சாமியாடிகள் (நாவல்)
பாகம் 2 (அத்தியாயம் 17-40)
சு. சமுத்திரம்
cAmiyATikaL (novel)
part 2, chapters 17-40
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சாமியாடிகள் (நாவல்)
பாகம் 2 (அத்தியாயம் 17-40)
சு. சமுத்திரம்
Source:
சாமியாடிகள் (நாவல்)
சு. சமுத்திரம்
திருவரசு புத்தக நிலையம்,
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017
முதற் பதிப்பு: டிசம்பர் 1991; இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2000
உரிமை : ஆசிரியருக்கே.
விலை ரூ. 60.00
பதிப்பு : ஏகலைவன் பதிப்பகம், சென்னை 600 041
--------------
சாமியாடிகள் - அத்தியாயம்- 17
காளியம்மனுக்கு ‘கால் நாட்டு பூஜை’ - அதாவது பெரிய கோயில்களில் கொடியேற்றுவது மாதிரியான முதல் கட்ட விழா. பழனிச்சாமி, ராமசுப்பு, குள்ளக் கத்தரிக்காய், நாட்டு வக்கீல் போன்ற முக்கியப் பிரமுகர்கள் அம்மனையே பார்த்தபடி நிற்க, கால் நடுவதற்குத் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து சிலர் மண்ணை வெளியில் எடுத்துப் போட்டார்கள். இரும்புக் கம்பியால் குத்தக் குத்த, மண், மண்வெட்டியால் அகற்றப்பட்டது. இங்கே என்ன நடக்கிறது என்பதை அங்கே சுடலைமாடன்வாசிகள் முகங்களைச் சுண்டிச் சுண்டிப் பார்த்தார்கள். “சீக்கிரம் சீக்கிரம்” என்றார் குள்ளக் கத்தரிக்காய்.
மாடக்கண்ணு வெட்டிய குழியில், ராமசுப்பு ஒரு பூவரசு மரக்கம்பை நட்டார். சாமியாடி தாத்தா, ஒரு கொப்பு அரச இலைகளிலும் அதன் காம்புகளிலும் சந்தனமிட்டு, குங்குமம் வைத்தார். பின்னர், அதைப் பழனிச்சாமியிடம் நீட்டினார். பழனிச்சாமி, அதைப் பயபக்தியுடன் வாங்கி, அம்மனிடம் அந்தப் பணிவோடு காட்டிவிட்டுப் பூவரசுக் கம்பில் எக்கி நின்று, அந்த அரச இலைகளை கட்டப் போனார்... பிறகு, “கம்புக்கும் சந்தனம் வைங்கடா... குங்குமம் பூசுங்கடா” என்றார். கம்பு, மஞ்சள் குங்குமமாய் மங்களமானபோது, பழனிச்சாமி, அரச இலைகளை அதில் கட்டினார். உடனே மேளச்சத்தம் பலமாய் ஒலித்தது. நாதஸ்வரம் உச்சிக் குரலுக்குப் போனது. சாமியாடி தாத்தா, வெட்டு வந்தவர் போல் தரையில் அங்குமிங்கும் புரண்டு எழுந்தார். எழுந்தவர் அப்படியே ஆடாமல் நின்றார். இப்படி கால்நடும்போது மேளம் கெட்டியாக ஒலிக்க வேண்டும்... ஒலித்தது... ஆனால் அப்படி ஒலித்தது அருகே நின்ற ‘சுடரொளிவு’ மேளமல்ல... சுடலைமாடன் கோவிலில் உள்ள ‘கணேச மேளம்’. அங்கேயும் கால் நடப்பட்டது... பழனிச்சாமியின் தம்பி அருணாசலம் கத்தினார்...
“யோவ் சாமியாடி பெரிய்யா... இந்த மேளத்துக்கும் அந்த மேளத்துக்கும் வித்தியாசம் தெரியாட்டா நீரு என்னய்யா சாமியாடி? ஏல சுடரொளிவு, கால் நட்டாச்சுல்ல... ஏமூல சும்மா இருக்க... தட்டேமுல...”
“எவ்வளவு ரூபாய் தரப் போறாகளோ... ஈரங்கிப் பய மவனுவ” என்று யோசித்துக் கொண்டிருந்த சுடரொளிவு, பீப்பி ஊத, அவன் தம்பி, தலை தவிடு பொடியாக்கப் போவது போல் அடித்தான்... மேளம் அடிப்பதற்கு முன்பே ஊத வேண்டியன் ‘ஊமைக் குழலை’ சுடரொளியின் மச்சான் இப்போது தான் சாவகாசமாகத் துடைத்தான்... சாமியாடி தாத்தா, திடீரென்று நின்ற இடத்தில் நின்றபடியே குதித்தார்... பிறகு மேளச் சத்தத்திற்கு ஏற்ப ‘டங்டங்’ என்று ஆடினார். அந்த ஆலமரத்திற்கு அப்பால், அதனால் மறைபட முடியாதபடி உள்ள அம்மன் கட்டிடத்திற்கும் கால் நாட்டப்பட்ட இடத்திற்கும் இடையே, தாத்தா ஆடினார்... தள்ளாமையில் பாதியாட்டம்... தானாக பாதியாட்டம்...
அம்மன் கோவில், ஒரு சின்ன அரண்மனை மாதிரி இருந்தது... கல் கட்டிடம்... பன்னிரண்டு படிகளேறினால் அம்மனின் முகப்பு அறைக்குப் போகலாம். அம்மன் அதற்கும் உள்ளே, மூன்றடி உயரப் பீடத்தில் இருந்தாள். மண்சிலைதான். ஆனால் வெண்கலத்தை விடக் கெட்டியான சிலை. சிலைக்கு கீழே அறுகோணத் தகடு. சட்டமிட்டுக் கண்ணாடிக்குள் வைக்கப்பட்டது. அம்மனுக்கு ஆறு கைகள்... ஒன்றில்அரிவாள், இன்னொன்றில் திரிசூலம், மற்றொன்றில் சுதர்சன சக்கரம். நான்காவது கையில் பாராங்குசம். இதர இரண்டு கரங்களும் பின்பக்கமாய் இருப்பதால் அவற்றில் என்ன உள்ளன என்பது தெரியவில்லை. இந்த ஆயுதங்கள் அனைத்தும் அசல் மண்ணாலானவைதான். ஆனால், அம்மனை கொத்திதிரி, சூலத்தி, கோணத்தி பயங்கரியாகக் காட்டுபவை. அம்மன் காலடியில் அசல் வெட்டரிவாள்... இரும்புத் திரிசூலம்... ஒரு மூலையில் கம்பீரம் காட்டியது. ஆகாயத்தில் இருந்து தொங்குவதுபோல் இரும்புக் கம்பியில் தொங்கிய இரண்டு விளக்குகள் எரி நட்சத்திரங்களாய் ஜொலித்தன.
சாமியாடி தாத்தா இன்னும் ஆடுவதை நிறுத்தவில்லை. திருமலை அவர் முன்னால் போய் நின்று ஆடினான்.
“நம்ம கால்தூசிக்குப் பொறாதவன்... இந்த செம்பட்டையான் பயலுவ... துள்ளோ துள்ளுன்னு துள்ளுதான். அவங்க அம்மன் கொடைய தடுக்க துப்புல்ல... காளியாத்தாவுக்கு ஆட்டமாம் பெரிய ஆட்டம்...”
சாமியாடி ஆடியபடியே உத்திரவு சொன்னார்...
“கவலைப்படாதே... என் மவனே... அவன் கொடை நடக்காது. என் மவன் சுடலைகிட்ட சொல்லிட்டேன். தாய்க்குப் பின்தான் தனயன்...”
“அதோ பாரு காளி... அங்கே நாலுபேரு எப்படி ஆடுறாங்கன்னு... அரச இலய எவ்வளவு உயரமா கட்டியிருக்காங்கன்னு... டேய் மாயாண்டி... நம்ம இலயயும் அவங்க கட்டுன உயரத்திற்கு கட்டுடா...”
“அச்சப்படாதடா மகனே... அவனுவ பரிதவிச்சு நிக்கப் போறானுவ பாரு... அவனுவள பாதாள சிறையில அடைக்கப் போறேன் பாரு...”
“சரி... சரி... நீரு அடைச்சது போதும்... இப்போ நிறைய வேல இருக்கு. ஆடுறத நிறுத்தும்... நீரு இப்போ ஆடுறதோட சரி கொடையில ஒம்ம பேரன்தான் ஆடணும்...”
சாமியாடி, கற்பூரத்தட்டில் உள்ள திருநீறையும், குங்குமத்தையும் எல்லோருக்கும் வெறுப்போடு இட்டுக் கொண்டிருந்தார். நெற்றியென்று திருநீறை உதட்டில் தேய்த்தார். நெற்றிப் பொட்டென்று குங்குமத்தைக் கண்ணில் தேய்த்தார்... ஒரே கத்தல். பீடி ஏசெண்ட், பயபக்தியுடன் விபூதி வாங்கினான்.
பழனிச்சாமி, அரச இலைகளை அவிழ்த்து மேலே கட்டப்போன மாயாண்டியைக் கையாட்டி நிறுத்தினார். பிறகு, கோவிலைச் சுற்றி நடைபெறும் வேலைகளில் கண்களைச் சுழல வைத்துப் பார்த்தார். அம்மன் சிலைக்கு, ‘வர்ணம்’ தீட்டுவதற்காக ஒரு குயவர் கோயிலுக்குள் போய் ஒரு கும்புடு போட்டுவிட்டு, திரைச்சீலையை இழுத்துப் போட்டார். கோவிலுக்கு எதிரே ஆலமரத்தைத் தாண்டி, ஒரு செவ்வகக் கட்டிடம். முப்பதடி உயர தகரக் கதவு போடப்பட்ட படாதி கட்டிடம். அங்கிருந்து சப்பரம். இழுத்து வெளியே கொண்டு வரப்பட்டது. நான்கு பக்கமும் வண்டிப் பைதாக்கள் அவற்றுக்கு மேல் சதுரமான தேக்குப் பரப்பு. அதிலே ஒரு மூன்றடி உயரப்பீடம். பீடத்தின் மேல் அம்மனின் வெண்கல அவதாரம். அதற்கு மேலே விதவிதமான புராணப் பொம்மைகள். சப்பரத்தின் முன்பக்கம் இரண்டு மண்குதிரைகள். அவற்றை நிசக் குதிரைகளாய் நம்ப வைப்பதுபோல் இருபுறமும் கட்டப்பட்டு முக்கோணம் போல் ஒன்று பட்ட குறுக்குச் சங்கிலி வடம். அதைப் பிடித்துத்தான் சப்பரத்தை இழுக்கவேண்டும். இந்தச் சப்பர, சக்கரக் கம்புகளைத் தச்சர்களும் இரும்பு பட்டைகளைக் கொல்லர்களும் தட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஒருவர் இதற்குள் டிராலி மாதிரி ஒரு வண்டியைக் கொண்டு வந்தார். அதன்மேல் நெருக்கமாக நான்கு இரும்புக் குழாய்கள். அவற்றில் கருமருந்தை இட்டு நிரப்பினார். பிறகு ஒரு கயிற்றில் பிடித்த நெருப்பை ஒரு குழாயில் பற்றவைத்து விட்டு ஓடினார். அவர் ஓடுவதற்குள் பயங்கர சத்தம். டப்டப்பு என்று சத்தம். நாட்டு வக்கீல் நாராயணன் அங்கலாய்த்தார்.
“இது பழைய வேட்டு... பழைய சத்தம்... தொலவுல கேட்கிறவர்களுக்கு நம்ம கோவில் வேட்டா, அந்தப் பயலுவ கோயில் வேட்டான்னு தெரியாது. அங்க பாருங்க...”
எல்லோரும் பார்த்தார்கள்... சுடலைமாடன் கோவிலுக்கு மேல் வாணங்கள் ஆகாயச் சுடர்களாய்ப் பறந்தன. சத்தம் போட்டபடியே ஒளியிட்டன... ஒளியிட்டபடியே வளைந்தன... விதவிதமான நிறங்களில் கலர்கலரான வாணங்கள்... சுடலைக்கு பூ மாலை சொறிவதுபோல் நட்சத்திரப் பொறிகளாக கீழே விழுந்தன. ஒன்று விழும்போது, இன்னொன்று எழுந்து வானமே வாணமாகியது.
கரும்பட்டையான்கள் சோர்ந்து போனார்கள். ‘கால் நாட்டு’ விசேஷத்தில் தோற்றாலும் கதாநாயக நாளில் கெலிச்சாகணும். ஏதாவது பெரிசா செய்தாகணும் என்று அருணாசலம் நாட்டு வக்கீலைப் பார்த்துக் கேட்டார்.
“அம்மன் கொடையோட அவங்க வீடியோ படத்த ஏதோ செய்யப் போறதாய் சொன்னியே... என்னடா அது?...”
“இப்போ சொல்லமாட்டேன்... ஆனால் செய்வேன்...”
“சொல்லேமில பேய்ப்பயலே... இன்னும் மூணு நாள் தான் இருக்கு... அந்தத் தட்டிப்பயலுவ வாணவேடிக்கை காட்டி நம்மள சிறிசாக்கிட்டானுவ... நாமும் பெரிசா செய்யணும் பாரு... சொல்லு... இதுக்கு மேலயும் பவுசு செய்தா நீ எதையுமே செய்யாண்டாம்...”
“சொல்லுதேன்... ஆனால் இது வெளியில போயிட்டா வீணாயிடும். நான் தென்காசில கொஞ்ச நாளு சினிமா ஆப்பரேட்டரா இருந்தனா...”
“ஆமா... அப்புறம்... ஏதோ திருடிட்டேன்னு துரத்திட்டாங்கல்லா?”
“நாக்குக்கு எலும்பு இல்லன்னு அதுக்காவ அது எப்படின்னாலும் புரளப்படாது...”
“சரி... தப்புதான்... சொல்லுடா...”
“சொல்லுதேன்... சொல்லுதேன்... அந்தப் பயலுவ டிவி பெட்டில சின்னதா சினிமாப்படம் போடுதான். நான் பதினாறு எம்.எம். அதுதான் பாவாடையை பிரிச்சி விரிச்சால் எவ்வளவு பெரிசா இருக்குமோ அவ்வளவு பெரிய திரையில சினிமா காட்டப்போறேன்... ஒண்ணுல்ல... ரெண்டு படம்... ரொம்ப பெரிசா தெரியும்...”
“நல்ல யோசனைதான்... படம் பெரிசா தெரிஞ்சா இந்த முட்டாப் பய மவனுவ கூட்டம் சுடலைமாடன் சாமி ஆட்டத்த அந்த கோவிலுல இருந்தபடியே ஒரு கண்ணால பார்த்துக்கிட்டே மறுகண்ணால நம்ம படத்தையும் பார்த்துடப்படாது பாரு... படம் ரொம்ப பெரிசுன்னா அங்க இருந்தே பாக்கலாம் பாரு...”
“நீயே ஊர்க்காரனுக்கு சொல்லிக் கொடுப்பே போலிருக்கே...”
பழனிச்சாமி எதுவும் பேசாமல், அவர்கள் பேசுவதைக் கேட்காதது மாதிரி கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், வெயிலை மறைப்பதுபோல் பீடித்தட்டை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு வாடாப்பூ நடந்தாள். அதைப் பார்த்த பீடி ஏசெண்டு, அவள் அப்பா மாயாண்டியை உசுப்பினார்.
“பாரும் மாமா... ஒங்களுக்காவ நான் செம்பட்டையான் பொண்ணுவள நிறுத்தினேன். கையில காசு நடமாடாட்டால் சுடலை மாடனுக்கு மாலை எடுத்துப் போட முடியாது. ஒரு கோழி வெட்ட முடியாம அவஸ்தப்படட்டுமுன்னு. ஒம்ம மகள் என்னடான்னா, அந்த ரஞ்சிதம் பேச்சக் கேட்டு செம்பட்டையான் பொண்ணுவசுட சேந்துக்கிட்டு முருகன் கோவில் பக்கத்துல குட்டாம்பட்டி பீடிய சுத்துறாள். எனக்கு ஏன் கெட்ட பேரு... இவளே செம்பட்டையான் பொம்புளைகளோட சேர்ந்ததால் நானும் பழையபடி செம்பட்டையான் பொண்ணுவள என் கடைக்குப் கூப்பிடப் போறேன்... பாரும் ஒம்ம மகள் எப்படி தரை குலுங்க நடக்கான்னு... அன்னைக்கு என்னடான்னா... அப்படிப் பேசினாள்... அதோ பாரும்...”
மாயாண்டி பார்த்தார். வேக வேகமாய் நடந்தார். வாடாப்பூவுக்கு பின்னால் போய் அவள் சடையைப் பிடித்து இழுத்தார். மல்லாக்க தன் மார்பில் சாய்ந்தவளைத் தோளில் போட்டபடியே அவள் கையில் இருந்த பீடித்தட்டை இரண்டாக வளைத்து, சிதைத்துச் சின்னா பின்னப்படுத்தினார். பீடித் தூள்களை எடுத்து ஆகாயத்தை நோக்கி எறிந்தார். அந்தத் தூள்கள் தன் தலையிலேயே விழ, மகளை, தலையிலும் இடுப்பிலுமாகக் காலால் இடறினார். இதற்குள் பழனிச்சாமி ஒடிவந்து மாயாண்டியின் முதுகில் பலமாக அடித்தார்.
“முட்டாப்பயல... அவள் நம்ம பொண்ணா இருக்கலாம்... அதுக்காவ நடுத்தெருவுல அடிக்க நமக்கு உரிமை இல்ல... ஒனக்கும் இது ஆகாதுழா... நம்ம கரும்பட்டையான் குடும்பத்த தலை குனிய வைக்க நீ ஒருத்தியே போதும் போலுக்கே...”
மாயாண்டி, மகளை இழுத்துக் கொண்டே வீட்டைப் பார்த்து நடந்தார். “இனிமேல் நீ பீடி சுத்துனது போதும்... வீட்லயே கிட” என்று சொன்னபடியே மாட்டை இழுப்பதுபோல் இழுத்துக் கொண்டு போனார்... இதைப் பார்த்த ஏசெண்டு சிரித்தபோது, அத்தனை அடியிலும் இழுவையில் கத்தினாள் வாடாப்பூ.
“ஏல பொந்துப் பயலே... கோள் சொல்லி... லேசா சிரில... இல்லன்னா அப்புறம் பலமா அழப்போறே...”
மகளை இழுத்துப்போன மாயாண்டி, மீண்டும் அவளை அடித்தார். அடித்தபடியே இழுத்துக் கொண்டு போனார்.
பீடி ஏசெண்டுக்கு அதற்குமேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. இந்த வாடாப்பூ இப்படிப் பேசுறதுக்கு அவள் அப்பாதான் அடிக்காரே தவிர, இந்த கரும்பட்டையான்கள் அவளைப் போய் அடிக்கல... அவள் இப்டி திட்டிட்டுப் போனாலும்... அவள அதட்டல... நம்ம சொல்லு விழலுக்கு இரச்ச நீர்... காட்ல பெய்த மழை... தூள் இல்லாத பீடி...
ஏசெண்டு வெறுப்போடு நடந்தான். சுடலைமாடன் கோயிலை ஓரங்கட்டிப் பார்த்தபடியே நடந்தான்... ஒருவேளை, அந்தக் கோயிலில் கூடி நிற்கும் செம்பட்டையான்கள் அவர்கள் பெண்களை கடையில் இருந்து விலக்கியதற்காக அடிக்க வருவார்களோ என்று பயந்தான். அவர்களோ அவனைப் பார்த்தாலும் பார்க்காதது மாதிரி தங்களுக்குள்ளே சிரித்தார்கள். அதுதான் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.
ஏசெண்டு புளியந்தோப்பு வழியாக நடந்தான். ரஞ்சிதம் போட்டி பீடிக்கடையைக் கொண்டு வருவாள் போலுக்கு... அப்டி வந்துட்டால் காத்துக் கருப்பிகளை குடும்பத்துக்காரன் என்ற முறையில்கூட விரட்ட முடியாது. ஒவ்வொருத்தியும் ஒரு வாடாப்பூவாய் ஆயிடுவாளுவ...
“அடடே... அலங்காரி மயினியா... என்ன இந்தப் பக்கம்?”
“நீ வாரன்னுதான் போக்குக் காட்டி வாறேன்... நீ புதுச் சினேகத்துல பழைய சினேகிதத்த மறந்துட்டே... என்னாலதான் மறக்க முடியல...”
“நம்ம சினேகிதத்த மறந்தா... ஒங்களக் கூப்புடுவனா... சோளத் தோட்டம் பக்கமா போகலாம் மயினி... போயி ரொம்ப நாளாச்சு...”
“நீ ஒருத்தன் எதுக்குவே எங்க குடும்பத்து பொம்புள பிள்ளியள துரத்திட்டே...”
“ஏதோ புத்திகெட்ட தனமாப் பண்ணிட்டேன்...”
“என் பொழப்புல வேற மண்ணள்ளிப் போட்டுட்டே...”
“நீங்க பீடி சுத்திதான் என்கிட்ட காசு வாங்கணுமா... ஒங்களுக்கு இல்லாத பணம் எனக்கு இருந்தென்ன... இல்லாட்டா என்ன...”
“போவட்டும்... அம்மன் கொடைக்கு நாங்க வீடியோ... அவங்க என்னவாம்...”
“என்கிட்டே அதெல்லாம் கேட்கப்படாது...”
அலங்காரி, ஏசெண்டின் விரல்களைப் பிடித்து, சொடக்குப் போட்டாள். பெருவிரலை அழுத்தினாள். ஏசெண்டு, அலங்காரியின் ஏசெண்டாக சுருண்டான்.
“பதினாறு எம்மம்மாம்... பெரிய துணி கட்டுவாங்களாம்... நீங்க வெறும் வீடியோ... அவங்க பதினாறு எம்.எம். படுதா...”
“அப்படியா... பதினாறுக்கு மேலயும் ஏதாவது இல்லாமலா இருக்கும்? நல்ல சமயத்துல சொல்லிட்ட... ஆமாம் கொழுந்தா... ஒங்க குடும்பத்துக்காரன்களை ஊர்ல என்ன சொல்லுதாங்க தெரியுமா... கோலவடிவுக்காக கரும்பட்டையான் கூட்டத்துல நாயி மாதிரி காத்துக் கிடக்கியளாம்...”
“அப்படித்தான் ஆயிப்போச்சு...”
“அப்படி ஆகப்படாது... கரும்பட்டையான் கூட்டம் அம்மன் கொடை முடிஞ்சதும், கோலவடிவ மெட்ராஸ்ல கொடுக்கப் போறாங்க... அப்படி கொடுத்துட்டா ஒங்க காத்துக் கருப்பன் குடும்பத்தை பொண்ணுக்கு வீங்கின்னு சொல்லப் போறனுவ... தேங்காய உருட்டிக்கிட்டு ஓடுன நாயின்னு ஆகிடாதிய...”
“நீங்க சொல்றதும் சரிதான்... எல்லாம், பற்குணத்தால வந்த வினை... இப்போ என்ன செய்யலாம்...”
“இப்பவும் லேட்டுடல்ல... அம்மன் கொடைக்கு முன்னயே கோலவடிவுதான் பொண்ணு... அக்கினிராசாதான் மாப்பிள்ளன்னு ஒரு ஏற்பாடு செய்துடுங்க. இல்லாட்டா ஊரு ஒங்கள இளப்பமாய் நெனைக்கும்...”
“வேணுமுன்னால் பாருங்க மயினி... ஒரு நாள் மட்டும் பொறுங்க... நாளைக்கே தெரியும்... கோலவடிவு பொண்ணு... அக்கினிராசா மாப்பிள்ள... இந்த ஆடில ஏற்பாடு... வார ஆவணில கல்யாணம்... இப்பவே போயி பற்குணத்தையும், ராமய்யாவையும் உலுக்குறேன் பாருங்க...”
“நல்ல காரியம் நடந்தா சரிதான்...”
அலங்காரி, குலவையிட்டாள் - கொக்கரக்கோ என்பது மாதிரி.
-----------
அத்தியாயம்- 18
உச்சி வெயில் உச்சத்த பிடித்த வேளை....
பழனிச்சாமி அசந்து கிடந்தார். பாக்கியம், அவரையே பார்த்தாள். வயிறு கொலுக்காய் கிடந்தது.... சொன்னாலும் கேட்க மாட்டார்... சோறுதான் சாப்பிடாண்டாம்... காபியாவது குடிக்கலாம்... பசியை அடக்கும். கேட்டால்தானே....
இந்தச் சமயத்தில், ராமசுப்பு, நாட்டு வக்கீல், குள்ளக் கத்தரிக்காய் வகையறாக்கள் உள்ளே வந்து, பழக்கப்பட்ட இடங்களில் உட்கார்ந்தபடியே கோயில் காரியங்களைப் பேசத் துவங்கி விட்டார்கள்...... அவரும் அந்த பசிக்கிறக்கத்திலேயே பதிலளித்தார்.... காலையில இருந்தே இவரு ஒரு டம்ளர் தண்ணி கூட குடிக்கலன்னு சொக்கார மச்சான்களிடமும், கொழுந்தன்களிடமும் சொல்வதற்காக, பாக்கியம் வாயைத் திறந்தாள். ஆனால் பேச்சோ, மூச்சு மாதிரி மேலும் கீழும் போய்க் கொண்டிருந்தது.
"எண்ணாச்சி மேளக்காரங்களுக்கு எங்க ஊட்ல சோறு பொங்குறோம்..... வில்லுப் பாட்டாளிகளுக்கு ஒங்க வீட்ல சோறு... சரிதானே."
பழனிச்சாமி, சரியில்லை என்பதுபோல் பேசினார்.
"மேளம்... வில்லு... பொய்க்கால் குதிரைக்காரன் எல்லாருக்கும் இங்கேயே பொங்கிடலாம்... தொழிலாளிவள பிரிச்சு சோறு போடப்படாது... எல்லாருமே மனுஷங்கதான்... ஏய் பாக்கியம்... நம்ம கொப்பரையை புளிய வச்சு தேச்சு கழுவுங்க.... உருளைக்கிழங்கும் முட்டக்கோஸும் தனித்தனியாய் வையுங்க.... போன வருஷம் மாதிரி என் சொல்ல தட்டுனது மாதிரியும் தட்டாதது மாதிரியும் ரெண்டையும் ஒரே பொறியலா போடாதிய... வயிறுன்னு வரும்போது காச பாக்கப்படாது... மானமுன்னு வரும்போது உயிரப் பாக்கப்படாது..."
"எண்ணாச்சி நம்ம நாட்டு வக்கீல்... பெரிய துணில போடுற சினிமா சங்கதி கரும்பட்டையான் பயலுவளுக்கு தெரிஞ்சு போச்சி... அவங்க அதவிட ரெண்டு மடங்கு துணில போடப் போறாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுதே..."
"இதுக்குத்தான் நான் சொல்ல மாட்டேன். சொல்ல மாட்டேன்னு சொன்னேன்... இவரு கேட்டாத்தானே..."
"இப்ப என்னடா குடி கெட்டுப் போச்சு... எதுக்கும் ஒரு ரெக்கார்ட் டான்ஸ் போட்டுட்டாப் போச்சு... எங்கண்ணாச்சி மொகத்த சுழிக்காவ... வேண்டாம்...''
"அம்மன் கொடை சமயத்துல.... அந்தப் பயலுவ வம்பு பண்ண ப் போறது மாதிரியும் ஒரு பேச்சு அடிபடுது.."
"கவலைப்படாதிய... அம்மன் கொடையில் நீங்க அக்கறை செலுத்துங்க.... நாங்க கரும்பட்டையான் பயலுவள கவனிச்சிக் கிடுறோமுன்னு காத்துக் கருப்பங்க கைமேல் அடிச்சு சத்தியம் செய்யாத குறையா சொல்லிட்டாங்க...."
"சொந்தக் காலுல நிக்கணுண்டா ..."
பழனிச்சாமி, கடைசியாய் இப்படிப் பேசியபோது, கோலவடிவு உள்ளே வந்தாள். அப்பாவிடம் ஏதோ பேசப்போவது போல் முகத்தை
நிமிர்த்தினாள்....
"இப்போ எப்டி இருக்காள்..."
"பெரியப்பா... சாப்பிடச் சொன்னாருன்னு.... சொன்னேன்... நீ சாப்பிடாட்டா அவரு சாப்புட மாட்டாராமுன்னும் சொன்னேன். உடனே அலறியடிச்சு சாப்புட்டுட்டா... நீங்க காலையில் இருந்தே சாப்புடலன்னேன். அழுதுட்டாள்..."
"யாரு கோலம் .." "வாடாப்பூ..." "அவளுக்கு என்ன கேடு.." பழனிச்சாமி விளக்கினார்.
"எனக்கு இப்பதான் வயிறு குளிருது.... பாக்கியம் சோறு போடு... எப்பா ஒங்ககிட்டே சாப்புட்டுக்கிட்டே பேசலாமா...."
"இதுல என்னண்ணாச்சி இருக்கு..... ஏன் சாப்புடல..."
"நம்ம வாடாப்பூ.... பீடிக்கடை தகராறுல செம்பட்டையான் பொண்ணுவ பக்கம் சேர்ந்து முருகன் கோயில் பக்கத்துல ரஞ்சிதம் ஏற்பாட்ல இன்னொரு கம்பெனி பீடி சுத்தியிருக்காள்... இது தெரிஞ்சதும் இந்தப் பய மாயாண்டி, பெத்த மகளை நாலு பேரு முன்னால் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டான்... நானும் அப்போ இருந்தேன்.... ஆனால் புத்தியக் கடன் கொடுத்துட்டேன்.... அந்தப் பய மவள் என்னடான்னா இந்த ரெண்டு நாளா குப்புறப் படுத்துக்கிட்டு அன்னம் தண்ணி இல்லாம கிடந்திருக்காள்... இன்னைக்கு காலையில்தான் எனக்கு விஷயம் தெரியும் கேள்விப்பட்டதுல இருந்து மனசு கேக்கல.... நானும் சாப்புடல... அதிகநேரம் கழிச்சுதான்.... பாக்கியத்துக்கிட்ட சொன்னேன்... இப்போ கோலவடிவு அவளோட உண்ணாவிரதத்தை முடிச்சு வச்சுட்டு வந்திருக்காள்..."
"பய மவள் சரியான அமுக்கடி கள்.”
"கள்ளித்தனம் இல்ல.... இதுக்குப் பேருதான் வீரம்... வாடாப்பூ தனிப் பீடி சுத்தறது எனக்குப் பிடிக்கல... அதேசமயம் அவள் தனிப்பிறவின்னு பெருமைப்படாமலும் இருக்க முடியல..."
"காலச் சுத்துன பாம்பு மாதிரி... இந்த செம்பட்டையான் பயலுவ பிடிவாதத்துல ஊரே குட்டிச் சுவராப் போயிட்டு. இதுக்குல்லாம் இந்தப் பய துளசிங்கம்தான் காரணம்.... செறுக்கி மவனோட ஒத்தக் காலையோ, கையையோ எடுத்துட்டா சரியாப் போயிடும்..."
கோலவடிவு, நாட்டு வக்கீல் நாராயணனிடம் ஏதோ சொல்லப் போவதுபோல் உதடுகளைக் குவித்தாள் ... "நீங்க நெனக்கது மாதிரி அவரு இல்லியாக்கும். அப்பா முன்னால் சிகரெட் பிடிக்காதவராக்கும். அம்மன் கொடையை தள்ளி வச்சுக்கிட சம்மதிச்சுட்டார். கொடைக்கு இன்னும் முழுசா ரெண்டு நாளுதான் இருக்குது..... இன்னும் தேதி வரலியே... வரும்... வரும்.... அவரு எல்லா முரடனுவளயும் சமாதானப் படுத்தனுமுல்லா..... இதோ சித்தப்பாவும் பீடி ஏசெண்டும் சிரிச்சுட்டு வாராவ.... அநேகமா.... துளசிங்கம் மச்சான் சுடலை மாடன் விசேஷத்தை தள்ளி வச்சிருப்பாரு... இவங்க அதைச் சொல்ல வாராங்க.... அப்பாடா.... ஊர்த்தகராறு ஒழிஞ்சது... இனுமே... எல்லாமே நல்லபடியாய் நடக்கும். பழச மறக்கணுமுன்னா புதுச நெனைக்கணும்... புதுச் நெனக்கணுமுன்னா பழச மறக்கணும்..... எம்மாடி நான் கூட கூட்டத்துல பேசலாம் போலுக்கே..... யார் கை தட்டலன்னாலும் துளசிங்கம் மச்சானும், அலங்காரி அத்தையும் தட்டுவான்..."
பீடி ஏ செண்டும், பழனிச்சாமியின் சொந்தத் தம்பி அருணாசலமும் உள்ளே வந்து உட்கார்ந்தார்கள். தம்பிக்காரர், சொக்காரர்களை நோட்டமிட்டபடியே பழனிச்சாமியிடம் பேசினார்.
"எண்ணாச்சி... ஒன்கிட்டே... நாங்க ரெண்டு பேரும்... தனியா பேசணும்... கோலவடிவு கல்யாண விஷயமாய்..."
குள்ளக்கத்திரிக்காய் ராமசாமி, மற்றவர்கள் சார்பில் பேசினார். "அப்போ ... நாங்க வர்றோம்..." பழனிச்சாமி பதறியடித்துப் பேசினார்.
"உட்காருங்கப்பா - அருணாசலம் . நீ ஏன் இப்படி புத்திய அடிக்கடி கடன் கொடுக்கே....? இவங்கெல்லாம் என்கிட்ட அவங்க குடும்ப விஷயத்தைச் சொல்லும்போது நம்ம குடும்ப விஷயத்த அவங்கள் துரத்திட்டா பேசணும்...? இவங்களுக்குத் தெரியாத குடும்ப விஷயம் அப்படி என்ன இருக்கு.... எதுன்னாலும் இங்கேயே சொல்லு..."
"சொல்லுதேன், சொல்லுதேன் - ஏழா கோலவடிவு நீ உள்ள போ"
அருணாசலம், அண்ணன் மகள் உள்ளே போகிறாளா என்று உற்றுப் பார்த்தபோது, அவள் கதவுக்குள் அஞ்ஞான வாசம்' செய்து காதுகளை உஷராக்கிக் கொண்டாள். அருணாசலம் பீடிகை போடாமலே பேசினார்.
"நம்ம ராமய்யா மச்சான் மவனுக்கு - அக்கினி ராசாவுக்கு கோலவடிவக் கேட்டு ஆளு மேல ஆளாய் சொல்லி அனுப்பி அலுத்துட்டாராம்... இப்ப இவர கையோட கேட்டுட்டு வரும்படியாய் சொல்லி அனுப்பி இருக்கார் ராமய்யா மச்சான்..."
"ஆவணிலதான் யோசிக்கலாமுன்னு சொல்லியாச்சே..."
ஏசெண்டு பதிலளித்தான்.
"அப்படில்ல மச்சான்... நாங்க அந்த கோவில் விவகாரத்துல..... ரத்த சம்பந்தத்துல ஒங்கள் சப்போட்டு செய்யுறோம்... ஆனால் ஊர்ல கோலவடிவ பெண்ணெடுக்க அப்டிச் செய்யுதா ஒரு பேச்சு.... இந்தப் பேச்ச ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்..."
"ஊர் வாய மூட உலமூடியா... இருக்குது மாப்பிள்ள..."
"தயவு செஞ்சி குறையும் கேளுங்க மச்சான்... கோலவடிவுக்கும் அக்கினி ராசாவுக்கும் கல்யாணமுன்னு இப்பவே ஒரு முடிவெடுக்கணும்... இல்லன்னா..... இல்லன்னு தெரியப்படுத்தணும்... முடிவு எப்டின்னாலும் நாங்க ஒங்க பக்கந்தான்.... செம்பட்டையான் குடும்பத்துக் காசிராஜன் மகள் சொல்லி அனுப்புனாக.... காசிராஜன் மகள் முடிவு பண்ணிட்ட பிறகும் ஒங்களையே சப்போட்டு செய்தால் ஒங்களுக்கு பெரும்..... எங்களுக்கும் பெரும்... ஆனால் ராமய்யா அண்ணாச்சிக்கு மனசு கேக்கல.... பழனிச்சாமி மச்சான் வாயால முடியாதுன்னு வந்தால்.... காசிராஜனுக்கு முடியுமுன்னு சொல்லி அனுப்பலாமுன்னு நெனைக்கார். ஏன்னா அனாவசியமாய் ஒரு பொண்ணு பெயரும், பையன் பெயரும் இதுக்கு மேல அடிபடப்படாது பாரும்..."
"ஒங்க கூடப் பிறந்த தம்பி நான்... ஒங்க மதிப்பு - ஒரு இம்மியளவு குறைஞ்சாக்கூட உயிர விடுறவன் நான்... அப்படிப்பட்ட நான் சொல்லுதேன்... ஏசெண்டு மாப்பிள்ள இப்போ ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும்... எந்தப் பக்கம் பொண்ணு எடுக்கமோ அந்தப் பக்கம் தானா சாயுறோம்... நம்ம குடும்பத்துல பாதிப்பேரு மெட்ராஸ் போயிட்டதால இப்போ நமக்கு ஆள் பலம் இல்ல.... யானை சகதில மாட்டிக்கிட்டா தவளை கூட கிண்டல் பண்ணுமாம்... நாம நாட்டாமையாய் இருக்கையில் நமக்கு கப்பம் கட்டுன இந்த செம்பட்டையான் பயலுவ... நம்மளயே.... எதுக்குறாமுன்னு நம்ம குடும்பத்து பயலுவ மெட்ராஸ்லயே இருந்துட்டதுதான் காரணம்... நம்ம பாட்டி பிறந்த குடும்பம் காத்துக் கருப்பன் குடும்பம்... நம்ம அத்தைய கட்டிக்கிட்ட குடும்பம்... பழைய உறவு போயிடப்படாது. அதனால்...."
அருணாசலம் விட்டதை ராமசுப்பு தொடர்ந்தார்....
" அக்கினி ராசாவும்.... நல்ல பையன்... நல்ல குடும்பம்... திரண்ட சொத்து இருக்கு.... அவங்க குடும்பம் இந்த உறவால்..... அடுத்த தலைமுறையில் கூட நம் பக்கம் நிற்கும்... இந்த சங்கதிய கேள்விப்பட்டாலே செம்பட்டையான் செத்துப் போவான்...''
“தப்பா நினைக்காதிய மச்சான்..... இப்பவே ஒரு முடிவு சொல்லிட்டா நல்லது..."
பழனிச்சாமிக்கு அவர்கள் சொல்வதன் தாத்பரியம் புரிந்தது... ஆனாலும் அக்கம் பக்கம் பார்த்தார்.... எவரும் முனங்கவில்லை ..... பாக்கியத்தைப் பார்த்தார்... அவள் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை .... பழனிச்சாமி, சிறிது பதட்டப்பட்டே முடிவளித்தார்.
"சரி மாப்புள்ள.... என் மகள், கோலவடிவுதான்... பொண்ணு .... ராமய்யா மச்சான் மகன் அக்கினி ராசாதான் மாப்பிள்ள. ஆவணில
கைமாத்திக்கலாம்."
"நீங்க பொண்ணு கொடுத்தா போதும்.... நகைநட்டு ரெண்டாம் பட்சம்...”
"அவளுக்கு நகை போட்டு பாக்கது எங்களுக்கும் பெருமதான்.... சரி என்னை கொஞ்சம் கண்மூட விடுதியளா...."
-----------------
அத்தியாயம்- 19
கோலவடிவு, சுவரில் போட்ட கரங்களை எடுத்துவிட்டு, அப்படியே கீழே சரிந்தாள். சரிந்தவள் கோபமாக எழுந்தாள்.... என்னப்பத்தி... என்னைக் கேட்காமலே எப்படி முடிவெடுக்கலாம்... என்று அங்கே போய் கேட்கலாம் போல் எட்டிப் பார்த்தாள்.... என்னைக் கேளாமலே எப்படிப் பெத்தாளோ.... அதுபோல கேளாமலே காவு கொடுக்காவ... எல்லாரும் ஊமையாயிட்டாவளே - அம்மாகூட பேசலியே. சித்தப்பா சந்திராவுக்கு இப்படி ஒரு மாப்பிள்ள பாப்பாரா... நான் தொக்கா.... மாடா... ஆடாம்? மனுஷி... வோட்டுப் போட்ட பொண்ணு .....
கோலவடிவின் கைகால்கள் ஆடின... தலையே பராமானது..... கண்களே எரிச்சலாயின... அக்னிராசா... அவளை, அங்கம் அங்கமாக, அங்குலம் அங்குலமாக எரித்தான். 'காளியம்மனுக்கு ஆடு.... சுடலைக்குக் கோழி.... இந்த ரெண்டு பேருக்குமா சேத்து நான்.... நானே.... அப்பா வழக்காளி அப்பா.... தகராறு சங்கதில் மட்டும் ரெண்டு தரப்பையும் விசாரிக்கணுமுன்னு எப்படிப் பேசுறியளோ அப்படி.... சுபகாரியத்திலயும் விசாரிக்கணும்... இல்லாட்டா ஒரு சுகம் இன்னொரு சோகத்தோட சேரும்.... இதனால் சொகந்தான் சோகமாகுமே தவிர சோகம் சுகமாயிடாது. ஒங்க கிட்டே எப்படிச் சொல்ல.... யார் மூலம் சொல்ல..... அண்ண னுக்கு கடை வைக்கது முக்கியம்..... அம்மாவுக்கு நீங்க முக்கியம்... நான்தான் - இந்தப் பாவிப்பொண்ணுதான் யாருக்கும் முக்கியமில்லாமப் போயிட்டேன்... போயிட்டேனே...'
கோலவடிவின் புலம்பிய நெஞ்சம் இறுகியது. மழையால் குழையும் கணிமண் தரை அப்புறம் இறுகுமே..... அப்படி இறுகியது.... பயம், வீரப்பிறப்பெடுத்தது..... இந்த திடீர் மனமாற்றம் அவளுக்கே ஆச்சர்யத்தைக் கொடுத்தது... எதிர்பார்க்காத வைராக்கியம்... எதிர் கொள்ளக்கூடிய துணிச்சல்..... கோயில் பேரேட்டு நோட்டில் தன்னப்போல் ஒரு தாளை தனியாக்கினாள்.... பேனாவைத் தேடிப்பிடித்து நாலு வரிகளை கிறுக்குவதுபோல எழுதினாள். அலங்காரி அத்தையிடம் பேச முடியாமல் போனால் இதையாவது சேர்த்துடணும்....
"எம்மா.... அம்மன் கோவிலுக்கு போயிட்டு வாறேம்மா..."
பாக்கியத்துக்கு சந்தோஷம்.... மகளுக்கு அக்னி ராசாவ பிடிக்காதோ.... என்ற சந்தேகம் இப்போது அம்மாக்காரிக்கு, அணுவளவும் கூட இல்லை.... பிடிச்சுட்டு.... இல்லாட்டா கோவிலுக்குப் போகமாட்டாள்.. அம்மனுக்கு நன்றி சொல்லப் போறாள்... அவளுக்கு பிடிச்சா எனக்கு பிடிச்ச மாதிரிதான். ஆனாலும் ஏதோ......
கோலவடிவு, அடிமேலடியாய் நடந்தும், அடியற்று நடந்தும், அடியோடு நடந்தும் குலதெய்வமான காளியம்மன் கோவிலுக்கு வந்தாள்.... அவள் எந்த நேரம் வந்தாளோ, அந்த நேரம் பார்த்து
கோவிலில் திரை விழுந்தது.... அம்மனுக்கு கண் திறக்கப் போறாங்களாம்..... அம்மனின் இரண்டு கண்களிலும் மஞ்சளைப் பூசுவார்கள் - பிறகு சந்தனத்தை அப்புவார்கள். அப்புறம் கோலவிழியில் வர்ணம் போடுவார்கள். உள்ளே கறுப்பு வட்டம் போடுவார்கள்..... ஒரு மையைக் கொட்டுவார்கள்.... இதுமேல் தான் கண்திறப்பு.... அம்மா கண்திறக்க, ஒரு மணி நேரமாவது ஆகும்... அதுக்குள்ள என் கண்ணே மூடிடும்.... மூடிடும்...
கோலவடிவு, கோயில் முன்பு போடப்பட்ட குவிந்த பந்தலைப் பார்த்தாள். மேல்தளத்தில் போடப்பட்ட பட்டாடைகளை நோக்கினாள் விதவிதமான ஜிகினா காகிதங்களைக் கண்ணுற்றாள்... சப்பரம் பல்வேறு தெய்வப் பொம்மைகளால் அலங்காரமாக நின்றது. வில்லுப்பாட்டாளிகள் உட்காரப் போகும் பெஞ்சு மேட்டைப் பார்த்தாள். அம்மனுக்காக எல்லாம் இருக்கு..... ஆனால் அம்மன் தான் இல்லை.... எனக்கு வழக்காளி அப்பா இருப்பதுபோல், எனக்காக அரிவாளை எடுத்த அண்ணன் இருப்பதுபோல், அம்மனுக்கு சப்பரம் இருக்கு... பந்தல் இருக்கு... ஆனால் அம்மன் இல்ல.... எனக்கு நானே இல்லாமப் போனது மாதிரி.... அம்மா... காளியம்மா... இது அடுக்குமாடி... உனக்கு மட்டும் சர்வ வல்லைமையுள்ள ஈஸ்வரன், எனக்கு மட்டும் ஒரு இடிச்சபுளி . என்னதாயி நியாயம்....
கோலவடிவு, அம்மனுக்குப் புறமுதுகு காட்டியபோது, அலங்காரி அத்தை எதிர்ப்பட்டாள். இவளைப் பார்த்து அவள் , காலில் குத்திய முள்ளை எடுப்பது போல, ஒத்தக் காலில் நின்றாள். கோலம் அங்கே ஓடிப் போனாள்.... அத்தையிடம் பேசினால் அழுகை வரும். அதோ அந்த வெடி வண்டி சத்தம் போல.... அப்பாவுக்கு கேட்கும்படியாய் சத்தம் வரும்....
கோலவடிவு, அத்தையின் முன்னால், கோலிபோல் சுருட்டப்பட்ட அந்த காகிதத்தை எறிந்துவிட்டுத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்தாள். அத்தையோடு இணைந்து நடக்க முடியவில்லை. ஊர் இருக்கும் இருப்பில், அது முடியாத காரியம்... ஆனாலும், அலங்காரி அத்தை பின்னால் நடந்தபடியே முன்னால் போனவளுக்கு அபயமளித்தாள்.
"அடக் கடவுளே.... என்னதான் ஆனாலும்... என் நிலைமை உனக்கு வர விடமாட்டேன்.... கருக்கலுல பருத்திக் காட்டுப் பக்கமா வா... அக்கினி ராசா ஒனக்கு மாப்பிள்ளையா வரமாட்டான்.. கலங்காமப் போ.... என் ராசாத்தி... நான் எதுக்கு இருக்கேண்டி..?"
----------------
அத்தியாயம்- 20
செம்பட்டையான் சுடலைமாடன் கோவில், நான்கு பக்கமும் மதில் சுவர்களால் மடக்கப்பட்டு நடுப்பக்கம் பெரிய வாசலைக் கொண்டது..... ஆனாலும் இந்தக் கோட்டைச் சுவர்களையைம் மீறி, கோவிலுக்குள் உள்ளே சாமி பிம்பங்கள் வெளியே நன்றாகவே தெரிந்தன. குள்ளமான மதில் சுவரின் உள்ளேயும், வெளியேயும் வெள்ளையடிக்கப்பட்டு, அந்த சுவர் முழுக்க வெள்ளை சிவப்புக் கோலப்பட்டைகள் செங்குத்தாக மாறி மாறித் தொங்குவது போல் தெரிந்தன. இந்த செவ்வகக் கோவிலுக்குள் மேற்குப் பக்கம் மூன்றடி உயரமான பீடத்தில் சுடலைமாடன் கூம்பு வடிவச் சுவராகக் காட்சி தந்தான்... நான்கு பக்கமும் முக்கோணமாய், உச்சியில் சதுரமாக முடிந்த மண் பிம்பம். அந்த மண் வடிவிற்கு வெள்ளையடிக்கப்பட்டு, அந்த வெள்ளையிலேயே விபூதி பூசப்பட்டதால், அது சரியாகத் தெரியவில்லை .... ஆனால் சந்தனமும் குங்குமமும் பளிச்சிட்டன... சாமியின் பாதத்தில் பயங்கரமான வெட்டரிவாள்... மாடனின் ஆறடி பிம்பத்தின் இரண்டு பக்கமும் வில் மாதிரியாக கம்பு. அதில் சர விளக்குகள் இணைக்கப்பட்டிருந்தன. மாடனுக்கு அக்கம் பக்கம் நான்கைந்து பிம்பங்கள்... வடக்கு மதில் சுவரை ஒட்டினாற்போல் இரண்டு சிறிய கட்டிடங்கள்.... அவற்றில் ஒன்றில் மாடத்தி.... இன்னொன்றில் பத்திரகாளி... இருவரும் சிலைவடிவங்களில் இருக்கிறார்கள். தெற்குப் பக்க மதில் சுவரை ஒட்டி ஏழெட்டுத்
தனித்தனியான மண் பிம்பங்கள்... சுடலைமாடன் முன்னால் மாடனைச் சித்தரிக்கும் ஒரு படம் இருந்தது... முந்தா நாள் துளசிங்கம் மாடனை நவீனப் படுத்துவதற்காக, தென்காசியில் வாங்கிய படம்.... இன்றைக்குச் சென்னையில் இருந்து வரும் சினிமா மாஸ்டர்களை வரவேற்கத் தென்காசிக்குப் போயிருக்கும் துளசிங்கம், காளிக்கும் மாடத்திக்கும் போட்டோ படங்கள் வாங்கி வரப்போவதாகச் சொல்லி இருந்தானாம்...
அந்தக் கோவிலுக்குள் இருபத்தோறு தேவதைகள்.... சிவபெருமான் தக்கனை அழிப்பதற்காக ஏவிய பூதகணங்கள் என்று வில்லுப்பாட்டாளி வெற்றிக்குமார் ஆடி ஆடிப் பாடுவதைப் பார்க்க அழகாக இருக்கும்.... இப்போது, சுடலை மாடனின் பங்காளிகளான கோட்டை மாடன், உதிரமாடன், அக்னி மாடன், முத்தாரம்மன், அக்னிபுத்திரன், மயான புத்திரன், பத்திரகாளி , மாடத்தி, கைக்கொண்டான், பேச்சி முதலிய தேவதைகளின் பிம்பங்களில் தூசி தட்டாமலே வெள்ளையடிக்கப்பட்டிருந்தது. கோவிலின் இடைவெளியை இட்டு நிரப்புவதுபோல் பெரிய பந்தல் போடப் பட்டிருந்தது... வளைவு வளைவான அலங்காரப் பந்தல்.... கோவிலுக்கு வெளியேயும் பந்தல்... அந்தக் கோவில் மதில் சுவருக்கு வெளியே ஒரு சின்ன பிம்பம்... ஏதோ ஒரு சாமிப் பெயர்... சாமிகளிலும் ஆதிதிராவிட பாகுபாடு உண்டு என்பது மாதிரியான கூரையில்லாத சாமி மழையில் கரையும் மண்சாமி.... அதுக்கு இப்போது தான் பட்டும் படாமலும் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது...
அந்தக் கோவிலுக்கு வெளியே, செம்பட்டையான்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி நின்றார்கள். இடையிடையே வாண வேடிக்கைகள் ஆகாயத்தில் உலாவின... அந்தச் சத்தம் நிற்கும் போதெல்லாம் செம்பட்டையான்கள் பேசிக் கொண்டார்கள்.
"ஏ...... சாமியாடி.. பயலுவளுக்குச் சொல்லு... கரும்பட்டையான் சாமியாடிக் கிழவனால தோரண மலையில் ஏறி சுனையிலே தண்ணி எடுக்க முடியாதுன்னு.... அவரு பேரனை ஏற்பாடு பண்ணுறாங்களாம்... அதனால் நாம் உஷாரா இருந்து, அவங்களுக்கு முன்னால மலையிலே ஏறி தண்ணி எடுக்கணும்..."
''ஆமா... சினிமாப் படத்த கோவிலுக்குள்ள வைக்கதா.... வெளிலயா...''
"துளசிங்கம் பார்த்துக்குவான்..." "எல்லாத்தையும் துளசிங்கம் பாத்துக்குவான்னா நாம எதுக்கு..."
"நன்றியில்லாமப் பேசாதல்..... நம்ம துளசிங்கம் ஊருக்கு வந்த பிறகுதான் நமக்கு பேரு..."
"நம்ம பலத்துலதான் அவனுக்கும் பேரு..." "ஒன்கிட்ட மனுஷன் பேசுவானா...."
"நீ பேசாண்டாம். ஆனால் அங்க சாராயம் காய்ச்சுற பயல்களை அம்மன் கொடை முடியுறது வரைக்குமாவது கொஞ்சம் தள்ளிப்போய் காய்ச்சச் சொல்லுப்பா..."
"நீ ஒருத்தன்.... அம்மன் கொடைக்காகவே ஸ்பெஷலா காய்ச்சுதான்.... அவன அப்புறப்படுத்துனா நம்ம ஆளுவ ஒன்ன அப்புறப்படுத்திடுவானுவ...."
வெளிப் பந்தலுக்குள் நடந்த இந்தப் பேச்சுக்கள் கேட்கும் தூரத்திலேயே விழுந்தாலும், எலி டாக்டர் காதுகளில் அவை விழவில்லை... மனிதர் குட்டி போட்ட பூனை மாதிரி பந்தலுக்கு வெளியே அங்குமிங்குமாகச் சுற்றினார்... வட்ட வட்டமாகவும், சதுரம் சதுரமாகவும் நீள நீளமாகவும் நடந்தார்... யாரிடமாவது புலம்பியாக வேண்டும்.
எலி டாக்டர் சத்தம் போட்டுக் கத்தினார்.
"ஏய் அலங்காரி... ஒன்னத்தான் பிள்ள... ஒரு நொடி வந்துட்டுப்போ ..."
சுடலைமாடன் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் வண்டிப்பாதை ஓரமாக ஆட்டுக் கிடாவுடன் போன அலங்காரி, அவரைப் பார்க்காதது போலவும், கேட்காதது போலவும் போனாள். அவர் இரண்டாவது தடவையாகக் கத்தும்போது, முகத்தைச் சுழித்தபடி நின்றாள்... நான் பொம்புள்... அங்கென்ன வேலை...
எலி டாக்டர் , கத்திக் களைத்துவிட்டு, அவளை நோக்கி நடந்தபோது, அலங்காரி அவரைப் பார்த்து நடந்தாள்... ஆட்டை ஒரு வாதமடக்கி மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு, ஆடியசைந்து நடந்தாள்.... பின்னர் இருவரும் இணைந்து நடந்தார்கள் - அலங்காரி, வெட்கப்பட்டு "சீ முன்னால நடயும் இல்லன்னா ... பின்னால் நடயும்" என்றாள். எப்படியோ இருவரும் முன்னாலும் பின்னாலுமாகக் கோவில் பக்கம் வந்தார்கள்.... எலி டாக்டர், பந்தலுக்குள் நின்றவர்களைச் சாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டே ஒப்பாரி வைக்காத குறையாக ஊளையிட்டார்.
"பாரு.... அலங்காரி... இந்த துளசிங்கம் பயல், செய்யுற அட்டூழியத்த... அம்மன் கொடைக்கு தடிப்பய உரக்கடையில சம்பாதிச்சத விட்டுடுவான் போலுக்கு... வெளிப் பந்தலும் இவன் பொறுப்பாம்... சினிமாவும் இவன் பொறுப்பாம்.... டான்சும் இவன் பொறுப்பாம். இந்த கழிசடைகள் பாக்கிறது மட்டும் சொக்காரப் பயலுவ பொறுப்பாம்... இதுக்கு மேல செலவளிக்காண்டாமுன்னு நீ கொஞ்சம் அவன் கிட்ட சொல்லு பிள்ள"
துளசிங்கம் எதுலயாவது பணத்த விட்டா அத வட்டியும் முதலுமா எடுக்குறவன்.... நாமதான் அவன்கிட்ட யோசனை கேட்கணும்... அவனுக்கு சொல்ல வேண்டியதில்ல. சரி போவட்டம் கோலவடிவுக்கும் அக்னி ராசாவுக்கும் முடிவாயிட்டாமே..."
"கேள்விப்பட்டேன்... ஆயிரந்தான் நடந்தாலும் எனக்கு மனசு கேட்க மாட்டேங்கு... கிளியை வளத்து பூனைகிட்ட...”
"பூனைகிட்ட கிளி போகல... நாயி கிட்ட தேங்காய கொடுக்காவ அது தானும் தின்னாது.. யாரையும் தின்னவும் விடாது..."
"இதுல இன்னொரு விஷயமும் சம்பந்தப்பட்டிருக்கு... அலங்காரி. காத்துக் கருப்பன் பயலுவ எப்போ நம்ம கோயிலுல மேளச் சத்தம் கேக்குதோ அப்போ நம்ம கோயிலையே ஒடைக்கப் போறதா பேசிக்கிறானுவளாம்.... எனக்கு கையும் ஓடமாட்டங்கு .... காலும் ஓடமாட்டங்கு.... அவங்களுக்கு என் மவன் துளசிங்கம் மேலதான் குறி... கரும்பட்டையான்களே சரிக்குச் சரியான ஜோடி. இப்ப அந்தப் பயலுவோட காத்துக் கருப்பனுவளும் ஒண்ணாச் சேர்ந்தா நம்ம கதி... அதோ கதிதான்... ஆமா... இப்டிச் செய்தா என்ன...."
"எப்படி...''
"நம்ம சுடலைமாடன் வழக்கமா.... கரும்பட்டையான் காளிகிட்ட உத்திரவு வாங்கப் போவாரு... இந்த வருஷம் பேசாம காத்துக் கருப்பன் மாரியம்மன் கிட்ட உத்தரவு வாங்கச் சொல்லலாமே.... இதனால் காத்துக்கருப்பன்கள வளைச்சுப் போட்டுடலாம் பாரு..."
"மாடன் மாரிகிட்ட உத்திரவு கேட்க சம்மதிப்பாரா..."
"நாம சொல்லுறதைத்தான் மாடன் கேட்கணும்.... மாடன் சொல்லுறதை நாம் கேட்கணுமுன்னு இல்ல... அப்டிக் கேட்டா ஊர்ல ஒரு கிடா ஒரு கோழி உயிரோட இருக்காது... சரி... என் திட்டத்தைப் பற்றி என்ன சொல்லுதே..."
"நல்ல திட்டந்தான்... அதுக்காவ.... அவனுவ காலுல போயி விழணுமான்னு யோசிக்கேன்...”
"யோசிச்சு சொல்லு.... அதோ பாரு வேனு.... துளசிங்கம் பயல் கொடைக்கு சினிமாப் பயலுவள கூட்டிட்டு வாரான்... கோணச்சத்திரத்துல ரூம் போட்டு குடிக்கதுக்கு... பிராண்டி போட்டு செறுக்கி மவன் உரக்கடைய ஒரு வழி பண்ணிடுவான் - அலங்காரி... அலங்காரி... நீ சொல்லு.... இதோட, அவன நிறுத்திக்கிடச் சொல்லு பிள்ள ...."
"நம்மளால் முடியாது சாமி... அவன் கேட்காட்டா எனக்குத்தான் மதிப்புக்குற... பிறவு எதையுமே அவன் கிட்டே பேச முடியாது..."
"என்ன அலங்காரி... என்கிட்டயே பசப்பற... நீ சொல்லி அவன் கேட்கமாட்டானாக்கும்... நீங்க ஒருத்தருக்கு ஒருத்தரா..."
எலி டாக்டர் சும்மா இருந்திருக்கலாம்.... அப்படி இருக்காமல் ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்... கண்ணடித்தபடியே சொல்லடித்தார்... அதைப் புரிந்து கொள்ள அலங்காரிக்குச் சிறிது நேரமானது... புரியப் புரியப் புலியானாள். அவரிடம் இருந்து பின் வாங்கி நின்று, கத்தினாள்.
"ஏய் எலி டாக்டர்... நீயுல்லாம் ஒரு மனுஷனா..." "என்ன பிள்ள நீ நான்னு..."
"நீ சிரிச்ச சிரிப்புக்கும் பேசுன பேச்சுக்கும் ஒன் மூஞ்சில காறித்துப்பணும்... இப்படிப் பேசற நீ ஒம்மாவ அம்மான்னு கூட கூப்புடப்படாது. பேச்சுக்கும் ஒரு அளவு வேண்டாமய்யா - நான் பலபேர தொட்டவதான்... கெட்டவதான்... இல்லங்கல.... ஒன் தம்பிய கட்டுன பிறவு ஒழுங்கா இருக்க நெனச்சவதான்... அவன் தெம்மாடின்னு தெரிஞ்சதும் ஒரு சிநேகிதம் ஏற்பட்டதும் வாஸ்தவந்தான்.... இது தெரிஞ்சு நீ குதியாய் குதிச்சே... அப்போ நீ நியாயமா பேசியிருந்தா நானும் அடங்கியிருப்பேன்... ஆனால் நீயோ.... அவன்கிட்ட போறவள் என்கிட்ட வரப்படாதான்னுதான் ஆடுனே - அந்த ஆட்டத்துல நானும் ஆடிட்டேன்.... ஆடுறேன்.... நான் இப்படி ஆனதுக்கு நீயும் ஒரு காரணம். அதுக்காவ இப்டியா பேசுறது... காக்கா காக்காவக் கொத்தி தின்னாது.... இப்பவே துளசிங்கத்துக்கிட்ட சொல்லுதேன் பாரு..."
"அய்யோ ... அலங்காரி.. நான் ஒன்ன அப்படிச் சொல்லுவனா... இந்த சுடல சத்தியமாச் சொல்லுதேன். நான் அப்டி நினைச்சிருந்தாக் கூட என் கையி விளங்காமப் போவும்.... காலு நடக்காமப் போவும்.. சொன்னவன் பழனிச்சாமி தம்பி அருணாசலம்... தேவடியா மவன.. நானே மிதிக்கப் போறேன். துளசிங்கம் பயல்கிட்ட சொல்லிடாத தாயி இப்பவே அடிக்காத குறையா நாயப் பேசுறது மாதிரி பேசுறான்... ஒரு நல்ல வாக்குக் கொடுத்துட்டுப் போ... அலங்காரி..."
அலங்காரி, எதுவும் பேசவில்லை... வேனில் இறங்கியவர்களைப் ஊமைச் சோகமாய்ப் பார்த்தாள்... பத்து பதினைந்து தடியன்கள் இறங்கினார்கள். ஒருவன் கையில் எட்டுக்கால் பூச்சி மாதிரியான வீடியோ காமிரா... ஒருத்தன் தோளில் மிருதங்கம் மாதிரியான சதுரப்பெட்டி.....
துளசிங்கம் அவர்களைச் சித்திக்கு அறிமுகம் செய்து வைத்தான்.....
"இவங்கெல்லாம் என்னோட சினிமா பிரண்டுங்க. ஏய் தர்மராசா... இங்க வாடா டேய் மவராசா... நீயும் வா... இவங்க கூடவே நீங்க ரெண்டு பேரும் இருக்கணும்... என்ன மாஸ்டர் அப்படிப் பார்க்கிய..."
"ஒங்க கோவிலுல ரொம்பப் பெரிசா விசேஷம் இருக்கும்.... வீடியோவில் எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பலாமுன்னு சொன்னே.... நானும் ஐயாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துட்டேன்.... இங்கே ஒண்ணு மில்லியப்பா... மெட்ராஸே மேலப்பா."
“நாளைக்கு பாத்துட்டு சொல்லுங்க. மாஸ்டர்... அதுக்கு மறுநாள் கிளைமாக்ஸ்... ரெண்டையும் பாருங்க.. படமாய் எடுங்க... ஒங்களுக்கு பிடிக்காட்டா அட்வான்ஸ அப்படியே தந்துடுறேன்.... அதோட ஒங்கள் பிஸுனசுக்காக மட்டும் கூப்பிடல.... எங்க விசேஷத்த நீங்களும் பார்க்கணுமுன்னுதான் கூப்பிட்டேன் "
மாஸ்டர் எதுவும் பேசாமல் தோளில் இருந்த காமிராவை எடுத்துத் தர்மராசாவின் தலையில் வைத்தான்..... தாடிக்காரன் ஒருத்தன்.... கண்ணும் வாயும் மட்டுமே வெளியே தெரியும்... இரண்டு பேர் மொட்டையன்கள்... எஞ்சிய பேர் நெட்டையன்கள்... ஒருவன் லுங்கி... ஒருத்தன் பைஜாமா... இன்னொருத்தன் டவுசர்காரன்... மற்றவர்கள் டைட் பேண்ட்... பொம்மைச் சொக்காக்கள்....
சினிமாக்காரர்களில் ஒருத்தன் விசிலடித்தபடியே பேசினான்...
"டேய்.. அதோட பாருடா... ஒரு கிராமத்துக்குட்டி... அருமையான லொக்கேஷன்ல எப்படி அழகாய் நடக்காள் பாரு - பாரதிராஜா பார்த்தா விடமாட்டாரு... அடடே.... குட்டி எப்படி பார்க்குது பாரு.... மாஸ்டர்... காமிராவ ரெடி பண்ணு- மாஸ்டர் இந்த போஸ் பியூட்டிபுல் ஒண்டர்புல் அது பாதர்கிட்ட இப்பவே அட்வான்ஸ் கொடுத்துடலாம்... ஷாட் ரெடியா...?"
எல்லோரும் தொலைவில் போன கோலவடிவையே பார்த்தார்கள். துளசிங்கம் மாஸ்டரிடம் கெஞ்சிக் கூத்தாடி காமிராவை விலக்கினான். 'இருக்கிற தொல்லை போதாதா... இந்தச் சமயத்துல... ஏன் அந்தப் பக்கமாய் போறாள். இவளுக்கும் அக்னி ராசாவுக்கும் கல்யாணமாமே....?'
கோலவடிவையே பார்த்த துளசிங்கத்தை அலங்காரி ரசித்துப் பார்த்தாள். இதுவரை தான் செய்யப்போவது நியாயமா என்று நெஞ்சுக்குள் பாதிக்குப் பாதியாய் சிந்தித்த அலங்காரி , அருணாசலந்தான் அப்படிப் பேசினான் என்பதை எலி டாக்டர் மூலம் கேள்விப்பட்ட உடனேயே மனதை கல்லாக்கினாள் - இல்லை.... அதுவே கல்லானது....
"துளசிங்கம் ஒன்கிட்ட தனியா பேசணும்... அவசரம்... அவசியம்.... நம்ம பருத்தித் தோட்டம் வரைக்கும் பேசிக்கிட்டே நடப்போம்..."
"என் பிரண்டுங்கள் விட்டுட்டு..."
"ஓ.கே. துளசி.... போயிட்டு வா... நாங்க கோவிலுல லொகேஷன் பாக்கோம்..."
எலி டாக்டர் நடுங்கிப் பார்த்தபோது -
அலங்காரி அவருக்கு முருகனைப் போல் அடைக்கலக் கையைக் காட்டிவிட்டு, துளசிங்கத்துடன் நடந்தாள்... கோலவடிவோ, சோளத் தோட்டத்திற்குள் ஒவ்வொரு சோளச் செடியையும் விலக்கி விலக்கி பார்த்துப் பார்த்து உள்ளே போனாள்...
-------------------
அத்தியாயம்- 21
பொதுவாக, சமய சந்தர்ப்பங்கள் சம்பந்தப்பட்டவர்களைக் காலால் இடறுவதுதான் பெரும்பாலான வழக்கம்... ஆனால் அலங்காரிக்கோ , அது இப்போது கை கொடுத்தது... கோலவடிவைக் கடத்திக் கொண்டு போக வேண்டும் என்பதை எப்படித் துளசிங்கத்திடம் எடுத்துரைப்பது என்று அவள் யோசித்தபோது அவர்களுக்குப் பின்னால் நடந்த அக்னிராசாவின் சித்தப்பா பற்குணமும், கரும்பட்டையான் ராமசுப்பும் அவர்களுக்கு முன்னால் நடந்து ஒரு ஓரமாக நின்றார்கள். பற்குணம், ராமசுப்புவுக்குச் சொல்வதுபோல், துளசிங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.
"நீ ஏண்டா கவலைப்படுறே... ஊரையே அடிக்கப்போறது மாதிரி... மெட்ராஸ்ல இருந்து அம்போக்குப் பயலுவள இறக்கிட்டான்னு யோசிக்காதடா... ஒவ்வொரு பய செம்பலும்பையும் இறக்கிக் காட்டுறேன்.... ஊரைப் பகைக்கின் வேரோடு கெடும் என்கிறது பழமொழி... பாத்துப்புடலாம்... குஸ்திப் பயலுவளாம். குஸ்திப் பயலுவ... செறுக்கி மவனுவ என் ஒத்தக் கைக்கு பொருவானுவளா.... ஒரே வெட்டுத்தான், மேளச்சத்தம் மட்டும் கேக்கட்டும்.... அதுவரைக்கும் பொறுத்துக்க..."
துளசிங்கம் ஏதாவது பதில் சொன்னால், அங்கேயே அவனை இரண்டில் ஒன்றைப் பார்க்கப் போவதுபோல், அந்த இருவரும் அவனையே பார்த்தபடி மெள்ள நடந்தார்கள் - துளசிங்கம் வேறுபக்கம் முகத்தைத் திருப்பியதால், அதுவே ஆரம்ப வெற்றி என்று அனுமானித்து, ஒரு கிளை வழியில் நடந்து பனங் காட்டிற்குள் மறைந்து போனார்கள்... அலங்காரி குத்திக் காட்டினாள்.
"பாத்தியாய்யா அவங்க பேசுறத - நம்ம செம்பட்டையான் ஆளுவ போதாதாக்கும்... நீ எதுக்காவ அப்பு மெட்ராஸ்ல இருந்து சின்னப் பயலுவள இறக்குமதி செய்யணும்...”
"அய்யோ சித்தி... நான் சுடலைமாடன் விசேஷத்த வீடியோ படம் எடுக்கதுக்காவ கொண்டு வந்திருக்கேன்... கோயில் கொடைக்காவ போட்ட பணம் மாதிரி பத்து மடங்கு சம்பாதிக்கப் போறேன்... எங்கப்பன்... இது தெரியாம முனங்குறாரு. இவனுவ வேற புதுக்கதை கட்டி விடுறானுவ..."
"அப்போ காத்துக் கருப்பன் அடிச்சா... இவங்க கையை கட்டிக்கிட்டு நிப்பாங்களா..."
"அதெப்படி.... நம்ம கோயிலுக்குள்ளேயே வந்து எவனும் வாலாட்டுனா.... பின்னிப்பிடுவாங்க பின்னி... வேல தெரிஞ்சவங்க... ஒரே டிக்கட்டுல வீடியோ படத்துக்கு வீடியோ படம்...... அடிக்கு அடி..."
"இந்த பற்குணம் வெறும் வாய்ச்சவடால்காரன்தான்... ஆனால் மெட்ராஸ்ல இருந்து ஊர்காரன அடிக்கதுக்கு ஆள் வந்திருக்குன்னு சட்டாம்பட்டி முழுதும் தண்டோரா போடப் போறான்... இந்தத் தகராறுல கலந்துக்காத காரை வீட்டுக்காரங்களும், நமக்கு எதிரா திரளப் போறாங்க..... நம்ம கோயில் இழுத்து மூடப் போறாங்க..."
"நான் மெட்ராஸ்காரங்கள் அனுப்பி வைக்கவும் முடியாது.... ஊர்க்காரன் கிட்ட சொல்லவும் முடியாது... ஏன்னா இந்தச் சமயத்துல எவனும் எவன் பேச்சையும் கேட்க மாட்டான் ஒரே குழப்பமாய் இருக்கு சித்தி... ஊர்க்காரனுவ ஒண்ணா திரண்டா நம்ம பயலுவளே ஓட்டம் பிடிப்பானுவ...... என்ன செய்யலாம்... ஒரு வழியும் தெரியலே..."
"ஒனக்கு சுடலைமாட சாமி கொடையும் நடக்கணும்... கரும்பட்டையானும் தல குனியணும்... ஊர்க்காரனும் பேசப்படாது... இந்த மூணும் ஒரே சமயத்துல நடக்கணுமுன்னா நடக்கும்... நடத்திக் காட்டுறதுக்கு நானாச்சு...”
“எப்டி சித்தி....? எப்டி...?” "ஆனால் சித்தி சொல்லுறதை மட்டும் நீ கேக்கணும்" “நீ எது சொன்னாலும் கேக்கேன் சித்தி...”
"அதோ... சோளத் தட்டைக்குள்ள மறஞ்சுட்டாளே... கோலவடிவு, அவள்... நீ கூட்டிட்டு ஓடணும்...."
நடந்து கொண்டிருந்த துளசிங்கம் அப்படியே நின்றான்... அதைக் கவனிக்காது நடந்த அலங்காரி சித்தியின் கையைப் பிடித்து, அவளையும் நிறுத்தினான்.... அவளையே சிறிது நேரம் ஆச்சரியமாய் பார்த்துவிட்டு சந்தேகம் கேட்டான்.
"உனக்குப் பைத்தியமா சித்தி? குத்துலயும் கொலையுலயும் விடப் போற விவகாரத்தை எப்படி சிரிச்சுக்கிட்டே பேசுறே...?"
"ஒன்ன அந்த மாதிரி சந்தர்ப்பத்துக்கு சித்தி விடுவனா...?"
"விடப் போறியே... அப்பவே... நீ... இப்படிச் செய்யச் சொல்வேன்னு ஒரு சந்தேகம்... ஆனால்... இதுக்குமேல்... என்னால முடியாது..... சித்தி.... சுடலை குடைதான் முக்கியம்..."
"சுடலைக்கு கொடை மட்டும் ஒன்னால நடத்த முடியுமோ....? ஊர்க்காரன் தான் விடுவானா...? அப்போ மட்டும் குத்து வெட்டு
கொலை நடக்காதோ...?"
"சண்டையில் சாகிறது வேற... சாகிறதுக்காவ சாகிறது வேற ...."
"ஒன்னைவிட சித்தி பத்து பதினஞ்சு வயது பெரியவள் - ஆயிரம் சண்டையைப் பார்த்தவள்... ஊர்ல ஒவ்வொருத்தனைப் பற்றியும் தெரிஞ்சவள்... இவ்வளவு கஷ்டப்பட்டு நம்ம கௌரவத்த காப்பாத்த வேண்டியதில்ல.... அதுக்கு லேசான வழி இருக்கு ... கோலவடிவை கூட்டிக்கிட்டு ஓடு... கரும்பட்டையான் கன்னத்துல கை வச்சுடுவான்... காத்துக் கருப்பன் பொண்ண சரியா வைக்கத் தெரியலன்னு பழனிச்சாமியத் திட்டுவான் - ஆக நம்ம கொடை பிரமாதமா நடக்கும்..."
"நீ சொல்றது மாதிரி கரும்பட்டையான் பயலுவள், அதுவும் இந்த திருமலைப் பயல.... அவமானப் படுத்துறதுக்கு இதைவிட நல்லவழி எதுவும் இல்ல.... ஆனால் கோபத்துல அவங்க... அதாவது அந்தச் சமயத்துல ஏற்படுற கோபத்துல அரிவாள் கிரிவாள் எடுத்து...."
"அதை அப்போ பார்த்துக்கலாம்... ஊர்க்காரன் அந்த அளவுக்கு விடமாட்டான்... பழனிச்சாமிக்கு துளசிங்கம் மருமகனாயிட்டான். ஊரு உலகத்துல நடக்கது மாதிரி ஒரு நாள் இல்லாட்டாலும் ஒரு நாளாவது ஒண்ணா சேருவாங்க..... நாம் ஏன் கெட்ட பேர் வாங்கணுமுன்னு ஒதுங்கிக்குவான்."
"சரி சித்தி. இவள் சம்மதிப்பாளா..." "சம்மதிக்க வைக்கது.... என் பொறுப்பு.." "சரி.... இவளக் கூட்டிட்டுப் போய் அப்புறம் எங்க விடுறது...”
"ஒன் சினிமாப் புத்திய காட்டிட்ட பாரு... நான் என்ன அவ்வளவு கல் நெஞ்சுக்காரியாடா.... நானும் மனுஷிதாண்டா... கோலவடிவை நீ கூட்டிக்கிட்டு ஓடிப்போற... ரிஜிஸ்தர் ஆபீஸ்ல அவளை கல்யாணம் செய்யுற - அப்புறம் நம்ம சுடலைமாடசாமி கொடைக்கு ரெண்டு பேருமா புருஷன் பொண்டாட்டியா வாரீய......"
"கொடை நாளைக்கு ராத்திரி துவங்குதே..."
"நாளைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமைதான் உச்சம்.... அதுக்கு வந்தா போதும்..."
"இவள் சரியான நாட்டுப்புறம்... இவளப்போய் கல்யாணம் செய்யுறதை நினைக்கவே.
"கரும்பு தின்னக் கூலியாடா கேக்கே..... கூலி..... அவள் மாதிரி ஒரு குடும்பப் பெண் கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும். ஆனால் இப்பவே சொல்லிட்டேம்பா.... அவள் கல்யாணம் செய்யுறதா இருந்தா கூட்டிட்டுப் போ... இல்லாட்டா இப்பவ சொல்லிடு... அப்புறம் ஒன் பாடு... ஊர்க்காரன் பாடு.... சுடல கோயில் மூடட்டும்... செம்பட்டையான் தலை குனிஞ்சு நடக்கட்டும்... எனக்கென்ன... நேருக்கு நேராய் நெஞ்சை நிமுத்துறவளுக... எத்தனையோ பேர் இருக்காளுவ..... ஆனால் கோலவடிவு கிடைச்சதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்..."
துளசிங்கம், மீண்டும் நின்றபடியே யோசித்தான்.... சித்தி சொல்வது ஒருவகையில் சரிதான். கோலவடிவு குடும்பப் பாங்கான பெண்... நிசமான பெண். அவனுக்கு ஏத்த ஜோடி இல்லதான்... ஆனால் எதையும் சோடிச்சுப் பேசத் தெரியாத அப்பாவி... வீட்ல பொண்டாட்டியா இருந்துட்டுப் போவட்டும்... திருமலைப் பயலுக்கும் செருப்படி கொடுத்தது மாதிரி இருக்கும்....
அலங்காரி, துளசிங்கத்தின் நடைவேகத்தை வர்ணித்தாள்.
"எப்பாடா... நீ வேகமாய் நடக்கதைப் பாக்க சித்திக்கு எவ்வளவு தெம்பா இருக்கு தெரியுமா... அதோ பாரு... பனங்காட்டுக்குள்ள போன பற்குணம் திரும்பி நடக்கதை.. நம்ம கிட்ட வம்பு பண்ணுறதுக்குன்னே வந்திருக்கானுவ... பாதியிலயே.... பேதில போற - பயலுவ... சரி.. மெதுவா நடப்பா... சித்தியும் கூட நடக்கணுமுல்லா..."
"நீயும் எங்க கூட வாயேன் சித்தி..."
"நீங்க ஓடிப்போறதால ஆடிப்போற ஊரை சமாளிக்க நான் இருக்கணுமே...."
அலங்காரியும் துளசிங்கமும் பள்ளப் பகுதியான பருத்திக் காட்டைத் தாண்டி, மேட்டுப் பகுதியான சோளத் தோட்டத்தின் பக்கமாக வந்தார்கள். அலங்காரி, ஊருக்குள் மறைந்து கொண்டிருந்த பற்குணத்தையும், அவரோடு சென்ற ராமசுப்புவையும் பார்த்துக் கொண்டே நின்றாள்... சோளப் பயிருக்குள் போகப் போன துளசிங்கத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள்... பிறகு மெல்லக் கூவினாள்....
"கோலவடிவு... ஒனக்கு நல்லகாலம் வந்துட்டுடி... என் ராசாத்தி... எந்தப் பக்கமா நிக்கே...."
அந்தப் பெரிய சோளத் தோட்டத்தில் நடுப்பக்கத்தில் நான்கைந்து சோளத் தட்டைகள் வளைந்து வளைந்து ஆடின.... வா.. வா.... என்று வளைந்தன....
துளசிங்கத்தைப் பார்த்த கோலவடிவால், தாங்கமுடியவில்லை.... தாளமுடியவில்லை .... விக்கலும் வெடிப்புமாய் அழுதாள். முகத்தைக் கரங்களால் மூடியபடியே அழுதாள். அவனைப் பார்த்து முகம் படர்ந்த கர விரல்களை விலக்கி, வெட்கத்தோடு சிரித்து சிணுங்கியவள் இப்போது வெட்கமற்றவள் போல் அழுதாள்.... அவளைப் பார்க்க துளசிங்கத்திற்கே என்னவோ போலிருந்தது.
கோலவடிவின் பக்கம் அலங்காரி வந்து நின்று கொண்டாள்... அவள் தலையைச் சாய்த்து, தன் தோளிலே போட்டுக் கொண்டாள்... பிறகு, அவளைத் தனக்கு எதிராகத் திருப்பி வைத்துக் கொண்டு, எந்தவித பீடிகையும் போடாமலே வெட்டொன்று துண்டு ரெண்டாகப் பேசினாள்.
"எனக்கு நீட்டி முழக்கிப் பேச நேரமில்ல கோலம்.... ஒனக்காவ உயிரைக் கொடுக்கவும் இவன் தயாராயிட்டான்... ஒன்னை அக்னி ராசாவோட சேர்த்து பாக்கவே இவனால முடியல.... அதனால நாளைக்கு ராத்திரிக்கு ஒன்னை கூட்டிட்டுப் போய் மறுநாள் காலையில் ரிஜிஸ்தர் ஆபீஸ்ல தாலி கட்டுதான். அப்புறம் மாலையும் கழுத்துமாய்... ஒங்கப்பா பழனிச்சாமி காலுல வந்து விழுவான். துளசிங்கம், பழனிச்சாமி அண்ணாச்சிக்கு மருமகனா ஆயிடுவான். நீ எலி டாக்டரு மருமகளா ஆயிடுவே.... கோயில் கொடை தகராறும் தீந்துடும்.... ஒன்னைப் பிடிச்ச அக்னிராசா சனியனும் விலகிடும்... என்ன சொல்லுதே.... ரெண்டுல ஒன்னை இப்பவே சொல்லு..... ஒனக்காவ நாங்க ரெண்டு பேரும் இங்க வந்துட்டோம்.... ஒங்க ஆட்கள் எங்களப் பார்த்துட்டா ரெண்டு கொல விழும்.... அதுக்கு முன்னால் சொல்ல வேண்டியத சொல்லிடு... அத்த சொன்னதுக்கு சம்மதமா..."
கோலவடிவு திகைத்துப் போனாள். திக்குமுக்காடினாள்... இப்படிப்பட்ட யோசனையை அவள் எதிர்பார்க்கவில்லை.... அதேசமயம் அவனை விட்டுவிட்டு, அக்னியை வலம் வரவும் மனம் இல்லை.... ஆனாலும் இப்படியா... எம்மாடி நெனச்சுச் பார்க்கவே முடியலியே.... இவருகூட நான் ஓடணுமா.... இதைவிட செத்துடலாம்.... அப்பா துடிச்சிடுவாரு..... அம்மா செத்திடுவாள்.... அண்ணாச்சி குதிப்பான்... அவங்க கிடக்கட்டும்... எனக்கே இது சரியா தெரியலியே... எம்மாடி... அலங்காரி அத்தையோட யோசனைப் பாரு... யோசனை....
கோலவடிவு, பூணிக்குருவி மாதிரி தோன்றிய ஒரு சோளக் கதிரைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு அதையே பார்த்தபடி நின்றாள்..... துளசிங்கம் உப்புக் குத்திக் கால்களில் நின்றபடி சோளத் தோட்டத்திற்கு வெளியே நோட்டம் விட்டான்.... அலங்காரி அடுக்கிக் கொண்டே போனாள்...
"ஒன் நிலம் எனக்குப் புரியுது கோலம்... ஆனால் ஒரு பொண்ணு எதிர்காலத்துக்காவ இந்தக் காலத்துலயே ஒரு முடிவு எடுத்தாகணும்... ஊர்ல கொண்டான் கொடுத்தாங்க வருஷம் முழுசும் சண்ட போடுவான். அதுல நம்ம வாழ்க்கைய தொலச்சிடப்படாது... ஊர்ல நடக்க பாரதப் போருக்கு நீ அரவானாய் ஆயிடப்படாது.... என்ன சொல்லுதே.... ஆள் அரவம் கேட்குது.... சரிடா... துளசி.... வாடா போகலாம்... கோலத்துக்கு அலங்கோல மாகணுமுன்னு தலைவிதி இருந்தால்... நான் தான் என்ன செய்ய முடியும்... நீதான் என்ன செய்ய முடியும்... புறப்படுடா....”
அலங்காரி துளசிங்கம் கையைப் பிடித்து இழுத்தபடியே நடக்கப் போனாள்.... கோலவடிவு கையில் இருந்த கதிரை விட்டுவிட்டு, அலங்காரியின் தோளைப் பற்றினாள்... துவண்ட முகத்தோடு பேசினாள்...
"அம்மன் கொடைக்குப் பிறவு ஆற அமா..."
"என்னம்மா..... நீ.... நாங்க என்னமோ ஒனக்கு உதவுறதாய் நெனச்சால், நீ எங்களுக்கு உதவுறதாய் நெனைக்கே.... அம்மன் கொடையில் என்ன நடக்கப் போவுதோ.... எது நடக்கப் போவுதோ. விவகாரம் கோர்ட்டுக்குக்கூட போவும்... அப்போ கல்யாண மேடைக்கு போக முடியுமா.... அதுவரைக்கும் இவனை ஒங்க ஆட்கள் உயிரோட விட்டு வைக்கப் போறாங்களோ... இல்லியோ.... எது சொன்னாலும் இப்பவே சொல்லு..."
கோலவடிவு, துளசிங்கத்தையே பார்த்தாள்.... அய்யய்யோ ... இவர வெட்டிக் கொன்னாலும் கொன்னுடுவாங்களோ... எனக்காவ இத்தன அமளியிலயும் உயிருக்கு ஆபத்தக்கூட நினைக்காம்... இங்க வந்திருக்கிற இவர அம்மன் கொடைக்குப் பிறகு அடியோட பார்க்க முடியாமக் கூட போவுமோ... அதுக்காவ இவரு பின்னால் நான் ஓட முடியுமா.... இதுக்கா அப்பா என்ன வளத்தாரு... இதுக்கா அம்மா என்னப் பெத்தாள்... ஆனால் இப்பவே இவர பிரிய எனக்கு மனம் வரமாட்டாக்கே... இந்தக் காட்டுலயே இவரோடயே இந்த கணத்துல இருந்தே இருக்கலாம் போல மனம் துடிக்குது.... இவர் விட்டுட்டு என்னால்.....
"கோலம், அத்தைய நீ தப்பா நெனச்சாலும் சரி... நீ எப்பவோ எடுக்கப் போற முடிவு இப்பவே எடுத்துடு.... இல்லன்னா ... ஒனக்கே ஒரு முடிவு கட்டிடுவான்.... அக்னிராசாவ கட்டிட்டு.... அப்புறம் அத்தைகிட்ட... வரப்படாது..."
கோலவடிவு இருதலைக் கொள்ளி எறும்பானாள்... தலையைப் பிடித்துக் கொண்டாள்... முகத்தை ஆட்டிக் கொண்டாள்... தலையைப் பின்னால் வளைத்து, கண்ணீரைப் பின்புறமாகத் தெறிக்க விட்டாள்... துளசிங்கம் நகர்வது போல் தெரிந்தது. அலங்காரி அத்தை அவனைப் பிடித்து இழுப்பது போல் தெரிந்தது... அய்யோ ... போறாரே..... என்னைவிட்டு போறாரே.....
அலங்காரி நிற்பதையும் பொருட்படுத்தாமல், கோலவடிவு துளசிங்கம்மேல் விழுந்தாள்.... அவன் இரண்டு தோள்களிலும் கைகளைப் போட்டபடி தேம்பினாள். அந்தத் தோள்களைப் பற்றிய படியே ஏங்கி ஏங்கி அழுதாள். உன்னை விடமாட்டேன்' என்பதுபோல் அவன் கழுத்தைத் தன் கரங்களால் பின்னிக் கொண்டு அலை மோதினாள்.
அலங்காரி அவசர அவசரமாகப் புறப்பட்டாள்.... "அய்யய்யோ என் ஆட்ட கோவில் பக்கம் மரத்துல கட்டிப் போட்டத மறந்துட்டேன், பாருங்க.... நிதானமாக வாங்க... நான் போறேன்."
---------------
அத்தியாயம்- 22
ஊருக்கு வெளியே உள்ள முருகன் கோவில் முன்பக்கம்.... தங்கரளி மரங்கள், அந்தக் காலத்துப் பெண்கள் காதில் போடும் பாம்படங்களாக அவற்றில் காய்கள் தொங்கின. பூவரசமரம், பழுத்த இலையோடும், பச்சை இலையோடும் ஒலிபெருக்கி மாதிரியான பூக்களோடும் மின்னின... இவற்றிற்கு மத்தியில் உள்ள வாகை மரத்தின் அடிவாரத்தைச் சுற்றி, இரண்டடி உயரத்தில் சிமெண்ட் தளம் கட்டப்பட்டிருந்தது ... வழிப்போக்கர்களும், வழியைத் தொலைத்தவர்களும் உட்காருவதற்காகச் சட்டாம்பட்டி ஊராட்சி மன்றம் தனது அக்கிரமங்களுக்கு பிராயச் சித்தமாக கட்டிய சிமெண்ட் திண்ணை ... அதில், ரஞ்சிதம் உட்படப் பல பெண்கள் உட்கார்ந்து பீடி வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தார்கள்.... சில பெண்கள் மரங்களில் அடிவாரங்களில் சாய்ந்தபடி கைகளை இயக்கினார்கள்... இந்தக் கூட்டத்தில், ஊர் வம்பில் தலையிடாத காரை வீட்டுக்கார பெண்களும் இருந்தார்கள். அந்தக் காலத்தில் ஓலை போடாமல் ஓடு போட்டு வீடுகள் கட்டிய குடும்பம். எண்ணிக்கையோ இருபது. இருப்பதோ லட்சங்கள். இப்போது மாடி மேல் மாடி கட்டிடங்கள் உருவாகி விட்டாலும், காரை வீட்டுக்காரன் பட்டம் என்று இவர்களைத்தான் சேரும் என்று இவர்களே சொல்லிக் கொண்டார்கள். ஊரும் சும்மா ஒரு பேச்சுக்குப் பேசும்...
ஒருத்தி அலுப்புத் தீர முதுகை வளைத்தபடியே பேசினாள்.
"எப்பாடா... நம்ம ரஞ்சிதம் புண்ணியத்துல.... நம்ம பொழப்பு நல்லாவே ஓடுது.... குட்டாம்பட்டில் இப்படி ஒரு கூட்டுறவு சங்கம் இருக்க தெரியாமப் போச்சு.... பாரு... பழைய இலய தரல... எடையில குளோறுபிகேஷன் செய்யல... பீடியக் கழிக்கல... வாரத்துக்கு முப்பது
ரூபா அதிகமா வரும்..."
"ஏழா... இதுதான் சாக்குன்னு இலய மோசமா வெட்டாத.... தூளை கொறவா வைக்காத..."
"அது ஒன் புத்தி. ஆமா ரஞ்சிதம் நாம எப்போ கூட்டுறவு சங்கத்தை வைக்கிறது..."
ரஞ்சிதம் பீடிகளைக் கையில் சுழலவிட்டபடியே, பேசியவளைப் பார்க்காமலே பதிலளித்தாள்.
"மொதல்ல... இந்த ஊருக்கு ரத்தக் கொதிப்பு மாதிரி வந்திருக்கிற கோவில் கொடை முடியட்டும்... நம்ம கண்ணாடிக்காரர் ஏற்கனவே பல அதிகாரிங்ககிட்ட பேசிட்டு வாரார்... ஒரு மாதத்துல முடிஞ்சுடும்."
"இந்த பால்பாண்டி பீடிக்கடை போண்டியாகணும்... அவன் பழையபடியும் மாட்டுத் தரகுக்குப் போகணும்..."
"இப்போவாவது ஒற்றுமையோட அவசியத்தை புரிஞ்சுக் கிட்டிங்களா... சில பழமொழிகளோட அர்த்தம் அதன்படி நடக்கும் போதுதான் விஸ்வரூபமாய் தெரியும்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிறது கோடான கோடி பேருக்குத் தெரியும்... ஆனால் நமக்கு புரிஞ்சது மாதிரி எத்தன பேருக்குப் புரியும்... நாம எல்லாரும் ஒருவர்னும், ஒருவரே எல்லாரும்னும் நினைக்கும் போது மனசுல ஒரு தெம்புவருது பாருங்க... அது எந்த விலைக்கும் கிடைக்காது.... இயற்கையான காத்து மாதிரி வெளிச்சம் மாதிரி.... இந்த ஒற்றுமை உணர்வு இயற்கையா இருக்காது... மனுஷன் தான் இதை செயற்கையாக்
கிட்டான்.."
"பேசு ரஞ்சிதம், ஏன் பேச்ச நிறுத்திட்ட... நீ பேசிக்கிட்டே இரு.... ஒனக்கும் சேர்த்து நாங்க பீடி சுத்துறோம். சினிமாக் காரனுவளப் பத்திப் பேசிப் பேசியே எவ்வளவு நாளா வீணாக்கிட்டோம் பாரு... ஏன் பேசமாட்டக்க...”
பேசியவள் பேசாதவளைப் பார்த்தாள். பிறகு எல்லாப் பெண்களும் ரஞ்சிதத்தைப் பார்க்க அவள் தொலை தூரத்தைப் பார்த்தாள்... அங்கே
வாடாப்பூ வந்து கொண்டிருந்தாள்... தலையிலே கஞ்சிக் கலயம்... தோளிலே மண்வெட்டி... கையிலே கதிரறுவாள்... அழுக்கடைந்த புடவை.... புழுதிபட்ட தலைமுடி....
வாடாப்பூ, அவர்கள் பக்கம் வந்து நின்று, உதடுகளைக் கடித்தாள்...... முகத்தைத் துடைப்பது போல் கண்ணீ ரைத் துடைத்துக் கன்னங்களைக் கழுவிக் கொண்டாள். ரஞ்சிதம் எழுந்த போய் அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். இதர பெண்களும் அவளைச் சுற்றி நின்று கொள்ள, ரஞ்சிதம் தழுதழுத்த குரலில் பேசினாள்.
"நீ நெசமாவே புரட்சிக்காரி வாடாப்பூ.... எங்களுக்காவ அப்பாவி அப்பாவே பாவியாயிடும்படியாய் அவர்கிட்டே அடிப்பட்டிருக்கே..... எங்களுக்காவ சிலுவ சுமந்திருக்கே.... ஏசெண்டு எவ்வளவோ கெஞ்சியும் என் தோழிகள் இல்லாம சுத்தமாட்டேன்னு சொல்லிருக்கே... இதுக்காவ கத்தரிக்குப் பதிலா மண்வெட்டிய தூக்கிட்டே... ஒன் தோளுல தொங்குற மண்வெட்டியும், கையில் இருக்கிற கதிரறுவாளும் ஒரு நாளைக்குக் கேள்வி கேட்கத்தான் போகுது... அப்போ கேள்விக்கான பதிலும் தானா வரும்... ஒனக்காக ஒரு இடம் எப்பவும் தயாராய் இருக்கு வாடாப்பூ.... நான் அமைக்கப் போற சங்கத்துல முதல் பேரே ஒன் பேர்தான். வாடாப்பூ...."
வாடாப்பூ, அந்தப் பேருக்கு உரியவளாய்ச் சிரித்தாள்... பிறகு ஏதோ பேசப் போனாள்.... அன்பிற்கு அடைக்கும் தாழில்லை என்று யார் சொன்னது? அவள் அன்புப் பிரவாகத்தில் வெளிப்பட்டு வார்த்தைகளுக்கு அழுகை தாழிட்டது, கண்ணீர் போட்டியிட்டது... அவர்களைப் பார்த்துச் சோகச் சிரிப்போடு, சுந்தரப் பார்வையோடு அவர்கள் கண்களுக்கு சின்னச் சின்ன உருவமாகி நடந்த போது -
ரஞ்சிதம், அவள் பின்னால் நடந்தாள்.... "ஒரு நொடி நில்லு" என்று கூவியபடியே வாடாப்பூவைப் பின் தொடர்ந்தாள்... கோலவடிவு விவகாரத்தை இவள் மூலமாக, தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும்... திருமலையிடம் பட்ட அவமானத்தைக் காரணமாக்கி, கோலவடிவின் மானம் போவதற்கு மௌன சம்மதம் கொடுக்கலாகாது.
ஆனாலும் இந்தத் திருமலை என்ன பேச்சு பேசிவிட்டான்... உரிமையோடு மோட்டார் பைக் முன்னால் போய் நின்றால், அதாலயே மோதுவது மாதிரி வண்டியை உறும் வைத்தான்.... கோலவடிவு விஷயமாய் கோவிலுக்குள்ள போய் பேசணுமுன்னு எப்டி பேசிட்டான். கோலவடிவப் பத்தி பேச எனக்கு தகுதி இல்லியாம்... அவள், என்ன மாதிரி கண்டவன்கிட்ட பல்லைக் காட்ட மாட்டாளாம்.... நான் அவன்கிட்ட, "என்னை கட்டிக்க சம்மதமான்னு" வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல் கேட்டது மாதிரி எவன் கிட்டயும் கேட்க மாட்டாளாம்.... நான் செம்பட்டையான் குடும்பத்து ஏசெண்டாம்.... துளசிங்கத்துக்கும் எனக்கும் ஏதோ இருக்கணுமாம்... இல்லாட்டா செம்பட்டையான் பொண்ணுவளுக்காவ ஏசெண்டுகிட்ட சண்டைக்குப் போயிருக்க மாட்டேனாம்.... அடேயப்பா.....
இவ்வளவு பேச்சுக் கேட்ட பிறகும், இவன் தங்கச்சிக்காவ யோசிக்கணுமா? இது தேவையா? யோசிக்கணுந்தான். தேவைதான். நான் சொன்னது மாதிரி நடந்துட்டு பாருன்னு நம்மையே நாம் பெருமைப்படுத்தி ஒரு பொண்ணு சீரழியுறத பார்க்கதவிட, நம்மையே சிறுமப்படுத்தி, ஒருத்தியக் காப்பாத்தறது நல்லது.... சரி... அக்னி ராசாவுக்கு அவளத்தான் முடிவு கட்டியாச்சே... இனிமேல் கோலவடிவு மாறிடுவாள்.... எப்டிச் சொல்ல முடியும்? நேத்து பகலுல அலங்காரி கிட்ட பேசிட்டுப் போனாள்.... இந்த வாடாப்பூ மூலம் அவளுக்கு புத்தி சொல்லணும்... எங்கிட்டயாவது கொஞ்சம் பேசச் சொல்லணும்... அவளுக்கு எது நல்லதோ அது கிடைக்க ஒத்தாசை செய்யத் தயார்னு உறுதி சொல்லி அனுப்பணும்... துளசிங்கம்... நல்லவன் இல்லன்னு நயமாச் சொல்லணும்.'
ரஞ்சிதம், வேகமாக நடந்தாள்... எதிரே அவளை மோதுவது போல் பாய்ந்த வேனில் இருந்து தப்பிப் பிழைக்க துள்ளிக் குதித்தாள். அந்த வாகனத்தை கோபமாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, பின்னர் கொண்ட குறிக்கோளைக் கருதி, வாடாப்பூவை நோக்கி எட்டி நடந்தபோது -
பீடி சுற்றும் பெண்கள் கூக்குரல் கேட்டது... மெள்ளப் போய்க் கொண்டிருந்த வேன் மீது, அந்தப் பெண்கள் கற்களையும், கட்டிகளையும் எடுத்து எறிந்தார்கள்... சில பெண்கள், அந்த வேனுக்குப் பின்னால் ஓடினார்கள். சத்தம் கேட்டுத் திரும்பிய ரஞ்சிதம், அந்தப் பிரச்சினை அவசரப் பிரச்சினை என்பதால், வாடாப்பூவைக் கையாட்டி போகச் சொல்லிவிட்டு, முருகன் கோவில் முன்னால் ஓடி வந்தாள். அந்த வேனோ, ஒரு மூலையில் திரும்பியது... அதன் பின்னால் ஓடிய பெண்கள் மூச்சிறைக்க ஓடி வந்தார்கள்...
"பாரு ரஞ்சிதம்..... இந்த மெட்ராஸ் பயலுவள்... கிணத்துல குளிச்சிட்டு வேனுல போற பயலுவ சும்மா போக வேண்டியதுதான... எங்களப் பார்த்து கையாட்டிட்டுப் போறாங்க..."
"ஒருவேளை சிநேகிதமாய்..." "அப்படி என்ன சினேகிதம் இவனுவ கூட... அப்டி இருந்தால் அதோ கதிரறுக்கப் போவுதே சேரி சனங்க... ஆம்புளைங்க அவங்களப் பார்த்தும் கையாட்டி இருக்கணுமுல்லா...?"
"இதுல்லாம் திமுறு ரஞ்சிதம்.. நாம என்னவோ அவங்களைப் பார்த்து மயங்குறதா தூம பயலுவளுக்கு ஒரு நெனப்பு...”
"நீ சொல்றதும் சரிதான்... இப்போ வார சினிமாப்படங்கள்லயும் எவனாவது ஒரு பயல் கண்ணுல கண்ணாடி மாட்டி கழுத்துல காமிராவ தொங்கப்போட்டு ஜீப்புலயோ , மோட்டார் பைக்குலயோ வந்தா... எந்த கிராமத்துப் பொண்ணயும் இழுத்துட்டுப் போயிடலாமுன்னு ஒரு எண்ணத்தை ஏற்படுத்துறாங்க... இவனுவளும் சினிமாக்காரங்களாம்... நிழல நிசமா நினைக்கிற பயல்......."
"எங்க துளசிங்கத்துக்கு இந்தப் புத்தி ஆகாது... இந்தக் காவாலி பயலுவள எதுக்காவ கொண்டு வரணும்..."
"சரி. பொறுத்திருந்து பார்ப்போம்... இப்போ குட்டம்பட்டில் பீடியைப் போட்டுட்டு வருவோம்...”
"ரஞ்சிதம் சொல்லிட்டாள்லா - இன்னுமா கையில் கல்ல தூக்கிட்டு நிக்கிய.... பைத்தியமுன்னு நெனப்பாவ..."
"மொதல்ல ஒன் கையில் இருக்க கல்ல கீழ போடு பைத்தியம்..."
எல்லாப் பெண்களும் பீடித்தட்டுக்களை எடுத்து கொண்டார்கள். அவற்றில் பீடிகள் வண்டல் வண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தட்டுகள் அந்த அடுக்கால் ஆயிரம் கண்ணுடைய அதிசயத் தட்டுக்களாகத் தோன்றின... குட்டாம் பட்டிக்குப் போகும் வழியில் தார்ரோடு பக்கமாக நடந்து வந்தார்கள்... அதற்குக் கிழக்குப் பக்கம் என்ன தகராறு? என்ன கூட்டம்? எலி டாக்டர் எதுக்காவ இங்க வந்தார்... "ஏடி கொஞ்சம் நில்லுங்க.... ரஞ்சிதம் நீயும் நில்லு... என்னான்னு பார்ப்போம்..."
காத்துக் கருப்பன்களில் அக்னி ராசாவின் தந்தை ராமய்யாவுக்கு அடுத்தபடியான வசதியுள்ளவர் முத்துப்பாண்டி. ஆகையால் அண்ணாச்சி ராமய்யாவுக்குப் போட்டியாக ராமய்யாவின் தம்பி பற்குணத்தைப் பார்த்துக் கையாட்டிப் பேசினார்.
"எலி டாக்டர் மச்சான் மெனக்கெட்டு நம்ம வீட்டு வாசலுல வந்து கெஞ்சுகிறார்... நம்ம மாரியம்மன் கோயில் சுடலைமாடன் உத்தரவு கேட்கும்படியாய்... உத்தரவு போடப் போறதாய் சொல்லுதார்... இது நமக்குப் பெருமைதான?"
"புராணத்தை தலைகீழாய் மாத்தப்படாது பாரு.... எலி டாக்டர் மச்சான் சூதோட சொல்லுறதை புரிஞ்சுக்கணும்..."
"அப்டிப் பார்த்தால் யாரு சூதில்லாதவிய...? நீ மட்டும் ஒங்க அண்ணாச்சி மவனுக்கு கோலவடிவ காதும் காதும் வச்சாப் போல நிச்சயம் செய்யணும்... அதுக்காவ எங்களை பயித்தியக்காரனா ஆக்கணுமோ...?" |
"முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடாத..."
"ஒனக்கு வேணும்போது சொக்காரன்.... வேண்டாத போது பங்காளி. கோலவடிவு அக்னி ராசாவுக்கு முடிக்கலாமான்னு சொக்காரன் கிட்ட கேட்டியா...'
"சரி... இப்போ கேட்கேன்... ஒன் சொல்லுக்கு கட்டுப்படுறேன்."
"இப்ப முக்கியம் கோலவடிவு இல்ல.... மாரியம்மன் தான்..... சுடலைமாடன்..... இங்க வரப் போறார்..."
"வந்தா காலை ஒடிப்பேன்...'' "ஒடிக்கிற கைய வெட்டுவேன்..."
எலி டாக்டர் ரசிக்கும்படியாய் காத்துக் கருப்பன்கள் கட்சி பிரிந்து சண்டை போடப் போனார்கள். அப்போது பீடிப் பெண்களிடம் ஒரு கூச்சல். எல்லோரும் சண்டையை விட்டுவிட்டு அங்கே ஓடினார்கள். 'காரை வீட்டுக்காரி' பீடிப்பெண் ஒருத்தி கத்த, மற்றப் பெண்கள் 'மாஸ்டர்கள்' வந்த வேனை, கைகோத்து, மறித்து நிறுத்தினார்கள்.
"இந்தப் பயலுவ அப்பவும் எங்களப் பார்த்து கையாட்டுறானுவ... இப்பவும் கையாட்டுறானுவ... எச்சிக்கல பயலுவ... என்ன நெனச்சு கிட்டாங்கன்னு கேளுங்க..... சட்டாம்பட்டி பொண்ணுங்கன்னா இளக்காரமா... அவங்கள் என்னன்னு கேளுங்கய்யா..."
இதற்குள் வேனைச் சுற்றி கூட்டம் மொய்த்தது. திருமலையும் கூட்டத்தில் ஒருத்தன். அதுதான் சாக்கு என்று வேனின் முன் சக்கரங்களில் காற்றைப் பிடுங்கி விட்டான். ஒருத்தர், வேனுக்கு உள்ளே ஒடுங்கி இருந்தவன்களைப் பார்த்து அதட்டினார்.
காரைவீட்டுக் குடும்பத்தின் அண்ணாவி...
"இறங்குங்கல.... எங்க பொண்ணுங்களப் பத்தி என்னல நெனச்சிய."
"இவங்க ஊரையே அடிக்க வந்த பயலுவப்பா.... நம்ம பொண்ணுவள கையாட்டி நம்மள வம்புச் சண்டைக்கு கூப்புடுறாவனுவ... ஏல செறுக்கி மவனனுவள்... இறங்குறியளா.... இறக்கணுமா.''
"இதுக்குல்லாம் காரணம்... இந்த துளசிங்கப் பயல்.... அவன் இழுத்துக் கிடத்தணும்... மல்லாக்கப் போட்டு வயித்துல மிதிக்கணும்... டேய்.... ஒரு அஞ்சாறு பேரு போயி.... அந்தப் பயல எங்க இருந்தாலும் இழுத்துட்டு வாங்கடா. நம்ம ஊரு பொண்ணுங்க கையப் பிடிச்சு இழுக்கலாமுன்னு அந்தப் பயலே இந்தப் பயலுவளகுக்கு சொல்லிக் கொடுத்திருப்பான்... ஏய்... சீக்கிரமாய் போய் இழுத்துட்டு வாங்கல..."
-------------
அத்தியாயம்- 23
வியாழக்கிழமை ; இரவு ஒன்பது மணி என்பதை உறுதிப்படுத்துவது போல் தொலைக்காட்சிப் பெட்டியில், தமிழ்ப் பெண் ஒருத்தி மறைந்து, ஒரு இந்திப் பெண் தோன்றினாள்.
பழனிச்சாமி வீட்டில் கல்யாணம் நடப்பதுபோல் பந்தி நடந்தது. வில்லுப் பாட்டாளிகள், மேளக்காரர்கள், (பதினாறு எம்.எம். காரர்கள் ஏனோ வரவில்லை) பந்தல்காரர்கள், ஒலிபெருக்கிக் காரர்கள், இவர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அட்வான்ஸ் நிச்சயித்தவர்கள், பண்ணையாட்கள் என்று பல்வேறு தரப்பினர், பல்கிப் பரவி, பாய்களில் உட்கார்ந்து வாழை இலைகளை வழித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ராமசுப்பு, திருமலை, அருணாசலம் போன்றவர்கள் பறிமாறி முடித்துவிட்டு, தாங்களும் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள். பந்தியைக் கண்குளிரப் பார்த்து விட்டு, பழனிச்சாமி, தமது தேக்குக் கட்டிலில் உட்கார்ந்தார். எதிரே முற்றத்தில் குவியல் குவியலாய் கிடந்த வாழைக் குலைகளையும், வெற்றிலைக் கட்டுக்களையும், பூமாலைகளையும் மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, லேசாகக் கண்மூடப் போனார்.
சுடலைக்குக் கொடை வெள்ளிக்கிழமை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டாலும், அது உச்ச நாள்... இன்று, பதினொரு மணியளவில் மேளம் தட்டப்படும்.... ஒலிபெருக்கி பாட்டுப் பாடும்... அதற்குள் எழுந்துவிடலாம் என்றுதான், பழனிச்சாமி படுக்கப் போனார். அதற்குள் வந்துட்டானுவ.... ராமசாமி, நாட்டு வக்கீல், மாடக்கண்ணு , கருப்பசாமி....
பழனிச்சாமியின் மனைவி பாக்கியம், கணவரின் காலடிப்பக்கம் உட்கார்ந்திருந்தாள். கோலவடிவு சாப்பிட்டாளோ , சாப்பிடலியோ, அம்மாவின் பக்கத்தில் அவளை ஒட்டியபடியே உட்கார்ந்து அம்மாவின் கால் பாதங்கள் மேல் தன் கால்களைப் பரப்பினாள். அப்பாவையே, அவர் பார்க்காத சமயமாகப் பார்த்தாள். எதிரே பனை நார் கட்டிலில் 'உஷ்' என்ற 'அப்பாடா மூச்சோடு' உட்கார்ந்த அண்ணன் திருமலையைக் குற்ற உணர்வோடு பார்த்தாள்.... அம்மாவின் பாதங்களை அழுத்தமாகப் பற்றினாள்... தாய்க்காரி பாக்கியம், தற்செயலாகத்தான் சொன்னாள்.
"என்னழா வந்துட்டு ஒனக்கு...? ஏன் இப்டி ஒட்டுப் புல்லு மாதிரி ஒட்டுறே... ஒரே புழுக்கமா இருக்குல்ல... தள்ளி உட்காரேன்..."
கோலவடிவு தள்ளி உட்காரவில்லை. அம்மாவைத் தள்ள போகிறவள் போல் நெருக்கியடித்தாள்... பங்காளிகளின் பேச்சு சுவாரஸ்யத்தில், பாக்கியமும் அந்த பாச நெருக்கடியை மறந்து விட்டாள் கோலவடிவுதான், அங்கே நடக்கும் பேச்சைக் கேட்பது போல் பாசாங்கு செய்தபடி எங்கோ நினைத்தாள்... இவங்கள் விட்டுட்டு எப்டிப் போவேன்... என் அம்மாவ விட்டுட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல பிரிஞ்சதில்ல.... எங்கப்பா முகத்த ஒரு நாளைக்கு முப்பது தடவையாவது பாக்காட்டா அது எனக்கு நாளே கிடையாது.... எனக்காவ அரிவாளைத் தூக்குன அண்ணா ... இவனுக்கு நானே அரிவாளாயிடப்படாதே... போக மாட்டேன். எங்கேயும் போகமாட்டேன். யார்கூடவும் போகமாட்டேன்.... போகவே மாட்டேன்....
கோலவடிவு, மூச்சைப் பிடித்திழுத்து, முன்னெற்றிச் சுருக்கங்கள் கலைய, பதட்டம் லேசாய் அடங்க, அம்மாவின் பாதத்தைப் பிடித்த கைகளைத் தூக்கி, மடியில் போட்டபடியே மனதை வைராக்கியப் படுத்தினாள். அங்கே நடந்த பேச்சுக்களின் ஒலியை மட்டும் உள்வாங்கி, அதன் உட்பொருள் புரியாமல் இருந்தவள், திடீரென்று காதுகளைக் கூர்மைப்படுத்தினாள்... மத்தியானமே காற்றில் வந்த செய்திக்கு, நாட்டு வக்கீல் நாராயணன் வர்ணனை கொடுத்தான்.
"காத்துக்கருப்பன் குடும்பத்த கலுகமூட்டி பிரிச்சுட்ட பெருமையில எலி டாக்டர் நின்னாரா..... அப்போ பார்த்து அந்த வேன் டயா நம்ம திருமலை காற்றப் பிடுங்கி விட்டானா... வேனுக்குள்ள இருந்த பயலுவ பித்துப் பிடித்துப் போய் இருந்தாங்களா.... அப்புறம் கையெடுத்து கும்பிட்டபடியே இறங்குனாங்க... கூட்டம் அவங்கள் அடிக்கப் போச்சுதா.... உடனே எலி டாக்டர் என்ன பண்ணுனாரு தெரியுமா...''
"தெரியுமான்னு தெரிஞ்சவன் கேட்டா.... என்னடா அர்த்தம்... சொல்லு...”
"எலி டாக்டர் தரையில் அப்படியே நெடுஞ்சாண் கிடையா விழுந்துட்டாரு... கூட்டத்துக்கு முன்னால் நல்ல பாம்பு படமெடுத்து காட்டுறது மாதிரி... படுத்தபடியே ஜனங்கள் கையெடுத்துக் கும்பிட்டாரு...”
"மானங்கெட்ட பய..."
"நீ வேற, அப்டி மட்டும் அவரு கும்பிடாட்டா - மெட்ராஸ்காரனுவள் ஊர்க்காரங்க உண்டு.... இல்லன்னு பிச்சி எடுத்திருப்பாங்க..... ஒரு எலும்புகூட மிச்சம் இருந்திருக்காது...."
"அப்புறம்.."
"துளசிங்கம் சேக்காளிவ, கோணச்சத்திரத்துக்கு ஓடிப் போயிட்டாங்களாம்.... இதுல ஒண்ணு தெரியுமா...? இதுக்குல்லாம் காரணம் துளசிங்கமுன்னு அவனைப் பிடிச்சு வாரதுக்கு காத்துக் கருப்பன் பற்குணம், காரை வீட்டுக்காரன் வாலன்', இன்னும் சிலருமா ஓடுறாங்க.... எலி டாக்டர் இவங்க பின்னால் ஓடினாரு... துளசிங்கம் கிடைக்கல எப்படியும் ரயில்வே பாலம் பக்கம் வருவான்னு நாலைஞ்சு பேரு.... அவனுக்குன்னே அரிவாள வச்சுட்டு காத்து இருக்காங்க.... துளசிங்கத்துக்கு அநேகமாக ஒத்தக் கையாவது, காலாவது போயிடும்..... நாம் செய்ய வேண்டியது காளியாத்தா வேற ஆள்மூலம் செய்ய வைக்கிறாள்.... துளசிங்கம் பய தொலைஞ்சிட்டாமுன்னு தோணுது..."
"இதனாலதான்.... பெரிய சினிமாவ மறந்துட்டியா?"
"ஊர்ல இதவிடப் பெரிய சினிமா நடக்கப்போவுது... துளசிங்கம் பய வசமா மாட்டிக்கிட்டான்... இந்நேரம் முடிச்சிருப்பாங்க..."
பழனிச்சாமி, ராமசுப்புவையும், நாட்டு வக்கீலையும் செம்பட்டை யான்களைப் பார்ப்பது போல் பார்த்தார். சுடச்சுட , சூடுபோட்டுப் பேசினார்.
"ஒருவன அடிக்கிறதும்.. பிடிக்கிறதும்... மனுஷத் தன்மையில்லடா கல்ல எறியுறவனுக்கு ஒரு நிமிஷம், அதனால் கஷ்டப்படுறவனுக்கு ஒரு யுகம்.... இதுல உடம்புக் கஷ்டத்தைவிட மனக்கஷ்டம் இருக்கே... அது சொல்லி மாளாது.... துளசிங்கத்த ஒரு காலை எடுத்துட்டாங்கன்னே வச்சுக்க. அவன் ஒத்தக் காலுல நொண்டியடிச்சு நம்ம வீட்டுப் பக்கமா நடந்து போறான்னு வச்சுக்க... நம்மள - 'நீங்களும் ஒரு காரணம்' என்கிறது மாதிரி பரிதாபமா பாக்கான்னு வச்சுக்க.... ஒன்னால தாங்க முடியுமோ என்னமோ... என்னால தாங்க முடியாது... சில பேச்சு பேச்சுக்குன்னே இருக்கு... காரியத்துக்காவ இல்ல.... பாக்கியம் எழுந்திருக்காத.... எனக்கு பசிக்கல...."
"பாத்தியாப்பா.... ஒங்க அண்ணாச்சி. அவர இனும் சாப்புட வைக்கது ஒங்க பொறுப்பு...”
என்ன அண்ணாச்சி .... வாலன், துளசிங்கத்தோட மோதப் போனால் நாம் என்ன செய்ய முடியும்..."
"ஒரு குற்றம் நடக்குமுன்னு தெரிஞ்சும் அதை தடுக்காம இருக்கது பெரிய குற்றம். சரி... சரி... ஓடுங்க... வாலனையும், பற்குணத்தையும் எங்க இருந்தாலும் தேடிப்பிடிச்சு இங்க கூட்டி வாங்க.... நீங்க போறியளா... நான் ..... போவட்டுமா..."
"எப்பா... சீக்கிரமா கூட்டி வாங்க.... இல்லாட்டா ஒங்கண்ணாச்சி புறப்பட்டு போவாரு..."
"ஊர்சனமே கொதிச்சு நிக்குது... அதுக்கு நாம் என்ன பண்ண முடியும்... எப்படியோ போயிட்டு வாறோம்..... அண்ணாச்சிக்காவ... போறோம்... அதுக்குள்ள முடிஞ்சுட்டுன்னா நாங்க ஜவாப் இல்ல..."
"ஒங்க பேச்ச தட்டாமப் போயிட்டாங்கல்ல....? அவங்க அடாபிடி பண்ணுமுன்னால் தடுத்துடுவாங்க... நீங்க சாப்புடுங்க..."
"அப்டி இல்ல பாக்கியம்... என்னப் பத்தி தெரிஞ்சிருந்தும்... என் முன்னால் இதையெல்லாம் பேசலாமுன்னு அவங்களுக்கு ஒரு எண்ண ம் வந்துட்டுப் பாரு..."
"சரி... மனச கலங்கவிடாதீங்க. நல்ல வேள் நமக்கு வார மருமவனாவது அப்பிராணி... வம்புதும்பு பேசாதவன்."
பழனிச்சாமி பதில் சொல்லாமல் இருந்தார். எஞ்சியிருந்த பங்காளிகள் கோவில் காரியங்களைப் பார்க்கப் போய்விட்டார்கள்...
அப்பாவையே அதிசயித்து பார்த்த கோலவடிவு, அவருக்கு மகளாகப் பிறந்த பெருமிதத்தில் நெகிழ்ந்து போனாள்...... அதே சமயம், சட்டென்று ஒரு எண்ணம் அவள் மனதில் முள்ளாகியது. துளசிங்கம் மச்சானை ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்துடுவாங்களோ. மெட்ராஸ் பயலுவ அப்டி நடந்துக்கிட்டா... அவரு என்ன பண்ணுவாரு... அய்யய்யோ அவரு ஒத்தக் காலுல நடக்க வேண்டியது வருமோ... அதை இந்தப் பாவி கண்ணால் பாக்க வேண்டியது வருமோ... எப்பா... எப்பா - நீங்களும் எழுந்திரிச்சு போங்கப்பா.... அவர காப்பாத்துங்கப்பா...
அப்பாவிடம் நினைத்ததைச் சொல்ல முடியாத கோலவடிவு, மொட்டை மாடிக்கு வந்தாள். அங்கே நின்றபடி நான்கு பக்கமும் கண்களைச் சுழலவிட்டாள்... எங்கேயும் விபரீதமான சத்தம் கேட்கவில்லை.... சுடலைமாடன் கோவில் முன்னால் மின்சார வெளிச்சத்தில் சின்னக் கூட்டம்... காளியம்மன் கோயிலில் பெரிய கூட்டம்.... எல்லோரும் சர்வ சாதாரணமாகப் பேசிக் கொண்டுதான் இருக்காங்க.... இந்த துளசிங்கம் எங்கதான் போயிருப்பாரு..? போய்ப் பார்ப்போமா.... எம்மாடி காதும் காதும் வச்சது மாதிரி போமாட்டேன். எங்கம்மாவ விட்டுட்டு போவமாட்டேன்... அம்மாவ விட்டுட்டுப் போனாலும் போவேனே தவிர, அப்பாவை விட்டுட்டுப் போவமாட்டேன். துளசிங்கம் மச்சான் என்னைக் கல்யாணம் பண்ணான்டாம்.... அவரு காலு கையி கதியா இருந்தால் போதும்... ஒத்தக் காலுல நடக்காம இருந்தா அதுவே போதும்......
கோலவடிவு, அந்த மொட்டை மாடியில் எத்தனை சுற்றுச் சுற்றினாளோ, எத்தனை கிலோ மீட்டர் நடந்தாளோ... கிழக்குப் பக்கமாய் திரும்பினாள். அது என்ன லைட்டு... சிவப்பு லைட்டு... பருத்திக் காட்டு.... துளசிங்கம் மச்சானா... சொன்னபடி நிக்காரே.... நேத்து சோளத்தட்டைக்குள்ள சொன்னாருல்லா... சரியா பதினொரு மணிக்கு என் விக்கி வண்டியோட நிப்பேன்... சிவப்பு லைட்டக் காட்டுவேன்.... வாரதும் வராததும் ஒன் இஷ்டமுன்னு சொன்னாரே.... போமாட்டேன். தூங்கப் போறேன்... இப்டி செய்தா என்ன... வாலனும், பற்குணமும், அவரை வெட்டிடப்படாதே.. எதுவும் செய்துடப்படாதே பழி எங்க குடும்பத்து மேல வந்துடப்படாதே.... பழி வருதோ இல்லியோ... அவருக்கு எதுவும் வரப்படாது.... அவர் உஷார் படுத்திட்டு வந்திருவோம்... எம்மா எப்பிடி போறதாம்... போனால் என்ன? ஒடியா போறோம்... பழகுன தோசத்துக்கு அவருகிட்ட சொல்லிட்டுத்தான வரப் போறோம்.... ஒருவருக்காவ காத்திருக்கவும் படாது... காக்க வைக்கவும் படாது. இதோ - நாலு எட்டுல போய் சொல்லிட்டு ரெண்டு எட்டுல திரும்பப் போறேன்.... சீக்கிரமா போவணும்... இல்லாட்டா... அங்கே போயி .... அவரக் கொன்னுடப் போறானுவ...
கோலவடிவு படியிறங்கினாள். "எம்மா... கோவிலுக்குப் போறேன்" என்று அம்மாவிடம் சொல்லி விட்டு அவள் பதில் சொல்லுமுன்பே படி தாண்டினாள். காளியம்மன் முன்னால் நடந்தாள். அடையாளம் தெரியாமல் இருப்பதற்குத் தலையிலே முக்காடு போட்டபடி பாய்ந்தாள். சுடலைமாடன் கோவிலுக்குப் போவது போல், போய், புளியந்தோப்பில் ஒதுங்குவதுபோல் ஒதுங்கி, பருத்தித் தோட்டத்தின் கரைக்கு வந்தபோது, துளசிங்கம் விக்கி வண்டியை உருட்டிக் கொண்டு வண்டிப் பாதைக்கு வந்தான்.. அலங்காரியும் முக்காடு போட்டபடியே அவன் பின்னால் நின்றாள்.....
---------------
அத்தியாயம்- 24
கோலவடிவு, அவர்களைப் பார்த்து, அவசர அவசரமாய் பேசினாள்... வீட்டிற்குப் போகத் தயாராய் இருப்பவள் போல், ஒரு காலை மேற்குத் திசை நோக்கி வைத்தபடியே கிழக்குப் பக்கம் நின்றவர்களைப் பார்த்து பேசினாள்.
"எனக்கு ஓடிப்போறதுல சம்மதம் இல்ல... அதுக்காக நான் வர்ல... துளசிங்கம் மச்சான வெட்டுறதுக்கு ஊருக்காரனுவ சுத்திக்கிட்டு இருக்கானுவ... பழைய பகைய மனசுல வச்சுட்டு அரிவாளோட
அலையுறானுவ... எங்கேயாவது போயி... அவரு தப்பிச்சா நல்லது.... நான் வாறேன் அத்தே..."
அலங்காரி , அவளை நின்று நிதானித்துப் பார்த்துவிட்டு, அழுகைக் குரலோடு பேசினாள்....
"சரிம்மா... நீ போ... நீ சொன்ன சேதி கோடி பெறும்.... இவன் எப்படியாவது போறான்... நீ போம்மா.... கூட வேணுமுன்னா துணைக்கு வரட்டுமா... போம்மா.... அக்னி ராசாவுட்டயோ... எந்த ராசாவுட்டயோ.. ஒரு தடவ மாட்டிக்கிட்டா ஒரேயடியா மாட்டுனது மாதிரி... என்கிற எண்ணத்தோட போம்மா..."
கோலவடிவு, அந்தக் கும்மிருட்டில் அலங்காரி அத்தையைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி உடம்பின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்தாள்.... பிறகு நின்றாள். நின்றபடியே பேசினாள்....
"எத்தே - இவர சாக்கிரத்தையா இருக்கச் சொல்லுங்க... இவருக்கு ஏதாவது ஆயிட்டுன்னா நான் உயிர விட்டுடுவேன்னு சொல்லுங்க அத்தே ..."
சினிமா தோஷம் பிடித்த துளசிங்கம் பேசினான்.
"அப்படியே எனக்கு ஏதாவது ஆனாலும் கோலத்த சத்தம் போட்டு அழப்படாதுன்னு சொல்லுங்க சித்தி... ஏன்னா, அவள் அழுகைக்கான காரணம் ஊருக்கு தெரிஞ்சு அவளுக்கும் எனக்கும் இருந்த பாசம் வெளில வந்துடப்படாது, இன்னொருத்தன் வீட்ல வாழப் போறவள் பாரு.."
அலங்காரி, வாயை வாழைப்பழமாக்கி, நாக்கை ஊசியாக்கினாள்.
கோலம்.. நீ பேசுற முறையும், ஒரு வகையில் சரிதான்... ஆனாலும் மனசு கேட்க மாட்டக்கு... எங்க மச்சான் மவன் வெட்டுப்படப் போறது நிச்சயம்... அதனால, இவனும் வெட்டுப் படுறதே வெட்டுப்படுறோம்.... வெட்டிட்டு படுவோமுன்னு இரும்புல பிச்சுவாக் கத்தியோட நிக்கான்.... இவன் ஒண்ணு கொலையில் சாவான்... இல்லாட்டா கொலை செய்துட்டு செயிலுல சாவான்... ஏதோ ஒன்கூட ஓடிப் போனால் தப்பிப் பிழைப்பான்னு நெனச்சேன்.... அப்புறம் பழனிச்சாமி அண்ணாச்சிக்கு மருமவனாயிட்டா ஊரில் எந்தப் பயலும் இவன் எதுவும் செய்ய முடியாதுன்னு இந்த அத்த ஆறுதல்பட்டேன். கடைசில, நீ அக்னிராசா கிட்ட அவஸ்தப்படணு முன்னும், இவன் அரிவாளால் வெட்டுப் படணுமுன்னும் தலைவிதி இருந்தால், அதை யாரு மாத்த முடியும்... நீ மனசு வச்சால் இவனையும் காப்பாத்தலாம்... ஒன்னையும் காப்பாத்தலாம்... ஊரையும் காப்பாத்தலாம்..."
கால்மணி நேரம் பதில் இல்லை. யாரும், யாருடனும் பேசவில்லை .
அலங்காரிக்கும், துளசிங்கத்திற்கும், முதுகைக் காட்டி நின்ற கோலவடிவு, சிறிது நேரம் அப்படியே நின்றாள். பிறகு வீடு இருந்த திசையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள். கும்பிட்டு முடித்ததும், அவர்களுக்கு முகத்தைக் காட்டினாள். முந்தானையை இறுக்கி முடிந்துகிட்டு, ராட்சதப் பூச்சி மாதிரி நின்ற அந்த விக்கி வண்டியின் பின்னிருக்கையில், ஏறிக் கொள்வதற்காக செங்குத்தான உடம்பை, "உப்புக் குத்திக் காலில்" நின்றபடி, சாய்ந்தாள்....
-------------
அத்தியாயம்- 25
கண்மூடித்தனமான இரவு....
அந்தக் குருட்டுத்தனமான இருட்டுப் பயங்கரப் பின்னணியில், பனங்காட்டை அடுத்த மாந்தோப்பிற்குள், ஏதோ ஒரு பூனை அசல் பச்சைக் குழந்தை போல் அழுதது. விட்டுவிட்டும், விடாப்பிடியாகவும் அழுது புலம்பியது. இந்த அழுகைச்சத்தம் அரவம் கேட்டு, பனங்காட்டு நரி ஒன்று, ஊளையிட்டது. அதற்கு அருகிலேயே நாகப் பாம்போ, அல்லது சாரைப் பாம்போ எலிவளை ஒன்றிற்குள் பசியேக்கப் பார்வையுடன் ஊர்ந்து கொண்டிருந்தது... காதைப் பியக்கும்படி அடித்த காற்று, பேயிரைச்சலாய்க் கத்தி, அங்குள்ள அனைத்தையும் ஆட்டுவித்ததில், பனங்காய்கள் விழுந்தன. புளியம் பழங்கள் சிதறின... தென்னை ஓலைகள் சாய்ந்தன.... காட்டுப் பூனை "விறுவு" நாட்டுக் கோழி ஒன்றைக் கௌவிக் கொண்டு நர்த்தனமாடுவதுபோல் தாவியது.
அந்த இருட்டுக்குப் பழக்கப்பட்ட துளசிங்கம், விக்கி வண்டியை வேகமாகத்தான் ஓட்டினான்... பழக்கப்பட்ட பாதை என்பதுடன், எவரும் பார்த்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையாலும், அவன் வண்டி வேகத்தை முடுக்கி விட்டான். பின்னால் உட்கார்ந்திருந்த கோலவடிவு படபடப்பாகப் பதறிப்பதறிக் கேட்டாள்.
"எனக்கு பயமாய் இருக்கு மச்சான்.... பயமாய் இருக்கு மச்சான் வண்டியை நிறுத்தும் மச்சான்... ஒமக்குப் புண்ணியம் மச்சான்... இது தப்பு மச்சான்... வீட்டுக்குப் போறேன் மச்சான்..... அய்யோ பயமா இருக்கு.... பயமா...."
மரணமுற்ற கர்ப்பிணிப் பெண் - பேய்களுக்காக அமைக்கப்பட்ட சுமைதாங்கிக் கல்லைப் பிடித்தபடியே, வண்டியை நிறுத்திவிட்டு, அவள் முகத்திற்கு எதிராய் முகம் போட்டுக் கேட்டான் துளசிங்கம்....
"சரி... வண்டிய திருப்பட்டுமா..." "திருப்பும் மச்சான் திருப்பும் மச்சான்.. பயமா இருக்கு மச்சான்."
"எதையும் பயப்பட்டு செய்யப்படாது... அப்படிச் செய்தால் அது உருப்படாது.... சரி... இறங்கு வண்டிய திருப்புறேன்."
"ஆனால் நீரு ஊருக்குள்ள இருக்கப்படாது... எங்க ஆட்கள் ஒம்ம கண்டதுண்டமா வெட்டுப்பிடுவாங்க."
"நீயே என்னைவிட்டு... வெட்டிக்கிட்டு போகும்போது அவங்களே என்னை வெட்டிக் கொல்லட்டும்."
"அப்போ நான் வீட்டுக்குத் திரும்புனால், நீரு ஊர்ல இருந்துக்கிட்டு கோயில் விவகாரத்துல வம்பு பண்ணுவீரோ...."
"வம்புக்கு போவ மாட்டேன்.... வர்ர வம்பை விடமாட்டேன்... சரி இறங்கு, வண்டியைத் திருப்புறேன்.... ஆமா ஏன் இறங்க மாட்டக்கே..."
"பயமா இருக்கு மச்சான்..."
"ஒனக்குப் பயம்.... எனக்கு கோபம்... ரெண்டும் தீரணுமுன்னா ஊருக்குப் போறதுதான் ஒரே வழி - இறங்கு கோலம்..."
"சரி... சரி... வண்டிய விடும்..."
"எந்தப் பக்கமா....”
"என்ன குழப்பாதயும்... எந்தப் பக்கமாய் வேணுமுன்னாலும் விடும். ஒம்ம இஷ்டம்..."
"அப்போ ஒனக்கு இஷ்டமில்லியா..."
"ஒம்ம இஷ்டந்தான்... என் இஷ்டமுன்னு இதுக்கு மேல எப்படிச் சொல்லுறதாம்... ஆனாலும் பயமா இருக்கு மச்சான்... ஏதோ செய்யத் தகாததை ..."
"அவனுவ ஒன்னை அக்னிராசாவுக்கு கொடுக்கது மட்டும் செய்யத் தக்கதா....? என்னை கொலை பண்ணுறதுக்காவ அரிவாள் கம்போட அலையுறது மட்டும் செய்யத்தகுமா...”
“சீக்கிரமா விடும்... ஊர்ல ஆளுவ தேடி வர்றதுக்கு முன்னால போயிடலாம்... எனக்கு பயமா இருக்கு மச்சான்... சீக்கிரமா விடும்..."
விக்கி வண்டி விரைந்து ஓடியது; ஒடுங்கிப் போய் உட்கார்ந்த கோலவடிவின் உடம்பெல்லாம் ஆடியது.... அவள் உடம்பில் பெருக் கெடுத்த வேர்வை வெள்ளத்தை, அந்தப் பேய்க் காற்றாலும், துடைக்க முடியவில்லை.... மோவாய், மார்பெலும்பில் முட்டும்படி கீழே விழப் போவதுபோல், இருந்த கோலத்தின் தோளில், இடது கையை அணைத்துப் போட்டபடியே துளசிங்கம் அவளுக்கு ஒரு யோசனை சொன்னான்....
"கீழ விழுந்துடப்போற கோலம்... என்னைச் சேர்த்துப் பிடிச்சுக்க... இப்டி பிடிச்சுக்க..... ஆமாம். இப்படித்தான்.... அப்புறம் இந்த மாதிரி சமயத்தில், எந்த கண்ணுலயும் ஒன் முகம் தெரியப்படாது... அதனால்.... ஒன் முகத்த என் முதுகுல போட்டு மறச்சுக்க... அப்டி இல்ல.... இப்டி..."
துளசிங்கம் அவளிடம் பேசியபடியே, அவளின் வலது கரத்தைப் பிடித்து, தனது வயிற்றோடு சேர்த்து வைத்தான். ஒரு கரத்தை வளைத்துப் போட்டான்.... அவன் ஓரிரு தடவை அந்தக் கையை எடுக்கப் போனபோது, அவள் தனது இடக்கையால் அவன் விரல் நுனிகளைப் பிடித்துக் கொண்டாள்.... பிறகு, தனது கையை, வண்டி சாயாமல் இருப்பதற்காக, அவன் எடுத்த போது, கோலம் தனது கையை அவன் வயிற்றில் இருந்து எடுக்கவில்லை. மாறாக, அந்தக் கைப்பிடியை வலுவாக்கினாள்.... பயத்திலே போட்ட பிடி, பாசப் பிடியானது. அவன், அவளைப் பார்க்காமலே வண்டியை ஓட்டியபடியே, ஒரு கையைப் பின்புறமாக வளைத்து, அவள் முகமென்று பிடறியைப் தடவி, பிடறி என்று முகத்தைப் பிடித்து, தன் முதுகிலே சாத்திக் கொண்டான்... வண்டிப் போகப் போக, கோலவடிவின் குரலும் போயிற்று... பிடித்த பிடியைத் தளர்த்தாமல், போட்ட முகத்தை நிமிர்த்தாமல், கிடந்தாள். இன்னும் சொல்லப் போனால், அவள் பிடி இறுகியது; கிடுக்கிப்பிடி... துளசிங்கம் வண்டியைத் தென்மேற்குப் பக்கமாய்த் திருப்பியபடியே, அவளிடம் சந்தேகம் கேட்டான்.
"ஒனக்கு இப்போ பயம் போயிட்டுன்னு நினைக்கேன்... பேசு கோலம்.... என் பேசமாட்டக்கே... நீ பேசாட்டா என்னை ஒனக்கு பிடிக்கலன்னு அர்த்தம்... ஏன் பேசமாட்டக்கே... ஏய்... பேசுப்பா..."
"மாட்டேன்... பேசுனா என் வாய் ஒம்ம கழுத்துல படும்..."
"சரி.. அப்போ முகத்தை தூக்கி வச்சுட்டுப் பேசு... இப்போ பயமா இல்லியா... வீட்டுக்குப் போகணுமேன்னு எண்ணம் வரலியா... தப்பு செய்துட்டோமுன்னு தோணலியா... சொல்லு கோலம்... ஒனக்கு கூச்சமா இருந்தால் முகத்த எடுத்துட்டுப் பேசு...”
கோலவடிவு முகத்தை அவன் முதுகில் இருந்து எடுத்தாள்.... அதுவும் அவன் சொன்னதற்காக அப்படிச் செய்பவள் போல், முகத்தைப் பட்டும் படாமலும் எடுத்துவிட்டு, பட்டுப்பட்டென்று பதிலளித்தாள்.
"எனக்கே என்னைப் பத்தி நினைக்க ஆச்சரியமா... இருக்கு மச்சான். இப்போ பயம் இருந்த இடத்துல... படபடப்புத்தான் இருக்குது.... சரியோ..... தப்போ .... வந்தாச்சு.... தப்புல்ல.... சரிதான்... நீரு என்கூட இப்டி வராமல்.. ஊர்ல... லாந்துனால்..... நிச்சயம்... ஒம்ம கொல பண்ணிப் புடுவானுவ... ஒம்ம காப்பாத்தறதுக்கு ஒரே வழி... இப்படி.... ஓடி வாரதுதான்... ஊரு உலகத்தில் செய்யாததையா.... செய்யுறோம். எத்தன பேரு.... இப்டி..... ஓடிப் போயிட்டு.... அப்புறம் குடும்பத்துல.... சேர்ந்துட்டாங்க...... கல்யாணம் ஆனதும்..... மாலையும் கழுத்துமாய் எங்கப்பாம்மா காலுல விழணும்... ஒங்கப்பாம்மா காலுலவுந்தான். வெட்டுப் புடுவாவளா... என்ன.... இப்போ .... ஒம்ம பிளானு என்ன ...''
கோலவடிவு, பயம் தெளிந்து, பலம் புரிந்து பேசுவதைப் பார்த்து, துளசிங்கமே அசந்து விட்டான்... மீண்டும் தனது கையைச் சுற்றி வளைத்து, அவள் பிடரியைச் செல்லமாகத் தட்டித்தட்டி, அவள் முகம் தன் முதுகில் மோதும்படி செய்துகொண்டே பேசினான்.
"இப்போ... நேராய் நாம வெட்டாம்பட்டிக்குப் போறோம்... எங்கம்மா பிறந்த ஊரு..."
''அய்யய்யோ ..... எங்க சொந்தக்காரங்களும் அங்க இருக்காங்களே..." |
"இருக்கட்டுமே.. கல்யாணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போட அவங்களையும் கூப்புடலாம்..."
“சரி.... சொல்லப் போறத முழுசாப் சொல்லும்..."
"வெட்டாம்பட்டில் எங்க பாட்டி வீடு இருக்குது. மாமன் மாருங்க... அவனவனுவ பெண்டாட்டிகள் ஊர்ல, வீடுகள் கட்டிக்கிட்டு இருக்காங்க... பாட்டி மட்டும் தான் தனியா அந்த வீட்ல இருக்காள்... இன்னைக்கு ராத்திரிக்கு .... அங்கேதான் தங்கப் போறோம்.."
"அப்புறம்..." "இதைக் கூடவா சொல்லிக் கொடுக்கணும்..."
"என்ன மச்சான் நீரு... அதுக்காவத்தானா... நான் ஓடிவாறேன்? சத்தியமாச் சொல்லுதேன்... எனக்கு அந்த நெனப்பே இல்ல.. ஒம்ம இப்டி கட்டிப் பிடிச்சிருக்கதுகூட நீருதான் தஞ்சமுன்னு சொல்லுறது மாதிரிதான். சரி... விஷயத்துக்கு வருவோம்... ராத்திரி தங்குறோம்.... ராத்திரி போனதும்..."
"காலையில் நேரா கோணச் சத்திரம் போறோம்... ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக்கிறோம். அங்கே இருந்து மாலையும் கழுத்துமா… காளியம்மாவ கும்புடுறோம்.... சுடல மாடன தரிசிக்கோம்..... நம்மள பெத்தவங்க காலுல விழுறோம்..."
"நாம இங்க ஓடிவாரது தெரிஞ்சு.... சட்டாம்பட்டில் இருந்து எங்க ஆளுவ வந்து ஏறுக்குமாறா எதுவும் செய்துப்படாதே மச்சான்...”
"நீ சின்ன பொண்ணு ... அதனால ஒனக்குத் தெரியல... யாரும் யாரையும் பொதுவா ஊர்விட்டு ஊர் வந்து அடிக்க மாட்டாங்க..... அடிக்க முடியாது... இந்த வெட்டாம்பட்டிக்குள்ள எந்த ஊர்க்காரனும் வந்து நம்மை அடிச்சா... இந்த ஊர்க்காரன் தன்னையே அடிச்சதா நெனைப்பான்..."
"சரி... இந்த ஊர்க்காரனே நம்மள அடிச்சா...."
"வெட்டாம்பட்டிக்காரன் அந்தப் பேருக்கு... ஏத்தபடி அடாவடிக்காரன்தான்... ஆனால் காலுல விழுந்துட்டா ஒருத்தர் உயிரை எடுக்கப் போறவனும் தன்னோட உயிரையே கொடுப்பான். சரி... என்னை நல்லா பிடிச்சுக்க... கீழே விழுந்துடப் போற..."
"இதோ பிடிச்சுக்கிட்டேன். இனிமேல் நான் விழுந்தா நீரும் விழுந்துதான் ஆகணும். தெரியுமா...”
அந்த விக்கி வெட்டாம்பட்டிக்குள் வந்தபோது, நாய்கள் கூடக் குலைக்கவில்லை... அவ்வளவு பெரிய தூக்கம். ஆனாலும், துளசிங்கம் வண்டியை நிறுத்திவிட்டு, தானும் இறங்கி, கோலவடிவையும் இறக்கிவிட்டு, வண்டியை உருட்டினான். ஏன் என்பது மாதிரி கேட்கப்போன கோலவடிவின் வாயை ஆள்காட்டி விரலால் தாளிட்டான். வெட்டாம்பட்டி என்ற பெயர் விளங்கும்படி, கருவேல மரங்களான உடைக்காடும், கல்லும் பாறையுமான அகழியும் கொண்ட அந்த ஊருக்குள் ஒரு ஓரத்தில் இருந்த, ஒரு பாடாதி வீட்டைத் துளசிங்கம் தட்டினான். அந்த இருட்டில், கதவைத் தட்டுவதாக நினைத்து, துளசிங்கம் சுவரைத் தட்டியபோது, கோலவடிவு அவன் கையைப் பிடித்து, கதவில் வைத்தாள்.... அவன் என்ன தான் தட்டினாலும், உள்ளே இருந்து எந்தக் குரலும் கேட்கவில்லை. இப்போது கோலவடிவும் சேர்ந்து தட்டினாள். கால் மணி நேரத்திற்குப்
பிறகு கதவு இடுக்கில் பார்த்தால், லாந்தர் வெளிச்சம் தெரிந்தது. ஐந்து நிமிடத்திற்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. திறந்தவளுக்கு, எழுபது வயது இருக்கும்... ஆனாலும், பல் விழாத பாட்டி... வெள்ளைச் சேலைக்காரி... காயப்போட்ட மொச்சை கொட்டை மாதிரி சுருங்கிப் போன முகம்..... அந்த மெல்லிய லாந்தர் விளக்கில், பேரனை அடையாளம் கண்டு கொண்டாள்.
"அய்யய்யோ .... இது யாருடாப்பா.... யாருடா..."
"பாத்தாத் தெரியல... பொண்ணு... ஏன் பாட்டி இப்டி எதிர் பாக்காதது மாதிரி முழிக்கே... நேத்து சாயங்காலம் இங்க மெனக்கிட்டு வந்து, ஒரு பொண்ணோட வருவேன்னு ஒன்கிட்ட சொல்லிட்டுத் தானே போனேன்..."
"சொல்லத்தான் செஞ்சே.... ஆனால் அதுக்கு நான் சம்மதிக்கு முன்னாலயே ஓடிட்டியே.... அய்யய்யோ ... இது அடாத காரியண்டா ... பொண்ணு யாருப்பா..."
"நம்ம பழனிச்சாமி மாமா மகள்..."
"அந்தப் பையன்' ஒருத்தன் தான் ஊரிலேயே யோக்கியன்... நீ நேராய் அவன் கிட்டயே பொண்ணு கேட்டிருக்கலாமேடா. நீயும் என்ன குறைஞ்சவனா....? இந்த பகவதியோட பேரனாச்சே...”
"குறைஞ்சவனோ கூடுனவனோ... இப்போ எங்கள் வீட்டுக்குள்ள விடு"
இற்றுப்போன அந்தக் கதவை மூடிவிட்டு, மூவரும் வீட்டுக்குள் வந்தார்கள். சமையலறை குடிசை ஒன்று.... அதற்கு எதித்தாற்போல, முற்றத்தைத் தாண்டிய காரைக் கட்டிடம்... துளசிங்கம் திண்ணையில் ஏறியபடியே கேட்டான்.....
"பெரிய வீட்டத் திற..." "ஏண்டா நீ செய்யறது ஒனக்கே நல்லா இருக்கா..? ஏம்மா... அவனுக்குத்தான் புத்தியில்ல... ஒனக்குமா.... பழனிச்சாமி குடும்பம்... எப்பேர்ப்பட்ட குடும்பம்... கரும்பட்டையான் குடும்பமுன்னு..."
"சும்மா தொணதொணக்காத பாட்டி... நான் இவள் கொல செய்யவா கூட்டி வந்தேன். நாளைக்கே ரிஜிஸ்டர் கல்யாணம் செய்யப் போறேன்.... நாங்க விழுற முதல் காலு ஒன் காலுதான்.."
"போலீஸ்காரன் என்ன தூக்கிட்டுப் போக மாட்டானே..?"
"ஒரு காதல் ஜோடியை சேர்த்த வச்சதுக்காவ போலீஸ்காரன் ஒன் கையைக் குலுக்குவான்.... சரி பெரிய வீட்ட திறந்துவிடு..."
பாட்டியின் இரண்டு கரங்களையும், ஒத்தைக் கைக்குள் வைத்துக் கொண்டே , துளசிங்கம், ஊரில் பலர் அரிவாள் கம்புகளோடு, தன்னைத் தேடி அலைவதைச் சொன்னான். கோலவடிவை திருமணம் செய்வதன் மூலந்தான், தான், ஊர்க் கொலையில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் விளக்கினான்....
இதைக் கேட்டுக் கொண்டிருந்த கோலவடிவும் தெளிவான குரலில் திடமாகப் பேசினாள்....
"ஆமாம் பாட்டி... இவரு... என்னைக் கூட்டி வரல.... நான்தான் இவரைக் கூட்டி வாரேன்... இல்லாட்டா... இவரு ஊர்ல.... உயிரோட இருக்க முடியாது.... எனக்கு எங்க குடும்ப மானம் பெரிசுதான்.... ஆனால்..... அதைவிட பெரிசு இவரோட உயிரு... இவருக்கு மட்டும் உயிர்போற நெலம வராட்டால்..... இவரு... தலைகீழ நின்னாலும்... இப்டி வரமாட்டேன்.... எங்கப்பாவ மாதிரி நானும்.... நியாயக்காரிதான் பாட்டி.."
"எம்மாடி... இந்த வயசுல... என்ன பேச்சு பேசுற..."
கிழவி பேசிவிட்டு, அவர்கள் இருவரையும் ஏற இறங்கப் பார்த்தாள்.... பிறகு, முணுமுணுத்தபடியே, வீட்டைத் திறந்துவிட்டாள்.... இருவரும் உள்ளே வந்தார்கள் - துளசிங்கம், கதவை மூடப் போனான் கோலவடிவு மூடப்போன கதவை, இடையிலேயே கை கொடுத்து நிறுத்தியபடியே கேட்டாள்....
"எதுக்கு மச்சான் கதவ மூடுறியரு...?" "இதுக்கு மேல சொல்லணுமோ... எனக்கு சொல்லத் தெரியல..."
"நான் சொல்லுறதையும் கேளும்... ஒம்மை நம்பி வந்தவள் நான். என் உடம்பு மட்டுமில்ல, இந்த நெஞ்சுக்குள்ள துடிக்கிற ஒவ்வொரு துடிப்பும் ஒமக்கு சொந்தம்... என் நெனப்பே ஒமக்குத்தான்.... என் நடமாட்டமே இனும் ஒம்மாலதான்... ஆனால் எல்லாம் கழுத்துல தாலி விழுந்த பிறகுதான். சரி... வெளில போயி படும்... நீரு போறீரா..... நான் போகட்டுமா...?"
துளசிங்கம் கதவை மறித்த அவளை, எதேச்சையாகவோ கோபத்தாலோ தள்ளியதில் கோலவடிவு கீழே விழுந்தாள். அவள் யோசித்தபடியே எழுந்தபோது, பாட்டி உள்ளே வந்தாள்.
"அந்த குலமானு சொல்லுறதைக் கேளுடா - இனிமேல் அவள் கழுத்துல நீ மஞ்சள் கயிற கட்டும்போது தான் ஒன் கையி அவள் மேல படணும். இதுக்கு முன்னால் படப்படாது. அதுக்கு முன்னால்.... அவள் சம்மதிச்சாலும் நான் சம்மதிக்க மாட்டேன்..."
துளசிங்கம் பாட்டியைக் கோபமாகப் பார்த்தபடியே, வெளியே வந்து, முற்றத்தில் முன்னும் பின்னுமாக நடந்தான்... செக்கு மாடு மாதிரி, சுற்றிச் சுற்றி வந்தான்.
கோலவடிவு யோசித்தாள் .... ஏன் இப்டி முரட்டுத்தனமாத் தள்ளினாரு? கீழே விழுந்தவளைக்கூட தூக்கி விடல?
------------------
அத்தியாயம்- 26
ஆடிவெள்ளியைப் பிரசவித்துக் கொண்டிருந்த வியாழனின் நடுநிசி....
இருளே ஆகாயமாக இருந்தபோதிலும், சட்டாம்பட்டி காளியம்மன் கரும்பட்டையான்களும், சுடலைமாடச் செம்பட்டையான்களும், ஏவிவிட்ட வாணங்கள், அந்த ஆகாயத்தின் எரி நட்சத்திரங்களாய் ஜொலித்தன... காளியம்மன் கோவில் கொண்டையில் தஞ்சை பெரிய கோவில் லிங்கம் அளவிற்கான லிங்க வடிவு மின்சார பல்புகள், சுடர்விட்டன...... சுடலைமாடன் கோயிலில் கோபுர வடிவிலான மின்விளக்குகள், எதிர்ச்சுடரை வெளியிட்டன... இரண்டு கோவில் களிலும், பந்தல்களிலும், பந்தல்களுக்கு அப்பால் கம்புகளில் கட்டப்பட்ட "வாழைத்தண்டு" விளக்குகள் நிலா வெளிச்ச இழப்பை ஈடுகட்டின... இத்தகைய இருட்டில் கள்ள நொங்கு' வெட்டுபவர்களும், கள்ளத் தேங்காய்ப் பறிப்பவர்களுமான சின்னச் சின்னச் திருடர்கள்... இந்த வெளிச்சத்தைப் பார்த்து "திரு திரு" என்று விழித்தார்களே தவிர திருட முடியவில்லை .....
சுடலைமாடன் கோவிலில் "மணமகளே மணமகளே வா” என்ற ரிக்கார்ட் பத்தாவது தடவையாக ஒலித்து, அங்கேயே கீறல் விழுந்த கிராம போனாகியது. காளியம்மன் கோயிலில், வெற்றிக்குமார் வில்லுப் பாட்டாளிக் குழுவினர், காளியம்மன் வரலாற்றை கையாட்டி, காலாட்டி குடந்தட்டி, சிங்கிதட்டி பாடினார்கள். அந்தக் குழுவின் குரல் ஒலி பெருக்கியில் ஏவி விடப்பட்டது... சுடலை மாடன் கோயிலில் ஒலி பெருக்கி பாட்டுச் சத்தத்துடன் "ஏய்.... ஆய்... ஊய்..." என்ற இடைச் செருகல் சத்தங்களும் ஒலித்தன..... அங்கே சுமார் பத்துப் பதினைந்து சாமியாடிகள் தார்பாய்ந்த வேட்டியோடு, சந்தனம் அப்பிய மேனியோடு தீப்பந்தங்களுடனும், வெட்டரிவாள்களுடனும், தங்தங்' என்று குதித்தார்கள்... அவர்களின் சிம்மக் கர்ஜனைகள், காளியம்மன் கோவிலில் எதிரொலித்தன. காளியம்மன் சாமியாடித் தாத்தா, வாயைத் திறந்து திறந்து மூடி சுடலை கோவிலில் பீறிட்ட பதினைந்து சிம்ம கர்ஜனைகளையும், தானே, ஒருவராய்த் தக்காரும் மிக்காரும் இன்றி உருமுவதாக அனுமானித்துக் கொண்டு ஆடினார்.
சட்டாம்பட்டி மண்டல சார்பற்ற மக்கள்' சுடலை கோயிலில் இருந்து காளி கோயிலுக்கும், காளி கோயிலில் இருந்து சுடலை கோயிலுக்குமாய், நடமாடினார்கள் என்றாலும் காளியம்மன் கோவிலி ல்தான் அதிகக் கூட்டம்... காத்துக் கருப்பன்களில் முக்கால்வாசி பேரும், காரைவீட்டான்களில் பாதிப்பேரும், கரும்பட்டையான்களுடன் கலந்து இருந்தார்கள்... திடீரென்று சுடலை கோயிலில் ஆறு முழு வேட்டி அளவிலான வெள்ளைப் படுதா தெரிந்தது....” “பெரியோர்களே.... தாய்மார்களே... எல்லாம் வல்ல சுடலை மாடன் திருவிளையாடலை முன்னிட்டு 'லைலாவும் அவள் காதலர்களும்' என்ற படம் காண்பிக்கப்படும்" என்று ஒரு முழக்கம் கேட்டது... இதனால், காளியாத்தா கோயிலில் கூடிய கூட்டத்தில், பாதிக்கு மேலானோர் சொக்கார, சொந்தக்கார பேதங்களைத் தாண்டி, லைலாவைப் பார்ப்பதற்காக, விழுந்தடித்து ஓடினார்கள். உடனே, கரும்பட்டையான் நாட்டு வக்கீல் நாராயணன், வயதான வில்லுப்பாட்டாளியைத் தெரியாத்தனமாக மல்லாக்கத் தள்ளிவிட்டு, "அண்ணன்மாரே , தம்பிமாரே.... அக்காமாரே, தங்கைமாரே" என்று மாரடிப்பது போல் கூவிவிட்டு, சினிமாப்புகழ் சிவராமன், நடிகர்கள் போலவும், நமது தலைவர்கள் போலவும் நடித்துக் காண்பிப்பார்' என்றான்.
ஆனாலும், 'லைலாவுக்கே' மவுசு.... புறநானூற்று வீரர்களாய் வீராங்கனைகளாய்ப் புறப்பட்ட கூட்டம், முன் வைத்த காலைப் பின் வைக்கவில்லை.... குறிப்பிடத்தக்க எல்லாக் கரும்பட்டையான்களும், முனங்கிக் கொண்டிருந்த போது, பாவம் இந்தக் காளியம்மன் சாமியாடி தாத்தா, நைட்டி' மாதிரியான சிவப்பு கவுனைத் தோள் வழியாகக் கால்வரைக்கும் தொங்கப் போட்டுக் கொண்டு, இரண்டு கரங்களிலும் ரப்பர் வளையல்களை மாட்டிக் கொண்டு முட்கம்பி செருப்பைச் செருகிக் கொண்டு, நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் மீதிக்கூட்டத்தில் பாதிக் கூட்டத்தை துரத்தினார்.... திருமலையால் பொறுக்க முடியவில்லை ....
"இன்னைக்கு நீரு.... ஆடுறதோட சரி... நாளைக்கு ஒம்ம பேரன்தான் ஆடுவான்... சாவப் போற காலத்துல, ஒமக்கெல்லாம் எதுக்குய்யா.... சாமியாட்டம்... வாலிபனுக்கு வழிவிடும்..."
நாட்டு வக்கீல், குள்ளக் கத்தரிக்காய், பீடி ஏசெண்ட் வகையறாக்களுக்கு மத்தியில், ஒரு நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்திருந்த பழனிச்சாமி திருமலையைக் கைகாட்டி அமர்த்தினார். தொண்டையைக் கனைத்தார்... அவர் ஏதோ பேசப் போகிறார் என்று கைப் பையன் விகடத்துக்காக ஆயத்தம் செய்த 'சினிமாப் புகழ்' சிவராமன் முன்னால் இருந்த மைக்கை வெடுக்கென பிடுங்கி, பழனிச்சாமி முன்னால் வைத்தான்.....
"பேசுங்க அய்யா..."
"ஏய் மைக்க எடுப்பா.... எல்லாத்துக்கும் சொல்லுதேன்... நமக்கு கூட்டம் முக்கியமில்ல... கொள்கைதான் முக்கியம்... கோவில் கொடை.... வெறும் பொழுது போக்கில்ல.... நம்மோட மூதாதையர் நமக்கு விட்டுட்டுப் போன பழக்க வழக்கம். அதை மாற்ற முடியாது.... இஷ்டப்பட்டவங்க இருங்க... இல்லாட்டா... போங்க யோவ் அடிப்பா.. விகடம் கொஞ்சம் இரும்..."
காசு வாங்கியே தீருவது என்று கங்கணம் கட்டியது போல், மேளக்காரர்கள் டங்கு டங்கு' என்று அடித்தார்கள் ..... நாதஸ்வரக்காரர்கள் ஓசை உச்சக்குரலில் ஓங்கின.... ஊமைக்குழல் உறுமியது.... தவுல் மேளம் இழுப்புப் போட்டது.... பம்மை மேளம் பரபரத்தது... மேளம் அடித்தவர்கள், தத்தம் கழுத்தில் கிடக்கும் தங்கச் செயின்கள் துள்ளித் துள்ளி விழ, சதுராடினார்கள். ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் குதித்தபடியே, ஆடாமல் நின்ற சாமியாடித்தாத்தா முன்னால் வந்து, அடிஅடி என்று அடித்தார்கள் - தாத்தாவும் ஆடினார் லேசாய்... மெதுவாய்... மேளக்காரர்களுக்கு ஈடுகொடுத்து, அவரால் ஆடமுடியவில்லை . 'நாளைக்கு ஆடணும்.... இப்படி ஆடினால் சின்னப்பய மவனுவ ஆடவிடமாட்டானுவ... திருமலைப்பயல் அடிக்கவே வருவான். ஆனாலும் ஆடணும். மூச்ச இளைக்காம, உடம்பு நோகாம
ஆடணும்.... எப்படி...?"
சாமியாடி தாத்தா திடீரென்று, கையை ஆட்டி, மேளத்தை நிறுத்திவிட்டு உத்திரவு சொல்லப் போனார். மைக் இல்லாமல் அவரால் உத்தரவு சொல்ல வராது.... ஆகையால் மைக் மைக்' என்றார்கள். அது ஏதோ மந்திரச் சொல் என்று மைக்காரன் சும்மா தலையைச் சொறிந்தபோது, தாத்தாவே மைக் முன்னால் ஓடிப்போய் உத்தரவு சொன்னார்.
"கவலைப்படாதிங்கடா என் மவனுவளா கவலப்படாதிங்கடா... என் மவனுவளா.... நம்ம குடும்பத்துல நாலு கல்யாணத்த இந்த ஆவணில முடிச்சு வைக்கப் போறேண்டா... ஏற்கனவே ஒரு மவளுக்கு, அக்கினி ராசாவோட முடிச்சு போட்டுட்டேண்டா... ஆமாடா... நான் தாண்டா என் மகள் கோலவடிவுக்கு மாங்கல்ய பாக்கியம் தந்தது.... எங்கேடா இருக்கா என் மகள் கோலவடி... என் மகளே மகளே.... வா மகளே.... இந்தத் தாய் ஒன் நெத்தியில் குங்குமம் வைக்கணும்... என் மகள் கோலம் வாது வரைக்கும் அடிடா மேளம்.... அடிடா மேளம்..."
மேளச்சத்தம் மீண்டும் ஒலித்தது.... சாமியாடித் தாத்தா பழனிச்சாமியைப் பார்த்து அருள்பாலிப்பவர் போல் ஓரக்கண்ணால் நோட்டம் போட்டார். எந்தப்பய இனிமேல் என்னை சாமியாடப்படாதுன்னு சொல்லுதான்னு பாத்துப்புடலாம்.....
லைலாவையும், அவள் காதலர்களையும் இங்கிருந்தபடியே பார்த்துவிட்டு, இப்போது இருப்புக் கொள்ள முடியாமல், கடலை கோவிலுக்கு போவதற்காகத் தற்செயலாக எழப்போவதுபோல் எழுந்த கரும்பட்டையான் வயதுப் பெண்கள், எழுந்த வேகத்திலேயே உட்கார்ந்தார்கள்..... கிழட்டுப் பய... கோலவடிவு பேரச் சொல்லிக் கூப்பிட்டது மாதிரி... நம்மளையும் கூப்புடப் போவுது.... நாம சபையில இல்லாட்டா வேற எவன் கூடவோ பேசிக்கிட்டு இருக்கதா நெனைப்பாவ... ஆமா... கோலவடிவ எங்க காணோம்... விளங்காதவா.... வீட்டுக்குள்ள படுத்துக் கிடப்பாள்.....
சாமியாடித் தாத்தா உத்தரவு போட்டு , பதினைந்து நிமிடமாயிற்று.... கோலவடிவு அவர் முன்னால் தோன்றவில்லை. பாக்கியம் கூட்டத்தில் இருந்த ஒவ்வொரு பெண்ணாக உற்றுப் பார்த்தாள்.... பழனிச்சாமி லேசாக முகத்தைச் சுழித்தார். பிறகு ராமசுப்புவிடம் எதையோ சொன்னார்... அவன், அவர் வீட்டைப் பார்த்து நடந்தான்... பாக்கியமும் நடந்தாள்... சாமியாடித் தாத்தா , மீண்டும் மேளத்தைக் கையாட்டி நிறுத்திவிட்டு 'மவளே கோல வடிவு... இந்தத் தாயி துடிக்கிற துடிப்பு தெரியலியா - ஒனக்கு குங்குமம் வச்சு அழகு பாக்க ஆசைப்படுகிறாள் இந்த தாயி... வாம்மா.... என் மவளே... வா... அடிடா மேளத்த' என்றார்.
மேளம் மீண்டும் முழங்கியது.... தாத்தா, தலையை விரித்துப் போட்டு ஆடினார். 'குலவ குலவ' என்றார். இந்த மாதிரி வேண்டுதலின் போது குலவையிடும் பெண்களில் பாதிப்பேரே ஒப்புக்குக் குலவையிட்டார்கள்... எப்போ கோலவடிவு வந்து உத்தரவு வாங்கி எப்போ நம்மள கூப்பிட்டு உத்தரவு வாங்கி... அதுக்குள்ள லைலாவும் அவள் காதலர்களும் மறஞ்சுடுவாங்க.... இந்த கோலவடிவு இன்னுமா.... தூங்குறாள்...
இதற்குள் பாக்கியமும், ராமசுப்புவும் வெறுங்கையோடு திரும்பி வந்தார்கள். பழனிச்சாமியை பட்டும் படாமலும் கையாட்டி பக்கத்தில் வரும்படி கூப்பிட்டார்கள்.... அவரும் அதைக் கவனியாததுபோல் கவனித்துவிட்டு அந்தப் பக்கமாக வந்தார்... பாக்கியம் சொல்வதற்கு முன்பே பழனிச்சாமி கேட்டார்.
"அவள் கையோட கூட்டிட்டி வரவேண்டியதுதானே... சாமியாடி சின்னய்யா அறிவில்லாம கூப்புட்டுட்டாரு.... இன்னும் என்ன
செய்யுறாள்..."
"அவளைக் காணல்... கண்டுபிடிக்க முடியல..." “என்ன உளறுற..."
"வீட்ல எல்லா இடத்துலயும் பாத்துட்டேன்.... கட்டிலுக்கு அடில்... பாத்துட்டேன்..... முற்றத்துல பாத்துட்டேன்.... மாட்டுத் தொழுவத்துல பாத்துட்டேன்... இந்தத் தெரு முழுசும் பாத்துட்டேன்..."
"ஒரு வேள் ஒதுங்க கிதுங்க..." "அரைமணி நேரமாவா..." "எனக்கு என்னமோ பயமா இருக்கு... பெத்த மனசு துடிக்குது.."
“என்ன பாக்கியம் சின்னப் பிள்ள மாதிரி... ஏணிப் படிக்கட்டு கீழ பாத்தியா...'
"பாத்துட்டேன்... குவியலாய் கிடந்த போர்வையைக்கூட உதறி பார்த்துட்டேன்.. மாடியக்கூட பார்த்துட்டேன்.. எங்க போயிருப்பா..."
"சரி... கத்தாத... இந்தாப்பா ராமசுப்பு... சாமியாடி சின்னய்யாவ அவளையோ எவளையோ கூப்புடாம சும்மா ஆடச் சொல்லு... சரி வா... வீட்டுக்கு போவோம்..."
பழனிச்சாமி, மனைவி கையைப் பிடித்தபடி நடந்தார். பொதுவாக இரண்டடி இடைவெளியில் நடக்கும் இருவரும் அப்படி நடப்பதில் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதைப் புரிந்து கொண்ட நாட்டு வக்கீல் நாராயணனும் எழுந்தான். உடனே, இதரக் கரும்பட்டையான் பிரமுகர்களும் எழுந்து பழனிச்சாமியின் பின்னால் நடந்தார்கள். திருமலை, தாவிக் குதித்து, கூட்டத்தின் கவனத்தைக் கவர்ந்தான்.
வீட்டுக்கு வந்த பழனிச்சாமி, தேக்குக் கட்டிலில் உட்காராமல், திண்ணைப் படிக்கட்டில் உட்கார்ந்தார்.... அங்கே வந்த சொக்காரப் பிரமுகர்களிடம் சாதாரணமாகச் சொல்லுவது போல் சொன்னார்.
"நம்ம கோலவடிவக் காணல..." "ஒருவேளை செம்பட்டையான் போடுற சினிமாவுல..."
"சீ... செத்தாலும் சாவாளே தவிர அங்க போகமாட்டாள். கரும்பட்டையான் வைராக்கியம் நம்ம பொட்டப் பிள்ளியளுக்கும் உண்டுப்பா... ஆளுக்கு ஒரு பக்கமா தேடுங்க.. எங்கேயாவது செடி செத்த கடிச்சு மயங்கி கியங்கி.... அழாத பாக்கியம்... நாம் யாருக்கும் எந்த கெடுதியும் செய்யல... நம்ம மவளுக்கு எதுவும் வராது... சரி.... தேடப் போயிருக்காங்கல்லா... பொறும்மா.... பொறு...."
"எப்படிப் பொறுப்பேன். எப்படித்தான் பொறுக்க முடியும்... நான் பாவியிலும் மோசமான பாவி... என் காலப் பிடிச்சு தடவி விட்ட என் ராசாத்திய விரட்டிட்டேனே... விரட்..."
பாக்கியம் விசும்பினாள்... விம்மினாள். பருத்த உடலைத் துடிக்க வைத்தாள். முந்தானையை எடுத்து முகத்தில் படிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டாள்.... வீசிக் கொண்டாள்.... கணவனை ஆறுதலாகப் பார்த்துக் கொண்டாள் - மகளைத் தேடிப் போய்த் திரும்பி வந்த ஒவ்வொருவர் பின்னாலும் கோலவடிவு திரும்பி வருவது போல் முகந்தூக்கிப் பார்த்து, பின்னர் அவள் இல்லாத, ஏமாற்றத்தில் தலைதாழ்த்தி அழுதாள்.... மாந்தோப்பு, புளியந்தோப்பு, பஸ்நிலையம் என்று பல்வேறு இடங்களுக்கு சென்ற ராமசுப்பு, திருமலை, மாயாண்டி போன்றவர்கள், உதடுகளைப் பிதுக்கியபடியே வந்தார்கள்... பாக்கியத்தின் அழுகை கூடிக் கொண்டே இருந்தது. பேச்சியம்மா ஓடிவந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கூட்டத்தை வரவழைக்கப் போனாள்... நல்ல வேளையாக சந்திரா அவளைப் பிடித்துக் கொண்டாள். அப்படியும் அந்த அடிச் சத்தம் கேட்டு, வாடாப்பூ உட்பட பல பெண்கள் வந்துவிட்டார்கள்.
திடீரென்று ஒருவர் தோளில் துண்டில்லாமல் வந்தார். அங்கிருந்த சூழலைப் புரிந்து கொண்டு ரகசியமாகக் கேட்க நினைத்ததை, பகிரங்கமாகவே கேட்டார்... வெட்டாம்பட்டிக்காரர்... பழனிச்சாமியின் அம்மா கூடப் பிறந்த சித்தி மகன்... சிவனுப் பாண்டியன்.
"கோலவடிவு இங்க இருக்காளா...?" "என்னப்பா சொல்லுதே.... சத்தமா சொல்லுதே..." "கோலவடிவு இருக்காளா....?" "இல்ல.. இல்ல.... சொல்ல வேண்டியதச் சொல்லு..."
"என் வீடு பகவதி வீட்டுக்குப் பக்கத்து வீடா... அதான் எலி டாக்டர் மாமியாரு வீடு. செம்பாதி வேளையில் தூக்கம் கலைஞ்சது.... தெரிஞ்ச குரல் மாதிரி சத்தம் கேட்டுது... அந்த வீட்டுப் பக்கமா எட்டிப் பார்த்தால் கோலவடிவு.. மாதிரி.... மாதிரிதான்... அவள்கூட ஒங்க ஊரு உரக்கடப் பயல்...”
"என்ன மனுசம்பா நீ... அப்பவே அங்கே போயி..."
"வேற பொண்ணு மாதிரி தெரிஞ்சிருந்தா போயிருப்பேன்... கோலவடிவு மேல யாருக்காவது சந்தேகம் வருமா - ? அதோட... இந்த மாதிரி விவகாரத்துல நாலுபேரக் கலக்காமல் செய்யப்படாதே..."
ஊம் ஊரைக் கெடுக்குமாம்... பெருச்சாளி வீட்டக் கெடுக்குமாம்... ஏய் பாவி மொட்ட கெடுத்துட்டாளே..."
"பேச்சி மயினி சும்மாக் கெட ஏல அரிவாள எடுங்கடா.... துளசிங்கம் பய... நம்ம பிள்ளய கடத்திக்கிட்டு போயிருக்கான்... அவளா போயிருக்க மாட்டாள்... வேல்கம்ப எடுங்கல ஒண்ணு துளசிங்கம் பிணமா விழணும்... இல்லன்னா நாம்..."
பழனிச்சாமி அங்கீகாரத்துடன், கரும்பட்டையான் இளைஞர்கள் கத்தி கம்புகளை எடுத்துக்கொண்டு நடக்கப் போன போது -
வாடாப்பூ, பழனிச்சாமியின் கால் மாட்டில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தாள்... அவர் காலை, கண்ணீ ரால் அலம்பியபடியே கதறினாள்.....
"இப்டி வருமுன்னு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே சொல்லியிருப்பேன் பெரியப்பா. மோசம் போயிட்டோமே பெரியப்பா.... மோசம் போயிட்டோமே.. நம்ம கோலவடிவும், துளசிங்கமும் அலங்காரி ஒத்தாசையில் பருத்திக் காட்டுல சந்திச்சுப் பேசுனதா ரஞ்சிதம் சொன்னாள்... ஒரு தடவ கோலம் அலங்காரி வீட்டுக்குப் போனாளாம்... இன்னைக்குத்தான் என்கிட்ட சொன்னாள்... காலையிலதான்...''
மாயாண்டி, பழனிச்சாமியின் கால்மாட்டில் கிடந்த தன் மகளின் தலைமுடியைப் பிடித்திழுத்து தூக்கி நிறுத்தினார்... வாயிலும் வயிற்றிலும் குத்தினார்.
"செறுக்கி மவளே... நீ எனக்குப் பிறந்திருக்க மாட்டே... அப்படி இருந்தால், காலையில தெரிஞ்சத பெரியப்பா கிட்டயாவது, பெரியம்மா கிட்டயாவது உடனேயே சொல்லியிருப்பே..."
"கோலவடிவ நானே திருத்திடலாமுன்னு நெனச்சேன். பெரியப்பா மனசு, தெரிஞ்சா என்ன பாடுபடுமுன்னு எனக்குத் தெரியும்... கோலவடிவுகிட்ட கேட்டுட்டு... அவள் திருந்தாட்டால் அப்புறம் பெரியப்பாகிட்ட சொல்லணுமுன்னு நெனச்சேன்... அய்யோ நானே அவள் ஓடிப் போவக் காரணமாயிட்டேனே...'
"நீயும் ஓடிப் போழா..."
மாயாண்டி மகளை மீண்டும் அடிக்கப் போனார். பழனிச்சாமி பிடித்துக் கொண்டார். அவளை தன் பக்கமாக இழுத்து வைத்துக் கொண்டு தழுதழுத்த குரலில் கேட்டார்.
"அப்போ அவள் இஷ்டப்பட்டுத்தான் போயிருப்பா என்கிறியா...?"
வாடாப்பூ பதிலளிக்கப் போன போது, வெட்டாம்பட்டி சிவனுப்பாண்டி பதிலளித்தார்...
"கோலவடிவும் உரக்கடைப் பயலும் நின்ன தோரணையை பார்த்தால் அப்படித் தான் தெரிஞ்சுது..."
பழனிச்சாமி, வேல் கம்புகளோடும், வெட்டரிவாள்களோடும் தயாராய் நின்றவர்களைக் கையாட்டி உட்காரச் சொன்னார். பிறகு, அங்கே எழுந்த ஒவ்வொருவரையும் தோளைத் தொட்டு உட்கார வைத்தார். அப்போது வெளியே அலங்காரி, துளசிங்கம் தங்கை புஷ்பத்துடன் பேசிக் கொண்டு போவது கேட்டது. சுடலைமாடன் கோயிலில் இருந்து வீட்டுக்குப் போய்க் கொண்டு இருந்தார்கள். பொழுது விடிந்தது தெரியாமல் விடிந்து, பகல் வருவது தெரியாமல் வந்துவிட்டது.
"ஏய் புஷ்பம்... மணமகளே மணமகளே பாட்டு நல்லா இருந்ததுல்லா... இன்னைக்கு இப்படிப்பட்ட பாட்டாத்தான் போடணுமுன்னு ஸ்பீக்கர்காரன் கிட்ட நானே சொல்லிட்டேன்... துள்ளாத துள்ளாத ஆட்டுக்குட்டி... என்கிட்ட இருக்குது சூரிக்குத்தி... நல்ல பாட்டுல்லா புஷ்பம்..."
பழனிச்சாமியின் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும், அலங்காரியின் பேச்சின் தாத்பரியத்தை உள்வாங்கியபோது, திருமலை யாரும் எதிர்பாராத வகையில் வெறிபிடித்தவன் போல் வெளியே ஓடினான்.... அவன் காலடிச் சத்தம் நின்றபோது அலங்காரியும், புஷ்பமும் “எம்மோ - எய்யோ " என்று ஊரே அதிரும்படி அலறினார்கள்.
----------------
அத்தியாயம்- 27
அலங்காரி கீழே கிடந்தாள்....
அவள் வாயிலிருந்து பல்வேறு ஒலிகள் பீறிட்டன..... அந்தச் சத்தங்கள் ஓய்ந்து கொண்டே போய், இறுதியில் ஈன முனங்கலாய் முடிவு பெற்றன..... மல்லாக்கக் கிடந்தவள் ஒருச்சாய்த்து படுத்தபடியே "எய்யோ என் காலு போச்சே... எய்யோ என் காலு காலு” என்று கத்தியபடியே வலது காலை, வளைக்க முடியாமல் வளைத்து, இடது கைக்குள் திணித்தபடியே கத்தினாள் - அப்படியும் ஆத்திரம் அடங்காத திருமலை, அவள் இடுப்பைக் குறி வைத்து காலைத் தூக்கினான். உடனே அவள், "எய்யோ ... எய்யோ ..." என்று அங்குமிங்குமாய் புரண்டாள்.... இதற்குள், துளசிங்கத்தின் தங்கை புஷ்பம் ஒரு காலில் நின்ற திருமலையை, சித்தியை விட்டு அப்புறப்படுத்துவதற்காக, லேசாகத் தள்ளினாள்.... அவன் அப்படியே கீழே விழுந்ததில், அவன் முட்டிக்கை அலங்காரியின் வாயில் ஊன்றியது. இப்போது அலங்காரி, "அய்யோ என் பல்லுப் போச்சே" என்று அலறியபடியே ரத்தத்தைக் கொப்பளித்தாள். அவள் கழுத்தை ஆதாரமாக, பிடித்தபடியே எழுந்த திருமலை, அலங்காரியை விட்டு விட்டு, புஷ்பத்தின் கையைப் பிடித்து இழுத்தான். அவளோ, "எய்யோ ... எய்யோ ...” என்று கத்தியபடியே, அவன் இழுப்புக்கு எதிர் இழுப்பாய் இழுத்தாள் - ஒரு காலை, வேப்பமா வேரில், கொக்கிபோல் மாட்டிக் கொண்டே, கூப்பாடு போட்டாள்.... இதனால் அவளை ஒரு கையால் இழுக்க முடியாமல் போன திருமலை, இப்போது இரண்டு கைகளாலும் அவளைப் பிடித்திழுத்தான். கால் செத்தவள் போல் கிடந்த அவளை, தரதரவென்று இழுத்துக் கொண்டே வாயே தெறிக்கும்படி வைதான்.
"என் தங்கச்சிய ஒண்ணன் தேவடியா மவன்... இழுத்துட்டுப் போன பிறவு நான் மட்டும் எதுக்கு சும்மா இருக்கணும்...? நீ எப்படிக் கத்தினாலும் நான் விடப் போறதுல்ல... என்கூட வந்து இருழா..."
திருமலை, புஷ்பத்தை இழுத்துக்கொண்டே போனான்... கீழே கிடந்த அலங்காரி எழுந்திருக்க முயன்றும் முடியாமல், "அய்யய்யோ . அய்யய்யோ... இந்த அநியாயத்தைக் கேக்க ஆளில்லையா" என்று அந்த இழுவையை ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டிக் கத்தினாள்.... திடீரென்று புஷ்பத்தைப் பிடித்த திருமலையின் கை, துண்டித்து விழுந்ததுபோல், அவளிடம் இருந்து விடுபட்டு கீழே தொங்கியது. அவன் கன்னங்களில் மாறி மாறி அறை விழுந்தன...... அவன் தன்னைத் தாக்கிய தந்தையை அதிர்ச்சியோடு பார்த்த போது, இன்னும் ஆத்திரம் போகாத பழனிச்சாமி மகனின் பிடறியிலும் போட்டார். இதற்குள் இரண்டு பேர் அவரைப் பிடித்துக் கொண்டார்கள் - இன்னும் நான்கு பேர் திருமலையைப் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டிற்குள் போனார்கள்..... அவனை வீட்டுக்குள் போட்டு, கதவை அடைக்கும் சத்தம் கேட்டது.
அக்கம் பக்கத்தில் இருந்து ஆட்கள் ஓடி வந்தார்கள். தெற்குப் பக்கம் வைக்கப்படப்பு வேலையில் ஈடுபட்ட நான்கைந்து பேர், அருவி போல் கீழே குதித்து, ஆறுபோல் ஓடி வந்தார்கள். மாடு மேய்க்கப் போன சிறுவர்கள் மாடுகள் போல் பாய்ந்து வந்தார்கள். புளியந்தோப்பு பக்கம் போன பெண்கள், தோட்டம் தொறவுக்குப் போய் கொண்டிருந்த விவசாயத் கூலித் தொழிலாளர்கள், அப்படி இப்படியாய் கூட்டம் குவிந்தது. கால்மணி நேரத்தில் ஊரே அங்குக் கூடிற்று.... புதிதாக வந்தவர்கள் ஏற்கனவே வந்தவர்களிடம் என்ன விஷயம் என்று கண்களாலும், வாயாலும் கேட்டதுதான் மிச்சம். எவருக்கும் என்ன நடந்தது என்று சொல்லத் தெரியவில்லை... அப்படிச் சொல்லத் தெரிந்தவர்களுக்கு அந்த சொற்களில் தாங்கள் இரு பக்கத்தில் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பது தெரிந்துவிடாமல் இருக்க, வாய்களைப் பூட்டிக் கொண்டார்கள்.
புஷ்பம் உடைந்த வளையல்களை, ஒவ்வொன்றாய் எடுத்துப் போட்டபடியே விம்மினாள். அவள் முன்னங்கைகள் ரத்தச் சிவப்பாய் தோன்றின. ஜாக்கெட்டில் ஒரு கைப்பகுதி இரண்டாகத் தொங்கி,
அவள் தோள்பட்டையைத் தனியாகக் காட்டியது.
பழனிச்சாமி, புஷ்பத்தின் அழுகைச் சத்தம் கேட்டுத் திரும்பினார். அவளை நோக்கி நடந்து, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தார். கழுத்தில் கயிறுபோல் முறுக்கிக் கிடந்த அவள் முந்தானையை எதேச்சையாய் விசாலப்படுத்தி, வெறுமனே கிடந்த தோள்பகுதியை மூடியபடியே, அவள் தலையைத் தடவிக் கொடுத்தார். இன்னும் எழுந்திருக்காத அலங்காரியோ, “ஏழா... தோள்ல கிடந்த முந்தானைய தூரத் தூக்குழா... என்ன நடந்ததுன்னு எல்லோருக்கும் தெரியட்டும்" என்று கத்தினான்... பிறகு தானே அந்தத் துணியை அவள் தோளில் இருந்து எடுக்கப் போவதுபோல் எழுந்தாள்.
இதற்குள் எங்கிருந்தோ ஓடிவந்த பேச்சியம்மா , கீழே குனிந்து, இரண்டு கை நிறைய மண்ணயள்ளியபடியே, எழுந்தாள். அலங்காரியின் தலைக்கு மேல், தன் கையைத் தூக்கி, அதை வெறுங்கையாக்கினாள்... அலங்காரியின் தலையில் மண்ணும், மண் கட்டிகளும் சரளமாக விழுந்தன. அலங்காரி, பேச்சியம்மாளின் கையைத் தட்டி விடாமலே ஒப்பாரியிட்டாள்.
"என் தலையில் விழுந்த ஒவ்வொரு மண்ணுக்கும் நீ பதில் சொல்லித் தீரணுண்டி.... மண்ணாந்த..."
"தன்னை மெச்சிக்கிடாம் தவுடுக் கொளுக்கட்டை... சாபமா போடுற... சண்டாள்.... முண்ட... வீட்டுக்கு வெளில தெரியாம இருந்த என் மச்சான் மவள மயக்கிப் பிட்டியளா பாவி... நீ விளங்குவியாழா பாவி... ஏழா... சந்திரா... நீயும் ரெண்டு கையி மண்ண அள்ளி இந்த மூளியலங்காரி மூதேவி சண்டாளி தலையில் தட்டுழா..."
சந்திரா, கீழே குனிந்து மண்ணை அள்ளாமல், மேலே நிமிர்ந்து அம்மா மேல் அப்பிக் கொண்டாள்.... தாயின் கையில் இருந்த மண்ணை தரையில் கொட்ட வைத்தாள்... இதற்குள் காளியம்மன் கோயில் பக்கமாய் படுத்துக் கிடந்த மேளக்காரர்களும், வில்லுப் பாட்டாளிகளும் ஓடி வந்தார்கள்... ஒரே கூட்டம். எல்லோரும் ஒரே சமயத்தில் பேசியதால் சந்தை சத்தமாகக் கேட்டது.
இதற்குள் சுடலைமாடன் கோவிலும் விழித்துக் கொண்டது. கோவிலுக்கு முன்னால், தென்னந்தட்டி விரிப்புகளில் தூங்கிக் கொண்டிருந்த செம்பட்டையான்களும் லைலாவையும், அவள் காதலர்களையும் கொண்டு வந்தவர்களும் எழுந்தார்கள். ஆரம்பத்தில் கரும்பட்டையான்களும் ஏதா தங்களுக்குள் விவகாரம் நடத்துவ-தாகத்தான், செம்பட்டையான்கள் நினைத்தார்கள். ஆனால், பேச்சியம்மா , அலங்காரி மேல் மண்ணைப் போட்ட போது, செம்பட்டையான்கள் உஷாரானார்கள். போதாக் குறைக்கு, அலங்காரி, செம்மண் கோலத்தோடு, வாயிலும் வயிற்றிலும் அடிப்பதை நன்றாக கேட்க முடியவில்லையானாலும், பார்க்க முடிந்தது.... செம்பட்டையான்களுக்கும், ஆக்ரோஷம் ஏற்பட்டது. அந்தக் கோவிலில் இருந்து, கரும்பட்டையான்களை நோக்கி ஓடி வந்தார்கள்... பாதி வழி வந்த பிறகுதான், துரோணர் மாதிரி ஆயுத மேந்தாமல் போவது தெரிந்தது. உடனே கோவிலுக்குள் இருக்கும் சூலாயுதம், வேலாயுதம் ஆகியவற்றை எடுப்பதற்காக அவர்கள் திரும்பியபோது, கரும்பட்டையான்கள் வீசிய கற்கள் அவர்களின் முன் பக்கமும், பின்பக்கமும் விழுந்தன.
அவ்வளவுதான்... கற்காலம் துவங்கிற்று....
இருபக்கங்களில் இருந்தும், கற்கள் ஏவுகணைகளாயின.... சின்னச் சின்னக் கற்கள் வேகவேகமாகவும், பெரிய பெரிய கற்கள் பயங்கர பயங்கரமாகவும் விழுந்தன... அலங்காரியை நோக்கி கல் வந்தபோது, அவள் "அய்யோ.... போனனே" என்று அங்குமிங்குமாய் ஓடினாள். சில கற்கள் மரங்களில் பட்டு பின்வாங்கின. பல கற்கள் மரங்கள் வழியாக முன்வாங்கின. இருபக்கமும் மேலோங்கிய கற்கள், வில் வளைவாய் வளைந்து கீழோங்கின... " வேண்டாம்பா.... வேண்டாம்பா..." என்ற ஊர்ச்சத்தங்கள்.... "எறில... வேகமா எறில்" என்ற ஊக்குவிப்புச் சத்தங்கள்..... சம்பந்தமில்லாதவர்கள் அங்குமிங்குமாய் ஓடிப்போய் மரங்களின் பின்னாலும், சுவர்களின் பின்னாலும் பதுங்கிக் கொண்டார்கள். சம்பந்தப்பட்டவர்களோ, சடுகுடு ஆடுவதுபோல் முன்னாலும் பின்னாலும் நகர்ந்து எதிரிகள் குறிபோடும் கற்களுக்கு அப்பால் நகர்ந்து நகர்ந்து கற்களை எடுத்து வீசினார்கள். சில சின்னப் பயல்களும், கல்வீச்சில் கலந்து கொண்டார்கள். பெண்கள் தத்தம் ஆட்களுக்கு கற்களை எடுத்துக் கொடுத்தார்கள்... அலங்காரி, ஓடிப்போய், ஒரு சுவரின் பக்கம் நின்று கொண்டாள்.
கரும்பட்டையான்களான நாட்டு வக்கீல், மாயாண்டி, ராமசுப்பு, அருணாசலம் முதலியோர் கைவீசுவது போல் கல் வீசினார்கள்... செம்பட்டையான்களான தர்மராசா, தனராசா, ஐவராசா முதலியோர் செம்பட்டையான்களுக்கு தலைமை வகித்தார்கள். அதாவது கல்லெறியும் சொக்காரர்களுக்கு பின்னால் நின்றபடியே, விடாதே.... பிடி" என்று ஊளையிட்டார்கள். "எறிங்கடா.... எறிங்கடா" என்று எரிந்து விழுந்து பேசினார்கள்.
விச்விச் என்ற கல்லெறிச் சத்தம்.... ஏய்... ஏய்' என்ற எக்காளச் சத்தம்... 'எம்மோ எய்யோ' என்ற பெண்களின் ஒப்பாரிச் சத்தம்... தத்தம் பெண்டு பிள்ளைகள் கல்லெறியில் மாட்டிவிடக் கூடாதே என்று அவர்களை இழுத்துப் பிடிக்க அங்குமிங்குமாக ஒடும் பெரியவர்களின் காலடிச் சத்தம்... இருதரப்பிலும் கல்லெறியில் விழுந்து கொண்டிருந்தவர்களின் அவலச் சத்தம்.... எங்கெல்லாமோ ஓடிக் கொண்டிருந்த நாய்களின் ஊளைச் சத்தம்... அங்குமிங்கும் அலைந்த பூனைகளின் மியாவ் மியாவ் சத்தம்... எங்குமே ஓட முடியாமல் தவித்த கட்டிப்போட்ட ஆடுகளின் மே... மே' சத்தம்... இங்கே நாட்டு வக்கீல்
குப்புற விழுந்தான். அங்கே காஞ்சான் மல்லாந்து கிடந்தார். விழுந்தவர்களைச் சுற்றி எம்மாடி... எம்மாடி' என்ற அவசரச் சத்தம்.
இறுதியில் ஆட்கள் அற்றுப்போய், கற்கள் சுயமாக எழுந்து ஒன்றுடன் ஒன்று மோதுவது போன்ற நிலைமை. கல்லெறிக்காரர்கள் குழிகளில் பதுங்கி, சுவர்களில் மறைந்து, மரங்களில் சாய்ந்து கற்களை மட்டுமே வீசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கல், பித்துப் பிடித்துப் போய் நின்ற பழனிச்சாமியின் தலைக்கு மேல் ஒரு அங்குல இடைவெளியில் பறந்தது. இன்னொரு கல், சொக்காரன்களை சமாதானப்படுத்திய எலி டாக்டர் முதுகைப் பிய்த்து அவரை வீழ்த்தியது. காத்துக் கருப்பன்களில் முக்கால்வாசிப் பேர் கரும் பட்டையான்களுக்கு கைகொடுப்பது போல் கல் தொடுத்தார்கள்.
இதற்குள் ஊர் கூட்டம் கும்பலாகியது. கல்லெறிந்த கரும்பட்டையான் செம்பட்டையான் கைகளை வளைத்துப் பிடித்து, கற்களைக் கீழே போடச் செய்தது. இன்னும் கல் வீசிக் கொண்டிருந்த செம்பட்டையான்களை நோக்கி படையெடுத்தது. பிடிங்கடா... தேவடியா மவனுவள்' என்று சொன்னபடியே அவர்களை நோக்கி ஓடியது.
கீழே கிடந்தபடியே இந்த விபரீதத்தைக் கண்ட எலி டாக்டர், பாம்புபோல் சுருட்டி வைத்த உடம்பை நெடுஞ்சாண் கிடையில் நீட்டி, ஓடிவந்த கூட்டத்திற்கு முன்னால் படுத்தார். இரு கைகளையும் தலைக்கு செங்குத்தாய் நீட்டி கும்பிட்டார். இதுதான் சாக்கு என்று, அக்கினி ராசா குடும்பத்தைப் பிடிக்காத அதே காத்துக்கருப்பன் வகையறாக்களில் சிலர், முன்னால் ஓடியவர்களைப் பின்னால் பிடித்து இழுத்தார்கள்.
எப்படியோ கல்லெறி ஓய்ந்தது. ஆங்காங்கே விழுந்து கிடந்தவர்களை அவர்களின் பங்காளிகள் சுடலை கோவிலுக்குள்ளும், பழனிச்சாமி வீட்டுக்குள்ளும் தூக்கிப் போனார்கள். எஞ்சியவர்கள்,
இப்போது சொல்லெறியில் ஈடுபட்டார்கள்.
"ஒங்க பொண்ணு கிடக்க முடியாமல் போனால், நாங்க என்னல பண்ணுவோம்..."
"நாங்களும் ஒங்க பொண்ணுல ஒருத்தியக்கூட விட்டு வைக்கப் போறதில்ல..."
"நீங்க இங்க வந்து பேசுங்க பார்க்கோம்.." "நீங்க ஆம்புளைன்னா இங்க வாங்கல..."
"நாங்க ஆம்புளதான்.... இல்லாட்டா ஒங்க குடும்பத்து பெண்ண எங்க குடும்பத்து பய கூட்டிட்டுப் போவானா...”
"தேவடியா மவனை..... சில்லி சில்லியாய் வெட்டுறோம் பாரு..."
இந்த அமளியில் ஊர்க்காரர்கள் அனைவரும், கூட்டங் கூட்டமாய் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு, பழனிச்சாமி வீட்டையும், மௌனமாகப் பார்த்தார்கள்.... கோலவடிவா... பழனிச்சாமி மகள் கோலவடிவா இப்டிப் பண்ணிட்டாள்? இந்தத் திருமல, புஷ்பத்த என்ன பண்ணுனானாம். ஏதோ பண்ணிபுட்டானாம்... ஏடாகோடமாய்... வெளில சொல்ல முடியாதபடி... கோலவடிவு, தானா போயிருக்க மாட்டாள். இந்த அலங்காரி பய மவள் மருந்து மாத்திரை போட்டு அந்தச் சின்னஞ்சிறிச, மயக்கி அனுப்பி இருப்பாள். இல்லாட்டா கோலவடிவா போறவள். சும்மாகிட ஊமை ஊரைக் கெடுக்கும்.... பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
பழனிச்சாமி, இன்னும் பித்தம் தெளியாமலே நின்றார். அவரருகே, அவரது கையைப் பிடித்தபடி நின்ற பாக்கியம், கண்கள் சுருங்க கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கி, அவர் மார்பு வழியாக தலையைக் கீழே இறக்கி, அப்படியே குப்புற விழுந்தாள். பழனிச்சாமியோ, அப்படிப் பார்த்தும், பார்த்தது புரியாத மனோநிலையில் ஆகாயத்தை வெறித்துப் பார்த்தபடியே நின்றார். மாயாண்டியும், காத்துக் கருப்பன் பற்குணமும், பீடி ஏசெண்ட்டும், பாக்கியத்தைச் சுற்றிய கூட்டத்தை விலக்கியபடியே "காத்து வரட்டும்... காத்து வரட்டும்..." என்றார்கள். பேச்சியம்மா, நாலு பேரைக் கீழே தள்ளிப் போட்டுவிட்டு முந்தானையால் பாக்கியத்திற்கு விசிறினாள். பிறகு, இவ்வளவுக்கும் காரணமான அந்த அலங்காரி, பலபட்ரயை... சும்மா விட்டுட்டு நிக்கியளே... நிக்கியளே'ன்னு புலம்பி, அலங்காரி பதுங்கி, பதுங்கி நின்ற திசையைக் காட்டிக் கொடுப்பதுபோல் பார்த்தாள். உடனே, ஒரு. சுவரில் உடம்பைப் போட்டு, அங்குமிங்குமாய் தலையை உருட்டிய அலங்காரியை நோக்கி, மாயாண்டியும், குள்ளக் கத்தரிக்காய் ராமசாமியும் ஓடினார்கள். அதற்குள், பீடி ஏசெண்டு பால்பாண்டி சிற்சில சமயங்களில் அலங்காரியின் சேலையைப் பிடிப்பதுபோல், இவர்களின் வேட்டிகளைப் பற்றிக் கொண்டான்... இனிமேல், அவர்கள் ஓடுவதாக இருந்தால்,
அம்மணமாகத்தான் ஓடவேண்டும்.
பாக்கியத்தின் கைகால்கள் வெட்டின. கண்கள் நிலை குத்தின. வாயில் நுரை வருவது மாதிரி இருந்தது. பழனிச்சாமி கீழே குனிந்து, அவள் தோளைத் தொட்டுத் தூக்கப் போனார். தூக்கப் போனவரும், கீழே விழுந்தார். அவள் தோளில் ஏதேச்சையாய் கைபோட்டபடியே விழுந்தார். ராமசாமி, அவரைத் தூக்கி நிறுத்தினார்..... மாயாண்டியும், இன்னும் சிலரும் பாக்கியத்தைக் கைத்தாங்கலாக வீட்டுக்குள் கொண்டு போனார்கள். "சுக்கு வச்சு ஊதுங்கடா... சுக்கு வச்சு ஊதுங்கடா...'' என்று சாமியாடித் தாத்தா தனக்கே கேட்காத
குரலில் பேசிவிட்டு, பிறகு பழனிச்சாமியின் வீட்டுக்குள் ஓடினார். ஏதோ ஒரு அசரீரி போல முடிவில்லாக் குரல் ஒன்று கர்ஜித்தது.
"இதுக்குல்லாம் காரணம் அலங்காரிதான்... செறுக்கி மவள் கொண்டையை சிறச்சி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, தலையில் மண் மூட்டய ஏத்தி உண்டு இல்லன்னு பாக்கணும்..."
இந்தப் பேச்சு ஊர்க்காதுக்கு கேட்டதோ இல்லையோ, அலங்காரிக்குக் கேட்டது. திடீரென்று, அவள் இன்னும் குன்றிப்போய் நின்ற புஷ்பத்தை நோக்கி ஓடினாள். அவள் கையைப் பிடித்து, திருமலையை விட வேகமாக இழுத்தாள்.... வடமேற்குப் பக்கமாக இழுத்துக் கொண்டே ஓடினாள்.
"என் பின்னால வாழா... ஒன்னை கற்பழிச்ச திருமலை கையில விலங்கு மாட்டி அவன நாயி மாதிரி இழுக்க வைக்கன்னா இல்லியான்னு பாரு....”
--------------
அத்தியாயம்- 28
கோலவடிவு அந்தப் பெரிய வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். துளசிங்கத்துடன் விக்கியில் வந்த பாதி வழியிலேயே மனதை திடப்படுத்தி வைத்திருந்த அவளை, துளசிங்கம் கீழே தள்ளிப்போட்டதன் மூலம் அவள் மனதும் திரவமாக்கி விட்டது உண்மைதான். ஆனாலும் அவ்வப்போது ஜன்னல் வழியாக அவன் எட்டிப் பார்த்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. வீட்டு நினைப்பும் அடிக்கடி வந்தது. அப்போதெல்லாம் பற்களைக் கடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். மனதைக் குழப்பிக் குழப்பி, குழம்பிப் போய், இறுதியில் நம்மால் ஆகக்கூடியது ஏதுமில்லை என்ற ஒரு இயலாமை எண்ணம் வரும்போது, கூடவே வருமே ஒரு பெருந்தூக்கம் - அது அவளையும் ஆக்கிரமித்தது. நீண்ட நெடுந்தூக்கம்.
கோலவடிவைச் சூரியக் கதிர்கள் இப்போது எரிப்பதுபோல் சுட்டன. அப்போது அவள் ஒரு இன்பக் கனவில் ஈடுட்டிருந்தாள். அம்மா, அவள் தலையை வாரி விடுகிறாள். "சனியனுக்கு எவ்வளவு நீள முடி பாரு...." என்ற திருமலையை "டேய் யார் வேணுமுன்னாலும் பேசு.... என் கோலத்த மட்டும் பேசாதே" என்கிறார் அப்பா. அவள் அப்பாவைப் பாசத்தோடு பார்த்துவிட்டு, அண்ணனை பொய் முறைப்பாய் முறைத்துவிட்டு அம்மாவின் மார்பில் அப்படியே சாய்கிறாள். இதுக்குப் பேர்தான் சொர்க்கமோ....
கோலவடிவு வீறிட்டு எழுந்தாள்... "அம்மா.... அம்மா..." என்று கூவியபடியே தூக்கம் கலைந்து எழுந்தாள். பிறகு அந்த சூன்ய அறையை விட்டு சூன்யமாகப் பார்த்தாள்.... இது வெட்டாம்பட்டி வீடு... அம்மா - அப்பாவிடம் இருந்து வெட்டிக் கொண்டு வந்து தங்கியிருக்கும் வீடு.
விரிந்த தலைமுடியை உசுப்பி வைத்துக் கொண்டு, இரண்டு கைகளால் இரண்டு காதுகளையும் மூடி, முன்னங் கைகளை முன்புறமாக மடக்கி வைத்து, செய்வதறியாது பிரமையோடும், பிரமிப்போடும் இருந்த கோலவடிவு, ஒரு சத்தங்கேட்டு திடுக்கிட்டாள். லேசாய் சந்தோஷப்பட்டாள். அலங்காரி அத்தையின் சத்தம்.
கோலவடிவு கதவை உடைப்பது போல் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, அலங்காரி அத்தை முற்றத்தில் நின்றாள்.... அவளருகே புஷ்பம்... பாட்டிக்காரி இருவரையும் ஆச்சரியமாகப் பார்த்தாள். செம்மண் கோலத்தில் அலங்காரி அத்தை ஏன் அப்படி நிற்கிறாள் என்பதோ, புஷ்பம், ஜாக்கெட் பியந்து போய் ஏன் வந்தாள் என்பதோ கோலத்திற்கு அனுமானமாகவில்லை. எதோ இயல்பாக நிற்பது போலவே நினைத்தாள். ஆனால் துளசிங்கமோ சித்தியையும், தங்கையையும் வாயகலப் பார்த்தான். பார்த்தபடியே எழுந்தான். பிறகு அவர்கள் முன்னால் போய் நின்றான்.
"என்ன சித்தி இதுல்லாம்....? இவள் ஏன் இப்டி வந்திருக்காள்... சொல்லு சித்தி.... சொல்லு சித்தி..."
"சொல்லத்தானே வந்திருக்கேன்... ஆதியோட அந்தமாச் சொல்லுறேன்... சொன்னாலும் ஆறாது.... சொல்லியும் மாளாது..."
"என்ன நடந்தது சித்தி.... சொல்லித் தொலை சித்தி..."
அலங்காரி சொல்லத் தொடங்கவில்லை சேலை மடிப்பில் ஒன்றை விலக்கியபடியே திண்ணையில் உட்கார்ந்தாள்.... கலங்கி நின்ற புஷ்பத்தை, கையைப் பிடித்து உட்கார வைத்தாள். திண்ணைத் தூணைப் பிடித்தபடி நின்ற கோலவடிவை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு, அவள் யாரோ எவளோ என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கோலவடிவால் பொறுக்க முடியவில்லை.
"அத்தே .... அத்தே ...” | "அத்த.... இன்னும் சாகாம இருக்கத்தான் செய்யுதேன்..."
அலங்காரி, கோலவடிவைப் பார்க்காமலே பதிலளித்தாள் - ஆனால் உட்கார்ந்திருந்த புஷ்பம் எழுந்தாள்... கோலவடிவை நேருக்கு நேர் பார்த்தபடி பேசினாள்....
"ஒனக்கென்ன....? நீ எடாத எடுப்பு எடுத்து எங்கண்ண ன கடத்திட்டு வந்துட்டே.... ஒனக்கு கொளுப்புப் பிடிச்சா..... நான் என்ன பண்ண முடியும்... இந்த ஜாக்கெட்டப் பாரு... ஒங்கண்ணன் என்னை என்ன பாடு படுத்தியிருக்கான்னு..."
புஷ்பம், பாதி அலங்காரியாலும், பாதி திருமலையாலும், பியக்கப் பட்ட ஜாக்கெட்டைக் கோலவடிவிற்குக் காட்டியபோது, துளசிங்கம் துள்ளி எழுந்தான்.
"குட்டாம்பட்டிக்கு இப்பவே போயி, செறுக்கி மவன என்ன பாடு படுத்துறேன் பாரு... என் தங்கச்சிய அவன் தங்கச்சி மாதிரி நெனச்சிட்டான் பாரு... ஏய் புஷ்பம் நீயாவது சொல்லுழா.."
"நானே சொல்லுதேண்டா... நானே சொல்லுதேன்.... கோழி கூவுறதுக்கு முன்னாலயே நானும் இவளும் சுடலைமாட சாமி கோவிலில் இருந்து நாங்க பாட்டுக்கு பேசிக்கிட்டு வந்தோம்.... கோலவடிவு, இங்க ஓடி வந்தது பழனிச்சாமி வீட்டுக்கு தெரிஞ்சுட்டு.... போலுக்கு - திருமலைப் பயல் ஓடிவந்து என்னை மிதிமிதின்னு மிதிச்சு கீழே தள்ளுனான். இந்த முழுத்த பொம்புளய் பிள்ளய ஜாக்கட்ட பிடிச்சு.... அய்யோ எப்டிச் சொல்லுறதுடா.... எப்டிச் சொல்லுறது.....
அழாதழா புஷ்பம்..."
துளசிங்கம் பொறுமை இன்றி முந்தினான்.
"இதுக்கு மேல நீ எதுவும் சொல்லாண்டாம்... இன்னைக்கு ஒண்ணு அவன் சாகணும்... இல்லன்னா நான் சாகணும்..."
"குறயும் கேளுடா... ஊர்க்கூட்டம் திரண்டுது... அதுக்குள்ள நம்ம ஆளுவளுக்கும் அவங்களுக்கும் ஒரே கல்லெறி... காஞ்சான் மச்சான்
முதுக நிமுத்த முடியாம கிடக்காரு. ஒங்கப்பாவுக்கும் நெத்தில காயம்... துடிச்சிட்டு கிடக்காரு. இதோ பாரு... என் வாய திருமலைப் பய என்ன பாடு படுத்தியிருக்கான்னு...”
"பாட்டி! ஒன் கையால் ஒரு அரிவாளை எடுத்துத்தா..." "முழுசா கேளு துளசிங்கம்... நீ எப்பவுமே அவசரந்தான்."
"நீ என்ன செய்யணுமுன்னு நினைக்கியோ, அதை வட்டியும் முதலுமா நடத்துறதுக்கு சித்தி ஏற்பாடு பண்ணிட்டேன். இவளக் கூட்டிக்கிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன். சுடலை மாடன சும்மா சொல்லப்படாது..... சப்-இன்ஸ்பெக்டர் அய்யா இருந்தாரு. நடந்ததைச் சொன்னேன்... மொதல்ல விரட்டுனாரு.... அப்புறம் நான் துளசிங்கத்தோட சித்தின்னேன்... அவ்வளவுதான்... கடிச்ச பல்ல திறந்தாரு... இதுக்குள்ள நம்ம சினிமாக்காரங்களும் வேன்ல வந்தாங்க..... திருமல வேனை பஞ்சராக்குனதைப் பத்தி புகார் கொடுத்திருக்காங்களாம். அது சம்பந்தமா.... வந்திருக்காங்க... அதுவும் நல்லதாப் போச்சு. ஏற்கனவே போன வருஷம் இந்த சப்-இன்ஸ்பெக்டரும், நம்ம ஊர் தகராறுல கார்ல இருந்துக்கிட்டே யாரையோ விசாரிச்சாராம்.... அப்போ இந்த திருமலை கார்ல இருந்து இறங்கி விசாரிச்சா என்னன்னு கேட்டானாம்... அப்போவே அவனை இவரு நோட்டோ பூட்டோ செய்து வச்சிருக்காராம்... ஏட்டய்யாவ, நான் தனியா கவனிக்கும்போது, தனியா சொன்னாரு..."
"அப்புறம்"
"திருமலையை விலங்கு போட்டு இழுத்துட்டு வாரதுக்கு, சப்-இன்ஸ்பெக்டரு போலீஸை அனுப்பி இருக்காரு... அவசரத்தில இந்த பேச்சியம்மாவை போலீஸ்ல சொல்ல மறந்துட்டேன்... அவள்தான் தலையில் மண்ணள்ளிப் போட்டாள்... இந்நேரம் திருமலை கையிலயும் காலுலயும் விலங்கு ஏறி இருக்கும்."
"செறுக்கி மவனுக்கு நல்லா வேணும்."
கோலவடிவு குமுறிப் போய் நின்றாள். அவர்களிடம் பேசுவதாய் நினைத்து தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.
"அத்தே... எங்கண்ணாவ ஒண்ணும் பண்ணாதிய.... அவசரத்துல ஏதோ பண்ணியிருப்பான்... அதுக்கு என் மேல இருக்கிற பாசம்தான் காரணம்... ஒங்க மேலே இருக்க கோபமுல்ல.... துளசிங்கம் மச்சான், எங்கண்ணாவ அப்டி திட்டாதேயும்.... இனுமே அவன் ஒமக்கு மச்சினன் மச்சினன் கையில் விலங்கு போட்டா ஒமக்கு கால் விலங்கு போட்டதா அர்த்தம்... அய்யோ அண்ணா ... எத்தே .... எங்கப்பா.... எப்டி இருக்கார்...? எம்மா எப்டி இருக்கா....? மச்சான்.... அவன் தங்கச்சி மாதிரி.... என் தங்கச்சிய நெனச்சிட்டான்னு... சொல்லிட்டீரே.... சொல்லிட்டீரே... இதுக்கு மேலயும் நான் உயிரோட இருக்கணுமா...?
கோலவடிவு, பேசப்போனதை பேசமுடியாமல், உள்வாங்கினாள்... தலை, தனியாய் பிய்ந்து பம்பரமாய் சுழன்றது போல் இருந்தது... ஆகக்கூடியது ஏதுமில்லை என்பதுபோல், கைகளை விரித்தாள்.... இதற்குள் புஷ்பம் மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்ததை ஒப்பித்தாள்.
"பாரு அண்ணா சித்திய ... திருமலை என்னைக் கற்பழிச்சுட்டான்னு போலீஸ்ல சொல்லிட்டாள்.... அந்தப் பன்னாடைப் பயலுவளும் எதையோ சோடிச்சு எழுதி... என்கிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க.... அவரு என் கையைத்தான் பிடிச்சு இழுத்தாரு... அதுவும் கோபத்துலதான்... வேற அர்த்தத்துல அவரு பிடிக்கல..."
அலங்காரி கற்பழிப்புக்கு விளக்கமளித்தாள்.
"இவ்வளவு நடந்த பிறவும் அவராம்... அவரு... ஒனக்கு மூள இருக்குதா... புஷ்பம்! கையைப் பிடிக்கது கற்பழிச்சது மாதிரிதான். நாம்... தமிழ்நாட்டுல இருக்கவங்க..... மறந்துடாத"
"ஆனாலும் சித்தி நீ நடக்காததை நடந்ததாச் சொல்லியிருக்கக் கூடாது.... கடைசியில் புஷ்பத்திற்குத்தான் அசிங்கம்..."
"நான் என்ன இழவப்பா கண்டேன் அப்பிடிச் சொன்னாத்தான் திருமலையை விலங்கு போட்டு கொண்டு வர முடியுமுன்னு ஏட்டய்யா சொன்னாரு... சரி... நான் தான் சொன்னேன்.... இவள் ஏன் கையெழுத்துப் போடணும்..."
"நான் என்னத்தைக் கண்டேன் ..... கிறுக்கல் கிறுக்கலாய் எழுதியிருந்தாங்க..... படிக்கதுக்கு முன்னாலயே அவங்களும் அவசரப்படுத்தினாங்க. சிச்தியும் அவசரப்படுத்துனாள். கையெழுத்துப் போட்ட பிறகு கற்பழிப்புன்னு சொல்லுதாங்க..."
"என்ன சித்தி இப்படிச் செய்துட்டே...."
"என்ன இழவோ செய்துட்டேன்.... இனும் என்ன செய்யச் சொல்லுற அப்புறம் சப்-இன்ஸ்பெக்டரு ஒன்னை கையோட கூட்டிட்டு வரச் சொன்னாரு... புஷ்பமும் வரணுமாம்."
"அவங்க பார்வையே சரியில்ல.. நான் போக மாட்டேன் "
"அண்ணாச்சி இருக்கும் போது எதுக்கும்மா கவலப்படுற....? எல்லாப் போலீசும் இவன் கைக்குள்ள அடக்கம்... இல்லியாடா துளசிங்கம்..."
துளசிங்கம் எதுவும் பேசவில்லை. வீட்டுக்குள் போய் டைட் பேண்ட்டை அவசர அவசரமாகப் போட்டான். அதுவரைக்கும் வெளியே காத்திருந்த கோலவடிவு உள்ளே போனாள். அந்தக் குழப்பத்திலும், அவளுள் ஒரு தெளிவு ஏற்பட்டது... போலீஸில் நடந்ததைச் சொல்லி அண்ணனை, மச்சானே மீட்டினால் அண்ணாவுக்குக் கோபம் தணியும். அப்புறம் அவனைச் சாட்சியாய் வச்சே ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக்கிட்டு ஊருக்குப் போகலாம். அம்மாவப் பாக்கணும்... இப்பவே பாக்கணும்...”
கோலவடிவு, துளசிங்கத்தை நெருங்கினாள். அவ்வளவு பேசிய அவனிடம் பேசவே தோன்றவில்லை. ஆனால் பேசித்தானே ஆகவேண்டும்....
“நானும் வாரேன் மச்சான்...” "எங்க வார?"
"ஒங்க கூடத்தான், நானும் வரப்போறேன் மச்சான். நடந்த விஷயத்த போலீஸ்ல சொல்லுவோம். அப்புறம்.... அண்ணாவோடயே ரிஜிஸ்டர் ஆபிசுக்குப் போவோம். புஷ்பம் அண்ணிய எங்கண்ணாவுக்கு கட்டி வச்சுடலாம்.... மொதல்ல போலீஸ்.... ரெண்டாவது ரிஜிஸ்டர் ஆபீஸ்... மூணாவது ஊர்... திருமலை-புஷ்பம் கல்யாணம்... எல்லாத்தையும் நல்லவிதமா முடிச்சுடலாம்... சரிதானே மச்சான்.."
"அப்பன் கோவணத்தோட கிடந்தானாம்..... மகன் 'இழுத்து மூடப்பான்'னு சொன்னானாம்... என் தங்கையை ஒண்ணன் தேவடியா மவன் ... சீரழிச்சிருக்கான்... அப்பா கல்லெறிக் காயத்தோட துடிக்காராம்... ஒனக்கு இந்தச் சமயத்துல கல்யாணம் கேட்காக்கும்... கல்யாணம்... பேசாம இங்கேயே கிட... இல்லன்னா எங்கேயாவது போய்த்தொலை..."
துளசிங்கம் அவளைப் பாராமலே வெளியே வந்தான். எதுவுமே பிடிபடாமல் நின்ற பகவதி பாட்டி "ஏய் ஒருத்திய தொடப்படாது. தொட்டா விடப்படாதுடா" என்றாள் - பேரனின் சட்டைக் காலரை பிடித்தபடி... துளசிங்கம், கோலவடிவைப் பார்த்தபடி பாட்டிக்குப் பதிலளித்தான்....
"நீயே அவள் கட்டிக்கிட்டு அழு... இப்போ எனக்கு அதைவிட வேற வேல இருக்கு.... எழுந்திரு சித்தி ... எழுந்திரு புஷ்பம்.... இன்னையோட அவங்க குளோஸ்."
துளசிங்கம், புஷ்பத்தோடும் அலங்காரியோடும் வெளியேறினான். புஷ்பமாவது கோலவடிவை பாசமாகப் பார்த்து விட்டு, பிறகு தானே பாவப்பட்டவள் போல் போனாள். அலங்காரியோ அவளைத் திரும்பியே பார்க்கவில்லை.
கோலவடிவு, குற்றுயிரும் குறையுயிருமாய் துடித்தாள்.
-------------
அத்தியாயம்- 29
சட்டாம், வெட்டாம், குட்டாம்பட்டிகள் போன்ற பல பட்டிகளுக்கு ஆதிபத்திய உரிமை கொண்ட அந்தக் காவல் நிலைய லாக்கப்பிற்குள் ஏழெட்டுப் பேர்கள் நின்றார்கள். கால்மணி நேரத்திற்கு முன்பு வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போது எதிரே சுவரோடு சுவராக நின்றவனை சுதாரித்துப் பார்த்தார்கள். எத்தன கொலை செய்தானோ.... இல்லன்னா இப்டியா....
காவல் நிலைய வாசல் முகப்பில் துப்பாக்கி பிடித்து நின்ற இரண்டு காவலர்களில் ஒருவர் லைட்டரைத் தூக்கி, துப்பாக்கி சுடுவது போல் சுட்டு, சிகரெட்டைக் கொளுத்த, இன்னொருத்தர் அதே வளாகத்தில் கூடிக்கூடி நின்ற கூட்டங்களில் ஒன்றை நோக்கி டா' போட்டும் டி' போட்டும் கூப்பிட்டார். லாக்கப் அறைக்கு அடுத்த அறையில் நகரங்களில் இருப்பதுபோல், போக்குவரத்து, சட்டம், ஒழுங்கு, குற்றம், புலனாய்வு என்று தனித்தனி சப்-இன்ஸ் பெக்டர்கள் இல்லாமல், எல்லாமே சர்வமயமான சப்-இன்ஸ்பெக்டர் நடுத்தரம். கல்லூரியில் ரேக்கிங் செய்த அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது. டெலிபோனில் அரசினர் சுற்றுலா மாளிகை அலுவலரை விரட்டிக் கொண்டிருந்தார். “எத்தனை தடவப்பா சொல்றது..... எஸ்.பி. கேம்ப் வாரார்.... வாரார்னு.... நோ.... நோ.... நாலு ரூமையும் பூட்டி வை.... புள்ளி விவகார அதிகாரிக்கு ரிசர்வ் செய்திருக்கா.....? இடமில்லன்னு சொல்லிடு.... ஆமா.... நாலு ரூம்ல ஒண்ணக்கூட திறக்கப்படாது..... அப்புறம் பின்னாடி என் மேல் வருத்தப்பட்டு பிரயோசனமில்ல... சுற்றுலா மாளிகையில் என்னெல்லாம் நடக்குன்னு எனக்குத் தெரியும்.
ஒன்னால்.... முடியுமா.... முடியாதா.... ஆங்..... அப்படி வழிக்கு வா..."
ஆகமொத்தத்தில், அந்த நிலையம் காவல் நிலையமாகத் தெரியவில்லை , காவலர் நிலையமாகவே தெரிந்தது... சப் இன்ஸ்பெக்டர் சுவரில் சாய்ந்து கிடந்த திருமலையை, எஸ்.பி. வருகையின் அவசரத்தையும் மீறி, நிதானமாக, இளக்காரமாக ஏடாகூடமாக, ஏளனமாகப் பார்த்தார். அவன் அருகே போய் நின்றபடியே போர்ப்பரணி பாடினார்.
"சப்-இன்ஸ்பெக்டர் எப்படிப்பட்டவர்னு இப்பவாது புரியுதுதாடா...? தேவடியா மவனே..... பாஸ்டர்ட்... என்ன சொன்னே சப் இன்ஸ் பெக்டர்னா காரை விட்டு இறங்கப்படாதோ.... இன்னொரு தடவ சொல்லுடா.... பார்க்கலாம்... போலீஸ் ஒன் மாமன் மச்சான் மாதிரி நெனச்சிட்டே.... இல்லே...'
சப்-இன்ஸ்பெக்டர் பூட்ஸ் காலால் திருமலையின் பாதத்தைத் தட்டிவிட்டார். அவனோ செத்துப் போனவன் போல் சுவரில் கிடந்தான். அந்த நிலையத்திற்கு உள்ளே, இரண்டு சுவர்களுக்கு இடையே உள்ள ஒடுகலான வழியில், முதல் சுவரில் அமைக்கப்பட்ட கொக்கிகளில் அவன் கைவிலங்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
குப்புறச் சாய்ந்து கிடந்த திருமலை முகத்தை மட்டும் அங்குமிங்குமாக அசைத்தான்.... உடம்பை அசைக்க இயலாது.... சுவருக்குச் சுவராகி விட்டான். அந்தச் சுவர் விழாமல் இருப்பதற்கான அணைப்புக்கல் மாதிரி நிறுத்தி வைக்கப்பட்டான். பயங்கரக் குற்றவாளிகளுக்காக விசேஷமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப் படவேண்டிய அந்தச் சுவர் கொக்கிகள், அவன் கைகளை விலங்கோடு சேர்த்து இழுத்துப் பிடித்தன. அவனுக்குக் கை வலித்தது. நீட்டிய கையைச் சுருக்கப் போனால், சுவர்க் கொக்கிகள் சுண்டி இழுத்தன. சுவரிலே முகம் போட்டுப் போட்டு மூச்சு முட்டியது. முகத்தைத் திருப்பலாம் என்றால், சுவர் மோவாயை இடித்தது. அவன் முட்டிக்கால்களின் பின்பகுதிகளில் லத்திக் குத்துக்கள் முத்திரை போட்டிருந்தன. அவற்றில் பூட்ஸ் காலின் அடையாளங்கள் செம்மண் நிறத்தில் தெரிந்தன.
சப்-இன்ஸ்பெக்டர் வெளியே ஒரு வேன் வந்து நிற்பதைப் பார்த்துவிட்டு, தனது அறையில் கம்பீரமாக உட்கார்ந்தார். இன்னும் வேன்காரர்கள் ஏன் தன்னிடம் வரவில்லை என்பது மாதிரி முகத்தைச் கழித்தார்... வாரவன் நேரா வரக்கூடாது? ரைட்டர்கிட்ட என்ன பேச்சு... நானிருக்கையில்...'
ஏழெட்டுப் பேர், சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்றார்கள் துளசிங்கம், தனது சகாக்களையும் அலங்காரி சித்தியையும் பிரமிக்கச் செய்வதற்காக, "ஆளே இளச்சீட்டிங்களே ஸார்" என்றான் - சர்வசாதாரணமாக. இதைப் புரிந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சுள்ளென்று விழுந்தார்.
"யோவ் துளசிங்கம்... நீயும் போலீஸ்.... மாமா மச்சானா நெனச்சிட்டே - இல்ல.. ஒன் சிஸ்டர் கற்பழிக்கப்பட்டிருக்காள்.. அவளை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பணும். எங்கேயா போயிட்டாள்? இந்தாம்மா.... ஒன் பேரு என்ன?"
"அலங்காரி.... எசமான்."
"ஏய் அலங்காரி... ஒன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டே.... கற்பழிக்கப்பட்ட பொண்ண எங்கே கடத்திட்டுப் போனே. அவள் வந்த பிறகுதான்... நீ போக முடியும்.”
"வருவாள் சாமி... வருவாள்... கற்பழிச்சவனையே நீங்க இன்னும் பிடிக்கல.”
"யோவ்.... இந்த பொம்புளைக்கு கண்ணு குருடா..."
துளசிங்கம், தனக்கும் கண் குருடு என்பதுபோல் புரியாமல் விழித்தான். சப்- இன்ஸ்பெக்டர் திருமலையைப் பார்த்துக் கண்ணடித்துக் காண்பித்தார். பிறகு அவர்களிடம் அப்படி நடந்து கொள்வது கௌரவக் குறைச்சலாக்கும் என்று ஒரு எண்ணம் திடீரென்னு ஏற்பட, அவர் உடம்பை விறைத்து, முகத்தை
முறைப்பாக்கினார்.
எல்லோரும் சுவரில் கட்டப்பட்ட திருமலையையே பார்த்தார்கள். வேன்கார சினிமாக்காரர்களுக்கு அது கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தாலும், அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. 'வேன் டயர்களை பஞ்சராக்கி, மூணு கிலோமீட்டர் தூரத்துக்கு வேனைத் தள்ள வைத்த கிராமத்து எக்ஸ்டிராப் பயல்.... ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு நாள் வீதம் கிடக்கட்டும். சினிமாக் காமிரா கொண்டு வராமப் போயிட்டோமே... இதையே ஒரு குளோஷப்பாய் ஷாட் எடுத்தால் எந்த தயாரிப்பாளர் கிட்டேயும் வித்துடலாம்...'
துளசிங்கம் முகத்தில் எந்தவிதச் சலனமும் காட்டாமல் திருமலையை யந்திர ரீதியில் பார்த்தான். லேசாகத் தலையை மட்டும் அங்கும் இங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டான். அப்புறம் சப்-இன்ஸ்பெக்டரை நன்றியோடு பார்த்தான். அலங்காரிதான், அவன் முன்னால் போய் நின்று பார்த்தாள். பிறகு, "இந்தக் காலுதானே உதச்சது" என்று திருமலைக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு, சப்-இன்ஸ்பெக்டர் அறைக்கு வந்தாள். அவர் அனைவரையும் அறையப் போவதுபோல் அதட்டினார்.
"கடுமையான குற்றம் செய்கிறவங்களத்தான். அதாவது - சீரியஸ் அபென்ஸ் செய்கிறவங்களத்தான்... இப்டி சுவர்ல போடுவோம்.... ஒங்களுக்குத் தெரியுமோ என்னமோ... ஒங்க கம்ப்ளயிண்ட் சீரியஸ்.... ரேப் சார்ஜ். டெட்லி சீரியஸ்... ஒன் சிஸ்டா மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பணும்... சீக்கிரமா கூட்டிவா..."
"ஸார் வந்து"
"யோவ் கூட்டி வாரியா இல்ல...? நானே கூட்டிட்டு வரணுமா... கூடக் கூடப் பேசுனே... எனக்குக் கோபம் வரும்..."
"சும்மா இருடா துளசிங்கம்... நான் போயி என் மவள கூட்டிட்டு வாறேன்."
அலங்காரி, திருமலையை அடிக்காத குறையாகக் கடந்து வெளியே போனாள். போலீஸ் கட்டிடத்திற்கு வெளியே, ஒரு ஓரமாக நின்ற புஷ்பத்தை இழுத்தாள். அவள் அங்கிழுக்க, இவள் இங்கிழுக்க, இறுதியில் வாயில் காவலர் அதட்ட, புஷ்பம் சுயமாகவே உள்ளே வந்தாள். திடீரென்று பழக்கப்பட்ட ஒரு குரல் கேட்டு நிமிர்ந்தாள். திருமலை குலுங்கிக் குலுங்கி அழுதான்... சுவரிலே இருந்து கையைப் பிய்ப்பது போல், முன்னாலும் பின்னாலும் தலையை ஆட்டி ஆட்டி சுவரில் முட்டினான்... ஒவ்வொரு சொல்லாகச் சொல்லி அந்த ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே அழுதழுது சொல்லி முடித்தான்....
"புஷ்பம்.... நானா ஒன்னைக் கற்பழிச்சேன்... புஷ்பம்... எனக்கு காப்பு மாட்டுனதுகூட பெரிசில்ல புஷ்பம்... ஒன்னை கற்பழிச்சேன்னு பழி போடுதாங்க பாரு... அதை நெனச்சாத்தான்.."
புஷ்பம், அவன் நின்ற கோலத்தைப் பார்த்து நிலையிழந்து நின்றாள். மனதுக்குள் யாரோ சூடு போடுவது போலிருந்தது.... குலுங்கிக் குலுங்கி அழும் திருமலையைப் பரிதாபமாகப் பார்த்தபடியே விம்மிவிம்மி அழுதாள். உடனே அலங்காரி, அவளைக் கைத் தாங்கலாய் அணைத்தபடி, சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் ஆஜர் படுத்தினாள். இன்னும் அந்த சப்பைப் பார்க்காமல் திருமலையையே பார்த்த புஷ்பத்தின் முகத்தை, அலங்காரி சப்-இன்ஸ்பெக்டர் பக்கமாக திருப்பிவிட்டாள். புஷ்பம் மீண்டும் மாங்கு மாங்கென்று அழுதாள்... வழியில் பார்க்கும் போதெல்லாம் “என்ன பிள்ள இப்டி வெட்கப்படுறே" என்று எந்த சூதும் இல்லாமல் பேசுன மனுஷன்... ஏதோ கோபத்துல அப்டி நடந்திட்டாரு. அதுக்காவ இப்டியா.... இப்டியா.... மாட்டக்கூட இப்டி கட்டமாட்டாவளே.... கூண்டுல கிளியக்கூட இப்டி அடைக்க மாட்டாவளே..."
கட்டுப்படுத்த முடியாமல் அழுத புஷ்பம் ஏதோ பேசப் போனாள். அலங்காரி அவள் வாயைப் பொத்தியபடியே முறையிட்டாள்.
"பாருங்க எசமான்... என் மச்சான் மவள அந்தப் பய என்ன பாடுபடுத்தி இருக்கான்னு.... எப்டி அழுவுறாள் பாருங்க...."
சப்-இன்ஸ்பெக்டர், புஷ்பத்தைப் பார்த்தார். அவள் பிய்ந்த ஜாக்கெட்டைப் பார்த்தார். பார்த்தபடியே சிகரெட்டைப் பற்ற வைத்தார். அந்த பார்வையைப் பார்த்த துளசிங்கம் பயந்துவிட்டான் பம்மியபடியே பயபக்தியோடு பேசினான்.....
"ஸார் தப்பா நெனக்கப்படாது. நாம கொஞ்சம் வெளில போய்..." "சரி நீங்க மொதல்ல போங்க... நான் வாறேன்..."
துளசிங்கம், புஷ்பம், அலங்காரி முன் நடக்க, சினிமாப் பயல்கள் பின் நடக்க, திருமலையைக் கடந்து போன போது, அந்தச் சுவர்க்
கைதி வீமனைப் போல் சபதமிட்டான்.
"ஜெயிச்சுட்டோம்னு நெனக்காதடா... துளசிங்கம்... ஒன் மார்பப் பிளந்து ரத்தம் குடிக்காட்டா என் பேரு திருமலை இல்ல... போலீஸ் அடிச்ச ஒவ்வொரு அடிக்கும் ஒன்னை ஒவ்வொரு வெட்டா வெட்டாட்டா நான் பழனிச்சாமி மகன் இல்ல.... இது எனக்குப் பெரிசில்லடா... என் தங்கச்சிய இழுத்துட்டுப் போனியே... அதுக்கு நீ ரத்தத்தால் பதில் சொல்லித்தான் ஆகணும்.... ஏய்.... அலங்காரி செறுக்கி..."
சப்-இன்ஸ்பெக்டர் ஓடிவந்து அவன் விலாவில் குத்தினார். பிடறித் தலையைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டே, அவன் முன் தலையை சுவரிலே மோதவிட்டார். அவருக்கு அடித்த களைப்பு ஏற்பட்டு விடக்கூடாதே என்று இரண்டு காவலர்கள் ஒத்தாசைக்கு வந்தார்கள். திருமலையைக் கவனிக்கும்படி அவர்களுக்கு கண்காட்டிவிட்டு சப்-இன்ஸ்பெக்டர் வெளியே வந்து, துளசிங்கக் கூட்டத்தின் மையம் போல் நடுவில் வந்து நின்றார்.
"இந்தாம்மா.... புஷ்பம்... வேன்ல ஏறு... மருத்துவ பரிசோதனை செய்துட்டு வர்லாம்.."
"ஸார்.. கோபப்படாம கேட்கணும்... எங்க சித்தி புத்தியில்லாதவள். தெரியாத்தனமாக சொல்லிட்டாள்.... அவன் ஒண்ணும் என் சிஸ்டா கற்பழிக்கல ஸார்..."
“சும்மா கிட துளசிங்கம்... கற்பழிக்க முயற்சி செய்தால் அதுவும் குற்றந்தான்."
சப்-இன்ஸ்பெக்டர் தன் தவறை உணர்ந்தவர் போல் வாயில் இருந்த சிகரெட்டை வீசிவிட்டு எச்சரித்தார்.
"பால்ஸ் கம்ளெயிண்ட் கொடுத்ததுக்கு ஒங்களயும் இப்போ உள்ளே போடலாம் தெரியுமா?"
"தெரியாம இருப்பனா ஸார்.. இவனையும் விடப்படாது.... என் தங்கச்சி ... பேரும் சந்திக்கு வரப்படாது.... ஏதாவது வழி சொல்லுங்க ஸார்...”
சினிமா மாஸ்டர் குறுக்கே புகுந்தான்.
"இந்தாப்பா துளசிங்கம்..... ஸார் மச்சினிக்கு வளைகாப்பாம்... வீடியோ எடுக்கணுமாம்... ஒங்கிட்டே தானே டேப் இருக்கு... கொடு கொடு... படம் எடுத்துட்டு சீக்கிரமா மெட்ராஸ் போகணும்.... ஷூட்டிங் இருக்குது....."
"வீட்ல இருக்கு... அதனால் என்ன.. இங்கேயே வாங்கித் தாறேன். என் செலவிலேயே எடுங்க மாஸ்டர்.... ஸார்... சீக்கிரமா சொல்லுங்க ஸார்... சிமெண்ட் பாக்கி வசூலுக்கு போகணும்... இப்போ கையில ஐயாயிரம் ரூபாய் வசூல் பணம் இருக்குது.... இன்னும் ஐயாயிரம் வசூலாகணும். ஆனாலும் இப்ப ஐயாயிரம் புது நோட்டா இருக்குது. சீக்கிரமா சொல்லுங்க... ஸார்... ஏதோ முன்ன பின்ன பழகாதவன்கிட்டே பேசுறது மாதிரி பேசாதீங்க ஸார்... நீங்க... எந்த ஸ்டேஷன் போனாலும் நான் உங்க ஆளு ஸார்."
"சரி. ரேப் கம்ளெயிண்ட் இருந்தால்தான் திருமலைப் பயல அப்படி வைக்க முடியும். எஸ்பி. வந்துட்டுப்போறது வரைக்கும் கம்ளெயிண்ட் லெட்டர் இருக்கட்டும். இருக்கணும்... அப்புறம் பார்த்துக்கலாம்.... பரவாயில்லியே.... காலையிலேயே ஐயாயிரம் ரூபாய் வசூலிச்சிட்டியே..."
அலங்காரி, சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்றாள். பின்னால் கிடந்த தலைமுடியை முன்னால் போட்டுக் கொண்டே, முத்தம் கொடுக்கப் போவதுபோல் உதடுகளைக் குவித்தாள்... மயக்கப் போவதுபோல் அவரைச் சாய்த்துப் பார்த்தாள். பிறகு, பின்னலை எடுத்து மார்பில் செல்லமாய் அடித்தபடியே கொஞ்சுவது போல் பேசினாள்....
"வசூலிக்காட்டாலும் என் மகன் வீட்ல இருந்து எடுத்துட்டு வந்திருப்பான். மாதச் சம்பளக்காரங்க கஷ்டம் அவனுக்கு நல்லாவே தெரியும்... அப்புறம் எசமான்... இந்த திருமலைப் பயல் எப்படி மிரட்டுறான் பார்த்தியளா... இவன வெளில் விட்டால் எங்களால ஊர்ல உயிரோட லாந்த முடியாது... இவன்கிட்டயும் இவன் அப்பன் பழனிச்சாமி, சித்தப்பன், மாயாண்டி, பேச்சியம்மா இவங்ககிட்டவும்
எழுதி வாங்கணும்... நீங்க கூப்புட்டாவது விசாரிக்கணும்..."
"விசாரிக்கேன்... விசாரிக்கேன்... யோவ் துளசி... சிமெண்ட் பணம் மீதி ஐயாயிரமும் வசூலாயிடுமா... இன்னைக்குள்ளேயே..."
"அந்தக் கவல வேண்டாம் ஸார்... நான் எது சொன்னாலும் யோசிச்சு சொல்லுறவன்... அப்புறம் ஸார்... எங்க சுடலமாடன் கோவில் கொடைய கரும்பட்டையான் கூட்டம் தடுக்காம இருக்கணும்... எதுவும் ஏடாகூடமாய் செய்துடுவாங்களோன்னு பயமாய் இருக்குது...''
"கவலப்படாத... டி.எஸ்.பி. கிட்ட பேசிட்டு, ஆயுதப் போலீஸயே அனுப்பி வைக்கேன்.... குரூப் கிளாஸ் ஏற்படாம தடுக்கணுமுன்னு நான் சொல்றதை அவரு தடுக்கமாட்டாரு... தட்ட முடியாது..... இந்த மாதிரி சித்தி கிடச்சது ஒன்னோட லக்குய்யா..."
"இல்ல நீங்க எங்களுக்கு கிடச்சதுதான் லக்கு... அப்புறம் எசமான்... ஊர்ல நாங்க உயிரோட லாந்தணுமுன்னா..."
"யோவ் முனுசாமி உடனடியாய் போய், பழனிச்சாமி.. மாயாண்டி." "பேச்சியம்மாவும் எசமான்...''
"ஆமா , பேச்சியம்மாவையும் கையோட கூட்டிவா.... எதுக்கும் விலங்கு எடுத்துட்டுப் போ..."
---------------
அத்தியாயம்- 30
சட்டாம்பட்டி சந்து பொந்துக்கள் கூடச் சத்தமிட்டன.
ஊர்ப் பொதுக் கிணறுகளில் தோண்டிப் பட்டைகள் மூலம் தண்ணீ ர் பிடித்த பெண்கள் மத்தியில், கோலவடிவுப் பேச்சு..... ஒரு சிலரின் தோண்டிப் பட்டைகள் பேச்சுக் கவனத்தில் தொழில் வேகம் போய் மூலப்படியில் மோதிக் கிடந்தன. அவற்றைப் பார்க்காமலே அவர்கள் புஷ்பத்தின் கற்பழிப்பு விவகாரத்தை மனதுக்குள் படம் போட்டுப் பார்த்து வர்ணனை கொடுத்தார்கள்.. ஊராட்சி போட்ட உருப்படாத குழாயடிகளிலும் இதே பேச்சு.... ஆயிரம் சண்டை நடந்தாலும் கரும்பட்டையான் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு வழக்கமாக வரும் செம்பட்டையான்களை இப்போது காணவில்லை... கொஞ்ச நஞ்சமிருந்த கரும்பட்டையான்கள் துளசிங்கத்தையும் அலங்காரியையும் துண்டு போட்டு ஏசினார்கள். செம்பட்டையான் மளிகைக் கடைக்கு வழக்கமாய் வரும் கரும்பட்டையான் பெண்கள் இப்போது தலை கவிழ்ந்தபடியே வேறு கடையை நோக்கி நகர்ந்தார்கள். பள்ளிக்கூடத்தில் மாணவ மாணவியருக்குக் கல்லெறிச் சம்பவம் பேச்சானது... ஆசிரிய ஆசிரியைகளுக்கு அது ஒரு பொருட்டல்ல. கோலவடிவே சிலபஸ்..... துளசிங்கமே பாடம். புஷ்பமே பரீட்சை .
இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டு, பஸ்ரோடு பக்கமாக வந்தால் அந்தச் சாலைக்கு மேற்கே உள்ள ஆசாரிமார் குடியில், பெண்கள் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் அலசினார்கள். கல்வீச்சு இந்தப் பக்கம் வரவில்லை . வரவும் முடியாது.... ஆனாலும் மாட்டுக்கு லாடம் கட்டிய கொல்லாசாரி கலப்பையைத் தண்டிப்பது போலவும் தட்டிக் கொடுப்பது போலவும் அல்லாடிய தச்சாசாரியிடம் பேச்சுக் கொடுத்தார்..... திருமலை புஷ்பத்த ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிட்டானாமே..... இதைத் தாண்டினால் காரைவீட்டார் பகுதி... இங்கே 'நம்ம குடும்பந்தான் நல்ல குடும்பம்...' என்பது மாதிரியான பேச்சுக்கள்.
இப்படி ஊர் எல்லாப் பக்கமும் ஏதோ ஒருவகையில் ஒரு விவகாரத்தையே பல்நோக்காய் பேசினாலும் துளசிங்கம் கடை இருக்கும் பகுதியில்தான் சத்தம், பலத்த கத்தலாகியது.... இதற்கு அருகே உள்ள காத்துக்கருப்பன் குடியிருப்புப் பகுதியில் ரோட்டுப் பக்கமான மைதானத்தில், ஒரே கூட்டம். பற்குணமும், பீடி ஏசெண்டும் துள்ளிக் குதித்தார்கள். சொக்காரர்கள்.... ஆங்காங்கே இடைச் செறுகல் போட்டார்கள்.
"கடைசில.... காத்திருந்தவன் பெண்டாட்டிய நேற்று வந்தவன் கொண்டு போனவன் கதையாப் போயிட்டே..."
"அப்படிப் பாத்தா காத்து இருந்தவன் துளசிங்கம்ட. நேத்து வந்தவன் தான் அக்னிராசா.... பழமொழி தலைகீழாயிட்டு..."
"என்னல ராகம் போட்டு பேசுற..? நம்ம குடும்பத்துக்கு நிச்சயித்த பொண்ண செறுக்கி மவன் கூட்டிட்டுப் போயிட்டான்... அப்படியும் ஒனக்கு கோபம் வராட்டா நீ மனுஷனா?"
"எனக்கும் கோபம் வரத்தான் செய்யுது... துளசிங்கம் மேல மட்டுமில்ல.... ரெண்டு பேருக்கும் இஸ்கு... தொஸ்கு இருக்கது தெரிஞ்சும் அவசர அவசரமாக அந்த கூறு கெட்டவள நம்ம தலையில் போட நெனச்சாரே பழனிச்சாமி.... அவரு மேலயும் கோபம் கோபமா வருது.."
"வெந்த புண்ணுல வேல பாய்ச்சாதப்பா... பாவப்பட்ட மனுஷன்.... மகள் அந்த ஓநாய்ப் பயலுக்கும் மகன போலீஸ் பயல்வ கிட்டயும் பறிகொடுத்துட்டு பரிதவிச்சு நிக்கார்... இரக்கம் இல்லாட்டாலும்
இறக்கிப் பேசப்படாது..."
"திருமலய எப்போ பிடிச்சுட்டுப் போனாவளாம் பற்குணம்..."
"அவன வீட்டுக்குள்ள பூட்டிப் போட்டிருக்கான்.... அப்புறமா அவன் வெளில போகணுமுன்னு கத்துனான்னு கதவ திறந்து விட்டிருக்காவ... திருமலை புளியந்தோப்பு பக்கமா போயிருக்கான்.... அவன் எப்படியும் வருவான்னு கள்ளச் சாராயப் புதருப் பக்கமா நின்ன போலீஸ்காரங்க அப்படியே தூக்கிட்டுப் போயிட்டாங்க... ஊருக்கு வராம பரும்புக் காட்டு வழியா கொண்டு போயிட்டாங்களாம்..."
"ஊர் வழியா ஏன் வர்லியாம்..."
"நீ முன்ன பின்ன போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தால் தெரியும்.... ஆள்பலம் இருக்குற குடும்பத்துல எப்பவும் நேருக்கு நேரா வந்து பிடிக்க மாட்டாங்க... அப்படியே வந்துட்டாலும், சும்மா ஸ்டேஷனுக்கு வாங்கன்னு பூனை மாதிரி பதுங்கிட்டு ஸ்டேஷன்ல போய் புலி மாதிரி பாய்வாங்க... பாவம் அவன் என்ன பாடு படுத்துறாங்களோ... போய் பார்த்துட்டு வருவோமா..."
"அவன் எந்த ஸ்டேஷன்ல இருக்கானோ... போலீஸ்காரங்க... ஒருத்தன் பிடிக்கலன்னா.... அவனப் பிடிச்ச எந்த ரிக்கார்டும் இல்லாம ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷனுக்கு மாத்துவாங்களாம்..."
"சரி.... எந்த ஸ்டேஷன்னுதான் பார்ப்போமே...” "பழனிச்சாமியே சும்மா இருக்காரு... நமக்கென்ன..."
"ஒருவேள திருமல ஊர்ல இருந்தா, கொலகில பண்ணிப்புடுவான். ரெண்டு நாளைக்கு ஸ்டேஷன்லயே இருக்கட்டுன்னு நெனக்காரோ... என்னவோ... என்ன சொல்ற பற்குணம்..."
"அவரு , பாவம் மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம துடிப்பாரு... நாமதான் ஏதாவது செய்யணும்... வாங்கப்பா ஊரத் திரட்டிக்கிட்டுப் போயி போலீஸ்ல கேட்போம்... திருமல ஆத்திரத்துல செய்ததை பெரிசா எடுக்கப்படாதுன்னு சொல்லிப் பார்ப்போம்.... இல்லன்னா வக்கீலப் பிடிச்சு ஜாமீன்ல எடுப்போம்..."
"இப்போ போலீசுக்குப் போயிட்டா அப்புறம் சுடலைமாடன் கொடைய நிறுத்த முடியாது. அதோ பாருங்க..... நம்ம குடும்பமும் கரும்பட்டையான் குடும்பமும் தல தாழ்ந்து நிக்கோம்... செறுக்கி மவனுவ திமிரப் பாருங்களேன்..."
ஒருத்தர் காட்டிய திசையை எல்லோரும் பார்த்தார்கள்.... முதலில் ரசித்தும் பிறகு வெறுத்தும் நோக்கினார்கள்.
ஆசாரிமார்குடி அருகே அறுபது செம்பட்டையான்கள் மேளதாளத்தோடு வந்தார்கள். கெட்டுமேளச் சத்தம் காதைத் துளைத்தது. நாதஸ்வரக்காரர்களும், மேளக்காரர்களும் பின்புறமாய்த் திரும்பித் திரும்பி ஊதிக்கொண்டும் அடித்துக் கொண்டும் நடந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு சாமியாடி உடம்பு முழுக்க சந்தனம் அப்பியிருந்தார். தலையில் ஒரு குடம் - சின்னச் செப்புக் குடம். அதன் வாய் மாதிரியான தலையில் ஒரு தேங்காய். இடையிடையே சாய்த்துச் செருகப்பட்ட மாவிலைகள். அவர் குடம் விழாதபடி உடலைக் குறுக்கிய போது ஐந்தாறு செம்பட்டையான்கள் கழுத்துக்களில் மாலைகளைப் போட்டுக் கொண்டு கையில் பிரம்புகளை வைத்துக்கொண்டு சாமியாட்டம் போட்டார்கள். துள்ளித் துள்ளி... தாவித்தாவி... தொலைவில் இருந்து இதைப் பார்த்த காத்துக் கருப்பன்களால் பொறுக்க முடியவில்லை. பற்குணம் குரல் கொடுத்தார்.
"செறுக்கி மவனுவ... குதிக்கிற குதியைப் பாரு... ரெண்டு குடும்பத்தையும் அவமானப்படுத்திட்டோம் என்கிற திமுறுல குதிக்கானுவ பாரு.... இவனுவள ஆட விடாப்படாதுடா... சுடலமாடன் கோவிலுல பந்தல் இருக்கப்படாதுடா..."
"இவனுவ எங்க போயிடுவானுவ... மொதல்ல திருமலய மீட்டுட்டு வருவோம்..."
"திருமல கிடக்கான். அவன் கடிச்சா தின்னுப்புடுவாங்க... இப்போ அவன் முக்கியம் இல்ல.. நம்மள அவமானப்படுத்துறது மாதிரி ஈவு இரக்கம் இல்லாம ஆடுற இந்தப் பயலுவ இன்னையோட சரியாகணும்... இந்த வருஷம் எந்தக் கோவிலுக்கும் விசேஷம் வேண்டாம். வாங்கடா... ஏலே செறுக்கி மவனுவளா..... வாரோண்டா... வாரோம்..."
காத்துக் கருப்பன்களில் ஒரு சிலர் தவிர ஒவ்வொருவருக்கும் செம்பட்டையான் சாமியாட்டம் சற்று அதிகமாகவே தெரிந்தது. பற்குணம் போட்ட கூச்சலில், ஒவ்வொருத்தரும் தனக்கு வருவதாக இருந்த ஒருத்தியை யாரோ ஒரு எதிரி கடத்திக்கொண்டு போய்விட்டது போலவும், அந்த எதிரியே இப்போது வீட்டுக்கு வந்து மீண்டும் பெண் கேட்டுக் கதவைத் தட்டுவது போலவும் தோன்றியது.... ஒரே கூட்டமாய், சாலை மேட்டுக்கு வந்தார்கள்.... அங்கே இருந்த துளசிங்கம் கடைகளை ஒருசிலர் அடித்து நொறுக்கப் போனார்கள்.... அப்போது பலரும் அவர்களைத் தடுத்து விட்டு கூட்டத்தை சாமியாட்ட செம்பட்டையான் பக்கம் ஏவிவிடப் போனபோது -
வடதிசையில் இருந்து சத்தம் கேட்டது... அந்த சத்தத்திற்கு உருவகமாய் பூமியதிர வேன்கள் வந்தன... முன்னாலும் பின்னாலும் இரண்டு வெள்ளை வேன்கள்... மேக்கப் செய்யப்பட்ட லாரிகள் மாதிரி... இவற்றிற்கு மத்தியில் ஒரு பச்சை நிற வேன்... கடைசியில் ஒரு ஜீப்... காத்துக் கருப்பன்கள், எங்கேயோ போகிற அந்த வண்டிகள் போகட்டும் என்பதுபோல் வழிவிட்டு நின்ற போது, அந்த நான்கு வண்டிகளும் துளசிங்கம் கடை முன்னால் நின்றன. வேனில் இருந்து துளசிங்கமும், சினிமாக்காரர்களும் வெள்ளைக் கூண்டு லாரிகளில் இருந்து போலீஸ்காரர்களும் சொல்லி வைத்தது போல் ஒரே சமயத்தில் குதித்தார்கள்... பாராசூட்டிலிருந்து குதிப்பது போல் குதித்த போலீஸ்காரர்களிடம் சட்டையில் அசோக முத்திரை போட்ட ஒருவர் ஏதோ சொல்ல அவர்கள் தாவிப் பாய்ந்தார்கள்.... கூட்டமாக நின்ற கரும்பட்டையான்களிடையே லத்தியும் கம்புமாய் பாய்ந்து போனார்கள் - ஒருவர் ஜீப்பில் இருந்தபடி கத்தக் கத்த போலீஸ் லத்தி வீச்சில் நான்கைந்து காத்துக் கருப்பன்களுக்கு நல்ல அடி.
"என்னய்யா மொட்டக் கூட்டம் போடுறீங்க..... அவனவன் வீட்டப் பாத்துப் போங்க... இல்லாட்டி முதுகு பிஞ்சிடும்... ஏ மேன் வாயால சொன்னா போக மாட்டீங்களா?"
காத்துக்கருப்பன் கூட்டம் சிதறியது.... தனித்தனியாகப் பிரிந்து வைக்கோல் குவியல்களில் பதுங்கி, வண்டிகளுக்கு பின்னால் மறைந்து நின்று, போலீஸ் மர்மங்களை மர்மமாகப் பார்த்தார்கள்... பற்குணம் பற்களைக் கடித்தபடியே காண்டிராக்டர் தாமோதரன் வீட்டை நோக்கிப் போனார். அவருக்குப் பிடறியில் அடி... அவர் போலீஸையும் எதிர்க்கக்கூடியவர்தான். ஆனால் இப்போது எதிர்த்தால் முதுகு பிய்யும் என்பது தெரிந்த மனிதர்.
இதற்குள் போலீஸ்காரர்கள் பெட்டிக் கடைகளில் பீடி பற்ற வைத்தவர்களை விரட்டினார்கள் - அவர்கள் ஏதோ ஊருக்கு தீ வைக்கப் போவதுபோல்; இந்த பாக்கு எத்தன பைசா என்று கேட்ட ஒருவனை, "என்னடா ஊர் விவகாரத்த பேசுற" என்று சொல்லி அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார்கள்.... இரண்டு போலீஸ் காரர்கள். துளசிங்கம் கடைக்கு முன்னால் பாரா போட்டார்கள்... நான்கைந்து பேர் சாலையோரமாய் இடைவெளி விட்டபடி நின்றார்கள்.
சற்று தொலைவில் வாலிபால் விளையாடிய வாலிபர்கள் பக்கம் பாய்ந்த போலீஸ் கும்பல் ஒன்று வலையை இழுத்துப் போட்டது.... பந்தைத் தூக்கி ஒருவர் மேல் வீசியது.... விளையாட்டுக்காரர்கள் திகைத்து நின்றபோது, 'வீட்டப் பாத்து போங்கடா.." என்ற லத்தி சாட்சியான அதட்டல்கள்... அந்த வாலிபக் கூட்டம் லேசான எதிர்ப்பைக்கூட காட்டாமல் கொத்தடிமைகளாய் கலைந்து போனது. ஒரு போலீஸ் பிரிவை அங்கேயே விட்டுவிட்டு, போலீஸ் ஜீப் தலைமையில் காவலர் வேன்களும், சினிமா வேனும் மீண்டும் ஓடின.... அப்படி ஓடி, செம்பட்டையான் சாமியாடி கூட்டத்தின் முன்னால் போய் நின்றது... அங்கே ஏழெட்டு போலீஸ்காரர்கள் இறங்கி சாமியாடிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பது போல் மேளத்திற்கு முன்னாலும் கூட்டத்திற்கு பின்னாலும் பக்கவாட்டிலும் போய் கூட்டத்தோடு கலக்காமல், சிறிது இடைவெளிவிட்டு நடந்தார்கள்.... ஒரு போலீஸ்காரர், தனித்துவத்தைக் காட்டி தனியாக ஆடிய சாமியாடி ரத்தினத்தை சண்டை போட வந்த சதிகாரனாய் நினைத்து காலில் ஒரு போடு போட்டார்.
போலீஸ் பயத்தில் ஓடப்போன மேளக்காரர்களை இரும்புக்கரம் தடுத்து நிறுத்தின. வாசிக்கப் பயந்து நின்ற நாதஸ்வரக்காரர்களின் வாய்களில் நாதஸ்வர முனைகள் திணிக்கப்பட்டன.... தாறுமாறாக ஆடிய சாமியாடிகள் வரிசைப்படுத்தப்பட்டு லெப்ட் ரைட் போல் ஆடும்படி சொல்லப்பட்டனர்.
மீண்டும் போலீஸ் வண்டிகள் சினிமா வேனின் சிநேகிதத்துடன் ஓடியது... பள்ளிக்கூட மைதானம், ஊர்க்கிணறு, குழாயடிகள், காளியம்மன் கோவில், பழனிச்சாமி வீட்டின் பாதை, சுடலைமாடன் கோவில் முதலிய பல இடங்களில் லத்திக் கம்புக்காரர்கள் குதித்துக் குதித்து இறங்கினார்கள்.... ஆங்காங்கே மண்வெட்டிகளை வைத்துக் கொண்டு வயல் வரப்புகளுக்குப் போகப் போனவர்களைக் கூட ஆயுதத்தை எடுத்துக்கிட்டா நிற்கீங்க' என்று அதட்டினார்கள்.... போலீஸ் என்றால் பயம் வரவேண்டும் என்ற தத்துவார்த்த நோக்கத்துடன் வழியில் சிக்கியவர்களை அடித்தார்கள்.... வயதானவர் களை அதட்டினார்கள்... வழக்கம்போல் தேநீர் கடைகளில் உட்கார்ந்தவர்களை அதட்டி அப்புறப் படுத்தினார்கள். அந்த இடங்களில் உட்கார்ந்து கொண்டார்கள்... கிணறுகளில் தண்ணீர் எடுத்த பெண்கள் பாதிக் குடங்களோடு ஓடினார்கள்.
அரை மணி நேரத்திற்குள் எதிர்பாராதது நடந்து விட்டது. ஊரே போலீஸ்மயமாகிவிட்டது... அந்த ஊருக்கு முன்பும் போலீஸ் வந்திருக்கிறது. மாமூலாக வந்து மாமூலாகப் போயிருக்கிறது. ஆனால் இப்படிப் பெரிய எடுப்பில் வந்ததில்லை... இப்படி கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்ததில்லை. தராதரம் தெரியாமல் நடந்ததில்லை. இன்றோ லத்திக் கம்பு இருக்கு என்பதற்காகவே அடிக்கிறார்கள்.
ஊர் மக்கள் அனைவரும் இப்போது தனிப்படுத்தப்பட்டு தனித்தனி மனிதர்கள் போல் தவித்தார்கள். போலீஸ் வரக் காரணம் என்ன என்றுகூட பேச முடியவில்லை . ஒருத்தர் நின்றால் திட்டு.... இருவர் நின்றால் மிரட்டல்... மூவர் நின்றால் அடி....
அந்த ஊர் பகுதி பகுதியாக, தெருத் தெருவாக விடுபடாத பயத்தில் மூழ்கியது. ஒவ்வொரு தெருவிலும் நான்கைந்து போலீஸ் காரர்கள். வேட்டியை மடித்துக் கொண்டு கூட நடக்க முடியவில்லை. குழந்தைகள் அழுதால் கூட போலீஸ்காரர்கள் என்ன சத்தம்' என்று உள்ளே வந்து அதட்டினார்கள்.... மாட்டுக்கு வைக்கோல் எடுக்க வெளியே வந்த ஒருவர் போலீஸ் முறைத்த முறைப்பில் உள்ளே ஓடிவிட்டார்... பள்ளிக்கூடத்திலிருந்து வரும் நான்கைந்து பயல்கள், போலீஸ்காரர் இருவர் பார்த்த பார்வையில் திரும்பித் திரும்பி பார்த்தபடியே எங்கிருந்து விடுதலை உணர்வோடு வந்தார்களோ அங்கேயே ஓடினார்கள்.... ஆக மொத்தத்தில் அந்த ஊரே போலீஸ் வலைக்குள் சுருட்டி வைக்கப்பட்டது போன்ற காட்சி.
போலீஸ் வண்டிகள் ஊர் முழுக்க சர்க்கஸ் அடித்தபோது, சினிமா வேன் எலி டாக்டர் வீட்டுக்கு வந்தது.... அதற்குள்ளும் நான்கைந்து போலீஸ்காரர்கள்... தொப்பி தெரியாமல் இருந்தார்கள்... அந்த வேனில் இருந்து துளசிங்கம் இறங்கியபோது, அலங்காரி, 'என் ராசா... நீதாண்டா சமர்த்தன்' என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்... துளசிங்கம் சினிமாக்காரர்களை இறங்கும்படி சைகை செய்தான்... ஆனால் அவர்கள் இறங்கவில்லை டிரைவரை வண்டியை எடுக்கும்படி அவர் முதுகைப் பிடித்து முன்பக்கமாகத் தள்ளினார்கள்.
சினிமா வேன் பாரந்தது ரஞ்சிதம் தலைமையில் பீடி சுற்றும் பெண்கள் உள்ள முருகன் கோவிலை நோக்கி....
-------------
அத்தியாயம்- 31
அந்த முருகன் கோவில் முகப்பில் எல்லாப் பெண்களும் கொட்டாவி விட்டபடியே பீடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.... மத்தியான வெயில்... மண்டைக்குள் ஊடுறுவியது. ரஞ்சிதம் எதையோ யோசித்தபடி, கைகளை மட்டும் யந்திர ரீதியில் இயக்கிக் கொண்டிருந்தாள்... கோலவடிவு சமாச்சாரத்தைப் பழனிச்சாமியிடமே சொல்லியிருந்தால், இந்த நிலமை வந்திருக்காதே என்ற மனத்தாங்கல் அவளுக்கு ... ஒருத்தர் வீணாகப் போகும் அபாயம் ஏற்படும்போது, அதனைத் தடுப்பதற்கு கௌரவப் பிரச்சினையோ, இழிவுபடுவோம் என்ற எண்ணமோ, இடையில் வரப்படாது என்று நினைப்பவள். இப்படிப்பட்ட கௌரவப் பிரச்சினைகள் பலருடைய கௌரவங்களை சந்திக்குக் கொண்டு வந்து வாழ்க்கையே பாழாக இருப்பதைக் கண்கூடாகப் பார்த்தவள். இப்போது இனிமேல் என்ன செய்யலாம் என்பதுபோல் பீடி இலை ஒன்றைக் குறி வைத்துக் கத்தரியை நீட்டி அந்த இலையை வெட்டாமலே வெறித்துப் பார்த்தாள்.
இந்தச் சமயத்தில் வாடாப்பூ, தலைவிரி கோலமாக ஓடி வந்தாள். ரஞ்சிதத்தின் முன்னால் மூச்சிறைக்க நின்றபடியே கோவிலை அங்குமிங்குமாய் பார்த்தபடியே கேட்டாள். இவள் இரவு தூங்கவில்லை என்பதைக் கண்கள் காட்டின.
"ரஞ்சிதம்... எங்க பேச்சியம்மா சித்தி இங்க வந்தாளா?" "வரல்லியே.. என்ன விஷயம்..." "ஒனக்கு விஷயமே தெரியாதா?"
"கோலவடிவு விஷயமாத்தானே... ரெண்டு பேருமே பெரிய தப்பு பண்ணிட்டோம்..."
"நாம நினைச்சுப் பாக்காத அளவுக்கு ஊர்ல என்னெல்லாமோ நடக்குது... ரஞ்சிதம்."
"விவரமாத்தான் சொல்லேன்..."
"அலங்காரி போலீஸ்ல என்ன சொன்னாளோ...... திருமலை அண்ணாவ போலீஸ்ல அடச்சிட்டாங்க.... இப்போ என்னடான்னா... ரெண்டு லோடு போலீஸ் வந்திருக்கு... மூலைக்கு மூலை... போலீஸா நிக்குது... யாரு வீட்டுக்கு வெளியேயும் ஒரு காக்கா குருவிகூட இல்ல.... எங்க வீட்டுப் பக்கம்கூட போலீஸ் துப்பாக்கியோட நிக்குது."
"அதான பாத்தேன்.... எங்க துளசிங்கம் அண்ணா வீட்ல ஒரு மணி நேரத்திற்கு முன்னாலே ஒரு அண்டாவுல சோறு வெந்தது.... நாலஞ்சு கோழிவ பிடிபட்ட சத்தம் கேட்டுது..."
"வினையே உங்க அண்ணான் தான்..."
"இந்தா பாரு... இந்தப் பேச்ச இங்க வச்சக்காத... ஒங்க கோலவடிவு மட்டும் யோக்கியமா....? ஊசி இடம் கொடுக்காம நூலு நுழையுமா...?"
"எம்மா.... ஒனக்கு கோடி கும்பிடு... ஏற்கனவே நொந்து போயிருக்கேன்... ஆள விடு..."
"அதெப்டி ஒங்க இஷ்டத்துக்கு எங்க அண்ணாவ பேசணும்..... நாங்க சும்மா கேட்டுக்கிட்டு இருக்கணுமா....?"
"என்ன ரோசாப்பூ... நமக்காவ பீடி சுத்துறதையே விட்டுக் கொடுத்தவள்.... நம்ம வாடாப்பூ.... அவள்கிட்ட போய்... சண்டைக்குப் போகலாமா...? அப்புறம் ஒன் பேச்சியம்மாவுக்கு என்ன ஆச்சாம்...?"
"எங்க குடும்பத்த கெடுக்கிறதுக்குனே வந்தவள் அவள்..... காலையில் அலங்காரி தலையில் மண்ணள்ளிப் போட்டாளா - இப்போ ஊரு முழுக்க போலீஸா - பயந்து போய் எங்கேயோ ஓடிட்டாள். அய்போ போலீஸ்... அய்யோ போலீஸ்'ன்னு சத்தம் கேட்டுது.... அப்புறம் பார்த்தா ஆளக் காணும். அருணாசலம் சின்னய்யா.... அழுதுட்டு கிடக்காரு.... அவருக்கும் வெளில வர பயம்... சந்திரா குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்டுக்கிட்டு கிழக்குப் பக்கமா போனாள். நான் மேற்குப் பக்கமா வாரேன்...”
"அட கடவுளே... ஊரு முழுக்க போலீஸா.... நம்ம ஊருக்கா... இந்த நெலம்..."
"இதோட போனாக்கூட பரவாயில்லியே... இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ..."
"ஊருக்குள்ள வந்து பாரு ரஞ்சிதம்... நாம பொட்டப் பிள்ளியாவது ஏதாவது சேர்ந்து செய்யணும்... ஆமை போற வீடும், போலீஸ் போற ஊரும் உருப்படாது. துளசிங்கம் ரெண்டுலயுமே அவசரப்பட்டுட்டான் .."
"வாரேன் ரஞ்சிதம்... எங்க சித்தி..... வயலுல... பம்பு செட்டுக்குள்ள பதுங்கிக் கிடக்காளான்னு பாத்துட்டு வாறேன்."
வாடாப்பூ, வயலைப் பார்த்துப் போவதற்காக திரும்பப் போனாள். அப்போது தந்தை மாயாண்டி ஓட்டமும் நடையுமாக ஓடி வருவதைப் பார்த்துவிட்டு நின்றாள். ஒருவேளை பேச்சியம்மா கிடைத்துவிட்டதைச் சொல்ல வருகிறாரோ.... என்னமோ...
மகள் வாடாப்பூவையே பார்த்தபடி ஓடி வந்த மாயாண்டி, அவள் மேல் பாய்ந்தார். அவள் தலையைப் பிடித்து தன் கையில் சிக்க வைத்துக் கொண்டு, அவள் முதுகில் சரமாரியாக குத்தினார். பிறகு அவளை மல்லாக்கத் தள்ளினார். மீண்டும் அவள் தலை முடியைப் பிடித்துத் தூக்கினார். தூக்கியபடியே களைப்புத் தெரியாமல் இருக்க ஏலேலோ பாடுவது போல் மகளின் கனத்தை உணராமல் இருக்கக் கத்துவது போல், கத்தினார்.
"செறுக்கி மவளே... ஊரே இழவெடுத்து நிக்குது. நம்ம குடும்பமே செத்துப் போயிக் கிடக்குது... திருமல ஜெயிலுல இருக்கான்.. கோலவடிவு குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையாயிட்டாள்.... பாக்கியம் மயினி மயங்கிக் கிடக்காள்.... நீ இங்க வந்து சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கியாக்கும்... அதுவும் இவளுவகிட்ட... இன்னைக்கு ஒன்ன சாவடிக்கனா இல்லியான்னு பாரு..."
மாயாண்டி, மகளின் விலாவைக் காலால் இடறினார். திடீரென்று ரஞ்சிதம் எழுந்தாள்.... அவளோடு நான்கைந்த பெண்களும் எழுந்தார்கள்.... ரஞ்சிதம் மாயாண்டியை ஒப்புக்குத் தொட்டபோது, அந்தப் பெண்கள் அவரை ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்து, ஒரு மரத்துப் பக்கம் கொண்டு போனார்கள். ஒவ்வொருத்தியும் அவர் உடம்பை ஊமைக்கீறலாக நகங்களால் பிராண்டினர் மாயாண்டி சத்தம் போட்டார்.
"என் மவள்.... நான் என்ன வேணுமுன்னாலும் செய்வேன்... ஒங்களுக்கு என்னழா...?"
ரஞ்சிதம் அவரருகே போனாள். பொட்டப் பிள்ளைகளிடம் கைதி போல் நின்ற அவரைப் பார்த்து ஆத்திரம் ஆத்திரமாகக் கேட்டாள்.
"தலைக்கு மேல.... வளந்த பொண்ண இப்டி அடிக்கியே.... நீ மனுஷனா?"
"ஏய்... அவன் இவன்னு பேசினே ..."
"இதுக்கு மேல பேசினா... ஒனக்கு மரியாதி போயிடும். இவள் வயசுல ஒரு மகன் இருந்தா இப்டி அடிப்பியாய்யா? மகள்னா ஒனக்கு இளக்காரம்... அதுவும் வயசுக்கு வந்த மகள் - நாலு பேருக்கு முன்னால் நாய அடிக்கது மாதிரி அடிக்கே... நாம் துணி உடுக்கது எதுக்குய்யா. மரியாதைக்குத்தானே... சொத்து இல்லாம ஒருத்தர் வாழலாம். சுகம் இல்லாமலும் வாழலாம்.... ஆனால் மரியாதை இல்லாம வாழுறது ஒரு வாழ்க்கையா.... வாழப்போற ஒரு பொண்ணோட மரியாதய கெடுக்கது மாதிரி அடிக்கவன் ஒரு அப்பனாயா - அப்படியே அவன் அப்பன்னாலும் அவன் ஒரு மனுஷனாய்யா. பழனிச்சாமி எப்பவாவது கோலவடிவ அடிச்சிருக்காராய்யா....? கருப்பசாமி எப்பவாவது சந்திராவை அடிச்சிருக்காரா....? ஒன் பொண்ணோட மரியாதய நீயே கெடுத்த அப்புறம் யார்தான் கெடுக்க மாட்டாக..?"
"என் மவள் எப்படின்னாலும் நடத்துவேன். நீ யாருழா...?"
"நானா... அவள மாதிரி ஒரு பொண்ணு. எப்போ பெத்த மகளை மாட்டை அடிக்கது மாதிரி அடிச்சியோ... அப்பவே நீ அப்பன் இல்ல... அவள் ஒனக்கு மகளும் இல்ல... இந்தப் பாவிப் பொண்ணு... ஒன்கிட்ட அடிபட்டே ஆடிப் போயிட்டாள். மகள் மறந்துட்டு பேசாம போய்யா.... திரும்பிப் பாராம ஓடுய்யா... இனிமேல் வாடாப்பூ என் வீட்லயே இருந்துக்குவாள்.... நீ யாரோ அவள் யாரோ.... எங்க கூட பீடி சுத்தி பிழச்சுக்குவாள். நீரு மவராசனா போயி பழனிச்சாமிக்கு சேவகம் செய்யும். உட்காரு... வாடாப்பூ... இந்த மனுஷன் இனிமேல் ஒனக்கு அப்பன் இல்ல.... நீ என்னோடயே இருந்துக்கலாம்..."
எல்லாப் பெண்களும் வாடாப்பூவைச் சூழ்ந்து கொண்டார்கள். அவளை, புதுப்பெண்ணை உட்கார வைப்பது போல் உட்கார வைத்தார்கள். சற்று நேரத்திற்கு முன்பு சண்டை போட்ட ரோசாப்பூ அவள் கன்னங்களை முந்தானையால் துடைத்துவிட்டாள். மாயாண்டி பரபரக்க பார்த்தபடியே நின்றார். பிறகு துள்ளினார்....
"ஏழா எழுந்திருக்கியா.. இல்ல.... ஒரே மிதியாய் மிதிக்கட்டுமா?" "எங்க அவளத் தொடு பாக்கலாம்..."
"நீயாழா.... எனக்குப் பிறந்தே..... அவளே சொல்லட்டும். ஏழா வாடாப்பூ.... எழுந்திருக்கியா இல்லியா...."
வாடாப்பூ, ரஞ்சிதத்தின் கையைப் பிடித்துக் கொண்டாள்..... இப்போது அவள் நினைத்துப் பார்க்கும் போது இதுவரை வாழ்ந்தது வாழ்க்கை இல்லை என்பது புரிந்தது. இந்தக் காலத்தில் எந்த பெண்ணுமே, அதுவும் விவகாரம் உள்ள பெண்கூட, அடிபடாத காலத்தில், எத்தனை வருஷமா அடிபட்டிருக்கேன்... எந்த மாட்டுக்கு புல்லு வெட்டுறேனோ.... அந்த மண்வெட்டிக் கணையால்..... எந்த மாட்ட விரட்டுறதுக்கு இருக்கோ .... அந்த சாட்டைக் கம்பால அடிபட்டேன்.... எந்தக் கால பிடிச்சு விடுவனோ அந்தக் காலால் உதைபட்டேன். இவரு அப்பனாய் இருந்தாலும் சரி... கடவுளாய் இருந்தாலும் சரி. வேண்டாய்யா... இந்த வேதனை வாழ்க்கை...'
"ஏழா... வாரியா.... இல்லியா...?"
"இனிமேல் ஒம்ம வாடையே வேண்டாம்... நீருமாச்சு... நானுமாச்சு என்னால தனியா பிழச்சுக்க முடியும்... ஒம்ம சோலியப் பார்த்துக்கிட்டு போவும்..."
"வரமாட்டியா?" "மாட்டேன்... மாட்டேன்... மாட்டவே மாட்டேன்... போதுமா..."
மாயாண்டி மகள் மேல் பாயவில்லை... அவளையே உற்றுப் பார்த்தார். பிறகு கண்களை மூடிக்கொண்டே யோசித்தார்.... யோசிக்க யோசிக்க எதுவோ தென்பட்டது... பேசாமல் அங்கேயே நின்றார். கால்களை ஒன்றுடன் ஒன்றாய் தேய்த்தபடியே நின்றார்... அவர் தலை குனிந்திருந்தது.... ரஞ்சிதம் சத்தம் போட்டாள்.
"இந்தாரும்... ஒம்மத்தான்.... நீரு... ஊசிமுனையில் ஒத்தக் காலுல தவம் இருந்தாலும் வாடாப்பூ... இப்போ ஒம்ம கூட வரமாட்டா.... இப்பதான் முதல் தடவயா ஒம்ம வாழ்க்கையில் யோசிக்கியரு. நல்லா யோசியும்... சாயங்காலமா வாரும்... நாங்களும் யோசிக்கோம்."
வாடாப்பூ, அப்பனைப் பார்க்காமல், குத்துக் கல்லாய் இருந்தாள். பிறகு தனது சுதந்திரத்தைப் பிரகடனப் படுத்துவதுபோல், ஒரு பீடி இலையை எடுத்து, பழுத்த பகுதியை வெட்டிவிட்டு அதை ஒரு புதுமை இலையாகக் கத்தரித்தாள். மாயாண்டி எங்கேயும் போகாமல் அங்கேயே கால்களைத் தேய்த்தபடி நின்றார்.
அப்போது அந்த சினிமா வேன் நான்கு பாய்ச்சலில் வந்தது. அதன் ஜன்னல் ஓட்டைகளில் தலை தலையாகத் தெரிந்தன. தொப்பித் தலை, மொட்டைத் தலை... டோப்பாத் தலை.... சாதாரணத் தலை.... பந்தயத்தில் ஓடுவதுபோல் பாய்ந்த அந்த வேன், முருகன் கோவில் பக்கம் நடைபோட்டது. முன் வரிசையில் நான்கு போலீஸ்காரர்கள் அந்தப் பெண்களைப் பற்றி தங்களுக்குத் தெரியும் என்பது போல் தலையாட்டினார்கள்.
அப்போது பின்வரிசைகளில் இருந்த சினிமாப் பையன்கள், அந்தப் பெண்களுக்கு முகம் காட்டாமல் வெளியே கைகளை நீட்டி ஆட்டினார்கள்.... 'ஹலோ... ஹலோ.... சுகமா' என்று பாடினார்கள்.... 'வாரீயா... வாரீயா...' என்பது மாதிரி கைகளை ஆட்டினார்கள். அந்தப் பெண்கள் கோபத்தோடு எழுந்தபோது, அந்த வேன் பறந்தது. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மாயாண்டி எழுந்திரும்மா..." என்று மகளை அம்மாவாக அனுமானித்து கூப்பிடப் போன போது, அந்த வேன் மீண்டும் பாய்ந்து வந்தது.... அந்தப் பெண்களுக்கு மீண்டும் கையாட்டிவிட்டு ஊரைப் பார்த்து ஓடியது.... ரோசாப்பூ கத்தினாள்....
"எங்க துளசிங்கம் சரியான அயோக்கியனா இருப்பான் போலுக்கே.... அவனுக்கு நாங்கள்லாம் தங்கச்சிமாரு. எங்கள் பார்த்துதான் இந்த பயலுவ அப்படி கையாட்டுதாங்கன்னு துளசிங்கத்திற்குத் தெரியும். அப்படி இருந்தும், அந்தப் பயலுவளையே போலீஸ் பாதுகாப்புல அனுப்பி நம்மள கூப்பிடும்படியா செய்துட்டான் பாரு... இன்னும் காரியம் ஆகணுமுன்னா எங்கள் அந்தப் பயலுலகிட்ட கூட்டிக்கூட கொடுப்பான் போலுக்கே.... என்ன ரஞ்சிதம்
பேசாம இருக்கே ..."
"நான் நினைக்கறத நல்லாவே சொல்லிட்டே ரோசாப்பூ - பொதுவா வசதியுள்ளவன் தான் மட்டும் வாழறதுக்காகவே சாதி பேசுவான்... உறவு பேசுவான்.... மற்றபடி சாதிக்காரனையோ... உறவுக் காரனையோ. வளர்க்கணுமுன்னு நெனைக்கவே மாட்டான்... ஏழை உறவுக்காரன் இவங்களுக்கு அடுப்புக்கு விற்கு மாதிரி. சாதிக்காரன் அடிதடிக் கத்தி மாதிரி. அதுலயும் இந்த துளசிங்கம் இருக்கானே... அவன் காரியம் ஆகணுமுன்னா நீ சொன்னதை செய்யக்கூட தயங்க மாட்டான்... பாவம்... கோலவடிவு..."
"புஷ்பம் மட்டும் என்ன... கோலவடிவ துளசிங்கம் சீரழிச்சான். புஷ்பத்த அலங்காரி சீரழிச்சிட்டாள்.... கன்னி கழியாமலே அது கழிஞ்சது மாதிரி ஆயிட்டாள். சோறு தண்ணி இறங்காம படுத்த படுக்கையா கிடக்காள்..."
"இவ்வளவுக்கும் காரணம் இந்த துளசிங்கம், இந்த அலங்காரி, இந்த போலீஸ்."
"திருமலையையும் இந்த மாயாண்டி மனுஷனையும் சேர்த்துக்க."
"சரி... இப்போ .... ஆட்கள் முக்கியமில்ல.... அவங்க அட்டூழியந்தான் முக்கியம்... நாம் ஏதாவது செஞ்சாகணும்..."
ரஞ்சிதம் முகத்தில் கையமர்த்தி, யோசித்தாள்.
------------------
அத்தியாயம்- 32
கோலவடிவு முடங்கிக் கிடந்தாள்.
அந்தப் பழைய காலத்துத் தேக்குக் கட்டிலில் புதிய கால சகுந்தலையாக குப்புறக் கிடந்தாள்... முகத்தைப் பக்கவாட்டில்
வைத்தால் எதையும் பார்க்க வேண்டியதிருக்கும் என்பதுபோல், நெற்றி, கட்டில் மேட்டில் படும்படி கிடந்தாள்... பச்சைக் கீரை போல் முதுகில் படர்ந்த அவள் முடி, அந்த ஆடிக்காற்றில் அவள் உணர்வுகளைப் போல் தனித்தனியாக அல்லாடியது. பிடரியிலும் தோளிலும் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தது. கண்களை மூடி அவற்றையும் கைகளால் மறைத்துச் செத்தவள் போல் கிடந்தாள்.
அவளை ஒரு பொருட்டாகக் கருதாமல் அலங்காரியும் துளசிங்கமும் போனபோது, தன்னை ஒரேடியடியாக விட்டு விட்டுப் போகிறார்களோ என்ற பயத்தில் அவர்கள் பின்னால் ஓடப்போனாள்.. பிறகு சொந்த ஊரில் பட்ட அசிங்கத்தை இந்த ஊர் தெருவிலும் பட வேண்டாம் என்று நினைத்து அந்த வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்தாள். திண்ணைப் படிக்கட்டில் உட்கார்ந்து முன் கைகளில் முகம் ஊன்றி, கைகள் வழியாக கண்ணீர் விட்டாள். அவளையே பகவதி பாட்டி பார்த்துக் கொண்டு நின்றாள். இமைகளுக்குள் சிறைப்பட்ட கண்கள் கொட்ட கொட்டப் பார்த்தாள். அந்த பார்வை தாளமாட்டாது கோலவடிவு புறக்கடைக்குப் போனாள். அங்கே நின்ற முருங்கை மரத்தில் சாய்ந்தாள்... ரயில் பெட்டிகள் மாதிரியான கம்பளிப் பூச்சிகள் அவள் உடம்பில் ஊர்ந்தன..... அவளுக்கு உணர்வேதும் இல்லை.... முகத்தை மரத்திலே இடித்து இடித்து நெற்றிப் பொட்டில் தனக்குத்தானே குங்குமம் வைத்துக் கொண்டாள். உடம்புக்குள் நெருப்புப் பற்றி எரிந்தது. முதுகுப் பகுதி அனலாய்க் கொதித்தது. இருதயம் சுடலைமாடன் கோயில் மேளம் போல் அடித்துக் கொண்டது. கண்கள் நெருப்பாய் எரிந்தன. காதுக்குள் பயங்கர இரைச்சல்.... கண்ணைத் திறக்க முடியவில்லை. தலையைச் சுமக்க முடியவில்லை.
நெஞ்சுக்குள் நினைக்க முடியவில்லை... வாயைத் திறக்காமல் மூச்சுவிட முடியவில்லை... இந்த உலகில் தானாய்ப் பிறந்து தானாய் வளர்ந்து தான் தோன்றியாய் போனது போன்ற பீதி.... துளசிங்கம் கோரப் பற்களோடு சிரிப்பது போன்ற பிரமை. அலங்காரி, மனிதத் தலைகளை கழுத்திலும் இடுப்பிலும் தொங்கப் போட்ட நீலியாய் நிற்பது போன்ற கற்பனை.
கோலவடிவு தன்பாட்டுக்குப் பேசிக்கொண்டாள். தனது பேச்சை, தானே காதில் வாங்காததுபோல் அந்த அறைக்குள் சுற்றிச் சுற்றி வந்து பேசிக் கொண்டாள். “மாட்டிக்கிட்டேனே.... வசமா மாட்டிக்கிட்டேனே... அலங்காரி என்னை ஏமாத்திட்டாளே. என் தங்கச்சி இந்த கோலவடிவு மாதிரியான்'னு சொல்லிட்டாரே.... சொல்லிட்டாரே.... எனக்கு வேணுந்தான்... இன்னும் வேணுந்தான்..."
இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் ஒருத்தியை அவள் போக்கிலே விடவேண்டும் என்று தெரிந்திருந்த பகவதி பாட்டி, சும்மாவே இருந்தாள். மஞ்சள் வெயில் மங்கலாக அடித்தபோது, பாட்டி தட்டுத் தடுமாறி ஒரு தட்டோடு பெரிய வீட்டுக்குள் வந்தாள். கைகளால் தடவித் தடவிக் கட்டிலுக்கு வந்தாள்.... தட்டைத் தரையில் வைத்து விட்டு முடங்கிக் கிடந்தவளை தூக்கப் போனாள்.... முடியவில்லை .... கோலவடிவின் உடம்பைத் தடவித் தடவிக் கைகளை முகத்தருகே கொண்டுபோய் தலையை வருடிவிட்டாள்... 'அம்மா' என்று கன்றுக்குட்டி கத்துவதுபோல் கோலவடிவு வீறிட்டு எழுந்தாள். அந்த பாட்டியை அம்மாவாக அனுமானித்து அப்படியே கட்டிக் கொண்டாள். அவள் அம்மா அல்ல என்று உணர்ந்ததும் பாட்டியை விட்டாள். ஆனால் பாட்டியோ அவளை விடவில்லை. பட்டரைச் சட்டம் போன்ற அந்த இளம் உடம்பைத் தன் பூஞ்சை உடம்பில் போட்டுத் தாங்கிக் கொண்டாள். அந்த அனுசரணையில் கோலவடிவு விம்மி வெடித்தாள்... ஏதோ ஒரு சத்தம் வந்ததே தவிர, அது அழுகையா கூக்குரலா அல்லது அவலமா என்று அடையாளம் காண முடியவில்லை. பாட்டி தனக்குப் பாதியாகவும், கோலவடிவுக்குப் பாதியாகவும் சேர்த்து அழுதபடியே சொன்னாள்.
"மோசம் போயிட்டியேம்மா.... மோசம் போயிட்டியே... நாடு நகரமெல்லாம் வழக்காளின்னு பேரு வாங்குன மவராசனுக்கு மவளா பிறந்துட்டு, இப்படி பண்ணிட்டியே. அவள் அலங்காரி, பெத்த மவளேயே கூட்டிக் கொடுக்கப்போனவள். இவன் துளசிங்கம் - என் போன், பொண்ணுவள ஆடுமாடா நினைக்கவன்."
பாட்டி பேச்சை நிறுத்திவிட்டு கோலவடிவின் மோவாயை நிமிர்த்தினாள்.
"ஏதாவது சாப்புடும்மா... உடம்பு தாங்காதும்மா... இஷ்டம் இருக்கோ இல்லியோ எப்படியும் உயிர் போவது வரைக்கும் வாழ்ந்துதானே ஆகணும்...? இந்த ஒடம்ப வச்சுதான ஆகணும்...? ஒன் நிலம் தெரிஞ்சே சாதத்தை குழைய சமைச்சேன்... இந்தாம்மா சாப்புடு கொஞ்சம்... கொழஞ்ச சோறுதான்..."
பாட்டி, தாலாத் தட்டைத் தேடிக் கண்டுபிடித்து, ஒரு கவளத்தை எடுத்துக் கோலவடிவின் வாயருகே கொண்டு போனாள். அவளோ பாட்டி கையைப் பிடித்துக் கொண்டாள்.
“எனக்கு நஞ்சு இருந்தா கொடு பாட்டி.... நஞ்சு இருந்தா கொடு.. இனிமே நான் வாழப்படாது...”
"எத்தனையோ பொம்புளயளுக்கு யோசன சொன்னவள் நான். ஒனக்கு என்ன சொல்லன்னே தெரியலியே... வேணுமுன்னால் ஒங்க அய்யாவோட சித்தி மவன் வீடு பக்கத்து வீடு , அங்க கொண்டு ஒன்ன விடட்டுமா?"
"நான் ஒனக்குப் பாரமா போயிட்டனா பாட்டி...."
"அப்டி சொல்லாதடி என் செல்லக்குட்டி, இந்த துளசிங்கம் பய பிறந்தது இதே வீட்லதான். ஒன்னை இப்பிடி பண்ணாத கோலமுல்லாம் பண்ணுவான்னு தெரிஞ்சிருந்தா அவன் பிறந்த உடனேயே வாய்க்குள்ள நெல்ல போட்டு கொன்னுருப்பேன்."
"இப்போ என்னையாவது கொல்லு பாட்டி.... நான் உலகத்துல இருக்கப்படாது....."
"ஏன் இருக்கப்படாது....? அலங்காரி மாதிரி பொம்புளயளே இருக்கும்போது, நீ ஏன் இருக்கப்படாது.... இப்ப எதுவுமே நடந்துடல.... எழுந்திரு.... ஒன்ன நானே பழனிச்சாமிகிட்ட கொண்டு விடுறேன்.... அவன் என்ன சின்னம்மான்னு கூப்பிடும்போது அம்மான்னு இவன் கூப்புடப்படாதான்னு நினைச்சவள் நான்... அப்பேர்ப்பட்ட உத்தமன் அவன். நீயும் உத்தமி... பரசுராமன் அம்மா மாதிரி.... லேசா தடுமாறிட்ட அவ்வளவுதான்... எழுந்திரு... ஒன்னை வீட்டோட சேத்துடுறேன்... முகத்த துடைழா..."
"என் தலைவிதிப்படி நடக்கட்டும் பாட்டி... வந்ததே வந்துட்டேன்... நானாவது விசுவாசமா இருக்கேன்... அதோட எந்த முகத்தோட பாட்டி போவேன். எனக்கு முகமே இல்லாமச் போச்சே பாட்டி... இல்லாமப் போச்சே..."
கோலவடிவு, மீண்டும் கட்டிலில் முடங்கினாள். மல்லாந்து படுத்தாள். மஞ்சள் சூரியன் எட்டிப் பார்த்தது... அவளுக்கு இந்த வெளிச்சம் மட்டும் அல்ல, எந்த வெளிச்சமும் பிடிக்கவில்லை. கொடியில் தொங்கிய கம்பளியை எடுத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிக்கொண்டாள். உடம்பு முழுவதையும் தலையோடு சேர்த்து மறைத்துக் கொண்டாள்.... அவளுக்குத் தேவை வெளிச்சமல்ல. இருட்டு.... கும்மிருட்டு... மையிருட்டு.... எவரையும் பார்க்க முடியாத
எவரும் பார்க்காத இருட்டு....
பகவதி பாட்டிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. துளசிங்கத்தை உருட்டி மிரட்டி இவளை ஒப்படைக்க வேண்டிய முறையில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம்.
பாட்டி வெளியே வந்தாள்... அந்த அறைக் கதவைச் சாத்தினாள். திண்ணையில் தூணில் சாய்ந்தாள். வயதான உணர்வுகள்... சக்திக்கு மீறித் துடித்ததாலோ என்னவோ.... அவள் அப்படியே சாய்ந்தாள்..... எவ்வளவு நேரமோ... அந்த இருட்டு வீட்டுக்குள் நேரத்தை அளக்க முடியவில்லை. திடீரென்று சத்தம் கேட்டது. கரும்பட்டையான் தர்மராசா சத்தம்... சாமியாடி ரத்தினத்தின் குரல். எல்லாவற்றிற்கும் மேலாக
அலங்காரியின் சத்தம்.
"பெரியம்மா எழுந்திரு சாப்பிட்டியா... சாப்புடாமலே படுத்துட்டியா?
பகவதி பாட்டி முக்கி முனங்கி எழுந்தபோது, அலங்காரி எரியாமல் கிடந்த லாந்தர் விளக்கு சிம்னியைத் துடைத்தபடியே பேசினாள்.
"ஏன் பெரியம்மா வீட்ட இருட்டுல வச்சிருக்கே.... வெளிச்சம் மகாலட்சுமி... அவளை அணைய வைக்கப்படாது..."
"நீ இருக்கியே... பேச்சுல... வெளிச்சத்தையும், செய்கையில்.... இருட்டையும் வச்சிருக்கவளாச்சே..."
தர்மராசா, பாட்டிக்கு உபதேசித்தான். "பாட்டி யாரப் பேகனாலும் பேசு. எங்க அலங்காரி சித்திய மட்டும் அப்படிப் பேசாத .... ஆனானப்பட்ட கரும்பட்டையானையும் காத்துக்கருப்பனையும் ஒரே சமயத்துல தலகுனிய வச்சவள். கோலவடிவ திட்டம் போட்டே துளசிங்கத்துக்கிட்ட பிடிச்சுக் கொடுத்துக் கரும்பட்டையான் மானத்த கப்பலுல ஏத்துனவள். அடாவடித் திருமலப் பயலை இப்போ போலீஸ் ஸ்டேஷன்ல.... சுவர்ல.... கொக்கி போட்டு, அதுல... விலங்கும் கையுமாய் பூட்டி வச்சிருக்கு..... பழனிச்சாமிய... விசாரிக்க... ஊருக்கு போலீஸ் போயிருக்கு... பாக்கியம் படுத்த படுக்கையா கிடக்காள்... துளசிங்கம் செல்வாக்கில ஊரு முழுக்க போலீஸ் காவலு.... கரும்பட்டையானுவளுக்கும், காத்துக் கருப்பனுவளுக்கும் நல்ல அடி... இப்டி... நாங்க ஊருல தலை நிமிர்ந்து நிக்கறதுக்கு எங்க அலங்காரி சித்திதான் காரணம்."
"நான் என்னப்பா செய்தேன். எல்லாம் சுடலைமாடன் அருள். இப்போ அவங்க குடுமியே நம்ம கைக்குள்ள என்கிறது மாதிரி ஆயிட்டு."
"இந்த தள்ளாத வயசுல என்னத்தயெல்லாம் கேட்க வேண்டியதாயிப் போச்சு. மெள்ளப் பேசு பய மவளே.... பாவம் கோலவடிவு கேட்டா துடிச்சுப் போவாள்.."
"சும்மா கிட பாட்டி..."
"ஏய் அலங்காரி! தள்ளாத வயதுக்காரி நான். இருக்க முடியல... வந்த விஷயத்தை சட்டுப்புட்டுன்னு சொல்லிட்டுப் போங்க..."
"பின்ன ஒன் வீட்ல குலாவுறதுக்கா வந்தோம்...? என்ன பேச்சு பேசிட்டே... பெரியம்மா.... இந்த ரஞ்சிதம் பய மவள், ஒரு போலீஸ் அதிகாரிகிட்ட கோலவடிவைக் காணல்..... கடத்திட்டுப் போன துளசிங்கம் மட்டும் திரியுறான். அவள் எங்க இருக்கான்னு தெரியணு முன்னு ஒரு மனு எழுதி கொடுத்துட்டாளாம். போலீஸ் பாடு கொஞ்சம் திண்டாட்டம்... அவங்க நம்ம கோழியத்தான் சாப்புடுறாக..... ஆனாலும் கொஞ்சம் பயப்படுறானுவ. அதனால கோலவடிவ கூட்டிட்டுப் போயி சுடலமாடன் கோவிலுலயே துளசிங்கத்திற்குக் கட்டி வைக்கப் போறோம். தாலிகூட வாங்கியாச்சு..."
"எங்க சித்தி லேசுப்பட்டவள் இல்ல பாட்டி... பகையாளி மகள் கோலவடிவு... எங்க கோவிலுல துளசிங்கம் தாலிகட்ட, தலை குனிஞ்சு இருக்கும்போது, கரும்பட்டையான் கூட்டம் எப்படித் துடிப்பாங்கன்னு கண்ணால் பார்க்கப் போறோம்..."
"கோலவடிவு கழுத்துல தாலி ஏறுறது, பெரிய மனுஷன்னு தன்னை நினைச்சுட்டு இருக்கிற பழனிச்சாமிய... செருப்பால
அடிக்கறது மாதிரி. சரி.... சரி.... கோலவடிவக் கூப்பிடு பாட்டி..."
“உடமஸ்த்த ன எங்கேடா?"
"துளசிங்கத்தைக் கேட்கியா...? இந்த ஊருக்குள்ள போலீஸோட வராண்டாமுன்னு... இந்த வெட்டாம்பட்டி எல்லையில் போலீஸோட நிக்கான்..... கார் காத்து நிற்குது... கோலவடிவும் அவனும் கார்ல பருத்திக்காடு பக்கம் போவாங்க.... அங்க மேளதாளம் தயாராய் இருக்கும்... அப்புறம் கரும்பட்டையான் பயலுவ தூக்குப் போடும்படி மேளதாளத்தோட சுடலைமாடனை சந்திப்பாங்க... கோலத்த கூப்பிடு பாட்டி." |
"கூப்புடவும் மாட்டேன். அவள் அனுப்பவும் மாட்டேன் - துளசிங்கம் அவன் அய்யா.... பழனிச்சாமி வீட்ல இருந்து யாராவது ஒருத்தன்... எல்லாருமா இங்க வரணும். இந்த வீட்லயே தாலி கட்டணும். அது வரைக்கும் அவள் இங்கதான் இருப்பாள்."
"பெரியம்மா கிட்ட என்னடா பேச்சு.... நாம உள்ள போயி கோலவடிப் பார்த்து ஒரு சொடக்கு விட்டால் அவள் வந்துட்டுப் போறாள்."
அலங்காரி, பகவதி பாட்டியைப் பற்றி கவலைப்படாமல், மச்சான் மகன் தர்மராசாவுடனும், கொழுந்தன் ரத்தினத்துடனும் பெரிய வீட்டுக்குள் போனாள். லாந்தர் விளக்கைத் தூக்கிப் பிடித்துப் பார்த்தாள். கோலவடிவைக் காணோம். பின் கதவு திறந்திருந்தது. அதன் வழியாக கொல்லைப்புறம் போனால் அங்கேயும் காணோம்.
அந்த வீட்டின் கோட்டைச்சுவர் பக்கம் உள்ள பப்பாளி மரம் பாதி ஒடிந்து தொங்கிக் கொண்டிருந்தது.
--------------
அத்தியாயம்- 33
அலங்காரி, துடித்துப் போனாள்.
புறக்கடை வழியாக அலறியடித்து முன் பக்கம் வந்தாள். மச்சான் மகன் தர்மராசா கையையும், மச்சினன் ரத்தினத்தின் கையையும்
பிடித்தபடியே பதறியடித்துப் புலம்பினாள். "கோலவடிவ காணுமே.... காணுமே...''
உடனே, அந்த செம்பட்டையான்கள் இருவரும், வீட்டுக்குள் போய், அலங்காரி பார்த்த இடத்தையெல்லாம் பார்த்தார்கள்..... அலங்காரி குரல் கொடுத்தாள்.
"பப்பாளி மரம் பாதில்.... ஒடிஞ்சிருக்கதப் பார்த்தா ... கோலவடிவு அந்த மரத்தைப் பிடிச்சு சுவரில் ஏறி அந்த பக்கமா குதிச்சிருப்பான்னு நெனக்கேன்... நல்லாப் பாருங்க... பாவி... மொட்ட... கெடுத்துட்டாளே.... ரஞ்சிதம் பாவி விடமாட்டாளே...''
அவர்கள் இருவரும் சுவரில் ஏறி, பேட்டரி விளக்குப் போட்டு, அதை அங்குமிங்குமாய் ஆட்டிப் பார்த்தார்கள். பிறகு உதடுகளைப் பிதுக்கியபடியே வந்தார்கள்.... பகவதி பாட்டி புலம்பினாள்.
"ஏய் அலங்காரி! குடி கெடுப்பா.... ஒனக்கு வர வேண்டிய நிலம் அவளுக்கு வந்துட்டே... இந்நேரம் நீ விழவேண்டிய கிணத்துல அவள் விழுந்திருப்பாளே.... ஒரு சின்னஞ்சிறிச... கொன்னுட்டியடி பாவி. அவள் ஒரு பொண்ணு மாதிரி நெனச்சா பேசுன... நாயப் பேசுறது மாதிரி பேசுன.... அப்போ துளசிங்கம் பய பேசுனதையும் இப்போ நீங்க பேசுனதையும் கேட்டுட்டு அவள் சாவுறதுக்காக ஓடிட்டாள். ஆத்துலயோ, கிணத்துலயோ உயிரவிட ஓடிட்டாள்.... நான் என்ன செய்வேன்.... கையும் ஓட மாட்டங்கு.... காலும் ஓட மாட்டேங்கே.... எப்பா.... சிவனுபாண்டி.... எப்பாவு.''
வீட்டில் கிழக்குச் சுவர் பக்கமாக போய் நின்று பகவதி பாட்டி கத்தினாள்... பழனிச்சாமியின் சித்தி மகன் சிவனுப்பாண்டி பெண்டு பிள்ளைகளோடு சுவர்ப் பக்கமாக வந்து தலையை நீட்டினான்.
''எப்பாவு... கோலவடிவு அங்க வந்தாளா? எங்கேயோ போயிட்டாளே..."
"வந்தபோது சொல்லணுமுன்னு தோணல.... போன பிறவா சொல்லுதே... கோலவடிவ வெட்டிக் கொன்னியளா? எரிச்சுச் கொன்னியளா? அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்.... ஒன்னையுைம் சேர்த்து போலீஸ்ல ஒப்படைக்கேன் பாரு..."
“நான் என்னப்பாவு செய்வேன்... இந்த மூளி அலங்காரி செய்த வேல்.... பாதகத்தி.... நானாழா.... ஒனக்கு கிடச்சேன்... வாழப்போற பெண்ணை நாசமாக்கி மிதிச்சிட்டியளா... பாவி... மொட்டுப்பூவ... பறிச்சி... எறிஞ்சிட்டியேழா... சண்டா ...."
"ஒனக்கும் எனக்கும் பேச்சில்ல... பெரியம்மா...”
"அப்படின்னா .... என் வீட்டுக்குள்ள ஏமுழா வந்த...? மரியாதி கெட்டவளே.... மேனாமினுக்கி... கையேயி... நீலி... என் கடைசி காலத்த நிம்மதி இல்லாம பண்ணிட்டியே...."
"இனிமே ஒன் வீட்டுப் படி ஏறுனால் சொல்லு..."
பகவதி பாட்டி, அங்குமிங்குமாய், அலைபாய்ந்து புலம்பினாள். சிவனும் பாண்டியனை, அவன் மனைவி சட்டையைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்தாள். இந்தச் சமயத்தில் பகவதிப் பாட்டி சொன்னதுதான் சாக்கு என்று அலங்காரி முகத்தை உப்பிக் கொண்டு செம்பட்டையான்களுடன் வெளியேறினாள். அவளால் பேச முடியவில்லை.... 'ஒரு வேளை கோலவடிவு தற்கொலை செய்திருப்பாளோ... எனக்கென்ன... இதுக்குல்லாம் காரணம் துளசிங்கந்தான்.... எலி டாக்டர் மவன்... அந்த இரப்பாளிப் பயல்தான்.'
அலங்காரியின் மெய்க்காப்பாளர்கள் போல் இருவரும் இருபக்கமும் நடக்க, அவள் இந்த இருட்டு வழியில் நடந்தாள். பேட்டரியை அடிக்கப் போன தர்மராசாவின் கையைப் பிடித்துத் தடுத்தபடியே இருட்டாகி நடந்தாள். சற்றுத் தொலைவில் தெரிந்த கார் வெளிச்சத்தை இலக்காக்கி, நடக்கும் தரையைப் பாதையாக அனுமானித்து அந்த மூவரும் நடந்தார்கள்.
அந்தக் காரை அவர்கள் நெருங்கியதும் துளசிங்கம் கூட கேட்க வில்லை. கான்ஸ்டபிள்கள் சகிதமாக நின்ற சப்-இன்ஸ்பெக்டர்தான் கேட்டார்.
"கோலவடிவு வரலியா...? ஒங்களத்தான் அலங்காரியம்மா.... ஏன் வரல?"
"ஓடிட்டா ஸாரே..... ஓடிட்டா.... ஓடுகாலி ... அந்த வீட்ட விட்டு எவனோடயோ ஓடிட்டா..."
"என்ன சித்தி நல்லா பாத்தியா..."
"நல்லாவே பார்த்துட்டேன். ஒடியே போயிட்டாள். கடைசில அவள் கரும்பட்டையான் புத்தியக் காட்டிட்டா.... இப்போ என்ன செய்யலாம் ஸாரே....”
சப்-இன்ஸ்பெக்டர், அலங்காரியின் கையைப் பிடித்தபடியே பதிலளிக்கப் போனார். அதைத் துளசிங்கம் பார்ப்பதைப் பார்த்த அலங்காரி, அவர் பிடியிலிருந்து லாவகமாக விடுபட்டு விலகி நின்றாள். சப்புக்கு' தாபம் - கோபம். மணமகளைப் பாதுகாப்பாகக் கொண்டு வர இரண்டு கான்ஸ்டபிள்களே போதும், அவரும் வந்ததே இந்த அலங்காரிக்காகத்தான்... ரொம்பத்தான் பிகு பண்ணுறாள்...
"அலங்காரி! நீ சாதாரணமா சொல்றது மாதிரி விஷயம் சின்னதுல்ல... கோலவடிவு ஒங்க பாதுகாப்புல இருந்தவள். அவள் ஓடிட்டான்னு நீங்க சொல்லலாம். ஆனால், எதிரிங்க நீங்க கொலை செய்ததா புகார் செய்யலாம். அப்போ நானும் சும்மா இருக்க முடியாது. ஒங்க ரெண்டு பேரையுமே ஒரே விலங்குல.... பூட்டி ஸ்டேஷனுக்கு கொண்டு போகவேண்டியது வரும்... இப்பவே கூட அரெஸ்ட் செய்யலாம்... கோலவடிவ காட்டவேண்டியது ஒங்க பொறுப்பு... அண்டர்ஸ்டாண்ட்... துளசி..."
துளசிங்கம், எதுவும் புரியாமல் அலங்காரியைப் பார்த்தபோது, அவள், சப்-இன்ஸ்பெக்டரின் அருகே வந்தாள். அவர் இடுப்பில் தன் கரத்தைத் தற்செயலாக உரச வைப்பது போல் உரசியபடியே கெஞ்சினாள்....
"எசமான்... நீங்களே எங்கள் கைவிட்டா ... எப்படி எசமான்? அப்படியே அந்த கரிமுடிவாள் உயிரை மாய்ச்சிருந்தாலும், எங்கள் நீங்கதான் கரை சேர்க்கணும். ஒங்களத்தான் மலை போல நம்பியிருக்கோம். நாங்க செய்த தப்பை எல்லாம் காலால உதறி கையால அணைக்கணும்...”
சப்-இன்ஸ்பெக்டர், அலங்காரி சொன்னதைச் செய்தார். அவள் கால்களில் தனது கால்களை மோதவிட்டபடியே அலங்காரியின் தோளில் கூசாமல் கையைப் போட்டார். துளசிங்கம், வேறுபக்கமாகத் திரும்பிக் கொண்டான். சப்-இன்ஸ்பெக்டர் குழைந்து குழைந்து பேசினார்.
"நான் சொல்றத தப்பா.... நெனக்காதீங்க... அலங்காரியம்மா நாளைக்கே பழனிச்சாமி கோர்ட்ல மனுப்போட்டு, கோலவடிவ... ஆஜர் செய்யணுமுன்னு கேட்டால் நம் எல்லோரும் மாட்டிக்குவோம்.... ஏற்கெனவே ரஞ்சிதம் நான் ரயில்வே பாலத்துல செக்குரிட்டி ஏற்பாட்டைப் பார்க்கப் போனப்போ துளசிங்கம் இருக்கான்.... கோலவடிவு எங்கேன்னு ... நான்... என்னமோ கோலவடிவ கூட்டிட்டுப் போனது மாதிரி கேட்டாள்.... சரி ஊருக்குப் போயிட்டாளோ.... என்னமோ... அங்க போய் பார்க்கலாம்.... காரில் ஏறுங்க..... என்ன ஆனாலும் சமாளிச்சுத்தானே.... ஆகணும்..."
துளசிங்கம், காரின் முன்னிருக்கையில் ஒதுங்கிக் கொண்டு, தர்மராசாவையும், ரத்தினத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டான்... அவனுக்குப் பயம் பிறந்தது. கோலவடிவு செத்துப் போயிருப்பாளோ என்று உயிரோடு செத்துக் கொண்டிருந்தான். பின்னிருக்கையில் சப்-இன்ஸ்பெக்டரும், அவரைத் தடுக்காத அலங்காரியும் உட்கார, கார் பறந்தது. அரை மணி நேரத்தில் தார் ரோட்டில் பாய்ந்து மண்பாதையில் ஓடி பருத்திக் காட்டுப் பக்கம் வந்தபோது, வெளிச்சத்தைப் பார்த்த மேளக்காரர்கள், அடி அடி என்று அடித்து ஊது ஊதென்று ஊதித் தள்ளினார்கள். அவர்களை நெருங்கியதும், சப்-இன்ஸ்பெக்டர் அதட்டலில் மேளதாளம் நின்றதால், கோவில் மைக் போட்ட சத்தம் நன்றாகக் கேட்டது.
"ஆண் பிள்ளை என்று நிரூபித்த அண்ணன் துளசிங்கமே வருக!"
"அதற்கு ஒத்துழைத்த அண்ணி கோலவடிவே வருக!"
சப்- இன்ஸ்பெக்டர் அலங்காரியின் தோளைத் தட்டியபடியே கேட்டார்.
"என்ன உளறுறாங்க?"
"அதுவா ஸாரே.... மெட்ராஸ்ல ஒரு சினிமாக்காரன் குழந்தை பெறாத முதல் பெண்டாட்டிய தள்ளி வச்சிட்டு ரெண்டாவதா ஒருத்திய கட்டி பிள்ள பெத்தானாம். அவன் ரசிகர் மன்றம் அப்போ போட்ட போஸ்டர் இந்தப் பயலுவ பாராம படிச்சு ஒப்பிக்காங்க.... ஒரு காலத்துல ஊர்க்காரனைப் பார்த்து சினிமாக்காரன் காப்பியடிச்சான்... இப்போ சினிமாக்காரனப் பார்த்து ஊர்ப்பயலுவ காப்பியடிக்காங்க.... நல்ல கூத்து ..."
அந்த கார் சுடலைமாடன் கோவிலுக்கு வந்தபோது, சாமியாடிகள் ஆடியபடியே காரை மொய்த்தார்கள். செம்பட்டையான்கள் வாணவேடிக்கை போட்டார்கள்..... சப்-இன்ஸ்பெக்டர் கார் கதவை உடைப்பது போல சாத்திவிட்டு இறங்கினார். லத்திக் கம்பைக் காட்டி எல்லோரையும் விரட்டினார். அப்படியும் ஆண்களும் பெண்களுமாய் கும்பல் கும்பலாய்க் கூடி கிசுகிசுத்தார்கள். இவர்களின் கவனத்தைக் கலைப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் "விசேஷம் அதுபாட்டுக்கு நடக்கட்டும், மைக்குல பேசுற பயல் வாயை மட்டும் மண்ணவச்சு அடைங்கப்பா" என்றபோது
வில்லுப்பாட்டாளி, "பார்வதியானவள் ஊசி முனையில் நின்று தவம் செய்து, அதனால் கிடைத்த சிவனார் வரத்தின்படி, கைலாயத்தில் வடக்குமணி வாசலில் முப்பத்திரண்டாவது தூணில் தூண்டாமணி விளக்கு சுடர் விளக்கைத் தூண்ட, சுடலை பிறந்தான்" என்று பாடியபோது, கார்ப்பக்கம் நின்ற ரத்தினம் ஊளை யிட்டுக்கொண்டே கோயிலுக்குள் ஓடினான். அவன்தான் சுடலைமாட சாமியாடி.... அந்தக் கதாநாயக சாமிக்குக் குல்லாய் போட்டார்கள். இரும்பு முள் செருப்பை மாட்டினார்கள். ரத்தினம் தங்குதங்கென்று ஆடி வடக்கே இருந்த பகவதியம்மனை ஆடும் பெண்சாமி ஒருத்தியிடம் உத்தரவு வாங்கிட்டு, மீண்டும் ஆட, உடனே எல்லாச் சாமியாடிகளும் குதித்தார்கள்.
மேளம் பீறிட்டது... நாதஸ்வரம் வீறிட்டது... பெண்களின் குலவைச் சத்தம் பந்தலை முட்டியது. கால்களைத் தூக்கி, கைகளை ஆட்டி வாய்களால் ஊளையிட்டபடி ஆடினார்கள். மேளக்காரர்களுக்கும் சாமி வந்தது..... எவர் சாமியாடி, எவர் மேளக்காரர் என்று கண்டுபிடிக்க முடியாத ஆட்டம். எல்லாச் சாமியாடிகளையும் கும்பிட்டு திருநீர் வாங்கிய ஒரு செம்பட்டை, பகவதியம்மனிடம் போகவில்லை. போகக்கூடாது. பகவதியம்மா, மனைவியைப் பிடித்து ஆட்டினாலும், மனைவி மனைவிதான். கும்பிடப்படாது..... எலிடாக்டர் ஒரே இடத்தில் நின்றபடி தோளை மட்டும் முறுக்கினார். மயான புத்திரன் இவர். நேற்று மண்டையில் பட்ட கல்லெறியால் அதுக்கு மேல் ஆட முடியவில்லை.
ஒரு சாமியாடி தோளில் வெட்டரிவாள்... இன்னொருத்தர் கையில் பிரம்புத்தடி. ஒருவர் புண்ணாக்கு தின்ன, இன்னொருத்தர் வாழைப்பழத்தை உரிக்காமலே உள்ளே போட்டார். இவர்களுக்கு மத்தியில் சுடலைமாட ரத்தினம் சுற்றிச் சுற்றி வந்தான் ... கையிலே
அரிவாளோடு குதித்தான்.... "டேய் என் புத்திரர்களா... பாத்தியளாடா... சுடலை மாடனோட லீலையை.... எதிரி கோயில் எப்படி மூடிட்டேன் பார்.... சப்-இன்ஸ்பெக்டர் மவனே..... கவலப்படாத..... கோலவடிவ கண்டுபிடிச்சுத் தாரது என் பொறுப்பு.... இவளை நான் தான் சில காரணத்துக்காவ மறச்சு வச்சிருக்கேன்..."
சப்-இன்ஸ்பெக்டர் கோவிலை விட்டுக் கோபமாக வெளியே வந்தார். கோவிலுக்குள் சாமியாட்டத்தை ஆடியோச் சத்தத்துடன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சினிமாக்காரர்களின் கும்பிடுகளுக்கு பதில் கும்புடு போடாமலே வெளியேறினார்.
ஆங்காங்கே பாராபோட்டிருந்த போலீஸாரைக் கண்காணிப்பது போல் பார்த்துவிட்டு ஒரு வேப்பமரத்தின் பக்கமாக வந்தபோது காலடிச் சத்தம் கேட்டு திரும்பினார். அலங்காரி..... அவளே, இப்போது அவரது கையை எடுத்துத் தோளிலே போட்டுக் கொண்டு கேட்டாள்....
"ஸாரே என்ன யோசிக்கியே...?"
"ரத்தினம் பயல அரெஸ்ட் பண்ணப் போறேன்... இப்பவே கையுல விலங்கு மாட்டப் போறேன்..."
"ஐய்யய்யோ ... அப்டில்லாம் செய்யாதிய ஸாரே... என்ன விஷயம்..?"
"ஆழம் தெரியாமல் காலைவிட்டுட்டு அவஸ்தப்படுறவன் மாதிரி கோலவடிவு என்ன ஆனாளோன்னு நான் அவஸ்தப்படுறேன். சாமியாடிப்பய சும்மா ஆட வேண்டியது தானே... சுடலைமாடன் மறச்சு வச்சிருக்கதா சொன்னான்... கிட்நாப்பிங்கா... அவன விடமாட்டேன்..."
"என் மொகத்துக்காவ அவன் விடுங்க சாமி. அவன் சரியான நெருப்புக்கோழிப் பய....”
"அலங்காரி , எனக்கென்னமோ... கோலவடிவு அவளோட வீட்டுக்கோ... சொந்தக்காரங்க.... வீட்டுக்கோ வந்திருக்கலாமுன்னு ஒரு சந்தேகம்... யாரையாவது ஆட்கள் அனுப்பி பார்க்கச் சொல்லேன்.”
"எல்லா அதிகாரத்தையும் கையில வச்சுக்கிட்டா இப்டிச் பேசுறது...? போலீஸ் அனுப்பி பழனிச்சாமி வீட்ட சோதனை போடுங்க... இல்லன்னா.... எந்த வீட்டுக்குப் போனாலும் பெரிய மனுஷத்தனம் இல்லன்னு நினைக்கிற பழனிச்சாமிய போலீஸ் அனுப்பி கையோட கூட்டி வரச்சொல்லி கோலவடிவ எங்கேடா கடத்திட்டு போனேன்னு ரெண்டு தட்டுத் தட்டுங்க..."
"அலங்காரி... நீ நெசமாகவே ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாய் ஆயிருக்கணும்.”
"அப்படின்னா ஸாரே...?"
"ஒண்ணுமில்ல.... விடியட்டும்... பழனிச்சாமிய இங்க கூட்டிவந்து ஒன் கண்ணு முன்னாலயே.... விசாரிக்கேன் பாரு...."
----------------
அத்தியாயம்- 34
கோலவடிவு, அலங்கோல வடிவாய் நடந்தாள்.
இரவோடு இரவாக, பகவதிப் பாட்டி வீட்டின் தெற்குச் சுவரில் ஏறி, கீழே குதித்தாள்; ஒரு எருக்குழியில் விழுந்தாள்.... சண்டும், சருகும், சாணமுமாக அந்த இடத்தின் குமிழி போன்ற குழியில் பொத்தென்று விழுந்தாள். அங்கிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வு அற்றுப் போனவளாய், கால்மணியோ - அரைமணி நேரமோ அங்கேயே குப்புற ஒரு பள்ளத்தில் உருண்டு கிடந்தாள். ஏதோ பெரிய இரை கிடைத்த சாக்கில், அங்கே வந்த தெரு நாய்கள், அவள் காலையும், கழுத்தையும் மூக்கால் நுகர்ந்து, வாயால் கௌவப் போன போது, கோலவடிவு நிமிர்ந்து உட்கார்ந்தாள். உடனே அந்த நாய்கள் குலைத்தான்.... அவளைச் சமாளிக்க இன்னும் சில தேவை என்பதுபோல், இதர நாய்களைக் கூப்பிடும் குரலில் கத்தின... காதல் வயப்பட்டு, ஒப்பாரி போடுவதுபோல், ஊளையிட்ட நாய்களும், இப்போது போர்ப்பரணி பாடின... அவள் எழுந்தபோது, லேசாய் பயந்து, அவளைச் சுற்றி வியூகம் போட்டு நோட்டம் பார்த்தன.
கோலவடிவு, அதைப் பொருட்படுத்தாததுபோல் நின்றாள். அங்கே உள்ள, சின்னப் பாட்டி மகன் சிவனுப்பாண்டி சித்தப்பா வீட்டிற்குப் போகலாம் என்று யோசிப்பதுபோல், பிடறியில் கை கோர்த்தபடி, அந்த வீட்டையே பார்த்தாள். பிறகு ஓடிப் போனவளுக்கு, உறவும் ஓடிப்போகும் என்று நினைப்பதுபோல், நடக்கத் துவங்கினாள்... அந்த நாய் வட்டம், அவள் நடை வேகத்திற்குப் பயந்து, விட்டுக் கொடுத்தது. பெரும்பாலான நாய்கள், அவளுக்குப் பயந்தது போல், வால்களை பின்னங் கால்களில் நுழைத்துக் கொண்டு, வட்டத்தை வழிகளாய்க் காட்டின.
கோலவடிவோ , அந்த மையிருட்டில் தாறுமாறாய் நடந்தாள். எருக்குழியைத் தாண்டி, ஊரின் கொல்லைப் புறமாக பனங்காட்டு வழியாக பாய்ந்தாள். அது வெட்டாம்பட்டிக்கும் சட்டாம்பட்டிக்கும் இடையே உள்ள குறுக்குவழி சைக்கிள் கூட செல்ல முடியாத பாதை - பனைமரத்து ஓலைகள், பேய்க்காற்றில், ஒன்றுடன் ஒன்று உரசி ஊளையிட்டன.... எங்கோ ஓடிய முயல், அவளைப் பார்த்து பம்மியது.... ஏதோ ஒரு .... பாம்புக்கு குறி வைத்த கீரி, அதை விட்டுவிட்டு, அவளை எதிர்த்து நின்றது... அவள், அது புரியாமல், அதன்மேல் கால் வைக்கப் போனபோது, அந்தக் கீரி, எந்த பிராணியோ இளைப்பாறும் குழிக்குள் பாய்ந்த து....
மரணம் என்ற உருவமற்ற ஒன்று, பனங்காடே தலையாக, சவுக்குத் தோப்பே உடலாக, பாழுங் கிணறுகளே பாதங்களாக உருவம் பெற்றது போல் பேய்ச்சத்தமாக காற்று மூச்சை வேக வேகமாய் விட்டுக் கொண்டிருந்தது..... காற்றில் விழுந்த பனங்காய்கள், ஏற்கெனவே விழுந்த புளியங்காய்களை நசுக்கின... எங்கோ ஒரு அவலச் சத்தம்.... எதிலோ ஒரு ஊளைச்சத்தம்... அனைத்திலும்... ஒரு ஆவேசச் சத்தம்...
கோலவடிவு பனங்காட்டைத் தாண்டி சவுக்குத் தோப்புக்குள் நடந்தாள். நடக்கும் இடமெல்லாம் இடறல்கள்.... நோக்கும் திசையெல்லாம் பேயிருட்டு... சப் சப் என்று வளைவிலும், நெளிவிலும் நர்த்தனம் ஆடும் சவுக்கு மரங்கள்.... அவளை சில நரிகள் வழி மறிக்கப் பார்த்தான்.... அவளும், அவை தன்னை அடித்துத் திங்கட்டும் என்பதுபோல் நின்ற இடத்திலேயே நின்றாள்.... ஆனால் அந்த நரிகளோ, அவள் தங்களை அடித்துத் தின்னாமல் இருந்தால் போதும் என்பதுபோல் திரும்பி பாராமல் ஓடின...
கோலவடிவு, சவுக்குத் தோப்பைத் தாண்டி, வயல்வெளிப் பக்கம் வந்தாள். பகலில் பொன் நிறத்தில் மின்னும் நெற்பயிர்கள், இருட்டுக் கற்றைகளாய் அவள் மேல் பட்டுத் தொட்டன... தென்னைகள், இருளின் கோடுகளாய் தென்பட்டன. அவள் நடை போட்டாள்.... தாண்டவமாடுபவள் போல், தாவிக் குதித்தாள்.... தொலைவில், சுடலைமாடன் கோவில் பக்கம், வாணங்கள், ஆகாயத்தில் பாளம் பாளமாய் பாய்ந்து அந்தக் கோவிலை அடையாளப்படுத்தின. இருள் கிழிந்த வாணங்கள், இறுதியில் இருளில் கிழிபட்டு, அற்றுப் போயின.... அவளை போகாதே போகாதே என்பதுபோல், பூசணிக் கொடிகள் அவள் கால்களைப் பின்னின... ஆமணக்குச் செடிகள் வழிமறித்தன.... வெட்டப்பட்ட சோளக் கட்டைகள் தட்டின... அவளோ கொடியைக் கிழித்து, செடியை ஒடித்து, கட்டைகளை கட்டையாக்கி நடந்தாள்.... கடந்த காலம், நிகழ்கால களங்கமாக, எதிர்காலம், எதிரிக் காலமாக.... அவள், காலங் கடந்தவளாய், காலத்தால் கடத்தப்பட்டவளாய் நடந்தாள்....
ஏதோ ஒரு விரக்தியோ அல்லது சக்தியோ அவளை நடத்திக் கொண்டிருந்தது. துணிந்தவளுக்கு துக்கமில்லை... வெட்கமில்லை என்பது மாதிரியான அசட்டு நடை.... துளசிங்கத்தால் கீழே விழுந்த போது வருத்தப்பட்டு, தனது தங்கையை தன்னுடன் ஒப்பிட்டு பேசியபோது கோபப்பட்டு, அவன் போலீஸ் நிலையம் நோக்கி போன போது பாவப்பட்டு, கட்டிலோடு கட்டிலாய் கிடந்தவள், இப்படி நடக்கிறாள்.
எந்த அர்த்த ராத்திரியில் ஐவராசாவும், அலங்காரியும், தனது அண்ணன் திருமலை, காவல் நிலையத்தில் கட்டுண்டு கிடப்பதைச் சொன்னார்களோ - அப்போது எழுந்தாள். எப்போது பழனிச்சாமியை இளக்காரமாய் பேசினார்களோ - அப்போது என்னடா நெனச்சே என்னடா நெனச்சே' என்று பாயப் போனாள்.... எப்போது தன்னைக் காட்சிப் பொருளாக்கி, தான் பிறந்த கரும்பட்டையான் குடும்பத்தை சிறுமைப்படுத்த திட்டமிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தாளோ - அப்போதே குமைந்தாள்... கல்யாணம் என்ற பெயரில் - தனது உற்றார்க்கும், பெற்றார்க்கும் கருமாந்திரம் வைக்கப் போகிறார்கள் என்பதை எப்போது தெரிந்தாளோ... அப்போது தெளிந்தாள்.... அப்பா விவகாரி..... ஓடிப்போன பல பெண்களைக்கூட, குடும்பப் பெண்களாக்கியவர். நடந்த விவரத்தை ... அப்படியே அவரிடம் சொன்னால் - அவர் நிச்சயம் அனுதாபப்படுவார். ஒருத்தனுடன் ஓடியது சாதாரண துணிவு என்றால், அவனை, தாய் தந்தையருக்காக உதறிவிட்டு திரும்புவது அசாதாரண துணிவு என்று தந்தை நினைப்பார் என்று அவள் நினைத்தாள்.... துளசிங்கம், ஐவராசா, அலங்காரி வகையறாக்கள், தன் குடும்பத்தை படுத்திய பாட்டில் பெருமிதப் பட்டபோது, அவள் தனது மனதுக்குள்ளேயே, அவர்களுக்கு எதிராக போர் தொடுத்தாள்.
அவர்கள் எந்தக் கையில் தன்னை ஒரு கருவியாக வைத்திருக்கிறார்களோ - அந்தக் கையையே உடைக்கும் கருவியாக தான் மாறியே ஆகவேண்டும் என்று கருவிக்கொண்டாள்... சட்டாம்பட்டிக்கும், வெட்டாம்பட்டிக்கும் இடைப்பட்ட வழியில் மட்டும் சிறிது தடுமாறி, பகவதி பாட்டி வீட்டுக்கு வந்ததும் பழைய கோலவடிவாய் தான் ஆகிவிட்டது, தனது பெற்றோருக்கு புரியும் என்று நினைத்தாள். ஒருவர் மீது அன்பு செலுத்தும்போது, அவரும் தம்மீது அந்த அளவு அன்பு செலுத்துவதாக நினைப்பது போல், பெற்றோருக்காக அவள் அனுதாபப்பட்டதால், பெற்றோரும் அனுதாபப் படுவார்கள் என்று நினைத்தாள். பெற்றோரின் கௌரவத்தை தூக்கிப் பிடித்து இப்போது நடக்கும் இந்த நடை ஒரு வீர நடை என்று வீம்புடன் நடந்தாள். வேண்டப்பட்டவர்களைப் பற்றி தீவிரமாக நினைக்கும்போது, அந்த நினைப்பின் ஒவ்வொரு அசைவும், நினைக்கப் படுகிறவர்கள் இதயத்திலும் ஒரு அசைவை உருவாக்கி, அந்த அசைவே நினைத்தவரின் சிந்தனையாய் மாறும் என்று நினைப்போமே, அந்த நினைப்பில் நடந்தாள்.
என்றாலும், ஊரை நெருங்க நெருங்க, ஓடிப்போன கேவலம், அவள் உடம்பில் களைப்பாகவும், உள்ளத்தில் உளைச்சலாகவும் ரூபமெடுத்தன... இருண்டிருந்த காளியம்மன் கோவில், அவள் முகத்தை இருளடையச் செய்தது. சுடலைமாடசாமி கோவிலின் விளக்குப் பிரகாசம் அவள் கண்களைப் பறித்து குருடாக்கியது....
ஊருக்குள் வட்டமடித்து, வேறு வேறு பாதைகளில் நடந்து நடந்து, இறுதியில் வீட்டுப் பக்கம் வந்தாள்... உள்ளே எல்லாமே தலைவிரி கோலமாய் ... தலைகீழாய் கிடப்பதைத் தொலைவிலேயே பார்த்துவிட்டாள்.... அம்மாவின் விசும்பல் கேட்டு, உள்ளே ஓடப் போனாள்.... அப்பாவின் பொருமல் கேட்டு தாவப் போனாள். ஆனாலும் கால்கள் நடந்தால், முதுகு நின்றது.... முதுகு வளைந்தால், கால்கள் நின்றன.
சொந்த வீடே, அன்னிய வீடானதுபோல் தோன்ற, அவள், அந்த வீட்டின் வடக்குச் சுவர்ப்பக்கம், வேற்றுப் பெண்ணாய் போனாள்... லேசாய் வியாபித்த பொட்டல்வெளி... அதில் கட்டை வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குள் தவழ்ந்து தவழ்ந்து போனாள்... அதன் பைதாக்களுக்குள் (சக்கரங்கள்) உடம்பைக் குறுக்கிக் கொண்டாள்....
வெளியே நடப்பதைப் பார்க்கும் போதெல்லாம், உள்ளே ஓடிப்போய் விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்ற வேகம்... அதே சமயம் வீட்டில் நடப்பதைப் பார்க்கும் போது, வெளியே ஓடி, பாழுங் கிணறு ஒன்றின் பாறைப் பற்களுக்கு தீனியாக வேண்டும் என்ற உந்தல்.
கோலவடிவு - அந்த பெயருக்கு எதிர்மாறாய் கிடந்தாள். வீட்டையும் தொலைவில் உள்ள ஒரு ஆழக் கிணறையும் மாறி மாறிப் பார்த்தாள்....
-------------
அத்தியாயம்-35
சுடலைமாடன் கோவில் சுறுசுறுப்பாய் இயங்கியபோது, காளியம்மா கோவில் மூடிக்கிடந்தது..... அரைகுறை பந்தலுடன், மொட்டையான சப்பரத்துடன் அந்தக் கோயில் இருளில் மூழ்கிப் போனது... இவ்வளவு பெரிய அவமானத்தைத் தந்த காளியாத்தாவிற்கு இந்த வருஷம் இல்லை, எந்த வருஷமும் கொடை தேவையில்லை என்று கரும்பட்டையான்கள் தீர்மானித்தார்கள்.... திறந்து கிடந்த அம்மன் கோவிலை மூடப்போனால் அம்மனைப் பார்க்க வேண்டியதிருக்கும் என்று நினைத்து, அவள் முகத்தில் விழிக்க விரும்பாதவர்கள் போல் அப்படியே விட்டுவிட்டார்கள்... சிலர் காளியம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள்...
கோலவடிவின் தந்தை பழனிச்சாமி வீட்டிலே.....
எல்லாமே தலைகீழாகக் கிடந்தன. தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளுக்கு யாரும் தண்ணி' காட்டவில்லை.... அவை ம்மா... ம்மா" என்று கத்தின. தொட்டியில் போட வேண்டிய புண்ணாக்கு திண்ணையில் திட்டாகக் கிடந்தது. வீடு பெருக்கப்படாமல் குப்பையும் கூளமுமாகக் கிடந்தது.... சேலை துணிமணிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்தன.... அடுப்பிலே தூசித் திட்டுக்கள். அம்மியிலோ பல்லிகள் பாச்சானைப் பிடித்துக் கொண்டிருந்தன.
இதேபோல், அந்த வீட்டு ஆட்களும் அப்படித்தான். பழனிச்சாமி, கட்டிலில் சோர்ந்து போய்க் கிடந்தார். அவர் முன்னால் சிதறிக் கிடந்த கரும்பட்டையான் பங்காளிகளைப் பரக்கப் பரக்கப் பார்த்தார். அவர் கண்கள், அவர்களைப் பார்ப்பது போல் எங்கேயோ பார்த்தன.... அடிக்கடி தன்னையறியாமலேயே வயிற்றைத் தடவி விட்டார்.... மாயாண்டி ஒரு அரிவாளைக் கூர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஏதாவது செய்துவிடக் கூடாது என்பதற்காக நாட்டு வக்கீல் "அரிவாளைக் கீழே போடும்... போடும்...'' என்று நச்சரித்துக் கொண்டிருந்தான். கோலவடிவின் அம்மா பாக்கியம், திண்ணையில் கிடந்து தலையைச் சுவரில் தேய்த்து தேய்த்து "பாவி மொட்டை கெடுத்துட்டாளே.. பாவி மொட்ட தலகுனிய வச்சுட்டாளே... யாருக்கும் தல வணங்காத என் மவராசன் அதோ அடியத்து கிடக்காரே.... கப்பல் போல இருந்த என் ராசா கவிந்து போய் கிடக்காரே...." என்று புலம்பினாள். அழுதழுது, அவள் முகம் வீங்கியிருந்தது.... வாடாப்பூ, அவள் வாயில் நீராகாரத்தை டம்ளர் விளிம்பால் உதடுகளைப் பிரித்து உட்புகுத்திக் கொண்டிருந்தாள். அந்தத் தாயைச் "சாப்பிடு... பெரியம்மா.... என்... கண்ணுல்ல...' என்று சொல்லிச் சொல்லிக் குழந்தைக்கு ஊட்டுவது போல் ஊட்டிக் கொண்டிருந்தாள். ஆனாலும், வலுக்கட்டாயமாக வாய்க்குள் போன நீராகாரத்தை பாக்கியம் துப்பினாள்.... பிறகு அப்படியே பேச்சற்று மூச்சற்றுச் சாய்ந்தாள்... திக்கற்றுக் கிடந்த பழனிச்சாமியையும் பாக்கியத்தையும் பார்த்துவிட்டு பலர் அழுது விட்டார்கள்.
நள்ளிரவில், சுடலைமாடசாமி பருத்திக் காட்டிற்குத் தீப்பந்தத்துடன் 'வேட்டை'க்குப் போய்விட்டு வந்து விட்டார். மேளத்திற்குப் பிறகு ஆடிய ரிக்கார்ட் டான்ஸம்மா மேடையிலேயே மேக்கப்பை கலைத்துக் கொண்டிருந்தாள். கூட்டம் சிறிது சிறிதாகச் சிறுத்துக் கொண்டிருந்தது.... கதிரவனும் கண் விழித்தான்.
திடீரென்று பழனிச்சாமி வீட்டு முகப்பில் பழைய காலத்துத் துப்பாக்கியோடு ஒரு கான்ஸ்டபிள் தோன்றினார்.
"யாரும்மா ... பாக்கியம்...." நாட்டு வக்கீல் நாராயணன் பதிலளித்தான். "அதோ புலம்பிக்கிட்டு இருக்காவளே..... அந்தம்மா...” "யாருவே பழனிச்சாமி..."
"அதோ யானை சேத்துல சிக்குனமாதிரி கட்டிலிலே கிடக்காரே, அவருதான். என்ன விஷயம்?"
"யாருவே பேச்சியம்மா..."
"எங்க வகையறாதான்.... ஒங்களுக்குப் பயந்து எங்கேயோ போயிட்டாள்... என்ன விஷயம்?"
"இவங்க மூணுபேரையும் எங்கய்யா கையோட கூட்டிட்டு வரச்சொன்னாரு..."
"ஓங்கையான்னா ..."
"விளையாடுறியளா... சப்-இன்ஸ்பெக்டர்தான்... சுடலமாடன் கோவிலுல பந்தோபஸ்த பார்த்துட்டு இருக்கார்... அங்க வரச் சொன்னார்...''
"என்ன விஷயமாம்?" "எது பேசணுமுன்னாலும் அவருகிட்ட வந்து பேசுங்க..." "வரமுடியாதுன்னு சொல்லுங்க...."
''விஷயம் லேசுல்ல.... இப்பவே பாத்துடுங்க.... இல்லன்னா எங்கய்யாவுக்கு கண்மண் தெரியாம கோபம் வரும்."
"அட போய்யா... எங்களால் வரமுடியாதுன்னா வரமுடியாது.... என்ன செய்யணுமுன்னாலும் செய்யலாமுன்னு ஒங்கய்யாகிட்ட சொல்லி புடு."
அந்த கான்ஸ்ட பிள் சிறிது யோசித்தார்... அந்த வீட்டில் நிலவிய அவல நிலை அவரையும் ஆட்டுவித்தது... சப்-இன்ஸ்பெக்டர் செய்வது அதிகப்படி என்று புரிந்தது. அவர் நாம் சொன்னால் கேட்பாரா.... துளசிங்கம் - அலங்காரி தானே இப்போ அவருக்கு ஆண் கான்ஸ்டபிள், பெண் கான்ஸ்டபிள்...
அந்த போலீஸ்காரர் போய்க் கொண்டிருக்கும் போதே, அருணாசலம் கத்தினார்....
"கொடுமைக்கு ஒரு அளவு வேண்டாம்..? நம்மளப் போய் சுடல மாடன் கோவிலுக்கு கூப்புடணுமுன்னா எவ்வளவு திமுறு இருக்கணும்? அவமானப் படுத்துறதுக்கும் அளவு இல்லாமப் போயிட்டுப் பாரு... இந்த பேச்சியம்மாவ வேற காணல்.... ஏடா... நாராயணா... திருமலை எப்டிடா இருக்கான்..."
"முணு மணிநேரம் சுவர்லயே மாட்ட வச்சிருந்தாங்களாம்.... என்னப் பார்த்துட்டு அழுதான்.... அழுதான்... அப்டி அழுதான்..."
பாக்கியம்மா, திடீரென்று எழுந்தாள்.... பெற்ற வயிற்றில் மாறி மாறி அடித்தாள். நாட்டு வக்கீல் நாராயணன் ஆற்றுவித்தான்.....
"பொறுத்துக்க சித்தி, பொறுத்துக்க... நாளைக்கு அவன் ஜாமீன்ல கொண்டு வாரது என் பொறுப்பு... இந்த புஷ்பத்த கூண்டுல ஏத்தி, வக்கீல வச்சு, அசிங்கம் அசிங்கமாய்க் குறுக்குக் கேள்வி கேட்க வைக்கேன் பாரு - நாளை மத்தியானத்துள்ள திருமலய ஒன் கண்ணுல காட்ட வேண்டியது என் பொறுப்பு. அதுவரைக்கும் பொறுத்துக்க சித்தி... நம்ம வீட்டு முன்னாலயே போலீஸ் போட்டிருக்கான் பாரு."
சிறிது நேரத்தில், பழனிச்சாமி வீட்டுப் பக்கம் பாரா பார்த்த போலீஸ்காரர்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தார். இடுப்பில் துப்பாக்கியுடனும் கையில் லத்திக் கம்போடும் வெளிப்பட்டுப் பேசினார்.
"எவண்டா அவன் பழனிச்சாமி... அவன் பெண்டாட்டி எங்க இருக்காள்?"
"சார் கொஞ்சம் மரியாதியாய்..."
"லத்தி பிஞ்சுடும்... கடத்தல் பயல்வளுக்கு என்னடா மரியாதை... கோலவடிவ கடத்தி எங்கடா வச்சிருக்கான், அந்த பழனிச்சாமி..."
எல்லோரும் திகைத்து திக்பிரமை பிடித்து நின்றபோது கட்டிலில் குப்புறக் கிடந்த பழனிச்சாமி தலையை ஒரு குலுக்கு குலுக்கினார். அங்கிருந்து முற்றத்தில் குதித்து முன்நோக்கி நடந்தார். சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் இரண்டு கைகளையும் நீட்டியபடியே கத்தினார்.
"இந்தாப்பா... கையி... விலங்கை மாட்டய்யா.... ஏய் பாக்கியம்... இங்க வாடி... ஒன் கையிலயும் விலங்க மாட்டட்டும்..."
"எங்கண்ணாச்சி கையில் மட்டும் விலங்கு போச்சுது... அப்புறம் தலையில் தொப்பி இருக்காது."
பமனிச்சாமி பதறாமலே சீறினார்.
"ஏய்யா யோசிக்கே... நீ கூப்பிட்டதுக்கு வராதது குற்றம். ஒரு மகளப் பெத்தது குற்றம். அவள் அருமையா வளத்தது குற்றம்... அவள் ஓடிப்போனதும் என்னோட குற்றம்... அவள் துளசிங்கம் கூட்டிட்டுப் போனதும் என் குற்றம்... அலங்காரி என்றவள் ரெண்டு பேரையும் செட்டப் பண்ணுனதும் என் குற்றம். இதோ வெளில் மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம தவிக்காளே.... பாக்கியம் இவளும் குற்றவாளிதான்... எல்லா குற்றத்துக்கும் சேர்த்து ரெண்டு பேருக்கும் விலங்கு மாட்டு. பாக்கியம் வாடி... ஒனக்கும் கோடி புண்ணியம்.... எங்க ரெண்டு கையையும் ஒண்ணா சேர்த்து விலங்கு போடு. இப்போ படற அவமானத்தைவிட ஒன்னால் படப்போற அவமானம் பெரிசாயிடாது."
சப்-இன்ஸ்பெக்டர் யோசித்தார். இந்த ஆசாமி இப்படிக் கத்துறார் என்றால் ஏதாவது பேக்ரவுண்ட் இருக்கும். இவன் மாமனோ மகனோ தாலுகா ஆபீஸ்ல இருப்பான். விஷயத்த இதோட விடமாட்டான்.... ஆர்.டி.ஓ. என்குயரி வரும். ஆனால், புகார் கொடுத்தவன் துளசிங்கமாச்சே.... ஒப்புக்காவது ஏதாவது செய்யணுமே.....
"நான் எதுக்கு சொல்ல வந்தேன்னா... பெரியவரே."
"நீ எங்கய்யா என்னை பெரியவன்னு நெனச்சே... என் வயசுல முக்கால் வயசுகூட ஒனக்கு இல்ல. எடுத்த எடுப்புலயே ஏடா ஓடான்னு பேசுறே... ஒன்னை மாதிரி நானும் விவகாரிதாய்யா... நாலு ஊர்ல வழக்குப் பேசி முடிச்சு வச்சவன் தாய்யா நான். இந்த ஊருல இந்தத் தெருவுல ரெண்டு வம்சங்க. ரெண்டுக்கும் ஏடாகோடமான போட்டி. இந்த ஊருக்குப் பொறுப்பு வகிக்கிற ஒனக்கு மொதல்ல இது தெரிஞ்சிருக்கணும். இப்படிப்பட்ட நிலையில் ஒரு குடும்பத்து பொண்ணு எதிரிக் குடும்பத்துப் பயலோட ஓடிப்போறது வெறும் காதல் விவகாரமா மட்டும் ஆகாது. அதுல பெண்ணப் பெத்தவன் குடும்பத்தோட மானமும், ஆணப் பெத்தவன் குடும்பத்தோட ஆணவமும் அடங்கியிருக்கு......
நீ சப்-இன்ஸ்பெக்டர்... என்ன செய்திருக்கணும்... இப்போ வந்து நிக்கியே.... இந்த இடத்துக்கு வரணும்.... ரெண்டு குடும்பத்துக் காரனுவளயும் ஊர்ப் பெரியவங்களையும் கூட்டணும்... அப்புறம் உருட்டு மிரட்டு.... இது ஒன் வேலை... ஒருத்தன் எதையோ சொன்னான்னு நிரபராதிகள் உருட்டி... மிரட்டி எதிரி கோவிலுக்கே கூப்பிடறதும்.... சொன்னபடி போகாட்டா விரட்டுறதும்... நல்லா இருக்கா? சும்மா ஒரு புகார் கிடச்சுட்டு என்கிறதாலே... கண்மண் தெரியாம ஆடுறதா.... ஏற்கெனவே படுற அவமானம் போதாதுன்னு, நீயும் அவமானப் படுத்துனா என்னய்யா அர்த்தம்? எங்களுக்கு மட்டும் ஆளில்லையா என்ன? விலங்கு போட்டு கூட்டிட்டுப் போய்யா... அப்படியாவது என் திருமலையை நான் பார்க்கலாம்..."
பழனிச்சாமி போட்ட கூச்சலில் ஊரில் பாதி கூடி விட்டது. காத்துக் கருப்பன்கள், காரை வீட்டுக்காரர்கள், ஒத்தை வீட்டுக்காரர்கள், ஆசாரிக் கூட்டம், கோனார் சாதியினர், சேரிக்காரர்கள்.... கடந்த ஒரு நாளில் போலீஸ்காரர்கள், பந்தோபஸ்து என்ற பெயரில் கண்டவர்களை எல்லாம் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதும், எலி டாக்டர் வீட்டில் என்னெல்லாமோ சாப்பிட்டதும், ஊர் மக்களிடம் ஒரு உக்கிரத்தை ஏற்படுத்தியது. ரஞ்சிதம் பீடிப் பெண்களோடு வந்தாள்... சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் போய் சவாலிட்டாள். "சாதாரண மனுஷன் பட்டை போட்டுட்டு ஆடுறான். நீங்க சர்க்கார் யூனிபார்ம் போட்டுட்டு ஆடுறிங்க. சினிமாப்பயல்க எங்கள் கிட்ட முறைகேடா நடந்ததா புகார் கொடுத்தேனே... அதுக்கு ஆக்ஷன் எடுத்தியா? இதோ புஷ்பம், இவள் கற்பு திருமலையால போயிட்டுதான்னு தீர விசாரிச்சியா? புஷ்பா நீயே சொல்லு..."
புஷ்பம் விம்மினாள்.
"இல்ல இல்ல, சண்டாளி முண்ட... அலங்காரி சோடிச்சா... இந்த சப்-இன்ஸ்பெக்டரும் நம்புறமாதிரி நடிச்சார். என்ன பேசவே விடலே..."
"இப்ப என்ன ஸார் சொல்றீங்க..... பொய்ப் புகார் கொடுத்த துளசிங்கத்தையும் அலங்காரியையும் கைது செய்ங்க பார்க்கலாம்... அப்போதான் நீங்க நிசமான போலீஸ்... இல்லன்னா போலி... இந்த ஊர்ல.. தடிமாடு மாதிரி திரிய வச்சிருக்கியே துளசிங்கம் - அவன்கிட்ட அந்த கோலவடிவ எங்கேடான்னு கேட்டியா?"
இடுப்பில் உள்ள துப்பாக்கியில் கை வைக்கப் போன சப்-இன்ஸ்பெக்டரை, அருணாசலம் இழுத்துப் பிடித்தார். கல்லைத் தூக்கப் போன பற்குணத்தை, நாட்டு வக்கீல் மடக்கிப் பிடித்தான். எவரோ இரண்டு பேர் முகங்களைக் காட்டாமல், சப்-இன்ஸ்பெக்டர் இடுப்பைக் கிள்ளினார்கள். சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்ற ரஞ்சிதம் கோபாவேசப்பட்ட பீடி பெண்களைத் தடுத்து நிறுத்தினாள். அதற்குள் எதுவும் தெரியாத அப்பாவி போலவும் சற்றுத் தள்ளி நின்ற ஆயுதப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டருக்கு கேடயமாக நின்றபடியே கெஞ்சினார்.
"நான் சொல்லுறதை தயவு செய்து கேளுங்க.... இந்த சப்-இன்ஸ்பெக்டர் நடந்துகிட்ட முறை தப்புத்தான்... இந்த ஒரு நாளிலேயே ஊர் நிலையை புரிஞ்சிக்கிட்டேன். ஏதோ நடந்தது நடந்து போச்சு... அதை இனிமேல் மாத்த முடியாது... திருமலையை உடனே விடுதலை செய்ய ஏற்பாடு செய்யுறேன்... நாங்களும் ஊரை விட்டு
ஓடிப் போயிடுறோம். ஆனால் அதுக்கு நீங்க அமைதி காக்கணும். ஒங்க விவகாரத்தை நீங்களே தீர்ப்பதாய் உறுதி சொல்லணும்."
காண்டிராக்டர் தாமோதரன் உறுதி சொன்னார். "எங்க விவகாரத்த நாங்களே தீர்த்துக்கிடுறோம் ஸார். அதுக்குன்னு ஒரு பிளான் வச்சிருக்கேன் ஸார். நீங்க எல்லாரும் பொறுமையா என் வீட்ல சாப்பிட்டுட்டு போங்க ஸார்... அதுக்குள்ள கோலவடிவையும் கண்டு பிடிச்சுடுங்க ஸார்."
போலீஸ் கூட்டமும், ஊர்க் கூட்டமும் சிறுகச் சிறுகக் கலைந்தது. வீறாப்பாய் நிற்பது போல் நின்ற சாதாரண சப்-இன்ஸ்பெக்டரை, ஆயுத சப்-இன்ஸ்பெக்டர் இழுத்துக் கொண்டு போனார்.
---------------
அத்தியாயம்- 36
திடீரென்று, கட்டை வண்டிப் பக்கம் போன சந்திரா, கூக் குரலிட்டாள்....
"இங்கே யார் இருக்கான்னு பாருங்க... எக்கா... எக்கா... எப்பக்கா வந்தே? இப்டி பண்ணிட்டியே... அக்கா...."
சந்திரா, கோலவடிவை இழுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். அவள் முதுகின் ஆதரவோடு வந்த கோலவடிவு, சட்டென்று முற்றத்தில் நிலைகுலைந்து விழுந்தாள்... முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டு, குப்புறக் கிடந்தாள்.... எவரும் கண்டு கொள்ளாத ஏணிப் படிக்கட்டுக்குள் கிடந்த பேச்சியம்மா, கோலவடிவின் முன்னால் வந்து மாரடித்தாள்.
"பாவி கெடுத்திட்டியே.. பாவி.. கெடுத்தியேடி... ஒன்னால நாங்க சின்னாபின்னப்பட்டு நிக்கோமே... இதுக்குல்லாம் காரணம் இந்த பாவி மொட்ட... வாடாப்பூதான்.. இவள் மட்டும் சொல்லியிருந்தால்..."
மாயாண்டி, பேச்சியம்மாவை மடக்கப் போனார். வாடாப்பூவை எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி, கூட்டி வந்தாச்சு.... பழையபடியும் அவள் ரஞ்சிதம் கிட்ட போயிடப்படாதே...
"இந்தா பாரு.. பேச்சி.. என்ன பேச்சு பேசுறே... என் மகளாவது சொன்னாள்..... ஒன் மகள் சொல்லியிருக்கக்கூட மாட்டாள். ஏழா.-- கோலவடிவு... எங்கள் பண்ணாத கோலமெல்லாம் பண்ணிட்டியளா... பாவி...”
மாயாண்டியையும் பேச்சியம்மாவையும் யாரோ அதட்டினார்கள்... பிறகு பழனிச்சாமியையும், கோலவடிவையும் மாறி மாறிப் பார்த்தார்கள் - கோலவடிவோ தன்னைப் பார்த்த சொக்காரர்களைப் பார்க்காமல், எதுவும் நடக்காதது போலவும், அவள் அங்கே செல்லாதது போலவும், சாய்வு நாற்காலியில் கிடந்த தந்தையை, கீழே கிடந்தபடியே ஏறிட்டுப் பார்த்தாள்... உதடுகள் திறந்தன... பற்கள் விலகின...
'அப்பா.... அப்பா.... என்னை செல்லமா.... வளத்து சீராட்டுன அப்பாவே... எப்போ அந்த துளசிங்கம் ஒம்ம அவமானப் படுத்துறதுக்காவத்தான் என்னை கூட்டிட்டுப் போனான்னு தெரிஞ்சுதோ.... அப்பவே நான் பழையபடியும் ஒம்ம மகளாயிட்டேம்பா.... எப்போ அண்ணனை போலீஸ் அடச்சு, சித்தரவதை செய்யுறதுக்கு ஏற்பாடு செய்தானோ, அப்பவே நான் அண்ணனுக்கு தங்கச்சியாயிட்டேன். அப்பா... எந்த உடம்போட போனனோ அந்த உடம்புல எந்த வில்லங்கமும் இல்லாமத் திரும்பி வந்துட்டேம்பா... நடந்ததை எல்லாம் போலீஸ்ல சொல்லி இந்த துளசிங்கத்துக்கும், அலங்காரிக்கும் பத்து வருஷமாவது ஜெயில் வாங்கிக் கொடுக்கணும் அப்பா. விட்டில் பூச்சியான என்னை வீட்டுக்குள்ள சேரும்பா. அம்மா.... என் அம்மா.... நீ இப்படி ஆவேன்னு தெரியமுன்னா ... நான் ஏழெழு ஜென்மத்துக்கும் இப்டிப் பண்ண மாட்டேம்மா... அண்ணன இரும்பால பூட்டிட்டு... நான் கழுத்துல தாலிய... பூட்டிக்கதுக்கு... நான்... அரக்கி இல்லம்மா...'
கோலவடிவு பேசுவதாகத்தான் நினைத்தாள். எல்லோரும் சும்மா நிற்கிறாவளே.. கேட்டதுக்கு அடையாளக் கோபம்கூட வர்லயே... ஓகோ எனக்கு நானே தான் பேசிக்கிட்டேனோ? என்னால பேச முடியலியோ.... பேச முடியலியோ? நாக்கு சுத்தமாட்டங்கே.... குரல் வரமாட்டங்கே ..."
தாய்க்காரி பாக்கியம் லேசாகக் கண் விழித்தாள்... ஏதோ பேசப் போன வாயில், கண்ணில் உற்பத்தியான நீர் சங்கமமானது... அவளின் இரண்டு கைகளும், ஆகாயத்தைப் பார்த்துக் கும்பிட்டன... பின்னர், காலாடாமல் கையாடாமல் வாய் மட்டும் துடிக்க அப்படியே கிடந்தாள்... தாயம்மா அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தாள்... வாடாப்பூ முந்தானையால் விசிறி விட்டாள். சந்திரா, கோலவடிவைத் திட்டினாள்.
எல்லோரும் பழனிச்சாமியை ஏறிட்டுப் பார்த்தார்கள்.
பழனிச்சாமி, அந்த சாய்வு நாற்காலியை சாய்ப்பவர் போல் எழுந்தார். சிறிது தொலைவில், முடங்கிக் கிடந்த கோலவடிவைப் பார்த்து, தலையை 'இரு... இரு...' என்பது போல் ஆட்டியபடியே, வீட்டுக்குள் போனார். அவர் போனதும், வீட்டுக்குள் டமார்' என்று சத்தம் கேட்டது. எல்லோரும் என்னமோ ஏதோ என்று உள்ளே பார்த்தபோது, பழனிச்சாமி கையில் ஒரு டிரங்க் பெட்டியோடு வெளியே வந்தார்.... பாசிபூத்த பழைய பெட்டி. பூட்டோடு கூடிய - நாட்டுப் பெட்டி
பழனிச்சாமி, அந்தப் பெட்டியுடன் மகளை நோக்கிப் போனார். கோலவடிவு, இப்போது தரையில் கிடந்தபடியே தவழ்ந்து தவழ்ந்து, அவர் காலைத் தொடப் போனாள். லேசாகத் தொட்டு விட்டாள். உடனே அவர், அந்தக் கைவிரல்களை ஐந்து தலை நல்ல பாம்பாக நினைத்தவர் போல், தனது கால்கள் அவள் கையில் சிக்காமல் இருக்க, துள்ளிக் குதித்தார். பிறகு அவளைப் பார்த்து, வழக்கில் தீர்ப்புக்குக் கட்டுப்படாதவளைப் பார்த்து, எப்படிப் பேசுவாரோ- அதே ஆணித்தரமான குரலில், விருப்பு வெறுப்பற்ற வேதாந்த முறையில் பேசினார்.
"எழுந்திரு... இந்த பெட்டியில் ஒன் துணிகள் நகைகள் நட்டு எல்லாம் இருக்குது... இதை.... நான் ஒனக்கு ஆசையோடு தரல... ஒன் ஞாபகம் வரப்படாதுன்னுதான் எல்லாத் துணியையும் அள்ளிப் போட்டுத் தாறேன். எழுந்திரு... நான் ஒன்னை பெத்தவன் பாரு.... அதனால் நானே... ஒன்னை அந்தப் பயல் வீட்ல கொண்டு விடுறேன்...
வா....”
கோலவடிவு, எல்லாவற்றையும் அங்கே வருவதற்கான அவசியம் உட்பட அனைத்தையும் அவரிடம் சொல்லப் போனாள். வார்த்தைகள் கிடைக்கவில்லை.... ஏதோ அரைகுறையாகப் பேசப் போனவளை, பழனிச்சாமி, மடக்கிப் பேசினார்.
"நீ எதுவும் பேச வேண்டியதில்ல.... பேசி ஆக வேண்டியதுமில்ல.... மரியாதியா எழுந்திரு.... டேய் நாராயணா.... நீயும் இவளுக்கு அண்ணாச்சேடா, செல்லாம் வளர்த்த செல்லத் தங்கச்சிய... புருஷன் வீட்ல கொண்டு விடவேண்டாமா? ரகசியமா ஓடுனவளை பகிரங்கமாய் கொண்டுவிட வேண்டியது நம்மோட கடமையாச்சேடா.... எந்திரிங்கடா... நமக்கு நல்ல பேர் வாங்கித் தந்தவளை கொண்டு விட்டுட்டு வரலாம். ஒருத்தி புருஷன் வீட்டுக்குப் போகும்போது தலை குனியணும்... பெத்தவங்களும் கூடப் பிறந்தவங்களும் தலை நிமிரணும்... இது இந்த வீட்ல தலைகீழா போயிட்டேன்னு பாக்கியாடா.... பரவாயில்ல.... எழுந்திருடா.... ஏய்... என் செல்ல மகளே.... என்ன அலங்கோலமாக்குன கோலமவளே.... எழுந்திரும்மா.... எழுந்திருழா. எழுந்திரு நாயே..."
நாராயணன் இருந்த இடத்திலேயே ஏறெடுத்துப் பாராமல் கிடந்தான். திண்ணையில் இப்போது மல்லாந்து கிடந்த அம்மா பாக்கியம், கைகளைத் தூக்கி தூக்கி ஆட்டினாள். என்ன சொல்ல நினைத்தாளோ.... எது செய்யத் துடித்தாளோ.....
கோலவடிவு, அப்பா நின்ற திசை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள்.... ஆனால் பழனிச்சாமி கும்பிட்ட அவள் கைகளை ஒரு சேரப் பிடித்து, அவளைச் செந்தூக்காகத் தூக்கினார். அவள் கீழே உட்காரப் போனாள். அவர், அவளை அப்படியே மேலே இழுத்துப் பிடிக்க, அவள் சிறிது நேரம் அந்தரத்தில் தொங்கினாள். தந்தை, அவளை அப்படியே தூக்கிக் கொண்டு சிறிது நடந்தார். அவள் எப்பா... எப்பா..." என்று பரிதாபமாய் குரலிட்டதும் அவர் கத்தினார்...
“நான் ஒனக்கு அப்பனும் இல்ல. நீ எனக்கு மகளும் இல்ல... ஏதோ பெத்த கடமைக்கு பொண்ணுக்குத் தோழியா' வாரேன். இந்த வீட்ல நீ இனிமேல் இருக்க முடியாது. இது மானஸ்தனுக்குப் பிறந்த மானஸ்த ன் வீடு. உம்... நட.... நட...”
கோலவடிவு நடக்க மறுத்தாள். பழனிச்சாமி விடவில்லை. சண்டித்தனம் செய்யும் மாட்டை இழுப்பது போல், அவள் கையை, விட்டுவிட்டுக் கழுத்தைப் பிடித்து இழுத்தார். அவள் கால்கள், தரையில் சாய்ந்த கோபுரம் போல் கோடுகள் போட, அவள் உடம்பு அவர் இழுத்த இழுப்பிற்கு நகர்ந்தது. அங்கே இருந்த எல்லோருக்கும், பழனிச்சாமியிடம் ஏதோ சொல்லவேண்டும் என்ற எண்ணம்... என்ன சொல்ல முடியும்... போனால் போகுது... இங்கே அவள் இருக்கட்டும் என்று சொல்ல முடியுமா.... என்னத்தைச் சொல்ல....
கரும்பட்டையான்கள் கைகளை நெறித்தபோது, பழனிச்சாமி, மகள் கழுத்தை நெறிக்காத குறையாக, இழுத்துக் கொண்டு போனார். இருவரும் அந்த வீட்டை விட்டு மறையப் போகும்போது, திண்ணையில் கிடந்த அம்மாவின் கைகால்கள் வெட்டின. "ஊ... ஊ " என்ற அலறல் சத்தம் ஒலித்தது.
பழனிச்சாமி, மகளை இழுத்துக் கொண்டு, பாதி வழி வந்துவிட்டார். வீட்டு வாசல்களில் இருந்தும், மாடிகளிலிருந்தும், ஊரார் உன்னிப்பாகப் பார்த்தார்கள். செம்பட்டையான் குடும்பத்தினரிடம் கூட, இப்போது அனுதாபம், அகங்காரத்தை விரட்டியது... பழனிச்சாமிக்கும் இளைத்தது..... அதற்குமேல், மாடாகப் போன அந்த மகளை அவரால் இழுக்க முடியவில்லை. கை வலித்தது. மனம் கனத்தது.. கால்கள் இளைத்தன. இதைவிட எல்லாக் கண்களும் அவரை மொய்த்தன... நடக்க மாட்டேன் என்பது போல் கால்களை, தரையில் மடித்துப் போட்டபடி அப்பாவின், கைக்குள் கழுத்தைக் கொடுத்துவிட்டு, பைசா நகரக் கோபுரம் போல் சரிந்து கிடந்த கோலவடிவை அவர் நிமிர்த்தினார்....அங்க ஓடத் தெரிஞ்சுது -- இங்க நடக்கத் தெரியலியோ...' என்று கத்தியபடியே, அவள் தலைமுடியைப் பிடித்து சுற்றி வளைத்து, அவளைப் பம்பரமாகச் சுற்றினார்... கோலவடிவு பேசுவதுபோல் முனங்கினாள். பழனிச்சாமி கத்தினார்...
"நீ என்னத்தழா பெரிசா சொல்லப் போறே... நீ என்ன பண்டமா.... பாத்திரமா.... தவலையா.... தட்டா... கிண்ண மா... செம்பா .... எச்சுபாத்திருமுன்னு சாம்பல வச்சு விளக்கி, வைக்கதுக்கு. நடழா.. எச்சிக்கல் நாயே... நட.."
கோலவடிவு இப்போது சுரணையற்றுப் போனாள்..... நடப்பது நடக்கட்டும் என்பதுபோல் நடக்காமல் நின்றாள்.... ஆகாயத்தைத் துழாவிப் பார்த்து, அந்த வேகத்தில் பூமியைக் குடைந்து பார்த்து, கூன் பட்டு நின்றாள்... பழனிச்சாமி விடவில்லை ... அவளுக்குப் பின்னால் வந்து, அவள் தோளில் தன் கரங்கள் இரண்டையும் அணை கொடுத்துத் தள்ளினார். அப்படியும், அவள் உடல்தான் சாயப் போனதே தவிர, கால்கள் நகரவில்லை ..... நகராத மாட்டையும் நடக்க வைத்துப் பழக்கப்பட்ட பழனிச்சாமி, தனது கால்களால் அவளது கால்களை முன்னால் தள்ளித் தள்ளி விட்டார். வலது கையில் இருந்து டிரங்க் பெட்டியை தோளில் போட்டு, கழுத்தால் அதை கொக்கி போட்டுத் தக்க வைத்துக் கொண்டு அவளைத் தள்ளினார். அவளோ கூந்தல் கலைய, சேலை விலக, கண்ணாடி வளையல்கள் சிதறல்களாக, தந்தையின் தள்ளிய வேகத்திற்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தாள். துளசிங்கம் வீட்டருக்கே போன போது, அந்த வீட்டுக்குப் போக விரும்பாதவள் போல், அவள் வேறு பக்கமாக உடம்பைச் சாய்த்தபோது, பழனிச்சாமி, தன் தலையால், அவள் உடம்பிற்கு அணை கொடுத்து, அவளைத் திருப்பினார்... துளசிங்கம் வீட்டை நோக்கி நகர்த்தினார்... அவள் பின்னால் சாயப்போனபோது, அவளை முன்னுக்குத் தள்ளி, தாளம் போட்டுப் பேசினார்.
"நான் ஒங்கள அடிக்கப் படாதும்மா... இப்போ நீங்க இன்னொருத்தன் பொருளும்மா... மரியாதையா நடங்கம்மா.. வந்தாச்சு... எட்டே எட்டுத்தான்... எனக்கு எட்டாத எட்டு... நடங்கம்மா...."
---------------
அத்தியாயம்- 37
பழனிச்சாமி, கோலவடிவைத் தன் மார்போடு சேர்த்து துளசிங்கம் வீட்டிற்குள் நுழைந்தபோது, அங்கே கூடியிருந்தவர்கள் திகைத்து போனார்கள். ஒருவர் என்னய்யா நெனச்சே' என்று ஆவேசப்பட்ட எலி டாக்டரை பிடித்துக் கொண்டார். சுத்தப்படுத்தப்பட்ட மாட்டுத் தொழுவில் நான்கைந்து கோவில் ஆடுகள் அங்கே தலைகளும், முண்டங்களுமாகக் கிடந்தன. கால்படி பொங்கல் சோறு, ரெண்டு வாழைப்பழம், கால் தேங்காய், ஆகியவற்றுடன், ஆட்டிறைச்சி சம அளவில் வைக்கப்பட்டன. மொத்தம் அறுபது பங்குகள். இனிமேல் ஆட்டுத் தலைகளை ஏலம் போடுவார்கள். அதுவரைக்கும் அங்கிருந்த பெண்களும், பிள்ளைகளும் அங்கேயே கிடப்பார்கள். பங்குகள் குறைந்திடப்படாதே... அழுகுன வாழைப்பழத்தை நொறுக்குன தேங்காயோட வச்சுடப்படாதே....
கோலவடிவின் கோலத்தைப் பார்த்து பதைத்தவர்கள் பலர்; பகைத்தவர்கள் சிலர்.... என்ன பேசுவது என்று தெரியாமல், திகைத்தவர்கள் ஒருசிலர். பழனிச்சாமி மகளை ஒரு கிடாத்தலை இருந்த இடத்திற்கு முன்னால் நிறுத்தியபடியே வாயுருக பேசினார்.
"தர்மப் பிரபுக்களே... இனிமேல் இவள் உங்களோட சொத்து. நா யார் சொத்துக்கும் ஆசப்படுறவன் இல்லை என்கிறது ஒங்களுக்கே தெரியும். துளசிங்கத்தோட இந்த சொத்த நீங்க விப்பியளோ.... வைப்பியளோ.... விறகா எரிப்பியளோ... ஒங்க இஷ்டம்... நான் தலையிடமாட்டேன்... நான் யார் தலையிட? போயிட்டு வாறேன்... தப்புத் தப்பு போறேன்.... ஒரே வழியாய் போறேன்... புண்ணியவான்களே..."
பழனிச்சாமி மகளை ஏறிட்டுப் பார்க்காமலே, குனிந்த தலை நிமிராமல், பேசிய வாய் மூடாமல் பேய்ப் பாய்ச்சலில் நடந்தார். கோலவடிவு, எங்கு நிற்கோம் என்ற உணர்வு இல்லாமல் அப்படியே நின்றாள். ஏதோ ஒரு பொம்மைக்கு கலர் அடிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதுபோல் நின்றாள். கண்கள் வெளுத்துப் பார்த்தன. எதையோ கேட்ட வெறுமையில் காதுகள் சிலிர்த்து நின்றன. தலையோ தாழ்ந்து போனது... அதோ வெட்டப்பட்டுக் கிடக்குதே ஆடு. அதன் தலையை பொருத்தி, செங்குத்தாய் நிறுத்திப் பிடித்தால் எப்படியோ அப்படி நின்றாள்.... எவரும் பிடிக்காமல், அவளும் கீழே விழாமல், அப்படி நின்றது ஆச்சரியந்தான்... அதிசயந்தான்.
செம்பட்டையான் கூட்டத்தினருக்கு, இப்போது அங்கே நடந்த சம்பவத்தின் முழுத் தாத்பரியம் மெள்ள மெள்ளப் புரிந்தது. மாமிசப் பங்குகளை சரிபார்த்த, அந்தக் கண்கள், அந்த நரமாமிச உணவை நைந்து பார்த்தன..... நையாண்டியாப் பார்த்தன. நமக்கும் பெண்ணிருக்கே என்று பயந்து பார்த்தன. நமக்கென்ன என்று பட்டும் படாமலும் பார்த்தான்... என் வீட்டு ஆடுகளை அறுக்கிறதுனால் ஒரு ஆட்டுத்தல் எனக்கு இனாம் வேணும்' என்று கேட்பதற்கு, கால நேரம் பார்த்துக் கொண்டிருந்த துளசிங்கத்தின் அப்பா, எலி டாக்டர் கோலவடிவின் அருகே வந்தார்.
"ஒப்பன் தான்... அறிவில்லாமல் கூட்டி வந்தான்... நீ எப்படி இங்கே வரலாம்? அந்தப் பயல கூட்டிட்டு ஓடும்போது என்கிட்ட சொல்லிட்டா ஓடின.... அந்த பயலே எனக்கு சம்பந்தம் இல்ல.... நீ எப்படி சம்பந்தமாவும்? திரும்பி நட... திரும்பி பாராமல் நட...''
கோலவடிவு, பேசாமல் அங்கேயே நின்றாள்... எங்கே நிற்கிறோம் என்பது தெரியாமல் எங்கேயோ நிற்பது போல் நின்றாள். இதை எதிர்ப்பாகக் கருதிய எலி டாக்டர், அந்த எதிர்ப்பை முறியடிக்கும் குறி, அவள் முதுகில் இருப்பதுபோல், அவளை உற்றுப் பார்த்துவிட்டு, பிறகு அவள் முதுகைப் பிடித்து தள்ளினார். கீழே விழப் போனவளை, முடியைப் பிடித்து நிறுத்தினார். அவள் அசையாமல் நிற்பதைப் பார்த்துவிட்டு, அவள் கையைப் பிடித்து இழுத்தார். இழுத்துக் கொண்டே நடந்தார். இவரது கையைவிட, அவளது கை மிக வலுவாக இருந்ததால், அவர் , கைகளை விட்டுவிட்டு, பின்னால் கிடந்த தலைமுடியை தேடிப் பிடித்து, முன்னால் கொண்டு வந்து, பச்சை கீரைப்போல், படர்ந்திருந்த அந்த தலை முடியைக் கயிறு மாதிரி திருகிவிட்டு, அதன் முனையை பிடித்தபடியே இழுத்தார். இழுத்தபடியே நடந்தார். நடந்தபடியே கத்தினார்.
“எத்தனைபேர் கிட்ட போனியோ... இவன் எத்தனாவது ஆளோ.... இங்க எப்படிழா வரலாம்?"
செம்பட்டையான்கள் சிலருக்கு மனம் கேட்கவில்லை.
"ஏப்பா.... பெண்பாவம் பொல்லாதுப்பா... ஒன் மவன நம்பி வந்த ஜீவன்... அவன் விட்டாலும் நாம் விடப் படாதுப்பா... ஒன் மவளுக்கும் இப்படி ஒரு நெலம வந்தால், என்னப்பா செய்வே.... பாவம் இருந்துட்டுப் போட்டும்." |
எலி டாக்டர் யோசிப்பது போல் நின்றபோது, அவரது புலிப் பொண்டாட்டி உறுமல் குரலோடு பெரிய வீட்டிற்குள் இருந்து வந்து, சொன்னவர்களைப் பார்த்து சூடாகக் கேட்டாள்.....
"ஒங்க மவளுவ இவள மாதிரி பண்ணுவாளுவ. ஆனால், என் மகள் பண்ணமாட்டாள். அப்படிப் பண்ணுனால் அவளை எருக்குழிலே நானே வெட்டிப் புதைப்பேன்- இவளை எப்படிச் சேக்க முடியும்? எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பாராத என் மவன மயக்குனாள்... அவனும் நியாயத்துக்குக் கட்டுப்பட்டு அவளைக் கூட்டிட்டுப் போனான்... கோயில் கொடைக்கு கூட்டிவரப் போனான்... இவதான், அங்க இருந்து எங்கேயோ ஓடிப்போயிட்டு, இப்போ வந்து நிக்காள்... என் மகனை விட்டுட்டுப் போனவளை சேத்தால், பழையபடியும் போகமாட்டாள்னு என்ன நிச்சயம்...? விளையும் பயிரு முளையிலே தெரியும்.... இது, மூணு இல விடுமுன்னாலேயே நாலு முந்தானை விரிச்ச வம்சம்... இதோ பாரும்... இன்னுமா பார்த்துக்கிட்டு நிக்கியரு... பாவி மனுஷா ஒம்மத்தான்...."
புருஷன்கார எலி டாக்டர், கோலவடிவின் பிடித்த முடியை, இறுக்கினார். சுருட்டுச் சுருட்டாய் சுருட்டி, அதன் இடைவெளியைக் குறைத்தார். அவளை, வெட்டுப்படப் போகும் ஆட்டை இழுப்பதுபோல, இழுத்துக் கொண்டு போனார். கல்லெல்லாம் அவள் காலில் மோதின. மண்ணெல்லாம் அவள் விரல்களில் அப்பின்.... அவள் நடக்கவில்லையானால், தலைமுடி பிய்ந்து, அவர் கையில் வந்திருக்கும். கோலவடிவு, வலிதாங்க முடியாமல் நடந்தாள்... மன வலியை உடல் வலி சிறிதாக்க, உடல் வலியை மனவலி சிறிதாக்க, அவள் கால்களைத் தாவிப் போட்டு, எலி டாக்டரின் இழுப்பு வேகத்தைவிட அதிக வேகத்தில் நடந்தாள். அந்த வீட்டிற்கு வெளியே உள்ள முச்சந்திக்கு வந்ததும், எலி டாக்டர், கோலவடிவை விட்டு விட்டு, "வீட்டுக்குள்ள வந்தே. வெளில வராமத்தான் போவே" என்று எச்சரித்து விட்டுப் போய்விட்டார் - ஆட்டுத் தலையை, அதிகாரப் பிச்சையில் கேட்பதற்கு.
கோலவடிவு குன்றிப்போய் நின்றாள்.
அவளுக்கு அருகே, முச்சந்தியின் ஒரு மூழிக்கல்லில், தன்னந்தனியாய்ச் சிக்கிக் கொண்ட ஒரு பூணிக் குருவியை இரண்டு காகங்கள் சுற்றி வளைத்துக் கொத்திக் கொண்டிருந்தன.... இந்த குருவிகள் கூட்டமாக... குடும்பமாக தத்திக் கொண்டிருக்கும் போது, அவற்றை சிநேகித முறையில் பார்த்த காகங்கள் தான் இவை. இப்போதோ, குடும்பத்திலிருந்து தனிப்பட்ட அந்த சின்னக் குருவியை, மேலும் தனிப்படுத்தி, வியூகம் போட்டு, அதன் உடம்பை சுரண்டிச் சுரண்டி ரத்தப் பிழம்பாக்கிக் கொண்டிருந்தன. இவற்றிற்கு எதிர்த் திசையில், நான்கு நாய்களுக்கு இடையேயான இடைவெளிக்குள் தாவி தப்பிக்கலாமா அல்லது தாக்கித் தப்பிக்கலாமா என்பதுபோல், ஒரு பூனை பதுங்கிப் பார்த்தது.
எலி டாக்டர் பிடித்த தடயத்துடன், தலைமுடி கூம்பி நிற்க, அவள் சிலிர்த்தாள். கண் மூடியபடியே கதியற்று நின்றாள். பழக்கப்பட்டச் சத்தம் கேட்டு லேசாய், அரை இருளாய்க் கண் விழித்தாள். துளசிங்கம், ஒரு சினிமாப் பாட்டைப் பாடாய் படுத்திக் கொண்டு வந்தான். அவளைப் பார்த்து திடுக்கிட்டவன் போல் சிறிது நின்றான். பிறகு அவள் முதுகைப் பிடித்துத் தள்ளியபடியே கத்தினான்.....
"வெட்டாம்பட்டியில்... எவன் கூட்டி படுத்தே....? படுத்த பயல கூட்டிக்கிட்டு இப்பவும் போ... இங்கே ஒனக்கு என்ன வேல..."
துளசிங்கம், அவளைத் தள்ளிய வேகத்தில் அவள் கீழே விழுந்தாள். விழுந்த வேகத்தில் தரைக்குச் சிவப்புச் சாயம் போட்டாள். துளசிங்கம் சிறிது நேரம் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, வேகவேகமாய் வீட்டிற்குள் நுழைந்தபோது, அவள் மெள்ள மெள்ள எழுந்தாள். அவள் நெற்றியில் பெருக்கெடுத்த ரத்த ஊற்றைப் பார்த்த பெண்கள் 'அச்சச்சோ' போட்டார்கள். ஆளுக்கு ஆள் நினைத்ததைப் பேசினார்கள்..... இன்னிக்கு..... ஊர்ல.... கூட்டம் போட்டு ஏதாவது பண்ண ணும்... பாவமா... இருக்கு... இவளுக்கு இதுதான் சரி... இதைப் பாத்துட்டாவது... மத்தவளுவ திருந்தணும்.... இது பொண்ண பெத்தவங்களுக்கும், அவளப் பிடிச்சவங்களுக்கும் நடக்கிற விவகாரம்... நாளைக்கே ஒண்ணாயிடு வாங்க... நாம இன்னிக்கு தலையிட்டு... நாளைக்கு என் பொல்லாப்பாகணும்....? ஆனாலும் ஒருத்திய.... இப்படி....
முச்சந்தியில்.... அனாதரவா விடுறது அநியாயம்...
கோலவடிவுக்கு ஊரார் பேச்சு காதில் விழவில்லை .... அடிமேல் அடியாய் நடந்தாள். கூன்பட்டு, கண் குருடுபட்டவள் போல், நடந்தாள். வலித்த நெற்றியை மட்டும் அவ்வப்போது வலது கை பெருவிரலால் அழுத்திவிட்டு, அழுத்திவிட்டு, அழுத்தமின்றி நடந்தாள். நடந்து கொண்டே போனாள்..
எலி டாக்டர் வீட்டுக்குள், செம்பட்டையான் பீடிப் பெண்கள் கோபங் கோபமாய் கத்துவது லேசாய் கேட்டது. புஷ்பம் ஒப்பாரி போட்டு அழுவதும், ஏதோ ஒரு அழுகைச் சத்தம் போல மட்டுமே அவளுக்குக் கேட்டது.
குழந்தை நடப்பது போலவும், கிழவி நடப்பது போலவும், இலக்கு இல்லாமல் நடந்தாள்... இடந்தெரியாமல் நடந்தாள்... செம்பட்டையான் பகுதிக்கும் கரும்பட்டையான் பகுதிக்கும் எல்லை போலான பழைய காலத்து இளவட்டக் கல்லருகே கண்களை மூடியபடி உதடுகளைப் பிரித்தபடி நின்றாள்... தொலைவில் நின்ற வாடாப்பூவும், சந்திராவும், கூப்பாடு போட்டபடியே அவளைப் பார்த்து ஓடி வரப் போனார்கள். கரும்பட்டையான்கள், அவர்களை, கைகளைப் பற்றி வீட்டுக்குள் கொண்டு போனார்கள்.
அந்தப் பக்கமாக ஒரு போலீஸ்காரருடன் அலங்காரி வந்தாள். கோலவடிவு என்ன செய்கிறாள் என்பதைப் பார்ப்பதற்காக. துளசிங்கமும் தற்செயலாக வருவதுபோல், வந்து கொண்டிருந்தான்... கோலவடிவையே, உதடுகள் துடிக்க உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அலங்காரி, எதுவும் நடக்காததுபோல் நடக்கப் போன துளசிங்கத்தின் கையைப் பிடித்து இழுத்தபடியே மன்றாடினாள்.
"ஏய் ராசா... சித்தி சொல்லுறதக் கேளுடா.... பெண்பாவம் பொல்லாதுப்பா.... நம்பள தஞ்சமுன்னு வந்தவள் சேத்துக்கப்பா...."
"என்ன சித்தி... ஒன் பேச்சு ஒரு மாதிரி இருக்குது..."
"ஆமாம்பா... யோசிச்சு பார்த்தா நல்லதா தெரிஞ்சுது, இப்போ நடத்தி பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்குதுடா.... சித்தியோட முகத்துக்காகவாவது..."
"ஏய் அலங்காரி... ஒன்னை மாதிரி கண்டவன் கூடல்லாம் ஓடிப்போறவள் எனக்கு பெண்டாட்டியா வரணுமா?"
"எப்பா.... என் மவனே.''
"யாருழா... ஒனக்கு மகன்? ஒன் மகளே எவனுக்குப் பிறந்தான்னு ஒனக்குத் தெரியுமாழா..."
"எப்பா இதுக்குமேல பேசாதப்பா..."
"ஒனக்கு வயசாயிட்டு.... இவள் என் தலையில் போட்டால்... ஒன் வியாபாரத்த நல்லா நடத்தலாமுன்னு பாக்கியா..."
துளசிங்கம் காறித் துப்பிவிட்டு, தன்பாட்டுக்கு நடந்தான்.
அலங்காரி போகிற துளசிங்கத்தையே வெறித்துப் பார்த்தாள். 'இவனை பயன்படுத்த நெனச்சேன்...... இவனோ.... என்னையே பயன்படுத்தி இருக்கான்... மோசம் போயிட்டேனே... நான் பெத்த மவள் - கல்யாணத்துக்குப் பிறகு என்னை ஏறிட்டுப் பார்க்காம போன நாளுல இருந்து என் மனசு.... என்ன பாடு படுதோ , அப்படித்தானே... இந்த பழனிச்சாமியும்... பாக்கியமும் படுவாவ...'
இதற்குள், எலி டாக்டரின் மனைவியும், ஏழெட்டு செம்பட்டையான்களும் சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள்... எலி மனைவியின் கையில் துடப்பம்..... அவன்கள் கையில் சாட்டைக் கம்பு... கருங்கல்லு... வாதமடக்கிக் கம்புகள்.... ஒருத்தன் கத்தினான்...
"எல்லாம் இந்த தாசி முண்ட அலங்காரியால வந்த வினை... இவள் விடப்படாது... பிடிங்கடா.... பிடிங்கடா... ஏழா... நில்லுழா..."
அலங்காரி நிற்கவில்லை ...... உயிர்பிழைக்க அவள் ஓடிக் கொண்டிருந்தாள்... " ஒரு காலத்துல சொக்காரன் எல்லாரும் ஒன்னை நாயத் துரத்துறது மாதிரி துரத்தப் போராங்க பாரு" என்று பெத்த மவள் போட்ட சூடு.... இப்போதுதான் வலிப்பதுபோல் ஓடினாள்.... இதற்குள் எலி டாக்டரும், காஞ்சானும் கூட, கூட்டத்தோடு கூட்டமாய் அவளை விரட்டினார்கள். அவள் எலி டாக்டருடன் கொஞ்சியதை காஞ்சான் நினைத்துக் கொண்டும், காஞ்சானிடம் கொஞ்சியதை எலி டாக்டர் நினைத்துக் கொண்டும் கோபாவேசமாய் விரட்டினார்கள். அவளிடம் கொஞ்சக் கொடுத்து வைக்காத கிழடு கெட்டைகள், அவளை விரட்டுவதில் காஞ்சானை மிஞ்சினார்கள். எலி டாக்டரை விட வேகமாகப் பாய்ந்தார்கள்.
அலங்காரியோ ஒரு குட்டிச்சுவரை, குதிரை போல் தாண்டி, கழுதை போல் கத்தியபடி ஓடிக் கொண்டிருந்தாள்.....
இதற்குள், அவளைத் துரத்திய செம்பட்டை வம்சம் வழியில் துளசிங்கத்தைப் பார்த்து நின்றது. பிறகு அவனை இழுத்துக் கொண்டு, பங்கு போடும் இடத்தை நோக்கி நடந்தது.
கோலவடிவு நின்ற இடத்திலேயே நின்றாள்.... அவளைச் சுற்றிய வீடுகளின் ஜன்னல்களில் கண்கள் தான் பதிந்திருந்தன.. கால்களோ வெளிவரவில்லை. வாசலோரங்களில் கூடிக்கூடி நின்றார்கள் - எவரும், எவளும் அவளை "வா" என்று அழைக்கவில்லை. அவளைப் பொறுத்த அளவில், திறந்திருந்த வாசல்களும், மூடப்பட்டவையே..... அன்னி யோன்யமாகப் பழகிய உறவினர்களும் அந்நியர்களே.
கோலமிழந்து நின்ற கோலவடிவு, யாரோ தனது கையைப் பற்றியது கண்டு திடுக்கிடாமலே பார்த்தாள் ரஞ்சிதம்.....
"ஏன் கோலம் மிரளுறே...? நான் இருக்கேன் கோலம்.... வாய் செத்த இந்த ஊரில் நாம ரெண்டு பேருந்தான் உயிரோட இருக்கோம். என் வீட்டுக்கு வா.... நான் ஒன்னைக் காப்பாத்துறேன்... ஒன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்த எல்லோரையும் விடப்போறதாய் இல்ல..."
ரஞ்சிதம் கோலவடிவின் கையைப் பிடித்து லேசாய் இழுத்தாள். தன்னிடம் எதிர்ப்புக் காட்டாமலே இணைந்து கொண்ட கோலவடிவை, முதுகில் தட்டியபடியே, ரஞ்சிதம் வீட்டைப் பார்த்து நடந்தாள். கோலவடிவையும் நடத்திக் கொண்டே போனாள்.
வீட்டுக்கு வெளியே, அம்மாவின் பாராவோடு' வந்து துளசிங்கம் அவர்கள் இருவரும் இணைந்து நடப்பதைப் பார்த்துவிட்டு, பல்லைக் கடித்தான். இந்த ரஞ்சிதம் ஊர்ல இருந்தால் தானே இந்தக் கோலவடிவும் இருக்க முடியும்...
---------------
அத்தியாயம்- 38
வீட்டிற்குள் இருத்தி வைக்கப்பட்ட இடத்தில் அப்படியே பித்துப் பிடித்தவள் போல் விழித்த கோலவடிவின் தலை முடியைச் சரிசெய்தபடியே ரஞ்சிதம் ஆறுதல் சொன்னாள்.
"கண் கலங்காத கோலம்.... ஒரு ஆம்புளத்துண இல்லாமலும் ஒரு பொண்ணால வாழமுடியுமுன்னு காட்டு.... பெத்தவங்க மத்த வங்களா ஆயிட்டால், மத்தவங்களே நமக்கு பெத்தவங்கன்னு மனச தேத்திக்கணும்... நீ ஒன் ஆயுள்வரைக்கும் என் வீட்லயே இருக்கலாம்... நம்மள எப்போ வேண்டான்னு சொல்லுதாங்களோ அப்பவே நாமும் அவங்கள வேண்டாங்கணும்... இப்போ எதுவும் குடிமுழுகிடல்.... பேசாம கொஞ்ச நேரம் தூங்கு... நான் அதுக்குள்ள சோறு பொங்கிடுறேன்.."
ரஞ்சிதம், ஒரு பாயை விரித்து, கோலவடிவைக் குழந்தையை சாய்ப்பதுபோல் சாய்த்து, பிறகு அவள் தலையைத் தூக்கி, ஒரு தலையணையை வைத்தாள்... பாவம் எப்போ சாப்பிட்டாளோ... இவள் சாப்பிட்டவள் இல்ல.... சாப்பிடப்பட்டவள்...
ரஞ்சிதம் அடுப்படி வேலையில் இறங்கி அரைமணி நேரமாகியிருக்கும்... கோலவடிவ, மல்லாந்து படுத்தபடி, அந்த வீட்டின் ஓலைக்கூரையை, பரக்கப் பரக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்....
திடீரென்று ஒரு விக்கி வண்டிச் சத்தத்தின் பின்னணிக் கூச்சலில் துளசிங்கத்தின் போர்ச்சத்தம் கேட்டது..... "ஏடி.... ரஞ்சிதம்... வாடி வெளில்...."
ரஞ்சிதம் வெளியே வந்தாள்.... விக்கியின் இரண்டு பக்கமும் இரண்டு கால்களை போட்டபடி துளசிங்கம் கர்ஜித்தான்...
"மரியாதியா... அந்த ஓடுகாலி நாய... வெளில துரத்தப் போறியா இல்லியா? ஆற அமர இவள் என் தலையில் கட்டலாமுன்னு பாக்கியா? ஒன்னாதாமுழா... ஏய் ரஞ்சிதம்.... ஒத்த வீட்டு நாயே... ஒனக்கு.... என் தலதானா கிடச்சது? அதுதான் நடக்காது.... பேசாம, அவள் அப்பன் வீட்டப் பார்த்து அடிச்சு விரட்டல, மரியாதி போயிடும்... எவன் கூடவோ ஒடிப் போயிட்டு என்கிட்ட வரப் பாக்கிற எச்சிக்கல நாயி இவள்... என் விஷயத்துல ஏமுழா தலையிடுறே...''
"வயசுப் பொண்ண காதலிக்கது மாதிரி காதலிச்சுட்டு... அப்புறம் அடிச்சு விரட்டுறது சொந்த விஷயமுல்ல துளசிங்கம்..."
"அவள் மயக்குனது மாதிரி ஒன்னயும் மயக்கணுமா...?"
"நீ அனாவசியமாய் பயப்படுற துளசிங்கம்... இவள் ஒங்க வம்புக்கே வரமாட்டாள்... நீ சம்மதிச்சாலும் ஒன்னைக் கட்டிக்க இவள் சம்மதிக்கமாட்டாள். தயவு செய்து இனும்யாவது அவள் விட்டு வை..."
"ஒன் சாலக்கு எனக்குத் தெரியாதா... இந்த ஊருக்கு எமனே நீதான்... இன்னைக்குள்ள இவளை நீ வீட்ட விட்டுத் துரத்தல்... அப்புறம்.... ஒனக்கு வீடே இருக்காது..... ராத்திரியோட ராத்திரியா ஒன்னையும்.... கொன்னு வீட்டையும் எரிச்சுப்புடுவேன் எரிச்சு...."
இதற்குள் சத்தம் கேட்டு பிள்ளைமார்குடி பெண்களும், ஆண்களும் கூடி விட்டார்கள். ஏற்கெனவே ரஞ்சிதத்தைப் பிடிக்காதவர்கள். அதோடு சொன்னபடி செய்யும் துளசிங்கம் வைக்கும் நெருப்பு.... ரஞ்சிதத்தின் வீட்டோடு மட்டும் நிற்காது... ஆகையால் ரஞ்சிதத்தை ஆளுக்கு ஆள் திட்டினார்கள். துளசிங்கத்திற்குத் தாங்கள் வேண்டப்பட்டவர்கள் என்று காட்டினார்கள்.
"ஏய் ரஞ்சிதம்... வேலில போற ஓணான... எடுத்து என் தாழில போடுறே..? ஒன்னால எங்களுக்கெல்லாம் கெட்ட பேரு... நீ இருக்க துவரைக்கும் நாங்க நிம்மதியாய் இருக்க முடியாது... இன்னைக்கே இந்த ஊரை விட்டு... நீ போயிடணும்... இல்லன்னா நாங்களே விரட்டுவோம்..."
ரஞ்சிதம் இடுப்பில் கை வைத்தபடி திருப்பிக் கத்தினாள்....
"இது எங்க அம்மா அப்பா நடமாடுன வீடு. மூதாதையர் கால்பட்ட இடம்... நான் பிறந்த பூமி... ஆயிரம் துளசிங்கம் வந்தாலும், என்னை அப்புறப்படுத்த முடியாது... வேணுமுன்னால் நீங்க இந்த ஊரைவிட்டுப் போங்க... நான் போகப் போவதாய் இல்ல..."
கோலவடிவு, வளைகோடாய் எழுந்தாள்... ரஞ்சிதம் கத்துவதையும், அவளின் உறவினர்கள் திருப்பிக் கத்துவதையும் அதனால் ஏற்பட்ட கூச்சலையும், குழப்பத்தையும் குழப்பத்தோடு பார்த்தாள். "நானே அவள் வெளில இழுத்துப் போடுறேன் பாரு" என்று துளசிங்கம் கத்தியது ஊருக்கே கேட்டாலும், அவளுக்கு லேசாகத்தான் கேட்டது. அவள் எழுந்தாள். கொல்லைப்புறத்தை நோக்கி மெல்ல நடந்தாள்.
------------------
அத்தியாயம்- 39
ரஞ்சிதத்தின் வீட்டுக்குப் பின்னால் வந்த கோலவடிவு, மேற்குப் பக்கமாக நடந்தாள்.... பின்னர் தெற்குப் பக்கமாக நடந்து குளத்துக் கரைக்குப் போனாள். அங்கிருந்து கரையிலே நடந்தாள்.... தரையிலே இறங்கினாள்... வயல்களில் கால் சிக்க வரப்புக்களில் கால் முட்ட, நடந்து நடந்து, அந்த ஊரையே வலம் வந்து, நஞ்சை வயல்களைத் தாண்டி, புஞ்சை வயல்களில் பாய்ந்து, புளியந்தோப்புக்கு வந்து, மூச்சு விட்டாள்.... பிறகு சோளத் தோட்டம் வழியாக ஊடுறுவி , பருத்திக் காட்டிலே பதுங்கி, அந்த ஆலமரத்தடி காளியம்மனின் பின்புறமாக நடந்து, முன்புறமாய் வந்தாள். ஆலமரம் வெறிச்சோடிக் கிடந்தது.... அம்மன் கோவில், அனாதைகள் இல்லாத இல்லமாய் வெறுமையுடன் தோன்றியது. அந்தக் கோவிலின் இரண்டு நிலைக் கதவுகளும் பூட்டில்லாமல் ஒதுங்கிக் கிடந்தன...
கோலவடிவு என்ன நினைத்தாளோ , ஏது நினைத்தாளோ , அம்மன் கோவில் படிக்கட்டுக்களில் ஏறினாள்.... உள்ளே போய், அம்மனுக்கு எதிரே சரிக்குச் சமமாய் உட்கார்ந்து கொண்டாள்... சுவரோரம் உள்ள கொடியில் சிவப்புச் சேலைகள் தொங்கின.... அம்மனின் ஊதாப் பாவாடை... அந்தச் சேலைகளுக்குள் சிக்கியிருந்தது...... அம்மனின் கால்மாட்டில் ஒரு வெட்டரிவாள்.... வாடிக்கிடந்த வாழை இலையில் அழுகிப் போன வாழைப்பழங்கள்... உலர்ந்துபோன வெற்றிலைகள்.. கோலவடிவு, சப்பாணி போல் நகர்ந்து, அம்மன் சிலையை, மிக நெருக்கமாக உற்றுப் பார்த்தாள். பிறகு இரண்டு கரங்களை பின்புறமாகக் கொண்டு போய், அம்மனின் முதுகைத் கோர்த்துப் பிடித்தபடியே, அம்மாவின் மார்பிலே தலை சாய்த்தாள். திக்கற்றவளுக்கு தெய்வமே துணை என்று பிடித்தாளோ தெய்வமே திக்கற்றும் போய் விட்டதாக நினைத்து, அந்த சிலைக்கு ஆதரவு காட்டுவதாக எண்ணி பிடித்தாளோ... அவளுக்கே பிடிபடவில்லை .
உச்சி வெயில் சுட்டது.
சுடலை மாடன் உபயத்தில் இரண்டு நாட்கள் இரவும், பகலும், லைலாவையும் ரிக்கார்ட் டான்ஸையும், முப்பது எம்.எம். கராத்தே படத்தையும் பார்த்த ஊரார், அந்தப் பட்டப் பகலில் தூங்கிக் கொண்டிருந்தார்கள் ... கரும்பட்டையான்களும், காத்துக் கருப்பன்களும், பழனிச்சாமிக்காக விட்டுக் கொடுத்த ராத்தூக்கத்தை, அந்தப் பகலில் கரைத்துக் கொண்டிருந்தார்கள்.... எவரும் கோலவடிவை, அந்த கோவிலுக்குள் பார்க்கவில்லை. சில சின்னக் குழந்தைகள் மட்டும் அவளைப் பார்த்துவிட்டு, பயந்துபோய் அப்பாம்மாக்களிடம் சொல்வதற்காக ஓடிக் கொண்டிருந்தபோது
கோலவடிவு, சத்தம் கேட்டு, அம்மன் மார்பில் குப்புறப் போட்ட முகத்தைத் திருப்பினாள்.... ரஞ்சிதம் வீட்டில் பலமாகக் கத்தியபோது லேசாகக் கேட்ட துளசிங்கத்தின் சத்தம், இப்போது லேசாய் ஒலித்தாலும் அவளுக்குப் பலமாய்க் கேட்டது.... அதோ போய்க் கொண்டிருக்கிறான் - இவள் இருப்பது தெரியாமலே யூனிபாரம் போட்ட இரண்டு போலீஸ்காரர்கள் பாதுகாப்பாய் பக்கத்துக்கு ஒருவராய் நடக்க, அவன் அட்டகாசமாகப் பேசியபடி, அனாவசியமாக கைகால்களை ஆட்டியபடி நடந்து நடந்து பேசினான்....
"ரஞ்சிதம் மட்டும் நான் சொன்னதைக் கேட்காட்டால்... அவள் ராத்திரியோட ராத்திரியா... ஏதாவது செய்யப் போறேன்... நீங்கதான் கண்ணை மூடிக்கணும்..."
"அதுக்கென்ன.. சாப்பாடுல்லாம் ஆயிட்டு... இனும் என்ன வேல.... நாங்க சாயங்காலமா ஸ்டேஷனுக்குப் போயிடுறோம். எது செய்தாலும் சாட்சி இல்லாம செய்யணும்..."
கோலவடிவு, கோரவடிவாய் எழுந்தாள்.
ஆயிரமாயிரம் ஆடு கோழிகளை வெட்டிய அம்மனின் வெட்டரிவாளை எடுத்துக் கொண்டாள்.... எப்படிக் கழுவினாலும் ரத்தத்துரு போகாத வெட்டரிவாள். விரிந்த குழல்..... துடிக்கின்ற உதடுகள்... கடிக்கின்ற பற்கள்... ஊழி நடனம் ஆடுவது போன்ற உடலாட்டம்... கோழைத்தனம் கலைந்தது போன்ற ஆவேசம்... இலக்கு தேடும் வெட்டரிவாள்... இலக்கு கண்ட பெண்சக்தி......
கோலவடிவு தாவிக் குதித்தாள். ஓங்காரமாய் கூக்குரலிட்டாள்... ஆங்காரமாய் கத்தினாள்... ஊரே அதிரும்படி ஓசையிட்டு ஓடினாள்...
"ஏய்... டேய் .."
மேனி வில்லாய் வளைய, முப்பது பற்கள் இப்போது கோரமாய் காட்சி காட்ட, கோலவடிவு ஆகாயமும், பூமியுமாக ஆனவள் போல், துளசிங்கத்தை நோக்கி ஓடினாள்... திரும்பிப் பார்த்த துளசிங்கம், எதுவும் பிடிபடாமல், அப்படியே நின்றான்.
அவனுக்கு, மெய்க்காவல் போட்ட காவலர்கள், வெட்டரிவாட்காரியைப் பார்த்துவிட்டு, திருடர்கள் போல் ஓடினார்கள். 'வேண்டாம்மா... வேண்டாம்மா....' என்று கூச்சலிட்டபடியே அங்கு மிங்குமாய் ஓடி, ஆளுக்கு ஒரு இடமாகத் தேடிப் பிடித்து ஒளிந்தார்கள். இப்போது திகைத்து நின்ற துளசிங்கமும் ஓடினான். கோலவடிவை விட்டு, அவள் குறியில் இருந்து விலகி ஓடுவதாக நினைத்து, அவள் அருகிலேயே ஓடினான்... குறுக்கும் நெடுக்குமாய் ஓடினான்... அய்யய்யோ என்று அலறியபடியே அங்குமிங்குமாய் ஓடினான். அவளையே சுற்றிச் சுற்றி ஓடினான் .... கற்ற குஸ்தி கைகொடுக்கவில்லை... கண்ட பெண்களோ இவளைப் போல் இல்லை...
கோலவடிவின் தலைமுடி, அந்த ஆடிக்காற்றில் பின்னாலும், முன்னாலுமாய் கோரதாண்டவம் ஆடியது.... அவள், அழுத்தமாய் நின்றாள்... அர்ச்சுனன், இலக்கை மட்டுமே பார்த்ததுபோல், துளசிங்கத்தின் கழுத்தை மட்டுமே பார்த்தாள். இவன் இலக்கோ அங்குமிங்குமாய் ஆடி அப்படியே நிலைகுலைந்து, நின்றும், நடந்தும், ஓடியும் அலைக்கழிந்தபோது -
ஒரு வீச்சு... ஒரே வீச்சு... கோலவடிவின் வலது கரத்தில் இருந்து விடுபட்ட வெட்டரிவாள், துளசிங்கத்தின் கழுத்தில் விழுந்தது.... கழுத்துச் சதையின் பாதி இடத்திற்குள் ஊடுருவிப் பாய்ந்து கௌவிப் பிடித்தது. அவன் ரத்தமும், சதையுமாய் தரையில் சாய்ந்தான்.... வெட்டுப்படும் கிடா போல் அலறி விழுந்தான்... கோலவடிவு விடவில்லை ... அவனிடம் அடிமேலடியாய் நடந்து போனாள்... அவன் முதுகில் வலது காலை வைத்து அழுத்தியபடியே, தொங்கிக் கொண்டிருந்த தலையை கீழே கிடந்த அரிவாளை எடுத்து அறுத்தாள்... வாழைக்காயை சீவுவது போல் சீவினாள்... ஒரே பாகம்... கொத்துக் குறை, மிச்சம் மீதி பேச்சுக்கே இடமில்லை...
கோலவடிவு, துளசிங்கத்தின் துண்டுபட்ட தலையை, அதன் முடியைப் பிடித்துத் தூக்கினாள்.... தூக்கியபடியே நடந்தாள்... காளியம்மன் கோவிலுக்குள் துள்ளிக் குதித்துத் தாவினாள்... அம்மனுக்கு முன்னால் அந்தத் தலையை வைத்தாள்.... வெட்டரிவாளையும், விடாமலே பிடித்துக் கொண்டாள்... அந்த தலைக்கும் அம்மன் சிலைக்கும் இடையேயான இடத்தில் ரத்தாசனம் போட்டாள்.... அவள் நெற்றிப் பொட்டில் துளசிங்கத்தின் ரத்தத் துளிகள்... சிவப்பான தலை..... குங்குமமான கண்கள்... ரத்தம் உறைந்த கழுத்து....
-------------
அத்தியாயம்- 40
எல்லாம் ஏழு நிமிடங்களில் முடிந்துவிட்டன..... அரைகுறை இல்லாமல், முழுமையாக முடிந்து போனது. கோலவடிவு அந்த சிலைமேல் சிலையாகக் கிடந்தாள்... அம்மன் மார்பில், பின் தலையைச் சாய்த்துப் போட்டாள்.... கண்கள் மேல்பட்டு, அம்மனின் கண்களையே உற்று நோக்குவது போல், அடங்கிக் கிடந்தாள்.
இதற்குள் போலீஸ்காரர்களின் கூக்குரலால், கண் விழித்த ஊரார், துளசிங்கம் போட்ட ஓலத்தால், ஓடி வந்தார்கள்.... என்னமோ ஏதோ என்று முதலில் ஓடி வந்தவர்கள், அவர்கள் எதிர்பார்த்ததை விடப் பெரிதாக நடந்ததைப் பார்த்த பயத்தில் திரும்பி ஓடினார்கள். பின்னால் வந்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஊமை போல் குரலிட்டார்கள். அம்மன் கோவிலை நோக்கி, கைகளை மட்டும் நீட்டி நீட்டிக் காட்டினார்கள்.... கிட்டே வந்த பெண்கள் எட்ட ஓடினார்கள்... சிலர் கண்களை மூடிக் கொண்டே நின்றார்கள்... சிலர் ஊரைவிட்டே ஓடினார்கள்... கூட்டம் கூட்டமாகக் கூட்டம் சேர்ந்தது.... காத்துக்கருப்பன்கள், காரை வீட்டார்கள், செம்பட்டையான்கள், கரும்பட்டையான்கள், பள்ளிக்கூடப் பிள்ளைகள் எலி டாக்டர் மயங்கி, ஒருவர் தோளில் சாய்ந்தார்... காஞ்சான் பற்குணத்தை ஆதரவாகப் பிடித்துக் கொண்டார். நாட்டு வக்கீல், பழனிச்சாமி வீட்டைப் பார்த்து ஓடினான். இரண்டு கைகளிலும் விலங்குத் தடங்களை விழுப்புண்கள் போல் கொண்ட திருமலை நொண்டியடித்து வந்தான். தங்கையைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டான். தனக்குத்தானே முனங்கிக் கொண்டான். "நான் செய்து மாட்டிக்கப்-படாதுன்னு நீ செய்திட்டியாம்மா..."
கூட்ட நெருக்கம்... கூக்குரல் தாக்கம்... யாராலும் பேச முடிய வில்லை.... கோலவடிவை நேருக்கு நேராய் பார்க்கவும் முடியவில்லை. உச்சிமுடியைப் பிடித்திழுக்கும் போது ஏற்படும் முகச்சுழிப்புடன்
துளசிங்கத் துண்டுத்தலை, ரத்தக் கட்டியில் ஒட்டிப்போய் கிடந்தது. சிவ சிவ என்றார்கள். அய்யய்யோ என்றார்கள். ஆனால் எவருக்கும் கோவிலுக்குள் போகும் தைரியமில்லை. எப்படியோ நான்கைந்து போலீஸ்காரர்கள் தைரியப்பட்டு வந்தார்கள். கோலவடிவைப் பார்க்காமல் கூட்டத்தைப் பார்த்து அதட்டினார்கள்.... பிறகு, கோலவடிவின் அருகே கிடந்த அரிவாளைப் பயத்தோடு பார்த்தபடியே, கோவிலுக்குள் போகப் போனார்கள்... ஆனாலும் போனபாடில்லை....
ரஞ்சிதம் ஓடி வந்தாள். கூட்டத்திற்குள் ஊடுறுவி, கோலவடிவின் பார்வை படும் இடத்தில் நின்றபடியே வெறித்துப் பார்த்தாள். விரக்தி யோடு பார்த்தாள். திருமலையைப் போல் தனக்குத்தானே முனங்கிக் கொண்டாள்... " என்னை துளசிங்கம் எதுவும் செய்துடப் படாதுன்னு அவனை அப்படிச் செய்திட்டியா கோலம்? அவசரப்பட்டுட்டியே கோலம் இல்ல.... நீ அவசரப்படல... ஒன்னை அவசரப்படுத்திட்டாங்க..."
கோலவடிவு, ரஞ்சிதத்தைப் பார்ப்பதுபோல் தெரிந்தது. சிலையில் போட்ட தலையைத் தூக்கினாள்... அவளை நோக்கி லேசாக கையை உயர்த்தினாள்.... வெறி பிடித்தவள் போல் சிரித்துக் காட்டினாள்.... பிறகு பழையபடியே தலையை அம்மன் சிலையில் போட்டாள். அப்புறம் தன் பாட்டுக்குக் கிடந்தாள்.....
சிறிது நேரத்தில் பழனிச்சாமி அந்தப் பக்கம் வந்தார். வாடாப்பூ அலற-சந்திரா புலம்ப-நாட்டு வக்கீல் நாராயணன் அவரை ஆதரவாய் பிடித்துக்கொள்ள, அருணாசலத்தின் தோளை ஆதரவாய், ஊன்றுகோல்போல் பிடித்தபடி வந்தார்... பெற்றெடுத்த மகளை - அதிர்ந்து பேசாத செல்வத்தை, இப்போது பேயாகிப் போனவளை, நேருக்கு நேராய்ப் பார்த்தார். அவளின் குற்றங்களையும், குணங் களையும் மறந்து, மகளென்று மட்டுமே பார்த்தார்.... தந்தை என்று மட்டுமே பார்த்தார். பெற்ற பாசம், கண்ணீராய் கவிழப் பார்த்தார்.
அந்த பரிச்சயப்பட்ட பார்வையில் நெகிழ்ந்தவள் போல் - காய்ந்த இரும்பை தண்ணீருக்குள் திணிக்கும் போது அது எப்படி ஒலி எழுப்புமோ, அப்படி ஓசையிட்டபடியே கோலவடிவு நேர் கோடாய் எழுந்தாள். பிறகு கீழே குனிந்து துளசிங்கத்தின் தலையைத் தூக்கிப் பிடித்தபடி மீண்டும் எழுந்தாள். சிறிது நேரம் அப்படியே நின்றாள்... பிறகு தந்தையை நோக்கி, அந்தத் தலையைத் தூக்கி காட்டினாள்.... காட்டிக் கொண்டே நின்றாள்....
(முற்றும்)
--------
This file was last updated on 18 June 2020.
Feel free to send the corrections to the Webmaster.