சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்
நூலாசிரியர் : கவியரசு. கு. நடேசகவுண்டர்
cIkAzi tirunilainAyaki piLLaittamiz
by kOvai naTEca kavunTar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. C.N. Muthukumaraswamy of Coimbatore for providing a soft copy of this work.
We thank Mrs. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in proof-reading this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்
நூலாசிரியர் : கவியரசு. கு. நடேசகவுண்டர்
Source:
சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்
நூலாசிரியர் : கவியரசு. கு. நடேசகவுண்டர்
பதிப்பாசிரியர் : கோ. ந. முத்துக்குமாரசுவாமி
மேனாள் முதல்வர், தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி, பேரூர்.
வெளியீடு : சிரவைக் கௌமார சபை , சிரவணபுரம் கௌமார மடாலயம்,
சின்னவேடம்பட்டி, கோவை - 641049
சிரவையாதீனக் கஜபூசை வெள்ளிவிழா நினைவு வெளியீடு
வெளியீட்டு எண்: 313. வெளியீட்டு நாள்: 22.03.2012
படிகள்: 300 விலை: ரூ. 30.00
அச்சிட்டோர்: சௌமி அச்சகம்
1E, துடியலூர் சாலை, சரவணம்பட்டி, கோவை - 641 035.
நூல் கிடைக்குமிடம்: தலைவர், கௌமார மடாலயம், சின்னவேடம்பட்டி, கோவை - 641 049.
-------------
சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்
நூலாசிரியர் : கவியரசு. கு. நடேசகவுண்டர்
நூலாசிரியர் பற்றி...
இந்நூலாசிரியர் கோவை, கவியரசு கு. நடேச கவுண்டர் அவர்கள் திரு. குமாரசாமிக் கவுண்டர், திருமதி அங்கம்மாள் ஆகிய தம்பதியருக்கு மூத்தமகவாக 1901ஆம் ஆண்டு பங்குனி உத்திர நன்னாளில் பிறந்தார். பங்குனி உத்திரத்தில் பிறந்தமையால் நடேசன் எனப் பெயரிட்டுப் பெற்றோர் மகிழ்ந்தனர்.
இளவயதிலேயே தந்தையை இழந்த இவர் தம் தாய்மாமனின் தையல் நிலையத்தில் காஜாத்தொளை எடுக்கும் சிறுவனாக வாழ்க்கையைத் தொடங்கினார். முற்பிறவிப் புண்ணியம் இருந்தமையால் வேட்டைகாரன்புதூரில் சமாதி கொண்டிருக்கும் தவத்திரு அழுக்குச் சாமிகளின் திருக்கண்ணோக்கம் இவர்பால் விழுந்தது. அழுக்குச்சாமிகள் இவருக்குத் தமிழின்பம், சிவபத்தி, திருமுறைப்பயன் ஆகியவற்றை ஊட்டினார்.
பள்ளபாளையம் வையாபுரிப்பிள்ளை என்னும் சான்றோர், சிறுவன் நடேசனுக்கு இயல்பாகவே இருந்த தமிழறிவினை இலக்கணக்கல்வி அளித்து மேலும் வளர்த்தார். பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தில் தமிழறிஞர்கள் சமயச் சான்றோர்கள் குழுமும் சத்வித்யாசன்மார்க்க சங்கத்தை அறிமுகம் செய்து வைத்தார். கோவை நீதிமன்றத்தில் சிரஸ்தாராகப் பணியாற்றிய பிள்ளை மூலம் வழக்கறிஞர் சிலரிடம் எழுத்தராகப் பணிபுரியும் வாய்ப்பு நடேசனாருக்குக் கிட்டியது. நடேசனார் மதுரைத்தமிழ்ச்சங்கம் நடத்தும் பாலபண்டித தேர்விலும் பின்னர், சென்னைப் பல்கலைக்கழகப் பண்டிதர் தேர்விலும் முதல்வகுப்பில் தேறி நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியரானார்.
சத்வித்யா சன்மார்க்க சங்கத்தின் வழியே சிரவணபுரம் கௌமார மடாலயத்தின் குருமூர்த்தியும் கொங்குக் கச்சியப்பருமாகிய தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் அன்புக்கு உரியரானார். சுவாமிகள் இவருக்கு வித்யாகுருவாக விளங்கினார். நடேசனார் சந்தத்தமிழ்க் கவியாக விளக்கம் பெற்றார். பின் நாளில், கோவைத் தமிழ்ச்சங்கத்தாரால் 'கவியரசு' எனும் பட்டம் அளிக்கப் பெற்றார்.
நகராண்மைப் பள்ளியின் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரியில் ஆசிரியராகவும் முதல்வராகவும் சிலகாலம் பணியாற்றினார். மதுரையாதீனம் தவத்திரு சோமசுந்தரப் பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல-வாதீனம் சீலத்திரு ஞானப்பிரகாச சுவாமிகள் ஆகிய பெரியோருடன் நெருங்கிய நட்புக்குரியராக விளங்கினார்.
1972ஆம் ஆண்டு வைகாசி விசாகத்தன்று அம்பலவாணர் திருவடி அடையப்பெற்றார்.
---------
ஆசியுரை
தவத்திரு குமரகுருபர சுவாமிகள், சிரவையாதீன கர்த்தர்
கவியரசு திருமிகு. கு. நடேச கவுண்டர் ஐயா அவர்கள் தன் சொந்த முயற்சியிலேயே தமிழ் கற்று நல்ல போதாசிரியராக, கவிஞராக, ஆய்வாளராக உயர்ந்து தமிழ்ப்பணி புரிந்த தகைசான்ற சான்றோர் ஆவார். அவர் இறையன்பில் இணையற்றவராகத் தவறாத சிவபூசைச் செல்வராக விளங்கினார். சற்றும் வாய்ப்பற்ற நிலையில் மிகக் கஷ்டப்பட்டு வடமொழியைப் பயின்று அம்மொழியிலும் புலமை பெற்றார். தம்மைப் பொறுத்தவரையில் சைவ சித்தாந்தக் கொள்கையில் அசைக்கமுடியாமல் ஆழங்கால் பட்டிருந்தும், சிவபெருமானின் அடியவர்களாக விளங்கிய அத்துவிதம் முதலிய பிறசமய ஆசிரியர்களின் வடமொழி நூல்களையும் மிகுந்த ஈடுபாட்டோடு மூலத்திற்கு இணையாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கவியரசு அவர்களின் நியாயக் களஞ்சியமும், அப்பர் தேவாரத் திறனாய்வும் தமிழ்ச்சைவ இலக்கிய ஆய்விற்கு மிகச் சிறந்த கருவி நூல்களாகும்.
திரு. நடேசகவுண்டர் ஐயா அவர்கள் நம் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானங்களிடம் தமிழ்நூல்கள் பலவற்றைப் பாடங்கேட்டார். ஆசிரியரின் படைப்புக்கு மாணவர் சிறப்புப்பாயிரம் அளித்தல் என்னும் மரபு பற்றிச் சுவாமிகளின் பல நூல்களுக்குக் கவியரசு சாற்றுக்கவி அளித்துள்ளார். அவ்வாறே திரு. கவுண்டர் ஐயா அவர்களின் படைப்புகளுக்கும் சுவாமிகள் சாற்றுக்கவிகள் அருளியுள்ளார். தம்பால் தமிழ்கற்க வந்த சிலரைச் சுவாமிகள் கவியரசு அவர்களிடம் ஆற்றுப்படுத்தினார் என்பதிலிருந்தே அவரைச் சுவாமிகள் எந்த அளவு மதித்திருந்தார் என்பதை அறியலாம்.
கவியரசு அவர்களின் படைப்புகளைத் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகள், மொழி பெயர்ப்புகள், இசைப் பாடல்கள், ஆய்வு நூல்கள் உரைகள் என வகைப்படுத்தலாம். சிற்றிலக்கியங்களுள் எட்டுப் பிள்ளைத்தமிழ்கள், ஒரு கலம்பகம், இரு தூதுகள், ஒரு தாலாட்டு, ஒரு திருப்பள்ளியெழுச்சி, சில பதிகங்கள் முதலியன அடங்கும்.
அருந்தமிழாகரருக்குத் திருப்பால் வழங்கி வேதநெறியும் மிகுசைவத்துறையும் தழைத்தோங்க செய்த அன்னை சீகாழி திருநிலைநாயகி. அத்தாயைச் சேயாகக் கருதி அமுதத் தமிழால் கொஞ்சுகிறார் நம் கவியரசு ஐயா அவர்கள். இப்பிள்ளைத்தமிழைப் படிக்கும் போது ஆங்காங்கு பெரிய புராணத் தொடர்களும், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் வரிகளும் நினைவில் நிழலாடும்.
அருமையான இந்தத் பிள்ளைத்தமிழ் நூலை குறிப்புரையோடு சிறப்பாகப் பதிப்பித்துத் தந்திருப்பவர் நூலாசிரியர் ஆகிய கவியரசு ஐயா அவர்களின் மைந்தரும் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரியின் மேனாள் முதல்வரும் ஆகிய முனைவர். கோ. ந. முத்துக்குமாரசாமி அவர்கள். பேராசிரியர் அவர்கள் ஆழ்ந்தகன்ற தமிழ்ப் புலமையும் இசைப்புலமையும் வாய்ந்தவர்கள். சைவச்செந்நெறியில் ஆழங்கால்பட்டவர்கள். கேட்டார்ப் பிணிக்கும் சொற்பொழிவாளர். வடமொழி அறிவும் வாய்க்கப்பெற்றவர்கள். இத்தன்மைகள் யாவும் இக்குறிப்புரையில் தெளிவாகப் புலப்படுகின்றன. இறைவியைப் போற்றும் இனிமைமிக்க பிள்ளைத்தமிழ்களின் வரிசையில் இந்த நூலும் ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இறையன்பர்கள் மட்டுமன்றித் தமிழ் இலக்கியச் சுவைஞர்களும் கற்று மகிழவேண்டிய இதை அனைவரும் நேசித்தும் வாசித்தும் மகிழ விழைகிறோம்.
கவியரசு அவர்களின் எட்டுப் பிள்ளைத் தமிழ் நூல்கள் இப்போது பதிப்பாகின்றன. இந்நூல்கள் திருமிகு. நடேசக்கவுண்டர் ஐயா அவர்களின் அருந்தவப் புதல்வி திருமதி. ந. அங்கயற்கண்ணி அவர்களின் புண்ணியப் பொருளுதவியுடன் வெளியிடப்படுகின்றன. போற்றுதலுக்குரிய சிரவையாதீனம் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அவர்களின் செயற்கரிய செயலாகிய கஜபூசையின் வெள்ளிவிழா நினைவு மலர்களாக இவை மலர்வது மிகப் பொருத்தமானது. தமிழ்மொழியின் ஆடி அசலங்களை நன்கு அறிந்துகொள்ள இத்தகைய நூல்களை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும் என விழைகிறோம்.
----------------
அணிந்துரை
முனைவர். ந. இரா. சென்னியப்பனார்,
தலைவர், மணிவாசகர் அருட்பணி மன்றம், பேரூர், கோவை - 10.
புவியரசு பங்கயத்தான் புரந்தரன் போற்றுகின்ற
புவிபாகம் உமைபாகன் புகழ்பாடும் திருமுறையின்
செவிபரசும் இசையுணர்ந்தோன் செழுந்தமிழின் திறமுணர்ந்தோன்
கவியரசு நடேசனார் கழலடியைக் கருத்திருத்துவாம் 1
மங்கையர்க் கரசிமேல் மாண்பான பிள்ளைத்தமிழ்
கங்கையற் குபதேசி கனிமுருகன் பிள்ளைத்தமிழ்
தங்கையன் எட்டிக்குடி தகவான பிள்ளைத்தமிழ்
அங்கையன் பழனியாண்டி அணிமயில் விடுதூது 2
திருநிலை நாயகி திறம்பேசும் பிள்ளைத்தமிழ்
பெருநிலை கந்தசாமி பேர்போற்றும் பிள்ளைத்தமிழ்
ஒருநிலை திருமுடியார் உயர்நெஞ்சு விடுதூது
தருநிலை பேரூரின் தரமான கலம்பகம் 3
பகுதியாய்த் துணைமாலை பாங்கான பிள்ளைத்தமிழ்
தகுதியாய்ப் படைத்தளித்த தண்டமிழின் கவியரசு
தொகுதியாய் வெளிக்கொணரும் தோன்றல் குமரகுருபரர்
மிகுதியாய் இவர்பாதம் மேல்வைத்து வணங்குதுமே 4
சிரவைநகர்க் கந்தசாமி சீரடியைத் துதித்திடுவோன்
அரவையணி பெம்மானின் அடிவணங்கும் பெருந்தவத்தோன்
இரவைநிகர் மலமோட்டும் இனியதமிழ்க் கவியரசு
கரவைமனம் இல்லாத கற்றறிந்த பெரும்புலவன் 5
கோவைநகர்க் கவியரசு கொண்டகொள்கை மாறாதான்
ஆவைநிகர் அழுக்குசாமி அருந்தவத்துச் சாதுசாமி
காவைநிகர் இராமானந்தர்கழலடி கருத்துறுவோன்
ஏவைநிகர் விழியுடைய எம்மன்னை அருள்பெற்றோன் 6
பொன்னிறம் தரும்சைவ வெண்ணீறு மங்காது
பூசுக்கண் மணிகள் அணிக
புலைகொலை மயக்கம் நீர்ஒழிக மன்னுயிரையுன்
போலன்பு கொடுபோற்றுக
மன்னுசிவ பத்தரைப் பாகவதர் தம்மையரன்
மாலென மதிக்கநீர்தூய்
மலரிட்டு வழிபாடு செய்தபின்னே யுணவு
வாயிடுக, தெய்வநாமம்
உன்னிடுக, எப்போதும் உருவவழி பாடுசெயல்
ஒழியற்க தீயர்கும்பல்
; உறலொழிக! இறைவனருள் உனைதேடி வரும்...
(தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பிள்ளைத்தமிழ்)
என்று குருநாதர் கந்தசாமி சுவாமிகள் கூறியதாகக்கவியரசு பாடியுள்ளார்.
1. சைவ வெண்ணீறு மங்காமல் பூசுதல், 2. உருத்திராக்கமணி அணிதல், 3. புலை, கொலை, மது முதலியவற்றை நீக்குதல், 4. மன்னுயிரைத் தன்னுயிர் போல் போற்றல், 5. சிவனடியார்களைச் சிவனாகவே மதித்தும் திருமாலடியார்களைத் திருமாலெனவே மதித்தும் வரவேற்று மலரிட்டு வழிபாடு செய்தபின் உணவு உண்ணுதல். 6. தெய்வ நாமமாகிய மந்திரத்தை மறவாது கணித்தல். 7. சிவபூசை செய்தல், 8. சிற்றினம் சேராதிருத்தல் ஆகியவற்றை மேற்கொண்டால் திருவருள் தேடி வரும் என்று சுவாமிகள் உபதேசித்ததாகக் கூறியுள்ளார். கவியரசு வாழ்க்கையில் இவற்றை முற்றிலுமாகப் பின்பற்றி வாழ்ந்தவராவர்.
கவியரசு தாம் பாடிய நூல்களில் தவத்திரு சாதுசாமி, தவத்திரு கந்தசாமி சுவாமி ஆகியோரை உரியவிடங்களில் புகழ்ந்து பாராட்டியுள்ளார். பழனியாண்டவர் மயில் விடுதூதில் விநாயகர் காப்பை அடுத்து "தஞ்சமென அஞ்சலெனும் சாதுகுருநாதன்” என்று சற்குருநாதர் வணக்கத்தில் போற்றிப் புகழ்ந்துள்ளார். “எமது தாழ்குடியைக் கொத்தடிமை கொண்ட குருசாது” என் நூலினுள்ளும் குறிப்பிட்டுள்ளார். தவத்திரு சாதுசாமிகள் மீது நவமணி மாலை என்று ஒரு தனிப்பனுவலையும் பாடியுள்ளார். மயில் விடுதூதில் வித்யா குரு துதியில் கந்தச்சுவாமி கருணாகரச்சாமி, கந்தச்சுவாமி தமப்பச்சாமி என்று கருத்துரைத்தார். தவத்திரு கந்தசாமி சுவாமி பிள்ளைத்தமிழில், அம்மைக் கவிஞன் எங்கள் குரு அருளார் கவி சற்குணமேரு ஆன கந்தசாமி என்றும் “எழுபிறப்பும் வழியடியேம், இயற்றும் தவத்தால் இங்கெய்தி, இணையிலாடல் புரிந்தருளும் எந்தாய்" என்றும் "குருவே கந்தசாமிக்குணக் குன்றே" என்றும் “சிரவைக் கந்த தேசிகனே" என்றும் “அனுபூதியருள் குருகந்தசாமி” என்றும் பலவாறாகப் பாடியுள்ளார். “செய சுந்தரச்சாமி நினது வழிவாழவே" என்று வாழ்த்தியும் உள்ளார்.
கவியரசு அவர்கள் பாராட்டிப்புகழ்ந்த மற்றொரு துறவியார் தவத்திரு திருமுடி சுவாமிகள் ஆவார். அவர்மீது நெஞ்சு விடுதூது என்ற எளிய பனுவலைப் பாடியுள்ளார். கவியரசு அவர்கள் பாடிய முதல் இலக்கியம் இதுவே.
“பிறவிப் பெருங்கடலை நீந்தலெனும் பெட்பே
உறவிக் குவலயத்தே உண்மைத் - துறவித்தோல்
தோணியாம் சற்குரவன் தோன்றுவது எக்காலம் அவற்
காணிய எந்நாள்"
என்று ஏங்கிய கவியரசுக்கு
“அரிய புலன் ஐந்தும் அவித்தார் குணமாம்
பெரிய மலைமேல் நின்று பெற்றியார் - பெரிய
சடைமுடி சூடிய தவராசர் ஆவார்"
ஆகிய ஞானியைக் கண்டார்.
"திருவடி எம்சென்னிமிசைச் சூட்டியருளும்
திருமுடி என்றேத்திச் சிரமேல் - கரமலர்கள் சூடினார்”
“மாற்ற இயலா மனத்திருளை மாற்றியொளி
ஏற்றும் பதத்தாமரை இணையும் - நோற்ற
தவப்பயனால் கண்டேன்"
என்று திருமுடி சுவாமிகளின் பெருமையினைத் தம் முடிமேல் வைத்துப் பாராட்டியுள்ளார்.
1. தவத்திரு திருமுடி சுவாமிகள், 2. தவத்திரு கந்தசாமி சுவாமிகள், 3. தவத்திரு சாது சுவாமிகள் ஆகிய முப்பெருந்துறவியர்களை மட்டும் பாடியவர் கவியரசு ஆவார்.
“மானிடரைப் பாடாத வண்ணம் பணியடியனேன் இடரைப்
பாட்டை யொழித்து ஏல்"
என்று பேரூர்க் கலம்பகத்தில் பாடியுள்ளார்.
"நாக்கொண்டு மானிடம் பாடேன்” என்றும் "என் நாவில் இன் கவியான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்” என்றும் "மானிடரைப் பாடாமல் மாதவனை ஏத்துமின்” என்றும் ஆழ்வார்கள்கூறியதைப் போல் மானிடம் பாடாத மாக்கவிஞர் கவியரசு.
"வம்பறா வரிவண்டு மணம் நாறமலரும்
மதுமலர் நல் கொன்றையான் அடியலால் பேணா
எம்பிரான் சம்பந்தன்”
போலவும்
“பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்”
என்ற நம்பியாரூரைப் போலவும்
"தோகைமேல் உலவும் கந்தன், சுடர்க் கரத்திருக்கும் வெற்றி
வாகையே தமக்கு வேலை வணங்குவதெமக்கு வேலை"
என்ற சைவ எல்லப்ப நாவலர் போலவும் வாழ்ந்த பெருங்கவிஞர் கவியரசு.
இலக்கு உடையது இலக்கியம், தமிழ் இலக்கியம் பலவகைப்படும். தொல்காப்பியத்தில் அங்கதச் செய்யுள், ஆற்றுப்படை, ஊரொடு தோற்றம் (உலா), கண்படைநிலை, களவழி, குரவைப்பாட்டு, குழவி மருங்கினும் கிழவதாகும், (பிள்ளைத்தமிழ்), கைக்கிளை, கையறுநிலை, கொடிநிலை, துயிலெடை நிலை (பள்ளியெழுச்சி, பரிபாடல் பிசி, புறநிலை வாழ்த்து, பெருமங்கலம், முதுமொழி, விளக்குநிலை, வெறியாட்டு முதலிய இலக்கிய வகைகள் காணப்பெறுகின்றன. அவற்றுள் பிள்ளைத்தமிழ் ஒன்று.
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் புறத்திணை இயலில் வரும் பாடாண்திணை பாடப்பெறும் தலைமகன் பெருமை கூறுவதாகும். “குழவி மருங்கினும் கிழவதாகும்" என்ற நூற்பாவிற்கு, தந்தையரிடத்தன்றி ஒருதிங்களில் குழவியைப் பற்றிக் கடவுள் காக்க என்று கூறுதலானும், பாராட்டுமிடத்துச் செங்கீரையும், தாலும், சப்பாணியும், முத்தமும், வரவுரைத்தலும், அம்புலியும், சிற்றிலும், சிறுதேரும் சிறுபறையும் எனப்பெயரிட்டு வழங்குதலானும்” என்று நச்சினார்க்கினியர் விளக்கம் தந்துள்ளார். பிள்ளைத்தமிழுக்கு அக்காலத்து இக்கருத்தே அடிப்படை ஆதாரமாகும்.
ஆழ்வார்களில் பெரியாழ்வார் கண்ணன்மேல் பாடிய பிள்ளைத் தமிழுக்குரிய பருவ அமைப்பின் பாடல்களே பிள்ளைத்தமிழின் தோற்றமாகும். சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தரைப் பற்றிப் பாடும்போது காப்பு, தாலாட்டு, செங்கீரை, சப்பாணி, வருகை, சிறுதேர், சிற்றில் முதலிய பருவங்கள் அமையப் பாடியுள்ளார். சேக்கிழார் பெருமான் காலத்தவரான கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்கன் பிள்ளைத்தமிழே முதல் பிள்ளைத்தமிழாகும். ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற்பிள்ளைத்தமிழ் எனப் பிள்ளைத்தமிழ் இருவகைப்படும். ஆண்பாற் பிள்ளைத்தமிழ் 1. காப்பு, 2. செங்கீரை, 3. தால், 4. சப்பாணி, 5. முத்தம், 6. வருகை, 7. அம்புலி, 8. சிறுபறை, 9. சிற்றில், 10. சிறுதேர் என்றப் பத்துப் பருவங்களை உடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழ் சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகிய பருவங்களுக்குப் பதிலாக அம்மானை, ஊசல், நீராட்டு ஆகிய பருவங்களைக் கொண்டிருக்கும். முதல் ஏழு பருவங்களும் இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவாக அமைந்திருக்கும். பத்துப் பருவங்களும் கழிநெடில் ஆசிரிய விருத்தங்களால் பருவத்துக்குப் பத்துப்பத்துப் பாடலாக அமைந்திருக்கும். பிற்காலத்தில் தோன்றிய பாட்டியல் இலக்கண நூல்கள் பிள்ளைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்துள்ளன.
சிற்றிலக்கியங்கள் பாடும் புலவர்களை “வித்தாரகவி" என்று கூறுவது மரபு. காப்பியம் படைப்பதைக் காட்டிலும் சிற்றிலக்கியம் படைப்பது கடினமாகும். காப்பியத்தில் நிகழ்வுகளைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். கதைமாந்தர்களுக்கேற்பப் பாடல்களை அமைத்துக் கொள்ளலாம். சிற்றிலக்கியங்களில் அவ்வாறு செய்ய இயலாது. அதுவும் பிள்ளைத்தமிழில் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியே பாட வேண்டும். அம்புலிப் பருவத்தில் சாமம், பேதம், தானம், தண்டம் ஆகிய நான்கு உபாயங்கள் வருமாறு பாடுதல் வேண்டும். ஆதலால் "பிள்ளைத் தமிழுக்கு அம்புலி புலி" என்ற மரபு ஏற்பட்டது.
கவியரசு கு. நடேச கவுண்டர் அவர்கள் பிள்ளைத்தமிழ்களுள் 1. சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ், 2. எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ், 3. தவத்திரு கந்தசாமி சுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியவை ஆண்பாற் பிள்ளைத்தமிழாகும். 1. மங்கையர்க்கரசியார் பிள்ளைத்தமிழ், 2. துணைமாலையம்மை பிள்ளைத்தமிழ், 3. திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் ஆகியவை பெண்பாற்பிள்ளைத்தமிழாகும்.
"சொன்னயமும் பொருள்நயமும் அணிநலமும்
கற்பனையாச் சொல்லா நின்ற
நன்னயமும் தொடைநயமும் வனப்புநய
மும்பிறிது நாட்டா நிற்கும்
எந்நயமும் சிற்சிலவே பிறர்க்கமையும்
நிற்கமைந்த எல்லாம் எண்ணில்
பன்னயமும் உணர்பொன்னுச் சாமிமகி
பா! நினது பாட்டு ஏற்றாமே"
என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பொன்னுச்சாமித் தேவரைப் பாராட்டியுள்ளார்.
1. சொல்நயம், 2. பொருள்நயம், 3. கற்பனை நயம், 4. தொடைநயம், 5. வனப்பு நயம் ஆகியவை புலவர்களுக்குச் சிற்சிலவே அமையும் என்று கூறியுள்ளார். கவியரசு அவர்கள் பாடல்களில் எல்லா நயங்களும் அமைந்திருப்பதைக் காணலாம்.
சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்க் காப்பு முதற்பாடலிலேயே பூமேவு, பாமேவு, தேமேவு, தாமேவு என்று எதுகைத்தொடை அமைந்திருப்பதைக் காணலாம். - "ஞானப்பாமேவு திருமுறைகளெனும் அமுத ஒண்டமிழ்ப் பண்ணவர்கள்” என்று திருமுறை ஆசிரியர்களைப் பாராட்டியுள்ளார்.
"சாரலிற்போய்ச்சிறு, குறவர்மகட்குச் சலாமிடற்கு ஏக்கறுகுமரனை”
என்று மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழிலும்
கூனேறு மதிநுதற் தெய்வக்குறப்பெண்
குறிப்பறிந்து அருகணைந்துன்
குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக்
குறையிரந்தவள் தொண்டைவாய்த்
தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன்
என்று முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழிலும் குமரகுருபர சுவாமிகள் பாடியதை மனதில் வாங்கிக் கொண்ட கவியரசு அவர்கள்
"ஏர்மருவு பைந்தினைக் காவல்புரி மான்மகளின்
இலவுவாய் மொழிய முதினுக்கு
ஏக்கற்று நிற்கின்ற இயல்பின்”
என்று காப்பும் பருவத்தில் பாடியுள்ளார். அருணகிரிநாதர் திருப்புகழை
"சீர்மருவும் அருணகிரிவாய்மலர்ந் தருள்புதிய
தெய்வத்தமிழ்ச் சந்தமார்
செம்பாவை மிகவிழைந்து உளம்உருகு குருமலை செவ்வேள்”
என்று பாராட்டியுள்ளார்.
பாவை என்ற சொல்லைச் செம்பாவை (செம்மையான பாடல்) திருப்பாவை (திருமகள்) ஆண்டாற்பாடிய திருப்பாவை என்ற மூன்று பொருளில் பாடியுள்ளார்.
“பட்டர் பிரான் கோதை” என்ற தொடர்க்குப் பட்டர்பிரான் தவப்பயனாய் உதித்த கோதை என்று பொருள் விளக்கம் செய்து பாடியுள்ளார்.
“வாக்கு முதல்வி மகிழ்நன் அருமறையின்
கொழுந்தின் பொருளறியா
மையினாற் குட்டி யருஞ்சிறையில் வைத்த
மலர்க்கை முருகோன்”
என்று பாடியது படைப்போன், அகந்தையுரைப்ப மறையாதி எழுத்தென்று
"உகந்த பிரணவத்தில் உண்மை - புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்று முனம்
குட்டிச் சிறையிருந்தும் கோமானே”
என்ற கந்தர் கலிவெண்பாப் பகுதியை நினைவூட்டுகின்றது.
பிரமனைக் குட்டிச் சிறையிட்ட செய்தியைத் தாலப்பருவத்திலும்,
"பெரிய பொருள் இஃது என்று உணரான் பிள்ளை எனவே எள்ளிய அப்
பிரமன்திக்குவாய் குருதிபெருகக் கக்குவாயாக்கி
அரிய சிறையில் வைத்து"
என்று நகைச்சுவை தோன்றப் பாடியுள்ளார்.
நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில் கூறப்பெறும் ஆறு படைவீடுகளில் திருவேரகம் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. நச்சினார்க்கினியர் மலை நாட்டு உள்ளதோர்பதி என்று குறித்தார். அருணகிரிநாதர் திருப்புகழில் சோழநாட்டுச் சுவாமிமலையே திருவேரகம் என்று பாடினார். ஆதலால் சுவாமிமலையே திருவேரகம் என்று அனைவரும் பாடினர்.
“இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்யாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன் நவில்கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல.....
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்”
என்பன திருமுருகாற்றுப்படையின் தொடர்கள்.
“இருமூன்று எய்திய இயல்பு பிறழாது முத்தீ
எனும் செல்வம் ஓம்பும் இயல்பார்
இருவரைச் சுட்டுபல் வேறுகுடியார் அகவை
இருபத்து நான்கு இரட்டி
அருநான்கு மறைநெறி பயின்ற பேரந்தணர்கள்
அரிய நறுமலர்கள் தூவி
அன்போடு தொழ உகந்து ஏரகத்தமர்கின்ற ஆறுமுகன்”
என்று கவியரசு திருமுருகாற்றுப்படைத்தொடர்களைப் பொருள் விளக்கம் செய்துள்ளார்.
“அடியேனுக்கும் ஐயன் எம் குருசாது
ஓதுதிருவாறெழுத்தே"
என்று குருநாதர் சாதுசுவாமிகள் ஆறெழுத்து மந்திரம் உபதேசத்ததைக்குறிப்பிட்டுள்ளார்.
சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ், எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ், மங்கையர்க்கரசியார் பிள்ளைத்தமிழ் ஆகிய மூன்றிலும் காப்புப் பருவத்தில் தமிழ்த்தெய்வத்தைப் பாடியுள்ளார். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தான் முதன் முதலில் மனோன்மணியத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். பிள்ளைத்தமிழில் யாரும் தமிழ்த்தாயைப்பாடவில்லை. கவியரசு அவர்கள் பிள்ளைத்தமிழ்த் தலைமக்களைத் தமிழ்த் தெய்வம், காக்குமாறு பாடியுள்ளார்.
1. உலகில் உயிர்கள் தோன்றிய போது உடன் தோன்றிய மொழி.
2. என்றைக்கும் விளங்கித்தோன்றும் மொழி என்று முள தென்றமிழ் - கம்பர்.
3. ஒழுங்கான இலக்கண மரபை உடையமொழி.
4. ஓதுதற்கு எளிதானமொழி.
5. நாகரிக மக்கள் பயிலும் உயர்வான மொழி.
6. உலகமக்களுக்குப் பொதுமறையாகிய திருக்குறளைத் தந்தமொழி.
7. சிவபெருமான், திருமால், சத்தி, கணபதி, முருகன் ஆகியோர் விரும்பும் மொழி.
8. முதலைவாய் மதலைமீட்ட மொழி.
9. கொடிய விடத்தையும் அமுதாக்கும் மொழி - என்று சுவாமிநாதன் பிள்ளைத்தமிழில் தமிழின் பெருமைகளைப் பாராட்டியுள்ளார்.
1. திரிபுரம் எரித்த விரிசடை இறைவர் சங்கப்புலவரோடு இருந்து ஆய்ந்த பெருமையுடையது.
2. அவ்விறைவன் செய்த இறையனார் களவியல் என்ற அகப்பொருள் இலக்கணத்தையுடையது.
3. அரிய பொருள்கள் எல்லாம் அடங்கிய திருக்குறளாகிய வேதத்தையுடையது.
4. மணிவாசகரின் திருவாசகத்தை உடையது.
5.வேதாகமங்களின் பொருளை எளிதில் உணர்த்தும் சைவ சித்தாந்த நூல்களை உடையது.
6. உயர்ந்த தேவர்கள் விரும்பும் பாடல்களைப் பாடும் புலவர்களுக்கு அமுதமாய்ப் பயன் தருவது.
7.பேருலகில் என்றைக்கும் அழியாதது - என்று எட்டிக்குடி முருகன் பிள்ளைத் தமிழில் கவியரசு அவர்கள் தமிழின் பெருமைகளைப்பாராட்டியுள்ளார்.
திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள் என்று இறையனார் களவியலிலும்
"கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ்"
என்று பாடியுள்ளார்.
1. அருமறைகளால் உணர்வரிய திருவடிகள் திருவாரூர் வீதியில் சுந்தரர் செந்தமிழுக்காகப் பரவையார் ஊசல் தீர்க்கப் பலகால் நடந்தன.
2. திருமகளுடன் திருமால் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு அடியரான கணிகண்ணன் பின் சென்றார்.
3. எம்மொழிக்கும் இல்லாத பெருமைபெறு செந்தமிழ் - என்று மங்கையர்க்கரசியார் பிள்ளைத்தமிழில் தமிழின் பெருமைகளைப் பாராட்டியுள்ளார்.
"ஐவகை எனும் பூதம் ஆதியை வருத்து, அதனுள்
அசரசர பேதமான
யாவையும் வகுத்து நல்லறிவையும் வகுத்துமறை
ஆதிநூலையும் வகுத்துச்
சைவமுதலாம் அளவில் சமயமும் வகுத்து..."
என்று தாயுமானசுவாமிகள் பாடியதை,
“ஐவகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள்
அசரசர பேதமான
யாவையும் வகுத்து மறையாதியும் வருத்தனை எம்
ஐயமற்று அவை ஓதவோ"
என்று செங்கீரைப் பருவத்தில் எடுத்தாண்டுள்ளார்.
கவியரசு அவர்கள் திருவாசகத்தில் மிக ஈடுபாடு உடையவர்கள். தாம் பாடிய நூல்களில் மணிவாசகரையும் அவர்தம் திருவாசகத்தையும் மனமுருகப் பாராட்டியுள்ளார்.
"நானார்என் உள்ளமார் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலேன்"
என்பது மணிவாசகர் வாக்கு.
“நானார் என் உள்ளமிதுதானார் முளைத்த சில
ஞானங்களார் என்னையும்
நான் என்று உணர்த்தியவர் யார் உம்பர் தம்பிரான்
ஞாலத்தின் மேலருளினால்
தானாக வந்து தயை செய்திலான் எனில் என்று
தம்மையுணர் பெரியர்"
என்று மணிவாசகரைத் 'தம்மையுணர்' பெரியர் என்று பாராட்டியுள்ளார்.
“அவஞான நெறிகள் நவநவமாக அறைகின்ற
அறிஞர்மலி கலியுலகிலே"
பயனில்லாத வீணான அறிவு வழிகளையே புதிது புதிதாகக் கற்பித்துக் கூறும் அறிஞர்மிக்க கலியுலகம் தற்கால உலகைச் சுட்டியுள்ளார். அவர்கள் கூறுகின்ற தவறான வழிக்கு எம்முடைய உள்ளம் செல்லுமா? பசித்தாலும் சிங்கம் புல்தின்னுமா? என்று உறுதிப்பாட்டைப் பாடியுள்ளார்.
“அவர்கள் மொழி தவறுநெறி எமதுளத்தேறுமா
அரியேறு புல்தின்னுமோ”
தன்மேல் நலியும் பசிபெரிதாயினும் புன்மேயதாகும் புலி (70)
என்ற பழமொழிப்பாடலை விளக்கம் செய்துள்ளார்.
தவநெறியை மேற்கொள்ளாவிட்டாலும் சிறப்பில்லாத சால்பில்லாத வழி செல்வோர்க்காக உழைக்க மாட்டோம். சரியை, கிரியை முதலிய நெறிகளை இகழ மாட்டோம். உன் அடியார் சார்பை எக்காலத்திலும் இகழ மாட்டோம்.
“தவஞான நெறி பயில கிற்றிலேம் ஆயினும்
சால்பிலா நெறியுழையேம்
சரியை கிரியாதி இகழேம் உன் அடியார் அடியர்
சார்பை ஒருகாலும் இகழேம்”
என்று தம் கொள்கைகளைப் பாடிய கவியரசு அவர்கள்.
“உயர்ஆகமத்தின் முடிவாக மெய்கண்டமுனி
உலகுய்ய வாய்மலர்ந்த
சிவஞான போதமுறை அநுபூதி கைவரவொர்
செங்கீரை ஆடியருளே"
என்று முருகப்பெருமானிடம் சிவஞானபோத அநுபூதி வேண்டும் முறை உளத்தைக் கனிவிக்கும் உயர்ஞானச் செய்தியாகும்.
சப்பாணிப் பருவம் "பன்மார்க்க நூலெல்லாம்" எனத் தொடங்கும் பாடலிலும் பயனற்றவைகளை நீக்கி, முப்பொருளை ஆராய்ந்து, தீய நெறி நீங்கி அறவழி நின்று புண்ணிய வழியில் அழிவில்லாத செல்வத்தை ஈட்டி, தூயதொண்டு நிலை கைவந்து இரண்டன்ற சுத்த அத்துவிதநிலையைக் கொண்ட சன்மார்க்க வழியை மேற்கொண்ட தொண்டர்க்குக் குலதெய்வமே (38) என்றுதம் கொள்கைப்பிடிப்பை ஆழமாகக் காட்டியுள்ளார்.
“பதியும் பசுபாசமும் உணர்ந்தோர் பகரும் ஞானக் கலைமுழங்கப்
பழுதிலடியார் சிவபூசை பயிலும் மணிநாமுழங்க என்றும்
புதிய தமிழின் துறைமுழங்கப் புலவர்புகழ் எங்கணும் முழங்க...
முழக்கியருள்க சிறுபறையே”
என்பன சைவசித்தாந்தத்தின் பாலும் சிவபூசையின் பாலும் தமிழின்பாலும் கவியரசு அவர்கள் கொண்டிருந்த ஆராக்காதலுக் காதாரமாகும்.
தமிழின் இனிமை சபைகளெல்லாம்
சாந்தநிலைமை சிந்தையெல்லாம் (94)
என்ற தொடர்கள் எத்தகைய ஆழமான பொருளுடையன.
“காதலாகிக் கசிந்து கண்ணீ ர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே"
என்ற திருஞானசம்பந்தர் பாடலுக்குப் பொருள் கூறுமுறையில் எட்டிக்குடிமுருகன் பிள்ளைத்தமிழ்க்காப்புப்பருவத்தில்
“வேத நான்கின் மெய்ப்பொருளாய்
வீட்டின் நெறியை விளக்குவதாய்
விளம்பு மறைகட்கு அரசாகி
விண்ணும் மண்ணும் எண்ணுவதாய்க்
காத லாகி யோதுபவர்
கடல்நேர் பிறவிகடத்துவதாய்க்
கடையேன் உளத்தும் பயில்கின்ற
கடவுள் எழுத்து ஐந்து" 6
என்று பாடியுள்ளார்.
“திருத்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென்று ஓதும் குவலயமே" 5
என்பது அருணகிரியாரின் கந்தரலங்காரப் பாடல்.
"திருந்தப் புவனங்கள் ஈன்றவள்தன்
திருமா முலையுண்டு அகங் குளிர்ந்து
திரைவாரி திசேர் சரவணத்தில்
செவ்விப் பூந்தொட்டிலில் அமர்ந்து
மருந்திலினிய அறுவர்முலை
மாந்த விரும்பி வாரியழ
வானோர் பகையாம் சூரரழ
மாயம் பெருத்த குன்றமழ
வானம் விரும்பிப் படைத்த மாயையழ
விம்மிவிம்மியழுங் குழந்தாய்”
என்று தாலப் பருவத்தில் அலங்காரப் பாடலை அலங்காரம் செய்துள்ளார்.
பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் (268)
என்று பவணந்தி முனிவர் செய்யுளுக்குச் செம்மையான இலக்கணத்தை இயற்றியுள்ளார்.
இன்று பாடல் இயற்றுவோர் பாடல்களில் இத்தகைய இயல்புகளைக் காண்பது அரிது.
“செஞ்சொல் ஒன்றும் இல்லாமல்
சீரும் கட்டும் சேராமல்
சிறந்த பொருளும் பயவாமல்
செவ்வே சந்தி பொருந்தாமல்
நெஞ்சம் கவரும் அணியின்றி
நிறைந்த புலமை இல்லோர்கள்
நேர்ந்த வாறு கீறும்பா
நிகர யாம்செய் சிற்றில்லம்"
என்று சிற்றில் பருவத்தில் செம்மையான சொற்களில்லாமல் சீரும் தளையும் சேராமல், சிறந்த பொருளும் இல்லாமல், இலக்கணச் சந்திகள் பொருந்தாமல் உள்ளம்கவரும் செய்யுட்குரிய அணிகள் இல்லாமல் புலமையில்லாதவர்கள் பாடும் பாடல்கள் போன்ற எம் சிற்றில் என்று சிறுமியர்கள் கூறுவதாக அமைந்துள்ள கற்பனைத்திறம் சுவைத்து மகிழத்தக்கது.
தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பிள்ளைத்தமிழில் குருபக்தி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது,
காப்புப் பருவத்தில்
“மும்மைப் புனல்சேர் கடல்பருகி
மூன்று தமிழின் மழைபொழிந்து
முகில்தோய் விந்த மலையினொடு
மோவா வினையின் மலையடக்கிச்
செம்மை நெறிக்குத் துணையாகித்
தீயநெறியைத் தூர்த்தொழித்துத்
திகழும் குறுமா முனியே! சீர்
சேர்இ ராமா நந்தா"
என்ற பாடலில் அகத்திய பெருமைகளைக் கூறி அகத்தியரே இராமானந்த குருவாக வந்து விளங்குவதாகப் பாடியுள்ளார்.
ஊழியூழி உயர் கயிலை ஓங்கல் (தாலப்பருவம் 4) என்ற பாடலில் ஊழிதோறூழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலை என்ற தொடருக்குப் பொருள் கண்டுள்ளார்.
"ஞான அருணகிரி நாதன்
நவின்ற சந்தத்திருப்புகழ்ப்பாச்
செவியா ரமுதத் தினுக் கேற்பச்
சீராயத் தாளமிடவென....
குருவே! கந்தசாமி! குணக்
குன்றே கொட்டுக! சப்பாணி" 3
என்று அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்களைப் புகழ்ந்து அப்பாடலின் சந்தத்திற்கேற்பத் தாளம் போடுதல் போலச் சப்பாணி கொட்டுக என்று பாடியுள்ளார்.
"காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற
கண்ணில்லாக் குழவியைப் போல்
கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு...”
என்றதாயுமானசுவாமிபாடல் தொடரை மேகம்
"காரா ணவமாம் இருட் சிறையில்
கண்ணில் லாமல் கிடந்தோமைக்
கலந்து மாயா உலகத்தைக்
காணக் கண்டுசெய்தாய்"
என்று வருகைப் பருவத்தில் பாடியுள்ளார்.
"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தென” என்ற சிவஞானபோதத் தொடருக்கு,
“ஐந்து பொலாத புலச்சிறுவேடர்
அலைப்பினுள் அலையாமே" (சிறுதேர் 4)
என்று பொருள் விளக்கம் பாடலில் புலப்படப்பாடியுள்ளார்.
மங்கையர்க்கரசியார் பிள்ளைத்தமிழ் முதல் பாடலில் மங்கையர்க்கரசியார் திருஞானசம்பந்தரை மதுரைக்கழைத்த காரணத்தைக் கூறித் திருஞானசம்பந்தரை ஞானசம்பந்த சிவசூரியன் என்று பாடியுள்ளார்.
“பொங்குதிரு வெண்ணீற்றின் ஒளிபரவ, அமணவிருள்
பொன்ற அடியவர்கள் இதயப்
போதவிழ ஞானசம்பந்த சிவசூரியன்
புகழ்மதுரை புகவழைத்த
மங்கையர்க்கரசியை வளவர்கோன் பாவையை
வரிவளைக்கைம்மானியை
வழுதியர்கள் குடிதழைய வந்த அருளமுதத்தை
வாழ்த்தும் என்தமிழ் தழையவே!”
என்ற பாடலில் 1. திருநீற்றின் வெண்மையான ஒளிபரவவும், 2. அமணராகிய இருள் கெடவும், 3. அடியவர் உள்ளத்தாமரை விரியவும் மதுரைக்குத் திருஞானசம்பந்த சிவ சூரியனை அழைத்தவர் மங்கையர்க்கரசியார் என்று பாடியதில் தேவாரத்தில் வரும் 1. மங்கையர்க்கரசி, 2. வளவர்கோன்பாவை 3. வரிவளைக் கைம்மானி ஆகிய தொடர்களைக் கொண்டே பாட்டுடைத் தலைவியைப் பாராட்டிய பாங்கு வியந்து போற்றுதற்குரியது. பாண்டி மாதேவி பங்கயச் செல்வி என்று பின் வரும் பாடல்களிலும் தேவாரத் தொடர்களைக் கொண்டே பாராட்டியுள்ளார்.
“மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு” என்ற திருநீற்றுப் பதிகத்தில் கூறப்பெறும் திருநீற்றின் பெருமைகள் முழுவதையும்
"பூசமிக இனியதாய்ப் புண்ணியம் தருவதாய்ப்
பொய்யாத மறைபுகழ்வதாய்ப்
போதமிகு விப்பதாய் ஏதம் அகல்விப்பதாய்ப்
புத்தி முத்திக்கு வித்தாய்
நேசமிகு விப்பதாய் ஆசையை அறுப்பதாய்
நெஞ்சவிருள் நீக்கிரவியாய்
நெற்றிக் கொரணியாய் திருவாலவாய் முதல்வன்
நீற்றின் ஒளிபோற்றல் செய்வாம்”
என்று தொகுத்து விளக்கம் செய்துள்ளார். அதே பாடலில்
“தேசுமிகு முத்தமும் சந்தனத் தேய்வையும்
திருநீறு மார்பணிந்தே
சிவனடிகள் முடிமீது மலர்வித்தகொடி"
என்று பிள்ளைத்தமிழ்த்தலைவியைக் குறிப்பிட்டுள்ளார்.
"முத்தின்தாழ் வடமும் சந்தனக் குழம்பும்
நீறுந்தன் மார்பினில் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டி மாதேவி"
என்ற திருஞானசம்பந்தர்வாக்கே அவ்வாறு பாட அடிப்படை ஆயிற்று. பிள்ளைத்தமிழில் பலவிடங்களில் பாண்டிநாட்டில் சைவம் தழைக்கச் செய்தது, பாண்டியனுக்கு இனிமை தந்தது, வெண்ணீற்றொளி பரப்பியது, அங்கயற்கண்ணம்மைத் திருத்தொண்டு செய்தது அடியார்களிடத்தில் அன்பு கொண்டது முதலியவற்றை விரிவாகப் பாடியுள்ளார்.
அகரம் ஆயிரம் அந்தணர்க் கியிலென்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கிலென்
பகரும் ஞானி பகலுண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந் தானே (1860)
என்பது திருமந்திரப்பாடல்.
“அகரமொரு நூறாயிரம் செய்து வேள்விபயில்
அந்தணர்க்கு ஈவது எனினும்
ஆலயம் சிகரம் உளவாக ஒருநூறா
யிரம்செய்வது எனினும் அரனார்
நிகரறுபொன் அடிமலர்கள் அகமலரில் வைத்தேத்தும்
நியதிதவறாத தொண்டர்
நீள்பசிக்கு ஒருவேளை உணவு தருவதனுக்கு
நிகரில்லை என்பதோர்ந்து"
அகரம் - அக்கிரகிருகம், இன்றைய வழக்கில் அக்கிரகாரம்.
1. அந்தணர்க்கு ஆயிரக்கணக்கான உயர்ந்த வீடுகளைத் தருவதைக்காட்டிலும், 2. கோபுரத்துடன் கூடிய கோயில்கள் ஆயிரக்கணக்கில் அமைப்பதைக்காட்டிலும் சிவஞானிக்குப்பகல் உணவு அளிப்பது உயர்ந்த அறிச்செயல் என்பது கருத்து பகரும் ஞானி என்று திருமூலர் குறிப்பிட்டார். இறைவன் திருவடித்தாமரைகளை உள்ளமாகிய தாமரை மலரில் வைத்துப் போற்றும் நியதி தவறாத தொண்டர் என்று ஞானிக்கு விளக்கம் தந்துள்ளார்.
நீராடற் பருவத்தில் “கடம் பொழிகவுட் சிறு விழிக்கும்” எனத் தொடங்கும் பாடலில் வையை நதிக்கும் சிவபெருமானுக்கும் சிலேடையாகவும் “மாமுகமார்மலை” எனத் தொடங்கும் பாடலில் வையை நதிக்கும் உமாதேவிக்கும் சிலேடையாகவும் பாடிய நிறம் கவியரசின் பாவமைக்கும் கருத்தாற்றலைக்கவினுறக்காட்டுகின்றது.
"புகலிவரு தமிழ்விரகர் புகழ்மதுரை நகரிறைவி
பொன்னூசல் ஆடியருளே"
என்ற மகுடம் பிள்ளைத்தமிழுக்கு மகுடமாய் அமைந்துள்ளது.
திருச்சுழியல் என்ற தலத்தில் வீற்றிருந்து அருள்புரியும் அருள்தரு துணைமாலையம்மையின் மீது பாடப்பெற்றது துணைமாலையம்மைப் பிள்ளைத்தமிழாகும். சிறந்த பெருங்கவிஞர் ஒருவர் முன்பே 1. காப்புப் பருவம், 2. செங்கீரைப் பருவம், 3. தாலப்பருவம், 4. சப்பாணிப்பருவம், 5. முத்தப்பருவம் ஆகிய பருவங்களை முழுவதுமாய் வருகைப் பருவத்தில் முதல் ஆறுபாடல்களுமாய்ப் பாடியிருந்தார். அவை சொற்செறிவும் பொருட்செறிவும் உடையன. திருக்கோயில் அன்பர்களும் அறங்காவலரும், நிர்வாகத்தினரும் வேண்ட எஞ்சிய பகுதிகளைக் கவியரசு அவர்கள் பாடி நிறைவு செய்துள்ளார்.
1. கயிலையில் மலைமகளாய், 2. காசியில் விசாலாட்சியாய், 3. கன்னியாகுமரியிற் கன்னிபகவதியாய், 4. தில்லையில் சிவகாமியாய், 5. காஞ்சியில் காமாட்சியாய், 6. திருத்தோணிபுரத்தில் பெரிய நாயகியாய், 7. அவிநாசியில் கருணாம்பிகையாய், 8. பேரூரில் மரகதமாய் எங்கெங்கும் இறைவனுக்கேற்ற முறையில் மணியின் ஒளிபோல் அமர்ந்த துணை மாலையம்மையே வந்தருள்க என்று வருகைப் பருவத்தில் பாடியுள்ளார்.
இன்று ஒலி நாடாக்களில் பலதலங்களைக் குறிப்பிட்டு அங்குள்ள அம்மையின் பெயர்களைக் குறித்துப் பாடும் இசைப் பாடல்கள் பல வந்துள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பிள்ளைத்தமிழில் அவ்வாறு பாடிய கவியரசு அவர்களின் கவித்திறத்தை என்னென்பது? திருக்கயிலையில் தொடங்கிச் பேரூரில் நிறைவு செய்துள்ளார்.
"முதலை துய்த்தசேய் நாவலூரன்
பணியில் நமனுய்க்க வருபுக் கொளியின்
அடியேங்கள் பணிகொள் கருணாம்பிகை”
என்று கருணாம்பிகைமேல் உள்ள பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
“இறைவனமர் பரிசினுக்கேற்ற படியாய்
மணியின் ஒளிபோல அமர் துணைாமாலை அம்மையே”
என்று பொன்னூசல் பருவத்திலும் தாதான்மியத்தைப் பாடியுள்ளார்.
“எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையும்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே”
மற்றும் என்பது திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்.
“எங்கேனும் யாதாய்ப் பிறந்திடினும்
அடியார்கள் இடருற்ற போதிரங்கி
இங்கே எனச்சொல்லி முன் நிற்பன்
இறைவன் எனும் எங்கள் தமிழ்விரகன் மொழி” (54)
என்று அப்பாடலைப் பாராட்டிப் பாடியுள்ளார்.
வருகைப்பருவம், அடுத்த பாடலில்
“பிரமாபுரத்துவரும் ஒருசிறுவன் அமுதுண்டு
பெருநெறித்தமிழ் செய்வித்தாய்”
என்றும் பாடியுள்ளார்.
அம்புலிப்பருவத்தில் முதல்பாடலில் திருநாவுக்கரசருக்கும் சந்திரனுக்கும் சிலேடையாகவும் இரண்டாம் பாடலில் திருஞானசம்பந்தருக்கும் சந்திரனுக்கும் சிலேடையாகவும் பாடிய திறம், சொல்லாட்சி முதலியன அம்புலிப் பருவம் கவியரசு அவர்களுக்கு எளிமையாக வருவதைக்காணலாம்.
1.குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
2. கவிராச பண்டிதர் மொழிபெயர்த்த சவுந்தரிய லகரி
3.அபிராம பட்டர் பாடிய அபிராமியந்தாதி
4. போரூர்ச் சிதம்பர சுவாமிகள் பாடிய மீனாட்சியம்மை கலிவெண்பா
ஆகிய அருட்பாடல்களைப் பாடுவோர் மனதில் நினைந்த வரத்தை உதவுகின்ற திருச்சுழியல் அன்னையே பொன்னூசல் ஆடியருளே என்று அருட் பாடல்களைப் பாடிய பாவலர்கள் பாங்கினைப்பாராட்டியுள்ளார்.
1. என் உளமேவும் தமிழ் விரகன் உலகுய்யமறை பாடினான்.
2. உன் நாவாயமுதுண்ட காளமேகப்புலவர் கவிமழை மொழிந்தார். இவற்றை அடியேன் அறிவேன், பேசுகின்ற சொற்கள் எல்லாம் உன்னுடைய திருவருளே என்று உயர்ந்த நூல்கள் கூறும், ஆதலால்,
“எனது கவியும்
புண்ணியம் பெற உன் திருச்செவிமடுத்து அம்மை
பொன்னூசல் ஆடியருளே”
என்று நிறைவு செய்துள்ளது இப்பிள்ளைத்தமிழின் தனிச் சிறப்பாகும்.
திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்த் தொடக்கப் பாடலே
"திருமார்பன் முதலான தேவர்கள் வணங்கும்பர
சிவனே மகாதேவன்”
என்று தொடங்குகிறது.
"திருமார்பன் முதலான தேவர்க்கெலாம் மறையோன் சிவனே ஆரெமன்று
ஒருவாய்மை மறைகரைந்தது உண்மை "
என்று பேரூர்ப் புராணத்தில் கச்சியப்ப முனிவர் பாடியதை எடுத்தாண்டு விளக்கஞ் செய்துள்ளார்.
"பூவார மலிபொய்கை யின்கரையின் நின்றழுதே
பூசுர இளங்குழந்தைப்
போனக மெனச் சகல கலைஞான அமுதினைப்
பொற்கிண்ண மோடளித்துத்
தேவாரம் அக்குழவி யோத மணவாளனொடு
திகழ்தோடுடைச் செவியின் வாய்த்
தேக்கியருள் உலகன்னை”
என்பதில் நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் பெருமான், சிவப்பிரகாசர் ஆகியோர் பாடியவற்றைச் சுருக்கித்தந்து பாடிய பான்மை பா வடிக்கும் மேன்மையைக் காட்டுகின்றது.
“ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே" (1178)
என்று திருமூலர்கூறினார்.
எம்பெருமான் இமவான்மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்
தமையன் எம் ஐயன் (207)
என்று மணிவாசகர் பாடினார்.
உலகத்தைப் படைக்கச்சிவமும் சத்தியுமான போது சத்திக்குச் சிவம் கணவனாகின்றான். சத்தி தத்துவத்திலிருந்து சதாசிவம் தோன்றுவதால் மகன் ஆகின்றான். சிவதத்துவத்திலிருந்து சத்தி தோன்றுவதால் தகப்பன் ஆகின்றான். முதலில் தோன்றியது சிவதத்துவம், பின்தோன்றுவது சத்தி தத்துவம் ஆதலால் சத்திக்குச் சிவம் தமையன் ஆகின்றான் இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு கவியரசு அவர்கள்
ஆளுமறை-யோலமிட்டு இன்னம் அறியாதவர்க்கு
அன்னை மகள் மனை தமக்கை
ஆகமமாகி உயிராகி (6)
என்று காப்புப் பருவத்தில் பாடியுள்ளார். குமரகுருபரர் அபிராமபட்டர் ஆகியோரும் சத்தியைச் சிவத்திற்கு தாயாகவும், தமக்கையாகவும், மனைவியாகவும் மகளாகவும் பாடியுள்ளனர்.
பேராசியர் திருக்கோவையார் உரையில் தத்துவமுறையில் விளக்கம் செய்துள்ளார்.
செங்கீரைப்பருவத்தில் செங்கீரை ஆடுக என்பதற்குப் பலவாறாகப் பொருள் கூறுவது உண்டு. செம்மை+நீர் - எனக் கொண்டு செம்மையானசொல் என்பதில் எதுகை மோனை எதுவும் இல்லாத தொடையைச் செந்தொடை என்பதைப் போல எவ்விதப் பொருளும் பலவாத சொல்லைச் செங்கீரை என்பது மங்கல வழக்கு எனக் கொள்வது ஒருமுறை. செங்கீரைச் செடிபோலத் தலையை இருபுறமும் அசைத்தாடுதல் செங்கீரை ஆடுதல் எனப் பொருள் கொள்வது மற்றொரு முறை.
1. அடியராகிய எம்மை தாய் வயிற்றில் பிறக்கச் செய்வாயா?
2. இனிவரும் பிறப்புக்களில் துன்பங்களைத் தந்து தண்டனை தருவாயா?
3. மயக்கும் ஐம்பொறிகள் வழியிலே உழலச் செய்வாயா?
4. பெண், பொன், மண் என்ற மூவாசையில் துன்புறுத்துவாயா?
5. உன்திருவடி பரவும் அன்பில்லாதவர் கூட்டத்தில் சேர்ந்து உன்னைமறக்கச் செய்வாயா? –
என்ற வினாக்களுக்குப்பதில் கூறுவாய் என்றபோது இல்லை என்று தலையசைத்துச் செங்கீரை ஆடுக என்று கேட்பது கவியரசு அவர்களின் மிகச் சிறந்த கற்பனையாகும்.
"நீதியை புரிந்துமொழிக எனும் வினாவுக்கு எதிர்
நிகழ்த்தி மறைவிடை விடுதல் போல்
செங்கீரை ஆடியருளே"
என்பது பாடற் பகுதி.
சீவகசிந்தாமணி குணமாலையார் இலம்பாகத்தில் சுண்ணப்பொடியில் வரும் போட்டியில் குணமாலையார், சுரமஞ்சரியார் ஆகியோர் சுண்ணப்பொடிகளைத் தூவி விட்டான் சீவகன். சுரமஞ்சரியார் சுண்ணப் பொடிகள் தீயன ஆகலின் வண்டுகள் உண்ணவில்லை. குணமாலையார்சுண்ணம் நல்லன ஆகலின் வண்டுகள் விரும்பி உண்டன என்ற செய்தி வருகிறது.
"தூவின் நிலமேல் விடாது வரிவண்டுகள்
சுழன்று துய்க்கும் சுண்ணம்”
என்று கவியரசு அவர்கள் நீராடற் பருவத்தில் பாடியுள்ளார். அதே பாடலில் "துகில் காம்பு நேத்திரங்கள்” என்று பாடியுள்ளார். “காம்பினொடு நேத்திரங்கள் தந்தருள வேண்டும்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடியதில் காம்பு நேத்திரங்கள் பட்டு வகையாகும். திருவாசகத்தில் "காம்பணிமின் உலக்கை எல்லாம்” என்று வருகின்றது. ஆழ்வார் பாடல்களிலும் காம்பு நேத்திரம் பட்டுவகை என்று வருகின்றது. வழக்கற்ற பழைய சொற்களைக் கச்சியப்ப முனிவர் மீண்டும் பாடல்களில் வைத்துப் பாடியுள்ளார். கவியரசு அவர்களும் வழக்கற்ற காம்பு நேத்திரம் என்ற சொற்களைப் பாடலில் வைத்துப் பாடியுள்ளார். சொல்நயம் கவிநயம், கற்பனைநயம், சந்தக்குழிப்பு, முன்னோர் மொழிபொருளைப் பொன்னே போல் போற்றல் ஆகியன நிறைந்த கலைப் பெட்டகம் கவியரசு அவர்களின் பிள்ளைத்தமிழ் நூல்கள்.
------------
நூலறிமுகம்
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ் என்றும பெண்பாற் பிள்ளைத்தமிழ் என்றும் இருவகைப்படும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, என்பன இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுப் பருவங்கள். சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்பன ஆண்பாற்பிள்ளைத் தமிழுக்குச் சிறப்பான பருவங்கள்; அவ்வாறே, அம்மானை, ஊசல், நீராடல் என்பன பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கே உரியன.
பிறிதோரிடத்தில் இந்நூலாசிரியர் கவியரசு அவர்கள் தமக்குத் திருநிலைநாயகியிடத்தில் அமைந்திருக்கும் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். "திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கும் அடியேனுக்கும் உள்ள இயைபை நினைக்குந்தோறும் என் உள்ளம் வியப்பும் மகிழ்வும் எய்திப் பூரிக்கின்றது. என் ஆன்ம நாயகர் திருநிலைநாயகி சமேத பிரம்மபுரீசுவரர். அடியேன் பூசைத் தொண்டினை ஏற்றுக் கொள்ளுங்காலை தீட்சாகுருமூர்த்தி திருமுறையிற் கயிறு சாத்தித் திருவுள்ளம் பார்த்த பொழுத, "கரம்முனம் மலராற் புனன்மலர் தூவியே கலந்தேத்துமின்” என்று தொடங்கும் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பிரமபுரத் திருப்பாட்டுக் கிடைத்தது. அதனால் பிரமபுரீசுவரரே என் ஆன்மநாயகர் ஆனார்.” அதனால் பிரம்மபுரீசுவரருடன் திருநிலைநாயகியும் நாள்தோறும் வழிபடற்குரியராயினார்.
1970 கவியரசு அவர்கள் தம் நண்பர்களாகிய சைவத்திருவாளர்கள் சென்னியப்ப கவுண்டர், சி.சு. கண்ணாயிரம், கருப்புசாமிக் கவுண்டர் ஆகிய சிவபூசாதுரந்தரர்களுடன் தலயாத்திரை மேற்கொண்டார். சீகாழி வந்தபோது, திரு. சி.சு. கண்ணாயிரம் அவர்கள் திருநிலை நாயகியம்மன் மீது பிள்ளைத்தமிழ் நூல் இல்லை, அக்குறையைக் கவியரசு அவர்கள் தீர்க்கவேண்டும் எனப் பணித்தார்கள். அவ்வேண்டுகோளின்படி பாடப்பட்டது இந்நூல். இந்த வரலாறு பாயிரம் 3ஆவது செய்யுளில் அமைந்துள்ளது.
கவியரசு அவர்கள் தம் வாழ்நாளின் பிற்காலத்தில் பாடிய இந்நூல் அச்சேறவில்லை. கையெழுத்தில் இருந்த நோட்டுப் புத்தகம் சில இடங்களில் கறையானால் அரிப்புண்டிருந்தது. தெளிவாகத்தெரியவராத பகுதிகள் புள்ளிகளிடப்பட்டுள்ளன. பொதுவாகக் கடவுளரைப் பாட்டுடைத் தெய்வமாகப் பாடப்பெறும் பிள்ளைத்தமிழ்களில் பருவத்துக்குப் பத்துப் பாடல்கள் இருக்கும். இந்தப் பிள்ளைத் தமிழில் வருகைப் பருவம் பன்னிரு செய்யுள்களால் அமைந்துள்ளது.
பதிப்புரை
தவத்திரு. கஜபூசைச் சுந்தரசுவாமிகள் தமிழாய்வு மையத்தின் சார்பில் 08-6-2011 அன்று தெய்வத்திரு. ப. சு. சின்னசாமிக்கவுண்டர் அவர்களின் நினைவு அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு விழாவில் "கவியரசு அவர்களின் முருக இலக்கியங்கள்” எனும் தலைப்பில் சிரவை ஆதீனகர்த்தர் தவத்திரு குமரகுருபர சுவாமிகளின் முன்னிலையில் உரையாற்றும் பேறு கிட்டியது. அவ்வுரையின்போது கவியரசு அவர்களுக்கு சிரவை ஆதீனம் இரண்டாம் குருமகா சந்நிதானங்களிடம் இருந்த கேண்மை இடம் பெற்றது.
நன்றியுரை வழங்கிய ஆதீனக்கவிஞர் திரு. ப. வெ. நாகராஜன் அவர்கள் கவியரசுவின் படைப்புக்களெல்லாவற்றையும் திரட்டி வெளியிட வேண்டும் என்ற தம் விழைவினை வெளிப்படுத்தினார். வாழ்த்துரை வழங்கிய ஆதீனகர்த்தர், புலவரின் விழைவினைச் செயல்படுத்தத் திருவுளம் பற்றி ஆணை பிறப்பித்தார்கள். சந்நிதானங்களின் திருவாணையின் வண்ணம் இந்நூல்கள் வெளிவருகின்றன.
முதலில் அனைத்து நூல்களையும் திரட்டி ஒரே புத்தகமாக வெளியிடும் எண்ணமிருந்தது. புத்தகம் பெரிதாகவும் கனமாகவும் இருந்தால் படிப்பதற்குத் தோதாக இராது. எனவே தனித்தனி நூலாக வெளிவருகின்றது. இந்த வரிசையில்,
1. பழநியாண்டவர் மயில்விடுதூது.
2. தடாகம் திருமுடிசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
3. திருப்பேரூர்க் கலம்பகம்.
4. எட்டிகுடி முருகன் பிள்ளைத்தமிழ்.
5. திருவேரகம் சாமிநாதன் பிள்ளைத்தமிழ்
6. மங்கையர்க்கரசியார் பிள்ளைத்தமிழ்
7. திருச்சுழியல் துணைமாலையம்மன் பிள்ளைத்தமிழ்.
8. சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்.
9. தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் வெளி வருகின்றன.
கவியரசு அவர்களின் நூற்றாண்டு 2002ல் நிறைவுற்றது. அவருடைய அன்பிற்குரிய தலைமை மாணாக்கரும் என்னுடைய பெருமதிப்பிற்குரிய புலமைமிக்க பல்துறை அறிஞரும் நண்பருமாகிய சித்தாந்த ஞான சரசுவதி முனைவர் ந. இரா. சென்னியப்பனார் அவர்கள் கவியரசு அவர்களின் நூற்றாண்டு விழாவினை நடத்த வேண்டும், அவருடைய நூல்களைத் திரட்டிப் பதிப்பிக்க வேண்டும் எனப் பலமுறை வலியுறுத்தினார்கள். நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியினையும் மேற்கொண்டார்கள். அவர்கள் அளித்துள்ள அணிந்துரை இவ்வெளியீட்டினைச் சிறப்பிக்கின்றது.
இந்நூல்களின் வெளியீட்டினை ஊக்குவித்த திருக்கயிலாய பரம்பரை திருப்பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் திருவடிகளுக்கு நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நூல்களை அச்சேற்றி வெளிக்கொணரத் திருவுளம் பாலித்த சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகளின் திருவடிகளுக்கு என் வணக்கம்.
இம்முயற்சியில் எல்லாவிதத்திலும், துணைநின்ற சிரவையாதீனக் கவிஞர், பெரும்புலவர் திருமிகு ப. வெ. நாகராஜன் அவர்களுக்கும், அணிந்துரை வழங்கிச் சிறப்பித்த பேராசிரியர் திருமிகு. முனைவர் ந. இரா. சென்னியப்பனார் அவர்களுக்கும் நன்முறையில் அச்சிட்டு வழங்கிய சௌமி அச்சக உரிமையாளர் தே. திருஞானசம்பந்தன் அவர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
- பதிப்பாசிரியர்
______________________________________________________
உ
திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
விநாயக வணக்கம்
திருமார்பன் முதலான தேவர்கள் வணங்குபர
சிவனே மகாதேவனச்
சிவனார் பெருந்தேவி யேமகா தேவியவர்
திகழ்மறையின் முதலெழுத்தாம்
பெருமா மதக்களிறு பிடியினுரு வாய்த்தந்த
பிள்ளையே பிள்ளையாரென்
பேர்க்குரிய னென்றுலக மேத்திடுவி நாயகன்
பிரசமல ரடிபரசுவாம்
வருமா ருயிர்க்கரிய மாதா தவத்திமைய
மலையின்மகள் என்றுமிளமை
மாறாத கிழவிபுவ னேசைதிரு மால்தங்கை
மாகடன் மிதந்ததோணிப்
பெருமா புரத்திலமர் பெம்மா னுயிர்த்துணைப்
பெரியதிரு நிலைநாயகி
பிரியமுற மழலைமொழி கொடுசிறிய னுவலுமிப்
பிள்ளைத் தமிழ்தழையவே. 1
________
எங்கள்குல தெய்வமாந் திருநிலைச் செல்விபுகழ்
ஏத்தநான் முகவனாலும்
எயின்மூன் றெரித்தமுக மைந்துடைய னாலுமூ
விருமுகக் குரவனாலும்
பொங்குகட லுலகைச் சுமந்ததலை யாயிரப்
புயகமன் னவனாலுமே
போகாது மறையாலு மாகா தெனப்புலவர்
புகல்வதை யறிந்து நாயேன்
மங்கலையை வாய்வந்த வாசொல்லி மகிழவுமென்
மழலைமொழி யிதனையவடன்
வள்ளைவார் செவிகொள்ளு மென்றதுணி வாலும்
வழுத்தினேன் இதுமேதையோர்
தங்கண்மா தமிழன்று தத்துறு நடைக்குழவி
தன்றமி ழெனத் தெரிந்து
சான்றகல் விச்செல்வ ரேன்றுகொள் வாரென்ற
தைரிய மிருந்தவாறே. 2
_______
விண்ணாரு மேத்துசீர்க் கண்ணா யிரன்சேண்
விளங்குசீர்ச் சென்னியப்பன்
விரகிரண விரணிய கருப்பசா மியினொடு
மெய்யன்பினேத்த வருள்செய்
பண்ணார் மொழித்திரு நிலைச்செல்வி கோயிலிற்
பத்தியொடு பரவியேத்திப்
பாடிவை கியபோது முதலவன் கனிவொடு
பணித்தபணி யேன்றடியேனேன்
எண்ணார நாடொறு நினைத்தேத்து திருவடி
யிணைச்சேற விப்பனுவலை
என்னாவி னின்றரு ளிசைத்தபடி யோதினேன்
ஏழையடியார்கள் சொல்லும்
தண்ணார் தமிழ்க்குறைவு கருதாம லேற்பள்முன்
தமிழ்நாடனுக்கும் மலையன்
தலைவற்கு மேயன்றி வலையற்கு மகளாய்த்
தவப்பயன் அளித்த லாலே. 3
______
நூல்
1, காப்புப் பருவம்
திருமால்
பூவார மலிபொய்கை யின்கரையி னின்றழுத
பூசுர விளங்குழந்தைப்
போனக மெனச்சகல கலைஞான அமுதினைப்
பொற்கிண்ண மோடளித்துத்
தேவார மக்குழவி யோதமண வாளனொடு
திகழ்தோடுடைச் செவியின்வாய்த்
தேக்கியருள் உலகன்னை யானபிர மாபுரத்
திருநிலையை யினிதுகாக்க
பாவார வோதுமொரு பாவலன தேவலாற்
பாப்பணை யிடுக்கிவழிபோம்
பசிய முகில் பாண்டவ சகாயன் தனஞ்சயன்
பரிநடத் துஞ்சாரதி
நாவார நாராய ணாவென்ற சிறுநம்பி
நடலைகெட வொருதூணிலே
நரசிங்க மாய்வந்து கனகனுயிருடலுண்ட
நல்லதிரு மகணாதனே. 4
_____
சிவபெருமான்
பெருகுவெகு முகககன நதியொர்துளி யெனவமைதி
பெறவெரியை நிகர்சடையின் மிசையே யடக்கினார்
பிரமன்மக னிடுசபத வலிமையற நிலைமைகெடு
பிறைகலைகள் வளரவுயர் முடிமீது வைத்துளார்
பெரியவுல குயிர்கடரு முதல்வனிலை புரியும்வினை
பிறழ்விலது பயனுதவு மெனவே மதித்தபேர்
பிணையின்விழி மனைவியர்கள் விரதமழி வுறவெகுளி
பெரிதுகொடு விடுமுய லகனைமேல் மிதித்துளார்
பருகுசுவை யமுதுவிழை விபுதர்குலை குலையவிரி
பரவையெழு காளவிட மடராது கைக்கணோர்
பழகளவி னுறுகனியை நிகரவுற வமுதுபுரி
பரிவுடையார் அதுநிறுவு களமே கறுத்துளார்
பரிதிமதி வலம்வருபொன் மலைசிலையர் வெகுதலையர்
பணிகயிறர் அரிகணையர் புரமே பொடித்தசீர்
பரவுபவர் பிணிகளைவர் வரதர்சிர புரமுதல்வர்
பதுமமல ரிணையடிகள் மலர்தூய் வழுத்துவாம்
முருகுவிரி பொழில்கடொறு முதுமறைகள் பசியகிளி
மொழியமுகில் தவழுமிள நறுமா பழுத்ததேன்
முதிருகனி கிழியவழி மதுரரச மிலையின்வழி
முளரிமலர் மிசையிழிய மறைநூல் விதித்தவா
முதுமரமு மகவெரியை வளர்செய்பதி யதுவிதென
மொழியவதி சயமருவ மறையோர் மிகுத்தவூர்
முதிர்சுவைய கனியடிசில் நறுநெய்பய சமுதுசெய
முறையின்வரும் அதிதிகளை யினிதே புரக்குமூர்
அருகுபெரு கியகடலி னலைகள்மதி யிரவிநுரை
அலையவுடு நிரைகள்கய லெனவே மிதக்குநாள்
அமரர்புக லெனவடைய விரிசிறைய சிலபறவை
அடல் முதுகின் உகமுடிவி னினிதே சுமக்குமூர்
அயனரிய மலர்கொடர னடிமலர்க ளனுதினமு
மகமுருகி வழிபடுசெய் பிரமா புரத்திலே
யருளினுரு வொடுமமரு மெமதுதொழு குலமெழுத
வரியவழ கியதிருநி லையை நீடளிக்கவே. 5
______
விநாயகர்
அடலின்மிகு கோதண்ட நெடியமுகி லுள்ளத்தில்
அதிசய மிகுப்ப வாழ
ஆழியை வயிற்றினி லடக்குகுறு முனிகமண்
டலநீரை யாகண்டலன்
விடையவ னருச்சனைக் காவைத்த காவுற்ற
வெம்மை யொழியக் கவிழ்த்த
விகடகட தடமருப் பைங்கைக் களிற்றினிரு
விரைமலர்ச் சரணினைகுவாம்
புடைதழுவு மகழிநடு வுலகினிறை யலகிலாப்
பொருள்வள மெலாநிறைந்து
பொழியுமத வாரணத் தாரணத் தொலிபொழிற்
புட்களொடு திக்குநிறையக்
கடலினடு விலகுகல நிகர்தோணி புரமேவு
கண்ணுதற் கடவுண் மகிழக்
காதல்புனை மாதர்மனை மாட்சிமிகு திருநிலைக்
கற்பரசியைக்காக்கவே. 6
_________
முருகன்
சந்தப் பொதியிற் குறுமுனிக்கும்
தழைத்த வாற்கீழ்ப் பெருமுனிக்கும்
தாரப் பொருளைத் தந்தகுரு
சாமி தந்தி மகள்கரும்பு
கொந்துக் கூந்தற் குறவள்ளிக்
கொடிக்குக் கொழுகொம் பெமக்கியவுள்
குமரப் பெருமான் சரணமலர்
குஞ்சிக் கணிந்து வந்திப்பாம்
வந்திக் காளாங் கூலிக்கு
வாய்த்த வமுதம் பொன்னோங்கல்
மகள்எவ் வுயிர்க்கும் கருணைத்தாய்
வளமார் கொச்சை மணிவிளக்கு
சிந்திப் பார்க்குத் தெய்வமணி
சிறியேன் பூசை செயுந்தெய்வம்
சீரார் திரசுந் தரியென்னும்
செல்வி தன்னைக் காத்திடவே. 7
_________
முருகன்
பூந்தளிர்க் கற்பகஞ் சுரபிசிந்தாமணி
பொலன்கொடி யிடைச்சிமுதற்
போகங்கள் போகப் புரந்தர னொளிந்திடப்
புத்தேளிர் தம்மையெல்லாம்
வாந்திவரு மீன்கவர்தல் முதலான இழிதொழில்கள்
வாங்குவன் கட்சூரனை
வலியசிங் கனையானை வதனனைக் கொன்றுசுரர்
வாழவருள் சேயைநினைவாம்
காந்துமொளி மாணிக்க மேய்ந்த மாளிகைதலைக்
கலைமதி யணிந்துநெற்றிக்
கார்படிந் தவிரொளிச் சூலந் தரித்துவிண்
கலவிநின் றெம்மையாளும்
ஏந்தன்முக் கண்ணிறைவர் உருவநினை விக்கின்ற
ஏர்மேவு சீர்காழிவாழ்
இறைவிமர கதநிறக் குழவிதிரு நிலைதன்னை
யினிதுகாத் தருள்கவெனவே. 8
__________
சட்டையப்பர்
ஒப்புரவி னால்வருங் கேடென்னி லஃதொருவன்
உடலுயிரை விற்றுங்கொள
லுறுமென்று திருவள்ளு வன்சொன்ன வாய்மொழிக்
குறுமுதா ரணமதாகத்
தப்புவகை செப்புசனன் உரைமீறி மூவடிமண்
தானஞ்செய் மாவலிக்குச்
சதிசெய்த நெடுமாலி னுடல்கீறி யொருகரிய
சட்டையணி பவனைநினைவாம்
எப்புவன மும்விழுங் கியவெள்ள மீததனில்
எழுந்துலவு தோணிமீதில்
ஏறிமீ காமனா கித்தா னடத்தும்பதி
யிருந்துயிர்க் கேள்வனுடனுற்
றுப்பல் குயிர்க்குதவு கற்பரசி சகசனனி
சுருதியுப வனம்வாழ்கிளி
தூயவா கமவிபின மேவிய மயூரிதிர
சுந்தரி தனைக்காக்கவே. 9
_________
மாசாத்தர்
வேலையமு தத்தைவிபு தர்க்குதவு மோகினி
விடத்தைநுகர் அரன்மகிழுமா
வீழிவாய் யமுதருத்திப் பெற்ற பாலகன்
விண்டுவை விடைப்பாகனைக்
கோலவெந் தாயென் றழைத்துக் குலாவிநற்
கோகனக மகளை முறையென்
கூறுவ தெனத்திகைத் தின்னமுந் தேறாத
குழவிவந் தினிதுகாக்க
ஆலுமறை யோலமிட் டின்னமறி யாதவர்க்
கன்னைமகள் மனைதமக்கை
ஆகமக மாகியுயி ராகியொரு கணமும்விட்
டகலாத பரதேவதை
சீலமறை வாணர்பயில் வேதவிசை சோலைபயில்
சிறுகிள்ளை பூவைதேரும்
சிரபுரத் தரனிடப் புறமடுத் திலகுநற்
றிருநிலைய நாயகியையே. 10
___________
திருஞானசம்பந்தர்
போதையார் பொற்கிண்ண வமுதமுமை தரவுண்ட
பொன்மேனி நன்மகவினைப்
போதனெடு மாலுமுன நேடரிய சிவனையிது
பொருளென்று சுட்டுபவனை
ஓதுபுல வாணர்மல வாதையற வேதங்க
ளொண்டமிழின் விண்டமுனியை
உயர்வீடு பெருமாறு திருமண நலூர்மணத்
துற்றவர்க் குதவுகுருவைத்
தீதையார் சமணிருள் சிதைக்க வருபானுவைத்
திருமுத்து மானமூருந்
திங்களங் குழவியைத் திருஞானசம்பந்த
தேசிகனை அஞ்சலிப்பாம்
வேதநெறி யாகம விதங்கள்பொலி சீகாழி
வியனகரி லடியர்தழைய
வீற்றிருந் தருள்செய்திர சுந்தரியை யேத்துமென்
மென்றமிழ்க் கவிதழையவே. 11
_________
பிரமதேவன்
மருநிலை பசுந்துழாய்ப் படலைமணி மார்பனென்
மலருந்தி வந்தனை யஃதால்
மகனாவை யென்றுபுகல் மாற்றம் பொறாதரனை
வந்தித்து வரமடைந்திங்
கொருநிலைய தன்றியொன் பதுபிறப் பவனுக்
குடம்பினை யளித்துமுததி
உடையாளை மனைவியாய்த் தந்தது மலாலவற்
குண்ணவாய் மண்ணையிட்டும்
பெருநிலை தனக்குளது காட்டியிறு மாந்தசீர்ப்
பிரமனன்பொடு காக்கவே
……………………………….
……………………………….
திருநிலையெ னும்பெயர்க் குரியவளை யரமகளிர்
செங்கைவளை காதோலையும்
சேர்ந்துவா ழக்கருணை கூர்ந்துநஞ்சுண்டபர
சிவனுயிர்த்துணைவி தனையே. 12
____________
தேவேந்திரன்
தான்புரந் திடுநாட்டரம்பையர் குழற்பகைத்
தகைமுகிலை யோட்டி இடையின்
சமமாகும் மின்னையுதறிக் கொங்கையொடு பொரூஉம்
சயிலங்கள் சிறையறுத்து
மீன்புறந் தருவிழியர் நடையைப் பழித்தமத
வேழத்தின் முதுகிலேறி
மிகைதணித் தளிசெய்யு மதிபதி புரந்தரன்
விழியையிமை போற்காக்கவே
கான்புரந் திடுமான் வயற்குதித் திடவயற்
கரையாடு மந்திகிளைமேல்
கடுகக் குதிக்கக் கிளைத்தேன் தளும்பிநீர்க்
கண்ணே குதிக்கவாளை
வான்புரக் கற்பகத் தாவுசிர புரமருவு
மங்கைதிர சுந்தரியையே. 13
_______
திருமகள்
மந்தர மத்துர கங்கயி றாநெடு வாரிதி தாழியென
வாலிபெருந்துணை யாக மதித்தெழு வண்சுவை யமுதுதனை
அந்தரர் நல்விருந்தாக வகத்தி னமர்ந்து சுரந்திடுமால்
ஆகத் தடமலர் மேவிச் சிறுவது மகலா மகள்காக்க
சுந்தர மதிதனில் தன்னைச் சுடர்வல விழியாகத்
துய்ய கலைக்கொடி யிடவிழி யாகத் துன்னிய மலைமகளைச்
சிந்துர வானன கணபதி யைத்தரு தெய்வ மடப்பிடியைச்
சீகாழிப்பதி வாழ்திரு நிலையைச் செவ்வன் காக்கெனவே. 14
___________
கலைமகள்
வெள்ளை நெட்டே டவிழ்த்துவரி
விரும்பும் பிள்ளைச் சுரும்பார்ப்ப
வீடா மலரி லிருந்துபழ
வேத முதலாங் கலைவிரித்துப்
பிள்ளை மொழியாழ் வாசிப்பான்
பிரம னாவும் என்னாவும்
பிரியா துறைவாள் சரணமலர்
பேணிப் பணிந்து துதிசெய்வாம்
துள்ளு மரிணம் எழிற்பார்வை
தொடரும் அன்னங் கவினுநடை
துவளும் ......... யிடை நுடக்கம்
………………………….
கொள்ள வளிக்கும் வள்ளன்மைக்
கொச்சைத் திரசுந் தரியம்மை
குழகன் மேனி குழைவித்த
கொங்கைக் கொம்பைப் புரக்கெனவே. 15
______________
துர்க்கா பரமேசுவரி
நெடுங் கடலுடுத்த புவியாம்செய்ச் செழித்தவுயிர்
நிரைமுழுவதையு முழக்கும்
நீள்கரும் பொற்கோட்டு நீலகிரி நிகர்மேதி
நெஞ்சந் துணுக்க முறவே
கடுங்கணர வரியேறு நாணவுக் கிரமிக்க
கவினுளைச் சிங்க மேறி
கட்கத்தி னாலெரிந் தம்மேதி தலைமீது
கால்வைத்த பாவை காக்க
ஒடுங்கிய வுளத்துமறை யவன்மீது பாசம்வீ
சுற்றமற லியுமெரு மையும்
உருளவுதை சேவடிப் பெருமை தனதாகியும்
உற்றகேள் வற்களித்த
கொடுங்குழைக் கவுரிதிரு நிலையாயி செல்விவண்
குரைகடல் மிதந்த தோணிக்
கொற்றநக ருற்றுவாழ் பச்சைமயி றன்னைக்
குறிக்கொண்டு காக்குமாறே. 16
___________
2. செங்கீரைப் பருவம்
சுருளளக அளிகளப நிரைதுவளு நுதலிதழ்த்
தூமணிச் சுட்டியசையச்
சுடர்மகர குழைதிவளும் வள்ளைவார் செவிவரை
தோய்விழிக் கயல்கள் பாய
மருமருவு சண்பகத்தின் முகுளநிகர் நாசி
மணிபவள வாயைத்தொட
மரைமலரை யொத்தமுக மண்டலத் திளமுறுவல்
மகரந்த மெத்த வுதிரக்
குருமணியின் வடமுமுடை மணியுமிடை யிடைபசுங்
கொடியென்னவே நுடங்கக்
கொழுவுவட வாலினிலை போல்வயிறு சிறிதே
குழைந்திடத் தாளி னொன்று
திருவமர முன்னர்வைத் தொன்றுபின் நீட்டியொரு
செங்கீரை யாடி யருளே
சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
செங்கீரை யாடி யருளே. 17
____________
இன்னுமுன் அடியரெமை யன்னையர் வயிற்றளறில்
இருமென்று புகவிடுவையோ?
எண்ணுதற் கரியதுயர் பண்ணிவெளி வருபிறப்
பென்றதண் டனையிடுவையோ!
மன்னிநின் றெமைமாறி மாறிமயல் செய்பொறிகள்
வழியிலே வுழல்விப்பையோ?
மாதர்பொன் மண்ணென்ற வேடணைகள் வீடாது
வந்துதுயர் செயவிடுவையோ?
நின்மலர்த் தாள்பரவு மன்னுமன் பிலர்குழுவில்
நின்றுனை மறப்பிப்பையோ?
நீதயை புரிந்துமொழி கெனும்வினா வுக்கெதிர்
நிகழ்த்திமறை விடைவிடுதல்போற்
சென்னியிரு புறமசைத் தென்னவென்னன்னையொரு
செங்கீரை யாடியருளே!
சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
செங்கீரை யாடியருளே!! 18
_______________________________
அன்றமரர் குழுவினிடை சென்றொரு துரும்புநட்
டவரகந் தையையழித்த
ஆற்றல்மிகு மாண்டகையு னொருபுறத் தான்கொலோ
அவனருட் குணமுநீயோ!
என்றுமுதி யாமைமரி யாமைமல மில்லாமை
யென்பனவும் மியல்கொலோ?
எண்ணில சராசரந் தம்மையீன்றுயிர்களுக்
கினியகதி தருவீர்கொல்லோ?
மன்றினிடை நின்றுவெளி கண்டுதொழு வார்க்கருள்
வழங்குவது முண்டு கொல்லோ?
வாழ்விப்பி ரோவென வினாவினோம் விதிவிடை
வழங்குதிரு முகமசைத்தே
தென்றலி லிளம்பசிய கொடியென்ன அம்மையொரு
செங்கீரை யாடியருளே!
சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
செங்கீரை யாடியருளே!! 19
___________
அந்தாம ரைப்பொய்கை யின்கரையில் நீயளித்
தருளமுத முண்பவ ளவாய்
அருமறைச் சிறுவன்முழு துணர்புலவ னாகியர
னரியபுகழ் பரவினமையும்
கொந்தார் அலங்கனிம் பன்சுரமு மிருகொடுங்
கூனையும் நிமிர்த்தி யுய்யக்
கொண்டுகழு வாவமண ருடல்கழுவி னவையாகக்
கொடுஞ்சமரில் வென்ற சயமும்
வந்தார்கள் காணமயி லாபுரியி லத்தியெழில்
மகளாக்கு வித்ததிறமும்
மற்றும்பல் வெற்றிகளை யறிஞர்புக ழக்கேட்டு
மலியுவகை யால்திருத்தோள்
செந்தாமரைக்கண்ணி னோக்கல்போ லெம்மன்னை
செங்கீரை யாடியருளே!
சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
செங்கீரை யாடியருளே!! 20
_____________________
அல்லன்மிகு சாருவா கன்புத்த னருகன்முத
லானவிழி சமயத்தவர்
அருவினைப் பயனுதவு முதல்வனை மறுக்குமீ
மாஞ்சகர் தாம்பிரமமென்
புல்லறிவர் சிறுதெய்வ நெறியாளர் மறைமுடிபு
புகல்புனித வத்துவிதநன்
போதமறி யாதபல பேதையர்கள் புகல்வாது
போகசிவ வாகமத்தால்
நல்லறிவு காட்டிவென் றிந்நகர முதுபுலவர்
நாட்டுபுல மைத்துவசமும்
நடராச னருள்மேவு மாபதிச் சிவனந்த
நாளிலா திரைவிழாவில்
தில்லையி லுயர்த்தவெற் றிக்கொடியு மொக்கவொரு
செங்கீரை யாடி யருளே!
சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
செங்கீரை யாடி யருளே! 21
________
வேறு
தமர நெடுங்கட லமளி துயின்றவர்
தங்காய்! செம்பூஏர்
தளிகுடி கொண்டவள் கலைமக ளென்பவள்
தம்பா லன்பாளே
அமரர் நலம்பெற மகிட னிறந்திட
வன்போர் வென்றாளே
அடிய ரிடும்பைகள் கெடவெளி வந்தருள்
தந்தா ளெந்தாயே
குமரி பயங்கரி சமரி நிரந்தரி
கொங்கார் பைங்கோதாய்
கொழுந ரிடம்பரி வுடனமர் கின்ற
குணம்பூ ணுந்தோகாய்
சிமய நெடுங்கிரி புதல்வி யசைந்தொரு
செங்கோ செங்கீரை!
சிரபுர மின்புறு திருநிலை யம்பிகை
செங்கோ செங்கீரை!! 22
________________
சிவமென வொண்சுரு திகணுவ லும்பொருள்
உன்பால் நின்றேதான்
திகழ்பெரு மைந்தொழில் செயவல தன்றி
யகன்றா லெங்கேதான்
திவளுவ தென்றரு மறைசொலும் நன்றிவி
யும்பா ருந்தாயே
செயல்பட நன்கதி பெறவு ளுகந்து
பதம்பூவின் பால்சேர்
நவமணி யொன்றிய குழைமுக சந்திர
னுந்தாம் நன்காட
நகைநில வும்பொலி தரவிதழ் செம்பவ
ளம்போ லஞ்சேரச்
சிவசம யம்பொலி சிரபுர நின்றவள்
செங்கோ செங்கீரை!
திரிபுர சுந்தரி திருநிலை யம்பிகை
செங்கோ செங்கீரை!! 23
_________
வேறு
ஆதர மிகும்பாணர் நீலகண்டப் பெரியர்
யாழினிசை மீட்டுகின்றார்
அன்னவர் மனைப்பன்னி சென்னியர் குலப்பொன்னி
யாருமுடன் ஓதுகின்றார்
வேதமத யானைதிரு ஞானசம் பந்தர்தமிழ்
விரகர்பால் கமழும்வாயால்
விண்ணவர்க ளுண்ணமுத நண்ணநா ணம்பண்
மிழற்றுகின்றார்; கணத்தர்
நாதரரு ணந்திகுட முழவொலிக் கின்றனர்,
நயந்துசுரர் நரர்கணின்றார்;
நாரதம கானாதி முனிவர்கந் திருவர்திரள்
நயனமிமையா தமைந்தார்;
சீதரர்சா கோதரியெ லாருமகிழ் கூரவொரு
செங்கீரை யாடியருளே!
சீகாழி மேயதிர சுந்தரிபரம்பரையொர்
செங்கீரை யாடியருளே!! 24
__________
வேறு
ஆயிர வொண்சுடி கைப்பட வரவர
சாய பதஞ்சலியும்
அந்தண நன்குலம் வந்து தவந்தன
மென்றுகொள் வெம்புலியும்
மேய நடம்புரி வாரு நயந்திட
வெம்புயகன் றலைமேல்
விந்த பதங்குதி கொண்டவ ரும்பரி
வொன்றி மகிழ்ந்திடவே
தாயென வன்று புரந்தருள் மேனை
தடந்தன மும்பெரிய
தடவரை யரசன் வியன்புய மும்புரி
தவமு நிறைந்திடவே
சேய நறும்பதம் வைத்து நடத்தவள்
செங்கோ செங்கீரை!
திரிபுர சுந்தரி திருநிலை யம்பிகை
செங்கோ செங்கீரை!! 25
___________
வேறு
தேரிரவி யும்பானி லாமதிய மும்பாவு
சேணிலுடு வும்பாவியே
சேர்திரை யெறிந்தே யுலாநுரைக ளென்றாக
தேவருலகும் பூவுமே
வாரிதி கலந்தே கலோலமு நிறைந்தே
வலாரியய னும்பூவைபோல்
மாயனு மினுந்தேவ ராருமயல் கொண்டேசி
வாயநம வென்றேகியே
ஊரிதனை யன்றோத வேறுமிட மெங்கேயெ
னாவுமைகொள் பங்காவெனா
ஓடியர ணென்றேபு காவுயுமி டங்கோடி
யூழியும் அமிழ்ந்தாதவூர்
ஆர்கலிமி தந்தேர்கொள் தோணிபுரர் பங்காமின்
ஆடியருள் செங்கீரையே!
ஆரணன் மிகும்பூசை பேணுநக ரஞ்சேர்பொன்
ஆடியருள் செங்கீரையே!! 26
______________
3. தாலப்பருவம்
அத்த கிரியில் மந்தேகர் அழியக் கதிர்வா ளான்வென்ற
ஆதித் தன்போய் மறைந்தனன்நல் லந்த ணாளர் சந்திசெய்தார்
சித்த மொருங்கும் அரனடியார் சிவாய வென்று சிந்தித்துத்
தியானித்திருந்தார் திருமுறைகள் செப்பித் தொண்டர் களிகூர்ந்தார்
பத்தி பரவச் சிவன்கோயிற் பரார்த்த பூசை நடைபெறுமால்,
பாலுண் டுன்றன் பசிதீர்ந்து பாடல் கேட்டுத் தூயபரா
சத்தி யுமையே திருநிலையே தாலோ தாலோ தாலேலோ!
சண்பைப்பைம்பொற் பெண்பாவாய் தாலோ தாலோ தாலேலோ! 27
__________
பரவைத் திரையி லரவணைமேற்
பையத் துயின்றா னுன்றமையன்
பதுமைப் பாங்கி யறமறவாப்
பண்பார் மனையிற் றுயில்கின்றாள்;
கரமுற் றவிசைத் தந்திரியாள்
கலைஞர் மனத்திற் றுஞ்சினளால்;
கறவைப் பசுவுங் கன்றுகளும்
கட்டுங் கொட்டி லுறங்கினவால்;
மரமும் கொடியும் புள்ளினமும்
மற்ற வுயிரும் செயலடங்கி
மறந்து தம்மை நித்திரையை
மருவிப் பரம சுகமார்ந்த;
சரசு வதியே திருநிலையே
தாலோ தாலோ தாலேலோ!
சண்பைப் பைம்பொற் பெண்பாவாய்
தாலோ தாலோ தாலேலோ! 28
_________
கஞ்சப் பள்ளிப் பெடையோடு
களிவண் டுறங்கும், பறவையினம்
காமர் பெடையும் குஞ்சுகளும்
கலக்கக் குடம்பை யினிதுறங்கும்
கொஞ்சுங் கிளியும் பூவைகளும்
குழற லடங்கிக் கூட்டுறங்கும்
குரங்கு மெண்குங் கொம்புகளிற்
கூடி யுறங்கும் குதலைமொழிப்
பஞ்சப் பிதமென் பதப்பாவாய்
பாராட்டுந்தாய் கண்மயங்கும்
பாடிப் பாடிச் சேடியரும்
பைய வாவித் தயர்கின்றார்
தஞ்ச மருளுந் திருநிலையே
தாலோ தாலோ தாலேலோ!
சண்பைப் பைம்பொற் பெண்பாவாய்
தாலோ தாலோ தாலேலோ!! 29
______________
கண்ட கதைவேண்டாநீல
கண்டன் கதைசொ லென்றாய்க்குக்
கங்கை சடைமேற் கரந்தகதை,
கண்ணப் பெண்ணைக் கலந்தகதை
விண்டோம்; ஊடல் கொண்டாய்கொல்;
விழிகள் சிவந்தாய் இமைக்கில்லாய்;
விமலர்க் கினிய மனைக்கிழத்தி
விளம்பி லுன்னை யலதுண்டோ?
வண்டு மொய்க்கும் பிறமலர்கள்
மலர்ந்த தடந்தா மரைத்தடமே
மாதே வன்பார் வதிபதியே;
மறையும் இதற்குச் சான்றாமே
கொண்ட முனிவா றுகவிமயக்
கொடியே தாலோ தாலேலோ!
குளிர்பூங் காழித் திருநிலைப்பூங்
கொம்பே தாலோ தாலேலோ! 30
____________
மதுர வாகீ சுவரியென்றோம்
மலர்வாய் மழலை யொழியாயால்
மாமூ கேசு வரியாகி
மணியே சிறிதே துயிலாயோ
குதிகொள் கயற்கண்ணாளென்று
குறித்தே மிரவு பகலுறங்காய்
குவளைக் கண்ணா யென்றாலும்
கூடாய் துயிலிவ் விரவெல்லாம்
பதும விழியா யென்றின்னே
பகர்ந்தோ மிரவு விழிமூடிப்
பாவாய்! தூவாய் திறவாமல்
பட்டே ணையினி லுறங்குகவே
சதுர மறைசேர் சண்பைநகர்த்
தலைவீ தாலோ தாலேலோ!
சம்பந்தர்க்குப் பாலளித்த
தாயே தாலோ தாலேலோ! 31
_________
மையார் தங்கண் ணிமைதிறந்தால்
வையந் தோன்றும் விழித்திருந்தால்
வாழும் இமைப்பின் மறையுமென
மனத்தில் நினைந்தே யுறங்காயோ!
செய்யாள் கேள்வன் துயின்றுமிந்தச்
செகத்தை யளித்தல் தெரிந்திலையோ
செங்கோ லரசின் ஒளியேயெத்
தீங்கும் வாராத் திறங்காக்கும்
பொய்யா மறையோர் இரப்பார்க்கிப்
போதப் போதென் னார்வேண்டும்
பொருள்க ளனைத்தும் பொழிவார்வாழ்
புகலி புரந்த பொன்கொடியே
செய்யாள் பரவுந் திருநிலையெஞ்
செல்வீ தாலோ தாலேலோ!
செகதண்டங்க ளீன்றளிக்கும்
திருவே தாலோ தாலேலோ!! 32
__________
வேறு
ஆதியு மந்தமு மான பரம்பொருள்
ஆனவர் பங்கினின் ஆயாளே,
ஆருயி ருய்ந்திடு மாறவர் ஐந்தொழில்
ஆய நலம்பெற வேநேர்வாய்,
யாதவர் கொண்டொதொர் கோல மதன்படி
யேயுடன் நின்றவ ளேதூயோய்,
யானை முகன்சிகி வாகனனும்பரி
வோடு வணங்கிடு மாதாவே
காதிலி லங்கிய தோடுகொ டம்புலி
காணும் விதம்புரி யாவோர்நாள்
காதலி னின்கழல் பாடுமொ ரந்தணர்
காதர முங்களை சீராளே;
சாதல் பிறந்திட லோய மணங்கமழ்
தாளிணை தந்தவள் தாலேலோ!
தாழ்வறு சண்பையில் வாழ்திரசுந்தரி
சாமளை மென்குயில் தாலேலோ!! 33
___________
வேறு
புலரியில் அலர்ந்தசெங் கமலமென நின்விழிப்
பொலிவுகண் டுளமலர்ந்தோம்
பூவைகிளி யாழ்குழற் போலவிசை மழலைமொழி
புகல்வார் செவிகுளிர்ந்தோம்
கலகலென மஞ்சீர முரல நடைபயிலுநின்
கமலசர ணழகுகண்டோம்
கரமலரின் மென்பாவை வைத்து விளையாடலுங்
கண்டுநகை கொண்டனம்நறும்
பொலன்மணிப் பாசனப் பூம்புனன் மஞ்சனம்
புரிந்துபொற் பட்டுடுத்திப்
பூணணிந் தருள்விழியின் மையெழுதி நுதலினிற்
பொட்டுமிட்டுக்கண்டெனம்
சலசநிகர் விழிதுயிலு மழகையுங் காணுமா
தாலேல தாலேலவே!
சதுர்மறைகள் பரவுதிரு நிலைமர கதப்பெணே
தாலேல தாலேலவே!! 34
__________
காரிரும் பொழில்சூழ்ந்த கச்சிமூ தூரிலெங்
காமக்கோட் டமுமிருக்கக்
காசியினி லன்னபூ ரணியா யுயிர்க்கெலாங்
கைச்சோறு யாமளிக்க
ஊரிடும் பிச்சையுடை தலையிலேற் றென்கொலோ
ஒன்னலர் பழிக்கவெங்கோன்
உழல்வ தெனவிழிமல ரிமைக்காம லேகவலை
யுற்றுறங் காதிருந்தாய்
பாரினி லவன்செயற் காரண மறிந்திடப்
படுவதோர் புலனடக்கிப்
பத்தர்க ளிரந்துண்டு முத்திபெறு மாறுநம்
பரமனு மிரப்பானெனத்
தாரணியின் மூலரு முரைத்தார் வருந்தற்க
தாலேல தாலேலவே!
சதுர்மறைகள் பரவுதிரு நிலைமரக தப்பெணே
தாலேல தாலேலவே! 35
______________________
கடலினெழு மமுதமுழு வதுமமர ருக்கீந்து
கடுவிட மிடற்றில் வைத்தார்
கம்பமா வரிமாவு மேகொளா ரேசுமா
கடவுமா வீது தகுமா?
அடுவெய்ய பணியார மேசுமந் தமரருக்
கணிபணிக ளாரம் வைத்தார்
அன்றுமென் றுந்தமக் கொன்றும்வைத் தாரிலைநம்
மரியமண வாளர் என்றே
படல்விசனம் உலகோப காரியுணு நஞ்சமும்
பாங்கி னமுதாகும், ஏறு
பரியாகு நரியுமவ ரேறுவிடை யேழ்தழுவு
பைங்கண்விடை பரவப்படும்
தடவிமய மயில்கவலை யுறல்சிறப் பல்லவோ
தாலேல தாலேலவே!
சதுர்மறைகள் பரவுதிரு நிலைமரக தப்பெணே
தாலேல தாலேலவே! 36
___________
4. சப்பாணிப் பருவம்
மண்ணாதி நாதமுடி வானதத் துவமுமவை
மருவுதனு கரணமுயிரும்
வந்துதித் திடுமாறு மன்றாடி கையதனில்
மன்னுதம ருகமுழங்கப்
பண்ணார வமரமுனி வரர்வித்தி யாதரர்கள்
பாடவவர் ஆடுமாடற்
பாணிக்கு மாறின்றி யங்கையிற் றாளம்
பரிந்துகொட் டுவதையேய்ப்பக்
கிண்ணார மானமொழி யரமகளிர் பரவுநன்
கேளிர்விழி குதுகலிப்பக்
கிலுகிலென வினவளைகள் நரலவிர லாழிமணி
கேழ்கிளர வங்கைசேப்பத்
தண்ணார முயர்பொழிற் புகலிநக ரமர்முதல்வி
சப்பாணி கொட்டியருளே!
சகதல மெலாமுதவு திருநிலைச் செல்வியொரு
சப்பாணி கொட்டியருளே!! 37
__________
வானந்து மணிசிந்த நிலவென்று தண்குவளை
மலர்வாய் விரிந்தபிரம
வாவிதனி நின்றம்மை யப்பா வெனச்செப்பி
மலர்வாய் திறந்தழைத்த
கானந்தனய உண்க வென்னமுலை யமுதீந்த
கவுணியச் சிறுவனுன்றன்
கணவனிசை யமுதுசுவை யமுதினி னிசைப்பவிரு
காதும்நெஞ்சுங் குளிரவே
ஆனந்த மாய்நுகர்ந் தரியபழ மறையுமொப்
பாமோவிதற் கென்றுகொண்
டதிசயத் தாற்கரங் கொட்டிக் குதித்தலென
அம்பொனுல கறியாதவண்
தானந்த ழைத்தசீர்ப் புகலிநக ரமர்முதல்வி
சப்பாணி கொட்டியருளே!
சகதல மெலாமுதவு திருநிலைச் செல்வியொரு
சப்பாணி கொட்டியருளே! 38
____________
உண்ணாமல் நல்லுடை யுடுக்கா மலேயுழைத்
தொண்பொருள் தொகுத்துவைப்பார்
ஒருசிலர், சிலோருடற் குறுதியே கதியென்
றுளத்தில் திடத்தராகிப்
பண்ணாத வக்கிரம மும்பணி யுடுத்துண்டு
பாவியென வாழுகின்றார்;
பகரி லித்திறமுளா ரணுகாது போமினப்
பாலென்ற கற்றலேபோல்
மண்ணோர் சிறக்கவற மீகையொப் புரவினால்
வண்பொருள் பயன்படுத்தி
வானமெதிர் கொள்ளவாழ் வாரெலா ரும்வருக
வருகென் றழைத்தல்போலத்
தண்ணார் தடம்பணைப் புகலிநக ரமர்முதல்வி
சப்பாணி கொட்டியருளே!
சகதல மெலாமுதவு திருநிலைச் செல்வியொரு
சப்பாணி கொட்டியருளே!! 39
__________
பெண்ணினல் லவளாய பேரறச் செல்வியெம்
பெருமான் திருக்கருணையாற்
பேசுமா கமமுழுதும் வினவிஅவர் பூசையின்
பெருமைதனை மிகமதித்து
மண்ணினார் கண்டுய்ய ஐவகைச் சத்தியும்
மலர்க்கைமுத் திரைகளாதி
வழுவா தியற்றுசிவ பூசையிடை யொண்கர
மலர்த்தாளம் மூன்றென்னவும்
பண்ணினல் லிசைவீணை யாழெனக் குரலொலி
பரப்பியோ திடுபோதினிற்
பாங்காக இடுதாள வகையென்ன வுங்கடற்
பவளமுயர் கமுகுசுற்றும்
தண்ணிலாம் பண்ணைமிகு புகலிநக ரமர்முதல்வி
சப்பாணி கொட்டியருளே!
சகதல மெலாமுதவு திருநிலைச் செல்வியொரு
சப்பாணி கொட்டியருளே!! 40
_______
பிரமனெடு மால்புரந் தரனாதி யமரருன்
பொற்பாத பீடிகைமுனர்ப்
பெருவிலைய மணிமுடியின் மிசைவைத்த வஞ்சலி
பிறங்கவீழ்ந் தேத்துகாலை
அரனுன்முன ரணுகவர வரியணையி னின்றெழுந்
தவனைவர வேற்குமாநீ
அவசரப் படும்வேலை முடிகளடி யிடறுமென்
றரமகளி ரெச்சரிக்கப்
பரவசப் படுமமரர் அறியார் கிடப்பவுன்
பவளவா யாலுரப்பிப்
படபடத் தெழுமாறு கைதட்டு மாறெனப்
பங்கயச் செங்கைமலரால்
சரசுவதி பரசுமொண் புகலிநக ரமர்முதல்வி
சப்பாணி கொட்டியருளே!
சகதல மெலாமுதவு திருநிலைச் செல்வியொரு
சப்பாணி கொட்டியருளே!! 41
_______
வேறு
அரனா ரழற்கண் ணெழுபொறிகள்
ஆறுங் குழந்தை வடிவாகி
ஆடல் புரிகாற் சரவணத்தில்
அடைந்தே வடிவொன் றறுமுகங்கள்
குரவார் புயங்கள் ஆறிரண்டு
கொள்ளப் பரிவா லணைக்குங்கை
கொங்கை யமுதங் கறந்தூட்டிக்
குளிர்ந்து முதுகைத் தடவுங்கை
விரவா வசுரர் குலமடிய
வெற்புப் பொடிய மகரநெடு
வேலை சுவற வேலையருள்
வேலை யுகந்து நீளுங்கை
குரவை கோக்குங் கைமலராற்
கொட்டியருள்க சப்பாணி!
கொச்சைப் பதிவாழ் பச்சைமயில்
கொட்டியருளாய் சப்பாணி!! 42
____________
சொக்கப் பெருமான் திருமேனி
தொட்டே பணிகள் திருத்துங்கை
தொன்னா ளவன்கண் மூடி,அவை
சோதி யென்று தெளிக்குங்கை
மொக்கிக் கழுத்தில் நின்றவிடம்
முதல்வற் கமுத மாக்குங்கை
முருக னென்ற குருமணிசேர்
முளரி மலரிற் கிளர்செங்கை
நெக்குள் ளுருகச் சிவபூசை
நியம மாக நிகழ்த்துங்கை
நெஞ்சிற் கொங்கைத் தழும்பெழும்ப
நிறைகா தலினாற் தழுவுங்கை
கொக்கின்றளிரை யொக்குங்கை
கொண்டே கொட்டுக சப்பாணி!
கொச்சைப் பதிவாழ் பச்சைமயில்
கொட்டி யருளாய் சப்பாணி!! 43
____________
வேறு
எத்தாலு மிக்கபொரு ளைத்தேடி வைத்தல்சுவை
யிற்சோறு துய்த்தல், மயலால்
இக்கார் மொழிச்சுரி குழற்பேதை யர்க்குதவி
இச்சா வழிச்சுழல்வதாய்,
வைத்தே யளித்துல கழித்தாள் முதற்பகவ
னைத்தூறல், பொய்ப்புகலலே,
மட்டார்தல், பற்பல வுயிர்க்கோறல் உற்றமடை
யர்ச்சேரல் விட்டொழியவே,
பத்தான நற்றவர்கள் பற்றான மெய்ப்பொருள்
பகத்தாசை, நித்தமணமார்
பற்பூ புனற்கொடு வழுத்தாசை, சற்சனர்
பழக்காசை வைத்துயவெனாச்
சத்தான புத்தியை யளித்தாளு முத்தமியொர்
சப்பாணி கொட்டியருளே!
தத்தாய் அருட்டிரு நிலைத்தாய் மலர்க்கைகொடு
சப்பாணி கொட்டியருளே! 44
___________
வித்தார நெட்டிம கிரிக்கோ னியற்றுதவ
சிற்கான நற்புதல்வியே
விச்சா நெறிப்பரவு மெய்ச்சாத கர்க்குளம்
விருப்பான சித்தி யருள்வோய்
சத்தான வத்திடம் விருப்பான சிற்பரை
சகத்தாதி யிச்சை செயலார்
சத்தீ, எளுக்கெணை யெனப்பார் பதத்துறு
சமர்த்தீ, பரப்பிரமமே,
முத்தார மொய்த்த வகலத்தீ; கலைக்கடன்
முலைச்சீ, வழுத்துமடியார்
மொய்ப்பாச மற்றுக வறுத்தான் அசிப்படை
முனைச்சூல் கரத்திலுடையாய்;
தத்தா தனத்தவென ஒத்தா வளைக்கைகொடு
சப்பாணி கொட்டியருளே!
தத்தா யருட்டிரு நிலைத்தாய் மலர்க்கைகொடு
சப்பாணி கொட்டியருளே! 45
____________
இப்பாரி னிற்பசு வெனச்சார மற்றவை
புசித்தே பிறர்க்கடிமையாய்
இட்டார் பணிப்பல வியற்றா வலைப்படு
மெனைப்பாச மச்சமறவே
அப்பா வெனப்பரிவு வைத்தே யழைத்தரு
கருட்பார்வை யிற்பவமெலாம்
அற்றேக மெய்ப்பொரு ளுரைத்தே சிரத்திலரு
மைப்பாதம் வைத்த பெருமான்
செப்பான பொற்கமலம் நெற்சாறு மிக்ககழை
செய்ப்பால் பொழிற்கமுகுசேர்
சித்தாடல் மிக்கபழ னிச்சாது சற்குரு
வுளத்தே திதிக்கு மமுதே
தப்பாது முத்தியடி யர்க்கே யளிக்குமுமை
சப்பாணி கொட்டியருளே!
தத்தாய் அருட்டிரு நிலைத்தாய் மலர்க்கைகொடு
சப்பாணி கொட்டியருளே!! 46
_________
5. முத்தப்பருவம்
எல்லை யில்லா கமமறையென்
றியம்பும் பெரிய கருவூலத்
தியல்சேர் புலவர் வைத்துதவ
எடுக்கக் குறையாப் பெருநிதியே,
தொல்லை யுயிராம் பாத்தியிடைத்
தொலையாப் பத்தி நீர்பாய்ச்சுந்
தொண்ட வுழவர்க் கிரும்போகம்
தோற்றி யளிக்கும் பொற்கொடியே;
இல்லை யென்னா திரப்பாருக்
கிரவும் பகலும் விருந்தளிக்கும்
இயல்பார்க் கென்றுங் குறைவுவரா
தென்று முலவாப் பொற்கிழியே
முல்லை நகைசேர் திருவாயின்
முத்தந் தருக முத்தமே!
முந்நீர் மிதந்த தோணிபுர
முதல்வீ முத்தந் தருகவே!! 47
________
கத்தக் கத்தக் கடல்வயிறு
கலங்கிக் குழம்பக் கடைந்தெடுத்துக்
கள்ளத் தேவர் சுவையமுதங்
கவர்ந்துண் டுஞ்சா வாரானார்
சுத்தப் பித்த னின்கணவன்
சுடுநஞ்சுண்டுஞ் சாவானாம்
சூழி னிந்த வதிசயந்தான்
தோன்றற் கேது பாற்கடலில்
பத்தித் துத்திப் படவரவப்
பாயற் றுயிலும் பசுமணிநின்
பவளச் செவ்வாய்ப் படுமமுதம்
பருகும் விரகே எனவியந்து
முத்தர் பரவப் படுகனிவாய்
முத்தந் தருக முத்தமே!
முந்நீர் மிதந்த தோணிபுர
முதல்வீ முத்தந் தருகவே!! 48
_________
பாக மாகக் கவிபாடிப்
பரசக் கல்வி வலமில்லை;
பத்தி யில்லை, பொய்மெய்யைப்
பகுத்தா ராயப் பழுதில்லா
ஊக மில்லை, யெனக்கவல
வேண்டா வுலகீர், உமைசரணத்
துற்றா லன்பு மூகனுந்தான்
உலகம் போற்றுங் கவியாவான்,
ஆக லானேத் துமினென்னு
மான்றோர் மொழிக்குச் சான்றாயுன்
அருளார் பஞ்ச சதிபாடி
அவற்றுள் நூறு சுவைக்கவியால்
மூகன் புகழுந் திருமுறுவன்
முத்தந் தருக முத்தமே!
முந்நீர் மிதந்த தோணிபுர
முதல்வீ முத்தந் தருகவே!! 49
_______
பெருகு மதவா ரணமுகத்துப்
பிள்ளை முகத்துக் கையிழுத்துப்
பிடித்துப் முழம்போட் டையவிவன்
பெரிய மூக்க னெனநகைக்க
அருமைத் தம்பி யவன்முகங்கள்
ஆறுங் கண்க ளறுமூன்று
மண்ண னெண்ணிச் சளிபிடித்தால்
அந்தோ துன்ப மதிகமென
இருவர் கலக மிட்டுவந்தங்
கிவனைப் பாரென் றுரைத்திடவே,
என்ற னானை! இளஞ்சிங்க!
மென்றே கொஞ்சி முனிவகற்றி
முருகு கமழ்வாய் முறுவல் செய்வாய்
முத்தந் தருக முத்தமே!
முந்நீர் மிதந்த தோணிபுர
முதல்வீ முத்தந் தருகவே!! 50
_________
திருந்து தவஞ்செய் துனையருமைச்
செல்வி யாக்கொள் மலையரசும்
சீராட் டித்தா ராட்டிமகிழ்
செல்வத் தாய்மே னைக்கொடியும்
அருந்தும் விடத்தை அமுதுசெயும்
அன்பிற் பெரிய மகிழ்நருமுன்
அருமைப் புதல்வ ராயமத
யானை முகனு மறுமுகனு
பொருந்திக் கரத்தி லமர்கிளியும்
பூவைப் பறழும் பெற்றமையால்
புன்மை யேமும் பெறவிழைந்தோம்
பொற்பார் பூங்கற் பகக்கொம்பே
முருந்து நிகர்நின் மணிமுறுவல்
முத்தந் தருக முத்தமே!
முந்நீர் மிதந்த தோணிபுர
முதல்வீ! தருக முத்தமே!! 51
______________________
வேறு
கோதின்மலி யிக்குறு மிடுக்கணுற முற்றுகண்
கொண்டமுதிர் முத்து வேண்டேம்
குளிர்கமுகின் மிடறுமுறி படமடலி னிடைநின்று
குதிமுதிய முத்து வேண்டேம்
ஏதமிக மோதியொன் றோடொன்று ராயெரியும்
இயல்வேயின் முத்து வேண்டேம்
இன்னலுற வரிபடுஞ் செந்நெற் கதிர்கணுதிர்
எல்லொளி முத்து வேண்டேம்
வேதியர்க ளாகுதிக் குதவுபசு வின்பல்லின்
விளைசோதி முத்து வேண்டேம்
மீனமுத லானவிழி சாதிதரு முத்தமும்
வேண்டேம் சுடர்ச்சடை யின்மேல்
பாதிமதி வைத்தபர முத்தரிட முற்றபரை
பனிவாயின் முத்த மருளே!
பன்னிரு திருப்பெயர் படைத்தபதி மன்னுமுமை
பவளவாய் முத்த மருளே! 52
_________
கத்துகட லெற்றுதிரை யிற்கரை யடுத்தநெற்
கழனியிற் கமலமலர்மேல்
கதறுகுட வளைவயி றுளைந்தீன்ற துளையடுங்
கதிர்நிலவு முத்துவேண்டா,
மத்தமத வுக்கிரகரிக்கொலை பயிற்றிய
மருப்பினொளி முத்துவேண்டா,
வன்பன்றி யறியாத வன்பன்றி வாய்க்கடையில்
வளர்தந்த முத்துவேண்டா,
வித்தக கவிக்குரிசில் வீரைகவி ராசன்நா
மெச்சுசுவை மிக்கவடிசில்
வீறுதவ மகளாகி வாரணா சிப்பயணம்
வெற்றிபெற விட்டவனையே
பத்தர்கள் மனத்தளி விளக்கமுற வைத்தசுடர்
பனிவாயின் முத்தமருளே!
பன்னிரு பெயர்ப்பதியில் மன்னுமுமை சொன்னமயில்
பவளவாய் முத்தமருளே!! 53
__________
செஞ்சொன்மறை யின்னமிவன் இன்னனென்
றறியாத சிவனுலக முய்ய வென்னத்
திருமால யன்றேட நடுவே முளைத்துச்
செழுஞ்சோதி யாய்நின் றதூஉம்
வஞ்சநஞ் சந்தனை யடக்கிவா னோருய்ய
மணிமிடற் றேவைத் ததூஉம்
வலியதிரி புரமெரிய நகைசெய்ததூஉம் கழைவில்
மதனனுடல் பொடிசெய் ததூஉம்
கஞ்சன் சிரங்கொய் துங்கரிய மாலுரிக்
கஞ்சுக முடற்போர்த் ததூஉம்
காலனை யுதைத்ததுவு மாதிவீரச்செயல்கள்
கற்பகக் கைமலரமர்
பஞ்சவன் னக்கிளிக் கோதிவைக் குங்கிள்ளை
பனிவாயின் முத்தமருளே!
பன்னிரு பெயர்ப்பதியில் மன்னுமுமை சொன்னமயில்
பவளவாய் முத்தமருளே!! 54
_________
தோடுமலி புண்டரிக னேடுமலர் கொண்டரன்
தொண்டா யருச்சித்தவூர்
சூரனுக் கஞ்சுமக வான்தவ மிருந்தவூர்
தோணியின் மிதந்தவூர்
மாடுமலி விண்ணோர்கள் புகலாகு மூர்முனிவன்
மச்சகந் தம்போக்குமூர்
மன்னுபொன் னஞ்சிர புரம்பூந்த ராய்புறவம்
வளர்சண்பை வெங்குருநகர்
வீடுமலி யன்பர்பெறு கழுமலந் தோணிபுரம்
மெச்சுபெயர் பன்னிரண்டை
மெய்புளக மெய்தியுள முருகிவிழி நீர்பொழிய
மெய்யன்பர் கூடுமிசையாற்
பாடுதொறு வந்தருள்செய் திருநிலைப் பச்சைமயில்
பனிவாயின் முத்தமருளே!
பாரதி சரோசைசசி பணிகொண்ட மாதேவி
பவளவாய் முத்தமருளே!! 55
___________
கழிசினத் தாற்பாற் குடத்தையுதை தந்தையின்
காலைவெட் டியசண்டியெக்
காலுமர னிருமாலி யத்தாற் களித்திடக்
கண்டவுன் புதல்வரேனோர்
விழைவுவிழ லாகாமல் அவன்வாய மெல்லிலை
விழுக்கருப் பூரசகலம்
மேவுபா குன்வாயி னிற்கொண்டு புதல்வர்கள்
விருப்புநிறை வேறவருள்வாய்
மொழியென்ற கிள்ளைவெளி வருமாறு காட்டிதழ்
முழுக்கோவை யமுதகனிவாய்
முறுகல்முத லிழிபின்றி வளர்பவள மென்கொடி
விளைந்தகனியொத்த துவர்வாய்ப்
பழமறை மிழற்றுகிளி! கிஞ்சுக வரும்பனைய
பனிவாயின் முத்தமருளே!
பாரதி சரோசைசசி மாதர்தொழு பார்வதியுன்
பவளவாய் முத்தமருளே!! 56
______________
6. வருகைப் பருவம்
வேதமரு ளாகம புராண விதிகாசமுதல்
விவிதகலை யோதியறியேன்
விதிமுறையி லோதினவர் நிறுவியுரை செய்கின்ற
மெய்ப்பொருளை வினவியறியேன்
ஆதியுனை நாதரொடு மாகம விதிப்படி
யருச்சனை யியற்றியறியேன்;
ஐந்தெழுத் தாதிதிரு மந்திரத் தெதுவுமு
ளடக்கிச்செபித்து மறியேன்;
பேதைமதி யேனடியே னானாலு முன்னருட்
பேறுபெற வேவிழைந்தேன்;
பிழைகணித் தாலுய்யும் வழியேது மாதவிப்
பேயனேன்வாழ வொருகால்
மாதர்பிர மாபுரத் திருநிலைச் செல்வியிவண்
வந்தருள்க வந்தருள்கவே!
மலையரையன் மரபுபெரு மகிமையுற வருபுதல்வி
வந்தருள்க வந்தருள்கவே!! 57
_____________
உளமான கோயிலிலி ருத்தியுனை வழிபா
டுஞற்றயா னுற்ற வாசை
உன்னுள மறிந்ததன் றோவம்மை யப்போதில
ஒன்றிரண்டோ விளைதடை
சளமான சிந்தனை வந்துவந் திடையே
சலிப்பினை விளைக்கு மந்தோ
சகமெலா முலவமன மோடுமொ ரிமைப்பொழுது
சஞ்சலமி லாதமையுமோ?
தளமா மலர்க்கொடு னருச்சனைக் கமரினுந்
தந்திரந் தடுமாறுமே
தமியனே னெவ்விதத் துய்குவே னின்னருட்
சலதிபடி மாறு விழிமுன்
வளமான வேணுபுர மேவுதிரு நிலையம்மை
வந்தருள்க வந்தருள்கவே!
மலையரையன் மரபுபெரு மகிமையுற வருபுதல்வி
வந்தருள்க வந்தருள்கவே!! 58
____________
ஊனமிகு மாணவமு மிருவினையு மாயையுமெ
னொன்னலர்கள், துன்னுபலவாய்
உற்றபல வின்னல்விளை கொற்றவர்க டமையேவி
ஒழியாம லெனைவளைந்தே
மானமில வானபல விழிதொழிற் செய்வித்து
வன்கண்மை செயமெலிந்தேன்,
மற்றுமொரு பற்றிம்மை மறுமைக்கு மறியேன்
வருந்தலுற் றேன்சரணுனக்
கானவெனை யஞ்சலென் றெப்போ தடைக்கல
மளித்தருள்வை? யருகில்வைத்தென்
னறியாமை நீக்கியுயர் திருஞான வமுதுண
வளிப்பை? அசு ரன்கொடுமையால்
வானவர்கள் புகல்புகும் புகலிநக ரமர்முதல்வி
வந்தருள்க வந்தருள்கவே!
மலையரையன் மரபுமிகு மகிமையுற வருபுதல்வி
வந்தருள்க வந்தருள்கவே!! 59
___________
புன்கண்மலி யும்பிறவி யின்கணெளி யன்படு
பொருந்துயர் புகன்றிடுமதோ
பொல்லாங்கு செய்தவைக ளெல்லாங் கணக்கிடப்
போமோ புராண வகைகள்
நன்குண மிழந்துபல வன்செயல் புரிந்தவர்கள்
நரகிலுறு துயர்மொழிவதை
நான்கேட்டு ளேனுள நடுங்குகிற தம்மையே
நனவிலுங் கனவிலுமே
தன்கணெண் குணபர சிவன்றனை யிணைத்தவெந்
தாயே வென்றருமமே
தாங்குபவள் நீபிழை பொறுத்தருள் தயாபரி
சதுர்த்தியுன் சரணடைந்தேன்
வன்கண்மலி வெங்குரு வணங்குதிர சுந்தரி
வந்தருள்க வந்தருள்கவே!
மலையரையன் மரபுமிகு மகிமையுற வருபுதல்வி
வந்தருள்க வந்தருள்கவே!! 60
__________
காமசிந் தாமணி புலம்பிடு சிலம்பினொடு
கணிகைமகள் துறவு முதலாங்
காவியக் கதைகளினி யோதுதற் கிசைவிலோம்
காசினியில் மாசிலடியார்
ஆமளவு நின்றிருத் தொண்டினின் றின்பவன்
பரியசௌ பாக்யமார்ந்த
அச்சரிதை யும்பரம னாடல்களு மோதுகவி
தாமிருதம் விழைவ தானோம்;
பூமிவிண் பாதலம் போயுழன் றிடுநெடும்
பொல்லாத பிறவிநீந்தப்
புணையாக வுன்னடிப் போதுதந் தாளவிப்
புவனமுழு துங்கொள் கடன்மேல்
வாமவொண் டோணியின் மிதந்தநக ரமர்முதல்வி
வந்தருள்க வந்தருள்கவே!
மலையரையன் மரபுமிகு பெருமைபெற வருமுதல்வி
வந்தருள்க வந்தருள்கவே!! 61
____________
வேறு
வேந்த ராமணி முடியொராயிர
மேவு தண்கட லாடைசூழ்
மேதினிக் குலமாதை யத்துகில்
மூடிவவ்விய வெய்யனாம்
சேந்த பொற்கணன் நெஞ்சுகீறிய
செங்கண் வெள்ளை வராகமால்
சேர்ந்து தண்புன லாடியர்ச்சனை
செய்து பாவம் விலக்கிய
தீந்தண் மாமலர் வாவி மேல்கரை
சேர்ந்த கற்பக வல்லியே
சிறியனேன் றழைநீரு மேற்றருள்
செய்ய திருநிலை நாயகீ
மாந்த ணீள்பொழிற் பூந்த ராய்நகர்
வாய்ந்த பூங்குயில் வருகவே!
வாங்கு மேருவி லேந்து சாம்பவி
வருக சங்கரி வருகவே!! 62
_______
பரசிவ னோடொரு பிரிவற மேவிய
பகவதி யேபழ மறையெலாம்
பழுதற வோதிய முனிவரர் தூமனம்
பதும நிலாவிய வெகினமே,
கரவில தாகிய கரதலர் வாழ்மனை
கமலை குலாவுற வருள்செய்வாய்
கருதுதொ றேழையெ முளநெகிழ் மாறெழு
கதிர்விடு மாதவ ஒளியினாய்
சுரர்கடை வாரிதி யமுதுணு போதவ
ருடனுரு மாறி யுணவும்நன்மால்
சுருவையின் மோதிட வுடலற வீசுரர்
துணைகொடு வாழ்வது பெருகிய
வரபுர மாகிய சிரபுர மேவிய
மரகத மாமயில் வருகவே!
மனமணி மாளிகை யொளிர்மணி தீபிகை
தருநிலை மாதிவண் வருகவே 63
_____________
வழுவுறு நெறிபல மலிகட லுலகினிலில்
மலமறு நெறிபெற லரிதெனா
வரநதி முதலிய புனன்முழு கியுமரன்
வதிபதி பலபல தொழுதெழா கு
ழுவுறு பலமுனி வரரொடு முழுதுடல்
மயிர்கெழு முனியர சணுகியே
குருமொழி யருள்கென வழிபட அரனவர்
குறைவர மறைமுடி புரைசெயா
முழுதும றிவைமறை யிருண்மல மிருவினை
முதலிய வையினியல் மொழிசெயா
முடிமிசை யடிமலர் நிறுவிமு மலமற
முழுகுப ரமசுக மருளுமூர்
கழுமல வளநகர் கெழுவிய திருநிலை
கதிதர வெமதுமுன் வருகவே!
கவுணியர் குழவியுண் அமுதவு ததிபொதி
கலசமுலை யிறைவி வருகவே! 64
_________
கறவை மனது குளிர முறைசெய்
கரவின் மனுவின் மரபினான்
கனக வுலகு சலதி யுலகு
கலவு புகழ்கொ ளளியினான்
அறமு மறமு மிணையில் சிபியின்
அருளி னுயர்வு தெரியவே
அமரர் பதியு மெரியி னிறையும்
அடல்கொள் கழுகு புறவுமாய்த்
துறவு பெரிய ததிசி யுமிது
தொடர லரிது பெரிதெனாத்
துலையி லவனை யிவர்செய விறை
தொலைவில் கருணை புரிவதாம்
புறவ நகர மமரு மமலர்
புனித மனைவி வருகவே!
பொறையு நிறையு மெழுதவரிய
பொலிவு முடையை வருகவே!! 65
________
அருவா யுருவா யருவுருவும்
ஆகி மறையீ றறியாத
ஐயன் பொன்மன் றினிலாடும்
அருமை யறியாக் காளிசினந்
திருகாச் சிறுசொல் சொல்லியவத்
தீமை தீர வழிபடுமூர்;
திருமால் பதத்தின் மிதிப்புண்ட
செங்கணரவம் புன்கணறக்
கருமா மிடற்றன் கழல்பரவிக்
காயங் காயங் கழித்தவூர்
கருது வார்தம் வறுமைபிணி
கவலை தீர்க்குஞ் சிவனகராம்
பெருமா மகிமைக் காழிநகர்ப்
பிராட்டி வருக வருகவே!
பிறங்க லரசன் பெற்றமடப்
பிடியே வருக வருகவே!! 66
_____________
பண்பைத் துறந்த யாதவர்கள்
படிமக் கபிலற் பிழைத்தமையால்
பழுது போகா வவன்சாபப்
பயனாய் முளைத்த சண்பையினால்
மண்விட் டுலந்த வகைகண்ட
மலர்க்கண் முகுந்தன் றன்னையுமவ்
வலிய சண்பை யாலிறப்பு
வந்து சேரா வணங்கருதி
எண்கட் பிரமன் தடமாடி
எண்தோட் பரனைப் பணிந்தேத்தி
யிசையோ டுந்தன் சோதிபுக
ஏற்ற வரம்பெற் றிடவருளும்
சண்பை நகர்வாழ் திருநிலையெந்
தாயே வருக வருகவே!
சயிலா திபனுக் குயிரனைய
தனயே வருக வருகவே!! 67
_______
நச்சுப் பாம்புக் கச்சையராய்
நகுவெண் தலையிற் பலிதேர்ந்து
நானா விதமாங் கிறிபேசி
நல்லா ருள்ளங் கவர்ந்தெங்கும்
பிச்சைக் கேகும் பெரும்பித்தன்
பிரியா துடனே திரிபேதை;
பேச்சி கும்பக் குசத்திமலைப்
பெண்சிற் றிடைச்சி யென்றாலும்
அச்சந் தீர்க்கு மாண்டிச்சி
அந்நாள் வலைச்சி தோள்புணர்ந்த
அந்த ணாளன் பொன்னுடலில்
யாரும் வெறுக்க வந்தடைந்த
மச்சக் கொச்சை மாற்றியவூர்
மகிழ்சங் கரியே வருகவே!
மகிமைத் திரசுந் தரியம்மே
வருக வருக வருகவே!! 68
________
7. அம்புலிப்பருவம்
விரியுநீர்க் குவலயங் களிகூர வானெறி
விளங்குதோ ணியிலுதித்தாய்
விமலர்கண் மணியாக மேவினை யிருட்படலம்
வீட்டுபா னீற்றொளியினை
பரிவினாற் றேவார வமுதுபா லித்தனை
பாண்டியர் குலம்புரந்தாய்
பழுதிலாச் சிவசிகா மணியுமா யெங்கள்சம்
பந்தகுரு வினைநிகர்தியால்
குரிசிலா ளுடையபிள் ளைக்கன்றி னமுதீந்த
குளிர்கருணை யாலுன்னையும்
கூவினாள் மேவுதி யெனிற்பெரிய பேறெளிது
கூடுவாய் நீடியாமல்
அரசமா மலையின்மக ளானபர தேவதையொ
டம்புலீயாடவாவே!
அரியசிர புரமேவு திருநிலைய நாயகியொ
டம்புலி யாடவாவே!! 69
________
எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் பரந்தபரன்
இடதுகண் ணாயிருந்தாய்
எம்பரமர் சடைமுடிக் கணியாகி னாயிறைவி
யிடுநுதற் றிலகமானாய்
கொள்ளைக் கவின்பெருகு கரசரண வுகிராய்க்
குலாவினாய் தோழியோடு
குரைகடலி லமுதமய மாயெழுந் தாயன்னை
கொலுவமரு மணையுமானாய்
வெள்ளத்த சீர்த்தமைய னிதயத்து வந்தனை
வெகுண்டரனை யிவள்பிணங்கு
வேளையிற் றிருவடிப் பரிசமும் பெற்றனையி
விதவுற வெலாநினைந்தே
அள்ளிக்கொள் பேரழகி யன்பா லழைத்தனள்
அம்புலீ ஆடவாவே!
அரியசிர புரமருவு திருநிலைய நாயகியொ
டம்புலி யாடவாவே!! 70
________
கோணங்கி யாகிச்சில் கலைசுமந் தேமாதர்
கூசிநின் றேசவருவாய்,
கொடியிடையர் சிலர்சாண முன்மீது வீசிடக்
கொண்டுமறு வுண்டுவளர்வாய்,
ஊணிங் கிலாதிரவி யுண்டுவளர்வாய்,
ஊர்தொறு முலாவியலைவாய்,
உன்னையொரு வேந்தனென் றுலகோர் மொழிந்திடு
முரைக்குறிப் பினையுமுணராய்,
காணுங் குழந்தைமுத லெவருமுனை மதியாது
கயவனெனல் கருதிடாயோ
கரிசிவையெ லாமொழிவை யொருநொடியி லெம்மம்மை
கட்கடைப் பார்வைபடினே
ஆணையா வர்க்குங் கடக்கவரி யாளுடன்
அம்புலீ யாடவாவே!
அரியசிர புரமருவு திருநிலைய நாயகியொ
டம்புலி யாடவாவே!! 71
________
தறுகணம னுரமுறிய வுதைசெய் பெருமானடிகள்
தங்குகட வூரின்மறையோன்
சமயநெறி நின்றவபி ராமிபட் டர்க்கன்று
தழைசெவிய குழையொன்றினால்
மறுவகலு மதியைவரு வித்தவ ளுன்னையு
மதித்தழைத்தா ளிதுவுமுன்
மாதவப் பேறாகும் வரின்வயிறு நிறையமுது
மாந்தலாம் செவியமுதமா
உறுசுவைய மூவர்தமி ழுண்ணலாங் கண்ணுடையன்
உற்றசிற் றம்பலத்தான்
ஒதுஞா னப்பனுவல் தேரலாங் கூத்தகவி
யுரைபரணி தனைநுகரலாம்
அறுசமய முதல்வியரு ளன்னபூ ரணியினுடன்
அம்புலீ யாடவாவே!
அரியசிர புரமருவு திருநிலைய நாயகியொ
டம்புலீயாடவாவே!! 72
_______________________
சட்டகலை யெட்டெட்டும் வன்னிகளும் வல்லசீர்ச்
சண்பைக்குள் வரவஞ்சியே
தண்கலைக ளீரெட்டு ளான்சோலை மறைவிலே
தானொதுங் கித்திரிகிறான்
துட்டனவன் வெங்குருவு மிங்குள வதற்குளம்
துவண்டனன் காழியென்றால்
துணுக்குறு கிறான்சிவத் தொண்டுவல கணநாதர்
தூய்மைக்கு நாணுகின்றான்
மட்டிலொளி ஞானசம் பந்தன்மா னங்கண்டு
மானமு மழிந்ததானான்
மாதுநீ பேதைதனை மன்னிக்க வென்றியாம்
மன்றாடி யாற்றுவித்தோம்
அட்டிடுத லுன்னையரி தன்றுவல் லேயெங்கள்
அம்பிகையொ டாடவாவே!
அரியசிர புரமருவு திருநிலைய நாயகியொ
டம்புலி யாடவாவே!! 73
_______
வேறு
சேர்ந்தே யறியா மலர்ச்செங்கைச்
சிவனார் தாமுந் திருமாலும்
திசைமா முகனு மிந்திரனுந்
தேவர் பிறரு முளமார்வங்
கூர்ந்தே யிவள்கட் குறிப்பறிந்து
குற்றே வல்செயக் காத்திருந்தார்;
கோல வளைக்கை யோச்சியுனைக்
கூவப் பெற்றாய்; இப்பேறு
நேர்ந்த போதே வந்துன்றன்
நிரப்பு நீங்கி யுய்கண்டாய்;
நிலையின் றலையு மடமதியே
நீடித் தாற்பின் கேடுறுவாய்
ஆர்ந்த கருணைத் திருநிலையோ
டாட வாரா யம்புலியே!
அழகார் புகலிக் கிறைவியொடே
ஆடவாரா யம்புலியே!! 74
_________
மலையி லுதித்தீர் இருவீரும்
வண்பா லுததி வளர்ந்தீர்மால்
மகிழுந் தங்கை மகவானீர்
மாதே வங்க மகிழ்ந்திருந்தீர்
குலைவி லமுத மூட்டியுயிர்க்
குழுவை வளர்ப்பீர்; காமன்றன்
குடைமே லோங்கத் துணைபுரிவீர்
குலவு மிவற்றா லுனையழைத்தாள்
நிலைமை யாய்ந்தா லிவள்செம்பொன்
நீயும் கரும்பொன் னாதலினால்
நின்றாழ் நிலைமை எண்ணியுய
நீடி யாமல் ஓடோடி
அலகில் கருணைத் திருநிலையோ
டாட வாவா வம்புலியே!
அழகார் புகலிக் கரசியுடன்
ஆட வாவா அம்புலியே!! 75
__________
கோணை மதியே குறுமுயலின்
கூடே கயமைக் குவலயத்தின்
குலவு பதியே கயநோயோய்
குருவைப் பிழைத்த கொடியோனே
காணற் காகாய் குகுவினிடை
கண்டாற் பிறந்த இரண்டாம்நாள்
கட்டம் பலவும் பட்டவராற்
கசந்து பேசப் படுவாயால்
வீணுக் கேனிப் பிறவியினி
மேன்மை வேண்டின் வேணுபுரம்
மேவிற் பாவ மோசனமாம்
வீடும் பெறலா மேனைமகள்
ஆணைக் கிணங்கித் திருநிலையோ
டாட வாரா யம்புலியே!
அழகார் புகலிக் கரசியுடன்
ஆட வாவா வம்புலியே!! 76
_________
கறுத்த காலனுரைத் துதைத்த
கமல மலர்த்தா ளிவளதுகாண்
கடிமுப் புரங்கள் பொடியாகக்
கனவிற் பிடித்த திவள்கரங்காண்
வெறித்த மலரோன் விண்டுசிவன்
விரும்பிப் புரிவ திவள்பணிகாண்
விழிப்பி னிமைப்பி னுலகமெலாம்
விரித்துத் தொகுப்ப திவளருள்காண்
மறிக்கட் டிருவுங் கலைமகளும்
வாழ்த லிவள்கண் மலர்க்கடைகாண்
வாவென் றழைத்தும் பாணித்தாய்
மதியோ இதுவென் மதியமே
அறுத்த மலத்தூர்த் திருநிலையோ
டாட வாரா யம்புலியே!
அகில புவனே சுவரியுடன்
ஆட வாரா யம்புலியே!! 77
___________
பிடித்த வில்லோ மென்கரும்பு
பிரச மலரோ ஐங்கணைகள்
பெருமா னொருபா லிச்சிறுமான்
பிழைத்தா லொறுப்பா ளோஎன்னேல்,
தடித்த மதிய தக்கனிழை
தவறு கருதித் தண்டித்த
தன்மை யறியா யிவள்முனிவைத்
தாங்க வல்லா ராரிவள்தாள்
பிடித்த ததிசி துருவாசன்
பெரிய குறிய முனிமுதலோர்ப்
பிழைத்த வமர ருறும்பீழை
பெயர்க்கப் பிறரான் முடிந்ததோ
அடித்தண் கமலத் திருநிலையோ
டாட வாவா வம்புலியே!
அகிலபுவனே சுவரியுடன்
ஆடவாவா வம்புலியே!! 78
____________________________
8. அம்மானைப் பருவம்
உலகுறு கவிப்பாம் வியோமமே கேசமாய்
ஒண்டிசைக ளெண்டோளுமாய்
ஓதரிய பேருருவ னானபெரு மனையுன
துள்ளத் துஞற்றலன்றி
இலகுகிரி யாவிதியின் வழுவாம லேபுறத்
தினிலும்வழி பாடியற்றல்
ஏய்ந்துநித் திலவெள்ளை யட்சதைகள் தூவுமா
றென்னவும் புட்பாஞ்சலி
கலகலென வெள்வளை கலிப்பவங் கைச்செழுங்
கமலங்கொ டிடுதலெனவுங்
ககனமுந் திசைகளுஞ் சென்றுகீழ் வரநெடுங்
கடலுலகும் விலைபெறாத
அலகில்நில வொளிவீசு மதியநிகர் திரள்முத்த
அம்மானை யாடியருளே!
அழகுநிறை பிரமபுர மருவுதிரு நிலையம்மை
யம்மானை யாடியருளே!! 79
_______
வந்தொரர விந்தனிவண் வழிபட்டரன் கழல்கள்
மாவரம் பெற்றுய்ந்ததால்
மற்றையண் டத்துமலர் வாழ்வோரும் ஆர்வமொடு
வழிபாடு செய்யவேண்டிப்
பந்திபந் தியின்வந்து சேர்வதும் போவதும்
பயில்கின்ற காரணத்தால்
படர்சிறைய வெள்ளன்ன மானம்விண் ணின்மீது
பலபல வியங்குமாபோல்
விந்தையர விந்தைகலை மகளிந்தி ராணிதொழு
விமலையுன் செங்கைமலரால்
விகசித வெளொளிகெழுமு பருமுத் திழைத்தபெரு
விலையஅம் மானைவீசி
அந்தமுத னடுவாகி யெங்குநிறை கின்றபரை
அம்மானை யாடியருளே!
அழகுநிறை பிரமபுர மருவுதிரு நிலையம்மை
யம்மானை யாடி யருளே!! 80
_________
மாதவ முயன்றுபெரு வாழ்வுபெறு தக்கனரன்
மகிமைமதி யாதுசெய்த
மகத்தினி லிளித்தப லுதிர்த்திடப் பெற்றனனொர்
வண்கதிர்ப் பரிதி, யொருவன்
ஏதில னெனக்கட் கடைச்சாடை காட்டிவ
லிருட்புகுங் கண்ணனானான்
இதையறிந் தஞ்சிமற் றையவினர்கள் பதின்மரும்
எமக்குமிது நேராதரன்
பாதபது மம்பணிந் துய்துமென விவண்வந்து
பரமனைப் பரவிமீளும்
படியெனப் பதுமரா கத்தினிய லம்மானை
பங்கயச் செங்கைமலரால்
ஆதரவி னாலெங்கள் விழிகள்களி கொள்ளுமா
றம்மானை யாடியருளே!
அழகுநிறை பிரமபுர மருவுதிரு நிலையம்மை
யம்மானை யாடி யருளே!! 81
__________
விண்டதண் டாமரையின் மதுவுண்ட வண்டென
விளங்குநின் பாதமலரின்
விம்முபர மானந்த மதுநுகர்ந் தமுதகவி
விள்ளுமபி ராமபட்டன்
தண்டனை உறாமலம் மாசைநாள் விண்மீது
தண்மதி யுதிக்குமாறு
தழைசெவிக் குழைவீசு கருணைநா யகியினுஞ்
சரணமடை புலவருய்யக்
கொண்டுமதி வீசுவேம் எம்மிட மதிக்கென்ன
குறைவென்று தேற்றல்போலக்
கொண்டலன குந்தளத் திளமதிக் குழவியுனை
கோமளப் பூங்கொம்பரே
அண்டமள வுஞ்சென்று மீளவொண் ணித்திலத்
தம்மானை யாடி யருளே!
அழகுநிறை பிரமபுர மருவுதிரு நிலையம்மை
யம்மானை யாடி யருளே!! 82
___________
கம்பவள தந்தியைக் கொடுவரியை யரியைக்
கரத்தா லுரித்து வெம்மைக்
கதிரைமறை முகிலெனப் போர்த்துடுத் தார்பெரிய
கஞ்சுக மெனத்தரித்தார்
விம்பவள வெம்பகன் கண்பறித்தார் மற்றொர்
வெம்பரிதி பல்லுதிர்த்தார்
விதிதலையி லொன்றைநக நுதியினாற் கிள்ளினார்
விறன்மறலி தனையுதைத்தார்
எம்பவள வண்ணரென் றிறைவர்பிர தாபங்கள்
ஏத்தியவை யெங்குமுலவ
என்றுய்த்தல் போலநீ ளிமயமலை தருபுதல்வி
ஏமகமலச் செழுங்கை
அம்பவள வானவிழி விம்பவ தரீபவள
அம்மானை யாடியருளே!
அழகுநிறை பிரமபுர மருவுதிரு நிலையம்மை
அம்மானை யாடியருளே!! 83
______________
வேறு
திங்கட் சடையான் முடிக்கங்கைச்
செழுநீ ரடிமேல் வார்ப்பதனால்
செழித்து மென்மேல் வளர்பசிய
தெய்வ மலர்க்கற் பகக்கொடியே
பொங்கு முனது பசியநிறம்
புவன மெல்லாம் படர்வதெனப்
பொற்கை யமர்ந்து மொழிகற்றுப்
போகும் பிள்ளைக் கிள்ளையெனக்
கொங்குண் கூந்த லார்மகவைக்
கொஞ்சும் பாடல் விஞ்சையர்கள்
கூட்டம் பெரிதும் பாராட்டும்
கொச்சைப் பதியாய், பசுஞ்சோதி
அங்கட் களிக்கு மாறருளால்
ஆடியருள்க வம்மானை!
அம்பொற் சண்பைத் திருநிலையே
ஆடியருள்க வம்மானை!! 84
____________________________
தேனார் கமலக் கரதலத்திற்
சேர்ந்து செம்மை யொளித்தாகித்
திருமார் பிடத்து நித்திலத்தாற்
றிவளும் தவள வொளியினதாய்,
மீனார் கண்ணின் ஒளியாலே
விரிந்த குவளை நிறத்ததாய்,
மேனி யொளியாற் பசுமையதாய்,
விவித மாகிக் கலைமகளாய்
வானார் மதிவெண் ணிறமலரின்
மங்கை யாகிச் செம்மைநிறம்,
மலையின் மகளாய்ப் பசுமைநிறம்,
மன்னு முனைநேர் தெளிபளிங்கின்
ஆனா வருள்சேர் திருநிலையே
ஆடி யருள்க வம்மானை!
அம்பொற் சண்பைப் பெண்பாவாய்
ஆடி யருள்க வம்மனையே!! 85
_____________
வேறு
வான ருஞ்சுரர் கூனம ருங்கலை
மதியமு துக்காக
வாடுதல் கண்டமு தக்கல யங்கள்
வழங்குத லும்போல
ஊனம ரும்பல வுயிர்கள் பசித்துயர்
ஓவிட நல்லன்ன
உண்டை வழங்குத லும்போ லக்கையில்
ஒண்டொடி யொலிசெய்யத்
தேனமர் கொன்றையர் வாரண வாசித்
திகழ்பதி யதிலன்னந்
தினமுத வும்பரி பூரணி நாரணி
சேடி யரொடு கூடி
ஆனன மலரத் திருநிலை நாயகி
ஆடுக வம்மானை!
ஆதி முதற்கொரு பாதியளித்தவள்
ஆடுக வம்மானை! 86
__________
திகழ்கழு மலநகர் தொழுபவர் மலவிருள்
சேணகல் வதுபோலச்
சிவனடி யவரணி பொடிநில வொளியென்
டிசைபர வுதல்போல
சகதல முதவிய மணிவயி றுமைநின
சவிபர வுதல்போலத்
தறுகண மனையுதை பதமலர் விறலொளி
தழைவுரு வதுபோல
மகபதி மணியொளிர் தரள முரகமணி
வகைகர மலர்வீசி
மலர்மகள் கலைமகள் சசிமகள் விழிமலர்
மலரமெய் யடியார்தம்
அகமலர் நிகர்சிர புரமமர் திருநிலை
ஆடுக வம்மானை!
ஆதி முதற்கொரு பாதியளித்தவள்
ஆடுக வம்மானை!! 87
________
நாவினில் வைக்கம ருந்தாய் நோய்தவிர்
நாம வெழுத்தஞ்சும்
நாவலர் பாடிய காவிரி நன்புனல்
நாடும் முகக்கடையில்
பாவிய நீரில் மிதந்திடு தோணிபு
ரம்முதல் பன்னிருபேர்
பன்னுப ழம்பதி யும்பொனி நதியும்
பதிநடு வமர்மலையும்
வாவு மறைப்பதி யுந்திரி சூல
மழுப்படை யுந்துடியும்
மதுவிரி கொன்றையும் மால்விடை யாகிய
வானுயர் கொடியுமிசை
ஆவலி னாலடி யார்பலர் பாடிட
வாடுக வம்மனையே!
ஆதி முதற்கொரு பாதி யளித்தவள்
ஆடுக வம்மனையே!! 88
________________
9. நீராடற் பருவம்
பண்ணார்ந்த வரிவண்டு முரலுநி னறுங்கேச
பாசத்தி னொடுபாசியும்
பாயும்வரி விழியொடு கருங்கயலு மிதழினொடு
பவளமும் கைவளையுடன்
மண்ணார வருதிரைச் சங்கமும் கொங்கையொடு
வனைகுமிழும் உறவுகொண்டு
வருவிருந் தெதிர்கொள்ளு மாறெனக் கூடியுடன்
மருவவின் சாறுவழியுங்
கண்ணார்ந்த செங்கழைச் சிலைமலர்க் கணைகளைக்
கைக்கொண்டு செம்மைநிறமுங்
கலவியங் குசபாச மேந்திச் சிலம்படி
கலிக்கவுன் காட்சிமருவி
விண்ணார்ந்த சோலைவழி வருகின்ற காவேரி
வெள்ளநீ ராடியருளே!
வேணுபுர மேவுபிர மீசருயிர் நாயகீ
வெள்ளநீ ராடியருளே!! 89
____________
தூவினில மேல்விழ விடாதுவரி வண்டுகள்
சுழன்று துய்க்குஞ் சுண்ணமொய்
சுரிகுழ லரம்பையர்கள் மதுமலர்க ளிந்த்ராணி
துகில்காம்பு நேத்திரங்கள்
காவிமுக வாசதாம் பூலாதி சந்தனங்
கத்தூரிமா னின்மதம்
கலையின்மக ளரதனம் பவளமுத னவமணிக்
கலன்மலரின் மகளேந்தி நின்
றாவலின் ஏவல்வழி நிற்கிறார், பொன்னன்னம்
ஆமென வசைந்துசென்றே
அரியமலர் வேய்ந்துசந் தனமுந்தி நீள்கலைகள்
ஆர்ந்துவெள் வளையணிந்து
மேவியெழில் மாதெரென வோடிவரு காவேரி
வெள்ளநீ ராடியருளே!
வேணுபுர மேவுபிர மீசருயிர் நாயகீ
வெள்ளநீ ராடியருளே!! 90
______________
மாலைநழு வக்கரிய குழல்சரிய நறுநுதல்
மணத்தசிந் தூரமழிய
வாவுகரு மயிலைநிகர் விழிகள்செங் கயலாக
வாய்வெள்ளை நெய்தலாகப்
பாலைநிகர் முத்துரத் தினவடம் பின்னுறப்
பருநகிற் சாந்தமுதிரப்
பவளநிற முதல்வனொடு பேரின்ப வாரிதிப்
படிவதென, வுயர்சையமாம்
கோலவரை யிற்பிறந் தகில்சந் தனங்கரிக்
கொம்புமயி லிறகுவயிரங்
குளிர்முத்த மரகதங் குலமணிகள் பிறவுடன்
கொங்குப்பொ னுஞ்சுமந்து
வேலைமண வாளனொடு கூடவரு பொன்னியின்
வெள்ளநீ ராடியருளே!
வேணுபுர மேவுபிர மீசனுயிர் நாயகீ
வெள்ளநீ ராடியருளே!! 91
_______________
கூந்தலுக் கிணைகூறு சைவலத் தின்குழுக்
குலையநுதல் வளைவினிணையாங்
கொடியமுர ணேனவெண் கொம்புவிலகிட,வரிக்
கூர்விழிக் கிணை யாங்கயல்
பாய்ந்துபல திசையோட, வாய்க்கிணை சொல்குமுதம்
பயங்கொண்டு நடுநடுங்கப்,
பங்கய முகத்தினுக் கஞ்சிக்க ணீர்விடப்
பல்முத்த மலைமொத்துண
ஏந்துகொங் கைக்கிணை யெனுஞ்சக்ர வாளங்கள்
இரிய, இடை நிகர்கொடியெலாம்
இடைய, பிடியனைய வென்னம்மை இகுளையரொ
டினிதுபுது நீர்சுமந்து
மேந்தகைய பொன்கொழித் தார்த்துவரு காவேரி
வெள்ளநீ ராடியருளே!
வேணுபுர மேவுபிர மீசருயிர் நாயகி
வெள்ளநீ ராடியருளே!! 92
___________
குலமலைக் கரசுமெய்த் தவமளித் திடுபசுங்
கொம்பே, கலாபமயிலே
கொடியிடைச் சசிமலர்க் கொடிகலைக் கொடிதொழுங்
குலதெய்வ மானவுமையே
கொலைமதக் கரிமருப் பொருகலைக் குளிர்மதிக்
கூனிளம் பிறையதாகக்
கொடியினம் படர்சடைக் கூட்டமா கக்குவளை
கொண்டலங் கண்டமாக,
மலைமதக் களிறுசெங் கட்புலிப் புள்ளிமான்
வயவரி சுமந்துமேனி
வண்ணமொண் பொன்னாக வருதலால் எம்மண்ணல்
வடிவுகாட் டிடுவதாகி
விலைமதிப் பரியநவ மணியுந்து காவிரியின்
வெள்ளநீ ராடியருளே!
வேணுபுர மேவுபிர மீசருயிர் நாயகீ
வெள்ளநீ ராடியருளே!! 93
____________
வேறு
ஏந்து மிருவெண் பிறைமருப்பின்
இபங்கள் மேயும் தண்சாரல்
இருங்கட் குவளைப் பூஞ்சுனைகள்
இலங்குஞ் சைய மலைப்பிறந்து
காந்து மணியும் செம்பொன்னும்
கல்லோ லக்கைத் தலமேந்திக்
கரைமேல் விழைவார் கொளவீசிக்
கடிய கோடை தனைத்துரந்து
சேந்த கைப்பைங் குவளைக்கட்
சிறிய மருங்கு லுழத்தியருந்
திண்டோ ளுழவர் தங்குழுவும்
செங்கை கொட்டி வரவேற்பப்
போந்து புவனம் புரந்தருளும்
பொன்னிப் புதுநீ ராடுகவே!
பொற்பார் புகலித் திருநிலையே
புதுநீ ராடி யருளுகவே!! 94
_____________
வாசப் புனலு நறும்பூவும்
வன்னி கரந்தை கூவிளமும்
மணியு முத்துஞ் சந்தனமும்
மலையி னகிலு மற்றவையும்
வீசு தரங்கக் கரமேந்தி
விமல னடியா ருடன்மேவி
வினையைத் துரந்து மெய்குளிர்ந்து
மின்போற் சடைச்செம் பொன்மேனிக்
காசை மிடற்றெங் கண்ணுதலார்
கருணை யுருவாய் வீற்றிருக்கும்
கவினார் பதிகள் தொறுஞ்சென்று
காலால் வலஞ்செய் தடியவர்போல்
பூசை புரியுந் தொண்டாற்றும்
பொன்னிப் புதுநீ ராடுகவே!
பொற்பார் புகலித் திருநிலையே
புதுநீ ராடி யருளுகவே!! 95
___________
அணரி நச்சுப் பற்பாம்பே
யணியாக் கொண்ட கறைமிடற்றார்க்
காவி யான தூவிமயில்
அனையாய், பவள வாயனமே
துணரி யோங்கு சோலைமயிற்
றோகை போல மடல்விரிந்து
சூற்பாம் பென்னக் கருக்கொண்டு
தோன்றி நிமிர்ந்து சான்றவர்போல்
வணருஞ் சாலி கழைகமுகு
மருவு மருத நிலமெல்லாம்
வையம் பொலியப் பலவளமும்
வழங்கிப் பாய்ந்து மிகும்புனல்போய்ப்
புணரி தனையும் புனிதஞ்செய்
பொன்னிப் புதுநீ ராடுகவே!
பொற்பார் புகலித் திருநிலையே
புதுநீ ராடி யருளுகவே!! 96
____________
இயலுந் தெய்வத் தமிழ்முனிவன்
ஏந்து கும்பத் திருந்தநதி
இபமா முகவன் கவிழ்த்துவிட
இருமா நிலத்திற் பாய்ந்தநதி
முயலுந் தவத்திந் திரன்வைத்த
மொய்பூஞ் சோலைப் பாய்ந்தநதி
முக்கட் பெருமான் பதிபலவும்
முன்னி மலர்தூய்ப் பரவுநதி
பயிலுந் தொண்டன் பணித்தபடிப்
பணிப்பாய்க் கிடந்து முதுகலைப்பப்
பதுமை நடந்து பின்றொடரப்
பசுமைத் தமிழ்ப்பின் செல்கருணைப்
புயலு நடுவட் பயிலுநதி
பொன்னி நதிநீ ராடுகவே!
பொற்பார் புகலித் திருநிலையே
புதுநீ ராடி யருளுகவே!! 97
__________
சினவுந் தெவ்வர் மிகைதணித்த
செங்கட் சோழன் சிவபாத
சேக ரன்சீரநபாயன்
செங்கோன் மனுவா தியர்புரப்ப
நனைக்கற் பகநா டும்பரிடை
நண்ணி யிருந்துந் தாழவளர்
நான்கு பயனுந் தருசோழ
நன்னா டளிக்குஞ் செவிலியாய்
மனவு மெலும்பும் பணியுமணி
மாதே வுக்குச் சாத்தவென
வளவன் வைத்த மணியாரம்
வழுவைக் காவி லரற்கணிந்த
புனலம் பொன்னித் திருநதியின்
புதுநீ ராடி யருளுகவே!
பொற்பார் புகலித் திருநிலையே
புதுநீ ராடியருள்கவே!! 98
_______
10. ஊசற் பருவம்
ஒள்ளொளிப் பருதிபன் னிருவரையும்
நான்காய் உருட்டித் திரட்டியனைய
ஓங்கொளிப் பவளத் திரட்கால் நிறுத்திவெள்
ளொளிவயிர விட்டமிட்டுத்
தெள்ளொளிய நிலவுவிரி நித்திலக் கோவையால்
சேர்த்துவடம் நவரத்தினத்
திண்பலகை கோத்தழகு திகழ்கின்ற
வூசலில் தினமிழைப் பவனுருவிலே
நள்ளிருக் கின்றபடி அடியரித யக்கமல
நடுவிலமர் மடவன்னமே
நாலுமறை யானவிபி னத்திலுறு
தோகையே நறுவிரைக் குழலினறுகாற்
புள்ளொலிக் கக்,கையில் வளையொலிக் கப்,
பசும் பொன்னுச லாடியருளே!
பூம்புகலி யோம்பியமர் திருநிலைச் செல்வியே
பொன்னூச லாடியருளே. 99
_______
நன்னித்தி லத்திரள் பதித்தபொற் காலின்மிசை
நளிவயிர விட்டமிட்டு
நாலுந் திரட்டரள நீள்வடங் கோத்துமண
நாறுமல் லிகைபரப்பி
அன்னத்தின் வடிவா யமைந்தபல
கையிலேறி யாகாய மீதுலாவ,
அரமகளிர் நின்றூக்க மென்னகை யரும்பஎம்
மம்மைநீ யாடுதோற்றம்
முன்னமெம் பரமன்முடி காணாத வெள்ளெகினம்
முன்னியிப் பதியினோற்று
முற்றுநின் னருள்பெற்று மீண்டுமுடி
கண்டிட முயற்சிக்கு மாறுபோலப்
பொன்னொத்த பூண்முலைக் கன்னன்மொழி மலைவல்லி
பொன்னூச லாடியருளே!
பூம்புகலி யோம்பியமர் திருநிலைச் செல்வியே
பொன்னூச லாடியருளே!! 100
_______
மண்ணில்வளர் இளமதியம் அனையசம் பந்தற்குன்
மணவாளர் உண்மகிழ்ந்து
வழங்கினதை யொத்தமுத் துப்பந்தர்
நீழலில் விமானநிகர் பேரூசலில்
கண்ணொளி வெறிக்கவெறி செம்மணிகள் மிக்கவணி
கலனுருவ மிசையணிந்து
கதிரவர்ப னிருவர்நவ மணியாய்க்
குயின்கவின் கனகிரீ டங்கவித்து
விண்ணுநில னுஞ்சென்று வருமா றுகைத்தாட
வெள்ளமுத வேலைநடுவே
விதிமுத லியோர்தாங்கு மஞ்சமேல்
அம்மைநீ மேவியமர் செம்மைகாட்டப்
புண்ணியர லார்தொழக் கிடையாத சேவடியை
பொன்னுச லாடியருளே!
பூம்புகலி யோம்பிவளர் திருநிலைச் செல்வியே
பொன்னூச லாடியருளே!!! 101
_______
பங்கய அரும்பனைய கொங்கையிணை
தங்கும் பசுங்கொடி மருங்குலாடப்
பைந்தொடைய லோடுகமு கம்பாளை
யனகேச பாசமா டக்குழன்மிசைக்
கொங்கருந் துங்கருந் தும்பியின மாடக்
கொழுங்கொடிப் புருவமாடக்
குழையாட வதன்மீது தாவுகய
லாடவெங் கோன்மனமு மூசலாட
எங்கணு மிருந்துவரு தொண்டர்குழு நின்கருணை
யென்னும் வெள்ளத்திலாடி
இதுகண்கள் பெற்றபய னென்றுவிழி
சொரிமாரி ஏந்துமார் பத்திலாடப்
பொங்குபொடி பூத்ததழல் மேனியவர் காதன்மயில்
பொன்னூச லாடியருளே!
பூம்புகலி யோம்பிவளர் திருநிலைச் செல்வியே
பொன்னூசலாடியருளே!! 102
_______
ஓங்கிய மலர்ச்சோலை யிற்சந்த னக்கொம்பர்
உற்றமணி யூசலேறி
ஊட்டியன வொண்டளிர்ச் செயலைச்
சேவடி யுதைந்தாடு தோறுமஃது
தேங்கமழ் அரத்தச் செழும்பூ மலிந்தருகு
சேர்கொன்றை மீதுதூவல்
தீவிழித் துத்தன்னை மரனாக்கு
மரனைச் செயிப்பமுயல் செய்கைகாட்ட
மாங்குயிற் றீங்கிளவி மயிலன்ன வின்சாயல்
மடவன்ன மன்னநடையாய்
மதுரகவி வாணர்மிடி பொடிபட
வளிக்கின்ற வான்சுரபியே முத்தியாம்
பூங்கமலை கோயிலாக் குடிகொள்சே வடியரசி
பொன்னூச லாடியருளே!
பூம்புகலி யோம்பிவளர் திருநிலைச் செல்வியே
பொன்னூச லாடியருளே!! 103
_______
காசுமிளிர் பணமாயி ரங்கொள்அர
வின்சிரக் கண்ணமருமண் ணின்மீது
கற்பனையின் வழுவாம லொழுகுபவர்
மேலான கதியதிற் புகுதுமாறுந்
தேசுமலி வானுலக மெய்திமிகு போகந்
திளைத்தவரும் வினையின்முடிவில்
சென்றுகீழ் உலகமுறு மாறும்,
அவை தேவிநின் திருவருட் செயலென்பதூஉம்
மாசுபடு மதியருந் தெளியவென
என்னம்மை மண்ணுமணி யூசலேறி
வானவரும் மண்ணவரும் வாழ்த்த மலர்வீழ்த்த,
அருமறைநான்கும் வல்லவாய்மைப்
பூசுரர்கள் நெஞ்சிலொளிர் மாணிக்க தீபமே
பொன்னூச லாடியருளே!
பூம்புகலி யோம்பிவளர் திருநிலைச் செல்வியே
பொன்னூச லாடியருளே!! 104
_______
முத்துமர கதநீலம் இரவியொளி மணிவைர
முயல்விழியை யனையமணியும்
முந்துகோ மேதமொடு புட்பரா
கம்பவள மொழியுநவ மணிகுயின்ற
சித்திரநல் லூசல்மே லமருமுன தெழிலுருத்
திகழ்மணிக டொறுமிலகுதல்
செகதல மெலாமருவு முயிரினுள
மலர்மிசைத் தேவிநீ செல்லல்காட்ட
உத்தமியுன் மேனியி லிருந்தழகு பெறுமணியுள்
உறுசூழ லுள்ளவையெலாம்
ஒன்றியுரு வங்காட்டல் எவையுமுன்
ஒன்றிவாழ் வதுமுணர்த்தப்
புத்தமுத மொத்தசிவ சத்திதிரி புரையம்மை
பொன்னூச லாடியருளே!
பூம்புகலி யோம்பிவளர் திருநிலைச் செல்வியே
பொன்னூச லாடியருளே!! 105
_______
உன்னையொழி யரப்பரம சிவமென்ப
துளதென்ன உன்னியதை மட்டுந்தொழ
லுற்றபிர மரமுனிவ னுற்றபிர
மம்பிறர்க் குறுதலா காதென்னவே
மன்னியர னொடுபாக மருவியுள பரசிவையுன்
மலரடித் தூவுமலரால்
மலரவன் றுளவன் மகவான்
முதற்மகிழ் மகிமையா யொண்ணிமவான்
தென்னவன் பரதர்குல மன்னவன்
குலமுயச் சென்றுமகவான எளிமை
சிந்தித்து மலர்வாணி யிந்திரை
முதற்பரவு சேடியர்கள் பாடமுத்தம்
புன்னைசொரி மென்கழி மிகுங்காழி மேயவுமை
பொன்னூச லாடியருளே!!
பூம்புகலி யோம்பிவளர் திருநிலைச் செல்வியே
பொன்னூச லாடியருளே!! 106
_______
எம்பம் பிருட்பிறவி யலையாழி யேறயான்
இறுகப் பிடித்த புணையாம்
இன்குரற் கிண்கிணி சிலம்பலம் பும்பதத்
திணையில் சம்பந்த முனிவன்
அம்பம்பு திரைக்கடற் சிலைதோணி யாகஅணை
அரசுதிரு நாவலூரன்
அன்பினா லின்பமார் மாணிக்க வாசகனை
யாதியருள் மொழிவிபுதர்கள்
செம்பம்பு தென்றமிழ்த் திருமுறைகள் பண்ணோடு
சிவபத்த ரோதும்இசையும்
தெய்வமறை லலிதையா யிரநாமம்
அரியேறு தேவிமான் மியமுதலவும்
பொம்பொம் பெனுஞ்சங்கு மெங்கணும் முழங்கிடப்
பொன்னூச லாடியருளே!
பூம்புகலி யோம்பிவளர் திருநிலைச்செல்வியே
பொன்னூச லாடியருளே!! 107
_______
மலிகடற் புவியில்மறை யாகம முதற்கலைகள்
வைதிகச் சைவமன்னருளாட்சி வாழ்க,
மழை வளமுதவி வாழ்க,
விமையோர் பொலிவுறப்
பொலிவுறப் பூசுரர்கள் வேள்விவாழ் கச்சிவன்
பூசைகள் வழாது வாழ்க,
பூசனைக் குதவுகவ் வியநீறு தருகின்ற
புனிதவா னிரைகள் வாழ்க,
நலிவுசெய் மறச்செயல் மறந்துமன் பதையெலாம்
நல்லறிவு பெற்று வாழ்க
ஞாலமிசை யுயிரெலாம் வாழ்கஅர
னடியார்குடி நாடோறு மோங்கி வாழ்க
பொலியுமுல குக்கெலா முதல்வியா கியதேவி
பொன்னூச லடியருளே!
பூம்புகலி யோம்பிவளர் திருநிலைச் செல்வியே
பொன்னூச லாடியருளே!! 108
திருநிலை நாயகியம்மை பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
_______
குறிப்புரை
1. திருமார்பன் - திருமால்; மகாதேவன் - பெருந்தேவன்; மகாதேவி - பெருந்தேவி; அவர்கள் பிள்ளையாகிய விநாயகரே மூத்தபிள்ளையார். கிழவி - உடையாள். வயது முதிர்ந்தவள். மழலைமொழியால் சிறுவன் நுவல்வதால் இந்நூல் பிள்ளைத்தமிழ் ஆயிற்று.
2. குரவன் - குராமாலை யணிந்தவன்; குருநாதன். புயக மன்னவன் - ஆதிசேடன். போகாது - முடியாது. மங்கலை - சர்வமங்களை என்னும் பெயருடையாள்.
3. கண்ணாயிரன் - இந்திரன். சென்னியப்பன் - தலையில் கங்கை தரித்தோனாகிய சிவபெருமான். இரணிய கருப்புசாமி - பிரமன். இத்தொடர்கள் கண்ணாயிரம், சென்னியப்பன், கருப்புசாமி என்னும் அன்பர்களையும் குறிப்பால் உணர்த்தும். தமிழ்நாடன் - பாண்டியன். மலையின் தலைவன் - பர்வதராஜன். வலையன் - நெய்தல் நிலத் தலைவன். வலையற்கும் மகளான வரலாற்றினைத் திருவிளையாடல் - வலைவீசின படலத்திற் காண்க.
4. ஒருபாவலன் - திருமழிசையாழ்வார். தனஞ்சய் - அருச்சுனன். சிறுநம்பி என்றது. பிரகலாதனை.
5. ககன நதி - ஆகாயகங்கை. பிரமன் மகன் இடு சபத வழி - தக்கன் இட்ட சாபத்தின் வலிமை. முதல்வன் இல்லை, வினையே பயன் தரும் என்பார், தாருகவன முனிவர்கள். விபுதர் - தேவர்கள். களவின் உருகனி - களாப்பழம்.
6. கோதண்ட நெடிய முகில் - இராமன். ஆகண்டலன் - தேவேந்திரன். விடையவன் - சிவபெருமான். வாரணம் - யானை. ஆரணம் - வேதம்.
7. ஆல்கீழ்ப்பெருமுனி - தட்சிணாமூர்த்தி. தாரம் - பிரணவம். தந்திமகள் கரும்பு - தெய்வயானைக்குக் கரும்பு போன்றவன். வந்திக்கு ஆளாம் கூலி - மதுரைப் பிட்டு வாணிச்சிக்கு ஆளாக வந்த கூலியாள்
9. உசனன் - கக்கிராச்சாரி. மீகாமன் - கப்பல் ஓட்டும் மாலுமி. சுருதி உபவனம் - வேதமாகிய பூஞ்சோலை. ஆகம விபினம் - ஆகமம் ஆகிய பொழில். மயூரி - பெண்மயில்.
10. மோகினியாகிய திருமால் ஈன்றதால் சாத்தனுக்குத் திருமால் தாய் ஆவார். விண்டு - விஷ்ணு. உமையை எம்தாய் எனவும் விடைப்பாகனை எந்தாய் எனவும் சாத்தன் அழைப்பான். கோகனக மகள் - திருமகள். உமாதேவி சிவனுக்குத் தாய் மகள் மனைவி தமக்கை உடல் உள்ளம் உயிர் ஆகிய எல்லாமாய் இருக்கிறாள்.
12. மரு - வாசனை. படலை - மாலை. பிரமன், தன்னை மகனென்று திருமால் கூறியதைப் பொறுக்காதவனாகிச் செய்த செயல்கள்கூறப்படுகின்றன. திருமாலின் பத்துப் பிறவிகளையும் பிரமன் படைத்துப் பெருமையுற்றான். கடல் உடையாள் - கடலாகிய ஆடையணிந்த நிலமகள். கைம்பெண்டிர் கைவளையலையும் காதோலையையும் அணியார்.
13. இந்திரன் ஆட்சி செய்யும் நாடு விண்ணுலகம். அதில் வாழும் மகளிர் அரம்பையர். அவர்களுடைய அவயவங்களுக்குப் பகையாகிய முகில் முதலியவற்றை அவன் அடக்கியாளும் விதம் கூறப்பட்டது.
இந்திரன், கண்ணை இமை காப்பது போலத் திரிபுரசுந்தரியைக் காக்க என இயைக்க. மிகை - செருக்கு. புரந்தரன் - இந்திரன்.
15. வெள்ளை ஏடு - வெண்டாமரை இதழ், எழுதாத ஓலை. அரிணம் - மான். கொச்சை - சீகாழி. அரிணம் முதலியவை பார்வை முதலியவற்றைப் பெறுமாறு அளிப்பவளாகிய கொம்பு என்க.
16. உலகமே வயல். உயிர்களே பயிர். மகிடாசுரனே எருமை. மேதி - எருமை. கடுங்கண்நர அரி யேறு - கோபமிக்க கண்களையுடைய நரசிங்கம். கட்கம் - வாள். எமனை உதைத்த பெருமை இறைவனது இடப்பாகத்துள்ள அம்மைக்கே உரியது. திருநிலை ஆயி - திருநிலையம்மை. செல்வி - சகலசௌபாக்கியவதி. வண் குரை கடல் - வளமை மிக்கதும் ஒலிப்பதும் ஆகிய கடல்.
17. அளிகளப நிரை - வண்டுக் குஞ்சிகளின் கூட்டம். செவிவரைதோய் விழி - காதளவு நீண்ட கண்கள். முகுளம் - அரும்பு. முறுவல் மகரந்தம் - புன்சிரிப்பாகிய பூந்தாதுமிடை - நெருங்கிய. நுதழ் இதழ் - நெற்றியாகிய தாமரை இதழ்.
18. வயிறே அளறு - நரகம். மறைவிடை - எதிர்மறையாகிய விடை. அஃதாவது 'இல்லை ' என்பது.
19. இதில் கேனோபநிடத்தில் காணும் செய்தி ஒன்று கூறப்படுகிறது ஒருகாலத்தில் அசுரர்களை வென்ற சுரர்கள் குழுமி, இவ்வெற்றிக்குக் காரணமானவர் யார்? யானே என்று ஒவ்வொருவரும் செருக்கிக் கூறிக் கலாய்த்தபோது அவரிடைச் சிவபெருமான் தோன்றி அவர் செருக்கை அழித்தான். விதிவிடை - 'ஆம்' என்ற விடை.
20. இந்தப்பாட்டில் சம்பந்தருக்கு அம்மை அளித்த திருமுலைப்பாலின் சிறப்புக் கூறப்படுகிறது. தாமரைப் பொய்கை - சீகாழியில் உள்ள பிரம்ம தீர்த்தம். அருமறைச் சிறுவன் - திருஞானசம்பந்தர். நிம்பன் - பாண்டியன். கழுவா அமணர் உடல் - சமணர்கள் உடலைக் கழுவமாட்டார்கள். கழுவினைவையாக - கழுவின்மேல் ஏறியவையாக. அத்தி - எலும்பு. தோள் நோக்கல் - வெற்றி பெற்றவர் தம் தோள் நோக்கி மகிழ்வர்.
21. சாருவாகன் - உலகாயதன். அருகன் - சமணன். கல்வித் திறமையால் வென்றவர்கள் கொடி பிடித்தல் மரபு. உமாபதி சிவாச்சாரியார் ஒராதிரை நாளில் தில்லையில் கொடிக்கவி பாடிக் கொடியுயர்த்தினார்.
22. தமரம் - ஒலி. செம் பூ ஏர் தளி - சிவந்த தாமரைப் பூவாகிய அழகிய கோயில்.
23. சிவமும் சத்தியோடு சேர்ந்தாலன்றி ஐந்தொழில் செய்யமாட்டாது. திவளல் - அசைதல். நன் திவி - நல்ல வானுலகம். பார் - மண்ணுலகம். பதம் பூவின் பால்சேர் - திருவடியைப் பூமியின் மேல் வைப்பாயாக. குழைமுக சந்திரன் - குழையை அணிந்த முகமாகிய சந்திரன். அம் சேர - அழகு உண்டாக.
26. சீகாழிக்குரிய தோணிபுரம், புகலி, பிரமபுரம் என்ற பெயர்களின் காரணம் இப்பாடலால் விளங்கும். உடு - விண்மீன். பூ - பூலோகம். வாரிதி - கடல். க(ல்)லோலம் - அலை. வலாரி - இந்திரன். பூவை - காயாமலர். இதனை அன்று - இதனை அல்லாமல். அரண் - புகலிடம். ஆரணன் - பிரமா.
27. அத்தகிரி - சூரியன் மறையும் மலை. மந்தேகர் - சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் அவனைத் தடுத்துப் போர் புரியும் ஒருவகை அசுரர் கூட்டம். பரார்த்த பூசை - உலக நன்மைக்காகத் திருக்கோயில்களில் நடைபெறும் பூசை. சண்பை - சீகாழி.
28. பரவைத் திரை - கடலலை. பதுமைப் பாங்கி - திருமகளாகிய சேடி. தந்திரியாள் - வீணையை வைத்திருப்பவள்.
29. கஞ்சப் பள்ளி - தாமரைப் படுக்கை. எண்கு - கரடி. பஞ்சு அப்பு இத மென் பதம் - செம்பஞ்சுக் குழம்பு பூசியதும் நன்மை தருவதும் மெல்லியதும் ஆகிய திருவடி. ஆவித்து - கொட்டாவி விட்டு.
30. என்றாய்க்கு - என்று சொன்னவளாகிய உனக்கு. கண்ணப் பெண் - கண்ணனாகிய பெண், மோகினி. ஒரு தடாகத்தில் பிற மலரினங்கள் பல மலர்ந்திருந்தாலும் அது தாமரைத் தடாகம் என்றே கூறப்படுவது போலக் கங்கையும் மோகினியும் இறைவனைக் கலந்தாலும் அவன் பார்வதி பதி என்றுதான் கூறப்படுவான். ஆதலால் ஊட வேண்டா.
31. வாகீசுவரி என்றோம். அதற்கேற்ப நிறையப் பேசுகின்றனை. மூகேசுவரி என்றோம். அதற்கேற்ப நீ மவுனமாக வேண்டும். மீனாட்சி என்ற பெயருக்கேற்ப இரவும் பகலும் உறங்காமல் இருக்கின்றனை போலும்? (குவளைக் கண்ணாய் என்றால் இரவிலும் கண் குவியாய் போலும். பதும விழியாய் என்றோம். அதற்கேற்ப இந்த இரவில் கண்மூடித் துயில்வாயாக.
32. அம்மை உறங்காமல் இருப்பதற்குக் காரணங்கள் கூறப்பட்டன. திருமால் அறிதுயில் கொடு இருந்தே காவல் தொழில் செய்கின்றான். அரசன் உறங்கினாலும் அவனது ஒளியே உலகத்தைக் காக்கும். இதில் புகலி நகர் வாழ்வாரின் ஈகைத் திறம் கூறப்பட்டது.
34. மஞ்சீரம் - சிலம்பு. சலசம் - தாமரை.
35. அம்மையே நின்கணவன் இரந்துண்பதைக் கருதி வருந்தற்க. அவனது அச்செயல் தன் அடியார்கள் உய்வதற்காகவே என ஆற்றுவித்து. கச்சி மூதூர் - காஞ்சீபுரம் ஒன்னலர் - பகைவர், புறச்சமயத்தவர்.
பரந்துல கெல்லாம் படைத்த பிரானை
இரந்துணி யென்பர்க ளெற்றுக் கிரக்கும்
நிரந்த மாக நினையு மடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய்தானே (திருமந்திரம் - 1885)
36. சிவபெருமானது செயல்களை எண்ணி வருந்தி, அம்மை துயிலாதிருக்கின்றாள் என்று கருதிய செவிலியர் அவளுக்குத் தேறுதல் கூறுதல். கம்பமா - யானை. அரிமா - குதிரை. ஏசுமா - பிறர் பழிக்கும்படி. கடவும் ஆ - ஆன் ஏற்றை வாகனமாகக் கொண்டு செலுத்துவார். பணி ஆரம் - பாம்பாகிய மாலை. உலகோபகாரிகள் நஞ்சினை யுண்டாலும் அவர்க்கு அது அமுதமாகும். அவர்கள் நரியின் மேல் ஏறினாலும் அது குதிரையாகும். விடை ஏழ் தழுவு விடை - திருமால்.
37. கூத்தப் பிரான் கைத் தமருக முழக்கத்தால் படைப்புத் தொழில் நடைபெறுகிறது. ஆரம் சந்தன மரம்.
38. வானந்து - வான் நந்து, வெண்மையான சங்கு. கரங்கொட்டிக் குதித்தலெனச் சப்பாணி கொட்டியருளே என இயையும். பொன்னுலகில் தானம் நடைபெறுவதில்லை. அழைத்த காணந்தனய - அழைத்தகால் நம்தனய - அழைத்தபொழுது நம் புதல்வனே.
40. தாளம் மூன்று என்னவும் தாள வகை என்னவும் சப்பாணி கொட்டியருளே என இயையும்.
41. தேவி, எல்லாத் தேவராலும் வணங்கப்படுபவள். தன்கணவன் வரும்போது ஆசனத்திலிருந்து எழுந்து முன் சென்றுவரவேற்கிறாள். அப்போது வணங்கி விழுந்து கிடக்கும் தேவர்களைக் கைதட்டி எழுப்பி எச்சரிக்கிறாள்.
42. மகர நெடு வேலை - சுறாமீன் உலாவுங் கடல். வேலை அருள் வேலை - வேலினை வழங்கும் வேளையில்.
43. மொக்குதல் - உண்ணுதல். அம்மையின் கை பட்டதால் ஆலகால விடமும் அமுதாயிற்று. முருகனை 'அம்பைக்குக் கைத்தல ரத்னம்' என்றார் அருணகிரிநாதர். கொக்கின் தளிர் - மாந்தளிர்.
44. முத்தொழில் கூறப்பட்டது. மட்டு ஆர்தல் - மது அருந்தல். இப்பாடலில் மக்கள் தவிர்க்க வேண்டுவனவும் செய்ய வேண்டுவனவும் கூறப்பட்டன.
45. சத்தான வத்திடம் - சத்தான வஸ்துவிடம். எள்ளினுள் எண்ணெய்போல எல்லா உலகத்தும் நிறைந்தவளே. அகலத்தீ - மார்புடையவளே. கலைக்கடன் முலைச்சீ - கல்வியாகிய கடல் நிறைந்த முலையாள். அம்மையின் முலைப்பால் கல்விமயமானது அசிப்படை - வாள். சூல் - சூலம்.
46. உயிர்களைப் பசு என்பதற்குக் காரணம் கூறப்பட்டது. ஞானகுரு பழநி சாது சுவாமிகளினருள் கூறப்பட்டது.
48. அமுதுண்டும் தேவர் சாகின்றவரானார். நஞ்சுண்டும் சிவன் சாவாதவனாவான். அதற்கு ஏது அவன் அம்மையின் திருவாய் ஊறலை நுகர்ந்ததுவே. அம்மையே திருமால் உருவாகப் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளான்.
49. மூககவி பாடியது மூகபஞ்சசதி. அவற்றுள் ஒன்று மந்தஸ்மித சதகம். முறுவல் - புன்னகை.
50. முகத்துக் கை – துதிக்கை.
52. பல்வேறு முத்துக்களைப் பழித்தது. இக்கு - கரும்பு. முற்று கண் - முற்றிய கணு. வேய் - மூங்கில்.
53. ஏனைய முத்தங்களுக்குக் குற்றம் கூறியவாறு. குடவளை - குடம் போன்ற சங்கு. வன்பு அன்றி அறியாத - முரட்டுச் செயலை அல்லாமல் வேறு அறியாத. மனத் தளி - மனமாகிய கோயில். சொன்னமயில் - பொன்மயில்
54. கஞ்சன் - பிரமன். கஞ்சுகம் - சட்டை. அம்மை தன் கிளிப் பிள்ளைக்குச் சிவன் புகழ்களைக் கற்பித்தது கூறப்பட்டது.
56. விழைவு - விருப்பம். விழல் ஆகாமல் - வீணாகதபடி. அவன் ..... அருள்வாய் - சிவனது வாயிலிருந்து தாம்பூலத்தையும் கருப்பூரத் துணுக்குகளையும், அம்மை, தன் வாயில் ஏற்றுச் சுவைத்துப், பின் அவற்றைத் தம் புதல்வரிகளின் வாயில் புகுமாறு ஊட்டுகின்ற திருவாய். அருள்வாய் - வினைத்தொகை. கோவைப் பழத்தையும் அமுதத்தையும் ஒத்த கனிவாய்.
57. விவிதகலை - பலவகைக் கலைகள். மாத - தாயே. ஒருகால் வந்தருள்க என இயையும்.
58. சளம் - சஞ்சலம். தளம் - இதழ். சலதி படிமாறு - கடலில் முழுகுமாறு. விழிமுன் வந்தருள்க என இயையும்.
59. ஒன்னலர்கள் - பகைவர்கள். இன்னல் விளை கொற்றவர்கள் - துன்பம் விளவிப்பதில் சமர்த்தர்கள்.
60. புகன்றிடுமதோ - சொல்லும் அளவினதோ. நனவிலும் கனவிலுமே உளம் நடுங்குகிறது என இயையும். வெங்குரு - யமன்.
61. சீவகசிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய காவியங்கள். இன்ப அன்பு - இன்ப மயமான பத்தி. கவிதாமிருதம் - கவிதைகளாகிய அமிழ்தம். அடிப்போது தந்தாள வந்தருள்க என இயையும்.
62. வேந்து அரா - பாம்பு அரசன், ஆதிசேடன். ஆதிசேடனது ஆயிரந்தலையிலும் உலாவுபவளும் கடலாடையுடுத்தவளும் ஆகிய பூமிதேவியை. அந்தக் கடலாடையால் மூடிக் கவர்ந்து சென்ற இரணியாட்சன். திருமால் பிரமதீர்த்தத்தில் குளித்து, இரணியாக்கனைக் கொன்ற பாவம் தீர்த்தார். தண் நீள் மா பொழில் - குளிர்ந்த நீண்ட மாஞ்சோலை.
63. எகினம் - அன்னப்பறவை. இயல்வது கரவாத கையையுடையார் மனையில் எப்போதும் திருமகள் வாழ்வள். ஆதவ ஒளி - சூரிய ஒளி. தேவர் அமுதம் உண்ணும்போது தானும் வேற்றுருவு கொண்டு அவருடன் உண்டபோது, திருமாலின் சுருவையால் வெட்டுண்டதாகிய ராகுவின் தலை பிரமபுரத்தில் அரனை வழிபட்டுய்ந்தது. அதனால் பிரமபுரம் சிரபுரம் ஆயிற்று. வாரிதி அமுது - கடலமுது. உ(ண்)ணவும் - உண்டதால். நன்மால் - நல்ல திருமால். ஈசுரர் துணை கொடு வாழ்வது பெருகிய சிரம் என இயையும்.
64. சீகாழிக்குக் கழுமலம் என்னும் பெயர் வந்த காரணம் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. வரநதி - கங்கை. உடல் மயிர் கெழு முனி - உரோமச முனிவர். மறைமுடிபு - வேதாந்த நிச்சயம். ஆணவம் கன்மம் மாயை என்பனவற்றின் இலக்கணங்களை உரோமசர் முதலிய முனிவர்களுக்கு இறைவன் உபதேசித்தான்.
65. சீகாழிக்குப் புறவம் என்னும் பெயர் வந்த காரணம் கூறப்பட்டது. கறவைக்கு முறை செய்தவன் மனு வேந்தன். சிபியின் வரலாறு பொருந்தியிருத்தல் காண்க. அமரர்பதி - இந்திரன். எரியின் இறை - அக்கினி தேவன். புறவு - புறா. சிபியின் கருணை ததீ முனிவரின் கருணையிலும் பெரிது.
66. சீகாழி என்ற பெயர் வந்த காரணம் கூறப்பட்டது. சினந்திருகா - கோபத்தால் மனம் மாறுபட்டு. செங்கண் அரவம் - காளியன் என்னும் பாம்பு. காயம் - உடம்பு, புண்.
67. சண்பை என்ற பெயர் வந்த காரணம் கூறப்பட்டது. யாதவர்கள் - கண்ணனது குலமாகிய யது குலத்தவர்கள். சண்பை - ஒருவகைப் புல். படிமம் - தவம். பிரமன் தடம் - பிரம தீர்த்தம். சயிலாதிபன் - பர்வத ராசன்.
68. கொச்சை என்ற பெயர் வந்த காரணம் கூறப்பட்டது. கிறி - நகைச்சுவைப் பேச்சு. நல்லார் - மகளிர். பலசாதிப் பெயர்கள் தொனிக்கிறது. அந்தணாளன் - பராசர முனிவர். மச்சக் கொச்சை - மீனினது துர்நாற்றம்.
69. இது சாமோபாயம். சந்திரனுக்கும் திருஞானசம்பந்தருக்கும் சிலேடை. சந்திரனுக்குப் பொருள்: குவலயம் - நீலோற்பலம். வான்நெறி - ஆகாயவழி. தோணியின் - தோணியைப் போல. சந்திரன் சிவபெருமானது இடது கண்ணாக உள்ளவன். பால் நீற்று ஒளியினை - வெள்ளிய திருநீறு போன்ற ஒளியை உடையாய். தேவுஆர - தேவர்கள் உண்ண. சந்திரன் பாண்டிய குலத்துக்கு முதல்வன். சிவனது தலையில் ஆபரணமாக உள்ளவன்.
திருஞான சம்பந்தருக்குப் பொருள்: குவலயம் - மண்ணுலகம். சிவபெருமானுக்குக் கண்மணிபோல. பால்போலும் திருநீற்றின் ஒளி. தேவாரம் ஆகிய அமுது. பாண்டியர் குலத்தைக் காப்பாற்றியது. சைவ சமயத்தவர்களுக்குச் சிகாமணி.
70. சாமோபாயம். அம்பிகையின் கைகால்களிலுள்ள நகங்களுக்குச் சந்திரன் ஒப்பாவான். திருமகளொடு பாற்கடலில் சந்திரன் தோன்றினான். சந்திரமண்டலத்தில் அம்பிகை வீற்றிருக்கின்றாள். திருமாலின் இதயத்தினின்று சந்திரன் பிறந்தான். ஊடல் தீர்க்கச் சிவபிரான் தேவியை வணங்கும்போது அவன் தலையிலுள்ள பிறை அவளது திருவடியைத் தீண்டுகிறது.
71. பேதோபாயம் - சந்திரனுக்குள்ள குறைகள் கூறப்படுகின்றன. கோணங்கி - வளைந்த உடம்பினன். குடுகுடுப்பைக்காரன். சந்திரனை நோக்கி எருவினை வீசி மகளிர் கும்பிடுவர். சூரியன் உண்டு எஞ்சிய மிச்சிலே இரவின் இருள். அதனையே சந்திரன் உண்கிறான். சந்திரனுக்கு ராஜாவென்பது ஒருபெயர். அது குறிப்புமொழியால் இரவோன். பிச்சைக்காரன் எனப்பொருள்படும். கயவன் - கயநோயாளம். கீழ்மகன். கட்பார்வை படின் கரிசெலாம் ஒழிவை என இயைக்க.
72. தறுகண் நமன் உரம் - அஞ்சாமையுடைய எமனது மார்பு. கண்ணுடையான் - கண்ணுடைய வள்ளலார். சிற்றிம்பலத்தான் - சிற்றம்பல நாடிகள். கூத்த கவி - ஒட்டக்கூத்தர்.
73. தண்டோபாயம். சட்டகலை எட்டெட்டு - செப்பமான கலைகள் அறுபத்து நான்கு. வன்னிகள் - பிரசாரிகள். கிளிகள். வெங்குரு - கொடியனான குரு. காழி - பாம்பு, சீகாழி. கணநாதன் என்ற பெயர் சந்திரனையும் கணநாத நாயனாரையும் குறிக்கும். மானம் - விமானம். சந்திரனுக்கு வெள்ளி விமானம். சம்பந்தருக்கு முத்துப் பல்லக்கு. மானம் - மரியாதை, அபிமானம். வல்லே - விரைவாக.
74. பேத தான தண்டோபாயங்கள். சிவனார் யாரையும் கும்பிட்டறியாத கையையுடையவர். நிரப்பு - வறுமை, துன்பங்கள். மடமதி - முட்டாள், அழகிய மதி.
75. சாமோபேதோபாயம். சந்திரன் உதயகிரியிலும் அம்மை இமயமலையிலும் உதித்தவர்கள். சந்திரன் மால்தங்கை மகவானான். கைமகவு - கைக்குழந்தை. அம்மை மால்தன் தங்கையானாள். அங்கம் - தலை, உடம்பு. சந்திரன் மாதேவனது தலையிலிருந்தான். அம்மை அவரது உடம்பில் ஒருபாகத்திலிருந்தாள். சந்திரனும் அம்மையுமுலகுக்கு அமுதம் அளிப்பவர்கள். சந்திரன் காமனுக்குக் குடையானவன். அம்மை காமனது குடை (ஆட்சி) ஓங்க அருளுகின்றாள். கரும்பொன் - இரும்பு.
76. கோணைமதி - கெட்ட புத்திஉடையவன், வளைந்த சந்திரன். கயமைக் குவலயத்தின் பதி - நீர் நிலையிலுள்ள குவளைகளின் தலைவன், கயவர் குழுவக்குத் தலைவன். குரு - அமாவாசை. சதுர்த்தியிற் பிறை - நாலாம் பிறை. கண்டவர் துன்புறுவர் என நாலாம் பிறை இகழப்படும்.
77. தண்டோபாயம். கறுத்த - சினந்த. சிவனது இடது பாதமும் இடக்கையும் அம்பிகையுடையன. வெறித்த - மணமிக்க. உலகமானது அம்பிகை விழிப்பின் உதிக்கும். இமைப்பின் மறியும். அம்பிகையின் வலக்கண்ணில் இலக்குமியும் இடக்கண்ணில் சரசுவதியும் இருக்கின்றனர். மதியோ இது - அறிவுடைமையோ இச்செயல். அறுத்த மலத்து ஊர் - கழுமலநகர்.
78. தண்டோபாயம். தடித்த மதிய தக்கன் - நுண்ணறிவில்லாத தக்கன். இழை தவறு - செய்த தவறு.
79. உலகக் கவிப்பு - வியோமம் என்பன ஆகாயத்தின் பெயர்கள்.
80. அரவிந்தன் - பிரமன். அன்னமானம். அன்னப்பறவை யாகிய வாகனம். விந்தை - விந்தியமலைத் தலைவியாகிய துர்க்கை. அரவிந்தை - திருமகள். விகசிதம் - பேரொளி.
81. மகம் - வேள்வி. இளித்த - இகழ்ச்சியாகச் சிரித்த. பல்லுதிர்ந்த சூரியன் பூஷா. கண்ணிழந்த சூரியன் பகன். இனர்கள் - சூரியர்கள்.
82. குந்தளம் - கூந்தல். நித்திலம் - முத்து.
83. கம்ப வள தந்தி - அசையும் இயல்புடைய அல்லது தறியிற் கட்டப்படும் பெரிய யானை. கொடுவரி - புலி. சிவன் மேற் போர்த்த யானைத்தோல் சூரியனை மறைத்த கருமுகில் போலிருந்தது. விம்ப வள - ஒளியின் வளம் உடைய. பிரதாபம் - வெற்றிப் புகழ். அது செந்நிறமென்பர் - ஏமகமலம் - பொற்றாமரை. அம்பு அ(வ்)வளவு ஆனவிழி - அம்பினது அளவாயுல்ல கண். விம்ப அதரீ - கொவ்வைக் கனியனைய உதட்டினையுடையவளே.
84. பசிய நிறம் படர்வதென, கிள்ளையென. அங்கண் களிக்குமாறு அம்மானை ஆடியருள்க என இயையும். கிள்ளை - கிளி.
85. திவளும் - பிரகாசிக்கும். தவளம் - வெண்மை. விவிதமாகி - பல்வேறு நிறத்ததாகி. பளிங்கு அம்மானை வெண்ணிறம் பெற்றுக் கலைமகளாகியும் செந்நிறம் பெற்றுத் திருமகளாகியும் பசுமை நிறம் பெற்று மலைமகளாகியும் தனக்கென ஒரு நிறமும் இல்லாதவனாக இருந்தும் மூன்று நிறமுமாகின்ற அம்மையை ஒக்கும்.
86. வாரணவாசி - காசிநகர். அங்கே அன்னம் அளிப்பவள் - அன்னபூரனி.
87. சவி - ஒளி. அம்மைக்குச் செந்நிறமும் உண்டு. தறுகண் நமனை - இரக்கமற்ற இயமனை. மகபதி மணி - நீலமணி. உரகமணி - நாகரத்தினம். அடியார்கள் உள்ளம் சிரபுரத்திற்கு உவமை.
88. தசாங்கம் கூறப்பட்டது. பதி நடு அமர் மலை எனப்படுவது திருத்தோணிக்கோவில்.
89. கேசபாசம் - கூந்தற் கற்றை. குமிழ் - நீர் மொக்குகள். கண் ஆர்ந்த செங்கழை - கணுக்கள் பொருந்திய செங்கரும்பு. வெள்ளத்திலும் அம் குசமும் (தர்பைப்புல்லும் பாசமும் (பாசியும்) உண்டு. அம்மையின் கையிலும் அங்குசமும் பாசமும் உண்டு. சிலம்பு அடி கலிக்க - மலையின் அடியில் ஒலிக்க, சிலம்பு திருவடிகளில் ஒலிக்க.
90. நல்ல பொற்சுண்ணத்தை விண்ணில் தூவினால் அது நிலத்தில் விழு முன்னரே வண்டுகள் மொய்த்து உண்டு விடும் என்பர். தூவின் - தூவினால். துகில் காம்பு நேத்திரங்கள் என்பன பட்டாடை வகைகள். அன்னம் எனச் சென்று நீராடியருள்க என இயையும். காவி - சுமந்து.
91. மயிலை - ஒருவகை மீன். பேரின்ப வாரிதியிற் படிவதென வெள்ள நீராடியருளே என இயையும். சிந்தூரம் - குங்கும திலகம். சாந்தம் - சந்தனம். நீராடலில் நிகழ்வன கலவியில் நிகழ்வன போன்றவை. கடல் நோக்கிச் செல்லும் காவிரி, கணவன் மனை நோக்கிச் செல்லும் காரிகை போலும்.
92. சைவலம் - நீர்ப்பாசி. ஏனம் - பன்றி. பயம் - அச்சம். நீர். கணீர் - கண் நீர். கள் நீர். பல்முத்தம் - பலவாகிய முத்தம், பல் போன்ற முத்தம். இடைய - தோற்க. இகுளையர் - தோழியர். ஆர்ந்து - நிறைந்து.
93. வெள்ளத்திற்கும் சிவனுக்கும் சிலேடை சசி - இந்திராணி. மலர்க்கொடி - திருமகள். கலைக்கொடி - சரசுவதி. ஒரு கலையை உடைய பிறை என்க. கொண்டல் அம் கண்டம் - மேகம் போன்ற கழுத்து. வயவரி - வலிமை பொருந்திய சிங்கம்.
94. இபங்கள் - யானைகள். இருங்கட் குவளை - கரிய கண் போன்ற குவளை. கல்லோலக் கை - அலையாகிய கை. சேந்த கை - சிவந்த கை.
95. தரங்கக் கரம் - அலையாகிய கை. வினையைத் துரந்து - தன் நீரில் குளிப்பவரின் தீவினைகளை ஒட்டி. காசைமிடறு - காயாம்பூப் போன்ற கழுத்து. காலால் - கால்வாய்களால்.
96. அணரி - மேலண்ணம். துணரி - பூங்கொத்துக்கள். வணரும் - வணங்கும். சாலி - நெற்பயிர்.
97. காவிரியாற்றின் பெருமை கூறப்பட்டது. இபமாமுகவன் - விநாயகன். திருமழிசையாழ்வார் வரலாறு கூறப்பட்டது. பணிப்பாய் - பாம்புப் படுக்கை. திருவரங்கத்தில் காவிரி நடுவண் திருமால் பள்ளி கொண்டுள்ளான்.
98. ஆரஞ் சாத்திய சோழன் வரலாறு கூறப்பட்டது. மனவு - அக்கு மணி. பணி - பாம்பு. வழுவைக் கா - ஆனைக்கா.
99. பருதி - சூரியர். நித்திலம் - முத்து. நள் - நடுவில். விபினம் - காடு. அறுகாற்புள் - வண்டு.
100. நளி - பெரிய. நாலும் - தொங்கும். தரளம் - முத்து. எகினம் - அன்னப்பறவை. பிரமன். முன்னி - அடைந்து.
101. வெறிக்க - கூசும்படி. குயின் - இழைக்கப்பட்ட. விதி - பிரமன். மஞ்சம் - சதாசிவ மயமான படுக்கை.
102. கேசபாசம் - குழற்கற்றை. கொங்கு அருந்தும் - தேனை உண்ணும். எங்கோன் - சிவபெருமான்.
103. செயலை - அசோகமரம். அரத்தம் - செந்நிறம் சிவபெருமான் காமனைத் தீழிவித்து எரித்தான். அதனால் காமன் மரன் ஆனான். ஸ்மரன் - கண்ணிற் காணப்படாமல் நினைக்கப்படுபவன். மரன் - ஸ்மரன் என்பதன் தற்பவம். அரன் - சிவன். வான்சுரபி - காமதேனு. அம்பிகையின் திருவடித் தாமரையில் முத்தியாகிய திருமகள் குடியிருக்கிறாள். அசோக மரம் காமனுக்கும் கொன்றை மரம் சிவனுக்கும் ஒப்பு.
104. காசு - மாணிக்கம். பணம் - படம். கற்பனை - நூல்கள் விதித்த விதி முறை. மண்ணுமணி - சாணையில் தீட்டிய ரத்தினம். மலர் வீழ்த்தப் பொன்னூசலாடியருளே என இயையும்.
105. இரவியொளி மணி - பதுமராகம். முயல்விழியையனைய மணி - வைடூரியம். அம்மை எல்லாவுயிருளும் இருக்கின்றாள். எல்லாவுயிரும் அவளுள் இருக்கின்றன.
106. பிரமர முனிவர் - பிருங்கி முனிவர். பிரமம் - மயக்கம். அறியாமை. எல்லாத் தேவரும் அம்மையின் திருவடியிலே முடிபட வணங்கிக் கிடத்தலால் அவளடியில் தூவும் மலர் அத்தேவர்தம் முடிமிசைத் தூவியது போலாகின்றது. அத்தகைய அரியவளாக இருந்தும் பாண்டியன் முதலியவருக்கு எளியவள் ஆனாள்.
107. பம்பு இருள் பிறவி - பரவிய இருள் மயமான பிறவி. அம் பம்பு - நீர் மிகுந்த. செம் பம்பு - செம்மை நிறைந்த.
108. பூசுரர்கள் - அந்தணர். கவ்வியம் - பால் முதலிய ஆனைந்து. மன்பதைகள் - மனிதக் கூட்டம்.
----------xxx-----------
This file was last updated on 23 Dec. 2020.
Feel free to send the corrections to the webmaster.