வயிரவன் கோவில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
சேந்தன்குடி வி. நடராச கவிராயரவர்கள் இயற்றியது
vayiravan kOvil vaTivuTaiyammai piLLaittamiz
by cEntankuTi naTarAca kavirAyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Roja Muthiah Research Library, Chennai for providing a scanned PDF of this work.
We thank Dr. (Mrs.) Meenakshi Balaganesh,Bangalore for help in the preparation of the soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
வயிரவன் கோவில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
சேந்தன்குடி வி. நடராச கவிராயரவர்கள் இயற்றியது
Source:
பாண்டியதேசத்தின் கணுள்ள வயிரவன் கோவில்
வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்.
இஃது தருமபுராதீனத்து மஹா வித்துவான்
சேந்தன்குடி வி. நடராச கவிராயரவர்கள் இயற்றியது.
தேவிகோட்டை மகாகனம் பொருந்திய வித்துவச்சிகாமணி
வீர. லெ. சிந்நயச்செட்டியாரவர்களால்
ஆராய்ச்சி செய்யப்பெற்றது.
சென்னபட்டணம்: கலாரத்நாகாம் என்னும் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1894.
-------------
சிவமயம்
சிறப்புப்பாயிரம்
அரியக்குடி மகா ஸ்ரீ சா. கி. அரங்கநாதச்செட்டியார் இயற்றியது.
நேரிசை ஆசிரியப்பா.
மலரவன் வகுத்த நிலமிசைச் சீர்க்கும்
வழுதிமா நாட்டகத் தெழுதலாக் கிளவிப்
பொருளினைத் தமிழா னருளிய குரவர்
தேவா ரத்தொடை மேவா மிலைச்சிய
வீரேழ் பதியிற் கூரே ருடைத்தெனு
நத்தூர் வயற்றிருப் புத்தூர் மருங்காக்
குறிஞ்சியா தியவயிற் செறிந்தபல் வளனுஞ்
சூளிகை வாய்ந்த மாளிகை நிரையுஞ்
செந்தழ லோம்பு மந்தண ரகரமும்
தீதுதீர் வேத மோதுகல் லூரியுஞ்
சதுக்கமுஞ் சாலையு மதுக்கமழ் சோலையு
முண்ணீ ரனவாந் தெண்ணீர் வாவியுந்
துன்னுபு திகழ்தரு நன்னக ராகி
மணிதுற் றிலங்கு வணிகர்க் குரிய
தென்பதி யாலய மொன்பதி லொன்றாய்ச்
செயிரவந் தணந்தொளிர் வயிரவன் கோயில்
வளரொளி நாதன் கிளரொளி வாமத்
தொருவலின் றமர்ந்த வருள்வளர் கன்னி
நகிறள ராமே யகிலமு மீன்ற
துடியிடை மேகலை வடிவுடை யம்மைமேற்
பூவிரி பொழில்சூழ் காவிரி யொழுகு
மயிலாடு துறையி னயல்சேர் சேந்தன்
குடிகுடி யிருக்கு மடிமையில் சீலன்
வரமலி வேளாண் மரபினில் வந்தோ
னைவறு தவத்துச் சைவசூ ளாமணி
மேக்குயர் மூன்று தீக்கையும் பெற்றுளா
னற்புதப் பாவலன் விற்பன சிரேட்டன்
றேசிற் பொலிநட ராசப் பெயரான்
பிள்ளைத் தமிழ்மகிழ் கொள்ளக் கழறினா
னாக வதிற்பிழை போகிய வாய்ந்து
நனிசுவைத் திஃதென வினிது திருத்தினன்
மாவி சால தேவி சால
மருந்திரு வைசியப் பெருங்குல திலகன்
விலக்கருஞ் சீர்த்தி யிலக்கு மணப்பேர்
நண்ணிய கண்ணியன் பண்ணிய புண்ணியப்
பயனா வுதித்த நயனா ரறிஞ
னிலக்கிய விலக்கண நலத்தகு கலைக்கட
னாற்கவி மழைபொழி சூற்கொள்சீ மூத
மிறுமாந் தெதிர்ந்தார்த் தெறுமாண் சிம்புள்
வடமொழி மாட்டுத் திடனுறு பயிற்சியன்
சிவாகமச் சென்னி யவாயசித் தாந்தம்
படைத்தமெய்ந் நெறியே கடைப்பிடித் திட்டோன்
செல்வங் கொடைபுகழ் மல்குங் கற்பக
மான்றோர் குழாத்துட் சான்றோ னென்பான்
றொழுதெழீஇ யரனையெப் பொழுது மறவா
னிச்சையன் போல நிச்சைய னெவற்றினு
மென்பாற் கேண்மையை யன்பாற் கெழுமியோன்
பொன்னுறழ் சற்குண சிந்நய
னென்னு நாம மன்னிய மன்னே.
சிறப்புப்பாயிர முற்றிற்று.
-----------
உ
கணபதி துணை.
வயிரவன்கோவில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்.
விநாயகர் துதி.
சீர்கொண்ட வண்டப் பரப்புமுழு தாளுடைய
செய்யவள ரொளியீச னார்
சித்தக் களிப்பினுக் கொத்தபரி பூரண
சிதானந்த சத்தி யென்னு
மேர்கொண்ட பிடியைக் களிற்றுருவு கொடுபுணர்ந்
தின்புற்று நல்க வந்த
விணையிலாப் பிரணவத் துருமருவு கரிமுகவ
னிருசரண மேத்தெ டுப்பாம்
பார்கொண்ட வயிரவன் கோவிலென் றுலகெலாம்
பரவுபதி விரவு செல்வி
பழமறையின் முடிமீ திருந்துமஃ துணராத
பரிசுபெறு மெம்பி ராட்டி
வார்கொண்ட தன்றனத் தமுதளித் தொருகுழவி
வடிதமி ழிருக்கு மொழிய
வைத்தபுக ழுத்தமிய ருட்கண்வடி வுடையம்மை
வண்பொருட் கவித ழையவே.
----------
காப்புப்பருவம்.
திருமால்.
இரவியா தியகோளு நாளுமெங் நாளுநே
ரேகாத வண்ண மோங்கி
யிறுமாந்த விந்தம் பிலத்தூடு புகவுய்த்த
வெறுழ்வலிப் பொதிய முனிவன்
கரவிசே டத்தினாற் குற்றால நகர்வயிற்
கருமேனி நீங்கி மேற்றான்
காணரிய சிவலிங்க சாரூப்பி யம்பெற்ற
கண்ணனா மண்ணல் காக்க
பரவிநீ டன்பக நிறைந்துபுறன் வழிகின்ற
பான்மையென விழியி னின்றும்
பரானந்த வாரிவர மெய்ம்மயிர் சிலிர்த்துப்
பணிந்தெழுந் துருகி நிற்கு
மிரவிலாத் தூமனத் தொண்டர்க ணினைத்தன
வெனைத்துந் தினைத்த னைப்போழ்
திடையுதவி வடுகபுரி விடலரிய வடிவுடைய
விறைவியை யிளங்கிளியையே. (1)
________
வளரொளிநாதர்.
வேறு.
நெடிய மாலினொடு பிரமன் வானவர்மு னீடிசைக் குரிய பாலர்க
ணிருவி கற்பமுற மனநி றுத்தியுயர்
நிட்டை கூடிய நிராசையோர் நினைவி னுக்கரிய பரம காரண
நிரந்த ரக்கருணை நிலயமே
நீல கண்டபரி பூர ணப்பிரம <நிகரில் யோகபர தாணுவே
யடிய மாலகல வருள்செ யென்றுநனி யனுதி னம்பரவு மன்பருக்
ககமி ருந்துவரு துயர்க ளைந்துதிரு வருள்வ ழங்கியிடு மமலனே
யசுர ருக்கமர ரஞ்சு கின்றமை யறிந்து சீர்வடுக வயிரவ
வனக னைக்கொடுவெல் வளரொ ளிப்பெயர்கொ
ளாதி யேயினி தளித்தியான்
முடிகொண் மால்வரையின் மகளெ னாவகில
முழுது மீன்றதனி முதல்வியை முதிய நூல்வழியி னொழுகு மேதகையர்
முன்னி வாழ்த்துகவு மாரியை முத்தி மார்க்கமுற முயலும் யோகியர்கண்
மூழ்கு மிக்கசுக வாரியை மூவி ரண்டுபகை வென்ற ஞானியரை
முதிரு மின்னளியி னோக்குறாப்
பொடிய ணிந்துமிளி ரடிக டாணிழல் புகுத்தி யுண்மகிழு மம்மையைப்
புராத னத்ததுநம் வடுக நாதனது புரமெனப் புகழ்ப டைத்தது
போக மாரமரர் கோனகர்க் கிணைசொல் புண்ணி யப்பதி யமர்ந்துவாழ்
பொருவி லாதவடி வுடைய தாயையருள் பொழிதரும் பசிய முகிலையே. (2)
_______
விநாயகர்.
வேறு.
பூத வுறுப்புங் கயானனமும்
பொலியும் தெய்வத் திருவுருவும்
புனைந்து கரிமா முகத்தவுணன்.
பொன்றப் புரிந்த புகழ்க்கருணை
நாத னெனநின் றிறைஞ்சடியார்
நலிவு பாற்று நற்பொருளே
ஞானக் களிறே யருணிதியே
நந்தா விளக்கே போற்றுதிநீ
சீத மதிய முடிக்கணிந்தோன்
சேயாம் வடுக வைரவப்பேர்ச்
சீர்சால் புரியி னிறைந்தோங்குஞ்
சிந்தா மணியை யெந்தாயைப்
பாதச் சிலம்பாய்க் கிடந்தலம்பும்
படர்வே தாந்தப் பசுங்கிளியைப்
பரவுந் தொழும்பர்க் கருளும்வடி
வுடையா ளென்னும் பாவையையே. (3)
_______
முருகக்கடவுள்.
கருணைக் கடலே வரநிதியே
கமலா சனத்தோன் சிரநடுங்கக்
கருதுங் குடிலைப் பொருள் வினவிக்
கரத்தாற் புடைத்த கற்பகமே
சொருண மயின்மேற் கொண்டருளிச்
சோராச் சூரின் வலிதொலைத்த
சுத்தப் பிரம குமரபர
தூயோய் தொடர்ந்து புரந்தருடி
யருண னிறம்வெள் கிடக்காந்தி
யளித்துக் கிளரும் வளரொளியா
மம்பொன் னாகத் தமர்ந்தவடி
வுடையா ளென்னு மருமருந்தை
வருணம் பலவாய்த் தோன்றியொளிர்
மணியின் கொழுந்தை வாழ்முதலை
வையம் பரவும் வைரவப்பேர்
வாய்த்த புரம்வாழ் வஞ்சியையே. (4)
_______
பிரமன்.
கடலி னெழுந்த கடுவினுக்குக் கலங்கி மேனி கறுப்புற்ற
கமலக் கண்ண ன் றிருவுந்திக் கஞ்சத் தடமே யிடமாக
வடல்கொண் டண்ட முழுதியற்றி யசர சரமா கியபேத
மனைத்தும் படைத்த நான்முகத்தெம் மைய னினிது புரந்திடுக
வுடலி னுலவு முயிரெனவவ் வுயிர்க ளெவைக்கு முயிராகி
யுயர்நா தாந்தப் பெருவெளியி னுலவி நடஞ்செய் குலமயிலைப்
படருஞ் சீர்த்தி வளரொளிப்பேர்ப் பரமன் பாக மகலாத
பரையை வைர வப்பதிவாழ் படியில் வடிவம் பிகைதனையே. (5)
_____
தேவேந்திரன்.
வேறு
நினைவரிய பல்கலைச் சொற்பொருட் பயனாகி
நித்தியா னந்த மயமாய்
நின்றிலகு வளரொளிப் பரமற்கு நளிகடலி
னீடுவிட வேக மேறா
தினியதன் செம்பவள வாயூறு தெள்ளமுத
மெஞ்ஞான்று மூட்டு கின்ற
வெழில்குலவு பொழில்சுலவு வடுகபுரி வடிவுடைய
விறைவியைத் தனிபு ரக்க
வனலியுழை யவிசொரிந் தச்சுவச் சதமேத
மாற்றிவிண் ணாட்டி னரசா
யரியா சனத்துவதி பயிரா வதக்குரிசி
லயில்கூரும் வச்சி ரத்தோன்
கனதனத் தரமகளி ராடிய விசைத்திடக்
கந்தருவ ரமரர் தாங்கக்
கவிகையைக் குவிகைமுனி வரர்காவு சிவிகைவரு
கண்ணா யிரக்க டவுளே. (6)
______
திருமகள்.
வேறு.
செய்ய திருப்பாற் புணரியின்கட்
சீத மதிவா னமுதோடு
சேர வுதித்துத் தேவர்களுட்
சிறந்தோ னிதயங் குடிகொண்டு
வையம் பரவு பொருள்வளனு
மற்றை வளனும் வளர்பாக்கு
மலர்க்கண் பரப்பு மிலக்குமிப்பேர்
மாதர் மாதர் பதம்பணிவா
முய்யும் பொருட்டுப் புவனமெலா
முடன்று படர்ந்து மிடைந்தகடு
வுண்ட கண்ட வளரொளிக்கு
ளொருவா துறையும் பேரொளியென்
றைய மின்றி யாகமங்க
ளறையும் வடுக நாதபுரத்
தன்னப் பெடையை வடிவுடைய
வருமைக் குயிலைப் புரந்திடவே. (7)
______
கலைமகள்.
வேறு.
வெண்டரள நிழன்மணியை நல்லார் கொளத்தந்து
வெறியுலாம் வேரி வாரி
வெம்பசி வருத்தவோ லிட்டுவரு வண்டர்க்கு
மிக்குண விருந்தளிக்கு
முண்டகத் தவிசுகந் தெண்டகப் பொலியுமொரு
முதல்வி கல்விச் செல்விநா
மூகையே மாகாது நமர்நா விருந்தருளு
முனிவிலாப் புனிதை காக்க
தண்டமி ழெனுங்கன்னி தாண்டவம் புரிகின்ற
தகுதிசால் பாண்டி நாடு
தரணியுள வேனைநாட் டினையொல்லை வெல்லுபு
தருக்கத் தழைந்து நிலவு
மண்டளவின் மல்லல்கெழு வயிரவன் கோவில்வளர்
வளரொளிப் பரம யோகி
வாமத்து வைத்துநித் தங்கொஞ்சு பைங்கிளியை
வடிவுடைக் கவுரி தனையே. (8)
______
காளி
கருதுமவி கண்ணுதற் குதவாத தக்கன்
கருத்தழிந் திடரின் மூழ்கக்
கலகமிடு சூலவேல் கைக்கொண்டு வடவையைக்
கட்கடைக் கடையு குத்து
விருதினொடு சென்றமரர் குழுவினைக் கழுதின
மிசைந்திட விரைந்த டர்த்து
வித்தகச் சூரரிப் பிணவெனத் திசைபோய
வீரமா காளி காக்க
வருதிநீ யிவணெனப் பரிதியை விளித்தவன்
வாயில்வாய் பற்ற கர்த்து
வானாடர் தலைவனைத் தோணெரித் தெச்சனது
வன்றலை யரிந்த பெம்மான்
சுருதிமுடி யறியாத முடிமீது தன்னடிச்
சுவடுபுனை வித்து மகிழுங்
துடியிடையை நெடியபுகழ் வடுகபுரி வடிவுடைய
சுந்தரியை யந்த ரியையே. (9)
____________
சத்த மாதர்
அருமைபெறு பிரமாணி யான்றகவு மாரியோ
டருண்மயேச் சுரிநா ரணி
யடலுறு வராகிவா னைந்தரு நிழற்றவா
ழயிராணி காளி யாய
பெருமைமலி யோரொழுவ ரன்னைமா ரன்பரைப்
பிரசாத மெளிதி னல்கும்
பெண்ணினுக் கரசியர்க ளின்னவர்த மென்பதப்
பிரசமலர் சென்னி புனைவா
மிருமையினு முயர்பதவி யடியவர்கள் கொளவுதவி
யெங்குநிறை யெம்பி ராட்டி
யெண்ணரிய பல்கோடி வேதத்தி னந்தத்
திருந்துவிளை யாடு சிறுமி
பொருதரங் கத்தகழி வாய்ப்புனலை வாய்ப்பெய்து
பொற்புரிசை யரிதி னேறிப்
புயன்மாரி பொழிவடுக புரிமேவு வடிவுடைய
பொன்னென்னு மின்ன முதையே. (10)
காப்புப்பருவ முற்றிற்று.
__________________
செங்கீரைப்பருவம்.
கங்கை முத லெழுநதிக் கலவைகொ ணறும்புனற்
கமலைகர கரக மதனாற்
கனிவினா லாட்டிகற் றிலதமிட் டுச்சியிற்
கதிர்மணிச் சூட்ட ணிந்து
செங்கைக்கு வண்டொடி செழுங்கழுத் தணிவடஞ்
சிற்றரையின் மிளிர்மே கலை
சீர்ச்செவிக் கொளிர்தோடு பணிபுரிந் துலகெலாஞ்
சேவைசெய் திருத்தாளினிற்
பொங்குநவ வீரர்முற் றோன்றிய மணித்தண்டை
பூட்டிவான் மகளி ரோடு
புண்ணியச் சுருதியாற் போற்றிசைத் தருகுறப்
பூந்தளிர்க் கையை யூன்றித்
திங்கண்முக மேனோக்கி வடிவுடைய வன்னமே
செங்கீரை யாடி யருளே
திருமருவு வயிரவப் பதிமருவு சோதியே
செங்கீரை யாடி யருளே. (1)
__________
தித்தித்து மதுரம் பழுத்தொழுகு நின்மழலை
செவ்விதிற் செவிம டுத்துச்
செழும்பொழிற் கோகிலப் புண்மேனி கருகிடத்
திவவியாழ் தலைகு னிதரப்
பத்திக் கதிர்க்கற்றை பெருகிவழி திருமுகம்
பார்த்து முழு மதியம் வெள்கப்
பங்கயப் பூக்குலங் கூம்பியும் வாடியும்
பன்னிலை படைத்து மாழ்க
வெத்திக்கு முலவிமெய் யியன் மணங் கமழ்தலா
லின்னறுஞ் சண்ப கப்போ
திறப்பது குறித்ததென வுயர்பாத வக்கொம்ப
ரிடைஞான்று கொண்டு புலரச்
சித்திக்கு வித்தான வடிவுடைய வன்னமே
செங்கீரை யாடி யருளே
திருமருவு வயிரவப் பதிமருவு சோதியே
செங்கீரை யாடி யருளே. (2)
_______________
பணிதந்த நீள்பணியை யணிதந்த வளரொளிப்
பரனிடம் பிரிய கில்லாய்
பனிமலைத் தெய்வதஞ் செய்தவங் கண்டவன்
பான்மக ளெனப் படர்ந்தாய்
துணிதந்த சதகோடி சூரிய ரொருங்கே
துதைந்துசுடர் விடினு மொவ்வாத்
துகடீர் தனிச்சுயம் பிரகாச புஞ்சமாய்த்
தொல்புவன முற்று முற்றாய்
கணிதந்த வுருவெய்தி வல்லிவல் லிக்குக்
கணிப்பரிய விம்மி தங்கள்
காட்டியம் மானைக் கலந்துவிளை யாடிளங்
காளையை யுயிர்த்த பிடியே
திணிதந்த வளர்கொங்கை வடிவுடைய வன்னமே
செங்கீரை யாடி யருளே
திருமருவு வயிரவப் பதிமருவு சோதியே
செங்கீரை யாடி யருளே. (3)
________________________
சுருதியின் றோடும் புராணத் திரட்சியும்
துன்றுமிதி காச வினமும்
தொல்லைமனு நூலாதி மிருதிக் குழாமுந்
துளக்கமில் கலைத் தொகுதியுங்
கருதியள விட்டின்ன தன்மைய னெனச்சிறிது
கட்டுரைத் திடவு மொண்ணாக்
கண்ணுதற் பண்ணவன் றிண்ணநெஞ் சிளகுறீஇக்
காமமிக் கூச லாட
விருநிலன் விசும்புபா தலமுதல வுலகநிரை
யேய்ந்தபே ரண்ட மாட
விருவகைத் தாமரை யிருக்கைக் கிழத்திய
ரெழுந்துவகை பொங்கி யாடத்
தெருமர லொழித்தாளும் வடிவுடைய வன்னமே
செங்கீரை யாடி யருளே
திருமருவு வயிரவப் பதிமருவு சோதியே
செங்கீரை யாடி யருளே. (4)
______________________________
எண்ணிலவு தாவரஞ் சங்கம மெனப்படு
மெவற்றையும் விதிக்கு மேலோ
னிப்பொரு ளனைத்தும் பிறழ்ச்சியடை யாவா
றிருத்திப் புரக்கு மாலோன்
பண்ணிலவு மாயா முதற்கா ரணத்துற்
பவித்தபிர பஞ்சம் யாவும்
பண்டையி னொடுக்கிப் பசுக்களை யிளைப்பாற்று
பரனெனுந் தேவர் மூவர்
விண்ணிலவு மேதக்க பதவியி லமர்ந்துதம்
வினையினி தியற்றும் வண்ணம்
விளர்த்துக் கறுத்துச் சிவந்தகன் றரிசிதறு
விழியாற் கடைக்க ணிப்பாய்
தெண்ணிலவு புன்முறுவல் வடிவுடைய வன்னமே
செங்கீரை யாடி யருளே
திருமருவு வைரவப் பதிமருவு சோதியே
செங்கீரை யாடி யருளே. (5)
__________________________
வேறு.
குவடுறு பெருவரை மகளென வுலகவர்
கொண்டா டுங்குயிலே
குணமிகு தவர்பெற விருமையு முதவுங்
கோதில் கழைச்சுவையே
கவடறு மனனுடை யடியவர் நுகர்தரு
கற்பக நற்கனியே
கரைபொரு திரைதவழ் கடலெழு கொடிய
கடுத்திகழ் கந்தரனெந்
தவமலி பயனென வனுதின நினைபு
தழீஇயயி லாரமுதே
சரணந ளினமலர் சரணடை பவர்வினை
தகரும் படிநூறி
யவமகல் வாழ்வருள் வடிவுடை யம்பிகை
யாடுக செங்கீரை
யரிதொழு வயிரவ புரியை மகிழ்ந்தவ
ளாடுக செங்கீரை (6)
____________________
திரிபுர மிளநகை யெரியுண வுதவிய
செம்ம லுளத்துறைவாய்
தெளிதமி ழினிமையின் மொழிபவர் கருதிய
செல்வ மெலாந்தருவாய்
விரிமது வொழுகிய விரைகமழ் மரைகெழு
மெல்லியன் மடமானார்
விரைகுநர் சயசய சயவென வருகு
விளம்பி வழுத்தியிடப்
பரிதிகி ரணவெயி றனைநனி யிகழ்புரி
பான்மை யெனக்கிளரும்
பருமணி குயிலுறு பலபல பணியொளி
பளபள பளபெளென
வரிய மருந்தன வடிவுடை யம்பிகை
யாடுக செங்கீரை
யரிதொழு வயிரவ புரியை மகிழ்ந்தவ
ளாடுக செங்கீரை. (7)
______________________
உரகர்கள் பணிபணி யிறைகடை கயிறென
வுறமந் தரநட்டே
யொருபுற னமரரு மொருபுற னசுரரு
முததி மதிக்குங்கால்
விரவிய வளமலி பொருள்களு ளவரவர்
வேண்டுவ கைக்கொண்டு
விடமிகு கொடுமையொ டெழுதலும் வளிபொர
விளிமுகில் பொரவோடிப்
புரகர சிரகர பரசிவ வரத
புராதன வபயமெனப்
புகறலு மதையுட னமுதுசெய் தருளிய
புண்ணிய வளரொளியா
மரனிட மருவிய வடிவுடை யம்பிகை
யாடுக செங்கீரை
யரிதொழு வயிரவ புரியை மகிழ்ந்தவ
ளாடுக செங்கீரை. (8)
_______________________
அம்பினை வென்றுசு ரும்புது ரந்தலை
யார்கட லைச்சினவி
யம்புய மலரை வெருட்டி யிளம்பிணை
யஞ்சி மருண்டுடலங்
கம்பித மெய்த விழித்து மதர்த்துள
கண்ணியர் மையலொரீஇக்
கனிவிற் றினநின கழலைப் பரசுநர்
காணிய நின்றிடுபூங்
கொம்பனை யாயதி கோமள சாமள
குந்தள கோகிலமே
குண்டகழ் சுலவிய வயிரவ நகரி
குலாய மடப்பிடியே
செம்பிய னாடு புரந்த துரந்தரி
செங்கோ செங்கீரை
செந்துவர் வாய்மயில் சுந்தர நாயகி
செங்கோ செங்கீரை. (9)
_______________________
ஆங்கு நிரந்தர நினையே வழிபடு
மந்தண னொருவனையின்
றண்மிய திதிதான் யாது கொலோதென்
றரசன் வினாவியிட
வோங்கிய குகுவைப் பூரணை யெனலு
முவாமதி காட்டுகென
வுன்பத மன்னோன் வேண்ட மணித்தோ
டுய்த்துமிழ் வெண்ணிலவாற்
றூங்கிருள் பருகுந் திங்களின் வானிற்
றோன்றக் கருணைசெயுஞ்
சுத்த நிராமய நித்திய பூரண
சொப்பிர காசமயீ
தேங்கு சிறப்புடை வயிரவ பதிநிதி
செங்கோ செங்கீரை
செந்துவர் வாய்மயில் சுந்தர நாயகி
செங்கோ செங்கீரை. (10)
செங்கீரைப்பருவ முற்றிற்று.
_________________________
தாலப்பருவம்./h3>
சிறுகட் பெருங்கான் மதக்களிறு
தெளிநீர் வயிர வத்தடத்துட்
சென்றாட் டயர வெழுதுளிபோய்ச்
சேணார் நதியிற் கலந்திடக்கண்
டிறுதற் றொழிறீர் புலவர் சில
ரினிது மூழ்கும் புண்ணியத்தா
லெந்தை பெருமான் சிவலோகத்
தெய்தி யனையா னுருப்பெற்று
மறுவற் றுறையக் காரணமாய்
வயங்கும் வடுக நாதபுர
மன்னி விளங்கு வளரொளியின்
வாமத் திருக்குஞ் சேமவைப்பே
தறுகட் பாசந் தவிர்த்தொன்றைத்
தருவாய் தாலோ தாலேலோ
தண்ணா ரமுதே வடிவுடைய
தாயே தாலோ தாலேலோ. (1)
___________________________
வித்தைக் கெல்லா மொருவித்தே
மெய்யன் பாள ரகத்தினிருள்
விடிய வுதிக்கு மிளங்கதிாே
வேதா கமமா கியமுதனூல்
பத்துத் திசையிற் படுமண்டப்
பரப்பிற் பல்கு மெவ்வுயிரும்
பயந்து மின்னுங் கன்னியெனப்
பகர நின்ற வற்புதமே
சத்தித் தளிகளிசை முரன்று
தாது குடைந்து மதுமாந்துக்
தடங்கா வடுக நாதபுரத்
தலமுன் புரிந்த தவப்பேறே
தத்தைக் கினிமை பயிற்றுமொழித்
தையா றாலோ தாலேலோ
தண்ணா ரமுதே வடிவுடைய
தாயே தாலோ தாலேலோ. (2)
___________________________
முடிக்கொண் டமரா பதிபுரக்கு
முகில் வாகனத்தான் றேவியொடு
முளரிப் பொகுட்டிற் சந்ததமு
முனிவின் றுறையு மொய்குழலா
ரடிக்கட் குறுகி யெம்மன்னை
யருளா நின்ற பணியாவென்
றகநெக் குடைந்து கசிந்துருகி
யங்கை பிணித்து வாய்புதைத்துப்
படிக்கு ணினது திருமேனி
படியிற் கன்றும் பைப்பயநீ
படியில் விளையாட் டியாங்களிக்கும்
படியாற் செய்தி யெனப்போற்றுந்
தடித்துக் கொடியே வடுகபுரி
தழைந்தாய் தாலோ தாலேலோ
தண்ணா ரமுதே வடிவுடைய
தாயே தாலோ தாலேலோ. (3)
____________________________
வெள்ளித் தகட்டி னிளவாளை
விசும்பு கிழிய வெடிபாய்ந்து
வேதா வுலகின் மானதப்பேர்
வேய்ந்த மடுவைப் புக்குழக்கிக்
கள்ளிற் பொலியுங் கற்பகப்பூ
வுகுத்துக் கமுகின் மடல்கீறிக்
கமழ்தே மாவின் கனிசிந்திக்
கதலித் தாற்றுப் பழஞ்சிதறித்
துள்ளித் துனைந்து மீட்டணைந்து
துளைந்து மதர்க்கும் பெருவாவி
சூழ்ந்த வடுக நாதபுரத்
தோகாய் கவர்ந்த முதலையுயிர்
தள்ளிக் கரியைக் காத்தபிரான்
றங்காய் தாலோ தாலேலோ
தண்ணா ரமுதே வடிவுடைய
தாயே தாலோ தாலேலோ. (4)
__________________________
மண்ணை யருந்து கின்றதரு
மந்த குழவி யென்றெடுத்து
மடியி லிருத்தி யசோதையெனு
மங்கை வாயைத் திறந்திடலு
மெண்ணை யிகந்த பல்லுலகு
மிரண்டு திணைய வணுக்குலமு
மிருப்பக் காணூஉ மகிழ்வச்ச
மீண்டி மாயை வடிவாய
வண்ண னெடியோ னிவனென்னா
வறிந்து போற்ற வளர்குரிசி
லடைந்து வேண்ட வரங்கொடுக்கு
மம்மே வடுக புரியமர்ந்த
தண்ணென் குணத்தாய் கற்பகத்தின்
றளிபோ தாலோ தாலேலோ
தண்ணா ரமுதே வடிவுடைய
தாயே தாலோ தாலேலோ. (5)
____________________________
வேறு.
அத்தி யுரித்தத ளைக்கலை யாக
வணிந்து களிப்புறுவோ
னையந் தம்மின் றெரிவையி ரென்ன
வகந்தொறு மேற்றுண் போ
னத்துபு சுடலையி னடலையை யென்று
நயந்து தரித்திடுவோ
னாணில னென்பு புனைந்து பிசாசொடு
நாளு நடம்புரிவோ
னித்தகு பித்தனை யொருகா லம்மியி
லேற்றிய கையாற்றொட்
டிட்ட தவத்தாற் றேவரின் மூவரி
னேற்ற முறச்செய்தாட்
சத்தி பராபரை வடிவுடை நாயகி
தாலோ தாலேலோ
தனிகர்கள் பரவிய வயிரவ பதியின
டாலோ தாலேலோ. (6)
____________________________
கவள மெனத்தொழு பவர்வினை யுண்டிடு
கரியை யளித்தபரங்
கருணை நெடுங்கட லாகிய சங்கரர்
கனிவி னருந்தமுதே
துவளு மிளங்கொடி யனைய மருங்கும்
றோகைக் கேகயமே
துணைநினை யலதிலை யெனமன நினைகுநர்
துயர்களை களைகண்ணே
யவளவ னதுவெனு முலகா யல்லையு
மாகி நிறைந்தவளே
யரியய னிந்திரன் முதலிய கடவுள
ரறிவரு முழுமுதலே
தவழ்நில மதிமுக வடிவுடை நாயகி
தாலோ தாலேலோ
தனிகர்கள் பரவிய வயிரவ பதியின
டாலோ தாலேலோ. (7)
___________________________
அணிதரு சிந்துர திலத மிலங்கிய
வானன சுந்தரியே
யழகிய நாசி புனைந்திடு முத்தணி
யதனிற் பொலிகதிராற்
பணிவொடு தொண்டுசெய் யடியவர் மண்டிருள்
பாற்றுறு கோற்றொடியே
பவளச் செப்பிடை நித்தில மணிகள்
பதித்தன வாய்நகையாய்
திணிவலி வெஞ்சூ ருடல்வடி வேல்கொடு
செற்றுப் பண்ணவரைச்
சிறைவிடு வித்துப் பதவி புகுத்திய
சேயைப் பெறுதாயே
தணிவறு பேரருள் வடிவுடை நாயகி
தாலோ தாலேலோ
தனிகர்கள் பரவிய வயிரவ பதியின
டாலோ தாலேலோ. (8)
__________________________
முதிருங் கனியிற் சுவையுங் காசிடை
மூசிய வொண்சுடரு
முளரியில் வெம்மையு மறலிற் றண்மையு
மொட்டவிழ் நறுமலரிற்
பொதியுங் கந்தமு மாமென மூன்று
புரத்தை யெரித்திட்ட
புண்ணிய முதல்வன் றன்னுழை நீங்காப்
பொன்னங் கொம்பனையாய்
நிதியுந் தேனுவு மைந்து வகைத்தாய்
நீடிய கற்பகமு
நிழலுமிழ் சிந்தா மணியும் விரும்பிலர்
நினைநினை நெஞ்சினர்பாற்
றதிதங் கிழுதுறழ் வடிவுடை நாயகி
தாலோ தாலேலோ
தனிகர்கள் பரவிய வயிரவ பதியின
டாலோ தாலேலோ. (9)
_______________________
மாசக லடியவர் மதிவயி னூறி
வழிந்திழி தெள்ளமுதே
வான்முக டணவிய சிகரத் திமகிரி
வாய்த்த செழுந்தேனே
தேச மனைத்தும் பையு ளொழிந்து
செழித்து வளங்கூரத்
தேர்வரு மேன்மைக் காஞ்சி நகர்க்கட்
சென்றற மெண்ணான்கு
நேசமொ டாற்றிப் பல்லுயி ருக்கொரு
நீயே தாயென்னு
நிகம மறைப்பொரு ளெளிது புலப்பட
நெடிதறி வித்தவளே
தாசர் தமக்கருள் வடிவுடை நாயகி
தாலோ தாலேலோ
தனிகர்கள் பரவிய வயிரவ பதியின
டாலோ தாலேலோ. (10)
_____________________
சப்பாணிப் பருவம்.
எட்டெட்டு வித்தையுமி ரொன்பான் புராணமு
மியாவர்க்கும் வரைய றுத்திட்
டித்தனை யெனக்கூற வொண்ணாத வண்ணத்
தியன்றபல பேத சமயக்
கட்டுற்ற நூல்களு மொழுக்கே வழக்கோடு
கழுவாய் விதந்து துணிவிற்
கழறுமிரு தியும்வேத தந்திரமு மேனைக்
கலைக்குலமு நினது செங்கை
கொட்டப் பிறந்தவொலி யிற்பிறந் தனவெனக்
குவலையம் பாதாளம் விண்
கொண்டாட விழுதையோர் திண்டாட மதிமுடிக்
கொற்றவன் கண்டா டவே
தட்டற்ற மாக்கருணை வடிவுடைய தேவிநீ
சப்பாணி கொட்டி யருளே
சதுர்மறை முழங்குவயி ரவபுரி மகிழ்ந்தமயில்
சப்பாணி கொட்டி யருளே. (1)
___________
பார்மலியு மெத்தகைய வரைகட்கு நாயகப்
பான்மைதன தாப்பொ றுத்துப்
பரவுகிரி ராசனென் றுலகெலா மேத்திடப்
பட்டிரும் புகழ்ப டைத்துச்
சீர்மலியு மிமவான் மனைக்குரிய மேனையந்
தெரிவைகண் டுவகை கூர்ந்தென்
செய்தவச் செல்வியிவ ணீடூழி வாழ்கெனச்
செப்பிமிக் கன்பு கொட்டப்
போர்மலி திறத்தினாற் புத்தேளிர் தம்மைவான்
போய்ப்பொருது வாட்டி யோட்டும்
புல்லியோர் நெஞ்சுபறை கொட்டநில மாதும்
பொலிந்தா வலங்கொட்ட வண்
டார்மலி கருங்கூந்தல் வடிவுடைய தேவிநீ
சப்பாணி கொட்டி யருளே
சதுர்மறை முழங்குவயி ரவபுரி மகிழ்ந்தமயில்
சப்பாணி கொட்டி யருளே. (2)
_________
புரமாகி நாடதாய்க் கண்டமாய் வருடமாய்ப்
புகறீவு மாய்வி ரிந்த
பூவுலகு தன்னையத னோடேனை யுலகமும்
புடைபெயர்ந் தழிவு றாமே
சிரமேல் வகித்தண்ட முண்டசிறு செய்யவாய்த்
தேந்துழாய் மாலை மாலைத்
தெண்டிரை'கொழிக்குமின் பாற்புணரி நாப்பணிற்
சிரமமின் றெளிது தாங்கு
முரவோன் சிதம்பர நடங்கண்ட புண்ணியத்
துவனைக் கனிட்டை விரலூ
டோராழி யாக்கித் தரித்திட்ட பங்கயத்
தொண்கரத் தொத்த றுத்துத்
தரம்யாரு முணர்வரிய வடிவுடைய தேவிநீ
சப்பாணி கொட்டி யருளே
சதுர்மறை முழங்குவயி ரவபுரி மகிழ்ந்தமயில்
சப்பாணி கொட்டி யருளே. (3)
________
எவற்றையு மொருங்குணரு முற்றுணர் வுடைக்கடவு
ளீசான மேலை வதனத்
தியாமெலா மீடேற வருள்காமி காதியா
மேழுநான் காக மாந்தஞ்
சிவத்தொடு கலந்தபர ஞானியர்க் கோதியுள
சீரிய விலக்க ணங்கள்
சேரத் தெரிந்துகோ டற்கிலக் கியமெனத்
திகழ்பட் டினத்த டிகளி
னிவப்புறு குலத்தொர்வணி கன்பொதி யெருத்திற்
கு நிலனட்ட பட்ட முளையை
நிலைபெயர்ப் பரிதாத் தளிர்ப்பித்த வளரொளியு
ணீங்காது நிலவு மொளியே
தவத்தவர் தவக்கருது வடிவுடைய தேவி
சப்பாணி கொட்டி யருளே
சதுர்மறை முழங்குவயி ரவபுரி மகிழ்ந்தமயில்
சப்பாணி கொட்டி யருளே. (4)
________
பலகலையும் விபரீத சந்தேக மின்றிப்
படித்தொழுகு மாதி சைவர்
பாவனா மந்திரக் கிரியைவழு வாமற்
பரிந்துபுரி யாக சாலைக்
குலவிவல னாகச் சுழித்துமீப் படர்தீக்
கொழுந்தெழு கொழும் புகையினைக்
கொண்மூ வினங்கண்டு வளரொளிப் பரமர்தங்
கோடீர மேக சாலங்
கலகமிட வருகின்ற தெனவெருவி வாயிலிற்
கலவிச் சரண் புகுந்து
கையினை யெடுத்துமுறை யிட்டாங்கு கணிதமில
களிறுநனி பிளிறு கோயிற்
சலசைதொழ நாளும்வாழ் வடிவுடைய தேவிநீ
சப்பாணி கொட்டி யருளே
சதுர்மறை முழங்குவயி ரவபுரி மகிழ்ந்தமயில்
சப்பாணி கொட்டி யருளே. (5)
________
வேறு.
சங்கு தவழ்ந்து மிளிர்ந்து புலம்பு
தடங்கொள் கிடங்கினிடைத்
தழைசெவி நால்வாய்த் தறுகட் சிறுகட்
டரளக் கூர்ங்கோட்டுப்
பொங்கு சினத்துப் புகர்முக மையற்
பூட்கை நடைக்கிரிகள்
புக்கிள மென்பிடி யுடன் விளை யாடல்
புரிந்து சொரிந்தமதக்
தங்குத லாலே யிரதமு மணமும்
தகையழி வெய்தியநீர்
சாலப் பண்டையின் மிகுமா மதுவும்
தாது முகுக்குமலர்க்
கொங்குமிழ் பைங்கா வடுக புரத்தாய்
கொட்டுக சப்பாணி
குமரனை யுதவிய வடிவுடை யிடுகிடை
கொட்டுக சப்பாணி. (6)
_______
ஆலத் தன்மையு மமிழ்தின் றன்மையு
மணவி மருண்டுபிறழ்ந்
தையரி சிதறிக் குழையினை மோதி
யகன்றஞ் சனமெழுதிக்
காலற் கொருதுணை யாகி மதர்த்துக்
காளைய ருயிர்வௌவுங்
கலக விலோசன விண்ணர மங்கையர்
கரந்தை வரச்சேக்குஞ்
சீலத் தளிரடி மாதர்ச் சசியுஞ்
செஞ்சொற் குரிமகளும்
தேசிக வண்ணச் செல்வியு மற்றைச்
சேடிய ரும்போற்றக்
கோலக் கோபுர வடுக புரத்தாய்
கொட்டுக சப்பாணி
குமரனை யுதவிய வடிவுடை யிடுகிடை
கொட்டுக சப்பாணி. (7)
_________
ஆரணி தந்துப கீரதி வேய்ந்தர
லாபர ணந்தரியா
வந்தி யிளம்பிறை சூடு சடாடவி
யாதி யிருங்குரவன்
சீரணி யொளிர் நின் றிருவுரு நோக்குபு
சிந்தை கரைந்துருகிச்
செறிவுறு கழிபடர் காமங் கன்றித்
தேய்ந்தரை மேனியனாய்
நேரணி நின்றிட வுள்ள மிரங்கி
நெகிழ்ந்தன் னவனுக்கு
நிகரறு பரமா னந்த சுகந்தரு
நித்திய கல்யாணி
கூரணி நாரணி வடுக புரத்தாய்
கொட்டுக சப்பாணி
குமரனை யுதவிய வடிவுடை யிடுகிடை
கொட்டுக சப்பாணி. (8)
______
அடியவர் தம்முட் லைமை படைத்த
வகத்திய மாமுனிவற்
காரண மாயிர முன்பெழு வாயா
லரனுப தேசித்த
வடிதமிழ் நயமொழி நறுமலர் கொடுபொருள்
வாசந் திசைவீச
மல்குமெ யன்பெனு நாரிடை வீக்கிய
வண்பா மாலையினைப்
படியெழு தரிய வநிந்திதை யாதிப்
பாங்கியர் கைசெய்த
பஃறிருப் பள்ளித் தாமத் தினுநனி
பரிவிற் புனைபாவாய்
குடிகள் செழிக்கும் வடுக புரத்தாய்
கொட்டுக சப்பாணி
குமரனை யுதவிய வடிவுடை யிடுகிடை
கொட்டுக சப்பாணி. (9)
________
தவள சுதாமய கிரண கலாதர
சந்திர னைப்பாராச்
சஞ்சல முங்கய ரோகமு மறுவுந்
தணவா நீயேயோ
விவணெமை யொக்கும் பெற்றியை யென்ன
விகழ்ந்து சிரிப்பதுபோ
லீண்டிய தண்ணொளி முத்துச் சுட்டி
யிலங்கு முகத்திருவே
யுவமையில் சிவனின் மதன்றனு நூறு
மொருத்தன் மாவதனத்
தொருத்தன் முதலிய சிறுவரும் வாய்வைத்
துண்ணா முலையாளே
குவலையம் வழிபடு வடுக புரத்தாய்
கொட்டுக சப்பாணி
குமரனை யுதவிய வடிவுடை யிடுகிடை
கொட்டுக சப்பாணி. (10)
சப்பாணிப்பருவ முற்றிற்று.
________
முத்தப்பருவம்.
வன்னிக் கொடியை நுதற்றலத்து
வைத்து வில்வே ளெருவிட்டு
வளத்து வளர வளர்ப்பவது
மன்னு மிரண்டு மூன்றுமுகக்
கன்னிக் கனியைத் தரவந்தக்
கனியி னினிய வெழிற்சுவையைக்
கண்வாய்த் தேக்கிக் களிகூர்ந்து
கன்னிநீயு முட னுண்ணத்
துன்னித் துய்க்கு மெம்பெருமான்
சோம சுந்தரப் பெயரைச்
சூடப் பிரியா வடிவுடைய
தோகாய் வயிர வன்கோயின்
முன்னிப் பொலிவாய் நின்கனிவாய்
முத்தந் தருக முத்தமே
முதிர்சீர் மேனை வலம்புரியின்
முத்தே முத்தம் தருகவே. (1)
_______
விளரிப் பண்ணைப் பெடையினொடு
விரும்பு சுரும்பு மிக்கிசையூஉ
மிடைய வவற்றைத் தெளிதீந்தேன்
விருந்து புரிந்து களிப்பித்து
வளவிப் புழுகு விரைச்சாந்து
வார்ந்து கறுத்து நுனிகுழன்று
மடங்கி நெறித்து நெய்த்தடர்ந்து
மன்ற வியற்கை மணங்கமழு
மளகக் காடு சுமந்துதளர்ந்
தலங்கு மருங்குல் வடிவுடையா
யாதி வயிர வன்கோயிற்
கமைந்த தூண்டா மணிவிளக்கே
முளரிச் செய்ய மலர்வாயின்
முத்தம் தருக முத்தமே
முதிர்சீர் மேனை வலம்புரியின்
முத்தே முத்தந் தருகவே. (2)
________
கற்றா மனம்போற் கசிந்துருகிக்
கண்ணீ ர் வாரப் புளகரும்பக்
கைகள் சென்னி மீதேறக்
கம்பித் துடல மொழிகுழறப்
பற்றா நின்னைக் கடைப்பிடித்துப்
பற்றா நின்ற பத்தர்தமைப்
பவஞ்ச மென்னும் படுகடனாப்
பண்வீழ்ந் தாழ்ந்து பதைப்பொழிய
வற்றாக் கருணைக் கரத்தெடுத்து
மன்னு சிவமாங் கரையுய்ப்ப
வல்லாய் வயிர வன்கோயில்
வாழ வாழும் வடிவுடையாய்
முற்றா முகிழ்வா ணகைவாயின்
முத்தந் தருக முத்தமே
முதிர்சீர் மேனை வலம்புரியின்
முத்தே முத்தம் தருகவே. (3)
________
மறுவி லாத பாசொளிய
மரக தத்தால் வனைபாவாய்
மாற்றுச் சாற்று வதற்கொண்ணா
மாமைச் சாம்பூ நதப்பொன்னே
பெறுத லரிய நிரதிசயப்
பேரா னந்தப் பெருவாழ்வே
பேணுந் தொண்டர் குறித்தவெலாம்
பெருகத் தருசிந் தாமணியே
பொறுமை வாய்மை யருள்வாய்ந்தார்
புந்திக் கமலத் தனப்பேடே
புகழ்சால் வயிர வன்கோயில்
புரக்கும் தாயே வடிவுடையாய்
முறுவல் பூத்த செம்பவள
முத்தந் தருக முத்தமே
முதிர்சீர் மேனை வலம்புரியின்
முத்தே முத்தந் தருகவே (4)
_________
பழிக்கோ ருறையு ளாயைந்து
பாத கஞ்செய் கொடியோரும்
பரிந்து சரணா கதியடையிற்
பாது காக்குந் தயாநிதியே
விழித்தா ரழலுக் கிரையாக்கி
வேளை வென்ற கோளரிகால்
விழுந்து வேண்ட ஆடலொரீஇ
மேவு மின்ப மென்பிடியே
செழித்தா காயத் தளவறிவான்
செல்வ போன்று நீடுபொழில்
செறியும் வயிர வன்கோயிற்
செல்வக் கன்னீ வடிவுடையாய்
மொழித்தே னொழுகுஞ் சேதாம்பன்
முத்தந் தருக முத்தமே
முதிர்சீர் மேனை வலம்புரியின்
முத்தே முத்தந் தருகவே. (5)
_________
வேறு.
சீல நிரம்பிய மாதவ முனிவரர்
சித்த ரியக்கர்கணஞ்
செற்றிய கருடர்கின் னரர்கிம் புருடர்
சிறந்திடு கந்தருவர்
ஞால முடித்திசை யேந்தி யனைத்தையு
நன்குணர் சேடாதி
நாகர் வசுக்கண் மருத்துவ ராதவர்
நான்கை யிரட்டுதிசா
பால ரெனைப்பலர் பூசனை யாற்றிப்
பரவலு மவர் வேட்ட
பயன்முழு துதவிய வடுக புரத்தாய்
பழமறை மொழிபூவாய்
மூல புராதன வடிவுடை யம்மே
முத்த மளித்தருளே
முடிவு கடந்தவள் வடிவு கடந்தவண்
முத்த மளித்தருளே. (6)
_________
தொண்டர் விரும்பிய பண்ட மொருங்கே
துன்ன விரைந்தருளுஞ்
சுந்தரி சந்தத மந்தர நாடு
துதைந்து களிப்பவர்நின்
புண்டரி கப்பத மெய்திப் போற்றப்
புன்க ணகற்றியுளாய்
பூரணி யாரணி காரணி நாரணி
பொலம்பூங் கொம்பனையா
யண்டநி றைந்தபல் லுலகுரு விப்போ
யாங்காங் கணிசெய்யு
மற்புத கோபுர வடுக புரத்தா
யழியா தொளிர்மின்னே
முண்டக மலர்முக வடிவுடை யம்மே
முத்த மளித்தருளே
முடிவு கடந்தவள் வடிவு கடந்தவண்
முத்த மளித்தருளே. (7)
_________
மந்தண மாகச் சுருதியு ணடுவண்
வைகு மநுப்பொருளே
மறுவற வோதிய வந்தணர் சிந்தையின்
மன்னிய வின்னமுதே
கந்த னெனுஞ்சிறு மதலையை மடியின்
கண்வைத் தொண்பவளக்
கவினார் கனிவாய் முத்தங் கொண்டு
களிக்கும் பெண்ணரசே
செந்தளிர் கோது கருங்குயின் முழவொலி
செவியுற வெருவிமுகிற்
றெழிப்பென வல்குறு வடுக புரத்தாய்
தேசிக தெய்வதமே
முந்தமு ளைத்தெழு வடிவுடை யம்மே
முத்த மளித்தருளே
முடிவு கடந்தவள் வடிவுக டந்தவண்
முத்த மளித்தருளே. (8)
________
கோதறு கற்பெனும் வாலிய புணரிக்
கூல வருந்ததிமுற்
கூறிய தாபத பன்னியர் யாருங்
குழுமிக் குளிர்நறவத்
தாதவிழ் முல்லைப் போதினை நின்னிரு
சரணத் தாமரைமீத்
தங்கத் தூவியி றைஞ்சி வழுத்தத்
தண்ணருள் பாலிப்பாய்
பூதப கீரதி வீசியை வீசிப்
பொலிசடை வளரொளியெம்
புண்ணிய னண்ணிய வடுக புரத்தொரு
போழ்து மிகந்தறியாய்
மூதழ கொழுகிய வடிவுடை யம்மே
முத்த மளித்தருளே
முடிவு கடந்தவள் வடிவுக டந்தவண்
முத்த மளித்தருளே. (9)
______
மாகமு மாழ்பில மும்பெற லரியதொர்
வாழ்வைப் புடவிபெற
வண்பொருண் முத்தமிழ் முத்தமிழ் வாரிதி
மகிழ்விற் பொங்கியிடப்
பாகடர் பூகமி லாங்கலி தேமாப்
பலவுங் குலவுஞ்சீர்ப்
பாண்டிய தேசமும் யாங்களு முய்யப்
பண்டு தடாதகையாய்ச்
சோகவி மோசன பாசன மாகிய
தொன்மது ரைப்பதியிற்
றோன்றிய திருவே வடுக புரத்தெந்
துணையே மென்பிணையே
மோகன சாமள வடிவுடை யம்மே
முத்த மளித்தருளே
முடிவு கடந்தவள் வடிவு கடந்தவண்
முத்த மளித்தருளே. (10)
முத்தப்பருவ முற்றிற்று.
_____________________
வருகைப்பருவம்.
பொற்புமலி விலைவரம் பறியாத வானவிற்
போலுநவ மணிகு யின்ற
பொன்னா லியன்றபூம் பாதசா லத்தொடு
புலம்புஞ் சிலம்பும் வேய்ந்தே
யெற்புதிய நளினமல ரிழையுநின் சிற்றடியை
யிருநில மடந்தை சூட
விருடிபன் னியரெலாங் கனகபூ ரணகும்ப
மேந்தியெதிர் கொண்டு வாழ்த்த
வற்புதப் பாமாலை யேழகத் திருவணிக
ரன்பின ரணிந்து பரவ
வரமகளிர் சசிவாணி கமலையா தியரவ்
வவர்க்குரிப் பணிகள் புரிய
வற்புறு கருங்கற் பெருங்கோயில் வடுகபுர
மருவுசிற் பரைவ ருகவே
வளரொளியி னுருவரையி லளவளவு மொருபசிய
வடிவுடைய மயில்வ ருகவே. (1)
_________
சொல்லார்ந்த வேதத்தி னந்தமோ லிட்டுநின்
சொருபத்தை யாது முணராத்
துயர்சற் றொழிந்துபின் றொடரநடை கண்டனத்
தொழுதியின மென்று தொடர்
வில்லார்ந்த சங்கநிதி பதுமநிதி முனியா
விளங்குசிந் தாம ணியுடன்
விரைத்தவைந் தருவுங் கடைக்கணிக் கின்றவெவ்
வேலையையு மவ்வே லையிற்
சொல்லாதி யற்றிமேற் கதிசார்து மென்னத்
துணிந்தன படர்ந்து தொடரத்
துரியநிலை யனுபவப் பெரியோர்க ணெஞ்சுந்
துளங்கா துடங்கு தொடர
வல்லாரை வல்லா ரெனச்செயும் வடுகபுர
மருவுசிற் பரைவ ருகவே
வளரொளியி னுருவரையி லளவளவு மொருபசிய
வடிவுடைய மயில்வ ருகவே. (2)
________
நெய்யினொடு திரிதகழி யொன்றுமில் லாமே
நிரந்தரந் திகழ்தீ பமே
நித்தியா னந்தபர ஞானமே யெங்கணு
நிறைந்தகரு ணா லயமே
பையுலவு பாப்புருக் குண்டலினி நாமம்
பரித்தான்ம வர்க்க வுடலிற்
பரவுமூ லாதார தானத்தி னிலவிமல
பரிபாக கால நோக்கிப்
பொய்யொருவு மெய்யுணர்வை யையமற வுய்யும்வ
கைபொள்ளெனத் தருமா தியே
பூதமுத னாதபரி யந்தமா மாறாறு
புகறத்து வங்க டந்து
மையண வவற்றிற் கதீதையாய் வடுகபுர
மருவுசிற் பரைவ ருகவே
வளரொளியி னுருவரையி லளவளவு மொருபசிய
வடிவுடைய மயில்வ ருகவே (3)
_________
வெண்ணிலவு தவழ்சடில முடிகாண் விருப்பினால்
விதியோதி மப்ப றவையாய்
விண்ணூ டெழுந்துபோய் விரிசிறை யயர்ந்தோய்ந்து
மேனின்று வீழ்கிற் குமோர்
தண்ணிலவு கேதகைப் போதெதிர யாரைநீ
சாற்றென வினாய காலைத்
தம்பிரான் சென்னிவாழ் தவமின்மை யேன்வழீ
இச் சதகோடி யூழிசென்ற
வண்ணலே யெனமீண்டு கண்டென்று பொய்க்கரிக்
கதனையு முடன்ப டுத்த
வன்னவற் காலயம் பூசனை சிறப்பொழித்
தங்கணா னங்க ணோங்கும்
வண்ணமிட லருளுமா சத்தியே வடுகபுர
மருவுசிற் பரைவ ருகவே
வளரொளியி னுருவரையி லளவளவு மொருபசிய
வடிவுடைய மயில்வ ருகவே. (4)
__________
பொன்றவரு கடைநாளி லேனுமுனை யன்பினாற்
புந்திவன சத்து நிறுவிப்
போற்றிக் குடங்கைநீ ராட்டிக் கிடைத்தசில
பூத்தூய் வணங்கி னோரைத்
தொன்றுபற் பல்பவத் தாற்றளவில் பாவத்
தொடக்கறுத் தொண்க யிலைமீத்
துலங்குசிவ லோகத் திருந்தமணி கண்டச்
சுயஞ்சோதி பக்கல் வைக்கும்
வென்றிபுனை பூங்கழற் செல்வியே புகழ்குலாம்
வீரபாண் டியபு ரத்தின்
மேதகப் பொலியே ழகப்பெருந் திருவணிகர்
வேண்டுபணி முழுது ஞற்றி
மன்றவனு தினமும் பராய்நிற்ப வடுகபுர
மருவுசிற் பரைவ ருகவே
வளரொளியி னுருவனாயி லளவளவு மொருபசிய
வடிவுடைய மயில்வ ருகவே. (5)
________
வேறு.
சருவ சீவ தயாநிதியே
சார்ந்தார் தங்கட் கிருநிதியே
தவஞ்சா லிமவான் கண்மணியே
சாற்ற வரிய மனோன்மணியே
கருவ மிக்க கயமுகனைக்
கடிது கடிந்து கடிகமழ்கார்க்
கடநீர் கவிழ்க்குங் கவுள்யானைக்
கன்றை யீன்ற மடப்பிடியே
பருவ வெழிலி யார்ப்படக்கிப்
பால ரூருந் தேரொலிவிட்
படரும் வடுக நாதபுரம்
பண்டு பெற்ற பெரும்பேறே
யருவ வுருவ வடிவுடைய
வமிழ்தே வருக வருகவே
யகில முயிர்த்த வுயிர்க்குயிரா
மன்னே வருக வருகவே. (6)
___________
பேசு மதுரம் பழுத்ததமிழ்ப்
பிரச மருந்துங் களியளியே
பெண்மைக் குணம்யா வுந்திரண்டு
பெருகி நிறைந்த வாலயமே
மாசின் மறையாய் மந்திரமாய்
மன்னு வேள்வி யாயவியாய்
வன்னி யாகி யெச்சனுமாய்
வயங்கா நின்ற மாச்சுடரே
யேசில் வடுக நாதபுரத்
தெந்த ஞான்றுந் தணவாமே
யிமையோ ரேத்த வீற்றிருக்கு
மினிய சுவைத்தீஞ் செழுங்கனியே
யாசு கலவா வடிவுடைய
வமிழ்தே வருக வருகவே
யகில முயிர்த்த வுயிர்க்குயிரா
மன்னே வருக வருகவே. (7)
_________
சந்த மறையி னுச்சி யெனச்
சான்றோர் பரவு முபநிடமுந்
தன்மை தெரியாத் தடுமாறுஞ்
சமையா தீதப் பழம்பொருளே
பந்த மிகந்த பதியியலும்
பாசத் தியலுந் தம்மியலும்
படிறின் றுணர்ந்துன் வழிநிற்போர்
பவக்கா டெரிக்கும் தழற்பிழம்பே
நந்தல் கெழுமா தளவைகளா
னாட்ட லாகாச் சுகப்பெருக்கே
நாளும் வடுக நாதபுர
நயந்த வின்சொற் கோகிலமே
யந்த நடுவில் வடிவுடைய
வமிழ்தே வருக வருகவே
யகில முயிர்த்த வுயிர்க்குயிரா
மன்னே வருக வருகவே. (8)
__________
தும்பை முதல நறுமலருங்
தூய வுள்ளத் தன்பும்விராய்த்
தொடுத்த திருப்பள் ளித்தாமஞ்
சூட்டத் தொடங்குங் கானுசிப்பிற்
பம்பு துகில்சோர் தரவதனைப்
பற்றி முழங்கை யாலிடுக்கிப்
பரிந்து வருந்து மொருதெரிவை
பத்திக் கிரங்கிப் பொன்முடியை
யிம்பர் வளைத்த வும்பர்பிரா
னிடப்பா கத்தின் மடப்பாவா
யிசைசேர் வடுக நாதபுரத்
தெம்பி ராட்டி வினைக்கார்கோட்
கம்பி நிகர்தாள் வடிவுடைய
வமிழ்தே வருக வருகவே
யகில முயிர்த்த வுயிர்க்குயிரா
மன்னே வருக வருகவே. (9)
_______
ஒளியா யகண்ட வெளியான
வுமையே வருக நமையாளு
மொருவ னுள்ளக் கிழியெழுது
முருவே வருக கழைச்சாற்றின்
றெளிவே வருக மலைப்பிறந்த
தேனே வருக மெஞ்ஞானச்
செறிவே வருக பரமுத்தித்
திருவே வருக பேரின்பக்
களியே வருக யோகியருட்
கண்ணே வருக வண்ணலஞ்சீர்க்
காமர் வடுக நாதபுரங்
கனிந்த கனியே நீவருக
வளிமீ தூரும் வடிவுடைய
வமிழ்தே வருக வருகவே
யகில முயிர்த்த வுயிர்க்குயிரா
மன்னே வருக வருகவே. (10)
வருகைப்பருவ முற்றிற்று.
__________
அம்புலிப்பருவம்.
பேரா யிரங்கொண்ட பெருமாட்டி கலைகளிற்
பீடுற நிரம்பி நின்றாள்
பெரியோர்க ணின்னையுங் கலைகளி னிரம்பியுள
பெற்றியா னென்று ரைப்ப
தாரா கணத்தினுக் கரசனென வுன்னைச்
சகத்திரய முங்கி ளக்குந்
தவாதுபல் வகைப்படு கணங்கட்கு மரசியாய்ச்
சந்ததமு மிவணி லவுவா
டேராத வர்க்காண நாணிநீ வெள்குவாய்
தேவியின் னவளு மாங்கே
தேராத வர்க்காண நாணுவா ளித்தகு
திறத்தினெஞ் செல்வி யொத்தா
யாராய்பு வைரவன் கோயில்வள ரம்மையுட
னம்புலீ யாட வாவே
யடியரிடர் பொடிசெயடல் வடிவுடைய பிடியினுட
னம்புலீ யாட வாவே. (1)
___________
உலகுபா ராட்டும் பெருந்தவத் தத்திரியி
னுழையுதித் திட்ட செயலா
லொருவாத கற்புமலி மாதரைப் புல்லினோ
ருள்ளகங் குளிர்வித் தலால்
விலகுறா விறல்கொண்டு கோலத்தை யெய்துபொலி
வேடனை யுவப்பித் தலால்
வேறுதுணை யில்லென விரைந்துகண் ணீர்வார்த்து
வேண்டுமிர வலரை நோக்கி
நிலவணிக் கரமமைத் தளிபுரியு நீரா
னிகழ்த்துமமிர் தத்தை மெய்யி
னேர்தலா லொண்மணிக் கண்மணிப் பெண்மணி
யைநீயுமொரு வாறு நேர்வா
யலகில்சீர் வைரவன் கோயில்வள ரம்மையுட
னம்புலீ யாட வாவே
யடியரிடர் பொடிசெயடல் வடிவுடைய பிடியினு
டனம்புலீ யாட வாவே. (2)
________
முன்னர்நின் மரபில்வரு முடிமுடி முடிச்செழியன்
முதுபுண்ணி யத்தி னாற்றான்
முத்தன நகைச்சிறிய முத்தனக் குழவியின்
முகிழ்த்தமை கருத்து ளோர்ந்தோ
தன்னமிச மென்னவுனை மன்னுபல நூலுந்
தழங்குமொற் றுமைபற் றியோ
தம்பிரான் சடைவைகி யெற்றைக்கு நீங்காத்
தனக்குமகிழ் செய்தி யென்றோ
நன்னர்நக ராசனாந் தந்தைபோற் பனிமேனி
நண்ணுதி யெனக்கு றித்தோ
நளினத் தளிர்க்கரத் திருவிரலி னிற்சுட்டி
நாடி யழையா நின்றன
ளன்னவயல் வைரவன் கோயில்வள ரம்மையுட
னம்புலீ யாட வாவே
யடியரிடர் பொடிசெயடல் வடிவுடைய பிடியினு
டனம்புலீ யாட வாவே (3)
_________
நீடலையி னாற்கரையை மோதுமுவர் நரலைவாய்
நித்தலும் தோன்றி மறைவாய்
நிலைபெறு சிவானந்த வாரிதியி டத்தெழீஇ
நின்றென்று மிவணி லவுவாள்
கோடணவு தபநியக் குன்றத்தை வைகலுங்
குலவிவல மாக வருவாய்
கூறுமம் மேருமால் வரையினைச் சிலையாக்
குழைத்துப் பிடித்த திவள்கை
வீடல்புரி யரவங் கறித்துமென் றுண்டுமிழ
வெய்துயிர்த் திடுதி யிவளோ
விண்டவப் பாந்தள்கட் கிறையைக் கனிட்டைக்க
கண்மென்மோ திரஞ்செ றிப்பா
ளாடலமர் வைரவன் கோயில்வள ரம்மையுட
னம்புலீ யாட வாவே
யடியரிடர் பொடிசெயடல் வடிவுடைய பிடியினு
டனம்புலீ யாட வாவே. (4)
__________
கொழிநிலாத் துன்னிய வுடம்பிற் களங்கமாங்
குறுமுயற் கறைப டைத்தாய்
கும்பிட்டு வாழ்த்துவோர் மும்மலக் கறையுங்
குமைத்திவ ளவர்ப் புரக்கும்
வழிவிடா தடருங் குருட்டிருட் டுக்கங்குல்
வாய்விசும் பூடு லவுவாய்
மண்டுமகி லாண்டத்தி னுள்ளும் புறம்புமன
வரதமிவள் சேர்ந்து லவுவாள்
பழிவிராம் படியெவரு நினைகலா வைந்துமா
பாதகத் தொன்று செய்தாய்
பாபவர்க் கங்களிவள் பேர்சொன்ன பேரையும்
பற்றாம லோட்டெ டுக்கு
மழிவிலா வைரவன் கோயில்வள ரம்மையுட
னம்புலீ யாட வாவே
யடியரிடர் பொடிசெயடல் வடிவுடைய பிடியினு
டனம்புலீ யாட வாவே. (5)
_________
பாதவ முதற்பொருள்கள் யாவும் பசும்பொலன்
படிவங் கிடைத்து மிளிரும்
படியிலா வானாட்டி லளவிலாப் புத்தேளிர்
பரவிய விருந்த வேந்தும்
பூதலா தியபல்ல வுலகும் படைத்திட்ட
புங்கவனு மங்க வற்றைப்
புரந்தளி புரிந்துபாற் புணரிதுயில் புயல்வணப்
புருடோத் தமக்கு ரிசிலுங்
காதலாற் போற்றிக் கடைக்கணரு ளெய்துமா
கடைவாயி லிடைநிற் பவுங்
கருதியிவ ளென்கொலோ வருதியென வுனைமலர்க்
கைகொடு விளிக்கின் றன
ளாதலால் வைரவன் கோயில்வள ரம்மையுட
னம்புலீ யாட வாவே
யடியரிடர் பொடிசெயடல் வடிவுடைய பிடியினு
டனம்புலீ யாட வாவே. (6)
__________
குழகுபடு நின்மேனி நாடொறுந் தேய்வுறுங்
குறையையுஞ் சிந்தித் திலாள்
கொண்டமனை யாட்டியரை யொப்பநோக் காத்தீக்
குணத்தையு மனத்தி லெண்ணாண்
மழகளிற் றானனத் தன்சேயை யொருஞான்று
மதியின்றி யெள்ளி யந்தோ
மன்பதைகள் காணுதற் கொண்ணாப் புலைத்தன்மை
வாய்த்தநின் புன்மை யுன்னாள்
பழகியரன் முடியிற்றன் மாற்றவளி னோடுதவழ்
பான்மையைச் சிறிது நினையாள்
பண்டுநீ பெருநோன் புஞற்றியுளை போலும்
பரிந்துனை விரைந் தழைத்தா
ளழகுநிறை வைரவன் கோயில்வள ரம்மையுட
னம்புலீ யாட வாவே
யடியரிடர் பொடிசெயடல் வடிவுடைய பிடியினு
டனம்புலீ யாட வாவே. (7)
___________
மேலுரைத் திட்டநின் பாவமும் பழிகளும்
விதவாத வேனை மிறையு
மேதக்க கன்னியிவள் சந்நிதியை மேவுமுன்
வெந்தழற் றுய்யின் வீயு
நாலுமறை யோதிமலர் மேலுறையும் வாலுணர்வி
னான்முகக் கடவு ளுக்கு
நாராய ணப்பெயர்ச் செம்மற்கு மேலாய
நற்பதம் பெற்றுய் யலா
மேலுமிவ் வெல்லாமொர் பொருளல்ல வழியா
திலங்குபர முத்தி வீட்டி
லிருவியுனை நிரதிசய வானந்த முந்தருவ
ளெட்டுணையு மைய மில்லை
யாலுமயில் வைரவன் கோயில்வள ரம்மையுட
னம்புலீ யாட வாவே
யடியரிடர் பொடிசெயடல் வடிவுடைய பிடியினுட
னம்புலீ யாட வாவே. (8)
________
மாணிக்க மனையசிறு மாணிக் கலக்கண்செய்
மறலிதரை விழவு தைத்தோன்
மாறடு சலந்தரனை விரலெழுது திகிரிகொடு
மன்னுயிர் குடித்த திறலோன்
வாணிக்கு மணவாளன் மீக்குலவு சிரமொன்றை
வள்ளுகிரி னாற்ற டிந்தோன்
வஞ்சகத் தாருகா வனவிருடி மார்வேள்வி
வந்தன வொருங்க டர்த்தோன்
வேணிற்கு நிலைகுலைய விழிசற் றலர்த்தவனை
வெண்ணீ றெனக்கண் டவன்
மேயபுல விக்காலை யிவள்காலை முடிபுனைவன்
வெகுளினுய் வரிது கண்டா
யாணிப்பொன் வைரவன் கோயில்வள ரம்மையுட
னம்புலீ யாட வாவே
யடியரிடர் பொடிசெயடல் வடிவுடைய பிடியினு
டனம்புலீ யாட வாவே. (9)
_______
மாகலோ கத்தரையு நாகலோ கத்தரையும்
வாட்டித் துரந்த கொடிய
மயிடாதி யசுரரை மடங்கலூ ருய்த்தெறுழ்
மடங்கலூர் கன்னி யிவடன்
பாகமார் பல்கலையி லோர்கலைக் கூறெனும்
பரிசினையு மறிய கில்லாய்
பைந்துழாய்ப் படலையரி முன்னாய தேவரைப்
பருவேத் திரத்து மொத்து
மேகனா நந்தியெம் பெருமானும் வெந்நிட்
டிரிந்தோட வன்று வென்ற
விவண்முனியி னின்னோடு போகாது வல்லை நீ
யெய்திற் பிழைப் புனக்குண்
டாகலால் வைரவன் கோயில்வள ரம்மையுட
னம்புலீ யாட வாவே
யடியரிடர் பொடிசெயடல் வடிவுடைய பிடியினு
டனம்புலீ யாட வாவே. (10)
அம்புலிப்பருவ முற்றிற்று.
_____________
அம்மானைப்பருவம்.
பாசபந் தப்பெரும் பண்டநிறை யாநின்ற
பல்குயிர்த் துச்சி லின்கட்
பதியுமுன தறுகோடி சத்திநின் கைப்புகூஉப்
பலவன்ன பேத மேவி
மூசுமே லுலகிடைப் போய் மீளு மாறெனவு
முளரியம் போதி னின்று
மொய்த்தெழீஇப் பல்வகைப் பொறிவரிய வண்டி
னமுழுத்த கற்பக நறுமலர்
வாசமலி யினியசுவை வழிநறவு பருகுவான்
வானகம் புகுவ வெனவும்
வளரொளிப் பரமனார் வாமபா கத்துறையு
மணிநகைக் கவுரி யுமையே
யாசகலும் வைரவன் கோயில்வா ழம்பிகே
யம்மானை யாடி யருளே
யதுலவடி வுடையா ளெனும்பெயர் தரித்தகுயி
லம்மானை யாடி யருளே. (1)
___________
வானாரு மண்டபகி ரண்டங்கள் யாவையு
மனக்கொள்சங் கற்பத் தினால்
வல்லையிற் சிட்டித் தனந்தவிளை யாட்டயரு
மாதேவி நீயா தலை
யூனாரு முயிர்கள் கண் கூடா வுணர்ந்துய்ய
வுவையிற்றை யங்கை பற்றி
யொன்றன்பி னொன்றாக முறுவல்பூத் துவகையா
லும்பரெறி பரிசு மானத்
தேனாரு மிதழியுந் தும்பையுங் கங்கையும்
திங்களும் தங்கி மிளிருஞ்
செஞ்சடில வளரொளித் தேவதே வன்பாற்
றிருந்துற விருந்த விமலா
யானாத வைரவன் கோயில்வா ழம்பிகே
யம்மானை யாடி யருளே
யதுலவடி வுடையா ளெனும்பெயர் தரித்தகுயி
லம்மானை யாடி யருளே. (2)
________
முத்தொளி ததும்புநின் னம்மனையி னெழுகிரண
மூடிருட் காட ழித்து
மூதண்ட மூடுருவி மாதிர வரைப்பெலா
முழுநிலவு காலு மதனாற்
றத்துபுன லுறுமிதழ்த் தாமரை யொடுங்கவும்
தழைகுமுதம் வாய்விள் ளவுந்
தம்முரிக் கணவர்ப் பிரிந்தமட வார்குழாஞ்
சாலமா ழாந்த யரவுஞ்
சித்திரம் வகுத்தனைய விருவகைப் பூமருவு
சேடியர் கரங்கூப் பவுஞ்
செகதலத் துள்ளார் வியப்பெய்தி நோக்கவுஞ்
சிந்தைநனி களிகூர்ந் துநீ
யத்தகைய வைரவன் கோயில்வா ழம்பிகே
யம்மானை யாடி யருளே
யதுலவடி வுடையா ளெனும்பெயர் தரித்தகுயி
லம்மானை யாடி யருளே. (3)
__________
நவமணி குயிற்றியொளி காலுமம் மனையுனது
நற்கரத் தெழுதல் காணூஉ
நளிர்கடன் முகட்டினின் றளவிலாக் கோள்களொ
டுநாள்களுஞ் சென்று மீப்போய்க்
குவலய வளாகத்து மீட்டுமடை கின்றன
குலாயவிச் செய்கை யார்க்குங்
குணிப்பதற் கெட்டாத பெரியவிம் மிதமெனக்
கூறிமா னவர்கண் மகிழத்
தவமுடிவின் வெளிவருநி னவவுருவ மென்னவே
தக்காரி றைஞ்சி நிற்பச்
சரண்புக் கவர்க்குமெய்ச் சரணாய வளரொளிச்
சங்கர னிடங் கவர்ந்தா
யவமொருவு வைரவன் கோயில்வா ழம்பிகே
யம்மானை யாடி யருளே
யதுலவடி வுடையா ளெனும்பெயர் தரித்தகுயி
லம்மானை யாடி யருளே. (4)
___________
வெடிவிடா வெண்முல்லை முகைநகை யரம்பையரும்
வெற்பரையன் மனைமே னையும்
விண்ணவர்க் கிறைவனைப் பிரியாப் புலோமசையு
விளரிப்ப ணளிமி ழற்றுங்
கடியுலாம் பங்கேரு காதனத் தினிதமர்
கருங்குழற் றையன் மாருங்
கண்பெற்ற பேற்றையா மின்றுபெற் றனமெனக்
கண்ணுற்று வாழ்த்தெ டுப்ப
முடிவிலா வாருயிர்கள் போக்குவர வைப்புரியு
முறையைத் தெளிப்ப போன்று
முதிரொளிய வம்மானை முன்னரும் பின்னரு
முயங்கிமீ தோங்கி மீள
வடியர்சேர் வைரவன் கோயில்வா ழம்பிகே
யம்மானை யாடி யருளே
யதுலவடி வுடையா ளெனும்பெயர் தரித்தகுயி
லம்மானை யாடி யருளே. (5)
__________
வேறு.
உப்புட னுதகம் விராய தெனப்பல
வுயிர்தோ றுஞ்செறிவா
யொள்ளிய மணியிற் சுடரென வளரொளி
யும்பர் பிரான்பாங்க
ரெப்பொழு துந்தண வாமே வைகிய
விறைவீ மறைமுடியு
மின்ன வியற்கைய ளென்னா வின்னமு
மெய்த்தறி தற்கரியாய்
செப்பிடு மவனவ ளதுவென நின்ற
செகத்துச் சீவகணஞ்
சேர வுயிர்த்துத் தாயாய்த் தலையளி
செய்து வளர்ப்பவளே
யப்புவ ளங்கிளர் வடுக புரத்தா
ளாடுக வம்மனையே
யருண்முகி லாகிய வடிவுடை நாயகி
யாடுக வம்மனையே. (6)
________
பீடுறு மாதவர் தேடிய பொருளே
பெண்ணுரு வாயகிலம்
பெற்று விளங்கு மிளங்கொடி யின்பம்
பெருகு பயோததியே
யோடுஞ் செம்பொனு மொப்பக் காண்பவ
ருள்ளத் தொருவகிலா
யோமென நின்ற பதத்தி லடங்கிய
வுள்ளுறை யின்பயனே
வேடுரு மேவிக் கேழற் பின்போய்
விசையெனொ டமராற்றி
வில்லடி யுண்ட பிரான்மெய்ப் புண்ணற
மென் முலை வேதிடுவா
யாடல ரங்கார் வடுக புரத்தா
ளாடுக வம்மனையே
யருண்முகி லாகிய வடிவுடை நாயகி
யாடுக வம்மனையே. (7)
______
மாழை நிறத்துத் தாதியர் தங்கண்
மனக்களி தீராமே
மாமது சூதன னோடு விரிஞ்சன்
வயிற்றொழில் போகாமே
வேழ முகத்தின னாறு முகத்தன்
விருப்பமு மாறாமே
விட்புல வாணர் நிமித்தமி ழைக்கும்
வேள்விக டேயாமே
பூழி யெனக்கரு வேளையெ ரித்தவர்
பொன்னட மோயாமே
புத்தமு தச்சுவை யொத்துத் தொண்டர்கள்
புந்திபொ ருந்தமலா
யாழிய வகழ்சூழ் வடுக புரத்தா
ளாடுக வம்மனையே
யருண்முகி லாகிய வடிவுடை நாயகி
யாடுக வம்மனையே. (8)
_________
நகமு னளித்து வளர்த்த பசுங்கிளி
நான்மறை முடிகாணா
நாதனி டப்புற மோவுத லோவிய
நண்ணிய புண்ணியமே
மகமுறு குண்டத் தங்கியி னவிகள்
வழங்கத் தாம்பெற்று
மகிழ்வொடு மேக்கெழு பற்ப னிறத்தவர்
வானாட் டவரேய்ப்பத்
தகவுறு மொன்பான் வகைமணி யாற்குயில்
சாலொளி யம்மனைக
டளிர்நிகர் பாணியி னின்றுய ரும்படி
தாரணி நாரணியே
யகரநி ரம்பிய வடுக புரத்தா
ளாடுக வம்மனையே
யருண்முகி லாகிய வடிவுடை நாயகி
யாடுக வம்மனையே. (9)
________
கொங்குவி ரிந்து நறுந்துளி சிந்திய
கொழுநற வினிதுண்டு
கோதறு பண்க ளளிக்குல மோதுங்
குளிர்மலர் துறுசோலை
தங்கிவ ளைந்து கவிந்து நிழற்றத்
தண்மையு மினிமையுமேய்த்
தவநிறை தந்து தெளிந்து தடாகந்
தாப மகற்றியிடப்
புங்கவ ரிமையா மைக்குறு காரண
பூத ரெனப்பொலியும்
புரிகுழன் மடவிய ரைம்புல னுக்கும்
போகம் புதிதூட்ட
வங்கணி பொங்கிய வடுக புரத்தா
ளாடுக வம்மனையே
யருண் முகி லாகிய வடிவுடை நாயகி
யாடுக வம்மனையே. (10)
அம்மானைப்பருவ முற்றிற்று.
______
சிற்றிற் பருவம்.
மூவருறை யுயர்வீடு முத்தியின் பென்றோது
முழுநிதியம் வைக்கும் வீடு
மோனஞா னானந்த சிவயோக நிலைகண்ட
முனிவர்கள் வசிக்கும் வீடுங்
காவலைக் கடவுள ரிடத்தாற்று கின்றமெய்க்
கண்ணா யிரற்கு வீடுங்
கதிகொளிரு சுடர்வீடு மெண்டிசைப் பாலகர்
களித்தமரும் வீடு நாள்கோள்
பாவிய சிறப்புமலி வீடுமாழ் பாதலம்
பற்றிவாழ் நாகர் வீடும்
பகுத்துத் தனித்தனி யியற்றிவிளை யாடுநீ
பாங்கிமா ரேத்தெ டுப்பத்
தேவர்தொழு மாவடுக நாதபுர மேவுபரை
சிறுவீடு கட்டி யருளே
தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
யள் சிறுவீடு கட்டி யருளே. (1)
________
எழுவகைத் தாதுவினொ டைவகைப் பௌதிகமு
மேய்வித்து நீடி மல்கு
மெழுபத் திரண்டா யிரத்தொகை நரம்பினையு
மேலுமா றுறவி சைத்து
நழுவலற மூன்றரைக் கோடியெனு மயிர்வேய்ந்து
நவவாயி லூடி யற்றி
நாலினோ டொன்பதுறழ் தத்துவப் பெயர்பூண்ட
நற்காவல் வினையா ளரைப்
பழகுற வமைத்துமன் பதைகட்கு வாழ்வீடு
பற்பல விழைத்திட் டவை
பழுதுபடின் வேறுமவ் வாறுபுரி யம்மையே
பரம கருணா நிலயமே
செழுநிழற் பொழில்வடுக நாதபுர மேவுபரை
சிறுவீடு கட்டி யருளே
தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
யள் சிறுவீடு கட்டி யருளே. (2)
_________
துஞ்சலில் லாதமறை நாற்சிகரி யாகத்
துலங்குமா றங்க மெயிலாத்
தொலைவிலறு பத்துநாற் கலைகளுயர் மாடமாத்
தூயபதி னெண்பு ராண
மெஞ்சலறு மகழியா வெழில்கொள்வே தாந்தநூ
லின்குளிர் நிலா முற்றமா
விருபதிற் றெட்டா கமங்களத் தாணியா
வெழுகோடி மனுவின் மிக்க
வஞ்சக் கரத்தரசு வீற்றிரா நின்றமெய்
யடியா ருளக் கோயில்க
ளமைத்தெம் பிரானோடு மக்கோயி றோறும்விளை
யாடுநீ யுவகை கூர்ந்து
செஞ்சொல்வண் டமிழ்வடுக நாதபுர மேவுபரை
சிறுவீடு கட்டி யருளே
தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
யள் சிறுவீடு கட்டி யருளே. (3)
_____________
அண்டமென் றோதுபெரு வெளியிலீ ரேழுநக
ரவ்வவற் றளவில் சிற்றூ
ரன்னவை யனைத்திற்கு மூன்றுதொழில் புரிகின்ற
வதிகாரி கண்மூ வராச்
சண்டனனி தாழ்ந்தவரை யுயிர்வெளவு கொலையாளி
சன்மார்க்க துன்மார்க்க மேற்
சரித்திடாச் சோதனைசெய் வாரிருவ ராகச்
சமைத்துமத் தன்மை போலப்
பிண்டத் தினுந்தந்து பொய்தலாட் டயரும்
பெருந்தகைச் சிறிய விடையாய்
பெற்றமூர் பெம்மான் றனித்துண்டு மூழ்குமற்
பேரின்ப மாவெள் ளமே
திண்டடஞ் சோவடுக நாதபுர மேவுபரை
சிறுவீடு கட்டி யருளே
தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
யள் சிறுவீடு கட்டியருளே. (4)
_________
ஆணினொடு பெண்புண ரருத்திகூர் கலவிக்க
ணாங்குவரு சிறிய துளியை
யங்ககர ணங்கள்சேர்த் தாகமாக் கிச்சீவ
னாரையுங் குடிபு குத்தி
வீணுறு மகங்கார மமகார முங்கொளுவி
வெய்யபிர பஞ்ச மென்னும்
வேலைக் கிடந்தலைய விட்டாடல் பார்க்கின்ற
மெல்லிய வியற்செல் வியே
வாணியிந் திரையிந்தி ராணியா தியமாதர்
வாய்புதைத் தேவல் கேட்ப
வையமக ளென்னிற் சிறந்தாரி யாண்டுமிலர்
வாய்மை யீதென் றுவப்பச்
சேணுலகு பணிவடுக நாதபுர மேவுபரை
சிறுவீடு கட்டி யருளே
தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
யள் சிறுவீடு கட்டி யருளே. (5)
__________
வேறு.
அறிவின் முதிர்ந்தவர் பரவு பெரும்பொரு
ளமுத நிறைந்தமதீ
யயனரி சுரபதி முதலிய தலைவர்க
ளனுதின மும்பரசி
மறைமொழி யாற்றொழ வினிது கடைக்கண்
வழங்கரு ளின்கடலே
மந்தர மத்தினை நிறுவித் தேவரும்
வல்லசு ரருமீர்ப்பக்
கறைவிட மாழியின் வாய்வர வெவருங்
கண்டு வெரீஇயெம்மைக்
காத்தி யெனப்புக வதனைத் துய்த்த
கபர்த்தி புறத்தமர்வாய்
செறிபொழில் சுலவிய வயிரவ பதிநிதி
சிற்றி லிழைத்தருளே
திருவுரு விடைமிடை வடிவுடை மயிலியல்
சிற்றி லிழைத்தருளே. (6)
__________
சேவை யுயர்த்தவர் நுதல்விழி நின்றெழு
சேவல் விறற்றுவசன்
றிசையீ ரைந்துந் திகிரி யுருட்டிய
தீச்சூர் முதலட்டுக்
காவர சுக்குப் பொன்னக ரரசைக்
கைக்கொள நல்கிளையோன்
கருணை நிறைந்து ததும்பு சடானன
காங்கே யக்குரிசில்
வாவி மடித்தல மீதிவ ரச்செவ்
வாய்முத் தங்கொண்டு
வாழிய வென்கண் மணியே யென்று
மகிழ்ச்சி துளும்புறுவாய்
சீவர் சிவம்பெறு வயிரவ பதிநிதி
சிற்றி லிழைத்தருளே
திருவுரு விடைமிடை வடிவுடை மயிலியல்
சிற்றி லிழைத்தருளே. (7)
_________
சூல மெடுத்தவ னால மிடற்றன்
சுத்த னிராலம்பன்
சொப்பிர காசத் தப்பிர மேயன்
துரிசறு மேனிக்குக்
கோல மியற்றியொர் பாக மிருக்குங்
கோமள சுந்தரியே
கோவல னாகிக் குன்று கவித்த
குணக்குன் றுக்கிளையாய்
மூலமு நாப்பணு மந்தமு மாகி
முளைத்த முழுப்பொருளே
மொய்த்துயர் புகையால் விண்கரி தெனுமா
முத்தீ மேதஞ்செய்
சீலர் நெருங்கிய வயிரவ பதிநிதி
சிற்றி லிழைத்தருளே
திருவுரு விடைமிடை வடிவுடை மயிலியல்
சிற்றி லிழைத்தருளே. (8)
_________
வேத மெனும்புனல் வாவி யெழுந்து
விரிந்து தழைந்துமணம்
வீசுபு நினையே நினையுந் தொண்டர்கள்
வித்தக நெஞ்சென்னுங்
காதல ளிக்குக் கருணைத் தேனைக்
காலுந் தாமரையே
கங்கண மாசுண வங்கணர் சங்கரர்
காலனை யடர் காலர்
பூத ரகந்தொறு மண்ணிய நுண்ணியர்
பூத கணப்படையார்
புரகர ரங்கத் திடமே யிடமாப்
பொலியும் பூம்பாவாய்
சீதள மார்பணை வயிரவ பதிநிதி
சிற்றி லிழைத்தருளே
திருவுரு விடை மிடை வடிவுடை மயிலியல்
சிற்றி லிழைத்தருளே. (9)
__________
முத்தி நறுங்கனி யிச்சித் தவர்கொள
முன்னித் தருதருவே
மூசிய நிலவு பரப்புங் கைலையின்
முன்னவன் யாவர்க்கு
மத்தன் பாலிரு நாழிய நெற்பெற்
றளவி லறஞ்செய்தா
யரியய னுளமெனு நகுசின கரமுறு
மாதி பராபரையே
வித்தகர் மெய்த்தவர் விப்பிரர் நித்தலும்
வேண்டிப் போற்றியிட
வினையை யொழித்துப் பதியொடு சேர்க்கும்
மென்னடை யோதிமமே
சித்தர் குழாங்கஞல் வயிரவ பதிநிதி
சிற்றி லிழைத்தருளே
திருவுரு விடைமிடை வடிவுடை மயிலியல்
சிற்றி லிழைத்தருளே. (10)
சிற்றிற்பருவ முற்றிற்று.
_______
ஊசற்பருவம்.
எழில்குலவு நான்மறைக் காலின்மே லுபநிடத
மென்கின்ற சுற்றணி யினை
யியைபுறச் சூழ்போக்கி யாகமப் பலகையை
யிசைத்து முத்திக் குரியவாம்
வழிகுலவு மைந்தெழுத் தாயமணி பீடத்தை
வாய்ப்பப் பதித்தல் செய்து
வரைவிலா வெண்ணான் கிரட்டிய கலைக்குழுவை
வார்தொட ரெனப்பி ணித்துப்
பழிகுல விடாதபர நாதாந்த வீட்டிலுள
பண்ணமையு மூச லேறிப்
பரசிவ னசைப்பவே கழிபெரு மகிழ்ச்சியொடு
பல்காலு மாடல் புரிவாய்
பொழில்குலவி வள மலியும் வடுகபுர மாதரசி
பொன்னூச லாடி யருளே
பொருவரிய வடிவுடைய புனிதைதிரி புரைவரதை
பொன்னூச லாடி யருளே. (1)
__________
தேற்றமுறு முனதுதிரு முககருணை வாரிதித்
தெள்ளமுத முள்ளிட மெலாந்
தேக்கித் திளைக்குமடி யார்மனத் தொட்டிலிற்
சேர்ந்தனையர் பத்தி யுந்தத்
தோற்றமுறு ஞானநித் திரைபுரியு மம்மையே
சொல்லிய நினைக்க வெட்டாச்
சுத்ததுரி யாதீத நிலயமக லாதுறை
சுகாரம்ப மோன வெளியே
யாற்றலுறு தலைமையை யடைந்தவா னோர்பதவி
யத்தனையு மைதி னாட
வம்பலத் துண்ணின்று பேரின்ப நடநவிலு
மங்கணா னெஞ்ச மாடப்
போற்றுநர் நினைத்தபெறும் வடுகபுர மாதரசி
பொன்னூச லாடி யருளே
பொருவரிய வடிவுடைய புனிதைதிரி புரைவரதை
பொன்னூச லாடி யருளே. (2)
________
அன்புற்ற வைம்பத்தொ ரக்கரத் துருவமா
யாதியொ டனாதி யாகி
யாணினொடு பெண்ணலி யெனப்பரவு முயிரகத்
தவியா திலங்கு சோதி
யின்பத்து ளின்பமே யெழிலினுக் கெழிலே
யிருந்தவ ருளத்தி ருந்தா
யிரண்டுமின் றொன்றுமின் றத்துவித வியல்புறீஇ
யெங்கணு நிறைந்து நின்றாய்
முன்புற் றடைக்கலம் புக்கிடை விடாதுள்ள
முண்டக மலர்த்து தொண்டர்
முன்னியன வென்னவைய மன்னபொழு தேயுதவு
முழுமுதா லெம்பி ராட்டி
பொன்பெற்ற செல்வர்வாழ் வடுகபுர மாதரசி
பொன்னூச லாடி யருளே
பொருவரிய வடிவுடைய புனிதைதிரி புரைவரதை
பொன்னூச லாடி யருளே. (3)
_________
ஒன்றாகி யிகபர மிரண்டாய்க் குணங்கண்மூன்
றும்மாகி வேத நான்கா
யோதெழுத் தைந்தாகி யங்கங்க ளாறாகி
யுலகடுக் கேழு மாகிக்
குன்றாத திசையெட்டு மாகியே வடிவெனக்
கூறுமொன் பானு மாகிக்
கூறுபடு வளிபத்து மாகிக் குலாவுவாய்
கொண்டலங் கண்டத் தினா
னன்றான பாகத் திருந்தெற்றை ஞான்றுமிளிர்
நந்தா மணித்தீ பமே
நாரதன் றும்புரு விசைக்குமிசை கேட்டுமகிழ்
நங்கைமா தங்கி கௌரீ
பொன்றாத புகழ்கொண்ட வடுகபுர மாதரசி
பொன்னூச லாடி யருளே
பொருவரிய வடிவுடைய புனிதைதிரி புரைவ
ரதை பொன்னூச லாடி யருளே. (4)
_______
நற்பரம முத்திபெறு ஞானசம் பந்தாதி
நவில்சைவ சமய குரவர்
நால்வர்திரு வாய்மலரு மினியதமிழ் வேதமா
நளிர்பாற் கடற்பி றந்த
வற்புதப் பொருளமுத மள்ளூற நெஞ்சா
லருந்தும் பெருந்த வத்தோர்க்
கழியாத நித்தியா னந்தமய வீட்டினை
யளிக்கும்வள் ளன்மை பூண்டாய்
சிற்பரம் பொருளைத் தெளிந்தனு பவிக்கின்ற
சிவயோக நிலைகை வந்தோர்
சிரமீது கரமேற வஞ்சலித் தேத்தநின்
சிற்றடி யுளம்ப திப்பாய்
பொற்புரிசை வானோங்கு வடுகபுர மாதரசி
பொன்னூச லாடி யருளே
பொருவரிய வடிவுடைய புனிதைதிரி புரைவரதை
பொன்னூச லாடி யருளே. (5)
_________
வேறு.
மாசி லாதபெரி யோர்மனக் ககன
மன்னியே நிலவு மதியமே
மன்னு முக்கனியி னிரத மாகிநவ
மணிக ளூடுலவு சுடருமாய்த்
தேச காலமொடு திசையு மாகியிரு
திணையெ னப்பரவு முயிருமாய்த்
திகழொளிக் கொளியு மாகி நின்றிலகு
திப்பியக் கமல வதனியே
காசி லாதகன கத்தினைக் கொடு
கணக்கி றந்தபணி காட்டல்போற்
கரிய மாயைகொடு புவன போகதனு
கரண முந்தருகௌ மாரியே
யோசை வேதமலி வயிர வப்பதிமி
னூச லாடியரு ளூசலே
யுவகை நல்குவடி வுடைய நல்லிறைவி
யூச லாடியரு ரூசலே. (6)
____________
குவல யத்துயர்வு மொப்பு நீத்தினிய
குணக ணந்துறுமு சலதியாய்க்
கோதி லங்கமறை யாறு நாலும்வெகு
கூறு பாடுகெழு மேனைய
நவையில் பல்கலையு முய்த்து ணர்ந்தவை
நவின்ற வாறொழுகு மந்தணர்
நாளும் வான்மருவு பண்ண வக்குழு
நயந்து தம்முருவி னோடுவந்
தவியை யேற்கும்வகை யாற்று கின்றன
வனந்த மானமக சாலைதோ
றவித லின்றிவள ரங்கி தங்குதலி
னல்லிருட் பரிசை யறிகலா
துவணு யர்ச்சியுறு வயிர வப்பதிமி
னூச லாடியரு ளூசலே
யுவகை நல்குவடி வுடைய நல்லிறைவி
யூச லாடியரு ளூசலே. (7)
___________
ஆடகப் பொதுவின் மாடுறத் திகழு
மதுல ஞானமய வெளியினின்
றரவ நீண்முனியு முழுவை மாதவனு
மகநெ கிழ்ந்துருகி நோக்கவு
மாடகத் திவவி யாழி னாரதனு
மன்னு தும்புருவு மருகுமேய்
மல்கு மாதுரிய நாத கீதமது
மாதி ரம்படர வார்க்கவு
மீடில் பேரறிவு கூரு நந்திபர
னேலு மாமுழ வதிர்க்கவு
மின்ப நாடக மியற்று நாயக
னிடத்து வாழுமெம தன்னையே
யூடு லாவுமெழில் வயிர வப்பதிமி
னூச லாடியரு ளூசலே
யுவகை நல்குவடி வுடைய நல்லிறைவி
யூச லாடியரு ளூசலே. (8)
___________
கரக பாலதரன் மதன வேளையடு
கண்ணுதற் கடவு ளாடவே
காட கும்பமத கரிமு கத்தெனாடு
கந்த சுந்தரனு மாடவே
பரம மாகியவை குண்ட நீத்துததி
பள்ளி கொள்ளுமுகி லாடவே
பங்க யத்தவிசி னும்பர் மேவுபு
படைத்திடும் பிரம னாடவே
சுரகு லாதிபதி யாதி யெண்டிசை
துதைந்த காவலவ ராடவே
சொற்ற நான்குவகை யோனி யிற்கதி
தொடர்ந்த மன்பதைக ளாடவே
யுரனி னீடுமெயில் வயிர வப்பதிமி
னூச லாடியரு ளூசலே
யுவகை நல்குவடி வுடைய நல்லிறைவி
யூச லாடியரு ரூசலே. (9)
______
தேங்கு லாவிவழி செய்ய தாமரை
செறிந்த வாவிநிகர் தேவியே
சிற்ப ரானெழுது தற்கொ ணாதவொரு
திப்பியச் சொருப சிற்பராய்
நீங்க லாதவழ கென்னும் வாரிதியி
னின்றெ ழுந்தவிரு குமிழியை
நேர்ந்து நித்தில வடம்பு னைந்துற
நெருங்கு மென்முலை யிளங்கொடீ
யாங்க ளுய்யும்வண மிப்பெருந் தரையி
லெளிது வந்தவரு நிதியமே
யெல்லை யின்றியரு ளூற்றெடுத் தொழுக
வினிது நோக்கும்விழி வனிதையே
யோங்கி வாழ்வுவளர் வயிரவப் பதிமி
னூச லாடியரு ளூசலே
யுவகை நல்குவடி வுடைய நல்லிறைவி
யூச லாடியரு ளுசலே. (10)
ஊசற்பருவ முற்றிற்று.
வயிரவன் கோவில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
This file was last updated on 16 March 2021.
Feel free to send the corrections to the webmaster.