ஆலமும் அமுதமும் (கட்டுரைகள்)
திரு.வி. கலியாணசுந்தரனார்
Alamum amutamum (essays)
by tiru vi. kalyANacuntaranAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India /archive.org for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஆலமும் அமுதமும் (சைவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகள்)
திரு.வி. கலியாணசுந்தரனார்
Source:
ஆலமும் அமுதமும்
ஆக்கியோர் : திருவாளர் - திரு. வி. கலியாணசுந்தரனார்
வெளியிடுவோர் : அரசி புக் டிப்போ
9, திருவள்ளுவர் கோயில் தெரு மயிலாப்பூர், சென்னை -4.
உரிமையுடையது, 1970
விலை. ரூ.0-75
மூன்றாம் பதிப்பு : பிப்ரவரி 1970
அச்சிட்டோர் : மெட்ரோபாலிடன் பிரிண்டர்ஸ், சென்னை 2
-------------------
அணிந்துரை
ஒருவன் 'உலக வாழ்க்கையே வேண்டா' என்று கடவுள் திருப்பெயரை மட்டும் ஓதீயவண்ணமிருக்கிறான்; மற்றொருவன் கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவனாவன்?
சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள் இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கை வாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று, விடுதலைக்கு இயற்கையோடியைந்து வாழ்தல் வேண்டுமென்பது. இவற்றுள் பின்னையது, எனது கல்வி கேள்வி ஆராய்சி அனுபவம் முதலியவாற்றான் தெருண்ட உண்மைக்கு அரண்செய்வதாய் நிற்கிறது. அதனால் அச்சீரிய கொள்கையை வாய்ப்பு நேரும் போதெல்லாம் வலியுறுத்துவது எனது தொண்டுகளுள் ஒன்றாய் நிகழ்ந்து வருகிறது.
உயிர்களின் நலத்துக்கு உடல் உலகு முதலியன இறைவனால் அருளப்படுகின்றன என்று சைவ சித்தாந்தம் அறிவுறுத்துகிறது. இவ்வறிவுறுத்தல் இக்கால உலகுக்கு இன்றியமையாத தென்பதற்கு ஈண்டு விரிவுரை வேண்டுவதில்லை. 'உலகமே வேண்டா ; கடவுளே வேண்டும்' என்னும் கொள்கைக்கும், 'கடவுளே வேண்டா; உலகமே வேண்டும்' என்னும் கொள்கைக்கும் இடையில் அரிமா நோக்கென மிளிர்வது சைவ சித்தாந்த விளக்கம்.
மதுரையில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முப்பத் தெட்டாவது ஆண்டு விழாக் கூட்டம் (27, 28, 29-12-1943) என் தலைமையில் நடைபெற்றது. தலைமையுரையில் இயற்கை வாழ்க்கையை விடுதலைக்குக் கொழு கொம்பாகக் கொள்ளுதல் வேண்டுமென்று சைவ சித்தாந்தம் சாற்றுவதையும் அத்தகைய வாழ்க்கையைச் சாம்ராஜ்யங்கள் குலைத்துக் கேடு சூழ்ந்ததையும், அதனால் பெரும் போர் எழுச்சி ஒருபாலும் புது உலக முழக்கம் இன்னொருபாலும் தோன்றியுள்ளதையும் எடுத்துக்காட்டல் எனது கடனாகியது. மேலும் உலகச் செம்மை நலத்துக்குரிய சில முறைகளும் என்னால் கோலப்பட்டன. அம்முறைகளில் 'ஆலமும் அமுதமும்' பொதுளலாயின.
மகா சமாஜம் கூடிய இடம் ஆலவாய் என்றும், மதுரை என்றும் அழைக்கப்படுதல் நாட்டவர்க்குத் தெரியும். அப் புனிதப் பெயர்கள், போராட்டத்தை ஆலம் என்றும், புது உலகை அமுதம் என்றும் சுட்டிக் காட்டுமாறு என்னைக் கடவின. அவ்வாலத்தையும் அமுதத்தையும் உள்ளுறை யாக்கொண்ட தலைமையுரை இந்நூல் வடிவம் பெறலாயிற்று. உள்ளுறைக்கேற்ப இந்நூலுக்கு 'ஆலமும் அமுதமும்' என்னும் தலைப்புச் சூட்டப்பட்டது.
ஆலம் எது? அமுதம் எது? ஆலம் மக்கள் நிகழ்த்தும் பாவம் . அமுதம் ஆண்டவன் திருவருள். பாவத்தை ஏற்று அருள் பொழியும் ஆண்டவனை நம் முன்னோர் 'நஞ்சணி கண்டன்' என்று போற்றியது ஈண்டு உன்னற் பாலது. ஆண்டவன் நஞ்சணிந்த கதையின் நுட்பம் இந் நூலின் உள்ளக்கிடக்கை என்று சுருங்கச் சொல்கிறேன்.
இந்நூல் காலத்துக் குரியதென்று நவிலவும் வேண்டுமோ?
இராயப்பேட்டை) திருவாரூர் - வி. கலியாணசுந்தரன்
15-5-1944
------------
ஆலமும் அமுதமும்
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணி செய்து நாள்தொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே'
தோழர்களே!
சைவ சித்தாந்த மகா சமாஜத் தலைமை எனக்குப் புதியதன்று. சமாஜ வெள்ளி விழாவின் முதல் நாள் கூட்டமும், இருபத்தொன்பதாவது ஆண்டுவிழாக் கூட்டமும் என் தலைமையிலே நடை பெற்றன. அத்தலைமைப் பணி மீண்டும் எனக்கு வழங்கப்-பட்டிருக்கிறது. அப்பணியை அன்புடன் எனக்கு வழங்கிய வரவேற்புக் கூட்டத்தார்க்கும், சமாஜத்தார்க்கும், மற்ற அன்பர்கட்கும் எனது நன்றி உரியதாக.
ஆலமும் அமுதமும்
நாம் எவ்விடத்தில் கூடியிருக்கிறோம்? ஆலவாயில் கூடியிருக்கிறோம் ; மதுரையில் கூடியிருக் கிறோம். ஒரு பால் ஆலம் ; மற்றொரு பால் அமுதம். ஆலம் உண்டு , அமுதம் அருளிய அழகன் - அங்கையற் கண்ணி பங்கன் - நம்மைக் காப்பானாக.
மதுரை
இருள் சூழ்ந்த இந்நாளிலும் மதுரையின் நினைவு தோன்றும் போதே மகிழ்ச்சி பொங்குகிறது; உள்ளத் தாமரையில் இன்பத்தேன் பிலிற்றுகிறது; ஒரு சக்தியும் பிறக்கிறது. மதுரையின் பழம் பெருமை என்னே! என்னே ! அப்பெருமையை இத்தலைமையுரையில் எங்ஙனம் விரித்தல் கூடும்? சுருங்கச் சொல்லலும் இயலாதே.
மதுரை, சிவலோகம் ; தமிழ் நிலம் ; பெண்மை நிலையம் ; தொன்மை வைப்பு; சரித்திர இல்லம், நாகரிக ஊற்று.
மதுரையம்பதி, வையை என்னும் பொய்யாக் கொடியை மணந்து விழுமிய செல்வம் பெற்றது. அச்செல்வச் சிறப்பை என்னென்று கூறுவேன்? கலையின் கலை என்பேனா ! வீரத்தின் வீரம் என்பேனா! அன்பின் அன்பு என்பேனா ! வேறு என்ன கூற வல்லேன் !
சங்கம் வளர்த்த மாண்பு இக்கூடற்பதிக்கு உண்டு. அன்று சங்கத்தில் வளர்ந்த தமிழ் இன்றும் தமிழ் நாட்டின் தனிமையைக் காத்து வருகிறது. தமிழ் நாடு தனிநாடு என்று தமிழன் வீறுடன் கூறிப் பீடுடன் நடக்கும் ஏக்கழுத்தம் நல்கிய மதுரை - நான் மாடக்கூடல் - வாழ்க ; வாழ்க.
'நாயகன் கவிக்கும் குற்றம் நாட்டிய' ஒரு வீரனைத் தந்தது இத்தமிழ்ப் பதி; ஒரு புலவன் பின்னே அந்நாயகனை ஓடச் செய்தது இப்பழம் பதி. அண்டங்களை யெல்லாம் அடுக்கடுக்கா யீன்றருளிய அன்னை மதலையாய்த் தவழ்ந்தது எங்கே? கண்ணகி யின் வீரம் கனன்று எழுந்தது எங்கே? எல்லாம் வல்ல இறைவனை மருகனாய்க் காவலனாய்ப் பெற்ற இடம் எது? அவனை மண் சுமக்கவும் விறகு விற்கவும் ஏவிய இடம் எது? இம்மதுரை - தெய்வ மதுரை - தமிழ் மதுரையன்றோ ?
சித்தாந்த அறிவுறுத்தல்
இன்னோரன்ன சிறப்புக்கள் பல வாய்ந்த இத் தமிழ் நகரில், அங்கையற்கண்ணியின் திருவோலக்க முன்னிலையில் சைவ சித்தாந்த மகாசமாஜப் பெயரால் நாம் ஈண்டியிருக்கிறோம். சைவ சித்தாந்தம் என்ன அறிவுறுத்துகிறது? முப்பொருளுண்மை, சத்காரிய வாதம், சொரூப தடஸ்த இயல், அத்துவித் நுட்பம், சரியை கிரியை யோக ஞானம், வீடுபேறு முதலியவற்றை அறிவுறுத்துகிறது. இவை களைப்பற்றிச் சைவக் கூட்டங்களிலும் மகாநாடு களிலும் யான் நிகழ்த்திய சொற்பொழிவுகளும்
தலைமையுரைகளும் பலப்பல. அவைகளிற் சில, 'சைவத்தின் சமரசம்', சைவத் திறவு', 'நினைப்பவர் மனம்', 'சித்தமார்க்கம் முதவிய நூல்களாய் வெளி வந்துள்ளன. சமாஜம் வெளியிட்ட சிவஞான பாடியப் பதிப்பின் முகப்பில் யான் எழுதிய 'சித்தாந்தக் கட்டுரை' ஒன்று திகழ்கிறது. அதிலும் சித்தாந்தத்தைச் சுருங்கிய முறையில் விளக்கி யுள்ளேன்.
காலதேச வர்த்தமானம்
இங்கே காலதேச வர்த்தமானம் நினைவுக்கு வரு கிறது. 'காலமொடு தேசவர்த்த மானமாதி கலந்து நின்ற நிலைவாழி கருணைவாழி' என்பது தாயுமானார் திருவாக்கு. இத்திருவாக்கால் கடவுளுக்கும் கால தேச வர்த்தமானத்துக்கும் உள்ள இயைபு புலனாகிறது.
முன்னே சைவ மகாநாடுகள் கூடிய காலதேச வர்த்தமானங்கட்கும், இக்காலதேச வர்த்தமானத் துக்கும் வேற்றுமை உண்டு என்று சொல்லலும் வேண்டுமோ? இக்கால தேசவர்த்தமானம், சைவ சித்தாந்தத்துக்கும் உலக வாழ்க்கைக்குமுள்ள தொடர்பின் மீது என் கருத்தைச் சிறப்பு முறையில் செலுத்துமாறு என்னைப் பிடர் பிடித்து உந்துகிறது.
சித்தாந்தமும் உலகமும்
சைவ சித்தாந்தத்துக்கும் உலக வாழ்க்கைக்குந் தொடர்பு உண்டா? இல்லையா? தொடர்பு உண்டு; பெருந் தொடர்பு உண்டு. சைவம் உலகத்தை விடுத்து வானத்தில் பறப்பதன்று. அஃது உலகத்தின் முதலாகவுள்ள மாயையைப் பொருளாகக் கொண் டது. மாயையைப் பொருளாகக் கொண்ட சைவம், அம்மாயா காரியமாகிய உலகை எப்படி விடுத்து மேலே பறப்பதாகும்? ஆகவே, சைவத்துக்கும் உலகுக்குந் தொடர்புண்டு என்பதற்கு விரிவுரை வேண்டுவதில்லை.
உலக வாழ்க்கை
இறைவன் முழு அறிவினன் என்றும், உயிர்கள் முழு அறியாமையுடையன என்றும், உயிர்களின் அறி யாமையை நீக்கி அவைகளைத் தன்னைப் போலாக்க அவைகட்கு இறைவன் தநுகரணபுவன போகங் களை அளிக்கிறான் என்றும், உயிர்கள் தநுகரணபுவன போகங்களை நல்வழியில் பயன்படுத்தி விடுதலையடைதல் வேண்டு-மென்றுஞ் சைவ சித்தாந்தம் சாற்று கிறது. தநுகரணபுவன போகங்களை, உடல் - உலகு - என்று தொகுத்துக் கூறலாம். இதனால் என்ன தெரி கிறது? சித்தாந்தத்தின் உள்ளத்தில் உலக வாழ்க் கையும் நிலவுகிறதென்று தெரிகிறது. உலக வாழ்க் கையைச் சித்தாந்தம் வெறுக்கவுமில்லை; துறக்கவு மில்லை. உயிர்களின் விடுதலைக்கு உலகவாழ்க்கை இன்றியமையாக் கருவி என்பது சித்தாந்தத்தின் உட்கிடக்கை.
மாறுபட்ட கொள்கைகள்
இவ்வுட்கிடக்கைக்கு மாறுபட்ட கொள்கைகள் பல உலகில் உலவி வருகின்றன. அவைகளை இரு கூறிட்டுக் கொள்கிறேன். ஒன்று, 'உலக வாழ்க்கையைத் துறந்தாலன்றி வீடுபெறல் இயலாது' என்பது; இன்னொன்று, 'உலகமே பொருள், அதற்கு வேறாகச் சித்தென்னுஞ் செம்பொரு ளென்று ஒன்றில்லை' என்பது.
இப்பின்னைய கொள்கையுடையார்க்கு நல்லறி வுச்சுடர் கொளுத்தும் நோக்குடன் அநுபூதிமான்களிடத்திலிருந்து, ' உலகம் பொருள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அப்பொருள் என்றும் ஒரு பெற்றி யதா யிருப்பதன்று ; மாறுந் தன்மையது. சித்தென்னுஞ் செம்பொருளோ என்றும் ஒரு பெற்றியதா யிருப்பது ; மாறுதலே அடையாதது ; உலகம் அடை யும் மாறுதலுக்கு நிலைக்களனாக நின்று துணை புரிவது' என்ற கருத்துக்கள் பிறந்தன. இக்கருத்துக்கள் நாளடைவில், 'உலகம் நிலையுதல் இல்லாதது; விடுதலைக்கு அதை நீத்தல் வேண்டும்' என்ற கொள்கையாய்த் திரிந்தன போலும்!
கொழு கொம்பு
உலக வாழ்க்கையை நீத்தல் வேண்டுமென்னுங் கொள்கையும், உலகமே பொருளென்னுங் கொள் கையும் மன்பதையின் நலத்துக்கு உரியனவாகா. மன்பதையை முன்னையது ஒரு வழியில் பாழ்படுத்தியது; பின்னையது வேறு வழியில் பாழ்படுத்தியது. அது கீழ் நாட்டைப் பெரிதும் பாழ்படுத்தியது ; இது மேல் நாட்டைப் பெரிதும் பாழ்படுத்தியது. சைவம் அதையும் விலக்கி இதையும் விலக்கி, 'உயிர்களின் விடுதலைக் கென்று ஆண்டவன் அருளிய கொடை உலகம். அவ்வுலகைக் கொழுகொம்பாகக் கொள்வது அறம்' என்று உலகை ஏற்கிறது. விடுதலைக்கு உலக வாழ்க்கை தேவை என்பது சித்தாந்தம்.
மண்ணினல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணினல் லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.
இது திருஞானசம்பந்தர் திருவாக்கு.
இறைகளோ டிசைந்த இன்பம்
இன்பத்தோ டிசைந்த வாழ்வு.
பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்.
இவை வன்றொண்டர் வாய்மொழிகள்.
இம் மறைமொழிகட்கு விரிவுரையாய்த் துணை போகும் முறையில் பட்டினத்தடிகள் திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில்,
புண்ணிய புராதன * * *
மலர்தலை யுலகத்துப் பலப்பல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ
மனையும் பிறவுந் துறந்து நினைவருங்
காடும் மலையும் புக்குக் கோடையிற்
கைம் மேல் நிமிர்த்துக் காலொன்று மூடக்கி
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்துஞ்
சடையைப் புனைந்துந் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணா துழன்றுங்
காயும் கிழங்குங் காற்றுதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருந்தியுங்
களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டுந்
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர்
அம்மை முத்தி யடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்;
ஈங்கிவை செய்யா தியாங்க ளெல்லாம்
பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்துஞ்
செந்தா துதிர்ந்த நந்தன வனத்துந்
தென்ற லியங்கு முன்றி லகத்துந்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
பூவிரி தரங்க வாவிக் கரையிலும்
மயிற்பெடை யாலக் குயிற்றிய குன்றிலும்
வேண்டுழி வேண்டுழி யாண்டாண் டிட்ட
மருப்பி னியன்ற வாளரி சுமந்த
விருப்புறு கட்டின் மீமிசைப் படுத்த
ஐவகை யமளி யணைமேற் பொங்கத்
தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
பட்டினுட் பெய்த பதநுண் பஞ்சி
னெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயன் மீது பரிபுர மிழற்றச்
சாயலன் னத்தின் தளர் நடை பயிற்றி
# # #
அஞ்சொன் மடந்தைய ராகந் தோய்ந்துஞ்
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தின்
அறுசுவை அடிசில் வறிதினி தருந்தா
தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்
வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்
தூசு நல்லன தொடையிற் சேர்த்தியும்
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்து
மைந்தரும் ஒக்கலு மகிழ்வன மகிழ்ந்தும்
இவ்வகை யிருந்தோ மாயினும் அவ்வகை
மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது
சிந்தை நின் வழிச் செலுத்த லின், அந்த
முத்தியும் இழத்திலம் முதல்வ அத்திறம்
நின்னது பெருமை யன்றோ * * *
என்று அருளியிருத்தலை உன்னிப் பார்க்க.
இக்காலப் பெருங்கவியாயிலங்கிய ரவீந்திரநாத் தாகூரும் உலக வாழ்க்கையைத் துறக்குமாறு அறிவுறுத்தினாரில்லை. கடவுள் நிலை பெறுதற்கு உலக வாழ்க்கையைக் கொழுகொம்பாகக் கோடல் வேண்டுமென்பதே அவர் உலகுக்கு விடுத்துள்ள நற்செய்தி.
இக்கால உலகம்
உயிர்களின் விடுதலைக்குக் கருவியாக இறைவனால் அருளப்பெற்ற உலகம் இப்பொழுது எப்படி இருக்கிறது? எக்காட்சி வழங்குகிறது? அந்தோ ! பொல்லாக் காட்சி ! உலகம் குண்டு - குண்டு - மயமா யிருக்கிறது ! எங்கே குண்டு இல்லை? குண்டு இல்லாத இடமுண்டோ ? நிலத்திலே குண்டு ! நீரிலே குண்டு! வானிலே குண்டு ! எங்கும் எங்கும் குண்டு ! குண்டு மழை ! குண்டு வெள்ளம் ! உலகம் எரிகிறது! ஆல காலம் பொங்குகிறது !
புது உலகம்
இதே சமயத்தில் புது உலகம்', 'புது உலகம்' என்று எங்கணும் பேசப்படுகிறது. புது உலகப் பேச்சை என்ன என்று கூறலாம்? அதை அமுதம் என்று கூறலாம்.
ஆலமும் அமுதமும்
ஒருபக்கம் ஆலம் ; இன்னொரு பக்கம் அமுதம். ஆலம் ஒடுங்குதல் வேண்டும்; அமுதம் எழுதல் எளிதில் அஃது ஒடுங்குமா? இஃது எழுமா? இரண்டையும் நிகழ்த்தும் ஒன்று உள்ளதா? உள்ளது. அதுவே சமயம் என்பது.
பாற்கடல் கடைந்தபோது ஆலம் எழுந்தது. அதைக் கண்ட அமரரும் மற்றவரும் என் செய்தனர்?" ஆண்டவனிடம் அடைக்கலம் புகுந்தனர்; தங்குறைகளையும் தவறுதல்களையும் முறையிட்டனர். அருட் கடலாய ஆண்டவன் ஆலத்தை யுண்டான். பின்னர் அமுதம் எழுந்தது. இது புராணக்கூற்று.
இக்கூற்றின் உள்ளுறை என்ன? மனிதர் எவ் வாறோ பாவஞ் செய்வோராகிறார். பாவம் ஆலமாய் அவரை எரிக்கிறது. எளிய மனிதர் மனந் திரும்பித் தங் குறைகளையுந் தவறுதல்களையும் ஆண்டவனை நோக்கி முறையிட்டு அழுகின்றனர். அழுகை - உண்மை அழுகை - ஆண்டவனைப் பாவமாகிய ஆலத்தை ஏற்கச் செய்யும்; அருளமுதத்தைப் பொழியச் செய்யும். ஆல ஒடுக்கத்துக்கும் அமுத எழுச்சிக்கும் மனந் திரும்பலும் முறையீடும் அழுகையுந் தேவை. இவ்வழுகையில் கூர்ந்து விளங்குவது சமய உண்மை.
'ஆல முண்டாய் அமுதுண்ணக் கடையவனே' என்பதும், 'தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னை' என்பதும் திருவாசகம். 'யான் உன் அரு ளாகிய அமுதம் உண்ண என் பாவமாகிய ஆலத்தை நீ உண்டாய்' என்றார் மாணிக்கவாசகர். இதற்கு வழி என்ன? வழியும் வாசகராலேயே காட்டப்படுகிறது. 'யானும் பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் - ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே' என்று அடிகள் வழிகாட்டுகிறார். அவ்வழி நடப்போமாக.
ஆலமுண்டகதை எப்பொழுதோ நடந்த தென்று புராணம் கூறுகிறது. அக்கதை ஒரு குறிக் கோளாக நிற்பது. வெறுங் கதை மீது மட்டுங் கருத்துச் செலுத்தலாகாது. அந்நிகழ்ச்சி உயிரிடை ஆங்காங்கே நடந்த வண்ணமிருப்பது. இதற்கு மணிவாசகம் சான்றாக நிற்றல் காண்க.
காரணம்
இந்நாளில் உலகிலேயே ஆலம் பொங்கி வருதற்குக் காரணமென்னை? பலர் பலவாறு கூறுவர். சரித்திரத்தார் ஒன்றுரைப்பர்; அரசியலார் வேறொன்று சொல்வர்; பொருண்மையர் மற்றொன்று பகர்வர் ; விஞ்ஞானியர் இன்னொன்று புகல்வர்; அவரவர் ஒவ்வொன்று அறைவர். இக் காரணங்களெல்லாம் ஒரோவழிப் பொருந்தி வருவன என்றே யான் அரற்றுவன். இக்காரணங்களைத் துருவி ஆய்தல் வேண்டும். ஆய்ந்தால் அடிப்படையான ஒன்று புலனாகும். அஃதென்னை? அஃது இக்கால அரசுகள் பெரிதும் மக்களை இயற்கை வாழ்க்கை யினின்றும் வழுக்கி விழச் செய்தமை என்பது புலனாகும். அரசுவழி நிற்பது குடிகளின் இயற்கை. இது பற்றியே, 'அரசு எவ்வழி அவ்வழி குடிகள்' என்னும் பழமொழியும் எழுந்தது.
இயற்கை - செயற்கை
மன்பதை, இயற்கை வாழ்க்கையை விடுத்தது; செயற்கை வாழ்க்கையில் வீழ்ந்தது. விளைவு என்ன? விளைவு கொதிப்பாயிற்று. கொதிப்பு, வாழ்க்கைப் போட்டியாய்ப் போராட்டமாதல் இயல்பு போட்டி யும் போராட்டமும் வாளா கிடக்குமோ? அவை மனிதர் உணவை மனிதர் பறிக்க முடுக்கின. அம் முடுக்கு, குடும்பப் பிணக்காய், ஊர்ப் பூசலாய், நாட்டுப் போராய், உலக யுத்தமாய், எரியாய், ஆல காலமாய்ப் பொங்குகிறது.
வாளுக்கு வாள்
யுத்த ஆலத்தை ஒடுக்கத் துப்பாக்கிக்குத் துப்பாக்கியும், பீரங்கிக்குப் பீரங்கியும், குண்டுக்குக் குண்டும் விடப்படுகின்றன. இவ்விடுகை ஆலத்தை ஒடுக்குங் கொல்? ஒடுக்குதற்குப் பதிலாக அதைப் பெருக்குமென்று அறவோர் கூறுவர்.
'இதோ , இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவிப் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது இயேசு அவனிடம் : உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு ; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்''
- மத்தேயு - 26:51-53
என வருங் கிறிஸ்து பெருமான் அனுபவ மொழி நம் முன்னே நிற்கிறது.
மனந் திரும்பல்
ஆலம் ஓரிடத்திலா தேங்குகிறது? அஃது உலக முழுவதும் மண்டிக் கிடக்கிறது. இவ்வேளையில் மக்கள் தங்கள் குறைகளையும் தவறுதல்களையும் உணர்ந்து மனந்திரும்ப முயலல் வேண்டும் ; மனந் திரும்பி ஆண்டவணை நினைந்து நினைந்து கசிந்து கசிந்து உருகுதல் வேண்டும் ; உருகி உருகி அழுதல் வேண்டும். அழுகை உண்மையுடையதாயின் , ஆலம் ஒடுங்கும் ; அமுதம் எழும். களைகண் ஆண்டவனே. அவனை அடைவோமாக.
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரனாமம்
கேளாய் நங் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே
என்று சைவப் படைத் தலைவர் கட்டளையிடுகிறார் - அவர் கட்டளைவழி நிற்போமாக.
ஆணவ அரசியல்
இறைவனை உளங்கொள்ளாமலும் அவனடியில் அடைக்கலம் புகாமலும் ஆணவத்தால் தருக்கிச் செருக்கித் திரியும் சிலர் கூடிப் புது உலகம் அமைக்கப் புகுவது இராணவன் கயிலாயமெடுக்கப் புகுந்த கதையாய் முடியும். ஆணவ எழுச்சியால் உண்மைப் புது உலகம் அமையுமா? அமைதல் அரிது. ஒருவேளை புது உலகம் என்னும் பெயரால் ஒரு 'போலி' தலை காட்டலாம். அது மீண்டும் ஆலத்தால் எரிவதாகும். ஆணவத்தினின்றும் ஆணவ உலகமே தோன்றும்.
அலுப்பு
ஆணவ அரசியலார் நாடுகள் ஆண்டது போதும்; அவர் கூட்டங்கள் கூடியது போதும்; சட்டங்கள் கோலியது போதும்; திட்டங்கள் வகுத்தது போதும். உலகம் அலுத்து விட்டது; இப் பொழுது அலமருகிறது ; பட்டினியால் துடிக்கிறது; நோயால் வதைகிறது; மரணக் குவியலைக் காண்கிறது; விடுதலை விடுதலை என்று வீறிடுகிறது. இனி உலகம் பொறாது. ஆணவ அரசியலீர் ! இறைவனை மறந்து இயற்கையை நீத்துச் செயற்கை ஆட்சி புரிந்தீர். அதனால் உலகம் துன்பக் கடலில் வீழலாயிற்று. இனி உம்மால் என் செய்தல் கூடும்? உமது கொட்டங் குலைக்க இயற்கை அன்னை முனைந்து நிற்கிறாள். அவள் முன்னே உமது ஆணவம் என் செய்யும்? இவ்வேளையில் உலகைப் புரட்சிக்கு - கொலைப் புரட் சிக்கு - இரத்தப் புரட்சிக்கு - இரையாக்காதீர்; விலகுமின்; ஒதுங்குமின்; ஆட்சியைச் சன்மார்க்கரிடம் ஒப்புவித்து ஒதுங்குமின். யுத்த ஆலம் ஒடுங்கும், புது உலக அமுதம் எழும்.
சான்றோர் கனவு
சன்மார்க்க ஆட்சி தேவை என்று அன்று பிளேட்டோ உள்ளிட்ட சான்றோர் கனவு கண்டனர்; அக்கனவு இன்று நினைவாகிறது. நினைவு செயலாவதற்குச் சன்மார்க்க முயற்சி வேண்டும். முயற்தி வழியே ஆண்டவன் அருள் இறங்கும்.
சமதர்மம்
'சமதர்மத்தால் புது உலகம் அமையுமே; அதற்கென்றே அது தோன்றியிருக்கிறது. இடையில் சன் மார்க்கம் எற்றுக்கு' என்று சிலர் கேட்கலாம். யான் சமதர்மக் கொள்கைக்கு மாறுபட்டவனல்லன்; உடன்பாடுடையவனே. சமதர்மம் இப்பொழுது முளைவிட்டுள்ளது. அது நன்முறையில் வளர்ந்து மரமாகிக் கனிதரல் வேண்டுமென்று தவங் கிடப்பவருள் யானும் ஒருவன். அத்தர்மம் செழுமையாக வளர்தற்குத் தக்க ஒளி வேண்டும். அவ்வொளியே சத் என்னுஞ் செம்பொருள்.
சன்மார்க்கம்
சத் + மார்க்கம் = சன்மார்க்கம். சத் - உண்மை ; மார்க்கம் - வழி. சன்மார்க்கம் - உண்மை வழி. உண்மை எது? எவ்வித மாறுதலுமின்றி என்றும் ஒரு தன்மையதா யுள்ளது. சத் என்னும் உண்மையைச் சித் - ஆனந்தம் - சிவம் (மங்களம்) - விஷ்ணு (வியாபகம்) முதலிய பல பெயர்களால் உலகம் அழைக்கிறது. பெயர்களை நீக்கிப் பொருளைப் பார்த்தால் எல்லாம் ஒன்றாகவே தோன்றும். ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலா ஒன்றை எப்பெயரிட்டு அழைத்தா லென்ன? 'உங்கள் பேத மன்றியே உண்மைபேத மில்லையே' என்றார் சிவவாக்கியர்.
சத்
சத் என்னும் இறைக்கு இருவித நிலையுண்டு. ஒன்று எல்லாவற்றையுங் கடந்தது; மற்றொன்று எல்லாவற்றிலும் கலந்தது. கடந்த நிலை வாக்கு மனத்துக்கு எட்டாதது. யான் வாக்கு மனமுடை யவன். கடந்த நிலை எனக்கு எற்றுக்கு? கலந்த நிலையே எனக்குத் தேவை.
மார்க்கம்
இறை எல்லாவற்றிலுங் கலந்த நிலையே இயற்கையை உடலாகக் கொண்ட ஒன்று. இறை உயிர்; இயற்கை உடல். உடலைக் கொண்டே உயிரின் உண் மையை உணர்தல் வேண்டும். சத் என்னும் இறை உண்மையை உணர்தற்கு மார்க்கமாக நிற்பது இயற்கை. சத் என்னும் இறை , இயற்கையை உடலாக் கொண்டும் அதற்குமேலுங் கடந்தும் நிற்பது என்பதை மறத்தலாகாது.
பொதுமை
பொதுமை இப்பொழுது எங்கணும் பேசப்படு கிறது. பொதுமைப் பேச்சு எதை உணர்த்துகிறது? இறைவன் உண்மையை மக்கள் தெளிந்து வருவதை உணர்த்துகிறது. பொதுமைக்கு ஊற்றாயிருப்பது சாத் என்னும் இறை. சத் எப்படி நிற்கிறது? அஃது ஒரு பக்கம் ஒருவிதமாகவும், மற்றொரு பக்கம் வேறொரு விதமாகவும், இன்னொரு பக்கம் சூந்யமாக வும் நிற்பதன்று. அஃது எங்கணும் பொதுவாய் நீக்கமற நிற்கிறது. இப்பொதுமையை அடிப்படை யாகக் கொண்டது சன்மார்க்கம்.
இறை பொதுமையாய் எங்கும் நீக்கமற நிற் பதை உபநிடதம் முதலாகப் பல ஞான நூல்களுந் தெரிவிக்கின்றன. முன்னோர் கருத்துக்களை யெல் லாங் கடைந்தெடுத்து அவைகளின் சாரத்தைச் சன்மார்க்கச் செல்வராகிய இராமலிங்க சுவாமிகள் ஓரிடத்தில் நன்கு தேங்கவைத்துள்ளார். விளக்கத் துக்கு அவ்வொரு தேக்கஞ் சாலும். அது,
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுங் களிப்பே
காணார்க்குங் கண்டவர்க்குங் கண்ணளிக்குங் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்குஞ் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நட மிடுகின்ற சிவமே
என்னரசே யான் புகலும் இசையுமணிந் தருளே
என்னுந் தேக்கம். இதில் இறையின் பொதுமை வெள்ளிடைமலையென விளங்குதல் காண்க.
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுஞ் சத்தாகிய சிவத்தை உணர்தற்குப் பொது உள்ளம் - பொது நோக்கு - பொது வாழ்க்கை - தேவை. இப்பொது மயை அறிவுறுத்துவது சமதர்மம். சமதர்மம் என்னுஞ் சொற்றொடரிலேயே பொதுமைப் பொருள் மணங்கமழ்தல் காண்க.
பொருள்
வாழ்க்கைக்குப் பல தேவை. அவைகளுள் தலை யாயது பொருள். 'பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை' என்றும், முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியுமன்றே' என்றும் திருவள்ளுவரும் மாணிக்க வாசகரும் முறையே அருளிய செம்மொழி
களை ஆழ்ந்து சிந்திப்போமாக.
பொது உள்ளம் - பொது நோக்கு - பொது வாழ்க்கை - பெறவேண்டுமானால், அதற்குப் பொருளும் பொதுமையாகவே பயன்படுதல் வேண்டும். இல்லையேல், உலக வாழ்க்கை செம்மையாக நடைபெறாது. உலகச் செம்மைக்குப் பொருட் பொதுமை தேவையாகிறது. அப்பொழுதே எல்லார்க்கும் பொதுவில் நடமிடும் சிவத்தை உணர்த்தத்தக்க உள்ளமும் நோக்கும் சீலமும் உண்டாகும்.
சிவகதிக்குச் சீலம் தேவை ; இன்றியமையாதது. மக்கள் வாழ்க்கையில் சீலஞ் சிறக்கத் தக்க அரசுகள் துணை செய்தல் வேண்டும். முன்னாளில் அத்தகை அரசுகளிருந்தன. அசோகன் ஆட்சி ஓர் எடுத்துக் காட்டாக நிற்கிறது. பின்னாளில் அரசுகள் நிலை வேறுவிதமாயிற்று. சீலத்தைச் சிதைக்கும். அரசுகளும் உலகில் தோன்றின. இந்நிலையில் சீலத்தை எப்படி வளர்ப்பது? பொருட் பொதுமை முறையன்றி வேறு புலப்படவில்லை. ஆகவே, பொருட் பொதுமை சமயத் தொடர்புடையதென்று தெளிக. இந்நோக்குடன் யான் பொருட் பொதுமையைப் போற்றி வருகிறேன்.
உலகாயதம்
சமதர்மம் எற்றுக்கு? எல்லார்க்கும் பொதுவில் நடமிடுஞ் செம்பொருளை உணர்தற்கு என்று அறுதி யிட்டுக் கூறலாம். அவ்வுணர்விற்குப் பயன்படாத சம தர்மம் உலகாயதமாகும். இதுபற்றியே யான் சம தர்மத்தைச் சன்மார்க்கமுற்ற சம-தர்மமென்றும்; சன் மார்க்கமற்ற சமதர்மமென்றுஞ் சொல்வது வழக்கம்.
சன்மார்க்கமற்ற சமதர்மம் ஓரளவில் புற அமைதியைக் காப்பதாகும். வாழ்க்கைக்குப் புற அமைதி மட்டும் போதாது. அதற்கு அக அமைதியும் வேண்டும். அக அமைதிக்குச் சன்மார்க்கமுற்ற சமதர்மம் தேவை.
இயற்கையை விடுத்துச் செயற்கையிற் செல்லும் அரசுகளால் சமயத்தின் சொரூபமே குன்றியது. சமயத்தின் பெயரால் பல அட்டூழியங்கள் செறிந் தன. அச்செறிவு பொருட் பொதுமையரையும் வேறு சிலரையும் சமயத்தை வெறுத்து மறுக்கச் செய்தது. பொருட் பொதுமையால் அட்டூழியம் அகன்றதும் சமய சொரூபம் தானே மிளிர்வதாகும். இயற்கை, மனித வாழ்க்யையைப் பொருட் பொதுமையளவில் நிறுத்திவிடாது ; சமயத்தை வாழ்க்கையில் புணர்த்தியே தீரும். மனிதனை விலங்கினின்றும் பிரிப்பது சமயம். அத்தகைய சமயத்தை மனிதனும் விட மாட்டான் ; சமயமும் அவனை விடாது. இது நிற்க.
சிவம்
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுஞ் சிவம் எத்தகையது? அஃது அழுக்காறு அவா வெகுளி பகைமை முதலிய தீக்குணங்கள் இல்லாதது. அவ்வுண்மை கண்ட ஆன்றோர் சிவத்தை அன்பு என்றும், சாந்தம் என்றுங் கூறிச் சென்றனர். அவ்வன்பும் சாந்தமும் ஓவியரிடத்தும் காவியரிடத்தும் படாத பாடு பட்டன; படுகின்றன. அன்புக்கும் சாந்தத்துக்கும் அவரவரெடுத்த வடிவங்கள் எத்தனை? எழுதிய கதைகள் எத்தனை? அன்புஞ் சாந்தமும் பாம்பை அணியாக்கின ; பேய்களைக் கணங்களாக்கின ; மழுவை ஏந்தின ; புலி, சிங்கம், எருது, மயில், பாம்பு முதலியவற்றின் பகைமையை நீக்கிச் சகோதரமாக்கின. இதை ஞானசம்பந்தர்,
கருமையி னொளிர் கடல் நஞ்ச முண்ட
உரிமையி னுலகுயி ரளித்த நின்றன்
பெருமையை நிலத்தவர் பேசி னல்லால்
அருமையி லளப்பரி தாய வனே.
அரவேரிடை யாளொடு மலைகடல் மலி புகலிப் பொருள் சேர்தர நாள்தொறும் புவிமிசைப் பொலிந்தவனே.
வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழி லிளமயி லால
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே
என்று பாடிப் பாடி அனுபவித்தலை உன்னி உன்னி முன்னுவோமாக. இத்தகை அன்புருவை - சாந்த வடிவை - பகை நீக்கும் ஓவியத்தை - நினைக்க நினைக்க அன்பும் சாந்தமும் அகத்திலும் புறத்திலும் நிலவும்.
உள்ளம்
பொதுமை உள்ளத்தில் பொலியும் அன்புக்கும் சாந்தத்துக்கும் முன்னே நஞ்சேது? மூர்க்கமேது? பகைமை ஏது? நஞ்சு , மூர்க்கம், பகைமை முதலியன புறத்தில் இருப்பனவல்ல; அகத்தில் இருப்பன. அகம் பொதுமையானால் நஞ்சு மூர்க்கம் பகைமை முதலிய தீமைகள் உருவெளியாகும். இந்நுட்பத்தை 'யாவையுஞ் சூனியம் சத்தெதிர் ஆதலின்' என்று சிவஞான போதம் சிறப்பித்திருத்தலை ஓர்க.
கோயில்
இத்தகைய அன்பு சிவத்துக்கு - சாந்த சிவத்துக் குப் பொன்னாம் ! பூணாம் ! பொருளாம்! நிலமாம்! புலமாம் ! சட்டமாம் ! திட்டமாம் ! வழக்காம்! வக்கீலாம் ! அந்தோ! என்ன கொடுமை ! கொடுமை! அன்புக்கும் சாந்தத்துக்கும் எடுக்கப்பட்ட கோயில் கள் பூர்ஷ்வாக்கள்' உலவும் அமைப்புக்களாயின.
'என் வீடு சகல ஜாதியாருக்கும் ஜெப வீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்களே என்று சொன்னார்' என்று மார்க்கிலுள்ள (11:17) நன்மொழியை நோக்குக. குறைபாடுகளைச் சன்மார்க்கம் செம்மை செய்யும்.
சன்மார்க்கத்தின் பொதுமை
யான் சன்மார்க்கத்தைப்பற்றிப் பெரிதும் பேசுகிறேன். யான் வேறு வழிச் செல்கிறேனா? சித்தாந்த வழியே செல்கிறேனா? என்று சிலர் நினைத்தல் கூடும். சித்தாந்த வழியே கண்களைத் திறந்து கொண்டு நடக்கிறேன். சித்தாந்தம் என்றால் என்ன? சன்மார்க்க மென்றாலென்ன? இரண்டும் ஒன்றே. பெயரை நீக்கிப் பொருள் நுட்பத்தில் புகுந்து பார்த்தால் உண்மை விளங்கும். சித்தாந்தம் சத்தையும் பொருளாக் கொண்டது; அதன் மார்க்கமாகிய இயற்கை யுலகின் முதலாக உள்ள மாயையையும் பொருளாக் கொண்டது. இதனால் சித்தாந்தமும் சன்மார்க்கமும் ஒன்றே என்பது பெறப்படுகிறது.
சன்மார்க்கத்தைப் பொதுவாகச் சமயம் என்றுங் கூறலாம். அது சைவம் வைஷ்ணவம் ஜைநம் பெளத்தம் கிறிஸ்துவம் இஸ்லாம் முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. சத் பொதுமை ; அதன் மார்க்கமாகிய இயற்கையும் பொதுமை. சமயமும் பொதுமையாகவே இருத்தல் வேண்டும். சமயப் பொதுமையைக் குறித்து ஆன்றோர்கள் அருளிய மொழிகள் கடலெனப் பெருகிக் கிடக்கின் றன. விரிவஞ்சிச் சில திவலைகளை ஈண்டுத் தெரிக் கிறேன்.
வணங்கும் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபலவாக்கி அவையவைதோ
றணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில்லாய் நின்கண்வேட்கை யெழுவிப் பனே.
- நம்மாழ்வார்
ஏறார் தரும் ஒருவன் பல உருவன் நிலை யானான்
நல்லார்கள் ....... ….
எல்லார்களும் பரவும் ஈசனை - சம்பந்தர்
வாது செய்து மயங்கு மனத்தராய்
ஏது சொல்லுவீராகிலும் ஏழைகாள்
யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்
மாதே வனலால் தேவர்மற் றில்லையே - அப்பர்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமூலர்
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லையின் மறைக ளாலும் இயம்பரும் பொருளீ தென்னத்
தொல்லையி னொன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சி
பல்பெருஞ் சமயஞ்சொல்லும் பொருளும் போற் பரந்ததன்றே
- கம்பர்
சமயபே தத்தவர்க் கணுகொணா மெய்ப்பொருள்
உலகெங்கு மேவியதே வாலயந்தொறு - பெருமாளே - அருணகிரியார்
எம்மதத் தோரெவ் வகை நிட்டை சொல்லினும்
சம்மத மேயெமக் குந்தீபற
தற்போது மாய்க்குமே லுந்தீபற - அவிரோதவுந்தியார்
வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கில்
விளங்குபரம் பொருளே நின் விளையாட் டல்லால்
மாறுபடுங் கருத்தில்லை - தாயுமானார்
பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகையென் கணவர் திருப் பேர்புகலென் கின்றாய்
அருகர் புத்த ராதியென்பேன் அயனென்பேன் நாரா
யணனென்பேன் அரனென்பேன் ஆதிசிவ னென்பேன்
பருகுசதா சிவமென்பேன் சத்திசிவ மென்பேன்
பரமமென்பேன் பிரமமென்பேன் பரப்பிரம மென்பேன்
துருவுசுத்த பிரமமென்பேன் துரியநிறை வென்பேன் .
சுத்தசிவ மென்பன் இவை சித்துவிளை யாட்டே
- இராமலிங்க சுவாமிகள்
எய்த எளிதாம் இறையருள் இல்லையேல்
எய்த அரிதா மியாவர்க்கும் - மெய்தெளிந்தால்
எம்மார்க்கத் தோரும் இகலற் றிருக்குமதே
சன்மார்க்கம் ஆகுநெறி தான் -அமுதசாரம்
ஓது சமயங்கள் பொருளுணரு நூல்கள்
ஒன்றோடொன் (று) ஒவ்வாமல் உளபலவும் இவற்றுள்
யாது சமயம் பொருள் நூல்யா திங்கென்னில்
இதுவாகும் அதுவல்ல எனும் பிணக்க தின்றி
நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண
நிற்பதுயா தொரு சமயம் அதுசமயம் பொருள் நூல். -- அருணந்திசிவம்
உலகம் , சாதி மதம் மொழி நிறம் நாடு முதலிய வேற்றுமைகளையுடையது. இவ் வேற்றுமைகளைக் கடந்து பொதுமையில் நிற்பது சன்மார்க்கம். சன் மார்க்கக் கண் திறக்கப்பெற்றால் அதன் முன்னே வேற்றுமைகளெல்லாம் பாழாகும். உலகம் பொதுமை இன்பத்தை நுகர வேண்டுமானால், அது சன்மார்க்கத்தில் நின்றொழுகுதற்குரிய ஆட்சி முறை கள் அமைத்தல் வேண்டும். இதுபற்றியே ஆட்சி முறைகளைச் சன்மார்க்கரிடம் ஒப்புவித்து ஒதுங்கு மாறு ஆணவ அரசியலாரைக் கேட்கிறேன்.
காலப்போக்கு
’ஆட்சியினின்றும் அரசியலார் ஒதுங்கினால் அரசியல் சண்டைகள் ஒடுங்கலாம். அவ்வாட்சியில் சமயத்தார் புகுந்தால் சமயச் சண்டைகள் மூளாவோ? சமய ஆட்சிக் கொடுமையினாலன்றோ அரசியல் ஆட்சி ஆக்கம் பெற்றது? மீண்டும் சமய ஆட்சியா? பழம் பாடங்கள் முன்னிற்கின்றனவே' என்று சிலர் ஐயுறலாம். அவர் காலப்போக்கை ஊன்றிக் கவனித்தால் அவர்தம் ஐயப்பாட்டுக்கு இடமிராதென்று நினைக்கிறேன். சமயத்தின் இயற்கை மனிதரிடத்துள்ள விலங்கியல்பை ஒட்டி, அன்பையுஞ் சாந்தத்தையும் நிலைபெறுத்த வல்லது. அத்தகைய சமயம், மக்களிடை வளர வொண்ணாதவாறு சாம்ராஜ்யங்களும், மடங்களும், இன்னபிற அமைப்புக்களும் கேடு சூழ்ந்தன. இவ் வமைப்புக்கள் தங்கள் நலங்கருதிச் சமயத்தின் பொதுமையை மக்களிடம் பரப்பாது, அதன் போலியைப் பரப்பி, அதைப் பன்மைப்படுத்தி, அதில் வெறியூட்டிச் சண்டைகளைப் பெருக்கிவிட்டன.
காலப்போக்கு, இனிச் சாம்ராஜ்யங்களும் மடங்களும் பிறவும் தங்கள் ஆட்சியைச் செலுத்த விடுதல் அரிது. காலப்போக்கு மாறிவிட்டது. சாம்ராஜ்யங்களெல்லாம் சமதர்ம ராஜ்யங்களாகுங் காலம் இது. மடங்களும் பிறவும் மாறுதல் அடையுங் காலம் இது. பலதிறச் சீர்திருத்த இயக்கங்கள் ஆங்காங்கே தோன்றித் தோன்றி ஆக்கம் பெற்றுப் பரவிவருங் காலம் இது. சம்பிரதாயங்களும் பிடிவாதங்களும் சாயுங்காலம் இது. கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போகுங் காலம் இது. புறக்கோலங்களே சமயம் என்று போற்றாத காலம் இது. 'எல்லாரும் ஓர் உயிர் எல்லாரும் ஓர் குலம்' என்னுங் கொள்கை வீறுகொண்டு பெருகிவருங் காலம் இது. எங்கணும் பொதுமையுணர்வு பொங்கிவருங் காலம் இது. இக் காலமா சமயப்பன்மைக்கும் வெறிக்கும் போருக்கும் இடந்தரும்? வருங்காலத்தில் சமயப் போலி யொழிந்து, சமய உண்மை நிலவும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. உள்ளுவ எல்லாம். உயர்வுள்வோமாக.
திரிபு
சமயம் இந்நாளில் திரிபாகக் கொள்ளப்படு கிறது. அது வாழ்க்கையின் ஒரு கூறாகக் கருதப்படு கிறது. வெறும் புறக்கோலம் சமயம் என்று எண்ணப்படுகிறது. இவ்வா-றெல்லாம் சமய நோக் கம் திரிபுண்டமையால் சில இடங்களில் அதன் மூலமே வெறுக்கப்படுகிறது. திரிபுக்கு அடிப்படை யான காரணங்கள் பல கூறலாம். முன்னே சில சொன்னேன். இங்கே ஒன்றைக் குறிக்கலாமென்று நினைக்கிறேன். அது மேல் நாட்டு நாகரிகத்தின் எழுச்சியும் கீழ் நாட்டு நாகரிகத்தின் வீழ்ச்சியுமாகும்.
மேல் நாடு
மேல் நாட்டு நாகரிகம் சமயத்தினின்றும் அரசியல், வாணிபம், தொழில் முதலியவற்றை வேறுபடுத்தியது. அந்நாகரிகம் சமயத்தை வாழ்க்கையின் ஒரு கூறாகக் கொண்டது. அது வாழ்க்கையைச் சமயமாகவும் சமயத்தை வாழ்க்கை யாகவும் ஏற்கவில்லை. அதனால் விளைந்ததென்ன? வாழ்க்கையில் போராட்டம் வளர்ந்ததே விளைந்த பயன். போராட்டம் அந்நாகரிகத்தை இப்பொழுது அரிக்கிறது; எரிக்கிறது. மேல் நாடு நல்லறிவு பெற்று, 'சமயமே வாழ்க்கை -வாழ்க்கையே சமயம்' என்று வாழுங்காலம் நெருங்கியிருக்கிறது. மேல் நாடு நல்வாழ்க்கை பெற ஆண்டவன் அருள் செய்வானாக.
கீழ்நாடு
கீழ்நாட்டு நாகரிகம் சமயத்தை வேறாகவும், அரசியல், வாணிபம், தொழில் முதலியவற்றை வேறாகவும் பிரிக்கவில்லை; எல்லாம் சமயத்தில் ஒன்றி நிலவுமாறு செய்தது ; வாழ்க்கைக் கூறுக ளெல்லாம் சமயமே என்று கொண்டது.
கீழ்நாடு தன் நாகரிகத்தை மேல் நாட்டில் பரப்ப முயலாது, அஃது இதன் நாகரிகத்தை ஏற்று நடிக்க முயன்றது. அதனால் கீழ்நாட்டிலுங் கேடு சூழ்ந்தது. இந்நாளில் கீழ்நாட்டு நாகரிகம் கதம்ப மாய்க் கிடத்தல் கண்கூடு.
நாடோறுமோ வாரந்தோறுமோ திங்கள் தோறுமோ விரத நாட்களிலோ ஒரு சிறுபொழு தைக் கோயிலுக்கென்று செலவழிப்பது சமய மாகாது. சமயம் புறக்கோலத்தளவில் கட்டுப்பட்டு திற்பதுமன்று. சமயம் ஓர் இறைப்பொழுதும் வாழ்க்கையை விடுத்து அகன்று நிற்பதில்லை. அத் தகைய ஒன்றை வாழ்க்கைக்கு வேறுபட்டதென்று கருதச் செய்யும் நாகரிகம் விழுப்பமுடையதாகுமா?
'தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனோ'
என்று அலமருகிறார் அப்பர்.
உண்ணுஞ் சோறு பருகுநீர்
தின்னும் வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமான்'
என்று நம்மாழ்வார் அருள்கிறார்.
’அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்
அதுவு நான்படப் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால் கொள்வ ரடிகேள்
பிழைப்பானாகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
மற்று நானறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என் கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே'
என்று வன்றொண்டர் அறிக்கை செய்கிறார்.
இப் பெருமொழிகளுக்கு விளக்க உரையாக,
'இருக்கினும் நிற்கும் போதும் இரவுகண் துயிலும் போதும்
பொருக்கென நடக்கும் போதும் பொருந்தி ஊண் துய்க்கும் போதும்
முருக்கிதழ் கனிவா யாரை முயங்கிநெஞ் சழியும் போதும்
திருக்களா உடைய நம்பா சிந்தையுன் பால தாமே''
எனவரும் அதிவீரராம பாண்டியர் பாடல் திகழ்கிறது.
கீழ்நாடு தனது நடிப்பை விடுத்து மனந்திரும்பித் தனது நாகரிகத்தைக் காலதேச வர்த்தமானத்துக் கேற்ற முறையில் வளர்த்து வாழ்வு பெறுவதாக.
கீழைச் சமதர்மம்
கீழ் நாட்டின் பழம் பெரும் நாகரிகம், வாழ்க்கையை வேறாகவும் சமயத்தை வேறாகவுங் கொள்ளாமையால், அதன் அடியில் சமதர்மம் நிலவுவதாயிற்று. சமதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது கீழ்நாட்டு நாகரிகம் என்று உலகம் உணர்வதாக. சமதர்மம் கீழ்நாட்டுக்குப் புதியதன்று. கீழ்நாட்டு நாகரிகம் வளர்ந்து வளர்ந்து அது சமதர்மமாகப் பரிணமித்தது. பாரத நாட்டுப் பழைய தர்ம சாத்திரங்களை ஆய்ந்தால், அவை களில் கிராமம் கிராமத்தாருடைய தென்பதையும், கேணியும் குளமும் ஏரியும் ஆறும் காடும் மலையும் பிறவும் மக்கட்குப் பொதுவுடைமையாய்ப் பயன் பட்டன என்பதையும் அதனால் மக்கள் உழைப்புக்க ளெல்லாம் சகோதர நேயக் கட்டினின்றும் பிறந்தன என்பதையும், இன்ன பிறவற்றையுங் காணலாம். சிறிஸ்து பெருமான், 'நாளைக்கென்று கவலையுறாதே யுங்கள்’ என்றும், 'அன்றாட உணவை அன்றாடம் எங்களுக்குத் தாரும் ' என்றும் அருளியது சமதர்ம நோக்குடையதன்றோ? இஸ்லாம் விதித்துள்ள 'ஜெக்காத்' வரியின் உள்ளக்கிடக்கை என்னை? உன்னுக. சமதர்மம் இன்று தோன்றியதன்று; நேற்றுத் தோன்றியதன்று. அது நீண்ட காலமாக உலகில் நிலவி வருவது.
மார்க்ஸ்
ஆங்காங்கே துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்த சமதர்மக் கூறுகளையெல்லாம் ஒருங்கு திரட்டி, ஒன்றுபடுத்தி, அவைகட்கு விஞ்ஞான முறையில் ஒருருவங் கொடுத்தவர் காரல் மார்க்ஸ். அதனால் அவர் உலக வாழ்த்துக்கு உரியவரானார்.
மார்க்ஸியம் சடபிரபஞ்ச அளவில் நிற்பது, அதன் கண் பொருட்பொதுமை உண்மையான், அஃது உலகினரால் பொதுவாகப் போற்றப் படுகிறது. அதற்கு மேலும் மேலும் ஆக்கந் தேட பேண்டுவது மார்க்ஸியர்களின் கடமை. அதற்கு என் செய்தல் வேண்டும்? மார்க்ஸியத்தைச் சத்துடன் கலப்புப் பெறச் செய்தல் வேண்டும். அப்பொழுதே மார்க்ஸியம் சன்மார்க்கமுற்ற சமதர்மமாகும்.
ஒலிவர் லாட்ஜ்
ஸர் ஒலிவர் லாட்ஜ் என்பவர் ஏறக்குறைய நாற்பதாண்டு சடதத்துவ ஆராய்ச்சி செய்த விஞ்ஞான நிபுணர் . பின்னே அவர் நீண்ட காலம் வெவ்வேறு ஆராய்ச்சிகளில் தலைப்பட்டனர். அவ் வாராய்ச்சிகளின் பயனாக அவரால் ஓர் உண்மை காணப்-பட்டது. அது சடம் மாறுதலடையாத சத்தாகிய சித்தை விடுத்துப் பிரிந்து நிற்பதில்லை என்பது. ஸர் ஓலிவர் கண்ட உண்மை மார்க்ஸியத்தில் விரவினால், மார்க்ஸியம் சத்மார்க்கமாகும். உலக வாழ்க்கைக்குச் சத்மார்க்கம் இன்றியமை யாததென்று யான் வலியுறுத்துகிறேன்.
சித்தாந்தக் கருத்து
சைவ சித்தாந்தம் சடத்துக்ரும் உண்மை கூறுகிறது; சத்தாகிய சித்துக்கும் உண்மை கூறுகிறது. சித் சடத்திற் கலந்தும் அதற்கு மேலுங் கடந்தும் நிற்பது என்பதையும் சித்தாந்தம் தெளிவு செய்கிறது. 'உலகெலா மாகி வேறாய் உடனுமாய்...'' என்று சைவ சாத்திரங் கூறுதல் காண்க... இதனால் மார்க்ஸியமும் ஒலிவரிஸமும் சித்தாந்தத்துக்குப் புறம்பாக நிற்பனவல்ல என்பது விளங்குகிறது.
எந்நாடு?
இக்கால உலக எரியைத் தணிக்கும் ஆற்றல் சன்மார்க்கத்துக்கே உண்டு. சன்மார்க்கம் தண்மை வாய்ந்தது. அத்தன்மை பொழியும் இடம் எது? நாடு எது? தேம்ஸ் நாடா? தானியூப் நாடா? வால்கா நாடா? மிஸ்ஸோரி மிஸிஸிபி நாடா? யங்டிஸ் கியாங்-ஹோ யாங்கோ நாடா? பஸிபிக் நாடா? இவைகட்கே இப்பொழுது தண்மை தேவை. இவைகள் எப்படித் தண்மையைப் பொழிவன வாகும் ? பின்னை எந்நாடு? நமது கங்கை நாடு.
சாந்தம் சாந்தம் சிவம்
கங்கையின் தாயகம் எது? பனி மலை. அம்மலை யின் முடி எது? கௌரி சங்கரம். கௌரி சங்கரம் எப்படி நிற்கிறது? சொல்லற்ற சாந்தம் சாந்தம் சிவம் ! சாந்த சிவத்தின் கருணை கங்கையாய்ப் பெருகிப் பாய்கிறது. சாந்தச் செல்வம், கௌரி சங்கரம் - இமயம் - கங்கை - பழம் பாரதம் - உபநி ஷத். அச்செல்வம் பாரத நாட்டில் ஆங்காங்கே காவியங்களாகியது, ஓவியங்களாகியது. காவிய ஓவிய அறிகுறிகள் நாடு முழுவதும் பொலிதருகின்றன. அவைகளுள் பாரத நாட்டையே உளங்கொண்டவை மூன்று அம்மூன்றும் பழம்பாரதத்தின் ஒருமைப் பாட்டையும் உணர்த்துவனவாம். அவை கயிலை, காசி, இராமேசம்.
பாரதக் கொடை
பழம்பாரதப் பெரியோர் நமக்குக் குண்டு பீரங்கி முதலிய கொலைக்கருவிகளை உதவினாரில்லை. சாந்தச் செல்வத்தை அருளினர், அதுவே சன்மார்க் கத்தண்மை - அந்தண்மை. இத்தண்மையில் பாரத. நாடு நீண்ட காலம் பண்பட்டது. அதற்கும் இடை நாளில் சில கூட்டுறவால் சிறு அசைவு நேர்ந்தது. இப்பொழுது தோன்றியுள்ள பெரும் போர் அவ் வசைவைப் போக்கி வருகிறது.
பணி
பாரத நாட்டின் முன்னே பெரும்பணி நிற்கிறது. அப்பணியில் நமக்கும் பங்கு உண்டு. அப்பணிக்கென்று நாம் இங்கே - ஆலவாயில் - கூடி யிருக்கிறோம்; மதுரையில் கூடியிருக்கிறோம் என்று யான் நினைக்கிறேன். நம் முன்னே நிற்கும் பணி எது?
பாவங்கள்
மன்பதை, இயற்கையை விடுத்துச் செயற்கை யில் வீழுந்து பலதிறப் பாவங்களைச் செய்தது. பாவங்கள் மலைகளெனவும் கடல்களெனவும் ஓங்கிப் பெருகிவிட்டன. இப்பொழுது அவைகளெல்லாந் திரண்டு உருண்டு மகா யுத்தமாய் - ஆலமாய் - உலகை எரிக்கின்றன. அவ்வெரி புது உலக அமுத வேட்கையை எழுப்பியிருக்கிறது. ஆலத்தை உண்டு. அருளமுதைப் பொழியவல்ல ஆண்டவனை அடை வோமாக.
அழுகை
ஆண்டவனை அடைவதென்றால் கோயிலுக்குப் போய் அதனை வலம் வருவதா? எங்கும் கண் கொண்டு பார்க்கும் ஆண்டவனை ஏமாற்றல் இயலாது. அவனுக்கு எல்லாந் தெரியும். ஆண்டவனுக்கு உள்ளத்தை ஒப்படைத்தல் வேண்டும், மனந் திரும்பிப் பழைய பாவங்களை நினைந்து நினைந்து, உருகி உருகி, வருந்தி வருந்தி முறையிடல் வேண்டும்; அழுதல் வேண்டும். அவ்வழுகையின் உண்மை ஆண்டவன் அருளை எழுப்பும். அவ்வருள் ஆலத்தை ஏற்று அமுதத்தைப் பொழியும். ஆகவே, இப்பொழுது இப்பணி தேவை.
அழுகை ஆண்டவன் அருளைச் சுரப்பிக்குமா என்று ஐயுறுதல் கூடாது. நமது கடமையை நாம் செய்வோமாக. ஆண்டவன் தன் கடமையைத் தான் செய்வன். தன்கடன் அடியேனைந் தாங்குதல் - என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பது அப்பர் அநுபவ மொழி. ஆண்டவன் கருணையாளன். அவன் நம்மைத் தள்ள மாட்டான்.
வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கன்னெஞ் சுருக்கிக் கருணையினா லாண்டு கொண்ட
அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ
கள்வன் கடியன் கலதியிலன் என்னாதே
வள்ளல் வரவர வந்தொழிந்தான் என்மனத்தே
உள்ளத் துறதுயரொன் றொழியா வண்ணமெல்லாம்
தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ
எனவருந் திருவாசகப் பாடல்கள் ஐயப்பாட்டை அழிக்கவல்லன. ஐயம் வேண்டா . ஆண்டவனடி யில் அடைக்கலம் புகுவோம்; மாணிக்கவாசகர் அழுது அழுது,
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால்
பொறுப்பவனே அராப்பூண் பவனே பொங்கு கங்கைசடைச்
செறுப்பவனே நின் திரு வருளால் என் பிறவியை வேரி
அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
என்று ஆண்டவன் அருளில் உறுதி கொண்டு அவனடியில் அடைக்கலம் புகுந்தார். நாமும் அவர் தம் அடிச்சுவட்டைப் பற்றி ஆண்டவனடியில் அடைக்கலம் புகுவோமாக.
கருணை
இறைவன் நமது விடுதலை குறித்துக் கருணை பொழிந்தவண்ண மிருக்கிறான். நம்மை உய்விக்க அவன் படும் பாட்டுக்கோர் அளவில்லை. ஐயன் நமக் கென்று தனு கரண புவன போகங்களைக் கொடுத் தான் ; திருக்குரான், பையில் , திரிபிடகம், பரமாக மம், உபநிஷத், நாலாயிரம், தேவார திருவாசகம் முதலிய மறைகளை அடியவர் மூலம் அருளினான்; அவ்வப்போது பெரியோரை அனுப்பினான். அறக் கருணைக்கு உலகம் ஆளாகவில்லை ; மனந் திரும்ப வில்லை. இப்பொழுது ஆண்டவன் மறக்கருணை, குண்டாய்ப் பொழிகிறது. இவ்வாறு எனக்குத் தோன்றுகிறது. அத்தோற்றம்,
மண்ணிடத்துங் கடலிடத்தும் வானிடத்துங் குண்டெறிதல்
அண்ணலுனை மறந்த உயிர்க் தருளூட்டுங் கருணைமழை
நண்ணுகவே சன்மார்க்கம் நண்ணுக என் றெச்சரிக்கை
பண்ணுவதுன் அருட்டிறத்தின் பண்புணர்த்த வல்லேனோ
என்னும் பாட்டை என்னைப் பாடுவித்தது. நாம் மனந்திரும்ப பாவங்களை முறையிட - கசிந்து கசிந்து உருகி உருகி அழ - விரைவோமாக. இப்பணி நம் முன்னே நிற்கிறது.
காலத்துக்குரியது
சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முன்னிற் கும் பணிகள் பல உள. அவைகளுள் தலையாயது மனந் திரும்ப முயல்வது. இது காலத்துக்குரிய தென்று யான் கருதுகிறேன். மற்றைப் பணிகளை யான் பலமுறை விரித்துள்ளேன்.
புரட்சி
உலகம் எத்தனையோ விதப் புரட்சிகளைக் கண் டது. கொள்ளைப் புரட்சிகளும், கொலைப் புரட்சிகளும் நமக்கு வேண்டா. அவைகள் கொள்ளையையும் கொலையையுமே பெருக்கும். நமது நாட்டில் நிகழ்ந்த அறப் புரட்சிகள் நம் முன்னே நிற்கின்றன. அவைகளைக் குறிக்கொண்டு நடப்போமாக. விருஷப் தேவர், புத்தர், சம்பந்தர், சங்கரர் முதலியோர் பெரும் பெரும் புரட்சி வீரர். அவர்கள் அஹிம்ஸை யாலும் சீலத்தாலும் பாட்டாலும் அறிவாலும் புரட்சி செய்தார்கள். இப்பொழுதும் ஒரு பெரும் புரட்சி தேவை. அப்புரட்சியை என்னென்று அழைக்கலாம்? அன்புப் புரட்சி யென்று அழைக்கலாம்; அதற்கு மனந்திரும்பிப் பாவங்களை முறையிட்டு அழும்பணி வேண்டும். அப்பணி செய்ய விரைவோமாக.
ஆலவாய்ப் பெருமானே! மதுரை அரசே! மறி கடல் விடமுண்ட வானவா ! நாங்கள் உன்னை மறந் தோம்; உன் அருளை மறந்தோம்; பாவங்களில் புரண்டோம். நாங்கள் குறைபாடுடையவர்கள் , வழுக்கி வீழ்கிறோம்; என் செய்வோம் ! எங்கள் பாவங்களெல்லாந் திரண்டு திரண்டு குண்டு மழையாய்ப் பொழிகின்றன ; எரிகிறோம்; எரிகிறோம்; உன்னை அடைந்து நிற்கிறோம் ; நீ பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்தவன்; மாபாதகனுக்கு அருள் செய்த வன். நாரைக்கும் கரிக் குருவிக்கும் விடுதலை அளித் தவன். உன்னடியில் அடைக்கலம் புகுகிறோம். அடைக்கலம் ! அடைக்கலம் ! ஆண்டருள்க; பொங்கி வரும் யுத்த ஆலத்தை ஒடுக்கியருள்க; புது உலக அமுதைப் பொழிந்தருள்க.
ஏதுபிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற ஆறு நீ பேசு. - சிதம்பர சுவாமிகள்
தோழர்களே ! உங்கள் அரிய காலத்தை இன்னுங் கொள்ளை கொள்ள விரும்புகிறேனில்லை, தலைமையுரையை இவ்வளவில் நிறுத்துகிறேன். அறிஞர் பலர் சொற்பொழிவுகள் நிகழப்போகின் றன. அவைகளைத் தழுவிப் பலதிறக் கருத்துக்களை வெளியிட எண்ணியுள்ளேன்.
இம்முறை யான் சாத்திரம் பேசவில்லை ; தத்துவம் பேசவில்லை; அத்துவிதத்தில் நுழைந்தே னில்லை; வேறு பல ஆராய்ச்சிகளில் நுழைந்தே னில்லை ; மனந் திரும்பலைச் சாற்றினேன் ; முறை யீட்டை முறையிட்டேன் ; அழுகையை அழுதேன் ; அன்புப் புரட்சியை அறைந்தேன். அப்புரட்சியை நாடோறும் நீங்கள் செய்யலாம். உண்மை அழுகைக்குப் பலர் வேண்டுவதில்லை. ஒரு சிலர் போதும். அஃது உலகை உய்விக்கும். ஆண்டவன் அருள் நமது அழுகை வாயிலாக வெளிவந்து ஆலத்தை உண்ணும்; அமுதத்தைப் பொழியும். வரும் ஆண்டுக்குள் புது உலகத்தைக் காண எழுங் கள் ; எழுங்கள். வித்தகம் பேச வேண்டா ; பணி செய்ய எழுங்கள் ; எழுங்கள்.
'வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாம் அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே'
-------------------
திரு. வி. கலியாணசுந்தரனாரின் நூல்கள்
1. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
2. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு (முதற் பகுதி) (இரண்டாம் பகுதி)
3. இந்தியாவும் விடுதலையும்
4. முருகன் அல்லது அழகு
5. உள்ளொளி
6. சன்மார்க்க போதமும் திறவும்
7. இருளில் ஒளி
8. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
9. இமயமலை அல்லது தியானம்
10. முடியா? காதலா? சீர்திருத்தமா?
11. சைவத்தின் சமரசம்
12. வளர்க்கியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் .
13. சைவத் திறவு
14. உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்
15. சிவனருள் வேட்டல்
16. காரைக்காலம்மையார் திருமுறை அரும்பதக் குறிப்புரையுடன்
17. தமிழ்நாடும், நம்மாழ்வாரும்
18. ஆலமும் அமுதமும்
19. புதுமை வேட்டல்
20. கிறிஸ்துவின் அருள் வேட்டல்
21. நாயன்மார் திறம்
22. முதுமை உளறல்
--------------------------