தாயார் கொடுத்த தனம் (கட்டுரைகள்)
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை
tAyAr koTutta tanam (biographical essays)
by nAmakkal irAmalingkam piLLai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Ramalinga Raja, son of nAmakkal irAmalingkam piLLai for providing
a scanned PDF copy of this work
and for permission to publish the e-version of this work as part
of the Project Madurai collections.
The e-version has been produced using Google OCR tool line. We thank Mrs. Priya Kulandaivelu
of Florida, USA for her assistance in the proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
தாயார் கொடுத்த தனம் (கட்டுரைகள்)
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை
Source:
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
ஜயம் கம்பனியார் பிரசுரகர்த்தர்கள்
நுங்கம்பாக்கம் :: சென்னை-6
முதற் பதிப்பு : செப்டம்பர் 1953 இரண்டாம் பதிப்பு : ஜூன் 1955
மூன்றாம் பதிப்பு : செப்டம்பர் 1956
விலை ரூ. 0.14.0
அச்சிட்டோர் : எவரெடி அச்சகம், சென்னை -17.
------------
பதிப்புரை
எங்கள் பதிப்பகத்தின் வெளியீடாக நாமக்கல் கவிஞரின் கட்டுரைத் தொகுப்பை 'தாயார் கொடுத்த தனம்' என்ற தலைப்புடன் பெருமகிழ்ச்சியோடு வெளியிடுகிறோம்.
இக்கட்டுரைகள் எல்லாம் கவிஞரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. ஒவ்வொன்றும் தமிழாராய்ச்சியும், இலக்கிய ரஸனையும் உடையதாய் அமைந்துள்ளது.
வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதைகளை விட ருசிகரமாக எழுதும் திறமை கவிஞரின் தனிச் சிறப்பு.
இதனைப் படிக்கும் மக்கள் அனைவருக்கும் இலக்கிய ரஸனை மாத்திரம் அல்ல, தமிழ் ஆராய்ச்சி மாத்திரம் அல்ல, வள்ளுவன் கூறினானே,
"ஒழுக்கம் விழுப்பம் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"
என்ற அந்த ஒழுக்கத்தையும் தரும்படியாக கட் டுரைகள் அமைந்துள்ளன.
ஆதலின் செந்தமிழ் நாட்டு மக்கள் யாவரும் இந்நூலைப் படித்து, ரஸித்து பயனுற விரும்புகிறோம்.
--பதிப்பகத்தார்
-----------
உள்ளுறை
1. தாயார் கொடுத்த தனம்
2. தெருக்கூத்து தந்த தெய்வப் பிரசாதம்
3. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே!
4. கற்றது கைமண்ணளவு
5. ஊதுவத்திக் கிண்ணம் செய்த உதவி
6. கண்டேன் சீதையை!
7. நிழல் சாயாத கோபுரம்
---------
1. தாயார் கொடுத்த தனம்
வெகு அவசரமாக ராமநாதன் என் அறைக்குள் வந்தான். வேர்த்த முகமும் வெறித்த பார்வையுமாக வெகு விகாரத் தோற்றமாக இருந்தான். ஆத்திரமும் அவசரமும் குழம்ப சிறிது நேரம் பேச்சு வராதவன் போல் முறைத்து முழித்து சும்மா என்னைப் பார்த்துக்-கொண்டு நின்றான்.
இயல்பாகவே ராமநாதனுடைய கண் முழிகள் மிகவும் பெரியவை. உண்மையில் கோழி முட்டைகளைப் பொட்டிட்டுப் புதைத்து வைத்தது போல் இருக்கும் அவன் விழிகள். அவனைப் பள்ளிக்கூடத்தில் பையன்களெல்லாம் 'முட்டைக் கண்ணா' என்றுதான் கூப்பிடுவார்கள். அதற்காக அவன் வருத்தப்படுவதோ கோபித்துக்கொள்வதோ இல்லை.
ஏதோ தடுமாற்றத்தோடு திணறிக்கொண்டு என்முன் நின்ற அவன் சற்று தெளிந்து “ஏண்டா ராமலிங்கம்! போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன்?" என்றான்.
திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு, “இல்லையே! போன ஞாயிற்றுக்-கிழமை நீ இங்கு வரவே இல்லையே? நீ சனிக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ தான் வந்திருந்தாய்” என்றேன்.
“இல்லையடா. நான் சத்தியமாக ஞாயிற்றுக்கிழமைதான் இங்கே வந்து உன்னோடு எட்டு மணியிலிருந்து பனிரண்டு மணிவரை ‘சித்திரம்', கணக்கு எல்லாம் போட்டுக் கொண்டிருந்தேன்” என்றான்.
“இல்லையில்லை அது ஞாயிற்றுக்கிழமை அல்ல” என்றேன் நான். "நீ மறந்து-போயிட்டே ராமலிங்கம், நான் ஞாயிற்றுக்கிழமை தான் நிச்சயமாக வந்திருந்தேன்” என்றான். மறுபடியும் நான் மறுத்தேன். அவன் மறுபடியும் மறுபடியும் திருப்பித் திருப்பி அதையே சொல்லி என்னை ஒத்துக்கொள்ளச் சொன்னான். எனக்கு 'ஒருக்கால் நம்முடைய நினைவுதான் மறதியாக இருக்கிறதோ' என்ற சந்தேகம் வந்துவிட்டது. எண்ணியெண்ணிப் பார்த்தும் நிச்சயமாகச் சொல்லமுடியாமல், "எனக்கென்னமோ நீ ஞாயிற்றுக்கிழமை வந்ததாக..." என்று முடிக்குமுன் ராமநாதன் “இல்லை ராமலிங்கம், சந்தேகமே வேண்டாம். நான் நிச்சயமாக போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் உன்னோடுதான் இருந்தேன்" என்று அழுத்தமாகப் பரிதாபக் குரலில் சொன்னான்.
எனக்கு அலுத்துப் போய்விட்டது. மறுபடியும் மறுத்துச் சொல்லி பேச்சை வளர்க்க மனமில்லை. அத்துடன் அவன் ஞாயிற்றுக்கிழமை வரவேயில்லை என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவும் முடியாமல் எனக்குள் சந்தேகமும் வந்து விட்டது. அதனால் ஒருக்கால் அவன் சொல்வதே உண்மை யாக இருக்கலாமோ என்ற எண்ணமும் தோன்றி அந்த விவாதத்தை உடனே ஒழித்துவிட நினைத்து, “சரி நீ ஞாயிற்கிழமைதான் வந்திருந்தாய். அதற்கென்ன இப்போ?" என்றேன்.
"ஒன்றுமில்லை, யாராவது கேட்டால் நான் போன ஞாயிற்றுக்கிழமை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையிலும் இங்கே உன்னுடன்தான் இருந்தேன் என்பதை மறந்து போகாமல் சொல்லு" என்றான்.
அவன் எதற்காக அப்படிச் சொல்லச் சொல்லுகிறான் என்று சிந்திக்கச் சிறிதும் அவகாசமின்றி நான், "சரி அப்படியே சொல்கிறேன் போ, என்னைத் தொந்தரவு செய்யாதே' என்று சொன்னேன். உடனே அவன் வெறித்த முகம் சிரித்த குறி காட்ட, “ஆமாம் மறந்துவிடாதே" என்று சொல்லிக்கொண்டே மறைந்துவிட்டான்.
என்றுமில்லாத அக்கரையுடன் நான் அப்போது ஏதோ பாடத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். வெகு விரைவில் ராமநாதன் வந்துபோனதையும் மறந்துவிட்டேன்.
ராமநாதன் வந்துபோனபின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து “செட்டியார் உன்னைக் கூப்பிடுகிறார்” என்று சீதாராம செட்டியார் வீட்டு வேலைக்காரன் வந்து என்னை அழைத்தான்.
சீதாராம செட்டியார் ராமநாதனுடைய தந்தை. கோயமுத்தூரில் நாங்கள் குடியிருந்த ஆரிய வைசிய வீதியில் ஒரு பெரிய மனிதர். அவர் வீடு எங்கள் வீட்டிற்கு எதிர் வீடு. அடிக்கடி வந்து என் தந்தையுடன் அளவளாவிக் கொண்டிருப்பார். என்னிடத்தில் வெகு பிரியமாக இருப்பார். அடிக்கடி எனக்கு பரிசுகளும் தின்பண்டங்களும் தருவார். ஒவ்வொரு தீபாவளிக்கும் எனக்கு ஒரு பட்டுத் துண்டும் பட்டாசுக் கட்டுகளும் தருவார்.
என் தந்தை அப்போது 'நகர போலீஸ் இன்ஸ்பெக்டராக' வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் அவருக்கு சீதாராம செட்டியார் அனுப்புகிற வேஷ்டிகள் முதலான தீபாவளி பரிசுகள் வேறு, எனக்குத் தனியே பட்டுத் துண்டும் பட்டாசும் தன்னுடைய வீட்டுக்கே என்னைத் தருவித்துக் கொடுப்பார். ஆனால் சீதாராம செட்டியார் ரொம்ப கோபக்காரர். எதிலும் வெகு கண்டிப்பானவர். ராமநாதன் அவரிடத்தில் நடுங்குவான். ராமநாதன் தன் தகப்பனாரிடம் மிகவும் பயப்படுவதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. என்னவெனில் ராமநாதனுக்குப் பெற்ற தாயார் இல்லை. வீட்டில் இருப்பது அவனுடைய மாற்றாந்தாய். அந்த அம்மாளுடைய குழந்தைகள் வேறு. குழந்தைகளுடைய சச்சரவால் அந்த அம்மாளுக்கு ராமநாதனிடத்தில் அன்பு குறைவு. அதனால் நேர்ந்த துன்பங்களும் ராமநாதனுக்கு அநேகம். தந்தை இயல்பாகவே கோபக்காரர் ஆனதால் ஒரு குற்றம் ஏற்பட்டு அதற்காக ராமநாதனை அவர் கடிந்துகொள்ள நேரிட்டால் - அவனை வீட்டிற்குள் அணைத்து ஆறுதல் சொல்ல அவனைப் பெற்ற அன்னை இல்லை. எனவே ராமநாதனுக்கு அவனுடைய தந்தையின் கோபம் என்றால் சிம்ம சொப்பனம் தான்.
சீதாராம செட்டியார் கூப்பிடுகிறார் என்ற உடன் நான் புத்தகங்களையெல்லாம் அப்படியே போட்டுவிட்டுப் புறப்பட்டேன். ஏனெனில் ராமநாதனுக்கு அவர் எப்படியிருந்தாலும் எனக்கு அவர் வெகு நல்லவர். அடிக்கடி பரிசுகளும் தருகிறவர். இப்போதும்கூட ஏதாவது கொடுக்கத்தான் கூப்பிடுகிறாரோ என்ற ஆசையும் கொஞ்சம்.
வேலைக்காரனுடன் நான் போனேன். சீதாராம செட்டியார், நான் அவரை அடிக்கடி பார்த்திருக்கிறமாதிரி இல்லாமல் சிடுசிடுத்த முகமாக, கிராம தேவதைகளின் கோயிலுக்கு முன்னால் உயரமான உருவங்கள் உட்கார்ந்திருக்குமே அதுபோல ஒரு காலின்மேல் ஒரு காலைப் போட் டுக்கொண்டு விரைப்பாக உட்கார்ந்திருந்தார். ஒரு பக்கத்தில் சுவர் ஓரமாக ராமநாதன் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியைப்-போல் குழைந்து குறுகி நின்றான். வீட்டுக்குள் போகும் கதவின் ஓரத்தில் ஒண்டிக்-கொண்டு என்ன நடக்கிறதென்று கவனிப்பதுபோல் சீதாராம செட்டியாரின் இளைய மனைவி இருந்தார்கள்.
வழக்கம் போல் நான் சீதாராம செட்டியாருக்கு முன்னால் வெகு அருகில் சென்று நின்றேன். அவர் உடனே, "ராமலிங்கம்! நீ மிகவும் நல்ல பையன் என்று உன்னைக் கேட்கிறேன். பொய் சொல்லக்கூடாது. உண்மையைச் சொல்ல வேணும் தெரியுமா?" என்றார்.
"சரி" என்றேன்.
"ராமநாதன் போன ஞாயிற்றுக்கிழமை காலையில் எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரைக்கும் உன்னோடவே படித்துக்கொண்டிருந்ததாகவும் வீட்டிற்குள் வரவே யில்லையென்றும் சொல்லுகின்றான். உண்மைதானா? பொய் சொல்லக்கூடாது தெரியுமா?" என்றார்.
நான் திடுக்கிட்டுப்போனேன். இந்தக் கேள்வியை அவர் தான் என்னைக் கேட்பார் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. யாராவது பள்ளிக்கூடத்துப் பையன்கள் கேட்பார்களாக்கும் என்று மட்டும் எண்ணினதுண்டு. இருந்தாலும் என்ன ? யார் கேட்டாலென்ன? யாராவது கேட்டால் ஆமாம் என்று சொல்லச் சொல்லி ராமநாதன் கேட்டுக் கொண்டான். நானும் அப்படியே சொல்லுவதாக அவனுக்கு வாக்களித்து-விட்டேன். ஒப்பந்தமாக நண்பனுக்கு உறுதிகூறிப் போகச் சொல்லிவிட்டு இப்போது அவனைக் கைவிடலாமா? துளிகூடத் தயங்காமல், “ஆமாம், ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணி வரைக்கும் என்னோடுதான் கணக்கும், சித்திரமும் போட்டுக் கொண்டிருந்தான்” என்றேன். "உண்மைதானா?" என்றார் சீதாராம செட்டியார்.
"உண்மைதான்" என்றேன்.
சீதாராம செட்டியாரின் பிகுவு கொஞ்சம் தளர்ந்தது. ராமநாதன் சற்று நிமிர்ந்து நின்றான். சிறிது மறைவாக நின்று கொண்டிருந்த சீதாராம செட்டியாரின் மனைவி முற்றிலும் மறைந்து விட்டார்கள்.
சீதாராம செட்டியார் அதற்குமேல் என்னை ஒன்றும் கேட்கவில்லை. சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனை போல மௌனமாக இருந்துவிட்டு, பிறகு என்னைப் பார்த்து, "சரி நீ போ" என்றார். நான் விட்டது போதும் என்று வீட்டிற்குப் போனேன் ...... வீட்டிற்கு வந்தபிறகுதான் என் மனது குழப்பமடைந்து, 'என்ன சொன்னோம்? எதற்காகச் சொன்னோம்? ஏன் ராமநாதன் இப்படிச் சொல்லச் செய்தான்?' என்றெல்லாம் எண்ணத் தொடங்கி நிம்மதி குலைந்தது. என்னென்னவோ எனக்குள்ளேயே சமாதானங்களைச் சொல்லிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு என் அறையில் நாற்காலியில் உட்கார்ந்து மேஜையின்மேல் சாய்ந்துகொண்டிருந்தேன். சற்றே நித்திரை வந்து கண்ணயர்ந்து போனேன்.
யாரோ என் தோளின் மேல் கையை வைத்தது தெரிந்து தூக்கம் கலைந்து திரும்பிப் பார்த்தேன். "எங்க அப்பா திருப்பூர் போய்விட்டார். வர இரண்டு மூன்று நாளாகும்" என்று சொல்லிக்கொண்டு ராமநாதன் அங்கே நின்றான்.
நான் எழுந்து நின்று அவனைப் பார்த்து, “என்னடா ராமநாதா! என்ன இதெல்லாம் ? உண்மையோ பொய்யோ நீ சொன்னச் சொன்னதற்காக நானும் உண்மைதான் என்றே சொல்லிவிட்டேன். என்ன நடந்தது? எதற்காக அப்படிச் சொல்லச் சொன்னாய்?" என்று கேட்டேன், அதற்கு ராமநாதன், "ராமலிங்கம், நீ இந்த உதவி செய்யா திருந்தால் என் உயிரே போயிருக்கும். அப்பா என்னைக் கொன்றிருப்பார் " என்றான்.
“ஏன்? எதற்காக? விவரமாக நடந்ததைச் சொல்லு" என்றேன்.
“ராமலிங்கம் உன் உதவியை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். ஆனால் தயவு செய்து இப்போது அதைப்பற்றி ஒன்றும் கேட்காதே. கொஞ்ச நாள் பொறு; எல்லாம் சொல்லுகிறேன். அப்புறம் உனக்கே தெரியும் நான் ஏன் இப்படிச் சொல்லச் சொன்னேன் என்பது” என்றான், நான் வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன். அப்போது மணி மாலை 4 இருக்கும். இருவரும் கால் பந்து (Foot-ball) ஆடப் போய்விட்டோம்.
இது நிகழ்ந்தது 1905-ம் ஆண்டு கடைசியில். அப்போது நானும் ராமநாதனும் ஐந்தாவது பாரத்தில் கோயமுத்தூர் பள்ளியில் ஒரே வகுப்புத் தோழர்கள். இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் ராமநாதன் எனக்கு சாதாரண ஒரு பள்ளித் தோழன்தான். ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ராமநாதனுக்கு என்மீது அளவு கடந்த அன்பு ஏற்பட்டு விட்டது. நான் அவனிடம் காட்டும் அன்பைக் காட்டிலும் ஆயிரம் பங்கு அதிகமாக எனக்கு அன்பும் நன்றியும் செலுத்த ஆரம்பித்துவிட்டான். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் இருவரும் நகமும் சதையும் போன்ற நண்பர்களாகி இணை பிரியாமல் இருக்கலானோம்.
அடுத்த ஆண்டு (1906) நாங்கள் இருவரும் ஆறாவது பாரத்துக்குப் (மெட்ரிகுலேஷன்) போனோம். என்னுடைய படிப்பில் நான் எல்லாப் பாடங்களிலும் கெட்டிக்காரன். கணக்குப் பாடத்தில் மட்டும் வெகு மட்டம். கணக்கு என்பது அந்தக் காலத்தில் 'அல்ஜிப்ரா', 'ஜியாமெட்ரி', 'அரித்மெடிக்' என்ற மூன்றும் சேர்ந்தது. இந்த மூன்றிலும் சேர்ந்து 42 மார்க் வாங்கினால் தான் வகுப்பில் தேறலாம். எனக்கு 'அல்ஜிப்ராவில்' ஐம்பதுக்குப் பத்து அல்லது பனிரண்டு எண்ணிக்கை வரும். 'ஜியாமெட்ரியில்' ஐம்பதுக்குப் பதினைந்து, சில சமயங்களில் அதற்கு மேலும் வரும். ஏனென்றால் ’ஜியாமெட்ரி'யில் படங்கள் போடவேண்டும். நான் சித்திரத்தில் அந்தப் பள்ளியில் முதன்மையானவன். ஆனால் இந்த 'அரித்மெடிக்' என்ற எண் கணக்குப் பாடத்தில் மட்டும் முழு மோசம். ஒவ்வொரு பரீட்சையிலும் தவறாமல் 100-க்கு பூஜ்யம் அல்லது ஒன்று, ஒன்றரை எண்ணிக்கைதான் வாங்குவேன். அந்த ஒன்று, ஒன்றரையும் கூட ஆசிரியர் தர்மமாகத் தருவதுதான்.
ராமநாதனோ மற்ற எல்லா பாடங்களிலும் மட்டம். ஆனால் கணக்குப் பாடத்தில் மட்டும் புலி. 'அல்ஜிப்ரா', ‘ஜியாமெட்ரி', 'அரித்மெடிக்' என்ற மூன்றிலும் நூற்றுக்கு நூறும் கூட வாங்கிவிடுவான். எண் கணக்கில் மகா நிபுணன்.
இப்படி இருக்கையில் 'மெட்ரிகுலேஷன்' பரீட்சைக்கு அனுப்பப் பையன்களைத் தேர்ந்தெடுக்கிற பொறுக்குத்தேர்வு (Selection Examination) வந்தது. பொறுக்குத்தேர்வு என்றால் அந்தக் காலத்தில் எங்களுக்கு யமன்போல். சர்க்கார் தேர்வுக்குப் பயப்படுவதில்லை. பொறுக்குத் தேர்வுக்கு வெகு பயம். பள்ளிக்கூடப் படிப்பு இவ்வளவு விளையாட்டாகிவிட்ட இந்தக் காலத்திலே கூட பொறுக்குத்தேர்வுக்குப் பயந்து மாணவர்கள் வேலை நிறுத்தம் என்றும் சத்யாக்ரஹம் என்றும் போராடுகிறார்கள். வேலை நிறுத்தம் என்றோ சத்யாக்ரஹம் என்றோ பேர் கூட சொல்லத் தெரியாத, சொல்ல முடியாத அந்தக் காலத்தில் பொறுக்குத்தேர்வு எவ்வளவு அச்சமாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் தான் உணரலாம். இந்தக் காலத்திலாவது ஒரு மாணவன் ஒரு பாடத்தில் தேறாமற் போனால் அந்தப் பாடத்திற்கு மட்டும் அடுத்த ஆண்டு தேர்வுக்குப் போகலாம். அந்தக் காலத்தில் அப்படி முடியாது. ஒரே காலத்தில் எல்லாப் பாடங்களிலும் தேறினால் தான் தேறமுடியும். இல்லா விட்டால் எல்லாப் பாடங்களுக்கும் அடுத்த ஆண்டு தேர்வு எழுதித்தான் ஆகவேண்டும். அந்த அடுத்த ஆண்டில் இந்த ஆண்டு தேறின பாடங்களில் கூடத் தேறாமல் போய்விட நேரும்.
சரி, கதையைத் தொடர்வோம். அந்தப் பொறுக்குத் தேர்வு நடக்க இன்னும் ஒரு மாதம் இருக்கிற போது பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழா வந்தது. அதில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்திலும் மிகவும் கெட்டிக்கார மாணவர்களுக்குப் பரிசு கொடுப்பார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பரிசுகள் உண்டு. கணக்குப் பாடத்தில் தவிர மற்ற எல்லாவற்றிலும் நான் முதல் பரிசோ அல்லது இரண்டாம் பரிசோ நிச்சயமாக வாங்குவேன். ஆங்கில பாடத்தில் அநேகமாக முதல் பரிசு வாங்குவேன். தமிழ், ஓவியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை எழுதுதல் முதலான இன்னும் இரண்டொன்றில் நிச்சயமாக ஒவ்வொரு ஆண்டும் முதற் பரிசு எனக்குத் தான். படிப்புப் பாடங்களைத் தவிர ‘ஜிம்னாஸ்டிக்ஸ்' என்று சொல்லும் தேகப்பயிற்சியிலும், 'ஹை ஜம்ப்' (உயரமாகத் தாண்டுதல்), 'லாங் ஜம்ப்' (நீளமாகத் தாண்டுதல்), பந்தய ஓட்டங்கள் முதலான வேறு பல வற்றிலும் தனித் தனி பரிசுகள் வழங்கப்படும். இவைகளிலும் நான் பல முதற் பரிசுகளும் சில இரண்டாம் பரிசுகளும் பெறுவேன்.
அந்தப்பரிசு விழா அந்த ஆண்டு நடந்தது. அதில் சுமார் இருபது புத்தகங்கள் (சில பரிசுகள் இரண்டு மூன்று புத்தகங்கள் சேர்ந்தவை) எனக்குப் பரிசாகக் கிடைத்தன. பரிசு வழங்கினவர் ’பிரின்சிபால்' எலியட் துரை. விழாவின் காரியஸ்தர் ஸ்ரீ C. N. கிருஷ்ணசாமி ஐயர் (துணை பிரின்சிபால்).
விழா முடிந்து கூட்டம் கலைந்தது. எனக்குக் கிடைத்த அத்தனை புத்தகங்களையும் நானே தூக்க முடியாமல் எனக்குத் துணையாக என் நண்பர் இருவரும் என் புத்தகங்களை எனக்காக எடுத்து வந்தார்கள். அன்றைக்கு ராமநாதன் ஊரில் இல்லை. அதனால் அவனுக்குக் கணக்குப் பாடத்தில் முதல் பரிசாகக் கொடுக்கப்பட்ட இரண்டு புத்தகங்களையும் கூட அவனிடம் கொடுத்துவிட நானே வாங்கிக்கொண் டேன். எல்லாப் புத்தகங்களையும் நாங்கள் மூவரும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போக வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தோம். எனக்கு வந்த பரிசுகளில் மிகவும் அழகான கட்டுடன் தங்க எழுத்துக்களால் பூ வேலை களோடு அச்சடிக்கப்பட்ட ஷேக்ஸ்பியரின் பூரண காவியத் தொகுப்பு, "Complete Works of SHAKESPEARE", என்ற நூலையும் இன்னும் இரண்டு நூல்களையும் மட்டும் நான் எடுத்துக்கொண்டு அவ்வளவு பரிசுகள் பெற்றுவிட்ட இளமையின் இறுமாப்புடன் மற்றவர்களுக்கு முன்னால் நடந்தேன்.
அந்தச் சமயத்தில் எதிரில் விஞ்ஞான ஆசிரியர் ஸ்ரீ T. S. வெங்கட்ரமண ஐயருடன் பேசிக்கொண்டே வந்த ஸ்ரீசுப்பையர் என்னைப் பார்த்தார். அவரைக் கண்டதும் மரியாதையாக நான் சற்று நின்றேன். சுப்பையர் எங்களுக்குக் கணக்கு ஆசிரியர். வெகு கெட்டிக்காரர். இரண்டு கைகளாலும் வெகு அழகாகவும் வேகமாகவும் எழுதுவார். இரண்டு கைகளிலும் இரண்டு சாக்கட்டித் துண்டுகளை எடுத்துக்கொண்டு வகுப்பிலுள்ள கரும் பலகையில் ஏக காலத்தில் இரண்டு வட்டங்கள் போடுவார். இரண்டும் ஒரே அளவான வடிவத்தில் குறையில்லாமல் இருக்கும். என் தந்தைக்குப் பழக்க மானவர். எல்லாப் பாடங்களிலும் கெட்டிக்காரனான நான் கணக்கில் மட்டும் பூஜ்யமாகவே இருக்கிறதில் அவருக்கு வெகு வருத்தம். நயப்படுத்தியும் பயப்படுத்தியும் எனக்குத் தனிப்பட்ட முறையில் எவ் வளவோ சொல்லித் தந்து பார்த்தவர். எண் கணக்கு மட்டும் என்னவோ என் மண்டையில் ஏறவே இல்லை. அதனால் அவருக்கு என்னிடத்தில் அதிக கோபம். அதனால் அவரைக் கண்டால் கூசுவேன். ஆகையினால் அவரைக் கண்டதும் நான் சற்று வெட்கத்தோடும் அச்சத்தோடும் விலகி நின்றேன்.
நான் நின்றதும் அவரும் நின்றார். என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "இதெல்லாம் நீ வாங்கின புத்தகங்களா? எல்லாப் பாடத்திலும் பரிசு. கணக்கில் மட்டும் எப்பவும் 'ஸைபர் '! உனக்குப் பரிசு வாங்குகிற திமிர் ரொம்ப இருக்கு. அந்த அகங்காரத்தில் கணக்கை மட்டும் கவனிக்கிறதே இல்லை. இதோ பார்! இந்தத் தடவை 'செலக்ஷன்' பரீட்சையில் நீ கணக்கில் நல்ல மார்க் வாங்கா விட்டால் உன்னை எங்கப்பராணை பரீட்சைக்கு அனுப்பப் போவதில்லை," என்று சொல்லிவிட்டு அதன் பின் நிமிஷங்கூட அங்கு நிற்காமல் போய் விட்டார்.
அவர் சொன்னவற்றுள் மற்றதெல்லாம் வழக்கமாக ஒரு ஆசிரியர் மாணாக்கனுக்கு எச்சரிக்கை செய்யும் இனத்தைச் சேர்ந்தது. ஆனால் “எங்கப்பராணை உன்னை பரீட்சைக்கு அனுப்பப் போவதில்லை" என்று அவர் சொன்னதை நான் அப்படி நினைக்க முடியவில்லை. 'எங்கப்பராணை' என்பது ஒரு சபதம். அதைக் கேட்டவுடன் என் இறு மாப்பு இடிந்துவிட்டது. குதூகலம் குலைந்தது. பரிசுகளெல்லாம் தரிசுகளாகத் தோன்றின. வெகு கவலையோடு வீட்டிற்குப் போனேன்.
அன்று இரவு முழுவதும் தூக்கம் வாவில்லை. தேர்வுக்குப் போகவேணுமென்றுதானே அவ்வளவு பாடும். ‘செலக்ஷனே' கிடைக்காது என்றால் எத்தனை பரிசு வாங்கித்தான் என்ன பலன்? மறுநாள் பள்ளிக்கூடம் போகக் கூட மனம் வரவில்லை. 'லீவ்' எழுதிக் கொடுத்தனுப்பி விட்டு உணவுகூடச் சரியாக உண்ண முடியாமல் பகல் முழுதும் படுத்துப் புரண்டுகொண்டிருந்தேன். மாலை ஐந்து மணிக்குப் பந்தாடப் போகிற நினைப்பெடுத்தது. கொஞ்சம் காற்றாடப் போய்வந்தால் கவலை குறையுமென்று வழக்க மாகப் பந்தாடுகிற வாலாங்குளத்திற்குப் போனேன்.
கோயமுத்தூர் ரயில்வே நிலையத்துக்கு அடுத்தாற்போல் இருக்கிற ஏரிக்கு வாலாங்குளம் என்று பெயர். அப்போது நாங்கள் அங்கேதான் பந்தாடுவது வழக்கம். பந்தாட்டம் நடந்து கொண்டிருந்தது. மனதிலிருந்த கவலையினால் நான் அதில் கலந்து கொள்ளவில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வெளியில் உட்கார்ந்தேன். சுமார் ஆறு மணிக்கு வெளியூருக்குப் போயிருந்த ராமநாதன் அப்போதுதான் திரும்பிவந்து என்னை வீட்டில் தேடிவிட்டு அங்கே வந்தான். நான் பந்தாடாமல் கீழே உட்கார்ந்திருப்பதைக் கண்டு, "ஏண்டா ராமலிங்கம்! பந்தாடாமல் உட்கார்ந்து-கொண்டிருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?" என்றான். "உடம்புக்கு ஒன்றுமில்லை. நீயும் இங்கே உட்கார், சொல்கிறேன்" என்றேன்.
அவனும் உட்கார்ந்தான். நான் பரிசுகள் வாங்கினதை யெல்லாம் சொல்லி சுப்பையர் சொன்னதையும் சொல்லி, சுப்பையரோ சபதம் சொல்லிவிட்டார். நானோ என்ன செய்தாலும் கணக்கில் நல்ல எண்ணிக்கை வாங்கமுடியாது. கண்டிப்பாக எனக்கு 'செலக்ஷன்' ஆகப்போவதில்லை. – ’செலக்ஷன்' இல்லாமல் மற்ற எது இருந்து என்ன?' என்று துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னேன்.
வெகு அனுதாபத்தோடு கேட்டுக்கொண்டிருந்த ராமநாதன் உடனே பதில் ஒன்றும் சொல்லாமல் யோசனை செய்துகொண்டு சும்மா இருந்தான். - இதற்குள் இருட்டி விட்டது. பந்தாடிக் கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக வீடு திரும்பிப் போய் விட்டார்கள். நாங்கள் இருவரும் இருந்த இடத்திலேயே இருந்தோம். எல்லாப் பையன்களும் போய்விட்டார்கள், தனிமையானபின் ராமநாதனுடைய மௌனம் கலைந்தது. மெதுவான குரலில் சொல்லத் தொடங்கினான். "ராமலிங்கம், நான் சொல்லுகிறபடி நீ செய்வதாகச் சொன்னால் உனக்கு நிச்சயமாக ’செலக்ஷன்' கிடைக்கும்படி நான் செய்கிறேன் " என்றான்.
எனக்குக் கொஞ்சம் உற்சாகம் உண்டாகி, “எப்படி?" என்றேன். உடனே ராமநாதன், “எனக்கு, இந்த செலக்ஷனைப் பற்றிய கவலையே இல்லை. நான் கணக்கில் தவிர மற்றதெல்லாம் நிச்சயமாகப் 'பெயில்'தான் ஆவேன். நான் என்ன செய்தாலும் 'செலக்ஷன்' கிடைக்காது. 'ஆனால் உன் விஷயம் அப்படியல்ல, நீ எல்லாப் பாடத்திலும் கெட்டிக்காரன். கணக்கு ஒன்றுதான் 'பெயிலா'கும். அதற்காக உனக்கு ’செலக்ஷன்' இல்லையென்பது அநியாயம். நீ சொல்லுவதைப் பார்த்தால் சுப்பையர் அப்படிச் செய்தாலும் செய்துவிடுவார். அதற்காஎ நான் சொல்லு கிறபடி நீ செய்யவேணும்” என்றான்.
" என்ன செய்யவேணும்?" என்றேன்.
“நீ என்ன செய்யவேணும் என்பதைச் சொல்கிறேன். ஆனால் நீ 'அப்படி', 'இப்படி' என்று ஒன்றும் நியாயம் சொல்லவராமல் தைரியமாக நான் சொல்கிறபடி செய்ய வேணும். அப்படியானால் தான் உனக்கு ' செலக்ஷன்' கிடைக்கும்” என்றான் ராமநாதன். எனக்கு வேண்டியது செலக்ஷன் 'தானே. அதனால் அவன் என்ன சொன்னாலும் செய்துவிடுவது என்ற துணிச்சல் உதித்து, “சரி, நீ எதைச் சொன்னாலும் நீ சொல்லுகிறபடியே செய்கிறேன்” என்றேன்.
"அப்படியானால் சத்தியம் செய்து கொடு" என்றான்.
சிறுவர்கள் வழக்கமாக சத்தியம் செய்துகொடுக்கிற விதமாக நான் ராமநாதனுடைய உள்ளங்கையைப் பிடித்து அதில் அடித்துக் கிள்ளி “சத்தியமாக நீ சொல்லுகிறபடி செய்கிறேன்" என்றேன். அதன்மேல் ராமநாதன் சொன்னான் :-
“'அரித்மெடிக்' (எண் கணக்கு) பரீட்சையில் மட்டும் நான் சொல்லுகிறபடி நீ செய்யவேணும். மற்றப் பரீட்சைகளில் வழக்கம்போல் நீ எழுதிக் கொடு. 'அரித் மெடிக்' பரீட்சையில் மட்டும் நீ செய்ய வேண்டியது என்ன வென்றால் உன்னால் முடிந்த வரையில் கணக்குகளைப் போட்டு சில பக்கங்களை நிரப்பிவிட்டு மடித்துப் பெயர் எழுதும்போது மறந்துபோகாமல் ‘S. ராமநாதன்' என்று பேர் எழுதி வைத்துவிடு. நான் உனக்கு வேண்டிய அளவு சில கணக்குகளை மட்டும் சரியாகப் போட்டு 'V. ராமலிங்கம்' என்று பேர் எழுதி வைத்துவிடுகிறேன். உனக்கு ”செலக்ஷன்' நிச்சயம்."
அடடா! என்ன அற்புதமான யோசனை! நான் உடனே மெய்மறந்துபோய் ராமநாதனுடைய கையைக் குலுக்கி, அவனைக் கட்டித்தழுவிக் கொஞ்சி, மகிழ்ந்து,
கூத்தாடினேன். சரி அப்படியே செய்வது என்று தீர்மானித்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டோம். அடுத்த ஐந்தாறு நாட்களும் அதேதான் பேச்சும் மூச்சும். கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு முன்னிருந்த கவலை முற்றிலும் மறைந்துவிட்டது. வழக்கம்போல் பள்ளிக்கூடத்திற்குப் போவதும், படிப்பதும், பந்தாடுவதுமாக இருந்தேன். கணித ஆசிரியர் சுப்பையர் 15 நாள் விடுமுறையில் எங்கோ ஊருக்குப் போய்விட்டார். வேறு ஒரு ஆசிரியர் கணக்குப் பாடத்திற்கு வந்து கொண்டிருந்தார். அதனால் சுப்பையரைக் கண்டவுடன் வரக்கூடிய அச்சமும் அகன்றுவிட்டது.
அதே சமயத்தில் ராமநாதனுடைய பாட்டன் வீட்டில் ஏதோ விசேஷம் என்று ராமநாதனும் அடிக்கடி வெளியூருக்குப் போவதும் வருவதுமாக இருந்தான். அதனால் அவனை அடிக்கடி சந்திப்பதும் முடியாமற் போய்விட்டது. பொறுக்குத் தேர்வும் வந்தது. அந்த ஆண்டு கணக்குத் தேர்வு கடைசியில் வந்தது. ஏன் என்றால் சுப்பையர் ஊரிலில்லாததால் அவர் வந்தபின்தான் கேள்வித்தாள் அச்சாக வேண்டி யிருந்தது.
கணக்குத் தேர்வுக்குப் போனேன். கேள்வித்தாளை வாங்கினேன். அநேக கேள்விகள் புரியக்கூட இல்லை. கேள்வி புரிந்த இரண்டொரு கணக்குகளுக்கும் வாய்ப்பாடு மறந்துபோய், கூட்டல் தவறி, கழித்தல் பிசகி, மேலும் கீழுமாக விழித்து, அந்தக் குழப்பத்தில் ராம நாதனுடன் ஒப்பந்தம் செய்ததை முற்றிலும் மறந்து போய்க் காகிதத்தை வழக்கம் போல மடித்து, வழக்கம் போலவே 'V. ராமலிங்கம்' என்று பேர் எழுதி வைத்து விட்டு வந்துவிட்டேன்.
ஊரில் இல்லாததால் என் கண்ணிற்படாமலும் மற்ற தேர்வுகளுக்கு வராமலும் இருந்துவிட்ட ராமநாதன், அவன் எனக்குத் தந்த ஒப்பந்தத்தை மறந்து போகாமல் அந்த கணக்குப் பரீட்சைக்கு மட்டும் தவறாமல் வந்து என்னிடம் சொல்லி யிருந்தபடி வேண்டிய அளவுக்குச் சில கணக்குகளை மட்டும் போட்டு காகிதத்தின்மேல் 'V. ராமலிங்கம்' என்று பேர் எழுதி வைத்துவிட்டு என்னைக்கூட பார்க்காமல் உடனே ஊருக்குப் போய்விட்டான். இப்படியாக நான் வாலாங்குளத்தில் ராமநாதனுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை முற்றிலும் மறந்தே போனேன்.
இந்த இடத்தில் என் தாயாரைப்பற்றி கொஞ்சம் சொல்லவேண்டி யிருக்கிறது. என்னுடைய தாயார் எனக் கிட்ட பெயர் 'கருப்பண்ணசாமி' என்பது. என் தந்தை இட்ட பெயர்தான் 'ராமலிங்கம்'. இந்த கருப்பண்ணசாமி என்ற பெயரைக் குறுக்கி செல்லப் பெயராக என் தாயார் என்னை 'சாமி' என்றுதான் அழைப்பார்கள். எனக்கு வினாத் தெரிந்தபின் அவர் எனக்கு அடிக்கடி சொல்லி வந்த உபதேசம் ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால், "சாமி! நீ என்ன வேணுமானாலும் செய். ஆனால் பொய் மட்டும் சொல்லாதே! ' போக்கிரி' என்று பேர் எடுக்காதே. இந்த இரண்டைத் தவிர நீ எது செய்தாலும் பரவாயில்லை" என்பார்கள். இந்த உபதேசம் இன்றைக்கும் என் காதில் அவர் சொன்னதுபோல் ஒலிக்கின்றது. என் வாழ்க்கையில் நான் அதிக தவறுகளைச் செய்துவிடாமல் அடிக்கடி தடுத்து என்னை ஆட்கொண்டது இந்த ஒரே உபதேசம் தான். என் சிறுபிராயத்தில் என் தாயார் 'தினம் தினம்' குறைந்த பட்சம் மூன்று தடவையாவது இதைச் சொல்லித் தந்து, என்னையும் சொல்லச் சொல்வார்கள். நான், "பொய் சொல்ல மாட்டேன். போக்கிரி என்று பேர் எடுக்க மாட்டேன்” என்று திருப்பித் திருப்பிச் சொல்லும்படி செய்வார்கள்.
நான் எத்தனையோ பொய்களைச் சொல்லியிருக்கிறேன். நான் செய்த பல குற்றங்களைப் பிறர் அறியாவிட்டாலும் என் நெஞ்சம் அறியும். இருந்தாலும் என் அன்னையின் இந்த உபதேசம் அடிக்கடி என் நினைவுக்கு வந்து, பொய் சொல் லக் கூடாதென்று மனப்பூர்வமாக முயன்றிருக்கிறேன். எனக்குள்ள எள்ளளவு நற்குணமும் நிலைபெற்றது, இந்த உபதேசத்தின் நினைவினால் தான். மகாத்மா காந்தியவர்க ளிடத்தில் எனக்கு மட்டற்ற பிரேமை பிறந்ததும் இந்த உபதேசத்தின் உண்மை-யினால்தான். இந்த 'பொய் பேசாதே', * போக்கிரி என்று பேர் எடுக்காதே' என்ற இரண்டும்தான் மகாத்மாவின் 'சத்தியம்', 'அஹிம்சை' என்ற இரண்டு மந்திரங்களும் என்பது பின்னால் எனக்கு விளங்கிற்று.
இனி கதையைத் தொடர்வோம்.
நான் ராமநாதனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முற்றிலும் மறந்துவிட்டு தேர்வு விடைத்தாளின் மேல் என் பெயரையே எழுதிவைத்துவிட்டு வந்துவிட்டேன். எனக்கு இந்தத் தந்திரத்தைச் சொல்லிக்கொடுத்த ராமநாதன் அதை நினைப்பூட்ட ஊரிலில்லாமற் போனதும், பள்ளிக்கூடத்தில் இதை நினைப்பூட்ட கணக்கு வாத்தியார் சுப்பையர் இல்லாமல் அவர் ' லீவில்' போய்விட்டதும் என் மறதிக்கு அனுகூல சந்தர்ப்பங்களாக அமைந்துவிட்டன. நான் மறந்து விட்டேன் என்றாலும் ராமநாதன் மறக்காமல், அந்த கணக்குத் தேர்வுக்கு மட்டும் எனக்காக வந்து, சொல்லியிருந்தபடி விடைத்தாளின் மேல் என் பெயரை எழுதிவைத்து விட்டு உடனே என்னைக்கூட சந்திக்காமல் ஊருக்குப் போய் விட்டான்.
அதனால் பரீட்சைக்குப் பிறகாவது நான் செய்துவிட்ட தவறை அறிந்துகொள்ள முடியாமற் போய்விட்டது. பொறுக்குத் தேர்வு நடந்து நான்கு நாட்களுக்குப்பின் ஒரு நாள் சுப்பையர் வேகமாக எங்கள் வகுப்புக்குள் வந்தார். அவர் கையில் கொண்டுவந்த கணக்குத் தேர்வு விடைகளின் கத்தையை மேஜையின்மேல் வைத்துவிட்டு, "டேய்! V. ராமலிங்கம்! இங்கே வா” என்றார். நான் எழுந்து நின்றேன். உடனே அவரிடம் போகாமல் நான் நின்று கொண்டிருந்ததில் அவருக்குக் கோபம் வந்து, "ஏண்டா நிற்கிறாய்? இங்கே வாடா வா. அ......யோ ......க்....... .........................லே" என்றார். எனக்குத் தேள் கொட்டிவிட்டமாதிரி யிருந்தது, மிக்க பயத்துடன் அவர் அருகிற் சென்றேன்.
“ 'செலக்ஷன்' பரீட்சையில் என்ன பித்தலாட்டம் - செய்தாய்? உள்ளதைச் சொல்லு" என்றார்.
“ஐயோ! நான் பரீட்சையில் ஒரு பித்தலாட்டமும் பண்ணவில்லை ஸார் " என்றேன்.
“ஒரு பித்தலாட்டமும் செய்யவில்லையா? உன்னை என்னமோ என்றிருந்தேன், பலே திருட்டுப் பயல் நீ, பசு மாட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டிருக்கிற புலிடா நீ,
பரீட்சையில் ஒரு பித்தலாட்டமும் செய்யவில்லையா? நன்றாக நினைத்துப் பார் " என்றார்.
"இல்லவே இல்லை ஸார். நான் ஒரு பித்தலாட்டமும் செய்யவில்லை" என்று மிகவும் குழைந்து கண் கலங்கிக் கூறினேன். “டேய் உண்மையைச் சொல்லிவிட்டால் சரி, இல்லையானால் உனக்குக் கசையடி தண்டனை கொடுத்து இனிமேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் சேரமுடியாதபடி செய்துவிடுவேன்" என்று உரக்கக் கத்தினார். நான் நடுங்கி விட்டேன். “நான் ஒரு தப்பும் செய்யவில்லையே ஸார் ” என்று தொடங்கினேன். அவர் உடனே மேஜையின் மீதிருந்த கணக்கு தேர்வு விடைத்தாள்களின் கட்டை அவசரமாக அவிழ்த்து அதன் மேலாக இருந்த இரண்டு விடைக் காகிதங்களைத் தம் வலது கையில் வைத்துக்கொண்டு, - இடது கையை என்பக்கம் நீட்டி, ஆள்காட்டி விரலை ஆட்டிக்கொண்டு, "ஐயோ! அடடா! ஒரு பாபமும் அறியாத யோக்கியன் நீ. அழாமல் என்ன செய்வாய்! போக்கிரிப் பயலே! இந்தா, இந்தக் கணக்குப் பரீட்சை விடைத்தாள்கள் கட்டில் ' V. ராமலிங்கம்' என்று இரண்டு விடைத் தாள்கள் இருக்கின்றனவே. அவை எப்படி வந்தன?" என்று கேட்டுக்-கொண்டே அந்த இரண்டு விடைத்தாள்களையும் என்மேல் வீசினார்.
ஆம்! அப்போதுதான் எனக்கு நான் ராமநாதனோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் நினைவு வந்தது. என் தலை சுழலத் தொடங்கிற்று, கண்கள் இருண்டன. உடல் நடுக்கமெடுத்தது. உள்ளம் துடித்தது. அவர் ”போக்கிரிப் பயலே" என்று சொன்னவுடன் என் தாயாரின் நினைவு வந்து அவர் உருவமும் முன்னால் தோன்றி, "சாமி,
நீ என்ன வேணுமானாலும் செய். ஆனால் பொய் மட்டும் பேசாதே ! போக்கிரி என்று பேர் எடுக்காதே!" என்று சொல்லுவது போல் என் காதுக்குள் ஒலித்தது. உடனே நான் ஒரு வினாடிகூடத் தாமதிக்காமல், "ஆமாம் ஸார், நான் மறந்தே போய்விட்டேன். நீங்கள் அன்றைக்கு, நீ செலக்ஷன் பரீட்சையில் கணக்கில் நல்ல மார்க் வாங்காவிட்டால் 'எங்கப்பராணை உன்னை பரீட்சைக்கு அனுப்பப்போவதில்லை' என்று சொன்னதில் நான் மிகவும் பயந்துபோய் மிகவும் வருத்தமாய் இருந்தேன். அதை ராமநாதனிடம் சொன்னேன். அவன் எனக்கு ஒரு யோசனை சொல்லித் தந்தான். கணக்கு பரீட்சை விடைத் தாளின் மேல் அவனுடைய பெயரை நானும், என்னுடைய பெயரை அவனும் எழுதி வைத்து விடுவதென்பது அந்த யோசனை. அதை நான் ஒப்புக்கொண்டு சத்தியமும் செய்து கொடுத்திருந்தேன். அதை நான் எப்படியோ முழுக்க மறந்துவிட்டு வழக்கம்போல் என் பெயரையே எழுதி வைத்துவிட்டேன். ஆனால் ராமநாதன் அந்த ஒப்பந்தத்தை மறக்காமல் என் பெயரை அவனுடைய விடைத்தாளின் மேல் எழுதி வைத்திருக்கிறான் ஸார். நான் மறந்தே போனேன். நீங்கள் என்னையும் மன்னித்து ராமநாதனையும் மன்னிக்க வேணும் ஸார் ” என்று கண்ணீர் சொட்டக் கரங்களைக் கூப்பிச் சொல்லிக்கொண்டே அவருடைய காலில் விழுந்துவிட்டேன்.
எதிர்பாராதபடி காலில் விழுந்துவிட்ட என்னை சுப்பையர் ஒரு குழந்தையைத் தந்தை தூக்குவதுபோல் வாரி யெடுத்து, தட்டிக்கொடுத்து, தைரியப்படுத்தி, "ராமலிங்கம்! நீ வெகு நல்ல பிள்ளை. ரொம்ப யோக்யன் என்பதை இப்போது கண்டுகொண்டேன். நீ சொன்ன உண்மை எனக்கு ரொம்பத் திருப்தியாக இருக்கிறது. நான் உன்னையும் மன்னிக்கிறேன். ராமநாதனையும் மன்னிக்கிறேன், உனக்கு 'செலக்ஷனும்' தருகிறேன். பயப் படாதே" என்றார். என் மனம் குளிர்ந்தது. கவலை மறைந்தது.
அதுமுதல் சுப்பையர் என்னை மிகவும் தனிப்பட்ட பிரியத்தோடு நடத்தலானார். அந்தக் காலத்தில் அப்படி நான் ஒரு ஆசிரியர் காலில் விழுந்ததை இந்தக் காலத்தில் எண்ணிப் பார்த்தால் மிகவும் கூச்சமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் என்னுடைய வாழ்நாளில் நான் அதைப்போல ஒரு நல்ல காரியத்தைச் செய்ததே இல்லை என்று என் மனம் மகிழ்கின்றது.
அதை நினைக்கும்தோறும் என் நெஞ்சம் பெருமை கொள்ளுகிறது. அந்தப் பெருமைதான் எனக்கு என் தாயார் கொடுத்த தனம்.
கடைசியாக, இதன் வாசகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிற அதையும் சொல்லிவிடவேண்டும்.
அது என்னவென்றால் : ஏன் ராமநாதன் குறிப்பிட்ட அந்த ஞாயிற்றுக்கிழமையில் காலை 8 மணிமுதல் 12 மணி வரையில் என்னுடன் இருந்ததாக என்னைச் சொல்லச் செய்தான் என்பது. அது என்ன என்பதை எனக்கே ராமநாதன் நெடுநாள் வரைக்கும் சொல்லவில்லை. பிறகு ஒரு நாள் அவனாகவே அதைச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக ஏற்பட்டது. ஒரு நாள் ராமநாதன் மிகவும் வாடின முகத்தோடு என்னிடம் வந்தான். வந்தவன் என்னோடு ஒன்றும் சொல்லாமல் தலையைத் தொங்க விட்டுக்கொண்டு உட்கார்ந்தான். குறிப்பறிந்து அவனுடைய கவலைக்குக் காரணம் என்னவென்று நான் கேட்டேன். அவன், “என்ன ராமலிங்கம், தினம் தினம் இதே தொல்லையாக இருக்கிறது" என்று ஆரம்பித்து தன்னுடைய மாற்றாந்தாயின் அன்பின்மையால் நேர்ந்த சில நிகழ்ச்சிகளையும் அன்றைக்கு அப்போது நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியையும் சொல்லிவிட்டு அந்தத் தொடர்ச்சியில் முன் நிகழ்ந்த 'ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணியிலிருந்து பனிரண்டு மணிவரை அவன் என்னோடுதான் இருந்தான்' என்று சொல்லச் சொன்ன காரணத்தையும் சொல்லிவிட்டான். அது என்னவெனில் :-
ராமநாதனுடைய சொந்தத் தாயார் வயிற்றில் அவனுடன் பிறந்த இரண்டு சகோதரிகள் உண்டு. அவர்கள் இருவரும் தாயார் இருக்கும் போதே சீரும் சிறப்புமாகக் கலியாணம் செய்து கொடுக்கப்பட்டு அவர்களுடைய கணவன்மார் வீட்டில் வாழ்ந்துவந்தார்கள். அவர்களிரு வருக்கும் தாயார் இறந்தபின் முன்போல பிறந்த வீட்டுக்கு அடிக்கடி வர ஆசையில்லாது போய்விட்டது. தகப்பனாருடைய அன்பு முற்றிலும் போய்விடவில்லை என்றாலும் மாற்றாந்தாயின் வரவேற்பு விரும்பத்தக்கதாக அமைய வில்லை. அந்த இரண்டு சகோதரிகளில் ஒருத்தி மிக்க பணக்காரி. தந்தையிடம் எந்தவித உதவியும் நாட வேண்டிய அவசியம் இல்லாதவள். இன்னொரு சகோதரியின் புகுந்த வீடு சில கஷ்ட நஷ்டங்களால் ஏழ்மை யடைந்துவிட்டது. அந்தச் சகோதரி. மாற்றாந்தாய்க்கும் மரியாதை காட்டி சிற்சில சமயங்களில் வந்து சிற்றன்னைக்குத் தெரியாமல் தந்தையிடம் உதவிகள் பெற்றுப்போவது உண்டு.
அந்த சகோதரி கடைசியாக வந்திருந்தபோது தகப்பனாரிடம் சில உதவிகளும் பெற்றுக்கொண்டு, தன்னுடைய குழந்தைகளுடைய நகைகளை யெல்லாம் கூட விற்றுத் தன் கணவனுடைய கடன் கஷ்டங்களைத் தீர்க்க வேண்டி நேர்ந்துவிட்டதால், தன் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் ஏதாவது, கழுத்திலும் காதிலும் போட (இறந்துபோன) தன் தாயாருடைய நகைகளிற் சிலவற்றைக் கேட்டாள். அதை எப்படியோ அறிந்த மாற்றாந்தாய் அவளை மிகவும் கடிந்து அவள் அழுதுகொண்டு போய்விடும்படிச் செய்துவிட்டாள். ராமநாதனுடைய சொந்தத் தாயாருடைய நகைகள் அனேகம். அந்த அம்மாள் இறந்தபின் அந்த நகைகளெல்லாம் ராமநாதனுடைய தந்தையிடமே இருந்தன. அவைகள் பழைய மாதிரி நகைகள் என்று, இளைய மனைவிக்கு எல்லாம் புது நகைகளே போடப் பட்டன.
மேற்சொன்னபடி அந்த ஏழைச் சகோதரி வந்து போனபின் ராமநாதனுடைய தந்தையிடம் இருந்த அந்த நகைகளைத் தன்னுடைய குழந்தைகளுக்குப் புது விதமாக நகைகள் செய்ய தங்கம் வேணும் என்று மாற்றாந்தாய் தான் வாங்கி வைத்துக் கொண்டாள்.
குறித்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை எட்டுமணி சுமாருக்கு அந்த நகைகளில் சிலவற்றை எடுத்து அவற்றை அழித்துத் தன் குழந்தைகளுக்கு நகை செய்ய மாற்றாந் தாயார் ஆசாரியிடம் காட்டிக்கொண்டிருந்தாள். ஆசாரி அவற்றை நிறுக்கத் தராசுடன் பிறகு வருவதாகப் போய்விட்டார். அந்த நகைகளை ஆசாரி சிறிது நேரத்தில் வருவாரே என்று அந்த அம்மாள் மீண்டும் பெட்டியில் வைக்காமல் அறையிலுள்ள ஒரு மாடத்தில் வைத்து விட்டுக் குளிக்கப் போய்விட்டாள்.
எதற்காகவோ அந்த அறைக்குள் போக நேர்ந்த ராமநாதனுடைய கண்ணில் அந்த நகைகள் பட்டன. அந்த நகைகளின் வரலாற்றை அறிந்த அவனுடைய இளம் உள்ளத்தில் உடனே தன் தாயாருடைய நினைவும், வீட்டுக்கு வந்து மாற்றாந்தாயால் அவமதிக்கப்பட்டு அழுதுகொண்டு போய்விட்ட சகோதரியின் நினைவும் வந்தன. உடனே அந்த நகைகளை எடுத்துக் கொண்டு ராமநாதன் மறைந்துவிட்டான். சீக்கிரம் தராசுடன் வருவதாகப் போன ஆசாரி பதினோரு மணிக்குத்தான் வந்தார். அம்மாள் அறைக்குள் சென்று பார்த்தாள். மாடத்தில் நகைகள் இல்லை. வைத்த இடம் மறந்துபோச்சோ என்று வீடெல்லாம் தேடியும் வீணாயிற்று. வீட்டில் தன் குழந்தைகளைத் தவிர ராமநாதனும், ஒரு வேலைக்காரனும், ஒரு சமையற்காரியும் உண்டு. வேலைக்காரனையும் சமையற் காரியையும் விசாரித்ததில் அவர்கள் அந்த அறைக்குப் பக்கமாகக் கூடப் போகவில்லை என்று சத்தியம் செய்தார்கள்.
ராமநாதன்தான் எடுத்திருக்கவேணும் என்பது அந்த அம்மாளுடைய தீர்மானம். சீதாராம செட்டியார் ஊரில் இல்லை. ராமநாதன் சுமார் பனிரண்டு மணிக்கு வீட்டிற்குச் சாப்பிட வந்தான். அவனைக் கேட்டதற்கு அவன் காலை 8 மணிக்கு வீட்டைவிட்டுப் போனபின் 12 மணிவரையிலும் வீட்டிற்கு வரவேயில்லை என்றும் அந்த நேரத்தில் என்னுடன் கணக்கும் ஓவியமும் போட்டுக்கொண்டிருந்த தாகவும் சாதித்துவிட்டான். மூன்று நாள் கழித்து சீதாராம செட்டியார் வந்தார். அவர் அன்றைக்கு வரப்போகிறார் என்பதை அறிந்ததும் ராமநாதன் என்னிடம் வந்து அப்படிப் பேசி என்னைத் தயார் செய்துவிட்டான். ராமநாதன் காலை 8 மணியிலிருந்து 12 மணி வரையிலும் என்னோடுதான் இருந்தான் என்பதற்கு நான் சாட்சியம் தந்துவிட்டேன். அதனால் சீதாராம செட்டியார் ராமநாதனைச் சந்தேகிக்கவில்லை. அவன் தப்பினான்.
இந்தக் கதையை அவன் சொல்லி முடித்ததும், நான் “அந்த நகைகளை என்ன செய்தாய்?" என்றேன். “அந்த நகைகளையா?" அவைகள் யாருக்குச் சேரவேணுமோ அவர்களுக்குத் தந்தேன்" என்றான்.
"அது யார்?" என்றேன்.
"அழுதுகொண்டு போன என் அக்காள்” என்றான்.
"எப்போது கொடுத்தாய்?” என்றேன்.
“அவற்றைக் கொஞ்ச காலம் நண்பன் வேணுவிடம் கொடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். பிறகு எங்கள் தாத்தா வீட்டில் செலக்ஷன் பரீட்சைக்கு முன்னால் நடந்த ஒரு விசேஷத்திற்கு அப்பா என்னை மட்டும் போய்வரச் சொன்னார். வேணுவும் என்னுடன் வந்தான். அங்கே அக்காளும் வந்திருந்தாள். அந்த நகைகளை அழித்து அக்காள் குழந்தைகளுக்கு நகை செய்கிற வரைக்கும் என் மனம் ஆறவே இல்லை. அதனால்தான் கணக்குப் பரீட்சைக்கு மட்டும் உனக்காக வந்து எழுதி விட்டு உடனே போய்விட்டேன் " என்றான்.
--------
தெருக்கூத்து தந்த தெய்வப் பிரசாதம்
”நீங்கள் முதல் முதல் எந்தப் பாட்டுப் பாடினீர்கள்? நீங்கள் கவிபாடத் தொடங்கியது எப்போது? எப்படி? கவிபாடுவதற்கு எப்படி ஆரம்பிக்கவேணும் ?", "எந்த இலக்கண நூலைப் படித்தால் கவிபாடக் கற்றுக் கொள்ளலாம்?" என்பன போன்ற கேள்விகளைப் பல பேர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். இவற்றிற்கு இடத்துக்கும், காலத்துக்கும் ஏற்றபடி நானும் பலவிதமான பதில்களைச் சொல்லியிருக்கிறேன்.
சென்னை அரசாங்கம் 'அரசவைக் கவிஞர் ' பதவியை உண்டாக்கி அந்தப் பதவிக்குத் தகுதியுடைய தமிழ்க் கவிஞன் யாரென்று ஆராய்ந்துகொண்டிருந்த சமயத்தில் எனக்குச் சில தமிழ்ப்புலவர்கள் வெவ்வேறு நோக்கத்துடன் கடிதங்கள் எழுதினார்கள். அதில் ஒருவர், "அரசவைக் கவிஞனாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? அதற்குப் போட்டியிட எதைப்பற்றி கவிகள் எழுத வேண்டும்? அதை யாருக்கு அனுப்பி விண்ணப்பம் செய்து கொள்ளவேண்டும்?" என்று கேட்டிருந்தார். இந்தக் கேள்வியின் அடிப்படையும் முன்சொன்ன கேள்விகளின் காரணத்தைச் சேர்ந்தது தான்.
கவி பாடும் திறமை ஒருவனுக்கு எப்படி வருகிறது என்பதைப்பற்றி யாரும் எளிதாய்ச் சொல்லிவிட முடியாது. அதனால்தான் கவிபாடும் திறமை ஒரு தெய்வீக வரப் பிரசாதம் என்றும், அது கவிஞனுடைய உள்ளத்தில் இயற்கையாகவே அமைந்திருக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அது எப்படியானாலும் இந்த சக்தி 'கவிஞன்' என்று பேரெடுக்காதவர்களுக்குள்ளும் பல பேரிடத்தில் இருக்கிறதாக நம்புவதற்கு இடமிருக்கிறது. கவிகளை உண்டாக்குவதற்கு எந்த உணர்ச்சியும் சக்தியும் வேண்டுமோ அந்த உணர்ச்சியும் சக்தியும் ஓரளவாவது உள்ளவர்கள் தான் கவிதையை அனுபவிக்கவும் முடிகிறது. கவிதைகளை நன்றாக ரஸிக்கக் கூடியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். கவிஞன் எவ்வளவு உணர்ச்சியோடு கவிகளை இயற்றினானோ, எந்தெந்த கருத்தை, எந்தெந்த சொல்லால், எதற்காக அமைத்தானோ, அதைவிட அதிகமான உணர்ச்சியோடும், அதிகமான பொருள்கள் சொல்லக்கூடிய அறிவோடும் அனுபவித்து விளக்கவல்லவர்கள், கவிஞரல்லாதாரில் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கவிஞனுக்கு அவசியமான நுண்ணிய உணர்ச்சியுள்ளவர்கள். சமயசந்தர்ப்ப சூழ்நிலைகளால் கவிஞன் என்ற பெயரெடுக்க அவர்களில் பெரும்பாலோருக்கு வாய்ப்பில்லாமற் போய் விடுகிறது. ஆதலால் கவி பாடும் திறமை என்கின்ற வரப்பிரசாதம் 'கவிஞன்' என்று பேரெடுத்தவர்களுக்கு மட்டும் ஏகபோக உரிமையான தல்ல. உணர்ச்சி வேகத்தின் ஏற்றத் தாழ்வினால் கவிதைகளின் தரம் வேறுபடலாம். கவிதைக்கு வேண்டிய நுண்ணிய உணர்ச்சி, கவிஞனுக்கும், ரஸிகனுக்கும் பொதுவானதுதான்.
கவிதைக்கு ஊற்றுக்கண் உணர்ச்சிதான். உணர்ச்சியோடு இயற்றப்பட்டதாகி, அதே உணர்ச்சியைப் பிறரிடத்திலும் உண்டாக்கக்கூடிய சொல்லடுக்குதான் கவிதை. அந்த உணர்ச்சியில்லாமல் எவ்வளவு நல்ல வார்த்தைகளை, எவ்வளவு இலக்கணச் சுத்தம் பார்த்து அடுக்கினாலும் அது கவிதையாகாது. உணர்ச்சியை உண்டாக்கக்கூடிய சொல்லடுக்கு இலக்கணக்குறை உள்ளதானாலும் அது கவிதையாகும். உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பமுடியாத சொல்லடுக்கு எவ்வளவு இலக்கண நிறையுள்ளதானாலும் அது கவிதையாகாது. உணர்ச்சியூட்டும் சொற்களால் ஓசையை அளவுப்படுத்தி சொல்லத் தெரிந்தால் அதுதான் கவிதை.
ஒரு குறிப்பும் இல்லாமல், வெறும் உணர்ச்சியும் ஓசையும் மட்டும் தூண்டினதால் நான் என்னுடைய சிறு பிராயத்தில் கவி பாடிய ஒரு நிகழ்ச்சியை இங்கே சொல்லுகிறேன். இந்த நிகழ்ச்சி மிகவும் சிறியதானாலும், நான் எப்போது கவி பாட ஆரம்பித்தேன், எப்படிப் பாடினேன் என்றெல்லாம் கேட்கிறவர்களுக்குப் பதில் சொல்லுவது போல அமைகிறது. இந்த நிகழ்ச்சியை நினைத்து எங்கள் வீட்டில் அடிக்கடி பேசிக் கொண்டே நான் வளர்ந்ததனால், இது இன்னும் என் மனதில் இன்று நிகழ்ந்தது போல நினைவில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சிதான் எனக்குக் 'கவி பாடும் திறமை' என்ற தெய்வப் பிரசாதமாக வந்ததென்று அதை மறவாமல் வாழ்த்தி வருகிறேன்.
எனக்கு நான்கு தமக்கைகள். முதல் இரண்டு தமக்கைகளும் மிகவும் சொற்ப படிப்புள்ளவர்கள். இன்னும் உயிரோடிருக்கிற என் கடைசி தமக்கை விருத்தாம்பாள் கொஞ்சம் படித்தவர். என் மூன்றாவது தமக்கையான பழநியம்மாள் தான் எங்கள் வீட்டில் நல்ல படிப்புள்ள பெண்.
பாட்டுப் பாடுவது, கோலம் போடுவது, பின்னல் வேலை, தையல் வேலை முதலியவற்றில் திறமையுள்ளவர். அவருடைய புத்தகங்களில் 'இதைத் தொடுவோர் உதை படுவார்' என்று எழுதுவார். பேச்சுக்களிலும் அடுக்குப் பதங்களாகவே பேசுவார். வீட்டில் சிறுவர்களோடு வழக்காட நேர்ந்தால் 'அண்டையில் வந்தால் மண்டையில் போடுவேன்' என்பதுபோலப் பேசுவார். நானும் அந்த தமக்கையோடு சேர்ந்து அடுக்கிப் பேச ஆசைப்படுவேன். அவர் பாடும்போது சேர்ந்து பாடமுயல்வேன். அந்த தமக்கையோடு எனக்கு வழக்கு வந்துவிட்டால் 'பழநியக் காள் ', 'கழநியக்காள்' என்று ஏளனம் செய்வேன்.
நாமக்கல்லில் நாங்கள் வசிக்கிற வீதியில் மேற்குக் கோடியில் ஓர் முச்சந்தி, அங்கே மாரியம்மன் கோயிலும் ஒரு பிள்ளையார் கோயிலும் உண்டு. அந்த முச்சந்தி ஒரு சிறு மணல்வெளி போல இருக்கும், கூத்துகளும் பொம்மலாட்டங்களும் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் நடக்கும். மக்கள் முச்சந்தி மணல் வெளியில் உட்கார்ந்து இரவில் கூத்தும், ஆட்டமும் பார்ப்பது வழக்கம். எங்கள் வீடு அதற்கு வெகு பக்கம். வினாத் தெரிந்த நாளாக எனக்கு நாடகத்திலும் கூத்திலும் வெகு பிரியம்.
அந்தக் காலத்தில் வெறும் பொழுது போக்குக்காகவோ வேடிக்கைக்காகவோ என்று நாடகமோ, கூத்தோ நடக்காது. சிற்றின்ப உணர்ச்சிகளைத் தூண்டி விடக்கூடிய கதைகளை நடிக்கமாட்டார்கள். ராமாயணம், மகாபாரதம் இவற்றில் நல்லொழுக்கத்தையும் அறநெறிகளையும் கற்பிக்கிற பாகங்களும், கோவலன் கதை, நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை, பிரகலாதன் கதை, முதலானவைகளும்தான் நடக்கும். கிராமங்களில் தெருக்கூத்தாகவும் பொம்மலாட்டங்களாகவும் நடத்தப்படுகிற கதைகள் முக்கியமாக அரிச்சந்திர நாடகமும், கோவலன் நாடகமும்தான். இப்போது நாம் அரிஜனங்கள் என்று சொல்லுகிற தாழ்ந்த வகுப்பார்கள்தான், அரிச்சந்திரன் கதையும் கோவலன் கதையும், தெருக் கூத்துக்களாக நடத்துவதில் பரம்பரையாக வெகு நல்ல பயிற்சியுள்ளவர்களாக விளங்கினார்கள். மிக எளிய சொற்களால் ஆகிய பாடல்களுடன் அவர்கள் நடிக்கும் அரிச்சந்திரன் கூத்தும், கோவலன் கூத்தும் மிகவும் வியக்கத் தகுந்தவை. அந்தக் காலத்தில் அவர்கள் நடித்துக் காட்டிய உணர்ச்சியை இப்போதுள்ள மிகச் சிறந்த நாடக மேடையிலும் காண்பது அரிது. தமிழ் நாட்டில் கிராம மக்களின் நல்லெண்ணங்களை வாழைபடி வாழையாக வளர்த்துப் பாவ புண்ணிய உணர்ச்சிகளைப் பாதுகாத்து வந்ததில் இந்தக் கூத்துகளுக்குப் பெரும் பங்கு உண்டென்றால் அது உண்மை. இப்போது நம்மிடையே பாவ புண்ணிய எண்ணங்கள் மிகவும் குறைவாக இருப்பதற்குக் காரணமும், அப்படிப்பட்ட கதைகளின் காட்சிகளை இப்போது நாம் காண்பதில்லை என்பதுதான்.
எனக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது, அந்தப் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் கோவலன் கதை தெருக்கூத்தாக தொடர்ந்து நடிக்கப்பட்டது. நான் என் தமக்கைகளுடன் நாள் தவறாமல் போவேன். மற்றவர்கள் தூங்கி விழுந்து கொண்டிருந்தாலும் நான் கண் கொட்டாமல் கூத்துப் பார்ப்பேன். கோவலன் கதை சிலப்பதிகாரத்தின் கதைதான். ஆனாலும் சிலப்பதிகாரத்திலுள்ள கதைக்கும், தெருக்கூத்தாக நடத்தப்படும் கதைக்கும். சில வேறுபாடுகள் உண்டு. பாமர மக்களிடையே தெய்வ பயத்தையும், நல்லொழுக்கத்தையும் வளர்ப்பதற்கென்றே நடிக்கப்படுகிற கூத்துகளானதால் அந்த நோக்கத்துக்கான சில மாறுதல்களைச் சேர்த்துத்தான் கதை நடத்தப்படும். முக்கியமான வேறுபாடுகள் இரண்டு. ஒன்று பாண்டியன் மரணம். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் கோவலனை அநியாயமாகக் கொன்றுவிட்ட குற்றத்தைக் கண்ணகி எடுத்துக்காட்டின உடனே அநீதி செய்துவிட்ட துக்கத்தால் பாண்டியன் மாரடைப்பு வந்து, தானே இறந்துபோகிறான். தெருக்கூத்துகளிலும், நாடகங்களிலும் பாண்டியனைத் தெய்வம் தண்டிப்பதாகக் காட்டுவதற்கு, காளிதேவி வந்து அவனை வதைப்பதாக நடிக்கப்படும்.
இன்னொன்று, சிலப்பதிகாரக் கதையில் மாதவி ஒரு வேசியாக நடந்துகொள்வதில்லை. வேசையர் குலத்தில் பிறந்தவளானாலும் மாதவி வேசித்தொழில் செய்தவளல்ல. கோவலனையே காதலித்து வாழ்ந்தாள். வினைவசத்தால் மாதவியும், கோவலனும் மனம் மாறுபட்டுப் பிரிந்து விடுகிறார்கள், தெருக்கூத்துகளில் மாதவியை வெறும் பணத்திற்காக நேசம் காட்டுகிற ஒரு விலைமகளாகவே காட்டப்படும். வேசையரின் உறவால் வரக்கூடிய கேடுகளைப் பாமரமக்களுக்குக் காட்டி எச்சரிக்க வேண்டு மென்ற நோக்கத்தினால் அப்படிக் காட்டப்படும்.
இப்படி மாதவியை விட்டுக் கோவலன் பிரிந்து போகிற காட்சி, ஒருநாள் தெருக்கூத்தில் நடந்து கொண்டிருந்தது. அதில் மாதவியான தாசி, கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் கோவலனிடத்திலிருந்த செல்வப் பொருள்களை யெல்லாம் ஒவ்வொன்றாகப் பறித்துக் கொள்ளுகிறாள். கோவலன் இடுப்பிலிருந்த தங்க அரை நாணை வாங்கிக்கொண்டு அவனுக்கு ஒரு நார்க் கயிறு தருகிறாள். அதுவும் போதாதென்று மாதவி கோவலனிடம் ஒரு கோவணத் துணியைக் கொடுத்து அவன் இடுப்பிலிருந்த பட்டாடையைக் கேட்கிறாள். கோவலன் அதற்கும் சம்மதித்து கோவணத்தை உடுத்துக்கொண்டு இடுப்புத் துணியையும் தந்துவிட்டுத் தெருவிற் போகிறான்.
அந்த சமயத்தில் வெகு உணர்ச்சியோடு ஒரு பாட்டு பாடப்படுகிறது. கோவலனுடைய வெகு பரிதாபகரமான அந்த சமயத்தில் பாடப்பட்ட அந்தப் பாட்டு கல்மனதையும் கரைத்துவிடும். அந்தப் பாட்டைக் கேட்ட காட்சி இன்னும் என் மனதில் இருக்கிறது. அந்தப் பாட்டு என்னவெனில்:
"ஆத்திநாரும் கோவணமாய் அலையவிட்டாள் மாதவியாள்
கூத்தியாரை நம்பினோரின் குடியழிந்து போவதைப்பார்"
இந்தப் பாட்டைப் பின்பாட்டு, பக்கமேளத்துடன் வெகு அழுத்தமாகத் திருப்பித் திருப்பிப் பாடினார்கள். இந்தப் பாட்டு அப்படியே எனக்குப் பாடமாகிவிட்டது. அதற்குப் பிறகு சில காட்சிகள் அவ்வளவு வேகமுள்ளவைகளாக இல்லை. அதனால் கூட்டத்தில் பல பேர் பேசிக்கொண்டும், சில பேர் தூங்கிக்கொண்டும். இருந்தார்கள். அந்தச் சமயத்தில் கோமாளி வேடதாரி வந்து சபையில் பேசுகின்ற ஆரவாரத்தை அடக்கவும், தூங்குகிறவர்களை எழுப்பவும் சில வேடிக்கையான பாட்டுகளைத் திருப்பித் திருப்பிப் பாடினான் :
"கூத்துப்பார்க்க வந்தீர்களா? இங்கே
குசலம் பேச வந்தீர்களா?
போட்டுக்கேக்க வந்தீர்களா? இங்கே
பழமை பேச வந்தீர்களா?
ஆட்டங்காண வந்தீர்களா?
காலை நீட்டித் தூங்க வந்தீர்களா?
தூங்குகிறவர்களையும் எழுப்பவேண்டுமென்று பாடப் படுகிற பாட்டானதால் இதை வெகு வேகத்தோடு உரத்த குரலில் பலமுறை பாடினார்கள். இந்தப் பாட்டின் பெரும் பகுதியும் உடனே எனக்குப் பாடமாகிவிட்டது. ஆட்டம் முடிந்தபின் வீட்டுக்கு வந்து தூக்கம் வருகிற வரைக்கும்,
'ஆத்தி நாரும் கோவணமாய் அலையவிட்டாள் மாதவியாள்
கூத்தியாரை நம்பினோரின் குடியழிந்து போவதைப்பார்'
என்பதையும்,
'கூத்துப்பார்க்க வந்தீர்களா? இங்கே
குசலம் பேச வந்தீர்களா ?'
என்பதையும் பாடிக்கொண்டே யிருந்து தூங்கிவிட்டேன். மறுநாள் விடிந்து வெகு நேரம்வரை தூங்கிவிட்டேன். வீட்டுக்கு நான் செல்லக் குழந்தையானதால் என் தூக்கத்தை யாரும் கலைக்கவில்லை. தூக்கம் கலைந்து நானாகக் கண்விழித்தபோது 'ஆத்தி நாரும் கோவணமாய்' என்ற பாட்டுதான் என் நினைவின் முன்னால் வந்து நின்றது. உடனே அந்தப் பாட்டையும் 'கூத்துப்பார்க்க வந்தீர்களா' என்ற பாட்டுக்களையும் பாட ஆரம்பித்தேன். ஆனால் முந்தின இரவில் படுக்கும் போது பாடின மாதிரி பாட்டுக்கள் சரளமாக வரவில்லை. மறதியினால் இரண்டொரு இடங்களில் தடைபட்டு வந்தது. நினைத்து நினைத்துப் பார்த்தேன். நினைவுக்கு வரவில்லை. உடனே படுத்திருந்தபடியே பழநியக்காளைக் கூப்பிட்டேன். அவர் வந்தார். ஐயத்தை வினவினேன். அவர் சரிப்படுத்திவிட்டார். எழுந்து படுக்கையில் உட்கார்ந்தபடியே அந்தப் பாட்டுகளைத் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டிருந்தேன்.
அங்கே வந்த என் தந்தை, “போதும், போடா ! ரொம்ப நேரமாகிவிட்டது. பல்லை விளக்கிக்கொண்டு பழயது சாப்பிடு போ. பாட்டெல்லாம் அப்புறம் பாடிக் கொள்ளலாம்" என்று எனக்குச் சொல்லிவிட்டு என் தமக்கையைப் பார்த்து எனக்குச் சோறு போடச் சொன்னார். தமக்கை போனார். நானும் எழுந்து பல் துலக்கப் போனேன்.
எங்கள் வீட்டுக்கு அப்போது சில உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்குள் என் தமக்கை பழநியம்மாளுக்கு நாத்தி முறையுள்ள ஒரு பெண்ணும் இருந்தார். அவரும் என் தமக்கையும் சம வயதுள்ளவர்கள். ஒருவரை யொருவர் மிகவும் உரிமையுடன் கேலி செய்துகொண்டு சல்லாபிப்பார்கள். பலமான வாக்கு வாதங்களும் செய்வார்கள். எனக்குப் பழயசாதம் பரிமாறப்போன பழநியக்காள் சாப்பிட உட்காரும் இடம் குப்பையும் கூளமுமாக, அசுத்தமாக இருந்ததைக்கண்டு இரைந்தார். அந்த இடத்தில் முந்தின இரவு சமையலுக்காக நறுக்கின கறிகாய்களின் தோலும், காம்பும், வெங்காயம் உரித்த சருகுகளும் அப்படியே கிடந்தன. முந்தின இரவு கறிகாய்களை நறுக்கினது விருந்துக்கு வந்திருந்த அந்த நாத்தி. அந்த நாத்திப்பெண்ணின் பேரைச் சொல்லி என் தமக்கை அந்தப் பெண்ணை அங்கே கிடந்த குப்பைகளுக்காக குற்றம் சாட்டி, "காய்கறி அறிந்த பெண் பிள்ளை கையோடு அந்தக் குப்பையை வாரி எறிய வேண்டாமா?” என்று சத்தம் போட்டார். அதைக் கேட்டுவந்த நாத்தி, "காய்கறி அரிஞ்சவளேதான் வாரவேணுமா? நீயுந் தானே பக்கத்திலிருந்தாய். நீ வாரி யிருக்கக்கூடாதா?" என்றார். இருவருக்கும் வாக்குவாதம் வலுத்து ஏக இரைச்சல் போட்டுக்கொண்டார்கள். சண்டையிடுவதைப் போன்ற சத்தத்தைக் கேட்டு பல் விளக்கிக் கொண்டிருந்த நான், அரையும் குறையுமாக முகத்தைக் கழுவிக்கொண்டு அங்கே ஓடினேன். இவர்கள் ஒருவரோடொருவர் அப்படி இரைந்து கொள்வதை கேட்டு வீட்டிலிருந்த பல பேர் கூடி விட்டார்கள். அங்கே வந்த எங்கள் தாயார், "என்னடி யம்மா, விடிந்ததும் விடியாததுமாக இப்படிப் பேசிக் கொள்ளுகிறீர்கள் நாத்தனாரும், நாத்தியும்" என்றார். அதைக் கேட்ட உடனே என் உள்ளத்தில் ஓர் உணர்ச்சி மின்னல்போல் பாய்ந்தது.
அக்காளும் நாத்தியும் சச்சரவு பேசிக்கொள்வதை என் கண்கள் பார்த்துக்கொண்டே இருந்தாலும் என் வாய் "ஆத்தி நாரும் கோவணமாய் அலையவிட்டாள் மாதவியாள்" என்ற பாட்டை முணகிக்கொண்டே இருந்தது. 'ஆத்தி நாரும்' என்பதை திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண் டிருந்த எனக்கு என் தாயார் 'நாத்தினாரும் நாத்தியும் ' என்று சொன்னதின் ஓசை ஒரு பாட்டிற்கு அடி எடுத்துக்கொடுப்பதுபோல அமைந்தது. 'ஆத்திநார், நாத்தினார் ' உடனே ஒரு பாட்டு உதித்துவிட்டது. 'ஆத்திநாரும் கோவணமாய்' என்ற பாட்டின் ஓசையை மனதில் வைத்துக்கொண்டு,
“நாத்தினாரும் நாத்தியுமாய் நடுவீட்டில் சண்டையிட்டார்
சோத்துக்காக வந்தேனம்மா சோறுங்காணோம் நீருங்காணோம்"
என்று நொடிப்பொழுதில் மனதில் பதங்களை அடுக்கிக் கொண்டு தர்க்கம் பேசிக்கொண்டிருந்த இருவருக்கும் மத்தியிற்போய் நின்று கொண்டு தெருக்கூத்தில் நடந்தது போல் ஆடிக்கொண்டே பாடினேன். எல்லோரும் ஏக காலத்தில் சிரித்துவிட்டார்கள். என் தாயார் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்டார்கள். அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் நான் மறுபடியும் - கூத்துப்பார்க்க வந்தீர்களா? இங்கே குசலம் பேச வந்தீர்களா?' என்ற பாட்டை நினைத்துக்கொண்டு என் தமக்கையைப் பார்த்து
"அக்கா !
“சாதம் போட வந்தீர்களா? இங்கே சண்டை போட வந்தீர்களா?"
என்று பாடிக்கொண்டே ஆடினேன். இதைக்கேட்ட எல்லோருக்கும் ஒரே சிரிப்பும் களிப்பும் வந்துவிட்டது. நான் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டே ஆடினேன். என் தாயாருக்கு அடக்கமுடியாத ஆனந்தம். "ஐயோ, சாமி! கண்ணுப்படப் போவுதுடா, போதும்" என்று என் ஆட்டத்தையும் பாட்டையும் நிறுத்தினார். அத்தோடு சண்டை சல்லாபமாகிவிட்டது. என் தாயாரே அந்த இடத்தைப் பெருக்கிவிட்டு, எனக்குப் பழய சோற்றைப் பரிமாறினார்கள்.
அந்த சமயத்தில் என் தந்தை அங்கில்லை. போலீஸ் கச்சேரிக்குப் போயிருந்தார். அவர் மத்தியானம் வீட்டுக்கு வந்தவுடன் முதல் சேதியாக என் தாயார் நான் பாட்டுப் பாடின விவரத்தைச் சொல்லி மகிழ்ந்தார்கள். தகப்பனார் வீட்டிற்கு வந்தபோது நான் பள்ளிக்கூடம் போயிருந்தேன். என் தந்தை சாப்பாட்டை முடித்துக்கொண்டு எனக்காகக் காத்திருந்தார். நான் பள்ளியிலிருந்து வந்ததும் என்னை என் தந்தை வெகு இனிமையாக வரவேற்று முதலில் சாப்பிட்டுவரச் சொன்னார். நான் போய் சாப்பிட்டுவிட்டு என் தந்தை இருந்த இடத்திற்கு வந்தேன். அதற்குள் அங்கே என் தாயாரும் மற்றவர்களும் கூடியிருந்தார்கள். நான் வந்ததும் என் தந்தை "காலையில் என்னமோ நீ கவி கட்டிப் பாடினாயாமே, அதைச் சொல்லு" என்றார். நான் உடனே வெகு மகிழ்ச்சியுடன்,
"நாத்தினாரும் நாத்தியுமாய் நடுவீட்டில் சண்டையிட்டார்
சோத்துக்காக வந்தேனம்மா, சோறும் காணோம் நீரும் காணோம்"
என்பதையும்,
"சாதம் போட வந்தீர்களா? இங்கே சண்டைபோட வந்தீர்களா "
என்பதையும் ஆடிக்கொண்டே பாடினேன். அதைக் கேட்டு என் தந்தை அடைந்த மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா?
அப்போது என் தந்தை நாமக்கல் போலிஸ் கச்சேரியின் தலைவர். அந்த முறையில் அவர் தினந்தினம் நாள் தவறாமல் ஸ்டேஷன் ’டைரி' என்ற தினசரிக் குறிப்புகளை எழுதவேண்டிய கடமைகளில் பழக்கமுள்ளவர். அதைப்போலவே வீட்டிலும் முக்கியமான நிகழ்ச்சி களை குறிப்பெழுதி வைப்பார். இந்த நிகழ்ச்சியையும், இந்தப் பாட்டுகளையும் அவர் எழுதி வைத்திருந்தார். மேலும் தொடர்ச்சியாக அடிக்கடி இதைப்பற்றி நண்பர்களிடத்திலும் உறவினர்களிடத்திலும் பிற்காலத்திலும் பேசிப் பெருமையடைவார். அதனால் தான் நானும் இதை மறக்காமல் மனதில் வைத்திருக்க முடிந்தது.
கவி பாடும் சக்தி தெய்வப்பிரசாதமானால் அந்த தெய்வப் பிரசாதம் எனக்குத் தெருக்கூத்துப் பாட்டின் மூலமாக வந்ததென்று எண்ணி அதனை வாழ்த்துகின்றேன்.
-----------------
3. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எனக்கு வினாத் தெரிந்தபின் என் தாயாரும் நான்கு தமக்கைகளும் பிறரும் ஒரு கல்யாணத்துக்காக நாமக்கல்லிலிருந்து காட்டுப்புத்தூர் என்னும் ஊருக்கு பிரயாணம் செய்துகொண்டிருந்தோம். நாமக்கல்லிலிருந்து காட்டுப்புத்தூர் பதினெட்டு மைல். "குஷன் டயர்' என்ற கெட்டி ரப்பர் போட்டு 'ப்ரீ வீல்' (Free wheel) இல்லாமல் ஒரே ஒரு சைக்கிள் வண்டி வெகு புதுமையான பொருளாக எங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்திருந்த காலம். ’மோட்டார் கார்' என்ற பேர் கூட அப்போது காதில் விழுந்ததில்லை. குதிரை வண்டியே அபூர்வம். மாட்டு வண்டிகள்தான் அக்காலத்துப் பிரயாணங்களுக்கு வழக்கமாயிருந்த வாகனம். நாங்கள் போனது ஒரு இரட்டைமாட்டு வண்டியில். வேகமாக விரட்டினால் மணிக்கு மூன்று மைல் வீதம் கொஞ்ச தூரம் போகும். முடுக்காவிட்டால் இரண்டு மைல் வீதம் கூட போகாது. பாதையும் நன்றாக இருக்காது. அதனால் காட்டுப்புத்தூருக்குப் போய்ச்சேர குறைந்தது ஏழு மணி நேரம் பிடிக்கும்.
விடியற்காலம் சுமார் ஐந்து மணிக்குப் புறப்பட்டோம். அந்நேரத்தில் உணவு அருந்திவிட்டுப் புறப்பட முடியாது. காப்பிக்கடைகள் தோன்றாத காலம். வழியில் உணவுக்கு வழியில்லை. அதற்காக இரவிலேயே கட்டி வைத்திருந்த புளி சாத மூட்டையுடன் புறப்பட்டோம். சுமார் ஒன்பது மைலுக்கப்பால் பாதை ஓரத்திலிருந்து ஒரு தோட்டக் கிணற்றின் கரையிலிருந்த மாமரத்தின் அடியில் தங்கி உணவு அருந்த இறங்கினோம். சாப்பிடத் தொடங்குமுன் தண்ணீர் மொண்டு வர எங்களுடன் வந்த ஒருவர் பாத்திரத்தோடு கிணற்றில் இறங்கினார். நான் கிணற்றை எட்டிப்பார்த்தேன். கிணற்றில் தண்ணீர் இருக்கிற இடமே தெரியவில்லை. பசும் புல் தரைபோல் ஒரே பச்சை தென்பட்டது. அந்தக் கிணற்றில் தண்ணீர் இல்லையோ என்று நான் எண்ணிக் கொண்டிருக்கிற போதே கிணற்றில் இறங்கினவர் படிகளில் நின்று கொண்டு புல் தரைபோல் காணப்பட்ட அந்த மட்டத்துக்குள் கையை விட்டு நாற்புறமும் வேகமாகச் சுழற்றினார். உடனே பசுமை விலகி அங்கே கருமை காணப்பட்டது. அந்த இடத்தில் பாத்திரத்தை அமுக்கித் தண்ணீர் மொண்டார்.
அப்போதுதான் மேலே தெரிந்த பசுமை முழுதும் பாசி என்பதை அறிந்தேன். தண்ணீர் வந்தபின் எல்லோரும் உட்கார்ந்து கட்டமுது உண்டோம். உண்ணும் போது நான் குடிக்கத் தண்ணீர் கேட்டேன். ஒரு சிறு பாத்திரத்தில் ஊற்றிக் கொடுத்தார்கள். புளி சாதத்தைத் தின்று அது தொண்டையை அடைக்கிறது போலிருந்த அவசரத்தில் தண்ணீரை வாங்கின உடனே வாயில் ஊற்றினேன். ஒரு பெரிய பாசிக்கொத்து என் வாயில் விழுந்தது. உடனே சாதத்தோடு அதையும் துப்பிவிட்டுத் தண்ணீரை உற்றுப்பார்த்தேன். அதில் ஆயிரக் கணக்கான பாசித் துணுக்குகள் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. அதைக்கண்டு அருவருப்புண்டாகி அந்தத் தண்ணீரைக் குடிக்க மனம் வராமல் என் தாயாரைப் பார்த்து, "என்னம்மா இப்படி அசுத்தமாயிருக்குது இந்த தண்ணீர், தூ! இதையா குடிக்கிறது?" என்று அந்த பாத்திரத்தை என் தாயாரிடம் நீட்டினேன். அப்போது என் பக்கத்திலிருந்த எங்கள் வயதான அத்தை, ”அது வெறும் பாசியப்பா. அது என்ன பண்ணும்? சும்மா குடி. 'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது' பாவம்" என்றார்.
அது எனக்குப் புரியவில்லை. என் தாயாரைக் கேட் டேன். என் தாயார், "ஆமாம் சாமி! பெரியவங்க அப்படித் தான் சொல்லுகிறாங்க. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கப்படாது" என்று சொல்லிக் கொண்டே அந்தத் தண்ணீரை ஊற்றிவிட்டு அந்த சிறு பாத்திரத்தின் வாயில் கட்டுசாதம் கட்டிவந்த துணியின் மூலையைப் போட்டு குடத்திலிருந்த வேறு தண்ணீரை அதில் ஊற்றி வடிகட்டி எனக்குக் குடிக்கத் தந்தார்கள்.
நான் அதைக் குடித்துவிட்டு சும்மா இருந்துவிட்டேன். இந்தத் "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது" என்ற பழமொழியை முதல் முதலில் நான் அப்போதுதான் அறிந்தேன். அதன் பிறகு அதைப் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். ஆனால் அதன் கருத்து என்ன வென்று ஆராய்ந்து பார்க்கவேண்டிய ஆசையோ, அவசியமோ உண்டாகவில்லை. மொத்தத்தில் தண்ணீரைப் பழித்துக்கொண்டு குடிக்காமல் இருந்துவிட்டுத் தொண்டை வறண்டு அபாயத்துக்கு ஆளாகிவிடக் கூடாதென்று அப்படிச் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது, என்று மட்டும் சிற்சில சமயங்களில் எண்ணிவிட்டுப் பிறகு அதைப்பற்றி சிந்தித்ததே இல்லை.
1822-ல் நாமக்கல்லில் சுகாதார இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீ குன்னிராமன் நாயர் என்பவர் எங்களுக்கு மிக வும் நெருங்கிய நண்பராகிவிட நேர்ந்தது. எப்படி என்றால் இப்போது நாமக்கல்லில் இருக்கிற மாபெரும் தேச பக்தரான ஸ்ரீ நாகராஜ-ஐயங்காரவர்களுடன் நானும் சில பொதுநல ஊழியர்களும் நெடுநாளாக சமூகசேவை செய்து வந்தோம், அந்த சேவைகளில் முக்கியமானது வெக்கை, காலரா, பிளேக், விஷஜுரம் முதலிய தொத்துவியாதிகள் பரவுகிற இடங்களுக்கெல்லாம் சென்று, நோய்கண்ட இடங்களுக்கு மருந்து கொடுத்தும், நோய் காணாத இடங் களில் நோய் வராமல் தடுப்பதற்கான எச்சரிக்கைச் சொற் பொழிவுகள் செய்தும் வந்தோம். அதற்காக சுகாதார இலாக்கா அதிகாரிகளுடன் ஒத்துழைப்பது மிகவும் அவசிய மாக இருந்தது. எங்களுடைய சேவைகளைப் பாராட்டின அதிகாரிகள் நண்பர்களாகிவிட்டார்கள்.
அந்த சமயத்தில் சர்க்கார் முயற்சியாக ஒவ்வொரு ஊரிலும் ஆண்டுக்கு ஆண்டு சுகாதார வாரம் கொண்டாடப்பட்டு வந்தது. பொதுமக்களுடைய ஆதரவைத் தேடி அந்தக் கொண்டாட்டங்களை வெற்றிகரமாக நடத்தவேண் டிய கடமை சுகாதார இலக்கா அதிகாரிகளைச் சேர்ந்தது. அதனால் ஸ்ரீ நாகராஜ ஐயங்காருக்கும், எனக்கும் பொது மக்களிடத்திலிருந்த செல்வாக்கும் அந்த அதிகாரிகளுக்கு மிகவும் அனுகூலமாக இருந்தது.
அத்துடன் என்னுடைய சொற்பொழிவுத் திறமையும், கல்வியறிவும், கவி பாடும் திறனும் அவர்களுடைய சுகாதாரப் பிரசாரத்துக்கு மிகவும் பயன்பட்டது.
அதனால் என்னுடைய உதவிகளை மிகவும் புகழ்ந்து சுகாதார இன்ஸ்பெக்டர் குன்னிராமன் நாயர் ஜில்லா சுகாதார அதிகாரியாக இருந்த பி. என். கே. தம்பி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். என்னை நேரிலும் நன்றாகத் தெரிந்திருந்த தம்பி அவர்கள் மாகாண சுகாதார அதிகாரியான ஸ்ரீ மாத்யூஸ் என்பவருக்கு எழுதினார். அந்த மாகாண அதிகாரி ஸ்ரீ மாத்யூஸ் என்பவர் எனக்கு நேராகப் பாராட்டுகள் எழுதி, சொந்த முறையிலும், அதிகாரி என்ற முறையிலும் தமிழ்நாட்டில் சுகாதாரப் பிரசாரத்திற்கு உதவும்படியாகப் பாட்டுகளும், நாடகங்களும் நான் எழுதி ஒத்தாசை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதற்காகப் பல சுகாதாரப் பாட்டுகளையும் “அரவணை சுந்தரம்” என்ற ஒரு வேடிக்கையான நாடகமும் எழுதிக்கொடுத்தேன். அந்த நாடகமும், பாட்டுக்களும் நூல் வடிவாக அச்சடிக்கப் பட்டு சுகாதார இலாக்காவின் மூலமாகவே பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டு சுகாதார வாரத்தில் பாடவும், நடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
'அரவணை சுந்தரம்' என்ற அந்த நாடகம் திருச்செங்கோட்டிலும் நடிக்கப்பட்டது. அந்த நாடகத்தில் மிகவும் முக்கிய அம்சங்கள் குடிப்பதை ஒழிக்கவேண்டும் என்பதை பாமர மக்களுடைய மனதில் நன்றாகப் பதியவைக்கும்படி யான சில காட்சிகள். நகைச்சுவையோடு மதுவிலக்கைப் பற்றிய நல்லறிவைப் புகட்டக்கூடிய இந்தக் காட்சிகள் ரொம்பவும் கவர்ச்சி தரக்கூடியனவாக அமைந்தன. திருச்செங்கோட்டில் இந்த நாடகம் முதல் தடவையாக நடிக்கப் பட்ட சமயத்தில் ஸ்ரீ ராஜாஜி அவர்கள் அந்த ஊருக்குப் பக்கத்தில் அவரால் ஏற்படுத்தப்பட்ட புதுப்பாளையம் காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்துகொண்டு மது விலக்கு பிரசாரமே முக்கிய வேலையாக மேற்கொண்டு கள்ளுக்கடைகளை மூடி விட வேண்டும் என்று சர்க்காருக்குப் பாமரமக்களுடைய கையெழுத்துள்ள விண்ணப்பங்களை தயார் செய்து கொண்டிருந்தார். அதனால் திருச்செங்கோடு வாசிகள் ராஜாஜி தலைமையில் அந்த நாடகம் நடக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தார்கள். நாடகம் ராஜாஜி தலைமையில் நடந்தது.
நாடகம் முடிந்தபின் "இந்த நாடகம் யார் எழுதினது?" என்று ராஜாஜி அங்கிருந்தவர்களைக் கேட்டார். “நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை எழுதினது” என்று ஒருவர் பதில் சொன்னார். "அப்படிச் சொல்லுங்கள். நானும் அப்படித்தான் யூகித்தேன்" என்று கூறி மகிழ்ச்சி அடைந்து அங்கிருந்த சுகாதார இன்ஸ்பெக்டரிடம், "இந்த நாடகத்தை ஒவ்வொரு கிராமத்திலும் நடிக்கும்படியாக சுகாதார இலாக்கா மூலமாக ஏற்பாடு செய்யுங்கள்" என்றார். ராஜாஜி சொன்ன அபிப்பிராயத்தை அங்கிருந்த சுகாதார இன்ஸ்பெக்டர் மறுநாளே சென்னை மாகாண சுகாதார அதிகாரிக்குத் தெரியப்படுத்தினார்.
சொந்த முறையில் ராஜாஜி எனக்கும் ஒரு கடிதம் எழுதி அந்த 'அரவணை சுந்தரம்' என்ற நாடகத்தைப் பாராட்டி என்னை ஆசீர்வதித்தார்.
அப்போது ராஜாஜி கவர்னர் ஜெனரலாகவோ அல்லது பிரதம மந்திரியாகவோ இருக்கவில்லை. ஆங்கிலேய ஆட்சிக்கும், அந்த ஆட்சியின் பிரதிநிதியான வெள்ளைக்கார ’வைஸ்ராய 'க்கும் எதிரியாகத் தீவிர ஒத்துழையாமைத் தலைவராக இருந்தார். ஆனாலும் ராஜாஜியிடத்தில் அப்போதும் அரசாங்க அதிகாரிகள் அனைவரும் அளவற்ற மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் ராஜாஜி அவர்கள் என்னுடைய 'அரவணை சுந்தரம்' என்ற நாடகத்தை எல்லா ஊர்களிலும் நடிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று சொல்லியிருந்ததற் கிணங்கி சுகாதார இலாக்கா மூலமாக அந்த நாடகம் தமிழ் நாட்டில் ஏறத்தாழ எல்லா ஊர்களிலும் நடத்தப்பட்டது. பல ஊர்களிலும் அதைப் பார்த்தவர்கள் என்னை மிகவும் பாராட்டி எழுதினார்கள். அதில் மிக்க மகிழ்ச்சியடைந்த ‘நாமக்கல் சுகாதாரவாரக் கொண்டாட்டக் கமிட்டியார் ' எனக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளிக்க விரும்பினார்கள். அதற்காக ஒரு விருந்து நடத்தி, அந்த விருந்தின் முடிவில் சென்னை மாகாண சுகாதார அதிகாரியான மாத்யூஸ் அவர்களே எனக்கு அந்தப் பதக்கத்தைப் பரிசளிக்க வேண்டுமென்று ஏற்பாடாயிற்று.
விருந்து நடந்தது. பல பேருடைய பாராட்டுரைகளுக்குப் பின் 'பப்ளிக் ஹெல்த் டைரக்டரும்' பல புகழுரைகளோடு பதக்கத்தை எனக்குப் பரிசளித்தார். கூட்டம் முடிந்து நான் அவரிடம் விடை பெற்றுக்கொள்ளும் போது, அவர் "தங்களோடு கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும். தங்கள் வீட்டுக்கு நாளை வரலாம் என்றிருக்கிறேன்" என்றார்.
நான் சற்றே திடுக்கிட்டு, "தாங்கள் வரவேண்டும் என்ற சிரமம் வேண்டாம். நானே வேண்டுமானால் தாங்கள் தங்கியிருக்கிற பங்களாவுக்கு வருகிறேன்" என்றேன். அதற்கு அவர், “இல்லையில்லை, நானே உங்கள் இருப்பிடத்திற்கு வந்து மரியாதை செய்ய விரும்புகிறேன்," என்று ஆங்கிலத்தில் சொன்னார்.
அதற்குமேல் நான் தட்டிக்கழிக்க முடியவில்லை. “நாளை காலையில் காப்பி அருந்த என் வீட்டிற்குத் தாங்கள் வரமுடியுமானால் நான் மிக்கப் பெருமையடைவேன் ” என்றேன். உடனே அவர் ஒத்துக்கொண்டார். அவருடன் இருந்த ஜில்லா சுகாதார அதிகாரி என். கே. தம்பி அவர்களையும், தாலூக்கா அதிகாரி குன்னிராமன் நாயர் அவர்களையும், மாத்யூஸ் அவர்களுடன் காப்பி சாப்பிட என் மனைக்கு வரும்படி கேட்டுக்கொண்டேன்.
அந்தப்படியே அவர்கள் மூவரும் மறுநாள் காலையில் என் வீட்டிற்கு வந்தார்கள். ஆகாரம் அருந்திய பின் அந்த மூன்று சுகாதார உத்தியோகஸ்தர்களும் நானும் மட்டும் பேச உட்கார்ந்தோம். அவர்கள் மூன்று பேரும் மலையாளிகள். மாத்யூஸ் என்பவர் 'சிரியன்' கிறிஸ்துவர். அவர் என்னோடு பேச விரும்பிய விஷயம் தமிழ்மொழி சம்பந்தமான ஒரு ஆராய்ச்சி. அதை ஆங்கிலத்தில் சொல்லிப் பயனில்லை. அதனால் வெகு கஷ்டப்பட்டுக் கொண்டு பெரும்பாலும் மலையாளம் கலந்த தமிழில் இடையிடையே ஆங்கிலத்தில் விளக்கமும் சேர்த்துக் கொண்டுப் பேசினார். சுகாதார டைரக்டருக்கும் எனக்கும் நடந்த சம்பாஷணையின் சாராம்சம் பின்வருமாறு :
டைரக்டர், "எனக்குத் தமிழ் நன்றாகப் பேச வராவிட்டாலும் நன்றாகப் புரியும். உங்களுடைய பாட்டுகளும் நாடகமும் எனக்கு மிகவும் இன்பமளிக்கின்றன. அவற்றில் எங்களுடைய பிரசாரத்திற்குத் தேவையான ஆழ்ந்த சுகாதார அறிவும், அனுபவமும் நிரம்பியிருக்கின்றன. கிராம மக்களுக்கு புரியும்படியான எளிய நடையிலும் இருக்கின்றன. ஆதலின் உங்களிடத்தில் கேட்டால்தான் என் மனதில் நெடுநாளாக இருந்து வருகிற ஒரு ஐயம் தெளியும். என்ற நம்பிக்கை உண்டாயிற்று. நானும் எத்தனையோ தமிழ் அறிஞர்களிடத்தில் இதைப்பற்றிக் கேட்டு விட்டேன். ஒருவராவது என் மனக்குறையை மாற்றுக் கூடியவர்களாக இல்லை. உங்களைக் கொண்டு ஐயத்தை நீக்கிக்கொள்ளலாம் என்ற ஆசையினால் உங்களிடம் அதைப்பற்றிப் பேச ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததை விட்டுவிடக் கூடாதென்று தான் என்னுடைய உத்தியோகப் பிரயாண திட்டங்களை முற்றிலும் மாற்றிக்கொண்டு இங்கே வந்தேன். அந்த ஐயத்தைச் சொல்லுகிறேன். அதை உடனே நீங்கள் நீக்க முடியுமானால் ரொம்ப மகிழ்ச்சி யடைவேன். அப்படி உடனே நீக்க முடியாவிட்டாலும் கொஞ்சம் சிரமம் மேற்கொண்டாவது அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். அது எனக்கு மட்டு மல்ல, பொதுவாகத் தமிழ்நாட்டிலுள்ள சுகாதார முன்னேற் றத்துக்கே நன்மை தரக்கூடியது " என்றார்.
நான், “அது என்ன? சொல்லுங்கள். தங்கள் விருப்பத்தைப் பூர்த்திசெய்ய என்னால் முடிந்தவரை செய்கிறேன்" என்றேன். அவர், "சொல்லுகிறேன், கேளுங்கள். அனேகமாக எல்லா தொத்து நோய்களும், மக்கள் உட் கொள்ளுகிற தண்ணீர் மூலமாகவும் சுவாசிக்கிற காற்றின் மூலமாகவும்தான் பரவுகின்றன. காற்றைக் காட்டிலும் கூட தண்ணீரைத்தான் அதிகமாகக் கவனிக்கவேண்டியது. எங்களுடைய சுகாதார இலாக்காவின் முக்கியமான அலுவல்களில் ஒன்று. எல்லா மக்களும் தண்ணீரைக் கூடுமானவரை சுத்தப்படுத்தி உட்கொள்ள வேண்டும் என்பதை உபதேசிப்பது. அது தங்களுக்குத் தெரியும்" என்றார். "ஆமாம்” என்றேன்.
"அப்படியிருக்க நாங்கள் கிராமங்களுக்குப் போய் எல்லோரும் தண்ணீரை வடிகட்டிக் காய்ச்சித்தான் குடிக்க வேண்டும், அப்படிச் செய்தால் 'காலரா' முதலான வியாதிகள் வரவே வராது, என்று சொன்னால் அங்கே இருக்கிற கிழங்கள் 'போமையா, தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது பாவம்' என்று சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள பல இடங் களில் இந்தப் பழமொழி வழங்குகிறது. உங்களுக்குத் தெரியுமா?" என்றார். “ஆமாம், இந்தப் பழமொழியை நான் என் சிறு பிராயத்திலிருந்தே கேட்டு வருகிறேன் " என்றேன். "இந்த 'தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்கக் கூடாது' என்ற பழமொழிக்கு என்ன பொருள்?” என்றார். "தண்ணீரை நோட்டம் பார்க்கக் கூடாது. அதிக தாகமுள்ள சமயத்திலும் ரொம்ப சுத்தம் பார்த்துக் கொண்டிருக்காமல் கிடைத்த தண்ணீரில் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டியது என்ற பொருளில் தான் இது வழங்கப்பட்டு வருகிறதாகக் கருதுகிறேன்” என்று சொல்லி என் சிறு பிராயத்தில் காட்டுப்புத்தூர் பிரயாணத்தில் நாங்கள் கட்டுச்சோறு தின்ற சமயத்தில் பாசிகள் நிறைந்த தண்ணீரை நான் பழித்ததையும், அப்போது ஒருவர் இந்தப் பழமொழியைச் சொல்லி என்னைப் பரிகசித்ததையும் சொன்னேன். "அப்படியானால் தூய்மையான தண்ணீரைத்தான் உட்கொள்ள வேண்டும் என்ற சர்வ சாதாரணமான சுகாதார அறிவு இல்லாதவர்களா தமிழர்கள் ? கல்வியிலும், கலைகளிலும், சுசிகரமான பழக்க வழக்கங்களிலும் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயிற்சி பெற்ற நாகரிக-முடையவர்கள் தமிழர்கள் என்பது எப்படிப் பொருந்தும்? இந்தப் பழமொழியையும் இது வழங்கப்பட்டு வருகிற பொருளையும் மேல் நாட்டார் அறிந்தால் நம்மை வெகு அநாகரிகமான மக்கள் என்றல்லவா எண்ணுவார்கள்?" என்றார் அந்த சுகாதார அதிகாரி. "ஆமாம், எனக்கும் அந்தக் கவலை உண்டு " என்றேன்.
" இந்தப் பழமொழிக்கு உண்மையான பொருள் வேறு ஏதாவது இருக்கவேணும் என்று எண்ணுகிறேன், ஏன் என்றால் நம் நாட்டுப் பழமொழிகள் எல்லாம் மிக்க அறிவும் அனுபவமும் நிறைந்தவைகளாக இருப்பதாக மேல்நாட்டார்களே பாராட்டினதை நான் பார்த்திருக்கிறேன். அப்படியிருக்க இந்தப் பழமொழிமட்டும் இவ்வளவு அநாகரிகமாக இருப்பது பொருந்தாது" என்றார். "நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்றேன். “அப்படியானால் தாங்கள் கொஞ்சம் ஆராய்ச்சிசெய்து இதன் உண்மையான பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.
“எனக்கும் அதுதான் ஆசை. முடிந்தமட்டிலும் முயற்சி செய்து பார்க்கிறேன் " என்றேன்.
அதன் பிறகு மாத்யூஸ் அவர்கள் வேறு பல விஷயங்களைப் பேசிவிட்டு ஒரு சிறு ஆங்கில நூலை என்னிடம் கொடுத்து அதை எளிய தமிழில் மொழிபெயர்த்துத் தர வேணும் என்றும், அதில் உள்ள சில கருத்துக்களை கும்மி, கோலாட்டம் முதலானவற்றிற்கு உதவும்படியான பாட்டுகளாகச் செய்து கொடுக்கவேணும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்த சிறு புத்தகம் அசுத்தமான தண்ணீரை அருந்தினால் நமக்கு வரக்கூடிய பல நோய்களையும் அவற்றிற்கான பரிகாரங்களையும் விளக்கக் கூடிய ஒரு வெகு நல்ல ஆங்கிலக் கட்டுரை. நான் அதை மொழிபெயர்த்துப் பாட்டுகளையும் இயற்றித் தருவதாக ஏற்றுக் கொண்டேன். விருந்தினர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள்.
அதன் பிறகு மாகாண சுகாதார டைரக்டர் சென்னையிலிருந்து எனக்கு எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும் இந்த ’தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்ற பழமொழியின் பொருளை நான் ஆராய்ச்சி செய்ய வேணும் என்பதை நினைப்பூட்டிக் கொண்டே வந்தார். நானும் எனக்குத் தெரிந்த தமிழறிஞர்கள் எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன். பழமொழித் திரட்டு, நிகண்டு, அகராதி முதலான நூல்களிலும், தமிழ் இலக்கியங்களிலும் எதிலாவது இதைப்பற்றி என்னவாவது கொஞ்சம் அறிந்து கொள்ளக் கூடுமா என்று ஆனமட்டும் தேடிப் பார்த்தேன். ஒன்றும் பலிக்கவில்லை. பல மாதங்கள் இதே நினைவாகப் பல முயற்சிகள் செய்து பார்த்துவிட்டு அது கண்டுபிடிக்க முடியாத விஷயம் என்று அதைக் கைவிட்டேன். இந்த ஆராய்ச்சிக்காக அலைந்ததினால் நான் வரைந்து கொடுப்ப தாக முன்பணம் வாங்கியிருந்த சில ஓவிய வேலைகள் பாக்கியாக நின்று கிடந்தன. அவற்றைப் பூர்த்திசெய்துவிட ஆரம்பித்தேன்.
அந்த சமயத்தில் சென்னை சர்க்கார் ஆர்க்கலாஜிகல் (Archaeology) இலாக்காவைச் சேர்ந்த ஒரு பெரிய அதிகாரி நாமக்கல்லுக்கு வந்தார். 'ஆர்க்கலாஜிகல் இலாக்கா' என்பது பழமையான பொருள்களிலிருந்து பழங்கால உண்மைகளைக் கண்டறிய ஆராய்ச்சி செய்யும் இலாக்கா. அதாவது புராதனமான கோயில்கள், கோபு ரங்கள், கட்டிடங்கள், கல் வெட்டுகள், சிற்பங்கள், சிலை கள் முதலியவற்றிலிருந்து பண்டைக்கால வரலாற்று உண்மைகளை அறிவதற்கான ஆதாரங்களைச் சேகரிக்கும் வேலைக்கென்றே அரசாங்கத்தில் நடத்தப்பட்டுவரும் இலாக்கா. நாமக்கல் பழமையான வரலாற்றுச் சின்னங்கள் உள்ள ஒரு சிறு நகரம். சிறப்பான விஷ்ணு ஸ்தலம்.
ஊருக்கு நடுவில் ஒரே கல்லாக இருக்கிற அழகான ஒரு குன்று உண்டு. அதன் உச்சியில் பழையகாலத்து ராணுவப் பாதுகாப்பாகக் கட்டப்பட்ட மதிற்சுவர்களும். மருந்து கிடங்கும் உள்ளன. ஓர் கோயிலும் உண்டு. குன்றின் கிழக்குப் பாகத்தில் பள்ளிகொண்டப் பெரு மாளுடைய ஆலயமும், மேற்கு பாகத்தில் ஸ்ரீ நாமகிரி, நரசிம்ம சுவாமியின் ஆலயமும் இருக்கின்றன. இந்த இரண்டு ஆலயங்களும் ஓரளவு அந்தக் குன்றின் பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ள சிற்பக் கோயில்கள். அக்கோயில்களின் தூண்களும், சுவர்களும், மூலவிக்ரக சிலைகளும், பாறையோடு சேர்ந்த பகுதிகளே. சுவர்களில் புராணக்கதைகள் வெகு வேலைப்பாடுள்ள சிற்பங்களாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. அத்துடன் நாமகிரியம்மன் கோயிலுக்கு நேராக சற்று தூரத்தில் சுமார் பதினெட்டு அடி உயரமுள்ள ஒரு அனுமார் கற்சிலையும் இருக்கிறது. இந்த அபூர்வமான சிற்ப வேலைகளையெல்லாம் 'போட்டோ' படங்கள் பிடித்துக்கொண்டு அவற்றைப்பற்றி சொல்லப்படும் கர்ண பரம்பரையான கதைகளையும் எழுதிக்கொண்டு போவதற்காக அந்த புதைபொருள் ஆராய்ச்சி இலாக்கா அதிகாரி வந்திருந்தார். அவர் அந்தக் கோயிலில் உள்ள சிற்பங்களை 'போட்டோ' எடுக்க முயன்றபோது அங்கிருந்த அர்ச்சகர்கள் போட்டோ எடுத்தால் சாமியின் சக்தி குறைந்து விடுமென்று தடுத்துவிட்டார்கள். அர்ச்சகர்களை மீறி அதிகாரிகள் ஒன்றும் - செய்யமுடியவில்லை. ஆனால் பாறையைக் குடைந்து வெட்டப்பட்டிருக்கிற கோயிலின் சுவர்களில் வியக்கத்தக்க வேலைப்பாடுடன் செதுக்கப்பட் டிருக்கிற சிற்பங்களைப் போட்டோ பிடிக்காவிட்டாலும், ஓவியத்திலாவது வரைந்து கொண்டு போக வேண்டுமென்று அந்த அதிகாரி ஆசைப்பட்டார். அர்ச்சகர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள். போட்டோ எடுப்பதில் திறமை மிக்க அந்த அதிகாரி ஓவியத்தில் அவ்வளவு கைத்திறம் உள்ளவரல்ல. அதனால் ஒரு ஓவியக்காரனைத் தேடவேண் டியதாயிற்று. அதற்காக விசாரித்தபோது என்னைப்பற்றிக் கேள்விப்பட்டு எனக்கு மிகவும் வேண்டியவரான ஒரு நண்பரைக் கூட்டிக்கொண்டு என் வீட்டுக்கு வந்தார்.
அவர் வந்த சமயத்தில் நான் ஒரு தனவானின் உருவப் படத்தை எண்ணைச்சாயத்தில் (Oil Paint) எழுதிக் கொண்டிருந்தேன்.
வந்தவர்களை வரவேற்றேன். எனது நண்பர் புதைபொருள் ஆராய்ச்சி அதிகாரியை எனக்கு அறிமுகப் படுத்தி அவர் நாமக்கல்லுக்கு வந்த காரியத்தை விளக்கிச் சொன்னார். அந்த அதிகாரியின் உயர்நிலைக்குத் தகுந்த மரியாதை காட்டி அவரை உபசரித்தேன். நான் அப்போது வரைந்து கொண்டிருந்த படத்தைப்பார்த்து, அவர் மிகவும் புகழ்ந்து பாராட்டிவிட்டு, என்னால் அவருக்கு ஆக வேண்டிய காரியத்தைச் சொல்லிக் கோயிலின் உட்புறத்தில் உள்ள சிற்பங்களைச் சித்திரமாக வரைந்து கொடுக்கக் கேட்டுக்கொண்டார். நான் ஒப்புக் கொண்டேன். அவர் களிப்படைந்து பல இடங்களில் தாமே எடுத்துவந்த அனேக போட்டோ படங்கள் அடங்கிய தொகுதியை (Album) என்னிடம் தந்து, பார்க்கச் சொன்னார். அதில் அநேக கோயில்கள், குளங்கள், கோபுரங்கள், சிற்பங்கள், சிலைகள், ஓவியங்கள், கல் வெட்டுகள் முதலியவற்றின் போட்டோ படங்களும், ஒவ்வொரு படத்தின் அடியிலும் அதைப்பற்றிய குறிப்பு களும் காணப்பட்டன. ஒவ்வொரு படத்தையும் கூர்ந்து பார்த்து இதற்கான குறிப்புகளையும் படித்துக் கொண்டே வந்தேன். அதில் பாண்டிய நாட்டுக் கல்வெட்டுகள் என்ற ஒரு பகுதி வந்தது. ஒரு குளக்கரையின் மேல் படித் துறைக்குப் பக்கமாக இருந்த ஒரு கல்வெட்டின் படம் காணப்பட்டது. அது இப்போது நாம் பாதைகளில் பார்க்கிற ஒரு மைல்கல்லைக் காட்டிலும் அகலமாகவும் உயரமாகவும் இருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் பழக்கத்திலிருந்த முறையில் அதில் எழுத்துக்கள் வெட்டப் பட்டிருந்தன. போட்டோ படத்தில் அந்த எழுத்துக்கள் நன்றாகத் தெரியவில்லை. ஆனால் படத்தின் கீழே இருந்த குறிப்புகளில் அந்தக் கல்லில் இருப்பது என்னவென்று எழுதப்பட்டிருந்தது. அது ஒரு சிறு செய்யுள் வடிவமாக இருந்தது. செய்யுளின் எதுகை, மோனை பார்க்கிற என்னுடைய இயல்பினாலோ என்னவோ செய்யுள் போன்ற அந்த சொற்றொடரை திருப்பித் திருப்பி மனதிற்குள்ளேயே படித்துப் பார்த்தேன். மின்சாரம் பாய்ந்தது போல் திடீரென்று ஒரு விஷயம் என் நினைவிற்கு வந்து உள்ளம் களித்து, உடல் சிலிர்த்து விட்டது.
அந்தக் கல்லிலுள்ள சொற்றொடர் அந்தக் குளத்துக்குள் நீரெடுக்க இறங்குகிறவர்-களுக்கு ஒரு எச்சரிக்கை. ”இந்தக் காலத்தில் குடி தண்ணீர் உள்ள குளங்களின் கரையின் மேல் நகரசபை, கிராமப்பஞ்சாயத்து முதலிய ’ஸ்தல ஸ்தாபனங்கள் ' இந்தக் குளத்தில் கை, கால் அலம்புகிறவர்களும், துணிகளைத் தோய்க்கிறவர்களும், ஆடு, மாடு முதலியவற்றை குளிப்பாட்டுகிறவர்களும், பாத்திரங்களைத் துலக்குகிறவர்களும், மற்ற வேறுவிதமான அசுத்தம் செய்கிறவர்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள்" என்று விளம்பரப் பலகைகள் போட்டிருக்கிறது போன்றது அந்தக் கல்வெட்டு. பலகைகளில் எழுதப்படுகிற இந்தக் காலத்து எச்சரிக்கை விளம்பரங்கள் வெகு சீக்கிரத்தில் மங்கி மறைந்துவிடுகின்றன. ஆனால் பாண்டியர் காலத்தில் நடப்பட்ட அந்தக் கல்வெட்டு எச்சரிக்கை இன்றைக்கும் உதவக்கூடியதாக இருக்கிறது.
அந்தக் கல்வெட்டிலிருந்த செய்யுள் போன்ற சொற்றொடரைப் பாருங்கள் :
"நீர்பிழை புரிவது ஊர்ப்பிழைத்தற்றால்
நெடுமுடி மன்னவன் கடுஞ்சினம் கொள்ளும்"
என்பது அந்த எச்சரிக்கை. பயன்தரக்கூடிய எதையும் பாடலாக எழுதிவைப்பது பழந்தமிழர்களுடைய மரபு என்ற பெருமையும் இந்தச் சிறு எச்சரிக்கையில் விளங்குகிறது. இனி இந்த சொல்லடுக்கின் பொருள்களையும் அதன் சுவையையும் கவனிக்க வேண்டும். ' நீர்பிழை புரிவது : தண்ணீரை அசுத்தப்படுத்துவது, ஊர்ப்பிழைத் தற்றால் : ஊருக்கே தீங்கு செய்வதைப்போன்ற குற்றமானதால், நெடுமுடி மன்னவன் கடுஞ்சினம் கொள்ளும் : அப்படி நீரை அசுத்தப் படுத்துகிறவர்களை அரசன் கடுமையாக தண்டிப்பான்' என்பது இதன் கருத்து.
இதில் இப்போது நாம் கவனிக்கவேண்டிய குறிப்பான விஷயம் என்னவென்றால் ’நீர்பிழை', 'ஊர்ப் பிழை' என்ற இரண்டு பதங்கள். 'நீர்பிழை' என்பது தண்ணீரை அசுத்தப்படுத்துவது, 'ஊர்ப்பிழை' என்பது ஊருக்கே தீங்கு செய்வது. தண்ணீரை அசுத்தப்படுத்துவது ஊரிலுள்ள எல்லா மக்களுக்கும் கெடுதி செய்வது போல என்று இந்தக் கல்வெட்டு சொல்லுகிறது.
நெடுங்காலத்திற்கு முன்னாலேயே குடி தண்ணீரைப்பற்றி இவ்வளவு சுகாதார அறிவோடு எச்சரிக்கை செய்துள்ள தமிழர்களா 'தண்ணீர் எப்படி யிருந்தாலும் அதைப் பழித்துக்கொண்டிருக்காதே, குடித்துவிடு' என்று பொருள் சொல்லும்படியான 'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்ற பழமொழியைத் தந்திருப்பார்கள்? அல்ல. அல்ல.
இந்தக் கல்வெட்டிலுள்ள ‘ நீர்பிழை' என்ற பதத்தைக் கண்டபின் அந்தப் பழமொழியின் உண்மையான உருவம் நமக்குத் தெரிகிறது. அது என்னவென்றால், 'தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே' என்பதுதான். இதன் பொருள் வெகு எளிது. அதாவது "பெற்று வளர்த்த உன் தாயாருக்கு ஒரு அபசாரம் செய்துவிட்டாலும் தண்ணீருக்கு அபசாரம் செய்யாதே' என்பதுதான். புதை பொருளாராய்ச்சி அதிகாரி என்னை நாடி வந்ததினால் தற்செயலாகக் கிடைத்த இந்த விளக்கம் பெரிய அதிர்ஷ்டம் தான். கோயிலில் உள்ள சிலைகளை ஓவியமாக எழுதி அவருக்குத் தருவதற்குமுன் அவருடைய போட்டோ ஆல்பத்திலிருந்த இந்த கல்வெட்டுப் போட்டோவை சித்திரத்தில் வரைந்து நான் வைத்துக்கொண்டேன். அதிகாரிக்கு வேண்டிய ஓவியங்களை வரைந்து கொடுத்து அவரை அனுப்பினவுடன், சென்னை மாகாண சுகாதார டைரக்டருக்கு எழுதி அவர் கோரிய ஆராய்ச்சி கைகூடிவிட்டதாகவும் அடுத்த சுகாதார வாரக் கொண்டாட்டத்தில் அதை விளக்கி ஒரு சொற்பொழிவு செய்யப் போவதாகவும் எழுதினேன். அவர் சுகாதாரவாரக் கொண்டாட்டம் நடத்துகிற-வரைக்கும் பொறுத்திருக்க விரும்பாமல், அடுத்த பத்து நாளைக்குள் சேலம் ஜில்லாவில் சிற்சில இடங்களில் காலரா இருந்ததை உத்தேசித்து, அதற்காக உத்தியோக முறையில் சுற்றுப்பிரயாணத் திட்டம் போட்டுக்கொண்டு சேலம் வந்து முகாம் செய்துவிட்டு, எச்சரிக்கை யில்லாமல் நாமக்கல்லுக்கு வந்துவிட்டார்.
'தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக் காதே' என்ற பழமொழிதான் காலகதியால் 'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்று மாறி விட்டது என்பதை விளக்கி, அதற்கு ஆதாரமாக நான் வரைந்து வைத்திருந்த கல்வெட்டுப் படத்தைக் காட்டி அதை நான் எப்படி அறிய முடிந்தது என்பதையும் சொன்னேன். ஸ்ரீ மாத்யூஸ் அவர்களுக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி மேலிட்டு என்னைக் கைகுலுக்கிக் கட்டித் தழுவிக்கொண்டார். வரையரை யில்லாமல் எனக்கு வந்தனம் கூறி நான் வரைந்து வைத்திருந்த கல்வெட்டுப் படத்தையும் அதன் விளக்கத்தையும் வாங்கிக்கொண்டு போனார். ஆதலால் 'தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே' என்றுதான் அந்தப் பழமொழி இருக்கவேண்டும்.
--------------
4. கற்றது கைமண்ணளவு
1904-ல் நான் கோயமுத்தூரில் நான்காவது படிவத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் முதன் முதல் கம்பராமாயணத்தில் ஒரு சிறு பகுதி எங்கள் பாடமாக வந்தது. ஸ்ரீ வெங்கட்ராம ஐயர் என்ற எங்கள் தமிழ்ப் பண்டிதர் அந்தக் கம்பராமாயணப் பாட்டுகளுக்கு வெகு ரசனையோடு ஆடிப்பாடிப் பொருள் சொல்லுவார். அப்போது என் மனதைக் கவர்ந்த பாட்டு
"பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவமனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீரடிபெயர்ப்பான்
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.'
என்ற சூர்ப்பணகையின் வருகையை வர்ணிக்கும் பாட்டு. இதை அந்த ஆசிரியர் அபிநயத்தோடு பாடிப் பொருள் சொன்னார். அன்றுமுதல் கம்பராமாயணப் பாட்டுகளில் எனக்கு ஒரு ஆசை உதித்தது, மேலும் நாங்கள் படிக்கிற காலத்தில் தமிழ்ப் பாடப் புத்தகத்திலுள்ள எல்லா செய்யுள்களையும் நாங்கள் மனப்பாடமாக ராகத்தோடு ஒப்பித்தாக வேண்டும். அப்படிப் பாடம் பண்ணி ராகத்தோடு ஒப்பிப் பதற்கும் கம்பராமாயணப் பாட்டு எனக்குக் கவர்ச்சி தந்தது. அதனால் நாளுக்கு நாள் கம்பராமாயணத்தில் எனக்கு அதிகக் கவனம் சென்றது. என் தமிழறிவு வளர்ந்த தற்கே கம்பராமாயணம்தான் முக்கிய காரணம்.
பள்ளிக்கூடத்தை விட்டபின் அடிக்கடி கம்பராமாயணச் செய்யுட்களை நானே படிப்பதிலும் அனேக புலவர்களுடைய கம்பராமாயணச் சொற்பொழிவுகளைக் கேட்பதிலும் ஆர்வம் மிகுந்தது. 1911-ம் ஆண்டில் காலஞ்சென்ற மோ. வே. கோவிந்தராஜய்யங்கார் என்பவருடைய கம்பராமாயணப் பிரசங்கத்தைக் கேட்க நேர்ந்தது. இவர் வட மொழியிலும் நல்ல புலமையுள்ளவர். வால்மீகி ராமாயணத்தையும் நன்றாக ஆராய்ந்தவர். வால்மீகி ராமாயணத்தையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டு இவர் கம்பனுடைய கவிதாமேதையைப் புகழ்ந்து பேசிய சொற்பொழிவைக் கேட்டு நான் பூரிப்படைந்து நானே அவருடைய நட்பை நாடினேன். வெகு விரைவில் நாங்களிருவரும் வெகு நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.
அவரிடத்தில் முறைப்படி கம்ப ராமாயணப் பாடங் கேட்கத் தொடங்கினேன். அப்படிப் படித்துக்கொண்டு வரும்போது ‘மந்தரை சூழ்ச்சி 'ப் படலத்தில்
வெயின் முறைக்குலத் திறையவன் முதலிய மேலோர்
உயிர்முதற் பொருள் திறம்பினும் உரைதிறம்பாதோர்
மயில்முறைக் குலத்துரிமையை மனுமுதன் மரபைச்
செயிருறப் புலைச் சிந்தையால் என்சொனாய் தீயோய்
என்ற பாட்டுக்கு பொருள் செய்யவேண்டிய சமயம் வந்தது. இந்தப் பாட்டு கைகேசியானவள் கூனியைக் கடிந்து பேசுகிற பேச்சு. கூனியானவள் "கைகேசி! நாளை ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போகிறார்களாம். அதனால் உனக்கும் உன் மகன் பரதனுக்கும் கேடுகாலம் வந்துவிடும். நீ பரதனுக்குப் பட்டம் கட்ட உடனே முயற்சி செய்" என்று தூண்டுகிறாள். அதைக் கேட்ட கைகேசி கடுங்கோபங்கொண்டு சீறுகிற பேச்சு தான் இந்தப் பாட்டு. "அடி! கூனி! உன்னுடைய சிறு மதியால் என்ன சொல்லைச் சொல்லிவிட்டாய்! இந்தக் குலம் சூர்யகுலம். அதில் தோன்றிய மன்னர்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி மூன்றையும் இழந்துவிட நேரிட்டாலும் முறைதவறிய காரியம் செய்ய மாட்டார்கள். அவர்கள் மயிலைப்போல முறை தவறாத குணமுடையவர்கள். மனுவின் சந்ததியைச் சேர்ந்த வர்கள். அப்படிப்பட்ட வம்சத்தின் பரம்பரையான பெருமையைக் கெடுக்க, மூத்தவனாகிய ராமனை விட்டு இளையவனாகிய பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டுமென்று கேட்கச் சொல்லுகிறாயே! அடி கொடியவளே!" என்கிறாள் கைகேசி. இதில் 'மயிலைப்போல முறை தவறாத குலம்' என்று சொல்லப்படுகிறது. முறை தவறாத தன்மைக்கு மயிலை உபமானமாகச் சொன்னதின் மர்மம் என்ன? மற்ற பட்சிகளிடத்தில் இல்லாமல் மயிலுக்கு மட்டும் உள்ள எந்த சிறப்பு இதற்குப் பொருந்தும் என்பது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை. அதற்காக நாங்கள் புரட்டிப் பார்த்த எந்த அகராதியிலும் இதற்குச் சரியான பொருள் கிடைக்கவில்லை. ஒரு நூலில் ’மயில் முதலில் பொரித்த குஞ்சுக்கு சிறகு முளைத்த பின்தான் இரண்டாவதற்குச் சிறகு முளைக்கின்றது. அது போல இராமனுக்குப் பட்டம் கட்டியபின் பரதனுக்குப் பட்டம் கட்டுதல் முறைமை என்பதாம்' என்று அச்சடிக்கப் பட்டிருந்தது. இதைப்போல அறிவில்லாத பொருளை அச்சடித்திருத்கிறார்களே என்று வியப்புற்றோம். எல்லாப் பட்சிகளிலும் முதலில் பொரித்த குஞ்சுக்குத்தான் முதலிற் சிறகு முளைக்கிறது. இதை மயிலுக்குமட்டும் சொல்வது மடமை. ஆதலால் அந்தப் பொருள் பொருந்தாமை கண்டு நாங்கள் பலபேரிடம் இதைக் கேட்டும் பயனடைய வில்லை. இது என்னமோ ஏதோ விளங்கவில்லையே என்று விட்டுவிட்டோம்.
1915-ம் ஆண்டில் நான் 'அமெரிக்க விஞ்ஞானி ' (Scientific American) என்ற ஒரு ஆங்கில சஞ்சிகையைப் படித்தேன். அது உலகத்தில் விஞ்ஞானம் அடைந்து வருகிற முன்னேற்றத்தை அப்போதைக்கப்போது வெளி யிடுகிற ஓர் உயர்ந்த சஞ்சிகை. அந்த சஞ்சிகை நல்ல நல்ல படங்களுடன் பளப்பளப்பான காகிதத்தில் வெகு அழகாக அச்சடிக்கப்பட்டிருக்கும். அதிலுள்ள படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வரும்போது ஒரு அழகான மயில் தன் தோகையை முழுவதும் விரித்து ஆடுவதுபோலவும் அதன் அருகில் வேறு சில மயில்கள் இருப்பதுபோலவும் வரைந்திருந்த ஒரு படம் என்னைக் கவர்ந்தது. வெகுநேரம் அந்தப் படத்தின் அழகைப் பார்த்துவிட்டு அதன்கீழ் அச்சடித்திருந்த விஷயத்தைக் கவனித்தேன். அதில் 'பக்ஷசாஸ்திர ஆராய்ச்சி' என்ற தலைப்புடன் ஒரு கட்டுரை இருந்தது. அதைப் படித்தேன்.
அதில் ஒரு பெரிய அமெரிக்கப் பிரபு ஏராளமான பணச்செலவில் ஒரு பக்ஷிசாஸ்திர ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தி பல சாதிப் பட்சிகளின் இயல்பைக் கண்டறிவதற்கான ஏற்பாடு செய்திருந்தார். ஒரு வெகு பரந்ததும் மரங்களடர்ந்ததுமான வனத்தில் ஒவ்வொரு சாதிப் பட்சிக்கும் ஒவ்வொரு இடம் ஏற்படுத்தி அந்தப் பறவை எப்படி எப்படி முட்டை வைத்து எப்படி எப்படிக் குஞ்சு பொரித்துக் குடும்பம் நடத்துகிறது என்பதையெல்லாம் வெகு நுணுக்கமாகப் பதிவு செய்துகொண்டு ஆராய்ந்து
வந்தார். அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதிதான் நான் பார்த்த மயில் படமும் அதைப்பற்றிய கட்டுரையும். அந்தக் கட்டுரையில் ஒரு மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும் என்றும் அப்படித் தாய்ப் பறவையோடு குஞ்சுகளெல்லாம் சேர்ந்திருக்கிற சமயத்தில் கலாபம் விரித்து ஆடவேண்டிய சந்தர்ப்பம் வரும்போ-தெல்லாம் அந்தக் குஞ்சுகளில் மூத்த குஞ்சுதான் முதலில் கலாபம் விரிக்கும் என்றும், அதற்குப் பிறகுதான் மற்றக் குஞ்சுகளெல்லாம் கலாபம் விரிக்கும் என்றும், கண்டறியப்பட்டதாக எழுதியிருந்தது. மூத்த குஞ்சு என்பதற்கு என்ன அடையாளம் என்றால் ஒவ்வொரு குஞ்சும் முட்டையிலிருந்து வெளிவந்த உடனே அங்குள்ள ஆராய்ச்சிக்காரன் ஒவ்வொரு குஞ்சின் காலிலும் ஒவ்வொரு நிறமான வளையத்தை - மாட்டிவிட்டுப் பதிவு செய்துகொண்டான் என்ற விளக்கமும் எழுதப்பட்டிருந்தது.
இதைப் படித்த உடனேயே எனக்கு ஒரே மகிழ்ச்சிப் பெருக்கு உண்டாகிவிட்டது. 'மயில்முறைக்குலம்' என்று கம்பன் பாடியிருப்பது இதுதான் என்று தீர்மானித்து அதை எனது நண்பர் கோவிந்தராஜய்யங்காரிடம் சொன்னேன். அவரும் அதை ஒப்புக் கொண்டார்.
அதுமுதல் இதைக் கண்டுபிடித்துவிட்ட இறுமாப்பு, என் மனதில் இடங்கொண்டது. பல இடங்களிற் சென்று கம்ப ராமாயணத்தைப்பற்றிப் பேசும்போதெல்லாம் இதை எப்படியாவது இழுத்துப் புகுத்தி இந்த ‘மயில் முறை' என்பதற்கு மற்ற எவருக்கும் தெரியாத பொருளை நான் சொல்லுவதாகச் சொல்லிப் பெருமை யடித்துக்கொள்வதில் ஒரு பிரியம் வந்துவிட்டது. கம்ப ராமாயணம் படித்தவர் என்ற யாரைக் கண்டாலும் நான் இந்த 'மயில் முறைக்குலம் ' என்ற பாட்டுக்கு அவர்களைப் பொருள் கேட்பேன். அவர்கள் விழிப்பார்கள். நான் ஆனந்தம் அடைவேன். வெகு நேரம் அவர்களைத் திண்டாடச்செய்து அதன்பிறகு என்னுடைய பொருளைச் சொல்லுவேன். அவர்கள் வியப்புற்று என்னைப் புகழ்வார்கள். சில பேர் இப்படி நான் பொருள் சொல்லுவதற்கு என்ன ஆதாரம் என்று கேட் பார்கள். உடனே நான் “இந்த அர்த்தம் பக்ஷி சாத்திரத்தை அறிந்தவர்கள் தான் சொல்லமுடியும்" என்று மட்டும் பக்ஷிசாத்திரத்தைக் கரை கண்டுவிட்ட நிபுணன் போல் காட்டிக்கொள்வேன். 'அமெரிக்க விஞ்ஞானி' என்ற பத்திரிகையில் பார்த்ததாகச் சொல்ல மாட்டேன்.
இப்படியாகக் கொஞ்ச காலம் உண்மையற்ற பெருமையில் களிப்புற்றுக் கொண்டிருந்தேன்.
கரூர் எனக்கு மாமனார் வீடு. அடிக்கடி அங்கே போய் தங்குவது வழக்கம். அப்படி ஒருமுறை அங்கே தங்கியிருந்தபோது அவ்வூர் பசுபதீஸ்வரசுவாமி கோவிலில் யாரோ ஒரு பெரியவர் தொடர்ச்சியாகக் கம்பராமாயணச் சொற்பொழிவு செய்துவருவதாகக் கேள்விப்பட் டேன். சொற்பொழிவைக் கேட்கப் போனேன். சொற்பொழிவு வெகு நன்றாக இருந்தது. சுமார் எழுபது வயதுள்ள ஒரு கிழவர் இனிமையான குரலில் பாட்டுக்களைக் குதூகலத்தோடு பாடி வியக்கத்தகுந்த முறையில் பொருள் சொல்லுவதைக் கேட்டு களிப்படைந்தேன். தொடர்ச்சியாக அவருடைய சொற்பொழிவைக் கேட்பதற்கென்றே பல நாள் அங்கு தங்கினேன். அந்த சொற்பொழிவாளரின் பெயர் ஸ்ரீ வெங்கட்ரமண ஐயங்கார் என்பது நினைவு. நான் போயிருந்தபோது அவர் சொல்லிக் கொண்டிருந்த பகுதி விபீஷணன் அடைக் கலப் படலம்.
எவ்வளவு இனிமையாகப் பாடி எத்தனை அழகாகப் பொருள் சொன்னாலும் இந்தக் கிழவருக்கு 'மயில் முறை' என்பதற்கு நான் கண்டுபிடித்திருக்கிற பொருள் தெரிந்திருக்க நியாயமில்லை. இவர் 'அமெரிக்க விஞ்ஞானி' சஞ்சிகையைப் பார்த்திருக்க முடியாது. இவரை நெருங்கி அதைப்பற்றி இவரையும் கொஞ்சம் ‘கிண்டல்' செய்து திண்டாடவிட்டு நம்முடைய பொருளைச் சொல்ல வேணும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.
ஒருநாள் அவரைப் பார்க்க என்று அவர் தங்கியிருந்த வீட்டுக்குப் போனேன். என்னைப்போலவே அவரைப் பார்க்க வேறு சில கம்பராமாயண ரஸிகர்களும், தமிழ்ப் பண்டிதர்களும் அங்கு வந்திருந்தார்கள். அந்தக் காலத்தில் எனக்குக் கவிஞன் என்ற பட்டமில்லை. வெறும் சித்திர வித்வான் என்றும், தமிழில் ஆர்வம் உள்ளவன் என்றும் அறிமுகப்படுத்தப் பட்டேன். வெகு வைதீக வழக்கங்களுடைய அந்த வெங்கட்ரமணர் என்னை இனிய முகத்துடன் பழைய தமிழறிஞர்களுக்குள்ள பணிவு, தணிவுகளுடன் வரவேற்று உபசரித்தார். கம்பராமாயணத்திலும், திருக்குறளிலும் வேறு பல தமிழ் இலக்கியங்களிலுமுள்ள பல செய்யுள்களையும் அங்கங்கே பாடிக்காட்டி எங்களுடன் அளவளாவினார்.
வெகு நேரம் கழித்து விடை பெற்றுக்கொள்ளப் போகிற சமயத்தில் நான் ஏதோ பொருள் தெரியாமல் கேட்கிறது போலப் பாசாங்கு பண்ணிக்கொண்டு “மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் 'மயில்முறைக் குலத்துரி மையை ' என்று வருகிறதே, அதில் 'மயில் முறை' என்பது என்ன?" என்று கேட்டுவிட்டு, அதற்கு பொருள் தெரியாமல் விழிக்கப்போகிறார் என்று அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவர் முகக்குறிகளில் வியப்போ, திகைப்போ, விழிப்போ காணப்படவில்லை. வெகு நிதானமாக "ஓ அதுவா! அது என்னவென்றால் காட்டிலே மயில் இயல்பாக வசிக்கும்போது ஒவ்வொரு தாய் மயிலும் அதன் குஞ்சுகளும், குஞ்சுகள் நன்றாக வளர்ந்த பிறகும் ஒரே குடும்பமாக எங்கே போனாலும் சேர்ந்தே போகும். இரை தேடுவதானாலும் அக்கம்பக்கமாகத்தான் இருக்கும். இப் படி ஒவ்வொரு மயில் குடும்பமும் தனித்தனிக் கூட்ட மாகத்தான் சஞ்சரிக்கும். அப்படி இருக்கும்போது அவைகளுக்குள் களிப்பு வந்து கலாபம் விரிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் மூத்த ஆண் குஞ்சுதான் முதலில் தோகையை விரித்து ஆடும். அதன் பிறகு தான் இளைய ஆண் குஞ்சுகள் தோகையை விரிக்கும். இப்படி முதலில் கலாபம் விரிக்கிற உரிமை மூத்த ஆண் குஞ்சுக்குத்தான் உண்டு என்பதுதான் இந்த ‘மயில் முறைக் குலத்துரிமை ' என்பது" என்றார்.
உடனே என் தலை சுழல ஆரம்பித்துவிட்டது. என் மூக்கு அறுபட்டு முகத்தில் கரி தடவிவிட்டது போன்ற ஒரு கவலை வந்துவிட்டது. 'அடடா ! இந்த பொருள் இந்தக் கிழவருக்கு எப்படித் தெரிந்தது! என்னைப் போல 'அமெரிக்க விஞ்ஞானிபைப்' பார்த்த யாரோ இவருக்குச் சொல்லியிருக்க வேணும். இல்லாவிட்டால் இது இவருக்கு எப்படித் தெரியும்?' என்றெல்லாம் எண்ணி ஏங்கி “இது தங்களுக்கு எப்படித் தெரிந்தது? இதற்கு என்ன ஆதாரம்" என்றேன். அதற்கு உடனே அவர் “இது நம்முடைய புராணங்களில் சொல்லப் பட்டிருக்கிறது. நம்முடைய புராணங்களில் எத்தனையோ அருமையான அனுபவ அறிவுகள் நிறைந்திருக்கின்றன. ஆனால் புராண நூல்களை இப்போது யாரும் படிப்பதில்லை. நாங்கள் பாடங் கேட்டுக்கொண்ட காலத்தில் பல புராணங்களைப் படித்தறிந்த பிறகுதான் பண்டிதனாக முடியும். தமிழாசிரியர்களிடத்தில் முறைப் படி பாடங் கேட்டுக்கொள்ளுகிற வழக்கம்தான் இப்போது இல்லையே. அதனால் தமிழ் நூல்களில் அனேக உண்மைகள் நாம் அறிய முடியாமலே போய்விட்டன" என்றார்.
“இது எந்தப் புராணத்தில் எப்படி சொல்லப்பட் டிருக்கிறது?" என்று கேட்டேன்.
அவர் ஒரு புராணத்தின் பெயரைச் சொல்லி அந்தப் புராணத்தில் அதற்கான ஒரு பாட்டையும் பாடினார். அந்தப் பாட்டில் அவசியமான இரண்டடிகள் பின்வருமாறு:
"பலாவம் பொழிலுறை ஒரு தாய் உயிர்த்த
பலமயிற்குள் கலாபம் புனைந்த களிமயிலே மூத்ததெனக் கொள்க!'
அதன் பொருள் : 'கானகத்திலே வசிக்கின்ற ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல மயில்களும் சேர்ந்திருக்கும்போது எந்தக் குஞ்சு முதலில் கலாபம் விரிக்கின்றதோ அது தான் மூத்த குஞ்சு என்று தீர்மானம் செய்துகொள்.' என்பது. இதை அவர் சொன்னபிறகு, இந்த விஷயத்தை அமெரிக்க விஞ்ஞானி என்ற பத்திரிகையிலிருந்து நான் கண்டுபிடித்து விட்டதாக எனக்கிருந்த கர்வம் அழிந்தது. இந்தப் பாட்டையும், இந்தப் பாட்டு எந்தப் புராணத்தில் இருக்கிறதோ அந்தப் புராணத்தின் பெயரையும் ஒரு துண்டுக் காகிதத்தில் குறித்துக் கொண்டேன். ஆனால் பாட்டை மட்டும் உடனே மனப் பாடம் செய்துகொண்டு அந்தத் துண்டுக் காகிதத்தை என்னுடைய பெட்டியில் எங்கேயோ வைத்துவிட்டேன்.
சொற்பொழிவு செய்ய அவசியமாக மனதிலிருக்க வேண்டியது இந்த இரண்டு அடிகள் தானே. அதனால் இந்தப் பாட்டு எந்தப் புராணத்தில் இருக்கிறதோ அந்தப் புராணத்தைப் படிக்க வேண்டுமென்ற சிரமத்தைக்கூட மேற்கொள்ளவில்லை
அதனால் அந்தத் துண்டுக்காகிதத்தை அடியோடு மறந்துபோய் அது காணாமற் போய்விட்டது.
அதற்குப்பிறகு நான் சொற்பொழிவு செய்யும்போதெல்லாம் 'மயில் முறைக்குலம் ' என்பதைப்பற்றிச் சொல்ல வேண்டியபோது அந்தப் புராணப்பாட்டின் இரண்டடிகளைச் சொல்லி, நான் 'அமெரிக்க விஞ்ஞானி' யில் கண்டதையும் சொல்லுவேன். இப்போதுதான் அமெரிக்கர் ஒருவர் ஆராய்ந்து கண்டுபிடித்த இந்த மயில் முறை இயல்பு நெடுங்காலத்துக்கு முன்னாலேயே தமிழ் இலக்கியத்தில் உள்ளது என்றும் பெருமை பேசி சொற்பொழிவாற்றி வந்தேன்.
சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால் காலஞ் சென்ற உயர்திரு. வெள்ளக்கால் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் அப்போது நாமக்கல்லில் வக்கீலாக இருந்த அவருடைய உறவினர் ஸ்ரீ வெங்கடபதி முதலியார் வீட்டிற்கு விருந்தினராக வந்தார். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் மிகப்பெரிய மனிதர். கம்ப ராமாயணத் தில் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர். கம்பராமயணத்தை தம் உயிர் போல் கருதியவர்.
அவர் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரில் கம்ப ராமாயணத்தில் ஆர்வம் உள்ளவர்களைத் தாமே சென்று பார்த்துவிட்டு கம்பராமாயணத்தைப்பற்றி அளவளாவுவார். அந்த முறையில் என்னைப்பற்றிக் கேள்விப்பட்ட அவர் என்னைப் பார்க்க என் வீடு தேடிவந்தார். அவர் வரப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது. அவரைப் பற்றிக் கேள்விபட்டிருந்தேன் என்றாலும் அதற்கு முன் அவரைப் பார்த்ததில்லை.
அவருடன் வந்த அவருடைய உறவினர் அவர் இன்னார் என்று எனக்குச் சொன்னவுடன் வயதிலும், படிப்பிலும் என்னைக்காட்டிலும் எவ்வளவோ பெரியவர், அவர் என்னைப் பார்க்க என் இடத்தைத் தேடி வந்தாரே என்ற மகிழ்ச்சியுடன் அவர் வரவை பெரும் பாக்கியமாகக் கருதி நான் “என்ன மாதவம் செய்தது இச்சிறு குடில்" என்று அவரை வரவேற்று வணங்கினேன்.
அவர் உடனே அதைத் திருப்பி “என்ன மாதவம் செய்தது இச்சிறு உடல் ” என்று சொன்னார். அப்போது நானடைந்த பெருமை அளவிடற்கரிது.
எல்லோருமாக உட்கார்ந்து சுமார் ஒரு மணி நேரம் கம்பன் கவித்திறத்தைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவரிடத்திலும் இந்த ‘மயில் முறைக்குலம்' என்பதைப்பற்றி கேட் டேன். அவரும் உடனே அந்த 'பலாவம் பொழிலுறை' என்ற புராணப் பாட்டைச் சொல்லி, ஏற்கனவே அதைப்பற்றி தம்முடைய கம்பராமாயண ஆராய்ச்சியில் விளக்கியிருக்கிறதாகச் சொன்னார். அதன் பின் திருக்குறளில் வெகு ரஸமாக அநேக விஷயங்களை நான் அதுவரை கேட்டிராத முறையில் சொன்னார். அந்த இனிமைமிக்க திருக்குறள் பேச்சில் என்னையே முற்றிலும் மறந்துவிட்ட நான் அந்த ‘பலாவம் பொழி லுறை ' என்ற பாட்டு எந்தப் புராணத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் கேட்டுக்கொள்ளத் தவறி விட்டேன்.
அதன் பிறகு இதுவரையிலும் இந்தப் பாட்டு எந்தப் புராணத்தில் இருக்கிறது என்று அறிந்துகொள்ள வாய்ப்பே இல்லாது போய்விட்டது.
சமீபத்தில் நான் திருநெல்வேலி போயிருந்தேன். அங்கே மதுரை திரவியம் தாயுமானவர் கல்லூரிக்கு வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரவர்களுடைய குமாரர்கள் பரிசாகக்கொடுத்த சுப்பிரமணிய முதலியாருடைய நூல்களை ஒரு 'நூல் நிலையம்' ஆக்கி அந்த நூல் நிலையத்தை என்னைத் திறப்புவிழா செய்யச் சொன்னார்கள். அப்போது நான் வெ. ப. சுப்பிரமணிய முதலியாரவர்கள் என் வீட்டிற்கு வந்ததையும், இந்த ’மயில் முறை' விஷயமாகப் பேசினதையும் சொல்லி அந்த 'பலாவம் பொழிலுறை ' என்ற பாட்டு எந்தப் புராணத்தில் இருக்கிறது என்பது தெரியவில்லை என்பதும் சொல்லி, அதை அறிந்தவர்கள் யாராவது இருந்தால் எனக்கு அறிவிக்க வேண்டும் என்றும் சொன்னேன். அப்போது எனக்கு யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை. நான் நாமக்கல்லுக்கு வந்தபின் திருநெல்வேலி அரசியலார் போதனாமுறைப் பள்ளி மாணவர் ஒருவர் எனக்கு இதைப்பற்றி எழுதியிருக்கிறார். அவர் என்னுடைய திருநெல்வேலி சொற்பொழிவைக் கேட்டவர். அவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரவர்களே இந்த ‘பலாவம் பொழிலுறை' என்ற பாட்டைப் பற்றி 'அவருடைய ' கம்பராமாயண ஆராய்ச்சி ' நூலில் இந்தப் பாட்டு தணிகைப் புராணத்தில் களவுப் படலத்தில் 244-வது செய்யுளாக இருக்கிறதாக விளக்கி யிருக்கிற தாகவும் எழுதியுள்ளார்.
அப்பாடா! இத்தனை நாளாயிற்று இந்தப் பாட்டு எதிலிருக்கிறது என்று அறிந்துகொள்ள. அதுவும் கடந்த சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளாக நான் கேட்ட எந்தத் தமிழ்ப் பண்டிதரும் பெரிய பெரிய படிப்பாளிகளும் இதை எனக்குச் சொல்லக்கூடவில்லை. கடைசியில் ஒரு மாணவர் இது இருக்கிற இடத்தைக் காட்டினார். ஆதலால் நான் 'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு' என்பதை உணர்கின்றேன்.
--------------------
5. ஊதுவத்தி கிண்ணம் செய்த உதவி
ஆம்! ஊதுவத்தி சொருகிவைக்கிற ஒரு சாதாரண 'நிக்கல் கிண்ணம்' சமய சஞ்சீவிபோல் எனக்கு உதவியது. நாம் மிகவும் அலட்சியம் செய்துவிடத் தகுந்த அனேக சிறு நிகழ்ச்சிகள் சிற்சில சமயங்களில் ஆச்சர்யப் படும்படியான காரியங்களைச் சாதித்து விடுகின்றன. அந்த வெகு சிறிய நிகழ்ச்சி திடீரென்று உண்டாக்குகின்ற உணர்ச்சியினால் தீராத சிக்கல்கள் தீர்ந்துவிடுகின்றன. நடக்காத காரியம் நடந்துவிடுகிறது. மனிதனுக்குள் மறைந்து இருந்து கொண்டு சாதார, சமயங்களில் செயலற்றுக்கிடக்கிற ஒரு நம்பிக்கையை அந்த சிறு நிகழ்ச்சி கிண்டிவிடுகிறது. அதனால் குருட்டு நம்பிக்கை என்று மறுக்கின்றவர்கள்கூட மறந்தாற் போல் அந்த திடீர் உணர்ச்சிக்கு ஆளாகிவிடுகிறார்கள். தான் என்ற அகந்தை கூட தனக்குப் புலப்படாத ஒரு சக்திக்குத் தலைவணங்கிவிடுகிறது. என்னைப் பார்த்து ஒரு அம்மாள், “என்னையா! ஒங்களை ரொம்ப நவ்ல மனுசருன்னு நினைச்சேன். மட்டு மரியாதையில்லாமெ நீங்க பேசரதைப் பார்த்தால் ரொம்ப அல்ப்ப சாவுகாசமாக வல்ல இருக்குது? இப்படிண்ணு தெரிஞ்சிருந்தா இந்த ஊட்டுக் குள்ளேயே விட்டிருக்க மாட்டமே. நீங்க மூளியும் மூக்கரையுமாய் படமெழுதியிருக்கிற நேர்த்திக்கு பேசின பேச்சுக்கு மேலே இனாம் வேறே தரணுமா? ஏன்? நாதியத்த பணந்தானே, போகட்டு முண்ணு அந்த செட்டியார் எழுதித் தந்துபுட்டாரோ? அந்த செட்டியாரே வரட்டும், அவரோடு பேசிக் கொள்ளுங்கள். போங்க வெளியிலே. ”டேய்! வெள்ளையா ! இவுகளை வெளியே போகச்சொல்லி கதவைச் சாத்து" என்று சொன்ன சமயத்தில்தான் அந்த ஊதுவத்தி கிண்ணம் வந்து உதவி செய்தது. அந்தக் கதையைக் கேளுங்கள். இந்தக் கதை உண்மையாக நடந்தது. ஆனாலும் இதில் சம்பந்தப்பட்ட ஊர்களையும் பேர்களையும் மாற்றி எழுதியிருக்கிறேன். ஏனென்றால் படிப்பவர்களுக்கு இது இன்பமளித்தாலும் இதில் சம்பந்தப் பட்டவர்களுடைய உறவினர்களுக்கு வேறுவித உணர்ச்சிகளை உண்டாக்கி அவர்களை நான் ஏளனம் செய்வதாக எண்ணி விடலாம்.
1912-ம் வருஷத்தில் அப்போது நம்மை ஆண்டு கொண்டிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு மகுடாபிஷேகம் செய்ய டில்லியில் ஒரு தர்பார் நடந்தது. அதைப் போன்ற வைபவம் இந்தியாவில் எங்கும் நடந்ததில்லை. அதில் ஒரு கண்காட்சியும் நடந்தது. அந்தக் கண்காட்சியில் நான் வரைந்த ஒரு பெரிய ஓவியமும் இடம் பெற்றது. அந்தப் படத்தைப் பாராட்டி எனக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளிக்கப்பட்டது. அந்தப் பதக்கத்தை டில்லி செங்கோட்டையில் நடந்த ஒரு விருந்தில் எனக்கு மேரி மகாராணி என் உடையில் அலங்கரித்து விட்டார்கள். அதனால் அதுவரையிலும் விளம்பர மில்லாமலிருந்த என் ஓவியத் தொழிலுக்கு கிடைப்பதற்கரிய கிராக்கி ஏற்பட்டது.
அதுவரையிலும் சித்திர வேலையைத் தொழிலாக நடத்தத் தயங்கிக்கொண்டிருந்த நான் மிக்க தைரிய மடைந்தேன், பலருடைய இருப்பிடத்திற்கும் நானாகப் போய் படம் எழுதிக்கொள்ளும்படி 'ஆர்டர் ' வாங்க அலைந்தது போய் 'ஆர்டர்கள் ' என்னைத் தேடிவர ஆரம்பித்தன. அதனால் பத்து, இருபது கிடைத்தாலும் போதுமென்று படமெழுதிக் கொண்டிருந்த நான் நூறு, இருநூறு அதற்கு மேலும் கேட்க ஆரம்பித்து நூறு ரூபாய்க்குக் குறைவான வேலைகளை வாங்குவதில்லை என்ற வழக்க முண்டாகி விட்டது. என்னுடைய வேலை சிறந்ததோ அல்லவோ, டில்லியில் சக்கரவர்த்தியே மெச்சிப் பரிசளித்த சித்திரக்காரனல்லவா? அதற்காக நான் கேட்ட கூலி கிடைக்கலாயிற்று.
அந்த சமயத்தில் செட்டிமார் நாட்டில் திரு. அண்ணாமலை செட்டியார் என்ற ஒரு தனவணிகர் இறந்துபோனார். அந்த அண்ணாமலை செட்டியாருடைய குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவரான ஒருவர் நாமக்கல்லில் இருந்தார். அவர் எனக்கு மிகவும் பழக்கமானவர். நான் டில்லியில் பரிசு பெற்று நாமக்கல்லுக்கு வந்தபோது என்னைப் பாராட்டினவர்களில் ஒருவர். அந்த நண்பர் செட்டிமார் நாட்டிற்குப் போனபோது அந்த அண்ணாமலை செட்டியாருடைய குடும்பத்தாரிடம் என்னைப்பற்றிப் பேசி, என்னைக்கொண்டு அந்த அண்ணாமலை செட்டியாரவர்களுடைய உருவப்படம் ஒன்றை வரைந்து வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்தார். அதே நண்பர் என்னிடம் வந்து அதைச் சொல்லி அந்த வேலையை எனக்கு வாங்கிக் கொடுக்க செட்டிமார் நாட்டுக்கு என்னை அழைத் துச் சென்றார்.
அண்ணாமலை செட்டியாருடைய மக்கள் என்னை அன்புடன் வரவேற்று செட்டியாருடைய சிறு 'போட்டோ ' ஒன்றை என்னிடம் தந்து அதிலுள்ள உருவத்தில் போட்டோ பிடிப்பதற்கென்று அவர் அணிந்திருந்த தலைப் பாகையை எடுத்துவிட்டு நிற்கிற மாதிரியாக அவருடைய முழு உருவத்தில் எண்ணை சாயத்தில் (Oil Paint) படம் எழுதித் தரவேண்டும் என்று சொன்னார்கள். நான் சம்மதித்தேன். அதற்கு என்ன விலை கொடுக்க வேணும் என்று கேட்டார்கள். அதுவரைக்கும் நான் அவ்வளவு பெரிய படம் வரைந்ததில்லை. அதற்கு என்ன கேட்பது என்று எனக்கே தோன்றவில்லை. அந்த அளவு படத்திற்கு மற்ற தொழிலாளர் என்ன கேட்பார்கள் என்பதும் தெரியாது. எனக்குள் ஏற்பட்ட குழப்பத்தை சமாளித்துக் கொண்டு நான் அந்த வேலைக்கு ஆயிரம் ரூபாயும் மற்றும் பிரயாணச் செலவுகளும் தரவேணும் என்று கேட்டேன். எந்தப் பொருளுக்கு என்ன விலை சொன்னாலும் அதை வாங்குகிறவர்கள் கொஞ்சமாவது விலையைக் குறைத்துக் கேட்காமல் வாங்கிவிடுவது வழக்கமில்லையல்லவா? அந்தப் பழக்கத்தில் கொஞ்சம் பேரம் நடந்தது. கடைசியாக என்னைக் கூட்டிக்கொண்டு போன நண்பருடைய விருப்பத்தின்படி நான் அந்தப் படத்தை எழுநூற்று ஐம்பது ரூபாய்க்கு எழுதித்தர ஒத்துக்கொண்டேன்.
மூன்று மாதகாலம் அதே வேலையாக நாமக்கல்லில் அந்த படத்தை எழுதிப் பூர்த்தி செய்து எடுத்துக்கொண்டு அண்ணாமலை செட்டியார் வீட்டிற்குப் போனேன். படம் அவர்களுக்கு முற்றிலும் திருப்தியளித்தது. படத்தை வீட்டின் முன்புறத்தில் ஒரு நல்ல இடத்தில் வைத்து அதற்கு ’வெல்வெட்' துணியில் சித்திர வேலை செய்த படுதா ஒன்றை உடனே தயார் செய்து அது வேண்டும் போது சுலபமாக விலகக்கூடிய முறையில் அமைத்தார்கள்.
எனக்கு ஒரு விருந்து நடத்தினார்கள். அந்த விருந்துக்கு அண்ணாமலை செட்டியாருக்கு நெருங்கியவர்களாக இருந்த உறவினர்களையும் அழைத்திருந்தார்கள். விருந்திற்குப்பின் எல்லாரும் அந்தப் படத்திற்கு முன்னால் உட்கார்ந்து தாம் பூலம் நடந்தது. அந்த சமயத்தில் ஒரு வெள்ளித் தட்டத்தில், வேஷ்டி, புடவை, தேங்காய், பழம், புஷ்பம் முதலிய மங்கலப் பொருள்களோடு எழுநூற்றைம்பது ரூபாய்க்கு ஒரு உண்டியலும் ரொக்கம் நூறு ரூபாயும் வைத்து எனக்கு வழங்கப்பட்டது. நான் வந்தனம் சொல்லி வாங்கிக் கொண்டேன். அதுவரையிலும் படத்தின் படுதா விலக்கப் பட்டிருந்தது. அதன்பிறகு வீட்டுக்காரர் படத்தைப் படுதாவால் மூடினார். விருந்தினர்கள் விடை பெற்றுக்கொள்ள வேண்டிய சமயம். அந்த சமயத்தில் கறுத்துப் பருத்த ஒரு மனிதன் வெகு வேகமாக உள்ளே வந்து மேல் வேட்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டு வீட்டுக்காரருக்கு கும்பிடு போட்டார். “அட! கருப்பையா! எப்படா வந்தாய்?" என்றார் வீட்டுக்காரர்.
“இப்பத்தான் வர்ரேனுங்கோ” என்றான் கருப்பையா. இந்தக் கருப்பையா என்பவன் படத்தில் இருக்கிற அண்ணாமலை செட்டியாருக்கு மிகவும் பிரியமான அந்தரங்க வேலைக்காரன். அளவற்ற எஜமான விசுவாசமுள்ளவன். சிறு பிராயத்திலிருந்து அண்ணாமலை செட்டியார் குடும்பத்திலேயே வளர்ந்தவன். அண்ணாமலை செட்டியார் இவனை மிகவும் அன்புடன் வைத்திருந்தார். அவர் இறந்ததனால் இவன் மிகவும் ஏக்கமடைந்து சொல் லாமல் சொந்த ஊருக்குப் போய்விட்டான். பரம ஏழை. படிப்பே அறியாதவன். ஆனால் வெகு யோக்யன்.
திடீரென்று வந்து நின்ற கருப்பையாவைப் பார்த்து அண்ணாமலை செட்டியாரின் மூத்த மகனான வீட்டுக்காரர் "கருப்பையா!" நம்ம பெரிய செட்டியார் வந்திருக்கிறாங்க பார்த்தியா?" என்றார்.
"பெரிய செட்டியாரா! எஜமானா! எங்கிங்கோ ?" என்றான் கருப்பையா. “இங்கே வா" என்று கருப்பையாவைப் படத்தின் அருகில் கூட்டிக்கொண்டு போய்ப் படுதாவை விலக்கினார். பார்த்தான் கருப்பையா படத்தை. கொஞ்ச நேரம் திகைத்து நின்று வாய் வராமல் திக்குமுக் காடி "தத்ரூபமா நிக்கிறாருங்களே!.........சாமீ............." என்று சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டுவிட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டு எஜமானை நேரில் கண்டது போல மிரள மிரளப் படத்தைப் பார்த்து மீண்டும் மீண்டும் கும்பிட்டான். கருப்பையாவின் தடுமாற்றம் கொஞ்சம் தணிந்தபின் அந்த செட்டியார் கருப்பையாவுக்கு என்னைக் காட்டி “கருப்பையா, இந்த ஐயாதாண்டா இந்தப் படத்தை எழுதினது" என்றார். உடனே கருப்பையா “இவுகளா, இவுக எழுதினதா இது! இவுகளை அந்த பிரமா இன்னுதான் சொல்ல ணும்" என்று என்னைக் கும்பிட்டான். 'இந்தப் படம் எழுதினதற்கு இந்த ஐயாவுக்கு என்ன கொடுக்கலாம்?" என்றார் செட்டியார். அதற்குக் கருப்பையா மிக்க முகமலர்ச்சியுடன் “இதுக்கு என்ன கொடுத்தாலும் கொடுக்கலாமுங்க. அஞ்சு கொடுத்தாலும் கொடுக்கலாம், பத்து கொடுத்தாலும் கொடுக்கலாம். அம்பதுகூட கொடுக்கலாமுங்க" என்றான். உடனே அங்கிருந்தவர்கள் எல்லாருக்கும் வயிறு வெடித்து விடும் போலச் சிரிப்பு வந்து விட்டது.
அப்படி நாங்கள் சிரித்துக்கொண்டிருந்த சமயத்தில் கருப்பையாவைத் தேடிக்கொண்டு ராமசாமி செட்டியார் என்ற ஒருவர் வெகு அவசரமாக அங்கே வந்தார். ராமசாமி செட்டியார் ஒரு பெரும் பணக்கார கனவான். அவர் படத்திலிருந்த அண்ணாமலை செட்டியாருக்கு நெருங்கிய நண்பர். அண்ணாமலை செட்டியார் உயிரோடிருந்தபோது அவருக்கு முன்னால் நடந்த ஒரு விவகாரப் பேச்சைப் பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவன் கருப்பையா. அந்த விவகாரம் கட்சிச் சண்டையாக முற்றி கச்சேரிக்குப் போய்விட்டது. அந்த வழக்கில் ராமசாமி செட்டியாருடைய கட்சிக்காக சாட்சியம் சொல்ல வேண்டியவன் கருப்பையா. அண்ணாமலை செட்டி யார் இறந்துபோன துக்கத்தால் சொல்லாமல் எங்கேயோ போய்விட்ட கருப்பையாவை ராமசாமி செட்டி யார் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கருப்பையா வந்திருப்பதை யாரோ சொல்லி ராமசாமி செட்டியார் அவ்வளவு அவசரமாக அங்கே வந்தார். வீட்டுக்காரர் வரவேற்றதைக்கூட சரியாகக் கவனிக்காமல் ராமசாமி செட்டியாருடைய கண்கள் கருப்பையாவைத் தேடின. கருப்பையா படத்துக்குப் பக்கத்தில் நின்றுகொண் டிருந்தான், கருப்பையாவைப் பார்த்த ராமசாமி செட்டி யார் படத்தையும் பார்த்தார். படத்தைக் கண்டவுடன் கருப்பையாவைக்கூட மறந்துவிட்டு ராமசாமி செட்டியார் படத்தின் அருகிற் சென்று வெகுநேரம் பார்த்து விட்டு "எங்கே எழுதினது இந்தப் படம்? அடையாளம் ரொம்ப சுத்தமாக அமைந்திருக்கிறது" என்றார். வீட்டுக்காரச் செட்டியார் என்னைச் சுட்டிக்காட்டி "இந்த ஐயா எழுதினது" என்றார். "இதற்கு என்ன கொடுத்தீர்கள்?" என்றார் ராமசாமி செட்டியார்.
"இதற்காக? இதற்கு என்ன கொடுக்கலாம் என்பதைப் பற்றித்தான் கருப்பையா சொல்லிக்கொண்டிருந்தான் " என்று கருப்பையா சொன்னதைச் சொல்லி மறுபடியும் சிரித்துவிட்டு "இதற்கு படத்துக்காக எழுநூற்றைம்பதும், வழிச் செலவுக்காக நூறும் ஆக எண்ணூற்றைம்பது தந்திருக்கிறது" என்றார் வீட்டுக்காரர். "அப்படியானால் நம்ப சொக்கலிங்கம் செட்டியார் படத்தையும் இதேமாதிரி எழுதச் செய்யுங்கள். சிவகாமி ஆச்சி அடிக்கடி சொல்லுது. வேறு எங்கேயோ எழுதச் சொன்னது, அடையாளம் கொஞ்சம்கூட சரியாயில்லை" என்றார் ராமசாமி செட்டியார்.
இப்படியாக சொக்கலிங்கம் செட்டியார் என்ற ஒருவருடைய படத்தை எழுத எனக்கு 'ஆர்டர்' தருவதாக ஏற்பாடாயிற்று. சொக்கலிங்கம் செட்டியார் என்பவர் பக்கத்து ஊரிலிருந்த ஒரு பணக்காரர். சுமார் இருபது லக்ஷம் ரூபாய் சொத்து உள்ளவர். ஒரு ஆண்டுக்கு முன்னால் இறந்து போனார். அவருடைய மனைவி சிவகாமி ஆச்சிக்கு குழந்தையில்லை. உறவின் முறை யில் சிவகாமி ஆச்சிக்கு வேண்டிய ஆலோசனைகளைச் சொல்லிக் காரியங்களைக் கவனித்துக் கொள்ளுகிறவர் ராமசாமி செட்டியார்.
கருப்பையாவைத் தேடி வந்த காரியத்தைப்பற்றிப் பேசி முடித்துக்கொண்டு சொக்கலிங்கம் செட்டியாருடைய ' போட்டோ' படத்துடன் மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டு ராமசாமி செட்டியார் போய் விட்டார். சொன்னபடி மறுநாள் படத்துடன் வந்தார். படத்தை வாங்கிப் பார்த்தேன். அது சுமார் இருபத்தைந்து பேர்களடங்கிய ஒரு 'குரூப்' போட்டோ (Group Photo). அதில் சட்டை யணிந்துகொண்டு தலைப்பாகையுடன் உட்கார்ந்திருந்தார் சொக்கலிங்கம் செட்டியார். சட்டையும் தலைப்பாகையும் நீக்கிவிட்டு, உட்கார்ந்திருக்கிறதை நிற்கிற மாதிரியாக்கி அண்ணாமலைச் செட்டியார் படத்தைப்போலவே முழு அளவில் எழுதித் தரவேணும் என்று சொன்னார்கள்.
அண்ணாமலை செட்டியாருடைய 'போட்டோ' நிற்கிற மாதிரியே இருந்தது. சட்டை அணியவில்லை. தலைப்பாகை மட்டும்தான் தள்ளவேண்டியிருந்தது. அவர் மட்டும் தனியாக இருக்கிற 'போட்டோ' ஆனால் சொக்கலிங்கம் செட்டி யார் இருந்த 'குரூப்' போட்டோ அப்படிப்பட்டது அல்ல. அதனால் அவர்கள் விரும்பினபடி மாற்றியமைத்து எழுதுவது மிகவும் கடினமான காரியம். அதற்காக நான் ஆயிரத்து ஐந்நூறு ரூபாயும் வழிச்செலவுக்கு நூற்றைம்பது ரூபாயும் தர வேணும் என்று கேட்டேன். ராமசாமி செட்டியார் நான் சொன்ன நியாயத்தை ஒத்துக்கொண்டார். ஆனால் அவர் சிவகாமி ஆச்சியிடம் படத்துக்கு 750-ம், வழிச் செலவுக்கு 100-ம் ஆக 850 என்று சொல்லிவிட்டு வந்திருப்பதாகவும் இருந்தாலும் மறுபடியும் பேசி ரூ. 1000/- படத்துக்கும் செலவுக்கு ரூபாய் 100-ம் தரச்செய்வதாகச் சொன்னார். நான் சம்மதிக்கவில்லை. வெகு நேரம் பேசியபின் ராமசாமி செட்டியார் சொன்னார், “முன் ஓர் படம் சின்ன அளவில் ரூ. 250க்கு எழுதப்பட்டது. அதில் கொஞ்சம்கூட சொக்கலிங்கம் செட்டியாரின் அடையாளமே அமைய வில்லை. அதனால் இதுவும் அப்படியிருந்துவிட்டால் என்ன செய்வது என்று ஆச்சி பயப்படுது. நீங்கள் ரூ. 1000-க்கு ஒத்துக்கொண்டு எழுதுங்கள். படம் சரியாக இருந்தால் இன்னும் ரூ. 250-ம் கூட்டித்தரச் செய்கிறேன்" என்றார். அதற்கு நான் "படம் திருப்திகரமாக இருந்தால் ரூ. 250-க்கு சிபார்சு செய்கிற தாங்கள் 500-க்கு சிபார்சு செய்யக்கூடாதா ?" என்றேன். எனக்கு சிபாரிசாக அண்ணாமலை செட்டியாருடைய மகன் "ஆமாம் அவ்வளவு பணக்கார ஆச்சி, புள்ளையா குட்டியா? இன்னும் 500 தந்தால்தான் என்ன? தரச் சொல்லுங்கள்” என்றார். அதன்படியே படம் நன்றாக இருந்தால் ரூ. 1500 தருவதென்றும் இல்லாவிட்டால் ரூ.750 மட் டும் தான் வாங்கிக்கொள்ள வேணும் என்றும் வழிச் செல வுக்கு அண்ணாமலை செட்டியார் படத்துக்கு வாங்கின ரூ. 100-க்கு மேல் கேட்பது சரியல்ல என்றும் ராமசாமி செட்டி யார் சொன்னார். 'அட்வான்ஸ் ' ரூ. 250 தரவேண்டும் என்றேன். அவர் அதற்கு சம்மதித்தார்.
சுமார் ஐந்து மாதகாலம் இடைவிடாது வேலை செய்து எனக்குத் திருப்தி உண்டாகிற வரையிலும் வெகு பாடு பட்டு படத்தை முடித்து எடுத்துக்கொண்டு ராமசாமி செட்டியார் வீட்டுக்குப் போனேன். அவர் வசிக்கும் இடமும், சிவகாமி ஆச்சி வசிக்கும் இடமும், இரண்டு மைல் தூரத்திலுள்ள வெவ்வேறு ஊர்கள். சட்டத்தோடு சுமார் 71 அடி உயரமும் 4 அடி அகலமும் உள்ள அந்தப் படத்தை ராமசாமி செட்டியார் வீட்டிற்கு முன்னால் வண்டியைவிட்டு இறக்கும்போதே அக்கம்பக்கத்திலுள்ள பலபேர் அது என்னவென்று பார்க்கக் கூடிவிட்டார்கள். கட்டுகளை அவிழ்த்து ராமசாமி செட்டியார் வீட்டிற்குள் சுவரில் சாய்த்து நிறுத்தப்பட்டது. உடனே அங்கே கூடியிருந்தவர்கள் எல்லாரும் "ஓ! சொக்கலிங்கம் செட்டியார்! பேஷ்! ரொம்பத் தெளிவாக இருக்கிறது" என்று படத்தைப் பாராட்டிப் பேசினார்கள். என் மனம் களிப்படைந்தது. பட்டபாடு வீணாகவில்லை என்ற மகிழ்ச்சி என்னை நிலை கொள்ளவிடவில்லை.
ஆனால் அந்த சமயத்தில் ராமசாமி செட்டியார் அங்கில்லை. அவர் முன் சொல்லப்பட்ட வழக்கிற்காகத் தன் கட்சியின் - சாட்சிகளை யெல்லாம் கூட்டிக்கொண்டு தேவக்கோட்டை கச்சேரிக்குப்போக வேண்டிய அலுவலுக்காக வெளியே போயிருந்தார். சற்று நேரம் கழிந்தபின் ராமசாமி செட்டியாரும் இன் னும் ஐந்தாறு பேர்களும் வந்தார்கள். கருப்பையாவும் வந்தான். வீட்டுக்குள் வேகமாக நுழைந்த ராமசாமி செட்டி யார் என்னைக் கவனிக்காமல் அங்கிருந்த கும்பலையும் அவர்கள் ஒரு படத்தைச் சுற்றி நின்றுகொண்டிருந்ததையும் கண்டார். கும்பலுக்குள் புகுந்து பக்கத்திற் சென்று வெகு நேரம் மௌனமாகப் படத்தைப் பார்த்துவிட்டு “படம் கொண்டுவந்தது யார்?" என்று திரும்பினார். “நான் தான்" என்று நான் அவருக்கு அருகிற் போனேன். “ஓ! வாங்கையா ! படம் ரொம்பத் தெளிவாக அமைந்து போச்சு. சாவகாசமாக 'உங்களோடு பேச எனக்கு நேரமில்லையே' என்று ரொம்ப வருத்தப்படுகிறேன். ஒரு வழக்கு விஷயமாக என் சாட்சிகளையெல்லாம் கூட்டிக்கொண்டு தேவக் கோட்டை வக்கீல் வீட்டிற்கு உடனே போகவேண்டி யிருக்கிறது. நாளைக்கு விசாரணை" என்றார்.
”தேவக் கோட்டைக்குப் போய்விட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன்" என்றேன். "வழக்கு தொடர்ந்து நடந்தால் நான் நாலைந்து நாட்கள் அங்கேயே தங்கவேண்டி நேரிட்டாலும் நேரும். நான் சிவகாமி ஆச்சியிடம் எல்லாம் விவரமாகச் சொல்லி யிருக்கிறேன். உங்களிடம் ஆச்சிக்கு ஒரு கடிதம் தருகிறேன். அங்கே கொண்டு போய்க் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள். சௌகரியப்பட்டால் சந்திப்போம் ” என்றார். நான் ஒத்துக்கொண்டேன். உடனே அவர் உள்ளே போய் ஒரு கடிதம் எழுதி அதை உறையில் போட்டு ஒட்டுமுன் என்னிடம் கொண்டுவந்து காட்டினார். அதில் படம் வெகு நன்றாக இருப்பதாகவும் பேசினபடி படத்துக்கு ரூ. 1500-ம் செலவுக்கு ரூ. 100-ம் தந்துவிடவேணும் என்றும் அதில் 'அட்வான்ஸ் ' தந்த ரூ. 250-ம் நீக்கி மீதி 1350-ம், வேஷ்டி, புடவை, தாம்பூலத்துடன் தரவேண்டும் என்றும் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை என்னிடம் தந்தது மட்டுமல்லாமல், ராமசாமி செட்டியார் அவருடைய வேலைக் காரர்களில் ஒருவனைக் கூப்பிட்டு முன்னாலேயே போய் சிவகாமி ஆச்சியிடம் படம் வந்திருக்கிற தகவல் சொல் லும்படி அனுப்பினார்.
மறுநாள் காலையில் படத்துடன் சிவகாமி ஆச்சியின் வீட்டுக்குப் போனோம். அந்த வீடு சொக்கலிங்கம் செட்டியார் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் இரண்டு லக்ஷம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அழகான கட்டிடம். அந்த வீட்டிலுள்ள ஒரு அலங்காரமான கூடத்தில் படத்தை சுவர் ஓரமாக நிறுத்தினோம். படத்தைப் பார்த்த உடன் சிவகாமி ஆச்சி கணவனை நேரில் கண்டு விட்டதுபோல் விழுந்து விழுந்து பலமுறைக் கும்பிட்டு விட்டு, முன்னாலேயே தயார் செய்துவைத்திருந்த ஒரு பெரிய பூமாலையைப் படத்துக்கு சூட்டச்செய்து தூபதீபம் காட்டி, கற்பூரம் கொளுத்தி வணங்கினார். அதன்பிறகு என் னைப்பார்த்து "நேற்றே ராமசாமி செட்டியார் சொல்லி யனுப்பினாங்க. உங்களுக்கு விருந்து செய்யச் சமையல் ஆவுது. சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாகப் போகலாம் இருங்கள் " என்று அந்த ஆச்சி வெகு உபசாரத்தோடு சொன்னார்கள். அருகிலிருந்த ஒரு அறையைக் காட்டி அங்கே எங்களைத் தங்கச் சொன்னார்கள். அப்படியே ஒத்துக்கொண்டு அறைக்குப் போகுமுன்னால் ராமசாமி செட்டி யார் கொடுத்த கடிதத்தை ஆச்சியிடம் கொடுத்தேன்.
நவீன அமைப்புகள் உள்ள அறை, அதில் நானும் என்னுடைய வேலையாள் ஒருவனும் எனக்குத் துணைவந்த வேறொரு நண்பரும் ஓய்வு கொண்டு உட்கார்ந்திருந்தோம். சிறிது நேரத்தில் சிவகாமி ஆச்சி வந்து "இதே அளவில் எங்கள் அக்கச்சி வீட்டுச் செட்டியார் படம் ஒன்றும், எங்க அப்பச்சி படம் ஒன்றும் நீங்கள் எழுதித் தரவேண்டும்" என்றார். "ஆகா! அதற்கென்ன! எழுதித் தருகிறேன். அது தானே என் தொழில். உங்கள் ஆதரவைத் தேடித் தானே இவ்வளவுதூரம் வந்திருக்கிறேன் " என்றேன்.
“அதற்கப்புறம் இன்னும் இரண்டு மூன்று வேலைகூட நான் உங்களுக்கு வாங்கித் தரலாமென்றிருக்கிறேன்" என்றார் சிவகாமி ஆச்சி. ”ரொம்ப சந்தோஷம். உங்கள் தயவிருந்தால் எனக்கு வேலைக்கு என்ன குறைச்சல் ?" என்றேன், "ஆனால் நீங்கள் எங்களுக்கெல்லாம் கொஞ்சம் சல்லீசாகச் செய்து கொடுக்கவேணும்” என்றார் அந்த ஆச்சி. “அதற்கென்ன? கூடியமட்டும் சல்லீசாகவே செய்து கொடுக்கிறேன்."
அதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி தெரிவித்துவிட்டு எனக்கு அனேக 'ஆர்டர்கள் ' வாங்கித்தரப் போவதாகப் பேசிவிட்டுப் போய்விட்டார்கள். சிறிது நேரம் சென்றபின் தின்பண்டங்கள், பழங்கள், பாயசத்துடன் நல்ல விருந்து நடந்தது. சாப்பாட்டுக்குப் பிறகு சொக்கலிங்கம் செட்டியாருடைய படத்துக்கு முன்னால் ரத்தினக் கம்பளம் விரிக்கப் பட்டு அதன்மேல் சந்தணம், தாம் பூலம் முதலியவை வழங்கப்பட்டன. பிறகு ஒரு தட்டத்தில் தேங்காய், பழம், வெற்றிலைபாக்கு முதலியவற்றுடன் சரிகை வேட்டியும், பட்டுப்புடவையும் வைத்து ஆச்சியவர்கள் கொண்டுவந்து என் அருகில் வைத்தார்கள். மறுபடியும் உள்ளே சென்று வெற்றிலை பாக்குமேல் வெள்ளி நாணயங்கள் பரப்பிய ஒரு தாம்பாளத்தை ஏந்திவந்து படத்துக் துத் தரவேண்டிய பணமென்று என்னிடம் தந்தார்கள். தரும்போதே ' நீங்கள் ரொம்ப நல்லமாதிரி என்று ராமசாமி செட்டியார் சொன்னாங்க. இந்த இடத்தை உங்கள் சொந்த வீடு மாதிரி எண்ணி அடிக்கடி வரப்போக இருக்க வேணும். நான் சொன்ன வேலைகளையெல்லாம் உங்களுக்கு வாங்கித் தருகிறேன்" என்று மிகவும் முகமலர்ச்சி யோடு சொன்னார்கள். நானும் வெகு மகிழ்ச்சியோடு அந் தத் தாம்பாளத்தை வாங்கி எனக்கு முன்னால் வைத்துக் கொண்டு அதிலிருந்த ரூபாய்களை எண்ண ஆரம்பித்தேன். நான் எண்ணுவதைப் பார்த்துக்கொண்டே ஆச்சி பக்கத்தில் நின்றார்கள், ரூபாயை எண்ணிக்கொண்டு போகப் போக என்னுடைய பூரிப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே போய், கடைசியில் மனதில் பெரிய புகைச்சல் உண்டாகிவிட்டது. அந்தத் தட்டில் ரூ 600 தான் இருந்தது. நான் மிகவும் ஏமாற்றத்துடன் “அறுநூறு ரூபாய் தானே இருக்கிறது” என்றேன்.
“ஆமாம், சந்தோஷமாக எடுத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கெல்லாம் நீங்கள் சல்லீசாகத்தான் எழுதித் தரவேணும்” என்றார் ஆச்சி. எனக்கு வருத்தமும் கோபமும் மாறி மாறி வந்து இன்னது சொல்வதென்று தெரியாமல் சிறிதுநேரம் திணறிப் போனேன். ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு "என்ன அம்மா! உங்களைப் போன்ற சீமான் வீட்டு ஆச்சிகள் இப்படிச் செய்யலாமா? ஐந்து மாதம் அதே வேலையாக வெகு பாடுபட்டு வேலை செய்ததற்கு இதுதானா வெகுமதி? இப்படி நடந்து கொள்வது உங்கள் கௌரவத்திற்குக் கொஞ்சம் கூட சரியல்ல. பேசினபடி வரவேண்டிய பாக்கி இன்னும் 1350 இருக்க, நீங்கள் 600 கொடுத்து ஏய்த்துவிடப் பார்க்கிறீர்களே" என்றேன். "அண்ணாமலை செட்டியார் படத்துக்கு எவ்வளவு வாங்கினிங்க?" என்றார் ஆச்சி. “அண்ணாமலை செட்டியார் படத்துக்கு ரூ. 850 தந்தார்கள். ஆனால்," என்று நான் பேச்சை முடிப்ப தற்குள் "பின்னென்ன? நானும் ரூ. 850 தந்திருக்கிறே னல்லவா? என்னைய்யா அவங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? நீங்களே சொல்லுங்கள் " என்றார். "அண்ணாமலை செட்டியார் படம் வேறு. இந்தப் படம் வேறு. இதை வெகு சின்னப் படத்திலி ருந்து ரொம்ப கஷ்டப்பட்டு ரொம்ப மாற்றி எழுதவேண்டியிருந்தது. 'ஆர்டர்' வாங்கும்போதே இந்த கஷ்டங்களை யெல்லாம் சொல்லித்தான் ஒப்பந்தம் பேசப்பட்டது. நீங்களெல்லாம் இப்படிச் செய்தால் என் தொழில் எப்படி வளரும்?" என்றேன். " என்னாய்யா இவ்வளவு அழுத்தம் பார்க்கிறீங்க. இதுக்கே கொஞ்சம் குறைச்சி வாங்கமாட்டமிங்கிறீங்களே. இன்னும் மற்ற வேலைகளெல்லாம் எப்படி உங்களுக்கு வாங்கித்தாரது?" என்றார்.
சாப்பாட்டுக்கு முன்னால் அந்த ஆச்சி என்னிடம் வந்து பல 'ஆர்டர்கள் ' வாங்கித் தருவதாகச் சொன்ன தெல்லாம் இதற்காகத்தான் என்று எனக்கு அப்போது தான் தெரிந்தது. "மற்ற படங்களுக்கு வேண்டுமானால் குறைத்துப் பேசிக் கொள்ளலாம். இதற்குப் பேசினபடி கொடுத்துவிடுங்கள்" என்றேன். “விடமாட்டிங்க போலிருக்குதே. சரி பேசினபடியே வாங்கிக் கொள்ளுங்கையா” என்று சரேலென்று உள்ளே போய் மறுபடியும் ரூ. 150 கொண்டுவந்து தட்டில் வைத்து 'ஐயா பேசின படி ஆயிரம் ரூபாயும் தந்தாச்சு. இனிமேல் ஒன்றும் தகராறு பேசக்கூடாது, சந்தோஷமாக எடுத்துக்கிட்டு போயிட்டுவாங்க," என்றார். "அம்மா என்ன இப்படி யெல்லாம் பிசுக்குகிறீர்களே? பேசின பேச்சு படத்துக்கு ஆயிரம் ரூபாயும் வழிச்செலவுக்கு நூறு ரூபாயும் தருவது என்று, படம் திருப்தியாக இருந்தால் இன்னும் ஐந்நூறு சேர்த்துத் தந்துவிடுவதென்றும் ராமசாமி செட்டி யார்தான் பேசினார். அதேமாதிரி தானே கடிதத்திலும் எழுதித் தந்திருக்கிறார். கடிதத்தைப் பார்க்கவில்லையா?” என்றேன். "ராமசாமி செட்டியாருக்கு என்ன போச்சு ? அவர் எதை வேணுமானாலும் எழுதலாம். பணம் கொடுக்கிறது நானா? ராமசாமி செட்டியாரா?" என்றார் ஆச்சி. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. ராமசாமி செட்டியார் தான் பேசினவர், 'அட்வான்ஸ்' தந்தவரும் அவர்தான். அவர் படம் சரியாக இருக்கிற தென்று ஒத்துக்கொண்டு உங்களுக்குக் கடிதம் தந்திருக்கிறார். கடிதத்திலுள்ளபடி தந்துவிடவேணும். ஒரு செப்புச்சல்லி குறைந்தாலும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். இப்படி நீங்கள் கண்ணியக் குறைவாக நடந்துகொள்ளக் கூடியவரென்று தெரிந்திருந்தால் நான் இங்கே வந்கிருக்கமாட்டேன் ” என்றேன்.
ஆச்சிக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னாய்யா கண்ணியக் கொறவு கண்டுபிட்டிங்க? படம் சரியா இருந்தாத்தானே இன்னும் ஐந்நூறு தரவேணும் என்று பேச்சு. படம் சரியாயிருக்குதூண்ணு மத்தவங்க சொல்லிப்பிட்டால் நான் ஒத்துக்குவேனா? படம் எனக்கு சரியாயில்லை. எங்க செட்டியார் வெள்ளைக்கார பொம்மை யாட்டம் செக்கச் செவேலுண்ணு இருப்பாங்க. இந்தப் படத்திலே ஒரு பக்கக் கன்னத்திலும் கழுத்திலும் கரி அப்பினாப்பிலே கன்னங்கரேலுண்ணிருக்குது. அவுங்க நெத்தியிலே சந்தனப் பொட்டுக்கு மேலே வைக்கிற குங்குமப்பொட்டு இவ்வளவு பெரிசா இருக்கவே இருக்காது! அவுக தூய வெள்ளையான வெளுத்த வேட்டி தான் கட்டுவாங்க. நீங்க எழுதியிருக்கிற வேட்டி அழுக்குத் துணியாட்டம் கருப்புக் கருப்பா இருக்குது. அவுங்க போடுகிறது ஒன்பது கல் மோதிரம், நீங்கள் எழுதியிருக்கிற மோதிரத்திலே ஒன்பது கல்லும் சரியாத் தெரியவேயில்லை! மேஜையிலே ரெண்டு கால் தான் தெரியுது! நாற்காலி யிலே ஒரு கால்தான் தெரியுது! அவுக போட்டிருந்த கெவுடு ஆறு முகமுள்ள உத்திராட்சம். அதிலே ரெண்டு முகம்தான் தெரியுது. படம் சரியாயிருக்கு தூண்ணு ராமசாமி செட்டியார் சொல்லிவிட்டால் நான் ஒத்துக்குவேனா" என்று ஆச்சி படத்தில் பல குற்றங்கள் சொன்னார்கள். அதைக்கேட்ட எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்துவிட்டது.
சிரிப்பையும் கொதிப்பையும் அடக்கிக்கொண்டு நான் “அம்மா! பணதுக்காக இப்படியெல்லாம் மட்டமான பேச்சுகள் பேசவேண்டாம் " என்றேன். 'மட்டமான பேச்சு' என்று நான் சொன்னதில் அந்த அம்மாளுக்கு அதிகக் கோபம் வந்துவிட்டது. "என்னங்கையா மட்டம் கிட்டமுண்ணு பேசறீங்க. ஒங்களை ரொம்ப நல்ல மனுசருண்ணல்ல நான் நெனைச்சேன். மட்டு மரியாதை யில்லாமல் நீங்க பேசறதைப் பார்த்தால் ரொம்ப அல்ப சாகவாசமாகவல்லவா இருக்குது. இப்படீண்ணு தெரிஞ்சிருந்தால் , இந்த ஊட்டுக்குள்ளேயே விட்டிருக்கமாட் டோமே. மூளியும் மூக்கரையுமாக நீங்கள் படம் எழுதியிருக்கிற நேர்த்திக்கு பேசினதுக்கு மேலே இனாம் வேறே தரணுமா? ஏன்? புள்ளையில்லாதவள் பணந்தானே போகட்டுமுண்ணு அந்தச் செட்டியார் எழுதிக்கொடுத்துப் புட்டாரோ! அந்த ராமசாமி செட்டியாரே வரட்டும். அவரோடு பேசிக்கொள்ளுங்கள். போங்க வெளியிலே. டேய் வெள்ளையா! இவுகளை வெளியே போகச் சொல்லி கதவைச் சாத்து" என்று ஆச்சி இரைந்தார்கள். “சரி - நான் அந்த செட்டியாரோடேயே பேசிக்கொள்கிறேன். டேய், தூக்கு படத்தை. இந்தப் படத்தை கடைத்தெருவில் காட்டி நாலு பேருக்கு இந்த நியாயத்தைச் சொல்லு வோம். படத்தைக் கட்டித் தூக்குங்கள்" என்றேன். “படத்தைத் தொடப்படாது" என்றார் ஆச்சி. “ஏன்? பணமா கொட்டிக் கொடுத்து விட்டீர்கள் படத்துக்கு? உங்கள் பணத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். என் படத்தை நான் எடுத்துக்கொண்டு போகிறேன். அதை தடுக்க உங்களுக்கு என்ன நியாயம் இருக்கிற தம்மா?" என்று சொல்லிவிட்டு அந்தப் படத்தைக் கட்டிக்கொண்டுவந்த பாய்கள் கயிறுகள் முதலியவற்றை நானே எடுத்துவந்து படத்துக்குப் பக்கத்தில் போட்டு விட்டு, என்னுடன் வந்திருந்த நண்பர்களைப் பார்த்து படத்தைத் தூக்கிக்கொண்டு போகக் கூலியாட்களைக் கூட்டிக் கொண்டு வரச்சொன்னேன்.
படத்தை நிச்சயமாக எடுத்துக்கொண்டு போய்விடுவேன் என்பதைக் கண்டபின் ஆச்சிக்குக் கொஞ்சம் அச்சம் வந்துவிட்டது. கோபம் தணிந்த குரலில் “என்னாய்யா இவ்வளவு பிடிவாதம் பேசு றீங்க. கொண்டாந்த படத்தை திருப்பித் தூக்கிக்கொண்டு போறது அவலக்ஷணம்" என்றார். "ஆமாம். நீங்கள் செய்கிறது. வெகு லக்ஷணம். நான் செய்வதுதான் அவலக்ஷணம்" என்றேன். 'போனாப் போகுது. இன்னும் நூறு ரூபாய் தந்துவிடுகிறேன். படத்தை எடுக்காதிங்க" என்றார். "படந்தான் உங்களுக்குப் பிடிக்கவில்லையே. அதற்கென்னத்துக்கு இன்னும் நூறு ரூபாய் தருகிறீர்கள்? வேண்டாம். வேண்டாம். போதும் உங்கள் செட்டியாரை நான் இவ்வளவு பாடுபட்டுப் படம் எழுதி நான் அடைந்த பலன். உங்கள் செட்டியாருக்கு நீங்கள் செய்கிற மரியாதை வெகு லக்ஷணமாக இருக்கிறது. இந்த அநியாயத்தைப் பார்த்து உங்கள் செட்டியாருடைய ஆத்மா இந் நேரம் துடித்துக் கொண்டிருக்கும்" என்று வெகு ஆத்திரத் தோடு சொன்னேன். இந்த சமயத்தில் செட்டியாருடைய படத்துக்கு முன்னால் தரையில் கணீர் என்ற ஒரு கனத்த ஓசை உண்டாகி 'ஙண ஙண' என்று சத்தம் கேட்டது. அங்கிருந்த எல்லாரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தோம். உடனே நான் வெகு சமயோசிதமாக “அம்மா பார்த்தீர்களா! செட்டியார் சொல்லுகிறார் கேளுங்கள். இவ்வளவு பெரிய ஆஸ்தியை உங்களுக்கு ஏகபோகமாக விட்டுப் போன அந்த செட்டியாருக்கு நீங்கள் செய்கிற அநியாயத்தைப் பொறுக்காமல் அவருடைய ஆத்மா ரொம்ப கோபித்துக்கொள்கிறது. அந்தக் கோபத்தின் அடையாளம் தான் அந்த ஓசை. உங்கள் செட்டியாருடைய கோபத்துக்கும் சாபத்துக்கும் நீங்கள் ஆளாகக்கூடாது" என்றேன்.
ஆச்சியினுடைய முகம் அச்சத்தால் வெளுத்து விகார மடைந்துவிட்டது. கொஞ்ச நேரம் - விழித்து விழித்துப் பார்த்துவிட்டு திடீரென்று படத்துக்கு முன்னால் விழுந்து கும்பிட்டுவிட்டு "ஐயா, கோவிச்சுக்காதீங்க, கொஞ்சம் பொறுங்க, எல்லாரும் இருங்கள்" என்று எங்களை உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போய்ச் சிறிது நேரத்துக் கெல்லாம் வெளியில் வந்து “இந்தாங்கையா ராமசாமி செட்டியார் கடிதத்தில் எழுதியிருக்கிறபடி பூரா பணமும் இருக்குது, சந்தோஷமாக எடுத்துக் கொள்ளுங்கள் " என்று பணத்தை என்னிடம் கொடுத்தார்கள். எண்ணிப் பார்த்தேன். எல்லாம் சேர்ந்து வரவேண்டிய பாக்கி ரூ. 1350-ம் வந்துவிட்டது. நான் வந்தனத்தைத் தெரிவித்து விட்டு "அம்மா! இந்தப் பணம் உங்களுக்கு ஒரு துரும்பு. ஆனால் எனக்கு இது மிகவும் பெரியது. நீங்கள் மனது வைத்தால் எவ்வளவு வேணுமானாலும் செய்யலாம். ராமசாமி செட்டியார் பேசினபடி வியாபார முறையில் வரவேண்டியது வந்துவிட்டது. அதற்குமேல் கேட்க நியாய மில்லை. இருந்தாலும் படம் உங்கள் செட்டியார் படம். பணம் உங்கள் பணம். உங்களை நாடி நான் உங்கள் வாசலுக்கு வந்த சந்தோஷத்துக்காக நீங்கள் ஒன்றும் எனக்கு வெகுமதி தரவில்லையே" என்றேன். உடனே அந்த ஆச்சி “நல்லாத் தருகிறேன்” என்று மீண்டு உள்ளே போய் நூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதற்காகத் தனி வந்தனம் சொல்லி ஆச்சியைப் புகழ்ந்துவிட்டு, புடவை, வேட்டி, பழம் தேங்காய், பாக்கு வெற்றிலை, பணம் முதலிய எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெகு குதூகலமாக விடை பெற்றுக்கொண்டோம்.
படத்துக்கு முன்னால் தரையில் உண்டான ஓசை வேறொன்றுமில்லை. படத்துக்கு மாலையிட்டு அலங்காரங்கள் செய்து தூபதீபம் காட்டிய போது, படத்துக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு பெரிய ‘நிக்கல்' ஊதுவத்தி ஸ்டாண்டுகள் புகையும் ஊதுவத்திகளோடு வைக்கப் பட்டன. அவற்றில் ஒன்று ஜன்னலுக்குப் பக்கமாக இருந்தது. ஜன்னலுக்கு நேராக ஒரு அலங்காரப் படுதா தொங்கிக்கொண்டிருந்தது. அந்தப் படுதா வேகமாக அடித்த காற்றில் ஊதுவத்திக் கிண்ணத்தின்மேல் மோதி அதைத் தள்ளிவிட்டது. கிண்ணம் பெரிய கிண்ணம். உயரத்திலிருந்து வேகமாகத் தள்ளப்பட்டு விழுந்ததால் ’கணீர்' என்று விழுந்தது. ' ஙண ஙண' என்று உருண்டது. இப்படி ஊதுவத்திக் கிண்ணம் ஒன்று எனக்கு சமய சஞ்சீவிபோல் உதவி செய்தது.
--------------
6. கண்டேன் சீதையை!
சீதையைத் தேடத் தென்திசைக்கு அனுமானை அனுப்பினான் ராமன். சிலகாலம் சென்றபின் மற்ற திசை களுக்குச் சென்றவர்களெல்லாம் திரும்பிவந்து சீதையைக் காணவில்லை என்று சொல்லிவிட்டார்கள். தென்திசைக்குப் போன அனுமான் மட்டும் இன்னும் வரவில்லை. அந்த அனுமானும் திரும்பி வந்து சீதையைக் காணவில்லை என்று சொல்லிவிடுவானோ என்று ராமன் கலங்கிக்கொண்டிருந்தான். வந்தான் அனுமான். வந்தவன் ராமனுடைய திருவடிகளை வணங்காமல் சீதாதேவி இருந்த தென் திசையை நோக்கித் தலையில் தன் கைகளைக் கூப்பி வைத்துக்கொண்டு தொழுது, தரையில் படுத்து வணங்கி அவளை நெடுநேரம் வாழ்த்தினான். புலன்களை வென்றவனாகிய அனுமான் வழக்கம்போல் தன்னை வணங்காமல் தென்திசையை வணங்கி வாழ்த்திய செய்கையைப் பார்த்துக் குறிப்பினாலேயே எதையும் அறிந்துகொள்ளும் கொள்கை யுள்ளவனாகிய ராமன் 'சீதை நலமாக இருக்கிறாள். அனுமான் அவளைக் கண்டுதான் வந்திருக்கிறான். அவளுடைய கற்புக்கும் குறைவில்லை' என்று நிச்சயித்தான்.
"கற்புக்கரசியை என் கண்ணாரக் கண்டேன், அலை கடல் சூழ்ந்த இலங்கை என்னும் தென்நகரில். ஆகையால், தேவதேவா! இனிமேல் ஐயத்தையும் இதுவரை அடைந்திருந்த கவலையையும் விட்டொழியுங்கள்" என்று அனுமான் மேலும் சொல்லுவான் :
“தேவா! உன்னுடைய மனைவி என்று நீ சொல்லிக் கொள்வதற்கும், உன் தந்தையாகிய தசரத மன்னனுக்கு மருமகள் என்பதற்கும், மதிலை மன்னனாகிய ஜனகன் என்னுடைய மகள் 'சீதை' என்று பெருமை யடைவதற்கும், தகுதிக்குமேல் தகுதியுடைய மிக உயர்ந்த சான்றாண்மை உள்ளவள். எனக்கோ சீதைதான் ஒப்பரிய தெய்வம். இன்னமும் கேள். பொன்னுக்குச் சமானம் - பொன்தான். பொறுமையிலே சீதைக்கு நிகர் சீதை தான். அப்படிப்பட்ட உத்தமியை மனைவியாக அடைந்த உனக்கு நிகர் நீதான். அவளைத் தெய்வமாகப் பெற்று விட்ட எனக்கு நிகர் எவருமே இல்லை. மேலும் உன்னுடைய பரம்பரையின் பெருமை கெடாதபடி உனக்குப் பெருமை உண்டாக்கி, தான் பிறந்த ஜனகன் குலத்துக்கும் புகழுண்டாகி, தன்னைச் சிறைப்படுத்திய கொடியவர் குலத்தை அழிக்கக்கூடிய அறத்தைக் காத்து, அக் கொடியோர்களால் இதுவரை துன்பமுற்ற தேவர்களுக்கு இனி நல்வாழ்வைத் தந்து, என்னுடைய குலப் பெருமையையும் எனக்குத் தந்தாள். இதைக்காட்டிலும் அவள் செய்யவேண்டியது என்ன இருக்கிறது?" இத்தனையும் சொல்லிவிட்டு அனுமான் திடீரென்று ஒரு வெடிகுண்டை வீசுகின்றான்.
அது என்ன? "ஸ்ரீராமா! உன்னைப் பிரிந்துவிட்டதால் உனக்காகத் தவம் செய்து கொண்டிருக்கிற ஒரு பெண்ணைப் பார்த்தேன் என்றா எண்ணுகிறாய்? இல்லை யில்லை. நான் பெண் யாரையும் பார்க்கவில்லை" என்றான் அனுமான். அதைக் கேட்டு ராமன் "ஐயோ! ஒரு பெண்ணைப் பார்க்க வில்லையா? அப்படியானால் சீதையைக் காணவில்லையா?" என்று திடுக்கிட்டுத் திகைப்பது போன்ற நிலைமை உண்டாகி, ”சீதை என்ற பெண்ணைப் பார்க்கவில்லையானால் பின் யாரைக் கண்டதாகச் சொன்னாய்?" என்று ராமன் கவலையி லாழ்கின்றான். அனுமான் சொல்லுகிறான் :
'விற்பெரும் தடந்தோள் வீர!
வீங்கு நீர் இலங்கை வெற்பின்
நற்பெரும் தவத்தளாய
நங்கையைக் கண்டேனல்லேன்
இற்பிறப்பு என்பது ஒன்றும்
இரும் பொறை என்பது ஒன்றும்
கற்பு எனும் பெயரது ஒன்றும்
களிநடம் புரியக்கண்டேன்.'
"வில்லேந்திய விசாலமான தோள்களையுடைய ராமா! பரந்த கடல் சூழ்ந்த இலங்கையின் மலையில் உனக்காகத் தவம் செய்துகொண்டிருக்கும் சீதை என்ற - ஒரு பெண் உருவத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் ‘குடிப் பிறப்பு' என்று சொல்லப்படுகிற ஒன்றும், ‘பெரும் பொறுமை' என்ற ஒன்றும், 'கற்பு' என்று கருதப்படுகிற ஒன்றும், ஆகிய இந்த மூன்றும் சேர்ந்து அங்கே ஆனந்தத் தாண்டவம் ஆடுவதைத்தான் கண்டேன்," என்றான் அனுமான். அதைக் கேட்டு ராமனுடைய திகைப்புக் குறைந்தது. போன உயிர் வந்தது போலக் களிப்பினால் பூரிக்கலானான்.
அதன்பிறகு அனுமான் முறையாக நான் அசோக வனத்தில் மரத்தின் மீது மறைந்திருந்து சீதையைக் கண்டதும், அந்த சமயத்தில் ராவணன் அங்கு வந்து காமப் பேச்சுக்களைப் பேசினதும், சீதை கடிந்ததும், பிறகு ராவணன் சென்றதும், சீதை தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்து ஒரு மறைவான இடத்தில் கழுத்துக்குச் சுருக்குப்போட கொடி ஒன்றைக் கழுத்தில் சுற்றினதும் அதைக் கண்டவுடன் மரத்தைவிட்டுக் குதித்து ராமநாமம் சொல்லிக் கணையாழி கொடுத்ததும், அதற்குப் பதிலாகச் சீதை சூடாமணியைத் தந்து விடை கொடுத்ததும் ஆகிய எல்லாவற்றையும் சொல்லி சூடாமணியைத் தருகின்றான் அனுமான்.
இனி நான் கண்ட சீதையைப் பாருங்கள். நான் 1946-ல் இலங்கைக்குச் சென்றிருந்த சமயம் இலங்கையின் மத்ய பாகத்தில் மலைநாட்டில் 'குவின்ஸ்பரி ' என்ற இடத்தில் தங்கியிருந்தேன். அப்போது என்னைப் பார்க்க யாரோ வந் திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இனிய பார்வையும் கவர்ச்சி மிக்க தோற்றமும் உடைய அந்த கனவான் வந்தார். அவர் பெயர் திரு. ஆறுமுகம் என்றும் இலங்கையிலுள்ள பல நாட்டுப் பகுதிக்கு அவர் நீர்ப்பாசன தலைமை எஞ்சினியர் என் றும் தெரியவந்தது. அவர் ஒரு யாழ்ப்பாணத் தமிழர். இலங்கை முழுவதிலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் மிக உயர்ந்த அரசாங்கப் பதவிகளில் இருக்கிறார்கள்,
எஞ்சினியர் ஸ்ரீ ஆறுமுகம் அவர்கள் சொன்னார்கள் : "தங்களுடைய 'என் கதை' என்ற நூலையும் 'அவளும் அவனும்' என்ற காவியத்தையும் படித்தது முதல் என் மனைவியும் மக்களும் தங்களைப் பார்க்க வேண்டுமென்று பல முறைப் பேசிக்கொண்டார்கள். தாங்கள் இலங்கைக்கு வந்திருப்பதைச் சஞ்சிகைகளில் படித்த நிமிஷம்முதல் தங்களை அழைத்துவர என்னைப் புறப்படச் சொல்லி அவசரப்படுத்து கிறார்கள். எனக்கும் அதே ஆசைதான். நானும் 'அவளும் அவனும்' என்ற நூலைப் பலமுறைப் படித்துப் பாடம்கூட செய்துவிட்டேன். நான் வசிப்பது பண்டாரவளையில். அங்கே தங்களுக்கு வரவேற்பும், விழாவும் ஏற்பாடு செய்திருக்கிறோம். அந்த விழா இன்னும் நான்கு நாட்களுக்குப் பிறகே நடக்கிறது என்றாலும் இப்போதே தங்களை அழைத்துச் சென்று எங்கள் வீட்டில் விருந்தினராக நாலைந்து நாள் வைத்துக்கொள்ள வேண்டுமென்பது எங்கள் விருப்பம்” என்று கூறினார்.
அடுத்த இரண்டு நாட்களில் வேறு இரண்டு இடங்களில் விழாக்கள் ஏற்பாடாகி இருந்ததால் ஸ்ரீ ஆறுமுகம் அவர்களுடைய விருப்பத்தை உடனே பூர்த்தி செய்ய முடிய வில்லை. இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஸ்ரீ ஆறுமுகம் தம்முடைய மோட்டார் காருடன் வந்து என்னைப் பண்டார வளைக்கு அழைத்துச் சென்றார். போகும் வழியில் அவர் அந்த மலைநாட்டில் நான் பார்க்கவேண்டிய பல இடங்களில் வண்டியை நிறுத்தி, அந்தந்த இடங்களைப்பற்றிய வரலாறு, புராண சம்பந்தமான கதைகளைச் சொன்னார். பண்டார வளைக்குப் போகுமுன்னால் இலங்கையிலுள்ள மலைப்பிர தேசங்களின் சிகரமாகிய 'நூவாரா எலியா ' என்னும் ஊரையும் அதிலுள்ள சிறப்புகளையும் காட்டினார். அந்த வழியில் பாதைக்குப் பக்கமாக ஒரு பள்ளத்தில் இருந்த சிறு தடாகத்தைச் சுட்டிக்காட்டி இது ’சீதைத் தடாகம்' என்றார். அந்தத் தடாகத்திலிருந்து ஒரு சிறு ஓடை அந்த மலைச்சாரலில் சல சலத்துக் கீழே ஓடிக்கொண்டிருந்தது. அதை 'சீதை ஓடை' என்றார். மேற்படித் தடாகத்திற்கு எதிரில் பாதைக்கு அப் பால் இருந்த மலையைக் காட்டி அங்கே தான் அசோகவனம் இருந்தது என்றும், அந்தக் குன்றின் ஓரத்திலிருந்த ஒரு குகையைக் காட்டி அதிலேதான் சீதை சிறையிருந்தது என்றும் கூறினார்.
அதன்பின் மோட்டாரை ஓட்டினார். அதே பாதையில் தடாகத்தைவிட்டு சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் இறங்கி வந்தபின் அங்கே ஒரு சிறு நீர்நிலை இருந்தது. அது தான் சீதை தினந்தோறும் நீராடின துறை என்றார். அந்த நீர் நிலைக்கு அடுத்தாற்போல் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கேதான் சீதை ஒவ்வொரு நாளும் ராமனைப் பூசை செய்தது என்றார். நாங்கள் போனபோது ஐந்தாறு மோட்டார் வண்டிகள் அந்தக் கோயிலின் அருகில் நின்று கொண்டிருந்தன. அவற்றின் பக்கத்திலும் அக்கோயிலின் உள்ளும் புறமும் பல யாத்ரீகர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலர் சிங்களவர்களாகவும் இருக்கக்கண்டு நான் வியப்படைந்து, "இந்தக் கோயிலைச் சிங்களவர்களும் வணங்குகின்றார்களா?" என்று கேட்டேன். “ஆம், இதை எல்லா மக்களும் வணங்குகிறார்கள். சில சிங்களவர்கள் இதற்கு மிகவும் பக்தி செலுத்துகிறார்கள். திருவிழாக் காலங்களில் ஏராளமான சிங்களவர்கள் நம்முடன் கலந்துகொள்கிறார்கள். ஏன்? கதிர்வேலன் தலமாகிய கதிர் காமத்தில் சிங்களவர்கள் தானே பூசாரிகள்” என்றார். நான் மிகவும் வியப்படைந்தேன். தமிழ் மக்கள் மிகச் சிறந்த தலமாகக் கருதி, கணக்கில்லாத பக்தர்கள் ஆண்டு தோறும் காட்டுத்தடத்தின் கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் தரிசித்து வருகிற கோயிலான கதிர்காம முருகக் கடவுளுக்குப் பூசாரிகள் சிங்களவர்கள் என்பதை அப்போதுதான் முதல் முதல் அறிந்தேன்.
இனி சீதையைப் பார்ப்போம். அந்த சீதை கோயிலுக்கு அருகில் அங்குமிங்கும் முளைத்திருந்த ஒரு செடியைக் காட்டி அதிலிருந்த, வாசனையிலும், வடிவத்திலும் வசீகரமில்லாத புஷ்பத்தைக் காட்டி “ இதுதான் சீதைப்பூ; இந்தப் பூதான் இந்த இடத்தில் கிடைக்கும். இதைக்கொண்டுதான் சீதை ராமனுக்கு அர்ச்சனை செய்தாள். இந்தப்பூ இந்த இடத்தில் தவிர இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலும் கிடையாது" என்றார் ஸ்ரீ ஆறுமுகம். அங்கே நின்று இவைகளையெல்லாம் கேட்டபிறகு சிறிது நேரம் என்னுடைய புறக்கண் புலனிழந்து மனக்கண் மலர்ந்தது. எதிரே இருந்த குன்றை நினைத்து, அதில் சீதை சிறையிருந்த குகையை நினைத்து, அச்சிறு கோயிலையும் நினைத்து, அதை தரிசிக்க வந்திருந்த பக்தர்களையும் நினைத்தபோது அக்குன்றிலிருந்த குகையைவிட்டு யாரோ ஒரு பெண் இறங்கிவந்து, நீர் நிலையில் குளித்து, பக்கத்திலிருந்த அந்த மணமற்ற மலரைப் பறித்து அந்தச் சிறு குடிசை போன்ற கோயிலில் பூசை செய் வதுபோலப் புலப்பட்டது. ஆம், அங்கே அப்போதுதான் சீதையைக் கண்டேன். எந்த சீதையை ? உடலும் உருவ மான சீதை என்ற பெண்ணையா? அல்ல. பின் எதைக் கண்டேன்?
இற்பிறப்பு என்பது ஒன்றும்
இரும் பொறை என்பது ஒன்றும்
கற்பெனும் பெயரது ஒன்றும்
களிநடம் புரியக்கண்டேன்.
அந்த மலையில் குடிப்பிறப்பு, எல்லையற்ற பொறுமை, கற்பு என்ற மூன்றும் கலந்த சூட்சும வடிவமான சீதையைக் கண் டேன். எந்த மலையில் கண்டேன்? கம்பன் சொன்ன அதே மலையில்தான், கம்பன் எந்த மலையைச் சொன்னான்?
விற் பெரும் தடந்தோள் வீர!
வீங்குநீர் இலங்கை வெற்பின்
நற்பெரும் தவத்தளாய
நங்கையைக் கண்டேனல்லேன்தும்
இற்பிறப்பென்பது ஒன்றும்
இரும்பொறை என்பது ஒன்றும்
இந்த மலையில் கம்பன் சொன்ன களிநடம் புரிந்த உருவத்தை நான் என் மனக்கண்ணில் கண்ட பிறகுதான் இந் தக் கம்பன் பாட்டிலுள்ள ' இலங்கை வெற்பின்' என்ற தொடருக்கு எனக்குப் பொருள் புரிந்தது. வெற்பு என்றால் மலை என்பது பொருள். 'இலங்கை வெற்பின்' என்றால் ’இலங்கை மலையில்' என்பது பொருள். இதுவரையில் நானும் என்னைப் போலவே எண்ணியிருந்த பலரும் சீதையை இராவணன் இலங்கைக்குக் கொண்டுபோய் அங்கே அசோகவனம் என்ற ஒரு சோலையில் சிறைவைத் தான் என்றும் அந்த சோலை சாதாரணமாக நம் தமிழ் நாட்டில் சமநிலங்களில் பார்க்கிற சோலை போலத்தான் இருக்கும் என்றும் எண்ணி யிருந்தோம். கம்பன் பாட்டிலுள்ள “இலங்கை வெற்பு” என்ற பதங்களுக்கு சிறப்பான பொருள் ஏதும் இருப்பதாகவும் எண்ணியதில்லை. இப்போதுதான் கம்பன் கவிதையின் அற்புதப் பெருமை இன்னும் அதிகமாகத் தெரிகிறது. கம்பன் இந்த மலையைப் பார்த்துவிட்டுப் பாடினானா? அல்லது கம்பன் பாடின 'இலங்கை வெற்பு' என்பதைப் படித்துவிட்டுத்தான் இந்த மலையில் சீதை இருப்பதாக இலங்கை மக்கள் சொல்லத் தொடங்கினார்களா? என்பது புரியாத விந்தை. அதுபோகட்டும்.
இந்த ஆள் நடமாட்டமில்லாத பிரதேசத்தில் உள்ள சின்னஞ்சிறு குடிசையிலும் சிறிதான இந்த கோயிலைத் தரிசிக்க கோடிக் கணக்கான மக்கள் வந்து போவதின் மர்மம் என்ன? இந்தக் கோயிலை வணங்கும் தமிழர்களையாவது அவர்கள் தமிழ் நாட்டிலிருந்து குடியேறினவர்கள். அவர்கள் கம்பராமாயணத்தை படித்தோ கேட்டோ இருக்கலாம் என்று கூறலாம். ஆனால் தமிழே இன்னதென்று தெரியாத சிங்களவர்கள் இதற்கு பக்தி செலுத்துவானேன்? அதற்கு ஒரே ஒரு காரணம்தான். எல்லா பக்தர்களும் இந்தக் கோயிலுக்கருகில் இற்பிறப்பு என்பதொன்றும், இரும்பொறை என்பதொன்றும் கற்பெனப்படுவது ஒன்றும் சேர்ந்து களி நடம் புரியக் காண்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அதை இலங்கைக்குப் போகாமலும் காணலாம். ஆம் இந்த இற் பிறப்பின் தீபத்தை, இரும்பொறையின் ஒளியை, கற்பின் ஜோதியை நான் கண்டேன் என் மனக்கண்களால்.
--------------
7. நிழல் சாயாத கோபுரம்
தமிழர்களின் நாகரிகத்தையும் கலைத்திறத்தையும் தெய்வ பக்தியையும் அறியச் செய்யும் அழியாச் சின்னங்களாக விளங்குவன தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களே! இக் காலத்திலுள்ளவைபோன்ற யந்திர பொறியியல் நுணுக்கங்கள் தெரியாத பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்த ஆலய கோபுரங்களில் அமைந்துள்ள சிற்ப வேலையின் சிறப்புக்களும், சித்திர நுணுக்கங்களும் அயல்நாட்டு அறிஞர்களுக்கு விந்தையாகவே இருக்கின்றன,
அப்படித் தமிழ் நாட்டிலுள்ள பல கோபுரங்களுள் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலின் கோபுரம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. மற்ற எல்லாக் கோபுரங்களும் ஒன்றுக்கொன்று உயரத்திலும் பருமனிலும் வேறுபட்டாலும் வடிவத்தில் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை, அவற்றின் முன்புறமும் பின்புறமும் அள்ளைப்புறங்களை விட அகலமுள்ளனவாக இருக்கத் தஞ்சாவூர்க் கோபுரம்மட்டும் அடித்தளத்திலிருந்து நான்கு பக்கங்களும் ஒரே அளவுள்ள சதுரமாகவே உச்சியில் கூர்மையடைகின்றது. மற்றக் கோபுரங்களின் உச்சியிலுள்ள விமானங்களிலுள்ள கலசங்களும் மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது என்று ஒன்றுக்கு மேற்பட்டனவாகவே இருக்கத் தஞ்சாவூர்க் கோபுரம் ஒரே கலசமுள்ளதாக இருக்கிறது. அதன் உச்சியிலுள்ள விமானமும் கோபுரத்தின் உச்சிச் சதுரத்துக்கு உள்ளடங்கினதாக உள்ளது.
இந்தத் தஞ்சாவூர்க் கோபுரத்தை 'நிழல் சாயாக் கோபுரம்' என்று சொல்வதை எல்லாரும் கேட்டிருக்கிறோம். என் இளம்பருவத்தில் பலமுறைக் கேட்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். ஆனால் அந்த ‘நிழல் சாயாக் கோபுர'த்தை நேரிற் கண்டு மகிழும் வாய்ப்பு நெடுநாள் எனக்குக் கிடைக்கவில்லை. 1908-ஆம் ஆண்டில் நான் திருச்சிராப்பள்ளியில் எஸ். பி. ஜி. காலேஜில் எப். ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். (இப்போது அது செயின்ட் ஹீபர்ஸ் ஹைஸ்கூலாக இருக்கிறது.) அப்போது ஒரு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நானும் மூன்று பள்ளித்-தோழர்களும் நிழல் சாயாக் கோபுரத்தின் அதிசயத்தைப் பார்க்கத் தஞ்சாவூருக்குப் போனோம்.
வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்குத் திருச்சி சந்திப்பிலிருந்து புறப்படுகிற ரெயில் வண்டியில் நாங்கள் நால்வரும் சென்று சுமார் எட்டு மணிக்கு எங்கள் உறவினர் ஒருவர் வீட்டை அடைந்தோம். அந்த வீட்டுக்கார உறவினர் பெரிய சிவபக்தர். ஒவ்வொரு நாளும் ஒரு வேளை யாவது பிரகதீசுவரர் ஆலயத்திற்குப் போவது அவருடைய வழக்கம். மற்ற நாட்களில் தவறிவிட்டாலும் வெள்ளிக் கிழமைகளில் கோவிலுக்குப் போய்வரத் தவறமாட்டார். நாங்கள் அவர் வீட்டுக்குப் போன சமயம் அவர் கோயிலுக்குப் புறப்படுகிற நேரம். இனிய முகம் இன்சொற்களுமாக எங்களை வெகு அன்போடு வரவேற்றார். குசல விசாரிப்புகள் முடிந்ததும் வீட்டுக்குள் சென்று எங்களுக்கு விருந்து சமைக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு எங்களிடம் வந்து, "கோயிலுக்குப் போய் வரலாமா?" என்றார். நாங்கள் வெகு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டோம். எங்களுடைய சட்டைகளைக் களைந்துவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டோம். வீட்டுக்காரர் எங்களுக்காகத் திருநீறும், தண்ணீரும் கொண்டு வந்து வைத்தார். அவருடைய குறிப்பை உணர்ந்து நான் விபூதியைக் குழைத்துச் சைவமுறைப்படி பட்டை பட்டை யாக நெற்றியிலும் கைகளிலும் உடம்பிலும் அணிந்து கொண்டேன். என்னுடன் வந்த மூவருள் ஒருவன் கிறிஸ்துவன். அவன் விபூதியை அணியத் தயங்கினான். அவனும் அணிந்து கொள்ள வேண்டுமென்று சமிக்கை செய்தேன். என்னிடத் தில்மிகவும் பிரியமுள்ள அந்த அந்தோணியும் தயக்கம்விட்டுத் திருநீறு தரித்துக்கொண்டதைச் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் இப்போது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பு வருகிறது. ஏனென்றால் அவன் விபூதி அணிவதை அறியாதவனாதலால் என்னுடைய விருப்பத்திற்கிணங்கித் திரு நீற்றை அளவுக்கு மீறி அள்ளிக்கொண்டு சேறு குழைப்பது போலக் குழப்பி நெற்றியிலும் உடம்பிலும் தாறுமாறாகப் பூசிக்கொண்டு ஒரு விகட வேடமாக விளங்கினான்.
என் உறவினரான ஸ்ரீ கிருஷ்ணசாமி பிள்ளை ஒரு மராமத்து இலாகா மேற்பார்வையாளர். அவருடைய சேவகன் இடதுகையில் தேங்காய், பழம் முதலியவைகள் அடங்கிய தாம்பாளமும், வலது கையில் ஒரு தூக்கு விளக்கும் எடுத்துக்கொண்டுப் போக, மற்றவர்கள் பின்னாற்சென்று ஆலயத்தை அடைந்தோம். அந்தக் காலத்தில் மின்சார விளக்குகள் இல்லை. கோயிலைப் பற்றிய பராமரிப்புகளும் மிகவும் குறைவு. அதனால் கோயில் முழுதும் ஒரே இருட்டு. அங்கும் இங்கும் ஆக இரண்டொரு மங்கலான விளக்குகள் மினுக்கிக் கொண்டிருந்தன.
அப்படிப்பட்ட அந்தகாரத்திலும் கோபுரத்தின் பெருமை கண்ணைக் கவர்ந்தது. ஆண்டவனை வழிபட வந்தோம் என்பதை முற்றிலும் மறந்து அங்கங்கே நின்று நின்று நின்று கோபுரத்தைப் பார்த்து, நிழல் சாயாமல் இருப்பதற்கு அதில் என்ன அதிசய அமைப்பு இருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டு நடந்தேன்.
கிருஷ்ணசாமி பிள்ளையைப் பின்பற்றி மூன்று முறை வலம்வந்து, ஆலயத்துள் சென்று நைவேத்தியம் தந்து தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். திரும்பும் போது சிவ சந்நிதானத்துக்கு முன்னால் நந்தி அமர்ந்திருக்கும் மேடைமீது ஏறி அந்த இருட்டிலும் அந்த பெருவிடையை மும்முறை வலம் சுற்றினோம். ஆலயத்தின் பெருமையையும், அந்த அற்புதச் சிற்பமாகிய பெரிய விடையின் சிறப்பையும் கிருஷ்ணசாமி பிள்ளை எங்களுக்குச் சொல்லி அந்தப் பெரிய விடையினால் தான் அங்குள்ள சிவபெருமானுக்குப் 'பெரு விடையார் ' என்ற பெயர் வந்தது என்றும் சொன்னார். அத்துடன் அந்த ஆலயத்தைக் கட்டிவைத்த சோழ மன்னரைப்பற்றிய கர்ண பரம்பரையான கதைகளையும், அக்கோயிலைப் பிற்காலத்தில் பரிபாலித்த மராட்டிய மன்னர்களின் பக்தியையும், அவர்களுக்குப் பிறகு அந்த ஆலயம் கவனிப்பதற்கு நாதனற்றுப் போய்விட்டதையும் அவர் சொல்லச் சொல்ல நாங்கள் கேட்டுக்கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு வந்த பின்னும் உணவருந்த உட்காருகிற வரைக்கும் கோயிலைப்பற்றியே புகழ்ந்து கொண்டிருந்தார். அப்போது நான், ”இந்தக் கோபுரத்தை ‘நிழல் சாயாக் கோபுரம்' என்று சொல்லுகிறார்களே, அது என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆம், அப்படித்தான் சொல்லுகிறார்கள். ஆனால் 'அது எப்படி' என்பதைப்பற்றிய விவரம் எனக்குத் தெரியவில்லை" என்றார்.
சாப்பாடு முடிந்த பிறகு படுத்துக்கொண்டோம். எனக்கு வெகு நேரம் வரையில் தூக்கமே வரவில்லை. அவ்வளவு உயரமான கோபுரம் எப்படி நிழலில்லாமல் இருக்க முடியும் என்பதையே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அத்துடன் கிருஷ்ணசாமிபிள்ளை சொன்னதிலிருந்து அந்தக் கோபுரத்துக்கு நிழலே விழாது என்று நான் கொண்டிருந்த நம்பிக்கை தளர்ச்சி அடைந்தது. எதற்கும் விடிந்த பிறகு கோயிலுக்குப் போய்ப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும் என்று சமாதானம் செய்துகொண்டு தூங்கி விட்டேன்.
காலை ஆகாரம் உண்டபின் கிருஷ்ணசாமி பிள்ளை உத்தியோக அலுவலாகப் பொய்விட்டார். நானும் என் தோழர்களும் நேரே கோயிலுக்குச் சென்றோம். அப்போது மணி எட்டரை இருக்கும். சூரியன் பிரகாசித்துக்கொண் டிருந்தான். நாங்கள் கோபுரத்தின் மேற்குப் பக்கத்துக்கு விரைந்து சென்று அங்கே கோபுரத்தின் நிழல் இல்லாம லிருக்கிறதா என்று பார்த்தோம். ஆ! என்ன ஏமாற்றம்! அங்கே கோபுரத்தின் நிழல் இருக்கத்தான் இருந்தது. அந்த ஆலயத்தின் மூலை முடுக்குகளை யெல்லாம் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டு பதினொரு மணிவரைக்கும் இருந்தோம். சூரியனுடைய ஒளி அதிகரிக்க அதிகரிக்க, கோபுரத்தின்நிழலும் நன்றாகத்தான் தெரிந்தது. காலை நிழல் மேற்குப் பக்கத்தில் விழுந்தால் மாலை நிழல் கிழக்குப் பக்கத்தில் விழப்போகிறது. இதை 'நிழல் சாயாக் கோபுரம்' என்று சொல்லுவானேன்? நம் நாட்டில் உலவுகின்ற எத்தனையோ மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று என்று நினைத்தேன். ’நிழல் சாயாக் கோபுரம்' என்ற பேச்சில் எனக்கு இருந்த மதிப்பு அப்போதே நீங்கிவிட்டது. அன்று பிற்பகலும் மறு நாளும் தஞ்சாவூரில் பார்க்கத்தகுந்த இடங்களைப் பார்த்து விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தஞ்சையைவிட்டுத் திருச்சிராப்பள்ளிக்கு வந்துவிட்டோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக 'நிழல் சாயாக் கோபுர'மும் அதைப் பார்க்கப் போனதும் என் மனதிலிருந்து மறைந்து விட்டன.
அடுத்த ஆண்டு நான் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர் விடுதியில் இருந்துகொண்டு எப். ஏ. வகுப்பின் இரண்டாம் ஆண்டுத் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த விடுதிக்குச் சுப்பிரமணிய ஐயர் என்ற ஆசிரியர் காப்பாளராக (வார்டன்) இருந்தார். அவர் பூகோள சாத்திரத்தில் நிபுணர். வெகு நல்லவர். மாணவர்களுடன் தோழனைப்போல் கொஞ்சிக் குலாவிப் பழகுவார். ஒருநாள் அவரும், பதினைந்து மாணவர்களும் ஸ்ரீரங்கத்துக்கு உல்லாச மாகப் போனோம். அது நிலாக்காலம். மாலை மூன்று மணிக்கு ஸ்ரீரங்கம் போய் ஆறு மணிவரைக்கும் கொய்யா மரத் தோட்டங்களிலும், தென்னந் தோப்புகளிலும் சுற்றிக் கொண்டிருந்தோம். ஆசைதீரக் கொய்யாப் பழங்களைத் தின்று இளநீரைக் குடித்து அவரவர்கள் விரும்பியபடி யெல்லாம் ஆடிப்பாடிக் கொண்டிருந்துவிட்டுக் கோயிலுக்குப் போனோம்.
ஸ்ரீரங்கம் கோயில் வடை மிகவும் பிரசித்தி பெற்றது. அத்துடன் அங்கே அப்போதைக்கப்போது அகப்படக்கூடிய முறுக்கு புளியோதரை, பொங்கல் முதலிய வைகளும் மிகவும் விரும்பத்தக்க சுவையுள்ளனவாக இருக்கும். இந்தக் காலத்தில் எப்படியோ தெரியாது. அந்தக் காலத்தில் திருவரங்கக் கோயிலில் சமைக்கப்படும் எந்த உண்டியும் (புளியோதரைத் தவிர), துளிகூட எண்ணெய் கலக்காத நெய்யில்தான் சமைக்கப்படும். அந்த உண்டிகளுக்காகவே பல பேர் கோயிலுக்குப் போவார்கள். அன்றைக்கு அங்கே சென்ற பதினைந்து மாணவருள் மூன்று பேர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மூவருள் ஒருவன் ஐயர். மற்ற இருவரும் ஐயங்கார்கள். இந்த இருவரும் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலின் அர்ச்சகர்களுடைய மக்கள், இவர்களுக்குள்ளும் கோபாலன் என்பவன் கோயிலில் மிக்க செல்வாக்குள்ள அருச்சகருடைய மகன். இவனுடைய சலுகையைக் கருதித்தான் அந்த உல்லாசப் பயணமே ஏற்பாடானது.
கோபாலன் தந்தையிடம் முன்னாலேயே சொல்லி வைத்திருந்தபடியால் ஸ்ரீரங்கம் கோயிலைத்தவிர வேறு எங்கும் கிடைக்காதவை என்று சொல்லப்படுகிற எல்லா வித உண்டிகளும் ஏராளமாகக் கிடைத்தன. அதற்காக நாங்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் விகிதம் சேர்த்துப் பதினைந்து ரூபாய் கொடுத்திருந்தோம். அது போதாமல் பின்னாலும் ஐந்து ரூபாய் கொடுத்தோம். அந்த உண்டிகளெல்லாம் தனித்தனிப் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்தன, அந்தப் பாத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கொள்ளிடத்தின் மத்தியிலுள்ள மணல்வெளியை அடைந்து அங்கே அமர்ந்து வெகு உல்லாசத்துடன் உண்டிகளை அருந்தினோம்.
அப்போது மணி ஒன்பதுக்கு மேல் இருக்கும். பூரண சந்திரன் மிகவும் பிரகாசத்துடன் விளங்கினான். அந்த நிலாவின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் அங்கிருந்த பூகோள ஆசிரியர் சுப்பிரமணிய ஐயரைப் பார்த்து, “ஏன் ஸார், இந்தச்சந்திரனுக்கு மத்தியில் இருக்கிற களங்கத்தை மரம் என்றும், மான் என்றும் சொல்லுகிறார்களே, அது என்ன?" என்றான். யார் எதைக் கேட்டாலும் எப்போதும் வெகு இனியமுறையில் செய்திகளை விளக்கிச் சொல்வதில் அலுப்புக்கொள்ளாத அந்த பூகோள ஆசிரியர் உடனே சந்திரமண்டலத்தைப்பற்றிய சாத்திர நுணுக்கங்களை விளக்கலானார்.
சந்திரனைப்பற்றி ஆரம்பமான அந்தப் பேச்சுக்கள் சூரிய மண்டலத்திற்கும் சென்றன. சூரியனுக்கும் பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள சம்பந்தங்களைப்பற்றியும், நாள், மாதம், ஆண்டு என்பனவற்றைப்பற்றியும், பருவங்களைப் பற்றியும், உத்தராயணம், தக்ஷிணாயணம் என்பவைகளைப் பற்றியும் வெகு விரிவாகவும் விளக்கமாகவும் ஆசிரியர் எடுத்துரைத்தார். அப்போது நான் கேட்ட 'உத்தராயணம், தக்ஷிணாயணம், நிரட்சரேகை, என்பனவற்றின் விளக்கங்களிலிருந்து, அன்றைக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னால் 'நிழல் சாயாக் கோபுர 'த்தைப்பற்றி நான் சொன்ன ஊகம் எனக்குப் பெரிய பரிசைத் தந்தது. அதைக் கேளுங்கள்.
1909-ஆம் ஆண்டில் எப். ஏ, பரீட்சைக்குப் பணம் கட்டினபின் எனக்குக் கடுமையான காதுவலி வந்து பரீட்சை எழுத முடியவில்லை. பின் ஒரு ஆண்டு வைத்தியம் நடந்து காதுவலி நீங்கிற்று. அதன்பிறகு படிப்பு நின்று விட்டது. சிறு சிறு கவிகளும், சித்திரங்களும் எழுதிக் கொண்டு சும்மா இருந்துகொண்டிருந்தேன். அப்போது எனக்குத் தூரபந்துவான ஸ்ரீ பா. வெ. மாணிக்க நாயக்கர் என்ற ஓர் எஞ்சினியர் பழக்கமானார். அவர் நல்ல தமிழறிஞர். சித்திரத்திலும்வல்லவர். கவிகளும் செய்வார். அவர் என்னுடைய கவித்திறனையும் சித்திர வித்தையையும் மிகவும் பாராட்டி அடிக்கடி என்னைத் தம்மிடம் வரச்செய்து அளவளாவிக் கொண்டிருப்பார். சிறுகச்சிறுக எங்களுக்குள் அன்பு அதிகரித்தது. அதனால் அவருடைய உத்தியோகப் பிரயாணங்களிலும் என்னை அழைத்துக் கொண்டுபோவார். அவர் ஜில்லாவுக்குப் பெரிய எஞ்சினீயரானதாலும் அரசாங்கத்தில் சலுகையுடையவரானதாலும் அவர் மூலமாக எனக்கு ஒரு நல்ல உத்தியோகம் கிடைக்கும் என்ற ஆசையால் என் தந்தை முதலானவர்கள் நான் மாதக் கணக்கில் அவருடன் தங்கி விடுவதிலும் மகிழ்ச்சியடை வார். அவர் போட்டோ படம் பிடிப்பதில் வல்லுநர். எனக்கும் போட்டோ பிடிக்கக் கற்றுக்கொடுத்தார்.
1912-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதியில் டில்லி நகரத்தில் ஐந்தாம் ஜார்ஜ் அரசருக்கு முடிசூட்டு விழா நடப்பதாக நாடெங்கும் பேச்சாக இருந்தது. அந்த விழாவிற்கு இரண்டு ஆண்டுகளாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்த விழாவைக் காண திரு. மாணிக்க நாயக்கரும் போகத் தீர்மானித்தார். டில்லி விழாவுக்குச் சென்று அதைப் பார்த்துப் பின் அப்படியே வடநாட்டிலுள்ள முக்கிய தலங்களையும் பார்த்துவர மூன்று மாதப் பிரயாணத்திற்குத் திட்டமிட்டார். போகிற இடங்களிலுள்ள விசேஷமான கட்டிடங்களையும் காட்சிகளையும் படம் பிடிக்க வேண்டுமென்பதும் திட்டம். அதற்கும் வேறு வேலைகளுக் கும் உதவியாக இருக்க என்னையும் அழைத்துக்கொண்டு போக ஏற்பாடு செய்தார்.
அந்த டில்லி தர்பாருக்குள் இடம் பெற அநுமதிச் சீட்டுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஒவ்வொரு மாகாணத்திலும் அந்த அந்த மாகாணத்திலிருந்து தர்பாருக்கு வர விரும்புகிறவர்களுடைய தகுதிகளை ஆராய்ந்து அநுமதிச் சீட்டுக் கொடுப்பதற்குத் தனி அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். அந்த அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயர்கள். சென்னை மாகாணத்துக்கு ஏற்பட்ட அதிகாரி ஹாமில்டன், ஐ. சி.எஸ்., என்ற ஆங்கிலேயர். அவர் திரு. மாணிக்க நாயக்கருக்கு மிகவும் பழக்கமானவர். அதனால் எனக்கு, ஒரு சித்திரக்காரன் என்ற முறையில், அநுமதிச் சீட்டு எளிதில் கிடைத்தது. பெரிய பெரிய ஜமீந்தார்களுக்கும் மிராசுதார்களுக்கும் கூட அனுமதி கிடைக்கவில்லை.
இந்த அநுமதிச் சீட்டுக்கு வேண்டிய சிபாரிசுகளைச் செய்து கொள்வதற்காகத் திரு. மாணிக்க நாயக்கரிடம் ஸ்ரீ ராஜப்பையர் என்ற நங்கவரம் பெரிய பண்ணை மிராசுதார் வந்தார். நங்கவரம் என்பது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் மிகச் செழிப்பான கிராமம். அதில் ஸ்ரீ ராஜப் பையர் மிகப் பெரிய மிராசுதார். தெய்வ பக்தியிலும் தான தர்மங்களிலும் சிறந்த சீமான். மாணிக்க நாயக்கருக்கு நெருங்கிய நண்பர். தர்பாரில் ஸ்ரீ ராஜப்பையருக்கு இடம் கிடைப்பதற்கு வேண்டிய முயற்சிகளையெல்லாம் செய்து அநுமதிச் சீட்டை வாங்கித் தருவதாக எஞ்சினீயர் ஒப்புக் கொண்டார். அது முதற்கொண்டு ஸ்ரீ ராஜப்பையர் திருச்சிக்கு வந்து மாணிக்க நாயக்கருடன் பிரயாணத்துக்கு வேண்டிய மற்ற ஏற்பாடுகளைப்பற்றிப் பேசுவார். அந்த சமயங்களில் நானும் அங்கு இருப்பேன். ஒருநாள் திரு. மாணிக்க நாயக்கர் ஸ்ரீ ராஜப்பையருக்கு என்னை அறிமுகப் படுத்தி என் தமிழறிவையும், கவித்திறத்தையும், சித்திர வித்தையையும் புகழ்ந்து பேசி என்னையும் டில்லிக்கு அழைத்துப் போவதைப்பற்றி சொன்னார். அன்று முதல் ஸ்ரீ ராஜப்பையர் என்னிடம் மிக்க அன்புடையவரானார். அடுத்த முறை வந்தபோது ஒரு ' கோடக்' காமிராவைத் தம் வீட்டில் அது சும்மா கிடக்கிறதென்று எனக்கு வெகுமதியாகத் தந்தார்.
அடுத்த தடவை ஸ்ரீ ராஜப்பையர் வந்தபோது, வட நாட்டுப் பிரயாணத்துக்கு அவசியமான கம்பளி உடைகள், போர்வைகள், தர்பாருக்கு வேண்டிய ‘சூட்'கள், ‘பூட்ஸு' கள் முதலியவற்றைப்பற்றிய ஆலோசனைகள் நடந்தன. ஸ்ரீ ராஜப்பையர் மிக்க வைதீக மனப்பான்மையுள்ளவர். வெள்ளைக்கார முறையில் உடைதரிக்கப் பழகாதவர். வழக்கமான பஞ்சகச்ச உடையிலேயே டில்லி தர்பாருக்கும் போய் வந்துவிடலாம் என்று எண்ணினவர். மாணிக்க நாயக்கர் வற்புறுத்திச் சொன்னதின் மேல் 'சூட்' அணிந்து கொண்டே தர்பாருக்குப் போகச் சம்மதித்தார். அப்படி எத்தனை ‘சூட்கள் ' வேண்டுமென்று பார்த்து ராஜப்பையருக்கும், மாணிக்க நாயக்கருக்கும் வேண்டிய புதிய ’சூட்'களின் விலையையும் கணக்கிட்டு அத்தனைக்கும் ராஜப்பையரே அப்போதே பணம் தந்துவிட்டார்.
இந்தப் பேச்சுகளெல்லாம் நடந்த இடம், திருச்சியில் ஆண்டார் தெருவில் மிகவும் பிரசித்திபெற்ற செல்வராக இருந்த ஸ்ரீ மாணிக்க முதலியார் வசித்த வீடு. அதை முதலியார் வீடு என்று சொல்லுவார்கள். அது மாணிக்க நாயக்கருக்கு மாமனார் வீடு. முதலியார் வீட்டுப் பெண் ணைத்தான் நாயக்கர் மணந்திருந்தார். (முதலியார், நாயக்கர், பிள்ளை, உடையார், கவுண்டர், செட்டியார் என்ற பல பட்டங்கள் எங்கள் இனத்துக்கு உண்டு). மாணிக்க நாயக்கர் அப்போது அந்த முதலியார் வீட்டின் மேல் மாடியில் குடியிருந்தார். மேற்சொன்ன பேச்சுகள் அங்கேதான் நடந்தன.
முதலியார் வீட்டு மேல் மாடியில் திறந்த இடத்தில் உட்கார்ந்தால் ஸ்ரீ தாயுமான சுவாமியின் கோயிலும் திருச்சி மலைக்கோட்டையும் கைக்கு எட்டுவனபோலக் காணப்படும். ஸ்ரீ ராஜப்பையரும், மாணிக்க நாயக்கரும் தர்பாருக்குப் போகவேண்டிய காரியங்களைப் பேசியபின் ராஜப்பையர் தாம் டில்லி தர்பாருக்குப் பிறகு காசிக்குப் போய்ச் சிலநாள் தங்கி அதன்பின் வடநாட்டிலுள்ள பல யாத்திரைத் தலங்களையும் பார்க்க விரும்புவதாகச் சொன்னார். அதிலிருந்து வடநாட்டுக் கோயில்களுக்கும், தமிழ்நாட்டுக் கோயில்களுக்கும் உள்ள வேற்றுமைகளைப்பற்றிய பேச்சு உண்டாயிற்று. ஸ்ரீ ராஜப்பையருடன் வந்திருந்த மூன்று நண்பர்களில் ஒருவர் முன்னமே வடநாடு போய்வந்தவர். அவர், "வட நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களையும் சேர்த்தாலும் தமிழ் நாட்டுக் கோயில் ஒன்றுக்கு ஈடாகாது" என்றார். அதைக் கேட்டதும் ராஜப்பையர் தம்முடைய முகத்துக்கு நேராக இருந்த தாயுமானவர் கோயிலைப்பற்றியும் அதன் கட்டிடச் சிறப்பையும் புகழ்ந்து பேசி மகிழ்ந்தார். இதற்கிடையில் இன்னொருவர்: தஞ்சாவூர் "நிழல் சாயாக் கோபுர" த்தைப் புகழ ஆரம்பித்தார்.
உடனே ராஜப்பையர் எஞ்சினீயர் மாணிக்க நாயக்கரைப் பார்த்து, "நீங்கள் எஞ்சினீயர் ஆனதால் உங்களுக்குத் தெரியுமே. தஞ்சாவூர்க் கோபுரம் நிழல் சாயாக் கோபுரம் என்று சொல்லப்படுகிறதே; அதன் ரகசியம் என்ன?” என்று கேட்டார், அதற்கு மாணிக்க நாயக்கர், “அது வெறும் கட்டுக்கதைதான். நிழல் சாயாத பொருள் உலகத்தில் உண்டா? நானும் அதைப்பற்றிச் சிந்தித்துப் பார்த்தேன். அதில் ஒன்றும் உண்மை இல்லை , பாமர மக்கள் பக்தியினால் சொல்லும் பேச்சு அது!" என்றார்.
இந்தச் சமயத்தில் கொள்ளிடத்து மணலில் ஒரு முழு நிலா நாளில் தட்சிணாயணம், உத்தராயணம், என்பன பற்றியும், 'நிரட்சரேகை ' என்பதைப்பற்றியும் ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் விளக்கியதைக் கேட்டு அதற்குப் பிறகு ஒருநாள் என் மனதில் உதித்த ஊகத்தையும் நினைத்துக்கொண்டு, "நான் சொல்லுகிறேன் " என்றேன்.
“ என்ன? " என்று அங்கு இருந்தவர்களெல்லாம் என் பக்கம் திரும்பினார்கள்.
"தஞ்சாவூர்க் கோபுரத்தை ஏன் 'நிழல் சாயாக் கோபுரம் ' என்று சொல்லுகிறார்கள் என்பதற்குக் காரணம் நான் சொல்லுகிறேன் " என்றேன்.
"அப்படியா! எங்கே சொல்லுங்கள் " என்று ஏக காலத்தில் எல்லோரும் கேட்டார்கள்,
உடனே நான், “தஞ்சாவூர்க் கோபுரத்தின் நிழல் உச்சிக்காலங்களில் ஒருநாளும் பூமியில் சாய்வதில்லை" என்றேன். அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் கல கலவென்று கைதட்டி வெகு நேரம் வரையில் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சிரிப்பு அடங்கினவுடன் திரு. மாணிக்க நாயக்கர் என்னைப் பார்த்து, “இந்த அதிசயத்தை எப்படித்தான் கண்டுபிடித்தீர்களோ! நானும் என்னடாப்பா, எவரும் அறியாத என்ன உண்மை நீங்கள் சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்தேன் " என்றார்.
"ஏன், நான் சொன்னது சரியான காரணம் அல்லவா? ” என்றேன்.
“உச்சிக் காலத்தில் எல்லாப் பொருள்களுக்குந் தான் நிழல் விழுவதில்லை. அது தஞ்சாவூர்க் கோபுரத்திற்குமட்டும் என்ன சிறப்பு ?" என்றார்.
“ அது சரி அல்ல. உச்சிவேளையில் எல்லாப் பொருள்களுக்கும் அவற்றின் நிழல் பூமியில் விழும். தஞ்சாவூர்க் கோபுரம் ஒன்றுக்குத்தான் அந்த நிழல் பூமியில் சாய்வ தில்லை" என்றேன்.
"அது எப்படி? " என்று சிரித்தார் நாயக்கர்.
"சொல்லுகிறேன். உச்சிவேளை என்பது நடுப்பகலான பன்னிரண்டு மணியை மட்டுந்தான் குறிக்கும். சூரியன் நம்முடைய உச்சிக்கு நேராக இருக்கிறான் என்பதை அல்ல. ஆண்டில் பெரும்பாலான நாட்களில் சூரியன் உச்சிக் காலத்தில் நம்முடைய உச்சிக்குச் சரியாக இருப்பதே யில்லை. உச்சிக் கோட்டுக்கு வடக்கிலாவது தெற்கிலாவது தான் பெரும்பாலான நாட்களில் உச்சி நேரங்களில் சூரியன் இருக்கிறான். உத்தராயணத்திலிருந்து தக்ஷிணாயணத்துக்கும், தக்ஷிணா-யணத்திலிருந்து உத்தராயணத்திற்கும் மாறுகின்ற காலங்களில் மட்டுந்தான் சூரியன் சரியான உச்சிக்கு வருகிறான். அப்போதுங்கூட ஒரு கடிகையில் எத்தனையோ ஆயிரம் பங்கில் ஒரு பங்கு நேரந்தான் நேரான உச்சியில் இருக்கிறான். மற்றக் காலங்களிலெல்லாம் உச்சிக்கு வடக்கிலோ தெற்கிலோ ஒதுங்கித் தான் ஓடுகிறான். ஒரு ஆண்டில் இரண்டே இரண்டு நாட்களில் தான் சூரியன் ஓர் அணுப்பொழுது நேரம் உச்சியில் இருக்கிறான். இந்த இரண்டு நாட்களில் இரு துளி நேரங்களைத் தவிர மற்ற உச்சி நேரங்களில் எல்லாப் பொருள்களுக்கும் நிழல் சாயும். சூரியன் தக்ஷிணாயணத்தின் கோடியிலும், உத்தராயணத்தின் கோடியிலும் இருக்கிற காலங்களில் அந்த உச்சி நிழல் நீண்டதாக இருக்கும். அந்தக் கோடியிலிருந்து நிரட்ச ரேகைக்குச் சூரியன் நெருங்க நெருங்க நிழலின் நீளமும் குறையும். ஆகையால் குறுகலாகவோ நீளமாகவோ உச்சி வேளையில் எல்லாப் பொருள்களுக்கும் நிழல் சாயும்."
"அந்த நிழல் தஞ்சாவூர்க் கோபுரத்திற்கும் உண்டல்லவா ? " என்று ஒருவர் கேட்டார்.
”இல்லை, அதுதான் தஞ்சாவூர்க் கோபுரத்தில் அமைந்திருக்கிற சிற்பத்தின் அழகு" என்றேன்.
அதுவரையில் நான் சொல்லிவந்ததைக் கண்களைச் சுருக்கிக்கொண்டு கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த மாணிக்க நாயக்கர் புன் சிரிப்போடு என்னைப் பார்த்து, "அந்தக் கோபுரத்தில் அமைந்திருக்கிற சிற்பத்தின் அழகு என்ன?" என்றார்.
"தஞ்சாவூர்க் கோபுரத்தின் அடித்தளம் மிகவும் அகன்ற சதுரம். கோபுரமும் சதுரமான அடுக்குகளாகவே உயர்ந்து உச்சியில் கூர்மை அடைகிறது. உச்சியிலுள்ள விமானமும் கோபுரத்தின் உச்சிச் சதுரத்துக்கு உள்ளடங் கினதாக இருக்கிறது. அதனால் அதன் உச்சிக்கால நிழல் அடித்தளத்துக்கு மேலேயே நின்றுவிடுகிறது, பூமியில் விழுவதில்லை. 'நிழல் சாயாக் கோபுரம்' என்பதற்கு, ‘ பூமியில் நிழல் விழாத கோபுரம்' என்பதுதான் பொருளே யல்லாமல் ‘நிழலே இல்லாத கோபுரம்' என்பது பொருளல்ல. மற்ற எல்லாப் பொருள்களுக்கும் அவற்றின் உச்சிக்கால நிழல் பூமியில் சாயும். ஆனால் தஞ்சாவூர் கோபுரத்தின் உச்சிக்கால நிழல் பூமியில் சாயாது" என்றேன்.
இதைச் சொல்லி முடிக்குமுன் எட்ட உட்கார்ந்திருந்த எஞ்சீனீயர் எழுந்துவந்து என்னுடைய கையைப்பிடித்துக் குலுக்கி, “இந்தக் காரணம் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. ஒருக்கால் இதுவே உண்மையான காரணமாக இருந்தாலும் இருக்கலாம். நான் இதற்காக உங்களை மெச்சுகிறேன்" என்று சொல்லிவிட்டு மீண்டும் தம் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு, "இது உங்களுக்கு யார் சொன்னது?" என்றார் .
நான் பழைய கதையைச் சொல்லி ஆசிரியர் சுப்பிரமணிய அய்யர் சொன்னவற்றோடு பொருத்திப் பார்த்ததையும் சொல்லி, "இது வெறும் என்னுடைய யூகம்தான். யாரும் எனக்குச் சொன்னதல்ல" என்றேன். எல்லோரும் வியந்து என்னைப் பாராட்டினார்கள்.
நங்கவரம் ராஜப்ப ஐயருக்கு ஒரே பூரிப்பு. அப்போதே அவர் நாயக்கரைப் பார்த்து, "ராமலிங்கமும் நம்முடன் டில்லி தர்பாருக்கு வருவதாகச் சொன்னீர்களே?" என்றார். "ஆம் அவருந்தான் வருகிறார் " என்றார் நாயக்கர்.
“அப்படியானால் நாம் அவருக்கும் உடுப்புகள் வாங்க வேண்டாமா?" என்று கெட்டுக்கொண்டே தமது பணப்பையை எடுத்து அதிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை நாயக்கரிடம் தந்தார்.
அந்தப் பணத்தைக்கொண்டு எனக்கு வெவ்வேறு மாதிரியில் 'ட்வீட்' சூட்டுகளும், போர்வையும், பூட்சுகளும் மற்றவைகளும் வாங்கினார்கள். இறைவன் அருளால் எங்கள் திட்டங்கள் நிறைவேறி டில்லிக்குச் சென்று முடி சூட்டும் தர்பாரைக் கண்டு களித்தேன். தர்பார் கண்காட்சிக்கு நான் அனுப்பியிருந்த ஓர் ஓவியத்துக்காக மன்னர் வழங்கிய தங்கப் பதக்கம் பரிசும் பெற்றேன். டில்லியில் பதினைந்து நாட்கள் தங்கிப் பிறகு சுமார் நான்கு மாத காலம் யாத்திரை செய்துவிட்டு 1913-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9-ஆம் தேதி வீடுவந்து சேர்ந்தோம்.
-------------
This file was last updated on 4 August 2020.
Feel free to send the corrections to the Webmaster.