மேனகா ( நாவல்) - முதல் பாகம்
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
mEnakA (novel) part 1
by vaTuvUr turaicAmi aiyankAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
மேனகா ( நாவல்) - முதல் பாகம்
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கா
Source:
மேனகா ( நாவல்) - முதல் பாகம்
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், B.A.,
ஜெனரல் பப்ளிஷர்ஸ்
244, (ப. எண்.) ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004.
உரிமை பதிவு
ஜெனரல் பப்ளிஷர்ஸ் முதற் பதிப்பு - 2004
© பதிப்பகத்தார்
மொத்த பக்கங்கள் : (16 + 320) = 336
விலை : ரூ. 125.00
ஜெனரல் பப்ளிஷர்ஸ்
244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004.
Laser Typeset by - KLM Printers, Chennai & Print Point Graphics, Chennai - 20. Printed by - Jai Ganesh Offset Printers, Chennai - 4.
-------------------
பதிப்புரை
பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங் களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை விறுவிறுப்பைக் குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக, சாதுர்யமாக கதாபாத்திரங்களைப் பேச விட்டு , சமு தாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது.... போன்ற அற்புத மான தகவல்களைச் சொல்லும் நாவல்கள்தான் வடு வூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்கள். இவருடைய கதைகளில் காதல் காட்சியும் வரும், கோர்ட் சீனும் வரும், போலீஸ் நடவடிக்கைகளும் வரும், மருத்துவரின் சேவையும் வரும் - இப்படி அநேகமாக எல்லாத் தரப்பு மனிதர்களின் மேன்மையைப் பற்றியும் சொல்வார்.
அதே சமயத்தில், இதே சமுதாயத்தில் நல்லவர் கள் மத்தியில் வாழும் வக்ர புத்தி உள்ளவர்களைப் பற்றியும் சொல்லி , அப்படிப்பட்டவர்களை எப்படி எல்லாம் அடக்கி ஆளலாம் என்பதைப் பற்றியும் சொல்லியிருப்பார். இவருடைய எழுத்துக்களில் சிரிப் புக்குப் பஞ்சமிருக்காது. கதைகளில் நிலவும் கடின மான சூழ்நிலையையும், படு சாதாரணமாகக் கையாண் டிருப்பார். சிக்கலையும் உருவாக்கி, அந்த சிக்கலி லிருந்து விடுபடும் வழியையும் சொல்வார். வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களைப் படித் தால், பொழுது போவது மட்டுமன்றி, பல விஷயங் களைத் தெரிந்து கொள்ளலாம்.
தமிழில் நெடுங்கதை அல்லது நாவல் தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் இந்த நாவல்களை எழுதியுள்ளார். அந்த காலகட்டத் தில் இவருடைய நாவல்களைப் படிக்காதவர் எவரும் இருந்திருக்க முடியாது. மிகவும் பிரபலமாகப் பேசப் பட்ட திகம்பர சாமியார்' இவருடைய பாத்திரப் படைப்பு. திகம்பர சாமியாரின் அறிவு அளவிட முடி யாதது. மிகவும் புத்திசாலியானவர். தன்னுடைய ஒவ் வொரு பேச்சு வார்த்தையிலும், செயலிலும் பல்லா யிரக்கணக்கான அர்த்தங்களை யூகிக்க வைப்பார். இவருடைய ஒவ்வொரு நாவலும், ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கிறது.
'இவ்வளவு வருடங்கள் ஆகி விட்டதே! போர் அடிக்காதா?' என்று வாசகர்கள் துளிகூட எண்ண வேண்டாம். இதை நாங்கள் வியாபார நோக்கில் சொல்லவில்லை. உண்மையில் இந்த நாவல்களை எல்லாம் நாங்கள் படித்துப் பார்த்த பிறகுதான் வெளி யிடுகிறோம். நேரம் போவதே தெரியாமல் சரளமான தமிழ் நடையில், கதை போகும் போக்கே மிக மிக நன் றாக உள்ளது.
வடுவூர் துரைசாமி ஐயங்கார் இப்படிப்பட்ட நாவல்களை எழுதியதால் ஏராளமான நற்சாட்சிப் பத்திரங்களையும், தங்க மெடல்களையும் பெற்று உள்ளார். இதெல்லாம் சாதாரண விஷயமல்ல. இந்த நாவல்களைத் தமிழ் மக்கள் படிக்க வேண்டும், போற்ற வேண்டும், நாங்களும் நிறைய புத்தகங்களை விற்க வேண்டும். இதெல்லாம் வாசகர்களுக்குத் தெரி யாமலா இருக்கும்? இந்தப் புத்தகங்களை வாங்கும் அனைவருமே புத்திசாலிகள்தான்.
இந்த நாவல்களை வெளியிடும் முயற்சியில் எங்களுக்கு மிகவும் உதவியாக எங்களது நீண்ட நாள் நண்பரான, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைவரான திரு. இரா. முத்துக்குமாரசாமிக்கும், நூலின் பழைய பிரதிகளைக் கொடுத்து உதவிய (காஞ்சி புரம் ) அன்பர்களுக்கும், மேலும் இந்த நூல்களை, அந்தக் காலத்திலேயே ஏராளமாக விற்பனை செய்து, பெரும் பணியாற்றி தற்போது எங்களுக்கு உரிமையை வழங்கிய இரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் உரிமை யாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் வாசகர் கள் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறோம்.
வடுவூர் துரைசாமி ஐயங்கார் நூல்கள் மீண்டும் வருமா? மீண்டும் வருமா?' என்று ஏங்கிக் கொண் டிருக்கும் வாசகர்கள் இப்போது மகிழ்ச்சி அடை வார்கள். இந்த நூல்களை புரூப்' பார்த்துக் கொண் டிருக்கும் போதே, பல வாசகர்கள், 'பரூப்' படிக்க வில்லை என்றால் கூடப் பரவாயில்லை, தாமதப்படுத் தாமல் உடனே வெளியிடுங்கள் என்று கூறினார்கள்.
அன்று 007 இன்று ஜேம்ஸ்பாண்டு - ஆனால்
அன்றும் இன்றும் என்றும் "திகம்பர சாமியார்''
அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன்
------------------
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
வடுவூர் துரைசாமி ஐயங்கார் : 1880-1942. தஞ்சை மாவட்ட மன்னார்குடி வட்டம். தந்தை கிருஷ்ண ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராக விளங்கி, எழுத்துச் செல்வாக்கால் வேலையை விட்ட வர். தம் நாவல்களைத் தாமே அச்சிட ஓர் அச்சகமும் 'மனோரஞ்சனி' என்ற மாத இதழும் தொடங்கி மாதம் ஒரு கதை நூல் என எழுதிக் குவித்தவர். கலைமகள் கம்பெனி, விற்பனை நிலையமாகும்.
நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்த மேனி , கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, அங்க வஸ்திரம், பஞ்சகச்சம், தலையில், குல்லா, காலில் கட் ஷூ, கையில் தடி, நெற்றியில் எப்போதும் திரு மண், வாய் நிறைய வெற்றிலை (பெரிய வாய்), புகை யிலை, தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார் இளமை யோடிருக்க. மொத்தத்தில் கை நிறைய சம்பாதித்த கவலை இல்லாத உல்லாச மனிதர். இவர் மாடிக்கு ஜே.ஆர். ரங்கராஜு, ஆரணியார், பம்மல் சம்பந்த முதலியார், வை. மு. கோ., எஸ். எஸ். வாசன் வந்து போவர்.
மனைவி நாமகிரி அம்மாள். மக்கள் விஜயராக வன், ரங்கநாயகி, கிருஷ்ணசாமி. மூத்த மகன் மனைவி புஷ்பவல்லி; புதுப்பேட்டை கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு; ஒரு பெண்ணும் பிள்ளையும் ரங்கநாயகிக்கு நான்கு மகள்களும், ஒரு பிள்ளை ரகுவும் நேவியில் காப்டன், வடுவூராரின் நவீனம் 'மைனர் ராஜாமணி' சினிமாவாக வந்து திரை யிட்டதும் ஒரு சமூகத்தை இழிவு செய்வதாக வழக்கு தொடர்ந்து நிறுத்தப்பட்டது. இந்த அதிர்ச்சி, அவ மானம் தாங்காது குருதிக் கொதிப்பால் மாண்டார்!
இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களைத் தம் துப்பறியும் கதைகளால் பிணித்தவர். புத்தகம் படிக் கும் பழக்கத்தை ஏற்படுத்தி, பரந்த ஓர் வாசக உல கினைப் படைத்துக் கொண்ட பெருமையர் Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு, சொந்தமாகவும் படைத்துள்ளார். இவர் படைப்பில் சிறந்ததாக மேனகா, கும்பகோணம் வக்கீல் குறிப் பிடத்தக்கன; படமாகவும் வந்தவை. வாசகர்களின் நாடித் துடிப்பறிந்து ஈர்க்கும் இனிய வசனமும் அழகு வருணனைகளும் அனைவரையும் அள்ளின.
திகைப்பூட்டும் திருப்பங்கள், சுவைமிகு நிகழ்ச்சி கள், ஆவலைத் தூண்டும் விறுவிறுப்பும், படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் நடையும், நகைச்சுவை நெளிய நல்ல நல்ல நவீனங்களைப் படைத்துள்ளார்.
வெறும் மர்ம நாவல் என ஒதுக்க முடியாத அள வுக்கு வைணவத் தலங்களையும், வேற்று மதத்தின ரும் கூடி வாழும் வகையும், சமூகக் குறை நீக்கமும் கொண்டும் விளங்குகின்றன. திகம்பர சாமியார் துப்பறியும் பாத்திரம் நினைவில் நிற்கும். நாவல் வர லாற்றில் சுவடு பதித்தவர் வடுவூரார் என்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
- நன்றி - தமிழ் இலக்கிய வரலாறு
(மது.ச. விமலானந்தம்)
-------------------
இலக்கிய சாதனையாளர்
முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் கல்கி என்கிற எழுத்தாளர் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையை அதி கரிக்க ஆவன செய்தது போல இருபதுகளில் தமிழ் வாச கர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் என்று ஜே.ஆர். ரங்கராஜு என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும்.
இந்த விஷயத்தைக் கல்கி தெரிந்து செய்தார் என் றும், முன்னிருவரும் தாங்களும் அறியாமலே வாசகர் பெருக்கத்துக்குக் காரணமாக இருந்தார்கள் என்றும் சொல்ல வேண்டும்.
ஜே.ஆர். ரங்கராஜுவின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரை யில் வெளிவந்தன. பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதி களையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு 10 பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும் போது மிகவும் பர பரப்பாக வாசகர்கள் வாங்கிப் படித்தனர். வரதராஜன் என்று இரண்டு பாகங்கள் வெளிவரும் வரையில் ஒன்றும் தடங்கல் இல்லை. வரதராஜனின் பல பகுதிகள் இலக் கியத் திருட்டு' என்று கேஸ் போட்டு, மேலே எதுவும் எழுதிப் பிரசுரிக்கக் கூடாது என்றும், ஆறு மாதம் ஜெயில் வாசம் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம். என்றும் கோர்ட் அவருக்குத் தண்டனை விதித்தது என்று எண்ணுகிறேன். ஜெயிலில் இருந்து விட்டு எழுதுவதை நிறுத்தி விட்டார் ரங்கராஜு இவரை எழுத்தாளர் சங்கம் ஒன்று 40களின் ஆரம்பத்தில் கல்கி தலைமையில் ஏற்பட்ட போது முதல் கூட்டத்துக்கு வரவழைத்து நான் சந்தித்திருக்கிறேன். தாடி வளர்த்துக் கொண்டு நாமம் போட்டுக் கொண்டு (வைஷ்ணவ நாயுடு அவர் என்று எண்ணுகிறேன்) பார்ப்பதற்குக் கம்பீரமாக இருந்தார்.
ரங்கராஜுவுக்கு அடுத்து வாசகர்களின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தவர் என்று வடுவூர் துரைசாமி ஐயங் கார் என்பவரைச் சொல்ல வேண்டும். 1923, 24 முதல் 27 வரையில் தஞ்சையில் கல்யாண சுந்தரம் ஹைஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது பச்சை, மஞ்சள், சிவப்பு அட்டையில் டெமி சைஸில் அவர்கள் நாவல்கள் ஒவ்வொன்றாக அப்பாவுக்குத் தெரியாமல் ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிப் படித்த நினைவிருக்கிறது. படித்துவிட்டு வீட்டுக்கு எடுத்துப் போனால் அப்பா சண்டை பிடிப்பாரென்று அப்போது மேல வீதியில் தெற்குக் கோடியில் இருந்த ஒரு லைப்ர ரிக்கு இனாமாகப் புஸ்தகத்தைக் கொடுத்து விடுவேன். இப்படிப் படித்த நாவல்கள் என்று கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும், வஸந்த கோகிலம், பூரண சந்திரோதயம், விலாஸவதி, திகம்பர சாமியார், மேனகா இவை நினைவுக்கு வருகின்றன. ஒரு நாவல் கலைப் பிரக்ஞையுடன், சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன், விரஸமான விஷயங்களையும் கூட அதிக விரஸம் தட்டாமல் எழுதுவதில் சிரத்தையுடன் எழுதிய வடுவூரார் உண்மையிலேயே இலக்கியப் பிரக்ஞை உடையவர் என்பதில் சந்தேகத்துக்கிடமேயில்லை.
ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதினார் பெரும்பாலும் என்றாலும் அவர் விக்டர் ஹ்யூகோவின் Les Miserables என்கிற நாவலை அற்புத மாகத் தமிழில் தழுவி எழுதியிருக்கிறார். முதநூலைப் போலவே கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமக ளும் என்கிற நாவல் அமைந்திருப்பதாகச் சொன்னால் அதில் தவறவில்லை.
அதே போல் கிரேக்க புராணக் கதையான Eros and Psyche கதையை வஸந்த கோகிலம் என்கிற நாவலாகச் செய்திருக்கிறார்.
இன்று தமிழில் சரித்திர நாவல்கள் ஏராளமாக எழுதப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் முன்னோடி யாகக் கல்கியைக் கருதுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், இதே அளவில் இன்று எழுதப்படுகிற சரித்திர நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாக 1924-ல் வெளி வந்த வடுவூராரின் விலாஸவதி என்பதைத்தான் சொல்ல முடியும். அது வெளிவந்த சமயத்தில் மிகவும் பரவ லாகப் பேசப்பட்டதுடன் படிக்கவும் பட்டது. மூன்று ஆண்டுகளில் ஐந்து பதிப்புகள் வந்ததாக ஒரு தகவல் படித்திருக்கிறேன்.
வடுவூராரின் ஆரம்பக் காலத்திய நாவல்கள் எல் லாம் மாதாந்திரப் பத்திரிகையாக வெளிவந்த மனோரஞ் சிதம் (அல்லது மனோரஞ்சனியா?) என்கிற பத்திரிகை யில் வெளிவந்ததாகச் சொல்வார்கள். இந்தப் பத்திரி கையைப் பார்த்திருப்பதாக எனக்கு நினைவில்லை. அந்தப் பத்திரிகையை முன்மாதிரியாகக் கொண்டுதான் வை.மு. கோதைநாயகி அம்மாள் தனது ஜகன் மோகினி நாவல் பத்திரிகையைத் தொடங்கியதாகவும் சொல்வார்கள்.
இன்னொரு விஷயமும் அப்போது பரவலாகப் பேசப்பட்ட விஷயம் நினைவுக்கு வருகிறது. வை.மு. கோதைநாயகியின் முதல் நாவலான வைதேகியின் முதல் பாதியை வடுவூரார் எழுதி, முன்மாதிரியாகத் தந்த தாகவும் அதைப் பின்பற்றி முடித்து விட்டு வெற்றிகர மாக வை.மு.கோ. துப்பறியும் நாவல்களிலிருந்து அவர் தனி பிராண்டான சமூக நாவல்களுக்கு நகர்ந்தார் என்றும் சொல்லுவார்கள்.
1930-ல் என்று எண்ணுகிறேன். பைகிராப்ட்ஸ் ரோடு கோடியில் மரினா பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே வேங்கடரங்கம் பிள்ளை தெரு பைகிராப்ட்ஸ் ரோடைச் சந்திக்கிற இடத்தில் இருந்த வீட்டை வாங்கி வடுவூரார் புதுப்பித்து வடுவூர் ஹவுஸ் என்று பெயரிட்டு கிரஹப் பிரவேசம் நடத்திய போது, மாலையில் பாண்ட் வாசித்துக் கொண்டிருக்கும் போது நான் சென்னையில் இருந்தேன். வீட்டைப் பார்த்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் கழித்து, அவரைப் பார்க்கப் போனேன். அந்த ஒரு தடவை மட்டுமே அவரை நான் சந்தித்திருக்கிறேன்.
என்ன பேசினோம் என்று நினைவில்லை. ஆனால், பேச்சு பூராவும் தன் பக்கத்தில் அவர் நாவல்களைப் பற்றி யும், அவருடைய தழுவல் முறைகளைப் பற்றியும் அவர் நடையைப் பற்றிய வரையிலும்தான் என்று நான் நினைவு கூர்கிறேன். தன் நாவல்களில் பெரும் பகுதி தழுவல்கள்தான் என்று அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், மேனகாவும் திலோத்தமை என்று ஒரு ஐந்து அங்க நாடகமும் தன் சொந்த எழுத்து என்று சொல்லி எனக்கு திலோத்தமா ஒரு பிரதி அன்பளிப்பாக அளித் தார். அதை வெகுநாள் நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.
அதைத் தவிர அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப் தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்கிற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். இந்தச் சரித்திர உண்மையில் இருந்த அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக ஆங்கிலத்தில் Long Missing Links என்று ஒரு 900 பக்க நூல் எழுதி அதைத் தன் சொந்தச் செலவிலேயே அச்சிட்டு விற்க முயன்றார். புஸ்தகம் விற்கவில்லை. அச்சுக்கும், பேப்பருக்கும் ஆன கடனை புதுசாக வாங்கிய வீட்டை விற்று அடைத்து விட்டு, பேசாமல் கிராமத்துக்குப் போய்விட்டார் என்று எண்ணுகிறேன். இந்தப் புஸ்தகமும் என்னிடம் வெகு நாள் இருந்தது.
காங்கிரஸ் கமலம்' அல்லது ஆணென்று அணைய அகப்பட்ட பெண் புதையல்' என்கிற நாவலை சுதேச மித்திரனில் தொடராக எழுதி வெளியிட்டார். இதுதான் பழைய வடுவூர் பாணியில் அவர் கடைசி முயற்சி என்று எண்ணுகிறேன். அதற்குப் பிறகு அவர் முப்பதுகளில் பழைய வேகத்தையோ சாதனையையோ எட்டவில்லை. மாசத்துக்கு ஒரு நாவல் என்று எழுதி, நாவலுக்கு நூறு ரூபாய் என்று கூலி வாங்கிக் கொண்டு ஏழெட்டு ஆண்டு கள் இருந்து பிறகு இறந்து விட்டார் என்று எண்ணுகிறேன்.
சேலம் பட்டுக் கரை வேஷ்டியும், காதில் டால் வீசும் வைரக் கடுக்கனும், நெற்றியில் ஒரு சிவப்பு ஸ்ரீ சூர்ணக் கோடுமாகவும் நான் பார்த்த வடுவூர் துரைசாமி ஐயங்காரை என்னால் இன்று கூட நினைவுகூர முடிகிறது. தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்பட வில்லை; புரிந்து கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
- நன்றி - இலக்கியச் சாதனையாளர்கள் –
க.நா.சு.
------------------------
தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
ஆரணி குப்புசாமி முதலியாரைத் தொடர்ந்து அவர் பாணியில் தழுவல்களாக எழுதியவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். தழுவல் நாவல்களாயிருந்தபோதிலும் தமிழ்நாட்டு இடப் பெயர், மக்கள் பெயர்களை வைத்தே ஜனரஞ்சகமாக எழுதப்பட்டதால், இவரது நாவல்கள்தான் தமிழ்நாட்டில் ஒரு பரந்த வாசகர் உலகத்தைச் சிருஷ்டித்து வைத்தன. புத்தகம் படிக்கும் பழக்கம் இந்த நாவல்களால் ஏற்பட்டது ஒரு புற மிருக்க, கண்டமேனிக்கு கதை எழுதும் எழுத்தாளர்களை உற் பத்தி செய்யக் காரணமாய் இருந்ததும் வடுவூரார் நாவல்கள் தான். ஆக, அக்காலச் சூழ்நிலையை ஒரு விமர்சகர் பின்வரு மாறு எடுத்துக் காட்டுகிறார்:
அச்சுப் பொறி மலிந்து காகித வர்த்தகம் பெருகி வரும் இக்காலத்தில் நாவல்களும் புற்றீசல் போல் தோன்றித் தொடங்கி விட்டன. மக்களின் ஆசாரங்கள் சீர் பெறவும், பாஷை வளர்ச்சி யுறவும் நாவல்கள் பெரிதும் உதவி புரியும் என்பது உண் மையே. ஆனால், தடியெடுத்தோரெல்லாம் வேட்டைக்காரர் என்றபடி தமிழ் உலகத்திலே இறகோட்டிகளெல்லாம் நாவ லாசிரியர்களாய் முன்வந்திருப்பதால் தற்கால நாவல்கள் பெரும்பாலானவற்றால் விளையும் தீமைகள் அற்ப சொற்ப மன்று. ரகர 'ற'கரங்களைச் சரியாய் வழங்க அறியாதவர் களும் தமிழ் எழுத்தாளராகத் துணிவு கொள்வதும் தமிழ் மொழியின் சனி திசையென்றே கூற வேண்டும். ஒன்றோ இரண்டோ விட புருஷர்கள், இரண்டோ மூன்றோ நாண மற்ற கன்னியர்கள், ஒரு துப்பறியும் கோவிந்தன் அல்லது கோபாலன், ஒரு ஆகாவழி ஜமீந்தார் - தமிழ் நாவல் பூர்த்தியாகி விடுகிறது.
தற்காலத்தில் துப்பறியும் நாவல்களெல் லாம் பிற நாட்டுப் பழக்க வழக்கங்களையும் மனோபாவங் களையும் தமிழகத்தில் பரப்பித் தமிழ் மக்களை அனாசாரப் படுகுழியில் தலைகீழாக வீழ்த்துகின்றன. நாவல்களின் தன்மை இன்னதென்றறியாத தமிழ் மக்களும் இந்த நாவல் புற்றீசல்களைக் கோழி விழுங்குவதுபோல் விழுங்கித் திருப்தி அடைகின்றனர் (லக்ஷ்மி, செய். 1924, முத்து மீனாட்சி நாவ லுக்கு மதிப்புரையில்).
வடுவூர் துரைசாமி ஐயங்கார் ரெயினால்ட்ஸ் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் கதைகளைத் தழுவி எழுதிய தோடு நின்று விடாமல் தமிழ்நாட்டின் சமகால சமு தாயத்தைச் சித்திரிக்கும் சொந்த நாவல்கள் பலவற்றையும் எழுதியிருக்கிறார். இவருடைய சொந்த முயற்சிகளில் சிறந் தவை மேனகா, கும்பகோணம் வக்கீல் என்பவையாகும். கையில் எடுத்தால் புத்தகத்தைக் கீழே வைக்காமல் தொடர்ந்து படிக்கும் ரசனை மிகுந்த கதைகளை எழுதிய வடுவூர் துரை சாமி ஐயங்கார் பின்னர் கல்கி போன்றவர்களின் கதைகளைப் படிக்கத் தயாரான ஆயிக்கரணக்கான வாசகர்களைத் தோற்று வித்த முன்னோடியாகவே விளங்கினார். இந்தப் பெருமையை ஆரணி குப்புசாமி முதலியாரும், ரங்கராஜுவும் பகிர்ந்து கொண்டனர்.
துரைசாமி ஐயங்காரின் மிகப் பிரசித்தமான மேனகா என்ற நாவலின் முதல் பக்கத்திலேயே ஓர் அடிக் குறிப்பு காணப்படுகிறது:
‘சம்பசிவையங்கார், மேனகா என்பவை உண்மைப் பெயர்களை மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள்
என்று அந்தக் குறிப்பு விளக்குகிறது. இன்றைய நாவல்களில் வரும் 'பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. உண்மை மனிதர்களையும் சம்பவங்களையும் குறிப்பிடுபவை அல்ல' என்ற சட்ட அடிப்படையில் முன்கூட்டியே விளக்கம் சொல்லிக் கொள்வது நடப்பியல் சித்திரங்களில் இன்றியமையாத நிபந்தனையாக அமைவதற்கு மாறாக, வடுவூராரின் குறிப்பு, மேனகா கதை உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுந்த கற்பனை என்பதை உணர்த்துகிறது. மர்மங்களும் துப்பறிதலும் நுறைந்த இந்த நாவலில் வாசகர் மனதை ஈர்க்கும் சம்பவங்கள் பல கையாளப்பட்டிருக்கின்றன. உணர்ச்சி களின் உச்ச நிலையைத் தொடும் சம்பவங்களுக்கும் குறை வில்லை. பல அல்லல்களுக்குட்படும் மேனகா, ஒரு முஸ்லிம் பெண்ணின் உதவியினால் தன் கணவனை மீண்டும் அடை வது லட்சிய கதை மாந்தர்களின் செயலின் விளைவாக அமை கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களின் சமகாலச் சூழ் நிலை 1920களில் எழுதப்பட்ட இந்த நாவலில் தத்ரூபமாக விளங்குகிறது.
வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்களில் மேனகாவை அடுத்து மிகப் பிரசித்தி பெற்றது கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் என்பது. பல மர்மங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த இந்த நாவலில் தஞ்சைப் பிராந்தியத் தில் அன்று நிலவிய சூழ்நிலை வருணிக்கப்படுகிறது. கதை யின் ஆரம்பமே பின்வருமாறு அமைந்திருக்கிறது:
திருக்கண்ணமங்கை என்னும் சிற்றூர் தஞ்சை ஜில்லா விலுள்ள மிக்க இரமணியமான ஒரு ஸ்தலம். அவ்வூரில் எக்காலத்திலும் ஓயாது குயிலினங்கள் தமது தீங்குரலமுதைச் சொரிந்து கொஞ்சிக் குலாவிக் குதூகலமாக வதிந்த தென்னஞ்சோலைகளுக்கிடையில், அச்சிற்றூரின் வேளாள ரது தெரு அமைந்திருந்தது. அத்தெருவினிடையிலிருந்த ஒரு பெருத்த மச்சு வீட்டின் கூடத்தில் முப்பத்தைந்து வயதுள்ள ஒரு ஸ்திரீ தென்னங்கீற்று முடைந்து கொண்டிருந்தாள். அவ ளது கைகள் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண் டிருந்தனவோ அவ்வளவு சுறுசுறுப்பாகவே அவளது வாயி
லிருந்து சொற்களும் வெளிப்பட்டு பக்கத்து அறையில் வாழைப் பூவை அரிவாள்மணையில் வைத்து நறுக்கிக் கொண்டிருந்த ஓர் அழகிய பெண்மணியின் செவிகளில் தாக்கிக் கொண்டிருந்தன.'
இவ்வாறு அழகாக சில காட்சிகளை வருணிக்கும் துரைசாமி ஐயங்கார் எழுத்திலே வாசகரைக் கவரும் உத்தி எங்கும் சிறந்து நிற்கிறது. கல்கிக்கு முன் அவ்வளவு தெளி வுடனும், அழகுடனும் வசனம் எழுதியவர்கள் வடுவூராரைத் தவிர வேறு யாருமில்லை என்று சொல்லி விடலாம்..... தமிழ் வாசகர்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து அறிந்து எழுதியவர்களில் காலத்தால் முதன்மையானவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார்...' என்பது க.நா. சுப்பிரமணியத்தின் மதிப்பீடு (படித்திருக்கிறீர்களா?-2).
வடுவூர் துரைசாமி ஐயங்காரின் செல்வாக்கைப் பயன் படுத்தி, குடும்பச் சூழ்நிலையை வைத்து, ஜனரஞ்சகமான நாவல்களை எழுதியவர் வை.மு. கோதைநாயகி அம்மாள்.
நன்றி : தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
சிட்டி, சிவபாதசுந்தரம்.
-------------------
தமிழ்த் திரையில்... முதல் நாவல்
புராணக் கதைகளும், இதிகாசக் கதைகளும், ராஜா ராணிக் கதைகளும் படமாக எடுக்கப்பட்ட தமிழ்த் திரையின் தொடக்க காலத்தில்.... முதன் முதலாக நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மேனகா.
அந்நாளின் புகழ் பூத்த எழுத்தாளர் வடுவூர் துரை சாமி ஐயங்கார் எழுதிய நாவல் இது.
திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு மேனகா நாவல், நாடகமாகவும் வடிவமைக்கப்பட்டு பல தடவை மேடையேறி புகழ் பெற்றது. அப்போது, நடிகர் எம். கே. ராதாவின் தந்தையார் எம். கந்தசாமி முதலி யார், மேனகா நாடகத்திற்கு வசனம் எழுதினார் (டி.கே. சண்முகம் சகோதரர்கள்தான் இந்நாடகத்தைத் தயா ரித்து வழங்கியவர்கள்).
1935-இல் மேனகா நாவலைப் படமாக்கிய பொழுது அதில் டி.கே. பகவதி, டி. கே. சண்முகம், என்.எஸ். கிருஷ்ண ன், டி.கே. சங்கரன், எஸ்.வி. சகஸ்ரநாமம், கே. ஆர். ராமசாமி, டனை. சிவதாணு ஆகியோர் நடித்தனர். இவர்கள் அனைவருக்கும் இதுவே முதல் படம் என்பதும் குறிப்பிடத் தக்க செய்தி. எம். எஸ். விஜயா, கே.டி. ருக்மணி ஆகியோரும் நடித்த இப் படத்தை இராஜா சாண்டோ இயக்கினார். பாரதி யாரின் பாடல் முதன் முதலாக ஒலித்த படம் என்ற வர லாற்றுப் பெருமையும் மேனகா படத்தையே சேருகிறது.
நன்றி - பதிப்புத் தொழில் உலகம், ஜூலை 2004
-----------------
மேனகா :
அதிகாரம் 1 - சாம்பசிவ ஐயங்கார்
"புத்தியில்லாதவனுக்குச் சுகமில்லை; என்ன செய்கிறது குட்டிச் சுவரைப்போல வயதான ஒரு கிழம் சொல்லுகிறதே, அதைக் கேட்கவேண்டுமே என்கிற மதிப்பு கொஞ்சமாவது இருந்தால் இந்த கஷ்டமெல்லாம் ஏன் உண்டாகிறது?" என்று எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தகுந்த கடுகடுத்த முகத்தோடு கனகம்மாள் தனக்குத்தானே மொழிந்து கொண்டு சமையலறையிலிருந்து கூடத்து அறைக்குச் சென்றாள்.
கூடத்தில் போடப்பட்டிருந்த சாய்மான நாற்காலியில் சாய்ந்து தமக்கெதிரில் இருந்த சிறிய மேஜையின் மீது கால்களை நீட்டி விட்டிருந்த டிப்டி கலெக்டர் சாம்பசிவ ஐயங்கார் தமது இடக்கரத்தால் நெற்றியைப் புதைத்துக் கண்களை மூடியவண்ணம் அசைவற்றிருந்தார். அவருடைய அன்னை கனகம்மாள் அப்போதைக் கப்போது கொடுத்த கூர்மையான சொல்லம்புகள் அவருடைய செவிகளுக்குள் நுழைந்து துளைத்தனவாயினும் அவர் உணர்வு பெறாமற் சும்மா விருப்பதே சுக மென்றிருந்தார்.
---------
குறிப்பு:- சாம்பசிவ ஐயங்கார். மேனகா என்பவை உண்மைப் பெயர்களை மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள்.
நார்மடிப் புடவையும், நரைத்த சிகையும், துளசி மணி மாலையும், இளமை வடிவமும், பூனைக் கண்ணும், பொக்கைப் பல்லும், வெள்ளிச் செம்பும், தொள்ளைக்காதும் பளபளவென மின்னத் திரும்பி வந்த கனகம்மாள், "ஒரு தரமா! இரண்டு தரமா! கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் இலட்சந்தரம் படித்துப் படித்துச் சொன்னேன். பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பொருத்த மிருக்கிறதா இல்லையா வென்று பார்த்து கலியாணத்தைச் செய்யச்சொன்னேன்; அது காதில் நுழையாமல் போய்விட்டது" என்று கூறிக்கொண்டே திரும்ப வும் சமையலறைக்குள் சென்றாள்.
வீட்டில் மனைவியிடம் கோபத்தையும் ஆத்திரத்தையும் காட்டி, குண்டுச்சட்டியிற் குதிரை யோட்டி, வெளியில் யாவரிடத்திலும் இனிமையே வடிவாய் யாவருக்கும் நல்லவராய் ஒழுகி வரும் எத்தனையோ மனிதரை உலகம் கண்டிருக்கிறது. ஆனால், தஞ்சையின் டிப்டி கலெக்டரான நமது சாம்பசிவ ஐயங்காரோ ஊருக்கெல்லாம் பெருத்த புலி, வீட்டிற்கு மாத்திரம் எலி; பிறரைக் கெடுக்க வேண்டுமென்னும் பொல்லா மனதுடையவ ரன்றாயினும், அவர் தமது முன் கோபத்தாலும், அவசரபுத்தியாலும் தமக்குக் கீழிருந்த தாசில்தார்கள், ரிவின்யூ இன்ஸ்பெக்டர்கள், குமாஸ்தாக்கள், கிராம அதிகாரிகள், சேவகர்கள் முதலியோர் யாவரையும் திட்டி விடுவார். சேவகர் முதலிய சிப்பந்திகளை அடிப்பதும் வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள் அவர் சுற்றுப் பிரயாணம் சென்று வல்லமென்னும் ஊரில் ஒரு சாவடியில் தங்கினார். காலையில் வெளியிற் சென்று தமது அலுவல்களை முடித்து விட்டு பகற் பன்னிரண்டு மணிக்கு சாவடிக்கு வந்து போஜனம் முடித்தார். சாதாரண ஜனங்கள் தமக்கு ஒழிந்த காலத்திலும், தாம் இன்புற்றிருக்கும் காலத்திலும் தமது குழந்தைகளை யெடுத்துக் கட்டியணைத்து முத்தமிட்டு சீராட்டிப் பாராட்டி, அவற்றின் மழலை மொழிகளைக் கேட்டு அவற்றுடன் கொஞ்சி குலாவுதல் வழக்கமன்றோ ; அவ்வாறு புது நாகரீகத்திற் பழகிய அதிகாரிகள் ஒழிந்த வேளையில், தமது பைசைக் (Bicycle) கிலுக்கு முகந்துடைத்து எண்ணெய் தடவி சீவிச் சிங்காரித்து பொட்டிட்டு மையிட்டுக் காற்றாகிய பால் புகட்டி அதனால் ஆத்ம திருப்தியடைதல் பெரும்பான்மையும் காணப்படுகிறது. நமது சாம்பசிவ ஐயங்காரும் அவர்களில் ஒருவராதலால், போஜனத்தின் பிறகு தமது இயற்கையின் படி இரட்டைச் சக்கர வண்டியின் இடத்திற் சென்றவர், அவ்வண்டியாகிய குழந்தைக்கு அன்று ஒரு நோய் கண்டிருந்ததை அறிந்தார். அவர் வெளியிற் சென்றிருந்த தருணத்தில் அவருடைய சமையற்காரன் மாதவன் அதில் முரட்டாட்டமாக ஏறி நெடுந்தூரம் சென்று அதை ஒடித்து வைத்திருந்தான். அதைக்கண்ட சாம்பசிவம் தமது நெற்றிக்கண்ணைத் திறந்தார். வசை மாரியைச் சொரிந்தார்; பிரம்பைக் கையிலெடுத்தார்; எதிரில் நடுநடுங்கி நின்ற டபேதார் ரெங்கராஜுவின் மீது சீறிப் பாய்ந்தார். "நாயே! நீ இங்கே எதற்காக இருக்கிறாய்? உன்னுடைய டாலி டவாலிகளைக் கழற்றிக் கீழே வைத்துவிடு; என் முன்னால் நில்லாதே; ஓடிப்போ கழுதை; உனக்கு எதற்காகச் சம்பளம் கொடுத்துப் பிண்டமும் கொட்டி வீட்டில் உட்காரவைத்திருக்கிறது?" என்று தாறுமாறாய்த் திட்டினார். அவருக்கு முன்னர் வந்திருந்த டிப்டி கலெக்டர்களிடத்தில் அத்தகைய அவமதிப்பை பெற்றறியாத ரெங்கராஜு வின் முகம் சினத்தினால் சிவக்க, இரத்தம் தெறித்தது. அவன் தன்னை அடக்கிக்கொண்டு, “இல்லெ சாமி! சமையக்கார ஐயரு ஏறிக்கிட்டுப் போனாரு; எனக்குச் சங்கதி தெரியாதுங்க!" என்று பணிவாக மொழிந்தான். பெருஞ் சீற்றத்தினால் தமது மதியை இழந்த நமது ருத்ர மூர்த்தி, "அந்தப்பயல் இதைத் தொடும்போது யாருக்கு சிறைத்துக்கொண்டு இருந்தாய்? போக்கிரி நாயே! குற்றத்தைச் செய்து விட்டு எதிர்த்துப் பேசுகிறாயா?" என்று பிரம்பை ஓங்கி அவனை இரண்டு அடிகள் அடித்து விட்டார். மானியும் முரட்டு மனிதனுமாகிய ரெங்கராஜு உடனே தன்னை மறந்தான். அவரது கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கிக் கொண்டு வட்டியும் முதலுமாக அடியைத் திருப்பிக்கொடுத்து அவருடைய கோபம் தணியும்படி செய்து விட்டான். அதன் பிறகு ரெங்கராஜு பல நாட்கள் வரையில் தன் வேலை போய்விட்ட தென்றே நினைத்து வெற்றிலைப் பாக்குக் கடை வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தான். ஆனால் டிப்டி கலெக்டரோ சிறிதும் களங்கமற்ற இருதயம் உடையவராதலால், அந்த நிகழ்ச்சியை அன்றோடு மறந்து விட்டார். அவனைத் தமது வீட்டைவிட்டு மாற்றாமலே வழக்கப்படி அன்பையும், கோபத்தையும் மாறிமாறிக் காட்டி வந்தார். இத்தகைய குணமுடையவர் தமது -- வீட்டில் மாத்திரம் அடங்கி ஒடுங்கி அன்னையின் மனதிற்கு விரோதமின்றி நடந்து வந்தார்.
முற் கூறப்பெற்றவாறு கோபத்தோடு சமையலறைக்குள் சென்ற கனகம்மாள் திரும்பவும் வெளியில் வந்தவள், "ஜாதகத்தை நன்றாக பாரடா பாரடாவென்று தலையிலடித்துக் கொண்டேன்; ஏதோ காக்கை, குருவி கத்துகிறதென்று நினைத்தானே யொழியக் கொஞ்சமாயினும் அதைக் காதில் வாங்கினானா?" என்றாள்.
அதைக் கேட்ட சாம்பசிவ ஐயங்கார் பொறுமையாக, "ஆமாம்; வெள்ளைக்காரர்க-ளெல்லாரும் ஜாதகம் பார்த்துத்தான் கலியாணம் செய்கிறார்களோ? அவர்களில் ஸ்திரீ புருஷர் சண்டையில்லாமல் அன்போடு ஒற்றுமையாய் வாழவில்லையா? அதெல்லாம் பைத்தியந்தான். நொண்டி வழியால் முயல் போய்விட்டதாக்கும்" என்று மெதுவாக முணுமுணுத்தார்.
கனகம் :- வெள்ளைக்காரனைப் பார்த்துப் பார்த்துத்தானே அநியாயமாய் நம்முடைய தேசமே நாசமாய்ப் போய் விட்டது. ஆனால் அது அவனுடைய குற்றமன்று; உங்களுடையது. நாம் அவனுடைய வழக்கத்தைப் பின்பற்றினால், முற்றிலும் அதையே செய்தல் வேண்டும். இல்லையாகில், நம்முடைய பழக்கவழக்கத்தை விடக்கூடாது; வெள்ளைக்காரன் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில்லை; ஆகையால்; அதை நீங்களும் செய்ய முயலுகிறீர்கள்; ஆனால் அவர்கள் பக்குவமடைந்த பெண்ணையும், பிள்ளையையும் ஒருவரோடு ஒருவர் ஐந்தாறு மாதகாலம் பழகும்படி விடுத்து அவர்களுடைய மனமும், குணமும் பொருந்துகின்றனவா வென்று பார்க்கிறார்களே! அப்படி ஏன் நீங்கள் செய்கிறதில்லை? உங்களுடைய காரியமே எப்போதும் பாதிக்கிணற்றைத் தாண்டுவதுதானே. நாம் பாலிய விவாகம் செய்வது நலமென்று வைத்திருக்கிறோம்; பெண்ணும் பிள்ளையும் ஒற்றுமையாய் வாழ்வார்களா வென்பதை அப்போது அனுபவத்தில் அறிய முடியாதாகையால் ஜாதகத்தின் மூலமாக அறிய முயல்கிறோம். அவர்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை கிடையாது; பெண்களையும் பக்குவமடைந்த பிறகே மணம் செய்விக்கிறார்கள். ஆகையால், கைப்புண்ணிற்குக் கண்ணாடி எதற்கு? ஏட்டின் மூலமாய் அறிதலை விட அனுபவத்திலேயே விடுத்துப் பார்த்து விடுகிறார்கள். அதுவும் நல்ல ஏற்பாடுதானே; இல்லற வாழ்க்கை என்பது கணவன், மனைவி யென்னும் இரண்டு மாடுகளால் ஒற்றுமையாக இழுத்து நடத்தப்படும் வண்டி யல்லவா? நம்மிடமுள்ள மாடும் நாம் புதிதாய்க் கொள்ளப்போகும் மாடும் ஒருமணப்பட்டு உழைக்கின்றனவா என்பதை அறிய நாம் அவற்றை வண்டியிற் பூட்டிப் பார்ப்பதில்லையோ? மனமொத்து வாழ்வதற் குரிய காரியமல்லவா? நாம் நம்முடைய பெண்ணின் மீது ஆண் காற்று வீசுதல் கூடாதென நினைக்கிறோம். வெள்ளைக்காரர்கள் நீடித்த பெருத்த லாபத்தைக் கருதி அற்பக் கேட்டைப் பொருட்படுத்தவில்லை; ஒரு பெண் தனக்குக் கணவனாக வரிக்கப்படும் மனிதனோடு சொற்பகாலம் ஒருமித்துப் பழகுவதினால் என்ன கெடுதி சம்பவிக்கப் போகிறது? அவள் ஒருவனிடம் திருப்தியாக நடக்கத் தவறினும், அவனிடத்திற் கற்ற பாடத்தை இன்னொருவரிடத்தி லாயினும் ஒழுங்காக ஒப்புவிப்பா ளன்றோ ? அவர்கள் காரியவாதிகள். நீங்களோ இரண்டிலும் சேராமல் அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் சேர்த்துக்கொண்டு திரிசங்குவின் சுவர்க்கத்திலிருக்கிறீர்கள்.
*சாக்குலே கொஞ்சம், பேக்குலே கொஞ்சம் என்றவனுடைய அறியாமைக்கும் - உங்களுடைய அறியா மைக்கும் வித்தியாசமில்லை. நாங்கள் சொன்னால் உங்களுக் கெல்லாம் மூக்கின் மேல் கோபம் வந்துவிடும். நீங்கள் எல்லாமறிந்த மேதாவிகள்; நாங்கள் இங்கிலீஷ் பாஷை படித்தறியாத முட்டாள்கள். பழைய மூட நம்பிக்கைகளை விடாத பட்டவர்த்தனம்; கர்நாடகம். புது நாடகமாடும் உங்களுக்கெல்லாம் இவ்வித உபத்திரவங்கள் வருவதேன்? ஆனால் உங்களுக்கென்ன வருத்தம்? நீங்கள் செய்யும் விஷப்பரிட்சையினால் ஒன்றையுமறியாத பேதைப் பெண்கள் வதைப்பட்டு அழிகிறார்கள் - என்றாள்.
------------
* குறிப்பு - ஒருநாள் கன்னட பாஷை பேசும் பிராமணர்கள் சிலர் தங்களுக்கு மாத்திரம் ஒரு விருந்து செய்து கொண்டார்களாம். கன்னட பாஷை யறியாத ஒரு தமிழன் அவர்களைப் போல வேஷம் போட்டுக் கொண்டு போஜனத்திற்கு உட்கார்ந்தானாம்; வாழைக்காய் கறியும், பாவற்காய் கறியும் கொணர்ந்து பரிமாறியவன் தமிழனுக்குக் கொஞ்சம் பரிமாறி விட்டு “சாக்கா?""பேக்கா?" என்றான். அவை "போதுமா?""வேண்டுமா?' என்ற அர்த்தத்தைக் கொண்ட கன்னட மொழிகள். அவற்றை அறியான் தமிழன், அவையிரண்டும் இரண்டு கறிகளை முறையே குறித்தன வென்று நினைத்த தமிழன், "சாக்குல கொஞ்சம் பேக்குல கொஞ்சம் " என்றானாம். உடனே அவனை பிடித்து உதைத்து வெளிப்படுத்தினார்கள் என்று ஒரு வரலாறு உண்டு.
---------
சாம்பசிவ ஐயங்கார் சிறிது கோபங்கொண்டார். எனினும் அதைக் காட்டாமல், "அம்மா! என்ன பைத்தியம் இது! எல்லாம் அவரவர்களுடைய தலைவிதிப்படிதானே நடக்கும். நம்மாற் செய்யக்கூடிய தென்ன இருக்கிறது? ஆயிரம் முறை ஜாதகத்தைப் பார்த்தோ அல்லது அநுபோகத்தில் விடுத்தோ கலியாணம் செய்தாலும் வீட்டுக்கு வீடு வாசலுண்டு; கணவனுக்கும், மனைவிக்கும் சண்டையில்லாத வீடேது. ஒரு வீட்டில் சொற்ப சண்டை இருந்தால் இன்னொரு வீட்டிற் பெருத்த பூசலா யிருக்கிறது. ஏழைக் குடும்பங்களில் புருஷன் வழக்கத்திற்கு மாறாக சிறிது தாமதமாய் வீட்டிற்கு வந்தால், அவன் வேறு எந்த ஸ்திரீயோடு பேசி விட்டு வந்தானோ வென்று நினைத்து அவன் மனைவி எரிச்சலும் பொறாமையும் கொண்டு அவனுக்குச் சாப்பாடு போடாமல் கோபித்துக் கொண்டு குப்புறப் படுத்து விடுகிறாள். பெரிய மனிதர் வீட்டிலோ தான் இல்லாத காலத்தில் தன் மனைவி பரிசாரகனோடு திருட்டு நட்புக் கொண்டாளோ வென்று கணவன் ஐயுறுகிறான். இப்படி தக்க முகாந்தரம் இன்றி ஒருவருக்கொருவர் சண்டை யிடுதலும் ஒருவர் மீதொருவர் வெறுப்பைக் கொள்ளுதலும் மனித இயற்கை; என்றாலும் இவன் செய்த காரியத்தைப்போல இந்த உலகத்தில் எவனும் செய்யத்துணிய மாட்டான்; இந்த முட்டாள் என்னை எவ்வளவு அவமதித்து நினைத்த விதம் வைது அவமானப் படுத்தினான் தெரியுமா? இப்படிச் செய்தவன் பெண்ணுக்கு என்ன தீங்கைத்தான் செய்யமாட்டான்! அண்டை வீட்டுக்காரர்கள் என்னைக்கண்டவுடன் கண்ணீர் விட்டு அழாத குறையாக இவன் படுத்திவைத்த பாட்டையெல்லாம் சொன்னார்கள். அடடா! என்ன துரதிருஷ்டம்! நமக்கிருப்பது ஒரே பெண் குழந்தை யென்று அதன் மேல் நமது ஆசையை யெல்லாம் வைத்து, கிளியை வளர்ப்பதைப் போல எவ்வளவோ அருமையாக வளர்த்து இங்கிதம் அறியாத எருமைக்கடா வினிடத்திற் கொண்டு போய்த் தள்ளினோமே! நம்முடைய புத்தியில் ஆயிரம் தரம் செருப்பால் அடித்துக் கொண்டாலும் அது நம்முடைய மடமைக்கும் போதாது'' என்றார்.
கனகம் :- ஆமடா அப்பா! கலியாணத்திற்குப் பெண்ணிருப்பதாகப் பத்திரிகையில் விளம்பரம் செய்து புருஷனைத் தேடிப் பிடித்தாயல்லவா! அதற்குத் தக்க மரியாதையை நீ பெறவேண்டாமா? இந்தமாதிரி அதிசயத்தை எங்கள் அப்பன், பாட்டன் காலத்தில் கேட்டதேயில்லை. இது பெருத்த கூத்தாகத்தான் இருக்கிறது. இந்த உபாயத்தை நீங்கள் எவரிடத்திற் கற்றுக் கொண்டீர்களோ! உங்கள் குருவாகிய வெள்ளைக்காரர்கள் கூட இப்படிப் பத்திரிகையில் விளம்பரம் செய்வதில்லையாமே? வியாபாரத்திற்குப் பெண்ணிருக் கிறதென்று எழுத உங்களுக்கு வெட்கம், மானம் முதலியவை கூடவா இல்லாமற் போகவேண்டும்! சாமான்களை விலைக்குக் கொள்வதைப் போல வியாபாரம் செய்தால் இம்மாதிரியான துன்பந்தான் சம்பவிக்கும். இப்படிக் கலியாணம் செய்வதைவிட மாப்பிள்ளையை வி. பி. தபாலில் அனுப்பும்படி விளம்பரம் செய்வீர்களானால், அது இன்னம் சுலபமா யிருக்கும். தங்கமான பெண்ணை முன்பின் கண்டும் கேட்டு மறியாத ஒரு பைத்தியத்தினிடம் கொண்டுபோய்த் தள்ளி அவளை மீளாத வேதனைக்கு ஆளாக்கினீர்கள். இரண்டு கெட்ட முண்டைகளும் நாசமாய்ப் போக; என் வயிறெரிகிற மாதிரி அவர்களுடைய வயிறு எப்போது எரியுமோ? இராவணன் குடியைக் கெடுக்க ஒரு சூர்ப்பனகை வந்தாள்; இந்தப் பைத்தியத்தின் குடியைக் கெடுக்க இரண்டு சூர்ப்பனகைகள் வந்திருக்கிறார்கள். அவர்கள் இருக்கிற வரையில் அந்தக் குடும்பம் உருப்படப்போகிறதில்லை. நம்முடைய குழந்தையும் சுகப்படப் போகிறதில்லை என்றாள்.
சாம்பசிவஐயங்கார்:- இனிமேல் என் உயிர் போனாலும் பெண்ணை அங்கே அனுப்ப மாட்டேன். இரண்டு புலிகளின் நடுவில் ஒருமான் அகப்பட்டுக் கொண்டு விடுபட வழியறி யாமல் வருந்துவதைப் போல அந்தத் துஷ்டர்களிடம் இவளிருந்து ஒருநாள் வாழ முடியாது. இவள் இனி இங்கேயே இருந்து விடட்டும், பாலியத்திலேயே விதவையாய்ப் போனதாக நினைத்துக் கொள்வோம்; பெண்கள் சுகப்படும் பொருட்டு புருஷன் வீட்டுக்குப் போவது வழக்கம். துன்பங்கள் அனுபவிக்க யார் அனுப்புவார்கள்? கலியாணத்துக்கு மூவாயிரம் ரூபா கொடுத்தோம். சாந்தி முகூர்த்தத்திற்கு இரண்டாயிரம் ரூபா பெறுமானமுடைய சிறப்புகளைச் செய்தோம். நான் ஒன்றும் செய்யவில்லை என்று நாத்திமார் இருவரும் தூஷிப்பதும் இடித்திடித்துப் பேசுவதும் கணக்கு வழக்கில்லையாம். ஒரு பிடி அரிசியெடுத்து பிச்சைக்காரனுக்குக் போட்டுவிட்டாளாம்; அரைப்படி அரிசியைப் போட்டுவிட்டா ளென்று அவர்கள் அந்தப் பைத்தியத்துக்குச் சொல்லிக் கொடுத்தார்களாம். அந்த முழுமுட்டாள் இரும்புக் கரண்டிக் காம்பைப் பழுக்கக் காயவைத்துக் கையிற் சுட்டுவிட்டானாம். இதைக் கேட்டவுடன் என் மனம் பட்டபாட்டை என்னவென்று சொல்வேன் ! மானத்துக்கு அஞ்சிப் பேசாமல் வந்துவிட்டேன்.
கனகம் :- ஆகா! பொறுமையில் பூமாதேவி என்றே நம்முடைய குழந்தை மேனகாவை மதிக்க வேண்டும். இத்தனை அக்கிரமங்கள் நடந்திருந்தும், இவள் தன் புருஷன் மீதும், நாத்திமார்களின் மீதும் எவ்வித குறையும் சொல்ல வில்லையே! சூடுபட்ட தழும்பைக் கண்ட போது எனக்கு சந்தேகம் உதித்தது; என்ன வென்றேன். நெருப்புத்தணல் தவறுதலாகக் கையில் விழுந்து விட்டதாகச் சொன்னாளே மேனகா! ஆகா! இவளுடைய நற்குணமும், பெருமையுமே அவர்களை அவசியம் அடித்துவிடும். கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார்கள் பாதகர்கள். நகைகளை யெல்லாம் பறித்து அடகு வைத்து வாயிற் போட்டுக்கொண்டு குழந்தையை பிறந்த மேனியாக விட்டது போதாதென்று, இப்படி அடித்தும், சுட்டும், வைதும் உபத்திரவிப்பார்களோ! நம்முடைய பெண்ணுக்காகத்தானே நாம் இவ்வளவு பொருளை வாரிக்கொடுத்தோம். நம்முடைய பொன் மாத்திரம் விருப்பமாயிருக்கிறதோ? பிறர் தேடும் பொருளில் இப்படிப் பேராசை கொண்டலையும் நாய்களுக்கு வெட்கமென்ன? மானமென்ன? பௌரஷமென்ன? ஆணவமென்ன? அடடா! அவர்கள் வீடு குட்டிச் சுவராய்த்தான் போய்விடும் - என்றாள்.
சாம்ப - என்னைக் கண்டவுடன் அந்தப் பைத்தியம், "ஏனடா இங்கே வந்தாய்? அயோக்கியப் பயலே!" என்றும், ''உள்ளே நுழைந்தால் காலை ஒடித்து விடுவே"னென்றும் என்னுடைய சேவகர்களுக்கு எதிற் சொன்ன வார்த்தையை நான் மறப்பேனா! - என்றார்.
சமையலறையிலிருந்த கனகம்மாள் ஆத்திரப் பெருக்கில் தன் கையிலிருந்த பெருத்த கீரைத்தண்டைக்கையிற் பிடித்த வண்ணமே டிப்டி கலெக்டருக்கெதிரில் தோன்றின காட்சி, அந்தக் கதாயுதத்தால் அவரை அடிக்க வந்ததைப்போல் இருந்தது. அம்மாள் ஆத்திரத்தோடு கையை நீட்டி, ''உனக்கு தெரியா தப்பா! அந்த முண்டைகள் மருந்து போட்டு விட்டார்களடா! கலியாணத்திற்குப் பின் இவ்வளவு காலமாக அவன் இப்படியா இருந்தான்! வரவர அவர்களுடைய துர்போதனையும், மருந்தும் ஏறிவிட்டன வப்பா! அவன் இதைத்தானா செய்வான்? இன்னமும் ஆயிரம் செய்வான். அவன் மேற் குற்றமில்லை. எறும்பூறக் கல்லும் குழிந்து போகாதா! ஓயாமற் போதித்துப் போதித்து மனதில் விஷத்தை ஊட்டிக் கொண்டே வந்தால், கரையாத மனதும் கரைந்து போகாதா?" என்றாள்.
சாம்பசிவ ஐயங்கார், "அவன் கடைசியில் என்ன செய்தான் தெரியுமா? நான் பெண்ணை அழைத்துப் போக வேண்டு மென்று அவனிடத்திற் சொன்னேன். உடனே அவன் செருப்பை எடுத்துக்கொண்டு என்னை அடிக்க வந்தான். நல்ல வேளையாக நம்முடைய சேவக ரெங்கராஜு அவனைத் தடுத்து மறைத்துக் கொண்டான். இல்லாவிட்டால், மிகவும் அவமானம் நேரிட்டிருக்கும்" என்றார்.
கனகம்மாள் விசனத்தோடு , "சரிதான்; மாமனாருக்குத் தகுந்த மாப்பிள்ளைதான். உனக்குக் கீழிருப்பவரை அடிக்காதே, வையாதே யென்று நான் எத்தனை தடவைகளில் சொல்லித் தலையில் அடித்துக் கொண்டும் நீ கேளாமற் செய்கிறா யல்லவா, அது வீணாய்ப் போகுமா? நமக்குக் கண்ணுக்குக் கண்ணான குழந்தைமேல், உன் பாபமூட்டை வந்திறங்கி விட்டதாக்கும். உம்; எல்லாம் தலைவிதியப்பா! காசைக் கொடுத்துத் தேளைக் கொட்ட விட்டுக் கொண்டதைப் போலப் பணத்தையும் கொட்டி, அருமையாய் வளர்த்த தங்கத்தையும் தாரை வார்த்தோம். என்ன செய்கிறது? பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும். அந்த துஷ்ட முண்டைகளால் உபத்திரவம் உண்டாகு மென்பது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும். முன் பின் தெரியாத இடத்தி லெல்லாம் சம்பந்தம் செய்து கொண்டால் அது இப்படித்தான் முடியும். போனது போகட்டும்; நம்முடைய குழந்தையை அழைத்துக்கொண்டு வந்தாயே , அதுவே போதும், அவள் இங்கேயே இருக்கட்டும். நல்ல காலம் வராமற் போகாது. அவனுக்கு எப்போது நல்ல புத்தி வரப்போகிறதோ , பார்க்கலாம்" என்ற வண்ணம் தன் ஆத்திரத்தை அடக்க வல்லமை அற்றவளாய்க் கண்ணுங் கண்ணீருமாய்க் கனகம்மாள் கீரைத்தண்டோடு சமையலறைக் குள் சென்றாள். துயரமே வடிவமாய் உட்கார்ந்திருந்த சாம்பசிவ ஐயங்கார், மேன்மாடியில் எவரோ விரலை மெதுவாய்ச் சொடுக்கித் தமக்குச் சைகை காட்டியதையுணர்ந்து மேலே நிமிர்ந்து பார்த்தார். அழகே வடிவாய்த் தோன்றிய பொற்கொடி போன்ற ஒரு பெண்மணி அங்கிருந்த வண்ணம் தன் சிரத்தை மாத்திரம் ஒரு பலகணியின் வழியாக நீட்டினாள். அவளுடைய கண்கள் அவரை வருந்தி அழைத்தன.
"சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடந்
துற்றே யசையக் குழையூசலாடத் துவர் கொள் செவ்வாய்
நற்றே னொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே."
என்னத் தோன்றிய அம் முகத்தை நோக்கிய டிப்டி கலெக்டரின் துயரமும், முக வாட்டமும் பறந்து போயின; இன்ப மயமானார். பத்தரை மாற்றுப் பைம்பொன்னைப் பழித்த அப் பூங்கொடியின் மேனி நிறத்தை அவளால் உடுத்தப் பெற்ற மேகவருணப் பட்டாடையும் இடையை அலங்கரித்த தங்க ஒட்டியாணமும் ஆயிர மடங்கு வனப்பித்தன. வயிரக் கம்மல், வயிர மூக்குப் பொட்டு முதலிய உயர்தர இழைகள் அவளது வதனத்திற் சுடர்விட் டெரித்தன; கறுஞ் சாந்துத் திலகமே கண் கொள்ளாச் சிங்காரமாய்க் காண்போர் மனதிற் காமத் தீயை வளர்த்தது. அவளுக்கு முப்பது வயது நிரம்பியதாயினும், அவளது தோற்றம் அவளுக்கு வயது பதினேழேயென்று பொய்யுரைத்துப் பிரமாணம் செய்தது. அதிக உயரமும் குறுகலு மின்றி நடுத்தர உயரத்தையும், மிக்க பருமனும் மெலிவு மின்றி உருட்சி திரட்சியைக் கொண்ட உன்னத மேனியையும் பெற்றிருந்த அவளிடத்தில் பக்குவ காலத்து யௌவன மடமயிலார்க்கு உரிய விவரித்தற்கரிய வசீகரத் தன்மையும், காண்போர் கண்ணையும் மனத்தையும் ஒருங்கே கவரும் அன்றலர்ந்த அரவிந்தத்தின் தள தளப்பும், மென்மையும் மற்றெல்லா நலன்களும் கொள்ளையாய்ப் பொலிந்தன. யாதொரு மகவையும் பெறாத புதிய சோபனப் பெண்ணைப் போல ஒளிர்ந்து அஞ்சுகம் போலக் கொஞ்சும் அவ் வஞ்சிக்குத் தங்கம்மாள் என்று பெயர் சூட்டியது எத்தகைய பொருத்தம்! கொடிய குணத்தையும் கடிய மனதையுங் கொண்ட கரடி, புலி, சிங்கம் முதலிய விலங்குகளும் தம் பேடுகளைக் கண்டால் அடங்கி ஒடுங்கித் தமது செருக்கை யிழந்து அவைகளின் காலடியில் வீழ்ந்து அவைகளை நாவினால் நக்கிக் கொடுத்து நைந்திளகு மென்றால், யாவர்மீதும் கோபங்கொள்ளும் சாம்பசிவ ஐயங்கார் அழகுக் குவியலாய்க் காணப்பட்ட தம் மனையாட்டியைக் கண்டு வெண்ணெயைப்போல் இளகி இன்பமாய் நின்றது விந்தையாமோ? மேன்மாடியி லிருந்த காந்தம் டிப்டி கலெக்டரின் சிகையைப் பிடித்து உலுக்கி மேலே இழுத்தது. அடுத்த நொடியில் அவர் மேலே சென்று அந்த வடிவழகியின் பக்கத்திற் பல்லிளித்து நின்றார்.
*****
அதிகாரம் 2 - இராகு, கேது, சனீசுவரன்
சென்னை, திருவல்லிக்கேணித் தொளசிங்கப்பெருமாள் கோவில் தெருவிலுள்ள ஒரு சிறிய இல்லத்தின் கூடத்தில் ஊஞ்சல் பலகையின் மீது குதூகலமாக ஒரு யௌவன விதவை உட்கார்ந்து ஆடிக்கொண்டிருந்தாள். அவளுக்குச் சற்றேறக் குறைய பதினெட்டு வயதிருக்கலாம். அவளுடைய சிரத்தின் உரோமமும், ஆபரணங்களும் விலக்கப்படாமலிருந்தன. அவளுடைய கண்களும், கன்னங்களும் குழிந்திருந்தமை யாலும், மனத்தின் வனப்பும், மஞ்சளின் வனப்பும் இல்லாமை யாலும் அவள் போய்க்கொண்டவளைப் போல காணப் பட்டாள். தசைப் பற்றுத் துரும்பு போலிருந்த அவளுடைய மேனி, அவள் சூனியக்காரியோ வென்னும் ஐயத்தை உண்டாக்கியது. மண்வெட்டியின் இலையைப் போலிருந்த அவளுடைய பற்களைத் திறந்து அவள் அப்போதைக்கப்போது நகைத்தபோது, இளைக்காதிருந்த பற்களும், சுருங்கிப் போயிருந்த முகமும் முரணி விவகாரத் தோற்றத்தை யுண்டாக்கின. அவள் சிவப்புத் தோலும், வஞ்சக நெஞ்சமும், பொறாமைச் சொற்களும், அற்பபுத்தியும் பெற்றவள். விசனமும், மகிழ்வும், அழுகையும், நகைப்பும், கோபமும், அன்பும், பகைமையும், பட்சமும் அவளுக்கு நினைத்தா லுண்டாகும்; நினைத்தால் மறையும்.
அவளுக் கெதிர்ச்சுவரின் ஓரத்தில் உட்கார்ந்து இன்னொரு விதவை அப்பளம் செய்து கொண்டிருந்தாள். வஞ்சனையின்றி வளர்ந்த ஒதியங்கட்டையைப்போலக் காணப்பட்ட அவள், மொட்டையடித்து முக்காடிட்டிருந்தாள் ஆயினும் முப்பது வருஷங்களையே கண்டவளாயிருந்தாள். யானை இடுப்பும், பானை வயிறும், குறுகிய தலையும், பெருகிய காதும், கிளியின் மூக்கும், ஒளியில்லா பல்லும், உருண்ட கன்னமும், திரண்ட உதடும், குறும்பைத் தலையும், திரும்பாக் கழுத்தும் பெற்ற அந்த அம்மாள் தனது குட்டைக்கைகளும், மொட்டை தலையும் குலுங்கக் குலுங்க அதிவிரைவாக அப்பளம் செய்த காட்சி அற்புதமாயிருந்தது. அவளும் மகிழ்வே வடிவமாய்க் கூச்சலிட்டு நகைத்து ஊஞ்சலிலிருந்த தன் தங்கை கோமளத்தோடு உரையாடிக் கொண்டிருந்தாள்.
கோமளம் :- ஏனடி அக்காள்! வரவர உன் கை தேறி விட்டதே! இப்போது செய்துவைத்த அப்பளம் நம்முடைய வராகசாமியினுடைய சாந்தி முகூர்த்தத்தில் டிப்டி கலெக்டர் அகத்தில் (வீட்டில்) பொறித்த அப்பளத்தைப் போலிருக்கிறதே! - என்று கூறி நகைத்துப் பரிகாசம் செய்தாள். அதைக் கேட்ட பெருந்தேவியம்மாள், "நன்றாயிருக்கிறது! அந்த பிணங்களுக்கு மானம் வெட்கம் ஒன்றுமில்லை; பணம் ஒன்றுதான் பிரதானம்; அந்தச் சபிண்டிக்கு டிப்டி கலெக்டர் உத்யோகம் என்ன வேண்டியிருக்கிறது! ஆண், பெண் அடங்கலும் நித்திய தரித்திரம். அவர்களுடைய முகத்தில் விழித்தாலும்,
அவர்களுடைய தரித்திரம் ஒட்டிக்கொள்ளும்" என்றாள்.
கோமளம் :- ஏனடி அக்காள்! அப்படிச் சொல்லுகிறாய்? அவனுடைய அகமுடையாள் தங்கம்மாள். தாயார் கனகம்மாள் (கனகம் என்றால் தங்கம்) இரண்டு தங்க மலைக ளிருக்க, டிப்டி கலெக்டரை தரித்திர மென்கிறாயே! - என்றாள்.
பெருந்தேவி:- (நகைத்து) ஆமாம். குடிக்கக் கூழில்லாதவள் சம்பூரண லட்சுமி யம்மாளென்று பெயர் வைத்திருப்பதைப் போலிருக்கிறது. நம்முடைய வராகசாமிக்கு சோபன முகூர்த்தத்தின் போது டிப்டி கலெக்டர் இரண்டாயிரம் ரூபா கொடுத்தானே; அதற்குப் பதிலாக தங்கத்தையாவது; கனகத்தையாவது சீராக அழைத்து வந்திருக்கலாமே. டிப்டி கலெக்டரும் இரண்டாயிரம் ரூபா லாபமாவதை நினைத்து இருவரில் ஒருத்தியை சந்தோஷமாக அனுப்பி யிருப்பானே.
கோமளம் :- நம்முடைய வராகசாமியா ஏமாறுகிறவன். அவன் தங்கம்மாளைத்தான் கேட்டிருப்பான் - என்று கைகொட்டி நகைத்து ஊஞ்சலை விசையாக ஆட்டினாள்.
பெருந்தேவி சிறிது வெறுப்போடு, “ஆமாம்; சின்ன பீடை வந்து குடும்பம் நடத்தித்தான் குப்பை கொட்டி விட்டாளே. பெரிய பீடை வந்துவிட்டால் அக்காள் வாசந்தான். வீட்டுக்கு மூதேவி பெத்தம்மாள் வேறு தேவையில்லை" என்றாள்.
கோமளம்:- இந்தப் பெண்ணை வாலையும், தலையையும் கிள்ளிவிட்டு எப்படித்தான் வளர்த்தார்களோ! சுத்த மந்தியா யிருக்குமோ! பெண்ணாய்ப் பிறந்தவள் பாம்பைப் போலப் பரபரப்பாய்க் காரியங்களைச் செய்து கொண்டு எள்ளென் பதற்குள் எண்ணெயாய் நின்றாலல்லவா சந்தோஷமா யிருக்கும்! சோம்பேறிப் பிணம்; நன்றாக ஒன்றரைப்படி யரிசிப் பிண்டத்தை ஒரே வாயி லடித்துக்கொண்டு, ஒரு கவளி வெற்றிலையைப் போட்டுக்கொண்டு , மெத்தையை விட்டுக் கீழே இறங்காமற் சாய்ந்து ஹார்மோனியம் வாசித்துக் கொண்டு ஓயாமல் அவனோடு தனியாக விளையாடிக் கொண்டிருந்தால் அது போதாதோ? பெரிய மனிதர்களின் வீட்டுப் பெண்களுக்கு இவ்வளவு தான் தெரியும்; அந்த துப்பட்டிக் கலையக்கட்டரும் அதைத்தான் கற்றுக் கொடுத்திருப்பான்.
பெருந்தேவி :- அந்த மொட்டச்சி வளர்த்த முண்டை என்னடி செய்வாள்! தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டிற் பார்க்க வேண்டுவதில்லை. வீட்டிலிருக்கிற தாய் பாட்டி முதலியோரின் நடத்தை எப்படி இருக்கிறது? தங்கத்தின் யோக்கியதையை நான் பார்க்கவில்லையோ? சாந்தி முகூர்த்தத்தின் போது அவ்வளவு கூட்டத்திலே, அகமுடையான் வந்து காலடியில் நிற்கும் போது, காலை நீட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்த தடிச் சிறுக்கிதானே அவள். அந்த குட்டையில் ஊறிய மட்டை எப்படி இருக்கும்!- என்றாள்.
அப்போது வாசற் கதவை யாரோ இடித்து, “பெருந்தேவி பெருந்தேவி!" என்று அழைத்த ஓசை உண்டாயிற்று. சந்தோஷத்தால் முக மலர்ச்சி பெற்ற பெருந்தேவி, "அடி! சாமா வந்திருக்கிறான்; கதவைத் திற!" என்றாள். உடனே கோமளம் எழுந்து குதித்துக் கொண்டோடி வாயிற் கதவைத் திறந்து விட, அடுத்த வீட்டுச்சாமா ஐயர் ஆடியசைந்து ஆடம்பரமாக உள்ளே நுழைந்தார். முதுகிலும், கழுத்திலும், கைகளிலும், மார்பிலும் வாசனை சந்தனத்தை ஏராளமாய்ப் பூசிக் கொண்டு, வாயில் தாம்பூலம், புகையிலை முதலியவற்றின் அழகு வழியப் புன் முறுவல் செய்தவராய்க் கூடத்திற்கு வந்தார். வாயிற் கதவைத் தாளிடாமற் சாத்திவிட்டுக் கோமளமும் அவரைத் தொடர்ந்து உள்ளே வந்தாள். அவர் இருபத்தாறு அன்றி இருபத்தேழு வயதடைந்தவர். அவர் நிலவளமுள்ள இடத்தில் உண்டான உருளைக் கிழங்கைப் போல உருண்டு திரண்ட சிவந்த மேனியைக் கொண்டிருந்தார். அவருடைய சுருட்டைத் தலை மயிரின் ஷோக்கு முடிச்சு ஒரு தேங்காயளவிருந்தது. அவர் மிக்க வசீகரமான தோற்றத்தையும் எப்போதும் நகைப்பை யன்றி வேறொன்றையும் அறியாத வதனத்தையும் கொண்டிருந்தார். அவருடைய கழுத்தில் தங்கக்கொடியும், தங்க முகப்பு வைத்த ஒற்றை உருத்திராட்சமும், காதில் வெள்ளைக் கடுக்கனும் இருந்தன. இடையில் துல்லியமான மல் துணியும், கழுத்திற் புதுச் சேரிப் பட்டு உருமாலையும் அணிந்திருந்தார். அவர் பெருந்தேவியம்மாளைப் பார்த்து புன்னகை புரிந்த வண்ணம் தோன்றி ஊஞ்சற் பலகையில் அமர்ந்தார்.
பின்னால் வந்த கோமளம், "அடி அக்காள் ! இதோ சாமாவைப் பாரடி, ஊரிலே கலியாணம், மார்பிலே சந்தனம் " என்று கூறிய வண்ணம் சற்று தூரத்தில் தரையில் உட்கார்ந்தாள்.
தாம்பூலம் நிறைந்த வாயை நன்றாகத் திறந்து பேச மாட்டாமல் சாமாவையர் வாயை மூடியவாறே , "அழி! பெருந்தேவி! நல்ல வழன் வந்திழுக்கிழது ; ஒழே பெண்; ழெண்டு லெட்சம் ழுபாய்க்கிச் சொத்திழுக்கிழது, நல்ல சுயமாசாழிகள்; கலியாணம் செய்கிழாயா?" என்று வார்த்தைகளை வழவழ கொழகொழவென்று வெண்டைக் காய்ப் பச்சடியாக்கிப் பெருந்தேவிக்குப் பரிமாறினார். வாயைத் திறக்க மாட்டாமையால், "அடி"யென்பது “அழி"யாயிற்று. மற்றச் சொற்களிலுள்ள "ர"கரங்களெல்லாம் "ழ"கரங்களாயின. அது சரியான தமிழில், "அடி பெருந்தேவி! நல்ல வரன் வந்திருக்கிறது; ஒரே பெண்; இரண்டு லெட்சம் ரூபாய்க்குச் சொத்திருக்கிறது. நல்ல சுயம் ஆசாரிகள்; கலியாணம் செய்கிறாயா?" என்று ஆனது.
அதைக் கேட்ட கோமளம் குதித்தெழுந்து, "ஏனடா சாமா! பெண் சிவப்போ , கருப்போ ? என்ன வயசு? அகத்துக் காரிய மெல்லாம் செய்யுமா? பெண்ணுக்குத் தாயார் சண்டைக் காரியா?" என்றாள்.
சாமா:- பெண் மாநிறந்தான். வயது பன்னிரெண்டாகிறது. மூக்கும் முழியும் பலே சொகுசா யிருக்கிறது. வீட்டிற்கு வந்து ஆறு மாசத்திற் பிள்ளையைப் பெற்று விடும். அவர்கள் தங்கமான மனிதர்கள்.
கோமளம் :- அடே சாமா! நீ எப்போதும் உன் குறும்பை விடுறதில்லையே! நாளைக்கு உன் தம்பிக்கு பொண்டாட்டி வரும்போது, கையில் குழந்தையோடேயே வரப்போகிறாள் போலிருக்கிறது.
பெருந்தேவி:- (சிறிது) அடே சாமா! இது இருக்கட்டும் அவர்கள் எந்த ஊரடா?
சாமா:- அவர்கள் கும்பகோணத்துக் கடுத்த கோடாலிக் கருப்பூர்; பி.எல். பரிட்சை தேறிய பிள்ளைக்குத் தான் பெண்ணைக் கொடுப்பார்களாம். கையில் ரொக்கமாகப் பதினாயிரம் ரூபா கொடுக்கப் போகிறார்கள். அதற்கு மேல் சீர் சிறப்புகள் எப்படி இருக்குமோ நீயே பார்த்துக்கொள். நம்முடைய வராகசாமிக்கு இந்தப் பெண் அகப்பட்டு விட்டால், நம்முடைய கலி நீங்கிப் போகும், குட்டுப் பட்டாலும் மோதிரக் கையாற் குட்டுப்பட வேண்டும். இது வல்லவா சம்பந்தம்! பெண்ணின் தகப்பனார் அந்த ஊருக்கே அதிபதி ; கோடீசுவரர்; ஒரே பெண் - என்றார்.
பெண்டிர் இருவரும் வியப்படைந்து வாயைப் பிளந்தனர்.
கோமளம் :- (பெருமகிழ்ச்சி காட்டி) பெண்ணின் பெயரென்னடா- என்றாள்.
சாமா:- பங்கஜவல்லியாம்.
பெருந்தேவி :- (சந்தோசத்தோடு) நல்ல அழகான பெயர். மேனகா வாம் மேனகா! பீனிகாதான். தொடைப்பக்கட்டை பீடை நம்மைவிட்டு ஒழிந்து போனது நல்லதுதான். இதையே முடித்து விடுவோம்; இந்த ஊருக்கு இப்போது அவர்களில் யாராயினும் வந்திருக்கிறார்களா?
சாமா:- பெண்ணுக்கு அம்மான் வந்திருக்கிறார். அவரை இங்கே இன்று ராத்திரி அழைத்து வருகிறேன். அதற்குள் உன் தம்பி வராகசாமியும் கச்சேரியிலிருந்து வரட்டும்; அவனுடைய அபிப்பிராயத்தைக் கேட்போம்.
பெருந்தேவி :- அவன் என்ன சொல்லப் போகிறான்? நாம் பார்த்து எவளைக் கலியாணம் செய்து வைத்தாலும் அது அவனுக்குத் திருப்திதான். இப்போது முதலில் பதினாயிரம் ரூபா வருகிறது. ஒரே பெண் ; பின்பு ஆஸ்தி முழுவதும் வந்து சேர்ந்து விடும். இந்த சம்பந்தம் கசக்குமோ! அவன் என்ன ஆட்சேபனை சொல்லப் போகிறான். நீ எதைப் பற்றியும் யோசனை செய்ய வேண்டாம்; இதையே முடித்துவிடப்பா. இந்த ஆனி மாசத்துக்குள் முகூர்த்தம் வைத்து விடு.
சாமா:- ஆகா! எவ்வளவு சுருக்கு! கலியாண மென்றால் உங்கள் வீட்டுக் கிள்ளுக்கீரைபோலிருக்கிறது. இதில் பல இடைஞ்சல்கள் இருக்கின்றன. பெண்ணுக்கு அம்மான் என்னைக் கேட்ட முதற் கேள்வி என்ன தெரியுமா? உங்களுக்குச் சொந்தத்தில் வீடிருக்கிறதா' வென்று கேட்டார்.
பெருந்தேவி:- (ஆவலோடு) இருக்கிறதென்று சொல்லுகிறதுதானே.
சாமா:- ஆம்; அப்படித்தான் சொன்னேன். சொல்லுவது மாத்திரம் போதுமா? வீடு வேண்டாமா? நாம் அவர்களுக்கு எல்லா விஷயத்திலும் சரி சமானமாக இல்லாமற் போனாலும் ஒரு வீடாவது நமக்கு அவசியம் இருக்கத்தான் வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம்; வராகசாமிக்கு முன்னொரு கலியாணம் ஆயிருக்கிற தென்பதும், அந்தப் பெண் உயிரோடு இருக்கிறாள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்தால், அவர்கள் பெண்ணைக் கொடுக்கமாட்டார்களே; அதற்கு என்ன யோசனை சொல்லுகிறாய்?
கோமளம் :- அது இவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது? கேள்வியுண்டானால் இல்லையென்று சொல்லி விட்டாற் போகிறது.
சாமா:- (கலகலவென்று சிரித்து) கோமளத்தின் புத்தி உலக்கைக் கொழுந்துதான். முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? அதெல்லாம் பலியாது; கலியாணம் முடிவானபின் இரகசியம் வெளியானாற் கவலையில்லை ; அதற்கு முன் வெளியானாற் குடி கெட்டுப் போகும். கலியாணம் நின்று போய்விடும்.
பெருந்தேவி :- ஊருக்கெல்லாம் வாந்தி பேதி வருகிறது; இந்தப் பீடைக்கு வரமாட்டே னென்கிறதே; இங்கே இருந்து போய் ஒரு வருஷமாய்விட்டது. நானாயிருந்தால் இந்தமாதிரி அவமானப்பட நேர்ந்தால், உடனே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு உயிரை விட்டிருப்பேன். புருஷன் தள்ளி விட்டானென்று ஊர் முழுவதும் ஏளனஞ் செய்வதைக் கேட்டு எந்த மானங்கெட்ட நாய்தான் உயிரை வைத்திருக்கும்.
சாமா - அவளைத் தொலைப்பதற்கு வழி முதலிலேயே சொன்னேன். நீங்கள் கவனிக்கவில்லை. தப்பித்துக் கொண்டு போய்விட்டாள். இப்போது என்ன செய்கிறது?
பெருந்தேவி :- ஆமடா சாமா! அது நல்ல யோசனைதான். அதைச் செய்திருந்தால் இப்போது காரியம் நன்றா யிருக்கும்.
கோமளம் :- என்ன யோசனை? எனக்குச் சொல்ல வில்லையே; விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடுகிறதோ?
சாமா:- சேச்சே! இல்லை இல்லை. அதெல்லாம் வம்பாய் முடியும். நம்முடைய தலைக்கு வந்து சேரும்.
பெருந்தேவி:- கோமளம்! அது உனக்குத் தெரியாது. சாமாவுக்கும் எனக்குந்தான் தெரியும்.
கோமளம் :- (முகத்தைச் சுளித்துக் கொண்டு) எனக்குச் சொல்லப் படாதோ? சாமா மாத்திரந்தான் உனக்கு உறவாக்கும்?
பெருந்தேவி :- அது வராகசாமிக்குத் தெரிந்தால் குடி கெட்டுப் போகும்; மண்டையை உடைத்து விடுவான். நீ குழந்தை புத்தியினால் அவனிடம் சொல்லி விடுவாயோ வென்று பயந்து சொல்லாமலிருந்தோம். வேறொன்று மில்லை; நம்முடைய சாமாவின் முதலாளி நைனா முகம்மது மரக்காய னிருக்கிறானே; அவன் தன் தம்பியை இங்கே வேலை பார்க்க வைத்துவிட்டு சிங்கப்பூரிலுள்ள தன் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ளப் போகிறானாம். அவன் மாமிசம் சாப்பிடுவதில்லையாம். மரக்கறி போஜனமே செய்பவனாம். அவனுக்குப் பிராமணருடைய போஜனத்தில் மிகவும் ஆசையாம். ஆகையால், சமையலுக்காக அவனுக்கொரு பிராமண ஸ்திரீ வேண்டுமாம். நல்ல அழகான சிறு பெண்ணாயிருந்தால் ரூபா. 5,000 ரொக்கமாகத் தருகிறே னென்று சாமா விடத்தில் தெரிவித்தானாம்; நம்முடைய மேனகாவை ரகசியமாய்க் கொண்டு போய்த் தள்ளிவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு வந்துவிட்டால் அந்தச் சனியனும் நம்மைவிட்டுத் தொலைந்து போகும்; அதனால் பெருத்த சொத்தும் கிடைத்துவிடும்; இதைத்தான் சாமா என்னிடம் சொன்னான். ஆனால் எனக்கு மனமில்லை; இப்படி வேறொருவனிடம் கொண்டு போய்த் தள்ளுவதைவிட விஷத்தைக் கொடுத்துக் கொன்றுவிடுவது நல்லதென்று நான் சொல்லி விட்டேன்.
கோமளம் :- அவள் துலுக்கனுக்கு நன்றாய்ப் பொங்கிப் போடுவாளே! ஒருநாளும் அவள் அதற்கு இணங்கமாட்டாள்.
சாமா:- நிஜந்தான். அவள் எங்கேயாவது கிணற்றிலோ கடலிலோ விழுந்து உயிரையாவது விட்டு விடுவாளேயன்றி அவனுக்கு ஒருநாளும் சமைத்துப் போடமாட்டாள். அந்தக் கவலை நமக்கெதற்கு? மரக்காயனிடம் நாம் பணத்தைக் கறந்து கொண்டு வந்து விடுவோம். அவள் அவனிடத்தில் உயிரை விட்டு விடட்டுமே! நாம் அவளைக் கொன்றோமென்பது இல்லாமல் போகுமல்லவா?
பெருந்தேவி :- ஆமடா சாமா! நீ சொல்வது நல்ல யோசனைதான். அவளை நாம் கொல்லுவதேன்? பாவம்! துலுக்கனிடத்தில் அகப்பட்டுக் கொண்டால் அவள் தானே உயிரை மாய்த்துக்கொள்ளுகிறாள்; அப்படியே முடித்து விடப்பா!
கோமளம் :- அவன் ஒரு வருஷத்திற்கு முன் சொல்லி யிருக்கிறான் போலிருக்கிறது. இப்போது வேறு யாரையாவது ஏற்பாடு செய்து விட்டானோ என்னவோ?
சாமா:- இல்லை இல்லை, நேற்றுகூட அவன் சொன்னான்.
பெருந்தேவி:- டிப்டி கலெக்டர்கூடப் பெண்ணை அழைத்துக் கொள்ளும்படி, தஞ்சாவூருக்கு போன ரெங்காசாரியார் மூலமாயும், சடகோபாசாரியார் மூலமாயும் சொல்லி யனுப்பினானே. நாம் இராஜி யாவதைப்போல பாசாங்கு செய்து பெண்ணை அழைத்து வந்து ஏழெட்டு நாட்கள் வைத்திருந்து பணத்தை வாங்கிக் கொண்டு தந்திரமாக அவளைத் தொலைத்துவிட்டு ஒன்றையும் அறியாதவரைப் போலிருந்து விடுவோமே. இது இரண்டாங் கலியாணத்துக்கு நிரம்பவும் அநுகூலமாயும் போகுமல்லவா?
கோமளம் :- மரக்காயன் சிங்கப்பூருக்குப் போகுமுன் அவள் அவனிடம் இருப்பதை யாராவது கண்டுவிட்டால் என்ன செய்கிறது?
சாமா:- அவனுடைய வீடு பெருத்த அரண்மனையைப் போலிருக்கிறது. அதற்குள் போய்விட்டால், பிறகு வெளியில் வழியே தெரியாது. கோஷாக்கள் இருப்பதால் உட்புறத்தில் எவரும் போகக்கூடாது; அந்த மாளிகைக்குள் எத்தனையோ மறைவான இடங்களும், ரகசியமான வழிகளும் இருக்கின்றன. அதற்குள் யார் இருக்கிறார்கள் என்பதை அவன் ஒருவன் அறிவானேயன்றி, மற்றவருக்கு ஒன்றுமே தெரியாது. அதைப்பற்றிக் கவலையில்லை.
பெருந்தேவி :- வராகசாமிக்கு அவள் மேலிருக்கும் வெறுப்பை மாற்றி, அவளைத் திரும்ப அழைத்துக் கொள்வதற்கு அவன் இணங்கும்படிச் செய்யவேண்டும். அதுவரையிற் கறுப்பூர் சங்கதியை நாம் சொல்லக்கூடாது. பெண்ணின் அம்மானிடம் நாங்கள் இன்னம் பதினைந்து நாட்களில் கறுப்பூருக்கே வருவதாய்ச் சொல்லி அனுப்பிவை- என்றாள்.
அப்போது எவனோ வாசற்கதவை இடித்து, "போஸ்டு போஸ்டு" என்று உரக்கக் கூவினான். கோமளம் குதித்துக் கொண்டோடி ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தாள். அது வராகசாமி ஐயங்காருக்கு எழுதப்பட்டிருந்தது. அதன் உறையை மெதுவாக திறந்து கொண்டே வந்த கோமளம், ''அடி மேனகா தன் அகமுடையானுக்கு எழுதியிருக்காளடி! ஒரு வருஷமா யில்லாமல் இப்போது புருஷனுக்கு என்ன எழுதியிருப்பாள்?" என்றாள். உடனே பெருந்தேவி தன் வேலையை நிறுத்திவிட்டு, "அடி! சீக்கிரம் வாசி, வராகசாமி வந்து விடுவான்'' என்று துரிதப்படுத்த, கோமளம் உடனே கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
-----------------------
மேனகா :
அதிகாரம் 3 - பழைய குருடி! கதவைத் திற(வ)டி!
"குழந்தை ஒரு வருஷமாக அநாதையைப் போலக் கிடப்பது, கண்ணில் பட்டால் தானே. தன் கச்சேரிப் பெருமையும், தான் தீர்மானம் எழுதுகிற பெருமையும், எஜமானியம்மாளோடு சர்க்கியூட் (சுற்றுப் பிரயாணம்) போகிற பெருமையும், தான் அலங்காரம் செய்து கொள்ளும் பெருமையும், தன் பைசைகிளின் பெருமையுமே பெருமை; குழந்தை செத்தாலென்ன! வாழ்ந்தாலென்ன! இது பூலோகமோ கைலாசமோ என்றிருக்கிறது. இவ்விதமான கடின மனசுக் காரருக்கெல்லாம் பெண் ஏன் வந்து பிறக்கிறது? அவள் வயசுக் காலத்திலே நல்லதைப் பொல்லாததை அனுபவித்து புருஷனோடு சுகமா யிருக்கவேண்டு மென்னும் நினைவே இராதோ? நெஞ்சிற் கொஞ்சமும் இரக்கமற்ற பாவிகளப்பா! முகத்தில் விழித்தாலும் பாவம் வந்து சேரும் " என்று டிப்டி கலெக்டருடைய செவியிற்படும் வண்ணம் கனகம்மாள் தனக்குத் தானே மொழிந்து கொண்டாள்.
ஒரு வருஷத்திற்கு முன் மேனகா சென்னையிலிருந்து வந்த போது, அவள் புக்ககத்தில் பட்ட பாடுகளையெல்லாம் சொல்லக் கேட்டதனால் கனகம்மாள் பெரிதும் ஆத்திரமும், அச்சமும், வெறுப்பும் அடைந்தவளாய் அவளை இனிக்கணவன் வீட்டிற்கு அனுப்பக் கூடாதென்னும் உறுதியைக் கொண்டாள். அவளைக் கீழே விடாமல் அவளுக்குத் தேவையானவற்றைத் தானே செய்து கண்ணை இமைகள் காப்பதைப் போல அவளை மேன் மாடியிலேயே வைத்துப் பாதுகாக்கத் தொடங்கினாள்; அவள் இன்ன விடத்திலிருக்க வேண்டும், இன்ன படுக்கையில் சயனிக்க வேண்டும், இன்ன பாத்திரத்தில் பருக வேண்டும், இன்ன புஸ்தகங்களைப் படிக்க வேண்டும், இன்ன காரியஞ் செய்ய வேண்டும் என்ற ஏற்பாடுகளைச் செய்து விட்டாள். ஆனால் அவளைக் கண்ணால் காணும்போதெல்லாம் கனகம்மாளுக்கு விசனம் வந்து விடும்; கண்ணீர் விட்டழுதவளாய், " என்னடியம்மா செய்கிறது! பாவிகளாகிய எங்கள் வயிற்றில் நீ வந்து பிறந்தாய். நாங்கள் நல்ல பூஜை செய்ய வில்லை. உன்னோடு பிறந்தவர்க ளெல்லாம் குண்டு குண்டாய்க் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு புருஷன் வீட்டில் வாழ்ந்து எவ்வளவோ சீராக இருந்து அதிகாரங்கள் செய்து வரவில்லை? எங்கெங்கோ கிடந்தவர்களெல்லாம் இப்போது எப்படியோ தலை கால் தெரியாமல் பெருமை யடித்துக் கொள்கிறார்கள். உன் தலை யெழுத்து இப்படியா யிருக்க வேண்டும்! உன்னை நல்ல நிலைமையில் பார்க்க இந்தக் கண்கள் கொடுத்து வைக்க வில்லை " என்பாள். குடிகாரன் மனதில் அவன் குடிக்கும் போது எந்த நினைவுண்டாகிறதோ அதே நினைவே அன்று முழுதும் இருப்பது போலக் கனகம்மாளுக்கு மேனகாவின் நினைவே ஓயா நினைவா இருந்தது. மேனகா அழுதால் கனகம்மாள் அவளைக் காட்டிலும் அதிகமாக அழுவாள். முன்னவள் நகைத்தால் பின்னவளும் அப்படியே செய்வாள். இவ்வாறு கனகம்மாள் மேனகா விஷயத்தில் அசலுக்குச் சரியான நகலாகயிருந்தாள்.
டிப்டி கலெக்டரோ தம்முடைய புத்திரி விதவையாய்ப் போய்விட்டதாக மதித்து அவளுக்குத் தேவையான புண்ணிய சரிதங்களை ஏராளமாக வாங்கி அவளுடைய அறையில் நிறைத்து அதனால் சுவர்க்கத்திற்குப் போகும் வழியை அவளுக்குக் காட்டிவிட்டதாயும் அவளை இவ்வுலக விஷயங்களிலிருந்து மாற்றி அந்த வழியில் திருப்பி விட்டதாயும் நினைத்துக் கொண்டார். மேனகாவின் உபயோகத்திற்காக இரண்டு நார்மடிப் புடவைகளை உடனே அனுப்பும்படி அவர் அம்மாபேட்டை கிராம முன்சீப்புக்குத் தாக்கீது அனுப்பிவிட்டார்; அவள் ஜெபம் செய்யத் துளசி மணி மாலை ஒன்று வாங்கினார்; அவள் மடியாகப் படுத்துக்கொள்ள வேண்டு மென்னும் கருத்துத்தோடு , இரண்டு மான் தோல்கள் வேண்டு மென்று மருங்காபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலை முழுங்கி மகாதேவ ஐயருக்குச் செய்தி அனுப்பி விட்டார்;
அவளுடைய பலகாரத்திற்குத் தேவையான புழுங்கலரிசி, பச்சைப் பயறு, வெல்லம் முதலியவைகளில் அவ்வாறு மூட்டைகள் அனுப்பும் படி தலைகாஞ்சபட்டி ரிவின்யூ இன்ஸ்பெக்டர் தாண்டவராய பிள்ளையிடம் ஆளை அனுப்பினார்; இவைகளால் எவ்விதக் குறைவு மின்றி நல்ல நிலையில் தமது புத்திரியைத் தாம் வைத்துத் தம்முடைய கடைமையை முற்றிலும் நிறைவேற்றிவிட்டதாகவும், தமது புத்திரி சந்துஷ்டியான பதவியிலிருக்கிறாள் என்றும் நினைத்துக்கொண்டார்; அப்போதே தம்முடைய சிரமீதிருந்த பளுவான மூட்டையைக் கீழே போட்டவரைப் போல இன்புற்றார்; இனி தமது உத்தியோகத்தை வீட்டின் கவலையின்றிப் பார்க்கலாமென்று நினைத்துத் தமது புத்திசாலித் தனத்தைப் பற்றித் தாமே பெருமை பாராட்டிக் கொண்டார்; இனி, தமது மனையாட்டியும் தாமும் எத்தகைய இடையூறு மின்றிக் கொஞ்சிக் குலாவி யிருக்கலா மென்றெண்ணி அளவளாவினார்; இனிப் பெண்ணின் நிமித்தம் சீமந்தம், பிள்ளைப்பேறு, மருமகப்பிள்ளையை வணங்குதல் முதலிய அநாவசியமான உபத்திரவங்களுக்கு ஆளாகாமல் தாம் தப்பித்து விட்டதாய் நினைத்து மகிழ்ந்தார். பொல்லாக் குணமுடைய மருமகப்பிள்ளையைப் பெற்று, விடுபடும் வழியறியாமல் கண் கலங்க வருந்தும் பெற்றோருக்கு நமது டிப்டி கலெக்டர் எத்தகைய குறுக்கு வழியைக் காண்பித்தார்! மருமகப்பிள்ளை ஏதாவது துன்பம் கொடுத்தால் உடனே அவரைக் கொன்று விடுதலே காரிய மென்று காட்டுகிறார். எப்படி கொல்லுகிறது? தமது புத்திரியை விதவையாக்கி வீட்டில் வைத்துக்கொள்ளுதலே அவளுடைய கணவனைக் கொன்றுதலைப் போலாகுமல்லவா? ஆனால் இந்தத் தந்திரம் இவருடைய மூளையைத் தவிர, வேறு எவருடைய மூளைக்கும் தோன்றியதே பெருத்த விந்தை.
இவ்வாறு சில மாதங்கள் கழிந்தன. டிப்டி கலெக்டரு டைய காரியங்க ளெல்லாம் பெண்ணின் கவலையின்றி நடைபெற்று வந்தன. எஜமானரும், எஜமானியம்மாளும் சுற்றுப்பிரயாணம் போவதும், அவருடைய பைசைக்கிளுக்கு ஆசார உபசாரங்கள் நடப்பதும், கோர்ட் குமாஸ்தா கோபாலையர் எஜமானனிடம் நடுநடுங்கிப் பல்லிளித்து நிற்பதும் , ஆர்டர்லி அண்ணாமலை பிராது மனுக் கூப்பிடு வதும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்பல நாடார் பொய்க் கேஸ் கொண்டு வருவதும், கண்டாகோட்டை கணக்கன் மகளைச் சுண்டாகோட்டை ஜெமீன்தார் கற்பழித்துக் கச்சேரிக்கு வருவதும், பஞ்சாங்கம் குப்புசாமி ஐயருடைய பசுமாட்டை நஞ்சாப்பட்டிக் காளிங்கராயன் பிடிப்பதும், வல்லம் கிராம முன்சீப்பு செல்லப்பையர் டிப்டி கலெக்டருக்கு வாழைத்தாறுகளை அனுப்புவதும், கெங்கா ரெட்டி என்னும் சேவகன் பங்காவை இழுத்துக் கொண்டே தூங்கி விழுவதும், பட்டாமணியம், சட்டைநாதபிள்ளை சர்க்கார் பணத்தை வட்டிக்குக் கொடுப்பதும், தாலுகா குமாஸ்தா தங்கவேலுப் பிள்ளை தொட்டி தலையாரிகளை ஆட்டி வைப்பதும், அவர் மனைவி உண்ணாமுலையம்மாள், " எண்ணிக்கொள்" என்று ஒன்பது மாதத்திற்கொரு பிள்ளையை ஒழுங்காய்ப் பெறுவதும், தாசில்தார் தாந்தோனிராயர் பருப்பு சாம்பாரில் நீந்தி தினம் தெப்ப உற்சவம் செய்வதும், கோடி வீட்டுக் குப்பம்மாள் தெருளுவதும், ஊளைமூக்குச்சுப்பனுக்கு உபநயனம் நடத்துவ தும், சப்பைக்கால் கந்தனுக்கு சாந்தி கலியாணம் நடத்துவதும், உளருவாய் ஜானகிக்கு ஊர்வலம் நடத்துவதும், எதிர்வீட்டு நாகம்மாள் எமலோகம் போகிறதும், பிரிந்தோர் கூடுவதும், கூடினோர் பிரிவதும் ஒழுங்காய் நடைபெற்று வந்தன.
ஆனால் கணவன் உயிருடன் இருக்கையிலேயே, விதவையாக்கப்பட்ட பூங்கொடியான மேனகா தன்னுடைய நாயகனை விடுத்து வந்த பிறகு பைத்தியங் கொண்டவளைப் போலக் காணப்பட்டாள். உண்பதை விடுத்தாள்; துயில்வதை ஒழித்தாள்; நல்லுடைகளை வெறுத்தாள்; நகைகளை அகற்றினாள்; அழகே வடிவாகக் காணப்பட்ட தனது அளகபாரத்திற்கு எண்ணெயு மிடாமல் சடையாய்ச் செய்து விட்டாள்; நகையற்ற முகத்தையும், மகிழ்வற்ற மனதையும் கொண்டவளாய்த் தன் சிந்தையை ஓயாமல் வேறிடத்தில் வைத்தவளாய் வாடி வதங்கித் துரும்பாய் மெலிந்தாள்.
''துயிலெனக்கண்களிமைத்தலு முகிழ்த்தலுந் துறந்தாள்
வெயிலிடைத்தந்த விளக்கென வொளியிலா மெய்யாள்
மயிலிற்குயின் மழலையாண் மானிளம் பேடை
அயிலெயிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்.''
என்றபடி துவண்டு இரண்டொரு மாதத்தில் எழுந்திருக்கும் திறனற்றவளாய் அயர்ந்து தள்ளாடினாள். அவளுடைய எண்சாண் உடம்பும் ஒரு சானாய்க் குன்றியது. ஹார்மோனியம் முதலிய வாத்தியங்களின் இன்னொலி அண்டை வீடுகளிலிருந்து தோன்றி அவளுடைய செவியில் மோதினால், ஆயிரம் தேள்கள் அவளது தேகத்தில் ஒரே காலத்தில் கொட்டுதலைப்போல வதைப்பட்டாள். மஞ்சள், மலர்கள் முதலிய மங்கலச் சின்னங்களை அறவே ஒழித்தாள். தனது உடம்பை ஒரு சிறிதும் கவனிக்காமலும், பிறர் மொழிவதற்கு மறுமொழி கூறாமலும்,
“விழுதல் விம்முதல் மெய்யுற வெதும்புதல் வெருவல்
எழுத லேங்குத லிங்குத லினியனை யெண்ணித்
தொழுதல் சோருத லுறங்குதறுயருழந் துயிர்த்தல்
அழுத லன்றிமற் றயலொன்று செய்குவ தறியாள்.''
என்ற வண்ணம் ஓயாமல் அழுதலையே அலுவலாய்ச் செய்து கொண்டிருந்தாள். தன்னுடைய சொந்த இடமாகிய தண்ணீரை விடுத்து வெளியேற்றப்பட்ட மீன் குஞ்சு தரையில் கிடந்து அசைவற்று செயலற்று உயிரை அணுவணுவாய்ப் போக்கி அழிவதைப் போலத் தன் கணவனுடைய இடத்தை விடுத்து வந்த பிறகு அவளுக்கு உலகமே உயிரற்றுப் பாழ்த்து இருளடைந்து போனதாய்த் தோன்றியது. பெண்மக்களுக்குக் கணவனைப் பகைமை காரணமாக விடுத்துப் பிரிதலைக் காட்டிலும் கொடிய விபத்தும், துயரும் வேறு உண்டோ ? கூரிய புத்தியையும் கவரிமானினும் அதிகரித்த மானத்தையும் கொண்ட அன்னப் பேடாகிய மேனகா வேடன் அம்பால் அடிபட்டுக் கிடக்கும் பறவைகளைப்போலப் புண்பெற்ற மனத்தோடு சோர்ந்து கிடந்தாள்.
ஆரம்பத்தில் அந்த நிலைமையை நோக்கிய கனகம்மாள், மேனகா தன் கணவன் வீட்டில் தனக்கு நேர்ந்த துன்பங்களை யெண்ணி அவ்வாறு வருந்துகிறாள் என நினைத்தாள். ஆனால் சொற்ப காலத்தில் அவ்வெண்ணம் தவறென உறுதியாயிற்று. அவள் தனது நாதன் மீது கொண்ட ஆசையாலும்; அவனது பிரிவாற்றாமையாலும் அவ்வாறு அலமருகின்றாள் என்பதைக் கண்டாள். அத்தகைய நிலைமையில் அவளைத் தமது வீட்டிலேயே எவ்வாறு வைத்துக் கொள்வ தென்பதைப் பற்றிப் பன்னாட்கள் யோசனை செய்தாள்; அவளைத் தன்னால் இயன்றவரை தேற்றி, அவளுக்குரிய தேவைகளைச் செய்து அவளைக் களிப்பிக்க முயன்றாள். அவள் அவற்றைச் சிறிதும் கவனித்தாளன்று. இரவுகளிற் பாட்டியின் அண்டையில் படுத்திருக்கும் மேனகா தனது துயிலில் கணவனைப் பற்றிப் பிதற்றியதையும், திடுக்கிட் டெழுந்து அவனை நினைத்து அழுததையுங் கண்ட கனகம்மாளுக்கு அப்போதே உண்மை நிச்சயமானது. கனகம்மாளினது மனதும் உடனே மாறியது. வராகசாமியின் மீது அவள் அது வரையில் கொண்டிருந்த வெறுப்பு விலக, அவன் மாத்திரம் நற்குணமுடையவனாய் அவளுடைய அகக்கண்ணிற்குத் தோன்றினான். எப்பாடு பட்டாயினும் அவளைக் கணவனிடம் கொண்டு போய் விடுதலே ஒழுங்கென அவள் நினைத்தாள்; சாம்பசிவ ஐயங்காரிடம் உண்மையைத் தெரிவித்தாள். அவருடைய உத்தியோக மகோத்சவத்தில் அந்த மொழி அவருடைய செவியில் ஏறவில்லை. அம்மாள் வேளைக்கு வேளை மத்தளம் தாளத்தோடு அதே பாட்டாய் பாடி அவருடைய செவிகளைத் துளைக்க ஆரம்பித்தாள். அவள் தம்மை எவ்வளவு கொத்தினாலும், தம் மருமகப் பிள்ளையிடம் பெற்ற மரியாதை அவருக்கல்லவோ தெரியும்! அவர் அதை அவ்வளவாக சட்டை செய்யாமல் இருந்தார்.
அவளுடைய உபத்திரவங்கள் ஒன்றுக்குப் பத்தாய்ப் பெருகின. அவள் ஈட்டி, சூலம், அம்பு, தோமரம், முதலிய ஆயுதங்களை தூரத்திலிருந்தே எறிந்து முதலில் யுத்தம் செய்தாள். பிறகு வாயுவாஸ்திரம், அக்கினி யாஸ்திரம், வருணாஸ்திரம் முதலியவற்றைக் கொண்டு போர் செய்தாள்; கடைசியாக அருகில் நெருங்கி முஸ்டியுத்தம் புரியத்தொடங்கினாள். அவர் என்ன செய்வார்? சென்னை யிலிருந்து வந்த சில மனிதரிடம், மத்தியஸ்தம் செய்யும்படி அவர் அரைமனதோடு தெரிவிக்க, அவர்கள் அதற்கு இணங்கிச் சென்றனர். பிறகு சென்னையி லிருந்து இரண்டொரு கடிதங்கள் வந்தன; அதனால் பயனுண்டாகாததைக் கண்ட கனகம்மாள் இந்த அதிகாரத் தொடக்கத்தில் கூறியவிதம் கடுஞ் சொற்களை உபயோகித்தாள். "ஒரு நாளா? இரண்டு நாளா? குழந்தை வந்து ஒரு வருஷமாகி விட்டது. இதெல்லாம் என் கண் செய்த பாவம்! இதை யெல்லாம் பார்க்கும்படி அந்தப் பாழுந் தெய்வம் செய்து விட்டதே! யாருக்கு யார் என்ன விருக்கிறது? பிள்ளையாம் பிள்ளை! அணிப்பிள்ளை தென்னம்பிள்ளை!" என்று மூச்சு விடாமலும், முற்றுப் புள்ளி வைக்காமலும் கனகம்மாள் பக்கம் பக்கமாய்ப் பேசிக் கொண்டே இருந்தாள். வழக்கத்திற்கு மாறாகச் சிறிது கோபம் கொண்ட புத்திர சிகாமணி, "நான் என்ன செய்வேன்? அந்தப் பைத்தியத்தின் காலைப் பிடித்துக் கொள்ளச் சொல்லுகிறாயோ? நானும் பல மனிதர் மூலமாய்ச் சொல்லி அனுப்பினேன். அந்த பிரபு அதை காதில் வாங்கினாலென்றோ? என்னுடைய சேவகன் அவனை அன்னியருக்கு எதிரில் பிடித்துக் கொண்டானாம். அதனால் மோசம் வந்துவிட்டதாம்" என்றார்.
கனகம் :- அவன் உன்னை அடிக்க வந்தபோது சேவகன் அவனைப் பிடித்துக் கொள்ளவில்லையாமே, நீ பெண்ணை அழைத்தபோது வராகசாமி குறுக்கில் வந்து மறித்தானாம்; அப்போதே சேவகன்பிடித்துக் கொண்டானாம். அப்படி யல்லவோ அவன் சொல்லுகிறான்.
சாம்ப :- அதெல்லாம் முழுப்புளுகு.
கனகம் :- என்ன இருந்தாலும் அவன் நம்முடைய குழந்தையின் புருஷன். அவனைச் சேவகன் பிடித்துக் கொள்ளுவதென்றால், அது அவமானமாகத்தானே இருக்கும். அதைப்பற்றி நம்முடைய மேனகாவே வருத்தப் படுகிறாளே. அவனுக்கு எப்படி இராது! போனது போகட்டும்; அவன்தான் வீண் பிடிவாதம் செய்கிறான்; நாமும் அப்படியே செய்தால் யாருக்கு நஷ்டம்? வாழையாடினாலும், வாழைக்குச் சேதம், முள்ளாடினாலும் வாழைக்குச் சேதம். இதனால் நமக்குத்தான் துன்பமெல்லாம். அழுத கண்ணும், சிந்திய மூக்கு மாய்ப் பெண்ணை நாம் எத்தனை நாளைக்கு வைத்திருக்க முடியும்? ஏதாவது அவமானம் வந்துவிட்டால் பிறகு நமக்குத்தானே தலைகுனிவு.
சாம்ப:- அதற்காக என்ன செய்யச் சொல்லுகிறாய்? என்னால் ஒன்றும் ஆகாது.
கனகம் :- நன்றாயிருக்கிறது! நாம் எப்படியாவது நயந்து தான் போகவேண்டும். நாம் பெண்ணைக் கொடுத்தவர்கள்; அவனுடைய கை மேலதான்; நமது கை ஒருபடி இறக்கந்தான். இன்னம் ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அடகு வைத்த நகைகளையும் மீட்டுக் கொடுக்க வேண்டும்; ஒரு நகைகூட இல்லாமல் பெண் மரம்போல இருக்கிறாளே; என்ன செய்கிறது?
சாம்ப:- அந்த துஷ்ட முண்டைகளிடம் இவள் போனால் துன்பந்தான் சம்பவிக்கும். இனி சுகமாய் வாழப்போகிற தில்லை. முறிந்து போன பால் நல்ல பாலாகுமோ? ஒரு நாளுமில்லை.
கனகம் :- (ஆத்திரத்தோடு) சரிதான்; வாழமாட்டாள் வாழமாட்டா ளென்று மங்களம் பாடிக்கொண்டே இரு; அதுதான் உங்களுடைய ஆசை போலிருக்கிறது. நீங்கள் இரண்டு பேரும் சுகமா யிருங்கள். அது மூத்த தாரத்தின் குழந்தை! அது எப்படியாவது அழிந்து நாறிப் போகட்டும். உனக்குப் பணச் செலவு செய்வதென்றால் ஒன்றும் தேவையில்லை. நீ ஒன்றிற்கும் உன் கையை அறுத்துக் கொள்ள வேண்டுவதில்லை. என்னுடைய மஞ்சற்காணியை இன்றைக்கு விற்றாகிலும் ஐயாயிரம் ரூபா கிடைக்கும். அதை விற்றுப் பெண்ணை அனுப்பிவிடு. இல்லாவிட்டால், அவள் இம்மாதிரி கஷ்டப்பட நான் இனி ஒரு க்ஷணமும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்; பேசாமல் எங்கேயாவது தலையில் துணியைப் போட்டுக்கொண்டு போய்விடுகிறேன். எனக்கு பிள்ளையு மில்லை , குட்டியுமில்லை யென்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறேன் - என்றாள். அழுகை மேலிட்டு அவளுடைய நெஞ்சை அடைத்தது. உதடு முதலியவை படபடவென்று துடித்தன. கண்களில் கண்ணீர் வழிந்தது. அவள் யாவற்றையும் துறந்து வீட்டை விடுத்து அப்போதே போவதற்குத் தயாரா யிருப்பவளாகத் தோன்றினாள். தம் அன்னை அதற்கு முன் அவ்வளவு வருந்தியதைப் பார்த்தறியாத சாம்பசிவையங்கார் ஒருவாறு பணிவை அடைந்தார்.
சாம்ப:- அம்மா! அந்த எருமை மாட்டினிடம் நான் இனி போக மாட்டேன். நீதான் போக வேண்டும். அவன் கேட்கிற பணத்தைத் தொலைத்து விடுகிறேன். நீயே கொடுத்து விடு -
என்றார்.
கனகம் :- எல்லாவற்றிற்கும் அந்த அடுத்த வீட்டு சாமா இருக்கானே, அவனுக்கு ஒரு கடுதாசி எழுதியனுப்பு; என்ன சொல்லுகிறான் பார்க்கலாம். ரூ.2000ம் கொடுப்பதாயும், அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்டுத் தருவதாயும், இனி பெண்ணை அன்போடு நடத்த வேண்டு மென்றும் எழுது.
சாம்ப:- சரி; நான் சம்பாதிக்கிறது அவனுக்குக் கொடுக்கத்தான் சரியாப் போகும். பெண்ணை அடித்தாற் பணம் வந்து விடும் என்று கண்டவன், பணத் தேவை உண்டான போதெல்லாம் அடித்துக் கொண்டுதான் இருப்பான்; நானும் பணத்தைச் செலுத்தி கொண்டேதான் இருக்க வேண்டும். பெண்ணை அடிப்பதில் அவர்களுக்கு இயற்கையிலேயே சந்தோஷம் அதிகம்; இன்னம் அது கஜானாவில் செக் மாற்றுவதைப் போலானால் பிறகு அடிப்பதுதான் வக்கீல் உத்தியோகமாகச் செய்வான். சரி! அப்படியே ஆகட்டும். கடிதம் எழுதுகிறேன்- என்று காகிதத்தையும், இறகையும் கையில் எடுத்தார்.
*****
மேனகா :
அதிகாரம் 4 - மனதிற்குகந்த மன்மதன்
வராகசாமிக்கு வயது இருபத்திரண்டாயிற்று. அவன் நடுத்தரமான உயரமும், சிவந்த மேனியும், வசீகரமான வதனமும் பெற்றவன். அவன் தன் சிரசில் அரையணா வட்டத்திற் குடுமிவைத்திருந்தமையால், உரோமத்திற்குப் பதில் ஒரு எலியின் வாலே சிரசிலிருந்தது. அவனது தேகத்தில் சுறுசுறுப்பொன்றே காணப்பட்டதேயன்றி தசைப் பிடிப்ப தென்பதே காணப்படவில்லை. அவன் மிக்க கூர்மையான புத்தியைப் பெற்றிருந்தும், அது ஏட்டுச்சுரக்காயேயன்றி, அவனுக்கு உலகத்தின் அனுபவம் சிறிதும் கிடையாது. அவன் குழந்தைப் பருவத்திலேயே தனது தந்தையை இழந்து, விதவையான தன் தாயினாலேயே வளர்க்கப்பட்டு வந்தான். போதாக்குறைக்கு இரண்டு சகோதரிமார்களும் விதவை நிலை அடைந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஒரு கைம் பெண்டாட்டியால் வளர்க்கப்பட்டால் மனிதன் கழுதையாக மாறிவிடுவானென்றால், மூன்று புண்ணியவதிகளும் தம்முடைய விவேகத்தைச் செலுத்தி ஆளாக்கிய வராக சாமியைப் பற்றி அதிகம் கூற வேண்டுவதுண்டோ ? அவனுக்கு அவர்கள் எந்த விஷயத்திலும் சுயபுத்தியே இல்லாமற் செய்துவிட்டனர். அவன் நடந்தாற் கால் தேய்ந்து போகும்; அவன் தண்ணீரில் நனைந்தால் உப்பு மூட்டையாகிய அவன் தேகம் கரைந்து போகும்; அவன் வீட்டைவிட்டு வெளியிற் சென்றால் அவனை பூதம் விழுங்கிவிடும் என்று நினைத்து அவன் எந்தக் காரியம் செய்தாலும் அதனால் அவனுக்குப் பெருத்த துன்பமுண்டாகும் என்று அவனை வெருட்டி வந்தனர்.
ஒரு ஊரில் பெருத்த தனிகன் ஒருவன் இருந்தான். அவன் சங்கீதத்தில் மகா நிபுணன். தோடி ராகம் என்றால் தூக்கு என்ன விலை என்பான். பல்லவி என்றால் படி எத்தனை பைசா என்பான். அவன் வீட்டில் ஒரு கலியாணம் நேர்ந்தது. அதற்காக அன்றிரவு ஊர்வலம் வர நினைத்து, அதற்கு மேளக்காரனை ஏற்பாடு செய்து அவனுக்கு நூறு ரூபாய் முன் பணம் கொடுத்தனுப்பினான். அம்மேளக்காரன் அன்று பகலில் வேறொரு ஊர்வலத்தில் மேளம் வாசித்துக்கொண்டு வந்தான். அதைக் கண்ட நமது தனிகனுக்கு அடக்கமுடியாத கோபம் பிறந்தது. மேளக்காரனை வரவழைத்து "நாயே!" என்றும், "கழுதே!" என்றும் வைதுவிட்டு சீறி விழுந்தான். தன்னிடம் பெற்ற முன் பணத்தை கீழே வைத்து அப்பாற் போகும்படி உத்தரவு செய்தான். மேளக்காரன் உண்மையை அறிய மாட்டாமல் நடுநடுங்கித் திருடனைப்போல் விழித்துத் தான் எவ்விதப் பிழையும் செய்யவில்லை என்றான். அதைக் கேட்ட தனிகன், "அடே மேளக்கார போக்கிரிப் பயலே! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? இப்போது வந்த ஊர்வலத்தில் நீ மேளம் வாசிக்கவில்லையா? முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கவா பார்க்கிறாய்?" என்றான்.
மேளக்காரன் :- ஆம்; நான் மேளம் வாசித்தது உண்மை தான். அது எப்படி குற்றமாகும் ? - என்றான்.
தனிகன் :- ஆகா! இன்னமும் என்னை முட்டாளென்று மதிக்கிறாய்? இப்போது குழாயிலுள்ள பாட்டுக்களை யெல்லாம் ஊதிவிட்டு இரவில் வெறுங் குழாயோடு வந்து இருளில் எங்களை ஏமாற்றவா பார்த்தாய்? நானா ஏமாறுகிறவன்? பணத்தைக் கீழே வையடா முட்டாப் பயலே! என்றான். மேளக்காரன் பொங்கி யெழுந்த தனது சிரிப்பை மிகவும் பாடுபட்டு அடக்கிக் கொண்டான். அத்தகைய மூட சிகாமணியிடத்தில் மேளம் வாசிக்காமல் இருப்பதே மேன்மை யென நினைத்து, தான் வாங்கிய முன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போனானாம்.
அதைப்போல வராகசாமி அதிகமாய்ப் பேசிவிட்டால், அவனுடைய தொண்டையிலுள்ள சொற்கள் செலவழிந்து போவதனால் தொண்டை காலியாய் போய் விடுமோவென அஞ்சியவரைப் போல் விதவைகள் அவனை மௌனகுரு சாமியாக்கி வைத்திருந்தனர். அதனால் அவனுக்கு பிறருடன் பேசும் திறமையும், வாக்குவாதம் புரியும் வன்மையும் இல்லாமற் போயிற்று.
அவனுக்குத் தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் விதவையரே கவனித்து வந்தார்கள். ஆதலின், அவனுக்கு எதைக் குறித்த கவலையும் நினைவும் இல்லாமற் போயின. அவன் கடைக்குப் போய் ஒரு நெருப்புப் பெட்டியும் வாங்கியறியான். எப்போதாயினும் விலக்கக்கூடா வகையில் அவன் கடைக்குப் போக நேர்ந்தால், புளி வராகனிடை என்ன விலை யென்றும், ஜவ்வாது வீசை என்ன விலை யென்றும் கேட்பான். இம்மாதிரி வளர்க்கப்பட்டு வந்தமையால், அவன் படிப்ப தொன்றிலேயே தன் முழு நினைவையும் வைத்து வந்தான். அதனால் அவனுக்குப் பெருத்த நன்மையும் பல தீமைகளும் உண்டாயின. அவன் எந்தப் புஸ்தகத்தையேனும் ஒருதரம் படிப்பானாயின், கிராமபோ (Gramaphone)னைப் போலப் புஸ்தகத்திலுள்ள விஷயங்கள் யாவும் அப்படியே அவன் மனதிற் பதிந்து போம்.
முதலிலிருந்து முடிவு வரையில் மனப்பாடமாய்ப் பக்கங்களின் இலக்கம், பத்திகள், வாக்கியங்கள், முற்றுப் புள்ளிகள், மைப் புள்ளிகள் முதலியவற்றையும் மறவாமல் ஒப்புவிப்பான். அவன் ஒவ்வொரு பரிட்சையிலும் சென்னை இராஜதானிக்கே முதற் பையனாகத் தேறி வந்தவன். எம்.ஏ., பி.ஏ., பி.எல்., முதலிய எல்லாப் பரீட்சைகளிலும் அவ்வாறே முதன்மை யடைந்தான். வெளிப்டையான அந்தச் சிறப்பைக் கண்டு மகிழ்ந்தே நம் சாம்பசிவையங்கார் அவனுக்கு மேனகாவை மணம் புரிவித்தார்.
ஆனால் மாப்பிள்ளை (மணப்பிள்ளையின் உண்மைத் திறமை அவனை வீட்டிற் பார்த்தவருக்கே நன்கு விளங்கும். "அடே வராகசாமி! இடுப்புத்துணி அவிழ்ந்து போய் விட்டதடா!" என்று பெருந்தேவியம்மாள் சொன்னாலன்றி, அவனுக்கு தன் இடையிலிருந்த துணி நெடுந்தூரம் பிரயாணம் சென்றது தெரியாது. "சாப்பிட்டு நிரம்ப நாழிகை யாயிற்று, உனக்குப் பசிக்கும், எழுந்துவா!" என்பாள் அன்னை. அவனுக்கு உடனே பசி வந்துவிடும்! எழுந்து உணவருந்தப் போவான். அதற்குள் பெருந்தேவியம்மாள், "அடே! பகலில் நீ அதிகமாய் சாப்பிட்டதினால் இப்போது கூடப் புளித்த ஏப்பம் வந்ததே; திரும்பவும் இப்போது சாப்பிட்டால் அஜீரணம் அதிகமாய் விடும் பேசாமற் படுத்துக்கொள்!" என்பாள். உடனே அவனுக்கு பசியடங்கிப்போம். அஜீரணமும் இருப்பதாய்த் தோன்றும், உடனே படுக்கைக்குப் போய் விடுவான்.
நாட் செல்லச் செல்ல அவன் படிப்பதிலேயே தன் புத்தியைச் செலுத்திச் செலுத்திப் பழக்கம் அடைந்தான் ஆகையால், அவனுடைய நினைவு அவனிருந்த இடத்திலேயே இருந்ததில்லை. அவனுடைய தேக சம்பந்தமான காரியங்கள் யாவும் இயந்திரத்தின் இயக்கத்தைப் போலப் பிறருடைய முயற்சியினால் தாமாய் நிறைவேறி வந்தன. அவன் வீட்டைவிட்டு வெளியில் சென்றால், அவன் மனது ரோமபுரியை ஆண்ட சீசரின் சரித்திரத்திற் சென்றிருக்கும். மனதில் நடக்கும் நாடகத்திற் கிசையக் கைவிரல்கள் அபிநயங்கள் காட்டிக் கொண்டும் யாதாயினும் எழுத்துக்களை எழுதிக்கொண்டும் இருக்கும்.உதடுகள் சொற்களால் அசைந்த வண்ணம் இருக்கும். அவன் வெளிப் பார்வைக்கு உன் மத்தனைப்போல காணப்படுவான். அதனால் அவனுக்குப் பல துன்பங்கள் அடிக்கடி நேர்ந்து வந்தன. மோட்டார் வண்டிகளிலும், டிராம் வண்டிகளிலும் தினந்தினம் அவன் உயிர் தப்பி மறு ஜெனனம் எடுத்து வந்தான். வண்டி யோட்டுவோர் மணியை யடித்துக் குழாயால் ஊதி எவ்வளவோ கூச்சலிடுவார்கள். அவன் முழுச் செவிடனைப்போல போய்க்கொண்டிருப்பான். அவர்கள் வண்டிகளை நிறுத்தி விட்டு அவனை வாயில் வந்தவிதம் திட்டுவார்கள். அண்டையிற் செல்லும் மனிதர் அவனுடைய உடம்பைப் பிடித்து இழுத்து விடுவார்கள்.
அவன் ஒருநாள் இரவு 7 1/2 மணிக்குக் கடற்கரையிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்தான். தன் வீட்டின் வாயிலில் வந்தவன் அதற்குள் நுழையாமல், மறதியாக மேலும் நெடுந்தூரம் தெருவோடு போய் அங்கு தன் வீட்டை போலத் தோன்றிய வேறொரு வீட்டிற்குள் நுழைந்தான். காலையலம்பிக் கொண்டு உள்ளே நுழைவது அவனுடைய வழக்கம் ஆகையால், எதிரில் வைக்கப்பட்டிருந்த செம்பைக் கையில் எடுத்தான். கூடத்திலிருந்த அவ்வீட்டுப் பெண்டீர் அவனைக் கள்வனென மதித்துக் "கூ கூ திருடன் திருடன்'' எனக் கூவி ஆரவாரம் செய்தனர். அண்டை வீட்டாரும் தெருவிற் சென்றோரும் தடிகளோடு உள்ளே நுழைந்து செம்பைத் திருடிய கள்வனைப் பிடித்துக் கொண்டனர். வராகசாமி அப்போதே தான் செய்த தவறை உணர்ந்து, உண்மையைக் கூறினான். அதை எவரும் நம்பாமல் அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போயினர். ஐயங்கார், ஆடு திருடின கள்ளனைப்போலத் திருட்டு விழி விழித்து செய்ய வேண்டுவ தறியாமல் தவித்து நின்றார். அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் சீதாராமநாயுடு அவனுடன் படித்தவ ராதலால் அவனைக் கண்டவுடன், "அடே வராகசாமி! என்னடா இது? எங்கடா வந்தாய்?" என்றார். ஐயங்கார் உண்மையைச் சொன்னார். அவர் விழுந்து விழுந்து சிரித்து ஜனங்களை அதட்டி யனுப்பி விட்டுத் தன் நண்பனது மானத்தைக் காப்பாற்றி அவனை வீட்டிற்கு அனுப்பினார்.
இன்னொருநாள் கச்சேரிக்குப் புறப்படும் அவசரத்தில், சட்டையைப் போட மறந்து தலைப்பாகையை மாத்திரம் அணிந்து கொண்டு வீட்டை விட்டு நெடுந்தூரம் போய்விட்டார். தெருவிலிருந்தோர் யாவரும் அந்த அவதாரத்தைக் கண்டு வியப்புற்றுக் கைகொட்டி நகைத்தனர். கோமளம் ஓடிவந்து உடம்பில் சட்டையில்லை யென்பதை நினைப்பூட்டினாள்.
அவன் உணவருந்த இலையில் உட்கார்ந்து, சாதம் பரிமாறப்படு முன் பரிஷேசனம் (நீர் சுற்றுதல்) செய்தல் மாதம் முப்பது நாட்களிலும் நடைபெறும்.
மேனகா வீட்டிற்கு வந்த சில மாதங்களில் அவனுடைய தாய் இறந்தாள். அவளுக்குப் பதிலாக அடுத்த வீட்டு சாமாவையர் மூன்றாம் விதவையின் பட்டத்திற்கு வந்து சேர்ந்தார். வராகசாமி தன் யெளவன மனைவி யிடத்தில் அதிக விருப்பம் வைத்துவிட்டால் தம்முடைய அதிகாரம் குறைந்து போகுமென நினைத்த பெருந்தேவி முதலியோர் அவன் அவள்மீது வெறுப்பையும் பகைமையும் கொள்ளும்படி செய்து வந்தனர். அவன் இயற்கையில் இரக்கம், தயாளம், அன்பு, நல்லொழுக்கம் முதலிய குணங்களைக் கொண்டவன். பிறருக்கு தீங்கு நினைப்பவனன்று. பிறர் காலில் முள் தைத்தால் அதைக் காணச் சகியாதவன். என்றாலும், அவன் சகோதரிமாரின் சொற்களுக்கு அதிக மதிப்பு வைத்திருந்தமையால், மேனகா விஷயத்தில் மாத்திரம் மிக்க கொடியவனாய் நடந்து வந்தான். அவர்கள் அடிக்கடி அவள் மீது கோள் சொல்லி அவனுக்குத் தூபம் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவன் தலை, கால் பாராமல் அவளை அடித்து விடுவான். இரண்டு மூன்று முறை கையிலும் பிறவிடங்களிலும் சூடு போட்டு விட்டான்.
தன்னுடைய கலியாணம் சாந்தி முகூர்த்தம் முதலியவற்றில் அவளுடைய தந்தை தனக்குத் தக்க மரியாதைகளும், சீரும் செய்யவில்லை யென்று சகோதரிமார் அவனிடம் அடிக்கடி உபதேசித்து வந்தனர். மேனகா குணத்தழகும், கல்வியழகும், மேனியழகும், நடத்தையழகும், வேலைத்திறமையும், புத்தி நுட்பமும் பெற்ற மாதர் திலகமாயிருந்தாள் ஆயினும், அவள் எவ்விதக் குற்றங் கூறுதற்கும் வழியின்றி ஒழுகி வந்தாள் ஆயினும், எவராலும் கோயிலில் வைத்து தெய்வமென வணங்கத் தகுந்த உத்தமியாயிருந்து வந்தாள் ஆயினும், அவர்கள் அவள் மீது பொய்க் குற்றங்களை நிர்மாணம் செய்து சுமத்தி ஒவ்வொரு நாளும் அடிவாங்கிவைப்பார்கள், அவனும் அவளும் ஐந்து நிமிஷமேனும் தனிமையிற் பேசவிடமாட்டார்கள். அந்த மனைவியே தனக்குத் தேவையில்லை யென்று அவன் அவளை வெறுக்கும்படி செய்துவிட்டனர். அவளுடைய தந்தையின் மீதும் பகைமையை உண்டாக்கி வைத்தனர்.
பெருந்தேவி யம்மாள் அதுவரையிற் சேர்த்த பணத்தை யெல்லாம் 300 - பவுன்களாக மாற்றி அதை ஒரு சிறிய மூட்டையாகக் கட்டி, அம் மூட்டையைத் தன் இடையில் புடவைக்குள் வைத்துச் சுமந்து வந்தாள். அத்துடனே நீராட்டம், போஜனம், நித்திரை முதலிய யாவும் நடைபெற்றன. அந்த இரகசியத்தை எவரும் அறியவில்லை. சாமாவையருடைய கூரிய நாசி அதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. அவள் வீணிற் சுமந்திருந்த அந்தப் பளுவைத் தான் ஏற்றுக் கொண்டு அவளுக்கு உதவி புரிய வேண்டும் என்பதே சாமாவையரின் அந்தரங்க நினைவு. அதற்காகவே அவர் அவர்களுடன் நட்புக்கொண்டு அன்னியோன்னியமாய்ப் பழகி வந்தார்; அவள் ஊதியதற்குத் தகுந்தவாறு அவர் மத்தளந் தட்டி வந்தார்.
அவர் விதவைகளோடு தனிமையில் இருக்கையில், பெருந்தேவி சொல்வதே சரியென்பார். வராகசாமியோடு இருக்கையில் அவன் சொல்வதே சரியென்பார். இருவரும் இருக்கையில், "இதுவும் சரி அதுவும் சரி; வராகசாமி மகா புத்திசாலி; அவன் வக்கீல் ; மற்ற எந்தக் கோர்ட்டுத் தீர்மானத்தின் மேலும் அவன் அப்பீல் செய்யலாம். அக்காள் தீர்மானத்திற்கு அப்பீல் கிடையாது'' என்று கோமுட்டி சாட்சியாக நயமாகச் சொல்லிவிடுவார்.
மேனகா தன் தகப்பன் வீட்டிற்குப் போய் ஒரு வருஷகாலமாயினும், வராகசாமி தனக்கொரு மனைவி இருந்தாள் என்பதை நினைத்தானோ இல்லையோ கடவுளுக்கே தெரியும். ஆனால் மந்திரிமார் மூவரும் அவனுக்கு பெண்ணை மணம் புரிவிக்க வேண்டுமென்று பன்முறை கூறிய காலத்தில் அவன் அதைப்பற்றி எவ்வித ஆக்ஷேபனையும் சொல்லவில்லை. இவ்வாறு அவன் அவர்களால் சூத்திரப் பாவையைப் போல ஆட்டப்பட்டு வந்தான்.
சாமாவையரும், விதவைமாரும் முன்னொரு அதிகாரத்தில் தமக்குள் பேசித் தீர்மானம் செய்துகொண்ட பிறகு அவர்கள் அவனுடைய மனதை மெல்ல மாற்றி, மேனகாவின் மீது அவன் விருப்பம் கொள்ளும்படி சொற்களைக் கூறி வந்தனர்.
அவன் கச்சேரிக்குப் போகாமல் வீட்டிலிருந்த ஒரு ஞாயிற்றுக் கிழமை பெருந்தேவி-யம்மாள் அவன் மனதிற்குப் பிடித்த சிற்றுண்டிகள் முதலியவற்றைச் செய்து அவனை உண்பித்தாள். அவன் தாம்பூலந்தரித்து ஊஞ்சற்பலகையில் உட்கார்ந்திருந்தான். அடுத்த வீட்டு சாமாவையரும் தமது இயற்கை யலங்காரத்தோடு வந்து ஊஞ்சற் பலகையை அழகுப்படுத்தினார். யாவரும் உல்லாசமாக ஊர் வம்புகளைப் பேசிய வண்ணம் இருந்தனர். அப்போது சாமாவையர் பெருந்தேவியம்மாளை எதிர்த்து வாதம் செய்பவரைப் போல் நடித்து , "பெருந்தேவி உனக்குக் கோபம் வந்தால் வரட்டும்; நீ இதனால் என்னோடு பேசாவிட்டாலும் பரவாயில்லை. நீ எங்கேதான் தேடிக் கலியாணம் செய்தாலும் மேனகாவைப் போன்ற நல்ல குணவதி உனக்குக் கிடைப்பது கடினம். இக்கரைக்கு அக்கரை பச்சை யென்று நீங்கள் நினைக்கிறீர்கள். மற்ற வீடுகளில் நாட்டுப் பெண்கள் இருக்கும் ஒழுங்கைப் பார்த்தால் இவளை நாம் கோயிலில் வைத்தே பூஜை செய்யவேண்டும். அற்பங்களெல்லாம் தலைகால் தெரியாமல் துள்ளி விழுந்து போகின்றன. அவருடைய தகப்பனார் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறாரே என்கிற அகம்பாவம் சிறிதாயினும் உண்டா ? அவள் காரியம் செய்யும் திறமையும், அவளுடைய பணிவும், அடங்கிய சொல்லும், நாணமும் யாருக்கு வரும்?” என்றார்.
எதிர்பாரா அம்மொழிகளைக் கேட்ட வராகசாமியினது மனம் ஒருவாறு கலக்கம் அடைந்து, அதற்கு இன்னவிதம் பதில் சொல்வதென்பதை அறியாமல் அவன் பேசாமலிருந்தான். சாமாவையரின் சொல் அவனது மனதில் ஒருவித ஆத்திரத்தை உண்டாக்கியது. ஆனாலும் விஷயம் உண்மையாகவே தோன்றியது. அப்போது பெருந்தேவி, ''அது நிஜந்தான் என்னவோ அவளுடைய அப்பன் லோபித்தனம் செய்கிறான் என்கிற ஒரு வெறுப்பைத் தவிர வேறென்ன இருக்கிறது? அவள் பேரில் நமக்கென்ன வர்மம்? அவள் தங்கமான பெண், அவளுடைய பொறுமைக் குணம் ஒன்று போதுமே! பாவம் நாம் அயலார் பெண்ணின் மேல் வீண்பழி சுமத்தினால் பொய் சொன்ன வாய்க்கு போஜன மற்றுப்போம்" என்றாள்.
சாமா:- அவளுடைய தகப்பனார் நம்முடைய விஷயத்தில் என்ன லோபித்தனம் செய்தார்? அவருடைய குடும்பக் கவலைகள் ஆயிரமிருக்கும். தமது சொந்தக்காரியத்தில் அவர் செட்டுக்காரரா யிருக்கலாம். அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நம்முடைய காரியங்களை யெல்லாம் அவர் சொன்னபடி ஒரு குறைவுமின்றிச் செய்துவிட்டார் அல்லவா? நமக்கு வேறென்ன வேண்டும்?
கோம:- தங்கந்தா னென்ன பொல்லாதவளா? அவள் நம்மிடத்தில் எவ்வளவு அந்தரங்க வாஞ்சையோடும் கபடமில்லாமலும் பேசுவாள்? அவள் முகத்தில் கோபமும் வாயிற் கொடுமையான சொல்லும் தோன்றியதை நான் அறியேன்.
சாமா - பாட்டி கனகம்மாளுக்கு அப்புறந்தான் மற்றவர்கள். அவளுடைய பிரியத்துக்கு மற்றவர்களுடையது உறை போடக் காணாது; வராகசாமி! வராகசாமி! என்று இவனைக் கீழே விடமாட்டாளே! அப்பேர்ப்பட்ட அருமையான மனிதர்களிடம் நமக்கு மனஸ்தாபம் உண்டானது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னவோ நம்முடைய வேளைப் பிசகினால் இப்படி நடந்து விட்டதே யொழிய யார் பேரிலும் குற்றமில்லை - என்றார்.
அம்மூவரும் கூறிய சொற்களைக் கேட்ட வராகசாமியின் மனதில் தன் மனைவி முதலியோர் மீது உண்டாயிருந்த வெறுப்பு முற்றிலும் ஒரு நொடியில் அகன்றது. அவன் புரிந்த கொடுமைகளைக் குறித்து ஒரு வித கழிவிரக்கம் தோன்றி அவனை வருத்த ஆரம்பித்தன.
அவனுடைய முகக்குறியை உணர்ந்த பெருந்தேவி அதுவே சமயமென நினைத்து, ''ஆகா! மேனகாவின் கடிதத்தைப் பார்த்தது முதல் என் மனம் படும்பாட்டை எப்படி வெளியிடுவேன்! சொல்லின் அழகும், கருத்தின் உருக்கமும் என்னைப் பிடித்து உலுக்கி விட்டன. கடைசியில் அவள் உயிரை விட்டுவிடப் போகிறேன் என்றல்லவா எழுதியிருக்கிறாள்! அடே சாமா! அந்தக் கடிதத்தை எங்கே வைத்தீர்கள்? அதை இன்னொரு தரம் படிக்க வேண்டும் போல் ஆசையா யிருக்கிறது" என்றாள்.
சாமா:- அடி கோமாளி நீதானே அதை வராகசாமிக்குக் காட்டிவிட்டு பெட்டியில் வைத்துப் பூட்டினாய். அதை எடு - என்றான்.
அவள் உடனே கடிதத்தை எடுத்து வந்து அடியில் வருவாறு படித்தாள்.
"பிராண நாதர் திருவடித் தாமரைகளில் அடியாள் மேனகா தெண்டன் சமர்ப்பித்து எழுதிய விக்ஞாபனம் :
இவ்விடத்தில் மற்றவர் யாவரும் க்ஷேமம். அவ்விடத்தில் தேவரீருடைய திருமேனியின் க்ஷேம லாபத்தைப் பற்றியும், அக்காள் தங்கை முதலியோரின் க்ஷேமத்தைப் பற்றியும் ஸ்ரீமுகம் தயை செய்தனுப்பப் பிரார்த்திக்கிறேன். தேவரீரை விடுத்துப் பிரிந்திருக்கும் துர்பாக்கியத்தை நான் அடைந்த இந்த ஒரு வருஷ காலமாக என் மனம் பட்ட பாட்டைத் தெரிவிப்பதற்கு இந்தச் சிறிய கடிதம் எப்படி இடந்தரப் போகிறது! எத்தனையோ நாட்களுக்கு முன்னமேயே கடிதம் எழுதி அனுப்ப என் மனம் என்னைத் தூண்டியது. கையும் துடித்தது. தேவரீருக்கு என் மீதிருந்த வெறுப்பும், கோபமும் தணியா திருக்கும் போது, மகா பாவியாகிய என்னுடைய எழுத்து கண்ணில் பட்டால் கோபமும் வெறுப்பும் அதிகரிக்குமோ வென்றும், கடிதத்தைப் பிரித்துப் பாராமலே எரித்து விடுவீர்களோ வென்றும் அஞ்சி என் ஆசையை அடக்கிப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். கடைசியில், தேவரீருடைய மனசோடு ஒன்று பட்டுப் பேச அவாக் கொண்டு துடிக்கும் என் மனசை இனி ஒரு நொடியும் தடுக்க வல்லமை அற்றவளாய், இதையனுப்பத் துணிந்தேன். க்ஷமிக்க வேண்டும்.
நான் அங்கிருந்த போது ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாழிகையும், இரவிலும், பகலிலும், துயிலிலும், விழிப்பிலும் தேவரீருடைய திருவுள்ளத்திற்கு சந்தோஷ கரமாகவும், இன்ப மூட்டும் விதமாகவும் நடந்து கொள்வதையே பாடமாகப் படித்து, அதையே என்னுடைய ஓயாக் கவலையாகக் கொண்டு, அவ்விஷயத்திலேயே என்னுடைய முழு மனதையும், தேகத்தையும், நான் அர்ப்பணம் செய்து வந்தும், என்னுடைய பொல்லாத வேளையின் பயனாக நான் உங்களுடைய வெறுப்பைப் பெற்றேன். நான் யாதொரு தவறையும் செய்யவில்லை யென்று சொல்லவில்லை. பேதமை என்பது மாதர்க்கணிகலன் அல்லவா? நான் எவ்வளவு தான் ஒழுங்காய் நடக்க முயன்றாலும், என்னையும் மீறி யாதாயினும் பிழை நேருதல் கூடும். என்னுடைய உயிருக்குயிராகிய தேவரீர் என் விஷயத்தில் க்ஷமையும், தயையும் காட்டாவிட்டால் எனக்கு வேறு யார் கதியிருக்கிறார்கள்? காரிகையாருக்குக் கணவன் சன்னிதானமே புகலிடம். அடிப்பதும் உங்கள் கை; அணைப்பதும் உங்கள் கை, பெற்றோர் எவ்வளவுதான் பாடுபட்டு தேக போஷணைக்குக் குறையின்றி என்னைப் பாதுகாக்கினும், அவர்களால் என் மன நோய்க்கு மருந்து செய்தல் கூடுமோ! அதற்குரிய வைத்தியர் தாங்களன்றோ ? என் ஆத்ம ரக்ஷகர் தேவரீரேயாகும். பட்டினியாக வருந்தித் தவிக்கும் என் மனசுக்கும் ஆன்மாவுக்கும் போஷணை செய்ய அவர்களால் எழுமோ? அதற்குரிய வள்ளல் தேவரீரே யென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
இவ்வொரு வருஷமாய் தேவரீர் என்னை அகல விலக்கிய போதிலும், என் மனசை விட்டு அரை நொடியும் தேவரீர் அகல நான் விடவில்லை. ஆனால், இதனால் என் உணர்வு, துயில் முதலியவை மாத்திரம் விலகி விட்டன. என்னுடைய உயிர் கொஞ்சங் கொஞ்சமாய் முக்காற் பாகம் போய்விட்டது. இன்னம் சொற்ப பாகம் விண்ணிற்கும் மண்ணிற்குமாக ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்கவோ, அல்லது நிற்க வைக்கவோ வல்லமை பெற்ற ஒரு தனிப்பிரபு இவ்வுலகில் தேவரீர் ஒருவரே, அக் காரியம் ஈசுவரனாலும் ஆகாது.
என்னைத் தேவரீர் எவ்வளவுதான் அடித்தாலும், வைதாலும் அது அப்போது என் தேகத்துக்குத் துன்பமாய்த் தோன்றினாலும் அடுத்த க்ஷணமே தேவரீரைப் பற்றிய நினைவு என்னை வருத்தி வந்தது. என் கையிலுள்ள சூட்டுத் தழும்புகளைக் காணும்போதெல்லாம் என் மனம் வருந்தித் தவிக்கிறது. சூட்டைப் பெற்றதற்காக வன்று, என்னை உங்களுடைய உரிமைப் பொருளாக மதித்து முத்திரை போட்ட தேவரீர் இப்போது என்னை உரிமை யற்றவளாக்கி விலக்கியதே என் மனசைக் கலக்குகிறது. நிமிஷத்திற்கு ஒரு சூட்டைப் பெற்றாலும், தேவரீருடைய சன்னிதானமே எனக்கு இன்பமாய்த் தோன்று மன்றி, வேறிடம் சுக முடைய தாமோ? பன்னிரண்டு மாதங்களாய் வானைக்காணாப் பயிரைப் போல வாடி வதங்கிக் கிடக்கும் இந்த அற்பப் பிராணியைக் கைதூக்கிவிடுவீர்களென்று ஒவ்வொரு நிமிஷமும் எதிர் பார்த்தேன். இன்னமும் என் பொல்லாத வேளை அகல வில்லை. தேவரீரை விடுத்துப் பிரிந்து இவ்வாறிருந்து இந்தச் சரீரம் இனி என்ன பயனை அடைப்போகிறது? இன்னம் சில நாட்களில் நான் இவ்வுடம்பைத் துறந்துவிடுவேன் என்பது நிச்சயம். அதற்குள் ஒரு தரமாவது தேவரீருடைய திருமேனியைக் கண்டு தரிசித்தாலன்றி என் கட்டை கடைத்தேறாது; என் மனமும் வேகாது.
கொண்டவரால் வெறுத்து விலக்கப்படும் பெண்டிருக்குக் குளங்களும், கிணறுகளுமே பேருபகாரிகளாயிருந்து கை கொடுத்து உதவுதல் வழக்கம். இவ்வூரில் சாமந்தான்குளம், ஐயன்குளம் என்று இரு குளங்களும் இதற்காகவே இருந்து உதவி புரிந்து வருகின்றன. எத்தனையோ தடவைகளில் அவைகளை நோக்கி நான் நடந்தேன். என் உயிரையும் மனசையும் கொள்ளை கொண்ட தேவரீருடைய முகாரவிந்தத்தை ஒரு தரமாவது காணாமல் போக என் மனம் சகிக்க வில்லை; என் செய்வேன்! இனி வேறு எவ்விதம் எழுதுவேன்? அபயம் அபயம் காத்தருளல் வேண்டும். அடியாள் மேனகா.''
என்று கோமளம் மிக்க உருக்கமாகவும், கேட்போர் மனது இளகுமாறும் படித்தாள். அக்கடிதத்தின் கருத்தை அப்போதே ஊன்றிக் கேட்டறிந்த வராகசாமியினது கண்களும், மனமும் கலங்கின. அது கனகம்மாளின் தூண்டலினால் எழுதப் பட்டதாகவும், முழுதும் பகட்டென்றும் நினைத்து அவன் அதை அதுவரையில் நன்றாய்ப் படிக்கவில்லை. அப்போதே அதில் எழுதப்பட்டிருந்த ஒவ்வொரு மொழியும், அந்தரங்க அவாவினால் மனப்பூர்வமாக எழுதப்பெற்றதாக அவனது செவிகளில் கணீர் கணீரென்று ஒலித்தது, அவனது சிரத்தின் ஒவ்வொர் உரோமத்தையும் பிடித்து உலுக்கியது. முன்பே கனிந்திருந்த அவனுடைய மனது எளிதிற் கலங்கி முற்றிலும் நைந்து அவனது முகத்தை விகாரப்படுத்தியது. கண்களினின்று கண்ணீர்த் துளிகள் வெளிப்பட்டன. அங்கவஸ்திரத்தால் அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். நல்ல பரிசுத்தமான மனதையும், அன்பையும், கல்வியறிவினையும் பெற்ற பெண்மணியான தனது பேதை மனையாட்டியைத் தான் குடிகாரனைப்போல் அடித்ததும், வைத்தும், சுட்டதும் நினைவுக்கு வந்தன. அவன் தன்னைத் தானே வெறுத்து வைது கொண்டான். அவனது அப்போதைய மன நிலையைக்கண்ட அவ்வஞ்சகர், அதுவே சரியான பாகுபத மென்று நினைத்தனர்.
பெருந்தேவி, " என்னவோ போனது போகட்டும்; இப்போது அவர் இன்னொரு இரண்டாயிரம் ரூபாயும், நகைகளை மீட்க ரூ. 800ம் தருவதாயும், நாம் கடிதம் எழுதினால் அவளை அழைத்து வந்து விடுவதாயும், சாமாவுக்கு எழுதியிருக்கிறார். ஏனடா வராகசாமி! அழைத்துக் கொண்டு வரும்படி எழுதுவோமா? பாவம்! நல்ல வயசுக் காலத்தில் பெண் அங்கே இருந்து பாலியத்தை ஏன் வீணாக்க வேண்டும்? குளத்தில் கிணற்றில் விழுந்து செத்து வைத்தாளானால், பாவமும், பழியும் நமக்கு வந்து சேரும். என்னவோ கோபம் பாபம் சண்டாளம், அப்பா! நீ கோபத்தை மனசில் வைக்காதே!" என்றாள்.
சாமா:- வராகசாமிக்குத்தான் அவள் மேல் அவ்வளவு கோபமென்ன? இவன் மனசு தங்கமான களங்கமற்ற மனசு. பிறர் காலில் முள் தைக்க இவன் சகிக்க மாட்டானே! மேனகாவை நிரந்தரமாய் விட்டுவிட இவனுக்குத் தான் மனம் வருமா? என்னவோ இவனுடைய மாமனார்தான் புத்தியில்லாமல் பெண்ணை அழைத்துக் கொண்டு போனார். எத்தனை நாளைக்குப் பெண்ணைத் தகப்பன் வீட்டில் வைத்துக் கொள்ள முடியும்? - என்றார்.
உடனே வராகசாமி விம்மி விம்மி அழுதவனாய்த் தனது மன வெழுச்சியை அடக்கிக்கொண்டு, "உங்களுக்கு எது சம்மதமோ , அது எனக்கும் சம்மதந்தான், சாமாவே பதில் எழுதட்டும்" என்றான்.
சாமா:- இல்லையப்பா! அவர் உன்னுடைய கையால் பதிலை எதிர்பார்க்கிறார். ஏனென்றால், பின்பு ஒருகால் நீ சண்டை போடுவாயோ என்கிற அச்சம் போலிருக்கிறது. இது பெரிய காரியம். அன்னியனாகிய நான் எழுதினால் அவருக்கு வருத்தம் உண்டாகும். நீயே ஒரு வரி எழுதிவிடு.
பெரு :- வராகசாமி! உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை ; கடைசியில் அவர் யார்? உன்னுடைய மாமனார்தானே? மாமனார் தகப்பனாருக்குச் சமானம். இதனால் உனக்கு ஒரு குறையும் வந்து விடாது. நீயே ஒரு வரி எழுதிவிடு.
வராக :- என்னவென்று எழுதுகிறது?
சாமா:- வேறே ஒன்றும் அதிகமாக எழுதவேண்டாம். “விஷயங்கள் ஏதோ கால வித்தியாசத்தால் இப்படி நேர்ந்துவிட்டன. இரு திறத்தாரும் ஒருவர்மேல் ஒருவர் வருத்தம் என்பதையே வைக்காமல் யாவற்றையும் மறந்து விடுவோம். தேவரீர் சாமாவையருக்கு எழுதியது என் மனசுக்கு சம்மதமாயிருக்கிறது. எப்போது தேவரீருக்கு சௌகரியமோ அப்போது செளபாக்கியவதி மேனகாவை அழைத்துவந்து விட்டுப் போகலாம். இனி நம்மிரு குடும்பத்தாரும் பாலுந்தேனும் போல இருப்போம் என்பது என்னுடைய மனப்பூர்வமான நம்பிக்கை" என்று எழுது, வேறொன்றும் வேண்டாம் - என்றார்.
வராகசாமி முதலில் சிறிது நாணித் தயங்கினான். தன் மாமனாரிடம் தான் தாறுமாறாய்ப் பேசிய சொற்கள் நினைவிற்கு வந்தன. எனினும், மேனகாவின் கபடமற்ற குளிர்ந்த வதனம் அவனுடைய மனக்கண்ணில் தோன்றி அவனிடம் மன்றாடியது. அவன் உடனே கடிதம் எழுத, அதை சாமாவையர் எடுத்துப் போய் தபாற் பெட்டியில் போட்டு வந்தார்.
மறுநாள் தஞ்சையிலிருந்து தந்தி யொன்று வந்து சேர்ந்தது. வராகசாமி பதைத்து அதைப் பிரித்துப் பார்த்தான். டிப்டி கலெக்டரும் மேனகாவும் அன்றிரவே புறப்பட்டு மறுநாள்
சென்னைக்கு வருவதாக அதில் எழுதப்பட்டிருந்தது.
--------------------
மேனகா :
அதிகாரம் 5 - பாய்வதன் முன் பதுங்குதல்
மேனகா திரும்பவும் தன் மணாளனது இல்லத்தை அடைந்து அன்றிரவு தனிமையில் அவனோடு பேசிய பின்னரே - இருவரும் ஒரு வருஷ காலமாக மனதில் வைத்திருந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் வெளியிட்ட பின்னரே - அவளுடைய மனப்பிணி அகன்றது. மங்கிக் கிடந்த உயிர் ஒளியைப் பெற்றது. எமனுலகின் அருகிற் சென்றிருந்த அவளுடைய ஆன்மா அப்போதே திரும்பியது. வாடிய உடலும் தளிர்த்தது. நெடிய காலமாய் மகிழ் வென்பதையே கண்டறியாத வதனம் புன்னகையால் மலர்ந்தது. விசனம் என்னும் முகில் சூழப் பெற்றிருந்த அழகிய முகத்தில் இன்பத் தாமரை பூத்தது.
''பெண்ணோ வொழியா பகலே புகுதா
தெண்ணோ தவிரா இரவோ விடியா
துண்ணோ ஒழியா உயிரோ வகலா
கண்ணோ துயிலா விதுவோ கடனே.''
என்னத் தோன்றி, நீங்காமல் வதைத்து வந்த அவளுடைய விசனக் குன்று தீயின் முன்னர் இளகும் வெண்ணெயெனத் தன் கணவனது களங்கமற்ற உண்மை அன்பினால் இளகி இருந்தவிடம் தெரியாமல் பறந்தது. ஒரு வருஷத்திற்கு முன் அவள் தஞ்சைக்குச் சென்ற தினத்திற்கு முந்தய நாளில் சுருட்டி வைத்த வெல்வெட்டு மெத்தையை அப்போதே பிரித்தாள். அவளுடைய தேகம் அன்றைக்கே பட்டுப்புடவையைக் கண்டது. சடையாகப் போயிருந்த அவளுடைய அழகிய கூந்தல், சென்னைக்குப் புறப்படு முன்னரே எண்ணெயையும், புஷ்பத்தையும் ஏற்றுக்கொண்டது. அவள் ஒரு வருஷமாக ஊண் உறக்கமின்றி கிடந்து மெலிந்து வாடி இருந்தாள் ஆதலால் அவளது தேகத்தில் இளமை, நன்னிலைமை, தேகப்புஷ்டி முதலியவற்றால் உண்டாகும் தளதளப்பும், கொழுமையும், உன்னத வாமமும் அவளிடம் காணப்படவில்லை ஆனாலும், தன் கணவனை அடையப் போகும் பெரும் பாக்கியத்தை யுன்னி அவள் அடைந்த மனக் கிளர்ச்சியும், பெரு மகிழ்வுமே அவளை தாங்கிக் கொணர்ந்தன.
நெடுங்காலமாய் பிரிந்திருந்த தன் மணாளர் அன்றிரவு தன்னிடம் தனிமையில் வந்து பேசுவாரோ, பேசினாலும் எவ்விதம் பேசுவாரோ என்று பெரிதும் கவலை கொண்டு அவள் உள்ளூற மனமாழ்கியிருந்தாள். அதற்கு முன் நடந்தவைகளை மறந்துவிடுவதாகக் கடிதத்தில் எழுதி இருந்தவாறு அவர் யாவற்றையும் மறந்து தன்னோடு உண்மை அன்போடு மொழிவாரோ அன்றி மறுபடியும் யாவும் பழைய கதையாய் முடியுமோ வென்று அவள் பலவாறு நினைத்து நினைத்து இரவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தாள். அத்தகைய சகித்தலாற்றா மனநிலைமையினால், அவளது மெல்லிய மேனி ஜுர நோய் கொண்டு வெப்பமடைந்தது; பூக்களோ மோப்பக்குழையும்; பூவையரின் வதனமோ தம்மணாளரது கொடிய நோக்கால் குழையு மன்றோ ? அவள் அதற்கு முன் தனது நாயகனிடம் ஒரு நாளும் இன்புற்றிருந்தவள் அன்று. ஆதலின், இனித் தன் எதிர்கால வாழ்க்கை எப்படியிருக்குமோ வென்று அவள் கவலை கொண்டு ஏங்கினாள்.
கழிந்த ஒரு வருஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பகலே ஒரு யுகம் போல வளர்ந்து வருத்திக் கடைசியில் அகன்றது. இரவில் யாவரும் உணவருந்தித் தத்தம் சயனத்திற்குப் போயினர். மேனகா தனது படுக்கையறையிலிருந்த வண்ணம் தன் கணவன் அன்று தன்னுடன் தனிமையில் பேச வருவாரோ வென்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள். கடைசியாக அவர் தன் அறைக்குள் வந்து தன்னுடன் பேசாமல் சயனித்ததைக் காண, அவளது மனம் ஏங்கியது. அப்போதும் அவருடைய வெறுப்பும், கோபமும் தணியவில்லையோ வென அவள் ஐய முற்றாள். ஆயினும், அவர் சயன அறைக்கு வந்ததிலிருந்து அவருக்குத் தன் மீது சொற்பமாயினும் அன்பு பிறந்திருக்க வேண்டுமென்று நினைத்தாள்.
ஆனால், அவர் முதலில் தன்னோடு பேசுவாரென்று தான் எதிர் பார்ப்பது தகாதென
மதித்தாள்; பெண்பாலாகிய தானே முதலில் பணிவாக நடக்க வேண்டுமென்று
எண்ணினாள். ஆனால் எதைப்பற்றி அவரிடம் பேசுவ தென்பது அவளுக்குத் தோன்றவில்லை. சிறிது யோசனை செய்தாள். முதலில் அவருக்கு மகிழ்வுண்டாக்கும்படி தான் பேசவேண்டு மென்று நினைத்தாள். தான் முதலில் மன்னிப்புக் கேட்பது போலவும் இருத்தல் வேண்டும்; தானே முதலிற் பேசியதாயும் இருத்தல் வேண்டும் என்று நினைத்துச் சிறிது தயங்கி, கவிந்த தலையோடு நாணி நின்றாள்; பிறகு மெல்ல அவனுடைய காலடியிற் சென்று, தனது மென்மையான கரங்களால், தாமரை இதழால் தடவுதலைப் போல அவனுடைய காலை இன்பகரமாய் வருடினாள்; அன்று அவர் பேசாவிடினும், தான் அவரது காலைத் தீண்டியதற்காகக் கோபங்கொண்டு தன்னை உதைத்தாலும் அதையும் பெரும் பாக்கியமாகக் கொள்ளத் தயாராக இருந்தாள். அவன் அப்போதும் அவளிடம் பேசாமலும், எவ்வித தடையும் செய்யாமலும் அசைவற் றிருந்தான். அவ்விதம் இருவரும் இரண்டொரு நிமிஷ வெட்கத்தினாலும், பரஸ்பர அச்சத்தினாலும் மௌனம் சாதித்தனர். இனியும், தான் பேசாமல் இருந்தால் கூடாதென நினைத்த மேனகா, வருடியவாறே தனது கையால் அவனுடைய மார்பையும் கரங்களையும் தடவிப் பார்த்து, "ஆகா! என்ன இவ்வளவு இளைப்பு! முன்னிருந்த உடம்பில் அரைப்பாகங் கூட இல்லையே!” என்றாள்.
அவளது உள்ளத்தினடியிலிருந்து தோன்றிய அவ் வினிய மொழிகள் புல்லாங்குழலின் இன்னொலியைப் போல அவனது செவிகளிற் பட பஞ்சைப் போன்ற குளிர்ந்த அவளுடைய மெல்லிய கரம் உடம்பிற் படக் கணவன் ஆனந்த பரவசம் அடைந்து, அவளது பக்கம் திரும்பி, அவளை ஆசையோடு இழுத்துத் தனக்கருகில் உட்காரச் செய்தான். ஆனால் அவன் அப்போதும் வாயைத் திறக்கவில்லை. அவன் பேசாமையால் மேனகாவின் மனம் முன்னிலும் அதிகம் துடித்தது. "ஆகா! இன்னமும் கோபமா? இந்தப் பாவியோடு ஒருவார்த்தை சொல்லக்கூடாதா? இவ்வளவு நாழிகை பேசாமலிருந்து என்னைத் தண்டித்தது போதாதா?" என்றாள்.
சாமாவையரும், பெருந்தேவி அம்மாளும் போதித்து போதித்து அவனுடைய மனதை மாற்றி மேனகாவின் மீது நல்லெண்ணத்தையும் அன்பையும் உண்டாக்கியிருந்தனர் ஆதலாலும், கல்லையும் கரையச் செய்யும் தன்மை வாய்ந்த அவளுடைய அன்பு ததும்பிய கடிதத்தைக் கண்டு அவன் கழி விரக்கமும், மனது இளக்கமும் கொண்டிருந்தான் ஆதலாலும், அவன் அவளது விஷயத்தில் தான் பெரிதும் தவறு செய்ததாய் நினைத்து அதற்காக அவளிடம் அன்று மன்னிப்புப் பெறவேண்டு மென்று வந்தவன் ஆதலாலும், அவளுடைய செயலும், சொல்லும் அவனது மனத்தை முற்றிலும் நெகிழச் செய்தன. உள்ளம் பொங்கிப் பொருமி யெழுந்தது. அவன் இன்பமோ , துன்பமோ , அழுகையோ , மகிழ்வோ வென்பது தோன்றாவாறு வீங்கிய மனவெழுச்சியைக் கொண்டான். கனவிற் கள்வரைக் கண்டு அஞ்சி யோட முயல்வோர் கால்கள் தரையினின்று எழாமையால் வருந்துதலைப் போல அவன் சொல்ல விரும்பிய சொற்கள் தொண்டையினின்று வெளிவராமையால் அவன் வருந்திச் சிறிது நேரம் தவித்தான். "மேனகா! உன்னுடைய நல்ல குணத்தை உள்ளபடி அறிந்து கொள்ளாமல் மூடனாய் நான் உன்னை எவ்வளவோ வருத்தினேன்! நான் செய்த கொடுமைகளை நினைக்க என் மனமே பதறுகிறது! எவ்வளவு படித்தாலும் என்ன பயன்? மாற்றில்லா மணியான மனைவியை அன்பாக நடத்தும் திறமையற்ற பெருந் தடியனானேன். உன்னிடத்தில் அழகில்லையா? குணமில்லையா? நன்னடத்தை யில்லையா? நீ கற்பிற் குறைந்தவளா? காரியம் செய்யும் திறமையற்றவளா? நீ எதில் குறைந்தவள்?
உன்னை நான் ஏன் இவ்விதம் கொடுமையாக நடத்த வேண்டும்? உன்னுடைய பெற்றோரையும் உன்னையும் இப்படி ஏன் துன்ப சாகரத்தில் ஆழ்த்த வேண்டும்? சகல சுகத்தையும் காமதேனுவைப் போலத் தரும் தெய்வ ரம்பையாகிய உன்னை நான் இவ்வொரு வருஷமாக நீக்கி வைத்தது என்னுடைய துர்பார்க்கியமே யொழிய வேறில்லை. பாவியாகிய எனக்கு நற்பொருள் தெரியவில்லை. தானே தேடிவரும் இன்பத்தை அனுபவிக்கப் பாக்கியம் பெறாத அதிர்ஷ்ட ஹீனனானேன். போனது போகட்டும்; உன் விஷயத்தில் நான் இது வரையில் லட்சம் தவறுகள் செய்து உன்னை வதைத்தும் வைதும் கடின மனத்தனாய்த் துன்புறுத்தினேன். அவைகளை யெல்லாம் நீ இன்றோடு மறந்துவிடு. இனிமேல், உன் மனம் வருந்தும்படி நான் எந்தக் காரியமும் செய்வதில்லை. இது சத்தியம்” என்றான். அப்போது அவனுடைய கண்களினின்று கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அவளை அவன் அன்போடு இறுகக் கட்டி அணைத்துக் கொண்டான். அவளும் ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தாள் ஆனாலும், அவளுடைய கை மாத்திரம் அவனை வருடிய வண்ணம் இருந்தது.
அந்தக்கரத்தைப் பிடித்துப் பார்த்த வராகசாமி, "ஆகா! இரக்கமற்ற பாவியாகிய நான் சுட்ட வடுவல்லவா இது! அடி மேனகா! இவ்வளவு கொடுமை செய்த துஷ்டனாகிய என்னைக் கொஞ்சமும் வெறுக்காமல் நீ எவ்வளவு அதிகமாக விரும்புகிறாய்! சுகத்தைக் கருதிய பெண்கள் தமது கணவரிடம் வாஞ்சையை வைக்கின்றனர். ஓயாத் துன்பத்தை அனுபவித்தும், நீ என்னுடன் இருப்பதை விரும்புகிறாய்! ஆகா! காதலின் மகிமையை என்ன வென்று சொல்வது! சூட்டைப் பெற்ற உன் கை என்னை வருடி எனக்கு இன்பம் கொடுப்பதைக் காண்பதே எனக்குப் போதுமான தண்டனையாய் விட்டது. நடந்தவற்றை நினைக்க என் மனம் பதறுகிறது. இப்போது நான் அனுபவிக்கும் மன வேதனையைப் போல நான் என் ஆயுசு காலத்தில் அனுபவித்ததும் இல்லை ; இனி அநுபவிக்கப் போவதும் இல்லை" என்றான்.
அந்தரங்கமான அன்போடு மொழிந்த சொற்கள் பசுமரத்து ஆணிபோல மேனகாவின் மனதிற் புகுந்தன. அதுவரையில் அவள் அனுபவித்த எண்ணிறந்த துன்பங்களின் நினைவு முற்றிலும் அவளுடைய மனதை விட்டு அறவே ஒழிந்தது. நிகழ்ந்தவை யாவும் கனவாகத் தோன்றின. பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தாள்; மனவெழுச்சிப் பெருக்கால் பொருமினாள். ஆந்தக் கண்ணீர் அருவிபோலப் பொங்கி வழிந்து ஆடைகளை நனைத்தது. அதுவரையிற் கண்டும் கேட்டும் அறியாவாறு அவன் அன்று தன்னிடம் அணைவாகவும் உருக்கமாகவும் அந்தரங்க அன்போடும் தன்னை கனப்படுத்தி மொழிந்ததைக் கண்ட மேனகா இன்ப சாகரத்தில் ஆழ்ந்து அவனுடைய ஆலிங்கனத்திலிருந்து தன்னை விடாமல் நன்றாக இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். ஆகா! இவ்வளவு ஆழ்ந்த பிரியத்தை என்மேல் வைத்துள்ள உங்களை விட்டு நான் என் உயிரை யொழிக்க முயன்றேனே! அந்த விஷயத்தில் நான் பெருத்த அபராதியானேன். நீங்கள் என் பிழைகளை யெல்லாம் இன்றோடு மன்னித்து விடவேண்டும். இனி என்னுடைய நடத்தையால் உங்களுடைய முழுப் பிரியத்தையும் சம்பாதித்துக் கொள்ளும் விதத்தில் நான் நடக்கிறேன். இனி நீங்கள் அடித்தாலும், வைதாலும், சுட்டாலும் என் தகப்பனாருடைய வீட்டைக் கனவிலும் நினைக்கமாட்டேன். நான் இறந்தாலும் உங்கள் பாதத்தடியிலேயே இறக்கிறேன்" என்றாள்.
வரா:- எவ்வளவோ செல்வத்தில் இருக்கும் டிப்டி கலெக்டருடைய ஒரே பெண்ணான நீ அடக்க ஒடுக்கம், பணிவு, பொறுமை முதலிய அரிய குணங்களுக்கு இருப்பிடமா யிருக்கிறாயே! ஆகா! நான் எவ்வளவுதான் தேடி அலைந்தாலும் உன்னைப் போன்ற நற்குணமுள்ள பெண்மணியை நான் ஒரு நாளும் காணமாட்டேன் - என்றான்.
இவ்வாறு அவ்விரு யௌவனப் பருவத்தினரும், அவ்வொரு வருஷத்தில் நிகழ்ந்த விஷயங்களைப் பற்றி பேசியவண்ணம் அதிகக் கிளர்ச்சி அடைந்து மாறி மாறி ஒருவரை யொருவர் புகழ்வதும், மகிழ்வதும், மொழிவதும், அழுவதுமாய்த் தெவிட்டாத இன்பம் அனுபவித்திருந்தனர். அது இரவென்பதும், தாம் துயில வேண்டுமென்பதும் அவர் களுடைய நினைவிற்கே தோன்றவில்லை. அவ்வாறு அன்றிரவு முழுவதும் கழிந்தது. அவர்களுடைய ஆசையும் ஆவலும் ஒரு சிறிதும் தணிவடையவில்லை. மற்றவர் எழுந்து இறங்கி யதையும், சூரியன் மிக்க உயரத்திற் கிளம்பிவிட்டதையும் உணர்ந்த பிறகு, ஒருவாறு அச்சங்கொண்டு அவர்கள் வெளியில் வந்தனர். அவ்விரவு கால் நாழிகை நேரத்தைப் போலக் கழிந்து போனதைக் காண அவர்கள் ஏக்கம் கொண்டனர்.
விசனத்தின் சுமையால் தனது உடம்பின் சுறுசுறுப்பை இழந்து மிகவும் தளர்வடைந்து தோன்றிய மேனகா அன்று புதுப்பெண்ணாக மாறிவிட்டாள். அவளுடைய தேகம் பளுவற்று இலேசாய்த் தோன்றியது. சந்தோஷத்தால் அவளுடைய உள்ளமும், தேகமும் பூரித்தன. வதனத்திற் புதிய ஒளி ஜ்வலித்தது. தான் அங்கு மிங்கும் சென்ற தருணங்களில் தனது மணாளன் தன்னை ஒளிமறைவாய்க் கடைக்கணித்துப் புன்முறுவல் செய்ததைக் காண, அவள் பெருமகிழ்வடைந்து நிகரற்ற பேரின்பம் அனுபவித்தாள். அவ்வாறு அவர்கள் ஐந்து நாட்கள் அன்றில் பறவைகளைப் போல இணைபிரியாதிருந்து, கொஞ்சிக் குலாவி, எத்தகைய பூசலும் கவலையுமின்றி இன்பக் கடலிலாடி சுவர்க்க போகம் அனுபவித்தார்கள். இரவுகளை பேசியே கழித்தனர். பெருந்தேவி முதலியோர் அதனால் மிக்க மகிழ்வடைந்தோர் போலப் பாசாங்கு செய்து அவர்கள் இச்சைப்படி விடுத்து அவர்களுக்கு அநுகூலமாயிருந்து வந்தமையால், அவர்கள் அவ்வைந்து நாட்களிலும் நிகரற்ற இன்பம் அனுபவித்தனர். பெருந்தேவியின் தூண்டுதலினால் அவன் மாலை வேளைகளில் மேனகாவை வண்டியில் வைத்துக் கடற்கரைக்கும், விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடந்த நாடகங்களுக்கும் அழைத்துச் சென்றான். அவர்களுடைய விளையாடல்களை யெல்லாம் கவனிக்காதவர் போலத் தோன்றி ஒவ்வொன்றையும் செவ்வனே கவனித்து வந்த விதவைகள் இருவரும் பொறாமையால் வயிறு வெடிக்க உள்ளூற வருந்தினர். ஆனாலும், தமது சதியாலோசனைக்கு அது அநுகூலமானதென்று நினைத்து அவர்கள் வாளாவிருந்தனர்.
இளையோர் இருவரும் சயன அறையில் தனிமையில் இருக்கையில் விதவைகள் தமக்குள் கண்ணைச் சிமிட்டி உதட்டைப் பிதுக்கி ஏளனமாய்ப் பேசியும், தமது விரலை அறைப்பக்கம் நீட்டிப் பௌரஷம் கூறியுமிருந்து, அவர்கள் மொழிந்த சொற்களை யெல்லாம் உற்றுக் கேட்டு வந்தனர். ஒருவர் மீதொருவருக்குக் காதலும், அன்பும் நிமிஷத்திற்கு நிமிஷம் மலையாய்ப் பெருகியதைக் கண்ட விதவைகளும், சாமாவையரும் தம்முடைய வஞ்சக ஆலோசனையை அதி சீக்கிரத்தில் நிறைவேற்ற உறுதி கொண்டனர். அவர்களுடைய எண்ணம் நிறைவேறுவதற்கு அநுகூலமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ஆறாம் நாள் ஒரு பெருத்த கொலைக்கேசின் பொருட்டு வராகசாமி சேலத்திற்குப் போக நேர்ந்தது. அவன் எந்த வக்கீலின் கீழ் வேலை செய்து வந்தானோ அவருடன் அவனும் அவசியம் போகவேண்டியதாயிற்று. அதை முன்னாலேயே அறிந்திருந்த அம்மூன்று சதிகாரரும், அன்றிரவே தமது காரியத்தை நிறைவேற்றி விடத் தீர்மானித்தனர். ஆறாம் நாள் வராகசாமி உணவருந்தி எட்டு மணி வண்டிக்குப் புறப்பட ஆயத்தமானான். வீட்டை விடுத்து வெளிப்படுமுன் அவன் மேனகாவுடன் தனிமையில் தனது சயன அறைக்குள் சென்று "மேனகா! இந்த ஐந்து நாட்களாய் ஒரு நிமிஷமும் பிரியா-திருந்தோம். இப்போது உன்னை விட்டுப் போக மனமே இல்லை. ஏதோ என் மனசில் ஒரு வித சஞ்சலம் தோன்றி வதைக்கிறது. காலெழவில்லை. மனசும் சகிக்க வில்லை. என்ன செய்வேன்!" என்று கண்கலங்க மனதிளக உருக்கமாக நைந்து கூறினான். மேனகா கண்ணீர் விடுத்து விம்மி விம்மி அழுது தனது முகத்தை அவனது மார்பில் புதைத்து, "அங்கே எத்தனை நாள் இருக்க வேண்டும்?" என்றாள்.
வரா:- வேலையெல்லாம் அநேகமாய் நாளைக்கு முடிந்து போம். நாளை நின்று மறுதினம் காலையில் அவசியம் வந்துவிடுவேன். நீ அதுவரையில் மனசைத் தேற்றிக்கொண்டு கவலைப்படாமலிரு - என்று கூறி அவளை இழுத்து இறுகத் தழுவி முத்தமிட்டுக் கண்ணீரைத் துடைத்து விட்டான். அவனுடைய ஆலிங்கனத்திலிருந்து விடுபட மனமற்றவளாய் அவனை இறுகப் பிடித்துக் கொண்டு, "இன்றிரவு! நாளைப்பகல்! நாளையிரவு! அவ்வளவு காலம் நீங்கள் இல்லாமல் எப்படிக் கழியும்? நானும் கூட வந்தால் என்ன?" என்று கொஞ்சிய மொழியாற் கூறினாள். "ஒரு நாளைக்காக இங்கிருந்து அழைத்துப் போய் உன்னை அங்கே வைப்பதற்கு நல்ல வசதியான இடம் அகப்படாது. நீ பெரிதும் வருந்த வேண்டி வரும்" என்றான் வராகசாமி.
மேனகா , "ஆண்பிள்ளைக ளெல்லாம் மகா பொல்லா தவர்கள். அவ்வளவு பெரிய ஊரில் ஒரு பெண்பிள்ளை ஒருநாளைக்கு இருக்க வசதியான இடங்கொடுக்காத அந்த ஊர்ப்புருஷரை என்னவென்று சொல்வது! அந்த ஊரிலுள்ளவர் தங்கள் மனைவி மார்களையாவது வசதியான இடத்தில் வைத்திருக்கிறார்களா? அல்லது, அவர்களை யெல்லாம் அங்கே இடமில்லை யென்று அவரவர்களுடைய தாய் வீட்டிலேயே விட்டுருக்கிறார்களா?" என்று பரிகாசமாகக் கூறிப் புன்னகை செய்தாள்.
வரா:- நீ இங்கே ஒரு குறைவு மில்லாமல் சௌக்கியமா யிருப்பதை விட்டு வண்டியில் கண் விழித்து அங்கே வந்து ஏன் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்? ஒரு நாள் ஒரு நொடியில் கழிந்து போம். கவலைப் படாதே!
மேனகா:- நீங்கள் அவ்வித வருத்தங்களுக்கு ஆளாகும் போது நான் மாத்திரம் உயர்வா? வருத்த மெல்லாம் உங்களுக்கு, சுகமெல்லாம் எங்களுக்கோ? நாங்கள் மாத்திரம் வெயிலையே அறியாமல் நிழலிலேயே இருக்கப் பிறந்திருக்கிறோமா? நானும் வந்தால் துன்பம் ஆளுக்குப் பாதியாய்ப் போகுமே - என்றாள்.
வரா:- எங்களுக்கு அவ்வளவு துன்பம் தோன்றாது. நாங்கள் போஜன சாலையில் நூறு ஆண் பிள்ளைகளுடன் உட்கார்ந்து சாப்பிடுவோம்; நினைத்த இடத்தில் படுக்கையை விரித்து விடுவோம். ஸ்திரீகளுக்கு அது சரிப்படுமா! பாதக மில்லை. நீ இரு; வருத்தப்படாதே; வண்டிக்கு நாழிகை யாகிறது. நான் போய் விட்டு வருகிறேன் - என்று அவளை இன்னொருமுறை ஆலிங்கனம் செய்தான். அவள் அவனைத் திரும்பவும் இறுகப் பிடித்துக்கொண்டு, "நான் உங்களை விடமாட்டேன். குற்றவாளியே தன் கேசை எடுத்துச் சொல்லிக் கொள்ளட்டும். அவனுடைய நியாயம் அவனுக்குத் தெரியா விட்டால் அதற்காக நானா இங்கே துன்பப் படுகிறது?'' என்று வேடிக்கையாக நகைத்துக் கொண்டே மொழிந்தாள்.
வரா :- (அந்த இன்பத்தை விலக்க மாட்டாதவனாய் மதி மயக்கமடைந்து நகைத்த முகத்தோடு நின்று) ஐயோ பாவம்! நான் போகாவிட்டால் துரை நம்முடைய கட்சிக்காரனைத் தண்டித்து விடுவான். பணத்தை வாங்கிக்கொண்டு வக்கீல் வரவில்லை யென்று கட்சிக்காரன் மண்ணை வாரி இறைப்பான் - என்றான்.
மேனகா:- மண்ணை வாரி இறைத்தால் அது இந்த ஊர் வரையில் வராது;
எறிந்தவனுடைய கண்ணில் தான் படும். அந்தத்துரைக்கு ஏன் புத்தியில்லை ? அவனை ஏன் நாம் முதலில் தண்டிக்கக் கூடாது?
வரா -(புன்னகையோடு) எதற்காக அவனைத் தண்டிக்கிறது?
மேனகா:- கொலைக் குற்றத்துக்காக.
வரா:- (திகைத்து) அவன் யாரைக் கொலை செய்தான்?
மேனகா:- உயிராகிய உங்களை உடலாகிய என்னிட மிருந்து பிரித்து விடுவது கொலைக் குற்றமல்லவா! அவர்கள் கிழவியைக் கலியாணம் செய்து கொள்கிறவர்கள். அந்த துரையும் ஒரு பாட்டியைக் கலியாணம் செய்து கொண்டிருப்பான். அதனால் நாம் அனுபவிக்கும் சுகம் அவனுக்கு எப்படி தெரியப் போகிறது. இளந்தம்பதிகளை நாமேன் பிரிக்கவேண்டும் என்ற இரக்கம் இல்லையே அவனுக்கு - என்று பேசி மென்மேலும் உல்லாஸமாகப் பேசிக் கொண்டே இருந்தாள்.
வராகசாமி ஆனந்த மயமாய்த் தோன்றித் தனது மனையாட்டியின் மதுரமான விளையாட்டுச் சொற்களைக் கேட்டு மனங் கொள்ளா மகிழ்வை அடைந்தான்; அவளை விடுத்துப் பிரிய மனமற்றவனாய்த் தத்தளித்துத் தயங்கினான்; ஊருக்குப் போகாமல் நின்றுவிட நினைத்தான்.
அப்போது சாமாவையர், "அடே வராகசாமி! குதிரை வண்டி வந்து விட்டது. நாழிகை யாகிறது" என்றார்.
பெருந்தேவியம்மாள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு, "ஏனடா சாமா! வண்டி வந்தால் என்னடா? நிற்கட்டுமே; என்ன அவசரம்? ஊருக்குப் புறப்படுவ தென்றால் சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லிக்கொண்டு, பணமோ காசோ எடுத்துக்கொண்டு தானே வரவேண்டும். வண்டிக்காரனுக்கு முன்னால் உனக்கு அவசரமாடா! எட்டு மணி ரயிலுக்கு இப்போதே என்ன அவசரம்? மணி ஏழேகால் தானே ஆகிறது'' என்று வராகசாமியின் காதிற்படும் வண்ணம் கூறினாள்.
சாமா:- (புன்சிரிப்போடு) வண்டிக்காரனுக்காக அவசரப்படுத்த வில்லை. நாழிகை ஆய்விட்டது; ரயில் தவறிப் போனால் கேஸ் பாழாய்ப் போய் விடும். உனக்கென்ன கவலை யம்மா! வீட்டிற்குள் இருப்பவள். கேஸின் அவசரம் உனக்கெப்படி தெரியப் போகிறது! - என்று உரக்கக் கூவினார்.
உடனே மேனகா , "சரி சம்மன் வந்து விட்டது. போய் விட்டு வாருங்கள். ரயில்
தவறிப்போனால், சேலம் குற்றவாளியோடு நானும் இன்னொரு குற்றவாளி ஆகி விடுவேன். போய் விட்டு வாருங்கள்; வரும்போது எனக்கு என்ன வாங்கி வருவீர்கள்?" என்றாள். அவ்வாறு அவள் சலிப்பாக மொழிந்ததும் ஓர் அழகாய்த் தோன்றியது
வரா:- சேலத்தில் முதல் தரமான மல்கோவா மாம்பழம் இருக்கிறது. அதில் ஒரு கூடை வாங்கி வருகிறேன் - என்று கடைசியாக அவளை இழுத்து ஆலிங்கனம் செய்து
முத்தமிட்டான்.
அப்பெண்மணி கொடி போல அவனைத் தழுவிய வண்ணம், " எந்த மல்கோவாவும் இந்தச் சுகத்துக்கு இணை யாகுமோ! இதைக் கொண்டு வந்தால் போதும்" என்றாள்.
வரா :- எதை?
மேனகா:- தாங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பாகிய பழத்தை வட்டியும் முதலுமாக ஒரு வண்டியளவு கொண்டு வாருங்கள். ஒரு கூடையளவு போதாது - என்று மெதுவாக அவனை விடுத்து நகர்ந்து அவன் போவதற்கு இடையூறின்றி விலகி நின்றாள்.
அடுத்த நிமிஷம் வராகசாமி வெளியில் வர, அவனும் சாமாவையரும் வண்டியில் ஏறிக் கொண்டனர். வண்டி புறப்பட்டு சென்டிரல் ஸ்டேஷனை நோக்கிச் சென்றது.
*****
இரவு ஒன்பது மணியாயிற்று. ஒரு பெட்டி வண்டியில் வந்து வாசலில் இறங்கிய சாமாவையர் பெருந்தேவியைக் கூவியழைத்துக் கொண்டே உட்புறம் நுழைந்தார்.
பெருந்தேவியம்மாள், "ஏனடா! வண்டி அகப்பட்டதா?" என்றாள்.
தனது கணவன் திரும்பி வந்து விடக்கூடாதா வென்று நினைத்து இன்பக் கனவு கண்டுகொண்டே இருந்த மேனகா சாமாவையருடைய குரலைக் கேட்டுக் கதவடியில் மறைந்து நின்று அவருடைய சொற்களைக் கவனித்தாள். கோமளம் ஒரு மூலையில் படுத்துப் பொய்த் துயிலி லிருந்தாள்.
சாமா:- நீங்களெல்லோரும் சாப்பிட்டு விட்டீர்களா? - என்றார்.
பெரு:- ஆய்விட்டது; என்ன விசேஷம் ? என்றாள்.
சாமா:- சரி! அப்படியானால் புறப்படுங்கள். கேஸை வேறு தேதிக்கு மாற்றி விட்டதாகத் தந்தி வந்து விட்டது. வராகசாமி போகவில்லை. வி. பி. ஹாலில் இன்றைக்கு , "சகுந்தலா"நாடகம், வராகசாமி உங்கள் மூவரையும் அழைத்து வரச் சொன்னான் என்றார்.
-----------------
மேனகா :
அதிகாரம் 6 - வலையிற்பட்ட மடவன்னம்
அதைக் கேட்ட மேனகா உள்ளூறப் பெருமகிழ்ச்சி கொண்டாள். அதற்குமுன் அவளது கணவன் அவளை நாடகம் பார்க்க அழைத்துப் போயிருந்தமையால், அதைப் பற்றிச் சிறிதும் சந்தேகங் கொள்ளாமல் சாமாவையருடைய சொற்களை அவள் உண்மையாக மதித்தாள். பெருந்தேவி கோமளத்தை யெழுப்பி விஷயத்தைத் தெரிவிக்க, அதற்கு முன் தமக்குள் முடிவு செய்யப்பட்டிருந்த அந்தரங்க ஏற்பாட்டின்படி கோமளம், " எனக்குத் தூக்கம் வருகிறது; என்ன சாகுந்தலா வேண்டியிருக்கிறது? எத்தனையோ தரம் "பிழைக்குந்தலா"வைப் பார்த்தாய் விட்டது. மூன்றே முக்கால் நாடகத்தை வைத்துக்கொண்டு முப்பது வருஷமாய் ஆடினதையே ஆடியாடிச் சொன்னதையே சொல்லிச் சொல்லி அழுது காதைத் துளைக்கிறார்கள். நான் வரவில்லை, நீங்கள் போய் விட்டு வாருங்கள். நான் அகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள். அதைக் கேட்ட பெருந்தேவி, "அடி! சரிதானடி வாடி; எழுந்திருந்து வண்டியில் உட்கார்ந்தால் தூக்கம் போய் விடுகிறது. நீ வராவிட்டால் நாங்களும் போக மாட்டோம். மேனகா! இவளுக்கு நீ சொல்லடி!" என்றாள்.
மேனகா:- நீங்கள்தான் சொல்லுகிறீர்களே; அதற்குமேல் அதிகமாக நான் என்ன சொல்லப்போகிறேன்? சின்னக்கா! வாருங்கள், வேடிக்கையாகப் போய்விட்டு வருவோம் - என்று நயமாகக் கூறினாள்.
கோமளம்:- இல்லை இல்லை. எனக்குத் தூக்கம் சகிக்கக்கூட வில்லை. கூத்தாடிகளிடத்தில் வீணாகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, அங்கே வந்து சாமியாடி விழுந்து பக்கத்திலிருப்பவர்களிடம் வசவும் இடியும் ஏன் பெற வேண்டும். நீங்கள் போங்கள். நான் வரவில்லை - என்று மறுமொழிக் கிடமின்றி உறுதியாகச் சொல்லி விட்டாள். பெருந்தேவியம்மாள் ஐந்து நிமிஷத்திற்குள் அறைகளைப் பூட்டிக் கொண்டு மேனகாவுடன் புறப்பட்டாள். இருவரும் வண்டியின் உட்புறத்தில் உட்கார்ந்தனர். சாமாவையர்வெளியில் வண்டிக்காரனோடு அமர்ந்தார்.
பெரு :- அடே சாமா! வண்டி கடற்கரைப் பாதையின் வழியாகப் போகட்டும் - என்றாள்.
வண்டி அவ்வாறே கடற்கரைப் பக்கமாகத் திரும்பிச் சென்று அங்கிருந்த அழகான சாலையை அடைந்தது. மேனகா தனது ஆசை மணாளனைக் காணப்போகும் நினைவினால் மனவெழுச்சியும் மகிழ்வும் கொண்டிருந்தாள் ஆனாலும் ஒருவித சஞ்சலம் அவளது மனதின் ஒரு மூலையில் தோன்றி அவளை வருத்தியவண்ணம் இருந்தது. அங்கு தோன்றிய கடற்கரையின் அற்புத வனப்பைக் காண, அவளது மனதும், நாட்டமும் அதன்மேற் சென்றன. அந்தப் பாட்டையில் அப்போதைக்கப்போது இரண்டொரு மனிதரையும், யாதாயினுமொரு மோட்டார் வண்டியையுங் கண்டனர். நிலவு பகலைப் போல எங்கும் தவழ்ந்திருந்தது; மிக்க அழகுபடச் சமதூரங்களில் அமைக்கப்பெற்றிருந்த கம்பங்களில் காணப்பட்ட மின்சார விளக்குகளின் வரிசை நிலமகளின் கழுத்தில் அணியப்பெற்ற வைர மாலையைப் போலக் காணப்பட்டது.
நிலமகளின் நெற்றித் திலகத்தைப் போலத் தனது மென்மையான சந்திர பிம்பம் பன்னீர் தெளிப்பதைப் போல தனது மென்மையான கிரணங்களால் அமுதத்தை வாரி வீசிக்கொண்டிருந்தது. கடலினில் உண்டான குளிர்காற்று ஜிலு ஜிலென்று வீசி மனிதரைப் பரவசப்படுத்தி ஆனந்தத் தாலாட்டு பாடியது. பாதையின் சுத்தமும் தீபங்களின் வரிசையும், கடற்பரப்பின் கம்பீரமும், மந்தமாருதத்தின் சுகமும், விண்ணில் நாட்டியமாடிய தண்மாமதியத்தின் இனிமையும் ஒன்று கூடி விவரிப்பதற்கு இயலாத ஒருவிதப் பரமானந்தத்தை உண்டாக்கின. தானும் தன்னாயகனும் அப்போது அங்கு தனிமையிலிருந்தால் அது எவ்வளவு இன்பமா யிருக்கும் என்று மேனகா நினைத்தாள். தன் கணவனின்றித் தான் மாத்திரம் அத்தகைய அற்புதக் காட்சியை அனுபவித்தல் தகாதென நினைத்து அவள் அவ்வின்பத்தில் சென்ற தனது மனதைக் கண்டித்து வழிமறித்தாள்; அதிசீக்கிரம் தான் தனது கணவனைக் காணலாமென்று இன்பக் கனவு கண்டு கொண்டே சென்றாள். பெருந்தேவி அவளிடத்தில் ஓயாமல் மகிழ்வான வார்த்தைகளைச் சொல்லியவாறு இருக்க, வண்டி கோட்டையைக் கடந்து ஹைக்கோர்ட்டுப் பக்கம் திரும்பி அங்கப்ப நாயக்கர் தெருவிற்குள் நுழைந்தது.
மேனகா அது எவ்விடமென்று பெருந்தேவி யிடத்தில் கேட்க, அவள் அதை நன்றாக அறிந்திருந்தாளானாலும் உண்மையை மறைத்து அது வி. பி. ஹாலுக்கு சமீபமென்றும்
தெரிவித்தாள்.
முன்னொரு நாள் தானும் தனது கணவனும் சென்றபோது இரு பக்கங்களிலும் இருந்த கட்டிடங்களொன்றும் அப்போது காணப்படவில்லை; தவிர அதில் அரைப்பங்கு நாழிகையில் தாம் இருவரும் வி. பி. ஹாலை அடைந்து விட்டதாகவும் தோன்றியது. எனினும், அவர்கள் வேறு வழியாகப் போகிறார்கள் என்று மேனகா நினைத்தாள். மேனகா அதற்கு முன்னர் தன்னைக் கணவன் கொடுமையாக நடத்திய நாட்களையும், அந்த முறை தான் வந்த பிறகு தன்னை நடத்திய விதத்தையும் நினைத்து, தனக்கு ஏதோ நல்ல காலமே திரும்பி யிருப்பதாக எண்ணி உள்ளூறப் பூரிப்படைந்தாள். தான் எத்தனையோ தடவைகளில் கிணற்றில் விழுந்து விட முயன்றதையும், பொறுத்தார் பூமியாள்வார் என்றபடி தான் தன் மனதின் உறுதியால் யாவற்றையும் சகித்திருந்தமையால் அப்போது நிகரற்ற சுகம் அனுபவித்ததாயும் நினைத்துத் தற்பெருமை பாராட்டிக் கொண்டாள்; தன் மணாளர் இனி எப்போதும் தன்னை அன்பாகவே நடத்துவாரென்றும், தன்னைப்போன்ற பாக்கியவதிகள் எவரும் இருக்க மாட்டார்களென்றும் நினைத்தாள். அடுத்த நொடியில் பாம்பு கடித்து மரிக்கப்போகும் ஒரு மனிதன் நிலம் வாங்கவும், மெத்தை வீடு கட்டவும், இன்னொரு மனைவியை மணக்கவும் நினைப்பவைபோல மேனகா தனது காலடியிற் கிடந்த வஞ்சகப் பாம்பைப் பற்றிச் சிறிதும் சந்தேகிக்காமல் மனக்கோட்டை கட்டி மகிழ்ச்சி கொண்டிருந்தாள். அந்தத் தெருவில் நெடுந்தூரம் வந்து விட்டதைப் பற்றி திரும்பவும் ஐயமுற்ற மேனகா , " என்ன இது? நாம் இப்போது எங்கிருக்கிறோம்? வி.பி. ஹால் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?" என்றாள்.
பெரு:- இதோ வந்துவிட்டது. நாம் குறுக்கு வழியாக வந்திருந்தால் இவ்வளவு நாழிகையில் போயிருக்கலாம், கடற்கரை வழியாக மெல்ல வந்தமையால் தூரம் போல இருக்கிறது - என்றாள்.
இரண்டொரு நிமிஷத்தில் வண்டி ஒரு பெருத்த மாளிகையின் வாசலில் வந்து நின்றது. தெருவில் ஆங்காங்கு மின்சார விளக்குகள் நட்சத்திர மணிகள் போலச் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்த மாளிகையின் வாசலில் இரண்டு விளக்குகள் இருந்தன. வண்டி நின்றவுடன் மேனகா, “இது வி. பி. ஹாலை போல இல்லையே!" என்றாள்.
பெருந்தேவி, "சாமா! வண்டியை முன்பக்கத்துக்குக் கொண்டு போகாமல் பின் பக்கத்தில் ஏன் நிறுத்தினாய்?" என்றாள்.
சாமா:- வராகசாமி இவ்விடத்தில் நமக்காக காத்திருப்பதாயும், பின்பக்கமாக உள்ளே போனால் முன்னே நல்ல இடத்தில் உட்காரலாமென்றும் சொன்னான். அவன் இங்கே எதிரில் இருப்பான், இறங்குங்கள் - என்றார்.
உடனே பெண்டீரிருவரும் வண்டியை விடுத்திறங்கினர். சாமாவையரும் இறங்கினார். மாளிகையின் வாசலிலிருந்த ஒரு மகம்மதியனைப் பார்த்த சாமாவையர், "பியூன்! ஐயா எங்கே?'' என்றார். அவன், ''உள்ளே இருக்கிறார்; போங்கள்' என்று மரியாதையாக மறுமொழி கூறினான்.
சாமா:- சீக்கிரம் வாருங்கள்; நாழிகையானால் கதவைச் சாத்தி விடுவார்கள் - என்றவண்ணம் உட்புறம் நுழைந்தார். பெண்டீரிருவரும் அவரைத் தொடர்ந்து உட்புறம் நுழைந்தனர். அவர்கள் உட்புறமிருந்த சில அகன்ற அறைகளைக் கடந்து செல்ல, எதிரில் மேன் மாடப் படிகள் தோன்றின. அவர்கள் அவற்றின் வழியாக ஏறிச்சென்றனர். எங்கும் மனிதரே காணப்படவில்லை. அவர்கள் மேன்மாடத்தை அடைந்தபின் அங்கிருந்த பல நெருக்கமான அறைகளைக் கடந்து மென்மேலும் நடந்தனர். ஒவ்வோர் அறையிலும், மின்சார விளக்குகள் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. பளபளப்பான புதிய நாற்காலிகளும், அழகிய சோபாக்களும், நிலைக் கண்ணாடிகளும், பூத்தொட்டிகளும், எங்கும் நிறைந்து காணப்பட்டன. அழகான உயர்ந்த இரத்தின கம்பளங்கள் தரை
முழுவதும் விவரிக்கப்பட்டிருந்தன.
சாமாவையர், "பெருந்தேவி! இதுதான் வேஷம் போட்டுக்கொள்ளு மிடம். இது எவ்வளவு அழகா யிருக்கிறது பார்த்தாயா? எல்லோரும் வேஷம் போட்டுக் கொண்டு முன்னால் போய்விட்டார்கள்'' என்றார்.
பெரு :- கூத்தாடிகள் அடுத்த அறையிலிருப்பார்கள். இப்படியே வர எனக்கு நிரம்பவும் வெட்கமாக இருக் கிறதப்பா; நானும் மேனகாவும் வாசல் பக்கமாக வருகிறோம் - என்று கூறிய வண்ணம் அப்படியே நின்றாள்.
சாமா:- சரி; அப்படியானால் நீங்கள் இவ்விடத்திலேயே இருங்கள், நான் வராகசாமியிடம் போய் டிக்கட்டுகளை வாங்கி வருகிறேன். நாம் முன்பக்கமாகவே உள்ளே போகலாம் - என்றார்.
பெரு:- அப்படியானால் சரி, சீக்கிரமாக வா - என்றாள்.
சாமாவையர் அவர்களை அவ்விடத்தில் விடுத்து எதிரி லிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்து போனார்.
கால் நாழிகை கழித்து, உட்புறத்தில் ஹார்மோனிய வாத்தியத்தின் இன்னோசை யெழுந்தது. அவர்கள் வஞ்சகமாக நடிக்கிறார்களென்று கனவிலும் சந்தேகியாதிருந்த மேனகா, தனது கணவனை விரைவில் காணப் போவதாக நினைத்துத் துடித்து நின்றாள்.
பெரு:- மேனகா! இந்த இடம் எவ்வளவு சொகுசா யிருக்கிறது பார்த்தாயா! ஆகா! இந்த இடம் நமக்குக் கிடைத்துவிட்டால் எவ்வளவு சுகமா யிருக்கும் - என்றாள்.
மேனகா:- நம்முடைய அகத்தில் இருப்பதைவிட இங்கே அதிகமான சுகம் என்ன இருக்கிறது? எல்லாவற்றிற்கும் மனசுதான் காரணம். பெரிய கண்ணாடிகளால் என்ன உபயோகம்? நம்மை நாமே நன்றாகப் பார்த்துக் கொள்ள ஈசுவரன் கொடுத்த கண்ணிருக்க அதற்கு நிலைக்கண்ணாடியின் உதவி எதற்கு? நம்முடைய சாதாரண விளக்கிலிருந்து உண்டாகும் வெளிச்சத்தில் நம்முடைய காரியம் ஆக வில்லையா? எந்தப் பொருள் நம்முடைய கண்ணிற் படாமல் மறைந்திருக்கிறது? முன் தோன்றாத வஸ்து ஏதாயினும் மின்சார விளக்கினால் நமது கண்ணுக்குப் புலப்படுகிறதா? ஒன்றுமில்லை. இதனால் கண்ணைத்தான் கெடுத்துக் கொள்கிறோம். எனக்கு இதெல்லாம் பிடிக்கிறதில்லை. ஒரு குடும்பத்தினர் ஒருவரிட மொருவர் அந்தரங்க அன்போடு நடந்துவந்தால், ஒரு குடிசை வாசமானாலும் அது பெருத்த சுகந்தான். இல்லையானால், அரண்மனையில் பஞ்சணையில் நடந்தாலும் சுகமில்லை - என்றாள்.
பெரு:- என்னடீ இந்த சாமத்தடியன் போனவனைக் காணோமே! அவனுக்கு யாராவது கொஞ்சம் புகையிலை கொடுத்துவிட்டால் அவன் உலகத்தையே மறந்துவிடுவான்.
பெண்பிள்ளைகளை இங்கே அந்தரத்தில் நிறுத்தி வைத்து விட்டு எங்கேயோ போய் உட்கார்ந்து கொண்டானே கட்டையிலே போவான்! என்று ஆத்திரமாக மொழிந்தாள்.
''உங்கள் தம்பியைக் காணாமல் கூட்டத்தில் ஒருவேளை தேடி அலைகிறாரோ என்னவோ!" என்றாள் வஞ்சகத்தை அறியாத வஞ்சி.
''ஆம் ஆம். அப்படித்தானிருக்கும். அடுத்த அறையில் அவனிருக்கிறானா வென்று நான் எட்டிப்பார்க்கிறேன்" என்று சொல்லிய வண்ணம் பெருந் தேவியம்மாள் எதிரிலிருந்த அறையின் நிலைப்படியண்டையில் போய் அதன் கதவைச் சிறிது திறந்து அப்புறம் எட்டிப்பார்த்த வண்ணம், "ஏனடா சாமா! நாங்கள் எவ்வளவு நாழிகையடா இங்கே நிற்கிறது? எங்கே டிக்கட்டு? இப்படிக் கொடு!'' என்று கேட்டுக்கொண்டே கதவிற்கு அப்புறம் நடந்தாள். அவள் டிக்கட்டை வாங்கிக்கொண்டு திரும்பி வருவாளென்று நினைத்து மேனகா அப்படியே சிறிது நேரம் நின்றாள். ஆனால், அப்புறஞ் சென்ற பெருந்தேவியம்மாளின் குரலாகிலும், சாமாவையரின் குரலாகிலும் பிறகு உண்டாக வில்லை. அவ்விதமே மேனகா ஒன்றையும் அறியாதவளாய்க்கால் நாழிகை நின்றாள்.
எவரும் இல்லாத இடத்தில் தான் தனிமையில் நின்றதைப் பற்றியும், போனவர்கள் திரும்பி வராததைப் பற்றியும், அவள் ஒரு விதக் கவலையும் அச்சமும் கொண்டு தத்தளித்து நின்றாள். அரை நாழிகை யாயிற்று. அவளுடைய மனோவேதனை முன்னிலும் அதிகரித்தது. இன்னதென்று விவரித்தற்கு இயலாத ஒரு வித துன்பமும் சந்தேகமும் வதைக்க ஆரம்பித்தன. தான் முன்னால் சென்று எதிரில் தோன்றிய அறைக்குள் எட்டிப் பார்க்கலாமா என்னும் ஒருவித எண்ணம் மனதில் உதித்தது. ஆனால் காலெழவில்லை. அவள் மெல்ல நடந்து எதிரிலிருந்த வாசலையடைந்து மிக்க அச்சத்தோடு உட்புறம் எட்டிப் பார்த்தாள். அந்த அறையும் விசாலமாய்க் காணப்பட்டது.
அதற்குள்ளும் மனிதர் காணப்படவில்லை. தான் செய்யத் தக்க தென்ன என்பதை அறியாமல் அவள் மனக்குழப்பம் அடைந்தாள். முதலில் நின்ற அறையிலேயே நிற்பதா, அன்றி எதிரில் தோன்றிய அறைக்குள் நுழைந்து பார்ப்பதா வென்னும் நினைவுண்டா-யிற்று. எவ்வித முடிவுக்கும் வரமாட்டாமல் அவள் தடுமாறித் திகைத்து அவ்விதமே ஐந்து நிமிஷ நேரம் நின்றாள். மனம் மேலே செல்லத் தூண்டியது. நாணம் காலைப் பின்புறம் இழுத்தது. அவ்வாறு கலக்கங்கொண்ட நிலையில் எதிரிலிருந்த அறைக்குள் மெல்ல நுழைந்தாள்; அதற்கப்பால் எங்கு செல்வதென்பதை அறியாமல் மயங்கி நின்றாள். எப்பக்கத்திலும் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அப்புறம் செல்ல வழி தோன்றவில்லை. அவ்வாறு தத்தளித்து நின்ற தருணத்தில், அவள் எந்தக் கதவைத் தாண்டி அந்த அறைக்குள் வந்தாளோ அந்தக் கதவை யாரோ சாத்தி வெளியில் தாளிட்டதை உணர்ந்தாள். அவள் கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போலப் பெரிதும் கோபமும், அச்சமும் அடைந்தவளாய்க் கையைப் பிசைந்து கொண்டு, "இதென்ன பெருத்த துன்பமாய்ப் போய்விட்டதே! போனவர்கள் திரும்பி வரவில்லையே! அங்கே என்ன சம்பவித்ததோ தெரிய வில்லையே! ஒருவேளை பிராணபதிக்கு ஏதாவது துன்பம் சம்பவித்திருக்குமோ? அன்றி, அவரைக் காணாமல் இவர்கள் தேடுகிறார்களோ? யாராவது வந்து நான் இவ்விடத்தில் தனியாக நிற்பதைப்பற்றி கேட்டால் நான் என்ன மறுமொழி சொல்லுவேன்? ஐயோ! தெய்வமே! இன்று என்ன ஆபத்தோ தெரியவில்லையே! ஈசுவரா! நீயே துணை" என்று பலவாறு எண்ணமிட்டு ஆற்று மணலில் வெயிற் காலத்தில் கிடந்து துடிக்கும் புழுவைப் போலத் துடித்துக் கையைப்பிசைந்து கொண்டு நின்றாள்.
அவ்வாறு ஒரு நாழிகை கழிந்தது. அவளது மனம் பட்ட பாட்டை எப்படி விவரிப்பது! மேலும் செல்லலாம் என்னும் கருத்தோடு அவள் கதவுகளை அழுத்தி அழுத்திப் பார்த்தாள். எல்லாம் அப்புறம் தாளிடப் பெற்றோ பூட்டப் பட்டோ இருந்தன. சாமாவையரும், பெருந்தேவியம்மாளும் எங்கு சென்றார்களோ? வழியில்லாதிருக்க அவர்கள் எப்படி போனார்களோ? அவர்களது கதி என்னவானதோ? என்று நினைத்து நினைத்து அவள் வருந்தினாள். அப்போதும் அவளுக்கு அவர்களின் மீது எவ்வித ஐயமும் தோன்றவில்லை. குழம்பிய மனதும் பதைபதைத்த உடம்புமாக மேனகா நின்றாள்.
அந்த அறை ஒரு சயன அறைபோல் மிக்க அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கந்தவருப் பதுமைகள் புஷ்பங் களைச் சொரிதலைப்போன்ற உருவங்களின் கையிற் பொருத்தப்பட்ட மின்சார விளக்குகள் நவரத்தினக் கற்களைப் போலவும் நக்ஷத்திரச் சுடர்கள் போலவும் பல வருணங்களிற் காணப்பட்டன. ஒரு முழ உயரம் காணப்பட்ட வெல்வெட்டு மெத்தை, திண்டுகள், தலையணைகள் முதலியவற்றைக் கொண்ட ஒரு தந்தக் கட்டில் இருந்தது. அதன் மீது அழகிய வெள்ளை நிறக் கொசுவலையும், மெத்தையின் மீது மெல்லிய வழுவழுப்பான பட்டுப் போர்வையும் காணப்பட்டன. மின்சார விசிறிகளின் சுழற்சியால் குளிர்ந்த இனிய காற்று உடம்பில் தாக்கிய வண்ணமிருந்தது; எங்கும் நிருவாணமான மங்கையின் படங்களும் விகாரமான படங்களும் காணப் பட்டன. யாவற்றையும் நோக்கிய மேனகா அது ஒருகால் நாடகத்தின் காட்சியாய் (சீனாக) இருக்குமோ வென்று நினைத்து மயங்கினாள். அந்த அறையில் இருந்த பொருட்களைக் காண அவளுடைய தேகம் குன்றியது. அங்கிருந்த ஒரு கடிகாரத்தின் கைகள் பத்து மணி நேரத்தைச் சுட்டின.
அந்த மகா பயங்கரமான நிலைமையில் ஒரு கதவு திடீரென்று திறக்கப்பட்டது. மேனகா திடுக்கிட்டு யார் வரப்போகிறார்களோ வென்று அந்தப் பக்கத்தைப் பார்த்தாள். அடுத்த நொடியில் மேனகாவைப் பார்த்துப் புன்னகை செய்த வதனத்தோடு ஒரு யௌவனப் பருவ மகம்மதியன் உள்ளே நுழைந்தான். அவனைக் கண்ட மேனகாவினது மனம் பதைத்தது. தேகம் துடித்துப் பறந்தது. அவள் நெருப்பின் மீது நிற்பவளைப் போலானாள். அவளுடைய சிரம் சுழல ஆரம்பித்தது, அறிவு தள்ளாடியது. உயிர் துடித்தது. அது கனவோ நினைவோ வென்று நினைத்து முற்றிலும் திகைத்துக் கல்லாய்ச் சமைந்து நின்றாள்.
----------------
மேனகா :
அதிகாரம் 7 - காட்சி தந்து மறைந்ததேன் காதலியே!
7-வது அதிகாரம்
மூன்றாவது நாட் காலையில் சேலத்திலிருந்து திரும்பி வந்த வராகசாமி அதிவிரைவாக வீட்டிற்குள் நுழைந்தான். மல்கோவா மாம்பழம் நிறைந்த ஒரு மூங்கிற் கூடையைத் தாங்கிப் பின்னால் வந்த வண்டிக்காரன் அதை வைத்து விட்டுத் தனது கூலியைப் பெற்று வெளியிற் சென்றான். அதற்கு முன் இரண்டு நாட்களாய் மேனகா மேனகா வென்று தியானம் செய்திருந்த வராகசாமி அந்த மடவன்னத்தைக் காணவும், அவளோடு தனிமையில் பேசவும் பேராவல் கொண்டிருந்தான். ஆதலால், அவளைத் தேடி ஒவ்வொரு அறையாக நுழைந்தான். துடிதுடித்துத் தோன்றிய அவனது கண்கள் அவ்வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் நுழைந்து அந்தப் பொற்பாவையைத் தேடி யலைந்தன. தன் சட்டை முதலிய உடைகளைக் கழற்றி அவற்றை வைக்கச் செல்பவன் போல அவன் தன் படுக்கையறைக்குள் சென்று அவ்விடத்தில் தேடினான். அவள் எங்கும் காணப்பட-வில்லை ; கோமளமும், பெருந்தேவியும், மகிழ்வற்ற வதனத்தோடும், அவனிடம் வெறுப்பைக் காட்டியும், அவன் வந்ததைப் பொருட் படுத்தாமலும் ஏதோ அலுவல் இருப்பவரைப்போலப் பித்தளைப் பாத்திரங்களையும் அம்மிக் குழவியையும் உருட்டி ஓசை செய்தவண்ணம் இருந்தனர். ஒருக்கால் தனது பிரிய நாயகி மாதவிடாய் கொண்டு வீட்டிற்கு வெளியில் சென்றிருப்பாளோவென ஐயமுற்று அவன் உடனே வெளியிற் சென்று திண்ணையிலிருந்த சிறிய அறையை நோக்கினான். அதன் கதவு வெளிப்புறம் தாளிடப் பெற்றிருந்தது. என்ன செய்வான்? தேகம் பதறியது. ஆவலோ அதிகரித்தது. சகோதரிமாரிடம் தன் மனைவி யெங்கே யென்று கேட்பதற்கும், ஒருவித வெட்கம் வருத்தியது. அத்தகைய நிலையில் உள்ளே வந்து ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்து, “கோமாளீ ” என்று மெதுவாகச் சிறிய பேயை அழைத்தான். அவள் வரவு மில்லை; ஏனென்று கேட்கவுமில்லை. அவனுடைய வியப்பும், வேதனையும், ஆவலும் அபாரமாய்ப் பெருகின.
அப்போது சாமாவையர் கவலை கொண்டு வாடிய வதனத்துடன் வந்து சேர்ந்தார். எப்போதும் புன்னகை கொண்ட சந்தோஷமான முகத்தோடு தோன்றும் அவ்வுல்லாச புருஷர் அன்று வழக்கத்திற்கு விரோதமாக அவ்வாறு தோன்றியதைக் கண்டு, தான் இல்லாத சமயத்தில் வீட்டில் ஏதோ விபரீதம் சம்பவித்திருப்பதாக வராகசாமி ஒருவாறு சந்தேகித்தான்.
உள்ளே வந்த சாமாவையர் நிரம்பவும் ஆவலோடு, ''அடே! வராகசாமி! சங்கதிகளை யெல்லாம் பெருந்தேவி சொன்னாளா?" என்றார்.
அதைக்கேட்டு திடுக்கிட்ட வராகசாமி, “இல்லையே! என்ன நடந்தது?" என்றான்.
சாமா:- பெருந்தேவியை அழைத்துக் கேள். அடீ பெருந்தேவி! இங்கே வா - என்றார்.
சமையலறைக் கதவின் மறைவில் ஆயுத்தமாக நின்றிருந்த மூத்த அம்மாள், " எல்லாம் நீயே சொல். எனக்கு இங்கே கையில் காரியமிருக்கிறது" என்றாள்.
வராக :- சாமா! நீதான் சொல்லடா; என்ன விளையாடுகிறீர்கள்? என்ன நடந்தது? - என்று பெருத்த ஆவலோடு கேட்டான்.
சாமாவையர் உடனே கனைத்துத் தமது தொண்டையைச் சரிபடுத்திக் கொண்டார்; முகத்தில் அதிகரித்த விசனக் குறியை உண்டாக்கிக் கொண்டவராய், "அப்பா வராகசாமி நான் என்ன சொல்வேன்! முந்தா நாள் நாம் புறப்பட்டு ரயிலுக்குக் போன பிறகு உன்னுடைய மாமனார் ஒரு பெட்டி வண்டியில் வந்தாராம். வண்டி வாசலில் நின்றதாம். அவர் வண்டியை விட் டிறங்காமல் ஒரு சேவகனை உள்ளே அனுப்பினாராம். அவன் உள்ளே வந்து டிப்டி கலெக்டர் வாசலில் பெட்டி வண்டியில் இருந்ததாகவும், மேனகாவைக் கூப்பிட்டதாகவும் சொன்னா னாம். உடனே மேனகா வெளியில் போய் வண்டியின் பக்கத்தில் நின்று அவரோடு அரைநாழிகை வரையில் பேசிக் கொண்டிருந்தார்களாம். பிறகு டிப்டி கலெக்டர் வண்டியின் கதவைத் திறக்க, அவளும் ஏறி வண்டிக்குள் உட்கார்ந்தாளாம். உடனே வண்டி போய்விட்டதாம்.
அவர் அவளை எங்கேயாவது அழைத்துக் கொண்டுபோய் விட்டுத் திரும்பவும் கொணர்ந்து விடுவாரென்று இவர்கள் நினைத்தார்களாம். அவன் திரும்பி வரவே இல்லை. நேற்று முழுவதும் பார்த்தோம்; இன்னமும் வரவில்லை. ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார் போலிருக்கிறது. உனக்குத் தந்தி மூலம் தெரிவிக்க நினைத்தோம். நீ எவ்விடத்தில் தங்குகிறாய் என்பது தெரியாது ஆகையால், எந்த விலாசத்துக்கு அனுப்புவ தென்னும் சந்தேகத்தினால் அப்படிச் செய்யக் கூடவில்லை. முந்தா நாளிரவு, நேற்று முழுவதும், டிப்டி கலெக்டருக்கு வேண்டிய இடமெல்லாம் தேடிப் பார்த்தோம். அவர்கள் எங்கும் காணப்படவில்லை ! அவர் அவளை ஊருக்குத்தான் அழைத்துக்கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால், அவர் உள்ளே வராமலும் எவரிடத்திலும் சொல்லாமலும் பெண்ணை அழைத்துப்போனதும், மேனகா அப்படியே வண்டியில் ஏறிப் போனதுமே வருத்தமாக இருக்கிறது'' என்றார்.
அதைக் கேட்ட வராகசாமிக்கு அடக்கவொண்ணா கோபமும், ஆத்திரமும் உண்டாயின. அவனுடைய தேகம் பதறியது. " என்ன ஆச்சரியம்! ஏழெட்டு நாட்களுக்கு முன் வந்தவன், இங்கே அன்னியோன்னியமா யிருந்து விட்டுப் போயிருக்கிறான். இதற்குள் அவனுக்கு என்ன கிறுக்கு வந்துவிட்டது! ஏனடி அக்கா! அவள் உங்களில் யாரிடத்திலும் சொல்லிக் கொள்ளா மலா போய்விட்டாள்?" என்று கேட்டான்.
அதைக் கேட்ட பெருந்தேவி மனத்தாங்கலாக, "அவளேன் சொல்லுவாள்? நாங்கள் அவளுக்கு இலட்சியமா? நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்த மாதிரி ஊரில் ஒரு வருஷமாக நாறிக் கிடந்த தரித்திரத்தைத் திரும்ப அழைத்து வந்து நல்ல பதவியில் வைத்தோமல்லவா! அவளுடைய பகட்டைக் கண்டு அதற்குள் நீயும் மகிழ்ந்து போய்விட்டாய். அதனால் அந்த நாய்க்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது. உன்னுடைய தயவைப் பூர்த்தியாகச் சம்பாதித்துக் கொண்டவளுக்கு எங்களுடைய தயவு எதற்கு? எங்களிடம் ஏன் சொல்லுவாள்?" என்றாள்.
அதைக் கேட்ட வராகசாமிக்கு டிப்டி கலெக்டர் மீதும், மேனகாவின் மீதும் அடக்கமுடியாத கோபம் பொங்கி யெழுந்தது. அவர்கள் யாராயினும் அப்போது எதிரிலிருந்தால் அவன் அப்படியே கசக்கிச்சாறு பிழிந்திருப்பான். அவனுடைய கண்ணில் தீப்பொறி பறந்தது. "இந்தப் பீடைகளின் உறவு இன்றோடு ஒழிந்தது. இனி செத்தாலும் நான் இவர்களுடைய முகத்தில் விழிப்பதில்லை ! சனியன் ஒழியட்டும்" என்று அவன் உறுதியாகக் கூறினான். எவ்வளவோ சிபார்சு செய்து சில நாட்களுக்கு முன்னரே பெண்ணைக் கொணர்ந்து விட்டவன், ஒரு வாரத்தில் யாதொரு காரணமுமின்றி அழைத்துப் போக வேண்டியதென்ன வென்பதே அவனது மனதைப் பெரிதும் வருத்தியது. வீட்டிலிருந்து வெளியே போக ஆரம்பித்தான்; இன்ன இடத்திற்குப் போகிறோம்; எவ்வளவு நேரமாக அலைகிறோம் என்பதை அறியாமல் பல தெருக்களின் வழியாகப் பைத்தியங் கொண்டவனைப் போல அலைந்து கடைசியில் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்தான். தண்ணீரின் ஓரமாக நடந்து நெடுந்தூரம் சென்றான். தானும் மேனகாவும் அதற்கு முன் வந்து உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் செல்ல, அவளுடைய வேடிக்கையான சொற்களும், அஞ்சு கத்தைப் போல அவள் கொஞ்சிக் குலாவித் தன்னோடு செய்த விளையாடல்களும், அவள் தன்னை உயிருக்குயிராய் நினைத்து அதைச் செயல்களில் காட்டி வந்ததையும், அவ்விடம் நினைப் பூட்டியது. அவளுடைய அரிய குணமும், ஆழ்ந்த காதலும் நினைவிற்கு வந்தன. அந் நினைவுகள் அவனது மனதைப் பெரிதும் வருத்தத் தொடங்கின.
அவ்வாறிருந்தவள் தான் இல்லாத காலத்தில் எதிர்பாரா வகையில் நடந்ததன் காரணமென்ன என்பதைப்பற்றி எத்தனையோ முறை யோசித்து உண்மையை அறியமாட்டாத வனாய்த் தடுமாறினான். சென்ற ஒரு வாரத்தில் அவள் நடந்து கொண்ட விதமும் , அவளால் தான் அடைந்த சுவர்க்க போகமும் அவனுடைய மனதில் தத்ரூபமாய்த் தோன்றின. அவள் மீது அவன் கொண்ட கோபமும் வெறுப்பும் ஒருவாறு தணிவடைந்தன. தான் அவ்வளவு விரைவாக அவர்களின் மீது வெறுப்பையும் கோபத்தையும் கொண்டு அவர்களுடைய உறவை அறவே விலக்கிட நினைத்தது பிசகெனத் தோன்றியது. நடந்தது என்ன என்பதை உள்ளபடி உணராமல் அவர்கள் மீது தான் பகைமை பாராட்டுதல் ஒழுங்கன்று என நினைத்தான். தன் மனைவியின் அழகும், ஆசையும் மாதுரிய குணமும் படிப்படியாக அவனை மேற்கொள்ள ஆரம்பித்தன.
உடனே அவன் ஒரு விதமான உறுதி கொண்டு திரும்பி திருவல்லிக்கேணி தபாற்சாலைக்கு விரைவாக நடந்து சென்று டிப்டி கலெக்டருக்கு அவசரமான தந்தி யொன்றை அனுப்பிவிட்டுத் திரும்பத் தனது வீட்டிற்கு வந்தான்; பெருத்த இழவு விழுந்த வீட்டிற்குள் நுழைபவனைப்போலத் துயரங் கொண்டவனாய் நுழைந்து தன் படுக்கையறைக்குள் சென்று, துணியால் முகத்தை மூடிக் கொண்டு படுத்தான். ஒரு நிமஷத்தில் அவனது மனத்தில் கோடி எண்ணங்கள் உதித்தன. தொடக்க முதல் தன்னிடம் மாறாத அன்புடன் மனதிற்குகந்த விதமாய் ஒழுகி வந்த மேனகாவின் வடிவம், அப்போதே இதழ்களை விரித்து நகைக்கும் தாமரைப்போல , அவளது சொற்களும், செயல்களும், திரும்பத் திரும்ப அவனது நினைவில் தோன்றின. சுவரில் மாட்டப்பட்டிருந்த அவளுடைய புகைப்படத்தைப் பார்த்தான். உடனே அதை எடுத்து அருகில் பார்க்கவேண்டும் என்னும் ஆசை உண்டாயிற்று, அதை எடுத்து அருகிற் பிடித்து உற்று நோக்கினான். மனதிலிருந்த விசனத்தை முகத்தின் புன்னகையால் மறைப்பதாகத் தோன்றிய அவ்வடிவத்தின் வதனத்தைக் கண்ணிமைப்பின்றி நோக்கினான்.
அறையின் வெளியிலிருந்த தன் சகோதரிமார் தன்னைப் பார்க்கிறார்களோ என்று திரும்பிப் பார்த்து ஆராய்ச்சி செய்து அந்தப் படத்திற்கு ஒரு முத்தம் கொடுத்தான். ''ஆகா! உன்னை அன்போடு நடத்தாமல் வருத்துகிறேனே என்று நீ விசனப்பட்ட காலத்தில் எடுத்த படமல்லவா இது! நீ எவ்வளவு தான் மறைக்க முயன்றாலும் உன் விசனம் நன்றாய்த் தெரிகிறது. நான் உன்னுடைய மனதின் நோயை மாற்ற முயலும் சமயத்தில் நீ என்னை விட்டுப் போய்விட்டாயே! இனிமேல் உன்னை நான் எப்படி அழைத்துக் கொள்வேன்? " என்று பலவாறு எண்ணமிட்டு அவன் வருந்திக் கிடந்த சமயத்தில், "வரகுசாமி அய்யர் வரகுசாமி அய்யர் !" என்று வீட்டின் வாசலில் எவனோ உரக்கக் கூவிய ஓசை உண்டாயிற்று. அவன் திடுக்கிட்டெழுந்து வெளியிற் சென்று பார்க்க, சேவகனொருவன் ஒரு தந்தியை நீட்டினான்.
வராகசாமி கையெழுத்துச் செய்து அதை வாங்கி மிகுந்த ஆவலோடு திறந்து படித்தான். அதில் அடியில் வருமாறு விஷயம் எழுதப்பட்டிருந்தது :- ''ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! நான் சென்னைக்கு வரவுமில்லை; பெண்ணும் இவ்விடத்தில் இல்லை. குளங்கள் முதலிய எல்லா இடங்களில் நன்றாய்த் தேடிப் பார்க்கவும்; போலீசிலும் பதிவு செய்யவும், நானும் உடனே புறப்பட்டு நாளைக்கு அவ்விடம் வருகிறேன். அவசரம்; அசட்டையாயிருக்க வேண்டாம். பெண் அகப்பட்டாளென்று மறு தந்தி வந்தாலன்றி இங்கே ஒருவருக்கும் ஓய்வுமிராது; ஒரு வேலையிலும் மனம் செல்லாது'' என்றிருந்த சங்கதியைப் படித்தான். அவனுடைய நெஞ்சம் தடுமாறியது, குழம்பியது. கோபம் பொங்கி யெழுந்தது. என்ன செய்வான்? யார் சொன்னது உண்மை யென்பதை எப்படி அறிவான்? உடனே ''அக்கா! அடி அக்கா!" என்று அதட்டிய குரலில் பெருந்தேவியை அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.
------------------------
மேனகா :
அதிகாரம் 8 - கும்பிடும் கள்ளன்
நமக்கு நன்மைகளை அளிக்கும் விஷ்ணு, சிவன் முதலிய தெய்வங்களையும் நாம் கோயிலில் வைத்து வணங்குகிறோம்; தீமைகளைத் தரும் காட்டேறி, பிடாறி, மதுரை வீரன் முதலியவற்றையும் கோயிலில் வைத்துக் கும்பிடுகிறோம். ஆனாலும், தீமையைச் செய்யும் தெய்வங்களிடத்தில் நமக்குள்ள அச்சமும், மதிப்புமே மிக்க அதிகம். தீங்கற்றதும், நமது உணவிற்குப் பயன் படுவதுமான புடலங்காயை நாம் ஒரு பொருட்டாக எண்ணுவதும் இல்லை; அதை வணங்குவதும் இல்லை. ஆலகால விஷத்தை வாயிற்கொண்டு நம்மைக் கொல்ல ஆயத்தமாக இருக்கும் நாகப்பாம்பையே நாம் பெரிதும் நன்கு மதிக்கிறோம்; அதன் புற்றில் பால் தெளித்து அதை வணங்குகிறோம்; அதைக் கண்டு அஞ்சி ஓடுகிறோம். அவ்வாறே தஞ்சையை ஆண்டதாசில்தார் தாந்தோனி ராயருடைய அருமையான புகழை நாம் இனியும் பாடாது இருப்போமானால், அவருக்கு நம்மீது கோபம் பிறக்கும். ஆதலால், அவரைப் பற்றிய விவரத்தை நாம் சிறிது அறிந்து கொள்வோம்.
அவர் எந்த விஷயத்திலும் எதிர்மறையான கொள்கை களைக் கொண்டவர்; முரண்களுக்கே இருப்பிடமானவர். அவர் தோற்றத்தில் ஒரு விதமாயும், உண்மையில் வேறு விதமாயும் இருப்பவர். அவர் வயதில் முதுமையடைந்தவர் அல்லர்; ஆனால், தலையின் உரோமமோ முற்றிலும் வெளுத்திருந்தது. அவருடைய மேனி பறங்கிப்பழம் போலச் சிவந்திருந்தது; மனதோ களாப்பழத்திலும் அதிகமாய்க் கறுத்திருந்தது. சொற்களோ தேனும் பாலுமாய் ஓடின ; செயல்களோ எட்டிப்பழங்களாய் உதிர்ந்தன. அகமோ ஆழந்தெரியா அகழியாய் இருந்தது; முகமோ கண்களையும், மனதையும் குளிரச் செய்து, கவரும் வண்ண ம் அந்த அகழியின் மீது மலரும் தாமரைப் பூவை யொத்திருந்தது. வாயில் வருவது இன்சொல்; நெஞ்சில் மறைந்திருப்பது வஞ்சம்; புரிய முயல்வது பொல்லாங்கு. கடைவாயில் காலகோடி விஷத்தை ஒளிய வைத்துள்ள நாகப்பாம்பு பரம பக்தனைப்போல நெற்றியில் திருநாமம் அணிந்திருப்பதை நாம் காண்கிறோம் அல்லவா. அவ்வாறே தாந்தோனிராயருடைய கழுத்தில் உத்திராட்சம், நெற்றியில் விபூதி, குங்குமம், அட்சதை முதலிய பக்த அலங்காரம்; அதிகாலை தொடங்கி பகல் பன்னிரண்டு மணிவரையில் சிவபூஜை, காதில் வில்வப்பத்திரம், ஆனால் சுவாமி வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை நோக்கி, அர்ச்சனை நிவேதனம் , ஸ்தோத்திரம் முதலியவை செய்யும்போதே இப்புறம் தன் மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டித் தாம் ஈசுவரனிடம் பாசாங்கு செய்து அவனை ஏமாற்றுவதாய்ச் சைகை காட்டக்கூடிய மனப்பான்மை உடையவர்.
அவருடைய கைகள் பிறரிடம் பெறுதலை அறியுமன்றி கொடுத்தலை அறிந்தனவன்று. அவருடைய நாவிற்குப் பிறர் வீட்டுச் போஜனத்தில் விருப்பம் அதிகமன்றித் தமது வீட்டுச் சோற்றில், ஆசையில்லை. அவருடைய மனது பொதுவாக ஆண்பாலரிடம் அருவருப்பையும் பெண்பாலரிடம் விருப்பையும் கொண்டது. கால் முதல் தலை வரையில் வைரங்களையும், பட்டாடை களையும் அணிந்து எழிலை ஏந்தி பூங்கொம்பு போல இருப்பவளும், லட்டு, ஜிலேபி, ஹல்வா முதலியனவே எனக் கண்டோர் வாயில் தேனூறும் வண்ணம் இனிமைத் திரளாகத் தோன்றும் மயிலியலாளுமான அவரது மனையாட்டியின் மீது அவருக்கு முற்றிலும் வெறுப்பு ; மூன்றுகாத தூரம் முடைநாற்றம் கமழும் தலையாரி எல்லப்பனுடைய தலைகாய்ந்த மனைவி முளியம்மாளின் மீதே அவருடைய காதலும் கண்ணோக்கமும் பிடிவாதமாகச் சென்றன. வெளியூர்களில் சுற்றுப் பிரயாணம் வரும் தாசில்தார்களெல்லோரும் ஊருக்குள் ஆண்பாலார் இருக்குமிடத்தில் முகாம் செய்வர்; தாந்தோனிராயரோ , அவ்வூர் மகளிர் தண்ணீ ரெடுக்கவும், நீராடவும் வரும் குளம், ஆற்றுத் துறைகள், கிணறுகள் முதலிய வற்றிற்கு அருகிலேதான் கச்சேரி செய்வது வழக்கம். உலகில் பிறர் யாவரும் அவரிடம் உண்மை யொன்றையே பேசுதல் வேண்டும்; நல்லொழுக்கம், நற்குணம் முதலியவற்றை உடையவராயிருத்தல் வேண்டும்; ஆனால், அந்த விதி அவரை மாத்திரம் கட்டுப்படுத்தாது, பிறர் எவரும் எத்தகைய சுகத்தையும் அனுபவித்தல் கூடாது; அதற்குப் பிறந்தவர் அவர் ஒருவரே. அவருடைய மேலதிகாரிகள் எதைக்குறித்தும் அவரைக் கண்டித்தலும், அவர் மீது குற்றங் கூறுதலும் தவறு; அவர் தமக்குக் கீழிருந்தோரை மாத்திரம் நினைத்த விதம் பேசலாம்; எண்ணிய விதம் ஏசலாம்.
அதுகாறும் அவர் பெரிய கலெக்டர் கச்சேரியில் சிரஸ்தார் உத்தியோகத்தில் இருந்து மகா பயங்கரமான பிளேக் நோயைப் போலத் தம்மை நடுங்கும்படி அந்த ஜில்லாவில் எல்லோ ரையும் ஆட்டி வந்தவர். கட்டை விரல் பருமனிருந்த அகஸ்தியர் தமது வயிற்றில் எட்டாவது கடலுக்கும் இடமிருக்கிறதே, கடலில்லையே என்று ஏங்கினாராம். அதைப் போல் எத்தனையோ கலெக்டர்களை விழுங்கிய தமது சொக்காப் பையில் இன்னம் இடமிருக்கிறதே என்று தாந்தோனியப்பர் ஏங்கினார். இலங்கையை ஆண்ட இராவணன் வீட்டில் வாயுபகவான் விசிறி கொண்டு வீசினான்; அக்கினி பகவான் அடுப்பெறித்தார்; சூரிய பகவான் விளக்கேற்றும் வேலை செய்தான்; வருண பகவான் தண்ணீர் குடமெடுத்தான். நவகிரகங்களே ஜாதகம் கணித்தன. அவ்வாறே நமது சிரஸ்ததாரான தாந்தோனி ராயர் வீட்டில் அறந்தாங்கித் தாசில்தார் முறந்தாங்கிப் புடைத்தார். திருவையாற்று போலீஸ்தார் திரிகை பிடித்தறைத்தார். பட்டுக்கோட்டைத் தாசில்தார்கட்டைகளைப் பிளந்தார். மன்னார்குடித் தாசில்தார் வெந்நீர் தயாரித்தார். கும்பகோணம் தாசில்தார் செம்பு தவலை கழுவினார். வலங்கிமான் போலீஸ்தார் பாயைப் பிரித்தார்.
அந்த ஜில்லாவிலிருந்த எல்லா உத்தியோகஸ்தர்களின் குடுமியும் அவருடைய கையிலிருந்தது. அவர்கள் செய்த நற்காரியங்கள் யாவற்றையும் ராயர் மறந்து விடுவார். எவனாயினும் அவருடைய கோபத்திற்கு இலக்கானால், ஒரு வாரத்திற்குள் அவனுடைய தலைச்சீட்டு கிழிபட்டுப்போம். தையல் இலையின் கோணலை நிமிர்த்தக் கல்லியந்திரத்தைப் பாரம் வைத்தலைப் போல, அவன் தலையைத் தூக்கா வண்ணம், அவனைப் பாதாளத்தில் ஆழ்த்தி அவன் மீது பாரம் வைத்து விடுவார். அத்தகைய உன்னத பதவியான சிரஸ்த்தார் வேலையிலிருந்து தஞ்சையின் தாசில்தார் வேலைக்கு வந்தவ ராதலால், தாந்தோனி ராயர் இன்னமும் பழைய மேன்மையை விடாமல் பாராட்டி வந்தார். அதற்கு முன் தமது வீட்டில் தஞ்சையின் தாசில்தார் மஞ்சள் அரைத்ததை மறந்து, தலை கால் தெரியாமல் அதிகாரமும் ஆடம்பரமும் செய்து தாசில் வேலை பார்த்து வந்தார்.
சில வருஷங்களுக்கு முன்னர் பி.ஏ., பி.எல்., முதலிய பாடங்களைப் பெற்ற ஒருவர் தேசத்தில் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். அவர் மகா புத்திமான். ஆனால், கீழிருந்த சிப்பந்திகளை மிரட்டி இரக்கமற்ற மனதோடு வேலைவாங்க அறியாதவர். மேலதிகாரிகளையும் வசியப்படுத்த அவர் கற்க வில்லை. இரண்டொரு வருஷங்களில் அவர் தமது உத்தியோகத்தை விட்டுவிட நேர்ந்தது. அப்போது அவர் தம் நண்பர் ஒருவருக்கு அடியில் வருமாறு கடிதம் எழுதி அனுப்பினார். "தாசில் உத்தியோகத்திற்குக் கல்வியும் தேவையுமில்லை. மூளையும் தேவையுமில்லை. மாதம் இரு நூறு ரூபாயை வீண் செலவு செய்து ஒரு மனிதனையும், அந்த வேலைக்கு வைக்கவேண்டுவதில்லை. பயங்கரமான ஒரு தோற்றத்தைக் கொண்ட ஒரு நாயைப் பிடித்து அதற்குச் சொக்காய், தலைபாகை முதலியவற்றை அணிவித்து நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும். பக்கத்தில் ஒரு டபேதார் நிற்க வேண்டும். எதிரில் வரும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாலுக்கா குமாஸ்தாக்கள், கிராம முனிசீப்புகள், கணக்குப் பிள்ளைகள் முதலியோரைக் கண்டு அந்த நாய் நன்றாய்க் குலைத்துக் கடிக்கப் போவதைப்போலப் பாய வேண்டும்.
அதே காலத்தில் கலெக்டர் முதலிய மேலதிகாரிகளைக் கண்டால், அன்னமிடுவோரின் பின்னர் வாலைக் குழைத்துச்செல்லும் நாய்களைப்போல, அந்த தாசில் நாய் உடனே செய்யவேண்டும். இவ்வாறு ஒரு நாய் இரண்டு தாலுக்காக்களின் தாசில் வேலையைத் திறமையோடு செய்யும்” என்று எழுதினார். அவர் பொறாமையால் அவ்வாறு கூறினாரோ அன்றி அது உண்மையோ வென்பதை அந்த இலாகாவில் இருப்பவர்களே நன்கறிவர். ஆனால், தாந் தோனிராயர் விஷயத்தில் இரண்டொரு விஷயங்கள் மாத்திரம் உண்மையா யிருந்தன. அவர் கீழிருந்தவர் விஷயத்தில் சாதாரண நாயைப் போல் நடக்கவில்லை; பைத்தியங் கொண்ட நாயைப் போலிருந்தார். மேற்கண்ட கடிதத்தில், "குலைத்துக் கடிக்கப் போவதைப் போல பாயவேண்டு"மென்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நமது தாந்தோனி ராயர் உண்மையிலேயே வீழ்ந்து கடித்துவிடுவார். அவருடைய ஆளுகையில் கீழிருந்த அதிகாரிகள் ரத்தக்கண்ணீர் விடுத்தனர். ஆனால், அவர் மேலதிகாரிகளான துரைகளை மயக்குவதில் யௌவனப் புருஷரை மயக்கும் வேசையரைக் காட்டினும் பெருந் திறமை வாய்ந்தவர். அவர் ஆணாய்ப் பிறவாமல் பெண்ணாய்ப் பிறந்திருந்தால், ஐரோப்பாக் கண்டமே அவரது காலடியில் வீழ்ந்து கிடக்குமோ வென்று பலரது மனதில் ஐயம் தோன்றலாம். அதற்கு நாம் என்ன செய்வது? அது அவருடைய பாக்கியம்.
பெரிய கலெக்டர் துரையின் பூரணமான தயவை அவர் பெற்றிருந்தமையால், டிப்டி கலெக்டர் முதலிய சிறிய அதிகாரிகள் அவருக்கு அதிகாரிகளாய்த் தோன்றவில்லை. மலையை விழுங்கும் மகாதேவ சாமிக்குக் கதவு ஒரு அப்பளமா மென்பர் நமது பெண்டீர். தாந்தோனிராயர் நமது சாம்பசிவ ஐயங்காரிடத்தில் வெளிக்கு மாத்திரம் பணிவும் அன்பும் கொண்டவரைப் போல நடித்துப் பகட்டி வந்தார்; உண்மையிலோ சாம்பசிவ ஐயங்கார் முன் கோபத்தால் அப்போதைக்கப்போது திட்டியதும் கடிந்து கொண்டதும் ஈட்டியாற் குத்துதலைப் போல தாந்தோனி ராயருடைய மனதில் தைத்தமையால், அவரிடம் உள்ளூற வெறுப்பும், பகைமையுங் கொண்டிருந்தார். தாந்தோனி ராயர் பெரிய கலெக்டரிடம் சென்றால், அவர் தாசில்தாருக்கு ஆசனமளித்து அவரை உட்காரவைத்தல் வழக்கம். நமது சாம்பசிவமோ உட்காரச் சொல்லுவதுமில்லை.
சாம்பசிவத்திற்கும், தாந்தோனிக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. சாம்பசிவ ஐயங்கார் இளகிய மனத்தினராயினும் முன்கோபமும், கடிந்த சொல்லுமுடையவர்; அதனால் பகைவர் பலரைப் பெற்றவர். தாந்தோனிராயர் கொடிய மனத்தினர் ஆனாலும் இனிய சொல்லினர்; ஏமாற்றும் திறமை உடையவர்; ஆகையால் அவரிடம் பலர் நத்தியலைந்தனர். சாம்பசிவம் தமது அலுவலையும், தமது கடமைகளையுமே மிக்க மதிப்பவர் அன்றி மனிதரைப் பற்றிக் கவனிப்பதில்லை. அவருக்குத் தமது மனிதனுக்கு ஒன்று பிறமனிதனுக்கு ஒன்று என்னும் நியாயம் கிடையாது. மேலதிகாரிகளுக்கு அஞ்சியோ , அன்றி அவர்களின் விருப்பின்படியோ , நீதி தவறி நடப்பவரல்லர். தாந்தோனி ராயர் காற்று எந்தப் பக்கம் வீசுகிறதோ அந்தப் பக்கம் திரும்பி விடுவார். அவருடைய காலை ஒருவன் நன்றாய் வருடிவிட்டால் அவனுக்குக் கணக்குப் பிள்ளை வேலைக்குச் சிபார்சு செய்து விடுவார். பருப்பு ஸாம்பாரை மிக்க மாதுரியமாகச் செய்பவனுக்குப் பட்டா மணியம் வேலை கொடுக்க எழுதி விடுவார். தாம் ஒழுங்காய் வேலை பார்ப்பவர் என்பதைப் பெரிய கலெக்டரிடம் தந்திரமாகக் காட்டிக் கொள்வார். ஆனால், அவருடைய காரியமெல்லாம் ஊழலாகவே இருக்கும். ஆறு மாதங்களுக்கு முன்னர் வந்த தபால்கள் உடைபடாமல் ஒரு மூலையில் குவிந்து கிடக்கும். குமாஸ்தாக்கள் எழுதி அவரது கை யெழுத்துக்காக வைத்த அர்ஜிகள் மலையாய்க் குவிந்து கிடக்கும். மேலதிகாரிகளிடமிருந்து ஏதாவதொரு விஷயத் திற்கு மறுமொழி வரவில்லை யென்று குமாஸ்தாவின் மீது சீறி விழுவார். அவன் அவருடைய கையெழுத்திற்கு ஆறுமாதத் திற்கு முன்னரே அனுப்பிவிட்டேன் என்பான். அது தம்மிடம்
வரவேயில்லை யென்று அவர் துணியைப் போட்டு தாண்டிச் சத்தியம் செய்து விடுவார். அந்த குமாஸ்தாவின் மீது விரோதமாக எழுதிவிடுவார்.
சாம்பசிவ ஐயங்கார் யாவரையும் முதுகில் அடிப்பார்; தாந்தோனிராயரோ வயிற்றில் அடிப்பார். சாம்பசிவம் பிறர் வீட்டில் தண்ணீர் கூடக் குடித்தறியார். பிறன் பொருளை விஷமாக மதித்தவர், தாந்தோனியோ பிச்சைக்காரனுடைய அரிசி மூட்டை பெரியதா யிருந்தால், அவனுக்கு வருமான வரி போடுவதாய்ப் பயமுறுத்தி, அவனிடம் அவ்வரிசி மூட்டையிலும் ஒரு பங்கு வாங்கி விடுவார். இருவரும் பணச் செலவு செய்வதில் செட்டுக்குணம் உடையவர்களே. சாம்பசிவம் எந்தச் செலவு இன்றியமை யாததோ அதைச் செய்வார். எது அவசியமில்லாததோ அதைச் செய்யமாட்டார். ஆனால், அவருடைய செட்டுத் தனம் கண்ணியத்திற்குக் குறைவு செய்யாதது. தாந்தோனிராயருடைய செட்டுத்தனம் பிறர் மனதில் அருவருப்பை உண்டாக்கக் கூடியது. அவர் வெளியூர்களில் சுற்றுப்பயணம் வரும்போது, அவரைச் சந்தோஷப்படுத்த நினைத்துக் கர்ணம் ரிவின்யூ இன்ஸ்பெக்டர் முதலியோர் நல்ல விருந்து தயார் செய்து அவருக்குப் பரிமாறினால், ஒட்டகம் ஆறு மாதங்களுக்குத் தேவையான தண்ணீரை வயிற்றில் சேகரம் செய்து வைத்துக் கொள்வதைப் போல, அவர் பல நாட்களுக்குப் பசியா திருக்கும்படிச் சாப்பிடுவார். ஆனால் பரிமாறும் கணக்குப் பிள்ளையின் மனைவி மீதிருக்கும் நகைகளையும், அந்த விருந்தின் சிறப்பையுங்கண்டு, அவன் லஞ்சம் அதிகமாக வாங்குகிறவனென்று நினைத்து, அவனை வேலையிலிருந்து தொலைக்க உறுதி கொள்வார்.
காலணாவிற்குக் கீரை வாங்குவதிலும் தாசில்தார் உத்தியோகத்தின் அதிகாரத்தைச் செலுத்தி நாலணா கீரை வாங்கிவிடுவார். அவர் எப்போதும் அம்பட்டனுக்கு முக்காலணா கொடுப்பது வழக்கம்; அவரிடம் இருந்தது ஒரு அணா நாணயமாக இருந்தால், அதைக் கொடுத்துவிட்டு, அதில் அதிகமாக இருக்கும் காலணாவிற்குத் தமது மனைவியின் தலையையும் சிறைத்துப் போகச் சொல்லக்கூடிய அற்ப குணத்தை உடையவர். இத்தகைய எண்ணிறந்த குண வேறுபாடுகளினால் தாசில்தாருக்கு டிப்டி கலெக்டர் மீது பெருத்த பகைமை உண்டாய்விட்டது. அவரை எவ்வகையாலும் கெடுத்து அவருடைய வேலையைத் தொலைத்துவிட வேண்டுமென்னும் உறுதி ஏற்பட்டு விட்டது. தாசில்தார் பெரிய கலெக்டர் துரையிடத்தில் பரம யோக்கியத்தைப் போல் நடந்து அவருடைய நன்மதிப்பையும் அன்பையும் பெற்றிருந்தார். அந்த நட்பை இழக்காமல் காப்பாற்றுவதற்காக அவர் வேறு எத்தகைய அட்டூழியம் செய்யவும் பின்வாங்கமாட்டார். ஒவ்வொருநாளும் அவர் காலையில் பெரிய கலெக்டரின் பங்களாவிற்குப் போவார். முதலில் அம்மன் சன்னிதிக்கு வெளியில் நின்று துரைசானி யம்மாளுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடி ஸ்தோத்திரம் செய்து காலை வந்தனம் சமர்ப்பிப்பார். அம்மாளுடைய தேக சௌக்கியத்தை விசாரிப்பதோடு நில்லாமல், அம்மாளுடைய போஜனத்திற்காக வளர்க்கப்பட்டு வரும் ஆடுகள், கோழிகள், வாத்துக்கள், அம்மாளுடைய நாய், அம்மாள் படுக்கும் கட்டில் மெத்தை முதலியவற்றின் சுகத்தைப் பற்றியும் அந்தரங்க அன்போடு கேட்பார். தினம் ஒவ்வொரு பூமாலை கொண்டு போய் அம்மாளின் நாய்க்குச் சாத்தி, அதன் நற்குணம், மேன்மைகுணம் முதலியவற்றைப் பற்றி அம்மாளுக்கு முன் ஒரு அத்தியாயம் திருப்புகழ் படிப்பார். அதன் உடம்பில் ஓடும் சீலைப் பேனை எடுத்து நசுக்குவார். அவற்றைக் கண்ட துரைசானி பெருமகிழ்ச்சியும் புன்னகையும் கொள்வாள். அதை எவருக்கும் கிடைக்காப் பெரும் பாக்கியமாக மதிப்பார் தாந்தோனியார் பங்களாவில் எத்தகைய தேவையும் உண்டாகாமல் தாசில்தார் பார்த்துக்கொள்வார். அவர்மீது துரை, துரைசானி ஆகிய இருவருக்கும் பட்சம் பெருகி வந்தது.
அவர் பங்களாவிற்கு வரும் போதெல்லாம் எதை மறக்கினும் தமது பகைவரான சாம்பசிவ ஐயங்காரை மாத்திரம் மறவாதிருந்தார். அவரைப் பற்றிப் பெரிய கலெக்டர் மனதில் கெட்ட அபிப்பிராயத்தையும், அருவருப்பையும், பகைமையும் உண்டாக்கி வந்தார்.
வராகசாமி தனது மனைவி மேனகா காணாமற் போனதைப்பற்றித் தஞ்சையில் தன் மாமனாருக்குத் தந்தியனுப்பிய தினம் காலையில் பெரிய கலெக்டர், சென்னை கவர்னருக்கு ஒரு முக்கியமான விஷயத்தில் அர்ஜி தயாரித்து அனுப்பவேண்டி யிருந்தது. அதில் தமக்குப் பக்கத்துணையா யிருக்கும் பொருட்டு கலெக்டர், தாந்தோனியாரையும், சாம்பசிவத்தையும் காலை ஒன்பது மணிக்கே வரும்படி கண்டிப்பாய் உத்தரவு செய்திருந்தார். தாந்தோனிராயர் தகப்பனுடைய திதியை விடுத்தாலும் விடுப்பார். பெரிய துரையின் உத்தரவை மீறவே மாட்டார். அவர் விடியற்காலம் ஐந்து மணிக்கே வீட்டைவிட்டுப் புறப்பட்டார். வழக்கப்படி முதலில் அம்பாளின் சன்னிதிக்கு வந்தார். அவள் எழுந்திருக்க வில்லை. அங்கிருந்த நாய், ஆடுகள் முதலியவற்றைத் தடவிக்கொடுத்த பிறகு, சுவாமி சன்னிதிக்குச் சென்றார்.
தாழ்வாரத்தின் பக்கத்தில் சார்புப் பந்தலிருந்தது, அதில் ஏற்றிவிடப்பட்டிருந்த சம்பங்கிக்கொடி உட்புறத்தை நன்றாய் மறைத்துக்கொண்டிருந்தது. அதன் மறைவில் நின்று உட்புறத்தில் துரை என்ன செய்கிறார் என்பதை உணரும் பொருட்டு ஒட்டகத்தைப் போலத் தலையை நீட்டி நீட்டிப் பார்த்தவண்ணம் நின்று தத்தளித்தார். பொட்லர் அந்தோனி ஓசை செய்யாமல் பங்களாவிற்குள் நுழைவதும், வெளிப்படுவது மாயிருந்தான். அவனிடம் பரம நண்பரைப் போல அன்பும் புன்னகையும் காட்டி துரை எழுந்து விட்டாரோ என்று தலையசைப்பாற் கேட்டார். அந்த மாதத்திற்கு தாசில்தார் அவனுக்குப் பணம் கொடா திருந்தமையால் அவன் அவருக்கு முகங் கொடாமற் போய்விட்டான். அடுத்த நிமிஷம் உட்புறம் துரையின் குரல் உண்டாயிற்று. அது கோபக்குரலாய்த் தோன்றியது. துரைமார் படுக்கையை விட்டெழுமுன் தேத்தண்ணீர் குடித்தே எழுதல் வழக்கம். அவ்வாறே, திண்டில் சாய்ந்தவண்ணம் துரை தேத்தண்ணீரைப் பருக முயன்றார். தூக்க மயக்கத்தில் கண்ணிமைகள் இன்னம் மூடிக்கொண்டிருந்தன. அப்படியே தேத்தண்ணீர் பாத்திரத்தை வாயில் வைத்தார். அதில் சருக்கரை அதிகமாய்ப் போடப்பட்டிருந்தது. துரைக்கு பெருத்த கோபம் மூண்டு விட்டது. உரத்த குரலில் அந்தோனியை அழைத்தார். அது தாசில்தார் காதில் தாந்தோனியென்று தம்மை அழைத்ததாகப் பட்டது. உடனே தாசில்தார் குடுகுடென்று உள்ளே ஓடிக் கட்டிலண்டையில் நின்றார். துரை இன்னமும் கண்களைத் திறக்கவில்லை. தாந்தோனிராயர் "காலை வந்தனம்"கூற வாயைத் திறந்தார்.
அப்போது துரையின் வாயிலிருந்த தேத்தண்ணீர் வெளிப்பட்டு தாசில்தாரின், வாயிலும், மூக்கிலும், முகத்திலும் உடைகளிலும் வருணாஸ்திரம் போல மோதி அபிஷேகம் செய்தது. துரை அதே காலத்தில் "கழுதையின் மகனே! எடுத்துக்கொள் உன் தேத்தண்ணீரை. மூளையில்லா மிருகமே!" என்று தாசில்தாரை அன்போடு உபசரித்தார். எதிர்பாராத அந்த பட்சத்தைக் கண்ட தாசில்தார் சிறிது நேரம் திகைத்துக் கல்லாய் நின்றார். அவருடைய விலையுயர்ந்த ஆடைகள் கெட்டுப் போயின. என்ன செய்வார்; ஒரு வகையான அச்சத்தையும், திகைப்பையுங் கொண்டார். தேத்தண்ணீர் அளவு கடந்து தித்திப்பாயிருந்ததால், துரை தம்மை பொட்லரென நினைத்து அவ்வாறு செய்தாரென்று ஒருவாறு யூகித்தார். சிறிது துணிந்து, "துரைகளே! காலை வந்தனம். நான் தாசில்தார் என்மேல் தேத்தண்ணீர் படவில்லை '' என்றார் ராயர். தாசில்தாருடைய குரலை உணர்ந்த துரை திடுக்கிட்டுக் கண்களைத் திறந்து பார்த்தார். உடனே விரைந்தெழுந்து மிகுந்த விசனத்தோடு, "தாசில்தாரே! மன்னிக்க வேண்டும், பொட்லரென்று நினைத்து இப்படி செய்துவிட்டேன். திரும்பவும் உம்முடைய மன்னிப்பைக் கேட்கிறேன்” என்றார். அங்கிருந்த தண்ணீர் பாத்திரம், துவாலை, சோப் முதலியவற்றைக் கொணர்ந்து தாசில்தாருடைய முகத்தைச் சுத்தி செய்ய முயன்றார். தாம் அறியாமல் செய்ததை மன்னிக்க வேண்டு மென்று மென்மேலும் கூறி மனதார வருந்தினார்.
"அதிகம் படவில்லை ; பாதமில்லை; நானே துடைத்துக் கொண்டேன். துரையவர்கள் இதைப்பற்றி வருந்த வேண்டாம்” என்று தாசில்தாரும் தாண்டவமாடினார். அவர் மீது பெரிதும் இரக்கமும், அன்புங்கொண்ட துரை, அவர் கேட்கும் வரத்தைக் கொடுக்கத் தயாராக இருந்தார். அந்தக் குறிப்பையறிந்த தாந்தோனியார் தமக்கு ஒவ்வொரு நாளும் அவ்விதம் பூஜை கிடைக்க வேண்டுமென்று ஈஸ்வரனை வேண்டினார்.
அரை நாழிகைக்குப் பிறகு அவ்விருவரும் தாம் எழுதக் கருதிய அர்ஜியைத் தயாரிக்க உட்கார்ந்தனர். அப்பொழுதும் சாம்பசிவம் வரவில்லை. மணி பத்தாயிற்று; துரை பொறுத்துப் பொறுத்துப்பார்த்தார். "தாசில்தாரே! ஏன் டிப்டி கலெக்டர் வரவில்லை ? இது அவசரமான காரியமென்று நான் எவ்வளவு வற்புறுத்திக் கூறி தவறாமல் ஒன்பது மணிக்கே வரச் சொன்னேன். அவர் கொஞ்சமும் மதிக்க வில்லையே" என்றார் துரை.
தாசில்:- தங்களுடைய உத்தரவே இம்மாதிரியானால், எங்களுடைய கதியைப்பற்றித் துரையவர்களே யோசிக்க வேண்டியது தான். நாங்கள் நாயினும் கீழாகவே மதிக்கப்பட்டு வருகிறோம். ஆனால், அவர் எங்களுடைய மேலதிகாரி. அவர் மீது வேண்டு மென்று கோள் சொன்னது போலாகும். கவர்மெண்டாருக்குப் போகவேண்டிய அவசர அர்ஜி விஷயத்தில் நான் என் உயிர் போவதாயிருந்தாலும் வராமல் இருக்கவே மாட்டேன். எனக்கு என்னுடைய கடமையே பெரிதன்றி மற்றது பெரிதல்ல - என்றார்.
துரை:- இந்த விஷயம் இருக்கட்டும். அவர் லஞ்சம் வாங்கும் விஷயம் எப்படி இருக்கிறது?
தாசில்:- அதைப்பற்றி சந்தேகங் கூடவா? அது ஒழுங்காக நடந்து வருகிறது. அவருடைய மைத்துனனை அவர் எதற்காக வரவழைத்து வீட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார். அவன் மூலமாகவே லஞ்சம் வாங்கப்பட்டு வருகிறது. அவன் வைத்துக்கொண்டிருக்கும் தாசிக்கு மாத்திரம் மாதம் ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்கிறானாம். அவனுக்கு வேறு வருமானம் இல்லை. நிலம் முதலிய எவ்வித ஆஸ்தியுமில்லை. டிப்டி கலெக்டர் மனைவியின் உடம்பில் மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்கு நகை ஏறுகிறது. அவருடைய சம்பளம் ரூ.400. இவ்வளவும் எங்கிருந்து வரும்? பணத்தைக் கொடுத்தவர்களில் பலர் வந்து கேஸும் தம் பட்சம் ஜெயமாகவில்லை யென்று சொல்லி என்னிடம் அழுதார்கள். நான் என்ன செய்கிறது! மேலதிகாரியின் சங்கதி - என்றார். அதைக்கேட்டதுரை உள்ளூற ஆத்திரமடைந்தார். மீசை துடித்தது. ஆனால் தம்மை நன்றாய் அடக்கிக்கொண்டார். "இந்த அர்ஜி விஷயத்தில் அவர் செய்ததை நேரில் துரைத்தனத்தாருக்கு எழுதுகிறேன். தவிர நீரும், போலீஸ் இன்ஸ்பெக்டர் புளுகுமலைப் பிள்ளையும் லஞ்சம் வாங்கும் விஷயத்தைப் பற்றி இரகசியமாக விசாரணை செய்து சாட்சியங்களை சேகரம் பண்ணுங்கள். லஞ்சம் வாங்கின கேஸ்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என்றார்.
தாசில் - அதில் இன்னொன்றிருக்கிறது. அவர் மேலதிகாரி. உண்மையை அறிந்தவர்கள் அவருக்குப் பயந்து இரகசியத்தை வெளியிடப் பின் வாங்குகிறார்கள். ஆகையால், ஒரு காரியம் செய்தால் நலமாயிருக்கும்; ஆனால் அது என் மனதிற்குப் பிடிக்கவில்லை. அவரை வேலையிலிருந்து மறு உத்தரவு வரையில் நீக்கி (சஸ்பெண்டு செய்து ) வைத்தால், யாவரும் உண்மையைச் சொல்லுவார்கள், லஞ்சம் வாங்கின கேஸ்களெல்லாம் பிறகு வெளியாகும் - என்றார்.
துரை :- இருக்கட்டும்; அதைப்பற்றி நான் நன்றாக யோசனை செய்து மேலே எழுதி அவரை நீக்கி வைக்கிறேன் - என்றார்.
அதற்குள் சலாம் செய்து டபேதார் உள்ளே வந்து ஒரு கடிதத்தைப் பெரிய கலெக்டரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கிப் பார்த்தார்.
அது டிப்டி கலெக்டரிடமிருந்து வந்திருந்தது; அதைப் பிரித்து அடியில் வருமாறு படித்தார்:
"ஐயா!
சென்னைக்கு நான் மிக்க அவசரமான சொந்த விஷயத்தின் பொருட்டு போகவேண்டி யிருப்பதால், எனக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு ரஜாக் கொடுக்கக் கோருகிறேன்.''
என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்தவுடன் துரை தாசில்தாரின் முகத்தைப் பார்த்தார். அவர் புன்னகை செய்து, “சென்னைக்கு இராத்திரி 7-மணிக்கல்லவா ரயில் புறப்படுகிறது. அவர் இப்போது வந்து விட்டுப் போவதற்குத் தடை யென்ன?" என்று கூறி எரிகின்ற கட்டையைத் தட்டி விட்டார்.
துரை:- டபேதார்! இதை யார் கொண்டு வந்தவர்?
டபே - டிப்டி கலெக்டருடைய மைத்துனர் கிட்டையர் என்றான். உடனே துரை வேறொரு காகிதத்தை எடுத்து அதில், “ரஜாக் கொடுக்கப்பட மாட்டாது" என்று எழுதி மடித்து ஒரு உறையில் போட்டு ஒட்டிடபேதாரிடம் கொடுக்க, அவன் அதை
வாங்கி வெளியிற் சென்றான்.
துரை:- அவ்வளவு அவசரமான காரியம் என்ன விருக்கும்?
தாசில் :- என்ன சூதோ தெரிய வில்லை. ஏதாயினும் லாபத்தை உத்தேசித்ததாகவே யிருக்கும். எல்லாவற்றிற்கும் நான் தந்தி ஆபீஸுக்குப் போய் டிப்டி கலெக்டருக்கு ஏதாயினும் தந்தி வந்ததா வென்று கேட்டு உண்மையை அறிந்து கொண்டு அவருடைய வீட்டிற்கே போய் தந்திரமாக விஷயத்தை அறிந்து கொண்டு வருகிறேன் - என்றார்.
துரை:- சரி; அப்படியே செய்யும் - என்றார்.
உடனே தாந்தோனிராயர் குனிந்து சலாம் செய்துவிட்டு தந்தி ஆபீசுக்குப் புறப்பட்டார்.
-----------------
மேனகா :
அதிகாரம் 9 - காணாமற் போனாயோ கண்மணியே?
மேனகா காணாமற் போனதைப் பற்றித் தமக்குக் கிடைத்த தந்தியைப் படித்த சாம்பசிவமும், அவருடைய தாயும், மனைவியும் பெருத்த திகைப்பையும், அச்சத்தையும், கவலையும் கொண்டனர். எதிர்பாராத வகையில் கோடை காலத்தில் உண்டாகும் பேரிடியைப் போலத் தோன்றிய அந்த விபத்தை அவர்கள் எதிர்பார்த்தவரல்லர். ஒரு வருஷகாலம் துயர்கடலில் ஆழ்ந்து வருந்திக் கிடந்த தமக்கும், தமது அருமைப் பெண் மேனகாவிற்கும் அப்போதே நல்ல காலம் திரும்பியதாக மதித்துக் கவலைச்சுமையை அகற்றி, உஸ்' ஸென்று உட்கார்ந்த தங்களை விதி என்னும் கொடிய நாகம் இன்னமும் துரத்தியதாய் நினைத்துத் தளர்வடைந்தனர். வழக்கத்திற்கு மாறாகத் தமது மருமகப் பிள்ளை தம்மிடம் அன்பையும் வணக்கத்தையும் காட்டியதை நினைத்து சாம்பசிவம், இனி மேனகா துன்புறாமல் சுகமாய் வாழ்க்கை செய்வாள் என்று நினைத்துப் பெரு மகிழ்வு கொண்டிருந்தார். அதற்கு முன் தாம் தமது மருகப்பிள்ளையைப் பற்றிக் கொண்டிருந்த அருவருப்பை மாற்றி அவன் மீது முன்னிலும் பன் மடங்கு அதிகரித்த வாஞ்சையை வைத்தார். அந்த முறை மருகப்பிள்ளை தம்மிடம் காட்டிய நன்னடத்தையைப் பற்றித் தாய், மனைவி முதலியோரிடம் பன் முறை கூறி அவர்களையும் மகிழ்வித்தார். இரு நூறு ரூபாயில் மருமகப் பிள்ளைக்குத் தங்கச் சங்கிலி கடியாரம் முதலியவற்றை வாங்கி வைத்திருந்தார்.
மனிதன் எத்தகைய இடைஞ்சலுமின்றி தனது இச்சைப்படி தனது வாழ்க்கையையும் தனது நிலைமையையும் செவ்வைப் படுத்திக்கொள்ளவும் நீங்காத சுகம் அனுபவிக்கவும் வல்லமை உடையவனாயிருப்பானாயின் அவனுக்கு உண்டாகும் செருக்கிற்கும் இறுமாப்பிற்கும் அளவிருக்குமோ! பிறகு அவன் கடவுள் ஒருவன் இருக்கிறான் என்பதை நினைப்பானா! தன்னையே கடவுளா யன்றோ மதிப்பான். எவனும் பிறனை மதியான். இரண்டு மனிதருக்கு இடையிலுள்ள நட்பு, சார்பு, அன்பு, உதவி, பணிவு முதலியவை சிறிதும் இல்லாமல் போய்விடும்; உலகமே கலக்கத்திற்கு இருப்பிடமாய் நாசமடையுமன்றோ ? அதனால்தான் கடவுள் விதி யென்பதை நியமித்து நம்முடைய நினைவுகளில் தலையிடச் செய்து நமது சிறுமையை நமக்கு ஓயாமல் அறிவுறுத்தி வருகிறார். நமது வாழ்க்கையாகிய காட்டை நாம் எவ்வளவு தான் வெட்டி அழகுப் படுத்தினாலும், அதில் விதியென்னும் புலியும், சிங்கமும், பாம்பும், தேளும், முட்களும், கற்களும் மேன்மேலும் காணப்படுகின்றன. விதிக்குக் கலெக்டரானாலும், கவர்னரானாலும் ஒரு பொருட்டோ? ஆசையோடு மோக்க நினைத்த ரோஜாப்பூவிதழில் கண்குத்தி நாகம் மறைந்திருந்ததைக் கண்டவரைப்போல நமது சாம்பசிவம் பெருந்திகைப்பும் மனக் குழப்பமும் அடைந்து என்ன செய்வதென்பதை அறியமாட்டாதவராய்த் தமது சாய்மான நாற்காலியையே சரணாகதியாக அடைந்தார். அன்று காலையில் பங்களாவிற்கு வரும்படி துரை தமக்கு உத்தரவு செய்திருந்ததையும் மறந்து பைத்தியம் கொண்டவரைப் போல உட்கார்ந்து விட்டார்.
கனகம்மாளுக்கு மாத்திரம் மேனகாவின் நாத்திமார்களின் மீதே சந்தேகம் உதித்தது. அவர்கள் செய்த துன்பங்களைப் பொறாமல் கிணற்றில் குளத்தில் வீழ்ந்து மேனகா உயிர் துறந்திருப்பாளோவென்று ஐயமுற்றாள். அருமைக் கண்மணி யான மேனகாவைத் தாம் இனிக் காண்போமோ காண மாட்டோமோ வென்று பெரிதும் சந்தேகித்தாள். அவளுடைய தேகம் பதைபதைத்து ஓரிடத்தில் நிலைத்து நில்லாமல் துடித்தது. துயரமும் ஆத்திரமும் கோபமும் பொங்கி யெழுந்தன. அவளுடைய மெய்யும் மனமும் கட்டுக்கடங்கா நிலைமையை அடைந்தன. எத்தகைய அலுவலும் காரணமுமின்றி அங்குமிங்கும் திண்டாடிக்கொண்டிருந்தாள். மேனகாவைத் தேடுகின்றாளோ அன்றி சென்னைக்குப் பறந்து போக இரண்டு இறகுகளைத் தேடுகின்றாளோ வென்னத் தோன்றும்படி அறையறையாய்ப் புகுந்து புறப்பட்டாள். மேனகாவின் நாத்திமார் இருவரும் தனது கண்முன்னர் நிற்பதாகப் பாவித்து வெற்று வெளியை நோக்கிப் பல்லைக் கடித்து வைது கர்ச்சித்தாள்; காணப்படுவோரின் மீது சீறி விழுந்தாள்.
தனக்குத்தானே புலம்பினாள், அழுதாள், கதறினாள், பதறினாள், அயர்ந்தாள், சோர்ந்தாள், தடுமாறினாள், ஏங்கினாள், தள்ளாடினாள், வாய்விட்டு வைதாள், வயிற்றிற் புடைத்தாள், தெய்வங்களை யெல்லாம் தொழுதாள், "என் மேனகா எங்கு போனாளோ? என் செல்வம் தவிக்கிறதோ? என் தங்கம் பசியால் துடிக்கிறதோ! என் மணிப்புறா களைத்துக் கிடக்கிறதோ? என் மாணிக்கக்கட்டி எங்கு மறைந்து போய்விட்டதோ? என் பஞ்சவருணக் கிளி எந்தக் குளத்தில் மிதக்கிறதோ? ஐயோ! என் வயிறு பற்றி எரிகிறதே! ஈசுவரா! உன் இடிகளை அனுப்பி அந்தப் பாழாய்ப்போன முண்டைகளின் மண்டையை உடைக்க மாட்டாயா? தெய்வமே! உன் சக்கராயுதத்தை அனுப்பி அந்தக் கொடிய வஞ்சகரின் நெஞ்சைப் பிளக்கமாட்டாயா?" என்று சரமாரியாக எதுகை மோனைகளோடு பிதற்றிச் சொற்களை வாரி வாரி வீசினாள். அரற்றிப் பொருமினாள்.
அவளுடைய வதனம் கொல்லன் உலையைப் போலக் காணப்பட்டது. பழுக்கக் காய்ந்த இரும்பிலிருந்து தீத்திவலைகள் தெறித்தலைப் போலக் கோவைப் பழமாய்ச் சிவந்த கண்களினின்று தீப்பொறி பறந்தது. அவள் அடிக்கடி விடுத்த நெடு மூச்சு இருட்டைத் துருத்திக்கொண்டு காற்றை விடுதலைப்போலிருந்தது. வாயின் சொற்கள் சம்மட்டி அடிகளைப் போல, "மூச்சுவிடுமுன்னே முன்னூறு, நானூறு ஆச்சென்றால் ஐந்நூறு மாகாதா" என்றபடி செத்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்து கொண்டிருந்தன. சொற்களின் கருத்திற் கிணங்க கைகளையும் உடம்பையும் அசைத்து அபிநயங் காட்டி எண்ணெயில் தை தை யென்று குதிக்கும் அப்பத்தைப் போல நிலை கொள்ளாமல் ஆடித் தவித்தாள். வாயில்லா ஜெந்துக்களான பாத்திரங்கள் உணவுப்பொருட்கள் முதலியவற்றிற்குமே அந்த நாள் விசனகரமான நாளாய் முடிந்தது. அத்தகைய நிலையில் வீட்டின் காரியங்களைத் தான் செய்வதாக அவளுக்கு நினைவு ; இங்கிருந்ததை அங்கு வைத்தல்; அங்கிருந்ததை இங்கு வைத்தல், அவ்வளவு காரியம் வீடு முற்றிலும் அலங்கோலம். மேனகா தன் கணவன் வீட்டைவிட்டுப் பிரயாணம் போனமையால் அன்று சாம்பசிவத்தின் வீட்டிலிருந்த பொருட்களுக்கெல்லாம் தத்தம் இருப்பிடத்தை விட்டுப் பிரயாணம். அவளுடைய அபி நயங்களுக் கிணங்கப் பாத்திரங்கள் யாவும் பக்க வாத்தி யங்களாய் முழங்கின. அம்மிக்குழவி "திமி திமி தை தா" வென்று நாட்டியமாடியது.
செம்புகள் உருண்டு போய்த் தவலைகளிடம் முறையிட்டன. தவலைகள் தக்காளிப் பழமாய் நசுங்கிப் போய்ச் சுவரில் முட்டி அதைத் தட்டி யெழுப்பின; சுவர்களோ தாம் நியாயாதிபதியான டிப்டி கலெக்டர் வீட்டிலிருந்தும், அம்மாளின் செய்கைக்கு அப்பீலில்லையே என்று வருந்தி வாய்விட்டாற்றின. அடுப்புகள் இடிந்தன. துடுப்புகள் ஒடிந்தன, அறைகள், ஜன்னல்கள் முதலியவை அவள் நடந்த அதிர்ச்சியால் நடுக்கு ஜுரங் கொண்டு நடுங்கின. அரிசியும் பருப்பும் சிதறி யோடின. ''பாழும் வயிற்றிற்கு இன்றைக்குக்கூடப் பிண்டமா?" என்று நினைத்த அம்மாள் அடுப்பில் தண்ணீரை வார்த்து அதற்கு நீராட்டம் செய்து வைத்தாள். மறைந்து கொள்ள இடமில்லாமல் ஓட்டின் மீது அஞ்சி நின்ற பூனைக்கூட்டி, அம்மாள் அடுப்பிற்கு அன்று விடுமுறை நாள் கொடுத்ததையறிந்து, அவளுக்குத் தெரியாமல் அதற்குள் மறைந்து அம்மாள் வருகிறாளோ வென்பதை அறிய இரட்டைத் தீவெட்டி போட்டதைப் போல கண்கள் மின்ன உற்றுப் பார்த்திருந்தது, அப்பூனைக்குட்டியைக் காட்டிலும் அதிகரித்த அச்சத்தையும், பெண்ணைப்பற்றிய விசனத்தையும் கொண்ட டிப்டி கலெக்டரின் மனையாட்டி தங்கம்மாள், மேனகா காணாமற்போனது பொய், தான் காணாமற் போனது நிஜமென்று செய்ய நினைத்தவளைப் போலக் கட்டிலிற்கடியில் மறைந்து துப்பட்டியால் தலை முதல் கால்வரையில் மூடிப் படுத்து டிப்டி கலெக்டர் தன்னையும் தேடும்படி செய்தாள். அந்தப் பெரும்புயலையும் மழையையுங் கண்டு அதிலிருந்து தப்ப நினைத்த ரெங்கராஜு தனக்கு வயிறு வலிக்கிறதென்று எதிரிலுள்ள சுருட்டுக்கட்டை இராமச்சந்திராவிடம் சொல்லி விட்டுக் கம்பி நீட்டினான்.
" என்ன ஆச்சரியம் இது! நான் பட்டணத்திற்குப் போனேனாம்! அவர்களிடம் சொல்லாமல் பெண்ணை அழைத்து வந்துவிட்டேனாம்! ஜெகஜாலப் புரட்டா யிருக்கிறதே! இந்தத் தந்தியை வேறு யாராயினும் அனுப்பி யிருப்பார்களா? இங்குள்ள நம்முடைய விரோதிகளின் தூண்டுதலினால் நடந்திருக்குமா? பெருத்த அதிசயமாய் இருக்கிறதே!" என்று சாம்பசிவம் தனக்கு எதிரிலிருந்த கம்பத்தோடு பேசினார். அதைக் கேட்ட தாய் "போடா! பைத்தியக்காரா! நம்முடைய தந்தி போய்ச் சேர்ந்து இரண்டு நாழிகையாயிருக்குமே. பொய்த் தந்தியா யிருந்தால் உடனே மறு தந்தி அனுப்பி யிருக்கமாட்டானா? இம்மாதிரி பொய்த் தந்தி அனுப்புவதால் யாருக்கு லாபம்? ஒன்றுமில்லை. நிஜமாய்த்தான் இருக்கும். அந்த முண்டைகள் கொலை செய்யவும் அஞ்சமாட்டார்களே; அந்தப் பைத்தியம் வீட்டை விட்டுப் போயிருக்கையில் பெண்ணை வெட்டிக் கொல்லை யிற் புதைத்துவிட்டு, அவனிடம் இப்படிப் பொய் சொல்லி யிருப்பார்களா!'' என்று ஆத்திரமும் துடிதுடிப்புங் கொண்டு கூறினாள்.
சாம்ப - அவர்களுக்கு நம்முடைய குழந்தையிடத்தில் அவ்வளவு பகைக்கென்ன காரணமிருக்கிறது? அப்படி வெறுப்பவர்கள் இங்கிருந்தவளை அழைத்துப் போக வேண்டிய தன் காரணமென்ன? - என்றார்.
கனகம் - உன்னைப்போல படித்த முட்டாள் ஒருவனும் இருக்க மாட்டான். பணத்தாசை எதைத்தான் செய்யாது? அவள் உடம்பிலிருந்த நகைகள் மூவாயிரம் பெறுமே, அவைகளை எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? அதற்கா கத்தான் இருக்கலாம். என்னவோ எல்லாம் நாளைக்குக் காலையில் விளங்கப் போகிறது. இன்றைய பகலும் இரவும் போகவேண்டுமே! பாழாய்ப்போன ரயில் சாயுங்காலத் திலல்லவா பட்டணத்திற்குப் புறப்படுகிறது. நீ அங்கே போனவுடன் அவசரத் தந்தி அனுப்ப வேண்டும். பேசாம லிருந்து விடாதே - என்றாள்.
சாம்ப:- கலெக்டர் இன்று காலையில் ஒரு காரியமாக என்னை வரச்சொல்லி யிருந்தார். நான் வரவில்லையென்று அவருக்குக் கோபமுண்டாயிருக்கலாம். ரஜாக் கொடுக் கிறாரோ இல்லையோ தெரியவில்லை, கொடுக்காவிட்டால் என்ன செய்கிறது?
கனகம்:- இந்த அவசரத்திற்கு இல்லாமல், வேறு எதற்காகத்தான் ரஜா இருக்கிறது? சே! பெரிய துரை நல்லவராயிற்றே! அவசரமென்று நீ எழுதி இருக்கும் போது, நீ வரவில்லை யென்று ஏன் கோபிக்கிறான்? அவன் அவ்வளவு அற்பத்தன்மை உடையவனல்லன். உன்னைப்போலவும் உன்னுடைய தாந்தோனிராயனைப்போலவும் நடப்பா னென்று பார்த்தாயோ? துரைகள் அறியாமையால் ஏதாயினும் தவறு செய்வார்கள். நீங்களோ வேண்டு மென்று செய்பவர்கள். துரை ஒரு அடி வைத்தால் நீங்கள் ஒன்பதடி பாய்கிறீர்கள். தகப்பனுக்குத் திதி யென்று கோபாலசாமி அய்யர் ரஜாக் கேட்டதற்குத் துரை, "ஏன் ஞாயிற்றுக்கிழமை சாவகாசமாய் வைத்துக்கொள்ளக் கூடாதா?" என்று அறியாமையால் கேட்டான். தாலுகா குமாஸ்தா தனகோடிப் பிள்ளை தனக்கு சாந்தி முகூர்த்தம் என்று இரண்டு நாளைக்கு ரஜாக் கேட்டபோது, வேறு ஏஜென்டு வைத்து அதை ஏன் நடத்தக் கூடாது என்று கேட்டான். வெள்ளைக்காரரை நம்பலாம்; உங்களை நம்பக்கூடாது - என்றாள்.
அப்போது கிண் கிண்ணென்று பைசைகிளின் மணியோசை உண்டாயிற்று. அடுத்த நிமிஷம் தடதடவென்று சைகிளை உள்ளே உருட்டிக்கொண்டு வந்த கிட்டன் அதை யொரு புறமாக நிறுத்தி விட்டு நேராகச் சாம்பசிவத்தினிடம் சென்று தனது சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை யெடுத்து மேஜை மீது வைத்தான். அவர் மிகுந்த ஆத்திரத்தோடு பாய்ந்து கடிதத்தை எடுத்துப் பிரித்தார். கனகம்மாளும் ரஜாக் கிடைத்ததோ இல்லையோ என்பதை அறிய ஆவல் கொண்டு துடி துடித்து நின்றாள்.
அவர் கடிதத்தைப் படிப்பதற்குள் நாம் அதைக் கொணர்ந்த கிட்டனைப் பற்றிய விவரத்தில் சிறிதறிவோம். அவன் தங்கம்மாளின் தம்பி என்பதைச் சொல்வது மிகையாகும். அவன் இருபத்திரண்டு வயதடைந்தவன். அழகிய சிவந்த மேனியையும் வசீகரமான பெண் முகத்தையும் பெற்றவன். அவன் தலையின் குடுமியை நீக்கி முன்மயிர் வளர்த்து அதை இரண்டாய் வகிர்ந்து விட்டிருந்தான். அவனுடைய நெற்றியில் சாந்துத் திலகமும், வாயிற் புகையிலை அடக்கியதால் உண்டான கன்னப் புடைப்பும் எப்போதும் குன்றின் மேல் விளக்காயிருந்து அவன் முகத்திற்கு அழகு செய்து கொண்டிருந்தன. அவன் கல்வி கற்கும் பொருட்டுப் பள்ளிக்கூடத்திற்குப் பல வருஷங்கள் சென்று புகையிலை போடுதல், பொடி போடுதல் முதலிய இரண்டு பரிட்சைகளிலும் முதல் வகுப்பில் தேறிவந்தான்.
அவனுடைய தந்தை சொற்பமான நிலத்தின் வருமானத்தில் ஜீவனம் செய்து வந்தவர். புத்திரன் கல்வி கற்கச்சென்றவன் ஆதலால் நிலச்சாகுபடி செய்தலைக் கற்கவில்லை. நிலச்சாகுபடி செய்தலும் இழுக்கான தொழிலென அவன் மதித்தான். குமாஸ்தா, கணக்குப் பிள்ளை முதலிய உத்தியோகம் அவருடைய பெருமைக்குக் குறைவானது. அவற்றிலும் பெரிய உத்தியோகங்களைச் செய்யத் தேவையான உயர்ந்த பரிட்சைகளில் அவன் தேறவில்லை. ஆகையால், அவனுக்குத் தகுந்த உத்தியோகம் உலகத்தில் ஒன்றுமில்லை. இத்தகை யோருக்கு சாம்பசிவத்தைப் போன்ற மனிதர் வீட்டில் வந்திருந்து அதிகாரம் செய்து சாப்பிடுதலே உத்தியோகம். அவனுடைய கெட்ட பழக்க வழக்கங்களைக் கண்டு அவனுடைய தந்தையும் அவனை அடிக்கடி கண்டித்தார். தவிர, அவனுக்குத் தேவையான காப்பியும் பலகாரங்களும் வேளைக்கு வேளை அங்கு கிடைக்கவில்லை. ஆகையால், சாம்பசிவத்தின் வீட்டில் சர்வாதிகாரியா யிருத்தல் அவனுக்குப் பரமபதமாய் இருந்தது. அவன் தனது தகப்பன் வீட்டில் சோற்றுக்கு மல்லுக்கட்டினான். அக்காள் வீட்டிலோ இடுப்பிற்கு மல்லுக் கட்டினான். உடம்பில் பிளானல் ஷர்ட், தோளில் பட்டு உருமாலை, தலையில் மகம்மதியர் தரிக்கும் நீண்ட அரபிக் குல்லா, கையில் வெள்ளி முகப்பு வைத்த சிறிய பிரம்பு முதலியவைகளே அவன் மனதிற்கு உகந்த ஆடையா பரணங்கள். இத்தகைய அலங்காரத்தோடு அவன் வெளிப்படுவானாயின், பன்னிரண்டு நாமங்கள் தரித்த வைதிகரான அவனுடைய தந்தை அவன் தமது மைந்தரென்று சத்தியம் செய்தாலும், அவரது சொல்லை எவரும் நம்பார்.
தவிர, அவன் தமது புத்திரன் என்பதை அவரே கண்டுபிடித்தல் முடியாது. ஆனால் சூது, கபடம், வஞ்சம் முதலியவற்றை அவன் அறியாதவன். முகவசீகரம் பெற்றவன். அவனுடைய கபடமற்ற தோற்றமும், குழந்தைச் சொற்களும், அவன் மீது யாவரும் விருப்பங்கொள்ளச் செய்தன. சாம்பசிவம் தமது மனைவியின் மீது காதல் கொண்டிருந்தார். கிட்டான் மீதோ மோகங் கொண்டிருந்தார். தங்கம்மாள் சாம்பசிவத்தைக் காணாமல் ஒரு பகல் சகிப்பாள்; தமது செல்லத் தம்பியான கிட்டனைக் காணாமல் பத்து நிமிஷமும் சகித்திராள். வீட்டின் விஷயங்களில் அவ்விருவரும் அவன் சொல்லை மிக்க மதித்து அதன்படியே நடந்து வந்தனர். வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்குதலிலோ மற்ற தேவைகளைக் கவனித்தலிலோ அவன் எஜமான், அவன் சித்தமே மந்திரி. அவனுக்குப் பலவகைப்பட்ட மனிதரென்னும் வேறுபாடே கிடையாது. தம் வீட்டுக் குதிரைக் காசாரியோடும் சகோதர உரிமை பாராட்டி அவனோடு கட்டிப் புரளுவான். வாசற் பெருக்கி நாகம்மாளின் வெற்றிலை பாக்குப் பையைப் பிடுங்கி அதிலிருந்து புகையிலை எடுத்துப் போட்டுக்கொள்வான். அவன் மனதில் ஒரு இரகசியம் நிற்பதில்லை. பெருத்த கொலை, கொள்ளை முதலிய கேஸ்களில் சாம்பசிவம் முதல் நாளே தீர்மானம் எழுதிவிடுவார். கிட்டன் அதை வேடிக்கையாகப் படித்துப் பார்த்துவிட்டு இரகசியமாக சேவகர்களிட மெல்லாம் சொல்லிவிடுவான். அவர்கள் அந்தச்சரக்கை வைத்துக்கொண்டு தமது திறமைக்குத் தகுந்தபடி வர்த்தகம் செய்து டிப்டி கலெக்டர் பெயரைச் சொல்லி பெருத்த பொருள் தட்டி விடுவார்கள். அதனால் டிப்டி கலெக்டர்லஞ்சம் வாங்குகிறார் என்று பெருத்த வதந்தி கிளம்பி ஊரெல்லாம் அடிபட்டது. அவர்மீது ஆத்திரங் கொண்டவர் யாவரும் அதை ஒன்றிற்குக் கோடியாய் வளர்த்துப் பேசி வந்தனர்.
இத்தகைய குண வொழுக்கங்களைக் கொண்ட யௌவனப் புருஷனான கிட்டன் கொடுத்த கடிதம் பெரிய கலெக்டர் துரையிடத்திலிருந்து வந்தது என்பதைக் கூறுதல் மிகையாகும். அதைப் படித்த சாம்பசிவத்தின் முகம் மாறியது. கோபத்தினால் தேகம் துடித்தது. பெரிய கலெக்டர் அங்கி ருந்தால் அவருடன் கைக்குத்துச்சண்டைக்குப் போயிருப்பார். என்ன செய்வதென்னும் குழப்பமும் கோபமும் ஒன்று கூடி அவரைப் பெரிதும் வதைத்தன. மதிமயக்கங் கொண்டு திரும்பவும் தமது நாற்காலியில் சாய்ந்து விட்டார். ரஜாக் கொடுக்கப்படவில்லை என்று உணர்ந்த கனகம்மாளின் நிலைமையை வருணித்தல் எளிய காரியமன்று. குரங்கு இயற்கையில் சுறுசுறுப்பானது. அது மரத்திலேறி கள்ளைக் குடித்து விட்டது. உச்சியிலிருந்த பேயொன்று குரங்கைப் பிடித்துக்கொண்டது. கீழே இறங்குகையில் தேளொன்று அதைக் கொட்டி விட்டது. அத்தகைய நிலைமையில் அக்குரங்கு எவ்வித ஆடம்பரம் செய்யுமோ அவ்வாறு கனகம்மாள் காணப்பட்டாள். அவளுடைய கோபமும், ஆத்திரமும் குதிப்பும் ஆயிரம் மடங்கு பெருகிப் பெரிய கலெக்டர் மீது திரும்பின. அவனுக்கு சகஸ்ரநாம (1000- பெயர்களால்) அருச்சனை செய்யத் தொடங்கினாள். அது பேரிடி மின்னல்களுடன் ஏழு மேகங்களும் ஒன்று கூடி அந்த மாளிகைக்குள் பொழிந்ததை யொத்தது.
அப்போதே அந்த மழைக்கு அஞ்சி அதில் நனையாமல் இருக்க முயல்பவனைப் போல சுவரோரத்தில் பதுங்கி, இடையில் அணிந்த வஸ்திரத்தை மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு மெல்ல ஒரு சேவகன் டிப்டி கலெக்டர் இருந்த இடத்திற்கு வந்தான். அவனைக் கண்ட சாம்பசிவம் கோபத்தோடு உரத்த குரலில், "ஏனடா! என்ன சங்கதி?" என்று அதட்டிக் கேட்டார். மழையில் நனைந்தவனுக்கு நடுக்கம் உண்டாதலைப்போல , அவனுடைய கை, கால்கள் அச்சத்தினால் வெடவெடென்று நடுங்கின. துணிந்து அவனது வாய் வரையில் வந்த சொல், திரும்பித் தொண்டைக்குள் போய்விட்டது. அவர் மேலும் இனுனொருமுறை முன்னிலும் ஓங்கி அதட்டிக் கேட்க, அவன் "சின்ன எஜமான்; சின்ன எஜமான்" என்று கையைப் பின்புறம் கட்டினான்.
கிட்டனை வேலைக்காரர் யாவரும் சின்ன எஜமான் என்று குறித்தல் வழக்கம். ஆதலால் கிட்டன் மீது ஏதோ கோட் சொல்ல அவன் வந்தான் என்று நினைத்த சாம்பசிவம், "ஏனடா கழுதை! அவன் மேல் என்னடா சொல்ல வந்தாய்? செருப்பாலடி நாயே! இதுதான் சமயமென்று பார்த்தாயோ? போக்கிரிக் கழுதே! ஓடு வெளியில் என்று கூறிய வண்ணம் எழுந்து அவனை அடிக்கப் பாய்ந்தார். அவன் நெருப்பின் மீது நின்று துடிப்பவனைப் போல தத்தளித்துத் தனது பற்களை யெல்லாம் ஒன்றையும் மறையாமல் வெளியிற்காட்டி, "இல்லை எஜமான்! ராயர் எஜமான் வந்திருக்கிறார்" என்றான்.
''அவன் யாரடா ராயன்? எந்தக் கழுதையையும் இப்போது பார்க்க முடியாது! போ வெளியில்” என்றார்.
தன் மீது அடிவிழுந்தாலும் பெறத் தயாராக நின்ற சேவகன் மேலும், “தாலுகா எஜமான் வந்திருக்கிறார்" என்றான்.
அதைக் கேட்ட சாம்பசிவத்தின் கோபம் உடனே தணிவடைந்தது. "யார்? தாசில்தாரா வந்திருக்கிறார்? உள்ளே அழைத்துவா!” என்றார்.
உட்புறத்தில் நடந்த அழகிய சம்பாஷணையை முற்றிலும் கேட்டிருந்த நமது தாந்தோனிராயர் பெரிதும் வெட்கினார்; அவருடைய தேகம் குன்றியது; என்றாலும் அக் குறிகளை மறைத்து, ஒன்றையும் கேளாதவரைப் போல எத்தகைய சலனமும் இல்லாத முகத்தோற்றத்தோடு உள்ளே நுழைந்தார். டிப்டி கலெக்டரிடத்தில் அந்தரங்க அன்பையும், மரியாதை யையும், பணிவையும் கொண்டவரென்று அவருடைய முகங் காட்டியது. "காலை வந்தனம் ஐயா!"(Good Morning Sir) என்னும் ஆங்கிலச் சொற்கள் அவருடைய வாயிலிருந்து வந்தன. அதே காலத்தில் இந்து மதக் கொள்கையின்படி கைகளைக் குவித்தார்.
அவர் ஒன்றற் கொன்று பொருந்தாக் காரியங்களைச் செய்யும் மனிதர் ஆதலின் அவரிடம் விழிப்பாயிருக்க வேண்டு மென்று அவருடைய வந்தனமே டிப்டி கலெக்டரை எச்சரித்ததைப் போல இருந்தது.
------------------
மேனகா :
அதிகாரம் 10 - வேடச்சிறான்கை மாடப்புறா
சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவில் மேனகா இருந்த அறைக்குள் நுழைந்த மகம்மதியனுடைய வயது சற்றேறக்குறைய இருபத்தேழு இருக்கலாம். சிவப்பு நிறத்தைக் கொண்ட நீண்டு மெலிந்த சரீரத்தை உடையவன். அவன் முகத்தில் சிறிதளவு மீசை மாத்திரம் வளர்த்திருந்தான். தலையின் மயிரை ஒரு சாணளவு வெட்டி விட்டிருந்தான். ஆதலின் அது நாய் வாலைப்போல முனை மடங்கி அவனுடைய கழுத்தைச் சுற்றிப் பரவி முகத்திற்கு அழகு செய்தது. கருமையாய்ச் செழித்து அடர்ந்து வளர்ந்திருந்த இரண்டு புருவங்களும் இடைவெளியின்றி இயற்கையிலேயே ஒன்றாய்ச் சேர்ந்திருந்தமையாலும், கண்களில் மை தீட்டப்பட்டிருந்தமையாலும் அவனுடைய முகம் பெண்மை யையும் ஆண்மையையும் ஒருங்குகூட்டி மிக்க வசீகரமாய்த் தோன்றியது. வாயில் வெற்றிலை அணிந்திருந்தான். உடம்பிலும் உடைகளிலும் பரிமளகந்தம் கமழ்ந்து நெடுந்தூரம் பரவியது. அவனுடைய இடையில் பட்டுக் கைலியும், உடம்பில் பவுன் பொத்தான்களைக் கொண்ட மஸ்லின் சட்டையும், தோளில் ஜரிகை உருமாலையும் அணிந்திருந்தான். கையிற் பல விரல்களில் வைரம், கெம்பு, பச்சை முதலியவை பதிக்கப்பெற்ற மோதிரங்கள் மின்னின.
அவ்வித அலங்காரத்தோடு தோன்றிய நைனாமுகம்மது மரக்காயன், மேனகாவுடன் நெடுங்காலமாய் நட்புக் கொண்டவனைப்போல அவளை நோக்கி மகிழ்வும் புன்முறுவலுங் காட்டி, “மேனகா! இன்னமும் உட்காராமலா நிற்கிறாய்? இவ்வளவு நேரம் நின்றால் உன் கால் நோகாதா? பாவம் எவ்வளவு நேரமாய் நிற்பாய்! அந்த சோபாவில் உட்கார். இது யாருடைய வீடோ என்று யோசனை செய்யாதே. இது உன்னுடைய வீடு. எஜமாட்டி நிற்கலாமா? எவனோ முகமறியாதவன் என்று நினைக்காதே. உன்னுடைய உயிருக்கு உயிரான நண்பனாக என்னை மதித்துக்கொள் என்றான்.
அவன் தனது பெயரைச்சொல்லி அழைத்ததும், ஆழ்ந்த அன்பைக் காட்டியதும், அவனுடைய மற்றச் சொற்களும், அவனது காமாதுரத் தோற்றமும் அவளுக்குக் கனவில் நிகழ்வன போலத் தோன்றின. அது இந்திர ஜாலத்தோற்றமோ அன்றி நாடகத்தில் நடைபெறும் ஏதாயின் காட்சியோ என்னும் சந்தேகத்தையும் மனக் குழப்பத்தையும் கொண்டு தத்தளித்து, அசைவற்றுச் சொல்லற்றுக் கற்சிலைப்போல நின்றாள். நாணமும் அச்சமும் அவளுடைய மனதை வதைத்து, அவளது உடம்பைக் குன்றச் செய்தன. அன்றலர்ந்த தாமரை மலர் காம்பொடி பட்டதைப் போல முகம் வாடிக் கீழே கவிழ்ந்தது. வேறொரு திக்கை நோக்கித் திரும்பி மௌனியாய் நின்றாள். சிரம் சுழன்றது. வலைக்குள் அகப்பட்ட மாடப்புறா , தன்னை எடுக்க வேடன் வலைக்குள் கையை நீட்டுவதைக் கண்டு உடல் நடுக்கமும் பேரச்சமும் கொண்டு விழிப்பதைப்போல, அவள் புகலற்று நின்றாள். அந்த யௌவனப் புருஷன் மேலும் தன்னிடம் நெருங்கி வந்ததைக் கடைக்கண்ணால் கண்டாள். நெஞ்சம் பதறியது. அங்கம் துடித்தது. அருகிற் கிடந்த கட்டிலிற்கு அப்பால் திடீரென்று விரைந்து சென்று நின்றாள். பெருங் கூச்சல் புரியலாமோ வென்று நினைத்தாள்.
அச்சத்தினால் வாயைத் திறக்கக் கூடாமல் போயிற்று. அதற்குள் அந்தச் சிங்காரப் புருஷன் கட்டிலிற்கு எதிர்புறத்திலிருந்த ஒரு சோபாவில் உட்கார்ந்து, "மேனகா! நீ ஏன் மூடப் பெண்களைப்போல இப்படிப் பிணங்குகிறாய்? உன்னுடைய உயர்ந்த புத்தியென்ன! அருமையான குணமென்ன! மேலான படிப்பென்ன! நீ இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது! நானும் ஒரு மனிதன் தானே! பேயல்ல ; பிசாசல்ல; உன்னை விழுங்கிவிட மாட்டேன். அஞ்சாதே! அப்படி அந்தக் கட்டிலின் மேல் உட்கார்ந்துகொள். உன் வீட்டிலிருந்து இவ்வளவு தூரம் வந்து இங்கே நிரம்ப நாழிகையாய் நின்றதனால் களைத்துப் போயிருக்கிறாய்! அதோ மேஜையின் மேல் தின் பண்டங் களும், பழங்களும் ஏராளமாய் நிறைந்திருக்கின்றன வேண்டியவற்றை எடுத்துச் சாப்பிட்டுக் களைப்பாற்றிக்கொள். சந்தோஷமாக என்னுடன் பேசு. நீ இப்படி வருந்தி நிற்பதைக் காண என் மனம் துடிக்கிறது. கவலைப்படாதே. விரோதியின் கையில் நீ அகப்பட்டுக் கொள்ளவில்லை. உன்னைத் தன் உயிரினும் மேலாக மதித்து, தன் இருதயமாகிய மாளிகையில் வைத்து தினம் தினம் தொழுது ஆண்டவனைப்போல வணங்கும் குணமுடைய மனிதனாகிய என்னிடம் நீ வந்த பிறகு உன்னுடைய கலியே நீங்கிவிட்டது.
நீ எங்கு சென்றால் உனக்குப் பொருத்தமான சுகத்தையும் இன்பத்தையும் நீ அடைவாயோ அங்கு உன்னை ஆண்டவன் கொணர்ந்து சேர்த்துவிட்டான். நீ உன் வீட்டில் அடைவதைவிட இங்கு ஆயிரம் பங்கு அதிகரித்த செல்வாக்கை அடையலாம். உனக்கு புலிப்பால் தேவையா? வாய் திறந்து சொல்; உடனே உனக்கெதிரில் வந்து நிற்கும்; ஆகா! உன் முகத்தில் வியர்வை ஒழுகுகிறதே! கைக்குட்டையால் துடைக்கட்டுமா? அல்லது விசிறிகொண்டு வீசட்டுமா?" என்றான். அதைக் கேட்ட மேனகாவின் உயிர் துடித்தது. கோபமும், ஆத்திரமும் காட்டாற்று வெள்ளமென வரம்பின்றிப் பொங்கி யெழுந்தன. தான் ஏதோ மோசத்தில் அகப்பட்டுக் கொண்டதாக நன்றாக உணர்ந்தாள். இன்னமும் தான் நாணத்தினால் மௌனங் கொண்டிருந்தால், தன் கற்பிற்கே விபத்து நேர்ந்து விடும் என நினைத்தாள். பிறர் உதவியின்றி தனிமையில் விபத்தில் இருக் கையில் பெண்டீர் நாணமொன்றையே கருதின், மானமும், கற்பும் நில்லாவென எண்ணினாள். புலியின் வீரத்தையும், துணிவையும், வலுவையும் கொண்டாள். தனது சிரத்தை உயர்த்தி, "ஐயா! இது எந்த இடம்? என்னை அழைத்துவந்த மனிதர் எங்கு போயினர்? நீர் யார்? என்னை இவ்விடத்தில் தனிமைப் படுத்தியதின் காரணம் என்ன? தயவு செய்து இவற்றைத் தெரிவித்தால், நீர் இப்போது செய்த உபசரணைகளைக் காட்டிலும் அது பதின்மடங்கு மேலான உதவியாகும்" என்றாள்.
நைனா முகம்மது முன்னிலும் அதிகரித்த மகிழ்ச்சி கொண்டு, "பலே! இவ்வளவு அழகாய்ப் பேசுகிறாய்! உனக்கு வீணை வாசிக்கத்தெரியும் என்று நான் கேள்விப்பட்டேன். நீ பேசுவதே வீணை வாசிப்பதைப் போலிருக்கிறதே! இன்னம் வீணை வாசித்துப் பாடினால் எப்படி இருக்குமோ! மூடப்பெண்களைக் கலியாணம் செய்து, பிணத்தைக் கட்டி அழுதலைப்போல ஆயிரம் வருஷம் உயிர் வாழ்வதைவிட மகா புத்திசாலியான உன்னிடம் ஒரு நாழிகை பேசியிருந்தாலும் போதுமே! இந்தச் சுகத்துக்கு வேறு எந்தச் சுகமும் ஈடாகுமோ! மேனகா! நீ கேட்கும் கேள்வி ஆச்சரியமா யிருக்கிறது; இப்போது இங்கு வந்த உன்னுடைய தாயும், அண்ணனும் உன்னை ரூபா பதினாயிரத்துக்கு என்னிடம் விற்றுவிட்டது உனக்குத் தெரியாதா? அவர்கள் உங்களுடைய வீட்டிற்குப் போய்விட்டார்களே! அவர்கள் உண்மையை உன்னிடம் சொல்லியிருந்தும் நீ ஒன்றையும் அறியாதவளைப் போலப் பேசுகிறாயே! பெண்களுக்குரிய நாணத்தினால் அப்படி பேசுகிறா யென்பது தெரிகிறது. நீ பொய் சொல்வதும் ஒரு அழகாய்த்தான் இருக்கிறது! பாவம் இன்னமும் நிற்கிறாயே!
முதலில் உட்கார்ந்துகொள். பிறகு பேசலாம். நிற்பதனால் உன் உடம்பு தள்ளாடுவதைக் காண, என் உயிரே தள்ளாடுகிறது. அந்த மெத்தையின் மீது உட்கார். என் பொருட்டு இது வரையில் நின்று வருந்திய உன் அருமையான கால்களை வருடி இன்பங் கொடுக்கட்டுமா? அதோ மேஜைமீது காப்பி, ஷர்பத், குல்கந்து, மல்கோவா, செவ்வாழை, ஆப்பிள், ஹல்வா, போர்ட்டு ஒயின், குழம்புப்பால் முதலியவை ஏராளமாய் இருக்கின்றன. நான் எடுத்து வாயில் ஊட்டட்டுமா! என் ராஜாத்தி! பிணங்காதே; எங்கே; இப்படி வா! உனக்கு வெட்கமா யிருந்தால், நான் என் கண்ணை மூடிக்கொள்கிறேன்; ஓடிவந்து ஒரு முத்தங்கொடு. அல்லது நீ கண்ணை மூடிக்கொள்; நான் வருகிறேன்" என்றான்.
அவனுடைய மொழிகள், அவள் பொறுக்கக்கூடிய வரம்பைக் கடந்து விட்டன. ஒவ்வொரு சொல்லும் அவளுடைய செவியையும், மனத்தையும் தீய்த்தது. இரு செவிகளையும் இறுக மூடிக்கொண்டாள்; கோபமும், ஆத்திரமும் அணை பெயர்க்கப்பட்ட ஆற்று வெள்ளமெனப் பொங்கி யெழுந்தன; தேகம் நெருப்பாய்ப் பற்றி எரிந்தது. கோபமூட்டப்பெற்ற சிறு பூனையும் புலியின் மூர்க்கத்தையும் வலுவையும் கொள்ளு மென்பதற்கு இணங்க அவள் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து, அவனுடைய தலையை உடலினின்று ஒரே திருகாய்த் திருகி யெறிந்து அவன் அதற்கு மேல் பேசாமல் செய்துவிட நினைத்தாள். அவன் கூறிய சல்லாப மொழிகளைக் கேட்டதனால் அவளுடைய மனதில் உண்டான பெருஞ்சீற்றம் அவளது இருதயத்தையும், தேகத்தையும், அவனையும், அந்த மாளிகையையும் இரண்டாகப் பிளந்தெறிந்து விடக்கூடிய உரத்தோடு பொங்கியெழுந்தது. உருட்டி விழித்து ஒரே பார்வையால் அவனை எரித்துச் சாம்பலாக்கித் தான் சாம்பசிவத்தின் புதல்வி யென்பதைக் காட்ட எண்ணினாள். அவன் உபயோகித்தகன்னகடூரமான சொற்களைக் காட்டினும், பெருந்தேவியம்மாளும், சாமாவையரும் தன்னை விற்றுவிட்டார்கள் என்னும் சங்கதியே பெருத்த வியப்பையும், திகைப்பையும் உண்டாக்கியது. அவள் பைத்தியங்கொள்ளும் நிலைமையை அடைந்தாள். என்றாலும், அபலையான தான், அன்னியன் வீட்டில் அவனுடைய வலுவை அறியாமல் தேகபலத்தினால் மாத்திரம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்தல் தவறென மதித்தாள். மேலும், என்ன நடக்கிற தென்று அறிய நினைத்து தனது கோபத்தை ஒரு சிறிது அடக்கிக்கொண்டாள். தன் கணவனையும் தன் குடும்பச் தெய்வமான ஸ்ரீநிவாசப் பெருமாளையும் நினைத்து மனதிற்குள் ஸ்தோத்திரம் செய்தாள்.
இனித் தன் கணவனுக்கும் தனக்கும் உறவு ஒழிந்தது நிச்சயமென்று மதித்தாள். அந்தப் பிறப்பில் தான் கணவனுடன் வாழ்க்கை செய்தது அத்துடன் அற்றுப்போய் விட்டது நிச்சயமென்று எண்ணினாள். எப்பாடு பட்டாயினும் தன் உயிரினும் அரிய கற்பை மாத்திரம் காத்து அவ்விடத்தை விடுத்து வெளியிற் போய்க் கிணற்றில் வீழ்ந்து உயிர் துறந்துவிடத் தீர்மானித்தாள். அவனிடம் முதலில் நயமான சொற்களைக் கூறி அவன் மனதை மாற்ற நினைத்து, "ஐயா! நீர் படிப்பையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் பெருமைப் படுத்துவதிலிருந்தே, நீரும் படித்த புத்திமான் என்று தோன்றுகிறது. நான் அன்னிய புருஷனுடைய மனைவி. நானென்ன உப்பா புளியா? என்னை விற்கவும் வாங்கவும் யாருக்கு அதிகாரம் இருக்கிறது? என்னை விற்க என்னுடைய புருஷனுக்குக் கூட அதிகாரமில்லையே! அப்படி இருக்க, நீர் வஞ்சகமாக என்னைக் கொணர்வதும், என்னால் சந்தோஷ மடைய நினைப்பதும் ஒழுங்கல்ல. நீர் நல்ல ஐசுவரிய வந்தனாய்த் தோன்றுகிறீர். உங்களுடைய ஜாதியில் புருஷர் பல பெண்களை உலகம் அறிய மணக்கலாம். என்னைப் பார்க்கிலும் எவ்வளவோ அழகான பெண்கள் அகப்படுவார்கள். அவர்களை மணந்து உம்முடைய பொருளாக்கிக் கொண்டால் உமது இச்சைப் படி அவர்கள் நடப்பார்கள். கல்வி, வீணை முதலியவற்றைக் கற்றுக் கொடுத்தல் அரிய காரியமல்ல. பணத்தைச் செலவிட்டால், இரண்டு மூன்று வருஷங்களில் அவற்றைக் கற்றுக் கொடுத்துவிடலாம். பிறகு நிரந்தரமாய் நீர் சுகப்படலாம். இந்த அற்பக் காரியத்திற்காகப் பிறன் மனைவியை வஞ்சகமாய்க் கொணர்ந்து சிறைச்சாலைக்குப் போகும் குற்றம் செய்யலாமா? இது புத்திசாலித்தனம் ஆகுமா? இப்போதும் உமக்கு மனைவிமார் இருக்கலாம். அவர்கள் இருக்க வேண்டிய இடமல்லவா இது?
போனது போகட்டும். நீர் சிறுவயதின் அறியாமையால் செய்த இந்தக் காரியத்தை நான் மன்னித்து விடுகிறேன். இதைப்பற்றி நான் வேறு எவரிடத்திலும் சொல்லமாட்டேன்; நிச்சயம். தயவு செய்து என்னை உடனே வெளியில் அனுப்பிவிடும். உலகத்தில் எல்லாப் பொருளிலும் பெண்களே மலிவான பொருள். மற்ற பொருட்களைப் பணம் கொடுத்தே கொள்ள வேண்டும். பெண்களைப் பணம் கொடாமலும் பெறலாம். பெண்களைக் கொள்வதற்காகப் பணமும் பெறலாம் ஆகையால், நீர் உலகறியப் பெண்களை மணந்து கொள்ளலாம். அதில் விருப்பம் இல்லையாயின், வேசையரைத் தேடி வைத்துக் கொள்ளலாம். அவர்களும் உம்மீது ஆசை காட்டுவார்கள். நான் அன்னிய புருஷனுடைய மனைவி. சொந்தக் கணவனையன்றி மற்றவரை நான் விஷமென வெறுப்பவள். என்னிடம் நீர் ஆசையையும், அன்பையும், இன்பத்தையும் பெற நினைத்தல், நெருப்பினிடம் குளிர்ச்சியை எதிர்பார்ப்பதைப் போன்றது தான். உம்முடைய நினைவு என்னிடம் ஒரு நாளும் பலியாது. என்னை அனுப்பிவிடும். உமக்குப் புண்ணியமுண்டு" என்று நயமும் பயமும் கலந்து மொழிந்தாள்.
நைனா முகம்மது புன்னகை செய்து, "உன்னைக் கொஞ்சும் கிளிப்பிள்ளை யென்றாலும் தகும். நீ கோபித்துக் கடிந்து கொள்வதும் காதிற்கு இனிமையாய் இருக்கிறது. நான் எத்தனையோ பெண்களைப் பார்த்தாய்விட்டது. எல்லோரும் முதலில் இப்படித்தான் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் எப்படி மாறினார்கள் தெரியுமா? நான் அவர்களை விட்டு ஒரு நிமிஷம் பிரிவதாயினும் அப்போதே அவர்கள் உயிரை விட்டுவிடுவார்கள். அத்தகைய கண்மணிகளாயினர். அப்படியே நீயும் செய்யப்போகிறாய். பெண்களென்றால் இப்படித்தான் முதலில் பிணங்கவேண்டும் போலிருக்கிறது. எனக்கு உன்மீது ஆழ்ந்த காதல் இருக்கின்றதா என்று பார்த்தது போதும். நான் அல்லா ஹுத்தாலா மீது சத்தியம் செய்கிறேன். இனி நீயே என் உயிர். நீயே என் நாயகி. நீயே என் செல்வம். நீயே நான் தொழும் ஆண்டவன். இந்த உடல் அழிந்தாலும் நான் உன்னையன்றி வேறு பெண்களைக் கண்ணால் பார்ப்பதில்லை; உன் மீது எனக்குள்ள ஆசையை நான் எப்படி விரித்துச் சொல்லப்போகிறேன்! நாம் நூறு வருஷம், ஆயிரம் வருஷம், கோடி வருஷம் , இந்த உலகம் அழியும் வரையிலும், ஒன்றாய்க் கூடியிருந்து இன்பம் அனுபவித்தாலும் அது தெவிட்டுமோ? என் ஆசை குறையுமோ? நான் இறந்தாலும் "மேனகா" என்றால் என் பிணம் எழுந்து உட்காரும், என் உடம்பு மண்ணோடு மண்ணாக மாறினும், மேனகா வருகிறாள் என்றால், அவளுடைய பாதம் நோகுமோ என்று அந்த மண் நெகிழ்ந்து தாமரை இதழின் மென்மையைத் தரும்" என்றான்.
மேனகா:- பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டுமையா; இவ்விடத்தில் உதவியின்றி அகப்பட்டுக்கொண்டேன் ஆகையால், உம்மை நான் ஒரு மனிதனாய் மதித்து மரியாதை செய்து மறுமொழி தருகிறேன். இத்தகைய அடாத காரியத்தைச் செய்த நீர், எனக்கு உதவி கிடைக்கும் வேறிடத்தில் இருந்தீரானால் உம்மை நான் மனிதனாகவே மதித்திரேன். கேவலம் நாயிலும் கடையாய் மதித்து தக்க மரியாதை செய்தனுப்பி யிருப்பேன். அவ்வாறு உம்மை அவமதிக்கும் என்னிடம் நீர் ஆசை கொள்வதனால் பயனென்ன! உலகத்தில் என்னுடைய கணவன் ஒருவனே என் கண்ணிற்குப் புருஷனன்றி மற்றவர் அழகில்லாதவர், குணமில்லாதவர், ஆண்மை யில்லாதவர், ஒன்று மற்ற பதர்கள். உம்மைக் கொடிய பகைவனாக மதித்து வெறுக்கும் என்னை வெளியில் அனுப்புதலே உமது கௌரவத்துக்கு அழகன்றி, என்னை நீர் இனி கண்ணெடுத்துப் பார்ப்பதும் பேடித்தனம்.
நைனா:- (புன்னகை செய்து ) என் ஆசை நாயகி யல்லவா நீ! நீ எவ்வளவு கோபித்தாலும் எனக்கு உன் மீது கோபம் உண்டாகும் என்று சிறிதும் நினைக்காதே. ஒரு நிமிஷத்தில் நீ என்னுடைய உயிரையும், மனதையும், ஆசையையும் கொள்ளை கொண்டுவிட்டாய். உன் புருஷன் உன்னை எவ்வளவு வைது அடித்துச் சுட்டுத் துன்புறுத்தினாலும் நீ அவனையே விரும்புகிறாயே. அப்படி நீ என்னை இழிவாய்ப் பேசுவதும், கடிந்து வெறுப்பதும் எனக்கு இன்பத்தைத் தருகின்றனவன்றி துன்பமாகத் தோன்றவில்லை. வீணில் பிடிவாதம் செய்யாதே; நீ எவ்வளவு தந்திரமாகப் பேசினாலும், அல்லது வெறுத்துப் பேசினாலும் நான் உன்னை விடப்போகிறதில்லை. என் படுக்கைக்கு அருகில் வந்த பெண்மயிலை நான் விடு வேனாயின் என்னைக் காட்டிலும் பதர் எவனும் இருக்க மாட்டான். நீ எப்படியும் என்னுடைய ஆலிங்கனத்திற்கு வந்தே தீர வேண்டும். அதை நீ வெறுப்போடு செய்வதைவிட விருப்போடு செய்வதே உனக்கும் நன்மையானது; எனக்கும் நன்மையானது. உங்களுக்கு ஒரே புருஷன் மீதுதான் விருப்பம் என்பதென்ன? எங்களிடம் வெறுப்பென்ன? அந்த ஆசை என் மீதும் உண்டாகும் என்பதை நான் உனக்குக் காட்டுகிறேன். ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். அதைப் பற்றிக் கவலைப்படாதே. மாற்றமில்லாத தங்கமல்லவா நீ! இவ்வளவு பாடுபட்டுக் கொணர்ந்த உன்னை விட்டு விட என் மனம் சகிக்குமா? இன்றைக்கு நான் உனக்கருகிலும் வருவதில்லை. நீ ஏதாயினும் ஆகாரம் செய்துவிட்டு சுகமாய்ப் படுத்துக்கொள். இரண்டொரு நாளில் நீயே என்னை விரும்புவாய்.
மேனகா:- (கோபத்தோடு) உமக்கேன் அவ்வளவு வீண் பிரயாசை? இருப்பதை மாற்றவும் இல்லாததை உண்டாக் கவும் உம்மால் ஆகுமா? நாயின் வால் ஏன் கோணலாய் இருக்கிறதென்று நீர் கேட்க முடியுமா? அல்லது அதை நிமிர்க்க உம்மால் ஆகுமா? மனிதன் சோற்றில் கல்லிருக்கிறதென்று அதை நீக்கிவிட்டு ஏராளமாகப் போர் போராய் அகப்படுகிறதென்று வைக்கோலைத் தின்பதுண்டா? என் புருஷன் என்னைக் கொடுமையாய் நடத்துகிறார். நீர் கொள்ளை கொள்ளையாய் ஆசை வைக்கிறீர். அதனால் என்னுடைய உயிருக்குயிரான நாதனை நான் விலக்க முடியுமா? அது ஒரு நாளும் பலிக்கக் கூடிய காரியமல்ல. நீர் என்னை இப்படி வருத்துதல் சரியல்ல; விட்டு விடும். உம்முடைய கோஷா மனைவியை வேறு ஒருவன் அபகரித்துப்போய்த் தனக்கு வைப்பாட்டியாயிருக்க வற்புறுத்தினால் அது உமக்கு எப்படி இருக்கும்? இது ஒழுங்கல்ல, வேண்டாம்; விட்டு விடும். இதுகாறும் நீர் உம்முடைய மனைவியிடத்தில் அனுபவிக்காத எவ்விதமான புதிய சுகத்தை நீர் அயலான் மனைவியிடம் அடையப் போகிறீர்? இந்த வீணான பைத்தியத்தை விடும்.
நைனா:- (புன்சிரிப்போடு) நீ வக்கீலின் பெண்டாட்டி யல்லவா! வக்கீல்கள் இரண்டு கட்சியிலும் பேசுவார்களே. நீ இது வரையில் உன் புருவுன் கட்சியைத் தாக்கிப் பேசினாயே. இப்போது என் கட்சியைக் கொஞ்சம் பேசு. நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆயிரம் ரூபாய் பீஸ் (கூலி ) தருகிறேன். நான் உன் புருஷன் கட்சியைப் பேசுகிறேன். நீ என்னிடம் வந்து விட்டபடியால் உன் புருஷன் பெண்சாதி இல்லாமையால் வருந்துவான். உனக்குப் பதிலாக என்னுடைய மனைவியை அனுப்பி விடுகிறேன். கவலைப்படாதே. நீ இங்கே இருந்து விடு; எவ்வளவோ படித்த நீ உங்கள் புராணத்தை படிக்கவில்லையா! முன் காலத்தில் திரௌபதி ஐந்து புருஷரை மணந்து திருப்தி அடையாமல் ஆறாவது புருஷன் வேண்டும் என்று ஆசைப்பட்டாளே. அவளை பதி விரதைகளில் ஒருத்தியாகத் தானே நீங்கள் நினைக்கிறீர்கள். என்னைத் தவிர நீ இன்னம் நான்கு புருஷர் வரையில் அடையலாம். அதற்கு அப்புறமே நீ பதிவிரதத்தை இழந்தவளாவாய்; அதுவரையில் நீ பதிவிரதைதான். கவலைப்படாதே.
உன்னுடைய கணவன் அறியவே நீ இதைச் செய்யலாம். கோபிக்காதே. நான் அருகில் வந்து உபசாரம் செய்யவில்லை என்று வருத்தம் போலிருக்கிறது! அப்படி நான் கௌரதை பாராட்டுகிறவன் அன்று; இதோ வருகிறேன்; நான் உனக்கு இன்று முதல் சேவகன். இதோ வந்து விட்டேன். என்ன செய்ய வேண்டும் சொல்; முத்தங் கொடுக்கட்டுமா? உன் கணவன் கொடுக்கும் முத்தத்தைப் போல இருந்தால் வைத்துக்கொள். கசப்பா இருந்தால் அதைத் திருப்பிக் கொடுத்து விடு" என்று மகிழ்ச்சியை அன்றிக் கோபத்தைச் சிறிதும் காட்டாமல் வேடிக்கையாகப் பேசிய வண்ணம் எழுந்து அவளைப் பலாத்காரம் செய்யும் எண்ணத்துடன் காமவிகாரங்கொண்டவனாய் அவளை நோக்கி நடந்தான். அவனது நோக்கத்தைக் கண்ட மேனகாவின் உடம்பு உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கிடுகிடென்று ஆடியது. உடம்பெல்லாம் வியர்த்தது. உரோமம் சிலிர்த்தது. மயிர்க்கா லெல்லாம் நெருப்பாக எரிந்தது. கடைசியான விபத்துக் காலம் நெருங்கிவிட்டதாக நினைத்தாள். அந்தத் தூர்த்தனது கையில் அகப்படாமல் எப்படித் தப்புவதென்பதை அறியாமல் கலங்கினாள்.
அவன் தனக்கு அருகில் வருமுன் தனது உயிரைப் போக்கிக் கொள்ள வழியிருந்தால், அந்நேரம் அவள் பிணமாய் விழுந்திருப்பாள். ஆனால், என்ன செய்தாள்? பெண்டுகளின் ஆயுதமாகிய கூக்குரல் செய்தலைத் தொடங்கினாள். "ஐயோ! ஐயோ! இந்த இடத்தில் யாருமில்லையா! இந்த அக்கிரமத்தைத் தடுப்பார் இல்லையா! ஐயோ! ஐயோ! வாருங்கள் வாருங்கள், கொலை விழுகிறது'' என்று பெரும் கூச்சலிட்டவளாய் பதைபதைத்து அப்பால் நகர்ந்தாள். நைனா முகம்மது அலட்சியமாக நகைத்து, "இந்த இடம் பெட்டியைப் போல அமைக்கப்பட்டது. நீ எவ்வளவு கூச்சலிட்டாலும், ஓசை வெளியில் கேட்காது. ஏன் வீண்பாடு படுகிறாய்? குயிலோசையைப் போல இருக்கும் உன் குரலால் பாடி எனக்கு இன்பம் கொடுப்பதை விட்டு ஏன் குரலை இப்படி விகாரப்படுத்திக் கொள்கிறாய்! பேசாமல் அப்புறம் திரும்பி நில்; உனக்குத் தெரியாமல் நான் பின்னால் வந்து கட்டிக் கொள்கிறேன்" என்று கூறிய வண்ணம், கட்டிலுக்கு அப்பால் இருந்த மேனகாவை நோக்கி வேகமாய் நடந்தான். அவள் பெரிதும் சீற்றமும் ஆத்திரமும் கொண்டு அவனை வைதுகொண்டே கட்டிலைச் சுற்றிவரத் தொடங்கினாள். "ஆண் பிள்ளையாய்ப் பிறந்து, எவனும் இப்படிக் கொஞ்சமும் வெட்கம், மானம், சூடு, சுரணை ஒன்றும் இல்லாமலிருக்க மாட்டான். எல்லாம் துறந்த மிருகம்! அருகில் வா ! ஒரு கை பார்க்கலாம். நான் உதவியற்ற பெண்ணென்று நினைத்தாயோ நாவைப் பிடுங்கிக்கொண்டு என் உயிரை விட்டாலும் விடுவே னன்றி, என் உணர்வு இருக்கும்வரையில் இந்த உடம்பு உன் வசப்படாது" என்று பலவாறு தூற்றி பௌரஷம் கூறி மேனகா முன்னால் ஓட, மரக்காயனும் விரைவாகப் பெட்டைக். கோழியைத் துரத்தும் சேவலைப்போலக் கட்டிலைச் சுற்றிச் சுற்றிப் பிரதட்சணம் செய்யத் தொடங்கினான்.
மேனகா அவன் சிறுவனென்று அலட்சியமாக மதித்து, அவனை அவ்வாறே அன்றிரவு முற்றிலும் ஏமாற்றி, அவனுடைய விருப்பம் நிறைவேறா விதம் செய்ய நினைத்தாள். உண்மையில் அவன் ஆண் சிங்கம் என்பதை அவள் அறியவில்லை ; அவளுடைய அற்புதமான அழகில் ஈடுபட்டு நைந்திளகி அவளிடம் கோபத்தையுங் காட்ட மனமற்றவனாய் அவன் அது காறும் அன்பான மொழிகளையே சொல்லி வந்தான். அவள் நெடு நேரமாக ஒரே பிடிவாதமாய்ப் பேசித் தன்னை அலட்சியம் செய்ததைக் காண, கடைசியில் அவனுடைய பொறுமையும் விலகியது. ஒரு பெண்பிள்ளைக்கு இவ்வளவு பிடிவாதமா! இதோ ஒரு நிமிஷத்தில் இவளை என் வசப்படுத்துகிறேன் என்று தனக்குள் நினைத்து உறுதி செய்து கொண்டு, "மேனகா! உன் மனது கோணக்கூடா-தென்று நான் இதுவரையில் தாட்சணியம் பார்த்தேன். உன்னைப் பிடிக்கமுடியாதென்று நினைத்தாயா? இதோ பார்; அடுத்த நிமிஷம் உன் மார்பும் என் மார்பும் ஒன்றாய் சேரப்போகின்றன'' என்றான். குறுக்கு வழியாய்க் கட்டிலின் மீதேறி அவளைப் பிடிக்கப் பாய்ந்தான். அவள் அப்போதே தன்னுயிர் போய்விட்டதாக மதித்தாள்.
கடைசி முயற்சியாக கட்டிலைவிட்டு, அதற்கப்பால் தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த மேஜைக்கப்புறம் விரைந்தோடினாள். அப்போது தற்செயலாய் அவளுடைய கூரிய விழிகள் மேஜையின் மீதிருந்த பொருட்களை நோக்கின. மாம்பழங்களை நறுக்குவதற்காக அதில் ஒரு கத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டாள். அது ஒன்றரைச் சாணளவு நீண்டு, பளப்பளப்பாய்க் கூர்மையாய்க் காணப்பட்டது; கண்ணிமைப் பொழுதில் அவள் அந்தக் கத்தியைக் கையிலெடுத்துக்கொண்டு சுவரை அடைந்து, முதுகைச் சுவரில் சார்த்தி, அவனிருந்த பக்கம் திரும்பி நின்று தனக்குள், ''ஈசுவரனில்லாமலா பொழுது விடிகிறது! நல்ல சமயத்தில் இந்தக் கத்தியைக் கொடுத்தான். அவன் அனாதை ரட்சகனல்லவா. மனிதருக்கு அவனுடைய பாதுகாப்பே காப்பன்றி, அரசனும் சட்டமும் இந்த அக்கிரமத்தைத் தடுத்தல் கூடுமோ? ஒருகாலுமே இல்லை ” என்று நினைத்து, “ஐயா! நீர் இனி வரலாம். நல்ல சமயத்தில் இந்தக் கத்தி எனக்கு உதவி செய்ய வந்தது. நீர் என்னைத் தீண்டு முன் இந்தக் கத்தியின் முழுப்பாகமும், என் மார்பில் புதைந்துபோம். பிறகு என் பிணத்தை நீர் உமது இச்சைப்படி செய்யும் என்றாள்; கத்தியின் பிடியை வலது கையில் இறுகப்பிடித்துத் தனது மார்பிற்கு நேராக விரைந்து உயர்த்திக்கையின் முழு நீளத்தையும் நீட்டினாள்.
அந்த விபரீதச் சம்பவத்தைக் கண்ட நைனா முகம்மது பேரச்சம் கொண்டவனாய் உடனே நயமான உரத்த குரலில் கூவி, "வேண்டாம், அப்படிச் செய்யாதே, நிறுத்து, நான் வெளியில் போய்விடுகிறேன். இனி உன்னைத் துன்புறுத்துவதில்லை. உன்னை உடனே கொண்டு போய் உன் வீட்டில் விட்டுவிடுகிறேன். கவலைப்படாதே" என்ற வண்ணம் அவளை விடுத்து நெடுந்தூரத்திற்கு அப்பாற் போய் நின்று, "பெண்மணி! நான் உன்னை சாதாரணப் பெண்ணாக மதித்து, அறிவில்லாதவனாய் இப்படிச் செய்துவிட்டேன். மன்னித்துக் கொள். உன்னைப் பதிவிரதைகளுக்கெல்லாம் ரத்தினமாக மதிக்க வேண்டும். இப்படிப்பட்ட மனைவியை அடைந்த வனுடைய பாக்கியமே பாக்கியம்! என் பணம் போனாலும் போகிறது. நீ சுகமாய் உன் கணவரிடம் போய்ச் சேர். இதோ சாமாவையரை அழைத்து வருகிறேன்" என்று சொல்லி ஒரு கதவைத் திறந்து கொண்டு அப்பாற் போய்க் கதவைத் திரும்பவும் மூடித் தாளிட்டுச் சென்றான்.
மேனகாவுக்கு அப்போதே மூச்சு ஒழுங்காய் வரத் தொடங்கியது. பேயாடி ஓய்ந்து நிற்பவளைப்போல அவள் அப்படியே சுவரின் மீது சாய்ந்தாள். அவன் கடைசியாய்ச் சொன்ன சொல்லை நிறைவேற்றுவானோ அன்றி அது வஞ்சகமோ வென்று ஐயமுற்றாள். தனக்கு திரும்பவும் என்ன ஆபத்து நேருமோ வென்று நினைத்து மேலும் எச்சரிக் கையாகவே இருக்க வேண்டு மென்று உறுதி கொண்டாள். உயிரையும் விலக்க நினைத்தவள் அந்தக் கத்தியைத் தன் கையிலிருந்து விலக்குவாளா? கத்தி முதலியவை கொடிய ஆயுதங்களென்று இழிவாய் மதிக்கப்படுகின்றவை அன்றோ! அது அப்போது அகப்படாதிருந்தால், அவளுடைய கதி எப்படி முடிந்திருக்கும்! பதிவிரதா சிரோமணியான அம்மடமங் கையின் கற்போ, அல்லது உயிரோ, இல்லது இரண்டுமோ அழிந்திருக்கும் என்பது நிச்சயம். இதனால், ஒரு துஷ்டனை அடக்கும் பொருட்டே கடவுள் இன்னொரு பெரிய துஷ்டனைப் படைக்கிறார் என்பது நன்கு விளங்கியது.
கடவுளின் படைப்பு வெளித் தோற்றத்திற்கு அரைகுறையாய்க் காணப்படினும், அது எவ்விதக் குற்றமற்ற அற்புதக் களஞ்சியமாய் இருப்பதை நினைத்த மேனகா கடவுளின் பெருமையைக் கொண்டாடினாள். என்றாலும், அவ்வளவு நுட்பமான அறிவைக் கொண்ட அப்பெண்மணி சாமாவை யரை அவன் அனுப்புவான் என்று அப்போதும் மடமையால் நினைத்தவளாய் ஒவ்வொரு கதவிலும் தன் விழியை வைத்து நோக்கிய வண்ணம் இருந்தாள். அந்தக் கொடிய காமதுரனது வீட்டைவிட்டு வெளியில் எப்போது போவோம் என்று பெரிதும் ஆவல் கொண்டு வதைபட்டாள். சாமாவையர் முகத்தில் இனி விழிப்பதும் பாவமென்று நினைத்தாள். சாமாவையர், என்னும் பெயர் அவளது காதிற் படும் படும் போதெல்லாம், நெருப்பு அவள் உடம்பைச் சுடுதலை போலத் தோன்றியது. அந்த மகம்மதியனிலும் அவனே மகா பாவமென மதித்தாள். சாமாவையன் மாமவையனாவனோ என்று வியப்புற்றாள். என்றாலும் முள்ளை முள்ளால் விலக்குதல் போலச் சிறிய வஞ்சகன் வீட்டிலிருந்து வெளிப்படப் பெரிய வஞ்சகனது உதவியைத் தேடுதல் தவறல்ல என்று நினைத்தாள். அவ்வாறு நெடுநேரம் சென்றது. காத்துக்காத்துக் கண்கள் பூத்தன. மகம்மதியனும் வரவில்லை. மாமாவையனும் வரவில்லை. எதிர்ச்சுவரில் மாட்டப் பட்டிருந்த கடியாரத்தைப் பார்த்தாள். மணி பன்னிரண்டாய் இருந்தது. அவ்வளவு நேரமாயிற்றா வென்று வியப்புற்றாள். கடியாரம் போகாமல் நிற்கிறதோ வென்று அதை உற்று நோக்கினாள். அதில் டிக்டக் டிக்டக் கென்ற ஓசை வந்து கொண்டிருந்தது. மகம்மதியன் சொன்னது பொய்யென்று நினைத்தாள். அவன் தன்னை வெளியில் அனுப்பமாட்டான் என்றும், திரும்பவும் அவன் வந்து தன்னை வற்புறுத்துவான் என்றும் அவள் உறுதியாக நினைத்தாள். இனி தான் அவன் முகத்தில் விழித்தால் தன்னிலும் கேவலமான இழிபரத்தை ஒருத்தியும் இருக்க மாட்டாள் என்று மதித்தாள்.
அன்றிரவு கழியுமுன் தான் அவ்விடத்தை விட்டு வெளியிற் போய்விட வேண்டும் இல்லையாயின், அந்த வாளால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை விட்டுவிட வேண்டும்; என்று ஒரே முடிவாகத் தீர்மானம் செய்து கொண்டாள். வெளியிற் செல்வதற்கு ஏதாயினும் வழி இருக்கிறதோவென்று அவ்வறை முழுதையும் ஆராயத் தொடங்கினாள். கதவுகளை அழுத்தி அழுத்திப் பார்த்தாள். யாவும் வெளியில் தாளிடப்பட்டோ பூட்டப்பட்டோ இருந்தன. வெளியிற் செல்வதற்கு எத்தகைய வழியும் காணப்படவில்லை. என்ன செய்வாள் அப்பேதை? ஓரிடத்தில் கற்சிலை போல நின்றாள். தன் நினைவையும் விழிகளையும் ஒரு நிலையில் நிறுத்தி எண்ணமிடலானாள். "நான் வெளியில் போனால், எவ்விடத்திற்குப் போகிறது? நான் கணவனிடம் போகாவிடில் எனக்கு வெளியில் எவ்வித அலுவலுமில்லை. கணவனிடம் போய்ச் சேர்ந்தால், நிகழ்ந்தவற்றை மறையாமல் அவரிடம் சொல்லவேண்டும். ஸ்திரீகளுடைய கற்பின் விஷயத்தில் புருஷருக்குப் பொறாமையும், சந்தேகமும் அதிகம் ஆகையால் அவர் ஏற்றுக்கொள்வாரோ அன்றி தூற்றி விலக்குவாரோ? நான் என் இருதயத்தை அறுத்து உள்ளிருக்கும் உண்மையைக் காட்டினாலும் அது ஜெகஜால வித்தையோ வென்று அவர் சந்தேகிப்பார். நான் ஒரு சிறிதும் மாசற்றவளாய் இருப்பினும், அவர் என் மீது தம் மனதிற்குள்ளாயினும் வெறுப்பையும் ஐயத்தையும் கொள்வார். அந்தரங்கமான அன்பும் மனமார்ந்த தொடர்பும் இல்லாமற்போனபின், வேண்டா வெறுப்பாய் வாழ்க்கை செய்வதைவிட, நான் உயிரை விடுதலே மேலானது.
பாவியாகிய என்னால் பெற்றோருக்கும் பழிப்பு. கணவனுக்கும் தலைகுனிவோடு ஓயாச் சந்தேகம்; ஒழியா வேதனை. எனக்கும் மானக்கேடு. மானம் அழிந்த பின் வாழாமை முன்னினிதே என்றனர் நம் மூத்தோர். இத்தனை தீமைக்கும் நான் உயிரை விடுதலே மருந்து. நான் காணாமல் போனதைப்பற்றி அவர்கள் இப்போது துன்புறுதல் நிச்சயம். நான் திரும்பாமல் போய்விட்டால், அவர்களுடைய துன்பம் ஒரே துன்பமாய்ச் சிறிது காலத்தில் ஒழிந்து போம்; என்னுடைய களங்கத்தோடு நான் திரும்பிச் சென்றால், அவர்கள் யாவருக்கும் அது மீளா வேதனையாய் முடியும்" என்று பலவாறு யோசனை செய்தாள். தான் மகம்மதியன் வீட்டை விட்டு வெளியிற் போனாலும் இறக்க வேண்டியதே முடிவு. வெளியிற் செல்ல வழியில்லாதலின் அந்தக் காமதுர மகம்மதியன் முகத்தில் இன்னொரு தரம் விழிப்பதிலும் பெரிதும் துணிவைக் கொண்டு அந்தக் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் விடுதலே தீர்மானமாய்க் கொண்டாள். நிரம்பவும் ஆண்மை வாய்ந்த மகா வீரனைப்போல மனோ உறுதியும் அஞ்சா நெஞ்சமும் விரக்தியும் கொண்டாள். பளபளப்பாய் மின்னிய வாளைக் கையிலெடுத்தாள். போரில் தோற்ற சுத்த வீரன் தனது பகைவன் கையில் அகப்பட்டு மானம் இழக்காமை கருதி இறக்க நினைத்துப் பகைவரின் குண்டு வரும் போது அதற்கெதிரில் தனது மார்பை விரித்து நின்று அதை ஏற்பவன் எத்தகைய மனோதிடத்தைக் கொள்வானோ அத்தகைய துணிவைக் கொண்டாள். இது விந்தையான செயலோ?
உண்மையைக் காக்கும் பொருட்டு அரசியல், செல்வம், நாடு முதலிய வற்றையும் நாயகன், புதல்வன் முதலியோரையும் போக்கிய மங்கையர்க்கரசியான சந்திரமதி, இறுதியில் அதன் பொருட்டு தமது சிரத்தை நீட்டினாரன்றோ. அத்தகைய உத்தம மகளிர் திருவவதரிக்க உதவிய புனிதவதியான நம் பூமகளின் வயிறு மலடாய் போனதோ? அல்லது இனி போகுமோ? ஒருக்காலும் இல்லை. எத்தனையோ சீதைகள், சாவித்திரிகள், சந்திரமதிகள், மண்டோதரிகள், தமயந்திகள், கண்ணகியர் தினந்தினம் இப்பூமாதேவின் மணி வயிற்றில் தோன்றிக் குப்பையிற் பூத்த தாமரை மலரைப் போல ஏழ்மையிலும் தாழ்மையிலும் இருந்து தம் புகழ் வெளிப்படாவகையில் அத் திருவயிற்றிற்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களின் சரிதத்தைப் பாடுவதற்கு வான்மீகிகளும், கம்பர்களும், புகழேந்திகளும் போதிய அளவில் எங்கிருந்து கிடைக்கப்போகின்றனர்! பதிவிரதா தருமத்திற்கே இருப்பிடமான இப்புண்ணிய உருவும், கற்பின் திரளுமாய்த் தோன்றும். இருபத்தொரு தலைமுறையில் அவர்களுடைய முன்னோர் இயற்றிய மகா பாத்திரங்களெல்லாம் தொலைய அவர்கள் புனிதம் எய்துவர் என்பது முக்காலும் திண்ணம்.
அத்தகைய புகழை நமது நாட்டிற்கு உதவும் பெண் மணிகளில் ஒருத்தியான மேனகா என்ன செய்தாள்? வாளைக் கையில் எடுத்தாள். வெட்டுவோன் வெட்டப்படுவோன் என்னும் இருவரின் காரியத்தையும் ஒருங்கே அவளே செய்வதான அரிதினும் அரிய வீரச்செயலை முடிக்க ஆயத்தமானாள். கத்தியை நோக்கினாள். அதனிடம் ஒருவகை ஆதரவும் நன்றியறிவும் அவள் மனதிற் சுரந்தன. "ஆ! என் அருமைக் கத்தியே! என் ஆருயிர் நண்பனே! நீ நல்ல சமயத்தில் செய்த பேருதவியை நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறப்பேனா? என் உயிர்த்தனமாகிய கற்பைக் கொள்ளை கொள்ள வந்த கொடிய கள்வனை வெருட்டி ஓடிய மகா உபகாரி யல்லவா நீ! இந்த ஆபத்தில் என்னை காக்க என் கணவனில்லாததை அறிந்து, திடீரென்று தோன்றி உதவி புரிந்த உத்தமனாகிய உன்னை நான் கணவனிலும் மேலாக மதித்துக் கடைசிக் காலத்தில் என் மார்பை நீ தீண்ட விடுகிறேன். நீ என் மார்பின் வெளிப்புறத்தை மாத்திரம் தீண்டுதல் போதாது. அதன் உட்புறத்திலும் நுழைந்து அதற்குள்ளிருக்கும் என் இருத யத்தையும் இரண்டாகப் பிளந்து அதற்குள் நிறைந்திருப்பது என்னவென்று பார். அங்கு நிறைந்திருக்கும் என் கணவன் உருவை மாத்திரம் ஒரு சிறிதும் வருத்தாதே; வாளே! ஏன் தயங்குகிறாய்? உன் மானத்தைக் காப்பாற்றியது, உன்னைக் கொல்வதற்குத்தானோ என்று கேட்கிறாயோ? அன்றி, "என் இருதயத்தைப் பிளந்து விட்டால், பிறகு என் கணவன் வடிவத்திற்கு இருப்பிடம் இல்லாமல் போகிறதே என்று நினைக்கிறாயோ?" என்று பலவாறு கத்தியோடு மொழிந்தாள்.
அப்போது அவளுடைய கணவனது வடிவம் அகக் கண்ணிற்குத் தோன்றியது, நெஞ்சு இளகி நைந்தது. இருப்பினும் எஃகினும் வலியதாய்த் தோன்றிய அவளுடைய மனதின் உறுதி தளர் வடைந்து, அவன் மீது வைத்த காதலும் வாஞ்சையும் திரும்பின. கண்களில் கண்ணீர் வழிந்தது. என்ன செய்வாள்? ''ஆ! என் பிராணநாதா! என் மனதிற்குகந்த மனோகர வடிவே! இணையற்ற இன்பம் பாய்ந்த என் மன்மத துரையே! உங்களிடம் இந்த ஐந்து நாட்களாய் நான் அனுபவித்த சுவர்க்கபோகமாகிய பேரானந்த சுகம் ஈசுவரனுக்குக் கூடச் சம்மதி இல்லை போலிருக்கிறது. நான் இந்த உயிரெடுத்து இவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ்ந்ததற்கு இந்த ஐந்து நாட்களே நல்ல நாட்கள். இவைகளே பயன் பட்ட சுபதினங்கள். மற்ற நாட்கள் யாவும் சாம்பலில் வார்த்த நெய்போல, அவமாக்கப்பட்ட நாட்கள் தாம். இனி நான் உங்களை எங்கு காணப்போகிறேன்? சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போன்ற உங்களுடைய சொல்லமுதை இனி என் செவி எப்போது அள்ளிப் பருகப்போகிறது? அதனால் என் உடம்பு இனி ஒரு தரமாயினும் பூரித்துப் புளகாங்கிதம் அடையப் போகிறதோ? இந்த சுகம் நீடித்து நிற்கும் என்றல்லவோ பாவியாகிய நான் நினைத்தேன்! தெய்வம் என் வாயில் நன்றாக மண்ணைப் போட்டு விட்டதே! நான் தஞ்சையிலிருந்த ஒரு வருஷத்தில் இறந்து போயிருக்கக் கூடாதா? அப்போது உங்களுக்காயின் வருத்தமில்லாமற் போயிருக்குமே. இப்போது உங்களுக்கு நீடித்த விசனம் வைத்துவிட்டேன்.
ஆனால், எனக்கு உண்டான இம்மானக் கேட்டை நீங்கள் கேட்டு மீளா வேதனைக்கடலில் ஆழ்தலினும், சாதாரணமாக என்னை இழப்பதன் துயரம் நீடித்து நில்லாமல் விரைவில் தணிந்து போம். தஞ்சையிலேயே உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்த நான் உங்களை விடுத்துச் செல்ல மனமற்றுத் தவித்தேனே! இப்போது உங்களிடம் வந்து எவருக்கும் கிடைக்காத பெரும் பேறான உங்களுடைய அந்தரங்கமான வாத்சல்யத்தையும், உண்மையான காதலையும் பெற்றபின் உங்களை விடுத்துப் பிரிந்து போவதற்கு என் மனம் இணங்குமோ? என் நாதா! என் நிதியே! என் உலகமே! என் பாக்கியமே! என் சுகமே! என் உயிரே! என்! தெய்வமே! உம்மை விடுத்துப் பிரிய மனம் வருமோ? நான் வாளால் என் கழுத்தை அறுத்துக் கொண்டாலும் உங்களிடம் சுகம்பெற்ற இவ்வுடம்பை விட்டு என் உயிர் போகுமோ? என்கட்டை தான் வேகுமோ? என் மனந்தான் சாகுமோ? என் செல்வமே ! உங்களை விட்டு எப்படி பிரிவேன்? உங்களுடைய பொருளாகிய கற்பைப் பறிகொடுக்க மனமற்று என் உயிரையே கொடுக்க இணங்கிவிட்டேன். இனி சாகாமல் தப்புவது எப்படி? நாம் இருவரும் ஒன்றாயிருக்கக் கொடுத்து வைத்தது இவ்வளவே. நீங்கள் என் பொருட்டு வருந்தாமல் சௌக்கியமாக இனி வேறொரு மங்கையை மணந்து இன்புற்று வாழுங்கள். அதைப்பற்றி நான் வருந்தவில்லை துரையே! போகிறேன். போகிறேன். பட்சம் மறக்க வேண்டாம். அன்பைத் துறக்க வேண்டாம். நான் பெண்டீர் யாவரிலும் ஏழை. கணவன் சுகத்தை நீடித்து அடையப் பாக்கியம் பெறாத பரம் ஏழை. முன் ஜென்மத்தில் எத்தனையோ பிழைகளைச் செய்து ஈசுவரனுடைய கோபத்திற்குப் பாத்திரமான மகா பாதகி! நான் என் மடமையாலும் பெண்மையாலும், உங்கள் விஷயத்திலும் எத்தனையோ பிழைகளைச் செய்திருப்பபேன்.
"கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நில்லாப்பிழை நினையாப் பிழையு நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப்பிழையுந் தொழாப்பிழையு
மெல்லாப் பிழையும் பொறுத்தருள்வா யென்றனாருயிரே?"
உங்களுடைய புதிய நட்பில் புதிய மனைவாழ்க்கையில் வருஷத்திற்கு ஒருமுறையேனும் என்னை நினைப்பீர்களா? பாவியாகிய என் பொருட்டு தங்கள் மனம் ஒரு நொடி வருந்துமாயின், நான் கடைத்தேறி விடுவேன். உங்கள் கண் என் பொருட்டு ஒரு துளியளவு கண்ணீர் விடுமாயின் என் ஜென்மம் சாபல்யமாய் விடும். உத்தரவு பெற்றுக்கொள்கிறேன். என் உயிர் நிலையே! போய் வருகிறேன். என் தெவிட்டாத தெள்ளமுதே! போய்வருகிறேன். தேவரீர் பொற்பாத கமலங்களில் ஆயிரம் முறை தெண்டம் சமர்ப்பித்தேன். தேவரீர் பாதமே எனக்குத் துணை. தேவரீரது ஆசீர்வாதம் நீங்காமல் என்மீது இருப்பதாக" என்றாள். முத்துமாலை கீழே விழுதலைப்போலக் கண்ணீர் வழிந்து பார்வையை மறைத்தது. அப்படியே நைந்து இளகி உருகி அன்புக் குவியலாய் ஆசைமயமாய்க் கண்களை மூடி ஒரு நிலையிலிருந்து, தன் கணவன் வடிவத்தை அகக்கண்ணிற்கொண்டு அதில் ஈடுபட்டு நெக்கு நெக்குருகிச் சலனமற்ற தெவிட்டாத ஆநந்தவாரியில் தோய்ந்து அசைவின்றி ஓய்ந்து உலகத்தை மறந்து மனோமெய்களை உணராமல் நின்று அசைந்தாடினாள்.
அவ்வாறு கால் நாழிகை நேரம் சென்றது. அந்த சமாதி நிலை சிறிது சிறியதாய் விலகத் தொடங்கியது. தானிருந்த அறையின் நினைவும், தன் விபத்தின் நினைவும், தான் செய்யவேண்டு வதான காரியத்தின் நினைவும் மனதில் தலைகாட்ட ஆரம் பித்தன. திரும்பவும் தனது கையிலிருந்த வாளை நோக்கினாள். அவளுடைய உரத்தையும் துணிவையும் கொண்டாள். "கத்தியே! வா இப்படி; நான் இந்த உலகத்திலிருந்தது போதும். களங்கத்தைப் பெற்ற நான் இனி அதிக நேரம் இவ்வுலகில் தாமதித்தால், என் கணவனது ஆன்மாவிற்கு அது சகிக்க வொண்ணாக் காட்சியாகும். ஆகையால், உன் வேலையைச் செய்" என்றாள். தான் பெண் என்பதை மறந்தாள். உயிரைத் துரும்பாக மதிக்கும் வீராதி வீரனைப்போல கத்தியைக் கையில் எடுத்தாள். தந்தத் தகட்டைப் போல மின்னி கண்களைப் பறித்து மனதை மயக்கி அழகே வடிவமாய்த் தோன்றிய அவளது மார்பில் அந்த வாள் வலுவாக நுழையும்படி அதற்கு விசையூட்ட நினைத்து தனது கையை நன்றாக நீட்டி இலக்குப் பார்த்தாள். அதற்குள் அவளுக்கு மிகவும் அருகிலிருந்த ஒரு கதவு படீரென்று திறந்தது; மின்னல் தோன்றுதலைப் போலத் திடீரென்று ஒருவருடைய கரம் தோன்றி அந்தக் கத்தியை வெடுக்கென்று அவள் கரத்தினின்று பிடுங்கிவிட்டது. "ஐயோ! மகம்மதியன் கத்தியைப் பிடுங்கிவிட்டானே! இனி என்ன செய்வேன்?" என்று நினைத்துப் பேரச்சம் கொண்டு பதறிக் கீழே வீழ்ந்து
மூர்ச்சித்தாள்.
*****
சற்று நேரத்திற்கு முன்னர் அவளைத் தனியே விடுத்துப் போன நைனாமுகம்மது மரக்காயன் நினைத்தவற்றையும் செய்தவற்றையும் நாம் நன்றாறிய வேண்டுமன்றோ? சாமாவையரின் மூலமாய் அவளை அவளுடைய வீட்டிற்குத் திருப்பி அனுப்பிவிடுவதாக அவன் சொன்னது முற்றிலும் வஞ்சகம்; அந்த அழகிய யௌவன மடமாதைத் தனது பெருத்த செல்வமே போயினும், தன் உயிரே அழியினும் தான் அனுப்பக்கூடாதென உறுதி செய்து கொண்டான்; அவளை விடுத்து வெளியிற் சென்றவன் வேறொரு அறைக்குள் நுழைந்து ஒரு சாய்மான நாற்காலியில் சாய்ந்தான்; கோபத்தினாலும் அவமானத்தினாலும் அவனுடைய தேகம் துடிதுடித்து வியர்த்தது; அவனுடைய மோகாவேசம் உச்சநிலையிலிருந்தது;
"துஞ்சா தயர்வோ டுயிர் சோர்தரவென்
நஞ்சார் விழிவே லெறிநன்னுதலாம்
பஞ்சேரடியா யிழைபா லுறையு
நெஞ்சே யெனை நீயு நினைந்திலையோ?''
என்ன, அவனுடைய மனதும் உயிரும் அறைக்குள்ளிருந்த பொற்பாவையிடத்தில் இருந்தனவன்றி, அவனது வெற்றுடம்பு மாத்திரம் அவனுடன் இருந்தது; வேறு துணையற்று, முற்றிலும் தன் வயத்திலிருந்த கேவலம் மெல்லியவளான ஒரு பெண் தன்னை அன்று ஏமாற்றியதை நினைத்து நெடுமூச்செறிந்தான்; நல்ல தருணத்தில் கத்தியொன்று குறுக்கிட்டு தனது எண்ணத்தில் மண்ணைப் போட்டதை நினைத்து மனமாழ் கினான். எப்படியாயினும் அன்றிரவு கழியுமுன்னம் அவளைத் தன் வயப்படுத்த உறுதி கொண்டான். அவ்வளவு பாடுபட்ட அப்பெண், அன்றிரவு முழுதும் விழித்திருக்கமாட்டா ளென்றும், அவள் நெடு நேரம் விழித்திருக்க முயலினும், இரண்டு மூன்று மணி நேரத்திலாயினும் சோர்வும், துயிலும் அவளை மேற்கொள்ளுமென்றும், அப்போது அவளுக்கருகில் இருக்கும் கதவைத்திறந்து கொண்டு மெல்ல உட்புறம் சென்று அவள் கரத்திலிருந்த கத்தியை பிடுங்கி விட்டால், அவளுடைய செருக்கு ஒழிந்து போமென்றும், தனது எண்ணம் அப்போது நிறைவேறிப்போ மென்றும் நினைத்து மனப்பால் குடித்தான்.
உரலில் அகப்பட்ட பொருள் உலக்கைக்குத் தப்புதலுண்டோ ? எவரும் கண்டறியக்கூடாத தன் சயன அறையில் வந்து அகப்பட்டுள்ள பெண் இனி தப்பிப்போவதுண்டோ! ஒருநாளும் இல்லையென்று நினைத்தான். அவளுடைய அற்புத வடிவமும் இளமையும் கட்டழகும் காந்தியும் இனிய சொற்களும் அவன் மதியை மயக்கி மையலை மூட்டி அவனை உலைத்து வதைத்து வாட்டின. தனக்குள் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமான முள்ள செல்வமெல்லாம் அவள் பொருட்டு அழிந்தாலும் கவலையில்லை. அத்துடன் தனது உயிர் போவதாயினும் இலட்சியமில்லை. அப்பெண்மணியைத் தனது கைக்கொண்டு தீண்டினால் போதும் என்று பலவாறு நினைத்து மதோன்மத்தனாய்க் காமாதுரனாய் ஜூரநோய் கொண்டு இருக்கை கொள்ளா மெய்யினனாய்த் தத்தளித்து உட்கார்ந்தும் நின்றும் நடந்தும் அயர்ந்தும் சிறிது நேரம் வருந்திப் போக்கினான்.
இரையை விழுங்கின மலைப்பாம்பைப் போல நகரமாட்டாமலிருந்த பொழுதும், கால்களில் புண் பெற்றதோ வென்ன மெல்ல நகர்ந்தது. மணி 11, 12, 1, 2 ஆயிற்று. மெல்ல எழுந்தான். ஓசையின்றித் தனது காலைப் பெயர்த்து வைத்து நடந்து மேனகா கடைசியாக கத்தியோடிருந்த இடத்திற்கு மிகவும் அருகில் இருந்த ஒரு கதவை அடைந்தான். அதில் காணப்பட்ட சிறிய இடுக்கில் கண்ணை வைத்து உட்புறம் கூர்ந்து நோக்கினான். கத்தியோடு கடைசியாய் நின்றவிடத்தில் அவள் காணப்படவில்லை. காலடி யோசையேனும் வேறு ஓசையேனும் உண்டாகவில்லை. அந்த இடுக்கின் வழியாக அறையின் மற்றப் பாகத்தை நோக்கக்கூடவில்லை. அவள் எங்கிருக்கிறாளோ , விழித்திருக்கிறாளோ துயிலுகிறாளோ வென்று ஐயமுற்றான். அங்கிருந்து தப்பிப்போக எத்தகைய வழியும் இல்லாமையால் அவள் எப்படியும் உட்புறத்தி லேதான் இருத்தல் வேண்டுமென உறுதி கொண்டான்.
மெல்ல ஓசையின்றி வெளித்தாளை நீக்கிக் கதவைத் திறந்தான். அவனுடைய தேகம் பதறி நடுங்கியது. உட்புறத்தில் தனது சிரத்தை நீட்டினான். கண்ணிமைக்கும் பொழுதில் அவனுடைய விழிகள் அந்த அறை முழுதையும் ஆராய்ந்து, இரத்தின பிம்பம் போலத் தோன்றிய பெண்மணியைக் கண்டுவிட்டன. அவள் எங்கிருந்தாள்? தரையிலிருந்தாளா நாற்காலி சோபாக்களில் இருந்தாளா? இல்லை. அது நம்பக்கூடாத விந்தையா யிருந்தமையால் அவன் பெரிதும் வியப்பையும் திகைப்பையும் அடைந்தான். சற்று முன் தன்னைக் கொடிய நாகமென நினைத்து விலகிய பெண்மணி அப்போது அவளது குணத்திற்கு மாறான காரியத்தைச் செய்திருந்த தைக்காண, அவன் தனது கண்களை நம்பாமல் அவற்றைக் கசக்கி விட்டுத் திரும்பவும் நோக்கினான். அது பொய்யோ மெய்யோ காமநோய் கொண்ட தன் மனத்தின் மகவோ என்று திகைத்தான். ஒரே ஜோதியாய்க் காணப்பட்ட மின்சார விளக்கின் ஒளியில் பளபளவென்ன மின்னிய அவனுடைய கட்டிலின் மீது, வெண் மேகங்களினிடையில் தவழும் மூன்றாம் பிறைச் சந்திரனைப்போல, அந்த வடிவழகி படுத்திருந்தாள். இன்னமும் அவளோடு போராடவேண்டுமோ வென்னப் பெரிதும் அச்சங்கொண்டு வந்த தனக்குக் கும்பிடப்போன தெய்வம் குறுக்கிட்டதைப் போல தன் விருப்பம் எளிதில் நிறைவேறியிருத்தலைக் கண்டு பேருவகை கொண்டான். பொற் பதுமையோ வென்னத் தோன்றிய மேனியும், உயர்ந்த பட்டுப் புடவையும், வைர ஆபரணங்களும் ஒன்று கூடி மின்சார வொளியில் கண்கொள்ளாச் சேவையாய் ஜ்வலித்தன. அது தெய்வலோகக் காட்சிபோலவும் அவள் கந்தருவ ஸ்திரீயைப் போலவும் தோன்றக் கண்ட யௌவனப் புருஷன் காதல் வெறியும் கட்டிலடங்கா மோகாவேசமும் கொண்டான்.
ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவளை அணைக்க நினைத்தான். அவள் ஒருகால் தன்னைக் கத்தியால் குத்திக்கொண்டு இறந்து கிடக்கிறாளோ வென்று உற்று நோக்கினான். உதிரமும் சவத்தோற்றமும் காணப்படவில்லை. இதழ்களை மூடிச் சாய்ந்திருக்கும் தாமரை மலரைப்போல அவள் துவண்டு கிடந்த தோற்றம் அவளது துயிலைச் சுட்டியது. அவள் தனது முகத்தை அப்புறம் திருப்பி மெத்தையில் மறைத்திருந்தாள். "ஆகா! நாணத்தினால் அல்லவா முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறாள். கடலின் ஆழத்தைக் கண்டாலும் காணலாம்; பெண்களின் மனத்தைக் கண்டு பிடிக்க எவராலும் ஆகாது; இவளும் என் மீது விருப்பத்தைக் கொண்டே என்னிடம் இவ்வளவு நேரம் போராடிப் பகட்டெல்லாம் காட்டியிருக்கிறாள். ஆண் பிள்ளைகளே எளிதில் ஏமாறும் மூடர்கள். என் மனதைச் சோதிப்பதற்கல்லவோ இவள் இந்த நாடகம் நடித்தாள். நான் தன்னிடம் உண்மை அன்பைக் கொண்டிருந்தேனோ, நெடுங்காலம் தன்னை வைத்து ஆள்வேனோ, அன்றி மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாளென சிறிது காலத்தில் விலக்கி விடுவேனோ வென்று ஆராய்ந்திருக்கிறாள். ஆகா! என் கண்மணி ! உன்னால் நான் எத்தகைய பேரின்ப சுகத்தை அடையப் போகிறேன்! உன்னை நான் விடுவேனா? என் உயிர் உடலிலிருந்து பிரியும்போதே நீயும் என்னிடமிருந்து பிரிவாய்; கண்மணியை இமைகள் காப்பதைப்போல உன்னை நான் என் ஆசை யென்னும் கோட்டைக்குள் வைத்து அனுதினமும் பாதுகாப்பேன் அஞ்சாதே" என்றான்.
மெல்ல அடிமேலடி வைத்துக் கட்டிலிற்கு அருகில் நெருங்கினான். அவனுடைய காமத்தீ மூளையையும், தேகத்தையும் பற்றி எரித்தது. அடக்க வொண்ணாத தவிப்பையும் ஆத்திரத்தையும் கொண்டான். அழகுத் திரளாகிய அந்த அமிர்த சஞ்சீவி கிடந்த தடாகத்தைத் தான் அடுத்த நிமிஷத்தில் அடைந்து தனது ஐம்புலன்களும் மனதும் ஆன்மாவும் களிகொள்ள, அந்த இனிமைப்பிழம்பை அள்ளிப் பருகுவேன் என்னும் உறுதியும் ஆவலும் கொண்டு கட்டிலை அடைந்தான். அப்பெண்மணி தனது புடவையால் கால்கள், கைகள், தலையின் உரோமம் முதலியவற்றை மூடிப் படுத்திருந்தது அதிகரித்த நாணத்தைக் காட்டியது. அவள் உடம்பில் விலாப்பக்கத்தில் சிறிது பாகமும், கன்னத்தில் சிறிது பாகமுமே அவனுடைய கண்ணிற்பட்டன.
அண்டைப் பார்வைக்கு அப் பெண்கள் நாயகத்தின் தேகத்தில் அழகு வழிந்தது; ஒரு சிறிது மாசுமற்ற தந்தப்பதுமை போலவும் வாழையின் மெல்லிய வெண்குருத்தைப் போலவும் அவளுடைய மேனி தோன்றியது. கைகால்கள் அச்சில் கடைந்தெடுக்கப் பட்டவைப்போலக் கரணைகரணையாக் காணப்பட்டன. பேரதிசயமாய்த் தோன்றிய அந்த அற்புதக் காட்சியில் அவன் மனது ஈடுபட்டுத் தோய்ந்தது. மெல்ல அருகில் உட்கார்ந்து கையை அவள் மீது வைத்தான். தன்னைக் குத்தும் எண்ணத்துடன் அவள் கத்தியை இன்னம் வைத்திருக்கிறாளோ வென்று கைகளை சோதனை செய்தான். கத்தி காணப்படவில்லை. அவனது பெருங்கவலை யொழிந்தது. துணிவுண்டாயிற்று. தன் முழு ஆத்திரத்தையும் மோகத்தைங்காட்டி அவளைக் கட்டி அணைத்து அவளுடைய சுந்தரவதனத்தைப் பிடித்துத் தன் பக்கம் திருப்ப முயல, அவள் நன்றாய்க் குப்புறப்படுத்துத் தன் முகத்தை அழுத்தமாக மெத்தையில் மறைத்துக் கொண்டாள்.
"ஆகா! நான் எத்தனையோ உயர்தர மங்கையரின் நாணத்தைக் கண்டிருக்கிறேன்! இவளைப்போன்ற பெண் மானை நான் கண்டதே இல்லை! தொடுவதற்குள் வருதலைவிட இவ்வாறு நாணுதலும் வசீகரமாய்த்தான் இருக்கிறது. இதுவே பத்மினி ஜாதிப்பொண்களின் இயல்பென நான் கொக்கோக சாஸ்திரத்தில் படித்திருக்கிறேன். ஆகா! நானே அதிர்ஷ்டசாலி! என்ன பாக்கியம்! ஆண்டவன் பெரியவன் அல்லாஹுத் தல்லாவின் அருளே அருள். எவ்வளவு அருமையான இந்த நிதிக்குவியலை எனக்கு அளித்தான்! எவர்க்கும் கிடைக்காத இந்த ஆநந்தபோகத்தை எனக்களிக்கும் ஆண்டவனை நான் எப்படித் துதிப்பேன்? இவள் தூங்காமல் என் வரவை ஆவலோடு எதிர்பார்த்தன்றோ வருந்திக் கிடக்கிறாள். நான் என் மடமையால் இந்நேரம் வராமல் உட்கார்ந்திருந்து விட்டேன்; என் கண்ணே ! என் இன்பக் களஞ்சியமே! மேனகா! என்னிடம் இன்னமும் வெட்கமா? இப்படித் திரும்பு; ரோஜாப்பூவையும் வெல்லும் உன் முகத்தை எனக்குக் காட்டக் கூடாதா? என் ஆசைக் கண்ணாட்டி; இப்படித் திரும்பு; சோதனை செய்தது போதும். நான் இனி உன் அடிமை ; இது சத்தியம். என்னுடைய பொருளையும், என்னையும் உன் பாதத்தடியில் வைத்து விட்டேன். உன் விருப்பப்படி பொருளைப் பயன்படுத்தி என்னை ஏவலாம்; இனி நீயே என் தெய்வம்! நீயே இந்த மாளிகையின் சீமாட்டி. கேவலம் கழுதையிலும் தாழ்ந்தவளான என் மனைவி உன் காலில் ஒட்டிய தூசிக்கும் நிகராக மாட்டாள். அந்த மூட மிருகத்தை நான் இனிமேல் கனவிலும் நினைப்பதில்லை. இது சத்தியம்.
அவளை நாளைக்கே அவளுடைய தாய் வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன். அல்லது விஷத்தைக் கொடுத்து அவளைக் கொன்றுவிடுகிறேன். புருஷனுடைய மனதிற்கிசைந்த விதம் அவனுக்கு சுகம் கொடுத்து அவனை இன்புறுத்த அந்த மிருகத்துக்குத் தெரியாது. நான் வேறு ஸ்திரீயோடு பேசினால் ஆத்திரமும் பொறாமையும் எரிச்சலும் உண்டாய்விடும். தானும் சுகங் கொடாள்; பிறரிடம் பெறுவதையும் தடுப்பாள். அவளிடம், நான் வேறு பெண் முகத்தையே பார்த்தறியாதவன் என்று ஆயிரம் சத்தியம் செய்து தினம் ஒவ்வொரு புதிய மங்கையை அனுபவித்துவிட்டேன். நீ யாவரினும் மேம்பட்டவளாக இருப்பதால், இனி நீயே எனக்கு நிரந்தரமான பட்டமகிஷி. நான் இனி உன்னை யன்றி பிறர் முகத்தைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. என் மனைவியையும் நாளைக்கே ஒழித்து விடுகிறேன். உன்னுடைய காந்தியல்லவோ காந்தி நூர்ஜஹான் (ஜெகஜ்ஜோதி) என்று என் பெண்ஜாதிக்கு வைத்திருக்கும் பெயர் உனக்கல்லவோ உண்மையில் பொருந்துகிறது! அந்த எருமைமாட்டை இனி நான் பார்ப்பதே இல்லையென்று அல்லா அறியச் சொல்லுகிறேன்" என்று தனது மனைவியை இகழ்ந்தும், மேனகாவைத் துதித்தும், நினைத்த விதம் பிதற்றி அப்பெண்மணியின் அருகில் தலையணையில் சாய்ந்து முரட்டாட்டமாய் அவளை இறுகக் கட்டி அவளுடைய முகத்தைத் தனது பக்கம் திருப்பி விரைவாகத் தனது ஆத்திரத்தை யெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அவள் முகத்தில் முத்தமிட்டான். அதனால் விலக்க முடியாத இன்பத்தைக் கொண்ட அம் மங்கை அருவருத்த புன்னகை காட்டி நெடுமூச்செறிந்து தனது கண்களை நன்றாகத் திறந்தாள். அத்தனையும் பொறித் தட்டுதலைப் போல ஒரு நொடியில் நிகழ்ந்தன.
பசுத்தோலில் மறைந்திருந்த புலியைப் போல, அம் முகம் அவனுடைய மனைவி நூர்ஜஹானின் முகமாய் போய்விட்டது. அவள் மேனகா வன்று; அவனுடைய மனைவி நூர்ஜஹானே அவ்வாறு படுத்திருந்தவள். தின் பண்டம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் கையைவிட, அதிலிருந்து நாகப்பாம்பு புஸ்ஸென்று படமெடுத்துக் கிளம்புதல் எவ்வாறிருக்கும்? அதைப் போல அந்தக் காட்சி தோன்றியது. அவனுடைய வஞ்சகத்தை இன்னொரு வஞ்சகம் வென்றுவிட்டது. அவள் அங்கு எப்படி வந்தாள், மேனகா எப்படி போனாள் , மேனகாவின் புடவை, இரவிக்கை, ஆபரணங்கள் முதலியவை அவள் மீது எப்படி வந்தன என்று பல விதமான சந்தேகங் கொண்டு திகைத்தான். இடியோசையைக் கேட்ட நாகம் போலப் பேரச்சம் கொண்டு பேச்சு மூச்சற்று அப்படியே மயங்கித் தலையணையில் சாய்ந்தான். தண்ணீரில் ஆழ்த்தப்பட்ட கொள்ளிக்கட்டையைப் போல , அவனுடம்பைக் கொளுத்திய காமத்தீ தணிந்து இருந்த இடம் தெரியாமல் பறந்தது. அது காறும் தன் மனைவியிடம் தனது விபசாரங்களை மறைத்துத்தான் பரம யோக்கிய னென்று நடித்து அவளை வஞ்சித்தது அப்போது வெட்ட வெளிச்ச மாயிற்று. அவளை நினைத்த விதம் தூற்றியவை யாவும் அவனுடைய நினைவிற்கு வர அவன் நடுநடுங்கி மூர்ச்சித்துக் கீழே வீழ்ந்தான்.
---------------------
அதிகாரம் 11 - மேனகாவின் கள்ளப் புருஷன்
அக்காள்! அடி அக்காள்!' என்று பொங்கி யெழுந்த ஆத்திரத்தோடு பெருந்தேவியைக் கூவி அழைத்தவனாய்க் கையிலேந்திய தந்தியுடன் உட்புறம் நுழைந்த வராகசாமி நேராக சமையலறைக்குள் சென்று, "அவள் தஞ்சாவூரில் இல்லையாமே!" என்று பெரிதும் வியப்பும் திகைப்பும் தோன்றக் கூறினான்; அவனுடைய உடம்பு படபடப்பையும், சொற்கள் பதை பதைப்பையும், முகம் அகத்தின் துன்பத்தையும், கண்கள் புண்படும் மனத்தையும் யாவும் பெருத்த ஆவலையும் ஆத்திரத்தையும் காட்டின. பாம்பைக் கண்டு நாம் அஞ்சி நடுங்குகிறோம். பாம்போ நம்மைக் கண்டு பயந்தோடுகிறது. வராகசாமி தனது சகோதரிமாரிடம் அச்சத்தைக் காட்டியதைப் போல், குற்றமுள்ள மனத்தினரான அவ்விரு பெண்டிரும் அவ்விடத்தில் உள்ளூறப் பெரும் பயத்தைக் கொண்டிருந்தனர் என்றாலும், அதை வெளியிற் காட்டாமல் மிகவும் பாடுபட்டு மறைத்து, முகத்தில் அருவருப்பைக்காட்டி ஏதோ அலுவலைச் செய்தவராய் அவனைப் பொருட்படுத்தாமல் இருந்தனர். மேனகாவுக்கு அவன் கொடுத்த செல்லத்தினால் அவர்கள் பெரிதும் தாழ்வும் அவமானமும் அடைந்தவரைப் போலத் தோன்றினர்.
பெருந்தேவி மாத்திரம் மெல்ல முணுமுணுத்த குரலில், "தஞ்சாவூரில் இல்லாவிட்டால் இன்னொரு திருவாரூரில் இருக்கிறாள். வீட்டை விட்டு வெளிப்பட்ட கழுதை எந்தக் குப்பை மேட்டில் கிடந்தா லென்ன? அவளுடைய அப்பன் அவளை எங்கே கொண்டு போனானோ? யாருக்குத் தெரியும்? அந்தப் பீடையின் பேச்சை இனி என் காதில் போடாதே யப்பா; நீயாச்சு உன் மாமனாராச்சு; எப்படியாவது கட்டிக் கொண்டாடுங்கள்'' என்று மிக்க நிதானமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் தாட்சண்யம் பாராமலும் கூறினாள்.
வராகசாமியின் மனோநிலைமை எப்படி இருந்தது? எல்லாம் குழப்ப மென்று ஒரே சொல்லால் குறிப்பதன்றி, விவரமாய் எதைச் சொல்வது? எதை விடுப்பது? உலகமே தலை கீழாக மாறித் தாண்டவமாடுவதாயும், அதிலுள்ள ஒவ்வொரு பொருளும் சுழல்வதாயும், தானும் தன் வீட்டுடன், சகோதரிமார் சமேதராய், இறகின்றி ஆகாயத்தில் கிளம்பிக் கரணம் போடுவது போலத் தோன்றியது. தான் செய்வது இன்ன தென்பதும், தனது அக்காள் சொன்னது இன்ன தென்பதும் தோன்றப் பெறானாய்த் தனது தெள்ளிய உணர்வை இழந்து, ஆத்திரமே வடிவாய்த் துயரமே நிறைவாய் நிற்க, அவன் வாயில் மாத்திரம் அவனறியாமல் சொற்கள் தாமாய் வந்தன. முகத்தில் கண்கள், நாசி, உதடு, புருவம், கன்னம் முதலிய ஒவ்வொரிடத்திலும் குழப்பம் குழப்பம் குழப்பம் என்பதே பெருத்த எழுத்தில் எழுதப்பட்ட விளம்பரம் போலக் காணப்பட்டது. " என் மாமனார் பட்டணத்துக்கே வரவில்லையாமே?" என்றான். மழைத் தூறலைக் காற்றானது கலைப்பதைப்போல கோபமும் துக்கமும் பொங்கி மோதி அவனுடைய அஞ்சிய சொல்லைத் தடுத்தன. மலை போல இருந்த மனையாட்டி எப்படி மறைந்து போனாள் என்பதை அவளுடன் கூட இருந்தவர் உள்ளபடி சொல்ல மாட்டாமல் தாறுமாறாய்ப் பேசியதைக் காண, அவனது தேகமும் கட்டிலடங்காமல் துடித்தன.
புதுமையாய்க் காணப்பட்ட அவனுடைய நிலைமை யைக் கண்ட பெருந்தேவி உள்ளூற மருண்டு விட்டாள். எனினும், அதிர்ந்த சொல்லால் வாயடியடித்தே தப்பவேண்டு மென்று நினைத்து அவனைச் சிறிதும் சட்டை செய்யாத வனைப் போல இருந்தாள். முதல்தர வாய்ப்பட்டியான பெருந்தேவியே விழிக்கும் போது கோமளத்தைப் பற்றிச் சொல்வது மிகையாகும். தண்ணீரில் மூழ்கும் நிலைமையில் இருப்பவன் வைக்கோலைப் பிடித்துக் கொள்வதைப் போல அவள், கரியேறிய தவலையொன்றைக்குப்புறத்தள்ளி, அது வாய்விட்டு ஓலமிடும்படி தேய்த்துத் திருவாழ்த்தான் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முயன்றதைப்போல எத்தனை நாளைக்குத் தேய்த்தாலும் அது வெளுக்கும் என்னும் அச்சம் சிறிதும் இல்லாமல், ஆடம்பரம் செய்தவளாய்த் தனது முகத்தைச் சுளித்து, மூக்கை வளைத்து, உதட்டைப் பிதுக்கி, வாயால் , "சூ"விட்டு "நன்றாயிருக்கிறது! ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். மாமனாராம் மாமனார் ! இந்தமாதிரி ஆயிரம் மாமனாரையும் பெண்டாட்டியையும் சந்தையில் வாங்கலாம். வெளிக்கு மாத்திரம் பெரிய மனிதர்; உள்ளே பார்க்கப் போனால் அற்பபுத்தி; அவ்வளவும் ஊழல் ; ஊரில் கழிக்கப்பட்ட பிணங்கள் நமக்கா வந்து வாய்க்க வேண்டும்; பெரிய வீடென்று பிச்சைக்குப் போனாலும், கரியை வழித்து முகத்தில் தடவினானாம் என்ற கதையாய் முடிந்தது'' என்று கோமளம் தனது கழுத்தில் சுளுக்குண்டானாலும் கவலையில்லையென்று நினைத்து அருவருப்போடு தனது கழுத்தை ஒரு திருப்புத் திருப்பினாள்.
ஆரம்ப நடுக்கத்திலிருந்து தேறித் துணிவடைந்த பெருந்தேவி , " என்னடா! முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறாய்? அவன் பெட்டி வண்டியில் வந்து வாசலில் இருந்தான். வெள்ளி வில்லை போட்டிருந்த அவனுடைய சேவகன் உள்ளே வந்து , டிப்டி கலெக்டர் எசமான் வாசலில் இருக்கிறார்; மகளைக் கூப்பிடுகிறார்' என்று சொன்னான் இவள் உடனே குடுகுடென்று ஓடினாள்; அப்படியிருக்க அவன் வரவில்லையென்று எந்த முண்டையடா உனக்குச் சொன்னவள்?" என்று தனது குரும்பைத் தலையைக் கம்பீரமாக உயர்த்தித் தாழ்த்தி குட்டைக் கைகளை நீட்டி மடக்கி இலங்கணி அவதாரம் காட்டி அதட்டிக் கூறினாள். அதைக் கண்டு ஒருவாறு அச்சம் கொண்ட வராகசாமி , "அவரே இதோ தந்தியனுப்பி யிருக்கிறார். வாசிக்கிறேன் கேள் :- ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! நான் சென்னைக்கு வரவுமில்லை; பெண்ணும் இவ்விடத்தில் இல்லை. குளங்கள் முதலிய எல்லாவிடங்களிலும் நன்றாய்த் தேடிப் பார்க்கவும். போலீசிலும் பதிவு செய்யவும். நானும் உடனே புறப்பட்டு நாளைக்கு வருகிறேன். அவசரம். அசட்டையா யிருக்க வேண்டாம். பெண் அகப்பட்டாளென்று மறுதந்தி வந்தாலன்றி இங்கே ஒருவருக்கும் ஓய்வுமிராது; ஒரு வேலையிலும் துணிந்து மனது செல்லாது" என்று தந்தியைப் முற்றிலும் படித்துவிட்டான்
அதைக் கேட்டுப் பெரிதும் ஆத்திரங்கொண்ட அக்காள், ''நன்றாயிருந்தது நாயக்கரே நீர் வாலைக்குழைத்து ஊளையிட்டது என்றபடி இருக்கிறதே தந்தி! அவன் மகா யோக்கியன்; அவனுக்கு நீ தந்தியனுப்பினாயோ! அந்த நாறக்கூழுக்குத் தகுந்த அழுகல் மாங்காய்தான் நீ! அவன் நம்மைக் கொஞ்சமும் மதியாமல் தன்னுடைய அதிகாரத்தின் மமதையால் பெண்ணை அழைத்துக்கொண்டு போயிருக்கிறான்; நீ அவனுக்குத் தந்தி அனுப்பினாயோ? இப்படிச் செய்தவன் முகத்தில் எந்த மானங்கெட்டவனாயினும் விழிப்பானா? அல்லது அவனுக்குத்தான் எழுதுவானா? இந்த ஆறுநாளில் உன் புத்தி எப்படியாய்விட்டது! நீ எடுப்பார் கைக் குழந்தைதானே! எட்டும் இரண்டும் இவ்வளவென்பதை அறியாத ஒரு சிறுக்கி, பி.ஏ., பி.எல்., பரிட்சை கொடுத்தவனை, ஒருநாள் போட்ட சொக்குப்பொடியில் குரங்கைப் போல ஆட்டி வைப்பாளானால், அது யாருடைய மூடத்தனத்தைக் காட்டுகிறது! எங்களிடம் சொல்லிக்கொள்ள வேண்டாம்; கட்டின புருஷனிடமாவது மரியாதைக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போகவேண்டு மென்று நினைத்தாளா! இப்படிச் செய்தவளை ஆண்மையுள்ள எந்தப் புருஷனாவது மானமில்லாமல் பெண்டாட்டியென்று சொல்லிக்கொள் வானா! உன்னிடம் அடங்கிக் கிடக்க வேண்டியவளுக்கே நீ இலட்சியமில்லாத போது, அவளைப் பெற்றவனுக்கு நீ ஒரு பொருட்டா? நல்ல இளிச்சவாயன் (இளித்தவாயன்) என்று கண்டான். உன் தலையில் வழவழ வென்று மிளகாய் அறைத்து விட்டான்" என்று சம்பந்தா-சம்பந்தமின்றிச் சொற்களையும், கைகளையும், உடம்பின் சதை மடிப்புகளையும் உலுக்கினாள்.
வராகசாமி சிறு வயதிலிருந்தே சகோதரிமாரிடம் ஒருவித அச்சத்தையும் மரியாதையும் கொண்டிருந்தவன். ஆதலின், அவர்களிடம் எதிர்வாதம் செய்தறியான். என்றாலும், கூர்மையான பகுத்தறிவைக் கொண்டவன். ஆதலின், அவர்கள் பொருத்தமற்ற சொற்களைச் சொல்லக் கேட்கும் போதெல் லாம் வெளிப்படையாய் மறுத்துக்கூறும் துணிவின்றித் தன் மனதில் அது தவறெனவே கொண்டு, போனாற் போகிற தென்று விட்டு விடுவான்.
மேனகாவின் மீது அவர்கள் அவன் மனதில் நெடுங் காலமாகப் பகைமையும்
வெறுப்பையும் உண்டாக்கி வந்திருந்தனர். ஆயினும், அவளைத் திரும்பவும் அழைத்துக்
கொள்ளும் படி செய்ய அவன் மனதை அவர்களும் சாமாவையரும் கலைத்து அவள் மீது உண்டாக்கிய ஆசை நிரந்தரமாய் அப்படியே அவன் மனதில் வேரூன்றி விட்டது. அவன் மனதை உழுது பண்படுத்தி கற்களை விலக்கி அவர்கள் நட்ட காதல் விதை முளைக்க, அதை அவ்வைந்து நாட்களில் மேனகா தனது ஆழ்ந்த வாத்சல்யமாகிய உரத்தைப் பெய்து, இரமணீய குணமாகிய நீரைப்பாய்ச்சி, இனிய ஒழுக்க மெனும் பாதுகாப்பினால் செடியாக்கி மரமாக்கி விட்டனள். அக்காதல் மரத்தில் ஆசையும், அன்பும், பட்சமும், இரக்கமும், தயையும் பூக்களாய்ப் பூத்தன. ஒவ்வொரு கொத்திலும் பழங்கள் வெளிப்படத் தவித்துக்கொண்டிருந்தன. ஆதலின், அவள் விஷயத்தில் அவன் மனதில் அசைக்கக்-கூடாத நம்பிக்கையும் அந்தரங்கமான வாஞ்சையும் உண்டாயிருந்தன. அவள் தன்னுடைய அனுமதியின்றி தந்தையுடன் சென்றிராள் என்று உறுதியாக நினைத்தான். டிப்டி கலெக்டர் அனுப்பிய தந்தி உண்மையானது என்றும், அவர் அவளை அழைத்துப் போகவில்லை யென்றும், அவர் அவளை அழைத்துப் போயிருந்து பொய் சொல்வது அவருக்குக் கோட்டையன்றி நன்மையைத் தராது ஆகையால், அவர் அவ்விதம் சொல்ல வேண்டிய முகாந்தரமில்லையென்றும் நிச்சயமாக நினைத்தான். ஆனால், மேனகாவோ வேறு எவருடனும் தனியே போகிறவளன்று; அக்காளோ பொருத்தமில்லாத சொற்களை அழுத்தமாய்ச் சொல்லி அதட்டுகிறாள். மேனகா காணாமற்போன வகைதான் என்ன என்று பலவாறு நினைத்து மனக்குழப்பம் அடைந்து நின்றவனாய், “அவர் இந்த ஊருக்கே வரவில்லை யென்று சொல்லுகிறாரே! அதை நாம் எப்படி பொய்யென்று நினைக்கிறது? அவர் சாதாரண மனிதரல்ல. சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவர். அவர் ரஜா வாங்கினாரா இல்லையா என்பதைப் பற்றி தஞ்சாவூரில் நம்முடைய சிநேகிதர் யாருக்காயினும் எழுதி உண்மையை ஒரு நிமிஷத்தில் அறிந்து விடலாமே. இந்தப் பொய் நிலைக்காதென்பது அவருக்குத் தெரியாதா? அவர் வந்திருக்கமாட்டாரென்றே தோன்றுகிறது" என்றான்.
அதைக்கேட்ட பெண்டீர் இருவரும், சண்டைபோடும் பொருட்டு முள்ளம்பன்றிகள் தமது உடம்பிலுள்ள முட்கள் சிலிர்க்கப் பதறி நிற்பதைப்போல இருந்தனர். பெருந்தேவி, "ஓகோ! அவன் பொய் சொல்லாத அரிச்சந்திர மகா ராஜாவோ? அப்படியானால் நாங்கள் சொல்வது பொய்யோ? சரிதான் இப்படிப்பட்டவன் என்பதை அப்பாவி அறிந்து கொண்டுதானே அவனும் அவளும் இப்படிச் செய்து விட்டார்கள். திம்மாஜி பண்டிதரென்பது முகத்திலேயே தெரியவில்லையா? அவன் ரஜா வாங்கினானா இல்லையா வென்பதை நீ அறிந்துவிடமுடியுமோ? அவன் இரகசியமாக ரஜா வாங்க நினைத்தால் தஞ்சாவூர் முழுதிலும் தப்படித்து விட்டுத்தான் வாங்குவானோ? பெரிய கலெக்டருக்கு ஒரு கடிதம் எழுதி சேவகனிடம் அனுப்பினால், அவனும் அதன்
பேரிலேயே பதில் எழுதி அனுப்பிவிடுகிறான். இந்த மாதிரி அவன் உன்னுடைய கலியாணத்தில் ரஜா வாங்கினதை நீ மறந்தாலும் நான் மறப்பேனோ? அதெல்லாம் உன்னுடைய குற்றமல்ல. உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் மருந்தின் வேலையாக்கும் இது. அவர்கள் அந்தத் தேவடியா நாரியை இங்கே எதற்காக அனுப்பினார்கள்? மருந்தை உள்ளே செலுத்தத்தானே அனுப்பினார்கள். இனிமேல் உனக்கு அவர்கள் சொல்லுவதுதான் நிஜமாயிருக்கும். இஞ்சி தின்ற குரங்கின் முகத்தைப் போல உன் முகமே நிஜத்தைச் சொல்லுகிறதே! மருந்து பேஷான மருந்து! பாட்டியம்மாள் இலேசானவளா! மருமகள் பேத்தி எல்லோர்க்கும் தாய்க்கிழவி யல்லவா அவள்! பொறித் தட்டுவதைப் போல உன்னை ஒரு நிமிஷத்தில் அவளுடைய மாத்திரைக் கோலால் புது மனிதனாக்கி விட்டாளே! கிழவி சாகவும் மாட்டாள்; செத்தாலும் எமனையும் எத்தி விடுவாள்; பற்றி எரியும் நெருப்பையும் மயக்கி விடுவாளே!
கோமளம்:- ஏனடி அக்காள்! அவள் வந்த மறுநாளே நான் சொன்னேன்; அப்போது எருமை மாட்டைப் போலப் பேசாமலிருந்து விட்டு இப்போது, "பப்பட்டி பப்பட்டி" என்று அடித்துக் கொள்ளுகிறாயே! வராகசாமிக்கு நான் கொண்டு போன காப்பியை என் கையிலிருந்து அவள் பிடுங்கிக் கொண்டு போனாளென்று நான் உடனே சொன்னேனே நீ காதில் வாங்கினாயா? அதில் தானே மருந்தைப் போட்டாள். அப்போதே கையும் மெய்யுமாய்ப் பிடித்துக்கொண்டால் காரியம் இவ்வளவுக்கு வருமா? அவளுடைய ஜாலமெல்லாம் பலிக்குகமா? இப்போது படு; உனக்கு வேண்டும்.
பெருந்தேவி :- நானா அதை கவனிக்க வில்லை ? நீ அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாய்! நான் நடந்ததை யெல்லாம் கவனித்தேன். அவள் காப்பியை உன் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு போனதும் தெரியும். படுக்கையறை யிலிருந்த தன்னுடைய டிரங்குப் பெட்டியைத் திறந்ததும் தெரியும். அதிலிருந்து ஏதோ மருந்தை யெடுத்துக் காப்பியில் போட்டதும் தெரியும். அப்போது புது மோகம் தலைக்கேறி யிருந்தது. நாம் சொன்னால் ஐயங்கார்வாளுக்குப் பொய்யாக இருக்கும். எப்படியாவது இரண்டு பேரும் ஒன்றாயிருந்து சுகப்படட்டும். நான் ஏன் அதைத் தடுக்கவேண்டு மென்று பேசாமலிருந்து விட்டேன்; இந்த மாதிரி அடிமடியில் அவள் கைபோட்டது இப்போது தானே தெரிகிறது.
கோமளம் :- இதுவரையில் வராகசாமி நமக்கெதிரில் அவளிடம் நெருங்கிப் பேசவும் கூச்சங்கொள்வான். இந்த ஐந்து நாளிலும் அவளை ஒரு நிமிஷங்கூட விடாமல் அவளுடைய புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டே அலைந்தானே! சுய புத்தியோடு இருக்கிற ஒரு ஆண்பிள்ளை இப்படித்தானா பெட்டைமோகினி பிடித்தலைவான்? அவள் குளிக்கப் போனால் அங்கே இவன் அவளுடன் இளிக்க வந்துவிடுவான். புடவை உடுத்திக்கொள்ள அவள் மறைவிற்குப் போனால் நான் ஆண்பிள்ளை அல்லவென்று சொல்பவனைப்போல இவனும் அவ்விடத்தில் ஆஜர். மிட்டாயிக் கடையைக் கண்ட பட்டிக்காட்டான் என்பார்கள். அப்படி யல்லவா இவன் தேன் குடித்த நரி மாதிரி ஆய் விட்டான். இந்தத் தடவை எல்லாம் அதிசயமாகவே நடந்தது. முன்னேயிருந்த மேனகா தானே இவள்? முன்காணாத எவ்விதப் புதுமையை இவன் இப்போது கண்டு விட்டான்? வித விதமான சகோதரிகள் நாம் இருக்கிறோமே யென்கிற லஜ்ஜை இவனுக்கும் இல்லை, அவளுக்கும் இல்லாமற் போய்விட்டதே!
பெருந்தேவி:- சீமைச் சரக்கு சீனாம் பரத்துக் கற்கண்டுக் கட்டியது அது! தங்கத்தைக் கூட மாற்றுப் பார்ப்பதற்கு உறைப்பார்கள். இவள் அபரஞ்சித் தங்கத்திலும் உயர்வு; கீழே விடாமல் தலைமேலேயே வைத்திருந்தபடியாலே தான், நன்றாய் ஏமாற்றிவிட்டார்கள். நானும் பார்த்தேன்; புருஷனும் பெண்டாட்டியும் இப்படி மானங்கெட்டு அலைந்ததை நான் பார்த்ததே யில்லை. என்னவோ சின்ன வயசில் வேடிக்கை பார்க்கட்டுமே யென்று ஒரு நாள் வாய் தவறி , "நாடகம் பார்க்க அழைத்துக்கொண்டு போடா" என்று சொல்லி விட்டேன். அதை ஒரே பிடியாய்ப் பிடித்துக்கொண்டானே! துரை துரைசானிகள் என்றே நினைத்துக் கொண்டு விட்டார்கள். கடற்கரைக்குப் போவதும், நாடகத்திற்குப் போவதும், குடும்ப ஸ்திரீகளுக்குத் தகுமா? இவன் தான் கூப்பிட்டால் அந்தக் கொழுப்பெடுத்த கிடாரிக்கு மானம் வெட்கம் ஒன்றும் இல்லாமலா போக வேண்டும்? இவர்கள் கடற்கரையில் செய்ததை எதிர்வீட்டு ஈசுவரியம்மாள் நாட்டுப்பெண் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறாள். எனக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போல இருந்தது.
கடற்கரையில் இவர்களை எல்லோரும் பார்த்துப் புரளி செய்யும்படி ஒருவருக்கொருவர் கட்டிக் கொள்வதாம்; முத்த மிடுவதாம். இந்தக் கலிகாலக் கூத்து உண்டா ! அடித்தால் கூட அழத் தெரியாத வராகசாமியும் இப்படிச் செய்வானா என்று சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டுப் போகிறார்களாம். எனக்கு உயிரே போய்விட்டது.
சிறிது நேரம் சம்பந்தமற்ற அவளுடைய கொடிய சொற்களைக் கேட்க மனமற்றவனாய் நின்ற வராகசாமி, "என்னடி யக்காள் காரியத்தை விட்டு என்னமோ பேசுகிறாயே! அவர் அழைத்துப்போயிருந்தால் அவள் அங்கே இல்லை யென்று எதற்காகச் சொல்லவேண்டும். பெண்ணை மறைத்து வைத்துக்கொள்ள முடியுமா! அப்படி மறைத்து வைத்துக் கொள்வதினால் அவர்களுக்கு என்ன லாபம்? எவராயினும் தாமே தமது கண்களை அவித்துக் கொள் வார்களா? எவ்விதம் செய்பவரா யிருந்தால் ரூபா. 3000 செலவழித்து ஒரு வாரத்திற்கு முன் அவளை இங்கே அழைத்து வருவாரா? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? அவர்களுடைய பணத்துக்குத் தான் செலவு செய்ய வழியில்லையா?” என்றான்.
பெரு: இது தெரியவில்லையா உனக்கு? ஆதாய மில்லாத கோமுட்டி ஆற்றோடு போவானா? அல்லது சோழியன் குடுமி சும்மா ஆடுமா? வேறு எதற்காக வந்தான்? உனக்கு சொக்குப் பொடி போடத்தான். அவர்கள் மூடர் களென்று பார்த்தாயோ? நாமே மூடர்களானோம்; உன்னை மயக்கி கைவசமாக்கித் தனிமையில் அழைத்துக் கொண்டால் உன்னையும், பெண்ணையும் எங்காவது தனிக் குடித்தனம் செய்ய அமர்த்தினால் பிறகு தாம் அடித்தது ஆட்டமா யிருக்கலாம் அல்லவா! இந்த இரண்டு மொட்டை முண்டைகளுடைய இடைஞ்சல் இல்லாமல் பெண் தன்னரசாய் வாழலாம் அல்லவா! அதுக்காகத்தான் மருந்து போட அவளை அனுப்பினார்கள். வந்த காரியம் சுலபத்தில் கை கூடிவிட்டது. நீயும் தாசானுதாசனாய் விட்டாய்! திரும்பிப் போய்விட்டாள்; பெண்டாட்டியாத்தே பெரியாத்தே என்று நீ அவளைத் தேடிக்கொண்டு தஞ்சாவூருக்கு ஓடி வருவாய் என்பது அவர்களுக்கு நன்றாய்த் தெரியும். நீ அங்கு வந்தால் அவர்கள் சொற்படி தானே செய்கிறாய். அம்மாள், ''கரணம் போடு" என்றால் “இதோ போடுகிறேன் எண்ணிக்கொள்" என்று செய்கிறாய். “நான் பட்டணத்திற்கு வரமாட்டேன். நீ இங்கே வக்கீல் பலகையைத் தொங்கவிடு" என்பாள். "சரி" என்கிறாய்; மேனகா
இதெல்லாம் அந்த சூனியக்காரக் கிழவியின் யோசனையடா; உனக்கென்னடா தெரியும்? வெளுத்த தெல்லாம் பால் கறுத்த தெல்லாம் நீர்! அடித்தால் உனக்கு ஒழுங்காக அழக்கூடத் தெரியாதே - என்றாள்.
அதைக்கேட்ட வராகசாமியின் மனோ நிலையை என்ன வென்று சொல்வது? பாம்பு கடிக்கப் பெற்றவன் படிப்படியாய்த் தனது தெளிவான அறிவையும் உணர்வையும் இழந்து மயங்கித் தடுமாறுதலைப்போல அவனுடைய நிலைமை மேன்மேலும் பரிதாபகரமாக மாறியது. அது கனவு நிலையோ அல்லது நினைவு நிலையோ வென்பது சந்தேகமாய்ப் போனது. மேனகா போனது கனவா, அன்றி அக்காள் சொல்வது கனவா என்பது தோன்றவில்லை. மேனகா காணாமற்போனதும் உண்மையாய்த் தோன்றியது. அக்காள் சொன்னதும் நிஜமாய்த் தோன்றியது. அடுத்த நிமிஷம் இரண்டும் பொய்யாகத் தோன்றின. அக்காளுடைய யூகத்திற்கும் தந்திக்கும் சிறிதும் பொறுத்தமில்லை யென்பது அவன் மனதில் நன்றாய்ப் பட்டது. அவனுடைய மனதில் வேறு எத்தனையோ சந்தேகங்கள் உதித்தன. அவனுக்கு இயற்கை யிலேயே அக்காளுடைய சொல்லில் நம்பிக்கையுண்டு. ஆகையால், அப்போதும் அவள் சொன்னதை அசட்டை செய்ய அவனது மனது துணியவில்லை. டிப்டி கலெக்டர் அனுப்பிய செய்தியும் பொய்யல்லவென்று தோன்றியது. அது நிஜமா அல்லது இது நிஜமாவென்பதை நிச்சயமாய் அறிய மாட்டாதவனாய்த் தடுமாறினான். "அதிருக்கட்டும் பெண் தமது வீட்டிலிருந்தால் போலீசில் பதிவு செய்யும்படி நமக்கு எழுதுவாரோ? பின்பு அது அவருக்குத்தானே உபத்திரவமாய் முடியும்” என்றான்.
பெரு :- அதெல்லாம் வெளிக்கு ஆடும் நாடகமப்பா; நான் அடிப்பது போல அடிக்கிறேன் நீ அழுவது போல அழு என்னும் கதையப்பா; அது எங்களுக்காக எழுதியனுப்பின சங்கதி யல்லவா; நீ போலீசில் பதிவு செய்ய மாட்டா யென்பது அவருக்கு நன்றாய்த் தெரியுமே; நான் நேற்றை மனிதர்; அவர்கள் எவ்வளவு காலத்துப் பழம் பெருச்சாளிகள்! எத்தனை ஊர் சுற்றினவர்கள்! எத்தனை மனிதரை அபக்கென்று வாழைப் பழத்தை முழுங்குவதைப் போல வாயில் போட்டுக்கொண்ட ஜாம்புவந்தர்கள்! " என் பெண்டாட்டியை எவனோ அழைத்துக்கொண்டு போய்விட்டா"னென்று எந்த மானங் கெட்டவன் போலீசில் எழுதி வைப்பான்? உன் மாமனாருக்கு இது தெரியாதா? அவர் எமனைப் பலகாரம் பண்ணுகிறவர் அல்லவா! கனகம்மாளோ கொக்கோ! - என்றாள்.
வராக :- அவர் நாளைக்கு வருகிறேனென்று எழுதியிருக் கிறாரே; எத்தனையோ வேலைகளை விட்டு எதற்காக அவர் ஓடிவருகிறது? நான் தான் அங்கே வருவேனென்று எதிர்பார்த் தார்கள் என்றாயே.
பெரு :- நீ தான் போகாமல் தந்தியனுப்பி விட்டாயே; செய்ததை முழுதும் செய்துவிட வேண்டாமா? அதற்காக அவரே வருகிறார். இங்கே வந்து எங்களோடு கட்டி யழுதுவிட்டு உன்னைத் தனியாக அழைத்துப்போய் உன் காதில் மாத்திரம் ஓதினால் நீ சரிதான் என்கிறாய்.
வராக :- அப்படியானால், அன்றைக்கு வந்தவர் அவரே யென்பது சரிதானா?
பெரு:- தடையென்ன! கிழவியைப் பாட்டி யென்று சொல்ல சந்தேகமென்ன! வெள்ளி வில்லை போட்ட அவருடைய சேவகன் வந்து டிப்டி கலெக்டர் மகளைக் கூப்பிடுகிறாரென்று சொல்லி இவளை அழைத்தான். அது இப்போதுதான் என் கண் முன்னால் நடப்பது போல இருக்கிறது! - என்றாள்.
"நீ அவரை உன் கண்ணால் பார்த்தாயா?" என்ற கேள்வி அப்போது கூடத்திலிருந்து உண்டாற்று. இல்லையாயின், அதே கேள்வி வராகசாமியும் அவளிடம் கேட்டிருப்பான். அந்தக் குரல் யாருடையது? வராகசாமியும், சகோதரிமாரும் சமையலறையில் இருந்தனர் என்று முன்னரே சொல்லப் பட்டதல்லவா! அவன் தந்தியை வீட்டு வாசலில் சேவகனிடத்திலிருந்து வாங்கிக்கொண்டு ஆத்திரத்தோடு உள்ளே நுழைந்து சமையலறைக்கு சென்ற போது அடுத்த வீட்டு சாமாவையரும் ஓசையின்றி உள்ளே வந்து, ஊஞ்சலில் உட்கார்ந்து உட்புறம் நடந்த சம்பாஷணையை ஒரு சிறிதும் விடாமல் கேட்டிருந்தார். அவரே மேற்குறிக்கப்பட்ட கேள்வியைக் கேட்டவர். தனது சார்பாக சாமாவையர் பரிந்து பேசுகிறார் என்பதைக் கண்ட வராகசாமி, உடனே வெளியில் வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து, "அடே சாமா! நீங்கள் என்னவோ கதை சொன்னீர்களே! இந்த தந்தியைப் பார்" என்று கூறி காகிதத்தை நீட்டினான். "தந்தி இருக்கட்டும். நீங்கள் பேசியதை யெல்லாம் நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். உன் மாமனார் வந்ததை இவர்கள் நேரில் பார்த்தார்களா? அவர்கள் உட்புறத்தில் அல்லவா இருந்தார்கள்?" என்று சாமாவையர் வக்கீல் பீஸ் (கூலி) இல்லாமல் வராகசாமியின் கட்சியை எடுத்துப் பேசினார்.
பெரு :- சாமா! நீ கோமுட்டி சாட்சியாய்ப் பேச வந்து விட்டாயோ? அவனை நாங்கள் நேரில் பார்க்க வேண்டுமா? வெள்ளிவில்லை போட்ட சேவகன் வந்து சொன்னானே. அவன் பொய் சொல்வானா? அந்த மண்டையிலே புழுத்த மகா பெரியவர் உள்ளே வராமல் அமர்த்தலாய்ப் பெட்டி வண்டியில் இருந்து கொண்டே சேவகனை அனுப்பும்போது நாங்கள் வெளியில் போய் தூபதீபம் காட்டி வெற்றிலை பாக்கு பூரண கும்பம் மேளம் தாளம் முதலிய உபச்சாரத்தோடு அந்த எச்சிற்கல்லைப் பிரபுவை நேரில் பார்க்கவில்லை என்கிறாயோ? அவன் டிப்டி கலெக்டராயிருந்தால் அது அவன் மட்டிலே; அந்த அதிகாரமெல்லாம் அவனுடைய சேவகரிடத் திலே காட்டவேண்டும். நமக்கென்னடா அவனுடைய தயவு? நம்முடைய வராகசாமியின் காலைப் பிடித்துப் பெண்ணைக் கொடுத்தவன் தானே அவன்; அவன் மரியாதை கொடுத்தால், நாமும் அவனை மரியாதைப் படுத்துவோம். அங்கில்லா விட்டால் இங்கும் இல்லை. அவன் வாசலில் நின்றால் நான் கொல்லையிற் போய் நிற்போம் - என்றாள்.
வராகசாமியின் கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்ட வனைப் போல ஒன்றையும் அறிய மாட்டாதவனாய்த் தத்தளித்து நின்றான். அவன் மனதோ மேனகாவைப் பற்றி கவலை கொண்டு துடித்தது. அக்காள் சொன்னது அவனுக்கு ஒரு சிறிதும் மன அமைதியை உண்டாக்க வில்லை. டிப்டி கலெக்டர் பெண்ணை அழைத்துப் போகவில்லை யென்று எழுதியிருக் கையில், அவரே அழைத்துப் போனவரென்று நினைப்பது பொருத்தமற்ற தென்றும் தவறான விஷயமென்றும் எண்ணிணான். அவளை அவர் அப்படி அழைத்துப்போகக் கூடிய மூடன் அல்ல என உறுதியாக நினைத்தான்.
அவன் இயற்கையில் நற்குணம் உடையவன் ஆதலாலும், அவன் தனது சகோதரிமாரின் மீது வைத்த நம்பிக்கையாலும், "பொய்யுடை யொருவன் சொல்வன்மை யினால் மெய்போலும்மே" என்றபடி பெருந்தேவியும், கோமளமும் வாயடியடித்து உடாய்த்தமையாலும் அவனுக்கு அவர்கள் மீது எவ்விதச் சந்தேகமும் தோன்றவில்லை. மேனகா வேறு எவ்விதம் காணமற்போயிருப்பாளோ வென்று நினைத்து நினைத்து பெருங் குழப்பமடைந்து திகைத்துப் பேச்சுமூச்சற்று உட்கார்ந்து விட்டான். அவனைப் போலவே குழப்பங்களைக் கொண்டு ஒன்றையும் அறியாதவரைப் போல நடித்த சாமாவையர், "அவள் மறைந்து போனது சொப்பனமாக வல்லவோ இருக்கிறது! அவர் இப்படியும் அழைத்துப் போவாரோ? நல்ல பெரிய மனிதரான அவருக்குத் தெரியாத காரியம் உண்டா ? பெண் இனிமேல் புருஷனுடன் வாழவேண்டாமா? அவர் நல்ல படிப்பாளி; கண்ணியம் பொருந்திய மனிதர்; அவர் இவ்விதம் அழைத்துப் போயிருப்பாரா வென்பதே எனக்குப் பெருத்த சந்தேகத்தைத் தருகிறது'' என்றார்.
பெருந்தேவி பெரிதும் ஆத்திரமடைந்து, "போடா; நீ மகா புத்திசாலி ! பெரிய மனிதனையும், படித்த மனிதனையும் நீதான் கண்டவன்! பெரிய மனிதரெல்லாம் யோக்கியர்கள்; சின்ன மனிதர்களெல்லாம் அயோக்கியர்களோ? பைத்தியக் காரா போ; மற்றவர்களுக்கு நீதி போதிக்கவும், மற்றவரை இகழவும் பெரிய மனிதர்களுக்கு நன்றாய்த் தெரியும். தம்முடைய சுபகாரியம் மாத்திரம் வழவழத்தான்; அவர்கள் மற்ற எல்லாருக்கும் புத்தி சொல்லுவார்கள். உலகத்தையே மாற்ற முயலுவார்கள். தம்முடைய பெண்டாட்டியை சீராகப் பயன்படுத்தாமல் விட்டு ஊரிலிருக்கும் விதவைகளுக்கு எல்லாம் கலியாணம் செய்யவேண்டு மென்று சொல்லு வார்கள்; தெய்வமே யென்று தம் பாட்டில் ஒழுங்காயிருக்கும் விதவைகள் மனதில் புருஷனுடைய ஆசையையும் விரக வேதனையையும் உண்டாக்கி நல்லவரைக் கெட்டவராக்கி விடுவார்கள். நம்முடைய வராகசாமியினுடைய பெரிய வக்கீல் இருக்கிறாரே; அவரைவிட உயர்ந்த பெரிய மனிதனும் மேதாவியும் சிங்காரமாய்ப் பேசுகிறவனும் வேறே இல்லை. முதலில் அவருடைய காரியத்தைப்பார். விடியற்காலம் ஐந்து மணிக்கு எழுந்து பல்தேய்க்கவும் நேரமின்றி உட்கார்ந் தாரானால், கட்சிக்காரர்களும், தரகுக்காரரும், தபாற்காரனும், நகைக்காரனும். புடவைக்காரனும், பிச்சைக்காரனும், வண்ணானும், அம்பட்டனும், பிள்ளையார் வேஷம், கட்டியக்காரன் வேஷம், இராஜா வேஷம், மந்திரி வேஷம் முதலிய வேஷங்களைப் போல் ஒருவன் மேல் ஒருவனாய் அந்த சுவாமியின் தரிசனத்துக்கு வந்து விழுகிறார்கள். பெரியவர் அவர்களுக்கு நடுவில் புதைபட்டு அஷ்டாவதானம் செய்கிறார்.
மேஜையின் மேல் பரிசாரகன் வைத்த காபியில் அதை கட்சிக் காரர்களான ஈக்கள் மொய்த்துக் கொள்கின்றன. அது அவருடைய வயிற்றை அடையத் தவம் புரிந்து ஆறிப்போய் அப்படியே கிடக்கிறது. பத்து மணிக்கு எழுந்து குடுகுடு வென்று கொட்டுகிறான். இன்னொருவன் அவர் தலையில் ஒரு சவுக்கத்தால் வேடுகட்டி விடுகிறான். பிள்ளையாருக்குப் போட்டு வைப்பதைப் போல வேறொருவன் சந்தனத்தை நெற்றியில் அடிக்கிறான். அப்படியே இலையில் உட்கார்ந்து கை சுட வாய் சுட இரண்டு கவளத்தை வாரி வாயில் அடித்துக் கொள்கிறார். எவ்வளவோ அற்புதங்களை உலகத்தில் சிருஷ்டித்த ஈசுவரன், வயிற்றின் மேல் ஒரு சிறிய வாசலும் கதவும் வைத்திருந்தால், வாயின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக அரை நாழிகை வரையில் சாப்பிடும் தொல்லை யில்லாமல் முழு ஆகாரத்தையும் அப்படியே வயிற்றில் வைத்துக் கதவைச் சாத்திவிடலாமே; ஈசுவரனுக்கு புத்தியில்லையே; அவனுக்கு வக்கீலின் அவசரம் தெரிய வில்லையே யென்று அவர் அடிக்கடி சொல்லுகிறாராம். எழுந்தவுடன் பரிசாரகன் கை யலம்பி விடுகிறான். அவருடைய பெண்ணோ சட்டை தலப்பாகை முதலியவற்றை ஏந்துகிறாள். தடதடவென்று கச்சேரிக்கு ஓடுகிறார். அங்கே ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டில் போட்டு, நாய்க்குலைத்து நரியாய் ஊளையிட்டு, நியாயாதிபதியின் முன் நாட்டியமாடி, நரியைப்பரியாக்கி பரியை நரியாக்கி, நட்டுவத்திற்குத் தகுந்தபடி பொய் சொல்லக் கூடாதென்னும் உறுதியால் நாடு , நகரம், அரசு பொருள், மனைவி, பிள்ளை முதலியவற்றையும் இழந்த அரிச்சந்திரனை முட்டாளாக்கி அவனுடைய நாடகத்தைத் தழைகீழாக ஆடுகிறார்.
கட்சிக்காரனுக்கு ஜெயமோ அவஜெயமோ, அவருடைய கட்சி என்றைக்கும் ஜெயம். ஜெயிலுக்குள் போகும் கட்சிக்காரன் அவருடைய பணத்தைக் கொடுத்துவிட்டுத்தான் போகிறான். சாயுங்காலம் அங்கிருந்து, துரைமார் பந்தாடுமிடங்களுக்குப் போய் அவர்களுடைய நட்பை வளர்த்துக்கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்தால் சமாசாரப் பத்திரிகை எதிரில் நிற்கிறது. அதன் பிறகு அடுத்த நாளைக்கு ஆடவேண்டிய நாடகத்தின் ஒத்திகை மனதில் நடக்கிறது. இராத்திரி பன்னிரண்டு மணிக்கு படுக்கை. விடியற்காலையில் எழுந்தது முதல் ராத்திரி கண் மூடும் வரையில் அவருடைய தேகத்திற்கும் மனதிற்கும் ஓயா வேலை ஒழியாக் கவலை. அவருடைய சம்சாரம் கமலாவுக்கு என்ன உத்தியோகம்? இனிமையான கட்டில், வெல்வெட்டு மெத்தை, மேலே கொசுவலை, மின்சார விசிறி, ஊதுவத்தி வாசனை, இந்த வைபவத்திலிருந்து எழுந்திருப்பது காலை ஒன்பது மணிக்கு. பல் தேய்க்க வென்னீர் பற்பொடியுடன் பரிசாரகன் எதிரில் பிரசன்னம். வெள்ளிக் கிண்ணியில் உப்புமாவும் சுடச்சுடக் காப்பியும், தாம்பூலாதிகளும் மேஜையில், “வா! வா!"வென்று அழைக்கின்றன.
கால் பிடிக்க வேலைக்காரி, எண்ணெய் தேய்க்க வெள்ளாட்டி, குளிப்பாட்ட இன்னொரு பாட்டி, புடவை தோய்க்க வண்ணாத்தி, குழந்தை யெடுக்க குசினிக்காரி, பால்கொடுக்க செவிலித்தாய், காலால் இட்டதைத் தலையால் செய்ய ஒரு பட்டாளம்; சிற்றுண்டியானவுடன் ஹார்மோனியம் வாசித்தல், வீணை தடவுதல், பகலில் முதல்தரமான போஜனம்; பிறகு மஞ்சத்தில் சிறுதுயில்; இரண்டு மணிக்கு மறுபடியும் சுடச்சுடக் காபி, லட்டு ஜிலேபி முதலிய ஏராளமாக திண்பண்டங்கள். பிறகு காதலன் காதலியைக் குறித்த தமிழ்நாவலின் இன்பம். மாலையில் கோச்சுவண்டியில் கடற்கரைக்குப் பவனி போதல். அங்கிருந்து வந்தவுடன் 7 1/2 மணிக்கு மாதுரியமான சாப்பாடு, 9 மணிக்குச் சயன உத்சவம். அவ்வளவே அம்மாளின் உத்தியோகமும், உழைப்பும். இவற்றால் தேகத்திற்கும், மனதிற்கும் ஏதாயினும் உழைப்புண்டா? ஒன்றுமில்லை. அவளுடைய சரீரம் கல்லா, கட்டையா? மனித சரீரந்தானே அவளுடையது! அதைப் பயன்படுத்தாமல் சோம்பேறித்தனமே குடிகொள்ள விடுத்து சங்கீதம், இனிய போஜனம், நல்ல காற்று முதலியவற்றால் சுகத்தையும் திமிரையும் ஊட்டி வேலையே இல்லாமல் உட்கார வைப்பது தவறென்று அந்தப் பெரியவர் அறிந்து கொண்டாரா? அறுபது நாழிகையும் நாய் போல அலைந்து பேய்போல உழைத்து ஓய்வே பெறாமல் பாடுபட்டுத் தமது உடம்பையும், மனதையும் வருத்தி வரும் அந்த மனிதரே தாசி வீட்டிற்கும் வேசி வீட்டிற்கும் போக ஆசைப்படுகிறாரே; அவர் கமலாவை எப்படி வைத்திருக் றோம் என்பதை நினைக்கிறாரா? அவளை இப்படி கெடுப்பதுதான் அருமை பாராட்டுவது போலிருக்கிறது. டிப்டி கலெக்டரும் இப்படித் தானே சண்டைக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கிடாவைப் போலத் தங்கத்தைக் கொழுக்க வைத்திருக்கின்றான்; பெரிய மனிதனாம், நல்ல பெரிய மனிதன்! இனிமேல் பெரிய மனிதனென்றாயானால், நான் பிறகு தாறுமாறாய் ஆரம்பித்து விடுவேன். படிக்கிறது பகவத்கீதை; குடிக்கிறது குடக்கள்" என்றாள்.
சாமா:- சூ! உளராதே; பெரிய இடத்துச் சங்கதி. உன் நாட்டுப்பெண்ணை வைத்து ஆள உனக்குத் திறமையில்லை; ஊராரை யெல்லாம் தூஷிக்கிறாயே! உன்னோடு கூட இருந்தவளை எங்கேயோ பறி கொடுத்துவிட்டாய். என்ன வென்று கேட்டால், மருந்தாம் மாயமாம்; சொல்லாமல் பெண்ணை அழைத்துக்கொண்டு போனால், வராகசாமி தனியாக வந்து விடுவானாம்; கொக்கின் தலையில் வெண்ணெய் வைப்பதா? நீ சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா? சென்னப் பட்டணத்தில் கன்னம் வைக்க சீரங்கப் பட்டணத்திலிருந்து குனிந்து வந்த கதையாக இருக்கிறது. வராகசாமியைத் தனியாக அழைத்துக் கொண்டு போக வேண்டுமானால் பெண் இவ்விடத்திலேயே இருந்து இவன் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலைத்துத் தன்னுடைய சொற்படி நடக்கச் செய்து கொண்டு தனிமையில் அழைத்து போவது சுலபமா! நீ சொல்வது சுலபமா! முன் பின் செத்திருந் தாலல்லவா உனக்குச் சுடுகாடு தெரியும். உன் அகமுடை யானுக்கு நீ இப்படித்தான் மருந்து போட்டாய் போலிருக்கிறது. இது மூக்கை நேரில் பிடிக்காமல் தலையைச் சுற்றிப் பிடிப்பதைப் போலிருக்கிறது.
கோமளம் - சபிண்டி தின்றவன் இருக்கும்போது, செத்தது பொய்யென்பது போலப் பேசுகிறாயே சாமா! மலைபோல இருந்த பெண்டாட்டி வீட்டைவிட்டுப் போனது கண் முன் நன்றாய்த் தெரிகிறதே. அவளுடைய அப்பன் அழைத்துக் கொண்டு போகா விட்டால் அவள் எப்படி மாயமாய் மறைந்தாள்? அவளென்ன சருக்கரைக்கட்டியா? நாங்கள் அவளைக் காப்பியில் போட்டு கரைத்துச் சாப்பிட்டு விட்டோமா? அந்தக் கெட்ட கழுதையும், அவளுடைய அப்பனும் இப்படிச் செய்தால் எங்களை என்ன செய்யச் சொல்லுகிறாய்? காரணத்தை யெல்லாம் அவர்களிடம் போய்க் கேள். அவர்களுடைய சூதெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும்?
பெருந்தேவி:- அவள் தன்னுடைய டிரங்குப் பெட்டியி லிருந்து எதையோ எடுத்துக் காப்பியிலே போட்டதை நான் கண்ணா ரப் பார்த்தேன். அதற்குத் தகுந்தாற் போல, இவனுடைய புத்தியும் மாறிப் போயிருக்கிறதே. இனி குட்டிச் சுவரில் முட்ட வெள்ளெழுத்தா? அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். அதைப்போல் தனக்குத்தான் அருமையாக ஒரு டிரங்குப்பெட்டி வந்து விட்டதென்று முப்பது நாழிகையில் முன்னூறு தரம் திறந்து பார்ப்பதும் பூட்டுவதுமே வேலை.
கோமளம்: - மகா அற்ப மனிஷி! அந்தத் திறவுகோலை எங்கேயாவது ஆணியில் மாட்டினால் நாங்கள் பெட்டியைத் திறந்து அதிலிருக்கும் அவளுடைய ஆஸ்தியை எடுத்துக் கொள்வோமாம். பெட்டியைத் திறக்கும் போது கூட தாலிச்சரட்டிலிருந்து திறவுகோலை வேறாய் எடுக்கமாட்டாள்; அப்பா! என்ன சாமர்த்தியம்! - என்றாள்.
சகோதரிமார் இருவரும் ஒரே பிடிவாதமாய் மேனகா தனக்கு மருந்து போட்டுவிட்டாள் என்று கூறியதை அவன் சிறிதும் நம்பாவிடினும், அவளுடைய பெட்டியைத் திறந்து, அதற்குள் சந்தேகநிவர்த்திக்குரிய குறி ஏதாயினும் இருக்கிறதா வென்பதைப் பார்க்க அவன் மனதில் ஒருவித ஆசை உதித்தது. அவன் உடனே, "அடிகோமளம்! அந்தப்பெட்டியை இங்கே எடுத்துக்கொண்டு வா , அதைத் திறந்து பார்ப்போம். அதில் வசிய மருந்தைக் காட்டுங்கள்" என்றான்.
பெரு:- மருந்துதான் உன் வயிற்றுக்குள் போய்விட்டதே; உன் வயிற்றைத் திறந்து பார். பெட்டியில் மிகுதி இருக்கிறதோ இல்லையோ.
கோமளம் : - திறவுகோல்தான் அவளுடைய தாலிச் சரட்டோடு சவாரி போயிருக்கிறதே; பெட்டியை நாம் எப்படித் திறக்கிறது. பூட்டு உறுதியானது. மறு சாவியால் திறக்கவே
முடியாது.
வராக :- திறவுகோலில்லாவிட்டால் பூட்டை உடைத்து விடுவோம் ; பெட்டியை எடுத்துக்கொண்டுவா.
சாமாவையர் :- (நயமாக) சேச்சே! அப்படிச் செய்யாதே. நல்ல உயர்ந்த பெட்டி ; வீணாய்க் கெட்டுப்போகுமப்பா! உனக்குப் பெட்டி என்ன செய்தது? மேனகா அதற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறாளா வென்று பார்க்கப்போகிறாயா? பெண்டுகள் குழந்தையைப் போலப் பலவிதமான விளை யாட்டுச் சாமான்களையும் ஆடையாபரணங்களையும் பிறந்த வீட்டிலிருந்து ஆசையோடு கொணர்ந்து மறைத்து வைத்திருப் பார்கள். அதை நாம் பார்க்கக்கூடாதப்பா! உனக்குத் தெரியாது; வேண்டாம்; அப்படிச் செய்யாதே.
பெருந்தேவி - (ஒருவித அச்சத்தோடு) ஆமாப்பா! அவள் பின்னால், அதை வதைத்தேன் இதை வதைத்தேன் என்று பழி போட்டு எங்கள் தலையை உருட்டி விடுவாள். அதை உடைக்க வேண்டாம். நீ செய்வது எங்கள் பேரில் வந்து சேரும். தானில்லாத காலத்தில் இரண்டு மொட்டை முண்டைகளும் உடன் பிறந்தானிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, பெட்டியை உடைக்கச் சொன்னார்களென்று மண்ணை வாரித் தூற்றுவாள். கோமளம்! நீ பெட்டியைத் தொடாதே - என்றாள்.
அதே காலத்தில் அப்புறந் திரும்பிக் கோமளத்தைப் பார்த்து கண்சிமிட்டிப் பெட்டியைக் கொண்டுவரும்படி சைகை செய்தாள்.
அவள் உடனே பெட்டியைக் கொணர்ந்து வைத்து விட்டாள். அதைத் திறப்பதற்குத் தேவையான ஒரு உளி, குண்டுக்கல், ஆணி முதலியவைகளும் வந்து சேர்ந்தன.
மேனகா தனக்கு மருந்திட்டாள் என்பதை அறிவதற்கு அநுகூலமாக ஏதாயினும் குறிகள் அதில் தென்படுமோ வென்று பார்க்க ஆவல் கொண்ட வராகசாமி, உளியால் அதன் பூட்டை உடைத்துப் பெட்டியின் மூடியைத் திறந்தான். தஞ்சையிலிருந்து வந்தபோது வாங்கிய தாழம்பூவின் மணம் குபீரென்று கிளம்பி எங்கும் இனிமையாய் வீசியது. அந்தப் பெட்டி மிகவும் அகன்று நீண்டும் இருந்தது; இடையில் பொருத்தப்பட்ட ஒரு தகட்டி னால், அதன் உட்புறம் இரண்டு பாகங்களாய்த் தடுக்கப் பட்டிருந்தது. அவைகளில் பல வகைப்பட்ட சாமான்களும் ஆடையாபரணங்களும் கொலு வைக்கப்பட்டவாறு அலங் காரமாய்க் காணப்பட்டன. அதன் தோற்றத்திலிருந்து அவள் நாகரீகமானவள் என்பதும், மகா புத்திசாலியென்பதும் நன்கு விளங்கின. பெட்டியின் ஒரு பகுதியில் அவளுடைய ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பகுதிக்குள் இருந்த பொருள் என்ன வென்பது தோன்றாவாறு அதன்மேல் ஒரு சிறிய பட்டுத் துணி மறைத்துக் கொண்டிருந்தது. மூடிவைக் கப்படும் பொருளைப் பார்க்க ஆவல் கொள்ளுதலே மனிதரின் இயற்கை. ஆதலால், வராகசாமி, ஒரு பகுதியை மூடிக் கொண்டிருந்த பட்டை விலக்கினான். அதில் ஏதேனும் விசேஷம் இருந்ததா? அப்படியொன்றும் காணப்படவில்லை. பட்டுக் கயிற்றால் அழகாகக் கட்டப்பட்ட ஒரு புஸ்தகக்கட்டு ஒரு புறத்தில் இருந்தது. இன்னொரு புறத்தில் 20, 25 அழகான விலை உயர்ந்த பட்டு இரவிக்கைகள் ஒரு கட்டாய்க் கட்டி வைக்கப்பட்டிருந்தன.
அவளுடைய இரவிக்கையைத் தொடவும் ஒருவகையான அருவருப்பைக் கொண்ட வராகசாமி அந்தக் கட்டில் என்ன புஸ்தகங்கள் இருக்கின்றன வென்பதையும், அதிலிருந்து அவளுடைய மனப்போக்கு எவ்வாறிருக்கின்றது என்பதையும் அறிய ஆவல்கொண்டு அதன் கட்டை அவிழ்த்தான். அதில் கம்பராமாயணம், திருவாய் மொழி, தாயுமானவர் பாடல், பாரதம், பாகவதம், பதார்த்தகுண சிந்தாமணி, சரீர தத்துவ சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், மருத்துவம், பாகசாஸ்திரமும், சுகாதார விளக்கம் முதலிய புஸ்தகங்களும், ஒரு நாவல் புஸ்தகமும் இருந்தது. நமது புராதனப் பழக்க வழக்கங்களிலேயே பயிற்றப்பட்ட மேனகா நாவலும் வைத்திருந்தாளோ வென்னும் சந்தேகம் சிலருக்கு உதிக்கலாம். ஆனால், தற்காலத்தில் நமக்கு ஒழுக்கம் பயிற்றும் நாவலாசிரியர்களால் எழுதப்படும் நிகரற்ற நாவல்கள் எதையும் அவள் வைத்திருக்க வில்லை. தமது சுயப்புலமையால் பெருத்த பண்டிதர்களால் எழுதப்பட்டு ஏராளமான சாற்றுக்கவிகளுடன் பிழையறத் தோன்றும் நாவல்களில் எதையும் அவள் வைக்கவில்லை. தோன்றாத் துணையாயிருந்து உதவும் கடவுளின் அருள்வாக்காய் அமைந்துள்ள கமலாம்பாள் சரித்திரமே அதில்காணப்பட்டது. வராகசாமி அவ்வாறு அவளுடைய புஸ்தகங்களைப் பரிட்சை செய்ததில் அவனுடைய அருவருப்பு அதிகரிக்கவில்லை. அவன் அவள் மீது எவ்விதமான குற்றமும் கூறுதற்கு இடமில்லாமல் போயிற்று. புஸ்தகங்களை முன்போலக் கட்டி வெளியில் வைத்தான். பெட்டியில் புஸ்தகக்கட்டு முதலில் இருந்ததற்கு அடியில் பெருத்த அற்புதமான தந்தப் பெட்டி யொன்று காணப்பட்டது. அதன் வேலைத் திறமும், அழகும் அவனுடைய கண்ணைப் பறித்தன. அந்தப்பெட்டியை மெல்ல வெளியில் எடுத்தான். அது பூட்டப்பட்டிருந்தாலும் அதன் திறவுகோல் அதன் பக்கங்களிலிருந்த வளையமொன்றில் கட்டப் பட்டிருந்தது. அதையெடுத்துப் பெட்டியைத் திறந்தான்.
அதுகாறும் மற்ற மூவரும் வாய் பேசாமல் அருகில் நின்று கவனித்தனர். அப்போது
பெருந்தேவி, "அடே அதை யெல்லாம் திறக்காதே; அதனால் வீண் மனஸ்தாபம் வந்து விளையும்; பணக்காரன் வீட்டுப் பெண்; விலை உயர்ந்த சாமான்கள் இருக்கின்றன. ஏதாவது போகும் குறையும்; அந்த வம்பு நமக்கேன்? பேசாமல் வைத்துவிடு!" என்று சொல்லி விட்டு சாமாவையரைப் பார்த்தாள். அவர் சிறிது புன்னகை கொண்டு தம்முடைய இரண்டாவது சதியா லோசனையும் தாம் நினைத்தபடியே நிறைவேறிப் போகும் என்பதை ஒருவாறு காட்டினார்.
அதைக் கவனியாத வராகசாமி தந்தப் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்து அத்தர், ஜவ்வாது, முதலியவற்றின் மணம் வீசியது. அதற்குள் என்ன இருந்தது? விலை உயர்ந்த பொருள் வேறொன்றுமில்லை. தபாற் கார்டளவில் புகைப்பட மொன்று காணப்பட்டது. அந்தப்படம் எந்தப் புண்ணிய புருஷனுடையதோ, அந்த மனிதன் முன் ஜென்மத்தில் என்ன பூஜை பண்ணினவனோ வென்று கண்டோர் நினைக்கும்படி பெட்டியாகிய பஜனை மடத்தில் அந்தப் படம் கோலா கலமாய் நறுமலர்களாலும் துளபத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது. வெல் வெட்டினால் தைக்கப்பட்ட சிறிய பஞ்சு மெத்தையின் மேலும் அழகிய திண்டு தலையணை களினிடையிலும் அப்படம் காணப்பட்டது. அதற்குப் பூஜை, தூபம், தீபம், நைவேத்தியம், அலங்காரம், பஜனை முதலியவை பெருத்த உத்சவத்தைப் போல நடத்தப் பட்டிருந்தன வென்பது நன்றாய் விளங்கியது.
மேனகா எந்த சுவாமியை அவ்வாறு வைத்து வழிபட்டு வந்தாள் என்பதை அறிய ஆவல் கொண்ட வராகசாமி மேலேயிருந்த புஷ்பங்களை விலக்கி அப்படத்தை எடுத்துப்பார்த்தான். அது தன்னுடைய படம் என்பதைக்கண்டான். ஒரே நொடியில் அவனுடைய உடம்பு பூரித்தது; மயிர் சிலிர்த்தது; இன்பமாய் நிறைந்தான். கண்களில் கண்ணீர்த் துளிகள் ஆநந்தம் ஆநந்தம் பிரம்மா நந்தமென்று நாட்டியமாடிக்கொண்டு வெளிப் பட்டன. "ஆகா! என்ன மேனகாவின் பைத்தியம்! என்ன இவளுடைய அறியாமை! இவள் ஏதாயினும் தெய்வத்தின் படத்தை வைத்து வணங்காமல் ஒரு மனிதனுடைய வடிவத்தை வைத்துப் பூஜிப்பாளா!" என்று நினைத்தான். “இங்கு இவளிருந்தபோது என்னை நேரில் இவ்விதம் தெய்வமாகத் தானே மதித்து யாவற்றையும் செய்து வந்தாள். ஒருக்கால் இது இவள் தஞ்சையிலிருந்த காலத்தில் செய்து வந்த காரியம் போலிருக்கிறது. ஆகா! இவளைப் போன்ற மனைவி நான் எத்தனை ஜென்மம் எடுத்து என் ஆயுட்காலம் முழுதும் தவம் புரிந்தாலும் கிடைப்பாளோ! என் பாக்கியமே பாக்கியம் " என்றெண்ணி அன்பு மயமாக இளகி அயர்ந்தான். மற்றவர் முகங்களைப் பார்த்தான். அவர்களும் அதைக்கண்டு ஒரு வித இளக்கமடைந்தவர்களாகத் தோன்றினர்.
"இத்தகைய கண்மணியைப் பறிகொடுத்தேனே! அவள் எங்கு போயிருப்பாளோ! எப்படி மறைந்திருப்பாளோ!" என்று நினைத்து ஏங்கினான். "அது நிஜமோ? அக்காள் சொல்வது நிஜமோ? அல்லது இரண்டும் உண்மையோ ? என்னை அவள் இவ்வாறு தெய்வமாக மதித்திருப்பதனால் என்னைத் தன் வசமாக்க அவள் தனது மடமையாலும் பாட்டி முதலியோரின் துர்போதனையாலும் எனக்கு ஏன் மருந்திட்டிருத்தல் கூடாது? அக்காள் சொல்வது மெய்யாகவே இருக்கலாம். அவள் எனக்கு மருந்திட்டிருந்தாலும் அதை நான் குற்றமாக கொள்வது தவறு. இருக்கட்டும் நாளைக்கு அவர் எப்படியும் வருவார். உண்மையை அறிந்து கொண்டு நானே நேரில் தஞ்சைக்குப் போய், அவளுக்கு நல்ல அறிவூட்டி, அவள் இங்கே இருந்தாலும் அவளைச் செல்வமாகவும் சீராகவும் வைக்கிறே னென்றும், அன்போடும் ஆசையோடும் நடக்கிறேனென்றும் உறுதி செய்து கொடுத்து விட்டு, அழைத்து வந்து விடுகிறேன்'' என்று முடிவு செய்து கொண்டு தந்தப் பெட்டியைத் தனக்கருகில் வைத்துக்கொண்டான். மேலே ஆராய்ச்சி செய்தலை நிறுத்தி விட நினைத்தான். அந்த உத்தமியின் மீது எவ்வித ஐயமும் கொள்வதனால் தனக்குப் பெருத்த பாவம் சம்பவிக்கும் என்று அவன் மனது கூறியது. அவள் தன்னைப் பற்றி இன்னும் என்ன புதுமைகளைச் செய்து வைத்திருக்கின்றாளோ என்பதைக் காண ஒருவகை அவா தோன்றி அவனை வதைத்தது. தான் சோதனை செய்த பகுதியின் மற்றொரு புறத்திலிருந்த ரவிக்கைகளின் கட்டையெடுத்து அவிழ்த்தான். ஒவ்வொன்றும், ரூபா 10, 15 பெறுமானமுள்ள 20, 25 அழகிய இரவிக்கைகள் (கச்சுகள் ) கண்ணைப் பறித்தன. ஒன்றை யெடுத்துப் பிரித்தான். உடனே அவளுடைய எழில் வழிந்த கைகளும், முதுகும், மார்பும், கழுத்தும் அவனுடைய அகக்கண்ணிற்குக் கண் கூடாகத் தோன்றி அவன் மதியை மயக்கின. "ஐயோ! என் இனிமை வடிவை எப்போது நேரில் காணப் போகிறேன்?" என்று நினைத்து ஏங்கினான். அந்தக் கச்சு மூட்டையை அப்படியே வாரிக் கண்களிலே ஒற்றிக் கொண்டு முத்தமிட நினைத்தான். அண்டையில் மனிதர் இருத்தலை யெண்ணித் தன்னை அடக்கிக் கொண்டான்.
கச்சு மூட்டையின் கீழ் வேலைப்பாடுகள் அமைந்த சாயப்பெட்டிகள் பல காணப்பட்டன. வட்ட வடிவமாய்த் தோன்றிய ஒரு பெட்டியை எடுத்துத் திறந்தான். வைரங்களும் சதங்கைகளும் நிறைந்த அவளுடைய தங்க ஒட்டியாணம், ''பொய்யோ யெனுமிடையா"ளான தங்கள் செல்வச் சீமாட்டியைக் காணோமே யென்று ஏக்கம் கொண்டு அதில் படுத்திருந்தது. அரைமனதோடு அதைக் கீழே வைத்தான். யாவற்றிலும் பெரியதாய்க் காணப்பட்ட இன்னொரு பெட்டியைத் திறந்தான். வெள்ளை, சிகப்பு, பச்சை முதலிய நிறங்களில் விதைகளைக் கொண்ட மாதுளம் பழத்தைப் பிளந்தவாறு ஏராளமான ஆபரணங்கள் அதில் தோன்றி சுடர்விட் டெரித்தன. அவற்றை அவன் அதுகாறும் பார்த்தவனே யன்று; அவள் அவற்றை ஒரு நாளிலும் அணிந்ததைக் கண்டானில்லை. தமது புதல்வியின் பொருட்டு அவ்வாறு எவ்வளவோ பொருட் செலவு செய்துள்ள அவளுடைய பெற்றோர் அவளது வாழ்க்கையைக் கெடுக்க நினைப்பாரோ? சே! அப்படி நினைப்பது மூடத்தனம் என்று எண்ணினான். ஏராளமான வெள்ளி மைச்சிமிழ்களும், சாந்து வைத்த வெள்ளிக் கிண்ணங்களும், தந்தச் சீப்புகளும், முகம் பார்க்கும் கண்ணாடிகளும் மூலை முடுக்குகளிலெல்லாம் நிறைந்து இருந்தன. அவைகளைப் பார்த்தவுடன், அவனுடைய அகக்கண்ணிலிருந்த மேனகாவின் காதளவு ஓடிய மை தவழ் கண்களும், நெற்றியினிடையிலிருந்து அழகுபெற்ற கஸ்தூரித் திலகமும், சுருண்ட கருங் கூந்தலின் ஒளியும் அப்படியே தத்ரூபமாய்த் தோன்றி அவனை வதைத்தன. இன்னொரு பெட்டி நிறையப் பவுன்களும், ரூபாய்களும் இருந்தன. அத்துடன் ஒரு பகுதியின் சோதனையை நிறுத்திவிட்டு அடுத்த பகுதியை ஆராய்ச்சி செய்தான். அதில் ஒவ்வொன்றும் 200, 250 ரூபாய் பெறுமான முள்ள 7, 8 பெங்களுர் பட்டுப் புடவைகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்பெட்டியிலிருந்த ஒவ்வொரு பொருளும் அவளுடைய ஒவ்வொரு அங்கத்தை நினைப்பூட்டி அவனைப் பெரிதும் வருத்தி துயரக் கடலில் ஆழ்த்தியது. புடவைகளின் கீழ் வெள்ளியினாலும், தங்கத்தினாலும் செய்யப்பட்ட அழகான பலவிளையாட்டுச் சாமான்கள் காணப்பட்டன. யாவற்றையுங் கண்ட வராகசாமி மேனகாவை நினைத்து நெடுமூச்செறிந்து கண்ணீர் விடுத்தான்.
"என் கிள்ளையே! நீ இவ்வளவு பெருத்த செல்வத்தை அடைந்திருந்தும் நற்குணம், நல்லொழுக்கம், அழகு முதலிய யாவற்றையும் பெற்றிருந்தும் சரியான புருஷனை மணந்து அவனுடன் இன்பம் அனுபவிக்கக் கொடுத்து வைக்காமற் போனாயே! உன் யோக்கியதைக்கும் மேன்மைக்கும் ஒரு சிறிதும் தகாத அதமனிலும் அதமனான என்னை நீ மணந்து தேம்பித் தவிக்கும்படி ஆனதே உன்கதி! இதுவரையில் போனது போகட்டும், இனி உன்னை நான் அன்போடு நடத்தி இன்புறுத்துவேன் என்று உனக்கு உறுதி கூறினேன்! அவ்வாறு நடக்க வில்லையா? நீ ஏன் இப்படித் திடீரென்று சொல்லாமல் போய்விட்டனை? நான் உன்னையும் சேலத்திற்கு அழைத்துப் போகவில்லை யென்ற கோபமா? ஜட்ஜிதுரையைக் கொலைக் குற்றத்திற்காக ஏன் தண்டிக்கக் கூடா தென்றாயே! அத்தகைய மகா சாமர்த்திய சாலியான உன்னை நான் மனையாட்டியாக அடைந்தது பற்றி அப்போது என் தேகம் எப்படிப் பூரித்தது தெரியுமா! அப்போது நான் கொண்ட பெருமை, நான் பி.எல். பரீட்சையில் தேறி விட்டேன் என்று கேட்ட போது கூட எனக்கில்லையே! இனி நான் சுட்டாலும், அடித்தாலும், வைதாலும் தகப்பன் வீட்டையே நினைப் பதில்லை யென்று உறுதி கூறினாயே! அப்போது சொன்னது பொய்யா? அன்றி இப்போது செய்தது பொய்யா?" என்று பலவாறு நினைத்து நினைத்து ஏங்கினவனாய் அவளுடைய பொருட்களை யெல்லாம் திரும்பவும் முன் போலவே வைக்கத் தொடங்கினான். அவனுடைய துயரத்தைக் கண்ட மற்ற மூவரும் தாமும் அவனைப் போலவே முகத்தை மாற்றிக் கொண்டனர் ஆயினும், “இன்னமும் தன்னுடைய எண்ணம் முற்றிலும் பலிக்கவில்லையே” என்று வருந்தி யிருந்தனர்.
யாவற்றையும் பெட்டிக்குள் வைத்த வராகசாமி தனது படமிருந்த தந்தப் பெட்டியை எடுத்தபோது மிகவும் கலங்கினான். உச்சி முதல் உள்ளங்கால் வரையில் அவனுடைய சதை ஆடியது. “பெண் பிறந்தாலும் இப்படியல்லவா பிறக்கவேண்டும்! உலகத்தை-யாளும் மகாராஜாக்களும் எனது பாக்கியத்தைக் கண்டு பொறாமை கொள்ளத் தகுந்த இந்தப் பெண்ணரசி எனக்கு வந்து வாய்த்தும், இவளிடம் சுகமடையக் கொடுத்து வைக்காத மகா பாவியல்லவோ நான். ஆகா கேவலம் என்னுடைய படத்திற்கு இவ்வளவு பெருமையா! பெருமைப்படுத்தட்டும். பூஜை செய்யட்டும். அதற்கு மெத்தை யென்ன? திண்டுகள் தலையணைக ளென்ன? அடி! பேதையிலும் பேதையே! இதற்காக, கண்டிப்பதா அன்றி கட்டியணைத்து முத்தமிடுவதா! நீ இருந்த போது நான் இந்த வேடிக்கையைப் பார்க்காமல் போனேனே! பார்த்திருந்தால், - ஆகா! உன்னை இதைப் போல உட்காரவைத்துப் பூஜை செய்திருப்பேனே! பயப்படாதே; இனி என் ஆயுட்கால மெல்லாம் என் இருதய கமலத்திலேயே உன்னை வைத்துப் பூஜிக்கிறேன். இது முக்காலும் சத்தியம்” என்று தனது உள்ளத் தினின்று மொழிந்த வண்ணம், தனது படத்தைக் கீழே வைத்து விட்டு அதிலிருந்த பூக்கள், திண்டு, தலையணைகள் முதலியவற்றை ஒவ்வொன்றாய் எடுத்து வியப்போடு ஆராய்ச்சி செய்தான். பிறகு யாவற்றிற்கும் அடியிலிருந்த சொகுசான மெத்தையைப் பார்க்க ஆசை கொண்டு அதை மெல்லப் பெட்டியை விட்டு வெளியில் எடுத்து அதன் அழகை நெடு நேரம் பார்த்துப் பரவசமடைந்த பின், அதை வகைக்கப் போகையில் அந்தப் பெட்டியின் அடியில் இன்னொரு பொருள் காணப்பட்டது! மெத்தையை மடியில் வைத்துக்கொண்டு அதை எடுத்தான். அவன் அதை எடுத்த போது மற்ற மூவருடைய தேகங்களும் ஒரே காலத்தில் ஒருவித அச்சத்தினால் நடுங்கின. என்றாலும், ஒன்றையும் அறியாத வரைப் போல முகத்தில் எத்தகைய மாறுபாடும் இன்றி முன்போல இருந்தனர். அது எத்தகைய பொருள்? அது ஒரு பட்டுத்துணியால் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்தது என்ன என்பதை அறிய ஆவல் கொண்ட வராகசாமி அதை ஆத்திரத்தோடு அவிழ்த்தான். பட்டுத்துணிக்குள் ஒரு தடித்த காகிதத்தில் அந்த வஸ்து கட்டப்பட்டிருந்தது; காகிதத்தையும் பிரித்தான். யாவரும் இமைகொட்டாமல் அதையே பார்த்திருந்தனர்; அதற்குள் இருகடிதங்களும், ஒரு புகைப்படமும் இருந்தன. பெரிதும் திகைப்பையும் வியப்பையும் அடைந்த வராகசாமி படத்தைப் பார்த்தான். கடிதங்களில் ஒன்றை எடுத்து யாருக்கு யாரால் எழுதப்பட்டது என்பதைப் பார்த்தான். உடனே அவனுக்கு ஒரு பெருத்த சந்தேகம் உண்டாயிற்று. தான் சோதனை செய்தது மேனகாவின் பெட்டியா அன்றி பிறருடையதா என்னும் சந்தேகம் தோன்றியது. தனது கண்களை நம்பாமல் திரும்பவும் ஊன்றி கடிதங்களையும் படத்தையும் மாறிமாறிப் பார்த்தான். அதற்குள் பெருந்தேவி, ''என்னடா! அது? மறைக்கிறாயே? என்ன இரகசியம் அது? அகமுடையாள் லட்சம் பத்து லட்சத்திற்கு நோட்டுகள் வைத்திருக்கிறாள் போலிருக்கிறது? பாட்டி கொடுத்திருப்பாள். எங்களுக்குச் சொல்லப்படாதோ?" என்று மனத்தாங்கலாகப் பேசினாள். அவளுடைய சொல், பச்சைப்புண்ணில் மிளகாய் விழுதை அப்புதலைப் போல இருந்தது. அவனுடைய முகமும், தேகமும் படபடத்துத் தோன்றின. கண்கள் துடிதுடித்து கோவைப்பழமாய்ச் சிவந்தன. கடிதங்களில் ஒன்றைப் படிக்க முயன்று இரண்டொரு வரிகளை வாய்க்குள்ளாகவே படித்தான். "பெண்மணியும், என்னிரு கண்மணியும், என் மனதைக் கொள்ளைகொண்ட விண்மணியுமான என் அருமைக் காதலி மேனகாவுக்கு மனமோகன மாயாண்டிப்பிள்ளை -" என்பது வரையில் படித்தான். அதற்கு மேல் அவனால் படிக்கக்கூடவில்லை. மூளை சுழன்றது. அறிவு மயங்கியது. கையிலிருந்த காகிதங்களும் படமும் கீழே விழுந்தன. அருகில் சுவரோரமாய்ச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மெத்தையில் கண்மூடிச் சாய்ந்து விட்டான்.
" என்னடா அது? என்னடா அது?" என்ற மிகுந்த ஆவலுடன் கேட்டுக்கொண்டு பெருந்தேவியம்மாள் பெட்டி யண்டையில் நெருங்கினாள். அதற்குள் கோமளம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து படத்தையும் கடிதங்களையும் கையி லெடுத்டு படத்தைப் பார்த்தாள். சாமாவையர் வராகசாமியின் பக்கத்தில் உட்கார்ந்து ஒன்றையும் அறியாதவரைப் போலத் திகைத்தார். படத்தைப் பார்த்த கோமளம், "மைசூர் மகாராஜாவின் படமல்லவா இது! இந்தப் படம் ஊரில் சிரிப்பாய்ச் சிரிக்கிறதே! இதற்கு இவ்வளவு ஜாக்கிரதை யென்ன? இரகசியமாய் வைப்பதென்ன? அக்கா! இந்தப் படத்தைப் பாரடி!" என்று கூறிப் பெருந்தேவியிடத்தில் காட்ட, அவள், "அடி உலக்கைக் கொழுந்தே! போ; இதுதான் மைசூர் மகாராஜாவின் படமோ? அதை நான் நன்றாகப் பார்த்திருக் கிறேனே! அது இவ்வளவு அழகாயுமில்லை. இரண்டுக்குமுள்ள வித்தியாசம் பொட்டையானுக்கு கூடத்தெரியும்" என்றாள். அதற்குள் சாமாவையர், " எங்கே என்னிடத்தில் கொடுங்கள்; பார்க்கலாம்'' என்று கேட்டு அதை வாங்கிப் பார்த்து, "படம் எவ்வளவு அழகாய் இருக்கிறது பார்த்தாயா பெருந்தேவி? முகவசீகரமும், களையும் எல்லோரையும் மயக்குகின்றனவே! என்ன அலங்காரம்! என்ன ஆடைகள்! இவன் மேலிருக்கும் உடுப்பு மாத்திரம் பதினாயிரம் ரூபாய் பெறும் போலிருக்கிறதே! நகையெல்லாம் வைரம் போலிருக் கிறதே" என்றார்.
கோமளம் :- கழுத்தில் காசுமாலை இருக்கிறதே! ஆண்பிள்ளை காசுமாலை போட்டுக்கொள்வதுண்டோ?
பெருந்தேவி:- ராஜாக்களும், தெய்வமும் எந்த ஆபரணத்தையும் அணியலாம்.
சாமா:- சேச்சே! காசுமாலையா அது? இல்லை இல்லை. தங்க மெடல்களை மாலையாகப் போட்டிருக்கிறார். இவர் யாரோ மகாராஜாவைப் போலிருக்கிறார். ஏதோ ஒரு விஷயத்தில் மகா நிபுணர் போலிருக்கிறது. மெடல்கள் பெற்றிருக்கிறார். அதிருக்கட்டும். கடிதத்தைப் படி - என்றார்.
உடனே கடிதங்களில் ஒன்றை யெடுத்த கோமளம் அடியிற் கண்டவாறு படித்தாள் :
"பெண்மணியும் என்னிரு கண்மணியும் என் மனதைக்கொள்ளை கொண்ட விண்மணியுமான என் அருமைக் காதலி மேனகாவுக்கு மனமோகன மாயாண்டிப் பிள்ளை எழுதும் கடிதம் -"
பெருந்தேவி - (திகைத்து) என்னடா இது! கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாயிருக்கிறதே! - என்றாள்.
சாமாவையர் அந்த அதிசயச் செய்தியைத் தாங்க மாட்டாமற் குழம்பிப்போன தனது தலையைத் தடவிக் கொடுத்து மௌனம் சாதித்தார்.
கோமளம் மேலும் படிக்கிறாள் :
" என் காதற் கண்ணாட்டி! என் அருமைப் பெருமாட்டி! என் ஆசைச் சீமாட்டி! பச்சை மட மயிலே! பவளவாய்ப் பைங்கிளியே! என் மனதிலுள்ள விஷயத்தை உனக்கு எப்படித் தெரிவிக்கப்போகிறேன். நாங்கள் தஞ்சாவூருக்கு வந்த இந்த எட்டுமாத காலம், நாமிருவரும் ஒரு நாள் தவறாமல் சந்தித்துக் கூடி அனுபவித்த பேரின்ப சுகம் எப்போதும் நீடித்திருக்கும் என்றல்லவா நினைத்தேன்; பாவியாகிய எனக்கு நீ ஏன் முதலில் காட்சி தந்து என் மனதையும் உயிரையும் கொள்ளை கொண்டாய்? இந்த ஊரிலேயே இன்னம் நாலைந்து மாதம் இருந்து நாடகம் ஆடிப் பிறகு சென்னைக்குப் போவோமென்று நான் எங்களுடைய கம்பெனித் தலைவரிடம் சொல்லி என்னால் கூடியவரையில் வற்புறுத்திப் பார்த்தேன். இந்த ஊரில் உண்டான நஷ்டத்தையெல்லாம் சென்னையில் உடனே சம்பாதித்து, கடன்களை அடைக்காவிட்டால் படுத்தாக்கள் முதலியவை விற்கப்பட்டுப் போமென்றும், ஆகையால் உடனே சென்னைக்குப் போக வேண்டுமென்றும், அவர் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார்.
அவருக்கு இந்த ஊரில் ஏராளமாக நஷ்டம் உண்டானது உண்மை. ஆதலால், அவரை இன்னமும் வற்புறுத்துவது தருமமல்ல. என்றாலும், எனக்கு உடம்பு சௌக்கிய மில்லையென்றும், நான் மாத்திரம் இரண்டு மூன்று மாதகாலத்திற்கு பின் வருகிறேன் என்றும் சொல்லிப் பார்த்தேன். என்னைப்போல ராஜா வேஷம் போடுவதில் அவ்வளவு சாமர்த்தியம் உள்ளவர் வேறு எவரும் இல்லை. ஆதலால், நான் வரா விட்டால், அவர் தமது கம்பெனியைக் கலைத்து விட்டு எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு இராத்திரியே காரைக்காலுக்கு ஓடிப் போவதே முடிவென்கிறார். அவருடைய நிலை மையும் பரிதாபமாக இருக்கிறது. நான் உன்னை விட்டுப் பிரிந்து போவதோ பரிதாபத்தினும் பரிதாபமாக இருக்கிறது! இந்த எட்டு மாத காலத்தில் எண்ணாயிரம் கோடி முத்தங் கொடுத்து அஞ்சுகம் போற் கொஞ்சிக் குலாவி என்னை எத்தனையோ முறை இன்பசாகரத்தில் ஆட்டிய என் காமக்களஞ்சியமான உன்னை விட்டுப் பிரிய எனக்கு மனம் வருமோ? முந்திய நாளிரவு நாமிருவரும் சந்தித்துப் பேசியபோது, நீ சொன்ன விஷயம் நினைவிற்கு வருகிறது. உன்னை சென்னையிலுள்ள உன் புருஷன் வீட்டிற்கு அனுப்ப உன் தந்தை முதலியோர் முயன்று கொண்டிருப்பதாகவும், உன்னை அழைத்துக் கொள்ள உன் கணவன் இணங்கவில்லையென்றும், அவன் எப்போதும் உன்னை அழைத்துக்கொள்ளாமலே இருந்து விட வேண்டு மென்று ஸ்ரீநிவாசப் பெருமாளைப் பிரார்த்தித்து வருவதாயும் சொன்னாயே; நீ ஒரு தந்திரம் செய், நீயே உன் கணவனுக்கு அவன் மனது இளகும்படி ஒரு கடிதமெழுதி அவன் உன்னை அழைத்துக் கொள்ளும் நிலையில் வைப்பதோடு, அவனுக்கு ஏதாயினும் பணம் கொடுக்கும்படி பாட்டியின் மூலமாக ஏற்பாடு செய்து நீ கூடிய சீக்கிரம் சென்னையில் உன் புருஷன் வீட்டிற்கு வந்துவிடு. நான் அதற்குள் சென்னையில் ஈசுவரனாலும் கண்டுபிடிக்கக்கூடாத இரகசியமான ஒரு இடத்தை வாடகைக்கு அமர்த்தி வைத்துவிட்டு உனக்கு ஆள் மூலமாகச் செய்தி அனுப்புகிறேன். நீ அப்போது என்னிடம் வந்து விடலாம். அதன் பிறகு நாம் இருவரும் இரதியும் மன்மதனும் போலக் கூடிச் சுகித்திருக்கலாம். என் கண்கொள்ளா எழில் வடிவே! என் உயிர் நிலையே! "அப்படியே ஆகட்டு"மென்னும் உன்னுடைய மறுமொழியைப் பெற்றாலன்றி நான் புறப்பட மாட்டேன். இது சாத்தியம். நீ தாமதமின்றி சென்னைக்கு வந்துவிட வேண்டும். நாளையதினம் இங்கே பட்டாபிஷேக மென்பதை நீ அறிவாய். நான் தனிமையில் வாடகைக்கு வைத்திருக்கும் வீட்டில் நான், நாடகம் முடிந்தவுடன் வந்து உன் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன். நீ வீட்டிற்குப் போகுமுன் அங்கு வந்து எனக்குக் கடைசி முறையாக இன்பங் கொடுத்துப் போவாயென்று நம்புகிறேன். அப் போது யாவற்றையும் நேரில் பேசிக் கொள்வோம்.
இப்படிக்கு உன் அடிமை,
மனமோகன மாயாண்டிப்பிள்ளை"
என்று ஒவ்வொர் எழுத்தும் கணீரென்று தெளிவாக வராக சாமியின் காதில் ஒலிக்கும்படி கோமளம் படித்து முடித்தாள். யாவரும் பேச்சு மூச்சற்ற சித்திரப் பதுமைகளைப் போலத் தோன்றினர். கோமளம் விரைவாக இன்னொரு கடிதத்தையும் எடுத்து அடியில் வருமாறு படித்தாள்.
" என் மாங்குயிலே! மடவன்னமே! நான் உன்னுடைய வீட்டிற்கு அனுப்பிய வேலைக் காரியின் மூலமாக உனது விஷயங்களை அறிந்தேன். உன்னுடைய சாமர்த்தியமும், இனிய குணமும் வேறு எவருக்கேனும் வருமோ? நீ புருஷனுக்குக் கடிதம் எழுதி அவனை ஏமாற்றியதும், இங்கு வந்தபின் அவனுடன் கொஞ்சிக் குலாவி அவன் சந்தேகமடையா வகையில் நடந்து அவன் மதியை மயக்கியதும் கேள்விப்பட்டேன். இன்றிரவு உன் கணவன் சேலத்திற்குப் போகிறான் என்பதைக் கேள்விப் பட்டேன். இன்றிரவு எனக்கு அம்பாள் தரிசனம் கிடைக்கப் போவதைக் குறித்து நான் அடையும் ஆநந்தத்தை எப்படி உனக்கு நான் தெரிவிப்பேன்? இன்றைக்கு ராத்திரியே நான் உன்னை அழைத்துக் கொள்கிறேன். இன்றோடு நமது கலி நீங்கப் போகிறது. ராத்திரி ஒன்பது மணிக்கு நானும் என் சமையற்காரனும் ஒரு வாடகைப் பெட்டி வண்டியில் வருவோம்.
நாடகத்தில் சேவகர்களுக்குப் போடும் வெள்ளி வில்லை, சட்டை முதலியவற்றை அவனுக்கு மாட்டிவிட்டு அவனை ஒரு சர்க்கார் சேவகனைப் போலச் செய்து உன்னுடைய வீட்டிற்குள் அனுப்புகிறேன். வாசலில் பெட்டி வண்டியில் உன் தகப்பனாரைப் போலத் தலைப்பாகை முதலியவற்றுடன் நானிருக்கிறேன். உன் தகப்பனார் கூப்பிடு கிறாரென்று என் வேலைக்காரன் உன்னை அழைப்பான். நீ உடனே வந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி சிறிது நேரம் பேசிவிட்டு உடனே வண்டியில் ஏறிப் போய் விடுவோம். சமயம் சரிப்பட்டால், உன் பெட்டியையும் எடுத்து வா , சரிப்படாமற் போனால் பெட்டி தேவையில்லை. வேண்டிய ஆடையாபரணங்களைப் புதியனவ னாய் வாங்கிக்கொள்வோம். இவ்வளவு சாமர்த் தியம் செய்த மகா புத்திசாலியான நீ, இதையும் நிறைவேற்று வாயானால், நாம் இனி என்றைக்கும் நீங்காத நித்தியாநந்த சுகம் அடை யலாம். தயங்காதே கண்மணி!
கடைசியாகப் பட்டாபிஷேகத்தன்று நாம் சந்தித்த அந்த இரவின் நினைவே என்னை ஒவ்வொரு நொடியும் ஓயாமல் வருத்துகிறது; உன் கிள்ளை மொழிகள் என் செவிகளில் இன்னமும் ஒலித்து நிற்கின்றன. உனது நெற்றியிலிருந்த கஸ்தூரி திலகமும், துடையிலுள்ள அழகிய மச்சமும் என் மனதில் அப்படியே பதிந்து நின்று என் உயிரைக் குடிக்கின்றன. என்ன செய்வேன்? காமநோய் பற்றி என்னை எரிக்கிறது. உன்னை இன்றிரவு கண்டு உன்னிடத்தில் ஆலிங்கன சுகம் பெற்றாலன்றி நான் படுத்த படுக்கையாய் விழுந்து விடுவேன் என்பது நிச்சயம். உன்னுடைய நாத்திமார்களான மொட்டை முண்டைகள் இருவரும் ஓயாமல் உன்னோடு கூட இருப்பதால் என்னுடைய வேலைக்காரி உன்னுடன் அதிகமாய்ப் பேச முடியவில்லை என்று கேள்விப்பட்டேன். ஆகையால், யாவற்றையும் கடிதத்தில் எழுதியனுப்பி யிருக்கிறேன். கண்ணே ! தவறாதே,
உன் அடிமை
மனமோகன மாயாண்டிப்பிள்ளை
என்று இரண்டாவது கடிதமும் அழுத்தந் திருத்தமாய் படிக்கப் பட்டது. பெரிதும் கோபங்கொண்ட பெருந்தேவி அங்கும் இங்கும் தாண்டிக் குதித்து, "அடே நாடகக்கார நாயே! பாழாய்ப் போன தேவடியாள் மகனே! உனக்கு வந்த கேடென்னடா! மொட்டை முண்டைகளாமே! நாங்கள் உன் முழியைப் பிடுங்கினோமா! இந்தக் கொளுப்-பெடுத்தவளுக்கு வந்த கேடென்ன! அவனுடைய இறுமாப்பென்ன! இப்படியும் நடக்குமோ! அடாடா! வராகசாமி! உன் தலை விதி இப்படியா முடிந்தது! நல்லகாலத்திற்காகவா இந்த சம்பந்தம் நமக்கு வந்து வாய்த்தது! அந்த வக்கீலின் பெண்டாட்டி கூத்தாடியைப் பிடித்துக்கொண்டு ஓடிவிட்டாள் , இந்தப் பெரிய மனிதன் பெண் எடுபட்டு ஓடி விட்டாள்" என்று சொல்லக் கேட்டிருந்தேன். அது நமக்கா வந்து சேரவேண்டும்? பாவி வயிற்றில் நல்ல பெண்களும் பிள்ளையும் வந்து பிறந்தோம். நாங்களாயினும் சிறுவயதில் விதவைகளானோம். அது என்னவோ தலைவிதி; அது அவமானமாகாது. இந்த அவமானம் ஏழேழு தலைமுறைக்கும் நீங்காதே; வராகசாமி! நீ வருத்தப்படாதே! எருமைச்சாணி ஹோமத்திற்கு ஆகாது. விட்டுத்தொலை கழுதையை" என்று மகா ஆத்திரத்தோடு கூறினாள்.
கோமளம்:- என்ன ஆச்சரியம்! இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா என்றிருந்தவள் எவ்வளவு பெருத்த காரியம் செய்திருக்கிறாள்! அடே யப்பா! என்ன சாகஸம்!! என்ன வேஷம்!!! ஒரு குறையுமறியாத மகா பதிவிரதையைப் போல வல்லவா நடந்து கொண்டாள்! வராகசாமி இவளோடு தனியாக இருந்தால் விஷமிட்டே இவனைக் கொன்றி ருப்பாள். இப்பேர்ப்பட்டவள் முகத்தில் முழித்தாலும் பெரும் பாவம் வந்து சேரும். கபடமே அறியாத குழந்தையைப் போலிருக்கும் நம்முடைய வராகசாமிக்கு இந்த கொடு நீலி, துரோகி, சாகஸி, தட்டுவாணியா வந்து சேரவேண்டும்! அடே சாமா! எப்போதும் அவளுடைய கட்சியை கீழே விடாமல் தாங்கிப் பேசினாயே நீ! இப்போது ஏனடா வாயைத் திறவாமல் ஆடு திருடின கள்ளனைப்போல் முழிக்கிறாய்? - என்றாள்.
சாமாவையர் நிரம்பவும் விசனக்குறிகளைக் காட்டினார். ஒன்றையும் சொல்ல மாட்டாதவரைப் போலக் கனைத்தும், எச்சிலை விழுங்கியும், வாயிலிருந்த புகையிலை சாமான்களை ஒருபுறம் ஒதுக்கி வழி செய்து கொண்டும் சிறிது தடுமாறி, "நான் வெளிப்பார்வையிலிருந்து சொன்னேனம்மா! பெண்டு களாகிய நீங்கள் இரகசியமாய்ச் செய்யுங்காரியங்களை நான் பார்த்துக்கொண்டா இருக்கிறேன். எனக்கு மாத்திரம் இது கனவாய்த் தோன்றுகிறதன்றி இன்னமும் இது உண்மை யென்று என் மனது நம்பவில்லை. டிப்டி கலெக்டருடைய தந்தி நிஜமா யிருக்க வேண்டு மென்று நாங்கள் சொன்னதை மறுத்து ஏதேதோ தாறுமாறாய் உளறினீர்களே! இப்போது பார்த் தீர்களா? எப்படி முடிந்தது?" என்றார்.
பெருந்தேவி :- அவள் இப்படி போகாமல் டிப்டி கலெக்டருடன் போயிருக்க கூடாதா வென்று இப்போது தோன்றுகிறது. அப்படியானால் அவளை நான் இன்னமும் நம்முடைய பொருளென்று சொல்லிக்கொள்ளவாகிலும் இடமுண்டு. வேண்டுமானால் கண்டித்தோ தண்டித்தோ அவளை அழைத்துக் கொள்ளலாம். இப்போது முதலுக்கே மோசம் வந்து விட்டதே!
சாமா:- (கனைத்துக்கொண்டு) அவளை இப்படியே விட்டு விடுகிறதென்று நினைத்தாயா? நாம் இதைப்பற்றி உடனே போலீசில் தெரிவிக்க வேண்டும். அவர்கள் உடனே அந்த நாடகக்காரனைப் பிடித்துச் சிறைப் படுத்துவார்கள். நாம் மேனகாவை உடனே அழைத்துக்கொண்டு வந்து விடலாம்.
பெருந்தேவி:- அப்படியானால் நீ உடனே போய் அந்தக் காரியத்தைப் பார். மேனகாவை அழைத்து வருவதை யாராவது பார்க்கப்போகிறார்கள்; வண்டியில் ஒரு திரை கட்டி மறைத்து அழைத்துக்கொண்டு வந்துவிடு - என்றாள்.
சாமாவையர் அருகிலிருந்த வராகசாமியை அன்போடு தடவிக்கொடுத்து, "அப்பா வராகசாமி! விசனப்படாதே! என்னவோ வேளைப்பிசகு இப்படி நடந்து விட்டது; விதி யாரை விட்டது அப்பா! ஒரு காரியம் நடக்கு முன், அது நமக்குத் தெரியாமல், நாம் அது நடவாமல் தடுத்துவிடலாம். இப்போது நடந்து போனதில் நான் என்ன செய்கிறது? அதைத் தடுக்க முடியாவிட்டாலும் அது மேலும் கெடாமல் நாம் அதை நல்ல வழிக்குத் திருப்ப வேண்டும். கவலையை விட்டுவிடு. நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எழுதி வைத்து மேல் நடவடிக்கை நடத்தச் செய்து மேனகாவை அழைத்து வந்து விடுகிறேன்” என்றார்.
இரண்டு கடிதங்களையும் படித்தது முதல் தீத்தணலில் புதையுண்டு கிடந்தவனைப் போலிருந்த வராகசாமிக்கு அம்மூவர் பேசியதும் கிணற்றிற்குள்ளிருந்து பேசுதலைப் போலத் தோன்றியது. என்றாலும் அம் மூவரும் பேசிய சொற்களின் கருத்தும் சாமாவையர் செய்த முடிவின் கருத்தும் அவன் மனதில் ஒருவாறு பட்டன. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகவேண்டா மென்னும் உறுதி தோன்ற, வராகசாமி சாமாவையரின் கையைப் பிடித்து இழுத்து சைகை செய்தான்.
அதை உணர்ந்த பெருந்தேவி, “ஆமடா சாமா! போலீசில் சொல்ல வேண்டாம். அது அவமானமாய்ப் போகும். நீ ஒரு காரியம் செய்; நீயே நேரில் போய் அந்தப் பயல் எந்த நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடித்து மெல்ல அவனுடைய இருப்பிடத்தை அறிந்துகொள். அவனிடம் போய் போலீஸ்காரனை அழைத்து வந்து சிறையிலடைப்பதாய் மிரட்டி அவளை மாத்திரம் இரகசியமாய் அழைத்து வந்துவிடு. ஒருவருக்கும் தெரியாமற் போகும். இம்மாதிரி ஓடிப்போன பெண்களை எத்தனையோ பேர் அழைத்துவந்து பந்தியில் ஏற்றுக் கொள்ள வில்லையா? வராகசாமியிடம் ஒன்றும் கேட்காதே. அவன் அப்படித்தான் தடுப்பான்; நீ போய் அவளை அழைத்துக்கொண்டு வந்துவிடு.
சாமாவையர்:- போனது வந்தது தெரியாமல் அவளைக்கொண்டு வருவது என் பொறுப்பு; அதைப்பற்றி நீ கவலைப்படாதே. நான் போகிறேன். நீங்கள் யாரிடத்திலும் விஷயத்தைச் சொல்லாதேயுங்கள். கோமளம்! உன்னுடைய ஓட்டை வாய் ஜாக்கிரதை - என்று சொல்லிக் கொண்டு எழுந்தார். வராகசாமி அப்போதும் சாமாவையரை விடாமல் ஒரே உறுதியாய்த் தடுத்தான்.
பெருந்தேவி :- அடே சாமா! வராகசாமிக்குக் கொஞ்சம் கோபம் தணியட்டும். அதற்கு மேல் இவனுடைய யோசனையின் மேல் செய்ய வேண்டுவதைச் செய்வோம். நீ உடனே இவனுடைய பெரிய வக்கீலிடம் போய், இவனுக்கு உடம்பு சரியாக இல்லை. ஆகையால், இன்றைக்கு இவன் கச்சேரிக்கு வர முடியவில்லை யென்று சொல்லிவிட்டு வா - என்றாள்.
உடனே சாமாவையர் எழுந்து வெளியிற் போய் நல்ல மூச்சாய் விட்டுக்கொண்டு தம்முடைய வீடு சேர்ந்தார். வராகசாமி எழுந்து கடிதங்களையும் படத்தையும் எடுத்துக்கொண்டு தன் சயன அறைக்குள் நுழைந்து கதவை மூடிவிட்டுத் தன் கட்டிலில் படுத்தான்.
-------------
அதிகாரம் 12 - பிச்சையெடுத்தது பெருமாள்; பிடுங்கித்தின்றது அனுமார்.
அவன் மனதில் அப்போதைய நிலைமையை அற்ப வல்லமையுடைய மிக்க பயனுடைய
சொற்களால் கேட்டறிதலினும் அதை மனதால் பாவித்தலே மிக்க பயனுடைத்தாம். அன்று அவன் சேலத்திலிருந்து வந்து வீட்டில் நுழைந்த முதல் அதுவரையில் தான் அயர்ந்த துயிலிலிருப்பதையும் அதில் மகா பயங்கரமான கனவைக் கண்டு கொண்டிருப்பதாயும் நினைத்தானேயன்றி எதிர்பார்க்கத் தகாத அத்தனை புதிய விஷயங்களும் தனக்கு அவ்வளவு சொற்ப காலத்தில் உண்மையில் நிகழக் கூடியவை அன்று என மதித்தான். அவன் உலகத்தையும் அதன் சூதுகளையும் வஞ்சனைகளையும் தீமைகளையும், ஒரு சிறிதும் அறியாதவன். ஆதலின், அவன் மனதில் உண்டான புதிய உணர்ச்சிகளும் அனுபவங்களும் மிக்க உரமாய் எழுந்து அவன் தேகத்தையும் மனதையும் கட்டிற்குக் கட்டிற்கு அடங்காமல் செய்துவிட்டன.
கன்றைப் பிரிந்த தாயெனப் பெரிதும் கனிந்து இரங்கிய மனதோடு மேனகாவைக் காண ஆவல் கொண்டு ஓடி வந்தவனுக்கு அவளைக் காணாத ஏக்கம் முதலாவது இடியாக அவன் மனதைத் தாக்கியது ; அந்நிலைமையில் தத்தளித்திருந்தவனுக்கு அவள் சொல்லாமல் தந்தையோடு போய்விட்டாள் என்ற செய்தி கேட்டது இரண்டாவது இடியானது. பிறகு அவள் தனக்கு மருந்திட்டாள் என்றதும் மூன்றாவது விந்தையாய் இருந்தது. அவளுடைய பெட்டியைத் திறந்தபோது தன் படம் வைக்கப்பட்டிருந்த நிலைமையைக் கண்டது நான்காவது அதிர்ச்சியாக முடிந்தது. கடைசியாக வெளியான கூத்தாடியின் விஷயம் மற்ற யாவற்றிலும் கொடிய பேரிடியாகத் தோன்றி அவன் நல்லுணர்வைச் சிதற அடித்துவிட்டது. காட்டாற்று வெள்ளத்தில் அகப்பட்டவன் மலையுச்சியிலிருந்து பாதாளத்தில் வீழ்த்தப்படுவதும், மடுகளிலும் சுழல்களிலும் புறட்டப் படுவதும், கற்பாறைகளில் இளநீரைப்போல மோதப் படுவதும், முட்களிலும், புதற்களிலும் சொருகப்படுவதும், வெள்ளத்துடன் வரும் கறுவேல மரங்களின் கிளைகளுக்குள் அகப்பட்டு அதனுடன் மாறிமாறி உட்புறம் ஆழ்த்தப்படுவதும், வெளியில் எறியப்படுவதுமாய்த் தத்தளித்துச் சித்தரவதையாகச் சிறுகச் சிறுக உயிரையும், உணர்வையும் இழப்பதைப் போல வராகசாமிக்கு உண்டான அத்தனை மனோபாவ அதிர்ச்சிகளினால் அவன் நிலைமை பரிதாபத்தினும் பரிதாபகரமாக இருந்தது.
அவள் நாடகக்காரனோடு நட்புக்கொண்டு ஓடிவிட்டாள் என்பதை நிச்சயமென்று அவன் மனது ஏற்றுக்கொண்டு விட்டதாயினும், உண்மையும், அன்பும், நன்னடத்தையுமே ஒன்றாய்த் திரண்டு உருப்பெற்று வந்தது போல இருந்த அவள் அத்தகைய பெருத்த இழிவிற்கு இணங்கினாள் என்ற முரணான செய்தியே அவன் மனதில் இரண்டு மதங்கொண்ட யானைகள் ஒன்றோடொன்று மோதிப் போர் செய்ததை யொத்தது. அன்னிய மனிதன் மீது தன் ஆசை முழுதையும், காதல் முழுதையும் வைத்துள்ள ஒரு பெண் தன் கணவனுடன் கொஞ்சிக் குலாவிச் சிரித்து விளையாடிக் குழந்தையைப் போலக் கபடமேயின்றி இருத்தல் எப்படிக் கூடும்? உலகத்திலுள்ள எல்லா விந்தைகளிலும் இது மேலான அற்புதமாக அன்றோ இருந்தது! காதலும் கோபமும் கரைபுரண்டு எழுந்து, "நானே பெரியவன் நானே பெரியவன்" என்று ஒவ்வொன்றும் தன் தன் புகழைப் பாடி ஆதாரங்களைக் காட்டி தன் தன் கட்சியே உண்மையானது என்று வாதாடியது; வராகசாமியின் மனது ஒரு நியாய ஸ்தலத்தை யொத்திருந்தது. அதில் மேனகாவின் வக்கீலாகிய அன்பு அவளுடைய உண்மைக் காதலையும், மாசற்ற குணத்தையும் உறுதிப் படுத்தும் பொருட்டு மிக்க பாடுபட்டு அப்போதைக்கப்போது அவள் செய்த அரிய செய்கைகளையும், சொன்ன இனிய சொற்களையும் ஒவ்வொன்றாய் விரித்துப் பேசி, அவர்களுக்குள் நடந்த எண்ணிக்கையற்ற அந்தப்புர ரகசியங்களை யெல்லாம் அவன் மனதிற்குக் கொணர்ந்து, "அடே! வராகசாமி! இவள் தங்கமான பெண்ணடா! இவளைப் போன்ற உத்தமி உனக்குக் கிடைக்க மாட்டாளடா? உன்னையே உயிராய் மதித்தவளடா! இவள் உனக்கு இரண்டகம் செய்வாள் என்று எப்படியடா நினைப்பது?" என்று உருக்கமாகப் பேசி அவன் மனதைக் கலக்கி, அவனது கோபத்தைத் தணித்துவிட்டது. எதிர்கட்சி வக்கீலான கோபம் இரக்கமற்ற பயங்கரமான முகத்தோடு கனைத்தெழுந்து, “அடே வராகசாமி! நீ பெருத்த முட்டாளடா! அன்பெனும் இந்தப் பைத்தியக்கார வக்கீல் உளறியதைக் கேட்டு நீ ஏன் இப்படித் தடுமாறுகிறாய்? குற்றவாளி இதற்கு முன் யோக்கியமானவள் என்பதைப்பற்றி இவர் சொன்னாரேயன்றி இப்பொழுது எழுத்து மூலமாக உறுதிப்பட்டுள்ள குற்றத்தை அவள் செய்யவில்லை யென்பதற்கு என்ன ஆதாரம் கட்டினார்? இப்போது அகப்பட்டுள்ள கடிதங்களால் அவளுடைய முந்திய நடத்தைகள் பொய்யென்பது நிச்சயமாகிறது அன்றி முந்திய நடத்தைகளால் இக்கடிதங்கள் பொய்யாகப்படவில்லை. மனிதருடைய மனதும் குணமும் என்றைக்கும் மாறாத பொருட்களா? இன்றைக்கு நல்லவராய் இருப்பவர் நாளைக்குக் கெட்டவராய்ப் போகின்றனர். ஒருநாள் குற்றம் செய்கிறவன், பிறந்த முதலே குற்றஞ் செய்து கொண்டிருப்பவனாக அவசியம் இருக்க வேண்டும் என்பதில்லை அல்லவா? மோகம் பொல்லாதது. நாடகத்திலோ காணப்படுவதெல்லாம் வேஷமும் வெளி மயக்கமுமாம். படித்த மேதாவிகளும், உறுதியான மனதைக் கொண்டவர்களுமான எத்தனையோ புருஷர் நாடகம் பார்ப்பதனால் மதிமயக்கங்கொண்டு அதில் நடிக்கும் பரத்தையர் வலையிற்பட வில்லையா? சில வருஷங்களுக்கு முன் கும்பகோணத்திலிருந்த சப்ஜட்ஜி ஒருவர், நாடகத்தில் பெண்வேஷம் தரித்து நடித்து வந்த ஒரு ஆண்பிள்ளையின் மீது மோகங் கொண்டு ரூபாய் ஆயிரம் கொடுத்து அவனைப் பெண்வேஷத்தோடு தமது வீட்டிற்கு வரவழைத்து ஒருதரம் கட்டி ஆலிங்கனம் செய்தனுப்பினாராம்; அவருடைய பாக்கியம் எவருக்கேனும் கிட்டுமா?
கூத்தாடிகள் காமத்தை உண்டாக்கும் இனிய பாடல்களைப் பாடி ஸ்திரீ புருஷர் இரகசியமாக நடத்தும் காரியங்களை எல்லாம் நாடக மேடையின் மீதே நடித்துக் காட்டினால், எவர் மனதுதான் திரும்பாது? ஆணும் பெண்ணுமல்லாத அலி நபுஞ்சகன் முதலியோரும் அந்தக் கவர்ச்சியை விலக்கக்கூடுமோ என்பதும் சந்தேகம். அப்படியிருக்க, மேனகா கூத்தாடியின் மீது ஆசை கொண்டது ஒரு விந்தையா! அவன் மீது ஆசை கொள்ளாவிடில் அவள் உன்மீது ஆசை கொள்ள ஒரு சிறிதும் நியாயமில்லை. என்னிடம் இருப்பதையும் என்னைக் காதலிப்பதையுமே அவள் பேராநந்த சுகமாய் நினைத்தவளாயிற்றே, என்று நீ சொல்லுகிறாய். அடித்தும், திட்டியும், கடிந்தும், சுட்டும், வருத்தும் மனிதனாகிய உன்னிடத்தில் சிற்றின்பம் அனுபவிப்பதே அவளுக்கு அவ்வளவு இன்பமாய்த் தோன்றினால், "கண்ணே" என்றும் "முத்தே'' என்றும் காலடியில் மண்டியிட்டுக் கெஞ்சியும் கொஞ்சியும், பாடியும், பகட்டியும், துதித்தும் உருகியும், ஓய்ந்தும் தனது தயவை நாடக்கூடிய ஒரு மனிதன் - இராஜாவைப் போலப் பளபளப்பான ஆடைகள் அணிந்து அழகே வடிவாய்த் தோன்றும் - ஒரு மனிதன் அவள் மனதிற்கு உன்னைக் காட்டிலும் எத்தனை கோடி மடங்கு உயர்வானவனாய்த் தோன்றுவான்; உன்னிடம் பெறும் இன்பத்தைவிட அவனிடம் பெறும் இன்பம் சுவர்க்கபோகமாக அல்லவோ அவள் மனதிற்குத் தோன்றும். ஆகையால், மேனகாவின் வக்கீலி னுடைய வாதம் உபயோகமற்றது. செல்லத்தக்கதும் அல்ல. கடைசியாக எழுத்து மூலமாய் வெளியானதே உண்மை ; அதை எவரும் அசைக்கமுடியாது. ஆகையால் தீர்ப்பு என் பக்கம் சொல்லப்படவேண்டும்" என்று கூறியது. அவ்வாறே இந்த வக்கீலின் பக்கம் தீர்மானம் செய்யப்பட்டது; அது மேனகாவுக்குப் பிரதிகூலமாயிற்று. என்ன செய்வாள்! அதற்கு மேல் அப்பீல் செய்ய வழியில்லை; தீர்மானமும் நிறை வேற்றப்பட்டு வராகசாமியின் மனதிலிருந்த மேனகாவின் பொருளான காதல் முற்றிலும் ஜப்தி (பறிமுதல்) செய்யப்பட்டுப் போனது. அத்தகைய நிலைமையில் வராகசாமியின் மனதில் அடக்கவொண்ணாப் பெருங் கோபம் கொந்தளித்துக்கொண்டிருந்தது.
மலைகளைப் பெயர்த்துக் கடலில் வீட்டி, கடலை வாரி ஆகாயத்தில் எறிந்து, உலக மண்டலங்களை யெல்லாம் அம்மானைக் காய்களாக வீசி, அண்டத்தையும், பகிரண்டத்தையும், நிலத்தையும், நீரையும், மலையையும், மரங்களையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கதம்பம் செய்யத்தக்க சண்டமாருதம் ஒரு சிறிய வீசம் படி உழக்கிற்குள் தனது முழுவல்லமையையும் காட்டுதலைப் போல அவன் மனதில் பெருங் கோபம் மூண்டெழுந்து விவரித்தற்கு ஏலாத் துன்பம் செய்தது. தன் மனதை விட்டு ஒரு நொடியேனும் அகலாமல் பிடிவாதமாய் எதிரில் வந்து நின்ற மேனகாவின் கபடமற்ற கலியாண குணம் ஒளிர்ந்த இனிய சுந்தரவதனத்தைக் காணக்காண அவனுடைய ஆத்திரம் பெருகிக் கட்டிலடங்கா நிலையை அடைந்தது. அந்த வடிவத்தை நோக்கில் பல்லை நறநற வென்று கடித்து உருட்டி விழித்து ஒரே அடியில் அவளுடைய தேகமாகிய வஞ்சகப் பாண்டத்தை உடைத்துப் பொடியாக்கிக் காற்றில் ஊதிவிட நினைத்தான். தாயின் மடிமீதிருக்கும் குழந்தை, அவள் பார்க்கும் முகக்கண்ணாடியை நோக்கி அதற்குள் தன் தாயிருத்தலையறிந்து கண்ணாடியின் பின் புறத்தைத் தடவிப் பார்த்தலைப் போல அவனுடைய அகக்கண்ணில் தோன்றிய வடிவமே அவனுக்கு உண்மை மேனகாவைத் தோன்றியது.
"அடி வஞ்சகி! பரம சண்டாளி! துரோகி" என்ன காரியம் செய்தாய்; உன் புத்தி இப்படியா போனது! சே! என்முன் வராதே; போ அப்பால் பீடையே! முகத்தைப் பார். சிரிப்பென்ன? கொஞ்சலென்ன? யாரிடத்தில் இந்தப் பகட்டெல்லாம்? உன்னுடைய மோசத்தைக் கண்டுகொள்ளக் கூடாத என்னுடைய முட்டாள் தனத்தைத் கண்டு சிரிக்கிறாயோ? பல்லைக் காட்டாதே. பல்லைக் காட்டிக் காட்டி என் உயிரைக் கொள்ளை கொண்டது போதும். கூத்தாடியைக் கட்டிக் கொண்டு அழ நினைத்தால், தஞ்சாவூரிலேயே அவனுடன் தொலைந்து போகாமல் இங்கே வந்து உன் வஞ்சக வலையை வீசி என் மதியை மயக்கி என்னைப் பித்தனாக்கிவிட்டுத்தான் போக வேண்டுமோ? அது என்னுடைய மூடத்தனத்திற்காக உன்னால் கொடுக்கப்பட்ட சன்மானமோ? ராஜா வேஷக்காரனைப் பிடித்தோமே, அவனுக்கு சரியாக ஸ்திரீ வேஷம் போட நமக்குத் திறமை இருக்கிறதா' என்பதை என்னிடம் பரீட்சை பார்த்தாயோ? அடி கொலை பாதகி! என்ன ஜாலம்! என்ன சாகஸம்! உயிரைக் கொடு என்றால் கொடுத்துவிடுவேன் என்றல்லவோ என்னிடம் பாசாங்கு செய்தாய்! அப்பப்பா! நீ பெண்ணா அல்லது பேயா? உன் தேகம் தசையாலானதா? அல்லது விஷத்தாலானதா? இந்தத் தடவை தஞ்சாவூரிலிருந்து நீ வந்த பின்பே புது மாதிரியாகவல்லவோ நடந்துகொண்டாய். இதற்கு முன் நீ இப்படியா வந்தாய்? இப்படியா நடித்தாய்? இவ்வளவு சாகஸமா செய்தாய்? இதில் ஏதோ சூதிருக்கிறது என்பதை அறியாமல் ஏமாறிப் போனேனே; நீ செய்த இவ்வளவும் என் மூடத்தனத்திற்கு வேண்டியதே; தஞ்சாவூரிலிருந்து வந்த தினத்தன்று இரவில் ஆகா நீ செய்து கொண்டிருந்த அலங்காரமும், நீ காட்டிய தளுக்கும் எப்படி இருந்தன தெரியுமா?
"பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்ப் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீரடி யளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்"
என்றபடி யல்லவா இருந்தது. எல்லாம் என்னை மயக்கும் பொருட்டு ஆடிய நாடகம் என்பது இப்போதே நன்றாய்த் தெரிகிறது. கழுதைச் சாதியைச் சேர்ந்த உன்னை நான் பதுமினி ஜாதிப் பெண்ணென்று நினைத்தேனல்லவா ; அதன் பொருட்டு என் புத்தியில் ஆயிரம் தரம் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்; காலையா பிடித்து விடுகிறாய்? அப்படியே மார்பு வரையில் தடவிப் பார்க்கிறாயோ? கழுத்தைப் பிடிப்பதற்கு இன்னம் கொஞ்சந்தான் இருக்கிற தென்று காட்டினாயோ? - உனக்கு என் உடம்பு இளைத்துப் போய் விட்டதென்று எவ்வளவு வருத்தம்! முன்னிருந்த உடம்பில் அரைப்பாகங்கூட இல்லையாம்! அடடா! எவ்வளவு விசனம்!! எதற்காக விசனம்? கொழுத்த கடாவைப் போலிருக்கும் கூத்தாடிக்குக் கால் பிடித்து விடாமல் இவனுக்குப் பிடிக்கிறோமே என்ற விசனமல்லவா அது! தெரிந்தது. இப்போது தெரிந்தது. நீ உடம்பின் முழுதும் வஞ்சகத்தைக் கொண்ட பரம்பரையென் பதை அறியாமல் நான் சேலத்திற்குப் புறப்படு முன் உன்னை ஆலிங்கனம் செய்தேனே; அதை இப்போது நினைத்தாலும் என் மனதில் அருவருப்பு உண்டாகிறது. உன்னைத் தீண்டிய என் தேகத்தை அப்படியே நெருப்பில் போட்டுக் கரியாக்கினாலும் என் அசுத்தம் விலகாது. அணைத்துக்கொண்ட என்னை விடமாட்டேன் என்று சொல்லுகிறாய்! இன்னம் அரை நாழிகையில் உன்னை விட்டு என் ராஜதுரையின் ஆலிங்கனத்திற்குப் போய் விடுவேனே, அதையறியாமல் என்னை அணைத்துக் கொள்கிறாயே என்று சுட்டிக் காட்டினாயோ? அல்லது மனதில் அவனுடைய உருவத்தை வைத்துக்கொண்டு அவனை நினைத்துக் கட்டிக் கொண்டாயோ? என் படத்தை வைத்துப் பூஜைசெய்பவள் போல வெளிக்குக் காட்டி உண்மையில் கூத்தாடியின் படத்தை வைத்துப் பூஜை செய்தவளல்லவா நீ! நீ எதைத்தான் செய்யமாட்டாய்; மையைப் பூசிய திருட்டுக் கண்களால் என்னை மயக்குகிறாயோ? எதிரில் நில்லாதே! நின்றால் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவேன். இனி நான் ஒரு நாளும் இப்படி ஏமாறுவேன் என்று நினைக்காதே! இரும்பு முள்ளால் குரவளையில் குத்தி இழுக்க முயலும் தூண்டிற்காரன் மாதுரியமான மாமிசத்தைக் காட்டி மீனை வஞ்சிப்பதைப் போல ஒவ்வொன்றுக்கும் குழந்தையைப் போலக் கொஞ்சிக் கொஞ்சியல்லவோ ஏமாற்றினாய்! அம்மம்மா ! யாரை நம்பினாலும் நம்பலாம், புருஷனிடம் சாதாரணமாய் நடவாமல், அநாவசியமான பாசாங்கு செய்து கொஞ்சிப் பேசி ஒவ்வொரு காரியத்தையும் நிறைவேற்றிக்கொள்ளும் கொடு நீலியரை மாத்திரம் நம்பவே கூடாதப்பா! நீ எதையும் செய்யத் துணிவாய். நான் நீண்ட காலம் ஊரை விட்டு எங்கும் போகாமலிருந்தால் இந்தக் கூத்தாடியின் வெறியால் என்னைக் கொன்றுவிடவும் நீ துணிவாய். சே! என்ன உலகம்! என்ன வாழ்க்கை ! எல்லாம் மோசம்! எல்லாம் நாசம்! எங்கும் விபசாரம்! ஈசுவரன் முதற்கொண்டு புழுப் பூச்சிகளிலும் விபச்சாரம்! ஆயிரம் ஸ்திரீகளில் ஒருத்தி சுத்தமானவள் என்பதும் சந்தேகம். எவரும் கொஞ்சமும் சந்தேகப்படாத விதத்தில் எவ்வளவு அபாரமான காரியங்களைச் செய்திருக்கிறாய்! உன்னுடைய சாமர்த்தியம் அல்லவா சாமர்த்தியம்! தாசி வேசிகளெல்லாம் உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும் போலிருக்கிறதே! கூத்தாடிகள் எல்லாம் உன் சாகஸத்தைக் கற்க உன் காலடியில் தவம் புரிய வேண்டுமே! பெட்டியில் சாமான்களை நாடகக் காட்சி போல அல்லவோ கொலு வைத்திருந்தாய்! உன் பெட்டியே அதைக் கண்டு சகியாமல் உன் இரண்டகத்தை வெளிப்படுத்தி விட்டதே! அது எனக்கும் நல்லதாகவே முடிந்தது. இல்லையானால் உன்னுடைய திருட்டை அறியாதவனாய் நான் பரத்தையாகிய உன்னை இன்னமும் தேடும்படியான வீண் இழிவு உண்டாயிருக்கும் அல்லவா! இப்போது அது இல்லாமற் போனது. டிப்டி கலெக்டராம்! கையாலாகாத முண்டம். புருஷன் வீட்டிலிருந்து விலக்கப்பட்டு வந்த பெண்ணை எந்த முட்டாளாயினும் வீட்டைவிட்டு வெளியில் அனுப்புவானா? தன் வீட்டில் நடக்கும் இந்தப் பெருந்திருட்டை அடக்க அறியாத மூடன், ஊராரின் உரிமைகளைக் காப்பாற்றப் போகிறானோ! தலைமுறை தலைமுறையா யில்லாமல், இந்தத் துணிவும் நினைவும் உண்டாகுமோ? தாயின் குணமே பெண்ணிடம் இருக்கும் என்று சொல்வது பொய்யாகாது. இவள் ஒரு கூத்தாடியைப் பிடித்துக் கொண்டால், இவளுடைய தாய் ஒரு குரங்காட்டியை வைத்துக்கொண்டிருப்பாள். ஈசுவரா! கர்மம்! கர்மம்! நமக்கு வாய்த்த சம்பந்தம் இப்படியா இருக்க வேண்டும்? இந்தக் கூட்டிக் கொடுக்கும் பயலுக்கு கௌரதை என்ன வேண்டியிருக்கிறது? அதிசாரமென்ன வேண்டியிருக் கிறது? எல்லாச் செல்வத்திலும் மேலான மனைவியின் கற்புச் செல்வம் தனக்கில்லாத மனிதன் மனிதனா? அவன் உயிரை வைத்துக்கொண்டு நடைபிணமாய் உலகத்தில் ஏன் திரிய வேண்டும்! இந்தக் கும்பலே பட்டிக் கும்பல் போலிருக்கிறது! குலம் கோத்திரம் முதலியவற்றை விசாரிக்காமல் பணத்தையும் உத்தியோகத்தையும் மாத்திரம் கண்டு ஆத்திரப்பட்டுச் செய்த கலியாணம் அல்லவா! நமக்கு வேண்டும்; சே! இனி எனக்கு ஆயுட்காலம் முழுவதும் பெண்டாட்டியே வேண்டாம். போதும் நான் பெண்டாட்டியை அடைந்து திண்டாடித் தெருவில் நின்றது. பெண் என்பதே பேய் வடிவம்! நாணம் என்னும் ஒரு வஞ்சகப் போர்வையணிந்து கொண்டு ஆண்பிள்ளைகளை யெல்லாம் ஏமாற்றும் விபசார வடிவம். இதனாலே தான் பெட்டியை அவ்வளவு ஜாக்கிரதையாகப் பூட்டியும் திறவுகோலைக் கழுத்தைவிட்டு நீங்காமலும் வைத்திருந்தாயோ! ஆகா! நீ இங்கே இருந்த காலத்தில் இந்தக் கடிதங்கள் அகப்பட்டிருந்தால், உன்னை உயிரோடு பூமியில் புதைத்திருப்பேன். தப்பித்துக்கொண்டல்லவா போய் விட்டாய்!" என்று அன்று பகல் நெடுநேரம் வரையில் ஆத்திரத்தோடு பிதற்றிக் கொண்டும் வெற்று வெளியை நோக்கி நறநற வென்று பல்லைக் கடித்துக் கொண்டும் புரண்டு புரண்டு வெயிலிற் புழுத் துடிப்பதைப்போல வருந்தினான். அவன் எவ்வளவு அதட்டியும், வைதும், இகழ்ந்தும், வெறுத்தும் பேசினான். ஆயினும் மேனகாவின் வடிவம் இனிமையான புன்னகை தவழ்ந்த முகத்தோடு அவனது அகக் கண்ணை விட்டு அகலாமல் நின்று கொண்டிருந்தது. அந்த வடிவத்தை விலக்க அவன் செய்த முயற்சியால், அது முன்னிலும் அதிகமாக மனதில் ஊன்றி நின்றது. அவள் வஞ்சகி, விபசாரி யென்பதும், கூத்தாடி யோடு ஓடி விட்டாள் என்பதும் அவனுடைய பகுத்தறிவால் உண்மையென்று ஒப்புக்கொள்ளப்பட்டுப் போயிருந்தும், 'அவள் அப்படியும் செய்வாளோ" என்னும் ஒரு வியப்பு மாத்திரம் இன்னமும் அவன் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. குழலினும் யாழினும் மிக்க இனிமையாய் மழலை மிழற்றிக் கொஞ்சி விளையாடித் தளர்நடை நடந்து வீட்டிற்கோர் இளஞ்சூரியனைப் போல விளங்கி, மகிழ்ச்சியாகிய கிரணங்களைப் பரப்பித் தானும் இன்பமயமாய் இருந்து தன்னைக் காண்போர்க்கும் இன்பம் பயத்து மனோகர வடிவமாய் விளங்கி மேன்மேலும் வளர்ந்து வாழக்கூடியதாய்த் தோன்றிய நோயற்ற மூன்று வயதுக் குழந்தை, திடீரென்று ஜன்னி கொண்டு ஒரே இழுப்பில் உயிரை விடுமாயின், அதன் பெற்றோர் அது இறந்ததை நம்புவாரோ! அது பேச்சு மூச்சற்றுக் கண்ணிற்கு எதிரில் கிடக்கினும் அது துயில்வதாய் நினைப்பார் அன்றோ ! அது பேசும், அது எழுந்திருக்கும், அது உடம்பை அசைக்கும் என்று பேதமையால் எண்ணிக் கடைசி வரையில், அது இறந்தது என்பதை நம்பார் அன்றோ! அவ்வாறே வராகசாமியின் நிலைமையும் இருந்தது. யாவும் கனவாய்ப் போகக் கூடாதா , மேனகா சமையலறை யிலிருந்து வந்து விடக்கூடாதா என்று நினைத்தான்; சுவரில் மாட்டப் பட்டிருந்த படம் காற்றில் அசைந்தால் மேனகா தான் வந்து விட்டாளோ என்ற எண்ணம் அவன் மனதில் உதிக்கும். இவ்வாறு மேனகாவின் உயிரற்ற வடிவத்துடன் அவன் போராடி மாறி மாறி அவள் மீது ஆத்திரமும், பெரும் கோபமும், இரக்கமும் கொண்டவனாய்ச்சித்தக் கலக்கமடைந்து பிதற்றிக் கிடந்தான்.
பெருந்தேவி, கோமளம் ஆகிய இருவரும் துக்கமும் வெட்கமும் அடைந்தவர் போல நடித்து அன்று பகற் பொழுதிற்குள் மூன்றே முறை போஜனம் செய்து விட்டு, முதல் நாள் தயாரித்த சீடையில் தலைக்கு ஒரு மூட்டை மடியிற் கட்டிக்கொண்டு, துக்கத்தின் சுமையைத் தாங்கமாட்டாமலோ , தமது வயிற்றின் சுமையைத் தாங்க மாட்டாமலோ, அன்றி சீடை மூட்டையின் சுமையைத் தாங்க மாட்டாமலோ சோர் வடைந்தவராய் சாவகாசமாய் அந்த சீடைகளுக்கு வழி சொல்லவேண்டும் என்னும் கருத்தோடு இரண்டு மூலைகளில் உட்கார்ந்து விட்டனர். ஆகா! அவர்கள் அடைந்த விசனத்தை என்ன வென்று சொல்வது! அவர்கள் வாயில் போட்டுக் கொண்ட சீடைகளெல்லாம் கரைந்து உருகித் தாமாய், உள்ளே போய்க்கொண்டிருந்தன வென்றால், அவர்களுடைய துயரத்திற்கு வேறு குறியும் தேவையா? மேனகாவின் பொருட்டு சீடைகளும் மண்டையை உடைத்துக்கொண்டு விழுந்து நெகிழ்தலை உணர்ந்த அவர்களுடைய கண்கள் ஆநந்தக் கண்ணீர் விடுத்தன. மேனகா மோசம் செய்து விட்டு ஓடிப்போனதைக் குறித்து வராகசாமியின் செவிகளில் படும் வண்ணம் அவர்கள் அடிக்கடி வாயில் வந்த விதம் பிதற்றினர். பிரம்மாண்டமான ஒரு தேர் கீழே கவிழ்ந்து போகக் கூடியதாய் விரைந்து ஓடுதலைப் போல அவர்களுடைய கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்து நெடுந்தூரம் செல்லும் ; உடனே சீடைகளாகிய முட்டுக்கட்டைகளைக் கொடுத்து அந்தத் தேரை நிறுத்துவார்கள். விசனத்தைக் குறித்த சொற்களை வாரிவாரி வீசுவார்கள். சீடைகள் இடை இடையில் முற்றுப் புள்ளிகளாகவும், கேள்விக் குறிகளாகவும் , நிறுத்தல் குறிகளாகவும் இலக்கணப் பிழையின்றித் தோன்றி அழகுப் படுத்தும்.
அவமானத்தினாலும், வெட்கத்தினாலும், மடியிலிருந்த சீடை மூட்டைகளின் தேகம் அடிக்கடி குன்றிக் குறுகிப்போனது. என்ன செய்வார்கள்! பொறுமைப் பொறுத்தவர்கள்; அலுப்பைப் பாராமல் ஒவ்வொரு தடவையும் சீடை பாத்திரம் இருந்த இடத்திற்குப் போய் மடியை நிரப்பிக் கொண்டு வருவார்கள். சாப்பாட்டுக்கு வரும்படி நெடுநேரமாகப் பெருந்தேவி வராகசாமியை அழைத்தும், அவன் அதைக் கவனியாமல் இருந்து விட்டான்.
பெருந்தேவியம்மாள், "அந்தக் கொழுப் பெடுத்த லண்டி ஒரு தடிப்பயலைத் தேடிக்கொண்டு ஓடினால் அதற்காக நீ ஏனடா பட்டினியாய்க் கிடந்து சாகிறாய்? இப்பேர்ப்பட்ட பெண்டாட்டி போனதைப் பற்றி விசனப்படுவது கூடப் பாவமடா? எழுந்து வா!" என்று கடுமையாக அழுத்தி நூறாம் முறை கூறினாள்.
வராகசாமி அதைக் கேட்கப் பொறாமல், " எனக்குப் பசியில்லை, நீங்கள் சாப்பிடுங்கள். பசி உண்டாகும் போது வருகிறேன்" என்று அருவருப்பாக மறுமொழி கூறினான்.
பெருந்தேவியா அவனை உயிரோடு விடுகிறவள்? "காலை முதல் காப்பி கூட சாப்பிட வில்லை; மணி இரண்டாகிறது. இதென்ன பெருத்த வதையாயிருக்கிறதே! பசிக்க வில்லையாமே! இவ்வளவு நாழிகை பசியாமலிருக்க நீ எதைச் சாப்பிட்டாய்? சேலத்திலிருந்து பசியா வரம் வாங்கிக்கொண்டு வந்தாயா? கிடக்கிறது எழுந்துவா; கொஞ்சமாக சாப்பிட்டு விட்டுப் போய் படுத்துக் கொள்கிறது தானே? உன்னை யார் விசனப்பட வேண்டாம் என்று சொல்கிறார்கள்?” என்று அன்போடு அதட்டி மொழிந்தாள்.
வராக :- அக்காள்! என்னை வீணாக ஏன் உபத்திர விக்கிறாய்? எனக்கு இப்போது சாப்பாட்டில் மனம் நாட வில்லை. இராத்திரி வேண்டுமானால் பார்த்துக்கொள்வோம்.
கோமளம் :- இராத்திரி வரையில் உபவாசமிருந்தால் போனவள் வந்துவிடுவாளா? அல்லது இந்த ஒரு வேளைப் பட்டினியோடு இந்த அவமானம் நீங்கிப் போகுமா?
பெருந்தேவி :- இனிமேல் அவள் ஏன் வருகிறாள்? அவள் வந்தாலும் நாம் அவளைச் சேர்த்துக்கொண்டால் நம்முடைய வீட்டில் நாய் கூடத் தண்ணீர் குடிக்காதே (கையை மோவா யோடு சேர்த்து வியப்புக்குறி காட்டி) அடி என்ன சாகஸமடி! என்ன சாமர்த்தியமடி! அந்தத் தடியனை டிப்டி கலெக்டரைப் போல வரச்சொல்லி இந்தப் பட்டி முண்டை மகா தந்திரமாய்ப் போய்ச் சேர்ந்து விட்டாளே! எனக்கு இப்போது நன்றாய் ஞாபகம் உண்டாகிறது; இந்த ஒரு வாரமாக நான் கவனித்தேன். கொள்ளு கொள்ளென்று இருமிக்கொண்டு ஒரு கிழட்டு முண்டை நம்முடைய வாசல் திண்ணையில் அடிக்கடி உட்கார்ந்திருந்ததை நான் கண்டிருக்கிறேன். இந்த இருமல் இவளை வெளியில் வரும்படி அழைத்த ஜாடை போலிருக்கிறது.
கோமளம்:- ஆமாம்! எனக்குக் கூட இப்போது ஞாபகம் உண்டாகிறது. வராகசாமி சேலத்திற்குப் போன அன்றைக்கு மத்தியானம் எச்சிலை எடுத்துப் போய் வாசலில் எறியப்போன மேனகா அவளுடன் என்னவோ மெதுவாய்ப் பேசிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டவுடன் உள்ளே வந்துவிட்டாள். நான் போய், "நீ யாரடி?" என்று கேட்டேன். "நான் கூலி வேலை செய்கிறவள். களைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன். தாகத்துக்கு ஜலங் கேட்டேன்; இப்போது உள்ளே போன அம்மாள் ஜலங் கொடுத்தால் சேஷமாய்ப் போய் விடும்" என்று சொல்லி விட்டார்கள். ''உயிர் போகிறது; நீங்கள்தான் கொஞ்சம் ஜலம் கையில் வாருங்கள்" என்றாள். "நாங்கள் கொடுக்கக் கூடாது" என்று சொல்லி வந்து விட்டேன். அவள் தான் தூதுவளாயிருக்க வேண்டும்; பகல் வேளையிலேதான் அவள் வருகிற வழக்கம். அவள் நாளைக்கு வந்தால் பிடித்துப் போலீசில் அடைத்து உள்ளதைச் சொல்லும்படி நசுக்கினால் உடனே எல்லாம் வெளியாகிறது.
பெரு:- அடி பைத்தியக்காரி ! போ; அவளுக்கு இனி இங்கே என்ன வேலை இருக்கிறது? அவள் வந்த காரியம் முடிந்து போய் விட்டது. (வருத்தமாக) அடே வராகசாமி! உடம்பு கெட்டுப் போகுமடா; இதில் உனக்கு மட்டுந்தானா விசனம்? எங்களுக்கு விசனமில்லையா? எவ்வளவோ அருமையான மனிதர் ஐந்து நிமிஷத்தில் வாந்தி பேதியில் போகிறதில்லையா? அந்த மாதிரி நினைத்துக் கொள்; எழுந்து வா; இல்லாவிட்டால் நான் சாதத்தை வெள்ளிப் பாத்திரத்தில் பிசைந்து உள்ளே கொண்டு வரட்டுமா?
வராக :- (ஆத்திரத்தோடு) அக்காள்! ஏன் என்னை வீணாய்க் கொல்லுகிறாய்? எனக்கு இப்போது சாதம் வேண்டாம்; சாப்பிடாததனால் நான் செத்துப்போயிட மாட்டேன்.
பேசாமலிரு - என்றான்.
அவள் ஓயாமற் சொன்ன உபசார வார்த்தைகள் அவனுக்குப் பெருந்தொல்லையாய் இருந்தன. மேனகாவும் தானும் நிகரற்ற இன்பம் அனுபவித்திருந்த சயனத்தில் இருந்ததும் நரக வேதனையாய்த் தோன்றியது. அந்த இடத்தைவிட்டு எங்கேயாயினும் போனால் தன் மனத்தின் குழப்பமும் கொதிப்பும் வேதனையும் தணிவடையலாம் என்று நினைத்து எழுந்து கூடத்திற்கு வந்து, "நான் ஹோட்டலில் காப்பி சாப்பிட்டு விட்டு வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே வெளியிற் போய்விட்டான்.
பெரு:- (கோமளத்தை நோக்கி) இன்றைக்கு இப்படித்தான் இருக்கும்; எல்லாம் இன்னம் நாலைந்து நாளில் சரியாய்ப் போகிறது. பழைய பெண்டாட்டி போனால் புதுப் பெண்டாட்டி வரப் போகிறாள். விசனமென்ன? புதியவளால் பெரிய ஆஸ்தி கிடைக்கப் போகிறது. நாளைக்கே வீடு வாங்கப் போகிறோம். அந்த நன்மை யெல்லாம் இவனுக்கு இப்போது தெரியாது; பின்னால் சுகப்படும் போது மேனகா போனது நல்லது என்பது விளங்கும்.
கோமளம்:- அப்போது! நிஜத்தை நாம் இவனிடம் சொன்னாற் கூட, இவன் கோபித்துக் கொள்ள மாட்டான்.
பெரு :- சேச்சே! நிஜத்தை நாம் ஒருநாளும் இவனிடம் வெளியிடக் கூடாது. குடி கெட்டுப்போம்; இவன் இப்போது முன்மாதிரி இருக்க வில்லை. சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை யல்லவா! நாம் ஏதோ ஒரு பெருத்த நன்மையை உத்தேசித்து அவளை விற்றுவிட்டோம். இனிமேலும் இவனிடம் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டால் நம்மை ஓட்டி விடுவான்; சந்தேகத்திற்கு இடமில்லாமல் நாம் ஒழுங்காக நடந்து வரவேண்டும் - என்றாள்.
அப்போது அவளுடைய சீடைமூட்டையும் குறைந்து போயிற்று. அடிக்கடி அதை நிரப்புவதற்கு எழுந்து போவதும் தொல்லையாயிருந்தது. வராகசாமிக்கு அடிக்கடி வாய் உபசாரம் சொல்லும் துன்பமும் தீர்ந்தது. ஆகையால், சீடைப் பாத்திரத்தையே எடுத்து வந்து பக்கத்தில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
அப்போது சாமாவையர் கனைத்துக்கொண்டு ஆடி அசைந்து மதயானையைப் போல நடந்து உள்ளே வந்தார். மூவரும் புன் சிரிப்பால் தமது வெற்றியையும் மகிழ்ச்சியையும் காட்டிக் கொண்டனர்.
பெரு :- அடே சாமா! சீடை கொஞ்சம் எடுத்துக் கொள்ளடா! நன்றாயிருக்கிறது. வாயில் போடுமுன் கரைந்து போகிறது.
சாமாவையர்:- (சந்தோஷ நகை நகைத்து) உன் காரியத்திற்குச் சொல்ல வேண்டுமா அம்மா! எனக்குப் பத்து எட்டு கொடுப்பது போதாது ; ஒருபடி நிறைய கொடுக்க வேண்டும்.
பெரு:- தேவையானது இருக்கிறது. இரண்டு படி வேண்டுமானாலும் சாப்பிடு - என்றாள்.
அதற்குள் கோமளம் ஒரு வெள்ளிக் கிண்ணியில் சீடையை நிரப்பி அவரிடம் நீட்ட, அவர் அதை வைத்துக்கொண்டு ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்து அதை உள்ளே உருட்டி விடத் தொடங்கினார்.
சாமா:- வராகசாமி எங்கேயோ போகிறானே! எங்கே போகிறான்?
பெரு:- சாப்பிடவே மாட்டேனென்கிறான். காப்பி சாப்பிட ஹோட்டலுக்குப் போகிறான்.
சாமா:- எல்லாம் இரண்டு மூன்று நாளில் சரியாப் போகிறது. அவள் மருந்து போட்டாளென்று நீ ஆயிரம் உறுதி சொன்னாயே; இவன் நம்பினானா பார்த்தாயா! கடிதங்களைக் கண்டவுடனே நம்பி விட்டானே. என்னுடைய யோசனை எப்படி வேலை செய்தது பார்த்தாயா?
பெரு:- ஆமாம்; நல்ல யோசனைதான்.
சாமா:- (இறுமாப்பாக) இதனால்தான் எல்லாவற்றிற்கும் என் யோசனையைக் கேட்டுச் செய்யுங்கள் என்று சொல்வது. இன்னொரு முக்கியமான விஷயம். அநேக வீடுகள் பார்த்தேன். சிறிய பன்றி குடிசைகளுக் கெல்லாம் நாலாயிரம் ஐயாயிரம் கேட்கிறார்கள். ஒன்றும் சரிப்படவில்லை. மைலாப்பூரில் ஒரு பங்களா இருக்கிறது. கரையோரம், பலே சொகுசான இடம், இருந்தாலும் அந்த இடத்தில் இருக்க வேண்டும். ஓயாமல் கடல் காற்று. ஒரு பக்கம் புஷ்பத் தோட்டம், இன்னொரு பக்கத்தில் வாழை, பாக்கு, தென்னை, மா, மாதுளை, எலுமிச்சை, பலா, கமலா முதலிய மரங்களின் பழங்கள் குலுங்குகின்றன. அவற்றில் கிளிகள் கொஞ்சுகின்றன. ஒரு பக்கத்தில் தடாகம்; மரங்களிலெல்லாம் ஊஞ்சல் ; உட்கார எங்கு பார்த்தாலும் சலவைக்கல் மேடைகள்; எங்கும் மணல் தரை; பெருத்த பங்களா; அதன் மணல் கரையைக் காணும்போது வயதான கிழவர்களுக்குக்கூட அதில் ஓடி விளையாட வேண்டு மென்னும் ஆசை உண்டாகும். குருடன் கூட இருபதினாயிரம் கொடுத்து விடுவான். தோதாக வந்திருக்கிறது. நம்முடைய நைனா முகம்மது இருக்கிறா னல்லவா; அவன் சிற்றப்பனுடைய பங்களா இது. அவன் நாகைப்பட்டினத்தில் கப்பல் வியாபாரி; இது அவனுக்கு இலட்சியமே இல்லை. இதை வந்த விலைக்கு விற்று விடும்படி எழுதியிருக்கிறான். சுலபத்தில் தட்டிவிடலாம். இது கிடைத்துவிடுமானால் நல்ல அதிர்ஷ்டந்தான்.
கோமளம் :- முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரிதான்.
பெரு :- இருபதினாயிரம் ரூபாய்க்கு நாமெங்கடா போகிறது? விற்பதற்கு இன்னம் மூன்று மேனகாக்கள் வேண்டுமே?
சாமா:- அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அவனுக்கு இந்த ஊரின் விலையேற்றம் தெரியாது. இது பன்னிரெண் டாயிரத்துக்கு மேல் போகாதென்று நான் அவனுக்கு முன்னொரு கடிதம் எழுதினேன். வேறு யாருக்காயினும் வேண்டுமானாலும் அந்த விலைக்கு வாங்கிக் கொடுத்து விடலாம். நான் எனக்கே வேண்டுமென்று சொன்னால், அவன் எனக்கு இரண்டாயிரத் தைந்நூறு ரூபாய் குறைத்து விடுவான். என்ன செய்கிறது? நம்முடைய தரித்திரம் கையில் பணமில்லை. நைனாமுகம்மது கொடுத்த ஐயாயிரமும் என்னிடம் பவுன்களாக இருக்கிறது. இன்னும் நாலாயிரத் தைந்நூறு ரூபாய் வேண்டும். அதாவது இன்னம் 300 பவுன்கள் சேர்த்து எல்லாவற்றையும் பவுன்களாகக் கலகலவென்று கொட்டினால் மரக்காயன் மஞ்சள் காசுகளைக் கண்டு வாயைப் பிளப்பான். நாம் பங்களாவை உடனே அடித்துவிடலாம்.
பெரு :- அப்படியானால் பங்களா இருபதினாயிரம் பெறுமா? அவ்வளவு உயர்வானதா?
சாமா:- நீ அங்கு வந்து அதற்குள் நுழைவாயானால், அப்புறம் இந்த வீட்டிற்கே வரமாட்டாய்! ரிஷி ஆசிரமம் போல இருக்கிறது. பாக்கியலட்சுமி தாண்டவ மாடுகிறாள். நீ கொடுத்த பணத்திற்கு அதில் உண்டாகும் ஒட்டு மாம்பழம் மாத்திரம் இரண்டு வட்டிக்குக் கட்டிக்கொள்ளும். மற்றப் பழங்கள், தேங்காய் முதலியவை இருக்கின்றன. குடியிருக்கும் இடம் வேறு இருக்கிறது. நாம் போடும் முதல் பணமே நாலு வருஷத்தில் வந்துவிடும்.
கோமளம் :- கோடாலிக் கறுப் பூரான் பங்களாவைப் பார்ப்பானானால் தேன் குடித்த நரியைப்போல மயங்கிவிட மாட்டானா?
பெரு:- உன்பேரில்தான் வீட்டை வாங்கவேண்டுமா?
சாமா:- ரூபாய் பன்னிரண்டாயிரம் கொடுப்பதானால் உன் பேரில் வாங்கத் தடையில்லை. என் பேரில் வாங்கினால் இரண்டாயிரத்தைந்நூறு குறையும்.
பெரு:- அதுவும் நமக்கு இப்போது அநுகூலமான காரியந்தான். இப்போது திடீரென்று என் பேரில் இவ்வளவு பெரிய பங்களாவை வாங்கினால் வராகசாமி சந்தேகப் படுவான். நீயே வாங்கினதாக இருக்கட்டும். அதில் நீ எங்களை இனாமாக குடிவைப்பதாக இருக்கட்டும். வேறு கலியாணம் ஆகும் வரையில் அங்கு நாமிருக்க வேண்டும் என்றும், அது எங்களுடையது என்று சொல்லிக் கொள்ளும் படிக்கும் வராகசாமியிடம் தெரிவித்தால், அவன் சந்தேகப்பட மாட்டான். நடக்க நடக்க மேலே யோசனை செய்து கொள்வோம்.
கோமளம்:- (சிரித்துக் கொண்டு) தோட்டம் நிலைத்தல்லவா தென்னம் பிள்ளைவைக்க வேண்டும். முதலில் பணம் வேண்டுமே. இன்னும் முன்னூறு மஞ்சள் காசு வேண்டாமா? அதற்கு யார் வீட்டில் கன்னம் வைக்கிறது?
சாமா - வெள்ளையப்பன் இருந்தால் தான் எல்லாம். இல்லாவிட்டால் சருக்கரை சருக்கரையென்று சொல்லி வெறும் வாயைச் சப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
பெரு :- (சிறிது யோசனை செய்கிறாள்) சரி. அதையே முடித்துவிடு. மிகுதிப்பணம் நான் தருகிறேன். உனக்கு 300 பவுன்களாகவே தருகிறேன். இன்றைக்கே தந்தியடித்து மரக்காயனை வரவழைத்து நாளைக்குப் பத்திரத்தை முடித்து அதைக் கொண்டு வந்து என்னிடம் கொடு.
சாமா:- சரி , பணமிருந்தால் ஒரு நொடியில் முடித்து விடுகிறேன். அவன் கோடீசுவரன்; இங்கே வரமாட்டான். நான் நேரில் போய் அங்கேயே பத்திரத்தை முடித்துக்கொண்டு வரவேண்டும். நீ இப்போது பணத்தைக் கொடுத்தாலும், நான் இன்று ராத்திரி மெயிலில் போய் நாளைக்கே காரியத்தை முடித்துக்கொண்டு நாளை மறுதினம் பத்திரத்துடன் வந்து விடுகிறேன் - என்றார்.
அதைக் கவனியாதவள் போலத் தோன்றிய பெருந்தேவி எழுந்து உள்ளே போய்த் தனது இடையில் சேலைக்குள் மறைத்துக் கட்டித் தொங்கவிட்டிருந்த பவுன் மூட்டையை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள். "இதோ இருக்கிறது முன்னூறு பவுன் எடுத்துக்கொள். உடனே காரியத்தை முடி' என்றாள்.
சாமா:- (ஆச்சரிய மடைந்து) பெருந்தேவியின் சமர்த்து யாருக்கு வரும்? இத்தனை வருஷமாக நான் சினேகமா யிருக்கிறேன்; தான் பணக்காரி யென்பதைக் கொஞ்சமும் இவள் காட்டிக் கொள்ளவே இல்லையே!
கோமளம்:- (பெருத்த ஆச்சரியத்தோடு) நான் இராத்திரிப் பகல் இவளுடன் கூடவே இருக்கிறேன். இதை எனக்கே காட்டவில்லையே! அக்காள் மகா கெட்டிக் காரியடா சாமா!
சாமா:- அடி பெருந்தேவி! இதென்ன பீதாம்பரையர் ஜாலமா? இல்லாவிட்டால் நிஜமான சங்கதியா? கோமளம்! இவள் இவ்வளவு இரகசியமாக மறைத்து வைத்திருந்ததை வெளியில் கொண்டுவரும்படி நான் செய்தேன் பார்த்தாயா? இவளை விட நான் கெட்டிக்காரனில்லையா? - என்று சந்தோஷ நகை நகைத்தார்.
அவ்விரு பெண்டீரும் பெருமகிழ்ச்சி கொண்டு அவருடன்கூட நகைத்தனர்.
சாமா:- பங்களா விற்குப் போனவுடன் கலியாணத்தையும் முடித்துவிடவேண்டும். பெண்ணின் அம்மான் முன்பு வந்தாரே, அவர் இன்னும் ஒரு வாரத்தில் வருகிறார். வந்தவுடன் காரியத்தை முடித்துவிடுவோம். அதற்குள் வராகசாமியைச் சமாதானப்படுத்தி அவன் மனதைத் திருப்ப வேண்டும்.
பெரு:- போதுமப்பா! முன்பு மேனகாவை அழைத்து வருகிறதற்காக அவன் மனதில் ஆசையை உண்டாக்கினோம், அது இப்போது ஆபத்தாய் முடிந்தது. தலைவலி போகத் திருகுவலி வந்தது. அவனுக்கு இப்போது அவளுடைய பைத்தியமே பெருத்த பைத்தியமாய்ப் பிடித்துக்கொண்டது. இப்போது அதை மாற்றுவது கடினமாய் இருக்குமென்று தோன்றுகிறது.
சாமா:- நாம் புதுப்பங்களாவிற்குப் போனால் கூடிய சீக்கிரம் அவனைச் சரிப்படுத்தி விடலாம். நான் இன்று ராத்திரியே போய்க் காரியத்தை முடித்து விடுகிறேன். வராகசாமியை நாம் இப்போது வெளியில் அதிகமாக விடக்கூடாது. நான் போய்த் தேடி அவனை அழைத்து வருகிறேன் - என்று சொல்லிவிட்டு பவுனை எடுத்துப் பையிற் போட்டுக் கொண்டு வெள்ளிப்பாத்திரத்தில் இருந்த சீடைகளை வயிற்றில் போட்டு நிறைத்துக்கொண்டு ஒய்யார நடைநடந்து தாம் அத்தனை வருஷங்கள் பாடுபட்டதற்குக் கூலி அந்த மூன்று நாட்களிலேதான் கிடைத்ததென்று நினைத்துப் பேருவகை கொண்டு தம்மை மறந்து தமது வீடு சென்றார்.
திடீரென்று தமக்குப் பெருத்த தொகைகள் கிடைக்கத் தாம் பணக்காரராய் விட்டதை தமது மனைவி மீனாட்சியிடம் சொல்லவும், பவுனையே கண்டறியாத அவளுக்கு அத்தனை பவுன்களையும் காட்டவும் பெரிதும் ஆவல் கொண்டார். அவருடைய கட்டுக்கடங்கா ஆத்திரத்தில் அவளிடம் விஷயத்தைச் சொல்லவும் அவளைத் தனிமையில் வா என்று கூப்பிடவும் மனம் பொறுக்க வில்லை; தாழ்வாரத்தில் நின்ற பெண்டாட்டியை குழந்தையைத் தூக்குவதைப் போல சுலபமாய்த் தூக்கிக்கொண்டு அறைக்குள் போய்விட்டார்.
--------------
அதிகாரம் 13 - வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?
திருவல்லிக்கேணி பெரிய தெருவிலிருந்த ஒரு வீட்டு வாயிலின் சிறிய திண்ணையில் சோம்பர் மகா சபையின் தினப்படிக் கூட்டம் ஒன்று அன்னக்காவடியா பிள்ளை என்னும்
ஒரு பெரிய பிரபுவின் அக்கிராசனத்தின் கீழ் நடைபெற்றது. காரியதரிசியாகிய திகம்பரமையர் தமது வலக்கரத்தில் இந்துப் பத்திரிகை யொன்றை வைத்துக்கொண்டிருந்தார். பொக்கிஷ தாரரான சவுண்டியப்ப முதலியார் தம்முடைய கையிலிருந்த சொறி சிரங்குகளைக் கணக்குப் பார்த்துத் தணிக்கை செய்து கொண்டிருந்தார். அங்கத்தினரான சாப்பாட்டு ராமையங்கார் மண் தோண்டியைக் கவிழ்த்தவாறு உருண்டு திரண்டு உடம்பை விட்டு நெடுந்தூரத்தில் தனிமையில் உட்கார்ந்திருந்த செல்லக் குழந்தையாகிய தமது தொந்தியைத் தடவிக் கொடுத்தவண்ணம் நாட்டின் வளப்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். சாப்பாட்டு வேளைகள் நிற்க, மற்ற வேளைகளெல்லாம் அவர்கள் நால்வரும் அந்தத் திண்ணையிலேயே காணப்படுவார்கள். ஜெர்மானியரின் சண்டை , இராஜாங்க விஷயங்கள் முதலியவற்றையும், ஊர் வம்புகளையும் பேசி, ஆழ்ந்த யோசனைகளைச் செய்து, "அப்படிச் செய்தால் நன்றாயிருக்கும்", "இப்படிச் செய்தால் நன்றாயிருக்கும்" என்று மேலதிகாரிகளின் காரியங்களில் குற்றங் குறைகளைக் கண்டு பிடித்துக் கொண்டும், சிரித்துக்கொண்டும், தருக்கம் செய்து கொண்டும், கூக்குரல் செய்து கொண்டிருப்பார். அந்தச் சங்கத்தினரின் காரியம் அம்மட்டோடு நிற்கவில்லை. அவர்கள் அந்தத் தெருவை ஒரு நாடக மேடையாகவும், அதன் வழியாகச் செல்லும் ஆண் பெண் பாலார் யாவரையும் நாடகத்தில் பிரசன்னமாகும் நடிகர், நடிகைகளாகவும், தம்மை, அந்த நாடகத்தைப் பார்க்க வந்துள்ள சபையோராகவும் மதித்து, காலை முதல் மாலை வரையில் சோர்வின்றி அந்த இன்பகரமான வேலையில் உழைத்து வந்தனர். அப்போதைக்கப்போது வெளியாகும் நாவல்கள் முதலிய நூல்களின் குண தோஷங்களைப்பற்றி பத்திரிகைகள் மதிப்புரை எழுதுதலைப் போல இந்தச் சபையார் தெருவிற் சென்ற ஒவ்வொருவருடைய வடிவம், அழகு நடை உயரம், பருமன், ஒழுக்கம், கற்பு முதலிய யாவற்றையும், நன்றாக ஆராய்ச்சி செய்து தீர்மானங்கள் சொல்லிக்கொண்டு வந்தனர். முக்கியமாக பெண் பாலார் விஷயத்திலேயே அவர்கள் தமது புத்தியையும், நாட்டத்தையும் கூர்மையாகச் செலுத்தினர்.
ஒரு நாள் பிற்பகலில், இயற்கையிலேயே பெரிதும் நாணங்கொண்ட ஒரு யௌவன மடந்தை தனது கட்டை விரலைப் பார்த்த வண்ணம் அந்த வீட்டுவாயிலின் வழியாக சென்றவள், திண்ணையிலிருந்த சோம்பர் மகா சபையாரைக் கடைக்கண்ணால் தற்செயலாகப் பார்த்துவிட்டாள். அவர்கள் நால்வரின் கருணாகடாட்சமும் தன் மீது விழ்ந்திருந்ததை அவள் உணர்ந்து விட்டாள். அவளுடைய வெட்கம் மலை போலப் பெருகியது. புத்தி குழம்பிவிட்டது. தலை சுழன்றது, தெருவும், வீடுகளும், "விர்"ரென்று ஆகாயத்தில் கிளம்பியதாகத் தோன்றின. அந்தக் குழப்பத்தில் அவளுடைய சேலை ஒருபுறம் நெகிழ்ந்து நெடுந்தூரம் பிரயாணம் சென்றது. தலை இன்னொரு பக்கமாகத் திரும்பித் தனது ஸ்தானத்தை விட்டுப் போனது. கால்கள் பின்னற் கோலாட்டம் போட்டன. கைகளும், விரல்களும் வையாளி பாய்ந்தன. ஏழெட்டு வீடுகளுக்கு அப்பாலிருந்த தன் கூடு ஒரு காத வழியைப் போலத் தோன்றியது. அதை எப்படிச் போய்ச் சேரப்போகிறோமென்று கவலை கொண்டு வேகமாய் நடந்தாள். தலையின் ஆட்டம் அதிகரித்தது. அந்த அவசரக் கோலத்தைக் கண்ட அக்கிராசனர் அன்னக்காவடியா பிள்ளை திகம்பரமையரை பார்த்து பரிகாசமாகக் கண் சிமிட்டி, "அடே அடே பாருடா ஜோக்கே, உடம்பு எப்படி நெளியுதையா! கால் பூமியிலேயே நிக்கல்லியே! அடே சௌண்டியப்பா! ஒன் கூத்தியா இவ்வளவு ஜோக்கா நடப்பாளா பாருடா!" என்று அநந்த பரவசம் அடைந்தவராய்க் கூறினார். அதைக் கேட்ட திகம்பரமையர், "அடே யப்பா காக்கா , "கர்"ரென்ற புருஷனை அப்பாடான்னு கட்டிக் கிண்டாளாம்” என்று சாப்பாட்டு ராமையங்காரைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டி, நாவால் நொட்டையிட்டார். அன்னக்காவடியா பிள்ளை , "அடே திகம்பரம்! நீ எப்போதும் ஒன் குறும்பை மாத்திரம் விடமாட்டாயே? சாப்பாட்டு ராமன் தெய்வமென்று குந்தியிருக்கிறான். அவனுக்கும் அவளுக்கும் என்னடா முடிச்சுப் போடறே? ஏண்டா சாப்பாட்டு ராமா! ஆசாமி ஆருடா இது? திருட்டுப் பயலே! நெசத்தைச் சொல்லி விடு” என்றார்.
அதைக் கேட்ட ஐயங்கார், "அடே! அடே! திகம்பரம்! ஒங்கவீட்டுப் பக்கத்திலேயே சரக்கை வைச்சிக்கிண்டு, எந்த ஊர்ச் சரக்கென்று என்னெக் கேட்கிறியேடா? அடே என்னையா ஆழம் பாக்கிரே? அடே அன்னக்காவடி! இவன் பெரிய மூட்டக் காரண்டா !" என்றார்.
திகம்பரமையர் புன்சிரிப்புடன், ''அடே! சத்தியமா எனக்குத் தெரியாதப்பா! எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டிலே இவ இருக்கா. அதுதான் தெரியும்; பலே ஆசாமியாம்; பார்வையிலேயும் அப்படித்தான் இருக்கிறது" என்றார்.
அப்போது அங்கு வந்ததான துர்ப்பாக்கியத்தைப்பெற்ற அந்த அம்மாள் தன் காலின் வெள்ளி மெட்டி கழன்று பாதையில் விழுந்ததையும் எடுக்காமல் செத்தேன் பிழைத்தேனென்று வீடு போய்ச் சேர்ந்தாள். மகா சபையோருக்கு முன்னால் அப்போது வேறு ஸ்திரீ தெருவில் நடந்தாள். அன்னக் காவடியாபிள்ளை, "அதுபோனாப்போவுது களுதே; இதைப் பாருடா என்ன குலுக்கு? என்ன தளுக்கு? இந்தத் திருவல்லிக்கேணிப் பசங்களுக்குத்தான் இந்தத் தேவிடியா நாட்டிய மெல்லாம் ஆருடா கத்துக் குடுக்கறாங்க?
என்ன கண்ணாடி! என்ன வாய்வெட்டு! அந்தப் புருவ வில்லு எம். ஆர். சி. ரயில் கைகாட்டி மரம் போல கைகாட்டி அழெக்கிதுடா" என்றார்.
அப்போது சவுண்டியப்ப முதலியார் சிரங்குகளைக் கணக்கிட்ட பிறகு இரண்டு
கைகளையும் கொண்டு கணைக்கால் இரத்த வெள்ளமாகும்படி விடாமல் சொறிந்து தச்சன் இழைப்புளி போட்டுமரத்தை இழைப்பது போலச் சொறிந்த சுகத்தினால் தானே திறந்து கொண்ட வாயிலிருந்து மேலே வடிந்த இன்பரசத்தைத் துடைக்கவும் மனமற்றுத் தமது வேலையைப் பார்த்தார்.
திகம்பரமையர், “இவள் சரியா ஆறடி உயிரம் இருக் கிறாளே; இவள் புருஷன் இரண்டே முக்கால் அடி உயரந்தானே இருக்கிறான். இவளுடைய காதில் ஏதாவது ரகசியம் சொல்ல வேண்டுமானா ஏணி வச்சு ஏறி இவளுடைய தோள்மேலே அவன் உட்கார்ந்துகொள்வானோ?" என்று கூறிக் கலகலவென்று தாமே சிரித்துக்கொண்டார்.
அன்னக்காவடியா பிள்ளை:- “இல்லேடா; இவள் கீழே படுத்துக்குவா; அவன் நின்னுகிட்டே பேசுவான். வீட்டு மச்சுமேலே ஏதாச்சும் சாமான் எடுக்கிறதுக்கு வேறே ஏணி தேவையில்லடா! இவளெக் கட்டிக்கிட்டவனுக்கு அது ஒரு லாபண்டா! ஏணி வாங்க வேண்டியதில்லை"- என்றார்.
அந்த ஸ்திரீக்கு உண்மையிலேயே நீண்ட கால்களிருந்தது அப்போது அநுகூலமாய் முடிந்தது. அவைகளின் உதவியால் அவள் சீக்கிரம் அப்பால் போய்விட்டமையால், அவர்களது மதிப்புரை மேலும் நீளவில்லை.
அதன் பிறகு தெருவில் வந்தவன் ஒரு ஆண்பிள்ளை. சபையோரின் மதிப்புரையைப் பெறும் பாக்கியம் அவனுக்கு வந்தது.
அன்னக்காவடியா பிள்ளை - அடே! தொந்திப்பையா! இதோ போறானே, இந்தப்பைத்தியத்துக்கும் ஒனக்கும் சொந்தமாடா? - என்றார். அவர் இல்லையென்றார்; உடனே திகம்பரமையர், “ஏண்டா! இந்த பைத்தியம் எப்படிடா வக்கீல் வேலை செய்கிறான்? அதுதான் தெரியல்லே! எலிவாலைப் போல குடிமியும், தோலுரிச்ச கோழி மாதிரி உடம்பும் கோமாளி அழகு வழிகிறதப்பா!" என்றார்.
சாப்பாட்டு ராமையங்கார்:- இவன் பெண்டாட்டியை நீங்க பாத்ததில்லையே! கிளிகிளிதான். நபுன் சகன் கையிலே ரம்பை அகப்பட்ட மாதிரி வந்து வாய்ச்சிருக்க அசட்டுக்கு ஐங்கலம் காமம் என்பதைப்போல, குருட்டு நாய்க்கு முழுத் தேங்காய் அகப்பட்ட மாதிரி அகப்பட்டுக்கிண்டா! அவ தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் பொண்ணாம். தங்க விக்கிரக மின்னாலும் தகும்" என்று இரசம் ஒழுகும் படி கூறினார். உடனே திகம்பரமையர், "ஆமா! தாலி கட்டினத்தினாலேயே அவ இவனுக்குப் பெண்டாட்டியாய் விடுவாளா! அவபலே கைகாரியாச்சே அது தஞ்சாவூர் மராட்டியர் வீட்டிலே யெல்லாம் மேஞ்ச மாடாச்சே அவளுக்கு இவன் மஞ்சள் அரைச்சுக் கொடுக்கத் தான் ஓதவு வான். இவனே மதிச்சுக் கூட அவ பேசறலில்லையே" என்றார்.
அன்னக்காவடியா பிள்ளை :- அடே ஆமாடா; எனக்குத் தெரியாத சங்கதி மாதிரி சொல்லுறீங்களே. தஞ்சாவூருலே ஒரு மராட்டியனை வச்சிருக்கினு ஒரு வருசமா இவன் கிட்ட வரமாட்டேன்னாளாமே! அவதானேடா? அந்த மரக்காயன் ஊட்டுலே கணக்கெளுதற் பாப்பாரப் பையன் சாமா இருக்கிறானே; அவந்தானேடா இந்த வராகசாமி அக்காளையும் தங்கச்சியையும் குத்தகைக்கு எடுத்திருக் கிறான்.- என்றார்.
உடனே திகம்பரமையர், "மொகத்தைப் பாருடா! மூணாம் பேஸ்து மாதிரி. ஆறு மாசம் பட்டினி இருந்தவன் போல இருக்காண்டா ! வக்கீல் வேலையிலே சோத்துக்கே தாளம் போலே இருக்குது. மேலே துணி இல்லை. இடுப்புத் துணி சொக்கா ரெண்டோடே வெளியிலே வந்துட்டான் பாருடா” என்றார்.
இந்த அன்னக்காவடி சபையினர் தங்களது வழக்கப்படிப்பேசிக்கொண்டே இருக்கட்டும். தனிமையிற் செல்லும் நமது வராகசாமியைப் பின்பற்றி நாமும் செல்வோம். தங்களுடைய அக்காளின் உபத்திரவங்களைச் சகிக்க மாட்டாதவனாய் வீட்டைவிட்டு வெளிப்பட்ட வராகசாமி பரதேசியோ அல்லது பைத்தியக்காரனோ வென்று காண்போர் நினைக்கும் வண்ணம் மெய்ம்மறந்து சோர்வடைந்து எத்தகைய காரிய காரணங்களும் இன்றி தெருத்தெருவாய் அலைந்து திரிந்தான். ஹோட்டலில் காப்பி அருந்தப் போவதாய்க் கூறி வந்தவன் ஹோட்டலையும் மறந்தான்; காப்பியையும் மறந்தான். மனமோகன மாயாண்டிப்பிள்ளையின் கடிதங்களில் இருந்த சொற்களே இன்னமும் அவனுடைய செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து உணர்ந்த விஷயங்களை, தன்னுடைய மனத்திலிருந்து விலக்குவதற்கு அவன் எவ்வளவு முயன்றும் அம் முயற்சி பலிதமாகவில்லை. சோம்பர் மகாசபையின் கௌரவ அங்கத்தினர்களான நால்வர் மனதுக்களும் எவ்வாறு சுறுசுறுப்பாக வேலை செய்தனவோ அவைகளிலும் அதிக ஊக்கத்தோடு வராகசாமியின் மனது வேலை செய்தது. புற்றிலிருந்து ஈசல்கள் கிளம்புதலைப்போல அவன் மனதில் எழுபத்திரண்டு வெள்ளம் நினைவுகள் இராமபிரானுடைய வானர சைனியங்களைப் போலத்தோன்றி ஆர்ப்பரித்தன. "சே! என்ன கடிதம்! அசங்கயித்திலும் அசங்கியம்; ஆபாசத்திலும் ஆபாசம்! அதை ஏன் என் காதாற் கேட்டேன்? நினைக்கும் போதே என் தேகம் குன்றிப் போகிறதே! மனம் கூசுகிறதே! கேவலம் இழிவிலும் இழிவு! கூத்தாடிப் பயலுடைய கடிதம் என்பது சரியாய்ப் போய்விட்டது. அவன் குணம் எங்கே போகும்? லட்சம் ஜனங்களுக்கெதிரில், மானங்கெட்ட காரியங்களைச் செய்கிற உணர்ச்சியில்லா மிருகப்பயல் கடிதத்தில் எதைத்தான் எழுதமாட்டான்? மானம் வெட்கம் கண்ணியம் முதலியவற்றை உடைய மனிதன் இந்தக் கடிதத்தைக் கையாலும் தொடமாட்டான். பார்த்த கண்ணையும் தண்ணீர் விட்டு அலம்புவான். என்ன என் துர்ப்பாக்கியம் ஈசுவரா! இந்த துஷ்ட முண்டை ஒழிந்துபோன துன்பத்தோடு என்னை விட்டு விடக்கூடாதா? அவள் யாருக்கு என்ன விதத்தில் உபயோகிக்கப்படுகிறாள் என்பதைக் கூட நான் விவரமாக அறிய வேண்டுமா? அடாடா! என்ன என் தலைவிதி! இந்த மாதிரியான என்னென்றைக்கும் அழியாத அவமானம் அடைவதற்கு இந்த உலகத்தில் நான்தானா தகுந்தவனென்று பொறுக்கி யெடுத்தாய் தெய்வமே? என்ன ஜென்மம் எடுத்தேன்! இதைக் காட்டிலும் மனிதனுக்கு உண்டாகக் கூடிய துன்பம் வேறுண்டா? தெரியாத் தனத்தினால் புலவர்கள் தரித்திரக் கொடுமையே எல்லாவற்றிலும் கொடிதென்றனர். எல்லா விஷயங்களையும் நன்றாய்ச் சொன்ன பொய்யா மொழிப் புலவரான திருவள்ளுவர் கூட இந்த விஷயத்தில் தவறிப் போய்விட்டார். அவர், "இனிமையி னின்னாத துயாதெனி னின்மையி னின்மையே யின்னாதது'' என்றார். பூலோகத்தில் தரித்திரக் கொடுமையே எல்லாத் துன்பங்களிலும் பெரிதென்றார். அவருடைய மனைவி நல்ல பதிவிரதையா யிருந்து விட்டமையால், தரித்திரக் கொடுமை யொன்றே அவருக்குப் பெரிதாய்ப் போய்விட்டது. அவர் சொற்படி நடக்க வேண்டுமென்று, நீர் விட்ட பழைய சாதத்தை விசிறிக் கொண்டு விசிறினாளல்லவா? பாதிக் கிணறு வரையில் இழுத்த பாத்திரத்தை, அவர் தன்னைக் கூப்பிட்டமையால், அப்படியே விட்டுவந்தாளல்லவா; அவருக்கு அந்த இறு மாப்பு, அவள் சாதாரணமாக இறந்த போதே,
"அடிசிற் கினியாளே! அன்புடையாளே!
படிசொற் றவறாத பாவாய்! அடிவருடிப்
பின்றூங்கி முன்னெழும் பேதையே! போதியோ?
என்றூங்கு மென்க ணிரா?''
என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுத வராயிற்றே! மனைவி அசாதாரணமாகப் புருஷனை விடுத்துப் பிரிதலைப் போன்ற துன்பம் வேறில்லை யென்பது அவருக்குத் தோன்றவில்லையோ? அவர் மகான். அவருக்குத் தோன்றவில்லையென்பது தகாது. அவர் காலத்தில் மேனகாக்களும், மாயாண்டிப்பிள்ளைகளும் இல்லாமையே காரணமாகலாம். அவருக்கு எத்தனையோ நூற்றாண்டு களுக்குப் பின் வந்த கம்பராவது இதைப் பற்றிச் சொன்னாரா? இல்லை; கம்பர் காலத்திலும் இல்லாமைத் துன்பமே பெருந்துன்பம்.
அப்போது பணமில்லாமையால் கடன் வாங்குதல் வழக்கில் வந்து விட்டது போலிருக்கிறது! மனிதருக்கு உண்டாகும் அதிகரித்த துன்பத்தைக் கம்பர் எப்படி வருணித்தார், ''கடன்கொண்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்றார். புலவருக்கு எப்போதும் தரித்திரக் கொடுமையே பெருங் கொடுமை போலும்! இராவணன், சீதையின் மனதிற்கு விரோதமாக, அவளை வற்புறுத்தித் தூக்கிச் சென்றதற்கே , இராமனைக் கம்பர் அழ வைத்தாரே! என்னுடைய விஷயத்திலே இந்த இராக்ஷசியே சம்மதித்து அல்லவோ காரியம் நடத்தி இருக்கிறாள். இராமாயணம் இதைப் போல இருந்தால், கம்பர் பாட்டுப்பாடுவதற்கு முன் தாமே விழுந்து புரண்டு அழுதிருப்பார்! அவர்கள் பேரில் குறை சொல்வதேன்? அவர்களுடைய பெண்டுகள் ஒழுங்காயிருந்து விட்டனர்; இப்படி அயலானோடு ஓடவில்லை, ஆகையால், அவர்களுக்கு இந்தத் துன்பமே யாவற்றிலும் பெரிதென்பது தோன்றவில்லை. எவருக்கும் கிடைக்காத இந்தப் பாக்கியம் எனக்கா கிடைக்க வேண்டும்? நான் முன் ஜென்மங்களில் இதற்காகவா தவம் செய்தேன்? என்ன ஜென்மம் எடுத்தேன்! நான் பி.எல்., பரிட்சையில் தேறிவிட்டேன் என்று பொறாமைப் பட்ட பயல்களா! வாருங்களடா வெளியில் ; ஏக புத்திரியான டிப்டி கலெக்டருடைய அழகான பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டேன் என்று பெரு மூச்சு விட்டீர்களே? இப்போது பெருமையைக் கண்டு பொறாமைப்பட ஏன் ஒருவரும் வரவில்லை ? இந்தப் பெருமையைச் சிறிதும் நான் எடுத்துக்கொள்ளாமல் அப்படியே கொடுத்து விடுகிறேன்;
யாராயினும் வாங்கிக்கொள்வீர்களா? புல்லென்றால் வாயைத் திறப்பது, கடிவாள மென்றால் வாயை மூடிக் கொள்வது; ஆம்; அதுதான் உலகநீதி. என் ஜென்மம் இப்படியாகேவலம் புழுவிலும் தாழ்ந்ததாய், யாவராலும் காறி உமிழ்ந்து நீசமென்று புறக்கணிக்கத் தக்கதாய்ப் போக வேண்டும்! இந்தப் பகல் வெளிச்சத்தில் என் வீட்டை விட்டு வெளியில் வந்தேன்! மனிதரின் முகத்தைப் பார்ப்பதற்கே வெட்கமாயிருக்கிறதே! எல்லோரும் என்னைப் பார்த்துப் புரளி செய்து என்னவோ பேசிக்கொள்கிறார்களே! வீட்டில் ஒரு மூலையில் விழுந்து கிடக்காமல் ஏன் வெளியில் வந்தேன்! ஆந்தை, கோட்டான், சாகுகுருவி முதலியவை இரவில் தானே வெளியில் வருகின்றன. அவைகளுடைய ஜோடிகளும் வேறு அழகான பறவைகளைப் பிடித்துக் கொண்டு போய்விட்ட தனால் வெட்கிப் பகலில் வெளிப்படுகிறதில்லை போலிருக் கிறது" என்று பலவாறு நினைத்துப் பெரிதும் வருந்தித் துயரே வடிவாய் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து சென்றான். தன்னுடைய கேவல நிலைமையைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அவனை அறியாமலே கண்ணீர் வழிந்தது. இடையிலிருந்த வஸ்திரத்தின் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டான். "சே! அவமானம் பிடுங்கித் தின்கிறதே! ஐயோ அழுகை வருகிறதே! துஷ்டக் கண்களே! ஏன் இப்படிக் கண்ணீரைச் சிந்து கிறீர்கள்? பாழுங் கண்களே! என் கட்டில் நில்லாமல் அழுகிறீர்களா? உங்களுக்கு வெட்கமில்லையா? கேவலம் சண்டாளியாக மாறிப்போன ஒரு துஷ்டையின் பொருட்டு நீங்கள் அழலாமா? இனி அழுவீர்களானால் உங்களை என் கையால் திருகி எறிந்துவிடுவேன். போதும் நில்லுங்கள். ஓகோ! அவளுக்காக அழவில்லை, எனக்கு வந்த இந்த இழிவுக்காக அழுகிறீர்களோ? நீங்கள் உயிருடன் இருந்தால் அந்த மகாபாவியை இனி எப்போதாயினும் காணநேருமோ என்று அஞ்சி வெயிலில் கரையும் பனிக்கட்டியைப் போல முற்றிலும் நீராய்க் கரைந்து ஓடிப்போய்விட நினைக்கிறீர்களோ? கண்களே! செய்யுங்கள்; செய்யுங்கள்; அழுங்கள் அதுதான் சரி" என்று பித்தனைப் போலப் பிதற்றிக் கொண்டு நுழைந்த தெருக்களிலேயே திரும்பத் திரும்பச் சென்றவனாக நடந்தான். அவனுக்கு ஆகாரமின்மையால் கண்கள் இருண்டன. களைப்பு மூட்டியது, ஆத்திரம் ஒன்றே தணியாமல் அவனை அங்கும் இங்கும் கட்டி இழுத்தது. சூரியனைப்பார்த்த கண்ணுக்கு உலகமெங்கும் கோடானு கோடி சூரியர்களே தோன்றுதலைப்போல , அவனுக்கு உலகத்திய பெண்பாலர் யாவருமே விபச்சாரிகளாய்த் தோன்றினர். அந்த வகுப்பாரே தனக்குப் பெரும் பகைவரென மதித்தான். எதிரில் அவனது கண்ணில் பட்ட ஒவ்வொரு மாதரின் வதனத்திலும் ஒவ்வொரு கள்ள நாயகன் ஒளிந்துகொண்டிருந்ததை வராகசாமி மாத்திரமே கண்டான். நல்ல யௌவனப் பெண்டீர் தமது வீட்டின் வாயிலில் நின்றால், மனிதர் பிளேக் வியாதி கண்ட வீட்டிற்கு நெடுந் தூரத்திற்கு அப்பாற் செல்வதைப் போல, எதிர் வீட்டின் பக்கமாகவும், அவர்களைப் பாராமலும் நடந்தான். அப்போது தெருவிலேயே அவனுக்கு எதிரில் எவராயினும் பெண்டீர் வந்துவிட்டால், அவன் வந்த வழியாகவே திரும்பிச் சென்று வேறொரு தெருவிற்குப் போனான். அங்கு சென்றால் அவ்விடத்தில் வேறொரு மாது ஹார்மோனியம் வாசித்து குயிலைப் போலப் பாடிக் கொண்டிருக்கக் கண்டான். "சே! பீடைகளா! எங்கே போனாலும் கழுத்தை அறுக்கிறீர்களா? சங்கீதம் என்ன வேண்டியிருக்கிறது! மானங்கெட்ட ஜென்மமே! நாடகத்திற்குத் தயாராகிறாயோ! மேனகாவுக்கு மாயாண்டிப் பிள்ளை அகப்பட்டான். உனக்கொரு பேயாண்டிப்பிள்ளை அகப்படுவான்; சித்தமாக இரு; நடக்கட்டும்; நான் இந்த ஹார்மோனிய ஓசையைக் கேட்டதே பாவம்" என்று நினைத்து, செவிகளில் கையை வைத்து மூடிக்கொண்டு அடுத்த இன்னொரு பெருத்த தெருவில் நுழைந்து அரைப்பாகம் சென்றான். அவ்விடத்தில் பெண்களின் ஹைஸ்கூல் இருக்கிறது என்பதை மறந்து அவ்விடத்திற்குப் போய் விட்டான். அவன் நெடுந்தூரத்தில் வந்தபோதே, பள்ளிக்கூடம் விடுவதற்கு மணியடிக்கப்பட்டது; அவன் அந்த வாயிலுக்கு வந்தபோது ஏராளமான மடந்தையர் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுதலைப்போல தபதபவென்று வெளிப்பட்டு விட்டனர். யா வரும் பத்து முதல் பதினெட்டு வயதடைந்த பெண்பாவையராகவே இருந்தனர். அவர்கள் அற்புத அலங்காரத்துடன் வெளியில் தோன்றி,
''மானினம் வருவபோன்றும், மயிலினம் திரிவபோன்றும்,
மீனினம் மிளிர்வபோன்றும், மின்னினம் மிடைவபோன்றும்,
தேனினம் சிலம்பியார்ப்பச், சிலம்பினம் புலம்பவெங்கும்,
பூநனை கூந்தன்மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார் "
என்றபடி தெருமுற்றிலும் நிறைந்தனர். திடீரெனத் தோன்றிய அந்தச் சகிக்கலாற்றாத காட்சியைக் கண்ட வராகசாமி மிக்க விரைவாகத் திரும்பி, வந்த வழியே ஓட முயன்றான். அங்கு அடுத்தடுத்திருந்த இரண்டு வீட்டு வாயில்களும் பள்ளிக்கூடத்து வாயில்களாதலால் பின்புறத்திலும் யௌவனப் பெண்டீரால் சூழப்பட்ட வராகசாமியின் மனோ நிலைமையை ஊகித்துக் கொள்வதே தகுதியின்றி அதை விவரிப்பது பலியா முயற்சியாம்.
அந்தத் தெருவே அப்போது மகா அழகுடையதாய் விளங்கியது. கண்கொள்ளா அலங்காரங்களுடன் பிரகாசித்த மங்கையர் யாவரும் புன்னகையும், சிரிப்பும், மிழற்றலும், மழலையுகுத்தலும், குழலையும் யாழையும் பழித்த குரலில் தேன் ததும்ப மொழிதலும் செய்து கொண்டு தாமரைத் தடாகத்திற் செறிந்த அம்புஜ மலர்கள் போலவும், ரோஜா வனத்தின் பூங்கொம்புகளில் அடர்ந்து நின்றசையும் ரோஜா மலர்களைப்போலவும் தோன்ற, முன் ஜென்மத்தில் மகத்தான புண்ணியம் செய்துள்ள அந்தத் தெருவானது உயிர்ப் பதுமைகளால் கொலுவைக்கப் பெற்ற ஒரு பெருத்த தர்பார் மண்டபத்தைப் போல விளங்கியது. ஆனால், வராகசாமியின் தேகம் ஒரு சாணளவாய்க் குன்றியது. நீந்த அறியாதவன் நீர்வெள்ளத்தில் தத்தளிப்பதைப் போலானான். அவனது மனதின் ஆத்திரம் மலையாய்ப் பெருகியது; அவனடைந்த அருவருப்பை என்னவென்று சொல்வது? நாற்றம் நெடுந்தூரம் வீசும் மாமிசங்களும், மீன்களும் வைத்து விற்கப்படும் கடைக்குள் தவறுதலாய் நுழைந்த வைதீகர்களைப்போலவும், அந்நியப் புருஷரது கூட்டத்தின் நடுவில் அகப்பட்டுக் கொண்ட பதிவிரதா ஸ்திரீயைப் போலவும், புலிக்குழாத்தில் அகப்பட்ட மான் கன்றைப்போலவும்; அவன் தடுமாறித் தவித்தான், கண்களை இறுக மூடிக்கொண்டான். ஒன்றையும் செய்யமாட்டாதவனாய் அப்படியே நின்று விட்டான். “தெய்வமே இது என்ன சோதனை? அடுத்த தெருவில் வந்த ஒருத்திக்கு பயந்து இங்கு வந்தேன். இங்கே நூறு பேர்கள் வளைத்துக்கொண்டார்களே! நாடகக்காரனோடு ஓடிப்போன விபச்சாரிக்கா இத்தனை பேரும் பரிந்து என்னைத் துரத்துகிறார்களா! என்ன கேடுகாலம்! (பல்லை நறநறவென்று கடித்து) பீடைகளா! நான் எங்கு போனாலும் துரத்துகிறீர்களா? எனக்கென்ன பயித்தியமென்று நினைத்துக்கொண்டீர்களா?
“முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற் கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளை யோலையை விளக்கியிட்டு
பட்டப் பகலில் வெளிமயக்கே செய்யும் பாவையர்மே
லிட்டத்தை நீதவிர்ப்பா யிறைவ கச்சியேகம்பனே.''
என்று பட்டினத்துப்பிள்ளை ஒரே பாட்டில் உங்களுடைய சாயத்தை இறக்கியிருந்தும் உங்களுடைய ஜாதிக் குறும்பு போகவில்லையா? நீங்கள் நாடகத்தின் வேஷங்களா அல்லது நாட்டியக் குதிரைகளா? இல்லற தருமத்தை நடத்தும் புருஷனுக்கு நீங்கள் அனுசரணையாயிருந்து நல்வழியிற் பயன்படும் பொருட்டு தேகம் எடுத்துள்ள பதிவிரதைகளா? அல்லது இம்மாதிரி வேஷம் போட்டு தெருத்தெருவாய் அலைந்து குலுக்கி மினுக்கிக் காணும் புருஷர் மனதிலெல்லாம் காமத்தீயையும் கபடநினைவையும் உண்டாக்கித் திரிவதே பெருத்த புருஷார்த்தமாகச் செய்வதற்கு ஜென்ம எடுத்தீர்களா? உங்கள் மேல் குற்றமில்லை. உங்களை வெளியில் அனுப்பும் முட்டாள் பயல்கள் அல்லவோ வழி சொல்ல வேண்டும். சங்கீதமாம், பள்ளிக்கூடமாம், ஸ்திரீ சுதந்திரமாம், இதுவரையில் சிறையிலிருந்து வரும் பெண்டீரை மீட்கப் போகிறார்களாம். எல்லாம் வாலறுந்த நரியின் கதைதான். இவர்கள் புஸ்தக மூட்டைகளை மார்பில் அணைத்துப் போவது தாம் பெற்ற குழந்தைகளை அணைத்துப் போவதைப் போல அல்லவோ இருக்கிறது. உங்கள் மார்பும் கைகளும் குழந்தைகளை அணைப்பதற்கே தகுந்தவை என்பது இதனால் நன்றாக விளங்குகிறது. புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப்போல அயல் நாட்டாரைப் பார்த்து நமது பெண்களும் பக்குவகாலம் அடைந்த பிறகு பள்ளிக் கூடங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் போவதாம். அன்னிய புருஷருக்கிடையில் அருவருப்பின்றி பழகுவதாம், புருஷருக்கிடையில் எழுந்து பிரசங்கம் செய்வதாம், நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் பெண்களின் ஆபரணங்களைக் காற்றில் தூற்றிவிட்டு, அயல் நாடு மாதரைப்போல துடுக்கு, துணிவு , தான் என்னும் ஆணவம், அடங்காமை, பணியாமை, முதலிய துஷ்ட குணங்களைப் பெறுவதாம். பாலிய புருஷர்கள் அவளுடைய அழகில் ஈடுபட்டுக் கைகொட்டி ஆர்ப்பரிப் பதாம்; அந்நிய நாட்டு மாதரைப்போல இவ்விடத்திலும் ஸ்திரீகளைத் தம் விருப்பின் படி செய்ய விட்டு விட வேண்டுமாம். இதுவரையில் இருந்திருந்த நமது ஸ்திரீகள் செய்யாத பெரிய காரியங்களை புது நாகரீகப் பெண்கள் - சாதித்து விடப் போகிறார்களாம். நினைத்த விதம் விபச்சாரம் செய்யலாம் என்னும் எண்ணத்தைக் கொண்ட காமாதுரப் பயல்களின் கொள்கையல்லவோ இது. இப்படிச் சொல்லு கிறவன் தன் பெண்டாட்டி பெண்களை மாத்திரம் அன்னிய புருஷரோடு பழக விடுவதில்லை , தான் மாத்திரம் உலகத்தில் வேறு எந்த ஸ்திரீயோடும் பழகவேண்டுமாம். எத்தனையோ யுகயுகமாய் அனுபவத்தில் ஆராய்ந்து பார்த்து நம் முன்னோர் கண்டு பிடித்த உண்மைகளை இந்தக் காமாதுர மேதாவிகள் மாற்றப் போகிறார்களோ? பெண் வடிவமோ இயற்கையிலேயே மனிதரை மயக்கும் நோக்கம் உடையது. மகளிர் தாயாகவிருந்து புருஷரை வளர்த்து தாரமாக வந்து உயிர் குடிக்கும் இருவித நடத்தை உள்ளவர்கள். புருஷருக்குப் பெண்டிரே இயற்கைப் பகைவர். உலகப்பற்றை நீக்கிப் பிறவிக்கடலைக் கடந்து மனிதர் மோக்ஷத்திற்குச் செல்ல முடியாமல் பிள்ளைகளென்றும், பெண்ணென்றும், அவற்றின் பொருட்டு வீடென்றும், பொருளென்றும் பல ஆசைகளையும், பற்றுக்களையும் உண்டாக்கி, அவன் தலையெடுக்கா விதம் செய்யும் மோகினி அவதாரம் ; தண்ணீர்க்குள் ஆழ்த்தப்படும் கட்டை வெளியில் வரா வண்ணம் கீழேயே இழுத்துக் கொண்டிருக்கும் பொருட்டு பிணைக்கப்படும் கற்கண்டுகளைப் போல, மனிதன் இறப்பு பிறப்பாகிய கடலிலிருந்து மேலே போகாமல் அதற்குள்ளேயே கிடக்கும்படி பிடித்திழுத்துக் கொண்டிருக்கும் விலங்குகள் அல்லவா பெண்டீர். பட்டினத் தார் நன்றாய்ச் சொன்னார்:
"காதென்றும் மூக்கென்றும் கண்ணென்றும் காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லிவரு மாயைதனை மறலி விட்ட
தூதென் றெண்ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பே னிறைவா கச்சி யேகம்பனே!"
என்றார்.
வீட்டிற்குள் இருந்தவண்ணமே எவ்வளவு அநர்த்தங் களைச் செய்யுங் குணமுடைய இவர்களைக் கண்டாலே மனிதன் உருக்குலைந்து போகிறானே! ஊமத்தங்காய்கள் தின்பவனுக்கே பைத்தியத்தை உண்டாக்குகின்றன; ஸ்திரீகளைக் கண்ணால் பார்த்தாலே மனிதன் உன்மத்தனாய் விடுகிறான். காமத்தினால் தனது ஒழுக்கத்தைவிட்டு கொலை களவு முதலியவற்றைப் புரியத் துணிகிறான்; இப்படிப்பட்ட ஊமத்தங்காய்களுக்கு மேல் நாட்டாரைப்போல தேவடியாள் அலங்காரமும் செய்து, சங்கீதம் கல்வி முதலியவற்றையும் கற்பித்து, பக்குவமான பிறகு, அவள் நினைத்த புருஷனோடு அலையும்படி விட்டு விட்டால் உலகம் அழகாயிருக்கும் அல்லவா? வாலறு பட்ட ஒரு நரியின் பேச்சைக் கேட்டு எல்லா நரிகளும் வாலை அறுத்துக் கொண்டதைப் போலாகும். கேடுகாலம் நெருங்கிவிட்டது. இருபது முப்பது வருஷங் களுக்கு முன்னிருந்த கிழவர்கள் யாவரும் நூறு வயது, தொண்ணூறு வயதிற்குக் குறையாமல் திட சரீரங்களோடு இருந்தவர்கள். அதன் காரணம் என்ன? ஸ்திரீகளின் விஷயத்தில் நம்மவர் அனுஷ்டித்த கட்டுப்பாடே காரணம்; முன்னவரில் புருஷர் முப்பது, முப்பத்தைந்து வயதிற்கே மணந்தனர், சிங்கக்குட்டிகளைப் போன்ற குழந்தைகளை ஈன்றனர். இப்போது புருஷர் பதினைந்து வயதிற்கே மனதில் பெண்ணாசை கொண்டு உருகி உருக்குலைந்து போகின்றனர். காரணம் என்ன? அன்னிய நாட்டாரின் பழக்கமே இதற்கு முக்கிய காரணமாகிறது, அவர்களுடைய ஸ்திரீகளும் புருஷரும் கலியாணமாகா மடந்தையரும், அவர்களை மணக்க நினைக்கும் காதலரும் ஜோடி ஜோடியாகச் சேர்ந்து தனிமையில் அலைந்து, பிறமனிதர் இருப்பதைப் பற்றி சிறிதும் லஜ்ஜைப் படாமல் கட்டி முத்தமிட்டு அணைத்துச் சரச சல்லாபம் செய்தலை நம் சிறுவர் காணில், அவர் சும்மா இருப்பாரோ? குழந்தைகள், சிறுவர் முதலியோர் எப்போதும் பிறர் செய்வதைப்போலச் செய்ய விரும்புதலே சுபாவமாக உடையவர்; இந்தப் பொல்லா உதாரணம் தொற்று வியாதியைப் போலப் பரவி வருதலே முதற் காரணமாகிறது. பிற பாஷைகளில் உள்ளவையும்,நம் பாஷைகளில் மொழி பெயர்த்துள்ளவையுமான காதலர் காதலியரின் கதைகளை நம் சிறுவர் வரம்பின்றிப் படித்தல் இன்னொரு முகாந்திரமாகிறது; நாடக மேடைகளில் கூத்தாடிகள் கேட்பாரின்றி செய்து காட்டும் அசங்கியங்களை நம் சிறுவர் பார்ப்பது மூன்றாவது காரணமாகும். அவற்றால் பிஞ்சுப்பருவத்திலேயே பெண் மோகம் கொண்டு சிறுவர் பழுத்துப் போகின்றனர். தவிர, ஏராளமான சிறுவர் படிப்பின் பொருட்டும், உத்தியோகத்தின் பொருட்டும், பெற்றோர், பெரியோர் துணையின்றித் தன்னரசாக விடப்பட்டு அவ்விடங்களில் இத்தகைய துர்நடத்தைகளைக் கண்டு கெடுதலே பெரும்பாலதாய்ப் பெருகிவிட்டது. இதனால் நம் தேசத்திய மனிதர் இறுகுமுன் கட்டுத் தளர்வடைவோராயும் பலஹீனராயும், அற்ப ஆயுளைக் கொண்டவராயுமாய் விடுகின்றனர். இத்தகைய நிலைமையில் நம்முடைய பெண்டீரை யெல்லாம் அன்னிய நாட்டாரைப் போல விட்டு விட்டால் அந்த அநர்த்தத்தை என்னவென்று சொல்வது? இந்த விஷயத்தில் மகம்மதியரே யாவரினும் மேலான புத்திசாலிகள். அவர்கள் எவ்வளவு பலசாலிகளா யிருக்கின்றனர்! அவர்களில் பத்து வயதுப் பையனுக்குள்ள வீரமும், பலமும் நமது முப்பது வயது ஆண்பிள்ளைக்கு இல்லையே! இதற்கு அவர்களுடைய கோஷா முறையே காரணமாகிறது. அவரவர் தத்தம் பெண்டீரையன்றி அயல் வீட்டுப்பெண்டீரைப் பார்ப்பதற்கும் சந்தர்ப்பம் இல்லை ஆகையால் அவர்களுடைய தேகபலமும் தேகக்கட்டும் தளர்வடைவதும் இல்லை; உருக்குலைவதும் இல்லை. அவர்களுடைய முன்னோரே பெண்டீரது அமைப்பின் கருத்தை உள்ளபடி அறிந்து அதற்குத் தகுந்த மருந்தைக் கண்டு பிடித்த மேதாவிகள்; அவர்களில் பெண்டீர் படிக்க வில்லையா? புத்திசாலிகளாக இருக்க வில்லையா? வீட்டின் காரியங்களை நடத்தவில்லை? வீட்டிற்குள் இருந்து படிப்பதை யாரேனும் தடுக்கிறார்களோ! சே! உலகம் இப்படியும் கெடுமா? எத்தனையோ யுகங்களாக அரங்கத்தைக் காட்டிலும் அந்தரங்கத் விடுதியே சிறந்ததாகவும் பொருள் புகழ் முதலிய செல்வத்தைக் காட்டினும் கற்புச் செல்வத்தையே சிறந்த அழகாகவும் நிதியாகவும் மதித்து உயர்வடைந்துள்ள நட்சத்திரங்களாகிய நமது நாட்டின் பெண்டீர் தமது உன்னத பதவியை இழந்து கீழே செல்ல நினைப்பாரோ? நமது ஆண்பாலர் நாகரீகம் சுதந்திரமென்னும் போர்வையை நம் பெண்டீரின் மீது போர்த்தி அவரை விபச்சாரமாகிய சேற்றிலும் உளையிலும் இழுத்துவிட்டு ஆண் பெண்பாலராகிய இருதிறத்தாருக்கும் துரிதமான அழிவைத் தேடுவாரோ! சீர்த் திருத்தங்கள் செய்ய முயலும் மேதாவிகளே! முதலில் நமது பெண்டீரின் தேக பரிசுத்தத்தையும், நடத்தையையும், அழகையும் பாதுகாத்து, அவர்களை வெளியில் விடாமல் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; நீங்கள் கெட்டுப்போய் விட்டீர்களென்று நினைத்து உலகத்தையும் கெடுக்க முயலாதீர்கள்!" என்று வராகசாமி பெருத்த ஜனாசாரச்சீர்திருத்த விஷயத்தைப் பற்றி தன் மனதிற்குள் நீண்ட தொரு உபந்நியாசம் செய்து கொண்டு நாலைந்து நிமிஷ நேரங் கழித்து கண்ணைத் திறந்து பார்த்தான். பள்ளிக்கூடச் சிறுமியர் யாவரும், அவன் சொல்வது நல்ல நீதி யென்று கருதி அதற்கிணங்கி வீடு சென்றவரைப் போல மாயமாய் மறைந்து தத்தம் வீட்டிற்குள் நுழைந்துவிட்டனர். வராகசாமி நல்ல மூச்சாக விடுத்துக்கொண்டு அந்தத் தெருவை விட்டு விரைந்து சென்று இன்னொரு தெருவை அடைந்தான்.
அங்கு சிறிது தூரம் செல்லுமுன் அவ்விடத்தில் பாண்டு (Band) வாத்தியத்துடன் ஒரு அலங்காரம் தோன்றியது. நல்ல வேளையாக அது பெண்ணலங்காரமல்ல. பலநிறங்களைக் கொண்ட காகிதங்களாற் செய்யப்பட்ட தோரணங்கள் மாலைகள் முதலியவற்றைப் பெற்ற ஒரு குதிரை வண்டி வந்தது. அதற்குள் பாண்டு வாத்தியம் வாசிக்கப்பட்டது. அதிலிருந்த ஒருவன் ஏதோ ஒரு துண்டு விளம்பரக் காகிதங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தான். வண்டி சென்ற வண்ணம் இருந்தது. அதன் பின் புறத்தில், விளம்பரத்திற்காக இருபது முப்பது சிறுவர் சிறுமியர் மோதியடித்துக் கொண்டு வண்டியுடன் ஓடினர். இருபக்கங்களிலும் வீட்டின் திண்ணைகளில் இருந்த பெண்டீர் சிறுவர்களை அனுப்பி விளம்பரக்காகிதங்கள் வாங்கி வரும்படி செய்ததை வராகசாமி கவனித்தான். வண்டிக் கூண்டின் இரு புறங்களிலும் இரண்டு பெருத்த மூங்கில் தட்டிகள் இருந்தன. அவற்றில் காகிதம் ஒட்டப்பட்டு, நாடகத்திரைகளைப் போல சித்திரங்கள் எழுதப்பட்டிருந்தன. அவை எவ்விதமான சித்திரம் என்பதை வராகசாமி கவனித்தான். அதில் ஒரு புருஷன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். ஒரு அழகிய பெண் அவனுக்கு அருகில் நின்று அவன் சிரத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தாள். அவ்விரு சித்திரப் பதுமைகளுக்கும் மேற் புறத்தில், தாரா சாங்கம், என்ற சொற்கள் பெருத்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன.
"டங்டிங் மத்தாப்பு சுந்தரி முழு நிருவாணத்தோடு எண்ணெய் தேய்ப்பது யாவரும் கண்டு ஆநந்திக்கக் கூடிய அற்புதக் காட்சி! இந்த அதிர்ஷ்ட சமயத்தை இழக்காதீர். போனால் வராது.''
என்று எழுதப்பட்டிருந்த விளம்பரத்தைப் படித்தவுடன் வராகசாமிக்கு ரௌத்திரா-காரமாய்க் கோபம் பொங்கி யெழுந்தது. பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டான். வண்டியில் இருந்த பயல்களை வண்டியோடு தூக்கி, விளம்பரத்தை ஆவலோடு வாங்கிப் படித்த மூடப் பெண்டீரின் மண்டை மீது ஒரு அடியாக அடித்து இருதிறத் தாரையும் கொன்றுவிடவல்லமையும், அதிகாரமும் தனக்கு இல்லையே என்று ஏங்கித் துடித்தான். அவனது மனத்திலும் வாயிலும் கோடானு கோடி வசவுகள் ஒரு நிமிஷத்தில் எழுந்தன. மூக்கின் மீது விரலை வைத்துக் கொண்டு கல்லாய் நின்றான். "பெருத்த கூட்டத்திற்கு முன்னர் ஆடையில்லாமல் ஒரு ஸ்திரீ வருவது ஆநந்தமாம்! அற்புதமாம்! அதிர்ஷ்டமாம்!! போனால் வராதாம்!!! இதைக் காட்டிலும் அதிகமான போக்கிரித்தனம் வேறுண்டோ ? கேவலம் இழிந்த மிருகங்களின் நிலைமையை அடைவது அவ்வளவு அருமையான மோட்ச பதவி போலிருக்கிறதே! ஆடையில்லாமல் வந்து நடிக்கும் ஸ்திரீயை விட அங்கு கூடும் பிரபுக்களே மானங் கெட்டவர்கள்; யாவற்றையும் துறந்த பேமானிகள் துணிகளின் விலை ஒன்றுக்கு நான்காக உயர்ந்திருக்கும் இந்தப் பஞ்ச காலத்தில் ஏழை ஜனங்கள் தமது உடம்பை மூடுவது பெரிதாக நினைப்பதை விடுத்தும், அதன் பொருட்டு தேகத்தை வருத்திப் பாடுபடாமலிருந்து வஸ்திரங்களை நீக்கிவிட்டு எளிதில் இந்த ஆநந்த நிலைமையை அடைந்து விடலாமே! முட்டாள் ஜனங்களே! நீங்கள் இந்தக் கூத்தாடி நாய்களிடத்தில் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்" என்று சரமாரியாகத் தூற்றிக்கொண்டே மேலும் நடந்தான். ஊருக்குள்ளிருந்து இத்தகைய இழிவான காட்சிகளைக் காண்பது அவனுக்கு மிகவும் துன்பகரமாக இருந்தது. மிக்க விரைவாய் நடந்து கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்து ஜனங்கள் இல்லாத ஓர் இடத்தில் கிடந்த கட்டு மரங்களின் இடுக்கில் படுத்துக்கொண்டான். கடற்கரையின் மாலைக் காட்சி நிரம்பவும் மனோக்கியமாக இருந்தது. நற்குண நல்லொழுக்கம் உடையோர், தமது இனிய சொற்களாலும், செயல்களாலும், தம்மிடத்தில் நெருங்கு வோரின் மனதைக் கவர்தலைப்போல, கடலின் குளிர் காற்று நல்லவர் என்றும் தீயவர் என்றும் பட்சபாதம் காட்டாமல் ஜிலுஜிலென்று வீசி, யாவரையும் மகிழ்வித்து இன்பமயமாக்கி எத்தகைய தீராத மனோ வேதனை கொண்டோரும் ஒரு சிறிதேனும் தமது துன்பத்தை மறக்கும்படி செய்தது. இராமபிரான் சீதா தேவியாரை இழந்த பின்னர், அவரைக் காண்பேனா வென்று பெரிதும் ஏங்கி, வானர சைனியங்களை நான்கு திக்குகளிலும் விடுத்துத் தேடச் செய்து மனமுடைந்து நம்பிக்கை யற்றிருந்த காலத்தில், "கண்டேன் ஜானகியாரை" என்று ஆஞ்சநேயர் திடீரென்று தோன்றிக் கூறியதைப் போல, “இவ்வளவு தானா இந்த உலகத்தின் இன்பம்! வாழ்க்கை ருசியற்றதாகப் போய்விட்டதே! எத்தனையோ அண்டபிண்ட சராசரங்களையும் படைத்த எல்லாம் வல்ல ஈசன் மனிதர் நீடித்து அநுபவிக்கும்படி தெவிட்டாத ஒரு சுகத்தைப் படைக்க வில்லையே!" என்று நினைத்து நம்பிக்கையற்று அருவருப்பான வாழ்க்கை செய்து வரும் விவேகிகளைப் பார்த்து, "சே! பயப்படாதேயுங்கள்; இந்த உலகத்தின் அற்பமான இன்பங்களைத் தவிர உயர்வான இன்பம் ஒன்று இருக்கிறது; நான் அந்த பேரின்ப உலகத்திலிருந்துதான் வருகிறேன்; ஆசாபாசங்களாகிய இராவணனுடனும் அவனுடைய சுற்றத்தாருடனும் போர் செய்து வந்து உங்களுடைய சுகத்தை அடையுங்கள்" என்று மந்தமாருதம் மெல்லிய குரலில் ஒவ்வோருவர் செவியிலும் செய்தி சொல்லியது. காதலிமார், தமது காதலருக்கு அனுப்பும் இரகசியமான கடிதங்களுக்கு வாசனை யூட்டி அனுப்புதல் போல், தூதாய்வந்த கடற்காற்றில் இனிமை கமழ்ந்தது. சிறுவர்கள் பைத்தியங் கொண்டவரைப் போலத் தம்மை மறந்து குதித்தாடினர். சிறியோரும் பெரியோரும் அலைகள் மோதும் இடங்களில் மிகவும் துணிவாக நின்று, அலைகள் வரும்போது பின்னால் ஓடியும், அவைகள் போகும் போது துரத்தியும் சூரப்புலிகளாய் தோள்தட்டி நின்றனர். அப்போது தரைக்குள்ளிருந்து இரதங்களைப்போல அங்கு புறப்பட்ட நண்டுகள் அவர்களைக் கண்டு பரிகாசம் செய்வன போல அலைகள் வரும்போதும் மனிதர் வரும்போதும் மண்ணிற்குள் பதுங்கியும், போன பின் வெளியில் வந்தும் ஏளனம் செய்தன. ஆண்பாலரும் பெண்பாலரும் எங்கும் கும்பல் கும்பலாக நின்று கொண்டு அவரவர்கள் மனதிற்கு உகந்தவற்றில் கவனத்தைச் செலுத்தினர். இளங்காதலன் உலகமெல்லாம் தன் மனைவியிடத்திலேயே இருக்கிறதென்று நினைத்து இறுமாப்படைந்து நடந்தான். அவனது காதலியோ கடைக்கண்ணால் தனது கணவனைப் பார்த்துப் பார்த்து அவனே கற்கண்டு மலையென நினைத்து, அடக்கிய புன்னகை தனது முகத்தில் தவழ பெருவிரலை நோக்கி நடந்தாள். குழந்தைகளின் நாட்டமோ விளையாட்டிலும், அங்கு விற்கப்பட்ட கமலாப்பழத்தின் மீதும் சென்றது. காமாதுரனது நாட்டமோ அயலான் மனைவியின் மீது சென்றது. திருடனது நினைவு மனிதருடைய இடைகளை ஆராய்ந்தது. மீன் தின்பவனது நினைவு, எவ்விடத்தில் வலையன் தனது கட்டு மரத்தோடு கரையேறுகிறான் என்று கவனித்தது. மூக்குப் பொடி போடுகிறவன் ஒரு தடவைக்குத் தேவையான பொடியைப் பெறும் பொருட்டு புதிய மனிதரிடம் நட்புப் பாராட்டி யோக க்ஷேமம் விசாரித்துக் கொண்டிருந்தான்.
காமாலை கொண்டவனுக்கு உலகமே மஞ்சள் நிறமுடையதாய்த் தோன்றுதலைப்போல ஒவ்வொரு வனுக்கும், அவனவனுடைய மனதின் அளவே உலகமாய்த் தோன்றியது. மூலையில் படுத்திருந்த வராகசாமிக்கோ கண்ணிற்படும் பெண்பாலர் யாவரும் மேனகாக்களாகவும், புருஷர் யாவரும் மாயாண்டிப் பிள்ளைகளாகவும் தோன்றினர். ஜனங்கள் இருந்த பக்கங்களைப் பார்த்தாலே அவனுக்குத் தலைநோவாய் இருந்தது. கடற்பக்கம் தனது பார்வையைச் செலுத்தினான். கடல் மகா கோபத்துடன் அலைகளை வெளியில் தள்ளி விடுதலையும், அலைகள் வெட்கமின்றித் திரும்பித் திரும்பிக் கடலிற் போய்ச் சேருதலையும் கவனித்தான். தாய்மார் குழந்தைகளிடத்தில் மனம் நிறைந்த அன்பையும் ஆசையையும் கொண்டிருந்தும், விரைவில் எழுந்து மறையும் முன்கோபத்தால் குழந்தைகளை அடித்து அப்பால் தள்ளுதல் போலவும், அக் குழந்தைகள் அழுதுகொண்டே ஓடிப்போய் தமது தாயிடமே சலுகை சொல்லிக்கொள்ளுதல் போலவும், விழுந்ததனால் தம் மீது படிந்த மண்ணோடு தாயை அணைத்துக்கொள்வது போலவும் இருந்தன. "ஆம்! ஆம்! நான் எவ்வளவு வைதாலும், அடித்தாலும் என்னை விடமாட்டே னென்று கட்டிக் கொண்டாள் அல்லவா! அலைகளே! அவள் இரகசியத்தில் செய்ததை வெளியில் காட்டி என்னை அவமானப் படுத்துகிறீர்களோ! செய்யுங்கள் செய்யுங்கள் எனக்குப் புத்தி வந்தது. இனிமேல் நான் அவளை மாத்திரமல்ல; மனிதப் புழுக்களையே என்றைக்கும் நம்பேன். வஞ்சகமும் விபசாரமுமே நிறைந்த மனித சமூகத்திலிருந்து வாழ்தலிலும் நிருமாநுனுஷ்யமான காட்டிற்குச் சென்று, இந்த ஆசையெல்லாம் ஈசன் மீது திருப்பு வேனாகினால், என் ஜென்மம் ஈடேறிப்போகும், இனி நான் வீட்டுக்கே திரும்புவதில்லை; அக்காள் முதலியோர் வதைப்பதும் போதும்; நண்பர்களும் அண்டை அயலாரும் பழிப்பதும் போதும். நாளைக்கு இந்த தட்டுவாணி, நாடகத்தில் வேஷம் போட்டு ஆடவும் தொடங்குவாள். அந்த மேன்மையையும் அடைந்து நான் உயிர் வாழவேண்டுமா? சே! இந்த நாட்டிலும் இருத்தல் தகாது! காசிக்குப் போய் சந்நியாசம் வாங்கிக்கொண்டு எவர் முகத்திலும் விழிக்காமல் இமய மலைக்குப் போய்விடுகிறேன். அதுதான் சரியான காரியம்" என்று தனக்குள் ஒருவாறு உறுதி செய்து கொண்டான். அவனது மனதில் ஒருவித ஆழ்ந்த விரக்தி உண்டானது. அவன் தெய்வபக்தி உள்ளவன். ஆதலால், ஈசுவரத் தியானம் செய்யவேண்டும் என்னும் ஆவல் அடங்கா வேட்கையாக அவன் மனதில் உதித்தது. தான் பார்த்த இடமெல்லாம் கடவுள் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அங்கு தோன்றிய ஒவ்வொரு பொருளும் தனக்கு ஒவ்வொரு செய்தி சொல்லுவதாக மதித்தான். அகண்டாதீத பரிபூரண வஸ்துவும் சாந்தநிறைவுமான சச்சிதாநந்தப் பொருளே சலனமற்ற அந்த ஆழ்ந்த கடலில் பிரதி பிம்பித்துத் தோன்றுவதாக நினைத்தான். நுரையின் வெண்மை நிறமும், நீரின் கறுநிறமும் கலந்த தோற்றத்தைக் கொண்ட பெருத்த அலைகள் தரையில் மோதுவதும் அதே நிறத்தைக் கொண்ட பிரமாண்டமான மலைப் பாம்புகள் துவார பாலகர்களைப் போலவழிமறித்து, ''மனிதர்களே! நீங்கள் பாவிகள்; ஈசுவரனுக்கருகில் வராதீர்கள்'' என்று கோபித்து சீறிக் கடிக்க வருதலைப் போல இருந்தது. கடலிலிருந்து உண்டான "ஹோ" என்னும் ஒலி "ஐயோ! நானும் அலைகளும் ஆதியந்தம் இல்லாமல் யுகங்கள் யுகங்களாக இங்கிருந்து உங்களுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லியும் அவற்றின்படி நடந்து பிழைத்துப் போகாமல் மதிமந்தராகவே இருந்து இறந்து இறந்து பிறந்து பிறந்து கொண்டே இருக்கிறீர்களே! எத்தனையோ தடவைகளில் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் வரும்போ தெல்லாம் என்னை அறிந்து கொள்ளாமல் புது மனிதரைப் போலக் காணப்படுகிறீர்களே! உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் புத்திமதியை இப்படி மறந்து பிறந்து கொண்டிருக்கிறீர்களே!" என்று கடல் ஓலமிட்டு அழும் ஓசையைப்போல இருந்தது. அலைகளில் அகப்பட்ட சிறிய கட்டைகளும், தேங்காய் மட்டைகளும் அலைகளுடன் கரைக்கு வருவதும் திரும்பிச் சிறிது தூரம் வரையில் தண்ணீரில் செல்வதுமாய் அவை அழுகி நாசமாய்ப் போம்வரையில் தவித்தது எவ்விதம் இருந்தது?
ஈசனை அடைய விரும்புவோர் வழிதவறி, சைவமென்றும், வைணவமென்றும், தென்கலை யென்றும், வடகலையென்றும், இந்து வென்றும், முகம்மதிய றென்றும் இன்னம் வேறு பலவிதமாயுள்ள வேறுபாடுகளான இடையூறுகளிலும், குறுகிய கொள்கைகளிலும் அகப்பட்டுக் கொண்டு நெடுந்தூரம் செல்ல மாட்டாமல் இறந்து பிறந்து வாசல் படியிலேயே தத்தளிப்பதைப்போல இருந்தது. அந்த மணல் பரப்பிற்கு அருகில் சென்ற பாதையின் இரண்டு திக்குகளிலும் கண்காணுந்தூரம் வரையில் நிறுத்தப்பட்டிருந்த கம்பங்களும், அவற்றில் அழகாய் விளங்கிய மின்சார விளக்குகளும் உலகந்தோன்றிய முதல், அப்போதைக்கப்போது அவதரித்து மற்ற மனிதரிலும் அறிவால் உயர்ந்து அவர்களுக்கு வழிகாட்டியாய் எப்போதும் அழிவின்றி நிற்கும் ஆழ்வார்களும், நாயன்மார்களும், நபீக்களும், ஏனைய மகான்களும் சாதாரண ஜனங்களால் கண்டுபிடிப்பதற்கு ஏலாத கடவுளைக்கண்ட தமது ஞான மாகிய தூரதிருஷ்டிக் கண்ணாடியை முகத்தில் அணிந்து நிற்பதைப் போல இருந்தன. நெடுந்தூரத்திற்கு அப்பாலிருந்த ஹைகோர்ட் டின் மீது ஆகாயத்தை அளாவிய கம்பத்தின் உச்சியில் இருந்த திசை காட்டும் விளக்கு மாறிமாறி பிரகாசமாகவும், மங்கியும் தோன்றியது வராகசாமிக்கு எவ்வாறு இருந்தது? ஜோதி ஸ்வரூபமான பரம்பொருள், மாயையென்னும் போர்வையால் மறைந்தும் தோன்றியும் காணப்பட்டு, பிறவிக்கடலைக் கடப்போருக்கு , "இதோ இருக்கிறேன், இதோ இருக்கிறேன்; என்னை எங்கெங்கோ தேடுகிறீர்களே; பூலோகத்திய உயர்ந்த நியாய ஸ்தலத்துக்கு மேலல்லவோ நான் இருக்கிறேன், வாருங்கள் என்று கைகாட்டி அழைப்பது போலிருந்தது. கடற் கரையோரத்தில் ஏராளமாகக் கிடந்த கட்டுமரக்கட்டைகள், பாவக்கடலை முற்றிலும் கடந்து அக்கரை சென்று கடவுளை அடையும் வல்லமை பெற்ற பொய்யான சமய நூல்களைப் போல எண்ணிக்கை யற்றுக் கிடந்தன. ஏராளமான அந்தக் கட்டைகள் செம்படவர், கடலில் சிறிது தூரம் சென்று அதிலுள்ள நீர் வாழைக் காய்களையும், புடலங்காய்களையும் கொய்து பிறருக்கு விற்றுப் பொருள் தேடுதற்குப் பயன்படுதல் போல சமய நூல்கள் கோயிற் பூனை தெய்வத்திற்கு அஞ்சாதென்ன, நம் பாகவதர்களும், ஆசான்களும் பிரசங்கித்து, தம் வயிற்றை நிரப்புதற்கு உபயோகப்படுதல் நினைப்பூட்டப் பட்டது. கடல் முகமாய் நீட்டி வைக்கப் பட்டிருந்த கட்டைகள் ஈசனை அடைய உபயோகப்படும் தோணிகளோ அன்றி, மனிதரைத் தடுத்துப் போர்புரியும் பொருட்டு கோட்டை மதிலின் மீது அணிவகுக்கப்பட்ட பீரங்கிகளோ வென்று ஐயுறும் வண்ணம் காணப்பட்டன.
இவ்வாறு வராகசாமியின் மனதில் விரக்திப் பெருக்கால் விபரீதமான எண்ணங்களும் தோற்றங்களும் உதித்தன. தான் உடனே எழுந்து போய் ரயிலில் ஏறி காசிக்குப் போவதே முடிவென்று தீர்மானித்துக் கொண்டான், தனது சட்டைப் பையிலிருந்த சிறிய பணப்பையை எடுத்து ஆராய்ந்தான். அதில் ஐந்து, பத்து நோட்டுகளும் சில்லரைகளும் இருந்தன. உற்காசகத்தோடு எழுந்து மணல் பரப்பில் நடந்தான். சோர்வும் களைப்பும் மேலிட்டு அவனைக் கீழே தள்ளப் பார்த்தன. கண்கள் இருண்டன. சிறிது நேரம் நின்று, தன் மனோவுறுதி யால் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு மேலும் நடந்து பாதையை அடைந்தான். மோட்டார் வண்டிகளும், சாரட்டுகளும் போவதும் வருவதுமாய் இருந்தன. மனிதர் பலர் கால் நடையாகச் சென்று கொண்டிருந்தனர். வராகசாமியின் தோற்றமோ மிக்க பரிதாபமாக இருந்தது. தனது அலங்கோல நிலைமையைக் கண்டு ஜனங்கள் ஏதாயினும் நினைத்துக் கொள்வார்களோ வென்பதையும் மறந்து பாட்டைப் பக்கம் விரைவாக நடந்து சிறிது நேரத்தில் சென்னை துரைத்தனத்தாரின் கலா சாலைக்கருகில் வந்தான். அவனது நோக்கம் எதிரில் வந்த வண்டிகளிற் சென்றது. அப்போது நெடுந்தூரத்திற் கப்பால் மெல்ல வந்த ஒரு மோட்டார் வண்டியைக் கண்டான். அதிலிருந்த மனிதரை அசட்டையாகப் பார்த்தான். அதில் மூவர் இருக்கக் கண்டான். முன்புறத்தில் இருந்த ஒரு மகம்மதியன் அதை ஓட்டினான். உட்புறத்தில் ஒருவர் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஒரு திரையால் தம்மை மறைத்துக்கொண்டும், முகத்தில் ஒரு முகமூடி அணிந்து கொண்டும் இருந்தனர். அவர் ஆணோ பெண்ணோ என்பது தோன்றாதவாறு உறை நன்றாக மூடிக்கொண்டிருந்தது. இன்னொருவர் யார் என்பதை அவனுடைய கண் ஆராய்ந்தது. அவள் அழகு பொருந்திய ஒரு யௌவனப் பெண்மணி; வெல்லெட்டு திண்டுகள் தலையணைகள் முதலிய வற்றினிடையில் அவள் சாய்ந்திருந்தாள். வாடிக்கிடக்கும் ரோஜா புஷ்பத்தைப்போல அவளது தோற்றம் நோய் கொண்ட தோற்றமாக இருந்தது. தூரப் பார்வைக்கே அவளுடைய முகம், அவனுக்கு அறிமுகமானதாய்த் தோன்றியது. வந்தவள் மேனகா வென்னும் நினைவு அவன் மனதில் உண்டாயிற்று. வண்டி அருகில் நெருங்க, நெருங்க, அவனுடைய ஆச்சரியமும், கோபமும் அதிகரித்துக்கொண்டே வந்தன. அவன் தனது கண்களை நம்பாமல் மயங்கி உற்று நோக்கினான்; வண்டி அருகில் வந்து விட்டது. தனது கண்களை மூடிக்கொண்டு திண்டுகளில் சாய்ந்திருந்தவள் தன் மனைவியான மேனகாதான் என்பதை நிச்சயமாகக் கண்டான். திரையால் மூடிக் கொண்டிருந்தது மாயாண்டிப்பிள்ளை யென்றும், அவனும் மேனகாவும் கடற்காற்று வாங்க உல்லாசமாக வந்திருப்ப தாகவும், அவ்வளவு சொகுசாக திண்டுகளில் சாய்ந்து வந்தவள் தன்னைக் கண்டே அவ்வாறு கண்களை மூடிப் பாசாங்கு செய்வதாயும் நினைத்தான். அவனுக்கு உடனே அடங்காக் கோபமும், பதைபதைப்பும் உண்டாயின. தான் அவளது முகத்திலேயே இனி விழித்தல் கூடாதென நினைத்து ஊரைவிட்டு ஓடிப்போக நினைத்துப் போகும் போதும் அவள் கள்ளப்புருஷனோடு சோதனையாக எதிர்ப்பட்டது தனக்கு அபசகுணமாகவும், தான் எங்கு சென்றாலும் அவள் தனது கண்ணில் பட்டுக்கொண்டுதான் இருப்பாள் என்றும் அவன் மனதில் ஒரு எண்ணம் உண்டாயிற்று. அவள் உயிரோடு இருக்கும் வரையில் தனக்கு அவமானமும், கோபமும், துயரமும் இருந்து கொண்டே இருக்குமென்று நினைத்தான். ஆகையால், அவளைக் கொன்றுவிடுவதே யாவற்றிற்கும் மருந்து என நினைத்தான். அவளைக்கொன்றபின் தானும் நியாய ஸ்தலத்திற்குப் போய்க் கொல்லப்பட்டுப் போவதே புகழுடைத் தென்றும், செயலற்ற பேதை போல அஞ்சி காசிக்குப் போய் சந்நியாசம் பெற்று ஒளிந்து திரிவதிற் பயனில்லையென்றும் ஒரு க்ஷணத்தில் தீர்மானம் செய்து கொண்டான். கீழே குனிந்து அங்கு மிங்கும் நோக்கினான். சற்று தூரத்தில் ஒரு தேங்காய்ப் பருமனிருந்த ஒரு கருங்கல்லைக் கையில் எடுத்துக் கொண்டான். அதற்குள் மோட்டார் வண்டி அவனைத் தாண்டித் தென்புறத்தில் பத்துப் பதினைந்து கஜதூரம் போய்விட்டது. கையில் கல்லுடன் அவனும் திரும்பி வண்டியை நோக்கி விசையாக ஓடினான். அந்த மோட்டார் வண்டியின் பின்புறத்திலிருந்த ஒரு தகட்டில் காலை வைத்தேறி, அருகில் காணப்பட்ட மேனகாவின் தலையில் அந்தக் கருங்கல்லை ஓங்கி மோதி மண்டையை உடைத்து அவளைக் கொன்றுவிட்டு இறங்கிவிட நினைத்தவனாய் விரைந்து ஓடினான். வண்டி மெல்லப் போனதாயினும், அது ஒரு ஆளின் வேகம் இருந்ததால், அவன் அதை நெருங்க நெடுந்தூரம் செல்லவேண்டியிருந்தது. களைப்பையும் பாராமல் தன் முழு வலுவையும் செலுத்தி ஓடினான். வண்டியும் சென்றது. அவ்வாறு ஐம்பது கஜதூரம் சென்றான். அடுத்த நிமிஷம் அவன் மோட்டாரை ஒரு கையாற் பிடித்துக்கொண்டு, கீழிருந்த தகட்டில் ஏறியிருப்பான். இன்னொரு நொடியில் மேனகாவின் அழகு வழிந்த முகத்தை இரத்த வெள்ளம் வழிந்து மறைத்திருக்கும் கருங்கல் அவளுடைய சிரத்தை உடைத்துச் சின்னா பின்னமாக்கி இருக்கும். முகமூடி போட்டிருந்த மனிதரும் தென்முகமாய் மேனகாவுடன் இருந்தமையால், பின்னால் ஓடிவந்த வராகசாமியை அவரும் பார்க்கவில்லை. அந்தச் சமயத்தில், தெய்வச் செயலாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வீட்டுக்குப் போக நேரமாய் விட்டதாகையால், விரைவாகப் போகவேண்டும் என்னும் நினைவு முகமூடி போட்டிருந்தவர் மனதில் உண்டானது; அவர் வண்டியை வேகமாய் செலுத்தும்படி வண்டிக்காரனிடம் கூறினார். அப்போது எதிரில் மிக்க அருகில் இன்னொரு மோட்டார் வண்டி வந்து கொண்டிருந்தது. இவர்கள் இருந்த வண்டிக்காரன் தனது வண்டியைச் சற்று கிழக்குப்பக்கம் விசையாக ஒதுக்கி வேகமாய் முடுக்கிவிட்டான். அதை எதிர்பாராத வராகசாமி, தனது கைப்பிடி வண்டிக்கு எட்டாமல் தவறிப்போனமையால், படேரென்று கருங்கல்லுடன் பாட்டையில் குப்புற விழுந்தான்; நாற்புறங்களிலும் தூரத்திலிருந்த மனிதர் அதைக் கண்டு, "ஐயோ! ஐயோ!"வென்று பெருத்த கூக்குரல் செய்து ஓடிவந்தனர். எதிரில் வந்த மோட்டார் வண்டி நிற்பதற்கு போதுமான சாவகாச மில்லாமையால் வராகசாமியின் உடம்பில் ஏறிப்போய் விட்டது. ஜனங்கள் பெரிதும் கூக்குரல் செய்து ஓடிவந்து சேருமுன் வண்டிகள் இரண்டும் மாயமாய்ப் பறந்து போய் விட்டன. பெரிதும் அச்சமடைந்தவராய் இரண்டு வண்டிக்காரர்களும் வாயுவேக மனோவேகமாய் வண்டிகளை ஓட்டிக்கொண்டு போயினர். ஓடிவந்து அங்கு கூடிய ஜனங்கள் உணர்வற்றவனாய் இரத்த வெள்ளத்தில் தோய்ந்து கிடந்த வராகசாமியைத் தூக்கி யெடுத்தனர். அந்தக் கூட்டத்திலிருந்த சாமாவையர் பதைபதைத்தவராய், அப்போது வந்த இன்னொரு மோட்டார் வண்டியை நிறுத்தச் செய்து, அதில் வந்த மனிதரை நயந்து வேண்டி அதில் வராகசாமியை வைத்து, இராயப்பேட்டை சர்க்கார் வைத்தியசாலைக்கு ஓட்டச் செய்தார்.
--------------
அதிகாரம் 14 - பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்
ஒன்பதாவது அதிகாரத்தின் இறுதியில் தாசில்தார் தாந்தோனிராயர், டிப்டி கலெக்டருடைய வீட்டிற்குள் வந்து அவருக்குக் காலை வந்தனம் செய்தார் என்பது சொல்லப் பட்டது அல்லவா! உடனே சாம்பசிவம் தமது கோபத்தையும், மனதின் துன்பத்தையும் சடக்கென்று மறைத்துக் கொண்ட வராய், "ராயரே! வாரும்; உட்காரும்" என்ற கூறிய வண்ணம் எதிரிலிருந்த ஒரு நாற்காலியைச் சுட்டிக் காட்டினார். அசந்தர்ப்பமான அந்த வேளையில் தாசில்தார்தம்மிடம் வந்தது, சாம்பசிவத்தின் மனத்திற்குப் பெருத்த துன்பமா யிருந்தாலும், தமது வீட்டைத் தேடி வந்த ஒரு பெரிதய மனிதரை உபசரியாமல் இருப்பது மரியாதைக் குறைவான காரியமென்று நினைத்து, அவருக்கு ஆசனம் அளித்துத் தாமும் தமது சாய்மான நாற்காலியில் உட்கார்ந்தார். கனகம்மாளும் இருந்தவிடம் தெரியாமல் பறந்து போய்விட்டாள். டிப்டி கலெக்டர் மீது அந்தரங்க அபிமானங் கொண்டவரைப் போல நடித்துத் தாண்டவமாடிய தாந்தோனிராயர் நாடகத்தில் சோகரசங் காட்டுவதைப் போல தமது முகத்தில் விசனக் குறிகளையும், அநுதாபக் குறிகளையும் வரவழைத்துக் காண்பித்தவராய் மிகவும் தயங்கி, ஒரு நாற்காலியில் உட்கார்ந்தும், உட்காராமல் நின்றும், ''அதென்ன துரை முழுமூடனா யிருக்கானே! அவசரமாகப் பட்டணம் போகவேண்டுமென்று நீங்கள் கடிதம் அனுப்பிய தென்ன! ரஜா கொடுக்கப்பட மாட்டாது என்று எழுதியனுப்பி விட்டானாமே?" என்று தளுக்காக ஆரம்பித்தார்.
.
சாம்ப:- (மாறுதலடைந்த முகத்துடன்) ஆம்; என்றைக்கும் கேட்குமுன் ரஜாக் கொடுக்கிற துரை, இன்று நல்ல சமயத்தில் இப்படிச் செய்து விட்டாரே; காரணமென்ன? நீர் அப்போது அங்குதானே இருந்தீர்?
தாந்தோ:- இந்த வெள்ளையர்களெல்லாம் குரங்குகள்; பேனெடுத்தாலும் எடுப்பார்கள், காதை அறுத்தாலும் அறுப்பார்கள்; நீங்கள் வரவில்லையென்று கோபித்துக் கொண்டே இருந்தான். உங்களுடைய கடிதத்தை டபேதார் கொண்டு வந்து கொடுத்தான். அது உங்களுடையது என்பது அப்போது எனக்குத் தெரியாது. அவன் கோபச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு, ஏதோ பதில் எழுதி டபேதாரிடம் அனுப்பிய பின், என்னிடம் விஷயத்தைத் தெரிவித்து, தான் ஏதோ பெருத்த ஜெயமடைந்து விட்டதாக பெருமை பாராட்டிக்கொண்டான். எனக்கு அதைக் கேட்க நிரம்பவும் வருத்தமாக இருந்தது. என்ன அவனுடைய பாட்டன் வீட்டு சொத்தை நீங்கள் எடுத்துக்கொண்டது. வரக்கூடாத அவசரமென்றால், அதற்கு யார் தான் என்ன செய்வார்கள்? நான்தான் இருக்கிறேனே! என்னை வைத்துக் கொண்டு அர்ஜியை அனுப்புகிறதுதானே? அல்லது அது நாளைக்குத்தான் போகட்டுமே. மனிதருக்கு ஆபத்தென்றால், அதற்காக நாக்கைப் பிடுங்கிக் கொள்வதா? இவன்தான் திடீரென்று மாண்டு போகிறான்; அல்லது இவனுடைய துரைசானிக்குத் தான் வாந்தி பேதி வந்துவிடுகிறது. அப்போது அர்ஜி எப்படிப் போகும்? தன்னைப் போலப் பிறரையும் பார்க்க வேண்டும். அதுதான் இந்தப் பயல்களிடம் கிடையாது. உண்மையில் அவசரமான காரியம் இல்லாதிருந்தால், தாங்கள் அவ்விதம் எழுத மாட்டீர்களென்று நான் சொன்னேன். அவர் அவசரமாக உங்களை வரச்சொல்லியிருந்தானாம். நீங்களே நேரில் வந்து ரஜாக் கேட்கவில்லையாம். இன்ன விஷயமென்றும் கடிதத்தில் குறிக்க வில்லையாம். எல்லாம் தான் என்கிற அகம்பாவம்; வேறொன்றுமல்ல.
சாம்ப:- (ஆத்திரமாக) நன்றாக இருக்கிறது! கடிதத்தில் எழுதும் காரியமும் உண்டு, எழுதாத காரியமும் உண்டு. நான் நேரில் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? என்னுடைய ஆபத்துக் காலத்தில் அதைப் பாராட்டாமல் அடக்கிக் கொண்டு இவரிடம் போவதுதான் இவருக்கு மரியாதை செய்வது போலவோ? அழகாயிருக்கிறதே!
தாந்தோனி :- (புன்சிரிப்போடு) நான் அவனை எளிதில் விடவில்லை. அவன் தயவு எனக்கு எதற்காக? மடியில் கனமிருந்தாலல்லவா வழியில் பயம்? இப்போது நீங்கள் சொன்ன மாதிரியே நான் அவனிடம் சொன்னேன். அவனுடைய பிடிதான் குரங்கு பிடியாயிற்றே; தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றான். அவனுடைய மூர்க்கம் தணிவடையட்டும் என்று பேசாமல் விட்டுவிட்டேன். இந்த அக்கிரமத்தைக் கண்டு என் மனது சகிக்க வில்லை. தங்களிடம் வந்து, இவ்விடத்திய சந்தர்ப்பத்தை அறிந்து, அதற்குத் தகுந்தாற்படி நடந்து கொள்ளலாம் என்று இங்கு வந்தேன். மிகவும் அவசரமாகத் தாங்களே அவசியம் பட்டணம் போக வேண்டிய காரியம் போலிருக்கிறது? - என்று தணிவான குரலில் நயமாகக் கேட்டார். அது, என்ன அவசர காரியமென்று கேட்பதைப் போலிருந்தது.
அதைக் கேட்ட சாம்பசிவம் உடனே விடை தராமல் தயங்கி யோசனை செய்தார்; தம்முடைய பெண் காணாமற் போய்விட்டாளென்று சொல்வது, பெண்ணின் கற்பைப்பற்றி அவர் சந்தேகிக்க இடங்கொடுக்கும் என்றும், பல இழிவான யூகங்களை உண்டாக்கும் என்றும், அது தனக்கு அவமானமாய் முடியும் என்றும் நினைத்தார். கடைசியாக, ஒரு சிறிய பொய் சொல்லவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். அந்தப் பொய்யினால் பிறருக்கு எவ்விதத் துன்பமும் உண்டாவதில்லை யென்றும், தமது மானத்தைக் காப்பதற்கே சொல்லப்படுகிறது என்றும் நினைத்த சாம்பசிவம், "ஆமாம்! நானே போக வேண்டிய அவசரந்தான். என்னுடைய பெண்ணுக்கு உடம்பு மிகவும் அசௌக்கியமாக இருக்கிறதாம். உடனே வந்தால்தான் பெண்ணைப் பார்க்கலாம் என்று தந்தி வந்தது. அந்த விசனத்தினால் இன்று எனக்குப் பங்களாவுக்கு வரப் பிடிக்கவில்லை. இன்று காலை முதலே ரஜா வேண்டுமென்று எழுதினேன்" என்றார்.
தந்தி ஆபீசில் முன்னமேயே உண்மையை யறிந்து வந்திருந்தவரான தாந்தோனிராயர், 'நீ பொய் சொல்லாத அரிச்சந்திரர் என்று எங்களிடம் ஆடம்பரம் செய்பவனல்லவா! இப்போது பொய் சொல்லுகிறாயோ! இருக்கட்டும்” என்று தமக்குள் நினைத்துக் கொண்டு, மிகவும் விசனத்தோடு, "அப்படியா! குழந்தை மேனகாவுக்கா? இப்போது சமீப காலத்தில் தானே இங்கிருந்து புறப்பட்டுப் போனாள்? இங்கிருந்த வரையில் உடம்பில் ஒரு கெடுதலும் இல்லையே? இப்போது திடீரென்று என்ன வந்தது?" என்றார்.
சாம்ப:- (சிறிது தயங்கி) இன்ன வியாதி என்னும் விவரம் எழுதப்படவில்லை. நான் அவசியம் இன்றைக்குப் போயே தீரவேண்டும். அவ்வளவு அவசரம். துரை இப்படி மோசம் செய்து விட்டாரே. இனிமேல் நானே அவரிடம் நேரில் போவதற்கும் என் மனதிற்குப் பிடிக்கவில்லை. அவர் ஏதாவது தாறுமாறாய்ப் பேசினால் எனக்கு நிரம்பவும் கோபம் வந்து விடும். அதனால் வீணில் காரியம் கெட்டுப்போம் - என்றார்.
தாந்தோனி :- (மிகவும் துயரமடைந்து, சாம்பசிவத்திற்கு வந்த துன்பத்தைத் தன்னுடையதாக மதித்தவராய் வேஷம் போட்டு) ஐயோ! என்ன தரும் சங்கடமா யிருக்கிறதே! துரை இன்றைக்குச் செய்தது சுத்த அயோக்கியத்தனம்; மனிதருக்கு உயிருக்கு மிஞ்சிய ஆபத்து வேறென்ன இருக்கிறது? நீங்கள் வரவில்லையென்று கோபம் உண்டானால்தான் என்ன? என்ன காரணத்தினால் இவ்வளவு அவசரமாக ரஜா கேட்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தல்லவா காரியம் செய்யவேண்டும். சுத்தத் தடியடிக்காரன் வேலையாய் இருக்கிறதே. இந்த முரடன் கையில் ஒரு ஜில்லாவையே ஒப்புவித்துவிட்டார்களே! நான் எத்தனையோ கலெக்டர்களைப் பார்த்திருக்கிறேன்; எங்களைப் போன்ற சின்ன வேலைக்காரர்களிடம் கடுமை காட்டினால், தங்களைப் போன்ற சம அந்தஸ்துள்ள பெருத்த அதிகாரி களிடத்தில் நிரம்பவும் மரியாதையாக நடந்து கொள்வது வழக்கமாம். அவர்கள் கண்ணியமான மனதைக் கொண்டவர்கள். இவன் யாரோ அற்ப பயல்; இவன் சீமையில் ஒரு அம்பட்டனுடைய மகனாம். இந்தப் பயல் இங்கே இவ்வளவு ஆடம்பரம் செய்து தானே ராஜா வென்று நினைத்துக் கொண்டு நம்மை யெல்லாம் ஆட்டி வைக்கிறானே. இவன் போன வருஷம் ஆறு மாசம் ரஜா வாங்கிக்கொண்டு சீமைக்குப் போயிருந்தான் அல்லவா? அப்போது நமது வெங்கப்பட்டி ஜெமீந்தார் வீராசாமி வாண்டையாரும் ஒரு வியாச்சியத்தின் பொருட்டு சீமைக்குப் போயிருந்தாராம். வாண்டையார் இந்த துரையை தற்செயலாக பார்த்தாராம். துரை தன்னுடைய அப்பனுக்குத் தலை சிரைத்துக் கொண்டிருந்தானாம். வீடு ஒரு கையகலம் மாட்டுக்கொட்டில் மாதிரி இருந்ததாம். வாண்டையாரை உட்காரக் கூட சொல்ல இடமில்லையாம். அவ்வளவு கேவலமானவன் இங்கே வந்து இப்படி நாடகத்தில் வரும் ராஜாவைப்போல வேஷம் போடுகிறான். இப்படிப்பட்ட தொழிலைச் செய்பவனுக்குத் தயாளமும் நீதியும் எங்கிருந்து உண்டாகும்?
சாம்ப :- அப்படியா! அதனாலென்ன? ஏழைகளாயிருந் தாலென்ன? கேவலத் தொழில் செய்பவராய் இருந்தால் என்ன? உண்மையில், அவர்களுக்குத்தான் பச்சாதாபமும், இரக்கமும், அதிகமாக இருக்கும். இவர் யாருடைய பிள்ளையாய் இருந்தால் நமக்கென்ன? அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? எத்தனையோ விஷயங்களில் இவரே கண்ணியமாகவும், பெரும் புத்தியைக் காட்டியும் நடந்து கொள்ளவில்லையா? அல்லது பெரிய பிரபுக்களின் பிள்ளைகளென்று வருகிறார்களே அவர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்வதில் லையா? அற்பத்தனமான காரியம் செய்வதில்லையா? இதை யெல்லாம் ஒரு பொது விதியாக வைத்துக்கொண்டு தூஷிக்கப்படாது. எனக்கு இவர் மீது வேறு எவ்வித வருத்தமும் இல்லை. இதுவரையில் நான் அறிந்தவரையில், இவர் என் விஷயத்திலும் மற்றவர் விஷயத்திலும் ஒழுங்காகவே நடந்து கொண்டி ருக்கிறார். இவர் நல்ல தங்கமான குணமுடையவர் என்றே சொல்லவேண்டும். ஆனால், இன்று இவர் செய்தது மாத்திரம் ஏதோ தப்பான எண்ணத்தின் மீது செய்யப் பட்டிருக்கிறது. இதை நம்முடைய வேளைப்பிச கென்றே சொல்லவேண்டும். அவசரமாக வரவேண்டுமென்று இவர் சொல்லி யிருந்தபடி நான் போக வில்லை. அதைக் குறித்துக் கோபம் உண்டாவது மனித சுபாவந்தான். இப்படிச் செய்து விடுவாரென்று நான் சந்தேகித்து என்னுடைய தாயாரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். காரியம் அப்படியே முடிந்துவிட்டது - என்று கண்டித்த சொற்களாக நயமாக குரலில் கூறினார்.
அதைக் கேட்ட ராயருடைய முகம் சிறுத்தது. அவமானமும் அடைந்தார். என்றாலும் அதைப் பாராட்டாமல், சாம்பசிவத்தின் நோக்கம் போல தமது பேச்சையும் திருப்பிக்
கொண்டார்.
"ஆம் நீங்கள் சொல்லுவது சரியான வார்த்தைதான். இந்த ஒரு விஷயத்திலே தான் முன்கோபத்தினால் இவர் இப்படிச் செய்து விட்டார். சுபாவத்தில் தங்கமான குணமுடையவர்தான். புத்தியும் பெரும்புத்திதான். அதைப்பற்றி சந்தேகமில்லை. என்றாலும், தமக்கு சம அந்தஸ்திலுள்ள தங்களுக்கு அவசரமே இல்லாத காரணமாயிருந்தாலும் ரஜாக் கொடுக்க வேண்டியிருக்க, இவ்வளவு அவசர சமயத்தில் மோசம் செய்ததனாலேதான் வாண்டையார் சொன்னதைச் சொல்லும் படி நேர்ந்தது. எங்களைப் போல இருந்தாலும் பாதகமில்லை. விறகு கட்டுக்காரனுக்கு பிளவை புறப்பட்டால், விறகு கட்டையால் அடிப்பதே மருந்து. நாங்கள் எப்படியாவது சமாளித்துக் கொள்வோ'' மென்று நேர்த்தியாகப் பேசினார் ராயர். அதைக் கேட்ட சாம்பசிவத்திற்கு முன்னிலும் அதிகரித்த அருவருப்பு உண்டாயிற்று. பளேரெனக் கன்னத்தில் அடிப் பவரைப்போல பேசலானார்.
"சேச்சே! அது சரியான பேச்சாகாது. அவசரம் என்றால் பெரிய மனிதருக்கும் அவரசந்தான்; சின்ன மனிதருக்கும் அவசரந்தான். பெரிய மனிதருக்கு மாத்திரம் ரஜாக் கொடுப்பதென்ன? சின்ன மனிதருக்கு இல்லையென்ப தென்ன? காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. எனக்கு என் பெண்ணைப் பற்றி எவ்வளவு விசனம் இருக்கிறதோ, அவ்வளவு விசனம் சின்ன மனிதருக்கும் தமது பெண் விஷயத்தில் இருக்கும் உண்மையில் அவசரமான காரிய மிருந்தால், எல்லோருக்கும் ரஜாக் கொடுத்து அநுதாபம் காட்ட வேண்டும். பொய்யான கடிதமாயிருந்தால், எனக்கு ரஜாக்கொடுப்பது தவறாகும். பொய் சொன்னதற்காக தண்டிக்கவேண்டும். டிப்டி கலெக்டரான எனக்கு விசேஷ மரியாதை காட்டவில்லை யென்று துரை மீது குற்றங்கூறுவது ஒழுங்கல்ல. ஏதோ தப்பான எண்ணத்தால், என்னுடைய அவசரத்தைக் கவனியாமல் ரஜாக் கொடுக்க மறுத்த தொன்றைப் பற்றித்தான் நான் விசனப்படுகிறேன்" என்றார். தமது சாமர்த்தியமான தளுக்கு மொழிகளைக் கேட்டு ஏமாறுவார் என்று நினைத்த தாந்தோனிராயருடைய சொற்களை சாம்பசிவம் சின்னாபின்னமாக்கி, அவருடைய தப்பான கருத்தை அவருடைய முகத்திலேயே அடிப்பதைப் போல மொழிந்தார். தாந்தோனிராயர் பெரிதும் வெட்கி, இஞ்சி தின்ற குரங்கைப் போல விழித்து ஏதோ யோசனை செய்பவரைப்போலக் கீழே குனிந்து கொண்டார். அவருடைய கண்கள் தரையை நோக்கின.
அப்போது நாற்காலிக் காலடியில் கிடந்த ஒரு சிவப்புக் காகிதம் அவருடைய கண்களில் பட்டது. அதுவே சென்னையிலிருந்து சாம்பசிவத்திற்கு வந்த தந்தி; அங்கு கனகம்மாளாலும் சாம்பசிவத்தாலும் நடத்தப்பட்ட ஆரவாரத்தில் அசட்டை செய்யப்பட்ட தந்தி காற்றில் பறந்து கீழே விழுந்து நாற்காலி அடியில் கிடந்தது. தாந்தோனிராயர் தற்செயலாய் அதிலேயே உட்கார்ந்து கொண்டார். இப்போது கீழே குனிந்தபோது அதையே கண்டார். “ஆகா! என்னை அவனமானப் படுத்திக் கீழே குனியச் செய்தாயல்லவா! இதோ உன்னை அவமானம் படுத்தும்படி உன்னுடைய தந்தியே என்னிடம் வந்து சேர்ந்தது பார்" என்று தம் மனதில் நினைத்துக்கொண்ட ராயர், மெல்ல அதையெடுத்துக்கொள்ள நினைத்தார். சாம்பசிவத்திற்கு எதிரில் மேஜை மறைத்திருந் தமையால், அவர் காகிதத்தைப் பார்க்கவில்லை. என்றாலும், தாந்தோனிராயர் ஒரு தந்திரம் செய்தார்; தம்முடைய கையிலிருந்த கைக்குட்டையை எடுத்துத் தமது முகத்தைத் துடைப்பவர்போலச் செய்து அந்த தந்திக் காகிதத்தின் மேல் விழும்படி அதைவிட்டார். உடனே கீழே குனிந்து கைக்குட்டையையும், அதன் கீழிருந்த தந்தியையும் ஒன்றாய்ச் சேர்த்தெடுத்துத் தமது சட்டைப் பைக்குள் சொருகிக் கொண்டார். சாம்பசிவம் கண்டுபிடித்துக் கேட்டாலும் காகிதம் தவறுதலாய் சவுக்கத்தோடு வந்து விட்டதாகச் சொல்லத் தீர்மானித்துக் கொண்டார். அந்தப் பீதாம்பரையர்ஜாலம் கால் நிமிஷத்திற்குள் நிறைவேறியது. உடனே, வியப்பைக் காட்டிய முகத்தோடு சாம்பசிவத்தை நோக்கி, "ஆகா! தங்களுடைய குணமல்லவோ குணம்! எப்போதும் மேன்மக்கள் மேன்மக்களேதான் இந்த அவசரத்தில் எங்களுக்கு ரஜாக் கொடுக்காமல் துரை இப்படிச் செய்திருந்தால், எங்களுக்கு மிகவும் மூர்க்கமான கோபம் பிறந்திருக்கும். வாயில் வந்தவிதம் பொருத்தமில்லாமல் தூற்றி யிருப்போம். துன்பச் சமயத்திலும் நீங்கள் நடு நிலைமை தவறவில்லை. அவர்களுடைய யோக்கியதைக்குத் தகுந்த பதவி தான் கிடைத்திருக்கிறது. உங்களுக்கு ஈசுவரன் ஒருநாளும் குறைவு வைக்கமாட்டான்"
என்று சாம்பசிவத்தைப் புகழ ஆரம்பித்தார்.
சாம்ப:- (புன்சிரிப்போடு) இப்போது சொன்ன நீதி நம்முடைய துரைக்கும் பொருந்துமல்லவா? கலெக்டர் பதவிக்கு அவர் தகுந்தவரென்றுதான் நாம் மதிக்க வேண்டும் - என்றார்.
தாந்தோனிராயர் என்ன செய்வார்? அவர் எவ்விதம் பேசினாலும் சாம்பசிவம் அதற்குமேல் ஏதாயினும் சொல்லி வளைத்துக்கொள்கிறார். அவரிடம் எதிர்த்துப் பேசுவதற்கும் அது சமயமல்ல. தான் கருதி வந்த காரியம் நிறை வேறவேண்டும். ஆகையால் ராயர் முடிவான காரியத்தைத் துவக்கினார். " எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அது தாங்கள் மனதிற்குப் பிடிக்குமோ என்னவோ?" என்றார். சாம்பசிவம், " என்ன யோசனை?" என்றார். தாந்தோனிராயர், "வேறொன்றுமில்லை; துரை முதலில் ஆத்திரத்தில் எத்தனையோ விஷயங்களில் செய்த உத்தரவுகளை பிறகு நிதானமான யோசனை செய்து மாற்றியிருக்கிறார்.
விஷயம் உண்மையில் அவசரமானதென்றும், தாங்கள் இன்று அவசியம் பட்டணத்துக்குப் போக வேண்டுமென்றும், தயவுசெய்து மறுபடி ஆலோசனை செய்து ரஜாக் கொடுக்கவேண்டு மென்றும் ஒரு கடிதம் எழுதி என்னிடம் கொடுங்கள். நான் நேரில் போய் உண்மையான விஷயங்களைத் தெரிவித்து, நீங்கள் மிகுந்த மனோ சஞ்சலத்தினால் இன்று காலையில் வரவில்லை யென்று கூறி, அவரிடம் ரஜாப் பெற்றுக்கொண்டு வருகிறேன். என்னை அவர் இன்று மாலை நான்கு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் அப்போது இந்தக் காரியத்தை முடிக்கிறேன். நான் கேட்டுக்கொண்ட எந்த வேண்டு கோளையும் துரை இதுவரையில் மறுத்ததில்லை. நிச்சயமாக ரஜாக் கிடைக்கும். நீங்கள் ஊருக்குப் போகச் சித்தமாக இருங்கள்” என்றார்.
அதைக் கேட்ட சாம்பசிவம் கீழே குனிந்து யோசனை செய்தார். தமக்குக் கீழ் உத்தியோகஸ்தரான தாசில்தார் மூலமாகக் கடிதம் எழுதிக் கொடுத்து அவ்விதம் சிபார்சு செய்யச் சொல்வது அவருக்கு இழிவாகத் தோன்றியது. தவிர, அந்த உதவியை தாசில்தார் பெரிதாக மதித்துக்கொள்வார். உத்தியோக முறையில் மேலதிகாரியான தாம், பிறகு அவரை எவ்விஷயத்திலும் கண்டித்தல் முடியாமற் போகுமென்றும், அதனால் தாம் தமது கடமையிற் பிழைசெய்ய நேருமென்றும் நினைத்தார். நிற்க, பெரிய கலெக்டரும் தம்ப்ைபற்றி இழிவான அபிப்பிராயங் கெள்வாரென்று எண்ணினார். அவர் இவ்வாறு சிந்தித்திருக்கையில், உட்புறத்திலிருந்த படியே, இங்கு நடந்தவற்றைக் கவனித்திருந்த கனகம்மாள் சாம்பசிவத்தை நோக்கி உள்ளே வரும்படி சைகை செய்தாள்.
சாம்ப:- அம்மாள் கூப்பிடுகிறாள், என்னவென்று கேட்டுவிட்டு வருகிறேன். கொஞ்சம் இரும் - என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றார். பொங்கியெழுந்த தனது ஆத்திரத்தையும், விசனத்தையும் சொற்களாலும் அபிநயங் களாலும் அதற்கு முன் வெளிப்படுத்திக்கொண்டிருந்த கனகம்மாள், தாசில்தாரைக் கண்டவுடன் ஒடுங்கி உட்புறத்தில் உட்கார வேண்டியது கட்டாயமாய்ப்போனது; அவள் பெரிதும் துடிதுடித்தவளாக உட்கார்ந்து வெளியில் நடந்த சம்பாஷணையை நன்றாகக் கவனித்துக்கொண்டிருந்தாள். உள்ளே வந்த சாம்பசிவத்தை நோக்கி, ''அடே! வேற வழியில்லை; இப்போது மீன மேஷம் பார்த்துக் கொண்டிருந்தாயானால், அநியாயமாகப் பெண் நமக்கில்லா மல் போய்விடும்; இந்த உத்தியோகம் போனால் போகட்டும்; வேறு எந்த வேலை செய்தாயினும் பிழைத்துப்போகலாம். தங்க விக்கிரகத்தைப் போலப் பதினாறு வயதளவு வளர்த்த குழந்தை போனால் ஒருநாளும் வராது. யோசனை செய்யாதே; கடிதம் எழுதிக்கொடு. ஆபத்து வேளையில் கீழ் உத்தியோகஸ் தனுடைய உதவியையுந்தான் நாடவேண்டும்; வீண் கௌரவத்தைப் பாராட்டாதே. வயிறு வலிக்கிறதென்று வைத்தியரிடம் போய் மருந்து வாங்கி வரும்படி சேவக ரெங்கராஜுவை அனுப்பினாயே; அது ஒழுங்கா? அதைப் போல இதையும் ஒரு வயிற்று வலியாக நினைத்துக்கொள்; இந்த ஆபத்து வேளையில் எவ்விதமான குறைவு வந்தாலும் பார்க்கப்படாது" என்று உறுதியாகக் கூறினாள்.
சாம்பசிவம் வாய் திறவாதவராய் உடனே திரும்பி வந்தார். "ராயரே! அம்மாள் கூட நீர் சொல்லும் யோசனைப் படி செய்யலாமென்று சொல்லுகிறாள். நான் அப்படியே எழுதிக்கொடுக்கிறேன். தயவுசெய்து எடுத்துக்கொண்டு போம்" என்று சொல்லிய வண்ணம் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட ராயர், "நான் நான்கு மணிக்கு துரையிடம் போகிறேன்; உடனே அவருடைய உத்தரவை வாங்கிவிடுகிறேன். என்னை சீக்கிரம் அவர் அனுப்பிவிட்டால் நானே இவ்விடத்திற்கு நேரில் வருகிறேன். தாமசமாகும் போலிருந்தால், ஒரு சேவகனிடம் சொல்லி யனுப்புகிறேன்; நீங்கள் பிரயாணத்துக்கு ஆயத்தமாக இருங்கள்" என்று அன்பொழுகப் பேசிவிட்டு விடை பெற்றுக்கொண்டு தாந்தோனிராயர் வெளியில் நடந்தார்.
அன்று பகல் முழுதும் சாம்பசிவத்தின் வீட்டில் எல்லோரும் பட்டினி கிடந்தனர். அவரும், அவருடைய தாயாரும், மனையாட்டியும் , "ரஜா கிடைக்குமோ கிடைக்காதோ , கிடைக்கா விடில் என்ன செய்வது" என்று நினைத்து பெரிதும் மனக்கவலை கொண்டு ஏங்கித் தவித்த வராய் , தாந்தோனிராயரது வரவை ஆவலோடு எதிர்பார்த் திருந்தனர். ஈன்று வளர்த்த பெற்றோர் பெரியோருக்கன்றோ தமது குழந்தைகளின் அருமை உள்ளபடி தெரியும். மலட்டு மனிதரான பெருந்தேவியம்மாள் சாமாவையர் முதலிய பஞ்சைகளுக்கு ஒரு காலும் நெஞ்சு இளகாது அல்லவா!
சாம்பசிவத்தின் மைத்துனனான கிட்டான் தனது அக்காள் மகள் மேனகையைத் தனக்கு மணந்து கொடுக்க வில்லை யென்ற ஒருவகையான அதிருப்தியை நெடுங்காலமாய்த் தன் மனதில் வைத்திருந்தான் ஆயினும், அவளைத் தன் உயிருக்குயிராய் மதித்து வந்திருந்தவன். ஆதலின், அவளுக்குத் துன்பமிழைத்த பெருந்தேவி முதலியோரை ஒரே குத்தில் கொன்றுவிடுவதாகச் சொல்லிக் கொண்டும், பெரும் துயரையும் கோபத்தையும் கொண்டு இருந்தான். ஆயினும் அவனுக்கு மாத்திரம் பசி தாங்கக் கூடவில்லை. அவன் ஹோட்டலிற்குப் போய் சொற்பமாக போஜனம் செய்துவிட்டு வந்தான். அவர்கள்
பிற்பகல் 4 1/2 மணி நேரம் வரையில் பொறுத்திருந்தனர். அதற்குமேல் சும்மா விருக்க அவர்களால் இயலவில்லை. கிட்டனை தாந்தோனிராயர் வீட்டிற்கு அனுப்ப நினைத்தனர். அப்போது ஒரு சேவகன் திடீரென்று உட்புறம் நுழைந்து வில்லாக உடம்பை வளைத்து சாம்பசிவத்தை வணங்கினான். சாம்பசிவம், " என்னடா சங்கதி? எங்கிருந்து வருகிறாய்?" என்று பெரிதும் ஆவலோடு கேட்டார். சாம்பசிவத்தினிடம் நெருங்குவதற்கும் அவரிடம் பேசுவதற்கும் சேவகர்களுக் கெல்லாம் நிரம்பவும் அச்சம் ஆதலால், அவனுடைய உடம்பு நடுங்கியது; வாய் குழறிப்போயிற்று. "கலெக்டர் எசமான் - இல்லை எசமான்! தாலுகா எசமான்” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவன், தான் ஏதோ தவறுதலாகச் சொல்லிவிட்டதாக நினைத்து தன்னைத் திருத்திக்கொண்டான். அதற்குமேல் பேச மறந்து போய் விட்டான். அதைக்கண்டு கோபங்கொண்ட சாம்பசிவம், “என்னடா குட்டிச்சுவரே! விழிக்கிறாய்? சீக்கிரம் சொல்லித் தொலை. இந்த அற்ப சங்கதியைச் சொல்ல மாட்டாமல் தவிக்கிறாயே! தாசில்தாரிடமிருந்து தானே வருகிறாய்?" என்றார்
சேவகன் :- ஆமா எசமான்! சாங்கிசன் ஆயிப்போச்சுன்னு ராயர் எசமான் சொல்லச் சொன்னாங்க - என்றான்.
சாம்ப:- அவர் எங்கடா இருக்கிறார்? –
சேவ: - தொரே பங்களாவுல அவருக்கு வேலை இருக்குதாம். உள்ளற இருந்தவங்க வெளிலே அவசரமா வந்து என்னைக் கூப்பிட்டு, இந்தச் சங்கதியை ஒடனே ஓடியாந்து எசமாங்கிட்ட சொல்லிப்புட்டு வரச் சொன்னாங்க; ஒடனே உள்ள போயிட்டாங்க - என்றான்.
அதைக் கேட்ட சாம்பசிவத்தின் முகத்தில் சந்தோஷம் ஜ்வலித்தது. அன்று காலையில் எழுந்தது முதல் அப்போதே அவர் மனம் முதன் முதலாக ஒரு சிறிது மகிழ்ச்சி அடைந்தது.
"அப்படியா? கடிதம் ஒன்றும் கொடுக்க வில்லையா?" என்றார் சாம்பசிவம்.
சேவ: - இல்லை எசமான்! சாம்ப: - வேறொன்றும் சொல்லவில்லையா?
சேவ:- பட்டணம் போவலாம்; சரிப்பட்டா, எசமான் ரயிலுக்குப் போறத்துக்கு முன்னாலே, அவுங்க வந்து பார்க்கிறேன்னு சொன்னாங்க; அவ்வளவுதான்.
சாம்ப:- அப்படியானால் சரி; நீ போ - என்றார்.
உடனே சேவகன் வெளியில் வந்து “செத்தேன் பிழைத்தே"னென்று ஓட்டம் பிடித்து இரண்டு நிமிஷங்களில் தாசில்தார் வீட்டிற்குள் நுழைந்து அவருக்கெதிரில் வந்து நின்றான்.
தாசில் :- ஏனடா சொன்னாயா?
சேவ :- சொல்லிட்டேன்.
தாசில் :- என்ன சொன்னார்?
சேவ :- ஒண்ணும் சொல்லல்லீங்க; சரிதான் போன்னாங்க; வந்துட்டேன்.
தாசில் :- சேவகப் பக்கிரி எங்கே ?
சேவ :- டிப்டி கலெக்டரு ஊட்டு வாசல்லே ரெங்கராசுக்கிட்ட ஒக்காரவச்சிட்டு வந்திருக்கிறேன்.
தாசில் :- சரி; அவன் வந்தவுடன் உள்ளே அழைத்துவா, எங்கேயும் போய்விடாதே - என்று சொல்லி அவனை வாசல் திண்ணைக்கு அனுப்பினார்.
மாலை ஆறுமணி சமயமானது; சேவகப் பக்கிரி புன்னகை செய்தவனாய் உள்ளே வந்தான்.
தாசில் :- (புன்னகை செய்து கொண்டு) என்ன சங்கதி?
பக்கிரி :- டிப்டி கலெக்டரும், பெரியம்மாவும் போவப் போறாங்க , ரங்கராசு போவல்லே , டிக்கிட்டு வாங்கப் பணங்கொடுத்துட்டாங்க. அவன் 6.45 மணிக்கு ரயிலுக்குப் போயி டிக்கிட்டு வாங்கப் போறான். அவுங்க ரெண்டு பேரும் சரியா 7 மணிக்கு ரயிலுக்குப் போறாங்க.
தாசில் :- பட்டணத்து ரயில் சரியாக எத்தனை மணிக்குப் புறப்படுகிறது உனக்குத் தெரியுமா?
பக்கிரி :- ஏழு மணி இருவது நிமிஷத்துக்குப் பொறப்படுதாம்.
தாசில் :- சரி; நி நேராகப் போலீஸ் இன்ஸ்பெக்டர் புளுகு மாப்பிள்ளை வீட்டிற்குப் போய், நான் ராத்திரி எட்டு மணிக்கு அவர் வீட்டிற்கு வருகிறேனென்று சொல்லிவிட்டு வா - என்றார்.
அவன் "அப்படியே செய்யறேன்" என்று சொல்லி விட்டு வெளியிற் போய்விட்டான். தாந்தோனிராயர் தம்மை உடனே நன்றாக அலங்கரித்துக் கொண்டு வெளிப்பட்டு பெரிய கலெக்டருடைய பங்களாவை அடைந்து வெளியிலிருந்த ட பேதாரிடம் கலெக்டர் என்ன செய்கிறார் என்று கேட்டார். துரையும், துரைசானியும் வெளியில் உலாவப் புறப்படும் சமயம் என்றும், சாரட்டு தயாராக நிற்கிறதென்றும் கூறினான். துரை வண்டியில் ஏறு முன் அவரைக் கண்டு அவர் உலாவப்போவதை நிறுத்திவிட வேண்டு மென்று எண்ணங் கொண்டவராய் தாசில்தார் குடுகுடு வென்று உள்ளே ஓடினார். தாழ்வாரத்தில் ஏறிப் பதுங்கி ஒதுங்கி நின்றார் துரையைக் கண்டவுடன் குனிந்து சலாம் செய்து புன்முறுவல் காட்டி, "மன்னிக்கவேண்டும்; உலாவப் போகும் சமயம் போலிருக்கிறது" என்றார்.
துரை அவரைக் கண்டவுடன் புன்னகை செய்து அன்பாக, ''என்ன தாசில்தார்? என்ன சங்கதி? எதாவது அவசரமான காரியமுண்டா ?" என்றார். தாசில்தார் மிகவும் பணிவாக, "ஆம்; இருக்கிறது; ஆனால், துரைசானி அம்மாள் வெளியில் போக காத்துக் கொண்டிருப்பார்களே என்று தான் கவலையாக இருக்கிறது” என்றார்.
துரை, "நான்தான் தினம் உலாவப் போகிறேனே. அவசர காரியம் இருந்தால் நான் போகாமல் நின்று விடுகிறேன். துரைசானியை மாத்திரம் அனுப்புகிறேன்" என்ற வண்ணம், தமக்குப் பின்னால் நின்ற துரைசானியிடம் திரும்பி, " எனக்கு அவசரமாக செய்யவேண்டிய வேலை வந்து விட்டது; நீ மாத்திரம் போய்விட்டு வா!" என்று சொல்ல, அவள் புறப்பட்டு வண்டியில் ஏறிக்கொண்டு போய்விட்டாள்.
துரையும் தாசில்தாரும் உட்புறம் சென்று நாற்காலியில் உட்கார்ந்து கொண்டனர். தாந்தோனிராயர் தம்முடைய சட்டையிலிருந்த தந்தியை எடுத்து கலெக்டரிடம் நீட்டினார். துரை அதை வாங்கி ஆவலோடு படித்தார். முதலில் விஷயத்தைப் படிக்காமல், அது யாரால் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதைக் கவனித்துப் பார்த்தார். அது சென்னையிலிருந்து யாரோ ஒருவரிடத்திலிருந்து டிப்டி கலெக்டருக்கு வந்ததாக அறிந்தார்; பிறகு விஷயத்தைப் படித்தார். தந்தி அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது. "நேற்றைக்கு முந்திய நாளிரவு, நான் சேலத்திற்கு போயிருந்த காலத்தில், நீர் இங்கு வந்து உம்முடைய பெண்ணை அழைத்துக்கொண்டு போனதாக என் சகோதரிகள் சொல்லுகின்றார்கள். பெண்ணை ஒரு வாரத்திற்கு முன் கொணர்ந்து விட்ட நீர் இவ்வளவு சீக்கிரமாகவும் எவரிடமும் சொல்லாமலும், எங்களுடைய சம்மதியில்லா மலும், அழைத்துப்போன காரணமென்ன? உடனே தந்தி யனுப்பவும்" என்று எழுதப்பட்டிருந்த தந்தியைப் படித்து முடித்த பின்னர் துரை, " என்ன ஒன்றும் நன்றாக விளங்க வில்லையே! வரகுசாமி என்று கையெழுத்துச் செய்யப் பட்டிருக்கிறதே! அந்த மனிதர் யார்?" என்றார்.
தாசில்:- வரகுசாமி யல்ல. அது வராகசாமி. அவன் டிப்டி கலெக்டருடைய பெண்ணின் புருஷர்; அவனுக்குப் பட்டணத்தில் வக்கீல் உத்தியோகம்.
துரை:- அவர் இல்லாதபோது இவர் போய் பெண்ணை அழைத்து வந்த காரணமென்ன?
தாசில்:- அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதிலே தான் ஏதோ சூதிருக்கிறது. அதை பின்னால் யோசிப்போம். நேற்றைக்கு முன் தினம் இவருக்கு தாங்கள் ரஜாக் கொடுத்தீர்களோ?
துரை:- இல்லையே! ஒரு வாரத்திற்கு முன், தம்முடைய பெண்ணைப் புருஷன் வீட்டில் கொண்டுபோய் விடவேண்டு மென்று ரஜா கேட்டார். கொடுத்தேன். அது நன்றாக நினைவிருக்கிறது. இந்த நாலைந்து நாளாக அவர் ரஜாவே வாங்க வில்லையே! - ஆம் இன்று அவருடைய சுற்றுப் பிரயாணச் செலவின் பட்டியை (Travelling Allowance Bill) அனுப்பியிருக்கிறார். அது என் பெட்டியிலிருக்கிறது; அதைப் பார்க்கிறேன். (பெட்டியைத் திறந்து பார்க்கிறார்) ஐந்து நாட்களாக அம்பாசமுத்திரம் முதலிய ஊர்களிலல்லவோ சுற்றுப் பிரயாணம் செய்ததாக எழுதி ரூ.35 பெற்றுக் கொண்டிருக்கிறார்.
தாசில் :- (புன்னகை செய்து) பார்த்தீர்களா முழுப் புரட்டை? முந்திய நாள் இவர் பட்டணத்தில் இருக்கிறார். இங்கே கிராமங்களில் சர்க்கார் வேலை செய்ததாக எழுதி பணம் வாங்கியிருக்கிறார்.
துரை:- (அடக்கிய கோபத்தோடு) இன்று காலையில் நீர் போன போது, அவர் இதைப்பற்றி என்ன சமாதானம் சொன்னார்?
தாசில்:- நான் போகும் போதே தந்தியா பீசிற்குப் போய் இம்மாதிரி தந்தி வந்திருப்பதாக அறிந்துகொண்டேன். பிறகு அவரிடம் போனேன். ஆனால், ஏன் அவரிடம் போனேன் ஆய்விட்டது. அவர் இவ்வளவு கெட்ட மனிதரென்று நான் இன்று தான் கண்டேன். இத்தனை நாளாக அவர் எங்களைத் தாறுமாறாக வைவது வழக்கம்; இன்று ரஜா கொடுக்க வில்லை யென்று அவர் துரையவர்களையும், துரைசானி யம்மாளையும் வைத வசவுகளை வாயாற் சொல்ல முடியாது. எனக்கு வந்த ஆத்திரத்தில் வேறு யாராவது மனிதனா யிருந்தால், காலில் கிடந்ததை எடுத்தே அடித்திருப்பேன்? என்னடா மேலதிகாரியைப் பற்றி இப்படிச் சொல்லுகிறனே என்று துரையவர்கள் நினைக்கப்படாது. அவர் தங்களைத் தூஷித்தது அவ்வளவு அசங்கியமாக இருந்தது.
துரை:- (மிகவும் ஆத்திரமாக) என்னவென்று திட்டினார்.
தாசில் :- தயவு செய்து மன்னிக்க வேண்டும். நான் சொன்னால் துரையவர்களுக்கு வருங்கோபத்தில், என்னைக் கூட அடித்துவிடுவீர்கள்.
துரை:- அவர் சொன்னதற்காக உம்மிடம் கோபிப்பதேன், பாதகமில்லை; சொல்லும்.
தாசில் :- (மிகவும் தயங்கி) தாங்கள் அம்பட்டனுடைய பிள்ளையாம்; சின்ன ஜாதிப் பயலாம்; அற்பத்தனம் உள்ளவர்களாம்! குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்த மாதிரி உங்களிடம் இந்த ஜில்லாவை ஒப்புவித்து விட்டார் களாம். தாங்கள் சென்ற வருஷம் நீண்டகால ரஜாவின் மேல் சீமைக்குப் போயிருந்த காலத்தில் வெங்கம்பட்டி வாண்டையார் உங்களை சீமையில் பார்த்தாராம்; அப்போது நீங்கள் உங்களுடைய அப்பனுக்குத் தலை சிரைத்துக் கொண்டிருந்தீர்களாம். உங்கள் வீடு, குப்பைத்தொட்டி போலிருந்ததாம். அவரை உட்காரவைக்க இடங்கூட இல்லையாம்; இப்பேர்பட்ட கீழ்ச்சாதி நாய்க்கு மனதிரக்கம் உண்டாகாதாம். அவர் சொன்ன ஆபாசமான வார்த்தைகளை வாயில் வைத்துச் சொல்வது கூட அவமானம் ; இப்படிப்பட்ட மனிதர் நாளைக்கு தாம் ஒன்றும் சொல்ல வில்லையே யென்று சொன்னாலும் சொல்லிவிடுவார். என்னவோ இந்த மனிதருக்கு கெட்டுப்போகும் காலம் கிட்டிவிட்டதென்று நினைத்து நான் பதில் பேசாமலிருந்து விட்டேன் - என்றார்.
அதைக் கேட்ட துரைக்கு வீராவேசம் பொங்கியெழுந்து கை, கால், மீசை முதலியவை துடித்தன. கண்கள் கோவைப் பழமாகச் சிவந்தன. அதுவரையில் அவர் அத்தகைய இழிவான சொற்களைக் கேட்டறியாதவர். ஆகையால் அது சகிக்கக்கூடாத அவமானமாயிருந்தது. அவர் தம்முடைய படபடப்பை அடக்கிக்கொள்ள பத்து நிமிஷ நேரமானது. வெங்கம்பட்டி வாண்டையார் அவரைச் சீமையில் கண்டது உண்மை. ஆகையால், சாம்பசிவம், அவ்வாறு நிச்சயமாகச் சொல்லியிருப்பார் என்று துரை எண்ணிக்கொண்டார்.
துரை :- சரி; தூஷித்ததை விடுத்து மேலே நடந்த விஷயத்தைச் சொல்லும்; அவருக்கு எதற்காக ரஜா வேண்டுமென்று கேட்டாராம்?
தாசில் :- அவருடைய பெண்ணுக்கு உடம்பு ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும், அவர் உடனே வந்தால் முகத்தில் முழிக்கலாம் என்றும் தந்தி வந்திருப்பதாக என்னிடம் பெரும் புளுகாய்ப் புளுகினார். காற்றில் பறந்து வந்து அவர் வீட்டில் முற்றத்தில் கிடந்த இந்தத் தந்தியை நான் தற்செயலாகக் கண்டேன். உங்களுக்குக் காட்டலாம் என்று எடுத்து வந்தேன்.
துரை:- பெண்ணைத்தான் இவர் இங்கே அழைத்து வந்துவிட்டாரே, பெண் நோய் கண்டிருக்கிறாள் என்று சொல்லி ரஜா வாங்கிக்கொண்டு பட்டணம் போவதேன்?
எனக்கொன்றும் விளங்கவில்லையே?
தாசில் :- இது சாதாரணமாக உலகத்தில் நடக்கக்கூடிய விஷயமாயிருந்தால் எளிதில் விளங்கியிருக்கும். இது அசாதாரணமான காரியம்; வேறு எங்கும் நடக்காத அநியாயம். சேவகர்கள் இதைப்பற்றி மிகவும் இழிவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்; அப்போது அவர்கள் சொன்னதை நம்பாமல், அவர்களைக் கண்டித்தேன். அது இப்போது நிஜமாய்ப் போய்விட்டது; இந்த மனிதர் எவ்விதமான பஞ்சமா பாதகங்களுக்கும் துணிந்தவராக இருக்கிறார். இப்பேர்ப்பட்ட மனிதர்களாலேயே பிராம்மண ஜாதிக்கு ஒரு இழிவு உண்டாய்விட்டது. இதைச் சொல்ல வாய் கூசுகிறது.
துரை:- (ஏளனமாக) இந்தப் பெரிய மனிதருடைய யோக்கியதையைச் சொன்னதுதான் சொன்னீர். முழுவதும் சொல்லும்; கேட்டு சந்தோஷப்படுவோம். பெண் இப்போது இங்கேதானே இருக்கிறாள்?
தாசில் :- பெண்ணை நான் பார்க்க முடியவில்லை. சேவகர்களிடம் விசாரித்தேன், அவர்கள் பெண் இங்கே வரவில்லை யென்று சொல்லுகிறார்கள். உண்மையான விஷயத்தை உங்களுக்குச் சொல்லத் தடையொன்றுமில்லை. இந்தப் பெண் அபூர்வமான அழகுடையவளாம். அவருக்கு இவள் ஒரே குழந்தை. ஆதாலால், இவளை விடுத்து அவர் ஒருநிமிஷங்கூட பிரிகிறதில்லையாம்; இரண்டு வயது முதல் இவர் அவளைத் தம்முடைய படுக்கையிலேயே விடுத்துக் கொண்டு படுத்துக்கொள்வது வழக்கமாம்; இவள் இரண்டு வருஷத்திற்கு முன் புஷ்பவதியானாளாம்; புஷ்பவதியான பிறகும் இவர் அப்படியே செய்துவந்தாராம். ஒரு வருஷமான பிறகு புருஷன் வீட்டார் பெண்ணை அனுப்பும்படி கேட்டார்களாம். மருமகன் இங்கேயே வந்திருந்து வக்கீல் வேலை செய்யட்டும் என்று இவர் சொல்லிவிட்டாராம் ; பிறகு இவருடைய தாய் மனைவி அண்டை அயலார் முதலியோரின் தொல்லைக்குப் பயந்து, பெண்ணை புருஷன் வீட்டுக்கு அனுப்பினாராம். பெண் அங்கு சென்று ஐந்தாறு மாசங்கள் இருந்தபின், புருஷன் தன்னை அடித்து வருத்துவதாக தகப்பனுக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதை இவர் ஒரு பெருத்த ஆதாரமாக வைத்துக் கொண்டு சேவக ரெங்கராஜு முதலியோரின் பக்க பலத்தோடு பட்டணம் போய் மருமகப் பிள்ளையை அடித்துவிட்டு பெண்ணைப் பலவந்தமாக அழைத்துவந்து விட்டார். சென்ற ஒரு வருஷகாலமாக பெண் இங்கேயே இருந்தது. அதற்குள் ரகசியம் நன்றாய் வெளியாகி விட்டது. விஷயம் இன்னதென்று நான் விரிவாகச் சொல்ல வேண்டுவதில்லை யென்று நினைக்கிறேன். அவர் சுற்றுப் பிரயாணம் போகும் போ தெல்லாம் அவரும் பெண்ணுமே போவது வழக்கம். வீட்டிலிருந்தாலும் வெளியிற் சென்றாலும், அவருக்கும் பெண்ணுக்கும் ஒரு படுக்கைதான். சேவகர்கள், கிராம அதிகாரிகள், கிராமத்து ஜனங்கள் யாவரும் இதைக் கண்டு காரித் துப்புகிறார்கள். பெண் வீட்டுக்காரர், வருடைய வீட்டிலுள்ள தாயார், மனைவி முதலிய யாவரும் இவரை வற்புறுத்தி தூஷித்தமையால் இரு வாரத்திற்கு முன் பெண்ணைக் கொண்டு போய் விட்டார். இரண்டு நாளைக்கு முன் இவர் என்ன நினைத்துக்கொண்டாரோ என்னவோ இரகசியமாய்ப் போய் பெண்ணை அழைத்து வந்திருக்கிறார்; ஆனால், பெண்ணை வீட்டிற்கு அழைத்துவரவில்லை. வேறு எவ்விடத்திலோ இரகசியமாக வைத்திருக்கிறார். மருமகப் பிள்ளையின் தந்தியைப் பார்த்தவுடனே தமக்கொன்றுந் தெரியாதென்றும், தாம் பட்டணத்திற்கு வரவில்லை யென்றும், பெண் இவ்விடத்தில் இல்லை யென்றும் பதில் தந்தி அனுப்பி விட்டார். தம்முடைய தாயாரும், தாமும் போய்ப் பட்டணத்தில் மருமகப்பிள்ளையோடு கட்டியழுது விட்டு வர உத்தேசம் போலிருக்கிறது. அதற்காகவே ரஜா கேட்டிருக்கிறார் - என்றார்.
அந்த வரலாற்றை கேட்ட துரை பெரிதும் வியப்படைந்து கல்லாய்ச் சமைந்து பேச்சு மூச்சற்று உட்கார்ந்துவிட்டார்; தாசில்தார் சொன்னது தந்திக்குப் பொருத்தமாக இருந்தது. மருமகப் பிள்ளை இல்லாத சமயத்தில், அவர்களுடைய அனுமதியின்றி டிப்டி கலெக்டர் தமது பெண்ணை அழைத்து வந்து விட்டதாக எழுத்து மூலமான சாட்சி ஏற்பட்டிருந்தது. தாம் அவசரமாகப் பட்டணம் போக வேண்டுமென்று அவர் காலையில் எழுத்து மூலமாக ரஜாக் கேட்டிருக்கிறார். அதற்கு முன் பெண் ஒரு வருஷமிருந்து ஒருவாரத்திற்கு முன்னமே தான் கொண்டுபோய்விடப்பட்டாள். அவற்றை யெல்லாம் நன்றாக யோசித்த துரை, தாசில்தார் சொன்னது நிஜமென்று நம்பினவராய் மூக்கில் விரலை வைத்து , " என்ன ஆச்சரியம்! இது கேவலம் மிருகம் செய்யக்கூடிய காரியமே யொழிய மனிதர் செய்யத் தகுந்ததல்ல. இவன் என்னுடைய மாமனாராக மாத்திரம் இருந்தானானால், இவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பேன். இவன் லஞ்சம் வாங்கினதைக் கூட நான் இதுவரையில் நம்பாமல் இருந்தேன். இப்போது பார்த்தால் இந்த மனிதன் எந்தக் குற்றத்தையும் செய்யக்கூடியவனாக இருக்கிறான். சே! இன்று சாயுங்காலம் இந்தச் சங்கதியா என் காதில் விழவேண்டும்! பாவம்! பாவம்!!" என்று கூறி விசனித்தார்.
தாசில்:- இதோடு நிற்கவில்லை. நீங்கள் ரஜா கொடுக்க மாட்டேனென்று உத்தரவு செய்தீர்களே! அவர் அதை மதித்தாரா? இதோ 7 1/2 மணிக்குப் பட்டணம் போகிறார். இவரும் இவருடைய தாயாரும் போகிறார்கள். சுற்றுப் பயணம் போவதாகச் சொல்லிவிட்டுப் பட்டணம் போகிறார். இப்போது 6 1/2 மணியாகிறது. துரை யவர்கள் இப்போது ரயிலுக்கு வந்தால் அதையும் ருஜுப்படுத்தி விடுகிறேன் என்றார்.
துரை :- சரி, அதையும் பார்த்துவிடுகிறேன். எழுந்திரும் போகலாம் - என்று கூறி எழுந்தார்.
இருவரும் உடனே புறப்பட்டு அரைக்கால் மைல் தூரத்திலிருந்த ரயில் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தனர். அப்போது மணி ஆறே முக்கால் ஆயிருந்தது. இருவரும் டிக்கட்டு கொடுக்கப்படும் இடத்திற்குப் போய், அவ்விடத்தில் நின்ற சேவக ரெங்கராஜுவைக் கண்டனர். இவர்களைக் கண்ட ரெங்கராஜு திடுக்கிட்டு நடுங்கி துரைக்கும், தாசில்தாருக்கும் குனிந்து சலாம் செய்தான்.
தாசில் :- எங்கடா வந்தாய்?
ரெங்க:- எசமான் ஊருக்கு போறாரு, டிக்கெட்டு வாங்க வந்தேன்.
தாசில் - எந்த ஊருக்கு?
ரெங்க :- பட்டணத்துக்கு.
தாசில் :- யார்யார் போகிறார்கள்?
ரெங்க :- எசமானும் அவுங்க அம்மாவும்.
தாசில்:- என்ன விஷேசம்?
ரெங்க :- எசமானுடைய மகளுக்கு உடம்பு அசௌக்கியமாம், அதுக்காவ போறாங்க.
தாசில் - பட்டணத்தில் எசமானுடைய மருமகப்பிள்ளை எந்தத் தெருவில் குடியிருக்கிறார்?
ரெங்க :- தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலே - என்றான்.
அப்போது துரை, "பட்டணத்துக்கு இப்போது எவ்வளவு ரூபா கட்டணம்?" என்றார்.
அந்தக் குறிப்பை அறிந்த தாந்தோனிராயர் , "அடே! டிக்கெட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாய்? எங்கே டிக்கெட்டைக் கொடு" என்று கூறி, இரண்டு டிக்கெட்டு களையும் அவனிடமிருந்து வாங்கி துரையினிடத்தில் கொடுக்க, அவர் அவைகளில் பட்டணம் என்னும் பெயர் இருக்கிறதா என்பதையும் அவற்றில் இருந்த இலக்கத்தையும் பார்த்துக் கொண்டு திருப்பிக் கொடுத்துவிட்டனர்.
தாசில்:- எசமான் இங்கே வந்துவிட்டாரா?
ரெங்க:- இன்னமில்லை, 7- மணிக்கு வருவாங்க- என்றான்.
அதன் பிறகு இருவரும் அவனை அவ்விடத்திலேயே விடுத்து அப்பாற் சென்று ஒரு மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழிந்தது; டிப்டி கலெக்டரும், கனகம்மாளும் வண்டியில் வந்து இறங்கினார்கள். ரெங்கராஜு தன் கையில் வைத்திருந்த இரண்டு டிக்கெட்டுகளையும் சாம்பசிவத்தினிடம் கொடுத்தான்; அவர் வாங்கிக் கொண்டார். மூவரும் உள்ளே போனார்கள். இரண்டொரு நிமிஷ நேரத்தில் சென்னைக்குப் போகும் வண்டியும் வந்தது. சாம்பசிவமும், கனகம்மாளும் வண்டியில் ஏறிக்கொண்டனர். யாவற்றையும் மறைவிலிருந்த கலெக்டர் நேரில் பார்த்தார்.
தாசில்:- பார்த்தீர்களா மனிதருடைய யோக்கியதையை? ரஜா கொடுக்க முடியாதென்று நீங்கள் உத்தரவு அனுப்பியிருக்கிறீர்கள். அதை மீறிக்கொண்டு போகிறார். ரெங்கராஜுகையில் டிக்கட்டுகளுடன் நின்றபோது, நாம் கண்டு கொண்டபடியால், அவன் உண்மையைச் சொன்னான்; இல்லாவிடில் சுற்றுப்பிரயாணம் போயிருப்பதாகத் தான் அவனும் சொல்லுவான்; இவர் பட்டணத்துக்குப் போய்த் திரும்பி வந்து, எங்கேயாவது சுற்றுப் பிரயாணம் போனதாக எழுதி பணம் வாங்கப் போகிறார்; பாருங்கள் - என்றார்.
நிகழ்ந்தவை யாவும் கனவோ வென்று ஐயமுற்று துரை திகைத்தார். சாம்பசிவம் எவ்விஷயத்திலும் அயோக்கிய தனமாக நடக்கக்கூடியவ ரென்றும் எத்தகைய இழிவான காரியத்தையும் செய்யப் பின்வாங்காதவர் என்றும் நினைத்து, அவர் விஷயத்தில் என்ன செய்வதென்பதை பற்றி யோசனை செய்து தாந்தோனியாரிடம், “நாம் இப்போது என்ன செய்யலாம்?”- என்றார்.
தாசில்:- அவர் இரண்டு நாளைக்கு முன்னர் ரஜா இல்லாமல் பட்டணம் போய், உத்தியோக முறையில் அம்பாள் சத்திரம் முதலிய இடங்களுக்குப் போனதாக பணம் வாங்கி, சர்க்காரை ஏமாற்றியிருக்கிறதற்கு எழுத்து மூலமான ருஜூவிருக்கிறது. அதைக் கொண்டு அவரைத் தண்டனை செய்விக்கலாம். தவிர, இப்போது ரஜா இல்லாமல் திரும்பவும் பட்டணம் போகிறார். இது வேலையினின்று நீக்கப்படத் தக்க குற்றம். இவற்றைத் தவிர, லஞ்சம் வாங்கின விஷயங்கள் இருக்கின்றன. இப்போதே நாமொன்று செய்யலாம்; பட்டணத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரிக்கு ஒரு தந்தி கொடுத்து, தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் இருக்கும் வக்கீல் வராகசாமி அய்யங்கார் வீட்டிற்கு, தஞ்சை டிப்டி கலெக்டர் இன்னார் நாளை காலையில் வருகிறார் என்றும், அவரை அப்படியே கைதி (Arrest) செய்யவேண்டும் என்றும் உத்தரவு அனுப்புங்கள். அவர் பட்டணத்தில் ரஜா இல்லாமல் இருந்ததற்கும், அது சாட்சியாகும் - என்றார்.
அதைக் கேட்ட துரை கால் மணி நேரம் யோசனை செய்தார். அருகிலிருந்த தந்தியா பீசில் ஒரு தந்திக்காகிதம் வாங்கிவரச்செய்து அதில் ஏதோ விஷயத்தை எழுதி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு அதை உடனே அவசரமாக அனுப்பும்படி சொல்லிக் கொடுத்தார். அவ்வாறே தந்தி உடனே அனுப்பப்பட்டுப் போனது.
---------------
அதிகாரம் 15 - கண்டதும் பொய் விண்டதும் பொய்
பத்தாவது அதிகாரத்தின் முடிவில், நைனா முகம்மது மரக்காயன், கட்டிலின் மீது படுத்திருந்த பெண்மணியை மேனகா வென்று நினைத்து அவளைப் புகழ்ந்தும் தனது மனைவியைத் தூற்றியும் அருகில் நெருங்கி அவளது முகத்தை வலுவாகத் திருப்ப , தன் மனைவி நூர்ஜஹானே அவ்விதம் படுத்திருந்தவள் என்று அறிந்து திடுக்கிட்டு அச்சங்கொண்டு மயங்கி வீழ்ந்து விட்டான் என்பது சொல்லப்பட்டதல்லவா.
நூர்ஜஹான் என்ற பெண்ணரசியின் அப்போதைய மனோ நிலைமையை உள்ள விதம் அறிந்து கூற யாரே வல்லவர் மனிதர் முதல் விலங்கு பறவை புழு முதலிய இழிந்த ஜெந்துக்கள் வரையிலுள்ள ஆன்மாக்கள் எல்லாம் எதைப் பொறுக்கினும் பொறுக்கும், ஆனால் அதனதன் ஜோடி அதன் கண்முன்னாகவே இன்னொன்றுடன் விபச்சாரம் செய்வதை மாத்திரம் பொறுத்துச் சும்மாவிருக்க இயலாத காரியமல்லவா? அதனால் உண்டாகும் கோபமும், பகைமையும், மூர்க்கமும் அளவிறந்தனவாகும்; உடனே குத்து, வெட்டு, கொலை முதலிய கொடிய செய்கைகள் உண்டாதல் நிச்சயம். அப்படியே தனது கணவனுடைய கன்ன கடூரமான சொற்களையும், செய்யத்தகாத செயலையும், அன்றிரவு ஆரம்பம் முதல் கேட்டும் கண்டுமிருந்த நூர்ஜஹானின் மனதில் எழுந்த கோபமும் பொறாமையும் ஒரு சண்டமாருதத்திற்கு இணயாக இருந்ததென்று கூறுவதும் குன்றக் கூறியதாகும். "மேலும் என்ன நடக்குமோ பார்க்கலாம்" என்று நினைத்து நினைத்து அவள் மிகவும் பாடுபட்டு தம் மனத்தின் நிலைமையை வெளியிற் காட்டாமல் அடக்கிக் கொண்டிருந்தாள். அன்று நிகழ்ந்தவை யாவும் கனவோ அன்றி உண்மையோ என்று ஐயமுற்றாள். அதுகாறும் தன்னிடத்தில் பரம் யோக்கியனைப் போலவும் நடித்து வந்த தனது கணவன், தன்னிடம் வரும் போதெல்லாம், "கண்ணே !" என்றும் ''முத்தே!" என்றும் கொஞ்சிக் குலாவி, ''உன்னை ஒரு நொடி விடுத்தாலும் உயிர் வாழ்வேனா" என்று சொல்லி வஞ்சித்துத் தன் மனதையும் காதலையும் ஒருங்கே கொள்ளை கொண்ட கணவன் - தன் கண்ணெதிரில் அப்படிச் செய்ததை உண்மை யென்று அவள் மனது எளிதில் நம்பவில்லை. அவளுக்கு யாவும் வியப்பையும் திகைப்பையும் கொடுத்தன. சித்தப்பிரமை கொண்டவளைப் போல உருட்டி உருட்டி விழித்தாள். அவளது மனத்தில் எழுந்த உணர்ச்சிகளும் எண்ணங்களும் புயற் காலத்தில் கடல் கொந்தளிப்பு ஆர்ப்பரித்தலைப் போல இருந்தன. ஆனால், திகைப்பு என்னும் பூட்டினால் வாயின் சொற்கள் பூட்டப்பட்டு வெளிப்படாமல் தடைபட்டு நின்றன.
அவள் ஒரு பெரிய குடும்பத்தில் உதித்த உத்தமி ; நற்குண நல்லொழுக்கத்திற்கு இருப்பிடமானவள்; தமிழ் நாட்டுப் பெண்ணாகையால் அவள் இந்துஸ்தானி பாஷையிற் பேசுதல் மாத்திரம் அறிவாள். தமிழ் ஆங்கிலம் முதலிய இரண்டு பாஷைகளிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவள்; அவ்விரண்டு பாஷைகளிலும் கவிகள் பாடும் திறமை வாய்ந்தவள்; அழகிலும், புத்தியிலும் சிறந்தவள்; இயற்கை அழகும் குணமும் வாய்ந்த அவள், கல்வி கேள்விகள் நிரம்பப் பெற்று பட்டை தீட்டப்பெற்ற வைரக்கல்லைப் போல, தனிச்சுடராய் விளங்கினாள். அவளுடைய தந்தை சென்னை கவர்னரின் நிருவாக சபையில் ஒரு அங்கத்தினர்; அவர் செல்வாக்கும், செல்வமும் நிரம்ப உடையவர். அவரது அருமைப் புத்திரியாயிருந்தும் அவள் செருக்கென்பதே அற்றவளாய், பெண்களுக்கெல்லாம் நற்பெயரும் மேம்பாடும் தேடிக் கொடுக்கும் சட்டகமாய் விளங்கினாள். அவளது நடைஉடை தோற்றம் யாவும் மிருதுத் தன்மையையும், பொறுமையையுமே சுட்டின. அவள் தமிழ்ப் பாஷையிலுள்ள இதிஹாச புராணங்கள், நீதி நூல்கள், சமய நூல்கள் முதலியவற்றை நன்றாகப் படித்தவள் ஆதலின் இந்துக்களின் சகோதர வாஞ்சையையும் மனமார்ந்த அன்பையுங் கொண்டவள். பரிசுத்தமான பழக்க வழக்கங்களை உடையவள். கணவனிடம் பக்தியும், நம்பிக்கையும் நிரம்பக்கொண்டவள்; அவனே தனது உயிரென மதித்தவள். அத்தகைய கபடமற்ற ஸ்திரீ ரத்னம் தன் விஷயத்தில் நைனா முகம்மது அந்தரங்கத்திற் செய்து வந்த வஞ்சகங்களை அறிந்து, அதற்குப் போதிய ருஜுவையும் கண்ணிற்கு எதிரேகாண்பாளாயின், அவள் மனது எப்பாடுதான் படாது? மாயாண்டிப் பிள்ளையின் கடிதங்களைக் கண்ட போது வராகசாமியின் மனம் எப்பாடு பட்டதோ, மேனகாவைப் பற்றி எவ்வகையான எண்ணங்களும் உணர்ச்சிகளும் கொண்டதோ அவற்றைக் காட்டினும் பதின்மடங்கு அதிகரித்த அல்லலையும் ஆத்திரத்தையும் நூர்ஜஹானது மனம் பெற்றது; அவள் புருஷனாகவும், நைனாமுகம்மது மனைவியாகவும் இருந்தால், தன் கண் முன்னே கண்ட விபசார நடத்தையின் பொருட்டு நைனா முகம்மதைக் கத்தியாற் குத்தி சித்தரவதை செய்து கண்டதுண்டமாக்கியிருப்பாள். அல்லது நைனாமுகம்மதுவின் கண் காண அவன் மனைவி அவ்விதமான தீய செயலைப் புரிய முயன்றிருந்தால், அவனும் அப்படியே செய்வான் என்பதற்கு ஆட்சேபனையில்லை. ஆனால், பெண் பேதையாகி அவள் அவனை அவ்வாறு தண்டித்தல் கூடுமா? கணவன் மீது அதிகாரமற்ற அபலையின் மனதில் எவ்வளவு வீராவேசம் தோன்றினாலும் அதனால் யாது பயன்? கணவன் மனைவி என்னும் சம்பந்தத்தில் பலவான் கட்சியே நீதியானதாக வல்லவோ இருந்து வருகிறது. நூர்ஜஹான் யாது செய்தாள்? ஆண்மக்களைப் போல கொல்ல வேண்டும் என்னும் நினைவைக் கொண்டாளா? இல்லை; தனது ஆருயிர்க் கணவனது தேகம் - தனக்கே உரிய பொருளாகிய தன் கணவனது - தேகம் அன்னிய மாதரால் தீண்டப்-படுவதா வென்னும் பொறாமை ஒன்றையே கொண்டாள். அவனது தேகத்தின் மதிப்பு அவள் மதிப்புக்கு முன்னிலும் கோடி மடங்கு உயர்ந்து தோன்றியது. பிற மாதர் மீது சிதறிச் சென்றிருந்த அவனது ஆசை முழுதும் தன்மீது திரும்பிவிட, இந்த உலகத்தை அவள் கொடுக்கக் கூடுமாயின், அப்படியே செய்துவிடுவாள். கணவனைத் தண்டிக்க வேண்டுமென்னும் விருப்பத்தை அவள் கொள்ளாவிடினும் அவன் விஷயத்தில் பெரிதும் அருவருப்பும், ஆத்திரமும் அடைந்தாள். உடனே எழுந்து அவனை விடுத்து அப்பாற் போய்விட வேண்டுமென்னும் பதைபதைப்பு மாத்திரம் தோன்றியது. படுத்திருந்தவள் சுருக்கென எழுந்து உட்கார்ந்தாள்.
அதற்குள், முதல் பயத்திலிருந்தும் மன அதிர்ச்சியி லிருந்தும் தெளிவடைந்த நைனா முகம்மது சிறிது துணிவைப் பெற்றான். அவன் தனது சபல புத்தியினாலும் தன்னோடு பழகும் மற்ற புருஷரின் கெட்ட நடத்தையைக் கண்டும் விபச்சாரத்தில் விருப்பம் கொண்டவனாயினும், அவன் தன் மனைவியின் பாண்டித்தியம், புத்திசாலித்தனம், நற்குணம் முதலியவற்றைக் கண்டு அவளிடம் உள்ளார்ந்த அச்சங் கொண்டவன்; செல்வாக்கையுங் கருதி, அவளிடம் பெருத்த மதிப்பும் வைத்திருந்தவன். ஆகையால் அவன் அவளைக் கேவலம் தனக்குள்ளடங்கிய மனைவி தானே என அசட்டை செய்யத் துணியவில்லை. அவள் வெளியிற் போய் தனக்கு எவ்விதமான தீங்கைச் செய்வாளோ , விஷயத்தை அவளுடைய தந்தை அறிவாரானால், அவர் எவ்விதமான துன்பம் இழைப்பாரோ என்றும் பெரிதும் அச்சமும் கவலையும் கொண்டான். அவளால் மேனகா விடுவிக்கப்பட்டுப் போனாள் என்பதை உடனே யூகித்துக்கொண்டான். ஆதலின், மேனகா தன் கணவனிடம் சென்று நிகழ்ந்ததைத் தெரிவிப்பாளாயின் அதனால் தனக்கு எவ்வகையான பொல்லாங்கு சம்பவிக்குமோ என்று ஒரு புறத்தில் கலங்கினான்; மேனகா எங்கு சென்றாள் என்பதை இவளிடம் அறிந்து, மேனகா இன்னமும் தன் வீட்டில் இருந்தால், தன்னைக் காட்டிக் கொடாமலிருக்க நூர்ஜஹான் மூலமாக ஏற்பாடு செய்ய நினைத்ததும் அன்றி, தன் மனைவியின் கோபத்தையும் தணித்து அவளுடைய அன்பைத் திருப்பவும் நினைத்தான்; இவ்விரண்டு காரியங்களும் மிகவும் எளிதில் சாதிக்கக் கூடிய விஷயங்களல்லவா! அவ்வெண்ணம் மலையை விழுங்கினவன் அதை ஜீரணம் செய்து கொள்ள சுக்குக் கஷாயம் குடிக்க நினைத்தது போலிருந்தது! எழுந்து உட்கார்ந்த தன் மனைவியின் கரத்தை அவன் மெல்லப் பிடித்தான். ஆல கால விஷத்தைக் கொண்ட கொடிய நாகம் தனது கையின் மேல் பட்டதைப்போல மதித்த நூர்ஜஹான், தனது கையை அப்பால் இழுத்துக்கொண்டு விரைந்து கட்டிலை விட்டுக் கீழே இறங்கினாள். அவனும் எழுந்து பாய்ந்து அவளை இறுகக் கட்டிப் பிடித்தான். நூர்ஜஹானுக்கு அடக்க முடியா ஆத்திரமும், அழுகையும், அருவருப்பும் மிகுந்த உரத்தோடு பொங்கி யெழுந்தன. அவனைக் காண்பதற்கும் அவளது கண்கள் கூசின ; தன் சுந்தர வதனத்தை அப்புறம் திருப்பிய வண்ணம் பதைபதைத்தவளாய்த் தன்னை விடுவித்துக் கொண்டு போய்விடவேண்டும் என்னும் ஆவலோடு நின்றாள். நைனா முகம்மது அவளை முரட்டாட்டமாக இழுத்துக் கட்டிலில் உட்காரவைத்து, தானும் அவளுக்கருகில் உட்கார்ந்து அவளது மோவாயை தன் வலக்கரத்தால் தாங்கி முகத்தைத் தன் பக்கம் திருப்பி நயமாக, "அப்பாடா! எவ்வளவு கோபம்! எவ்வளவு ரோஷம் நீ ஆண் பிள்ளையாக மாத்திரம் இருந்தால் இந்நேரம் என்பாடு திண்டாட்டமாயிருக்கும்" என்று மிகவும் கொஞ்சிய குரலால் பேசி, தனது முகத்தை அவளுடைய முகத்திற்கு அருகில் கொணர்ந்து, "கண்ணே! இவ்வளவுதானா உன்புத்தியின் மேன்மை! இதையெல்லாம் உண்மை யென்று நினைத்துக் கொண்டாயா? ஆகா! நீ பிராமணப்பெண்ணைப் போலவே இருக்கிறாயே! இம்மாதிரி உடைதரிக்க நீ எங்கு கற்றுக் கொண்டாய்? இந்த உடையில் உன் அழகே குறைந்து போய்விட்டதே! இதை நீ சீக்கிரம் விலக்கி விட்டால், அதன் பிறகே என் கண்ணாட்டியான நூர்ஜஹான் தன் இயற்கை அழகில் விளங்குவாள். இதையெல்லாம் உண்மை யென்று நினைக்காதே!" என்று தேன் போல மொழிந்து முகத்தில் முத்தமிட முயல, அவள் மகா அருவருப்போடு தனது முகத்தை அப்பால் இழுத்துக்கொண்டு, " எதை யெல்லாம்?" என்று கேட்டாள்.
நைனாமுகம்மது, " என்ன ஒன்றையும் அறியாதவளைப் போலக் கேட்கிறாயே! நடந்ததையெல்லாம் நான் திரும்பச் சொல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறாயா? அதிருக்கட்டும், இந்தப்பெண் எங்கிருக்கிறாள்? இங்கேயே இருக்கிறாளா? தன்னுடைய வீட்டுக்குப் போய்விட்டாளா? அதைத் தெரிவி! கோபிக்காதே! என் சீமாட்டியல்லவா! "ஆறுவது சினம்" என்று தினந்தினம் படித்துக் கொண்டேயிருப்பாயே; அதை நினைத்துக்கொள். இதன் உண்மையையெல்லாம் நான் உனக்குப் பின்னால் விரிவாய்ச் சொல்லுகிறேன். அப்போது நான் குற்றமற்றவன் என்று நீ நிச்சயமாக அறிவாய். முதலில் அவள் எங்கிருக்கிறாள் என்பதைத் தெரிவி" என்று தந்திரமாக மொழிந்தான்.
நூர்ஜஹான் ஒன்றையும் அறியாதவளைப் போல, "பெண்ணா ! எந்தப் பெண்?" என்றாள். நைனா முகம்மது புன்சிரிப்பைக் காட்டி, "ஆகா என்ன வேஷம் இது? அவளை உனக்குத் தெரியாதா? கொஞ்ச நேரத்துக்கு முன் இங்கிருந் தாளே அவள் தான்; இதோ உன் மேலிருக்கும் உடைக்கு எவள் சொந்தக்காரியோ அவள்தான்” என்றான்.
நூர்ஜஹான் பைத்தியங் கொண்டவளைப்போல உருட்டிப்பார்த்து, " என்ன ஆச்சரியம்! இதெல்லாம் கனவில் நடக்கிறது என்றல்லவோ நினைத்தேன்! உண்மையாக இவ்விடத்தில் வேறொரு பெண் வந்தாளா? அவளிடம் சொல்லப்பட்ட வார்த்தை-யெல்லாம் உங்களால் சொல்லப் பட்டது தானா?" என்றாள்.
அவள் பெருங்கொதிப்பை தன் மனதில் அடக்கிக் கொண்டு அவ்வாறு கேட்கிறாள் என்பதை உணர்ந்து எவ்விதமாயினும் அவளைச் சாந்தப்படுத்தாமல் விடக்கூடா தென உறுதி செய்து கொண்டு அவன் முன்னிலும் இளக்கமும் உருக்கமும் காட்டி, "நூர்ஜஹான்! என் தங்கமே! என்னைச் சோதித்தது போதும், காரியம் இப்படி விபரீதத்துக்கு வருமென்று முன்னமே ஒருவகையான சந்தேகம் உதித்தது. இதை நீ தப்பாக நினைத்துக்கொள்வாய் என்று எண்ணினேன்; அப்படியே செய்து விட்டாய். கோபிக்காமல் கொஞ்சமும் பொறுமை யோடு நடந்துகொள். நீ அருமையான உயர்ந்த குணமு டையவள் என்பதை இந்தச் சமயத்தில் நீ அவசியம் காட்டக் கடமைப்பட்டவள். இதிலேதான் உன்னுடைய மேன்மை இன்னமும் உயரப்போகிறது. ஒன்றையும் அறியாத அசட்டுப் பெண்களைப்போல , நீயும் இப்படி ஆத்திரம் அடைவதைக் காண என் மனம் வருந்துகிறது. உன்னுடைய உண்மைக் காதலை சோதனை செய்யவே இந்த நாடகத்தை நான் ஆடினேன். இது நிஜமான செய்கையல்ல. இதில் உன்னுடைய காதலின் பெருமையை உள்ளபடி அறிந்தேன். ஆனால், இதனால் உன்னுடைய உண்மைக் காதலை மாத்திரம் நான் அறிந்தேன் அன்றி உன் மீது எனக்குள்ள காதலை நீ சந்தேகிக்கும்படி செய்துகொண்டது மாத்திரம் ஒரு மூடத்தனம். நான் இப்படி விஷப்பரிட்சை செய்திருக்கக்கூடாது. என் காதலை உனக்கு நான் இன்னொரு முறை நான்றாக மெய்ப்பிக்கிறேன். அதுவரையில் பொறுமையோடு இரு, இப்போது பெருந்தன்மையோடு நடப்பாயானால், இதனால் உனக்கு ஒரு குறைவும் வராது. நாமிருவரும் இனி உயிரும் உடலுமென ஒன்று பட்டு வாழலாம்" என்று கூறி, அன்போடு அவளைக் கட்டி ஆலிங்கனம் செய்தான்.
குஷ்ட நோய் கொண்டவரைக் கண்டு மனிதர் அருவருப்படைந்து அஞ்சி விலகுதலைப்போல, அவள் அவனது ஆலிங்கனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அப்பால் நழுவி, " என்ன இது மறந்துவிட்டீர்களா? கழுதையிலும் தாழ்ந்த மிருகமல்லவா! நான் தங்களைப்போன்ற மனிதப் பிறப்பினர் என்னைக் கையாலும் தொடலாமா! சே! இதென்ன கேவலம், இழிவான காரியம்! இந்த எருமை மாட்டை இனி பார்ப்பதே இல்லை யென்று இப்போதுதானே சொன்னீர்கள்! நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். தங்கள் உத்தரவுப்படி நடக்க நான் கடமைப்பட்டவள். நான் போய்வருகிறேன். இதுவே நான் தங்களைக் கடைசியாகப் பார்ப்பது ; உத்தரவு பெற்றுக்கொள்கிறேன்" என்று கூறிக்கொண்டு எழுந்து விசையாக இரண்டோர் அடிகள் வைத்தாள். பெரிதும் வெட்கி அவமானம் அடைந்த அவன், வழிமறித்துக் குறுக்கில் நின்று, "கடைசியாகப் பார்ப்பதா ! எங்கே போகிறாய்? உன்னை விட்டுப் பிரிந்து நான் ஒரு நிமிஷமும் உயிருடன் இருப்பேனா? என் சீமாட்டி! கோபித்தது போதும்; உட்கார்ந்துகொள்; இந்த நடுராத்திரியில் எங்கே போகிறாய்? இப்படியே படுத்துக்கொள்" என்றான்.
நூர்ஜ :- எங்கே போகிறேனா! நான் மேனகாவின் வீட்டுக்குப் போகவேண்டாமா? மறந்துவிட்டீர்களா?
நைனா - (அன்பாக) சே! நீ போகவேண்டாம்; நானே பெட்டி வண்டியில் வைத்து அவளைக் கொண்டு போய் அவளுடைய வீட்டில் விட்டு வருகிறேன். இதற்காக நீ ஏன் போக வேண்டும்?
நூர்ஜ:- இப்படி முன்னுக்குப்பின் விரோதமாக நீங்கள் பேசினால் நான் எதைச் செய்கிறது? மேனகாவுக்குப் பதிலாக அவளுடைய புருஷனிடம் என்னை அனுப்புகிறேன் என்று சொன்னீர்களே! அது ஞாபகமில்லையா? தங்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யாமல் அடிமையாகிய நான் வேறு எதற்காக இருக்கிறேன்? உத்தரவு பெற்றுக் கொள்கிறேன் என்று மேலும் நடந்தாள். கூர்மையான அம்பால் அடிக்கப்பட்ட பறவையைப்போல நைனாமுகம்மது ஒரு நிமிஷம் தத்தளித்துத் தடுமாற்றம் அடைந்தான்! தன்னுடைய பிழையை மறைக்கப் புன்னகை செய்தான். ஆனால், முகத்தில் அசடு வழிந்தது. குற்றமுள்ள மனதாகையால் தன் வினை தன்னையே சுட்டது. என்றாலும் அச்சத்தினால் தூண்டப்பட்டவனாய் விரைந் தோடினான். வாயிற் படியைக் கடந்து கொண்டிருந்த நூர்ஜஹானின் இடையில் கையைக்கொடுத்துக் குழந்தையை எடுப்பது போலத் தூக்கிக்கொணர்ந்து கட்டிலின் மேல் பலவந்தமாக உட்காரவைத்து, "நூர்ஜஹான்! என்ன இது? என்றைக்கும் என் மனம் போல் நடப்பவள் இன்றைக்கு இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாயே! இது ஆச்சரியமாகவே இருக்கிறது! நான் கபடமாக அவளிடம் பேசியதை நீ உண்மை யென்று நினைத்து இப்படி கோபிக்கிறாயே! உன்னை அன்னிய புருஷனிடம் அனுப்ப நான் பேடி யென்று நினைத்தாயா? வேடிக்கையாகச் சொல்லும் வார்த்தைகளை யெல்லாம் நிஜமாக நினைத்துக்கொள்ளலாமோ? எவ்வளவோ படித்த புத்திசாலியான நீ இப்படிப் பிணங்குவது சரியல்ல" என்று கூறிக் கெஞ்சி மன்றாடினான்.
நூர்ஜ:- இப்போதும் தங்களுடைய சொற்படிதானே செய்யப்போகிறேன். ஏன் என்னை இப்படி முரட்டுத்தனமாக கட்டாயப் படுத்துகிறது? ஆண்பிள்ளையாகிய உங்களுக்கு உடம்பில் பலம் அதிகம்; அபலைகளாகிய பெண்டு பிள்ளை களைக் காப்பாற்றும் பொருட்டு ஆண்பிள்ளைகளுக்கு ஆண்டவன் அதிக பலத்தைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் பெண்டு பிள்ளைகளை வஞ்சித்துத் தம்மிச்சைப்படி வற்புறுத்து வதற்கு அந்தப் பலத்தை உபயோகிக்கிறீர்கள். உங்களுக்கு அதிக பலமிருக்கிறது என்று அதன் உதவியால் உங்கள் விருப்பமே சட்டமாகச் செய்கிறீர்கள். நீங்கள் எங்களது கண்ணிற்கு எதிரே விபச்சாரம் செய்தாலும் நாங்கள் அதற்கு அநுசரணையாக இருந்து காதலராகிய உங்கள் இருவரையும் ஆசீர்வதிக்க வேண்டும்; ஆனால், நாங்கள் மாத்திரம் மிகவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். இது என்ன நியாயமோ தெரியவில்லை. இது வலுக் கட்டாயமான நியாய மன்றி மனிதருடைய பகுத்தறிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத நியாயம். அன்னிய புருஷனிடம் பெண்டாட்டியை அனுப்பும் பேடியா நான் என்கிறீர்களே? நீங்கள் ஒவ்வொரு தினமும் ஒரு அன்னிய ஸ்திரீயை அபகரித்து வருவதாகச் சொன்னீர்களே; அவர்களுடைய புருஷர்களெல்லாம் பேடிகளென்று நினைத்தீர்களா? நீங்கள் ஒருவரே உலகத்தில் பேடித்தனம் இல்லாதவர்கள் போலிருக்கிறது? அவர்களுடைய புருஷர் அறியாமல் திருட்டுத்தனமாகக் கொணர்ந்து துணையற்ற இடத்தில் வைத்துக்கொண்டு பெண்களை வற்புறுத்துவது சூரத்தனம் போலிருக்கிறது! அவர்களுடைய புருஷர்கள் தாம் பேடிகளாயிற்றே. அவர்களுக்கு முன்னால் நேரில் போய் இந்தக் காரியத்தை ஏன் செய்யக்கூடாது? இருக்கட்டும்; இந்த விஷயத்தை நியாய ஸ்தலத்திற்கே கொண்டு போய் எது சூரத்தனம் என்பதை அறிந்து கொள்வோம்!
இன்று வந்த மேனகா இந்நேரம் தன்னுடைய வீடுபோய்ச்சேர்ந்திருப்பாள். நாளைய தினமே நியாயாதிபதி இடத்தில் வழக்கு தொடருவதாகச் சொல்லி இருக்கிறாள். இங்கு நடந்த நானும், என் அக்காளும், மற்றும் வேலைக்காரரும் நேரில் பார்த்திருந்தோம். அவளுடைய கற்பை அவளது கணவனுக்கு ருஜுப்படுத்த வேண்டும் அல்லவா! அதற்காக எங்களை யெல்லாம் அவள் சாட்சியாகக் கோரப் போகிறாள். நியாயாதிபதி, குரானை வைத்துக் கொண்டு சத்தியம் செய்யச்சொன்னால், நாங்கள் உயிர் போவதானாலும் பொய் சொல்லமாட்டோம்; நடந்த வற்றையே சொல்வோம். அங்கிருந்து இந்த சூரப்புலி தப்பி வந்தால் இனி மேலும் தினந்தினம் ஒரு அன்னியப் பெண்ணைக் கொண்டுவரலாம்; ஆனால், மேனகாவின் புருஷனுக்கு என்னைக் கொடுத்து விட்டால், பிறகு தினம் தினம் இங்கு வரும் பெண்களின் புருஷர்களுக்குக் கொடுக்க அத்தனை நூர்ஜஹான்களுக்கு எங்கே போவீர்கள்? இதற்காகத்தான் தனியாக இந்த சயன அறையை வைத்துக் கொண்டிருக்கிறீர்களோ? அடாடா? என்னை எவ்வளவோ அருமையாக வளர்த்த என் தந்தை இருந்திருந்து என்னை நல்ல புருஷருக்கு கொடுத்தார்! என் தலைவிதி இப்படியா இருக்க வேண்டும்! நான் அவரிடம் போய் எல்லாவற்றையும் சொல்லுகிறேன்; அவர் இதைக் கேட்டு மிகவும் சந்தோஷ-மடையட்டும். போய் வருகிறேன். இனி உங்கள் முகத்திலும் விழிப்பேனென்று நினைக்க வேண்டாம்; என்னை விடுங்கள்" என்று கூறித் திமிறிக்கொண்டு எழுந்தாள்.
அவன் அவளை விடாமல் பிடித்துக்கொண்டு எழுந்து, "சே! என்ன பிடிவாதம் இது? உனக்கு நான் உண்மையில் வஞ்சம் செய்வேன் என்றா நினைத்தாய்? என்ன முட்டாள் தனம் இது! உன் மனதைப் பரிட்சை செய்தேனென்று நான் எவ்வளவு சொல்லியும் நீ நம்பமாட்டேன் என்கிறாயே? உனக்கு என்மீது அந்தரங்கமான காதலிருப்பதாக இதனால் நான் உணர்ந்து விட்டேன். என்னைப் பார்க்கிலும் பாக்கியவான் ஒருவனும் இருக்கமாட்டான். நான் இப்போது அடையும் ஆநந்தத்திற்கு அளவில்லை. அதை வீணாக நீ கெடுக்காதே!" என்று நயந்து கெஞ்சிக் கூத்தாடி அவளை அணைத்து சரச சல்லாபம் செய்யத் தொடங்கினான். அது காறும் தன்னுடைய ஆத்திரத்தை மிகவும் பாடுபட்டு அடக்கிக்கொண்டிருந்த நூர்ஜஹான் தனது பொறுமையை இழந்து, கோபம் மூட்டப்பட்ட சிங்கத்தைப் போலானாள்.
மகா ஆத்திரத்தோடும் கம்பீரமாகவும் தனது கணவன் முகத்தைப் பார்த்து, "இது யாரை ஏமாற்றும் வித்தை? நான் ஒன்றையும் அறியாத முட்டாள் என்று மதிக்க வேண்டாம். இதுவரையில் எனக்குத் தெரியாமல் என்னை முட்டாளாக்கிய திலிருந்து, எல்லாவற்றையும் நான் அறிந்த பிறகும் என்னை ஏமாற்ற நினைத்தீர்களா! அது ஒருநாளும் பலிக்காது. இந்த நியாயத்தையும் கச்சேரியில் சொல்லிக் கொள்வோம்' என்று கூறித் தனது முழுபலத்தையும் செலுத்தி அவனை மீறித் தன்னை விடுவித்துக்கொண்டு விரைந்தோடினாள். எதிர்பாராத அந்த அம்பு பாய்ந்ததனால் தளர்வடைந்து சிறிது தயங்கியபின் எதையோ நினைத்துக் கொண்டு அவளைத் துரத்தி ஓடினான். அவள் அந்த அறையை விடுத்து அப்பாற் சென்றாள். அவனும் விடாமல் தொடர்ந்தான்.
இரண்டொரு அறைகளைக் கடந்தவுடன் அவள், “அக்கா! அக்கா!” என்று உரக்கக் கூவ, சற்று தூரத்திலிருந்து, "ஏன் அம்மா! இதோ வந்தேன்'' என்று இன்னொரு குரல் கேட்டது. அதைக் கண்ட நைனா முகம்மது தயங்கி நின்றுவிட்டான். அவ்வீட்டில் இரண்டு நாட்களாக வந்திருந்த நூர்ஜஹானுடைய அக்காள் கோஷா ஸ்திரீயாதலால் அவளை நைனாமுகம்மது பார்த்தல் கூடாது; ஆகையால், தான் செய்யவேண்டுவது என்னவென்பதை அறியாமல் தத்தளித்துக் கலங்கினான். அச்சம் மேற்கொண்டு அவனைப் பெரிதும் வதைத்தது. நிற்கவும் வலுவற்றவனானான்; அவர்கள் என்ன செய்வார்களோ , மேனகா எங்கிருக்கிறாளோ , அவள் தனது வீட்டிற்குச் சென்றால் அதனால் என்ன துன்பம் சம்பவிக்குமோ, அதைத் தன் மாமனார் உணர்ந்தால் அதனால் என்ன விபரீதம் நேருமோ வென்று பலவாறு நினைத்துக் கலங்கினான். என்றாலும், தன் மனைவி தன்னை எவ்விதம் கோபித்துக் கடிந்தாலும் தன் மீதுள்ள ஆழ்ந்த அபிமானத்தினால் தன்னைக் காட்டிக்கொடுக்க மாட்டாள் என்று ஒரு அந்தரங்கமான குரல் அவன் மனதில் கூறியது. மிகவும் களைப்படைந்தவனாய்த் தனது சயன அறைக்குள்ளிருந்த கட்டிலில் படுத்து நித்திரையின்றி வருந்திக் கிடந்தான்.
-----------------
அதிகாரம் 16 - திரிசங்கு சொர்க்கம்
மேனகா காணாமற்போன தினத்திற்கு நான்காம் நாள் காலை ஏழுமணி சமயம், சாமாவையர், பெருந்தேவியம்மாள், கோமளம் ஆகிய மூவரும் வழக்கப்படி வராகசாமியின் வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்தனர். அதற்கு முதல் நாள் மாலையிலே தான் வராகசாமி மோட்டார் வண்டியின் கீழ் அகப்பட்டுக் கொண்டான் ஆகையால், அவர்களுடைய முகம் மிகவும் கவலையைத் தோற்றுவித்தது. பெருந்தேவியம்மாள் சாமாவையரைப் பார்த்து, "மேனகா போன விஷயத்தைப் பற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் உன்னிடம் கேட்டார் என்றாயே! அவருக்கு இதை யார் சொல்லி இருப்பார்கள்? ஒரு வேளை மேனகா மரக்காயன் வீட்டிலிருந்து தப்பித்துக்கொண்டு தஞ்சாவூருக்குப் போயிருப்பாளோ? அங்கிருந்து அவளுடைய அப்பன் இந்த ஊர் போலீஸாருக்கு இதைப்பற்றி எழுதியிருப்பானோ? காரியம் அப்படி நடந்திருந்தால் நம்முடைய பாடு திண்டாட்டந்தான்" என்றாள்.
உற்சாகமற்றவராய் இருந்த சாமாவையர், "நன்றாய்ச் சொன்னாய்! நீ மரக்காயன் வீட்டுக்குள் வந்து பார்த்திருந்தும் இந்தச் சந்தேகம் உனக்கேன்? அவன் மாளிகைக்குள் இரகசியமான அறைகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் ஒரு அறைக்குள் மேனகாவை விட்டு பூட்டி யிருக்கிறானே! அவள் இனி வெளியில் வருவது எமலோ கத்துக்குப் போன உயிர்மீளுவதைப் போலத்தான். இந்த விஷயத்தில் மரக்காயன் மகா கெட்டிக்காரன் அல்லவா; அவனுக்குத் தெரியாத தந்திரமே இல்லை. அவன் வீட்டில் நானும், இன்னும் எத்தனையோ குமாஸ்தாக்களும், ஏராளமான வேலைக்காரர்களும் வேலைபார்த்து வருகிறோமே! அவன் வீட்டில் நடந்த இந்த விஷயம் யாருக்காவது தெரியுமா? ஒருவருக்கும் தெரியாது; காதும் காதும் வைத்த மாதிரி இது நடந்து போயிருக்கிறது. அவன் ஒன்றையும் அறியாதவனைப் போலவும், ஏதோ வியாபார நிமித்தம் போகிறவன் போலவும், நாகைப்பட்டணம் போய்விட்டானாம். அவளையும் நாகைப்பட்டணத்திற்குக் கொண்டு போய் பந்தோபஸ்தாக வைத்திருக்கிறானோ, அல்லது, அவனுக்கு அந்தரங்கமான ஒரு வேலைக்காரி இருக்கிறாள், அவள் வசம் மேனகாவை ஒப்புவித்துப் போயிருக்கிறானோ தெரியவில்லை. எந்த வகையிலும் அவள் அவனிடமிருந்து தப்பிப் போயிருக்க முடியாது" என்றார்.
பெரு:- அப்படியானால் டிப்டி கலெக்டரே நேற்று நமக்கு கொடுத்த தந்தியோடு போலீசாருக்கும் தந்தி கொடுத்திருக்க வேண்டும்.
சாமா:- அப்படி யிருக்கலாம்.
கோமளம் :- அவள் மரக்காயனுடைய வீட்டிலிருந்து கொண்டே போலீசாருக்காவது, அவளுடைய அப்பனுக் காவது, வராகசாமிக்காவது கடிதம் எழுதி; நாமே துலுக்கனிடம் அவளை விற்றவர்களென்று தெரிவித்துவிட்டால், போலீசார் அவனைப் பிடித்துக் கொள்வார்களே! தான் தப்பும் பொருட்டு அவனே நம்மைக் காட்டிக்கொடுத்துவிட்டால், நாம் என்ன செய்கிறது?
சாமா:- பைத்தியந்தான்; அவள் கடிதம் எழுதி நாக்கை வழித்துக்கொள்ள வேண்டியது-தான்; அந்தக் கடிதத்தை வெளியில் யார் எடுத்துக்கொண்டு போய் தபாலில் சேர்க்கிறது? முதலில் அவளுக்கு அங்கே காகிதம் யார் கொடுக்கப் போகிறார்கள்? அதைப்பற்றிக் கவலையே யில்லை. அவனுடைய தலை போவதாயினும், அவன் நம்மை ஒருநாளும் காட்டிக் கொடுக்க மாட்டான். அவன் வீட்டிற்குள் போலீசார் திடீரென்று நுழைந்துவிட முடியுமோ? உள்ளே இருக்கும் கோஷாப் பெண்டுகள் அப்புறம் போக சாவகாசம் கொடுத்த பிறகே போலீசார் உள்ளே நுழைய வேண்டும். அதற்குள் மேனகா பூமிக்குள்ளிருக்கும் அந்தரங்க அறைக்குள் விட்டுப் பூட்டப்படுவாள். அந்த இடத்தை எவனும் கண்டு பிடிக்க முடியாது; அந்தச் சாமர்த்தியம் இல்லாமல் போனால், அவன் துணிந்து இதில் இறங்குவானா?
கோமளம் :- அவனுடைய வீட்டுக்குள் இருக்கும்போது அவளைக் கண்டுபிடிக்க முடியாது. அது சரிதான். அவள் அங்கிருக்கும் வேலைக்காரிக்கு லஞ்சம் கொடுத்து வெளியில் வந்து விடுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீ என்ன செய்வாய்?
பெரு:- அடி முட்டாளே! போ; அவள் வெளியில் வந்தால் அதனால் நமக்கென்ன கெடுதல்? மாயாண்டிப்பிள்ளை தான் கடிதம் எழுதியிருக்கிறானே! மாயாண்டிப்பிள்ளை அவளைத் தள்ளிவிட்டான்; அவனிடமிருந்துதான் வந்திருக்கிறாள் என்று நாங்கள் சொல்லிவிடுகிறோம். அதன் பிறகு அவள் ஆயிரம் சொல்லட்டுமே. அவளுடைய சொல்லை யார் நம்புவார்கள்? நம்மீது சொல்ல அவளுக்கு என்ன சாட்சி இருக்கிறது? அவள் எதைத்தான் சொல்லிக் கரடியாய்க் கத்திய போதிலும் சரி; நாமே அவள் விஷயத்தில் பரிந்து பேசி சிபாரிசு செய்தாலும் சரி; வராகசாமி இனி தன் உயிர்போவதானாலும் அவளை ஒரு நாளும் அழைத்துக்கொள்ள மாட்டான். ஓடிப் போனவளை அழைத்துக்கொண்டான் என்னும் தூஷணைக்கு அவன் ஒருநாளும் இணங்கமாட்டான். அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலையில்லை. இந்த அசடு போய் மோட்டார் வண்டியில் விழுந்து அறைபடுமோ; பட்டப்பகலில் கண் அவிந்தா போய்விட்டது! இதுவல்லவோ சகிக்கக் கூடாத கஷ்டமா யிருக்கிறது. நேற்று முதல் இன்னமும் கண்ணைக்கூடத் திறக்கவில்லையாமே! அவன் கதி என்னவாகுமோ தெரிய வில்லையே! நம்மை அங்கே இருக்கவிடமாட்டேனென் கிறார்களே! வழியில் போகிறவர்களுக்கு நம்மைப்பார்க்கிலும் அதிகக் கவலைபோலிருக்கிறதே!"
சாமா :- சே! அப்படிச் சொல்லாதே; நாம் அங்கே இல்லாவிட்டாலென்ன? அவர்கள் எவ்வளவு கவலையோடும் உபசாரம் செய்து பார்த்துக்கொள்ளுகிறார்கள் தெரியுமா! மணிக் கணக்குப்படி யல்லவா ஒவ்வொரு காரியமும் செய்கிறார்கள். அவனை இப்போது பார்த்துவிட்டே இப்படி நடுங்குகிறாயே, நேற்று சாயுங்காலம் கடற்கரையில் அவன் பயங்கரமாக விழுந்து கிடந்தபோது பார்த்திருந்தால் என்ன சொல்லமாட்டாயோ! பாவம் தரை முழுதும் இரத்தம் சிறிய குளத்தைப் போல தேங்கி உறைந்து போய்க் கிடந்தது. வண்டி முழங்காலின் மேல் ஏறிப்போய்விட்டதாம்; அங்கே ஒரு எலும்பு முறிந்து போயிருப்பதாகத் தெரிகிறதாம்; பெரிய டாக்டர் துரை யதனால் தான் மிகவும் பயப்படுகிறாராம். அவன் பிழைத்தால் பழையபடி எழுந்து நடக்க ஒரு மாசத்துக்கு மேலாகும்.
பெரு:- ஹோட்டலில் காப்பி சாப்பிடப் போகிறேனென்று சொல்லிவிட்டுப் போனவன் கடற்கரைக்கு ஏன் போக வேண்டும்! இவன் போகாமல் அங்கே என்ன மகா காரியம் கெட்டுப் போய்விட்டது! பெண்டாட்டி போய்விட்டால், கடற்கரையில் என்ன திண்டாட்டம் வேண்டியிருக்கிறது! இது வரையில் இல்லாத அருமைப் பெண்டாட்டியை இப்போ தென்ன கண்டுவிட்டது.
சாமா:- நான் நேற்றைய தினமே சொன்னேன்; அவனை போது தனிமையில் வெளியில் விடக் கூடாது என்றேன். அது நிஜமாய் முடிந்தது. இதனால் என்னுடைய நாகைப் பட்டணப் பிரயாணங்கூட வீணாய் நின்று போய் விட்டது. நான் வீட்டில் பணத்தை வைத்துவிட்டு வெளியில் போய் தெருத்தெருவாய் அலைந்து தேடிப்பார்த்தேன்; அவன் எங்கும் காணப்படவில்லை. ஒருவேளை கடற்கரைக்குப் போயிருப்பானோ என்று ஒருவித சந்தேகம் உதித்தது. பார்த்தசாரதி கோயிலுக்கு எதிரிலுள்ள சந்தின் வழியாக சமுத்திரக் கரைக்குப் போய் மணலில் மூலை முடுக்கெல்லாம் தேடினேன். அதற்குள் ஜனங்கள் கூக்குரல் செய்து கொண்டு பாட்டைக்கு ஓடினர். அது என்னவோவென்று அஞ்சி நானும் ஓடினேன். ஓடிப் பார்க்கிறேன். இவன் விழுந்துகிடக்கிறான். என்ன செய்கிறது! என் தேகம் அப்படியே பதறிப் போய்விட்டது. நல்ல வேளையாக அங்கே அப்போது ஒரு தனிகருடைய மோட்டார் வண்டி வந்தது. அவர் பவழக் காரத் தெருவில் இருப்பவராம்; அவர் பெயர் முத்தையன் செட்டியாராம்; எங்கேயோ அவசர காரியத்தின் மேல் போனவர், இந்த கோரமான காட்சியைக் கண்டு மனவிரக்கங் கொண்டு, அதில் வராகசாமியையும், என்னையும் வைத்துக்கொண்டு போய் ராயப்பேட்டை வைத்தியசாலையில் விட்டுப்போனார்.
பெரு :- அவர் நல்ல தயாள குணமுள்ள மனிதர் போலிருக்கிறது! எல்லாப் பெரிய மனிதர்களும் இப்படி இருக்க மாட்டார்கள். இப்படி எவனாவது விழுந்திருக்கக் கண்டால், அவர்கள் இன்னொரு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவார்கள் - என்றாள்.
அப்போது டிக்டிக்கென்ற காலடியோசையுடன் நடையில் வந்த யாரோ ஒருவர் "சாமாவையர்!" என்று கூப்பிட்டார். அந்தக் குரலைக் கேட்ட இவர்கள் மூவரும் திடுக்கிட்டு வாசற் பக்கம் நோக்கினர். அடுத்த நொடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமயசஞ்சீவி அய்யர் உட்புறம் நுழைந்தார். அவருடைய கருடப் பார்வையும் கம்பீரத் தோற்றத்தையும் இராஜவேஷ நடையையும் கண்ட அம்மாள்கள் இருவரும் நடுநடுங்கி, எழுந்து நாணிக்கோணி சமையலறைக்குள் புகுந்து மறைந்தனர். சாமாவையர் விரைவாகத் தமது ஆசனத்திலிருந்து எழுந்து, "வாருங்கள் அண்ணா ! இப்படி வாருங்கள்; ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்'' என்று கையைக் காட்டி நாட்டியமாடி, அவரை கூடத்திற்கு அழைத்து வந்து ஊஞ்சலில் உட்காரவைத்தார்.
போலீஸ்:- உட்காருவது இருக்கட்டும்; எப்போதுந்தான் உட்கார்ந்து கொண்டே இருக்கிறோம்; வந்த காரியத்தைப் பார்ப்போம். இந்த வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்? வராகசாமி அய்யங்காரின் அக்காள், தங்கை ஆகிய இருவரைத் தவிர வேறு ஒருவரும் இல்லையே?
சாமா:- ஆம்; வேறு ஒருவரும் இல்லை.
போலீஸ் :- அன்றைக்கு ராத்திரி என்ன நடந்தது? அவருடைய தமக்கையை இப்படிக் கூப்பிடும்; அந்த அம்மாளுடைய வாக்குமூலம் வாங்க வேண்டும் - என்றார்.
உடனே சாமாவையர் சமையலறைப்பக்கம் திரும்பி, “பெருந்தேவியம்மா! இப்படி வா. அன்றைக்கு ராத்திரி நடந்ததைச் சொல்” என்றார்.
கதவின் மறைவில் நின்ற பெருந்தேவியம்மாள், “நீதான் சொல்லேன். என் வாயால்தான் வரவேண்டுமா" என்றாள்.
சாமா:- கச்சேரியில் உனக்குப் பதிலாக நான் சாட்சி சொல்ல முடியுமா? நீதான் சொல்ல வேண்டும்; அன்றைக்கு நடந்தது எனக்குத் தெரியுமா? உனக்குத்தானே நேரில் தெரியும்.
பெரு :- அன்று ராத்திரி 7 1/2 மணிக்கு நீயும் வராகசாமியும் ரயிலுக்குப் புறப்பட்டுப் போனபிறகு நாங்கள் மூன்று பேரும் சாப்பிட்டுக் கையலம்பினோம். கோமளம் பாயைப்போட்டுப் படுத்துக் கொண்டவள் அரை நாழிகைக்கெல்லாம் தூங்கி விட்டாள். நானும் மேனகாவும் பேசிக்கொண்டிருந்தோம். சுமார் 8, 812 - மணி இருக்கலாம். அம்மா! அம்மா!! வென்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே ஒருவன் வந்தான். "யாரடா?'' என்றேன். "நான் தஞ்சாவூர் டிப்டி கலெக்டருடைய சேவகன் ரெங்கராஜு; எஜமான் வாசலில் பெட்டி வண்டியில் இருக்கிறார்; மகளோடு பேசவேண்டுமாம்; கூப்பிடுகிறார்" என்றான் அவன். உடனே மேனகா புறப்பட்டு வெளியில் போனாள். வாசலில் நின்ற பெட்டி வண்டியிலிருந்த மனிதரோடு பேசிக் கொண்டு கொஞ்ச நாழிகை நின்றாள். பிறகு அவர் பெட்டி வண்டியின் கதவைத் திறந்தார். அவளும் ஏறி உள்ளே உட்கார்ந்து கொண்டாள். உடனே வண்டி போய்விட்டது. நடந்தது இவ்வளவுதான் - என்றாள்.
போலீஸ் :- அந்தச் சேவகன் சாதாரணமான உடை தரித்திருந்தானா? அல்லது சேவகனைப் போல சர்க்கார் உடுப்புப் போட்டிருந்தானா?
பெரு :- ஆம், தலைப்பாகை, நீண்ட சட்டை, வெள்ளி வில்லை முதலிய அலங்காரத்துடன் வந்தான்.
போலீஸ் :- அதற்குமுன் அவன் எப்போதாவது, டிப்டி கலெக்டருடன் வந்திருக்கிறானா? அல்லது வந்தவனைப் போலாகிலும் இருந்தானா?
பெரு:- ஒரு வருஷத்துக்கு முன், அவரோடு இரண்டு சேவகர்கள் வந்தார்கள் எனக்கு. அவ்வளவாக ஞாபகமில்லை. வன் அவர்களில் ஒருவனாக இருக்கலாம்; ஆனால், நான் வனை அவ்வளவு நன்றாகக் கவனிக்கவில்லை.
போலீஸ்:- பெட்டி வண்டியில் இருந்தவர் டிப்டி கலெக்டர் தானே? அதைப்பற்றி சந்தேகம் இல்லையே?
பெரு :- நான் சமீபத்தில் நெருங்கிப் பார்க்கவில்லை. முற்றத்தில் நின்றுகொண்டு பெட்டிவண்டியைப் பார்த்தேன். தலைப்பாகை, சட்டை, திருமண் முதலியவற்றுடன் ஒருவர் வண்டியில் இருந்தார். அவர் டிப்டி கலெக்டர் என்றே அப்போது நினைத்தேன். அவர் இல்லாவிட்டால் மேனகா நின்று பேசமாட்டாள் ஆகையால் வந்தவர் அவர்தான் என்று நிச்சயமாக நினைத்தேன்.
போலீஸ்:- அந்தப் பெண் பிறகு இதுவரையில் திரும்பி வர வில்லையா?
பெரு:- இல்லை.
போலீஸ்:- இதற்கு முன் அவர் பெண்ணை எப்போது இங்கே கொணர்ந்து விட்டார்?
பெரு :- ஒரு வாரத்திற்கு முன்.
போலீஸ்:- அப்படியானால், இவ்வளவு சீக்கிரமாக மறுபடியும் வந்து அழைத்துப் போகக் காரணமென்ன?
பெரு :- அதுதான் எங்களுக்குத் தெரியாமையால் தவிக்கிறோம். அதைப்பற்றி அவரையே கேட்கவேண்டும்; கேட்டு உண்மையை எங்களுக்குத் தெரிவிப்பீர்களானால் உபகாரமா யிருக்கும் - என்றாள்.
போலீஸ் இன்ஸ்பெக்டர், "சரி; அப்படியே செய் கிறோம்" என்று ஒருவாறு புரளியாகக் கூறிவிட்டு , "சாமாவை யரே! இதில் உமக்கென்ன தெரியும்?" என்றார்.
சாமா:- நான் வராகசாமியைக் கொண்டுபோய் ரயிலில் ஏற்றி விட்டு வந்தேன். அப்போது மணி ஒன்பது இருக்கலாம். இங்கே வந்தவுடன் வாசலில் உட்காந்திருந்த பெருந்தேவி யம்மாள் என்னைக் கூப்பிட்டு இப்படி நடந்ததென்ற விவரம் தெரிவித்தாள்; மேனகா கூட தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டாளே என்று வருத்தப் பட்டாள். ஒருவேளை அவர் எங்கேயாவது அறிமுகமான இடத்துக்கு அவளை அழைத்துக்கொண்டு போயிருப்பார் என்றும், திரும்பவும் கொணர்ந்து விட்டுவிடுவார் என்றும், கவலைப் படவேண்டாம் என்றும் சொல்லிவிட்டு நான் என் கிரகத்துக்குப் போய்விட்டேன்; மேனகா பிறகு இதுவரையில் வரவே இல்லை - என்றார். அவர்கள் இருவரின் வாக்குமூலங்களையும் காகிதத்தில் எழுதிக்கொண்டே வந்த இன்ஸ்பெக்டர் அடியில் அவர்களுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டுப் போனார். சாமாவையர் திரும்பவும் விதவை களோடு பேசிக்கொண்டிருந்தார்.
வெளியிற் சென்ற இன்ஸ்பெக்டர் தமது கைக் கடிகாரத்தைப் பார்த்தார்; எட்டு மணி ஆகியிருந்தது. வாசலிலிருந்த இரண்டு ஜெவான்களையும் அழைத்துக் கொண்டு அவர் எதிர்த்த வீட்டின் திண்ணைக்குப் போய் உட்கார்ந்து கொண்டார். அந்த மூன்று செந்தலைப் பூச்சிகளையும் கண்ட அவ்வீட்டு மனிதர் தமக்கு எத்தகைய துன்பம் நேரப்போகிறதோ வென்று பெரிதும் அச்சங்கொண்டு நடு நடுங்கி, செய்யவேண்டுவதை அறியாமல், உள்ளேயே உட்கார்ந்து விட்டனர். அண்டை வீட்டுக்காரர்கள் யாவரும் ஒன்றுகூடி மகாபுத்திசாலித்தனமான பல யூகங்களைச் செய்யலாயினர். போலீசார் உட்கார்ந்திருந்த வீட்டிற்குள் ஏதோ திருட்டுச் சொத்திருப்பதாகவும், அந்த வீட்டைப் போலீசார் சோதனை போடப்போகிறார்கள் என்றும் அந்த வீட்டில் உள்ளோரைக் கைதி செய்து விலங்கிட்டுக் கொண்டுபோகப் போகிறார்கள் என்றும் பலவாறு கூறிப் புரளி செய்திருந்தனர். எவரும் தம் தம் வேலையைக் கவனிக்கவே மனமற்றவராய், அவ்விடத்தில் நடக்கப்போவ தென்ன என்பதைப் பார்க்க ஆவல்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
கால்மணி நேரம் கழிந்தது. அப்போது ஒரு குதிரைவண்டி ஜல் ஜல் ஜல் என்று சதங்கையோசை செய்துகொண்டு வந்தது; ஆடம்பரம் மாத்திரம் அதிகமா யிருந்ததே யன்றி, குதிரையோ மாதம் காதவழி மயமாய்ப் பறக்கும் நீலவேணிக் குதிரை; அதன் வயது சொற்பமே. அது உயிர்விட வேண்டிய முடிவுகாலம் ஆனபிறகு மேலே கொசருக்கு மூன்று நான்கு வருஷங்களே ஆயிருக்கலாம். உடம்பு முற்றிலும் முகத்திலும் எலும்புகள் மாத்திரம் இருந்தமையால், அது குதிரையைப் போலவும் இருந்தது. கழுதையைப் போலவும் இருந்தது. ஒவ்வொரு கண்ணிலும் எழுமிச்சங்காய் அளவு கையளவு வெண்ணெய் திரண்டிருந்தது. சதங்கை யொலிக்குச் சரியான பின் புறக்கால் ஒன்றோடொன்று மோதி தத்தோம் தகதோமென்று தாளம் போட்டு பஜனை செய்தன; அதற்கு வருஷம் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் விரத தினங்கள்; வயதான ஜெந்துவாதலால் அவ்வாறு பஜனை செய்து பட்டினி கிடந்து அடுத்த உலகத்துக்குத் தன்னைத் தயார் செய்துகொண்டு வந்தது. ஆனால், முகமெல்லாம் பட்டுக் குஞ்சங்கள் அழகு செய்தன. உடம்பு முழுதும் இழைத்திருந்ததாயினும், அதன் வால் மயிரும், அதை ஒட்டிய சாயிபுவின் தாடி மயிரும் கொஞ்சமேனும் இளைக்காமல், இரண்டு சாமரங்களாய் அசைந்து குதிரையின் எண்ணிறந்த புண்களில் மொய்த்த ஈக்களை ஓட்ட உதவியா-யிருந்தன. அந்த வண்டிக்குள் வருபவர் யாவரென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் உற்று நோக்கினார். வண்டி அடுத்த நிமிஷத்தில் வந்து வராகசாமியின் வீட்டு வாசலில் நின்றது.
அதற்குள்ளிருந்து கீழே இறங்கிய சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய இருவரும் அவ்வண்டியின் குதிரையைப் போல உயிரற்றவரைப் போல காண்போர் இரக்கங் கொள்ளும் வண்ணம் பரிதாபகரமான நிலையில் இருந்தனர். எப்போது பட்டணம் வருவோம், எப்போது தமது பெண்ணிருந்த இடத்தைக் கண்டு உண்மையை அறியப் போகிறோம் என்று ஆவல் கொண்டு இரவு முழுதும் கண் மூடாமல் முதல் நாட் காலையிலிருந்து தண்ணீரும் அருந்தாமல் பெருத்த வேதனை அடைந்து தவித்து வந்தனர் ஆதலின், அவர்களுடைய உடம்பில் உற்சாகம் என்பது ஒரு சிறிதும் காணப்படவில்லை. அதிகாலையில் தனது இளங்கன்றை விடுத்துப்பிரிந்த பசு மாலையில் கன்றைப் பார்க்க ஆவலும் இரக்கமும் கொண்டு ஓடி வருதலைப் போல வராகசாமியின் வீட்டைக் கண்டவுடனே அவர்களுடைய உள்ளம் பொங்கி எழுந்து பதறியது. மேனகா இருக்கமாட்டாளே என்று அவர்களுடைய மனது நம்பவில்லை. உள்ளே நுழைந்தவுடன் அவளைக் காணலாம் என்னும் மூடநம்பிக்கை கொண்டவராய், வண்டியிலிருந்து இறங்கி உடபுறம் விரைந்து சென்றனர்.
வண்டிக்காரன் வண்டியை ஓட்டிச் செல்லாமல், அவ்விடத்திலேயே அதை நிறுத்திக்கொண்டிருந்தான். எதிர்த்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் சைகை செய்து வண்டிக்காரனை அழைத்தார். அவன் இன்ஸ்பெக்டரிடம் பன்முறை சூடுண்டவன் ஆதலின், எமனைக் கண்ட உயிரைப் போல, அவன் நடுநடுங்கி ஓடி வந்து, எண் சான் உடம்பையும் ஒரு சாணாய்க் குறுக்கிக் குனிந்து சலாம் செய்தான்.
மகா கம்பீரமாகவும் அலட்சியமாவும் அவனைப் பார்த்த இன்ஸ்பெக்டர், “அடே தாடிமியான்! என்னடா ஜோர்மேலே ஓட்டுகிறாய்? இரட்டைக் குதிரை சவாரியோ ? சிவப்புக் குதிரை மேலே வண்டி; வெள்ளைக் குதிரைமேலே நீ! நல்ல வேட்டை தானோ? எங்கிருந்து வருகிறாய்? கூலி ஒரு ரூபாயாவது இருக்குமா ?" என்றார்.
வண்டிக்காரனுக்கு அடி வயிற்றில் நெருப்பு விழுந்தது. தான் வண்டியை மிதமிஞ்சிய விசையில் ஓட்டினதாக அவர் எழுதி தனக்கு பத்து இருபது அபராதம்போட்டு வைப்பாரோ வென்று நினைத்து அச்சங்கொண்டவனாய், "இல்லே நாயனா! ஏளேமேலே கோவம் வைக்காதிங்க நாயனா! நம்பிளுக்கு புள்ளே குட்டீங்கோ பத்து பதினஞ்சு இருக்கான், பஞ்சகாலம் நாயனா! ஒங்க காலுக்கு நம்ப சலாம் செய்யறான் நாயனா! மனசுலே கோவம் வைக்கவேணாம் நாயனா! வண்டி எளும்பூரிலே யிருந்து வந்திச்சு நாயினா! வண்டியிலே வந்தவரு தஞ்சாவூருதுப்பட்டி கலையக்கட்டராம் நாயனா! இன்னேக்கி முளுக்க வண்டி பேசியிருக்கான் நாயனா ரெண்டே ரூவாதான்; அதிக மில்லீங்கோ நாயனா" என்ற தனது பற்களைக் காட்டிக் காட்டிக் கெஞ்சிக் கூத்தாடினான்.
அதைக்கேட்ட போலீஸ் இன்பெக்டர் வியப்பைக் கொண்டவரைப்போலக் காட்டி' “ஓகோ! தஞ்சாவூர் டிப்டி கலெக்டரா வந்திருப்பவர் ! இவருடன் நான் அவசரமாகப் பேசவேண்டும். நல்லது நீ ஒரு வேலை செய்; இவர் மறுபடியும் வண்டியில் ஏறியவுடன் இவரிடம் சொல்லாமல் வண்டியை நம்முடைய ஸ்டேஷன் வாசலுக்குக் கொண்டுவா. நாங்கள் பேசிய பிறகு நீ அவர் போகச் சொன்ன இடத்துக்கு ஓட்டலாம், தெரியுமா? நான் போகலாமா? இந்த ஜெவான்களை இங்கே வைத்துவிட்டுப் போகிறேன்; வராமல் தவறி ஓட்டிக் கொண்டு போவாயானால் முதுகு தோலை உரித்து விடுவேன், ஜாக்கிரதை" என்றார்.
வண்டிக்காரன் குனிந்து குனிந்து சலாம் செய்து, "அப்பிடியே ஆவட்டும் நாயனா! நம்பளோட ரோக்கியம் இதுல பாரு நாயனா! நாம்ப முசல்மான் நாயனா! நம்ப வாயிலே பொய் வரமாட்டான் நாயனா! நீங்க போவலாம் நாயனா'' என்றான்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெவான்களிடம் ஏதோ இரகசியமாகப் பேசிய பிறகு அவர்களை அவ்விடத்தி லேயே உட்காரவைத்து விட்டு தம்முடைய ஸ்டேஷனுக்குச் சென்றார். வண்டிக்காரன் வராகசாமி வீட்டு வாசலையடைந்து அன்றைப் பொழுது அபராதம் இல்லாமல் நல்ல பொழுதாய்ப் போகவேண்டுமே யென்று அல்லாவைத் தொழுது கொண்டிருந்தான்.
சாம்பசிவம் முன்னும் கனகம்மாள் பின்னுமாக இருவரும் உட்புறஞ் சென்றனர். கூடத்தில் நின்றுகொண்டிருந்த சகோதரிமார் இருவரும் அவர்களைக் கண்டவுடன் பெரிதும் அருவருப்பைக் காட்டிய முகத்தோடு, "வாருங்கள் !" என்று ஒரு உபசார வார்த்தை கூடச் சொல்லாமல் அசைந்தாடிக்கொண்டு அலட்சியமாக சமையலறைக்குள் நடந்தனர். ஊஞ்சற் பலகையில் இருந்த சாமாவையர் மாத்திரம் திடுக்கிட்டெழுந்து டிப்டி கலெக்டருக்கு மரியாதை செய்து , "வாருங்கள் அண்ணா ! வாருங்கள் பாட்டியம்மா!" என்று அன்போடு இருவரையும் வரவேற்று உபரசணை செய்தார்.
சந்திர பிம்பம் போல இனிமையே வடிவாகத் தமது பெண்மணி மேனகா தம்முன் தோன்றுவாளோ வென்று நினைத்து மனப்பால் குடித்தவராய் வந்த அவர்களுக்கு அந்த வீடு இழவு வீழ்ந்ததனால் பாழ்த்துப்போன வீட்டைப்போலத் தோன்றியது. பெருந்தேவி கோமளம் இருவரும் எந்த நாளிலும் அவர்களுடன் அன்னியோன்னியமாகப் பேசிப் பழகியோர் அல்லர். என்றாலும், வரும் போது "வாருங்கள்'' என்று சொல்வது மாத்திரமுண்டு. அந்த வாயுபசரணையும் இப்போது இல்லாமற் போனது. தமது பெண் போனமையால் அந்த மரியாதையும் அவளுடன் போயிருப்பதாக அவர்களிருவரும் நினைத்து அதைப்பற்றிச் சிறிதும் மனவருத்தங் கொள்ள வில்லை. அவர்களுடைய மனம் பெண்ணைப் பற்றிய கவலையால் பெரிதும் உலைப்பட்டு அவளைப்பற்றி எவ்விதமான செய்தியைக் கேட்போமோ வென்று கரைகடந்த ஆவல் கொண்டு தத்தளித்தது. அவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாய்த் தோன்றியது. அவ்விருவரும் எதிரிலிருந்த தண்ணீர்க் குழாயில் கால்களை அலம்பிக் கொண்டு கூடத்திற் புகுந்தனர். சாம்பசிவம் ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்தார். கனகம்மாள் ஒரு கம்பத்தருகில் நின்றாள். அதற்குள் சாமாவையருடைய முகம் முற்றிலும் மாறுதல் அடைந்தது; மனம் கலங்கியது. அவர்களிடம் எவ்விதமாகப் பேசுவதென்பதை அறியாமல் தடுமாற்றம் அடைந்தார். என்றாலும் ஏதாயினும் ஒன்றைச் சொல்லவேண்டு மென்று நினைத்து, "போட்மெயிலில் தானே வந்தீர்கள்?" என்றார்.
அதைக் கேட்ட சாம்பசிவம், "ஆம்; வேறு வண்டி யேது? எங்கே மாப்பிள்ளையைக் காணோமே? பெரிய வக்கீல் வீட்டுக்குப் போயிருக்கிறாரோ?" என்றார்.
உடனே சாமாவையர் பெரிதும் விசனத்தோடு சிரத்தைக் கீழே கவிழ்த்தார்; இரண்டொரு நிமிஷநேரம் மௌன மாயிருந்தார். பிறகு, "அதை ஏன் கேட்கிறீர்கள்! பட்டகாலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்பது போல எல்லா ஆபத்தும் நமக்கே வந்து சேருகிறது" என்றார். எதிர்பாராத அந்தப் பயங்கரமான சொல்லைக் கேட்க அவர்களுடைய பதை பதைப்பு ஒன்றுக்கு நூறாய்ப் பெருகியது. சாம்பசிவம் சாமாவையருடைய வாயிலிருந்து என்ன விபரீத சமாச்சாரம் வெளிப்படுமோவென்று அஞ்சினார்; அவருடைய வாயையே நோக்கி வண்ணம், " என்ன விசேஷம் ?" என்று ஆவலோடு கேட்க, சாமாவையர், "நேற்று காலையில் சேலத்திலிருந்து வராகசாமி திரும்பி வந்தான். வந்தவுடன், மேனகா காணாமற் போனதைப் பற்றிக் கேள்விப் பட்டு நிரம்பவும் விசனமடைந்தான்; ஜலபானம்கூடச் செய்யாமல் பைத்தியம் பிடித்தவனைப்போல பிதற்றிக் கொண்டிருந்தான். சாயுங்காலம் எழுந்து ஒருவருக்குந் தெரியாமல் கடற்கரைக்குப் போய்விட்டான் போலிருக்கிறது. அதற்கப்புறம் தற்செயலாக நான் இங்கே வந்தேன். வராகசாமி எங்கே என்றேன். ஹோட்டலில் காப்பி சாப்பிடப்போவதாகச் சொல்லி விட்டுப் போனான் என்று இவர்கள் சொன்னார்கள். நான் உடனே அவனைத் தேடிக்கொண்டு தெருத்தெருவாய் அலைந்தேன். அவன் எங்கும் அகப்படவில்லை ; கடைசியாக கடற்கரைக்குப் போனேன். அங்கே அப்போது ஒருவன் மேல் மோட்டார் வண்டி ஏறிவிட்டதைக் கண்டு ஜனங்கள் ஓடினார்கள்; நானும் ஓடிப்போய் பார்க்கிறேன்! வராகசாமி கீழே கிடக்கிறான்!" என்று பெரிதும் வியப்போடு கூறினார்.
அதைக் கேட்டுத் துடிதுடித்த கனகம்மாள் கையைப் பிசைந்து கொண்டு, "ஐயோ! அவர் இப்போது எங்கிருக்கிறார்? உயிருக்கு மோசமில்லையே?" என்று சகிக்கமாட்டாத ஆவலோடு கேட்டாள். அவர்களுக்கு அந்த ஒரு நொடியும் ஒரு கோடி வருஷங்களாய்த் தோன்றியது. வராகசாமி உயிர் துறந்திருப்பானோ வென்னும் சந்தேகம் உள்ளூற அவர்களை வதைத்து வாட்டியது.
சாமா:- உயிருக்கு ஆபத்தில்லை. ராயப்பேட்டை சர்க்கார் வைத்தியசாலையில் இருக்கிறான் - என்றார்.
அப்போதே கனகம்மாள் சாம்பசிவம் இருவருக்கும் உயிர் வந்தது; சரியான மூச்சாக விடுத்தனர்.
சாம்ப:- காயம் அதிகமோ?
சாமா:- வண்டி முழங்காலில் ஏறிவிட்டது; அதில் ஒரு எலும்பு கொஞ்சம் ஒடிந்துபோய் விட்டதாம். இரத்தச் சேதம் இவ்வளவு அவ்வளவென்று சொல்லமுடியாது! அபாரம்! அவன் இன்னம் கண்ணைத் திறக்கவில்லை. நேற்று ராத்திரி முழுதும் மருந்து கொடுத்தார்கள்; இன்று காலையில் நாங்கள் முன்று பேரும் போய் விட்டு இப்போதே திரும்பி வந்தோம். பெரிய டாக்டர் மிகவும் கவலைப் படுகிறார்; அங்கே எல்லோரும் கூடிக்கொண்டிருந்தால் சீக்கிரம் குணப் படாதென்று சொல்லி, எங்களை அனுப்பிவிட்டார் - என்றார்.
அந்தப் புதிய இடயப் பெற்ற அவர்களுடைய மனம் ஆடி அலமர்ந்தது; அவர்களது தேகங்கள் மண்ணில் நிலைத்து நில்லாமல் விண்ணில் பறந்தன. அவர்களுடைய உள்ளம் பட்டபாட்டை என்னவென்று சொல்வது! அவர்கள் அப்படியே திகைத்துப் போயினர்.
கனகம்மாள், “பெண் இப்போது இங்குதானே இருக்கிறாள்?" என்று மிக்க துன்பகரமான அந்த முக்கிய விஷயத்தை மெல்ல கேட்டாள். அந்தக் கேள்வியைக் கேட்காதிருக்கவும் அவளுக்குச் சகிக்கவில்லை ; அதைக் கேட்டவுடனே, "அவள் இல்லை" என்னும் மறுமொழி வந்து விடுமோவென்று தயங்கி, கடைசியில் அதைக் கேட்டு விட்டாள்; சாமாவையர் என்ன செய்வார்? கையுங்களவுமாக பிடிபட்ட கள்ளனைப்போல விழித்துச் சிறிது நேரம் தவித்தார்; பிறகு, "பெண் இங்கிருந்தால், வராகசாமிக்கு ஏன் இந்த ஆபத்து வருகிறது? பெண் போனவிடந்தான் தெரியவில்லை " என்றார்.
கனகம்மாள் இன்னமும் அதை நம்பாமல், “ஆனால் அவள் இப்போது உள்ளே இல்லையா?” என்று பேதைமைப் பெருக்கால் மறுபடியும் வினவினாள்.
சாமாவையர் “இல்லை” யென்று விடை கூறினார். ஆகா! அவர்களுடைய மனதின் குழப்பம் பெருங் குழப்பமாயிற்று! அவர்கள் தீத்தணலின் மேல் விடப்பட்டோரைப் போலாயினர். பெண்ணுக்கும் மாப் பிள்ளைக்கும் ஒரே காலத்தில் துன்பம் சம்பவித்த விஷயம் ஒரு நிமிஷத்தில் அவர்களுடைய தேகத்தைச் சீர்குலைத்து, நெஞ்சைப் பிளந்து, இருதயத்தைச் சின்னாபின்ன மாக்கிவிட்டது. பேசமாட்டாமலும், எவ்வித யோசனையும் செய்ய மாட்டாமலும் அப்படியே சோர்ந்து அசைவற்றுச் சாய்ந்து விட்டனர். ஒரு நிமிஷமான பிறகு சாம்பசிவம், "அப்படியானால் நான் இங்கே வந்து மேனகாவை அழைத்துப் போனேனென்று இவர்கள் மாப்பிள்ளையிடம் சொன்னதாக எனக்குத் தந்தி வந்ததே! அதென்ன சங்கதி? அந்தத் தந்தியை யார் கொடுத்தது?” என்றார்.
சாமா:- அதை வராகசாமிதான் கொடுத்தானாம். நான்காம் நாள் வராகசாமி ஒரு கேஸின் விஷயமாக சேலம் போனான். ராத்திரி 8 மணி வண்டிக்கு நானும் அவனுடன் போய் அவனை ரயிலில் ஏற்றிவிட்டு ஒன்பது மணிக்குத் திரும்பி வந்தவன், வராகசாமிக்கு ரயில் கிடைத்துவிட்டதென்று இவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போக நினைத்து இங்கே வந்தேன்.
அப்போது கோமளம் தூங்கிக் கொண்டிருந்தாள்; பெருந்தேவியம்மாள் மிகவும் வருத்தத் தோடு உட்கார்ந்திருந்தாள்; என்னவென்று கேட்டேன். அதற்குக் கொஞ்ச நாழிகைக்கு முன் நீங்கள் ஒரு பெட்டி வண்டியில் வந்து வாசலில் வண்டியிலே இருந்து கொண்டு, வெள்ளி வில்லை தரித்த ஒரு சேவகனை உள்ளே அனுப்பி, மேனகாவை அழைத்து வரச்சொன்னதாகவும், உடனே மேனகா வெளியில் போய் பெட்டி வண்டிக்கருகில் நின்று உங்களோடு கொஞ்ச நாழிகை பேசிக்கொண்டிருந்து விட்டு அவளும் வண்டியில் ஏறிக்கொண்டதாகவும், பிறகு வண்டி போய்விட்டதாகவும் பெருந்தேவி என்னிடம் தெரிவித்தாள். மேனகா தன்னிடம் சொல்லிக்கொள்ளாமற் போனதைப்பற்றி பெருந்தேவியம்மாள் வருத்தப்பட்டுக்கொண்டாள். நீங்கள் எங்கேயோ அறிமுகமான இடத்துக்கு மேனகாவுடன் போய்விட்டுத் திரும்பி வந்துவிடுவீர்களென்று இவளுக்கு சமாதானம் சொல்லிவிட்டு நான் போய்விட்டேன். மறுநாளும் நீங்கள் வராமையால், உங்களுக்கு அறிமுகமானவர் வீட்டிலெல்லாம் போய் நாங்கள் விசாரித்துப் பார்த்தோம். ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. நேற்று வராகசாமி வந்தான்; உடனே உங்களுக்குத் தந்தி கொடுத்தான் - என்றார்.
அதைக் கேட்ட சாம்பசிவம் சகிக்கவொண்ணா ஆச்சரியத்தையும், திகைப்பையுங் கொண்டு , " என்ன கண்கட்டு வித்தையா யிருக்கிறதே! நானாவது இங்கே வரவாவது! அன்றையதினம் நான் அம்பாள் சத்திரத்திலல்லவா முகாம் செய்திருந்தேன்; இங்கு வர எனக்கு ரஜா ஏது? ரஜா இல்லாமல் நான் இங்கு வரமுடியுமா? ஒரு வாரத்துக்கு முன்னால் தானே நான் இங்கே பெண்ணைக் கொண்டு வந்து விட்டேன். அதற்குள் இவர்களுடைய அனுமதி யில்லாமல் அவளை அழைத்துப் போவேனோ! என்னகென்ன பைத்தியமா? இது கேழ்வரகில் நெய் ஒழுகுகிற தென்னும் சங்கதியா யிருக்கிறதே!" என்று கூறி மேலும் பேசமாட்டாமல் மதிமயக்கம் கொண்டு சாய்ந்தார்.
மிகவும் பதைபதைத்து நின்ற கனகம்மாள், “இதைப் போலீஸில் எழுதி வைத்தீர்களா?” என்றாள்.
சாமா:- வராகசாமி எழுதிவைக்க வேண்டாமென்று சொல்லி விட்டான்.
சாம்ப:- ஏன்? - என்றார்.
அதற்குமேல் பதிற் சொல்லமாட்டாமல் சாமாவையர் தயங்கினார்; கனைத்துக் கொண்டார்; இருமினார்; எச்சிலை விழுங்கினார்; அப்புறம் திரும்பினார்; ஆகாயத்தைப் பார்த்தார்; பூமாதேவியைக் கடாட்சித்தார்; சமையலறையைக் கடைக் கணித்தார்; கடைசியாக மெளனம் சாதித்தார். சாம்பசிவம் அத்துடன் விடுபவரல்லர்; "போலீசில் பதிவு செய்யும் படி நான் தந்தியில் கூட தெரிவித்தேனே; அதைச் செய்யாத காரணமென்ன?” என்று அதே கேள்வியைக் கேட்டார்.
சாமா:- உங்களுடைய தந்தியைப் பார்த்தவுடன் அன்றைக்குப் பெட்டி வண்டியில் வந்தது நீங்களல்ல வென்று நிச்சயித்தோம். ஆனால், மேனகா எப்படித்தான் போயி ருப்பாள் என்பதைப் பற்றி வராகசாமி எண்ணாததெல்லாம் எண்ணிப்பார்த்தான். அப்போது அவனுக்கு ஏதோ சந்தேகம் உதித்தது. மேனகாவின் டிரங்குப் பெட்டியை உடைத்துப் பார்த்தான்; அதில் ஏதோ இரண்டு கடிதங்கள் அகப்பட்டனவாம். அதைப் பார்த்தவுடன், அதில் பல இரகசியங்கள் வெளிப்பட்டனவாம். அதன்மேல் , அவன் போலீஸில் எழுதிவைக்க வேண்டாமென்று நிறுத்திவிட்டான் -என்றார். அதைக்கேட்ட அவ்விருவரின் பைத்தியமும், ஆவலும் உச்ச நிலையை அடைந்தன, சிரம் சுழன்றது; அந்த வீடே கிருகிரென்று சுற்றி மேலே கிளம்புவதாய்த் தோன்றியது. புத்தியின் தெளிவை இழந்து மேலே கேட்கவேண்டுவ தென்ன என்பதை அறியாமல் சோர்ந்தனர்.
சாம்ப:- என்ன கடிதங்கள்? யாருக்கு யாரால் எழுதப்பட்ட கடிதங்கள்? அதில் அப்படி என்ன பரம இரகசியத்தைக் கண்டீர்கள்? எங்கே அந்தக் கடிதங்கள்? நான் படித்துப் பார்க்கிறேன் - என்று அருவருப்போடும் அடக்கிய கோபத்தோடும் கேட்டார்.
சாமா:- (மிகவும் பணிவாக) அண்ணா ! அதை மாத்திரம் நீங்கள் என்னிடம் கேட்கவேண்டாம்; கடிதங்கள் வராகசாமி யிடத்தில் வைத்தியசாலையில் இருக்கின்றன. நேரிலேயே பார்த்துக்கொள்ளுங்கள்; இந்த விஷயத்தில் மாத்திரம் தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும் - என்றார்.
சாம்ப:- (பொங்கியெழும் ஆத்திரத்தோடு) என்ன ஐயா! இவ்வளவு தூரம் சொன்னவர் பாதிக் கிணற்றில் விட்டதைப் போல முக்கியமான இடத்தில் மறைக்கிறீரே! எங்கள் மனம் தவிக்கிறது உமக்குக் கொஞ்சமும் தெரியவில்லையா? வீணாக இன்னமும் வேடிக்கை பார்க்கவேண்டாம். மிகுதி விஷயத்தை யும் சொல்லும். எப்படியும் அதை நாங்கள் அறிந்து கொண்டே தீரவேண்டும். நடந்ததைச் சொல்ல உமக்கென்ன யோசனை? அதனால் உம்மீது யார் என்ன குற்றம் சொல்லப் போகிறார்கள்? பாதகமில்லை , சொல்லும்; அது எதுவாக இருந்தாலும் இருக்கட்டும் - என்றார்.
சாமாவையர் பற்களைக் காட்டிக் கெஞ்சி, "இல்லை அண்ணா. அதை மாத்திரம் நீங்கள் மற்றவர்களிடத்திலேயே கேட்டுக்கொள்ளுங்கள். அதை வாயில் வைத்துச்சொல்லவும் எனக்கு மனமில்லை; இப்போது இன்னம் ஐந்தே நிமிஷத்தில் நாம் ராயப்பேட்டை வைத்தியசாலைக்குப் போனால் கடிதங்களையே நீங்கள் பார்க்கலாம்" என்று பிடிவாதமாகப் பேச அவர்கள் மிகுந்த ஆயாசமும், ஆத்திரமும் அடைந்தனர். அவர்களது ஆவல் மகா உக்கிரமாக எழுந்து அவர்களது நெஞ்சையும் தேகத்தையும் படீரெனக் கிழித்து விடுமோ வென்னத்தகுந்த விசையையும் பருமனையும் அடைந்தது. கோபம் தேகத்தையே நெருப்பாய்ப் பற்றி எரித்தது. ஆனால், அதை யார் மீது காட்டுவது? சாமாவையர் அன்னிய மனிதர்; வராகசாமியின் வீட்டில் புண்ணியத்திற்கு உழைப்பவர். ஆகையால், அவரை மேலும் வற்புறுத்த சாம்பசிவத்திற்கு மனமில்லை. இரண்டு கைகளுமற்ற மனிதன் முஷ்டியுத்தம் செய்ய நினைத்ததைப் போல அவருடைய அடங்காக் கோபம் வீணில் ஜ்வலித்தது. “சரி; அப்படியானால், போவோம்
எழுந்திரும்" என்றார் சாம்பசிவம். இருவரும் எழுந்தனர்.
அதற்குள் கனகம்மாள் சமையலறைப்பக்கம் போய் உள்ளே எட்டிப்பார்த்து, “பெருந்தேவியம்மா! என்ன செய்கிறாய்? இப்படி வா அம்மா! என்ன இது கூத்தாக இருக்கிறதே! பெண்ணையார் அழைத்துக் கொண்டு போனது? நீங்கள் ஒருவரும் பார்க்கவில்லையா? அந்தச் சேவகன் யார்? விவரமாகச் சொல்லம்மா!" என்று தனது ஆத்திரத்தை யெல்லாம் அடக்கிக்கொண்டு நயமாகக் கேட்டாள்.
பொறுப்பதற்கு இயலாத துர்நாற்றத்தைக்கண்டு முகத்தைச் சுளித்துக் கொள்பவள் போல பெருந்தேவியம்மாள் தனது முகத்தை விகாரப்படுத்திக்கொண்டு அருவருப்பாக, "ஆம்; கூத்துதான்! அது எங்களுக்கு எப்படித் தெரியப் போகிறது? கூத்தைப் பார்க்கிற-வர்களுக்கும் கூத்தாடிகளைப் பார்க்கிறவர்களுக்குந்தான் நிஜம் தெரியும்; எங்களுக்கென்ன தெரியும்" என்று ஒன்பது முழம் நீட்டிப் பேசினாள். அவளுடைய முகமும் உதடுகளும் கைகளும் யாவும் நீண்டன. ''வா, உட்கார்" என்ற மரியாதையும் இல்லாமற் போனதன்றி தன் வீட்டில் வந்து அல்லல் கொடுக்கும் பிச்சைக்காரரை அவமதித்துப் பேசுபவளைப் போல மொழிந்தாள் பெருந்தேவியம்மாள்.
கனகம்மாள் தங்களுடைய பொல்லாத காலத்தை நினைத்துத் தனது ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, " என்ன இது? நீ சொல்வதொன்றும் விளங்கவில்லையே! நடந்ததை விவரமாகச் சொல்லம்மா! பெண்ணை அழைத்துப் போனது யார்? ஏதோ கடிதம் அகப்பட்டதாமே; அது என்ன கடிதம்?"என்று திரும்பவும் நயமாகக் கேட்டாள்.
பெருந்தேவி முன்னிலும் அதிகரித்த எரிச்சலைக் காட்டி, "பெண் சங்கதிதான் ஊர் சிரிக்கிறதே! அவளால், நாங்கள் எல்லோரும் மூடி முக்காடிட்டு உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கும்படி ஆய்விட்டதே! வராகசாமி இதைக் கேட்டு தற்கொலை செய்து கொள்ளத்தானே மோட்டார் வண்டியின் கீழ் தன்னுடைய கழுத்தைக் கொடுத்தான்; அப்படியல்லவோ செய்து விட்டாள்! பெண்ணிருந்தாலும் இப்படித்தான் இருக்க வேண்டும்! இந்தப் பெண்ணைப் பெற்ற வயிற்றில் பிரண்டையை வைத்துக் கட்டிக்கொள்ளலாம். இப்படிப்பட்ட பெண்ணிருந்தால் ஏழேழு தலைமுறைக்கும் போதும். அடாடா! இருந்திருந்து நல்ல இடத்தில் சம்பந்தம் செய்துகொண்டோம்! இனி எங்கள் வீட்டில் நாய் கூட தண்ணீர் குடிக்காது. அநியாயமாக எங்கள் குடியைக் கெடுத்துவிட்டாள் கொழுப்பெடுத்த முண்டை” என்றாள்.
அந்தச் சொல் உருக்கிய இரும்பைப் பெய்தலைபோல, கனகம்மாள், சாம்பசிவம் ஆகிய இருவரின் செவிகளிலும் நுழைந்தது. அவர்களது தேகம் கட்டுக்கு அடங்காமல் பதைபதைத்தது. ஒரே அடியில் பெருந்தேவியின் மண்டையை சுக்கள் சுக்கலாக உடைக்கக்கூடிய மூர்க்கத்தை அடைந்தனர். கோபமூட்டப்பெற்ற புலிகளைப் போல நின்ற கனகம்மாள், "பெருந்தேவியம்மா! என்ன தாறுமாறாகப் பேசுகிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்பதைக்கூட மறந்துவிட்டாயே! நடந்த விஷயத்தையும் சொல்லமாட்டே-னென்கிறாய்; நினைத்தவிதம் எங்களை தூஷிக்கிறாய்! இதனால் உங்களுக்கு மாத்திரமே துக்கமும் வெட்கமுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது! அருமையாக வளர்த்த எங்களுடைய குழந்தை போய்விட்டது; எங்கள் மாப்பிள்ளையின் உயிருக்கு ஆபத்து வந்தால், அதில் எங்களுக்கு விசனம் இல்லையா? உங்களுடைய விசனத்துக்கு எங்களுடையது குறைந்த தென்று நினைத்துக்கொண்டாயா? நீ எங்களை எதிரிகளைப்போல நினைத்து ஆத்திரமாய்ப் பேசுவதேன்? குழந்தை எங்கு தவிக்கிறாளோ! அவளையல்லவோ நாம் இருவரும் சேர்ந்து கண்டு பிடிக்க வேண்டும்; இந்தச் சமயத்தில் நீயும் நானும் சேர்ந்து சண்டையிடுவதா அழகு? - என்றாள்.
பெருந்தேவி மிகுந்த அருவருப்பைக் காட்டி வலது கையால் மோவாயில் வியப்புக் கொக்கி மாட்டி, ''குழந்தையாமே குழந்தை! நல்ல குழந்தை! வாயில் விரலை வைத்தால் அந்தக் கோந்தைக்குக் கடிக்கக் கூடத் தெரியாது பாவம்! அந்தக் கோந்தை தவிக்கிறதோ? நல்ல தடிப்பய லோடே உல்லாசமாகப் பொழுது போக்கித் தவிக்கிறதோ? அவள் போன இடம் தெரியாதோ? தஞ்சாவூரில் ஒரு வருஷம் வைத்துக் கொண்டு நாடகக்காரனுக்குக் கூட்டிக்கொடுத்த உங்களுக்கு அவள் போன இடம் தெரியாதோ? காக்கை பிடிக்கிற பைத்தியக்காரியைப்போல, என்னைக் கேட்க வந்துவிட்டாயோ? அப்பா! பொல்லாக் கும்பல்! மகா பட்டிக்கும்பலென்று தெரிந்து கொள்ளாமலல்லவா மதி மோசம் போனோம்" என்று ஏழு மேகங்களும் ஒன்றுகூடி கிடுடாயமான இடிகளை உருட்டி விடுதலைப்போல மொழிந்தாள். அந்த கன்னகடூரமான சொற்களைக் கேட்ட சாம்பசிவம் வீராவேசங் கொண்டு தம்மை முற்றிலும் மறந்து பாய்ந்து எதிரில் கிடந்த அம்மிக் குழவியைக் கையிலெடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைய, சாமாவையர் குறுக்கில் விழுந்து மறைத்து அம்மிக்குழவியை வாங்கி அவரையும் கூடத்திற்கு இழுத்து வந்தார். நெருப்புக் கடலில் நீந்திய கனகம்மாள் அழுத்தமாக, "அடி பெருந்தேவி! நாக்கை உள்ளே வைத்துப் பேசு; தாறுமாறாக உளறாதே; என்ன நடந்ததென்று கேட்டோம். ஒழுங்காகச் சொல்ல மனமிருந்தால் சொல்; இல்லாவிட்டால், சொல்ல மாட்டே னென்று சொல்லிவிடு; நாங்கள் அறிந்துகொள்ளும் விதத்தில் அறிந்தகொள்ளுகிறோம். உனக்குத்தான் வாயிருக்கிறதென்று பேச்சை ஓட்டாதே"-
என்றாள்.
அதற்குள் கட்டுக்கடங்காத கோபத்தைக் கொண்ட பெருந்தேவியம்மாள், "அடியாமே அடி! உங்கள் வீட்டு சேவகன் பெண்டாட்டியென்று நினைத்துக்கொண்டாயோடி நாறமுண்டை ! யாரைப் பார்த்து அடி என்கிறாய்? அதற்குள் அந்தக் கட்டையிலே போவான், மொட்டைச்சி மாதிரி அம்மிக்குழவியைத் தூக்கிக்கொண்டு ஓடி வருகிறானே! போங்கள் வெளியில்; ஜாதிகெட்ட பிணங்களா! உங்களை யார் இங்கே பாக்கு வைத்து அழைத்தது? பேத்தியை நாடகக்காரப் பயலுக்குக் கூட்டிக்கொடுத்த தாய்க்கிழவி முண்டைக்கு இவ்வளவு அகங்காரமா! வீட்டைவிட்டு மாரியாதையாக வெளியிலே போகிறாயா? சந்தனாபிஷேகம் பண்ணட்டுமா?" என்று கூறி தைதாவென்று தாண்டிக் குதித்து இலங்கணி அவதாரம் எடுத்தாள்.
அந்த விபரீதத்தைக் கண்டு மிகவும் அச்சமடைந்த சாமாவையர் நடுவில் விழுந்து, ''அண்ணா ! வாருங்கள் வெளியில் போவோம்; இது சுத்த அசடு; இவளோடு சண்டையிடுவது நமக்குத்தான் அவமானம்; அம்மாவைக் கூப்பிடுங்கள். நம்முடைய அகத்துக்குப் போவோம், வாருங்கள் பாட்டியம்மா! இது நன்றாக இல்லை; வாருங்கள் வெளியில் போவோம்" என்று வற்புறுத்தினார். ஆகாயமோ பூலோகமோ வென்பது தெரியாமல், தம்மை முற்றிலும் மறந்து நின்ற சாம்பசிவம், அம்மாளுடைய கையைப் பிடித்து அழைக்க, அவள் கடைசியாக, "பெருந்தேவியம்மா! கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்குக் கஷயாத்தால் அதை ஜீரணம் செய்யப் பார்க்கிறாயா! அது எங்களிடம் பலிக்காது; இ ; இதோ ஒரு நிமிஷத்தில் உன் சூதைக் கண்டு பிடிக்கிறோம்" என்று சொல்லி விட்டு வர, மூவரும் வீட்டிற்கு வெளியில் வந்தனர்.
அப்போது சாமவையர், "அண்ணா ! இவளுடைய குணம் உங்களுக்கு எப்போதும் தெரிந்ததுதானே. நீங்கள் இதைப் பாராட்டி மனவருத்தப் படவேண்டாம்; நாம் பாலைப் பார்ப்பதா பானையைப் பார்ப்பதா? வராகசாமியின் பொருட்டு நீங்கள் இதை க்ஷமிக்க வேண்டும்; வாருங்கள் நம்முடைய அகத்துக்குப் போவோம். இன்னம் நீங்கள் காப்பிக்கூட சாப்பிடவில்லையே! முதலில் காப்பி கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு பிறகு மேல் யோசனையைச் செய்வோம்” என்றார்.
அவருடைய சொற்கள் சாம்பசிவத்தின் செவிகளில் நுழையவில்லை. அவருடைய மனமும் தேகமும் கோபத் தாலும், ஆத்திரத்தாலும், அவமானத்தாலும், துயரத்தாலும் படபடத்தது. அதிவிசையில் சுற்றிக்கொண்டிருந்தும் அசைவற்றிருப்பது போலத் தோன்றும் பம்பரத்தைப் போல இருந்தன. உடம்பெல்லாம் வியர்வை ஒழுகியது; கண்கள் கலங்கின. தாம் ஒரு பெண்ணைப் பெற்றதனால் அவ்வாறு கேவலமாக நடத்தப்பட நேர்ந்ததல்லவா என்று சாம்பசிவம் நினைத்து உருகி ஓய்ந்து போனார். அதுகாறும் அத்தகைய பழிப்பைப் பெறாமல், எவ்விடத்திலும் பணிவையும் மரியாதையையும் பெற்றவராதலின், வெட்கமும், துக்கமும், அழுகையும் பொங்கியெழுந்தன ; கண்களில் துளிந்த நீரைத் துடைத்துக் கொண்டார்; இன்னமும் தாம். வந்த காரியம் முடியாமையால், அதற்குள் தாம் அவ்வாறு சோர்வடைதல் கூடாதென நினைத்தவராய், "சாமாவையரே வண்டியில் ஏறும்; நேராக வைத்திய சாலைக்குப் போவோம்" என்றார். அவருடைய சொல்லின் உறுதியைக் கண்ட சாமாவையர் , அதை மறுக்க மாட்டாதவராய் உடனே அதற்கிணங்கி வந்து வண்டியில் உட்கார்ந்து, இன்ன இடத்திற்குப் போக வேண்டுமென்று வண்டிக்காரனிடம் சொன்னார். அதற்குள் சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய இருவரும் ஏறி வண்டியில் உட்கார்ந்து கொண்டனர். அதிவேகமாய் ஓட்டும்படி சாம்பசிவம் கண்டித்து உத்தரவு செய்தார். வண்டி அப்படியே புறப்பட்டது. வண்டிக்கார சாயுபுவின் கைகளும், சாட்டை வாரும், சதங்கைகளும், வாயும் அதிகவேகமாய் வேலை செய்தனவே யொழிய குதிரையின் ஓட்டத்தில் எவ்வித மாறுபாடும் உண்டாகவில்லை. அடிகள் அதிவேகமாக படப்பட குதிரையின் நடை தளர்ந்த நடையானது.
கிழக்கு திரையின் முதுகில் அவன் இன்னம் சிறிது தாராளமாக அடிகளைச் சமர்ப்பித்திருந்தால் குதிரை ஈசுவரனைக் குறித்துத் தவம் செய்து இன்னம் அதிகமான பலத்தையும் பாலியத்தையும் பெற்று வர அடுத்த உலகம் சென்றிருக்கும்; எதிர்த்த வீட்டு திண்ணையிலிருந்த போலீஸ் ஜெவான்களும் வண்டியில் பின் தொடர்ந்து வந்தனர்.
வண்டிக்குள்ளிருந்த தாயும் பிள்ளையும் அப்படியே பிரமித்து வாய் திறக்கவும் மாட்டாமல் உட்கார்ந்திருந்தனர். மேனகாவின் விஷயம் அவர்களுக்கு இன்னதென்று நன்றாய் விளங்கவில்லை. பெருந்தேவியம்மாளின் தூஷணையிலிருந்து அவளுடைய கற்பிற்குக் குறைவான விஷயம் ஏதோ வெளிவந்திருப்பதாக மாத்திரம் ஒரு சிறிது தெரிந்தது; மேனகாவின் நற்குண நல்லொழுக்கத்தையும், கற்பின் உறுதியையும், மேன்மையான மனப்போக்கையும் அவர்கள் நன்றாக அனுபவத்தில் உணர்ந்தவராதலின், அது சுத்தக் கட்டுக் கதையாகவே இருக்க வேண்டு மென்று நினைத்தனர். மேனகாவைப்பற்றி அப்படி அவதூறாக நினைக்க அவர்களுடைய மனம் துணியவில்லை. மகா புனிதவதியான அந்தக் கோமளாங்கியின் கற்பைச் சந்தேகித்தால், சந்தேகிப் போரின் சிரத்தில் இடியே வீழ்ந்து அழித்து விடுமென்று நினைத்தனர். அவர்கள் அவ்வாறு எண்ண மிட்டிருந்த தருணத்தில் வண்டி மேன்மேலும் சென்றது. தொளசிங்கப் பெருமாள் கோயில் தெருவின் தொடர்ச்சியான சாத்தானித்தெருவைக் கடந்து அப்பால் மேற்கு முகமாய் திரும்பி பீட்டர் சாலையிற் செல்ல ஆரம்பித்தது. அடுத்த நிமிஷத்தில், அங்கே இடது பக்கத்திலிருந்த போலீஸ் ஸ்டேஷன் வாயிலில் திடீரென்று நின்றது. சாமாவையர், "சாயிபு! ஏன் வண்டி நின்று விட்டது?" என்றார்.
உடனே சாயிபு ஒன்றையும் அறியாதவனைப்போல, “இல்லே ஸாமி! எங்க ஊடு இங்கே இருக்கிறான்; அதுக்காகவ குதிரே எடக்குப் பன்றாங்கோ; இதோ ஆச்சு ஓட்டறேன் ஸாமி! ரோசனை பண்ண வாணாம் ஸாமி!" என்று கூறிக் குதித்து, குதிரையின் கடிவாள வாரைப் பிடித்து நடத்துபவன் போலச் செய்து, வண்டியை ஸ்டேஷன் வாசலின் ஓரமாக நிறுத்தினான். உடனே புற்றிலிருந்த ஈசல்கள் கிளம்புதலைப்போல, ஐந்தாறு போலீஸ் ஜெவான்கள் தோன்றி, வண்டியின் நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பின்பக்கத்தில் திடீரென்று தோன்றி பனைமரத்தைப் போன்று விறைத்து நின்று சாம்பசிவத்திற்கு திருஷ்டி தோஷம் கழிப்பவரைப்போல வலது கையை தூக்கிக்காட்டி ஒழுங்காக சலாம் செய்து தமது கையைத் துடையில் சேர்த்து நின்றார். எதிர்பாராத அந்தக்காட்சியைக் கண்டு திடுக்கிட்ட சாம்பசிவத்தின் நிலைமை எப்படி இருந்தது என்றால், பாசி நிறைந்த குளத்தில் ஒரு கல்லைப் போட்டவுடன் பாசி விலகி நாற்புறங்களிலும் அலை நகர்ந்து, இடையில் தெளிவான இடத்தைக் காட்டுதலைப்-போல, அவருடைய ஏனைய துன்பங்களும், உணர்ச்சிகளும் திடுக்கென்று அவருடைய மனத்தின் முன்புறத்திலிருந்து பின் புறத்துக்கு ஒதுங்கின; அவர் சுய உணர்வைப் பெற்று தமது இயற்கையான கௌரவத் தோற்றத்தைக் கொண்டு, தமது முகத்தில் சந்தேகம் தோன்ற, “யார் நீங்கள்? இந்த டிவிஷன் போலீஸ் இன்ஸ் பெக்டரோ? இதற்கு முன் என்னைப் பார்த்திருக்கிறீர்களோ?" என்றார்.
சமய சஞ்சீவி அய்யர் தம்முடைய முகத்தைத் தாமரைப் பூவைப் போலப் புன்னகையால் மலர்த்திக் காட்டி, "ஆம்; தாங்கள் தஞ்சாவூர்டிப்டி கலெக்டர்வாள் அல்லவா?" என்றார்.
சாம்ப:- ஆம்; நான்தான் - என்றார்.
போலீஸ் :- அப்படியானால் தாங்கள் ஒரு நிமிஷ நேரம் ஸ்டேஷனுக்குள் தயவு செய்யவேண்டும் - என்றார்.
குதிரையின் இடக்கினால் வண்டி நின்றவுடன் இன்ஸ்பெக்டர் அதைப் பார்த்து வெளியில் வந்ததாகவும், வண்டியில் தாம் இருந்ததைக் கண்டவுடன் பழைய அறிமுகத்தால், தம்மை அவ்வாறு சலாம் செய்தார் என்றும் சாம்பசிவம் முதலில் நினைத்தார். பிறகு இறங்கி ஒரு நிமிஷம் வரும்படி மரியாதைக் குறைவாகத்தம்மிடம் அவர் சொல்லவே, சாம்பசிவம் ஒரு சிறிது திகைப்படைந்தார். அது காலை வேளையாதலால், ஒரு கால் தமக்கு பழம், காப்பி, முதலிய சிற்றுண்டிகள் கொடுத்து உபசரிக்க அழைக்கிறாரோ வென்று நினைத்தார்; என்றாலும் தம்முடைய அவசரத்தை நினைத்து, "ஸ்டேஷனுக்குள் என்ன விசேஷம்? நான் மிகவும் அவசரமாய்ப்
போக வேண்டும்" என்று கூறினார்.
போலீஸ்:- ஸ்டேஷனில் அதிக தாமதப்படுத்தக்கூடிய வேலை ஒன்றுமில்லை. போலீஸ் கமிஷ்னர் வந்திருக்கிறார். அவர் தங்ளோடு மிகவும் அவசரமாக இரண்டொரு வார்த்தைகள் பேச விரும்புகிறார். உடனே திரும்பி வந்து விடலாம்; தயவு செய்யவேண்டும் - என்று நயமாகவும் அதிகாரத்தோடும் கூறினார். அதைக்கேட்ட சாம்பசிவத்திற்கு அது உண்மை உலகமோ அல்லது தாம் கனவு நிலைமையில் இருக்கிறோமோ என்னும் சந்தேகம் உதித்தது; பெரிதும் ஆச்சரியத்தோடு, " என்ன ஐயா! நான் வண்டியிலிருக்கிறேன் என்பதை இப்போது தான் நீங்கள் பார்த்தீர்கள் கமிஷனர் என்னோடு பேசவேண்டுமென்று எப்போது சொன்னார்? என் வரவை முன்னதாகவே எதிர்பார்த்திருப்பவரைப் போலப் பேசுகிறீர்களே! முதலில் நான் இந்த ஊருக்கு வந்ததுதான் உங்களுக்கு எப்படித் தெரியும்? இப்போது இந்த வழியாக நான் வருவேன் என்பதுதான் எப்படித் தெரியும்; அதற்குத் தகுந்தாற்போல, இவ்விடத்தில் வண்டியும் தானாக நின்றதும் ஆச்சரியமாக இருக்கிறது!" என்றார்.
போலீஸ்:- இந்த விவரங்களை யெல்லாம் அவரே தங்களிடம் நேரில் திருப்திகரமாகச் சொல்வார்; காத்திருக்கிறார், தயவு செய்யுங்கள் - என்று மேன்மேலும் வற்புறுத்தி னார். சாம்பசிவையங்காருடைய மனதில் கோடானு கோடி எண்ணங்கள் உண்டாயின; தாம் செல்லும் இடங்களி லெல்லாம் போலீஸார் தம்முடன் தொடர்ந்து கொண்டே வருகிறார்களோ வென்றும், அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய முகாந்திரம் என்னவென்றும் நினைத்து நினைத்து எவ்வித நிச்சயமான முடிவையும் அடையக் கூடாதவராய் தயங்கினார். தாம் அதற்குமுன் பார்த்தும் அறியாத போலீஸ் கமிஷனர் தம்மிடம் என்ன அவசரசங்கதியைக் கூறப்போகிறார் என்றும், அது எத்தகைய புதிய துன்பத்தைச் செய்யக் காத்திருக்கிறதோ வென்றும் கவலை கொண்டு தவித்தார். பெண்ணின் விஷயமும் , மருமகப்பிள்ளையின் விஷயமும் இன்னொரு புறத்தில் வதைத்தது. "நிற்கவேண்டாம் பரவும் பறவு"மென்று அவரைத் தூண்டிக்கொண்டே இருந்தன. அந்த நிலையில் இருதலைக் கொள்ளி எரும்பு போலான சாம்பசிவம் அரை மனதோடு கீழே இறங்கி ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்.
அங்கு நடந்த சம்பாஷணையைக் கவனித்திருந்த கனகம்மாளுடைய மனது இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு வகையான சஞ்சலத்தை அடைந்தது. இன்ஸ்பெக்டருடைய குரலைக் கேட்டபோதே கோட்டான் சாகுருவி முதலியவற்றின் அவகுரலைக் கேட்பதைப் போல இருந்தது. சாம்பசிவத்திற்கு ஏதோ பெருத்த விபத்து நேரக் காத்திருப்பதாக நினைத்த அம்மாள் வண்டியிலிருக்க மனமற்றவளாய்க் கீழே இறங்கினாள். சாமாவையரும் கூடத் தொடர்ந்தார். அவர்கள் இருவரும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தனர். அவர்களும் வந்ததை போலீஸார் ஆட்சேபிக்கவில்லை. சாம்பசிவம் உள்ளே சென்று, எதிரில் ஓர் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரியைக் கண்டார். அவர் நமது சாம்பசிவத்தைக் கண்டவுடன், அன்பான குரலில் மரியாதை யாக, "டிப்டி கலெக்டரே! வரவேண்டும்; இதோ இந்த ஆசனத்தில் உட்காருங்கள்" என்றார். சாம்பசிவம் அப்படியே உட்கார்ந்தார்; என்றாலும், விஷயம் இன்னதென்பது தெரியாமை மாத்திரம் அவருக்கு மிகுந்த ஆவலைக் கொடுத்தது. சாம்பசிவம் மெதுவாக, "தாங்களை நான் பார்த்ததில்லை; போலீஸ் கமிஷ்னர் தாங்கள்?''
துரை, "ஆம்; நான்தான்; சங்கதி வேறொன்றுமில்லை. நேற்றிரவு எனக்குத் தஞ்சாவூர் கலெக்டர் துரையிடமிருந்து ஒரு அவசரத்தந்தி வந்தது. அதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்பியே உங்களைத் தருவித்தேன்" என்றார்.
திடுக்கிட்டுப் பெரிதும் வியப்படைந்த சாம்பசிவம், "நேற்று சாயுங்காலம்தானே நான் அங்கிருந்து புறப்பட்டு வந்தேன். இதற்குள் என்ன அவரசமான சம்பவம்
நேர்ந்துவிட்டது?” என்றார்.
துரை, “இதோ படிக்கிறேன்; கேளுங்கள். இதில் முதல் பாதிபாகம் உங்களுக்கு சம்பந்தமானது, பிற்பாதி பாகம் எங்களுக்குச் சம்பந்தமானது. ஆகையால், உங்களுக்குச் சம்பந்தப்பட்ட முதல் பாகத்தைப் படிக்கிறேன் கேளுங்கள் :
சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களுக்கு :-
தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் சாம்பசிவையங்கார் இன்று மாலையில் இங்கிருந்து புறப்பட்டு பட்டணம் வருகிறார். காலையில் எழும்பூரில் இறங்குவார். பிறகு திருவல்லிக்கேணி தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலிருக்கும் வக்கீல் வராகசாமி அய்யங்கார் அவர்களது வீட்டிற்கு வருவார். அவரைக் கண்டு அவரிடம் அடியில் எழுதப்பட்ட எனது உத்தரவைக் கொடுத்து, அதற்கு சாட்சியாக நீங்களே அவருடைய கையெழுத்தையும், பெருவிரல் ரேகை அடையாளத்தையும் பெற்றுக் கொள்ளக் கோருகிறேன். அவர் ரஜா இல்லாமல் இரண்டு தடவைகளில் தம்முடைய அதிகார எல்லையை விடுத்து வெளியூர்களுக்குப் போயிருக்கிறார். அப்படிப் போன ஒரு சமயத்தில், தாம் தம்முடைய உத்தியோக முறையில் தம்முடைய அதிகார எல்லைக்குள்ளிருக்கும் கிராமங்களில் முகாம் செய்ததாக பொய்யான செலவுப் பட்டி தயாரித்து, சர்க்காரை ஏமாற்றிப் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார். தவிர, அவர் பலரிடம் லஞ்சம் வாங்கினதாக அனுமானிக்க பல சாட்சிகளும் இருக்கின்றன. இவற்றால் அவர் உத்தியோகத்தினின்று நீக்கப் படத்தக்கதும், நியாயஸ்தலத்தில் தண்டனை பெறத் தகுந்தது மான பலகுற்றங்களைச் செய்திருப்பதாக நினைக்க இடமிருக்கிறது. அவற்றைப்பற்றி நாம் செய்யப்போகும் விசாரணை முடியும் வரையில், அவரை வேலையிலிருந்து நீக்கி வைத்திருக்கிறோம். தம்மிடமிருக்கும் சர்க்கார் சம்பந்தமான காகிதங்கள் சீல்முகர் முதலிய யாவற்றையும் இந்த உத்தரவை அவர் பெற்ற இரண்டு நாட்களுக்குள் தஞ்சை கஜானா டிப்டி கலெக்டரிடம் ஒப்புவிக்க வேண்டியது :
என்று கமிஷனர் முற்பகுதியைப் படித்துக் காட்டினார். அதைக் கேட்ட சாம்பசிவத்தின் மனோநிலைமையை மனிதர் யூகித்தல் வேண்டுமேயன்றி, அதை உள்ளவாறு விரித்தெழுதத் தேவையான அறிவாற்றல் இந்த எழுது கோலுக்கு இல்லையென்று சொல்வது பொய்யாகாது. அவர் மிஞ்சிய வியப்பும் திகைப்பும் கொண்டு பேசமாட்டாமல் அப்படியே கல்லாய்ச் சமைந்து போனார். அவமானத்தால் அவருடைய தேகமும் மனமும் குன்றிப்போயின. முகத்தைக் கீழே கவித்துக்கொண்டார்; உடம்பு பதைபதைத்தது. விழிகளில் தீப்பொறி பறந்தது. அது வேறு எவராலோ அனுப்பப்பட்ட பொய்த் தந்தியா யிருக்க வேண்டுமென்று நினைத்தார். தாம் எத்தகைய குற்றமும் செய்யாதிருக்கையில், கலெக்டர் தம்மீது பொய்க்குற்றம் சுமத்தி, வேலையினின்றும் நீக்கியிருக்கிறார் என்பதை அவருடைய செவிகள் நம்பவில்லை. அது உண்மையாயிருக்குமோ வென்றும், அது யாருடைய விஷமமோவென்றும் யோசித்தார். ஒன்றுந் தோன்றவில்லை. சாமாவையர் ஆங்கில பாஷை சிறிது உணர்ந்தவராதலால், அவர் அங்கு நடந்த சம்பாஷணையின் கருத்தை அறிந்து கொண்டார். கனகம்மாள் விஷயம் என்னவென்பதை மெல்ல சாமாவையரிடம் கேட்க, அவர் உடனுக்குடனே அந்த சம்பாஷணையை மொழிபெயர்த்து வந்தார். கனகம்மாளின் மனமும் மெய்யும் ஆத்திரத்தினாலும், வியப்பினாலும் அவமானத்தினாலும் படபடத்து நின்றன.
சாம்பசிவையங்கார் கமிஷனரைப் பார்த்து, " என்ன ஆச்சரியம்! இந்த உத்தரவு எனக்குச் சம்பந்தப்பட்டது தானா? நன்றாகப் பாருங்கள். இந்தக் குற்றங்களில் எதையும் நான் செய்யவில்லையே!" என்றார். கமிஷனர் துரையேனும் மற்ற போலீஸாரேனும் அவர் சொன்ன சொல்லைச் சிறிதேனும் மதிக்கவில்லை. கையுங்களவுமாகப் பிடிபடும் திருடன்கூட தாம் குற்றம் செய்யவில்லையென்று சொல்வதைக் கேட்டுப் பழகிய போலீஸார் புத்திக்கு சாம்பசிவம் அதே வேஷந்தான் போடுவதாகத் தோன்றியது. ஆகையால், கமிஷனர் அவரைப் பெருத்த அயோக்கிய சிகாமணியாகவே மதித்தாராயினும், வெளிக்கு மாத்திரம் மரியாதை காட்டி, "கலெக்டர் சொல்வது பொய்யோ , டிப்டி கலெக்டர் சொல்வது பொய்யோ; அது தானே பின்னால் விளங்குகிறது. எனக்கு அவர் கொடுத்த வேலையைச் செய்ய நான் கடமைப் பட்டவன். இதோ தந்தியை நீங்களே பாருங்கள்!" என்று கூறியவண்ணம் தந்தியின் கீழ்பாகத்தை மறைத்துக்கொண்டு முற்பகுதியைக் காட்டினார். அது உண்மைத் தந்தியாகவே காணப்பட்டது; தஞ்சாவூர் கலெக்டரிடத்திலிருந்தே வந்திருந்தது. அதன்தன் வாசகமும் கமிஷனர் படித்தபடியே இருந்தது; சாம்பசிவம் சிறிது யோசனை செய்தவராய், "உம் நடக்கட்டும்; எல்லாம் காலவித்தியாசம்; என்னென்ன சம்பவிக்கிறதோ பார்க்கலாம். இப்போது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார்.
துரை அவருடைய வேதாந்தப் பேச்சைக் கேட்டுப் புரளியாகப் புன்னகை செய்து, “இந்த முற்பாதியின் நகல் ஒன்று வேறு காகிதத்தில் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதில் என்னுடைய கையெழுத்தும் செய்திருக்கிறேன். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். சென்னை ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷனில் நானே நேரில் கமிஷனரிடம் இதன் முற் பகுதியான உத்தரவைப் பெற்றுக்கொண்டேன்' என்று தந்தியின் பின்புறத்தில் எழுதிக் கையெழுத்துச் செய்து அதில் உங்களுடைய பெருவிரல் ரேகையை அழுத்துங்கள்; அவ்வளவே, வேறொன்றுமில்லை. அதன்பிறகு உங்களுக்கு விருப்பமான இடத்துக்கு நீங்கள் போகலாம்" என்றார்.
அதைக் கேட்ட சாம்பசிவம் தம்மை மறந்த நிலைமையில், கமிஷனர் சொன்னபடி செய்துவிட்டு; உத்தரவுக் காகிதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு, துரையிடம் சொல்லிக்கொள்ள வேண்டுமென்னும் மரியாதையையும், தமது தேகத்தையும் முற்றிலும் மறந்து நேராக வெளியிற் போய் வண்டியில் ஏறிக்கொண்டார். வண்டி ஓட்டப்பட்டது. மூன்று உலகங் களையும் எரித்த ஈசனது கோபத்தையே, அவ்விருவரின் கோபத்திற்கு இணைசொல்லவேண்டும். அன்றி, வேறு எந்த கோபமும் அந்தச் சமயத்தில் இணைசொல்லத் தகுந்ததல்ல. தாங்கள் வண்டியிற் செல்வதாக அவர்களுக்குத் தோன்ற வில்லை. ஆகாயத்தில் பறப்பதாகவே நினைத்துக் கொண்டனர். அவர்களுடைய மனதிலிருந்து பொங்கியெழுந்து உலகத்தை யெல்லாம் மூடிய உணர்ச்சியைக் கோபம் என்பதா , துயரம் என்பதா , விபத்து என்பதா என்ன வென்பது? யாவும் இருந்தன வென்றே சொல்லவேண்டும். மிதமிஞ்சிய கொதிப்பில் அவர்களுடைய நிலைமை கட்டுக்கடங்காமல் போயிற்று, வாய் திறந்து பேசவும் வலுவற்றவராய்ப் போயினர். ஐந்து நிமிஷ நேரத்தில் வண்டி வைத்திய சாலையின் வாசலில் நின்றவுடன், சாமாவையர் "இறங்குங்கள்'' என்ற பிறகே, அவ்விருவரும் தமது உணர்வைப் பெற்றுக் கீழே இறங்க, மூவரும் உட்புறம் நுழைந்தனர். அப்போது அகாலமாய்ப் போனமையால், பிணியாளிகளிடம் போகக் கூடாதென்று சேவகன் அவர்களைத் தடுத்துவிட்டான். என்ன செய்வது என்பதைப்பற்றி சாம்பசிவம் யோசனை செய்தார். மற்றவரை வெளியில் இருக்கச் செய்து தாம் மாத்திரம் பெரிய டாக்டர் துரையிடம் போய், தாம் தஞ்சாவூர் டிப்டி கலெக்டரென்றும், வண்டியில் அடிபட்டுக் கிடக்கும் தமது மருமகப் பிள்ளையை அவசரமாகப் பார்க்கவேண்டுமென்றும் கூற, அவர் இரக்கங்கொண்டு, போய்ப் பார்க்க அனுமதி கொடுத்தார். ஆனால், வராகசாமியுடன் பேசி, அவனை அலட்டக்கூடா-தென்றும், பதினைந்து நிமிஷத்திற்கு மேல் இருக்கக் கூடாதென்றும் நிபந்தனை கூறி அவ்வாறு அநுமதித்தார்.
உடனே மூவரும் நோயாளிகள் கட்டில்களிற் படுத்திருந்த ஒரு அறைக்குள் சேவகனால் நடத்தப்பட்டனர். வராகசாமி படுத்திருந்த இடத்தை சாமாவையர் அறிவார் ஆதலின், அவர் மற்ற இருவரையும் அவ்விடத்திற்கு அழைத்துப் போனார். ஆனால், கட்டிலில் படுத்திருந்த மனிதன் வராகசாமிதானா வென்னும் சந்தேகம் அவர்களது மனதில் உதித்தது. அவ்வளவு அதிகமாக அவன் உருமாறிப்போய், கண்களைத் திறவாமல் முற்றிலும் உணர்வற்று தளர்வடைந்து உயிரற்றவன் போலத் துவண்டு கிடந்தான்; உடம்பில் ஏராளமாகத் துணிக்கட்டுகள் காணப்பட்டன. அவன் அத்தனை காயங்களை அடைந்தான் என்பதை அவற்றிலிருந்து யூகித்துணர்ந்தவுடன் அவர்களது உயிரே கிடுகிடென்று ஆடித் தத்தளித்தது ; குலைநடுக்கம் எடுத்தது; மயிர் சிலிர்த்தது; கண்களில் கண்ணீர் பொங்கிக் கடகடவென்று கன்னங்களில் வழிந்தது. அவர்களது மனம் கொதித்தது; வயிறு பற்றி எரிந்தது; இருவரும் அந்த நிலைமையில் என்ன செய்வர்? அந்தப் பிணியிலிருந்து அவனை மீட்பதற்குத் தங்களது உடல் பொருள் ஆவி மூன்றையும் கொடுத்துவிடவும் தயாராக இருந்தனர். அந்தப் பரிதாபகரமான தோற்றத்தைக் காண, அவர்களுடைய முந்திய விசனங்கள் யாவும் புலியின் முன் பூனைக் குட்டிக ளென்ன ஓடி யொழிந்தன; அவர்களது மனம் நைந்திளகி ஏங்கியது. இருவரும் கட்டிலுக்கருகில் நின்று மாறிமாறி காயங்களையும் முகத்தையும் உற்று நோக்கினர்.
ஒவ்வொரு காயமும் எவ்வளவு பெரிதாயிருந்த தென்னும் விவரத்தை சாமாவையர் சொல்லச் சொல்ல, அவர்கள் விம்மி விம்மி அழுதனர்; தமது முந்தானையால் வாயை மூடிக் கொண்டு பொருமி யழுது, கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர். சிறிதும் அசைவின்றி வராகசாமி சவம்போலக் கிடந்தான். உடனே சாம்பசிவம் மனவுருக்கம் அடைந்து, "ஐயோ! ஏழரை நாட்டான் எல்லாரையும் ஒரே காலத்தில்தானா ஆட்டிவைக்கவேண்டும்? எனக்காயினும் உத்தியோகம் போனதோடு நின்றது; உமக்குத் தேகத்துன்பமா நேரவேண்டும்! பாவியாகிய எனக்கு நன்மையே நிலைப்பதில்லை. பத்து நாட்களுக்கு முன் மேனகாவை நீர் மிகவும் அன்பாக நடத்தி அரை நொடியும் அவளை விட்டுப் பிரியாது வாஞ்சையைக் காட்டியதைக்கண்டு என் மனம் எவ்வளவு பூரித்தது. உனக்கும் இவ்வளவு சந்தோஷமா என்று தெய்வமே அதைக் கண்டு பொறாமை கொண்டு என் வாயில் மண்ணைப் போட்டு விட்டதே! என்னுடைய திருஷ்டி தோஷமே உங்கள் இருவரையும் இப்படி அலங்கோலப்படுத்தி உங்கள் வாழக்கையைச் சின்னா பின்னமாக்கி யிருக்குமோ! அப்படிப்பட்டதுஷ்டக் கண் இப்போது ஏன் விசனப்படுகிறது'' என்று பலவாறு தமக்குள் நினைத்து உருகினார். கனகம்மாள் வராகசாமியின் முகத்தருகினில் குனிந்து அன்பு ததும்ப, ''மாப்பிள்ளை; மாப்பிள்ளை!" என்று இரண்டு மூன்று முறை கூப்பிட்டாள். அவன் அதை உணர்ந்ததாகத் தோன்றவுமில்லை; சிறிதும் அசைவற்றும், கண்திறவாமலும் முன்போலவே கிடந்தான்; கனகம்மாள், அப்போது அவனுக்கு எவ்வித உபசரணை செய்வதென்பதை அறியமாட்டாமல் தவித்தாள்.
புலிப்பால் தேவையென்றாலும், உடனே தருவிக்கவும், அவனது உயிர் எமலோகத்தின் வாசற்படியில் இருந்தாலும், அங்கு சென்று எமனுடன் முஷ்டியுத்தம் செய்து அவன் உயிரை மீட்டுவரவும் தக்க திறமை வாய்ந்த கனகம்மாள், அப்போது எப்பாடு படுவதாயினும், வராகசாமியின் நிலைமையில் சிறிய மாறுபாடும் தோன்ற வகையில்லை; மற்ற துன்பங்களாகிய இடிகளைத் தாங்கிய கனகம்மாள் அதைக் கண்டு சகிக்கமாட்டாமல் பதைபதைத்தாள்; தான் ஒன்றையும் செய்யமாட்டாமல் சும்மா நிற்பது அவளுக்குத் துன்பமயமாக இருந்தது. அன்பு என்னும் பெரும் பேய் மனதிற்குள்ளிருந்து ஓயாமல் இடித்து இடித்து அவளை ஊக்கிக்கொண்டே இருந்தது. கன்றுக்குக் கனிந்திறங்கும் பசுவைப்போல உள்ளம் உருகிநின்று, தன் வலது கையை நீட்டி அவனுடைய கன்னத்தை மெல்லத்தடவி, "மாப்பிள்ளை! மாப்பிள்ளை!" என்றாள். திடீரென்று வராகசாமியின் கண்கள் திறந்து கொண்டன. ஆனால் விழிகள் பயங்கரமாக இருந்தன. பார்வை அங்கு நின்றவர்களின் மீது விழவில்லை. அவன் வேறு வெளியைப் பார்த்தான்; அவனுடைய மூளை நன்றாய்க் குழம்பிப் போயிருப்பதையும், அவன் தேகமுற்றிலும் பச்சைப்புண்ணா யிருப்பதையும் அவன் விழியின் குழப்பமும், ஒளியின்மையும் தெளிவாகக் காட்டின. அடுத்த நிமிஷத்தில் கண்களில் அயர்வு தோன்ற, இமைகள் தாமே மூடிக்கொண்டன. அப்போது அங்கு வந்த துரைஸானியாகிய தாதி யொருத்தி, "சந்தடி செய்யாமல் பார்த்துவிட்டுப் போங்கள். அவருடன் பேசக்கூடாது" என்று இங்கிலீஷ் பாஷையில் கீச்சுக்குரலில் அதிகாரத்தோடு கூறினாள். அதைக் கேட்ட கனகம்மாள் அடங்கிப் பின்வாங்கினாள்.
அதற்குள் சாமாவையர் வராகசாமிக்குப் பக்கத்தில் கழற்றி வைக்கப்பட்டிருந்த, அவனுடைய சொந்த உடையை மெல்ல எடுத்து அதிலிருந்த கடிதங்கள் இரண்டையும் படத்தையும் எடுத்து சாம்பசிவத்தினிடம் கொடுக்க அவர் மிகுந்த ஆலலோடு அவற்றை வாங்கி படத்தை உற்று நோக்கினார். அதைக் கண்ட கனகம்மாளும் அருகில் நெருங்கி அதைப் பார்த்தாள். விஷயம் இன்னதென்பது அவர்களுக்கு உடனே விளங்கவில்லை. மதிமயக்கங் கொண்ட சாம்பசிவம் ஒரு கடிதத்தை எடுத்துப் படித்தார்; பிறகு இன்னொன்றைப் படித்தார். கனகம்மாளும் அவருடன் கூடவே அவற்றைப் படித்துவிட்டாள். இருவரின் முகங்களும் சடக்கென்று மாறிவிட்டன; பிரேதக்களை தோன்றியது; புத்தி குழம்பியது; சிரம் கிருகிருவென்று சுழன்றது; நெருப்பாற்றில் நீந்தித் தத்தளிப்போரைப் போலாயினர். வைத்தியசாலையும், வராகசாமியும்,அவனுடைய காயங்களும், கட்டுகளும் அவர்களுடைய நோக்கத்தினின்று இந்திரஜாலமோவென்ன நொடியில் மறைந்தன.
மாயாண்டிப் பிள்ளை மேனகாவுமே அவர்களது அகக்கண்ணாகிய நாடகமேடையில் தோன்றிக் கூத்தாடினர். தமது உடம்பையும் தாம் எங்கிருக்கிறோம் என்பதையும் மறந்து பதறிப்போய் அப்படியே தூண்களைப் போல நின்றுவிட்டனர். யார் என்ன சொல்லுவது என்பதை அறியாமல் சுவரில் தீட்டப்பட்ட சித்திரப் பதுமைகளைப் போல அசைவற்றிருந்தனர். அப்போது தாதியின் கீச்சுக்குரல் திரும்பவும் உண்டாயிற்று. "பதினைந்து நிமிஷம் முடிந்து போய்விட்டது; போகலாம்" என்ற சந்தோஷ சங்கதியை சிறிதும் மனங் கூசாமல் அவள் தெரிவித்தாள். அதற்குள் சாமாவையர், "அண்ணா ! நாழிகையாய் விட்டதாம்; நாம் வெளியிற் போக வேண்டும்; கடிதங்களை முன்போல வைத்துவிடுவோம். துரையின் அனுமதி யில்லாமல் நாம் எதையும் எடுத்துக் கொண்டு போகக்கூடாது'' என்றார். அதைக் கேட்ட சாம்பசிவம் கடிதங்களையும் படத்தையும் முன்போல உடைக்குள் வைத்துவிட்டு வெளியில் நடந்தார். அவருடைய நிழலைப்போலக் கனகம்மாளும் கூடவே சென்றாள். மூவரும் வைத்தியசாலைக்கு வெளியில் வந்தனர். அங்கு குதிரை வண்டியுடன் சாயப்பு தயாராக இருந்தான். வண்டியில் பூட்டப்பட்டு, விடுபடும் வழியறியாமல் தத்தளித்து நின்ற குதிரையும், சாம்பசிவம் கனகம்மாள் ஆகிய இருவருக்கும் நேர்ந்து வரும் பொல்லாங்குகளைக் கண்டு அழுவதைப்போலக் கண்ணீர் சொரிந்து தன் விதியை நினைத்து அழுதுகொண்டு நின்றது.
வெளியில் வந்தவுடன், சாம்பசிவம் வண்டிக்கருகில் நெருங்காமல் சற்று தூரத்திலேயே நின்றார். மற்ற இருவரும் வந்தனர். இரணியனது குடலைப் பிடுங்கி மாலையாய்த் தரித்துக்கொள்ளும் எண்ணத்துடன் மகா கோபத்தோடு தோன்றிய உக்கிர நரசிம்மமூர்த்தி தூணிற்குள்ளிருந்து கோப நகை செய்ததைப்போல, அங்கிருந்தோர் நடுங்கும்படி சாம்பசிவம் கலகலவென்று சிரித்தார். கடிதங்களில் காணப்பட்ட விஷயம் முற்றிலும் முழுப்புரட்டான கற்பனை யென்று அவர் முன்பே உறுதி செய்துகொண்டார். மேனகா தஞ்சையிலிருந்த ஒரு வருஷ காலத்தில் கணவனது பிரிவாற்றாமையால் பட்ட பாட்டையும் ஊணுறக்கமற்றும் மேன்மாடியை விட்டுக் கீழிறங்காமலும் கிடந்து ஏங்கித் துரும்பாய் மெலிந்து தன்னை வதைத்துக் கொண்டதையும் நன்றாக அறிவார் ஆதலின், அவர்களுக்கு விபசார தோஷம் கற்பிப்பது, மகா பாபமான காரியமென்று எண்ணினார். அவளைப் பற்றி மனதாலும் அவ்வாறு நினைப்பது கொடிய பாதகமென்று உறுதியாக நினைத்தார். மகா உத்தமியான அவள் விஷயத்தில் எத்தகைய தகாத நினைவும் கொள்ள அவருடைய மனது கூசியது.
தமது விஷயத்தில் தந்தியில் அபாண்டமான பொய் குற்றங்கள் சுமத்தப் பட்டிருக்கையில், தமது பெண் விஷயத்திலும் இப்படிக் கற்பனையான குற்றம் சுமத்தப்படுவது ஒரு பெரிய வியப்பாகாது என்றும், ஒன்று எப்படி முற்றிலும் புரட்டோ , அவ்வாறே மற்றதும் புரட்டானது என்றே நிச்சயித்தார். கடித விஷயம் நாத்திமார்களாலேயே உற்பத்தி
செய்யப்பட்டதென்றும், கனகம்மாள் முதல்நாள் கூறியபடி அவர்கள் மேனகாவைக் கொன்றே இருக்கவேண்டும் என்று நினைத்தார். அவர்கள் போலீஸில் பதிய வைக்காமையும், அந்த நினைவையே உறுதிப்படுத்தியது. தமது அருமைப்பெண்ணை தாம் இனி காண்போமா, அவளை எப்படிக் கொன்றிருப் பார்களோ என்ற எண்ணங்கள் உதிக்க உதிக்க அவருடைய உடம்பு அப்பொழுதே வெடவெடவென்று துடித்தது.
உடனே போலீஸில் பதியவைத்து, வராகசாமியின் வீட்டைச் சோதனை போட்டு விதவைகள் இருவரையும் கைது செய்து நன்றாக விசாரணையைத் தொடக்க வேண்டுமென்று நினைத்தார். தனது சகோதரிகளை அவமானப்படுத்தியதைப்பற்றி வராகசாமி தங்கள் மீது கோபங்கொள்ளக் கூடுமாயினும், தாம் அவ்வாறு செய்தே தீரவேண்டு மென்று உறுதியாக வெண்ணினார். ஆனால், அதற்குள் அவர் மனதில் இன்னொரு நினைவு உண்டாயிற்று. சென்ற பத்து மாதங்களாக தஞ்சையில் நாடகம் நடத்திய வீராசாமி நாயுடு கம்பெனியில் மனமோகன மாயாண்டிப் பிள்ளை யென்ற புகழ்பெற்ற ஒரு ராஜ வேஷக்காரன் இருந்ததாகவும், அவன் ஏராளமான குடும்ப ஸ்திரீகளைப் பைத்தியங்கொண்டலையும் படி செய்து அவர்களைக் கெடுத்துவிட்டான் என்றும், அந்தக் கம்பெனி சமீபகாலத்தில் சென்னைக்கு வந்தது என்றும் அவர் தஞ்சையிலேயே நாளடைவில் கேள்விப்பட்டிருந்தார். வீராச்சாமி நாயுடுவும் வருமானவரி போடும் விஷயமாக தமது கச்சேரியில் ஒருதரம் விசாரணைக்கு வந்ததாகவும் அவருக்கு நினைவுண்டாயிற்று. ஆகையால் உடனே நாடகக் கொட்டகைக்குப் போய், வீராசாமி நாயுடுவையாவது மாயாண்டிப்பிள்ளையையாவது கண்டு கடிதத்தில் எழுதப்பட்டிருப்பது பொய்யென்பதற்கு அவர்களுடைய சாட்சியமும் கிடைக்கும்படி தயார்படுத்தி விட்டுவந்து அதன் பிறகு போலீஸில் பதிவு செய்வதே பலமான முறையென்று நினைத்தார்.
சாமாவையரை நோக்கி, "சாமாவையரே! வீராச்சாமி நாயுடுவின் கம்பெனி எந்தக் கொட்டகையில் ஆடுகிறது?" என்றார் சாம்பசிவம். மாயாண்டிப் பிள்ளை இருந்த கம்பெனி விஷயத்தை அறிந்தவரைப் போலப் பேசியதைக் கண்டு திடுக்கிட்டு உள்ளூற நடுங்கினார். ஆனால் அதை வெளியிற் காட்டாமல் மறைத்துக்கொண்டு “செங்காங்கடைக் கோட்டையில் ஆடுகிறது” என்றார்.
''சரி; அங்கே போய்விட்டு வருவோம், வாரும்” என்றார் சாம்பசிவம். அவருடைய அந்தரங்க நினைவை உணராத கனகம்மாள் அவர் மேனகாவின் கற்பு விஷயத்தில் சந்ததேகப்படுகிறார் என்று நினைத்து அதைப் பொறாமல், " என்னடா இது? இந்தப் பொய்க் கடுதாசியை எடுத்துக்கொண்டு நாடகக் கொட்டகைக்குப் போக வேண்டுமா? குட்டிச்சுவரில் முட்டிக்கொள்ள வெள்ளெ ழுத்தா? இந்த மொட்டை முண்டைகளே கட்டுக்கதை எழுதி வைத்து விட்டு நீ இங்கே ரஜா இல்லாமல் வந்ததாக கலெக்டருக்கும் எழுதியிருக்கிறார்களடா! அங்கே எதற்காகப் போகிறது? அங்கே போய், "ஏனடா மாயாண்டிப் பிள்ளை! நீ என் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்துவிட்டாயா?" என்று கேட்கிறதா? அதெல்லாம் வேண்டாமப்பா! நீ பேசாமல் போலீஸில் எழுதி வை; முண்டைகள் தாமாக வழிக்கு வருகிறார்கள்” என்றாள்.
சாம்பசிவம் பணிவாக, “அம்மா! உண்மை யென்ன வென்பது எனக்குத் தெரியாதா? இருந்தாலும் கொட்டகைக்கு நாம் போவதில் கொஞ்சம் அனுகூலம் இருக்கிறது. நாம் போய்விட்டு வர ஒரு மணி நேரத்திற்கு மேலாகாது. அப்புறம் உடனே போலீஸில் பதிய வைப்போமே! போலீஸ் எங்கே ஓடப்போகிறது?” என்று மரியாதையாகக் கூற, கனகம்மாள், ''அப்படியானால் வண்டியில் ஏறுங்கள்" என்றாள்.
உடனே மூவரும் வண்டியில் ஏறிக்கொண்டனர். வண்டியைச் செங்காக்கடைத் தெருவிற்கு விரைவாக ஓட்டும்படி சாமாவையர் வண்டிக்காரனுக்கு உத்தரவு பிறப்பித்தார். எப்போதும் சுறுசுறுப்பையும் துரிதத்தையுமன்றி சோர்ந்த நிலைமையைக் காட்டாத வண்டிக்காரபாச்சாமியான் சாயுபுவின் வாயில் “இதோ ஆச்சு ஸாமி” என்ற சொல்லே எப்போதும் தவறாமல் வந்தது. அதற்கிணங்க குதிரையின் சதங்கைகளும் ஜல் ஜல் ஜல்லென்று ஓசை செய்தன. அவற்றால் உட்புறம் இருந்தவர் வண்டி வேகமாகவே ஓட்டப்படுவதாக நினைத்துக்கொண்டு திருப்தியடைந்தனர். ஆனால், உண்மையில் முன்னிலும் விசை குறைந்து கொண்டே வந்ததன்றி அதிகரிக்க வில்லை. தமயந்தியின் இரண்டாவது சுயம்வரத்திற்குப் போகும் பொருட்டு சாரத்தியம் செய்த நளமகராஜனைப்போல பாச்சாமியான் சாயப்பு கடிவாள வாரைக் கம்பீரமாக கையில் ஏந்தினான். வண்டி புறப்பட்டது.
ஒன்பதரை மணிக்கு வைத்தியசாலையிலிருந்து கிளம்பிய வண்டி மிகவும் சீக்கரமாக, பிற்பகல் ஒரு மணிக்கு செங்காங்கடைத் தெருவை அடைந்து (மூன்று மயில் தூரம்) வீராச்சாமி நாயுடு எவ்விடத்தில் ஜாகை வைத்துக் கொண்டிருக்கிறான் என்று சாமாவையர் விசாரிக்க, அவன் நாகமணித் தோட்டத் தெருவில் குடியிருக்கிறான் என்பது தெரிந்தது. வண்டி அவ்விடம் சென்றது. அது பரத்தையர் வசிக்கும் தெருவாதலால், அங்கு எப்போதும் இரவாகவே யிருந்தது. வீட்டின் கதவுகள் திறக்கவில்லை; மனிதரும் காணப்படவில்லை. பிளேக் வியாதி கொண்டதினால் காலி செய்யப்பட்ட ஊரைப்போல, அந்த இடம் மிகவும் பயங்கரமாகக் காணப்பட்டது; சூரியனும் அந்தத் தெருவில் தனது கிரணங்களை விடுவதற்கு அஞ்சுபவன் போலத் தனிமையில் நின்று மேற்குப் புறத்திலிருந்த தெருவிற்கு ஓடப் பார்த்தான். ஆந்தை, கோட்டான், கூத்தாடிகள், பரத்தையர், கள்வர், கொலைஞர், அமெரிக்க தேசத்திய ஜனங்கள் முதலியார் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவ ராதலின், நமது பகல் அவர்களுக்கு இரவல்லவா? அதனால், அந்தத் தெருவில் யாவரும் படுக்கையில் இருந்தனர்.
வீராசாமி நாயுடு எந்த வீட்டில் இருக்கிறார் என்பதைச் சொல்லக்கூடிய மனிதன் எவனும் அங்கு காணப்படவில்லை. சாமாவையரும் வண்டிக்காரனும் கீழே இறங்கி வீடுதோறும் சென்று கதவைத் தட்டினர்; ஒரு வீட்டில் பதிலே இல்லை. இன்னொரு வீட்டில் அப்போதே பயங்கரமாக கொட்டாவி விடுத்துக் கூச்சல் செய்து விழித்துக் கொண்ட ஒரு மனிதன் இன்னமும் தனது உணர்வைப் பெறாமல் "ஆ""ஊ" என்ற மறுமொழியே கொடுத்தான். இன்னொரு வீட்டில் அரைத் தூக்கத்திலிருந்த ஒரு கிழவி "ஆழது? இங்கே ஒழுத்தழுமில்லே! போழா!" என்று குழறிக்பேசி அதட்டினாள். அவ்வாறு அவர்கள் வீண் பாடுபட்டுக்கொண்டே செல்ல, அப்போது தெய்வச் செயலாக அங்கு ஒரு வழிப்போக்கன் வந்தான். அவன் வீராச்சாமி நாயுடுவின் வீட்டைக் காட்டினான். சாமாவையர், சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய மூவரும் அந்த வீட்டை அடைந்தனர். சாமாவையர் கதவைத் தட்டினார். பதில் இல்லை. மேலும் ஓங்கி இடித்தார். அப்போதும் பதில் இல்லை; கை ஓயாமல் ஒரு நாழிகை வரையில் கதவில் தமது முஷ்டியை உபயோகப்படுத்தினார். அதன் பிறகு ஒருவன் கதவைச் சிறிதளவு திறந்து அதைக் கையில் பிடித்துக்கொண்டு வழிமறைத்து நின்று மிகவும் நிதானமாக சாம்பசிவம் முதலியோரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு இழுப்பான குரலில், “நீங்க எங்கேயிருந்து வறீங்க?" என்றான்.
உடனே சாமாவையர், “வீராசாமி நாயுடு இங்கேதானே குடியிருக்கிறார்?" என்று கேட்டார்.
கதவைத் திறந்த மனிதன், " என்ன சங்கதி? நீங்க எங்கயிருந்து வறீங்க" என்று திரும்பவும் கேட்டான்; அவன் அவர்களைக் கண்டு பயந்து விட்டான் என்பது நன்றாக விளங்கியது.
சாம்ப:- தஞ்சாவூரிலிருந்து வருகிறோம். நாயுடு தெரிந்தவர்; அவரைப் பார்த்துவிட்டுப் போகவேண்டும் - என்றார்.
அதைக் கேட்ட அந்த மனிதன் மறுமொழி யொன்றுங் கூறாமல் கதவைத் திரும்ப மூடி உட்புறம் தாளிட்டுக்கொண்டு போய் விட்டான்; வெளியிலிருந்த மூவருக்கும் அவனது நடத்தை வியப்பை உண்டாக்கியது; அவன் வருவானோ மாட்டானோ , வீராசாமி நாயுடு அந்த வீட்டில் இருக்கிறானோ இல்லையோ, மறுபடியும் கதவை இடிப்பதா கூடாதா வென்று பலவாறு எண்ணமிட்டுக்கொண்டு அரைநாழிகை நேரம் வெளியில் நின்றனர். அப்படி நின்றது சாம்பசிவத்திற்கு மிகவும் அவமானமாய்த் தோன்றியது; தேகமே கூசியது. என்ன செய்வார்? அது பெண்ணைப் பெற்றதன் பலனென்று நினைத்து நின்று வருந்திக்கொண்டிருந்தார். நல்ல வேளையாக அவன் திரும்பவும் கதவைத் திறந்தான். அவன் என்ன சொல்லப் போகிறானோவென்று மூவரும் அவன் வாயை நோக்கினர்.
அவன், "அவுங்க, இப்பத்தான் எந்திருச்சாங்க; அப்பிடி ஒக்காருங்க; மொகங் கழுவிக்கின போறவால உள்ளற போவலாம்" என்று சொல்லிவிட்டுத் திரும்பவும் தாளிட்டுக் கொண்டு போய்விட்டு ஒரு நாழிகைக்குப் பிறகு வந்து கதவைத் திறந்து, "வாங்க உள்ளற" என்றான். மூவரும் உட்புகுந்தனர். பல தாழ்வாரங்கள், கூடங்கள், அறைகள் முதலியவற்றைக் கடந்து மூன்றாங் கட்டுக்குள் நுழைந்தனர். கண்டவிட மெல்லாம் கிழிந்த திரைகளும், ஒடிந்த நாற்காலிகளும், பல்லிளித்த பக்கப் படுதாக்களும், இடுப்பொடிந்த காட்சிகளும், மூங்கில்களும், கயிறுகளும், குப்பையும், செத்தையும், புகையிலைத் தம்பலங்களும், கிழிக்கப்பட்ட தீக்குச்சிகளும், குடித்து மிகுந்த சிகெரட்டுகளும், வாடிப்போன வெற்றிலைகளும் கிடந்தன. ஆண்களும், பெண்களும் மூலைமுடுக்குகளி லெல்லாம் அலங்கோலமாய்ப் படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கினர். முகத்தில் பூசப்பட்ட அரிதாரம் பாதி கலையாமலும், கடவாயைப் பெருகவிட்டும், உடைகளை இழந்தும் தாறுமாறாய்க் கிடந்தனர். எங்கும் துற்நாற்றம் சூழ்ந்து வயிற்றைப் புரட்டியது.
சாம்பசிவம், கனகம்மாள் இருவரும் துணியால் மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு விரைவாக அப்புறம் நடந்தனர். “ஆகா! இந்த அழகைக் கண்டுதானா ஜனங்கள் ஏமாறி மோகிப்பது! இதன் பொருட்டா ஜனங்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் விரயம் செய்கிறார்கள்! இந்த விகாரங்களைக் கண்டுதானா குலஸ்திரீகள் தமது உயிராகிய கற்பையும், இம்மை வாழ்க்கையையும், தமது பெற்றோரையும், உற்றாரையும் இழந்து திண்டாடித் தெருவில் நிற்பது? இவர்களைப் பார்த்த கண்களைத் தண்ணீர் விடுத்தலம்பினும் அருவருப்புத் தீராது! கோரம்! கோரம் !" என்று நினைத்துக் கொண்டே மூன்றாங் கட்டில் நுழைந்தனர். அங்கிருந்த தனியான ஓரறையில் பாய் திண்டு முதலியவற்றின் மீது வீராசாமி நாயுடு உட்கார்ந்திருந் தான். ஒரு மூலையில் காப்பித் தண்ணீரும் கருத்த ஆப்பமும் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு புறத்தில் வெற்றிலை பாக்கு புகையிலை சிகரெட்டு முதலிய நிவேதனம் வைக்கப்பட்டிருந்தன. வேறு யாரோ வரப்போகிறார்களென்று நினைத்து அமர்த்தலாகக் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த வீராசாமி நாயுடு சாம்பசிவத்தைக் கண்டவுடன் திருக்கிட்டுத் தனது கண்களை நம்பாமல் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து அடங்கி யொடுங்கி குனிந்து கைகுவித்து, "சுவாமி! நமஸ்காரம்; வரவேண்டும்" என்று அன்போடு வரவேற்று, நாற்காலிக்காக அங்குமிங்கும் தாண்டிக் குதித்தான். ஒன்றும் அகப்படாமையால், எதிரிலிருந்த ஒரு கம்பளியை எடுத்துக் கீழே விரித்து உட்காரும்படி வேண்டினான். அவர் தஞ்சை டிப்டி கலெக்டரென்பது அவனுக்கு நன்றாகவே நினைவிருந்தது; அவனுடைய அந்தரங்கமான விசுவாசத்தைக் கண்ட சாம்பசிவத்தின் அருவருப்பு ஒரு சிறிது தணிந்தது; அவரும் புன்னகை காட்டி, "நான் உட்காருவதற்கு நேரமில்லை; நடு தூக்கத்தில் உம்மை நாங்கள் எழுப்பிவிட்டோம். ராத்திரி யெல்லாம் கண் விழித்திருப்பீர்கள். பக்கத்திலுள்ள நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவுக்கு ஒரு காரியமாக வந்தோம்; நீர் இங்கே இருப்பதாகக் கேள்விப்பட்டு உம்மையும் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தோம். வேறொன்றும் விசேஷ மில்லை; சௌக்கியந்தானே?" என்றார்.
நாயுடு:- (கைகுவித்து) தங்கள் தயவினால் சௌக்கி யந்தான்; ஏதோ இருக்கிறேன். இந்த ஏழையை மதித்து தாங்கள் இவ்வளவு தூரம் தயவு செய்தது என்னுடைய பாக்கியந்தான் - என்றான். ஆனால், அவனுடைய மனது மாத்திரம் ஒருவாறு அச்சங்கொண்டது. அவர் தமக்கு அதிகரித்த வருமானவரி விதிக்கும் பொருட்டு உளவறிய வந்திருப்பாரோ வென்று ஒருவகையான சந்தேகம் உதித்தது. ஆகையால், அவன் தனது தேக சௌக்கியத்தைக்-கூடப் பூர்த்தியாகத் தெரிவித்துக் கொள்ளாமல் இழுப்பாகக் கூறினான்; தான் சௌக்கியமாக இருக்கிறதாக அவன் சொன்னால், அதனால் அவனுக்கு நல்ல வருமானம் வருகிறதென்று நினைத்து வரி விதிக்கக் கூடிய சர்க்கார் அதிகாரிகளும் இருப்பதால், அவன் தனது க்ஷேமத்தைத் தெரிவிப்பதில் கூட சுங்கம் பிடித்தான்.
சாம்ப:- உங்களுக்குத் தஞ்சாவூரில் நஷ்டம் வந்ததென்று சொல்லிக்கொண்டார்களே! இங்கே எப்படி இருக்கிறது? - என்றார்.
நாயுடுவின் சந்தேகம் நிச்சயமானது. உடனே மூக்கால் அழத்தொடங்கினான். “ஆமாம்! இராமேசுவரம் போனாலும் சநீசுவரன் விடாதென்கிறமாதிரி தன்னிழல் தன்னோடு தானே வரும். அங்கே நஷ்டப்பட்டேன்; இங்கே பொருளை வாரி எடுக்க வந்தேன். இங்கே பெரிய அவக்கேடு சம்பவித்தது; என்ன செய்கிறது? அதிர்ஷ்டமில்லை ” என்றான். சாம்பசிவம் மிகவும் அநுதாபங்காட்டி, "அடாடா! என்ன அவக்கேடு வந்தது? சொல்லக்கூடியதுதானே?" என்றார்
வீரா:- எங்களிடத்தில் மாயாண்டிப்பிள்ளை யென்று ஒரு புகழ் பெற்ற ராஜா வேஷக்காரன் இருந்தான். அவன் திடீரென்று ஒரு வாரத்திற்கு முன் எங்கேயோ ஓடிப்போய்விட்டான். அவன் போனது மட்டுமின்றி ஐந்நூறு ரூபா பெறுமான உடுப்புகளையும், நகைகளையும் எடுத்துக்கொண்டு நல்ல சமயத்தில் போய்விட்டான். வேறு சரியான ராஜா வேஷக்காரன் இல்லாமையால், பண வசூலே கிடையாது; சோற்றுக்கும் திண்டாட்டமாய் விட்டது - என்றான்.
சாம்ப:- ஐயோ பாவம்! அவன் ஏன் போய்விட்டான்? சம்பளம் குறைவென்று போய்விட்டானோ?
நாயுடு :- அப்படி யொன்றுமில்லை. அவனுக்குச் சாப்பாடு போட்டு மாதம் இருநூறு ரூபா கொடுத்தேன். நான் அதில் குறைவு வைக்கவில்லை; இங்கிருந்தால் அவனும் பிழைத்துப் போகலாம்; நாங்களும் தலையெடுப்போம். தலைச்சுழி யாரை விட்டது.
சாம்ப:- அப்படியானால், அவன் ஏன் ஓடினான்?
நாயுடு:- வேறு எதற்காக ஓடுகிறான்? எல்லாம் ஸ்திரீ விஷயந்தான். அவன் சும்மாவிருந்தாலும், நாடகம் பார்க்க வரும் பெண்டுகள் அவனை விடுகிறதில்லை. அவன் தஞ்சாவூரிலிருந்தபோது யாரோ ஒரு பெரிய மனிதருடைய பெண்ணைத் திருட்டுத்தனமாக வைத்துக்கொண்டிருந்தானாம். அவள் மகா அழகு சுந்தரியாம்; அவளுடம்பில் ஐயாயிர ரூபா நகை யிருந்ததாம். அங்கிருந்து நாங்கள் இங்கே வந்த பிறகு, அவளும் ஏதோ தந்திரம் செய்து, தன் பெற்றோர் புருஷன் முதலியோரை ஏமாற்றிவிட்டு, இவனிடம் வந்துவிட்டாளாம். அவளும், அவனும் எங்கேயோ இரகசியமாய் ஓடிப்போய் விட்டார்கள், ரெங்கூன் சிங்கப்பூர் முதலிய அக்கரை தேசங்களுக்குப் போய் அவர்கள் இருவரும் நாடகக் கம்பெனி ஏற்படுத்தி ஆடப்போகிறதாகக் கேள்விப்பட்டேன். அவன் போன தேதி முதல் எங்களுக்குத் துன்பந்தான் - என்றான்.
அதைக் கேட்ட சாம்பசிவம் கனகம்மாள் ஆகிய இருவரின் முகங்களும் மாறுதலடைந்தன. விஷயம், கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதைப்போல முடிந்ததைப்பற்றிக் பெரிதும் கலக்க மடைந்தனர். மேனகா தஞ்சையில் தமது வீட்டிலிருந்த ஒவ்வொரு நிமிஷமும் கனகம்மாளின் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தாள் ஆதலின், இதில் சம்பந்தப் பட்டவள் மேனகா அன்றென்பது நிச்சயமாகத் தெரிந்ததா யினும் கடிதத்திற்கும், அந்த விவரத்திற்கும் ஒற்றுமை யிருப்பதால், ஒருக்கால் அவளே அவ்வாறு செய்திருப்பாளோ வென்னும் சந்தேகமும் அவர்களுடைய மனதில் அஞ்சி அஞ்சித் தலையைத் தூக்கியது. அவர்களுடைய குழப்பம், பெருங்குழப்பமாய், முற்றிலுங் குழப்பமாய் முடிந்தது.
நாயுடு:- பிராமண ஜாதியாம்!
சாம்ப:- வைஷ்ணவ ஜாதியா? ஸ்மார்த்த ஜாதியா?
நாயுடு:- அதை நான் கேட்கவில்லை. யாரோ ஒரு பெரிய மனிதருடைய பெண்ணாம். மகா சாகஸம் செய்து தங்கள் வீட்டாரை ஏமாற்றிவிட்டு வந்துவிட்டாளாம்.
சாம்ப:- பாவம்! யாருடைய பெண்ணோ தெரியவில்லை. சரி; நான் தஞ்சாவூர் போனவுடன் அந்தப் பெண்ணின் பெற்றோர் என்னிடம் வந்து பிராது சொல்லிக்கொண்டு அழுவார்கள்; அவனுடன் கூட இருந்த உங்களுக்கே அவன் போன இடம் தெரியவில்லையே! நான் இதில் என்ன செய்யப்போகிறேன்! சரி; நாழிகை யாகிறது; நாங்கள் போய் விட்டு வருகிறோம். நீர் ஒரு உதவி மாத்திரம் செய்யும்; மாயாண்டிப்பிள்ளை எங்கிருக்கிறான் என்பது உமக்கு இனிமேல் தெரியவந்தால், தஞ்சைக்கு என் பெயருக்கு ஒரு கடிதம் எழுதி விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்; அதை நான் அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் சொன்னால் அவர்கள் போய் பெண்ணை அழைத்துவருவார்கள்; அப்போது அவனும் இங்கே உங்களிடம் திரும்பி வந்து விடுவான்'' என்றார். வீராசாமி நாயுடுவுக்கும் அது அநுகூலமான காரியமாகத் தோன்றியது; " எஜமான்களின் தயவு மாறாமல் ஏழைமேல் எப்போதும் இருக்க வேண்டும்" என்று பன்முறை வேண்டிக் கொண்டான். உடனே மூவரும் வெளியில் வந்தனர்.
திண்ணையில் உட்கார்ந்திருந்த பாச்சாமியான் சாயப்பு எழுந்து போய் வண்டியின் மேல் தம் சிம்மாசனத்தில் திடீரென்று உட்கார்ந்தான். நின்றபடியே தூங்கி ஆடி விழுந்து கொண் டிருந்த குதிரை எதிர்பாராத அந்த அசைப்பால் மரக்கிளையி லிருந்து நைந்து விழும் பழம் போல பொத்தென்று கீழே விழுந்துவிட்டது. சாயபுவும் குதிரையின் முதுகின் மேல் குப்புற விழுந்தான். ஆனால், அவனுடைய மீசையில் மண் படுமுன் எழுந்துவிட்டான் என்றாலும், தன்னுடைய குதிரை அப்படிச் செய்து தன்னை அவமானப்படுத்தியது அவனால் சகிக்கக் கூடாத காரியமாக இருந்தது. அதிகரித்த கோபத்தினால் அவனுடைய தாடி மயிர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஈட்டியைப் போல நீண்டு நின்றது; படுத்திருந்த குதிரையின் முகத்தண்டை அவன் வந்து கீழே உட்கார்ந்து அதன் இரண்டு காதுகளையும் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டான்; அவன் ஒருக்கால் அதன் காதில் ஏதேனும் இரகசியமான மந்திரம் சொல்லி அதை எழுப்பப் போகிறானோ வென்று பிறர் சந்தேகிக்கத் தக்கதாக அந்த நிலைமை காணப்பட்டது.
ஆனால், அவன் குதிரையின் இரண்டு காதுகளையும் இறுகப் பிடித்துக்கொண்டு, பாறையில் மட்டையை உடைக்க இளநீரை மோதுதல் போல் ஓங்கி அதன் முகத்தைத் தரையில் ஏழெட்டு முறை மோத கிழக்குதிரை வீர் என்று கதறிக்கொண்டெழுந்தது. அதன் உடம்பில் விபரீதமான சுறுசுறுப்புண்டாயிற்று. மோவாயும், உதடுகளும், பற்களும், வாயிலிருந்த கடிவாளமுள்ளும், இரத்தப் பெருக்கும் ஒன்று சேர்ந்து தக்காளிப் பழமாய் நசுங்கி உருவமற்று ஒரே மொத்தையாகத் திரண்டு காய்ந்த பேரீச்சம் பழம் போலாயின; குதிரை சாகவும் மாட்டாமல், சகிக்கவும் மாட்டாமல் தவித்து மரண வேதனைப்பட்டது. தான் வண்டியில் ஏறும் போது தூங்கிய பெரும் பிழைக்காக குதிரையைத் தான் தக்கபடி தண்டித்து விட்டதாக நினைத்துத் தனது மார்பை பெருமையோடு பார்த்துக்கொண்ட சாயப்பு மூவரையும் நோக்கி, "ஏறுங்க ஸாமி! போகலாம்" என்று மரியாதையாக அழைத்தான். சாமாவையரும், பெரிதும் களைப்படைந்து தம்மை முற்றிலும் மறந்திருந்த மற்றிருவரும் வண்டியில்
ஏறிக்கொண்டனர்.
அதற்குள் அந்தத் தெருவில் இரண்டொரு வீட்டு வாயில்கள் திறக்கப்பட்டிருந்தன. எதிர்த்த வீட்டுத் திண்ணையில் நாலைந்து சோம்பேறிகள் உட்கார்ந்து சிகரெட்டுப் பிடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர். அவர்கள் நால்வரும் இருபது முதல் முப்பது வயது வரையில் அடைந்த யௌவனப் புருஷர்கள். அவர்கள் அந்தத் தெருவிலுள்ள பரத்தையர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் புருஷரைத் தேடிவந்து பிழைப்புக்கு வழி செய்யும் பேருபகாரிகள். அவர்களுடைய அலங்காரங்களோ, அவர்கள் மிக்க கண்ணியமான பெரிய மனிதர்கள் என்பதைச் சுட்டின. ஆனால், உண்மையில் அவர்களைக்காட்டிலும் இழிவான மனிதரை பூமாதேவி இது காறும் பெற்றிராள்.
சாம்பசிவம், கனகம்மாள், சாமாவையர் ஆகிய மூவரும் வீராசாமி நாயுடுவின் வீட்டுக்குள்ளிருந்து வந்ததைக் கண்டவுடன் அந்தத் தரகர்கள் புரளி செய்து அவர்களைப் பழிக்கத் தொடங்கினார்கள். அவரவர் மனதிலிருப்பதே அவரவர் வாயிலும் செயலிலும் தோன்றும் என்பதற்கு இணங்க, அந்தப் பெரிய மனிதர்களுக்கு உலகத்திலுள்ள எல்லோரும் கூட்டிக் கொடுக்கும் தரகராய்த் தோன்றினர். அவர்கள் சாம்பசிவம் முதலியோரைக் கண்ணெடுத்தும் பாராமலே சுவரைப்பார்த்து உரத்த குரலில் பேசத்தொடங்கினார்கள். ஆனால், அவர்களது ஒவ்வொரு சொல்லும் கணீர் கணீரென்று இம்மூவர் செவியிலும் பட்டது. என்றாலும், தம்மை ஏன் அப்படிப் பழித்துப் பேசுகிறார்கள் என்று சாம்பசிவம் கேட்பதற்கு வழியின்றி, அந்தச் சோம்பேறிகள் தமக்குள் பேசிக் கொள்வோரைப் போலச் சாமர்த்தியமாகப் பேசினார்கள்.
ஒருவன், "அடே பாப்பான்!" என்றான். இன்னொருவன், “அடே கும்பகோணத்துப் பாப்பான்!" என்றான்.
மூன்றாவது மனிதன், “இல்லேடா! அக்காளே! மாயாண்டிப் பிள்ளையைத் தேட்றாண்டா! அக்காளே இவனுக்கு மக இருப்பாடா! மாயாண்டிப்பிள்ளை தான் ஆண்டவனாச்சே; அந்த ஆண்டவனுக்கு எல்லோரும் குட்டிங்களை இட்டாந்து நிமித்தியம் (நிவேதனம்) பண்ண வாராங்கடா!" என்றான். நான்காவது மனிதன் , "அக்காளே! இந்த பாப்பார நாயிங்க கெட்டமாதிரி ஒருத்தனுங் கெடல்லேடா! அக்காளே அவுங்க எந்த வேலைக்குமே போவட்டுமே; எல்லோரையும் கெலிச்சுப்புட்றாங்கடா! கள்ளுக் குடிக்கட்டும்; அதை நாம்ப மொந்தை, மொந்தையாகக் குடிச்சா அவங்க மொடா மொடாவா முழுங்கிப்புட்றாங்க, பள்ளிக் கூடத்திலே படிச்சா , அவங்கதான் மொதல்ல தேர்றாங்க. கச்சேரி வேலே செஞ்சா ஒருத்தன் நாலுபேரு வேலையைச் செய்றான். அவுங்க பெரிய ராக்சசப் பயலுங்கடா; போன வருசம் கெவுணரு பங்களாவுலே ஒரு விருந்து நடந்திச்சாம்! அதுலே ஒரு பாப்பானும் மூணு தமிளனும் ஒரே மேசேலே ஒக்காந்தானுவளாம். மீன் குஞ்சேநெய்யிலே பொரிச்சு ஆளுக்கு ஒரு தட்டு வச்சாங்களா அக்காளே! அந்தப் பாப்பான் நாலு தட்டையும் பொட்லரு கையிலே யிருந்து புடிங்கிக் கொட்டிக்கினு தானே துன்னுட்டானாம். அப்பாலே இன்னம் எட்டுத் தட்டுக் கொண்டாரச் சொல்லித் துன்னானாம்; அக்காளே! அவங்க ஆம்பிளெங்களும் அப்படித்தான் பொம்பிளெங்களும் அப்படித்தான். பொம்பிள்ளெங்க, நாடவம் பார்க்க வந்தா நாடவக்காரனைப் பிடிச்சுக்கிறாங்க - என்றான்.
முதல் மனிதன்:- (பல்லைக் கடித்துக்கொண்டு) பார்டா? அக்காளே! வெட்கம், மானம், சூடு, சொரணை, ஒண்ணுமில்லாம பட்டப்பகல்லே , ஒரு கௌவியையும் இட்டுக்கினு நாடவக்காரன் ஊட்டுக்கு வந்துட்டான்; பாக்கறதுக்கு மகாபெரிய மனிசனைப் போல இருக்கறாண்டா! ஒதேடா அக்காளே! - என்றான்.
இன்னொருவன், "அக்காளே! குடுடா சாக்கடே ஹல்வா"
தங்களைத்தான் அவர்கள் அவ்வாறு தூற்றுகிறார்கள் என்பதை சாம்பசிவம் அறிந்து அந்தப் பக்கம் திரும்பி உற்று நோக்கினார்; அப்போது அவர்கள் ஒன்றையும் அறியாத பரம் சாதுக்களைப் போலக் காணப்பட்டனர். அவர்களில் ஒருவன் எழுந்து மிகவும் மரியாதையாகவும் அன்பாகவும் நன்மையும் புன்னகையும் ஜ்வலித்த முகத்தோடும், " என்ன நாயனா பாக்கறீங்க? யாரைத் தேட்றீங்க; சொன்னாக்க நாங்க காட்டறோம் நாயனா!" என்று உபசாரமாகக் கேட்டு அதே காலத்தில் தணிந்த குரலில் ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால், "அக்காளே அக்காளே' என்று திட்டினான். சாம்பசிவம் பட்டணத்துச் சோம்பேறிகளின் குணத்தை நன்றாய் அறிந்தவராதலின் பேசாமல் வண்டியில் ஏறிக் கொண்டார்.
மற்றவரும் ஏறிக்கொள்ள, வண்டி புறப்பட்டு தெருவின் கடைசியிற் போய் நின்றது. வண்டியை எவ்விடத்திற்கு ஓட்டுவதென்று வண்டிக்காரன் கேட்க, சாமாவையரும் கனகம்மாளும் சிந்தனை செய்யலாயினர். அதற்குள் சாமாவையர், "இப்போது மணி மூன்றிருக்கலாம். நாம் நேராக என்னுடைய வீட்டிற்குப் போவோம். அப்புறம் மற்றதைச் செய்வோம். நீங்கள் வேறு யார் வீட்டிலும் இறங்கவேண்டாம்" என்றார். வேறு இடமில்லாமையால் அவர்கள் அதற்கு இணங்கினார்கள். தொளசிங்கபெருமாள் தெருவிற்கு வண்டியை ஓட்டும்படி சாமாவையர் வண்டிக்காரனிடம் சொல்ல, அவன் அப்படியே வண்டியை நடத்தினான்.
சாம்பசிவமும் கனகம்மாளும் மேலே செய்யவேண்டுவ தென்ன வென்பதைப் பற்றி எண்ணமிடலாயினர். வீராசாமி நாயுடுவின் நாடகக் கம்பெனியின் விவரங்கள், மாயாண்டிப் பிள்ளையின் காரியம் முதலியவற்றை நிச்சயமாக அறிந்து கொண்டு போலீஸில் பதிய வைக்க நினைத்த சாம்பசிவத்தின் சந்தேகம் தீராச் சந்தேகமாய் முடிந்தது. அவர்களுடைய மனக் குழப்பமும் மலையாய்ப் பெருகியது. மாயாண்டிப்பிள்ளையைத் தேடிச் செல்வதா? அப்படியானால் எங்கு தேடிச்செல்வது? ரெங்கூனுக்குப் போவதா , சென்னையிலேயே தேடுவதா என்று ஒன்றன் மேல் ஒன்றாக எண்ணிக்கையற்ற நினைவுகளும், சந்தேகங்களும் மனதில் உதித்தன. முதல் நாட் காலையிலிருந்து அன்னம் தண்ணீரின்றி ஓயாமல் அலட்டப்பட்டதனால் அவர்களது தேகம் கட்டுக்கடங்காமல் தளர்ந்து போய்விட்டது. மயிர்களெல்லாம்
நெருப்பாய்ப் பற்றி எரிந்தது. முதல் நாளிரவு துயிலாமையால் கண்கள் அடிக்கடி இருண்டன; மூளை கலங்கியது; அடிக்கடி மயங்கி வண்டிக் கூண்டில் சாய்ந்தனர். முகம் விகாரத் தோற்றம் அடைந்தது. தமக்கு ஏற்பட்ட பலவகையான விபத்துக்களையும் ஒன்றன்பின் ஒன்றாக நினைத்து நினைத்து அவர்கள் மனது எவ்வித முடிவிற்கும் வரக்கூடாமல் சுழன்று கொண்டே இருந்தது; அது காறும் மேனகாவின் உறுதியான கற்பையே ஒரு வலுவாகக் கொண்டு; அதனால் எத்தகைய மனிதரையும், துன்பங்களையும் பொருட்படுத்தாமல் வந்த அவர்களுக்கு அந்த வலு ஆற்றில் இறங்கிய மண் குதிரையின் வலுவைப்போலத் தோன்றவே, அவர்களுடைய பெருமையும், ஆபத்திலும் ஒடுங்காத மனோதிடமும் சோர்வடைய ஆரம்பித்தன. மேலே எங்கு செல்வது? எதைச் செய்வது? பிழைப்பானோ சாவானோவென்னும் ஐயந்தோன்றக் கிடக்கும் மருமகப் பிள்ளையைப் பற்றிக் கவலை கொண்டு அவனைப் பிழைப்பிக்க வழிதேடுவதா? அன்றி, காணாமற்போன பெண்ணைத் தேடுவதா? இரண்டு நாட்களுக்குள் தஞ்சாவூர் போய்த் தமது உத்தியோகத்தை ஒப்புக்கொடுத்து விட்டு அங்கு நடக்கும் விசாரணையைக் கவனிப்பதா என்று எண்ணாதன வெல்லாம் எண்ணி ஏங்கித் தவித்தனர். அவர்கள் இருவரும் வாய் பேசா மௌனிகளாய்க் காணப்படினும் அவர்களது மனமும் தேகமும் எரிமலையின் உட்புறம்போல, எல்லாம் உருகிய நெருப்புக் குழம்பாயிருந்தமையால், தாமே எரிந்து பஸ் மீகரமாய்ப் போய்விடத்தக்க நிலையில் இருந்தனர்.
அவர்களுடைய நிலைமையைக் காட்டிலும் கோடி மடங்கு அதிகரித்த வேதனையை அடைந்து சாகுந் தருணத்திலிருந்த குதிரை இடைவழியில் திடீரென்று கீழேவிழுந்து படுத்துவிட்டமையால், ஆங்காங்கு வண்டி அரை நாழிகை, ஒரு நாழிகை நின்று போயிற்று. அதனால் உள்ளிருந்தோரும் ஒருவர் மேலொருவர் விழுந்து புரண்டு, மொத்துண்டதும், வண்டியின் நிறுத்தங்களும், சாம்பசிவம் கனகம்மாள் இருவரின் யோசனைகளுக்கு முற்றுப் புள்ளிகளாகவும், வியப்புக்குறிகளாகவும் வினாக்குறிகளாகவும் விளங்கின. தம்மைப் பிடித்த சனியன் இன்னமும் ஒழியவில்லையே யென்றும், மேலும் என்னென்ன துன்பங்கள் சம்பவிக்குமோ வென்றும் அவர்களது நெஞ்சம் கலங்கியது. அத்தகைய நிலைமையில் வண்டி மாலை ஐந்தரை மணிக்குச் சாமாவையரின் வீட்டை அடைந்தது; மூவரும் இறங்கி உட்புறம் சென்றனர். சாம்பசிவம் நடைத்திண்ணையில் "உஸ்'' என்று உட்கார்ந்தார்; வாயிற்கதவை அரைப்பாகம் மூடிவிட்டு அதன் மறைவில் கனகம்மாள் கீழே உட்கார்ந்துகொண்டாள். சாமாவையர் தடதடவென்று உள்ளே ஓடினார்.
உட்கார்ந்த இருவருக்கும் களைப்பு வந்து மேலிட்டது; தேகத்தின் அங்கங்கள் யாவும் ஈயகுண்டுகளைப்போலப் பெருஞ் சுமைகளாக அழுத்தின. உட்கார்ந்த மாத்திரத்திலேயே அவர்கள் பிரம்மாநந்த போக அனுபவிப்பவரைப்போல ஒத்தனர். ஆனால், அவர்களது மனமொன்றே மேற் செய்ய வேண்டுவதைப்பற்றித் துடிதுடித்தது. உள்ளே ஓடிய சாமாவையர் ஐந்து நிமிஷ நேரத்திற்குள் காப்பியும் உப்புமாவும் தயாரிக்கும்படி தமது மனைவியிடம் கூறிவிட்டு அங்கிருந்த சமையற் பாத்திரங்களைக் கொணர்ந்து முற்றத்திலிருந்த கிணற்றடியிற் போட்டுவிட்டு நடைக்கு வந்து, "பாட்டியம்மா! எழுந்து வாருங்கள்; சாயுங்காலமாய்விட்டது. பாத்திரங்ளை தயாராக வைத்திருக்கிறேன். எழுந்து கொஞ்சம் சமையல் செய்து கொள்ளுங்கள். ராத்திரி முதல் பட்டினியல்லவா? வாருங்கள் காப்பி தயாராகிறது; சமையலாவதற்குள் அண்ணா கொஞ்சம் காப்பி சாப்பிடட்டும்" என்று கூறிவிட்டு உள்ளே ஓடினார். அதற்குள் அவர்களுடைய தேகம் அசைக்கவும் வல்லமையற்று ஓய்ந்து போனது. அவர்களுடைய உயிர் எந்த உலகத்திலிருந்ததோ வென்பது அவர்களுக்கே விளங்க வில்லை. மனமோ மேனகா வராகசாமி தஞ்சை கலெக்டர் ஆகிய மூவரிடத்திலும் சென்று சென்று மாறி மாறிப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தது.
சாம்பசிவம், "அம்மா! எல்லாவற்றிற்கும் நீ கொஞ்சம் ஆகாரம் தயார் செய். மேலே பல இடங்களுக்குப் போய் பார்க்கவேண்டியிருக்கிறது. உன்னாலும் இனி மேல் பசி தாங்கமுடியாது" என்றார். அம்மாள் அருவருப்போடு, " எனக்கு ஆகாரமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். ஸ்நானம் செய்தால், களைப்பு தீர்ந்து போகும், அதை மாத்திரம்தான் செய்யப்போகிறேன்; நீ காப்பியைச் சாப்பிடு” என்று சொல்லி விட்டு எழுந்து கிணற்றடிக்குச் சென்று நீராடத் துவங்கினாள். அதற்குள் சாமாவையர் கூஜாவில் காப்பியும் ஒரு தட்டில் உப்புமாவும் எடுத்துக்கொண்டு ஓடிவந்து நடைத்திண்ணையில் வைத்து விட்டு, வாயிற்கதவை மூடித் தாளிட்டு விட்டு, அவற்றை நிவேதனங் கொண்டருளும்படி சாம்பசிவத்தை வேண்டினார். அவர் தமக்கு "வேண்டாம் வேண்டாம்" என்று மறுக்க, சாமாவையர், “இல்லை, இல்லை; கொஞ்சம் ஆகட்டும், ஆகட்டு"மென்று வற்புறுத்தினார்; சாம்பசிவம், “எனக்கு உடம்பெல்லாம் அசுசியா இருக்கிறது. ஸ்நானம் செய்த பிறகு பார்த்துக்கொள்வோம்" என்று கூறிவிட்டு காப்பியை மாத்திரம் அருந்தும் எண்ணத்துடன் எழுந்து தண்ணீர் குழாயண்டையில் சென்று இடையின் வஸ்திரத்தை நனைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யத் தொடங்கினார். பாதிவழி தூரம் கீழே நடந்து, தானே குதிரையையும் இழுத்துக்கொண்டு வந்த பச்சாமியான் வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரையை அவிழ்க்காமலே வேகவைக்கப்பட்ட கொள் நிறைந்த பையை அதன் வாயிற் கட்டிவிட்டு, வண்டியின் பெட்டிக்குள் விருந்த ஒரு ரொட்டியை எடுத்துக் கடித்து இழுத்து, அதிலிருந்து கொஞ்சமும் பிய்க்கமாட்டாமல் கைக்கும் வாய்க்கும் பெருத்த தகராறு உண்டாக்கிவிட்டான். அந்த ரொட்டி அவன் மனதைக் காட்டிலும் அதிகமாக இறுகிப்போயிருந்தது.
அப்போது சமையலறைக்குள்ளிருந்த சாமாவையருடைய மனைவி மீனாட்சியம்மாள் ஏதோ ஒரு அவசரமான விஷயத்தை நினைத்துக் கொண்டவளாய் அதைத் தனது கணவரிடம் தெரிவிக்க நினைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள். சாமாவையர் தாழ்வாரத்தில் நின்று கொண்டு வேறு பக்கத்தில் தமது கவனத்தைச் செலுத்தியிருந்தார். சாம்பசிவம் முதலிய அயலார் இருந்தமையால், மீனாட்சியம்மாள் தன் கணவனைக் கூப்பிட வெட்கியவளாய் சூ சூ வென்று மூஞ்சூறு கத்துவதைப்போல உதட்டால் ஓசை செய்ய, அதையுணர்ந்த ஐயர் அவளிடம் சென்றார். மிகவும் சாந்தமாக அவள் அவருடைய செவியில், "காலை 4 மணிக்கு ஒரு தந்தி வந்ததாம். அதைப் பெருந்தேவியம்மாள் கொடுத்துவிட்டுப்போனாள்; அதை வாங்கிப் புரையில் வைத்திருக்கிறேன்" என்று கூறிவிட்டு விளக்கெண்ணெய் வழிந்த ஒரு மாடத்தைக் காட்டினாள். சாமாவையர் விரைந்து சென்று மாடத்தில் எண்ணெயில் நனைந்து கிடந்த ஒரு தந்தியை எடுத்து மேல் விலாசத்தைப் பார்த்தார்.
''சென்னை திருவல்லிக்கேணி தொளசிங்கப்ருெமாள் கோவில் தெருவிலிருக்கும் வக்கீல் வராகசாமி வீட்டில் வந்திருக்கும் தஞ்சை டிப்டிகலெக்டர் சாம்பசிவஐயங்காரவர்களுக்கு" என்ற மேல் விலாசம் அதன் மேல் காணப்பட்டது. தஞ்சை கலெக்டரிடத்திலிருந்து அது வந்திருக்கலாமென்று நினைத்த சாமாவையர், அதை எடுத்துக்கொண்டு குழாயண்டையில் ஓடி, அண்ணா! உங்களுக்குத் தஞ்சாவூரிலிருந்து ஒரு தந்தி இன்று காலையில் வந்ததாம். வாங்கி வைத்திருக்கிறாள்'' என்று கூறி உறை மூடிக்கொண்டிருந்த தந்தியைக் காட்ட, அதை எதிர்பாராத சாம்பசிவம் திடுக்கிட்டு, "யாருக்கு? எனக்கா? எங்கிருந்து வந்திருக்கிறது? இப்படிக் கொடும்" என்று பதைபதைத்தவராய், பாதி நனைந்தும் நனையாததுமாயிருந்த இடைத் துணியோடு பாய்ந்து வந்து அதை வாங்கி உடைத்து அது யாரிடத்திலிருந்து வந்தது என்பதை முதலில் பார்த்தார். "கிட்டன்" என்று கையெழுத்து செய்யப்பட்டிருந்தது. உடனே அவரது மனது எண்ணாத தெல்லாம் எண்ணியது. அந்த ஒரு நிமஷமும் நான்கு யுகங்களாய்த் தோன்றியது. அவர் விஷயத்தைப் படித்தார். அது அடியில் வருமாறு எழுதப்பட் டிருந்தது. –
"நீங்கள் பட்டணம் போனபின், "நேற்று ராத்திரி பன்னிரண்டு மணிக்கு நம்முடைய வீட்டிற்குள் தீவெட்டிக் கொள்ளையர்கள் முப்பது பேர்கள் நுழைந்து என்னையும் அக்காளையும் அடித்துப் போட்டு விட்டு நகைகள், பணங்கள், துணிகள், பாத்திரங்கள் பெட்டிகள் மேஜை நாற்காலிகள் முதலிய எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். எனக்கு ஒரு கோவணமும் அக்காளுக்கு ஒரு சிறிய கிழிந்த புடவைத் துண்டமும் கொடுத்துவிட்டு ஒரு துரும்பு விடாமல் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அக்காள்மேல் இருந்த நகைகளைப் பிடுங்கியதில் காது மூக்கு முதலியவற்றை அறுத்துவிட்டதோடு பச்சைப் புளியந்தடியால் அவளை அடித்து விட்டனர். அவள் செத்தவள் போலவே கிடக்கிறாள். பிழைப்பது கடினமென்று டாக்டர் சொல்லுகிறார். நீங்கள் உடனே வராவிட்டால் அவளைக் காணமுடியாது. தந்திக்குப் பணமும் கட்டிக்கொள்ளத் துணிகளும் சேவக ரெங்கராஜு கொடுத்தான்" என்று எழுதப்பட்டிருந்த தந்தியை சாம்பசிவம் படித்தார். எதிர்பாராமல் பீரங்கி குண்டு மார்பில் பாய்ந்து அவருடைய உடம்பையே தகர்த்து சின்னாபின்னமாக்கிவிட்டதைப் போல தமது மனத்தில் எழுந்த விசனத்தையும் ஆத்திரத்தையும் தாங்கமாட்டாமல் பைத்தியங்-கொண்டவரைப்போல ஆகாயத்தில் துள்ளிக்குதித்தார். பல வீடுகளுக்கு ஓசை கேட்கும்படி "அம்மா"வென்று வீரிட்டுக்கத்தினார்.
அந்த விபரீதக் கோலத்தைக் கண்ட கனகம்மாள் திக்பிரமை கொண்டு தண்ணீர் ஒழுகிய வஸ்திரத்தோடும் உடம்போடும் " என்ன! என்ன!"வென்று கேட்டுக்கொண்டே ஓடிவந்தாள். சாம்பசிவம் தந்தியின் கருத்தை இரண்டொரு வார்த்தையில் தெரிவித்து விட்டு வெளியில் ஓடி மிகவும் அவசரமாக இரயிலுக்குப் போக வேண்டும் என்றும், வண்டியைத் தயாரிக்கும்படியும் சாயுபுவிடம் கூறிவிட்டு உள்ளே ஓடிவந்து அம்மாளையும் அழைத்துக்கொண்டு வெளிப்பட்டார்; மேனகாவையும், வராகசாமியையும், தமது உத்தியோகத்தையும், உலகத்தையும் மறந்தார்.
சாமாவையரையும் நடையிலிருந்த காப்பியையும், இடையில் பிழி படாமையால் ஜலம் சொட்டிய வஸ்திரத்தையும் கவனிக்காமல், இருவரும் வெறி கொண்டவரைப்போல ஓடி வண்டியில் உட்கார்ந்து கொண்டு, " எழும்பூருக்கு ஓட்டு" என்றனர். மிகவும் தயாளமான மனத்தைக் கொண்ட சாயப்பு அவர்களது கோலத்தைக் கண்டு வேறு பக்கத்தில் தனது முகத்தைத் திருப்பி கலகலவென்று சிரித்தவனாய் வண்டியிலேறிக்கொண்டான். அவ்வளவோடு அவர்கள் தன்னை விட்டு விடுவார்களென்று நினைத்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். கொள்ளிருந்த பை, வாயை விட்டுப் போய் விட்டதே என்று ஏக்கங் கொண்ட நமது நீலவேணிக் குதிரை திரும்பவும் புறப்பட்டது. ஒன்றையும் அறியாமல் திகைத்த சாமாவையர் வெளியில் ஓடிவந்தார்; அதற்குள் வண்டி நெடுந்தூரம் போய்விட்டது.
--------------
அதிகாரம் 17 - அணங்கோ? ஆய்மயிலோ?
மூர்ச்சை யடைந்து இரவு பன்னிரெண்டு மணிக்குக் கீழே வீழ்ந்த மேனகா மறுநாட் காலை எட்டு மணிக்கே தனது உணர்வை ஒரு சிறிது பெற்றாள். அவ்வளவு நீண்ட நேரம் வரையில், அவளது தேகம் உணர்வற்று, உயிர்ப்பற்று, அசைவற்று, ஓய்ந்து, ஜடத்தன்மை யடைந்து இவ்வுலகையும், தன்னையும் மறந்து சவம் போலக் கிடந்தது. அவளது ஜீவனோ மண்ணிலு மின்றி விண்ணிலுமின்றி அந்தத் தேகத்தை விட்டுப் பிரிந்ததோ பிரியவில்லையோ வென்னும் சந்தேக நிலைமை யில் எவ்விடத்திலோ மறைந்து கிடந்தது.
மெல்லிய மலர்கள் மூக்கிற்கருகில் வருதலால் வாடிக்குழைந்து போதலைப்போல உத்தம ஜாதிப் பெண்களின் மனதும் தேகமும் காமாதூரரது சொல்லால் குழைந்து கருகிப்போகுமல்லவா! அவ்வாறே மேனகா வென்னும் மெல்லியலாள் எதிர்பாராத பெருத்த விபத்திற் பட்டு அன்றிரவில் நெடு நேரம் வரையில் நைனா முகம்மது மரக்காயனுடன் போராடவே , அவளது மனதும் மெய்யும் அளவுகடந்து அலட்டப்பட்டு நெகிழ்ந்து போயின. உயிரிலும் அரியதான தனது கற்பை , அந்தக் கள்வன் அபகரித்து விடுவானோவென்ற சகிக்கவொண்ணா அச்சமும் பேராவலும் பொங்கியெழுந்து அவளை வளைத்துக் கொண்டன. கணவனது சுகத்தைப் பெறாமல் நெடிய காலமாய் பெருந்துன்பம் அனுபவித்து அலமாந்து கிடந்த தன்னைத் தனது ஆருயிர்க் கணவன் கடைசியாக வரவழைத்து ஒப்பற்ற அன்பைக் காட்டி இன்பக் கடலிலாட்டிய காலத்தில், அதை ஒரு நொடியில் இழந்துவிட நேர்ந்ததைக் குறித்துப் பெரிதும் ஏங்கினாள். தனது பிராணநாதனை இனி காணல் கூடுமோ கூடாமற் போகுமோ வென்ற பெருந்துயரமும் பேரச்சமும் உரமாக எழுந்து வதைத்தன.
நைனா முகம்மதுவின் காமாதூரமான தோற்றமும் மோகாவேசக் குறிகளும் வரம்பு கடந்த கன்னகடூரமான சொல்லம்புகளும் பசுமரத்தாணிபோல அவளது உள்ளத்தில் தைத்து ஊடுருவிப் பாய்ந்து அதை சல்லடைக் கண்ணாய்த் துளைத்துப் புண்படுத்திய தாதலின், தத்தளித்து மயங்கி தற்கொலை புரிந்து கொள்ள வெண்ணி, தனது மெல்லிய இயற்கைக்கு மாறாக மிகவும் வற்புறுத்தி வலுவையும் மனோ உறுதியையும் வருவித்துத் தனது தேகத்திற்கும் மனதிற்கும் ஊட்டி, விண்ணென்று சுருதி கூட்டப்பட்ட வீணையைப் போல இருந்த தருணத்தில் தந்தியருதலைப்போல, அவளது கரத்திலிருந்த கத்தியை யாரோ பிடுங்கிக்கொள்ளவே அவளது வீராவேசமும், மனதின் உரமும், உறுதியும் ஒரு நொடியில் உடைந்து போகும் நீர்க்குமிழியைப் போல, இருந்தவிடந்தெரியாமற் போகவே, அவளுடைய அங்கம் முற்றிலும் தளர்வடைந்து நிலை தடுமாறிப்போனது. தனது கத்தியைப் பிடுங்கினவன் அந்த மகம்மதியனே யென்னும் அச்சமும், இனி தனது கற்பு நிலையாதென்னும் அச்சமும் பெரும் பேய் அறைதலைப் போல, அவளுடைய மனத்தைத் தாக்கவே, அவளது மூளையும், அறிவும் சிதறிப்போயின. சிரம் கிருகிரென்று சுழன்றது. ஒரு விநாடிக்குள் அவள் வேரற்ற மரம்போலக் கீழே படேரென்று வீழ்ந்து மூர்ச்சித்தாள். முகம் வெளுத்துப் பிணக்களை பெற்றது. நித்திரைக்கு அப்பாலும் மரணத்திற்கு இப்பாலுமான இருண்ட நிலைமையில் நெடுநேரம் வரையில் அவளது உணர்வு ஆழ்ந்து கிடந்தது.
மேற்கூறப்பட்டபடி மறுநாட்காலை எட்டு மணிக்கே பூந்தோடுகள் போன்ற அவளது அழகிய இமைகள் சிறிது விலகின. வெளுத்திருந்த வதனத்தில் இரத்த ஓட்டம் காணப்பட, ரோஜா இதழின் நிறம் தலை காட்டியது. ஆனால், அவளது விழிகள் தமது தொழிலைச் செய்யாமல் வெறும் விழிகளாயிருந்தன. வெளியிலிருந்த எந்தப் பொருளையும் அவ்விழிகள் உட்புறத்திற்குக் காட்டவில்லை. ஆனால், அவைகள் உட்புறத்தின் தன்மையை மாத்திரம் நன்றாக வெளியில் தோற்றுவித்தன. மூளையின் குழப்பமும், உணர்வின்மையும் நிதரிசனமாக விளங்கின. அவ்வாறு பிளவுபட்ட இமைகள் இரண்டொரு நிமிஷ நேரத்தில் சோர்வடைந்து சேர்ந்து கொண்டன. அவள் திரும்பவும் சவம் போலானாள். மிக்க பயங்கரமாக இருண்ட இரவுகளில் எப்போது இரவு தொலையுமென்றும் எப்போது பொழுது புலருமென்றும் மனிதர் வருந்து கையில் நெடுநேரத்திற்கு முன்னரே கோழி கூவி பொழுது விடியுமென்னும் நம்பிக்கை உண்டாக்குதலைப்போல மேனகாவை நாகபாசமெனக் கட்டி அழுத்தியிருந்த இருள் விலகுமென்பதை அவளது இமைகள் முன்னால் அறிவித்தன. அதனால், அவளது உடம்பு மாத்திரம் இன்னமும் அசைவற்றே கிடந்தது; காணாமற்போன மனிதரைத் தேடியழைத்து வர வேவுகாரரை அனுப்புதலைப் போல, மறந்து போன அவளது உணர்வைத் தேடிக்கொண்டு வரும் பொருட்டு அன்றிரவு முதல் காலை வரையில் உள்ளே செலுத்தப்பட்ட மருந்துகள் தமது அலுவலை மிகவும் திறமையோடு செய்து, எமனுலகம் வரையிற் சென்று முஷ்டி யுத்தம் செய்து, அதைத் திரும்பிக் கொணர்ந்து, அவளுடைய உடம்பை இறுக அழுத்திக் கொண்டிருந்த இரும்புக் கதவு போன்ற உணர்வின்மையை உடைத்து அதில் ஒரு சிறிய துளை செய்து, உட்புறத்தில் உயிரைப் பெய்தன. அவளது உயிராகிய விளக்கு நன்றாய்ப் பிடித்துக்கொண்டு சுடர்விட்டு எரிய ஆயத்தமாய் புகைய ஆரம்பித்தது. அவளது மனதில் உடனே ஒரு சிறிது உணர்ச்சி உதயமானது. அவ்வுணர்ச்சியில் ஒரே குழப்பமும் உடம்பு முற்றிலும் ஒரே இரணகாயமா யிருப்பதும் தெரிந்தனவன்றி, தான் யாவரென்பதும், தானிருந்த இடம் எதுவென்பதும், தனக்கு நேர்ந்த துன்பங்கள் இன்னின்ன வென்பதும் மனதிற் புலனாகவில்லை. இன்னமும் தேகமும் மனதும் சலனப்பட்டு இயங்காமல் ஜடத்தன்மையான நிலைமையில் இருந்தன. மேலும், கால் நாழிகையில் புகையின் நடுவில் மெல்லிய சுடர் எழுதலைப்போல அவளது உயிரும் உணர்வும் சிறுகச்சிறுக வலுவடைந்து பெருகின. தான் மேனகா வென்பதை அப்போதே அவள் உணர்ந்தாள். தான் தனது இல்லத்தில் படுத்துத் துயில்வதாயும், அதில் பயங்கரமான கனவு கண்டு கொண்டிருப்பதாயும் ஒரு எண்ணம் அவளது மனதில் உதிக்க ஆரம்பித்தது.
தனது நாத்திமார்களும், அவர்களது துர்ப் போதனையால் தனது கணவனும் தன்னைக் கொடுமையாய் நடத்தியதும், அவர்கள் சொன்ன சொற்களும், புரிந்த செய்கையாலும் , தான் பிறகு ஒரு வருஷகாலம் தஞ்சையில் தவித்துக் கிடந்ததும், அப்போதே நிகழ்வன போலக் காணப்பட்டன. தான் இன்னமும் தஞ்சையில் இருப்பதாகத் தோன்றியது. அவளது உணர்வு மேலும் அதிகரிக்க அதிகரிக்க, முற்றிலும் சிதறிக் குழம்பிக்கிடந்த மனது தெளிவடையத் தொடங்கியது. தான் தனது கணவனிடம் திரும்பி வந்ததும், அவனுடன் ஐந்து நாட்கள் புதிய வாழ்வாக வாழ்ந்து பேரின்பச் சுகமடைந்ததும் தோன்றின. கடைசியில் தனது கணவன் சேலத்திற்குப் போன அன்றிரவு சாமாவையர் தன்னையும் பெருந்தேவியம்மாளையும் நாடகம் பார்க்க அழைத்துச் சென்ற நினைவு மெல்ல மனதில் தலைகாட்டியது. அதன்பிறகு தான் மகம்மதியன் வீட்டில் தனிமையில் விடப் பட்டதும், அங்கு ஒரு யௌவன மகம்மதியன் தோன்றியதும், அதன்பிறகு நேர்ந்த விஷயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அவளது நினைவில் நாடகக் காட்சிகளைப் போலத் தோன்றின. முடிவில், தான் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை புரிய முயன்றதும், அப்போது திடீரென்று ஒருவர் தோன்றிக் கத்தியைப் பிடுங்கிக்கொண்டதும் தெளிவாக விளங்கின. கத்தி பிடுங்கப்பட்ட பிறகு நடந்த தென்ன வென்பது அவளுக்குத் தெரியவில்லை. அதன் பிறகு எட்டு மணிநேரம் இடைவேளை கழிந்ததென்பதை அவள் அறிந்தவளேயன்று. அது இன்னமும் இரவென்றும்,முந்திய நிமிஷத்திலேதான் கத்தி பிடுங்கப்பட்டதென்றும் எண்ணினாள். அன்றிரவில் நிகழ்ந்த விஷயங்கள் யாவும், உண்மையில் சம்பவிக்கக்கூடாத அசாதாரணமானவைகள். ஆதலால், அவைகள் நிஜத்தில் நடந்தனவென்று அவள் மனது நம்பிக்கை கொள்ளவில்லை. தான் கனவு காண்பதாகவே அவள் உறுதியாக நினைத்தாள்.
ஆனால், அது எது முதல் எதுவரையில் கனவென்பதை நிச்சயிப்பதே கூடாமல் குழப்பத்தை உண்டாக்கியது. தான் நாடகம் பார்க்கப் போனதும் அதன் பின்னர் நடந்தவைகளும் கனவா, அன்றி, தான் தகப்பன் வீட்டிலிருந்து திரும்பிவந்ததும், இன்புற்று வாழ்ந்ததும், பிறவும் கனவா, அன்றி, தான் தஞ்சைக்குப் போனதும், அவ்விடத்தில் ஒரு வருஷமிருந்தது முதலியவும் கனவா, அன்றி, தன்னைத் தனது கணவன் முதலியோர் கொடுமையாய் நடத்தியது கனவா என்று அவளுடைய குழப்பம் பெருங்குழப்பமாய்விட்டது. "உலகமே பொய்; அதிலுள்ள பொருட்கள் பொய்; எல்லாம் மாயை; பொருட்களே கிடையாது என்று மாயா தத்துவத்தைப்பற்றி வாதிப்போருக்கு, தமது தேகமும், தாம் பேசுவதும், தாம் நினைப்பதும், தாம் உணர்வதும் எல்லாமே பொய்யாகத் தோன்றுதலைப்போல, மேனகாவின் மனதிற்கு அப்போது எல்லாம் பொய்யாகவும், மெய்யாகவும் தோன்றியது. பாவம் மனிதருக்கு உணர்வு என்னும் அந்த ஒப்பற்ற ஒரு வஸ்து தனது நன்னிலைமையை இழந்துவிடுமானால், அப்புறம் அவர்கள் மனிதரல்லர். யௌவனம் கட்டழகு காந்தி முதலிய எத்தகைய உயர்வுகளும் அருமை பெருமைகளும் இருப்பினும் அவை சிறிதும் மதிப்பற்றவையாம். அங்ஙனமே ஆனது அவளது நிலைமை. தான் மேனகாதானா , தான் டிப்டி கலெக்டருடைய பெண்தானா என்னும் பெருத்த சந்தேகம் தோன்றியது.
கண்களைத் திறந்து தனது உடம்பைப் பார்த்து அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள நினைத்தவளாய், நலிந்த தமது நேத்திரங்களைத் திறந்து தனது மேனியை உற்று நோக்கினாள்; என்ன ஆச்சரியம்! தனது உடம்பு மேனகாவின் உடம்பாகத் தோன்றவில்லை! தும்பைப்பூவிலும் அதிகமான வெண்மை நிறத்தைக் கொண்ட மெல்லிய மஸ்லின் துணியொன்று தனது தேகத்தில் ஒரு சுற்றாக அன விலையுயர்ந்த மேகவர்ணப்பட்டாடை, பாப்பு , கொலுசு, காசுமாலை, அட்டிகை முதலியவை தனது தேகத்தில் காணப்படவில்லை. அவற்றை தனது தேகத்திலிருந்து எவரும் விலக்கியதாகவும் அவளுக்கு நினைவுண்டாகவில்லை.
தன்னுடைய கரத்திலிருந்த கத்தியை மாத்திரம் யாரோ சற்று முன்னே பிடுங்கியது நினைவுண்டாயிற்று. தான் கண்ணை மூடித் திறப்பதற்குள் அத்தகைய மாறுதல் தனது தேகத்தில் வந்திருப்பதென்ன விந்தை! அது இந்திரஜாலம் மகேந்திர ஜாலமோ? சே! எல்லாம் தவறு! எல்லாம் பொய்! தான் காண்பது கனவே! என்று நினைத்த அவளது பேதை மனம் முற்றிலும் குழம்பிச் சோர்வடைந்து போயிற்று. மனத்தி லெழுந்த எண்ணிறந்த சந்தேகங்களின் சுமையைத் தாங்க மாட்டாமல் மனம் தவித்து மழுங்கி ஓய்வை அடைந்து விட்டது ஆகையால், கண்ணிமைகள் மூடிக்கொண்டன! அவளது மனம், தன் குழப்பத்தால், தன்னையே ஏமாற்றிக்கொண்டது. வெள்ளை வஸ்திரத்தை விதவைகளே அணிபவர். தான், ஒருநாளும் மஸ்லின் துணியை அணிந்ததில்லையே. தானறியாவகையில் அது அப்போது தனது உடம்பில் எப்படி வந்தது? தான் மேனகாவன்று; வேறுயாரோ ஒருத்தி என்று நினைத்து எண்ணாததெல்லாம் எண்ணி மயக்கமும் குழப்பமும் அடைந்தாள்.
மேலும் அரை நாழிகை சென்றது. ஊற்றுக் கண்களிலிருந்து தெளிந்த நீர் ஊறுதலைப் போல, அவளுடைய உணர்வு பெருகி தெளிவைப் பெறப் பெற, விஷயங்கள் யாவும் உண்மையாகவே தோன்றின. தான் மேனகாதான் என்னும் நினைவு இயற்கையாகவும், உறுதியாகவும் அவளது மனதில் எழுந்து மாறுபடாமல் நிலைத்து நின்றது. தான் கனவு காணவில்லை யென்பதும் தெளிவாகத் தெரிந்தது. அப்படியானால், தானறியாமல், தன்னுடம்பில் வேறு வஸ்திரம் எப்படி வந்தது, தனது பட்டுத் துகிலை எவர் களைந்தவர் என்ற சந்தேகங்களே இப்போது உரமாக எழுந்து வதைத்து அவள் மனதில் வேறு பலவித பயங்கரமான யூகங்களுக்கு இடங் கொடுத்தன. பெருத்த வேதனை உண்டாயிற்று. தனது கையிலிருந்த கத்தியைப் பிடுங்கிக் கொண்ட மகம்மதியனே தனது ஆடையை மாற்றினவ னென்றும், அவன் தனது கற்பை பிடுங்கமுற்பட்டபோது தான் மயங்கிக் கீழே தரையில் விழுந்ததாக கனவைப் போல ஒரு ஞாபகம் உண்டாயிற்று. உண்மை அப்படி இருக்க, தான் இப்போது விலையுயர்ந்த உன்னதமான கட்டிலில், மிக்க இன்பகரமான வெல்வெட்டு மெத்தையின் மீது படுத்திருப்பதன் முகாந்தரமென்ன வென்பதை நினைத்தாள். தனது கற்பு ஒழிந்துபோன தென்பதை தனது சயனம் உறுதிப்படுத்தியது. என்ன செய்வாள்! அவளது தளர்வடைந்த மனது பதறியது. வேதனையும் வியாகுலமும் பெருத்த கோபமும் மகா உரத்தோடு எழுந்து மனதிற் குடிகொண்டன. அவளது தேகமோ அவளுக்குச் சகிக்க இயலாத அருவருப்பைத் தந்தது. தனது உடம்பைப் பார்ப்பதற்கே கண் கூசியது. மகம்மதியனைத் திரும்பவும் பாராமல் தற்கொலை புரிந்து கொள்ள முயன்ற தனது எண்ணத்தில் மண்விழுந்து போனதை நினைத்து பெருந்துயரமும் ஆத்திரமும் அடைந்தாள்.
களங்க மடைந்துபோன தனது இழிவான தேகத்தை உடனே சாம்பலாக எரித்து அழித்துவிட தனக்கு வல்லமை யில்லையே என்று நினைத்துப் பதைத்தாள். அவ்வளவு நாழிகை தனது வேசைச் சரீரத்தைச் சுமந்திருப்பதைப்பற்றி ஆறாத் துயரமடைந்தாள். கட்டிலின் மீது தனக்கருகில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தது அவள் மனதில் அப்போதே புலனாயிற்று. அது தன்னைக் கெடுத்த மகம்மதியனே என்று நினைத்தாள். அவள் மனதில் ரௌத்திராகாரமாய்க் கோபம் பொங்கி எழுந்தது.
அந்த அசங்கியமான படுக்கையில், அன்னிய புருஷனுக்கருகில் தானிருப்பதாக நினைத்து, தான் ரௌரவாதி நரகத்தில் இருப்பதாக எண்ணிப் பதறினாள். அவ்விடத்தை விட்டெழுந்து அப்பாற் செல்ல நினைத்து மிகவும் வற்புறுத்தி முயன்று பார்த்தாள். அவளது மனது மாத்திரம் துடித்ததன்றி, தேகம் ஒரு சிறிதும் அசையும் வல்லமை அப்போது இல்லாதிருந்தது. தான் நினைத்த விதம் கண்களைத் திறந்து நோக்கவும் இயற்கையான திறனுண்டாகவில்லை. தேகம் ஜடப் பொருளாய்க் கிடந்தது. தேகவலுவற்றவருக்கு மற்றையோரிலும் கோபமும், ஆத்திரமும் அதிகமென்பது யாவரும் அறிந்த விஷயமாம். அதற்கிணங்க, செயலற்றுக் கிடந்த மேனகா தன் மனதில் பொங்கி எழுந்த சீற்றத்தைக் கடவுன் மீது திருப்பினாள். நிரபராதியான ஜெகதீசனை நினைத்த விதம் தூஷிக்கலானாள். "ஆ பாழுந் தெய்வமே! உன் கோவில் இடியாதா? நீ நாசமாய்ப் போக மாட்டாயா? என்னை இப்படிக் கெடுத்து சீர்குலைத்துக் கண்ணாரப் பார்க்க வேண்டுமென்று எத்தனை நாளாய் நினைத்திருந்தாய்! என் வயிறு பற்றி எரிகிறதே! மனம் பதைக்கிறதே! உயிர்துடிக்கிறதே! தெய்வமே, நீ கருணாநிதி யென்று அழைக்கப்படக் கொஞ்சமும் யோக்கியதை உள்ளவனா நீ! முற்காலத்தில் நீயா திரௌபதியின் மானத்தைக் காத்தவன்! எவனோ புளுகன் எழுதி வைத்தான் மகா பாரதத்தை! சதிகார தேசத்திற்கு கொலைகாரன் அரசனாம் என்பதைப் போல உன்னுடைய மகிமை இருக்கிறது. உன்னுடைய படைப்பும், உன்னுடைய நியாயமும் நன்றா யிருந்தன! இந்தப் பாழும் உலகத்தில் கற்பாம்! நீதியாம்! சே! மூடத்தனம்!" என்று கடவுள் மீதும், உலகத்தின் மீதும், தனது தேகத்தின் மீதும் பெரிதும் ஆத்திரமும் வெறுப்பும் கொண்டு தூஷித்துத் திரும்பவும் அநாசாரம் பிடித்த அந்த மெத்தையை விடுத்து எழுந்து அப்பால் போய், நொடியேனும் தாமதியாமல் தனது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தாள். அவளது மனம் பம்பரம்போலச்சுழன்றது. ஆனால், அவளது தேகம், ஒரே பச்சை புண்ணாகவும், இரணக் குவியலாகவும், அசைவற்று கட்டிற்கடங்காது கிடந்தது. மனது மாத்திரம் புதிதாய்ப் பிடித்துக் கூண்டில் அடைக்கப்பட்ட கிள்ளைப் போல படபடத்து தவித்தது.
அந்த நிலைமையில் அவளுக்கு அருகில் மெத்தையில் உட்கார்ந்திருந்தவர் தமது கரத்தால் அவளது முகத்தைத் தடவிக் கொடுத்ததாக அவளுடைய உணர்வில் புலனாயிற்று. அந்தக் கை ஆண்பிள்ளையின் முரட்டு கையாகத் தோன்றவில்லை. அது பூவிதழைப்போல மிருதுவாயும், குளிர்ச்சியாயும் இருந்தது. பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, பனிக்கட்டி முதலியவை கலக்கப்பட்ட சந்தனம், ஜூர நோய் கொண்டவனது உடம்பில் பூசப்படுதலைப்போல, அது அளவு கடந்து இனிமையாய்த் தோன்றியது. உடனே "மேனகா! அம்மா மேனகா!" என்ற ஒரு குரல், அருகில் உண்டாயிற்று; அந்தக் குரல் குயிலையும், குழலையும், யாழையும், பாகையும், தேனையும் பழித்ததாய், சங்கீத கானம் போன்றதாய் , அமுதத் துளிகளையும் குளிர்ச்சியையும் ஒருங்கே சொரிந்து செவிகளில் இனிமையைப் பெய்வதாய் கணீரென்று சுத்தமாய் ஒலித்தது.
எதிர்பாராத அந்தக் குரலைக் கேட்டுத் திகைத்த மேனகா, அது தேவகானமோ சாமகானமோ வென்று சந்தேகித்து வியப்புற்றாள். அது ஒரு பெண்மணியின் குரலென்பது சந்தேகமற விளங்கியது. தன்னை அபகரித்து வந்த மகம்மதியனது குரலுக்கும் இந்தக் குரலுக்கும் பெருத்த வேறுபாடு காணப்பட்டது. ஒன்றைப் பறையோசைக்கு ஒப்பிட்டால் இன்னொன்றை வீணா கானத்திற்கே ஒப்பிடல் வேண்டும். ஆதலின், இப்போதுண்டானது அந்த மகம்மதியனது குரலன்று என்பதும், இது ஒரு பெண்பாவையின் இனிய குரலென்பதும், எளிதில் விளங்கி விட்டன. தனக்கு அருகில் இருப்பது மகம்மதியனல்லன் என்றும், அது அவனது பணிப் பெண்ணாகவேனும் அல்லது உறவினளாகவேனும் இருக்க வேண்டும் என்றும் யூகித்துக் கொண்டாள். தனது உணர்வு அறிய தான் அன்னிய புருஷனைத் தீண்டியதான இழிவும் பாவமும் இல்லாமற் போனதைக் குறித்துப் பெரிதும் மகிழ்வடைந்தாள். ஆனால், அந்த அற்பமான இன்பமும் ஒரு நிமிஷமே மனதில் நிலைத்து நின்றது. ஏனெனில், தனது கற்பை ஒழிந்தது நிச்சயமே என்ற அருவருப்பு நினைவில் திரும்பவே அவளது மனக்களிப்பு கைப்பாக மாறியது. தான் கண்களைத் திறந்து தனக்கருகிலிருந்த அந்த மாதை, வெட்க மில்லாமல் பார்த்து எப்படி அவள் முகத்தில் விழிப்பது என்று நினைத்து மேனகா மனமாழ்கினாள். அவளது தேகம் குன்றியது. அவள் கண்ணைத் திறவாமலே இரண்டொரு நிமிஷநேரம் கிடந்தாள். முன்னரே அறியாத அயலார் வீட்டில், அதுவும், அவனது கட்டிலின் மேல்தான் எவ்வளவு நேரம் அவ்வாறு கண்ணை மூடிப் படுத்திருத்தல் கூடுமென்றும், அப்படி யிருப்பதால் இழிவே யன்றி தனக்கு யாது பயனென்றும், தான் அவ்வாறு கிடப்பது ஒழுங்கல்ல வென்றும் நினைத்தாள். மெல்ல தனது கண்ணைத் திறந்தாள்.
அவள் ஒரு புறமாகத் திரும்பிப் படுத்திருந்தவளா கையால், அருகில் இருந்தவளை முதலில் பார்க்கவில்லை. அவளது அகன்ற சுந்தரவிழிகள் ஒரு நொடியில் அந்த அறையை நன்றாக ஆராய்ந்தன. உடனே ஒரு விஷயம் எளிதில் விளங்கியது. அது, தான் மகம்மதியனோடு தனிமையிலிருந்த அறையல்ல வென்பது நிச்சயமாயிற்று. தான் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு வந்ததையும், தனது தேகத்திலிருந்த ஆடையாபரணங்கள் விலக்கப் பட்டதையும், தான் அறியாது போனது என்ன மாயமோ என்று திகைத்தாள். அப்போது தான் துயின்றாளோவென்று சந்தேகித்தாள். அல்லது மயக்கந்தரும் மருந்தை, அந்த மகம்மதியன் தனது வஞ்சகத்தால், தன் உடம்பில் செலுத்தி விட்டானோ வென்று எண்ணாத தெல்லாம் எண்ணினாள். அந்த இடமும் மிக்க அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு சயன அறையாய்க் காணப் பட்டது. எங்கும் அழகிய மலர்களையும், இலைகளையும் கொண்ட தொட்டிகளும் சம்பங்கிக் கொடிகளும், ரோஜா செடிகளும், நிலைக் கண்ணாடிகளும், படங்களும், பதுமை களும், நாற்காலிகளும் சோபாக்களும், பிறவும் நிறைந் திருந்தன. தானிருந்த கட்டிலும் அதன் மீதிருந்த மெத்தையும், திண்டு, தலையணைகளும், ஏராளமான மெல்லிய பட்டுப் போர்வைகளும், பட்டுத் துப்பட்டிகளும், சால்வைகளும், கொசு வலைகளும் விலை மதிப்பற்றவை யாவும், ஒரு சிறிய மாசுமற்றவையாயும் இருந்தன.
மனிதரது பஞ்சேந்திரி யங்களுக்கும் சுகம் தரத்தக்க பொருட்கள் யாவும் அந்த அறையில் காணப்பட்டனவாயினும், மிகவும் மேம்பட்ட மகா ராஜனும், அங்கிருந்த இனிய போகத்தில் ஆழ்ந்து ஈடுபட ஆவல் கொள்ளத் தக்கனவாய் அவை காணப்படினும், மேனகா தான் தீத்தணல்கள், தேள்கள், பாம்புகள் முதலியவற்றின் மீது கிடப்பதாக எண்ணங் கொண்டு அருவருப்படைந்து வருந்தினாள். அவளது விழிகள் அந்த அறையை ஆராய்ந்த போது இன்னொரு புதுமை அவளது காட்சியில் பட்டது. கட்டிலிற்கு அருகிலிருந்த ஒரு நாற்காலியில் வெள்ளைக்கார துரைசானி உட்கார்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டாள். அவளது வயது சற்றேறக்குறைய முப்பத்தைந்திருக்கலாம். மெலிந்ததும் கம்பீரமாக நீண்டதுமான அழகிய தேகத்தைக் கொண்ட அந்த மாது, தனது இடக்கரத்தில் ஒரு சிறிய தோல் பையையும், வலக்கரத்தில் வைத்தியர் பிணியாளரின் மார்பில் வைத்து நாடி பார்க்கும் குழாயையும் வைத்திருந்தாள். அந்த துரைஸானியை தான் அடிக்கடி பார்த்திருப்பதாக உடனே மேனகாவுக்கு நினைவுண்டாயிற்று. தான் அவளைக் கண்டது எவ்விடத்தில் என்று மேனகா யோசனை செய்தாள். தனது கணவன் வசித்த தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலுள்ள வீடுகளில் பெண்பாலருக்கு வைத்தியம் செய்ய அவள் அடிக்கடி வந்து போனதைத் தான் கண்டதாக எண்ணினாள். அவள் தனது கண்ணைத் திறந்து புதுமையான அத்தனை விஷயங்களையும் கண்டதனால் மிகவும் சோர்வடைந்தாள். இமைகள் திரும்பவும் மூடிக்கொண்டன.
கால் நாழிகை வரையில் அயர்வடைந்து உணர் வற்று உறங்கினாள். மறுபடியும் தனது உணர்வைப் பெற்றாள். திரும்பவும் மனது வேலை செய்யத் தொடங்கியது. தனக்கருகில் துரைஸானி உட்கார்ந்திருப்பதி லிருந்து, தனக்கு ஏதோ தேக அசௌக்கியம் உண்டான தென்றும், அதன் பொருட்டு அவள் வந்திருப்பதாகவும் யூகித்துக்கொண்டாள். தனக்கு எவ்விதமான நோயுண்டானது என்பதைப்பற்றி நினைத்துப் பார்த்தாள். ஒரு கால் தான் தன்னைக் கத்தியாற் குத்திக் கொண்டதனால் இரணம் ஏற்பட்டதோ வென்று ஐயமுற்றாள். தனது தேகத்தில் எந்த இடத்தில் நோவுண்டாகிறது என்பதை அறிய தனது தேக நிலைமையை ஊன்றி அகக்கண்ணால் நோக்கினாள். பொதுவாக தேகம் முற்றிலும் மரத்துப் புண் பெற்று அசைவின்றித் தோன்றியதே யன்றி ஏதாயினும் குறித்த விடத்தில் எத்தகைய பிணி இருப்பதாகவும் புலப்படவில்லை. ஆதலால் அவள் அவ்விஷயத்தில் எத்தகைய முடிவிற்கும் வரக்கூடாமற் போனது.
அப்போது பகல் நேரமா யிருந்ததை உணர்ந்தாள். தான் இரவு பன்னிரண்டு மணிக்கே தற்கொலை செய்து கொள்ள முயன்றது என்பதும், அப்போதே கத்தி பிடுங்கப்பட்டது என்பதும் நினைவிற்கு வந்தன. இடைவேளையான அவ்வளவு நீண்ட காலம் தான் உணர்வற்றோ துயின்றோ இருந்திருக்க வேண்டு மென்பதும், அப்போதே உடை மாற்றப்பட்ட தென்பதும் ஒருவாறு விளங்கின. தனது பெயரைச் சொல்லி அன்பே நிறைவாக அழைத்த பெண்மணி யாவள் என்பதை அறிய ஆவல் கொண்டவளாய், மிகவும் பாடுபட்டுத் தனது வதனத்தைச் சிறிது இப்புறம் திருப்பி தனக்கருகில் இருந்தவளை நோக்கினாள்.
அருகில் உட்கார்ந்திருந்த யௌவன மங்கை அந்தக் குறிப்பை யறிந்து, திரும்பவும் முன்போலவே அன்பாக அழைத்து, "அம்மா ! உடம்பு இப்போது எப்படி இருக்கிறது தெரிவி; நாங்கள் யாரோ அன்னியர் என்று நினைக்காதே; நாங்கள் உன் விஷயத்தில் அந்தரங்கமான அபிமானம் உள்ளவர்கள்'' என்று மிக்க உருக்கமாகக் கூறி, தனது கரத்தால் அவளது கன்னம் கரம் முதலிய விடங்களை அன்போடு மிருதுவாக வருடினாள். விடுபடும் வழியின்றி கொடிய நரகத்தினிடையில் கிடந்து தவிக்கும் ஒருவனது வாயில் ஒரு துளி தேன் சிந்தியதைப்போல, அத்தனை துன்பங்களின் இடையே அவ்வளவு மனமார்ந்த உண்மை அன்பை ஒருவர் தனக்குக் காட்டக் கிடைத்ததை நினைத்த மேனகா ஒரு நிமிஷம் தன்னை மறந்து ஆநந்தப் பரவசம் அடைந்தாள். அழகே வடிவாய் பூரண சந்திரோதய மென்ன ஜெகஜ்ஜோதியாய் கந்தருவ மாதைப் போல தனக்கருகில் உட்கார்ந்திருந்த பெண்மணியின் கபட மற்றதும், மென்மை , உத்தம குணம், பெருந்தகைமை முதலிய அரிய சிறப்புகளைக் கிரணங்களாய்ச் சொரிந்ததுமான அழகிய வதனத்தைக் காண மேனகாவின் மனதில் ஒரு வகையான நம்பிக்கையும், ஆறுதலும் இன்னமும் தோன்றின. காணக் கிடைக்காத அந்த அற்புதமான காட்சி உண்மையானதோ அன்றி பொய்த் தோற்றமோ வென்று உடனே ஐயமுற்றாள். மகா பயங்கரமான நிலையிலிருந்து தான், இரமணீயமான அந்த நிலைமையையடைந்த பாக்கியத்தை நினைத்து நினைத்து பெருமகிழ்வடைந்தாள். அந்த இன்பகரமான நிலையில் அவளது புலன்கள் தொய்ந்து எளிதில் தெவிட்டிப் போயின. மனதிலும், உணர்விலும் அந்த மனோகரமான அற்புதக் காட்சி எளிதில் பதிந்தது. அதற்கு முன், தன்னை ஒரு நாளும் கண்டறியாத அப் பெண்பாவை தனக் கருகில் உட்கார்ந்து, தனக்குரிய உபசரணைகளைச் செய்ததும், தன் மீது அவ்வளவு ஆழ்ந்த அபிமானம் காட்டியதும், தனது பெயரைச் சொல்லி யழைத்ததும் மேனகாவின் மனதில் பெருத்த வியப்பை உண்டாக்கின.
அவளது நடத்தை யெல்லாம் வஞ்சக நடத்தை யல்ல வென்பதும், அவள் மகா உத்தம ஜாதி ஸ்திரீ யென்பதும், அவளது முகத்திலேயே ஜ்வலித்தன. அவள் யாவள்? முதல் நாள் இரவு தன்னை வற்புறுத்திய மகம்மதியனுக்கு அவள் உறவினளா? பணிப்பெண்ணா ? அல்லது அவனுக்கும் அவளுக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லையா? அது முதல் நாளிரவில் தானிருந்த வீடுதானா? அல்லது வேறிடமா? கத்தி தனது கையினின்று பிடுங்கப்பட்ட பிறகு தனக்கு என்ன நேர்ந்தது? என்பன போன்ற எண்ணிறந்த சந்தேகங்களைக் கொண்டு அவற்றை வெளியிடவும் வல்லமை யற்று, பெரிதும் கலக்கமும், துன்பமும் அடைந்து திரும்பவும் சோர்ந்து காம் பொடிபட்ட ரோஜாவைப்-போலக் கண்களை மூடிக்கொண்டு தலையணையில் சாய்ந்து விட்டாள். பிறகு நெடுநேரம் வரையில் அவள் இமைகளைத் திறக்கவுமில்லை. அவளது தேகம் அசையவுமில்லை. அவள் திரும்பவும் உணர்வற்ற நிலைமையில் வீழ்ந்து விட்டாள்.
மூர்ச்சையிலிருந்து மேனகா தெளிவடைந்ததையும், அவளது வதனம், தேகம் முதலியவற்றின் மாறுபாடுகளையும் மிகவும் ஆவலோடும் சிரத்தையோடும் கவனித்து உணர்ந்த துரைஸானியம்மாள், "நூர்ஜஹான்! நான் வைத்திய சாலைக்குப் போக நேரமாய்விட்டது. இனி இந்த அம்மாளைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை; மிகவும் விரைவில் நல்ல நிலைமையை யடைந்து விடுவாள். நான் போய் விட்டு மாலையில் திரும்பவும் வந்து பார்க்கிறேன்.
இவளே கண்விழித்துப் பேசினால் பதில் சொல்; அப்போதும் இவளது மனதை அலட்டாமல் பார்த்துக்கொள், பெருத்த பயத்தினால் உண்டான மன அதிர்ச்சி இவளது நரம்புகளை வரம்பு கடந்து தளர்த்தி விட்டது. நரம்புகள் மிகவும் தாமதமாகவே தமது சுய நிலைமையை யடைய வேண்டும்; நாம் இன்னம் சிறிது தாமதமாய் மருந்து கொடுத்திருப்பேர் மானால் இவள் இதுவரையில் பிழைத்திருப்பதே அரிதாய்ப் போயிருக்கும்; அதே மருந்தை மூன்று மணி நேரத்திற்கொருமுறை மார்பில் தடவிக்கொண்டே இரு; மூக்கினால் உள்புறம் செலுத்தும் மருந்தை இனி மூக்கினால் வார்க்க வேண்டாம். இவள் விழிக்கும் போது அதை வாயினாலேயே இரண்டொருமுறை செலுத்தினால் முற்றிலும் குணமுண்டாய்விடும்; நான் போய்விட்டு வருகிறேன் என்று இங்கிலீஷ் பாஷையில் கூறினாள்.
நூர்ஜஹான் கவலையோடு; "இனி உயிருக்குப் பயமில்லையே?" என்றாள்.
துரைஸானி :- இல்லை, இல்லை. இனி அதைப்பற்றி கவலைப்படாதே; சந்தேகப்படக்கூடிய குறிகள் ஏதாவது இனி தோன்றினால் உடனே எனக்குச் செய்தியனுப்பு. பகல் பதினொன்றரை மணி நேரம் வரையில் நான் இராயப்பேட்டை வைத்தியசாலையில் இருப்பேன். அதன் பிறகு என்னுடைய பங்களாவிலேயே இருப்பேன். இவளுடைய புடவையையும், நகைகளையும், இப்போது அணிவிக்க வேண்டாம்; அவைகள் மாத்திரம் விலக்கப்படாம லிருக்குமாயின், தடைப்பட்ட இரத்த ஓட்டம் இவ்வளவு விரைவில் திரும்பியிராது. இந்த மஸ்லினே உடம்பில் இருக்கட்டும்; இதை நாளைக்கு மாற்றலாம்.
நூர் :- சரி; அப்படியே செய்வோம்; நடுராத்திரி முதல் நீங்கள் இங்கிருந்து பட்ட பாட்டிற்கு நான் எவ்விதம் நன்றி செலுத்தப்போகிறேன்! தவிர, இந்த விஷயம் இப்போது எவருக்கும் தெரிதல் கூடாது. இரகசியமாக இருக்க வேண்டும்; என்னுடைய கணவனது மானமோ அவமானமோ உங்களுடைய கையிலிருக்கிறது.
துரைஸானி :- நூர்ஜஹான்! அதைப்பற்றிக் கவலை கொள்ளாதே. எப்படிப்பட்ட இரகசியமானாலும், நான் அதை வெளியிட மாட்டேன். வைத்தியர்கள் அதை வெளியிடுதல் கூடாது. எவ்வளவோ அந்தரங்கமான வியாதிகளுக்கெல்லாம் நாங்கள் சிகிச்சை செய்கிறோம். அவற்றை வெளியிடுவதனால் எங்களுடைய தொழிலே கெட்டுப்போகுமே; இரகசியத்தைக் காப்பாற்றுதலே இந்தத் தொழிலின் நாணயம்; இதைப்பற்றி நீ யோசனை செய்யாதே. நான் போய் விட்டு வருகிறேன் - என்றாள்.
நூர்:- சரி; நீங்கள் மாலையில் வருவதற்குள் இவள் நன்றாக விழித்துக்கொண்டால், இவளுக்கு எவ்விதமான ஆகாரம் கொடுக்கிறது? இவள் பிராமணப்பெண் என்பதை பார்வையிலே நீங்கள் அறிந்து கொண்டிருக்கலாம். அதற்குத் தகுந்த விதம் ஆகாரம் கொடுக்க வேண்டும். நாங்கள் தயாரித்த ஆகாரத்தைக் கொடுப்பதாய்ச் சொல்லி, ஒரு பிராமண பரிசாரகனை அழைத்து வரும்படி ஆளனுப்பியிருக்கிறேன். இந்தப் பங்களாவில் நாங்கள் வசிக்கும் இடத்திற்கும் இதற்கும் இடையில் நெடுந்தூரம் இருக்கிறதென்பது உங்களுக்குத் தெரியும். விஷயத்தை யெல்லாம் நான் என்னுடைய தகப்பனாரிடம் சொல்ல வேண்டாமென்று நினைத்தேன். என்னுடைய அக்காள் அப்படிச் செய்வது தவறென்று நினைத்து அவரிடம் சொல்லிவிட்டாள். அவரே பரிசாரகனை அழைத்து வரும்படி ஆளை அனுப்பினார். ஒரு மனிதர் அவசியம் வருவார். ஒருவரும் அகப்படாவிட்டால், நாம் என்ன ஆகாரத்தைக் கொடுக்கிறது? - என்று கேட்டாள்.
துரைஸானி :- இப்போது எவ்விதமான ஆகாரமும் கொடுக்க வேண்டாம். உட்புறம் செலுத்தப்படும் இந்த மருந்திலேயே தேக புஷ்டிக்குரிய மருந்தும் கலக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இன்று மாலை வரையில் பசியே தோன்றாது; ஒருக்கால் இவளே பசியென்று சொன்னால் சர்க்கரை கலந்து பாலில் சிறிதளவு கொடுப்பது போதும். இன்றிரவு பார்லி (Barley) அரிசிக்கஞ்சி கொடுக்கலாம். அதற்குள் நான் திரும்பவும் வருகிறேன் - என்று கூறியவண்ணம் அறையை விட்டு வெளியிற் சென்று தனது மோட்டார் சைக்கிலில் ஏறிக்கொண்டு போய்விட்டாள்.
அவளை அனுப்பிவிட்டுத் திரும்பி வந்த நூர்ஜஹான் பக்கத்திலிருந்த மருந்தை எடுத்து மேனகாவின் மார்பில் தடவி விட்டு, முன்போலவே அருகில் உட்கார்ந்து கொண்டு பரிதாபகரமாகக் காணப்பட்ட அவளது களங்கமற்ற முகத்தைப் பார்த்த வண்ணம் இருந்தாள். தனது கணவரும், பிறரும் செய்த சதியினால், ஒரு சூதையுமறியாத அப் பெண்பேதை அடைந்த நிலைமையைப் பற்றி நினைத்து நினைத்து வருந்தினாள். அவளைத் திரும்பவும் அவளது கணவனிடம் சேர்த்து, அவன் அவளது கற்பின் விஷயத்தில் எவ்வித ஐயமும் கொள்ளாதபடி திருப்தியடைந்து அவளை ஏற்றுக்கொள்ளும்படி எப்படிச் செய்வதென்னும் யோசனையே ஓயாமல் அவளது மனத்தில் எழுந்து பெருஞ்சுமையாக அழுத்தியது. அதைக் குறித்து எவ்விதமான முடிவிற்கும் வரக்கூடாமையால் தாமரை இலைத் தண்ணீரைப் போலத் தத்தளித்தாள். அவளது முழு வரலாற்றையும், அவள் வாய் மூலமாக எப்பது அறிவதென்பதைக் குறித்து மிகவும் ஆவல் கொண்டவளா யிருந்தாள். அதுகாறும் தனது கணவன் பரம-யோக்கியனென்று நினைத்து அவனே உயிரென மதித்துத் தனது பாக்கியத்தைக் குறித்துப் பெருமை யடைந்திருந்ததெல்லாம் ஒரு நொடியில் ஒழிந்து போனதையும், அவன் கேவலம் இழிகுணமுடைய வனாய், வேசைப்பிரியனாய், சமயத்திற்கேற்ற விதம் பொய்மொழி கூறி வஞ்சிக்கும் அயோக்கியனாயிருந்ததையும் ஓயாமல் சிந்தித்தாள்.
அதைப்பற்றி நினைக்கும்போது துக்கமும் வெட்கமும் அழுகையும் அவள் மனதில் பொங்கியெழுந்து நெஞ்சையடைத்தன. கண்களும் மனதும் கலங்கின. அப்போதைக் கப்போது கண்ணீர்த் துளிகள் தோன்றின. நெடுமூச்செறிந்தாள். மனிதர் வெளிப்-பார்வைக்கு அழகாயும், உட்புறத்தில் அவ்வளவு மிருகத்தன்மையைக் கொண்டும் இருப்பாரோவென்று நினைத்து அவள் பெரிதும் வியப்புற்றாள்; தன் கணவன் எழுத்து வாசனையறியாத முட்டாளன்று; அப்படி இருந்தும், கொஞ்சமும் நல்லொழுக்கமும் மன உறுதியு மற்றவனாயும், நிறையில் நில்லாத சபலபுத்தியுள்ளவனாயும் இருப்பதைக் குறித்து வருந்தினாள். அவனுக்கும் தனக்குமுள்ள உறவு இனி ஒழிந்த தென்றும், அவனது முகத்திலே இனி விழிப்பதில்லை யென்றும் அவன் இனி தனது வீட்டிற்கு வராமல் தடுத்துவிட வேண்டும் என்றும், தனது இல்லற வாழ்க்கை அந்த இரவோடு ஒழிந்து போய்விட்டதென்றும் உறுதியாக நினைத்து மனமாழ்கினாள். தனது சொந்த விசனத்தைக் காட்டிலும் மேனாவின் நிலைமையும், அவள் களங்கமற்றவளென்பதை ருஜுப்படுத்தி அவளுடைய கணவனிடம் அவளை எப்படி சேர்ப்பது என்னும் கடினமான காரியமும், அவள் மனதில் அதிகமாக வேரூன்றி வதைத்தன. அதிலேயே அவள் தனது முழு மனதையும் செலுத்தி, தனிமையில் சிந்தனை செய்து கலக்க மடைந்து மனமுருகிக் கண்ணீர் பெருக்கி உட்கார்ந்திருந்தனள்.
மிகவும் சிங்காரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறையில் சிறிய மாசும், தூசியும் தோன்றாத புதிய மெல்லிய பட்டுப் போர்வைகள், துப்பட்டிகள், திண்டு, தலையணைகள், முதலியவற்றி னிடையில் மேனகா அழகே வடிவாய்க் கிடந்ததும், அவளுக்கருகில் இரதிதேவியோவென்ன தனக்குத் தானே நிகராய் தேஜோமயமாக நூர்ஜஹான் உட்கார்ந் திருந்ததும் தெய்வங்களும் காணக் கிடைக்காத கண்கொள்ளா அற்புதக் காட்சியாக விருந்தன. அவ் விருவரில் எவள் அழகிற் சிறந்தவள் என்பதைக் கண்டு பிடிப்பது எவருக்கும் பலியாக் காரியமாயிருந்தது. மேனகாவைப் பார்க்கையில், அவளது அழகே சிறந்ததாயும், இருவரையும் ஒன்றாகப் பார்க்கையில் இருவரும் இரண்டு அற்புத ஜோதிகளாகவும், ஒருத்திக்கு இன்னொருத்தியே இணையாகவும் தோன்றினர். ஒருத்தியை ஜாதி மல்லிகை மலருக்கு உவமை கூறினால் மற்றவளை ரோஜா மலருக்கு உவமை கூறுதல் பொருந்தும். ஒருத்தி வெண்தாமரை மலரைப் போன்றவளென்றால், மற்றவள் செந்தாமரை மலரை யொத்தவளென்றே கொள்ளவேண்டும். ஒருத்தியை இலட்சுமிதேவி என்றால், இன்னொருத்தியைச் சரசுவதி தேவியென்றே மதிக்க வேண்டும். இருவரது அமைப்பும் அழகும் ஒப்புயர்வற்ற தனிப்பேறா விளங்கினவன்றி அவர்களைக் காணும் ஆடவர் மனதில் காமவிகாரத்தை யுண்டாக்காமல், அவர்களிடம் ஒரு வகையான அச்சமும், அன்பும், பக்தியும் உண்டாக்கத் தக்க தெய்வாம்சம் பொருந்திய மேம்பட்ட அமைப்பாகவும் அழகாகவும் இருந்தன. சிருஷ்டியின் செல்வக் குழந்தைகளாயும், கடவுளின் ஆசைக் குழந்தைகளாயும் காணப்பட்ட அவ்விரு மடமயிலார் வசிப்பதான பாக்கியம் பெற்ற இல்லத்தில், மனிதர் காலையிலெழுந்தவுடன் அவர்களது தரிசனம் பெறுவாராயின் அவர்களது மனக்கவலைகளும் துன்பங்களும் அகன்றுபோம். அந்த உத்தமிகளைப் பார்த்தாலே பசி தீரும்.
அவ்வாறு நூர்ஜஹான் துயரமே வடிவாக இரண்டொரு நாழிகை உட்கார்ந்திருந்தாள். அதற்குள் மேனகாவின் மார்பில் இரண்டு முறை மருந்தைத் தடவினாள். அப்போது நூர்ஜஹானின் அக்காள் திடீரென்று உள்ளே நுழைந்து, "அம்மா பரிசாரகன் வந்து விட்டார். ஏதாவது ஆகாரம் தயாராக வேண்டுமா? இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள்.
நூர் :- சற்று முன் கண்ணைத் திறந்து நன்றாகப் பார்த்தாள். இனி பயமில்லை யென்று துரைஸானியம்மாள் சொல்லி விட்டாள். இப்போதும் ஆகாரம் கேட்க மாட்டாளாம். எல்லாவற்றிற்கும் பாலை மாத்திரம் காய்ச்சி வைக்கட்டும் - என்றாள்.
அலிமா:- சரி; அப்படியே செய்வோம்; உனக்குக் காப்பியும் சிற்றுண்டியும் இவ்விடத்திற்கே கொண்டு வருகிறேன். நீ அவற்றைச் சாப்பிடு; வேண்டாமென்று சொல்லாதே. - என்றாள்.
நூர்:- இல்லை அக்கா! எனக்கு இப்போது ஒன்றும் வேண்டாம். பெருத்த விசனத்தினால் எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை. பசி உண்டானால் பார்த்துக்கொள்வோம். தயவு செய்து என்னை வற்புறுத்த வேண்டாம். - என்று நயந்து
வேண்டினாள்.
அதைக் கேட்ட அலிமா புண்பட்ட மனதோடிருக்கும் தனது சகோதரியை மேலும் வருத்த மனமற்றவளாய், "அப்படி யானால் இன்னம் கொஞ்சநேரம் ஆகட்டும்; அப்புறம் வருகிறேன்" என்று அன்போடு கூறிவிட்டு அவ்வறையை விடுத்துச் சென்றாள்.
மேலும் ஒரு நாழிகை நேரம் கழிந்தது. நூர்ஜஹானால் பிரயோகிக்கப்பட்ட மருந்து நன்றாக வேலை செய்து மேனகாவின் உணர்வைத் திருப்பியது. தனக்கருகில் ஓர் அழகிய பெண்பாவை யிருந்ததைத் தான் கடைசியாகக் கண்ட நினைவும் அவ்வுணர்ச்சியோடு திரும்பியது. அந்த நினைவினால் அவளது அப்போதைய மனநிலை ஒரு சிறிது இன்பகரமாயும், நம்பிக்கை தரத்தக்கதாயு மிருந்தது. அந்தப் பெண் யாவளென்பதையும், மற்றும் எல்லா விவரங்களையும் அந்தப் பெண்மணியிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டு மென்னும் விருப்பமும் ஆவலும் உண்டாயின. அந்த மகமதியப் பெண், அன்றிரவு தன்னை வற்புறுத்திய மகம்மதியனுக்கு ஒருகால் அனுகூலமானவளாய் இருப்பாளோ என்னும் ஒருவகையான அச்சம் தோன்றி ஒரு புறம் அவள் மனதைக் கவர வாரம்பித்தது ; இவ்வாறு நம்பிக்கையாலும், அவநம்பிக்கை யாலும் ஒரே காலத்தில் வதைக்கப்பட்டவளாய், நூர்ஜஹானது முகத்தை நோக்கினாள். அதுகாறும் அவளுடைய வாய், பூட்டப்பட்ட கதவைப் போலத் தோன்றியது. அப்போது, தான் பேசக்கூடுமென்னும் தைரியம் அவளது உணர்வில் தோன்றியது.
முதற்பாகம் முற்றிற்று
-----
This file was last updated on 31 Oct 2020.
Feel free to send the corrections to the webmaster.