அண்ணாவின் நாடகங்கள் (6)
டாக்டர் சி. என். அண்ணாதுரை
Tamil Plays - 6
by cA.na. aNNaturai (aRinjar aNNA)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Digital Library /Tamil Virtual Academy for providing a scanned image/PDF of this work.
The e-text has been generated using Google OCR online tool and subsequent correction of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அண்ணாவின் நாடகங்கள் -6
டாக்டர் சி. என். அண்ணாதுரை,
Source:
அண்ணாவின் நாடகங்கள்
டாக்டர் சி. என். அண்ணாதுரை, M.A.
பரிமளம் பதிப்பகம் 9, அவின்யு ரோடு, சென்னை-34
முதல் பதிப்பு ஆகஸ்டு, 1971
விலை ரூ.10/
"தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் நிதி உதவியுடன் வெளியிடப்பட்டது "
மத்திய கூட்டுறவு அச்சகம், சென்னை-2
உரிமை : பரிமளம் பதிப்பகம்
--------
பொருளடக்கம்
1. நன்கொடை | 4. கல்சுமந்த கசடர் |
2. கண்ணீர்த்துளி | 5. ராகவாயணம் |
3. இரக்கம் எங்கே ? | 6. புதிய மடாதிபதி |
---------------
அண்ணாவின் நாடகங்கள்
1. நன்கொடை (அரசியல் நாடகம்)
பீரங்கி பீமராவ் நாயுடு - காங்கிரஸ் பிரசாரகர்
ஜவுளி ஜம்புலிங்கம் - காங்கிரஸ் எம்.எல்.ஏ.
வனிதா - ஜம்புலிங்கத்தின் மகள்
தருமலிங்கம் - ஜம்புலிங்கத்தின் தம்பி
மன்னன் - ஜம்புலிங்கத்தின் மகன்
சங்கரலிங்க ஐயர் - ஜம்புலிங்கத்தின் கடை மானேஜர்
இடம் - தமிழகத்தில் ஒரு நகரம்
காலம் - இப்போது
கண்டவர் - யூகம்
(விசாலமான அறை - அறைச் சுவர்களில் காந்தி, நேரு, பட்டேல் ஆகியோரின் உருவப்படங்கள் மிகப் பெரிய அளவில் மாட்டப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் எம். எல். ஏ. ஜம்புலிங்கம் தூய கதருடையில் தோற்றமளிக்கிறார். சோபாவில் சாய்ந்தபடி யிருக்கிறார். எதிரில் அன்று வந்த தினசரிகள் பிரிப்பவரின்றி வைத்த படியே உள்ளன. 'வந்தே மாதரம்' என்று கூறிக்கொண்டே உள்ளே வந்த காங்கிரஸ் பிரசாரகர் பீரங்கி பீமராவ் நாயுடுவை வரவேற்கிறார்.]
ஜ : - வா, தம்பி, வா. ஏது இவ்வளவு நேரத்தோடே, இவ்வளவு தூரம்?
பீ : எல்லாம் உங்களைப் பார்த்துப் போகத்தான்.
ஜ : நல்லா பாரு, தம்பீ - நிக்கிறியே, உக்காரு.
[பீமராவ் உட்காருகிறார்]
பீ : நாட்டிலே, காங்கிரஸ்காரன் என்று சொல்லிக்கொண்டு வெளியில் வரமுடிய-வில்லை. அப்படி செய்துவிட்டார்கள், இல்லாததையும், பொல்லாததையும் பேசி, காங்கிரஸ் என்றாலே கசக்கிறமாதிரி பண்ணிவிட்டார்கள். காங்கிரஸ் என்றாலே வெறுக்கும்படி, மக்களை மாற்றிவிட்டார்கள்! திராவிடத்தான் களுடைய கொட்டம் வளர்ந்து கொண்டே போய்விட்டது. அவன்களை அடக்கலேன்னா, காங்கிரஸ் இனி செத்துப்போய் விட்டதென்றே வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஜ : சரி, தம்பீ! இப்ப அதுக்கு என்ன செய்ய வேணும் சொல்லு.
(ஜம்புலிங்கத்தின் அலட்சியம் அவனுக்குக் கோபத்தையூட்டுகிறது.)
பீ : இவ்வளவு விளக்கமாக நான் நிலைமையை எடுத்துக் காட்டின பிறகும், எதிர்காலம் எவ்வளவு இடர் உள்ளதாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிய பிறகும் ..............
ஜ: தம்பீ! பதறாம் பேசு. நீ சொன்னது உண்மை - எழுத்துக்கு எழுத்து உண்மை, நான் அதைப் புரிந்துகொள்ள வில்லையா என்ன! நல்லா புரியுது. நான் இப்ப உன்னை கேட்பது என்னான்னா, இப்ப என்ன செய்ய வேணும்ன்னுதான்.
பீ : கேள்வி சரி, ஆனால் நீங்கள் பேசுகிற தோரணை சரியில்லை. நான் வேலை வெட்டி இல்லாமலா வந்திருக்கிறேன் - அல்லது என் சொந்த இலாபத்துக்காகப் பாடுபடுகிறேனா..............
ஜ : இதென்ன தம்பீ, விணான கோபம்.
பீ : வீண்தான் ...... உங்களைப்போன்றவங்களுக்காக நாங்க மாரடித்துக்கொண்டு அழறது வீண் வேலைதான். எக்கேடாவது கெடட்டும் என்று விட்டுத் தொலைக்க வேண்டியதுதான் .........
.
ஜ : வெடுக்கு வெடுக்குன்னு பேசாதே, தம்பீ. இப்ப உன் பேச்சை நான் மதிக்க-வில்லையா..............
பீ : மதிச்சு ..........?
ஜ : இவ்வளவு நேரமா நீ சொன்னதை எல்லாம் கேட்டு கிட்டு இருந்தேன்.
பீ : கேட்டு.....? நிலைமை புரியுதா உங்களுக்கு. நெருப்பைக் கக்கறானுங்க, திராவிடத்தானுங்க........... புரியுதா ............. சன்னம் சன்னமாப் பேத்து எடுக்கறானுங்க, செல்வாக்கை....
ஜ: என்ன சொல்லு தம்பி, இந்தத் திராவிடத்தானுங்க நெருப்பைக் கக்கட்டும், விஷத்தையே கொட்டட்டும், நம்ம காங்கிரஸ் மகாசபையை அசைக்கக்கூட முடியாது.
பீ : அதுதான் தப்பு என்கிறேன், நிலைமை உங்களுக்குப் புரியவில்லைன்னு சொல்றேன். திராவிடத்தானுங்க கூட்டம், மகாநாடு, நாடகம், பாட்டுக் கச்சேரி, படக்காட்சி, இதிலே எல்லாம் கூட்டம் எப்படிக் கூடுது தெரியுமா உங்களுக்கு .........
ஜ: கூட்டம் கூடிட்டா தீர்ந்துபோச்சா ................
பீ : கூட்டம் கூடினா என்னன்னு சொல்றிங்களா! பேஷ்! ரொம்ப நல்லாயிருக்கு உங்க மூளை ...
ஜ : தம்பீ! நல்ல வார்த்தையா பேசு ......... மூளை நல்லா யிருக்கா இல்லையான்னு எல்லாம் பேசாதே........... சரியில்லை........... என் வயசையாவது கவனிக்க வேணும் பாரு .......... நீ பெரிய மேதாவின்னே வைச்சிக்கோ .... ஆவேசமாப் பேசறே...... விடாப் பிடியா வேலை செய்யறே.......... அதனாலேயே, அனுபவஸ்தர் களோட மனதைப் புண்படுத்தலாமா ...........
பீ : ஆத்திரத்திலே பேசிவிட்டேன் .... மன்னிக்கணும்......
ஜ: ஆத்திரம் கூடாது தம்பீ! நாமெல்லாம் மகாத்மா சிஷ்யருங்க.... பொறுமை வேணும் ....... ஆத்திரம் கூடவே கூடாது. எதிர்க்கட்சிக்காரணுங்களோட பிரசாரத்தாலே, தீமை வரும்னு சொல்றே. சரி. அதுக்கு என்ன செய்யலாம்......
பீ : நாமும் கூட்டம் மகாநாடு, நடத்த வேணும்.
ஜ : இவ்வளவு தானே! செய்துட்டாப் போவுது ........ நாடகம் கூட நடத்தலாம்.....
பீ : மகாநாடு, நாடகம், இது என்ன வேலை செய்யுது தெரியுமா ... பட்டிக்காட்டா-னுங்களெல்லாம் கூட இப்ப, பார்லி மெண்ட், பர்மிட், சட்டம். பத்திரிகை சுதந்திரம் இதை எல்லாம் தெரிந்து கொண்டு பேசுறாங்க.....
ஜ : ஆமாம்... பொதுவா, அறிவு வளருது....
பீ : என்ன .... என்ன ... அறிவு வளருதா! சரிதான் உங்க ளுக்கே மயக்கமா இருக்கு, அந்த ஆசாமிகள் பேச்சைக் கேட்டு ....
ஜ: செச்சே..... ஒரு பேச்சு முறைமைக்குச் சொன்னேன் ... சரி, தம்பீ! மதுவிலக்கு கமிட்டிக் கூட்டம் போகணும்... இப்ப உன் ஏற்பாடு என்ன அதைச்சொல்லு... மகாநாடு நடத்தணும் .....
பீ : ஆமாம் ......
ஜ : நடத்தி விடலாம், தம்பீ! மகாநாடு நடத்தி, நாலாயிரம் ஐயாயிரம் பணம் கூட மிச்சப்படுத்தறாங்களாமே திராவிடக் கட்சிக்காரனுங்க. நாமும் ஒரு மகாநாடு நடத்தினா, ஆயிரம் இரண்டாயிரம் மிச்சமாகும்...........
பீ : யாருக்கு? நமக்கா! உலகம் தெரியாதவரா இருக்கிறே யேய்யா ... அவனுங்களுக்கு மிச்சமாகுது - மகாநாடு நாடகம் எதிலேயும் - அதைப் போல நமக்கும் ஆகுமா ....
ஜ: ஏன், தம்பீ, நாமும் பெரிய கொட்டா போட்டு, கொடி மரம் நட்டு நம்ப கோடிலிங்கம் நாயனக்கச்சேரி, கோகர்ணம் குப்பாயி பாட்டு, எல்லாம் ஜமாய்த்து விடலாம் - அட, ஒரு இரண்டாயிரம் மிச்சம் பிடிச்சா, நம்ம கமிட்டி ஆபீஸ் செலவுக் காவது ஆகும். ஒரு வருஷமா, வாடகை நான் கையைவிட்டுக் கொடுக்கறேன் தம்பீ!
பீ : தலைதலைன்னு அடிச்சிகிட்டு போகலாம்னு தோணுது, உங்கப் பேச்சைக் கேட்டு ...... ஐயா! ஆர அமர யோசித்துப் பேசுங்க. ஜனங்க, திராவிடத்தானுங்களோட சேர்ந்துவிட்டாங்க ........... அதனாலே, அவங்க மகாநாடுன்னா, ஐம்பதனாயிரம்னு
இலட்சம்னு ஜனங்க சோறாங்க...........
ஜ: போ, தம்பீ, சும்மா விளையாடறே..... ஐம்பதாயிரமும் இலட்சமும் ......
பீ : உன்னோடு மாரடிக்க என்னாலே முடியாதய்யா என்னாலே முடியாது .......... ஐம்பதாயிரம்னு சொன்னா நம்பிக்கை வரவில்லை... வரவில்லையேல்லோ - சரி, இதைப் படியுங்கள்
ஜ : நீயேதான் சொல்லு தம்பி, என்ன இருக்கு - அவனுங்க பேப்பரா ......
பீ : இல்லை, நம்ம மிதரன் .. ஜ : மித்ரன் என்ன சொல்லுது...
பீ : கேளுங்க... திராவிட மகாநாடு நடந்தது. பெரிய அட்ட காசம் - ஊர் சுவர் முழுவதும் ஆபாசமான வசை மொழியை எழுதி பரபரப்பை உண்டாக்கிவிட்டனர்.
ஜ : சரி- ஐம்பதாயிரம்னு எங்கே இருக்கு ....
பீ : நம்ம பேப்பர்லேயே ஐம்பதாயிரம்னு வருமா.... வரணுமா - சூட்சமமா இருக்கே அட்டகாசம்னு - என்ன அர்த்தம் அதற்கு ... பெரிய கூட்டம்! நம்ம மித்ரன் நிருபர் பார்த்துப் பிரமிச்சி போயிருக்கிறார் - ஊர் அமர்க்களப்படறதுன்னுதானே அர்த்தம். ஊர்லே சுவர் பூரா எழுதி இருக்கிறான்னா. என்ன அர்த்தம். அவ்வளவு ஜரூரா வேலை செய்கிறான்னு அர்த்தம்... சுவர்லே எழுதிக் காட்டினது நாம் - முதலிலே...
ஜ : பட்டாளத்திலே சேராதே பணத்தைப் பாங்கியிலே போடாதேன்னு எழுதினோமே .........
பீ : அது மட்டுமா ...... ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம் .......... இதெல்லாம் ? ஆமாம், ஆமாம் - ஊர் பூராவும், அதைப் பார்த்துப் பார்த்து அதனாலேதானே நம்ம கட்சிக்கும் செல்வாக்கு! இப்ப, அவனுங்களிடமிருக்கு, அந்த செல்வாக்கு - அதனாலே அவனுங்க மகாநாடு நடத்தினா, கூட்டம் பிரமாதமா வருது - நமக்கு அப்படி வராது ....
ஜ : அப்படியா......!
பீ : அதனாலே நம்ம மகாநாட்டுச் செலவு இருக்கே, அதை ஜனங்களிடம் வசூல் செய்வது முடியாது.
ஜ: டிக்கட்டு விற்கலாமேல்லோ.
பீ : யார் வாங்குவா.....! டிக்கட்டே கூடாது நம்ம மகா நாட்டுக்கு.
ஜ : அப்படியானா, செலவு? பி : செலவுக்காகத்தான் உங்களிடம் வந்தது .........
ஜ: ஏன் தம்பீ, நான் பணம் கொடுக்க இஷ்டமில்லாத தாலே இப்படிப் பேசுகிறேன்னு எண்ணிக் கொள்ளாதே. என் மனசிலே பட்டதைச் சொல்லுகிறேன் .......
பீ : சொல்லுங்க..........
ஜ: இந்த ஜனங்கதான் புத்தி கெட்டு போயி, திராவிடத் தான்களோட சேர்ந்துகிட்டு இருக்கறாங்களே, இப்ப, நாம்ம ஏன் நம்ம பணத்தைப் பாழாக்கிக்கிட்டு, கூட்டம்னும், மகாநாடும்னும் ஏற்பாடு செய்துகிட்டு இருக்கணும்! தானா திருந்தட்டும்னு விட்டு விட்டா நல்லதில்லையா ........
பீ : விட்டு விட்டா, நம்ம கட்சி இருந்த இடத்திலே புல் முளைக்கும்..... இப்பவே வெளியே தலைகாட்ட முடியலே, இன்னும் கொஞ்சம் வளரவிட்டா, உங்களைப் போல, எப்படியோ ஆகட்டும்னு இருந்துவிட்டா தீர்ந்தது, நம்ம கட்சி குப்பை மேட்டுக் கூளமாயிடும்......
ஜ : சரி.... தம்பி! மகாநாட்டுக்கு, என்னிடம் என்ன எதிர் பார்க்கிறே ....
பீ : நீங்கதான் வரவேற்பு கமிட்டித் தலைவர்.
ஜ : நானா! ஜில்லா காங்கிரஸ் தலைவருக்கல்லவா அந்த உரிமை .
பீ : காங்கிரஸ் மகாநாடல்ல இப்ப நான் போட வேணும்னு சொல்றது - இது காங்கிரஸ் எதிர்ப்பு ஒழிப்பு மகாநாடு - காவிய காவிகாப்பு மகாநாடு .........
ஜ : என்ன து .... காவிய காவி ........
பீ : அதாவது நமது பழய புராண இதிகாச காவியங் களையும், சாது சன்யாசி சன்னிதானங்களையும் திராவிடத் தானுங்க ஒழிக்கக் கிளம்பி இருக்காங்க.. நாம் காவிய காவி காப்பு மகாநாடு போட்டு அந்தப் பயல்களை வெளுத்து வாங்க வேணும்........
ஜ : நீ, பேசறது பூரா வேடிக்கையா இருக்கு தம்பி! நமக்கு ஏன் அந்த வீண் வேலை. காவியக்காரனும் காவி கட்டியும் தங்களைக் காப்பாத்திக் கொள்ள மகாநாடு போட்டுக் கொள்ளட் டும் - நாம் தானா முந்திரிக்கொட்டைங்க.
பீ : விவரம் தெரியாததாலே இப்படிப் பேசறிங்க - அந்தப் பயல்களுக்கு எதிரா, ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டிக் காட்ட வேணும் அந்தப் பயல்களை நாம்ம மட்டுந்தான் எதிர்க்கிறோம்னு இருக்கப்படாது பெரிய பெரிய புலவர்களெல்லாம் எதிர்க்கிறாங்க, பெரிய பெரிய ஞானிகள் எதிர்க்கிறார்கள் என்கிற எண்ணம் ஜனங்க மனசிலே பரவி, பிறகு ஜனங்க, நம்மோடு, சேரவேணும்.
ஜ : இதென்னமோ, தம்பி எனக்கு, கொக்கு தலையிலே வெண்ணைவைச்சி பிடிக்கிற மாதிரியாத்தான் படுது ........ நாம்ம நம்ம காங்கிரஸ் கட்சி மகாநாடு கூட்டி காந்தி பெருமை, கைராட் டினத்தோட அருமை இதுகளைப் பற்றி எடுத்துச் சொன்னா
ஜனங்க திருந்தி வருவாங்க ..........
பீ : இனிமேலே என்னய்யா இருக்கு, நாம்பதான் முப்பது வருஷத்துக்குமேலே மூலை முடுக்குக்கூட பாக்கிவிடாம், காந்தி, கதரு, கைராட்டினம் இவைகளோட பெருமையை எடுத்துப் பேசியாச்சி - கேட்டுக் கேட்டு ஜனங்களுக்குப் புளிச்சும் போச்சே காந்தி, தத்துவத்தை மறந்துவிட்டாங்க. கதரை கள்ளமார்க் கட்டை மறைக்கிற துணியாக்கிவிட்டாங்க, கைராட்டினம் பரணை மேலே இருக்கு. அப்படின்னுதானே இப்ப ஜனங்க பேசறாங்க நம்ம கட்சியைப் பார்த்து. இப்பப் போயி காந்தி கதர் கைராட் டைன்னு பேசினா, காதிலே ஏறுமா, கவைக்கு உதவுமா ..........
ஜ : அப்ப ... காவிய மகாநாடும் போடணும் .........
பீ : ஆமாம் - இது ஒரு நாள் - அது ஒரு நாள் - பத்து ரூபாய் பிடிக்கும் - இலட்ச ரூபா பலன் கிடைக்கும் - செலவுன்னு எண்ணக்கூடாது சேவைன்னு எண்ண வேணும் .......
ஜ : அது சரி...
[பீமராவ் கோபத்தின் உச்சக்கட்டத்திற்குப் போய் விட்டார்] |
பீ : என்ன சலிப்பு ...... ஏன்யா .........! காங்கிரஸ் கட்சியினாலே தான் உனக்கு இந்தச் செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து. எம்.எல்.ஏ., அதிகாரம், கிடைச்சுது. அந்தக் கட்சிக்கு ஒரு ஆபத்துன்னா கைகொடுக்க மனசு இல்லை. மனஷனாய்யா நீ ........ காங்கிரஸ்காரனா.....
[ஜம்பு லிங்கம் இதுவரை சாந்தமாக பேசி வந்தார். அவரும் கடுகடுப்போடு பேசத்
தொடங்கினார் ]
ஜ : ஆமாம், இப்ப உன் கிட்டே, காசு கொட்டிக் கொடுத்தாத் தான் நான் காங்கிரஸ் காரன்னு ஒத்துக்கொள்ளவே போலிருக்கு - ஏண்டா தம்பீ! நீ வந்து அந்த மகாநாடு இந்த மகாநாடுன்னு சொல்லுவே, உடனே நான், பெட்டிச் சாவியை உன்னிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்தேமாதரம்னு சொல்லவேணும், நீ தொறந்து உனக்கு வேணும்கிற பணத்தை எடுத்துக்கிட்டு ஜெய் ஹிந்த சொல்லிவிட்டுப் போயிடுவே இல்லையா - இதைச் செய்தா நான் நல்லவன் - இல்லையானா பொல்லாதவன் - அப்படித்தானே - இந்த வேலை நல்லா இருக்கு தம்பீ! திராவிடத்தானுங்க எதிர்க் கிறானுங்க, அதனாவே என்கிட்ட பணத்தைக் கொட்டு, அவனும் நானும், நாயே பேயேன்னு ஏசிக்கிட்டு போறோம், நீ, நோட்டு நோட்டா நீட்டு, இதுதானா, உன் பிளான் .......
பீ: மரியாதையாப் பேசு- தெரியுதா - வார்த்தைகளை அளந்து பேசு - உன்னைப் போல சுயநலக்காரனுங்க இருக்கிறதாலே தான், திராவிடத்தானுங்க அந்தப் போடு போடறாங்க - அவனுங்க பேசறதிலே என்ன தப்பு இருக்கு - கதர் கட்டிக்கொண்டு கள்ள மார்க்கட் கழுகுகள் இருக்குன்னு சொன்னாங்களே, திராவிடத் தானுங்க அவங்க வாய்க்குச் சர்க்கரை போட வேணும்
[ஜம்புலிங்கம் எழுந்து நின்றுக்கொண்டு ஆத்திரமாகக் கூவினார்]
ஜ : ஏலே...ஏய்....! இதோபாரு....... போயி, சந்துமுனையிலே நின்னுகிட்டு கத்து, இங்கே பேசாதே... எழுந்திரு ... மரியாதையா
பீ : யாருக்கு மரியாதை இல்லே ........... யாருக்கு மகாத்மா பேரைச் சொல்லிக்கிட்டு ஜனங்களை ஏமாத்திகிட்டு, மாசமாசம் மூவாயிரம் நாலாயிரம்னு அடிக்கறியே கொள்ளே நூல் பர்மிட்டிலே, அதைத்தான் திராவிடத்தானுங்க பேசி, மானத்தை வாங்கறானுங்க வேணும் உங்களுக்கு - இதுவும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும்.........
ஜ : வீணா அவமானம் அடையப் போறே - ஏய்! நான் கள்ள மார்க்கட்காரன். அதானே........ பேசாதே .......... இதோபார், கதர் போட்டிகிட்டிருக்கறேன் - காங்கிரசிலே இருக்கறேன் பர்மிட் டிலே கொள்ளை அடிக்கிறேன் - அதானே நீ சொல்றது ... போடா, போயி, நீயும் அந்தத் திராவிடத்தானுங்களோட கூடிக் கொண்டு,
ஏசு, பேசு, உன்னாலே என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துகொள் - நட என் வீட்டை விட்டு ...........
பீ : இப்ப, நட! அப்போ ஒட்டோ ஒட்டுன்னு அலைகிற போது, நான் தேவைப்பட்டுது ....
ஜ : நீ இல்லேன்னா, ஓட்டு கிடைக்காது எனக்கு - ஏண்டா, டே! அப்படியா எண்ணிகிட்டு இருக்கே - ஆறு தடவை வந் தார்டா என் வீடு தேடி, உங்க தலைவரு எலக்ஷன்லே நிக்கச் சொல்லி - கெஞ்சிக் கூத்தாடினாரு .........
பீ : அதை எல்லாம் சொல்லிச் சொல்லித்தான் திராவிடக் கட்சிக்காரன், கண்டிக்கிறான் - உங்களைப் போன்றவர்களாலே, காங்கிரசின் கதியே அதோகதியாகுது.
ஜ : ஏண்டா சேர்த்தாங்க காங்கிரசிலே ...... - தெரிஞ்சாச் சொல்லேண்டா, டே! வந்தேமாதரம்.... உன்னைத்தாண்டா கேக் கறேன், ஏன் சேத்துக்கிட்டாங்க, காங்கிரசிலே, கொஞ்சம் பசை இருக்கிறதாலேதான் - சும்மா இல்லே - சரி, சரி உன்கிட்ட என்ன வீண்பேச்சு - நான் பிளாக்மார்க்கட் - போய்க் கூவு ஊர் பூராவும் - இந்த ஊர் எம்.எல்.ஏ. இருக்கிறாரே, அவர்கதர் கட்டிகிட்டு பிளாக்மார்க்கட் செய்கிற காங்கிரஸ்காரர்ன்னு பேசு, போ ...........
பீ : பேசத்தான் போகிறேன் பாரு .........
ஜ : பேசித்தான் பாரேன் ... ஒரு மீடிங் நடத்து, அடுத்த மீடிங்கு போட முடியுதான்னு பாரு. ஜில்லா கமிட்டியைக் கூட்டி உன் மேலே ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, உன்னை மூணு வருஷத்துக்குக் காங்கிரசிலே இருந்து தள்ளி வைக்கலேன்னா. என் பேரையே மாத்தி வைச்சிக்கிறேண்டா, டேய்! மாரடிச்சான்! போய், உன்னாலானதைப் பார்த்துக்கோ . டேய்! மன்னார் ............. மரியாதையா போய்விடு.
[சத்தம் பலமானது கேட்டு சங்கரலிங்க ஐயர், எம்.எல்.ஏ. வின் மண்டி மானேஜர் வெளியே வருகிறார். நிலைமையைக் கண்டதும், அவர் கண்களிலே குறும்பு
ஒளிவிடுகிறது - புன்னகையும் தவழுகிறது. எம்.எல்.ஏ. வும் காங்கிரஸ் பிரசாரகர் பீரங்கி
பீமராவும் கோபமாகவே இருக்கக் காண்கிறார். இதுபோது தலையிட்டு நிலைமையைச் சீர் செய்தாக வேண்டும் என்று தீர்மானிக்கிறார். எனவே குழைவாகப் பேச்சைத் துவக்குகிறார்.]
ச: (பீமராவைப் பார்த்து) என்ன பீமராவ்! பிரமாதமான கோபம் - ரௌத்ராகாரம்.
பீ : கோபமா!.... எனக்கா! ஆமாம் ....... நீ வேறு எப்படிப் பேசுவே... இந்த முப்பது வருஷகாலமாக நான் இந்தத் தேசத் திலே என் சக்திக்கு மீறின அளவு சேவை செய்துவருகிறேன். என்னை ...... இப்போது, புதுசா முளைத்த களான்கள் கண்டபடி ஏசினால் கூட நான் பொறுமையாக இருக்க வேண்டும் போலிருக்கு.
ஜ: பார், சாமி! பார்... இப்ப ஏசுவது யார்னு நீயே பாரு ......... காளானாம் நான், காளான் ....... கேட்டயா ....... கர்ணம் போட்டாங்க என் எதிரே முன்னே ........ இரண்டே இரண்டு கதர் வேட்டி போதும், ஒரே ஒரு கையெழுத்து போதும், காங்கிரசிலே சேர லாம்னு, இப்ப நான், காளான் .... எப்படி இருக்கு நியாயம்! அதுவும் யார் சொல்லறது .......... இந்த சோளக் கொல்லைப் பொம்மை .....!!
பீ : மரியாதையாக பேசணும்னு மறுபடியும் சொல்றேன்.. புதுசா மழைக்காலத்திலே முளைக்கிறது காளான் - அதுபோலத் தேர்தல் காலத்திலே கிளம்பும் தலைவர்களைக் காளான் என்று சொல்வது தவறல்ல! ஏசுவதாகாது ...... கண்களை உருட்டலாம். பற்களை நறநறவெனக் கடிக்கலாம் ... உம்ம வீட்டிலே வந்திருக் கிறேன் என்கிறதாலே, ஆளை விட்டு அடித்துக்கூடப் போடலாம். ஆனா அதற்கெல்லாம் அஞ்சுபவனல்ல, இந்த பீரங்கி பீமராவ் நாயுடு ..............!
ச : சார்! பீரங்கி! அதெல்லாம் கிடக்கட்டும் - காளான் என்றால் கேவலம் என்கிறீரா?
[பீமராவ் இந்தக் கேள்வியால் சிறிது திகைக்கிறார். இதுதான் தக்க சமயம் என்று சங்கரலிங்க ஐயர், மேலும் தாக்குகிறார்.]
ச : காளான் - என்றால் எதற்கும் உதவாத, கேவலமான பொருள் - (எம்.எல்.ஏ.வைக் காட்டி) இவரை ஏசுவது முறையா, இல்லையா என்பது கூடக் கிடக்கிட்டும், இப்ப, எனக்குத் தெரிய வேண்டியது இது, காளான் என்றால் கேவலமானது, உபயோக மில்லாதது என்கிறீரா........... இது தெரிய வேணும் இப்போ ... பிரசாரத்திலே பிரக்யாதி வாய்ந்தவர் ............ தெரியும். எதிரிகளை ஏசுவதிலே சமர்த்தர் - தெரியும் - இல்லாமலா பீரங்கி பீமராவ் நாயுடு என்று பட்டம் இருக்கு .................
ஜ: (வெறுப்பும் அலட்சியமும் கலந்த குரலில்) பட்டம்! யார் கொடுத்ததாம், பட்டம் .......
ச : (குறும்பு ததும்பும் குரலில்) என் பேச்சை! கவனிக்க வில்லை போலிருக்கு ............................. பட்டம் இருக்குன்னுதான் சொன்னேன் - பட்டம் தந்தான்னு சொல்லலே............ புரியறதோ ........... பட்டம் இருக்கு ........... அவ்வ ளவுதான்...........
பீ : அதாவது நானே சூட்டிக்கொண்டேன் ..........
ச : செச்சே! யாராவது ஆப்த நண்பர்களாக இருப்பவா சூட்டியிருப்பா............ நீர் அவாளுக்கு ஏதாவது பட்டம், சர்தார். சுபேதார், அப்படி இப்படின்னு சூட்டியிருப்பீர். இது சகஜம், இதனாலே லோகத்துக்கு நஷ்டம் என்ன! அது கிடக்கட்டும், பீமராவ்! காளான், காளான்னு கேவலமாப் பேசிண்டிருக்கிற, அந்தக் காளான், கேவலமானது-தானான்னு கேட்கறேன் ........
பீ : ஏன் கேட்கமாட்டீர்! மாதம் ஒரு பச்சை நோட்டு தருகிறாரே, இதுவும் கேட்பீர், இன்ன மும் கேட்பீர் .............
ச : கோபம் தான் வர்ரது உமக்கு ............ என் கேள்விக்குப் பதில் இல்லே - உம்மை நம்பிண்டு இருக்கு காங்கிரஸ், இந்தப் பக்கத்திலே . காங்கிரசுக்குக் கியாதி போயிண்டிருக்குன்னா, இதிலே, என்ன ஆச்சரியம்! காளான் என்றால் கேவலமானது என்கிற அளவுதான் அறிவு இருக்கு ..........
..
பீ : (கோபம் அதிகமாகி) ஏ . ஐயர்! போதும் உன் அதிகப் பிரசங்கம் ...... நிறுத்து...
ஜ : இதேதான் சாமீ! இக்கட்டான கேள்வி கேட்டா, கோபம் கொதிக்குது இந்தக் கோமாளிக்கு.
பீ : யாரய்யா, கோமாளி ......... எம்மு எல்லு ஏ ............. யார் கோமாளி! உன் கோமாளித்தனத்தைக் கண்டு தான் ஊரே சிரிப்பாச் சிரிக்குது ........... சட்டசபைக்குப் போனயே, அங்கே என்ன செய்தே ...... தெரியாதா........ திராவிடத்தானுங்க அதைச் சொல்லிச் சொல்லித்தானே கண்டிக்கிறானுங்க............ உம்மைப் போல ஒரு எம்.எல்.ஏ. சட்டசபையிலே தூங்கலாமான்னு கேள்வி கேட்டாரேல்லோ ...... அந்தக் கேள்வியோ, சபாநாயகர் தந்த பதிலோ இன்னது என்று கூட உமக்குத் தெரியாதே - அவ்வளவு சுவாரஸ்யமான தூக்கத்திலே அல்லவா இருந்தீர் .......
(எம்.எல்.ஏ. பதற், சங்கரலிங்க ஐயர், அவரைச் சாந்தப் படுத்துகிறார்.)
ச : பீரங்கீ! தூக்கம் வர்ரது சட்டசபையிலேன்னா, என் னய்யா அர்த்தம்! தூங்கறவாளைக் கோபிச்சிண்டு பேசறீர்.... சரி... அவா தூங்கினது தவறுன்னே வைத்துக்கொள்வோம் - தூக்கம் வந்ததே சட்டசபையிலே, அதைக் கவனிச் சீரா........ என்ன பொருள்? அவ்வளவு அசமந்தமா, சோபையில்லாமல் இருக்கு உம்ம சட்டசபை.....
ஜ : அதைச் சொல்லுங்க சாமி, அதைச் சொல்லுங்க........... என்ன பிரமாதமான காரியம் நடக்குது சட்டசபையிலே ......... முதலிலேயே கட்சிக் கூட்டம் நடத்தறாங்க........... அங்கே ஒரு நாலைந்து பெரிய தலைங்க எதை எதையோ எழுதி இதெல்லாம் சட்டம்னு சொல்ல எல்லோரும் வந்தே மாதரம்னு சொல்லி சம்மதம் கொடுத்து விடறாங்க, பிறகு, சட்டசபையிலே கூடி அதையே நிறைவேத்தறாங்க - வெட்டி வேலை - தூக்கம் வராமலா இருக்கும் ..........
ச : பீமராவுக்கு இதெல்லாம் புரியாது இல்லே... அவருக்குத் தான் காளான் விஷயமே புரியல்லய்யே! காளான்னா மகாகேவல மானது என்றுதானே எண்ணிண்டிருக்கார்.
பீ : என்னய்யா இது, காளானை எடுத்துக்கிட்டு நாலு நாழியா காலட்சேபம் செய்திண்டே இருக்கீர் ... என்ன கண்டு விட்டீர் காளானைப் பத்தி ...
ச: நானா...! நன்னா சொன்னே, போ .... நான் என்ன மேதா வியா.... போறது... பென்சிலின் தெரியுமோ?
பீ : பென்சிலின் - மருந்தா?
ச : ஆமாம்... மருந்துன்னா சாமான்யமானதா.... அடடா, சகல ரோக நிவாரண சஞ்சீவி அல்லவா அது....
ஜ : ஆமாம்... எப்படிப்பட்ட ரணமும் ஆறுதாமே....
ச : எந்த வியாதியா இருக்கட்டும்...... கட்டுக்கு அடங்காம படிக்கு, மீசுரமாகிவிட்டா, இந்தப் பென்சிலின் தர்ரா... உடனே நோய், பெட்டிப் பாம்பாகிவிடறது ... அவ்வளவு அற்புதமான மருந்து பென்சிலின்.
பீ : (சலிப்புடன்) சரி அதனாலே...
ச : அதனாலே என்கிறீரா .... அவசரம் உமக்கு ...... பீரங்கி அல்லவா, அப்படித்தான் இருக்கும் அவசரம்.
பீ : கேலி போதும் ஐயரே! விஷயத்துக்கு வாரும்.......... பென்சிலின் அற்புதமான மருந்து ... அதனாலே?
ச : ஒத்துக்கொள்கிறீரா ............. பென்சிலின் அற்புதமான மருந்து, என்பதை.
பீ : ஆமாம் ...........
ச : அந்தப் பென்சிலின் இருக்கே அது, நீர் கேவலமான துன்னு நினைக்கிறீரே, காளான், அந்தக் காளானிலிருந்துதான் செய்யறா..........
ஜ : (ஆச்சரிய மேலிட்டு) அப்படியா, சாமி!
ச : ஆமாம்.... காளானிலிருந்து தான் பென்சிலின் செய்யறா... பீமராவுக்கு அது என்ன தெரியும், பாபம், அவர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அனந்தம்........ காளானோட அருமை எங்கே தெரியப்போது... பீமராவ்! எள்ளும் கொள்ளும் வெடிக் கிறது போல முகம் இருக்கு. பிரபஞ்சத்திலே. உம்மைத் தவிர மத்தவாளெல்லாம் ஞான சூன்யான்னு எண்ணிண்டு, பெரிய வாளை ஏசறதும் மிரட்டறதுமா இருக்கக் கூடாது ... பீரங்கிதான் நீர்! ஆனா, எதற்குப் பயன்பட வேண்டும், பீரங்கி - இவர் பேரிலே குண்டு வீசவா .... பைத்யக்காரர் - சுமுகமாக, சாந்தமாப்பேசி, என்ன காரியத்தைச் சாதிக்கவேணுமோ, அதைச் சாதிச்சிண்டு போறதா, சம்வாதம் செய்துண்டு, - சச்சரவு செய்துண்டு இருக்கறதா?
ஜ : நல்லா சொல்லுங்க சாமி! மனதிலே ஆழமா அழுத் தமா படற மாதிரியாகச் சொல்லுங்க........
ச : (பீமராவிடம்) மகாநாடு போடவேணும் என்கிறீர் - செய்ய வேண்டியதுதான்.... ஆனா, பூராவும் இவர் தலையிலேயே போடலாமா ...... இவர், இப்ப, எம். எல். ஏ . அதனாலே, ஏதோ அவருடைய அளவுக்குக் கொஞ்சம் செய்யத்தான் வேணும் - செய்யத்தான் போறார் ....... ஆனா. இவரை மட்டும் இழுத்தா போதுமோ ....... அடுத்த எலக்ஷனிலே, யார் எம்.எல்.ஏ.-வுக்கு நிற்கப் போறதுன்னு கண்டுபிடியும் - அவரைப் போய்ப் பிடித்து உலுக்கி எடுக்கவேணுமே..........
பீ : எலக்ஷனுக்காகத்தானா இவ்வளவும் ......
ச : (குறும்பாக) பின்னே எதுக்கு? நமக்குள்ளே பேசிக் கொள்வோம், பீமராவ்! வேறே எதற்கு இந்த மகாநாடு ........
பீ : எலக்ஷன் விஷயத்தோடு கூட, நமது புனித காங்கிரஸ் மகாசபையினுடைய செல்வாக்கையும் கவனிக்க வேண்டும் - அதுதான் முக்கியம்.
ச: சரி, அப்படியே இருக்கட்டும் - காங்கிரஸ் மகாசபை யோட செல்வாக்கைப் பலப்படச் செய்யறது எதுக்கு ... அதுவும் எலக்ஷனுக்குத்தானே ... இல்லையானா, வெள்ளைக்காரனை ஓட்ட வேணுமோ........ இல்லையே, அவா போயிட்டா ...... இப்ப, காங்கிர சுக்கு அந்த வேலை இல்லை .... ஆகவே காங்கிரசோட பலம் எதற்கு பயன்படப்போறது? எலக்ஷனுக்கு.... அதனாலேதான் சொல்றேன், அடுத்த எலக்ஷனிலே, யாரார் எம்.எல்.ஏ.வுக்கு நிற்கப்போறவான்னு கண்டு பிடிச்சு ..........
ஜ : பீமராவுக்கு எப்படித் தெரியும்' அந்த இரகசியம். சாமி போன எலக்ஷனிலே, இந்த பீரங்கியும் மத்தவாளும், யாரோ தேசத் தொண்டராம் தாண்டவராயப்பிள்ளை .........
ச : ஆமாம், கொடிப்போர் தாண்டவராயன்னு சொல்லுவா ....... அதாவது, ஊரிலே உயரமா இருக்கிற மரம், கோபுரம், ஒண்ணு பாக்கி விடாமல், தேசியக் கொடியைக் கட்டிவைக்கறது அவன் வேலை. பாபம், பல தடவை, அடி உதை .....
பீ : மண்டையைக்கூட உடைத்திருக்கா.....
ச : யார் தெரியுமா..? உம்ம சம்மந்தி, ஆப்காரி காண்ட்ராக்டர் ஆறுமுகம் பிள்ளையோட தம்பி......
ஜ: சொன்னாங்க... இவன் அவங்க புதுசா கட்டின பிள்ளையார் கோயில் கோபுரத்திலே கொடி கட்டப் போனானாம் ...... கேள்விப்பட்டிருக்கேன் ....... அந்தத் தாண்டவ-ராயனைத்தான் எலக்ஷனுக்கு நிற்க வைக்க வேணும் னு ததிங்கிணத்தோம் போட்டாங்க... கடைசியிலே இவங்க தலைவர், இங்கே வந்தார். நான் முடியாதுன்னு சொல்ல வாய் எடுத்தேன்....... இப்ப சொல்றேன், சாமி! நிஜத்தை, ஒரு மந்திரி வேலை கூடத் தருவ தாகச் சொன்னாங்க....... அதனாலே, அடுத்த எலக்ஷனிலேயும், யாராரை நிற்க வைப்பாங்க என்கிற விஷயம், பீமராவுக்கு என்ன தெரியும்.....
பீ : சரி..... உங்களுடைய போக்கு எனக்கு நன்றா புரிந்துப் போச்சி....... நான் என்ன செய்ய வேணுமோ அதைச் செய்து கொள்கிறேன் ........
[போக முயல்கிறார் ]
ச : பீமராவ்! உட்காருமய்யா, உட்காரும் ...... மகாநாடு ஏற்பாடானதும், நன்கொடை புத்தகம் எடுத்து வா, நானே கிட்ட இருந்து, பணம் வாங்கித் தருகிறேன் - இவரிடம் மட்டுமல்ல, இன்னும் எனக்குத் தெரிந்த மத்தவாளிடமெல்லாம் ..........
பீ : (வெறுப்பாக) பாபம், உங்களுக்கு என் சிரமம் - நான் மகாநாடு கூட்டும் உத்தேசத்தையே விட்டுவிட்டேன் .........
ப : விரக்தியா............ இவ்வ ளவு சீக்கிரமாகவா......
பீ : (கோபமாக) மகாநாடு எதுக்கு ...... எதுக்காக மகாநாடு போடவேணும் ............ எங்களுக்கு என்ன வந்தது ........... திராவிடத் தானுங்க, எங்களையா ஏசறாங்க................... உண்மைக் காங்கிரஸ் ஊழியர்களுக்கு மரியாதை காட்டுவதுதான் எங்கள் கடமை என்றுதான் சொல்கிறாங்க. உண்மைக் காங்கிரஸ் ஊழியர்களே! உங்கள் தியாகத்தை உலுத்தர்கள் பயன்படுத்திக்கொண்டு ஊரை மிரட்டி வாழ்கிறார்களே, கொள்ளை அடித்துக் கொழுக் கிறார்களே. அவர்களோடு கூடிக்கொண்டு, ஏன் பாழாகிறீர்கள், என்றுதான் கேட்கிறார்கள், தியாகத் தழும்புகளுக்குத் தலை வணங்கத்தான் செய்கிறார்கள்! தேர்தல் காலத் தில்லுமல்லுகளும், கள்ள மார்க்கட் கழுகுகளும், வைதீக வல்லூறுகளும், பதவி தேடும் பச்சோந்திகளும், காங்கிரசிலே கூடிக் கொண்டு கொட்டமடிப்பதைத்தான் அவர்கள் கண்டிக் கிறார்கள். இதை ஏன் தடுக்க வேண்டும் - இதை ஏன் நாங்கள் எதிர்க்க வேண்டும்! நன்றாகக் கண்டிக்கட்டும் - சூடு சொரணை உங்களுக்கு வருகிற அளவுக்குக் கண்டிக்கட்டும் - காங்கிரசின் செல்வாக்கைக் கபடர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொண் டார்கள் என்பது உலகுக்குத் தெரிகிற அளவுக்குக் கண்டிக் கட்டும் - எங்களுக்கு என்ன! மகாநாடு போட்டு, உங்கள் சார்பாகப் பேசுவதே அக்கிரமம் - அனியாயக்காரனை அம்பலப் படுத்துகிறார்கள் திராவிடத்தார் - செய்யட்டும். அப்பழுக்கற்ற உழைப்பாளிகள், உண்மைத் தியாகிகள், ஏன் இதற்காகச் சீற வேண்டும். பல காலமாக எந்த காங்கிரசில் சேர்ந்து பாடுபட் டோமோ அந்தக் காங்கிரசின் செல்வாக்கை அழிக்கிறார்களே. என்ற கோபம் எங்களுக்கு. ஆனால் அதற்காக வேண்டி எதிர்ப்பு மகாநாடுகள் நடத்தினால், உங்களைப்போன்ற பகற்கொள்ளைக் காரர்களின் ஆதிக்கம்தான் வளருகிறது. உங்களுக்கு இடமளித்த பிறகு, உங்களுடைய ஆளுகையிலே வந்த பிறகு, காங்கிரஸ் வாழவாமுடியும், அதைக் காப்பாற்றக் கிளம்புவதும் வீண் வேலை. விபரீதமாகவும் முடிகிறது வீணர்கள் கொழுக்கிறார்கள்.
ஜ : பீரங்கி அல்லவா ............ பிரமாதமான பேச்சாத்தானே இருக்கும். சரி, சந்து முனைக்குப் போய் சண்டமாருதத்தைக் காட்டு, இங்கே என் பங்களாவிலே வேண்டாம்.
பீ : நான் பேசுவானேன் - உங்களுடைய யோக்யதையை எடுத்துக் காட்டி விளாசுகிற திராவிடத்தான்கள் செய்யும் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை போடாதிருந்தாலே, போதும், உங்கள் மானம் கப்பலேறும், உங்கள் கொட்டம் தன்னாலே
அடங்கும் .................
(எம். எல். ஏ.-வின் திருக்குமாரி. அதுபோது சில ஏடுகளுடன் வருகிறாள். உள்ளே இருந்து. முகத்திலே கோபக் குறிகள் உள்ளன. மூவரும் பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள். வந்த வனிதா, அங்கு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து,
ஒரு ஏட்டைப் பிரிக்கிறாள்.)
வ : யார் வேண்டுமானாலும் சுரண்டுவதற்கு இடமிருக்கிறது. இந்தச் சுரண்டல்களைத் தடுக்கக்கூடிய சுறுசுறுப்பு மந்திரிமார் களுக்கு இல்லை. மந்திரிகளுக்குத் தந்திரிகளாக இருக்கும் எம். எல். ஏ. - க்களோ எப்படி எப்படியோ இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக எழுதினால் நல்லதோ அவ்வளவுக்கவ்வளவு குறைவாகத்தான் எழுதவேண்டும். ஏனென்றால் சூடு சொரணையற்றுப் போனவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
[வனிதா ஏட்டை மூடியபடி.]
அப்பா! கேட்டாயா, இந்த கேடு கெட்ட... ஏடு எழுதி யிருப்பதை, ஜ : (அலட்சியமாக) கிடக்கிறான் களம்மா!.......... சாமியே கிடையாதுன்னு பேசற கும்பல், சாதாரண மனஷாளைச் குறை சொல்வதிலே என்ன ஆச்சரியமிருக்கு.
ச : ஆயாசமடையறதிலேயும் அர்த்தமில்லே ......
ஜ : நாக்கு புழுத்துச் சாகப் போகிறானுங்க.....
பீ : (புன்னகையுடன் சங்கரலிங்க ஐயரைப் பார்த்து ) சாபம் கொடுக்க உத்தேசமோ..
வ : எல்லோரும் விஷயத்தைப் புரிந்து கொள்ளாமலே பேசுகிறீர்கள் ............ எவ்வளவு கேவலமாக எழுதியிருக்கிறான் இந்தப்பத்திரிகையிலே....... இப்ப இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்குச் சூடு சொரணையே கிடையாதாம் - எவ்வளவு துடுக்குத் தனம்.......
ஜ : அதுகளோட துடுக்குத் தனத்தை நீ என்னம்மா கண்டே ........?
ச : சாட்சாத் சிவபெருமானுக்கு நெற்றிக்கண்ணே கிடையா துன்னு சாதிக்கிற, சண்டாளக் கூட்டம் எம்.எல்.ஏ. வைச் சூடு சொரணையற்ற ஜென்மம் என்று ஏசி எழுதுவது, என்ன ஆச்சரியம், வனிதா!..........
வ : எம்.எல்.ஏ.க்களைச் சூடு சொரணையற்ற ஜென்மங்கள் என்றும், மந்திரிகள் சுறுசுறுப்பு அற்றவர்கள், அதாவது சோம்பேறிகள் என்றும் எழுதியிருப்பது, சூனாமானா என்று எண்ணிக்கொண்டு, பேசுகிறீர்கள் .........
பீ : வேறே, யார் எழுதினது?
வ : (ஏட்டை அவர் எதிரே வீசி) யாரா? உங்க, காண்டீபம் காங்கிரசைத் தாங்கிக் கொண்டிருக்கே அதே ஏடு. சோம்பேறி மந்திரிகள், சொரணை கெட்ட எம்.எல்.ஏ.-க்கள் என்று எழுதி யிருக்கு 8-6-'51-ல் . இதுவா கட்சியை வளர்க்கிற இலட்சணம்.
ஜ: (பதறி ) காங்கிரஸ் பத்திரிகையா இப்படி எழுதுது - எங்களைக் குறித்து ......
[பீமராவ் புன்னகையுடன் பத்திரிகையைப் பார்க்கிறார் ]
ச : (சோகமாக) சோம்பேறி மந்திரிகள்! சொரணை கெட்ட எம். எல். ஏ.-க்கள்!! அட அடா! எவ்வளவு கேவலமான நிந்தனை ...... இவ்வளவு கேவலமாக சூனாமானாக்கள் கூடப் பேசுவ தில்லை ............
வ : ஆமாம் - அவர்கள் சில சமயம் இந்த மந்திரி சபையே திராவிடர்களுடையது தான், மந்திரிகள் மீதும் தவறு கிடையாது, எம். எல். ஏ.-க்கள் மீதும் தவறு கிடையாது - இவர்களுடைய அதிகாரத்தை எல்லாம், டில்லி எடுத்துக்கொண்டுவிட்டதாலே, இவர்களாலே ஏதும் செய்யமுடியவில்லை என்று பேசுகிறார்கள், காங்கிரசை ஆதரிக்கும் 'காண்டீபம் ' சோம்பேறி மந்திரிகள் - சொரணைகெட்ட எம்.எல்.ஏ.-க்கள் என்று எழுதுகிறது - இதை ஆதரிக்க வேண்டும் என்று காங்கிரசின் பெயரைக் கூறிக் கொண்டு, பீமராவுகள் பேசுகிறார்கள் ................
ஜ : தெரியுதாய்யா யோக்யதை! என்னமோ, எங்களை, திராவிடத்தானுங்க, திட்டு திட்டுன்னு திட்டறாங்க, எங்கிட்ட பணம் கொடு, நான் மகாநாடு கூட்டி, அந்தத் திட்டைத் துடைச்சிப் போடறேன்னு பேசினயே, இதுக்கு என்ன சொல்றே? காண்டீபம் கண்டபடி ஏசுதே! சூடு இல்லை சொரணை இல்லை, எங்களுக்கு... காசு இருக்கேல்லோ, அதைக் கொடு!.... எப்படி, சாமி! ஏற்பாடு!!
ச : காண்டீபம் இப்படித் திட்டுகிறபோது, திராவிடா திட்டு வதிலே கோபப்படக் காரணமே இல்லே ..........
ஜ : அதைப்போயி தடுக்க வேணும், ஆயிரம் கொடு, ஐந்நூறு கொடுன்னு கேட்க வந்துவிட்டாரே இந்த ராவு நாட்டு ......
[எம்.எல். ஏ . தம்பி தர்மலிங்கம் வருகிறார். சிறிதளவு கவலையுடன் வெளியே இருந்து உள்ளே, சிறு மந்திராலோசனைக் கூட்டம் போல இருக்கக் கண்டு யோசிக்கிறார்.]
ஜ: என்ன தம்பீ! ஏன் முடியலையா, போன காரியம் .......
த : (ஆயாசமாக உட்கார்ந்து) வனிதா! ஐஸ்வாடர் கொடு - என்ன கேட்டிங்க......... போன காரியமா? அது ஒரு வகையாக முடிஞ்சுது ....... (பீமாராவைக் காட்டி) இவர் என்ன வேலையா.....
ஜ : கட்சி சமாசாரம் பேச வந்தாரு - பரவாயில்லை - அவர் நம்ம சினேகிதருதான்...
த: எல்லாரும் சினேகிதருதான் - சினேகிதராலே, ஆபத்து வருகிற காலமாக அல்லவா இருக்குது இப்ப .........
ஜ: என்ன தம்பீ, என்னென்னமோ பேசறே.........
து : பீமராவ் ஒண்ணும் சொல்லவேயில்லையா உங்களிடம்?
ஜ : எதைக் குறித்து?
வனிதா கொண்டு வந்த ஐஸ் வாடரைச் சாப்பிட்டு விட்டு, கட்கத்திலிருந்த கணக்குப் புத்தகத்தை எடுத்து, அதற்குள் இருந்த ஒரு பழைய பத்திரிகைப் பிரதியை எடுத்துப் பிரிக்கிறார்.]
த: இதைப் பார்க்கவில்லை போலிருக்கு .........
ஜ. எதை ?
த: நம்ம தலைக்குத் தீம்பு தேடுது இந்த ஏடு.
[மெல்லிய குரலில் படிக்கிறார்.]
ஒவ்வொரு சட்டசபை அங்கத்தினரும், பார்லிமெண்ட் அங்கத்தினரும், அவர்கள் அங்கத்தினராகும் போது எவ்வளவு சொத்து உடையவர்களாக இருந்தார்கள்! இப்போது எவ்வளவு சொத்து அவர்களுக்கு இருக்கிறது என்று விசாரணை செய்து கண்டு பிடிக்கவேண்டும்.
(இடையில் நிறுத்த எம்.எல்.ஏ. கனைக்கிறார்.)
ச : இவ்வ ளவுதானா....... த: இன்னும் இருக்கு. வ : விசாரணை செய்ய வேணுமாமா?
த : கேளுங்க, மத்ததையும் ........... சட்டசபை அங்கத் தினருடைய மாதச் சம்பளம் 150 என்பது தெரிந்த விஷயம். ஐந்து வருஷத்துக்கு முன்பு சொத்து ஒன்றும் இல்லாதவரா யிருந்தவர் இப்போது இலட்சக் கணக்கில் சொத்து, சேர்த்திருந் தால் அது சம்பளத்திலிருந்து சேர்ந்திருக்க முடியாதல்லவா? வேறு எந்த வழியில் அவர் அவ்வளவு பணம் சேர்த்தார் எனும் விவரம் சொல்லியாக வேண்டுமல்லவா?
வ : என்ன பேப்பர் அது?
ஜ : வயத்தெரிச்சல் பேப்பர் ...... வேறென்ன - எம்.எல்.ஏ.க் களெல்லாம் பணக்காரனாயிட்டானுங்க என்கிற வயத்தெரிச்சலைக் கொட்டுகிற பஞ்சை ஏடு.
த: சாமான்யமான பேப்பரல்ல .......... ரொம்ப செல்வாக் கானது....... டில்லி வரையிலே செல்வாக்குள்ளது ......
ஜ: பேப்பர் நிறைய செலவாகுதுன்னு சொல்கிறயா ..........
த: அது மட்டுமில்லே.... டில்லி மந்திரி இருக்கிறாரே, ராஜ கோபாலாச்சாரியார், அவருக்கு ரொம்ப வேண்டிய பேப்பர் ...
வ : கல்கியா ........! ஜ : கல்கியா இப்படி எழுதுது ..........
வ : எம். எல். ஏ.க்களெல்லாம் கொள்ளைக்காரனுங்கன்னு துணிச்சலா எழுதுதே .........
த : விசாரணை செய்யவேணுமாம் ...... ச : சொத்து என்ன இருக்குன்னா...
த: ஆமா, எம்.எல்.ஏ., ஆவதற்கு முன்பு என்ன இருந்தது, இப்ப எவ்வளவு இருக்கு - எப்படி இவ்வளவு சொத்து கிடைச்சுது இதெல்லாம் கண்டு பிடிக்க வேணுமாம் ........
வ : காண்டீபமே பரவாயில்லை..... சொரணையற்ற ஜென்மம் எம்.எல்.ஏ, என்று எழுதிற்று, கல்கியின் கர்வத்தைப் பாரேம்பா கொள்ளைக்காரன் என்றே எழுதுது ........
ஜ : (பீமாராவைக் கோபமாகப் பார்த்து) கல்கியும், காண்டீபமும் இப்படி, எங்க மானம், போகிறபடி எழுதி இருக்கு, இதோ இவர் இருக்கிறாரே, பீரங்கி, இவர் சொல்றாரு, பணம் கொடு, நான் உங்களைத் திட்டுகிற திராவிடத்தானுங்களைத் தீர்த்துக் கட்டிவிடறேன்னு.
வ : திராவிடத்தானுங்க, வேறே கட்சி வேறே இலட்சியம் - இருந்தும், சோம்பேறி மந்திரிகள், சொரணை கெட்ட எம்.எல்.ஏ.க்கள் என்றெல்லாம் சொல்றது இல்லையே.........
ஐ: சொந்தக் கட்சிப் பத்திரிகை ........ இந்த இலட்சணத்திலே இருக்கு ....... இதை என்ன மகாநாடு போட்டு தடுக்கப் போறே, பீமு.
த : 17-6-51லே எழுதி இருக்கு ........ அது சரி... என்ன மோ வயத்தெரிச்சலிலே, எழுதியிருக்கு, எதையோ எழுதித் தொலைக் கட்டும், இந்த எழுத்தெல்லாம் நம்மை அசைக்காது, ஆனா இதைப்போல விசாரணை எதாவது நடக்குமா...?
ஜ : விசாரணையாவது மண்ணாவது ..........
ச : என் வீணா விசாரப்படணும் - கல்கி ஹாஸ்ய பத்திரிகை - வேடிக்கையா ஏதோ எழுதி இருக்கும் .........
ஜ : நல்லா இருக்கு சாமி! உங்க நியாயம்! சொரணை கெட்டவன், சூடு இல்லாதவன், அகப்பட்டதைச் சுருட்டறவன், என்றெல்லாம் எழுதுவது, விகடமா..........
வ : அவர் வேற எப்படிச் சொல்லுவார் அப்பா! அவர் தானே நம்ம ஊருக்கு, கல்கி ஏஜண்ட்.
ஜ : புரியுது, ஐயரோட போக்கு .......
த: இது மட்டுமில்லை ........ அடுத்த எலக்ஷனிலே, இப்ப இருக்கிற எம்.எல்.ஏ.க்களை தேர்தலுக்கு நிறுத்தக் கூடாதாம்.
ஜ : யார் யோசனை இது?
த: கல்கிதான் ...... கேளுங்க.........
யாரை அபேட்சகராகப் பொறுக்குவது என்ற கேள்விக் குப் பதில் சொல்வதைக் காட்டிலும் யாரைப் பொறுக்கக் கூடாது என்ற கேள்விக்கு விடை சொல்வது எளிது. பொது மக்களைக் கேட்டால், உங்களுக்குப் புண்யமாய்ப் போகட்டும், இப்போதுள்ள எம். எல். ஏ.-க்களைத் தயவு செய்து திரும்பவும் பொறுக்காதீர்கள் என்பார்கள்.
ஜ : எப்படி இருக்கு, சாமி, இவர் கொட்டுடா பணத்தை மகாநாடு நடத்தன்னு கேட்கறாரு - இவர் எழுதறாரு பழைய ஆட்களை நிறுத்தாதே புதுசா ஆளைத் தேடுன்னு.
ச : அதனாலேதான் நானும் பீமராவிடம் சொன்னேன், மகாநாடு நடத்த பணம் வேணும்னா, அடுத்த சான்சுக்கு யார் ஆசைப்பட்டுண்டிருக்காளோ அவாளைப் போய்ப் பாருன்னு.
[எம்.எல்.ஏ.வின் மூத்த மகன் மன்னன் வருகிறான். பீமராவைக் கண்டு கேலியாகப் பார்க்கிறான்.]
ம : பீமராவா! என்ன, காவிய காவி பாதுகாப்பு மகாநாடாமே ...... அப்பாவிடம் நன்கொடைக்காகவா ....?
ச: அந்த மகாநாடு மட்டுமில்லே ....... காங்கிரஸ் எதிர்ப்பு ஒழிப்பு மகாநாடும்.
ம : ஆமாம், அதற்குத்தானே, காண்டீபம் ஆசிரியர் தலைவர்.
ஜ : யார், யார்?
வ : சொரணையற்ற ஜென்மங்கள் இந்த எம்.எல்.ஏ.க்கள் என்று எழுதினாரே, அதே காண்டீபம் ஆசிரியர்தான்.
பீ : மன்னா! நான் இங்கே வந்தது, மகாநாடுகள் விஷய மாகத்தான் - இப்போதோ, அந்த எண்ணமே இல்லை ....... நான் புது மனிதனாகிவிட்டேன்
ம : அப்படியா....... பீமராவ், திராவிடத்தான்கள் கடவுளை மறுக்கும் கயவர்கள், என்று கன்னிக் கோயில் மைதானத்திலே பேசினாயே, காரசாரமாக ...
ச : ஆமாம், அவர், நாஸ்தீகப் பிரச்சாரம் செய்துதான் நாட்டைக் குட்டிச் சுவராக்கிண்டிருக்கா..........
ம : கடவுளைக் கும்பிட வேண்டாம் என்றா சொல்கிறார்கள் ?
ச : இது கடவுளா, அது கடவுளா, ஆறுமுகமா, ஆனை முகமா, பசு கடவுளா, பாம்பு கடவுளா, கண்டதும் அத்தனையும் கடவுள் தானா - என்று பேசறாளே, அது நாஸ்தீகம் தானே........
ம : அது எப்படி நாஸ்திகமாகும் ....... கடவுளே கூடாது என்றால் தானே நாஸ்தீகம் ......
ஜ : ஆமாம் ...... அது உண்மைதான் .....
ம : கடவுள், கடவுள் என்று கூறிக்கொண்டு கண்டதை பூஜிப்பது கூடாது என்கிறார்கள். இதை நாஸ்தீகம் என்கிறீர். (சட்டைப் பையிலிருந்து ஒரு ஏடு எடுத்து ) இதைக் கேளுங்கள் - எடுத்ததை எல்லாம் கடவுளாக்கி வழிபட்டு கோயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விசித்திர வழக்கம், இந்தியாவில் இருக்கிறது. பெயரளவில் பக்தி பண்ணிவிட்டு நடைமுறையில் நேர்மாறான செயல்களைச் செய்வதும் நம்மவர் வழக்கமாகி விட்டது .
ச : இது எந்த மேயோ எழுதினது ......
ம : இது மேயோ சொன்னதுமல்ல,திராவிடத்தார் சொன்னதுமல்ல, பாரதத்தின் முடிசூடா மன்னர், பண்டித ஜவஹர், பெங்களூரில் பேசியது, 3-6--1951-ல் 'அனுமான்! இதழில் வெளிவந்தது. பீமராவ்! இதைத்தான் பத்தாயிரம் துண்டு வெளியீடு போட ஏற்பாடாகி இருக்கிறது. காவிய காவி பாதுகாப்பு மகாநாட்டின் போது பொதுமக்களுக்குத் தர.
பீ : மகாநாடு இல்லை - அந்த எண்ணத்தை விட்டு விட்டேன் - ஆனால், இந்தப் பொன் மொழியைப் பொதுமக்கள் படிக்கட்டும், இன்னும் ஒரு பத்தாயிரம் வெளியிடலாம், (சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்து)
இந்தா ஐந்து ரூபாய், என் நன்கொடை.
[ அனைவருக்கும் வணக்கம் செய்கிறார் ]
வணக்கம். நான் சென்று வருகிறேன்.
[ அனைவரும் பீமராவ் நாயுடுவை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.]
---------------------------
2. கண்ணீர்த் துளி (அரசியல் நாடகம்)
காட்சி 1
இடம் : திரு.வி.க. திடல் பாதை.
இருப்போர் : திராவிடர் கழகத் தோழர், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர், காங்கிரஸ் ஊழியர் காத்தமுத்து.
நேரம் : வெள்ளிக்கிழமை மாலை 5 மணி.
தி.க : ஏ! கண்ணீ ர்த் துளி! காமராஜர் மீது பகை கக்கிக் கொண்டிருக்கும் கபோதியே! காமராஜரை நாங்கள் ஆதரிக்கும் காரணத்தை விளக்கி, பெரியார் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தாயா?
தி.மு.க : படித்தேன், நண்பரே, ஆர்வத்துடன் படித்தேன் தி. க : அடுக்காதே ; படித்த பிறகு?
தி.மு.க : சிந்தித்தேன் ; வாதத் திறமையின் நேர்த்தி கண்டு மகிழ்ந்தேன்.
தி.க : ஆனால், திருந்தவில்லை .......!
தி.மு.க : அறிக்கை யாரையும் திருத்துவதற்காக எழுதப் பட்டதாகவே எனக்குப் படவில்லை. திருப்திப் படுத்த, எழுதப் பட்டதாகத் தெரிகிறது ; திருப்தி பெறவும் எழுதி இருக்கிறார் போல் தோன்றுகிறது.
தி.க : வக்கணை பேசுவாய், வேறென்ன தெரியும் உனக்கு. சரி திருத்தவோ, திருப்திப் படுத்தவோ, எதற்கோ எழுதினார் ; கிடக்கட்டும்; அதற்குப் பதில் என்ன சொல்லப் போகிறாய்?
தி.மு.க : யார்? நானா? காமராஜர் அல்லவா, பதில் சொல்ல வேண்டும் போலிருக்கிறது, அறிக்கையைப் பார்த்தால்.
தி.க : உன்னோடு பேசுவதும், வீண் கொஞ்ச நஞ்சம், சந்தேகம் கொண்டோருக்கும், அந்த அறிக்கை, தெளிவு தருகிறது. காமராஜரிடம் நாம் ஆதரவு காட்டுவதால், நமக்குத் தான், திராவிடருக்குத்தான் இலாபம், தெளிவாகத் தெரிகிறது.
தி.மு.க : அறிக்கை அவ்விதம் தான் இருக்கிறது.......
தி.க : காமராஜரிடம் பேசின நமது தோழர்களெல்லாம், பெரியார், சொல்கிறபடிதான், பெருமையாக, சந்தோஷத்துடன் சொந்தம் கொண்டாடிக்கொண்டு, புகழ்ச்சியாகச் சொல்கிறார்கள் தெரியுமா?
தி.மு.க : உனக்கு அந்தப் பாக்யம் கிடைத்ததில்லை போலும் ......
தி.க : இந்தக் கிண்டல் பேச்சு வேண்டாம்... தெரிகிறதா.....
தி.மு.க : சரி, உனக்குக் கோபம் குறையட்டும் - நான் வருகிறேன் -- அதோ, காங்கிரஸ் ஊழியர் காத்தமுத்து வருகிறார்.
[காங்கிரஸ் ஊழியர் காத்தமுத்து வருகிறார். புதிய கதர்ச்சட்டை துல்லியமாகத் தெரிகிறது. தி. க... தி.மு.க. இருவரும் ஒன்றாக இருக்கக் கண்டு, இருவருக்கும் வணக்கம் செய்கிறார்.]
தி.க : காத்தமுத்துவா? வா, வா, என்ன நீ இந்தச் சதிகாரக் கும்பலுடன் கூடிக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன்.......
காத்தமுத்து : என்னய்யா, துப்பறியும் இலாகா போல இருக் கிறது பேச்சு ...... என்ன சொல்கிறீர்
தி.க : காமராஜர் எதிர்ப்புக் கோஷ்டியின் மகாநாட்டுக்குச் சென்றீராம்.
காத்த : ஆமாம்... தவறென்ன? என்ன பேசிக்கொள் கிறார்கள், அவர்கள் வாதம் என்ன? இரு கோஷ்டிகளிலே, காங்கிரசுக்கும், தேசத்துக்கும் நன்மை எதன் மூலம் கிடைக்கும் என்று கண்டறிய வேண்டாமா? அதனால் ..........
தி.க : அதாவது, வேடிக்கை பார்க்க என்பது பொருள் ........ காத்த : வேவு பார்க்க என்றுதான் சொல்லேன் .......
தி. க : எப்படியோ இருக்கட்டும்; காத்தமுத்து! காமராஜர் கவிழ்க்க ப்படக்கூடாது - அதுதான் எங்கள் கவலை ..........
தி.மு.க : ஏன் காத்தமுத்துவுக்கு மட்டும் வேறு எண்ணமா இருக்கும்!
காத்த : காமராஜ் எதிர்ப்பு என்று பெயரிடப்பட்டுவிட்டிருக்கிறதல்லவா ஊழியர் மகாநாட்டுக்கு ; அதற்கு நான் சென்றதால், நண்பருக்கு அந்தச் சந்தேகம். ஆனால், ஒன்று : நண்பருக்குக் காமராஜ் மட்டும் தான் கவிழக்கூடாது: எங்கள் நோக்கம், காங்கிரசும் கவிழ்க்கூடாது என்பது.
தி.க : அதுபற்றி இப்போது பேசுவானேன். காமராஜ் சம்பந்தப்பட்ட மட்டில், நாம் ஒன்று, சரிதானா ....
காத்த : காமராஜ் பற்றி, அவரோடு வாழ்விலும் தாழ்விலும் ' ஒன்றாக இருந்து வந்துள்ள எங்களுக்குத் தெரிவதைவிட அதிக மாகவே நண்பருக்குத் தெரியும் போலிருக்கிறது....
தி.மு.க : ஏன், அவ்விதம் இருக்கக்கூடாது. மேலும், காமராஜர் ஏன், புதிய கருத்துள்ளவராகி இருக்கக்கூடாது ...........
தி.க : சொல்லு, சொல்லு, காத்த : நீங்கள், தீனா மூனா கானா தானே.
தி.க : கண்ணீர்த் துளிதான்! என்றாலும், நாங்கள் புட்டுப் புட்டுச் சொன்ன பிறகு, காமராஜர் நல்லவர் நம்மவர் என்பதை உணர்ந்து கொண்டு வருகிறார் .........
காத்த : நம்மவர்!........... அதென்ன ய்யா, நம்மவர் ....... எந்த அர்த்தத்தில், சொல்கிறீர்.
தி.மு.க : ஏன்! திராவிடர் என்ற பொருளில் தான் சொல்கிறார்.
காத்த : நீங்களாக ஒரு முடிவு செய்து கொள்கிறீர்கள்.....
தி.மு.க : இல்லையே! என் நண்பர், பழகிப் பார்த்துத்தான், காமராஜர் நம்மவர்' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ; என்னைக் கூடத் திருத்தப் பிரயாசை எடுத்துக் கொண்டிருக்கிறார் ......
.
தி. க : நிச்சயமாக, விரைவில் திருந்திவிடுவாய் ...... காமராஜ ரூக்கும் திராவிடர் கழகத்துக்கும் உள்ள நேசம்' நியாயமானது என்பதை இப்போதே ஓரளவுக்கு உணர்ந்து கொண்டுதான் இருப்பாய் .......
தி.மு.க : அறிக்கையாலே, என்கிறாயா? காத்த : என்ன அறிக்கை ........?
தி.க : இந்தப் பயல்களுக்கு விளக்கம் தருவதற்காகப் பெரியார் ......... வெளியிட்டிருக்கிறார் ....... படிக்கவில்லையா.........
காந்த : என்ன எழுதியிருக்கிறார்?
[காத்தமுத்துவிடம் அறிக்கை தரப்படுகிறது. படிக்கும் போது முகம் சில இடங்களில் சுளிக்கிறது. காத்தமுத்து முகம் சுளிக்கும் போது தி.மு.க ; தி. க. வைக் கவனிக்கிறார். தி. க. சிறிது கோபமடைகிறார் ; சமாளித்துக் கொள்கிறார். காத்தமுத்து, பத்திரிகையை தி. க.விடம் கொடுக்கிறார்.]
தி.க : எப்படி, விளக்கம் .......
காத்த : உங்களுக்குத் தந்திருக்கிறார்.
தி.க இதைப் பார்த்த பிறகுதான் இந்த கண்டித் துளிக்கு இலேசாக மனம் மாறி வருகிறது ......
காத்த : எனக்கே, கொஞ்சம் மனம் மாறி வருகிறது ....... தி.க : பலே! பலே! வெற்றி, வெற்றி......
தி.மு.க : காத்தமுத்து இனி கழகம்தான் .... ஏன், அப்படித் தானே.
காத்த : ஏனப்பா, வீணாக, துரும்பைத் தூணாக்கிப் பேசுகிறீர் கள்? இந்த அறிக்கை, எனக்குக் குழப்பத்தைத்தான் தருகிறது .... காமராஜர் யார், எப்படிப்பட்டவர் என்பதே இப்போது புரிய மாட்டேனென்கிறது .........
தி.மு.க : உனக்குக்கூடவா? எனக்கும் அதே சங்கடந் தான் ........ ஆனால் என் நண்ப ர், தி.க.வுக்கு நன்றாகப் புரிகிறது .........
காத்த : உங்களுக்கு, அவர் போக்குத் தெரியாது; ஆமாம், தெரிந்து கொள்ளவும் முடியாது ......
தி.மு.க : காமராஜர், எங்களை ஏமாற்றுகிறார், என்கிறீரா? காத்த : இல்லையானால், எங்களை ஏமாற்றுவாரா?
தி. மு. க : அதுவும் இல்லை, நம் எல்லோரையும் ஒன்றாக்கு கிறார், என்று எண்ணிக்கொள்ளக்கூடாதா?
தி.க : அதேதான் ....... அதுதான்.
காத்த : அது எப்படிச் சாத்தியம்? நீங்கள், திராவிடநாடு விட்டு விட்டீர்களா ....... நேரு ஆட்சியை ஏற்கிறீர்களா.... காங்கிரஸ் மகாசபையை எதிர்க்காமலிருக்கிறீர்களா ........
தி.மு.க : சரி, சரி ...... ஏதேது, கதர் கட்டுவீர்களா, இந்தி படிப்பீர்களா, என்று அடுக்குவார் போலிருக்கிறதே, காத்த முத்து .........
தி.க : அவருடைய ஆசை அது; நம்முடைய கொள்கையை நாம் எப்படி விட்டுவிடுவோம்?
காத்த : உங்கள் கொள்கை காமராஜரை ஆதரிப்பது அல்லவா ........
தி.க : ஆமாம் காத்த : அப்படியானால் காமராஜர் எந்தெந்தக் கொள் கைக்குக் கட்டுப்பட்டவரோ, எந்தெந்தக் கொள்கையால் அவர் வளர்க்கப்பட்டாரோ, உருவாக்கப்பட்டாரோ, அவைகளுக்கு நீங்கள் அழிவு தேடலாமா ........
தி.மு.க : நியாயமான வாதம் ......... தி. க : வாதமா அது, பிடிவாதம் ....
காத்த : காமராஜர் வேண்டும், அவர் கொள்கைகள் வேண் டாம் என்பது என்ன வாதமோ! விசித்திர வாதம் .........
தி.மு.க : இதிலென்ன விசித்திரம்? முட்டையை உடைப்பது முட்டை அடை செய்வதற்குத்-தானே ...... அதுபோல இது ஒருமுறை........ காமராஜருடன் உறவாடுவது, காங்கிரசை அழிக்க ; ஏன் நண்பரே! அப்படித்தானே ........
காத்த : அதுதான் எங்கள் சந்தேகம் .......
தி. க : பார்த்தாயா, உன் வேலையைக் காட்டிவிட்டாயே........ எங்களுக்குள் எரிச்சல் உண்டாக்கி வைக்கிறாயே ..........
தி.மு.க : ஐயயோ! அப்படிச் சொல்லிவிடாதே நண்பா ........ நான் விவரம் தெரியாமல், தவறாக வாதம் செய்து விட்டேன் போலிருக்கிறது ....
காத்த : என்னமோ, என் குழப்பம் வளருகிறது; நான் அவரிடமே போய்த் தெளிவு பெறப் போகிறேன்.
தி.மு.க : பெரியாரிடமா.....
காத்த : காமராஜிடம் .........
(காத்தமுத்து விடை பெற்றுக்கொண்டு சென்றான் பிறகு)
தி. மு.க : ஆமாம், இந்தக் காத்தமுத்துப் போன்றவர்களி டம் எல்லாம், காமராஜர் தாராளமாகவா பேசுவார்? என்ன பேசுவார்கள்?
தி.க : என்ன பேசும், இதுகளெல்லாம் ....... ஏதாவது உதவி கேட்கும் ........ இவ்வளவு என்ன....... நாளைக்கு வீட்டுக்கு வாயேன். காத்தமுத்து என்னென்ன பேசினான் என்பதை ஒரு எழுத்து விடாமல், நான் சொல்கிறேன்.
தி.மு.க : அது எப்படி? காத்தமுத்து வந்து சொல்வானா?
தி, க : அவனைக் கேட்டால் உண்மையைத் தெரிந்து கொள்ள முடியுமா........ காமராஜர் ஆபீஸ் ப்யூன்' என் பக்கத்து வீடுதானே......... சேதி பூராவும் சொல்லுவான். பெரியார் என்றால் உயிர் அந்த ஆசாமிக்கு ........ ஒரு கூட்டம் தவற மாட்டான்....
-------------
காட்சி 2
இடம் : ஒரு மாளிகை உட்புறம்.
இருப்போர் : காமராஜர், அவர் நண்பர், காங்கிரஸ் ஊழியர் காத்தமுத்து.
நேரம் : வெள்ளிக்கிழமை மாலை 6 மணி.
காமராஜர் : வரச்சொல்லு! வரச்சொல்லு! அடா, அடா! பொழுது போனால் பொழுது விடிந்தால், பெரிய தொல்லையாகி விட்டது, வந்து என்ன பேசவேணுமோ, அதைச் சொல்லிவிட்டுப் போகச் சொல்லு.
நண்பர் : முகத்தை இப்படிச் சிடுசிடு' என்று வைத்துக் கொண்டிருந்தால், வருகிறவருக்கு எப்படி இருக்கும்? ஏன், உங்களுக்கு, வரவர, இவ்வளவு கோபம் வருகிறது......
காம : நீ வேறே, தத்துவம் பேச ஆரம்பித்து விடாதே....... வரச் சொல்லு.... முகத்தை என்ன பவுடர் போட்டுப் பளபளப்பு ஆக்கிக்கொள்ளணுமா....... போய்யா, போயி...........
நண் : இதோ, அவரே, வந்து விட்டார்.
காம் : வாய்யா! வா, வா! என்ன விசேஷம்? போன மாதம் கூட வந்தயாமே...... நேரம் இல்லை, பார்க்க....... கடிதம் போட்டதாகக் கக்கன் சொன்னார் ...... திருச்சியிலே இருந்து வருகிறாப் போலே இருக்கு ...
காங்கிரஸ் ஊழியர் : ஆமாம்...... போயிருந்தேன் - சும்மா பார்க்க, என்ன பேசுகிறாங்கன்னு கேட்க .........
காம : அதுசரி, அதுசரி....... இதுபோல வேடிக்கை பார்க்க, பொழுதுபோக்க நீங்களெல்லாம் போறிங்க ....... அந்த ஆசாமிக, இதெல்லாம் ஆதரவுன்னு எண்ணிக் கொண்டு தப்புக் கணக்குப் போடுகிறானுங்க.. சரி... என்ன ஒரே வீராவேசமான பேச்சுத்தானா..
ஊழி : பேசினாங்க....... கோபம் மட்டும் தான் என்று சொல்லி விடுவதற்கில்லை, வருத்தமும் இருக்கு.....
காம : இருக்கும், யார் இல்லை என்கிறா; எல்லோரையும் சந்தோஷப்படுத்த முடியுமா .............. முடியல்லே .......... கேட்டதைக் கொடுக்காவிட்டா, எள்ளும் கொள்ளும் வெடிக்குது.
ஊழி : தப்பாவே, எடுத்துக்கொள்றீங்களே...........ஏதாவது கேட்டுப் பெறுவதுன்னா, உங்களோடு சிநேகமா இருந்தா கிடைக்காதா? பத்துக் கேட்டா, ஒண்ணாவது கிடைக்குமே............. விரோதித்துக்கொண்டு, என்ன இலாபம் ........?
காம : வேறே என்னய்யா இப்ப இவங்களுக்குக் கவலை வந்து குத்துது சொல்லு, கேட்போம். நான் படாத பாடுபட்டு பக்குவமாப் பேசி, உள்ளத்துக்கு உள்ளே இருப்பதை வெளியே தெரிய ஒட்டாதபடி சாமார்த்தியம் காட்டி, ஒரு பெரிய தொல் லையை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறேன்.... இந்தத் தேர்தல் நேரத்திலே இது எப்படிப்பட்ட இலாபகரமான காரியம்...... ஒரு பெரிய பட்டாளமே, இப்ப, நம்மோட வம்புதும்புக்கு வாராமே, வாழ்த்தி வரவேத்துகிட்டு இருக்குது ... இலேசான ஆசாமிகளா. நெருஞ்சி முள்ளு மாதிரி, சதா சுருக்குச் சுருக்குன்னு குத்திகிட்டே இருக்கும்.... அப்படிப்பட்ட ஆசாமிக, இப்ப, எவ்வளவு அன்பா, நேசமா இருக்கறாங்க... இந்தக் காரியத்திலே, இப்படிப்பட்ட 'ஜெயம்' கிடைக்கும்னு நானே, எதிர்பார்க்க-வில்லை. எப்படியோ நம்மோட ஜாதக பலன்' என்று தான் சொல்லோணும், வெற்றி கிடைச்சுது. பெரிய தொல்லை விட்டு துண்ணு நம்ம ஆளுங்க மத்தக் காரியத்தைக் கவனிக்காமபடிக்கு ............... அவங்களோட சவகாசம் எதுக்கு? என்று கேட்டு, கொட்டிகிட்டே இருந்த, எனக்குச் சங்கடமா இராதா ........?
ஊழி : நாங்க சொல்கிறபடிதான் காமராஜர் நடக்கிறார், எங்களோட ஆள் ஆயிட்டார் - நாங்கதான் இப்ப ராஜ்யமே ஆளுகிறோம் என்றெல்லாம், அவங்க பேசறது கேட்டா, நம்ம ஆளுங்களுக்குச் சங்கடமா இராதா....?
காம : புத்தி எங்கேய்யா போச்சுது .... நம்ம ஆளுங்க, கவனிச்சுப் பார்க்க வேணாமா...? எந்தக் காரியத்திலே, நான் விட்டுக் கொடுக்கறேன், எந்தக் கொள்கையிலே வளையறேன். சொல்லு கேட்பம் இந்தியான்னு வேண்டாம், திராவிடம் வேணும்னு எதாச்சும் பேசறனா.... நேத்து கூட, தனிநாடு கேட் கறது பைத்யக்காரத் தனம்னு நான் பேசி இருக்கறேன் .....
ஊழி : ஆமாமாம், நாங்க கூட பேசிக் கொண்டோம். இதைப் படிச்சா அவரு உங்களைத் தாக்குவாருன்னு கூட எண்ணிக் கொண்டோம்.....
காம : போய்யா, அதுக்கு அவருக்கு நேரமே கிடையாதபடி நான் செய்து வைத்திருக்கறேன் ............ திராவிட நாடு கேட்கறது என்னோட கடமை - அது கூடாது என்கிறது காமரஜரோட
கடமைன்னு, அவர் பேசறாரு, எழுதறாரு .......... இன்னும் என் னய்யா வேணும் ... திராவிட நாடாவது வெங்காய நாடாவதுன்னு கூட அவர் வாயாலேயே வந்திருக்குது தெரியுமேல்லோ ....
ஊழி : அதெல்லாம் படிக்கிற போது சந்தோஷமாகத்தான் இருக்குது ... ஆனா, இராமனை கொளுத்தறது .....
காம : கொளுத்தறபோது, நானென்ன சிவகாசி வத்தி பெட்டி குரோஸ் குரோசா வாங்கிக் கொடுத்தனா? கொளுத் தவே விடலே தெரியுமா ............ இராஜகோபாலாச்-
சாரி இருந்த போதாவது, பிள்ளையாரை, தெருத் தெருவாப் போட்டு உடைச் சாங்க... இராமர் படம் கெளுத்தினா, ஜெயில் தான்னு சொன்னேன் துணிச்சலா.... அது அவரோட கடமை அதுக்காக அவர் பேரிலே கோபம் கொள்ளாதிங்கன்னு அவர், அவரோட ஆளுகளுக்குச் சமாதானம் சொன்னாரு ....... அவ்வளவு பக்குவமாக நிலைமை இருக்குது .......
ஊழி : உத்யோக விஷயத்திலே எல்லாம் ........
காம் : என்ன ....? என்ன ய்யா குடி முழுகிப் போச்சி........? எல்லாம் அவங்க கட்சி ஆளுகளுக்குத் தூக்கி கொடுத்து விட்ட மா .....?
ஊழி : அப்படிச் செய்யல்லேன்னாலும் எங்க ஆளுக! எங்க ஆளுகன்னு அவங்கச் சொல்லிக் கொள்றாங்க ......
காம் : அது அவங்க இஷ்டம்...... உனக்கென்ன நஷ்டம், சொல்லு . இதோ பாருய்யா ஒரு வேடிக்கை.... இவரு இருக்காரே, இராஜரத்தினம் .............
ஊழி : ஆமா, போலீஸ் ஐ.ஜி ...........
காம : அவர்தான்........ அவர் ஐ.ஜி ஆன உடனே, என்ன பேசிக் கொண்டாங்க...?
ஊழி : எங்க ஆசாமின்னு அவங்க பேசிக் கொண்டாங்க......
காம : நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி தெரியுமாய்யா, டிராமா கம்பெனி.....
ஊழி : தெரியுமே... சம்பூர்ண இராமாயணம் நடத்தினாங்க...
காம : அந்த டிராமாவிலே, இந்த ஐ.ஜி. தலைமை வகித்தார் - என்ன பேசினாரு தெரியுமா .... தெய்வானுகூலம் - தெய்வீக சக்தின்னு எதுவும் கிடையாதுன்னு சில பைத்யக்காரர்கள் பேசறாங்க. அது சுத்த தப்பு. எனக்கு ஐ.ஜி. வேலை கிடைச்சது கூட தெய்வானுகூலத்தாலேதான்னு, பேசினாரு தெரியுமா .....
ஊழி : அப்படியா... அடே.. அவரா...?
காம : ஆமா! பேப்பரிலே பார்க்கலையா? இப்ப, சொல் லய்யா, அவர் எங்க ஆளு'ன்னு அவங்கப் பேசிக்கொள்றதிலே, அர்த்தம் ஏதாச்சும் இருக்கா.....
ஊழி : ஆமா... எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும் ?
காம : கல்வி இலாகாவிலே, சுந்தரவடிவேலு இருக் காரேல்லோ ....
ஊழி : ஆமாம்... அவரு முழுக்க முழுக்க அவங்க ஆளாம்...
காம் : யாரு சொல்றது? அவங்கதானே.......! பைத்யக்காரத் தனமா, நீயும் நம்பறயா? இதோ பாரய்யா. இராஜகோபாலாச் சாரி ஆட்சியின் போது, இந்த ஆசாமி, கல்வி இலாகாவிலேதான் பெரிய வேலையிலே இருந்தாரு ...... அப்ப கல்வித் திட்டம் வந்து தேல்லோ .........
ஊழி : நாமெல்லாம் கூட எதிர்த்தமே ......
காம : ஆமாய்யா.... பெரியார் கட்சியும் பலமாகத்தானே எதிர்த்துது ... மறியல் நடத்தல்லே ....
ஊழி : ஆமாம்... அடே அப்பா, ஊரையே ஒரு கலக்கு கலக்கி விட்டாங்களே ......
காம : கலக்கினாங்களேல்லோ ....... அப்ப. இதே சுந்தர வடிவேலுதான், ஊரூருக்குப் போயி ஆச்சாரியாரோட கல்வித் திட்டம் சிலாக்யமானது, அதை எதிர்க்கிறவங்க விவரம் தெரி யாதவங்கன்னு பேசினவரு ... தெரிஞ்சுக்கோ .....
ஊழி : இவரா ... ஆச்சாரியாரையா ஆதரிச்சாரு...
காம : ஆதரிக்காமே, என்ன பண்ணுவாரு? ஏன்யா, உத்யோகஸ்தரையெல்லாம், உன் ஆளு என் ஆளுன்னு கட்சி கள் பேசிக் கொள்ளலாமே தவிர. அவங்க எப்பவும் ' எஜமான் சொல்படி தானே .....
ஊழி : அப்படித்தான் இருக்குது ....
காம:இப்படிப்பட்டவங்களுக்கு உத்யோகம் கொடுத்து விட்டதிலே, நமக்கென்னய்யா நஷ்டம்... அதனாலே என்ன முறை, தலைகீழாக மாறிப் போச்சு? என்ன திட்டம் வந்து நம்மைக் குத்துது, குடையுது.. பெரியவரு, என்னை தற்குறி, தன்மான மத்தவன், கங்காணி, அப்படி இப்படின்னு ஏசிப் பேசி வந்தாரு...
இப்ப, தமிழ் மகன், தடியாலே அடிச்சாலும், ஜெயிலிலே போட் டாலும், நான் அவர் பேரிலே கோபம் கொள்ளவே மாட்டேன். அது அவரோட கடமை.... என்றல்லவா பேசறாரு... பார்க்கற யேல்லோ அவங்க பேப்பர்லே.....
ஊழி : ஆமாமாம். நம்ம பத்திரிகைகள் போட மறந்துட்டா கூட, இப்ப நம்ம சேதியை அவங்கதான் வெளியிடறாங்க... ஒண்ணாயிடணும்னு கூட யாரோ, அவங்க ஆசாமி பேசினாருன்னு, பார்த்தேன் ....
காம : ஆமாமாம்.... இரண்டொரு உத்யோகம்... இதனாலே, நமக்கு, கட்சி என்கிற முறையிலே, எவ்வளவு பெரிய இலாபம்னு கவனிச்சயா.... எத்தனை விதமான இலாபம் .......
ஊழி : ஓட்டு, நமக்குத்தான் போடணும்னு ....
காம : அடிச்சிப் பேசறாங்கய்யா.... இன்னும், நாம், எலக்ஷன் பிரசார கூட்டம் போடவே இல்லை ; நம்ம வேலையை அவங்க ஆரம்பச்சி 'ஜரூரா' செய்துகிட்டு, வாராங்க, ஊரூரா ......
ஊழி : காங்கிரசுன்னா, வேப்பங்காயா இருக்கும். எரிஞ்சு எரிஞ்சு விழுவாங்க, அவங்க....
காம : ஆகுமா.... அது முன்னே!... இப்ப எல்லாம்... சரி யாகுது ... கசப்பு மருந்து தேனிலே குழைச்சி சாப்பிடுவது இல்லையா... அது போலன்னு வைச்சிக்கய்யே.. ஓட்டு ' வாங்கித் தர, அவங்களோட தயவை, நான் ஒண்ணும் கேட்கல்லே ... தானா வருகிற சீதேவியை வேணாம்னு சொல்றதா? கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு வந்து கொடுக்கும் என்பாங்களே, அது போல! இதைத்தானே, இராஜதந்திரம்னு சொல்லணும் ....
ஊழி : ஆமா, பெரியவரோட கட்சி ஆசாமிக, இதை எல் லாம் அலசிப் பார்க்கமாட்டாங்களா...
காம : நேரம் ஏது? ஏன்யா, அவரு என்ன சாமான்யப் பட்டவரா... காமராஜர் சங்கதி கிடக்கட்டும், இராமன் சமாசாரத் தைப் பார்க்கலாம் வாங்கன்னு அழைச்சிகிட்டுப் போயிட்டாரே...... இப்ப, அவங்களோட கவனம், மெட்ராசிலேயா இருக்குது...... அயோத்தியா பட்டணம் போயாச்சி......
ஊழி : ஒரு விதத்திலே, அது நமக்குச் சௌகரியமாப் போச்சு.....
காம : ஒரு விதத்திலேயா .... நீங்க இதை எல்லாம், சரியா அலசி ஆராய்ந்து பார்க்கறது கிடையாது .... பெரியவரு, இப்ப இராமர் - சீதை பத்திப் பேசறதும் எழுதறதும், கிளர்ச்சி செய்யறதும், பார்த்தா, அவங்க ரெண்டு பேரும் இப்ப, எதிரே இருந்து கொண்டு இருப்பது போல தெரியுதேல்லோ ... அவ்வளவு தீவிர மாத்தானே எதிர்க்கிறாரு..
ஊழி : ஆமாம்....... அது தவிர, வேறே பிரச்சினையே கிடை யாதுன்னு நினைக்கிற மாதிரித்தான் தோணுது.
காம : அப்பேற்பட்ட எதிர்ப்புச் சக்தியைக் கிளப்பி, ஓயாம ஒழிச்சலில்லாமெ பாடுபட்டு, படை திரட்டி கிளர்ச்சி செய்யக் கூடியவர்னு தெரியுதேல்லோ ...
ஊழி : ஆமாமாம்... அது எல்லோருக்கும் தெரிஞ்சது தானே.....
காம : அப்படிப்பட்ட சக்தியை இப்ப என்னோட சிநேகிதம் மட்டும் இல்லேன்னா, ஆட்சியின் பேரிலே தானே ஏவி இருப் பாரு - திக்குமுக்காடிப் போயிருக்கணுமே... அந்தத் தொல்லையைச் சமாளிக்கிறது தவிர வேறே ஒரு வேலைக்கும் நேரம் கிடைக்காதே... ஏன்யா மிரட்டறேன்னு நினைக்கறியா... நான் சொல்றது சரியா இல்லையான்னு நீயே, யோசிச்சுப்பாரு, புரியும் தேவி குளம் பீர்மேடு விஷயமிருக்கே, எப்பேற்பட்ட தலைவலி ...
ஊழி : பெரிய தலைவலிதான்... இன்னும் தீரலிங்களே...
காம : மலைமலையா ஆதாரமிருக்குது, தேவிகுளம் இதெல் லாம் தமிழனுடையதுதான் என்பதற்கு........ கிடைத்தாகணும், நியாயப்படி பார்த்தா ... ஊரே திரண்டுது .... எல்லாக் கட்சிக்காரனும் 'ஓண்ணா ' கூடிகிட்டானுங்க......
ஊழி : ஆமா, பெரியவருகூட காரசாரமாக எழுதினாரு.......
காம : எப்படி எழுதாமே இருக்கலாம்? நாமே கூடத்தானே பேசினோம். சட்டசபையிலே தீர்மானம் போட்டோம் ........
ஊழி : டில்லியிலே, நம்ம மனுவைத் தள்ளி விட்டாங்க ......
காம : ஏன்யா, பூசி மெழுகறே........ நம்மோட மூக்கை அறுத்து முகத்திலே கரியைப் பூசி அனுப்பி விட்டாங்க....... பெரிய வருமட்டும், என்னோட சினேகிதமா இல்லாமெ இருந்தா தூள் பறந்திருக்குமே, துரோகி ஒழிக! வடநாட்டுக் கூலி ஒழிக! கங்காணி ஒழிக! மானங்கெட்ட மந்திரிசபை மண்ணாய்ப் போக!... என்று நாள் தவறாமல், போடு போடுன்னு போட்டபடி அல்லவா இருந்திருப்பாரு, சும்மாவா விட்டு வைப்பாரு, எத்தனை கண்டன நாள் - எவ்வளவு கிளர்ச்சி - மறியலு - ஏ, அப்பா! ஊர் அமளிகுமளியாயிருக்குமே ........ இராமர் படமா எரிச்சிகிட்டு இருப்பாரு - போட்டுக் கொளுத்து நேரு படத்தை என்பாரே!
ஊழி : செய்திருப்பாரு ............ ஆமா...............
காம : தடியடி, துப்பாக்கி, ஜெயிலு எல்லா ரகளையும், இங்கே, பம்பாய் மாதிரித்தானே நடந்திருக்கும் .......?
ஊழி : உண்மைதான் ...... ஊரே நாறிப்போயிருக்கும்......
காம : இப்போ ? கப்சிப்! எவனாவது, மத்தக்கட்சிக்காரனுக. தேவிகுளம் பீர்மேடுன்னு பேசினா, இப்ப, நான் கூடப் பதில் சொல்லத் தேவை கிடையாது. அவரே, சரிதான் வாயை மூடுங் கடா........... தேவியும் குளமும் ...... மானங்கெட்ட சீதையையும் மரியாதை கெட்ட இராமனையும் கொளுத்திச்சாம்பலாக்காமெ. அந்த ஊரு வேணும் இந்த ஊரு வேணும்னு, வம்பு பேசறிங் களே, ஈனப்பிறவிகளே! இழி ஜாதி மக்களே! - அப்படி இப் படின்னு தாக்குதாக்குன்னு தாக்கறாரு......... வடக்கெல்லையிலே, நமக்கு நியாயம் கிடைக்கல்லே, வாயைத் திறக்கறாரா, பார்த் தயா? தேவிகுளம் பீர்மேடு, எப்படியும் தமிழனுக்குத்தான், கூச்சல் போடாதிங்க, கிளர்ச்சி செய்யாதிங்க, நாங்களே வாங்கிக் கொடுக்கறோம்னு, நாம், காங்கிரஸ் கூட்டத்திலேயும் சொன்னோம், சட்டசபையிலும் பேசினோம் - நேரு நம்மோட மூக்கை அறுத்து விட்டாரு... இப்ப எங்க ரெண்டு பேருக்கும் இருக்கற சினேகிதம் இல்லைன்னா, வெளுத்து வாங்கி இருப்பாரே பெரியவரு, சும்மாவா விட்டு வைப்பாரு! மந்திரிசபை ஒழிப்பு நாள் போட்டிருப்பாரு! இப்ப பார்த்தயா? சூர்ப்பனகையோட மூக்கை இராமன் அறுத்தது பேடிச் செயல், இதை எந்த யோக்யன் கேட்டான் என்று பேசி வாராரு ....... நாம், தப்பிச்சிக் கிட்டோம்...........
ஊழி : அந்த வகையிலே பார்க்கறபோது, நீங்க அதிர்ஷ்ட சாலின்னுதான் சொல்லோணும் ..........
காம : 'நாம்'ன்னு சேர்த்துச் செல்லய்யா ...... நம்ம கட்சிக்கே அதிஷ்டம்னு சொல்லு. ஒண்ணு கேட்கறேன், சொல்லு, சென்னை ராஜ்யம்னுதான் பேர் இருக்கோணும் தமிழ் நாடுன்னு பேர் இட முடியாது என்று சொல்லி விட்டு, என்னைத் தவிர வேறு எவனா லாவது நிம்மதியா இருக்க முடியுமா? சும்மா விட்டு வைப்பாரா பெரியவரு! அட, மானங்கெட்டவனே! உன்னைப்போயி, நான் பச்சைத் தமிழன், தமிழ் மகன், தன்மானத் தமிழன் என்றெல்லாம் தூக்கி வைச்சி வைச்சிப் பேசினேனே. தமிழ்நாடுன்னு பேர் வைக்கக் கூடவா உனக்கு மனம் இல்லை, தமிழன் தானா நீ! மான ரோஷம் எல்லாம் வித்துப் போட்டு, நீ மந்திரியா இருக்கலாம்....... நான் எப்படி அதைப் பார்த்துகிட்டுச் சும்மா இருக்க முடியும் .......... ஆகவே, இரண்டிலே ஒண்ணு பார்த்துவிடறேன் ........... என்று 'போர்' ஆரம்பிச்சிவிட்டிருப்பாரெல்லோ .........
ஊழி : ஆமாம்....... தமிழ் நாடு என்கிற பெயருக்காக 'போர்' நடத்தப் போவதாகக் கூடச் சொன்னதாகக் கவனம்........
காம : சொன்னாரய்யா, சொன்னார். பிறகு, பார்த்தார், நான் தமிழ்நாடு கிடையாதுன்னு சொல்லி விட்டேனா, என்னடா செய்யறது, இந்த மாதிரி நிலைமை ஆயிப்போச்சேன்னு, யோசனை செய்தாரு. செய்து, பிடி இராமனை! என்று அவரோட ஆசாமிகளுக்கு வேறே வேலை கொடுத்து விட்டாரு .........
ஊழி : சாமர்த்தியசாலிதாங்க.......
காம : யாரு? அவருமட்டுந்தானா ? ஏன்யா, அவர் மூலமாகக் காங்கிரசுக்கு வரக்கூடிய ஆபத்தை வரவிடாமப்படிக்குத் தடுத்த என்னோட சாமர்த்தியத்தைக் கொஞ்சங்கூடப் பாராட்டமாட்டே போலிருக்குது ......
ஊழி : செச்சே! அப்படி இல்லிங்க....... நீங்க, முன்னே எல்லாம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு இருப்பிங்களே, இப்ப, என்னமோ குழைறதும் கொஞ்சறதுமா இருக்கவே.........
காம : குழையறதாலே, இலாபம் இருக்கா இல்லையான்னு பாரு . பம்பாயிலே இவ்வளவு ரகளை நடந்தது - பஞ்சாபிலே - குஜராத்திலே - அசாமிலே - ஒரிசாவிலே - எங்கே பார்த்தாலும் ரகளையோ ரகளைன்னு நடந்தது - துப்பாக்கிப் பிரயோகம் நாள் தவறாமல் நடந்தது ...... கொலை! படுகொலை! சித்திரவதை! காங்கிரஸ் கொடுங்கோலாட்சி!- என்று இன்னேரம் இதற்காக, பெரியவரு சூறாவளி போல அல்லவா பிரசாரம் செய்து, காங்கிர சோட மானத்தை வாங்கி விட்டிருப்பாரு - கொலைபாதக ஆட்சித் தலைவர் வருகிறார், அவர் முகத்திலே காரித் துப்புங்கள் - என்று இராஜேந்திர பிரசாத் வந்தபோது இயக்கமே நடத்தி இருப்பாரே! நீயும் பார்க்கறயே, நாள் தவறாமல் பேசுகிறாரே, ஒரு வார்த்தை, கண்டனம் பேசுகிறாரா? பேசமாட்டார்! எனக்குச் சங்கடமாக இருக்குமே என்கிற எண்ணத்திலேதான். இல்லையானால், நேரு ஒழிக' கிளர்ச்சிதான் நடக்கும்.
ஊழி : ஆமாம்....... அதைக் குறித்தெல்லாம் பேசுவது என்றால் அவருக்கு இஷ்டமாச்சே....
காம் : இஷ்டம்னு மெதுவாச் சொல்றியே......... அக்கார வடிசல் சாப்பிடுவது போலன்னு சொல்லு....... காங்கிரஸ்காரர் களே காங்கிரஸ் ஆட்சியை வெறுப்பார்கள் அப்படியல்லவா, புட்டுப் புட்டுச் சொல்லி வருவாரு, பார்க்கறயே, அவர் சீதையைப் பத்தி எடுத்துச் சொல்லி வருவதைக் கேட்டா, சீதைக்கே சந்தேகம் வந்து விடுமே, அப்படி இருக்கெல்லோ, அப்படிப் பட்டவரு, காங்கிரஸ் ஆட்சியிலே, இரத்தம் ஆறாக ஓடுது, பிணம் மலைமலையாகக் குவியுதுன்னு, எடுத்துச் சொல்லியிருந்தா, அம்மாடி! அல்லோலகல்லோலமாகி இருக்குமே, ஒரு பேச்சு உண்டா! அதுதான் போகட்டும்! சிலோனிலே தமிழர்களைச் சுட்டுத் தள்ளின சேதி வந்ததே - எங்க ரெண்டு பேருக்கும் சினேகம் இல்லாமெ போயிருந்தா - இன்னேரம், காங்கிரஸ் சர்க்காரைப் படாதபாடு படுத்தியிருக்கமாட்டாரா? கப்சிப் ஒண்ணும் பேசல்லே, பார்த்தயேல்லோ! இந்த - விசைத் தறி சமாசாரம் ஒண்ணு போதுமே அவருக்கு காங்கிரஸ் சர்க்காரை கணடதுண்டமாக்காமல் இனி நான் வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைக்கமாட்டேன் என்று கடும் சபதமல்லவா, எடுத்துக் கொண்டிருப்பாரு!
ஊழி : ஆமாம்........ அதெல்லாம் ஒரு துளி சங்கடமும் தருவ தில்லை, எதெதற்கு அவர் பெரிய பெரிய கிளர்ச்சி செய்யக் கூடியவானு, நாடு எதிர்பார்க்குமோ, அதிலே அவர் தலையிடவே காணோம்.
காம : அதுமட்டும் இல்லை ........ அவர் தலையிட்டு, கிளர்ச்சி செய்யாதது மட்டுமல்ல, மத்த கட்சிக்காரனுங்க ஏதாச்சும் மூச்சுப் பேச்சுன்னாலும், இவரே அவர்களை எதிர்த்து, மூலையிலே உட்காரச் செய்துவிட்டு, எனக்குச் ' சேதி' சொல்லி அனுப்புவாருன்னு, எண்ணிக்கொள்ளேன், இவ்வளவு இலாபம்' இருக்குது
ஊழி : விளங்குதுங்க...... விளங்குது
காம : என்னோட சினேகிதம் ஏற்பட்ட பிறகு, அவர், தனிநாடு கேட்கிற விஷயத்தைக்கூட பத்தோட பதினொன்னு செய்துக்கிட்டாரு ... ஐந்தாண்டுத் திட்டத்தை அலங்கோலப் படுத்திப் பேசறது கிடையாது ; இப்படி நமக்கு ஏகப்பட்ட இலாபம் இருக்குது.
ஊழி : இதை எல்லாம், விளக்கமாச் சொல்லி விடுங்களேன் நம்ம ஆளுகளுக்கு ........
காம : சுத்த ஏமாளியா இருக்கறயே, நம்ம ஆளுகளுக்கு விளக்கமாகச் சொன்னா, பெரியவரோட கட்சி ஆட்கள் விசாரப் படமாட்டாங்களா ...... என்னடா இது, பெரியவரு காமராஜர்கூட நேசமா இருப்பது, ஆராய்ந்து பார்த்தா, நம்மோட கொள்கைக்கே ஆபத்தாத்தான் இருக்குது, காங்கிரசுக்குத்தான் அந்தச் சினேகிதத்தாலே, இலாபம் பலவிதத்திலேயும் இருக்குதுன்னு தெரிஞ்சி, சங்கடப்பட மாட்டாங்களா.......?
ஊழி : ஆமாங்க....... அதுவும் உண்மைதான்.
காம : அதனாலேதான், இப்படி உன்னைப்போல, தனியா வந்து பார்க்கிறவங்களிடம் நான், விளக்கம் சொல்றேன். தேர்தல் முடிகிற வரையிலே, நாம் இந்த! கறவைப் பசுவை' விடப்படாது ஐயா, விடப்படாது ........ஆமா! நான் காரண மில்லாமலே, சினேகிதம் செய்து கொண்டிருப்பனா! கெண்டையை வீசினா, விரால் கிடைக்கும்னு, நம்பு . பெரியவரே, எழுதி யிருக்காரு, காமராஜர் எப்பவும் காங்கிரஸ் பக்தர்'னு தெரியுதா .........
ஊழி : உங்களோட காங்கிரஸ் பக்தி ' எங்களுக்குத் தெரி யாததுங்களா ..
காம : 'பக்தி' மட்டுமல்லய்யா ...... யுக்தி' இருக்குது. அதையும் தெரிஞ்சிக்க வேணும் ........ தெரியுதா ..........
ஊழி; உங்களோட பக்தியும் யுக்தியும், யாருக்கு வரும் ........ இனி நான் சும்மா இருக்கப்போறதில்லைங்க....... ஆமா, கிராமம் கிராமமாக இதைச் சொல்லி வைப்பேன் ..........
காம : இரு, இரு ...... வெளிப்படையாகச் சொல்லிக் காரி யத்தைக் கெடுத்துவிடாதே ....... ஆமா....... இந்த ஐந்தாண்டுத் திட்டத்துக்கு ஒரு நாடகக் கோஷ்டி ஏற்படுத்த முடியுமா ....... உன்னாலே ...........
ஊழி : நீங்க உத்தரவிட்டா செய்து முடிச்சுடறேன் ........ இதுக்கு என்னங்க கஷ்டம் ........
காம : செய்து பாரு, யோசனை. அடுத்த மாசம், முடிக்கலாம்.
ஊழி : நம்ம பக்கத்திலே, ஒரு மகாநாடு போடணுமுங்க, எலக்ஷனுக்கு முந்தி
காம : போட்டாப்போச்சி, அதுக்கென்ன.
ஊழி : இந்திராகாந்தி வருவாங்களான்னு, கேட்கறாங்க.
காம : அடெடே! காங்கிரஸ் மகாநாடு போட உத்தேசமா?
ஊழி : ஆமாங்க.... நம்ம கட்சி மகாநாடுதான்.
காம : ஏன்யா! அதைவிட, புத்தர் மகாநாடு, திருக்குறள் மகாநாடு, இப்படி ஏதாவது போட்டா?
ஊழி : புரியுது, புரியுது .... போடறது.... எல்லோரையும் அழைக்கறது .....
காம : இந்த முன்னேற்றத்தானுங்க மட்டும் வேணாம்...
ஊழி : சரி... அவனுங்க வந்தா கொஞ்சம் கூட்டம் வருது... காம : கூட்டம் வரும்... ஆனா, அவரு வரமாட்டாரு. ஊழி : அதுவும் அப்படியா ... நமக்கு எதுக்குங்க சங்கடம்..
காம : 'யுத்தி தான்யா, இப்ப நமக்கெல்லாம் 'கத்தி' தெரியுதா...
ஊழி : தெளிவாகத் தெரியுது. ஏங்க, தேசீய கலா சேவா சப்பான்னு பேர்வைக்கலாமா....
காம : எதுக்குப் பேர்? ஊழி : அதுதாங்க, நீங்க சொன்னிங்களே...? காம : மகாநாடு விஷயமாத்தானே சொன்னேன்....
ஊழி : அதுக்கு முந்தி சொன்னிங்களே... ஐந்தாண்டுத் திட்ட பிரசாரம் ......
காம : அடே, அதுவா, மறந்து விட்டேன் ......
ஊழி : இதுதாங்க, எங்களோட பயமெல்லாம் எங்க விஷயத்தை மறந்து விடுவிங்களோ என்கிற பயம்தான்.
காம : அந்தப் பயமே வேண்டாம்... நான் எப்பவும், உங்களோட சேர்ந்து வளர்ந்தவனாச்சே... இந்தச் சினேகிதமெல் லாம் எனக்கு சாஸ்வதமா....? இருக்கிற வரையிலே, என் னென்ன இலாபம்னுதான், என் குறி இருக்கும்.... தெரியுதா...
ஊழி : நேரமாகுதுங்க... டெலிபோன் கூட அடிச்சிகிட்டே இருக்குது. நான் வாரேனுங்க வந்தேமாதரம்.
காம் : ஜெய்ஹிந்! நமஸ்காரம் ......
-----------------
காட்சி 3
இடம் : திராவிட கழகத் தோழர் இல்லம்.
இருப்போர் : திராவிட கழகத் தோழர், திராவிட முன்னேற்ற கழகத் தோழர், ஆபீஸ் ப்யூன், ஆளவந்தார் .
காலம் : சனிக்கிழமை மாலை 7 மணி,
தி.மு.க : இந்தக் காத்தமுத்து, என்ன பேசினாராம், காம ராஜர் என்ன சொன்னாராம் .... அடடே! என்ன, கண்ணிலே ஏதாவது தூசி விழுந்ததா .......
[ஆபீஸ் ப்யூன் ஆளவந்தார் வருகிறார்.]
ஆள : ஏன், தம்பி! இன்னும் அதை எண்ணியா கண்ணைக் கசக்கிக்கிட்டு இருக்கறே
தி.மு.க : கண்ணீ ர் துளி!
ஆள : நீ, வேறே, தம்பியோட மனம்தான் தணலாக் கிடக்குதே .
தி.மு.க : நண்பா! கவலைப்படாதே, ஆளவந்தார். எனக்கு விவரமாகச் சொன்னார், காமராஜர், காத்தமுத்து சம்பாஷணையை
தி.க : உன்னிடம் சொல்லியாச்சா.
ஆள : என் எரிச்சல் இன்னமும் அடங்கல்லையே, தம்பி, காமராஜரைப் பெரியார் ஆதரிப்பதாலே, நமக்குத்தான் இலானு நீ சொல்லச் சொல்ல நானும் நம்பிக்கொண்டுதான் இருந்தேன்.
தி.மு.க : ரெண்டு பேருமாச் சேர்ந்து, என்னைத் திருத்தக் கிளம்பினது கொஞ்சநஞ்சமில்லையே..........
தி.க : தாறுமாறாகக் கூடப் பேசினோம்.......
ஆள : காத்தமுத்துவிடம் காமராஜர், விவரம் விவரமாப் பேசப் பேச என் மனம் படாதபாடு பட்டுது, போயேன் .........
தி.க : என்னிடம், நீ சொன்னது, என் மனசிலே நெருப்பை வாரிக்கொட்டினது போலாச்சி...........
தி.மு.க : எனக்கு, ஆளவந்தார் சொன்னது கே ஆச்சரியம் ஏற்படவில்லை - ஏன் ....... எனக்குத் தெரியும், காம ராஜர் எண்ணம் இப்படித்தான் இருக்கும் என்று ........
ஆள : எவ்வளவு புட்டுப்புட்டுச் சொன்னார் தெரியுமா.......... இந்த காத்தமுத்து, வெளியே வந்து விழுந்து விழுந்து சிரிக்கிறான்.
தி.க : ஏன் சிரிக்கமாட்டான் ....... நம்மை எல்லாம் ஏமாற்றி விட்டாரே. தன்னோட காமராஜர் என்கிற தெம்பு.
தி.மு.க : எல்லாம் நல்லதாகத்தான் முடியும் ....... வருத்தப் படாதே.......
தி.க : வேதனையா இருக்குதப்பா ஆள : ஏம்பா....... ஐயாவிடம் சொன்னா, என்னா .......?
தி.க : நாமா ........ நம்புவாரா?
தி.மு.க : சொல்லலாம், ஆனா நாமதான், அந்தப் பழக்கத் தையே வைத்துக்கொள்ளவில்லையே.
ஆள : ஆமாம், அதுவும் உண்மைதான் ........ தி.க : சொன்னா, ரொம்பக் கோபிப்பாரு ......
தி.மு.க : அவரிடம் போய் இதைச் சொன்னா, தீர்ந்தது, நீங்களும் கண்ணீர்த் துளியாக வேண்டியதுதான்.
ஆள : இனிமேலேயா ஆகப்போவுது, தம்பி, இப்பவே கண்ணிலே தண்ணி தளும்புதே ......
-----------------
3. இரக்கம் எங்கே ?
[இரக்கம் இல்லையா? ஏனய்யா இவ்வளவு கல்மனம்? இரக்கம் கொள்ளாதவனும் மனிதனா? சர்வ சாதாரண மாகக் கேட்கப்படும் கேள்விகள். ஆனால், பலரால், பல சமயங்களில் இரக்கத்தைக் கொள்ள முடிவதில்லை. ஏன்? வாழ்க்கையின் அமைப்பு முறைதான் அதற்கு முக்கியமான காரணம். இச்சிறு நாடகம், இக்கருத்தை விளக்குவது.]
காட்சி 1
இடம் : வேலன் வீடு.
இருப்போர் : வேலன், வீராயி, மருதை, பூஜாரி .
[மருதை படுத்துக்கிடக்கிறான். வேலனும் வீராயியும் பூஜாரிக்கு எதிரில் அடக்கமாக உட்கார்ந்திருக் கிறார்கள். பூஜாரி உடுக்கையை அடித்துக் கொண்டு, உரத்த குரலில் பாடி, வேப்பிலையால், அவ்வப்பொழுது அடித்துக்கொண்டிருக்கிறான். ஒரு தட்டிலே விபூதியும், எலுமிச்சம் பழமும் வைக்கப்பட்டிருக்கிறது. பாதி அளவு சாராயம் உள்ள ஒரு பாட்டில், ஒரு புறம் இருக்கிறது. பூஜாரியின் கண்கள் அடிக்கடி அந்தப் பக்கம் பாய்கிறது.]
பூ : வேலப்பா! இது பொன்னியம்மா குத்தந்தான், இருந் தாலும் பாதகமில்லே! நான் அதுக்கு சரியான வேலை செய்து விடறேன், கொலை நோவு ஓடிப் போவுது பாரு.
வீ : (கும்பிட்டபடி) உங்களுக்குக் கோடி புண்யமுங்க. எங்களாலே இந்த கோரத்தைப் பார்த்துச் சகிக்க முடியலைங்க.
பூ : வீரம்மா! உன்புள்ளே நோவு போயிடுத்துன்னு வைச்சிக்கோ . வேலப்பா! பொன்னியம்மா கோயிலிலே இண்ண ராத்திரி நடுசாமத்திலே, ஒரு கோழி அறுத்து, இரத்தத்தை அபிஷேகம் செய்யணும். குடலுக்குக் குடலு.
வீ : அப்படின்னா, என்னாங்கோ?
பூ : ஆத்தா, கோவத்திலே, உன் மவனுடைய குலையிலே நோவு உண்டாக்கிட்டா. இப்பொ அவமனசு குளிருகிறாப்போலே, கோழியை அறுத்துக் குடலை எடுத்து மாலையா போட்டு விட்டா, ஆத்தா, உன் மவனுடைய குலை நோயை போக்கிடுவா.
வீ : (கும்பிட்டு, கன்னத்தில் போட்டுக் கொண்டு) பொன்னிம்மா, தாயே! அப்படியே செய்யறேன். ஏழைகமேலே இரக்கம் காட்டு.
(வேலன், துணிமுடிப்பை அவிழ்த்து 3- ரூபாய் கொடுக்கிறான்.பூ ஜாரி அதைப் பெற்றுக் கொண்டு போகிறான்.)
--------
காட்சி 2
இடம் : பாதை.
இருப்போர் : பூஜாரி, ராஜாக்கண்ணு.
[பூஜாரி, ராஜாக்கண்ணு வருவதைக்கண்டு]
பூ : அடடே! தம்பி! ராஜாக்கண்ணு இல்லே, நீ! நம்ம வேலன் மகன்?
ரா: ஆமாம். நீங்க? தொப்புளான் தோட்டத்திலே காவக்காரராக இருந்திங்களே, மொட்டெ, அவுங்கதானே?
பூ : முன்னே காவக்காரனாக இருந்தேன். இப்ப நான் நம்ம பொன்னியம்மா கோயில் பூஜாரி. ஆமா, கடுதாசி போட்டானா, வேலன்?
ரா: இல்லையே! ஏன்? வீட்டிலே யாருக்கு என்ன?
பூ : அடபாவமே! உனக்கு விஷயமே தெரியாதா? உன் தம்பி மருதை இருக்கானே, பாவம், அவனுக்குக் குலைநோவு கொல்லுது. பொன்னியம்மா குத்தம். இப்பத்தான், மந்திரிச்சி விட்டு வர்ரேன். போய்ப்பாரு தம்பியை.
ரா: (சோகத்துடன்) இங்கே இப்படியா? சரி. நான் தான் படாத பாடுபட்டு, பிழைச்சா போதும்னு இங்கே வந்தேன். வந்த இடத்திலே இப்படி இருக்குது. துரத்தி அடிக்குது தொல்லையும் துயரும்.
பூ : உனக்கு என்னப்பா உடம்புக்கு? தலையிலே கட்டு! காயம்!
ராஜா : அதுவா? ஒண்ணுமில்லே, நம்ம மாட்டுக்குச் சூடு போட்டு வைக்கிறமில்லே, அந்த மாதிரி நம்ம சர்க்காரு, அடிக்கடி இப்படித் தொழிலாளருக்கு முத்திரை போட்டு வைக்கிறது. அந்த முத்திரை தான் அது.
பூ : என்னப்பா இது? பட்டணத்து பாஷையிலே சொன்னா எனக்குத் தெரியுமா? புரியறாப்போல சொல்லு.
ரா: போலீசார், தடியாலே அடிச்சாங்க, மண்டையிலே. அந்த அடி.
பூ : (திடுக்கிட்டு) என்னப்பா இது? பூமழை பொழிஞ்சு துன்னு சொல்றாப்போலே, இவ்வளவு சாந்தமாச் சொல்றயே. இந்த அனியாயத்தை. போலீசாரு தடியாலே அடிச்சாங்களா? ஏன்?
ரா : என்னை மட்டுமா? என்னைப் போல ஒரு நூறு பேருக்கு இருக்கும். ஒரு ஐஞ்சாறு பேரு, 'ஓகயா' ஆயிட்டாங்க.
பூ : என்ன ஆயிட்டாங்க?
ரா: செத்துப் போயிட்டாங்க
பூ: (திகைத்து) செத்துப் போயிட்டாங்களா? அடிச்சதா லேயா?
ரா : அடின்னா அடி, உங்க ஊட்டு அடி, எங்க ஊட்டு அடியா அது.
பூ : அக்ரமமா இருக்கேடா, தம்பி! ஏன் அடிக்கோணும் மனுஷன்களை. நாயா நரியா நாம்ப.
ரா : (கேலிச்சிரிப்புடன்) அடிக்கிறவங்க மாத்திரம் நாயா, நரியா? அவங்களும் மனுஷ்யனுங்கதான்.
பூ : மனுஷனை மனுஷன் இப்படி ஈவு இரக்க மில்லாமெ. அடிக்கறதா! சாகடிக்கிறதா? ஏன்?
ரா : மெட்றாசிலே, நான் மில்லிலே வேலை செய்யறே னேல்லோ, என்னைப்போல ஒரு ஐயாயிரம் பேரு தொழிலாளி வேலை செய்யறானுங்க. விலைவாசி ஏறிப்போச்சி. மில்லிலே கொடுக்கிற கூலி போதலே . மில்காரருக்கு இந்த வருஷத்திலே அடி அடின்னு இலாபம் சரியா அடிச்சுது. எங்க உழைப்பினாலே தானே இவ்வளவு இலாபம் வந்தது, எங்களுக்கோ வயித்துக் கூடச் சரியா இல்லையே, நீங்க கொடுக்கிற கூலி ஒரு எட்டணா அதிகமாத் தரவேணும்னு கேட்டோம் .......
பூ : நீயா, கேட்டே ?
ரா : எல்லோரும், ஒருவர் மட்டும் கேட்க முடியாதே. கூட்டம் போட்டுக் கேட்டோம்....
பூ : தம்பீ! பீடி இருந்தா ஒண்ணு குடு.
ரா : இல்லையே! கூலி உயர்த்தச் சொன்னமா - முடியா துன்னு சொன்னான்.
பூ : கெவர்மெண்டா? ரா: இல்லே - மில்காரன். பூ: சரி. அப்புறம்?
ரா : ஸ்ட்ரைக் பண்ணினோம். பூ : என்னா? என்ன பண்ணிங்க? நாஸ்டரைக் ஸ்டரைக் பண்றதுன்னா, வேலைக்கு வர முடியாதுன்னு சொல்றது.
பூ : வேலை செய்யாவிட்டா, கூலி? கூலி வராமே, குடும்பம் எப்படி நடக்கும்?
ரா : அதெல்லாம், சங்கம் பார்த்துக் கொள்றேன்னு சொல்லிச்சி. ஸ்ட்ரைக் பண்ணிக் கூட்டம் போட்டோம். ஒரு ஐயாயிரம் ஜனம், ஆத்திரத்தோடு கூடினா, கொஞ்சம் ஆர்ப்பாட்ட மாகத் தானே இருக்கும்! கெவர்மெண்டு அத்திரைமேலே வந்திட்டுது. ஒரே
பூ : ஆமாம் - கொஞ்சம் நிதானம் தவறினாலே, ஆர்ப்பாட்டந் தான்.
ரா : நாங்க, குடிக்கக் கஞ்சிக்குக் கூட்டம் போட்டோம். அதுக்குப் பேர் என்னா தெரியுமோ. கலாட்டான்னு பேரு.
பூ : யாரு உங்க மில்காரன் சொன்னானா?
ரா: கெவர்மெண்டு சொல்லிச்சி. சொல்லி, போலீசை அனுப்பினாங்க. அவனுங்க குதிரைமேலே வந்தாங்க. நாங்க, கும்பலா கூச்சல் போட்டோம். குதிரை மிரண்டுட்டுது. ஒரே அமர்க்களம். போலீசாரு, தூக்கினாங்க தடியை. மண்டையைப் பார்த்துக் குடுத்தானுங்க........
பூ: ஈவு இரக்க மில்லாமெ ......... ரா : ஈவாவது, இரக்கமாவது? என் கூட, தங்கவேலுன்னு ஒரு தொழிலாளி - அவன் அண்ணனுக்குப் போலீசிலே வேலை. அண்ணைக்குப்பாரு வேடிக்கையை - கும்பலிலே புகுந்து அடிக்கச்சே, தங்கவேலுக்கு அடி கொடுத்தது யாரு தெரியுமா - அவுங்க அண்ணன்! கும்பலிலே கோவிந்தா! கண்டானா அவன், தன் தம்பின்னு? கண்டு அடிக்காம விட்டா, அவனுக்கு வேலை தான் நிலைக்குமா? சாயந்திரம் அண்ணன் அடிச்சான் - அந்த அடிக்கு இராத்திரி, அண்ணிதான் 'பத்து' அரைச்சி போட்டா.
பூ : ரொம்ப அக்ரமமா இருக்கேடாப்பா? இரக்கம், கொஞ்சம்கூடக் காணோமே?
[ராஜாக்கண்ணு ஒரு பீடி எடுத்துப் பற்ற வைக்கிறான்.)
பூ : என்னா தம்பி, பீடி, குடுன்னு கேட்டா, இல்லைன்னு சொன்னயே?
ரா : ஆமா, ஒண்ணுதான் இருந்தது. உங்களுக்குக் குடுக்கிறதுக்கு இல்லைன்னு சொன்னேன். சரி, நான் வீட்டுக்குப் போய்ப் பார்க்கிறேன்.
[ராஜா போகிறான்]
பூ : திருட்டுப்பய! ஒரு பீடி கேட்டா இல்லைன்னு சொன் னான். வேணும் இதுக்களுக்கு. இதுக்களிடம் ஈவு இரக்கம் காட்டப் படாது.
[போகிறான் )
--------------
காட்சி 3
இடம் : வேலன் வீடு.
இருப்போர் : மருதை, வேலன், வீராயி.
(மருதை படுக்கையில் படுத்துப் புரள்கிறான் - துடிக் கிறான். சாராயப் பாட்டில் முழுவதும் காலி யாகிக் கிடக்கிறது. வேலனும் வீராயியும் வேதனைப் படுகிறார்கள்.)
வீ : ஐயோ! புழுவாட்டம் நெளியிறானே! என்மனம் தாளலியே. நான் என்னத்தைச் செய்வேன். பொன்னியம்மா!
மரு : ஐயோ! ஐயயோ - என் உயிர் போவுதே - அம்மா - அம்மாடி - அப்பா - அப்பாடி –
[ராஜாக்கண்ணு ஓடி வருகிறான்.]
வீ : அடே ராஜா! இந்தக் கண்றாவியைப் பாருடா! மரு : அண்ணென்! வந்தூட்டயா? உன்னைத்தான் பார்க் கோணும், பார்க்கணும்னு ஆசையா இருந்தது. ஐயயோ! அப்பப்பா!
ரா : (பக்கத்திலே உட்கார்ந்து மருதையைத்தூக்கி, மார்மீது, கார்த்திக் கொண்டு விம்மியபடி) தம்பி! மருதெ! உனக்கு என்னடாப்பா, பண்ணுது? ஐயோ இது என்ன நோயோ தெரியலை. பார்க்கச் சகிக்கலையே! தெய்வமே! உனக்குக் கருணை இல்லையா?
மரு: அண்ணென்! எங்கிட்ட கொஞ்சம் பேசண்ணென். ஏழைக பேச்சை எண்ணைக்கும் கேட்காத தெய்வத்தைக் கூப்பிட்டு பலன் என்னாண்ணேன்.
ரா: (தம்பியை அன்புடன் அணைத்துக்கொண்டு) அடெ அப்பா! இந்தக் கோரத்தைப் பார்க்கவாடா, நான் வந்தேன். அப்பா! இங்கே பக்கத்திலெ, டாக்டர் யாரும் இல்லையா?
வீ : இருக்கறாரே, ராமய்யர்.
(மருதையைப் படுக்க வைத்துவிட்டு ஓடுகிறான், ராஜாக்கண்ணு - டாக்டர் வீட்டுக்கு.)
-----------
காட்சி 4
இடம் : டாக்டர் வீடு.
இருப்போர் : டாக்டர் தண்டம் கம்பவுண்டர், ராஜாக்கண்ணு.
(சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டு, டாக்டர் சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். கம்பவுண்டர் கண்ணன் காலி பாட்டில்களில் கலர்த் தண்ணீ ர் நிரப்புகிறார். ஐயா! ஐயா! டாக்டர்! டாக்டர்! என்று வெளியே குரல் கேட்கிறது. டாக்டர் பரபரப்படைகிறார். கம்பவுண்டர் பாட்டில்களை ஒழுங்காக வைத்துவிட்டு வெளியே போய், ராஜாக்கண்ணை அழைத்துக்கொண்டு வருகிறார்.)
க : இப்பத்தான், டாக்டர் ஒரு விசிட் போய்வந்து உட்கார்ந் தார் - இதற்குள் வந்துவிட்டீர்.
ராஜா : ரொம்ப அவசரமான கேஸ் (டாக்டருக்கு நமஸ் காரம் செய்துவிட்டு) ரொம்ப அர்ஜண்டாக என் வீட்டுக்கு வரவேணும்.
டா (கம்பவுண்டரைப் பார்த்து ) பயம் என்ன இப்போ ?
க : டுவெல்வுக்கு டென் மினிட்ஸ் இருக்கு.
டா: அப்படின்னா, டோக்கர் கம்பெனி சேட் வருகிற சமயம்?
ரா : டாக்டர் சார்! என் தம்பி, பிராணாவஸ்தையிலே இருக்கிறான். இந்நேரத்திற்குள் என்ன ஆகிவிட்டதோண்ணு பயப்படக்கூடிய ஸ்திதி. தடை சொல்லாமல் வரணும். என் தம்பி உயிரைக் காப்பாத்தணும்.
டா : (அலுப்பால் வெறுப்படைந்தது போல பாவனை செய்து) என்னய்யா இது ஒரே ரகளை! நமது வாடிக்கைக்காரன் - ஒரு இலட்சாதிபதி - டோக்கர் கம்பெனி சேட் - அவன் வருகிற நேரம் அதைக் கெடுத்துக்கொண்டு, உன் பின்னோடு வரமுடியுமா?
ரா: (டாக்டரின் காலைப் பிடித்துக்கொண்டு) அப்படிச் சொல்லப் படாதுங்க. கொஞ்சம் இரக்கம் காட்டுங்க.
டா : எழுந்திரு, எழுந்திரு . என் வேலையிலே அலுப்பு பார்த்தா முடிகிறதா? சரி! கார் வந்திருக்கா?
ரா: மோட்டாரா? இல்லிங்க.
டா : யார்ரா இவன் - சுத்தப்பட்டிக்காட்டுப்பயபோலிருக்கு. போய் குதிரை வண்டியாவது கொண்டுவாடா. ரா : ரிக்ஷா கொண்டு வரட்டுங்களா? டா : சரி. ஓடு. அழைத்துக்கொண்டு வா.
(வெளியே செல்கிறான். டாக்டர் உடை போட்டுக் கொள்கிறார்.)
--------------
காட்சி 5
இடம் : வேலன் வீடு.
இருப்போர் : வேலன், வீராயி, மருதை.
(டாக்டர் உள்ளே வருகிறார். வீராயி கும்பிடுகிறாள். வேலன் காலிலே விழுகிறான்.)
டா : என்னை அழைக்கவந்த ஆசாமி எங்கே ?
வே: டே! அப்பா! ராஜாக்கண்ணு! டே!
[ராஜாக்கண்ணு, ஒரு பழைய நாற்காலியைத் தூக்கிக்கொண்டு ஓடி வருகிறான். அதைப் போட்டு, டாக்டரை அதிலே உட்காரச் சொல்லி விட்டு நிற்கிறான்.]
[டாக்டர் பரிசோதனை நடக்கிறது.]
டா : இது, அபண்டி சிடிஸ். மேஜர் ஆபரேஷன் செய் யணும். ரொம்ப ஜாக்ரதையாத்தான் கவனிச்சிக்க வேணும்.
ரா: (பயந்து ) ஆபரேஷனா? ஆபத்து இராதுங்களே!
டா : ஏம்பா! நான் என்ன ஜோசியரா? டாக்டர்தானே அபண்டி சிடிஸ் ஆபரேஷன் சருமமானதுதான் நூறு ரூபாயாகும், பீஸ்.
ரா : (மேலும் பயந்து) நூறு ரூபாய்ங்களா? உயிருக்கு ஆபத்து இராதே .
டா : நூறு ரூபாய்னா அதிகம்னு நினைக்கறயா? வியாதி, அப்படிப்பட்டது. உயிர் விஷயத்தைப்பத்திப் பயப்படாதே, பகவான் இருக்கார்.
ரா : (வேலனைப் பார்த்து ) ஐயா, ஆபரேஷன் செய்கிறாராம், பிறகு ஆண்டவன் இருக்காருன்னு சொல்றாரு .
வே : (வேதனையுடன் ) ரூபா நூறு வேணுமாமே.
[ராஜாக்கண்ணு கைகளைப் பிசைந்து கொள்கிறான். வீராயி முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள்.]
டா : சரி! உங்க யோசனை முடிந்த பிறகு வந்து சொல் லுங்கோ . இப்ப, விசிடிங் பீஸ் ஐஞ்சு ரூபா எடுங்கோ .
ராஜா : இருங்க, டாக்டர்.
[ராஜா, தகப்பனிடம் இரகசியமாக எதுவோ பேசுகிறான்.]
[மடியிலிருந்து ஒரு மணிபர்சை எடுத்துச் சில நோட்டுகளை டாக்டரிடம் கொடுத்து]
ரா: தற்சமயத்துக்கு இதை வைச்சிக்கங்க - ஏழைக மேலே இரக்கம் காட்டுங்க.
டா : நீ, என்ன காய்கறிக் கடைக்காரனா? இது என்னப்பா இருபத்தைந்து ரூபா?
ரா : கையிலே இருந்தது அவ்வளவுதானுங்க. பெரிய மனசு செய்ய வேணும்.
[டாக்டர் ஒரு ஐந்து ரூபா நோட்டை எடுத்துக் கொண்டு, மற்றதைத் திருப்பிக் கொடுத்து
விட்டு ]
டா : வேறே ஆசாமியைப் பாரு இல்லையானா தாம் ஆஸ்பத்ரிக்குப் போ.
ரா : ஐயா! இந்த ஆபத்தான நிலைமையிலே, கைவிட்டு விடுவது தர்மமா, நியாயமா? கொஞ்ச ஈவு இரக்கம் காட்டக் கூடாதா? இந்தப் பையனைக் கொஞ்சம் கண்ணாலே பாருங்க. உயிர் துடிக்குதே! மரணாவஸ்தையிலே இருக்கிறானே! பணமா பெரிசு! டாக்டர்! ஒரு பிராணனைக் காப்பாத்துங்க - கொஞ்சம் இரக்கம் காட்டுங்க.
டா : சுத்தப் பைத்யக்காரத் தனம்! இரக்கம், இரக்கம்னு சொல்லிக்கொண்டா, எனக்குப் படிப்பு சொல்லித் தந்தார்கள்? பணம் கொடுக்க, வக்கு இல்லாதவன், டாக்டர் வீடு வரு வானேன்? வேலை இல்லாமலா இருக்கிறோம், கண்ட இடத்துக்கு வந்துபோக! இடியட்!
[கோபமாகப் போய்விடுகிறார். டாக்டர் போன பிறகு]
ராஜா : அப்பா! இந்தப் பாவிகள் எவருக்கும் இரக்கம் என்பது கடுகளவு கூட இல்லை. ஏழைகளின் துயரத்தைப் பற்றி கவலைப்படுகிற ஆளையே காணோம்.
வே: எந்தப் புண்யவானும் கிடைக்கலையே.
மருதை : (படுக்கையில் புரண்டபடி) புண்யவான்களுக்கு என்னப்பா குறைவு? வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கோயிலைக் கட்டுவாங்க, குளத்தை வெட்டுவாங்க, தேரு திருவிழா செய்வாங்க, ஏழைக்குக் குலைநோவு வந்தா, அவுங்களுக்கு என்ன, குடும்பமே நாசமானாத்தான் என்ன!
ரா : தம்பி! நீ பேசிகிட்டு இராதேப்பா. போகும்.
மரு : இருக்கப்போறது கொஞ்ச நேரம், பேசிகிட்டாவது சாகிறேன்.
வீ: ஐயோ, மகனே! அப்படி எல்லாம் பேசாதேடா கண்ணு!
ரா: அப்பா! என்னாலே தாங்க முடியாது. இந்த க்ஷணம் போய், நீங்க வேலை செய்ற இடத்திலே எப்படியாவது கொஞ்சம் பணம் கடன் வாங்கிகிட்டு வாங்க......
வே : அந்தப் பாவி கிட்டவா போகச் சொல்றே. அவன் ஈவு இரக்கமில்லாதவனாச்சே, எரிஞ்சி விழுவானே.
வீ: போய், கைகாலைப் பிடிச்சிக்கங்க. இந்த ஆபத்தான வேளையிலே கூடவா, அவரு, கர்மியா இருப்பாரு போய் வாங்க. எழுந்திருங்க. நான் நல்ல சகுணம் வருதான்னு பார்க்கிறேன்.
(வேலன் போகிறான்.)
--------------
காட்சி 6
இடம் : மிராசுதார் மாணிக்கம் மாளிகை.
இருப்போர் : மிராசுதார், கணக்கெழுதும் கந்தையா, கடன் பட்டவர்.
[மிராசுதார் கோபமாக உலவுகிறார். கடன்தர வேண்டியவர் கைகட்டிக் கொண்டு நிற்கிறார். கணக்கெழுதுபவர் தலையைச் சொறிந்து கொண்டு நின்றபடி, கடன் தர வேண்டியவரைக் குறும்பாகப் பார்க்கிறார்.]
மிரா : தலை தலைன்னு அடிச்சிகிட்டு, எங்காவது தேசாந்திரம் போகலாம் போலே இருக்கு. மூணு வருஷமாகுது ; வாங்கின கடனைப் பைசல் செய்யலே. கேட்டு அனுப்பினா லாபாயின்ட் பேசறே லாபாயின்ட்.
கட : நான் தவறாக ஒண்ணும் சொல்லலிங்களே. கணக்கப் பிள்ளை, மென்னியைப் பிடிச்சாரு. அந்தச் சமயம், என் மருமவன், குடித்துவிட்டு வந்து என் மகளைப் போட்டு அடி அடின்னு அடிச்சிப்போட்டான். நான் வேதனையோடு இருந் தேனுங்க. அந்தச் சமயத்திலே, கடனைப் பைசல் செய் தாகணும்ணு, உயிரை வாங்கனாரு. கோவத்திலே, வாங்கிக்கிற விதமா வாங்கிக்கோன்னு சொன்னேன்.
மிரா : (ஆத்திரம் பொங்கியவராய்) எவ்வளவு திமிர் இருந்தா அப்படிப் பேசத்தோணும்? கடன் பட்ட கழுதே. அடக்க ஒடுக் கமாப் பதில் பேசாமே, ராங்கிப் பேசறியா ராங்கி. உன்னை, வீடு வாசலை ஏலத்திலே எடுத்து ஊரைவிட்டுத் துரத்தாவிட்டா, என் பேரை மாத்தி வைச்சிக்கிறேண்டா . ஆமா ..........
கட : மன்னிச்சிடுங்க........
மிரா : உன்னையா? ஊரான் சொத்துக்குப் பேயாப் பறக்கற உன்னையா? மரியாதையா இந்த இடத்தை விட்டுப் போயிடு.........
ஆமா....... எனக்கு இருக்கற கோவத்துக்கு, நான் உன்னை ..........
கண: (கடன்காரனைப் பார்த்து) போய்வாய்யா! நாளை மறுநாள் வந்து கடனைப் பைசல் செய்துடு. போ! கடனை வாங்கறப்போ, பூமேலே வைத்துக் குடுத்துடறேன், கெடுவு தவறாதுன்னு குழையறது - கொஞ்சம் கண்டிஷனா இருந்தா, சட்டம் பேசறது....... போ! போ.
[கடன்பட்ட பூஜாரி போகிறான்.]
[வேலன் வருகிறான்.]
மிரா : இவர் எங்கே வந்தாரு தொரெ! இந்த நேரத்திலே?
வே : (சோகம் கப்பிய குரலில்) எஜமான்! இந்தச் சமயத் திலே நீங்கதான் காப்பாத்த வேணும்.
மிரா : (கேலியும் கோபமும் கலந்த குரலில்) கற்பூரம் கொண்டு வந்தாயாடா?
வே: (புரியாமல்) எதுக்குங்க?
மி : என் எதிரிலே கொளுத்த! ஒருத்தன் மாத்தி ஒருத்தன் நம்மைப் பிராணனை வாங்குகிறவனாகவே வந்து சேருகிறான். காப்பாத்தவேணுமாம் இவரை! ஏண்டா, உலகம் பூராவையும் காப்பாத்த அவன் இருக்கான்.
வே: என் சின்ன மகன் சாகக் கிடக்கிறானுங்க. கொலை நோவு. ரொம்ப ஆபத்தா இருக்குது ...
மி : ஓஹோ! இதைச் சொல்லிவிட்டு, நாளைக்கு வேலைக்கு வராம் இருக்க........
வே: எஜமான், லீவு கேக்க வரலிங்க ....... என் மகன் உயிரைக் காப்பாத்தணும். டாக்டர் ஆபரேஷன் செய்தாத்தான் பையன் பிழைப்பானுன்னு சொல்றாரு . (விழுந்து கும்பிட்டு) இந்தச் சமயம் ஒரு நூறு ரூபா கடனா கொடுங்க, என் பிள்ளையை காப்பாத்துங்க...
மி : சரி. சரியான பிளான் ' போட்டுகிட்டுத்தான், வந்தூட் டான். ஆபரேஷன் செய்யணுமா! டாக்டர் பீசு 100 ரூபா!! பெரிய சீமானில்லே இவரு. பட்டத்து இளைய ராஜாவுக்கு, இல்லவா, வைத்யம் செய்யப் போறாரு.......
வே: எஜமான், இந்தச் சமயம் என் மனம் நொந்து போயிருக்கிற சமயத்திலே இப்படி எல்லாம் பேசாதிங்க. எப்படி யாவது, நீங்கத்தான் காப்பாத்தணும். கொஞ்சம் இரக்கம் காட்டுங்க. நான் நாயா, உழைக்கிறவனாச்சிங்களே, உங்களைத் தவிர உலகத்திலே எனக்கு யாருங்க துணை?- கொஞ்சம் மனசு வையுங்க.
மி : (கோபத்துடன்) ஏண்டா! நீ என்னாண்ணு எண்ணிக் கிட்டே, பணம் என்ன செடியிலா முளைக்குது. வாய் கூசாமே, ஐஞ்சா, பத்தா? நூறு ரூபா கேக்கறே. முட்டாப் பயலே! போடா. போயி ஏதாச்சும் கஷாயம் போட்டுக் கொடு நோய் போயிடும். ஆபரேஷனாம் - நூறு ரூபாயாம் ...... பெரிய சமஸ்தானம் - திருவாங்கூர் ....!
வே: தெரிந்த வைத்யமெல்லாம் செய்தாச்சிங்க. குண மாகலைங்க. துடியாத் துடிக்கிறான்.
மி : ஏண்டா, அந்தப் பய பெரிய அலகிரி! கூச்சல் போடு வான். நோவு இருந்தா கொஞ்சம் பல்லைக் கடிச்சிகிட்டுப் பொறுத்துக்க வேணும். மூணுநாளா எனக்கு முதுகுவலி உயிரை வாட்டுது - அவ வேறே அடி வயித்திலே என்னமோ பண்ணுது என்னமோ வேதனைன்னு அழுதுகிட்டு இருக்கா. நோவு நொடி சகசமாக வரும் போகும். அதைச் சாக்குக் காட்டி இங்கே பணம் கிணம்னு வராதே. செப்பாலடிச்ச காசு கிடையாது - ஆமா - போ, போ .
வே: எஜமான், எஜமான் ....
மி : போடா போ! நான் இனிமே உனக்குப் புத்தி சொல்லி கிட்டு இருக்க முடியாது - சிவன் கோயில் போயாகணும் - டே முனியா! தடியைக் கொண்டா - அம்மா! அன்னம்! சரிகை வேஷ்டியை எடுத்து வாம்மா - போ போ! - இங்கே சனியன் போல என் எதிரே இராதே- அன்னம்! வாம்மா நேரமாவுது - ஏய், கணக்குப்பிள்ளை. நெத்தியிலே, சந்தனப் பொட்டு சரியா இருக்கா பாரய்யா.... (உரத்த குரலில்) டேய்! தடியா! வண்டியைப் பூட்டியாச்சா?
[அன்னம், வேஷ்டி கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கிப் பார்த்துவிட்டுக் கோபத்துடன், கீழே வீசிவிட்டு]
ஏம்மா! இதான் கிடைச்சுதா உனக்கு? வேறே இல்லே .......
----------------
காட்சி 7
இடம் : பாதை
இருப்போர் : வேலன், சுடலை, ராஜாக்கண்ணு
[விசாரத்தோடு வேலன் தள்ளாடி நடந்து வருகிறான். அவனுக்குப் பின்புறமிருந்து ஒரு முரடன் ஓடி வந்து, கீழே தள்ளி, வேலனைத் கத்தியால் குத்த முயற்சிக்கிறான். வேலன் கூச்சலிடுகிறான்.]
வே : சுடலை! சுடலே! உன்னைக் கும்பிடுகிறேன். என்மவன் அங்கே குத்துயிராக இருக்கிறான், என்னை இப்போ ஒண்ணும் செய்யாதே ......
சு : டே, வேலா! போன வெள்ளிக்கிழமை புளிய மரத்திலே கட்டி வைச்சி அடித்தவனில்லே நீ . மறுதினமே தயார் பண்ண கத்திடா இது.
வே: (திணறி) எஜமான் சொன்னாரு உன்னை நான் அடிச் சேண்டா சுடலை - எனக்கும் உனக்குமா விரோதம்?
[சுடலை அடிக்கிறான் - வேலன் கத்தியைக் கீழே தட்டி விடுகிறான் - கூவுகிறான் - அதே சமயம் ராஜாக்கண்ணு ஓடி வருகிறான்.]
(சுடலைமீது பாய்ந்து, தாக்குகிறான். சுடலை பலத்த அடிபட்டுக் கீழே வீழ்கிறான்.)
வே : ஜயோ, பாவம்! பலமான அடி விழுந்துடுத்தோ .
(சுடலை அருகே சென்று இரத்தத்தைத் துடைக்கிறான்)
ராஜா! அவன் மேலே தப்பு இல்லெடா. போன வெள்ளிக்கிழமை, அவனை நான் புளிய மரத்திலே கட்டி வைச்சி, அடிச்சேன் - இன்னக்கி அவனுக்குச் சமயம் கிடைச்சது.
ரா : இவன் என்ன செய்தான்.
வே : பாவம்! என்னை ஒண்ணும் செய்யலே இவன். என் எஜமான் தோட்டத்திலே வேலை செய்கிறவன். தாறுமாறாப் பேசினானாம் எஜமானனை. அவர் என்கிட்ட சொல்லி, அடிக்கச் சொன்னார்.
ரா: ஏழையைக் கொண்டே ஏழையை அடிக்கச் சொன்னானா? சரி, பணம் கிடைத்ததா?
வே: கிடைக்குமா? நான் முன்னமேயே சொன்னேனே. கெஞ்சிக் கூத்தாடினேன் - ஒரு சல்லிக்கூடத் தரமுடியாதுன்னு சொல்லிவிட்டுப் போயிட்டாரு - ஜமுனா வீட்டுக்கு.
(ராஜாக்கண்ணு ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு) ரா : அப்பா! நீ வீட்டுக்குப்போ! தம்பிக்குக் கொஞ்சம் சாராயம் கொடுத்தேன். தூங்கறான். எனக்கு ஒரு சினேகிதர் இருக்காரு. அவரையாவது போய்க் கேட்டுப் பார்க்கிறேன்.
வே : சுருக்கா வந்தூடு . ரா: ஆகட்டும்பா! அடிப்பட்டதுக்கு ஏதாச்சும் 'பத்து அரைச்சி போடப்பா.
(வேலன் போகிறான். ராஜா, கீழே கிடந்த கத்தியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.]
----------------
காட்சி 8
இடம் : ஜமுனா வீடு - கூடம்
இருப்போர் : ஜமுனா, மிராசுதார்
[ஜமினா, மிராசுதாரருக்குப் பானம் தருகிறாள். அவர், சரசமாடிக் கொண்டே அதைப் பருகுகிறார். வெளியே குரல் கேட்கிறது. அவள் எழுந்து உள்ளே போய்விடுகிறாள். ]
(மிராசுதார். உள்ளே வா, என்று உத்தரவிடுகிறார். ராஜா, கூடத்துக்கு வருகிறான், மிராசுதார் குடி வெறியில் உளறுகிறார்.)
மி : யார் நீ? தெரியலையே!
ரா: (பானத்தை எடுத்துப் பருகிவிட்டு) தெரியலே!..... நான்தான் ஜமுனாவுக்குத் தம்பி!
மி : (குடிவெறியால் ராஜாவைத் தழுவிக்கொண்டு) அடெ, நம்ம மச்சானா! மச்சான் - சும்மா சாப்பிடு .... சாப்பிடு மச்சான் ......... எனக்குத் தெரியவே தெரியாதே ... ஜமுனா சொல்லவேயில்லையே. ஜமுனா! ஜமுனா!! ஜமூனா!!-!
[ஜமுனா வருகிறாள்]
ரா : அக்கா! கொஞ்சம் அத்தானிடம் இரகசியம் பேசணும், உள்ளே போய் இரு.
ஜ : யார் இவரு? அக்காவுக்கு ஒரு தம்பி வந்து முளைச்சாரு? ரா : (மிரட்டுகிற பாவணையில்) ஜம்னாக்கா! உள்ளே போ!
ஜ: (கோபத்துடன்) அடயாரடா இவன், அறிவு கெட்டவன் -- என் வீட்டிலே வந்து. என்னை உள்ளே போகச் சொல்ல .
மி : என்னா ஜமுனா இது? அக்காவுக்கும் தம்பிக்கும் சண்டையா?
ஜ: கர்மந்தான்! குடித்துவிட்டு வெறியிலே உளறாதிங்க. ரா : உள்ளே போகிறயா, இல்லையா? ஜ : அடடே! இவரு பெரிய சூரப்புலி!
ரா: (கோப்பையை வீசி எறிந்து ) போடி உள்ளே! போடின்னா போ - (கத்தியைக் காட்டுகிறான்- ஜமுனா உள்ளே ஓடிவிடுகிறாள் பயந்து - திகைக்கும் மிராசுதாரன் வாயைக் கட்டி விட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு, ராஜா ஓடிவிடுகிறான்.)
-----------------
காட்சி 9
இடம் : வேலன் வீடு.
இருப்போர் : வேலன், வீராயி, மருதை.
[ராஜாக்கண்ணு, வீட்டுக்குள் நுழைகிறான். அழுகுரல் கேட்கிறது. ஐயோ! என்று அலறிக் கொண்டு ஓடுகிறான். தம்பி மருதை இறந்து கிடக்கிறான். வேலனும் வீராயியும் புரண்டு அழுகிறார்கள். ராஜாக்கண்ணு, தம்பி மேல் புரண்டு கதறுகிறான்.]
ரா : தம்பி! கடைசியில் நீ செத்துவிட்டாய்! ஆமாம்! தடி தடியாக நாங்கள் இருத்து என்ன பிரயோசனப்பட்டது - பழிகார உலகமே! ஏழையைப்பார்! குடிக்கவும் கூத்தி வீட்டுக்குப் போக வும், ஏழையின் வயிறு எரியப் பணத்தைப் பிடுங்கும் பணக்கார சமுகமே! உன் மனம், கல்லா, இரும்பா? இரக்கம் இல்லாத நெஞ்சு! ஈரமில்லாத நெஞ்சு! உன் வஞ்சகம் எப்போது ஒழியும். (தம்பி மேல் விழுந்து) எப்போதடா தம்பி! இந்த உலகத்திலே ஏழையின் குலை நோய், எப்போதடா தீரும். நமக்கு விடுதலை, விமோசனம், வாழ வழி, எப்போதடா தம்பி கிடைக்கும்? உன்னைப்போல, பிண மான பிறகுதானா? ஏழைகளுக்கு இந்த உலகத்திலே இடம் இல்லையா? காலமெல்லாம் என் தகப்பனாரை வேலை வாங்கிய காத கன் கடுகளவுகூட இரக்கம் காட்டவில்லையே! பாழும் பணத்தை (நோட்டுக்களைக் கசக்கிக் கீழே வீசியபடி) ஊரை மோசம் செய்து பலகுடும்பங்களை நாசம் செய்து, சேர்த்த பணத்தை, ஜமுனாவுக் குத் தர மனம் இருந்தது, என் தம்பியின் உயிரைக் காப்பாற்ற மனம் இல்லையே! பணமே! பணமே! பாபிகள் கையில் கொஞ்சி விளையாடும் பணமே! இதோ என் தம்பியின் பிணம்! நீ இங்கே முன்பு இருந்திருந்தால், என் தம்பி பிழைத்திருப்பான். தூ! இனி என் கால் தூசுக்குச் சமானம் நீ (நோட்டுக்களைக் காலால் துவைக்கிறான்.)
[ இரண்டு போலீசார் உள்ளே வருகிறார்கள்.]
போ : யார்டா இங்கே, ராஜாக்கண்ணு! ரா : நான்தான் ......... போ : இதென்ன இங்கே?
ரா: என் தம்பி .
போ : செத்து போயிட்டானா? பாவம் : கர்மம்! சரி. நீதானே ஜம்னா வீட்டிலே புகுந்து கலாட்டா செய்து மிராசுதார் பொருளைத் திருடிக்கிட்டு ஓடிவந்தது.
ரா : ஆமாம்.
போ : எவ்வளவு நெஞ்சழுத்தம்! பயல், பட்டணமோ, பிடித்துத் தள்ளிகிட்டுவா .......
வீ : (அவர்கள் காலைத் தொட்டு) ஐயா! தருமப் பிரபுக்களே! இங்கே பிணம் கீழே கிடக்குதே - அவன் தம்பிங்க .... தகனம் செய்தூட்ட பிறகு, இழுத்துக்கிட்டுப் போங்க... உங்கக் காலைக் கும்பிடறேன்... ஐயா! நீங்க பிள்ளே குட்டியைப் பெத்தவங்கதானே.
வே : ஐயாவுங்களே நானும் கும்படறேன்.
போ : அதெல்லாம் ஸ்டேஷன் போன பிறகு, ஐயாகிட்டச் சொல்லணும். டே! ராஜாக்கண்ணு! புறப்படு.
வீ : ஐயா! கொஞ்சம் ஈவு இரக்கம் காட்டுங்களய்யா! தம்பி பிணத்தைப் போட்டுட்டு எப்படிய்யா, அண்ணன் காரன் வருவான்.
ரா : அம்மா, அழாதே! இரக்கம் இரக்கம் என்று ஏனம்மா இல்லாத ஒன்றைக் கேட்கிறாய். டாக்டரைக் கேட்டாயே இருந்ததா? எஜமானரை அப்பா கேட்டாரே, இருந்ததா? பைத்தியம் உனக்கு.
[போலீசுடன் போகிறான்.]
------------
காட்சி 10
இடம் : பாதை. இருப்போர் : போலீசார், ராஜாக்கண்ணு.
(ராஜாக்கண்ணு, கையில் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறான்.)
போ 34: என்னமோ போண்ணேன்! எனக்கென்னமோ வர வர இந்த வேலையே பிடிக்கலே. அதிலேயும் இந்தமாதிரி சமயத்திலே ரொம்பக் கண்றாவியா இருக்கு.
போ 48: அதைப் பாத்தா முடியுமா 34? டியூடின்னா டியூட்டி தானே! கண்ணைக் கசக்கினா கூட நாம்ப என்ன செய்யறது - இவன் வீட்லே தம்பி செத்துப் போயிட்டானே, தகனம் செய்ற வரை, சும்மா இருக்கட்டும்னு சொல்லத்தான் வேணும்னு தோணுது. நமக்கு மட்டும் இரக்கம் இல்லாமலா போகும்? ஆனா, விட்டா, பய, ஓடிடுவானே, பிறகு நாம்ப சஸ்பெண்டு தானே, ஏம்பா! நம்ம பெண்டு பிள்ளைக் கதி என்ன ஆகும்?
34: நீ சொல்லறதும் நியாயமாத்தான் இருக்கு. இவங்கிட்ட வும் இரக்கமாகத்தான் வருது.
[ஒரு ஆசாமி ஓடோடி வந்து, 48- ம் நம்பர் கான்ஸ்டபிளைப் பார்த்து]
வந்: மாமா! அக்காவை, பாம்பு கடிச்சிடிச்சி, ஓடிவா .....
48: ஐயோ! என்னா! பாம்பா! அடிபொன்னி! ஐயயோ! 34, என் சம்சாரத்தைப் பாம்பு கடிச்சிடிச்சாமே.
போ 34: பதறாதே 48, வீட்டுக்கு ஓடிப்போயி, ஏதாச்சும் மந்தரம் மருந்து பாரு . அட தெய்வமே! எவ்வளவு நல்ல மனுஷரு. இவருக்கு இப்படி ஆபத்து வந்ததே.
போ 48: 34! எனக்கு ஒரு இடமும் தெரியாதே .
34: அழாதே 48! அழாதே. பாம்புன்னா, வெறும் தண்ணிப் பாம்பாகூட இருக்கும், பயப்படாதே!
48: எந்தப் பாம்போ - என்ன ஆகுதோ - அவ ரொம்பப் பயங்காளிப்பா - பாம்புன்னாலே உயிர் போயிடுமே - எங்கே யாவது மந்திரக்காரன் ..........
34: இருக்கு, ஒருவில்லிகிட்ட...........
48: அந்த வில்லி ................
34: ஏம்பா! அந்த இருளன், ஊர்க்கோடியிலே இல்லவா இருக்கறான்.
48: (பதறி) உலகத்துக் கோடியா இருந்தாக்கூட போகத் தானே வேண்டும். இரக்கம் துளிகூட இல்லையா உனக்கு. வாப்பா!
34: இந்தப் பயலை .......
48: இவனா? கிடக்கட்டும், பிறகு பார்த்துக்கொள்வோம்பா.
34: ஓடிப் போயிட்டா ?
48: அங்கே உசிரு போயிட்டா என்னப்பா செய்யறது! ஐயோ! பொன்னி!
34: (ராஜா, கைவிலங்கைக் கழற்றிவிட்டு) டே! நீயும் ஓடிப் போயி, உன் தம்பி தகன காரியத்தைக் கவனிச்சிட்டு ரெடியா இரு வீட்லே .
ரா : ஆகட்டுங்க.
34: என்னா? ஐயோ, பாவமனு இரக்கத்தாலே உன்னை வீட்டுக்கு அனுப்பறேன் - ஏமாத்தினா ......?
48: வாப்பா, ஏமாத்தமாட்டான். நான் எம்மாந் துடியாத் துடிக்கறேன் - ஈவு இரக்கமில்லாமே இப்பத்தான் அந்தப் பயகிட்ட பேசிகிட்டு இருக்கறே.
34: பாவம்! அவனும் போய், தம்பி காரியத்தைக் கவனிக் கட்டும் - வா! வா! பாம்பு கடிச்சா ஒரு பச்சிலை கொடுப்பான். அந்த வில்லி. போயிடும்.......
48: என்னாப்பா?
34: விஷம் போயிடும்பா.
[போகின்றனர்] [ராஜாக்கண்ணு தனிமையில் ]
ராஜா : மனிதர் கைவிட்டனர் - பாம்பு காப்பாற்றுகிறது என்னை!
இரக்கம் காட்டமுடியாது! டாக்டர் - மிராசுதாரன் - சுடலை - 34 - 48 - சகலரும் கூறினர்! உலகமே கூறுகிறது - ஒருவர் இருவர் இரக்கம் காட்ட வேண்டும் என்று பேசுவர், முடிவதில்லை காட்ட. பாம்பு கடித்தது என்ற உடனே, பாவம் போய் உன் தம்பியைத் தகனம் செய்துவிட்டுவா! என்று இரக்கம் பேசினார்கள்! இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள். அதற்குள் ஓடிவிட வேண்டும் - ஆமாம்! திருட்டு ரயில் தான் பிறகு? கப்பல்! கண்காணாச் சீமை!......... என்னைப்போல் எத்தனையோ பேர்! இரக்கத்தைத் தேடி அலைந்து ....... உரு மாறினவர்கள்.
----------------
4. கல் சுமந்த கசடர்
காட்சி 1
இடம் : வீரர் கூடாரம்.
காலம் : காலை
உறுப்பினர் : வீரர்.
நிலைமை : ஒரு வீரன் பாடுகிறான் மற்றவர் இரசிக் கின்றனர். மற்றோர் வீரன் ஓடிவருகிறான். பாட்டைக் கேட்கிறான். கேட்டுவிட்டு .........
வீரன் : எதன்மேல் ஆணை? எதன் மேல் ஆணை?
பாடிய வீரன் : ஏன்? தாயின் மேல் ஆணை. தந்தைமேல் ஆணை. தமிழகமேல் ஆணை.
வீ : தமிழகமீது ஆணையா! உண்மையாகவா?
பா. வீ : என்ன நண்பா உனக்குத் திடீரென்று சந்தேகம் வந்துவிட்டது.
வீ : நண்பா ! தாயின் மேல் ஆணையிட்டு, தமிழகத்தின் மானத்தைக் காக்கப் போரிடும் வீரர்கள் நாம். ஆனால் இதனை வெறும் வீண் பேச்சு என்று கருதுகிறார்கள்.
பா. வீ : யார் அத்தகைய அறிவாளிகள் !
வீ : நாம் வாயாடிகளாம். நமது மன்னனும் அப்படித்தானாம். நாம் ஏதும் செய்யமாட்டாதவர்களாம்.
பா. வீ : சொன்னவன் யார்? அதைக் கேட்கும் போது நீ மரமாகவா நின்றாய்?
வீ: இல்லை. காற்றென ஓடிவந்தேனிங்கு . பங்கப்படுத்தும் அந்த மாபாவிகளின் மண்டைக் கர்வத்தை மன்னனிடம் கூற ஓடோடி வந்தேன்.
பா. வீ : என்ன துணிவு ! எவனுக்குப் பிறந்த தந்த ஆணவம்! எங்கே இருக்கிறான் அந்த மரமண்டைக்காரன்? அங்கத்திலா? கலிங்கத்திலா? எங்கேயிருக்கிறான்? யாரவன்?
வீ : தமிழனை, தமிழகத்தை , தமிழ் மன்னனான, நமது சேரன் செங்குட்டுவனை இழிவாகப் பேசியவர்கள் அங்கத்திலே இல்லை, கலிங்கத்திலேயில்லை, கங்கைக் கரையிலே உள்ளனர் அக்கயவர்கள், கனகன் விஜயன் என்பது அக்கசடரின் பெயர்.
பா. வீ : ஆரிய மன்னர்களா?
வீ : ஆம்! அந்தப் பதர்கள் தான். அடங்கிக் கிடந்த கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. கைகட்டி வாய் பொத்தி நின்ற கூட்டம் கொக் கரிக்கிறது. நமது தமிழரைக் கேவலமாகப் பேசுகிறது.
பா. வீ : ஆகா ! வீரரை வீணர் கேலி செய்தனரா? போருக் கஞ்சாத நம்மை புரட்டர் கூட்டம் இகழ்ந்து பேசிற்றா? என்ன காலம்! என்ன கோலம் ! கனக விஜயருக்கு காலம் முடிந்து விட்டதோ இந்தக் கர்வங்கொள்ள! புலியைப் பூனை போருக் கழைக்கிறதா? புறப்படுங்கள் போவோம் நமது பூபதியிடம், அந்தப் புல்லரின் விஷயத்தைக் கூறுவோம். போருக்குக் கிளம்புவோம்.
வீ : அந்த ஆரியமுடி தாங்கிகளை அடித்து நொருக்குவோம்.
------------
காட்சி 2
இடம் : சேரன் மாளிகை
காலம் : காலை
நிலைமை : சேரனும் ஒரு புராணீகனும் தனியாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர் : புராணீகன் இராமா யணக் கதையைக் கூறுகிறான்.
புரா : ஆரண்யத்திலே ஸ்ரீராமச்சந்திரர் சீதாபிராட்டியாரைத் தேடித்தேடியலைந்து அழுது கொண்டிருக்கிறார். தம்பி லக்ஷ்மணன் அண்ணா ! இது நம்முடைய போறாத காலம், தாங்கள் இதற்காக இப்படிப் புலம்புவதா? என்று கூறி..........
சேரன் : மறையவரே! என்ன சொன்னான் அந்த இலக்ஷ மணன்? சீதையை எவனோ களவாடிக் கொண்டு போனானென்று தெரிந்துமா அண்ணனுக்குப் போறாதவேளை, போனால் என்ன என்று கூறினான்?
புரா : ஆமாம். இராமருடைய சோகத்தைத் தணிக்க.......
சேரன் : சரி . பிறகு கூறும் கேட்போம்.
புரா : ஆரண்யத்திலே அலைந்து திரிந்து வருகையிலே, ஸ்ரீராமச்சந்திரருக்கு, வானர குலத் தலைவரான சுக்ரீவனுடைய சிநேகிதம் கிடைத்தது. சுக்ரீவனுக்கும் அவன் அண்ணன் வாலிக்கும் பகை. இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் தருவதாக வாக்களித்தார்.
சேரன் : யார் வாக்களித்தது? மனைவியை இழந்து எப்படிக் கண்டுபிடிப்பது என்று மார்க்கம் தெரியாது மருண்டு போயிருந்த இராமன், வாலியைக் கொல்வதாக வாக்களித்தானா? என்ன மறையவரே ! வேடிக்கையாக இருக்கிறதே. வாலியின் வீரதீர பராக்கிரமத்தைப் பற்றிப் பலர் கூறுவர் ...............
புரா : ஆமாம், ஆனால் ஸ்ரீராமச்சந்திரர் சாமான்யரோ, ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் அவதாரமல்லவோ!
சேரன் : அவதார புருஷருக்குத்தான் மனைவி பறிபோகும் ஆபத்து நேரிட்டது போலும்! சரி அந்த வேடிக்கை கிடக்கட்டும் வாலிக்கும் சுக்ரீவனுக்கும் பகை இருந்தது. அது கேட்ட இராமர் ............
புரா : வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டமளிக்க வாக்களித்தான்.
சேரன் : பேஷ்! உன் இராமன் பெரிய வஞ்சகனாக வல்லவோ காணப்படுகிறான்.
(புராணீகன் காதுகளைப் பொத்திக்கொள்கிறான்.]
சேரன் : ஆம் மறையவரே! அந்த வஞ்சகத்தைக் காதால் கேட்பது கூடத் தகாதுதான். அண்ணன் தம்பிக்குச் சண்டை ! இந்த ஆரிய இராமனிடம் அந்த வானரன் முறையிட்டான். நீதிமானாக, தர்மவானாக இருப்பின், இருவருக்குள் நேரிட்ட விரோதத்தைப் போக்கிச், சமரசம் உண்டாக்கியிருக்கவேண்டும். அப்பா வாலி! வா இப்படி, ஒரு தாய் வயிற்றிலுதித்த நீங்கள் இப்படி விரோதித்துக்கொள்வதா? இதேபார் என்னை என் பக்கத் தில் இருப்பது இலட்சுமணன். என் தம்பி. என்னைத்தான் என் சிற்றன்னை பதினாலு ஆண்டு காடு செல்லவேண்டுமென்றாள். நான் விரைவாகக் கிளம்பினேன். என் தம்பி இலட்சுமணன் என்னைவிட்டுப் பிரிய மனமின்றி, தானும் வனவாசம் ஏற்றான். இப்படி இருக்க வேண்டும் அண்ணன் தம்பி ஒற்றுமை என்று கூறியிருக்க வேண்டாமா? அதை விட்டான். அண்ணன தம்பிக்குள் கிளம்பின சண்டைக்குள் புகுந்தான்.
[இதைக் கேட்டுக்கொண்டே வந்து நின்ற வில்லவன்]
வில் : மறைந்திருந்து அம்பெய்தி வாலியைக் கொன்றான். சேர : (திரும்பி) மறைந்திருந்தா?
வில் : (புராணிகரை நோக்கி) கூறுவதுதானே மறையவரே! மறைந்திருந்து, மரத்தின் பின்புறமிருந்துதானே, இராமன் வீர வாலியின் மீது அம்பெய்திக் கொன்றான்.
புரா : அப்படித்தான் கதை ............
வில்ல : இப்படி நெருக்கடியான கேள்வி கேட்டால் இது கதை. கேள்வி கிளம்பாத வரையிலே அது கடவுள் புராணம். மன்னா! இதுபோல நயவஞ்சகம், துரோகம், சதி முதலியவை நிரம்பிய பல கதைகள் தான் ஆரியருக்குள்ள புராணக் கதைகள்.
சேர : சேச்சே ! என்ன இருந்தாலும் ஒரு வீரன், மன்னன், வாலியை மறைந்திருந்து கொல்வது மிக மோசம், கேவலம் ....
புரா : (வில்லவனை நோக்கி) பேடித்தனம், கூறுமே வில்லவரே!
வில்ல : எனக்கு அந்தச் சிரமிமின்றி தாங்களேதான் கூறி விட்டீர்களே, அந்தக் கோழைத்தனமும் சுயநலத்தோடு கூடியது.
புரா : என்னப்பா நயநலம்? கிஷ்கிந்தையை இராமர் ஸ்வீகரித்துக் கொண்டாரோ? சுக்ரீவனுக்கல்லவோ பட்டாபி ஷேகம் செய்துவைத்தார்.
வில்ல : பட்டங்கட்டினார்? எதற்கு? வானரப்பட்டாளத்தை அரக்கர் படைமீது ஏவ.
சேர : உண்மைதான், சுக்ரீவனுக்கும் இராவணனுக்கும் ஒரு விரோதமும் கிடையாது. ஆனால் சுக்ரீவனுடைய படைதான் இராவணப் படையைத் தாக்கிற்று.
வில்ல : இருதரப்பிலும் நஷ்டம், ஆரியப்படை யோ அயோத்தியிலே நிம்மதியாக இருந்தது,
(இரு வீரர் ஓடிவந்து வணங்குகிறார்கள்.)
வில்ல : ஏன்? என்ன ! ஏன் இப்படி அவசரம்?
வீரன் : மன்னா ! வணக்கம். தமிழ் நாட்டை இழிவாகப் பேசுகின்றனர்.
வில் : எந்தப் பித்தர் பட்டியிலே கண்டாய் அந்தச் சத்தற்ற ஜன்மங்களை? தமிழரைத் தாழ்வாகப் பேசும் அளவு தலைக்கு வெறியேறிய தருக்கர் யார்?
வீரன் : கங்கைக் கரையிலே கனகன், விஜயன், என்று இரு ஆரிய மன்னர்கள் உள்ளனர்.
சேர : ஆரிய மன்னர் ! ஆரியரிலே மன்னர்களும் உள்ளனர்
வில் : மன்னராக இருப்பதுடன், மமதையாளராகவும் உள்ளனர். அந்தப் பதர்கள். நமது தமிழ் மரபினைக் குறித்துக் கேவலமாகப் பேசினராம். கேலி செய்தனராம் தமிழ்க் குடியினரை கேட்டீர்களா இந்தக் கெடுமதியாளர்களின் போக்கை! சிங்கத்தைக் கேலி செய்யும் செந்நாயைக் கண்டதில்லை. விழி பழுதானவன் வழி காட்டுவோனை கேலி செய்ததில்லை, வீணர்கள் வீரர்களைப் பழிக்கின்றனர்.
சேரன் : ஆகா ! அவ்வளவுக்குத் துணிந்துவிட்டனரா? இடம் கிடைக்காது திண்டாடி இங்கே வந்த சடங்கள் இப்போது படமெடுத்தாடும் பாம்பாகிவிட்டனவா? ரோம் நாட்டு வீரரும், யவண நாட்டுத் தீரரும், தமிழரின் வீரத்தைப் பாராட்ட , கலிங்க மும், காந்தாரமும் வங்கமும் அங்கமும் மூவேந்தரின் திறத்தைப் பாராட்டியிருக்க, பிழைக்க வந்த கூட்டம் நம்மை இழிவாகப் பேசுவதா? தமிழகம் அவ்வளவு தாழ்ந்துவிட்டதா?
வில் : திக்கெட்டும் புகழ் பரப்பிய தீரனே!
சேர : போதும் நிறுத்து, எட்டுத்திக்கும், என் புகழ் பரவிற் றென்று, இங்கே நின்று புகழ்ந்து பேசுகிறாய், அங்கே அந்த ஆரிய மன்னர் என்னையும், உன்னையும், நம்மைத் தாங்கி நிற்கும் தமிழகத்தையும் தாழ்வாகப் பேசினர்.
வில் : கட்டளை யிடுங்கள் காவலரே ! அந்தக் கருத்தறியாக் கயவரின் குருதி கங்கையிலே கலக்கச் செய்கிறேன். வீங்கிக் கிடக்கும் தோள் எதற்கு? தூங்கிக் கிடக்கும் இந்த வாள் எதற்கு? தங்கள் தாளிலே அந்தத் தருக்கரின் முடியினைக் கொண்டுவந்து வைக்கிறேன். அவர்கள் நாடுகள் காடாகும். மாளிகைகள் மண்மேடாகும். வயல் வெளியாகும். பிணக் குவியலைக் காட்டுகிறேன்.
சேர : வில்லவா! உன் வீரப் பேச்சு என் மனப்புண்ணைக் கொஞ்சம் ஆற்றுகிறது. ஆனாலும் அறிவும் ஆற்றலும் அற்ற கூட்டம் ஆண்மையாளராம் தமிழரைக் கேலி செய்தது பற்றி எண்ணினால் என் உள்ளம் பதறுகிறது. எங்கிருந்து பிறந்தது அந்தத் துணிவு? வடநாடு இப்போது எந்த வகையிலே உயர்ந்துவிட்டது. ஏன் இந்த மமதை பிறந்தது?
வில்: வடநாடு ஆரியக்காடாகி விட்டது. மன்னர் மன்னவா! அங்கு இப்போது போர் என்றால் மன்னரும், வீரரும். எதிரியை முறியடிக்க எவ்விதம் தாக்குவது? வட்டவடிவிலே படையை அமைப்பதா? விலாப்புறத்தில் தாக்குவதா? வில் வீரரை முதலிலே நிறுத்துவதா? வேழப் படையை அனுப்புவதா? என்று போர் முறை பேசிடுவர். புரோகிதக் கூட்டம் குறுக்கிட்டு, இன்ன யாகத்தை இவ்விதம் இன்றிருந்தே செய்தால் இந்திரன் வஜ்ராயுதத்தைத் தருவான். இத்தனை வேளை இத்தனை ஆயிரம் ஆரியருக்குச் சமாராதனை நடத்தினால் அக்கினி பகவான் அருள் புரிவான். எவன் எதிர்த்தாலும் வெற்றி நமக்கே கிடைக்கும் என்று புளுகுவர். மன்னன் மந்திரியைப் பார்ப்பான். மந்திரி பொக்கிஷக்காரனைப் பார்ப்பான். பூசுரன் செலவுக் கணக்கைக் கூறுவான். பொருளைப் பெறுவான். களத்திலே வீரர்களின் விழியிலே வேல்பாயும். பர்ணசாலைகளிலே அந்தணன் வயிற்றிலே வகைவகையான உண்டி பாயும். போரிலே வீரர் பல்லாயிரவர் ஆர்ப்பரிப்பர். ஆலயங்களிலே அந்தணர் . அந்தி பூஜை அர்த்த ராத்திரி சேவை என்று காரியங்களிலே ஈடுபடுவர். வீரனின் இரத்தம் அங்கே சிந்தும். இங்கே வேதியக் கூட்டம் விலாப்புடைக்கத் தின்று, தின்றது செரிக்கச் சந்தனம் பூச, பூசிய சந்தனம் கீழே சிந்தும். அமளியிலே அங்கங்கள் அறுபடும்; இங்கு அரசாங்கப் பொக்கிஷம் அந்தணர் ஏற்பட்டால் குறைவுபடும். இந்த முறையில் ஆரியம் அங்கு வேலை செய்கிறது. அரசுகளை அழிக்கிறது அவனிகாவலா!
சேர : ஆற்றோரத்திலே ஆடு மேய்த்து. மலைச்சரிவிலே * மாடு மேய்த்து மானையும் பன்றியையும் வெட்டித் தின்று, நெருப் பையும் நீரையும் கும்பிட்டு, சோமரசமும் சுரபானமும் பருகி, பெளண்டரீக யாகமும் பிறவும் செய்து கிடந்த கூட்டம், கோட்டைகளைத் தகர்த்து, கொத்தளங்களைத் தூளாக்கி படைபல வென்று தடைபல கொன்று தன்மானத்தையே தரணிவாழ் மக்கள் போற்றவேண்டும் எனப் பரணி பாடி வாழும் தமிழரை. நம்மை நிந்திப்பதா? பச்சை கண்டு இச்சை கொண்ட நச்சு நினைப்பினர் செங்குருதி பாய்ச்சி செந்தமிழர் வீரத்தை நிலைநாட்டி தங்கக் கோட்டைகளிலே வைரமணிகளென ஒளி விட்டு விளங்கு வீரராம் தமிழரை, கேலி மொழி பேசுவதா? ஆஹா! அவ்வளவு துணிந்து விட்டதா அந்த ஆற்றலற்ற கூட்டம்! எவனுடைய தயவு கிடைத்துவிட்டதாம் அந்தப் பவதி பிக்ஷாந் தேகிகளுக்கு ! யார் அவர்களுக்குத் துணை? தேவனா! மூவனா? தேய்ந்து வாழும் சந்திரனா? தெருப் புழுதியுடன் விளையாடும் வாயுவா? சாக்கடையிலும் சரசமாடும் வருணனா? எந்தக் கற்பனைக் கடவுளை நம்பி இந்தக் காரியம் செய்யத் துணிந்தனர்?
வில் : யார் முன்னின்று, ஆரிய மன்னருக்கு இந்தத் தைரிய மளித்திருந்தாலும் சரி, மன்னர் மன்னவா! மண்ணிலே என் உடல் வீழ்வதாயினும் சரியே அந்த மாற்றார்களை மண்டியிடச் செய்வேன். இது உறுதி, சத்தியம். தமிழகத்தின் மீது ஆணை யிட்டுக் கூறுகிறேன். போர் தொடுக்க உத்தரவு அளியுங்கள்.
சேர : ஆம்! போர்தான்.
-----------------
காட்சி 3
இடம் பாசறை
நிலைமை : படை அணிவகுப்பு. மன்னர் பார்வையிட வருகிறார். படையினர் மன்னரை உற்சாகமாக வரவேற்கின்றனர்.
படையினர் : மன்னர் மன்னவன் வாழ்க ! தமிழ் மாநிலம் வாழ்க ! சேரன் செங்குட்டுவன் வாழ்க!
மன்னன் : தமிழ் மாநிலம் வாழ்க ! வீரர்காள் ; உண்மை உரை அது. தமிழ் மாநிலம் வாழ அதன் கீர்த்தி பரவ உங்கள் குருதியைக் கொட்ட வேண்டுமென்று, கேட்டுக்கொள்ளவே இன்று இங்கே உம்மை அழைத்தேன். ஆரிய நாட்டின் மீது படையெடுக்க நாம் தீர்மானித்து விட்டோம். மண் பெண் பொன் என்ற மூன்றுக்காக மாநிலத்திலே போர் மூளுவது உண்டு. நாம் மண் வேண்டியோ, பெண் தேடியோ , பொன் கோரியோ போருக்குக் கிளம்பவில்லை. மாநிலத்தின் பூந்தோட்டம் தமிழகம். மறக்குடித் தமிழரின் மதிமுகவதிகள் மயக்கமொழி பேசி மஞ்சமிழுப்போனை தயக்கமின்றித் தழுவிடும் வழுக்கிவிழுந்த வனிதையரல்ல. வீரப்பெண்மணிகள் ! பொன் நமது காலடி யிலே! நமது மணி மாடங்களிலே தேனிடையூறிய செம்பவள இதழ்ச் சேயிழையார் தத்தமது காதலருடன் தென்றலையும் திங்களையும் வென்று வாழ்கின்றனர். மண் பெண் பொன் எனும் மூன்றிற்குமல்ல நாம் போரிடுவது. மானத்துக்கு பல்லைக் காட்டி வாழ்ந்த கூட்டம் தமிழகத்தின் எல்லையைத் தாண்டி ஓர் கொல் லையை ஆண்டு வருகிறது. அது புன்னகைப் பூந்தோட்டமல்ல. செந்தமிழ் செழிக்கும் சோலையுமல்ல; கங்கைக்கரையோரத்திலே கசடர் இருவர் கனகன், விஜயன் எனும் பெயரினர், அரசர்களாக உள்ளனராம், சீறிப் போரிடும் வேங்கைகள் உலாவும் காட்டிலே சிறுநரிகள் உள்ளது போல்! அங்கு அவர்கள் வாழ்வதை நாம் தடுத்தோமில்லை, பொருட்படுத்தவுமில்லை. மல்லிகைத் தோட்டத்தின் வேலி ஓரத்தில் உள்ள கள்ளி என்று அதனை மதித்தோம். அந்தக் கொல்லைக்காவலர் நாமெல்லாம் கல்லாகாதிருக்கும் இந்த நாளில், உமது கரத்திலே கட்கமும் கருத்திலே வீரமும், உடலிலே தமிழ் இரத்தமும், உயிரிலே தன்மானமும், விளங்கும் இந்த நாளிலே, நான் நெடுமரமென நின்றிருக்கும் போது, என் முன்னோர்களின் வீரதீர வெற்றிகளையறிந்து மறவாதிருக்கும் நான் மண்டலத்தை ஆளும் நாளில், அந்த மமதையாளர்கள், மனுசந்ததியார் தமிழரை, தமிழகத்தை, தமிழ் வீரத்தை தன் மானத்தைப் பழித்துப் பேசினர், இழித்துரைத்தனராம்.
என் ஆட்சியிலே நேரிட்டது இந்த அவமானம். நான் வெட்கப்படுகிறேன் வீரர்காள். போர்ப் புலிகளாகிய உங்களை ஆளும் பாக்கியம் பெற்ற நான் தமிழரின் வெற்றிச் செய்திகளை விருந்தாக அளித்திடுவது முறை. கோலளித்தமைக்கு நான் செய்ய வேண்டிய கடமை, கைம்மாறு. ஆனால் நான், உங்கள் முன்னால் மூவேந்தரில் முதல்வன் என்று பேசப்படும் நான், உங்கள் முன் இதோ நிற்கிறேன் ஆரியர் தமிழரை இழிவுபடுத்தினர் என்ற செய்தியைக் கூறிக்கொண்டு. வாள் ஏன் எனக்கு! முடி ஏன் எனக்கு? தமிழ் மண்ணிலே நான் வாழ்வானேன்? தோழரே! நான் ஓர் ஒதியமரம் என்பது போலும் அவர்தம் நினைப்பு : சேர மண்டலத்திலே வீரர் இல்லையா, இந்தச் செருக்கரின் சிரம் அறுக்க. போர் வீரர் கூட்டம் கூனி விட்டதா? போர்த்திறம் இழந்தோமா! தோள்வலியும் மனவலியும் போயினவா? முன்னோரின் புகழுக்கு நாம் மாசுகளா? முதுமொழிகளுக்கு கரையான்களா? ஆண்மையற்ற கூட்டமா? அஞ்சிவாழும் ஆமைகளா? நயவஞ்சக நரிகளா? நாமா? திரு இடத்தவரா? ஒருபோதும் இல்லை. நாம் ஏறுகள். நாம் தமிழர் . கொலைவாளைத் தூக்குவோம் கொடுமை களைவோம். மாற்றானின் ஆயுதங்களை நமது மார்பு எனும் மதிலில் வீசச்செய்வோம், மகிழ்வோம். உமது குருதியைக் கொட்ட களத்திலே பிணமாவதானாலும் அதற்கும் அச்சாரம் வாங்கி விட்டேன். உங்கள் வீரத்தின் மேல் ஆணை யிட்டேன் : ஆரிய மன்னருக்கு இறுதிச்சீட்டு அனுப்பி விட்டேன்; என்னாளிலே என் தமிழர் இழிமொழி கேட்டும், வாளாயிருந்தனர் என்ற வசை மொழியை என் இரத்தத்தைக் கொண்டு கழுவிடத் தீர்மானித்து விட்டேன். அதைக் காண வாரீர் என்று உம்மை அழைக்கிறேன். தமிழகம் காணிக்கை கேட்கிறது; வீரத்தை, தியாகத்தைக் கேட்கிறது : இங்கே வீரர்கள் இல்லையா? ஆண்மையாளரே! கிளம்புங்கள். சிங்காரத் தமிழகத்தைச் சின்னாட்கள் மறந்திருங்கள். காதலை, கவிதையை , காட்சியை, மறந்திடுங்கள். வானமே கூடாரம், தரையே பஞ்சணை ஆயுதங் களே தோழர்கள். இதற்கழைக்கிறேன் உம்மை. உயிரைக் கரும்பெனக் கருதுவோன் விலகட்டும். மானத்தைப் பெரிதென மதிப்போர் வாளை முத்தமிட வரலாம். வாகை சூடிடத் தமிழகம் நம்மை அழைக்கிறது. பெற்று வளர்த்து பெருமைப்படுத்திய தமிழகம் அழைக்கிறது. உங்கள் தந்தையர் நாடு அழைக்கிறது! வர இசைபவர் யார்?
படையினர் : எல்லோரும் ! எல்லோரும்.
-----------------
காட்சி 4
(வீரர்கள் கீதம்)
இடம் : பாதை.
[அடிப்போம், மடல் கெடுப்போம், முகத்திடிப் போம், குடல் எடுப்போம், இடுப்பொடிப்போம், சிரம் உடைப்போம், வசை துடைப்போம், உயிர் குடிப்போம், வழி தடுப்போம், பழி முடிப்போம், இனி நடப்போம்.]
கோஷம் : துாக்குவீர் கத்தியை , தாக்குவீர் எதிரியை.
--------------
காட்சி 5
இடம் : களம்,
உறுப்பினர் : வீரன், வில்லவன்.
வீரன் : தலைவரே! மாற்றார்கள் மனம் மருண்டு விட்டனர். அவர்களின் படை வரிசை கலைகிறது. போர் வீரர்களின் முகத்திலே பயந்தோன்றிவிட்டது. நாம் முன்னேறித் தாக்கத் தாக்க எதிரியின் படை வரிசை பிண வரிசையாகி வருகிறது. எதிரிப் படைத் தலைவன், இறுமாப்பால் தமிழரைத் தாழ்வாகப் பேசிய கனகன் மிரண்டு ஓடுகிறான், விஜயன் பின் தொடர்; நமது குதிரை வீரர்களை அனுப்பி அவனைப் பிடித்து விடுகிறேன். களத்திலே அவன் தலை உருளட்டும். அவன் பிணமாவதைக் கண்டு எஞ்சியுள்ள அவனது சேனையின் நெஞ்சு பஞ்சாகட்டும். தஞ்சம் தஞ்சமென்று அந்தப் பஞ்சைகள், நமது மன்னன் திருவடி பணிந்து கெஞ்சட்டும். கட்டளையிடுங்கள் ! கண்கலங்கி நிற்கும் அந்தக் கதியற்றவரை, களத்திலே பிணமாக்கிக் கழுகுக்கு விருந்திடுகிறேன்.
வில்லவன் : வேண்டாம், வீரத் தோழனே! விரண்டோடும் விஜயனும்தி கலங்கிய கனகனும் புறமுதுகிட்டு மிஞ்சியுள்ள சேனையுடன் ஓடட்டும்.
வீர : அங்ஙனமாயின் அவர்கள் தம் நகர் சென்று விடுவரே, பிழைத்துக் கொள்வரே!
வில் : நண்பா ! அவர்கள் ஓடித் தம் நகர் செல்லட்டும். அவர்களைத் துரத்திக்கொண்டு நாம் அந்த நகருக்குள் நுழை வோம். அவர் தம் அரண்மனை மாடியிலே அரச குடும்பக குமரிகள் ஓடிவரும் மன்னரைக் கண்டு ஈதென்ன கோலம், நமது கொற்றவன் இவ்வளவு கோழையா என்று கூறட்டும். வளை யணிந்த மாதரின் விழியும் மொழியும், கேலியை ஏவட்டும். வெட்கம் அந்த வேந்தரின் விலாவைக் குத்தட்டும். வெட்கி வியர்த்து வெட வெடத்துக் கிடக்கும் அந்த வேளையிலே நாம் சென்று அவர்களைப் பிடிப்போம். அரண்மனையிலோ அழுகுரல் கிளம்பட்டும். ஆற்றல் மறவரோடு போரிட்டால் அழிவு கிடைக்கு மென்பதை ஆரியச்சேரி அறியட்டும். ஓடவிடு அந்த ஓடெடுத்து வாழ்ந்த வேந்தர்களை.
--------------
காட்சி 6
இடம் : களத்தில் ஓர் பகுதி.
உறுப்பினர் : தமிழ் வீரன்-ஆரிய வீரன்.
நிலைமை : தமிழ் வீரன், பயந்தோடும் ஆரியனைப் பிடித்திழுத்து முதுகில் ஒரு அறை கொடுத்து.
தமிழ் வீரன் : ஏ ஆரியப்பதரே எங்கே உங்கள் வீரம், யோகம், யாகம்! அக்கினி-யாஸ்திரமெங்கே! (மறுபடி அடிக்க.)
ஆரிய வீரன் : (முதுகைத் துடைத்துக்கொண்டு அலறி) ஐயோ ! இதுதான் அக்கினி-யாஸ்திரம்.
த. வீ : எது?
ஆரி. வீ : இதோ என் முதுகிலே சுரீரென்று கொடுத்தீர் களே நெருப்புப் போல ........
த. வீ : முண்டமே ! ஓடிப் போ, பாமரமக்களிடம் பச்சைப் புளுகு பேசுவது, எம்மிடம் அக்கினியாஸ்திரம், வருணாஸ்திரம் உள்ளன என்று,
(அழுகிறான் ஆரியன்.)
இதோ கண்களிலே நீர் பெருகுவதைப் பார்! வருணாஸ்திரம்! சீ... போரிட லாயக்கோ, பழக்கமோ, பயிற்சியோ அற்ற கூட்டம், வாலாட்டத்திலே மட்டும் குறைவில்லை,
-------------
காட்சி 7
இடம் : களம்.
உறுப்பினர் : கனக விஜயன், வில்லவன், வீரர்.
நிலைமை : நாலு பக்கமும் தமிழ் வீரர்கள் கனக விஜயரை சுற்றி வளைத்துக் கொள்கின்றனர். கனக விசயர் ஓடப்பார்த்து முயன்று முடியாததால் பணி கின்றனர். அதுசமயம் வில்லவன் கோதை வந்து சேருகிறான்.
வில்லவன் : விடாதீர்கள் ! விடாதீர்கள் !! அந்த விப்பிரரை (அருகே வந்து கனக விசயரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு) சீறிப் போரிட்ட சிங்கங்களே! செருக்கைக் கக்கிய சழக்கரே! நெருப்புடன் விளையாடத் துணிந்த ஏமாளிகளே நில்லுங்கள்! தலையைக் கொஞ்சம் நிமிர்த்துங்கள்! உங்கள் முகத்தை நான் கொஞ்சம் பார்க்கிறேன். (முகத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்து விட்டு) ஆகா! வீரம் வழிந்தோடுகிறது! அந்தக் கண் களிலே தீரத் தீப்பொறி பறக்கிறது ! சீச்சீ வெட்கமில்லை உங்க ளுக்கு! வீரதீர கெம்பீரனாம், எமது மன்னன் மீது, போரிட எப்படியடா துணிவு கொண்டீர்கள். எதை நம்பி இறங்கினீர்கள், இந்த ஆபத்தான விளையாட்டில்! நீங்கள் செய்த குற்றத்திற்காக, இங்கேயே, இப்போதே , உங்கள் உடலைக் கூறு கூறாக்கி, நாய்க்கும், நரிக்கும் விருந்திடுவேன். ஆனால் நயவஞ்சகராகிய உங்களின், இந்த நிலையைக் காண வேண்டும் என் தமிழர், என்ற ஆசையால் நீங்கள் இன்னமும் பிணமாகாதிருக்கிறீர்கள். வஞ்சனையைக் கக்கும் உமது கண்கள், எமது தமிழரின் கண்கள் உமிழும் வீரக் கனலால் குருடாகட்டும்! மலையெனத் திரண்டுள்ள எம் தமிழ் வீரரின் தோளைக் கண்டதும், அவர் தம் தாளிலே வீழ்ந்து, பணிய வாருங்கள். தமிழகத்தைத் தாழ்வாகப்
பேசியவன் கதி என்னாயிற்று என்பதை உலகு உணரட்டும். கர்வம் பிடித்துத் தமிழரை ஏசிய நீங்கள் கல் சுமந்து வாரீர் தமிழகத்திற்கு. உங்கள் தலையிலே ஏற்றிவைக்கும் கல் கொண்டு, எப்படிய வீரதீர கெம் பறக்கிறது.
வீரப் பெண்மணி கண்ணகிக்குக் கோவில் கட்டுவோம். வீரர் காள் தமிழகத்தின் மானத்தைக் காத்த தோழரே, ஏற்றுங்கள் கல்லை, இந்த கயவர் சிரமீது. சுமக்கட்டும்! இந்தச் சூது தவிர வேற்றியாக் கூட்டம்! தமிழகத்தின் புகழின் பாரம் தெரியட்டும். புறப்படுக.
---------------
காட்சி 8
இடம் : பாதை .
உறுப்பினர் : கனகன் - விசயன் - வீரர்.
நிலைமை : கல் சுமந்து கொண்டு கனக - விசயர். தமிழ் வீரர் உருவிய வாளுடன் வருகின்றனர்.
வீரர் : நட- நட! நட - நட்டா நயவஞ்சக நரியே! வாயால் கெட்ட வகை கெட்ட மூடரே ! நடவுங்கள்!
(எதிர்ப்புறமிருந்து வருபவருக்கு)
வீரர் : புதிய பொதி மாடு! சேரன் செங்குட்டுவன், கங்கைக் கரை ஓரத்திலே மேய்ந்து கொண்டிருந்த இந்தப் பொதிமாடுகளை, தமிழகத்துக்குக் கல் சுமக்கச் செய்தான்.
------------------
காட்சி 9
இடம் : சேரன் கொலு மண்டபம்.
நிலைமை : வீரர்கள் வருகை
வீரர் : மன்னர் மன்னவா வெற்றி! வெற்றி!!!
வில்லவன் : வெற்றி வீரரின் தலைவனே , வணக்கம். தமிழரை இழித்துப் பேசிய கனக - விசயரைக் கைது செய்து வந்துள்ளேன். இதோ அந்தக் கசடர்.
சேரன் : கனகன் ! விசயன்! காவலராம் இவர்கள் ! கடும் போரிடத் தெரியுமாம் ! ஏடா மூடர்கள் ! கங்கைக் கரையிலே காலந்தள்ளுவதை விட்டு, ஏன் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டீர்? என்ன காரியம் செய்கிறோம் என்பது தெரியாது, சிறு செயல் புரிந்தீர். வேங்கையின் வாலை மிதித்தால், அதன் பற்களால் கொல்லப்படுவோம், என்று தெரியாதவன் ஏமாளி யல்லவா? ஆரியரே! உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உங்கள் இனத்தவர் எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராவீர்கள். போர் என்றால் புகை கிளம்பும் யாகம் செய்வீர்கள் ! ஆண்டவனிடம் அஸ்திரம் கேட்பீர்கள் ! வாள் வீசத்தெரியாத உங்களுக்கு ஏன் இந்த வம்பு? தமிழரைப் பொன் கேட்டீர் கொடுத்தோம். வாழ இடம் கேட்டீர், தந்தோம்! அந்த வாழ்வு பெற்ற பின்னர் தமிழ ரையா இகழ்ந்து பேசினீர்?
கனகன் : மன்னவா? உம் அடி பணிகிறோம்.
சேரன் : இதிலென்ன ஆச்சரியம் ! உமது பரம்பரை, தலை முறையாக வீரரின் காலடியிலே, வீழ்ந்ததன்றி வேறு வரலாறு ஏது எடா மூடர்களே ! உமது வீரத்திற்கு ஒரு சான்று கூறமுடி யுமா? ஒரே ஒரு சான்று !! வீரரென்று வாயாரப் புகழ்வீர் சிலரை, அவர்கள் யாவரும் இறைவனின் அருளால் அந்த வெற்றிகள் யாவும் கிடைத்தன என்றுதானே கதை. வீரத்திற்குச் சான்று எங்கே? வில்லவா இந்த வீணரை, நமது மக்கள் காண ஊரெங் கும் அழைத்துச் சென்று, பிறகு, சிறையிலே தள்ளு, தமிழ் வீரர்களே! உங்களுக்கு, என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் உங்களைக் கண்டு பூரிக்கிறது. வில் லவா! உன் வீரம் தமிழகத்துக்கு அழியாப் புகழ் அளித்து விட்டது. உன் வெற்றி, தமிழர்மீது வீசப்பட்ட மாசினைத் துடைத்து விட்டது. இதோ பரம்பரையாகச் சேரக் குடியின ருக்குச் சொந்தமாக இருந்து வந்த வீரவாள், உன்கையில் இனி இருக்கட்டும்.
(வில்லவன் வாளை ஏந்தி முத்தமிட்டு]
வில்ல : இந்த வாள் தமிழகத்தின் உயர்வைக் காக்கப் பயன் படட்டும். வீரக்குடியின் வெற்றிவாளை ஏந்தும் யோக்யதையை நான் பெறுவேன் மன்னர் மன்னவா.
[பணிந்து செல்லல் ]
---------------------------
5. ராகவாயணம்
அபஜெய காண்டம்
ராகவாச்சாரியார் : முதலியாரவாள்! என்ன இருக்கிறது இதிலே எல்லாம் ; க்ஷணப்பொழுது நடைபெறும் பொம்ம லாட்டம் ; வேறே என்ன.!
ரங்கநாதர் : ஆமாம் சாமி! சந்தேகமென்ன. ஆனால் எங்கே இந்த ஜனங்களுக்கு இந்த ஞானம் வரப்போகுது. என்னமோ எல்லாவற்றையும் தங்கள் தலைமேலே மூட்டை கட்டிவைத்து தூக்கிக் கொண்டு போகப்போவது போலத்தான் அலைகிறதுகள்.
ராக : ஞானம் இல்லை, முதலியாரவாள் ! ஞானம் ஏற்பட வில்லை. ஏன் என்கிறீர்? சத்சங்கம் இல்லை. சத்விஷயங்களைப் பத்தின கேள்வி ஞானம், இல்லை!
ரங்: நீங்க ஒரு பைத்யம் சாமி! அவனுங்கதான், நம்மை எல்லாம் ஞான சூன்யங்கள்னு ஏசறானுங்க.............. நம்ம பேச்சை யாவது அவனுங்க கேட்பதாவது ....
ராக : ஒரு யோசனை சொல்லட்டுமா?
ரங் : எதுக்கு?
ராக : ஜனங்களோட ஷேமத்துக்குத்தான்.
ரங்: என்னது அது ..............
ராக : ஸ்ரீமத் ராமாயண காலட்சேபம் ஏற்பாடு செய்துடு வோம் - ஆறு மாதம் - சித்ரகூடப் பாகவதர்னு கேள்வியுண்டோ , மகா சிலாக்யமான உபன்யாசம்...........
ரங் : யாரு? யாரோ , உங்க பந்துன்னு சொல்வாங்களே......
ராக : ஆமாம்... கலெக்டராகப் போயிருக்கவேண்டியவர், எம். ஏ .பி .எல் .............
ரங்: கேள்விதான் ...... ரிவின்யூ இலாக்காவிலே இருக்கச்சே என்னமோ இரண்டு மூணாயிரம் கையாண்டதாக ..........
ராக : பழி சுமத்தினா, மகாபாவிகள்! கேஸ் நடத்தியிருந் தாரானா, ஜெயம்தான், ஆனா, என்ன செய்தார் தெரியுமோ? ராமா! இது உன்னோட சோதனைடாப்பா ! இதோ வந்துட்டேன் உன் சேவைக்குன்னு சபதம் செய்துண்டு வாயைத் திறவாமப் படிக்கு மூவாயிரத்தையும் கட்டிவிட்டார். கட்டி விட்டா விட்டு விடுவாளோ, ஜெயிலுக்குத்-தான் அனுப்புவான்னு கண்டவா கண்டபடி பேசினா. ஆனா ராமானுக்ரஹம்னா என்ன சாமான்யமா ! மேலதிகாரிகள் வழக்கை வாபஸ் வாங்கிண்டா. பார்த்தீரோ ராம நாம மகிமையை...
ரங் : அவருடைய கதா காலட்சேபம் வைத்தா நல்லது என்கிறீரா.-.
ராக : ஏற்பாடு செய்துவிட்டேன் முதலியாரவாள் ! அடுத்த புதன் இங்கே வர்ரார் ...................
ரங்: அப்ப டியா ............ சரி ........ ராக : மொத்தமா ஆயிரத்தொண்ணு ............ ரங்: ரூபாயா?
ராக : பவுன் கூடத்தான் தரலாம் .... ஆனா முடியுமோ ....
ரங்: எங்கே முடியுது....... நான் பாருங்க நம்ம கிராமத்திலே துரோபதை அம்மன் திருவிழாவிலே பாரதம் படிக்கறதுக்கு, நம்ம படவேட்டராயர் இருக்காரே, அவரை ஏற்பாடு செய்து விட்டு. இப்ப படாத பாடு படறேன். ஒரு பயலும் காசு தர மாட்டேன்கிறான். பூராச் செலவும் நம்ம தலைலேயே விழுந்தது, ரொம்பச் சிரமமா-யிட்டது...................
ராக : பாரதம் புண்ய கதைதான்... ஆனாலும் .....
ரங்: இராமாயணம்மாதிரி ஆகாது என்கிறீர். ஆமாம், சந்தேகமென்ன, எதோ என் சக்த்தியானுசாரம் நான் பாரதம் ஏற்பாடு செய்தாச்சி, நீங்க உங்க சக்திக்குத் தகுந்தபடி , ராமாய ணம் நடத்தி வையுங்கோ . இப்படி நாம், ஆளுக்கு ஒரு காரியமா ஏத்து நடத்தினாத்தான், கட்டிவரும். நான் புறப்படட்டுங்களா, நாளை மறுநாள் தீ மிதிக்கிறது - விறகுக் கடை பக்கம் போகணும் .....
ராக : சரி .........
-----------
அமளிக் காண்டம்
காமாட்சி : காயா, பழமா?
ராகவாச்சார் : அவனண்டை போனா பழம் கூட அழுகின்னா போயிடும். கொடாகண்டனாச்சே ................
கா : விடியாமூஞ்சி வேலைக்குப் போனா, எப்படி ஜெயம் கிடைக்கும்னேன். உமக்கு எங்கே வரப்போறது, சாமர்த்யம்.
ராக : சும்மா கிட்டி ! நான் நாலு நாழியாப் பேசி, அதைச் சொல்லி இதைச் சொல்லி, ராமாயணம் வைக்கலாம்னு சொன்னா, அவன், நான் ஏற்கனவே கிராமத்திலே பாரதம் நடத்தறனேன்னு, சொல்லி விரட்டறான்.
கா : இருந்தா என்னடாப்பா! உன்னோட செல்வத்துக்கும் வருமானத்துக்கும் இதெல்லாம் ஒரு பெரிய காரியமா , உன்னைப் போன்ற லட்சுமி புத்ரா இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யாமப் போனா, வேறு யார் முன்வருவா, அப்படி இப்படின்னு , மனசு இளகறமாதிரியாப் பேசணும்..... உமக்கு எங்கிருந்து வரப் போறது .... மூஞ்சியையும் முகரக் கட்டையையும் பார்க்கிறபோதே, கதவை இழுத்துத் தாள் போட்டுடறா ...........
ராக : போதும் போடி வாயாடினது. டால் அடுக்குதோ உன் முகம் - போய்க் காட்டேன் அவனிடம் . நேக்குச் சாமர்த்யமாகப் பேசத் தெரியல்லே ... நோக்குத் தெரியுமேன்னோ, போ, போய்ப் பேசி ஜெயித்துண்டு வாயேன் பார்ப்போம் .........
கா : இப்படி வம்பு தும்பும், அடா துடியும் பேசத் தெரியும் உமக்கு, வேறென்ன தெரியும். போன காரியத்தை முடிச்சுண்டு வரச் சாமர்த்தியமில்லேன்னாலும், கோபம் மட்டும் வந்துடறது பொத்துண்டு ..............
ராக : ராமா! ராமா! ராமா! தலை தலைன்னு அடிச்சிண்டு எங்காவது தேசாந்திரம் போகலாம்டாப்பா, இவளிடம் சிக்கிண்டு பிராணனை விடறதைவிட. எவண்டி உன்னோட அண்ணனை அழைச்சி, ராமாயணம் நடத்தச் சொல்லுவன். ஊர் பூரா தெரிஞ் சிருக்கு , இலஞ்சக் கேசிலே அவன் சிக்கிண்டதும், வேலையிலே
இருந்து டிஸ்மிஸ் ஆனதும்.
கா : தெரிஞ்சா என்னவாம்! ஏதோ போறாத வேளை - சோதனைக் காலம். அவர் என்ன ஜெயிலுக்கா போயிட்டு வந்தார் ............
----------------
உபதேச காண்டம்
கமலா : ஏண்டி அம்மா ! ஏன் அப்பா உம்னு இருக்கார்......
காமாட்சி : உம்னு இருப்பார், உர்னு பாய்வார், வேறே என்ன தெரியும் அவருக்கு ....... !
க : ஏண்டி சண்டை போட்டே அப்பாவோட...........
கா : சண்டை போடாமே, உங்க அப்பாவோட இலட்சணத் துக்கு சரசமாடுவாளோ ...... துப்புக் கெட்ட ஜென்மம்....... என் தலை எழுத்து .............
க : அடுக்கிண்டே போறயே.............. என்ன விஷயம்னு சொல்லேன் ...........
கா : ரொம்ப அவசியமா, தெரிஞ்சுக்கணுமோ... க; சொல்லுடின்னா....... அம்மா...... சொல்லேன் ......
கா : நேத்துப்பூராச் சொன்னேனேல்லோ ராமாயண காலட் சேபம் நடத்தச் சொல்லி அந்த முதலியைப் போயிப் பாருன்னு ...
க : ஆமாம் போகலையா.......?
கா : போனாரே! போயி, வெறும் கையோடு வீடு திரும்பி வந்தாச்சி. அவன் சம்மதிக்கல்லையாம். நாம்தானே சம்மதிக்க வைக்கணும், அதுக்குச் சாமர்த்யம் இருந்தாத்தானே. எங்க அண்ணன் பேரிலே கேஸ் வந்தப்போ இந்த மாதிரி பித்துக் குளியா நான் இருந்திருந்தேனானா , அண்ணன் இன்னேரம் ஜெயிலிலே தான் இருந்திருப்பார்..............
க : ஆமாம், அடுத்தாத்து பாட்டி கூடச் சொல்றா......... நீதான், கலெக்டரிடம் பேசி, கேசை ஜெயிச்சிண்டு வந்தாயாமே.........
கா : ஜெயிச்சிண்டு வந்தயாமேன்னு , இவ்வளவு சுலபமாச் சொல்விடறயே ............. அந்த கலெக்டர் கொஞ்சத்திலே மனசு இளகி வழிக்கு வந்தானா. முதல்லே , பொம்மனாட்டிகளைப் பார்க்கற வழக்கமில்லேன்னு ; ப்யூனிடம் சொல்லி அனுப்பினான் - நான் வாசற்படியிலே காத்திண்டிருக்கேன் ...... அம்பா சன்னதிக் குப் போயி, அர்ச்சனை செய்துண்டு பிற்பாடு, போனேன் அவன் பங்களாவுக்கு ; ப்யூன் வந்து சொல்றான், தொரை பார்க்க மாட்டாராம், பொம்மனாட்டிகளைப் பார்க்கற வழக்கம் இல்லை யாம்னு. அடே அப்பா! நீ போயி தொரையிடம் சொல்லு, எங்களுக்கும் ஆம்பிளைகளைப் பார்க்கற பழக்கம் கிடையாது. ஆனா, இது ஒரு ஆபத்தான விஷயம் அதனாலே தான் வந்திருக்கா ஐயர் வீட்டம்மான்னு சொல்லுடான்னேன், பிற்பாடு தான் உள்ளே போகவே முடிந்தது. நெருப்புப் பொறி போலப் பேசறான். இலஞ்சம் ருஜு ஆகிவிட்டது. சும்மா விடுவதற் கில்லை, அழுது பிரயோஜனமில்லை, அப்படி இப்படின்னு , தாட் பூட்னு குதித்தான் .... பிற்பாடு அவனோடு இதமாப் பேசி........
க : தமிழ் தெரியுமோ அவனுக்கு ..............
க : தட்டுத் தடுமாறிப் பேசுவன். ஆசாமிக்கு நல்ல மனசு. முதலிலேதான் கர்ஜித்தான், பிறகு, நான் அவனோடு பக்குவமாப் பேசி, கோபத்தைப் போக்கி, மனசு இளகும்படிச் செய்ததாலே. சரி! உனக்காகச் செய்றேன், என்றான். கேஸ் தள்ளுபடி யாச்சு. ஒரு பொம்மனாட்டிக்கு இருக்கற சாமர்த்தியத்திலே நூத்திலே ஒண்ணு இல்லை , உன் தோப்பனாருக்கு ............
க : உன் சாமர்த்தியம் யாருக்கும் வராதுன்னு தான், சகலரும் சொல்றாளே!
பாடாபிஷேக காண்டம்
ரங்கநாதர் : என்னமோ பொழுதுபோக்காப் பேசிகிட்டு இருக்கறானேன்னு பார்த்தா, அந்த ஐயன், தன் வேலையை நம் மிடமே காட்ட ஆரம்பிச்சிவிட்டான்.............
சங்கரசிவம் : அப்படிங்களா? என்ன கேட்டான், எதாச்சும் கடன், கிடன்............
ரங்க : அட அது அல்லய்யா. ஊர் ஜனங்க ஞான மில்லாமே கெட்டுப் போறாங்களாம், அதனாலே ஒரு ஆறுமாசம் ராமாயணம் நடத்தணுமாம், செலவுக்கு நான் பணம் தரணும்னு அடி போட்டான்.
சங்கர : கெட்டிக்காரனாச்சே அந்தப் பாப்பான் .........
ரங்க : ஆமாம், நாம என்ன கொக்கா! சரி, சரின்னு கேட்டு கிட்டு, ஆமாம் சாமி! நடத்தவேண்டியதுதான் ; ராமாயணம், புண்யம்தான்-- நான் கூட எங்க கிராமத்திலே பாரதம் நடத்தி கிட்டு வர்ரேன், எல்லாச் செலவும் நானேதான் செய்யறேன்னு
ஒரு போடு போட்டேன் ........
சங்கர : பாரதம் நடக்குதுங்களா..........
ரங்க : பாகவதம் நடக்குது ...... ஆளைப் பாரு ! அதான் நமக்கு வேலையா ............ சும்மா சொல்லி வைச்சேன்யா ............ சொல்லவேதான், வாயை மூடிக்கிட்டுப் போனான் ; அடே அப்பா! சர்வ ஜாக்ரதையா இல்லையானா நம்ம தலையிலே, மிளகா அரைச்சிட்டுப் போயிடுவானுகளே. தெரியாமலா பெரியவங்க சொன்னாங்க பிராமணா எமகாதகான்னு ......
---------
பணபஹாண காண்டம்
கமலா : இவர்தான் ரங்கநாத முதலியார் - எங்க ஊருக்கே பெரிய சீமான் - பூமான்- தர்மவான் ....
ரங்கநாதர் : ஐயயோ, ரொம்ப அடுக்கிக்கிட்டே போறிங் களே... உட்காருங்கோ ரெண்டுபேரும்... ஐயா! கணக்கப் பிள்ளை சங்கரசிவம், ஓடிப்போயி, கலரு வாங்கிட்டு சுருக்கா வா....... நீங்க யாரு..........
கம : இவ, என் ஸ்நேகிதி, சமூக சேவகி சாரூபாலான்னு ........
ரங் : தெரியாதுங்களே ........ சினிமா கினிமா பாக்கற பழக்கம் கிடையாது ....
கம் : என்ன முதலியாரவாள்! அவசரப்பட்டுப் பேசலாமா... சாரூபாலா, யார் தெரியுமோ ............. இன்கம்டாக்ஸ் ஆபீசர் கோதண்டராம ஐயரோட பொண்ணு ........
ரங் : அப்படிங்களா ...... மன்னிச்சுடுங்க........
சாரு : பரவாயில்லடி கமலா ! என் டிரசைப் பார்த்து, சினிமா ஸ்டார்னு எண்ணிண்ட்டார் போல இருக்கு .........
ரங்: ஆமாங்க ....... இல்லிங்க ........ தப்பு தாங்க ... தோப்பனாரு சௌக்யந்தானுங்களே ....... இந்த ஊரிலே ரொம்ப நல்ல பேருங்க உங்க அப்பாவுக்கு ......
சாரு : இங்கே என்ன ! எந்த ஊரிலே அவர் வேலை பார்த் தாலும் அப்படித்தான் ....
ரங் : நெருப்புங்க, தப்புதண்டா செய்கிறவங்களைக் கண்டா.... ஆமா ........ சில பேர்களுக்கு, அவர் பேரேச் சொன்னாலே , சிம்ம சொப்பனந்தான் ........
கம் : அப்படித்தான் இருப்பார். ஆனா அவரோட மனசு தங்கம் ........ அது பழகினாத் தெரியும் ....... இப்ப, நம்ம சாரு, ஒரு காரியம் ஆரம்பிச்சிருக்கா , சம்பூர்ண ராமாயண காலட்சேபம் நடத்த ஏற்பாடு செய்திருக்கா ..........
ரங் : ரொம்ப சந்தோஷம்ங்க....... எந்த இடத்திலே, எப்போ , என்னாலே ஆகவேண்டிய காரியம் என்ன, சொல்லுங்க, சங்கோசப்படாம்........
கம : சத்காரியத்துக்குச் சங்கோசப் படுவாளோ! பாருங்கோ இதிலே நான், என் தோப்பனாருக்கே விரோதமாக் கிளம் பிட்டேன். சாரூபாலா சொன்னா இந்தக் காலட்சேபம் சிலாக்கிய மானதா இருக்க வேணும்னா , சித்ரகூட பாகவதர் தான் வரணும்னு ... எங்க தோப்பனார், இதுக்கு முன்னாலேயே , அவரை இங்கே வர வழைக்க ஏற்பாடு செய்துவிட்டாராம் ; பார்த்தேன், சரி அவர் தருகிறதைவிட ஒரு ஐநூறு அதிகம் நாங்க தர்ரோம்னு தந்தி கொடுத்து அவரோட சம்மதத்தை வாங்கியாச்சி.... அப்பாவுக்கு முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்கறது ........
ரங்: ரொம்ப சாமர்த்தியமாத்தான் வேலை செய்திருக்கறிங்க... ஆமாம், ஐயாவுக்கு அதாவது நம்ம இன்கம்டாக்ஸ் ஆபீசருக்கு ராமாயணம் ரொம்ப பிடிக்கும்ங்க ளா ..........
கம் : சொல்லேண்டி சாரூ! இவ தோப்பனாருக்கு, உயிர், ராமாயணம்னு சொன்னா....... வனவாசம் போகிற கட்டத்திலே, கண்ணீ ர் தாரை தாரையாப் பொழியும் .........
ரங்: எனக்குக் கூடங்க, அந்தக் கட்டத்திலே, கைகேயி மேலே வர்ர கோபம், இவ்வளவு அவ்வளவுன்னு சொல்லி முடியாதுங்க..... ஆபீசரய்யா அடிக்கடி காலட்சேபம் கேட்க வருவாருன்னு சொல்லுங்க ........
கம் : வருவாராவா ! நீங்க ஒரு பைத்தியம் முதலியாரவாள்! ஆரம்ப விழா வைபவமே, அவர்தான் செய்துவைக்கப் போறார்.....
ரங்: பேஷாப் போச்சு போங்க......
கம் : சீதா கலியாணத்துக்கு யார் வாரா சொல்லுங்க பார்ப்போம்..........
ரங்: யாருங்க........? கம் : நம்ம ராஜாஜீ!
ரங்: ஆஹாஹா ! சிலாக்கியமான ஏற்பாடு ! ராமா! ராமா! உன் பெருமையே பெருமை.
கம் : பட்டாபிஷேகத்துக்குத்தான் நாங்க போட்டிருக்கிற பிளான் பலிக்குமோ பலிக்க தோன்னு தெரியல்லே.... உம்மோட சொல்றதிலே என்ன தப்பு , நம்ம கவர்னர் இருக்காரே.........
ரங் : நம்ம கவர்னருங்களா , என்னங்க அவருக்கு .......
கம் : அடடா ! அவருக்கு ஒண்ணுமில்லே முதலியாரவாள் ! அவரைத்தான் பட்டாபிஷேகத்துக்கு அழைக்கிறோம் ........
ரங்: அடா அடா ! இதைச் செய்துட்டாப் போதுங்க, நம்ம ஊரே பூரிச்சிப்போகும் .........
கம் : செலவுதான் நிறைய ஆகும்...... பாருங்க, கன்னைய்யா செட்டியாரிடம் கதை கதையா இதைச் சொன்னோம், அந்தக் கர்மி நூறு ரூபா கொடுத்துவிட்டு, இன்னும் தொந்தரவு கொடுக்காதிங்கன்னு சொல்லிவிட்டான்.
சாரு : ஏண்டி! கமலா! சில பேர் கர்மிகளாத்தான் இருப்பா! ராம் காரியத்துக்குத் தர மனசு வராது. இன்கம் டாக்சுக்குக் கொட்டிக் கொடுப்பா .........
ரங் : என்னோட மனசு, பெரிசு... இப்ப காலம் கொஞ்சம் கஷ்ட மானது........
கம : எல்லோருடைய கஷ்டமும் போறதுக்குத்தானே ராமாயணமே ...........
ரங்: ஆமாமாம்!
கம் : பகவானோட காரியத்துக்கு தயக்கமே இருக்கப் படாது .......
ரங்: சந்தேகமென்னங்க......... ஒரு இரநூறு எழுதிடட்டுங் களா ...........
கம : உங்க இஷ்ட ம் ........
ரங் : அதிகம் செய்கிறவன் தான் ........... இப்ப கொஞ்சம் தொந்தரவு ... எல்லாம் ஆபீசரய்யாவிடம்தான் இருக்கு நம்ம கணக்குப் புத்தகம் ஜாடாவும்.....
கம் : ராமனிருக்கார் போங்க உங்க பங்கிலே ..... ஆபீசர் சத்யசந்தர் .... பக்திமான்களிடம் பொகுப் பிரீதி...... முன்னூறு எழுதுங்க ..........
ரங் : சரிங்க....... தடை சொல்வேனுங்களா............ கணக்கப் பிள்ளே ! மூணு ............ ஆமாமாம்............... உள் அலமாரியிலே ................ கொண்டு வா ...... கலர் சாப்பிடுங்க..........
----------------
6. புதிய மடாதிபதி
இடம் பெறுவோர் : மடாதிபதி அருளாளர், முருகதாசர், கந்தபூபதி, மாசிலாமணி, சித்ரா, பக்தர், பணியாட்கள், போலி மடாதிபதி.
நிகழ்ச்சி இடம் : மடாலயமும், அதைச் சுற்றி உள்ள இடமும்.
பாழடைந்த சாவடி
(சாலை ஓரத்தில் உள்ள சற்று கலனான சாவடியில் அழுக்கேறிய உடையணிந்த ஒருவன் படுத்துப் புரண்டு கொண்டிருக்கிறான் ... தூக்கம் வரவில்லை. மடத்து, பண்டாரங்கள் இருவர், ஏதோ பேசிக் கொண்டு அவ்வழியே வருகிறார்கள்.)
ஒருவன் : திட்டம் நன்றாகத்தான் இருக்கு ... வெற்றி கிட்டி னால் தானே ......
மற்றொருவன் : வேலை செய்தால்தானே வெற்றி கிடைக்கும் ....
ஒரு : வேலையும் சீக்கிரம் நடந்தாக வேண்டும் ......
(சாவடிப்படியில் உட்காருகிறார்கள்]
மற் : கண்மூடி மக்கள் - கொட்டித் தருகிறார்களே, கேட்கும் போதெல்லாம் ......
ஒரு : நாம்தான் மிரட்டுகிறோமே ........ நரகம் என்று ...........
மற்: எல்லோரும் அல்ல....... தொகை குறைந்து கொண்டே வருகிறது........
ஒரு : பக்தர்கள் தொகை குறைந்துவிட்டால் பிறகு அது நமக்குத்தானே நஷ்டம்.........
மற் : (ஆயாசத்துடன்) நமச்சிவாயம் ...... நமச்சிவாயம் ..... மடமும் இருக்க வேண்டும் .... அவனும் தொலைய வேண்டும்......... அதற்கு உன் திட்டம் தான் சிலாக்யமானது ...... (சுற்று முற்றும் பார்க்க, படுத்துப் புரண்டபடி இருப்பவன் தெரிகிறான் - உற்றுப் பார்க்கிறான் - மீண்டும் மீண்டும் பார்க்கிறான் - கூட இருப்பவனை அழைத்துக் காட்டுகிறான் - இருவரும் படுத்திருப்பவன் அருகே சென்று உற்றுப் பார்க்கிறார்கள் . ஆச்சரியத்துடன்.)
ஒரு : சரியான பாத்திரம்......!
மற்: (படுத்திருப்பவனைப் பார்த்தபடி) திட்டம் பலித்தது....... வெற்றி ........ நிச்சயம்.
[தட்டி எழுப்புகிறார்கள். கண் விழித்து அவர்களைப் பார்த்துவிட்டு]
படுத் : காவி உடை கண்டதும் கன்னத்தில் அடித்துக் கொள்ளும் கபோதி நானல்ல....... போங்கள்...... போங்கள்.......
ஒரு : (மற்றவனைப் பார்த்து) இவனே சரியான ஆயுதம் மத்தானை ஒழிக்க........
படுத் : என்ன உளறல் இது ...... ஆயுதமாம் ஒழிப்பதாம் .....
மற் : அப்பா ....... அச்சம் வேண்டாம் .......... அரனடியார்கள் நாங்கள் அருளாளர் சீடர்கள் !
படுத் : ஓஹோ! ஜடாமுடிதாரியின் சீடர்களா! வாட்ட வருத்தமின்றி வாழ்வதால் ஓங்கி வளர்ந்திருக்கிறார்கள் ...... ஊரார் உழைப்பை உறுஞ்சும் உலுத்தர்களே! நான் ஓர் பாட்டாளி ........ ஆனால் ஏமாளியல்ல ! உழைப்பாளி......... ஊர் சொத்தைத் தின்று விட்டு ஓம் நமச்சிவாயா என்று கூவிக் கிடப்பவனல்ல ; என் முன் என்ன வேலை? வேறு இடம் பாருங்கள் ........
ஒரு : கந்தபூபதி! காரியம் பலித்தேவிட்டது. நம்மவர் களிடம் இவ்வளவு துவேஷம் கொண்டுள்ள இவனே சரியான ஆயுதம் ........
கந்தபூபதி : முருகதாசரே! முடித்துவிடலாம்.
[படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்து கோபத்துடன் ]
படு : யாரய்யா நீங்கள் ...... சாவடியிலே உறங்குபவனைத் தொல்லை தருகிறீர்கள் .......
கந்: கோபியாதே அப்பா ! நாங்கள் பண்டாரங்கள் ..... ஆண்டிகளிடமா ஆத்திரம் காட்டுவது .........
படு : ஆண்டிகளாம் , ஆண்டிகள் ! மோசாண்டிகளே! ஊரிலே எவ்வளவோ மக்கள் உழைத்து அலுத்துக் கிடக்க, உண்டு கொழுத்து ஊன் சுமந்து திரிகிறீர்களே, உங்களுக்கு வெட்கம், மானம் இல்லை!
(இருவரும் கோபம் கொள்ளாமல் களிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.)
கந்: கோபியாதே நண்பா ! எமது காவியைக் கண்டு கலங்காதே -!
(அருகே உட்கார்ந்து )
பொருள் தருகிறோம், வறுமையை ஓட்டிவிடுகிறோம், ஒரு இலட்சம் தருகிறோம்.
படு : (கேலியாக) ஒரு இலட்சமா! ஓட்டாண்டியாகிய எனக்கா? என்னய்யா கேலியா செய்கிறீர்கள் ......... பதிகம் பாடி ஓட்டாஞ்சல்லிகளைத் தங்கமாக்கப் போகிறீர்களா........!
முரு : (சிறிது சலிப்புடன்) மாயமும் அல்ல, மந்திரமும் அல்ல ....... உண்மையாகவே பணம் அப்பா ........ பணம்.
கந்: இதோ பாரப்பா! பண்டாரக் கூட்டம் என்றாலே உனக்குப் பிடிக்க வில்லையல்லவா?
படு : பண்டாரக் கூட்டத்திடமா பகை ! இல்லை! எவனொருவன் ஊராரை ஏய்க்க மதவேடம் புனைந்து திரிந்து மதோன்மத்தனாக வாழ்கிறானோ அவனை நான் மனிதனென்று கூட மதிப்பதில்லை ...... ஏனெனில் .........
கந்: விளக்கம் வேண்டாம்... உன் அபிப்பிராயத்தை மறுக்கவில்லை........... சரி, அப்படிப்பட்ட மதோன்மத்தர்களின் மன்னனை வீழ்த்த உனக்கு ஓர் சந்தர்ப்பம் கிடைத்தால் .......... (குறும்பாகப் பார்க்கிறான்)
படு : (ஆர்வத்துடன்) மகிழ்ச்சியுடன் வரவேற்பேன்! கந்: மெத்தச் சந்தோஷம்....... இனி கேள் சேதியை ........ முரு : கந்த பூபதி! தனி இடம் சென்று பேசுவது ...... படு : சரி, கிளம்புங்கள் ........
[மூவரும் புறப்படுகின்றனர்.]
-------------
மடாலயம்
[மடாலயக் கூடத்தில் மடாதிபதி அழகிய அலங்காரப் பீடத்தில் அமர்ந்துகொண்டு, எதிரே பக்திப் பரவசத்திலே உள்ள ஒரு சீமானுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். மடாதிபதியின் கையாள் உடன் இருக்கிறான்.]
அருளாளர் : (கெம்பீரமும் உருக்கமும் கலந்தக் குரலில்) ஆகவே, எவனொருவன் இந்திரியங்கள் எனும் துஷ்டக் குதிரை களுக்கு அறிவெனும் கடிவாளமிட்டு அடக்கி, நன்னெறி எனும் பாதையிலே செலுத்துகிறானோ, அவனே அரனடி என்னும் திருத்தலத்தை அடைவான்.
[கையாள், பக்திச் சீமானை, பார்க்கிறான் சீமான், அருளாளர் காதணி விரலணி இவைகளைக் கண்டு ரசிக்கிறார்.]
இடையே இச்சை எனும் நச்சுக் கொடி கிடக்கும்.
[அருளாளர் எதிரே உள்ள பழத்தட்டுகளைப் பார்க்கிறார், பக்தர்.]
பச்சென்றிருக்கிறதே என்று எண்ணிச்சிக்கினால் சீரழிவர். அதனைக் கடக்கவேண்டும். அதற்கு நிராசை எனும் சாட்டை கொண்டு குதிரையைத் தட்டவேண்டும். மெய்யன்பனே! பரமனருள் பெற்றவர்கள் எல்லோரும் இங்கனம் செய்தே முக்தி பெற்றனர்.
சீமா : (கண்களை மூடியபடி) ஆஹா ! தன்யனானேன், குருநாதா ! உணர்ந்தேன் ..........
[மடாலயத்தின் வேறோர் பகுதியில், கந்த பூபதி முருகதாசர், படுத்திருந்தோன் மூவரும் இரகசிய மாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சலிப்புடன் படுத்திருந்தோன் பேசுகிறான்.]
படு : புரிகிறதய்யா , புரிகிறது ....... பன்னிப் பன்னிப் பேசிப் பாதிப் பிராணனை வாங்கிவிட வேண்டாம்.
முரு: நண்பா ! சாமான்யமான காரியமல்லவே.
படு : சரி, சரி.... மதயானையின் மண்டையைப் பிளக்க வேண்டும்.
கந்: அதற்கு ஏற்ற ஆண் சிங்கம், நீ......... படு : இரத்தம் குடிக்கும் நரிகள் -?
படு : (அசட்டுச் சிரிப்புடன்) நாங்கள் என்று தான் வைத்துக் கொள்ளுமய்யா ..........
படு : (உறுதியாக) இதோ பாரய்யா, பண்டாரம்! நான் இந்தச் சதிக்குச் சம்மதிப்பது என் சொந்த இலாபத்துக்கல்ல ...... அவன் போனால் நீயோ .... நீயோ ..... பட்டம் பெறுவது நிச்சயம்...... எனக்கு இலாபம் இல்லை.
கந்: கேள், கொடுக்கப்படும்........
படு : கேட்கத்தானே போகிறேன்.... மடத்தை உங்கள் கையிலே ஒப்படைக்கிறேன் ...... ஆனால், அங்கு விழா அன்று கிடைக்கும் பணம் அவ்வளவும் எனக்கு ....... என் விருப்பப்படி நடப்பேன் - குறுக்கிட்டால் ... தொலைத்து விடுவேன்.
கந்: ஒரு நாள் உன் இராஜ்யம்! அவ்வளவுதானே .....
படு : அவ்வளவேதான் ....... என் திட்டப்படி நடந்தால் வெற்றி- தெரிகிறதா........
முரு : சந்தேகமே வேண்டாம்... சர்வேஸ்வரன் மீது ஆணை ...........
படு : (வெறுப்புடன்) சர்வேஸ்வரனை ஏனய்யா அழைக் கிறீர்கள், சண்டாளத் திட்டம் போட்டுவிட்டு ........
கந்த : பழக்கத்திலே வந்துவிட்டது, சம்போ, சர்வேஸ்வரா, என்று சொல்லிச் சொல்லி.........
[மடாலயக் கூடத்தில் பக்தன் அருளாளர் எதிரே வீழ்ந்து வணங்கியபடி]
பக் : சம்போ ! சர்வேஸ்வரா! குருநாதா ! ......
[அமர்ந்ததும்.]
மடா : மெய்யன்பனே! பொன்னார் மேனியனைப் போற்று! போக போகாதிகளில் இலயிக்கும் சுபாவத்தை மாற்று. பார், பிறகு பாரிலே இன்பம், பரமபதத்திலே எல்லையில்லா ஆனந்தம் தோன்றும். '
கை : மடாலயத்திடம் ... விசேஷமான அக்க ரை ......... ஏதேதோ செய்ய வேண்டும் என்று அவருக்கு நெடுநாட்களாக அவா .......
மடா : அம்பலவாணா! அவனருள் பெற்றவர்க்கே அவ்வெண்ணம் உதயமாகும். மலட்டு மாடு , மதுரமான பால் தருமா?
[கந்த பூபதி அங்கு வருகிறான். அவனைக் கண்டதும் கையாள் குறும்பாகச் சிரிக்கிறான். மடாதிபதி கண்களை மூடிக்கொள்கிறார்.]
கை : ஸ்வாமி நிஷ்டையில் இறங்கி விட்டது ...... வாரும், போவோம்.........
(வணங்கி விட்டுச் செல்கிறார்கள்.)
மடா : (அவர்கள் சென்ற பிறகு, கண்களைத் திறந்து ) காயா - பழமா?
கந்த : காயும் கனியுமே இந்தக் கந்தன் கைபட்டால். மடா : (மலர்ந்து ) பழம் எவ்விடத்தது?
கந்த : தோட்டம் அருகாமையில் தான் ....... ஆனால் வேலியும் காவலும் உண்டு ........
மடா : (கோபப் பார்வையுடன்) வேலியும் காவலும் ! எவருக்குமா.......
கந்த : (புன்னகையுடன்) அதிபருக்குக் கிடையாது ...... கனி கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டேன் - கட்டளையைத்தான் எதிர் பார்த்து நிற்கிறேன் ..... கனி, தங்க நிறம்!
மடா : (பூரித்து ) அம்மையப்பன் அருள் கலந்ததோ.......?
கந்த : மருள் கிளம்பிற்று....... முதலில் - கனி, வைணவம் ....... மடா : திருப்பாவை திருவெம்பாவை மாநாடு நடத்துவோம்! கந்த : லாவண்யவதி. மடா : உனக்கா தெரியாது .......
கந்த : வஞ்சிக்கொடி!
மடா : நஞ்சிராதே ........
கந்த : பஞ்சவூர் அல்ல... பக்குவமாகப் பயிரான பாரி ஜாதம்,
மட : பெயர் ........
கந்த : சித்ரா ..........
மடா : என்ன அருமையான நாமதேயம்.... என்னதான் அலங்காரம் செய்து கொண்ட போதிலும், இந்தச் சடையும் முடியும் சனியனாகவன்றோ இருக்கும், கன்னியின் கண்ணும் கருத்தும் கலங்குமோ! கச்சி ஏகம்பா!
---------------
மடாலயத்தை அடுத்த ஒரு விடுதி
[நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டிருக்கிறாள், எழில் உள்ள மாது. கட்டிலின் மீது கந்தபூபதி உட்கார்ந்திருக்கிறான்.]
கந்த : சொக்கிவிடுவான், சித்ரா !..... சொர்ணாபிஷேகம் உனக்கு ........
சி: சகிக்காது அவன் நடை உடை பாவனை.......
கந்த : சித்ரா ! உன் சாமர்த்யத்தைத்தான் நாங்கள் சகலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
சி : எனக்கு அதிகம் சொல்ல வேண்டுமா.....
[மோகப் பார்வை காட்டி.]
சி : எப்ப டி.........!
கந்த : (பரவசமாகி) சித்ரா ..........
சி : குருநாதருக்குத் துரோகம் எண்ண லாமா...... (குறும்பாக)
கந்த : (தாவிச் சென்று சித்ராவின் கரத்தைப் பிடித்திழுத்து அருகே நெருங்கியபடி) சித்ரா ........!
சி : (அவன் முதுகைத் தட்டி) பைத்யமே! சித்ரா சித்ரா என்று ஜெபம் செய்து கொண்டிருந்தால் போதுமா ....... நேர மாகிறதே ..........
-----------
வசந்த மண்டபம்
[மடாலயத் தோட்ட வசந்த மண்டபத்தில் உலாவிக் கொண்டே.]
மடா : சித்ரா ....
[தோட்டப் பாதையில் கந்த பூபதியும் சித்ராவும் ]
கந்த : (மெல்லிய குரலில்) சித்ரா.... இரண்டு பகல் இரண்டு இரவு ... ஆசாமி, தேனில் வீழ்ந்த ஈயாக வேண்டும் .....
(சித்ரா தலை அசைக்கிறாள் ]
கந்த : மடம் மகோற்சவம் என்று ஏதேனும் பேசினால் ......
சி. முத்தமிட்டு வாயை மூடிவிட வேண்டும் - பாடம். கவனமிருக்கிறது ....
[மடாதிபதி இருக்குமிடத்தருகே வந்ததும், கந்தபூபதி பின் தங்கிவிட, சித்ரா மட்டும் ஒயிலாகச் செல் கிறாள். அவளைக் கண்டதும் மடாதிபதி பூரித்துப் போகிறார்.]
மடா : வர்ணனையைவிட வஸ்து விசேஷமாகத்தான் இருக் கிறது - சொர்ணபிம்பமே! உட்கார் இப்படி. நெடு நேரம் நின்றால் உன் மலரடி கசங்கிவிடும்.
சி : (பாசமாக பார்த்து) இந்தக் கண்களை விடவா?
மடா : கண்களுக்கென்ன .........
சி : தங்கள் தரிசனத்துக்காகக் காத்துக் காத்துக் கிடந்து கண்கள் பூத்துப்போய் விட்டன.
மடா : பார்த்த பின் ...... என் வேடம் ...........?
சி : சிவலோகநாதனைக் காண்பது போலிருக்கிறது
மடா : (அவள் கரத்தைப் பற்றிய படி) சிங்காரி ! உன்னைக் கான நான் காலை முதல் தவம் கிடந்தேன். மடத்திலேயோ மன்னார்சாமிகள் வருவதும் போவதும் ஓயவில்லை. என்மனமோ அங்கில்லை மோகனாங்கி!
சி : சுந்தரரூபா!
மடா : ஆஹா ஹா......( அணைத்தபடி) என் கண்ணே .. கனியே ..........
(அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு)
சி : இதோ தங்கக் கோப்பையிலே கனிரசம் - தங்களுக் கென்று.
[கனிரசக் கோப்பையைக் காட்ட]
மடா : உன் பவளவாயை விடவா அந்தக் கோப்பை வசீகர மானது ...... உன் பாகுமொழி போதுமே
சித்ரா : பழரசம் வேறு வேண்டுமா............
[அவளை அணைத்துக்கொள்ள ஆவலாகச் செல்கிறார். அவள் இலாவகமாக அவரை விட்டு விலகிய படி, கோப்பையைத் தருகிறாள் பழரசத்தைப் பருகுகிறார், சித்ராவைப் பார்த்த வண்ணம் சைவ வேடச் சின்னங்களான உருத்திராட்சமாலை முதலியனவற்றை மடாதிபதி கழற்றி ஒரு புறத்தில் தட்டிலே வைக்கிறார்)
----------------
மடாலய உள் கூடம்
[மடாலயத்தின் வேறோர் பக்கம், பல தட்டுகளிலே பழவகைகளைப் பணியாட்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கிறார்கள். பெரிய மாலைகள் - உதிரிமலர்கள் கூடைகளிலே வைக்கப் படுகின்றன. விபூதி மடலில் விபூதியைக் கொட்டி அதிலே பன்னீர் தெளிக்கிறார்கள். மணிகளைத் துடைத்து வைக்கிறார்கள். மயில் விசிறிகளை எடுத்து வைக்கிறார்கள். பணியாட்கள் வேலை செய்து கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.]
ஒரு . பணியாள் : பாழாப்போன பவனி உற்சவம் நம்ம உயிரிலே பாதியைப் போக்கி விடும் - எவ்வளவு வேலை, எவ்வ ளவு வேலை .........
மற். பணி : நரம்பு முறிய நாம்ப பாடுபட்டானதும் மாப் பிள்ளை மாதிரியா அவர் பல்லக்கிலே ஏறிகிட்டு பவனி வருவாரு .........
ஒரு பணி : விவரம் தெரியாத கும்பல், அவர் நேரே கைலாயத்திலிருந்து வந்தார்னு பேசிகிட்டுக் கீழே விழுந்து விழுந்து கும்பிட்டுவிட்டுக் கூத்தாடப் போவுதுங்க............
[விபூதி மடல் கை தவறிச் சாய்கிறது விபூதி கீழ கொட்டிவிட, அதை ஒரு புறம் கூட்டித்
தள்ளிக்கொண்டே . ...........]
மற். பணி : இதுக்கு என்ன தவியாத்தவிக்கிறாங்க தெரியுமா - பக்தனுங்க..........
ஒரு. பணி : இங்கே நீ கூட்டிக் குவிக்கிறே....... ஆமாம், குருநாதர் அறைப்பக்கம் ஒரே இருள் மயமாக இருக்கே, என்ன விஷயம்.........
மற். பணி : எனக்கும் சந்தேகந்தான் - பவனி உற்சவத்துக் காக பத்து புது பதிகமாவது தயாரிப்பாரு ......
(சாம்பிராணித் தூபம் போடும் கலசத்தைச் சுத்தமாகத் துடைக்கிறான் ஒரு பணியாள். மற்றவன் ரிஷப உருவம் கொண்ட பிடி போட்ட மணியைத் துடைக்கிறான்.)
----------------
மடாலயக் கொலு மண்டபம்
(சாம்பிராணித் தூபம் குபு குபுவென வருகிறது. மணி ஓசையும் பக்தர்களின் வாழ்த்தொலியும் கிளம்புகின்றன. பக்தர்கள் பலர் - கூடி யுள்ளனர். மடாதிபர், விழாக் கோலத்துடன் பீடத்தில் அமர்ந்திருக்கிறார். கையாள், மயில் விசிறிக்கொண்டு வீசிக்கொண்டிருக்கிறான். கந்த பூபதியும் முருகதாசரும் பணிவுடன் மடாதி பதியின் பக்கம் நின்று கொண்டுள்ளனர். மடாதிபர் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார். முகத்திலே மலர்ச்சி காணப்படுகிறது. மணி ஓசை நின்றதும், கண் திறக்கிறார் கையாளும் கந்தபூபதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள் கின்றனர் மடாதிபர் , கையைக் காட்டுகிறார் அமைதியாக இருக்கும்படி. சந்தடி நின்று
விடுகிறது]
மடாதிபதி : மெய்யன்பர்களே! இந்த வருஷம் பவனியை நிறுத்திவிட்டோம்.............
[பக்தர்களிடையே ஆச்சரியம் ]
நமச்சிவாயத்தின் கட்டளை வேறு விதமாகி விட்டது.
[மடாதிபர் எதிரே சிறு சிறு முடிப்புகளாக காணிக்கைப் பணம் வரிசையாக வைக்கப்பட்டிருக் கிறது. கந்தபூபதியை மடாதிபர் நோக்க, கந்த பூபதி கையாளைப் பார்க்க, கையாள், ஒரு சுவடி எடுத்துப் பிரித்துப் படித்தபடி]
கை : மூன்று இலட்சத்து முப்பதாயிரம் - பழைய இருப் புடன் சேர்த்து இருபத்தெட்டு இலட்சத்து அறுபதாயிரம் ......
மடா : அதிலே ஒரு இலட்சம், வேலையற்றோர் உதவிக்காக ஊர்ப்பெரியவர் மன்றத்துக்குக் கொடுக்கிறோம் !
[ஊர்ப் பெரியவர் மன்றத் தலைவர் மகிழ்ச்சி மேலிட்டு அருளாளர் வாழ்க ! அறம் வாழ்க! அருளாளர் வாழ்க! என்று மன எழுச்சியுடன் கூறி, மடாதிபர் அருகே சென்று வணங்கி, பண முடிப்பு பெறுகிறார் ]
[பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். கந்தபூபதியைக் கையாள் முறைத்துப் பார்க்கிறான்.]
மடா : கந்தபூபதி ! இரண்டு லட்சம் ரூபாயை நமது ஊர் நாட்டாண்மைக்காரரிடம் கொடுத்து ஏரி, குளம், குட்டைகளைச் சீர் செய்து பாதைகளைச் செப்பனிடச் சொல்லு. (கணக்கெழுது வோனைப் பார்த்தபடி) அப்பனே ! ஏட்டிலே குறித்துக் கொள்.
அனாதை விடுதிக்கு அறுபதாயிரம், முதியோர் பள்ளிக்கு நாற்பதாயிரம், தமிழ் ஆராய்ச்சிக்கு ஒரு இலட்சம், இசைமன்றத் துக்கு ஐம்பதாயிம் ஏழைகளின் இலவசப் படிப்புக்கு இரண்டு லட்சம்.
[மடாதிபதியின் 'நன்கொடை' கேட்டு மக்கள் ஆனந்த ஆரவாரம் செய்கிறார்கள். கந்தபூபதி கடுகடுத்த முகத்துடன் மடாதிபதியை பார்க் கிறான் ]
மடா : (குறும்பாக) ஆயாசப்படாதே அப்பனே! நமச்சி வாயத்தின் திரு உள்ளப்படி நாம் நடக்கிறோம்.
[அருளாளர் வாழ்க ! அறம் வாழ்க ! என்று மக்கள் ஆரவாரம் செய்கின்றனர்.]
மெய்யன்பர்களே! இன்று நாம் நடந்து கொள்ளும் முறை உமக்கு வியப்பாக இருக்கும் - கந்தபூபதிக்கு கசப்பு - முருக தாசருக்கு கோபம் - நாம் இன்று மாயாபந்தம் விடுபட்டோம் - மறு பிறவி கொண்டோம் மகேஸ்வரன் அருளால், என் அப்பன், இமயம் வாழும் சொக்கன் நேற்றிரவு என் முன் தோன்றி எனக்குப் புதிய கட்டளைகள் பிறப்பித்தார்,
[பக்தர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஊர்ப் பெரியவர்கள் உள்ளன்புடன் பேசுகிறார்கள், வணங்கியபடி...]
பெரி : பூலோக கைலாயமன்றோ இது. இங்கு அரன் வருவது முறைதானே - அரனைக் கண்ட அண்ணலே! வாழ்க! சிவனுடன் பேசிய செம்மலே வாழ்க!
மடா : அன்பர்களே! (சிவனார் பேசுவது போன்ற குரலில்) வெண்பட்டு உடுத்துகிறாயே நீ - நீ காணும் மக்கள் கந்தல் ஆடை யுமின்றி உள்ளனரே, காண்கிலையோ (சொந்தக் குரலில்) என்று என்னை என்னப்பன் கேட்டார். உனக்கு மேனியிலே சந்தன மணம் - மக்களின் உடலிலே உழைப்பால் உண்டாகும் வியர் வையின் நாற்றம்! உன் நாசிக்கு எட்டவில்லையா என்று கேட் டார்.
[பக்தர்களின் மனம் உருகுகிறது)
மடா : (சிவனார் பேசும் பாவனையிலேயே) உனக்கு அறுசுவை உண்டி -உழைப்பாளிக்கு அரைவயிற்றுக் கஞ்சி உனக்குப் பாலும் பழமும் பட்சணமும்! அவர்களுக்குப் பழம் சோறும் பருக்கையும் கம்பங்கூழும். உனக்கு பஞ்சணை! அவர் களுக்குக் கட்டாந்தரை ! உனக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம்! அவர்களுக்குக் குன்மம், காசம், கொடுநோய். உனக்குக் கோட்டை போலக் கோயில், கொலு மண்டபம் ! அவர்களுக்கு நண்டுவளை போல் வீடு. ஏ! மட அதிபனே ! இதைக் கண்டாயே, உன் கண்களிலே நீர் சுரக்கவில்லையா? இதயம் துடிக்க வில்லையா - இரத்தம் கொதிக்கவில்லையா? (சொந்தக் குரலில்) என்று கேட்டு கடுங்கோபத்துடன் என் எதிரே நின்றார்.
பெரி : (மனம் உருகிய நிலையில்) என்ன அற்புதம்! இறை வனின் திருவிளையாடலை என்னென்பது!
மடா : நான் மௌனமாக இருந்தது கண்டு இமயவன் என்னை ஏறிட்டுப் பார்த்துக் கூறினார் ................ (சிவனார் பேசும் பாவனையில்) உன்னிடம் பக்தகோடிகள் காணிக்கை தருவதும் வேலிகள் விடுவதும் எதற்கும்! உன் சுகபோகத்துக்கா? நீ.
ஏழைகளுக்கு இதம் செய்ய வேண்டும் என்பதற்காக அல்லவா! (சொந்தக் குரலில்) என்று சிவனார் சீற்றத்துடன் கேட்டார். நான் அஞ்சவில்லை.
[பக்தர்கள் முகத்தில் கவலை.]
மடா : காரணம் என்ன? என் மனதிலே இருந்துவந்த கறை - அஞ்ஞானம், என்னைவிட்டு அகலவில்லை . பந்தம், பாசம், பற்று, சுயநலம் இவை என் மனதிலே இருந்து கொண்டு. அஞ்சாதே ! அரன் மிரட்டினால் என்ன ! உன் உரிமையை இழக்காதே - என்று கூறி என்னை உசுப்பின!
பெரி : சிவனாரிடம் சண்டையா ! சிவ சிவா!
மடா : நான், கர்ம பலன்படி காரியம் நடக்கிறது, கடம்பா, கச்சியேகம்பா, காமாட்சி மணாளா , காலனைக் கொன்றவா! - என்று துதித்தேன். சிவனார், (சிவன் பேசும் பாவனையில்) ஏ! அஞ்ஞான சொரூபமே! என் அடியவனை விட்டு வெளியே, வா! - (சொந்தக் குரலில்) என்று முழக்கமிட்டார் - முக்கண்ணுடையார்.
பக்தர்கள் : ஆஹா ......... பிறகு ........
மடா : என் தலை சுழன்றது !
பக் : ஐயோ ............. பிறகு .............
மடா: மார்பு வெடித்துவிடும் போலாகிவிட்டது!
பக் : அடடா !......... பிறகு.........
மடா : என்னென்பேன் இறைவனின் திருக்கூத்தை ! என் எதிரில் நான் நின்றேன்.
[அனைவரும் திடுக்கிடுகின்றனர்.]
மடா : என்னைப் போன்றே ஓர் உருவம் என் எதிரே நின்றது. பெரிய சுமையைக் கீழே இறக்கிவிட்டவனுக்கு உண்டாகும் ஆனந்தம், எனக்கு! என் எதிரே இருந்த உருவம் உறுமிற்று... நான், பிரபோ! இதென்ன என்று கேட்டேன்.........
பக் : சிவனார் என்ன சொன்னார்............
மடா : (சிவனார் பேசும் பாவனையில்) பாலகா! ஒவ்வொருவர் உள்ளத்திலும் பற்றும், பாசமும், தன்னலமும் உண்டல்லவா? மனிதனின் மனதிலே அஞ்ஞானமும் உண்டு மெய்ஞ்ஞானமும் உண்டு. இரு சக்திகளுக்கும் கடும் போர் - மனம் எனும் களத் திலே! எவனொருவன் அஞ்ஞானத்தை விரட்டி அடிக்கிறானோ
அவனே அரனடியான் - இதோ உன்னைப் போன்றே காணப் படும் உருவம், உன் எதிரே நிற்கும் உருவம், உன் உள்ளத்திலே இருந்துவந்த அஞ்ஞானம்! அந்த அஞ்ஞான சொரூபத்தை நான் வெளியேற்றிவிட்டேன். ஆனால், நான் மறைந்ததும், அஞ் ஞான சொரூபம் மிரட்டும் - அஞ்ஞாதே ! தங்க இடம் கேட்கும் - இசையாதே ! விரட்டு - விரட்டு - உன் அடியார்களிடம் கூறிடு - அழித்துவிடு. அஞ்ஞான சொரூபத்தை மீண்டும் உன் உள்ளத் திலே குடிபுகவிட்டால்! பிறகு நான் வாரேன் உன்னைக் காப் பாற்ற, (சொந்தக் குரலில்) என்று கூறிவிட்டு, அஞ்ஞானத்தை விரட்டினார் - அது அகோரக் கூச்சலிட்டு விட்டு ஓடிவிட்டது - நான் தான் தன்யனானேன்! தயாபரனின் தொண்டனானேன்! மக்களின் தோழனானேன்! உண்மைக்கு ஊழியனானேன்! ஊராருக்கு உழைப்பாளியானேன்!..... ஆனால் மெய்யன்பர்களே! மீண்டும் அந்த அஞ்ஞான சொரூபம் வருமோ - வந்தால் என்ன செய்வது என்று அச்சம் எனக்கு. அரன் விட்ட வழிப்படி நடக்கட்டும்.
(கூட்டத்திலே பரபரப்பு - அமளி. உண்மை மடாதிபதி ஓடிவருகிறார் - அலங்கோலமாக, ஒரு பணி யாளுடன் – கூவியபடி]
[உண்மை மடாதிபதியைத் தொலைவிலே கண்டதும், போலி மடாதிபதி]
போ. மடா : மெய்யன்பர்களே!........ அதோ ...... அதோ ........
(என்று அச்சம் மேலிட்டு அலறும் பாவனையில் கூவ, பக்தர்கள் திடுக்கிடுகிறார்கள், மற்றோர் மடாதி பதியின் திடீர்ப்பிரவேசம் கண்டு.)
உ . மடா : (ஆத்திரமாகி) யாரடா அவன் - அயோக்கியா! அக்ரமக்காரா! வேஷக்காரா ! நான் வசந்த மண்டபத்திலே இருந்த சமயம் இங்கே புகுந்து என் பீடத்தில் அமர்ந்துகொண்டு பிதற்றுகிறாய் ..... பேயர்களே! எப்படி இதை அனுமதித்தீர்கள்! பித்தர்களே! இதென்ன பாதகம் !
[இரு மடாதிபதிகளைக் கண்ட மக்கள் திகைத்து]
மக் : இங்கேயும் மடாதிபதி - அங்கேயும் மடாதிபதி - என்ன அதிசயம் .......
போ. மடா : மெய்யன்பர்களே! வந்துவிட்டது அஞ்ஞான சொரூபம்....
[மக்கள் திடுக்கிடுகிறார்கள் ]
உ . மடா : யாரடா அஞ்ஞான சொரூபம் அக்ரமக்காரா!
[பீடத்தருகே பாய்கிறான். நன்கொடை பெற்றுக் கொண்டவர்கள் தாவிச் சென்று அவனைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.]
போ. மடா; அரன் ஆணை! என்னை அணுகாதே.
உ . மடா : அரனும் கரனும் ! என்ன டா உளறல் இது ..... போ.
மடா : அபசார நிந்தைப்பட்டுழலாதே –
உ . மடா : (கதறும் நிலையில் ) ஐயோ ! கந்தா - முருகா - உங்களுக்குக் கண்ணில்லையா... நான் சித்ரபூஜையில் இருந்த சமயம் விபரீதம் வந்துவிட்டதே........
போ. மடா : பக்தகோடிகளே ! விஷயம் விளங்கிவிட்டதா? விண்ணவன் கூறியபடி என்னை விடாமல் பிடித்தாட்ட அஞ்ஞான சொரூபம் வந்துவிட்டது .......
[பலரும் அஞ்ஞான சொரூபம்! அஞ்ஞான சொரூபம்! என்று கூவுகிறார்கள்.]
[உண்மை மடாதிபதி பிடித்திருப்போரைத் தாக்கித் தள்ளிக்கொண்டு முன்னால் செல்ல முயற்சிக் கிறான். விபூதி மடலில் இருந்து விபூதியைப் பிடி பிடியாக எடுத்து போலி மடாதிபதி, உண்மை மடாதிபதியின் கண்ணில் விழும்படி தூவிக்கொண்டிருக்கிறான்.]
போ. மடா : ஐயோ! அஞ் ஞான சொரூபம் - அடித்து விரட்டுங்கள் ..................
உ . மடா : (அழுகுரலில்) அடித்து விரட்டுவதா! என்னையா.....
[கந்தபூபதி, முருகதாசர், கையாள் மூவரும் குசுகுசு வெனப் பேசிக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தவர்களாகி]
மூவரும் : அடித்து விரட்டுங்கள் - அடித்து விரட்டுங்கள் ...
உ . மடா : பாவிகளே!..... என்னையா......... போ. மடா : பக்தர்களே! அஞ்ஞான சொரூபத்தை.....
[பலரும் சேர்ந்து அழித்துவிடுகிறோம் என்று கூச்சலிடுகிறார்கள். உண்மை மடாதிபதி பெரும் பாடுபடுகிறார்.]
போ . மடா : நமச்சிவாயத்தின் மீது ஆணை ! அஞ்ஞான சொரூபத்தை அடித்து விரட்டுங்கள்.
[பலரும் சேர்ந்து மடாதிபதியைக் கீழே சாயுமளவு அடித்துவிடுகிறார்கள். அமளி அதிகமாகிறது. போலி மடாதிபதி, குறிப்பாக ஒரு பண முடிப்பை எடுத்துக்கொள்கிறான் கந்தபூபதி அவன் கரத்தைப் பிடித்திழுத்துக்கொண்டு ஓடு கிறான். அமளியிலே இதை யாரும் கவனிக்க வில்லை. முருகதாசன் கற்பூரக் குவியலைக் கொளுத்துகிறான். கீழே வீழ்ந்த பிறகும் மடாதி பதியை அடிப்பது ஓயவில்லை . அஞ்ஞான சொரூபம் ஒழிக! அருளாளர் வாழ்க ! அஞ் ஞான சொரூபம் ஒழிக - என்ற முழக்கம் பல மாகிறது. மடாதிபதி மாண்டு போகிறார் ]
பெரி : ஒழிந்தது அஞ்ஞான சொரூபம் ! மெய்ஞ்ஞானம் எங்கே ! - (என்று ஆர்வத்துடன் கேட்க).
[பலரும் எங்கே? மடாதிபதி அருளாளர் எங்கே? அரனைக் கண்ட அண்ணல் எங்கே?- என்று கேட்கின்றனர்.]
கந்த : (உருக்க மாக) அப்பனே! ஒப்பிலாமணியே! உன் திருவிளையாடலை என்னென்பேன்! மெய்யன்பர்களே! நீறு பூசுங்கள்! நாதன் நாமத்தைப் பஜியுங்கள், அருளாளரின் மெய்ஞ்ஞான உருவம் அரனடி சேர்ந்துவிட்டது - அஞ்ஞானத்தை அடித்து வீழ்த்தியதும், இங்கோர் ஜோதி தோன்றிற்று - மெய்ஞ் ஞானி அதிலே கலந்துவிட்டார் - பொன்னார் மேனியனைப் போற்றுங்கள் .......................... அருளாளரின் சடலத்தை அடக்கம் செய்வோம் வாரீர் ...............
[கண்களைத் துடைத்துக்கொள்கிறார், பலரும் ]
பெரி : பட்டம் யாருக்கு ............?
[கந்த பூபதியும், முருகதாசரும் கையாளின் காலில் வீழ்ந்து வணங்கி, மடாதிபதி மாசிலாமணியார் வாழ்க ! என்று கூறுகிறார்கள்.]
(கையாள் கண் துடைத்துக்கொள்கிறான்.)
கந்த : வாழ்த்துங்கள்! பக்தர்களே ! மாசிலாமணியார்........
[மக்கள், வாழ்க ! வாழ்க ! என்று கூவுகிறார்கள் ]
[ அதேபோது காட்டுப் பாதையிலே போலி மடாதிபதி தன், வேடத்தைக் கலைத்தபடி]
போ. மடா : ஒழிந்தான் உலுத்தன் - யார் அவன் அடி பணிந்து கிடந்தனரோ அவர்களே அடித்துக் கொன்றனர்.......... அக்ரமக்காரன் - சரியான தண்டனை.
(வேகமாகச் செல்கிறான்.)
-----------------
This file was last updated on 04 Dec. 2020.
Feel free to send the corrections to the webmaster.