ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்.
ஆசிரியர் வித்துவான் கனகசபைத்தம்பிரான்
Atipuri vaTivuTaiayammai piLLaittamiz
by vitvAn kanakacapaittampirAn
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Roja Muthaiah Research Library, Chennai for providing a scanned image/PDF of this work.
The e-text has been generated using Google OCR online tool.
We thank Ms. Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation of the e-version of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்.
ஆசிரியர் வித்துவான் கனகசபைத்தம்பிரான்
Source:
ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்.
வித்துவான் கனகசபைத்தம்பிரான் அவர்கள் அருளிச்செய்தது.
இஃது சென்னபட்டணம்: ஊ. புஷ்பரத செட்டியாரால்
தமது கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
1887.
-------------
உ
ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்.
குணாலய விநாயகர் துதி.
பூமேவு திருமாது மணிமார்பி லுறைகின்ற
புயல்வண்ண நெடுமாயனும்
புகழ்பெற்ற கலைமாது மறைநாவி லுறைகின்ற
புத்தேளு மலர்துன்றிய
காமேவு கற்பகப் பொன்னுலகி லுறைகின்ற
காவலனு முனிவோர்களுங்
கருத்திலுறை வித்தேவல் செய்யுங் குணாலயக்
களிற்றின்மல ரடிபணிகுவாந்
தேமேவு கொன்றைச் செழுந்தேன் றுளிக்கும்
தியாகப் பிரான்வேணியாஞ்
செங்கொண்டல் கண்டுகண் டுள்ளங் களிக்குமொரு
தெய்வமட மயிலையடியார்
பாமேவு மாதிபுரி வைகுகிளி யைப்புலவர்
பன்னுதிரி புரசுந்தரப்
பாவையைக் கருணைமழை பொழிவிழிக் கொண்டலைப்
பரவுதமிழ் தழைகவென்றே.
--------------------------------
1. காப்புப் பருவம்.
திருமால்.
நீர்பூத்த செக்கர்ச் சடாமகுட மேல்வைத்த
நிலவினைக் கண்டுமலரு
நெடியவிழி யுற்பல மணந்தமுக மதியினொடு
நின்மலன் விழித்திங்களுஞ்
சூர்பூத்த வென்வினை துமித்தவிழி யிரவியுஞ்
சூழ்ந்துமுன் னின்றளவளாய்த்
துன்னவெழில் கொண்டுதிரு வொற்றிமா நகரிலுறை
சுந்தரியை யினிதுகாக்க
சீர்பூத்த மறையண்ணன் மணிநா வகங்கொண்ட
தேவிபுல வோரிடமெலாஞ்
சென்றுவிளை யாடவய வீரரிட மெல்லாஞ்
சிறந்துவிளை யாடவிசயை
தார்பூத்த மருமத்து மலர்மாது முலகெலாஞ்
சார்ந்துவிளை யாடமுழுதுந்
தண்கட லுறங்கியு முயிர்த்தொகை யளிக்குமொரு
சக்கரச் செங்கைமுகிலே. (1)
________________________________
பரமசிவன்.
அருமறைக் குமுயரம ரருக்குமய னரிதமக்கு
மறியாதபொற் றாட்டுணை,
யறையுமுப் பொழுதுமறலு குத்துவிழு மலர்பறித்
தணிசெய்வார்கண் முற்காட்டியு,
மமரர்கற்பக முமணிநிதிக் குலமுமமிழ்து மற்றைய
வும்வீசுகைப் பூத்தனி
லருவருப் புடையவுடை தலைக்கலனை யகிலமட்
டவுணவார் தரச்சாத்தியு
மிருநிலத் தவரைநிறை சுகக்கடலி னிடைவிதித்த
மறைவாயின் மிக்கார்த்திடு,
மிருணிறக் கடலினுயிர னைத்துமுள மினையவுற்ற
விடமாதரத் துட்டியு,
மினிமைமிக்க மதிபுனல் பதித்தசடை யிடையழற்
கணரமா லையைச்சூட்டியு,
மிமயநற்கயிலை யெழில்கொ ளொற்றியென வெனதுளத்
துறைதியா கரைப்போற்றுது,
மருமலர்க் குழலுமொளி நுதற்சிலையு மதர்விழிக்
கயலுமூசலைத் தாழ்த்திய,
வடிகுழைச் செவியுமுறு வனித்திலமு மலர்முருக்
கிதழுநா சியிற்றூக்கிய,
மணிகுயிற் றணியும்வளர் கழுத்தணியும் வரிபுயத்
தணியும்வால் வளைக்கூட்டமும்,
வனசமொத்த கரதலமுமுற் பலமென் மணிவிரற்
செறியுமோ திரத்தீட்டமும்,
விருதெடுத் தனையவெழு தெழுத்தினொடு மிகுவிரைக்
கலவையா டுறச்சாத்திய,
மிளிர்முலைத் தரளவடமு மிட்டிடையின் விரவுபொற்
கலையுமாட கத்தாக்கிய,
விலையிடற் கரியபரி புரப்பதமும் விழிகளிப்ப
வெதிரேவெளித் தோற்றிய
விமலவுத்த மியைவடிவுடைக்கொடியை விடையுயர்த்த
கவுமாரியைக் காக்கவே. (2)
________________________________
விநாயகர்.
தேவ ரருந்துங் கலைமதியைத் தெவிட்டா தருந்த விடைவகிர்ந்த,
செவ்வாய்க் கடையி னொருபிளவைச் சேர்த்தோர் பிளவும் பிடித்ததுபோன்
மூவர் விழையும் பெருங்கருணை முகத்தோர் மருப்பு மொருமருப்பு
முளரிக் கரத்து மழகெறிக்கு முக்கட் களிற்றி னடிடணிவாங்
காவல் புரியு நெடியோனைக் கமலத் தவிசின் முதியோனைக்
காய்ந்து நிறுவும் பழையோனைக் காதற் குழவி யெனவளர்க்கும்
பாவ மகன்ற பராபரையைப் பண்ணம் பணைத்த வருளாளைப்
பரவும் பதும புரத்தாளைப் பறம்பின் மகளைப் புரக்கவே. (3)
_____________________
சுப்பிரமணியர்.
சிலம்பு சதங்கை கலகலெனத் தெருவில் விளையாட் டயரிளமைச்
செவ்வி கடக்குமுனந் தேவர்சேனா பதியாய்ச் சயசூரன்
குலம்பற் பலவுஞ் சிலதினத்திற் கொன்று குவித்து விண்ணுலகங்
குடியேற் றியபன் னிரு தடந்தோட் குமரப் பெருமாள் சரண்பணிவா
நலம்பல் லுயிர்க்கு மினிதருள நளிமா லிமயத் தடஞ்சிலம்பி
நறுநீர்ப் பசும்பொற் சுனைபூத்த நளின மலர்ச்சேக் கையிலிருந்த
வலம்பு மணிநூ புரச்செழுந்தா ளன்னப் பெடையை யெழில்கொழிக்கு
மாதி புரிவாழ் திரிபுரசுந் தரவா ரணங்கைப் புரக்கவே. (4)
____________________
பிரமன்.
ஒருகாற் கமலத் தடங்கண்ண னுந்திக்கமலத் திடைப் பிறந்த
வுரிமை யானுமற் றொருகா லுவண முயர்த்தோன் றனைவிழுங்கி
யருகா விழைவி னீன்றெடுத்த வாண்மை யானும் பிதாமகனென்
றகிலமுழுது மெடுத் தேத்து மன்னக் கொடியோ னனிபுரக்க
முருகா ரிதழிச் சடைமௌலி முதல்வர்க் கன்னை யாய்மகளாய்
மூத்தா ளாகியிளை யாளாய் முயங்கு மனையாய் முழுதுலகும்
பெருகா தரவினுயிர்த் தளித்துப் பிறழாத் தெய்வக் கன்னியையென்
பிழையுந் தொலைப்ப வாதிநகர் பேணிவாழ் சுந்தரி தனையே. (5)
_____________________________
இந்திரன்.
மடல்விண் டவிழ்ந்த நறுவாச மலர்க்கற் பகமு மிருநிதியு
மாசற் றுயர்சிந் தாமணியும் வற்றாச் செருத்தற் சுரபியுநின்
றிடர்விண் டவிழ்ந்து விழவெவர்க்கு மிரப்ப தளிப்பக் கடைவிழியா
லேவித் துரக்கங் காவல்புரி யேந்தற் கடவு ணனிபுரக்க,
வுடல்விண் டவிழ்ந்த சீரடியார்க் குயர்ந்த வீடுந் தருவாதி
யோரைம் பொருளு மெப்பொருளு முலகோர் தமக்கு மெளிதுதவி
யடல்விண் டவிழ்ந்த நெடுஞ்சூலத் தமலனடியில் வீற்றிருப்ப
வலர்ந்து வகுளம் வீற்றிருக்கு மாதிபுரிசுந் தரிதனையே. (6)
________________________________
திருமகள்.
பச்சைப் பெருமாள் வளர்மேனிப் பவளப் பெருமா ளுலகளந்த,
பாதப் பெருமாள் பாம்பணையிற் படுக்கும் பெருமாளு யிரளிக்கு,
மிச்சைப் பெருமாண் மணிமார்பு மிதழ்விண் டலர்ந்த தாமரையு,
மெய்துஞ் செல்வத் தவரிடமு மிருந்துவிளை யாட்டயர் மடந்தை,
யச்சப் பிறவிக் கடல்கடந்த வடியா ருள்ளத் தனிமலரு,
மரிய யோகப் பெருந் தவத்தோ ராறாதாரத் திருமலருஞ்,
செச்சைத் திருநீற் றொளிமேனித் தியாகப் பெருமா ளுடனொற்றித்,
தெய்வ நகரும் விளையாடுஞ் சிலம்பின் மகளைப் புரக்கவே. (7)
_________________________________
கலைமகள்.
வெள்ளை மயமா கியசாத்து விதாற் குணத்தோர் தமக்கன்றி,
மேவா ஞானந் தனைவளர்க்கும் வியனார் கலைக்கும் தெய்வதமாய்த்,
தொள்ளை யகற்று மொருதானுஞ் சுடர்வெண் ணிறமாய் வெண்கமலத்
தொல்லை மனையிற் குடிகொள்ளும் தூவிச் சிறையோ திமமாது,
வள்ளை மருட்டு மிருசெவியின் மணிப்பூங் குழையின் வெண்ணிலவும்,
வதன நிலவு நுதனிலவும் வற்றாக் கருணை நகைநிலவுங்,
கிள்ளை வளர்கை வளைநிலவுங் கெழுவி யகிலாண் டமும்விளர்க்கக்,
கீர்த்தி நிலவு மொற்றிநகர் கிளர்பார்ப் பதியைப் புரக்கவே. (8)
_____________________________
சத்தமாதர்கள்.
வேறு.
தூயமறை யேட்டை யாகத் தரித்தவள் சூழ்விசய
நாடுபினாகக் கரத்தினள்,
தோகைமயி லேறிவை வேலைப் பிடித்தவள்
சோதிவளர் பாணியி லோர்சக் கரத்தினள்,
பேயின்முது கேறிய சூலத் தொடிக்கையள்
பேரசுரர் மார்புழு நீள்பொற் கலப்பையள்,
பீடுமலை யாண்மையை வீழ்வச் சிரத்தினள்
பேசுமெழு மாதர்க டாளைப் பழிச்சுது
மாயன்முத லோர்முன மோலிட் டரற்றலும்
வாருமிரு நீவிர்க ளேதுக் கிளைத்தனிர்
வாழ்வுதரு வாமென வோதிக் கலக்கிய
மாகடலின் மீதெழு மாலத்தி னற்சுவை,
ஆயுமறை நாவின ளாவித் தெரித்தபி
னானவடை யாளம தாகக் களத்திடு,
மார்கருணை நாயகர் பாகத் தொருத்தியை
ஆதிநகர் மேவிய மாதைப் புரக்கவே. (9)
________________________________
பலதேவர்கள்.
(சந்த விருத்தம்.)
வீசுமண மிக்கமத வாசமலர் மொய்த்ததொடை
மேவியற லுக்கொத்து நீளுமள கத்தியை,
மேருவினி வப்பவளர் வானவில் பசப்பமத
வேழவி லிறப்பக்கு லாவியகு ளத்தியை,
வேலைவிட மத்தனுண வாரமிழ்தி னற்பயன்வி
ராவவதி னுற்றுச்சு லாவுநய னத்தியை,
வீறுமக ரக்குழையி னடிமணி முத்தவிய
னூசலைய றுத்திட்ட வார்செவிவ னப்பியை,
வாசவனி திப்பணில மாசறவு யிர்த்தகுரு
மாமணியின் மூக்குத்தி நாசிகைபு டத்தியை,
வாரிசம லர்த்தலையி னாரநிரல் வைத்தனைய
வாணகைமு கிழ்த்துக்கு லாவியவெ யிற்றியை,
வாசுகிவ ளைத்துமலை வாரிதிக லக்கவெழு
வானமிழ்தி னிப்பப் பராவுமத ரத்தியை,
வானவர் நிதிப்பதும மாரமிழ் துகுத்ததென
வானருள் கொழித்திட்ட சீதளமு கத்தியை
யீசனிரு கைக்கமல நேசமொடு கட்டுவட
மேலணி திருத்தித்து ழாவிய கழுத்தியை,
யேதில மெனப்பசிய வேய்வரை யிடத்தொழிய
வீகைவனை முத்தத் தழாலறு புயத்தியை,
யேமகட கத்தொடர்கண் மோதிரம ணிச்சரிக
ளேமுற வெடுத்திட்ட பூநிகர் கரத்தியை,
யேசில்கல வைப்புழுகு பூசியெழு தித்தரள
நீடுகன கப்பணிகள் பூணிரு தனத்தியை
யாசைவளர் மத்தமத யானைவள மத்தகமோ
டாடரவொ ழித்துச்ச மார்கடித டத்தியை
யாடக மிழைத்தவரி நூபுரம தர்த்த*பரி
யாகமு மணைத்துக்க லீலெனு மடிச்சியை,
யாதிநக ருற்றடியர் மோகவினை முற்றுமற
வாரருள் கொழித்திட்ட மேயரு ளொருத்தியை,
யாதவரு ருத்திரர்கள் சேர்வசு மருத்துவர்க
ளானவிவர் முப்பத்து மூவர்கள் புரக்கவே. (10)
* பரியகம் என்பது பரியாகமென நீண்டு நின்றது.
காப்புப்பருவம் முற்றிற்று.
_________________________
2. செங்கீரைப்பருவம்.
வாருற்ற வெண்டிரை மணிப்புணரி மேகலை
மருங்குடுத் தோங்கன்முலைமேன்,
மணிக்கச் சணிந்தருவி நித்தில வடம்பூண்டு
வைகுபுவி மாதுதலையின்
நேருற் றிருப்பக் குறித்தவ ளிருஞ்சுத்தி
யெய்தவொரு தீக்கைசெய்தாங்,
கிருகையு நிலத்திற் பதித்தொரு முழந்தா
ளிருத்தியெழில் கொப்புளிப்பப்,
பேருற்ற மற்றொரு முழந்தா ணிமிர்த்துப்
பிறங்கொளிய ரத்தவடியும்,
பெய்துமுக மலர்மே னிமிர்த்துலக மின்பப்
பெருக்காற்றி னென்றுமாடச்
சீரொற்றி மாநக ரிருந்தவடி வுடையம்மை
செங்கீரை யாடியருளே,
தேவர்க்கு மூவர்க்கு மியாவர்க்கு மொருமுதல்வி
செங்கீரை யாடியருளே. (11)
_____________________________________
பொருவற்ற சீறடி யணிந்தமணி நூபுரம்
பொன்னஞ் சதங்கைதண்டை,
பொற்றொடர் செழும்பா டகங்களிவை மெல்லப்
புலம்பிநின் றசையவிடையின்,
மருவுற்ற மேகலை மணிக்காழ்க ளசையமென்
மலர்க்கைவளை தோளங்கத,
மார்பிலொளிர் நித்திலவ டங்களசை யக்காது
வார்ந்துகுழை யோடுமசையக்,
குருவுற்ற வாணுதற் சுட்டியசை யச்செருகு
கொண்டைமலர் மாலையசையக்,
கோமளத் திருமேனி முற்றுமசை யக்கருணை
கொட்டுநின் வதனமசையத்,
திருவொற்றி மாநக ரிருந்தவடி வுடையம்மை
செங்கீரை யாடியருளே,
தேவர்க்கு மூவர்க்கு மியாவர்க்கு மொருமுதல்வி
செங்கீரை யாடியருளே. (12)
____________________________________
மின்னொத்த நுண்ணிடைப் பொற்றொடித் தேங்குழன்
மேனையெனு மாதுபண்டை
மெய்த்தவம் வாய்ப்பநின் றிருமேனி தொட்டுவிரை
நீராட்டி யீரமொத்திப்
பொன்னொத்த தேமற் பயோதரத் தொழுகுபால்
பூங்குமுத மலரைவென்ற
பொழிகதிர்ப் பவளவா யூட்டிப் பொலன்கலம்
பொற்பத் திருத்தியழகு
மன்னத் தடங்கண்ணி னஞ்சனந் தீட்டிமதி
வாணுதற் பொட்டுமிட்டு
மார்பத் தணைத்துவாய் முத்தாடி வைத்தாட
மல்குமருள் கூர்ந்துவளருந்
தென்னொற்றி மாநக ரிருந்தவடி வுடையம்மை
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மூவர்க்கு மியாவர்க்கு மொருமுதல்வி
செங்கீரை யாடியருளே. (13)
________________________________
வருந்தத் தவங்களா லாற்றுபல வேள்வியான்
மாசற்ற யோகங்களான்
மற்றுமுள செயல்களா லொன்றானு மறியாத
வாய்மையுரு வானபொருணீ
பொருந்தத் தரைக்கணுறு பார்வையி னுயிர்க்கெலாம்
புரைமுழுத கற்றவருளாற்
பூண்டதிரு மேனியைத் தங்கள்வடி வங்கள்போற்
புந்திசெயு மடவார்களை
யிருந்தத்து வாவினல தெம்முருவ நும்மதி
னெனத்தலையி னான்மறித்தாங்
கிலகெழில் கொழிக்குமுழு மதிமுக நிமிர்ந்தசைய
விளநிலா நகைமுகிழ்ப்பத்
திருந்தொற்றி மாநக ரிருந்தவடி வுடையம்மை
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மூவர்க்கு மியாவர்க்கு மொருமுதல்வி
செங்கீரை யாடியருளே. (14)
_____________________________________
பொறிவைத்த மணிமார்பி னெடியோனு மதுவொழுகு
பூவணையி னான்முகவனும்
பொன்னுலகி னரசுபுரி யிந்திரனு மாதிரப்
புலவோரும் வானவர்களும்
மருவற்ற கருடர்கிம் புருடர்கின் னரர்களும்
மாதவ ரிராக்கதர்களும்
மல்குவிஞ் சையர்களுஞ் சித்தர்சாத் தியர்களும்
மற்றுமுள வனைவோர்களும்
வெறிதுற்ற பொன்மலர்க டூய்த்தொழ வவர்க்கருள்
விழிக்கடை வழங்குமாறு
மெல்லவிரு பாலுந் திரும்புமது போலொளி
விரிக்குமுக மசையவழகு
செறியொற்றி மாநக ரிருந்தவடி வுடையம்மை
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மூவர்க்கு மியாவர்க்கு மொருமுதல்வி
செங்கீரை யாடியருளே. (15)
______________________________________
வேறு.
முத்தி னிசைத்த மௌத்திகம் வார்குமிழ் மூக்கி னசைந்தாட,
முரிசிலை நிகர்நுத லொளிவிடு சுட்டிமு றுக்கினெழுந் தாடக்
கத்திகை யோடுமி லம்பக மாடக் கதிரவ ருதயமெனக்
காதணி குண்டல நான்றிரு தோள்கள் கலந்து துவண்டாடக்
கொத்துறு வித்துரு மத்தொடை நித்தில கோவைபி ணைந்தாடக்
கோற்றொடி யங்கத மேகலை நூபுர கோலமி குந்தாட
வத்த னிடத்தம ரொற்றி நகர்ப்பரை யாடுக செங்கீரை
யருமறை முடியுறை திரிபுர சுந்தரி யாடுக செங்கீரை. (16)
___________________________________________
மணிமலை யெனவரு கருநிற மகிடனை வன்கள னிடையெதிரா,
வார்புரு வச்சிலை தாங்குனி யக்கையின் வரிசிலை யுங்குனியத்
தணிவறு வெகுளி விழிக்கணை யோடு தழற்கணை யுங்கடவித்
தரையவர் பாதல வுரகர்க ளமரர்கள் சகலரு முளம்வெருவத்
திணிவரை நிரைபல பிதிர்பட மிகுசமர் செய்தவ னொருதலையிற்
றிவள்பரி புரவொலி மறையொலி யுடனெழு திருவடி நிறுவிநிமிர்ந்
தணிவளர் நடமிடு மாதி புரத்தவ ளாடுக செங்கீரை
யருமறை முடியுறை திரிபுர சுந்தரி யாடுக செங்கீரை. (17)
_________________________________________
செங்கம லம்புரை யும்பத மொன்று சிலம்பு மசைந்தாடத்,
திருவரை கட்டிய வாளர வுந்திக ழக்குமசைந் தாடப்
பொங்கொளி மார்பணி முப்புரி நூலொடு பூண்க ளசைந்தாடப்
புயவரை யிழியரு வியின்மணி மாலிகை பொங்கி யசைந்தாடக்
கங்கை யிளம்பிறை வெண்டலை விண்ட கடுக்கை யசைந்தாடக்
கவின்மிகு மொற்றி யிடத்துயி ருய்வகை கண்ணி யசைந்தாடு
மங்கணர் பங்குறை நங்கை யசைந்தினி தாடுக செங்கீரை
யருமறை முடியுறை திரிபுர சுந்தரி யாடுக செங்கீரை. (18)
_______________________________________
வேறு.
அருவென வுருவென வலனென நின்றவன் மன்றா டும்போது
மவிர்சுடர் விழிமலர் பலவும் விழைந்து விருந்தா ருந்தேசு
மருவிய முகமுமி ழொளியெதிர் கண்டு வளஞ்சா லுந்தேவர்
மலிகுரு கினமொடு மதியிது வென்று மகிழ்ந்தார் வங்கூர
விருநில மகிழ்துன வருமு னறிந்து பசுந்தே னந்தாத
விணர்மலர் சொரிதர வதனம சைந்துவ சிந்தே பண்போடு
திருமகள் கலைமகள் வழிபடு மம்பிகை செங்கோ செங்கீரை
திசைமுக னகருறை திரிபுர சுந்தரி செங்கோ செங்கீரை. (19)
_______________________________________
அனவர தமுமுன தடியவ ரன்பின் விளைந்தூ றுந்தேனே
யகமல ரறுவகை யினுநிலை பண்பின ரங்கா குந்தேசே
யினமல ரிடுமவ ரிதய மெழுந்தக ரும்பே தண்பாலே
யிணையறு பணிபுரி யியல்பினர் சிந்தையி ருந்தா லுந்தோகாய்
புனன்மதி யரவுட னசைய வசைந்துபொ லிந்தா டுந்தியாகர்
புயவரை தழுவிய வமிழ்துகு கொம்பின்வ ளர்ந்தே றும்பாகே
தினகர னெனவுல கிடைவரு சங்கரி செங்கோ செங்கீரை
திசைமுக னகருறை திரிபுர சுந்தரி செங்கோ செங்கீரை. (20)
செங்கீரைப்பருவம் முற்றிற்று.
______________________________
3. தாலப்பருவம்
துணிபொற் றகட்டின் மணியிழைத்த தூவி சுடரு முடியாகத்
துலங்கு முடுக்க ளமார்குழாஞ் சொரிபூ மாரி வளங்காட்டப்
பிணிமுற் றொழிந்த பெருவனப்பின் பேதை மடவா ரிடைவதிதல்
பிரச மலரான் மணிமார்பிற் பேணி யிருக்கு மெழில்காட்ட
மணிமுற் றிழைத்த நெடுமாடம் வளர்ந்த நெடுமா லுருக்காட்ட
மற்றாங் கெழுந்து நுடங்குகொடி வான மளந்த பதங்காட்டு,
மணிமுற் றமைந்த வொற்றிநக ரரசே தாலோ தாலேலோ,
வகில முயிர்த்த வடிவுடைப்பெண் ணமுதே தாலோ தாலேலோ. (21)
____________________________________
கொண்டற்குழுவுங் கலைமதியும் குளிவான் கங்கைப் பெருக் காறும்,
குளிர்மா மணிச்செஞ் சூட்டரவுங் கொலைபூத் தலர்சூ லப்படையு
மண்டிக் கதிர்ப்ப மிசையணிந்து வடிவ முழுது நீற்றொளியின்,
வயங்கி நெடுமா டமுஞ்சிறந்த மண்ணிற் சிவலோ கமுமாகிப்
பண்டை மறையு மறிவரிய பரமற் கிடமா மித்தலத்திற்,
பயிலுந் தவத்தா லவனுருவம் பரித்து விளங்கும் பரிசேய்க்கு,
மண்ட ரிரைஞ்சு மொற்றிநக ரரசே தாலோ தாலேலோ,
வகில முயிர்த்த வடிவுடைப்பெண் ணமுதே தாலோ தாலேலோ. (22)
_______________________________________
சந்த மறையின் முழக்கானுஞ் சகல கலையின் வழக்கானும்,
தயங்கு காயத் திரியானுந் தண்டா தோம்பு மெரியானும்
பந்தமறுக்குந் திருமறையோர் பண்டு பரஞ்சோ தியைவணங்கும்,
பதுமக் கடவு ளின்றுபல படிபவ மெடுத்துப் பரவொளியைச்,
சிந்தை மகிழ்ந்து தரிசிக்குஞ் செய்தி காட்ட வாகனமும்,
திகழ்ந்து பலவா யடுத்ததுபோற் சிறையோ திமங்கள் பலபயிலு
மந்தண் வயல்சூ ழொற்றிநக ரரசே தாலோ தாலேலோ,
வகில முயிர்த்த வடிவுடைப்பெண் ணமுதே தாலோ தாலேலோ. (23)
______________________________________
திருத்தன் சிவலோ கப்பெருமான் றேவர் பெருமான் வழங்குமணித்,
தியாகப் பெருமா னெழுத்தறியுஞ் செல்வப் பெருமான் றிகழ்பதும
நிருத்தப் பெருமான் மதிதோறு நெடுவீ திகளினெ ழுந்தருளி,
நிகரில் காட்சி கொடுத்தலினா னெடுந் தாழையு நிருமலன்முன்
வருத்த மறுக்கு முருத்திரரை வழங்கி யாங்கு வளரோடு,
மணிக்கண் மூன்றுந் தீம்புனலு மருவும் பசுங்காய் பலதோற்று,
மருத்த மருளு மொற்றிநக ரரசே தாலோ தாலேலோ,
வகில முயிர்த்த வடிவுடைப்பெண் ணமுதே தாலோ தாலேலோ. (24)
___________________________________
வேலைக் கடலிற் புனல்பருகி விண்ணிற் பரவுங் கருமுகிலை,
வேத விதியினவி சொரியும் வேள்விக் களத்து விழுப்புகையை,
மாலைக் குழன்மென் மடமாதர் மாட நிலைக டொறுமடுத்து,
மணிச்செய் சுருங்கை திறந்துவிடும் வாசங் கமழுங் கொழும்புகையைச்,
சோலைக் கருகு செழுங்கன்னற் சுவைச்சா றடுதீம் புகைதன்னுட்
டுன்ன வடக்கி மதியிரவி சோதி மறைத்துத் துறக்கமறு,
மாலைக் களஞ்சூ ழொற்றிநக ரரசே தாலோ தாலேலோ,
வகில முயிர்த்த வடிவுடைப்பெண் ணமுதே தாலோ தாலேலோ. (25)
_______________________________
மறைகண் மணிச்செய் காலாக வளர்மண் ணாதி வடிவெட்டும்,
வகுத்த சட்ட மவையாக வதியப் படுத்த தாகமமா,
நிறையு மிரண்டு ஞானமுமே நீக்கில் வடமாத் துரியமென,
நிலவுத் தரத்திற் கோத்தமைத்த நிகரின் மணித்தொட் டிலினிவர்ந்து,
குறைவில் பரமா கியமனையிற் கோதி லடியாரெ னுஞ்சுற்றங்,
குழுமிக் களிப்பத் தாலாட்டுங் குழந்தா யடியேந் தவப்பேறே,
யறைதண் கடல்சூ ழொற்றிநக ரரசே தாலோ தாலேலோ,
வகில முயிர்த்த வடிவுடைப்பெண் ணமுதே தாலோ தாலேலோ. (26)
_____________________________________
பசும்பு லறுகும் வெண்டும்பைப் பனிமென் மலரும் பொன்னிதழிப்,
பைந்தேன் றொடையுஞ் செஞ்சடையிற் பயிலுந் தியாகர் திருவுருவின்
விசும்பி னெழுமிந் திரவில்லின் விரவிப் புவன மெனுமனையின்,
மிடலா ணவவுத் திரத்திசைத்து விடுத்த கரண வடத்திட்ட,
தசும்பி னிழைத்த வுடற்றொட்டிற் சார்வித் துயிராங் குழவிகளைத்,
தண்டா தினிது தாலாட்டும் தாயே யிமய மகளேதே,
னசும்பும் பொழில்சூ ழொற்றிநக ரரசே தாலோ தாலேலோ,
வகில முயிர்த்த வடிவுடைப்பெண் ணமுதே தாலோ தாலேலோ (27)
_______________________________
சரியை கிரியை யியற்றுநர் கடத்த மிதயத் தொட்டிலினும்,
தண்டா யோகத் தவராறா தார மலர்ப்பூந் தொட்டிலினும்,
விரியு மறிவை யறிந்தவர்கள் வெளியே யகமே யெனும்விகற்பம்,
விரவாச் சுத்தத் தொட்டிலினு *மேவித் தினிது தாலாட்டு
முரிய மகளே யாங்களிடு மொளிமா மணிப்பொற் றொட்டிலினு,
முவந்து விளையாட் டயர்கிளியே யுவண முயர்த்தோன் சகோதரியே
யரிய பொருள்சே ரொற்றிநக ரரசே தாலோ தாலேலோ,
வகில முயிர்த்த வடிவுடைப்பெண் ணமுதே தாலோ தாலேலோ (28)
* மேவுவித்தென்பது, மேவித்தென விகாரமாய் நின்றது.
_________________________
வேறு
அயனென வரியென வரனென நின்றவர் தாயே தியாகேச,
ரகமகிழ் மணமக ளெனவவர் பண்பறி மாதே தேதேயென்,
றியவரி னரியிசை முரன்மலர் மங்கையர் வாழ்வே தாழ்வார்க,
ளெவையெவை விழைவன வவையவை தந்தருள் பாவாய் தூவாயாய்
கயமுனி யெனவொரு மகனைவ ழங்கிய காவே யோவாத,
கலைமறை முதலிய பனுவன் மலர்ந்தெழு தேனே வானாடர்,
சயசய சயவென வழிபடு மம்பிகை தாலோ தாலேலோ,
சதுமுக னகருறை திரிபுர சுந்தரி தாலோ தாலேலோ. (29)
______________________________
மரகத மயிலின னுணமுலை தந்தவ டாலோ தாலேலோ,
வளர்கவு ணியணுண வமிழ்துக றந்தவ டாலோ தாலேலோ,
கரிணியி னுரிபுரி கருணையர் பங்கின டாலோ தாலேலோ,
கயமுகன் வரவொரு பிடியின்வி ழைந்தவ டாலோ தாலேலோ,
விரணிய சபையினர் நடனமு வந்தவ டாலோ தாலேலோ
வெழின்மிகு பதுமநன் னடனமு வந்தவ டாலோ தாலேலோ,
தரணியு மருள்பெற தரையின்வ ளர்ந்தவ டாலோ தாலே,
சதுமுக னகருறை திரிபுர சுந்தரி தாலோ தாலேலோ. (30)
தாலப்பருவம் முற்றிற்று.
____________________________
4. சப்பாணிப்பருவம்.
தெண்டிரை சுருட்டும் பனிப்பெரும் பாற்கடல்
சிலம்புநட் டாவுசுற்றித்
தேவரொடு தானவர்க டைந்தகொடு விடமன்று
சீறிக் கொதித்துவரலும்
வெண்டலை புனைந்தருதி யாகப் பிரானதனை
வெய்துகனி வாய்மடுப்ப
விளங்குபகி ரண்டமு மொடுங்காது தடைசெய்து
மென்மலர்ச் செங்கைகளாற்
கொண்டல்பொழி தண்டுளியி னோடுசுவை மண்டுபண்
கொண்டுமின வண்டுகிண்டக்
குறுமலர் முறுக்கிதழ்கள் விண்டுபொழி நுண்டுளிக்
கோற்றேனு மிடையறாத
தண்டலை யுடுத்ததிரு வொற்றிநக ருறையம்மை
சப்பாணி கொட்டியருளே
தடவரைச் சுகுமாரி வடிவுடைக் கவுமாரி
சப்பாணி கொட்டியருளே (31)
_______________________________
வழங்குபல வுயிர்களுக் குயிராகி யறிவுகள்
வளர்ப்பதே யன்றிவெளியின்,
மல்குபல பொருளெலாங் காட்டலுந் தம்பிரான்
மணியுருவி னொளியாமெனப்
பழங்கணுறு மடவோரு மெண்ணியெளி துய்யப்
பரிந்துதிரு விளையாட்டினார்
பரிதிமதி தழல்களுங் குருடாக வெங்கணும்
பாயிருள் பரந்துமூட
முழங்கழ னுதற்கணெதிர் மலரமல ரிணைவிழிகண்
மூடுநின் செங்கைமலரான்
முத்தநிறை வித்துரும நித்தலு நெடுந்திரை
முகந்துதுறை தோறுமுலவும்
தழங்குகடல் சூழ்ந்ததிரு வொற்றிநக ருறையம்மை
சப்பாணி கொட்டியருளே
தடவரைச் சுகுமாரி வடிவுடைக் கவுமாரி
சப்பாணி கொட்டியருளே. (32)
_____________________________
விண்ணவர் படைக்கலத் தெறுழொரு துரும்பினான்
மேவின ரளந்துமலையை
வில்லென வளைத்துநகை நகநயன மடிகளான்
மிக்கபகை சாய்த்துமமரு
மெண்ணரிய பெருவலிய போனுமிகு மன்பினர்க்
கெண்மையினு மென்மையானு
மிறைவர்திரு வருள்கண்டு மடவோரு முய்யமு
னெழுந்தகம் பாநதிக்கட்
டிண்ணிய பெருங்கற்பி னன்பிற் றழீஇயமலர்
திருமேனிகுழை வித்தநின்
சிலைவளைக் கங்கணச் செங்கைமென் றளிர்கொண்டு
சேண்டொட நிவர்ந்தசீர்த்தித்
தண்டலை யுடுத்ததிரு வொற்றிநக ருறையம்மை
சப்பாணி கொட்டியருளே,
தடவரைச் சுகுமாரி வடிவுடைக் கவுமாரி
சப்பாணி கொட்டியருளே. (33)
______________________________
அருவிவளர் கயிலைச் சிலம்பனு நெடுந்தவ
மகற்றியின் பந்திளைப்ப
வரிபிரம ரிந்திரன் முதலான தேவர்மற்
றனைவோரு மெண்ணிலுயிரு
மருவலுறு தத்தம துயிர்த்துணையி னோடும்
வதிந்தின்ப வாரிபடிய
வானோங்கு மிமயத் தடங்கிரிப் புரவலன்
மகிழ்ந்தினிது வாக்குநீரோ
டொருவிழி நுதற்கட் படைத்தவச் சிவபிரா
னுவந்துதன் செங்கையேற்ப
வுயர்வற வுயர்ந்தருள் சுரந்துயி ரளிக்குபின்
னொண்டொடிச் செங்கைகளாற்
தருமகிழ் சிறந்ததிரு வொற்றிநக ருறையம்மை
சப்பாணி கொட்டி யருளே
தடவரைச் சுகுமாரி வடிவுடைக் கவுமாரி
சப்பாணி கொட்டியருளே. (34)
____________________________
வண்டாடு மலரவன் வெண்டிரைப் பாற்கடன்
மலர்க்கண் படுக்குநெடியோன்
மதக்கலுழி தூங்குமயி ராவதக் குரிசினெடு
வானாடர் முதலோர்களைப்
பண்டாவி யோடும் விராய்வெளித் தோற்றாது
பாழிவளர் வீரியநுகர்
பண்டாசுரப்பெரும் பதகனுயிர் சிந்திப்
பசுங்கழைச் சிலைவளைத்து
விண்டாரு மம்புயஞ் சூதமொ டசோகம்வெண்
முல்லைமலர் நீலமென்னும்
விசிகந் தொடுத்தின்ப வெள்ளம் பெருக்குநின்
மென்மலர்ச் செங்கைகளாற்
தண்டா வளங்கொடிரு வொற்றிநக ருறையம்மை
சப்பாணி கொட்டியருளே
தடவரைச் சுகுமாரி வடிவுடைக் கவுமாரி
சப்பாணி கொட்டியருளே. (35)
___________________________
வேறு.
அங்கணர் திங்கண் முடிச்சடி லத்தம ரத்தனை கங்கையுமற்
றவர்கயி லைக்கிரி வளர்பல கங்கையு மந்தர கங்கைகளும்
துங்க முடிக்கன கச்சிலை முதலிய தொல்கிரி கங்கைகளுஞ்
சுரர்தொழு திரிபத கையுமெழு பொருனைத் துறையுமோர் காவிரியு
மெங்குள கங்கையு மாருயிர் செய்திடு மெத்தனை பாவமுநீத்
திகபர முத்தி யளித்தருண் மேன்மை யிணக்குநி னங்கைகொடு
கொங்குயர் பொழில்செறி யொற்றி நகர்ப்பரை கொட்டுக சப்பாணி
குடிலையி னிலைபெறு திரிபுர சுந்தரி கொட்டுக சப்பாணி. (36)
________________________________
செந்தமிழ் தந்து நெடுந்திரை வேலை சிலம்பொ டடக்கிநிலஞ்
செவ்வ னிறுத்திய முனிசிவ முணரத் திசைமுகன் சிறையெய்த
வெந்திற லவுண னிடுஞ்சிறை நின்றும் விசும்பின ரெளிதகல,
மேதகு முனிவர ராதிய ரேத்தி விழுத்தகு வரமேவ
வந்தருள் கந்தர்தம் மாறுரு வுந்தனி வடிவ மெனச்செய்து
மல்கிய கருணையின் மேன்மை யனைத்தும் வழங்குநின் செங்கைகொடு
கொந்தண வும்பொழி லொற்றி நகர்ப்பரை கொட்டுக சப்பாணி
குடிலையி னிலைபெறு திரிபுர சுந்தரி கொட்டுக சப்பாணி. (37)
______________________________
அரையர்க ளவரவ ருளம்விழை வுறவெதி ரவிர்மணி பொருள்கொட்ட
வமரர்கள் வரமரு ளெனமுன மிடைபவ ரவிழ்மலர் மழைகொட்டத்
தரைவள ரடியவர் தொழுதெழி னடமொடு தகுகர மலர்கொட்டச்
சரணடை பவருள மியவர்கை யொடுமொலி தழைதரு பறைகொட்ட
வுரைதக நடமிடு மிறைவரு மனமகிழ் வொடுமிள நகைகொட்ட
வுலகுறு பலவுயிர் களுமகிழ் பெறுநின தொளிவிழி யருள்கொட்டக்
குரைகட லளவிய வொற்றி நகர்ப்பரை கொட்டுக சப்பாணி
குடிலையி னிலைபெறு திரிபுர சுந்தரி கொட்டுக சப்பாணி. (38)
______________________________________
வேறு
மலர்மகள் கலைமக ளுளநிறை போத வனத்துறை சொற்பூவை
மலரவ னரியர னிவர்தொழி லாதி வளர்க்கு மணிப்பாவை
அலர்சொரி தருமகிழ் விரிநறு நீழ லிருக்கு மயிற்றோகை
அரவிள மதியணி யிறையவர் தியாக ரிடத்து நிதிச்சாகை
யிலகெழி லடிநினை யலருள மேவி யிருட்கடி விற்சோதி
யிரவொடு பகனினை பவர்மன நீல மிரிக்கு மருட்சோதி
குலவிய வயனக ரமலை பராபரை கொட்டுக சப்பாணி
கொடியிடை பிடிநடை வடிவுடை நாயகி கொட்டுக சப்பாணி. (39)
___________________________________
படவர வணைமிசை விழிதுயி னாரணர் முட்டிய வட்கார்கள்
பலருயி ருணுமொரு திகிரிகொள் பாணிய ரொட்டிய புத்தேளிர்
உடனமு துணவளை கடல்கடை காரணர் கட்டுள வக்கோதை
ஒளிமணி திருமகண் மருவிய மார்பினர் முப்புர முற்றாரோ
டடலைசெய் திடவரன் விடுகணை யானவ ரப்பர மறகார்வ
மலர்தர வழகிய மனைவியு மானவர் துட்டரை யட்டேமுன்
குடநட மிடுமொரு வரதர் சகோதரி கொட்டுக சப்பாணி
கொடியிடை பிடிநடை வடிவுடை நாயகி கொட்டுக சப்பாணி. (40)
சப்பாணிப்பருவம் முற்றிற்று
______________________________
5. முத்தப்பருவம்.
கொண்டலுகு முத்தமும் வேயினுகு முத்தமுங்
கோலப் பசும்பூகதங்
கொட்டுமிள முத்தமுங் கன்னலுகு முத்தமுங்
குளிர்செந்நெ லுகுமுத்தமு
மண்டுமத மால்கரிக் கோட்டின்விளை முத்தமும்
மாதர்களம் விளைமுத்தமும்
வன்றலைக் கொக்கின்விளை முத்தமுந் தாமரை
மலர்க்கண்விளை முத்தமும்வளைத்
தண்டரள முத்தமும் மிப்பியுமிழ் முத்தமுந்
தக்கவிது முத்தமுமெலாஞ்
சமமின்றி விலைசெயப் பட்டுநா ணோடுபுரை
தண்டாது தாங்கவென்றும்
தொண்டுகொண் டருளுநகை முத்தநிரை வைத்தநின்
தொண்டைவாய் முத்தமருளே
சுரர்பரவு மாதிநகர் மருவுசுந் தரவல்லி
தொண்டைவாய் முத்தமருளே. (41)
____________________________________
பொங்கிய பெரும்புன னெடுந்திரைக் கடல்பின்பு
புரைவருதல் போற்றியம்மை
புரையற்ற முறுவலொடு மெதிரப் பெருந்தவம்
போற்றலிங் கொண்ணாதெனச்
சங்கமுமிழ் நித்திலந் தன்னுட் கிடந்தவை
தழீஇக்கொணர்ந் தெதிரிறுப்பத்,
தயங்கிய விசும்பின்வளர் கங்கையும் பற்றித்
தடந்திரைக டோறுமெறியப்
பங்கய நிதிச்சங்க நிதிகளும் தம்முட்
பதுங்கித் தவங்கள்புரியும்
பன்மணித் தரளங்க ளவரவர்கொ ளத்தமது
பானின் றகற்றிமகிழத்
துங்கவொளி கொட்டுநகை நித்தில நிரைத்தநின்
தொண்டைவாய் முத்தமருளே
சுரர்பரவு மாதிநகர் மருவுசுந் தரவல்லி
தொண்டைவாய் முத்தமருளே. (42)
______________________________
சந்தவெண் மதியமும் மத்தமுங் கங்கையும்
தாதுமலி வெள்ளெருக்கும்
தண்ணங் கடுக்கையும் வெண்டலையு மரவுந்
தரித்தருடி யாகப்பிரான்
செந்திரு மணந்தநெடி யோன் முதலுயிர்த்தொகை
திகழ்ந்திடு மிளைப்பாறுமா
செறிந்தபல வண்டமு மழித்தெழுந் தாடுமத்
திருநடன நோக்குந்தொறு
மந்தமில் செழுங்கனக மன்றமுத லாமிடத்
தாடுநட நோக்குந்தொறு
மசைந்தாடு பதுமநட நோக்கும் தொறுந்தொறு
மம்மைநின் சிந்தைமகிழ்வார்
சுந்தர மிகுந்தவள வெண்முறுவ றோற்றுநின்
தொண்டைவாய் முத்தமருளே
சுரர்பரவு மாதிநகர் மருவுசுந் தரவல்லி
தொண்டைவாய் முத்தமருளே. (43)
______________________________
நலங்கொடிரு மார்பத்து நெடியோன் பிருந்தையெரி
நன்காட்டு மத்தமதுர,
நாமகண் மணாளனுந் தண்மகள் புணர்ச்சியினை
நாடிக் கலங்கஞருறப்
பொலங்கல னணிந்தவயி ராணிபுணர் கேள்வனும்
பூட்சிமுழு துங்கண்பெறப்
புரையற்ற முனிவர்முத லோர்களும் புரையுறப்
போர்புரியு மதனைவென்ற
வலங்கொளிறை யவனந்த மாரவேள் படையென
வயங்குமலர் வாளிகன்னல்
வார்சிலை பிடித்தநின் செங்கைமலர் நோக்கிமகிழ்
கூரவது நோக்கிநோக்கித்
துலங்குமிள நகைமூர லுள்ளே யரும்புநின்
தொண்டைவாய் முத்தமருளே,
சுரர்பரவு மாதிநகர் மருவுசுந் தரவல்லி
தொண்டைவாய் முத்தமருளே. (44)
_______________________________
சிறையுற்ற கோகிலப் பறவையும் பூவையுஞ்
செய்யவாய்ப் பைங்கிள்ளையுஞ்
சீருற்ற வசுணமுங் கின்னரமு மம்மைநின்
செல்வத் திருக்கோயிலி
னறைதுற்ற மென்மலர்ப் பைந்துணர் நெடுங்கோட்டு
நன்மணங் கமழும்வகுள
நண்ணியிசை கவரமதி லின்புறஞ் சூழ்ந்துமணி
நாகங்கள் காத்திருப்பக்
கறையற்ற கந்திருவர் முதலோர்கை வீணையுங்
காமர்குழ லுஞ்சந்நிதி
காப்பவரை யுருகிடப் பட்டமர முந்தளிர்
பரப்பவுயிர் பலவுமகிழத்
துறைமுற்று பண்ணோடு மின்மொழி மிழற்றுநின்
தொண்டைவாய் முத்தமருளே
சுரர்பரவு மாதிநகர் மகன் சுந்தரவல்லி
தொண்டைவாய் முத்தமருளே. (45)
__________________________________
வேறு.
பத்தி மிகுந்த வடியார்க்குப் பலவே றான பணிவிடையும்,
பதுமக் கடவு ளுலகாக்கும் பணியு மளிக்கும் பணியரிக்கு
மத்த மிலைந்த வுருத்திரற்கு மாற்றும் பணியு மயேசுரற்கு
மறைக்கும் பணியுஞ் சதாசிவற்கு வற்றாக் கருணை யருட்டணியு
மொத்த தெனவே கொடுத்தருளு முனது திருவாய் பைங்கிளிக்கு
முறையேற் றுதலா லுற்றார்க்கே யன்றி யெமக்குந் தரலாகு
முத்த நிரைத்த செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
முற்று மெமையா ளொற்றிநகர் முத்தே முத்தந் தருகவே. (46)
_____________________________________
வில்லை வளைக்குங் கொடும்புருவ மின்னே ரனைய தாதியர்நின்
விளங்கு நகையோ டெதிர்வதென வேரித் தளவ முகைபிணித்திட்
டொல்லை யுடைவ தெனமுன்ன ருறுத்தா திருண்ட குழற்செருகி
யொளிமிக் குடைந்து முள்ளுடையா வுரத்த திதனை யலைத்துமென
நல்ல தரளங் கோத்துரத்தி னாற்றத் தகவே யெனவுளத்து
நயந்த கருணைப் பெருமகிழ்ச்சி நகையா லவர்கண் முகமலர்த்து
முல்லை நிகர்த்த செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
முற்று மெமையா ளொற்றிநகர் முத்தே முத்தந் தருகவே.(47)
___________________________________
திருந்து மாலை யிடைக்கரும்பு சிதையப் பாகு தேன்புளிப்பச்
செய்ய கனிக ளினைந்தழியத் தீம்பா னெருப்பிற் சூடுண்ண
வருந்தி யெடுத்த கடலமிழ்தம் வானோர் சிறையிற் றளர்வெய்த
வயங்கு நினது வாலெயிற்றில் வற்றா தூறுஞ் சுவையமுத
மருந்து முறுதி குறித்தன்றே யகில புவனங் களுநீர
வடர்ந்த விடத்தைத் தியாகேச ரன்று பருகி னாரனந்த
முருந்து நிரைத்த செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
முற்று மெமையா ளொற்றிதகர் முத்தே முத்தம் தருகவே (48)
__________________________________
வேறு.
வழுவறு முழுதுடன் மயிர்தழு வியமுனி
மட்டுகு பொற்கமல
மலரணை விரவிய வுயரிய பிரமன்
மணத்த மலர்த்துளவ
விழுமிய தொடலைக ளுரமணி நெடியவ
னட்டு நறைப்பதுமம்
விரவிய விருமட மகளிர்கள் விடைமுக
முற்ற முதற்குரவன்
பழுதறு மிவர்பலர் விழியெதிர் பதுமநன்
னட்ட மளித்தருளு
பரிபுர வடியினர் பரிவொடு மொருமுறை
பத்தினர் முத்தமிட
முழுதுல கமுமருள் வடிவுடை யுமையவண்
முத்தமளித் தருளே
முறைநிறை பொறையுறை மறையவ னகர்மயின்
முத்த மளித்தருளே. (49)
____________________________________
கடவுள ரிடர்கெட வொருகரி முகனையு
யிர்த்தம டப்பிடியே
கதிர்மணி வெயில்விரி யிமவரை நடுவண்
முளைத்த மலர்க்கொடியே
யிடரகி லமும்விட வயில்கொளு முருகை
யெடுத்து வளர்த்தவளே
யிறையவ ரருளொழி சிறுவிதி புரியு
மகத்தை யிறுத்தவளே
வடிமறை குடிலையும் வடுவறு மடியர்ம
னத்து மிருப்பவளே
வடவரை குழையமு னெயிலடு மொருவரி
டத்தமர் சிற்பரையே
முடியுடை யவர்பணி வடிவுடை யுமையவண்
முத்த மளித்தருளே
முறைநிறை பொறையுறை மறையவ னகர்மயின்
முத்தமளித் தருளே. (50)
முத்தப்பருவம் முற்றிற்று.
_____________________________________
6. வாரானைப்பருவம்.
நித்திய நிராமய நிராலம்ப நிர்க்குண
நிராதார நிருவசனமாய்
நீடிய பரானந்த ரோடுகுணி குணமுமாய்
நின்றருள் பராபரையுநீ
சத்தியெனு முதலுநீ விந்துவெனு மருளுநீ
தயங்கிய மனோன்மனியுநீ
தங்கிய மகேசையும் நீயுமையு நீமலர்த்
தாமரையின் மடமாதுநீ
யெத்திசையு மேத்துகலை மாதுநீ யென்றுமறை
யின்னுமுறை யிடுவதல்லா
லின்னபடி யென்றுனது தன்மையை யறிந்தில
தெமக்குள மிரங்கியருள்வா
யத்தனம ரொற்றிநகர் வந்தமையி னுய்ந்துளே
மகிலகா ரணிவருகவே
யமலையந் தரியேக விமலைமந் திரரூபி
யமலசுந் தரிவருகவே. (51)
__________________________________
மும்மல மதத்தினும் மிருவினைத் தொடரினும்
மூடியவ பக்குவமெனு
மொய்யிருட் கந்தினுந் தனுவாதி நான்கென
மொழிந்திடுங் காவலரினு
மம்மரி னிருக்கின்ற பலவகை யுயிர்க்கரி
வழாமற் பிணித்தடக்கி
வான்வீ டெனும்பெரிய வெளியூடு கைப்பமணி
வார்கயிறு மங்குசமுநீ
செம்மலர்க் கைத்தலங் கொண்டுமறை யறியாத
சீறடி நிலந்தோய்தரத்
தியாகப் பிரானிருந் தமரர்தொழ நடமிடுந்
திருவொற்றி யூர்வருதலா
லம்மையும் மிம்மையும் மும்மையும் பேறுளே
மம்மைமா தரிவருகவே
யமலையந் தரியேக விமலைமந் திரரூபி
யமலசுந் தரிவருகவே. (52)
______________________________
இருளென்னு மாணவ மலர்க்கட லழுந்தியறி
வென்பதணு வளவுமின்றி
யிடருற் றிருந்தவடி யேங்களைப் பேரின்ப
வெறிதிரைக் கடலழுத்த
மருளென்னு மதுமாறு பரையாகி முன்பெங்கண்
மாட்டுவந் தனையதுவலான்
மற்றெங்கள் புன்மையை யறிந்துவெளி யினுநல்ல
வடிவுகொண் டிறைவர்தேருக்
குருளென்னு மதியமுஞ் சேடனு முரண்கொண்
டுடற்றவவர் தங்களிடையும்
றொள்ளருள் சுரந்தரு டியாகப் பிரானமரு
மொற்றிமா நகரியினும்வந்
தருளென்னு மாறவனி டத்தினி லமர்ந்தருளு
மாதிகா ரணிவருகவே
யமலையந் தரியேக விமலைமந் திரரூபி
யமலசுந் தரிவருகவே. (53)
_____________________________
சங்கரர் சதாசிவர் தயாநிதி சதானந்தர்
சர்வேசர் சத்தர்சித்தர்,
சம்புதற் பரர்முன்பு தமதுமுத லுபகார
நல்கியுஞ் சாருமுயிர்க
ளெங்குநிறை பவர்பதத் தியையாது தனுவா
யியைந்துகன் மங்களீட்டி
யெண்பத்து நான்குநூ றாயிர மெனும்பவ
மெல்லா மெடுத்துழிதரும்
துங்கவறி யாமையை யொழித்தாள வருளினாற்
றூயதல மோடுதீர்த்தம்
தொக்கவெழின் மூர்த்தியு மொற்றிமா நகரில்வரு
சுந்தரத் தியாகரெனுமவ்
வங்கணர் பெருந்தலைவர் தம்மொடினி தாயரு
ளளிக்குமம் மனைவருகவே
யமலையந் தரியேக விமலைமந் திரரூபி
யமலசுந் தரிவருகவே. (54)
_______________________________________
தூயபரை யெனநின்ற வம்மைநீ யாதியாய்த்
துதையுமர னிச்சையாகிச்
சுடர்கின்ற ஞானமாய்க் கிரியையா யருவமாய்த்
தொக்கவரு வுருவமாகி
யேயுமரு ளுருவமா யிலயமொடு போகமதி
காரமா யின்பமாகி
யியற்றுமைந் தொழிலுக்கும் வித்தாகி யுடலாதி
யிசைவித்த பலவுயிர்க்கு
மேயமல முற்றுந் துமித்தருளு மாறும்பர்
விண்ணத்து வதிகற்பக
மெய்யருள் கிடைத்திட வடுத்துமலர் வகுளமாய்
விளங்குமெழி லொற்றிநகர்வந்
தாயுமடி யாருளத் தள்ளூற நின்றதா
ரறிவர்மங் கலைவருகவே
யமலையந் தரியேக விமலைமந் திரரூபி
யமலசுந் தரிவருகவே. (55)
__________________________________________
வேறு.
கற்றார் புனித நாவகத்துங் கரைந்து கரைந்து விழிநெடுநீர்
கால வுருகும் பேரன்பர் கருத்தி னிடத்து மீன்றெடுத்த
வுற்றார் தமது மடித்தலத்து முரைசேர் மறையின் முடியகத்து
மூடற் பொழுது துனிதிருத்த வுற்ற நயப்பி னொடுவணங்குஞ்
செற்றார் புரநீற் றியதியாகர் செய்ய சடில மேலிடத்துந்
தீராச் சுவடு படவூன்றுந் திருத்தா ணிலமு முடிசூட
வற்றாக் கருணை யொற்றிநகர் வடிவாள் வருக வருகவே
வைய முழுது முய்யவரு மாதே வருக வருகவே.(56)
____________________________________
கடியார் தெய்வக் கற்பகப்பூங் காவிற் றெரிந்து பறித்தெடுத்துக்
கண்ணா யிரத்தோன் முதலான கடவுட் குழாங்கள் சொரிபூவு
மடியா ரன்பிற் டழுதகற்றி யாய்ந்து சொரியு நறும்பூவு
மம்மே வன்மைப் பூவைமறைத் தடர்ந்து நிமிரு மணித்தலத்தின்
முடியால் வணங்கி மலர்மகளிர் முதிர்பே ரொளியி னணிதிருத்த
முன்னுந் தொறுங்கூ சிடுநினது முளரி மலர்த்தாள் பெயர்த்திட்டு
மடியாக் கருணை யொற்றிநகர் வடிவாள் வருக வருகவே
வையமுழு துமுய்ய வரு மாதே வருக வருகவே. (57)
_______________________________
குணில்வார் முரச மழைபொழியக் குழுவா னவர்க ளகந்தழைப்பக்
கொதிநஞ் சயின்ற தியாகேசர் கோலவது வைபுரி நாளி
னணியா ரம்மி மிசையேற்று மந்தப் பொழுதுங் கலவியிடை
யமிழ்தமூற வருடலுறு மந்தப் பொழுதும் புலவி யிடைத்
தணியா விழைவி னினிதுணர்த்துந் தன்மை யிடத்து மலைவளைத்த
தடந்தா மரைக்கை மிசைமலருந் தாட்டா மரைமென் மெலப்பெயர்த்து
மணிவா ரிதிசூழொற்றி நகர் வடிவாள் வருக வருகவே
வைய முழுது முய்யவரு மாதே வருக வருகவே. (58)
_______________________________
விளங்க வதுவை புரிகாலை விண்ணோர் முனிவோ ரனைவோரு
மிடைந்த கனத்தா லாற்றாது மெலிந்து தாழ்ந்து வடபூமி
துளங்க வதனைச் சமமாக்கத் துறுகற் பொதிய வரைக்கேகுந்
தோலாத் தவத்து மிகப்பெரிய சுவைத்தீந் தமிழின் குறுமுனிவர்க்
குளங்கொள் கருணைத் தியாகேச ரொருவ ருடனே மணக்கோல
முவந்து கொடுப்பத் திருவொற்றி யூர்வந்தருளு மணி விளக்கே
வளங்க ளடியார்க் கருள்கின்ற வடிவே வருக வருகவே
வையமுழுது முய்யவரு மாதே வருக வருகவே. (59)
___________________________
தேசம் பரந்த பெருங் கீர்த்திச் செல்விவருக தியாகேசர்
தேவிவருக வெமை யாண்ட செம்பொற் சிலம்பின் மகள்வருக
பாசம் பரிக்கும் தீயோர்க்கும் பாசம் பரிக்கும் தாய்வருக
பரவுமடியா ருள்ளகத்துப் பரவுங் கருணைத் தேன் வருக
நேசம் பரந்த வொற்றி நகர் நிமலைவருக வானந்த
நிலையம் வருக வுலவாத நிதியம் வருக கற்பகப்பூ
வாசம் பரந்த குழற்கற்றை வடிவாள் வருக வருகவே
வைய முழுது முய்யவரு மாதேவருக வருகவே. (60)
வாரானைப்பருவம் முற்றிற்று.
_________________________
7. அம்புலிப்பருவம்.
மங்கல மிகுந்துபல மணியொளிரு மலைமீது
வந்திடுந் தோற்றத்தினான்
மல்குமிர வலெராங் களிதூங்க வேவெளியின்
வந்தொளிரும் வடிவத்தினால்
பொங்கிய மகிழ்ச்சியொடு காதலர் களாகிய
புலவருக் கமுதுதவலாற்
பொன்னஞ் சிலம்பினை யடிப்படுத் திடுதலாற்
புகழுலகு சூழ்ந்துவரலாற்
கொங்குகமழ் சோலைபுடை சூழொற்றி நகரினருள்
கூர்ந்ததிரி புரசுந்தரக்
கோமளப் பெருமாட்டி கொண்டரு ளருட்செயல்
குறிக்குநின் செய்கையாகு
மங்கணுல குய்யவருள் செய்யுமலை வல்லியுட
னம்புலீ யாடவாவே
யங்கணர் மருங்கிலுறை சங்கரி சுமங்கலியொ
டம்புலீ யாடவாவே. (61)
________________________________
தூயவடி வெய்தினை யமிழ்தந் தரித்தனை
தொல்லுலகு தொழநின்றனை
துலங்கொளி விமானத் திருந்தனையொ ரொற்றியிற்
றுன்னிவளர் பலகையிறையை
யேயுமுழு தன்பினால் வந்தனை புரிந்தனை
யிறைவரவ ரிடமெய்தினை
யெண்ணிலா வுயிர்கட்கு மின்பம் பெருக்கியெய்ப்
பாற்றுகின்றனை நினதுமெய்ப்
பாயவொளி யெங்கும் பரப்புகின் றனையிவை
பன்னுதிரி புரசுந்தரப்
பாவைதன் பாலுமுள பார்க்கினின் செயலெலாம்
பார்ப்பதிகொள் செய்கையாகு
மாயுமடி யாருள்ள நேயமுறு மிறைவியுட
னம்புலீ யாடவாவே
யங்கணர் மருங்கி லுறை சங்கரி சுமங்கலியொ
டம்புலீ யாடவாவே. (62)
_______________________________
வெண்டிரை சுருட்டும் பெருஞ்சுவைப் பாற்கடல்
விளங்கநீ தோன்றினையிவள்
வேறின்றி யெவ்வுலகு மாகிநிமி ரானந்த
வெள்ளக்கடற் பிறந்தாள்
புண்டரிக மலர்குவிய வமிழ்தகிர ணங்கணீ
பொழிவையிவ ளடியருள்ளப்
பூங்கமல மலர்குவிய வின்னருட் கிரணங்கள்
பொழிவளிர வதனிலொருநீ
வண்டலை நறுங்குவளை மகிழ்விப்பை பகலுமிவண்
மாதபோங் கட்குவளைகண்
மகிழ்விப்ப ணீதவம் வயக்கியுஞ் சார்வைகொன்
மற்றன்னை யழையாதபோ
தண்டர்பணி யாதிநகர் கொண்டவடி வம்மையுட
னம்புலீ யாடவாவே
யங்கணர் மருங்கிலுறை சங்கரி சுமங்கலியொ
டம்புலீ யாடவாவே. (63)
______________________________
மருள்கொண்ட வுலகத்தி லிருள்கின்ற விருளதனை
மாற்றுகின்றனை நீயிவள்
மன்னுயிர்க் காணவ விருட்டினைப் பின்வந்து
மருவாமன் மாற்றுகின்றா
டெருள்கொண்டு பைங்கூழ் வளர்த்திநீ மற்றிவள்
செறிந்தவகி லத்துயிரொலாஞ்
செல்வமொடு மலிதர வளர்த்துவரு கின்றனள்
சேண்வெளியின் வருதியொருநீ
பொருள்கொண்டு பரவெளியி னோடுலக மெங்கணும்
பொற்பநிறை கின்றனளிவள்
பொருவிலிவ ளருளெளிது கிடையாது நீசெய்த
புண்ணியப்பய னெய்தினை
யருள்கொண்ட வொற்றிநகர் மருவுவடி வுடையவளொ
டம்புலீ யாடவாவே
யங்கணர் மருங்கிலுறை சங்கரி சுமங்கலியொ
டம்புலீ யாட வாவே. (64)
____________________________________
கலைவளரு நின்னமிழ்த முண்கின்ற புலவோர்கள்
கடலமிழ்த முண்டுமவுணர்
கைப்போர்க் குடைந்துபன் முறையுநின் னொடுபெருங்
கவலைக்கடற்க ணாழ்ந்தார்
தலைவளரும் வேள்வியவி யுண்ணப் புகுந்தொருவர்
தாக்கவுயிர் சாம்பினரவர்
சார்புமொரு சார்பாக வேகநீ யெண்ணலை
தயங்கிய தசும்பைவென்ற
முலைவளரு மிவளமுத முண்டபெரு வலியினான்
முக்கெணொரு களிறுமிளைய
முருகனுந் தானவரை வென்றின்ப மீந்தமுன்
முறைமைகளை முற்றுமெண்ணி
யலைவளரு மொற்றிநகர் மருவுவடி வம்மையுட
னம்புலீ யாடவாவே,
யங்கணர் மருங்கிலுறை சங்கரி சுமங்கலியொ
டம்புலீ யாடவாவே. (65)
_________________________________
தீயமல மூலத்தி னிருண்மூழ்கு விழியெனச்
செயலாதி மாய்ந்தழுந்து
திருகுவினை மாற்றவே தியாகப் பிரானொடுந்
தேவியிவள் கருணைகூர்ந்து,-
மாயையை யளித்துடன் கன்மமு மளித்தறிவு
வளர்விக்கு நன்றிசிறிது
மதிக்கவறி யாயது கிடக்கவிப் பொழுதுநீ
வானாறு தலைசிறப்பப்
பாயவுல கந்தொழத் திரிகின்ற நின்னுடைய
பாக்கியம் யாரதுசொலாய்
பண்டசுரன் வௌவிக் கரப்பநெடி யோன்கரம்
பற்றிவரு நாளின்முன்ன
ராயுமறை சேரொற்றி மேயவடி வம்மையுட
னம்புலீ யாடவாவே
யங்கணர் மருங்கிலுறை சங்கரி சுமங்கலியொ
டம்புலீ யாடவாவே. (66)
__________________________________
பூதிமிக வருளென்று மிடர்களொடு பிணிகளைப்
போக்கென்று மூலகாயதர்
புல்லிய பௌவுத்தரரு கந்தர்வயி ணவர்முதற்
பூவுலகின் மாந்தர்பலரும்
தீதினவ மணிமுடித் திருமார்பன் முதலான
தேவர்களும் வந்துநின்றார்
தியாகப் பிரானுநந் தேவியிவண் மலர்முகச்
செவ்விபார்த் தாடுகின்றா
னோதிநிறை கலையுடையை யாயினிவை பார்த்தேனு
முற்றுநின் பிணியுமறுவு
மொழிப்பையினி யாயினுங் கலைமதிக் கடவுளென்
றோதுபெய ரிருபொருள்பட
வாதிநக ருறைகின்ற மாதுசுந் தரியினொடு
மம்புலீ யாடவாவே
யங்கணர் மருங்கிலுறை சங்கரி சுமங்கலியொ
டம்புலீ யாடவாவே. (67)
_______________________________
கடலில்வரு நுரையென்று மொருமுனி முகத்தினொரு
கண்ணில்வரு பீளையென்றுங்
கடல்கடையு மத்தினிடு தறியென்று மரவுண்டு
கான்றசோ றென்றுமொழியா
மடமிகுதி யாற்குரவன் மனைமாது நலணுண்ட
மாபாவி யென்றுமிறைகாய்
மாற்றலன் குடையென்றும் வளர்சாப மிகவேற்று
மாழாந்த துட்டனென்று
முடல்குறைய வேபண்டு கறையுமுடை யவனென்று
முன்றீங்கை மதியாமையே
யொருதினந் தியாகர்பொற் றேர்க்குருளி யானநன்
றொன்றே மதித்தழைத்தா
ளடர்கருணை பெறலாகு மொற்றிவடி வம்மையுட
னம்புலீ யாடவாவே
யங்கணர் மருங்கிலுறை சங்கரி சுமங்கலியொ
டம்புலீ யாடவாவே. (68)
_______________________________
தக்கன்வளர் யாகத்தி லிவளையவ மதிசெயத்
தண்டா மரைக்கணெடுமால்
சதுமுகத் தவனாதி யனைவர்க்கு மவ்வவ்வ
தண்டம் புரிந்தகாலை
புக்கவொரு நீயுஞ் சுரித்தவத னந்தான்
புழுங்கத் துகைத்திறுத்த
போர்வீர னென்றுமுள னின்றுநீ மதியாது
போந்தெங்ங னுய்யவல்லாய்
தொக்கவல் லிருளைத் தணத்துமென மதியாதி
தோகையிவ டியாகப்பிரான்
சுடர்விழி புதைத்தஞான் றென்செய்தி யோர்ந்துபார்
தூய்மைவள ரொற்றிநகரி
னக்கயிலை யென்னவே புக்கசுந் தரியினொடு
மம்புலீ யாடவாவே
யங்கணர் மருங்கிலுறை சங்கரி சுமங்கலியொ
டம்புலீ யாடவாவே. (69)
_____________________________________
தாரணி முடிக்கட்டி யாகப் பிரானினது
சாபந் தணிக்கவைத்த
தயவுமொரு சேடனான் சாத்துமலர் நீக்கிநீ
சாத்துமா றென்னையென்று
போரணி குறித்துனைத் தாக்கச் சினந்துழிப்
போந்தருள் புரிந்ததயவும்
பூவையிவண் முகநுதன் மருங்குலெழின் மதிதொறும்
பொற்பச் சுரந்துதிரியுங்
காரண மதித்தகரு ணைப்பெருக் கன்றுகொல்
கவுரியிவள் சிறிதுசீறிற்
கட்டிய சடைக்காட்டி ராதுபின் னுயிர்வாழ்தல்
கைகூட லரிதுகண்டா
யாரண முழங்கொற்றி யூரின்வடி வம்மையுட
னம்புலீ யாடவாவே
யங்கணர் மருங்கிலுறை சங்கரி சுமங்கலியொ
டம்புலீ யாடவாவே. (70)
அம்புலிப்பருவம் முற்றிற்று.
______________________________________
8. அம்மானைப்பருவம்.
வந்தா தரித்திசைக் கவிபாடு புலவோர்க்கு
மலரடிக ணோவவேகி
மயிலைநக ரொருவணிகன் மணிவவ்வி யீந்தருளு
மகிழ்நர்விளை யாடனோக்கி,-
முந்தார்வ மொடுநகை குறித்துமற் றொருநீயு
மொத்தவான் புலவருக்கு
முதிரொளி யுமிழ்ந்துள்ள விழைவுக ளனைத்தையும்
முன்னுமு னளிக்கவல்ல
சிந்தா மணித்திரள் படைத்தெடுத் தெறிகின்ற
செய்கையே மானவொளிகால்
செம்மணித் திரளா லிழைத்தபல வம்மனைகள்
செங்கைத் தலத்தினேந்தி
யந்தா மரைத்தடஞ் சூழொற்றி வடிவம்மை
யம்மானை யாடியருளே
யாடகச் சிலையீன்ற பாடகத் தாட்செல்வி
யம்மானை யாடியருளே. (71)
_______________________________
தொல்லைப் பெரும்பிணித் தறுகணா ணவமெனுஞ்
சூரனைப் பொருதழித்த
தோலாத பிரதாப விரவியுஞ் சீறடிகள்
சூழ்ந்தவடி யார்க்குநான்கு
மல்லற் பெரும்பொருள்க ளீயுஞ் செழுங்கீர்த்தி
மதியமும் வான்சுடர்களை
வணங்கவெழு கின்ற திறமானவொளிர் செம்மணியின்
வைத்தவம் மனைகள்பலவும்
வில்லிற் பொலிந்ததர ளத்தினிழை யம்மனையும்
வெவ்வே றெடுத்தணிந்து
மேகக் குழாங்கடவழ் பூகப் பொதும்பர்மணம்
வீசொற்றி யூரினுயிர்கட்
கல்லற் பவத்துய ரகற்றவுறை சிற்சத்தி
யம்மானை யாடியருளே
யாடகச் சிலையீன்ற பாடகத் தாட்செல்வி
யம்மானை யாடியருளே. (72)
_______________________________
பூலோக கயிலாய மாம்பதும நகரிற்
பொலிந்தெழுத் தறிவித்தவர்
பூங்கண் புதைத்துமுன் றமதொளி கெடுத்தவப்
பொருவற்ற திறனுமிறவாச்
சாலோக முதலான முத்தியுங் கீழ்ப்பட்ட
சகலகதி யுங்கொடுக்கும்
தன்மையு மதித்துவிண் ணிருசுடரும் வந்தரு
டரக்கொண்டு தாங்கள்வாழு
மாலோக நிமிர்கின்ற தெனவெண்மை செம்மையின்
வாய்ந்தொளிர் கழங்குநிமிர
வளர்கின்ற பைங்குரற் செந்தினைத் தண்புனம்
வைகிக்க வண்டிரித்திட்
டாலோல மிடுமகளை மருகியென வைத்தபெண்
ணம்மானை யாடியருளே
யாடகச் சிலையீன்ற பாடகத் தாட்செல்வி
யம்மானை யாடியருளே. (73)
__________________________________
செங்கைவந் தேற்றவர் தமக்குப் பெரும்பொருள்
செறித்துமென வுள்ளமதியாத்
தெய்வதப் பதுமநிதி யும்பணில நிதியுஞ்
செருக்கித் தருக்கிநிற்ப
மங்கைநின் செங்கைமலர் நோக்கியிறு மாப்பினை
மாற்றுது மெனக்கருணையால்
வயங்குமிரு நிதியமும் மெண்ணில படைத்துவிண்
வைப்பினுக் கேறவிடல்போற்
பொங்குசெம் மணியிற் புரிந்தனவு முத்திற்
புரிந்தனவு மள்ளியுந்திப்
பொருகருங் கடலும் திரைக்கைகொடு பன்மணிகள்
போந்தெதிர் சொரிந்திறைஞ்சி
யங்கெழு நிரந்தர புரிக்கண்வடி வுடைமங்கை
யம்மானை யாடியருளே
யாடகச் சிலையீன்ற பாடகத் தாட்செல்வி
யம்மானை யாடியருளே. (74)
_________________________________
ஊற்றுஞ் செழுந்தேன் மலர்ப்பசுங் கற்பக
முவந்துவந் தொருவகுளமா
யுனதுசெந் தாமரை விழிக்கடை திறந்தொழுகு
மொண்கருணை வெள்ளநிறையத்
தூற்றுந் தொளைப்பூவி னாதிபுரி வளர்கின்ற
தொன்மையை யறிந்திரண்டு
சுடர்நிதியும் வந்துதிரு முன்னர்க் கிடப்பத்
தொடிக்கையி னெடுத்தணைத்துச்
சாற்றும் வரங்களு மளித்துவிண் விடுகின்ற
தன்மைபோல் வெண்மைசெம்மை
தம்மைமுன் விடுத்துநின் விற்குண மவற்றலர்
தனைத்தொடர்வ தென்னநீலத்
தாற்றம்ப லம்மனை விடுத்துவடி வுடைமங்கை
யம்மானை யாடியருளே
யாடகச் சிலையீன்ற பாடகத் தாட்செல்வி
யம்மானை யாடியருளே (75)
___________________________________________
வேறு.
முத்தி னிழைத்தவும் வித்துரு
மத்தின் முடித்தவு மிக்கொளிகான்,
முழுமணி மொய்த்தவும் விலையுல
கேழுமு னிந்தவிர் கோமேதம்
வைத்து நிரைத்தவும் வச்சிர
மிட்டவும் வவ்விப் பலகையுரு
வதிதரு சத்தியோ சாதர்முன்
னாதிய மகிழ்நர்க ளைவர்களு
முத்தமி நின்னிள மைப்பரு
வத்தினு வந்தணை யக்கருதி,
யுறுதொறு நீயிது பருவம
லாமையை யுன்னித் தள்ளுவபோ
லத்த மிகுத்திடு மொற்றி
நகர்ப்பரை யாடுக வம்மனையே
யரிபிர மர்கள்பணி திரிபுர
சுந்தரி யாடுக வம்மனையே (76)
_________________________________________
சோதி மணிப்பல கைக்கு
ளமர்ந்தரு டுரியா தீதவொளி,
சுரர்தொழ வரமிகு முப்புர
நிறச் சுடர்தம னியமேருக்
கோதை வரிச்சிலை யெனமலர்
வென்ற குடங்கை வளைத்ததுநின்
கொற்ற மெனக்கொள மும்மல
வரையர் குறும்பு செய் முப்புரமு
நீதிசெய் யடியர் தொழப்பொடி
செய்யவந் நெடுவரை யோடெண்கன்
னிரையுநின் னிருகை வளைப்பதெ
னப்பல நிறமணி யம்மனைதொட்
டாதி புரத்தமர் கோதை
யிளங்கொடி யாடுக வம்மனையே,
யரிபிர மர்கள்பணி திரிபுர
சுந்தரி யாடுக வம்மனையே. (77)
________________________________
முந்தொரு கற்ப முறங்கரி
யுந்தி முகிழ்த்தவன் வீடெய்த
முன்னி யறிந்த வயன்வளர்
யோக முழங்கெரி யூடுருவா
வந்துல குய்ய விருந்தவர்
கண்ணென மருவிரு கோள்களுமின்
மலர்க்கை யுறப்பெறு மேன்மை
மதித்தொளிர் மற்றெழு கோள்களுமவ்
வுந்தொளி கோள்களை முன்கொடு
வந்தரு ளுற்றுவிண் ணேகுதல்போ
லொளிமிகு நவமணி யம்மனை
கைக்கொண் டொளிர்சங் கலைகடல்வா
யந்தி தொறுங் குமுறாதி
புரத்தவ ளாடுக வம்மனையே
யரிபிர மர்கள்பணி திரிபுர
சுந்தரி யாடுக வம்மனையே. (78)
_______________________________________
தீண்டற் கரியவர் திருவுள
மகிழத் திகழண் டத்திரளுஞ்
செறிதரு மற்றைய பலவுநின்
சிந்தனை சிறிது தொடங்குதலு
மீண்டித் தொழிலுறு தற்கொரு
சான்றென வெண்ணிலி யம்மனையு
மெங்கு மெழுந்து மிலங்கத்
தளிரி னிணைக்கைச் சிறிதசையாத்
தூண்டிய பரிகரி யிரதமு
மைந்தர்க டொழில்பயி லக்கிளருந்
தூசியின் விண்ணகர் மண்ணகர்
நிகரச் சுடர்விழி யிமையாட
வாண்டச் சுரர்வெரு ளாதிபுரத்
தவ ளாடுக வம்மனையே,
யரிபிர மர்கள்பணி திரிபுர
சுந்தரி யாடுக வம்மனையே. (79)
___________________________________
எடுத்தெறி யும்பல வம்மனை
கட்கியை யக்கனி வாய்மலரு
மிசைகட் குளமுரு கித்தரை
வீழ்ந்திடு மிறகுள கின்னரநேர்
தொடுத்தெதி ரம்மனை யாடுறு
மலர்கண் சுரர்மக ளிர்கள்பாடச்
சுவைநனி கேட்டு விசும்பி
னெழுந்து சுவைத்திற நுகர்தோறு
மடுத்தெறி யம்மனை யெனவவை
தமையு மருண்ட னர் சிலர்நோக்க
மலிந்தெழு மம்மனை யூடுநின்
விழியு மதர்த்துப் பெரிதுலவ
வடுத்தவ ரின்புறு சிவபுரி
யுமையவ ளாடுக வம்மனையே
யரிபிர மர்கள்பணி திரிபுர
சுந்தரி யாடுக வம்மனையே. (80)
அம்மானைப்பருவம் முற்றிற்று.
___________________________________________________
9. நீராடற்பருவம்.
கள்ளோ டலர்ந்தநறு மென்மலர்ச் சுண்ணமுங்
களபப்பசுஞ் சுண்ணமுங்
கர்ப்புரச் சுண்ணமுங் கலவையஞ் சுண்ணமுங்
கமழ்கின்ற பலசாந்தமும்
புள்ளோடி யாடிமுர லுஞ்செழுந் தொங்கலும்
பூவையர்க ளேந்திநிற்பப்
பொற்பநின் கையா லெறிந்துவிழி சேப்பமென்
பூண்முலைச் சாந்தமழிய
நள்ளோதி சோரவுடல் பூரிப்ப நகைசெயிழை
நான்றாட வாடுந்தொறும்
நாயகற் கிதுவுமொரு வடிவென்று கலவிநீ
நண்ணுவது மானவிருபால்
வெள்ளோதி மத்திர டழங்கவரு பாலிநதி
வெள்ளநீ ராடியருளே
வெற்றிநெரி யன்பணிகொ ளொற்றியூர் வடிவம்மை
வெள்ளநீ ராடியருளே. (81)
_________________________________
சந்தனச் செச்சையும் பைந்துணர்ப் பூக்களும்
தண்மதுத் தொங்கல்பிறவும்
தளிர்க்கையி னெடுத்துநீ மேலோச்ச மலர்தொட்ட
தனுமாரன் வேவநோக்கு
மந்தணன் றன்மனைவி யென்றுனக் கஞ்சியர
மகளிர்வா ளாதுநிற்ப
வவருள மறிந்தஞ்சு கண்ணனன் றமராட
வருண்மொழி கொடுத்தவிறைபோல்
வந்துநீ ரெம்மொடும் பொருமினென் றருளியவர்
வந்தாட விளையாட்டினு
மானாத வாறெலாம் வென்றவர் புறம்கண்டு
வாளரியி னோடுநீடி
வெந்திறற் கணையினொடு வேல்வென்ற
விழிமாது வெள்ளநீ ராடியருளே
வெற்றிநெரி யன்பணிகொ ளொற்றியூர் வடிவம்மை
வெள்ளநீ ராடியருளே. (82)
_______________________________
செறியுமா னந்தப் பெருங்கடற் றணவாத
சீதளக் குணமானநீ
திகழ்பல வுயிர்க்குமல வெப்பினை யகற்றவே
திருமேனி கொண்டுவந்தாய்
நெறியினால் வழிபடுத லியையாத நீரெனவு
நின்விழி யருட்பார்வையா
னினைவினா னூற்றத்தி னான்வேறு தொடர்பானு
நீள்கதியி னெளிதுசோ
வறியுமா தவமுனித் தேனுவின் மடித்தலத்
தள்ளுற வூறுதீம்பா
லாங்கருந் திக்கிரியில் வீழ்ந்தருவி யாய்நிலத்
தாறுகொண் டோடிநீடி
வெறியுலா யெண்டிசை மணக்கு மம்பாலிநதி
வெள்ளநீ ராடியருளே
வெற்றிநெரி யன்பணிகொ ளொற்றியூர் வடிவம்மை
வெள்ளநீ ராடியருளே. (83)
_____________________________________
கடைநாளி லெங்கணுங் கோத்தகட லிற்றுஞ்சு
கண்ணனுந் தியில்வந்தவெண்
கண்ணனக் கடலிடைத் தாங்கலாற் றாதுதாழ்
கமலத்தொடுந் தாழ்ந்துகைப்
புடைமான் றரித்தரு டியாகப்பிரான் கருணை
பூப்பமேல் வந்தெழுந்த
பொற்பினைச் சிற்பரை கறங்கிப் பிறங்கிவரு
பூம்புனல் குடைந்தாடுதோ
அடைவார் திரைக்கண்மல ருடனோதி மத்திர
ளொசிந்தாழ்ந் தெழுந்துகாட்ட
வொண்டொடித் தோழியர் முறுக்குநீர்ப் பந்தோ
டுடைந்தோட நீர்ச்சிவிறிதூய்
விடையானி டத்தகொடி யுடையானி டத்தகொடி
வெள்ளநீ ராடியருளே,
வெற்றிநெரி யன்பணிகொ ளொற்றியூர் வடிவம்மை
வெள்ளநீ ராடியருளே. (84)
__________________________________
தண்ணிய நறுங்கங்கை சூட்டிய தியாகரைத்
தழலினுக் கதிதெய்வமாச்
சாற்றிய மறைக்கியைய வவர்தழற் கோயிலுட்
சார்ந்திருக் கின்றதுமலால்
வண்ணவெரி யாடுகின் றார்நினது கூறென்னு
மாலைநீர்க் கதிதெய்வமா
வகுத்திடு மதற்கியைய வாழியிடை யம்மாலும்
வதியுமற் றம்மைநீயும்
புண்ணிய மெவர்க்கும் புரக்கப் புதுப்புனல்
புகுந்தாடன் முறைமையாகும்
பொருகரிக் கோடுங் கலாவமுந் தரளமும்
பொழிகிரண வயிரங்களும்
விண்ணவர் வியப்பத் திரட்டிவரு பாலிநதி
வெள்ளநீ ராடியருளே
வெற்றிநெரி யன்பணிகொ ளொற்றியூர் வடிவம்மை
வெள்ளநீ ராடியருளே. (85)
__________________________________
வேறு.
கன்னற் செழுந்தேன் கனிந்தமொழிக் கவுரியிரட்டை வினையொத்த
காலையடியா ருள்ளகநீ கருணை யோடுமெ ழுந்தருளப்
பன்னற் கரும்புண் ணியபாவம் பாறத் தணவாப் பிராரத்தம்
பயிலுங்கரணம் யாவையுநின் பண்பின் மயமாம் பரிசேபோ
லன்னக் குருகுங் கரண்டமுத லானகுருகும் புறத்தேக
வலராதிக ணின்னுருப் படுங்குங் குமமாதிகளின் குணங்கவரப்
புன்னைப் பொதும்ப ரொற்றிநகர்ப் பூவாய்புதுநீ ராடுகவே
பூணிற் சிறந்த வடிவம்மை புதுநீராடி யருளுகவே. (86)
____________________________
அங்கு நினது கைத்தலத்தங் குலிதோ றெழுந்த கங்கையினா
லகில வுலகு மறன்கடைநீத் தம்மை யின்றும் பேறெய்து
மிங்கு மெடுத்த நின்றளிர்க்கை யெழிலார் சிவிறி தூம்புனலி
னீர்ந்தண் டுளிதோய்ந் தின்னமுமண் ணிடமாதியபூ தமுமவற்றுட்
டங்கு முயிரும் பேறெய்தச் சந்தமறை யோரரசர் பொரு
டழைத்த வணிகர் சூத்திரர்சங் கரரும் வணங்க மனத்தின்பம்
பொங்க வரங்கொ ளொற்றிநகர்ப் பூவாய் புதுநீ ராடுகவே
பூணிற் சிறந்த வடிவம்மை புதுநீ ராடி யருளுகவே. (87)
_______________________________
ஒருபான் முழுது நினைக்கலந்து முன்கூ றான நெடுமாலை
யொருபாற் கலந்துந் தியாகேச ரொருநாட் காஞ்சி யிடைநீமுன்
இருமா நிலமுய்ந் திடவாட வெழுந்த மஞ்சள் வாரியினாட்
டெய்தி மஞ்ச ணீர்கூத்த ரெனும்பேர் தாங்கி வதிதலினாற்
குருகார் முன்கை யுமையின்றுங் குளிர்நீ ராடன் மற்றவர்க்கும்
குறையா மகிழ்ச்சி தலைசிறக்குங் கொள்கைத் தாகு நால்வகையின்
பொருளா தரிக்கு மொற்றிநகர்ப் பூவாய் புதுநீ ராடுகவே
பூணிற் சிறந்த வடிவம்மை புதுநீ ராடி யருளுகவே. (88)
_______________________________
வேறு
மங்கைநின் கொங்குமி ழுங்குழ லோடுசை
வலம்விழி யொடுகயல்கள்
வார்செவி யொடுகொடி வள்ளை முகத்தொடு
வாரிசம் வாயினொடு
செங்குமு தந்திவ ணகையொடு தரளந்
திகழ்கள மொடுவளைகள்
செறிவளை முன்கையி னொடுமக ரம்வளர்
சிறுமுலை யொடுநேமி
யங்குரு குதர மடிப்பொடு திரையடி
மூன்றொடு ஞெண்டுவரா
லாமையு மினமென வுறவெம தகமல
ரகவடி மலரொடுறப்
பொங்கிய பெருமகிழ் நின்கண வருமுறப்
புதுநீ ராடுகவே
பொற்பமர் சிற்பல கைப்பார் தற்பரை
புதுநீ ராடுகவே. (89)
_____________________________________
முந்திய தீர்த்த மெனப்படு நான்கு முகத்திறை வன்குண்ட
முண்டக மாதரு ரோமசர் செந்தமிழ் முனிசக் கரமேந்தி
நந்தி பிரான்முத லோர்பெயர் பூண்ட நலத்தகு பலதீர்த்த
நாலையு முயர்சிவ கங்கையு முலகவர் நாடின ராடியெழுந்
தெந்தை பிரானரு ளாழியி னாடிட வெம்பெரு மானுனின
தீர்ம்புன லாடலை நோக்கு தொறும்வள ரின்பக் கடலாடப்
புந்தி விழைத்தன தந்தருள் பைந்தொடி புதுநீ ராடுகவே
பொற்பமர் சிற்பல கைப்பரர் தற்பரை புதுநீ ராடுகவே. (90)
நீராடற்பருவமுற்றிற்று.
__________________________________
10.பொன்னூசற்பருவம்.
செங்கிரண வொளியுமிழு மாணிக்க மணியிற்
றிரட்டிநாட் டியநெடுந்தூண்
செழும்பருதி காட்டமுழு வயிரத் திழைத்துமேற்
சேர்த்தவுத் திரமதிபொர
வங்கதிற் றூக்குபுது நித்திலத் தாமங்க
ளச்சுவனி தேவர்புரைய
வாடகைப் பலகைவட வரைதகப் பலகையி
னழுத்துபல மணிகளேனைத்
தங்கியொளிர் கோணாள்கள் பிறவுங் கடுப்பவன்
றம்பிரா னிரதமான
சகலதே வருமின் றுனக்குமோ ரூசலாய்ச்
சார்ந்தமைந் தார்களென்னப்
புங்கவ ரிறைஞ்சுதிரு வொற்றிநகர் வடிவம்மை
பொன்னூச லாடியருளே
பூலோக கயிலாயர் பாலேக மானபெண்
பொன்னூச லாடியருளே. (91)
________________________________________
அள்ளொளித் தரளத் திழைத்தபொற் பலகையி
னமர்ந்தம்மை யாடுந்தொறும்
மகச்சரியை கிரியைப் பணிக்குரிய வடியவ
ரகத்தினொளிர் புண்டரீக
நள்ளமர்த லென்னவும் யோகியர்கள் புருவநடு
நகுகிரண மதிமண்டல
நாப்பணம ரொருகாட்சி யென்னவும் மெய்ஞ்ஞான
நன்மையின ரானந்தமாந்
தெள்ளொளிச் செறிவின்மலர் கின்றதிது வென்னவுஞ்
செம்மாப்ப வென்றுமொருநீ
திகழ்கின்ற வுள்ளும் புறம்புமொரு தன்மையிற்
சேர்ந்தருளு முண்மைகாட்டப்
புள்ளிவர் தடம்பொங்கர் சூழொற்றி வடிவம்மை
பொன்னூச லாடியருளே
பூலோக கயிலாயர் பாலேக மானபெண்
பொன்னூச லாடியருளே. (92)
______________________________________
செக்கர்ச் செழுங்கிரண வெயிலுமிழு மிரவியுந்
தெண்ணிலாக் கதிர்விரிக்கும்
திங்களும் திருவொற்றி மாநக ரமர்ந்தரு
டியாகப்பிரான் கண்களா
யொக்கச் சிறந்துகவி னூற்றிருக் கின்றநின
துருவத்திருச் சாயையை
யோவாது நாப்பட் டழீஇத்தாங்கி வளர்கின்ற
வுண்மைப் பெருந்தவத்தாற்
றக்கதம தியல்பான வுருவத்து நின்னையே
தாங்குதல் கடுப்பவொருகாற்
றயங்கு மாணிக்கத் திழைத்தபல கைக்கணுந்
தையலொருகா னித்திலம்
பொக்கவொளி மணையினு மிருந்தவடி வம்மைநீ
பொன்னூச லாடியருளே
பூலோக கயிலாயர் பாலேக மானபெண்
பொன்னூச லாடியருளே. (93)
________________________________
சந்தமணி வச்சிரப் பலகைமுழு தொளிநிலவு
தவழ்கிரண முமிழ்தருதலாற்
றவளவமிழ் தொழுகுநிறை மதியமென வொருபாற்
றகைந்துள சகோரங்களும்
கொந்தொளி கொழித்திருட் படலங் கிழிக்குங்
குருப்பதும ராகத்தினாற்
கோட்டுமப் பலகையினை யிரவியென வொருபாற்
குழீஇய சக்கரவாகமும்
வந்தடி வணங்கியிரு சுடரகல வாடுமவ்
வாட்டந்தவிர்த் தருளென
மங்கைநின் பால்வரங் கொளமிடைவ தொப்பமணி
மாடமெதிர் கண்டோர்விழிப்
புந்திகவ ரெழின்மருவு மொற்றிவடி வம்மைநீ
பொன்னூச லாடியருளே
பூலோக கயிலாயர் பாலேக மானபெண்
பொன்னூச லாடியருளே. (94)
_____________________________
வரங்கண்மலி வானவர் கடைந்தநா ளஞ்சாது
வானவர்கண் மகுடசூளா
மணியெனுந் தியாகேசர் செவ்வாய் மடுப்பவொரு
வல்விட முயிர்த்ததென்று
தரங்கமலி பாற்கட றனைப்பற்றி வேறாய்ச்
சமைத்துறத் தூக்கியுமறந்,
தணியாமை யாலதி னிவர்ந்தலைத் தாலெனத்
தவளமணி மணையிலேறி
யிரங்குமணி மேகலைக் கமலைமுதன் மாதர்களு
மெய்துதம் பகைமைதீர்க்கு
மேல்வையிது வென்றுட னிசைந்தாங்கு மணிவட
மிருங்கைத்தலத்தி னூக்கப்
புரந்தனி லுயர்ந்தசிவ புரியிலுமை வடிவம்மை
பொன்னூச லாடியருளே
பூலோக கயிலாயர் பாலேகமா னபெண்
பொன்னூச லாடியருளே. (95)
_____________________________
கனிநறுந் தேமொழிச் செய்யவா யரமகளிர்
கைதொழுதி றைஞ்சியூசல்
காணமிடை கின்றவ ருளந்தொறும் விழிதொறுங்
கதிர்மணிப் பூண்கடோறு
மினியநின் பூங்குழற் கற்றையுஞ் சிலைநுதலு
மிலவிதழ்ச் செய்யவாயு
மிலங்கிய மணிக்குழைக் காதுந்தொடிக்கையு
மிட்டிடையு மடியுமுழுது
நனிவிரவு மூசலொடு நின்னுருத் தோற்றுவது
நாடுமறிவோ டம்மைநீ
நண்ணுபல பொருடொறு மிருந்துநின் னியல்பான
நன்மைதிரி யாமைகாட்டப்
புனிதமறை பரவுதிரு வொற்றிவடி வுடையம்மை
பொன்னூச லாடியருளே
பூலோக கயிலாயர் பாலேக மானபெண்
பொன்னூச லாடியருளே. (96)
______________________________
ஒழுகொளி மணித்திர டரங்கக் கரங்களா
னுந்திக்கழங் காடுறூஉ
மொண்கங்கை நின்னையொரு தங்கையென வளவளா
யுகந்தாட வெண்ணிநண்ணி
யெழுதரிய நினதுதிரு வுருவம் தழீஇக்கொண்
டிருந்தபடி நினதுசகனத்
திருகைத் தலங்களுங் கோத்தெடுக் கின்றதே
யெனவயிர வுத்திரத்திற்
பழுதற விசைத்ததர ளத்தாம்பு பூட்டுபரு
மாணிக்க மணையிலேறிப்
பாவைய ரணிந்துதெரு வீதியினுகுத்திட்ட
பைஞ்சாந்துசெங் குங்குமம்
புழுகடி வழுக்குதிரு வொற்றிவடி வுடையம்மை
பொன்னூச லாடியருளே
பூலோக கயிலாயர் பாலேக மானபெண்
பொன்னூச லாடியருளே. (97)
_________________________________
மெல்லிதழ் முறுக்குடைந் தூற்றுபைங் தேங்கலுழி
வீற்றுவீற்றோட வறுகான்
மிஞிறுபெடை யொடுமுண்டு பண்டக மிழற்றிதழி
வெண்டும்பை வன்னிமத்த
மல்லிகை கடம்பெருக் காத்தியிவை பொதுளியெழி
லார்ந்தசடிலக் காட்டினுக்
கந்தரக் கங்கைமுழு தும்பாய்ச்சு மண்ணலா
ராகம் பகுந்தமுன்னா
ணல்லவிரு விடையுளொன் றைப்பகுந் தேறிய
நலத்ததிது வெனவுமென்று
நண்ணிய மடங்கலிது வென்னவுந் தாரத்தி
னகுகதிர்ப் பலகையேறி
புல்லியரு மன்புசெயு மொற்றியூர் வடிவம்மை
பொன்னூச லாடியருளே
பூலோக கயிலாயர் பாலேக மானபெண்
பொன்னூச லாடியருளே. (98)
_________________________________
தண்ணிய வெனாதிருங் கைத்தல மிருந்துழித்
தலைவரவர் தியாகேசனார்
தம்மையும் வணங்கியிசை தோற்றிநீ மாரனைச்
சார்ந்துவசை தோற்றியுமெதிர்
நண்ணியது நன்றெனத் தாக்கியொரு முறைசெய்யு
நன்மைபொர மணி நூபுர
நகுகதிர்த் தண்டைபரி யாகமுங் கிண்கிணியு
நன்றெழுந் தார்ப்பநீண்ட
திண்ணிய வசோகினை யுதைந்தாடு தோறுநின்
செயிரினுக் கஞ்சியதுவும்
திரையிட் டிறைஞ்சுவது மானத் துணர்த்தலர்கள்
சிந்திமென் சாகைதாழ்த்த
புண்ணிய மலர்ந்ததிரு வொற்றிவடி வுடையம்மை
பொன்னூச லாடியருளே
பூலோக கயிலாயர் பாலேக மானபெண்
பொன்னூச லாடியருளே. (99)
__________________________________
சொற்பயிலு மறநெறிகள் வாழவந் தணராறு
தொழிலினொடு வாழவெற்றித்
தோலாத வரையர்வணி கர்கள்வாழ வுழவுமிகு
சூத்திரர்கள் வாழவேனைப்
பற்பல குலத்தினமர் வோர்களும் வாழவொளி
பரவுமறு சமயம்வாழப்
பரசமய மாக்களும் பத்தியின் பாங்கர்ப்
பதிந்தினிது வாழநினது
கற்பனையி னில்லாது மாறுபடு மிழுதையர்
கணங்களுங் கோட்டநீங்கிக்
காதலொடு வாழநின் றிருவிழாப் பணிவிடை
கவின்கொண்டு நாளும்வாழப்
பொற்புபொலி வொற்றிநகர் வாழவடி வுடை யம்மை
பொன்னூச லாடியருளே,
பூலோக கயிலாயர் பாலேக மானபெண்
பொன்னூச லாடியருளே. (100)
பொன்னூசற்பருவம் முற்றிற்று.
ஆதிபுரிவடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
This file was last updated on 10 Oct 2020.
Feel free to send the corrections to the webmaster.