திருப்பேரூர் இரட்டை மணி மாலை
ஆசிரியர்: திரு. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்;
கோவை கோ.ந. முத்துக்குமாரசாமி எழுதிய உரையுடன்
tiruppErUr iraTTai maNi mAlai
of C.K. cupramaniya mutaliyAr
(with the notes of C.N: Muthukumaraswamy)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. C.N. Muthukumaraswamy of Coimbatore for providing
a soft copy of this work along with his commentary/notes.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருப்பேரூர் இரட்டை மணி மாலை
ஆசிரியர்: திரு. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்
Source:
திருப்பேரூர் இரட்டை மணி மாலை
ஆசிரியர்: திரு. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்
தம்பிரான்சுவாமிகள் வழிபாட்டு மன்ற வெளியீடு
1961
உரை : சிங்கை கோ.ந. முத்துக்குமாரசாமி எழுதியது
----------
முன்னுரை
முத்து பவளம் ஆகிய இரண்டு வகை மணிகளால் கோத்த மாலை போன்று வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் இருவகை யாப்புச் செய்யுள்களால், அந்தாதித் தொடையினால் ஆன நூல் இரட்டைமணிமாலை எனப்படும். இது திருப்பேரூர்ப் பட்டிப்பெருமானைப் போற்றிப் புகழ்ந்து அவனுக்குச் சாத்திய சொன்மாலையாதலால் திருப்பேரூர் இரட்டைமணி மாலை எனப் பெயரினதாயிற்று.
மலர்மாலை வாடும்; நின்மாலியம் ஆகும்; களையப்படும். சொன்மாலை தூயது; சாத்தும் தோறும் புதிதாகும். எனவே, இறைவனுக்குச் சொன்மாலை சாத்திக் களித்தனர், பெரியோர்.
இந்நூலின் ஆசிரியர் பிற்காலத்தில் ஸ்ரீலஸ்ரீ சம்பந்த சரணாலய சுவாமிகள் என்ற திருநாமம் பூண்டு துறவறம் மேற்கொண்ட சிவத்திரு சிவக்கவிமணி சி.கே சுப்பிரமணிய முதலியார் அவர்களாவர். திருத்தொண்டர் புராணத்திற்குப் பேருரை எழுதும் காலத்தில் உரைநடையாகவும் செய்யுளாகவும் பலநூல்கள் இயற்றினார். அவற்றுள் ஒன்று, இந்தநூல்.
சிவக்கவிமணி அவர்களின் ஆன்மநாயகர் பட்டிப் பெருமான். அவர்மேல் இயல்பாக எழுந்த பத்திப் பெருக்கு இந்நூலாக மலர்ந்தது. இச்சிறு நூலில், அமைந்துள்ள சொற்களும் கருத்துக்களும் இந்நுலாசிரிரியன் ஆசிரியரின் பன்னாள் திருமுறைப் பயிற்சியினையும் திருமுறைகளின் மேல் அவர் கொண்டிருந்த பத்தியினையும் வெளிப்படுத்துகின்றன.
ஸ்ரீலஸ்ரீ சம்பந்த சரணாலய சுவாமிகளின் ஆவது குருவழிபாட்டின்போது அக்குருவழிபாட்டின் நினைவாக இந்நூல் எளிய பொருள் விளக்கத்துடன் வெளிவருகின்றது. சுவாமிகளின் பிற செய்யுள் நூல்களும் இனிவரும் குருவழிபாட்டு நாள்களில் ஒவ்வொன்றக வெளிக் கொணர விருப்பம். திருவருளும் குருவருளும் முன்னிற்க.
-------------
உ
சிவமயம்
காப்பு
பேரூர்த் திருப்பட்டிப் பெம்மான் திருவடிக்கே
நாரூரும் மாலை நவில்வதற்குச் – சீரூரும்
பட்டி விநாயகன்றன் பாதங்கள் காப்பாகும்
இட்டமா யென்னோ டியைந்து
‘சீரூரும் பட்டி விநாயகன்தன் பாதங்கள் இட்டமாய் என்னோடு இயைந்து பேரூர்த் திருப்பட்டிப் பெம்மான் திருவடிக்கே நாரூரும் மாலை நவில்வதற்குக் காப்பாகும்’
பட்டி விநாயகர் – தலவிநாயகர். சீர் – பெருமை. பட்டி விநாயகனின் பெருமையாவது தன் தந்தையின் அடையாளங்களாகிய கங்கை, பிறை கொன்றைமாலை, பாம்பு, செஞ்சடை ஆகியவற்றையும் தாய் உமை தன் மென்கரத்தில் ஏந்தியுள்ள பாசாங்குசங்களையும் தானும் தரித்திருந்து, தன் அன்பர்களின் கொடிய வறுமையை ஓட்டி அழிப்பதுவாகும். இருவர் அடையாளமும் அவர்களின் செயலும் உடைமை பட்டிவிநாயகனின் சிறப்பு.
தந்தையின் புகழினை நவிலும் இந்த நூலுக்குத் தனயனாகிய விநாயகனின் திருவருள் விருப்பத்துடன் காப்பாகும். தந்தையைப் போற்றி வணங்குதல் தனயருக்கு இயல்பாம். பாதம்- திருவருள். நாரூரும் மாலை – நார்- அன்பு, பத்தி. கையினால் கட்டப்படும் பூமாலைக்கு நார் போல, வாயினால் இச்சொன்மாலை பத்தி நார்கொண்டு கட்டப்படும், சொன்மலர்களைப் பத்தியாகிய நார் கொண்டு கட்டப்படும் இச்சொன்மாலை இனிதமையப் பட்டி விநாயகன் திருவருள் காப்பாம்.
நூல்
சீரார்ந்த செல்வத் திருப்பேருர் வாழ்கின்ற
பேரார்ந்த பட்டிப் பெருமானே – நீரார்ந்த
நற்பான்மை யொன்றுமில நாயேனை யாண்டுகொள
அப்பா உனதருளை ஆக்கு (1)
பெருமை வாய்ந்த முத்தித் தலமாகிய திருப்பேரூரில் உறைகின்ற புகழ்மிக்கபட்டிப் பெருமானே! உருகும் நல்ல இயல்பு சற்றும் இலாதவனும் நாய்போன்றவனுமாகிய அடியேனை ஆட்கொள என் தந்தையே!, உனதருளை என்மேற் செலுத்துவீராக!
சீர்- பெருமை. செல்வம் – ஞானம். அது முத்தியைக் குறித்தது. பேர்- புகழ்.’பேராற் பெரியோனே- பேரூர்ப் பெருமாளே’ (திருப்புகழ்.)
நாயேனை- “நாயிற்கடையாய்க் கிடந்த அடியேனை- நாய் கட்டுண்ட காலந்தவிர மற்றைய காலங்களில் இழிந்த அசுத்தங்களை உண்பது; இழிந்த இடங்களில் படுத்துக் கிடப்பது; வீட்டினுள்ளும் செல்லாமல் வெளியிலும் போகாமல் வாயிற்கடையிலேயே கிடப்பது; தான் தின்று கான்றதையே மீண்டும் தின்பது; பிற ஊனை விரும்பி உண்பது; எலும்பைக் கடித்துத் தன் வாயில் எலும்பு குத்தியதால் உண்டான காயத்தில் வெளிப்படும் குருதியை எலும்பினின்றும் வரும் குருதியாகக்க் கருதி மீண்டும் மீண்டும்அதனையே கடிப்பது’; குறிக்கோளின்றி அலைவது;
அவ்வாறே ஆன்மாவும் அடியார் கூட்டத்தில் கலந்துள்ள காலம் தவிர ஏனைய காலங்களில் இழிந்த போகங்களை நுகர்ந்து இழிந்தவிடங்களிலே கிடப்பது. சிவலோகத்தில் செல்லாமல் உலகியலிலும் முற்றும் ஈடுபடாமல் இரண்டும் கெட்டநிலையில் உள்ளது; தான் நுகர்ந்த போகங்களையே மீண்டும் மீண்டும் நுகர்வது; தன் ஊன் உடம்பையும் தன்னையொத்த மகளிர் உடல் வனப்பையும் நச்சுவது; அவ்விருப்பம் துன்பம் தரினும் இன்பம் தருவதாக மயங்கி மீண்டும் மீண்டும் அதில் திளைப்பது; வாழ்வில் எந்த நோக்கமுமின்றி அலைவது.
ஆன்மாவுக்கு நாயுடன் இத்துணை ஒத்த இழிந்த இயல்புகள் இருப்பினும் நாய் நன்றியறிவுள்ளது. எத்துணை ஒறுப்பினும் தன் தலைவனிடம் அன்புகாட்டுவது. ஆனால், ஆன்மா இறைவன் செய்த நன்றிகளை மறப்பது. ஆகலின் ‘நாயிற்கடையாய்க் கிடந்த அடியேன்’ என்றார். (சி.சு. கண்ணாயிரம். சிவக்குடில் விளக்கம், திருவாசக உரை. இனி சி.சு. க என்றே சுட்டப்படும்)
ஈண்டு, சுவாமிகள் அடியேன் நாய் போல் நன்றியறிவு உடையேன், ஆதலால் எனை ஆண்டுகொள உனதருளை ஆக்கு’ என வேண்டினார். ;
-----
ஆக்கும் பெருமா னளிக்கும் பெருமா னருள்வழியே
போக்கும் பெருமா னெனப்புகல் மூவரும் போற்றிசெய
நீக்க மறநிற்பாய் நீயவர் காணா நிலைமையென்னே
காக்குங் கடவுளே பேறூரிற் பட்டியெங் காவலனே. (2)
பேரூரில் பட்டி எனும் திருநாமத்துடன் விளங்குகின்ற எம்முடைய காவலனே! எம்மைக் காத்தருளும் கடவுளே! படைப்புக்குப் பிரமன், காத்தலுக்குத் திருமால் ஒடுக்குதற்கு உருத்திரன் என்று உலகத்தாரால் புகலப்படும் மூவரும் துதி செய்ய, நீர், இச்சேதன அசேதனப் பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கின்றீர். அவ்வாறு நிறைந்திருந்தும், முத்தொழிற்கும் கருத்தர்களாகிய அவர்களால் அறியப்படாதவ ராய் இருக்கின்றீர். இவ்வாறிருக்கும் உம்முடைய நிலைமை அதிசயிக்கத் தக்கதாக இருக்கின்றது.
மூவர்களோடும் நீக்கமற உடனுறைந்தும் அவர்களால் காணப்படா நிலைமயினான் என்றதால் பட்டிப் பெருமானின் தலைமைத் தன்மை உணர்த்தப்பட்டது. “‘தாவியவ னுடனுறைந்துங் காணாத தற்பரனை” (திருக்கோளிலி. 6) என்றார் ஆளுடைய பிள்ளையார்
இதனால் பட்டிப்பெருமானே அம்மூவர்களோடும் உடனுறைந்து, அவர்கள், தம்முடைய பணியினைச் செவ்விதே முடிக்கக் காவலனாகவும், மூவரையும் காப்பவனாகவும், உள்ளான் என்பது பெறப்பட்டது.
------
காவல்பெறு வார்சிலபேர் காக்கப் படாதிடும்பைக்
கேவல்பெறு வார்பலபே ரேழையேன் – கூவல்பெறா
தென்றென்றுந் துன்புறுவ தென்வினையே பட்டீசா
நன்றென்று நான்பெறுமந் நாள் (3)
பட்டிப் பெருமானே! ஆன்மாக்களில் சிலபேர் உன் திருவருளால் காக்கப் பெறுவர்; பலபேர் உன் திருவருளை அடையும் தகுதியைப் பெறுதற்கு உன் மறக் கருணையால் துன்பப்பட ஏவப் பெறுவார். அறிவிலாத யான் நின் பார்வைக்கு எட்டாமல் உலகில் துன்பப்பட்டு உழன்றுகொண்டே இருக்கின்றேன். நின் அருளினைப் பெறும்அந்நாள் எந்நாள்?
பட்டிப்பெருமான் பக்குவமுடைய அன்பர்களை ‘அறைகூவி ஆட்கொண்டு’ அறக்கருணை புரிகின்றான். பலரை மறக்கருணை செய்து அருளுக்குத் தகுதியுடையவ ராக்குகின்றான். இவ்விரண்டு நிலையிலும் இல்லாத என்னிடம் பராமுகமாக இருக்கின்றான். இது என் தீவினையே அறக்கருணையையோ மறக்கருணையையோ பெற, எந்நாள் அவனுடைய பார்வைக்கு நான் எட்டுவது?
“எங்கள் சிவலோகா, உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தா லொன்றும் போதுமே”“அடியேன் அறியாமை யறிந்து நீயே யருள்செய்து கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே’” எனும் திருவாசகம் குழைத்த பத்துத் திருப்பாடல்களைக்(2,4) கருதுக. ஏழையேன் - ஏழைமையை உடையவன். ஏழ்மை – வறுமை, அறியாமை.
--------
நாளின்று நாளையென் றோடிட நாயேன்றன் நாட்கள்குறிக்
கோளின்று வாளா கழியவைத் தாய்நற் குணக்குன்றமே
ஆளென்ன நின்கழற் காக்கிவைத் தானிற் கழகாகுமே
வேளின் மிகைதணிக் கும்பேரை வாழ்பட்டி மேன்மையனே. (4)
மன்மத வேளின் செருக்கை அடக்கும் திறலோனே! திருப்பேரூரில் உறையும் பட்டிப் பெருமானே! எவர்க்கும் தலைமை உடையவனே.! நற்குணங்களெல்லாவற்றானும் இயன்றதோர் மலையெனத் தக்கவனே! இன்று நல்ல நாள் இல்லை நாளை வழிபட்டுப் புண்ணியந் தேடலாம் என்று நாயினேனுடைய வாழ்நாள்களையெல்லாம் குறிக் கோள் இல்லாமல் வீணே கழிய வைத்தாய். அடியேனை உன்னுடைய கழலணிந்த திருவடிக்கு அடிமையாக்கி வைத்தால் அது உறுதியாக நினக்கு அழகாகும்.
தகுதி உடையாருக்கருள் புரிவது உனக்குப் பெருமையன்று. அதனை நீ செய்தே தீரவேண்டும். தகுதியில்லாத என்போன்றொருக்கு அருளுவதே உன் கருணைக்கு அழகாகும் என்றவாறு.
--------
மேன்மை தகுஞ்செயல்க ளொன்றுமிலேன் வெய்யவினை
தான்மறையு மாறுந் தகுதியிலேன் – பான்மைமிகு
மெய்யடியார் கூட்டத்துள் மேவுகிலேன் பட்டீசா
உய்யும் வகைநீ யுரை. (5)
பட்டீசனே! நான் உய்வதற்கு உரிய சிவபுண்ணிம் எதுவும் செய்யவில்லை. கொடிய வினைகள் என்னைவிட்டு நீங்கும் தகுதியும் இல்லேன். மெய்யடியார் கூட்டத்திற்கும் புறமானேன். நான் கடைத்தேறும் வழியை எனக்குக் காட்டுவாயாக.மேன்மை – சிவ புண்ணியம். மாறும் – நீங்கும்.
சிவபுண்ணியங்களைச் செய்வதும் வினைகளைப் பெருக்கிக் கொள்ளாம லிருப்பதும் மெய்யடியார் கூட்டத்துள் மேவியிருப்பதுமே உய்யும் வகை எனக் குறிப்பால் உணர்த்தினார்.
-----------
உரைக்கின்ற ஆணவ மோய்ந்திட் டிருவினை யூடறுத்துத்
தரைப்பால் வளர்கின்ற மாயைத் தளையைத் தறித்துவிட்டுக்
கரையில் பிறவிக் கடல்கடந் துன்கழல் காண்பதென்றோ
விரைகமழ் கொன்றைச் சடைப்பட்டி யீச்சுர மெய்த்துணையே (6)
மணம் கமழ்கின்ற கொன்றைமலர்களாகிய கண்ணியைத் தலையில் சூடிய பட்டிசுரனாகிய மெய்த் துணையே!,(எல்லாப் பெருங்கொடுமைக்கும் காரணம் என்று) உரைக்கப்படுகின்ற மூலமலத்தின் சக்தி கெடவும், பெரிய வினைகளின் வேர் படராமல் அறுத்து, இப்பூமிமேல் மேலும் மேலும் உடல்களையும் கருவிகளையும் போகங்களையும் தந்து சிறைப்படுத்தும் மாயையாகிய விலங்கினைத் தறித்துவிட்டு, விடுதலையாகிக், கரை காணா பிறவியாகிய கடலைக் கடந்து உன்னுடைய திருவடிகளை அடைவதென்றோ?
பட்டீசனே உயிர்களுக்கு மெய்த்துணை. உலக வாழ்க்கையில் நாம் துணை எனக் கருதுவதெல்லாம் பொய்த்துணைகளே; அவை துணைகள் அல்ல.
‘பெருங்கொடுமைகளுக் கெல்லாம் மூலமலமாகிய ஆணவமே காரணம்’ என்பது, சிவஞான பாடியம். மோய்தல் கெடுதல். ‘முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான்’ (சிவபுராணம் வரி 20)
வினை படர்ந்து பெருகும் இயல்பினது. அதன் ஆணி வேரை அறுத்துக் களைதல் வேண்டும்.
மாயாகாரியங்களாகிய தனுகரணபுவன போகங்களால் வருவது குடும்பம் முதலிய தளைகள் இந்தவிலங்கினால் உயிர்கள் தளைக்கப்பட் டுள்ளன. உலகியல் நடைபெறுவதற்கு இறைவனே ஆன்மாக்களை இந்தப் பாசமாகிய பந்தத்தில் தளைத்துள்ளான். “பந்தித்த பாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க நேசத்தை வைத்த நெறி போற்றி” (போற்றிப் பஃறொடை)
இந்த நேசமே உய்யவிடாமல் தடுக்கும் தளையாகக் கடினமுறும். இந்தக் கடின விலங்கை சாத்திரநூலறிவு எனும் அரத்தினால் குருநாதர் அராவி விடுதலை அளிப்பார். “சீவகத்தால், பாசம் பதியைப் பரவாமல் பல்லுயிர்க்கும், நேசமாய் நிற்கும் நிகளத்தைத் , தேசுற்ற நூலரத்தால் தேய்த்த அருள்நுட்பத்தான்” (சித்தாந்தப் பஃறொடை) நிகளம் – தளை.
குடும்பப் பாசமான விலங்கினை நூலரத்தால் தேய்த்துத்தான் நீக்க வேண்டும். தறித்தால் தளைக்கப் பெற்ற உறுப்புக்குக் கேடு விளையக் கூடும்.இதற்குக் காலஞ் செல்லும்.
இந்தத் தளையினின்றும் உடனே விடுதலை வேண்டும் எனும் உந்துதலில் சுவாமிகள்,”வளர்கின்ற மாயைத் தளையைத் தறித்துவிட்டு” என்றார்.
------------
துணையென்று சொல்கின்ற சுற்றமிலேன் மற்றும்
அணைவென்று காண்பதற்கிங் காரும் – புணையிலேன்
தன்னந் தமியனேன் தாய்போன்ற பட்டீசா
என்னைநீ கைவிடா தே. (7)
என்னிடம் பெற்ற தாய் போலப் பரிவுடைய பட்டீசா! உற்றகாலத்துக்கு உறு துணை என்று சொல்லப்படுகின்ற சுற்றம் எதுவுமிலேன்; சார்பென்று சார்வதற்கு இவ்வுலகில் சார்வாவார் எனக்கு இங்கு ஒருவரும் இல்லை. யான் தன்னந் தமியனாக உள்ளேன். என்னை நீ கை விட்டிடாதே.
“தாய் போன்ற பட்டீசா” – ‘தாய்போல் தலை யளித்திட்டு’ (திருவம்மானை) கைக்குழந்தை, தன் உள்ளத் துயரை இன்னதென்று கூற இயலாது துன்புறும். ஈன்றாள் அதன் துயரைத் தானே உணர்ந்து தவிர்த்து நலமுற வைப்பள்.தவமொன்றும் முயலாத என்னை நீ தானே தேடி நண்ணிய பின்னும் நின்னிடம் நான் எனக்கு வேண்டுவன வற்றைக் கேட்கவும் அறியாதிருந்தேன். எனக்கு வேண்டியவற்றை நீயே அறிந்து தலையாய அருளை நல்கினாய்”: (சி.சு. க)
----------
விடிலோ கெடுவேன் கெடினும் விடேனின் விரைமலர்த்தாள்
படினின் விழுத்தொண்டுட் பட்டுப் பயிலுவன் பட்டிதன்னுள்
முடிவின்றி யென்றும் விளங்குகின் றயெங்கள் முன்னவனே
கடுவொன்று வல்வினைக் காட்டை யெரிக்குமெங் காவலனே. (8)
ஆன்பட்டி எனும் திருப்பேரூரில் அடியேங்கள் உய்ய என்றும் விளங்குகின்றாய்! எங்களுக்குத் தலைவனே! நஞ்சுபோன்ற கொடிய வினைகளாகிய காட்டினை எரித்து ஒழிக்கும் எங்கள் காவலனே! என்னை நீ கைவிட்டிடாதே. என்னை நீ கைவிட்டாலும் உன் திருவடியைப் பற்றிய என் கரத்தை நான் நெகிழவிடேன்.உன்னுடைய மணமிக்க தாமரை மலர் நிகரும் திருவடிகளில் படிந்து உன்னுடைய விழுத்தொண்டினை இடைவிடாது செய்வன்.
இப்பாடல்,
“கடையவனேனைக்---- விடையவனே விட்டிடுதி கண்டாய் – சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக்கொள்ளே”
‘”பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன்பின்
வெற்றடியேனை விடுதிகண் டாய்விடி லோகெடுவேன்
மற்றடி யேன்றனைத் தாங்குநர் இல்லையென் வாழ்முதலே
உற்றடி யேன்மிகத் தேறிநின் றேன்எனக் குள்ளவனே””
(நீத்தல் விண்ணப்பம்.1, 23)
எனும் திருவாசகத்தை நினைவூட்டல் அறிக.
‘மன்னும் உத்தரகோச மங்கை’ என்றாற் போல, ‘பட்டிதன்னுள் முடிவின்றி என்றும் விளங்குகிறாய்’ என்றார். விடிலோ கெடுவேன் – வெற்றடியனாகிய இவனுடைய அடிமைத் தன்மை பயனற்றது என்று கருதி என்னைக் கைவிட்டு விடுவாயோ? அவ்வாறு கைவிடின் நான் கெட்டொழிவேன் என்றவாறு. விடிலோ – ஓகாரம் இரக்கக் குறிப்பு. (சி.சு. க). முன்னவன் – முதல்வன்.
------------
காவல் பெறவேண்டிற் கைக்கொண்டொழுகுவீர்
ஏவல்கள் செய்தே யிருந்திடுவீர் – பாவ
வினைகளெலாம் போக்கியே வீடளிக்கும் பட்டிப்
புனைகழலான் பாதப் புணை (9)
. ‘காவல் பெற வேண்டின், பாவவினைகளெலாம் போக்கியே வீடளிக்கும் பட்டிப் புணைகழலான் பாதப் புணையைக், கைக்கொண்டு ஒழுகுவீர். ஏவல்கள் செய்தே இருந்திடுவீர்’ எனக் கொண்டு கூட்டுக.
இறைவனைக் காவலன் என்பது மரபு. “காக்கும்எம் காவலனே” என்பது சிவபுராணம். காவலன் – அரசன். குடிமக்களைக் காத்தல் மன்னனின் கடமை. அவனுடைய ஆணைவழி ஒழுகுவார்மீது அவன் அன்புகொள்வான். அதனால் இறைவனின் பாதப் புணையைக் கைக்கொண்டு ஏவல்கள் செய்தே இருந்திடுவீர் என்றார். உயிர்களின் கடன் இறை பணி செய்தலே. “தன்கடன் அடியேனையும் தாங்குதல், என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்ற அரசு வாக்கு குறிக் கொள்க.. சமுசாரக் கடல் கடக்க ஆன்மாக்களுக்கு அவன் திருவடிகளே புணை. ஆன்மாக்களை முத்திக் கரை சேர்ப்பதற்கு அடையாளமாகப் பாதத்தில் கழல் அணிந்துள்ளான்.
----------
காலவன் போற்றுங் கழன்மற வேன்பட்டி மாமுனிவன்
மேலவன் கோமுக னுங்கண்டு போற்றும் வியனடத்தைப்
போலெங்குக் காண்ப னெனவே புகன்று புகழ்ந்திடுவன்
கோலநற் பேரையிற் பட்டியெம் மானெங் குரவனையே ! (10)
. அழகிய புண்ணியத்தலமாகிய திருப்பேரூரில் உறையும் பட்டிப்பெருமானாகிய என் குருநாதனைக் காலவமுனிவன் போற்றும் கழலடிகளை மறவேன்; பட்டிமாமுனிவனும், பெரியோனாகிய கோமுகனும் கண்டு போற்றிய ஞானநடனத்தைப் போன்றதொரு அருட்கூத்தை நான் எங்குக் காண்பேன் எனவே சொல்லிப் புகழ்ந்து போற்றிடுவேன்.
சிவனே குருநாதன். இப்பாடலில் பட்டிப் பெருமான் காலவமுனிவர்,பட்டிமுனி கோமுனி ஆகியோருக்கு அருள்புரிந்த தலவரலாறு சுட்டப்படுகின்றது. காசிப முனிவரின் புத்திரர் காலவ முனிவர். இவர் வழிபட்ட ஆலயம் காலவேச்சரம். இது பட்டீசர் ஆலயத்திற்கு வடகிழக்கில் உள்ளது. இவர் வரலாறு காலவன் வழிபடு படலத்தில் உளது’
விஷ்ணு கோமுனியாய் பேரூரை அடுத்துச் சிவலிங்கம் அமைத்து சிவாகம முறைப்படி சிவாராதனம் செய்து காலவ முனிவரோடு சிவயோகத்தில் இருந்தனர். இவ்வரலாறு தென் கயிலாயப்படலத்தில் உளது. பிரமன் பட்டிமுனி எனும் பெயருடன் பேரூரில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். இவ்வரலாறு வடகயிலாயப் படலத்தில் உள்ளது.
இம்மூவரும் பெருமானின் திருநடனத்தைத் தரிசிக்கவே இங்குத் தவமியற்றினர். அவர்களுடைய தவத்திற்கு இரங்கிய பெருமான் காலவேச்சரத்தில் அரசடியில் திருநடனம் செய்தருளினான். உடுக்கை ஒலியும் மறைச்சிலம்பொலியும் கேட்டனரேயன்றி இறைவனின் திருக்கூத்தினை எவரும் கண்டிலர். அனைவரும் ஏங்கித் துதித்தனர். ஊனநடனம் செய்து உயிர்களின் ஆணவனலவலியை மாற்றி ஞானநடனம் செய்தருளினர். ஞான நடனத்தைக் காணும் ஞானநோக்கினை இறைவன் அளித்தருள முனிவர் மூவரும் கண்டு களித்தனர். இவ்வரலாறு நிருத்தப்படலத்தில் அமைந்துளது.
அம்முனிவர் மூவரும் கண்டுய்ந்த ஞானநடத்தைப் போல நான் எங்குக் காண்பேன் என இரங்கியவாறு.
----------
குரவங் கமழ்காஞ்சிக் கோல நதியும்
புரவார் பிறவாப் புளியும் – இறவாப்
பனையுங் கண்டுய்யப் பண்ணலாற் பேரூர்
தனையொப் பதுவெத் தலம் (11)
குரவமலர்களின் மணம் கமழும் காஞ்சி மாநதியையும் சோலையிலுள்ள பிறவாப் புளியையும் இறவாப்பனையையும் கண்ணாற் காண அவை நம்மை உய்யச் செய்தலால் அவை உள்ள திருப்பேரூர்தனை ஒப்பது எத்தலம்? ஒன்றும் இல்லை என்றவாறு.,
சுமதி என்னும் அந்தணன் நற்குடியிற் பிறந்து மறையொழுக்கம் வழுவி, பாவியாய் வாழ்ந்திறந்தான், பேரூர் அருகில் வீழ்ந்து இறந்த அவன் உடலை ஒரு நாய் உண்ண எண்ணி இழுத்துச் சென்று காஞ்சி நதியில் இட்டது. காஞ்சி தீர்த்தத்தில் அவனுடல் வீழ்ந்ததும், அத்தீர்த்தத்தில் ஆடிய சிவ புண்ணியத்தால் அவன் செய்த பாதகங்கள் அழிந்தன. அவன்சிவபுரத்தை அடைந்தான்
பிறவாப் புளியும் இறவாப் பனையும் இப்பேருர் முத்தித் தலம் என்றும் இங்கு வழிபட்டோர் பிறப்பிறப்பிலா முத்தியை எய்துவர் என்றும் உணர்த்துவன. இம்மூன்றும் காட்சிப்பொருளாக இத்தலம் முத்தித்தலம் என உணர்த்துவதால், “கண்டு உய்யப் பண்ணலால் பேரூர்தனை ஒப்பது எத்தலம் என்றார்.
--------
தலத்துள் முருகன் அயனரி சங்கரன் சாருமையும்
நலத்தகும் ஐவர்கள் நண்ணுங் கிரிகள் நடுவுதிகழ்
சொலத்தகு மாதி புரியென வோங்கு சுகநகருள்
வெலத்தகு பேரைப்பட் டீசர் பதமெங்கள் மெய்த்துணையே (12)
இந்த நிலவுலகில் முருகன் பிரமன் திருமால் சிவன் சிவனைச் சார்ந்த உமை ஆகிய ஐவரும் சேர்ந்துள்ள மலைகளுக்கு நடுவுவில் ஆதிபுரி எனும் புகழோடு, சுகம் அளிக்கும் தலங்களையும் வெல்லும் தகுதியதாய் விளங்கும் திருப்பேரூரில் வீற்றிருக்கும் பட்டிப்பெருமானின் திருவடிகளே எங்களுடைய மெய்த்துணையாகும்
திருப்பேரூர், பிரமன் இருக்கும் ஐயர்மலை எனப்படும் ஐயாசாமிமலை, திருமால் இருக்கும் பெருமாள் முடி, தென்கைலாயம் எனப்படும் வெள்ளிங்கிரி, முருகன் வீற்றிருக்கும் மருதமலை, நீலிமலை எனப்படும் குருடி மலை ஆகிய குன்றுகளால் சூழ்ப்பட்டுள்ளதால், “நலத்தகும் ஐவர்கள் நண்ணும் கிரிகள் நடுவு திகழ்” என்றார்.
நந்தி ஒருமுறை இறைவனை வணங்கித் “தேவரீர் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவற்றினும் மேலான தலமெது என வினவியபொழுது, எம்பெருமான், “ எந்த நாளும் எம்முடைய இருப்பிடமாய், எல்லாவற்றையும் இலயஞ்செய் (ஒடுக்கும்) அரங்கமாய்,எவற்றினும் மேலதாய் அழகிதாய் விளங்குவது ஆதிபுரியாகிய பேரூர்” என்றனர். அதனால் பேரூருக்கு ஆதிபுரி எனும் பெயர் வழங்கலாயிற்று.
“பாரிடை முளைத்து நின்ற பலசிவ லிங்கங் கட்குச்
சீரிய முதன்மையானுஞ் எப்புவ அனைய நாமம்
ஆருமவ் வாதி லிங்கம் அமர்ந்தருள் கொழிக்கு மாற்றால்
ஓருமந் நகரை ஆதி புரியென வுரையா நின்றார்” (பேரூர்ப் புராணம்)
சுகவாழ்க்கைக்குரிய நகரங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் இனிதான நகரமாகையால், “ஓங்கு சுகநகருள் வெலத்தகு பேருர்” என்றார். வெல-வெல்ல.இடைக்குறை.. சுகம்- இன்பம். முத்தியுமாம்
------------
மெய்த்துணை யேயுன் விழுநகராம் பேரூரில்
பொய்த்துணையா மிவ்வுடலம் போயகலப் – பெய்திடுவாய்
அம்மண்ணுக் காக்குவாய் அப்பனே பட்டீசா
செம்மை பெறஇவையே செய். (13)
அடியேனுடைய மெய்த்துணையே!! என்னுடைய அப்பனே! பட்டீசா! சிறப்புடைய நகராகிய திருப்பேரூரில், என்னுடைய துணையென நான் கருதி இருக்கும் இப்பொய்யான உடல் நீங்கச் செய்திடுவாயாக; அப்பேரூர் மண்ணுக்கு இரையாக்கிடுவாயாக. அடியேன் வீட்டின்பத்தைப் பெற இவற்றைச் செய்தருள்வாயாக.
பேரூர் முத்தித் தலம். இம்மண்ணில் இறப்பார் சிவபுரம் சேர்வர் என்பது சுமதி எனும் அந்தணன் வரலாற்றில் பெறப்பட்டது. ஆகவே இங்கு, தம் உயிர் நீங்கச் செய்ய வேண்டினார்.
மெய்த்துணை x பொய்த்துணை. மெய்த்துணை, உண்மையான துணை; தனித்துணை என்றும் சொல்லப்படும். ஒப்பற நிலையான துணை.
உயிர் அநாதி கேவலத்தில் கிடக்கும்போதும் இறைவன் துணையாயிருந்து படைப்புக்குக் கொண்டுவருகின்றான். சகல நிலையில் உயிர் தன்முனைப்பால் இறைவன் உடனிருப்பதை அறியாது உழன்ற நாளிலும் துணையாக உள்ளான். தன் முனைப்பற்று இறை விளக்கம் பெற்ற பின்பும் துணையாக உள்ளான். இறுதியில் வீடுபேறுற்ற நிலையிலும் உடனிருந்து இன்பம் துய்க்கச் செய்கின்றான். இந்நிலைகள் யாவற்றிலும் பிறர் துணையின்மையால் இறைவனே ‘தனித்துணை, மெய்த்துணை.’ (சி.சு.க. சிவக்குடில் விளக்கம்)
செம்மை- வீடுபேறு. “செம்மையே யாய சிவபதம்” ஆன்மா சிவவியாபகத்தில் கலத்தல். விழுநகர் – விழுமியநகர்.முத்திப்பேறு அளிக்கும் நகர். விழுமியம்- சிறப்பு
----------
செய்குன்று போலும் செழுமடங்கள் வாவிச் செழுங்கமலம்
எய்குன்ற லில்லாத பேரூ ரிறைவா இணையடியை
மெய்நீ றணிந்து பணிந்து மொழிந்தியான் மேவிடவே
கைமேவி யுய்யக் கருணைசெய் வாயெங்கள் கண்ணுதலே. (14)
செயற்கையாகச் செய்த குன்றுகளைப் போன்று உயர்வாகக் கட்டப்பட்ட மடங்கள்,, தாமரைத் தடாகங்கள் குறையாத பேரூர்த் தலைவனே! உடலில் முழுநீறு பூசி உன்னை நினைந்து வணங்கி திருவைந்தெழுத்தை மொழிந்து உன்னை யான் சேர்ந்திட நீ என் பக்கம் மேவி யான் உய்யக் கருணை செய்வாய். எங்கள் முக்கண் இறைவனே!
உய்யும் வழி இதுவெனவும் இதுவும் அவனருளால்தன் அமையும் என உணர்த்தியது. கை – பக்கம். குருவாய் வருவாய் என்றது.
“ஐயும் தொடர்ந்து விழியும் செருகி அறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யும் திருவொற்ரி யூருடை யீர்!திரு நீறுமிட்டுக்
கையும் தொழப்பண்ணி ஐந்தெழுத் தோதவும் கற்பியுமே””
---------
கண்ணார் நுதலாய் கவின்பேரூர்ப் பட்டீசா
எண்ணார எண்ணி யிருந்திடவும் – மண்ணாரத்
தாழ்ந்து வணங்கிக்கை கூப்பித் தழைத்திடவும்
வாழ்ந்த கருணையினை வை (15)
கண்பொருந்திய நெற்றியினனே! அழகியபேரூர்ப் பட்டீசனே! என் நெஞ்சு முழுதும் நீயாக உன்னையே எண்ணி இருந்திடவும், மண்மேற் பொருந்திப் பஞ்சாங்க அட்டாங்கமாக என் உடல் தோய்ந்து இருகைகூப்பி வணங்கித் தழைக்கின்ற வாழ்க்கையினை, யான் வாழக் கருணையினை என்மேல் வைத்தருள்.
நெஞ்சார நினைத்தல், வாயார வாழ்த்தல், உடலாரத் தொழுதல் ஆகியவையே மனம் வாக்குக் காயம் ஆகியன பெற்ற பயன்.
கண் ஆர் நுதலாய்- நுதல் ஆர் கண்ணாய் என்பது ‘இல்முன்’ என்பது ‘முன்றில் என வருதல் போல மாறிவந்தது. கண்ணானது அருளுடைமை பற்றிச் சிறப்புடைய பொருளாயிற்று. நுதலான் என்னும் னகர ஈற்று ஒற்று யகர ஒற்றாய் விளிப்பெயராயிற்று. (சி.சு.க)
------------
வைக்கின்ற செல்வம் வளரருள் வாரி வழங்குமுகில்
எய்க்கின்ற போது பிழையாத ஊன்றுகோல் எப்போதும்யான்
துய்க்கின்ற பேரின்ப ஊற்று வயல்க ளெல்லாம் தூமணம்
உய்க்கின்றபேரூர் உயர்பட்டி யீச்சரன் ஒண்கழலே (16)
வயல்களெல்லாம் சேற்று நாற்றம் வீசாமல் தூமணம் கம்ழுகின்ற பேரூர் உயர் பட்டிச்சரனின் ஒளிவீசும் கழல்அணிந்த திருவடிகளே எனக்குச் சேமநிதி; மேலும் மேலும் அருளை வாரி வழங்குகின்ற மேகம்; தளர்கின்றபோது காக்கும் ஊன்றுகோல்; எப்போதும் யான் அனுபவிக்கின்ற பேரின்ப ஊற்று.
வைக்கின்ற செல்வம்- சேமநிதி. பிற்காலத்தில் பயன்படும் என்று எண்ணி சேமித்து வைத்தபொருள். “வைச்ச பொருள் நமக்காகுமென்று” (அப்பர், திருக்கோயில்) அப்பொருள் பெருமானின் கழலடியே. அச்செல்வம் இருத்தலால் பேரின்பவாழ்வு குறைவற நடக்கும்.
மேகம் கைம்மாறுகருதாது மழை வளவயலானாலும் களர் நிலமானாலும் கார்க்கடலானாலும் பொழியும். அதுபோல கழலிணை என் தகுதியைக் கருதாது எனக்குத் திருவருளை மாரிபோற் பெய்யும்;
எய்த்தல் – இளைத்தல், தளர்தல்.ஊன்றுகோல் ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துற்றபோது பற்றுக்கோடாகிய துணை. தளர்ச்சி வறுமையானாதல், அறிவின்மையானாதல், முதுமையானாதல், நோயானாதல் தோன்றும் தளர்ச்சியினால் இடுக்கண் படும்போது திருவடி நினைவு அதனை நீக்கும் ஆதலால் பிழையாத ஊன்றுகோல் என்றார். பிற ஊன்று கோல் தடுக்கி வீழச் செய்யும் திருவடியாகிய ஊன்றுகோல் அங்ஙனம் பிழையாத ஊன்றுகோல் என்பதாம்.
-“ஞானத்தின்
கண்ணை மறைத்த கடியதொழில் ஆணவத்தால்
எண்ணுஞ் செயல்மாண்ட எவ்வுயிர்க்கும்- உள்நாடிக்
கட்புலனாற் காணார்தம் கைகொடுத்த கோலேபோல்” .
. (போற்றிப் பஃறொடை)
என்றதில் ஊன்றுகோலின் சிறப்பைக் காண்க.
மாணிவாசகர் சிவபெருமானை, ‘ஊற்றான உண்ணாரமுதே” என்றார். என்மனத்தில் ஊறுவதாகிய உண்பதற்கு அரிய அமுதே என்று பொருள். திருவடி (சிவம்) இமைப்பொழுதும் தம் நெஞ்சில் நீங்காது நின்று நினைக்கச் செய்தலால் “எப்போதும் யான் துய்க்கின்ற பேரின்ப ஊற்று’ என்றார்.
------------
கழறந் தருளுவாய் காலமிது பட்டிப்
பிழம்பே இனியுன்னை யெய்த – உழந்தேனியான்
எத்துணையு மில்லேனிங் கிவ்வுலகில் வாழேனன்
எய்த்தடைந்தே னின்றா ளிணை (17)
ஆன்பட்டியில் அருட்பிழம்பாய் எழுந்தருளியிருக்கும் சிவமே! இப்போதே உன் கழல் தந்தருளுவாய்! கழல் தந்தருளுவதற்கு இதுவே காலம். உன்னை அடைவதற்குப் பலவகையாலும் உழன்று வருந்தினேன். உன் திருவருளையன்றி வேறு பற்றுக்கோடாகிய துணை ஒன்றும் இல்லேன். இவ்வுலகில் வாழும் ஆசையொன்றுமில்லேன். தளர்ச்சியுற்று சம்சாரமாகிய கடலைக்கடக்க நின் தாளிணையையே புணையெனப் பற்றினேன்.
பிழம்பு- திரண்ட வடிவம். ‘கடுந்தழற் பிழம்பன்ன மேனிச் செய்யனே”,
“எண்ணமே யுடல்வாய்மூக்கொடு செவிகண்
என்றிவை நின்கணே வைத்து
மண்ணின்மே லடியேன் வாழ்கிலேன் கண்டாய்”
எனும் மணிவாசகம் கருதுக
இனி- இப்பொழுதே. இப்பிறப்பிலே இப்பொழுதே உன்னை அடைய உழன்றேன்.
“இம்மையுன் றாளென்றன் னெஞ்சத் தெழுதிவை யீங்கிகழில்,அம்மை யடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார்” , என அப்பர் வருந்தியது போலச் சுவாமிகளும், வரும் பிறவியில் எனக்கு அருளினாலும் நீ அருளியதை உணர்வார் எவர்? ஒருவருமிலர். எனவே, இப்பிறப்பில் இப்பொழுதே தாளிணை தந்தாளுக என்றவாறு.. ---------
இணையார் திருவடி பேணற்கி யானார்மற் றெவ்விடத்தேன்
துணையாகி எல்லா வுயிர்க்கு மருள்செய் தொழிலவனே
கணையாற் புரமெரி செய்துவிண் மண்ணெலாங் காத்தவனே
இணையில் பெரும்பேரூர்ப் பட்டியில் வாழ்கின்ற வெம்மிறையே (18)
உயிர்களுக்கெல்லாம் மெய்த்துணையாகி அருள்செய்வதையே தொழிலாக உடையவனே! வெங்கணையால் திரிபுரம் மூன்றையும் எரித்து விண்ணுலகம் மண்ணுலகம் யாவற்றையும் காத்தவனே! தனக்கு நிகரில்லாத பெருமையுடைய பேருர் ஆன்பட்டியில் வாழ்கின்ற எம் தலைவனே! ஒன்றற்கொன்று இணையாக வுள்ள திருவடியை விரும்புதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கின்றது?
இணையார் திருவடி – ஒருதிருவடிக்கு மற்றொரு திருவடியே இணை. இடது திருவடி உயிர்களின் தொழிலை இயக்கும் கிரியாசத்தியும்,வலது திருவடி உயிர்களின் அறிவை இயக்கும் ஞானசத்தியுமாம்.இணையார் என்றதனால் அவற்றுக்குமேல் வேறு ஒன்றும் இல்லை என்று அவற்றின் உயர்ச்சி கூறியதாம்
பேணற்கு யானார்?- பேணுதல் – விரும்புதல். ஒரு பொருளை விரும்புதற்கும் தகுதி வேண்டும். அத்தகுதி சற்றும் இல்லாத யான் அதனை விரும்புதல் தகுமா? என்றவாறு. உன் திருவருளைப் பெறத் தகுதி உடையேன் அல்லேன், “நாயினேன் உனைநினையவும் மாட்டேன், நமச்சிவாயஎன் றுன்னடி பணியாப் பேய னாகிலும் பெருநெறி” காட்டுதல் வேண்டும். “‘தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்”, “தொழுவார்க்கெளி யாய்துயர் தீரநின்றாய்” அடியவரின் துயர் தீர்ப்பதே தொழிலாக நின்றாய், ஆதலின் உன்னைப் பேணுதல் என்னிடத் தில்லை யாயினும் நீ உறுதியாக என்னைக் காப்பாய் எனும் நம்பிக்கை உள்ளது. என்றவாறு
----------
இறையு மறந்தாலிங் கெவ்வாறு வாழ்வேன்
குறைவில்லாய் பேறூரிற் கோவே – இறவாகும்
போதுன் கழல்பெறப் பொங்கும் அருளன்றி
யாதொன்றும் வேண்டுகிலேன் யான். (19)
குறையே இல்லாத நிறைவே! பேரூர்த்தலைவனே! உன்னைக் கணப்பொழுதும் மறந்தால் எப்படி வாழ்வேன்? நான் இறப்பை அடையும்போது நின் திருவடியைப் பெறப் பொங்கும் உன் அருளையன்றி வேறு எதனையும் யான் நின்னிடத்து வேண்டவில்லை..
குறைவு இல்லாய் – இறைவன் நித்தியப்பொருள். நித்தியப்பொருளின் இலக்கணம் கால எல்லையும் இட எல்லையும் இன்றி யாண்டும் எப்பொழுதும்வியாபித்திருத்தல். ஆதலின் பதிப்பொருள் நிறைவுடைய தாயிற்று.
இறைவன் நினைவு என்னுள் மூச்சுக்காற்றாக இயங்குகின்றது.. இமைப்பொழுதும் நீங்காதவன் நினைவு மறந்தால் அக்கணமே என்னுயிர் நீங்கும்.
-----------
நான்பெற்ற பேரூர்த் திருநர் போற்றி நலம்பெருக்கும்
கான்பெற்ற பச்சைக் கொடியிடப் பகர் கழல்கள் போற்றி
ஊன்சேர் பிறவி யொழிக்கும் திருநடம் போற்ரி யன்பர்
கான்மலர் போற்ரி கழல்சேர் திருவடிச்சீர் பெறவே. (20)
நான் அருமையாகப் பெற்ற பேரூர்த் திருநகரத்திற்கு வணக்கம் என்னைக் காத்தருள்க! ஆன்மாக்களுக்கு நன்மையையே பெருக்குகின்ற திருவடி யுடைய மரகத வல்லியை இடப்பகத்தில் உடைய பட்டீசருக்கு வணக்கம் என்னைக் காத்தருள்க. ஊனார் உடலொடு பிறக்கும் பிறப்பினை ஒழித்தருளும் ஞான நடனத்திற்கு வணக்கம் என்னைக் காத்தருள்க. திருவடித் தொண்டர்களின் காலாகிய மலர்களுக்கு வணக்கம் என்னைக் காத்தருள்க. (எதற்கெனின்)வீடுபேறாகிய செல்வத்தினை அருள்வதாகிய கழலணிந்த திருவடியை யான் பெறுக.
போற்றி என்பதற்கு என்னைக் காத்தருள்க என்றும் வணக்கம் என்றும் இருவகையாகப் பொருள்கொள்ளலாம். திருநகரம் – முத்தித்தலம். திரு- செல்வம், ஞானம்,,முத்தி.திருவடிச் சீர் – திருவடியே வீடு பேறு. ஆதலால் திருவடிச் சீர் என்றார். சீர்- செல்வம்; அது வீடுபேறு.
வாழ்த்து
வாழிதிருப் பேரூர் வாழிபட்டி யீசர்கழல்
வாழிபச்சை நாயகியார் வார்கழல்கள் – வாழியே
அல்லாருங் கண்டத் தமலனடி யாரெங்கும்
எல்லாரும் வாழி யினிது
யான் வாழும் பொருட்டு இவை வாழ்க என வாழ்த்தினார். அல்- இருள். அமலன் – இயல்பாகவே மலம் அற்றவன்.
----------
This file was last updated on 20 Dec 2020.
Feel free to send the corrections to the webmaster.