நினைத்து நோக்கினாள். அங்கே உத்தமன் அக்னி ராசா, தான் சரியாகக் கிரகிக்காததாலோ, அல்லது துளசிங்கம் சொல்ல வேண்டிய அளவுக்குச் சொல்லாததாலோ, சாவியாகிப்போன நெற்பயிர்களை வட்டமடித்த காகங்களை விரட்டியடித்து காவல் காத்தான். அவன் ஒரு பொருட்டல்ல என்பதுபோல் அந்தப் பறவைகளோ பயப்படவில்லை. அக்னிராசா கோலவடிவின் கவனத்தைக் கவர “ஏய் காக்கா.” என்றான். அதைப் பார்த்த கோலவடிவுக்கு அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. வரப்பென்று நினைத்து வயல் வழியாக நடந்தாள். குளத்தின் மதகுப் பக்கம் வந்த பிறகு, மீண்டும் கைகளை உதறினாள். பம்ப் செட் அறையை பூட்ட மறந்துட்டேனே...
கோலவடிவு, மீண்டும் நடந்த வழியிலேயே நடந்து, வயல் மேட்டிற்கு வந்து பம்ப் செட் அறையைப் பூட்டினாள். சிறிது தூரம் நடந்தபின், மீண்டும் கைகளை உதறி திரும்பி வந்து சாவியை எடுத்துக் கொண்டாள். அக்னிராசா அவளை சந்தோஷமாகப் பார்த்தான். லேசாய் பாட்டுக்கூட பாடினான். அப்படி பாட்டாக நினைத்து அவன் எதையோ இழு இழு என்று இழுத்தான். இப்படி அவளைப் பார்ப்பதையும், பாடியதையும் பார்த்த கோலவடிவிற்குக் கோபமும் வந்தது. கூடவே அனுதாபமும் வந்தது. ‘ஓம்ம எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனால் புருஷனாய் பிடிக்கலன்னு, நேரா போய் நாகரிகமாய் சொல்லிடலாமா. எம்மாடி... அப்பாவுக்குத் தெரிஞ்சா வெட்டிப் புதச்சிடுவார். அப்புறம் துளசிங்கம் மச்சான் குங்குமம் வச்சதுக்கு அர்த்தமில்லாமப் போயிடும். அவரு கை ராசியில்லாத கையா இருக்காது. இருந்தா கடை இப்படி செழிச்சிருக்காதே.’
கோலவடிவு கரை வழியாய் நடந்து, கண்மாய் வழியாய் இறங்கி ஊருக்குள் நுழைந்தபோது, தேவைப்படாதவர்கள் அனைவரும் தென்பட்டார்கள். தேவைப்பட்ட இரண்டே இரண்டு ஜீவன்களைக் காணாததால், அவள் ஜீவனற்றவள் போல் நடந்தாள். எதிர் பார்ப்புடன் வயலுக்குள் ஓடியவள், ஏமாற்றமாக நடந்தாள். அக்கினிராசாவின் ஆக்கிரமிப்புக்கு நடத்தப்பட்ட பேச்சு. அவள் மூச்சை இப்போது தடை செய்தது. அண்ணாவுக்கு என் பொருந்தாத கல்யாணத்தைவிட, கடை வைப்பது பெரிசாப் போயிட்டு. அப்பா என்னடான்னா பட்டும் படாமலும் பதிலளிக்கார். அம்மாவுக்கோ, அக்கினிராசா உத்தமனாம். நான் யார் கிட்ட சொல்ல, எப்படிச் சொல்ல. சும்மா ஆறுதலுக்குன்னாவது சொல்லியாகணும். இல்லாட்டா தலையே வெடிச்சுப் போயிடும். அத்தே... அலங்காரி அத்தே...
ஊரில் பள்ளிக்கூடத்திற்கு அருகே வந்த கோலவடிவு, அங்கு மிங்குமாகப் பார்த்தாள். அலங்காரி அத்தை வீடு அங்கேதான் இருக்குது. போய்ப் பார்த்தா என்ன... அஞ்சு வருஷத்துக்கு முன்னால அத்தை வீட்டுக்குப் போயிருக்கேனே. புதுசாவா போகப் போறேன். அதெப்படி... அப்போ நான் வயசுக்கு வரல. அத்தை வீட்டுக்கு வயசுப் பொண்ணுவ போனால்தானே, ஊருக்கு சந்தேகம் வரும். சந்தேகம்... பொல்லாத சந்தேகம்... தாயக் கழிச்சாலும், தண்ணியக் கழிக்கப்படாதாம். அதாவது தண்ணி வராத ஏதோ ஒரு இடமோ, அந்த தண்ணியோ அசிங்கமாய் இருக்குன்னு அதுக்கு அடுத்த இடத்தையோ, தண்ணியையோ கழிக்கப்படாது. அப்படியே அந்த தண்ணியக் கழிச்சாலும் இந்த அத்தையைக் கழிக்கப்படாது. அவளுக்கு ஆயிரம் வில்லங்கம் இருக்கும். ஆனால் அந்த அத்தைதான் என்னைக் காப்பாத்துவாள். படிதாண்டா பத்தினிமாரு அக்னி ராசாவுக்கு என்ன முடிக்கணுமுன்னுதான் பேசுவாளுவ. ஒரு பொண்ணு தன்னோட கல்யாணத்தைப் பத்தி பேசுறதான்னு சிரிப்பாளுவ.
கோலவடிவு அங்குமிங்குமாய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு, அலங்காரி வீட்டின் வெளிச்சுவரில் குப்புறச் சாய்ந்து நின்றபடி, முகத்தை மறைத்துக் கொண்டு கதவைத் தட்டினாள். அதிக நேரம் தட்ட வேண்டிய அவசியமில்லை. அலங்காரியின் பாவி மனுஷன் கதவைத் திறந்துவிட்டு, ஆச்சரியப்பட்டார். பிறகு இங்கே பாரேன் என்பது மாதிரி, பெரிய வீட்டுத் திண்ணையில் ஒரு சேலையைத் தைத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தார். உள்ளே ஓடிவந்த கோலவடிவு, காஞ்சான், எலி டாக்டர் காட்டும் அவசரத்தைவிட அதிக அவசரம் காட்டித் கதவைத் தாழிட்டாள்.
அலங்காரி ஊசி நூலோடு எழுந்தாள். சேலை ஒரு பொருட்டல்ல என்பதுபோல் அதை விசிறியடித்துவிட்டு, பாதி வழி நடந்து, கோலவடிவை, தனது மறுபாதி போலாக்கி, அணைத்துக் கொண்டே பேசினாள்.
“என்னடா... இப்டி தும்மல் வருதேன்னு நெனச்சேன். நமக்கு பிடிச்சவங்க வருவாங்கன்னு எதிர் பார்த்தேன். நீ வந்துட்டே... ஆயுசு நூறு. இந்த வீட்டுக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாலதான் வந்திருக்கே. இல்லியா...?”
கோலவடிவு பதில் சொல்லப்போனாள். அலங்காரி மகள் விமலா கல்லூரி படித்து முடித்துவிட்டு, விடுமுறையில் வரும் போதெல்லாம் இவள் வந்திருக்கிறாள். அந்த அண்ணிய இவளுக்கு ரொம்ப பிடிக்கும். விமலாண்ணி மதுரையில் கல்யாணம் ஆனபிறகு அம்மாவ எட்டிப் பாக்கதே கிடையாது. பக்கத்து ஊருக்கு புருஷனோட வாராள். இந்தப் பக்கம் வர்ரதே இல்ல. அம்மா நடத்தை சரியில்லன்னு இப்பதான் அம்மாளுக்கு தெரியும் போலுக்கு... அவள ஞாபகப்படுத்தி இவள அழ வக்கப்படாது...
அலங்காரி மெளனமாக நின்ற கோலவடிவை தோளில் கை போட்டு, திண்ணையை அடுத்த அறைக்குக் கூட்டிப் போனாள். பிறகு கணவனுக்கு ஆணையிட்டாள்.
“என் மருமவளுக்குக் போண்டா வாங்கிட்டு வாரும். இல்லாட்டா மசால்வடை. ஒன்னத்தான் கேனய்யா... ஏன் இப்படி பராக்கு பாக்கே... எனக்குன்னு வந்தே பாரு... சரியான அக்னி ராசா. பீரோவுல காசு இருக்கு... எடுத்துட்டு ஒடுய்யா.”
“எனக்கு எதுவும் வேண்டாத்தே. சாப்புடுற நிலையிலயும், நான் இல்லத்தே.”
கோலவடிவு, அலங்காரியின் மார்பில் விழுந்தாள். அவளின் இரு தோள்களையும் பிடித்துக் கொண்டு அங்குமிங்குமாகத் தலையாட்டினாள். விம்மியடிபயே பேசினாள்.
“அத்தே நீங்க சொன்னது சரியாப் போச்சு அத்தே. என்னை அக்னி ராசாவுக்கு எரிச்டுவாவ போலுக்கு. ஆமாத்தே... அக்னி ராசாவுக்கு அநேகமா என்னை முடிச்சுடுவாவ போலுக்கே. நீங்கதான் என்னக் காப்பாத்தணும்.”
“அய்யோ... எனக்கு கையும் ஒடமாட்டக்கு. காலும் ஒடமாட்டக்கே... ஒன்னையா... அக்கினி ராசாவுக்கா... அடக் கடவுளே... யோவ் ஒம்மத்தான்... துளசிங்கத்தை நான் சொன்னேன்னு கையோட கூட்டி வாரும். இங்க வாருமுய்யா. சொல்லப் பொறுக்காம ஓடுவியரே... எது கேட்டாலும் முழுசாக் கேக்கணும்... துளசிங்கத்தைத் தனியாக் கூப்பிட்டு, நான் உடனே வரச் சொன்னேன்னு சொல்லும். கோலவடிவு இருக்கான்னு சொல்லாதயும். சொல்லிட்டா வெட்கப்பட்டுட்டு வரமாட்டான். இந்தாரும் ஐம்பது பைசா. ஒரு டீயும், மசால்வடையும் சாப்புட்டுட்டு அப்பிடியே ஆட்டுக்கு புல்லு வெட்டிட்டு வாரும்.”
அலங்காரி, கணவனை வாசலில் வழியனுப்பி வைத்த கையோடு கதவைத் தாழ்ப்பாளிட்டு விட்டு அந்த இடைவெளி நேரத்தில் கோலவடிவின் பிரிவை பொறுக்க முடியாதவள் போல் ஓடிவந்தாள். கோலவடிவு மருவி மருவிக் கேட்டாள்.
“அவரு... அவரு... எதுக்கத்தே.”
“நானும் யோசிச்சேன். ஆனால் அவனாலதான் யோசனையே சொல்ல முடியும். பாரு ஒன் நிலமயப் பார்த்து, இந்த அத்தைக்கே கைகால் ஆடுதுபாரு. ஒன்னை காப்பாத்தியாகணும். இதுல அத்த பிறழப் போறதுல்ல. ஆனால் எப்டிக் காப்பாத்தறது. இதுக்கு துளசிங்கம்தான் சரியா யோசித்து சொல்லுவான். சரி... என்ன நடந்தது. எது நடந்ததுன்னு இந்த அத்த கிட்ட ஒருவரி விடாம ஒப்பிப்பியாம். நான் இருக்கேன் சொல்லுடி என் ராசாத்தி.”
கோலவடிவு, வயலில் துளசிங்கம் குங்குமம் வைத்த அந்த நாளில் இருந்து, அந்த பம்ப் செட்டில் குளித்தாலும், குங்குமம் வைக்கப்படாத இந்த நாள்வரை வரிவரியாய் வார்த்தை வார்த்தையாய் ஒலி ஒலியாய் ஒப்பித்தாள். சொல்லி முடித்துவிட்டு, மாங்கு மாங்கு என்று அழுதாள். அழுது முடித்துவிட்டு, அத்தையை சோகமாகப் பார்த்தபோது - தெருக்கதவு தட்டப்பட்டது. அதைத் திறப்பதற்காக துள்ளிக் குதித்தவளை, அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, அலங்காரி வெளியே வந்தாள். கதவைத் திறந்ததும், துளசிங்கம் வாசற்படியில் நின்றபடியே “என்ன சித்தி” என்றான். “உள்ளே வாப்பா” என்று அவன் கரத்தைப் பிடித்து உள்ளே இழுத்துவிட்டு, அலங்காரி கதவை மீண்டும் தாளிட்டாள். அவன், கதவை ஒரு கையால் திறக்க முயற்சி செய்தபடியே கேட்டான்.
“ஒனக்கு ஏன் சித்தி காலம் நேரம் தெரியல. இன்னிக்கு நம்ம சுடலை மாடனுக்கு வரிபோட நம்ம சொக்காரங்க கூடியிருக்காங்க. கரும்பட்டையான் குடும்பத்து காளியம்மன் கொடையோடயே நம்ம கோவிலுக்கும் கொடைன்னு நானே முடிவு எடுத்தாச்சு. ஆனாலும் கூட்டத்துல முடிவு எடுக்கதா பாவலா செய்யணும். எவனும் கரும்பட்டையானுவளுக்குப் பயந்து முடிவ மாற்றிடப்படாது பாரு.”
“அப்படி மாத்திட்டால் நாம உயிரோட இருக்கதுல அர்த்தமில்ல. உள்ள யாரு இருக்கான்னு பாரு...”
“அடடே... கோலவடிவு... இவள் எதுக்கு வந்தாள்...?”
“காரணமாத்தான் வந்திருக்காள். அக்கினி ராசாவுக்கு அவளக் கட்டப் போறாங்களாம். அவளுக்கு இஷ்டமில்ல. நாம் அந்தக் கல்யாணத்தை தடுக்கணுமாம்.”
“இருக்கிற உபத்திரம் போதாதுன்னு இவள் வேறயா...? அதோட இவளும் லேசுபட்டவ இல்ல. அன்னைக்கு. திருமலைக்கு ரகசியமாய் கையோட கையாய் பணத்தை எடுத்து...”
“பழைய கதை வேண்டாண்டா. சித்தி சொன்னால், அதுல காரண காரியம் ஏதாவது இருக்கும். ஆறுதலா அவள் கிட்ட ரெண்டு வார்த்த பேசிட்டு போ.”
“என்ன சித்தி இது... அவள்கிட்ட என்ன பேச்சு. அதுவும் ஒன் வீட்ல. கதவ மூடிக்கிட்டு... இதுல்லாம் கொலையில போய் முடியுற சமாச்சாரம்...”
“இப்போ நீ அவள்கிட்ட பேசுனால் கோயில் விவகாரத்துல நாம் ஜெயிப்போம். எப்படின்னு கேளாத. பேசாம அவள் கிட்ட பேசுடா... ஆறுதலா பேசு... விளையாட்டா...”
“போ சித்தி...”
“நீ அவள்கிட்ட பேசும்போது சித்தி போயிடுவேன்...”
அலங்காரி கண்சிமிட்டியபடியே சிரித்தாள். துளசிங்கத்திற்கும் கிறக்கம் வந்தது. இருவரும் கோலவடிவைப் பார்த்தபடியே போனார்கள். உள்ளறையில் கட்டிலில் உட்கார்ந்திருந்த கோலம் எழுந்தாள். கண்ணிர் சொட்டுக்கள் கழுத்தில் பெருக்கெடுத்தன. அலங்காரி அவள் கண்களை முந்தானையால் துடைத்து விட்டுப் பெருமூச்சோடு பேசினாள்.
“ஒன் கதயத்தான் இவன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன். துடிச்சுட்டான்... துடிச்சுட்டான்... அப்படித் துடிச்சுட்டான். எய் துளசிங்கம்... என் மவனே... கோலம் நம்ம பொண்ணுடா. அலங் கோலமாய் ஆயிடப்படாதுடா. அவள எப்படியும் காப்பாத்தி ஆகணும். எம்மாடி எனக்கு தலைக்கு மேலே வேல. நம்ம சுடலமாடன் ஆட்டுக்கு தவிடு வச்சுட்டு வாறேன்.”
சுடலை மாடனுக்கு வளிபோடும் நாளிலேயே கோலவடிவை தன்னிடம் வரவழைத்த மாடனின் திருவிளையாடலில் மெய் சிலிர்த்து அலங்காரி போய்விட்டாள். துளசிங்கம், இடுப்புப் பெல்ட்டைத் தடவியபடியே கோலவடிவைப் பார்த்தான். இருவரும் சிறிது நேரம் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். நேரமில்லாத துளசிங்கம் நேரடியாகவே உறுதி சொன்னான். சித்தி பூடகமாகப் பேசுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கும் என்ற அர்த்தத்தில் பேசினான்.
“கவலைப்படாதே கோலம். அந்த அக்னிப் பயல் ஒன்னை எரிக்காம நான் பாத்துக்கிறேன். அழாதேம்மா... வேற எந்த வழியும் இல்லாட்டா நானே ஒன் கழுத்துல தாலி போடுறேன். பயப்படாதே... ஒங்கப்பா சம்மதத்தோடுதான்.”
கோலவடிவு புல்லரித்தாள். அவன் சொன்ன காட்சியை நினைக்க நினைக்கக் கன்னம் சிவந்தது. அண்ணாவோட ஏற்பட்ட அமளி துளியில், இவனால் அப்டி செய்ய முடியுமா என்று அவனை ஏக்கமாய்ப் பார்த்தாள். பிறகு, அவனால் முடியும் என்றும், அதற்குரிய சாதுரியமும், சமர்த்தும் அவனிடம் இருப்பதைக் கண்டு கொண்டவள் போலவும் அவனைச் சிரிப்பும் சிணுங்கலுமாய்ப் பார்த்தாள். அப்பா அவனுக்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்தது அவள் முகத்தில் நல்ல சிவப்பாக மலர்ந்தது.
துளசிங்கம் அவள் மோவாயை, ஒரு கையாலேயே நிமிர்த்தினான். எந்த நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்தானோ, அதை எச்சிலாக்கியபடியே உறுதியளித்தான்.
“இந்த முத்த சாட்சியாய் சொல்லுறேன்... இந்த துளசிங்கம் ஒன்னைக் கைவிடமாட்டான்...”
அந்த அறைக்கு வெளியே, அலங்காரி சுடலைமாடன் கிடாவோடு விளையாடி விளையாடிப் பாடினாள்.
“துள்ளாத துள்ளாத ஆட்டுக்குட்டி
என்கிட்ட இருக்குது... சூரிக்குத்தி”
--------------
அத்தியாயம்- 13
கரும்பட்டையான் கூட்டத்தின் காளியம்மன் ‘வரி விதிப்பு’ சட்டுப்புன்னு முடிந்துவிட்டது. ஆனால், செம்பட்டையான் கூட்டத்தின் வரி விதிப்பு ரப்பர் மாதிரி இழுத்தது. முதலில் கூட்டத்தை எங்கே நடத்துவது என்று பிரச்சினை மேலாவாரியாக எழுந்தது. ‘காஞ்சான்’ வழக்கம்போல் தன் வீட்டில்தான் நடத்தவேண்டும் என்றார். ஆனால், துளசிங்கம் தலையெடுத்து விட்டதால் அவன் தந்தை ‘எலி டாக்டர்’ தனது வீட்டில் வைக்க வேண்டும் என்றார். இறுதியில் இவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் கூடிவிட்டார்கள். சொல்லி வைத்தது போல், கிழவர்கள் ஒருபக்கமாகவும், வாலிபர்கள் ஒரு பக்கமாகவும் உட்கார்ந்தார்கள். இந்தத் தடவை கரும்பட்டையான் காளியம்மனுக்கு, இந்தச் செம்பட்டையான் சுட்லை மாடனைப் போட்டியாக்குவது என்று தீர்மானமாகிவிட்டதால், அந்தக் குடும்பத்துப் பெண்கள் கூட்டத்திற்கு வெளியே காதுகேட்கும் தொலைவில் கூடிக்கூடி நின்றார்கள். அவர்களுக்கும் ஒரு எரிச்சல்... ஒரு ஆசை... அதென்ன எல்லா வருஷமும் முதல் கொடை கரும்பட்டையான் கொடை.
‘குடிமவன்’ குத்தாலிங்கம் பிரித்துக் கொடுத்த நான்கு வெற்றிலைகளைக் குதப்பிக் கொண்டிருந்த கூட்டத்தின் முகப்பில் இருந்த எலி டாக்டர், ‘பால் குடிக்கத் தெரியாத’ அப்பாவி பூனை மாதிரி கேட்டார்...
“சரிப்பா எப்போ கொடையை வச்சுக்கலாம்.”
“இது என்ன பெரியய்யா புதுக்கேள்வி. இந்த வெள்ளில வரின்னா அடுத்த வெள்ளிலதான கொடை. இதுல ஏன் சந்தேகம் வருது.”
காஞ்சான் விளக்கமளித்தார். “சந்தேகம் ஒனக்கு வர்ல... ஆனால் சில பயலுவளுக்கு இருக்கு. அதனால தான் எலி டாக்டர் அண்ணாச்சி கேக்காவ.”
“ஏய். யாரும் சபையில் வக்கணப்பேர பேசப்படாது. நெசப்பேரத்தான் சொல்லணும்.”
“ஆமா... எலி டாக்டர் தாத்தாவோட நெசப்பேரு என்ன.”
“சின்னப்பய மவனுகளா. சும்மா இருங்கடா... சரி... அடுத்த வெள்ளில கொடை... அப்படித்தானே...”
“கரும்பட்டையான் கூட்டம் நமக்கு வேற யாருமுல்ல... கொண்டான் கொடுத்தாக... அதோடு காளியம்மா மாடனுக்குத் தாயி... தாய்க்குப் பிறகுதான் மகன்...”
“காளியம்மனுக்கு சுடல மவனோ இல்லியோ... ஒங்கம்மா பொறந்தது கரும்பட்டையான் குடும்பம்... ஒனக்கு தாய்மாமன் குடும்பம் உசத்தியாப் போச்சா...?”
“ஏல உட்காருல... ஒன் மாமன் மச்சான் உறவ வீட்ல வச்சுக்க. இது சபை...”
“என் தாய் மாமனுக்கும் எனக்கும் எழவு எட்டு கிடையாதுன்னு ஒங்களுக்குத் தெரியாதா...?”
“ஒரு வேள இந்தச் சாக்குல சேரப் பாக்கியோ என்னவோ...?”
“பரம்பரையாய் அவங்கதான் முதல் வெள்ளில கொடுக்காங்க. நாம் அந்தக் கோவிலுல போயி மாலை எடுத்துப் போடுறவங்க. அவங்க நம்ம கோயிலுல வந்து உத்தரவு கேட்கிறவங்க... வேண்டாங்கல... ஆனால் ஒரு வார்த்த அவங்ககிட்ட கேட்டுக்கிட்டு...”
“நீ வேணுமுன்னா அவங்க காலுல போயி முட்டு. நாங்க போகப் போறதுல்ல.”
காஞ்சானைத் தொலைவில் நின்ற அலங்காரி, முகத்தைச் சுண்டிச் சுண்டிக் கைகளை மேலே மேலே தூக்கி தூக்கித் தூண்டிவிட்டாள். அவர் விடுவாரா...
“பரம்பரையாய் பழக்கம் என்கிற கரும்பட்டையான் பருப்பு, செம்பட்டையான் அடுப்புல, இனிமேல் வேகாது. அவங்கள இப்டி விட்டதாலதான் நம்பள இளப்பமாய் நினைக்காங்க. அவங்க கண்ணுக்கு பழனிச்சாமிதான் ஒரே ஒரு பெரிய மனுஷன். நானோ, துளசிங்கம், அப்பாவோ வெறும் மனுஷனாக்கூடத் தெரியல. எவ்வளவு திமுரு இருந்தா நம்ம துளசிங்கம் பய கடைக்குள்ள வந்து அந்தத் திருமலைப் பயல் அடிப்பான். எவ்வளவு திமுரு இருந்தால் நம்ம அலங்காரிய...”
“ஏய் யார் பேச்ச பேசுனாலும் அலங்காரி பெரியம்மா பேச்சு எடுக்கப்படாது.”
எல்லாரும் எதிர்பாராத வகையில், அலங்காரி அங்கே ஓடிவந்தாள். சில பெண்கள், அவள் சேலையைப் பிடித்து இழுத்தும், அவள் அதை விட்டுவிட்டு வரத் தயாரானவள் போல் முண்டியடித்தாள். கடைசியில், அந்தப் பெண்கள் தான் கூச்சப்பட்டு, பிடித்த சேலையை ஓடிப்போய் அவள் தோளில் தொங்கப் போட்டார்கள்.
அலங்காரி, சபைக்கு முன்னால் வந்து கத்தினாள்.
“என்ன அலங்காரி பேச்சு பேசப்படாதா. பெறவு எதுக்குல பெரியம்மான்னு சொல்லுத...? அதுக்குப் பதிலா வேற வார்த்தய போட்டா என்னடா. பேசிதியளோ... பேச்சு செத்த பேச்சு... இது கெளரவ சபையா... இல்ல செம்பட்டையான் சபையா... எனக்கு இப்போ தெரியணும்.”
“என்ன அலங்காரி இந்தச் சமயத்தில...”
“பின்ன என்ன மச்சான்... கெளரவ சபையில திரெளபதிய துச்சாதனப்பய துகிலுரிஞ்சது மாதிரி... பழனிச்சாமி வீட்ல என்னை அருணாசலம் அப்டி மான அவமானமாப் பேசிட்டான். காஞ்சான் மச்சான பயல்னு வேற திட்டுனாள், அந்த பேச்சி. துளசிங்கம் கடையில வந்து அடிச்சுட்டுப் போறான் திருமல...”
“எம்மா... இது ஆம்புள விவகாரம். நீ போ... பொம்புளக்கி வேல இல்ல...”
“ஆம்புளைவ பொம்பளையா மாறிட்டா, பொம்புளயவ ஆம்புளயா மாறித்தானே ஆவணும்...? எங்களுக்கு அதான் ஒங்க குடும்பத்து பொம்புளயளுக்கு... இங்க கூடியிருக்கிற செம்பட்டையான்... ஆம்புள மார்ல எத்தனை பேரு கரும்பட்டையான் பயலுவ காலக் கழுவப் போறியள்னு தெரியும்...”
எலி டாக்டர், கண்ணைச் சிமிட்டியபடியே எச்சரித்தார்.
“அலங்காரி ஒனக்கு அபராதம் போட வேண்டியது வரும்.”
“அப்படின்னா அதையும் நீருதான் கட்டவேண்டியதிருக்கும். எங்க வீட்டு மம்மத ராசாவோட கூடப் பிறந்த அண்ணாச்சியாச்சே.”
“போம்மா... போம்மா... ஏல... பேய்ப் பய மவனுளா... லேசா சிரிங்கல... குடலு அறுந்துடப் போவுது.”
துளசிங்கம் எழுந்தான். அப்பாவை ஒரு முறைப்பு முறைத்து, அவரை கப்சிப்பாக்கி விட்டுப் பேசினான்.
“அலங்காரி சித்தி சொன்னதுல தப்பில்ல. சித்தி நீ ஏன் போறே, இங்கேயே நில்லு. அடுத்த வெள்ளில கொடை கொடுக்கோம். சரிதானே...”
“ஒரு வார்த்த அவங்க கிட்டயும்...”
“நாம என்ன வேலைக்காரனுவளா, எசமான்க கிட்ட உத்தரவு கேட்க.”
“ஒரே நாள்ல ரெண்டு கொடைக்கு கூட்டம் சிதறும். அடிதடி கூட வரும்...”
“அதை நான் பார்த்துக்கிடுறேன். நம்ம மேல ஒரு தூசி துரும்பு விழாது. அப்புறம்...”
“அப்படின்னா சரிதான்.”
துளசிங்கம் மீண்டும் உட்கார்ந்து அப்பாவைப் பேசவிட்டான். துளசிங்கத்திடம் பலருக்குப் பயம். இவன் கிட்டதான் உரத்த வாங்கியாகணும். இவனோ, ராமய்யா வயலப் பண்ணுவது மாதிரி பண்ணிடப்படாது. அதோட இவன்கிட்டே கடனேன்னு வாங்குனாலும் கடனிலயே வாங்கலாம். எல்லாத்துக்கும் மேல, நம்ம பயல். இளவட்டப் பயலுவல்லாம் இவன் பக்கம். இந்தக் குடும்பத்துல, முதல் தடவையா, நாகரீகம் தெரிஞ்ச நம்ம பயல்.
“சரிப்பா... வரி எவ்வளவு போடலாம்...?”
“அறுபது ரூபாய்.”
“போதுமா...?”
“போதாட்டா என் மகன் துளசிங்கம் இருக்கான்.”
“சபையிலயாவது நான் இருக்கேன்னு சொல்லேன் டாக்டர் அண்ணாச்சி. தலை இருக்கும்போது வால் ஆடலாமோ...”
வால்தான் ஆடும் என்பது போல், துளசிங்கம் மீண்டும் எழுந்தான். இலைதழை உடையோடு இதுதான் தீர்ப்பு என்பது மாதிரி பேசினான்.
“இப்பவே சொல்லிட்டேன்... வீடியோ சினிமாப்படம் போடப் போறோம்...”
“திருவிளையாடலா... சம்பூர்ண ராமாயணமா... ரெண்டுல எதுன்னாலும் சரிதான்...”
“ரெண்டும் இல்ல. ஒரு இங்லிஸ் சண்டைப்படம். ஒரு தமிழ் காதல் படம்...”
“கட்டணம் வசூலிக்காட்டா சரிதான்...”
“அப்புறம் வில்லு, பொம்பள வில்லுதான். சர்க்கரைப் பட்டி சடையம்மாவோட வில்லு.”
“எல்லாத்தையும் நீயே தீர்மானம் பண்ணிட்டே. நீயும் யாரு,நம்ம பயதானே, சம்மதிக்கோம்... சம்மதிக்கோம்...”
“நீங்க சம்மதிப்பிங்கன்னு எனக்குத் தெரியும். எதுக்கு சொல்ல வந்தேன்னா... நம்ம சுடலைமாடன் கோவிலுல இருபத்தோரு சாமிங்க... எக்ஸ் டிராவா ஒருத்தர சேர்த்து இருபத்திரண்டு பேரு சாமியாடுறாங்க... இவங்கெல்லாம் அளவோட ஆடனும்.”
“என்னப்பா... நீ குடும்பக் கட்டுப்பாடு கூட்டத்துல பேசுறது மாதிரி பேசுற... சாமிகள பழிக்கப்படாது.”
“நான் சாமிகளப் பேசல... சாமியாடிகளத்தான் பேசுறேன். சாமியாடுற எங்கப்பாவையும் இந்த சின்னய்யாவயும் சேர்த்துத்தான் சொல்லுறேன். தண்ணி போட்டுட்டு யாரும் சாமியாடப்படாது. அப்படி ஆடுனா இளவட்டங்க கோயில் பந்தலுலயே கட்டி வச்சுடுவோம்.”
‘பட்டை தீட்டும்’ சாமியாடி ரத்தினம் உரிமைக்குரல் எழுப்பினார். “ஒன் வயசுக்குத் தக்கபடி பேசு துளசிங்கம்.”
“துளசிங்கம் சொன்னதுல என்னப்பா தப்பு. சாமியாடுற நாளுலயாவது குடிக்காம இரேன். போன வருஷம் குடிச்சுப்புட்டு மகளேன்னு சொல்லுறதுக்குப் பதிலா மயினின்னு பேசுற. மாடனுக்கு ராமாக்கா எப்படி மயினி ஆனாள்.”
“சரி, சபை முடியலாமா...? ரெண்டு நாளையில் வரிப் பணத்த எல்லாரும் கொடுத்துடனும்.”
எல்லோரும் எழப்போனபோது, பத்துப் பதினைந்து பேர் சுற்றி வந்து நின்றார்கள். அத்தனைபேரும் கரும்பட்டையான் குடும்பத்தினர். இவர்கள் வரவை எதிர்பாராத காஞ்சான் கத்தினார்.
“என்னப்பா இது. அடிக்க வாரது மாதிரி வந்திருக்கிய.” வந்தவர்களில் முக்கியமான, ஒருவர் மரியாதையுடன் பேசலானார்.
“நாம எதுக்கு மச்சான் அடுச்சுக்கணும். நீங்களும் வரி போடுறதா கேள்விப்பட்டோம்...”
“ஆமா... அதுக்கென்ன இப்போ...?”
“வருஷா வருஷம் நாங்கதான்...”
“ஒங்களுக்கு இந்த ‘நான்’ என்கிற அகங்காரம் வரப்படாதுன்னுதான் அடுத்த வெள்ளில கொடை கொடுக்கப் போறோம்.”
“அடுத்த வருஷம் நீங்க மொதல்ல கொடுங்க. நாங்களே விட்டுக் கொடுக்கோம். இந்த வருஷம் வரி போட்டுட்டோம்...”
“நாங்களுந்தான் போட்டுட்டோம்.”
“இப்படி விதண்டாவாதமா பேசுனா எப்படி...?”
“கரும்பட்டையான் பேசுனால் வாதம். அதையே நாங்க பேசுனா விதண்டாவாதம். அடுத்த வருஷம் நாங்க விட்டுக் கொடுக்கோம். இந்த வருஷம் நாங்கதான் நடத்தப் போறோம்.”
கரும்பட்டையான் குடும்பத்தைச் சேர்ந்த ‘நாட்டு வக்கீல்’ நாராயணன், கெஞ்சாமலும் அதேசமயம் மிஞ்சாமலும் பேசினான். நாட்டு வக்கீல் என்று பெயர் எடுத்தவன்...
“கோயில் முறைன்னு ஒண்ணு இருக்கே. காளி, மாடனோட தாய். வருஷா வருஷம் ஒங்க மாடன் எங்க காளிகிட்ட வந்து விபூதி பூசிட்டுப் போய்த்தான் ஆடுறது வழக்கம்.”
“இந்த வருஷம் எங்க மாடன் ஒங்க காளிகிட்ட விபூதி வாங்க மாட்டான்...”
“சரி வாங்கட்டும். வாங்காமப் போகட்டும். இனிமேல் வருஷா வருஷம் மாறி மாறி காளிக்கும், மாடனுக்கும் கொடை கொடுத்துடுவோம். இந்த வருஷம் காளிக்கே முதல் கொடையா இருக்கட்டுமுன்னு எங்க பழனிச்சாமி அண்ணாச்சி ஒங்ககிட்டே சொல்லச் சொன்னாரு.”
கோலவடிவின் சிநேகிதத்தால், அடுத்தவர்கள் பதிலளிக்கட்டும் என்று தன்பாட்டுக்கு இருந்த துளசிங்கம், அந்தப் பக்கமாக வந்த திருமலையைப் பார்த்துவிட்டான். அவ்வளவுதான். புதிய உறவு பழைய பகையானது. அழுத்தம் திருத்தமாகக் கேட்டான்.
“ஏன் பழனிச்சாமி எங்ககிட்ட வந்து கேட்க மாட்டாரோ...? அவரு பெரிய மனுஷனா இருந்தால் அவரு வீட்டு வரைக்குந்தான்.”
திருமலைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.
“ஏல... செறுக்கிமவனே. யார்ல பழனிச்சாமி... பேர் சொல்லிக் கூப்புடுற அளவுக்கு வந்துட்டியா...?”
“பழனிச்சாமி... பழனிச்சாமி... என்னல செய்வே...?”
“இப்போ ஒன்னையும் ஒன் சொக்காரனையும் என்ன செய்யப் போறேமுன்னு பாரு.”
“வீடு விட்டு வீடா அடிக்க வந்திருக்கிய. ஏல... நீங்கல்லாம் நிசமான செம்பட்டையான்னா எடுங்கல அரிவாள. கையில் அது இல்லாட்டா, கல்ல எடுங்கல.”
கரும்பட்டையான்களும், செம்பட்டையான்களும் வீரத் தனத்திலும், பேடித்தனத்திலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. இருதரப்பும், புறநானூற்று வீரர்கள் போல் மோதப் போனாலும், அந்தப் பள்ளிக்கூட மைதானத்தில் அப்போதைக்கு செம்பட்டையான் வகையறாக்களே அதிகம். போதாக்குறைக்குத் துளசிங்கம், அந்தக் குடும்பத்தின் இளைஞர்களுக்குக் குஸ்தி என்ற பெயரில் எதையோ சொல்லிக் கொடுத்திருந்தான். அவர்கள் அந்த குருவையே ஒரு மாதிரி ஏடாகோடமாய்ப் பார்த்தபோதுதான், அவன் அந்த வித்தைப் பயிற்சியை இடையிலே நிறுத்திவிட்டான். என்றாலும், இந்த வாலிபர்கள் இந்தக் கரும்பட்டையான்களைச் சமாளிக்க கற்றதோர் கைம்மண்ணளவு குஸ்தி போதும் என்பதுபோல் கைகளைச் சுருக்கி வைத்து நீட்டப் போனார்கள். குஸ்தியாம்...
சுற்றி வளைக்காமல் சொல்வதாக இருந்தால், இருபது பேர் கொண்ட கரும்பட்டையான் கூட்டத்தை நூறு பேர் கொண்ட செம்பட்டையான் கூட்டம் சுற்றி வளைத்தது. அந்தக் கூட்டத்திற்குள் மாட்டிய நாராயணன், பழனிச்சாமியின் தம்பி அருணாசலம், மகன் திருமலை, குள்ளக் கத்தரிக்காய் ராமசாமி, ஆகிய ஒரு சிலர் மட்டும், ‘கிட்ட வாங்கடா’ என்று பேசினார்கள். ஆனால் அந்தக் குரல்களோ கெஞ்சுவது போல் தான் ஒலித்தன. எதிரிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்ததும், எகிறி எகிறிப் பேசுவது எந்தப் பட்டியில் உண்டோ இல்லையோ இந்தச் சட்டாம்பட்டியின் வழக்கம். கரும்பட்டையான்களைப் பார்த்து செம்பட்டையான்கள் சீறினார்கள்.
“இப்போ கூட லேட்டுல்ல. தெருவிட்டு தெருவுல அடிக்க வந்ததுக்கு மன்னிப்புக் கேட்டுட்டு ஓடிப் போங்க. வழி விடுறோம்... இல்லன்னா ஒங்கள ஒரு வழி பண்ணாம விடமாட்டோம்.”
துளசிங்கம், மனித வளைக்குள் மாட்டிக் கொண்ட திருமலையை ஏளனமாகப் பார்த்தபடியே பேசினான்.
“ஏய். திருமல... இப்ப துள்ளேண்டா...?”
“நீ வேணுமுன்னா ஒத்தைக்கு ஒத்தையா வாறியாடா...? பதினைஞ்சு பேர நூறு பேரு மடக்குறது பெரிய வீரமா...?”
“இது தெரியாம சவுடால் பேசுறது மட்டும் வீரமா...?”
“சரி. தெரியாம வந்தோமுன்னு மன்னிப்புக் கேட்டுட்டு மரியாதியா போங்க.”
“ஒத்தைக்கு ஒத்த வாடா.”
“வருவேன். ஆனால் நான் எட்டுபேர ஒரே சமயத்துல சமாளிக்கிறவன். ஒன்ன மட்டும் கவனிச்சுட்டு எழுபேர விடுறதுக்கு தயாராய் இல்லல.”
செம்பட்டையான்களும், கரும்பட்டையான்களும் இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கைகலப்பு இல்லாமல் வாயாடுவார்களா என்று ஒரு சந்தேகம் வருவது இயற்கைதான். அது அந்த ஊர் மண்வாகு என்பது மட்டுமல்ல, துளசிங்கம் திருமலை தவிர, எவனும் எவனுடனும் தனிப்பட்ட முறையில் மோதவில்லை. ஒருவேளை இந்தச் சூழலே இன்னும் கொஞ்சம் நேரம் நீடித்து இருதரப்பில் யாராவது ஒருவர் மீது ஒருவர் கையோ, காலோ தற்செயலாகப் பட்டால், அது கொலைகளில் கொண்டு போய் விடலாம். அத்தகைய சந்தப்பங்களில் கூட்டம் கும்பலாகிவிடும். ஒரு கூட்டம் ஒரே மனிதன்போல் உணர்ச்சி வசப்படும்போது அதற்குப் பெயர் கும்பல். அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாமன் மச்சானை வெட்டுவான். மச்சான் மயினியைத் துகிலுரிவான்.
செம்பட்டையான், இளக்காரமாய்ப் பேசப் பேச, கரும்பட்டையான் வம்சத்துக் கூட்டம் கும்பலாகிக் கொண்டிருந்தது. தற்காப்பிற்காவது தாக்கியாக வேண்டும் என்று திருமலையும், அவன் சிற்றப்பாவும், வேட்டிகளைத் தார்ப்பாய்ந்தபோது அலங்காரி ஓடி வந்தாள். கைகளைத் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டபடியே கூக்குரலிட்டாள்.
“ஏய்யா... நாம் இன்னையோட இருந்து இன்னையோட போற அந்நியம் இல்ல. அன்னியோன்னியமா இருக்கவங்க. நாளைக்கு ஒருத்தர் முகத்துல ஒருத்தர் விழிச்சாகணும். சுடலைக்கும், காளிக்கும், பலி கொடுக்க ஆடு இருக்கு, கோழி இருக்கு... மனுஷங்க வேண்டாய்யா...”
அலங்காரி, செம்பட்டையான் வட்டத்தை உடைத்து, உள்ளே போய் ஒவ்வொரு செம்பட்டையானையும் பின்னால் தள்ளிக் கொண்டிருந்தாள். பலர் அதுதான் சாக்கு என்று அவள் தொடுமுன்னாலயே பின்னால் போனார்கள். சிலர், அவள் மீதுள்ள பழைய கோபத்தை மனதுக்குக் கொண்டு வந்து, தள்ளியவளையே தள்ளினார்கள்.
இந்தச் சமயத்தில், ஐம்பது பேர் மேற்குப் பக்கத்தில் இருந்து ஒடி வந்தார்கள்... காத்துக்கருப்பன்கள்... அக்கினி ராசாவின் சித்தப்பா பற்குணம், அந்த கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர் போல, முன்னால் நின்றார். அதற்குள் அந்த, ‘காத்துக்கருப்பன் கூட்டம்’ வட்டம் போட்ட செம்பட்டையான் கூட்டத்திற்கு வெளியே ஒரு வட்டம் போட்டது. இந்தக் காத்துக்கருப்பன்கள் அடிதடி திலகங்கள். அடித்துவிட்டுத் தான் பேசுவார்களே தவிர, பேசிவிட்டு அடிக்க மாட்டார்கள். ஊர்விட்டு ஊர் போய் அடித்துவிட்டு, செறு வென்று திரும்புவதிலும் முரடர்கள். பற்குணம் தலைப்பாவைக் கட்டிக் கொண்டே கத்தினார்.
“தனியா மாட்டிக்கிட்டா இப்படியா, அவங்கள கோடுபோட்டு வைக்கது மாதிரி வைக்கது, ஏய் துளசிங்கம். அவங்கள விடுடா... விடுறியா, இல்ல விட வைக்கணுமா...”
துளசிங்கம் சும்மா இருந்தபோது, காஞ்சான் பதிலளித்தார்.
“என்ன பற்குணம்... விவகாரம் தெரியாமப் பேசுற. மெனக்கெட்டு எங்கள அடிக்கிறதுக்குன்னே இங்க வந்து வம்பு செய்தானுவ. இவனுவள அடிச்சு கிடத்திட்டது மாதிரி பேசுதியே. இந்த இருபது பேரையும் மலத்திப்போட எவ்வளவு நேரமாவும்? செய்தோமா...”
“அப்டிச் செய்தால் பின்னால என்ன நடக்குமுன்னும் யோசிக்கனுமுல்லா..”
“தெருவிட்டு தெரு வந்த பிறவு அந்த திமுருக்கு அடங்க முடியுமா. அப்படிப்பட்ட உயிருதான் எதுக்கு...”
“துளசிங்கம் பெரியவிய பேசும்போது நீ சும்மா இரு. சரி... இப்போ அவங்கள விடப்போறியளா...? இல்லியா...?”
“நீ பொதுப்பிள்ள. நீ சொன்ன பிறவும் கேட்காம இருப்பமா? ஏல துளசிங்கம்... இங்க வாடா... மாரியப்பா தள்ளிப் போ. எல கவுகண்ணா... ஒனக்கு தனியா வெத்துல பாக்கு வச்சு சொல்லணுமா...? சரி... பற்குணம் உட்காரு. விஷயத்த இப்பவே பேசித் தீர்த்துடலாம். பழனிச்சாமி மச்சான கூப்பிடுவோமா.”
“எங்கப்பா கூப்பிட்டாலும் வரமாட்டாரு.”
“எங்க துளசிங்கத்தையும் ஒங்க திருமலையையும் ஊரவிட்டே துரத்திட்டா ஊர்ல பேசுறதுக்கு எந்த விவகாரமும் இருக்காது.”
காஞ்சான் பேசப் பேச, எலி டாக்டர் அவரை விலாவில் இடித்தார். ஒருவேளை, அந்தக் குடும்பத்தில் தனக்கு உள்ள இரண்டாவது பெரிய மனுஷத்தனத்தை என் மகன் துளசிங்கம் பறிச்சுடுவான்னு பயப்படுதானா... கழுத களவாணிப் பயல்... தீப்பிடிச்ச பங்காளி வீட்டை அணைக்காம அவன் காலையே கட்டிப் பிடிச்சு அழுத பயல் மாதுரில்லா அழுவுறான். இந்த எலியன்... எலி டாக்டர், காஞ்சான் வாயை, தனது கையாலேயே பொத்திக்கொண்டு பேசினார்.
“நீயே சொல்லு பற்குணம். எங்க கோவிலுக்கு எப்போ கொடை கொடுத்தா இவங்களுக்கு என்ன. இவங்கதான், மொதல்ல கொடை கொடுக்கணுமுன்னு சட்டமா, இல்ல சர்க்கார் உத்தரவா... சொல்லு பற்குணம்.”
பற்குணம் பதில் சொல்வதற்கு முன்பு, அவரின் சின்னய்யா மகன் பீடி ஏசெண்ட் பால்பாண்டி பதிலளித்தான்.
“சட்டம் வேண்டாம்... உத்திரவு வேண்டாம்... சம்பிரதாயமுன்னு ஒண்ணு இருக்குல்லா. இந்த ஊர்லயே பெரிய குடும்பம் எங்க குடும்பம். எங்க வீரபத்திர சாமிக்கே, ஒங்க ரெண்டு குடும்பமும் காளிக்கும், மாடனுக்கும் கொடுத்து முடிச்ச பிறவுதான் கொடுக்கோம். கடைசி வெள்ளில நடத்துற எங்களால முதல் வெள்ளில நடத்த முடியாதா என்ன...”
“சரிப்பா... நாங்க ரெண்டு குடும்பமும் நடத்தல. ஒங்க காத்துக் கருப்பன் வீரபத்திரனுக்கே முதல் வெள்ளில கொடுங்க. ஒங்களுக்கு விட்டுக் கொடுக்கோம். ஆனால் கரும்பட்டையான் கூட்டத்துக்கு எந்த வருஷம் விட்டுக் கொடுத்தாலும் இந்த வருஷம் விட்டுக் கொடுக்கப் போறது இல்ல. இப்பவே சொல்லு, ஒங்க குடும்பத்துல ராமய்யா தம்பிதான் பெரியவன்னாலும், நீதான் தலை. சொல்லு...”
எலிடாக்டர் போட்ட கொக்கிப் பிடியில் மாட்டியபடி, பற்குணமும், பீடி ஏசெண்டும், உடம்பை நெளித்தார்கள். ஐம்பது வயதுக்கார பற்குணத்தின் வைரப்பட்ட கருப்புடம்பு களிமண்போல் குழைந்தது. எலி டாக்டரின் இந்த யோசனைக்குக் காத்துக் கருப்பன்களில் பலர் ஒத்துப் பாடினார்கள்.
“ஆமாண்ணாச்சி... ஆமா தம்பி... ஊரிலயே பெரிய குடும்பம் நம்ம குடும்பம். நாமளே முதல் வெள்ளில கொடை கொடுப்போம்.”
பற்குணம் அரசியலில் கொஞ்சம் அனுபவப்பட்டவர். அதனால், உடம்பைக் குழைத்தும், குரலை உயர்த்தியும் பேசினார்.
“மூள இருக்காடா... பொதுக்கூட்டத்துல கடைசில பேசுறவரு யாரு... தலைவர் தானே. இது மாதிரி... கடைசி வெள்ளில கொடை கொடுக்கதுதான் நம்ம குடும்பத்து பெரும. சரிவே... எலிமச்சான்... என்ன சொல்லுதியரு.”
“ஒங்களுக்கு எப்டி கடைசி வெள்ளி முக்கியமோ. அப்டி எங்களுக்கு முதல் வெள்ளி. இதுல பேசுறதுக்கு ஒண்ணுமே இல்ல.”
“ஊர் வழக்கத்தை மாத்தப்படாது. இதனால ஊரே குட்டப் புழுதியாய் ஆயிடும் ஒங்களால. அம்மன் கொடையை அடுத்த வெள்ளிக்கு தள்ளிப் போட முடியுமா, முடியாதா. கடைசியாய் கேட்கேன்...”
“கடைசியாய் கேட்டாலும் சரி, மொதல்ல கேட்டாலும் சரி, வச்சது வச்சதுதான். இதுல பேச்சுக்கே இடமில்ல, மாப்பிள்ள...”
“அப்போ இந்தக் காத்துக் கருப்பன் குடும்பத்துக்காரங்க சொல்லுறத கேட்க மாட்டிய... அப்படித்தானே மச்சான்.”
“நீ அப்டி எடுத்துக்கிட்டால் நாங்க எப்டி பதில் சொல்லுறது மாப்பிள்ள...? ஆனால் எங்க மாடனுக்கு அடுத்த வெள்ளில கொடை நடந்தே தீரும்.”
“அதை நடத்த விடாமல் செய்ய எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகுமுன்னு நினைக்கிய.”
அலங்காரி ஒதுக்குப்புறமாய் நின்ற பெண்கள் கூட்டத்தில் இருந்து ஓடோடி வந்தாள்.
“நீ பேசுறதுல ஒரு வகையும் இல்லல... தொகையும் இல்ல... எங்க சுடலை மாடனுக்கு நடத்துற விசேஷத்த யாராவது தடுத்தால், அவங்கள எங்க மாடனே கேட்பான். சொம்மா பழனிச்சாமி அண்ணாச்சி வீட்டுக்கும் ஒங்க வீட்டுக்கும் கொடுக்கல் வாங்கல் பேச்சு நடக்குதுன்னு தாம் தூமுன்னு குதிக்கப்படாது.”
“எங்க குடும்பத்துல பொம்புளைவ இப்டி அம்பலத்துல வந்து பேசுற பழக்கம் இல்ல. அப்டிப் பேசுனா, ஒரே வெட்டா வெட்டிப் பிடுவோம். வருஷக்கணக்குல இப்பிடி விட்டு வைக்கமாட்டோம்.”
“எங்க கரும்பட்டையான் குடும்பத்துலயும் அப்படித்தான். எங்க பொம்புளைக எவளும் எங்கள மீறிப் போக மாட்டாளுவ. எங்க பொம்புளயால, எங்க தல, எப்பவும் குனிஞ்சது கிடையாது.”
கடைசியாகப் பேசிய திருமலையை உற்றுப் பார்த்தபடியே, துளசிங்கம் ‘ஒகோ அப்படியா...’ என்று சொல்லி ஏளனமாய்ச் சிரித்தான்.
பற்குணம் எழுந்தபடியே கர்ஜித்தார்.
“எந்தப் பொம்புளயப் பத்தியும், எந்தப் பயலும் பேசப்படாது. ஆனால் ஒண்ணு, செம்பட்டையான் கூட்டம் சுடலமாடனுக்கு இரண்டாவது வெள்ளியிலயோ, மூன்றாவது வெள்ளியிலயோதான், கொடை கொடுக்கணும். இதையும் மீறி கொடுத்தால் சுடலைமாடன் ஆடமாட்டான், ஊருதான் சுடலையாவும்.”
“நீரு இப்டி மிரட்டுறது நல்லதாப் படல.”
“நல்லதாப் படுதோ, கெட்டதாப் படுதோ, நாலு நாளு கெடு கொடுக்கேன். நல்லா யோசிச்சு ஊரோட ஒத்துவாங்க.”
“நீரு மட்டும் ஊராயிடாதே.”
“ஆகுதா ஆகலியான்னு அப்புறம் தெரியும். ஒங்க கோயிலுல மேளச் சத்தம் கேட்டால், அப்புறம் இன்னொரு மேளச் சத்தமும் கேட்கும். அதுக்கு இடந்தராதிய. எழுந்திருங்கல. இவனுவ கிட்ட நமக்கு வேலயில்ல.”
பற்குணம் எழுந்தார். அவருடன் வந்த சொக்காரர்களும் கரும் பட்டையான்களும் எழுந்தார்கள். இந்த காத்துக்கருப்பன் கூட்டத்தில் பலர் செம்பட்டையான், கரும்பட்டையான் குடும்பங்களில் பெண் எடுத்தவர்கள், கொடுத்தவர்கள். ஆனால் செம்பட்டையான் குடும்பத்தில் இப்படி உறவு வைத்திருப்பவர்கள் ஏழைகள். அவர்கள் பற்குணம் பேசியதை மனதுக்குள் ஆட்சேபித்துக் கொண்டே தத்தம் உடல்களை பின்னால் நடக்க விட்டார்கள்.
செம்பட்டையான்கள் ஆடிப்போய் விட்டார்கள். காஞ்சான், எலி டாக்டரை குற்றஞ்சாட்டுவது போல் பேசினார்.
“ஆழந்தெரியாமல் இறங்கிட்டோமே. காத்துக்கருப்பங்க கரும்பட்டையான் பயலுவகூட சேர்ந்துட்டாங்க. நாம எந்த மூலைக்கு... ஏய்... துளசிங்கம் என்னடா இது...”
துளசிங்கம், அழுத்தமாகப் பேசினான்.
“கவலைப்படாதிய சித்தப்பா. மெட்ராஸ்ல இருந்து லாரில ரெளடிகள கொண்டு வாறேன். சினிமா ஸ்டண்ட் ஆட்களையும் கொண்டு வாறேன். அதுக்குள்ள என் கையும் சுகமாயிடும்...”
அலங்காரிக்கு வழக்கம்போல் நெஞ்சு கணத்தது. முன் நெற்றிக்குள், உள்ளிருந்து ஏதோ ஒன்று உருண்டு வந்து மோதியது. காதுகள் இரைந்து, வெளிச்சத்தை விரட்டின. அந்தக் கூட்டமே ஒரு காடாகவும், தான் மட்டும் தனியாகவும் தோன்றியது. எப்பிடில்லாம் குத்திக் குத்திப் பேசுறாங்க. ஏல... காத்துக் கருப்பன்களா... கரும்பட்டையான் மூஞ்சுகளா... என் நிலையில ஒங்க அம்மாரும், பொண்டாட்டிமாரும் இருந்தா, அவளுவளும், என்னை மாதிரிதான் இருப்பாளுவடா. எனக்கு காலமே. காலனா வந்தது, ஒங்களுக்குத் தெரியுமாடா...
துளசிங்கம், பேசுவதை, ஆற்றுப்படையாக கேட்டுக் கொள்வதற்காக, சிந்தனையோ, நிபந்தனையோ, எதையோ ஒன்றை தடைசெய்துவிட்டு, உன்னிப்பாய்க் கேட்ட அலங்காரி, இப்போது எக்காளமாகப் பேசினாள். குறுஞ்சிரிப்பும் - கொள்கை முழக்கமுமாய்,
“எதுவும் வேண்டாம் சுடல மாடன். எனக்கு சொல்லிக் கொடுத்ததை, நான் ஒங்ககிட்ட சொல்லுவேன். நீங்க நான் சொன்னத செய்தாப் போதும். காத்துக்கருப்பன்களையும், அந்த கரும்பட்டையான்களையும், ஒரே கத்திரியால் மொட்டை அடிச்சுடலாம்.”
ஆண்கள், அலங்காரியை அதிசயமாகப் பார்த்தார்கள். இதுவரை அவளை இளக்காரமாகப் பார்க்கும் செம்பட்டையான் தாய்க்குலம், அவளைத் தலைவியாக ஏற்றுக் கொண்டதுபோல் அண்ணாந்துப் பார்த்தது.
------
அத்தியாயம்- 14
கட்டிலில் கால்போட்டு உட்கார்ந்திருந்த பழனிச்சாமி, பங்காளிகள் சொல்வதை வழக்காளியாய் இருக்கும்போது எப்படிக் கேட்பாரோ, அப்படி எந்தவித உணர்வையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் கேட்டார். காத்துக் கருப்பன்கள் தலையிட்டதைச் சொல்லும்போது மட்டும், மோவாயில் ஊன்றிய கையை எடுத்து விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். எல்லோரும் சொல்லி முடித்ததும், இன்னும் ஏதாவது இருக்கிறதா என்பதுபோல் அவர்களைப் பார்த்து விட்டுச் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அவர் வாயையே எல்லோருடைய கண்களும் மொய்த்தன. அவரும் நிதானமாகக் கேட்டார்.
“ஒருவேள நான் நேருல போயி கேட்கலன்னு அவங்க நெனக்கலாம். நானே, எலி டாக்டர் வீட்ல போயி, கேட்கனே... என்ன சொல்றிய...”
“அது மட்டும் கூடாது அண்ணாச்சி... அந்த துளசிங்கம் செறுக்கி மவன்... ஓங்கள பேர் சொல்லிக் கூப்புடுறான்...”
“கோபத்துல சில வார்த்தை வாரத பெரிசா எடுக்கப்படாது... நம்ம திருமலைகிட்ட சண்டை போட்ட பிறகுகூட இந்த துளசிங்கம் ஒரு நாளு என்னைப் பார்த்துட்டு வாயில இருந்த சிகரெட்ட தூக்கி எறிஞ்சுட்டு மரியாதையா போனான்... நானும் போனேன்னு அவங்களுக்கும் ஒரு திருப்தி இருக்கட்டுமே...”
“அது மட்டும் கூடாது அண்ணாச்சி... ஒங்க மரியாதிக்காவ நாங்க சண்டைக்குப் போனோம்... இனிமேல் எங்க மரியாதிக்காவ நீங்க போவப்படாது... அப்புறம் உங்க இஷ்டம்...”
இஷ்டம் என்ற வார்த்தையை இஷ்டமில்லாமல் உச்சரித்த பங்காளிகளை, திடுக்கிட்டுப் பார்த்தார் பழனிச்சாமி. எல்லாம் இவனால என்று திருமலையைப் பார்த்துப் பேசப்போன வாயை அடக்கிக் கொண்டார். அப்போது, அவர் தம்பி அருணாசலம் “இந்த துளசிங்கம் பயதான் ரொம்ப குதிக்கான்... அந்த அடாவடிப் பயலோட இன்னொரு கையயும் ஒடிக்கணும்” என்றார்.
பழனிச்சாமி திட்டவட்டமாகச் சொல்லாமல், யோசனை கேட்பது போல் கேட்டார். “சரி... நாம் விட்டுக் கொடுப்போமா... அவனுவ வேணுமுன்னா வெள்ளில கொடுத்துட்டுப் போறான்...”
“அண்ணாச்சி... இந்த விஷயத்துல மட்டும் எங்கள விட்டுக் கொடுத்திடாதிய... எப்டி அப்படிக் கொடுக்கது, தர்மராசா. தம்பிமாருகள திரியோதனனுக்கு அடிமையாக்குனது மாதிரி, ஒங்க பெருந்தன்மய புரிஞ்சுக்க முடியாத தற்குறிப் பயலுவ அவனுவ...”
பழனிச்சாமி, காபி ரெடியா என்பது மாதிரி... கதவில் சாய்ந்து நின்ற மனைவி பாக்கியத்தைப் பார்த்தார். அவள் அப்போதுதான் ஞாபகம் வந்ததுபோல், சமையலறைக்குப் போனாள். பழனிச்சாமி திட்டவட்டமாகப் பேசினார்.
“சரி, ரெண்டு கோயிலுக்கும் நடக்கட்டும்...”
“அவங்க சுடலைக்கு எப்படி...”
“இப்போ அவங்க பேச்சு தேவையில்ல... நாம நம்ம அம்மனுக்கு அடுத்த வெள்ளில கொடை கொடுக்கோம்... அவ்வளவுதான்... அதுதான் பேச்சு...”
“எப்பா. இப்பதான் மனசு குளுந்தது... அண்ணாச்சின்னா அண்ணாச்சிதான்...”
திருமலைக்கு ஒரு வயது குறைந்த ராமசுப்பு பக்குவமாய் பேசினான்.
“நம்ம கோவிலுக்கும் அவங்க கோவிலுக்கும் இடையே இருக்கிற தூரம் கூப்புடு தூரம். இங்க இருந்து அங்க பாக்கலாம். அங்க இருந்து இங்க பாக்கலாம்...”
“இதுக்குத்தான் ஊரில ஒன்ன தோல்வாயன்னு சொல்லுதாங்க... சட்டுப்புட்டுனுன்னு சொல்லேண்டா...”
“நான் பெரியப்பா கிட்டதான் பேசுறேன்... ஒம்மகிட்ட இல்ல... கோவிலுக்கு களையே கூட்டந்தான்... அந்தக் கோவிலுல... இருபத்திரண்டு பேர் சாமியாடுறான் நம்ம கோவிலுக்கு ஒரே ஒரு சாமியாடி. அதுவும் நெத்தில திருநீர் பூசுறேன்னு நம்ம வாய்க்குள்ளேயே கைய விடுற சின்னச்சாமித் தாத்தா... இவரு ஆடுறதவிட இவரு கைகாலு ஆடுறதுதான் ஜாஸ்தி...”
“சின்னப்பய மவனுக்கு பேச்ச பாரு... இப்ப என்னல செய்யனும்... வேணுமுன்னா நீ சாமியாடு... நான் ஒதுங்கிக்கிறேன்... பாருடா பழனிச்சாமி...”
“அப்போ சாமி ஆடுறதும் ஆடாததும் மனுஷன் இஷ்டத்த பொறுத்தது... அம்மன் இஷ்டத்த பொறுத்தது இல்லங்கிறியளா...”
“ஏல நாட்டு வக்கீலு நாராயணா... குதர்க்கமாய் பேசாம... இந்தச் சிக்கலுக்கு ஒரு வழி சொல்லேண்டா...”
“சொல்ல மாட்டேன்... செய்து காட்டுவேன்...”
“அவங்க வீடியோ படத்துக்கு அதிகமாய் ஒண்ணு செய்யணும்... செய்யப் போறேன்...”
“என்ன செய்யப் போறே...”
“இப்ப சொல்ல மாட்டேன்... ஆனால் செய்வேன்...”
“செறுக்கி மவனுக்கு திமுரப் பாரு... நம்ம மனச அந்தரத்துல விடுறான் பாரு... பொம்புள நாடகமாடா...?”
“இல்ல...”
“ரிக்காட் டான்ஸா...?”
“இல்லவே இல்ல...”
“பிறகு என்னதான் செய்யப்போற...”
“வேணுமுன்னா... பெரியப்பாகிட்ட தனியா சொல்லுறேன்... அவருக்கு சம்மதமுன்னா அந்தக் காரியத்த செய்து... செம்பட்டையான் கோவிலுல சாமியாடுற பயலுவகூட நம்ம கோவிலுக்கு வரும்படியாய் செய்யப் போறேன்... பெரிசா...”
“ஏல நாட்டு வக்கீலு... நீ செம்பட்டையானுவள விட திமுருபிடிச்ச பயல்... என்னதான்னு சொல்லேண்டா...”
“நீரு ஆயிரம் கேள்வி கேட்டாலும் இப்ப சொல்லமாட்டேன்... ஆனால் ஒண்ணு... செம்பட்டையான் கோவிலுல காக்கா குருவிகூட இருக்காது... பெரியப்பா மட்டும் கொஞ்சம் கண்ணை மூடிக்கணும்...”
பழனிச்சாமி, நாட்டு வக்கீலை எடைபோட்டுப் பார்ப்பதுபோல் பார்த்தார். கட்டில் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு புராணப் புத்தகத்தை பிரித்தார். பிறகு பெருமூச்சோடு பேசினார்.
“எப்டி வேணுமுன்னாலும் செய்யுங்க... ஆனால் ரெண்டு கண்டிஷன்... என்னை கோயிலுக்கு வான்னு வற்புறுத்தப்படாது... செம்பட்டையானை கண்டால் ஒதுங்கிப் போகணும்... வம்பு தும்பு வச்சுக்கப்படாது...”
எல்லோரும் ஒருமித்துப் பேசப் போனார்கள்... அதற்குள் காபி டம்ளர்கள் ஆவி பறக்க வந்துவிட்டன.
------------
அத்தியாயம்- 15
கோலவடிவு தெருப்பாதை தெரியும்படியான இடத்தில் உட்கார்ந்திருந்தாள். தெருவில், துளசிங்கம் போவதைப் பார்க்கப் பார்க்க, அவளுக்கு ஏன் பார்த்தோம் என்பது மாதிரி கோபம் ஏற்பட்டது. கடைசில போயும் போயும் இந்தக் கழிச்சுப் போட்ட துளசிங்கத்த பெரிசா நெனைக்கிறேன் பாரு. மனுஷனா இவன்... இல்ல... இவரு... ஊரே கும்பிடுற மாதிரி பாக்கிற எங்கப்பாவை நேத்துப் பிறந்த இந்த மனுஷன் பழனிச்சாமின்னு நாக்குமேல பல்லுப் போட்டு பேசியிருக்கார். எனக்கு, குங்குமம் வச்சது நெனப்பிருந்தா, முத்தம் தந்தது மறக்காட்டா. இப்டி துள்ளுவாரா... கடைசில, இவரு அந்த காத்துக்கருப்பன் கூட்டத்துல உதைபட்டாதான் புத்தி வரும்...
அய்யய்யோ அக்கினி ராசா அந்த வகையறாவாச்சே... துளசிங்கத்த உதைச்சால் நாமுல்லா விழுவேன்... அதுவும் அக்கினி ராசா முன்னால... அது அப்புறம்... இப்போ நானும் கரும்பட்டையான்... எங்க குடும்பத்த இளக்காரமா பேசுற யாரும் எனக்குப் பெரிசில்ல... ஆமா எனக்கு குங்குமம் வச்சதை அந்த மனுஷன் தமுக்கடிப்பாரோ... முத்தம் கொடுத்ததை அம்பலப்படுத்துவாரோ... எதுக்கும் அவரு கிட்ட போயி சொல்லிட்டு வந்துடணும்... நீருதான் குங்குமம் வச்சீரு... நான் நெத்தியக் காட்டலன்னு சொல்லணும்... முத்தத்த எடுத்துக்கீட்டீரே தவிர... நான் தர்லன்னு சொல்லணும்... தெரிஞ்சு தெரியாம நடந்தத மறந்துடும்... நீ யாரோ... நான் யாரோன்னு சொல்லணும்... இனிமேல் அவருக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காது... எம்மாடி இவ்வளவு நடந்த பிறகும் அவரு... எங்க குடும்பத்த இவ்வளவு இளப்பா நெனச்ச பிறகு அவர கட்டிக்க அப்பா சம்மதிச்சாலும்... நான் சம்மதிக்க மாட்டேனாக்கும்... மூஞ்சில அடிச்சாப்ல... அவர்கிட்ட பழைய குப்பையை கிளறப்படாதுன்னு சொல்லிட்டு வந்துடலாம்...
கோலவடிவு, பயப்படாமல் எழுந்தாள்... கம்பீரமாக நடந்தாள்... அதே அந்த ஒற்றையடிப் பாதையில் ஒட்டமும் நடையுமாக நடந்தாள்... மாலை வேளை என்பதால், கண்ணுக்குச் சிலரே தென்பட்டார்கள்... அதுவும் தொலைவில், அவள் அந்தப் பள்ளமான பருத்திக் காட்டிற்குக் குறுக்கு வழியாய் வரவும், துளசிங்கமும், நேர் வழியாய் வரவும் சரியாய் இருந்தது. கோலவடிவைப் பார்த்து, துளசிங்கம் சிரித்தான். அந்தச் சிரிப்பில் பாதிக்கோபம் பறந்து போவதை உணர்ந்த கோலவடிவு, எஞ்சிய கோபத்தை விடப் போவதில்லை என்பதுபோல் ‘தம்’ பிடித்து நின்றாள்... துளசிங்கம், அவள் அருகே வந்தபோது அவள், அவன் கை எட்டாத தொலைவில் நின்று கொண்டாள்... மனதிற்குள் பேசியதை ஒப்பித்தாள்...
“நான் ஒன்னும் ஒம்மகிட்ட கொஞ்ச வரல... நம்மஞக்குள்ள நடந்ததை சொல்லப் படாதுன்னுதான் சொல்ல வந்தேன்...”
“எங்க சுடலை மாடன் சத்தியமாய்ச் சொல்லுதேன்... என் தலையே போனாலும் நமக்குள்ள நடந்ததை சொல்லவே மாட்டேன்... அதோட ரெண்டு சமயத்துலயும் தப்பு செய்தது நான்தான். நீயில்ல...”
“அப்போ எங்கப்பாவ... சபையில... பேர் சொல்லி... மொட்டய்யா...”
“நானும் ஒண்ணன்மாதிரி ஒரு முட்டாளு... எப்டிச் சொன்னேன்னு எனக்கே தெரியல... எங்கப்பா முன்னால சிகரெட்ட பிடிக்கிற நான், மாமா முன்னால... பிடிச்சதுல்ல... இன்னும் ஆயிரம் சண்டை வந்தாலும், ஒரு சிகரெட்டக்கூட பிடிக்க மாட்டேன்...”
“அது அவரோர் இஷ்டம்... அனாவசியமாய் சபையில என்னையும் அக்கினி ராசாவையும் அலங்காரி அத்தை எதுக்கு சம்பந்தப்படுத்தணும்...”
“சரியான பைத்தியக்காரி நீ... சித்தி அப்படிச் சொன்னதாலதான், இனிமேல் பொண்ணு கேட்க அவங்க யோசிப்பாங்க... இல்லாட்டா சித்தி சொன்னதை நீரூபிக்கதாய் ஆயிடும்... பாரு... எங்க சித்தி லேகப்பட்ட சித்தியில்ல...”
“என் நெத்தில குங்குமம் வச்ச நெனப்பிருந்தால், அது தந்த ஞாபகம் இருந்தால், நீரு விட்டுக் கொடுக்கலாமுல்லா... ஒரு வெள்ளிக்குப் பதிலா... இன்னொரு வெள்ளில வைக்கலாமுல்லா...”
“இதோ பாரு கோலம்... ஒன் மேல எனக்கு ‘இது’ வாரதுக்கு முன்னால போட்ட திட்டம் அது... இப்போ அத மாத்தறது கஷ்டம்... ஆனாலும் எங்க ஆட்கள் கிட்ட சொல்லிப் பாக்கேன்... கெஞ்சிப் பாக்கேன்... போதுமா... அநேகமாய் எங்க கொடைய தள்ளி வச்சுடலாமுன்னு நினைக்கேன்... அப்டி முடியலன்னா... நீ என்னை தள்ளி வச்சுடப்படாது...”
“ரெண்டு குடும்பத்துக்குள்ள இவ்வளவும் நடந்த பிறகு நமக்குள்ள... நமக்குள்ள...”
“கண் கலங்காத கோலம்... நீ சொல்றது மாதிரி... இவ்வளவு நடந்த பிறகும் ஒங்க அண்ணன் நம்மை ஒண்ணாச் சேர விடமாட்டான்... இந்த இடைவெளில காத்துக்கருப்பன் பயல்வ குறுக்கே வாரான்... அவங்களுக்கு ஒன்னைக் கட்டணும் என்கிறதைவிட பழனிச்சாமி மாமா வீட்ல பெண்ணெடுத்தோமுன்னு பேர் வாங்கணும். அந்தப் பேராசையிலதான் நம்ம ‘கிழ ஊரு’ விவகாரத்துல தலையிட்டு சண்டய பெரிசாக்கிட்டாங்க... ஆனால் சத்தியமா சொல்லுதேன்... அவங்க திட்டம் பலிக்காது... என்னால ஒன்னைக் கட்ட முடியுதோ இல்லியோ... அக்கினி ராசா கட்ட விடமாட்டேன்... எங்க அம்மன் குடையை தள்ளிவச்சுட்டா என்ன செய்வாங்க... முயற்சி செய்யப் போறேன்... முடிஞ்சாலும் முடியலாம். அப்டி முடியாமப் போனாலும் ஒங்க கரும்பட்டையான் கூட்டம் என்னை அடிச்சாலும் பட்டுக்குவேன்... திருப்பி அடிக்கமாட்டேன்...”
“கை எப்டி இருக்கு...?”
“இப்போ பரவாயில்ல... நாளைக்கு கட்ட எடுக்கப் போறேன்...”
“எங்கண்ணாகிட்ட ரூபாய் கொடுத்ததை தப்பா நினைக்கப் படாது... புளியம்பழம் வித்த பணம்... அப்பா என்கிட்ட வீட்டுக்குள்ள வைக்க கொடுத்தாரு... நான்தான் சண்டைச் சத்தம் கேட்டு மறந்து போயி ரூபாவோட வந்துட்டேன்... தப்பா நினைக்கப் படாது...”
“சரி... பழையத விடு... ஒன்னப் பார்த்தால் எனக்குத்தான் தப்பு செய்யப்படாதுன்னு ஒரு எண்ணம்... அப்படிப்பட்ட முகராசி ஒனக்கு...”
“இனுமே நாம சந்திக்கப்படாது... வழில பாத்தாலும் பேசப்படாது... கிட்டாதாயின் வெட்டென மறன்னு பள்ளிக்கூடத்துல படிச்ச பாடம்...”
கோலவடிவு திக்கினாள்... விக்கினாள்... முந்தானையை எடுத்துக் கண்களை ஒற்றிக் கொண்டாள். பிறகு சத்தம் வராமல் இருக்க வாயில் ஒற்றிக் கொண்டாள். துளசிங்கம், அவள் தோளில் கை போட்டான். இரண்டு கைகளாலும் அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபோது, அவள் அவன் மார்பில் முகம் போட்டாள். கழுத்தில் கை போட்டாள்... பிறகு அவனிடமிருந்து விடுபட்டு, அவனை ஏறிட்டுப் பார்த்தவள், இன்னொருத்தியைப் பார்த்துவிட்டாள்...
“அய்யய்யோ... ரஞ்சிதம்... ரஞ்சிதம்...”
கோலவடிவு, தன் மார்பில் சாய்ந்ததை, திருமலை தன் காலில் விழுந்ததாகப் பாவித்துக் கொண்ட துளசிங்கம் சந்தோஷமாகச் சொன்னான்.
“அவள் பாக்கல... வேற பக்கமா நிக்காள்...”
“அய்யோ... நம்மள பாத்துட்டுதான் அப்படி திரும்பி நிக்காள்... அதோ வாராள் பாருங்க... எம்மோ... அவள் ஊர்ல சொன்னா எனக்கு மட்டுமில்ல... எங்க குடும்பத்துக்கே கேவலமாச்சே...”
கோலவடிவு பயந்தபடியே ஓடினாள்... துளசிங்கம் சிரித்தபடியே நின்றான்... அலங்காரி சித்தி சொன்னபடியே உயிருக்கு உயிராய் பேசியாச்சு... அவள்கிட்டபோய் சொல்லணும்... சிரிப்பாள்... சிரிப்பாள்... அப்படிச் சிரிப்பாள்...
------------
அத்தியாயம்- 16
காலை வேளை... கதிரவன் தங்கப் பிரவேசம் செய்த நேரம்...
ஆலமரத்தடிக்கு அருகே அம்மன் கோவில், களை கட்டியது என்றால், சுடலை மாடன் கோவிலும் சும்மா இருக்கவில்லை... இங்கே கரும்பட்டையான்கள் பத்துப் பதினைந்து பேர், அங்கே செம்பட்டையான்கள் பதினைந்து இருபதுபேர், இருதரப்பும் தத்தம் கோவில்களை உற்றுப் பார்த்தார்கள்... அம்மன் கோவிலில் சிலர் பலருக்கும், சுடலை கோவிலில் பலர் சிலருக்கும் உத்திரவுகள் பிறப்பிப்பது போல், கோவில்களின் பல்வேறு இடங்களைச் சுட்டிக் காட்டினார்கள்... உடனே இரண்டிலும் ஏணிகள் சாத்தப்பட்டன... யார் ஏணியில் முதலில் ஏறுவது என்பதுபோல், இருதரப்பும் ஏணிக் கட்டத்திலேயே போட்டி போடுவதுபோல் தோன்றின. ஏறியவர்களிடம் சுண்ணாம்புக் கலசமும் தூரிகையும் ஒரே சமயத்தில் கொடுக்கப் பட்டன... அம்மன் வீட்டில் தெளிந்த சுண்ணாம்பு வெள்ளை சுடலை வீட்டில் மங்கலாகவும், சுடலை வீட்டு வெள்ளைச் சுண்ணாம்பு அம்மன் வீட்டில் மங்கலாகவும் தெரிந்ததை, செம்பட்டையான்களும், கரும்பட்டையான்களும் தத்தம் கோவில் சுவர்கள் அதிகமாய் பிரகாசிப்பதாக அனுமானித்துக் கொண்டார்கள்.
காளியம்மன் கோவில், சட்டாம்பட்டியின் மேல ஊருக்கும் கீழ ஊருக்கும் எல்லைக் கோடாக உள்ள கோவில்... இதற்கு தென் கிழக்கே துளசிங்கம் வீடு... திருமலை நடக்க ஏழு நிமிடமும், அக்னி ராசா நடக்கப் பன்னிரண்டு நிமிடமும் ஆகும் தூரத்தில் இருந்தது. சுடலைமாடன் வைத்திருக்கும் குறுக்குத்தடி, காளி கோவில் பக்கமும், காளியின் திரிசூலம் சுடலை கோவில் பக்கமும் நன்றாகத் தெரிந்தன.
தேநீர் கடையில் இருந்து பெரிய கூஜாவில் வாங்கி வரப்பட்ட காபியை, கையோடு கொண்டு வந்த டம்ளர்களில் குடித்துக் கொண்டிருந்த பீடிப் பெண்களைக் ‘குள்ளக் கத்தரிக்காய்’ ராமசாமி விரட்டினார்... அவருக்குக் கொடுக்காமல் குடித்தால் எப்படி...?
“கொஞ்சம் தள்ளி உட்காருங்க... இன்னும் தள்ளி... தள்ளி...”
“இப்பபடியே தள்ளித் தள்ளிப் போனால்... சுடலை மாடன் இருக்காரே, அந்த கோவிலுல போய்தான் இடிப்போம்...”
நாட்டு வக்கீல் நாராயணன் குறுக்கு விசாரணைக்கு போய் விட்டான்.
“அம்மனுக்கு நாளைக்குப் பந்தக்கால் நடுறோம்... அப்புறம் கண் திறப்போம்... எவளாவது சுத்தபத்தம் இல்லாதவள் இருந்தால், இப்பவே எழுந்து போயிடணும்...”
சில பெண்கள் சிரித்துக் கொண்டார்கள்... சிலர் முகத்தைச் சுழித்துக் கொண்டார்கள். பலர், ஆங்காங்கே கூடிக்கூடி நின்ற வண்ணம் இரண்டு கோயில்களையும் கண்ணால் அளந்தபடியே வாயளந்த ஆட்களை வாயகலப் பார்த்தார்கள்.
செம்பட்டையான் ரோசாப்பூ சிரிக்கவில்லை... சுழிக்கவில்லை... சினந்தபடியே பேசினாள்...
“இந்த நாட்டு வக்கீல் நாராயணன் நம்ம எல்லோரையும் தன் பொண்டாட்டி மாதிரி சுத்தபத்தம் இல்லாதவள்னு நெனச்சிட்டான் பாரேன்...”
“எங்க அண்ணாச்சி பெண்டாட்டி எந்த வகையிலழா சுத்த பத்தமில்ல...? அம்மனுக்கு சுத்தம் இல்லாட்டா கோபம் வருமுன்னு உலக நடப்பச் சொன்னா ஒனக்கு ஏன் வலிக்குது... ஒங்க சுடல மாதிரி எங்கம்மன் புண்ணாக்கு தின்கிறவள் இல்ல...”
கரும்பட்டையான் வாடாப்பூ ரோசாப்பூவைத் திட்ட, ‘காத்துக் கருப்பி’ தங்கம்மா தனது கருத்தைப் பொதுக் கருத்தாகச் சொன்னாள்.
“செம்பட்டையான் கூட்ட ஆம்புளைகளுக்குத்தான் திமிருன்னு பார்த்தோம்... பொம்புளைகளுக்கும் அப்பிடித்தான் போலுக்கு...”
“ஏய் தங்கம்மா... நீ மேல ஊருக்காரி... ஒனக்கென்னடி வந்திருக்கு... நாங்க ரெண்டு குடும்பமும் கீழே ஊர்காரிவ... அடிப்போம்... பிடிப்போம்... அணைப்போம்... நீ பாட்டுக்கு சும்மா இரேன்...”
“இனிமேல... நல்லா ஞாபகம் வச்சுக்க... ஊரு ஒண்ணுதான்... அதுக்குத்தான் எல்லை உண்டே தவிர, அதுக்குள்ள எல்லை கிடையாது... இனிமேல் கருப்பனும் கரும்பட்டையானும் ஒண்ணு... செம்பட்டையான் வாயில மண்ணு... அம்மன் கொடையில பாக்கத்தான் போறோம்...”
“ஏழா வார்த்தய அளந்து பேசுழா... இல்லன்னா ஒன் தலையில் மண்ணு விழும்... இப்பவே...”
“எங்கழா... மண்ணள்ளி போடு பார்க்கலாம்...”
“இன்னொரு தடவ சொல்லு பார்க்கலாம்...”
கரும்பட்டையான்களை சும்மா சொல்லக்கூடாது... எல்லாப் பெண்களையும் ஒரே மாதிரி பாவித்து விரட்டினார்கள்.
“நாங்கதான் நாயிமாதிரி ஒருத்தர ஒருத்தர் குதறுறோம்... ஒங்களுக்கு என்னழா வந்துட்டு...? எழுந்திருங்கழா... இந்த சண்டைக்கு வினையே ஒங்க மூலந்தான் வந்துது... ஒடிப்போங்க... இந்தப் பக்கம் எவளும் வரப்படாது... ஏல... பக்கிரிசாமி... வெள்ளையால அடிக்கே... வெள்ளை சும்மா கண்ணப் பறிக்காண்டமா... போங்கழா...”
பீடிப்பெண்கள் எழுந்தார்கள்... தட்டும் பீடியுமாய் நடந்தார்கள்... நாட்டு வக்கீல் நாராயணன் விரட்டினான்... என்று எழவில்லை. பீடியோட நேரம் வந்தாச்சு... அதோட இன்னைக்கு கணக்குப் பார்த்து காசு வாங்குற நாள்... எடைபோட்டு இலை வாங்குற நாள்...
சிநேகிதத்தின் அடிப்படையில் ஒவ்வொருத்தரும் , இன்னொருத்தியை இடித்தபடியே கலகலவென்று சிரித்தபடி போவாள்... ஆனால், இன்றைக்கோ, காத்துக் கருப்பியும் கரும்பட்டையாள்களும் கலந்து போக, செம்பட்டையாள்கள் தங்களுக்குள் மட்டுமே சேர்ந்து போனாள்கள்... திருமலை திட்டுவானே என்ற பயத்தில், துளசிங்கம் ஒதப்பானே என்ற அச்சத்தில்...
அந்தப் பெண்கள் தங்களுக்குள்ளேயே ஒரு வரையப்படாத சண்டைக்கோட்டைப் போட்டுக் கொண்டு, பீடிக்கடை படியேறினார்கள்... நான்கு படியில் முடிகிற கல்தூண் திண்ணையில் சில சிறுவர்கள் பீடிக்கு லேபிள் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். உள்ளறையில் பீடி இலைகள், அடுக்கடுக்காய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. பக்கத்துலயே தூள்கள் குவியலாக இருந்தன. இரண்டுக்கும் மத்தியில் உள்ள மேஜையில் தராசு.
ஒவ்வொருத்தியும் ஒரு பயலிடம் பீடிகளை எண்ணிக் கொடுத்து விட்டு, கணக்குப் பிள்ளையிடம் கையளவில் உள்ள பேரேட்டை நீட்டினாள். அப்போது, ஒரு ‘அண்டா குண்டா’ அறையில் இருந்து ஏசெண்டு வந்தான்... ‘இர்’ என்றோ ‘இன்’ என்றோ சொல்ல முடியாத வயசு... முப்பது முப்பத்தைந்து இருக்கும்... அவன் முகத்தைவிட, முடி நன்றாக இருந்தது... உடம்பைவிட உடுப்பு நன்றாக இருந்தது... கண்ணுக்குக் கீழே கரும் வட்டங்கள்... கைகளில் தேமல்... ஆனாலும் அவன் அதட்டிச் சொன்னான்...
“செம்பட்டையான் குடும்பத்துப் பொண்ணுவளுக்கு இன்னையில இருந்து இல கிடையாது... நாளைக்கு வந்து கணக்க முடிச்சுக்கட்டும்... இனிமேல் இந்தக் கடைப்பக்கம் திரும்பிக்கூட பார்க்கப்படாது... ஏல தேசிங்கு... மூணுல ஒரு பங்கு பீடி இலய கரும்பட்டையான், காத்துக் கருப்பன் பொண்களுக்கு நிரந்து போடுடா... செம்பட்டையான் பொண்ணுவள திரும்பிப் பாராம போங்க...”
செம்பட்டையான் ரோசாப்பூ நேரடியாகக் கேட்டாள்.
“எங்கள எதுக்காவ போகச் சொல்லுதியரு...”
“இது காத்துக் கருப்பன் பால்பாண்டி நடத்துற கடை... செம்பட்டையான் பொண்ணுவளுக்கு இங்க இடம் கிடையாது...”
“நீரு ஒண்ணும் முதலாளி இல்ல... கம்பெனி ஏசெண்டு...”
“சரி கம்பெனிக்கே கம்ளைண்ட் கொடுங்க... இனிமேல் இந்தப் பக்கம் வரப்படாது...”
“செம்பட்டையான் ஆம்புளகூட சண்டைபோட வக்கில்ல... வந்துட்டாரு... பொண்ணுவகூட சண்ட போட...”
“நான் சண்டை போட்டா... ஒங்களால தாங்க முடியாது... மரியாதியா போறியளா... இல்ல... பீடி ஒட்டுற பயலுவள வச்சு கழுத்தப் பிடிச்சுத் தள்ளணுமா...”
ஏசெண்டு, அப்படிச் சொல்லிவிட்டு, திடுக்கிட்டான்... காரணம் பீடி ஒட்டும் பயல்களிலும் செம்பட்டையான்கள் இருக்கிறார்கள்... அவர்களை நாளைக்கு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டம் போடுவது போல், மோவாயை அவர்களைப் பார்த்தே மேலும் கீழுமாய் ஆட்டினான்... செம்பட்டையான் பெண்களில் பலர் ஏழைகள்... சொத்துப்பத்து இல்லாத சூன்யங்கள்... பீடி சுற்றியே பிழைப்பவர்கள்... வேறு பிழைப்புத் தெரியாதவர்கள்... அவர்கள் அழப்போவது போல நிற்பதைப் பார்த்துவிட்டு அவர்களிடம் ஆலமரத்தடியில் சண்டை போட்ட கரும்பட்டையான் வாடாப்பூ கோபத்தை நிதானத்தோடு காட்டிப் பேசினாள்.
“இவளுவள விரட்டுறது நியாயமில்ல... கோயில் சண்டைய கோயிலுலதான் பாக்கணும்... மேளத்துல பாக்கணும்... தாளத்துல பாக்கணும்... பீடில பாக்கப்படாது... இவளுவளும் எங்கள மாதிரி தொழிலாளி பொண்ணுவ...”
பீடி ஏசெண்ட் துள்ளி எழுந்தான்.
“அம்மாமாருக்கு அவ்வளவு திமுரு உண்டாயிட்டோ... ஊர்க்காரனுவளயே உண்டு இல்லன்னு பார்க்கிற குடும்பத்துல ஆம்புளையாய் இருந்தாலும் சரி, பொம்புளையாய் இருந்தாலும் சரி... இங்க இடமில்ல... எவளாவது செம்பட்டையானுக்கு பிறந்தவதான் இப்டிப் பேசுவா... அப்படி பிறந்தவளுவ வராண்டாம்... மத்தவளுவ வரட்டும்... ஏய் தங்கம்மா... நம்ம குடும்பத்துக்காரிகள வரச் சொல்லு... வாறியா...? இல்ல... அவங்கவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி பீடி சுத்துறதை நிறுத்திட்டு வயல் வேலையில போடச் சொல்லணுமா...?”
காத்துக் கருப்பன்களும், கரும்பட்டையான் பெண்களும், கைவிரல்களைக் கடித்தபடியே யோசித்தார்கள்... எம்மாடி வயல் வேல பாக்கதைவிட தூக்குப் போட்டுச் சாகலாம். பீடி சுத்துனாதான் கையில ரெண்டு காசு புரளுது... வீட்லயும் மதிக்காக... வயலுக்கு போனால் வரப்பு மாதிரி மிதிப்பாவ... இந்த அம்மன்கொடை முடியுறது வரைக்குந்தான் செம்பட்டையான் பொண்ணுவளத் தடுப்பான்... அப்புறம் ஆறுனசோறு பழைய சோறு மாதிரிதான்...
செம்பட்டையான் பெண்களும், இதர பெண்களைப் போல், சும்மா ஒரு பேச்சுக்காக அப்படிப் பேசியிருக்கணும் என்று அனுமானித்து, இலை வாங்க நுழைந்தபோது, ஏசெண்டு அதட்டினான்.
“நீங்களெல்லாம் எதுக்காவ சேல கட்டணும்... நல்ல மாட்டுக்கு ஒரு அடி... நல்ல பொண்ணுக்கு ஒரு சொல்லு... மானம் மரியாதி வேண்டாம்... எந்த செம்பட்டையாளும் இன்னும், இங்கே நிக்கான்னா அவளுக்கு மானம் ரெண்டாம் பட்சமுன்னு அர்த்தம். காசுன்னு வந்துட்டா என்ன வேணுமுன்னாலும் செய்வாளுவ போலுக்கு...”
ரோசாப்பூ, வாடாப்பூவையே பார்த்தபடி செம்பட்டையான் பெண்கள் கண்ணிர் சிந்தினார்கள். கரும்பட்டை வாடாப்பூ, பதிலுக்கு கண்ணிர் சிந்தியபடியே அவளோடு நின்றாள்... பிறகு அந்தப் பெண்களோடு வெளியே வந்தாள்... இந்தப் பெண்கள் அவளை உள்ளே தள்ளிவிட்டாலும் அவள் அவர்களுடனேயே வெளியே வந்தாள்... “ஒண்ணாச் சிரிச்சோமே, அதுபோல் ஒண்ணாவே அழுவோம்...” என்று சொன்னபடியே வெளியேறினர்.
செம்பட்டைப் பெண்கள், வாடாப்பூவோடு, கடைக்கு வெளியே வந்து, வீதியில் நின்றார்கள்... நடந்ததை நம்ப முடியாமல், மேற்கொண்டும் நடக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றார்கள்... அப்போது, ரஞ்சிதம் எதிர்ப்பட்டாள்... அவளைப் பார்த்ததும், இவள்களில் ஒருத்தி சத்தம் போடாமலே அழுதாள்... பிறகு ரஞ்சிதத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒப்பித்தாள்.
“அன்னிக்கு ஒன்னை அடுத்த சாதிப் பொண்ணுன்னு பீடிப் பய அவமானமா திட்டும்போது சும்மா இருந்தோமே, அதுக்கு இப்போ நல்லா அனுபவிக்கோம்... ரஞ்சிதம், கரும்பட்டையான் ஆம்புளயும், செம்பட்டையான் ஆம்புளையும் போட்டி போட்டால் காத்துக் கருப்பனுக்கு என்ன வந்துட்டு... நாங்க இப்போ பீடி சுத்தப் படாதாம். அஞ்சாறு வருஷமா செய்யுற வேலையை எப்பிடி நிறுத்திட்டான் பாரு...”
“ரஞ்சிதம் நீயாவது பூவு வித்துப் பிழைக்கே... நாங்க என்ன பண்ணுவோம்...? பீடிய பிடிச்ச கையால மம்பெட்டிய பிடிக்க முடியாது... இலைய சுருட்டின கையால புல்லு வெட்ட முடியாது... இதவிட அந்த கரிமுடிவான் எங்கள ஒரே வெட்டா வெட்டியிருக்கலாம்...”
ரஞ்சிதம், அந்தப் பெண்களை இரண்டு பக்கமும் கை நீட்டி இரு முனைகளிலும் நின்றவர்களின் கரங்களைப் பற்றியபடியே சாதாரணமாகப் பேசினாள்.
“மனுஷனையும், மனுஷியையும் பிரிச்சுப் பார்த்தால், அப்புறம் கையி காலுன்னும் பிரிக்க வேண்டியது வரும்... அன்னிக்கு என்னை சாதியச் சொல்லி விரட்டுனான்... இன்னைக்கு ஒங்கள குடும்பத்த சொல்லி விரட்டுறான்... நாளைக்கு கரும்பட்டையான் பொண்ணுவள விரட்டுவான்... அப்புறம் காத்துக் கருப்பன் குடும்பத்துல முதல் சொக்காரன சேர்த்துட்டு, ரெண்டாவது சொக்காரன விரட்டுவான்... அப்புறம் முதல் சொக்காரனுவனுள்ல அண்ணன் தம்பின்னு ஏத்துக்கிட்டு சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளை விரட்டுவான். பிறகு தன்னைத்தானே மட்டும் வச்சுக்குவான்... இப்படிப் பட்டவனுவள முதலில் விரட்டுனாத்தான் நம்மள மாதிரி தொழிலாளிங்க ஒன்றாய் சேரமுடியும்...”
“இப்போ வேல இல்லாம வீதியில நிக்கோமே... ரஞ்சிதம்...”
“கவலைப்படாதிய... குட்டாம்பட்டில கண்ணாடிக்காரன்னு ஒருத்தர் ஏற்பாட்டுல பீடி சுற்றும் கூட்டுறவு சங்கம் வந்திருக்கு... அதுல பீடி சுத்தி பிழைக்கலாம்... இப்போவாவது நமக்கு சங்கம் தேவைன்னு தோணுதா...”
“அதுல என்ன சந்தேகம்... இவன விடப்படாது...”
“கண்ணாடிக்காரர் கிட்டே சொல்லுவோம்... அவர் லேபர் கோர்ட்டுல ஏற்பாடு செய்வார்... பேரேடு புத்தகத்த பத்திரமா வையுங்க... சரி நாம இப்பவே குட்டாம்பட்டி போய் கூட்டுறவு சங்கத்துல பதிவு செய்யலாம்... கோர்ட்ல இல்லன்னா... அரசாங்கத்துல... புகார் கொடுக்கது பத்தி முடிவெடுப்போம்... இவனை நீங்க விட்டாலும், நான் விடமாட்டேன்...”
ஏசெண்டு பால்பாண்டி, அந்தப் பெண்களின் பின்பக்கமாக ஓடிவந்து, முன்பக்கமாக நின்று கத்தினான்.
“என்னடி சொன்ன ரஞ்சிதம்... என்னை நீ விடமாட்டியா... இப்பவே ஒன் சேலயப் பிடிச்சு இழுக்கேன்... ஒன் கள்ளப் புருஷன்ல எந்தப் பய வந்து காப்பாத்துறான்னு பாக்கலாம்...”
ரஞ்சிதம் எந்தவித உணர்வையும் காட்டாமல், அப்படியே நின்றாள். அதுமட்டுமில்லாமல், பீடி ஏசெண்டை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். அவன், ஏதோ தன்னிடம் குசலம் விசாரிக்கப் போவது போலவும், அதற்குப் பதிலளிக்க வேண்டியது தனது கடமை என்பது போலவும் சினமடையாமலே அவனைப் பார்த்தாள். “அய்யோ சாமி நான் அப்படி ஒன்னும் பேசல” என்று ரஞ்சிதம் சல்ஜாப்பு சொல்வாள் என்று எதிர்பார்த்த ஏசெண்டு சிறிது அதிர்ச்சியுற்றான். ஆனாலும் செம்பட்டையான் பெண்களைப் பயமுறுத்துவதற்காவது ரஞ்சிதத்தை ஏதாவது செய்ய வேண்டும். ஒப்புக்காவது, அவள் தோளில் கிடக்கும் முந்தானையைக் கீழே இழுத்துப் போடவேண்டும். செறுக்கி மவள்...
ஏசெண்டு, ரஞ்சிதத்தை, அடிமேல் அடிவைத்து நெருங்கினான். என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியாமலே - அதேசமயம், ஏதாவது செய்யவேண்டும் என்ற வீறாப்புடன் நெருங்கினான். இதற்குள் செம்பட்டையான் பெண்கள், ரஞ்சிதத்தைச் சுற்றி வியூகம் போட்டார்கள். அந்த வியூகத்திற்கு முன்னால் கரும்பட்டையான் வாடாப்பூ, தன்னைத்தானே முன்னால் நிறுத்திக் கொண்டு, ஏசெண்டைப் பார்த்துச் சவாலிட்டாள்.
“ஏய்... பால்பாண்டி... நீ நெசமாவே... மனுஷன்னா... ரஞ்சிதத்த தொடு பாக்கலாம்...”
“என்னடா நெனச்சே... பண்ணிப் பயலே...”
“ஒருத்தி இரண்டாவது கணையைத் தொடுத்தாள்... இதையடுத்து எல்லாப் பெண்களும் முந்தியடித்து பேசினார்கள்.
“ஒரு பொம்புளய, அதுவும் ஒத்த வீட்டு பொண்ண, அடிக்கவாறியே... நீயுல்லாம் ஆம்புளையாடா...”
“பீடிக் கம்பெனில நீ பெரிய வேலைக்காரன்... நாங்க சின்ன வேலைக்காரிவ. எங்கள வராதன்னு நீ எப்டிடா சொல்லலாம்...”
“ஊருன்னா ஆயிரம் நடக்கும்... ஐயாயிரம் இருக்கும்... கரும்பட்டையான் குடும்பத்துல பொண்ணு எடுக்கணுமுன்னா... முறப்படி கேட்கறத விட்டுப்புட்டு, இப்டியாடா ஆடுறது...? ஆம்புளத் திமுர்ல அலையுறவனுவ... சண்டைக்கு நாங்க பொட்டப் பிள்ளியல என்னல செய்வோம்...”
“அம்மன் கொடைக்கும் பீடி சுத்தறதுக்கும் என்னல சம்பந்தம்... எரும மாடே...”
“ஏமுல... பித்துப் பிடிச்சு நிக்கே... ரஞ்சிதத்த தொடுல பாக்கலாம்...”
“பெண்கள கொடுமப் படுத்தினா ஆறு வருஷம் செயிலுக்கு போகனுமுன்னு தெரியுமாடா...”
“பீடி சுத்துறத ஒன்னால தற்செயலாய் நிறுத்தலாம்... நிரந்தரமா முடியாதுன்னு கண்ணாடிக்காரரை வச்சு ஒனக்கு சொல்லிக் கொடுக்கோம் பார்...”
“இந்த ரஞ்சிதம் முகத்த ஏறிட்டு பாருல... அனாதையா, அம்மாவ... இழந்துட்டு இருக்க இவளயால சேலய உறிவே...”
“எழுழா அவன்கிட்ட பேசிக்கிட்டு... சாணியக் கரைச்சு அவன் தலையில் ஊத்துங்க... அந்த சாணிய எடுழா...”
ஒருத்தி ஆவேசப்பட்டு சற்றுத் தொலைவில் கிடந்த எருமைமாட்டுச் சாணியை எடுத்தாள்... இன்னொருத்தி, அவளைத் தடுத்து, அவள் கையை அங்குமிங்கும் ஆட்டி, சாணத்தைக் கீழே தட்டிவிட்டாள்... இதற்குள் அக்கம் பக்கத்தில் போட்டி கொடைகளைப் பற்றிக் கூடிக் கூடிப் பேசி நின்றவர்கள், அங்கே ஒடி வந்தார்கள்... அந்தப் பெண்களைச் சத்தம் போட வந்த எல்லோரும், அவர்களின் ஆவேசத்தைக் கண்டு சற்று பயந்து, அது தணிவது வரைக்கும் காத்திருப்பது போல், அவர்களையே பார்த்தார்கள்... ஏசெண்டு, வெலவெலத்துப் போனான்... ஒருத்திக்குப் பதில் சொல்லப்போனால், இன்னொருத்தி கேள்வி கேட்டாள்... அவன், அந்தப் பக்கம் நின்றவர்களில் பெரும்பான்மையினரான சொக்காரர்களைப் பார்த்து இப்போது முறையிட்டான்.
“இவளுவ பேசுற பேச்சப் பாத்தியளா... பொம்புளன்னு பாக்கேன்...”
“நாங்களும் ஒங்க ஆட்கள் மொவத்துக்காவ ஒன்ன விட்டுட்டுப் போறோமுல... சாக்கிரத... அடுத்த வாரம் நீயே ஒன்கையால எங்களுக்கு பீடி இலைய கொடுக்கியா... இல்லியான்னு பாரு... பொண்ண மானபங்கப் படுத்துனால்... தூக்குத் தண்டனையாம்... அடிச்சா ஆயுள் தண்டனையாம்... பீடி இலைய மட்டும் பார்க்காம, பேப்பரையும் படிச்சுப் பாரு. வா... ரஞ்சிதம்...”
“இவன்... எங்க... பீடி இலைய பாக்கான்...? அதைச் சுத்துற விரலத்தான பாக்கான்...”
எல்லாப் பெண்களும், ரஞ்சிதத்தை முதுகைப் பிடித்தும், கையைப் பிடித்தும் இழுத்தும் தள்ளிக் கொண்டு போனார்கள்... அவள் என்னமோ இந்த ஏசெண்டை திட்டியதுபோலவும், இவள்கள் என்னவோ சமரசம் செய்து வைப்பது போலவும்; இவள்கள் நடக்க, நடக்க, பீடி ஏசெண்ட்டின் பக்கம் நின்றவர்களின் பேச்சு கேட்டது... மூளை இருக்கா... மண்டையில மசாலா இருக்கா...? இதுக்குப் பேருதான் திமிரு... கொளுப்பு... அந்தக் கூட்டம் இவள்களைச் சொன்னதா அல்லது அவனைச் சொன்னதா என்று அந்த களேபரச் சத்தத்தில் சரியாகப் புரியவில்லை.
ரஞ்சிதம் புல்லரித்துப் போனாள்... சென்னையில், அண்ணி செண்பகம், ‘வேணுமுன்னா அவன்கிட்ட போய் இருந்துக்க... நீ பார்க்காம அவன் எப்படிப் பார்ப்பான்’ என்று ஆண் பார்வைக்கே புது இலக்கணம் வகுத்தபோது, அவள் அழவில்லை... வயதான, அம்மா, மகளுக்கு கல்யாணமாகாதோ என்ற ஏக்கத்தில் இறந்த போதுகூட, அவள் அந்த துக்கத்தை, ‘ஒரு ஜீவனாவது கவலையற்ற இடத்துக்குப் போயிட்டே’ என்று ஆறுதலில் மறந்தாள்... இந்த பீடி ஏசெண்ட்டும், அப்போது பேசும்போதும், இப்போது பேசும்போதும் அவளுக்கு அழுகை வந்தது... ஆனால் அழவில்லை... ஆனால் இப்போதோ, அந்தப் பெண்கள் தனக்காக ஒருமுகமாய் நிற்பதை நினைத்துப் பார்க்கும்போதே அழுதுவிட்டாள். இரண்டு பெண்களின் தோள்களில் கைகளை போட்டபடியே, தலையை அங்குமிங்குமாய் ஆட்டி ஆட்டி அழுதாள்... கண்ணில் பெருக்கெடுத்த நீரும், முகத்தில் துளிர்த்த வேர்வையும் வாயென்ற கடலில் வடித்து கொண்டிருந்தன... அந்தப் பெண்கள் துடித்துப் போனார்கள்.
“அழாதே ரஞ்சிதம்... அழாத... அவன் அறிவில்லா பயல்... நாங்களும்தான் அவனுக்கு நல்லா கொடுத்தமா... அவன் தலையில் சானிய ஒரு துண்டாவது எடுத்துப் போட்டிருக்கணும்... அது செய்யாதது தப்புதான்... அழாத ரஞ்சிதம்...”
ரஞ்சிதம் கண்ணிரைத் துடைத்த ஒருத்தியின் கரங்களைத் தன் கரங்களுடன் இணைத்துக் கொண்டே விம்மலுக்கிடையே பேசினாள்.
“நான் அவர் திட்டுனார்னு...”
“அவரு பெரிய இவரு... எரப்பாளிப் பயல மரியாதியா பேசாத... சரி ஏதோ பேச வந்தே... சொல்லு ரஞ்சிதம்...”
“நான் அவனுக்காவ அழல... ஒங்க அன்ப நெனச்சால் அழுக வருது... ஒங்க அன்புக்கு நான் தகுதியா இருக்க மாட்டேனோன்னு பயம் வருது...”
“சரி... சரி... சொம்மா கொஞ்ச நேரம் எதையும் யோசிக்காத சரியாயிடும்... நீ இப்போ எதுவும் பேசப்படாது... ஆமா... அந்தப் பக்கம் தற்செயலா வந்தியா? இல்ல இப்படி நடக்குமுன்னு எதிர்பார்த்து வந்தியா?”
“எழா... தொட்டிலயும் ஆட்டி, பிள்ளையுமா கிள்ளுற...”
“அவளும் வீட்ல நடக்க கல்யாணப் பேச்சு நம்பி... தொட்டுலயும் வச்சுட்டா... தாலாட்டும் தெரிஞ்சுக்கிட்டா... கிள்ளுறதுக்கு மாப்பிள்ளதான் வர்ல... பிள்ளைக்கு எங்கே போறது...”
“எந்த சமயத்துல தமாஷ் செய்யணுமுன்னு தெரியாண்டாம்...? ஒரு வாரத்துக்கு பீடி சுத்துறனால... எழுபத்தைஞ்சு ரூபாய் வரும்... இப்போ அதவிட்டுவிட்டு அனாதையா நிக்கோம்... எவளுக்காவது உடம்புல சூடு சொரணை இருக்குதா...?”
சிரித்த பெண்கள் அழுகையை அடக்குவதுபோல் சிரிப்பை அடக்கினார்கள். ஒருத்தியை ஒருத்தி ஆறுதலாகப் பிடித்துக் கொண்டார்கள். கூட்டத்திற்குள், இருந்தாலும், தனிமைப் பய உணர்வு காசில்லாமல் குடும்பத்தில் இருக்கப் போகிறோமே என்ற அச்சம்...
எல்லோரும் முருகன் கோவிலுக்கு வந்தார்கள். சோர்ந்து போய் உட்கார்ந்தார்கள். ரஞ்சிதம் அவர்கள் முன்னால் அவர்களுக்கு முகம் கொடுத்து அமர்ந்தாள்... இப்போது பழைய நிலைக்கு வந்து விட்டாள்... சிரிப்பதற்கே வாழ்க்கை என்பது மாதிரியான சிரிப்பு... கூடி வாழ்வதே கோடி பெறும் என்பது போன்ற பார்வை...
கண்களை அகல வைத்துப் பேசினாள்.
“நாம எல்லாரும் குட்டாம்பட்டிக்கு மொத்தமாகவும் போவோம்... இல்லன்னா நான், ராசகிளி, வாடாப்பூ வேணுமுன்னால் இன்னும் ரெண்டு பேரு... அஞ்சாறு பேராய் போவோம் . குட்டாம்பட்டில கண்ணாடிக்காரர் நம்மள பாத்ததுமே இலை தூள் தருவாரு. கன்னத்துள வச்ச கைய விடுங்க. குட்டாம்பட்டில பீடித் தொழிலாளி சங்கத்தை வைக்க அந்த கண்ணாடிக்காரர் படாதபாடு பட்டாரு. அப்படியும் விடாப்பிடியாய் சங்கம் வச்சு அதையே கூட்டுறவு சங்கமா மாத்திக்கிட்டார், அதுக்கு முன்னால அவரை அடிச்சாங்க... ஊர்லலேந்து தள்ளி வச்சாங்க... அவரு மசியல... அவரு நமக்கும் சேர்த்து பாடுப்பட்டதால நாம அதிகமா கஷ்டப்பட வேண்டியதில்ல... சரி... இப்பவே... போவோமா...”
“இன்னும் வயித்துக்குள்ள எதுவும் போகல... காபியக்கூட சரியா குடிக்கவிடாம அந்த நாசமாப்போற நாட்டு வக்கீலு வந்து விரட்டிட்டான்... வீட்ல போயி கொஞ்சம் கஞ்சி குடிச்சுட்டு வாறேன்... எங்க வரணும் ரஞ்சிதம்...”
“இங்கேயே வாங்க...”
“முன்னப்பின்ன யோசிக்காம ஏமுழா எழுந்திருக்கிய... பீடிப்பய, ரஞ்சிதத்த இங்க வந்து மிரட்டப் போறான்...”
ரஞ்சிதம், பொதுப்படையாய் பேசினாள்.
“நீங்க போங்க... ஒரு பொண்ண... அவமானப் படுத்துனால ஆயுள் தண்டனைன்னு சொல்லிட்டிங்கல்லா... அந்த ஆளுக்கு இது பொய்யுன்னு தெரியாது. ஒரு பொண்ண என்னபாடு படுத்திட்டும் ஜாமீன்ல வந்துட சட்டம் இடம் கொடுக்கது அவனுக்குத் தெரியாது... அவன மாதிரி ஆட்கள் முட்டாளா இருக்கதும், ஒரு வகையில நல்லதுக்குத்தான். சரி சீக்கிரமா போயிட்டு வாங்க...”
அனைத்துப் பெண்களும் ரஞ்சிதத்தை வியப்போடு பார்த்துவிட்டு நடந்தபோது, ரஞ்சிதம் வாடாப்பூவையே வியந்தபடி பார்த்தாள்... அவளுக்கு இப்போது முதுகு காட்டி நடக்கும் இந்த வாடாப்பூ கரும்பட்டையான் குடும்ப முழு உணர்வையும் மீறி வந்தவள்... அவள் பெரிய மனுஷி... பாதிக்கப்படும் வாய்ப்பு வராதபோதே... பாதிக்கப்பட்டு விட்டவர்களோடு சேர்ந்த அவள் முன்னால் போய் நின்று கும்பிட வேண்டும்... முருகனைக் கும்புடுவதும் கும்பிடாததும் அப்புறம்...
ரஞ்சிதம், முருகன் சிலையையே உற்றுப் பார்த்தாள்... அந்த கோவணாண்டியை பார்த்துப் பார்த்துப் பேசிக் கொண்டாள்... முருகா... ஒன்னைப் பார்க்கப் பார்க்க என் மனம் நெகிழுதுடா... ஒன்ன இந்தக் கோலத்துல பார்க்கும் போதெல்லாம் நீ சிவன் மகன் மாதிரி எனக்குத் தெரியல... சிவகாசில தீப்பெட்டித் தொழிலுல ஈடுபட்டிருக்கிற சின்னப் பையன் மாதிரி தெரியதுடா... இந்த ஏசெண்ட் கிட்ட பீடி ஒட்டுற பிஞ்சுகள் மாதிரி தோணுது... நீ கைலாசத்த விட்டது மாதிரி... நீ படிக்க வசதியில்லாம பள்ளிக்கூடத்த விட்டுட்டு மரம் வெட்டுற, கிணறு தோண்டுற விவசாய கூலிப் பையன்கள கண்ணு முன்னால பாக்கது மாதிரி இருக்குடா... மெக்கானிக்குகளிடம் திட்டும் உதையும் வாங்கிட்டு, வெறுமையாய் பாக்குற பிஞ்சுப் பயல்க... ஞாபகம் வருதுடா...
ரஞ்சிதம், அங்கே வைத்துவிட்டுப் போயிருந்த பூத்தட்டைப் பார்த்தாள்... நாளை முதல் இது பீடித்தட்டாகப் போகிறது... அவள் எழுந்தாள்... கையில் இருந்த உதிரிப் பூக்களை முருகன் பாதத்தில் போட்டாள்... கதம்பப் பூவை மாலை போல் மடித்து, முருகன் சிலையின் கழுத்தில் போட்டாள். அவள் தனக்கென்று ஒரு பூத் துண்டை எடுக்கப் போனாள்... நீட்டிய கரத்தைச் சுருட்டிக் கொண்டாள்... பெண்களை நகைபோட்டு நகை போட்டே நகைப்புக்கு இடமாக்கிட்டாங்க. பூ வைத்துப் பூ வைத்தே பூவாய் வாட வச்சுட்டாங்க...
ரஞ்சிதம் கோவிலுக்கு வெளியே வந்தாள்... மேற்குப் பக்கமாக, ரயில்வே பாலத்தைப் பார்த்தவள், கிழக்குப் பக்கம் உறுமல் சத்தம் கேட்டு, திரும்பினாள்... திருமலை, மோட்டார் பைக்கில் கம்பீரமாக வந்து கொண்டிருந்தான்.
ரஞ்சிதத்திற்கு, கோலவடிவை பருத்திக் காட்டில் பார்த்த கோலம் நினைவுக்கு வந்தது... இது வெறும் காதல் பிரச்சினை மட்டுமல்ல... ஊர்ப் பிரச்சினை... துளசிங்கத்திற்கு, ஒருவேளை இந்தக் கோலவடிவு எத்தனையோ பேர்களில் ஒருத்தியோ என்னவோ... அவள் மேல் துளசிங்கத்திற்கு, நிசமாவே காதல் இருந்திருந்தால்... நேற்று என்கிட்டே அப்படி வம்பா பேசியிருக்கமாட்டான்... தமாஷ்தான்... ஆனால் அந்த தமாஷ், நிசமானால் சந்தோஷப்பட்டிருப்பான்... அப்படிப் பட்டவனிடம் இருந்து கோலவடிவைக் காப்பாற்றியாகணும்... ஒருவேளை... அவளை, அவன் நிசமாவே காதலிச்சால்... காதலிக்கட்டும். கல்யாணத்துக்குப் பிறகு காதலிக்கட்டும்... விஷயத்தை, இந்த திருமலையிடம் எப்படிச் சொல்வது... எப்படியாவது சொல்லியாகணும்... முருகனுக்கு இவரும் பக்தர்... முருகன் கோவில் முன்னால் “ஆவேசப்படமாட்டேன். அரிவாளை எடுக்கமாட்டேன்”னு சத்தியம் வாங்கிட்டு, பக்குவமாச் சொல்லணும்... ஒரு பொண்ணையும் காப்பாத்தியாகணும்... ஊரையும் காப்பாத்தியாகணும்...
ரஞ்சிதம் திருமலையைப் பார்த்து போலீஸ்காரன் கையாட்டுவது போல், வலது கையை நிமிர்த்தி, உள்ளங்கையை வெறுங்கை ஆக்கினாள்.
-------------
This file was last updated on 18 June 2020.
Feel free to send the corrections to the Webmaster.