ஒளவையார் அருளிய நல்வழி
சுந்தர சண்முகனார் எழுதிய நயஉரை
naya urai for auvaiyar's nalvazi
by cuntara caNmukanAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஒளவையார் அருளிய நல்வழி
சுந்தர சண்முகனார் எழுதிய நயஉரை
Source:
நல்வழி நயஉரை
ஒளவையார் அருளிய நல்வழியும் சுந்தர சண்முகனார் எழுதிய உரையும்
திருமண அன்பளிப்பு நூல்
திருமணச் செல்வர்கள் : . முருகவேள், M.A., பா. அன்ப ரசி, M.Sc.,
திருமண நாள் : 6-6-1993
நிகழிடம் : புதுச்சேரி
வெளியீட்டகம்: புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்
8 (38), வேங்கட நகர் புதுச்சேரி - 11
-----------
ஔவையார் அருளிய நல்வழி - நயஉரை
கடவுள் வாழ்த்து
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
அழகு செய்கின்ற உயர்ந்த யானை முகத்தை உடைய தூய மாணிக்கப் பிள்ளையாரே ! பாலும் தெளிந்த தேனும் வெல்லப் பாகும் பருப்பும் ஆகிய இந்த நான்கு பொருள்களையும் ஒன்று கூட்டிப் பதம் செய்து நான் உனக்குப் படைப்பேன். சங்கம் வளர்த்த இயல் இசை
கூத்து என்னும் மூன்று தமிழையும் நீ எனக்கு அருளுக.
------------
புண்ணியமாம் பாவம்போம் போன நாட் செய்த அவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும்
தீதொழிய நன்மை செயல் 1
நல்வினை ஆகவேண்டியது - தீவினை போகக் கடவது. போன பிறவியில் செய்த அந்த வினைகள், மண்ணுலகில் வந்து பிறந்தவர்க்கு முதல் பொருள் (மூலதனம்) ஆகும். எண்ணிப் பார்க்கின் எந்த மதத்தார் சொல்வதும் இதைத் தவிர வேறில்லை. ஆதலின் தீவினையை நீக்கி நல்வினையே செய்க. (1)
---------
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி 2
சொல்லப் போனால், இரண்டு குலங்களைத் தவிர வேறு இல்லை. உலகில் நீதி தவறாத அறநெறி முறைப்படிப் பிறர்க்கு உதவுபவர் உயர் குலத்தார் - உதவாதவர் தாழ் குலத்தார் - இது பட்டறிந்த அனுபவத்தில் அறிந்தபடி யாகும். (2)
-------------
இடும்பைக் கிடும்பை இயலுடம்பி தன்றே
இடும் பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழின் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு 3
இருக்கும் இந்த உடம்பு துன்பத்தை இட்டு வைக்கும் பை அல்லவா? இவ்வாறு இடும் பொய்யுடலை மெய்யானது என எண்ணாமல், விரைந்து பிறர்க்கு நன்மை செய்க ஊழின்படி ஏற்பட்ட பெரிய துன்ப நோயிலிருந்து விடுபட்டவரை ஏற்கும் வீடுபேறு (மோட்சம்) அறம் உண்டாயின் கிடைக்கும். (3)
---------------
எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்கால மாகும் அவர்க்கு 4
நல்வினைகள் வந்து சேர்ந்தபோ தல்லாமல், யாருக்கும், ஒரு செயலைத் திட்டமிட்டுச் செய்தல் இயலாது. அவர்கட்கே , ஆகும் காலம் வந்துவிடின், கண் இல்லாத குருடன் வீசி அடித்த அளவு கோலுக்குத் தப்பித்தவறி மாங்காய் விழுவதுபோல் எண்ணியது நடைபெறும். (4)
--------------
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றால் போகா-இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில் 5
எவ்வளவு முயன்று தேடினும் கிடைப்பதற்கு அரிய நன்மைகள் கிடைக்கமாட்டா. வந்து சேரக் கூடியவற்றை, வேண்டா - போங்கள் என்றாலும் போகமாட்டா. ஆனால், கிடந்து ஏக்கமுற்று மனம் புண்ணாக நெடுநாள் - நெடுநேரம் கற்பனையாக எண்ணிக் கிடைக்கப் பெறாமல் அழிந்து போவதே மக்கள் செயலாக உள்ளது. (5)
------------
உள்ள தொழிய ஒருவர்க் கொருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு 6
உலகில் அவரவர்க்குக் கொடுத்து வைத்துள்ள இன்பம் தவிர மேற்கொண்டு பெறக் கிடைக்கா . மிக்க நீரை உடைய கடல் கடந்து போய்ச் செயலாற்றி மீண்டு வரினும் மனித உடம்போடு உயிர்கட்கு மேற்கொண்டு பயன் என்ன ! (6)
----------
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போல்
பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு 7
எந்த வகையில் எண்ணிப் பார்க்கினும், இந்த உடம்பு பொல்லாத புழுக்கள் நிறைந்ததும் நோய்கள் உள்ளதுமான அற்பக் குடிசையாகும். நல்லறிஞர்கள் இதை அறிந்திருப்பதனால், தண்ணீரில் ஒட்டாமல் தாமரை இலை பிரிந்திருப்பது போல் இவ்வுலகோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பர். பிறரோடு வீண் பேச்சுப் பேசார். (7)
----------
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம் 8
உலகோரே, கேளுங்கள் ! பொருள் குவிப்பதற்காக அளவற்ற முயற்சி செய்யினும் , ஊழ்வினை கூட்டும் அளவன்றி மேலும் நிரம்பச் சேராவாம். செல்வம் நிலையில்லாதது என்பதைத் தெளிவீராக. எனவே, தேட வேண்டிய செல்வம் நல்லறச் செயல்களே - அறிவீராக. (8)
------------
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து 9
ஆற்றில் வெள்ள நீர் அற்று மணல் கால் சுடும்படி உள்ள நாளிலும், ஆறு தனது ஊற்றுக் குழியில் பெருகும் நீரால் உலகமாந்தரை உட்கொள்ளச் செய்யும். அது போல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் ஏழையாய் ஆயிடினும், தம்மிடம் வந்து கேட்பவர்க்கு , மனம் ஒப்பி இல்லை என்னாது ஏதாவது உதவுவார். (9)
-------------
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென்று இட்டுண் டிரும் 10
.
உலகோரே! பல்லாண்டு காலமாக அழுது புரளினும் இறந்து போனவர்கள் திரும்ப வருவார்களா? - வரமாட்டார்கள். ஆதலின் அழ வேண்டா . நமக்கும் அதுவே செல்லும் வழியாகும். எனவே, நாம் இறக்கும்வரையும், நமக்கு என்ன கிடக்கிறது என்று எண்ணி , பிறர்க்கு உதவி செய்து உண்டு இருப்பீராக. (10)
--------------
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது 11
துன்பம் மிகுக்கும் எனது வயிறே! இல்லாதபோது ஒரு நாள் உணவை விடு என்றால் விடாது கேட்பாய்; உணவு நிரம்ப உள்ள போது இரண்டு நாளுக்கு வேண்டியதைச் சேர்த்து உண்டு கொள் என்றால் அதுவும் செய்யமாட்டாய்; எனவே, உன்னோடு காலம் தள்ளுதல் கடினம். (11)
-----------
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு 12
ஆற்றங் கரையில் உள்ள மரம்போல, அரசர் அறிய ஆரவாரமாக வாழ்ந்த பெருவாழ்வும் ஒரு காலத்தில் வீழ்ச்சி அடையலாம். உழவுத் தொழில் செய்து உணவு கொண்டு வாழ்வதற்கு ஒப்பான வேறு உயர்வு இல்லை. வேறு தொழிலுக்கு இடையூறு ஏற்படலாம். (12)
---------------
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர் ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல் 13
வளமான இவ்வுலகத்தில், மேன்மேலும் முன்னேறுப வரை யாரும் தடுக்க முடியாது. அது இருக்கட்டும். இறப்பவர்களை யாரும் நிறுத்தி வாழவைக்க முடியாது. இறந்து உயிர் வாழ்பவரையும் யாரும் இரவாமல் இருக்கச் செய்ய இயலாது. இது மெய். (13)
-----------
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும் 14
சொல்லப் போனால், ஒருவரிடம் இச்சக மொழிகள் பல பேசி வலிய வாங்கி உண்பது, ஐயம் (பிச்சை) எடுப்பதற்கு மூத்த அண்ணன் போன்ற மட்டமான வாழ்க்கையாகும். சிச்சீ! வயிறு வளர்ப்பதற்காக மானத்தை விடாமல் உயிரை விடுவது மிகவும் பொருத்தமாகும். (14)
-------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும் 15
'சிவாயநம' என்று உருவேற்றி இருப்பவர்க்கு எப்போதும் இடையூறு இல்லை. இந்த நல்வழியே அறிவுடைமையாகும். இது இல்லாத மற்றவை, விதிப்படி நேரும் அறிவு போன போக்காகும். (15)
-------------
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி 16
கடல் சூழ்ந்த இம் மண்ணுலகில், தண்ணீரின் தன்மை அது இருக்கும் நிலத்தின் அமைப்பாலும், உயர்ந்தவரின் உயர் பண்பு அவர் கொடுக்கும் கொடையாலும், கண்ணின் அழகு அழியாத அருள் பார்வையாலும், பெண்ணின் பெருமை கற்பு கெடாத உறுதியாலும் அருமை பெருமை உடையனவாய் அமைந்திருக்கும். (16)
-------------
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்-வையத்து
அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும் பானை பொங்குமோ மேல் 17
முன்பு செய்த தீவினை இருக்கும்போது, வீணே தெய்வத்தைத் திட்டுவதால், பெரிய செல்வ வாழ்வு வந்து விடாது. உலகில் பிறர்க்கு இடுவதால் பாவம் போகும் என அறிந்து அன்று இடாதவர்க்கு இன்று ஒன்றும் கிடைக்காது, வெறும் பானையில் எதுவும் மேலே பொங்கி வருவதில்லையே. (17)
-----------
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார் - மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணங் கொடுத்தாலும் தாம் 18
பெற்றோர், உடன் பிறந்தோர், தம் நாட்டார் - தம் ஊரார், தமக்கு உற்ற உறவினர், விரும்பிய நண்பர்கள் ஆகியோருக்கு உதவாத கருமிகள், வேறு பிறர் புண்ணாகும்படித் தம்மை அடித்தால் அவர்கட்குக் கொடுப்பார்கள். தம்மோடு தொடர்புடையவர்கள் தம் காலிலும் விழினும் கொடுக்க மாட்டார்கள். (18)
-------------
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம் 19
வயிற்றின் பசிக்கொடுமையால் ஒரு நாழி அரிசி பெற நாம், பிறருக்குத் தொண்டு (சேவை) செய்தும், ஓரிடம் சென்று யாசித்தும், மிக்க நீரையுடைய கடல் கடந்து அக்கரை நாடு சென்றும், பொய்யாக நடித்தும், அரசியல் நடத்தி ஆண்டும், பாட்டுப்பாடியும் ஆக இவ்வளவும் செய்து பாழான உடம்பை இயக்குகிறோம். (19)
------------
அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்கும்
கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும் 20
மார்பில் குவிந்த கொங்கையை விலைபகரும் விலைமாதரைக் கொண்டாடிக் கொடுக்கும் வாழ்க்கை, அம்மியைத் துணையாக உடம்பில் கட்டிக்கொண்டு ஆற்று வெள்ளத்தில் இறங்கிய செயலைப் போன்றதாகும். இச்செயல், இப்பிறவிக்கும் மறுபிறவிக்கும் கூட நல்ல தாகாது; பெரிய செல்வத்தை அழித்து, வறுமைக்கு விதை போட்டதாகும். (20)
--------------
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெல்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வரும்
திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
தரும் சிவந்த தாமரையாள் தான் 21
செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் (இலட்சுமி ), வஞ்சகம் இல்லாத தூயவர்கட்கு , நீர்வளம், சோலை நிழல் வளம், வயலில் நிறைந்த நெல்போர், நல்லபேர், உயர்ந்த புகழ் , நல்ல ஊர் வாழ்வு, வளரும் செல்வம், நிறைந்த வாழ்நாள் ஆகியவற்றை என்றைக்குமே தந்தருளுவாள். (21)
-------------
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின் யாரோ அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம் 22
பணத்தை அரும் பாடு பட்டு ஈட்டி யாருக்கும் பயன் படாதபடி மண்ணில் புதைத்து வைத்து நிலை கெட்டுப் போன மாந்தர்களே - கேளுங்கள் ! உடலாகிய கூட்டைவிட்டு உயிர் போனபின் அந்தப் பணத்தைக் கண்டுபிடித்து நுகர்பவர் (அனுபவிப்பவர்) யார் ? பாவிகளே - சொல்லுங்கள் ! (22)
-----------
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே -மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை 23
நீதி மன்றத்தில் பொய் பேசி - பொய்ச் சான்று சொன்னவரின் வீட்டில், பேய் குடி புகும், வெள்ளை எருக்கு பூக்கும், பாதாள மூலிக் கொடி படரும், மூதேவி சென்று தங்கியிருப்பாள், பாம்பும் குடியிருக்கும். (23)
--------------
நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டி பாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன் பிறப்பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை 24
திருநீறு அணியாத நெற்றி அழகிழக்கும். நெய் இல்லாத உணவு சுவையிழக்கும். ஆறு இல்லாத ஊர் வளம் இழக்கும். வேற்றுமை பாராட்டாத உடன் பிறந்தார் இல்லாதவர்க்கு உடம்பு வலு இழக்கும். இளங்கொடி போன்ற பெண் அதாவது மனைவி இல்லாத வீடு எல்லாம் இழக்கும். (24)
---------
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு 25
ஒருவன் பொருள் மிகுதியாகச் சேர்ந்த தொடக்கத்தில் அளவு மீறிச் செலவு செய்தால், பின்னர் மானம் பறிபோகி, அறிவு அற்று, சென்ற இடங்களில் எல்லார்க்கும் கள்ளன் போல் காணப்பட்டு , வரப்போகும் ஏழு பிறப்புக்கும் தீமை தேடியவனாய், நல்லவர்கட் கெல்லாம் பொல்லாத வனாவான். (25)
-------------
மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம் 26
மான உணர்வு, உயர் குடும்பப் பெருமை, கல்வி, வள்ளல் பண்பு, சிறந்த அறிவுடைமை, கொடை, நோன்பு, உயர் புகழ், தளராத ஊக்க முள்ள உழைப்பு, தேனின் பிழிவு போல் இனிக்கும் சொல் பேசும் கன்னியர்மேல் காதல் ஆகிய பத்தும், பசிவந்துவிடின் பறந்து போய்விடும். (26)
-------------
ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல் 27
ஒரு பொருளை அடைய எண்ணினால் அது கிடைக்காமல் வேறொன்று கிடைக்கலாம்; அல்லது அந்தப் பொருளே வந்து கிடைப்பினும் கிடைக்கலாம். இது அல்லாமல், சிறிதும் நினைக்காத பொருள் நம் முன்வந்து சேரினும் சேரலாம். எல்லாமே என்னை ஆளுகின்ற கடவுள் செயலாகும். (27)
-----------
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன் - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான் 28
உண்பதோ நாழி அரிசி; உடுப்பதோ நான்கு முழத் துணி. நினைத்து எண்ணிக்கையிடும் தேவைகளோ எண்பது கோடிகள். அறிவுக் கண் மறைந்த மாந்தர்களின் குடும்ப வாழ்க்கை , எளிதில் உடையக் கூடிய மண்பாண்டம் போல் இறக்கும் வரையும் கவலை தருவதேயாகும். (28)
----------
மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்த
முதம் கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர் 29
மரத்தில் கனிகள் தோன்றிவிடின், உண்பதற்கு வா என வௌவாலைக் கெஞ்சிக் கூவி அழைப்பவர் யாரும் இங்கு இல்லை; அது தானே வரும். கன்று ஈன்ற பசு பாலைச் சுரந்து தருவதுபோல், செல்வர்கள் மறைக்காமல் உதவி செய்யின், உலகத்தார் தாமாக வந்து வேண்டியவர் களாவர். (29)
--------------
தாந்தாமுன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே!
ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி 30
அரசரே ! தாமரைப்பூவில் இருக்கும் நான்முகன் விதித்துள்ள விதிப்படி , தாங்கள் - தாங்கள் முன் செய்த வினைப்பயனைத் தாங்களே அனுபவித்தாக வேண்டும். கொடியவர்களை என்ன செய்வது! ஊரார் எல்லாம் ஒன்று சேர்ந்து வெறுத்து அறிவுரை கூறினும் பழைய விதிப் பயன் போகாது. (30)
----------------
இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று-வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி 31
தவறான பாட்டைப் பாடுவதைவிட, வெற்றுப் பண்ணை (இராகத்தை) மட்டும் இசைத்துக் கொண்டிருப்பது நல்லது. உயர்ந்த குலத்தில் பிறந்து ஒழுக்கம் கெட்டவரைவிட
தாழ்குலத்தில் பிறந்தும் நல்லொழுக்கம் உடையவர் உயர்ந்தவ ராவர். அஞ்சி ஓடும் போர் வீரத்தைவிட, தீராப் பிணி மேலானது. பழிச் சொல்லுக்கு அஞ்சாத மனைவியை விட தனி வாழ்வு நல்லது. (31)
------------
ஆறிடும் மேடும் மடுவும் போல் ஆம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்-சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து 32
பெரிய உலகத்தோரே! வெள்ளம் வடிந்தபின் ஆற்றில் காணப்படும் மேடு - பள்ளம் போல், செல்வம் குறையும் - கூடும். எனவே, ஏழைக்குச் சோறு போடுவீராக; தண்ணீரும் தருவீராக! இந்த அறத்தின் தொடர்பினால், உள்ள வளம் மேலும் உயர்ந்து பெருகும். (32)
------------
வெட்டென்வை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும் 33
யானை மேல் பட்டு ஊடுருவிச் செல்லும் அம்பு பஞ்சுக் குள்ளே பாய்ந்து செல்ல முடியாது. நீண்ட இரும்புக் கடப்பாரைக்கு அசைந்து கொடுக்காத கல்பாறை, பசுமையான மரத்தின் வேருக்கு நெகிழ்ந்து பிளவுப்படும். இவைபோல், வன் சொற்கள் இனிய மென் சொற்களை வெல்ல முடியாது. (மென் சொல்லே பயன் தரும்) (33)
----------
கல்லானே யானாலும் கைப்பொருள் ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல் 34
ஒருவன் படிக்காதவ னாயினும் கையில் பெருஞ்செல்வம் பெற்றிருப்பின், எல்லாரும் போய் அவனை வரவேற்பார்கள். படித்திருப்பினும், பொருள் இல்லாதவனை அவனுடைய மனைவியும் மதிக்கமாட்டாள், மற்றும், பெற்று வளர்த்த தாயுங்கூட விரும்ப மாட்டாள் அவனது வாய்ச் சொல் எங்கும் செல்லுபடியாகாது. (34)
----------
பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா துணர்வு 35
பூ தெரியாமலே காயாகும் அத்தி ஆல் முதலிய மரங்களும் உண்டு. யாரும் ஏவாதிருக்கவும் தாமே நிலையாய் உணர்ந்து நற்செயல் புரியும் மக்களும் உள்ளனர். தூவி விரைத்து பாடுபடினும் நன்கு விளையாத விதைகளைப் போல் மூடனுக்கு எவ்வளவு உரைத்து அறிவுறுத்தினும் நல்ல உணர்வு உண்டாகாது. (35)
---------------
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம் 36
நல்ல வளையல் அணிந்த பெண்ணே! நண்டும் முத்துச் சிப்பியும் மூங்கிலும், வாழையும் தாம் அழியப் போகும் காலத்தில் தாம் கொண்ட கருவை வெளிப்படுத்துதல் போல், சிலர் உயர் அறிவும் செல்வமும் கல்வியும் அழியப் போகும் பெண்கள் மேல் நாட்டம் கொள்வார்கள் (36)
----------
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைபடேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி 37
முன் செய்த வினைப் பயனை வென்று போக்குவதற்கு வேதம் முதலிய எத்தகைய நூலிலும் வழி கூறப்படவில்லை . ஆயினும் நெஞ்சமே கவலைப் படாதே! நிலையான வீடுபேறு (மோட்சம்) அடைய முயல்பவர்க்கு அவர் நினைத்தது கை கூடுமேயல்லாமல், அவரை ஊழ்வினை என்பது தடுக்காது. (37)
---------
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள் 38
நல்லது - கெட்டது என்றும், நான் அவன் என்றும், அல்ல - ஆம் என்றும் வேறுபாடு இல்லாமல் பொது நெறியில் நின்று, தானே கடவுள் - தனக்குள் கடவுள் என்றிருப்பதே உண்மைத் தத்துவமாம் - சம்பங் கோரைப் புல்லை அறுத்த பின் கட்டுவதற்கு வேறு கயிறு வேண்டியதில்லை; அந்தப் புல்லாலேயே கட்டலாம். அது போல், கடவுளைத் தானே தன்னுள்ளேயே தேடலாம். (38)
---------
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு 39
ஒருவன், முப்பது அகவைக்குள் (வயதுக்குள்) காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றையும் ஒழித்து ஒப்பற்ற பொருளாகிய கடவுளைத் தனக்குள்ளேயே காணானாயின், அவன் கற்ற (சாத்திரக்) கல்வி ஏட்டளவேயாகும். எதுபோல எனில், திருமணம் ஆகாத பெண்கள், முலைகள் இருந்தும் பயனின்றித் தளர்ந்து முதுமை அடைவது போலாம். (39)
------------
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர் 40
திருவள்ளுவரின் திருக்குறளும், சிறந்த நான்கு மறைகளின் முடிவான கருத்துகளும், அப்பர் - சம்பந்தர் - சுந்தரர் ஆகிய மூவரின் தமிழ்த் தேவாரங்களும் முனிவர்கள் மொழிந் தனவும், திருக்கோவையாரும் திருவாசகமும் திருமூலரின் திருமந்திரமும் ஒத்த ஒரு பொருளையே உணர்த்தும் என்று உணர்க. (40)
-------------
திருக்குறள்
இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.
வாழ்க்கைத் துணை நலம்
மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.
மக்கள் பேறு
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கள் பேறல்ல பிற.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
--------------
அன்பளிப்பு உரை
எங்கள் மூன்றாம் மகன் திருவளர்செல்வன் ப. முருகவேள், M.A.,
எங்கள் மருகர் திரு மு. சி. பாலசுப்பிரமணியனின் முதல் மகள் திருவளர் செல்வி பா. அன்பரசி , M.Sc., ஆகியோரின் திருமணம் ஸ்ரீமுக ஆண்டு வைகாசித் திங்கள் 24 ஆம் நாள் (6-6-1993) ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்றபோது வருகை புரிந்து சிறப்பித்துத் திருமண மக்களை வாழ்த்தியருளிய பெரு மக்களுக்கு நன்றி செலுத்தி இந்த நூலை அன்பளிப்பாக வழங்குகிறோம்.
இங்ஙனம்
வே. ச. பழநிசாமி, அன்ன பூரணி பழநிசாமி,
பெண்ணின் பெற்றோர்: மு. சி. பாலசுப்பிரமணியன், தையனாயகிபாலசுப்பிரமணியன்,
முத்தியாலுப்பேட்டை (புதுவை)
---------
திருமண வாழ்த்து
திருமணச் செல்வர்கள் : ப. முருகவேள் - பா. அன்பரசி
1. மண்ணரசி யாய்விளங்கும் புதுவைத் தாயின்
மடியினிலே. களித்தாடித் தூய்மை விஞ்சும்
எண்ணமதை இதயத்தின் இயற்கை ஆக்கி;
எவ்வுயிரும் தம்முயிர்போல் ஏற்றிப் போற்றி,
விண்ணளக்கும் திசையெல்லாம் புகழின் வாசம்,
வீசிடவே வாழ்ந்திட்ட சான்றோர் தம்முள்,
வண்ணமிகு சின்னாத்தா குடும்பம் என்றால்,
வாய் மணக்கும் வாழ்த்துரையின் முழக்கம் கேட்கும்.
2. தேடுகின்ற பொருளெல்லாம் தமக்கும், வீட்டுச்
சிறப்புக்கும் என்றிருப்போர் வாழும் நாட்டில்,
நாடெல்லாம் நம் உறவு; நாடும் செல்வம்
நல்லுறவில் பகிர்ந்துண்டு வாழ்தற் கென்றே;
தேடியநற் பொருளுக்கோர் பொருளை வைக்கும்
தெய்வமனப் பாங்காலே பெண்கள் கல்வி
நீடுயர வீடுமனை நிமிர்ந்த ளித்த
நெஞ்சத்தை நெஞ்சார வாழ்த்தா ருண்டோ?
3. எளிமைக்கு மறுபெயர்தான் ஈந்து வத்தல்;
ஈதலுக்கு மறுபெயர் தான் அறத்தின் காப்பு ;
வளமைக்கு மறுபெயர்தான் சுற்றம் சூழல்;
வாழ்வுக்கு மறுபெயர்தான் இனிமைப் பண்பு;
அழகுக்கு மறுபெயர் தான் அன்பின் ஊற்றம்;
ஆற்றலுக்கு மறுபெயர்தான் நாட்டுப் பற்று ;
முழுதுக்கும் மறுபெயர்தான் வைப்ப தென்றால்
முன்தோன்றும் சின்னாத்தா பெயர்தான் அ ங்கே.
4.வான் மரபில் உதித்திட்ட மகளாம், மாதர்
மணியாகும் அன்னபூ - ரணிதான் கொண்ட
தேன்பழனி சாமியென்னும் வாய்மை யாளன்,
திருவுளத்தின் பாங்கறிந்தே ஈன்றெ டுத்த
மான்அனை தையனாயகி, பால சுப்ர
மணியனுக்கு மனைத்தக்க மாண்பா ளாகி,
தான் பிறந்த வீட்டுக்கோர் தத்தை நல்கும்
தருணமிது; தனிக்களிப்பு தவழும் நன்னாள்.
5. மணமேற்கும் முருகவேள் மதியில் மிக்கான் ,
மங்கலமாய் அன்பரசி தன்னை வாழ்க்கைத்
துணையாக்கிப் புது வாழ்வைத் தொடங்கும் நேரம்,
சுடர்விரிக்கும் மகிழ்ச்சிக்கோர் எல்லை உண்டோ ?
குணமென்னும் புனலேறிக் குளிர்ந்த பொய்கைக்
கரையினிலே பூத்திட்ட கொள்கைப் பூக்கள்
இணைந்திங்கே இல்லறத்தைக் காணும் வேளை
என்வாழ்த்தைப் பொன் வாழ்த்தாய் இசைத்தேன் வாழ்க.
6. அன்புமனம் பொருந்தி, நலம் அனைத்தும் பெற்றே,
அழகான இல்லறத்தின் அருமை வென்றே,
இன்பமுடன் பேறெல்லாம் எய்தி என்றும்,
எழில்மரபின் புகழுக்கோர் அரணாய் நின்று,
தென்பொதிகைச் சந்தனம் போல் மணம்ப ரப்பத்
தெளிதமிழும் இனிமையும் போல் சேர்ந்து வாழ்ந்து,
நன்னெறிகள் விளைக்கின்ற கலைக்கூ டம்போல்
நலமோங்க வளமோங்க வாழ்க வாழ்க.
டாக்டர் ச. சவரிராஜன்
முன்னாள் உள்துறை அமைச்சர், புதுவை மாநிலம்
---------------
சுந்தர சண்முகனாரின் உழைப்புகளுள் சில:
தமிழ் அகராதிக் கலை
தமிழ் இலத்தீன் பாலம்
கெடிலக்கரை நாகரிகம்
அம்பிகாபதி காதல் காப்பியம்
கவுதமப் புத்தர் காப்பியம்
மர இனப் பெயர்த் தொகுதி-1
மர இனப் பெயர்த் தொகுதி-2
உலகு உய்ய!
பாரதி தாசரொடு பல ஆண்டுகள்
கடவுள் வழிபாட்டு வரலாறு
தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு
மக்கள் குழு ஒப்பந்தம்
மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்
மாதவம் புரிவாள் தெய்விகத் திருமணம் (நாவல்)
ஆழ்கடலில் சில ஆணி முத்துகள்
இயல் தமிழ் இன்பம்
மனத்தின் தோற்றம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
தமிழ் நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்
பால காண்டப் பைம்பொழில்
அயோத்தியா காண்ட ஆழ்கடல்
ஆரணிய காண்ட ஆய்வு
கிட்கிந்தா காண்டத் திறனாய்வு
சுந்தர காண்டச் சுரங்கம்
தமிழ்க் காவிரி
சபாநாயகம் பிரிண்டர்ஸ், சிதம்பரம்,
--------------------
This file was last updated on 14 Jan.2021.
Feel free to send the corrections to the Webmaster.