காளமேகப் புலவர் பாடிய
திரு ஆனைக்கா உலா
tiru AnaikkA ulA
by kALamEkap pulavar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Mrs. Meenakshi Balaganesh for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
காளமேகப் புலவர் பாடிய
திரு ஆனைக்கா உலா
Source:
காளமேகப் புலவர் பாடிய
திரு ஆனைக்கா உலா
- மூலமும் குறிப்புரையும் -
பதிப்பாசிரியர்: மு. அருணாசலம், எம். ஏ.
செந்தமிழ்க் கழகம் -- சொக்கநாதபுரம் '
முதற் பதிப்பு - 1944
விலை ரூபா 2-8-0, உரிமை பதிவு செய்யப்பெற்றது
சாது அச்சுக்கூடம், சென்னை
----------------
பொருளடக்கம்
பதிப்புரை
முகவுரை
நூன்முகம்
1. உலா
2. திருவானைக்கா உலா
3. இவ்வுலாவின் பொருட்சுருக்கம்
4. திருஆனைக்காத் தல வரலாறு
5. ஆசிரியர் வரலாறு
6. நூலாராய்ச்சி
(திருஆனைக்கா உலா, விநாயகர் வணக்கம், தலச்சிறப்பு, திருவீதியில் எழுந்தருளல்
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் )
சில குறிப்புக்கள்
அரும்பொருள் அகராதி
-----------
பதிப்புரை
செந்தமிழ்க் கழகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று கிடைக்காத பழந்தமிழ் நூல்களை நல்ல முறையில் அச்சிட்டு வெளியிடுவது. காகிதப் பஞ்சம் காரணமாக, அந்நோக்கத்தை விரைவில் நடைமுறையில் கொண்டுவர முடியவில்லை. எனினும், கழக அமைச்சர் திரு. மெ. சு. உ. சுப. பழ. சுப்பிரமணியன் செட்டியார் அவர்களின் பொருளுதவியாலும், கழக அங்கத்தினர்களின் தீவிர முயற்சியாலும், திருஆனைக்கா உலா என்னும் இந்நூலை எங்கள் கழகத்தின் முதல் நூலாக வெளியிடுகிறோம். இந்நூலை வெளியிடுவதற்குப் பொருள் உதவிய நண்பர் திரு. பழ. சுப்பிரமணியன் செட்டியாரவர்களுக்கும், நூலின் பதிப்பாசிரியர் திரு. மு. அருணாசலம் அவர்களுக்கும், இந்நூல் வெளியிடுவதற்கு வேண்டிய உதவி செய்த திரு. வை. கோவிந்தன் செட்டியார் அவர்களுக்கும், சாது அச்சுக்கூடத்தினருக்கும், நூல் வெளிவருவதற்குக் காரணமாயிருந்த திரு. இராமநாதனவர்களுக்கும் அன்பர்களுக்கும் எங்கள் நன்றி உரியது.
-- செந்தமிழ்க் கழகத்தார்
----------
முகவுரை
திரு ஆனைக்கா உலா என்பது, சோழ நாட்டிலுள்ள திரு ஆனைக்கா என்ற தலத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் சிவபெருமான்மீது காளமேகப்புலவர் பாடிய சிறு பிரபந்தம். இத்தலத்தைப்பற்றியும் நூலைப்பற்றியும் ஆசிரியரைப்பற்றியும் விரிவான செய்திகளை இதன் பின்னுள்ள நூன்முகத்தால் அறியலாம்.
சிலேடை பாடுவதில் இணையில்லாதவர் என்று புகழ் பெற்ற காளமேகப் புலவருடைய வரலாறும் அவர் பாடிய தனிப் பாடல்களும் தமிழ் நாடு முழுதும் நன்கறிந்தவை. ஆயினும், அவர் பாடிய நூல்கள் இரண்டொன்றேயுள்ளன; இவைகளும் இன்றும் கிடைக்கமாட்டா. இவற்றைத் தொகுத்துத் தனிப்பாடல்களையும் சேர்த்துக் காளமேகப் புலவர் பிரபந்தத் திரட்டு என்ற பெயரோடு வெளியிட எண்ணினேன். காகிதப் பஞ்சம் ஏற்பட்ட காரணத்தால் நான் எண்ணியபடி திரட்டு வெளியிட இயலவில்லை. திரு ஆனைக்கா உலா ஒன்றுமட்டும் இப்போது வெளிவருகிறது. இது 1890இல் முதன்முதல் வெளியாயிற்று. அதைப் பரிசோதித்துக் குறிப்புரை யெழுதி, நூன்முகம், பொருளகராதி முதலிய அங்கங்களமைத்து இப்பதிப்பு வெளியாகிறது.
திரு ஆனைக்கா உலா
செட்டி நாட்டிலுள்ள சொக்கநாதபுரத்துச் செந்தமிழ்க் கழகத்தார் இந்நூலை இப்போது வெளியிடுகிறார்கள். இலக்கிய உணர்ச்சி குன்றியுள்ள இக்காலத்தில், பண்டை இலக்கியமொன்றை வெளியிட முன்வந்த கழகத்தாரின் ஊக்கத்தைப் பெரிதும் பாராட்டுகிறேன். வேண்டுவார் வேண்டுவதே ஈபவனாகிய ஆனைக்காவுடைய ஆதிப்பெருஞ்செல்வன் கழகத்தாராகிய இளைஞர்களுக்கு எல்லா நலன்களையும் அருளுமாறு அவன் திருவருளை இறைஞ்சுகின்றேன்.
தியாகை, மு. அருணாசலம்
1-5-1944
-------------
center> நூன்முகம்
ஊனோ டுண்டல் நன்றென ஊனொ டுண்டல் தீதென
ஆன தொண்டர் அன்பினாற் பேச நின்ற தன்மையான்
வானொ டொன்று சூடினான் வாய்மை யாக மன்னிநின்று
ஆனொ டஞ்சும் ஆடினான் ஆனைக் காவு சேர்மினே.
1. உலா
பிரபந்தமென்பது, ஒரு புலவன் தான் வழிபடுகின்ற தெய்வத்தையோ அடியாரையோ, தனக்கு உபகாரஞ்செய்த அரசனையோ வள்ளலையோ புகழ்ந்து பாடுகின்ற நூல். பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு வகை என்பது மரபு. இவற்றுள் உலா என்பதும் ஒன்று.
தலைவன் வீதியிலே பவனி வருகிறானென்றும், அங்ஙனம் வருகையில் ஏழு பருவ மகளிரும் அவனைக் கண்டு காதல் கொண்டார்கள் என்றும் பொருளமையக் கலிவெண்பாவால் பாடவேண்டும் என்பது உலாப் பிரபந்தத்துக்குரிய இலக்கணம்; 'பேதை முதலா எழுவகை மகளிர்கண்டு, ஓங்கிய வகைநிலைக்கு உரியா னொருவனைக் காதல்செய் தலின்வருங் கலிவெண் பாட்டே ' என்பது பன்னிரு பாட்டியல் சூத்திரம் (215); 'திறந்தெரிந்த பேதை முதலெழுவர் செய்கை , மறந்தயர வந்தான் மறுகென்று - அறைந்த கலி, வெண்பா உலாவாம்' என்பது வச்சணந்தி மாலை (செய்யுளியல் 27).
குழமக னைக்கலி வெண்பாக் கொண்டு
விழை தொல் குடிமுதல் விளங்க உரைத்தாங்கு
இழைபுனை நல்லார் இவர்மணி மறுகின்
மற்றவன் பவனி வர, ஏழ் பருவம்
உற்றமா னார்தொழப் போந்தது உலாவாம் (486)
என்பது இலக்கண விளக்கப் பாட்டியல். ஏழு பருவ மகளிராவார், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்பவர்கள்.
இது, புறப்புறக் கைக்கிளை என்றும், பாடாண்டிணை என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர்; 'இனி ஒரு பொருள் நுதலாது திரிந்து வருங் கலிவெண் பாட்டும், ஈண்டுக் கூறிய நெடுவெண் பாட்டோடு ஒரு புடை ஒப்புமையின் அக்கலிவெண் பாட்டாக இக்காலத்தார் கூறுகின்ற உலாச் செய்யுளும் புறப் புறக்கைக்கிளைப் பொருட்டாதல், ஒன்றென முடித்தல் என்னும் உத்தியாற் கொள்க. அவ்வுலாச் செய்யுள் இரண்டுறுப்பாயும் வெண்பாவிற் கெட்டும் வருதலின் கலிவெண்பாவின் கூறாம். இக்காலத்து அதனை ஒருறுப்பாகச் செய்து செப்பலோசையாகவும் கூறுவர். அது துள்ளலோசைக்கே ஏற்குமாறுணர்க' - தொல்காப்பியம், செய்யுளியல் 118; 'பக்கு நின்ற காமம் ஊரிற் பொதுமகளிரோடு கூடிவந்த விளக்கமும் பாடாண்டிணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர்; அது பின்னுள்ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்யும் உலாச் செய்யுளாம்" - தொல். புறத்திணையியல், 'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப்' என்ற 30 ஆம் சூத்திரவுரை.
பேதை முதலான ஏழு பருவ மகளிர் இன்னார் என்பதையும் அவர்களுக்குரிய வயதையும் பின்வரும் பன்னிரு பாட்டியற் சூத்திரங்கள் உணர்த்தும்:
ஏழு நிலையும் இயம்புங் காலை
பேதை பெதும்பை மங்கை மடந்தை
அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவத் தாதல்
நோக்கி யுரைப்பது நுண்ணியோர் கடனே. (218)
பேதைக் கியாண்டே ஐந்து முதல் எட்டே. (216)
பெதும்பைக் கியாண்டே ஒன்பதும் பத்தும். (220)
மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவுஞ் சாற்றும். - (221)
மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும். - (222)
அரிவைக் கியாண்டே அறுநான் கென்ப. (223)
தெரிவைக் கியாண்டே இருபத் தொன்பது. (224)
ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது
பேரிளம் பெண்டுக் கியல்பென மொழிப. (225)
இவ்வாண்டு வரையறையானது வேறுவிதமாகக் கூறப் பெறுதலுமுண்டு:
காதல்கூர்ஏழ்
எழிற்பேதை பதினொன்று பெதும்பை பன்மூன்று
இயன்மங்கை பத்தொன்பான் மடந்தை ஐயைந்து
அழகரிவை முப்பஃதோர் தெரிவை நாற்பது
ஆம்வயது பேரிளம் பெண் முதலா யுள்ளோர்
தொழவுலாப் போந்த துலா (37)
என்பது சிதம்பரப் பாட்டியல்.
ஐந்து முதலே ழாண்டும் பேதை. (487)
எட்டு முதல் நான் காண்டும் பெதும்பை. (488)
ஆறிரண் டொன்றே யாகும் மங்கை. (489)
பதினான் காதிபத் தொன்பான் காறும்
எதிர்தரும் மடந்தை; மே லாறும் அரிவை. (490)
ஆறு தலையிட்ட இருபதின் மேலோர்
ஆறுந் தெரிவை ; எண் ணைந்துபேரிளம் பெண்என்று
ஒரும் பருவத் தோர்க்குரைத் தனரே. (491)
இவை இலக்கண விளக்கப் பாட்டியற் சூத்திரங்கள்.
பேதை தனக்குப் பிராயமு மேழு பெதும்பைக்கொன்ப
தோதிய மங்கைக்குப் பன்னிரண் டாகும் ஒளிர்மடந்தை
மாதருக் கீரேழ் அரிவை பதினெண் மகிழ்தெரிவைச்
சாதிமூ வேழெனும் பேரிளம் நாலெட்டுத் தையலர்க்கே
என்பது ஒரு தனிப் பாடல்.
உலா என்பது, உலாப்புறம் என்றும் சொல்லப்பெறும்; தலைவன் புறத்தே உலா வருதலால் இப்பெயர் வந்தது; ' அது [1]திருவுலாப்புறத்துள் "வாமான ஈசன் வரும்'' என முடித்து, மேல் வேறோர் உறுப்பாயவாறும், ஒழிந்த உலாக்களுள் வஞ்சியுரிச்சீர், புகுந்தவாறும் அடிவரையறை யின்மையும்' என்பது நச்சினார்க்கினியர் உரை (தொல். செய். 161); 'பாட்டுடைத் தலைவன் உலாப்புற வியற்கையும், ஒத்த காமத் தினையாள் வேட்கையும், கலியொலி தழுவிய வெள்ளடி யியலாற், றிரிபின்றி நடப்பது கலிவெண் பாட்டே' - பன்னிரு. 214; 'புறவுலா என்பதனை உலாப்புறம் என்றும்......... வழங்கும் இத்தொடக்கத்தன இலக்கணப் போலி ' - நன்னூல் 247, சங்கர நமச்சிவாயர் உரை.
பவனி வருதலைக் கூறுதலால் இப்பிரபந்தம் பவனி உலா என்னவும் பெறும்; 'கழுக்குன்றீசர், பவனித் திருவுலாப் பாட' - கழுக்குன்றத்துலா.
ஞானசம்பந்தர்மீது நம்பியாண்டார் நம்பி பாடிய ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை என்ற பிரபந்தத்தால், உலாமாலை எனவும் உலா சொல்லப் பெறுமென்று அறியலாம். 'குருபரன் மேற், சீர்கொண்டு உலா மாலை சேர்க்கவே ' - இலஞ்சி முருகனுலா; 'நம்பி எங்கள், மாமால் பவனியுலா மாலைக்கு' - குறுங்குடி நம்பியுலா.
இவ்வாறு தலைவன் உலா வரும்போது கண்டு காமுறும் மகளிர் பொதுமகளிராவார் என்பது மேற்காட்டிய நச்சினார்க்கினியர் உரைப்பகுதியால் பெறப்படும்; ' இனி ஊரொடு தோற்றமும் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப் படாது' (தொல். புறத். 31) என்று அவர் மேலும் கூறுவது இக்கருத்தை வற்புறுத்துவதாயுள்ளது; சீவகன் உலா வந்தபோது,
இன்னமு தனைய செவ்வாய் இளங்கிளி மழலை யஞ்சொற்
பொன்னவிர் சுணங்கு பூத்த பொங்கிள முலையினார்தம்
மின்னிவர் நுசுப்பு நோவ விடலையைக் காண ஓடி
அன்னமும் மயிலும் போல அணிநகர் வீதி கொண்டார்
என்று சொல்லுமிடத்து, 'இது கற்புடை மகளிரொழிந்தோரைக் கூறிற்று' (சிந்தாமணி 457) என்பர் அதே உரைகாரர். - பெருங்கதை - ஆசிரியரான கொங்குவேளிரும் இதே கருத்தைக் கூறுவர்:
உதயண குமரன் வதுவைக் கணிந்த
கோலங் கொண்ட கோல்வளை மகளிருள்
ஞாலந் திரியா நன்னிறைத் திண்கோள்
உத்தம மகளிர் ஒழிய மற்றைக்
கன்னியர் எல்லாம் காமன் கரந்த
கணையுளங் கழியக் கவினழி வெய்தி
இறைவளை நில்லார் நிறைவளை நெகிழ
நாண்மீ தூர்ந்து... வருந்தினர். (2: 7: 51 – 8)
மகளிர் காமுறுதல் முதலியவற்றைக் கூறும்போது, எழுபருவ மகளிரையும் முறையாகக் கூறுவது மரபு. பெருங்கதையுள், நீராட்டரவம் என்ற பகுதியில், பேதை முதலிய எழுபருவ மகளிரும் நீராடிய அரவத்தை ஆசிரியர் மிக்க விரிவாகக் கூறியுள்ளார். அங்ஙனமே, இராமனைக் காணவந்த மங்கையரைக் கூறும்போது, 'பேதைமார் முதல் கடைப் பேரிளம் பெண்கள்தாம், ஏதியார் மாரவேள் ஏவவந் தெய்தினார் ' (எதிர்கோட் படலம் கூச) என்று கம்பரும் கூறுவர்.
இப் பொதுமகளிரைப் போல, உலாவையொத்த சைவநூல்களிற் கூறப்பெற்றுள்ள சைவமாதர்கள் உருத்திர கணிகையர் எனவும், தளிப்பெண்டுகள் எனவும் கூறப்பெறுவர். (இவர்கள் விழாக்காலங்களிலே அவ்வத்தலத்துக்குரிய உலாவைப் பெருமான் திருமுன்பு பாடுவது பழைய வழக்கமாயிருந்தது என்றும், இவ்வழக்கம் பல தலங்களில் இப்போது அருகிவிட்டது என்றும், டாக்டர் ஐயரவர்கள் கூறுவர்.)
உலாவில், எழுபருவ மகளிரின் செயல்களைக் கூறும் பகுதி பின்னெழு நிலை என்றும், தொடக்கத்தில் பாட்டுடைத் தலைவன் சிறப்பைக் கூறும் பகுதி முதனிலை என்றும், இம்முதனிலையுள் தலைவன் சிறப்பு, நீராடல், அலங்காரம், குழாங்கள் முதலியன உரைக்க வேண்டுமென்றும் பன்னிரு பாட்டியல் கூறும் :
முதனிலை பின்னெழு நிலைஉலா வெண்கலி. (213)
குடிநெறி மரபு கொளல் கொடை விடியல்
நன்னீ ராடல் நல்லணி யணிதல்
தொன்னகர் எதிர்கொளல் நன்னெடு வீதியின்
மதகளி நூர்தல் முதனிலை யாகும். (216)
ஆதி நிலையே குழாங்கொளல் என்றெடுத்து
ஓதிய புலவரும் உளரென மொழிப. (217)
முதனிலைப் பகுதியிலேனும் பின்னரேனும், தலைவனுக்குரிய தசாங்கம் கூறவேண்டுமென்பது மற்றொரு விதி:
பேதை முதல் ஏழ்பருவப் பெண்கள் மயக்கமுற
ஓதுமறு குற்றானொள் வேலோனென் - றேதம்
அறக்கலி வெண்பாவின் ஆக்கல் உலாவாம்
புறத்தசாங் கந்தாங்கிப் போற்று
என்பது பிரபந்தத்திரட்டு [2]. பின்னெழுநிலையுள் சிற்றில், பாவை, கழங்கு, அம்மனை, ஊசல், கிளி, யாழ், புனலாட்டு, பொழில் விளையாட்டு, மது நுகர்தல் என்பனவும் பிறவும் கூறுதல் வேண்டுமென்பது இலக்கணம்:
சிற்றில் பாவை கழங்கம் மனையே
பொற்புறும் ஊசல் பைங்கிளி யாழே
பைம்புன லாட்டே பொழில்விளை யாட்டே
நன்மது நுகர்தல் இன்ன பிறவும்
அவரவர்க் குரிய ஆகும் என்ப. (பன். உஙச)
பேதை முதலிய ஏழு பருவ மகளிரையும் ஆசிரியர்கள் உலாவுள் கூறும்போது, அவரவர் வயதுக்கேற்ற இயல்புடையவராக அவர்களை வருணிக்கவேண்டுமென்பது மரபு. பேதை என்பவள் ஏழெட்டு வயதான இளங்குழந்தை; வேட்கை பிறவாத பருவத்தினள்; வெறும் விளையாட்டொன்றையே அறிவாள். பெதும்பை, வேட்கை பிறந்தும் பிறவாமலுமுள்ள பருவத்தாள். மங்கை, தக்க பருவத்தினள்; காதலொழுக்கத் துக்கு உரியவள்; இனித்தான் அதை அறியப்போகின்றவள். மடந்தை, சற்றே இன்பந் துய்த்தவள். அரிவை, இன்பத்தில் முழுதும் திளைத்தவள். தெரிவை, இந்த நிலையும் கடந்து ஓரளவு தாய்மை நிலையடைந்தவள். பேரிளம் பெண், வயது முதிர்ந்தவள்; மெய்யின்பத்தை விழையும் நிலையை ஓரளவு கடந்தவள். இவ்வகை இயல்புகள் தோற்றும்படி புலவர்கள் ஏழு பருவத்தையும் அமைத்தல் வேண்டும். இவற்றுள் பெதும்பைப் பருவம் பாடுதல் எளிதன்று என்பது புலவர்கள் கொள்கை; 'பேசும் உலாவிற் பெதும்பை புலி' என்பது பழம்பாடல்.
பெண்களுக்குரிய பருவம் ஏழு என்றதற்கேற்ப, ஆண்களுக்கும் ஏழு பருவங்களையும் அவற்றுக்குரிய வயதையும் பன்னிரு பாட்டியல் கூறுகிறது. இவை பாலன் - 7, மீளி - 10, மறவோன் - 14, திறலோன் - 15, காளை - 16, விடலை - 30 (வரையில்), முதுமகன் (முப்பதின் பின்னர்) என்பன. 48 ஆண்டுவரை உலாப் பாடலாம் என்றும் கூறுகிறது:
நீடிய நாற்பத் தெட்டி னளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்தென மொழிப. (பன். 233)
வேந்தர், கடவுளர், அறிவோர் என்போர் உலாக் கொள்ளுதற்குரியோர்:
வேந்தர் கடவுளர் விதி நூல் வழியுணர்
மாந்தர் கலிவெண் பாவிற் குரியர். (235)
நாலு வருணமும் ஏவுதல் உரிய
உலாப்புறச் செய்யுளென் றுரைத்தனர் புலவர். (236)
மேற் சூத்திரத்தில் (237) உலாவுக்குரியர் என்று கூறாதபடி, கலிவெண்பாவிற்குரியர் என்று பன்னிரு பாட்டியல் கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. உலாப் பிரபந்தத்துள் கலிவெண்பா பயின்று வந்தமை காரணமாக, உலா என்பதைக் கலிவெண்பா எனவும் கலிவெண்பாவை உலா எனவும் கூறுவது வழக்கமாகிவிட்டது என்று ஊகிக்கலாம். (கோட்டியூர்த் திருமாமகள் நாச்சியார் கலிவெண்பா3 என்ற நூலின் எட்டுப் பிரதிகளில் திருமாமகள் நாச்சியார் உலா என்று எழுதப்பட்டுள்ளது. இதுவும் இம்மயக்கத்தையே உணர்த்துகிறது.)
வேந்தர் மீது பாடப் பெற்ற உலாக்கள், ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா என்பனவும், சங்கரசோழன் உலாவும்.
கடவுளர் மீது பாடப்பெற்றவை திருக்கயிலாய ஞான உலா முதலியன. இந்த ஞானஉலா, சேரமான் பெருமாள் நாயனார் பாடியது; சைவவேதமாகிய திருமுறையில் சேர்க்கப்பெற்ற பெருமையுடையது. தமிழ்மொழியிலேயே முதன்முதல் தோன்றிய உலா இது ஆதலினால், ஆதியுலா எனவும் பெயர்பெறும். இது சிவபெருமான்மீது பாடப்பெற்றது. குறுங்குடி நம்பியுலா, திருவேங்கடநாதர் உலா என்பன திருமாலைப் புகழ்வன. தணிகையுலா, போரூர் உலா, இலஞ்சி முருகன் உலா, குன்றையுலா என்பன முருகனைப் புகழ்வன.
கடவுளோடு வைத்து எண்ணத்தக்க பெருமையுடைய அடியார்கள்மீது பாடப்பெற்ற உலாக்களும் உள்ளன. முன்னமே பார்த்த ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை என்பது திருஞானசம்பந்தரைப் புகழ்ந்து நம்பியாண்டார்நம்பி பாடியது; தமிழில் தோன்றிய உலாக்களுள் இது இரண்டாவது. இதுவும் ஆதியுலாவோடொப்ப, பதினோராந் திருமுறையில் சேர்க்கப்பெற்றுள்ளது. சம்பந்தர்மீது பாடப்பெற்ற வேறு உலாவும் உண்டு.
தத்துவராயர் பாடிய ஞானவினோதன் உலாவும், சிவப்பிரகாசர் பாடிய சிவஞான பாலைய தேசிகர் உலாவும் ஞானாசிரியர்களைப் புகழ்பவை.
சிவந்தெழுந்த பல்லவராயன் உலா போன்றவை, உபகாரியைப் புகழ்பவை.
ஆதியுலா தோன்றிய பின்னர், எண்ணற்ற உலாக்கள் தமிழிலே தோன்றியுள்ளன. இவற்றில் சிலவே மேலே குறிப்பிடப்பட்டன. ஆதியுலாவும், ஒட்டக்கூத்தர் பாடிய சோழர் மூவர் உலாக்களுமே பின் வந்த பிரபந்தங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தன.
உலாப்பாடுதலில் ஒட்டக்கூத்தர் வல்லவராகக் கருதப்பட்டார் என்பதை, 'கோவை யுலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்' என்ற பழம்பாடல் உணர்த்துகின்றது. அவர் பாடியுள்ள உலாக்கள் இதற்குச் சான்று பகரும்.
உலாவைக் குறித்து இலக்கணங்களுட் கண்ட செய்திகளை ஆசிரியர்கள் கூட்டியும் குறைத்தும் மாற்றியும் உலாக்களில் அமைப்பார்கள். பாட்டுடைத் தலைவன் ஒருநாள் தேரில் உலா வருதலும், ஏழு பருவ மகளிரும் கண்டு காமுற்றனர் என்பது மரபு. ஆனால், மதுரைச் சொக்கநாதர் ஏழு நாள் விழாவில் ஏழுவிதமான ஊர்திகளில் உலா வந்தார், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவமகள் கண்டு காமுற்றாள் என்று சொக்கநாதருலா கூறும். 'மதகளி றூர்தல்' என்று இலக்கணம் கூறியதற்கேற்ப, தலைவன் களிறூர்ந்துவருஞ் செய்தியை மூவருலாக்களிற் காணலாம்.
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலையானது, ஏழு பருவ மகளிருடைய செய்திகளையும் தனித்தனியே விரித்துக் கூறாது, பேதை முதல் பேரிளம்பெண் ஈறாகவுள்ள மடவார் வந்து கண்டு காமுற்றுச் செயலழிந்து நின்றனர் என்று கூறும்:
வீதி யணுகுதலும் வெள்வளையார் உள் மகிழ்ந்து
காதல் பெருகிக் கலந்தெங்கும் - சோதிசேர்
ஆடரங்கின் மேலும் அணிமாளிகைகளிலும்
சேடரங்கு நீள் மறுகுந் தெற்றியிலும் - பீடுடைய
பேரிளம் பெண் ஈறாகப் பேதை முதலாக
வாரிளங் கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப்
பேணுஞ் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்
பூணும் புலம்பப் புறப்பட்டு (117 - 120)
என்ற கண்ணிகளைக் காண்க.
----------
2. திரு ஆனைக்கா உலா
பழமையான உலாப் பிரபந்தங்களிலே திரு ஆனைக்கா உலாவும் ஒன்று. சோழநாட்டில் காவேரிநதியின் கரையில் அமைந்த ஆனைக்கா என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள வெண்ணாவலீசர்மீது காளமேகப் புலவர் பாடியது. இதிலுள்ள கண்ணிகள் 461.
தலச்சிறப்பு என்ற முதனிலைப் பகுதியில் ஆசிரியர் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றோர் அனைவருடைய செய்திகளையும் கூறுகிறார். பேதையின் இளம் பருவத்துக் குரிய அறியாத்தன்மையை இவர் மிக்க நயமாகவும் விரிவாகவும் புலப்படுத்தியிருக்கிறார். இலக்கணத்துட் கண்ட தசாங்கத்தை இவர் கூறவில்லை. சிற்றில் (222) பேதைப் பருவத்திலும், பாவை (217, 255) பேதை பெதும்பைப் பருவங்களிலும், கழங்கு பெதும்பைப் பருவத்திலும், பந்தாடுதல் மங்கைப் பருவத்திலும், யாழ் (316) மடந்தைப் பருவத்திலும், அம்மனை அரிவைப் பருவத்திலும், பொழில் விளையாட்டு (428 - 435) பேரிளம்பெண் பருவத்திலும் கூறப்பெற்றுள்ளன.
பெதும்பை கழங்காடுமிடத்து, ஒன்று முதல் ஏழுவரையுள்ள எண்களைக் கூறும்போது, கயிலை வெற்பெடுத்த வீரன் உடல் சரிய ஊன்றிய தாள் ஒன்று, ஆனைக்காவிலுறை ஓங்கார மூர்த்தி உருவிரண்டு, கோல மூன்றாக்கி முடிக்கும் திருக் கருமம் மூன்று, எம்மை எழுபிறப்பின் வீழாமற் காத்தெடுக்கும் கரம் நான்கு, மால் பார் காக்கத் தந்த படை ஐந்து, சேவடி சேரத்தவஞ்செய் பண்பினார் வெல்லும் பகை ஆறு, விடங்கர் என இருந்த இடங்கள் ஏழு என்று பாடியிருப்பது அழகுபெற அமைந்துள்ளது. இதைத் தழுவியே கடம்பர் கோயிலுலாவிலும் கழங்காடுதலில் எண்கள் அமைக்கப்பெற்றுள்ளமை இங்கு அறியத்தக்கது.
------------
3. இவ்வுலாவின் பொருட்சுருக்கம்
திருவானைக்காவில் எழுந்தருளியிருந்து, சம்புமுனிக்கும் உமாதேவிக்கும், இந்திரன், அக்கினி , சூரியன், சந்திரன், அகத்திய முனிவன், இராமன் ஆகியோருக்கும் அருள் செய்து, தமக்கு நூலால் பந்தரிட்ட சிலந்தியொன்றைக் கோச்செங்கட் சோழராய்ப் பிறக்குமாறு அருள்செய்து, சோழன் அளித்த ஆரத்தை ஏற்றருளிய சிவபெருமான், ஒரு நாள் காவிரி நீரால் திருவபிடேகங்கொண்டு, பூசை ஏற்று, வேதமும் தேவாரமும் கேட்டு, நடங்கண்டு, அலங்காரங்கள் புனைந்து, சாந்தும் நீறும் அணிந்து, திருவாடுதண்டில் ஏறி, விநாயகன், முருகன், பிரமன், திருமால் முதலிய தேவர்களும், சமயாசாரியரும், செங்கட்சோழனும், சேரபாண்டியரும், பிற பரிவாரத்தாரும் சூழ்ந்து வர, சின்னங்கள் ஆர்க்க, வீதியில் திருவுலா வருவாராயினார். அப்போது வானுலகத்து மங்கையர் முதலான பலவகை மகளிரும் கூடி உலாவரும் பெருமானைத் தரிசித்து, அவருடைய திருமேனியழகிலே ஈடுபட்டு மயங்கித் தம்வசமிழந்து நின்றார்கள்.
இவ்வாறு மயங்கி நின்றோருள் ஒருத்தி, பேதைப் பருவத்தினள். இவள் சிற்றிலிழைத்து அதில் மணற் சிறுசோறு அட்டு விளையாடுந் தருணத்தில், வீதியில் பெருமான் உலா வந்தார். தாயர் முதலானோர் சென்று பெருமானை வணங்கியது கண்டு, தானும் வணங்கிப் பெருமானுடைய திருவுருவத்தின் மீது விருப்பங்கொண்டு, தான் சமைத்த சிறுசோறுண்ண “இவரை விருந்தழைமின்' என்றாள். கேட்ட தாயர், ‘தாருகாவனத்து முனி பன்னியரிடம் பிச்சை ஏற்ற இப்பெருமான் உன் சோறு உண்ண மாட்டார்; எங்களுக்கு விருந்திடு, நாங்கள் உண்கின்றோம் ' என்றுரைத்து அவளை இல்லினுள் கொண்டுசென்றனர்.
அடுத்தாற்போல், பெதும்பைப் பருவத்தினளான பெண்ணொருத்தி, கழங்காடிக்கொண்டிருந்தாள். நவமணிகளிலே ஏழைமட்டும் பொறுக்கி, சிவபெருமான் இராவணன் உடல் சரிய ஊன்றிய தாள் ஒன்று, ஓங்காரமூர்த்தி உரு இரண்டு, அவர் முடிக்கும் கருமம் மூன்று, கரம் நான்கு, மாலுக்குத் தந்த படை ஐந்து, அவர் திருவடிசேரத் தவஞ்செய்வோர் வெல்லும் பகை ஆறு, விடங்கரென அவரிருக்குந் தலம் ஏழு எனச் சொல்லி அவள் ஆடும்போது, இறைவன் உலா வருதலும், மற்றைய மாதர் இறைஞ்சுதல் கண்டு, இவளும் இறைஞ்சினாள். தன்னை எடுத்துப் பெருமானுடைய தேரின்மீது வைக்குமாறு தாயரைக் கேட்க, அவர்கள், 'பிரமனொருவனே சிவபிரான் தேரில் ஏற வல்லவன்; மேலும், அவரிடத்துத் தீயும் அரவும் பாயும் எருதும் உள' என்று சொல்லி இவளை அச்சுறுத்த, இவள், 'பிரான் பாகத்தில் மற்றொருத்தி இருக்கிறாளே' என்று காட்டினாள். கேட்ட தாயர், இவளுக்கு மோகம் குடிபுகுந்ததென்று கூறி நகைக்குமளவில், தேர் அயல்வீதியடைந்தது. வசமிழந்து நின்ற பெதும்பையை அவர்கள் பின்னர் இற்கொண்டு சென்றனர்.
அப்பால், மங்கைப்பருவத்தினளொருத்தி தன் பருவ மங்கையரோடு பந்தாடியிருக்கும்போது, தோழியர் வந்து, 'நீ ஆடியது போதும், உன் பந்தாட்டத்தை யாமா புகழ முடியும்? ஆனைக்கா ஈசனார்தாமே புகழ வல்லவர்' என்று கூறினர். கேட்ட மங்கை, 'அங்ஙனமானால், அவரே என்னை மணஞ் செய்யத்தக்கவர் ' என்றாள். ஈசன் அப்போது வீதியிற் பவனிவரலும், இவள் சென்று வணங்கி, காதல் மிகுதியால் அவருடைய மாலையைத் தருமாறு குறையிரந்து நிற்க, அவர், தம் இடப்பாகத்திலிருந்த உமையாள் முகம்நோக்கி முறுவல் அரும்பிவிட்டு, அவ்வீதி கடந்து சென்றார்.
அங்கு மடந்தைப் பருவத்துப் பெண்ணொருத்தி இருந்தாள். அவள்முன் ஒருவிறலி வந்துநின்று இசைபாட எண்ணி, மடந்தையைப் புகழ்ந்து, ''நீயே உமை'' என்று கூறவும், அவள், ''நான் உமையானால், அச்சிவபிரானைச் சேரேன் கொல்” என்று மறுமொழி கூறி, இரங்கினாள். ''கங்கை நீ” என்று அவ்விறலி மீண்டும் கூற, மடந்தை, "அவளாகில், சிவபிரான் தலைமீது இருப்பேனே'' என்றாள். "உன் கொங்கை மலையோ'' என்று விறலி கூற, " மலையானால் அப்பிரானுக்கு உறைவிடமாவேனே'' என்றாள். பின்னும் விறலி, "உன் புருவம் வில்லோ'' எனலும், ''அங்ஙனமானால் அப்புராரி பற்றி வளைக்குமோ'' என்று மடந்தை கேட்டாள். 'உன் நெற்றி பிறையோ'' என்று விறலி புகழ, மடந்தை, ''இறையோன் முடிக்குமே'' என்றாள். விறலி மீண்டும், ''உன் கண் மானோ விடமோ'' எனலும், மடந்தை, "மானானால் இடக்கையிலும் விடமானால் மிடற்றிலும் இறைவன் தரிக்குமே'' என்று கூறி ஆற்றாளாயினாள். கேட்ட விறலி, "சிவன் ஆகத்துக்கு நீ ஏலாதவளோ!'' எனவும், மடந்தை மகிழ்ந்து அவளுக்குப் பரிசில் வழங்கி அனுப்பிவிட்டு, தான் சிவன்பால் கொண்ட காதல் தன்னை வெதுப்ப வெம்பினாள். அப்போது தாயர் அவள் நிலையறிந்து, "நீ வருந்தாதே, வெண்ணாவலீசர் உன்மீது மோகங்கொண்டு நாளையே உன்வாசல் வருவார் '' என்று சொல்ல, அவள் தேறி, இராப்பொழுதைக் கழித்து, மறுநாள் காலை தன்னை அலங்கரித்து எதிர்கொண்டு நிற்ப, சிவபிரானும் அந்நேரம் அவ்வீதியில் பவனிவந்தார். கண்ட மடந்தை மகிழ்ந்து தன் குறைகூறி இரப்ப, அவர் தம் மாலையையளிக்காமற் சென்றார். அவளோ, தான் கொண்ட காதலால் சோர்ந்து, கலையும் வளையும் இழந்து நின்றாள்.
அடுத்த தெருவில், அரிவைப் பருவத்தாளொருத்தி, கையில் அம்மனை ஏழையேந்தித் தோழியரோடு ஆடிக்கொண்டிருந்தபோது, மேலெறிந்த அம்மனைகள், புயலில் சென்று ஒளித்துவிட்டன. அம்மனைகளைக் காணாது, 'இவற்றை எங்கே தேடுவது?' என்று அவள் தன் தோழியரைக் கேட்க, அவர்கள், 'இவ்வம்மனைகளை மேகம் மழையோடு குடக வெற்பில் உகுத்துவிடும். காவிரியில் இவை வந்து, நீரில் வீழ்ந்த ஆரம் ஈசரையடைந்தமைபோல, ஈசரையடையும் " என்றார்கள். கேட்ட அரிவை, இக்கூற்றை உடனே சோதிக்க விரும்பி, கோயிலை நோக்கிச் செல்லவும், எதிரே சிவபிரான் பவனி வந்தார். கண்ட அரிவை, தான் கொண்ட நினைவை மறந்து, செயலழிந்து நிற்க, அவர் அப்பாற் சென்றார்.
அங்கு, தெரிவைப் பருவத்துப் பெண்ணொருத்தி மலர்ப் பீடத்தின் மேல் வீற்றிருக்க, அருகே மன்மதன் சேவித்து நின்றான். 'இதுகாறும் உன்னை ஏவிப் பணிகொண்டேன். இதன்பொருட்டு உனக்கு நான் செய்யும் கைம்மாறு யாது?' என்று தெரிவை கேட்க, மன்மதன் வணங்கி, 'என்னை எரித்த சிவனை என்னால் வெல்ல முடியவில்லை. நீயும் எனக்குப் படைத்துணையாய் வந்தாயானால், அவரோடு பொருது வென்று வாகை சூடுவேன். சிவபிரான் வலப்பாகத்தை அப்போதே நீயும் பெறலாம்' என்றான். தெரிவை அதற்கிசைந்து, 'நீ தேரில் பின்னே வா' என்றுரைத்துவிட்டு, முன் சென்று வீதியையடைந்தாள். வேதமாகிய தேரில் எழுந்தருளி வந்த பிரானைக் கண்டதும், நினைந்த கருமம் மறந்து, அடி வணங்கி, 'அடியேனைக் கா' என்று வேண்டினாள். கேட்ட மன்மதன், பொறாமல் அவள் மீது அம்பெய்துவிட்டு, பெருமான்பின் அடுத்த தெருவுக்குச் சென்றான்.
அடுத்த தெருவிலே பேரிளம்பெண்ணொருத்தி இருந்தாள். இவள் முந்திய ஆறு பருவங்களிலும் பெருமானைத் தொழுது பெருகிய அன்புடையவள். தோழியரோடு ஒரு பூஞ்சோலையையடைந்து, அங்குள்ள தேமா முதலிய பல விருட்சங்களைக் கண்டு, அவை யாவும் வெவ்வேறு தலங்களில் இறைவனுக்கு நிழலளித்தமை கருதி அவற்றைப் பணிந்து, பின் வெண்ணாவலைக் கண்டாள். கண்டதும், தன்னாவல் தீர அதைத் தழுவி அவசமுற்று நின்றாள். தோழியர் அவளை ஒருவாறு தேற்றி அழைத்து வரவும், வீதியில் சிவபிரான் உலா வருவது கண்டு, 'இந்தா, தொழு பவனி' என்றார்கள் - பேரிளம் பெண்ணும் கண்டு பலவாறு துதித்து நிற்க, சிவபிரான் இவளை வாட்ட வேண்டாமென்று மன்மதனுக்குச் சொல்லிக் காத்தார். இவளும் சோர்வு நீங்கினாள்.
இவ்வாறு பேதை முதலிய ஏழு பருவப் பெண்களும் காதலுற்று மயங்க, திருவானைக்காவுடைய ஆதிப் பெருஞ்செல்வர் திருவுலா வந்தருளினார்.
----------
4. திரு ஆனைக்காத் தலவரலாறு
திரு ஆனைக்கா என்ற சிவஸ்தலம், சோழ நாட்டில், காவிரி கொள்ளிடம் என்னும் இரண்டாறுகளுக்கும் இடையே, புகழ்பெற்ற வைணவாலயமாகிய திருவரங்கத்துக்குச் சிறிது மேற்கே அமைந்துள்ளது. சோலைகளுக்கு இடையே அமைந்திருத்தலினால், கா என்றும் காவை என்றும் சொல்லப்பெறும். ஆனை வழிபட்டமையால் இத்தலம் ஆனைக்கா ஆயிற்று. பஞ்சபூத ஸ்தலங்கள் ஐந்தில், இத்தலம் அப்பு ஸ்தலம் (அப்பு-நீர்)4. இதற்கு அடையாளமாக, மூலலிங்கத்தைச் சுற்றி இன்னும் நீர் இடைவிடாது ஊறிக்கொண்டே இருக்கிறதென்று சொல்வர். ஆறாதார ஸ்தலங்களுள் இது சுவாதிட்டானத்தலம்5. கோயில் மேற்கு முகமாயுள்ளது. சுற்றிலும் பஞ்சப் பிராகாரங்கள் என்னும் ஐந்து சுற்று வீதிகளையுடையது. மதில்களுள் நான்காவது மதில் மிகப் பெரியது; இது திருநீற்று மதில் எனப் பெயர் பெறும். இம்மதில் கட்டிய காலத்தில், சிவபெருமானே ஒரு சித்த வேடங்கொண்டு எழுந்தருளி வந்து, கூலி வேலைக்காரருக்குத் திருநீற்றையே கூலியாகக் கொடுக்க, அது அவரவர் தகுதிக்கேற்பப் பொன்னாயிற்றென்பதும், இது காரணமாகவே மதில் திருநீற்று மதில் அல்லது திருநீறிட்டான் மதில் எனப் பெயர் பெற்றது என்பதும் பழைய வரலாறுகள். (கண்ணி 77, அடிக்குறிப்பைப் பார்க்க.) 'சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருஆனைக்கா உடைய செல்வா' என்ற அப்பர்' திருத்தாண்டகம் இவ்வரலாற்றைச் சுட்டுகிறதென்று கொள்ளலாம்.
இத்தல சம்பந்தமான புராண வரலாறுகளில் முக்கியமானவை இரண்டொன்றை இங்கே குறிப்பிடலாம்.
சம்பு முனிவர் வரலாறு: நாவல் (ஜம்பு) நிறைந்த இவ்வனத்தில் தவம் செய்த முனிவர் தம் கரத்தில் வீழ்ந்த வெண்ணாவற் கனியைக் கண்டு அதிசயித்து அதைக் கயிலையங் கடவுளுக்கு நிவேதிக்க எண்ணிக் கயிலையடைந்து, பெருமானுக்குப் பழத்தைப் படைத்துத் தாம் விதையை உண்டார். உண்ட முனிவர் வயிற்றில் விதை முளைத்து, அவர் தலை வெடிக்க வளர்ந்து பெரிய மரமாகவும், முனிவர் இறைவனை வாழ்த்தி, இறைவன் கட்டளைப்படி, கனிவீழ்ந்த இடமாகிய வெண்ணாவல் வனத்துக்கு மீண்டார். அவருடைய தவத்துக்கு இரங்கி, இறைவனும் அத்தலத்தில் அந்நாவல் அடியில் உறைவானானான். நாவல் தலவிருட்சமாயிற்று; தலம் ஜம்புகேசுரம் ஆயிற்று. இறைவனுக்கு ஜம்புகேசுரன், சம்புநாதன் என்ற பெயர்கள் வந்தன. (கண்ணி 8 - 19.)
அம்பிகை பூசித்த வரலாறு: ஞான உபதேசம் பெற விரும்பிய அம்மையாருக்குச் சிவபெருமான் பூலோகத்தில் உபதேசம் செய்வதாய்ச் சொல்லவும், அங்ஙனமே அம்மையும் பூலோகத்துக்கு வந்து ஆனைக்காவையடைந்து, நீரைத் திரட்டி அப்புலிங்கமாக்கி வழிபட்டார். சிவபெருமான் பின்னர் இங்கு அவருக்கு ஞானோபதேசம் செய்தான். நீரைத் திரட்டியமையால், மூர்த்திக்குச் ‘செழுநீர்த் திரள் ' என்றும், 'அமுதீச்சுரம்' என்றும் (அமுதம் - நீர்) பெயர்கள் உண்டு. ஞான உபதேசம் செய்தமையால், இத்தலம் ஞான பூமி, ஞான நகர் என வழங்கும். (கண்ணி 20 - 29.)
ஆனை வழிபட்டது: புட்பதந்தன், மாலியவான் என்ற இரு கணநாதர்கள் பக்தி காரணமாக ஒருவர் மீது ஒருவர் பொறாமையுற்று ஆனையும் சிலந்தியுமாக எனத் தம்மைத்தாமே சபித்துப் பின்னர் இத்தலத்தில் வந்து வழிபடுவாராயினார். சிலந்தியானது நாவலில் குடியிருந்து, வாய் நூலால் பந்தரிட்டுப் பெருமான் மீது சருகு முதலியன உதிராவண்ணம் தொண்டு செய்தது. நூலைக்கண்ட யானை பண்டைத் தொடர்பால் அருவருப்புற்று நாள்தோறும் சிலந்தி வலையை அறுத்தெறிந்து, நீராட்டி மலர்தூவிப் பெருமானை வழிபட்டது. தன் நூற்பந்தரைத் தினமும் யானை அழிப்பதைப் பொறுக்காத சிலந்தி ஒருநாள் யானைத் துதிக்கையினுட் புகுந்து கபாலத்தில் சென்று கடித்தது. யானை வீழ்ந்து இறந்தது. சிலந்தியும், துதிக்கையினின்றும் வெளிப்பட வழியின்றி இறந்தது. இறைவன் யானைக்கு அப்போதே பழைய கணநாதன் பதவி அளித்தான். சிலந்தியைப் பின்னர் சோழ குலத்தில் மன்னனாய்ப் பிறக்கச் செய்தான். யானை வழிபட்டமையால், ஆனைக்கா, தந்திவனம் என்ற பெயர்கள் இத்தலத்துக்கு உண்டாயின. (கண்ணி 40 – 51, பக்கம் 11 - 12 அடிக்குறிப்புப் பார்க்க.)
கோச்செங்கட் சோழர் வரலாறு: இறந்த சிலந்தியானது சோழமன்னனான சுபதேவன் மனைவி புட்பவதி6 கருவுள் தங்கி மகவாய்ப் பிறந்தது. உரிய காலத்துக்கு முன்னே பிறந் தமையால் மகவு செங்கண் பெற்றிருந்தது. இதனால், அதற்குச் செங்கட்சோழர் என்ற பெயர் ஏற்பட்டது. (கண்ணி 52 - 59 அடிக்குறிப்புப் பார்க்க.) இச்சோழர், அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர். பெரியபுராணம், திருஆனைக்காப் புராணம் முதலியன இவர் வரலாற்றை விரிவாய்க் கூறும். சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற சேரஅரசனை இவர் சிறைப்படுத்தினார் என்னும் செய்தியைப் புறநானூறு(74) தெரி விக்கிறது. சிலந்தி பந்தரிட்ட தலத்தில் சோழர் பழைய நினைவோடு மாடக் கோயிலும், யானைபுக முடியாத தந்திபுகா வாயில் என்ற வாயிலும், நவதீர்த்தம், திருச்சாலக நவம், சுற்றுக் கோயில்கள், தேர், வீதிகள், கோபுரங்கள் முதலியனவும் செய்தமைத்தார். 'புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலாற் புதுப் பந்தர் அது இழைத்துச் சருகால் மேய்ந்த, சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப் பெய்தார்' (அப்பர்) என்பது முதலான தேவாரப் பாடல்கள் சோழர் தொண்டைப் பாராட்டிக் கூறும்.
ஆரம் பூண்டது: சோழ மன்னனொருவன் தன் தேவியோடு நீராடியபோது, அவளணிந்திருந்த மாலையொன்று காவிரி நீரிலே போய்விட, ‘இது இறைவனுக்காகுக ' என்ற சோழன் விருப்பப்படி சிவபெருமான் அம்மாலை தமது அபிடேக நீர் மொண்ட குடத்துள் புகச்செய்து மாலையை ஏற்றருளினார். (65 - 68.) 'தாரமாகிய பொன்னித் தண் துறை விழுத்தும், நீரின் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே, ஆரங் கொண்ட எம் ஆனைக் காவுடை ஆதி' என்று சுந்தரர் இவ்வரலாற்றைத் தேவாரத்துள் கூறுகிறார்.
மேற் கூறப்பட்டோரேயன்றி, திருமால், பிரமன், திக்குப் பாலகர், வசுக்கள், இராமன், பராசர முனிவன், அகத்தியன், சூரிய சந்திரர், அக்கினி, இந்திரன் முதலியோர் இங்கு வழிபட்டுப் பேறு பெற்றனர்.
கோயில் சிற்பச் சிறப்பு மிகுதியுமுடையது. சுற்றுக் கோயில்கள், மண்டபங்கள் பல. இதன்கண் உள்ள பல கல் வெட்டுக்களால், சரித்திரச் செய்திகள் பல விளங்குகின்றன.
தல சம்பந்தமான நூல்கள்: தேவாரப் பதிகங்கள் - 7 (சம்பந்தர் 3, அப்பர் 3, சுந்தரர் 1). ஐயடிகள் காடவர்கோன் க்ஷேத்திர வெண்பா ஒரு பாடல்; அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாக்கள் பல; தாயுமானவர், காளமேகம் முதலியோர் பாடல்கள். கச்சியப்ப முனிவர் பாடிய திருவானைக்காப் புராணம் விரிவான நூல்; 25 படலங்களுடையது. காளமேகம் பாடிய திருஆனைக்கா உலா, மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய அகிலாண்ட நாயகி மாலை, அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ், வேறு அந்தாதி முதலிய பல பிரபந்தங்கள், தனிப்பாடல்கள்.
----------
5. ஆசிரியர் வரலாறு
திருவானைக்கா உலாவின் ஆசிரியர் காளமேகப் புலவர் இவருடைய சரித்திரம் தமிழ்நாடு முழுவதும் அறிந்தது. சமீப காலம் வரையில், ஏன் இன்றுங்கூட, தமிழ்நாட்டிலுள்ள நாட்டுப்புறங்களிலெங்கும், ஆங்கிலப்படிப்போ அதிகத் தமிழ்ப் படிப்போ இல்லாத பாமரத் தமிழ்மக்கள் இவருடைய தனிப்பாடல்களைச் சொல்லியும் கேட்டும் இன்புற்று வருகிறார்கள். இவருடைய சிலேடை முதலியவற்றில் அவர்களுக்குள்ள ஈடுபாட்டுக்கு அளவில்லை.
கும்பகோணத்திற் பிறந்து வளர்ந்த சோழியப் பிராமணனான வரதன் என்பவர் திருவரங்கம் பெரிய கோயில் மடைப்பள்ளித் தொழிலேற்று வாழ்ந்து வந்தான். (இவன் மோகூர் காளமேகப் பெருமாள் கோயில் பரிசாரகன் புதல்வனென்றும் கூறுவதுண்டு.) திரு ஆனைக்கா ஆலயத்துக்குரிய உருத்திர கணிகையருள் ஒருத்தியிடம் இவனுக்குக் காதல் பிறந்து அவளோடு உறைந்துவந்தான். மார்கழி மாதத்தில் ஒருநாள், சம்புகேசுவரர் ஆலயத்தில் அக்கணிகை திருவெம்பாவை பாடியபோது, 19ஆம் பாடலான 'உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் ' என்பது சொல்லி வருகையில், 'எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க' என்ற தொடரைப் பாடினாள். இத்தொடரின் கருத்துக்கு மாறாக, சிவனடிக்கன்பில்லாதவனும் பெருமாளுக்குத் தொண்டனுமான ஒருவனிடம் அவள் காதல் பூண்டிருந்தமை பற்றி அவளுடைய தோழியர் அவளைப் பழித்துரைத்தனர். அவள் பெரிதும் நாணி, அன்று வழக்கம்போல் வரதன் வரும் நேரத்தில் தன் வாயிற்கதவையடைத்தாள். மாலையில் வந்த வரதன், நிகழ்ந்ததையறிந்து, அவள் காதலைப் பெரிதாக எண்ணி, திருவரங்கத்தைத் துறந்து, சிவதீட்சை பெற்றுச் சைவனானான். சம்புநாதராலயம் அடைந்து, அகிலாண்டநாயகியைப் பணிந்து ஒழுகி வரும்போது, பண்டை நல்வினைப் பயனால் அவன் கற்ற கல்வியும் கைகொடுத்து, கண்டோர் வியக்கக் கவிபாடும் ஆற்றல் அவனுக்கு வந்தது.
அளவில்லாமல் ஆசுகவிகளும் சித்திரக்கவிகளும் சிலேடைக்கவிகளும் மிக எளிதாய் , 'இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டா காதோ' என்றபடி பாடல்களைக் கார்காலத்து மேகம் பொழிவதுபோல் பொழிந்து தள்ளிய காரணத்தால், இவருக்குக் காளமேகம் என்ற பெயர் ஏற்பட்டது. நாடெங்கும் இவருடைய புகழ் பரவிற்று. இவர் பாடியதாக வழங்கும் தனிப்பாடல்களுக்கு அளவில்லை. இருநூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் இன்று வழக்கிலுள்ளன. யாவும், சித்திரக்கவியும், மிறைக்கவியும், வசைக்கவியும், சிலேடைக்கவியுமே.
ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்ற நால்வகைக் கவிஞருள் காளமேகம் ஆசுகவி என்று பெரும்புகழ் பெற்றார்; புலமைச் சிறப்பு எவரெவருக்கு எவ்வெவ்விதம் என்று சொல்லும் பாடல், 'ஆசுக்குக் காளமுகில் ஆனவனே' என்று கூறுகிறது. போலிப் புலவரையும், கொடைத்திறமற்றோரையும் காளமேகம் ஓயாது பழித்துரைத்து வந்தமையால், 'வசை பாடுகிறவர்' என்ற பெயரும் பெற்றார்; 'வசை பாடக் காளமேகம்' என்பது ஒரு பழம் பாடல். ஆயினும் பழங்கவிஞர் பலரும் தங்களைக் காளமேகம்' என்று சொல்வதிலே பெருவிருப்புக் கொண்டிருந்தார்கள். மாறனலங்கார ஆசிரியரைக் குறிப்பிடும் போது ஒரு புலவர், 'தரு காளமேகம் கவிராசராசன் சடையன்' என்பர். படிக்காசுப் புலவர் எழுதிய ஒரு சீட்டுக் கவியில், 'காளமேகம்போல வசைபாட யாமும் இக்காசினியில் அவதரித்தோம்' என்கிறார். அட்டாவதானி ஆதி சரவணப்பெருமாள் கவிராயர் என்பார், முத்திருளப்பப் பிள்ளை என்ற வள்ளலுக்கு எழுதிய சீட்டுக்கவியொன்றில், 'இலக்கண இலக்கியக் கடலைமுழு துங்குடித் தேப்பமிடு காளமேகம், இனியகவி அவதானி சரவணப் பெருமாள்’ என்று தம்மைக் கூறிக் கொள்ளுகிறார்.
தமிழ்நாவலர் சரிதை, தனிப்பாடற்றிரட்டு, தனிச் செய்யுட் சிந்தாமணி முதலான நூல்களில் காளமேகப் புலவர் பாடிய பாடல்களையும் அவர் சரித்திரச் செய்திகளையும் விரிவாகக் காணலாம்.
சீரங்கத் தாரும் திருவானைக் காவாரும்
போரங்க மாகப் பொருவதேன் – ஓரங்கள்
வேண்டாம் இதென்ன விவரந் தெரியாதோ
ஆண்டானுந் தாதனும் ஆனால்.
என்ற பாடல், இவர் காலத்துக்குச் சற்று முன்னமே திருவரங்க வைணவருக்கும் திருவானைக்காச் சைவருக்கும் இருந்த பூசல்களைக் குறித்து இவர் பாடிய தனிப்பாடல்.
கல்லால் அடித்ததற்கோ காலால் உதைத்ததற்கோ
வில்லால் அடித்ததற்கோ வெட்கினீர் - சொல்வீரால்
மஞ்சுதனைச் சூழும் மதிலானைக் காவாரே
நஞ்சுதனைத் தின்றதென்முன் னாள்.
என்பது, இத்தலம் சம்பந்தமாக இவர் பாடிய மற்றொரு தனிப் பாடல்.
கவிபாடும் ஆற்றல் பெற்றவுடனே காளமேகம் பாடிய நூல், திரு ஆனைக்கா உலா. இவர் பாடிய மற்றொரு பிரபந்தம், தம்மையாதரித்த வள்ளலான பாவை - தெய்வப்பெருமாள் என்பவன் மீதுள்ள சித்திர மடல். கடல் விலாசம் என்ற பிரபந்தம் இவர் செய்ததாகத் தனிச் செய்யுட் சிந்தாமணி கூறும்; நூல் கிடைக்கவில்லை. இவர் செய்ததாக வேறு நூல்கள் புலப்படவில்லை.
இவருடைய காலத்தை யறிவதற்குத் திட்டமான ஆதாரங்களுள்ளன. இவரை ஆதரித்த சிற்றரசன் திருமலைராயன் என்பவன். 'என்னை நிலைசெய் கல்யாணிச் சாளுவத் திருமலை ராயன், மந்தரபுயனாம் கோப்பய னுதவு மகிபதி – விதரணராமன் வாக்கினாற் குபேர னாக்கினான்' என்பது அவர் பாடல். இவன் சோழநாட்டுத் திருமலைராயன் பட்டணத்திலிருந்து ஆண்டவன். இவன் காலம் கி. பி. 1450 - 80.
திரு ஆனைக்கா அம்மன் கோயில் தென்புறத்துள்ள சாசனமொன்று, சாளுவக் கோப்பராஜன் குமாரன் திருமலை ராயன் சக வருடம் 137... இல்7 ஜம்புகேசுவரருக்குத் திருவாபரணம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இதற்கு நேரான ஆண்டு கி. பி. 1450க்குமேல் 1456க்குள்ளிருக்கும். எனவே, காளமேகப் புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தவராவார்.
காளமேகருடைய குருவான ஞானவரோதயரும், திருமலைராயனிடம் வித்துவானாயிருந்த அதிமதுரகவியும், வருணகுலாதித்தன் மடல் பாடிய பெண்பாற் புலவரும் இவர் காலத்துப் புலவர்கள். (இரட்டைப்புலவர் இவர் காலத்தில் இருந்தார்களென்றும், இவர் இறந்தபோது அவர்கள் வருந்திப் பாடினார்களென்றும் சொல்வதுண்டு.)
----------
6. நூலாராய்ச்சி
இந்நூலில் வந்துள்ள தலசம்பந்தமான செய்திகளையும் பிறவற்றையும் கீழே விரிவாகக் காணலாம்.
சிவபெருமான் திருநாமங்கள்: அழகுக்காரு மொவ்வாதான் (74), வடிவழகுக் காருமொவ் வாதான் (172), பேரழ குக்காருமொவ்வாதான் (450): அழகுக்காரு மொவ்வாதான் என்ற பெயர் திருப்பூவணநாதருடைய திருநாமம்; 'தன்னழகுக் காருமொவ்வாத் தாணு – பூவணநாதருலா 340. அனைத்துலகை யாள்வான் (69), அவனி முழு தாள்வான் (448): மதனன் என் ஆருயிரைக் காய்ந்தால் அனைத்துலகாள்வாயென்று பேருமக்குண்டாமோ பெருமானே' (452- 3) என்ற பேரிளம்பெண்ணின் கூற்றைக் காண்க; 'அனைத்துலகும் ஆள்வானே ஆனைக்காவா' - அப்பர், ஆதி (311), ஆதிப்பெருஞ் செல்வன் (70), ஆதியான் (372 ) : 'ஆதி ஆனைக்கா'- சம்பந்தர்; 'ஆனைக்காவுடை ஆதி' - சுந்தரர். என்னானைக் கன்று (75): 'என்னானைக்கன்றினை என்னீசன் தன்னை ... திரு வானைக்காவுளானை' - அப்பர். என்னானைக் காவார் (337): "என்னானைக்காவா'' - ஐயடிகள் காடவர்கோன் க்ஷேத்திரத் திருவெண்பா. சம்புநாதர் (27). செழுநீர்த்திரள் (26): (திரு ஆனைக்காவுளானைச் செழுநீர்த்திரளைச் சென்றாடினேனே' - அப்பர். தேவர் குலக்கொழுந்து (70): 'தேவர் குலக்கொழுந்தே தென்னானைக் காவுள்மேய ஐயா' - அப்பர். பின்னிரக்கஞ் செய்யும் பெருமான் (30): 'பின்னிரக்கஞ் செய்வான் தன்னை .... திருவானைக் காவுளானை' - அப்பர்; பச்சாதாபேசுவரர் என்பதும் இதுவே. வெண்ணாவலீசர் (337). அழகன் என்ற பெயரில் ஆசிரியர் பெரிதும் ஈடுபடுகிறார்: 'தில்லையுள் ஆடிக் காட்டிய பின்னிணை யழகன், அக்கு மணியில் அழகன் வசந்தனழகன், அணியும் பணியிலழகன்'. 72 - 3; 'கொன்றை அலங்கல் அழகர்': 306 - 7; 'நிறைந்த பணியழகன்' - 367; 'வசந்தனழகன்' - 403.
அம்பிகை திருநாமங்கள்: அகிலாண்டநாயகி (20, 23). வடிவுடைய மங்கை என்ற பெயர் இரண்டிடங்களில் (115, 171) வருகிறது. இது அம்பிகைக்கு மற்றொரு திருநாமமாயிருக்கலாம்; வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா மதிலானைக் காவுளாய் ' என்ற அப்பர் தேவாரமும் காண்க.
ஆனைக்காவின் பெயர்கள்: அமுதீச்சுரம் (21), ஆனைக்கா, கரிவனம் (374), கா (91), காவை (65), சம்புதலம் (7), ஞானநகர் (64), ஞானபூமி (8), தந்திவனம் (223). பஞ்ச பூதஸ்தலங்களுள் ஆனைக்கா அப்புஸ்தலமாதலின், 'ஆம் என்ற பூதலம்' (24) என்பர்; ஆம் - நீர். இத்தலத்தில் இறைவன் நீர்வடிவமாயிருக்கிறான் என்ற செய்தியைப் பூவணநாதருலாவும், 'காவிரிவாய்ச், சீருருவப் பேருருவச் செந்தீத் திருவுருவம், நீருருவ மாக நிகழ்பதியும் ' (188) என்று குறிப்பிடுகிறது.
தீர்த்தங்கள்: நவதீர்த்தம் (59); பிரம்புட்கரணி (17); இந்திர தீர்த்தம் (31 - 2); கமலபதி புட்கரணி (33 - 4); சந்திர புட்கரணி (35); காவிரித்தீர்த்தச் சிறப்பைப் பலவிடங்களிலும் ஆசிரியர் பாராட்டிக் கூறுவர் (37 - 39).
தலவிருட்சம்: வெண்ணாவல்.
கோயில்: பொன்னினாற் கோயில் (55).
வாயில்: தந்திபுகா வாயில் (56).
சாலகம்: திருச்சாலக நவம் (57, 75).
மண்டபம்: மாவித்தக நிருத்த மண்டபம் (57). இது சோமாஸ்கந்தர் மண்டபம் போலும்.
மதில்: திருநீறிட்டான் மதில் (77)
பூசித்துப் பேறு பெற்றோர்: சம்புமுனி, அம்பிகை, பிரமன், இந்திரன், அக்கினி, சூரியன், சந்திரன், அகத்தியன், ஆனை, சிலந்தி, இராமன், சோழன்.
ஆரம்: நாகேசன் அன்றளித்த பேராரம் (123-4) சோழன்தேவியின் ஆரத்தைக் காவிரியினின்றும் குடத்துள் வரச்செய்து அபிடேக காலத்தில் பெருமான் அணிந்த செய்தியைப் பலவிடத்தும் பாராட்டுகிறார் (65-8). இச்செய்தியை, அம்மனையாடிய அரிவையின் அம்மனை ஏழும் புயலிலொளித்தபோது, "இவை, குடகவெற்பில் மழையோடு உகுப்புண்டு, காவிரியில் சேருங்காண், காவை அரனார்க்கு அன்று நீர் விழுந்த ஆரம்போல் நேருங்காண்" என்ற தோழியின் கூற்றாகவும் புலப்படுத்துகிறார்.
தெய்வங்கள்: அக்கினி, இந்திரன், இயமன், இரதி, இராமன், உருத்திரர், கந்திருவர், காளி, குபேரன், சந்திரன், சாத்தன், சூரியன், திருமால், துர்க்கை, பிரமன், முருகன், வசுக்கள், வருணன், வாயு, விநாயகன், வைரவன்.
அடியார்கள்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சிறுத்தொண்டர், சாக்கிய நாயனார், கோச்செங்கட் சோழர். மூவர் பாடல் (442).
அரசர்: சோழன், நாகேசன், பாண்டியர், சேரர்.
பணிக்கொத்து: அகம்படியர், ஆரியப்பட்டர், உட்சமயத்தோர், ஓதுவார், கங்காசல மரபில் வந்த தக்கோர், கண்காணியார், கைக்கோளர், சரணத்தார், சிவமறையோர், சென்னியர், சோழியர், தேவரடியார், நாற்பத்தெண்ணாயிரம் முனிவர், பதினெண் மடத்தார், பயிராவிப்படை, பாவலர், மந்திரிகள், வன்னியார், வேதக் கவுசிகர்.
இசைக்கருவிகள்: சங்கு, குழல், முரசு, வங்கியம் (169), மத்தளம், பேரிகை, முழவு, யாழ் (170), எக்காளம் (174).
தேவர் முதலியோர்: அசுவதரர், கம்பளர், அரம்பையர், இந்திரலோகத்தார், கதிர்மண்டலத்துக் கன்னியர், சுரர், நாகமங்கையர், வித்தியாதரர், வைகுண்டலோகத்து மங்கையர்.
தலங்கள்: அருணகிரி, ஆரூர், ஆலங்காடு, ஐயாறு, கச்சி ஏகாம்பரம், காசி, காளத்தி, குறுக்கை, சிராமலை, சேது, திருக்கொணாசலபுரம், தில்லை, நாகைக்காரோணம், பழனம், பறியல், பைஞ்ஜீலி, மதுரை, மருதவனம், மழபாடி.
தலவிருட்சங்கள்: அருச்சுனம், ஆத்தி, இலந்தை, கடம்பு, கல்லால், காயா, குருந்து, கூவிளை, கொன்றை, தில்லை, தேமா, நாவல், நீலி, நெல்லி, பராய், பலா, பனை, பாதிரி, பாலை, புன்கு, புன்னை, மகிழ், மாதளை, வடம், வன்னி, வேய்.
தொனிப் பெயர்கள்: இராசி (252 - 3); நட்சத்திரம் (83); பறவை (224) ; மாதம் (84 – 9).
பிறதலச் செய்திகள்: எலிக்கு அரசு தந்தது (104 - 105), கூடலில் விறகு விற்றது (445), சமணர் கழுவேறியது (155), சம்பு பரியழைத்தது (157), பைஞ்சீலியில் இயமனுக்கு அருளியது (211).
கொடிகள்: இடபக்கொடி, கடம்பன் கொடி, மகரத் துவசம்.
மலைகள்: கொல்லி, நேரி.
பிற செய்திகள்: கார்முக ராசிகளான சிலை மகரம் துலை மீன் அலவன் கன்னியில் மழை உண்டாகுமெனல் (252-3), பெண்களின் சொல்லால் பத்து மரம் ஆவி பெறுமெனல் (350), மாணிக்க மொன்பதும் மகத்தில் பசுவின் உறுப்பெனல் (419), வெள்ளியில் அக்கினி கால்வீழ் பொழுதொக்க நிற்குமயில் (293).
பண் பாடிய மூவரும், இத்தலத்தில் மண்ணும் சிவலிங்கம் என்றெண்ணித் தலத்தை மிதியாமல் அப்பாலிருந்தே வழிபட்டுப் பாடல் பாடினர் என்ற செய்தி இந்நூலால் அறியப் படுகிறது; 'இந்நகரின், மண்ணுஞ் சிவலிங்கம் என்றெண்ணி வாராமற், பண்ணுந்து சொல்மூவர் பாங்காகக் - கண்ணுற்று, நின்றேத்தும் பாக்கொண்டோன் ' (62-4). வேறு வகையால் இச்செய்தி அறிதற்கில்லை.
இத்தலத்தில் என்பு பொன்மலராய் வழிபட்ட செய்தியை 94ஆம் கண்ணி உரைக்கின்றது.
அருஞ்சொற்கள்: அருட்டித்தல் (26), அறுதி (336), ஆகா என நகைத்தல் (280), இந்தா (449), எத்தர் (451), ஏராதவள் (324), கட்டாண்மை (425), கேதித்து (427), சவாசம் (134), சாபித்து ( - சபித்து 42), நாயன் (435), பூரை (282, 297), மார் ( - மார்பு 86), வேளாளர் (மன்மதன் 427), வைச்ச (146).
_________________
அடிக்குறிப்புகள் -- Footnotes :
1. சேரமான் பெருமாள் பாடிய திருக்கயிலாய ஞானவுலா.
2. மதுரைச் சொக்கநாதருலா, ஐயரவர்கள் முன்னுரை மேற்கோள்; பிரபந்தத்திரட்டு என்ற பாட்டியல் கூறும் நூல் இன்னும் அச்சாகவில்லை.
3. இக்கலிவெண்பா செந்தமிழ்ப் பத்திரிகையில் என்னால் வெளியிடப்பட்டுள்ளது.
4. மற்றையவை: பிருதிவி (மண்) - ஆரூர்; தேயு (தீ) - அண்ணா மலை; வாயு - காளத்தி, ஆகாயம் - சிதம்பரம்.
5. ஆறாதாரங்களாவன: மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை.
6. இப்பெயர், பின் சொன்ன புராணங்களில் கமலவதி என்று காணப்படும்; 'பூ வெனப்படுவது பொறி வாழ்பூ' ஆதலால், புட்பவதி என்னும் பெயர் கமலவதி என்றாகியிருக்கலாம்.
7. இங்கு ஒரு எண் சிதைந்து போயிற்றுப் போலும்.
-----------------
திரு ஆனைக்கா உலா
உ
திருச்சிற்றம்பலம்
காப்பு
விநாயகர் வணக்கம்
நேரிசை வெண்பா
ஏரானைக் காவிலுறை என்னானைக் கன்றளித்த
போரானைக் கன்றதனைப் போற்றினால் - வாராத
புத்திவரும் பத்திவரும் புத்திரசம் பத்துவரும்
சத்திவரும் சித்திவரும் தான்.
----
காப்பு. ஏர் - அழகு. யானைக்கு அருள் புரிந்த தலமாகையால், ஆனைக்கா என்ற பெயர் பெற்றது; கா - சோலை. உறை - உறைகின்ற. என்னானைக்கன்று: சுவாமிக்கு இத் தலத்தில் வழங்கும் பெயர்களுள் ஒன்று; இதே பெயரைப் பல இடங்களிலும் காணலாம்; 'என்னானைக் கன்றினை என் ஈசன் தன்னை எறிநீர்த் திரையுகளும் காவிரிசூழ், தென்னானைக் காவானை' என்பது அப்பர் தேவாரம். போர் ஆனைக்கன்று: விநாயகர். ஆனைக்கு அன்று அளித்த என் போர் ஆனைக்கன்று என்றும் கொள்ளலாம். அளித்த - அருள் புரிந்த. போர் ஆனை: சிவபிரான். வாராத - வருதற்கரிய. பத்தி - பக்தி. சத்தி - சக்தி. சித்தி - அட்டமாசித்திகள்.
----
நூல்
கலி வெண்பா
1. தலச்சிறப்பு
சீர்பெற்ற தற்பரமாய்ச் சிற்பரமாய்ச் சிற்பரத்து
வேர்பெற்ற நாதமாய் விந்துவாய்ப் - பேர்பெற்ற
சோதியாய் மும்மைச் சொரூபமாய் ஐம்பூதத்(து)
ஆதியாய் எவ்வுயிரும் ஆயினோன் - வேதத்து
மட்டுப் படாது வளர்ந்தண்ட வான்கனிந்த(து)
எட்டுப் பணைகொண் டெழுந்ததரு - கிட்டுபொருள் 3
ஈவானும் ஈகென்(று) இரப்பானும் ஈஎனவே
ஆவானும் தானாகும் ஆடலான் - ஓவாது
தானே சகமாகித் தானே படைத்தளித்துத்
தானே அழித்தருளுந் தம்பிரான் - ஞான
விசித வடிவாய் விளங்குஞ் சிகர
ரசித கிரியில் இருந்தோன் - வசனநெறி
சம்புதலத் தோன்பால் தடங்கண்டு சங்கரஎன்(று)
அம்புயன் மாதவஞ்செய் தர்ச்சிக்க - நம்பும்
பெருஞான பூமிப் பெயர்தலத்துக் கெய்த
அருஞான தீக்கை அளித்தோன் - இருடி 8
----------
1. தற்பரம் - பரம்பொருள். சிற்பரம் - அறிவுக்கெட்டாத பொருள்; சித் - அறிவு. விந்து, நாதம்: பஞ்சபூதம் தொடங்கியுள்ள முப்பத்தாறு தத்துவங்களில் கடைசியான சத்தி சிவம் என்னும் தத்துவங்கள்.
2. மும்மைச் சொரூபம் - அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவம். ஐம்பூதம் - நிலம் நீர் நெருப்பு உயிர் (வாயு) விசும்பு (ஆகாயம்) என்பன.
3. வேதத்து மட்டுப்படாது - வேதத்தினாலே இன்னது தானென்று அளவிட்டுச் சொல்லமுடியாதபடி. தரு என்றது சிவபெருமானை. எட்டுப் பணை கொண்டு எழுந்த தரு: அட்டமூர்த்தமாகிய பரம்பொருள்: நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலாப் பகலோன், புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்' - திருவாசகம், 319. பணை - கிளை. சன்னிதியிலுள்ள துவஜஸ்தம்பமல்லாமல், மூன்றாம் பிராகாரத்தில் சுற்றிலும் எட்டுக் கொடிகள் உள்ளன என்பதும் இங்கே உணரத்தக்கது.
4 - 5. 'அறிவானுந் தானே அறிவிப்பான் தானே, அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற, மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாசம், அப்பொருளுந் தானே அவன்' என்ற காரைக்காலம்மையார் பாடலைக் காண்க (அற்புதத் திருவந்தாதி, 20). ஓவாது - ஒழியாது. சகம் - உலகம்.
6. விசிதம் - வெண்மை. ரசித கிரி - வெள்ளிமலை; கயிலாயம்.
7. சம்புதலத்தோன்: சம்பு - ஜம்பு, நாவல்; தலவிருட்சம்; வெண் நாவல் மரத்தின்கீழ் இறைவன் வீற்றிருப்பதால், ஜம்புகேசுரம், சம்புதலம் என்ற பெயர்கள் வழங்கும். வெண் நாவலுளாய்' என்பது சம்பந்தர் தேவாரம். தடம் - தடாகம், கண்டு - உண்டாக்கி. அம்புயன் - பிரமன்; இத்தலத்திலே பிரமன் வழிபட்டுப் பேறுபெற்றான்; இதைத் திருவானைக்காப்புராணம் தீர்த்தவிசேடப் படலத்திற் காண்க.
8. இறைவன் இத்தலத்தில் சத்திக்கும் நந்தி தேவருக்கும் பரஞானத்தைப் போதித்தமையால், 'ஞான பூமி' என்ற பெயர் இத்தலத்துக்கு வந்தது; திருவா. பு. ஞான உபதேசப்படலம் பார்க்க. தீக்கை - தீக்ஷை. இருடி - சம்பு முனி என்ற முனிவர்.
---------
சம்புமுனி வழிபட்ட வரலாறு
ஒருவனடி சேர்வான் பொன் னோங்கல் சூழ் சம்பு
தருவின் அடியிற் றவமே - புரியக்
கரத்தில் தவளக் கனியொன்று வீழ
மரத்திற் கனிகருது மற்றக் - கரிக்கொத்த 10
---------
இது முதல் சம்பு முனிவர் வரலாற்றைக் கூறுகிறார். நாவல் வனமாகிய இத்தலத்தில் அம்முனிவர் கடுந்தவம் புரிந்து வந்தபோது, ஒருநாள் அவர் கையிலே அரிய வெண் நாவற் கனியொன்று வீழ்ந்தது. பிற கருநாவற் கனிகளுக்கு மாறாக அதனிடம் பொருந்திய வெண்மையையும், அதன் ஒளியையும் அழகையும் கண்டு வியப்புற்ற முனிவர், தாம் உண்ணாமல் அதை இறைவனுக்கே படைக்க வேண்டும் என்றெண்ணிக் கயிலையடைந்து இறைவனுக்குப் படைத்துப் பின் உண்டார். அவர் வயிற்றுட் சென்ற நாவல் விதை முளைத்து, அவர் தலை வெடிக்கும்படி பெரிய மரமாகி வளர்ந்தது. மிக்க ஆனந்தமடைந்து மர வடிவாய் நின்ற முனிவர் தம் நிழலிலேயே உறையுமாறு இறைவனை வேண்டினார். இறைவனும் அதற்கிசைந்து, கயிலையிலிருந்து பழைய நாவல் வனத்துக்கே செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டான். மரவடிவோடு முனிவர் நடந்து வந்து, நாவல் வனமெய்திக் கடுந்தவம் புரிய இறைவனும் அங்குவந்து அம்மர நிழலில் உறைவானானான். அம்மரமே தலவிருட்சமான வெண்ணாவல். அதன் கீழுறைவதால் இறைவனுக்கு ஜம்புநாதன் என்ற பெயர் வந்தது. இவ்வரலாற்றைத் திருவா. பு. சம்புமுனி தவம்புரிபடலத்திற் காண்க.
9. அடி சேர்வான் - இறைவன் திருவடியைச் சேர எண்ணி. ஓங்கல் - மலை. சம்பு தரு - நாவல் மரம்.
10. தவளக் கனி - வெண் (நாவற்) பழம். கருதும் - பார்க்க. கரிக்கொத்த மேனி - யானையின் நிறமொத்த கருநிறம்.
---------
மேனி யுளதிந்த வெண்கனிதெய் வீகத்தால்
ஆன(து) அரற்கமுதம் ஆம்என்னத் - தான்எழுந்து
கைக்கொண் டடக்கும் கனியைக் கயிலையிற்போய்
நக்கன் தனக்களிப்ப நன்றென்று - முக்கணான்
வாங்கி அருந்திவிதை மாமுனிக்கு நல்கமுனி
தாங்கி அருந்தத் தரிக்குமோ - பூங்கொன்றைத்
தாரான் பவளஇதட் டங்கியதன் றோஉடலில்
வேராய் முடியில் வெளிதுரந்து - தேராளி
மேக பதங்கரப்ப வெண்ணாவ லாய்எழுந்து
சாகை யொடுதழைப்பத் தானோங்கி - ஓகையுடன்
நின்று பரவ நிருத்தன் கருத்துடனே
இன்றுமுதற் சம்புமுனி இப்படிப்போய் - மன்ற 16
நளினமுனி பூசித்த ஞானபூ மிக்கண்
தெளிபிரம புட்கரணி தீரத்(து) - ஒளிர
இருப்பாய் உன் நீழலிலே யாமுறைவோம் என்ன
விருப்பால் அவன்வந்து விட்டான் - உருத்திரனார்
கற்பித்த அந்நெறியே கஞ்ச முனித்தடப்பால்
பொற்புப் புறமுறையப் புக்கதற்பின் - வெற்பிடித்து
அம்மை பூசித்த வரலாறு
நவ்வி அகிலாண்ட நாயகிஞா னக்கேள்வி
எவ்வழிநான் எய்தும் இயல்பென்னச்-செவ்வியாய் 20
------------
11. அரற்கு - சிவபெருமானுக்கு.
12. நக்கன் - சிவன். நன்று என்று: என்று முக்கணான் சொல்லி.
13. நல்க - கொடுக்க. தரிக்குமோ - விதை பொறுக்குமோ ; தரியாமல் முளைத்து விட்டது என்றபடி.
14. தாரான் - மாலையணிந்தவன்; சிவபிரான். பவள இதழ் தங்கியதன்றோ: கனியை இறைவன் - உண்டபோது அவன் இதழ்கள் அதிற் பொருந்தின ஆதலால்; உடலில் வேர் பிடித்து முடிவழியே மரமாக வெளிப்பட்டதென்க. தேராளி - தேரை உடையவனாகிய சூரியன்.
15. மேக பதம் - மேகங்களின் நிலை. கரப்ப: சூரியனுக்கும் மேகங்களுக்கும் அப்பாற் சென்று அவைகளை மறைத்து விட. சாகை - கிளை. ஓகை - உவகை.
16. பரவ - துதிக்க. நிருத்தன் - சிவபிரான். சம்பு முனி: விளி. மன்ற - நிச்சயமாக. (அசையாகவும் கொள்ளலாம்.)
---------
17. நளின முனி - பிரமன்; நளினம் - தாமரை. ஞான பூமி - ஆனைக்கா (அ). பிரம புட்கரணி - பிரமன் உண்டாக்கிய பிரம தீர்த்தம்; தெற்கு நாலாம் பிராகாரத்தில் உள்ளது. தீரத்து - கரையில். பிரமன் தான் படைத்த பெண்ணையே இச்சித்த பாவம் தீர இத்தலத்தில் வந்து இத்தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டு, இழந்துபோன படைத்தற்றொழிலையும் மீளப்பெற்றான் என்பது இத்தீர்த்த வரலாறு.
18. என்ன - என்று இறைவன் சொல்ல. அவன் - சம்புமுனி. உருத்திரனார் - சிவன்.
19. கற்பித்த - சொல்லிய. கஞ்சமுனித் தடப்பால் - பிரம தீர்த்தக் கரையில். பொற்பு - அழகு.
இது முதல் உமாதேவியார் இத்தலத்தில் வந்து வழிபட்டு ஞானோபதேசம் பெற்ற வரலாற்றைக் கூறுகிறார்.
20. நவ்வி: பெண்மான் போன்ற. அகிலாண்ட நாயகி: இத்தலத்து அம்பிகையின் திருநாமம். ஞானக் கேள்வி - ஞான உபதேசம். என்ன - என்று கேட்க. செவ்வியாய் - அழகுடையவளே; விளி. இறைவன் கூறுகிறான்.
-----------
நீயும்போய் ஞான நிலத்திலெமை அர்ச்சிஎனத்
தாயும்போய் அந்தத் தலத்தெய்தித் - தூய
அயன்தனை நோக்கிநாம் அர்ச்சிக்க வேதான்
இயன்றசிவ லிங்கம்ஏ தென்னப் - பயின்றரனார்
அங்கம் பிரியா அகிலாண்ட நாயகியே
எங்கும் சிவரூப மேஅன்றோ - செங்கையினால்
ஆத்திமுடி யோனைநீ ஆமென்ற பூதலத்தில்
மூர்த்திகரித் தேத்த முறைமைஎனப் - பூத்தடத்துத்
தண்துறையில் நின்றுமையாள் தன்கோவைக் கங்கையுடன்
கண்டுபிடிப் பாள்போற் கரபற்பங் - கொண்டு
திரட்டத் திரண்ட செழுநீர்த் திரளால்
அருட்டிக்க வெண்ணாவல் ஆனோன் - திருக்கோயில் 26
----------
21. ஞான நிலம் - ஆனைக்கா (அ). தாயும் – அம்பிகையும்.
22. அயன் - பிரமன். பயின்று - நெருங்கி. அரனார் - சிவபிரான். என்ன - என்று தாய் கேட்க.
23. அங்கம் பிரியா நாயகி: இடப் பாகம் பெற்றிருத்தலினாலே.
24. ஆத்தி முடியோன்: ஆத்தி சிவபிரானுக்கு உவந்த மலர்களிலொன்று. ‘ஆத்திசூடி அமர்ந்ததேவன்' என்றது காண்க. ஆம் என்ற பூதலத்தில் - அப்புஸ்தலமாகிய திரு ஆனைக்காவில்; ஆம் - நீர். மூர்த்திகரித்து ஏத்த - மூர்த்தியாக வடிவமைத்து வழிபட என - என்று பிரமன் கூற.
25. கோவை - இறைவனை. கரபற்பம் - கைத்தாமரை; பற்பம் - பத்மம்: தாமரை.
26. திரட்ட - பிரம தீர்த்தத்தின் நீரைத் திரட்ட. அருட்டிக்க - எழுப்ப, வெண் நாவலின்கீழ் எழுந்தருளினோன். செழுநீர்த்திரள்: சுவாமி பெயர்; நீரை அம்மையார் திரட்டி இலிங்கமாக அமைக்க, அந்த இலிங்கம் அப்புலிங்கம் எனப் பெயர்பெற்றது. இதையே அப்பர் சுவாமிகள், ‘திருவானைக் காவுளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடினேனே ' என்று திருத்தாண்டகத்தில் பாடுகிறார்.
---------------
சேர்ந்தருளி வீற்றிருக்குஞ் சிற்சம்பு நாதரெனக்
கூர்ந்த திருநாமங் கொண்டபிரான் - சார்ந்தஉமை
பேருவகை தோன்றப் பிரியா தனேகநாள்
சீருள மாபூசை செய்ததற்பின் - ஊரின்
திருநாமந் தானும்அமு தீச்சுரமே யாகப்
பெருஞானம் போதித்த பெம்மான் - நிருதி 29
-------------
இந்திரன் பூசித்த வரலாறு
திசைதழைக்கப் பின்னிரக்கஞ் செய்யும் பெருமான்
இசைதவத்தால் எவ்விடையீண் டென்று – தசையுடலம்
------------
27. சம்பு நாதர்: இத்தலத்துச் சிவபெருமான் பெயர்களுள் ஒன்று.
29. அமுதீச்சுரம்: அம்மையார் அமுதமாகிய நீரைத் திரட்டி லிங்கமூர்த்தமாக்கியபடியால் அமுதீச்சுரம் என்ற பெயர் வந்தது. நிருதி திசை - தென்மேற்குத் திசை.
இதுமுதல், விருத்திராசுரன் என்பவனைக் கொன்றதனால் வந்த பிரமகத்தி தோடம் நீங்க இந்திரன் இத்தலத்தில் வந்து இந்திர தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட வரலாற்றைக் கூறுகிறார்; இதைத் திருவா. பு. தீர்த்த விசேடப் படலத்திற் காண்க.
30. பின்னிரக்கம் செய்யும் பெருமான்: இறைவன் பெயர்களுள் ஒன்று; ‘பின்னிரக்கஞ் செய்வான் தன்னை .... திருவானைக்காவுளானை' என்பது இத்தலத்துக்குரிய அப்பர் தேவாரம்; இப்பெயர் பச்சாதாபேசுவரர் என்றும் வழங்கும். தழைக்க என்றது இந்திர தீர்த்தம் உண்டானமையால். எவ்விடை ஈண்டு என்று - எவ்விடமும் பொருந்தும்படி உடலம் பெருகுக என்று. (பாடபேதம்) என்றும்.
--------
வீங்கவரம் பெற்ற விருத்தா சுரனுயிரை
வாங்கிய வீரகத்தால் வானவர்கோன் - ஏங்கித்தன்
நாமத் தடங்கண்டு நாளுந் தொழப்பழைய
வாமத் துறக்கம் வழங்கினோன் - காமச்
அக்கினி, சூரியன், சந்திரன், அகத்தியன் பூசித்தது
சமிர மதனால் தணலிதவஞ் செய்ய
நிமிரும் ஒளிகாட்டி நின்றோன் - கமலபதி
புட்கரணி கண்டுதவம் பூணப் பொலஞ்சோதி
மட்கலில் லாத வரந்தந்தோன் - உட்கும் 34
-----------
31. வீங்க - பெருக்க. விருத்தாசுரன் - விருத்திராசுரன்; இவன் வரலாற்றைத் திருவிளையாடற் புராணம் இந்திரன் பழி தீர்த்த படலத்திற் காண்க. வீரகம் - வீரகத்தி; வீரனைக் கொன்ற தோடம். (பிரமகத்தி என்பது போல.) வானவர்கோன் - இந்திரன்.
32. தன் நாமத் தடம் - இந்திர தீர்த்தம். வாமத் துறக்கம் - அழகுடைய சொர்க்கலோகம்.
33. காமச் சமிரம் - காமப் போர். சமிரம் - சமீரம், சமரம்; போர். வாயுபகவானுடைய மனைவியை விரும்பிய பாவத்தால் தன் ஒளி குறைய, அக்கினி தென்கிழக்கில் அக்கினி தீர்த்தமுண்டாக்கி வழிபட்டு, மீண்டும் தன் ஒளி குறையாது பொலியப் பெற்றான். தணலி - அக்கினி. கமலபதி - தாமரைக்கு நாயகனான சூரியன்.
34. புட்கரணி: தீர்த்தம். நாலாம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையிலுள்ள தெப்பக்குளம், சூரியன் தோற்றுவித்தது. பொன் போன்ற தன் ஒளி குன்றாதிருக்க வரம் பெற்றான் என்க. மட்கல் - குறைதல், உட்கும் - அஞ்சும்.
------------
மதிதனது பொய்கை மருங்குதவஞ் செய்ய
அதிகவினை தீர்த்த அம்மான் - உததி
பருகி உமிழ்முனிவன் பாரொக்க நிற்க
வருபொழுது பூசிக்க வாழ்ந்தோன் - பிரமகிரி
நின்று குறுமுனிகை நீங்கிநெடுங் காவேரி
அன்று தொடங்கி அலைக்கரத்தால் - மன்றல் 37
--------
35. மதி - சந்திரன். தனது பொய்கை - தான் உண்டாக்கிய சந்திர புட்கரணி, சோமதீர்த்தம். சந்திரன் வழிபட்டது, தக்கன் சாபத்தால் தேய்ந்த தன் கலை வளரும் பொருட்டு. இச்சந்திர தீர்த்தத்தை, 'சோணாட்டில் ... பொன்னிமணி கொழிக்குங் குலையிற் பெருகும் சந்திர தீர்த்தத்தின் மருங்கு குளிர்சோலை ... ஒன்றுளதால்' என்று கோச்செங்கட்சோழ நாயனார் புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார். உததி - கடல்.
36. முனிவன் - அகத்தியர். பாரொக்க நிற்க வரு பொழுது: கயிலையில் சிவபெருமான் திருமணம் நடந்தபோது, வடபக்கம் தாழ்ந்து தென்பக்கம் உயர்ந்ததைச் சமம் செய்யவேண்டிச் சிவபெருமான் அகத்தியரைத் தெற்கே போகச்சொல்ல அதன்படி அவர் போனார்; போன போது, அகத்தியர் ஆனைக்காவில் வழிபட்டு, பார் ஒக்க நிற்கச் செய்யும் வல்லமையைப் பெற்றார். அகத்தியர் உண்டாக்கிய அகத்திய தீர்த்தமென்பது அம்மன் கோயிலிலுள்ள சிறு கேணியாகும். பிரமகிரி - குடமலைபோலும்; 'குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு, கடல் வளன் எதிரக் கயவாய் நெரிக்கும், காவிரிப் புதுநீர்' (10: 106 - 108) என்னும் சிலப்பதிகார அடிகளிற் காண்க: குடகுமலை என வழங்குவது.
37. குறுமுனி கை நீங்கி - அகத்தியனிடமிருந்து வெளிப்பட்டு; இதை, 'அமர முனிவன் அகத்தியன் தனாது, கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை' (பதிகம், 11 - 2) என்ற மணிமேகலை அடிகளிற் காண்க. அலைக் கரத்தால் - அலை யாகிய கையால் (மலர் சிதறி). மன்றல் - மணம் பொருந்திய.
--------
மலர்சிதறி வந்துதொழ வானதிமுன் னான
பலநதியும் வந்து பணிய - நிலைநின்று
காட்சிக் கதியருளிக் கண்டுகலந் தாடினர்தம்
நீட்சித் துயர்அறுதல் நிச்சயமே - ஆட்சிமலை 39
----------
38. வானதி - வான் நதியான ஆகாய கங்கை.
39. ஆடினர் - காவிரித் தீர்த்தத்திலே ஆடினோர். நீட்சித் துயர் - நீண்டதாயுள்ள துயர்; பிறவித்துயர் முதலாயின.
இது முதல் கோச்செங்கட் சோழர் வரலாற்றைக் கூறுகிறார். கயிலாயத்திலிருந்த மாலியவான் புஷ்பதந்தன் என்ற கணநாதர் இருவர் சிவபக்தியில் ஊக்கங் காரணமாக ஒருவர் மீதொருவர் பொறாமையினால் தம்மைத்தாமே சபித்துக்கொண்டு சிலந்தியும் யானையுமாகி, சாபநீக்கத்துக்காக இத்தலத்தில் வந்து வழிபட்டனர். யானை நீர்கொண்டு வந்து நாவலின் கீழிருந்த இலிங்கத்துக்கு அபிடேகம் செய்து வழிபட, நாவலில் குடியிருந்த சிலந்தியோ, இலிங்கத்தின் மீது தழைகள் விழாதபடி தன் வாய்நூலால் பந்தரிட்டு மறைத்துத் தொண்டாற்றியது. மறுநாள் வந்த யானை, சிலந்திவலையைக் கண்டு குற்றமென எண்ணி அதை அழித்து மீண்டும் முன்போல் நீராட்டி மலரிட்டு வழிபட்டது. மீண்டும் சிலந்தி புது வலை கட்டியது. இவ்வாறு வலையை யானை அழித்தலும் சிலந்தி கட்டுதலும் பலநாள் நிகழ, ஒருநாள், நூற்பந்தரை அழிப்பவரைக் காணவெண்ணிக் காத்திருந்த சிலந்தியானது யானையின் செயலை நேரே கண்டது. மிக்க கோபத்தோடு யானையின் துதிக்கையினுள் நுழைந்து உள்ளேறிச் சென்று கடிக்க, யானை இறந்து வீழ்ந்தது. துன்புற்ற யானை வீழ்ந்திறக்க, உட்புகுந்த சிலந்தியும் யானையின் கபாலத்திலிருந்து வெளிப்பட வழியின்றி இறந்தது. பூத உடலை நீத்த கணநாதர் இருவருக்கும் சிவபெருமான் காட்சியளித்து, யானையை முன் போல் சிவகணநாதனாக்கி, சிலந்தியைப் பூமியில் சோழ குலத்தில் மன்னனாய்ப் பிறந்து புண்ணியம் செய்து பின் முத்தியடையுமாறு கட்டளையிட்டு அனுப்பினார். அதுவும் சுபதேவச் சோழன் புதல்வனாய்ப் பிறந்து கோச்செங்கட் சோழனாயிற்று.
---------
கோச்செங்கட் சோழர் வரலாறு
கண்ணுதற்கு விண்ணோர்தம் காவின் மலர்பறிக்க
நண்ணுதற்குப் போனகண நாதர்களில் - எண்ணும்
மனப்புட்ப வந்தனுடன் மாலியவான் தானும்
இனப்புட்பம் ஆறாடி ஏந்திச் - சினத்தினால் 41
--------
இச்சோழன், அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவரான கோச்செங்கட் சோழ நாயனார். இவர் சரித விரிவைப் பெரியபுராணத்தும், திருவானைக்காப்புராணம் கோச்செங்கணார் வழிபடு படலத்தும் காணலாம். இவர் சேரமான் கணைக்காலிரும்பொறையைச் சிறைப்படுத்திய செய்தியைப் புறநானூறு 74-ம் பாடல் தெரிவிக்கிறது.
சிலந்தியின் வரலாற்றைத் தேவாரத்துப் பல இடங்களிலும் காணலாம். சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழற்பந்தர் செய்து, உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணானு மாக, கலந்த நீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித்திட்டார்', 'எளிய நாவல் அருநிழலாக ஈசன், வரணியலாகித் தன் வாய் நூலினாற் பந்தர் செய்ய, முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்னனாக்கித், தரணி தானாள வைத்தார்' - அப்பர்; சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர்...புத்தூரே' - சம்பந்தர்; ‘திருவும் வண்மையும் திண் திறலரசுஞ் சிலந்தியார் செய்பணி கண்டு, மருவுகோச் செங்கணான் தனக்களித்த வார்த்தை கேட்டு ' - சுந்தரர்.
40. கண்ணுதல் - நெற்றியிலே கண்ணையுடைய சிவபெருமான். விண்ணோர் தம் கா - தேவலோகத்துள்ள சோலை.
41. மனப் புட்ப வந்தன் - மனமுடைய மேற்சொன்ன புஷ்பதந்தன் என்ற கணநாதன். இனப்புட்பம் - பலவகை மலர்கள். ஆறு ஆடி - நீராடி.
------------
தம்மைத்தாம் சாபித்துச் சார்பான சம்புதலத்(து)
எம்மைப்பூ சித்துய்ம்மின் என்றுவிட - அம்முறையே
வெள்வரையிற் புட்பவந்தன் வெள்ளானை யாய்ப்பிறந்து
வள்ளலைவெண் ணாவல்வாய் வந்திறைஞ்சித் - துள்ளிய
மாலிய வானுமுரு மாறிச் சிலந்தியாய்க்
கோலியவெண் ணாவற் குடிகொண்டு - நூலிழைத்து
நாதன் சடைமுடிமேல் நாவற் சருகுதிரா
ஏதங் கெடப்பந்தர் இட்டுவரப் - போதகங்கண்(டு)
அங்கையால் தள்ளிநீ ராட்டியருச் சித்தேகப்
பொங்கர்வா ழுஞ்சிலந்தி போதமுனிந் - தங்கொளித்து
யானிட்ட பந்தர் இதுவோ தவிர்ப்பதென
மாநெட்டை வேழம் வருமளவும் - தானெட்டி 47
------
42. சாபித்து - சபித்து. எம்மை - சிவபிரானை.
43. வெள்வரை: இம்மலை திரு ஆனைக்காவுக்கு வடமேற்கிலுள்ள தென்பார்கள். வள்ளலை - சிவபிரானை.
44. கோலிய வெண்ணாவல் - அங்குத் தோன்றியிருந்த வெண் நாவல் மரத்திலே.
45. நாதன் - கீழுள்ள சிவலிங்க உருவம். ஏதம் - குற்றம்; மரத்திலிருந்து சருகு உதிர்ந்து இலிங்கத்தின் மீது விழுதலாகிய குற்றம். பந்தர் - தன் நூலினாற் பின்னிய வலை. போதகம் - யானை.
46. அங்கையால் தள்ளி - துதிக்கையால் வலையை விலக்கி, அருச்சித்து ஏக, என்க. பொங்கர் - மரக் கொம்பில். போத முனிந்து - மிகவும் கோபமடைந்து.
47. என - என்று அச்சிலந்தி எண்ணி. மா நெட்டை வேழம் - பெரிய நெடிய யானை.
-----------
வேய்த்திருந்த நஞ்சமென மீன்மிடற்றில் தூண்டிலெனப்
பூத்திருந்து பூட்கை புகப்பொறா - தாய்த்திறலின்
மிக்க களிறலறி வீழச் சிலந்தியும்அங்(கு)
ஒக்க இறக்க உமைபாகர் - அக்கணமே
வாரு மெனஎழுப்பி வாரணத்துக் கப்பொழுது
சேருஞ் சிவலோகச் சீரருளி - ஊரின் பேர்
ஆனைக்கா ஆக்கி அருளச் சிலந்திஅடி
யேனைக்கா பின்புநான் இப்புவிக்குக் - கோனாகி
நின்னடிமை செய்யஅருள் நீஎன்ன மாலியவான்
சொன்னபடித் தில்லைவாய்த் தொல்லைமுடிச் - சென்னி
இனிய சுபதேவன் எண்டொடித்தோள் தோய்ந்த
வனிதையரிற் புட்பவதி வாழத் - தனிமகவாய்ப் 53
-------------
48. வேய்த்திருந்த - வேய்ந்திருந்த; அதாவது மூடியிருந்த விடம் போல. பூட்கை - யானை. புக - அதன் துதிக்கையினுட் புக. திறல் - வலி. (பா- ம்) புகப்பெறாதாய்.
49. ஒக்க - உடனே.
50. வாரணம் - யானை.
51. யானைக்கு முத்தி கொடுத்ததைக் கண்டவுடனே. மாலியவானான சிலந்தி பின் வருமாறு கேட்கிறது. அடியேனைக் கா (காப்பாயாக).
52- 3. தில்லைவாய் .... புட்பவதிவாழ: தொன்மைதரு சோழர்குலத் தரசனாஞ் சுபதேவன், தன்னுடைய பெருந்தேவி கமலவதியுடன் சார்ந்து, மன்னுபுகழ்த் திருத்தில்லை மன்றாடும் மலர்ப்பாதம், சென்னியுறப் பணிந்தேத்தித் திருப்படிக்கீழ் வழிபடு நாள்' என்பது பெரியபுராணம். சென்னி - சோழன். வனிதையரில் - பெண்களில். புட்பவதி: இத்தேவியின் பெயரை இப்பெரியபுராணச் செய்யுள் கமலவதி என்று கூறுகிறது; திருவானைக்காப் புராணமும் இவ்வண்ணமே கூறும். தனி மகவு - ஒரே குழந்தை.
-----------
போதுவித்துச் செங்கண்ணார் என்னும்பேர் பூண்பித்துச்
சோதி மணிமகுடஞ் சூட்டுவித்துக் - காதலாய்த்
தன்னூலிற் பந்தரிட்ட தானத்தில் தாணுவுக்குப்
பொன்னினாற் கோயில் புதிதமைப்பித்(து)- இன்னமொரு
தந்திபுகா வாயிலுந் தக்கநவ தீர்த்தமுங்கண்(டு)
அந்தண் மடவார் அனவரதம் - சிந்தித்துச் 56
------
54. போதுவித்து - பிறக்கச்செய்து. செங்கண்ணார்: குழந்தை சிறிது காலந்தாழ்த்துப் பிறந்தால் உலகமுழுதும் ஆளவல்ல சக்கரவர்த்தியாவான் என்று சோதிடர் சொல்லக் கேட்டதேவி, அதன் பொருட்டுத் தன்னைத் தலைகீழாய்க் கட்டித் தூக்கச்செய்து, சிறிது நாழிகையானபின், சோதிடர் குறித்தநேரத்தில் அவிழ்த்துவிடச் செய்து குழந்தையை ஈன்றாள். காலந் தாழ்த்துப் பிறந்தமையால், குழந்தை சிவந்த கண்ணுடையதாயிருக்கக் கண்ட தாய், 'என்கோச் செங்கண்ணனோ' என்றதனால் இப்பெயர் வந்தது. இதை 'மகவு பெற அடுத்த வேலையதனிற் காலமுணர், பழையார் ஒருநாழிகை கழித்துப் பிறக்குமேல் இப்பசுங்குழவி, உழையார் புவனம் ஒருமூன்றும் அளிக்கும் என்ன ஒள்ளிழையார்'; பிறவாதொரு நாழிகை கழித்தென் பிள்ளை பிறக்கும் பரிசு என்கால், உற ஆர்த் தெடுத்துத் தூக்கும்என உற்ற செயல்மற் றதுமுற்றி, அறவாணர்கள் சொல்லிய காலம் அணையப் பிணிவிட் டருமணியை, இறவா தொழிவாள் பெற்றெடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள்' (பெரிய பு. கோச்செ. பு. 9 - 10) என்ற பாடல்களால் உணர்க. காதலாய் - அன்புடன்.
55. பந்தரிட்ட தானத்தில் கோயில் அமைப்பித்து என்பதை, 'ஆனைக்காவில் தாம்முன்னம் அருள் பெற்றதனை அறிந்தங்கு, மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழுங் கோயில் செய்கின்றார்' (மேற்படி; 13) என்றதனால் உணர்க. தாணு - சிவபிரான்.
56. தந்தி புகாவாயில்: (தந்தி - யானை) சிலந்தியிட்ட பந்தரை யானை அழித்ததென்ற நினைவோடு, சிலந்தியாயிருந்து பிறந்த கோச்செங்கட்சோழர், யானை புகமுடியாத வாயில் கட்டிவைத்தார். நவதீர்த்தம்: பிரம, இந்திர, சம்பு, இராம, ஸ்ரீமத், அக்கினி, அகத்திய, சோம, சூரிய தீர்த்தங்கள்; ‘காமரு பிரமதீர்த்தம் இந்திர புட்கரணியே சம்பு புட்கரணி, தேமலி இராமதீர்த்தமே சீமத்தீர்த்தமே அக்கினி தீர்த்தம், ஆமகத்திய நற்றீர்த்தமே சோமதீர்த்தமே அலரியின் தீர்த்தம், வாமமே கலையாய் மேலவாந் தீர்த்தம் மருவிய பெயரிவை காண்டி' - திருவா. பு. தீர்த்த விசேடப்படலம் 26. அனவரதம் – நாள்தோறும்.
----------
சேவிக்கு மெல்லைத் திருச்சா லகநலமும்
மாவித் தகநிருத்த மண்டபமும் - நாவல்
தருமுனிக்குச் சுற்றெல்லாந் தங்கு கடவுட்
டிருவிருப்புந் தேருந் தெருவும் - அரணும்
திருக்கோ புரநிரையுஞ் செய்யக்கண் டுய்ய
அருட்கோலி முத்தி அளித்தோன் - விருப்பஞ் 59
----------
57. திருச்சாலக நலம்: சன்னிதிக்கு முன்னே தரிசனத்துக்காக அமைக்கப்பெற்றுள்ள ஒன்பது துவாரங் கொண்ட பலகணி; இதன் வழியாக இறைவனைத் தரிசித்தோர் நவ தீர்த்தங்களிலும் மூழ்கிய பலனைப் பெறுவரென்பது ஐதிகம். மா - பெரிய வித்தக - வியப்புக்கிடமான.
58. நாவல் தரு முனி - சம்பு முனியாகிய நாவல் மரம்; தலவிருட்சம். திரு இருப்பு - பிற தெய்வங்களுக்கான சுற்றுக் கோயில்கள்.
59. நிரை - வரிசை. இவ்வளவும் கோச்செங்கட் சோழர் செய்யக் கண்டு, அவர் உய்ய அருள் செய்து முத்தி அளித்தோன் (இறைவன்). கோச்செங்கட்சோழர் பல கோயில்கள் கட்டிய சிறப்பைத் தேவாரத்தாலும், 'இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோ ளீசற்கு எழில்மாடம் எழுபதுசெய் துலகம் ஆண்ட, திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம்' என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்தாலும் அறியலாம்.
----------
சுரந்த சிலந்திமுடி சூட்டும் பெருமான்
பெருந்திருவெண் ணாவற் பெருமான் - கருந்துளவோன்
இராமன் பூசித்த வரலாறு
சேதுவிற்றான் செய்த சிவபூ சையில்அகன்ற
பாதகத்தில் ஒன்றுகால் பாறாது - போதுதலும்
தன்நாமத் தாற்ப்ரதிட்டை சன்னிதியிற் செய்திறைஞ்ச
அன்னான் வினைதீர்த் தருளினோன் - இந்நகரின் 62
வேறு சிறப்புக்கள்
மண்ணுஞ் சிவலிங்கம் என்றெண்ணி வாராமற்
பண்ணுந்து சொல்மூவர் பாங்காகக் - கண்ணுற்று
நின்றேத்தும் பாக்கொண்டோன் நீடென்பு பொன்மலராய்
நன்றேத்தும் ஞான நகரினோன் – அன்றுரகன் 64
----------
60. கருந்துளவோன் - திருமால்; இராமன்.
61. சேது - இராமேசுவரம். ஒன்று - சிவபக்தனான கும்பகன்னனைக் கொன்ற பாதகம். பாறாது - அழியாமல் வந்து பொருந்துதலும்.
62. தன் நாமத்தால் பிரதிட்டை சன்னிதியிற் செய்து இறைஞ்ச: நீல நிறத்தையுடைய இராமன் தன் பெயரால் நீலவிண்டீசர் என்ற மூர்த்தியை இராமதீர்த்தத்துக்கு மேற்கில் தாபித்து வழிபட்டான். 'ஆழியாற் கருள் ஆனைக்கா’ - சுந்தரர் தேவாரம்.
62 - 64. இந்நகரின் மணலும் சிவலிங்க வடிவம் என்றெண்ணி, தேவாரப் பண்பாடிய மூவரும் இத்தலத்தில் அடி வைத்து மிதியாமல் அயலில் நின்றே பாடினார்கள் என்ற இந்த வரலாறு வேறு நூல்களில் கூறப்பெறவில்லை. ஆயினும், மக்களிடையே வழங்கி வருவதாகத் தெரிகிறது. பண் - தேவாரப் பண். மூவர் - அப்பர், சம்பந்தர், சுந்தரர். பாங்காக - அயலிலே இருந்து. கண்ணுற்று - வழிபட்டு. பா - தேவாரப் பாடல். என்பு - எலும்பு. ஞான நகர்: அ. உரகன் - நாகலோகத்து மன்னன்.
-----------
சோழன் ஆரஞ்சாத்திய வரலாறு
மங்கைக் களித்த மணியாரம் காவைஉமை
பங்கற் கழகன் பரிக்கவென - நங்கை 65
பொருந்தா திருப்பதுவும் பொன்னிநீர் ஆழத்
திருந்தார் தொழுங்கழற்காற் சென்னி – பரஞ்சுடரே
-------------
இது முதல் சோழனது முத்துமாலையை இறைவன் ஏற்றருளிய வரலாற்றை உரைக்கிறார். சோழனொருவன், தன் தேவி அணிந்திருந்த முத்துமாலையின் பொலிவைக் கண்டு, அதைத் திருவானைக்கா இறைவனுக்கே அணிவிக்கக்கருதினான். ஆனால், காவிரியில் நீராடியபோது, அது நீருள் வீழ்ந்து மறைந்துவிட்டது. இதனால் பெரிதும் மனங்கவன்ற மன்னன், அதை ஏற்றுக்கொள்ளுமாறு பிரானைப் பிரார்த்தித்தான். இறைவன் திருவருளால், திருமஞ்சனமாட்டுவோர் முகந்துசென்ற திருமஞ்சனக்குடத்து நீரில் அம்மாலை புகுந்துகொண்டு, திருமஞ்சனமாட்டியபோது இலிங்கத்தின் மீது மாலையாக விழுந்தது என்பது வரலாறு. இதைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், 'தாரமாகிய பொன்னித் தண் துறை விழுத்தும், நீரின் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே, ஆரங் கொண்ட எம் ஆனைக்காவுடை ஆதி ' என்று தேவாரத்துள் பாடுகிறார்.
65. மங்கைக்கு அளித்த மணியாரம் - உரகன் தன் மகளான நாககன்னிக்களித்த மாலை. நாககன்னி, சோழன் மனைவி. காவை - ஆனைக்கா; கா உடைமையால் காவை என்றும் கூறப்பெறும். உமைபங்கற்கு - சிவபிரானுக்கு. பரிக்க என - அணிவிக்க எண்ண. நங்கை - மனைவி.
66. பொருந்தாதிருப்பது, நீரிலே மாலை போய்விட்டமையால். பொன்னி - காவேரி. திருந்தார் - பகைவர்.
-----------
கொண்டருளு நீஎனப்பொற் கும்ப நீ ரோடுவரக்
கண்டருளித் தாமணிந்த காரணத்தால் - எண் திசையோர்
ஆரம்பூண் டாரென் றழைக்கும்பேர் பூண்டார்வில்
நாரம்பூண் டார்பன் னகம்பூண்டார் - பாரிற்
வேறு சிறப்புக்கள்
பணிவார் பிறப்பறுக்கும் பாதத்தான் வெண்ணீ(று)
அணிவான் அனைத்துலகை ஆள்வான் - இணையில்லான்
தேவர் குலக்கொழுந்தா திப்பெருஞ் செல்வனியல்
நாவலன் தூதன் நடப்பெருமான் - சேவுடையான்
சோமநா தப்பெருமான் சோதிமறை தேடரிய
காமன் ஆகங்கடிந்த கண்ணுதலான் - சேமமாம் 71
------------
67. கும்பம் – குடம். தாம் - இறைவன்.
68. ஆரம் பூண்டார் என்று எண்திசையோரால் அழைக்கப்பெற்றார் என்க. வில் நாரம், பூண், தார், பன்னகம் பூண்டார் என்க; வில் நாணாகவும், ஆபரணமாகவும், மாலை யாகவும் இருப்பது பாம்பானமையாலே; நாரம் - நார், நாண்; சிவபிரானுடைய மேருவில்லுக்கு நாணாவது, வாசுகியாகிய பாம்பு, பூண் - ஆபரணம். தார் - மாலை. பன்னகம் - பாம்பு.
69. பிறப்பறுக்கும் பாதம்: 'இழித்தன ஏழேழ் பிறப்பும் அறுத்தன ... ஐயாறன் அடித்தலமே' - அப்பர் தேவாரம்.
70. தேவர் குலக்கொழுந்து: ' தேவர் குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய ஐயா' - அப்பர் தேவாரம். ஆதிப்பெருஞ்செல்வர் என்பது சுவாமி திருநாமங்களுள் ஒன்று. 'ஆனைக்காவுடை ஆதி' என்பது சுந்தரர் தேவாரம். இயல் நாவலன் தூதன் - தேவாரம் பாடிய சுந்தரருக்காகத் தூது சென்றவன். சே - இடபம்.
71. மறை - வேதம். காமன் - மன்மதன். ஆகம் கடிந்த கண்ணுதலான் - அவன் உடலை எரித்த நெற்றிக் கண்ணை யுடையவன். சேமமாம் – பாதுகாவலாயுள்ள.
----------
திக்காடை யான்சந்த்ர சேகரன் தில்லையுளா
டிக்காட் டியபின் னிணையழகன் - அக்கு
மணியி லழகன் வசந்த னழகன்
அணியும் பணியி லழகன் - துணரான்
சரனழகுக் காகந் தழலாகப் பார்த்த
அரனழகுக் காருமொவ் வாதான் - பரமன்
சிறக்குந் திருச்சா லகத்தொளிர்தே வேசன்
கறைக்கண்டன் என்னானைக் கன்று - நிறக்கின்ற
மாபெருவெண் ணாவல் வடநாவ லிற்கிளர்ந்த
கோபுர மேருநெடுங் குன்றேய்ப்பத் - தீபவொளி
சீரா லயமும் திருநீறிட் டான்மதிலும்
ஊரான துங்கயிலை ஒப்பாகப் - பேராது 77
----------
72. திக்கு ஆடையான் - திசைகளை ஆடையாக உடுத்தவன். அக்கு மணி, உருத்திராக்கமணி.
73. பணி - ஆபரணம், பாம்பு. துணரான் சரன் - மலரம்பு உடைய மன்மதன்.
74. சரன் அழகுக்கு - மன்மதன் விட்ட அம்புக்காக. ஆகம் தழலாக - அவன் உடல் எரியும்படி.
75. திருச்சாலகம்: 57. ஒளிர் - விளங்குகின்ற கறைக்கண்டன் - நீலகண்டன். என்னானைக்கன்று: காப்பு பார்க்க.
76. இத்தலத்துக்குரிய வெண்நாவலானது நாவலந்தீவின் வடநாவலை ஒத்திருக்கவும், பெரிய கோபுரமானது மேரு ஒத்திருக்கவும்; ஏய்ப்ப - ஒத்திருக்க.
77. திருநீறிட்டான் மதில்: சிவபெருமானே ஒரு சித்தவேடங்கொண்டு வந்து மதில் கட்டுந் தொழிலாளிகட்குத் திருநீற்றையே கூலியாக அளிக்க, அது அவரவர் வேலைக்கேற்பப் பொன்னாயிற்று. நீற்றையே கூலியாக அளித்துக் கட்டிய இம்மதில் ‘திருநீறிட்டான் மதில் ' என்று பெயர் பெற்றது. கோயிலைச் சூழ்ந்துள்ள பல மதில்களுள் இது நான்காவது மதில். 'திரு நீறிட்டான் மதில், சுற்றிய பொற்றிரு ஆனைக்காவல்' - அருணகிரிநாதர்; 'இமையவர்கள் கம்மியனும் நன்றுநன் றென்னநீ றிட்டான்மதில், இவ்வுல குளோர்வேலை செய்யவே தினமும் நீறிட்டிருந்தருள் தேவர்கள், தம்பிரான் - க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ், 36.
--------------
தன்னிருபாற் பொன்கொழித்துத் தாவுங் கனதரங்கப்
பொன்னிந்தி சம்புநதி போலோங்கத் - தன்னகர்சூழ்
இப்பதியும் இந்நகரும் இந்த்ரபத முன்னான
அப்பதியும் அச்சுரரும் ஆமென்ன - மெய்ப்புலவோர்
மேதகு வித்யா தரரின் மிகவிளங்க
மாதர் அரம்பையரின் வாழ்வுபெறப் - பாதவங்கள்
அண்டர்தரு விற்றோன்ற ஆடகப்பொற் றெய்வீக
மண்டலமொப் பான மழைநாடன் - திண்திறலான்
மிக்க விழவறா வீதி வளநாடன்
செக்கர்வான் திங்களணி சேகரத்தான்- தக்கதிரு 82
-----------
78. தன் இருபால் - காவேரியாற்றின் இருபிரிவுகளான காவேரி கொள்ளிடம் இரண்டிலும். தரங்கம் - அலை. பொன்னி - காவேரி. சம்புநதி - சாம்புநதம்; மேருமலையி லிருந்து வடக்கு நோக்கி நாவற்சாற்றைச் சுமந்து ஓடும் ஆறு என்று கருதப்பெறுவது.
79. அப்பதியும் அச்சுரரும் - தேவலோகமும் தேவரும்.
80. புலவர் வித்தியாதரர் போல இசையிலும் மாதர் அரம்பையர்போல அழகிலும் விளங்க. பாதவங்கள் - மரங்கள்.
81. அண்டர் தரு - கற்பகத்தரு; அதைப் போலத் தோன்ற. ஆடகப் பொன் - ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்புநதம் என்ற நால்வகைப் பொன்னில் ஒன்று. மழை நாடன்: நீர்வளம் பொருந்திய ஆனைக்கா ஆதலால்.
82. விழவு அறா - எக்காலமும் விழா நடந்தபடியேயிருக்கிற. செக்கர் - சிவந்த. சேகரம் - சடை.
------------
(தொனிகள்)
ஆதிரையான் மூல மறையத்தத் தான்மகத்தான்
ஓதமெறி நாகைக்கா ரோணத்தான் - சோதியான்
கெச்சைதனி லாடியான் கேதகையொன் றாவணியான்
அச்சமனை யன்றுபுரட் டாசியான் - பிச்சை
அடர்ந்திட்ட மாமுனிவர் ஆச்சிரமந் தோறும்
படர்ந்திட்ட மையற் பசியான் - கொடுங்கூற்(று) 85
_______________________________
83. ஆதிரை நட்சத்திரத்துக்குரியவன், பழைய வேதத்தின் முடிவிலிருப்பவன், யாகத்துக்குத் தலைவன், அலைமோதுகின்ற நாகைக்காரோணத்திலிருப்பவன், ஒளி பொருந்தியவன். ‘ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால், ஊர்திரை நீர் வேலி யுலகு' - முத்தொள்ளாயிரம். மகம் - யாகம். ஆதிரை, மூலம், அத்தம், மகம், (திரு) ஓணம், சோதி என்ற நட்சத்திரப் பெயர்கள் இங்குத் தொனிக்கின்றன.
இது முதல் 89-ம் கண்ணி வரையில், ஆடி தொடங்கிப் பன்னிரண்டு மாதப் பெயர்களையும் தொனியினால் குறிப்பிடுகிறார்.
84. கெச்சை - காலிலணியும் சதங்கை போன்ற ஓர் அணி. ஆடியான் - (தில்லையில்) நடமாடியவன். கேதகை - தாழை; ஒன்றா அணியான் - இது பொருந்தாத அலங்கார முடையவன். திருவண்ணாமலையில் தோன்றிய சிவசோதியின் முடிதேடிச் சென்ற அன்னமாகிய பிரமனுக்குத் தாழை பொய்ச்சாட்சி சொன்னமை காரணமாகச் சிவபெருமானால் விலக்கப்பட்டது; ஆகவே கேதகை ஒன்றாத அணி. அச்சமனை - அந்த யமனை. புரட்டு ஆசியான் - புரட்டிய போரையுடையவன்; ஆசி - போர். ஆடி, ஆவணி, புரட்டாசி என்பன தொனி.
85. மாமுனிவர் - தாருகாவனத்து முனிவர். எங்கும் சென்று மையலாகிய பசியை இட்டான் என்க. அற்பசி என்பது தொனி. கூற்று - யமன்.
_______________________________
எடுக்கைக்கு வந்துபிறந் தேங்காத் திகையான்
கடுக்கைத் தொடைமார் கழியான் - பொடிச்சுதையான்
வன்னி வளர்க்குஞ்சோ மாசியான் வஞ்சகமே
பன்னுமவர் நெஞ்சத்தற் பங்குணியான் - நன்னீரால்
தீவணத்தங் குஞ்சித் திரையான் சிறுவனையாள்
காவணத்தி லேனோர்வை காசியான் - மூவரைவிட்
டப்புரத்தா னார்க்கும் அளித்தஉயி ரானியான்
மைப்புரத்தான் தங்கை வலத்தினான் - செப்பரிய 89
_______________________________
86. ஏங்கா திகையான் - ஏங்கித் திகைக்கமாட்டான். கடுக்கைத் தொடை - கொன்றைமாலை. மார் - மார்பு; ‘மார் தங்கு தாரைத் தந்தருள்வாயே' - திருப்புகழ்; 'மாரினை நோக்கியே மருள்வர் சிற்சிலர்' - சிதம்பரச் செய்யுட்கோவை, 58. கழியான் - நீக்கமாட்டான். பொடிச் சுதையான் - திருநீற்றுப்பொடியைப் பூசியவன். கா(ர்)த்திகை, மார்கழி, தை என்பன தொனி.
87. வன்னி - நெருப்பு. சோமாசி - சேர்மயாஜி; சோமயாகஞ் செய்தவன். சிவபிரான் கையிலே நெருப்பை ஏந்தியிருத்தலைக் குறிப்பிடுகிறார். நெஞ்சத்து அற்பங் குணியான் - நெஞ்சத்தை அற்பமும் கருதமாட்டான்; 'கரவாடும் வன்னெஞ்சர்க் கரியான்' - அப்பர் தேவாரம், மாசி, பங்குனி தொனிப் பெயர்கள்.
88. தீ வண்ணத்து அம் குஞ்சித் திரையான் - தீ வண்ணமுடைய சிவந்த அழகிய தன் சடையிலே திரையுடைய கங்கையை ஏற்றவன். சித்திரை, வைகாசி தொனிப் பெயர்கள்.
89. அப்புரத்தானார்க்கு - அம்முப்புரத்திலிருந்த அசுரர் மூவருக்கும். அளித்த உயிர் ஆனியான் - உயிருக்கு ஆனி (ஹானி, கேடு) வரும்படி செய்தவன். கருமேனியுடையவன் தங்கைக்கு வலப்பாகத்திலே அமர்ந்தவன். ஆனி (மாதம்) தொனிப் பெயர், செப்பரிய - சொல்லுதற்கரிய.
_________________________
(மடக்கு)
அம்பர அம்பரத்தான் அம்பொற் சிலைச்சிலையான்
பைம்பணியி னான்பைம் பணியினான் - செம்பொறியின்
கோவான் கோவான்மேற் கொள்ளு மவையவத்தான்
மாவா ரணத்தான்மா வாரணத்தான் - காவாசன் 91
கங்கையினான் கங்கையினான் காசியிலான் காசியிலான்
பைங்கடல்சூழ் பாரிடத்தான் பாரிடத்தான் – செங்கமல
__________________________________
90. அம்பர அம்பரத்தான் - திக்கையே ஆடையாக உடுத்தவன் (72). அம்பொற் சிலைச் சிலையான் - அழகிய பொன் மலையாகிய மேருமலையை (திரிபுரமெரித்தபோது) வில்லாக உடையவன். பைம்பணியினான் - பசிய பாம்புகளையணிந்தவன், ஆபரணங்களை யணிந்தவன்.
91. செம்பொறியின் கோவான் - தழலுருவானவன். கோ ஆன் - ஆனிற் சிறந்ததாகிய திருமால் விடை. மேற்கொள்ளுதல் - அதை வாகனமாய்க் கொள்ளுதல்; ‘மேற் கொள்ளல். ஆன் என்னும் உலகு' - சிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல். அவையவத்தான் - திருவுருவையுடையவன். மா வாரணத்தான் - பெரிய யானைத்தோலை யுடையவன். பெரிய கொடியையுடையவன். கா வாசன் - திருவானைக்காவில் வசிப்பவன்.
92. கங்கையினான் - கங்கையாற்றையுடையவன்; (கம் கையினான்) அக்கினியைக் கையில் ஏந்தியவன். கம் - அக்கினி. காசியிலான் - காசியை இருப்பிடமாயுள்ளவன்: (காசி - துன்பம்) துன்பமில்லாதவன். பாரிடத்தான் - பூமியையுடையவன்; (பாரிடம் - பூதம்) பூதகணத்தையுடையவன். கமலம் - தாமரை.
___________________________
(அடிமடக்கு)
அத்த னகத்திருக்கா ளத்தியான் கங்குறைத்த
அத்த னகத்திருக்கா ளத்தியான் - எத்திசையும்
வாவிச் சுவேத வனத்தினான் தேடரிய
வாவிச் சுவேத வனத்தினான் - சேவைக்
கரிய கமலா லயத்தானாய் வேதற்
கரிய கமலா லயத்தான் - வருக
நவிலு மாணிக்க நகத்தான் வலாரி
நவிலு மாணிக்க நகத்தான் - பவளமணிப் 96
_______________________________
இதன் பின் அடிமடக்காக ஒன்பது கண்ணிகளிலே பல தலங்களைக் குறிப்பிடுகிறார்.
93. அகத் திருக்கு ஆள் அத்தியான் - உள்ளத்திலுள்ள திருக்கையெல்லாம் போக்கியாளவல்ல கயிலை மலையிலிருப்பவன். கங்குறைத்த - தலையைக் கிள்ளின. அகத்து இரு காளத்தியான் - அகத்திலே உறைகின்ற காளத்தி மலையினான்.
94. வாவு இச் சுவேத அனத்தினான் - தாவுகின்ற இந்த வெள்ளை அன்ன வடிவு கொண்ட பிரமன். தேடரிய - (திருவண்ணாமலையில்) தேடிக் காணமுடியாத (திருமுடியுடைய). வாவிச் சுவேத வனத்தினான் - வாவியையுடைய வெண்காட்டான். வெண்காட்டு முக்குளத் தீர்த்தம், ‘முக்குளநீர், தோய் வினையாரவர் தம்மைத் தோயாவாம் தீவினையே ' என்று சம்பந்தரால் பாடப்பெற்றமை இங்கு உணரத்தகும்.
95. சேவைக்கு அரி அகமலா லயத்தான் - இடபமாக அமர்ந்த திருமால், குற்றமற்ற சிந்தனையையுடையவன். ஆய் வேதற்கு - தேடிய பிரமனுக்கு. கமலாலயத்தான் - திருவாரூர்ப் பிரான்; கமலாலயம் என்பது திருவாரூர்த் திருக்குளம்.
96. வரு கன வில்லும் ஆணிக் கனகத்தான் - தன்னுடைய கனமான வில்லும் ஆணிப் பொன்னாகிய மேருமலையாக உடையவன் ; கனகம் - பொன் ; திரிபுரமெரித்த போது மேரு வில்லாயிற்று. வலாரி - இந்திரன் (வலன் என்னும் அசுரனது பகைவன்). நவிலும் - துதிக்கும். மாணிக்க நகத்தான் - மாணிக்க மலையான் (திருவாட் போக்கி).
_____________________________
பண்ணதி ரேகாம் பரத்தினான் அந்தமறைப்
பண்ணதி ரேகாம் பரத்தினான் - நண்ணி
நவமணிய பஞ்ச நதியானென் றேத்து
நவமணிய பஞ்ச நதியான் - எவரையும்வந்
திக்காமன் சோதிச் சிராமலையான் ஈன்றசெவ்வந்
திக்காமன் சோதிச் சிராமலையான் - மைக்கோல
வாமத்தா னீலி வனத்தினான் நல்கியமெய்
வாமத்தா னீலி வனத்தினான் - நாமத்தா 100
________________________________
97. மணியின் ஓசை அதிர்கின்ற; பண் – ஓசை. ஏகாம்பரத்தினான் - ஒற்றையாடையுடையவன். அந்தமறைப் பண் - வேதத்தின் இசை. அதிர் - ஒலிக்கின்ற. ஏகாம்பரத்தினான்: காஞ்சியில் ஒரு மாவின் கீழ் எழுந்தருளியுள்ள சிவபெருமான்.
98. நவமணிய - நவமணிகளையுமுடைய. பஞ்ச நதியான்: திருவையாற்றி லுறைபவன்.
99. வந்து இக்காமன் சோதிச்சு இரா மலையான் - மன்மதன் வந்து துன்புறுத்தாத மலையை (கயிலை மலையை) உடையவன்; சோதிச்சு - சோதித்து. ஈன்ற - அரும்பிய. செவ்வந்திக் காமன் - செவ்வந்திச் சோலைக்கு நாயகன். சோதி - சோதியாயுள்ளவன். சிராமலையில் தலவிருட்சமாயுள்ளது செவ்வந்தி. சிராமலையான் - திரிசிராப்பள்ளியில் உறைபவன்.
100. மைக்கோல வாமத்தான் - கரிய நிறமுடைய திருமாலை இடது பக்கத்திலுடையவன். நீலி - பார்வதி. வனத்தினால் - அழகினால். நல்கிய மெய் வாமத்தான் - பொருந்திய இடது பக்கத்தையுடையவன். நீலிவனத்தினான்: திருப்பைஞ் ஞீலியிலுறைபவன். இங்கு, ஞீலி என்று ஒரு வாழை தலவிருட்சம். நாமத்தால் - புகழால்.
___________________________________
னாலு கவியுடைவெண் ணாவலா னேவலா
னாலு கவியுடைவெண் ணாவலான் - கோல
(வேறு)
மருத வனத்தான் மழவை வயித்யன்
அருண கிரிக்கோன் அமலன் - மருகல்
பறியல் கொறுக்கை பழனம் இவற்றுள்
உறையும் நிருத்தன் ஒருத்தன் - மறைகொள்
அடவி யகத்தில் அவியும் விளக்கை
முடுகும் எலிக்கு முடியும் - குடையும்
அவனி யனைத்தும் அரசும் அளித்த
சிவனிசை நெக்குஞ் செவியன் - அவனடியின் 105
___________________________
101. நாலு கவி - ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் நாற்கவி. (நாமத்தால்) வெண்ணாவலான் ஏவலான் - வெண்மையான புகழுடைய (அந்தணனான) சுந்தரரால் ஏவப்பெற்று (தூது சென்றது முதலிய) தொழில் செய்தவன். நாவலூரன் - சுந்தரர். நாலு கவியுடை வெண்ணாவலான் - தொங்குகின்ற குரங்குகளையுடைய நாவல் மரத்தினடியில் உறைபவன் (திருவானைக்கா).
102. மருதவனம் - திருஇடைமருதூர். மழவை - மழபாடி. வயித்தியன் என்றது, வைத்தியநாதன் என்ற பெயரை. இப்பெயர் புள்ளிருக்கு வேளூரில் சிவபெருமானுக்குரியது. அருணகிரி - அண்ணாமலை.
102 - 3. இங்கே கூறியுள்ள தலங்கள் யாவும் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள். பறியல் - திருப்பறியலூர். மறைகொள் அடவி யகமென்றது, வேதாரணியம் (திருமறைக்காடு).
104 - 5. திருமறைக்காட்டில் இறைவன் திருமுன் எரிந்த விளக்கு அணையும் தருணத்திலிருந்தபோது, அதை ஓர் எலியானது தன் மூக்கினால் தூண்டி எரியச் செய்த சிவபுண்ணிய விசேடத்தால் மறுபிறப்பில் மாவலி (மகாபலி) யாகப் பிறந்து மண்ணும் விண்ணும் ஒருங்கே அரசாளும் பேறு பெற்றது: ‘நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னை, கறைநிறத்தெலிதன் மூக்குச் சுட்டிடக்கனன்று தூண்ட, நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலகமெல்லாம், குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கைவீ ரட்டனாரே' - அப்பர் தேவாரம். முடுகும் - தூண்டிய. அவனி - பூவுலகம் அளித்த சிவன் என்க. இசை நெக்கும் - இசைக்கு உருகுகின்ற.
இதன் பின் இரண்டு கண்ணிகள் (106 - 7) வல்லோசைச் சந்தத்திலும் அடுத்த இரண்டு (108 - 9) மெல்லோசைச் சந்தத்திலும் அமைந்துள்ளன.
____________________________
மெய்க்கணிட்ட அர்ச்சனைக்கு மெத்தமெச்சி விட்ணுவுக்கோர்
சக்கரத்தை யுற்றளித்த தத்துவத்தன் - மிக்கதத்வம்
எட்டிரட்டி முப்பதிற்றி ரட்டிபத்தி ரட்டிதப்பு
சிட்டரெட்டு சித்தசுத்த சிற்குணத்தன் - வட்டமிட்ட
செஞ்சடையன் சிங்கவுரஞ் சிந்துகொடுஞ் சிம்புளினன்
பஞ்சமுகன் சங்கணியும் பைங்குழையன் – செஞ்சரணங்
______________________________
106. திருமால் தம் கண்ணை மலராக இட்டு அருச்சித்த பூசைக்கு மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குத் தமது சக்கராயுதத்தை அளித்த வரலாறு; ‘பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத், தங்கண் இடந்து அரன் சேவடிமேற் சாத்தலுமே, சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற்கு அருளியவாறு. எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ' – திருவாசகம் 324. விட்ணு - விஷ்ணு.
107. தத்துவம் எட்டு, முப்பது, பத்து, இரட்டி - தொண்ணூற்றாறு தத்துவம். தப்பு சிட்டர் - இவற்றைக் கடந்த ஞானியர். எட்டு - உணரக்கூடிய.
108. சிங்க உரஞ் சிந்து - நரசிங்கத்தின் மார்பைக் கிழித்த. சிம்புள் - சரபப் புள். நரசிங்கமூர்த்தியின் செருக்கு அடங்க இறைவன் சரபப் புள்ளாக வந்தாரென்பது புராண வரலாறு. பஞ்சமுகன்: ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என ஐந்து முகங்களுடையவன்.
_______________________________
குஞ்சிதவங் கங்கொள்மினன் கொம்புவிரும்புந் திறல்கண்
டஞ்சனடந் தந்துவிளங் கம்பலவன் - நெஞ்சிலுறை
நாதன் பிறந்துழலும் நாயேனை ஆட்கொண்ட
பாதன் பரமன் பரஞ்சோதி - ஆதவன்சூழ்
ஆசைகொண்ட சம்புவின்கீழ் ஆறெண் சதுரியுகம்
பூசைகொண்ட சம்புவிறற் பூதேசன் - தேசு
திருவிழா
குலவும் இடபக் கொடியேற்றி வீதி
உலவுதிரு நாள் தனில் ஓர்நாள் - தலவலயம் 112
__________________________
109. குஞ்சித செஞ்சரணம் - தூக்கிய சிவந்த திருவடி. அங்கம் கொள் மின் - உடலிற் பாதியைக் கொண்ட உமாதேவி. நன் கொம்பு - நல்ல கொம்பு போல்பவள். அவள் கண்டு விரும்பும்படியாக நடனம் செய்து விளங்குகின்ற அம்பலவன்.
110. ஆதவன் - சூரியன்.
111. ஆசை கொண்ட சம்பு - திசையெல்லாம் அடக்கிக் கொண்டு வளர்ந்த நாவல். ஆறெண் சதுர்யுகம்: நாற்பத்தெட்டு சதுர்யுகம் பூசை கொண்டார்; ‘செழுநீர்த் திரளென உயர் சதுர யுகம் நாற்பத் தெட்டான நெடுநாள் உவப்புடன் பூசை கொண்ட எம்பிரான்’ - க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ், 36. சம்பு - சிவன். பூதேசன் - பூதநாயகன். தேசு - ஒளி.
112. உலவு திருநாள் - திருவிழாக் கொண்டு திருவீதி வலம் வருகின்ற காலத்தில். தலவலயம் - பூ மண்டலம்.
___________________________
திருப்பள்ளி யெழுச்சி
மூடும் இருள்தீர முறைசெய்வான் மூரித்தேர்
ஊடு பரிதி உதயமெழ - ஆடகக்கால்
செச்சைப் பவளச் செழுந்தரள மாணிக்க
வச்சிரப்ர வாளசித்ர மண்டபத்துப் - பச்சை
மயிலை வடிவுடைய மங்கையை இன்சொற்
குயிலை அணைந்து குலாவும் - துயிலை 115
மணத்தகடம் பன்கொடியும் மாயோன்கைச் சங்கும்
உணர்த்த உணர்ந்தமளி யோவித் - தணப்பிலாக்
கன்னி முகங்கருகக் கங்கை உடல்வெளுப்பப்
பொன்னி தனையழைத்துப் புல்லியபின் – முன்னிகழ்ந்த
________________________________
113. மூரித்தேர் - பழந்தேர். பரிதி - சூரியன். ஆடகக் கால் - பொற்றூண். இறைவன் துயில் நீத்தெழுதலைக் கூறுகிறார்.
114. செச்சை - சிவப்பு. தரளம் - முத்து. வச்சிரம் - வயிரம். பச்சை மயில் - தேவியார்.
115. வடிவுடைய மங்கை என்பது, திருவொற்றியூரில் தேவியின் திருநாமம்; 'வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா மதிலானைக் காவுளாய்' - அப்பர் தேவாரம். துயிலை ஓவி (116) என்க.
116. மணத்த கடம்பன் - மணமுடைய கடப்ப மாலையணிந்த முருகன். கொடி - அவன் கொடியாகிய சேவல். மாயோன் - திருமால். சேவல் கூவியதும், சங்கு ஒலித்ததும் பொழுது புலரப்போகிறதென்பதை நினைவூட்டித் துயிலுணர்த்தின. அமளி ஓவி - படுக்கையினின்றும் நீங்கி, தணப்பில்லா - பிரிவில்லாத.
117. கன்னி - உமாதேவி. பொன்னி - காவேரி; இவளைப் புல்லியதனால், அவரிருவரும் கருகினர், உடல் வெளுத்தார்; புல்லியது என்பது நீராடினமையை. முன் நிகழ்ந்த - முன்னமே பூசித்த.
____________________________
போதக மேன்மையாற் போகத்தால் இவ்வூரில்
வேதியர்கள் பூசிக்க வேகொண்டு - சீதப்
பனிமண் டலமதியை பைம்பொற் பதியில்
தனிமண் டபத்தில் தவிசின் - இனிதிருந்து
வேதமும் மூவர் விளம்பிய வித்தார
நாதமும் கேட்டு நடங்கண்டு - சோதிப்
திருவலங்காரம்
புகையழலில் தந்த புலிபட் டிருக்கத்
தகைய கலைமருங்கில் சாத்திப் - பகுவாய்
அரவமணிக் கச்சை அதன்மேல் இசைத்துச்
சரண பரிபுரமும் சாத்திக் - கரதலத்தில் 122
______________________________
118. போதகம் - யானை; இது முத்தியடைந்து விட்டமையால், இப்போது வேதியர் பூசனையை ஏற்றார். போக அத்தால் (அதனால்), போகத்தால், சீத-குளிர்ச்சி பொருந்திய.
119. பனி மண்டலமது இயை - பனி மண்டலமாகிய நீர் பொருந்துகின்ற; இது அப்புஸ்தலமாகையில். தவிசின் இனிதிருந்து - ஆசனத்தில் வந்தமர்ந்து.
120. மூவர் விளம்பிய வித்தார நாதம் - மூவர் பாடிய தேவார இசை. இத்தலத்துக்குச் சம்பந்தர் பாடிய பதிகங்கள் மூன்றும் அப்பர் பாடியவை மூன்றும் சுந்தரர் பாடிய பதிகம் ஒன்றும் உள்ளன.
121. புகையழலில் தந்த புலி - தாருகாவனத்து முனிவர் செய்த அபிசார ஓமத்துட் பிறந்த புலி; அதன் அழகிய தோலை மருங்கிலே அணிந்து: பகுவாய் - பிளந்த வாயுடைய.
122. கச்சை - இடையில் கட்டுவது. பரிபுரம் - காலில் அணியும் ஆபரணம். கரதலம் - கை.
_____________________________________
காகோ தரகங் கணங்கவினக் காண்டகுதோள்
மாகோ மளவலைய மாட்சிதர - நாகேசன்
அன்றளித்த பேராரம் ஆகத் தழகெறிப்ப
மின்றளிர்த்த பொற்றோடு வீறுபெறத் - துன்றிய
நட்சத்ர மாலை நவசந்த்ர மாலையுடன்
அட்சத் திரமாலை ஆங்கிலங்க - வட்சத்
தலத்துத் திருமேனித் தாழ்வடங்கள் தாழ
மலர்க்கொத் திதழித்தார் வாய்ப்ப - மலர்க்குவளைத்
தாமம் கமழச் சடைநீர் அருவிநிரை
யாமென்ற முந்நூலும் ஆங்கிலங்கச் - சோமக்
கிரணாபி டேகம் கிளரக் கரமான்
தருணா மிருகமதம் தாவப் - பரிநாமச் 128
_____________________________
123. காகோதர கங்கணம் - பாம்பாகிய கங்கணம், கவின - அழகு பெற, மாகோமள வலயம் - பெரிய அழகிய தோள் வலயம் (வாகு வலயம்).
124. பேராரம் - பெரிய மாலை; 65 - 68 பார்க்க. ஆகத்து - உடலிலே. பொற்றோடு, காதிலே, துன்றிய – நெருங்கிய.
125. அட்சத் திரமாலை - உருத்திராக்கமாகிய நிலையான மாலை. வட்சத்தலம் - மார்பு.
126. இதழித் தார் - கொன்றை மாலை.
127. தாமம் - மாலை. சடைநீர் அருவி நிரையாமென்ற முந்நூல் - சடையிலுள்ள கங்கை நீரின் அருவி யொழுங்கு என்னத்தக்க பூணூல்: முப்புரியா யிருத்தலினாலே முந்நூல். சோம - சந்திரனுடைய.
128. கிளர - பெருக. கரமான் - கையிலுள்ள மான். தருண - இளமை பொருந்திய. மிருக மதம் - கத்தூரி. பரி நாம - கீர்த்தி பெற்ற.
____________________________
செக்கர் விசும்பில் செறிந்தசிறு காரென்னத்
தக்க கருஞ்சட்டை சாத்தியபின் - சொக்கத்
திருச்சாந்து அணிதல்
தருணிய செங்கட் சகோரம் படுப்பான்
உருவிலியோ டங்கிரதி ஒப்பப் - பெருவரையின்
மங்கை முயக்கத்து மாமுலைமேல் கத்தூரி
பங்க மடங்கப் படிந்ததெனத் - தன்கருணை
அன்பர் உளத்திலிருள் வாங்கியன்பு செய்யாத
வன்பர் உளத்தில்விடம் வைத்ததெனத் - தன்கண்கள்
மூன்றினுக்கு மாறாத மூடிருளைக் கேடகற்றத்
தான்தரித்து வைத்த தகைமையெனத் - தோன்றச்
சிவந்த திருமார்பில் திருச்சாந்து சாத்திக்
கவின்றரச வாசம் கமழப் - பவங்கொள் 134
____________________
129. செக்கர் விசும்பு - சிவந்த வானம். கார் - மேகம், சொக்கம் - அழகு. விசும்பும் காரும், பெருமான் திருமேனிக்கும் சட்டைக்கும் உவமை.
130. தருணிய - இளம்பருவமுடைய. சகோரம் - ஒரு புள்; முலைக்கு உவமை. உருவிலி - மன்மதன். இரதி - அவன் தேவி.
131. வரையின் மங்கை - உமாதேவியார். முயக்கம் - தழுவுதல், பங்கம் - சேறு.
132. இருள் - அஞ்ஞானம். வன்பர் - கொடியவர்.
133. முச்சுடர்களான தன் மூன்று கண்களின் ஒளியாலும் மாறாது அடர்ந்துள்ள இருளை அகற்றுவதற்காகத் தரித்து வைத்தாலொத்த சாந்து.
134. இதுவரையில் நான்கு கண்ணிகளால் திருச்சாந்து அணிந்தமையைக் கூறினார். கவின் தர - அழகு பெற. சவாசம் - நறுமணம். பவம் - பிறவி.
__________________________
தணிமா லயனார் தலைமாலை பொற்கிண்
கிணிமாலை தம்மிற் கெழுமப் - பணியின்
நிழல்பூத்த வேணியான் நெற்றிக்கண் ஈன்ற
தழல்பூத்த நீறு தயங்க - எழில்பூத்த
செவ்விக் கமலத் திருமுகமும் சோதிதரக்
கைவைத்த வீரமழுக் காட்சிதர - எவ்வழகுக்
குண்ணாடும் அன்ப ருளத்தில் தியானம்போல்
கண்ணாடி காட்டுவதும் கண்டருளி - வெண்ணாவல்
திருவீதியில் எழுந்தருளல்
மாமுனியும் தாமும் வருவதெனத் தண்தரளத்
தாம மணிக்கவிகை தானிழற்றச் - சேமத்
திருவாடு தண்டில் சிறந்தேறித் தேவர்
மருவா டகவாயில் வந்து - சுரலோக 140
__________________
135. மால், அயனார் இருவருடைய தலைமாலையும் பொற்கிண்கிணி மாலையும் கெழும. கெழும - பொருந்த. (பா - ம்) தணிமாலையனார்.
136. வேணி - சடை. தயங்க - ஒளிவிட.
137. செவ்வி - அழகுபெற்ற. கை வைத்த - கையில் தரித்த.
138. உள் நாடும் அன்பர். உள்ளத்தில் தியானமாவது. தசகாரியத்துள் ஒன்றான ஆன்ம தரிசனம். கண்ணாடி, பதினாறு உபசாரங்களில் ஒன்று.
139. நாவல் மா முனி: சம்பு முனி. கவிகை - குடை; இது நாவல் முனியொப்ப இருந்தது.
140. திருவாடு தண்டு - பல்லக்கு வகை; ‘சேமத் - திருவாடு தண்டினுமேற் செல்ல' - பூவணநாதர் உலா, 89. ஆடக வாயில் - பொன் வாயில். சுரலோக ஆன் – காமதேனு.
__________________________
உலா வருதல்
ஆனென்னப் பூலோக மங்கை தவப்பேறு
தானென்ன மேருவென்னத் தாருவென்ன - ஞானக் 141
கடற்கானச் சோங்கென்னக் காட்டுகதி யென்னத்
தடக்கா சினிதவப்பே றென்ன - விடைக்கொடிநின்(று)
ஆடுநவ ரத்ன அலங்கார ஆடகத்தேர்
ஊடு கவுரி உடனேறி - நீடுதிருக்
கொற்றக் குடைசதுக்கம் கோலநிலாப் பந்தரின்கீழ்
நற்றுப் பணிசத்ரம் நன்கமைய - முற்றுகமழ்
மந்திர வட்டத்து மாயன்தன் வந்தனைபோல்
சந்திர வட்டங்கள் தாந்தயங்கச் - சிந்துரமேல்
பிச்ச மனேகம் பிறங்கப் பெருங்கடல்சூழ்
வைச்ச தரங்க வகைமான - மெச்சுவார்
ஆசி புடைசூழ ஆலால வட்டமிட
வாசமுறு முத்தின் அடைப்பைவரப் - பாசமும் 147
-------
141. தாரு - கற்பகத் தரு. என்ன - என்று பலரும் போற்றும்படியாக
142. ஞானக் கடலும் கானச் சோங்குமென்ன; கானச் சோங்கு - கானாறு சூழ்ந்துள்ள மலைச்சோலை. தடக் காசினி - தடஞ் சூழ்ந்த பூமி. விடைக் கொடி - இடபக்கொடி.
143. ஆடு - (கொடி) அசைகின்ற. ஆடகத் தேர் - பொற்றேர். கவுரி - அகிலாண்ட நாயகியார்.
144. நற்று - நன்மை. சத்ரம் - குடை.
145. சந்திர வட்டம் - சந்திர வடிவாயமைந்த ஆலவட்டம். சிந்துரமேல் - யானை மீது.
146. பிச்சம் - பீலிக்குடை. பிறங்க - விளங்க. வைச்ச தரங்க வகை மான - சூழவைத்துள்ள அலைகளைப் போலிருக்க. மெச்சுவார்: மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச' - ஆதி உலா.
147. ஆசி - மங்கல வாழ்த்துரைகள்.
---------
உடன் வருவோர்
அங்குசமும் கோடுங்கொண் டைந்துகரத் தண்ணலார்
வெங்கண் அடல்ஆகு மீதேறச் - செங்கண்மால்
கந்தன் விரிஞ்சன் ககவா கனத்தேற
இந்திரன் சாத்தன் இபத்தேறச் - சந்திரனும்
சங்கநிதிக் கோவும் தரளவிமா னத்தேறச்
செங்கதிர்கள் ஆறிரண்டும் தேரேறப் - புங்கவங்கம்
ஏறும் உருத்திரர்கள் ஏறவே தோகையன்னத்
தேற வசுக்கள் எரிக்கடவுள் - மாறி
ஒருமையில் ஏற ஒலிகலை ஏற
எருமையில் ஏற இயமன் - வருணன் 152
-----------
148. கோடு - கொம்பு. அண்ணலார் - விநாயகர். அடல் ஆகு - வலி பொருந்திய பெருச்சாளி வாகனம். ஏற - ஏறிச் சூழ்ந்து வர.
149. கந்தன் - முருகன், விரிஞ்சன் - பிரமன். கக வாகனம் - பறவை; முறையே கருடன், மயில், அன்னம் என்பன. சாத்தன் - ஐயனார். இபம் - யானை. இத்தேவர் முதலி யோர் தத்தம் வாகனங்களில் இவ்வாறே ஏறிச்செல்லுஞ் செய்தியைத் திருக்கைலாய ஞான உலாவிலும் காண்க.
150. சங்கநிதிக் கோ - குபேரன்: சிவபிரானுடைய தோழன். தரள விமானம் - முத்துச் சிவிகை. கதிர்கள் ஆறிரண்டு - பன்னிரு சூரியர். புங்கவங்கம்: புங்கவம் - இடபம்; ‘புங்கவ மூர்வோனும் ' - பரிபாடல் 8.
151. உருத்திரர் பதினொருவர்; வாகனம், இடபம். அஷ்டவசுக்கள் அன்னத்தில் ஏறி வர. எரிக்கடவுள் - அக்கினி
152. ஒரு மையில் - ஓர் ஆட்டின் மீது. ஒலி - வாயு. கலை - மான். இயமன் எருமையில் ஏற.
-------
சுறவேறக் கோளரியில் துர்க்கைஇனி தேற
வெறிசூல வைரவனாய் ஏறத் - திறல்படைத்த
காளி கடியேறக் கந்திருவ ருஞ்சுரரும்
மூளும் எழிலி முதுகேற - நீளருகர்
சேரக் கழுவேறத் தென்மதுரை ஏறினோன்
ஆரச் சிவிகை அதிலேறப் - பூரிக்கப்
பாடும் புலவர் பரியேறப் பாணியிற்றூ
ணோடு திறம்பா உரைத்தோனும் - கூடலிலே
சம்பு பரியழைத்த தக்கோனும் தண்டேறச்
செம்பொற் றடமவுலிச் செங்கணான் - வெம்புரவி
மேவிவர மீனவரும் வில்லவரும் மெய்த்தவத்தோர்
யாவரும் ஏத்தி இறைஞ்சிவரப் - பூவில் 158
-----------
153. சுறவு - சுறாமீன்; வருணன் வாகனம். கோளரி - சிங்கம்; துர்க்கை வாகனம். சூலமேந்திய வைரவன் நாய்மீது ஏறி வர.
154. கடி - பேய். சுரர் - தேவர். எழிலி - மேகம். அருகர் - சமணர்.
155. கழுவேற - கழுவேறும்படியாக. ஏறினோன்: ஞானசம்பந்தர். ஆரச் சிவிகை - இறைவனளித்த முத்துச் சிவிகை.
156. புலவர் - சுந்தரர். பரி - குதிரை; பாணி - நீர், கடல்; தூண் ஓடு திறம் பா உரைத்தோன்: கடலில் சமணர் தம்மைக் கட்டியிட்ட கற்றூண் மிதந்து ஓடும்படி பாடிய அப்பமூர்த்தி. கூடல் - மதுரை.
157. சம்பு பரியழைத்த தக்கோன் - நரியைப் பரியாக அழைப்பித்த மாணிக்கவாசகர். இவர்கள் சிவிகையில் வர. மவுலி - கிரீடம். செங்கணான் - செங்கட்சோழர். புரவி - குதிரை.
158. மீனவரும் வில்லவரும் - பாண்டியரும் சேரரும்.
-----------
குழாங்கள்
எதிரின் றியநாற்பத் தெண்ணா யிரரும்
பதினெண் மடத்திற் பயிலும் - முதலிகளும்
வேழஞ்செய் பூசைபுரி வேதக் கவுசிகரும்
சோழன் கொணர்ந்தநதிச் சோழியரும் - ஆழிசூழ்
தந்த்ரப் பெரிய சரணம் அறைவோரும்
மந்த்ரச் சிவமா மறையோரும் - எந்தைமுடிக்
கங்கா சலமரபில் வந்துசிவ காரியத்தைத்
தங்காத லால்புரியும் தக்கோரும் - பைங்காதல் 162
----------
159. நாற்பத் தெண்ணாயிரர் - நாற்பத் தெண்ணாயிர முனிவர்; இது ஒரு கூட்டப் பெயர்; 'எப்பற்றுந் தீர்நாற்பத் தெண்ணா யிரவரெனும் ஒப்பற்ற வேடத்துயர்ந் தோரும்' - பூவணநாதர் உலா, 90. பதினெண் மடத்திற் பயிலு முதலிகள்: சிவாகம பத்ததிகள் பதினெட்டையும் இயற்றிய ஆசாரியர்கள் பதினெண்மருடைய பரம்பரையினர்; 'சைவ மார்க்கப் பதினெண் மடத்தார்' - மேற்படி 95.
160. சிவலிங்கத்துக்கு யானை செய்த பூசையைச் செய்துவரும் அர்ச்சகர்; கவுசிகம் - சாமவேதம். நதிச் சோழியர் - கங்கைக் கரையிலிருந்து சோழன் அழைத்து வந்து சோழநாட்டில் குடியேற்றியதாகச் சொல்லப்பெறும் பிராமண வகுப்பினர்; சோழியப் பிராமணர் என்போர்.
161. சரணம் - வேதத்தின் பகுதி. அறைவோர் - இதை ஓதும் வேதியர்; பவிழிய சரணத்தார், தைத்திரிய சரணத்தார், தலவகார சரணத்தார் என்னும் மூவகையினர். சிவ மறையோர் - ஆதி சைவர்.
162. கங்காசல மரபு - கங்கை மரபு; வேளாளர் குலம்; ' கங்கைபெறுங் காராளர்' - ஏரெழுபது. காதலால் - அன்பினால்.
--------------
ஆரியப் பட்டரும் அன்பால் அகங்குழைந்து
சீரியப்பாட் டோதும் திருப்பெயரும் - நேரிலான்
சுந்தரனை யாண்டநாள் தொல்லா வணவோலை
வந்தவையில் வாசிக்கும் மந்திரிகளும் - இந்துநுதல்
கன்னலுரை கொவ்வையிதழ் காரளக பாரதனத்(து)
அன்னநடைத் தேவ ரடியாரும் - கன்னிக்
குமாரராங் கோயில்கைக் கோளக் குழாமும்
உமாமதியாம் கண்காணி யோரும் - சமுகப் 166
-------------
163. சீரியப் பாட்டு - தேவாரப் பதிகம். திருப்பெயரும் - ஓதுவார்களும்.
164. ஆண்ட - தடுத்தாட்கொண்ட. தொல் ஆவண ஓலை: திருநாவலூரர் மணத்தின் போது சிவபெருமான் முதிய அந்தண வேடத்தோடு அவரைத் தடுத்தாட்கொள்வதற்காக எழுந்தருளி வந்து சபையோர்முன் காட்டிய அடிமை ஓலை; தொல் - பழமையான; ஆவண ஓலை: 'கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ, அருள்பெறு கரணத்தோனும் ஆவணம் தொழுது வாங்கி, சுருள்பெறு மடியை நீக்கி விரித்தனன் ........ சபையோர் கேட்ப வாசகம் செப்புகின்றான்' - பெரியபுராணம், தடுத்தாட். 58. இந்து நுதல் - பிறைபோன்ற நெற்றி யுடைய. இது முதல் பல சாதி மக்களைக் கூறுகிறார்.
165. கன்னல் உரை - கரும்பு போன்ற மொழி. கார் - அளகம் - மேகம்போற் கறுத்துப் பெருத்த குழல்.
166. கன்னிக் குமாரராம் - மணமாகாமல் குமரர்களாயிருப்பவர்களான. கைக்கோளக் குழாம் - கைக்கோளரென்போர்; இவர்கள் ஆலய சேவைக்கென்றே முன்னம் இப்படி இருந்து வந்தார்கள்; நெசவுத் தொழில் செய்வோர் என்னலுமாம். உமா மதியாம் - அழகும் அறிவும் பொருந்திய. கண்காணியார் - மேற்பார்வையாளர்.
------
படைவயி ராவிப் படையும் பரன்தாள்
அடையும் அகம்படி யாரும் - கடலுலகத்
துள்ள தபோதனரும் உட்சமயத் தோர்யாரும்
தெள்ளிய பாவலரும் சென்னியரும் - வெள்ளமென
சின்னங்கள்
எங்கும் திரண்டுவர ஏற்றுக் கொடியீண்டச்
சங்கும் குழலும் தடமுரசும் - வங்கியமும்
மத்தளமும் பேரிகையும் மண்முழவும் விண்முழவும்
எத்திசையும் ஒத்திசைப்ப யாழின்முரல் - மெத்து
சகமேவு தேவர்கள் தம்பிரான் வந்தான்
மகமேரு வில்வளைத்தான் வந்தான் - பகஇப் 171
-----------
167. சமுகப்படையும் வயிராவிப்படையும்; வயிராவி - பைராகி; படை தொண்டர் குழாம். அகம்படியாரும்: கோயிலில் அணுக்கத் தொண்டு செய்வோரும்; 'கோயிலுள்ளால் அகம்படித் தொண்டு செய்வோர் ' - பெரியபு. தில்லை. 4.
168. உட்சமயத்தோர்: வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் பாசுபதம் சைவம் என்னும் உட்சமயங்கள் ஆறினையுஞ் சேர்ந்தோர். சென்னியர் - கூத்தர்.
169. ஏற்றுக்கொடி - சிவபெருமான் கொடியாகிய இடபக்கொடி. ஈண்ட - நெருங்க. சங்கு. குழல் முதலியன இசைக்கருவிகள். இவற்றின் பெருக்கை ஆதி உலாவிற் காணலாம்.
170. விண் முழவு - தேவ துந்துபி. மெத்து - மிகுந்த.
171. சகம் - உலகம். பக - பிளக்க. வந்தான் வந்தான் என்று சின்னங்கள் ஆர்ப்பெடுப்ப (174).
-------------
படியிடந்து மாலறியாப் பாதத்தான் வந்தான்
வடிவழகுக் காருமொவ்வான் வந்தான் - விடுநூல்
சிலந்திமுடி சூட்டும்சிவன் வந்தான் செவ்வி
மலர்ந்த முகமுடையான் வந்தான் - தலமளந்த
தாளுயர்க்கும் புள்ளூர்தி தம்பிரான் வந்தானென்(று)
ஆளுமொற்றை எக்காளம் ஆர்ப்பெடுப்பக் - கூளிகுறள்
சுற்றும் கவர்ந்துவரத் துள்ளுமக ரத்துவசன்
வெற்றிச் சிலைக்கொடிசே வித்துவரப் - பொற்றொடியார்
குழா மகளிர்
தோரண வீதிதனில் தோன்றினார் தோன்றுதலும்
ஆரண நாட்டின் அரம்பையரும் - நாரணனார் 176
-------
172. இப்படி இடந்து: திருமால் சோதியின் அடியைத் தேடி அண்ணாமலையிலே நிலத்தைத் தோண்டி. வடிவழகுக் காரு மொவ்வாதான்: 74 பார்க்க; இது சுவாமி திருப் பெயர்களுள் ஒன்றாயிருக்குமெனத் தோன்றுகிறது.
173. சிலந்தி முடி சூட்டியது, கோச்செங்கட் சோழராய்ப் பிறப்பித்து.
174. தலமளந்த தாள் - திருவிக்கிரமாவதார மெடுத்த திருமால். உயர்க்கும் புள்ளூர்தி - அன்னப்புள்ளைக் கொடியாகவும் ஊர்தியாகவும் உடையவனான பிரமன். இவ்விருவருக்கும் தம்பிரான் என்க. ஒற்றை எக்காளம் - ஊது சின்னங்கள். கூளி குறள் - பூதகணங்கள்.
175. மகரத்துவசன் - மீனக்கொடியுடைய மன்மதன். வெற்றிச் சிலைக்கொடி: பெண்கள். பொற்றொடியார்: பெண்கள்.
176. ஆரண நாடு - பிரமலோகம்.
-----------------
வைகுண்ட லோகத்து மங்கையரும் வாகனமாம்
பெய்கொண்ட லோனுலகில் பெண்படையும் - மொய்கதிரின்
மண்டலத்துக் கன்னியரும் மாநாக மங்கையரும்
எண்டிசை வெற்பிலுள்ள ஏழையரும் - கண்டுருகி
மானிட மங்கையராய் மண்டபத்தும் கோபுரத்தும்
மீனுடைய விண்தோய் விடுதளத்தும் - ஏனைக்
கடையினும் முன்றிலினும் கற்புரிசை சூழ
விடையினும் வீதியினும் எய்தி - மடவீர்
குழா மகளிர் கூற்று
விருதேற்ற வேள் பரவும் வெண்ணாவ லீசர்
வருதேர்ப் பவனி தொழ வாரீர் - எருதேறித் 181
-----------
177. வாகனமாம் பெய்கொண்டலோன் - மேகத்தை வாகனமாகவுடைய இந்திரன். உலகு - அவனுக்குரிய தேவலோகம். மொய்கதிர் - சூரியன்.
178. நாக மங்கையர் - நாகலோகத்துப் பெண்கள். எண் திசை வெற்பு - அஷ்டகுல பர்வதங்கள். ஏழையர் - பெண்கள். இப் பலவேறு உலகங்களிலுள்ள பெண்களெல்லாம் கண்டுருகி, எய்தி (180).
179. மீனுடைய விண் தோய் - நட்சத்திரம் பொருந்திய வானம் வரையில் உயர்ந்த
180. கற்புரிசை - கல்மதில், மேற்சொன்ன பெண்கள் மானிட மங்கையராய் (179) எய்தி, பின்வருமாறு சொல்கிறார்கள். மடவீர்: விளி.
181. வேள் - மன்மதன். வாரீர் என்று அப்பெண்கள் பிற பெண்களை அழைக்கிறார்கள். (பா - ம்) விருதேத்த
-----------
தும்பைச் சடைப்பிறையைச் சூழ்செக்கர்வான் போலும்
செம்பொற் றிருவா சிகைபாரீர் - வெம்பணத்தில்
அங்கணுல கெல்லாம் அடக்கும்அரா இவர்க்குக்
கங்கண மான கவின்பாரீர் - தங்கைக்கு
வாய்த்தமண வாளனார் என்றறிந்து மைத்துனனார்
சாத்தியவங் கண்மணித் தார்பாரீர் - நேத்திரங்கள்
மூன்றினிடை யூடே முயங்குமிருள் மாறிப்போய்த்
தோன்றும் புருவத் துணைபாரீர் - வான்தரளத்
தோடிருந்து காதுறைவார் யாழிசைக்கோர்
சோதிகரத் தூடிருந்துதாவும் உழைபாரீர் - தாள் தொழுது 186
----------
182. செக்கர்வான் - சிவந்த வானம். வெம்பணத்தில் - கொடிய தனது (பாம்பினது) படத்திலே.
183. அங்கண் உலகு - இடமகன்ற உலகம். அடக்கும் அரா - அடக்கவல்ல பாம்பு . இவர்க்கு - திருவீதியிலெழுந்தருளி வருகின்ற ஆனைக்கா ஈசருக்கு. கவின் - அழகு. தங்கை - உமாதேவி.
184. மைத்துனனார் - திருமால். அங்கண் மணித்தார் - அழகிய கண்ணாகிய மலர் (காசு பார்க்க). நேத்திரம் - கண்.
185. அக்கினி, சூரியன் சந்திரன் என்ற முச்சுடருமான மூன்று கண்களின் ஒளியின் முன் இருள் அஞ்சி ஓடிப்போய் இரு கரும்புருவங்களாகத் தோற்றுகிறதாம். தரளத் தோடு - முத்தினாலான தோடு,
186. காதுறைவார் – கம்பளர், அசுவதரர் என்ற இரு நாகர். இவர்கள் சரசுவதிதேவியை வழிபட்டு இசையில் வல்லவர்களாகி, சிவபிரானை இசையால் வழிபட்டு அவனருள் பெற்று அவன் திருக்காதிரண்டிலும் தோடுகளாகத் தங்கி இசைபாடி மகிழ்விக்கிறார்களென்பது புராண கதை. சோதி கரத்து - இறைவன் கையில். தாவும் உழை - தாவுகின்ற மான். பெருமான் திருக்கரத்தேந்திய மான் யாழிசையைக் கேட்க அவன் காதை நோக்கித் தாவுகிறது என்கிறார்.
------------
சேகரத்தா ரானார்தம் சென்மவினைக் கோள்தீர
மாகரத்தில் ஏந்தும் மழுப்பாரீர் - பாகத்தில்
நன்றாய்க் குடியிருந்து நாதனையும் கங்கையையும்
ஒன்றாக்கி விட்ட உமைபாரீர் - நின்றேத்தும்
தையலார் மேனியெலாம் தன்னிறமாய்த் தோற்றுவிக்கும்
துய்யபூங் கொன்றைத் தொடைபாரீர் - பையவெனச்
செல்வார்தம் காதலெலாம் தென்னானைக் காவார்க்குச்
சொல்வார் எமக்கருளாய் தோளென்பார்- வில்வாங்கி
எண்கொண்ட பூங்கணைவேள் எய்தவடுத் தேவரீர்
கண்கொண்டு பாரீர் கடிதென்பார் - ஒண்கண்கள் 191
-----
187. சேகரத்தாரானார் - திருவடியைத் தலைமேலே சூட்டிக்கொண்டவர்கள். வினைக்கோள் தீர - வினையாகிய கொடுங்கலியைப் போக்க. கரத்தில் - கையில் மழுவை. கோள் தீர்க்க ஏந்தியிருக்கிறார் என்க.
188. ஒன்றாகி விட்டதென்றது. உமை சிவபிரான் பாகத்தில் குடியிருந்தும், கங்கைக்கு இடங்கொடாது விலக்கி விடாதபடி அவன் முடியிலேயே இடங்கொடுத்து இருவரையும் ஒன்றாக்கிவிட்டாள் என்ற இரக்கக் குறிப்பு.
189. கொன்றை பொன்னிறமுடையது; ஏத்தும் தையலார் பெருமான் மீது காதல் கொள்வதால் அவர்கள் மேனி பொற்பசலை பூக்கிறது; ஆகவே கொன்றை, தன் நிறமாய்த் தோற்றுவிக்கிறது. ‘தான் கொன்றைப், பொன்னுருவங்கொண்டு புலம்புற்றாள்' - ஆதியுலா. தொடை - மாலை.
190. பைய என்று சொல்லிச் செல்வார், காதலெலாம் சொல்வார்கள், என்பார்கள். வில் வாங்கி - வில்லை வளைத்து.
191. எண் கொண்ட பூங்கணை வேள் - ஐந்து கணைகளை யுடைய மன்மதன், வடு - அவனுடைய அம்பு தைத்த வடு. ஒண் கண்கள் - ஒளி பொருந்திய கண்கள்.
-----------
செங்காலில் சாத்தித் திருந்துமா லாமெமக்குச்
சங்காழி தாரீர் தனித்தென்பார் - வெங்காதல்
பேதையர்மாட் டில்லையோ பின்னிரக்கம் செய்வாரென்(று)
ஓதுதிரு நாமமுமக் கேதென்பார் - தாதிதழித் 193
தேமாலை மார்பீர் செழுநீர்த் திரளாகில்
யாமாட வொட்டாத தென்னென்பார் - கோமானே
வெங்கைவே ழம்செய்த பூசைபோல் வெவ்வினையேம்
கொங்கைவே ழம்செய்யக் கொள்ளென்பார் - எங்கள்
செழுநீர்த் திரளாம் திருமேனி எல்லாம்
கழுநீர்த் திரளாகக் காண்பார் - அழுநீர்
கடலிற் றனிமையினா கத்தைக்காண் பார்பூ
மடலிற் கைவைப்பார் மகிழ்வார் - வடிவழகர்
உற்றார் எமக்கென் றுருவெளியில் ஓடிப்போய்
முற்றா முலையின் முயங்குவார் - சொற்றான்
அயர்வார் கலைநாண் அகல்வார் அறிவு
பெயர்வார் அவரிலொரு பேதை - கயிலைக் 199
----------
192. பெண்களை இங்கே திருமாலாகச் சொல்கிறார். ‘உமது பாதத்திலே வைத்த கண்ணை மீட்க முடியாமல் மால்கொண்ட (மாலான) எங்களுக்கு காதல்நோய் காரணமாகக் கழன்று போய்விட்ட வளையையும் மோதிரத்தையும் மீளவும் தருவீராக' என்கிறார்கள். மால் ஆம் - மயக்கங்கொண்ட, திருமாலான. சங்காழி - வளையையும் ஆழியையும்; சங்கையும் சக்கராயுதத்தையும். கண்ணை மலராக இட்டு வழிபட்ட திருமாலுக்கு இவையிரண்டையும் சிவபிரான் அருள் செய்தமையால்.
193. பேதையர் மாட்டு - பெண்களிடத்து; பேதை வயதிற் சிறியவளானமையால் (வயது ஐந்து முதல் ஏழு வரை) அவளிடத்திற் காதலுக்கு இடமில்லை என்பதும் குறிப்பு. பின்னிரக்கம் செய்வார் என்று ஓது திருநாமம்: கருணாகரன் என்பது இறைவன் பெயர்களுள் ஒன்று; (30). தாது இதழி - தாது பொருந்திய கொன்றை.
194. செழுநீர்த் திரள் இறைவனுக்குரிய பெயர். நீர்த்திரளானமையால் யாம் நீராடவொட்டாதது என்ன என்பது ஒரு நயம். கோமானே: விளி.
195. வேழம் - புட்பதந்தன் என்ற யானை. கொங்கை வேழம் செய்ய - கொங்கையாகிய யானைகள் உம்மைத் தழுவிப் பூசலிடும்படியாக. எங்கள் என்றது, கவிகூற்று; எங்கள் இறைவனார் திருமேனி என்றபடி.
196. நீர் வடிவமான இறைவன் திருவுரு முழுதும், அழுத கழுநீரையொத்த தங்கள் கண்ணாகவே காண்பர்.
197. மடலிற் கை வைப்பார் - மடலேறத் துணிவார். பெண்கள் மடலேறல் மரபல்ல; 'கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்கதில்' - குறள் 1137. ஆயினும், இறைவன்மாட்டுக் காமுற்ற பெண்கள் மடலேறத் துணிந்த செய்தியைப் பிரபந்தங்களிற் காணலாம்; ஊரார் இகழிலும் ஊராதொழியேன் நான், வாரார்பூம் பெண்ணை மடல்' - சிறிய திருமடல். வடிவழகர்: 172.
198. உற்றார் எமக்கு - எமக்கிரங்கி வந்தார். முயங்குவார் - தழுவுவார். சொற்றான் - சொல்தான்.
199. கலை நாண் - கலையும் நாணும். அவரில் - இப்படிக் காமுற்று அறிவு அகன்ற பெண்களில்.
---------
பேதை
கடவுட் பகவன் களவுநூல் தன்னை
அடிவரவு தீட்டும் அலேகம் - புடவிபுகழ் 200
சீரானைக் காவான் திருக்கொணாச லப்புரத்துப்
பேரானை யீனாப் பிடிக்குருளை - சூராலங்
காட்டில் பயில்நடத்தோன் கச்சியே காம்பரத்தில்
கோட்டில் பயிலாக் குயிற்பிள்ளை - மூட்டமரின்
மண்டலகைச் சேனையோன் மாணிக்க மாமலைசூழ்
கொண்டலிடிக் காடாக் குழாமஞ்ஞை- முண்டகக்கண்
என்னானைக் கன்றார் இமையத்தார் கைத்தலத்து
மன்னா துலவு வனக்கன்று - தன்னேர் 204
------
200. அடிவரவு - பாட்டின் முதற் குறிப்பு: ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் அடிவரவு எழுதியிருப்பதை நாலாயிரத்துட் காணலாம். அலேகம் - வெற்றேடு. புடவி - பூமி.
201. திருக்கொணாசலப்புரத்து - வஞ்சனை செய்ய ஒண்ணாத அப்புஸ்தலமாகிய ஆனைக்காவின் பிடிக்குருளை - பெண் யானைக்குட்டி. திருக்கோணாசலம் என்ற ஈழநாட்டுத் தலப்பெயர் இங்கே தொனிக்கிறது.
202. ஆலங்காடு, சிவபெருமான் நடிக்கும் பஞ்ச சபைகளுள் ஒன்றாகிய இரத்தினசபை; நடத்தோன்: இங்குள்ள நடனம், ஊர்த்துவ நடனம். ஏகாம்பரத்தில் கோட்டில் - ஒற்றைக் கனியுடைய மாவின் கிளையில். மூட்டு அமரின் - மூளும் சண்டையில்.
203. மண்டு அலகை - பொருந்துகின்ற பேய். சேனையோன் - சிவபிரான். மாணிக்கமாமலை - இரத்தினகிரி (திருவாட்போக்கி). மஞ்ஞை - மயில். முண்டகம் - தாமரை.
204. என்னானைக்கன்று: காப்பு. இமையத்தார் - இமயத்துக்குரியவரான சிவபிரான். கைத்தலத்து மன்னாது: கையிலே பொருந்தாமல் நீங்கி. கையிலிருந்த மான் கையை விட்டு நீங்கி இங்குவந்து உலவுகின்றது என்னத்தக்க மான் கன்று இப்பேதை; 'நேசன் திருக்கரத்தினின்றுந்தென் புட்பவன. வாசஞ் செயக்குதித்த மான்கன்று' - பூ. உலா, 165. வனக்கன்று என்று பேதையைச் சொல்லியது, இறைவன் பெயரான என்னானைக்கன்று என்பதனோடு ஒப்புநோக்க நயமாயமைந்துள்ளது. (பா - ம்) இமையத்தாரத்தலத்து.
----------
அடியார்க் கெளியான் அனமேவு பொய்கை
படியாக் களியன்னப் பார்ப்பு - விடையான்
சடையி லடங்கும் சலம்போற் றடத்தூண்
இடையி லடங்கும் இறைபோல் - வடதருவின்
வித்தி லடங்கும் விதையைப்போல் மேகசரீ
ரத்தி லடங்கும் அசனிபோல் - அத்தி
உழையி லடங்கிய ஓங்கல்போல் ஊதுங்
கழையி லடங்கும் கனல்போல் - விழைபொய்கைத்
தோயத் தடங்கும் துணைத்தா மரைமுகைபோல்
காயத் தடங்கும் கனதனத்தாள் - தாயிற் 209
-----------
205. அடியார்க்கெளியான்: ‘அடியார்க்கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்குடியார்க் கெழுதிய கைச்சீட்டு' - சிவபெருமான் எழுதி விடுத்த சீட்டுக்கவி. அனம் - அன்னம். படியா - தோயாதி. பார்ப்பு - குஞ்சு. விடையான்: சிவபிரான்.
206. சலம் - கங்கை. தூண் இடையில் அடங்கும் இறை: நரசிம்மமூர்த்தி. வடதரு - ஆலமரம்.
207. வித்து: 'ஓர், ஆல் அமர் வித்தின் அருங்குறள் ஆனான்' - கம்பர். அசனி - இடி. அத்தி - யானை.
208. அத்தி உழையில் - யானையிடத்திலும் மானிடத்திலும். ஓங்கல் - கொம்பு. ஊதுங் கழை – புல்லாங்குழல். கழை – மூங்கில். விழை - விரும்புகின்ற.
209. பொய்கைத் தோயத்து - பொய்கை நீரில். முகை - அரும்பு. காயத்து - உடலினுள்.
208- 209 முதல் இதுவரையில் தனத்தின் வருணனை.
---------------
சிறந்தபிரா னல்லாத தெய்வங்கள் போலே
இறந்து பிறக்கும் எயிற்றாள் - நறுங்கொன்றை
நீரங்கொள் வேணியர்பைஞ் ஜீலி வனத்திலதி
காரங்கொள் ஏமன்போல் கண்ணினாள் - தேரில்
பருதி அகன்றகலாப் பக்குவத்தில் கங்குற்
குருதி யனைய குழலாள் - கருதில்
பெரிய வடநூற் பிரகிருதர் பாடைக்
குரிய குதலை உரைப்பாள் - எரிகின்ற 213
_______________________________
210. தாயிற் சிறந்த பிரான்: 'தாயிற் சிறந்த தயாவான தத்துவனே’ - திருவாசகம். அல்லாத தெய்வங்கள்: மற்றைச் சிறு தெய்வங்கள்; இறந்து பிறக்கும் எயிற்றாள் - (அத்தெய்வங்கள் போல) விழுந்து முளைக்கும் பல்லுடையவள். 'செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள' - முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்.
211. கொன்றை நீரம் - கொன்றையையும் கங்கை நீரையும். பைஞ்ஞீலி வனம் - திருப்பைஞ்ஞீலி என்ற சிவ ஸ்தலம். மார்க்கண்டனுக்காக யமனை வதைத்தபிறகு, உலகெங்கும் காரியங்கள் சரிவர நிறைவேறாமல் சிதைவடைந்த போதிலும், பைஞ்ஞீலியில் மட்டும் சரிவர நிகழ்ந்ததைக்கண்ட தேவர் முதலாயினோர் அங்கே சென்று இறைவனை வழிபட, இறைவன் யமனை எழுப்பி மீட்டும் அவனுக்கு அதிகாரத்தைத் தந்தான் என்பது புராண வரலாறு.
212. பருதி அகன்றகலாப் பக்குவம் - அந்தியொளி; பரிதி - சூரியன். கங்குல் குருதியனைய குழல் - மாலைச் செவ்வானம் போன்ற கூந்தல்; குருதி - இரத்த நிறம். கூடியும் கூடாமலுமுள்ள குழல் என்க.
213. பிரகிருதர் - பிராகிருதம் பேசுவோர். குதலை - மழலை மொழி.
--------------
நந்தா மணிவிளக்கை நாடும் குறளிபோல்
செந்தா மரையென்னச் சிந்திப்பாள் - முந்துகதிர்
துன்றிச்சூ ரக்கடவுள் தூரத் தெழுந்தோறும்
குன்றிச்சூ டென்றள்ளக் குந்துவாள் - அன்றி
மகத்தில் எழும்பிறையை வாவென் றுரைப்பாள்
அகத்தி முகைகண் டயர்வாள் - மிகுத்த
செழுங்கமுகின் செந்தாதைத் தீயென்று வண்டற்
குழந்தையைக்கொண் டேகக் குறிப்பாள் - முழங்கும்
ஒருவர் இதற்குள் உளரென்று மென்தோற்
கருவி உடைக்கும் கருத்தாள் - நிரைமகுட 218
-----------
214. நாடும் குறளி - தேடிவரும் குறளிப்பேய். செந்தாமரை என்ன - நந்தாவிளக்கைச் செந்தாமரை என்றெண்ணி; பேதை குழந்தைப் பருவத்தினள் என்பதைக் குறிப்பிடுகிறார்.
215. துன்றி - நெருங்கி. சூரக்கடவுள் - சூரியன். குன்றிச்சூடு - குன்றி மணியின் கதிர். குந்துவாள் - உட்காருவாள்.
216. மகத்தில்: மகம் - மாகம்; வானம். அகத்தி முகை - அகத்தி அரும்பு. இது வளைந்து வெண்மையாய்ப் பிறைபோல் தோன்றுதலால், தனக்கு விளையாடக் கிடைக்க வில்லையே என்று அயர்வாள்.
217. வண்டற் குழந்தை - வண்டற் பாவை; மண்ணாற் செய்த குழந்தையை வைத்து விளையாடும் போது. செந்தாதைத் தீயென்றெண்ணி அஞ்சி அதை அப்பாற்கொண்டு போக எண்ணுவாள்.
218. மென்தோற் கருவி - தோற் கருவியான மேளம் போல்வது: இதனுள் ஒருவர் புகுந்துள்ளனர் என்று சொல்லி அதை உடைக்குங் கருத்தாள். நிரை மகுட மாடம் - கலசம் நிரைத்த உப்பரிகை.
--------------
மாட மணிமுகட்டில் கார்கண்ட வண்ணமயில்
ஆட வளைக்கைவிரித் தாடுவாள் - கூடல்வாய்த்
தொல்லானைக் காவுடையான் சூழ்ந்தவிளை யாடல்போற்
கல்லானை முன்னம் கரும்பளிப்பாள் - முல்லைக்
கொடிக்குயின்ற பந்தல்தனைக் கோட்டிக் குழிசி
யிடைப்புளின அரிசியுலை ஏற்றி - அடர்தரளச்
சிற்றி லகத்தில் சிறுசோ றமைத்தருந்தச்
சுற்றில் விருந்தழைப்பாள் சோதிமணி - முற்றத்து
வந்தனள் அவ்வளவில் வாய்த்தசிறுத் தொண்டர்பால்
முந்த விருந்துண்ட மூர்த்தியான் - தந்திவனத்(து)
உள்ளான்மண் காக்கைக் குரியா னிலும்வலியான்
அள்ளா விடமுன் அருந்தினான் - வெள்ளானை 224
----------
219. கார் கண்டு மயில் ஆடத் தானும் ஆடுவாள் என்க. கூடல் - மதுரை.
220. தொல் - பழைய கல்லானை தின்னக் கரும்பளித்தது, சோமசுந்தரக்கடவுள் நிகழ்த்திய திருவிளையாடல்.
221. முல்லைக் கொடியாலான பந்தலை அமைத்துச் சிறுசோறாக்கத் தொடங்குகிறாள். குழிசி - பானை. புளின அரிசி - மணல் அரிசியால் பொய்யாக மணற்சோறாக்குகிறாள். பாடம், 'இடைப்புளின வரீகியுலை ஏற்றி' என்றிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது; இருக்கிற பாடம் தளை கெடுகிறது. (பா-ம்) கோட்டுக்.
222. சுற்றில் - அயல் வீட்டிலுள்ளவர்களை.
223. சிறுத்தொண்டர் பால் விருந்து: அவரிடம் பிள்ளைக்கறி கேட்டது. விருந்தழைப்பாள் (உ உ உ) வந்தனள் என்க. தந்தி வனம் - ஆனைக்கா. தந்தி - யானை.
224. மண் காக்கைக்கு - காத்தலுக்கு. உரியான்: திருமால். அவனிலும் வலியான், சிவபிரான். உள்ளான். காக்கை, வலியான் என்ற பறவைப் பெயர்கள் தொனிக்கின்றன. விடம் - ஆலகால விடம். வெள்ளானை - புட்பதந்தனாகிய ஆனை.
-------------
பூசிக்க வீடளித்துப் புன்சிலந்தி சூட்டுதற்கு
மாசித்ர மௌலி வழங்கினோன் - தேசுதிகழ்
தீத்திரள் எங்கள் செழுநீர்த் திரள்தேவர்
பூத்திரள் சிந்திப் புடைசூழ - ஏத்துமறை
நாற்றுரகத் தேற்றதலம் ஞாலத்து நாணாகித்
தோற்றுரகத் தேற்றுத் துவசத்து - வேற்றுச்
சுடருருளைத் தேரின்மேல் தோன்றுதலும் ஈன்றோர்
வடமணியல் குற்றேரில் வந்தாள் - உடனே 228
---------
225. மா சித்ர மௌலி - (சோழ மரபுக்குரிய) அழகிய சித்திரக் கிரீடத்தை.
226. தீத்திரள் - அழல்வண்ணனான சிவபிரான். தீத்திரள் எங்கள் செழுநீர்த் திரள்: 'செந்தீத் திருவுருவம், நீருருவமாக நிகழ்பதியும்’ - பூவண. உலா, 188. தேவர் பூவின் திரளைச் சிந்தி.
227. மறை நாற்றுரகம் - (துரகம் - குதிரை) வேதமாகிய நாலுபுரவி; 'அருமறையைத் தேர்ப்புரவி ஆக்கிக் கொண்டார்' - அப்பர். திரிபுரமெரித்தபோது, வேதங்கள் புரவியாயின. நாணாகித் தோற்று உரகம் - (உரகம் - பாம்பு) வாசுகியாகிய பாம்பு அவருடைய மேரு வில்லுக்கு நாணாயிற்று: 'வல்லசுரர் புரங்கள் மூன்றும் வரைசிலையா வாசுகிமா நாணாக்கோத்துத் துளைத்தானை' - அப்பர். ஏற்றுத் துவசம் - இடபக்கொடி.
228. சுடர் உருளைத் தேர் - சந்திரசூரியரான சக்கரங்களைக் கொண்ட தேர்; உலகமே அத்தேராக அமைந்தது; ‘விரிதலை யுலகந் தேரா அதிலுறும் மிகு சகடு இருசுடரா' வேதகிரீசர் பதிகம். வடம் அணி - மாலையணிந்த. எங்கள் செழுநீர்த்திரள், தேவர் புடைசூழத் (226) தோன்றுதலும் வந்தாள்.
-------------
தொழத்தொழுது பூசித்துத் தூவி மடமாதர்
நிழற்குநிழல் தானாக நின்றாள் - தழற்கரத்தோன்
கொன்றைச் சடாமுடிமேல் கொக்கிறகும் நக்கறுகும்
கன்றுகதிர் வாளரவும் கச்சபமும் - சென்றசென்ற
எல்லா உகாந்தத்தும் ஈசற் கொருதிவசம்
செல்லாது காட்டும் சிறுபிறையும் - நல்லிசையின்
வாணர் படைவீடும் முச்சுடரின் மண்டலமும்
காணரிய நீலமணிக் கந்தரமும் - மாணிக்கக் 232
-----------
229. தொழத் தொழுது - வந்த இறைவனை ஈன்றோர் தொழ, தான் (பேதை) தொழுது. மாதர் - ஈன்றோர் முதலாயினோர். தழற் கரத்தோன் - தழலைக் கரத்திலேந்திய சிவபிரான்.
230- 236. இறைவன் திருவுருவத்தைக் கேசாதி பாதமாக வருணிக்கிறார்.
230. கொக்கிறகு - கொக்குமந்தாரை மலர். கச்சபம் - ஆமை: 'என்பொடு கொம்பொ டாமை இவை மார்பிலங்க எருதேறி ' - சம்பந்தர்.
231. உகாந்தம் - யுகாந்தம். திவசம் - தினம். வானத்திலுள்ள பிறை வளர்ந்து தேய்வது போலல்லாது, என்றும் ஒரே தன்மையாய் இருப்பதான பிறை.
232. நல்லிசையின் வாணர் படைவீடு - அசுவதரர் கம்பளர் என்னும் இசைவாணர் இருவர் இருக்குமிடமாகிய இரு காதுகள்; 'தோடுவார் காதன்றே தோன்றாத் துணையையர், பாடுவோர் ஓரிருவர்க் கிட்ட படைவீடே' (திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், 16) என்பதிலும் இப்படியே படைவீடென்பதைக் காண்க. முச்சுடரின் மண்டலம் - சோம சூரியாக்கினி ஆகிய மூன்று கண்கள். கந்தரம் - கழுத்து.
--------------
கேயூர வாகும் கிரிதனையும் மானுமொரு
மாயூரம் நீங்காத வாமமும் - சேயவொளித்
தெக்கண பாகமும் செங்கைத் தமருகமும்
அக்கணியும் அக்கினியும் ஆகமும் - ஒக்கச்
செழியா விருமென்று சேர்க்குமடி யார்க்கு
வழியான உந்தி மடுவும் - உழுவை
அதளுடையும் அம்பலத்துள் ஆடிச் சிவந்த
சததளமும் கண்டுருகித் தானே - புதிய 236
இவரை விருந்தழைமின் என்றாள் அதுகேட்(டு)
உவகைமிகுந் தன்னைமார் உன்போல் – தவமுனிவர்
-----------
233. கேயூர வாகு - கேயூரமணிந்த புயம்; கேயூரம் - தோளணி. மானும் - ஒக்கும். மாயூரம் நீங்காத வாமம் - மயில் போன்ற தேவியார் பிரியாதமர்ந்துள்ள இடப்பாகம்.
234. சேய ஒளித் தெக்கண பாகம் - செந்நிறமுடைய வலப்பாகம்; இடப்பாகம் மயிலின் சாயலான நீலநிறங் கொண்டது; இதற்கு மாறானது. தமருகம் - உடுக்கை. அக்கு அணி - உருத்திராக்க மாலை.
235. செழியா இரும் - செழித்து வாழும். உந்தி மடு - கொப்பூழ். உழுவை - புலி.
236. அதள் - தோல். சத தளம் - நூறு இதழுடைய தாமரை போன்ற திருவடி; 'நூற்றிதழ்த் தாமரை' - புற நானூறு; ‘சத தளமின் வழிபடு தையல்' - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், 2.
237. விருந்தழைமின்: மேலே 'விருந்தழைப்பாள் வந்தனள்' (223 - 4) என்றது காண்க. தவமுனிவர் மாதர் - தாருகாவனத்து இருடியர்தம் மனைவியர்.
------------
மாதரிட அறிந்தார் இல்லையோ மால்கொண்ட
ஆதரவால் நீயமைத்த ஆரமுதம் - மேதினிதான்
அன்றோ அதுபரமர்க் காகா தவர்விடைக்காம்
என்றோத ஏதிவர்க்காம் என்றாளை - நின்றோர்பார்த்(து)
ஆலால முண்டுகளித் தாரமுதம் உண்டுபதி
னாலாநா ளுள்ளும் நவமதியின் - மேலான
ஆதிப் பெருஞ்செல்வர்க் கன்னமே ஏதரிது
பேதைப் பருவம்போய்ப் பேரணங்காம் - போதழைத்து
வேண்டிய இன்ப விருந்திடுநீ என்றளவில்
காண்டகுதேர் வீதி கடந்ததால் - ஆண்டவர்க்கிங்(கு)
ஊட்ட நினைப்பாள் உமைபோலும் என்றுவந்து
வாட்ட நினையா மதன்சென்றான் - கூட்டகத்து
வல்லியார் எங்கட்கு மானே விருந்திடென
இல்லிடைகொண் டேகினார் ஈண்டொருத்தி - அல்லி 244
-----
238. இட - பிச்சையிட. ஆதரவு - அன்பு. ஆரமுதம் மேதினிதான் அன்றோ - இவ்வுண்டி நிலத்தாலானது; ‘உணவெனப் படுவது நிலத்தொடு நீரே' - புறநானூறு.
239. அவர் விடைக்கு ஆம்: நிலத்தை யுண்ணுதல், அவர் இடபவாகனமாகிய திருமாலுக்குரியது, ஆகவே அவருக்கு ஆகாது. ஏது இவர்க்கு ஆம் - இவருக்குப் பிடித்த உணவு ஏது. நின்றோர்: தாயர் முதலானோர்.
240. ஆலாலம் உண்டு: விடத்தை உண்டு மகிழ்ந்தவரான சிவபிரான். பதினாலாம் நாள், புதிய சந்திரனிடத்திலே மேலான ஆதிப்பெருஞ் செல்வருக்கு (உசக) ஆரமுதம் உண்டு என்க; சந்திரன் அமுதம் தருபவனாகையாலே.
241. அன்னமே - பெண்ணே; விளி. பேரணங்காம் போது - நீ பெரிய மங்கையாகும்போது.
243. நினைப்பாள் - நினைப்பாளாகிய பேதையை. வாட்ட நினையா - அம்பெய்து துன்புறுத்த நினையாமல். மதன் - மன்மதன்.
244. வல்லியர் - வீட்டிலுள்ள பெண்கள். இல்லிடை கொண்டு - வீட்டினுள் அழைத்துச் சென்று. ஈண்டொருத்தி - அடுத்த பருவத்தினளான மடந்தை.
------------
பெதும்பை
உறங்குகணை வேளார்க் கொருநாட் கொருநாள்
பிறங்குகரும் பன்னாள் பெதும்பை - நிறைந்தபொருள் 245
வித்தைபோ தாதெனினும் வேள்நூலி லேசிறிது
தத்தைபோல் கற்றுத் தனித்துரைப்பாள் - மெத்த
நிரம்பாச் செயலால் நெகிழ்ச்சியால் முக்கண்
அரன்பாதத் தம்புயப் போதன்னாள் - திருந்தஇவள்
ஆலிங் கனமே அமையும் எனத்தேவர்
மாலிங் குறலா வனப்பினாள் - மேலன்பு
மையொத்த கண்டன்பால் வையா தவர்மனம்போல்
மெய்யொப் பனைதான் விரும்புவாள் - மையல் 249
----------
245. கணை வேளார் - மன்மதன். ஒரு நாளுக்கொருநாள் கரும்பு போல் இனிப்பவள். (பா - ம்) வௌவற்கொருநாள்.
246. வேணூல் - வேள் நூல்; காமநூல். தத்தை - கிளி; இவளுக்கு இன்னும் பொருள் விளங்காது என்பது குறிப்பு: இனிமேல் வேண்டுமுரை பார்க்கப் பூவின் மதனூற்பாடம் போற்றுவாள்' - பூ. உலா. 210.
247. நிரம்பாச் செயல் - திருமால் செய்த பூசை முடியாமையால். அம்புயப் போது - தாமரை மலர்.
248. மால் இங்கு உறலாம்: இங்கு மயக்கங் கொள்ளத் தக்க, திருமால் இங்கு வரத்தக்க, வனப்புடையவள்.
249. மையொத்த கண்டன் - நீலகண்டன். ஒப்பனை - அலங்காரம். கண்டன் பால் வையாதவர் மனம் புறப்பொருள்களை நாடுதல்போல் இவளும் புற அலங்காரத்தை நாடுகிறாள்.
--------
தருசுரத மும்பிறவும் தான்வளர்த்த வேட்டுக்
குருகுகளில் கண்டறிந்து கொள்வாள் - அரனார்
சகங்காயும் கூத்துச் சமைந்துதிரை நின்று
முகங்காட்டு மன்ன முலையாள் - அகங்கைப்
பலியுகந்த தம்பிரான் பத்தியர்போல் இன்பம்
கலியுகந் தட்டாத கண்ணாள் - சிலைமகரம்
காட்டுதுலை மீனலவன் கன்னியிலுண் டானமழை
கூட்டரவில் கூட்டுங் குழலினாள் - வீட்டடுத்த 253
------
250. சுரதம் - காமலீலை. வேட்டு - வேட்டைவல்ல.
251. சகங் காயும் கூத்து - ஊழிக்கூத்து. சமைந்து - அதைப் பொருந்தியமைந்து. திரைநின்று - மறைந்து நின்று. (பா - ம்) சமைந்தெதிரே நின்று.
252. பலி உகந்த - தாருகாவனத்தில் பலியேற்ற. பத்தியர் - பக்தர். கலியுகம் - துன்பமான யுகம். தட்டாத: பக்தருக்கு இன்பமென்றுந் துன்பமென்றும் இல்லாதது போல, அவள் கண்ணிலும் இப்போது இன்பமும் துன்பமும் (கலியுகம்) இன்னும் தட்டவில்லை. 'இருநோக் கிவளுண்க ணுள்ளது ஒரு நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து' என்ற குறள் காண்க. சிலை - தனுராசி; மகரம் - மகரராசி.
253. துலை - துலாம்; மீன் - மீனம்; அலவன் - (நண்டு) கடகம்; கன்னி - கன்னி ராசி. இவ்வாறும் கார்முக ராசிகளென்றும், இக்காலத்து மேகங்கள் நீரையுண்டு கருமையடைந்து கால்வாங்கி நிற்குமென்றும் சொல்லப்பெறும். கூட்டரவில் -கூடுவதுபோல; கூடும் குழலையுடையவள்; பேதைக்குக் குழல் கூடாது என்று முன்னமே கூறியது (212) இங்கு நினைத்தற்குரியது. ‘இகுளை கூட்டுந் திருக்குழலாள்' - பூவண. உலா, 251.
---------
கழங்காடுதல்
சீதளக் காவில் சிறுதென்ற லூடாடும்
மாதவி நீழலிலே வந்திருந்து - தூதியரும் 254
பாங்கியரும் அன்னையரும் பார்க்கவொரு பாவையுடன்
யாங்கழங் காடுதும் என்றமைந்து - வாங்கினாள்
ஒன்பான் மணியதனில் ஓரேழ் மணிதிரட்டி
இன்பான கோளேழ் எனத்திகழத் - தன்பாணிப்
பல்லவத்துள் எல்லாம் பவளமா ணிக்கமொழிந்
தில்லை யெனவிளங்க ஏற்றெறிந்து - தொல்லோன்
படர்கயிலை வெற்பெடுத்த பத்திருதோள் வீரன்
உடல்சரிய ஊன்றியதா ளொன்றும் – மடலவிழ்பூந்
--------
254. சீதளக் கா - குளிர்ந்த சோலை. இது முதல் பெதும்பை கழங்காடுதலைக் கூறுகிறார். பெதும்பைப் பருவத்துக் கழங்காடுதலைக் கூறுதல் மரபு. பிற உலாக்களிலும் இதைக் காணலாம். பின்னே ஒன்று முதல் ஏழுவரையுள்ள எண்களுக்குப் பொருந்திய செய்திகளை இவ்வாசிரியர் கூறுவதுபோலவே, கடம்பர் கோயிலுலா முதலியவற்றிலும் காணலாம்.
256. ஒன்பான் மணி- நவமணிகள் (416). கோளேழ்: நவக்கிரகங்களுள் ராகு கேது நீக்கி மற்றவை. பாணி - கை.
257. பல்லவம்- தளிர்; தளிர்போன்ற கை. மாணிக்கமொழிந்து இல்லை என: கழங்குகளை எறியும் வேகத்தினால், கையின் செம்மையாகிய மாணிக்க நிறமொன்றே தெரிகிறது. ஏற்று - வாங்கி.
258. பத்திரு தோள் வீரன் - இராவணன். ஊன்றிய தாள் ஒன்று: 'அரக்கன் முடி பத்துங் குலைந்து விழ ஊன்றிய சேவடியான்' - அப்பர்.
-----------
தேங்காவி சூழும் திருவானைக் காவிலுறை
ஓங்கார மூர்த்தி உருவிரண்டும் - ஓங்கற்
கொடிக்கன்பு கொண்டபிரான் கோலமூன் றாக்கி
முடிக்கும் திருக்கருமம் மூன்றும்- அடைக்கலமென்(று)
ஏத்தெடுக்கும் எம்மை எழுபிறப்பின் வீழாமற்
காத்தெடுக்கும் நாதன் கரம்நான்கும் - பூத்தொடுக்கும்
தார்காக்கும் செஞ்சடையான் சங்கரிக்குநாள் வரைமால்
பார்காக்கத் தந்த படைஐந்தும் - போர்காட்டும்
திண்பினா கப்படையான் சேவடிசே ரத்தவம்செய்
பண்பினார் வெல்லும் பகையாறும் - ஒண்பார் 263
--------
259. தேங்காவி - தேன் நிறைந்த குவளை மலர், உரு இரண்டு: சத்தி, சிவம்.
260. ஓங்கற் கொடி - மலைமகளான உமா தேவி. கோலம் மூன்று - பிரமா, விஷ்ணு, ருத்திரன். கருமம் மூன்று: படைத்தல் காத்தல் அழித்தல்.
261. கரம் நான்கு - மான், மழு, வரதம், அபயம் என்னும் திருக்கைகள்.
262. தார் காக்கும் - மாலை பொருந்திய. சங்கரிக்கும் நாள் - சங்கார காலம். மால் - திருமால். பார் காக்க - உலகைக் காத்து வர. படை ஐந்து - திருமாலின் பஞ்சாயுதங்கள்; சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், கட்கம் என்பன.
263. திண் பினாகப் படையான் - வலி பொருந்திய பினாகப் படையுடைய சிவபிரான்; பினாகம் - சிவனது வில். பகை ஆறு: காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்கள் என்னும் ஆறு.
------------
திருந்து விடங்கரெனத் தேற்றும்பா ரேத்த
இருந்த இடங்கள்தாம் ஏழும் - மருந்தனையாள்
பாடிவிளை யாடும் பருவத் துருவத்துக்
கூடிவிளை யாடுமலர்க் கொம்பினாள் - நீடு
வலியைக் கருதாமல் மாதவத்தோர் விட்ட
புலியைக் கலையாப் புனைந்தோன் - உலகனைத்தும்
ஆண்டவன்கா கோதர ஆபரணன் ஆனந்தத்
தாண்டவன் சிந்தூரச் சரணத்தான் - நீண்டவனுக்(கு)
எட்டாத நீளத்தான் எள்ளெண்ணெய் போலுடலின்
உட்டான் உயிராய் உறைகின்றான் - புட்டாவு 268
________________________
264. விடங்கர் - உளியினாற் செதுக்கப்படாமல் தானே உண்டான சுயம்பு லிங்கம். இடங்கள் தாம் ஏழும் - தியாகராச மூர்த்திக்குரிய சத்த விடங்கத் தலங்கள்; இவை ஆரூர், நாகை, நள்ளாறு, மறைக்காடு, காறாயில், வாய்மூர், கோளிலி என்பன; சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு, காரார் மறைக்காடு காறாயில் - பேரான, ஒத்ததிரு வாய்மூர் உவந்த திருக் கோளிலி, சத்த விடங்கத் தலம்' - பழம் பாட்டு. மருந்தனையாள் - பெதும்பை.
265. பாடி - ஒன்று முதல் ஏழுவரை இவ்விதம் பாடி.
266. வலியை - சிவபிரானது ஆற்றலை. மாதவத்தோர் - தாருகாவனத்து முனிவர். புலியைக் கலையா - புலியினது தோலை ஆடையாக.
267. காகோதரம் - பாம்பு. சிந்தூரச் சரணத்தான் - சேவடியான். நீண்டவனுக்கு - நெடுமாலுக்கு.
268. நீளத்தான் - திருவருணைச் சோதி வடிவம். எள்ளெண்ணெய் போல: ‘யாவுளும், எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே' - திருவாசகம், 50. உட்டான் - உள் தான். புட்டாவு - புள் தாவு.
----------
விண்தடவு கோடரத்து வெண்ணாவல் வாய்ச்சிலந்தி
கண்ட நிழலிலுறை கங்காளன் - அண்டர்
அடிபரவும் ஆதிப் பெருஞ்செல்வன் அத்தன்
வடிவழகுக் காரும் ஒவ் வாதான் - சுடருருளைச் 270
செம்பொற் றிருத்தேர்மேல் தோன்றுதலும் சேயிழையும்
அம்பொற் கழங்காடல் ஆங்கொழித்துத் - தம்பிரான்
சேரும் திருவீதி சென்றாள் திரண்மாதர்
யாரும் இறைஞ்ச இறைஞ்சினாள் - தாரும்
திரண்ட சதுர்ப்புயமும் செம்முகமும் கண்டாள்
இரண்டு விழிக்கடங்கா தென்றாள் - மருண்டுதொழு
தாதரித்துத் தாயரைப்பார்த் தன்னைமீர் என்னையிவர்
மாதரித்த திண்தேரில் வைம்மினென - நாதனார்
தாமேறும் தேரில் சதுமுகவற் கல்லாது
யாமேறப் போதா தெளிதன்றே - யாமெல்லாம் 275
-----
269. விண் தடவு கோடரத்து - வானுற வோங்கி வளர்ந்த மரக்கொம்பையுடைய. சிலந்தி கண்ட நிழலில் - அது பின்னிய வலையின் கீழ்.
270. சுடர் உருளைத் தேர்: திரிபுரமெரித்தபோது சிவபிரான் சென்ற தேருக்குச் சந்திர சூரியரே இரு சக்கரங்களாயிருந்தனர். சேயிழை: பெதும்பை. ஒழித்து: கழங்காடலை விட்டுவிட்டுப் பெருமானைக் காண வருகிறாள்.
273. சதுர்ப்புயம்: உசு க. இரண்டு விழிக்கடங்காது: ‘நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்' - கம்பர்.
274. மா தரித்த - குதிரை பூட்டிய.
275. தேர்மீது தன்னை வைக்கும்படி சொன்ன பெதும்பைக்கு, சிவபெருமானது தேர் மீது பிரமனல்லாது வேறொருவர் அமர ஒண்ணாது என்கின்றனர் தாயர்; திரிபுரமெரித்த காலத்துப் பிரமன் சாரதியாகத் தேரில் அமர்ந்தானாதலால்; சதுமுகவன் - நான்முகன். 'விரிதலை யுலகம் தேரா ... அம் புயன் அமைவுறு சாரதியா ... அழியா முப்புரம் அட்டிடும் அந்நாளில் - வேதகிரீசர் பதிகம். எளிதன்றே - எளிதல்ல.
-------
தீண்டற் கரியதுகாண் தெய்வத் திரட்சிகாண்
காண்டற்கு வாய்த்தசங் கற்பங்காண் - ஆண்டவர்கைத்
தீயுளது காண்சடையிற் செங்கண் அரவுகாண்
பாயும் எருதுளகாண் பைந்தொடியே - நீயடர்ந்
தேகத் தொழாயென்றார் என்சொன்னீர் தேறிலிவர்
பாகத் திருப்பாளைப் பாருமென - மோகம்
குடிபுகுந்த தென்றெண்ணிக் கோதையர்கொண் டாடி
வடிவுடைய மங்கைக்கு மாறா - யடியிட்டாள்
ஆகா வெனநகைக்கும் அவ்வளவில் ஆடகத்தேர்
ஏகா அயல்வீதி எய்திற்றால் - மாகாமன் 280
இப்பாவை யையெய்ய எண்ணுவன்எண் ணானாகி
ஒப்பாரிலாதா ருடன் சென்றான் தப்பியே
நிற்கின்ற மானை நிரைவளையார் தாம்பூரை
இற்கொண்டு சென்றார்பின் ஈண்டொருத்தி – பொற்குன்று 282
--------
276. நமக்குக் கிடைத்தற்கரியது என்று சொல்லுகிறார்கள். தெய்வத் திரட்சி: 'செழுநீர்த் திரள்' என்பது இறைவன் பெயராதலால்.
277. தீ, அரவு, பாயும் எருது என்பவற்றைச் சொல்லி அச்சுறுத்துகிறார்கள். பைந்தொடியே: விளி.
278. தொழாய் என்றார், அன்னைமார். மேலே பெதும்பை பேசுகிறாள். பாகத்திருப்பாளை - இடப்பாகத்திலிருக்கும் உமாதேவியை. பாரும் என - என்று பெதும்பை சொல்ல.
279. குடி புகுந்தது: குடி புகுவதற்கு இன்னும் காலமல்ல என்பது குறிப்பு. கோதையர் - தோழியர் முதலானோர். வடிவுடைய மங்கை: உமாதேவி (115). மாறாயடியிட்டாள்; போட்டியாக வந்து விட்டாளென்ற கருத்து.
280. நகைப்பவர் கோதையர். ஆடகத்தேர் - பொற்றேர். ஏகா - ஏகி. (பா - ம்) எய்தித்தான்.
281. ஒப்பாரிலாதார்: சிவபிரான் பெயர் (333).
282. மானை - பெதும்பையை. நிரை வளையார் - வரிசையாக வளையணிந்த பெண்கள். பூரை இற் கொண்டு - நிறைந்த வீட்டினுள்ளே அழைத்துக்கொண்டு. ஒருத்தி - அடுத்த பருவத்தினளான மங்கை.
---------------
மங்கை
அனசம்பு நாதன் அயன்மேவு பொய்கை
வனசம் பொருமங்கை மங்கை - தனதிடப் 283
பங்குமைக் கீந்தோன் பதியைத் தனதாக்கும்
குங்குமக் கொங்கையாள் கொங்கையாள் - பைங்கயிலை
ஆதியான் காவேரி யாற்றில் அறல்போலும்
ஓதியாள் காமகலை ஓதியாள் - பாதியாம் 285
-------
283. பொற் குன்று அன்ன சம்புநாதன்; அவனுடைய. அயன் மேவு பொய்கை - பிரம தீர்த்தத்திலுண்டான. வனசம் பொரும் அங்கை மங்கை - தாமரையை ஒத்த அழகிய கையையுடைய மங்கைப் பருவத்தாள். தனது இடப் பங்கு - சிவபிரானது இடப் பாகத்தை.
284. உமைக் கீந்தோன் - சிவபிரான். பதி - கயிலை மலை. தனதாக்கும்: அவ்வளவு பெரியதான. குங்குமக் கொங்கை ஆள் கொங்கையாள் - குங்குமமணிந்த மணம் பொருந்திய தனத்தாள்; கொங்கு - நறுமணம், தேன். கொங்கு ஐயாள்; ஐ - மென்மை.
285. காவேரியாறு ஆனைக்காவருகே ஓடுவதால் அதைச் சொன்னார். அறல் - கருமணல். ஓதியாள் - கூந்தலையுடையவள்; ஓதி - கூந்தல்; கூந்தலுக்குக் கருமண லொழுங்கை உவமை கூறுவது மரபு; 'கார்க்கவின் பெற்ற ஐம்பால் போல், மையற விளங்கிய துவர்மணல் அதுவது, ஐதாக நெறித்தன்ன அறலவிர் நீளைம் பால்' - கலித்தொகை, 32. காம கலை ஓதியாள் - மன்மதன் நூலை ஓதியவள்.
-------
பெண்ணினான் ஆதிப் பெருஞ்செல்வன் ஆனைக்காக்
கண்ணினாள் வேலனைய கண்ணினாள் - நண்ணியசீர்த்
தந்தியரா மத்தனார் தாமச் சடாடவியில்
உந்தியா ளச்சுழிபோல் உந்தியாள் - எந்தை
இணங்கிய வெற்பின்கீழ் எதிர்ந்ததோர் காலன்
வணங்கிய ரோம வலியாள் - அணங்கனைய
பந்தாடுதல்
தன்பருவ வல்லியரும் தானுமணிச் சாளரத்துப்
பொன்புனையும் ஆடரங்கில் புக்கிருந்து - மின்பந்து 289
-----
286. கண்ணினாள்: இடமாகவுடையவள் அல்லது தன் கண்ணிலே இருத்தி வைத்துள்ளவள்; கண்ணையுடையவள்.
287. தந்தியராம் அத்தனார் - யானை பூசை செய்யப் பெற்ற சிவபிரான். தாமச் சடாடவி - மாலையணிந்த சடை. சடாடவியில் உந்தியாள் அச்சுழிபோல் உந்தியாள்: ‘வானிழிந்த கங்கைச் சுழியனைய உந்தியாள்' - ஆதி உலா.
288. ரோம வலி - அடி வயிற்றின் மயிரொழுங்கு. காலன் வணங்கியது. தன் பாசத்தினும் இம்மயிரொழுங்கு அதிகமும் பிணிக்கவல்லது எனக் கருதி. அணங்கு அனைய - தெய்வப் பெண் போன்ற.
289. வல்லியார் - கொடி போன்ற தோழியர். மின் பந்து - ஒளி பொருந்திய பந்து.
இது முதல் மங்கை பந்தாடுதலைக் கூறுகிறார். மங்கை பந்தாடுதலைத் தேவையுலா, இலஞ்சியுலா முதலியனவும், அம்மானையாடுதலைக் காளத்திநாதருலா, வாட்போக்கிநாதருலா முதலியனவும் கூறும்.
----------
மின்னிடை தாங்குவன வித்தாரம் மெத்துவன
மன்னிய முத்துநவ ரத்தினவாய் - தன்னிரண்டு
கொங்கையுடன் மாறுகொண்ட கோட்டுப் பிழைக்கவற்றை
அங்கையினால் வாங்கி அறைந்தெறிந்து - சங்கரனைச்
சொல்லார் எழுபிறப்பும் சுற்றித் திரிந்ததென
எல்லா அவையவத்துள் எய்துவித்தும் - நில்லா(து)
எழுவித்தும் வெள்ளியில் அக்கினி கால்வீழ்
பொழுதொக்க நிற்குமயில் போன்றும் - செழுமை 293.
----------
290. மின் போன்ற இடையிலே தாங்கப்பெற்றுப் பெருத்து, முத்தும் நவரத்தினமும் வைத்திழைத்த மாலையணிந்த தன் கொங்கை.
291. தன் இரு கொங்கைகளோடு மாறுகொண்ட அவ்விரு பந்துகளையும் சினந்து அறைந்தெறிந்தாள் என்றவாறு; பந்து கொங்கைக்கு உவமை சொல்லப்பெறுவது. மாறு - பகை. கோட்டுப் பிழை - கோடுதலாகிய பிழை; கோடுதல் - கோணுதல்; வக்ரமாகப் பகைமை கொள்ளுதல். பிழைக்கு அவற்றை எனப் பிரிக்க; அவற்றை - அப்பந்துகளை.
292. சொல்லார் - துதியாதவர்கள். 'வைத்தபந் தெடுத்தலும் மாலையுட் கரத்தலும், கைத்தலத்தி னோட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும், பத்தியிற் புடைத்தலும்' (252) என்ற சிந்தாமணிச் செய்யுள் இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.
293. வெள்ளி - சுக்கிரன். அக்கினி - கார்த்திகை நட்சத்திரம். கால் வீழ்பொழு தென்றது, பொருந்தத் தொடங்கும் சமயத்தை; அதாவது கார்ப்பருவம் தொடங்கப் போகிறதென்ற அறிகுறி. அக்காலத்தில் மயில்கள் ஆடுதல் போல் பந்துகள் இவள் கையில் ஆடின என்றவாறு.
--------
திருந்திய கொம்பிற் செறிகனிக்குப் புட்கள்
பொருந்தி எழுந்தகல்வ போன்றும் - சுரும்பு
மருமுளரிக் காட்டிணங்கு மாபோன்றும் மாரன்
பொருபுரிந்து சூழ்கதண்டு போன்றும் - ஒருதன்
மிகுவினைகள் கண்டோர் விழிக்குலமும் நெஞ்சும்
புகுவன போவன போன்றும் - திகழ்தரவே
நின்றாடி னாளை நிரைவளையார் தாம்பூரை
என்றாகம் புல்லி இலங்கிழையாய் - உன்தொழிலை
யாமோகொண் டாடுவோம் ஆனைக்கா ஈசனார்
தாமே அறியத் தகும்என்ன - ஆமே
அவரறிவா ராமாகில் அவரே எனக்கா
னவர்வதுவைக் கென்று நவின்றாள் - சிவரூபம் 299
---------
294. கனியைத் தின்னப் புட்கள் வந்து போவன போல. சுரும்பு - வண்டு.
295. மருமுளரி - நறுமணமுடைய தாமரை. இணங்குமா - பொருந்துவது. மாரன் - மன்மதன். பொரு புரிந்து - போரிட்டு. கதண்டு - வண்டு.
296. தன் மிகு வினைகள் - தான் பந்தாடும் தொழிலை. புகுவன போவன போன்றும், பந்து திகழ்தர.
297. நிரை வளையார்: தோழியர். பூரை: போது மென்று தாயர் முதலானோர் சொல்லி. ஆகம் புல்லி - அவளைத் தழுவி. இலங்கிழையாய் - விளி; திருந்திய ஆபரணமணிந்தவளே. தொழிலை: பந்தாட்டத்தை.
298. தோழியர் கூற்று. ஆமே - ஆம்; இது மங்கை கூற்று .
299. வதுவைக்கு - மணம் செய்து கொள்வதற்கு. நவின்றாள் - மங்கை கூறினாள். சிவரூபம் - திருவுலா வரும் சிவபிரானை.
----------
காண்டற்கு வேண்டிக் கவின்திருத்திக் காரிகையார்
ஈண்டிப் புடைசூழ இல்நின்று - நீண்ட
கனகநிலை ரத்னக் கதவுகடை நீக்கி
இனிய தெருமருவும் எல்லை - புனிதன்
திருந்து செழுநீர்த் திரளான் தெய்வீகப்
பெருந்திருவெண் ணாவற் பெருமான் - அருங்கொல்லி
நேரி மலையுடையான் நீலநெடுங் காலனுடல்
சோரி முடைநாறும் சூலத்தான் - பேரிமய
மாதக லாதுறையும் வாமபா கத்தினான்
சீத கலாச்சந்த்ர சேகரத்தான் - போதன்
சுரபேத வேதத் துரகத்தேர் தூண்டி
வரவே பவனி வரலும் - புரிகுழலாள்
சென்றாடி வேதச் செழுநீர்த் திரள்வந்தான்
என்றாடிப் பாடி இறைஞ்சினாள் - கொன்றை 306
________________________________
300. கவின் - அழகு. காரிகையார் - பெண்கள். ஈண்டி நெருங்கி. இல் நின்று - வீட்டிலே யிருந்து.
301. கனக நிலை - பொன்னாலான வாயில் நிலை. கடை நீக்கி - தாழை நீக்கித் திறந்து, மருவும் எல்லை - வந்தபோது.
302. கொல்லி - கொல்லி மலை; சேரனுக்குரியது.
303. நேரிமலை: இது சோழனுக்குரியதென்றல் மரபு; எனவே சோழன் வழிபட்ட ஆனைக்கா ஈசருக்கும் உரியது. சோரி முடை - இரத்தத்தின் நாற்றம்; காலனை அழித்தமையினாலே. இமய மாது - உமாதேவி.
304. வாம பாகம் - இடப்பாகம். சீத கலா - குளிர்ந்த கலையையுடைய. போதன் - அறிவு வடிவானவன்.
305. சுர பேத வேதத் துரகம் - நாத வடிவாயுள்ள வேதமாகிய குதிரை பூட்டிய, புரி குழலாள்: மங்கை.
306. சென்று ஆடி: கூத்தாடி; நீராடி என்றும் கொள்ளலாம், செழுநீர்த்திரள் ஆனமையால்.
________________________________
அலங்கல் அழகர் அடியேற் கிரங்கி
இலங்கு புயமளித்தால் என்னாம் - கலங்கினேன்
என்னைஇடப் பாகத் திருத்தினால் யானவள்போல்
உன்னை இரந்துழல ஒட்டேனே - கன்னியைப்போல்
மேதகு முப்பத் திரண்டறத்தை வீசியுனக்(கு)
ஓதக் கடல்நஞ்சை ஊட்டேனே - கீதவிதம்
சீராகப் பாடித் திருக்கூத்தி லுந்துணையாய்ப்
பேராது நிற்கப் பெறுவேனே - வாராய்என்(று)
ஓது மளவில் உமையாள் முகம்நோக்கி
ஆதி முறுவல் அரும்பினான் - மாதை 311
எவரும் நகைத்தார் இரதிபதி யேதான்
அவிருமணித் தேர்கண்ட தப்பால் - இவளொருத்தி
_____________________________
307. அலங்கல் - மாலை.
308. அவள் - இடப்பாகத்திலுள்ள உமாதேவி. இரந்துழல ஒட்டேன் - பிச்சை எடுக்கும்படி இறைவனை விட்டுவிடமாட்டேன். கன்னி - தேவியாகிய காமாட்சியம்மை.
309. அறத்தை வீசி, நஞ்சை ஊட்டேன்: அம்மையார் காஞ்சியில் முப்பத்திரண்டறங்களையும் வளர்த்தாள், ஆயினும் இறைவன் விடத்தை உண்ணும்படி விட்டுவிட்டாள் என்ற ஏளனம்; வீசி என்றது, அறத்தைப் புறக்கணித்து விட்டு என்றும் பொருள்படும். ஓத - குளிர்ச்சி பொருந்திய.
310. துணையாய் என்றது, நடராசப் பெருமான் ஆடும் போது சிவகாமசுந்தரி கண்டு களித்து அருகே இருப்பதை எண்ணி.
311. ஓதும் அளவில் - மங்கை சொல்லியபோது. ஆதி: ஆனைக்காவுடை ஆதி.'
312. எவரும் - தோழியர் முதலானோர். இரதி பதியேதான் - மன்மதனானவன். அவிரும் - ஒளிவிடுகின்ற. கண்டதப்பால் - அப்பாற் சென்றது. ஒருத்தி - மடந்தை.
------------
மடந்தை
அந்நாள் உததிதரும் ஆரமுதுக் காரமுதாம்
பொன்னா பரணத்தின் பூணாரம் - அன்னாள் 313
விழிவேளைத் தந்தானை வில்வேளை மெய்யே
வழிவேளை யாளும் மடந்தை - எழில்மேனிக்(கு)
அன்றன் றணிந்த கலந்தோறும் ஆதுலருக்(கு)
என்றும் கொடுக்கும் இயல்பாளை - நின்றொருநாள்
கீதம் விரவி ஒருத்தி கிளர்கீர்த்தி
ஓத அமைந்தெதிர்நின்(று) ஓதிமமே - மாதர்க்(கு)
அரசே மணியே அமுதே அனங்கன்
சிரசே கரமே திருவே - கருணைக்கு 317
நீயே உமையென்றாள் நேரிழையும் நானுமையேல்
தூயோனைக் சேரேன் கொல் என்கின்றாள் - ஆய அருட்
----------
313. உத்தி தரும் ஆரமுது - கடலிற் பிறந்த அமிர்தம்; பேரழகி னாற்கடையப் பெண்ணமுதாய் வந்துதித்த, ஆரமு தம் வாய்மை யறிதெரிவை' - வாட்போக்கி உலா, 345. அன்னாள் - போன்றவள்.
314. விழிவேள் - வீரபத்திரன். தந்தான் - சிவபிரான். வில்வேள் - மன்மதன்.
315. ஆதுலருக்கு - இரவலருக்கு.
316. ஒருத்தி எதிர் நின்று பின் வருமாறு கூறுகிறாள். ஒருத்தி - ஒரு பாடினி. கீதம் விரவி - இசை பாடி. கீர்த்தி ஓத - புகழைச் சொல்ல. ஓதிமம் - அன்னம். இது முதல் 324 வரை பாடினியின் கூற்றும் மடந்தையின் மறுப்பும்.
317. அனங்கன் - அங்கமில்லாதவன்; மன்மதன். சிரசேகரம் - முடிக்கு அணி என்னத்தக்கவள். திரு - இலக்குமி.
318. நேரிழை: மடந்தை. தூயோன் - இறைவன்
----------
கங்கைநீ என்றாள் அவளாகில் கண்ணுதல்மேல்
தங்குவ னேஎன்று சாற்றினாள் - கொங்கை
பொருப்போஎன் றாள்அப் பொருப்பாகில் ஈமத்
திருப்போன் இருக்குங்காண் என்றாள் - இருப்புருவம் 320
பொற்றனுவோ என்றாள் அஃதாகில் புராரிகரம்
பற்றிவளை யாதோ பகர்என்றாள் - நெற்றி
பிறையோஎன் றோதினாள் பெய்வளையும் அப்போ(து)
இறையோன் முடிக்குமே என்றாள் - நறைமலர்க்கண்
மானோ விடமோ எனவுரைத்தாள் மன்றாடி
யானோன் தரிக்குமே ஆங்கென்றாள் - தானதும்
ஆராமல் தன்னை யறிந்து சிவன் ஆகத்துக்(கு)
ஏரா தவளோ நீ என்றேத்தப் - பேராசை 324
-----------
319. கண்ணுதல் - நெற்றிக்கண்ணுடைய சிவபிரான்.
320. பொருப்பு - மலை. அப்பொருப்பு - கயிலை. ஈமத்திருப்போன்: சிவபிரான்.
321. பொற்றனு - பொன் வில். புராரி - முப்புரமெரித்தவன். பற்றி வளையாதோ என்றது, பொன் மலையான மேரு புராரிக்கு வில்லானமை கருதி.
322. பெய் வளை - மடந்தை. முடிக்குமே - சடையில் சூடிக்கொள்ளுமே. நறை மலர்க் கண் - தேன் நிறைந்த மலர் போன்ற கண்ணையுடைய.
323. மன்றாடி - மன்றிலே ஆடிய சிவபிரான். தரிக்கும்: மானை இடக்கையிலும், விடத்தை மிடற்றிலும் தரித்திருத்தல் பற்றி.
324. ஆராமல் - ஆற்றாமல். ஏராதவளோ - ஏலாதவளோ; என்று அந்தப் பாடினி ஏத்த.
-------
வல்லியும் வந்து மணிப்பூ டணமெறிந்து
புல்லி விடஅவளும் போந்தோறும் - சொல்லுதலும்
தன்காதல் தானே தனக்குத் துணையாக
மின்காமன் அம்பினால் வெம்பினாள் - நன்காஇப்
பாய லதனைப் பணியென்றாள் பாவைநோய்
தாயர் அறிந்தணுகித் தையலே - நீயஞ்ச
வேணுமோ உன்னை வினவியே வெண்ணாவல்
தாணுமோ கங்கொண்டு தானாளைக் - காண
எழுந்தருள்வன் நின்வாசல் என்றுமத வேளும்
அழுந்தண் சமீரனா வோனும் - செழுஞ்சடையில்
தாங்கிய சந்திரனும் தாமூர் மழவிடையும்
ஈங்குவரக் காட்டினார் என்றேத்த - ஆங்கவளும்
கங்குற் கடல்நீந்திக் காலை அவன்வருமென்(று)
அங்கத்தைப் பூணால் அலங்கரித்துத் - தொங்கல் 331
--------
325. வல்லி: மடந்தை. பூடணம் எறிந்து: பரிசாக அளித்து. புல்லிவிட - அவளைத் தழுவி உபசரித்தனுப்ப.
326. தன் காதல் தானே தனக்குத் துணையாக: தனியும் தானும் அத் தையலும் ஆயினான்' - கம்பர்.
327. பாயல் அதனைப் பணி: படுக்கையை விரிப்பாயாக. பாவை நோய் - இம்மடந்தை கொண்ட காதல் நோயை.
328. வினவி - நினைத்து.
329. மதவேள் - மன்மதன். சமீரனாவோன் - வாயுவாகிய தென்றல்.
330. மழவிடை - இளமை பொருந்திய இடப வாகனம் வரக் காட்டினார் - தோன்றினார்கள்.
331. அவன் - சிவபிரான்.
---------
அளக முடித்திடையில் ஆடை இறுக்கி
வளைகள் திருத்திவிழி மையிட்(டு) - ஒளிர்திலகம் 332
நெற்றிக் கெழுதி நெறிமேல் விழிவைத்து
மற்றொப் பிலான்மேல் மனம்வைத்து - முற்றாத்
தனத்தியர் சூழ எதிர்கொண்டு நின்றாள்
அனத்தினூ ருந்தேரி னானும் - தனத்தினனும்
மாலும் மகவானும் வந்திப்பத் துந்துமிஎப்
பாலும் அதிரப் பவனிவர - வாலிபத்தாள்
அன்னையர் சொன்ன தறுதி யெனவியந்தாள்
கைந்நிறைபொன் னாலத்தி காட்டினாள் - சன்னிதிநின்(று)
எண்ணார் புரமெரித்த என்னானைக் காவாரே
வெண்ணாவல் நீங்கா விமலரே - தண்ணறுந்தார் 338
சென்னியுடன் முற்றும் செழுநீர்த் திரளாரே
பொன்னிவரும் ஆரம் பூண்டாரே - என்னிதயத்(து)
----------
332. அளகம் – கூந்தல்.
333. நெறிமேல் - அவன் வரப்போகும் வழிமேல். ஒப்பிலான்: 'வடிவழகுக்காரு மொவ்வாதான்'. முற்றாத் தனத்தியர் - இளம்பெண்கள்.
334. அனத்தின் ஊருந்தேரினான் - அன்னத்தேருடைய பிரமன். தனத்தினன் - குபேரன்.
335. மகவான் - இந்திரன். துந்துமி - ஒரு வாத்தியம். எப்பாலும் - எப்புறமும். வாலிபத்தாள் - மடந்தை.
336. அறுதி - நிச்சயம்.
337. எண்ணார் - பகைவர். தண் நறுந்தார் - குளிர்ந்த மணமிக்க மாலை.
338. பொன்னி வரும் ஆரம் பூண்டார்: 65 - 68.
--------
உம்மை நினைந்தளவே உண்டிகடு வாயினேன்
அம்மதிப்போல் மெய்பாதி ஆயினேன் - வெம்மதன 340
வேளும் பகையாகி விட்டான்விட் டேனாடை
நாளுந்துஞ் சாத நலம்பெற்றேன் - ஆளநீர்
என்னைநினைந் தெய்தினால் ஏதோ உமக்கரிதென்(று)
அன்னம் உளப்பா டறிவிப்பப் - பின்னிரக்கம்
செய்திலன் வேள்பூசல் தீர்த்திலன் செங்கணருள்
பெய்திலன் ஆதிப் பெருஞ்செல்வன் - மொய்தன்
தொடைவழங்கி னானோபொற் றோௗளித்தா னோமின்
கொடைவிரும்பித் தூசுவளை கொண்டான் - கடைவழிபோய்த்
திண்தேரும் தானும் தெருவகன்றான் சீராக
வண்டேர் இதழியாள் மற்றொருத்தி - அண்டர் 344
----------
339. நினைந்தளவே - நினைத்த அளவிலே. உண்டி கடுவாயினேன் - உணவு கொள்ளவில்லை, நஞ்சாயிற்று; கடு - நஞ்சு. அம்மதி - இறைவனணிந்த பிறைச் சந்திரன்.
340. விட்டேன் ஆடை: 'அங்கை வளை தொழுது காத்தாள் கலைகாவாள்' - ஆதி உலா. துஞ்சாத நலம் என்பது உறங்காத துன்பம்; இறவாத தன்மை எனச் சிலேடைப் பொருள்.
341. அன்னம் - மடந்தை. உளப்பாடு - தன் துயரத்தை. பின்னிரக்கம் செய்திலன்: பின்னிரக்கம் செய்யும் பெருமான் ஆதலை எண்ணி.
342. வேள் பூசல் - மன்மதன் போர். ஆதிப் பெருஞ் செல்வன் - இறைவன் திருநாமம்.
343. தொடை - தனது கொன்றை மாலை. மின் கொடை - மடந்தையின் கொடையை. தூசு வளை - கலையை யும் வளையையும்; காதலால் இவற்றை அவள் இழந்தாள்.
344. வண்டு ஏர் இதழியாள் - வண்டுகள் மொய்க்கின்ற கொன்றை மலரணிந்தவள். அண்டர் - தேவர்.
-----------
அரிவை
விபரம் செறிமடவார் வேற்றுருவில் தோன்றும்
அபரஞ்சி அன்னாள் அரிவை - தபனன்சீர் 345
பொற்றரளத் தோடாகிப் பொங்குபூ ணாரத்தின்
உற்ற வொளியாய் உடன்மேவ - நற்றுளவோன்
ஓதியில் வண்டாய் உறையவொளி ஓதிமமாய்
ஆதி அயனார் அடிதொடரச் - சோதி
மயிலாய் வலாரி மகிழநடங் காட்டப்
பயில்வாயுச் சாமரையில் பாயத் - துயிலா
அளகா புரேசன் அடிச்சிலம்பாய் நிற்ப
இளகாத மால்தந் திடுவாள் - கிளர்காவில் 349
பத்துமரம் அத்தனையோ பட்டமர மும்கிரியும்
சித்திரமும் ஆவிபெறும் செஞ்சொல்லாள் - அத்திகிரி
---------
345. விபரம் செறி - தனித்த சிறப்புப் பொருந்திய வேற்றுருவில் தோன்றும் தேவலோகத்துப் பெண் போன்றவள். அபரஞ்சி அன்னாள் - புடமிட்ட பொன் போன்றவள். தபனன் - சூரியன்.
இது முதல் 350 வரை அரிவையின் தோற்ற வருணனை.
346. தோடு ஆரம் என்பவற்றின் ஒளியானது, சூரியனது ஒளியே இவைகளாக வந்து உடன் மேவுகிறது என்னும் படியிருக்கிறது. துளவோன் - திருமால்.
347. ஓதியில் - கூந்தலில்; வண்டாயுறைவது, அதன் கருநிறத்தைப் பெறவேண்டி. ஓதிமம் - அன்னம். அடி தொடர்வது, நடையழகைக் கற்க.
348. வலாரி - இந்திரன்.
349. அளகாபுரேசன் - குபேரன். இளகாத மால் - குறையாத மயக்கம். காவில் - சோலையில்.
350. பத்து மரம் அத்தனையோ: மாதவி, சண்பகம், பாலை, புன்னை, எழிற்படலி, கொண்மா, மகிழம், மராவொடு, அசோகு, குரா என்னும் பத்து மரங்கள். இவை மலராவிட்டால், இளம் பருவப் பெண்கள், பண்பாடல், நீழற்படல், நட்டல், ஆடல் முதலிய பத்துக் காரியங்களைச் செய்ய இவை முறையே மலருமென்பது மரபு. இங்கே இவை பத்துமே யன்றி, அமுதம் போன்ற அவள் செஞ்சொல்லைக் கேட்ட மாத்திரத்திலே, பட்ட மரமும் கிரியும் சித்திரமும் உயிர்பெற்றெழும் என்கிறார். இது முதல் அவள் கண்ணின் வருணனை. கண்ணாகிய வேல் எப்படிக் கொல்லனால் அடிக்கப்பெற்றதென்பதைக் கூறுகிறார்.
----------
வெற்பாம் தனியுலையும் மேகத் துருத்திகொடு
கற்பாம் அனிலக் கனலூதப் - பொற்பான
எண்டிக்கை முட்டும் இருட்கிரியில் ஈசனார்
கண்டக் கடுஇரும்பு காய்ந்ததனை - அண்டம்
பரிக்கும் அராக்குறட்டில் பற்றிவட வெற்போன்
இருக்கும் அடைகல்லில் இட்டு - மருத்துளவோன் 353
ஏனை இடிக்கூடம் எடுத்தெற்றி எமக்கொல்லன்
தானமைத்த வேல்போல் தடங்கண்ணாள் - வானவர்கோன்
-------
351. அத்திகிரி - யானை மலை; இது உலைக்கூடம், மேகமே துருத்தி. கற்பு என்ற காற்று நெருப்பை ஊத; அனிலம் - காற்று.
352. இருட்கிரி என்பது நீலகிரி. கண்டக் கடு இரும்பு இறைவன் கண்டத்தில் தங்கிய நீலவிடமாகிய இரும்பு; இருட்கிரியில் காய்ச்சப்பெற்றது. அண்டம் - பூமி.
353. பரிக்கும் அராக்குறட்டில் - உலகைத் தாங்கும் அரவான ஆதிசேடன் என்ற குறட்டினாலே பிடித்து. வடவெற்போன் - வடமலையாகிய மேருவுக்குரியவனான சிவபிரான். இருக்கும் அடைகல் - உறையும் மலையாகிய கயிலாயமென்னும் அடைகல்; அடைகல் - உலைக்கூடத்திலுள்ள பட்டடை. மருத்து - காற்று.
354. இடிக்கூடம் எடுத்தெற்றி - இடியாகிய சம்மட்டியால் அவ்விரும்பை அடித்து, எமக்கொல்லன் - எமன் என்னும் கொல்லன். அமைத்த வேல் - இவ்வாறு செய்து முடித்த வேல், தடங்கண் - அகன்ற கண். வானவர்கோன் - இந்திரன்.
----------
மேவாரில் அந்த விருத்தா சுரன்மெய்போல்
பூவானம் முட்டப் புடைத்தோங்க - ஓவாது 355
தாரா கணந்தரளத் தாராகிப் பேரண்டம்
வாராகி அற்றைக்கு மற்றைநாட் - கேராது
போகப் பொழுதிற் புடைத்துப் பொருமிமிக
மோகத்தை நல்கும் முலையினாள் - மேகத்துக்(கு)
---------
355. அவள் கொங்கையின் வருணனை. மேவார் - பகைவர். விருத்திராசுரன் வரலாற்றை 31-ம் கண்ணி உரையிற் காண்க. மெய் - உடல். பூ வானம் முட்ட - பூமியும் வானமும் முடிய. ஓவாது - ஒழியாது.
356. தாரா கணம் - நட்சத்திரக் கூட்டம். தார் - மாலை. வாராகி - தனத்தைக் கட்டும் கச்சாகி.
--------
அம்மனை யாடுதல்
அப்பாலும் நீண்ட அதிரேகை மேனிலத்தில்
எப்பா வையரோ டினிதிருந்தே - ஒப்பிலா 358
மாணிக்க அம்மனையேழ் வாங்கிஎறிந் தேற்பளவில்
சேணிற் புயலிலவை சென்றொளிப்பக் – காணாள்
திகைத்துமட வீரிதுநாம் தேடுவதெங் கென்றாள்
வகைக்குடக வெற்பின் மழையோ - டுகுப்புண்டு
காவிரியில் சேருங்காண் காவையர னார்க்கன்று
நீர்விழுந்த ஆரம்போல் நேருங்காண் - நாவலர் 361
அன்றாற்றில் இட்டபொருள் ஆரூர்க் குளத்துவர
என்றாற் கிதுவும் எளிதென்ன - நன்றென்(று)
உவந்து பரவி உடனேசோ திப்பாள்
நவங்கொள் தலம்நின்று நண்ணிச் - சிவன்கோயில்
எய்தஅமைந் தாளவ் வெல்லைக்கண் தில்லைக்குள்
செய்த நிருத்தத் திருத்தாளான் - மெய்தனைப்போல்
நந்திக் கினியபிரான் நாரணரும் நாகருமுன்
சந்திக்க வாங்கியபொற் சாபத்தான் - வெந்த 365
--------
358. அதிரேகை மேல் நிலம் - தனக்குச் சமானமில்லாத உயரமமைந்த உப்பரிகை; அதிரேகை: வியதிரேகம். பாவையரோடு - தோழியரோடு.
359. எறிந்தேற்பளவில் - எறிந்தும் ஏற்றும் விளையாடும்போது. சேணிற் புயலில் - தொலைவிலுள்ள மேகத்தில். மேகத்தில் ஒளித்ததென்றது, அவளிருந்த மாடத்தின் உயரத்தைப் புலப்படுத்துகிறது.
360. மடவீர்: விளி. என்றாள் - என்று அரிவை கேட்கிறாள். குடகவெற்பு - குடமலை அல்லது குடகுமலை; காவிரியின் பிறப்பிடம் (36). மழை: காவிரிப் பெருக்குக்குக் காரணமானது. உகுப்புண்டு - மழையோடு கீழே விழுந்து.
361. காவை - ஆனைக்கா. நீர் விழுந்த ஆரம்: 65 - 68. நாவலர் - சுந்தரமூர்த்தி.
362. திருமுதுகுன்றிற் கிடைத்த பொன்னைச் சுந்தரர் மணிமுத்தாநதியிலிட்டுப் பின் திருவாரூருக்கு வந்து ‘பொன் செய்த மேனியினீர்' என்ற திருப்பதிகம் பாடி, இறைவன் திருவருளால் அங்குள்ள குளத்தினின்றும் எடுத்தார் என்பது வரலாறு. என்றாற்கு - என்று அருள் செய்த இறைவனுக்கு. இதுவும் - மேகத்தில் மறைந்த உன் பந்து குடகவெற்பில் மழையோடு வீழ்ந்து ஆனைக்காக் காவிரியில் கிடைப்பதுவும்.
363. நவங்கொள் - புதுமை பொருந்திய
364. எய்த - செல்ல. அவ்வெல்லைக்கண் - அப்போது.
365. நாரணரும் நாகரும் முன் சந்திக்க வாங்கிய பொற்சாபத்தான்: திரிபுரமெரித்தபோது நாகமாகிய மேருமலையை வில்லாகவும் நாரணனை அம்பாகவும் கொண்டதனால், அவ்விருவரும் சந்தித்தார்கள்; வாங்கிய - வளைத்த; பொற் சாபத்தான் - பொன் மலையாகிய மேருவில்லான்; சாபம் - வில்.
------
சுடலைதனி லாடியும்தான் சுத்தனா கைக்கோர்
சடிலமிசைக் கங்கை தரித்தோன் - உடலில்
நிறைந்த பணியழகன் நீலக் கிரீபன்
சிறந்த செழுநீர்த் திரளான் - பிறங்கற்
குமரிக் கொருபாகன் கோடூர் குழகன்
தமரித்து வேதம் தயங்க - நிமிர்சிகரப்
பாரமணித் தேரில் பவனிவரக் கண்டளவே
ஒருநினை வொன்றுசெயல் ஒன்றாகி - ஆரத்
தழுவுவாள் போற்செல்லும் தன்தனபா ரத்தைக்
கழுவுவாள் போற்கண்ணீர் காலும் - நழுவும் 370
குருகும் கலையும் குவலயத்தார் கொள்ள
உருகும் தளரும் உயிர்க்கும் - சருகுபடும்
நெஞ்சோ டயருமிவள் நேர்கண்டும் காணாஅம்
பஞ்சோ னுடன்சென்றான் ஆதியான் - செஞ்சோதி 372
-------------
366. வெந்த சுடலையிலாடியும் (ஆடியும்: நடனமாடியும்; முழுகியும் என்பது தொனி) தான் சுத்தனாகைக்குக் கங்கை தரித்தான் என்பது முரண். சடிலம் - சடை.
367. பணி - பாம்பு, ஆபரணம். நீலக்கிரீபன் - நீலகண்டன். பிறங்கற் குமரி - மலைமகளான உமாதேவி.
368. கோடூர் குழகன் - இரு கோடுகளையுடைய பிறைச்சந்திரன் ஊர்கின்ற சடையுடைய குழகன்; சிவ பிரான். இவ்விரு சீர்களின் சரியான வடிவம் புலப்பட வில்லை. முன்னமே உள்ள பாடம், 'கோடு குழலழகாந் - தமரித்து' என்பது. 'கோடூர் குழலன்' என்றும் இருந்திருக்கலாம். தமரித்து - ஒலித்து.
369. ஓரும் - நினைக்கின்ற. ஆர - பொருந்த.
370. கண்ணீர் காலும் - கண்ணீர் சொரிவாள்.
371. குருகு - வளை; கலை - ஆடை. குவலயத்தார் கொள்ள - நிலத்திலே கழன்று விழ. சருகு படும் - வெம்புகின்ற.
372. காணா - உருவமின்மையாற் காணமுடியாத. அம்பஞ்சோன் - பஞ்சபாணனான மன்மதன். இவள் நேர்கண்டும், ஆதியான் சென்றான் என்க. செஞ்சோதி - சிவபிரான். இவள் - இவளை.
-----------
தெரிவை
சித்ர மணிமகுடத் தெய்வத் திருத்தேரில்
அத்திரு வீதியகன் றாங்கொருத்தி - சுத்த 373
தெரிவை புவனத் திலோத்தமை வெள்ளிக்
கிரியின் மருவாத கேகை - கரிவனத்தின்
அத்தற்கு நஞ்சை அளித்தபிழைக் கம்போதி
மெத்தப் பயந்துபயன் வேறுதவி - சித்தத்தை 375
-----
373. அகன்றாங்கு - நீங்கிச் செல்லவே.
374. திலோத்தமை வானுலகத்தில் இருப்பவளாதலில் இவள் பூவுலகத்திலிருக்கும் திலோத்தமை. வெள்ளிக்கிரி - கயிலை. கேகை - மயில், கரிவனம் - ஆனைக்கா.
இது முதல் 381 வரை தெரிவையின் உருவ வருணனை.
375. அம்போதி - கடல். நஞ்சையளித்த பிழை - ஆலகால விடத்தைத் தந்தமை; 'நஞ்சை யளித்த பிழைக்கு மெத்தப் பயந்து' என்ற கருத்தை, 'அடல்விடையின் மேல் வருவார் அமுதுசெய அஞ்சாதே, விடம் அளித்த தெனக்கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே, கடல் வயிறு நிறையாத காவிரி' என்ற பெரியபுராணத் திருவிருத்தத்திற் காண்க (திருமூல. 8). பயன் வேறுதவி - வேறு நல்ல பொருள்களைத் தர எண்ணி. (பா - ம்) பிழைக்காம்போதி.
---------
அன்புறுத்த வேண்டிஇரண் டாவ தொருபிறையும்
முன்படைத்த தொவ்வாத முண்டகமும் - மின்பரப்பும்
வித்துருவும் ஒப்பிலா வெண்முத்தும் மேலான
புத்தமுதும் சஞ்சரிக்கப் புஞ்சகமும் - கைத்தலத்தின்
முன்னிரக்கம் செய்யும் முதல்வனா ரைப்போலப்
பின்னிரக்கம் செய்யும் பெருவிடமும் - இன்னிசையைத்
தானே முரலுமணிச் சங்கும் கிளைத்தருவும்
வானே பெறாதோங்கும் வாரணமும் - மானத் 379
------
376. கடலானது, நஞ்சளித்த பிழைக்குப் பயந்து வேறு பயன் உதவிற்று என்று பின் வரும் பொருள்களைச் சொல்லுகின்றார். சந்திரன், அமுதம், கற்பகம், விடம், ஐராவதம் முதலியன, பாற்கடல் கடைந்தபோது கிடைத்தவை; ஏனைய, கடற்படு திரவியம். இரண்டாவதொரு பிறை: தெரிவையின் நெற்றி. முண்டகம் - தாமரை; அவள் முகம். மின் பரப்பும் - ஒளி பொருந்திய
377. வித்துரு: வித்துருமம், பவளம்; அவளுடைய இதழ்கள். முத்து: பல். புத்தமுது - வாயமுது. புஞ்சகம் - திரட்சி பெற்றமைந்துள்ளது; வித்துருமம், வெண்முத்து, புத்தமுது என்பன சஞ்சரிப்பதற்கு (அதாவது பொருந்தியிருப்பதற்கு) ஏற்ற ஒரு திரண்ட செப்புப் போல்வது; அதாவது வாய்.
378. கைத்தலத்தின் முன் - கும்பிடுவாருக்கு. விடம்: கண்.
379. சங்கு: கழுத்து. கிளைத்தரு - கற்பக விருட்சம். வாரணம் - ஐராவதமாகிய யானை, முலை; வானே பெறாதோங்கும் என்றது அதன் பருமையை புலப்படுத்தியபடி.
----
தனிமையெழில் வல்லி சாதகமும் போத
இனிய அரம்பை இனமும் - புனிதமாம்
அல்லலளி ஞெண்டும் வராலும் கமடமும்
நல்லனமும் சேர்த்துமலர் நாரிநிகர் - அல்லவெனப்
பெண்ணுருவ மாகிப் பிறங்குமணி பாரித்துக்
கண்ணுதல்முன் விட்டனைய காட்சியாள் - வண்ணமலை
ஈசனார் வேண்டி இருந்தவஞ்செய் யாநின்ற
ஊசிஅனைய உரோமத்தாள் - ஆசை
பகலுமிரு ளாகாமல் பாதுகாத் தோதி
முகிலின் விதுவை முடிப்பாள் - மகரம் 384
------
380. வல்லி சாதகம் - கற்பகத்தருவிற் படருங்கொடி; இடைக்கு உவமை. அரம்பை இனம் - வாழை; தொடை.
381. ஞெண்டு (நண்டு): முழந்தாள். வரால்: கணைக்கால். கமடம் (ஆமை): புறங்கால். நல் அன்னம், நடைக்கு உவமை. மலர் நாரி நிகர் அல்ல - மலர்மகளான இலக்குமியும் இவளுக்கு இணையல்ல என்னும்படி.
382. பிறங்கும் அணி பாரித்து - ஒளி பொருந்திய அணிகளைத் தாங்கி; கண்ணுதல் முன்னே வரவிட்டது போன்ற தோற்றமுடையவள்; மேலே 'நஞ்சையளித்த பிழைக்குப் பயந்து' (385) என்றதை நோக்குக. வண்ணமலை - அழகு பொருந்திய மலை.
383. ஆசை - திக்கெல்லாம்.
384. இவள் கூந்தல் அவிழ்ந்து கிடந்தால் அதன் கருமையும் பெருமையும் காரணமாகத் திக்கெல்லாம் பகற்பொழுதிலேயே இருள் மூடிவிடுமாம்; ஆகவே, அதை முடிக்கிறாள். ஓதி - கூந்தல். முகில் - மேகம். விது - சந்திரன்; பிறை என்ற ஓர் ஆபரணத்தை அணிகிறாள். மகரம் - மீன்கள்.
----
உகளுததி சூழ்ந்த உலோகரையும் லோக
மகளிரையும் மாலாக்க வல்லாள் - சகல
வனிதையர் சூழ மதனா லயத்தில்
இனிதுமலர்ப் பீடத் திருந்து - தனதருகு
சேவித்து நிற்குஞ் சிலைவேளைப் பார்த்(து)உன்னை
ஏவிப் பணிகொண்டோம் இன்றளவும் - நீவிரும்ப
யாஞ்செய்யும் கைம்மா றியம்புவாய் என்பாளைப்
பூஞ்செய்ய தாள்பணிந்து போர்மாரன் - ஈஞ்சைஎமக்(கு)
ஈந்தான் இபக்கா இறையவ னைச்செயிக்க
ஆய்ந்தாய்ந்து பார்ப்பேன் அறிகிலேன் - வாய்ந்த 389
படைத்துணையாய் நீவந்தால் பஞ்சசரத் தாலே
விடைத்துணையா னைப்பொருது வெல்வேன் – தொடுத்ததொடை
------
385. உகள் உததி - பிறழ்கின்ற அலையுடைய கடல்.
இது முதல், சிவனை வெல்வதற்குத் தனக்குப் படைத்துணையாக வரும்படி மன்மதன் தெரிவையை அழைத்தானென்று கற்பனையாகக் கூறுகிறார்.
387. சிலை வேள் - மன்மதன். ஏவிப் பணிகொண்டோம் இன்றளவும் என்றது தெரிவை கூற்று; அதாவது, தன்னைக் கண்டோரை மயக்க அவன் காரணமாயிருந்தமையால்.
388. செய்ய - சிவந்த. ஈஞ்சை - கொலை.
389. ஈந்தான்: என்னைச் சிவன் எரித்துவிட்டான்: இது மாரன் கூற்று. இபக்கா - ஆனைக்கா. செயிக்க அறிகிலேன் என்க.
390. படைத்துணையாய் என்றது, பெண்கள் அவனுக்குப் படையாதலினாலே. சரம் - அம்பு. விடைத்துணையான் - இடபவாகனமுடையவன்.
---------
வாகை எனக்காம் வலப்பாகம் அக்கணமே
தோகை உனக்காம் தொடங்கென்ன - ஓகையுடன்
ஈதோ அரிதென் றெழுந்தாள்மெய் யில்லானை
நீதேரில் வாவெனப்பின் நேர்கொண்டு - வீதிதனில்
சென்றாள் விழிவேல் திருப்புருவ விற்கோலி
நின்றாளல் குற்றேர் நிறுத்தினாள் - குன்றை
முறிக்கு முலையானை முன்னணியும் மொய்கார்
நெறிக்குழல்மாப் பின்னணியும் நிற்பக் - குறிக்கைவளைத்
தானை மருங்கு தழைப்ப அணிவகுத்தாள்
யானைவனத் தானும் எளியனோ - சேனைக்
கணந்தொடர வன்னியார் கைமுயன்று போத
வணங்கு மயில்வடிவர் வாழ்த்த - இணங்குமுடி 396
----------
391. வாகை - வெற்றிமாலை. வலப்பாகம்: இறைவனுடைய இடப்பாகம் முன்னமே உமையவள் கொண்டிருத்தலினாலே வலப்பாகம் உனக்குக் கிடைக்கும் என்றவாறு. தொடங்கு - புறப்படு. ஓகை - உவகை.
392. மெய்யில்லான் - அனங்கன்.
393. அவளுடைய படையின் அணிவகுப்பைக் கூறுகிறார். விழியாகிய வேலும், புருவமாகிய வில்லும்.
394. குன்றை முறிக்க வல்ல முலை, யானைப்படை. நெருங்கிய கார்போன்ற கூந்தலான குதிரை (மா) படையின் பின்னணி.
395. வளைத் தானை - வளையணிந்த தோழியராகிய படை. யானை வனம் - ஆனைக்கா.
396. வன்னி - நெருப்பு; அக்கினி தன் இடக்கையிலே அமர்ந்துவர என்பது குறிப்பு; வன்னியார் - தொண்டு செய்யும் ஒரு வகுப்பினர். மயில் வடிவர் - பெண்கள்.
-----------
அம்புருவஞ் சீதரனே யாகச் சிரமேரு
இன்பச் சிலையாய் எதிரேந்த - உம்பர்
கரபத் திரம்பொழியக் கல்லார வாகு
வரையிற் பணிவலைய மன்ன - வரியின்
முடுகு சினத்துரகன் முன்கை செறிய
அடுதிறற்கை மாமணிநின் றார்ப்பக் - கொடிய
துடியதிர நெற்றிக்கண் சோதிதர வேத
வடிவமுறுந் தேரேறி வந்தான் - பிடிநடையாள்
கண்டாள் நினைந்த கருமமறந் தாள்காதல்
கொண்டாள் உடல்புளகம் கூட்டினாள் - புண்டரிக
அம்பரா ஆதிப் பெருஞ்செல்வா ஆனைக்காச்
சம்புநா தாசந்த்ர சேகரா - பைம்பவள 402
--------
397. சீதரன் - திருமால்; அம்பாக வந்தவர்; மேரு மலை, வில். முடி அம்பு என்றது, (அம்பு - நீர்) கங்கையாகவும் உருவம் சீதரனாகவும் ஆக, சிரமேரு இன்பச் சிலையாகவும் குறிப்பு. உம்பர் - தேவர்.
398. கரபத்திரம்: ஈர்வாள் என்றும், கையிலுள்ள பத்திர புட்பங்கள் என்றும் இருபொருள். கல்லார வாகு வரை - கல்லொத்த வலியுடைய மலைபோன்ற தோள், குவளை மலரணிந்த தோள். பணி வலையம் - பாம்பாகிய மாலை, மன்ன - பொருந்த.
399. உரகன் - பாம்பு.
400. துடியதிர - கையிலுள்ள உடுக்கை ஒலிக்க. வேத வடிவமுறும் தேர் - வேதப் புரவி பூட்டிய தேர்; திருவுலா வந்தான் என்பதைப் தெரிவையின் அணிவகுப்போடு (395) பொர வந்தான் எனக் குறிப்பிடுகிறார். பிடி நடையாள்: தெரிவை.
401. கருமம் - போரிடுவதாகிய கருமம். புண்டரிக அம்பரா - புலித்தோலாடை யணிந்தவனே.
---------
வண்ணா வசந்த அழகா மதனையடு
கண்ணா அடியேனைக் காவென்றாள் - ஒண்ணுதலாள்
போற்றுவது கேட்டுப் பொறானாகி எம்மையலர்
தூற்றுவளோ என்றலரைத் தூற்றினான் - கூற்றுதைத்தோன்
தன்னை யடைந்தோர்க்குத் தவறுவர வொட்டுமோ
மின்னை யுவந்து விழிவைத்தார் - பின்னை
உருவிலியாங் கென்செய்தான் ஒத்தவா றொத்துச்
செருவிலியாய் ஈசன்பின் சென்றான் - வருதெருவில் 406
------------
403. மதனை அடு கண்ணா - மன்மதனைக் காய்ந்த கண்ணையுடையவனே.
404. கூற்றுதைத்தோன் - யமனை வதைத்தவன். (பா-ம்) பொறானாகிலெம்மையவர்.
405. மின்னை - ஒளியை; அதைத் தருகின்ற சுடரைக் கண்ணாக உடையவர் என்க. தெரிவையை உவந்து கடைக்கண் நோக்கினார் என்னலுமாம்.
406. உருவிலி: மன்மதன். ஒத்து: சிவபிரான் கடைக்கண் நோக்கியதற்கிணங்க என்றவாறு. செருவிலியாய் - போரிடும் வில்லுடையவனாய்: போரை விட்டவனாய் என்னலுமாம்.
----------
பேரிளம் பெண்
பொற்புற் றவளொருத்தி பொன்னாட்டின் மின்னார்க்குப்
பிற்பட்டு முற்பட்ட பேரிளம்பெண் - வெற்பின்மதில் 407
காவைச் சிவனாரைப் போலே கரடதட
மாவைப் பணிவிக்கும் வார்த்தையாள் - ஆவிவதை
பண்ணுதலால் பேணுதலால் பாகீ ரதிமுடித்த
கண்ணுதலான் இன்னருள்போற் கண்ணினாள் - வண்ணவழ(கு)
எல்லாஞ் சுமந்துகனத் தேயோ இனியதன(து)
அல்லாது மாறில்லை ஆகியோ - நில்லாக்
கிளரத் திசையிலிடங் கிட்டாத வாறோ
தளர்சிற் றிடைக்கிரங்கித் தானோ - கிளர்சிற்
றிடையரிகண் டானை எதிர்ப்பதோ இந்த்ரன்
படையிலடி சாயற் பதமோ - விடையோன் 412
-----------
407. பொற்பு - அழகு. பொன்னாடு - தேவலோகம். இவள் வானுலகப் பெண்டிருக்குப் பிற்பட்டுத் தோன்றியவளான போதிலும், அழகு காரணமாக அவர்களுக்கு முற்பட்டவளாய்ச் சொல்லத்தக்கவள். வெற்பின் மதில் - மலை போலுயர்ந்த மதில்.
408. கரட தடம் - யானையின் கபோல மதம் பாய்கின்ற சுவடு. மா - இச்சுவடு பொருந்திய யானை. யானை இசைக்குப் பணியும் என்பது மரபு; ஆகவே இசைபோன்ற இவள் வார்த்தை யானையைப் பணிவிக்கும் என்க. காவைச் சிவனாரைப்போல என்றது. இத்தலத்தில் யானை பணிந்தமையைக் குறிப்பிட்டவாறு.
409. பாகீரதி - கங்கை. இறைவனருள் துன்பமும் இன்பமும் தருதல் போல, இவள் கண் ஆவியை வதை பண்ணும், பேணும். 'ஒருநோக்கு நோய்நோக்கு நோக்கொன் றந்நோய் மருந்து' - குறள்.
410. இது முதல் 416 வரையில் அவளுடைய தனங்களின் நிலையை வருணிக்கிறார். கனத்தேயோ: கனத்தோ; கனத்த காரணத்தினாலோ, விழும் கொங்கையாள் (416) என்க.
411. சிற்றிடைக் கிரங்கி: ‘இன்னம் பெருக்கில் இடை தாங்குந் தாங்காதென்று, உன்னி அது பார்க்க உற்றது போல்' - பூ. உலா, சங்க. திசையிலிடங் கிட்டாதவாறோ: 'பழகுந் திசை யடங்காப் பண்போ' - மயிலையுலா.
412. அரி - மென்மை; சிங்கம். கொங்கையாகிய யானை எதிர்ப்பதோ. அரி கண்டு ஆனை எதிர்ப்பதோ: அரியைப், பொம்மல் எதிர்த்த புகர்புகமோ' - மயிலையுலா. இந்திரன் படை வச்சிராயுதம்; அதன் இடை சிறுத்திருப்பதைக் குறிப்பிட்டவாறு.
-----------
அழுந்துவளை ஆகத் தணையப் பெறாதே
எழுந்துவளர்ந் தென்னபயன் என்றே - செழுங்கடலில்
ஆங்கால காலங்கண் டஞ்சியநாள் அண்டரெல்லாம்
வாங்காது கைவிட்ட மந்தரமோ - நீங்கா(து) 414
அடிமுடிவு காணா தரியயன் அஞ்சிப்
படிமிசையின் வீழ்ந்திறைஞ்சும் பண்போ - விடையோனைப்
பைஞ்சிலந்தி நூலைப் பறித்தகற்றி யேபணியும்
குஞ்சரமோ என்னவிழுங் கொங்கையாள் - அஞ்சிஉமை
-------
413. அழுந்து வளை ஆகம் என்றது, காஞ்சியில் சிவபிரான் ஆகத்தில் அம்மையின் வளைத்தழும்பும் முலைத்தழும்பும் பட்டமை கருதி.
414. காலகாலம் - ஆலகால விடம். அண்டர் - தேவர். வாங்காது: அஞ்சி ஓடியபோது, கயிற்றை இழுத்துக் கடையாமல். மந்தரம் - மந்தர மலை.
415. அரியும் அயனும் ஒத்தன இரண்டு தனங்களும். படி - நிலம்.
416. குஞ்சரம் - (இத்தலத்தில் வழிபட்ட) யானை. யானை இத்தலத்திற் பணிந்த செய்தியை இங்கு உவமையாய்ச் சொல்லியது போலவே, தேவையுலாவிலும், 'சென்று திருவானைக் காவிற் சிவனைமதக், குன்று வணங்கக் குனிந்ததோ' (328) என இதே சந்தர்ப்பத்தில் கூறியிருக்கக் காணலாம்.
இதன் பின் 421 வரையில், பேரிளம்பெண் அணிகலன்கள் அணியாத காரணத்தைக் கூறுகிறார்.
-----------
காணா தரன்கலந்தால் காயத் திவையழுந்தில்
வீணார வாரமா மேயென்றோ - சேணாடர்
வீடார மானதனி வில்லா ளனைத்தழுவக்
கூடாத காதற் கொடுமையோ - நீடறிவான்
மாணிக்க முன்னா மணியொன் பதுமகத்தில்
ஏணிப் பசுவுறுப்பென் றெண்ணியோ - காணும்
அவையவத்தின் தொல்லை அபிராம மெல்லாம்
இவைகரக்க லாவதென் னென்றோ - கவினிசைத்த
நாணாகி யாபரணம் நான்கெய்தி யோநவமாம்
பூணாரம் அத்தனையும் பூணாதாள் - பாணிஉழைக் 421
-----------
417. காயத்து - கலக்கும் இறைவன் உடலில். இவை இந்த அணிகலன்கள். வீண் ஆரவாரம்: உமை. இந்த அணி கலன்கள் அழுந்தின தழும்பைக் கண்டு ஊடுவாள், ஆரவாரம் உண்டாகும் எனக் கருதி. சேணாடர் - வானவர்.
418. வீடாரமான தனி வில் - அவர்களுக்குப் பாசறை என்னத்தக்க வில்; அவர்களுக்குப் பகைவரான திரிபுராதியர் முதலியோரை அழித்தமைபற்றி. வில்லாளன்: அவ் வில் லேந்திய சிவபிரான்.
419. மணி ஒன்பது: மாணிக்கம், முத்து, வயிரம், வயிடூரியம், கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம் என்பன. இவ்வொன்பது மணிகளும் யாகத்தில் பசுவின் உறுப்புக்களாயமைந்திருத்தல் கருதி என்க.
420. அவையவத்தின் - தன்னுடலின். தொல்லை அபிராமம் - பழமையாயுள்ள அழகு. இவை கரக்கலாவது - இவ்வணிகள் மறைத்து விடும். கவின் இசைத்த - அழகு பொருந்திய.
421. ஆபரணம் நான்கு: நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் நாற்குணம். நவமாம் - புதியனவான. பாணி - கையிலே. உழைக்கன்று - மான் கன்று.
-----------
கன்றேந்தி யைத்தழுவக் கண்டகன் வைப்பிரிந்த
அன்றே விழிக்கெழுதா அஞ்சனத்தாள் - தென்திசையில்
ஓடாத காற்றேர் ஒழிந்தால் உருவிலிக்கு
நீடாழித் தேராம் நிதம்பத்தாள் - ஓடாத
கங்குற் களிறு கருப்புச் சிலைமலர்க்கோல்
திங்கட் கவிகைகுயிற் சின்னமீன் - தங்குகொடி
கட்டாண்மை வேளுக்குக் காலமலாக் காலத்தும்
முட்டா துதவிவினை மூட்டுவாள் - எட்டான
தோளானை யாறு பருவத்தி லுந்தொழுது
நீளா தரங்கூரும் நெஞ்சினாள் - கேளார்சொல் 426
--------
422. கன்றேந்தி: சிவபிரான். கண்ட கனவு, முன்னமே ஒருநாள் கண்டது; அன்று முதல் அலங்காரஞ் செய்து கொள்வதை விட்டாள். எழுதா அஞ்சனத்தாள் - கண்ணுக்கு மையெழுதலை விட்டாள்; 'அஞ்சனங்கள், ஓரத் தெழுதாத ஒண்கண்ணாள்' - காளத்தி உலா, 509.
423. தென்றல், தெற்கிருந்து வடக்கு நோக்கி ஓடும்; தெற்கு நோக்கி ஓடாது; ஆகவே அதை ‘தென்திசையில் ஓடாத கால்' என்றார். உருவிலி - மன்மதன்; அவனுக்குத் தென்றலே தேர். இக்கருத்தை 'வடக்கோடு தேருடையான்’ என்ற சிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடலிலும் காண்க.
424. கங்குல் - இருள்; மன்மதனுக்கு யானை. கருப்புச்சிலை - கரும்பாகிய வில். மலர்க்கோல் - மலரம்பு. திங்கள் கவிகை - சந்திரனாகிய குடை. குயில், சின்னம்; மீன், கொடி.
425. கட்டாண்மை - பெருவீரம். முட்டாது - குறைவில்லாது. வினை - காதல் தொழில். எட்டான தோளான்: ‘எண்தோள் வீசி நின்றாடும் பிரான்' - அப்பர்.
426. ஆறு பருவம் - முன்னமே இப் பேரிளம்பெண் கடந்து வந்த பருவங்கள்; பேதை முதல் தெரிவை வரையுள்ள ஆறு. நீள் ஆதாரம் - பெருகிய அன்பு. கேளார் - சுற்றத்தார்.
-----------
கேளா தனவரதம் கேதித் திருப்பாளை
வாளார் தடங்கண் மயிலொருத்தி - வேளாளர்
பாணம் உதவுபொழில் பார்க்கவா என்றழைப்ப
வாணுதலும் போதகற்று வான் சென்றாள் - நீணிலத்தில்
ஐந்து நிலமும் அமைந்து கிளர்காவின்
வந்துவளர் தேமாவை மாமகிழை - முந்தியகல்
லாலை வடத்தை அருச்சுனத்தை ஆத்திதனைப்
பாலையை வேயைப் பலாத் தன்னை - நீலியைப் 430
---------
427. கேதித்து: வருந்தி. மயில்: தோழி. வேளாளர்: மன்மதனார் என்றபடி.
428. பாணம் உதவு பொழில் - அம்பாக மலர்களை அவனுக்குத் தரும் சோலை. வாள் நுதல்: பேரிளம் பெண். போது அகற்றுவான் - மலரெடுக்க. (பா - ம்) போதகத்துவான்.
இதன் பின் தேமா முதல் நெல்லிவரையுள்ள பல மரங்களை அச்சோலையிலுள்ளனவாகச் சொல்லி, அவற்றின் மேல் பிற மகளிர் காதல் கொண்டு மடலேறத் துணிய, இப்பேரிளம் பெண் வெண்நாவலைக் கண்டு காதலுற்றாள் என்று இத்தலத்துக்குப் பொருந்தக் கூறுகிறார். மரங்களைக் கூறியது, அவை தலவிருட்சமாயமைந்துள்ள தலங்களைக் குறிப்பிட்டவாறு.
429 - 431. ஐந்து நிலம்: குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் என்பன. தேமா: காஞ்சி, நாகை, மாந்துறை முதலிய தலங்களிலுள்ள தலவிருட்சம். மகிழ்: அண்ணாமலை, நீடூர். திருவொற்றியூர். கல்லால்: காளத்தி. வடம் (ஆல்): திரு ஆலங்காடு, ஆலம்பொழில். அருச்சுனம் (மருது): திருவிடைமருதூர். ஆத்தி: திருச்சிற்றேமம், செங்காட்டங்குடி, ஆப்பாடி. பாலை: திருப்பாலைத்துறை. வேய் (மூங்கில், வேணு): திருநெல்வேலி, பாசூர். பலா: குற்றாலம், பூவணம், நாலூர். நீலி: திருப்பைஞ்ஜீலி; (நீலி - வாழை; கழுக் குன்றம், மருகல், தேனூர் முதலியனவும் பொருந்தும்.)
-----
புன்னையைக் கூவிளையைப் புன்கைப் புனக்கடம்பை
வன்னியைக் கொன்றையை மாதளையைத் - தன்னைச்
சினைதரு பாதிரியைத் தில்லையைக் காயாப்
பனையை இலந்தையைப் பராயைப் - புனைகுருந்தை
நெல்லியை நோக்கினாள் நித்தருறை நீழலெனச்
சொல்லி யவற்றைத் தொழுதிட்டாள் - எல்லை
மாதர் பலரும் மயங்கி மடலேற
மேதகு திண்தேரில் வீதிதொறும் - பூதரமாம் 434
--------
431. புன்னை: திருமயிலை, அம்பர், புகலூர், கூவிளை (வில்வம்): ஓமாம்புலியூர். புன்கு: திருப்புன் கூர். கடம்பு: மதுரை, கடம்பர் கோயில், கடம்பூர். வன்னி: பேணு பெருந்துறை, மறைக்காடு, பட்டீச்சுரம், பாம்புரம். கொன்றை: கடவூர், பந்தணை நல்லூர், வைகாவூர், திருப்புத்தூர், கொள்ளம்பூதூர், மூக்கீச்சுரம். பாதிரி: திருப்பாதிரிப்புலியூர், புக்கொளியூரவிநாசி. தில்லை: சிதம்பரம், கருகாவூர் - பனை: பனையூர், திருவோத்தூர், திருப்பனந்தாள். இலந்தை: கீழ்வேளூர், திருநணா. பராய்: திருப்பராய்த்துறை. குருந்து: தண்டலை நீள்நெறி, திருப்பெருந்துறை. இவ்வாறு சிவபிரானுக்கு நிழலளிக்கும் தலவிருட்சங்கள் கூறப் பெற்றிருத்தலைக் கடம்பர் கோயிலுலாப் பேரிளம்பெண் பருவத்திலும், மதுரைச் சொக்கநாதருலா அரிவைப் பருவத்திலும் காணலாம்.
433. நெல்லி - திருநெல்லிக் காவலுக்குரிய தல விருட்சம்.
434. மயங்கி - காதலுற்று. மடலேற: கண்ணி 197 பார்க்க. பூதரமாம் - மலைபோற் பெரிதான.
---------
நன்னாவல் கண்டாள்வெண் ணாவ லாய்க்கொண்டு
தன்னாவல் தீரத் தழுவினாள் - என்னாயன்
தானன்றோ நீயென்றும் சம்புவே என்றேத்தி
ஆனந்த மாகும் அவசமுறும் - ஏனென்னும்
பங்கிற் பசுங்கொடியைப் பாவிக்கும் சேவிக்கும்
செங்கைச் செழுநீர்த் திரள்திரட்டும் - சங்கரனே
என்னும் சிவமருள் கொண் டிப்பாவை நிற்பவளை
அன்னம் தொடர்நடையார் ஆவாளைத் - துன்னறிவு
போந்ததோ மின்னேநம் பெம்மான்வெண் ணாவலிடம்
சேர்ந்ததோ ஆங்கவரைச் சென்றுதொழ- நேர்ந்ததென்(று)
ஆற்றி அணைத்துவரும் அவ்வளவில் அண்டரெலாம்
போற்றி செயசெய போற்றியென - நாற்றிசையும்
சேணோர்மண் ணோராய்த் திரண்டுவரக் கல்லாரப்
பூணோன் கயிலைப் பொருப்பினோன் - வாணன் 441
---------
435. வெண் நாவல் இத் தலத்துக்குரியதாதலினாலே அதைக் கண்டு தழுவினாள். நாயன் - தலைவன்.
436. சம்புவே: விளி. அவசமுறும் - தன்னிலையற்றிருப்பாள். பின் வருவன, பேரிளம் பெண்ணின் செயல்கள்.
437. பங்கில் பசுங்கொடி: உமாதேவியார்.
438. சிவமருள் கொண்டு: சிவபிரான் மீது பிறந்த காதல் மயக்கத்தால். துன்னறிவு - பொருந்திய அறிவு.
439. போந்ததோ - உன்னை விட்டு நீங்கிற்றோ; தோழியர் கூற்று. மின்னே: விளி. அறிவு சேர்ந்ததோ என்க.
440. சேணோர் - தொலைவிலுள்ள வானுலகத்தவர். கல்லாரப் பூணோன்: 398. பொருப்பு - மலை.
---------
குடமுழவும் நாரதனார் கோதிலா யாழும்
இடமுடைய மூவர் இயலும் - படரும்
திருச்செவியில் நாயேன் தெளிவிலாப் புன்சொல்
இருத்தி யருள்கைக் கிசைவோன் - வரத்தில்
சிறக்கும் அயனாற் செருக்கியே செத்துப்
பிறக்கும்தெய் வங்கள் பெருமான் - நிறக்குமுரண்
சேவினான் கூடற் றிருவீதி யில்விறகுக்
காவினான் றென்னானைக் காவினான் - பூவினான்
சம்பு முனிகவுரி தந்தி சிலந்திகனல்
வெம்பு பரிதிமதி விண்ணவர்கோன் - கும்பன் 446
அறிந்தா றறிதுமோ அப்பதிகள் தோறும்
செறிந்தால் எனக்களித்தாள் சித்தம் – புறந்தழைத்த
---------
442. மூவர் இயல்: தேவாரம்.
443. நாயேன் தெளிவிலாப் புன்சொல்: ஆசிரியர் தாம் பாடிய இவ்வுலாவையே குறிப்பிடுகிறார்.
444. செத்துப் பிறக்குந் தெய்வங்கள் பெருமான்: உக பார்க்க; 'தோன்றி மரிக்குந் தெய்வங்கள் மணாளன்' - பூ. உலா, சருக. நிறக்கும் முரண் - விளங்குகின்ற வலிமை பொருந்திய. (பா - ம்) அயனார்.
445. சேவினான் - இடபவாகனமுடையவன். கூடல் - மதுரை. காவினான் - சுமந்து சென்றவன்; மதுரையில் பாணபத்திரனுக்காக விறகுவிற்ற திருவிளையாடல். காவினான் என்பது மடக்கு. பூவினான்: பிரமன்.
446. வழிபட்டுப் பேறுபெற்றோரைக் குறிப்பிடுகிறார். கவுரி - உமாதேவி. தந்தி - யானை. கனல் - அக்கினிதேவன். பரிதி - சூரியன். விண்ணவர்கோன் - இந்திரன். கும்பன்: கும்பத்தில் தோன்றிய அகத்தியன்.
447 . அறிந்தாறு - அறிந்தவாறு. (பா - ம்) அறிந்தாற்றுதுமோ.
----------
தீர்த்த மகளிர் திருமால் பரவ அருள்
மூர்த்தி அவனி முழுதாள்வோன் - மாத்தேரின்
வந்தான்மற் றவ்வளவின் மாதரார் வீதியிற்கண்(டு)
இந்தா தொழுபவனி என்றுரைப்பச் - சந்தாபம்
ஆறினாள் பேரழகுக் காருமொவ்வா தீரென்று
கூறினாள் கைதலைமேற் கூப்பினாள் - தேறினாள்
பித்தரே ஆதிப் பெருஞ்செல்வ ரேமடவார்க்(கு)
எத்தரே வெண்ணாவல் ஈசரே - நித்தம்
புதியவரே ஓராரம் பூண்டபெரு மானே
அதிவிரகம் ஆனேன் அணையீர் - மதனன்என்
ஆருயிரைக் காய்ந்தால் அனைத்துலகாள் வாயென்று
பேருமக்குண் டாமோ பெருமானே - நீருருவால் 453
உம்மை வகுத்த முறையால் உமக்குமையாள்
அம்மைகண்டீர் எம்மையிடத் தாளுவீர் – இம்மையில்யான்
________________________________
448. அவனி - உலகு. மா - பெரிய.
449. மாதரார் - தோழியர் முதலான பெண்கள். சந்தாபம் - மனத்திலுண்டான காதற்றுன்பம்.
450. கூறினாள் - கூறி வழிபட்டாள்.
451. இது முதல் பேரிளம் பெண் கூற்று. எத்தரே - ஏமாற்றுபவரே.
452. நித்தம் புதியவரே: 'பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே' - திருவெம்பாவை. ஓராரம் - சோழன் தேவியணிந்த முத்துமாலை.
453. காய்ந்தால் - வருத்தினால். அனைத்துலகை ஆள்வாய்: இங்கு, சிவபிரான் திருநாமங்களுள் ஒன்றெனத் தெரிகிறது; 69, 448.
454. அம்மை: தேவி, தாய். இடத்து - இடப்பாகத்தில்.
----------
தானும் அவள்போல் தவத்திகண்டீர் தாழ்ந்தசடை
காணுமிமை யாதகண்ணுங் கண்டீரே - யானுநெடு
மாலுடனே வந்தேன் மலைவேளைப் பெற்றேனத்
தாலுமவ ளாகும் நான் தப்பாதே - ஏலுமவட்(கு)
ஒற்றைப்பா கந்தான் உதவியது வாங்கரிதேல்
மற்றைப்பா கந்தரினும் வாழேனோ - கொற்றவரே
என்று மதியா திசைத்தாள் இறையோனும்
மன்றல் மலர்த்தார் வழங்கினனோ - குன்றளித்த
வல்லிக்காய்த் தானஞ்சி மாரனைவாட் டேலென்று
சொல்லிக்காத் தானவ ளுஞ்சோராள் - எல்லையிலா 459
-------
455. தவத்தி - தவமுடையவள். சடைகாணும் என்றது, தான் கொண்ட காதல் மிகுதியினால் கூந்தலை எண்ணெயிட்டு அலங்கரிக்கத் தவறியது - காரணமாகச் சடையாயிற்றாதலினாலே. இமையாத கண் என்றது, காதல் நோய் மிகுந்து உறக்கம் கொள்ளாமையால்.
456. பேரிளம்பெண் தான் உமையேயாயினாள் என்பதைச் சிலேடையால் சொல்லுகிறாள். நெடுமாலுடனே வந்தேன்: மிக்க மயக்கங் கொண்டுவந்தேன், திருமாலுடன் பிறந்தேன். மலைவேளைப் பெற்றேன்: என்மீது மன்மதன் மலைய (போரிடப்) பெற்றேன். மலைவேளாகிய முருகனைப் பெற்றேன். அத்தாலும் - அக்காரணங்களால். அவளாகும் - உமாதேவியாவேன். ஏலும் அவட்கு - பொருந்திய அவளுக்கு.
457. உதவியது வாங்கரிதேல் - உதவிய இடப்பாகத்தைத் திரும்ப வாங்கமுடியாதென்றால். மற்றைப் பாகம் - வலது பாகத்தை.
458. இசைத்தாள் - கூறினாள். மன்றல் - மணம் பொருந்திய. குன்றளித்த வல்லி - உமாதேவி. வாட்டேல் - துன்புறுத்தாதே.
-------
வில்லைக் குனித்தான்வெண் ணாவனிழல் வீற்றிருந்து
தொல்லைச் சிலந்திமுடி சூட்டினோன் - தில்லைச்
சிவாவனத்தான் எங்கள் செழுநீர்த் திரளான்
உவாவனத்தான் போந்தான் உலா. 461
-------
நேரிசை வெண்பா
மெய்த்திறலோன் வில்லடியும் மீனவன்கை மாறடியும்
புத்தனெறி கல்லும் பொறுத்தநீ - முத்தமிழோர்
செஞ்சொல் தனைவிரும்புஞ் செம்புநா தாஅடியேன்
புன்சொல் தனையும் பொறு.
திருச்சிற்றம்பலம்
-------
460. எல்லையிலா வில் - மேருவில். குனித்தான் - வளைத்தான், சிவபிரான். சூட்டினோன் - ஆனைக்காவுடையோன்.
461. உவா வனம்: ஆனைக்கா.
வெண்பா. வில்லடி: அருச்சுனனோடு பன்றிக்காகப் போரிட்டபோது பட்டது. மீனவன் - பாண்டியன். மாறு - பிரம்பு; மாணிக்கவாசகருக்காக வைகையாற்றங்கரையில் மண்சுமந்தபோது பிரம்பாலடிபட்டது. புத்தன் எறி கல்: சாக்கிய நாயனார் மலராகப் பாவித்துக் கல்லாலெறிந்தது. செம்புநாதா - சம்புநாதா. புன்சொல் - அற்பமான பாடல். செம்புநாதா, அடியும் அடியும் கல்லும் பொறுத்த நீ, அடியேன் புன்சொல் தனையும் பொறு என்க.
-------
சில குறிப்புக்கள்
கண்ணி 57. 'திருச்சாலக நவமும்' என்பது பாடமாயிருக்கலாம்; ஒன்பது துவாரங் கொண்ட பலகணி என்ற அடிக்குறிப்பைக் காண்க.
72. தில்லையுளாடிக் காட்டிய பின்னிணை யழகன்: பின்னழகுக் கொப்புரையாப் பேரம் பலவாணன்' - பூவணநாதருலா 340; ஆரூர்த் தியாகராசப் பெருமானுக்கும் இங்ஙனமே 'முன்னிலும் பின்னழகர்' என்ற திருநாமமுண்டு; ‘முன்னழகு கண்ட முதன்மயக்கின் மும்மடங்கு, பின்னழகு' ஆரூர் உலா 391.
102. 'வலிய மழபாடி வயித்திய நாதற்குத், தலைவலியாம் நீரேற்றந் தானாம்' என்பது காளமேகப் புலவர் மழபாடியைக் குறித்துப் பாடிய தனிப்பாடல்.
114. பவளம், தாளம், மாணிக்கம், வச்சிரம் என்பன மணிகளின் பெயர்கள்.
144. நல் துப்பு (பவளம்) அணி சாத்ரம் என்றுமாம்.
238 - 9. நீ சமைத்த சிறுசோறு, மணற்சோறு; மண்ணை உண்டவன் திருமால். (கண்ணன் ஆயர்பாடியில் யசோதை முன் மண்ணையுண்டது.) எனவே, மண்ணாலான சோறு திருமாலாகிய விடைக்கு ஏற்றதாகும்.
244. அடிக்குறிப்பு, மூன்றாம் வரியில் ‘மடந்தை' என்பதைப் 'பெதும்பை' எனத் திருத்திக்கொள்க.
262. படை ஐந்து: ' மாயனிவன் என்றுதெளி வெய்தத், தண்டு தனு வாள் பணிலம் நேமி எனும் நாமத், தன்படைக ளானதிரு. ஐம்படை தரித்தே' - கலிங்கத்துப்பரணி 226.
265. 'கொம்பினாள்' என்பது 'கொம்பனாள்' என்றிருக்கலாம்.
274. இங்குப் பெதும்பை கூறுவது போலவே, மதுரைச் சொக்கநாதருலாவில் பேதை தன்னைத் தேரில் ஏற்றுமாறு கூறுவதும் அறியத்தக்கது! 'நீரேற்ற செய்யசடை நித்த னுறையுமணித் தேரேற் றும் என்னை என' - 169.
310. சீராகப் பாடித் திருக்கூத்திலுந் துணையாய் நிற்க: 'நீ கொடுகொட்டி ஆடுங்கால் .... கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ' - கலித்தொகை 1.
318. ' தூயோனைக்' - பிழை; 'தூயோனைச் ' என்று திருத்துக.
352. 'மருத்துளவோன்' என்பது 'மருத்துரவோன்' என்றிருக்கலாம்.
403 - 4. தனக்குப் படைத்துணையாய் வந்த தெரிவை, பகைவரான சிவபிரானோடு போரிடாமல் அவரைப் போற்றுவது கேட்டு, மன்மதன், தான் அவளைத் துணைகேட்ட செய்தியையும் அவரிடம் சொல்லித் தூற்றுவாளோ என்றஞ்சி அலரை (மலரம்பை) அவள் மீது தூற்றினான் என்க.
417. வீண் ஆரவாரமாம்: 'பெண்ணார வாரம் பெரிதன்றே' - திருக்கைலாய ஞானவுலா 169.
449. சந்தாபமென்பது மன்மதன் கணைகளுள் ஒன்றான சூதத்தினை. இதனால் விளைவது சிந்தாகுலம்.
459. உமாதேவியை எண்ணி அஞ்சி, பேரிளம் பெண்ணுக்கு மாலை தரவில்லை. வாட்டேல் என்று மன்மதனிடம் சொல்ல, அவன் அம்பெய்யவில்லை; இவளும் சோர்வடையவில்லை.
-------
அரும்பொருள் அகராதி
எண் - கண்ணி எண்
அக்கினி தவம் செய்தது 33, 446
அகத்தியன் (குறுமுனி) 37;
கடலை உண்டுமிழ்ந்தது 36;
தவஞ் செய்தது 36, 446
அகம்படியார் 167
அகிலாண்ட நாயகி 20, 23
அசுவதரர் கம்பளர்: காதுறைவார் 186;
நல்லிசையின் வாணர் 231-2
அட்சத்திர மாலை 125
அட்ட மூர்த்தம்: எட்டுப் பணை கொண்டெழுந்த தரு 3
அடிமடக்கு 94 - 101
அடைப்பை 147
அத்த நட்சத்திரம் 83
அத்திகிரி வெற்பு 350
அதிரேகை 358
அப்பர் கற்றூண் ஓடப் பாடியது 156
அபரஞ்சி 345
அம்பலவன் 109
அம்பிகை திருநாமங்கள் : அகிலாண்ட நாயகி, வடிவுடைய மங்கை
அம்போதி - கடல் 375
அம்மனை யாடல் 359 - 363
அமுதீச்சுரம் 29
அருகர் 154
அருச்சுனன் வில்லடி : இறுதி. வெண்பா
அலேகம் 200
அவனி முழுதாள்வோன் 448
அழகுக்காரு மொவ்வாதான் 74
அளகாபுரேசன் (குபோன்) 349
அறம் முப்பத்திரண்டு 309
அனங்கன் 317
அனைத்துலகையாள்வான் 69, 453
ஆத்தி முடியோன் 24
ஆதித்தர் பன்னிருவர் 150
ஆதி 311
ஆதிப்பெருஞ் செல்வன் 70,241, 270, 286,342, 402, 451
ஆதியான் 285, 372
ஆதிரை 83
ஆம் - நீர் 24
ஆரம்பூண்ட மை 68, 123-4,338 361, 452
ஆரம் பூண்டார் என்ற பேர் 68
ஆரவாரம் 417
ஆரியப்பட்டர் 163
ஆறெண் சதுர்யுகம் பூசைகொண்டது 111
ஆனந்தத் தாண்டவன் 267
ஆனைக்கருளியது 320
ஆனைக்கா ஆன காரணம் 50 - 51
ஆனைக்கா கயிலை ஒத்தமை 77-81
ஆனை வழிபட்டது. 446
இடபக் கொடி 112, 142; ஏற்றுக்சொடி 169; ஏற்றுத் துவசம் 227
இந்தா 449
இந்திர தீர்த்தம் 32
இந்திரன் தவம் செய்தது 30-32, 446
---------
இபக்கா - ஆனைக்கா 389
இயமன் 152
இரதி 130
இரதிபதி 312
இராசிப் பெயர்கள் 252-3
இராமன் பூசித்தது 61 - 2
இராவணன் 258
இருட்கிரி (நீலகிரி) 352
ஈஞ்சை - கொலை 388
உடன்வருவோர் 148 - 158
உமாமதி 166
உமை 25, 27, 188, 242, 284, 311, 318, 416 ; உமையாள் அம்மை என்றது 454 ; பிறங் கற் குமரி 367 - 8
உரகன் 64
உருத்திரர் 151
உவா வனம் - ஆனைக்கா 461
எத்தர் 450
எமக்கொல்லன் 354
எலி அரசு பெற்றமை 104-5
எள்ளெண்ணெய்போல் உடலுள் உறைகின்றான் 268
என்பு பொன் மலராதல் 64
என்னானைக் கன்று: காப்பு, 75, 204
என்னானைக் காவார் 337
ஒப்பிலாதார் 281; ஒப்பிலான் 333
ஒலி - வாயு 152
ஓங்கார மூர்த்தி 259
ஓணம் 83
கக வாகனம் 149
கங்காசல மரபு - 162
கங்கை 25, 92, 117, 319, 366
கடம்பன் (முருகன்) கொடி 116
கடவுட்டிரு இருப்பு 58
கண்காணியோர் 166
கண்ணாடி காணல் 138
கந்தன் 149 .
கமலபதி புட்கரணி 33-4
கமலாலயத்தான் 95
கர பற்பம் 25
கரிவனம் - ஆனைக்கா 374
கல்லாரப் பூணோன் 441
கவுரி 143 ; வழிபட்டது 446
கழங்காடல் 255 - 265
களவு நூல் 200
கன்னிக் குமாரர் 165
கா - ஆனைக்கா 91
காகோதர ஆபரணன் 267; கங்கணம் 123
காமனாகங் கடிந்த கண்ணுதல் 71
கார்முக ராசிகள் 252 - 253
காலகால விடம் 414
காவிரி 361
காவேரி 37,285; பொன்னி 66, 78, 117, 338; குறுமுனி – கை நீங்கியது 37.
காவை - ஆனைக்கா 65, 361, 408
காளி 154
குடக வெற்பு 360
குழாமகளிர் கூற்று 181 - 198
கேதகை ஒன்றா அணியான் 84
கைக்கோளக் குழாம் 166.
கை வைத்த வீர மழு 137
கொக்கிறகு 230
கொல்லிமலை 302
கோச்செங்கட் சோழர் வரலாறு 40-60
சங்கநிதிக் கோ 150
------------------
சதுமுகவன் (பிரமன்) 275
சதுரியுகம் 111
சந்தத்தில் வந்த கண்ணிகள் 106-109
சந்திர புட்கரணி 35
சந்திரன் வழிபட்டது 35, 446
சம்பந்தர் சமணரைக் கழுவேற்றியது 155
சம்புதரு 9,111; தலம் 7, 42, நதி 78; நாதன் 283,402
சம்புமுனி 16; வழிபட்டது 446
சமீரன் - தென்றல் 329
சரணம் அறைவோர் 161
சவாசம் 134
சாத்தன் 149
சாந்தணிதல் 130-134
சிம்புள் 108
சிலந்திக்கருளியது 460
சிலந்தி வழிபட்டது 44-5, 446
சிவலிங்கம் 22
சிவலோகம் 50
சிவாவனத்தான் 460
சிற்சம்புநாதர் 27
சிறுத்தொண்டர் 223
சின்னங்களின் கூற்று 171-174
சீதரன் 397
சுந்தரர் 164; நாவலர் 70,361; பூரிக்கப் பாடும் புலவர் 156;
ஆற்றிலிட்ட பொன்னை ஆரூர்க் குளத்திலெடுத்தது 362
சுபதேவச் சோழன் 53
சுரபேத வேதத் துரகம் 305
சுவாமி திருநாமங்கள்: அவனி முழு தாள்வோன் அழகுக் காரு மொவ்வாதான்,
அனைத் துலகையாள்வான், ஆதி, ஆதிப் பெருஞ் செல்வன், ஆதியான், என்னானைக்கன்று,
என்னானைக் காவார், ஒப்பிலாதார், செழு நீர்த்திரள், தேவர் குலக்கொழுந்து, பின்னிரக்கஞ் செய்யும் பெருமான், பேரழகுக்காரு மொவ்வாதான், வடிவழகர், வடிவழகுக்காரு மொவ்வாதான்
சுவேத வனம் 94
சூரிய புட்கரணி 33-4
சூரியன் வழிபட்டது 34, 446
செங்கண்ணார் 54, 157; தாணுவுக்
குப் பொற்கோயில் எடுத்தது 55
செத்துப் பிறக்கும் தெய்வங்கள் பெருமாள் 444
செம்புநாதன்: இறுதி வெண்பா
செவ்வந்தி 991
செழுநீர்த் திரள் 26, 194, 196, 226,302, 306,338, 367, 437, 461
சென்னி 52,66
சேரர் - வில்லவர் 158
சோங்கு 142
சோதி நட்சத்திரம் 83
சோமநாதப் பெருமான் 71
சோமாசியான் 87
சோழன் ஆரஞ்சாத்தியது 65-68; கொணர்ந்த நதிச்சோழியர் 160
சோழியர் 160
ஞான தீக்கை 8
ஞான நகர் 64; நிலம் 21; பூமி 8, 17
தத்துவம் முப்பத்தாறு 107
தந்தி புகா வாயில் 56
தமரித்தல் - ஒலித்தல் 388
------------
தலப்பெயர்கள்: அண்ணாமலை (அருணகிரி) 102; ஆரூர் 95, 362; ஆலங்காடு 201-2;
இடைமருது (மருதவனம்) 102; ஏகாம்பரம் 97; ஐயாறு 98; கச்சி ஏகாம்பரம் 202;
காசி 92; காளத்தி 93; குறுக்கை 103; சிராமலை 99; சேது 61;
திருக்கொணாசலபுரம் 201; தில்லை 52, 72, 364, 460; நாகைக்காரோணம் 83;
பழனம் 103; பறியல் 163; பைஞ்ஞீலி (நீலிவனம்) 100;
மதுரை (கூடல்) 155, 156, 220, 445; மழபாடி 102; மறைக்காடு 103-4;
வாட்போக்கி (மாணிக்க மலை) 96, 203; வெண்காடு (சுவேதவனம்) 94
தலவிருட்சங்கள்: அருச்சுனம் (மருது), ஆத்தி 430; இலந்தை 432;
கடம்பு 431; கல்லால் 429; காயா, குருந்து 432; கூவிளை, கொன்றை 431;
தில்லை 432; 429; நாவல் 435; நீலி 430; நெல்லி 434; பராய். 432; பலா 430;
பனை, பாதிரி 432; பாலை 430; புன்கு, புன்னை 431; மகிழ் 429; மாதளை 431; வடம் (ஆல்) 430; வன்னி 431; வேய் (மூங்கில்) 430
திங்களணி சேகரத்தான் 82
திருச்சாலகத்தொளிர் தேவேசன் 75
திருச்சாலக நலம் 57
திருநீறிட்டான் மதில் 77
திருமால் வழிபட்டது 448
திருவாசிகை 182
திருவாடு தண்டு 140
தில்லையுளாடிக் காட்டிய பின்னிணை யழகன் 72
திலோத்தமை 374
துர்க்கை 153
தெய்வங்கள் போல் இறந்து பிறக்கும் எயிறு 210
தெய்வீகம் 11, 81, 302
தென்றிசையில் ஓடாத காற்றேர் 422 - 3
தேராளி 14.
தேவர் குலக்கொழுந்து 70
தேவரடியார் 165
தேவார மூவர் பாங்காக நின்று ஏத்தியது 63 - 4
நட்சத்திரங்கள் 83
நட்சத்திர மாலை 125
நதிச் சோழியர் 160
நந்திக்கினிய பிரான் 365
நவ சந்திரமாலை 125
தேமா நவ தீர்த்தம் 56
நாகேசன் அளித்த பேராரம் 123 4
நாதம் விந்து 1
நாரதர் யாழ் 442
நாலுகவி 101
நாவல்முனி 57 - 58, 138 - 9
நாவலன் - சுந்தரர் 70, 361
நாற்பத்தெண்ணாயிரர் 159 திக்காடையான் 72
நிருத்த மண்டபம் 57
நிருதி திசை 29
நீட்சித் துயர் 39
நீலக்கிரீபன் 367
நீல விண்டீசர் பிரதிட்டை 62
-----------
நீலிவனம் (பைஞ்ஞீலி) 100
நேரிமலை 303
பஞ்ச நதியான் 98
பஞ்சமுகன் 108
படைத்து அளித்து அழித்தல் 5
பத்தியர் - பக்தர் 252
பத்துமரம் மகளிரால் மலருமெனல் 350
பதினெண் மடம் 159
பந்தாடல் 289-297
பரிக்க 65
பறவை பெயர்கள் 224
பாகீரதி 409
பாடை 213
பாண்டியன் (மீனவன்) 158; பிரம்படி: இறுதி வெண்பா
பாரிடத்தான் 92
பிரம கிரியில் காவேரி தோன்றல் 36
பிரம புட்கரணி 17
பிரமன் - அம்புயன் 7; அயன் 22,135, 347; கஞ்சமுனி 19;
நளினமுனி 17; விரிஞ்சன் 149
பின்னிரக்கஞ் செய்திலன் 341-2
பின்னிரக்கஞ் செய்யும் பெருமான் 30, 193
பின்னிரக்கஞ் செய்யும் பெரு விடம் 378
பினாகப் படையான் 263
புங்கவங்கம் - புங்கவம் 150
புட்பவதி 53
புட்பவந்தன் 41, 43
புண்டரிகம் - புலி 401
புத்தன் (சாக்கிய நாயனார்) கல்லடி :
இறுதி வெண்பா
புத்திர சம்பத்து: காப்பு
புன்சொல் (இந்நூல் என்ற குறி ப்பு) 443, இறுதி வெண்பா
பூரை: நிறைந்த 282; போதும் 297
பேரழகுக்காரு மொவ்வாதான் 450
பைஞ்ஞீலியில் எமன் அதிகாரம் பெற்றது 211
போரானைக்கன்று: காப்பு
மக நட்சத்திரம் 83
மடக்கு 90 - 2
மடலேறல் 197, 433
மணியொன்பதும் பசுவுறுப்பு 419
மதனாலயம் 386
மதுரையில் கல்லானைக்குக் கரும் பருத்தியது 220; விறகு விற்றது 445
மந்தரமலை 414
மயில் வடிவர் 396
மன்மதன்: அம்பஞ்சோன் 372; உருவிலி 130; மகரத்துவசன்175
மாணிக்கவாசகர் சம்பு பரியழைத்தது 157
மாதப் பெயர்கள் 84- 9
மாநெட்டை வேழம் 47
மாலியவான் 41, 44,52
முத்தமிழ்: இறுதி வெண்பா
மும்மைச் சொருபம் 2
முன்னிரக்கம் செய்யும் முதல்வனார் 378
மூர்த்திகரித்தல் 24
மூல நட்சத்திரம் 84
மூவர் - தேவாரம் பாடிய மூவர் 120, 442
யானை வனம் 395
ரசிதகிரி 6
-----------
வசுக்கள் 151
வடநாவல் 76
வடநூற் பிரகிருதர் பாடை 213
வடிவழகர் 197
வடிவழகுக் காருமொவ்வாதான் 172, 270
வடிவுடைய மங்கை 115, 279
வண்டற் குழந்தை
வயிராவிப் படை 167
வல்லிசாதகம் 380
வலாரி 96, 348
வன்னியார் 396
வாணன் குடமுழவு 441 - 2
வாத்திய வகை 169-170
விசித வடிவு 6
விட்ணு சக்கரம் பெற்றது 106
விடங்கர் 264
விநாயகர்: காப்பு, 148
விபரம் 345
விரிஞ்சன் 148
விருத்தாசுரன் 31, 355
வில்லவர் 158
விழவறா வீதி வளநாடன் 82
வீரகத்தி 31
வெண்ணாவல் 15, 26, 43, 44, 76, 101, 181,269, 302, 328, 338, 435, 439, 451, 460
வெண்ணாவற்கனி 10, 11
வெள்ளியில் அக்கினி கால் வீழ்பொழுது 293
வேதக் கவுசிகர் 160
வேதவடிவமுறுந்தேர் 400
வேழம் செய்த பூசை 195
வேள் நூல் 246
வேளாளர் – மன்மதனார் 427
வேளார் 245
வைகுண்ட லோகம் 177
வைச்ச - வைத்த 146
br>
வைரவன் 153
--------------------
This file was last updated on 16 Dec. 2020
Feel free to send the corrections to the webmaster.