நாலடியார் நயவுரை
புலவர் சுந்தர சண்முகனார்
nAlaTiyAr - nayaurai
by cuntara caNmukanAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
நாலடியார் நயவுரை
உரையாசிரியர் : புலவர் சுந்தர சண்முகனார்
Source:
நாலடியார் நயவுரை
உரையாசிரியர் : புலவர் சுந்தர சண்முகனார்
வெளியிடுபவர் : சிங்கார - குமரேசனார்
புதுச்சேரி
நாலடியார் நயவுரை
உரையாசிரியரின் நாற்பத் தொன்பதாவது வெளியீடு, 1970
வெளியீடு : புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்
6-C, வைசியர் தெரு, புதுச்சேரி - . (தென்னிந்தியா)
விலை ரூ.10.00
பிரபாத் பிரஸ், கடலூர் -2. போன் : 461
-------------
திருமண அன்பளிப்பு
திருமணச் செல்வர்கள்:
கு. சிங்காரவேலு, B. (om.. (A.C.A.) & சந்தான லட்சுமி
'நாலடியார் நயவுரை' என்னும் இந்த அரிய நல்லறம் உரைக்கும் நூலினை,
எங்கள் இரண்டாவது மகன் திருநிறை செல்வன் கு. சிங்காரவேலு, B. Com., (A. C. A.)
சென்னை - சைதை - காரணீசுவரன்பேட்டை உயர்திரு. மா.து. குப்புசாமி முதலியார்
முதல் மகள் திருநிறை செல்வி சந்தானலட்சுமி ஆகியோர்க்கு, சாதாரண - ஆனி - 26ஆம் நாள் (10-7-1970) புதுச்சேரியில் நடைபெற்ற திருமணத்தில், திருமணமக்களை வாழ்த்தி வாழும் முறை அறிவுறுத்தும் முறையிலும், திருமணத்திற்கு வருகைதந்து சிறப்பித்து மணமக்களை வாழ்த்தியருளிய பெருமக்கட்கு நன்றி செலுத்தும் முறையிலும் அன்பளிப்பாக வழங்குகிறோம். வாழ்க!
இங்ஙனம்,
சிங்கார- குமரேசன் செயலட்சுமி குமரேசன்
திருவகம்' ! 43, காளத்தீசுவரன் கோயில் தெரு,, புதுச்சேரி - 11
10-7-1970
--------------------
பொருள் அடக்கம்
உரையாசிரியர் உரை
1. அறத்துப்பால்
1.1. இல்லற இயல்
1 பொறை யுடைமை ; 2. பிறர்மனை நயவாமை ; 3. ஈகை
4. பழவினை; 5. மெய்ம்மை ; 6. தீவினை யச்சம்
1.2. துறவற இயல்
7. செல்வம் நிலையாமை ; 8. இளமை நிலையாமை; 9. யாக்கை நிலையாமை
10. அறன் வலியுறுத்தல்; 11. தூய தன்மை ; 12. துறவு; 13. சினம் இன்மை
2. பொருட்பால்
2.1. அரசியல்
14. கல்வி
15. குடிப் பிறப்பு ; 16. மேன் மக்கள்; 17. பெரியாரைப் பிழையாமை
2.2. நட்பியல்
21. சுற்றம் தழால்
22. நட்பாராய்தல்; 23. நட்பில் பிழை பொறுத்தல்; 24. கூடா நட்பு
2 3. இன்ப இயல்
25. அறிவுடைமை; 26. அறிவின்மை ; 27. நன்றியில் செல்வம்
2.4. துன்ப இயல்
28. ஈயாமை; 29. இன்மை ; 30. மானம் ; 31. இரவச்சம்
2. 5. பொது இயல்
2. 6. பகை இயல்
33. புல்லறிவாண்மை; 34. பேதைமை; 35. கீழ்மை; 36. கயமை
2.7. பன்னெறி இயல்
3. காமத்துப் பால்
3.1. இன்ப துன்ப இயல்
3. 2. இன்ப இயல்
39. கற்புடை மகளிர்; 40. காம நுதலியல்
செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 171
--------------
உரையாசிரியர் உரை - சுந்தர சண்முகன்
பெயர்க் காரணம் :
சங்க இலக்கியங்கள் எனப்படும் பதினெண்கீழ்க்கணக்கு(18) நூற்களுள் திருக்குறளுக்கு அடுத்த பெருமையுடையது நாலடியார் தான் ! திருக்குறள் இரண்டு அடிகளால் ஆன குறுகிய (குறள் ) பாக்களை உடையதாதலின் 'திருக்குறள்' எனப் பெயர் வழங்கப் பெறுகிறது. அங்ஙனமே, நான்கு அடிப்பாடல்களையுடைய நூல் 'நாலடி' எனப்பட்டு, பின்னால் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி சேர 'நாலடியார்'' என வழங்கப்பெறுகிறது. இந்நூல் நானூறு பாடல்களை உடையதாதலின், இதனை 'நாலடி நானூறு எனவும் வழங்குவர். அறம் உரைக்கும் தமிழர் மறை நூல் ஆதலின், இதனை 'வேளாண் வேதம் (வேளாளர் = தமிழர் ) எனவும் அழைப்பர்.
நூல் வரலாறு :
எண்ணாயிரம் சமண முனிவர்கள் ஆளுக்கு ஒரு பாடலாக எழுதிவைத்துவிட்டுப் போன எண்ணாயிரம் பனையோலைச் சுவடிகளை, என்னவோ குப்பை என எண்ணிப் பாண்டிய மன்னன் வைகை யாற்றில் எறியச்செய்ய, அவற்றுள் நானூறு பாடல்கள் மட்டும் எதிர்த்து நீந்திக் கரையேறி வந்ததாகவும், அவற்றின் அருமை யுணர்ந்து அவற்றைத் தொகுத்து 'நாலடியார்' என்னும் பெயருடைய நூலாக்கியதாகவும் கதை கூறப்படுகிறது. ஆமாம் - கதையே தான் இது!
தேனீக்கள் மலரிலிருந்து உறிஞ்சித் தேன் எடுப்பதுபோல, இந்தக் கதையிலிருந்து நாம் உறிஞ்சி எடுத்துக்கொள்ளக்கூடிய உண்மைக் கருத்தாவது : "திருக்குறள் திருவள்ளுவர் என்னும் ஒருவராலேயே அருளப்பட்டது போல, நாலடியார் ஒருவராலேயே இயற்றப்படவில்லை; பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பே நாலடியார்" - என்பதாகும். சங்க இலக்கியங்கள் பல, இவ்வாறு பலரால் இயற்றப் பெற்ற பாடல்களின் தொகுப்பே என்னும் உண்மை ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது. நாலடியார், பதுமனார் என்னும் புலவரால் தொகுக்கப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
நூல் அமைப்பு :
நாலடியாரின் நானூறு பாடல்களும், திருக்குறளைப் பார்த்து அதே மாதிரியில் வகை ’தொகை' செய்யப் பெற்றுள்ளன. அதாவது, அறத்துப் பால், பொருட் பால், காமத்துப் பால் என மூன்று பால்களும், ஒவ்வொரு பாலிலும் பல இயல்களும், ஒவ்வோர் இயலிலும் பல தலைப்புக்களும் (அதிகாரங்களும் ), ஒவ்வொரு தலைப்பிலும் பத்துப் பத்துப் பாடல்களுமாக நாலடியார் உருவமைக்கப் பெற்றுள்ளது.
நாலும் இரண்டும்:
திறக்குறளைப் போலவே வடிவமைக்கப் பெற் றுள்ள நாலடியார், திறக்குறளுக்கு அடுத்தபடியாக அன்றுதொட்டு இன்றுவரை பலராலும் பரவலாகப் போற்றப்பெற்று வருகிறது. டாக்டர் ஜி. யு. போப் (G.U. Pope) என்னும் ஆங்கிலேயரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உலக அரங்கிலும் பரவியுள்ளது இந்நூல். இரண்டடிப் பாக்களையுடைய திருக்குறளுடன், நாலடிப் பாடல்களையுடைய நாலடியார் இணைத்தே அறிஞர் பலராலும் பாராட்டப் பெற்றுள்ளது. சில பாராட்டுக்கள் வருமாறு:
"பாலும் நெய்யும் உடலுக்கு உறுதி
வேலும் வாளும் அடலுக்கு உறுதி
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி''
''பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் .''
''நாலடி இரண்டடி கற்றவ னிடத்து
வாயடி கையடி அடிக்காதே"
"நால்' எனப்படுவது நாலடியார். 'இரண்டு' எனப்படுவது திருக்குறள். மேலே காட்டப்பட் டுள்ள பகுதிகளில், திறக்குறளுக்கும் முதலிடத்தை நாலடியார் பிடித்துக் கொண்டுள்ளதே - அம்மாடி!
உரைகள் :
திருக்குறளுக்குப் பழைய உரைகள் பலவும் புதிய உரைகள் பலவும் உள்ளவாறே நாலடியார்க்கும் உள்ளன. நாலடியார்க்கு, தருமர், பதுமனார் ஆகிய பழம் பெரும் புலவர்களின் உரைகளுடன், பெயர் தெரியாத புலவர் ஒருவரின் பழைய உரையும் கிடைத்துள்ளது. இக்காலத்திலும் புலவர் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றின் வரிசையில் அடியேனது உரையும் இப்போது இடம் பெறுகிறது. சில இடங்களில், பிறர் உரைகளினும் எனது உரையில் மாறுதல் இருக்கும்.
ஒரு புரட்சி :
திருக்குறள் அறத்துப்பாலில் முதலில் இல்லறவியலும் அடுத்துத் துறவற வியலும் அமைந்துள்ளன. ஆனால், பிறர் அனைவரும் வெளியிட்டுள்ள நாலடியார் பதிப்புக்களிலோ, முதலில் துறவற வியலும் அடுத்தே இல்லற வியலும் காணப்படு கின்றன. அடியேன் இந்த அமைப்பினை மாற்றி, திருக்குறளைப் போலவே நாலடியாரிலும் முதலா வதாக இல்லற வியலையும் இரண்டாவதாகத் துறவற வியலையும் அமைத்துள்ளேன். இல்லறத் திற்குப் பின்னே துறவறம் கொள்வதே தமிழரின் தனிமுறை யன்றோ ? இருப்பினும், இதனைச் சிலர் - இல்லை, பலர் ஏற்கார். அவர்கட்கு இதோ பதில்:
நாலடியார் நூற்பாடல்களை ஒருவர் எழுதவில்லை; பலர் எழுதினர். பதுமனார் அவற்றை வகைப்படுத் தித் தொகுத்ததாகச் சொல்லப்படுகிறார். எனவே, துறவற வியலை முதலில் அமைத்தது பதுமனாரின் கைவரிசையே! அங்ஙனமெனில், இல்லறவியலை நாம் ஏன் முதலில் அமைத்துக் கொள்ளக்கூடாது? மற்றும், ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள பத்துப் பத்துப் பாடல்களும், இந்த (எனது) பதிப்பில் உள்ள வரிசைப்படியே எல்லாராலும் அமைக்கப் படவில்லை; சிலரால் சில பாடல்கள் வரிசைமாற்றி எண் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், நாலடியாரில் பலரும் தம் கைவண்ணம் காட்டியுள்ளனர் என்னும் இமாலயப் பேருண்மை புலனாகிறது. எனவே, இந்தப் பதிப்பில் இல்லறவியலை முதலில் அமைத்தது பொருத்தமே என்று தெளியலாம்.
----------------
நாலடியார்
கடவுள் வாழ்த்து
வானிடு வில்லின் வரவறியா வாய்மையால்
கானிலம் தோயாக் கடவுளை - யாம் நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்துமெம் உள்ளத்து
முன்னி யவை முடிக என்று.
(உரை) வானத்தில் தோன்றி மறையும் இந்திர வில்லைப் போல, எதிரே திடீரென வர இருப்பதைப் பற்றி அறிய முடியாத உண்மைக் காரணத்தால், ’எமது உள்ளத்தில் எண்ணிய நல்லெண்ணங்கள் நிறைவேறுக' என்று வேண்டி, கால் (பாதம்) தரையில் படியாத தெய்வத்தை, நம் தலைகள் தரையில் படியும்படி நாம் கீழே விழுந்து வணங்கி இடைவிடாது (தியானிப்போமாக) நினைவு செய்வோமாக!
(குறிப்பு : நாலடியாரின் பல பதிப்புக்களின்
முகப்பிலும் இந்தக் கடவுள் வாழ்த்துப்பாடல் காணப்படுகிறது. இது, நானூறு பாடல்களுக்கும் அப்பாற்பட்டது. இதனைப் பின் வந்தவர் எவரேனும் இயற்றியிருக்க வேண்டும்.)
-----------------
நாலடியார் நயவுரை
1. அறத்துப் பால் - இல்லற வியல்
1. பொறையுடைமை
கோதை அருவிக் குளிர்வரை நல்நாட!
பேதையோ டியாதும் உரையற்க ;- பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும்; ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று. 1
மாலை போன்று அருவி ஓடும் குளிர்ந்த நல்ல மலை நாடனே ! அறிவில்லா மூடனுடன் ஒன்றும் பேசாதே; பேசினால், அந்த அறிவிலி மனம் சிதையப் பேசுவான். ஆதலின், நழுவி நீங்கி விடுதலே நல்லது.
----------
நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதி, மற்(று) - ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்கு நீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும். 2
நேர்மை யற்ற கீழோர் தன்மையற்ற சொற்களைச் சொன்னவிடத்து, அத்தவறைப் பொறுத்தலே தக்கது மற்றபடி பொறாவிடின், பொங்கும் கடல் சூழ் உலகம் புகழாகக் கொள்ளாது; தாழ்வாகவே கருதிவிடும். 2
--------
காதலார் சொல்லும் கடும் சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ - போதெலாம்
மாதர்வண் டார்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
ஆவ தறிவார்ப் பெறின். 3
மலர்களிலெல்லாம் அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற வளம் மிக்க குளிர்ந்த கடல் நாடனே நன்றாவதை அறியும் நல்லவரை நண்பராகப் பெறின், அந்த அன்புள்ள நண்பர் இடித்துரைக்கும் கடுஞ்சொல், சிரித்துப் பேசி நடிக்கும் பகைவரின் இன்சொல்லினும் தீய தாகுமோ? 3
--------
அறிவ தறிந்தடங்கி, அஞ்சுவ தஞ்சி,
உறுவ துலகுவப்பச் செய்து, - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது. 4
அறியவேண்டியதை அறிந்து, அடங்கி, அஞ்சுவதற்கு அஞ்சி, செய்யத்தக்க நன்மையை உலகம் மகிழச் செய்து, பெற்றதைக் கொண்டு மகிழ்ந்து வாழும் மாண்புடையவர் எப்போதும் துன்பமுற்று வாழ்வதில்லை.
---------
வேற்றுமை இன்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றும் துணையும் பொறுக்க ; பொறானாயின்
தூற்றாதே தூர விடல். 5
மாறுபாடு இன்றி இணைந்து இருவர் நட்பு கொண் டிருக்கும்போது, ஒருவனிடம் தெளியாத தீயொழுக்கம் காணப்படின், மற்றவன், பொறுக்கும் வரையும் பொறுப்பானாக; பொறுக்க முடியாமற்போனால், அவனைத் தூற்றாமல் தூர விலகிவிடுவானாக.
----------
இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான் நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல்; கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது. 6
காட்டுவள நாடனே! நண்பர் துன்பம் செய்யினும், அஃது இன்பமே - போனால் போகிறது என்று பொறுத்து, துன்பம் நேர்ந்ததற்குத் தன்னைத்தானே நொந்து கொள்ள வேண்டுமே தவிர, நெருங்கிப் பழகிய நண்பரைக் கைவிடலாகாது; பிரிதல் என்பது விலங்கிற்கும் இயலாதது. 6
--------
பெரியார் பெருநட்புக் கோடல், தாம்செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நல்நாட!
நல்லசெய் வார்க்குத் தமர். 7
'ஒல்' என அருவி ஒலித்தோடும் உயரிய நல்ல மலை நாடனே! பெரியோரது உயர்நட்பைக் கொள்வது, தாம் செய்த தவறுகளைப் பொறுத்துக் கொள்வர் என்பதனா லன்றோ? அங்ஙனமெனில், தவறின்றி நல்லனவே செய்வார்க்குப் பெரியோர்கள் கிடைத்தற்கு அரிய ராவரோ? 7
----------
வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க் (கு)
அற்றம் அறிய உரையற்க ; - அற்றம் மறைக்கும்
துணையார்க் குரைப்பவே தம்மைத்
துறக்கும் துணிவிலா தார். 8
வளமெல்லாம் வற்றி மேலும் மிகப் பசித்தாலும், பண் பற்ற அற்பரிடம் வறுமையை வெளிப்படையாகக் கூறற்க. பசியால் தமது உயிரைக் கைவிடும் துணிவு இல்லாதவர், தமது வறுமையை நீக்கும் துணையாளரிடமே தம் துன்பத்தைக் கூறுவது வழக்கம். 8
--------
இன்பம் பயந்தாங் கிழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
பழியாகா வாறே தலை. 9
உயர்ந்த அருவிகள் ஓடும் நாடனே! ஓர் இன்பம் ஒழியாது கிடைப்பினும், அது பழியின்றி யிருத்தலே சிறந்த தாம்; எனவே, ஒரு பொருள் மிக்க இன்பம் அளிப்பினும், அங்கே இழிவு சிறிது தலைகாட்டினாலும், இன்பம் காரணமாக அதனை ஏற்றுக்கொள்ளலாகாது. 9
------------
தான் கெடினும் தக்கார்கே டெண்ணற்க; தன்னுடம்பின்
ஊன் கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல். 10
தான் கெட்டாலும் நல்லார் பிறர்க்குக் கேடு சூழற்க. பசியால் தன் உடம்பின் தசை சுருங்கினாலும் உண்ணத் தகாதவர் கையுணவை உண்ணற்க. வானம் கவிந்து மூடிய வையகம் முழுதும் கிடைப்பதானாலும், இடையிடையே பொய் கலந்த சொற்களைச் சொல்லற்க.
--------
2. பிறர்மனை நயவாமை
இல்லறவியல் -2. பிறன் மனைவியை விரும்பாமை
அச்சம் பெரிதால்; அதற்கின்பம் சிற்றளவால்;
நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால், நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன் தாரம்
நம்பற்க நாணுடை யார். 11
பிறன் மனைவியை விரும்புவதால் அச்சம் மிகுதியாம்; அச்சத்தை நோக்க இன்பமோ சிறிய அளவேயாம். நித்தம் நினைத்துப் பார்க்கின், அரச ஒறுப்பு (தண்டனை) கிடைக்கலாம்; நரகத்திற்கு உரிய மிகுந்த தீவினையும் பெருகும்; எனவே, நாணம் உடையவர் பிறன் மனைவியை நம்பி விரும்பற்க.
-----------
அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும்
பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா; - பிறன் தாரம்
நச்சுவார்ச் சேரும் பகை பழி பாவமென்(று)
அச்சத்தோ டிந்நாற் பொருள். 12
பிறன் மனைவியை விரும்புபவரை அறம், புகழ், நட்பு, பெருமை ஆகிய நான்கும் அடையா; மாறாக, அவரை, பகை, பழி, பாவம், அச்சம் என்னும் நான்குமே வந்தடையும். 12
------------
புக்க விடத்தச்சம்; போதரும் போதச்சம்;
துய்க்கு மிடத்தச்சம் ; தோன்றாமல் காப்பச்சம்;
எக்காலும் அச்சம் தருமால், எவன்கொலோ
உட்கான் பிறனில் புகல். 13
பிறன் மனையாள் இருக்குமிடம் புகும்போதும் அச்சம்; திரும்பும் போதும் அச்சம்; இன்பம் நுகரும்போதும் அச்சம்; வெளித்தெரியாமல் காப்பதிலும் அச்சம்; ஏன் எப்போதுமே அச்சம் ஏற்படும், எனவே, ஒருவன் அஞ்சாதவனாய்ப் பிறன் மனைவியிடம் செல்லுதல் ஏனோ? 13
--------------
காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீணிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி ! நீ கண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு. 14
பிறன் மனை புகுவதைப் பிறர் காணின் குடிக்குப் பழியாம்; அகப்பட்டுக்கொண்டாலோ கால் துண்டிக்கப்படும்; ஆண்மைக்கு ஏலாத தீப்புணர்ச்சி செய்யுங்கால் அச்சமாம்; நீண்ட நாகத் துன்பமும் கிடைக்கும்; எனவே, ஏ காமுகனே! நீ பெற்ற இன்பம் என்னதான் என்று எனக்குக் கூறு. 14
-----------
செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியால் பிறர்மனைமேல் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடியுண் பார். 15
ஒழுங்கு ஒருசிறிதும் இன்றி, அற்பர் கூட்டத்தைச் சேர்ந்தவராகி, திரட்சியும் தேமலும் கொண்ட முலைகளையுடைய பிற பெண்ணின் தோளைத் தழுவி. முற்பிறப்பில் தமக்கிருந்த வலிமையால் பிறர் மனைவியிடம் சென்றவரே, இப்பிறப்பில் பேடிகளாகி ஆட்டம் ஆடி உண்டு கழிக்கிறார்கள். 15
-----------
பல்லார் அறியப் பறையறைந்து நாள் கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதல் மனையாளும் இல்லாளா என்னொருவன்
ஏதில் மனையாளை நோக்கு 16
நல்ல நாள் கேட்டறிந்து பலரும் அறிய மணமுரசு கொட்டித் திருமணம் செய்துகொண்டு காவல் மனை புகுந்துள்ள மென்மைத் தன்மையுடைய அன்பு மனையாட்டி அகத்திருக்க, ஒருவன் அயலான் மனைவியை நோக்குவது ஏனோ ? 16
---------------
அம்பல் அயலெடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீ இமைந்துற்று - நம்பும்
நிலைமையில் நெஞ்சத்தான் துப்புரவு, பாம்பின்
தலைநக்கி அன்ன துடைத்து. 17
அயலார் பழி தூற்ற, தம் உறவினர் நடுங்கி வருந்த, மாற்றான் மனைவியை மருவிப் புணர்ந்து மயக்குற்று அவளையே நம்பிக்கிடக்கும் நிலையற்ற நெஞ்சத்தானது காம நுகர்ச்சி, பாம்பின் தலையை நக்கிச் சுவைப்பது போன்ற தன்மையுடையது. 17
----------------
பரவா ; வெளிப்படா; பல்லோர்கண் தங்கா
உரவோர்கண் காமநோய் ; ஓஒ கொடிதே !
விரவாருள் நாணுப் படலஞ்சி யாதும்
உரையாதுள் ஆறி விடும். 18
அறிவுடையவரிடம் தோன்றிய காமநோய், வெளிப்படாமலும் பரவாமலும் பலரிடமும் அறியப்படாமலும் வெளியானால் பகைவரிடம் நாணப்படுவதற்கு அஞ்சி ஒருவரிடமும் ஒருசிறிதும் உரைக்கப்படாமலும் உள்ளேயே தணிந்து விடும். ஆ ஆ ! அது மிகவும் கடுமையானது ! 18
-------------
அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறம் சுடும் ;- வெம்பிக் கவற்றி
மனத்தைச் சுடுதலால் காமம்
அவற்றினும் அஞ்சப்படும். 19
அம்பும் நெருப்பும் ஒளிவிடும் கதிர்களையுடைய செஞ்ஞாயிறும் வெம்மையாய்ச் சுட்டுத் தாக்கினும் வெளியுடம்பையே சுட்டு வருத்தும்; ஆனால் காமத்தியோ, வெதும்பிக் கவலையுறச் செய்து உள்மனத்தையே சுட்டுத்தாக்குவதால், அம்மூன்றினும் அஞ்சப்படவேண்டியதாம். 19
-----------
ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமே; குன்றேறி
ஒளிப்பினும் காமம் சுடும். 20
ஊருக்குள் மூண்டெழுந்த அச்சம் மிக்க சிவந்த நெருப்புக்குத் தண்ணீருள் மூழ்கியும் தப்பித்துக்கொள்ளலாம்; ஆனால் காமத்தியோ, நீருக்குள் மூழ்கினும் சுடுந்தான்; மலைமேலேறி மறைந்து கொள்ளினும் விடாது சுடும். 20
---------
3. ஈகை / 3. ஈதல்
இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ள இடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்(கு)
அடையாவாம் ஆண்டைக் கதவு. 21
வசதி இல்லாவிடத்தும், தம்மால் இயன்ற அளவு, வசதியுள்ள இடம் போல் மிகவும் மகிழ்ந்து அமைதியாய்க் கொடை புரியும் பண்புள்ள மாந்தர்க்கு, அங்கே வீடுபேற்றுக் கதவுகள் அடைக்கப்படாவாம். 21
------------
முன்னரே சாம் நாள் முனிதக்க மூப்புள ;
பின்னரும் பீடழிக்கும் நோயுள் ;- கொன்னே
பரவன்மின்; பற்றன்மின்; பாத்துண்மின்; யாதும்
கரவன்மின்; கைத்துண்டாம் போழ்து. 22
முடிவு நாளும், வெறுக்கத்தக்க முதுமையும் முதலிலேயே நிலையாயுள்ளன, மேலும், பெருமை கெடுக்கும் பிணிகளும் உள்ளன. எனவே, வீணே பொருள் தேடி அலையாதீர்கள் ! இருக்கும் பொருளையும் இறுக்கிவிடாதீர்கள் கையில் பொருள் இருக்கும்போதே பலர்க்கும் பகுத்தளித்து உண்ணுங்கள்! ஒன்றையும் ஒளிக்காதீர்கள் ! 22
---------
நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்
கொடுத்துத் தாந் துய்ப்பினும் எண்டுங்கால்
ஈண்டும்; இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்;
விடுக்கும் வினையுலந்தக் கால். 23
வறுமையால் நடுங்கித் தம்மை யடைந்த எளியோரது துன்பத்தைப் போக்காத கருமிகள், அவர்க்கும் அளித்துத் தாமும் நுகரினும், செல்வம் சேருங்காலத்தில் சேர்ந்தே திரும் குறையாது. நல்வினை யற்றபோதோ, இடுக்கி இறுகப் பற்றினும் செல்வம் நில்லாமல் விட்டு நீங்கும். 23
------------
இம்மி அரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின்; உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்(து)
அடாஅ அடுப்பி னவர். 24
உம் இல்லம் வருவோர்க்கு நாடோறும் இம்மி அரிசி அளவாயினும் இயன்றது ஈந்து உண்ணுங்கள். இல்லையேல், ஆழ்ந்த கடல் சூழ்ந்த இவ்வுலகில், சமைக்காத அடுப்புடைய ஏழையர், கொடாத கருமிகள் என்று உம்மை இழித்து உரைப்பர். 24
-----------
மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவர்க்கு
உறுமா றியைவ கொடுத்தல்; - வறுமையால்
ஈதல் இசையா தெனினும், இரவாமை
^
ஈதல் இரட்டி யுறும். 25
மறுமைப் பயனையும் இம்மைப் பயனையும் ஆராய்ந்து இயன்றவற்றை ஈதலே, ஒருவருக்கு நன்மையுறும் வழியாகும். ஏழமையால் ஈதல் இயலாது போயினும், இன்னொருவரிடம் இரவாதிருத்தல் ஈதலினும் இருமடங்கு சிறந்தது. 25
-------------
நடுவூருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க
படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை. 26
பலரும் விரும்ப வாழும் நல்லோர், ஊர் நடுவே மேடை யால் சூழப்பெற்றுள்ள குலைக்காய்க்கும் பனைமரம் போன்றவ ராவர்; செல்வத்தால் குடும்பம் செழித்திருந்தபோதிலும் பிறர்க்குக் கொடுத்துண்ணாத மாக்கள் சுடுகாட்டிலுள்ள காய்க்காத ஆண் பனை போன்றவர் ஆவர். 26
-----------
பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
என்னை உலகுய்யும் ஆறு. 27
மீனின் புலால் நாற்றத்தைப் புன்னைமலரின் நறுமணம் போக்குகின்ற அலைமோதுங் குளிர்ந்த கடற்கரை நாடனே! பெய்யவேண்டிய அளவு மழை பெய்யாதுபோயினும், உலக நன்மக்கள் செய்ய வேண்டிய நன்மைகளைச் செய்யாதொழி யினும், இவ்வுலகம் பிழைக்கும் வழி என்னவோ? 27
---------
ஏற்றகை மாற்றாமை என்னானும் தாம் வரையான்
ஆற்றாதார்க் கீவதாம் ஆண் கடன்; ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப! மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து. 28
கலக்கும் ஆறுகளால் வளம் மலியும் குளிர்ந்த கடல் நாடனே ! இரந்து கேட்கும் கையை மறுக்காமல் யாதாயினும் தம் அளவுக்குத் தக இல்லாதார்க்கு ஈவதே ஆண்மையின் கடமை. பதிலுக்குத் தரக்கூடிய செல்வர்க்கு ஈதலோ, நல்ல கடன் என்னும் பெயரே பெறும். 28
------------
இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க;- முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும். 29
தமது உடைமை மிகவும் சிறியது என்று கருதாமலும், இல்லையென்று கூறாமலும், எப்போதும் யார்க்கும் அறப் பயனைச் செய்துவருக. இதனால் வாயிற்படி தோறும் முறையாகப் பிச்சைக்குப் புகும் துறவியின் உண்கலம் நிறைவது போல, மெல்ல மெல்ல நல்வினை நிறைக்கப்படும். 29
------------
கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பார்;
அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படும் சொல். 30
குறுந்தடியால் கண்வாயில் அடிக்கப்படும் முரசொலியை ஒரு காதத்தில் உள்ளோர் கேட்பார்; இடியிடித்து முழங்குவதை ஒரு யோசனை தொலைவிலுள்ளோர் கேட்பார்; பெரியார் கொடுத்தார் எனப்படும் புகழ்ச் சொல்லையோ, அடுக்கிய மூவுலகிலும் உள்ளவர்களும் கேட்பரே ! 30
-------------
இல்லறவியல் - 4. பழவினை
4. பழைய ஊழ்வினை
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்;- தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு. 31
ஓர் இளங்கன்றினைப் பல பசுக்களின் நடுவே செலுத்தி விட்டாலும், அது தன் தாய்ப் பசுவைத் தேடிக் கண்டு கொள்வதில் வல்லமையுடையதாம்; முற்பிறவியில் செய்த பழைய ஊழ்வினையும், தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடியடைவதில் அக்கன்று போன்றதேயாம். 31
----------
உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்று வீழ்ந் தக்க துடைத்து. 32
உருவழகும் இளமையும் நல்ல பொருளும் மிடுக்கும் ஒரு நிலையாய் நிலைக்காததை அறிந்தும், ஒரு வகையிலும் ஒரு நன்மையும் செய்யாதவனது வாழ்வு, உடம்பைப் பெற்று நின்றும் ஒரு பயனும் இன்றி வீணே வீழச்செய்த அளவின தேயாம். 32
------------------
வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை;
அளந்தன போகம் அவரவர் ஆற்றான்;
விளங்காய் திரட்டினார் இல்லைக்; களங்கனியைக்
காரெனச் செய்தாரும் இல். 33
விளாம்பழத்தை உருண்டையாக்கினவர் எவரும் இலர்களாப் பழத்தைக் கறுப்பாக்கினவரும் எவரும் இலர்; அவை இயற்கையாய் அமைந்துள்ளன. உலகில் வளம் பெற விரும்பாதார் எவரும் இல்லையெனினும், அவரவர் ஆற்றிய வினைகட்கேற்ப இன்பங்களும் இயற்கையாய் அளவுபடுத்தப் பட்டுள்ளன.
---------------
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல். 34
மழை வறண்டால் பெய்விப்பாரும் இல்லை. மழை மிகுந்தால் அதனைக் குறைப்பாரும் இல்லை. அவ்வாறே, ஊழ்வினையால் வரக்கூடியவற்றைத் தடுத்தல் எந்த வலி யார்க்கும் இயலாது; பெற விரும்புகிறவற்றைத் தாமாகப் பெறுவதென்பதும் அதுபோன்றே இயலாததாம். 34
-------------
தினைத்துணையர் ஆகித்தம் தேசுள் அடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து
வாழ்வர்; நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை
வினைப்பயன் அல்லால் பிற. 35
பனையளவு பெருமைக்குரிய சிலர், தினை அளவினராய்த் தம் ஒளி உள்ளடங்கி நாளும் பெருமை யிழந்து வாழ்கின்ற னரே; நினைத்துப் பார்க்கின், அதற்குரிய காரணம், முன் செய்த வினைப்பயனே யல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? 35
-----------------
பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
கோதென்று கொள்ளர் தாம் கூற்று. 36
பல கற்று நிரம்பிய கேள்வியறிவின் பயனும் உணர்ந்த அறிஞர்கள் விரைவில் இறக்கவும், கல்லாத மூடர் நெடுங் காலம் வாழ்வதன் காரணம் அறிய விரும்புவீரேல், கல்லாதார் அறிவு என்னும் ஊட்டப் பொருளைத் தம்மிடம் பெற்றில்லாமையால், அவர்தமைச் 'சக்கை' என்று கருதி எமன் கொள்வதில்லை. 36
----------------
இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பம்பூ
அன்னம் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும். 37
அடம்பம் பூவை அன்னம் கிழித்து விளையாடுகின்ற அலை வீசுங் குளிர்ந்த கடற்கரை நாடனே! சிலர் துன்பம் மிக்க நெஞ்சுடையவராய், பலரும் பார்க்கும்படி, பலருடைய நீண்ட கடைவாயிலில் நின்று இரந்து அலைவதெல்லாம், பழைய தீவினையின் பயனே யாகும். 37
-----------
அறியாறாம் அல்லர். அரிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல் - வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும். 38
காற்று வீசி நெய்தல் மலர் மணம் பரப்பும் நீண்ட குளிர்ந்த கடற்கரை நாடனே ஒருசிலர், ஒன்றும் அறியாதவரும் அல்லராய், அறியவேண்டியதை அறிந்துங்கூட, பழிபட்ட தீச்செயல் புரிவது, முன் செய்த தீவினையால் நிகழ்வதே யாகும். 38
-----------
ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மன் தீய விழைபயன் நல்லவை;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது. 39
கடல் சூழ் உலகில் யாவரும் ஒரு சிறிதும் தீமையை விரும்பார்; எவரும் விரும்பும் பயன்கள் நற்பயன்களே ! ஆனால், ஒருவர் விரும்பினும் விரும்பாவிடினும், வரக்கூடிய நன்மை தீமைகள் வராமல் விடுதல் இல்லை. 39
---------------
சிறுகா, பெருகா, முறை பிறழ்ந்து வாரா;
உறுகாலத் தூற்றாகா ; ஆமிடத்தே ஆகும்
சிறுகாலைப் பட்ட பொறியும்; அதனால்
இறுகாலத் தென்னை பரிவு. 40
சிறிய கருவிலேயே அமைந்துவிட்ட பழவினைகள் குறைவதில்லை; மிகுவதில்லை; முறைமாறி நடப்பதுமில்லை; துன்பக் காலத்தில் ஊன்றுகோல்போல் துணையாவதுமில்லை; ஆகவேண்டிய நன்னாள் வரும்போதே எல்லாம் ஆகும்; எனவே, அழிவு வரும்போது வருந்துவது ஏனோ? 40
---------------
இல்லறவியல்
5. மெய்ம்மை / 5. உண்மையுடன் ஒழுகல்
இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று ; வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ !
செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து. 41
வரிசையான வளையல்கள் அணிந்த நங்கையே! கொடுக்க முடியாத ஒரு பொருளை இல்லையெனல் யாருக்கும் பழியன்று; அஃது உலக இயற்கையே ஆனால், தருவதாகச் கூறி நெடுங்காலம் நின்றோடச் செய்து, பின்னர், கேட்ட வரது விருப்பம் அழியும்படி இல்லையெனப் பொய்த்து விடுதல், செய்த நன்றியைக் கொன்றவரின் செயலினும் குற்றம் உடையதாம். 41
--------
தக்காரும் தக்கவர் அல்லாரும் தம் நீர்மை
எக்காலும் குன்றல் இலராவர்; - அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம்; கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு 42
வெல்லம் யார் தின்றாலும் கசக்காது; வேம்பு தேவனே தின்றாலும் கசக்கும். இவை போன்றே, தகுதியுடையவரும் அவர் அல்லாத அற்பரும் தத்தம் பண்புகளினின்று என்றும் குறைய மாட்டார்கள். 42
---------
காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
மேலாடும் மீனின் பலராவர்;- ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட !
தொடர்புடையேம் என்பார் சிலர். 43
குளிர்ந்த மலை நாடனே ! காலோட்டம் உள்ள செல்வம் காலத்தில், மிக்க உறவினர்கள், வானின் மேல் மின்னும் விண்மீன்களினும் பலராய் வந்து சேர்வர்; தாங்கமுடியாத வறுமைத் துன்பத்தை ஒருவர் அடைந்தபோது அவரோடு உறவுடையோம் என்பவர் சிலரே. 43
--------
வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவண் தெய்த இருதலையும் எய்தும்;
நடுவண தெய்தா தான் எய்தும் உலைப்பெய்(து)
அடுவது போலும் துயர். 44
குற்றமற்ற இவ்வுலகில் நிலைபெற்ற அறம், பொருள் இன்பம் என்னும் மூன்றனுள் நடுவாகிய பொருளை ஒருவன் அடைந்தால், இருபக்கமும் உள்ள மற்ற இரண்டையும் கூட அடைவான்; நடுவாய பொருளை அடையாதவனோ உலையிலிட்டுக் காய்ச்சுவது போன்ற துன்பமே அடைவான். 44
-------------
நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே ஆயினும் செல்வர்வாய்ச்சொல் செல்லும்;
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். 45
நல்லினப் பசுவின் கன்றானால் சிற்றிளங் கன்றும் விலை போகும். படிக்காதவராயினும் செல்வரானவரின் வாய் சொல் செல்லுபடியாகும். வறியவர் வாய்ச்சொற்களோ அற்ப ஈரம் உள்ள போது உழுகின்ற உழவுபோல் மேலோ ( நின்று செல்லுபடியாகாவாம். 45
--------------
இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்;- தடங்கண்ணாய்!
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய். 46
விரிந்த கண்களுடைய பெண்ணே! பேய்ச்சுரைக்காயில் உப்பு, நெய், பால், தயிர், பெருங்காயம் முதலியன இட்டுச் சமைப்பினும் கசப்பு நீங்காது; அதுபோல, எப்போதும் அடங்காத முரடர்கள், விரிவாக மெய்யறிவு நூற்களைக் கற்பினும் என்றும் அடங்கமாட்டார்கள். 46
--------
தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க;
என்னை அவரொடு பட்டது - புன்னை
விறல் பூங் கமழ்கானல் வீங்கு நீர்ச் சேர்ப்ப!
உறல்பால் யார்க்கும் உறும். 47
புன்னையின் மிக்க பூமணங் கமழும் சோலையும் விரிந்த நீர்ப்பரப்பும் உடைய கடற்கரை நாடனே! வரவேண்டியது யார்க்கும் வந்தேதிரும். எனவே, தம்மை இகழக்கூடிய வரைத் தாம் அவர்க்குமுன் இகழ்வாராக! அவரோடு ஆகக் கூடியது என்ன? 47
----------------
ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம் ;- பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு. 48
பசுக்கள் பல பல்வேறு நிறங்கள் உடையவாயினும், அவை தரும் பால் வெண்மையன்றி வேறு நிறத்ததன்று; அறநெறிகள் பசுக்களைப்போல் பல்வேறு வடிவங்களில் இருப்பினும், அவற்றின் பயன், பால்போல ஒரே நல்லியல்பு உடையதாகும். 48
--------------
யாஅர் உலகத்தோர் சொல் இல்லார் தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார் - யாஅர் இடையாக
இன்னாத தெய்தாதார் யாஅர்
கடைபோகச் செல்வமுய்த் தார். 49
ஆராயுங்கால், உலகில் ஒரு சுட்டுச் சொல்லும் பெறாதவர் யார்? வாழ்வில் சூழ்ச்சியால் வாழாதவர் யார்? இடையிலே துன்பம் அடையாதவர் யார்? இறுதிவரையும் செல்வராய் இருந்தவர் யார்? 49
--------------
தாம் செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்(று)
யாங்கணும் தேரின் பிறிதில்லை ;- ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
கூற்றம் கொண் டோடும் பொழுது. 50
உயிரை எமன் பிடித்துக்கொண்டு ஓடும்போது, தாம் பேணி அழகுசெய்து காத்த உடலும் உடன் வந்து பயன் தராது. எப்படி ஆராய்ந்து பார்க்கினும், தம்முடன் வரக் கூடியது, தாங்கள் செய்த வினைகளைத் தவிர மற்று வேறு ஒன்றும் இல்லை. 50
-------------
6. தீவினையச்சம் / 6. தீச்செயல் புரிய அஞ்சுதல்
துக்கத்துள் தூங்கித் துறவின் கண் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலம்கெட்ட
புல்லறி வாளர் வயிறு. 51
உலகத் துன்பத்துள் மயங்கித் துறவுநெறியைக் கொள்ளாத மக்களின் பிணங்களை உடையன சுடுகாடுகள். அறிவு கெட்ட அற்பர்களின் வயிறுகளோ, மிகுந்த விலங்குகட்கும் பறவைகட்கும் சுடுகாடுகளாம். 51
----------------
இரும்பார்க்கும் காலராய் ஏதிலார்க் காளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர்;- சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். 52
வண்டுகள் ஒலிக்கும் காட்டினுள் வாழும் கவுதாரியையும் காடையையும் கூட்டினுள் கொண்டுவந்து அடைத்து வைப்பவர்கள், மறுமையில் இரும்பு விலங்கு ஒலிக்கும் கால் உடையவராய், அயலார்க்கு அடிமையாய், கருப்பங் கொல்லையில் வேலை செய்வார்கள். 52
---------------
அக்கேபோல் அங்கை ஒழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே;- அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால். 53
முற்பிறப்பில் நண்டை விரும்பி அதன் கால்களை ஒடித்து உண்ட பழைய தீவினை இப்பிறப்பில் வந்தடையின், சங்கு மணிபோல் உள்ளங்கை தவிர மற்ற விரல்கள் அழுகித் துன்பம் மிக்க தொழுநோயுடன் திரிவர். 53
----------------
நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச் சுட் டெவ்வநோய் ஆக்கும்; - பரப்பக்
கொடுவினையர் ஆகுவர் கோடாரும் கோடிக்
கடுவினையர் ஆகியார்ச் சார்ந்து. 54
நெய் போன்ற குளிர்ந்த பொருளும் நெருப்பின் வெப்பத்தைச் சேரின் எரிக்கும்படிச் சுட்டுத் துன்ப நோயைத் தரும். அதுபோல, கோணலற்ற நேர்மையாளரும் கடுஞ் செயலாளரைச் சார்ந்தால், நேர்மை கோணி, மிகவும் கொடுந்தொழில் புரிபவராவர். 54
-----------------
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும்; - வரிசையால்
வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு. 55
பெரியோர் நட்பு பிறைநிலாப்போல நாடோறும் படிப்படியாக வளரும்; சிறியோர் நட்போ, வானில் செல்லும் முழுநிலாப்போல நாடோறும் படிப்படியாய்த் தானாகவே தேய்ந்து குறையும். 55
-----------
சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந் தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் -சார்ந்தோய்கேள்!
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து. 56
ஒருவரைச் சார்ந்துள்ளவனே, கேள் ! நீ அவரை உயர்ந்தவர் என மதித்துச் சேர்ந்தாய்; ஆனால், அங்ஙனம் சேர்ந்த உனக்கு, நீ சேர்ந்தவரிடம் உயர் பண்பு இல்லை யெனத் தெரிந்தால், அது, ஒருவன், சந்தனம் இருக்கிறது என்று ஒரு செம்பைத் திறந்து உள்ளே பாம்பைக்கண்டது போன்றதாம். 56
----------------
யாஅர் ஒருவர் ஒருவர் தம் உள்ளத்தைத்
தேரும் துணைமை உடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் ! மக்கள்
மனம் வேறு; செய்கையும் வேறு. 57
மலைச் சாரலில் பெருமணிகள் கிடந்து சுடர்விடும் மலை நாடனே, கேள் ! மக்களது மனம் வேறாயுள்ளது, செய்கையும் வேறாபுள்ளது; எனவே, எவர் ஒருவர் இன்னொருவரது மனத்தைப் புரிந்து கொள்ளும் அறிவுத் துணை உடையவராயிருக்க முடியும்? 57
-------------
உள்ளத்தால் நள்ளா துறுதித் தொழிலராய்க்
கள்ளத்தால் நட்டார் கழிகேண்மை -- தெள்ளிப்
புனல்செதுப்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும். 58
தண்ணீர் மணிகளைத் தெள்ளியிழுத்துச் சேறாய்க் குழப்பிக் கொண்டோடும் பொலிவு மிக்க மலை நாடனே! உள்ளத்தால் நட்பு கொள்ளாமல், நன்மை பெறுவதற்கு ஏற்ற வெளிச்செயல் உடையவராய்க் கள்ளத்தனமாய் நட்புற்றிருப்பவரின் பெரிய நட்பு, மனத்தில் களங்கம் உடையதாகிப் பின் அழிந்துவிடும். 58
------------------
ஓக்கிய ஒள்வாள் தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் ;- ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு. 59
ஓங்கிய ஒளிவிடும் வாள் தவறித் தம் பகைவர் கையில் அகப்பட்டுக் கொள்ளின், தம் ஊக்கத்தை அழிப்பதும் உண்மையாகும். அதுபோல, கல்லாத தீயோரிடம் நட்பு கொளின், அந்நட்பு, இம்மையிலும் மறுமையிலும் தம் வளர்ச்சியைச் சுட்டழிக்கு மாதலால், அன்னாரிடமிருந்து பிரிதலே நற்செயலாகும். 59
----------------
மனைப்பாசம் கைவிடாய்; மக்கட்கென்றேங்கி
எனைத் தூழி வாழ்தியோ நெஞ்சே - எனைத்தும்
சிறுவரையே ஆயினும் செய்த நன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு. 60
மனைவியின் பற்றைக் கைவிடாமலும் மக்கள் நன்மைக் கென்று ஏங்கி யுழைத்தும் எத்தனை ஊழிக்காலந்தான் நெஞ்சமே நீ வாழ்வாயோ? எவ்வளவு சிறியதாயினும் செய்துள்ள நல்லறத்தைத் தவிர, உயிர்க்கு மிகு நன்மை யளிப்பது வேறொன்றும் இலது. 60
-----------------
துறவற வியல்
7. செல்வம் நிலையாமை / 7. செல்வத்தின் நிலையில்லாமை
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வ மொன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று. 61
உப்பு, உறைப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என்னும் ஆறு சுவைகள் கலந்த உணவை மனைவி விரும்பி ஊட்ட, மறு கவளம் வேண்டா என்று தள்ளி முதல் கவளத் தோடு உண்டு எழுந்த செல்வரும், பின் ஒரு கால் ஏழை யராகி வேறோரிடம் சென்று கூழுக்குக் கெஞ்சுவர் என்றால், செல்வம் என்னும் ஒன்று நிலையானதாக மதிக்கத்தக்க தன்று என்பது புலப்படும். 61
-----------------
துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால்
பகடு நடந்த கூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் தொட்டுப்
சகடக்கால் போல வரும். 62
செல்வமானது நடுவு நிலைமை உடையதாய் எவரிடமும் நிலைத்து நில்லாமல், வண்டியின் உருளைக் கால்போல மேலுங் கீழுமாய் மாறிமாறி வரும்; ஆதலின், குற்றம் அற்ற பெருஞ்செல்வம் கிடைப்பின், கிடைத்த காலந் தொட்டே, எருது நடந்து உழுது உண்டான உணவுப் பொருளைப் பலரோடு சேர்ந்து உண்பீராக! 62
---------------
யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - எனை
வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள். 63
யானையின் பிடர் பெருமையுற அதன் மேலுள்ள குடை நிழலின் கீழ்ப் படைத்தலைவராய் அமர்ந்து சென்ற அரசரும், மாறான தீவினை தாக்க, தாம் கைக்கொண்ட மனைவியை மாற்றாசர் கொள்ள வீழ்ந்தழிவர். 63
---------------
நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்(து)
ஒன்றின ஒன்றின வல்லே செயிற்செய்க ;
சென்றன சென்றன வாழ்நாள் ; செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று. 64
வாழும் நாட்களோ செல்லுகின்றன - செல்லுகின்றன; யமனோ, சினந்து விரைந்து வருகிறான் - வருகிறான்; எனவே நிலைத்தவை - நிலைத்தவை என்று நினைப்பன வெல்லாம் நிலையாக மாட்டா என்று அறிந்து, உம்மால் இயன்ற இயன்ற அறங்களைச் செய்வதாயின் உடனே செய்க. 64
----------------
என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில் தீக் கூற்றம்
தொடுத்தாறு செல்லுஞ் சுரம். 65
யாதானும் ஒரு பொருள் கையில் கிடைத்தால், அதனைப் பிறகு உதவுவோம் என இறுகப்பிடித்து வைத்திராமல் முதலிலேயே பிறர்க்கு உதவியவர்கள், நடுநிலை தவறுதல் இல்லாத கடிய யமன் உயிரைப் பிடித்துச் செல்லும் கொடுநிலத்திலிருந்து தப்பிப் பிழைப்பர். 65
-------------
இழைத்த நாள் எல்லை யிகவா; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை ; -ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ! நாளைத்
தழீ இம் தழீஇம் தண்ண ம் படும். 66
குறிப்பிட்ட வாழ்நாளின் எல்லையை யாரும் கடக்க முடியாது. எமனிடத்திலிருந்து தப்பி நீங்கிக் குதித் தோடிப் பிழைத்தவர் இங்கே எவரும் இலர். நாளைக்கே 'தழீஇம் ' - 'தழீஇம்' எனச் சாப்பறை (சாவுமேளம்) கொட்டப்படலாம். எனவே, மிகவும் பெரும்பொருள் வைத்திருப்பவரே! உடனே பிறர்க்கு வழங்குவீராக. 66
-------------
தோற்றஞ்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்து நும் நாளுண்ணும்;- ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் ! யாரும்
பிறந்தும் பிறவாதாரில், 67
நாடோறும் புதிதாய்த் தோன்றுகிற கதிரவனை அளக்கும் படியாகக் கொண்டு ஒவ்வொரு நாளும் எமனானவன் உம் வாழ்நாளைத் தானியமாக அளந்து உண்டுவருகிறான்; எனவே, எவரும் இவ்வுலகில் பிறந்திருப்பினும், நல்லறம் புரிந்து, பிறவா நிலை யெய்திய பெரியோர் போல அருள் உடையவராகுக! 67
---------------
செல்வர்யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய் திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும். 68
தாம் பெருஞ்செல்வர் என்றெண்ணித் தாம் செல்லப் போகும் மறுவுலகைப் பற்றி எண்ணாத அற்பரின் பெரிய செல்வம், இரவில் கரிய மேகத்தின் வாய்த் தோன்றிய மின்னல் போல் சிலகாலம் இருந்து, பின் வளரும் வழி முற்றும் அறக் கெட்டழியும். 68
---------------
உண்ணான்; ஒளி நிறான், ஓங்கு புகழ் செய்யான்;
துன்னருங் கேளிர் துயர்களையான் ;- கொன்னே
வழங்கான் ; பொருள்காத் திருப்பானேல் அஆ
இழந்தானென் றெண்ணப் படும். 69
ஒருவன் தானும் உண்ணாதவனாய், விளக்கமான நற் பெயரை நிலைநிறுத்தாதவனாய், உயர்ந்த புகழ்ச் செயல் புரியாதவனாய், பிறர்க்கும் வழங்காதவனாய், வீணே பொருளை வைத்துக் காத்திருப்பானேயாகில், ஆ ஆ அதனை இழந்துவிட்டான் என்றே எண்ணப்படுவான். 69
----------------
உடா அதும் உண்ணாதும் தம்முடம்பு செற்றும்
கெடா அத நல்லறமும் செய்யார் - கொடா அது
வைத்தீட்டி னாரிழப்பர் வான்தோய் மலை நாட!
உய்த் தீட்டும் தேனீக் கரி. 70
வானத்தை முட்டும் மலைநாடனே ! நல்லுடை உடுக்காமலும், நல்லுணவு உண்ணாமலும், தம் உடலை வருத்தியும், அழியாத நல்ல அறச்செயல்களும் செய்யாத வராயும், பிறர்க்கும் வழங்காமலும் பொருளைச் சிறுகச் சேர்த்து வைத்திருப்பவர் பின்னர் இழந்துவிடுவர். தேனைக் கூட்டில் கொண்டுவந்து சேர்க்கும் தேனீக்களே இதற்குச் சான்றாம். 70
-------------
துறவறவியல்
8. இளமை நிலையாமை. / 8. இளமையின் நிலை யில்லாமை
நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்;- புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோலூன்றி இன்னாங்
கெழுந்திருப்பார். 71
நல்லறிவினர் பின்னால் நரை தோன்றும் என முன்கூட்டியே உணர்ந்து இளமையிலேயே துறவு கொள்ளத் துணிந்தனர். குற்றம் நீங்காத - நிலையில்லாத இளமையை விரும்பி மகிழ்ந்து இறுமாந்திருந்தவர் பின்னர்த் தடி ஊன்றித் துன்பத்துடன் நடமாடுவர். 71
----------------
நட்புநார் அற்றன; நல்லாரும் அஃகினார்;
அற்புத் தளையும் அவிழ்ந்தன;-- உட்காணாய்!
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி. 72
நண்பர்கள் நீங்கினர்; நல்லறிஞரும் நெருக்கம் குறைத்தனர்; மனைவி மக்கள் முதலானாரின் அன்புப் பிணிப்புக்களும் அவிழ்ந்து போயின. இதனை உள்ளுணர்ந்து காண்க. வீணே உயிர் வாழ்வதால் என்ன நன்மை ஏற்படும்? கட லில் மூழ்கும் கப்பலின் நிலைபோன்ற அழிவுத்துன்பம் இதோ வந்துவிட்டதே! 72
----------------
சொற்றளர்ந்து கோலூன்றிச் சோர்ந்த நடையின ராய்ப்
பற்கழன்று பண்டம் பழிகாறும் -- இற்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிப்படரு மாறு. 73
பேச்சு தளர்வுற்று, தடி ஊன்றி, நடை சோர்ந்து, பற்கள் கழன்று விழுந்து, இவ்வுடம்பாகிய பண்டம் இழித்துரைக்கப்படும் வரையும் இல்லறத்திலேயே இருந்து காம வழி ஒழுகும் ஊனக்கண் உடையவர்க்கு, மறுமைக்கு அரணான வீட்டு நெறி செல்லும் வழி இல்லை. 73
-----------------
தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள் மாட்டும் - காழிலா
மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்
கோல் அம்மனைக்கோல் ஆகிய ஞான்று. 74
உடல் கூனிக் குனிந்து தளர்ந்து தலை நடுங்கித் தடி ஊன்றிக் கீழே விழுந்து இறக்கும் தறுவாயிலுள்ள இம் முதியவளிடத்தும், நெஞ்சுறுதியில்லாத - காம மயக்கம் கொள்கின்ற மாந்தருக்கு, இவள் ஊன்றும் கைத்தடி, தம் தாய் ஊன்றிய தடிபோல் தெரியும்போது மனத்திற்குத் துன்பம் தரும். 74
--------------
எனக்குத் தாய் ஆகியாள் என்னையீங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் - தனக்குத் தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்
ஏகும் அளித்திவ் வுலகு (கொண்(டு) 75
எனக்குத் தாயா யிருந்தவள் என்னை இங்கே விட்டு விட்டு, தனக்குத் தாய் தேடி வேறு பிறவி எடுக்கச் சென்று விட்டாள்; அவளுக்குத் தாயானவளும் அவ்வாறே தாய் தேடிச் செல்கிறாள் எனில், இவ்வுலக உயிர்கள் தாயோ தாய் என்று தாயைத் தேடிக்கொண்டு அலையும் எளிமை யுடையனவாம். 75
----------------
வெறியயர் வெங்களத்து வேல் மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல். 76
வேலன் (சாமியாடுபவன்) வெறியாடும் (சாமியாடும்) கொடிய கொலைக்களத்திலே (ஆட்டைக் கொல்லும் பலி பீடத்திலே), அவனது கையில் தளிரோடு கூடிய மணமிக்க மாலை முன்னால் விளங்க, வெட்டப்படவிருக்கும் ஆடு அந்தத் தளிர் இலையை உண்டாற் போன்ற நிலையற்ற இளமையின் போலியின்பம் அறிவாளரிடம் இராது. 76
----------
பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோற்கண்ணள் ஆகும் குனிந்து. 77
இளமையானது, குளிர்ச்சி பொருந்திய சோலையில் உள்ள பயனுள்ள மரங்க ளெல்லாம் பழங்கள் இற்று வீழ்ந்தாற் போன்றது. எனவே, மிகப் பெரிதும் வேல் போன்ற அழகிய கண்ணுடையவள் என்று இந்த இளம் பெண்ணை விரும் பாதீர்கள் ! மற்றபடி இவளும் பின்னர் உடல் கூனிக் குனிந்து கோலையே கண்ணாகக் கொண்டு நடப்பாள். 77
------------
'பருவம் எனைத்துள் பல்லின் பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ ' என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்
கோள் எண்ணார் அறிவுடை யார். 78
வயது எத்தனை ஆகியுள்ளது ! பல்லின் வன்மை எப்படி? (ஒரு முறை மட்டுமா அல்லது) இரு முறையும் உண்கிறீர்களா? என்று முறைப்படி கேட்கப்பட்டுப் பிறரால் உடல் உள்ளாராய்ச்சி செய்யப் படுவதால், உடல் உறுதியை ஒரு பொருளாக அறிவுடையவர் மதிக்கார். 78
----------------
'மற்றறிவாம் நல்வினை ; யாமிளையம்' என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்!
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு. 79
முதிர்ந்த பழம் மரத்திலேயே இருக்க, கொடிய காற்றால், நல்ல இளங்காய் விழுந்து போவதும் உண்டு. எனவே, இப்போது நாம் இளையவராயுள்ளோம்; நல்லறம் புரிதலைப் பிறகு பார்த்துக் கொள்வோம் என்று கருதாமல், கைப் பொருள் இருக்கும் இப்பொழுதே மறைக்காமல் நல்லறம் செய்க. 79
-----------------
ஆட்பார்த் துழலும் அருளில் கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தாற் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாயலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. 80
நாள் முடியும் ஆளைத் தேடி அலையும் அருள் அற்ற எமன் ஒருவன் இருப்பதால், தோளில் எடுத்துச் செல்லும் கட்டு சோறு போன்ற நல்லறத்தைக் காலத்தோடு செய்து பிழையுங்கள் ! எமன், கருவைப் பிதுக்கித் தாய் அலறும் படிக் குழந்தையையும் கொண்டு செல்லுதலால், அவனது கபடு அறிந்து நடத்தல் நல்லது. 80
-------------
துறவறவியல்
9. யாக்கை நிலையாமை / 9. உடம்பின் நிலையில்லாமை
'மலைமிசைத் தோன்றும் மதியம் போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் ' என்றெடுத்துத் தூற்றப்பட்டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில். 81
மலைமேல் தோன்றும் முழு நிலாப்போல யானையின் பிடர் மேல் நிறுத்தப்பட்ட வட்ட வெண்குடைக்கீழ் அமர்ந்து சென்ற அரசர்களும் இறுதியில் இத்தரையில் இறந்துப்பட்டனர் என்று குறிப்பிட்டு எளிமையாய்ப் பேசப்படுகின்றனரே தவிர, இவ்வுலகில் இறவாமல் தப்பினவர் எவரும் இலர். 81
-------------
வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஆ தெழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும்
நிலவார் நிலமிசை மேல். 82
உள்ள வாழ் நாள் ஒவ்வொன்றையும் அளக்கும் அலகாக, ஒளிவீசும் கதிரவன் ஒருநாளும் வீணே தவறாமல் தோன்றிக் கொண்டே யிருத்தலால், இவ்வுலகின் மேல் எவரும் நிலைத்திரார்; எனவே, வாழ்நாள் முடியுமுன் உலகோடு ஒத்து உதவி வாழ்க! 82
-----------
மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோ மாறே
வலிக்குமாம் மாண்டார் மனம். 83
மண அரங்கு அதிர மணப்பறையாய் ஒலித்த இன்னியங்கள் (வாத்தியங்கள்) அப்போதே அங்கேயே அந்த மண் மக்கட்கே மேற்கொண்டு பிணப்பறையாய் முழங்குதலும் உண்டு என்று உணர்ந்து, மாட்சிமையுடைய பெரியோர் உள்ளம், பிழைத்து ஏகக்கூடிய நல்லற வழியினையே அழுந்தப் பின்பற்றுமாம். 83
---------------
சென்றே யெறிப ஒருகால் ; சிறுவரை
நின்றே யெறிப் பறையினை ;- நன்றேகாண்!
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக்கொண்டெழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து. 84
சாப்பறை அடிப்பவர் செத்த வீடு சென்று முதலில் ஒரு சுற்று அடிப்பார்கள், பின்னர்ச் சிறிதுநேரம் இருந்து இரண்டாவது சுற்று பறை கொட்டுவர்; பின்பு மூன்றாவது சுற்று அடிக்கும் போது, பிணத்தைத் துணியால் போர்த்து நெருப்புச் சட்டி எடுத்துக்கொண்டு, செத்தவரைச் சாகப் போகின்றவர் சுமந்து செல்வர். இத்தகைய வாழ்க்கை நன்றோ? ஆராய்ந்து காண்க. 84
-------------
கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணங்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் -- மணங்கொண்டீண்(டு)
உண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொண் என்னும் பறை. 85
உறவினர் கூட்டமாய்க் கூடிக் ’கல்' என ஒலித்து அழுது புலம்ப, பிணத்தைச் சுமந்து சுடுகாட்டில் கொண்டு செலுத் துபவரைக் கண்டும், இவ்வுலகில் மணம் புரிந்து கொண்டு, இன்பம் உண்டு - உண்டு - உண்டு என்று நம்பும் மயக்க உணர்வுடையோர்க்கு, இன்ப நிலையாமையைச் சாப்பறை யானது 'டொண் - டொண் - டொண்' எனக் கொட்டி உணர்த்தும். 85
------------
நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென பல்லோர் பழிக்கிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால். 86
தோலாகிய பைக்குள் இருந்து தொழில் மிகவும் செய்து உணவூட்டிய உயிராகிய கூத்தாடி உடலை விட்டு வெளியே புறப்பட்டு விட்டால் அந்த வெற்றுடலை நார்கட்டி இழுத்தும் போனால் என்ன? நன்கு தூய்மை செய்து அடக்கம் செய்தால் என்ன? கண்டவிடத்தில் எறிந்தால் தான் என்ன? பலரும் பழித்தால் தான் என்ன? 86
------------
படுமழை மொக்குளிற் பல்காலுந் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் -தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணருந் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல். 87
பெய்யும் மழையில் தோன்றி மறையும் குமிழிபோல் பல முறையும் தோன்றி அழியக்கூடிய ஒருவித உடம்பு இது என்று எண்ணி, உலகியல் தடுமாற்றத்தை ஒழிப்போம் என்று உணர்ந்து செயல்படும் திண்ணிய அறிவினரை ஒப்பவர் இந்த நீண்ட உலகில் யார் உளர்? 87
--------------
யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம் பெற்ற
யாக்கையால் ஆய பயன்கொள்க - யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும். 88
உடம்பானது, மலைமேல் காணப்படும் மேகம் போல் சிறிது நோம் தோன்றி மற்று அங்கேயே நிலையாமல் நீங்கிவிடக் கூடியது; எனவே, உடலை உறுதியாகப் பெற்றிருப்பவர், தாம் பெற்றுள்ள அவ்வுடம்பால் தகுந்த நல்லறப் பயனை நாடிக்கொள்க. 88
-------------
புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை - 'இன்னினியே
நின்றான்; இருந்தான்; கிடந்தான்; தன் கேளலறச்
சென்றான்' எனப்படுத லால். 89
இதோ இப்போதுதான் நின்றுகொண்டிருந்தான் - பின்னர் அமர்ந்தான் - பின்பு படுத்தான் - பின் தன் உறவினர் அலறி அழ இறந்தே போய்விட்டான் என்று வாழ்க்கை நிலை பேசப்படுதலால், உடலானது புல் நுனியிலுள்ள பனிநீர் போல் நிலையற்றது என்று உணர்ந்து, இப்போதே - ஆம் - இப்போதே அறச்செயல் புரிவீராக! 89
---------------
கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரான் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து. 90
மாந்தர்கள், கேளாமலேயே உறவினராய்த் தாமாக வந்து வீட்டில் பிறந்து. கூடு மாத்திலேயே தங்க ஒன்றும் சொல்லாது வெகு தொலைவு பறந்து சென்றுவிடும் பறவை போல, தம் உடலைச் சுற்றத்தார்க்கு விட்டு ஒன்றும் சொல்லாமலேயே பிரிந்து போய்விடுகின்றனர். 90
---------------
துறவறவியல்
10. அறன் வலியுறுத்தல் / அறத்தின் வலிமையை வற்புறுத்தி அறிவித்தல்
அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார். 91
முற்பிறப்பில் செய்த அறத்தால் (தவத்தால்) இன்பம் துய்த்து இப்பிறப்பில் அறம் செய்யாதவர்கள், அடுத்த பிறவியில், இவ் வீட்டில் உள்ளவரே நன்கு வாழ்பவராவர் என ஒரு வீட்டை அண்ணாந்து பார்த்துத் தாம் உள்ளே புக முடியாதவராய் வெளிக்கடைவாயிலைப் பிடித்துக்கொண்டு மிகவும் வருந்தி நிற்பர். 91
------------
ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம் நாம் என்னாப் புலைநெஞ்சே! - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள்
சென்றன செய்வ துரை. 92
அற்ப மனமே! நாம் வளர்ச்சியுற வேண்டும்; ஆதலின் செல்வத்தை விரும்பி அறத்தை மறந்து விடுவோம் என்று கருதி, பொருளுக்காக ஓயாது நின்று முயன்று வாழ்கிறா யென்றாலும், நின் வாழ் நாட்கள் இதோ சென்று விட்டனவே! இனி நீ செய்யப்போவதைக் கூறுக. 92
-----------
வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத்
தொல்லைய தென் றுணர் வாரே தடுமாற்றத்(து)
எல்லை இகந்தொருவு வார். 93
அறிவிலி பழைய தீவினைப் பயனாகிய துன்பம் வரின், வெப்பமாய்ப் பெருமூச்சு விட்டு மனம் சோர்வான். எனவே, அதனைப் பழவினைப் பயன் என்று அறிந்து தெளிந்தவரே, தடுமாற்றத்தின் எல்லையைக் கடந்து நீங்கிக் கடைத் தேறுவர். 93
--------------
அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்னுதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு. 94
பெறுதற்கரிய நல்லுடம்பைப் பெற்ற நற்பயனால் பெரிய அறப்பயனையும் மிகவும் செய்து வைத்துக் கொள்வீராக உடலானது, கரும்பு தரும் சாறுபோல் பின்னர் அறப்பயனை மிகவும் அளித்து, மற்று அக்கரும்பின் சக்கை போல் தான் அழிந்துவிடும். 94
------------
கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேங்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர். 95
காலத்தோடு கரும்பை ஆலையில் இட்டு ஆட்டி வெல்லச் கட்டி பெற்றவர், பின் சக்கை தீயில் பொருந்தி எரியும் போது அங்கே துன்பம் உறமாட்டார்; அதுபோல, வருந்தி உழைத்து உடம்பினால் அறப்பயன் சேர்த்துக்கொண்டவர் எமன் வரும்போது வருந்துவதில்லை. 95
-------------
'இன்றுகொல் அன்றுகொல் என்று கொல்' என்னாது
'பின்றையே நின்றது கூற்ற மென் றெண்ணி
ஒருவுமின் தீயவை; ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம். 96
எமன் இப்பொழுது வருவானோ - அப்பொழுது வருவானோ - எப்பொழுது வருவானோ என்றெல்லாம் எண்ணாமல், அவன் நம் பின்னாலேயே மறைந்து நின்றுகொண்டிருக்கிறான் என்பதாக எண்ணி, தீ வினைகளை நீக்குக ! முடிந்தவரையும் உயர்ந்தோர் வகுத்துள்ள அறங்களைச் செய்துவருக. 96
----------
மக்களால் ஆய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும். 97
மக்கட் பிறவியால் ஆகக்கூடிய பெரும்பயனை ஆராயின், எவ்வளவோ மிகப் பல பயன்கள் உண்டாவதால், தடித்த உடம்புக்கு வேண்டிய உதவிகளை மட்டும் செய்துகொண்டிராமல், மேலுலகம் சென்று துய்ப்பதற்காக நல்லறங்கள் செய்யவேண்டும். 97
------------
உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தா அங்(கு) - அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான் சிறிதாப் போர்த்து விடும். 98
கிள்ளி யெறியும் அளவினதான ஒரு சிறிய ஆலம் விதை பெரிய மரமாய் விரிந்து மிகவும் பரந்த நிழலைப் பயப்பது போல, அறத்தின் பயனும் தான் சிறியதாயிருப்பினும் தகுந்தவர் கையில் செய்யப்பட்டால், வானம் சிறிதாக அதனைப் போர்த்தும் அளவு தான் பெரிதாகும். 98
-------------
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின் புறுவர்;
வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார். 99
நாடோறும் நாளானது தம் வாழ் நாளில் கைவைக்கிறதாக அந்நாளைக் கணக்கிட்டு உணராதவர், நாடோறும் நாள் வந்து கழிதலைப் பார்த்தும், தம் வயது குறைவதான அந்நுட்பம் உணராதவராய், நாடோறும் நாளை இன்பமா யிருக்கிறது என்றெண்ணி மகிழ்வர். 99
-------------
மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் ;-ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின். 100
ஈனத் தொழில் செய்து உணவு ஊட்டியபோதும் இந்த உடம்பு அழியா உறுதி பெற்றுப் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்து நிலைத்து நிற்கும் என்றால், ’மானம்' என்னும் பெறுதற்கரிய அணிகலனை இழந்து, இரத்தல் (யாசித்தல்) என்னும் ஈனத்தனமான இழிசெயல் செய்தாவது யான் உயிர் வாழ்வேன். ஆனால் அது நடவாதே! 100
--------------
துறவறவியல்
11. தூய் தன்மை / உடம்பின் தூய்மை யற்ற தன்மை
'மாக்கேழ் மடநல்லாய்!' என்றரற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கில்லை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல். 101
உடம்பிலே ஓர் ஈயின் சிறகளவு தோலின் ஒரு பகுதி கழன்றாலும், அதைக் கொத்தாதபடி காக்கை ஓட்டுவதற்கு ஒரு கோல் வேண்டும்; எனவே, 'மாந்தளிர் நிறமும் இளமையும் உடைய அழகிய பெண்ணே ' என்று பெண்களை நோக்கிப் பிதற்றும் பெரிய மனிதர்கள் உடம்பு அற்பமான ஓர் ஒதுக்கிடம் என்பதை அறியார் போலும் ! 101
----------
தோற்போர்வை மேலும் துளை பலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித் துடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்ற தனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும். 102
உடம்பானது, தோலாகிய போர்வைக்கு மேலும் பல துளைகளை உடையதாய்ப் பொய்த் தோற்றத்தை மறைக்கும் மேற்போர்வைத் துணியால் பொலிவுடையதாய்க் காணப் படுகிறது; ஆதலின், மேற்போர்வையால் பொய்ம்மையை மறைக்காமல் காமமும் பேசாமல் உட்புறம் வெளிப்புற மாகும்படி பையைத் திருப்பிப் பார்ப்பதுபோல் அவ்வுடலைத் திருப்பிப் பார்த்தால் உண்மை விளங்கும். 102
--------------
தக்கோலம் நின்று தலை நிறையப் பூச்சூடிப்
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல். 103
இவ்வுடம்பு எப்போதும் உண்ணும் செயலால் உறுதி பெறக்கூடியது (அதாவது, சோற்றால் அடித்த பிண்டம்) என்னும் உண்மையை உணர்ந்து பெரியவர்கள் வெளியழகு செய்வதைக் கைவிட்ட இவ்வுடலாகிய செத்தையின் இழி நிலை, தாம்பூலம் உண்டு தலை நிரம்ப மலர் அணிந்து பொய்யழகு செய்வதால் மறைந்து விடுமோ? 103
---------------
தெண்ணீர்க் குவளை பொருகயல் வேல் என்று
கண்ணில் புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்கு சூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன். 104
கண்ணின் உள் நீரை எடுத்துவிடின் பனை நுங்கைத் தோண்டியது போல் தெரியும் அக் கண்ணின் உண்மை நிலையை உணர்ந்து நன்னெறியில் நடக்கும் நான், பெண் களின் கண்களை, தெளிந்த நீரில் உள்ள குவளை மலர் போன்றன - துள்ளும் கயல் மீன் போன்றன - வேல் போன்றன - என்றெல்லாம் கண்ணற்ற அற்பர்கள் பிதற்றி மயக்குவதால் உறுதி தளர்வேனோ? 104
-------------
முல்லை முகைமுறுவல் முத்தென் றிவை பிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன். 105
யாரும் காணும்படி சுடுகாட்டில் உதிர்ந்து சிந்திக் கிடக்கும் பல்லாகிய எலும்பைப் பார்த்து நல்வழி நடக்கும் நான் பெண்ணின் பல் முல்லை மொக்கு போன்றது - முத்து போன்றது- என்றெல்லாம் பிதற்றுகிற கல்லாத அற்பர்களின் மயக்கவுரையால் மனம் தளர்வேனோ? 105
------------
குடரும் கொழுவும் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்பும் ஆம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள். 106
குளிர்ந்த பூமாலை சூடிய அழகிய பெண் எனப்படுபவள் குடலும் மூளையும் இரத்தமும் எலும்பும் தொடர்கின்ற நாம் பும் தோலும் நடுநடுவேயுள்ள தசையும் கொழுப்பு நிண மும் ஆகிய இவ்வுடற் பகுதிகளுள் எது என்று குறிப்பிடத் தக்கவளோ? 106
------------
ஊறி உவர் த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
'பெருந்தோளி! பெய்வளாய்!' என்னுமீப்போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு. 107
ஊத்தைகள் ஊறி வெறுக்கத்தக்க ஒன்பது துளையிடங்களிலும் கிளறி மலக்குழம்பு தளும்பும் உடலாகிய குடத்தை மேலே மூடியுள்ள வழவழப்புத் தோலினால் கண்ணிற்கு அழகெனக் கொண்டு, 'பேரழகு பொருந்திய தோளை உடையவளே - அணிந்த அழகு வளைய லுடையாளே' என்றெல்லாம் மூடன் பிதற்றுவான். 107
---------------
பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் -- மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
முடைச்சாகா டச்சிற் றுழி . 108
உடம்பாகிய பண்டத்தின் உண்மை நிலை உணராதவர் அணிந்துள்ள சந்தனத்தையும் மாலையையும் பார்த்துப் பாராட்டுகின்றனர். இவர்கள், முடைநாற்றமுடைய உடம்பாகிய வண்டி உயிராகிய அச்சு முரிந்து இற்று விழுந்த பின், வலிய பெட்டைக்கழுகும் ஆண்கழுகும் பிணத்தை நெருங்கி யிழுத்துக் குத்தியுண்பதைக் கண்டதில்லை போலும் 108
------------
கழிந்தார் இடுதலை கண்டார் நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின்; இற்றி தன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து. 109
இடுகாட்டில் இட்ட இறந்தவர் தலைகள், பார்ப்பவ உள்ளம் அஞ்சும்படி, உள்குழிந்து ஆழ்ந்துள்ள கண்களுடன் தோற்றமளித்து, இறவாதிருப்பவரை நோக்கி 'நல்லறம் பேணி நல்வழியில் நில்லுங்கள் ! இவ்வுடலின் இயல்பு இத்தகையது தான்’ என மிகவும் நகைத்து எச்சரிக்கின்றன போலும்! 109
--------------
உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர் தீர்க்கும் செம்மாப் பவரைச் - செயிர் தீர்ந்தார்
கண்டிற்றிதன் வண்ணம் என்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர். 110
உயிர் போனவரின் வெள்ளைத் தலை, கண்டார் அஞ் நகைத்து, இன்பத்தில் இறுமாந்திருப்பவரை எச்சரித்து குற்றத்திலிருந்து நீக்கும். குற்றம் நீங்கியவர் அது கண் இவ்வுடலின் தன்மை இத்தகையது என்று உணர்வதால் தம்மை யொருபொருளாக மதித்துத்தருக்கடைவதில்லை. 110
---------------
துறவறவியல்
12. துறவு / உலகப் பற்றைத் துறத்தல்
விளக்குப் புகவிருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின் முன் நில்லாதாம் பாவம் ; - விளக்கு நெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது. 111
விளக்கு வெளிச்சம் ஏற்பட்டதும் இருள் நீங்கினாற்போல, ஒருவனது தவத்தின் முன்னே தீவினை நிற்காது. விளக்கின் நெய் தீர்ந்தபோது இருள் சென்று பாய்வதுபோல், ஒருவனது நல்வினை நீங்கியபோது தீவினை நிலைத்து விடும். 111
--------
நிலையாமை, நோய், மூப்புச், சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார் ;-தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவை பிதற்றும்
பித்தரின் பேதையார் இல். 112
பொருள்களின் நிலையின்மை, பிணி, முதுமை, இறப்பு ஆகியவற்றை எண்ணி மேலோர் தமக்கேற்ற நல்வினைகளைச் செய்வர். எனவே, வேத சாத்திரம், சோதிடம் என்றெல்லாம் பிதற்றுகிற பித்தர்களினும் அறிவிலிகள் இல்லை . 112
------------
இல்லம், இளமை, எழில் வனப்பு, மீக்கூற்றம்,
செல்வம், வலியென் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்;
தலையாயார் தாமுய்யக் கொண்டு. 113
வீடு, இளமை, எழுச்சி, அழகு, மேலான புகழ்ச்சொல், செல்வம், வலிமை என்ற இவை யாவும் நிலையற்றவை என மேலோர் மெல்ல ஆய்ந்துணர்ந்து, தாம் பிழைக்கும் வழிதேடி, காலம் தாழ்க்காது துறவுகொள்வர். 113
-------------
துன்பம் பலநாள் உழந்தும் ஒரு நாளை
இன்பமே காமுறுவர் ஏழையார்; - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா (று)
அடைவொழிந்தார் ஆன்றமைந் தார். 114
அறிவிலார், பல நாள் துன்பத்தில் உழல்வதானாலும், ஒருநாள் இன்பத்திற்காக மனை வாழ்வை விரும்புவர், கற்றமைந்த பெரியாரோ, இன்பம் இடையிடையே சிறிதளவு வருவதறிந்தும், துன்பமே மிகுதியானது என்றுணர்ந்தும் மனைவாழ்வைத் துறந்தனர். 114
--------------
கொன்னே கழிந்தன் றிளமையும்; இன்னே
பிணியொடு மூப்பும் வருமால்;- துணிவொன்றி
என்னொடு சூழா தெழுநெஞ்சே ! போதியோ
நன்னெறி சேர நமக்கு. 115
இளமையும் வீணே கழிந்தது; இதோ - இப்போதே நோயுடன் முதுமை வருகிறது. எனவே, என்னோடு கலவாமல் துணிவுடன் எங்கெங்கோ செல்லும் என் மனமே! இனியாயினும் நமக்கு நல்வழி ஏற்படப் புறப்படுக. 115
---------------
மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும்
பூண்டான் கழித்தற் கருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார். 116
மனைவியிடம் மாட்சிமையான குணம் இல்லாமையுடன் மக்களைப் பெறும் மலர்ச்சியும் இல்லையென்றாலும் கணவன் அவளைக் கைவிட முடியாதாதலின், இப்படியான வறட்டுச் சூழ்நிலையின் காரணத்தால், கற்றறிந்த பெரியோர் முற்கால நூற்களிலே திருமணத்தைக் 'கடி' என்னும் சொல்லால் குறித்தனர். (கடி என்னும் சொல்லுக்கு, 'திருமணம்' என்றும், 'விலக்குதல்' என்றும் பொருள்கள் உண்டு ) 116
----------
ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கரும் துன்பங்கள் தாம் தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர். 117
ஊக்கத்துடன் தாம் மேற்கொண்ட நோன்புகள் குலையும் படி, தாங்க முடியாத துன்பங்கள் தலை நீட்டி வரினும், அவற்றை விலக்கி நோன்பை நிலைநிறுத்தும் வலிமை யுடையவரே நல்லொழுக்கம் போற்றும் அழகிய தவத்தோராவர். 117
----------
தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்ப தன்றிமற்(று)
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன். 118
பிறர் தம்மை இகழ்ந்து பேசியதைத் தாம் பொறுத்துக் கொள்வதல்லாமல், மேலும், இவர் எம்மை இகழ்ந்த தீவினைப் பயனால், மறுமையில் நாகத்தின் எரிவாயில் விழுந்து வருந்துவாரே என்று இரக்கப்படுவதும் துறவியரது கடமையாம். 118
---------
மெய்வாய் கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்க்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும். 119
மெய், வாய், கண், மூக்கு, காது எனப் பேர்கூறப்படும் ஐம்பொறிகளின் வாயிலாய் உண்டாகும் விருப்பையும் ஆவலையும் தன்கைவயமாய்க் கலங்காமல் தடுத்துக் காத்துச் செலுத்தும் வலிமை உடையவன் தவறாது வீடு (முத்தி) பெறுவான். 119
-------------
துன்பமே மீ தூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார்;- இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல். 120
அறிவிலார், துன்பங்களே மேலிடக் கண்டும் துறவு கொள்ளாராய் இன்பத்தையே விரும்பி எதிர்பார்ப்பர். மேலோர் இன்பம் வருந்தோறும் மற்று அதில் மிக்குள்ள துன்பத்தை நோக்கி, இன்பத்தை விரும்புதல் செய்யார். 120
---------------
துறவறவியல்
13. சினம் இன்மை / கோபம் கொள்ளாமை
மதித்திறப் பாரும் இறக்க ; மதியா
மிதித்திறப் பாரும் இறக்க ;- மிதித்தேறி
ஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று . 121
நம்மை மதித்து நன்கு நடப்பவரும் நடக்கட்டும்! மதிக்காமல் நம்மை மிதித்து நடப்பவரும் நடக்கட்டும் ! அற்ப ஈயுங்கூட, நம் தலைமேல் மிதித்து ஏறி அமர்வதால், அவ் வுண்மை யுணர்ந்தவர், சுடும் சினம் கொள்ளாது பொறுத் தலே நல்லது. 121
----------
தண்டாச் சிறப்பின் தம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி எல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர். 122
அடிபெயர்க்கவும் முடியாமல் நெருக்கி மிகவும் இழிவு நேர்ந்தபோதும் எடுத்த நற்செயலை முடிக்கும் மனவுறுதி யுடையவர், நீங்காத பெருமைக்கு உரிய தமது இனிய உயிரைக் காக்காமல், பிறரால் துன்பம் கண்டபோதெல்லாம் வெறுத்து உயிரை விடுவரோ? 122
-------------
காவா தொருவன் தன் வாய்திறந்து சொல்லும் சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. 123
ஒருவன் தன் வாயை அடக்காமல் திறந்து பேசும் தீய பேச்சு, பின்னர் விடாமல் அவனையே சுட்டு வருத்துவதால், இடைவிடாது ஆராய்ந்து அமைந்த கேள்வி யறிவுடைய பெரியோர் எப்போதும் காயும் கடுஞ் சொற்களைச் சினந்து சொல்லார். 123
--------------
நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் ;- ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர் கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ். 124
மேலானவர், தமக்கு நிகரற்ற கீழோர் பண்பற்ற பேச்சு பேசினால், அதற்காக வியர்த்துச் சினங் கொள்ளார். கீழோரோ, அப்பேச்சினைத் தம் உள்ளத்தால் அலசி ஆராய்ந்து ஊரார் கேட்கும்படி நெடுகச் சென்று பேசித் துள்ளிக் குதித்துத் தூணிலே முட்டிக்கொள்வர். 124
---------
இளையான் அடக்கம் அடக்கம்; கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் ; - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை. 125
இளைஞனது அடக்கமே சிறந்த அடக்கம்; மேன்மேலும் கிளைக்கும் பொருள் வருவாய் இல்லாதவன் கொடுக்கும் கொடையே உயர்ந்த கொடைப் பயனாம்; எவற்றையும் நொறுக்கவல்ல வலிமையும் திண்மையும் உடையவன் பொறுக்கும் பொறுமையே சிறந்த பொறுமையாகும். 125
------------
கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பையவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு. 126
உயர்ந்தோர், மந்தரித்து இட்ட திருநீற்றால் விரைவில் படம் அடங்கிய பாம்புபோல, தத்தம் குடிப் பெருமையால் கட்டுண்டு, கீழோர் வாயிலிருந்து கல் வீசினாற்போல் வருங் கொடுஞ்சொல்லை யாவரும் அறியப் பொறுத்துக்கொண்டு போவர். 126.
------------
மாற்றாராய் நின்று தம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ;- ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாமவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று. 127
பகைவராய் நின்று தம்மோடு மாறுகொள்ளும் அற்பர்க்கு அடங்கி ஒதுங்கிப் போதலைக் கோழைமை என்று அறிவாளிகள் கருதார்; எனவே, அவர்கள் பொறுக்க முடியாதபடி எதிரிட்டுத் துன்பம் செய்தால் தாம் பதிலுக்கு அவர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே நல்லது . 127
----------------
நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் ;- அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம் போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம். 128
கீழோரது சினம் நெடுநாள் ஆனாலும் நீங்குதல் இன்றி வளர்ந்து கொண்டே போகும். சிறப்புடைய பெரியோர் சினமோ, காய்ச்சும்போது தண்ணீர் கொள்ளும் சூட்டைப்
போல் சிறிதுநேரம் இருந்து பின்பு தானாகவே ஆறிவிடும். 128
-----------
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம் செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க்கில். 129
தாம் உதவி செய்ததை உணராமல் ஒருவர் தமக்கு மிகவும் தீமையே செய்தாலும், தாம் பதிலுக்கு நன்மையே செய்வதைத் தவிர, அவரது தவறுக்காக அவர்க்குத் தீமை செய்ய முயலுதல், வானளவு உயர்வு மிக்க குடும்பத்தில் பிறந்த நல்லோரிடம் இல்லை. 129
-----------
கூர்த்து நாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயால்
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கில்லை ;- நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்கள் தம் வாயால் மீட்டு. 130
நாயானது வெறிமிக்குக் கவ்விக் கடிக்கக் கண்டும், தம் வாயால் பதிலுக்கு அந்நாயைக் கடித்தவர் இவ்வுலகில் இல்லை. எனவே, கீழோர் பண்பு இன்றிக் கீழான சொற் களைச் சொன்னால், மேலோர் தம் வாயால் பதிலுக்குத் திருப்பி அவ்வாறு சொல்வார்களோ?
130
--------------
பொருட்பால் அரசியல்
14. கல்வி / கல்வியின் சிறப்பு
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல ;- நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. 131
மயிர் முடியின் அழகும் வளைந்த ஓரக்கரையிட்ட உடையழகும் பூசும் பூச்சழகும் ஒருவர்க்கு உண்மையான அழகாகமாட்டா. யாம் மனத்தால் நல்ல தன்மை உடையோம் என்னும் நடுநிலைப் பண்பை உண்டாக்குவதால் கல்வி அழகே உண்மை அழகு. 131
------------
இம்மை பயக்குமால், ஈயக் குறைவின்றால்,
தம்மை விளக்குமால், தாம் உளராக் கேடின்றால்,
எம்மை உலகத்தும் யாம்காணேம் ; கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து. 132
கல்வியானது இவ்வுலக இன்பமும் அளிக்கும், கொடுக்கக் கொடுக்கக் குறையாது வளரும்; தம் புகழை விளங்கச் செய்யும்; தம்மைப்புகழால் என்றும் உள்ளவராக்கி அழியாது நிற்கும்; இத்தகைய கல்வியைப் போல, அறியாமையாகிய மயக்கத்தைப் போக்கும் மருந்து. யாம் எவ்வுலகிலும் கண்டதில்லை. 132
-----------
களர் நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளை நிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
கடைநிலத்தோர் ஆயினும் கற்றறிந் தோரைத்
தலை நிலத்து வைக்கப் படும். 133
உவர் நிலத்தில் தோன்றிய உப்பை நன்செய் நிலத்தில் தோன்றிய நெல்போல் சிறந்ததாக உயர்ந்தோர் மதிப்பர் அதுபோல், தாழ்குடியில் பிறந்தவராயினும் கற்றறிந்தவர்களைத் தலைமையிடத்தில் வைத்துப் போற்ற வேண்டும். 133
------------
வைப்புழிக் கோட்பாடா; வாய்த்தியின் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்;
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செவ்வன
விச்சை, மற் றல்ல பிற. 134
கல்வி, செல்வம் போல் வைத்த இடத்திலிருந்து யாராலும் கவரப்படாது; பாடம் கேட்பவர் வாய்க்கப் பெற்றுக் கற்றுத் தரின் அழியாது மேலும் வளரும்; மிகுந்த பெருமைக்குரிய வேந்தர் சினக்கினும் பறிக்க முடியாது; எனவே, ஒருவன் தனக்குப்பின் தன் பிள்ளைகட்கு வைப்பு நிதியாக அளித் துப்போக வேண்டியது கல்வி தவிர வேறில்லை . 134
--------------
கல்வி கரையில ; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணிபல ; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே; நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. 135
கல்விக்கோ அளவில்லை; கற்பவரின் வாழ் நாட்களோ சிலவே; அந்நாட்களிலும், மெல்ல எண்ணிப் பார்க்குங்கால், நோய்கள் பல உள் என்பது புலனாகும்; எனவே, நீரை நீக்கிப் பாலை மட்டும் பருகும் அன்னம் போல, தெளிவாக ஆராய்ந்து, நிறைவுடைய நல்ல நூற்களையே தேர்ந் தெடுத்து அறிவுடையோர் கற்பர். 135
------------
தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணின் கடைப்பட்டான் என்றிகழார் ;- காணாய்!
அவன் துணையா ஆறுபோ யற்றே; நூல் கற்ற
மகன் துணையா நல்ல கொளல். 136
பார்க்குங்கால், ஓடம் செலுத்துபவன் பழங்குடியைச் சேர்ந்த இழிகுலத்தவனாயுள்ளான் என்று யாரும் இகழ மாட்டார்கள்; அவன் துணையாக ஆற்றைக் கடந்து போவது போன்றதே, இழிகுலத்தானாயினும் நல்ல நூற்களைக் கற்றவன் துணையாக நற்கருத்துக்களைக் கற்றுக்கொள்ளு தலுமாம் ! அறிவாயாக! 136
----------
தவலரும் தொல்கேள்வித் தன்மை உடையார்,
இகலிலர், எஃகுடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்(து)
உம்பர் உறைவார் பதி. 137
குற்ற மற்ற பழைய நூற் கேள்வியும் நற்பண்பும் உடையவரும் பகைமை யில்லாதவரும் அறிவுவன்மை யுடையவருமாகிய கற்றவர்கள் குழுவில் கூடிப் பேசி மகிழ்வதனினும், அகன்ற விண்ணில் தேவர் வாழும் உயர்ந்த நகரம் இன்பம் தருமாயின் ஆண்டு சென்று
பார்க்கலாம். 137
----------
கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்பு தின் றற்றே ; நுனி நீக்கித்
தூரின் தின் றன்ன தகைத்தரோ; பண்பிலா
ஈரம் இலாளர் தொடர்பு. 138
ஒலிக்கும் குளிர்ந்த கடல் துறை நாடனே ! கற்றுத் தெளிந்தவரது நட்பு, கரும்பை நுனியிலிருந்து அடி நோக்கித் தின்பதுபோல் போகப்போக இனிக்கும். பண்பும் அன்பும் இல்லாத அறிவிலிகளின் நட்போ, கரும்பை நுனியைவிட்டு அடியிலிருந்து நுனிநோக்கித் தின்பதுபோல் இனிமை குறைந்துவரும். 38
------------
கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் ; - தொல் சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந் தாங்கு. 139
புதிய மட்பாண்டம், பழம் பெருமையும் நல்ல நிறமும் உடைய பாதிரிப்பூவைப் பெற்று அதன் மணத்தைத் தன்னிடமுள்ள தண்ணீருக்குக் கிடைக்கச் செய்தாற்போல, கல்லாதவர்களும் கற்றறிந்தவருடன் கலந்து பழகினால் அவர்தம் நல்ல அறிவு நாடோறும் கிடைக்கப் பெறுவர். 139
---------
அலகுசால் கற்பின் அறிவு நூல் கல்லா (து)
உலக நூல் ஓதுவ தெல்லாம் - கலகல
கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல். 140
ஒருவர் அளவு மிக்க படிப்பினைகள் அமைந்த அறிவு நூற்களைக் கல்லாமல், வெற்று உலகியல் நூற்களை மட்டும் படிப்பதனாலெல்லாம், ’கல கல' வென்று வீணே கத்தும் அளவேயன்றி, நன்மை பெற்றுத் தடுமாற்றம் நீங்கும் அளவு உண்மை யுணர்ந்தவ ராகார்.
140
--------------
அரசியல்
15. குடிப்பிறப்பு /பிறந்த குடியின் (குடும்பத்தின்) பெருமை
உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர் தம் கொள்கையிற் குன்றார்;
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புல் கறிக்குமோ மற்று. 141
அரிமா (சிங்கம்) பசித் துன்பம் மேலிட்டபோதும் கொடிப் புல்லைக் கடித்துத் தின்னுமா? தின்னாது. அது போல, உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர், உடை சிதைந்து பசியால் உடம்பு மெலிந்தபோதும் (குறுக்கு வழியில் வாழ்வு பெறுவதற்காகத்) தமது உயர்ந்த குறிக்கோளிலிருந்து மாறார் 41
-----------
சான்றாண்மை, சாயல், ஒழுக்கம் இவை மூன்றும்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கல்லது - வான்தோயும்
மைதவழ் வெற்ப ! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு. 142
வானளாவிய - மேகம் தவழ்கின்ற மலை நாடனே! மாண்பும் பழகும் பதமும் நல்லொழுக்கமும் ஆகிய முப் பண்புகளும், வானளாவிய புகழ் மிக்க உயர் குடியில் பிறந்தார்க் கல்லாமல், பெருஞ் செல்வம் பெற்றபோதும் தாழ்குடியினர்க்கு அமையா. 142
----------
இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன - குடிப்பிறந்தார் குன்றா
ஒழுக்கமாக் கொண்டார்; கயவரோ (டு)
ஒன்றா உணரற்பாற் றன்று. 143
பெரியோர் வரின் இருக்கைவிட்டு எழுதலும் எதிர்சென்று அழைத்து வருதலும் அவரை வழியனுப்பும்போது சிறிது தொலைவு உடன் செல்லுதலுமாகிய இன்ன பல உயர் பண்புகளை, உயர் குடிப் பிறந்தவர் குறையாத இயற்கை யொழுக்கமாகக் கொண்டிருப்பர். இவ்வொழுக்கம் அற்பரிடம் இருப்பதாகக் கருதமுடியாது. 143
------------
நல்லவை செய்யின் இயல்பாகும்; தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும் ;- எல்லாம்
உணரும் குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ
புணரும் ஒருவர்க் கெனின். 144
ஒருவர்க்கு உயர்குடிப் பிறப்பு கிடைத்துள்ளது எனில், அவர் நல்லன செய்தால் உயர்குடிப் பிறப்பின் இயற்கை யென்று உலகம் கூறும், தியன செய்தால், பலரும் தூற்றும் பழிக்கு இடமாகும்; எனவே, எல்லாம் உணர்ந்த உயர்குடியில் பிறந்ததால் அவருக்குச் சொந்த நன்மை என்னவோ? 144
--------------
கல்லாமை அச்சம் ; கயவர் தொழிலச்சம்;
சொல்லாமை உள்ளுமோர் சோர்வச்சம் - எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந் தார். 145
மாண்பற்ற தாழ்குடியில் பிறந்தவர், படிக்காத அச்சம், கயமைத் தொழில் செய்யும் அச்சம், நல்லோர் அவை நடுவே ஒன்றும் பேசவியலாமையை எண்ணிச் சோர்ந்துபோகும் அச்சம், எல்லாமே இரப்பவர்க்கு ஒன்றும் கொடுக்கமுடியாத அச்சம் ஆகிய அச்சங்களை உணராத மரக்கட்டைகளாய் மரத்துப்போவர். 145
----------------
இன நன்மை இன்சொலொன் றீதல்மற் றேனை
மன நன்மை என்றிவை எல்லாம் - கனமணி
முத்தோ டிமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப
இற்பிறந்தார் கண்ணே உள. 146
உயர்ந்த பல மணிகள் முத்துக்களோடு ஒளி வீசும் - ஒலிக்கின்ற குளிர்ந்த கடற்கரை நாடனே ! நல்லின நட்பு, இன்சொல் பேசல், இரப்பார்க்கு ஒன்று ஈதல், மேலும் மற்ற மனத்தூய்மை முதலிய நற்பண்புகள் யாவும் நற்குடிப் பிறப்பாளரிடம் இருக்கும். 46
-------------
செய்கை அழிந்து சிதல் மண்டிற் றாயினும்
பெய்யா ஒரு சிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா ல்வை 147
பெரிய மாளிகை ஒரு பக்கம் வேலைப்பாடு அழிந்திருந்தாலும், மற்றொரு பக்கம் செல் நிறைந்து அரித்திருந்தாலும், இன்னொரு பக்கமாவது மழை பெய்யாத நல்ல இடத்தை உடைத்தாயிருக்கும். அதுபோல, நற்குடிப் பிறந்தோர், வறுமைத் துன்பத்தால் வருந்துங் காலத்தும், செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்து கொண்டே யிருப்பர். 147
----------
ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉம் திங்கள் போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்(கு)
ஒல்கார் குடிப்பிறந் தார். 148
ஒரு பக்கம் பாம்பு (கிரகணம் ) பற்றிக்கொண்டாலும், மற்றொரு பக்கத்தால், அழகிய இடத்தையுடைய பெரிய நிலவுலகை வெளிச்சத்தால் விளங்கச்செய்யும் நிலாவைப் போல, நற்குடியாளர், தம்மை வறுமை நன்கு பற்றி நிற்பினும், உலகிற்கு உதவுவதில் தளரார். 148
------------
செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்தும் செய்யார் சிறியவர்;- புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று. 149
மான் உடம்பின் மேல் சேணம் போட்டுக் கொண்டாலும், பாய்ந்தோடும் குதிரைபோல் போர்முகத்தில் பகையை எதிர்த்தல் இயலாது; அதுபோல, உயர்குடிப் பிறந்தோர் செய்ய முடியாதபோதும் எப்படியாவது முயன்று செய்யும் நற்செயல்களை, தாழ்ந்தவர்கள் செய்ய முடிந்த போதும் செய்யமாட்டார்கள். 149
-------------
எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தன் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவர்;
அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும். 150
நீர் அற்றபோதும் அகழ்ந்த ஆற்றைத் தோண்டினால் விரைந்து தெள்ளத் தெளிந்த நீர் தோன்றி உதவும். உயர் குடியினரும் தம்மிடம் யாதொன்றும் இல்லாத போதும், வசதியற்றுத் தம்மை அண்டிய எளியார்க்கு, தளர்ந்த விடத்து உதவும் ஊன்றுகோல்போல் உதவுவர். 150
---------------
அரசியல்
16. மேன்மக்கள் /மேலான பண்பாளரின் மேன்மை
அங்கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் ;- திங்கள் -
மறுவாற்றும், சான்றோர் அஃ தாற்றார் ; தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின். 151
அழகிய இடத்தையுடைய விண்ணிலே அகன்ற நில வொளியை வீசும் வெண்ணிலாவும் மேன்மக்களும் தம்முள் நிகராவர்; ஆனால், வெண்ணிலாவானது தன்னிடமுள்ள கறுப்புக் களங்கத்தைத் தாங்கிக்கொண்டுள்ளது. மேலோரோ, ஒரு களங்கம் உற்றால் அதைத் தாங்கமுடியாத வராய் மயங்கி அழிவர். 51
-----------
இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் ;- விசையின்
நரிமா உளம் கிழித்த அம்பினில் தீதோ
அரிமாப் பிழைப்பெய்த கோல். 152
கருதியது கைகூடினும் - சரி கைகூடாவிடினும் சரி - பழி வராமல் பார்த்துக்கொள்வர் பெரியோர். விரைந்து பாய்ந்து நரியின் மார்பைப் பிளந்த அம்பைக்காட்டிலும், அரியின் (சிங்கத்தின்) மேல் வைத்த குறிதவறிய அம்பு தாழ்ந்ததா என்ன ? 52
------------
நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றம் கொண் டேறார்;- உரம்கவறா
உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை. 153
உயர்ந்தோர் நரம்பு தெரிய மெலிந்து ஏழமையுறினும், தம் வரம்பு கடந்து குற்றமான செயல்புரிந்து முன்னேற முயலார்; தம் அறிவைக் கருவியாகக்கொண்டு, ஊக்கம் என்னும் கயிற்றால் மனத்தைக் கட்டுப்பாடு செய்து, தம்மிடம் உள்ள அளவிற்குச் செய்யத்தக்க நற்செயல்களைச் செய்வர். 153
-----------
செல்வழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சில நாள் அடிப்படின்
கலவரையும் உண்டாம் நெறி. 154
நல்ல மலை நாடனே ! கருங்கல் மலையிலும் ஒருசில நாள் மக்களின் காலடி பட்டாலேயே தேய்ந்த பாதை உண்டாகி விடும். பெரியவர்கள் செல்லும் வழியிலே ஒருவரை ஒருநாள் கண்ணால் கண்டாலும், தொன்றுதொட்டுப் பழகிய நட்பு போல் தெரியும்படி மிகவும் விரும்பிக்கட்டுண்டு பழகுவர். 154
------------
புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண் ஓடி
நல்லார் வருந்தியும் கேட்பரே மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து. 155
எழுத்து இலக்கணம்அறியாத - ஒரு கருத்தும் உணர முடியாத வீணர் கூட்டத்திலே கல்லாத போலி யொருவன் பேசவும், தவறி அங்குச் சென்ற நல்லார் அவனது பேச்சால் வருந்தினாலும், கண்டித்தால் அவன் பலர் நடுவே நாணுவானே என்று பரிவுகொண்டு இரக்கமுற்று வாளா கேட்டுக்கொண்டிருப்பார். 155
---------
கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்து நீர் கொள்ளினும் இன்சுவைத்தே ஆகும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார் தம் வாயிற் சிதைந்து. 156
கரும்பைப் பல்லால் கடித்தும் கணுக்கள் சிதறும்படி ஆலையில் இட்டு நொறுக்கியும் உரலில் இட்டு இடித்தும் எப்படி சாறு எடுத்தாலும், அது, இனிய சுவையுடையதாகவே யிருக்கும். உயர்குடிப் பிறந்தவரும், தம்மை யொருவர் பழிபடத் திட்டிச் சென்றாலும் தம் வாயால் இழித்துப் பேசாது இனிக்கவே பேசுவார். 156
-------------
கள்ளார் ; கள் உண்ணார்; கடிவ கடிந்தொரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் : - தள்ளியும்
வாயிற்பொய் கூறார் ; வடுவறு காட்சியார்
சாயின் பரிவ திலர். 157
குற்றமற்ற நல்லறிவினர் திருடார்; கள் குடியார்; விலக்க வேண்டியவற்றை விலக்கி நீக்குவர், பிறரை மட்டப்படுத்தி இகழ்ந்து பேசார்; தவறியும் வாயால் பொய் பேசார் ; வாழ்வு சரிந்தால் துன்புறுதல் இலர். 157
---------------
பிறர்மறையின்கண் செவிடாய்த், திறனறிந்(து)
ஏதிலார் இற்கண் குருடனாய்த், தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு. 158
பிறாது மறைச் செய்தியை (இரகசியத்தை) ஒட்டுக் கேட்பதில் செவிடனாகியும், முறையறிந்து ஒழுகி, அயலான் மனைவியைத் திய நோக்குடன் காண்பதில் கண் குருடனாகியும், பிறரைப் பற்றிப் புறங்கூறித் தியன, பேசுவதில் ஊமையாகியும் ஒருவன் ஒழுகுவானேல், அம்மேலோனுக்கு யாதோர் அறமும் அறிவுறுத்த வேண்டியதில்லை. 158
----------------
பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டும் என்றிகழ்ப;- என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்டொறும் செய்வர் சிறப்பு. 159
நற்பண்பில்லாதவர், தம்மிடம் ஒருவர் பல நாளும் வந்தால், ஏதேனும் விரும்பி வருகிறார் என்று இகழ்ச்சியாக நடத்துவர். மேன்மக்களோ, ஒருவர் எதையும் விரும்பிவரினும் நல்லதே என்று மகிழ்ந்து, காணுந்தோறும் பெருமையுடன் நடத்துவர். 159
--------------
உடையார் இவரென் றொருதலையாப் பற்றிக்
கடையாயார் பின் சென்று வாழ்வர்;- உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே நல்ல
குலந்தலைப் பட்ட இடத்து 160
நற்குடியிற் பிறந்த நல்லாருடன் சேர்ந்தால், பொன்னும் மணியும் உடைய சுரங்கத்தை அடைந்தது போல் ஆகாதோ ஆகும் ! இஃதறியாதார், இழிந்தவர் பின்னே சென்று இவர் பெருஞ்செல்வம் உடையவர் என்று உறுதியாகப் பற்றிப் (பல்லிளித்து) வாழ்வர். 160
--------
அரசியல்
17. பெரியாரைப் பிழையாமை / பெரியவரிடம் பிழைபட நடவாமை
பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்;- வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி அணிமலை நல் நாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது. 161
ஒலிக்கின்ற அருவி ஓடும் அழகிய மலைநாடனே! குற்ற மற்ற பெரியாரிடத்துங்கூட, பொறுத்துக்கொள்வார் என்று கருதி, வெறுக்கத்தக்க தீச்செயல்கள் புரியலாகாது; அவர் வெறுத்துவிடின், அதனால் ஏற்படும் இழப்பை நீக்குதல் யார்க்கும் இயலாது.161
-----------
பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே நல்ல
நயமில் அறிவி னவர். 162
நல்ல நயம் அறியாத அறிவுபெற்ற மூடர், பொன்னையே தரினும் பெறுதற்கரிய பெரியாரை எளிதே - இலவசமாகச் சேரப்பெற்றுங்கூட, (அவரால் நன்மைபெறாமல்) பயனற்ற பொழுதாக நாளைக் கழிப்பர். அந்தோ ! 62
------
அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகை மக்க ளால் மதிக்கற் பால ;- நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்த நூலார். 163
ஒருவருடைய தாழ்வும் உயர்ந்த மதிப்பும் ஆகிய இரண்டும் மேன்மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டியவை யாம். நயம் இல்லாத - ஒழுக்கமும் அறியாத அற்பமாக்கள் செய்யும் இகழ்ச்சியையும் எடுத்தோதும் புகழ்ச்சியையும், ஆராய்ந்த நூல்வல்லார் ஒரு பொருட்டாக மதியார். 163
-------------
விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினம் சேண் நின்றும் உட்கும்;
அருமை உடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை உடையார் செறின். 164
படம் விரிக்கும் பளபளப்பான நிறமுடைய நல்ல பாம்பு ஆழமான வெடிப்புக்குள் இருப்பினும், இடியின் கடுமையான சினமுழக்கம் வெகுதொலைவில் தோன்றினாலும் அஞ்சும். அதுபோல, பிழை செய்தவரைப் பெரியவர் சினந்தால், புகுதற்கரிய காப்பிடத்தில் (அரணில்) புகுந்து
கொள்ளினும் தப்ப முடியாது . 164
------------
'எம்மை அறிந்திலிர்; எம்போல்வார் இல்'லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று ;- தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள். 165
’எம்மைப் பற்றி நீவிர் அறியீர்; எம்மைப்போல் உயர்ந்தவர் எவரும் இல்லை' என்று ஒருவர் தம்மைத்தாமே உயர்த்திக்கொள்வது உயர்ந்த கோட்பாடாகாது; நல்லறம் அறிந்த பெரியோர், தம்மை அருமையானவர் என்று கருதிப் பெருமைக்கு உரியவர் என்று ஏற்றுக்கொள்வதே ஒருவர்க்கு உயர்வு. 165
--------------
நளிகடல் தண்சேர்ப்ப நாள் நிழல் போல
விளியும் சிறியவர் கேண்மை - விளிவின்றி
அல்கு நிழல்போல் அகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு. 166
குளிர்ந்த பெரிய கடற்கரை நாடனே! தாழ்ந்தோரது நட்பு முற்பகல் நிழல் போல் வாவரக் குறைந்து மறையும்; தொன்றுதொட்டு வரும் புகழாளாது நட்போ மறையாமல் பிற்பகல் நிழல் போல் போகப் போக நீண்டு நீண்டு வளரும். 166
------------
மன்னர் திருவம் மகளிர் எமில் நலமும்
துன்னியார் துய்ப்பர்; தகல் வேண்டா ; - துன்னிக்
குழை கொண்டு தாழ்ந்த குளிர்மரம் எல்லாம்
உழைதங்கண் சென்றார்க் கொருங்கு. 167
அடர்ந்து தளிர் கொண்டு தாழ்ந்திருக்கும் குளிர்ந்த மரங்களெல்லாம் தம்மை யடைந்தார்க்கு ஒருசேர இடம் தரும். அரசரது செல்வத்தையும் மகளிரின் அழகு நலத்தையும் அடைந்தவர் நுகர்வர். இதில் தடையில்லை. 167
----------
தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும் - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்பயார் மாட்டும்
கலவாமை கோடி உறும். 168
வற்றாத நீண்ட பெரிய நீர்க்கழிகளையுடைய கடற்கரை நாடனே! தெளிவுபட ஆராயும் அறிவிலாரையும் கூடியபின் பிரிவதென்றால் பெரிய பிரிவுத் துன்ப நோய் வருத்தும். எனவே, எவரிடமும் கூடாதிருப்பது கோடி நன்மையாகும். 168
----------
கல்லாது போகிய நாளும், பெரியவர் கண்
செல்லாது வைகிய வைகலும், - ஒல்வ
கொடா தொழிந்த பகலும் உரைப்பின்
படா அவாம் பண்புடையார் கண். 169
நல்ல நூலைக் கற்காது வீணாகிய நாளும், பெரியோரிடம் சென்று பழகாதொழிந்த நாளும், இயன்றவற்றைப் பிறர்க்கு உதவாது கழிந்த நாளும், சொல்லப்போனால், நல்ல பண்பாளரிடம் காணப்படா. 169
---------------
பெரியார் பெருமை சிறுதகைமை ; ஒன்றிற்(கு)
உரியார் உரிமை அடக்கம் ;- தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தன் சேர்ந்தார்
அல்லல் களைப எனின். 170
பெரியவர்கட்குப் பெருமை பணிவு. உயர்ந்த பொருள் ஒன்றிற்கு உரியவரின் உண்மையான உரிமை அடக்கமே. ஆராயுங்கால், செல்வம் பெற்றவரும், தம்மை அண்டினவரது வறுமைத் துயரை நீக்குவார் எனில் உண்மையான செல்வராவர். 170
--------------
அரசியல்
18. நல்லினஞ் சேர்தல் /நல்லார் கூட்டுறவை நாடுதல்
அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயில் முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு. 171
வெயில் ஏறியதும் புல்லில் இருந்த பனி விட்டு நீங்கினாற் போல, அறியாப்பருவத்திலே அடங்காத தீயவருடன் கூடி முறையற்ற செயல் புரிந்துவந்த தீயொழுக்கம், முறை யறிந்த நல்லினத்தோடு சேர்ந்து பழக விலகிவிடும். 171
---------
அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம் ;
பொறுமின் பிறர்க்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினை தீயார் கேண்மை; எஞ் ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல். 172
நல்லறவழியை நாடியறிக. எமனுக்கு அஞ்சித் தீவினை செய்யற்க . பிறர் சொல்லும் கடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்க. வஞ்சகக் குணம் வராது தடுக்க. தீவினை செய்வாரது தொடர்பை வெறுத்திடுக பெரியோர் வாய்மொழியை என்றும் பெற்றுப் பின்பற்றுக. 172
---------
அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மா என் நெஞ்சு. 173
கூடியவரைப் பிரிதலும் கொடிய பிணியும் சாவும் உடம்பு பெற்றவர்க்கு உடனுக்குடன் உண்டாவதால், ஆராயத் தொடங்கிப் பிறவி கொடியது என்று உணரவல்ல பேரறிவாளரை என் மனம், அம்மாடி ! மிகவும் சேர்வதாகுக. 173
-----------
இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள்
பண்பாற்று நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும்
நண்பாற்றி நடகப் பெறின். 174
மிகவும் எண்ணிப் பார்க்கின், பிறவி துன்பமானது என்றாலும், இந்தப் பிறவியில் பண்பு மிக்க உள்ள முடைய பெரியார்களோடு என்றும் நட்பு கொண்டு கூடியிருக்கப் பெறின், பிறவியை எவரும் வெறுக்கார். 174
----------
ஊர் அங் கணநீர் உரவு நீர்ச் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்;- ஓரும்
குலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து. 175
ஊரிலுள்ள கழிவுநீர் வேறொரு பெரிய தூய நீரோட்ட இடத்தை அடைந்தபோது, கழிவு நீர் என்ற இழிந்த பேரும் நீங்கி, தூய தெய்வ நீர் எனப்படும். குடிப்பெருமை யில்லாத கீழோரும், நன்மாண்புடைய நல்லோரைச் சேர்ந்தால், மலைபோல் பெருமையால் உயர்ந்து தோன்றுவர். உணர்வீராக!" 175
-------------
ஒண்கதிர் வாள் மதியம் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம் ;
குன்றிய சீர்மையர் ஆயினும் சீர்பெறுவர்
குன்றன்னார் கேண்மை கொளின். 176
உயர்ந்த அழகிய இடமகன்ற விண்ணிலே வெண்கதிர் வீசும் விளக்கமுடைய வெண்ணிலாவின் நடுவே அமைந்து இருப்பதால், 'முயல்' என அழைக்கப்படும் கறுப்புக் களங்கமும் மக்களால் வணங்கப்படுகிறது. அதுபோல, ஒருவர் குறைந்த பெருமை யுடையவரானாலும், மலையன்ன பெரியாரின் நட்பைக் கொண்டால் நிறைந்த பெருமை பெறுவர் 176
-------
பாலோ டளாய நீர் பாலாகும் அல்லது
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் ;- தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து. 177
பாலோடு கலந்த நீர் பாலாகுமே தவிர, நீரின் நிறம் தனியாய்த் தெரிந்து காணப்படாது. அதுபோல், ஆராயுங்கால், சிறந்த பெரியாரின் பெருந்தன்மையைச் சார்ந்தால் சிறியாரின் சிறுமைத்தனமும் தெரியாது மறையும். 177
-----------
கொல்லை இரும்புனத்துக் குற்றி அடைந்தபுல்
ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு;
மெல்லியரே ஆயினும் நற்சார்வு சார்ந்தார்மேல்
செல்லாவாம் செற்றார் சினம். 178
பெரிய கொல்லைக் காட்டில் அடிமரக் கட்டையோடு சேர்ந்துள்ள புற்கள் உழவர் உழும் கலப்பைக்கு அசைய மாட்டா. மெலிந்தவரானாலும் நல்லினத்தாரைச் சார்ந்து உள்ளவர்பால் பகைவரின் சினம் செல்லாது. 178
----------
நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தம்தம்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர் - கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத் தாங்குச் சான்றாண்மை
தீயினம் சேரக் கெடும். 179
நன்செய் நிலத்தின் நல்ல வளத்தால் நன்கு வளரும் நெற்பயிரேபோல், தாம் பிறந்த குடியின் பெருமையால் உயர்ந்தோர் உருவாகின்றனர். கப்பலின் கட்டமைப்பைக் கொடிய புயற்காற்று வீசிக் கட்டழிப்பதுபோல, ஒருவரின் பெருந்தன்மை தீய கூட்டத்தைச் சார்வதால் கெட்டழியும். 179
---------
மனத்தால் மறுவில ரேனும் தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர்;- புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனம் தீப்பட்டக் கால். 180
அறுவடை செய்யப்பட்ட கொல்லைக்காட்டில் தீவைக்கப் பட்டால், அதைச் சார்ந்து அருகேயுள்ள மணம் மிக்க சந்தன மரமும் வேங்கை மரமுங்கூட வெந்து போகும். அதுபோல, ஒருவர், மனத்திலே களங்கம் இல்லாதவரா யினும் தாம் சேர்ந்துள்ள திய கூட்டுறவால் இகழப்படுவர். 180
------------
அரசியல்
19. பெருமை /பெருந்தன்மை
ஈதல் இசையா திளமை சேண் நீங்குதலால்
காத லவரும் கருத்தல்லர்; - காதலித்(து)
'ஆதும் நாம்' என்னும் அவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள். 181
வறுமையால் ஒன்றும் உதவ முடியாது போக, இளமை நெடுந்தொலைவு விட்டு நீங்கியதால் காதல் கொண்டிருந்த பெண்டிரும் கருத்து செலுத்தாது விட்டனர்; எனவே, நாம் இன்னும் காதலித்து வாழ்வோம் என்னும் ஆவலைத் துறந்து மேல்நிலைக்குச் செல்லமுயல்வதே சிறந்த செயல் போலும்! 181
---------
இற்சார்வின் ஏமாந்தேம் ; ஈங்கமைந்தேம்' என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர் பேதையார்; - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர். 182
இல்லறத்தைச் சார்ந்திருந்ததால் இன்புற்றோம் - ஈண்டு எல்லாம் நிறைவுற்றோம் - என்று கருதிப் பின்வருவதை மறந்து நடப்பர் அறிவிலிகள். அந்த வாழ்வு உள்ளதுபோல் தோன்றி நிலைக்காது போகும் என உணர்ந்த அறிஞர்கள் என்றும் துன்புறுதல் இல்லை. 182
-----------
மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைப் படாதே நீர் வாழ்மின் - அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம் வேறாம்; காரணம்
இன்றிப் பலவும் உள. 183
மறுவுலக வாழ்விற்கு விதையாகிய நல்லறத்தை மயக்கமின்றிச் செய்து குறைவுபடாமல் நீவிர் அறிவுடை யவராய் வாழ்வீராக! (ஏனெனில், இவ்வுடல்) நின்றவிடத்தில் நின்றபடியே நிலைமை மாறிப் போகும்; மற்றும் ஒரு காரணமும் தெரியாமலேயே பல்வகைச் சிக்கல்களும் உண் டாகும். 183
---------
உறைப்பருங் காலத்தும் ஊற்று நீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார் போல் மற்றையார்
ஆ அயக் கண்ணும் அரிது. 184
மழை யற்ற காலத்தும் ஊற்று நீருடைய கேணி சிறுக இறைத்து உண்டாலும் ஊர் முழுவதையும் காக்கும் என்று கூறுவர். பிறர்க்குக் கொடுக்கும் கடமையையுங் கூட, செல்வம் குறைந்த போதும் உயர்ந்தோர் செய்வதுபோல், செல்வம் உண்டானபோதும் மற்ற கீழ்மக்கள் ஆற்றுதல் இல்லை . 184
------------
உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழி ஊறும் ஆறேபோல் ;- செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை. 185
மிகுந்த நீரைத் தந்து உலகினரை உண்பித்து, நீர் அற்றபோதும் தோண்டும் ஊற்றுக்குழியில் நீர் ஊறி உதவும் ஆற்றைப் போல, உயர்ந்தோர் செல்வத்தைப் பலர்க்கும் பகிர்ந்தளித்து, செல்வம் வற்றிய போதும் சிலருக்காயினும் உதவிபுரிந்து செய்யவேண்டிய நற் கடமைகளைச் செய்வர். 185
-------------
பெருவரை நாட! பெரியார்கண் தீமை
கருநரைமேல் சூடேபோல் தோன்றும் ;- கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும். 186
பெரிய மலைநாடனே! பெரியோரது குற்றம், பெரிய காளைமாட்டின் மேல் போட்ட சூட்டைப்போல் நன்கு தெரியும். அந்தப் பெரிய காளையைக் கொன்றது போன்ற கொடுமைகள் புரியினும் இழிந்தவர் மேல் ஒரு பழியும் தெரியாது மறைப்படும். 186
-----
இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்
பசைந்த துணையும் பரிவாம்; - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும். 187
சிறுமை பொருந்திய நற்பண்பு இல்லாதவரிடம் ஒட்டி உறவாடும் வரையும் துன்பமேயாம். கலக்கத்திற்குரிய தீமைகளை விளையாட்டாகவும் செய்ய விரும்பாத நல்லறிஞரிடம் கொண்ட பகையும் பெருமை பெறும். 187
---------
மெல்லிய நல்லாருள் மென்மை ; அதுவிறந்(து)
ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம்
சலவருள் சாலச் சலமே; நலவருள்
நன்மை வரம்பாய் விடல். 188
மென்மைத்தன்மையுடைய நல்லவரிடம் மென்மைத் தன்மையும், அது கடந்து நடக்கும் பகைவரிடம் எமனும் அஞ்சும்படியான கடுமை கலந்த வன்மையும், எல்லாமே வஞ்சகமாய் நடப்பவரிடம் மிகவும் வஞ்சகத் தன்மையும், நல்லவரிடம் நன்மையின் உயர் எல்லையும் காட்டுவீராக! 188
------------
கடுக்கி ஒருவன் கடுங்குறளை பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்கம் இலாதவர் தூய மனத்தார்
விளக்கினுள் ஒண்சுடரே போன்று. 189
கலக்கம் இல்லாத திண்ணியர், ஒருவன் தம்மைக் கடுக்கடுக்கச் செய்து கொடிய கோள் சொல்லி மயக்கினாலும், மன மாறுபாடு ஒருசிறிதும் இன்றி, விளக்கில் எரியும் விளக்கமான சுடரேபோல் விளங்கித் தூய்மையுடைய உள்ளத்தராய்த் தோன்றுவர். 189
-----------
முன்துத்தும் துத்தினை நாளும் அறம் செய்து
பின் துத்துத் துத்துவர் சான்றவர் ; - அத்துத்து
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும். 190
முன்னால் உண்ணத்தக்க சிறப்புணவை நாடோறும் பிறர்க்கு அளித்துவிட்டு, பின் எஞ்சியுள்ள உணவை உயர்ந்தோர் உண்ணுவர். அங்ஙனம் உணவுண்பது, காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் போக்கி முடிந்த அளவெல்லாம் அவரைத் துயரத்தினின்றும் விலக்கிக் காக்கும். 190
------------
அரசியல்
20. தாளாண்மை / முயற்சி உடைமை
கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ் போல்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க் குண்டோ தவறு. 191
கொள்ளத்தக்க : நீரை மிகவும் தன்னிடத்திலேயே வைத்திராமல் வெளிவிடும் குளத்தின் கீழ்மட்டத்தில் உள்ள பசுமையான பயிர்போல, முயன்று உழைக்கும் தலைமைச் சுற்றத்தார் கொடுப்பதை உண்டு மற்ற சுற்றத்தார்கள் துன்பின்றி வாழ்வர். வாள் சுழற்றி ஆடும் கூத்தாட்டு மகளிரின் கண் சுழல்வதுபோல் சுழன்று உழைக்கும் அம் முயற்சியாளர்க்குத் தவறிப்போகும் செயலும் உண்டோ ? 191
-----------
ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன் தான்
தாழ்வின்றித் தன்னைச் செயின். 192
அசைகின்ற கொம்பாக வழியிலே நின்றிருந்த இளஞ் சிறுமரம், வயிரம் பாய்ந்த பெருமரமான போது யானையை யும் கட்டக்கூடிய தறியாக அமையும். ஒருவன் தான் தன்னைத் தாழச்செய்யாது முயன்று வளர்த்துக்கொண்டால், அவனது வாழ்வும் அந்த மரம் போலவே உறுதிபெறும். 192
------------
உறுபுலி ஊனிரை இன்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியும் தின்னும்;- அறிவினால்
கால்தொழில் என்று கருதற்க; கையினால்
மேல்தொழிலும் ஆங்கே மிகும். 193
வலிய புலி பெரிய இறைச்சி யுணவு கிடைக்காமல் ஒரு நாளைக்குச் சிறிய தேரையையும் பிடித்துத் தின்னும். எனவே, நுமது அறிவை நோக்க, கிடைத்துள்ள தொழில் காலால் செய்யும் அற்பத் தொழில் என்று எண்ணற்க; கைத்திறமையால் செய்யும் மேலான தொழிலும் அங்கே கிடைக்கக் கூடும். 193
-----------
இசையா தெனினும் இயற்றி ஓர் ஆற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை ; - இசையுங்கால்
கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப!
பெண்டிரும் வாழாரோ மற்று. 194
தாழையை அலைகள் மோதும் சோலைகளையுடைய அழகிய குளிர்ந்த கடற்கரை நாடனே ! ஒன்று எளிதில் முடியா தாயினும் ஒருவகைத் திறமையுடன் முயன்று முடித்துக் கலங்காது நிற்பதே ஆண்மையாம் ! எளிதில் முடியுமானால் மற்றபடி பெண்களும் செய்து வாழ்வார்களே ! 194
--------
நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லால் பொருளில்லை ;- தொல் சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவங்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். 195
உயர் குலம் என்றும் இழிகுலம் என்றும் - சொல்லளவே தவிரப் பொருள் அளவில் ஒன்றுமில்லை. பழம்பெருஞ் சிறப்புடன், நல்ல செல்வம் ஒன்று போதுமா? தவம், கல்வி, முயற்சி என்ற இவற்றாலெல்லாந்தான் உயர்குடிப் பெருமை உளதாகும். 195
---------
ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் ; ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஓண்மை உடையார்
குறிப்பின் கீழ்ப் பட்ட துலகு. 196
நல்லுணர்வாளர் செயல் முடிக்கும் வரையும் தம் அறிவுத்திறமையை வெளியாக்காது உள்ளடக்கி, தம் மன ஊக்கத்தையும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். பிறாது ஊக்கத்தை அவரது உறுப்புக்களின் குறிப்பினாலேயே ஆராய்ந்தறியும் அறிவுடையவரின் நோக்கத் தின்படி உலகம் நடக்கும். 196
----------
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழ்ஊன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். 197
செல்லால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை மற்ற அதன் விழுதுகள் தூண்களாய் நின்று தாங்கிக் காப்பது போல, தந்தையிடம் தளர்ச்சி காணப்படின், அது, அவன் பெற்ற மைந்தன் முயன்று உழைத்து மறைக்க நீங்கும். 197
------------
ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானம் தலைவருவ செய்பவோ - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன் தாள்
அரிமா மதுகை யவர். 198
யானையின் புள்ளி பொருந்திய முகத்தைப் புண்படுத்தக் கூடிய கூரிய நகங்களையும் வலிய கால்களையும் உடைய அரிமா (சிங்கம்) போன்ற வலிமை (உறுதி) உடையவர்கள், இல்லறத்தில் இருந்துகொண்டு தாழ்வுப்பட ஒரு பொருளும் இல்லாமல் வறுமையால் இறப்பதாயினும், பெருமை குன்றி இழிவுதரும் செயல் செய்வரோ? 198
-----------
தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்(கு) - ஓங்கும்
உயர்குடி யுள் பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை. 199
இனிய கரும்பு ஈன்ற திரண்ட காலோடும் பிடரி மயிர் போன்ற சோலையோடுங் கூடியதான கருப்பம் பூ, தேன் போல் மணக்கும் மணத்தை இழந்தாற்போல, தமது புகழ்ப் பெயரைப் பொறித்து நிலைநாட்டும் பெரிய ஆண்மைக்குரிய முயற்சிகளை ஒருவர் செய்யாத போது, உயர்ந்த குடியில் பிறந்ததனால் என்ன பயன்? 199
-----------
பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர் ;- கருனையைப்
பேரும் அறியார்; நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும். 200
பெரிய முத்தரைய மன்னர் போன்ற செல்வர்கள் மிகவும் மகிழ்ந்து அளிக்கும் பொரியல் வகையோடு கூடிய விருந்துணவை அற்பர்களே ஆர்வத்துடன் உண்பர். பொரியல்களின் பேரும் அறியாத உழைப்பாளர் மிகவும் விரும்புதற்குரிய தமது உழைப்பால் பெற்ற நீருணவும் (நீராகாரமும்) அமிழ்தமாகும். 200
------------
நட்பியல்
21. சுற்றம் தழால் / சுற்றத்தாரைத் தழுவிக் காத்தல்
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவா அன் மகன்கண்டு தாய்மறந் தா அங்(கு)
அசா அத்தான் உற்ற வருத்தம் உசா அத்தன்
கேளிரைக் காணக் கெடும். 201
தாயானவள் கருக்கொண்ட மசக்கை நோயினையும் கருவைச் சுமக்குங் காலத்துத் துன்பத்தினையும் குழந்தையைப் பெறும்போது உண்டாகும் வலியினையும் மகனைத் தொடையின் மேல் வைத்துப் பார்க்குங்கால் மறந்து விடுவதுபோல, ஒருவன் தளர்ச்சியால் தான் உற்ற துன்பம், நலம் விசாரிக்கும் தன் நல்ல உறவினரைக் காணுங்கால் நீங்கப்பெறுவான். 201
----------
அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழல் மரம் போல் நேராப்பத் தாங்கிப் - பழுமரம்போல்
பல்லார் பயன் துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன் 202
வெப்பம் மிக்க காலத்தில் தன்னை அடைந்தவர்க் கெல்லாம் நிழல் தரும் நெடுமரம் போல எவரையும் ஒரு நிகராகக் கருதிக் காத்து, பழுத்த மரம் போல் தன்னிடம் பலரும் பயன் நுகர, தனக்குப் பற்றாமையால் தான் வருந்தியும் உயிர் வாழ்வதே நல்ல ஆண் மகனுக்கு உரிய கடமையாகும். 202
-----------
அடுக்கல் மலைநாட ! தன்சேர்ந் தவரை
எடுக்கலம் என்னார் பெரியோர்; - அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே
தன்காய் பொறுக்கலாக் கொம்பு. 203
அடுக்கியது போல் அமைந்துள்ள மலைகள் நிறைந்த நாடனே! தம்மை அடைந்தவரை எடுத்து ஆதரிக்க மாட்டோம் என்று பெரியவர் கூறார். மேலும் மேலும் திண்மையான காய்கள் பலப்பல காய்த்தாலும் அந்தத் தன் காய்களைத் தாங்க முடியாத கிளைகள் இல்லை. 203
----------
உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா;
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை ; -நிலை திரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கம் இலாளர் தொடர்பு. 204
சிறுமையுடையவரின் நட்பு முதலில் உலகம் அறியும்படி முற்றும் கலந்திருப்பது போல் காணப்படினும் பின்னர் நிலைக்காது; சில நாட்களேயிருந்து மறைந்துவிடும். என்றும் தளராத நல்லோரது நட்போ, தம் நிலையிலிருந்து மாறாது ஒழுகும் தவத்தோர் நல்வழியடையத் தவநெறியில் நிலைத்திருப்பது போல் நிலைத்திருக்கும். 204
-----------
இன்னர் இனையர் எமர்பிறர் என்னும் சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பம் தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்கள் ஆகற்பா லார். 205
இவர் இத்தகையவர், இவர் இவ்வளவு உடையவர், இவர் எம் உறவினர், இவர் அயலார் என்று பாகுபடுத்திப் பேசும் சொல் ஒருசிறிதும் இல்லாத உயர்ந்த பண்புடன் பொருந்தி, தமக்கு அப்பாற்பட்ட மாந்தரின் துன்பத்தையும் போக்கும் வரே, எவர்க்குள்ளும் மேன்மக்களாகக் கருதப் பெறுவர். 205
----------------
பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான் புழுக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட் (டு)
எக்காலத் தானும் இனிது. 206
பொன் கலத்தில் இட்ட - புலிநகம் போன்ற வெண்மையான சோற்றைச் சர்க்கரையோடும் பாலோடும், உள்ளன் பில்லாதவர் கையிலிருந்து பெற்று உண்பதைக் காட்டிலும், உப்பில்லாத புல்லரிசிக் கஞ்சியை உயிர்போன்ற உண்மை உறவினரிடத்திலிருந்து எந்தக் கலத்தில் (பாத்திரத்தில்) பெற்று உண்டாலும் இனிக்கும். 206
----------
நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும் ; - கேளாய்
அபரானப் போழ்தின் அ. கிடுவ ரேனும்
தமராயார் மாப்டே இனிது. 207
தம்மொடு பொருந்தாதவரது வீட்டில் விருந்தோம்பலாக விருப்பத்திற்குரிய பொரியல்களோடு கூடிய சிறப்புணவு நேரத்தோடு கிடைக்கப்பெற்றாலும் அது வேப்பங்காயாகும். மேலும் கேட்பாயாக ! நேரங்கெட்ட நேரத்தில் கீரையுணவு இட்டாலும் தம்மைச் சேர்ந்தவரிடத்திலிருந்து கிடைப்பது இனிக்கும். 207
----------
முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டி உண் பாரும் குறடுபோல் கைவிடுவர்;
சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப்படு வார். 208
நாடோறும் சலிக்காது சம்மட்டியைப் போல அதட்டி மிரட்டி உண்டுவந்தவரும், பொருளை நெருப்பில் இட்டு நீங்கிவிடும் குறடு போல் துன்பக் காலத்தில் நீங்கிவிடுவர். உண்மை நண்பர் எனப்படுவார், பொருளோடு நெருப்பிலே நிற்கும் உலையாணிக்கோல் போல, நண்பருடன் தாமும் நெருப்பொத்த துன்பத்துள் தோய்ந்திருப்பர். 208
---------
நறுமலர்த் தண்கோதாய் நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வதொன் றுண்டோ ? - இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால். 209
மணம் மிக்க குளிர்ந்த மலர்மாலை உடையவளே! நண்பர்க்கு நண்பர் இறுதிவரையும் இன்புறவேண்டிய வற்றுள் எழுச்சிகொண்டு இன்புற்று அவருடன் துன்புற வேண்டியவற்றுள் துன்புறாவிடின், மறுவுலகத்திற்காகச் செய்யத்தக்க நற் செயல் வேறொன்று உளதோ? 209
-------------
விருப்பிலார் இல்லத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம், விருப்புடைத்
தன்போல்வார் இல்லுள் தயங்கு நீர்த் தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து. 210
விரும்பாதவர் வீட்டில் வேறுபட அமர்ந்து உண்கிற - பூனைக்கண்போல் பளபளக்கும் விருப்பத்திற்குரிய கறிக ளோடு கூடிய சிறப்புணவும் வேப்பங்காய் போன்றதாம். விருப்பமுடைய தம்மொத்தவரது வீட்டிலே பெற்ற தெளிந்த குளிர்ந்த புல்லரிசி நீர்க்கஞ்சி, எலும்பையும் உயிர்ப்பிப்பதற்கேற்ற அமிழ்தமாம். 210
-------------
நட்பியல்
22. நட்பாராய்தல் /ஆராய்ந்து நட்பு கொள்ளுதல்
கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ் ஞான்றும்
குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற் (கு)
எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ
என்றும் மதுரம் இலாளர் தொடர்பு. 211
பொருளுணர்ந்து கற்றுத் தெளிந்த நல்லோர் நட்பு, கரும்பை நுனிக்குருத்திலிருந்து அடி நோக்கித் தின்பது போல் வர வர என்றும் இனிக்கும். என்றும் இனிய பண்பு இல்லாதவாது நட்போ, குருத்திற்கு எதிரிலிருந்து - அதாவது, அடியிலிருந்து நுனி நோக்கித் தின்பதுபோல் வரவா இனிமை குன்றும். 211
-----------
இற்பிறப் பெண்ணி இடைதிரியார் என்பதோர்
நற்புடை கொண்டமை அல்லது - பொற்கேழ்
புனல் ஒழுகப் புள் இரியும் பூங்குன்ற நாட!
மனம் அறியப் பட்டதொன் றன்று. 212
(பொன் கொழித்துப்) பொன்னிறத்துடன் அருவி ஓட (அந்த ஒலி கேட்டுப் ) பறவைகள் பறந்தோடும் பொலிவு மிக்க மலைநாடனே ! ஒருவரது உயர்குடிப் பிறப்பை எண்ணி, அவர் நடுவிலே மாறுப்படமாட்டார் என்ற ஒரு நற்காரணத்தால் நட்பு கொள்வது தவிர, மற்றபடி, ஒருவரது உள்மனம் உண்மையாய் அறியப்படக்கூடிய ஒன்றன்று. 212
------------
யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை தழீஇக் கொளல் வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்; எறிந்த
வேல் மெய்யதா வால்குழைக்கும் நாய். 213
யானை போன்றவரது நட்பை விலக்கி நாய் போன்ற வரது நட்பைப் பொருந்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், யானையானது பல நாள் அறிந்து பழகியும் பாகனையே கொல்வதுண்டு. நாயோ, (தனது தலைவன் தன்மேல்) எறிந்த வேல் உடம்பிலே பாய்ந்திருக்கவும் வாலைக் குழைத்து அன்பு காட்டும். 213
------------
பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்; - பலநாளும்
நீத்தார் எனக்கை விடல் உண்டோ தம்நெஞ்சத்(து)
யாத்தாரோ டியாத்த தொடர்பு. 214
பலநாளும் பக்கத்திலேயிருந்து பழகினாலும் சில நாளாவது மனத்தோடு பொருத்தப் படாதவரோடு பெரியோர் பொருந்தார். தம் மனத்தோடு பொருந்தியவரோடு பெருந்திய நட்பை, அவர் பல நாளாய்ப் பிரிந்திருக்கிறார் என் பதற்காகப் பெரியோர் கைவிடுதல் உண்டோ ? (இல்லை ) 214
-----------
கோட்டுப்பூப் போல மலர்ந்து பின் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி ;- தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பின் கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல். 215
மரக்கிளையில் நிலையாக மலர்ந்திருக்கும் பூக்களைப்போல, பிறகு குன்றாது என்றுமே அகம் மலர்ந்து நட்பு கொண்டது நட்பு கொண்டதாகவே இருப்பதுதான் உண்மையான நட்பு ஆளுதலாகும். தோண்டப்பட்ட குளத்திலே உள்ள தாமரை முதலிய மலர்களைப்போல முதலில் நட்பு மலர்ந்து பிறகு குன்றிவிடுபவரை விரும்புபவரும் நண்பராய்க் கொள் பவரும் இல்லை. 215
------------
கடையாயார் நட்பில் கமுகனையர்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர் ;- தலையாயார்
எண்ணரும் பெண்ணை போன் றிட்டஞான் றிட்டதே
தொன்மை உடையார் தொடர்பு. 216
நட்பியல் நட்பு கொள்வதில், கடைப்பட்டவர், பாக்கு மரம்போல் மிக்க உதவியும் உழைப்பும் தேவைப்படுவர். இடைப் பட்டவர் தென்னை போல் ஓரளவு உதவியும் உழைப்பும் எதிர்பார்ப்பர். முதன்மையான பண்பாளர் பழைய நண்பருடன் கொள்ளும் தொடர்பு, (நட்டதைத் தவிர வேறு உதவி வேண்டாத) எண்ணுதற்கரிய சிறப்புடைய பனை மரம் போன்று, நட்பு கொண்டபோது இருந்த நிலையிலேயே என்றும் இருந்து சிறக்கும். 216
----------
கழுநீருள் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் ;- விழுமிய
குய்த்துவை ஆர் வெண்சோறே ஆயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய். 217
கழுநீரில் கழுவி ஆக்கிய கரிய கீரை உணவாயினும், ஒருவன் சிறந்த அன்புடன் கிடைக்கப்பெற்று உண்டால் அஃது அமிழ்தமாம். உயர்ந்த தாளிதம் உடைய துவையல் முதலியவற்றோடு கூடிய வெண்மையான சோறாயிருப் பினும், பொருந்தாதாரின் கையிலிருந்து உண்ணுதல் கசக்கும் எட்டிக்காயாம். 217
-----------
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியர் ஆயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும்
செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு. 218
நாயின் காலில் மிக அண்மையிலுள்ள சிறிய விரல்கள் போல மிகவும் அருகிலிருந்து பழகுபவர் ஆனாலும், ஈயின் கால் அளவுகூடச் சிறு உதவியும் செய்யாதவரது நட்பினால் பயன் என்ன? (தொலைவிலிருந்து நீரைக் கொண்டு வந்து) நிலத்தை விளைவிக்கும் வாய்க்கால் போன்றவரின் நட்பைத் தொலைவில் தேடிச் சென்றாயினும் பெற வேண்டும். 218
-------------
தெளிவிலார் நட்பின் பகை நன்று; சாதல்
விளியா வருநோயின் நன்றால்;- அளிய
இகழ்தலின் கோறல் இனிதே; மற் றில்ல
புகழ்தலின் வைதலே நன்று. 219
தெளிவில்லாதாரின் நட்பினும் பகை நல்லது; நீங்காமல் நீடிக்கின்ற நோயைவிட இறப்பே மேல்; அளிந்து நெளியும் படி ஒருவரை இகழ்வதனினும் கொல்லுதல் இனியதாம்; அடுத்து, இல்லாதவற்றைக் கூறிப் பொய்யாகப் புகழ் வதனினும் திட்டுதலே நல்லதாம். 219
-------------
மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருள் தக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇ இப் பின்னைப் பிரிவு. 220
பலரோடு பல நாள் கலந்து பழகிப் பார்த்துப் பொருத்த மறிந்து, ஒரு பொருளாக மதிக்கத்தக்கவரது நட்பையே கொள்ள வேண்டும்; ஏனெனில், கடித்து உயிர்போக்கும் பாம்போடாயினும் கூடிப் பிறகு பிரிவதென்பது துன்பமே! 220
--------------------
நட்பியல்
23. நட்பிற் பிழை பொறுத்தல் / நண்பரது குற்றத்தைப் பொறுத்தல்
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்;
நெல்லுக் குமியுண்டு; நீர்க்கு நுரையுண்டு;
புல்லிதழ் பூவிற்கும் உண்டு. 221
நல்லவர் என்று எண்ணித் தாம் முதலில் மிகவும் விரும்பி நட்பு கொண்டவரை, பிறகு நல்லவர் அல்லர் என்று அறியினும், அவரது குற்றத்தை உள்ளேயே அடக்கிக் கொள்ள வேண்டும்; ஏனெனில், நெல்லுக்கும் உமி உள்ளது; நீருக்கும் நுரை உள்ளது; பூவுக்கும் அழகற்ற புற இதழ் உள்ளது. 221
---------
செறுத்தோ றுடைப்பினும் செம்புனலோ டூடார்
மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்;
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு. 222
தண்ணீரை விரும்பி நோக்கி வாழும் உழவர், வயலில் மடை கட்டுந்தோறும் உடைத்துக் கொண்டாலும் அந்தச் செவ்விய நீரிடம் சினங்கொள்ளார் ; மீண்டும் நீரை மடக்கிக் கட்டுப்படுத்துவர்; அதுபோல, தாம் விரும்பிப் பெற்றவாது நட்பை, அவர் வெறுக்க வெறுக்கக் குற்றம் புரியினும் நல்லோர் விடாது பொறுப்பர். 222
--------------
இறப்பவே தீய செயினும் தன் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ? - நிறக்கோங்(கு)
உருவவண் டார்க்கும் உயர்வரை நாட!
ஒருவர் பொறை இருவர் நட்பு. 223
நல்ல நிறமுடைய கோங்க மலரிலே அழகிய வண்டுகள் ஒலிக்கும் உயர்ந்த மலைநாடனே! மிகவும் தீமை செய்யினும் தம் நண்பரைப் பொறுத்தல் தக்கதொரு செயலேயல்லவா? ஒருவரது பொறுமையாலேயே இருவரது நட்பு நிலைக்கும்.223
-------------
மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
கடுவிசை நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப!
விடுதற் கரியார் இயல்பிலரேல் நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ. 224
மடிந்து விழும் அலைகள் கொழிக்கும் உயர்ந்த ஒளியுடைய முத்துக்களும் மிக்கவேகமுடைய மரக்கலங்களும் கரையிலே மோதியலையும் கடல் நாடனே ! விடமுடியாதபடி நட்பு செய்யப் பெற்றவர் நற்பண்பு இல்லாதவரானால், அவர் நமது உள்ளத்தை எரிக்க மூட்டிய நெருப்பாவார். 224
-----------
இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும் ; பொன்னொடு
நல்லில் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால். 225
பொன்னுடன் நல்ல வீட்டையும் முன்னொரு நாள் பற்றி எரித்துவிட்ட நெருப்பை நாம் நாள் தோறும் நாடி நம் வீட்டில் சமையலுக்காக வளர்ப்பதால், துன்பம் செய்யினும் விடத்தகாத நண்பரைப் பொன்னே போல் போற்றி வைத்துக் கொள்ள வேண்டும். 225
------------
இன்னா செயினும் விடுதற் கரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ? -- துன்னரும்சீர்
விண் குத்தும் நீள்வரை வெற்ப! களைபவோ
கண்குத்திற் றென்றுதம் கை? 226
அடைதற்கரிய சிறப்புடைய - விண்ணை முட்டும் நீண்ட மூங்கில்கள் நிறைந்த மலைநாடனே! துன்பம் செய்தாலும் கைவிட முடியாதவரைச் சேர்க்காது விலக்குதல் தகுமோ? கண்ணைக் குத்திவிட்டதென்று தம் கையையே எவரேனும் வெட்டிவிடுவரோ? 226
------------
இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர் ; - கலந்தபின்
தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரின் கடை. 227
விளங்கும் நீரையுடைய குளிர்ந்த கடற்கரைத் தலைவனே! பெரியோர் கலந்து பழகியபின் நண்பரிடம் குற்றம் காணமாட்டார் அவ்வாறு பழகியபின் குற்றம் எடுத்து கூறுகிற - உறுதியான அறிவு இல்லாத அற்பர்கள், தாமும் அந்த நண்பரைப் போலவே கடைப்பட்டவராவர். 227
---------
ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்
நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால் - காதல்
கழுமியார் செய்த கறங்கருவி நாட!
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று. 228
ஒலிக்கும் அருவி ஓடும் மலைநாடனே! அயலார் செய்தது மிகவும் தியதே என்றாலும், பார்க்குமிடத்து, அதற்காக வருந்துவது என்ன வேண்டிக் கிடக்கிறது? எனவே, நம்மிடம் அன்புமிக்கவர் தவறிச் செய்த தீமையும் நெஞ்சிலே நின்று ஆராயப்படுங்கால் நல்லதேயாம்! 228
-------------
தமர் என்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமர் அன்மை தாமறிந்தார் ஆயின் அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமர் அன்மை
தம்முள் அடக்கிக் கொளல். 229
தம்மைச் சேர்ந்தவர் என்று நம்பித் தம்மால் முன்பு நட்பு கொள்ளப்பட்டவரை, தம்மைச் சேர்ந்தவர் அல்லர் என்று பின்பு தாம் அறியின், அவரைத் தம் உறவினரினும் நன்கு மதிப்பது போல் வெளிக்குக் காட்டி, அவர் தம்மவர் அல்லர் என்பதைத் தமக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்க. 229
---------
குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க
அறைகடல் சூழ் வையம் நக. 230
ஒருவனை நண்பனாகக் கொண்டபின் அவனது குற்றத்தையும் மற்ற குணத்தையும் யான் ஆராய்ந்து திரிவேனே யாயின், ஒலிக்கும் கடல் சூழ்ந்த இவ்வுலகம் எள்ளி நகைக் கும்படி, நண்பனது மறைச்செய்தியை (இரகசியத்தைக் காக்காமல் வெளிவிட்டவன் அடையும் இடத்தை (நாகத்தை) யானும் அடைவேனாக! 230
----------------
நட்பியல்
24. கூடா நட்பு / பொருந்தா நட்பு
செறிப்பில் பழங்கூரை சேறணை ஆக
இறைத்து நீர் ஏற்றும் கிடப்பர் - கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நல்நாட!
தம்கருமம் முற்றும் துணை. 231
கறுப்பான குன்றுகளிலே பொங்கும் அருவி வீழும் நீர்வளம் மிக்க நல்ல மலை நாடனே நல்ல கட்டமைப்பு இல்லாத பழைய கூரையின் கீழ் மழைபெய்யும் போது சேற்றை அணையாகக் கட்டியும் ஓரிடத்தில் நீரை இறைத்து மற்றோரிடத்தில் கலங்களை (பாத்திரங்களை) ஏந்தி நீரைப் பிடித்தும் துன்புறுவது போலச் சிலர் தம் காரியம் கைகூடும் வரை நம் துன்பங்களில் பங்கு கொள்ளும் நண்பர் போல் நடிப்பர். 231
----------
சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம், - மாரி
வறந்தக்கால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்கால் சீரிலார் நட்பு. 232
வெண்மையான அருவி ஓடும் மலை நாடனே! மேலோர் நட்பு உயர்ந்த பெருமையுடையதாய், மழைபோல் சிறந்த பயனளிக்கும். சிறந்த வாழ்வு வந்தபோதும் சிறப்பு அமையாத கீழோர் நட்பு, மழை வறண்டாற்போல் பயனில் தாகும். 232
---------
நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால் ;- நுண்ணூல்
உணர்விலர் ஆகிய ஊதியம் இல்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று. 233
நுண்ணிய அறிஞருடன் பழகி நுகரும் இன்பம், விண்ணுலக இன்பம் போல் விருப்பத்திற்குரியதாகும். நுண்ணிய நூலறிவு இல்லாதவராகிய பயனிலிகளுடன் பழகுதல் நாக வேதனையுள் ஒன்றாகும். 233
-----------
பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதும் செல்லாதே நந்தும் - அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரல் மலை நாட!
பந்தம் இலாளர் தொடர்பு. 234
பக்கங்களிலெல்லாம் நீண்ட சந்தனச் சோலைகள் நிறைந்த மலைச்சாரல் நாடனே! உண்மைப் பற்று இல்லாத வரது நட்பு முதலில் வளர்வதுபோல் தோன்றி, பின்னர், வைக்கோல் போரில் பிடித்த நெருப்பைப் போல் சிறு பொழுதும் நில்லாது மறையும். 234
-------------
செய்யாத செய்தும் நாம் என்றலும் செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக்கொண் டோட்டலும் - மெய்யாக
இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும். 235
செய்ய முடியாததை யாம் செய்வோம் என்று பொய்ப் பெருமை பேசுதலும் செய்யக்கூடியதைச் செய்யாமல் காலந் தாழ்த்தி நீட்டிக்கொண்டு போதலும் (ஆகிய இரண்டும்), உண்மையில் இன்புறும் நுகர்வை வெறுத்த துறவியர்க்குங்கூட அப்பொழுதே துன்புறும் நிலைமையை உண்டாக்கும். 235
-----------
ஒரு நீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பல் ஒக் கல்லா;
பெருநீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார்
கருமங்கள் வேறு படும். 236
ஒரே நீர் நிலையில் தோன்றி ஒன்றாக நீண்டு வளர்ந்த போதும், மலர்ந்த நேர்த்தியான குவளை மலரை ஆம்பல் மலர் ஒவ்வாது. அதுபோல, பெருந்தன்மையாளரின் நட்பைப் பெறினும், பெருந்தன்மை யில்லாத அற்பரின் செயல்கள் மாறுபடும். 236
-----------
முற்றல் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலால் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு. 237
ஓரளவு வளர்ச்சியடைந்த சிறு குரங்கு, உணவுப் பொருளுடன் தன் எதிர்ப்பட்ட தந்தைக் குரங்கைக் கண்டதும், பயற்றங்காய் நெற்றைக் கண்டாற் போன்ற தன் கைவிரலால் தந்தையின் கையைக் குத்தி விரித்திட்டு அதிலுள்ள உணவைப் பறித்து உண்ணும் மலை நாடனே! ஒற்றுமை இல்லாதாரின் நட்பு இனிக்காது. 237
-----------
முட்டுற்ற போழ்தின் முடுகி என் ஆருயிரை
நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் - நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க
நெடுமொழி வையம் நக. 238
நண்பனுக்கு நெருக்கடி நேர்ந்தபோது விரைந்து சென்று எனது அரிய உயிரை அந்த ஒப்பற்ற ஒரே ஒரு நண்பன் கையில் ஒப்படைக்கேனே யானால், தன் நண்பன் மணந்து கொண்ட மனைவியைக் கற்பழித்தவன் செல்லும் நரகத்திற்கு, நீண்ட புகழுடைய இவ்வுலகத்தார் எள்ளி நகை யாடும்படி யானும் செல்வேனாக! 238
---------
ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு. 239
தேன் உண்டாகும் நல்ல மலை நாடனே ! நயம் அறிந்தவரின் நட்பை விட்டு அற்ப அறிவினருடன் கொண்ட நட்பு, பசு நெய் இருந்த பாண்டத்தில் அதை நீக்கிவிட்டு வேப்ப நெய்யைப் பெய்து வைத்தது போன்றதாகும். 239
-------------
உருவிற் கமைந்தான்கண் ஊராண்மை இன்மை
பருகற் கமைந்தபால் நீரளாய் அற்றே;
தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல் நாகம்
விரிபெடையோ டாடிவிட் டற்று. 240
உருவத்தில் அழகாய் அமைந்திருப்பவனிடம் ஊருக்கு உதவும் பண்பு இல்லாமை, அருந்துதற்கு ஏற்ற அளவு அமைந்துள்ள பாலில் மிகுதியாய் நீர் கலந்தாற் போலும்! தெளிந்த அறிவாளர் தியவருடன் சேர்ந்து மாறுதல், நாகப்பாம்பு பெட்டைவிரியன் பாம்போடு உடல் உறவாடினாற்போலும்! 240
----------
இன்ப இயல்
25. அறிவுடைமை / நல்லறிவு உடைமை
பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார்; காணாய்!
இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேரா (து)
அணங்கருந் துப்பின் அரா. 241
வருத்துதற்கரிய வலிமையுடைய இராகு என்னும் பாம்பு, சிறிய இளம் பிறையாய் இருக்கும்போது நிலாவைப் பிடிக்கச் செல்லாது. அதுபோல, தகுதிவாய்ந்த மேலோர் பகைவர் பணியும் நிலைமை பார்த்து, அவர்க்காகத் தாமே நாணி, அவர்மேல் போருக்குச் செல்லார். அறிவாயாக. 241
----------
நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்(கு)
அணிகலம் ஆவ தடக்கம் ;- பணிவில் சீர்
மாத்திரை இன்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரம் கூறப் படும். 242
பெரிய குளிர்ந்த கடற்கரை நாடனே! வறுமையுற்ற மாந்தர்க்கு அடக்கம் அணிகலமாகும். ஒருவன் பணி வில்லாத் தன்மையுடன் அளவு மீறி நடப்பானாயின், அவன் வாழும் ஊராரால் அவனது குடி குறைத்துப் பேசப்படும். 242
-----------
எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா;
தென்னாட்டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னாற்றான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர். 243
எட்டி மரத்து விதையை எந்த மண்ணில் நடினும் தென்னைமர மாகாது. தென்னாட்டில் (யமதிசையில்) பிறந்த வரும் விண்ணுலகம் அடைவதால், மறுவுலக வாழ்வு தன் செயலுக்கு ஏற்பத்தான் அமையும். வடநாட்டிலும் நல்லன செய்யாத வீணர் மிகப் பலர் உளர். 243
----------
வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதும் திரியாதாம் ;- ஆங்கே
இனம் தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனம் தீதாம் பக்கம் அரிது. 244
வேப்பிலைக்குள் வைத்துப் பழுக்க வைத்தாலும் வாழைப் பழத்தின் இனிய சுவை சிறிதும் மாறாது. அதுபோலவே, பழகும் குழுதியது என்றாலும். நற்பண்புடையவரது நட்பு, மனம் கெடும் எல்லைக்குச் செல்வதில்லை. 244
-----------
கடல் சார்ந்தும் இன்னீர் பிறக்கும்; மலை சார்ந்தும்
உப்பீண் டுவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர்; எறிகடல் தண் சேர்ப்ப!
மனத்தனையர் மக்களென் பார். 245
அலை வீசும் குளிர்ந்த கடற்கரை நாடனே! கடற்கரையை யடுத்தும் இனிய தண்ணீர் கிடைக்கும்; மலைச்சாரலை யடுத்தும் உப்புத் தன்மை மிக்க உவர்ப்புத் தண்ணீர் கிடைக்கும்; ஆதலால், மக்கள் எனப்படுபவர் தம்தம் இனத்திற்கு ஏற்பமட்டும் இருப்பவரல்லர்; தம்தம் மனத்திற்கு ஏற்பவும் மதிக்கப்படுவர். 245
--------
பரா அரைப் புன்னை படுகடல் தண் சேர்ப்ப!
ஓரா அலும் ஒட்டலும் செய்பவோ நல்ல
மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார்
விரா அ அய்ச் செய்யாமை நன்று. 246
பருத்த அடியையுடைய புன்னை மரங்கள் நிறைந்த குளிர்ந்த கடற்கரை நாடனே! யாரிடத்தும் நல்ல நட்பு கொண்டு நிலைத்துத் தங்கும் மனமுடையவர், நண்பரை விட்டுப் பிரிதலும் பிறகு சேர்தலும் செய்வரோ? (மாட்டார்.) எனவே, கண்டபடி கலந்து பழகாதிருத்தல் நல்லது. 246
------------
உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரப் புணருமாம் இன்பம் ;- புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய். 247
எதையும் விளங்க ஆராய்ந்துணரும் அறிவுடையாரைச் சேரின் இன்பமும் சேரும். விளங்க உணரும் உணர்ச்சி யில்லாரோடு தவறிச் சேர்ந்து பழகின், அவரை விட்டு நீங்கும்போது துன்பமும் விட்டு நீங்கும். 247
----------
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும், - நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான். 248
தன்னை நல்ல நிலைமையில் நிறுத்திவைப்பவனும், தன்னை நன்னிலையிலிருந்து கலங்கச்செய்து தாழ்மைப் படுத்துபவனும், இருக்கும் நிலையைக் காட்டிலும் மேலும் மேலும் உயரச் செய்து தன்னை நிலை நிறுத்துபவனும், தன்னை யாவர்க்கும் தலைவனாகச் செய்பவனும் தானே தான் (பிறன் அல்லன்) 248
-----------
கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
பெருமை உடையாரும் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
பேதைமை அன்ற தறிவு. 249
அரிய இயல்புடைய அலைகள் ஆரவாரித்து ஒலிக்கும் குளிர்ந்த கடற்கரை நாடனே! ஒரு செயல் முடிக்கும் காரணத்தால், கல்லாதவர் பின்னே பெருமைக்குரிய கற்றோர் செல்லுதலும் அறியாமை அன்று, அஃது அறிவு உடைமையே! 249
----------
கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத்
தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒரு நிலையே
முட்டின்றி மூன்றும் முடியுமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம். 250
செயலும் உருவாகச் செய்து முடித்து, இன்பமும் துய்த்து, அறமும் தகுந்தவர்க்குச் செய்து, இப்படியாக ஒருசேர மூன்றும் முட்டுப்பாடு இல்லாமல் முடியுமானால், அந் நிலைமை, (வெளிநாட்டு வாணிகத்திற்குச் சென்று ஊதியத்துடன்) உள் நாட்டுப் பட்டினக் கரையை வந்தடைந்த மரக்கலத்தின் வெற்றிக்கு ஒப்பாகும் என்பர். 250
------------
இன்பவியல்
26. அறிவின்மை /நல்லறிவு இல்லாமை
நுண்ணுணர் வின்மை வறுமை; அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்:- எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ
கண்ண வாத் தக்க கலம். 251
நுட்பமான அறிவு இல்லாமையே ஏழமை யாகும். அந்த நுண்ணறிவு உடைமையே கெப்பும் கிளையுமாய் மிக வளர்ந்த பெருஞ்செல்வமாகும். நினைத்துப் பார்க்கின், பெண்மையை விரும்பி ஆண்மையை இழந்த பேடியானவள் கண்கவர்ந்து விரும்பத்தக்க அணிகலன்களை அணியமாட்டாளோ? (அணிவாள்) - எனவே, அறிவிலார் செல்வம் பேடியின் நகைபோன்றது. 251
---------
பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்(து)
அல்லல் உழப்ப தறிதிரேல் - தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி உறைதலால் சேராளே
பூவின் கிழத்தி புலந்து. 252
பல வகையாய் நிறைந்த கேள்வியறிவின் பயன் உணர்ந்த கற்றோர் சிறப்பிழந்து வறுமைத் துயரால் வருந்துவதை அறிகின்றீர் எனில் அதன் காரணம் இதோ : தொன்று தொட்ட சிறப்புடைய நாக்கிற்கு உரிய கலைமகள் கற்றவரிடம் சேர்ந்திருத்தலால், தாமரைப் பூவிற்கு உரிய திருமகள், மருமகளாகிய கலைமகளோடு பிணங்கிக் கற்றவரைச் சேராதிருக்கிறாள். 252
-----------
'கல்'லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும். 253
கற்பாயாக என்று இளமையில் தந்தை சொல்லியும், அதனை ஒரு சிறந்த சொல்லாகக் கொள்ளாமல் புறக் கணித்துக் கல்லாது கழிந்த ஒருவன், எழுதிய ஓலையைப் பலர் முன்னே மெல்ல நீட்டிப் படிக்கும்படி கூறினால், உடனே சினந்து குற்றமாகக் கோலை அடிக்க எடுத்துக் கொள்ளுவான். 253
--------------
கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாய் இருந் தற்றே ; இரா அ(து)
து உரைப்பினும் நாய்குரைத் தற்று. 254
கற்காமல் நீண்டு வளர்ந்த ஒருவன் உலகில் நல்ல அறிஞர்களின் நடுவிலே புகுந்து ஒன்றும் பேசாமல் மெல்ல அமர்ந்திருப்பினும், அது, நாய் வாளா இருப்பது போலாம்; அவன் வாளா இராமல் ஏதாவது பேசினாலும், அது, நாய் குலைப்பது போலாம். 254
-----------
புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
கல்லாத சொல்லும் கடையெல்லாம் ; கற்ற
கடா அயினும் சான்றவர் சொல்லார் பொருள்மேல்
படாஅ விடுபாக் கறிந்து. 255
கடைப்பட்டவர் எல்லாரும், அறிவோடு பொருந்தாத அற்பர் குழுவைச் சார்ந்த பொய்ப் புலவர்களின் நடுவிலே புகுந்து, தாம் நூற்களில் கல்லாத வீண் செய்திகளைச் சொல்வர். பெரியோரோ, தாம் கற்றறிந்த கருத்துக்களைக் கீழோர் கேட்பினும், அக்கருத்துக்களில் ஆழ்ந்து தோயாமல் மேலோடு விடுவதை அறிந்திருப்பதால் ஒன்றும் பேசார். 255
-----------
கற்றறிந்த நாவினார் சொல்லார் தம் சோர்வஞ்சி;
மற்றையர் ஆவார் பகர்வர்; பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும்; எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை ஒலி. 256
படித்துணர்ந்த நாவன்மையாளர் தமக்குச் சோர்வு உண்டாகலாம் என்று அஞ்சிக் கண்டபடி பேசமாட்டார். மற்றவரோ கண்டபடி நிரம்பப் பேசுவர். வற்றிய பனையின் ஓலை 'கலகல' என ஒலிக்கும். வற்றாத பசுமையான ஓலைக்கு என்றும் ஒலி (ஓசை) இல்லை. 256
--------
பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்
நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்;
குன்றின் மேல் கொட்டும் தறிபோல் தலை தகர்ந்து
சென்றிசையா வாகும் செவிக்கு. 257
நல்லதை உணராத மாக்களுக்கு அறவழி உணர்த்தினால், அது, பன்றிக்குக் கூழ் வார்க்கும் தொட்டியில் இனிய மாம்பழச் சாற்றைப் பிழிந்தாற்போலும்; மற்றும் அது, மலைமேல் அடிக்கும் கட்டுத்தறிபோல் சிதைந்து, அவர்தம் செவிக்குள் சென்று புகாதாகும். 257
-----------
பாலால் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று;
கோலால் கடா அய்க் குறினும் புகல் ஒல்லா
நோலா உடம்பிற் கறிவு. 258
பல நாள் பாலால் கழுவி வெய்யிலில் உலர்த்தினாலும் கரிக்கு வெண்மைத் தன்மை உண்டாகாது. நல்வினை செய்யாத உடம்பிலே கோலினால் குத்தித் துளைத்துச் செலுத்தினாலும் அறிவு புகாது. 258
--------
பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லா (து)
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல் - இழந்தவை
தாம்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார் வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு. 259
தேன் சொரிந்து இனிமையாக மணக்கினும் மலர்மேல் மொய்க்காமல் இழிந்த கழிவுப் பொருள்களை விரும்பி மொய்க்கும் ஈக்களைப்போல இழிந்தவற்றையே தாம் விரும்பும் மனமுடையார்க்கு, தகுந்த பெரியோர் வாயிலிருந்து வரும் இனிமை பொருந்திய தெளிவான பேச்சின் ஆராய்ச்சி முடிவு என்ன பயன் தரும்? 259
----------
கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ் சுதைத்தலான் - மற்றுமோர்
தன்போல் ஒருவன் முகம் நோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ். 260
கற்றறிந்தவர் கூறும் குற்றமற்ற நுண்ணிய கருத்துக் களைக் கேட்பதை விரும்பாமல் தன்மனம் புறக்கணித்துத் தள்ளுவதால், கீழ்மகன், தன்னைப்போன்ற மற்றொருவனது முகத்தைப் பார்த்துத்தானும் ஓர் இழிந்த மேடைப் பேச்சைத் தொடங்கிவிடுவான். 260
----------
இன்பவியல்
27. நன்றியில் செல்வம் /நன்மை அளிக்காத செல்வம்
அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரித்தாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணியர் ஆயினும் பீடிலார் செல்வம்
கருதும் கடப்பாட்ட தன்று. 261
அருகிலே அமைந்து (ஓடு முடிய) பல பழங்கள் பழுத் திருப்பினும், பொரி பொரியான அடிமரத்தையுடைய விளா மாத்தினை வெளவால்கள் அடையமாட்டா. அதுபோல, மிகவும் அருகில் உள்ளவரானாலும் பெருமையில்லாதவரது செல்வம், ஏழைகளால் எண்ணிப் பார்க்கும் முறைமையும் உடையதன்று. 261
----------
அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ ஆயினும்
கள்ளிமேல் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்;
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார். 262
அள்ளிக் கொள்ளலாம் போன்ற அழகுடைய சிறுசிறு அரும்புகளை உடைத்தாயிருப்பினும், கள்ளிப்பூ அணியும் பூ அல்லவாதலால், கள்ளிச் செடியை நோக்கி எவரும் கையையும் நீட்டார். அதுபோல, செல்வம் மிக உடையவ ரானாலும் கீழ்மக்களை அறிஞர் அணுகார். 262
--------
மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்
வல்லூற் றுவரில் கிணற்றின்கண் சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடையர் ஆயினும் சேட்சென்று
நல்குவார் கட்டே நசை. 263
மிகுந்த அலைகளையுடைய கடற்கரையிலே வாழ்ந்தாலும், உவர்ப்பு இல்லாத - விரைந்த ஊற்றை உடைய கிணற்றை நெடுந்தொலைவு சென்று அடைந்தே மக்கள் நீர் எடுத்து உண்பர். அதுபோல, மிக்க செல்வமுடைய கருமிகள் அருகில் இருப்பினும், நெடுந்தொலைவு செல்வதாயினும் கொடுப்பவரிடத்திலேயே மக்களின் விருப்பம் திரும்பும். 263
-----------
புணர்கடல் சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையார் இருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல் வாரும் வாழ்வரே
பட்டும் துகிலும் உடுத்து. 264
நல்லுணர்வு உடையவர் வறியவராய் வாடி யிருப்ப, நல்லுணர்ச்சி யற்ற - முள்ளிச் செடியும் கண்டங்கத்தரிச் செடியும் போன்ற கீழ்மக்கள் பட்டாடையும் உயர்ந்த மெல்லிய பருத்தியாடையும் உடுத்து வசதியாக வாழ்வர். நீர் அடர்ந்த கடல் சூழ்ந்த இவ்வுலகில் புண்ணியமோ வேறு வகையாயிருக்கிறதே! 264
---------
நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது, வேல்நெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில். 265
வேல் போன்ற நீண்ட கண்ணையுடையவளே! நல்லவர்கள் - நயமுடையவர்கள் வறியவர்களாய் இருக்க, நயமே இல்லாத - கல்லாத மூடர்க்கு ஒரு செல்வம் உண்டாகியிருப் பதன் காரணம், முன்பு செய்த நல்வினைப் பயனே யல்லாமல், நினைக்குங்கால் வேறொன்றும் தெரியவரவில்லை. 265
-------------
நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்
(பாவாய்! நீறாய் நிலத்து விளியரோ;- வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ பொன் போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து. 266
நல்ல தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பொன்னனைய திருமகளே! நீ, பொன் போன்ற நல்ல மாந்தரைவிட்டு நீங்கி, மாறுபட்ட அற்ப மாந்தர் பக்கம் சேர்ந்துள்ளாய்; ஆதலின், மணமற்ற மலரிதழ் போல் மதிப்பிழந்து, இவ்வுலகில் சாம்பலாய் அழிந்து போ! 266
---------
நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ
பயவார்கண் செல்வம் பரம்பப் - பயின்கொல்
வியவாய்காண்; வேற்கண்ணாய்! இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கும் நிலை. 267
வேல் விழியாளே! நயமான நல்லவரிடம் உள்ள வறுமைக்கு நாணம் இல்லை போலும்! பிறர்க்குப் பயன் படாதவரிடம் உள்ள செல்வம் அவரிடமே பெருகி ஒட்டிக் கொண்டிருக்கப் பிசினா என்ன! இவ்விரண்டும் ஆங்காங்கே பொருந்தாது மாறி நிற்கும் நிலைமையைக் கண்டு வியப்பாயாக! 267
-----------
வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர்;- வலவைகள்
காலாறும் செல்லார்; கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய விருந்து. 268
நாணயக்கேடும் - நயவஞ்சகமும் இல்லாத நல்லோர் காலால் வழிகடந்து வருந்திச் சென்று கலவைக்கீரை முதலான உணவுகளை உண்டு காலங்கழிப்பர். நாணயக் கேடும் - நயவஞ்சகமும் உள்ளவர்கள் (வலவைகள்), காலால் நடந்து வேறிடம் செல்லார்; வீட்டிலேயே உணவின் மேல் பாலாறு - நெய்யாறு முதலியன பாய், பொரியல் வகையுடன் தாம் மட்டும் விருந்து உண்பார்கள். 268
--------
பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்றுகுக்கும்;
வெண்மையுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து. 269
பொன்னிறமான செந்நெல்பயிர் கதிர்ப்பொதியுடன் உள்கரு வாடிக்கிடக்க, மின்னல் வீசும் மேகமானது கடலிலே நீரைக் கக்கிச் சொரிவதுண்டு. அறியாமையுள்ள அற்பர் பெரிய செல்வம் அடைந்தபோது, அவரது கொடை யும் அம்மேகம் போன்றதே ! 269
-----------
ஓதியும் ஓதார் உணர்விலார்; ஓதாதும்
ஓதியனையார் உணர்வுடையார் ;- தூய்தாக
நல்கூர்ந்துஞ் செல்வர் இரவாதார்; செல்வரும்
நல்கூர்ந்தார் யார் எனின். 270
நல்லுணர்வு இல்லாதவர் கற்றிருப்பினும் கல்லாதவரே யாவர்; நல்லுணர்வு உடையவர் கற்றில்லாவிடினும் கற்றவர் போன்றவரே! தூய உள்ளத்துடன் ஒழுகி, பிறரிடம் ஒன்றும் இரவாதவர் வறுமையுற்றிருப்பினும் செல்வரே யாவர்; செல்வரும் பிறர்க்கு ஒன்றும் உதவார் என்றால் வறியவரே! 270
-------------
துன்ப இயல்
28. ஈயாமை /28. பிறர்க்குக் கொடுக்காத கருமித் தன்மை
நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல் ;- அட்ட (து)
அடைத்திருந் துண்டொழுகும் ஆவதில் மாக்கட் (கு)
அடைக்குமாம் ஆண்டைக் கதவு. 271
நண்பர்க்கும் சரி - நண்பர் அல்லாதவர்க்கும் சரி - தம்மிடம் இருக்கும் அளவுக்குச் சமைத்த உணவைப் பகிர்ந்து அளித்து உண்ணுதலே, உண்மையில் சமைத்து உண்ணும் குடும்ப ஒழுக்கமாகும். சமைத்ததைக் கதவை அடைத்து விட்டு உண்ணும் உருப்படாத மாக்களுக்கு அவ்வுலகக் (மோட்சக்) கதவு அடைத்திருக்குமாம். 271
--------
எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறம் செய்தார் தலைப்படுவர்;- மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும்' என்பார்
அழிந்தார் பழிகடலத் துள். 272
எவ்வளவாயினும் - தம்மால் முடிந்த அளவு சிறு அறமாயினும் செய்தவர் மேன்மையடைவர். மற்று, பெருஞ் செல்வம் அடைந்தபோதும், பின்பு அறம் செய்வோம் என்று தள்ளிப் போடுபவர் பழி என்னும் கடலுள் ஆழ்ந்து அழிவர். 272
---------
துய்த்துக் கழியான்; துறவோர்க்கொன் றீகலான்;
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே; உலகத்(து)
அருளும் அவனை நகும். 273
பொருளைத் தானும் நுகர்ந்து செலவழிக்காதவனாய், துறவியர்க்கும் ஒன்றும் உதவாதவனாய், பொருளை வீணே பூட்டிவைத்து ஒழிந்துபோகும் அறிவிலியை நோக்கி, அவன்வைத்துச்சென்ற பொருளும் இகழ்ந்து சிரிக்கும்; உலகில் அருள் என்னும் பண்பும் அவனை எள்ளி நகை யாடும். 273
----------
கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்(து)
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்க ப் படும். 274
பிறர்க்கு ஈதலும் தான் நுகர்தலும் அறியாத கருமித் தன்மை மிக்க உள்ளம் உடையவன் பெற்றுள்ள பெரிய செல்வம், வீட்டில் பிறந்த அழகிய பெண்ணை அயலான் மணந்து அனுபவிப்பது போல, உரியதொரு காலத்தில் அயலான் எவனாலாவது அனுபவிக்கப்படும். 274
--------
எறிநீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற் றூறல் பார்த் துண்பர்;
மறுமை அறியாதார் ஆக்கத்திற் சான்றோர்
கழி நல் குரவே தலை. 275
அலை வீசும் நீர் மிக்க பெரிய கடற்கரையை அடுத்து வாழ்ந்தாலும், நீர் அற்ற சிறிய கிணற்றடியில் ஊறும் சிறிய ஊறல் நீரை எதிர்பார்த்திருந்தே மக்கள் உண்பர். எனவே, மறுவுலகிற்கு உரிய நல்வினையை அறிந்து செய்யாதவரின் செல்வத்தைக் காட்டிலும், உயர்ந்தவரின் மிக்க ஏழமையே மேலானது. 275
-------------
'எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
'எனதென' தென்றிருப்பன் யானும்; தன தாயின்
தானும் அதனை வழங்கான்; பயன் துவ்வான்;
யானும் அதனை அது. 276
'என்னுடையது - என்னுடையது’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் அறிவில்லாத கருமியின் செல்வத்தை யானும் 'என்னுடையது - என்னுடையது' என்று எண்ணிக் கொண்டிருப்பேன். தனதாயிருந்தும், அவன் அதனைப் பிறர்க்கும் வழங்குவதில்லை - தானும் பயன் துய்ப்பதில்லை; அந்தச் செல்வத்தைப் பொறுத்தமட்டிலும் யானும் அது போலத்தான்! 276
-------
வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
காப்புய்ந்தார்; கல்லுதலும் உய்ந்தார்; தம் கைந்நோவ
யாப்புய்ந்தார்; உய்ந்த பல. 277
பிறர்க்கு உதவாத செல்வரைக் காட்டிலும் வறியவர்கள் தப்பிப் பிழைத்தார்கள்; அதாவது : முதலாவதாக, செல்வத்தை இழந்துவிட்டார் என்னும் துன்பத்திலிருந்து தப்பினர்; அடுத்து, வருந்தி அதனைக் காக்கும் தொல்லையிலிருந்து தப்பினர்; மூன்றாவதாக, கீழே புதைப்பதற்காக மண்ணைத் தோண்டும் துன்பத்திலிருந்து தப்பினர்; அடுத்து, தம் கைவலிக்கப் பொருளைப் பிடித்துக் கொண்டிருக்கும் தொல்லையிலிருந்து தப்பினர்; இப்படியாக இன்னும் பல துன்பங்களிலிருந்து தப்பினர். 277
---------
தனதாகத் தான் கொடான் ; தாயத் தவரும்
தமதாய போழ்தே கொடா அர்; தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார்; தான்கடியான்
பின்னை அவர் கொடுக்கும் போழ்து. 278
பொருள் தனதாக இருக்கும்போது தான் வழங்கான். (தான் இறந்தபின்) தன் மரபினர் தம்முடைய தாக்கிக் கொண்டபோது அவர் வழங்கார்; இவன் தனதாக இருந்தபோது முன்பு கொடுத்திருந்தால் தன் மரபினர் தடுத்திரார். இவன் இறந்தபின் அவர்கள் வழங்கும்போது இவன் தடுக்க முடியாது. 278
-----------
இரவலர் கன்றாக ஈவாரா வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை ;- விரகின்றி
வல்லவர் ஊன்ற வடியாபோல் வாய் வைத்துக்
கொல்லச் சுரப்பதாம் கீழ். 279
இரப்பவர் கன்றாகவும் கொடுப்பவர் பசுவாகவும் ஆர்வத்துடன் (பால் போல்) பொருளைச் சொரிந்து கொடுப்பதே வள்ளன்மையாகும். ஆர்வமின்றி, வலிதாய்க் கறப்பவர் ஊன்றியிழுக்கப் பாலைச் சொட்டும் பசுப்போல, வழி வகுத்துக் கொல்வதுபோல் வருத்தினாலேயே கீழ்மக்கள் பொருளைச் சுரப்பர். 279
----------
ஈட்டலும் துன்பம்; மற் திட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் ;- காத்த
குறைபடின் துன்பம்; கெடின் துன்பம் ; துன்பக் (கு)
உறைபதி மற்றைப் பொருள். 280
பொருளைத் தேடுதலும் துன்பம்; அப்படித் தேடி ஈட்டிய நல்ல பொருளைக் காத்தலும் அங்கே கடுந்துன்பம்; காவல் குறை பட்டாலும் துன்பம்; பொருள் அழியினும் துன்பம்; இவ்வாறாக அந்தப் பொருள் துன்பத்திற்கே உறைவிடமாகும். 280
---------------
துன்பவியல்
29. இன்மை /இன்மையின் (வறுமையின்) கொடுமை
அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட்டுடைமை பலருள்ளும் பாடெய்தும்;
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
செத்த பிணத்திற் கடை. 281
காவி படிந்த உடையை இடுப்பிலே உடுத்து வாழ்ந்தாலும், கையில் பத்தோ - எட்டோ பொருள் உடைத்தா யிருப்பது பலர் நடுவே பெருமையடையச் செய்யும் பொருத்தமான உயர்குடியில் பிறந்திருப்பினும், ஒரு பொருளும் இல்லாத ஏழையர் செத்த பிணத்தினும் தாழ்ந்தவராய்க் கருதப்படுவர். 281
----------
நீரினும் நுண்ணிது நெய்யென்பர்; நெய்யினும்
யாரும் அறிவர் புகை நுட்பம் - தேரின்
இரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்
புகற்கரிய பூழை நுழைந்து. 282
நீரைக்காட்டிலும் நெய் நுட்பமானது என்று சொல்வர். நெய்யைவிட புகை நுட்பமானது என்பதை எவரும் அறிவர். நினைத்துப் பார்க்கின், வறுமைத் துன்பம் உடையவன் புகையும் புக முடியாத வாயிலுக்குள்ளும் நுழைந்து புகுந்து விடுவான். 282
--------
கல்லோங் குயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்;- கொல்லைக்
கலா அல் கிளிகடியும் கானக நாட
இலா அ அர்க் கில்லை தமர். 283
தினைப் புனத்தில் கல்லால் கிளி ஓட்டும் காட்டு நாடனே கற்கள் ஓங்கி உயர்ந்துள்ள மலைச்சாரலில் காந்தள் பூ மலராவிடின், சிவந்த புள்ளிகளையுடைய வண்டினங்கள் செல்லமாட்டா. அதுபோல, பொருள் இல்லார்க்கு உறவினரும் இலராவர். 283
------
உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம் போல்
தொண்டா யிரவர் தொகுபவே, வண்டாய்த்
திரிதரும் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில். 284
உடம்பு அழிந்தபோது அதனைத் தின்னக் கூடும் காகங்கள் போல, செல்வம் உண்டானபோது, அடிமையாக ஆயிரக் கணக்கானவர் வந்து சேர்வர். தேனுக்குத் திரியும் வண்டு போல் வறுமையுற்று உணவுக்குத் திரிந்து கொண்டிருக்கும் காலத்தில், கேடு இன்றி நலமா யிருக்கிறீரோ என்று வினவுபவர் இவ்வுலகில் ஒருவரும் இலர். 284
----------
பிறந்த குலம்மாயும்; பேராண்மை மாயும்;
சிறந்ததம் கல்வியும் மாயும் ;- கறங்கருவி
கன்மேற் கழூஉம் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு . 285
ஒலிக்கும் அருவி கல்மேல் விழுந்து கறையைக் கழுவுகிற கூட்டமான குன்றுகள் சூழ்ந்த நல்ல நாடனே! வறுமையால் கவ்வப்பட்டவர்க்கு, பிறந்த குலப்பெருமை போகும் பெரிய ஆண்மையும் அழியும்; தமது சிறந்த கல்வியுங்கூட குன்றும். 285
------------
உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்(கு)
உள்ளூர் இருந்துமொன் றாற்றாதான் - உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான் போய்
விருந்தினன் ஆதலே நன்று. 286
வயிற்றுள் மிகுகின்ற பசியினால் தன்னிடம் விரும்பி வந்தவர்க்கு, உள்ளூரில் வாழ்ந்தும் ஒன்றும் கொடுக்காத கருமி, உள்ளூரிலே இருந்து உயிர் வாழ்க்கையை வீணாய்க் கழிக்காமல், தான் வெளியூருக்கு அல்லது விண்ணுலகிற்கு விருந்தினனாய்ப் போய்விடுதலே நல்லது. 286
--------
நீர்மையே அன்றி நிரம்ப எழுந்ததம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; - கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார். 287
கூர்மையுடைய முல்லை மொக்கைத் தோற்கடிக்கும் பற்களை யுடையவளே! வறுமையென்னும் துன்பம் சோப் பெற்றவர்கள், தம் உயர் பண்பையே யன்றி, மிகவும் எழுச்சியுற்றிருந்த தம் அறிவுக் கூர்மையையும் இன்னும் எல்லாவற்றையும் ஒருசேர இழந்துவிடுவர். 287
-------
இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது
முட்டாற்றுப் பட்டு முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டும்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று. 288
வறுமையால் இடுக்குற்று ஒன்று கேட்டவர்க்குக் கொடுக்கமுடியாமல் முட்டுப்பாட்டைந்து வருந்தி முயன்று உள்ளூரிலே வாழ்வதனினும், நெடுந்தொலைவிலுள்ள வேற்றூர் சென்று, ஆங்கு வரிசையாய் உள்ள வீடுகளில் கையேந்திக் காலங்கழிக்கும் மாண்பு கெட்ட வழியில் வாழ்வதே நல்லது. 288
---------
கடகம் செறிந்ததம் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக் - குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே
துப்புரவு சென்றுலந்தக் கால். 289
செல்வம் சென்றழிந்துவிடின், முன்பு கடகம் அணிந்திருந்த தம் கைகளால் கிளைகளை வளைத்து வாங்கி இலைகளைப் பறித்துக்கொண்டு போய்ச் சமைத்து, குடைவாக வளைக்கப்பட்ட பனையோலைப்பட்டையையே பாண்டமாகக் கொண்டு அதில் உப்பில்லாமல் வெந்த இலைக்கறியை இட்டுத் தின்று உள்ளம் அழிந்து வாழ்க்கை நடத்துவர். 289
---------
ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழிகொம்பின் மேற் செல்லாவாம் :- நீர்த்தருவி
தாழா உயர் சிறப்பிற் றண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர். 290
நீர் நிறைந்து அருவி தாழ்ந்து பாயும் உயர்ந்த சிறப்புடைய குளிர்ந்த நல்ல மலைநாடனே! ஆரவாரிக்கின்ற புள்ளிகள் பொருந்திய - அழகு விளங்கும் வண்டினங்கள், பூத்து உதிர்ந்துபோன வெற்றுக் கிளைகளிடம் செல்ல மாட்டா. அதுபோல, வாழ்வு அற்றவர்க்கும் உறவினர் இலர். 290
-----------------
துன்பவியல்
30. மானம் /மானம் உடைமை
திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதம் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானம் தலைப்பட்ட தீப்போற் கனலுமே
மான முடையார் மனம். 291
செல்வத்தின் வன்துணையால் நல்ல தகுதி யில்லாதார் புரியும் செருக்கான செயல்களைக் கண்ட மாத்திரத்திலும், எரியுற்றுக் காட்டைப்பற்றிய நெருப்பைப் போல மானம் உடையவரது உள்ளம் கொதிகொதிக்கும். 291
-----------
என்பாய் உகினும் இயல்பிலார் பின் சென்று
தம்பா டுரைப்பரோ தம்முடையார்? - தம்பாடு)
உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடை
(யார்க்(கு) உரையாரோ தாமுற்ற நோய்? 292
மானத்தைத் தம் உடைமையாகக் கொண்டவர், (வறுமையால் உடல்) எலும்பாகிச் சிதைவதானாலும், நற்பண்பு இல்லாத கயவர் பின்னே சென்று தமது துன்பத்தைக் கூறுவரோ? (கூறார் ) . தமது துயரை உரைப்பதற்கு முன்பே அவராக உணர்ந்து போக்கும் அறிவுடைய நல்லோரிடம் தாம் அடைந்த துன்பத்தைக் கூறாதிருப் பாரோ? (கூறுவர்.) 292
-----------
'யாமாயின் எம்மில்லம் காட்டுதும்; தாமாயிற்
காணவே கற்பழியும்' என்பார்போல் - நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும்; அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு. 293
ஏழையராகிய யாங்கள் செல்வர்க்கு விருந்தளித்தால் எம் மனைவியரைக் கொண்டே பரிமாறச் செய்வோம். அச் செல்வர்கள் எமக்கு உணவு அளிப்பின், அவர்தம் மனைவியரை யாம் கண்டாலேயே கற்பழிந்துவிடும் என்று கருதியவர்போல மனம் நாணி, எம்மை வெளிவாயிலில் அமர வைத்தே யாரைக் கொண்டாயினும் சோறிடுவர். அதனால் செல்வரது தொடர்பை மறந்திடுவீர்! 293
----------
இம்மையும் நன்றாம்; இயல்நெறியும் கைவிடா (து)
உம்மையும் நல்ல பயத்தலால் - செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய்! நன்றே ; காண்!
மான முடையார் மதிப்பு. 294
மிக நன்றாய்க் கத்தூரிப் புழுகு மணக்கும் கூந்தலை யுடையவளே! மானம் உடையவரது மாண்பு, இவ்வுலக வாழ்விலும் நன்மைதரும்; ஒழுகவேண்டிய நன்னெறியைக் கைவிடாததால் மறுவுலகத்திலும் நல்லனவே அளிக்கும்; ஆதலின், அது மிக உயர்ந்த து! அறிவாயாக! 294
-----------
பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; - சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம்; அவைபோல்
அறுநவை ஆற்றுதல் இன்று. 295
பாவமும் அடுத்துப் பழியும் உண்டாகும்படியான தீச் செயல்களை, பெரியோர் உயிர் சாய்ந்து மாய்வதாயினும் செய்யார்; ஏனெனில், சாதல் என்பது, ஒரு நாளில் - ஒரு சிறு நேரத்தில் மட்டும் துன்பம் தரும், அந்தப் பாவமும் பழியும் போல தாங்குதற்கு அரிய துன்பங்களை என்றும் தருவ தில்லை. 295
---------------
மல்லன்மா ஞாலத்து வாழ்ப வருளெல்லாம்
செல்வர் எனினும் கொடாதவர் - நல்கூர்ந்தார்.
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார். 296
துன்பவியல் வளப்பம் மிக்க பெரிய இவ்வுலகில் வாழும் மாந்தருக்குள் எல்லாம், செல்வம் உடையவராயினும் பிறர்க்கு வழங்காதவர்கள் ஏழைகளே. வறுமையுற்றவிடத்தும் செல்வரிடம் சென்று இரக்காதவர்கள், பெரு முத்தரையர் என்னும் மன்னர் மரபினர்போல் செல்வரேயாவர். 296
-----------
கடையெலாம் காய்பசி அஞ்சும்;மற் றேனை
இடையெலாம் இன்னாமை அஞ்சும் ;- புடைபரந்த
விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலையெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும். 297
பக்க வாட்டத்தில் பரவியுள்ள வில் போன்ற புருவத்தையும் வேல் போன்ற நீண்ட கண்ணையும் உடையவளே! கடைப்பட்டவர்கள் வருத்தும் பசிக்கு அஞ்சி எதையும் செய்வர். மற்றைய இடைப்பட்டவர்கள் மற்ற துன்பங் கட்கு அஞ்சி அதற்காக ஏதும் செய்வர். முதன்மையான பண்பாளரோ, உலகம் சொல்லும் பழிக்கு அஞ்சித் தியன் செய்யார். 297
------------
'நல்லர்; பெரிதளியர்; நல்கூர்ந்தார்' என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன்
உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ
தலையாய சான்றோர் மனம்! 298
இவர் நல்லவர் - பெரிதும் இரக்கமுடையவர் - அதனால் இப்போது ஏழையாகிவிட்டார் என்று இகழ்ச்சியாகப் பேசிச் செல்வர்கள் நல்லவரைப் பார்க்கும் ஏளனப் பார்வையைக் காணும் போது, சிறந்த பெரியோரது உள்ளம், கொல்லனது உலைக்களத்தில் ஊதியெழுப்பும் நெருப்பைப் போல உள்ளே கொதிக்கக் கூடும் போலும்! 298
---------
நச்சியார்க் கீயாமை நாணன்று ; நாணாளும்
அச்சத்தால் நாணுதல் நாணன்றாம் ;- எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லா திருப்பது நாண். 299
தம்மிடம் விரும்பி வந்தவர்க்கு ஒன்று கொடுக்காதது கூட அவ்வளவு பெரிய நாணமன்று; நாள்தோறும் பலவகை அச்சத்தால் நாணுதலுங்கூட மிகப்பெரிய நாணமன்று; ஆனால், செல்வக் குறைவினால் தாம் மெலிந் திருக்க, தம்மினும் மேலானவர் தமக்குச் செய்த உதவியை நன்றியுடன் வெளியில் சொல்லாதிருப்பதே மிகவும் பெரிய நாணமாகும். 299
----------------
கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம் வீழ்ந்த துண்ணா திறக்கும் ;- இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின். 300
மதமுடைய யானையை அடித்து வீழ்த்திய - காட்டில் வாழும் வேங்கைப் புலியானது, தன் வலப்பக்கம் வீழாமல் இடப்பக்கம் வீழின் அந்த யானையை உண்ணாமல் பட்டினி யால் இறந்து போகும். பெரியோர்களுங்கூட, இடம் அகன்ற விண்ணுலகமே கிடைப்பதாயினும் மானம் கெட்டு வருவதானால் அதனை விரும்பார். 300
------------
துன்பவியல்
31. இரவச்சம் / இரத்தலுக்கு அஞ்சுதல்
'நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார்; எஞ்ஞான்றும்
தம்மாலாம் ஆக்கம் இல ரென்று - தம்மை
மருண்ட மனத்தார் பின் செல்பவோ தாமும்
தெருண்ட அறிவி னவர். 301.
'இந்த வறியவர் நம்மால் தான் செல்வர் ஆக முடியும்; தம் சொந்த முயற்சியால் ஈட்டும் செல்வம் உடையவராகார்' என்று தம்மைத் தாமே பெரிதாய் அலட்டிக்கொள்ளும் மனமுடைய செல்வர் பின்னே, தாங்களும் தெளிந்த அறிவுடையவராயுள்ள நல்லோர் செல்வார்களோ? 301
----------
இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை அன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு. 302
ஒருவன் இறந்து மீண்டும் பிறக்கும் பிறப்பு என்பது, முடிய கண்களை விழித்து இமைக்கின்ற அளவினது அல்லவா? எனவே, ஒருவன் (அழியும் உடலை வளர்க்க) இழி செயல்கள் செய்து வயிறு நிரம்ப உண்ணுவதனினும், பழிச்செயல்கள் செய்யாதவனாய்ப் பசித்து அழிதல் தவறாகுமோ ? 302
-----------
இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி;- புல்லா
'அகம்புகுமின் உண்ணுமின்' என்பவர்மாட்டல்லால்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்? 303
(பொதுவாக உலகியலில்) ஒருசிலர், ஏழைமை காரணமாக இரக்கத் (யாசிக்கத்) துணிந்து இழிந்த வழியில் செல்லாமல் இருப்பதுமில்லை. ஆனாலும், மேன்மக்கள், எம் வீட்டிற்கு வருக ! விருந்து உண்க' என்று விரும்பி அழைப்பவரிட மல்லாமல், மற்றவரிடம் தம் முகம் காட்டிச் செல்லுதலைச் செய்வரோ? 303
---------
திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோ டுயர்வுள்ளின் அல்லால்
அருத்தஞ் செறிக்கும் அறிவிலார் பின் சென்(று)
எருத்திறைஞ்சி நில்லாதாம் மேல். 304
திருமகள் தன்னைத் துறப்பினும், தெய்வமே சினந்து வருத்தினும், மேன் மகன், ஊக்கமான உள்ளத்துடன் உயர் நெறி நிற்றலை எண்ணுவ தல்லாமல், பொருளை இறுக்கி வைக்கும் அறிவிலிகளின் பின்னே சென்று தலை வணங்கி நிற்கவே மாட்டான். 304
----------
கரவாத திண்ணன்பிற் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை ; - இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால்; என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு! 305
மறைக்காது அளிக்கும் உறுதியான அன்புடைய கண் போல் சிறந்தவரிடத்தும் சென்று இரவாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கையாகும். இரப்பதை எண்ணும்போதே உள்ளம் நாணத்தால் உருகுகின்றதே? இரந்து ஒன்று பெற்றுக்கொள்ளும்போது பெற்றுக்கொள்பவரின் மனக் குறிப்பு எங்ஙனம் கூசுமோ! 305
---------------
'இன்னா இயைக; இனிய ஒழி' கென்று
தன்னையே தானிரப்பத் தீர்வதற்(கு) என்னை கொல்
காதல் கவற்றும் மனத்தினால் கண்பாழ்பட் (டு)
ஏதி லவரை இரவு. 306
எனக்குத் துன்பமே வருக ! இன்பம் ஒழிக!' என்று எண்ணித் தன் மனத்தைத் தானே நிறைவு (திருப்தி) செய்து கொள்ளத் தீர்ந்து போகக்கூடிய வறுமைக்காக, பொருள் விருப்பத்தால் கவலைப்படும் மனத்துடன் கண் குழிந்து அயலாரிடம் சென்று இரப்பது ஏனோ? 306
---------
என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்(து)
என்றும் அவனே பிறக்கலான் ;- குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட!
இரப்பாரை எள்ளா மகன். 307
குன்றின் பரப்பு முழுதும் பொன் கொழித்து அருவி பாய்ந்து ஓடும் மலை நாடனே! இவ்வுலகில் என்றும் புதியவர் பிறந்து கொண்டே யிருப்பினும், என்றும் (இன்னும்) பிறவாதவன் ஒருவன் உள்ளான் எனில், இரப்பவரை இகழாத மனிதன் தான் அவன். (மற்றவர் எவரும் இரப்பவரை இகழ்கின்றனர்.) 307
-----------
புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீ இ ஒருவனை
"ஈயாய் எனக்கென் றிரப்பானேல், அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்? 308
வெளியே வறுமை தன் உடலை மெலியச் செய்ய, உள்ளே உள்ள தன் நல்லறிவை நீக்கி நிறுத்தி விட்டு, இன்னொருவனை அடைந்து எனக்கு ஈவாயாக என்று ஒருவன் இரப்பானேயாயின், அவன் தர மறுத்துவிட்டால், அப்போதே இவன் நாணத்தால் மாய்ந்து போகமாட்டானோ? 308
----------
ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுதல் அல்லால் - பரிசழிந்து
'செய்யீரோ என்னானும்' என்னும் சொற்கின்னாதே
பையத்தான் செல்லும் நெறி. 309
ஒருவர் மற்றொருவரை அடைந்து அவர்க்கு ஏற்ப நடந்து காட்டி அவரை வணங்குவதில் வல்லவராய் இருப்பதல்லா மல், (மேலும்) தன்மை கெட்டு ஏதேனும் உதவி செய்ய மாட்டீரா என்று கேட்கும் இழிவுப் பேச்சைவிட, மெல்லத் தான் சென்று கொண்டிருக்கும் வறுமைப் பாதை துன்பம் தராதே! 309
--------
பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானும் செய்க;- கிழமை
பொறாஅர் அவரென்னிற் பொத்தித்தம்
நெஞ்சத்(து) அறாஅச் சுடுவதோர் தீ. 310
ஒருவர் பழைய நட்பு துணையாக முன்பு பழகிய முறையில் வந்து கேட்கும் உரிமையில், தான் ஏதேனும் இயன்ற அளவு செய்யவேண்டும். அவர் உரிமையை ஏற்றுக் கொள்ளாது கைவிடப்பட்டார் எனில், அவரது நெஞ்சைக் க விந்து கெண்டு ஒருவகைத் துன்பத் தீ அறாமல் சுட்டெரிக்கும். 310
---------------
பொதுவியல்
32. அவை யறிதல் /அவையை அறிந்து அதற்கேற்ப ஒழுகல்
மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர் முன்
சொன்ஞானம் சோர விடல். 311
மெய்யறிவுடையோரது அவையில் ஒத்துப் பழகும் நல் வழியை விட்டு, அங்கே அறியாமைக்கு உரிய ஒரு செய்தியைக் கூறி, அதுவே சரியென்று மிகவும் பரப்புதல் செய்து, கீழான அறிவுடன் நடந்து கொள்ளும் கரிய உள்ள முடையவரின் முன்னே, சொல்லத்தக்க நற்கருத்தை நல்லோர் சொல்லாது விடுவாராக! 311
-------
நாப்பாடம் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும்
தீப்புலவற் சேரார் செறிவுடையார்; - தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிபழிக்கும்; அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும். 312
நாவால் பாடம் பண்ணியதை ஒப்பித்து, பாடலின் நயம் உணர்ந்தவர் போல் மிகவும் காட்டிக்கொள்ளும் தீய பொய்ப் புலவனை, நிறைந்த அறிவுடையவர் அடையார். ஏனெனில், அந்தத் தீய புலவன், அவையிலே, பெருமை குன்றும்படி இவரது குடிப்பிறப்பைப் பழித்துப் பேசுவான்; அல்லாமலும், தோள் தட்டிக்கொண்டு அடிபிடி மல்லுக்கு எழுவான், 312
--------------
சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்;
கற்றாற்றல் வன்மையும் தாம் தேறார் ; - கற்ற
செலவுரைக்கும் ஆற்றியார் தோற்ப தறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர். 313
வீணாகப் பல பேசும் மாந்தர் பலர், சொல்லையே தார்க் குச்சியாகக் கொண்டு பிறரைக் குத்தி, தினவு கொண் டெழுந்து பேச விரும்புவர்; சான்றோரது கல்வியறிவின் வலிமையைத் தாம் அறியார்; தாம் கற்றவற்றையும் பிறர் நெஞ்சில் பதியும்படி எடுத்துச் சொல்லும் வழியறியார்; தமது தோல்வியையும் அறியமாட்டார். 313
-----------
கற்ற தூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் ; - மற்றதனை
நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும். 314
அறிவிலி தான் சிறப்பாகக் கற்றது ஒன்றும் இன்றி, ஆசிரியர் சொல்லிய பாடத்தின் வாயிலாக ஏதேனும் ஒரு செய்யுளை மனப்பாடம் செய்துவைத்திருப்பான். மேலும், அப்பாடலை, நல்லவர் அவையிடையே புகுந்து நாணமின்றி ஒப்பித்துத் தன் மட்ட அறிவைக் காட்டி விடுவான். 314
------------
வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ(டு) - ஒன்றி
உரைவித் தகமெழுவார் காண்பவே கையுள்
சுரைவித்துப் போலுந்தம் பல். 315
பிறரை வெல்வது காரணமாக, விலங்கு போன்ற தன்மையுடன், உண்மைப் பொருள் உணராதவராய், சினந்து கறுவி எழுந்து கொதிக்கும் தியவரோடு சேர்ந்து தமது பேச்சுத் திறனைக் காட்ட முயல்பவர், தம் கைக்குள் சுரை விதையைப் போன்ற தம் பற்களைக் காண்பர். (அதாவது பல் உதிர்க்கப் படும்) 315
--------
பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால் - கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே; மற்றவரை
ஈன்றாட் கிறப்பப் பரிந்து. 316
பொதுவியல் செய்யுள் பாடத்தை மட்டும் படித்து அதன் பொருள் அறிவைத் தெளியாத மூடர்கள் வெறுக்கத்தக்க சொற்களை சொல்லும்போது, கெடுதல் இல்லாத சிறப்பினை உடைய பெரியோர், மற்று அந்த மூடர்களைப் பெற்ற தாய்மார்க்காக மிகவும் இரங்கி வருந்தி வாளர் இருப்பர். 316
----------
பெறுவது கொள்பவர் தோள் போல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளிய நூல் ;- மற்றம்
முறிபுரை மேனியர் உள்ளம் போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள். 317
நூற்கள், கிடைக்கும் பொருளைப் பெற்றுக்கொள்ளும் வேசியரின் தோளைப்போல், ஒருவழிப்பட்டுப் படிப்பவர்க் கெல்லாம் எளிமையாகக் கிடைக்கும்; ஆனால் மாந்தளிர் போன்ற மேனியுடைய அந்த வேசியரின் உள்ளத்தைப் போல, யார்க்கும் புரிந்து கொள்ள முடியாத நுண்பொருள் உடையனவாயிருக்கும். 317
-----------
புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் -- மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே; பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு. 318
நூற்களை மிகுதியாகச் சேர்த்து வைத்தும் அவற்றின் பொருள் அறியாராய், கொண்டுவந்து சேர்த்து வீடு முழுவதும் நிறைத்து வைப்பினும், மற்றபடி அந்நூற்களை இப்படியாகப் (பூசை போட்டு) போற்றிக் காக்கின்ற பொய்ப் புலவரும் வேறானவரே! நூற்பொருளைப் புரிந்து பிறர்க்கு எடுத்துச் சொல்லும் மெய்ப்புல வரும் வேறானவரே! 318
---------
பொழிப்பகலம் நுட்பம் நூல் எச்சமிந் நான்கிற்
கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு? 319
குற்றமற்ற கூட்டமான காட்டுப் பசுக்களைக் கொண்டுள்ள நீண்ட மலை நாடனே! தொகுப்புரை, அகல விரிவுரை, நுட்ப உரை, நூலில் எஞ்சி மறைந்து கிடப்பதை எடுத்துக்கூறும் ஆராய்ச்சியுரை ஆகிய இந் நால்வகை உரைகளின் வாயிலாக நூலின் கருத்தைக் கொழித்தெடுத்து விளக்கம் செய்து காட்ட முடியாதவரின் சொற்கள், ஒரு நூலுக்கு நல்ல உரையாக் முடியுமா? 319
---------
இற்பிறப்பில்லார் எனைத்து நூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்கும் கருவியரோ?- இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்ற நூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில். 320
நற்குடிப் பிறப்பு இல்லாதவர் எவ்வளவு நூற்கள் கற்றிருப்பினும், தம் சொல்லால், பிறரைப் போற்றிக் காக்கத்தக்க கருவி போன்றிருப்பரோ? நற்குடியில் பிறந்த நல்லறிஞர், பெரியோர் இயற்றிய நூற்பொருளை அறியாத மூடரின் அற்ப அறிவைத் தாம் பொருட்படுத்து வதில்லை . 320
-------------
பகையியல்
33. புல்லறிவாண்மை / புல்லிய சிற்றறிவு உடைமை
அருளின் அறமுரைக்கும் அன்புடையார்
வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர் புலவர் - பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும்; பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு. 321
அருளினால் நல்லறம் கூறும் அன்புடையவரது வாய் மொழியை அறிவுள்ள புலவர் உயர்ந்த பொருளாக ஏற்றுக் கொள்வர். பால் ஊற்றிய கூழைத் (பாயசத்தை) துழவும் அகப்பை சுவைத்துணராதது போல, உண்மைப் பொருள் உணராத அறிவிலி அவர் வாய்மொழியை இகழ்ந்து பேசுவான். 321
------------
அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல்தேற்றா தாங்கு. 322
தோலைக் கவ்வித் தின்னுகிற புலைநாயானது பால் சோற்றின் சுவையை அறிந்து கொள்ளாதது போல, பொறாமையில்லாத நல்லவர் அறநெறியை எடுத்துச் சொல்லும்போது, ஒழுங்கானவர் அல்லாதவர் அதனைக் காது கொடுத்துங் கேளார். ' 322
----------
இமைக்கும் அளவில் தம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் - திணைத்
துணையும் நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள்
பொன் என் பொன்றாக்கா லென். 323
கண்ணிமைக்கும் நேரத்தில் தமது இனிய உயிர் பிரிந்து போகலாம் என்னும் உண்மையை எத்தனையோ விதங் களாலும் தாம் அறிந்திருந்தும், தினையளவும் நல்லது செய்யாத நாணம் இல்லாத - மடத்தனம் உடைய மாக்கள் செத்தால் தான் என்ன! சாவாமல் இருந்தால்தான் என்ன! 323
------------
உளநாள் சிலவால் ; உயிர்க்கேமம் இன்றால்;
பலர்மன்னும் தூற்றும் பழியால் ;- பலருள்ளும்
கண்டாரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
தண்டித் தனிப்பகை கோள். 324
உள்ள வாழ்நாட்களோ சிலவே ! உயிர்க்கோ பாதுகாப்பு இல்லை. பலரும் தூற்றிப் பேசும் பழியோ மிகுதி! எனவே, உலக மக்கள் பலருள்ளும் கண்டவரோ டெல்லாம் சிரித்துப் பேசாமல், ஒருவன் மாறுபட்டு விலகித் தனித்துப் பகை கொள்வது ஏனோ? 324
-------------
எய்தி இருந்த அவை முன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை ;- வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான்
வியத்தக்கான் வாழும் எனின். 325
பலர் கூடியிருந்த அவை முன்னே போய் ஒருவன் மற்றொருவனை வைதானாக, வையப்பெற்றவன் ஒன்றும் செய்யாது வாளா இருப்பானேயானால், வைதவன் வாழ்வு கெடுவான் - அங்ஙனம் கெடானாயின், வியக்கப்படத்தக்க வனேயாவான்! 325
-------------
மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன் கண் முயலாதான் - நூக்கிப்
'புறத்திரு ! போ' கென்னும் இன்னாச்சொல்
இல்லுள் தொழுத்தையால் கூறப் படும். 326
முதுமை மேலிட்டு வருவதற்கு முன்பே நல்ல அறச் செயலை ஊக்கத்துடன் தொடங்கி அதனிடம் முயற்சி கொள்ளாதவன், பின் முதுமையில் தன் வீட்டிலேயே ஒதுக்கப்பட்டு, 'வெளியிலேயே இரு- எங்கேயாவது போ' என்னும் இனிமையற்ற சொற்களை வேலைக்காரியாலும் இகழ்ந்து சொல்லப்படுவான். 326
-------------
தாமேயும் இன்புறார்; தக்கார்க்கும் நன்றாற்றார்;
ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் ;- தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார். 327
அற்ப அறிவினர் தாமும் செல்வத்தை நுகரமாட்டார்; தகுதியுடைய பிறர்க்கும் நன்மை செய்யார்; பாதுகாப்பு பொருந்திய நல்லறவழியையும் பின்பற்றார்; தாம் செல்வத்தில் மயங்கித் தூங்கி வீணே வாழ் நாளைக் கழிப்பர். 327
-----------
சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம். 328
மறுவுலகம் செல்லும் போது தமக்கு வேண்டிய அறமாகிய சோற்றை, இளமையிலேயே, இறுக இறுகத் தோளிலே மாட்டிச்செல்லும் கட்டுசோற்றைப் போல் உண்டாக்கி வைத்துக் கொள்ளாதவராய், பொருளை இறுக்கி இறுக்கி வைத்து, பிறகு அறம் செய்வோம் என்று தள்ளிப்போடும் அறிவிலிகள், (இறக்கும் போது பேசமுடியாமையால்) சையால் குறிப்புக்காட்டும் பொன்னுருண்டையும், புளித்த விளாங்காய் கேட்பதாகச் சுற்றத்தாரால் கருதப்படும். 328
-------------
வெறுமை இடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனத்தாரே யாகி - மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவினார். 329
வறுமை யுற்றபோதும் பெரிய நோய் கொண்டபோதும் மறுவுலகைப் பற்றி எண்ணும் மனத்தை உடையவரா யிருந்து, அவை நீங்கி ஆறுதல் பெற்ற காலத்தில், மறுவுலகைப் பற்றிக் கடுகு அளவாயினும் அற்ப அறிவினர் எண்ணார். 329
--------------
என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம் நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை ;- அன்னோ!
அளவிறந்த காதல் தம் ஆருயிர் அன்னார்க்
கொளவிழைக்கும் கூற்றமும் கண்டு. 330
அந்தோ ! அளவற்ற அன்பிற்கு உரிய - தம் அரிய உயிர்போன்ற நெருங்கிய உறவினரைக் கொண்டு போக முயலும் எமனைப்பற்றி அறிந்தும், பெறுதற்கரிய இந்த மனித உடலைப் பெற்றிருந்தும் அறம் செய்ய எண்ணாராய், வீணே தம் வாழ்நாளைக் கழிப்பர் சிலர். என்னே கொடுமை இது! 330
-------------
பகையியல்
34. பேதைமை / மடமை
கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே;
கொலைவல் பெருங்கூற்றம் கோள் பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு. 331
கொல்லுதல் வல்ல கொடிய யமன் உயிரைப் பிடிக்க நாளும் - கோளும் பார்த்திருக்க, இவ்வுலக இன்பமாகிய வலையில் அகப்பட்டு இறுமாந்திருப்பவரது தன்மை, கொலை காரர் ஆமையைத் தண்ணீரில் போட்டு உலையிலே வைத்துக் கீழே தீ மூட்ட, ஆமையானது சிறிது நேரத்தில் தாம் இறக்கப்போவதை அறியாமல் அந்தத் தண்ணீருக்குள் மூழ்கி விளையாடுவது போன்றதாகும். 331
----------
பெருங்கடல் ஆடிய சென்றார், ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுதும்' என்றற்றால்;
"இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு. 332
குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய செயல்களின் குறைகளை நீக்கி நிறைவு செய்து, பிறருக்குச் செய்யத்தக்க நல்ல அறச் செயல்களைப் பிறகு பார்த்துக் கொள்வோம் என்று தள்ளிப் போடுபவரின் தன்மை, பெரிய கடலில் குளிக்கச் சென்றவர், ஒரு சேர அலையோசை அடங்கிய பின் குளிப்போம் என்று காத்திருப்பது போன்றதாகும். 332
----------
குலம், தவம், கல்வி, குடிமை, மூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர். 333
உயர்குலம், தவம், கல்வி, நற்குடிப் பிறப்பு, முதுமை ஆகிய ஐந்தையும் குறையாமல் ஒருவன் அடைந்திருப் பினும், நன்மை மிக்க - குற்றம் அற்ற - பழம் பெருஞ் சிறப் புடைய உலக நடைமுறையை அறியாது ஒழுகுதல், (பாலில் வேக வைத்துச் சமைத்தாலும்) நெய்யில்லாத சோற்றை உண்பதற்கு நேராகும். 333
----------
கல்நனி நல்ல கடையாய மாக்களின் ;
சொல் நனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்(று)
உற்றவர்க்குத் தாமுதவ லான். 334
கருங்கல் பாறைகள், பிறர் சொல்லும் சொற்களைத் தாம் நன்கு உணரமாட்டா என்றாலும், தம்மை அடைந்தவர்க்கு, அப்பொழுது - அப்பொழுதே, தம்மேல் நிற்பதற்கும் அமர் வதற்கும் படுப்பதற்கும் நடப்பதற்கும் ஆகப் பலவகையில் தாம் உதவியாயிருப்பதால், கீழ்ப்பட்ட மக்களினும் மிகவும் நல்லவையாம். 334
-------------
பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவு கொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து. 335
சினந்து பேசுவதால் பெறக்கூடிய நன்மை ஒன்றும் இல்லையாயினும் ஏதோ பெற்றவன் போலக் கறுவிக்கொண்டு தமக்கு ஒப்பாகாத உயர்ந்தோரிடத்தும், சினத்தினால் இனிமையற்ற சொற்களைத் தொடுத்துப் பேசித் திட்டா விடின், அறிவில்லாதவனுக்கு, நாக்கு தன்னைத் தின்று வருத்தும் சுனை உடையதாயிருக்கும். 335
---------------
தங்கண் மரபில்லார் பின் சென்று தாமவரை
எங்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலரும் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று. 336
நல்ல தளிரையுடைய புன்னை பூத்துக் குலுங்கும் கடற்கரை நாடனே ! தம்மிடம் நல்ல பண்பு இல்லாதவரின் பின்னே போய், அவரை எப்படியாவது எம் வழிப்படுத்தி விடுவோம் என்று எண்ணுபவரின் அற்ப நட்புமுயற்சி, கருங்கல்லைக் கிள்ளிக் கிள்ளிக் கையைக் கெடுத்துக் கொண் டது போலாம். 336
-----------
ஆகா தெனினும் அகத்துநெய் உண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர். 337
கிடைக்காது என்றாலும் ஒரு கலத்துள்ளே நெய் இருக்கு மாயின், விட்டுப் போகாமல் எறும்புகள் வெளியே சுற்றிக் கொண்டேயிருக்கும். அதுபோல், யாதொன்றும் உதவார் என்றாலும், செல்வமுடையவரை உலகினர் பின்பற்றி விடாது சுற்றுவர். 337
-----------
நல்லவை நாடொறும் எய்தார்; அறம் செய்யார்;
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார்; எல்லாம்
இனியர்தோள் சேரார்; இசைபட வாழார்;
முனியார்கொல் தாம் வாழும் நாள். 338
அறிவிலிகள், நல்லவர் அவையை நாடோறும் அடைந்து பழகார்; நல்லறம் செய்யார்; வறியார்க்கு யாதொரு பொருளும் ஈயமாட்டார்; எல்லா வகையிலும் இனிய தம் மனைவியர் தோளைத் தழுவார்; புகழ் உண்டாக வாழ மாட்டார்; இத்தகையவர்கள் தாம் வாழும் நாளை வெறுக்க மாட்டார்களோ? 338
----------
விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம்' என்றிருக்கும் கேண்மை - தழங்கு குரல்
பாய் திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு. 339
ஒருவர் இன்னொருவரை விரும்பி வியந்து நட்பு கொள்ள, இவரை யாம் விரும்பமாட்டோம் என்று புறக்கணிக்கும் படியான போலி நட்பு, ஆராயும் அறிவுநலம் இல்லாத அவரைப் பொறுத்தமட்டில், முழங்கும் ஒலியுடன் பாயும் அலைகடல் சூழ்ந்த இவ்வுலகமே கிடைப்பதாயினும் துன்பமே! 339
----------
கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும். 340
ஒருவன் கற்ற கலைகளையும் கண்ணிரக்கம் மிக்க மென்மைப் பண்பையும் உயர்குடிப் பிறப்பையும் பக்கத்திலுள்ள மற்றவர் பாராட்டினாலேயே பெருமை ஏற்படும். தானே சொல்லிக்கொண்டால், (பரிகசிக்கும்) மைத்துனர்மார்கள் பலர் ஏற்பட்டு, மருந்தினால் திராத பைத்தியக் காரன் என்று இகழப்படுவான். 340
----------
பகையியல்
35. கீழ்மை /இழிந்த தன்மை
கப்பி கடவதாக் காலைத்தான் வாய்ப்பெயினும்
குப்பை கிளப்போவாக் கோழிபோல் - மிக்க
கனம் பொதிந்த நூல் விரித்துக் காட்டினும்
கீழ்தன் மனம்புரிந்த வாறே மிகும். 341
நொய்போன்ற தானியக் கப்பியைப் போதுமானதாகக் காலையிலேயே தன் வாய் நிறைய உடையவன் ஊட்டினாலும் குப்பை கிளறுதலை நிறுத்தாத கோழியைப் போல, மிகுந்த பெருமை பொருந்திய நூற்பொருளை எடுத்து விரித்துக் கூறினாலும், கீழ்மகன் தன் மனம் விரும்பிப் போகிற போக்கிலேயே மிகுதியும் போவான். 341
----------
காழாய கொண்டு கசடற்றார் தம்சாரல்
தாழாது போவாம் எனவுரைப்பின் - கீழ்தான்
'உறங்குவாம்' என்றெழுந்து போமாம்; அஃதன்றி
மறங்குமாம் மற்றொன் றுரைத்து. 342
திட்பமான அறிவு பெற்றுக் குற்றமின்றி வாழும் நல்லோர் இடத்தைக் காலம் தாழ்த்தாது அடைவோம் - வருக என்று அழைத்தால், கீழ்மகன், தூங்கலாம் என்று எழுந்து போய்விடுவான்; அல்லாவிடின், வேறு ஏதேனும் ஒரு காரணம் கூறி வர மறுத்துவிடுவான். 342
------------
பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா (து)
ஒருநடையர் ஆகுவர் சான்றோர், பெருநடை
பெற்றக் கடைத்தும், பிறங்கருவி நன்னாட!
வற்றம் ஒருநடை கீழ். 343
விளங்கும் அருவிபாயும் நல்ல மலை நாடனே! பெரியோர் இடையிலே தாம் பெருவாழ்வு பெற்றாலும், தம் உயர் பண்பிலிருந்து தவறாமல் என்றும் ஒரு சீராகவே ஒழுதவர். கீழ்மகன் இடையிலே பெருவாழ்வு பெற்றபோதும் தனது தாழ்ந்த ஒரு போக்கையே பின்பற்ற வல்லவனாம். 343
----------
தினையனைத்தே ஆயினும் செய்த நன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் ;- பனையனைத்து
என்றும் செயினும், இலங்கருவி நன்னாட
நன்றில் நன்றறியார் மாட்டு. 344
விளங்கும் அருவி ஓடும் நல்ல மலைநாடனே! தமக்குப் பிறர் செய்த நன்றி யொன்று இருக்குமானால் அது தினையளவே யானாலும் அதனைப் பனையளவு பெரிதாகப் பெரியோர் மதிப்பர். நன்றி யுணர்வு இல்லாதார்க்கு என்றும் பனையளவு பெரிய நன்மை செய்யினும் பயன் இல்லை. 344
-------------
பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற் கிமையாது பார்த்திருக்கும் ; அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும். 345
பொன் கலத்திலே உணவிட்டு ஊட்டிக் காப்பாற்றினாலும் நாயானது பிறரது எச்சில் சோற்றிற்காக இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும். அத்தன்மை போல, கீழ்மக்களைப் பெருமையுடையவராக நடத்தினாலும், அவர்கள் செய்யும் செயல்கள் தாழ்ந்து வேறுபடும். 345
--------------
சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்;- எக்காலும்
முந்திரிமேல் காணி மிகுவதேல் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும். 346
ஆழியுருட்டும் அரசச் செல்வம் பெற்றாலும், மேலோர் எப்போதும் வரம்பு மீறிய பேச்சுப் பேசமாட்டார்கள். கீழ் மகன், முந்திரி (1/320) அளவுக்கு மேல் காணி (1/80) அளவு பொன் மிகுதியாகப் பெற்றாலும் தன்னை எப்போதும் இந்திரனாகவே எண்ணிக்கொள்வான். 346
-----------
மை தீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும். 347
குற்ற மற்ற பசும்பொன் தகட்டின் மேல் சிறந்த மணிகளைப் (இரத்தினங்களைப்) பொருத்திச் செய்யப்பட்ட தென்றாலும் செருப்பு தன் காலின் கீழே இருத்தற்கு உரியதேயாம். அதுபோலவே, கீழோர் மிகத் திரண்ட செல்வமுடையவரானாலும் அவர் செய்யும் செயலால் அவரைக் கீழானவர் என அறிந்து கொள்ளலாம். 347
-----------
கடுக்கெனச் சொல்வற்றாம் ; கண்ணோட்டம் இன்றாம்;
இடுக்கண் பிறர்மாட் டுவக்கும் ;- அடுத்தடுத்து
வேக முடைத்தாம்; விறன்மலை நன்னாட!
ஏகுமாம்; எள்ளுமாம் கீழ். 348
வன்மையான நல்ல மலை நாடனே கீழ்மகன், பிறர் உள்ளம் கடுக்கும்படிப் பேசவல்லவனாம்; கண்ணிரக்கமே இல்லாதவனாம்; பிறரிடம் துன்பம் உண்டானால் மகிழ்வான்; அடிக்கடி சினம் உடையவனாவான்; எங்கும் செல்லுவான், யாரையும் இகழ்வான். 348
-----------
பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினியர் ஆகுவர் சான்றோர் ;- விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப!
எள்ளுவர் கீழா யவர். 349
தேன் தளும்பும் நெய்தல் மலர் நிறைந்த - ஒலிக்கின்ற குளிர்ந்த கடற்கரை நாடனே ! இவர் பழைய நண்பர் என்று பல நாளும் தம் பின் வந்து நின்றாலும், உயர்ந்தோர், வந்தவரிடம் இனிமையாகப் பழகுவர் . கீழ்மக்களோ, வந்த வரை விரும்பாமல் இகழ்வர். 349
------------
கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும்
தீற்றினும் வையம்பூண் கல்லா சிறுகுண்டை !
ஐய; கேள்! எய்திய செல்வத்த ராயினும்
கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும். 350
ஐயனே, கேள்! அறுத்த புல்லைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து என்றும் ஊட்டி வளர்த்தாலும், சிறிய எருதுகள் தேரை இழுக்கமாட்டா. திரண்ட செல்வம் உடையவ ரானாலும், செய்யும் செயலைக்கொண்டு கீழ்மக்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். 350
------------------
36. கயமை - மிகவும் தாழ்ந்த தன்மை
ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினும்
காத்தோம்பித் தம்மை அடக்கும் - மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்
போத்தறார் புல்லறிவினார். 351
நிறைந்த அறிவுடையோர் வயதில் சிறியவ ரானாலும் தம் பண்பைப் போற்றிக் காத்து அடக்கமாய் ஒழுகுவர். அற்ப அறிவினரோ, வயது முதிருந்தோறும் கெட்ட செயல்களையே மிகவும் செய்து கழுகு போல் ஊர் சுற்றித் திரிந்து குற்றத்திலிருந்து விடுபடார். 351
---------
செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாம் தேரை ; வழும்பில் சீர்
நூல் கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது. 352
செழுமையான பெரிய தடாகத்திலே வாழ்ந்தாலும், தவளைகள் எப்போதும் தம் மேலுள்ள ஒருவகை வழுவழுப்பான அழுக்கைப் போக்கிக் கொள்ளமாட்டா. அதுபோல், குற்றமற்ற சிறப்புடைய நல்ல நூற்களைக் கற்றபோதும், நுட்ப அறிவு ஒருசிறிதும் இல்லாதவர், நூற்பொருளை ஆராய்ந்து தெளியும் ஆற்றல் இலர். 352
---------
கணமலை நன்னாட கண்ணின் றொருவர்
குணனேயும் கூறற் கரிதால் - குணனழுங்கக்
குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட் (கு)
எற்றால் இயன்றதோ நா. 353
கூட்டமான குன்றுகள் நிறைந்த நல்ல நாடனே ! ஒரு வரது கண் எதிரே இல்லாமல் புறத்தே அவரது நற்பண்பு களைக் கூறற்கும் என்னவோ போல் இருக்கிறது. ஆனால், அவரது பண்பு இழுக்கடையும்படி அவர் பக்கத்தில் நின்றே குற்றங்களைத் தூற்றும் அற்பர்கட்கு நாக்கு எதனால் செய்யப்பட்டதோ - தெரியவில்லையே! 353
-----------
கோடேந் தகலல்குல் பெண்டிர் தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார் ; - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை
காட்டி மதித்திறப்பர் மற்றை யவர். 354
பக்கம் உயர்ந்து அகன்ற அல்குலை (வயிற்றின் கீழ்ப் பாகம்) உடைய குடும்பப் பெண்கள், தமது பெண்மைக்கு உரிய ஒப்பனையைத் (அலங்காரத்தைத்) தோழியர் செய் வதுபோல் செய்ய அறியார். ஆனால், அவரல்லாத விலை மாதரோ, திரண்டு புதுநீர் பெருகுவதுபோல, தம் பெண்மை யழகைத் தாமே அணிசெய்து காண்பித்துத் தம்மைப் பெரிதாய் மதித்து வரம்பு கடந்து செல்வர். 354
---------
தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா
உளி நீரர் மாதோ கயவர் : - அளி நீரார்க்(கு)
என்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின். 355
அற்பர்கள் அருளாளர்க்கு யாதொன்றும் உதவார்; தமக்குத் துன்பம் செய்பவரைக் காணின், அவருக்கு எவ்வளவு உதவியும் செய்வர். ஆதலின் அந்த அற்பர்கள், தளிரின் மேலே வைக்கப்பட்டிருப்பினும் ஒருவர் தட்டாமல் உள்ளே செல்லாத உளியின் தன்மையராவர் - அந்தோ! 355
-----------
மலை நலம் உள்ளும் குறவன்; பயந்த
விளை நிலம் உள்ளும் உழவன், சிறந்தொருவர்
செய்த நன் றுள்ளுவர் சான்றோர்; கயம் தன்னை
வைத்தை உள்ளி விடும். 356
வேடன் மலையின் வளத்தைப் பற்றி எண்ணுவான்; உழவன் பயன் தந்த விளை நிலத்தைப் பற்றி நினைப்பான்; பெரியோர் தமக்கு ஒருவர் சிறப்பாகச் செய்த நன்றியை மறவாது எண்ணிக்கொண்டிருப்பர்; கயவனோ, தன்னை ஒருவன் திட்டியதைப் பற்றியே நினைத்துக்கொண் டிருப்பான். 356
-------------
ஒரு நன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த
பிழை நூறும் சான்றோர் பொறுப்பர், கயவர்க்(கு)
எழுநூறு நன்றி செய் தொன்று தீ தாயின்
எழுநூறும் தீதாய் விடும். 357
உயர்ந்தோர், தமக்கு முதலில் ஒரு நன்றி செய்தவர் பின்பு மனம் ஒப்பிச் செய்த நூறு பிழைகளையும் பொறுத்துக்கொள்வர். கீழோர்க்கு எழுநூறு நன்மைகள் செய்து பின்பு தவறி ஒரு தீமை செய்யினும், அந்த எழுநூறு நன்மைகளும் தீமைகளாகிவிடும், 357
---------
ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் ; - கோட்டை
வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி
செயிர்வேழ மாகுதல் இன்று. 358
வாள் போன்ற கண்ணுடையவளே! தன் தந்தத்தை வைரப் பூணால் பூட்டினாலும் பன்றியானது, சினந்து போரிடும் யானையாகுதல் இல்லை. அதுபோல, நற்குடிப் பிறந்தவர், தளர்ந்த வறுமைக் காலத்தும் செய்யக்கூடிய நற்செயல்களை, முழுமூடர் செல்வத்தால் மேம்பட்டபோதும் செய்யார். 358
-------
இன்றாதும்; இந்நிலையே ஆதும்; இனிச்சிறிது
நின்றாதும்' என்று நினைத்திருந்(து) - ஒன்றி
உரையின் மகிழ்ந்து தம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர். 359
இன்றைக்குச் செல்வராகிவிடுவோம் - இப்படியே இப்பொழுதே செல்வராவோம் - அல்லது, இனிச் சிறிது நாள் தள்ளிச் செல்வராகிவிடுவோம் என்றெல்லாம் எண்ணியிருந்து - அந்த எண்ணத்தோடு ஒன்றி அதைப் பற்றிப் பேசுவதிலே மகிழ்ச்சியுற்று, இறுதியில் தம் மனம் மாறு பாடுற்று (நீர் அற்ற) தாமரை இலைபோல் அழிந்தார் பலர். 359
---------------
நீருள் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரம் கிடையகத் தில்லாகும் ;"ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப்பெருங்கல் அன்னார் உடைத்து. 360
நீரிலே தோன்றி நிறம் பசுமையா யிருப்பினும் நெட்டிக் கோரைக்குள் ஈரம் இருக்காது. நிறைந்த பெருஞ் செல்வத்தில் திளைத்திருந்தபோதும், பெரிய பாறைக்கல் போன்ற மனம் உடையவரையும் இவ்வுலகம் உடையது. உணர்வாயாக! 360
-------------
பன்னெறி யியல்
37. பன்னெறி - பல வகை இயல்புகள்
மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த
காப்பாய் இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம் விழை தக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு. 361
விரும்பத்தக்க மாண்புடைய மனைவியைப் பெற்றில்லாத வனது இல்லம், மேகம் தவழும் அளவு உயர்ந்த மாட மாளிகையாய், சிறப்புடைய காவல் பொருந்தியதாய், நூல் திரிவிளக்கு என்றும் அணையாது நிலையாக எரியக்கூடியதா யிருப்பினும் என்ன பயன்? அது, பார்த்தற்கும் முடியாத ஒரு காடேயாம். 361
----------
வழுக்கெனைத்தும் இல்லாத வாள் வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம் பெறுவராயின் - இழுக்கெனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதேயச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது. 362
வழுக்குதல் சிறிதும் இல்லாத வாள் முனையில் காவலில் வைக்கப்பட்டிருப்பினும், தாம் இழுக்கான வழியில் செல்வா ராயின், மென்மையான மொழி பேசும் பெண்கள் யாதும் தவறு செய்யாத காலம் சிறிதளவே; கற்பொழுக்கம் இல்லாத காலமே பெரிதாகக் கருதப்படும். 362
---------
'எறி ' யென் றெதிர் நிற்பாள் கூற்றம் ; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி ;- அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ் பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை. 363
(கணவன் சினங்கொள்ளின்) 'என்னை அடி' என்று எதிர்த்து நிற்பவள் கணவனுக்கு எமனாவாள்; விடியற் காலையிலேயே சமையற்கட்டில் புகுந்து வேலை தொடங்காதவள் கொடிய நோயாவாள்; சமைத்ததனை நல்ல உணவாகக் கணவனுக்கு இடாதவள் வீட்டில் வாழும் பேயாவாள். இம்முவகைப் பெண்டிரும், கொண்ட கண்வனைக் கொல்லும் படைக்கலங்களாகும். 363
-----------
'கடி' யெனக் கேட்டும் கடியான் ; வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான் ;- பேர்த்துமோர்
இற்கொண் டினி திரூஉம் ஏமுறுதல் என்பவே
கற்கொண் டெறியும் தவறு. 364
திருமணத்தைக் கைவிடுக என்று சொல்லக் கேட்டும் கைவிடவில்லை; (முதல் மனைவி இறந்தபோது) வெடி யோசை படச் சாப்பறை முழங்கியதைக் கேட்டும் தெளிவு பெற்றானில்லை. மீண்டும் ஒரு மனைவியை மணந்து கொண்டு இன்பமாய் வாழ்வதாக நினைக்கும் மயக்கம், தன்மேல் தானே கல்லை எறிந்து கொண்ட தவறு போன்ற தாகும் என்று சொல்வர் அறிஞர். 364
-------------
தலையே தவமுயன்று வாழ்தல் ; ஒருவர்க்(கு)
இடையே இனியார்கண் தங்கல் ;- கடையே
புணராதென் றெண்ணிப் பொருள் நசையால்
தம்மை உணரார்பின் சென்று நிலை. 365
தவஞ் செய்ய முயன்று வாழ்தல் ஒருவர்க்கு முதன்மைப் பண்பு; இனிய மனைவியருடன் தங்கிவாழ்தல் நடுத்தரமான செயல்; சேராது என்று நினைத்துப் பொருளாசையால் தம் பெருமை உணராதவர் பின்சென்று நிற்றல் கடைப்பட்ட செயல். 365
-----------
கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனி துண்ணேம் ; ஆரப் பெறேம்யாம்' என்னும்
முனிவினால் கண்பா டிலர். 366
தலையாயவர் நன்னூற்களைக் கற்பதில் காலங் கழிப்பர்; இடையாயார் நல்ல இன்பங்களை நுகர்ந்து காலம் போக்குவர்; கடைப்பட்டவர்கள், யாம் இனிய உணவு உண்டிலேம் - செல்வமும் நிரம்பப் பெற்றிலேம் என்னும் கசப்பால் தூக்கம் இன்றிக் கிடப்பர். 366
----------
செந்நெல்லால் ஆய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே ஆகி விளைதலால் - அந்நெல்
வயல் நிறையக் காய்க்கும் வளவயல் ஊர!
மகனறிவு தந்தை அறிவு. 367
அழகிய நெல் வயல் நிறைய விளையும் வளப்பமான மருதநில நாடனே! செந்நெல்லிலிருந்து உண்டான செழுமையான விதை முளை மீண்டும் அந்தச் செந்நெல்லாகவே விளைவதால், மகனது அறிவு தந்தையிடமிருந்து வந்த அறிவே! 367
----------
உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக் கடைக்கால்
தலைக்கண்ண தாகிக் குடைக்கால்
போல் கீழ்மேலாய் நிற்கும் உலகு. 368
பெருஞ் செல்வமுடையவரும் பெரியோரும் கெட்டுப் போக, வைப்பாட்டியின் பிள்ளைகளும் கீழ்மக்களும் வளர்ச்சி யுற, இப்படியாக, கடைசியில் கால்மாட்டில் இருக்க வேண்டியது தலைமாட்டிற்கு வந்துவிட, (விரித்துப் பிடிக்கும் போது கீழேயும் மடக்கித் தொங்கவிடும்போது மேலேயும் வந்துவிடும்) குடையின் காம்பைப் போல உலகம் கீழ் மேலாய் நிற்கக்கூடியது. 368
--------
இனியார் தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ள முடையார் - மணிவரன்றி வீழும்
அருவி விறன்மலை நன்னாட !
வாழ்வின் வரைபாய்தல் நன்று. 369
மணிகளை வாரிக்கொண்டு வந்து வீழ்கின்ற அருவிகளை யுடைய வன்மையான நல்ல மலைநாடனே ! இனிய நண்பர் தம் உள்ளத்தில் உள்ள துன்பத்தை எடுத்துரைக்கவும், அத்துன்பத்தை நீக்க எண்ணாத நெஞ்சம் உடைய கொடியோர், வாழ்வதனினும் மலையினின்றும் கீழே வீழ்ந்து இறத்தல் நல்லது. 369
------------
புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்பற நாடின்வே றல்ல ;- புதுப்புனலும்
மாரி அறவே அறுமே; அவரன்பும்
வாரி அறவே அறும். 370
புது வெள்ளமும் பொலிவான காதணியுடைய வேசையர் தொடர்பும் ஆகிய இரண்டையும் பரபரப்பு இன்றி அமைதியாக ஆராயின் இரண்டும் வேறல்லவாம். புது வெள்ளமும் மழை அற்றால் தானும் அற்றுப் போகும். வேசையார் அன்பும் பொருள் வருவாய் அற்றால் தானும் அறும். 370
---------
3. காமத்துப் பால் - இன்ப துன்ப வியல்
38. பொதுமகளிர் / 38. விலைமாதரின் இழிதகைமை
விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின் வே றல்ல ; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே; அவரன்பும்
கையற்ற கண்ணே அறும். 371
விளக்கின் ஒளியும் விலைமாதரின் தொடர்பும் ஆகிய இரண்டையும் குற்றமற ஆராயின் இரண்டிற்கும் வேறு பாடில்லை. விளக்கின் ஒளியும் எண்ணெய் அற்றபோது அற்றுப் போகும் விலைமாதரின் அன்பும் கைப்பொருள் அற்றபோது அற்றுவிடும். 371
-----------
அங்கோட்டகலல் நல் ஆயிழையாள் நம்மொடு
செங்கோடு பாய்துமே என்றாள் மன் ;- செங்கோட்டின்
மேல்காணம் இன்மையால் மேவா தொழிந்தாளே
கால்கால் நோய் காட்டிக் கலுழ்ந்து. 372
அழகிய பக்கம் அகன்ற அல்குலையும் சிறந்த அணி கலனையும் உடைய விலைமகள், இறப்பதானால் நம்முடன் மலையின் நெடிய உச்சியிலிருந்து வீழ்ந்து இறப்போம் என்று சொன்னாள். ஆனால், நம்மிடம் பொன் - பொருள் தீர்ந்துவிட்டதால், காலிலே வாயுவுநோய் என்று காட்டி அழுது, மலையின் நெடிய உச்சியை ஏறியடையாது பிரிந்துபோய்விட்டாள். 372
--------------
அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங்கண்மால் ஆயினும் ஆகமன் ; தம்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய் தளிர் அன்னார்
விடுப்பர் தம் கையால் தொழுது. 373
அழகிய இடமுடைய விண்ணுலகில் தேவர்கள் தொழும் செங்கண்ணுடைய இந்திரனே ஆனாலும் ஆகட்டுமே! தம் கையிலிருந்து கொடுக்கும் பொருள் ஒன்றும் இல்லாத வரை, கொய்யும் தளிர் போன்ற மேனியுடைய வேசியர், தம் கையால் ஒரு கும்பிடு போட்டு அனுப்பிவிடுவர். 373
------------
ஆணமில் நெஞ்சத் தணி நீலக் கண்ணார்க்குக்
காணமில் லாதார் கடுவனையர் - காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடை
யார் அக்காரம் அன்னார் அவர்க்கு. 374
அன்பு இல்லாத மனமும் அழகிய நீலமலர் போலும் கண்களும் உடைய வேசியர்க்கு, பொன் - பொருள் இல்லா தவர் நஞ்சு போன்றவராவர். எல்லாரும் காணச் செக்கு ஓட்டிக் கொண்டிருந்தவரும் ஈட்டிய பொருள் மிக உடையவ ரானால், அம்மாதர்க்குச் சர்க்கரை போன்றவ ராவர். 374
-------------
பாம்பிற் கொருதலை காட்டி, ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும்; ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார். 375
பிடிக்க வரும் பாம்பிற்குப் பாம்பு போன்ற தலைப் பக்கத்தைக் காட்டி, மற்றொரு பக்கமாகிய வாலை, இனிமை பொருந்திய தெளிந்த நீர் மிக்க தடாகத்தில் உள்ள மீனுக்குக் காட்டக் கூடியதான விலாங்கு மீனைப்போன்ற இரட்டைச் செயலுடைய வேசியரின் தோளை, விலங்கு போன்ற - வெள்ளை யறிவுடைய மூடர் தழுவுவர். 375
-------------
'பொத்த நூல் கல்லும் புணர்பிரியா அன்றிலும்
போல் நித்தலும் நம்மைப் பிரியலம்' என்றுரைத்த
பொற்றொடியும் போர்த்தகர்க்கோ டாயினாள்;
நன்னெஞ்சே! நிற்றியோ போதியோ நீ. 376
துளைத்துக் கோத்த நூலும் மணியும் போலவும், இணை பிரியாத அன்றில் பறவைகள் போலவும் நிதமும் நம்மைப் பிரியவே மாட்டோம் என்று உறுதிகூறிய - பொன் வளையல் அணிந்த அவ்வேசிப் பெண்ணும், போரிடும் ஆட்டுக் கடாவின் கொம்புகள் போல் வேறு பக்கம் முறுக்கிக் கொண்டாள். எனவே, எனது நல்ல மனமே ! நீ அவள் பக்கமே இருக்கப் போகிறாயா? என் பக்கம் வரப் போகிறாயா? 376
---------
ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள் கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை. 377
காட்டுப் பசு நக்குவதுபோல் முதலில் இன்பமாக நடந்து, வந்தவரின் கைப்பொருளைப் பறித்துக் கொண்டபின், சண்டி எருதைப்போல் குப்புறப் படுத்துக்கொள்ளும் அற்பப் பரத்தை யின் போலி அன்பை நம்பி ஏமாந்து எமக்குரியது என்று இருந்தவர் தாம் பலராலும் நகைக்கப்பெறுவர். 377
------------
ஏமாந்த போழ்தின் இனியார் போன் றின்னாராய்த்
தாமார்ந்த போதே தகர்க்கோடாம் - மானோக்கின்
தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே
செந்நெறிச் சேர்துமென் பார். 378
ஆடவர் ஏமாந்தபோது இனியவர் போன்று நடித்து, தாம் செல்வம் நிரம்பியபோது இனிமையற்றவராய் ஆட்டுக் கடாவின் கொம்புகள் போல் முறுக்கிக் கொள்ளுகிற - மான் போலும் மருண்ட பார்வையுடைய - தம் போக்கில் செல்கிற விலை மாதரின் பெரிய கொங்கைகளை, நல்வழி யடைவோம் என்று முயல்பவர் தழுவார். 378
-------------
ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற் மொழிந்த மொழி கேட்டுத் - தேறி
'எம் 'ரென்று கொள்வாரும் கொள்பவே; யார்க்கும்
தமரல்லர் தம்முடம்பினார். 379
விளங்கும் நெற்றியுடைய விலைமகளிர் துன்பம் செய்யும் தம் நெஞ்சின் வஞ்சகத்தை உள்ளே மறைத்து நம்பும்படிச் சொல்லும் சொற்களைக் கேட்டு நம்பி, இப் பெண்டிர் எமக்கு உரியர் என்று நம்பக்கூடியவரும் நம்பத்தான் செய்கின்றனர். ஆனால், தம் உடம்பைத் தமக்கே உடைய அப் பெண்டிர் எவருக்கும் உரியவரல்லர். 379
--------------
உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
அறிந்த விடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர். 380
விளக்கமான நெற்றியுடைய வேசியர், மனம் வேறொருவன் பக்கம் இருக்க, வஞ்சகமாய்ச் செய்யும் செயல்முறை யெல்லாம் உலகினரால் தெளிவாக அறியப்பட்டிருந்தும் பாவம் நிறைந்த உடம்பை யுடைய மூடர் அறியமாட்டார். 380
-------------
39. கற்புடை மகளிர் /39. கற்புடைய பெண்டிரின் உயர்தகைமை
அரும்பெறற் கற்பின் அயிராணி அன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் - விரும்பிப்
பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை. 381
பெறுதற்கு அரிய கற்புடைய இந்திராணி போன்ற பெரிய புகழ் மிக்க பெண்ணேயாயினும், தன்னை விரும்பி அடைய வேண்டும் என்னும் ஆசையால் தன் பின் வந்து நிற்கின்ற தீய ஆடவர் உருவாகாதபடி தன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய - நறுமணமிக்க நெற்றியுடைய மனைவியே கணவனுக்கு நன்மை புரியும் துணைவியாவாள். 381
--------------
குட நீரட் டுண்ணும் இருக்கட் பொழுதும்
கடல் நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சியாள். 382
ஒரு குடத்து நீரைக்கொண்டே சமைத்து உண்ணத்தக்க நெருக்கடியான நேரத்திலும், கடல் அளவு நீரும் வற்ற உண்ணும் அளவு உறவினர் மிகுதியாக வந்துவிடினும், விருந்தோம்பும் கடமைப் பண்பை ஒழுக்க நெறியாகக் கொள்கிற - மென்மையான மொழி பேசும் பெண்ணே மனைவாழ்க்கைக்கு மாண்பு அளிப்பவ ளாவாள். 382
-------------
நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல். 383
நான்கு பக்கமும் இடிந்து வழியடையதாய், மிகவும் சிறியதாய். எல்லாவிடத்தும் மேல் கூரை வழியாக உள்ளிருப்பவர்மேல் மழைத்துளி சொரியக்கூடியதாய் இருப்பினும், மேலான அறங்கள் புரிய வல்லவளாய், தான் வாழும் ஊரார் தன்னைப் புகழும்படியான சிறந்த கற்புடைய இல்லத்தரசி இருக்குமிடமே சிறந்த இல்லமாகும். 383
------------
கட்கினியாள், காதலன் காதல் வகைபுனை வாள்,
உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள், - உட்கி,
இடனறிந் தூடி, இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண். 384
கணவனது கண்ணுக்கு இனியவளாய், கணவன் விரும்பும் வகையில் அழகு செய்து கொள்பவளாய், அச்சமுடையவளாய், ஊரார்க்கு நாணும் கூச்சம் உடையவளாய், கணவனுக்கு அஞ்சி, இடம் அறிந்து அவனோடு ஊடல் (காதல் விளையாட்டுக் கோபம்) கொண்டு, இன்பமாகக் கணவனது நிலை உணர்ந்து ஒழுகும் மடமொழி பேசும் மாதுதான் சிறந்த மனைவியாவாள். 384
----------
எஞ்ஞான்றும் எங்கணவர் எம்தோள் மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம் போல் நாணுதுமால் - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள் நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்! 385
எந்நாளும் எம் கணவர் எம் தோள் மேல் அணைந்து எழுந்தாலும், அந்த முதலிரவு நாளில் கண்டது போலவே இந்த நாளிலும் யாம் மிகவும் நாணிக் கூசுகிறோம். ஆனால், எப்போதும் பொருள் விருப்பத்தால் பலாது மார்பைத் தழுவி வாழும் பரத்தையர் எப்படித்தான் தழுவுகின்றனரோ? 385
---------------
உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான் கண் ஒண்பொருள் -தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம். 386
இன்ப வியல் வள்ளல் தன்மை உடையவனிடம் உள்ள உயர்ந்த செல்வம், உள்ளத்தில் நல்லாராய்ச்சி உடையவன் கற்ற நூல் போல் பயன் தரும். நாணமுடைய குல மகளிர் பெற்றுள்ள அழகு, தேர்ந்த ஆண்மகனது கையில் உள்ள கூரிய வாளைப்போல் குறிப்பிடத்தக்கதாம். 386
--------------
கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப்
பதக்கென்று ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் -ஒருங் கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடா (து)
என்னையும் தோய வரும். 387
எனக்கு நேர் ஒவ்வாத - அழகிய நெற்றியை யுடைய பரத்தையரைத் தழுவிய மலையனைய மார்புடைய என் கணவன், நீராடாமல் கூட என்னையும் தழுவவருகிறான். இதனால், இவ்வூர்த் தலைவனாகிய என் கணவன், கருங்கொள்ளினையும் செங் கொள்ளினையும் வேறுபாடு அறியாது தூணி அளவு - பதக்கு அளவாக ஒரு சேர ஒத்த அளவில் வாங்கியவனானான். 387
--------------
கொடியவை கூறாதி; பாண! நீ கூறின்
அடிபைய விட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற்(கு); அதனால்
வலக்கண் அனையார்க் குரை. 388
(எம்கணவனது பிரிவைச் சொல்லவந்த) பாணனே! யாம், அவற்கு, உடுக்கையின் பயன்படுத்தப் படாத (அடிக்கப்படாத ) இடப்பக்கத்தைப் போல் உள்ளேம்; அதனால், தலைவனது பிரிவு பற்றிய கொடிய செய்தியை எம்மிடம் கூறாதே ! கூறுவதானால், மெல்ல அடி வைத்து இவ்விடம் விட்டு நீங்கிப் போய், உடுக்கையின் பயன்படுத் தப்படும் (அடிக்கப்படும்) வலப்பக்கம் போன்ற பரத்தை யர்க்கு உரைப்பாயாக! 388
--------------
சாய்ப்பறிக்க நீர் திகழும் தண்வயல் ஊரன்மீ (து)
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன் - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
நோக்கி இருந்தேனும் யான். 389
கோரைகளைப் பிடுங்கியதும் தண்ணீர் விளங்குகின்ற குளிர்ந்த வயல் சூழ்ந்த ஊரையுடைய என் கணவன் மேல் ஈ பறக்கவும் பொறுக்காமல் ஒரு காலம் நொந்தவளும் நான் தான். ஆனால், காமத்திப் பொறி பறக்க அணைத்துப் பரத்தையரின் முலையோடு மோதிய - குளிர்ந்த சந்தனச் சாந்து அணிந்த கணவனது மார்பின் அலங்கோலத்தைப் பார்த்து வருந்துபவளும் நான் தான் ! 389
--------------
"அரும்பவிழ் தாரினான் எம்மருளும்' என்று
பெரும் பொய் உரையாதி; பாண - கரும்பின்
கடைக்கண் அனையம்யாம் ஊரற்(கு); அதனால்
இடைக்கண் அனையார்க் குரை. 390
என் கணவனிடமிருந்து தூது வந்த பாணனே ! இன்று அரும்பு மலர்ந்த மாலை யணிந்த என் தலைவன் எனக்கு அருள் செய்வான் என என்னிடம் பெரிய பொய் சொல் லாதே ! அவற்கு யான், கரும்பின் கடைசியிலுள்ள சுவை யற்ற கொழுந்தடை போன்றவள். அதனால், கரும்பின் சுவை மிக்க நடுப்பகுதியைப் போன்ற பரத்தையரிடம் போய்ப் பேசுக. 390
----------
இன்பவியல் - காமம்
40. காமநுத லியல் / 40. காமத்தின் இயல்பு கூறுதல்
முயங்காக்கால் பாயும் பசலை ; மற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம் - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு. 391
விளங்கும் கடலில் ஓயாமல் அலைமோதுகிற - நீண்ட உப்பங்கழிகளையுடைய குளிர்ந்த கடற்கரை நாடனே! தலைவனோடு புணராவிடின் உடம்பில் 'பசலை' என்னும் ஒருவகை நிறம் பரவும். ஆனால், ஊடல் (சிறு பிணக்கு) கொண்டு சிறிது பிரிந்து வருந்தாவிடினும் காமத்திற்கு இன்பம் இல்லை. எனவே, முதலில் புணர்ந்து பிறகு ஊடுவது ஒருவகைச் சுவையான முறை. 391
-------------
தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்கும் துணையில்லார்க்(கு) - இம்மெனப்
பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து. 392
தாம் விரும்பும் கணவரது மாலை நிறைந்த அழகிய மார்பைத் தம் முலைகள் பூரிக்கும்படித் தழுவும் வாய்ப்பு இல்லாத பெண்டிர்க்கு, 'இம்' என்னும் ஒலியுடன் மழை பெய்ய மேகம் இடியிடிக்கும் திசைகளெல்லாம், சாப்பறை அடித்தாற் போன்ற துன்பச் சூழ்நிலை உடையதாய்த் தோன்றும் 392
--------------
கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம் மாலை இட்டுக் கலுழ்ந்தாள் ; துணையில்லார்க்(கு)
இம்மாலை என்செய்வ தென்று. 393
கம்மாளம் முதலிய தொழில் செய்த மக்கள் தொழில் முடித்துக் கருவிகளை உள் எடுத்து வைத்துவிட்ட - மயக்கத் திற்குரிய மாலை நேரத்தில், நல்ல மலர்களை ஆய்ந்தெடுத்து மாலை தொடுத்த தலைவி, கணவரின் துணையில்லாத என் போன்றார்க்கு இந்த மாலை யாது பயன் தரும் என்று கையிலிருந்த மாலையைக் கிழே எறிந்து கலங்கி யழுதாள் 393
--------------
செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்ட நீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள் வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல்
அந்தோ ! தன் தோள்வைத் தணைமேற் கிடந்து. 394
(நம் மனைவி) மறைகின்ற கதிரவனைப் பார்த்து, சிதறிய செங்கோடு பொருந்திய தன் கண்ணில் வழிகின்ற நீரை மெல்லிய விரலால் முறை முறையாக வழித்துத் தெறித்து விம்மியழுது, நாம் பிரிந்துள்ள நாளைத் தன் மெல்லிய விரலால் எண்ணிக் கணக்கிட்டு, ஐயோ! தலையணை மேல் (தலைவைக்காமல்) தோளை ஊன்றிச் சாய்ந்து கிடந்து நம் குற்றங்களை நினைத்துக்கொண்டிருப்பாளோ? 394
---------------
கண் கயல் என்னும் கருத்தினால் காதலி
பின் சென்ற தம்ம ! சிறுசிரல் ; பின் சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில் வாக் கறிந்து. 395
என் காதலியின் கண்ணைக் கயல் மீன் என்று கருதியதால், சிறிய மீன்கொத்திக் குருவி (கொத்தித்தின்ன) அவள் பின்னே சென்றது ! அம்மாடி ! அப்படி அவள் பின்னே சென்றும் - ஊக்கத்தோடு முயன்றும், விளங்கும் அவள் புருவத்தை (குருவியைக் கொல்லும்) வளைந்த வில் என எண்ணி அஞ்சியதால் கொத்தாது ஓடிவிட்டது. 395
---------
அரக்காம்பல் நாறும் வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ!- அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையென <வென்(று)
அஞ்சிப்பின் வாங்கும் அடி. 396
செவ்வாம்பல் மலர்போல் மணக்கும் வாயினையும் அழகிய இடுப்பையும் உடைய என் மகளுக்கு, செந்நிறம் பொருந்திய சாயக்குழம்பைப் பஞ்சிகொண்டு பூசினாலும், 'மெதுவாக - மெதுவாக ' என்று கூறி அஞ்சிப் பின் இழுத்துக் கொண்ட காலடிகள், (இப்போது தன் காதலனுடன்) பருக்கைக் கற்கள் பொருந்திய காட்டு வழியில் செல்லும் கடுமையைத் தாங்கிக் கொண்டனவோ? 396
---------------
ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதின் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து. 397
ஓலையில் எழுதிய நூலைப் படிக்கும் பள்ளிக்கூடத்தார்களின் ஓசை அடங்கிய - சிறிது நேரம் செவ்வானம் பொருந்திய மாலை நேரத்தில், தன்னை மணந்த கணவர் பிரிவதை எண்ணி மாலையை அறுத்தெறிந்து, தன் அழகிய முலையின் மேல் அழகு செய்து பூசிய சந்தனத்தை அழித்துத் தலைவி அழுது புலம்பினாள். 397
---------------
'கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ' என்றி;- சுடர்த்தொடீஇ
பெற்றா னொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரு மாறு. 398
ஒளியுடைய வளையல் அணிந்த என் தோழியே ! கடக்க முடியாத காட்டு வழியிலே காளை போன்ற காதலன் பின்னே நாளை நடந்து செல்லவும் வலிமை உடையையோ - என்று நீ கேட்கிறாய் ! பெரிய குதிரையைப் பெற்றவன் ஒருவன், பெற்ற அப்போதே அதன்மேல் ஊர்ந்து (சவாரி ) செல்லும் முறையினையும் கற்றிருப்பான். 398
--------------
முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் ;- கலைக்கணம் வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும் என்
பூம்பாவை செய்த குறி. 399
(என் மகள் ) தன் முலைக்கண்களும் முத்துமாலையும் முழு உடலும் பதியும்படி என்னைத் தழுவிக்கொண்ட குறிப்பை யான் (நேற்று) சிறிதும் அறிந்திலேன். என் பொலிவு மிக்க பதுமை போன்ற மகள் செய்த குறிப்பு, மான் கூட்டம் புலிக்கு அஞ்சும் காட்டு வழியிலே (ஒருவரும் அறியாமல் தன் காதலனுடன்) செல்வதற்குப் போலும்! 399
------------
கண் மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி. 400
பொன்னிறத் தேமல் தோன்றியுள்ள - கோங்கு மொக்குப் போன்ற முலையை யுடைய என் தோழியே ! (என்னை மன்மதன் மலர் தூவி வருத்துகிறான்; குயில் இனிமையாகக் கூவி இன்பத்தைத் தூண்டுகிறது; வெண்ணிலா தோன்றி என்னை வெம்பச் செய்கிறது. யான் பிறந்ததாலேயே இவ்வளவு துன்பப்படுகிறேன். இருப்பினும் ) மன்மதனை முதலில் எரித்துப் பின் எழுப்பிவிட்ட மூன்று கண்கள் உடைய சிவனும், குயில் முட்டையைத் தன் கூட்டில் வைத்துக் குஞ்சு பொரித்த காகமும், நிலாவை (கிரகண காலத்தில்) விழுங்கிப் பின் உமிழ்ந்து விட்ட - படமுடைய இராகு என்னும் பாம்பும், எனக்குப் பிறவி தந்த என் தாயும் தவறு செய்துள்ளதாக என்ன கூறுவது? அவர் களின் மேல் - அவைகளின் மேல் குற்றம் சொல்லிப் பயனில்லை. பக்கத்தில் இருக்கவேண்டிய என் கணவர் பொருள் ஈட்டும் காரணமாகப் பிரிந்து சென்றுள்ள அச்சத்திற்கு உரிய வழியே தவறு உடையதாய் என் பிரிவுத் துன்பத்திற்குக் காரணமாக உள்ளது. 400
நாலடியார் நயவுரை முற்றிற்று
------------
நாலடியார் நற்புகழ்
" எண்ணா யிரவர் இசைத்தவெண்பா நானூறும்
கண்ணாமிந் நாலடியைக் கற்றுணரத் - தண்ணார்
திருக்குருகூர் மாறனையே தேர்ந்து மறை
தேர்ந்த திருக்குருகூர் மாறனையே தேர்.''
*, நானூறும் வேதமா நானூறு நானூறாம்
நானூறுங் கற்றற்கு நற்றுணையாம் - நானூறும்
பண்மொழியாள் பாகம் பகிர்ந்து சடைக்கரந்த
கண்ணுதலான் பெற்ற களிறு.''
" வெள்ளாண் மரபுக்கு வேதமெனச் சான்றோர்கள்
எல்லாருங் கூடி யெடுத்துரைத்த - சொல்லாய்ந்த
நாலடி நானூறு நன்கினிதா நன்மனத்தே
சீலமுடன் நிற்க தெளிந்து."
---------------
செய்யுள் முதற் குறிப்பு அகரவரிசை
அகத்தாரே வாழ்வாரென் 91
அக்கேபோல் அங்கை 53
அங்கண் விசும்பின் அகல் 151
அங்கண் விசும்பின் அமரர் 373
அங்கோட்டகலல் நல் 372
அச்சம் பெரிதால் 11
அடுக்கல் மலைநாட 203
அடைந்தார்ப் பிரிவும் 173
அத்திட்ட கூறை 281
அம்பல் அயலெடுப்ப 17
அம்பும் அழலும் 19
அரக்காம்பல் நாறும் 396
அருகல தாகிப் 261
அரும்பவிழ் தாரினான் 390
அரும்பெறல் யாக்கையைப் 94
அரும்பெறற் கற்பின் 381
அருளின் அறமுரைக்கும் 321
அலகுசால் கற்பின் 140
அவமதிப்பும் ஆன்ற 163
அவ்வியம் இல்லார் 322
அழல்மண்டு போழ்தின் 202
அள்ளிக்கொள் வன்ன 262
அறம்புகழ் கேண்மை 12
அறிமின் அறநெறி 172
அறியாப் பருவத் 171
அறியாறாம் அல்லர். 38
அறிவ தறிந்தடங்கி 4
அறுசுவை யுண்டி 61
ஆகா தெனினும் அகத்து 337
ஆடுகோ டாகி 192
ஆட்பார்த் துழலும் 80
ஆணமில் நெஞ்சத் தணி 374
ஆமாபோல் நக்கி 377
ஆர்த்த அறிவினர் 351
ஆர்த்த பொறிய 290
ஆவாம் நாம் ஆக்கம் 92
ஆவே றுருவின ஆயினும் 48
ஆற்றும் துணையும் 196
ஆன்படு நெய்பெய் 239
இசைந்த சிறுமை 187
இசையா ஒருபொருள் 41
இசையா தெனினும் 194
இசையும் எனினும் 152
இடம்பட மெய்ஞ்ஞானம் 46
இடும்பைகூர் நெஞ்சத்தார் 37
இட்டாற்றுப் பட்டொன் 288
இமைக்கும் அளவில் தம் 323
இம்மி அரிசித் 24
இம்மை பயக்குமால் 132
இம்மையும் நன்றாம் 294
இரவலர் கன்றாக 279
இருக்கை எழலும் 143
இரும்பார்க்கும் காலராய் 52
இலங்குநீர்த் தண்சேர்ப்ப 227
இல்லம், இளமை, எழில் 113
இல்லா இடத்தும் 21
இல்லாமை கந்தா இரவு 303
இழித்தக்க செய்தொருவன் 302
இழைத்த நாள் எல்லை 66
இளையான் அடக்கம் 125
இறப்ப நினையுங்கால் 174
இறப்பச் சிறிதென்னா 29
இறப்பவே தீய செயினும் 223
இற்சார்வின் ஏமாந்தேம் 182
இற்பிறப் பெண்ணி 212
இற்பிறப்பில்லார் எனைத்து 320
இன நன்மை இன்சொலொன் 146
இனியார் தம் நெஞ்சத்து 369
இன்பம் பயந்தாங் 9
இன்றாதும்; இந்நிலையே 359
இன்றுகொல் அன்றுகொல் 96
இன்னர் இனையர் 205
இன்னா இயைக 306
இன்னா செயினும் இனிய 6
இன்னா செயினும் விடற்பாலர் 225
இன்னா செயினும் விடுதற் 226
ஈட்டலும் துன்பம் 280
ஈண்டுநீர் வையத்துள் 39
ஈதல் இசையா திளமை 181
ஈனமாய் இல்லிருந் 198
உடா அதும் உண்ணாதும் 70
உடுக்கை உலறி 141
உடைப்பெருஞ் செல்வரும் 368
உடையார் இவரென் 160
உணர உணரும் 247
உண்டாய போழ்தின் 284
உண்ணான்; ஒளி நிறான் 69
உபகாரம் செய்ததனை 129
உயிர்போயார் வெண்டலை 110
உருவிற் கமைந்தான்கண் 240
உருவும் இளமையும் 32
உலகறியத் தீரக் 204
உளநாள் சிலவால் 324
உள்கூர் பசியால் 286
உள்ளத் துணர்வுடையான் 386
உள்ளத்தால் நள்ளா 58
உள்ளம் ஒருவன் 380
உறக்கும் துணையதோர் 98
உறற்பால நீக்கல் 34
உறுபுலி ஊனிரை 193
உறுபுனல் தந்துல 185
உறைப்பருங் காலத்தும் 184
ஊக்கித்தாம் கொண்ட 117
ஊருள் எழுந்த 20
ஊர் அங் கணநீர் 175
ஊறி உவர் த்தக்க 107
ஊறுசெய் நெஞ்சந்தம் 379
எஞ்ஞான்றும் எங்கணவர் 385
எத்துணை யானும் 272
எந்நிலத்து வித்திடினும் 243
எம்மை அறிந்திலிர்; 165
எய்தி இருந்த அவை 325
எறி ' யென் றெதிர் நிற்பாள் 363
எறிநீர்ப் பெருங்கடல் 275
எற்றொன்றும் இல்லா 150
எனக்குத் தாய் ஆகியாள் 75
எனதென தென்றிருக்கும் 276
என்பாய் உகினும் 292
என்றும் புதியார் 307
என்னானும் ஒன்றுதம் 65
என்னேமற் றிவ்வுடம்பு 330
ஏட்டைப் பருவத்தும் 358
ஏதிலார் செய்த 228
ஏமாந்த போழ்தின் 378
ஏற்றகை மாற்றாமை 28
ஒண்கதிர் வாள் 176
ஒரு நன்றி செய்தவர்க் 357
ஒரு நீர்ப் பிறந்தொருங்கு 236
ஒருபுடை பாம்பு 148
ஒருவர் ஒருவரைச் 309
ஓக்கிய ஒள்வாள் 59
ஓதியும் ஓதார் உணர்விலார் 270
ஓலைக் கணக்கர் 397
கடகம் செறிந்ததம் 289
கடக்கருங் கானத்துக் 398
கடமா தொலைச்சிய 300
கடல் சார்ந்தும் இன்னீர் 245
'கடி' யெனக் கேட்டும் 364
கடித்துக் கரும்பினைக் 156
கடிப்பிடு கண்முரசம் 30
கடுக்கி ஒருவன் 189
கடுக்கெனச் சொல்வற்றாம் 348
கடையாயார் நட்பில் 216
கடையெலாம் காய்பசி 297
கட்கினியாள், காதலன் 384
கணங்கொண்டு சுற்றத்தார் 85
கணமலை நன்னாட 353
கண் கயல் என்னும் 395
கண் மூன் றுடையானும் 400
கப்பி கடவதாக் 341
கம்மஞ்செய் மாக்கள் 393
கரவாத திண்ணன்பிற் 305
கருங்கொள்ளும் 387
கருத்துணர்ந்து கற்றறிந்தார் 211
கரும வரிசையால் 249
கருமமும் உள்படாப் 250
கரும்பாட்டிக் கட்டி 95
கல்நனி நல்ல கடையாய 334
கல்லாக் கழிப்பர் 366
கல்லாது நீண்ட 254
கல்லாது போகிய 169
கல்லாமை அச்சம் 145
கல்லாரே ஆயினும் 139
கல்லெறிந் தன்ன 126
'கல்'லென்று தந்தை 253
கல்லோங் குயர்வரைமேல் 283
கல்வி கரையில 135
கழிந்தார் இடுதலை 109
கழுநீருள் காரட 217
களர் நிலத் துப்பிறந்த 133
கள்ளார் ; கள் உண்ணார் 157
கற்ற தூஉம் இன்றிக் 314
கற்றறிந்த நாவினார் 256
கற்றனவும் கண்ணகன்ற 340
கற்றார் உரைக்கும் 260
கனைகடல் தண்சேர்ப்ப 138
காணின் குடிப்பழியாம்; 14
காதலார் சொல்லும் 3
காலாடு போழ்தில் 43
காவா தொருவன் 123
காழாய கொண்டு 342
குஞ்சி அழகும் 131
குட நீரட் டுண்ணும் 382
குடரும் கொழுவும் 106
குலம், தவம், கல்வி 333
குற்றமும் ஏனைக் 230
கூர்த்து நாய் கௌவிக் 130
கேளாதே வந்து 90
கொடியவை கூறாதி 388
கொடுத்தலும் துய்த்தலும் 274
கொய்புல் கொடுத்துக் 350
கொலைஞர் உலையேற்றித் 331
கொல்லை இரும்புனத்துக் 178
கொன்னே கழிந்தன் 115
கோடேந் தகலல்குல் 354
கோட்டுப்பூப் போல 215
கோதை அருவிக் 1
கோளாற்றக் கொள்ளாக் 191
சக்கரச் செல்வம் 346
சாய்ப்பறிக்க நீர் 389
சான்றாண்மை, சாயல் 142
சான்றோர் எனமதித்துச் 56
சிதலை தினப்பட்ட 197
சிறுகா, பெருகா 40
சிறுகாலை யேதமக்குச் 328
சீரியார் கேண்மை 232
செந்நெல்லால் ஆய 367
செம்மையொன் றின்றிச் 15
செய்கை அழிந்து 147
செய்யாத செய்தும் நாம் 235
செல்சுடர் நோக்கிச் 394
செல்லா இடத்தும் 149
செல்வர்யாம் என்று 68
செல்வழிக் கண்ணொருநாள் 154
செழும்பெரும் பொய்கையுள் 352
செறிப்பில் பழங்கூரை 231
செறுத்தோ றுடைப்பினும் 222
சென்றே யெறிப 84
சொற்றளர்ந்து கோலூன்றிச் 73
சொற்றாற்றுக் கொண்டு 313
தக்காரும் தக்கவர் 42
தக்கோலம் நின்று 103
தங்கண் மரபில்லார் 336
தண்டாச் சிறப்பின் 122
தமர் என்று தாம்கொள்ளப் 229
தம்மமர் காதலர் 392
தம்மை இகழ்ந்தமை 118
தம்மை இகழ்வாரைத் 47
தலையே தவமுயன்று 365
தவலரும் தொல்கேள்வித் 137
தளிர்மேலே நிற்பினும் 355
தனதாகத் தான் கொடான் 278
தாமேயும் இன்புறார் 327
தாம் செய் வினையல்லால் 50
தாழாத் தளராத் 74
தான் கெடினும் தக்கார்கே 10
திருத்தன்னை நீப்பினும் 304
திருமதுகை யாகத் 291
தினைத்துணையர் ஆகித்தம் 35
தினையனைத்தே ஆயினும் 344
தீங்கரும் பீன்ற 199
துகடீர் பெருஞ்செல்வம் 62
துக்கத்துள் தூங்கித் 51
துய்த்துக் கழியான் 273
துன்பமே மீ தூரக் 120
துன்பம் பலநாள் 114
தெண்ணீர்க் குவளை 104
தெரியத் தெரியும் 168
தெளிவிலார் நட்பின் 219
தோணி இயக்குவான் 136
தோற்போர்வை மேலும் 102
தோற்றஞ்சால் ஞாயிறு 67
நச்சியார்க் கீயாமை 299
நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் 23
நடுவூருள் வேதிகை 26
நட்டார்க்கும் நள்ளா 271
நட்புநார் அற்றன; 72
நட்பும் இரண்டும்
'நம்மாலே யாவரிந் 301
நயவார்கண் நல்குரவு 267
நரம்பெழுந்து நல்கூர்ந்தார் 153
நரைவரும் என்றெண்ணி 71
நல்ல குலமென்றும் 195
நல்லர்; பெரிதளியர்; 298
நல்லவை செய்யின் 144
நல்லவை நாடொறும் 338
நல்லார் எனத்தாம் 221
நல்லார் நயவர் இருப்ப 265
நல்லாவின் கன்றாயின் 45
நளிகடல் தண்சேர்ப்ப 166
நளிகடல் தண்சேர்ப்ப 242
நறுமலர்த் தண்கோதாய் 209
நன்னிலைக்கண் தன்னை 248
நாப்பாடம் சொல்லி 312
நாய்க்கால் சிறுவிரல்போல் 218
நார்த்தொடுத் தீர்க்கிலென் 86
நாலாறும் ஆறாய் 383
நாள்வாய்ப் பெறினும் 207
நாறாத் தகடேபோல் 266
நிலநலத்தால் நந்திய 179
நிலையாமை, நோய் 112
நின்றன நின்றன 64
நீரினும் நுண்ணிது 282
நீருள் பிறந்து 360
நீர்மையே அன்றி 287
நுண்ணுணர் வின்மை 251
நுண்ணுணர்வி னாரொடு 233
நெடுங்காலம் ஓடினும் 128
நெருப்பழல் சேர்ந்தக்கால் 54
நேரல்லார் நீரல்ல 2
நேர்த்து நிகரல்லார் 124
பகைவர் பணிவிடம் 241
படுமழை மொக்குளிற் 87
பண்டம் அறியார் 108
பரவா ; வெளிப்படா; 18
பரா அரைப் புன்னை 246
பருவம் எனைத்துள் 78
பலநாளும் பக்கத்தார் 214
பல்லார் அறியப் 16
பல்லாவுள் உய்த்து 31
பல்லான்ற கேள்விப் 36
பல்லான்ற கேள்விப் 252
பழமைகந் தாகப் 310
பழையர் இவரென்று 349
பனிபடு சோலைப் 77
பன்றிக்கூழ்ப் பத்தரில் 257
பன்னாளும் சென்றக்கால் 159
பாடமே ஓதிப் பயன்தெரிதல் 316
பாம்பிற் கொருதலை 375
பாலால் கழீஇப் பலநாள் 258
பாலோ டளாய 177
பாவமும் ஏனைப் 295
பிறந்த குலம்மாயும் 285
பிறர்மறையின்கண் 158
புக்க விடத்தச்சம்; 13
புணர்கடல் சூழ் வையத்துப் 264
புதுப்புனலும் பூங்குழையார் 370
புத்தகமே சாலத் தொகுத்தும் 318
புல்லா எழுத்தின் 155
புல்லாப்புன் கோட்டிப் 255
புறத்துத்தன் இன்மை 308
புன்னுனிமேல் நீர்போல் 89
பெயற்பால் மழைபெய்யாக் 27
பெரியவர் கேண்மை 55
பெரியார் பெருநட்புக் 7
பெரியார் பெருமை 170
பெருகுவது போலத் 234
பெருங்கடல் ஆடிய 332
பெருநடை தாம்பெறினும் 343
பெருமுத் தரையர் 200
பெருவரை நாட 186
பெறுவது கொள்பவர் 317
பெறுவதொன் றின்றியும் 335
பொத்த நூல் கல்லும் 376
பொழிந்தினிது நாறினும் 259
பொழிப்பகலம் நுட்பம் 319
பொறுப்பரென் றெண்ணிப் 161
பொற்கலத் தூட்டிப் 345
பொற்கலத்துப் பெய்த 206
பொன்னிறச் செந்நெல் 269
பொன்னே கொடுத்தும் 162
மக்களால் ஆய 97
மடிதிரை தந்திட்ட 224
மதித்திறப் பாரும் 121
மரீஇப் பலரோடு 220
மலை நலம் உள்ளும் 356
மலைமிசைத் தோன்றும் 81
மல்கு திரைய கடற்கோட் 263
மல்லன்மா ஞாலத்து 296
மழைதிளைக்கும் 361
மறுமைக்கு வித்து 183
மறுமையும் இம்மையும் 25
மற்றறிவாம் நல்வினை 79
மனத்தால் மறுவில 180
மனைப்பாசம் கைவிடாய் 60
மன்றம் கறங்க 83
மன்னர் திருவம் 167
மாக்கேழ் மடநல்லாய் 101
மாண்ட குணத்தொடு 116
மாற்றாராய் நின்று 127
மான அருங்கலம் 100
முட்டிகை போல 208
முட்டுற்ற போழ்தின் முடுகி 238
முயங்காக்கால் பாயும் 391
முலைக்கண்ணும் முத்தும் 399
முல்லை முகைமுறுவல் 105
முற்றல் சிறுமந்தி 237
முன்துத்தும் துத்தினை 190
முன்னரே சாம் 22
மூப்புமேல் வாராமை 326
மெய்ஞ்ஞானக் கோட்டி 311
மெய்வாய் கண் மூக்குச் 119
மெல்லிய நல்லாருள் 188
மை தீர் பசும்பொன்மேல் 347
யாஅர் உலகத்தோர் 49
யாஅர் ஒருவர் 57
யாக்கையை யாப்புடைத்தாப் 88
யாமாயின் எம்மில்லம் 293
யானை அனையவர் 213
யானை யெருத்தம் 63
வடுவிலா வையத்து 44
வயாவும் வருத்தமும் 201
வலவைகள் அல்லாதார் 268
வழங்காத செல்வரின் 277
வழுக்கெனைத்தும் 362
வளம்பட வேண்டாதார் 33
வற்றிமற் றாற்றப் 8
வாழ்நாட் கலகா 82
விரிநிற நாகம் 164
விருப்பிலார் இல்லத்து 210
விழைந்தொருவர் தம்மை 339
விளக்குப் புகவிருள் 111
விளக்கொளியும் வேசையர் 371
வினைப்பயன் வந்தக்கால் 93
வெறியயர் வெங்களத்து 76
வெறுமை இடத்தும் 329
வென்றிப் பொருட்டால் 315
வேம்பின் இலையுள் 244
வேற்றுமை இன்றிக் 5
வைகலும் வைகல் 99
வைப்புழிக் கோட்பாடா 134
This file was last updated on 12 March 2021
Feel free to send your corrections to the webmaster.