நக்கீரதேவ நாயனார் அருளிய
திருமுருகாற்றுப்படை - மூலமும்
எஸ். வையாபுரி பிள்ளையவர்கள் உரையும்
tirumurukARRuppaTai of nakkIrar, with notes
by S. vaiyApuri piLLai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Mr. M. Balasubramanian of Coimbatore for the preparation of the
machine-readable version of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை
மூலமும் எஸ். வையாபுரி பிள்ளையவர்கள் உரையும்
Source:
நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை
மூலமும் எஸ். வையாபுரி பிள்ளையவர்கள் உரையும்
நான்காம் பதிப்பு
சைவ சித்தாந்த மகா சமாஜம்
9, வைத்தியராமையர் தெரு, தியாகராயநகர், சென்னை.
1946
உரிமை பதிவு செய்யப்பட்டது
தனிப் பிரதி விலை அணா 2
Printed at the Sadhu Press, Royapettah, Madras, for the
Saiva Siddhanta Maha Samajam, Mylapore; Copies 2000; 20-12-1946.
------------
திருமுருகாற்றுப்படை மூலமும் எஸ். வையாபுரி பிள்ளையவர்கள் உரையும்
பதிப்புரை
திருமுருகாற்றுப்படை மூலமும், ராவ்சாஹிப் திரு. எஸ். வையாபுரி பிள்ளையவர்கள் உரையும் சமாஜப் பதிப்புக்களாக 1933, 1934, 1936-ம் ஆண்டு களில் வெளிவந்தன. இப்போது இரண்டாயிரம் பிரதி கள் நான்காம் பதிப்பாக இன்று வெளிவருகின்றன. இவற்றையும் சைவ மக்கள் நன்கு பயன்படுத்துமாறு முருகப்பெருமான் திருவடிகளை வழுத்துகின்றேன்.
சமாஜ ஆண்டு விழா
இங்ஙனம் திருச்செங்கோடு க. அரங்கசாமி ! 25-12-1948
காரியதரிசி, சைவ சித்தாந்த மகா சமாஜம்
------------------
நூல் வரலாறு
ஒரு மலைச்சாரலில், ஒரு தடாகக் கரையிலிருந்த ஓர் ஆலமரத்தின்கீழ் நக்கீரர் சிவபூஜை செய்துகொண்டிருந்தபொழுது, மரத்திலிருந்த ஒரு பழுத்த இலையின் ஒருபாதி தண்ணீரிலும், மற்றொரு பாதி கரையிலுமாக விழுந்தன. உடனே நீரில் விழுந்த ஒருபாதி, மீன் வடிவமும், புறத்தே விழுந்த மற்றொரு பாதி, பறவை வடிவமும் பெற்று, பறவை மீனை இழுத்துக்கொண்டிருக்க, நக்கீரர் இக்காட்சியில் கருத்தைச் செலுத்தினதால் சிவபூஜைக்குப் பங்கம் உண்டாயிற்று. அதற்கு முன்பு இவ்வாறு சிவபூஜையில் வழுவிய 999 பேரை ஒரு குகையில் அடைத்து ஆயிரத்தை நிரப்ப இன்னும் ஒருவர் வேண்டு மெனக் காத்திருந்த ஒரு பூதம், நக்கீரரையும் கொண்டுபோய் அடைத்து, தனது நியமப்படி இவ்வாயிரம் பேரையும் உண்ணுவதற்கு முன் நீராடப் போயிற்று. அப்போது அதுவரை உணவு பெற்றுப் பிழைத்திருந்த 999 பேரும், நக்கீரர் வருகையால் தாங்கள் இறக்க வேண்டி நேரிட்டதை அவருக்குத் தெரிவித்து அழுதார்கள். அவ் வழுகையைக் கேட்ட நக்கீரர், அவர்கள் நிலைக்கு இரங்கித் திருமுருகாற் றுப்படை என்னும் இப்பாட்டைப் பாடினார். உடனே முருகக்கடவுள் அவர்கள் எதிரில் தோன்றி எல்லோரையும் குகையிலிருந்து வெளிப் படுத்திக் காப்பாற்றினார்.
----------
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை
மூலமும், ராவ்சாஹிப் திரு. எஸ். வையாபுரி பிள்ளையவர்கள் உரையும்
1. திருப்பரங்குன்றம்
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
ஓ அற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை 5
மறுஇல் கற்பின் வாள் நுதல் கணவன்
கார்கோள் முகந்த கமம் சூல் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து 10
உருள் பூந் தண்தார் புரளும் மார்பினன்
உரை :- (1- 6) உலகத்திலுள்ள உயிரினங்களெல்லாம் மகிழும் படியாக எழுந்து மகாமேருவை வலமாமச் சுற்றிவரும், பலர் புகழ் கின்ற சூரியன் கடலிடத்தே தோன்றினாற் போல, நீக்சமின்றி எப் போதும் நெடுந்தூரம் சென்று விளங்கும் ஒளியை உடையவன் முருகன். (சூரியன் புற இருளைக் கெடுக்குமாறு போலத் தன்னை மனத்தால் நோக்குவாரது அகவிருளை (= மலத்தை) முருகன் எளிதில் கெடுத்துவிடுகிறான். உதய சூரியனை நோக்குவாருக்குக் கடலின் நீலமும் சூரியனது செம்மையும் தோன்றுவது போல, முருகனை நோக்குவாருக்கு மயிலின் நீலமும் அவனது திருமேனிச் செம்மையும் தோன்றும்.) அவனது அழகும் வலிமையுமுள்ள திருவடிகள் வந்தடைந் தோர்களுடைய தீவினையையும் அறியாமையையும் போக்கி அவர்களைக் காக்கும். அவனுடைய திருக்கரங்கள் இடியைப் போலப் பகைவரை அழிக்க வல்லன அவன் குற்றமற்ற கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையுமுடைய தெய்வயானையின் கணவன்.
(7-11) கடலிலே நீரை முகந்து கொண்ட சூல்முதிர்ந்த கரு மேகம், சூரியனும் சந்திரனும் இருளை நீக்கும் ஆகாயத்தே நின்று, பெருந்துளிகளைச் சிதறிக் கார்காலத்து முதல் மழையைப் பொழிந்த குளிர்ந்த மணம் பொருந்திய காட்டிலே, இருள் மிகும்படியாகத் தழைத்தோங்கிய பருத்த அடிப்பாகத்தையுடைய வெண்கடம்பினது பூவால், தேருருள்போலச் செய்யப்பட்ட குளிர்ந்த உருண்ட பூ மாலைகள் அவனது மார்பில் அசைந்து கொண்டிருக்கும்.
-------
மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில்
கிண்கிணி கவை இய ஒண்செம் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில் 15
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழைச்
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணைஈர் ஓதிச் 20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு
பைந்தாள் குவளைத் தூ இதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
(12, 40, 41, 13-19) பெரிய மூங்கில்கள் ஓங்கி வளரும் ஆகா யத்தை அளாவுகின்ற மலையிலேயுள்ள சோலையில், தெய்வத்தன்மை யால் அச்சத்தை விளைவிக்கின்ற தெய்வப் பெண்கள் பலருங்கூடி, அழகு விளங்குகின்ற மலையிடமெல்லாம், எதிரொலி எழும்படியாகப் பாடி யாடுவர். கிண்கிணி சூழ்ந்த ஒளி பொருந்திய சிவந்த சிறிய பாதங்களையும், திரண்டகால்களையும், வளைந்து ஒடுங்கிய இடையையும் உடையவர்கள் இப்பெண்கள். இவர்களுடைய தோள்கள் மூங்கிலைப் போன்றிருக்கும்; இவர்களது பூந்துகில் இந்திரகோபப் பூச்சியின் நிறத்தைப்போல இயல்பாகச் சிவந்திருக்கும்; அது சாயந்தோய்க்கப் பெற்றதன்று. பல மணிகள் கோத்த ஏழு வடங்கள் கொண்ட மேகலையை இவர்கள் அரையில் அணிந்திருப்பார்கள். இயற்கை யாகவே இவர்கள் மிகுந்த அழகுடையவர்கள். இவ்வித அழகைச் செயற்கையில் தோன்றச் செய்வது அரிது. இவர்களணிந்த ஒளிமிக்க ஆபரணங்கள் சாம்பூநதமென்ற பொன்னால் செய்யப்பட்டவை. இவர்கள் மேனி குற்றமற்றது ; நெடுந்தூரத்தைக் கடந்து செல்லும் காந்தியையுடையது.
----
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
மகாப் பகுவாய் தாழயண் ணுறுத்துத் 25
துவர முடித்த துகள் அறு முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇக் கரும் தகட்டு
உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக்
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளை இத் துணைத்தக 30
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறும் குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேம்கமழ் மருது இணர்கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் 35
வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்று அடு விறற்கொடி
வாழிய பெரிது என்று ஏத்திப் பலருடன்
--------
(20-39) இவர்கட்குத் துணை செய்யும் தோழிப் பெண்கள், கோதி வகிர்ந்த ஒத்த நுனிகளையும் பளபளப்பையும் உடைய இவர் களது கூந்தலிலே, சிவந்த காம்புகளையுடைய சிறிய வெட்சிப்பூக் களின் இதழ்களை விடுபூவாகத் தூவி, அதற்கு நடுவே பசும் காம்பினை யுடைய குவளைப் பூவின் மாசற்ற இதழ்களைக் கிள்ளியிட்டு முடிப்பர்; சீதேவி யென்னும் தலையாபரணத்தையும் வலம்புரி வடிவாகச் செய்த தலையாபரணத்தையும் வைத்தற்குரிய இடத்தே வைப்பர் ; திலக மிட்ட மணங்கமழும் இவர்களது அழகிய நெற்றியிலே சுறாமீனின் திறந்த வாய்போலச் செய்த ஆபரணம் தங்கும்படி அலங்கரிப்பர் : நன்றாக முடித்த இவாது மாசற்ற கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகுவர்; கரிய புறவிதழ்களையும் பஞ்சு நுனி போன்ற மேற் பக்கத்தையுமுடைய பூக்களுள்ள மருதின் ஒளி பொருந்திய பூங்கொத்துக்களை அதன்மேலே இட்டுவைப்பர் , நீர்க் கீழுள்ள பசிய கிளையினின்றும் மேலே எழுந்து தோன்றுகின்ற சிவந்த அரும்புகளைச் சேர்த்துக் கட்டிய மாலையை அதன் மேலே வளைவாகச் சூட்டுவர்; அசோக மரத்தின் ஒளி பொருந்திய தளிர் களை ஒரே அளவாகத் திருத்தி இவர்களது வளமை பொருந்திய காதிலே இட்டு நிறைத்திருப்பர். நுட்ப வேலையையுடைய ஆபரணங் களை அணிந்த இவர்களது மார்பிடத்தே அத் தளிர்கள் அசைந்து கொண்டிருக்கும். திண்ணிய வைரத்தையுடைய வாசனைமிக்க சந் தனமுரைத்த நன்னிறமுள்ள குழம்பை மணம் வீசும் மருதம் பூவை அப்பினாலொப்பத் தமது அழகிய மார்பில் இவர்கள் அப்பியிருப்பர்; விரிந்த மலரையுடைய வேங்கையின் நுண்ணிய மகரந்தத்தையும் அதன்மேலே அப்புவர் ; விளா மரத்தினது சிறிய தளிரைக் கிள்ளி அழகுபெற ஒருவர்மேலொருவர் தெறித்து விளையாடுவர் ; " வஞ்சி யாது எதிர் நின்று கொல்லுகின்ற வெற்றியையுடைய கோழிக்கொடி நெடுங்காலம் வாழ்வதாக'' என்று கூறி வாழ்த்துவர்.
----------
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்
சூர் அர மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்குச் 45
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்
உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு 50
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்திவெருவர
வென்று அடு விறற்களம் பாடித்தோள் பெயரா 55
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க
இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ் இணர்
மாமுதல் தடிந்த மறு இல் கொற்றத்து 60
-------
(42-44) இத்தகைய சிறப்புவாய்ந்த சோலையையுடைய மலைச் சரிவிலே, குரங்குகளுங் கூட ஏறி அறியாதபடி மரங்கள் அடர்ந்து நெருங்கியிருக்கும். அவ்விடத்தே காந்தள் பூக்கள் பூத்திருக்கும். அவைகளை வண்டுகள் மொய்ப்பதில்லை. ஒளி வீசுகின்ற அக் காந் தளின் பூக்களாலாகிய பெரிய குளிர்ந்த மாலையானது முருகன் திரு முடியிலே விளங்கிக் கொண்டிருக்கும்.
{45, 46, 57-60) விளங்குகின்ற இலை வடிவான நுனியை யுடைய (முருகனது) நீண்ட வேலாயுதம், நிலத்திலே பழமையாக வுள்ள குளிர்ந்த கடலும் நிலை குலையும்படி அதனுள்ளே புகுந்து, அங்கே ஒளித்துக்கொண்டிருந்த சூரபன்மனை இருகூறாகப் பிளந்தது. குதிரைத் தலையும் மனித உடலுமாகிய இரண்டு பெரிய வடிவங்களும் ஒன்றாயமைந்த அச்சூரபன்மனுடைய சரீரம் உடனே அறுபட்டு வேறு வேறாகத் துண்டித்துப் போயிற்று. கவிழ்ந்து தொங்கும் பூங் கொத்துகளையுடைய மாமரமாக அவன் மாறி நின்றான். அச்சம் தோன்றப் போரிலே மண்டிச்சென்று, அவுணர்கட்கு நல்வெற்றியே இல்லாமற் போகும்படி, முருகன் அவனைக் கொன்றான்.
(47-56) அப்போர்க்களத்தில் வந்து கூடிய பெண் பேய்கள் காய்ந்த மயிரை யுடையன; ஒழுங்கற்ற பல் வரிசையையும் பெரிய வாயையும் உடையன ; சுழல்கின்ற விழிகளையும், ஊன் வடிவதால் பசுமையான கண்களையும், கொடும் பார்வையையும் உடையன : பிதுங் கிய கண்ணுடைய ஆந்தையும் கடும் பாம்பும் தொங்கிக் கிடக்க, பெரிய மார்பை அலைக்கின்ற காதுகளையும் உடையன. அவை, இரத்தத்தை அளைந்த, கூரிய நகமுடைய, வளைந்த, தம் விரல்களினாலே, இறந்து பட்ட அவ்வவுணர்களுடைய முடை நாற்றம் மிக வீசுகின்ற பெரிய தலைகளிலுள்ள கண்களைத் தோண்டிப் புசித்து, அத்தலைகளை, ஒள்ளிய வளைகளை யணிந்த தம்முடைய அகன்ற கைகளிலே எந்தி, நிணத்தைத் தின்று கொண்டிருக்கும் வாய்களையுடையனவாக, அச்சந் தோன்ற முருகன் வஞ்சியாது அவுணர்களின் எதிரே நின்று அவர்களைக் கொன்ற வெற்றிக் களத்தைப் பாடித் தமது தோள்களை யசைத்துத் துணங்கைக் கூத்தாடின.
-----
எய்யாநல் இசைச் செவ்வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப 65
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே செ
ருப்புகன்று எடுத்த சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்
திருவீற் றிருந்த தீது தீர் நியமத்து 70
மாடம் மலி மறுகில் கூடற் குடவயின்
இரும் சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் 75
அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன் ; அதா அன்று ,
-------
(60-77) இத்தகைய குற்றமற்ற வெற்றியினையும் ஒருவராலும் அளந்தறிய வொண்ணாத நல்ல புகழினையும், இரத்தக் கறையாற் சிவந்த வேலாயுதத்தையும் உடையவன் முருகன். அவனுடைய திரு வுடியை நினைக்கின்ற, நன்மை பொருந்திய கொள்கையுடைய சிறந்த உள்ளத்தோடு மெய்ஞ்ஞானத்தால் விரும்பித் தங்குதலை வேண்டி, நீ அவ னிடம் போதலை விரும்பினையாயின், நற்குணங்கள் பலவும் சேருத லால் நன்மை பொருந்திய நெஞ்சத்திலே உண்டான உன் இனிய விருப்பமானது கைகூடும்படி. நீ கருதிய செயலை இப்பொழுதே மேற்கொள்வாய். அதைப் பெறுதற்கு, அவன் எங்கே உளன் என்னில் திருப்பரங்குன்றிலே நெஞ்சார விரும்பி அமர்ந் திருத்தலும் உரியன். போரில் வெற்றிக் குறியாக விரும்பித் தூக்கிய வானுற ஓங்கி நீண்ட கொடியையும், வரிந்து கட்டிய [*]பந்தும் பாவையும் பயனற்றுக் கிடக்கும்படி பகைவர்களை அழித்துவிட்டபடியினாலே போர்த்தொழில் அரிதாகிவிட்ட வாயிலையும், திருமகள் வீற்றிருக்கும் குற்றமற்ற கடை வீதியையும், மாடங்கள் மிக்க தெருக்களையு முடைய மதுரைக்கு மேற்கே யுள்ளது இத் திருப்பரங்குன்றம். அழ கிய சிறகுகளையுடைய வண்டின் அழகான திரள்கள், கருஞ் சேறு நிறைந்த அகன்ற வயல்களிலே முறுக்கு அவிழ்ந்து மலர்ந்த முள் செறிந்த தண்டுகளையுடைய தாமரைகளிலே இராய்போது உறங்கி, விடியற்காலத்திலே தேன் மணக்கின்ற நெய்தற் பூவை யூதி, சூரியன் தோன்றியவுடன் கண்களைப்போல் மலரும் அழகிய சுனைப் பூக் களிலே சென்று ரீங்காரம் செய்கின்ற வளத்தினையுடையது இது. முருகன் இங்கே இருப்பது மன்றி,
-----------
[*] பகைவரை மகளிர்கோலம் பூணச்செய்து, வாயிலிலே இருத்தி, அங்கே அவர் விளையாடுதற்காக நூலால் செய்யப்பட்ட பந்தும் பொம்மையும் தொங்கவிட்டு வைப்பர். இப்போது பகைவரின்மை யால் அப்பந்து முதலியன பயனற்றுக் கிடந்தன.
----------
2. திருச்சீரலைவாய்
வைந்நுதி பொருத வடு ஆழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் 80
கூற்றத்து அன்ன மாற்றரும் மொய்ம்பின்
கால்கிளர்ந்து அன்ன வேழம் மேல் கொண்டு
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப 85
நகைதாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
--
(124. 125,78-88) நன்மக்கள் புகழ்ந்த நன்மை ஓங்கிய உயர்ந்த சிறப்பையும் புகழையுமுடைய திருச்செந்தூர் என்னும் பதியிலே எழுந்தருளி இருத்தலையும் (முருகன்) தனது நிலைபெற்ற தன்மையாக உடையவன். தாழ்ந்து கிடக்கும் மணிகள் மாறிமாறி ஒலிக்கின்ற பக்கங்களையும், வேகமான நடையையும், கூற்றுவனது வலியை ஒத்துப் பிறரால் தடுத்தற்கரிய வலியினையும், காற்று எழுந்த தைப்போலவுள்ள வேகத்தையுமுடைய யானையின் மேலே, கூரிய துனியுடைய தோட்டி ( = அங்குசம் ) வெட்டின வடுவழுந்திய புள் ளியையுடைய அதன் மத்தகத்தே பொன்னரி மாலையும் பட்டமும் கிடந்து அசையும்படி, அவன் ஆங்கு ஏறி இருப்பன். ஐந்துவகை யுறுப்புக்களையும், நிரம்பிய வேலைப்பாட்டையுமுடைய கிரீடத்திலே, வெவ்வேறு நிறங்களோடு விளங்குகின்ற அழகிய மணிகள் மின்னலைப் போல ஒளிவிட்டு அவனது சிரசை அழகு படுத்தும். நெடுந்தூரம் பிரகாசிக்கும் இயற்கையையுடைய வெண்மதியைச்சூழ்ந்து, அதை விட்டு நீங்காத நக்ஷத்திரங்களைப்போல , ஒளி நிரம்பி வகையா யமைந்த பொற்குண்டலங்கள் அவன் காதுகளில் அசைந்து ஒளி விட்டு விளங்கும்.
----
தாவு இல் கொள்கைத் தம் தொழில் முடிமார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே 90
மாஇருள் ஞாலம் மறு இன்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம், ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக்
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே, ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ 95
அந்தணர் வேள்வி ஓர்க்கும் மே, ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித்
திங்கள் போலத் திசைவிளக்கும்மே, ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே, ஒரு 100
குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் [முகம்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே ஆங்கு அம்
மூவிரு முகனும் முறைநவின்று ஒழுகலின்
-----
(89-103) வருத்தங்களைப் பொருட்படுத்தாத கொள்கையோடு தமது தவத் தொழிலை முடிக்கின்றவர்களுடைய மனத்திலே பொருந்தி, காந்திமிக்க அவனது திருமுகங்கள் தோன்றும். அம்முகங்களுள் ஒன்று, இருள் மிக்க இப்பேருலகானது மாசு சிறிது மில்லாது விளங் கும்படியாகப் பல கிரணங்களைத் தோற்றுவிக்கும் ; ஒரு முகம், அன் பர்கள் துதிக்க, அவர்கட்கிணங்கி இனிதாகத் தோன்றி, அவர்பா லுள்ள காதலாலே மகிழ்ந்து, அன்போடு உரங்கொடுக்கும்; ஒரு முகம், மந்திரத்தையுடைய வேத முறையினின்றும் வழுவாத அந்தணர்களுடைய யாகங்களில் இடையூறு வாராதபடி நோக்கம் செலுத்தும் ; ஒரு முகம், மக்கள் அறிவினுள் அகப்படாது எஞ்சி நின்ற பொருள்களை யெல்லாம் உலகம் இன்புறும்படியாக உணர்த்திக் கலைநிரம்பிய சந்திரன் போலத் திசைகளை யெல்லாம் விளக்கிக் கொண்டிருக்கும் ; ஒரு முகம், பகைவர்களை யழித்து அவர்கள் பிறர் மேற் செய்யும் போரைக் கெடுத்துத் தீராத கோபங் கொண்ட நெஞ் சத்தோடு போர்க்களத்தை விரும்பும்; ஒரு முகம் கொடி போன்ற இடையை யுடையவளாயும் குறவரது இளம் பெண்ணாயுமுள்ள வள்ளியோடு மகிழ்ச்சியை நாடி யிருக்கும். இப்படி அவனுடைய ஆறுமுகங்களும் அவ்வவற்றிற்குரிய தொழில்களை முறைப்படச் செய்து வருவன.
------
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில்
செம்பொறி வாங்கிய மொய்ம்பில் சுடர்விடுபு 105
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை ; உக்கம் சேர்த்தியது ஒருகை ;
நலம் பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசை இயது ஒருகை ;
அங்குசம் கடாவ ஒருகை ; இருகை 110
ஐயிரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ; ஒருகை
மார்பொடு விளங்க ; ஒருகை
தாரொடு பொலிய ; ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப; ஒருகை
பாடு இன் படுமணி இரட்ட ; ஒருகை 115
நீல்கிற விசும்பின் மலிதுளி பொழிய ; ஒருகை
வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட ; ஆங்கு அப்
----------
(104-118) மாலை தாழ்ந்து கிடக்கும் அழகிய பெருமை பொருந்திய அவனது மார்பிலுள்ள உத்தம லக்ஷணமாகிய ரேகைகள் அவனுடைய தோள்கள் வரை நீண்டிருக்கும். அந்தத் தோள்கள் மிக்க வலிமை யுடையனவாய் ஒளி பொருந்திப் புகழ் நிறைந்து வளைந்தும் நிமிர்ந்து மிருக்கும். அவன் கைகளில் ஒன்று, ஆகாயத்திலே செல்லுகின்ற ஒழுக்கத்தினையுடைய [$]தெய்வ இருடிகளுக்குப் பாதுகாவலாக ஏந்தியது ; ஒரு கை இடுப்பிலே வைத்தது, ஒரு கை, அழகிய ஆடை யணிந்த தொடையின் மேலே கிடப்பது ; ஒரு கை, அங்குசத்தைப் பிடித்துச் செலுத்துவது ; இரண்டு கைகள், அதிசயமான கரிய கேடகத்தையும் வேலாயுதத்தையும் சுழற்றிக் கொண்டிருப்பன ; ஒரு கை, மார்பிலே தங்கி விளங்குவது; ஒரு கை, மாலையோடு அழகு பெறத் தோன்றுவது ; ஒரு கை, உயர்த்தப்பட்ட தால் நழுவித் தாழ்கின்ற தொடியோடு மேலே சுழன்று கொண்டிருப் பது ; ஒரு கை, இனிய ஓசையையுடைய ஒலிக்கின்ற மணியை மாறி மாறி ஒலிக்கச் செய்வது ; ஒரு கை , நீல நிறத்தையுடைய மேகத்தி லிருந்து நிரம்பிய நீர்த்துளிகளைப் பொழியச் செய்வது ; ஒரு கை, தெய்வப் பெண்களுக்கு மண மாலையைச் சூட்டுவது. இவ்வாறு பன்னிரண்டு கைகளும் தத்தமக்குரிய முறையிலே தொழில் செய்வனவாயுள்ளன.
[$] சூரியனது முழு வெப்பம் உயிர்களாற் பொறுக்க முடியாத தெனக்கருதி, சூரியனோடு சுற்றி வந்து தமது அருளினால் அவ்வெப் பத்தைச் சில முனிவர்கள் குறைக்கின்றனரென்பது பழைய வரலாறு.
------
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால்வளை ஞால 120
உரம் தலைக் கொண்ட உரும் இடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும்பு அறாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்குபர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலை இப் பண்பே ; அதா அன்று, 125
-----
(119-123, 125) ஆகாய துந்துபி ஒலித்துக் கொண்டிருக்க, திண்ணிய வைரம் பாய்ந்த ஊது கொம்புகள் 'சப்திக்க, வெண் மையான சங்குகள் முழங்க, வலிமையைத் தன்னிடத்திலே கொண்ட இடியேற்றினைப் போன்ற முரசத்தோடு, பல புள்ளிகளை-யுடைய மயிலானது அவனுடைய வெற்றிக் கொடியிலே யிருந்து ஒலித்துக் கொண்டிருக்க, ஆகாய வழியாக விரைவாய்ச் செல்லுதலை மேற் கொண்டு அவன் இங்கே (திருச்செந்தூரிலே) வந்து தங்குவான். அதுவுமன்றி,
3. திருஆவினன்குடி
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசு அற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் 130
பலஉடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடும்சினம் கடிந்த காட்சியர் இடும்பை 135
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனி இல் காட்சி முனிவர் முன்புகப்
-----
(137, 126-- 136) அவர்களுள் வெறுப்பில்லாத அறிவையுடைய முனிவர்கள் விருப்பத்தோடு கூடி முன்னே சென்றார்கள். அவர்கள் மரவுரியைத் தைத்து உடையாக அணிந்தவர்கள் ; வலம்புரிச் சங்கை ஒத்ததாய் அழகாய் முடிக்கப்பட்ட வெண்மையான நரைமுடியை யுடையவர்கள் ; அழுக்கின்றி விளங்கும் மேனியையுடையவர்கள் ; மான் தோலைப் போர்த்துக்கொண் டிருக்கிற தசையற்ற மார்பையுடையவர்கள் ; எலும்புகள் மேலே எழுந்து தோன்றும் சரீ ரத்தையுடையவர்கள் : பல நாட்கள் கழிந்தபின் உண்ணும் இயல்பை யுடையவர்கள் ; பகையும் கோபமும் நீங்கிய மனத்தை-யுடையவர்கள் ; எல்லாவற்றையும் கற்றுணர்ந்தோருங்கூட அறிய முடியாதபடியுள்ள அறிவையுடையவர்கள் ; கற்றவர்கட்கெல்லாம் எல்லையா-யிருக்கின்ற தலைமையை யுடையவர்கள் ; காமத்தையும் கடுஞ் சினத்தையும் நீக்கின அறிவாளர்கள் ; மனவருத்தம் என்பதைச் சிறிதும் அறியாத தன்மையை யுடையவர்கள்.
(175, 176, 164-168, 173, 174) முருகன், வருத்தமில்லாத அருட் கற்பினையுடைய தெய்வயானையுடன் ஆவினன்குடி என்னும் திருப்பதியிலே சிலநாள் இருத்தலும் உரியன். தாமரையிற் பிறந்த வனாயும், கேடில்லாத காலத்தை யுடையவனாயுமுள்ள [*]நான்முகன் காரணமாக, உற்ற குறையானது தீரும்பொருட்டு, திருமால் முதலி யோர், பகல்போலத் தெளிவாக மயக்கமற்றிருக்கின்ற அறிவையுடை யவராயும் நால்வகையான இயற்கையை யுடையவராயும் உள்ள முப் பத்து மூன்று தேவர்-களோடும், பதினெட்டு வகையான உயர் நிலை யைப் பெற்ற கணங்களோடும் அந்தர மார்க்கமாக வந்தார்கள்.
[*] முருகக் கடவுள் அசுரரை அழித்து இந்திரன் மகள் தெய்வ. யானையை மணந்த பொழுது தம் கையிலுள்ள வேலாயுதத்தை நோக்கி '' நமக்கு எல்லாம் தந்தது இவ்வேல் '' என்று கூறினார். அப் போது அருகே யிருந்த பிரமன் "இவ்வேலுக்கு இப்பெருமை என் னால் வந்ததே '' என்றான். உடனே முருகர் " நம் கை வேலுக்கு சக்தி கொடுப்பவன் நீயா? '' என்று கோபித்து " இங்ஙனங் கூறிய நீ பூலோகத்துப் போ '' என்று சபித்தார். இச்சாபத்தை நீக்கும் பொருட்டுத் திருமால் முதலியோர் இவ்வுலகத்துக்கு வந்தனர் என்பது பழைய வரலாறு.
------------
புகைமுகந்து அன்ன மாசு இல் தூஉடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் 140
நல்யாழ் நவின்ற நயன்உடை நெஞ்சின்
மெல்மொழி மேவலர் இன்நரம்பு உளா
நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்உரை கடுக்கும் திதலையர் இன்நகைப் 145
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்கக்
----------
(138-147) அப்போது, அன்பு நிறைந்த நெஞ்சையும் மென்மையான மொழியை-யுமுடைய கந்தருவர்கள் இனிய யாழை வாசித் துச் சென்றார்கள். புகையைப்போல நுண்ணியதாயும் மாசற்றதாயு முள்ள தூய உடையை இவர்கள் தரித்தவர்கள் ; அரும்பு மலர்ந்த மாலையை மார்பிலே அணிந்தவர்கள். செவியினாலே சுருதியை அளந்து அமைத்த நரம்புகளையும் வார்கட்டினையும் உடையது அவர்களுடைய யாழ். இக்கந்தருவர்களோடு இவர்களது பெண்டிரும் விளங்கித்தோன் றினார்கள். அவர்கள் நோயின்றி அமைந்த சரீரத்தை யுடையவர்கள் ; விளங்குகின்ற மாந்தளிரைப் போன்ற நிறத்தை யுடையவர்கள் ; பொன்னுரை விளங்குவதைப் போன்ற அடிவயிற்று வரிகளை யுடை யவர்கள் ; கண்ணுக்கினிய ஒளியோடு கூடிய பதினெண்கோவை மேகலையை யணிந்த அரையை யுடையவர்கள் ; மாசற்றவர்கள்.
-------
கடுவொடு ஒடுங்கிய தூம்புஉடை வால் எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் 150
புள் அணி நீள்கொடிச் செல்வனும் வெள்ஏறு
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூஎயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல் 155
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈர் இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலை இய 160
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறும் ஞாலம் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவு இல் ஊழி
------
(148-159) அவர்களுள், விஷம் தங்கியிருக்கிற துளையை யுடைய வெண்மையான
நச்சுப் பற்களையும், நெருப்புப்போல மூச்சு விட்டு யாவருக்கும் பயமுண்டாகும்படி
வருகின்ற கொடிய வலிமை யினையும் உடைய பாம்புகள் அழியும்படி, புடைக்கின்ற பல வரிகளை யுடைய வளைந்த சிறகுகளோடு கூடிய கருடனை, நீண்ட சொடியாகக் கொண்டவன் திருமால். வெண்ணிறமான ரிஷபத்தை வலப்பக்கத் திலே கொடியாக உயர்த்தினவனாயும், பலரும் புகழ்கின்ற வலிமை மிக்க தோளை யுடையவனாயும், உமாதேவி ஒரு பக்கத்திலே வீற் றிருக்க விளங்குபவனாயும், இமையாத முக்கண்களை யுடையவனாயும், திரிபுரங்களையும் அழித்த மிகுந்த வலிமையை யுடையவனாயும் இருப் பவன் உருத்திரன். ஆயிரம் கண்களை யுடையவனாயும், நூறு யாகங் களைச் செய்து முடித்தவனாயும், அதனால் பகைவர்களை வென்று கொல்கின்ற வெற்றியை யுடையவனாயும், நான்கு கொம்புகளோடும் பெருந் தோற்றத்தோடு கூடிய நடையோடும் உயரத் தூக்கிய நீண்ட பெரிய தும்பிக்கையோடும் கூடிய (ஐராவதம் என்னும்) யானையின் பிடரியிலே ஏறியவனாயும், செல்வம் மிகுந்தவனாயும் இருப்பவன் இந்திரன்.
(160-163) இவ்வாறு இவர்கள் உடன் வர, திருமாலும் உருத்திரனும், இந்திரனும், நான்கு பெருந் தெய்வங்களாகிய திக்குப் பாலகர்களை யுடையதும், பல நன்னகர்களை நிலையாக வுடையதும், உயிர்களைக் காக்கும் ஒரே கொள்கையையுடைய பலரும் புகழ்கின்ற திரிமூர்த்திகளும் தலைவராக இருத்தலினாலே இன்புறுகின்றதும், ஆன இப்பூமியிலே தோன்றினார்கள்.
-------------
நான் முக ஒருவற் சுட்டிக் காண்வாப் 165
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரோடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீ இயர்
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு
வளிகிளர்ந்து அன்ன செலவினர் வளி இடைக் 170
தீஎழுந்து அன்ன திறலினர் தீப்பட
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கிலதம் பெருமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்து உடன் காணத்
தாவு இல் கொள்கை மடந்தையொடு சில்நாள் 175
ஆவினன்குடி அசைதலும் உரியன் ; அதா அன்று,
---
(169-172) நக்ஷத்திரங்கள் வானத்தில் பூத்தது போன்ற தோற் றத்தை யுடையவராயும், அவை உலாவுகின்ற விண்ணிடத்தைச் சேர்ந்து காற்றை எழுந்தாலொத்த வேகத்தை யுடையவராயும், காற் றிலே நெருப்பு எழுந்தாலொத்த வலிமையையுடையவராயும், நெருப் புப் பிறக்கும்படி இடியேறு இடித்தாற்போன்ற குரலை உடையவரா யும் இவர்கள் சென்றார்கள்.
(176) இவர்கள் யாவரும் இங்ஙனமாக வந்து காணும்படி இங்கே (திரு ஆவினன் குடியில் முருகன்) தங்கி யிருப்பான். அதுவுமன்றி,
----------
4. திருவேரகம்
இருமூன்று எய்திய இயல்பினின் வழா அது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமைநல் யாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன் நவில் கொள்கை 180
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலா உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து 185
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நா இயல் மருங்கில் நவிலப்பாடி
விரைஉறு நறுமலர் ஏந்திப் பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் ; அதா அன்று ,
(177-189) ஏரகம் என்னும் திருப்பதியிலே முருகன் எழுந் தருளியிருத்தலும் உரியன். இங்கே அவனை இருபிறப்பாளராகிய அந்தணர் , உரிய காலத்தைத் தெரிந்துத்திப்பர். இவர்கள் தாய் வழியிலும் தந்தை வழியிலும் நன்கு மதிக்கப்பட்ட பல பழைய குடிகளிலே தோன்றியவர்கள் ; தங்களுக்குரிய [#]ஆறு தொழில்களிலும் இலக்கணம் வழாது நடப்பவர்கள் ; தங்கள் இளமையில் நாற்பத் தெட்டு வருடங்களைப் பிரமசரியத்திற் கழித்தவர்கள்; அறத்தைச் சொல்லும் கொள்கையுடையவர்கள் ; மூன்று வடிவாக அமைத்து வளர்க்கும் [$]முத்தீயாகிய செல்வத்தை யுடையவர்கள் ; ஒன்பது இழைகளைக் கொண்டு முப்புரிகளாக அமைந்த நுண்ணிய பூணூலையுடைய வர்கள் ; இவர்கள் ஈரமான ஆடை உடம்பிலே கிடந்துலரும்படி யுடுத்து, கைகளை உச்சியிற் குவித்து, முருகனைப் புகழ்ந்து, ஆறெழுத் தாகிய மந்திரத்தை வாய்க்குள்ளே உச்சரித்து, மணம் பொருந்திய நல்ல புஷ்பங்களை ஏந்தி வழிபடுவார்கள். இவ்வழிபாட்டுக்கு மிகவும் மகிழ்ந்து, முருகன் இங்கே (திருவேரகத்தில்) தங்கியிருப்பான்.
அதுவுமன்றி,
-----------
[#] ஆறு தொழில்கள் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல் ஈதல், ஏற்றல்.
[$] முத்தீ - ஆகவனீயம், தக்கிணாக்கினி , காருகபத்தியம்.
-----------
5. குன்றுதோருடல்
பைங்கொடி நறைக்காய் இடை இடுபு வேலன் 190
அம்பொதிப் புட்டில் விரை இக் குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறும்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலை இய கானவர்
நீடு அமை விளைந்த தேக்கள் தேறல் 195
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரல்உளர்ப்ப அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்
குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் 200
முடித்த குல்லை இலைஉடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வால் இணர் இடைஇடுபு
சுரும்பு உணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண்டு அன்ன மடநடை மகளிரொடு 205
-----
(217, 193- 205) குன்றுதோறும் [§] வேலனாக நின்று ஆடலை யும் முருகன் தனது நிலைபெற்ற குணமாக உடையவன். குன்று களிலே கொலைத் தொழிலைச் செய்யும் வலிமை பொருந்திய வளைகின்ற வில்லையுடைய வேடர்கள் மணமுள்ள சந்தனத்தைப் பூசி நிறம் விளங்கும் மார்பினராய், நெடுங்காலமாக மூங்கிலிலே விளைந்த இனிய கள்ளின் தெளிவை அங்கே சிற்றூர்களிலுள்ள தங்கள் சுற்றத் தாருடன் கூடி உண்டு மகிழ்ந்து, தொண்டகம் என்னும் பறையைக் கொட்டி, குரவைக் கூத்தாடுவார்கள். இவர்களுடைய பெண்மக்கள் விரலால் வலிந்து மலரச் செய்ததாயும் ஆழமான சுனையிலே பூத்த தாயும் வண்டுகள் நெருங்கி மொய்த்ததாயுமுள்ள கண்ணியை (தலை மாலையை) உடையவர்கள் ; (இதழ் பறித்துக்) கட்டிய மாலையைச் சூடியவர்கள் ; சேர்த்துக் கட்டின கூந்தலையுடையவர்கள் ; இலைகள் செறிந்ததாயும், சிவந்த தண்டினை யுடையதாயுமுள்ள மராமரத்தின் வாசனை மிக்க பல வெண்மையான பூங்கொத்துகளையும், கஞ்சங் குல் லையையும், இடையிடையே விரவிக்கட்டின வண்டுண்ணும் பெரிய குளிர்ந்த தழையாடையை மணிவடங்கள் பூண்ட அரையிலே அசை யும்படி உடுத்தவர்கள் ; மட நடையை யுடையவர்கள். மயிலினங் களைப் போன்ற இவர்களும் குரவைக் கூத்தாடுவார்கள்.
[§] வேலன் = படிமத்தான் = தேவராளன் = கோயிலிற் பூசை செய் பவன் - இவன் ஆவேசம் பெற்று ஆடிக் குறி முதலியன சொல் லுதல் பண்டைக்கால வழக்கு. வேலைக் கையிற் பிடித்து ஆடுவதால் இவனுக்கு வேலன் என்பது பெயராயிற்று. மலை நாட்டில் வேலன் என்ற பெயரோடு இப் பூசகன் இன்றும் வழங்கப்படுகிறான்.
------------
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல்அம் 210
கொடியன் நெடியன் தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்து அன்ன இன்குரல் தொகுதியொடு
குறும் பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுஉறழ் தடக்கையின் இயல ஏந்தி 215
மென்தோள் பல்பிணை தழீ இத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே ; அதா அன்று,
--------
(216, 215, 217, 190 - 192, 206 - 214, 217) மெல்லிய தோள்களை யுடையவர்களாயும் மான்பிணைகளைப் போன்றவர்களாயும் உள்ள இப்பெண்களைத் தன்னுடைய முழவை யொத்த பெரிய கையினாலே தழுவி எடுத்து வேலனும் ஆடுவான். இவன் பச்சிலைக் கொடியிலே சாதிக்காயை இடையே இட்டுத் தக்கோலக்காயைக் கலந்து காட்டு மல்லிகையுடனே வெண்தாளியைக் கட்டின கண்ணயையுடையவன் ; சிவந்த மேனியையுடையவன் : செவ்வாடை யணிந்தவன் ; . சிவந்த அடிப்புறத்தையுடைய அசோக மரத்தின் குளிர்ந்த தளிரானது அசைகின்ற காதையுடையவன் ; கச்சைக் கட்டிக் கழலணிந்து வொட்சி மாலை சூடியவன் ; குழலையும் கொம்பை யும் ஊதிச் சிறிய இசைகளை உண்டாக்குபவன் ; ஆட்டுக் கிடாவையும் மயிலையுமுடையவன் ; குற்றமற்ற கோழிக்கொடியுடையவன் ; உயர மான வடிவத்தை யுடையவன் ; தோளிலே கடகத்தை யணிந்தவன் ; சிறிய பூம்பொறிகளைக் கொண்டு நறியதாய்க் குளிர்ந்த மென்மை யோடு லெத்தில் தாழ்ந்து புரளும் ஆடையையுடையவன் ; நரம்பு ஒலித்தது போன்ற இனிய குரலிலே பாடும் பெண்களோடு ஆடு பவன். இவ்வாறு குன்று தோறும் ஆடுதலுமன்றி,
--------
6. பழமுதிர் சோலை
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் 220
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறி அயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் 225
மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும்
----------
(218-226) சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக[$] வைத்து, ஆட்டை யறுத்து, கோழிக் கொடியை நிறுத்தி, ஊர்கள் தோறும் எடுத்த சிறப்புடைய திருவிழாக்களிலும் அவன் (முருகன்) இருப்பான். அன்பர்கள் தன்னை ஏத்துதலினாலே தான் மனமுயந்த இடங்களிலும் அவன் வசிப்பான். படிமத் தானாகிய வேலன் செய்த வெறியாடுகளத்திலும், காட்டிலும், சோலை யிலும், ஆற்றின் நடுவிலுள்ள அழகு வாய்ந்த திட்டுக்களிலும், ஆறு களிலும், குளங்களிலும், இன்னும் பல்வேறிடங்களிலும், நாற் சந்தி முதலிய சந்திகளிலும், புதுப்பூக்களையுடைய கடம்பமரத்திலும், ஊர் நடுவிலுள்ள மரத்தின் அடியிலும், அம்பலத்திலும், பசுக்கள் உராய்ந்து கொள்ளும் தறிகள் உள்ள இடங்களிலும் அவன் இருத்தற்குரியன்.
[$] தெய்வத்தின் முன்பு குறுணி வீதம் கொள்கலன்களில் வேதனமாகப் பரப்பி வைக்கும் அரிசி (முதலிய தானியங்கள்).
--------
மாண்தலைக் கொடியொடும் மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇச் 230
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலை இய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரை இத் தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் 235
பெரும் தண் கணவீர நறுந்தண் மாலை
துணை அற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நல்நகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க 240
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப் படுத்த உருகெழு வியன்நகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலஉடன் 245
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
---
(243, 244, 227 - 248) அன்றியும், பகைவர்கள் அஞ்சுமாறு , தான் வந்து தோன்றும்படி வழிப்படுத்தின அச்சத்தைத் தருகின்ற மலைக் கோயில்களிலும் முருகன் உறைவான். ஆங்கே குறப் பெண்கள் மாட் சிமை தங்கிய சிறப்புள்ள கோழிக்கொடியை அமைப்பர் ; நெய்யோடு வெண் சிறு கடுகை அப்புவர் ; வெளியே கேளாதபடி மந்திரத்தை உச்சரிப்பர் ; வணங்கி அழகிய மலர்களைத் தூவுவர் ; வெவ்வேறு நிறங் களையுடைய இரண்டு உடைகளை உடுத்துவர் ; சிவப்பு நூலைக் காப்பாகக் கட்டி, வெண்-பொரியைத் தூவி, மிக்க வலிமை பொருந்திய பெரிய கால்களையுடைய கொழுத்த ஆட்டுக் கிடாய்களின் இரத்தங் கலந்த வெண்மையான அரிசியைச் , சிறு பலியாகக் கொடுத்துப் பல பிரப்பும் வைப்பர் ; அக்கோயிலில் பசு மஞ்சள் நீரை யும் வாசனை நீரையும் தெளித்து, பெரிய குளிர்ந்த செவ்வலரி மாலை களை ஒரே அளவாகத் துண்டித்துத் தொங்கவிடுவர் ; தூபம் காட்டுவர்; குறிஞ்சிப் பண்களைப் பாடுவர் ; இனிய அருவி யொலியும் வாத்திய ஒலியும் ஒன்றாக முழங்க, பல நிறப் பூக்களைத் தூவுவர் ; அஞ்சும்படி இரத்தங் கலந்த செந்தினையைப் பாப்புவர் ; முருகன் விரும்புகின்ற வாத்தியங்களை வாசிக்கச் செய்வர் ; ' மலையிலுள்ள சிற்றூர்களெல் லாம் வாழ்க ' வென்று வாழ்த்துவர் : வெறியாடும் களம் முழுவதும் ஆரவாரிக்கும்படி பாடுவர் ; கொம்புகள் பலவற்றையும் ஊதி, வளைந்த மணிகளை ஒலிப்பித்து, கெடாத வலிமையையுடைய பிணிமுகம் என் னும் யானையை வாழ்த்துவர். அப் பெண்கள் இங்ஙனம் சாந்தி செய்ய, முருகனை வேண்டிக் கொண்டவர்கள் தாங்கள் வேண்டினவெல்லாம் பெற்றதால் அவனை வழிபட்டு நிற்பர்.
---------
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே
ஆண்டு ஆண்டு ஆயினும் ஆகக் காண்தக 250
முந்துநீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக்
கைதொழூடப் பரவிக் கால்உற வணங்கி
(249-252) முருகன் இவ்வாறு ஆங்காங்கே உறைந்திருத்தலும் உரியன். நான் அறிந்த அளவு இது. மேற்கூறிய இடங்களில் அவன் உறைந்தாலும் சரி, அல்லது வேறிடங்களில் உறைந்தாலும் சரி, நீ அவனை கேரிற் காணும் பொழுது இனிய முகத்தோடு அவனைத் துதித்துக் கையினால் தொழுது வாழ்த்தி, அவன் திருவடிகள் உனது தலையிற பொருந்தும்படி வணங்கிப் புகழ்வாயாக.
-----------
நெடும்பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ 255
ஆல்கெழு கடவுள் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழை அணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்கு வில் தானைத் தலைவ 260
மாலை மார்ப நூல் அறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பொரும் செல்வ 265
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேர் ஆள 270
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்
மண்டு அமர் கடந்தநின் வென்று ஆடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவே எள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி. 275
போர்மிகு பொருந் குரிசில் எனப்பல
யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்
நின் அடி உள்ளி வந்தனன் நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமை யோய் எனக் 280
குறித்தது மொழியா அளவையில் குறித்து உடன்
------------
(253--281) "நெடிய பெரிய இமயத்தின் சரவணப் பொய்கை யில், கார்த்திகைப் பெண்கள் [*] அறுவரும் பெற்று, அக்கினி தன் கையிலே தாங்கிய ஆறு வடிவு பொருந்திய செல்வனே ! கல்லாலின் கீழிருந்த கடவுளின் புதல்வனே! பெரிய பர்வதராஜனது புத்திரி யின் மகனே! பகைவர்கட்குக் கூற்றம் போன்றவனே! வெற்றியைத் தரும் போரைச் செய்யவல்ல துர்க்கையின் புதல்வனே ! ஆபரணங்க எணிந்த சிறப்புடைய காடுகிழாளின் புதல்வனே! வளைந்த வில்லுடைய வானவர் படைக்குத் தலைவனே ! கடம்பமாலையணிந்த மார்பினனே! நூல்களை யுணர்ந்த அறிஞனே / போரில் ஒப்பற்றவனே! பொருகின்ற 'வெற்றியுடைய வீரர்லீரனே! அந்தணர்க்குச் செல்வமாயிருப்பவனே! அறிவாளர்கள் புகழ்ச்சிச் சொற்களெல்லாம் ஒன்றாகக் குவிந்த மலையே / (வள்ளி தெய்வயானை என்ற) மங்கையரின் கணவனே / வீரருட் சிறந்தவனே ! வேல் தரித்த அகன்ற கையினையுடைய பெருஞ் செல்வனே ! கிரவுஞ்சகிரியை அழித்ததனால் குன்றாத வெற் றியையுடையவனே! ஆகாயத்தை யளாவும் பெரிய மலைகளிலிருக்கும் குறிஞ்சிநிலத் தலைவனே ! பலரும் புகழ்கின்ற நன்மொழிப் புலவர்க ளுட் சிறந்தவனே ! பெறுதற்கரிய தன்மையுடைய முத்தி நாயகனாம் முருகனே ! முத்தியை விரும்பினோர்க்கு அதைக் கொடுக்கும் பெரும் புகழாளனே ! பிறரால் வருந்துவோர்க்கு அருள் புரியும் பொற்பணி பூண்ட சேயே! நெருங்கிய போர்களிலே வெற்றிகொண்ட தனது மார்பினாலே பரிசில் வேண்டுவோரைப் பாதுகாக்கும் நெடுவேளே! பயத்தைத் தருபவனே ! கற்றறிந்த பெரியோர் துதிக்கும் பெரும் புகழ்பெற்ற கடவுளே ! சூரபன்மாவின் குலத்தை வேரோடறுத்த வலிமை மிக்கவனே ! மதவலி என்ற பெயருடையோனே ! போரில் வல்ல வீரனே! தலைவனே !" என்று நீ பலவாறாக நான் கூறிய முறைமையிலே விடாது அவனைப் புகழ்ந்து " உனது பெருமையை அளந்தறிதல் உயிர்கட்கு அரிதான காரியம், ஆகவே என்னால் உனது புகழை முழுதுங் கூறுதல் இயலாது , உன் திருவடியை நினைந்து இங்கு வந்தேன், ஒப்பற்ற புலமையுடையோனே!'' என்று உனது விண்ணப்பதைத் தெரிவித்துக் கொள்.
[*] இறைவனிடத்திலிருந்து இந்திரன் வாங்கிய கருவினைச் சப்த ரிஷிகள் தாங்க முடியாது முத்தீக் குண்டத்திலிட்டுப் பிறகு அருந் ததி நீங்கலாக மற்ற ஆறு ரிஷி பத்தினிகட்கும் (இவர்களே கார்த்தி கைப் பெண்கள்) தர, அவர்கள் அதனை விழுங்கிக் கருவுற்றுச் சர வணப் பொய்கையிலே பதுமப் பாயலிலே ஆறு வடிவாக ஈன்றனர் என்பது வரலாறு.
-------
வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர்
சாறு அயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்து என 285
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்
வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி
அணங்குசால் உயர்நிலை தழீ இப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி 290
அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வாவுஎன
அன்புஉடை நன்மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ ஆகித் தோன்ற விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்கும்மதி பலவுடன் 295
----------
(281-295, 317) உனது விண்ணப்பத்தைச் சொல்லி முடித்த வுடனே, பல்வேறு வடிவங்கொண்ட சிறு பூதங்கள் பல, திருவிழாங்க ழும் அவ்விடத்தே பெருமை மிகத்தோன்றி " இவன் தேவரீர் கிரு பைக்குப் பாத்திரமானவன், அறிவுமுதிர்ந்த சொல்வளமுடைய புலவ னாகிய இரவலன், தேவரீரது செழும்புகழை நாடி இங்கே வந்திருக் கின்றான, பெருமானே !" என்று இனிய நல்ல சொற்களால் பலவா றாக ஏத்தும். அப்போது தெய்வத்தன்மை நிரம்பியதாயும், வலிமை மிக்கதாயும்; ஆகாயத்தை யளாவுகின்ற தாயுமுள்ள உயர்ந்த வடிவோடு அவன் (முருகன்) தோன்றுவான். தோன்றி, அச்சம் தரவல்ல தனது பெரு நிலையை உள்ளடக்கி, மணங்கமழும் தெய்வத் தன்மை யுடைய, பழமையான தனது இளமை நலங்காட்டி, "உனது வரவை நான் அறிவேன், பயத்தை விட்டுவிடு'' என்று அன்புள்ள நல்ல மொழிகளைப் பலகாலும் அருள் வான் . கெடாத நீல நிறமுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் உனக்கொப்பாக ஒருவருமில்லை யென்று கூறும்படி, பெறுதற்கரிய சிறந்த பரிசிலையும் அறிவுகள் பலவுடன் பழமுதிர் சோலை மலை கிழவோனாகிய அவன் கொடுத்தருள்வான்.
-------------
வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து
ஆரம் முழுமுதல் உருட்டி வேரல்
பூஉடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த
தண்கமழ் அலர் இறால் சிதையநன் பல 300
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்து உடை வான் கோடு தழீஇத் தத்துற்று 305
நன்பொன் மணி நிறம் கிளரப் பொன் கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் 310
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடா அடி உளியம்
பெருங்கல் விடர் அளைச் செறியக் கருங்கோட்டு
ஆமா நல் ஏறு சிலைப்பச் சேண்நின்று 315
இழுமென இழிதரும் அருவிப்
பழம் முதிர் சோலை மலைகிழ வோனே .
----------
(296- 317) அவனுடைய மலையிலுள்ள அருவி பல நிறம் பொருந்திய ஆடைகளைப்-போல ஒடுங்கி அசைந்து வரும் ; அகில் மரங்களைச் சுமந்து வரும் ; சந்தனத்தின் முழுமரத்தை உருட்டும் ; பூக்கள் நிறைந்த மூங்கிற் கிளைகள் அசைந்து புலம்ப வேரைப் பறிக்கும் ; தேவருலகை யளாவும் நெடிய மலையில் தொடுக்கப்பட்டு, சூரிய பிம்பம் போலத் தோன்றுவதாயும் குளிர்ந்ததாயும் மணம் வீசு வதாயுமுள்ள தேன் கூடுகளைச் சிதைக்கும் ; நல்ல ஆசினிப் பலாவின் முதிர்ந்த சுளைகள் பலவும், மலையுச்சியிலுள்ள சுரபுன்னை மரத்துப் பூக்களும் அவ்வருவிமேல் உதிர்ந்து விழ, கருங்குரங்கும் கருமுகக் கடு வனும் நடுங்க, அழகிய நெற்றியையுடைய கரிய பெண்யானை குளிரால் ஒடுங்க, அவ்வருவி அலைவீசிச் செல்லும். பெரிய ஆண் யானையினது முத்துடைய வெண் கொம்புகளை வாரி எடுத்து, பொன்னிறமும் மணி நிறமும் விளங்கப் பொன்னைக் கொழித்துக்கொண்டு குதித்துச் செல்லும் ; வாழையின் அடித்தூரைச் சாய்க்கும் ; தெங்கின் பெரிய இளநீர்க்குலை உதிரும்படி தாக்கும் ; மிளகுக் கொடியின் கரிய கொத்துகளைச் சாய்த்துக் கவிழ்க்கும் ; புள்ளியுடைய பீலியும் மடநடையுமுள்ள பல மயில்களை மருட்டும் ; பெட்டைக்கோழிகளை வெருட்டும் ; பனஞ் செறும்பின் புல்லிய கருநிறத்தைப் போன்ற மயிர் செறிந்த உடலையும் வளைந்த அடியையும் உடைய கரடியும் ஆண் பன்றியும் பெரிய கற்பிளவாகிய குகையிலே அஞ்சி ஒடுங்கும் படி செய்யும் ; கரிய கொம்பினையுடைய காட்டெருமைக் கிடாய்கள் கதறும்படி மிக உயரத்திலிருந்து இழும் என்ற ஓசை யுண்டாகும் படி அருவியானது விழுந்து செல்லும். இவ்வாறு அருவி விழுந் தோடும் மலைக்குத் தலைவனாகிய முருகன் உனக்கருள் புரிவான்.
---------
வினைமுடிபு
கணவன் (6), மார்பினன் (11), சென்னியனாகிய (44), சேயுடைய (61), சேவடிபடரும் உள்ளத்தோடே (62), செல்லுஞ் செலவை நீ நயந்தனையாயின் (64), நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப (65), இன்னே பெறுதி (66), அது பெறுதற்கு அவன் யாண்டுறையு மென் னில், குன்றமர்ந்துறைதலு முரியன். (77), அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பு (125), ஆவினன்குடி அசைதலுமுரியன் (176), ஏரகத் துறைதலு முரியன் (189), குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பு (217), விழவு , நிலை, களன, காடு, கா, துருத்தி, யாறு, குளன் , வேறு பல்வைப்பு , சதுக்கம், சந்தி, கடம்பு , மன்றம், பொதியில், கந்துடை நிலை, வியனகர் (220 - 244 ) முதலிய இடங்களில் ஆண்டாண்டுறை தலு முரியன் ; இதை யானறிந்தவாறே கூறினேன் ; (249), முந்து நீ கண்டுழி ஏத்தி (251), பரவி வணங்கி (252), பலயானறி அளவையி னேத்தி (277), நின்னடியுள்ளி வந்தனனென (279), குறித்தது மொழியா வளவையில் (281) , கூளியர் (282), தோன்றி (283), வந் தோன் பெருமநின் வண்பகழ் நயந்தென் (28), மலைகிழவோன் (317). வந்தெய்தி (288), தழீஇ (289), இளநலங்காட்டி (290), அஞ்சல் அறி வல் நின்வாவென (291), நன்மொழி யளைஇ (292) , பரிசில் நல்கும் (295), என வீடு பெறக்கருதிய இரவலனை நோக்கி வீடுபெற்றானொரு வன் ஆற்றுப்படுத்தியதாக வினை முடிபு செய்க.
-----------
தனி வெண்பாக்கள்
குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர் தடிந்தாய்
புன் தலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏ றூர்ந்தான் ஏறே
உளையாய் என் உள்ளத் துறை. 1
குன்றம் எறிந்ததுவும் குன்றப் போர் செய்ததுவும்
அன்றங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவம்
மெய்விடா வீரன்கை வேல். 2
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை, 3
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில் வேல் ரூர் தடிந்த கொற்றவா - முன்னம்
பனி வேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். 4
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின் செல்லேன்- பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தி வாழ்வே. 5
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன். 6
முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே- ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். 7
காக்கக் கடவிய நீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா--பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. 8
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான் தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு--சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 9
நக்கீரர் தாம் உரைத்த நன்முருகாற்றுப்படையைத்
தற்கோல நாடோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளி
தான் நினைத்த எல்லாம் தரும். 10
திருச்சிற்றம்பலம்
------------------------
This file was last updated on 17 June 2020.
Feel free to send the corrections to the Webmaster.