தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்)
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனர்
tamizkkalai (Speeches)
by tiru vi. kalyANa cuntaranAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Digital Library /Tamil Virtual Academy for providing a scanned image/PDF of this work.
The e-text has been generated using Google OCR online tool and subsequent correction of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்)
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனர்
Source:
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்)
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனர்
இலக்கிய மன்றம்
104, டெமல்லஸ் ரோடு, சென்னை -12.
பதிப்புரிமை 1953
விலை அணா 0-8-0
The Progressive Printers, Madras-1.
-----------
முன்னுரை
தண்டமிழ்ப் பெரியார், சாந்தசீலர், ஒழுக்க ஒளி திரு. வி. க. அவர்களின், உயர்வெண்ணும் உள்ளத்தினின்றும் வெளிப்பட்ட ஒப்பற்ற கருத்தோடைகளிற் சில ஈண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழ் நாட்டின் மேடைகள் அனைத்தும், கட்சிகள் யாவும், சமயக் குழுக்கள் எல்லாம், அவரது பொன்னுரையால் பொலிவு பெற்றதை மறக்கவியலாது. தமிழும் தமிழரும் அவரது கருத்தோடையில் திளைத்து மறுமலர்ச்சி எய்தியுள்ளதையும் நாமறிவோம். அத்தகு பெரியாரின் உரை ஒவ்வொன்றும். நிகழ்ந்தபின் - தொகுக்கப்பட்டு அச்சியற்றப் பெற்றிருத்தல் வேண்டும். அதனால், தமிழகம், காலத்திற்கும் பெறும் பயன் அளவிடற்பாற்றோ மாறாக முயற்சி கெட்டு, ஊக்கங்குன்றி, எழுச்சியற்ற இந்நாட்டில், அவரது பொன்னுரைகள் முற்றும் காக்கப்படவில்லை. காதிற்குப் புலனான பலவற்றுள் சிலவே கண்ணுக்குப் புலனாகும் வடிவு பெறுவனவாயுள்ளன. எனவே அவற்றையேனும், ஏற்றுப் போற்றிப் பயன் பெறுவது தமிழர் கடனேயன்றோ.
அத்தகு நோக்கத்தாலேயே, “தமிழ்க்கலை ” வெளியிடப் படுகின்றது. தமிழ்க்கலை' என்று ஒன்றைக் குறிப் பிடுவதற்கே இடமில்லா தபடி அதன் தனிமை' மறைக் கப்பட்டிருந்தது ஒரு காலம் தமிழ்க்கலை இகழப்பட்டது பிறிதொருகாலம். 'தமிழ்க்கலை' தமிழகத்திலேயே இடம் பெறாது தவிக்கிறது. இந்நாள் வரை. ஆனால் தமிழ்க் கலையின் தனிமையும், உயர்வும், உலகிற்கே வழிகாட்டியாகும் ஆற்றலும், தனித் தனியான உரைகளில் விளக்கப் பட்டுள்ளன. தண்டமிழ்க் கவிதைபோல் "சாந்தம்" தழுவிய சீலரால் கலையின் பாப்பு, தன்மை , பயன் பலவும் விளக்கப் பட்டுள்ளன. வாழ்க்கைத் துறையில், பட்டினியை நீக்குவதே, பட்டினிப் பட்டாளத்தை ஒழிப்பதே, கலையென முழக்குகிறார். நம் நாட்டிற்குத் தட்ப வெப்ப நிலைக் கேற்ப தோன்றி வளாந்த தனிக் கலைகள் ஓம்பப்பட வேண்டும் என நவில்கின்றார். நாட்டை வளப்படுத்த விஞ்ஞானக் கலைவரை வேண்டுமென விளக்குகிறார். விஞ்ஞானம் ஆக்கத் துறையிலேயே பயன்படுத்தப்பட வேண்டும், என எச்சரிக்கிறார். அறப்புரட்சி, உள்ளப் புரட்சியை விழைகிறார்.
கிராம வாழ்க்கையின் இயற்கை நலத்தை வியக்கின்றார். பொறாமை நீக்கி, மிகுபொருள் விரும்பாது, அருளொடு அன்பொடும் வாழும்படி அறிவுறுத்துகிறார். சீர்திருத்தத்தின் உயர்வையும், வள்ளலாரின் குறிக்கோளையும் விளக்குகிறார். வள்ளலாரின் வாக்கால், "கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக"-என சூளுரைக் கின்றார். மார்க்ஸ் கண்ட நெறியினும், அவரது குறிக்கோளை நிறைவேற்றும் தமிழர் நெறியின் மாண்பைப் புலப்படுத்துகிறார்.
மேலுலக இன்பத்திற்குப் பயன்படுவதா வாழக்கை? என்று- தற்கால உலக வாழ்க்கைக்குப் பயன்படுவது தான் உண்மையான வாழ்க்கை என உணர்த்துகிறார் குழந்தைகள் உணவுக்குக் ஏங்கிக்கிடக்க, தங்கமயில் வாகனம், வெள்ளி ரிஷபம், வாணவேடிக்கை முதலான பேயின் விழவுக்குப் பொருள் பாழாவதைக் கண்டு கண்ணீர் சொரிகிறார். பொதுவுடைமையாகிய இறைவன் தீட்சதரின் தனிவுடமையாயின், அவ்விடத்தில் இறைவன் இல்லை, இல்லை என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
'வாழ்க்கை நிலையாமை', பெண்ணை வெறுத்தல்', ''பேதம் பாராட்டல்” முதலிய ஊறு விளைவிக்கும் கொள்கைகள் இடைக் காலத்தில் நுழைந்தவைகளைச் சுட்டுகிறார். இயற்கையோடு இயைந்த, ஒளி, காற்று, நீர் ஆகியவற்றில் தோய்ந்த வாழ்வின் நலத்தை உணர்த்துகிறார். நல்லுணவு, நல்லுடல், நன்முயற்சி, நற்றொண்டு வேண்டும் என வலியுறுத்துகிறார்.
மேலும் - இந்த நன்னிலை விளைய, பாசீச வெறி ஆட்சி ஒழிந்து, சமதர்ம மக்களாட்சி மலர விழைகின்றார். உலகப் பொதுமை விளையும்படி உரிமைப் பயிர் தழைக்க வேண்டுமானால், தமிழ்நாடு தமிழருக்கு ஆகவேண்டும். தமிழரின் நெறி தழைத்தோங்க, குறள் நெறி குவலயம் எங்கும் பரவ, திராவிடப் பண்பாடு- உரிமையோடு உலவி உலகை வாழச் செய்ய, திராவிடக் கலை மணம் கமழ, “திராவிட நாடு திராவிடருக்கே" ஆக வேண்டும் என முழக்குகிறார்.
மக்களும், மன்றங்களும், அவரது விளக்கத்தை ஏற்று அவ்வாறே முழக்குகின்றனர். இந்நிலையில் அவரது உயர் நெறியை ஒவ்வொருவரும் நன்கு உணரவேண்டு மன்றோ ? எனவே, இந்த எடு வெளிவருகிறது. பெற்றுப் பயன் காண்பது ஒவ்வொருவரின் கடமையுமாகும் என நான் கூற வேண்டுமோ?
க. அன்பழகன்.
------------------
பதிப்புரை
மணிவிழாக் கண்ட மாண்புடைப் பெரியார், தமிழுருவாகிய தலைவர் திரு. வி. க. அவர்களின் சொற்பொழிவுகளை மக்கள் அனைவரும் படித்துப் பயன்பெற நூல் வடி வில் தந்துள்ளோம். தக்க புலவர் பார்வையிட்டபின் இதனை வெளியிடலாமென திரு. வி. க. விரும்பினார்கள். விரும்பிய வண்ணமே, இச் சொற்பொழிவுகளை அழகுறச் செப்பனிட்டுத் தந்த புலவர் மணி அன்பு கணபதி அவர்கட்கும், முன்னுரை தந்து தவிய பேராசிரியர் க. அன்பழ கன், M.A. அவர்கட்கும், சொற்பொழிவுகளைக் குறித்துத் தந்த அன்புப் பழம் நீ அவர்கட்கும், துணை புரிந்த புலவர் மு. கோவிந்தசாமி அவர்கட்கும். எங்கள் நன்றியும் கடப் பாடும் என்றும் உரியன.
நல்லன்பு வாழ்க! பதிப்பகத்தார்.
-----------------
1. தமிழ்க்கலை
(சென்னை Y. M. C. A. பட்டி மன்ற முதல் ஆண்டு நிறைவிழாவில் பேசியது)
தமிழ் நாட்டில் சில காலமாகப் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. அவ்வுணர்ச்சி ஆக்கத்திற்குப் பயன்படுமாக! இத்தகைய பட்டி மன்றங்கள் பல இந்நாட்டில் காணப்படல் வேண்டும். இயற்கைக்கு மாறான கொள்கைகளை அழித்துவிடுங்கள். ஆனால், இயற்கை நெறிப்பட்ட கொள்கைகள் இன்று அழிக்கப்பட்டு வருதலைக்காண வருந்துகிறேன். அது கூடாது. இத்துறையில் சிறப்பாக மகளிர் முயற்சி செய்தல் வேண்டும்.
ஆடல், பாடல், நகைச்சுவை இவை பெரிய கலைகளாம். என் சொந்தக் கலை, 'பட்டினிப் பட்டாளத்தை' யொழிக்கும் கலையாகும். அதுவே வாழ்க்கைக் கலை; உயர்ந்த கலை. என் வாழ்வு முழுதும் அதற்கே முயற்சி செய்துவருகிறேன். பட்டினிப் பட்டாளம் ஒழிந்தால்தான் நாட்டில் தமிழ் வளரும்; கலை செழிக்கும்.
பேச்சு ஒரு சிறந்த கலையாகும். இளைஞர் திறம்படப் பேசப் பழகவேண்டும். முன்னர், பேசப் போவதை எழுதிக்கொண்டு பின் பேசவேண்டும். பிறகு குறிப்பெழுதிக்கொண்டு பேசலாம். பழகிய பின், ஒருமுறை நினைத்துப் பார்த்துக் கொண்டு பேசலாம். தமிழ் மொழியில் அமைந்த கலை இனியது; உயர்ந்தது.
கலையை மகளென, பெண்ணெனப் பேசும் பழக்கம் நம் நாட்டிற்கே சிறப்பானது. கலையெனில் பெண், சக்தி, உமா. கலைக்கு (சக்திக்கு) எல்லை யாது? உலக முழுதும் அவள் எல்லை. அதனைத் தாண்டி சூரியமண்டிலம், பின் கோள்கள்; எல்லாங் கடந்த ஒளியுலகு; அதற்கப்பாலுமுள்ள விந்து.. அதனையும் தாண்டிய நாதவுலகு. அதுவே கலையின் எல்லை. கலைமகள், காணும் இந்தப் பருமையுலகு, காணாத நுண்மையுலகு, பருநுண்மை , இரண்டுங் கடந்தவுலகு யாவற்றையுங் கடந்தவள், எல்லா இடமும், காலமும், தத்துவங்களும் கடந்தது கலை. அந்நிலை கண்டவர் எல்லாக் கலைகளையும், கல்லா மலே எளிதில் அறிவர்.
கதிரவன், கோள்கள், பூமி இவையெல்லாம் ஆராயும் கலைகளாகும். எல்லாம் மூலக் கலையி னின்றே தோன்றுவனவாம்.
காவியம், ஓவியம், இசை, நாட்டியம், விஞ்ஞா னம், தத்துவம் யாவும் கலைகளே. இன்று நாம் காணும் கலைகளை யெல்லாம் தமிழ்ப் பெரியோர் கண்டனர். 1,800 ஆண்டுகளாக அதற்கு இடை யூறுகள் எழலாயின.
தமிழ்க் காவியக்கலை மிகச் சிறந்ததொன்றாகும். அது வாழ்விற்குத் துணை போகுமா? என ஆராய்வது ஒரு நல்ல கலை யெனலாம்.
தமிழ்க்கலை யெல்லாம் வீரம்; காதல். இவையிரண்டும் இல்லாதது கலையன்று. இரண்டும் தேவை. இரண்டும் வேறு பட்டனவல்ல.
கிரீஸ் நாடு ஓவியச் சிறப்போங்கியது. அதனினும் உயர்ந்த து தமிழ் ஓவியக் கலை; ஒப்புயர் வற்றது. தென்காசி, புதுக்கோட்டை, மாபலிபுரம் இங்குள்ள ஓவியங்கள் இணையற்றவை. அஜண்டா ஓவியங்களிலுங்கூட மேலானவை தமிழ்நாட்டு ஓவி யங்கள். உலகிலேயே ஓவியச் சிறப்பு கொண்ட தமிழ்நாடு இன்று ஓவிய ஆராய்ச்சியில் குறைந் துள்ளமை கண்டு மனம் வாடுகின்றேன்.
ஜப்பானில் தமிழர் ஓவியம் கலந்துள்ளது; ஓவியத்தின் தாயகம் தமிழக மெனலாம்.
இசையே தமிழ். தமிழ்க் கடவுள் இசை வடிவானவர். 'ஏழிசையாய் இசைப்பயனாய்' என ஆண்டவனை அடியார் போற்றினர். முன்னர் இந்தியா மந்திரியாயிருந்த 'மார்லி ' என்பவர் நமது ஓவியத் தைப்பற்றி I. C. S. மாணவர்கட்கு ஒருமுறை கூறியுள்ளார்.
"ஓவியத்தில், இசையில் உயர்ந்த நாடு இந்தியா, நாகரீகம் செழித்த நாடு; உலகிற் சிறந்த நாடு. அத்தகைய கலைத்திறனை நாங்கள் எவ்வளவு முயன்றாலும் பெற முடியாது' என்பதுவே அவர் புகழ்ச்சி.
ஆம், இசைக்கு வெப்பநிலைப் பொருத்தம் வேண்டும். மிகுந்த வெப்பம் அல்லது குளிர்ச்சியுள்ள நாட்டில் இசை மேம்படல் அருமை. வெம்மையும் தண்மையுங் கலந்தநிலை இசைக்கு மிகவும் ஏற்ற மளிக்கும். நமது வங்காளக் குடாக்கடல் மண்ணில் இசையை வளர்க்குந்திறன் உண்டு என்பதனை ஆராய்ந்துள்ளனர்.
ஆனால், அவ்விசை இங்கு எங்கேயுள்ளது? அகப்போரும், புறப்போர்களும் கலையை அழித்து வருகின்றன. போர், கலையை அழிக்கும்; நாட்டை அழிக்கும்; நாகரிகம் அழிவதைச் சொல்ல வேண்டு மோ? தாகூர் இதுபற்றி நன்கு கூறியுள்ளார்.
தமிழர் சமயம், ஆடல் சமயம்; பாடல் சமயம். இறைவனது நெறியைச் சம்பந்தர் கூறும்போது, "ஆடல் நெறியென்பேன்; பாடல் நெறி யென்பேன் " என்கிறார். ஆனால் இடைக்கால ஏட்டு வேதாந்திகள் சிலர், கலையால், நாட்டியத்தால் சமயம் அழியுமென்றனர். கலையை வளர்ப்பதே உண்மையான சமயமென்பேன். பழந்தமிழர் வைத்யம், சித்த வைத்யம்; நல்ல முறையாகும். அது மருத்துவக் கலையுள் மேம்பட்டது. குட்டம், க்ஷயம், எலும்புருக்கி முதலிய நோய்கட்கு இன்றும் சில ஊசிகள் தவிர, நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ; சித்த முறையில் நல்ல மருந்துகள் உண்டு. இன்றும் அந்நோயை எளிதில் போக்குவோர் பலர் உளர். அம்முறையை ஆக்கம் பெற ஊக்குதல் கடனாகும்.
இன்று நம் நாடு வளர எக்கலை வேண்டும்? விஞ்ஞானக் கலை; விஞ்ஞானக் கலையென்பேன். இயற்கைத் தாயின் கருவின் உள்ளத்தில் விஞ்ஞான உண்மைகள் நிறைந்து கிடக்கின்றன. இன்றுவரை மனிதன் உள்ளத்தைத்தான் கண்டான்; இல்லாததைக் கண்டானில்லை. இயற்கையின் எல்லையை இன்னும் காண முடியவில்லை. அறிஞர்கள் கால தேச வர்த்தமானத்திற்கேற்ப விஞ்ஞான உண்மைகளைக் காண்பர். இயற்கையும் காலத்திற்கேற்ப வெளிப்படும். முதலில் அகல் விளக்கு இருந்தது. எண்ணெய்க்கு ஆமணக்குத் தேவையாயிருந்தது. இயற்கையன்னை ஆமணக்குச் செடியினைக்காண உதவினாள். பின் மக்கள் பெருகினர். மண்ணெண்ணெய் தேவையாயிற்று. பர்மா, ஈரான் முதலிய இடங்களில் மண் (இயற்கை) எண்ணெயைச் சுரங்தது. அதுவும் போதவில்லை. மக்கள் மிகவும் பெருகினர். அன்னை அறிஞனிடம் 'மின்னலை'க் (Electricity) காண அருளினாள். மனிதன் மின் விளக்கைக் கண்டான். இதையுங் கடக்க வேண்டிய காலம் வரலாம்! என்னென்ன வருமோ!
இன்று 'அணு' கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் எல்லாவற்றையுஞ் செய்யலாம். ஆனால், ஆக்கத்திற்கே அதனைப் பயன் படுத்தவேண்டும். திருவிளையாடலில் 'எல்லாம் வல்ல சித்தரான படலம்' ஒன்றுள்ளது. முதலில் அதைக்கண்டு வியந்தேன். இப்படியும் இயலுமா? எண்றெண்ணி னேன். இன்று அணு எல்லாக் காரியங்களையும் செய்யப் போவதைக் காண்கிறோம்.
'ஆர்டிக் கடல்' நாடு முன் எப்படி இருந்தது? இன்று எப்படி விளங்குகிறது! எங்கும் பட்டணங் கள்! கடலோர மெல்லாம் பட்டணங்கள்! பனி உறையும் அந்த நாட்டில் இன்று கோதுமை செழிப்பாக விளைகிறது! எப்படி வளர்கிறது? அங்கு விஞ்ஞான அறிவு வளர்கிறது. மக்கள் வளர்ச்சிக்கேற்ப விஞ்ஞானமும் வளர்ந்துகொண்டே போகிறது. ரஷிய மனிதன் இரும்பு வேண்டுமென எண்ணினான். ஏதோ மணலையும் இன்னும் சில பொருள்களையுங் கலந்தான்; இரும்பு வந்தது. அந்த அறிவு இங்கும் ஓங்கவேண்டும்.
அப்போது, ஏன் பாலாற்றொல் என்றும் வெள்ளம் ஓடச் செய்யக்கூடாது? ரஷியாவில் அப்படிச் செய்திருக்கிறார்கள். நம் நாட்டில் 10 கோடியாயிருந்த மக்கள் 20 கோடியா பினர். பின் 30, 40 கோடியாயுள்ளனர். அடுத்த கணக்கில் 50 கோடியாகலாம். அதற்கேற்ப விஞ்ஞானத்தை வளர்த்துக்கொண்டே போகவேண்டும். நிலநூல் (Geology) உயிர்நூல் (Biology) செடிநூல் (Botany) இவற்றை நன்றாக ஆராய்ந்து அறியவேண்டும். இவற்றை யெல்லாம் தமிழாக்க வேண்டும். ஆக்க முடியுமா? எனச் சிலர் அஞ்சுகின்றனர். முடியும்; முடியும். தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ந்த புலவர்களை அத்தொண்டில் புகுத்துதல் வேண்டும். இங்குத் தலைமை வீற்றிருக்கும் சேதுப் பிள்ளையவர்கள் நல்ல தமிழ்த் தொண்டர்; அவர்கள் இத்தகைய தொண்டில் ஈடுபடவேண்டும். அத் தகைய காலம் மிக அணித்தேயுள்ள தென்பேன். நம்நாடு பழம் பெருமையுடன் பிற நாடுகளோடும் உயர வேண்டுமானால் இன்றைய தமிழ்க் கலையில் விஞ்ஞானக்கலை நிரையவேண்டும். விஞ்ஞானம் படித்தால் நாத்திகராய் விடுவராம்; மாணவர் கெட்டு விடுவராம். இப்படிச் சொல்வது பிழையாகும். எதில் விஞ்ஞானமில்லை ? கம்ப ராமாயணத்தில் செடிநூல் (Botany) உண்டு .
ரஷியாவில் முன்னெல்லாம் கலை யென்றால், அறைதான் கிடைக்கும். இன்று அங்கு யாவரும் விஞ்ஞானத்தை விரும்பிப் படிக்கின்றனர். அங்கு "அழகுக் கலை” வளர்கின்றது.
இளைஞர்களின், குழந்தைகளின் முகமே ஒரு கலை. அங்கு அழகு நடனஞ் செய்கின்றது. நமது நாட்டில் அதனைக்காண முடியவில்லையே! எலும்பும் தோலுமாக வல்லவோ இளைஞர் காணப்படுகின்ற னர்? அவர் முகத்தில் களையில்லை; கலையுமில்லையே!
பறவைகளின் ஒலியும், நீலக்கடலின் காட்சியும் நல்ல கலையின் பந்தான். பசியிருக்குமிடத்தே, பட்டினிப் பட்டாளத்திடம் கலை எப்படிப் பற்றும்? இன்று நான் வரும்போது மூன்று பட்டினிப் பட்டாளங்கள்-நகராட்சி மன்றம், ரிஷா, அரசாங்க அச்சுத் தொழிலாளர்கள்-ஊர்வலங்கள் போவ தைக் கண்டேன். அவர்களிடம் இசையைப் பற்றியோ, கலையைப் பற்றியோ கூறிப் பயனென்ன ? இசையைக் கேட்பதைவிட்டு, பட்டினி யெரிச்சலில் 'பளார்' என்று அறைதான் கிடைக்கும். ஆதலினாலே, எந்த நாட்டில் பட்டினிப் பட்டாளம் ஒழிக்கப்படுமோ அங்குத்தான் உண்மைக் கலை ஒங்கும்.
’விவாதக்கலை' வேண்டும். இன்று ரஷியா 'Dialectic Materialism' பேசுகின்றது. இது 3,000 ஆண்டுகட்டு முன்னரே காணப்பட்டது. விவாதக் கலையின் மூலமே அது படிப்படியாக வளர்ந்து இன்றைய நிலையுற்றது. வாதப்போர் என்பது அறிவுப்போர். அதிலேயே உண்மைகாண முடியும். விவாதஞ் செய்தல் ஓர் உண்மையான கலை ; நிலையான கலை.
நம்நாடு வாழ விவாதம் வேண்டும். அன்று நாடு நன்றாக வளரும். பேச்சில் அழகும், திறமை யும், பண்பும் அமைய வேண்டும். இவ்வகையில் பெண்மக்கள் பெரிதும் பங்கு கொள்ளவேண்டும்
அப்போதுதான் நம் நாடு நன்னிலையடையும்.
தமிழ்க்கலை வாழ்க! தமிழ்நாடு உயர்க!
--------------
2. மாணவரும் தமிழும்
(15-10-51 அன்று பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு)
தமிழ்த் தோழர்களே!
இன்று இங்கே தமிழ் மன்றத்துவக்க விழாவுக்குத் தலைமை வகிக்கும்படி நீங்கள் கட்டளை இட்டிருக்கிறீர்கள். என்னுடைய உடல் எந்த நிலையிலே இருக்கின்றது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். டாக்டர். மு. வரதராசனார் அவர்கள் என்னைப்பற்றிச் சிறப்புரை பகர்ந்தார். யான் அச் சிறப்புரைகளுக்கு அருகன் அல்லன். என்னுடைய கண்கள் படலத்தால் மறைக்கப் பட்டிருக்கின்றன. பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் மாணவ மணிகளை என்னுடைய அகக் கண்களால் பார்த்து மகிழ்கிறேன். தலைவர் முன்னுரை என்று நிகழ்ச்சி நிரலில் குறிக்கப்பட்டிருக்கின்றது. என்னுடைய முன்னுரை ஒழுங்காகவோ, அல்லது தொடர்ச்சியாகவோ இராது.
இப்பொழுது என் உடல்நிலை ஒழுங்காகப் பேச இடந்தராமைக்கு வருந்துகிறேன். உங்கள் முன்னிலையில் முதுமை உடலுடன் காட்சி யளிக்கிறேன். ஏதோ இளம்பிள்ளைகள் தமிழ் மன்றத்திலே பேச என்னை அழைத்திருக்கிறார்களே என்று பேச வந்துள்ளேன்.
மன்று மன்றமானது. மன்று என்றால் மரத்தடிக்குப் பெயர். பழைய சரித்திரத்திலே மன்று என்ற பொருளை அதிகமாகக் காணலாம். மன்று என்று நான் குறிப்பிடுகின்ற மரத்தடியிலே முன்னர், தமிழ் மன்றம் கூடியது. மரத்தடிகளிலே கூடியது போய் மேல்மாடிகளிலே கூட ஆரம்பித் தார்கள். இப்பொழுது மாடிகள் மேல் மாடிகள் ஏறிக்கொண்டு இருக்கின்றன. மேல்மாடிகள் இப்பொழுது பல காட்சி யளிப்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். மேல்மாடிகள் பல உண்டாக்கிக் கொண்டே போகின்ற கட்டம் இருக்கின்றதே, அந்தக் கட்டத்தின் வளர்ச்சியைத் தடுக்க இப்பொழுது விஞ்ஞான ஆராய்ச்சி சந்திரமண்டலம், சுக்கிரமண்டலம் வரை போய் சூரியமண்டலமும் போகமுடியுமா முடியாதா என்று ஓர் ஆராய்ச்சி நடந்துகொண்டு வருகின்றது. முன்பு நடைபெற்ற மன்றங்களிலே அறிவானது ஓங்கி வளர ஆரம்பித்தது. முதல் முதலில் மரத்தடியிலே, தமிழ் மரத்தடியிலே தமிழ் வளர ஆரம்பித்தது. பலமரங்கள் கூடியுள்ள இடத்திலே பச்சையப்பன் கல்லூரியை அமைத்து இருக்கிறார்கள். பச்சையப்பன் கல்லூரி என்றால் பசுமையான கல்லூரி என்று பொருள்.
நான் நீண்டநேரம் பேச இயலாததற்குப் பெரிதும் வருந்துகிறேன். தமிழ் என்றால் இனிமை. தமிழ்ப் பிள்ளைகளாகிய உங்கட்கு முக்கியமாக வேண்டியது இனிய மனம், இனிய செயல், இனிய சொல். சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் முறை யில் இதை உங்கட்குச் சொல்லுகிறேன். இனிய மனம் எப்பொழுது மலரும்? அரும்பும்? மற்ற உயிரையும் தன் உயிர்போல் பாவிக்கும் பொழுது தான் இனிமை மனம் உண்டாகும். அறிவோடு, அருளோடு யாருக்கும் தீங்கு செய்யாது இருக்க வேண்டும். உலகத்திலுள்ள உயிர்களுக்கு எக் காரணம் பற்றியும் தீங்கு செய்யாதிருக்கவேண்டும். தீங்கு செய்யாதிருக்கும் நிலைமை தமிழ் நாட்டிலே இன்னும் உண்டாகவில்லை.
தமிழ் நாட்டிலே இன்று எங்கும் பொறாமை தலைவிரித்தாடுகின்றது என்று பேராசிரியரால் சொல்லப்பெற்றது. மக்கள் அனைவரையும் உலகத்திலே ஒருமைப்பாடாக எப்பொழுது பார்க்கப் போகிறோமோ? உலகத்திலே இப்பொழுது எத்தனை சாதிப் பூசல்கள், வகுப்புப் பூசல்கள் மலிந்து கிடக்கின்றன? இந்த நூற்றாண்டிலேகூட நாட்டிலே ஒருமைப்பாடு ஏற்படுமென்று எண்ண முடிய வில்லை. உலகத்திலே போராட்டங்கள் நிரம்ப இருக்கின்றன. எடுத்துக்காட்டாக சட்டங்கள் நிரம்ப இருக்கின்றன. எந்த நாட்டிலே சட்டங்கள் அதிகமாகின்றனவோ அந்த நாட்டிலே மக்கள் மனம் பண்படாது. நான் சொல்வதிலிருந்து மக்களுடைய மனம் பண்படவில்லை என்று உங்களுக்கு நன்கு தெரியும். அருள், அறம் அரும்ப வேண்டுமானால் முகிழ்க்க வேண்டுமானால் மக்களுடைய மனம் பண்படவேண்டும். சிறப்பாக மனிதரிடத்திலே தேவைக்கு அதிகமாகப் பொருள் சேர்க்கும் குணம் வளர்ந்து வருகின்றது. இது தவறு. மிகு பொருள் விரும்பாமை மக்களிடையே பரவ வேண்டும்.
பழைய காலத்திலே தமிழர்கள் தேவைக்கு அதிகமாக எதையும் ஏற்படுத்திக் கொண்டதில்லை. இனிய மனம் உங்களுக்கு வாய்க்கப் பெறவேண்டும். அதிகப் பொருளாசை இருத்தல் கூடாது. ஆனால் இன்று நாட்டிலே நடப்பதென்ன? சண்டைகள் பீரங்கிகள் பெருகிக் கொண்டே யிருக்கின்றன. நான் பழைய ஆள். ஆனால் புதுமை கண்டு ஓடுகிறவன் அல்ல; அறிவியல் கலையிலே நாட்டம் கொண்டவனே.
மிகு பொருள் விரும்புதல் அமைதியை உண்டாக்குமா? உண்டாக்காது. பொருளாதாரம் படித்த ஆசிரியர்களை, பெரிய கலைஞர்களை எல்லாம் மிகுபொருள் விரும்பல் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள்? இதனால் உலகத்திலே பெரிய போராட்டம். அந்தப் போராட்டத்திடை நாம் வாழ்கின்றோம். உற்பத்திகள் பெருகவேண்டும். மக்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வருகின்றது. அதற்கேற்ப உற்பத்திகள் பெருகவேண்டும். உணவு, உடை, உறையுள் இன்றி மக்கள் பல்லோர் அல்லலுறு கிறார்கள்.
அமைதி வேண்டுமென்று கிராமத்திற்குச் சென்ற அன்பர் ஒருவர் "அமைதியோடு அருட்பா படிக்க வேண்டுமென்று கிராமத்திற்கு வந்தேன். ஆனால் கிராமத்திலேகூட போராட்டம் நடந்துகொண்டே யிருக்கின்றது" என்றார். முன்பிருந்த அமைதி கிராமங்களிலும் இல்லை. பாட்டாளிகள் துன்பத்தோடு வாழ்கின்ற கொடுமை நன்றாகத் தெரிகின்றது. இதற்கு அறிவு என்ன செய்யவேண் டும்?-Physics, Chemistry, Geology & Zoology படித்த மாணவர்களே நீங்கள் என்ன செய்யவேண்டும்? நீங்கள் வக்கீலாகவோ அன்றி அக்கவுண்ட்டண்ட் ஜெனரல் ஆபீசில் ஒரு குமாஸ்தாவாகவோ, ஒரு போலீஸ் உத்தியோகத்திலிருந்து பிறகு D.S.P. ஆகி அதன் பின்னர் போலீஸ் கமிஷனராக ஆகவோ எண்ணுகின்றீர்களா? நீங்கள் விஞ்ஞானத்தைப் படித்ததைப் படித்து என்ன பயன்? நீங்கள் படிக்கும் விஞ்ஞானம் மக்களுக்குப் பயன்படும் துறை யிலே நீங்கள் கல்வி அறிவினைப் பெறல்வேண்டும். 'கேஸ்பியன் கடல்' அதற்குப் பக்கத்திலே, (நில நூற் படத்தைப் புரட்டிப் பாருங்கள்) கடற்கரைக்கருகே நரி, ஓநாய் ஓடிக்கொண்டிருந்தன. ரஷ்யா தேசத்திலே படித்த 'ஜீயாலஜிஸ்ட்' ஒருவர் இதைப் பார்த்தார்.
இருபத்தைந்துபேர் முப்பதுபேர் சேர்ந்துகொண்டு 'காஸ்பியன்' கடலில் நுழைந்தார்கள். அதிலே கொஞ்சம் உப்பிருந்தது. அந்த உப்பினை எடுத்து விட்டார்கள். பின்னர் அந்தத் தண்ணீரைப் பாய்ச்சி பழங்கள், கோதுமை முதலியவற்றை விளைக்க ஆரம்பித்தார்கள். விஞ்ஞானம் படித்தவர்கள் தங்கள் அறிவை இவ்வாறு பயன் படுத்தவேண்டும். பட்டிக்காட்டிலே வாழ்கின்றவர்கள் பெரும்பாலும் எலும்பும் தோலுமாகக் காட்சி அளிக்கிறார்கள். அவர்கள் புளியங்கொட்டையையும், கிழங்கையும் சாப்பிடுகிறார்கள். சிலர் அகப்பட்ட புல்லையும் தின்று வாழ்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் என்னை? தலையாய காரணம் என்னை?
கிராமங்களுக்கு ஏற்றாற்போல நகரங்களிலே உற்பத்தி அதிகமில்லை. முன்பு பால கங்காதர திலகர் பேசும் பொழுது குறிப்பிட்டார் : "நாளுக்கு நாள் கிராமங்கள் நகரங்களாக மாறிக்கொண்டே வருகிறது என்றார்."
மழையை வரவழைக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. மழையை உண்டாக்க செயற்கை முறையைக் கண்டிபிடித்திருக்கிறார்கள். தாதுப் பொருள்களை ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும். பல இடங்களில் பழச்சோலைகளை உண்டாக்க வேண்டும். கல்வி அறிவை மக்கள் நன்கு பயன்படுத்த வேண்டும்.
நான் இதுகாறும் ஆற்றிய சொற்பொழிவில் குற்றம் குறை இருக்கலாம். நான் மனிதன். குறை பாடுடையவனே. குற்றம் குறை இருந்தால் மன்னிக்க. நீண்டநேரம் பேச இயலாததால் இந்த அளவோடு முடித்துக்கொள்ளுகிறேன்.
உலகம் வாழ்க உலகம் வாழ்க. உலகம் வாழ்க.
தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!!
-----------
3. வள்ளலாரும் சீர்திருத்தமும்
[இராமலிங்க சுவாமிகள் சமாஜ சார்பில் நிகழ்ந்த வள்ள லார் பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரை. திருவொற்றியூர்]
சகோதரிகளே! சகோதரர்களே!!
யான் இப்பொழுது பல அழைப்புகளை மறுத்து வருகிறேன். ஆனால் இந்த இராமலிங்க சுவாமிகள் சமாஜத்தார் அழைப்புக்கு மட்டும் இணங்கினேன். இச் சமாஜம் காலஞ்சென்ற தலைவர் கா. ரா. நமச்சிவாய முதலியாரின் உடன் பிறந்தார் திரு. கா. ரா. மாணிக்க முதலியார் தலைமையில் நடைபெறுவது. இத்தலைமை என்னை இணங்கச் செய்தது. திரு. சாமராஜ முதலியார் புதல்வர் இராமலிங்கம், திரு. கந்தசாமி முதலியார் புதல்வர் இராமலிங்கம் ஆகிய இரண்டு இராமலிங்கங்களின் இளமை என்னை இத்தொண்டாற்ற ஒருப்படச் செய்தது. இளமையில் எனக்குத் தணியாக் காதல் உண்டு. இராமலிங்க அடிகளின் நற்செய்தியை (Gospel - சுவிசேஷம்) பரப்பும் பொறுப்பு இளைஞரிடத்தில் இருக்கிறது என்பது எனது நம்பிக்கை. இரண்டு இராமலிங்கங்கள், இருபது இராமலிங்கங்களாய், இரு நூறு இராமலிங்கங்களாய், இரண்டாயிரம் இராமலிங்கங்களாய் பெருகின் வள்ளலாரது அருட்டிறம் நன்முறையில் வளர்வதாகும்.
சில வாரங்கட்கு முன்னர், திரு. சுந்தரனார் என் தலைமையில் ஓர் அரிய சொற்பொழிவு சென்னையில் நிகழ்த்தியது உங்களுக்குத் தெரியும். அக் கூட்டத்தை நடாத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கும் மூல காரணமாக நின்றது முன் இராமலிங்கத்தின் இளமையே. இவ்விளைஞர் முதன் முதல் என்னைக் கண்டபோது "காற்றாலே புவியாலே” என்னும் அருட்பாவுக்கு உரை கேட்டனர். இருள் சூழ்ந்த இக் காலத்தில் ஒரு மாணாக்கர் அதிலும் ஒரு கல்லூரி மாணாக்கர் ஆழ்ந்த பொருளுடைய ஒரு பாட்டுக்கு உரை கேட்கின்றாரே என்று என் உள்ளம் இன்பக் கடலாடிற்று. பின்னே உரையாட உரையாட அவர் அருட்பா மயமாக விளங்கியதைக் கண்டேன். அவர் தம் பேச்சு அவர் தம் தந்தையாரைக் காண என்னை உந்தியது. தந்தை சாமராஜ் முதலியாரைக் கண்டு பேசித் தோழர்களாயினேம்.
சில ஆண்டுகட்கு முன்னர் யான் பேசிய முறைக்கும் இப்போது பேசுகின்ற முறைக்கும் வேற்றுமை உண்டு. பழைய பேச்சு ஒலிபரப்பியை விழைந்ததில்லை; இப்போது விழைகிறது. மெலிந்த உடல்; நலிந்த குரல்; முதுமைத் தோற்றம். என் செய்வேன் ?
சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ராஜாஜி மண்டபத்தில் ஒரு கூட்டம் கூடியது. அதில் சீர்திருத்தப் பெரியார் வீரேசலிங்கம் பந்துலுவின் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. அவ்விழாக் கூட்டத்தைத் திறந்து வைத்தவர் ஸர்.சி. ராமலிங்க ரெட்டியார். அவர் தமது பேச்சில் உலகப் பெரியார் சிலரையும் வட இந்தியப் பெரியார் சிலரையும் குறிப்பிட்டனர். ஆனால் நம் வள்ளலாரைக் குறிப்பிட்டாரில்லை. என்ன? இராமலிங்கம் இராமலிங்கத்தை மறந்தனர் என்பது என் நெஞ்சம் நினைந்தது. தவறு திரு. ரெட்டியார் மீது இல்லை; தமிழராகிய நம்மீதே உண்டு. தமிழராகிய நாம் இராமலிங்க அடிகளை அணித்தே உள்ள ஆந்திரத் திற்கும் அனுப்பினோமில்லை. குறை யாருடையது?
உலக வரலாற்றை நோக்கினால் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல பெரியோர்கள் தோற்றம் புலப்படும். அவருள் குறிக்கத்தக்கவர் மேடம் பிளாவட்ஸ்கி, டால்ஸ்டாய், காரல்மார்க்ஸ், ராஜாராம் மோகன் ராய், தயானந்தர், இராமகிருஷ்ணர் முதலியோர். இதே காலத்தில் வாழ்ந் தவர் நம் இராமலிங்க அடிகளாரும்.
இராமலிங்க வள்ளலார் அருளிச் செய்த திருவருட்பாவில் அவர் காலத்தில் வாழ்ந்த பொரியோர்களின் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. வள்ளலார் அருட்பா அவ்வளவில் கட்டுப்பட்டு நிற்க வில்லை. பண்டைக் காலச் சான்றோர் உள்ளக் கிடக்கைகளும் அருட்பாவில் உண்டு.
"வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
மரபினில் யானொருவனன்றே"
என்பது, வள்ளலார் திருவாக்கு. வள்ளலார் ஞானியார் என்பது மட்டுமல்ல அவர் குரு-தீர்க்கதரிசி-நபி, சித்தர். "தொல்காப்பியர் முதல் இராமலிங்கம் வரை" என்னும் தலைப்பு வேய்ந்து ஒரு நூல் எழுத வேண்டும் என்ற வேட்கை என்னுள் எழுந்த காலம் உண்டு. இப்பொழுது அத் தொண்டுக்கு உரிய தகுதியை எனது உடல்நிலை தகைந்திருக்கிறது. மறுபிறப்பிலாதல் அத் தொண்டாற்றும் பேறு எனக்குக் கிடைக்க ஆண்டவன் அருள் புரிவானாக! இந்நாளில் இத் தொண்டாற்றும் ஆற்றல் வாய்த்தவர் ஒரு சிலர் தமிழ் நாட்டில் வதிகின்றனர். அவருள் ஒருவரைச் சிறப்பாக இங்கே குறிக்கின்றேன். அவர் எனது கெழுதகை நண்பரும் உழுவ லன் பரும் ஆன ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளை என்பவர். அவர் ஆராய்ச்சியாளர் மட்டுமல்லர்; அன்பர் திருவருட்பாவின் உட்கிடக்கையை உணரும் அன்பும் ஆராய்ச்சியும் பெற்றவர்.
வள்ளலார் 'வாழையடி வாழையென' அருளியதை ஊன்றி ஆய்தல் வேண்டும். அத்திருவாக்கிலே ஒருவித மரபு தொன்றுதொட்டு இடையீடின்றி வளர்ந்து வருதல் காணலாம். அம்மரபு எது? அது அஹிம்ஸா தர்ம மரபு. இதற்குக் கால் கொண் டவர் விருஷபதேவர். அவரது காலம் தெரியவில்லை. அது சரித்திர காலம் கடந்தது. பதினாயிரம் ஆண்டு கட்கு முன்னரே அவர் தோன்றியவர் என்பது நன்கு தெரிகிறது. அவரே முதன் முதல் உலகத்திற்கு அஹிம்ஸையை அறிவுறுத்தியவர். இவ் அஹிம்ஸை காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்றவாறு பல பெரியோர்களால் வளர்க்கப் பெற்றது. இந்நாளில் மக்கள் கூட்டத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் அவ்விழுமிய அறத்தை ஓம்பினர். அருட்பா என்னும் கனியினின்று வடியும் சாறு கொல்லாமை என்னும் பேரறமே யாகும்.
இக்கால உலகம் அரசியலைப் பெரிதும் குறிக் கொண்டு நிற்கிறது. அருட்பாவில் அரசியல் உண்டா? உண்டு என்றே அறுதியிட்டுக் கூறு வேன். சில திங்கட்கு முன்னர் இம்மேடையிலேயே என்னால் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அது அருட்பாவிலுள்ள ' மழவுக்கு மொருபிடி சோறளிப்பதன்றி' என்ற பாட்டை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ந்தது. அதில் மார்க்ஸ் யத்தைப் புகுத்தி விரிவுரை பகன்றேன்.
மார்க்ஸியத்திற்கும் நமது இராமலிங்கீயத் திற்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா? என்று சிலர் ஐயுறலாம். ஒற்றுமை உண்டு என்பது யான் கண்ட உண்மை. மார்க்ஸியம் இராமலிங்கீயத்திற்குள் அடங்கும். இராமலிங்கீயம் மார்க்ஸியத்தைக் கடந்து, விஞ்சி நிற்கும். இதை விரித்துப் பேசின் உங்கள் அரிய காலத்தைக் கொள்ளை கொண்டவன் ஆவேன். மூன்று சொற்பொழிவுகள் நிகழ்தல் வேண்டும்; என் செய்வேன் ; மன்னிக்க!
மார்க்ஸ் போலீஸ் அற்ற-சேனைகள் அற்ற அரசற்ற ஓர் உலகைக் காணவே முயன்றார். வள்ளலாரும் அத்தகைய உலகைக்காணவே உருகி உருகி நின்றனர். அச் சீரிய உலகைப் படைக்கும் முறையில் இருவர்க்கும் வேற்றுமை உண்டு, வள்ளலார் அஹிம்ஸையை அருளை- கொல்லா மையை அடிப்படையாகக் கொண்டு அன்பு உலகைப் படைக்க ஆண்டவனை வேண்டினர். இது மார்க்ஸியத்தில் இல்லை.
''கருணையிலா ஆட்சி கடுகி யொழிக
அருணயந்த நன்மார்க்க ராள்க- தெருணயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்று
நினைத்து, எல்லோரும் வாழ்க இசைந்து.”
இத் திருவாக்கை எண்ணுக; நினைக்க; உன்னுக; முன்னுக!
" கருணையில்லா ஆட்சி கடுகி யொழிக" என்பதன் கருத்து என்னை? அருளாட்சி மலர்தல் வேண்டும் என்பதன்றோ? அருளாட்சி என்பது யாது? கொலையற்ற ஒன்று என்று சொல்லவும் வேண்டுமோ? அதுவே போலீஸ்-சேனை- அரச அங்கம் முதலியன இல்லா ஒரு பெரும் நல்லாட்சி அற ஆட்சி!
அருளாட்சி வேண்டும். அந்த அருளாட்சியை ஒருவர் பெற்றார். அருளாட்சி உலகத்திலேயே பரவ வேண்டும். அருளாட்சி வந்தே தீரும். இரண்டு வாரத்துக்கு முன் ஒரு அமெரிக்க பத்திரிகையைப் படித்தேன். அதிலே ஒரு புதிய 'Bomb' கண்டு பிடித்திருப்பதைக் கண்டேன். எனக்கு அது பாசு பதாஸ்திரத்தை நினைவூட்டியது. பாசுபதாஸ்திரம் செலுத்தியவர் கைக்கே மீளுமென்பது புராணம்.
இந்தக் குண்டு (பாம்) வெம்மையற்ற ஓர் இடத் திலே வைக்கப்பெறும். அது ஏவப்பெறின் கூட்டம் கட்டமாகச் செல்லும். சூடுள்ள இடமெல்லாம் சென்று அழிக்கும். அது தண்மை ஊட்டினாலன்றி ஒழியாது. அது வைக்கப்பெறுமிடம் தண்மை உள்ள இடம். அத்தகைய பாம்களில் ஒரு நூறு ஏவப்பெறின் உலகம் அழியும். மனிதனிடம் உள்ள சூட்டையும் அந்த பாம் பயன்படுத்திக் கொள்ளுமாயின் மனித வர்க்கமே அழிவது ஒரு தலை. இது நாகரிகமா? அல்லது அநாகரிகமா? அமைதிக்கும், ஒழுங்குக்கும் வழிகோலியவர் எத்துணை பேர்? மக்கள் மனத்தை மாற்றி அருள் நெறியில் செலுத்த ஆண்டவன் அவ்வப்பொழுது அன்பினால் கருணையினால் அடியார்களை அனுப்பி வைக்கிறார், அவர்கள் ஆற்றிய போதனையும் சாதனையும் விட்டு விட்டோம். மீண்டும் கருணையில்லா ஆட்சிக்குக் கடிது செல்லுவோம். முதல் வரியிலேயே அடிகளார் “ஒழிக” என்றார். அது அப்பாட்டின்-Destructive Element ஆகும். அடுத்த வரியில் ஆக்கவேலைக்குரிய குறிப்பைக் காண்கிறோம். (Constructive aspect).
சரித்திர காலத்திற்கு முன்னர் மக்கள் ஆளப் பட்டதாகத் தெரியவில்லை. அரசாங்கமே இருந்த தில்லை. மக்களின் சிறப்பியல்பு சாந்தம். இன்று கோபத்தை மனிதன் அடக்கவேண்டும். நாகரிகம்-- கலை அரசாங்கம் முதலியன மக்களின் மன நிலையைக் கெடுத்து விட்டன. மறியல் குணத்தை உடலாக, கூடாக வைத்துக் கொண்டு அருளால் அதனை உயிர்த்து நம் நாட்டிற்கு வேண்டிய வகையை அமைத்துக் கொள்ளவேண்டும். அங்ஙனம் அமைத்துத் தந்தார் நம்-வள்ளலார். அருட்பா-மருட்பா வாதம் நிகழ்ந்த காலத்தில் அருளைப் பற்றியில் பாடிய பாடல்கள் எனவும் அருளைப்பெற விரும்பிய பாடல்கள் எனவும் வெவ்வேறு வகைகளில் பொருள் கண்டனர். அருளை இறைஞ்சிப் பாடப் பெற்ற பாக்கள் எனின் பொருந்தும்.
தமிழ் மொழியின் தனிச்சிறப்பு பாடல்களே. இக்குறிப்பைப் பாட்டியல் தமிழ் உணர்த்துகின்றது. படைப்பையெல்லாம் பாடல்களாகப் பாடியவன் தமிழன். பாடியவர்களெல்லாம் வாழந்தனரா? அவர் பாக்கள் வாழின் அவர்கள் வாழ் கின்றனர். (Shelly lives) ஷெல்லி வாழ்கின்றான். பாட்டியல் சிறப்பைத் தேவாரத்திலே காணலாம் ; திருவாசகத்திலே காணலாம் ; தாயுமானாரிலும் காணலாம்.
தமிழர் இயல்பு பாட்டுப் பாடுவது. தமிழர் கவிதையில் திளைத்தனர். வள்ளலார் திருவொற்றியூரில் கண்டகாட்சியை அழகாக அமைக்கின்றார். அடியார் கூட்டத்தை வருணிக்கும் ஓர் வர்ணனை உய்த்து உணரற்பாலது. கவிதைபோல் சாந்தம், என்று சொல்வது போதாதென்றெண்ணி "தண்டமிழ்க் கவிதை போல் சாந்தம்" என்றார்.
பாட்டால் பணிசெய்வது தொண்டில் மிகச் சிறந்தது. சாந்தத்தின் தனிப் பெருமையைக் காந்தி அடிகளின் வாழ்க்கையிலிருந்து ஒரு குறிப் பின் வாயிலாகக் காண்போம். அகிம்சா மூர்த்தி காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக வீற்றிருக்கிறார். மோதிலால் நேருபோன்ற தலைவர்கள் அங்குக் குழுமியிருந்தனர். கூட்டத்தினரிடையே குழப்பம் நேரிட்டது. குழப்பம் சண்டையாக முற்றியது. அவரவர் கைக்குக் கிடைத்த நாற்காலியை எடுத்து ஒருவர் மேல் ஒருவர் வீசலானார்.
இக்காட்சியைக் காந்தியார் கண்டார். உடனே ராமபஜனை செய்யத்தொடங்கினார். கைபிடித்த நாற்காலிகள் விடுபட்டுப் பஜனை செய்யக் கூம்பின. எந்தவிதத்தில் நிலைமை சமாளிக்கப்பட்டது என் பதை நோக்கின் சாந்தத்தின் தனிச்சிறப்பும் பாட்டின் பண்பும் விளங்கா நிற்கும்.
சீர்த்திருத்தம் நிரம்பவேண்டும். நான் மரணத் திற்கு அஞ்சவில்லை!
"தந்தையார் போயினர் தாயரும் போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியா லேழை நெஞ்சே
அந்தணாரூர் தொழு துய்யலா மையல் கொண் டஞ்சல் நெஞ்சே'"
அருணகிரியாரும் அந்தகனைவென்ற குறிப்பும் திருப்புகழில் காணக்கிடக்கிறது.
"மரணபயம் தவிர்க்க தவிர்க்க!" எனவும், " என் மார்க்கம் சிறப்பொழிக்கும் சன்மார்க்கம் தோழீ" எனவும் பாடி மரணபயம் தவிர்தலுமாம் என்பதை பரக்கப் பேசினவர் நம் இராமலிங்கர். இதுவே வள்ளலாரின் சுவிசேஷம்.
எத்தகைய மாற்றமும் ஒரு புரட்சியால் தான் ஆகும். புரட்சியெனின் சரித்திர மாணவர்களுக்கு (Bloody Revolution) இன்னோரன்ன இரத்தக் களரிகள் தான் நினைவிற்கு வரும். இங்கு நான் கொள்ளும் பொருள் இரத்தக்களரி அன்று. மாற்றம் காணவேண்டுவனவற்றின் நடுவே நின்று மெல்ல மாற்றம் காணுதலே புரட்சியெனக் கொள்ளலாம். இது, அறப்புரட்சி. இந்தக் களரியின் வாயிலாக மாற்றம் கொணர்வது மறப்புரட்சியாகும். அது வேண்டுவதில்லை! அத்தகைய அறப்புரட்சிக்கு அடி கோலியவர். பலபாக்கள் - அம்முறையில் மாற்றம் வரவேண்டிப் பாடியவர் நம் வள்ளலார் ஆவர். நம்முடைய இராமலிங்கர் ஒரு பெரும் புரட்சிக்காரர்.
மறநெறி நின்றவரை-அறத்தாற்றில் அறவழியில் -அருள்நெறியில் உய்த்தவர் இராமலிங்கர். அறப்புரட்சி - அருட்புரட்சி - அன்பால் - அறிவால்-கருணையால் அமைதல் வேண்டும்.
ஜாதிப்பித்தை, சமயப்பிணக்கை எவ்வாறு ஒழித்தல் வேண்டுமெனின் மதப்பித்தரிடை--சமயிகள் இடைசென்று வள்ளலார் கூறியபடி புறச் சமயத்தலைவர் பெயர்களைக் கூறி எம்மதமும் சம்மதம் என்பதைப் புலப்படுத்தி வேற்றுமையிடையில் ஒற்றுமைக்கு வழிகோல வேண்டும். வள்ளலார் இக்கருத்தினைக் கூறியது குறிப்பிடத்தக்கது.
"அருகர் புத்தராதி யென்பேன் அயனென்பேன் நாரா
யணனென்பேன் அரனென்பேன் ஆதிசிவனென்பேன்
பருகு சதாசிவ மென்பேன் சத்திசிவ மென்பேன்
பரமமென்பேன் பிரமமென்பேன் பரப்பிரமமென்பேன்”
அடுத்து வள்ளலாரின் தொண்டு உள்ளத்தைக் காண்பேன்.
"எத்துணையும் பேதமுறாதெவ்வுயிருந் தம்முயிர்போ லெண்ணியுள்ளே
ஒத்துரிமை யுடையவரா யுவக்கின்றார் யாவரவருள்ளங் தான்சுத்த
சித்துருவாயெம் பெருமானடம் புரியுமிடமென நான் தெரிந்தேனந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடவென் சிந்தைமிக விழைந்ததாலோ.''
இந்தப் பாட்டில் எல்லாம் உண்டு. வள்ளலார் ஒரு புத்துலகச் சிற்பி. ஏனையோரும் புத்துலகங்களைக் கண்டுள்ளனர். அவர்கள் கண்ட வகைக்கும் வள்ளலார் வகுத்த முறைக்கும் வேறுபாடு உண்டு. அத்தகைய வள்ளலார் கண்ட புதுமை உலகத்தை பத்து ஆண்டுகளில் தோற்றுவித்துவிடலாம். இது காறும் உலகவனாய் நின்று பேசினேன். இனித் தென்னாட்டானாய் நின்று பேசுகிறேன். ஆசியாவிற்கு-ஏன்? உலகத்திற்கே தமிழகம் வழிகாட்டியாய் நிற்கும். அந்நிலையில் இந்தியாவுக்கு வழி கர்ட்டி தமிழ்நாடு.
திரு. C. R. ரெட்டி அவர்கள் இராமலிங்கா ரெட்டி என்ற பெயர் பூண்டிருந்தாலும் இராமலிங்கரை அறியாத குறை நம் குறையே. உலகத்தாருக்கு இராமலிங்கரின் பெருமையை எடுத்துரைக்க வேண்டிய கடமை இளைஞர்களாகிய உங்களுக்கே உரியது. இராமலிங்கர் கண்ட புத்துலகத்தை அருட்பாவில் காணலாம். இராமலிங்கரே அருட்பா. தமிழனது செந்நீர், தமிழனின் தமிழ்க் குருதி, தமிழ்ரத்தம் ஒவ்வொரு பாடலிலும் ஊடுருவி நிற்கின்றது.
இத்துறையில் தமிழர் ஆற்ற வேண்டிய பணி மிகப்பெரிது. தோன்றியிருக்கும் சங்கங்கள் யாவும் இணைக்கப்படவேண்டும். இணைந்தாலன்றி சக்தி பிறக்காது.
ஒன்று படுக-அருட்பா ஜாதி மதமற்ற ஒரு நூல். அதைப் பரப்புதல் வேண்டும். இதைச் சங்கங்கள் சிறந்த குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். உழைப்பால் பண்டைய நிலை எய்து வோம். வள்ளலார் அருளாட்சி பெற்றேன் என்று கூறி அவர் பெற்ற இன்பத்தை வையகம் பெறுதல் வேண்டும் என்னும் பேரவாவினால் அதனை அறை யப்பா முரசு என்றார். தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். பொறாமை யொழியின் தமிழர் ஒன்றுபடுதல் ஒரு தலை. வள்ளலார் காட்டிய வழிநின்று உய்ய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி நிற்போம்.
வள்ளலார் கண்ட சத்திய ஞானசபையும் சத்திய தருமச் சாலையும் தாம் கண்ட கனவைச் செயலில் கொண்டுவர முயன்றதின் சின்னங்களாகும்.
எல்லோரும் ஒன்று படுங்கள். நான் இது காறும் சொல்லிய வற்றில் கருத்து வேற்றுமை இருக்கலாம். கொள்ளத் தக்கனவற்றைக் கொண்டு தள்ளத்தக்கன தள்ளுமின்.
------------
4. வள்ளலார் திருவுள்ளம்
(சென்னை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் 125-வது பிறந்த நாள் விழாவில் ஆற்றிய உரை)
சகோதரிகளே! சகோதரர்களே!!
யான் “வள்ளலார் திருவுள்ளம் " என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டிருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. மேலுலக இன்பத்திற்குப் பயன்படுவதா வாழ்க்கை? தற்கால உலகவர்ழ்க்கைக்குப் பயன்படுவதுதான் உண்மையான வாழ்க்கையாகும். அரிசிப் பஞ்சம் தற்சமயம் தாண்டவமாடு கிறது. ஒரு பணக்காரர் தன் வீட்டில் ஆயிரம் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைப்பதுதான் முதலாளித் துவம். இதைகாரல் மார்க்ஸ் வெறுத்தார். நாமும் தான் வெறுக்கிறோம். நாடு என்பது எவ்வாறிருக்க வேண்டும்? இதற்கு ஆங்கில அறிஞரான மாலடோ அவர்கள் :
"நோயாளிகளை அதிகமாகப் பெற்றது நாடாகாது.
சிறைகளை அதிகமாகக் கொண்டது நாடாகாது.
வைத்திய சாலைகளை வெகுவாக உடையது நாடாகாது.
பெண் உரிமையைக் குலைப்பது நாடாகாது.
ஏழை மக்களைத் துன்புறுத்துவது நாடாகாது."
என்றெல்லாம் கூறுகிறார். தீய ஒழுக்கங்களால் நோய் வருகிறது. நோய் தீர்க்கும் மருந்தை நமது அருட்சுடர் வள்ளலார் வெகு அழகாகக் கூறியுள்ளார். அவரை ஒரு பெரிய டாக்டர் என்றே சொல்லலாம்.
வள்ளலார் நாட்டிலே அருளாட்சி காண விரும்பினார். ஆகவே 'கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக' என்றார். 'அருணயந்த நன்மார்க்கர் ஆள்க' என்று அடுத்தபடியே ஆள்வோரையும் கூறினார். அவர் எந்த மாதிரியான அரசைச் சொன்னார்? அரசற்ற அரசை, போலீஸ்காரன் இல்லாத அரசை, கள்ள மார்க்கட் கலவாத அரசைச் சொன்னார். அவ்வாறு அவர் காண விரும்பிய அருளாட்சி வருமா? வரும். ஐந்து ஆண்டிலே வரும் என்று சிலர் சொல்லுகிறார்கள். பத்து ஆண்டிலே கட்டாயம் வரும் என்று நான் சொல்லுகிறேன்.
பாரதியாரைப் புதுநெறி காட்டிய புலவன் என்று உலகம் இன்று போற்றுகிறது. அந்த பாரதியார் உயிராயிருந்தபோது பத்து ரூபாய்க்குப் பட்டபாடு எனக்குத் தெரியும். இப்பொழுது பத்து லட்சம் வேண்டுமானாலும் அவருக்குக் கிடைக்கிறது. ஆடம்பரமான வெளித் தோற்றத்தை அவர் விரும்பவில்லை- ஒருக்காலும் விரும்பவே மாட்டார். இப்போது பாரதியார் சொன்னதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளலார் சொல்லி விட்டார். வள்ளலார் சொன்ன சிவம் எது?
'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்குங் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே
என்னரசே யான் புகலும் இசையுமணிந் தருளே.''
என்றவாறு எல்லார்க்கும் பொதுவான சிவமே வள்ளலார் கண்ட சிவம். ஒரு சிலரைக் கண்டு கோயிலின் உள்ளே வராதே! சாமி அருகில் போகாதே என்று சில தீட்சதர்கள் இன்றும் கூறுகிறார்கள். அவர்களே 'செட்டியாரா! ஐந்து ரூபாய் தட்சணையா! வாங்க வாங்க' என்று உபசரித்து அழைக்கும் இடத்திலா சிவம் இருக்கும்? ஒருக்காலும் இருக்காது, இருக்காது என்பதை நான் அறுதியிட்டுக் கூறுவேன்.
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் சிவம் அல்லவா நம் சிவம்! கடவுள் இல்லை என்று சொல்பவரையும் மதிப்பவரன்றோ நம் சிவம். நாஸ்திகத்தைப் பரப்பும் ஆசிரியர்களை நீக்கவேண்டு மென்று புதுச் சட்டம் ஒன்று பிறந்திருக்கிறது. சட்டத்தால் தடுப்பது அறியாமை-அநாகரிகம் என்பேன். சட்டம் என்றாலேயே எதையும் வெல்ல முடியாது. இன்று ஆஸ்திக ஆட்சி சட்டத்தால் தடுக்கிறது. நாளை நாஸ்திக ஆட்சி வந்தால் ஆஸ்திகம் கூடாது என்று சட்டம் போடுகிறது. இது தவறு. கடவுள் இல்லை யென்றால் காட்டவேண்டும். சயன்ஸ் மூலமாகக் காட்டலாமே! திருநீற்றில் இருக்கிற நன்மையை எடுத்துச் சொல்லலாமே. குங்குமத்தில் இருக்கிற குணத்தை எடுத்துச் சொல்லலாமே. நாட்டில் சட்டமே கூடாது என்பது என் கருத்து. ஏழையைக் கண்டு தீட்சதர் வெறுக் கிறார். ஏழையை நடராஜாவிடம் நெருங்காதபடி செய்கிறார். பொதுவுடைமையாகிய நடராஜா அப்படி யில்லையே! அவர் எங்கும் உள்ளாரே! வள்ளலார் கண்டது தீட்சதருடன் இருக்கும் நடராஜா அல்ல. அவர் கண்டது பொதுவுடைமை நடராஜா வன்றே !
"மழவுக்கு மொருபிடிசோ றளிப்பதன்றி
யிருபிடியூண் வழங்க லிங்கே
உழவுக்கு முதல் குறையு மெனவளர்த்தங்கு
அவற்றையெலா மோகோ பேயின்
விழவுக்கும் புலாலுண்ணும் விருந்துக்கும்
மருந்துக்கு மெலிந்து மாண்டார்
இழவுக்கு மிடர்கொடுங்கோ லிறைவரிக்குங்
கொடுத்திழப்பா ரென்னே யென்னே.”
இன்றைய நாட்டிலே உணவுப் பஞ்சமும் உடைப் பஞ்சமும் தாண்டவமாடும் காலத்திலே நம்மனோர் செய்கின்ற தடபுடல் உற்சவத்தைக் கண்டே நம் வள்ளலார் மேற்கண்ட பாடலைப் பாடினார் போலும். இரு பிடியூண் வழங்கினால் உழவுக்கு முதல் குறையு மென்று வளர்த்த பொருளை-கள்ள மார்க்கட்டு காசை-பேயின் விழவுக்கு வீணாக்குகின்றனர். தங்க மயில்வாகனம், வெள்ளி ரிஷபம், புஷ்ப விமானம், பொய்க்கால் குதிரை, மேளக் கச்சேரி, நாட்டியக் கச்சேரி, வாண வேடிக்கை முதலான வற்றிற்கு பணத்தைப் பாழாக்குகின்றனர். இவை யெல்லாம் பேயின் விழாவல்லாமல் வேறென்ன? உயிர்க்கிரங்கும் கடவுள் உண்மையாக இவற்றை யெல்லாம் கண்டு உளம் பூரிப்பாரா? அவ்வாறு அவரது உள்ளம் இவற்றைக் கண்டு குளிருமாயின் அது பேயல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்?
இங்ஙனமே புலாலுண்ணும் விருந்துக்கும், மாண்டார் இழவுக்கும், கொடுங்கோல் இறைவரிக்கும் பணம் செலவிடப்படுவதையும் கண்டு உள்ளம் வெதும்புகின்றார் வள்ளலார். அறிவு விளங்க வேண்டிய காலத்தில் அந்தக் காலத்தில் ஒருவர் தோன்றுகிறார். அவரைப் பெரியவர் என்கிறோம்.
சன்மார்க்கம் வேண்டிய காலத்தில் அருட்சுடர் வள்ளலார் அவர்கள் தோன்றி அதற்கு வழிகாட்டி யுள்ளார்கள். ஆகவே வள்ளற் பெருமானார் வாழ்க என்று அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்று வோமாக.
-----------------
5. உயிர்த்தொண்டு
(சென்னை தொண்டைமண்டலம் துளுவவேளாளர் பாட சாலையில் ஆற்றிய சொற்பொழிவு)
மாணவ மணிகளே,
நீங்கள் வாழ்கின்ற காலம் இந்தக்காலமா? அந்தக்காலமா? எந்தக்காலம்? நீங்கள் வாழ்கின்ற காலம் நெருக்கடியான காலம். உடை கிடைப்பது, சோறு கிடைப்பது அரிதாயிருக்கிற காலம். சில மாணாக்கர்கள் பரிட்சை இல்லாத காலம் வருமா? என்றுகூட எண்ணலாம் பரிட்சை ஒழிந்தால் ஒரு பெரிய சனியன் ஒழிந்தது என்று எண்ணும் மாணாக் கரும் இருக்கலாம்.
மாணவ மணிகளின் உடல் பெரிதும் எலும்பும் தோலுமாகவே இருக்கக் காண்கிறேன். மாணவர்களின் உடல் நன்றாக இருக்கவேண்டும். எலும்பும் தோலுமாய் இருத்தல் கூடாது. அழகை விரும்பாத மாணாக்கர்கள் உண்டோ ? அழகை விரும்பாதார், யார்? தெய்வம் என்றால் அழகு எனலாம்.
அந்தக்காலம் போற்றற்கு உரியதா? இந்தக் காலம் போற்றற் குரியதா? வயது முதிர்ந்த என்னைப் போன்றோர் நாட்டுப் புற அழகைத்தான் பாராட்டிப் பேசுவார்கள். நாட்டுப் புறங்களிலே உள்ள சிறுவர்கள் அழகிய கட்டிடங்களிலே கல்வி பயில்வதில்லை. கிராமத்திலுள்ள சிறுவர்கள் கல்வி அறிவிலே சிறந்தவர்களாக இல்லா திருக்கலாம். ஆனால் உடலோம்பும் திறத்திலே அவர்கள் வல்லவர்கள். மாடு மேய்த்து, ஏர் உழுது, ஏற்றம் இறைத்து அழகிய உடலைப் பெற்றிருக்கிறார்கள் நாட்டுப்புறத்து மக்கள். உடலோம்பும் திறத்தினை அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவற்றை அவர்கள் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கலா சாலைக்கு வந்து மாணவர்களின் உடலைப் பரிசோதிக்கும் டாக்டர் 100-க்கு 75 பேர் காசநோயால் எலும்புருக்கி நோயால் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்றும் இவர்களின் நுரையீரல் சரியாயில்லை என்றும் அறிக்கையைத் தந்து செல்வார்.
கிராமங்களிலே உள்ள சிறுவர்களைப் பற்றி டாக்டர்கள் அம்மாதிரியான அறிக்கையைத் தர மாட்டார்கள். யுனானி வைத்தியரிடம் சென்றால் அல்வா தருவார். தமிழ் வைத்தியரிடம் சென்றால் லேகியம் தருவார். டாக்டரிடம் சென்றால் டானிக் தருவார்.
உடல் உரம் பெறுவான் வேண்டிப் பெரும்பாலோர் டானிக்தான் சாப்பிடுகிறார்கள். இந்த டானிக் மூன்று வேளைகள் முறையாகச் சாப்பிட்டு விட்டு, பாதம் பருப்பு, பால் இவற்றோடு ஆறு வேளை ஓட்டலில் காபி, டீ சாப்பிட்டு விட்டால் உடலில் பலமேறிவிடும் என்று பலர் எண்ணுகிறார்கள் இது தவறு.
இன்றுள்ள இந்துக்களின் உடம்பைக் காட்டி லும், மிகப் பழைய காலத்தில் உள்ள இந்துக்களின் உடம்பு நல்ல நிலையில் தான் இருந்தது.
"வாழ்க்கை நிலையாமையை" அறிவுறுத்தி, விரதமிருங்கள், நோன்பிருங்கள், செத்துப்போங்கள் என்று சொல்வதைக் கண்டித்து அந்தக் காலத்து மக்கள் மட்டுமல்ல இந்தக் காலத்துத் தமிழ்ப் பண்டிதர்கள் கூடப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அது தவறு. அந்தக் காலத்து மக்களல்ல இப்படி எழுதிவைத்தது. மத்தியில் வந்த கூட்டத்தார்தான் வாழ்க்கை நிலையாமையைப் பற்றி எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
உங்கு என்ற சொல் இப்பொழுது வழக்கில் இல்லை. உங்கு என்றால் மத்தியில் என்று பொருள்.
உலகத்தில் உயர்ந்த பொருள் எது? சூரிய வெளிச்சம். ஐன்ஸ்டன் என்ற பெரியார் "நாளுக்கு நாள் சூரிய வெளிச்சத்தின் சக்தி அதிக மாகிக்கொண்டே போகிறது" என்று சொல்லுகிறார். பசிய மரங்களில் உள்ள இலைகளின் மேல் படர்ந்து அதன் வாயிலாக நம்மீது படும் சூரிய வெளிச்சத்திற்கு அதிக சக்தி உண்டு. இம்முறையில் சூரிய வெளிச்சம் நம்மீது பட்டால் அழகொழுகும் முருகனாய் ஏன் இருக்கமுடியாது?
டாக்டர் கூன் என்ற பெரியார் சூரிய வெளிச்சம் நம்மீது படுவதை நன் முறையில் பயன் படுத்திக் கொள்வதற்காகத் தலையில் பசுமையான நிறமுள்ள துணிகளைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார். சூரிய வெளிச்சத்திலே உள்ள சக்தியை அறியாமல் இயற்கை வழியிலே நடவாமல் லேகியத்தையும், டானிக்கையும் சாப்பிடுவதால் பயன் என்ன? உடலுக்கு நல்ல காற்று ஏராளமாக வேண்டும். உமிழும்படியான காற்றை ஒரு வேளை உள்ளே ஈர்த்து நுரையீரலிலே நிரப்பினால் கறுப்புத் தெரியாது உடல் சிவந்த மேனியுடன் இருக்கும். ரோமம் கறுத்திடும்.
கழவர்களுக்கு இருக்கும் வெள்ளை மயிரைக் கண்டுவிட்டு சில இளைஞர்கள் கேலி செய்வது கண்டு அதற்காக சிலர் கறுப்புமையை அதன்மீது பூசிக்கொள்வதுண்டு. தவறி கைப் பட்டாலும், தண்ணீர் பட்டாலும் அந்தக்கறுமை மறைந்து வெண்மை தோன்றும். அதைக் கண்டோர் பின்னும் நகைப்பர். ஆதலின் மைபோடுதல் கூடாது.
நான்கு மணி நேரம் வரை நீரிலேயே இருந்து நல்ல பலன்களைப் பெற்றதாக ஒரு ஆங்கிலப் பெண்மணி சொல்லுகிறார். நீரிலும் ஓர் ஒளி உண்டு.
நல்ல காற்றிலே உலவி, நல்ல தண்ணீரை அருந்தி, சூரிய வெளிச்சம் நம் உடலிலே நன்கு படியும்படி வாழ்வோமானால் எந்த நோயும் வாராது.
தண்ணீரில் அடிக்கடி மூழ்கி நல்ல பயன்களைப் பெற்று 101 வயதுவரை இருந்த அம்மையாரைப் பார்த்து அவருடைய பேரன், 101 வயதிலே இளம் பெண்ணைப் போல் இருக்கிறாயே என்று கேலி செய்வானாம்.
நீங்கள் பெரியவர்களானால் எப்படி வாழ்வது? How to Live - என்ற ஆங்கில நூலை அவசியம் படிக்கவேண்டும். நாகரிகத்துடன் நாம் அரிசிச் சோறு சாப்பிடுவதாகச் சொல்லப்படுகிறதே அதில் நாகரிகமே இல்லை எனலாம். தவிட்டைப் போக்கி (Polished Rice) வெண்ணிற அரிசியைச் சாப்பிடுகிறோம். தீட்டிய நல்ல வெள்ளைப் பச்சரி லெய உணவாக்கி பூனை, நாயிடம் வைத்துப் பாருங்கள். மோப்பம் பிடித்துப் பார்த்து அது தொடவே தொடாது. பூனையும் நாயும் தொடாத அரிசியைத் தான் இன்று நாம் உண்கிறோம்.
இது போன்ற அரிசிகளைச் சாப்பிடுவதால் தான் குடல் வாதம் போன்ற நோய்கள் வருகின்றன. ஜபானிலே அரிசியைத் தீட்டுவதற் கென்றே சில சட்டங்கள் அமைத்திருக்கிறார்கள். நன்கு தீட்டப்பொத அரிசியில்தான் வைடமின் இருக்கிறது. கீரை தின்பதிலே நல்ல சத்துண்டு. கீரைகள் தின்பவனைப் பார்த்து கீரை தின்னி என்று கேலி செய்கிறார்கள். அது தவறு. இளம் மாணாக்கர்களாகிய நீங்கள் நல்ல கீரைகளை நாள் தோறும் புசிக்கவேண்டும்.
'செந்தயிர் கண்டம் கண்டமாக' என்று கம்பன் சொல்லுகிறான். இப்பொழுது பலர் தயிர் சாப்பிட்டால் அஜீர்ணம் வருகிறதென்று சொல்லுகிறார்கள். அது தவறான கருத்து. எலும்புகளுக்கு நல்ல பலனைத் தருவது தயிர் ஒன்றே. பழங்காலத் திலே உடலோம்பல் மிகவும் சிறந்திருந்தது. அதை நீங்கள் கைக்கொள்ள வேண்டும்.
காலம் செல்லச் செல்ல இந்த ஜாதி, மதம், நிறம் போய்விடும். இதற்காக எவ்வளவோ சண்டைகள். ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் இதற்காகச் சண்டை. இந்தக் காலத்திலே உலகத்தோடு தொடர்பில்லாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது. ஒரு பொருளை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்தால் உலகத் தொடர்பு இல்லாமல் இராது.
என் ஜாதி, என் மதம், என்ற வெறி ஒழிய வேண்டும். இவை ஒழியும் காலம் வந்துகொண்டே இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் "உலகம் வாழ்க" என்று சொல்லவேண்டும். உலகம் வாழ வேண்டும் என எண்ணி வழிபட வேண்டும். "உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு" என்று திருமுருகாற்றுப் படையில் வருகிறது. உலகு உலகு என்ற அடியை முதலில் வைத்துப் பாடுகின்ற பெருமை பழம் புலவர்களுக்கு உண்டு.
சில மக்களுடைய எண்ணம் கேவலம் இழிந்த நிலையிலே என் ஜாதி, என் மதம் என்று இருமாப் புடன் செல்கிறது.
இந்தக் காலத்திலே மக்களுடைய குறிக்கோள் எங்கே போகிறது? பதவி, பதவி, பதவிமேல்தான் போகிறது. கவுன்சிலராக வேண்டும், மேயராக வேண்டும், மந்திரியாக வேண்டும், பின்னர் கவர்னராக வேண்டும், ராஜாவாக வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள். தலைமை, பதவி இவைகளிலே தான் பலர் ஆசை வைக்கிறார்கள்.
'Scout Movement' என்ற சாரணர் இயக்கம் என்ன சொல்கிறது? (Service, Service) தொண்டு , தொண்டு, ஒருவருக்கொருவர் தொண்டு செய்யுங்கள் என்று சொல்லுகிறது. இறைவனை மட்டுமல்ல; மக்களையும் தொண்டால் வழிபடுங்கள். எல்லோரும் தலைவராக வேண்டுமென்றால் சண்டைதான். பிற்காலத்தை உண்டாக்கப் போகிற நீங்கள் தொண்டு செய்யுங்கள். மேயராக வேண்டும், மந்திரியாக வேண்டும் என்று ஆசை வைக்காதீர்கள். மேயராகவும், மந்திரியாகவும் வேண்டாமென்று நான் சொல்லவில்லை. நான் கண்டிப்பது பதவிப் பித்தை .... அந்தப் பதவி ஆசையைத்தான்.
அதிகாரம் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டு, அதிகாரத்தைக் கொண்டு துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவதும், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து கொண்டு பெரும் பதவியில் இருக்கிறோம் என்ற ஆணவ அதிகாரத் தோரணையில் இறுமாப்புடன் கட்டளை-யிடுவதும் கூடாது. அதிகாரத்திலும் பண்பும், பணிவும் இருக்கவேண்டும். இன்றேல் அதிகாரமும் நிலைக்காது. தொண்டு செய்யவும் இயலாது. நீங்கள் செய்யப்போகும் தொண்டால் தான் உலகம் பண்படைய வேண்டும்.
''அப்பா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கொல்லாநா னன்பு செயல் வேண்டும்
எப்பாரு மெப்பதமு மெங்கணு நான் சென்றே
எந்தைநின தருட்புகழை யியம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேற் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க வருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினு நீ பொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே."
என்று இராமலிங்கர் சொல்லியுள்ளார். நீங்கள் அதை நினைத்து சாதி, மதம் கடந்து தொண்டு புரிய வேண்டும். உலகத்தோடு ஒத்துத் தொண்டு செய்ய வேண்டும்.
நீண்ட நாட்கள் உயிர் வாழவேண்டுமென்று கவிகள் கனவு கண்டார்கள். அந்தக் கனவை நினைவாக்கி நீங்களெல்லோரும் நீண்ட நாட்கள் வாழவேண்டும். நீண்ட நாட்கள் உயிர்த்தொண்டு செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
-----------
6. வ. உ. சிதம்பரனார்
[9-11-47 ஞாயிறன்று சென்னை செயின்ட்மேரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக் கழக மகாநாட்டில் தோழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.)
நான் வ. உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள் படத்தைத் திறப்பேன் என்றார் தலைவர். இத்தனிப்பேற்றினை வழங்கிய கழகத்தாருக்கும் உங்களுக்கும் என் நன்றி உரியதாகுக. நான் இங்கு எக்கட்சியின் சார்பிலும் வரவில்லை, நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல.
சிலர் நினைக்கிறார்கள், திரு. வி. க-வுக்கு ஒரு கட்சி கிடையாது, ஒரு கொள்கை கிடையாது, எங்கும் போவார் எவர் படத்தையும் திறப்பார் என்று. எனக்குக் கொள்கையுண்டு. என் கொள்கை என் கையில் இருக்கிறது. ஏழை மக்கள் கையில் இருக்கிறது. பாட்டாளி மக்கள் கையில் இருக்கிறது. நான் சாதி, மத, நிற, மொழி, நாடு முதலிய எல்லா பேதங்களையும் கடந்தவன். பொது மக்களின் சுக வாழ்வுதான் எனது குறிக்கோள். ஒவ்வொரு மனி தனையும் சுயேச்சையுடன் வாழ உயர்த்த எக்கட்சி பாடுபட்டாலும், அங்கெல்லாம் நான் போவேன், வருவேன், பாடுபடுவேன்.
நான் காங்கிரசில் மிகத்தொண்டு செய்தவன். நாட்டில் காங்கிரஸ் வீழ்ந்துபட்ட காலத்திலெல்லாம் தொண்டு செய்தவன். பின் ஏன் காங்கிரசைவிட்டு விலகினேன்? கொள்கையில் வேறுபாடா? முரண்பாடா? அல்ல, அல்ல, அல்ல! காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு அடிமையாக இருக்க விரும்பவில்லை யென்ற காரணந்தான். காங்கிரசின் பாசிசக் கொள்கைகளையும், பிற்போக்கான சுயநலப் போக்கையும் கண்டித்தே வெளியேறினேன்.
பரந்த நோக்குடன் காங்கிரசில் பாடுபட்டு உழைத்த எனது நண்பர் பெரியார் ராமசாமியும் விலகினார். ஏன்? இதே காரணங்களால்தான். வ. உ. சிதம்பரனாரும் வெளியேறினார். ஏன்? உரிமை, உரிமை, உரிமை. மறுக்கப்பட்டது. பிரிந்தோம். தனி மனிதனின் உரிமையை காக்கவே நாங்கள் பிரிந்தோம் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் பாசிசக் கொடுமையை வெறுத்தே வெளி யேறினோம்.
காங்கிரஸ் பதவி வேட்டையாடும் சுயநலவாதிகளின் பிடியிலே சிக்கிக் கொண்டுள்ளது. காங்கிரஸ் பாசிசப் போக்குடன் செல்கிறதா, இல்லையா என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரையே கேட்கிறேன். இல்லையென்று திரு காமராஜர் கூறு வாரா? 'சமதர்மம்தான் காங்கிரஸ் கொள்கை' என்று வாய்தவறி காமராஜ் அவர்கள் கூறி விட்டார். அது அல்ல, அல்ல, அல்ல என்று நான் கூறுகிறேன். வெகு சுலபமாக சொல்லி விட்டார் இப்படி. இவ்வளவு வயதான எனது அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறுகிறேன். காங்கிரஸ் சமதர்மத்தை நாட்டுவது எவ்வளவு கடினமென்று. காமராஜ் அவர்கள் அதை ஏற்று நடத்துவாரானால் அவருக்குப் பின் தொண்டனுக்குத் தொண்டனாக பணி செய்யத் தயார்.
சுயநலவாதிகளிடம் சிக்கிக்கொள்ளும் எக்கட்சியையும் அந்தப் பிற்போக்காளர்களிட-மிருந்து மீட்கவேண்டும். அன்றைய வ. உ. சி. இதே நோக்கத்துடன் தான் காங்கிரசில் போராடினார்.
வ. உ. சி. அவர்கள் சைவர். ஆனால் வடநாட்டுச் சைவத்தைப் பின்பற்றுகின்ற திருவாவடு துறை, தருமபுரம் ஆகிய மடத்தார் போற்றுகின்ற சைவமல்ல. சாதி, சமய வழக்குகள் தென்னாட்டுச் சைவத்தில் இல்லை, எவ்வுயிரிடத்தும் உள்பாயிரு, எல்லோரும் ஒரு குலம் என்பதே உ. சி. யின் கொள்கை. தென்னாட்டு மகாஜன சபை உண்மையாக வடநாட்டுக் காங்கிரசை எதிர்ப்பதற்காக ஏற்பட்டது. ஆனால் அது இன்றைக்கு அக்கொள்கைக்கு முரண்பட்டிருக்கிறது.
வ. உ. சி-க்கு காந்தியத்தில் நம்பிக்கை இல்லை . அவர் கதர் கட்டமாட்டார். 'கதரில் நம்பிக்கை பில்லை' யென்று பச்சையாக சொல்லுவார்.
அவர் அறவாள் வைத்திருப்பார். அது தான் அறிவு நிறைந்த திருக்குறள் வாள். திருக்குறளின் உண்மைகளை அறியாத துர்ப்பாக்கியத்தால்தான் இத் திருநாடு அதன் சிறப்பை இழந்தது.
வட நாட்டாரால் திணிக்கப்பட்ட போலித் தியாகம் தமிழர்களின் நாகரிகத்தையும் கலைப்பண்பையும் பாழ்படுத்திவிட்டது. ஒன்றின்மீது அளவற்ற பைத்தியம் பிடித்தலைவது சகஜமாய் விட்டது. உதாரணமாக நமது மாகாணத்தின் மந்திரிகளில் ஒருவர் தமிழர்களின் கலைப்பொக்கிஷமான குறளிலிருந்து காதல், மண வாழ்க்கை ஆகிய பகுதிகளை எடுத்துவிடவேண்டும் என்றுகூட சொல்லும் அளவுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. தமிழர்களின் பண்பு நமது மந்திரியாருக்குத் தெரியாதென்று தான் நினைக்கிறேன்!
வ. உ.சி யின் தொண்டினைப் பற்றிப் பேசப் பேச நம் நாட்டில் தன்னம்பிக்கை யுண்டாகும்.. அப்போது நேருவின் கண்காணிப்பு தேவையில் பட்டேலின் உதவி வேண்டியதில்லை. (நீ கைத்தட்டல்.)
தமிழ்நாடு தமிழருக்கானால், ஆந்திரநாடு பிரியும், மளையாள நாடு பிரியும், கன்னடநாடு பிரியும் எல்லாம் தனித்தனியாகப் பிரியும். பிரிந்த சில மாதத்திற்குள் என்ன ஏற்படும்?
ஆந்திரர்கள் அச்ச தெலுங்கு காவல (சுத்த தெலுங்குவேண்டும்) என்பார்கள். மளையாளிகளும் அச்ச மலையாளம் வேண்டும் என்பார்கள். கன்னடியர்களும் அப்படியே. அப்பொழுது சுத்த தெலுங் கில் 100-க்கு 90 தமிழ்ச்சொற்களாக இருக்கும். சுத்த மலையாளத்தில் 100-க்கு 95 தமிழாகும். அப்படியே கன்னடத்திலும் அமையும். அதுபோது மொழியால் எல்லோரும் ஓர் இனம் என்பதை உணர்வார்கள். இன்பத்தால் ஒன்றென்று அணைவர்.
எனவே இப்பொழுது தமிழ்நாடு, ஆந்திர நாடு, மளையாள நாடு, அதற்குப் பிறகு என்ன? நீங்களே சொல்லுங்கள்? என்று மக்களைப் பார்த் துக் கேட்டார். கூடியிருந்தோரில் பெரும்பகுதியினர் "திராவிட நாடு திராவிடருக்கே!" என்று பெரும் ஆரவாரம் செய்தனர்.
ஆம்! அடுத்து, திராவிட நாடு திராவிடருக்கே ஆகும். (மக்கள் நெடுநேரம் கைதட்டல்.)
இப்பொழுது வடவேங்கடம் எல்லை. பிறகு இன்னும் விரியும். மராட்டியரும் கண்விழிப்பர். அவர்களும் மொழியால் திராவிடர், இனத்தால் திராவிடர் என்பதை உணர்வர். இப்பொழுதும் அவர்கள் இருப்பிடத்தை தட்சிணம் என்றுதான் சொல்லிக்கொள்கின்றனர்.
அப்போது நமக்கு வடக்கு எல்லை வடவேங்கடம் அல்ல, விந்தியமலையாக விளங்கும். இதுதான் முடிவு. தமிழ்நாடு தமிழருக்கே! திராவிடநாடு திராவிடருக்கே! என்பது (நீண்ட கைதட்டல்).
இதை அடைவது தான் தமிழனுக்குப் பெருமை. வடநாட்டுப் பாசிசத்தைத் தமிழன் இன்று தாங்கி, திணறவேண்டியிருக்கிறது. (கை தட்டல்) இதையே நான் கடலூர் மாநாட்டிலும் கூறினேன்.
சாதி, மத, உயர்வுதாழ்வுகளை யொழித்த சமதர்மமே எனது கொள்கை.
வெள்ளையனுக்குத் துணையாக இருந்து கொண்டு வடநாட்டுப் பாசிசம் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. அதற்கு இடம்தராதே, தராதே, தராதே இந்த வடநாட்டுப் பாசிசத்தை யொழிப்பது தான், எந்தக் கழகமாயிருந்தாலும், அக்கழகத் தின் முதல் வேலையாக இருக்கவேண்டும்.
சென்னை மாகாண ஆட்சியை ஆந்திர நாட் டுக்கு வேறு தமிழ் நாட்டுக்கு வேறாகப் பிரிக்க கவர்னர் ஜெனரல் முயற்சிப்பதாகக் கூறப்படு கிறது. இதை நம்பவேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன். இந்த முயற்சிக்குக் காரணம் கவர்னர் ஜெனரல் அல்லவே அல்ல. காங்கிரசை ஆட்டிப் படைத்து நாட்டிலே சர்வாதிகார ஆட்சி செலுத்தும் வேறொருவரே இதற்குக் காரணம்.
உடனடியாகப் போரிடவேண்டியது ஆந்திரர்களோடோ, அல்லது மற்ற நம் சகோதரர்களோடோ அல்லவே அல்ல. பாசிசப் படேலிசத்தை முறியடிப்பதே நம்மை முன்னோக்கியுள்ள மாபெரும் பணியாகும். (பெரும் கைதட்டல்).
தமிழ் மக்கள் உரிமை உணர்வு கொண்டவர்கள். பாசீசம் எந்த வடிவிலே வந்தாலும் விரட்டத் தானே செய்வர் எனவே ஜனநாயகம் தழைக்க, சமதர்மம் சநம் நாட்டு விடுதலைக்குப் பாடுபடுவதே நமது கடமையாகும்! ஓங்குக விடுதலை!
---------------
This file was last updated on 20 Jan. 2021.
Feel free to send the corrections to the webmaster.