கடையம் (வளைசை) கலியாணியம்மை பிள்ளைத்தமிழ்
திருப்புலியூர் அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் இயற்றியது
kaTaiyam kaliyANiyammai piLLaittamiz
by tiruppuliyUr azakiya tirucciRRampala tEcikar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the publisher Mr. Kumbapada Sekharan of Tirunelveli for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
We thank Mrs. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கடையம் (வளைசை) கலியாணியம்மை பிள்ளைத்தமிழ்
திருப்புலியூர் அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் இயற்றியது
Source:
கடையம் (வளைசை) கலியாணியம்மை பிள்ளைத்தமிழ்
பதிப்பாசிரியன்: கம்பபாதசேகரன், ஆதீன சமயப்பரப்புனர், நெல்லை.
கடையம், அருள்மிகு. வில்வவனநாத சுவாமி திருவாசக முற்றோதுதல் குழு மற்றும்
கடையம் ஸ்ரீ நித்யகல்யாணி சேவா சமாஜத்தினரின் பேருதவியுடன்
நவராத்திரி விழாவில் கடையத்தில் வெளியிடப்பட்ட கலைமகள் திருநாள் மலர்
வெளியிட்டோர் : கம்பன் இலக்கியப் பண்ணை
பிட்டாபுரத்தம்மன் கோயில்தெரு, திருநெல்வேலி நகர் - 627 006.
வள்ளுவம் 2046ம்௵ துலை 4௴ முரசு 21.10.2015
க.ஆ. 1130, விளைநிலம் : 173
பிள்ளைத்தமிழ் களஞ்சியம் 2
ஸ்ரீ நித்ய கல்யாணி சேவா சமாஜம், கடையம்.
இராமநதி அருவிவீழ் மாமலையி னடிவாரம்
தேமதுரக் குயிலோசை தேன்ததும்பும் சோலைதனில்
நாம்மகிழ நலமெல்லாம் நல்குநித்ய கல்யாணி
நாமந்தனை நவில்வார்க்கு நண்ணும் பேரின்பமே
---------
கடையம் (வளைசை) கலியாணியம்மை பிள்ளைத்தமிழ்
(பிள்ளைத்தமிழ்க் களஞ்சியம் 2)
இராசராசசோழர், நாதமுனிகள், உ.வே.சாமிநாத ஐயர், மு.ரா. அருணாசலக் கவிராயர், புட்பரத செட்டியார் - திருமுறையை, திவ்விய பிரபந்தத்தை, காப்பியங்களை, சிற்றிலக்கியங்களை, செப்பேட்டிலும், பட்டோலையிலும், அச்சிட்டும் பைந்தமிழ் செல்வங்களை உலகிற்கு அளித்த சான்றோர் இவர்கள் திருவடிகளுக்கு துறைசை ஆதீன 23வது சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக மூர்த்திகள் அவர்கள் ஆணையிட்டபடி இந்நூலை பதிப்பித்து படிமக்கலமாக படைக்கின்றேன். -
கம்பபாதசேகரன்
வெளியிட்டோர் : கம்பன் இலக்கியப்பண்ணை
பிட்டாபுரத்தம்மன் கோவில்தெரு, திருநெல்வேலி நகர்.
________________
கலியாணியம்மை பிள்ளைத்தமிழ் ஆசிரியரின் ஊரும், பேரும் கூறும் பாடல்
திருமகள் நடன மிடுபுகழ் வளைசைத் தெசரத ராமவீச் சுரனுக்
கிருகணின் மணியா முமைகலி யாணிக் கிளமைசேர் திருவிளை யாடற்
பருவமீ ரைந்தும் விருத்தநற் பாவிற் பப்பத்துப் பாடிநன் களித்தான்
அருள்விளைந் திருக்குந் திருப்புலி யூர்வாழ் அழகிய திருச்சிற்றம் பலமே.
இப்பாடலில் நூலாசிரியரின் ஊர் திருப்புலியூர் என்பதும் பெயர் திருச்சிற்றம்பலம் என்பதும் தெரியவருகிறது. இந்த திருப்புலியூர் சிற்றம்பலம் என்பவர் தான் தென்காசி தலபுராணத்தை பாடி ஆசிரியராக இருப்பார் என கருதப்படுகிறது.
-----------
ஓம்
திருப்புலியூர் அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் இயற்றிய
திருநெல்வேலி மாவட்டம் அம்பை வட்டம் கடையம் (வளைசை)
கலியாணியம்மை பிள்ளைத்தமிழ்
1. காப்புப்பருவம்
திருமால்
பார்கொண்ட திண்டிறல் பல்புவன பந்திப்
பரப்பைப் புரக்கவேண்டிப்
பாண்டிப்பி ராட்டிபெறு செல்வியைச் செல்வப்
பழந்தேவனைப் புணர்ந்த
வார்கொண்ட கும்பக் கதம்பப் படீரமுலை
வஞ்சியைச் செஞ்சொல்வளரும்
வளைசை மாநகர் மருவுகலி யாணசுந்தர
மனோன்மணி தனைப்புரக்க
தார்கொண்ட பைந்துளவ மருமத்தி டைத்தங்கு
தவமறைத் தையலீன்ற
சதுர்முகனை முதலிட்ட புத்தேளிர் யாரும்
தனித்தனி விரும்பிநிற்பச்
சீர்கொண்ட மந்தரச் சிகரியில் பஃறலைச்
சேடனுட லைப்பிணித்துத்
தெண்டிரைக் குரைகடல் கடைந்தமு தளித்திட்ட
செங்கட்கருங் கொண்டலே! (1)
_________
சிவபெருமான்
வரியளி குமுறிய மடல்விரி யிதழியின்
மதுமழை மாறாத வார்சடைக் காட்டினர்
மழையிருள் எனவிடம் உமிழ்தரு கணபண
மணிவெயில் கால்வீசு மாசுணப் பூட்டினர்
மதனெரி படநுத லழல்பொழி விழியினர்
மலரடி மேலேறு மாமறைப் பாட்டினர்
மலைநிகர் புயமிசை யொருபுடை யணிகுழை
யொருபுடை மேனீடு வால்வளைத் தோட்டினர்
சருவென முனிவர் மனைபுகு முனமவர்
தளிரிய லார்தேடு தாதகிச் சூட்டினர்
தமனிய வரைபொரு மகலிய வுரமிசை
பிறைவட மாயாடு சூகரக் கோட்டினர்
தவளவெண் நிலவுமிழ் பொடியணி நுதன்மிசை
தருணநிலா வீசுதாழ் பிறைக் கீற்றினர்
சதுர்மறை பரவிய தமிழ்வளை சையிலுறை
தசரத ராமீசர் தாள்களைப் போற்றுதும்
பொருமிய கவுணிய மழமுகில் பருகிய
புணரிசெய் பாலூறு பூண்முலைப் பார்ப்பதி
புவனை கவுரிதிரி புரையென வறிவொடு
புகல்பவர் நாவேறு பூவையைப் பூத்தொளிர்
பொலன்முக டளவிய பனிவரை யதிபதி
புணர்தரு பேராசை மேனைமுத் தாட்டிய
புதல்வியை முதல்வியை மழகளி றெனவரு
புதல்வனை யீராறு தோள்வரைச் சூர்ப்பகை
அரசனை மகவென அருளிய வனிதையை
அலைகடல் போலாரும் ஆகமச் சூழ்ச்சியை
அருவென உருவென உளதென இலதென
அகிலமு மானாளை யாகமக் காட்டினில்
அனுதின நடமிடு மரகத மயிலையென்
அறிவினி லூடாடு நீளொளிக் காட்சியை
அடியவர் மனதினில் நினையுமுன் னுதவிய
அருள்நிதி போல்வாள் கல்யாணியைக் காக்கவே! (2)
_____________
விநாயகர்
இனிதுற வாய்த்தநன் கதையைப் பொருப்பினில்
எழுதிய கோட்டுவெங் கரடக் களிற்றினை
வனமலர் பூத்ததிண் புயவெற் பனைப்புகழ்
வளைசையின் மூர்த்தியைங் கரனைப் பழிச்சுதும்
கனிதமி ழாற்செறிந் தவர்க் கருட்கடல்
கலைவளர் கீற்றிளம் பிறையைத் தரித்திடு
தனிமுதல் பால்புணர்ந் தவளைக் கருத்தொடு
தசரதன் வாழ்த்து பைங்கிளியைப் புரக்கவே! (3)
_____________
முருகன்
கோதறு மலர்க்குவளை பூத்தொளி நிரம்புமொரு
கோகனகம் விண்டலர்ந்து
குமிழ்முகிழ் விரிந்தொழுகு தமிழமு தரும்புமிரு
கோங்கலர் பொலிந்துமெள்ளப்
பாதவ ரையில்கொடு முடித்தலை வணங்கவும்
பைம்பொன் வரையைக்கிழித்துப்
பவளா சலத்தில் படர்ந்தேறு பச்சைப்
பசுங்கொடி தனைப்புரக்க
வேதனை யழைத்தொரு சிரத்திடை புடைத்துமறை
வித்தகனெ னத்தழைத்து
மிக்ககம லத்தரசி ருப்பினில் விருப்பினொடு
மேவிப்ப தாகைபெற்றி
ஓதிமமு யர்த்துயி ரனைத்தும் படைத்திறைதன்
உச்சியி னுவந்துகேட்ப
ஒருபிரணவத் திலுறுமுட் பொருளின் மெய்ப்பொருள்
உணர்த்து குமரக்கடவுளே! (4)
______________________
பிரமன்
இலகிச் சுடர்கால் வெண்சிறை யெகினப் பரியூர்தி நெஞ்சினில்
இழைமுப் புரிநூல் விளங்கிய இறைமைப் பழையோன் வசுந்தரை
முலையில் துயில்கூர் கரும்புயல் முகைவிட் டலர்நா பியஞ்சுழி
முளரிப் பெருமாள் பதங்களில் முடிவைத் தினிதாவ ணங்குவதும்
கலைகற் றவர்நா வுறைந்தவள் கருணைக் கடலாய் நிறைந்தவள்
கமழத் தருதார் புனைந்தவள் கயிலைக் கிரிமே லிருந்தவள்
மலையத் துவசமீ னவன்பெறு மதுரைத் தமிழ்நா டுகந்தவள்
வளைசைக் கலியாண சுந்தர மயிலைப்பரி வாய்மை தங்கவே! (5)
__________________________
இலக்குமி
சிகரா சலத்தில் பணாமுடிப் பஃறலைச்
சேடனுடலைப் பிணித்துத்
தெண்திரை நெடுங்கடலை யண்டர் கடையத்துள்ளு
தெள்ளமு துடன்பிறந்த
மகராலயத் தைநிகர் மைப்புயல் கவுத்துவ
மணிச்சுட ரெறித்தமார்பில்
மாகனக நெட்டிதழ்க் கோகனகவீட்டினில்
வசிப்பவளை யஞ்சலிப்பாம்
புகர்மா முகக்களிறு கன்றுக்கு வென்றிப்
புழைக்கர மெடுத்துநீட்டிப்
பொன்னாடு சுற்றும் பொழில் பசுங்கற்பகப்
பூந்தழை பறித்தருத்தும்
சகலாச னத்துக்கு மேலான வெள்ளித்
தடங்கிரி நெடுஞ்சாரலில்
தசரதன் வழுத்துமொரு தனிமுத லிடத்திறைவி
தன்னைப் புரக்கவென்றே. (6)
_______________________
சரசுவதி
அண்டர் தொழுதிடுமால கண்டனிடத் தமர்ந்த
அருட்கடலை யிமயவரை யளித்தரு ளும்பால
துண்டமதி நுதற்கொடியை யண்டரண் டம்புரந்த
துரந்தரியைக் கலியாண சுந்தரி யைப்புரக்க
வண்டமிழின் வடகலையின் வடிவுறு மாஞான
மடுவுகுத்த பாலருந்தி மால்மக னான்முகத்தும்
விண்டமலர்ப் புண்டரிக மண்டபத்து மிருந்து
விளையாடு மொருபிள்ளை வெள்ளை யோதிமமே! (7)
______________________________
சத்தமாதர்
புகலரு மருமறை யெண்ணித் தெரித்தவள்
புரமெரி படநகை முன்னிச் சிரித்தவள்
புரையறு மரியுற வண்ணிப் பரித்தவள்
பொருதிரை புகையவில் லுன்னிக் குனித்தவள்
பகுபடை பகைவரை பம்மப் பணித்தவள்
பலியிட வுயர்திரி தண்டக் கரத்தினள்
பருவத மெனவரு வெண்மைக் கயத்தினள்
பகரிவ ரெழுவர்கள் தம்மைப் பழிச்சுதும்
மகரச லதிவிட முண்ணப் படித்தவ
ரசுரர் பணிசெய விண்ணைப் புரக்குமோர்
மகபதி பகைதெறு கண்ணைப் படைத்தவர்
மலரயன் விறலரி கண்ணுக் கொளித்தவர்
சகதல முழுமுத லென்னத் தழைத்தவர்
தழுவிய கனதன மின்னைப் புனற்கரை
தவழ்குட வளைசொரி வெண்ணித் திலத்தொளிர்
தமிழ்வளை சையிலுமை தன்னைப் புரக்கவே. (8)
________________________
திக்குப்பாலகர்
மூதண்டகூடக் குலக்கிரி களைச்சிறை
முறித்ததிறல் வச்சிரபாணி
மோதுந்திரைக்கடல் சுருட்டுமொரு தென்கீழை
மூலையில் சித்திரபானு
மாதண்டனைக்குரிய தண்டாயுதக் கடவுள்
வாதினில் திறலரக்கன்
மகரவாகனமுடைய வாருண திசைக்கடவுள்
மண்ணுல கெலாம்பரித்த
வேதண்டகொடுமுடி நடுங்கப் பிடுங்குமுயர்
வேகப்பிர சண்டவாயு
வெற்பனையபுட்பக மிசைப்பொலி குபேரனவன்
வெண்மருப் பிடபவூர்தி
தீதொன்றிலாதவிவ ரெண்மருந் தாம்பெற்ற
திசைதொறுஞ் சென்றுநின்று
சீர்வளைசையூர்காத்த கல்யாண சுந்தரச்
செல்வியைக் காத்தருளவே! (9)
___________________________
முப்பத்து முக்கோடி தேவர்
மரகதமணிக் கற்கள் பாசொளி பிறங்கவருள்
வண்மைக் குணத்தினொளியை
மன்னவர்கள் மன்னனாந் தென்னன்மக ளென்னவரு
வன்னப்பசுங் கிள்ளையை
இரசிதசபா நடுவில் எம்பிரான் செய்ந்நடனம்
எய்துகால் மாற்றுயர்ந்த
தென்றுகண் டுவகையுறும் வளைசைநக ரமர்தரும்
எம்மனையை யினிதுகாக்க
திரைதிரைத் தெறியும் கடற்புவி யிருட்டறச்
செங்கதிர் பரப்பியொற்றைத்
திண்சகட் டெழுபுரவி சண்டா நிலம்பொரத்
திண்தேர் நடாத்திநிற்கும்
பரிதிகள் மருத்துவர் வசுக்கண ருருத்திரர்கள்
பன்னிருவ ரிருவரெண்மர்
பதினொருவ ரெனவைத்த முப்பத்து முக்கோடி
பண்ணவர் மகாசமுகமே! (10)
___________________________
2. செங்கீரைப் பருவம்
நறும்புன லெடுத்தாட்டி யீரம்பு லர்த்தியிசை
நாவசைத் தழுகைமாற்றி
நாவேறு கண்ணேறு வாராமல் வெண்ணீறும்
நன்னிலப் பொட்டுமிட்டுக்
குறுந்தொடி சிலம்புகிண் கிணிதண்டை பாடகம்
குளிர்மணிக் காஞ்சிகாரை
குழையில் குதம்பைமுதல் யாவையும் அணிந்துகட்
குவலயங் களிசிறப்பப்
பெறுங்கனக வல்லியார் கைகொண்டெ டுத்துலகு
பெற்றசிற் றுதரநிறையப்
பெருகுமுலை யமுதூட்டி வைத்துமுத் தாட்டிமகிழ்
பிள்ளைமைப் பருவமெல்லாம்
சிறந்தமல யத்துவசன் வாரக் குமாரத்தி
செங்கீரை யாடியருளே!
செல்லார் கருங்குழல் கல்யாண வல்லியுமை
செங்கீரை யாடியருளே! (11)
___________________________
நெல்வந்து கன்னலை நிகர்ப்பப் பசுங்கன்னல்
நெட்டிலைக் கதலியேய்ப்ப
நெட்டிலைப் பூங்கதலி மரகத மடற்கமுகு
நிகராகநீள் கமுகெலாம்
அல்வந்த வெண்கதிர்ச் சந்திரமண் டலமளவி
யார்கலிப் புவியனைத்து
மாயிரம் பணமுடிப் பந்தியில் தாங்குரகன்
அம்பொன் நாடும்பரிக்க
வில்வந் தரித்தசடை முக்கட்பிரா னருளின்
மேலிட்டு எழுந்ததென்ன
வெண்கொடு முடிக்கோபுரக் கொடிகொள் மாடங்கள்
மேவுமளகா புரமெனச்
செல்வந் தழைக்கத் தழைத்தவளை சைக்கிறைவி
செங்கீரை யாடியருளே!
செல்லார் கருங்குழல் கல்யாண வல்லியுமை
செங்கீரை யாடியருளே! (12)
_________________________
மங்காத பொன்மலர்க் கற்பகா டவிசூழ்
மலர்ப்பூங் கடம்பவனமு
மணிகொழித் தெறியுமமு தோததியுமொ ளிர்கின்ற
மாபுட்ப ராகதீவும்
கொங்கார் மலர்த்திரளு மேவுமுயர் கயிலாய
கோலவெண் கிரியின்மீது
கொன்றையந் தொடையலணி செஞ்சோதி யாயொரு
கோயிலுள் குளிர்மதுப்பூம்
பைங்காவி யொத்தவிழி மாதங்கி யாதியர்
பணிவிடை யியற்றிநிற்பப்
பத்தரா கியமோன சித்தர்யோ கில்கண்டு
பரவிவழி பட்டுமகிழச்
சிங்கார மாக்கொலு விருக்கும் பசுஞ்சோதி
செங்கீரை யாடியருளே!
செல்லார் கருங்குழல் கல்யாண வல்லியுமை
செங்கீரை யாடியருளே! (13)
___________________________
கம்பாச லப்பகடு ரித்துடுத்து ரையற்ற
ககனவட் டத்திலாடிக்
காணருந் துரிய துரியாதீத மொக்கக்
கடந்துபர யோகமெய்தி
அம்பான பன்மலர் எடுத்தமர் தொடுத்தசிலை
அங்கசன் எரிந்துசிறுதேர்
ஆகவரு தென்றலங் கன்றுங் கிடந்தலற
அழல்விழி திறந்துகருதார்
மொய்ம்பான முப்புரமு மொக்கவெரி பட்டழிய
முகிழ்நகை திறந்துஞான
முத்திரை யளித்தரிய மோனம் புரிந்ததிரு
முக்கணான் செக்கர்மேனிச்
செம்பாதியுங் கொண்ட மரகதக் கலாபமயில்
செங்கீரை யாடியருளே!
செல்லார் கருங்குழல் கல்யாண வல்லியுமை
செங்கீரை யாடியருளே! (14)
______________________
வள்ளத் தடஞ்சுனை குடைந்தாட அஞ்சுமிடை
வஞ்சிக் குறிஞ்சிமடவார்
வளர்செந் தினைப்புனங் காக்குமிதண் மீதேறி
மைக்கருங் கூந்தல்சாயத்
துள்ளித் துடித்தகயல் மைக்கண் குறிக்கொளத்
துங்கமென் கொங்கைபொங்கத்
தொட்டிட்ட வள்ளைப் பொலங்குழை யிலங்கச்
சுடர்க்காந்த ளங்கைமலரால்
அள்ளிக் கதிர்ப்பற்ப ராகமணியைப் புதைத்து
ஆடல்கவண் கல்வீசி
அமுதங் கனிந்தூறு குமுதங்களைத் திறந்து
ஆவாயெனப் புள்ளோச்சும்
தெள்ளித் தெளிந்ததமிழ் வெள்ளிக்கிரிக் கிறைவி
செங்கீரை யாடியருளே!
செல்லார் கருங்குழற் கல்யாண வல்லியுமை
செங்கீரை யாடியருளே! (15)
_________________________
பொன்னஞ் சிறைச்சுரும் பிசைபாடு மம்புயப்
புரிமுறுக் குடையநீண்ட
பொற்கோ புரக்கொடு முடிக்கொடி மதிற்கிடை
புகத்தேரி ழுத்துயர்ந்த
கன்னம் படைத்தபரி கால்கதி யரைப்படக்
கால்குனித் துடல்குலுக்கக்
கண்ணும் பிழைத்தருண னெண்ணுந்தி கைப்பவெதிர்
கண்டவர்க ளதிசயிப்பப்
பண்ணுங் கதிர்கரமு மொக்கப் பரப்பிப்
பனிப்பகை பரக்கமன்னும்
பன்மணிக் கோமறுகு சுற்றுமது ரைத்தமிழ்ப்
பாண்டிநன் னாடுகாத்த
தென்னன் சிறுப்புதல்வி பொன்னங்கிரிக் கிறைவி
செங்கீரை யாடியருளே!
செல்லார் கருங்குழல் கல்யாண வல்லியுமை
செங்கீரை யாடியருளே! (16)
_______________________
வாராடு கும்பமுலை மேனை பெறுவாரக்
குமாரத்தி யென்னமன்னி
வான்முக டளந்தபனி மால்வரைக் கன்னியர்
மருங்குற நெருங்கமொய்த்துக்
காராடும் முச்சிவரை யருவித் தடாகமுங்
கஞ்சத்தடஞ் சுனைகளும்
கழுநீர் முறுக்கவிழு நெட்டோடை யும்புதுக்
கற்பகச்சோ லையும்போய்
நீராடி யம்மனை கழங்குபந் தித்தனையு
நின்றாடி மன்றாடுவார்
நெஞ்சூச லாடவே பொன்னூச லாடியருள்
நீலக்கலாப மயில்போல்
சீராடி விளையாடு மருமைப்பெண் ணென்னம்மை
செங்கீரை யாடியருளே!
செல்லார் கருங்குழல் கல்யாண வல்லியுமை
செங்கீரை யாடியருளே! (17)
________________________________
வேறு
வந்தனையேபுரி யும்பெரியோர்மன தன்பால் மின்போலே
வந்தொளிர் சாமளசுந்தர மேனியுமந்தா ரஞ்சூடும்
குந்தளபாரமு மந்திநிலா நுதலுஞ் சேலுங்காதும்
குங்குமபார கதம்பபயோதர முந்தேனும் பாலும்
உந்தியநீள்புள கங்கள்சிலீரென ஒன்றாய் வந்தூறும்
உம்பரளாவு பொலன்கிரிராசன் உவந்தோதுந் தோறும்
செந்துவர்வாயிதழ் விண்டமனோன்மணி செங்கோ செங்கீரை!
திங்களைநேர்முக மங்களநாயகி செங்கோ செங்கீரை! (18)
_______________________________
அங்கையில் வால்வளை நின்றுகலீரென அஞ்சேலஞ்சேல்நீ
யஞ்சலியார் செயினுந் திருவருள்செய் யணங்கேயென்றோதிப்
பங்கயமாளிகை மின்கொடிபாரதி என்போர் மின்போலே
பந்திவிடாவொரு சிந்துரரேகை பகுந்தே செந்தேனார்
கொங்கலர்சூடு கங்குழல்வாரி குடைந்தே வந்தேறும்
கொண்டலை நேர்தருமென்றே கண்டவர் கூறமருங்காரும்
செங்கயல்போலு நெடுங்கண் மனோன்மணி செங்கோசெங்கீரை!
திங்கள் நேர்முக மங்களநாயகி செங்கோசெங்கீரை! (19)
_______________________________________
சந்திரசூரிய ரிந்திரன்மாலயன் என்றோதுந் தேவர்
தண்கடல் சூழ்தரும் எண்டிசைகாவல் புரிந்தோர்பண்பாக
வந்தனைகூர் மலரம்புய பாதமிதென் றேயன்பாக
வண்கையினாலிரு கண்களினூடு புனைந்தா கந்தோறு
முந்தியநீள் புளகங்கள் சிலீரென வொன்றாய்நின்றோத
உம்பரளாவு பதங்களுவந் தருளுந்தாய் நந்தாத
சிந்துரநேர்நுத லம்பிகைகாரணி செங்கோ செங்கீரை!
திங்களைநேர் முகமங்களநாயகி செங்கோ செங்கீரை! (20)
_______________________________________
3. தாலப்பருவம்
மயிலைப் பொருவுஞ் சிறுசாயல்
மாதர்க் கரசசென் றிறுமாந்த
வள்ள முலைப்பா லமுதூட்டி
மழலைகலந் துவளைக் கையால்
பயிலத் தயிலப் புனலாட்டிப்
பச்சைக் குழந்தையு டல்குலுக்கிப்
பட்டாலீ ரம்புலர்த் திநுதற்
பரிந்தநிலக் காப்பணிந்து மைக்கண்
அயிலைப் பிணைக்கஞ் சனம்தீட்டி
யரைஞா ணிறுக்கி வளைதிருத்தி
யசைக்குங் குதம்பை தூக்கியுச்சி
யமைத்து சுடிகை யணிந்துமணிச்
சயிலத்தரசி வளர்க்க வளருந்
தாயே தாலோ தாலேலோ!
தமிழ்தேர் வளைசைக் கலியாணித்
தாயே தாலோ தாலேலோ! (21)
_________________________________
கழைக்குன்ற னைத்தும டுப்படுக்கிக்
கடலேழையுந் தண்புன லமைத்துக்
கணக்குக் கடங்கா மூதண்டக்
கலன்கள டுக்கிக்கடைக் கனலிட்டு
இழைக்குங் குமமாமுலை மடவார்
எல்லாங் கூடவிரு வினையும்
தந்தமிசையச் சமைத்தீ ரேழுலகும்
என்வீடுன் வீடெனப் பணித்துக்
குழைக்கும் குமிழ்க்குநடந் தோடும்
கூர்வேல் விழியால் துடக்குண்ட
கொன்றைச் சடையான் நின்றிரப்பக்
குறுவாள்முறு வல்விளைத்த னைத்துந்
தழைக்கும் படிக்குச் சிற்றிலிழைத்
தாயே தாலோ தாலேலோ!
தமிழ்தேர் வளைசைக் கலியாணித்
தாயே தாலோ தாலேலோ! (22)
___________________________________
பம்புஞ் சிறைவண் டிசைபாடும்
பங்கேருகத் தண்குளக் கரையில்
பவளக் கனிவாய் மலர்ந்துதிசை
பார்த்துப் பொருமி யழக்கண்டு
வெம்புந் தழற்கைக் கடவுளொடும்
வெள்ளை விடைமேல் எழுந்தருளி
விழிநீர் துடைத்து வெரிந்தடவி
விரிபொற் குழுவின் நிரம்புமணிக்
கும்பந் தனையொத் திறுமாந்த
கொம்மை முலைப்பால முதளித்துக்
கூறுந்தமி ழுந்தண் டிகையும்
கொற்றக்குடை யுங்கொடுத்து முற்றும்
சம்பந்தனை ஆதரித்து வளர்த்
தாயே தாலோ தாலேலோ!
தமிழ்தேர் வளைசைக் கலியாணித்
தாயே தாலோ தாலேலோ! (23)
_______________________________________
வாமம்பெ றுங்கைச்சிலை வளைத்து
வண்டுச் சிலைநாண் படக்கொழுவி
மதுக்கொப் புளிக்கும்ப கழிதொட்டு
மந்தாநிலத் தேரொடும் எதிர்த்த
காமன்படச் செங்கனல் விழித்த
கண்ணாரெண் ணாதெண்ணி யெண்ணிக்
காந்தளிருச் சூடகக் கைதொட்ட
கையால் சதங்கைத்தாள் பிடிப்பச்
சீமந்தவி ரேகையில் புனைந்த
செம்பொற் சுடிகை மணிவிளங்கத்
திங்கள் முகத்தாற் புறத்தொதுங்கும்
திமிரப்பொதி போற்செங் கழுநீர்த்
தாமஞ் சொருகிக் கூந்தல்முடித்
தாயே தாலோ தாலேலோ!
தமிழ்தேர் வளைசைக் கலியாணித்
தாயே தாலோ தாலேலோ! (24)
_______________________________
தொடங்குஞ் சதுர்மா மறைப்படியே
தூநீராடிக் குறை முடித்துச்
சோமக் கொழுந்தார் திருமுடிக்குத்
துணர்ச் சிற்றறுகு மலர்சாத்திக்
குடங்குன்ற னையமுலை புதைத்துக்
கும்பிட் டிறைஞ்சு மவ்வேலைக்
குடகா விரியும்பகீ ரதியுங்
கோதா வரியும் புறஞ்சாய
முடக்குந் திரைக்கம் பாநதிக்குள்
மோதும் செழுநீர்ப் பிரளயம்போல்
மோகப் பிரளயந் தந்து
முக்கட் பெருமான் செக்கர்மணித்
தடங்குங் குமத்தோள் குழையவணைத்
தாயே தாலோ தாலேலோ!
தமிழ்தேர் வளைசைக் கலியாணித்
தாயே தாலோ தாலேலோ! (25)
___________________________________
வேறு
விண்பொதி யக்கிளர் சந்தச்சோலை வேழமருப் புதவும்
வெண்முத்துந் திகழ்கண் முத்துந்திரை வெள்வளை யொண்முத்தும்
பண்பொதி யத்தமிழ்ப் பாடிப்பாடிப் பந்தா டுஞ்சூழல்
பைம்புன மங்கையர் வாரியெடுத்துப் பண்டிகளில் கொண்டே
செண்பக மொய்த்துயர் சோலையில்மன்னிச் சென்னிச் சுமையாறுந்
தெண்கட லுப்புத் தள்ளியளிக்குந் தெள்ளருவிச் சாரல்
தண்பொதி யத்தமிழ் நாடுபுரப்பவள் தாலோதாலேலோ!
சாமளவல்லி கல்யாண சவுந்தரி தாலோதாலேலோ! (26)
______________________________
கம்பிக்காதில் குண்டலமாடக் காதளவுஞ் சென்றே
கருணைத்திவ லைகிடந்தநெ டுங்கண்காவி புரண்டாடச்
செம்பொற்சுடிகைக் கதிர்மணியாடத் திருவரை ஞாணாடச்
செங்கைக்கதிர் வளையாடத் தண்டைசிலம்பு கலந்தாடப்
பைம்பொற்றொட் டிலுதைந்தாடிச்சிறு பால்நகை மேனைமுகம்
பார்த்துப்புன்னகை யாடிப்பனிமால் வரையர சன்பெற்ற
சம்பத்தென்ன வளர்ந்த பசுங்கிளி தாலோதாலேலோ!
சாமளவல்லி கல்யாண சவுந்தரி தாலோதாலேலோ! (27)
___________________________________
பண்டாசுரனைத் தூளிசெய்தன்னிரு பற்பபதம் பணியும்
பத்தர்தமக்கிடர் முற்றியதுட்டர் பயந்துமு றிந்தோடக்
கண்டார்பரவ வராகியெனத்தள கர்த்தவியம் பெற்றே
கனகக்கொங்கை மருப்புநெருப்புக் கக்குந் துணைவிழியும்
துண்டார்வெண் பிறையொத்த மருப்புஞ்சுடர் முடியுந்துடியும்
துண்ணெனவண்ட கடாகநடுங்கச் சுற்றும் கொற்றக்கைத்
தண்டாயுதமுங் கொண்டு நடந்தவள் தாலோதாலேலோ!
சாமளவல்லி கல்யாண சவுந்தரி தாலோதாலேலோ! (28)
_____________________________
சிந்தைக்ககேறத் திவவுவலித்துச் செம்மணி மாடகமும்
செவ்வில்முறுக்கித் தந்திரியில்கைச் சிறுவிரல் உகிர்சேப்பக்
கந்தத்தோடு கருங்குழலசையக் கைவளை பூசலிடக்
கத்தூரித்திலகம் பொலியச்சுடர் கைத்துடி நின்றாடல்
பந்தைப்போல்முலை விம்மச்சரிகம பதநியெனச் சொல்லிப்
பரவசமுற்றுக் கருவிழிசுழலப் பாடியரன் செவியில்
சந்தத்தேறல் வடித்த கருங்குயில் தாலோதாலேலோ!
சாமளவல்லி கல்யாண சவுந்தரி தாலோதாலேலோ! (29) __________________________________
அரியயனுந்தொழ வவனிபுரந்தவள் தாலோதாலேலோ
அடியரிடங்களி லுவகைசுரந்தவள் தாலோதாலேலோ
திரிபுரமெங்கணு மெரியமுனிந்தவள் தாலோதாலேலோ
சிவமெனவந்தவோர் பொருளைமணந்தவள் தாலோதாலேலோ
தரியலர்தங்களை யடரநடந்தவள் தாலோதாலேலோ
தமிழைவழங்கியென் மனத்துணிறைந்தவள் தாலோதாலேலோ
வரிவிழியிந்திரை பரவவிருந்தவள் தாலோதாலேலோ
வளைசைவளம்பதி தழையவளர்ந்தவள் தாலோதாலேலோ! (30)
________________________________
4. சப்பாணிப் பருவம்
அமர்பொற் கற்பகச் சோலையில் விடாயாற
அயிராணி இன்பமெய்த
ஆகண்ட லன்பவனி வெள்ளானை மீதுவர
அன்றுவெஞ் சூரைவென்ற
குமரனைப் புகர்முகக் கவுண்மதத் திருசெவிக்
குஞ்சரக் கன்றையீன்ற
கோற்றொடி படாமிட்ட கும்பமுலை மேனைபுணர்
கோன்பெறுந் தவகுமாரி
நிமிர்தடக் கைக்களி றுரித்தசிவன் மனையாட்டி
நீலக்குறத் திமாமி
நித்திரை மறந்திரவு சஞ்சரிக் குங்கொடிய
நிருதரைப் பொருதடர்த்த
சமரசக் ராயுதக் கடவுளுக் கொருதங்கை
சப்பாணி கொட்டியருளே!
தசரத இராமீச் சுரத்திலுறை கல்யாணி
சப்பாணி கொட்டியருளே! (31)
__________________________________
விண்ணளவு கொடுமுடிகள் மூதண்ட மெட்டுமொரு
வேதண்ட மத்துநிறுவி
வெண்திரைப் பாலாழி யோர்தாழியா யமுதம்
இசையக்க டைந்தவந்நாள்
அண்ணலம் பஃறலைக் காகோத ரத்துடல்
அலைத்தழல் கண்பிதுங்கி
ஆயிரமுகம் புகைந்தந் தகாரஞ் சொரிய
அண்டர்கண் டலறிவீழக்
கண்ணனு டலங்கருகி வந்தடைய நின்றபய
கரதலமளித்த முக்கட்
கடவுளுக் கன்றுவெங் காளகூ டத்தைக்
களத்திலபி மந்திரித்துத்
தண்ணமுத மாக்கியருள் தாமரைக் கைகொண்டு
சப்பாணி கொட்டியருளே!
தசரத விராமீச் சுரத்திலுறை கல்யாணி
சப்பாணி கொட்டியருளே! (32)
_____________________________________
குமிழெதிர் மறிந்துபொற் குழையெதிர் நடந்தபைங்
கூர்விழிக் கொம்பனையார்
கூடிவிளை யாடுந்த டஞ்சோலை தோறுமைக்
குயில்யா ழிசைவடிப்பக்
கமழ்தரு குடக்கனி உடைத்துண்டு கருமந்தி
கைத்தாள மொற்றிநிற்பக்
கற்றைப் பொலஞ்சிறைக் களிவண்டு பண்முரளி
காட்டக் கலாபமஞ்ஞை
இமிழ்புனல் காளமுகி லீட்டங்கள் கண்டுவெகு
நாட்டியமி யற்றிநிற்ப
இனிதுகண் டம்புயத் தரசமட வோதிமம்
இருக்குமா மருதவேலித்
தமிழ்வளைசை மருவுமபி ராமசுந் தரவனிதை
சப்பாணி கொட்டியருளே!
தசரத விராமீச் சுரத்திலுறை கல்யாணி
சப்பாணி கொட்டியருளே! (33)
__________________________
கண்காந்து(ம்) வெம்பொறிப் பிறையெயிற் றெறுழ்வலிக்
கார்நிறப் போரரக்கர்
கருமாள விண்ணவரு(ம்) மண்ணவரும் வாழச்செய்
கல்யாண முற்றத்தின்வாய்
விண்காந்து(ம்) விரிசுடர்ச் சந்திரசூ ரியர்திரு
விளக்கேந்த விதியின்முறையே
வெள்ளையோ திமவூர்தி வேள்விக ளியற்றமணி
வெற்பரசி பெற்றவரிசைப்
பெண்காந்த னுக்கிசையு மென்றுகண் டோர்சொலப்
பெற்றபே றென்னயிமவான்
பெற்றமூ ரும்பிரானம் போருகக் கையில்
பெய்புனலி னூடமைத்த
தண்காந்த ளஞ்செங்கை சேந்தொளி துளும்பநீ
சப்பாணி கொட்டியருளே!
தசரத விராமீச் சுரத்திலுறை கல்யாணி
சப்பாணி கொட்டியருளே! (34)
_________________________
குடம்புரை செருத்தலஞ் சேற்றடிக் கருமேதி
கொழுமலர் புண்டரிகமும்
கொடிபட்ட வள்ளையும் பற்கொடு கறித்துக்
குதட்டிக்கொ ழுத்தசைத்துக்
கடம்பெருகு பாலெனக் கதிர்முறை திறந்துதங்
கன்றுக்கி ரங்கிநின்று
கால்வாய்ச் சொரிந்தபால் குளவாய் நிறைந்துபாற்
கடலினைநி கர்ப்பவதனுள்
படம்புரை நிதம்பப் பிராமியென நெட்டிதழ்ப்
பங்கேருகத் தொட்டிலில்
பச்சைப் பசுந்தேரை தாலாட்ட வோதிமப்
பச்சிளம் பிள்ளைதுயிலுந்
தடம்புடை உடுத்தவளை சைப்பதி புரக்குமயில்
சப்பாணி கொட்டியருளே!
தசரத விராமீச் சுரத்திலுறை கல்யாணி
சப்பாணி கொட்டியருளே! (35)
_______________________________
காலினிறை சேற்றுக் கரும்பக டிணைத்துழுங்
கழனியில் துழனிபடலும்
காரளிகள் கமலத்தில் நின்றஞ்சி யோடுவது
கார்பெய்து கார்களேகல்
போலுழு மள்ளருள் ளங்களைத் திறைகொண்டு
புணர்முலைக் கடைசியர்கள்தம்
பூங்குமுத வாய்க்குரவை யார்ப்பநடும் வெண்ணாறு
புனல்பெருக்கத் தழைத்துப்
பாலமுத முட்கொண்டு சூல்பொதி யவிழ்ந்துமணி
படுகதிர்க் குலைகள்கற்புப்
பாவைய ரெனத்தலை கவிழ்ந்து விரசிதம்பொதி
பசும்பொன் னிகராகவளரும்
சாலிபுடை சூழ்மருத வேலிவளை சைக்கிறைவி
சப்பாணி கொட்டியருளே!
தசரத விராமீச் சுரத்திலுறை கல்யாணி
சப்பாணி கொட்டியருளே! (36)
__________________________
வேறு
நம்பிவணங்கிய தேவர்க்கிடர்செய் நண்ணலர் முப்புரமாய்
நடுக்கிழிபட்ட நுதற்கணெருப்பி னலிந்தவந் நாள்முதலுன்
செம்பதுமச் சரணங்கள்பராவிய சித்தச னுக்காகச்
செஞ்சிலைபஞ்ச சரங்கள்தொடுத்த திருக்கை வருந்தாமே
வம்பவிழ்கொன்றை பசும்பொன்னசும் பொளிர்வார்சடிலப் பெம்மான்
மாலைத்திண்தோள் குழையப்பொருமி வளர்த்த மணிக்கனகக்
கும்பகதம்ப பயோதரி!பூதரி! கொட்டுக சப்பாணி!
கோமளவல்லி! கல்யாணசௌந்தரி கொட்டுக சப்பாணி! (37)
________________________
படவரவனைய நிதம்பகதம்பப் பணைமுலை நெடியவிழிப்
பழனக்கடைசியர் குரவைமுழங்கப் பந்திப குந்துநடுந்
தடவயல்மடையில் வரம்பிலரும்பு தழைத்த தடங்காவில்
தாழைவனத்தில் கமுகவனத்தில் தவளமணிக் குன்றில்
புடைபடுநதியில் கரையில்திரையில் புண்டரிகக் சுனையில்
பூமலிமல்லிகை நந்தவனத்தில் பொங்குநிலா வீசிக்
குடவளைதவழ் வளைசையிலுறை பெய்வளை கொட்டுகசப்பாணி!
கோமளவல்லி கல்யாணசௌந்தரி கொட்டுக சப்பாணி! (38)
_________________________
கச்சைக்கிழியப் பொருமிப்பொருமிக் கண்கள் கறுத்ததுணைக்
கனகக்கொங்கைக் கங்கைக்குவித்தருள் கங்கைப் புனைசடையோன்
இச்சைக்கிழியில் சித்திரமென்ன இருக்கும் பொற்கிளியே!
எழுதியபிரணவ பஞ்சரமன்னி இருந்தகருங் கிளியே!
பச்சைக்கிளியே! காமற்குதவிய பஞ்சவனக் கிளியே!
பல்வளையொலிகெழு கையிலெடுத்துப் பவளக்கனி வாயால்
கொச்சைக்கிளியைக் கொஞ்சுங்கிளியே! கொட்டுக சப்பாணி!
கோமளவல்லி கல்யாண சௌந்தரி கொட்டுக சப்பாணி! (39)
______________________________
முந்தியஆச்சிர மங்களில்முற்றி முதிர்ந்து முறைப்படியே
மூன்றாமாச்சிர மத்திலிருந்த முனிக்குந் துணைவிக்கும்
சிந்தனைதீரப் பணிவிடைசெய்யுஞ் சிறுமுனிவன் புனலைச்
சென்றுமுகப்பக் குஞ்சரமென்றே செஞ்சர மொன்றுய்ப்ப
அந்தகனோவென் றாருயிர்சோர அயோத்திநகர்க் கிறைவன்
அப்பழிதீர விதிப்படிபத்தியின் அருச்சனை செய்யமலர்க்
கொந்தலர்வில்வ வனத்திலிருந்தவள் கொட்டுக சப்பாணி!
கோமளவல்லி கல்யாணசௌந்தரி கொட்டுக சப்பாணி! (40)
________________________________________
5. முத்தப் பருவம்
நறைபட்ட கொன்றைச் சடாடவியின் மேனின்று
நன்னிலந் தன்னில்வீழ்ந்து
நகைவளைத் தெண்டிரைக் கைக்கொண்டு பேராழி
நண்பனை மணந்தகங்கைத்
துறைபட்ட முத்துமத் தலைவனைக் காவேரி
தோய்துறை பணிலமுத்தும்
துள்ளருவி பாயத்தமிழ்ப் பொருநை சேர்கின்ற
துறையில்வளை யீன்றமுத்தும்
குறைபட்ட முத்தமா யெரிபடும் புரைபடும்
கொள்கவெனப் போய்க்கடைபடும்
கூரொளி மழுங்கிநிர்த் தூளிபடு மாதலால்
கொள்ளோம முத்தமெல்லா(ம்)
மறைபட்ட கிண்கிணிச் சிற்றடிப் பொற்றொடி
மணிப்பவள முத்தமருளே!
மலையாசலன் புதல்வி கலியாண சுந்தரி
மணிப்பவள முத்தமருளே! (41)
_______________________
திருமகள் வயங்குசெந் தாமரையின் முத்தமுந்
தெற்றும் சலஞ்சலத்தின்
தெண்ணிலா முத்தமு(ம்) முடங்கு தடந்திரைத்
திகழ்வலம் புரியின்முத்தும்
பெருமகளிர் கந்தரத் தொளிர்பணில முத்தமும்
பேழ்வாய்வெள் ளிப்பிமுத்தும்
பிறைப்பரு மருப்புப் பொருப்பீன்ற முத்தமும்
பின்னுகிளை துன்னுமுத்தும்
கருமகளிர் குரவைகெழு கழனியில் செந்நெலும்
கன்னலுங் கான்றமுத்தும்
கைக்கொளோ மாகையால் இந்திரன் மகளையும்
கானவர்த(ம்) மகளையுந்தன்
மருமகளெ னப்பெற்ற பொன்னிமய மலைமகள்
மணிப்பவள முத்தமருளே!
மலையாச லன்புதல்வி கலியாண சுந்தரி
மணிப்பவள முத்தமருளே! (42)
___________________________
தாமரைக் கைக்கொண் டெடுத்துமுத் தாடுமொரு
சைலப்பிராட் டிவட்டத்
தடமுலைப் பாலுண்டு தெய்வமறை முறையிடும்
சரணில் சிலம்பலம்பக்
காமனுக் கபயம் கொடுத்தகைக் கதிர்வளை
கலீரெனக் கண்டுகண்டு
கயிலாய வெற்புக்கோ ரரசென்று வெற்பரசு
கண்கள்களி கூரநறைவார்
தேமலர் குன்றத்த சும்பவிர் பசும்பொனில்
செக்கர்வான் மணிகுயிற்றும்
திருமாளி கைப்பத்தி மத்தியில் தாதியர்கள்
சென்றுநின் றாட்டவொளிரு
மாமணித் தொட்டில் துதைந்தா டுமரகத
மணிப்பவள முத்தமருளே!
மலையாசலன் புதல்வி கலியாண சுந்தரி
மணிப்பவள முத்தமருளே! (43)
__________________________
தத்து முத்தாடுந் தடந்திரைக் கம்பையிற்
சம்புவைத் தழுவிநின்ற
தண்காந்த ளங்கையும் பதினாலு புவனமுந்
தந்தசிற் றுதரமடியு
நத்து முத்தாடுஞ் சிறுக்கந்தரப் பொட்டு
நகைமுதற் சுவைகளெட்டு
நாட்டுமிணை நாட்டமுங் காணுந்தொ றுந்தனது
நயனாம்புயங் களித்துக்
கொத்து முத்தாடுமணி முச்சியை முகந்துபைங்
குதலைமொழி யமுதுபருகிக்
குறுநகை நிலாவுண்டு கனகப் பிராட்டிதன்
குவிமுலை கொடுத்துமடிமேல்
வைத்து முத்தாடுமொரு பச்சைப் பசுங்கிளி
மணிப்பவள முத்தமருளே!
மலையாசலன் புதல்வி கலியாண சுந்தரி
மணிப்பவள முத்தமருளே! (44)
_____________________________
பூமருவு செம்பொற் கடம்பாடவிக் குயில்
புயற்குல மிறங்குசாரல்
பொதிய வரையில் பயிலு(ம்) மரகதக லாபமயில்
பொன்னிமய மீன்றபூவை
தேமலர்ச் சோலைதிகழ் வடவரை வளைத்திட்ட
செந்தேனருந் துபைந்தேன்
செவ்விபெறு மாயிரம டல்செழுந் தாமரைத்
திருமுகப் பசியவன்னம்
பாமருவு பலகலையும் ஆகமப் பனுவலும்
பதினெண் புராணவகையும்
பையக்கொ ழுந்துவிடு பூங்கொடியி லோங்கார
பஞ்சரத்துள் ளிருந்து
மாமறைவ டிக்குமொரு பச்சைப் பசுங்கிளி
மணிப்பவள முத்தமருளே!
மலையாசலன் புதல்வி கலியாண சுந்தரி
மணிப்பவள முத்தமருளே! (45)
_____________________________
பஞ்சானனக் கடவுள் விடமுண்ண அமுதுண்ட
பண்ணவர்கடைந்த தெண்ணீர்ப்
பாலாழி வெண்டிரை தொறுந்தோன்று செந்திருப்
பாவையர் குழாங்கடுப்பச்
செஞ்சாயல் மயிலென விறங்கிக் கொழுங்கைச்
செழுங்குங் குமங்குளித்துச்
செருகுங்க ருங்குழலின் மந்தார மாலையிரு
தீரமுந்தே னிறைப்பத்
துஞ்சாம டந்தையர்கள் ஏந்துமுலை நீந்தும்
துணைபொற் குடங்கள்பொருவத்
துழனியிட் டாடும் தடாகத் தடந்திரை
துள்ளருவி வெள்ளிவரைவாய்
மஞ்சார் நெடுஞ்சாரல் வில்வவன நாயகி
மணிப்பவள முத்தமருளே!
மலையாசலன் புதல்வி கலியாண சுந்தரி
மணிப்பவள முத்தமருளே! (46)
_____________________________
வேறு
எத்தாய்நினைப்போர் மனத்திருளா யெளியேன்விழிக்குச் சுடரொளியாய்
இரண்டாய்மூன்றா யொன்றாகி யெல்லாப்பொருளுந் தானேயாய்ச்
சத்தாய்சத்தாய்ச் சதசத்தாய்த் தயங்குவானந்தப் பொருளாகிச்
சகலபுவனங் களுக்குமொரு தாயாய்மகளாய் வளர்த்தெடுத்த
கைத்தாயருக்குக் கண்மணியாய்க் கன்னித் தமிழ்தேர் கடல்ஞாலங்
காவல்தலைமை பூண்டவளாய்க் கயிலைப்பெருமான் கண்களுக்கு
முத்தாய்வளர்ந்த பெண்பிள்ளாய் முத்தந்தருக முத்தமே!
மும்மைப்புவனம் புரக்குமம்மை முத்தந்தருக முத்தமே! (47)
______________________
பழக்கும்மிமிலும் கைமரமும் பாறும்படகுங் கொண்டுசென்று
பாயுந்திரைக்குள் படிந்தெழுந்து பானல்முழுதுஞ் சூறையிட்டுத்
தழல்குன்றெனச் செம்பவளமும்வெண் தவளத்தரளவளை யும்வெள்ளித்
தகடென்றடுக்கு மீன்குவையும் தத்தம்கொழுநர் கொணர்ந்திறைப்ப
வழக்கென்றிருந்து மகளிரெல்லா மணிச்சங்கரிந்து புள்ளோச்சி
வாரிப்பகுத்துப் பொன்கொழித்து மன்றல்மறுகு தொறும்பம்பை
முழக்கும்பரதர் குலக்கொம்பே! முத்தந்தருக முத்தமே!
மும்மைப்புவனம் புரக்குமம்மை முத்தந்தருக முத்தமே! (48)
________________________________
கொழுங்குங்குமமா முலைமடவார் குரல்வீணையு மத்தளத்தொனியும்
குமுதக்கனிவாய்க் கடைசியர்தங் குரவைத்தொனியுங் குயிலிசையும்
வழங்குங்கொடையில் பெரும்புகழ்சேர் வள்ளியோர்தம் கொடைமுரசு
மாற்றார்படையைப் பொருதடர்த்து வாகைதரித்தோர் திறல்முரசும்
கழங்கும்பயில்பைந் தொடிமலர்க்கைக் கன்னியரை வேற்காளையர்
மங்கலநாண்பூட்டி மணம்புணர் கல்யாணமுரசும் தனித்தனியே
முழுங்கும்வளைசைப் பதிபுரப்பாய் முத்தந்தருக முத்தமே!
மும்மைப்புவனம் புரக்குமம்மை முத்தந்தருக முத்தமே! (49)
_____________________________
பொழியுங்கருவி மழைதூங்கும் பொங்கர்நடுவில் முடப்பலவில்
பொதியுங்குடமுட் கனிதகர்த்துப் பொன்போல்பழுத்த புதுச்சுளைவாய்
வழியுஞ்செழுந்தேன் நெட்டுவிறால் வடிதே னூடு புக்கருந்தி
வள்ளைகுதட்டும் கருமேதி வளவாய்புலரா வகைபெருகும்
செழியன்திருநாட் டினிதுயர்ந்த செல்வப்பழனத் தமிழ்வளைசைத்
தேவர்பணியும் பழந்தேவன் செவியால்பருகு தெள்ளமுதாய்
மொழியுங்குதலைப் பசுங்கரும்பு முத்தந்தருக முத்தமே!
மும்மைப்புவனம் புரக்குமம்மை முத்தந்தருக முத்தமே! (50)
________________________________
6. வாரானைப் பருவம்
பஞ்சவன் புதல்வியாய்த் தமிழ்நாடு காத்திட்ட
பட்டவர்த் தனிவருக!முன்
பனிவரை தவஞ்செய்து பெண்ணர செனப்பெற்ற
பாக்கியப் பேறுவருக!
விஞ்சையரு(ம்) மண்ணவரு(ம்) விண்ணவரு(ம்) நண்ணுமலர்
வில்வவன வல்லிவருக!
வெங்காள கூடவிடம் உண்டகங் களானொடு
விடையில்வரு வாள்வருகவோர்
வஞ்சகமி லாதெனை வளர்த்ததாய் வருகவென்
வாக்கிலுறை செல்விவருக!
வாய்ந்தவென் குலதெய்வம் வருகவென் னிருகண்மணி
வருகவென் னம்மைவருக!
அஞ்சமுடை யான்மறை முழக்கும் வளைசைக்குள்
அகிலாண்ட நாயகிவருகவே!
அந்தரி நிரந்தரி வரந்தரு துரந்தரி
கல்யாணசுந் தரிவருகவே! (51)
_____________________________
கோலக்கு தம்பையணி காதுக்கு மாமணிக்
குண்டலந் தூக்கவருக!
குளிர்தயில மாறாத உச்சிக்கு முச்சியும்
குச்சுந்த ரிக்கவருக!
சாலத்த வழ்ந்தநடை பார்த்தகட் கஞ்சனம்
தானணிய வருகவருக!
சதுர்மறை கள்காணாத சிற்றடிக் கம்பொற்
சதங்கைவட மணியவருக!
பாலொத்த வெள்வளைக் கைக்குநவ மணியிட்ட
பைம்பொன்வளை புனையவருக!
பதினாலு புவனமும் பெற்ற சிற்றுதரப்
பசிக்கமு தளிக்கவருக!
ஆலத்தை யுண்டவர்க் காரமுத மாகவரும்
அசலநாயகி வருகவே!
அந்தரி நிரந்தரி வரந்தரு துரந்தரி
கல்யாணசுந் தரிவருகவே! (52)
___________________________
வண்டறையு மந்தார மாலைக் கருங்குழல்
வகுப்பிடு நெடும்பின்னலும்
வடிகாது மாமணிக் குண்டலமு மங்கைக்கமண்
டலமு(ம்)மறை யின்முறையும்
விண்டல(ம்) நிறைந்தொளிர் சரற்கால சந்திரமுக
விம்பமுங் கும்பமுலையும்
வெண்கலையு(ம்) மேகலையு மிருபாத பங்கயமும்
விரிமணிப் பரிபுரமு(ம்)மைக்
கண்டல(ம்) நிறைந்ததண் கருணையும் உயர்வரத
கரதலமு மபயகரமுங்
கற்றவர்கள் சித்தாந்த காரஞ்சு ருட்டுமெய்க்
கதிர்நிலவு மெதிரநின்றே
அண்டரவை தெண்டனிடு புண்டரிக மண்டபத்து
அரசவோதிமம் வருகவே!
அந்தரி நிரந்தரி வரந்தரு துரந்தரி
கல்யாணசுந் தரிவருகவே! (53)
_______________________________
வாடுமிடை மேனைதன் மகிழ்ச்சிப் பெருக்கினால்
வாய்மலர்ந் தம்மைவருக
வளருமென் செல்வமே வருக!மகளே வருக!வருக
வெனவிரு கைநீட்டப்
பாடக மலர்ப்பதங் கன்றிச் சிவப்பப்
பயப்பயத் தனிநடந்து
பத்திபெறு முச்சியுந் தொங்கலு மிலங்கப்
பணிச்சுடிகை வெயிலெறிப்பச்
சூடகச் செங்கைக் குறுந்தொடி புலம்பச்
சுடர்த்தரள மாலையாடத்
துணைவிழி களிற்கருணை வெள்ளந் துளும்ப
மெய்ச்சோதி மரகதமெறிப்ப
ஆடகப் பணிவரைப் பச்சைமயில் போலவரும்
அம்மைதிரிபுரை வருகவே!
அந்தரி நிரந்தரி வரந்தரு துரந்தரி
கல்யாணசுந் தரிவருகவே! (54)
_______________________________
மதுகரமு வரியளியு மிஞிறுகளு நனிகுமிறு
மடலிதழி யணியல்சரிய
வரநதியி னிடைகுலவு முடநிலவு படவரவின்
மணிவெயிலி னொளிகவெளிறக்
கதிர்விழியு(ம்) மதிவிழியு(ம்) நுதல்விழியு மிருள்நிலவு
கறைமிடறு மழகுசொரியக்
கரதலமு(ம்) மழுவுமி ளமறியு மரிதாவுபய
கமலபத பரிபுரமெலாஞ்
சதுர்மறையி னோலமிட வரிபிரமர் பணியவுயர்
சபைநடுவில் நடமிடுபிரான்
தசரதனு மவனுடைய தலைமகனு மடிபரவு
தனிமுதல்வனென நெடியபுலியின்
அதளுடைய வுடையனொடு விடையில்வரு மலையுதவும்
அமலை திரிபுரைவருகவே!
அந்தரி நிரந்தரி வரந்தரு துரந்தரி
கல்யாணசுந் தரிவருகவே! (55)
_____________________________
வேறு
கொல்லைக்கமுகின் செம்பழுக்காய்க் குலைகள்சிதற வெடிதாவிக்
கொண்மூவகடு படக்கிழித்துக் குளித்துக்களித்து விளையாடி
எல்லைக்கடங்கா வான்புனலோ டிறங்கிப்புறங் கூர்சாதகத்துக்
கெல்லாம்புதிய விருந்துகொடுத் திறைக்கும்கழு நீர்த்தேனருந்திச்
செல்வக்கயல்கள் புடைசூழச் சினைச்சங்கார்ப்ப மணித்தரங்கச்
சிவிகையேறித் திருவுலாச் செல்லாநிற்குந் தடம்பணைசூழ்
மல்லல்பழைய வளைசைநகர் வாழ்வே! வருகவருகவே!
மலயத்துவசன் பெற்றெடுத்த மயிலே! வருகவருகவே! (56)
_____________________________
விண்ணுக்கடங்கா வான்பொருளே! வேதப்பொருளே! விழுப்பொருளே!
விழிக்குத்துணையே! மொழிக்கரும்பே! விளக்கின்சுடரே! சுடரொளியே!
கண்ணுக்கடங்காப் பேரமுதே! கருணைப்பெருக்கே மதிக்கொழுந்தே!
கண்மூன்றுடைய பெருமானைக் கலந்துபிரியாச் சிறுமானே!
எண்ணுக்கடங்கா அதிசயமே! எண்ணெண்கலைக் குமொருமுதலே!
ஈரேழுலகுக் கொருதாயே! எழுதற்கரிய விசித்திரமே!
மண்ணுக்கடங்காப் புகழ்வளைசை வாழ்வே வருகவருகவே!
மலயத்துவசன் பெற்றெடுத்த மயிலே! வருகவருகவே! (57)
_______________________________
முதிர்சொற்பொருளே மெய்ப்பொருளே முழுத்தமதியே குணநிதியே!
மூலவாகமமே வோதிமமே மூவாமருந்தே பெருவிருந்தே!
குதலைக்கிளியே! தண்ணளியே! குன்றில்பிணையே! உயிர்த்துணையே!
கோலக்கொடியே! குலப்பிடியே! கொடுக்குந்தருவே! செழுந்திருவே!
அதிர்கற்பகமே வனுபவமே வறிவற்புதமே! மரகதமே!
அருட்போரேறே தவப்பேறே! அரனார்பிணையே! அரசனையே!
மதுரக்கனியே! வளைசைமனோன் மணியே! வருகவருகவே!
மலயத்துவசன் பெற்றெடுத்த மயிலே! வருகவருகவே! (58)
____________________________________
சிந்தித்தெழுந்து புனலாடித் திருநீறணிந்து குறைமுடித்துத்
திருச்சந்நிதியில் படிந்தெழுந்து செம்பொற்கோயில் வலம்வந்து
சந்தித்தனந்தம் அஞ்சலிநின் சரணாம் புயத்துக் கினிதியற்றித்
தாள்வாழ்த்தெடுத்து நின்னருளால் தழைக்கும்பெரியோ ருடன்பழகி
எந்தைக்கிசைந்த அஞ்செழுத்து மெம்பிராட்டி திருவுருவாம்
ஏழெட்டெழுத்து முருவேற்றி யிருந்துகணப்போ தானாலும்
வந்திப்பவர்முன் வரும்வளைசை வாழ்வே! வருகவருகவே!
மலயத்துவசன் பெற்றெடுத்த மயிலே வருகவருகவே! (59)
______________________________
பொருவாள்விதிர்த்துக் கருதலரைப் பொருவாள்வருக வாரிசம்மென்
பூத்தாள்நுண்ணூ லிடையவனி பூத்தாள்வருக வடியவர்க்குத்
தருவாழ்பதமு மெப்பதமுந் தருவாள்வருக மலர்க்கொன்றைத்
தாராள்வருக மலைநிகருந் தனத்தாள்வருக வவிர்பசும்பொன்
உருவாள்வருக மாந்தளிர்ப்பட் டுடையாள்வருக கயிலைவரை
உடையாள்வருக வெனையடிமை யுடையாள்வருக வுயிர்தழைக்க
வருவாள்வருக வளைசைநகர் வாழ்வே வருகவருகவே!
மலயத்துவசன் பெற்றெடுத்த மயிலே வருகவருகவே! (60)
_______________
7. அம்புலிப் பருவம்
வார்க்கின்ற தேன்கொன்றை மாலைப் பிரானுக்கு
மாலையன் றுதவியென்றும்
வந்திக்கு மிமயவரை யினிதளித் திடவந்து
வழுதிகுல ரத்னமாகிக்
கூர்க்கின்ற வண்கலைகள் விண்டுகொண் டுச்சமரக்
கோலவிடை மேல்விளங்கிக்
கொற்றவே ளுக்கதிக சத்திதந் தெறிபுனல்
குவலயந் தனிபுரப்பாய்
பார்க்கின்ற பொழுதிலித் தன்மையென் னம்மைபெறு
பான்மையா மேன்மையல்லவோ
பண்புறுந் தோழமைக் காமென்று சுட்டிவிரல்
பயில்குறிப் பறிவுறுத்தும்
ஆர்க்கின்ற பரிபுரச் சிற்றடிப் பொற்றொடியொ
டம்புலீ யாடவாவே!
அல்லிமலர் வல்லிதொழும் வில்வவன வல்லியுட
னம்புலீ யாடவாவே! (61)
__________________________
கூறுஞ்செழுங் கலைகள் ஒவ்வாயென்று நின்னிடைக்
குறைபடுமெ னம்மைதன்பால்
குறைவில்லை யிரவுகொண் டுழல்வைநீ யிவளடியர்
கொடியவிரவைத் தவிர்ப்பாள்
ஏறுங்களங்க வடிவெய் தினைவி ளங்குமிவள்
என்றுமகளங் கவடிவாள்
எம்பிரானுக் குமொரு கண்ணாவை நீயவற்
கிருகண்மணி யாகவருவாள்
தேறும்புறத் திருளொதுக் குவாய் நீயிவள்
திருவுளத்தெண் ணிலன்பர்
சித்தாந்தகார முந்தீர்ந்து விடுமா கையால்
செப்பிலிவள் அதிகமன்றோ
ஆறங்க நால்வேத மானமுக் கண்ணியுட
னம்புலீ யாடவாவே!
அல்லிமலர் வல்லிதொழும் வில்வவன வல்லியுட
னம்புலீ யாடவாவே! (62)
_______________________________
எம்மைவந் தாளுடைய காமாரி பாகத்து
இருந்தபெருமாட்டி யடியார்க்கு
எப்பதமு(ம்) நல்குவளி ணைப்பதந் தொழுமவர்க்கு
இடர்செய்வார் தமையடர்ப்பள்
வெம்மைவெங் காளமமென வருமயிடன் முடியுருள
வெற்றிவடி வாள்விதிர்ப்பள்
விண்ணவர் வெரூஉக்கொள வருந்தார காசுரனை
வெட்டிவிறல் நட்டமிடுவள்
செம்மையொன் றில்லாத பண்டா சுரன்படச்
செஞ்சிலை வளைத்துநின்றாள்
திக்கெட்டி னுஞ்செலச் சிங்கவாகன முண்டு
தேவர்க்கு யாவர்க்குமே
அம்மைகண் சீறிடில் வேறுதிக்கி லையறிந்
தம்புலீ யாடவாவே!
அல்லிமலர் வல்லிதொழும் வில்வவன வல்லியுட
னம்புலீ யாடவாவே! (63)
____________________________
என்றைக்கு நீங்காது நின்தனிர வென்னம்மை
இன்னருள் கிடைக்கிலேகும்
எறுழ்வலித் தக்கன்முன் னிட்டசா பத்தினால்
எய்துகய ரோகமும்போம்
கன்றிப்பு கைந்துவெங் காளந்து டிக்கின்ற
கட்செவிக் கணபணநெடுங்
காகோதரப் பகையு(ம்) மாறுமுட லில்படு
களங்கமுந் தீர்ந்துவிடலாம்
துன்றிப்பொ லிந்தகலை நிலைபெறப் பெறலுமாம்
சுரராசன் முதலெவர்க்கும்
துரந்தரப் பட்டமும் சுகவாழ்வு மின்பமும்
தூயவிவள் கருணைமகிமை
யன்றிக்கி டைக்குமோ வேண்டிய தெலாந்தருவ
ளம்புலீ யாடவாவே!
அல்லிமலர் வல்லிதொழும் வில்வவன வல்லியுட
னம்புலீ யாடவாவே! (64)
_______________________
கடற்புவி வழுத்து மலயத்துவச னுக்குமொரு
கன்னிகையெனப் பிறந்தாள்
கன்னிநா டாள்கின்ற தென்னர்கோன் மரபிற்கோர்
காரணமெனச் சிறந்தாள்
மடற்கமல பாதாதி கேசவரை தன்னுடைய
வடிவழகு பத்திபாய
மன்னுமோங் காரத்துள் நிலையெனக் கண்ணாடி
வைத்துனைப் பார்க்கவென்றோ
திடப்பட உயிர்ப்பயிர் வளர்க்குமவள் செய்கையைச்
சிந்தித்தி யம்பலாமோ
செப்புமுன் பழமைத் தவங்களோ அறிகிலேந்
திருவுளமகிழ்ந் தழைத்தாள்
அடற்புலி யுடைப்பர னிடப்புடை மடப்பிடியொ
டம்புலீ யாடவாவே!
அல்லிமலர் வல்லி தொழும் வில்வவன வல்லியுடன்
னம்புலீ யாடவாவே! (65)
____________________________
விண்டலம டங்காத சண்டானி லம்புரவி
வேகந்தழீஇக் கொளத்தேர்
விசைபட நடாத்துமொரு பகலவனிருக் கவவன்
வெய்யவனெனத் தெளிந்தோ
மண்டலமெ டுத்தமுத கிரணனென் றுனையோதும்
வண்மையை யுணர்ந்துதானோ
வலக்கணவ னார்தமதிடக் கண்ணென வெண்ணியோ
வருகவென்று னையழைத்தாள்
துண்டமதி தீரலா முழுமதிய மாகலாந்
துண்ணென்ன வருதியாகில்
சுவர்க்கத் தலத்திடைச் சுரர்கள்குரு பன்னியைத்
தொட்டபாவமு மொழியுமே
அண்டர்வான் முகடளவு வெள்ளிவெற் புடையவளொ
டம்புலீ யாடவாவே!
அல்லிமலர் வல்லிதொழும் வில்வவன வல்லியுட
னம்புலீ யாடவாவே! (66)
__________________________
சொன்னபடி யிப்படியி லெய்தினால் வெள்ளருவி
துள்ளருமி ராமதீர்த்தத்
துறைபடிந் தாடலாஞ் சரபங்க மாமுனி
சுனைப்புனல் குடைந்தாடலாஞ்
சன்னிதிப் பூஞ்சுனை யாடலாங் கம்புசெறி
சம்புநதி நீராடலாந்
தழைகின்ற வில்லுவத் தண்சோலை நீழலில்
சார்ந்துதகை தீர்ந்துவிடலாம்
பொன்னுலவு திரிகூட மும்பொதிய வெற்புமிரு
புடைதயங்கப் பொலிந்த
பூஞ்சிகர வெள்ளிப் பொருப்பில் புராதனன்
பொற்றாள் பணிந்துய்யலாம்
அன்னபூரணி வளைசை யம்பதியி லம்பிகையொ
டம்புலீ யாடவாவே!
அல்லிமலர் வல்லிதொழும் வில்வவன வல்லியுட
னம்புலீ யாடவாவே! (67)
________________________
மேகக் கருங்களிறு கைக்கொண் டெடுக்குமொரு
வெண்சுதைக் கவளமேயோ
வேனில்வேள் தீபமோ கண்ணாடி யோவொற்றை
வெள்ளைவட்டக் கவிகையோ
மாகற்ப காடவிமடந் தையர்மலர்க் கையில்
வைத்தாடு மம்மானையோ
வான்மீயுடுக் கள்பூத் தொளிர்கின்ற வாகாச
வாவியில் புண்டரிகமோ
பாகப் படுத்துமமு திட்டபொற் றளிகையோ
பகரிலென் றெண்ணியெண்ணிப்
பார்த்தவர் திகைப்பதை நிவிர்த்திசெய வெண்ணியோ
பாரிலுனை வருதியென்றாள்
ஆகப் படைக்குமிவள் வேண்டிய தெலாந்தருவ
ளம்புலீ யாடவாவே!
அல்லிமலர் வல்லிதொழும் வில்வவன வல்லியுட
னம்புலீ யாடவாவே! (68)
________________________
தேனேறு கொன்றைப் புராதனன் றிருமுடி
பொறுத்ததுன் சிறியவடிவம்
தேவர்தே வாதியர்கிரீ டம்பொறுத் ததிவள்
சிற்றடிப் பொற்றாமரை
வானேறு கொடுமுடிப் பூச்சக்ர வாளகிரி
வட்டத்துணீ நிறைந்தாய்
வாக்குமன மெட்டாத நிலையிலே நின்றிவள்
மனோன்மணீ வடிவமானாள்
மீனேறு சசியெனப் பேருனக் கம்மைகொலு
வேளைகண் டேவல்செய்யும்
விண்ணில் புலோமசை யுமப்பேர் படைத்தலால்
மேன்மையென்னோ படைத்தாய்
ஆனேறு கொடியுயர்த்த வளடிவணங் கிவந்
தம்புலீ யாடவாவே!
அல்லிமலர் வல்லிதொழும் வில்வவன வல்லியுட
னம்புலீ யாடவாவே! (69)
___________________________________
பந்தமில் கலைக்கோட்டு மாமுனி பகர்ந்தபடி
பயில்புத்ர காமேட்டிசெய்
பணைமருப் புப்பொருப் பாயிரத் தொகையில்
மேற்படுமுயர் அயோத்திவேந்தன்
எந்தவன முந்திரிந் திரவுவேட் டைக்குழன்று
ஏமாந்து மையிருட்டில்
பாயவெய்து குருபுத்திரன் குண்டிகைப் புனலோசை
இருசெவிபடப் பொறாமல்
வந்தொரு கைக்களி றெனச்சிலை வளைத்ததால்
வந்தபழியைத் தவிர்ப்பான்
மாதவத்தால் கண்டு பூசித்த வெள்ளிவரை
வரதனொடு வீற்றிருந்தாள்
அந்தரத் துழலுமுனை வருதியென் றனள்கருதி
யம்புலீ யாடவாவே!
அல்லிமலர் வல்லிதொழும் வில்வவன வல்லியுட
னம்புலீ யாடவாவே! (70)
______________________________
8. அம்மானைப் பருவம்
ஒளிதூங்கு செக்கர்மணி யம்மானை யாட்டொழிந்து
ஒண்முத்தவம் மனையெடுத்து
ஒவ்வொன்றும் விளையாடு மவ்வேலை செங்காந்தள்
ஒப்பல வெனச்சிவந்த
கிளிதூங்கு கைக்கிடை புகக்கதிரெ றிக்கின்ற
கிளர்மணியம்மா னைபொருவக்
கிரணப் பனிப்பகை யெனக்கண்டு விடுதலில்
கெண்டைக்கெ திர்ந்தகருணைத்
துளிதூங்கு மைக்கண் ணொளிபாயத் துளங்கித்
துளங்குங் களங்கவட்டச்
சோமக்குழா மெனக் கண்டோர் திகைப்பத்
தொகைப்பட நிறைந்துநறவுண்டு
அளிதூங்கு பூங்குழல் செல்வியுட னென்னம்மை
அம்மானை யாடியருளே!
அயிராணி யயிராணி வாணிபணி கலியாணி
அம்மானை யாடியருளே! (71)
_______________________________
எம்மாதி ரத்திருளு மொக்கச் சுருட்டிவிடும்
எரிமணிப்பட நெடும்பாம்பு
இரசதக் கொடியொடு துவர்க்கொடி கள்சுற்றி
வைத்தென்னத் தழைத்தசடிலச்
சும்மாடு கட்டிச் சிவன்சுமக் குங்கங்கை
துண்ணென வணங்கிநின்று
சுருதிமிருதி கள்கருதி யறியாத சிற்றடி
தொழப்பெற்ற தெம்பேறெனச்
செம்மாந்து பேருவகை மீப்பெருகி வழியத்
திரைக்கரத் தாலெடுத்துச்
செறிகுமி ழியம்மானை யாட வவ்வாடல்
சிறப்பிற்கு முடிதுளக்கும்
அம்மானை வைத்தகை யம்மானை மேவுமயில்
அம்மானை யாடியருளே!
அயிராணி யயிராணி வாணிபணி கலியாணி
அம்மானை யாடியருளே! (72)
______________________________
இருமுழந் தாள்மடித் திடையிடை பதம்பெயர்த்
திருசிலைப்புருவ நெறிவைத்
தெறிவேலெனக் கண்கள் எங்கெங்கு நோக்கிநின்
றேந்துபொற் காந்தளங்கைத்
திருமலர் தனித்துயர்ந் தொளிர்கின்ற மரகதத்
திருமேனி சலனமின்றிச்
சீர்பட வசைத்துமுக மண்ணாந்து கைம்முறை
திறம்பாதிலக் கமேற்றிப்
பரிபுரமு(ம்) மேகலையும் வெள்வளையு மோலிடப்
பட்டுத்தரீய மசையப்
பனுவலாட்டி யுமலர்ப் பாவையும் பாங்குறப்
பச்சைக்கலாப மயில்போல்
அருவிசொரி கயிலைமலை அம்மானை வாழ்த்திநின்
றம்மானை யாடியருளே!
அயிராணி அயிராணி வாணிபணி கலியாணி
அம்மானை யாடியருளே! (73)
_______________________________
விசைபட்ட பைங்காந்த ளங்கரத் தம்மானை
மீமிசைப்பட்ட போழ்தில்
விண்பட்ட சக்ரவாகத் தொகுதி யொத்தன
விருப்பொடு திரும்பிவரலால்
இசைபட்ட பூங்குமுத வொண்முத்த நகைவதனம்
எழுசந்திர விம்பமென்றே
எண்ணிச் சகோரங்கள் வெண்ணிலா வுண்ணலாம்
எனவெண்ணி வருவதொப்பாம்
திசைபட்ட வும்பர்வான் வழியினிடை வரலின்
இந்திரனிளைப் பால்நடக்குஞ்
செய்கையென் றெண்ணலா மெனவாணி துதிசெயத்
திருவுளத் துவகைபொங்கி
அசைபட்ட சிற்றடி மறைச்சிலம் பார்ப்பநீ
அம்மானை யாடியருளே!
அயிராணி அயிராணி வாணிபணி கலியாணி
அம்மானை யாடியருளே! (74)
_____________________________
மோட்டாமை துஞ்சுங் கருந்தெளி தனில்குட
முலைக்கடைசி மார்கள்கூடி
முடிநாறு எடுத்துநட் டொண்புன னிறைத்திட
முருத்துக்குருத் துயிர்த்துக்
காட்டாவுடல் கூன்நிமிர்ந் தெழுந் தள்ளிலை
கறுத்துத்தழைந்து குழைவாய்க்
கால்கொண் டெழுந்துமதி யமுதமுட் புகலும்
கமஞ்சூலுளைந் துகதிரீன்று
ஈட்டாவரும் பெரும்பால் கொண்டு பச்சைமணி
ஈர்ங்குலைவெண் முத்தஞ்சொரிந்
தீன்றபுவியைத் தலைவணங் குவதுபோல் கவிழ்ந்து
இன்னல்தீர்செந் நெல்நிரைகண்
டாட்டாடு மள்ளர்கிளை மிகுபழன வளைசையுமை
அம்மானை யாடியருளே!
அயிராணி அயிராணி வாணிபணி கலியாணி
அம்மானை யாடியருளே! (75)
__________________________
வேறு
பொருளுணரும் சிவஞானத் தேனே! பொற்கலை
யான்றனக் கிளையமானே!
வரமுதவும் பெருங்கருணை யாறே!
மலையரசி பெற்றெடுத்த பேறே!
இரவுதவிர் கற்பகப் பூங்காவே! எங்கு(ம்)
நிறைந்தார்க் கினியவாழ்வே!
அருள்நிதியே கலியாணித் தாயே
அம்மானை யாடியருளு வாயே! (76)
கொம்பனையார் புனல்மொண் டெடுத்த
குடத்தில் தடத்தில் மலரிடத்தில்
வெம்புசுடர் மறைகாப் புளினமேட்டில்
மலர்கோட் டில்முல்லைக் காட்டில்
செம்பதுமத் தளையவிழ் பழனச்சேற்றில்
வளர்நாற்றில் வாழைத் தாற்றில்
அம்பணிலம் ஊர்வளைசைத் தாயே
அம்மானை யாடியருளு வாயே! (77)
பையரவில் துயிலைய னோடு பனிமலர்
புத்தேளிரும் பராவத்
துய்யமறை எங்கோவென் றரற்றத்
துள்ளுநீர் வெள்ளி வரைப்புறத்தில்
மெய்யடியார் தம்பிறவி மாற்ற வில்வ
வனத்தினில் வந்துதித்த
ஐயர்மகிழ் கலியாணித் தாயே
அம்மானை யாடியருளு வாயே! (78)
முகந்தமுதம் ஊறுபிறை வேணி முடங்கு
வளையிலேறு சறுவாணி
பகர்ந்து மறைதேடிய பவானி
பரம்பொருளை மேவுமபி மானி
இகம்பர மெலாமுதவு வாணீ எனுங்கவிஞர்
நாவிலுறை வாணி
அகண்ட பரிபூரண கலியாணி
அம்மானை யாடியரு ளாயே! (79)
பன்னாளு(ம்) நான்மறைகள் தேடும்
படநாக வார்கழலி னானைப்
பொன்னாடு தேடுபெரு வாழ்வைப்
புண்ணாறு சூலமுடை யானைத்
தொன்னாளி ராமனொடு தாதை
சொன்மாரி தூயடி பராவும்
அன்னானை மேவிய பெண்ணீயே
அம்மானை யாடியரு ளாயே! (80)
_______________________________________
9. நீராடற் பருவம்
மாலைக் கருங்குழல் சைவல நிகர்ப்பமணி
வார்குழைகள் வள்ளையொப்ப
வாள்முகம் பங்கேருகம் பொருவ மைக்கண்கள்
மடல்நெடுங் குவளைமானப்
பாலைப் பொருந்துநகை வெண்முத்த முறழ்தரப்
பணிமிடறு பணிலமேய்ப்பப்
பவளவிதழ் குமுதங் கடுப்பப் படாமுலைகள்
பற்பமுகிழங்கள் புரையக்
கோலக் குறுஞ்சுழி யொழுங்குபடு உரோமநிரை
கோகனக நாளமாகக்
கோதையர் நெருங்கலா லொழுகுதீம் புனல்மலர்க்
கூட்டமெனும் அவர்கநடுவில்
காலைச் செழுங்கமல வாள்முகத் தன்னமே
கங்கை நீராடியருளே!
கலியாண சுந்தரக் கடவுட் பெண்அமுதமே!
கங்கை நீராடியருளே! (81)
_______________________________
சுற்றமொடு தந்தைதா யில்லியை யொருத்தனைச்
சூலாயுதக் கடவுளைத்
துரிய துரியாதீத மொக்கக் கடந்திட்ட
தொல்லையா மெல்லைவெளியில்
குற்றமில் குணத்தனைக் கூவிள வனத்தனைக்
கொழுமலர ருச்சனைசெய்வான்
கோதற்ற மாமுனிவன் வேண்டலிற் றெண்டிரை
கொழித்துச் செழித்துவரலால்
அற்றமில் சிறப்புடைய வெள்ளிவரை யாதியாய்
அள்ளிக்கொள் வெள்ளருவிநீர்
அலைகடனை நதிவரையி லாறிடத் துற்பவித்து
அடியவர்க் கருள்புரிதலால்
கற்றவர்கள் வரநதி யெனத்துதிக் கப்பெற்ற
கங்கைநீ ராடியருளே!
கலியாண சுந்தரக் கடவுட்பெண் அமுதமே!
கங்கைநீ ராடியருளே! (82)
________________________
வேறு
ஒருநாள் ஒருபோது ஒருகணம் விட்டொழியா திருக்கு(ம்) மும்மலத்தர்
உள்ளத் தழுக்கும் புறத்தழுக்கும் ஒக்கக் கழுவி ஊழியெனும்
பெருநாள் தொலைந்துந் தொலையாத பிறப்பு மிறப்பும் தனிதீர்ந்து
பேரானந்தக் கடல் மூழ்கிப் பிழைத்தீ டேறத்த ழைத்தபசுந்
தருநாண் மலரால் மறைகாணாச் சரணாம் புயத்தை அருச்சித்துச்
சைவசமயந் தலைநின்ற தகைமை யடியார்களை நயனக்
கருணாநதி நீராட்டு மம்மை கங்கை நதிநீ ராடுகவே!
கலியாணித் தாய் வெள்ளிவரைக் கங்கை நதிநீ ராடுகவே! (83)
______________________________
தும்பை முடிக்குஞ் சடைமுடியில் சோமக் கொழுந்து மாரமுதம்
சொரியுங் கருணைத் திருநோக்கும் சுருதிபயில் குஞ்சிதத் தாளும்
பைம்பொன் இமைக்குந் திருத்தோடும் பங்கேருகக் கைச்சுடர் மழுவும்
பயிலுந் தனக்குஞ் சேருமெனப் பாதிப்படிவம் பகுத்து பன்றிக்
கொம்பை முடவெண் பிறைக்கீற்றைக் கொண்டு பெற்றத் தெழுந்தருளும்
கொன்றைச் சடையெம் பெருமானைக் கும்பிட் டிறைஞ்சிக் குடவளையூர்
கம்பை நதிநீ ராடுமன்னம் கங்கை நதிநீ ராடுகவே!
கலியாணித் தாய் வெள்ளிவரைக் கங்கை நதிநீ ராடுகவே! (84)
___________________________
அன்னமாடும கன்றுறை வாயி றங்கிப் புறங்கூரி ருட்படலம்
அனையகருங் குந்தளப் பந்தி யசையும் பசுஞ்சைவல நிகர்ப்ப
மின்னுலாவும் தனக்குடங்கள் மிதப்புக் குடங்கள் பொருவமலர்
மென்காந்த ளங்கைக்கதிர் வளைகள் வெள்ளை வளைகட் கெதிரொலிப்பத்
தென்னுலாவும் விழிச் சேலால் செஞ்சேல் வெருவப் பாற்கடலில்
திரைதோறுந் தோன்றும் செழுஞ் செந்திருக் குழாம்போல் முருக்கிதழ்வாய்க்
கன்னிமார்கள் புடை நெருங்கக் கங்கை நதி நீராடுகவே!
கலியாணித் தாய் வெள்ளிவரைக் கங்கை நதி நீராடுகவே! (85)
____________________________________
சுருதிச் சதுர்மறை ஒலிகெழு மறுகும் சொற்றமிழ் பயிலிடமும்
துன்று பொன்மன்றில் நடனஞ்செய் மடந்தையர்சூழ் தெருவும் பெரியோர்
கருதிப் பணியுங் கடவுளர் விழவும் கன்னியர் காளையர்தம்
கடிமண முரசு கறங்கு முழக்கும் கழனித் துழனிகளும்
பரிதிக் கதிர்மறை சோலையு(ம்) மாலைப் பந்தியு(ம்) முந்துபுனல்
பன்மல ரோடையு(ம்) மென்மலர் வழிதேன் பாய்நதியும் பொதியு(ம்)
மருதத் தமிழ்நா டினிது புரந்தவள் வரநதி யாடுகவே!
வளைசை நகர் கலியாண சவுந்தரி வரநதி யாடுகவே! (86)
___________________________________
நின்றுபறித்து நெடுங்கொடி வள்ளையின் நெட்டி குதட்டிமண
நீலக்குவளை யரும்புக ளேகுமுன் னெட்டிதழ் விட்டெழுதேன்
முன்றில்கடந்து கருங்கவரி கணமுகில் புரையச் செறியு(ம்)
முடவுப்பலவின் அடிக்குள டுக்கிய முட்கனி நெக்குடையச்
சென்றடிவைப்பச் செஞ்சுளை கொட்டிய தேறல் சிறுகாலில்
செருத்தல் பனைமுலை கொட்டியபாலுந் திரைஎறியப் பாயு(ம்)
மன்றல்பழனத் தென்னாடு டையவள் வரநதி யாடுகவே!
வளைசைநகர்க் கலியாண சவுந்தரி வரநதி யாடுகவே! (87)
_________________________________
இனமாய் வைத்தநெடும் பழுவேணியில் லேறியெழுந் துறிதொட்டு
இட்டகயிற்றை நெகிழ்த்துக் கையில் எடுத்தசெழுந் தயிரைக்
கனமா வுண்டுதெ விட்டியிறங்குங் காலையில் மழவிடைபோல்
கண்டுபிடித் துரலோடு பிணித்துக் கட்டிக் கள்வனெனத்
தினமாடக் குடமங்கையர் செங்கையின் மத்தால் மொத்துண்டு
சிற்றாய்ப் பாடியில் நெய்ம்மண மாறாச்செம் பவளக்கனிவாய்
வனமாலைத் திருமாலுக் கிளையவள் வரநதி யாடுகவே!
வளைசைநகர்க் கலியாண சவுந்தரி வரநதி யாடுகவே! (88)
_______________________________
கானவிநோ தரிடம்பிரி யாதகருங் குயிலே! மயிலே!
கைக்களி யானைமுகத்தனை யீன்றதோர் கன்னிமடப் பிடியே!
பீனபயோ தரபூதர மேந்திய பெண்மையி ளம்பிடியே!
பிரணவபஞ் சரமன்னிய வன்னப்பிள் ளையிளங் கிளியே!
மோனதியான சமாதிசெய் மாதவ முற்று தவப்பேறே!
முதுமறை முற்றிய உபநிடதத் துமுழுத்த விழுப்பொருளே!
வானதியாக முழங்கு நெடுந்திரை வரநதி யாடுகவே!
வளைசைநகர்க் கலியாண சவுந்தரி வரநதி யாடுகவே! (89)
_______________________________
புண்டரிகத் திலுவந்து வதிந்த பொலஞ்சிறை யோதிமமே!
புண்ணியபூ ரணர்நண் ணியவேத புராதனமெய்ப் பொருளே!
அண்டர்கள் கொண்டவி டாய்தவிரப் பருகாரமு தக்கடலே!
அங்கசனுக்கு வரங்கள் கொடுத்த அருட்பொரு ளாகரமே!
விண்டலமுட்டு நெடுஞ்சிக ரத்தினில் மின்பொதியப் பொலியும்
வெள்ளிவ ரைக்குளிர் துள்ளருவிக்குட வெண்பணிலஞ் சொரியும்
வண்தரளங் களைவண் டலிடுந்திரை வரநதி யாடுகவே!
வளைசைநகர்க் கலியாண சவுந்தரி வரநதி யாடுகவே! (90)
__________________________________
10. ஊசற் பருவம்
விரிகின்ற தெள்ளொளிப் பவளக் கொழுங்காலின்
மேலிட்ட கோலவயிர
விட்டத்தி லிட்டவட மெண்ணிலா வெண்ணிலா
விழுதுவிட் டென்னவீக்கிச்
சொரிகின்ற குழவிவெயில் மழகதிரெ றிக்கின்ற
சுடர்மணிப் பலகைமீதில்
தோற்றுநின் தோற்றமப் பரிதிமண் டலமிசைத்
தோன்றவருஞ் சோதியேய்ப்பத்
திரிகின்ற கயலெனப் பிறழ்கின்ற துணைவிழிச்
சிலைநுதல் கரியகூந்தல்
செந்தாமரைப் பொன்நின் றாட்ட வெண்டாமரைச்
சேயிழைதுதிப் பயிமவான்
புரிகின்ற மெய்த்தவ மெனப்பெற்ற கன்னிமயில்
பொன்னூச லாடியருளே!
பொற்புருக் கொண்டகல் யாணசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே! (91)
_______________________________
ஒழுகொளிய மாணிக்கமணி முகப்பிடை வெளியில்
ஒள்ளொளிய தூணிரண்டும்
உதயகிரி அத்தமனகிரி யிசைய விடைவிட்டம்
ஒளிகொள்பரி வேடமொப்ப
விழுதெனப் பிறழ்கின்ற தரளவட நிலவாக
மேயமகடூக் குழாங்கள்
வெண்தார கைக்கணம் பொருவப்பொன் மானநடு
விரவுபொற் பலகையின்மேல்
பழகுமின் னமுதவடி வானநின் தோற்றவெண்
பனிமதிக் கடவுளொப்பப்
பத்தர்தஞ் சித்தாந்த காரஞ்சு ருட்டிமெய்ப்
பரமாநுபூதி விளையப்
புழுகொழுகு கும்பக்க தம்பமுலை யன்னமே
பொன்னூச லாடியருளே!
பொற்புருக் கொண்டகல் யாணசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே! (92)
______________________________
பாங்கில் பரப்புமல ரில்லா மலேநின்ற
பைங்கோட் டசோக மெங்கோன்
பாலவிழி யழலினால் தான்பட்ட பாடும்
அப்படை மதன் பட்டபாடும்
தாங்கப் படாதெனத் தவநிலை புரிந்துநின்
சரணாம் புயங்கள் தழுவித்
தண்மலர் சொரிந்திட் டிரண்டறு கலப்புற்ற
தகைபோல் சரண் சிவப்ப
நீங்கப்ப டாதபொற் சிறைவண்டு பண்முரல
நெய்த்த நறையூற் றெடுத்து
நிறைமல ரெனக்கங்குல் பூத்திட்ட மின்மினிகள்
நிறைசந்தனச் செழுங்காப்
பூங்கற்ப கத்தருநி கர்க்கும்வளை சைக்கிறைவி
பொன்னூச லாடியருளே!
பொற்புருக் கொண்டகல் யாணசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே! (93)
____________________________
கங்குல்மங் குல்படல மனையகுழல் சரிதரக்
கழுநீரலங் கலாடக்
காவிவிழி போராட வள்ளைப் பொலங்குழை
கலந்துபொன் னோலையாடத்
துங்கவெங் கட்செவித் துத்திப் பணாமுடிச்
சுடிகைமா மணிகுயிற்றும்
சுடிகைச் செழுந்தொடர் துதைந்தாட மரகதச்
சோதிவெயில் வீசியாடச்
சங்குசங் கத்திடை யுயிர்த்த வெண்முத்திட்ட
தனவுத்த ரீயமாடச்
சதுர்மறையு(ம்) முறையி டுந்தாள் சிலம்பாடச்
சடாமுடிக் காடளாவிப்
பொங்குகங் கைப்புனிதர் நெஞ்சூச லாடநீ
பொன்னூச லாடியருளே!
பொற்புருக் கொண்ட கல்யாணசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே! (94)
______________________________
வழியுஞ் செழும்பவள வெற்பென்னும் வெள்ளைவிடை
வள்ளலைத் தனிபராவி
வழிமுதல் தலைமை யோரீடே றுதற்காக
மாபகீரத னழைப்பப்
பழியுங் கொடுந்து யருநீங்கப் பசும்பொற்
பருப்பதச் சாரல்வாரும்
பண்ணவர்கள் துதிசெயுந் தீர்த்திகை கடுக்கும்
பனைக்கையில் வளைத்துநிழலைச்
சுழியுங் கடக்களிறு பிடியோடு கூடித்
துளைந்தாடு வட்டமடுவைச்
சுற்றுந் தரங்கக் கருங்கடல் எனத்தினந்
துள்ளருவி பொன்னுமுத்தும்
பொழியுந் தடஞ்சாரல் வெள்ளிக்கிரிக் கிறைவி
பொன்னூச லாடியருளே!
பொற்புருக் கொண்ட கல்யாணிசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே! (95)
____________________________
உருவப் பெரும்பலகை யிருவினைக் கால்நெஞ்சம்
உயர்விட்டமாசை வடமென்று
ஒழியாம லெளியனேன் போயும்வந் துந்திரியும்
ஊசலாட்டொ ழியும்வண்ணம்
குருவில் சிறந்தநின் மெய்ம்மொழி யிடத்தில்நின்
குளிர்கருணை வடமிசைத்துக்
கூறரிய தானதவ மிருகாலு நிறுவியென்
கொடியநெஞ்சம் பலகையாக்
கருவில் படாதவகை பருவப் படுத்திநீ
காக்கக்கருத் திலெண்ணிக்
கடவுள்மா மறைநின்று முறையிட வதீதம்
கலந்துநிரு வாணவெளியில்
பொருவற்ற ஞானங்கொ ழுந்துபடர் கொளுகொம்பு
பொன்னூச லாடியருளே!
பொற்புரு கொண்ட கல்யாண சுந்தர வல்லி
பொன்னூச லாடியருளே! (96)
________________________
கருமிடற் றாலந் துளும்பதிரி சூலம்
கபாலங்கரத் திலசையக்
காகோதரப் பட்டநெட் டுயிர்ப் பச்சடைக்
கங்கைநதி பொங்கிவழிய
அருகினில் கிண்கிணிச் சிறுகலெ னக்கிடந்து
அருமறைப் பனுவலார்ப்ப
அளவற்ற கடவுளர்தம் முடிவினுமோர் முடிவின்றி
ஆனந்த நடமியற்றும்
பரிபுரச் சீறடிப் பதுமத்தி லாறடிப்
பறவையை நிகர்த்தபுந்திப்
பழவடியர் தொழவருள் பழங்கருணை நாயகர்
பழந்தேவர் மாலைசூட்டும்
புரிகுழல் கற்பகம் பூங்காம வல்லிசெம்
பொன்னூச லாடியருளே!
பொற்புருக் கொண்ட கல்யாணசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே! (97)
___________________________
ஒலிகின்ற நான்மறையின் உயர்கிரியை ஞானமென
ஓதுபொற் றூணநிறுவி
உபநிடத விட்டத்தில் விந்துநா தப்பாசம்
ஒற்றித்திசைத்து நிலவென்று
இலகின்ற ஓங்கார வட்டப் பெரும்பலகை
இட்டபொன் னூசலேறி
இனிதி ருந்தாடு முன்சோதித் திருக்கோலம்
இளஞாயிறு தயமேய்ப்ப
மலிகின்ற தெள்ளுபுனல் துள்ளருவி வெள்ளிவரை
வாய்முகி லிறங்குசாரல்
வாயிலகு மாணிக்க வெற்புக்கி டந்தந்து
மரகதக் கிளைகிளைத்துப்
பொலிகின்ற வில்லுவச் சோலையில் கோலமயில்
பொன்னூச லாடியருளே!
பொற்புருக் கொண்ட கல்யாண சுந்தரவல்லி
பொன்னூச லாடியருளே! (98)
________________________________
சேணூட ளாவுமந் தாகினிச் செஞ்சடைச்
சிவபிரான் சித்தாம்புயம்
திண்பூச லாடவண் டினமூச லாடநறை
சிந்துமந்தார மணமும்
கோணூடெ ழும்பிறைக் கீற்றமுத மூற்றும்
குளிர்ந்தபைம் புனலுமாடக்
குழைகளு வளைகளு மிழைகளு மெதிர்ந்தாடல்
கொண்டாட வொளிருவயிரத்
தூணூடுபச் சைப்பசேல் என்று நின்றிருச்
சோதிநிற மூசலாடத்
துங்கமலை யரசன்மணி முன்றில் புறத்திலொரு
தோகைநின் றாடல்போலப்
பூணூசலா டும்படா முலைக் கவுமாரி
பொன்னூச லாடியருளே!
பொற்புருக் கொண்ட கல்யாண சுந்தரவல்லி
பொன்னூச லாடியருளே! (99)
_________________________
சேலோக ருங்கண் சிவப்பொழுகு பவளமோ
செவ்விதழெனச் செவ்விகூர்
தெய்வப் பிணாக்கள்வாய்த் தெள்ளமுத முண்டவமரர்
சித்தஞ்சிறப்ப முன்னாள்
மேலோர் கள்மாமறை முழக்கஞ் செயக்கற்பின்
மேனையரசன் பிறங்கும்
வெற்பிற் புகுந்துநன் திருமங்கலம் பூட்டு
மேருவரை வில்லிறன்பாற்
சாலோக சாமீப சாரூப சாயுச்சிய
சகலபதமுந் தழைத்த
தசரதவிரா மீச்சுரம் பெருந் தீர்த்திகைத்
தண்ணருவி வெள்ளிவரையாம்
பூலோக கயிலாச கிரியிலுறை வாய்வாழி
பொன்னூச லாடியருளே!
பொற்புருக் கொண்ட கல்யாண சுந்தரவல்லி
பொன்னூச லாடியருளே! (100)
____________________________
கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழ் முற்றும்
-------------------------- xxxxxx --------------------
This file was last updated on 20 feb. 2021
Feel free to send the corrections to the webmaster.