முன்னீச்சரத்து ஸ்ரீவடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்
ஆக்கம்: சொக்கன்
munnIccarattu Sri vaTivAmpikai piLLaittamiz
by cokkan
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Noolaham.net and Mr. Padmanabha Iyer, London for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
We thank Mrs. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
முன்னீச்சரத்து ஸ்ரீவடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்
ஆக்கம்: சொக்கன்
Source:
முன்னீச்சரத்து ஸ்ரீவடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்
ஆக்கம்: சொக்கன்
வெளியீடு, முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்.
1999.01.31.
பதிப்பு:
ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானம்
ஸ்ரீமதி திரிபுரசுந்தரி அம்மாள் கைலாசநாதக் குருக்கள் ஞாபகார்த்த வெளியீடு
-------------
வெளியீட்டுரை
இலங்காதீபத்தில் 'அலகேஸ்வரம்’ என ஸ்ரீ சிவமஹா புராணம் சனத்குமார சம்ஹிதையில் எடுத்தோதப்பதுவதும், குப்ஜிகா தந்திரத்தில் ‘தேவமோஹினீ பீடம்’ எனவும், மார்க்கண்டேயபுராணத்து காமாட்ச விலாஸத்தில் சாங்கரீ பீடம், ஸ்ரீ லங்காபீடம் எனவும் விதந்தோதப்படுவதுமான சிறப்புக்கள்மிக்க சக்திபீடமாக முன்னேச்சரம் விளங்குகின்றது. இத்தலத்திலே ஸர்வாபீஷ்டவரப்பிரத ஸ்ரீ வடிவாம்பிகாதேவி அருளாட்சி செய்து வருகின்றாள்.
இவ்வாறான சிறப்புக்கள் மிக்க தேவியை வியாசபகவானால் தட்சிண கைலாஸ புராணத்தில் (XVI 94 - 101) துதிக்கப்படுபவளும், கொக்குவில் ச. சபாரத்தின முதலியாரால் ஆசிரியவிருத்தத்தாலும், கொக்குவில் சி. சிலம்புநாதபிள்ளையால் பதிற்றந்தாதி, ஆசிரிய விருத்தத்தினாலும், புழுதிவயல் R. S. தம்பு உபாத்யாயரால் பதிகத்தாலும், S. M. ராஜப்பாவால் விருத்தத்தாலும், சிவஸ்ரீ சி. பாலசுப்பிரமணியக்குருக்கள், நவாலியூர் சோமசுந்தரப்புலவர் இருவரினாலும் திருவூஞ்சலினாலும், பெரியசாமிப்பிள்ளையால் கும்மியினாலும்; கி. வா. ஜகன்நாதனால் விருத்தப்பாவினாலும், கலாநிதி கா. கைலாசநாதக் குருக்கள் அவர்களால் பஞ்சரத்தினத்தாலும், சொக்கனால் அந்தாதியினாலும்; திருமதி செல்வம் கல்யாணசுந்தரத்தினால் மாலையாலும் துதிக்கப்பட்டு அருள் பாலித்துவருகின்றவளும் மனம், வாக்கு, காயங்களுக்கு அப்பாற்பட்டவளுமான தேவி வடிவாம்பிகையை இனிமையான தமிழ்பிரபந்தங்களுள் ஒன்றான பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தம் மூலம் ஆசிரியர் சொக்கன் அவர்கள் பாடியுள்ளார்.
இவ்வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் தேவியை 5 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரையான பருவங்களான காப்பு, செங்கரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊஞ்சற் பருவங்களினூடாக ஆசிரியர் வர்ணிக்கின்றார். பாமரரும் பண்டிதரும் புரிந்து கொள்ளும் அளவிற்குச் சொன்னடையும், பொருணயமும் மிக்கதாக இனியதமிழிலே ஆக்கி ஆசிரியர் அவர்கள் அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமாகியுள்ளார். அவருக்குத் தமிழுலகு என்றும் கடமைப்பட்டுள்ளது.
நாயன்மார்கட்டை வாழ்விடமாகக் கொண்ட ஆசிரியர் சொக்கன் அவர்களைச் சைவத் தமிழுலகு நன்கு அறியும்.
ஆசிரியர் சொக்கனுக்கு ஸ்ரீ வடிவாம்பிகா தேவியின் திருவருட்கடாட்சம் என்றென்றும் நீங்காமல் கிடைப்பதாகுக!
இந்நூலுக்குத் தகுந்த முன்னுரை ஒன்றினை வழங்கிய எனது சகோதரர் பேராசிரியர் கா. கைலாஸநாதக் குருக்கள் அவர்களுக்கும் எனது நன்றிகளுடன் கூடிய நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாரம்பரியமாகவே 1948ம் ஆண்டு முதலாக ஸ்ரீமுன்னைநாத பெருமானுக்கும் ஸ்ரீவடிவழகிக்கும் நடைபெற்றுவரும் லட்சார்ச்சனை தினத்தின் பகுதானிய வருடத்து லட்சார்ச்சனையின் இறுதிநாளான இன்று இந்நூலை வெளியிட்டு வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இதனை அம்பிகையடியவர்கள் அனைவரும் படித்துப் பயன்பெறுவார்களாக.
இந்நூலினை கணினி வடிவில் வடிவமைத்துத் தந்த யாழ்ப்பாணத்து Institute of Informatics Studies நிறுவனத்தினர்க்கும் கணினி அச்சுப்பதிப்பு செய்த கங்கை கொம்பியூட்டர் நிறுவனத்திற்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
திரிகரண சுத்தியுடன் இத்தைப்பூச நன்னாளிலே ஸ்ரீ வடிவாம்பிகா தேவியின் பாதக்கமலங்களில் இந்நூலினைச் சமர்ப்பிக்கின்றோம்.
கா. இரத்தின கைலாசநாதக் குருக்கள்
பிரதான குருவும் தர்மகர்த்தாவும், கார்ய கலாமந்திரம்.
ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்.
வெகுதானிய தைப்பூச நன்னாள்
31.01.1999
-----------------
இலக்கிய கலாநிதி பேராசிரியர் கா. கைலாஸநாதக் குருக்கள் அவர்கள்
வழங்கிய முன்னுரை.
உ
சிவமயம்
சொக்கன் பெரும் தமிழ் அபிமானி. அம்பிகையிடத்தில் பெரும் பக்தி பூண்டவர். முருகபக்தன். என்னிடம் பல்கலைக்கழகத்தில் கற்ற மாணவர்களுள் என்றும் என் ஞாபகத்தில் இருக்கும் ஒருவர். குருபக்திமிக்கவர். தன்னாசான் தன்னொடு கற்றோன் தன்மாணாக்கன் பாயிரம் எழுதுவதற்கு உரியவர் என்ற முறையில் உரிமையுடன் இப்பாயிரம் வழங்குகின்றேன். முன் ஒருமுறை வடிவழகிமீது பாடல்கள் பாடியுள்ளார். இப்பொழுது வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் பாடுகின்றார். சொக்கன் வாய் மூலமாக வடிவழகி மேல் இப்பிரபந்தம் வெளிவருகின்றது. அழகே உருவானவள் வடிவழகி என்றும் அழகையும் அவளையும் பிரிக்க முடியாது. நேரில் பார்த்தவர்கள் இதனை நன்கு உணர்வர்.
பிரபந்தங்கள் தமிழ் இலக்கியத்தைப் பெரிதும் அழகு செய்கின்றன. இப்பிரபந்தவகையைச் சார்ந்தது பிள்ளைத்தமிழ்.
'வயோவஸ்தா விவர்ஜிதா' என்பது லலிதாசஹஸ்ரநாமங்களில் ஒன்று. வயது வகுக்கப்படாதவள் என்பது இதன் பொருள். 'பாவனாகம்யா' என்பது இன்னொருநாமம். பாவனையால் அடையத்தக்கவள் என்பது இதன் பொருள். பாவனையினால் சிறுபருவம் ஒரு பொழுதும் காணாத உலகமாதாவைச் சிறுமியாகக் கற்பித்து, சிறுமியாக இருக்கும் இப்பிரபந்தத்தில் காப்புப்பருவம், செங்கீரைப்பருவம், தாலாப்பருவம், சப்பாணிப்பருவம், முத்தப்பருவம், வாரானைப்பருவம், அம்புலிப்பருவம், அம்மானைப்பருவம், நீராடற்பருவம், ஊஞ்சற்பருவம் என பத்துப் பருவங்களைக் கொண்டு அவ்வப் பருவ நிகழ்ச்சிகளை மனமார வழுத்தி கவிதையால் களித்ததன் விளைவே இப்பிள்ளைத்தமிழ். இப்பாடல்கள் நூறிலும் பெருகும் உணர்ச்சிப்பெருக்கு பாடல்களாகப் பரிணமிக்கிறதைக் கண்டு சுவைத்துப் பேரின்பம் கண்டோம். அம்பிகையை பாலையாக, சிறுமியாக, பாலாபரமேஸ்வரியாகப் பாவனை செய்து உபாசிக்கும் முறையினருக்கு இப்பாடல்கள் பெரும் அர்த்தபுஷ்டியை உடையவை. சொற்சுவை, பொருட்சுவைமிக்கவை. சுவைக்கச்சுவைக்கத் தெவிட்டாதவை.
இவ்வகையாக, சிறுமியாக வளர்ந்து சகல குணநலன்களும் மிகுந்து விளங்கும் பருவங்களைக் காளிதாஸன் குமாரசம்பவம் எனும் மஹாகாவியத்தில் தனக்கு உரிய முறையில் முதல் சர்க்கத்தில் சிலபாடல்களில் வர்ணிக்கிறார். இதுவும் கற்பனை வழி எழுந்ததே. ஈடிணையற்றது இவ்வருணனை.
கவிகள் தத்தம் சாதுர்யத்தால் சாதிக்காதது என்ன இருக்கிறது. வாழ்க சொக்கனின் கவிதா சாமர்த்யம்,
கா. கைலாஸநாதக் குருக்கள்.
62, TARNICA ROAD, HOWICK,
AUCK LAND, NEW ZEALAND.
18.01.1999.
-----------
உ
கணபதி துணை
உள்ளுறை
வெளியீட்டுரை
முன்னுரை
குலதெய்வணக்கம்
விநாயக வணக்கம்
அவையடக்கம்
1. காப்புப் பருவம்
2. செங்கீரைப் பருவம்
3. தாலப் பருவம்
4. சப்பாணிப் பருவம்
5. முத்தப் பருவம்
6. வாரானைப் பருவம்
7. அம்புலிப் பருவம்
8. அம்மானைப் பருவம்
9. நீராடற் பருவம்
10. ஊஞ்சற் பருவம்
நிறைவுரை
பாடல் முதற் குறிப்பகராதி
------------
குலதெய்வ வணக்கம்
நலந்தி கழ்திரு நல்லையிற் கந்தனைச்
சிலம்பு மெல்லடிச் சிற்றிடை யாரொடும்
இலங்கி எங்களுக் கின்னருள் ஈந்திடும்
பொலங்கொள் வேற்படை யாளனைப் போற்றுவாம்.
விநாயகர் வணக்கம்
ஓம் எனும் பிரணவத் துருவாகி உலகெலாம்
ஒருவனாய் விக்கினங்கள்
ஒன்றுமே இன்றிநன் றாகவே அடியவர்
உள்ளஅணை மீதமர்ந்து
நாம்எனும் ஆணவப் பிணிகடிந் தவர்தமது
நவையழித் தருள்சுரந்து
நாதனாய் ஞானமளி போதனாய் ஐந்துகர
நம்பனாய் நிலவுமெந்தாய்!
போம்எமது வழியெலாம் கலங்கரை விளக்கமாய்ப்
பொலிந்திடும் ஆனைமுகனே!
புத்திசித் தியெனும் பொன்னெழிற் பாவையர்
புகலிடங் கொள்ளுமார்ப!
ஆம்என இசைந்தெனக் காதரம் ஆகிடுன்
அன்னைமுன் னீச்சரத்தாள்
அகிலாண்ட நாயகிக் கன்புடன் அளித்திடும்
அருந்தமிழ்க் கவிதழையவே.
அவையடக்கம்
அண்டசரா சரமனைத்தும் அருளாற் பேணி
அவ்வவற்றிற் கேற்றவெலாம் அளிக்கும் அன்னை
பண்டையநற் கவிவாணர் பலரும் பாடிப்
பரவிநின் றருள்வேட்ட பாவை யாட்(கு)
உண்டுறங்கி உலகினிலே உழலும் நாயேன்
ஒருசிறிய தமிழ்மாலை புனைந்து சூட்டல்
"மண்டுமொளிக் கதிரவனுக் கிணைநான்" என்று
மமதை கொளும் மின்மினியின் மடைமை அன்றோ!
ஆயினுமே திருமூலர் கூற்றிற் கொப்ப
அவளடிக்கோர் பச்சிலையாய் ஆனாற் போதும்
பாயருளை வெள்ளமென வழங்கும் அன்னை
பராசக்தி கடைக்கணிப்பாள் என்று நம்பிச்
சே(ய்)யானும் என்பிள்ளைப் பாட்டைச் சாத்திச்
செம்மலர்நோன் றாளிணையைப் பணிவேன் தாயும்
''பொயிடுஎன் முன்வையேல் " என்னா ளாயின்
புலவர்களும் புறந்தள்ளார் போற்றுவாரே!
-------------
1. காப்புப் பருவம்
சிவபெருமான்
கோவணம் துன்னமே ஆயினும் கோவணம்
குன்றிடா மன்றாடியைக்
கூடியே அன்னவற் கொள்ளையின் பங்கொளக்
கொழிதமிழப் பாட்டிசைத்த
நாவணம் மிக்கவர் நால்வருக் கருளினை
நல்கிவீ டளிநம்பனை
நம்பியே பாதபங் கயமீது வீழ்ந்தெமது
நாவலித் திடப்போற்றுவோம்
சாவணம் செலவிடா துய்வணம் காட்டவும்
சந்தமார் தமிழ்கேட்கவும்
சிலாபநன் னகரத்து முன்னையம் பதியினைச்
சார்ந்தஎம் வடிவழகியைப்
பூவண மேனியொடு பூத்துக் குலுங்கிடும்
பொழிலெனப் பூணணிந்து
பொலிந்திடும் செல்விதனை ஆகத்தி னிற்கொண்டு
போற்றிப் புரக்கவென்றே. 01
திருமால்
தட்டிக் கேட்க ஆளில்லைத் தறுதலை என்றே தாய்கவலச்
சற்றும் அஞ்சா தயலேகித் தறதற என்றே உறிஏறிச்
சட்டி வெண்ணெய் உண்டாலும் சற்றும் வெகுளி கொள்ளாமல்
தங்கள் மகன்போல் அரவணைத்துத் தழுவி மகிழும் ஆய்ச்சியரின்
குட்டிப் பிள்ளை, கோபாலன் குறும்பன், திருவின் மணவாளன்
கோலக் கார்நிற மேனியினான்
கட்டிப் பாகும் முக்கனியும் காணாச் சுவையின் சொல்லழகி கவினார் பொழில்சூழ்
முன்னைவளர் கனியை இனிதே காக்கவென்றே. 02
முருகப்பெருமான்
வேத ஞானபரி பூரணன் பிரமன்
மேதை அல்லனென் வைத்தவன்
மேனி செம்பவள மானவன், கருமை
மேவு கண்டமுள எம்பிரான்
காதல் கொண்டுசெவி தந்து நற்கதியைக்
காட்டும் 'ஓம்' எனுமோர் மந்திரம்
கருது நற்பொருளை உரைஎனக் கெனலும்
கனிவுகொண்டு பொருள்வி ரித்தவன்
சீத மார்தமிழை ஓத வைத்தெமது
சிந்தை நன்குகுடி கொண்டவன்
சீறு வேலும்முகம் ஆறு மோடுசென்று
தேவர் துன்பமன் றோட்டினோன்
மோது வேல்விழிகொண் டாடுங் கூத்தனைத்தன்
மோக லாகிரியில் வீழ்த்திய
முன்னை வாழழகி தன்னை அன்புமிக்க
முந்தியே புரக்க என்றுமே. 03
----------
வைரவக்கடவுள்
ஆணவம் மிகுத்திட அனைத்துமே தன்னுடைய
ஆக்கமென் றகங்கரித்தே
அனலாடி தன்னிலும் தான்பெரியன் என்றெண்ணி
ஐந்துதலை யான்தானென
வீணானாய்த் திரிந்திட்ட வேதனின் தலையொன்று
வீழ்ந்திடக் கிள்ளினானை
வெங்கொடிய தீமைகள் வீழ்ந்துபரி நாசமாய்
மேதினிவிட் டோட்டுவாளைக்
காணவே சுவானவா கனத்தமர்ந் தூர்களைக்
காக்கின்ற காவலானைக்
கருநீல மேனியொடு கனல்விழிப் பார்வைகொடு
காட்சியான அடிபோற்றுவோம்
பூணரவி னோடுபுலி அதழணிந் தேகயத்
துரிபோர்க்கும் எந்தையாரின்
பொன்னெழிற் பாவையைச் சங்குவளை யாளினைப்
போற்றிப் புரக்க என்றே. 04
-------------
வீரபத்திரக் கடவுள்
தக்கன் தன்னை அகிலத்தின்
தலைவன் ஆகத் தக்கவனாய்த்
தகுதி நோக்கா திறுமாந்து
தலைவன் தன்னை மறந்துசெயப்
புக்க வேள்விக் கமரர்களும்
புகுந்தார் புகல்யார் என் ஓரார்
புன்மை கடியச் சிவன்ஏவப்
போந்தான் அழித்தான் புல்லியரைச்
சொக்கத் தங்க மேனியினான்
சுந்தரற் கீடிலை எனுமுண்மை
சொல்லா லன்றிச் செய்கையினாற்
சூதினர் உணர வைத்தமகன்
மிக்க வீர பத்திரனை
வேண்டிப் பரவித் துதித்திடுவோம்
வேயின் தோளி முன்னையளை
விழைந்து நன்கு காக்கவென்றே. 05
----------
அரிகரபுத்திரர்
''பாரினில் விண்ணிற பாதலத் தினில்வாழ்
பவர்எவர் எனினுமே யாகப்
பதிக்குவன் கரத்தை எனில்அவர் தலையிற்
பசுமமாய் ஆக'' என்றரனை
ஈரமில் கொடியன் வேண்டிய வரத்தை
ஈந்தவன் மீதுசோ திக்க
ஏற்றினன் அஞ்சி ஓடியே மாயன்
இடஞ்சரண் எய்திட மாலும்
ஓரெழிற் கன்னி உருவுடன் தோன்றி
உலுத்தனை உயிர்கவர்ந் திட்டான்
ஓடியே ஒளித்த அரனவன் திரும்பி
உருவினில் மோகினி யான
காருருக் கனியைக் கலந்தனன் கலந்த
கலப்பினில் தோன்றிய ஐயன்
கடும்புலி ஊர்தி, கால்பிடித் திடுவோம்
முன்னையாட் காத்திட என்றே. 06
--------
மாகாளி
இதழ்களைப் பீறிமுன் வருகின்ற இருபற்கள்
இருட்பிழம் பனைய மேனி
உருத்தெழுந் தெங்கணும் கனற்பொறி பறக்குமிரு
ஏற்றமார் செய்ய விழிகள்
கதம்மிகுத் துலகத்தின் கொடுமைகள் அனைத்தையும்
களைந்திடற் குரியபூட்கை
கங்காளனோடு வெங்கான கத்திலே
கதித்தெழுந் தாடும் ஆடல்
வதம்பல புரிந்துகொடும் அரக்கரை அழித்தவிண்
ணவர்களுக் கிதம் அளிக்கை
வாய்த்தபே ரன்னைமா காளியைப் பயத்துடன்
பத்திமிகப் போற்று கின்றோம்
பதம்பஞ் சினாற் செய்து பவளத்தை இதழாக்கிப்
பால்வணப் பற்களோடே
பழம்பெரும் முன்னையின் கழையுறழ் தோளியைப்
பரிந்துமே காக்க என்றே. 07
----------
கலைமகள்
பாலோடு தேன்கலந் தாலனைய சொல்பொருள்
பதமாய்க் கலந்து புலவர்
பாடிடும் பாடலின் சுவைநயந் திடுகின்ற
பாவைவெண் கமலாசனி
ஞாலமிசை இசைபோக்கி நவையறுத் திடுகம்பன்
நன்னையக் காளிதாசன்
நலமிக்க செந்தமிழ்க் கவிகுமர குருபரன்
நாவினில் அமர்ந்த செல்வி
கோலமிகு வெள்ளாடை வெள்ளணிகள் செபமாலை
வீணையுந் தரித்த அன்னை
குவலயத் தறுபத்து நான்கெனும் கலையெலாம்
குடைநிழற் காக்கும் அரசி
வாலையாய் முன்னையில் வந்தருளி எங்களின்
வாழ்வினுக் கொளி விளக்காய்
வளர்கின்ற மாதேவிக் காகவே வேண்டுவம்
வழுத்தியே காக்க என்றே. 08
___
திருமகள்
திருமால் உளம்மகிழ அவர்மார்பி லேதிகழும்
திருவாட்டி எங்களது பெருமாட்டி
சிறுவாயி லேமுறுவல் பெரும்ஆழி ஆம்விழியில்
தெளிவாகும் நற்கருணைச் சீமாட்டி
மருவா தவத்தருக்குப் புவிவாழ்வு வெந்துயராம்
மகிழார்கள் ஆயினுன் தருளாட்சி
மருவும் நலத்தருக்கோ அளகா புரிக்கதிபன்
மதிக்கத் தகும்பெருமை அடைவாமே
கருவா தனைக்கெதிராய் அறமாதி செய்வரெனின்
கனகாலம் இன்பினிலே திளைப்பார்கள்
கடலாரும் நஞ்சையுண்டே அமுதார வைத்தவனின்
கனியான முன்னைவளர் எழிலாளை
உருவான செங்கமலத் துறைவாய்! மனங்கனிந்தே
ஒருகால மும்விடுத்து நீங்காமல்
இணையாக நின்றிட வென் றிதமாக வேண்டுகிறோம்
இனியா ளையேபுரந் தருள்வாயே. 09
_____
தமிழ்த்தாய்
எந்தமிழே! எழிற்றமிழே! ஏற்றமிகு தமிழே!
இன்பருளும் தெய்வதமே! இணையிலிஎந் தாயே!
அந்தமுனக் கில்லையென வந்தனைகள் செய்ய
ஆரியத்தோ டருகமர்ந்து சீரிளமை கொண்டாய்
சொந்தமென உன்னடிகள் சூட்டியுளத் தேத்திச்
சுந்தரியே! அஞ்சலியைத் தந்திடுவோம் என்றும்
பந்தமறுத் தின்பமளித் தெங்களினைக் காக்கும்
பராசக்திக் கரணாக நின்றிடுக நீயே. 10
____
2.செங்கீரைப் பருவம்
பன்னுதற் கின்னிய சொன்னயப் பைந்தமிழின்
பண்ணிசையி லேகுளிர்ந்து
பழமறையி லமைதுதிகள் மனமகிழ் முறுவலொடு
பரிந்துநற் செவிமடுத்துக்
கன்னலது சாற்றினைக் காய்ச்சிப் பதஞ்செய்த
கட்டியின் இனியவான
கவினாரு செவ்விதழ் மலர்த்தியே கேட்பவர்
கனிந்துருக ஒலியெழுப்பி
அன்னையே! உன்னரிய அனிச்சமலர் மேனியால்
அம்புவியி லேதவழ்ந்து
அனைத்திலும் புனிதமாம் கங்கையின் மேலான
அரியவுமிழ் நீர்வழித்துச்
சின்னவுன் வாய்நோவக் கிர்கிரென் றொலிசெய்து
செங்கீரை ஆடியருளே
சிவதலத் துயர்தலம் எனப்பகர் முன்னையாய்!
செங்கீரை ஆடியருளே. 11
____
ஆற்றும் பூசை நெறிமாறா
அந்தணர் ஆற்றித் துதித்திடவும்
அணைந்தே உன்றன் அடியார்கள்
அருள்தா என்றே அரற்றிடவும்
போற்றிப் புகழ்ந்து பூரித்துப்
புலவோர் பாமழை பொழிந்திடவும்
பூவார் சோலைப் புதுமலராற்
புனைந்தே மாலை சாத்திடவும்
கூற்றைக் குதித்த கூத்தாடி
குதூகலித் துன்னை நோக்கிடவும்
குளிர்ந்துன் திருவாய் திறந்து நீ
குவலய மெல்லாம் மகிழ்வெய்த
ஆற்றின் ஒழுக்கின் மென்மெலென
ஆடுக இனிதே செங்கீரை
ஆதியின் முன்னைப் பெருவாழ்வே!
ஆடுக இனிதே செங்கீரை. 12
__________
ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலே
அமர்ந்தருளும் எம்பி ராட்டி!
அகிலமுடன் அண்டங்கள் சராசரம் யாவுமே
அணைத்துவாழ் வளிக்கும் அன்னை!
பாயருள் வெள்ளத்தி லேதினைத் திடஅவை
பாலிக்கும் மேன்மை யாட்டி!
பாலகி வடிவுகொண் டரவிந்த மீதிலே
பரிவுடன் இருந்த உன்னைத்
தோயுமன் பெழவந்த இமயத்து ராசனும்
தோகையெனும் மேன்னை யாளும்
துதித்துமே மார்பார அணைத்துநன் மகளென்று
சொந்தமும் கொண்டாடவே
ஆயுமறி வானந்த ரூபிணி! முன்னையாய்
செங்கீரை ஆடியருளே
அமுதவாய் மலர்த்திநீ கிர்கிரென் றொலி செய்து
செங்கீரை ஆடியருளே. 13
_______
சிவனவன் சக்தியையுஞ் சக்திசிவன் தன்னையும்
சிறப்புடன் ஈன்ற பின்னைச்
சிவம்சக்தி இருவரும் உலகுயிர்க் குருத்தருவர்
சிவஞான சித்தி கூற்று
இவையெலாந் தோற்றினும் சிவன்மாணி சக்தியும்
ஏற்றமார் கன்னி யேயாம்
இதுவுமஃ துரைக்கின்ற உண்மையே ஆய்ந்திடின்
ஏற்பதே மறுத்த லில்லை
பவவினை கொண்டுலகிற் கருவிருந் துழலாது
பாலிக்கக் குழவியாகிப்
பாரினில் வந்துதவழ் பாலகி! முன்னையுறை
பத்தருக் கெய்ப்பில வைப்பே!
சிவமெனும் செம்பொருட் குயிரன்ன செல்விநீ
செங்கீரை ஆடியருளே
சிற்றிடைப் பெரியவிழி கரிய ஒளி மேனியாய்!
செங்கீரை ஆடியருளே. 14
__________
பாட்டி னால்வழி பாட்டினால் மறை
பரவலால் ஒலிஎன் றென்றம்
பாய்ந்துமே அருவி வீழ்தல்போல் ஆர
வாரம் மிக்கதாம் முன்னையில்
ஏட்டிதழ்க் கமல வாவியில் இளைய
இன்னறும் வளிவந் துளரலால்
இனிய கந்தமண முறுவ தெப்பொழுதும்
எங்கணும் பரவும் அல்லவோ?
கூட்டியே இனிய பாலுடன் நறிய
குன்றினிற் குறவர் தந்ததேன்
குளிர்ந்த பால்தயிரும் இனிய முக்கனியும்
கொண்டு நல்லஅபி டேகங்கள்
ஆட்டுவார் அரிய தொண்டிலே மகிழ்ந்
தாடுகசெங் கீரையே
அவனி எங்குமுன் புகழ்ம ணந்திடநீ
ஆடுகசெங் கீரையே. 15
____________
முகில்மதிவில் கயலோடு திலமலர் மாங்கனியும்
முத்தினொடு சிவந்த பவளம்
முழுமையுந் தாங்கியழ கொழுகவே வஞ்சியென
முத்தனைக் கனிய வைக்கும்
அகிலாண்ட ஈசுவரி கௌரிகௌ மாரிஉயர்
ஆதிபரா சத்தி உமையே!
ஆதியும் அந்தமும் இல்லாத சோதியொளிர்
அத்தனுக் கிடம ளித்தாய்
சிகைகொண்ட மயிலால வண்டினம் மலர்களைத்
தேடியே ரீங்கரிக்கச்
சேர்முகில்கள் இடித்துமழை பொழிந்திடச் சீருடன்
சிறந்தவளம் நிறையு முன்னை
சகத்தினிற் றலைமைபெற அமைத்திடும் தேவியே!
செங்கீரை ஆடியருளே
சித்தத்தில் நித்தமொளிர் உத்தமி! நீநன்கு
செங்கீரை ஆடியருளே. 16
__________
சந்திரமண் டலநடுவில் லலிதமகா நித்யையாய்த்
தண்கலை கள்பதி னாறுடன்
சர்வபரி பூரணியென் றெவ்வெவரும் ஏத்தஒளி
காலுவை ஒவ்வொர் திதிக்கும்
நந்தலில் வெவ்வேறு நவமான பெயர்பெற்று
நற்கலை கள்ஒவ் வொன்றுமே
நாள்தொறும் வளர்ந்துபின் னொடுங்கிநின் றரியவாம்
நாடகம் பயிலு நங்காய்!
புந்தியில் உனைக்கொண்டு வந்திக்க வந்தருள்
புரிகின்ற நன்னெஞ் சினாய்!
பூரணி! புராதனி! கௌமாரி! சங்கரி!
போதமிக் கருளு முன்னைச்
சிந்தெழிற் பதிவாழும் சுந்தரி! சுதந்தரி!
செங்கீரை ஆடி யருளே
சீலமார் பாலகி! ஏலமார் குழலிநீ!
செங்கீரை ஆடி யருளே. 17
__________
கால, குல, நாம, சுத்த மொடு நாத
விந்து, ஞானகலா சிவமான
கருது நவபுவன மெனுமிவைகள் சக்தி
சிவமுடைய கோணம் ஒன்பானும்
சால மிகுதிறனிற் கோலமுற இணையச்
சங்கமித் திடலின் விளைவாகச்
சாற்று முயர்தொழில்கள் மூன்றும் முறையாகச்
செய்கை நிகழ்வ வாம்உணர் வூற
ஆல மொளிர்கண்டற் காதரங் கள்தரும்
அஞ்சொலிள மங்கை நீயன்றோ!
அன்றி உன்துணையொன் றின்றி ஒரு செயலும்
ஆகிடாதெனவும் அறிவோமே
தூல உருக்கொண்டு முன்னை நகர்வதே
ஆடுசெங்கீரை இனிதாயே
சோதி எழில் நங்கை! மாலவனின் தங்கை!
ஆடுசெங்கீரை இனிதாயே. 18
__________
கார், கூதிர், முன்பனி, பின்பனி, வேனிலொடு
காலைபின் மாலை எனலும்
கருதியே மாதம்ஆண் டூழியுக மென்னலும்
கருத்தி லாளங் கணக்கு
கார்குழற் கற்றையினைத் தாங்குவஞ் சிக்கொடீ!
காலவா தீதை நீயே
கனிவுமிகு குழவியாய் உனையெண்ணு வோமெனிற்
கடைகெட்ட மூடரன்றோ?
ஆர்ப்பரித் தெழுகின்ற அலைகள்நின்ற பேராழி
அதனில்நாம் பரமாணுவாம்
ஆயினும் பேராசை கொண்டுனைச் சிறுமியாய்
அகத்தினிற் கொண்டு விட்டோம்
சீர்மிகும் செலவிஎம் சிறுமையை மறந்துநீ
செங்கீரை ஆடி யருளே
சிவனையே பித்தாக்கும் முன்னையின் செல்வியே!
செங்கீரை ஆடி யருளே. 19
__________
முன்னைப் பதியின் பெருவாழ்வே!
மூத்தோர்க் கெல்லாம் மூத்தவளே!
மூத்த கணபதி மடியேற
முத்தம் இட்டு மகிழ்பவளே!
பின்னைக் குமரன் வரக்கண்டு
பித்தாய் அவனை அணைப்பவளே!
பெரிய சிவனின் பெருமாட்டி!
பிறங்கு மாலுக் கருந்தங்காய்!
உன்னை மகளாய் இமவானும்
உத்தமி மேனையும் பெறும்பேற்றை
உரைத்தற் கெம்மால் எளிதாமோ?
உவமை கடந்த வடிவழகீ!
சின்ன மெய்கொண் டெம்முன்னே
செங்கீ ரைநீ ஆடுகவே
சிவந்த இதழில் அமுதூறச்
செங்கீ ரைநீ ஆடுகவே. 20
____________
3. தாலப் பருவம்
பத்துத் தலையும் ஆணவமும்
பாரித் திட்ட இராவணனைப்
பகர்மூன் றுலகிற் கதிபதியைப்
பகழி கொண்டு துளைத்தபிராற்
பித்த னாகப் பிரமகத்தி
பிடித்தே அலைத்த போதினிலே
பக்தியிற் கலைத்த பிரானாயெம்
பரிகாரஞ் செய்தவத் தின்னாய்
முத்தி யருளும் முன்னையனை
முன்வந் தேத்தித் தொழுததனால்
முழுதாய் அதன்பிடி தளர்ந்ததுவும்
முழுமையும் உண்மைக் கதையாகும்
அத்தன் அவனின் ஆருயிரே!
அருளே! தாலோ தாலேலோ!
அஞ்சுகக் குதலை மொழியாளே!
அன்பே! தாலோ தாலேலோ! 21.
_____
மாலே பரம்பொருள் என்றுரைசெய்
மாபா தகத்தைப் புரிந்ததனால்
மாதே வன்முன் உயர்த்தியகை
மடியா துழன்ற வியாசற்குச்
சால உண்மை தனையுணர்த்திச்
சாபந் தீர்த்த அருளாளன்
சந்நிதி முன்னையில் அவனோடே
சரியா சனங்கொள் தயாபரியே!
ஓல மிட்டுச் சரணடைவார்
உள்ளத் தொளிரும் ஒளிவிளக்கே!
ஒருமை மனத்தோர்க் குன்ஞானம்
உவந்தே அருளும் உன்னதியே!
காலம் யாவும் நாம்மகிழக்
கனியே! தாலோ தாலேலோ
காட்டும் வதனத் தண்மதியே
கதியே! தாலோ தாலேலோ. 22
____________
முன்னேச் சரனார் வடிவழகி
முதிர்ஞா னத்துக் கணநாதன்
முருகார் இளவல் இவர்கட்கு
முறையாய்க் கோயிற் றிருப்பணிகள்
என்றும் முட்டுப் படாவண்ணம்
ஏந்தல் குளக்கோட் டன்என்னும்
இயல்சேர் சோழ மாராசன்
ஏத்திப் போற்றிப் புரிந்தனனால்
அன்றும் முன்னும் இன்றுமினி
அமையும் எதிர்கா லந்தனிலும்
என்றும் புகழோ டிருப்பவளே!
எவர்க்கும் இன்னருள் சுரப்பவளே!
நன்றுன் குழவி நலங்காண்போம்
நங்காய்! தாலோ தாலேலோ
நற்றாய் மேனை உளமகிழ
நலமே! தாலோ தாலேலோ! 23
___________
ஆழியின் நடுவில் முத்தாக
அமைந்த இலங்கை நன்னாட்டில்
அரசன் பராக்ரம பாகுவெனும்
அண்ணல் முன்னைச் சீர்த்தியினை
வாழி அறிந்தே பத்திமிக
வளமார் நிபந்தம் பலசெய்து
மனமும் ஒன்றிட வழிபட்டு
மாட்சி பலவும் பெற்றிட்டான்
கேழில் பரம கருணையினாய்!
கேளிர் என் எமைக் கொள்பவளே!
கேடில் இகபரச் செல்வமெலாம்
கிடைக்கச் செய்யும் தயாநிதியே!
பாழில் இருந்து காப்பவளே!
பரையே! தாலோ தாலேலோ
பாலகி! எங்கள் மனங்குளிரப்
பரிவாய் தாலோ தாலேலோ. 24
__________
ஆழக் கடலின் கரையினிலே
அன்றொரு நாள்நீ அரனுடனே
ஆடல் புரிந்த நிலைகண்டே
அருகில் வந்துனை அகப்படுத்த
ஏழை மீனவன் முயன்றிடநீ
எழிலார் சிலையாய் மாறினையே
எடுத்தே உன்னை அரசர்கரம்
அளிக்க அவரும் நம்பாமல்
ஆழச் சிந்தித் தமைத்தபல
அழகுச் சிலைகள் தம்மிடையே
அசையும் உன்பத அடையாளம்
அந்த மீனவன் கண்டுரைக்க
வாழ அரசன் கோயிலிலே
வைத்த நிதியே! தாலேலோ
வளரும் இளமதி! முன்னையளே!
வாழ்வே! தாலோ தாலேலோ. 25.
_____________
பொன்றும் செல்வம் வேண்டாது
பொன்றாக் கல்வி விழைவாராம்
புகழ்சேர் அறிஞர்ப் புகலிடமாய்ப்
போற்றும் காஞ்சி மாநகரில்
மன்னும் மறைதேர் நாகேந்த்ர
மாண்பார் குருக்கள் மகனாராம்
மதிசேர் குமாரஸ் வாமிகுரு
மயங்கிக் கலங்க வந்தபிணி
தன்னைப் போக்கி அவர்மூலம்
தகைசால் கோயில் சமைப்பித்தாய்
தகைமை யாளர் வழிவந்தோர்
தாயே! உன்பணிக் காளானார்
கன்னற் கினிமை நல்குசுவைக்
கரும்பே! தாலோ தாலேலோ
கருதித் துதிப்போர்க் கரணாகும்
கண்ணே! தாலோ தாலேலோ. 26
_____________
காரிற் கறுத்த கருங்குழலும்
கணைவாள் நாணும் இருவிழியும்
கவினார் கூனற் பிறைநுதலும்
காற்றுக் கொடியும் மெல்லிடையும்
தேரின் எட்பூ நாசியதும்
திகழுந் தாமரை மலர்முகமும்
திருவார் கொவ்வைக் கனிவாயும்
சீரார் பஞ்சுச் சீறடியும்
பாரில் வந்து முடிசாய்த்துப்
பணியும் வானோர் முடியழுந்தப்
பதைத்தே ஒல்கும் அனநடையும்
பார்க்கப் பார்க்கத் தெவிட்டாவாம்
ஏரார் முன்னைப் பதியுறையும்
எழிலே! தாலோ தாலேலோ
என்பை உருக்கி எமையாளும்
இன்பே! தாலோ தாலேலோ. 27
___________
உத்தம சத்திய நித்தியர் நச்சிட
உடலினிற் பாதியளாய்
ஒத்து சதித்துவம் இத்தரை மக்களுக்(கு)
உணர்த்தும் வித்தகியாய்ப்
பத்தியை வித்தி விளைத்திடு நற்றவர்
பாங்கினில் ஓங்கியுயர்
பாரிய தாகவே வானுற நின்றிடு
பவித்திர நற்றருவாய்
எத்தனை வருணனை அத்தனைக் கும்அரி
தாகிவி ளங்கிடுவாய்
எழில்தரு பொழில்நிறை பழனவ ளம்உறை
இன்பருள் முன்னையளே!
தத்தை எனத்தரு சொற்கு தலைக்கொரு
சாமளை! தாலேலோ
சங்கரன் இங்கித துங்க மணித்திரள்!
தாலோ தாலேலோ. 28
____________
சீரும் செழிப்பும் சேர்ந்துறையும்
சிலாபம் சூழ்ந்த செறிகடலைச்
சேர்ந்தே முயங்கி வெண்முகில்கள்
சினைகொண் டின்பாய்க் கறுத்துமிகப்
பேரும் பின்னர் இடிமின்னிப்
பெரிய மழையைப் பொழிந்தோடிப்
பிறங்கும் மாயவ னாறாகிப்
பேரா தரிக்கம் அடியார்கள்
கூரும் அன்புடன் நீராடக்
கூபங் குளமாய் உருக்கொள்ளும்
குளித்துச் செபஞ்செய் இவர்களுக்குக்
கோயிலில் அமர்ந்தே அருள்பவளே!
காருண் அஞ்சன விழியாளே!
கதிரே! தாலோ தாலேலோ
கண்ணே! முன்னைப் பாவாணர்
கனவே! தாலோ தாலேலோ. 29
_____________
மட்டவிழ் மலர்கொடு விட்டுணு வழிபட
மகிழ்ந்தவர்க் காழி அருள்
மாமலை மேருவைச் சாபம் தாகவே
வளைந்திடு மாதேவன்
குட்டி அயன்சிறைப் பட்டிட வைத்திடும்
குமரனின் நற்றாதை
கொஞ்சி மகிழ்ந்திட வஞ்சியின் கொடி எனக்
கூடி உறைபவளே!
விட்டு விடுதலை பெற்றிட முன்னையில்
வேண்டிநிற் பார்களினை
வேதனை செய்பவ வாதனை போக்கிட
மிக்கருள் தருபவளே!
பட்டினும் மென்னமய தாகிய மேனியை!
பரையே! தாலேலோ
பாவவி நாசினி! வதனவி லாசினி!
பரையே! தாலேலோ. 30
_______
4. சப்பாணிப் பருவம்
பாரினிற் சிறந்தநற் பழையபதி முன்னையிற்
பாலகி ஆக வந்து
பஞ்சினும் விஞ்சுகுளிர் தஞ்சமுற் றிடுபதம்
படிந்திட முழந்தாளினைச்
சீருற மடித்தெழிற் றொடையதும் மடங்கிடச்
செங்கம்ப ளத்தமர்ந்து
செவ்விதழ்க் கமலநல வதனத்தில் முத்தெனச்
சிறுவியர் துளிசெய்திடக்
காரெனுங் குழற்கற்றை கிரணமாய் நுதல்விழக்
கண்களிற் சுடர் தெறிக்கக்
காதினிற் றோடுகதிர் நிலவுமாய் ஒளிகாலக்
களிமுறவல் காட்டியன்னே!
சாருமிந் திரனாதி தேவருங் களிகொளச்
சப்பாணி கொட்டியருளே
சஞ்சலம் விஞ்சுலகு கெஞ்சிடத் தஞ்சமெனச்
சப்பாணி கொட்டியருளே. 31
___________________________
பற்றற்ற பரமர்தம் பற்றினைப் பற்றிடப்
பற்றருள் கோடதாகிப்
பழவினை களில்விழுந் தழுந்தாம லேதொழும்
பத்தருக் கருள்புரிந்து
சிற்பர வியோமமாய்ச் சிற்றம் பலத்திலே
சிவனுடன் கூடியாடிச்
செகதல மனைத்தையும் ஆட்டுவித் திங்கிதம்
செய்கின்ற எம்பிராட்டி!
கற்றதும் கற்பதும் தனையுந்தன் பதியையுங்
கருதிவழி படற்கேயலாற்
காசினியி லேபிற அறிவுறற் கன்றென்று
காட்டிடுந் தெய்வதீபம்!
சிற்றிளங் குழவியாய் எம்முனர் இன்போடு
சப்பாணி கொட்டியருளே
சீர்வளர் முன்னையிற் பேர்வளர் செல்விநீ
சப்பாணி கொட்டியருளே. 32
____________________________
கான மயிற்கெழிற் சாயல் பயிற்றிடு
கவின்மிகும் அபிராமி!
கந்த மலர்முகத் தின்னளி தந்திடு
கரிய விழிக்குமரி!
தான மெனக்கிளி இன்மொழி வேண்டிடக்
தயைபுரி சொல்லழகி!
தண்ணிய தடமுறை அன்னமும் வெள்கிடத்
தகுநடைக் குரியாளே!
ஞான மிகுத்திடு மோன தவத்தினர்
நாடுமி ளம்பிணையே!
தஞ்ச மெனக்கொளும் அஞ்சுக மேசிறு
பஞ்சடி வஞ்சியளே!
கூனை நிமிர்த்திடு காழியற் கன்னைநீ
கொட்டுக சப்பாணி
குளிர்வள முன்னையில் அருள்தரு நாயகி!
கொட்டுக சப்பாணி. 33
_______________________
ஊழி முடிவில் வடவைத்தீ
உருத்தெ ழுந்தே அண்டமெலாம்
ஒருசில நொடியில் நீறாக்க
ஓல மிட்டுக் கடல்யாவும்
பாழின் மீது பாய்ந்தோடிப்
பரிநா சத்தை ஆக்கிவிடப்
பரமன் சீற்றத் தோருருவாய்ப்
பயங்கர நாட்டம் பயில்கையிலே
யாழின் இனிய சொல்லுடையாய்!
யாமளை! யாதவற் கிளையாளே!
யமற்கும் யமனாம் சங்கரனின்
யார்க்கும் அடங்கா வெகுளியினை
வீழ வைத்தருள் மெல்லணங்கே!
விரும்பிக் கொட்டுக சப்பாணி
வேயனை தோளி! முன்னையர்நாம்
வேண்டக் கொட்டுக சப்பாணி. 34
__________________________
கண்ணினைக் கூச வைத்திடும் ஒளியும்
காண்டிற் கரியதே யாகும்
கணந்தொறும் புதிய வடிவினைக் கொள்ளல்
கண்களுள் அடங்கிட வில்லை
பணங்கொளும் அரவைப் பணிகளாய்ப் பூண்ட
பாதிமெய் பயமிகு விக்கும்
பாரெலாம் நிறைத்துக் கடந்தெழும் சோதி
பார்த்திடும் தகுதியிங் கில்லை
குணங்குறி யாவும் கடந்தஎம் தாயே!
குழவியாய் எம்முனர் வருக
கோதிலா உன்றன் குளிரெழில் நிலவிற்
குளித்திடல் எம்விழை வாகும்
பிணங்குத லின்றி முன்னையில் வந்து
கொட்டுக சப்பாணி
பேதையர் நாங்கள் உளங்களி கூரக்
கொட்டுக சப்பாணி. 35
__________________________
குளிர்தரு நறுமலர்ப் பொழில்தரும் பெருமெழில்
குலவிடும் பழனங்கள்
கொழித்திடும் பெருவளம் மிகுநலத் திருதரும்
குவலயத் துயர்முன்னை
வளர்தரும் சிறுமியைக் கயிலையை விடுத்திங்கு
மகிழ்தரும் மகிமையளை
வரைகெழு மகளினை மனோலயத் துடன்மிக
வழிபடப் பரிபவளைத்
தளர்வுறத் தணைத்துநன் னலம்பல தருவதில்
தனக்கினை ஒருவரில்லாத்
தகைமையிற் பொலிவுறும் தகையளை இமையவர்
தமக்குமுன் னிருப்பவளைக்
குழைவுறும் மனத்துடன் அழைக்குவம் அமுதமே!
கொட்டுக சப்பாணி
கோவலற் கிளையபெண் ணரசியே! மகிழ்வுடன்
கொட்டுக சப்பாணி. 36
_________________________
வள்ளற் பசுக்கள் பால்சொரிய
வளர்ந்த தெங்கிள நீர்நல்க
வனப்பார் வயல்கள் நெல்மணியை
மலைபோற் குவிக்க எந்நாளும்
தள்ளா விளையுள், தக்கார்கள்,
தாழ்வில் லாப்பெருஞ் செல்வருமாய்த்
தழைக்கக் கடைக்கண் சாத்தியருள்
தயாநிதி! முன்னீச் சரத்தாளே!
கொள்ளைநின் னழகைத் தம்விழியாற்
கொள்ளக் கூடும் அடியர்குழாம்
கூரும் அன்பாற் கூத்தாடிக்
குளறி உரோமாஞ் சலிகொள்ள
விள்ளற் கரிய இளமானே!
விழைந்து கொட்டுக சப்பாணி
மேலாம் மறைகள் துதிபாட
விளங்கிக் கொட்டுக சப்பாணி. 37
____________________________
செருவில் அசுரன் சிரசு விழவே
செறுத்த மகிட மர்த்தனி!
சிறுமை பலவும் அழிய வகைசெய்
சிவனுக் குரிய பத்தினி!
கருவை உறுதல் குழவி பெறுதல்
கடந்த விமலி சமரிநீ
கடைக்க ணருளிற் படைத்தும் அளித்தும்
களிக்கும் அமிர்த வர்ஷனி!
புருவ நடுவில் விழியை உடைய
புயங்கன் அடியர்க் கரணும்நீ
புதுமை பழைமை இளமை முதுமை
புகுதற் கரிய அரணும்நீ
சருவ புவன அரசி! பரிவை
அருளிக் கொட்டுக சப்பாணி
சகல அவலம் முனையில் அகல
ஜனனி! கொட்டுக சப்பாணி. 38
_____________________________
வரம்பிலாப் பெருமைகொள் முன்னீர் சரத்தினில்
வயங்குமா மண்டபத்தில்
மாபெரிய கலைவிழா இன்றதன் உச்சமாய்
மகிழ்நடனம் ஒன்றாமதில்
நரம்பிசைக் கருவிக்கு நாயகம் எனத்தகும்
நல்வீணை வாணிகொள்ள
நந்திமத் தளத்தினை முழக்கிட நாரணன்
வேய்ங்குழல் இசைக்கவேதா
அரம்பையோ டுருப்பசி மேனகைதி லோத்தமை
ஆடற்கு நட்டுவாங்கம்
இயற்றிட நாரதர் தும்புரு கந்தருவர்
இன்னிசைப் பதமிசைக்கச்
சரிந்துதலை அசைத்து நடம்சுவைத் துமேகுழவி
சப்பாணி கொட்டியருளே
சாற்றிரிய ஆற்றுலுறை மாற்றலர்க் கிடியேறு!
சப்பாணி கொட்டியருளே. 39
__________________________
பாங்கரும் முன்னைப் பதியினிலே
பரன்பரை மகோற்சவக் கொடியேற்றம்
பரவசம் தொடர்ந்திரு பத்தேழ்நாள்
பழம்பெரும் அடியர்க்குக் கொண்டாட்டம்
தீங்குள் கொடுமைகள் பாதகங்கள்
செய்பவர் கட்கினித் திண்டாட்டம்
சேரிம்மைப் பயன்களை வேண்டுபவர்
தேவியின் அருளுக்கு மன்றாட்டம்
ஓங்கி எழும்பத்தி வெறியானார்
உடல்வளைத் தாடும்நற் கூத்தாட்டம்
உணர்வு மிகுந்தெழப் போற்றிசையால்
உருகி இசைப்பவர் பெருங்கூட்டம்
தேங்கிடா தலையெறி சனக்கூட்டம்
தேர்ந்துநீ கொட்டுக சப்பாணி
சிறுபதம் மடித்திருந் தம்மே! நீ
சீர்தரக் கொட்டுக சப்பாணி. 40
_____________________________
4. முத்தப் பருவம்
கத்திக் கொழிக்கும் ஆழ்கடலிற்
களித்துத் திரிந்த நற்சிப்பி
கருவா யிருந்து வயிறுளைந்து
கவினார் ஒளியிற் றிளைக்குமொரு
முத்தை ஈனச் சுழியோடு
முயன்று பெற்ற அம்முத்தும்
மும்மத வேழ முகத்துமிக
முதிர்ந்த கொம்பிற் பெறுமுத்தும்
நத்தும் மூங்கிலில் விளைமுத்தும்
நல்லன் எனினும் நங்களது
நங்கை வடிவாம் பிகையுன்றன்
நகைமுத் தத்திற் கிணையாமோ?
சித்தம் களிவெளி கொள்ளஅருட்
செல்வி! முத்தம் தருகவே
சீரிய பவளச் செப்பிதழால்
தேவி! முத்தம் தருகவே. 41
___________________________
எழிலி னிலகு தரள எயிறும் எமது தமிழொத் திலகிடும்
இனிய அரிய மகிமை மிகவும் இழைக்கும் கொவ்வையின் அழகதும்
வழியும் அமுத உமிழ்நீர் கமழும் மணமும் சுவையும் இதழுமென்
றிவையும் மருவி அருவி எனவே எமதுள் ளமதிற் பெருகிடச்
சுழியும் கதுப்பிற் கனியு மழகிற் சுருண்டு மயங்கும் மதுகரம்
சுகங்கொள் வதென அகங்கொள் மகிழ்விற் செகத்தை மறக்கும் மறப்பதும்
ஒழியப் பிறிதொன் றறிவ திலதெம் அழகி! தருக முத்தமே
உயிரி னிலகிப் பயிலும் முனையின் ஒளியே! தருக முத்தமே. 42
___________________________________
வெள்ளிப் பனிமலை மீதினிலே
வெள்ளை நீற்றன் மெய்புளகம்
மேவத் தழுவி அவனுக்கு
மேலாம் முத்தும் ஈபவளே!
துள்ளித் திரியும் வேழமுகன்
தூங்கும் கரத்தான் தனையென்றுந்
தள்ளற் கரிய பாசத்தால்
தழுவி முத்தம் தருபவளே!
கள்ளார் கமலத் தடமான
கவினார் சரவணம் சென்றங்கே
கந்த பாலற் கறுமுகமும்
களிக்க முத்தம் அருள்பவளே!
எள்ளல் வேண்டா முன்னையராம்
எமக்கு முத்தம் தருகவே
ஏழை யேமென் றிரங்கியெமக்
கினிதாய் முத்தம் தருகவே. 43
___________________________
போர்முகில் வந்து திரண்டுருண் டேயிருள்
போர்த்திடு போதினிலும்
புன்மைகள் மேலெழுந் திழிவுக ளுள்ளே
புதைபடு போதினிலும்
சீர்மிகும் இந்தும காகடல் மத்தியிற்
றிகழ்ந்திடும் முத்தெனவே
தேய்ந்திட லின்றி யினும்புகழ் கொண்டு
சிறந்திடும் இலங்கையிலே
பேர்பெற நின்று பிறங்கிடு முன்னையின்
பேரும்பெயர் நாயகியே!
பேணிடு பைரவி! கௌரி! கௌமாரி!
பிஞ்ஞகன் பங்கினளே!
மூர்த்தி கரம்மிகு மாலவன் பின்னையே!
முத்தம் தந்தருளே
முத்துக் குமரனின் பத்திக் குரியாய்!
முத்தம் தந்தருளே. 44
_________________________
மஞ்சு லாவி வளம்புல நல்கும்
மரக தமணித் தீவினைச் சூழ்ந்து
மகத்து வம்மிக்க மாகடல் இந்து
மணிகள் கொண்டு தரைமிசைச் சேர்க்கும்
பஞ்சு மெல்லாடிப் பாவையர் கூடிப்
பாடி ஆடிப் பரவசம் கொள்வார்
பகர்சி லாபத்தின் ஆழிமுத் தீனும்
பளிச்சி டும்அவை அணிகளில் ஏறும்
தஞ்சம் என்றுனை நாடிடும் தொண்டர்
தாழ்வி லாப்பெரும் பேறடை வார்கள்
தண்ண ளிக்குயர் லட்சியம் ஆவாய்
தாய்எ மக்குநீ சேயுமே ஆவாய்
விஞ்சும் அன்புடன் வீற்றிருந் தோநாம்
மேன்மை பெற்றிட முத்தமருளே
விழவு பற்பல வாற்பொலி முன்னை
மேவி னாயெமக்கு முத்தமருளே. 45
__________________________
புண்ணி யம் முன்பு செய்தவரும்
புரையில் குணத்திற் பொலிவாரும்
போற்றி உன்னடி பிடிப்பாரும்
பொருந்த உன்பணி செய்வாரும்
பண்ணிற் பாடிப் புகழ்வாரும்
பாரில் விழுந்து பணிவாரும்
பத்தி மிகவே வீதியினிற்
பலகால் உருண்டு வருவாரும்
நண்ணிக் காவடி எடுப்பாரும்
நதிபோல் முன்னை வருகின்றார்
நாகம் அணிவோன் நாயகியே!
நங்கள் உயிருள் உயிரேநீ
உண்ணீர் உண்ணீர் என்றழைத்துன்
உவகை முத்தம் அருள்கவே
ஒதும் வேதத் துட்பொருளே!
உனது முத்தம் அருள்கவே. 46
____________________________
சத்தி இன்றேற் சிவமில்லைத்
தத்துவம் இதனில் வேறில்லை
சங்கரன் திரிபுரம் எரித்துதவும்
தகவில் கூற்றினை மாய்த்ததுவும்
மத்தம் மதம்மிகு யானையினை
மடுத்தே உரித்துப் போர்த்துதவும்
மாலும் பிரமனும் காண வொணா
மகத்துவ சோதியாய் எழுந்ததுவும்
அத்தனைப் பிரியா தவன்பாகம்
அமர்ந்தவுன் திருவிளை யாடல்களே
அக்கினி யுடனே சூடொன்றி
அகலா தமைந்தவுன் ஆற்றல்களே
உத்தமி மகிடனின் மர்த்தனியே!
ஒருகால் முத்தம் தருகவே!
உன்னத முன்னையில் ஓங்கியொளிர்
ஒளியே! முத்தம் தருகவே. 47
____________________________
பாலா என்றும் பூரணி என்றும்
பவநா சினிஎன்றும்
பற்பல நாமம் பற்பல் வடிவம்
பாங்காய்க் கொண்டி டுவாய்
மாலா கிப்புவி மாயையில் ஆழ்வார்
மயக்கம் போக்கிடுவாய்
மதிவலி யாலுறும் ஆணவம் அழித்து
மாண்பினில் வைத்திடுவாய்
''காலா உன்னைக் காற்றூசாகக்
கருதுவம் " என்பாரின்
கருத்தினிற் குறுதி நல்கிடும் வலிய
காலாந் தகியாவாய்
ஏலார் குழலி முன்னைய ளேமெல்
லியலே! முத்தருள்க.
இசைவாய் இருந்தெம் இன்னல் களைஏந்
திழையே! முத்தருள்க. 48
__________
தாயில்லைத் தந்தை யில்லைத் தருஞ்சுற்றஞ்
சூழவில்லைத் தயவாய் நின்றே
தண்ணளிசெய் துதவநல் லரசில்லைத்
தலைவரிலைத் தக்கார் இல்லைப்
பாயுவிழி நீர்துடைத்துப் பரிவுசெய்
ஒருவரிலாப் பாவி என்போல
பதறிநெருப் பிடைநின்று துடிக்கின்ற
பலபேரிப்பாரில் உள்ளார்
பேயாகி நடைப்பிணமாய்ப் பித்துர்களாய்த்
திரிவோரைப் பேணிக் காக்கப்
பெருமுன்னீச் சரமமர்ந்த பெண்ணரசி
உனையன்றிப் பெரியர் யாரோ?
தாயான நீயுனது தயாவினைக்காட் டறி
குறியாய்த்தருக முத்தே
தந்தெம்மைத் தழுவிவிழி நீர்துடைத்து
முன்னையினிற் றருக முத்தே. 49
_________________________
பாலே! தேனே! கனியே கரும்பின்
பாகே! கற்கண்டே!
பரவிநின் றுயிரினுள் உயிராய் எம்மைப்
பாலித் திடுமயிலே!
காலே தீயே புவியே வெளியே
கசிநற் றண்ணீரே
காணும் இவையுன் னுடைமை எனவே
கருதித் துதிக்கின்றோம்
சேலேர் கண்ணி! சிவையே! உமையே!
சிறந்திடு சிற்பரையே!
சிம்மத் தூர்ந்தே சிறுமை துடைக்கும்
சின்மய முன்னையளே!
மேலே ஒருவர் இல்லா முதலே!
முத்தம் தந்தருளே
மின்னல் இடைச்சி! கன்னல் மொழிச்சி!
முத்தம் தந்தருளே. 50
______________________________
6. வாரானைப் பருவம்
நனையா விழியும் உன்னாமம்
நவிலா நாவும் நின்பாத
நளினம் பணியாக் கல்மனமும்
நாயேன் உடையேன் ஆயிடினும்
தினையி னளவு நலம்பிறராற்
செய்யப் பெற்ற பெரியோர்கள்
தேர்ந்தே அதனை உளங்கொண்டு
சிறிதாம் என்று மறவாதே
பனையின் அளவாய்க் கொள்வதுபோற்
பரையே! என்முற் பிறவிகளிற்
பத்தி சிறிது செய்தேனேற்
பாலித் திடஎன் முன்வருக
அனையே! வருகஅன் பே!வருக
அழகே! வருக வருகவே
அரணே! வருக முன்னைவளர்
அமுதே! வருக வருகவே. 51
_____________________________
உததி அனைய பிறவி தொடர
உலகில் அலைவை அடைவதோ?
உயிர்கள் வினைகள் பெருக இழிவுற்
றலைதல் மிகவும் உறுவதோ?
பதவி பெருமை தலைமை எனவே
பரவும் இருளில் உழல்வதோ?
பகைமை மடைமை சிறுமை வறுமை
படர மலைவை அடைவதோ?
நிதமும் இவைகள் நினையும் அறிஞர்
நினைவில் உலவும் மகதியே!
நெடிய கொடிய இழிவு தொலைய
நிதமுன் னையினை அடைபவர்
கதியை அருளப் பெரிது வருக
கடையர் எமையுன் உடைமை
யாய்க் கருதிக் கடிது வருக வருக
கனியே! வருக வருகவே. 52
______________________________
செம்பவள மேனியில் வெண்ணீறு சண்ணித்துத்
திகழும் மேனி
சிறியமதி கங்கையினைத் தரித்தசிவன் பக்கலிற்
செவ்வே ளோடு
அம்பொன்னின் அணையிலமர்ந் தகிலமெலாங் காக்கின்ற
அருளின் செல்வி!
ஆலயகண் டாமணியும் அந்தணரின் மறையொலியும்
அழைக்க வந்தே
"எம்பெருமான், பெருமாட்டி, குகா”என் றேத்த
இணைவார் தம்மை
எக்காலும் அவர்களினைக் கைவிடா திருக்குமோர்
எழிலார் முன்னை
எம்பொன்னே! நன்மணியே! முத்தே! எங்கள்
இதயக் கோயில்
எழுந்தருள நீவருக வருக அன்னே!
இனிது வருகவே. 53
_____________________________
அணுமுதல் இமயம் அனைத்திலும் உள்நின்
றருளுவை அவற்றினுக் கப்பால்
ஆகுவை உன்னை அகத்தினிற் கொள்ள
ஆகுமோ? அடியவர்க் கல்லால்
மணமிகு முல்லை சண்பகம் கமலம் மருக்கொழுந்
திணைமலர்த் தொடையாய்!
மதிவலர் தங்கள் திறத்தினிற் காணா
மாபெரும் ஒளிவளர் சுடரே!
உண்ணத் தெவிட்டா அமிர்தமே! உன்றன்
உவப்புறு முறுவலைக் காண
ஓடியே முன்னைவந் துள்ளனம் தாயேம்
ஒரேஒரு முறையதைக் காட்ட
அணங்குகொள் புவியில் அறிவொளி ஏற்ற
அம்மையே! வருகநீ வருக
ஆடல்வல் லானின் ஆகத்தினிற் பாகம்
அமைந்தனை! வருகநீ வருக. 54
______________________________
பொன்னைத் தீயில் உருக்கிமிகப்
புடம்போட் டதனிலுங் காணாத
பொன்னே! பூத்த புதுமலராய்ப்
பொலியும் முகார விந்தமுடன்
கன்னிப் பெண்ணாய் நினைக்காணக்
கருதிய சிவனும் பித்தானான்
கண்ணிற் காணச் சிறுதுரும்பாய்க்
காட்டிய உன்றன் பேராற்றல்
உன்னாத் தீயும் பெருங்காற்றும்
உன்னுடன் பொருது தோற்றனவே
உடனங் கிருந்த தேவர்களும்
உன்றன் மகிமையை அன்றுணர்ந்தார்
அன்னே! இறைஞ்சிப் பணிகின்றோம்
அணித்தாய் எம்முன் வந்தருளே
என்னே! முன்னையர் பெரும் பேறென்(று)
எவரும் வியக்க வந்தருளே. 55
_____________________________
மூடிருளாம் அமாவாசை எனக்கொள் நாளை
முற்றுமுன் நினைவிலபி ராமிப்பட்டர்
முழுநிலா நாளென்றார் மன்னன் கேட்டு
முற்றியபித் திதுவென்றே முடிவு செய்யத்
தோடினது பேரோளியை மதியாய்க் காட்டித்
தொண்டரைநீ காத்திட்டாய் மடைமை ஒன்றாய்த்
தொக்கமூ டன்நாவில் நாமந் தீட்டிப்
தொல்லுலகிற் கவிக்கோமான் ஆக்கி வைத்தாய்
கூடியுன தடிபரவி நின்றார் தம்முட்
குலவிடுமிம் மைப்பெருமை கூடார் யாரே?
கோலஞ்செய் குளிர்வதனக் கொடியே! தேனிற்
குழைந்தெடுத்த கனியமுதச் சுவையே! நின்னைப்
பாடியருள் நாடியினி தாடி ஒன்றாய்க்
கூடும்எமை நாடிநீ வருகஇன்றே
பரவசத்தில் ஆழ்ந்திடநீ வருக முன்னைப்
பாலகியே! ஓடிவந் தருள்க நன்கே. 56
_____________________________
அன்னத் தூவியில் மென்மையவாய்
அனிச்ச மலரினும் நொய்ம்மையவாய்
அமைந்த நலமிகு தாளிணையும்
அரவிந் தம்எனும் நகைமுகமும்
சின்னக் காந்தட் சிறுவிரலும்
செழித்த பதுமத் தங்கையும்
சீரார் பூங்கொடி மேலுலவும்
செறிந்த கூந்தற் காடதுவும்
என்றுங் கருணை நிறைவிழியும்
இசைபோல் இசைக்கும் இன்மொழியும்
எங்கட் கென்றே கொண்டு வரும்
இளைய பிள்ளாய்! முன்னையளே!
ஒன்றி உன்னை ஓவியமாய்
உளத்தில் எழுத வந்தருளே
ஓசை ஒலியெல் லாமானாய்!
ஒருகால் எம்முன் வந்தருளே. 57
________________________________
தத்துப் பித்தென் அடிவைத்துத்
தரையிற் குழந்தைகள் நடத்தல்போல்
தாயே! நீயும் அசைந்துவரத்
தமியேம் செய்த தவம் என்னே!
முத்தாய் முளைகொள் பல்லழகும்
முறுவல் விளையும் இதழழகும்
மொய்க்கும் வண்டினை எய்க்குமொரு
மோகனக் குவளை விழியழகும்
பித்தங் கொளச்செயும் நுதலழகும்
பெட்பார் முழுமதி முகத்தழகும்
பெரிதாய் வளர்ந்த நறுங்கூந்தற்
பின்னற் சடையின் மின்னழகும்
நத்திக் கிறங்க எமைவைக்க
நல்லாய்! எம்முன் வந்தருளே
நாடிப் பணிவார் நிறைமுன்னை
நங்காய்! எம் முன் வந்தருளே. 58
_____________________________
பாசக் கடலிற் சிக்குண்டு
பவத்தளை இறுக்க அலைப்புண்டு
பாரில் தாயின் வயிற்றினிலே
பத்துத் திங்கள் சிறையுண்டு
நீச மாந்தர் பிறத்தல்போல்
நீயுதித் தாயோ? இலைமேனை
நேரில் தவத்திற் கிரங்கியெழில்
நிறைந்த முளரியில் வந்திருந்தாய்
தாசன் இமயனும் அவளு முனைத்
தங்களின் உயிராய்க் கொண்டதனால்
தரையிற் குழவியைப் போல்வளர்ந்தாய்
தாய்க்கே உரிய பாசத்தால்
நேசத் தோடே அவள்தருபால்
நீயுண் டிடவே வந்தருளே
நிசமாய் முன்னையர் வேண்டுகின்றோம்
நிர்மலி யே!நீ வந்தருளே. 59
_____________________________
வருகுவை என்றுன் வழிதனில் விழிகள்
வைத்தவை பூத்தன மாலின்
மனமலர் மலர்த்தும் மாண்புடைத் தங்காய்!
மலைமக ளாய்உதித் தவளே!
உருகுமெம் முள்ளம் உனைநினை போதில்
ஒருகணம் பிரிந்திட லாற்றோம்
ஒளிக்கதிர் தெறிக்கும் உன்விழிப் பார்வை
ஒன்றுக்கே அலந்திடு கின்றோம்
அருமையோ டுரிமை அளவிலா அன்பால்
அழைக்குவம் அலட்சியம் இனுமேன்?
அசைக்கரு முகில்கள் மழைக்குறி காட்ட
ஆடிடும் மயில்கள்போ லானோம்
பெருமைசேர் முன்னைப் பதியினர் நாங்கள்
பெண்ணுனைக் காணவந் தருளே
பேதையர் எங்கள் பித்தினைப் போக்கப்
பேணியே விரைந்துவந் தருளே. 60
_______________________________
7. அம்புலிப் பருவம்
தாமரை மொட்டுநடு மலர்ந்தவெண் தாமரை
தகுமென்ன வான்தடத்தில்
தாரகைக் கணத்தினிடை எழில்பெற் றிலங்குமிகு
தண்ணளி நிறைவெண்மதி
போமுனது வழியினிற் பூவிலும் மென்மையொடு
பொலிந்திடுங் குழவிபலரைப்
போற்றிடும் யாழ்குழலின் இனியவிசை தோற்றிடப்
புறங்காண் வல்லபலரைக்
காமலர்கள் என்னநீ கண்டுகளி கொண்டதைக்
கருத்திலே வைத்துரைப்பாய்
காருலவு முன்னையிற் காணுமிவ் வழகினுக்
கழகிபோற் கண்டதுண்டோ?
காமமுரை யாதுண்மை கூறியவள் பக்கலிற்
களித்தாட ஓடிவாவே
கந்தரக் கடுவரிற் பந்தமுறு சுதந்தரி
களிக்கநீ ஓடிவாவே. 61
____________________________
காதலர் வாழ்வினிற் களிப்பருள மண்ணினிற்
கதிரொளி வீசுமதியே!
காலாதி காலமாய்க் கவிவாணர் பாவினிற்
கருவாகி யுள்ளமதியே!
சீதளக் குளிர்மையாற் செகமெங்கும் இன்பினிற்
றிளைத்திடச் செய்யுமதியே!
சிவபிரான் முடிமீது திகழ்கின்ற தவத்தினைச்
செய்ததால் வாழு மதியே!
மோதிவரு கடலலைகள் அருச்சிக்க நின்றவை
முழுவெள்ளி யாக்குமதியே!
மோகனப் பேரெழிலி முன்னைப் பதியினாள்
முகமலர வைக்க வேண்டி
ஆதரத் தோடன்னை மேனைமையாள் அழைக்கின்றாள்
அம்புலி! ஆட வாவே
அரியபா லன்னமதை அவளோடு பகிரலாம்
அம்புலி ஆட வாவே. 62
____________________________
அன்னையின் வுலகினுக் கன்னமிட் டளித்தருளும்
அன்னபூ ரணியென்பதோர்
அருத்தமிகும் உண்மையை அறிந்துளோம் ஆதலால்
அதிசயித் திடுகின்றனம்
அன்னையென இமவானின் பாரியெனு மேனையாள்
அமையஅவள் மடியின்மீதில்
அழகாய் அமர்ந்துளாள் அடஞ்செயும் பிள்ளையாய்
அன்னையளி பாற்சோற்றினைத்
தன்னரிய வாயினுள் ஏற்காது தள்ளிமிகு
தாரகை நிறைந்தவானில்
தண்ணொளி இறைத்துவரு வெண்மதி ! உனையின்று
தன்னுடன் ஆடவரவே
உன்னியே விழிநீரை உகுக்கிறான் முன்னையாள்
அம்புலி ஆடவாவே
இவளினைப் போலுனக் கொருதோழி கிட்டுமோ?
அம்புலி ஆடவாவே. 63
_____________________________
பாலாழி மீதன்று பெற்றவமு தத்திலொரு
பருத்துளி நீயுமன்றோ?
பாலகி இவளின்முன் னவன்கடைந் ததுவென்று
பகருண்மை அறிவையன்றோ?
காலனின் காலனாம் கறைகண்டன் அமுதோடு
கடுவிடம் எழுந்தகாலை
கடிததனை உருட்டியே உண்டிருக் காவிடிற்
காண்டிடற் கின்றிருப்பையோ?
சாலவே இவையாவும் மீளநீ நினைவையேற்
சட்டென்று வருதல்வேண்டும்
சகமெலாம் ஒளிசெய்து நீபெறும் புகழெலாம்
சங்கரியொ டிணைந்தாடலின்
சீலமோ டொப்பிடிற் சிறியநீர்க் குமிழியாம்
சிறியமதி! ஆடவாவே
சம்புவுக் கினியமுன் னையளையேய்க் காதுமே
சந்திரா! ஆடவாவே. 64
________________________
முன்னவர் அறியொணா முன்னவன் முன்னையர்
முத்திக்கு வித்தானவன்
மூவர்க்கும் அரியவன் தேவர்க்கும் தெரிகிலன்
முழுமுதற் கடவுளென்றும்
தன்னிடப் பாகத்தில் மன்னிட வைத்திட்ட
தயாபரி சிறுமதலையாய்த்
தன்னையே ஒடுக்கிவந் திம்முன்னை உறைவதால்
தன்னிலை மறந்தாளென
உன்னினை போலும்நீ ஒளித்துவிளை யாடலால்
உனைப்பெரியன் என்பைபோலும்
ஒருகணம் இவள்பெருமை உனதுளத் தெண்ணிடில்
ஓடிநீ வந்திடாயோ?
அன்னையிவள் சீற்றத்திற் காளாகி மாளாமல்
அம்புலி ஆடவாவே
ஆனந்த ரூபிணி அனந்தகுண சோபினியொ
டம்புலி ஆடவாவே. (65)
____________________________
நல்லரைக் காக்கவும் தீயவரை மாய்க்கவும்
நல்லவருள் கொண்டுபுவியில்
நவியனைய கோசலை தயரதன் தவத்தினால்
நாரணன் இராமனாகிச்
சொல்லரிய அழகோடு வளர்கின்ற காலையிற்
சோதியுறு வானில்வந்த
சுடராகும் உன்னையொரு தோழனாய்ப் பெறஎண்ணிச்
சோறுண்ண மறுத்தபோதில்
வல்லனாம் சுமந்திரன் கண்ணாடி தன்னிலுன்
வடிவினைக் காட்டமகிழ்ந்தான்
வள்ளலவன் தங்கையாம் எள்ளலறு முன்னையாள்
மதியூகி ஏய்த்தலரிதாம்
அல்லிடை ஒளிதரல் போலஅவள் முகமொளிர
அம்புலி! ஆடவாவே
அவளிடை வருதலொன் றன்றிவழி வேறில்லை
அம்புலி ஆடவாவே. 66
__________________________
இந்திர கோபமென் இலங்குசெம் மேனியில்
இடைவிடா தொளிகான்றிடும்
இரத்தினம் தரளமொடு பொன்னணிகள் யாவையும்
இளநிலா எறித்துநிற்க
விந்தைமிகு மணநாறு கஸ்தூரி புனுகுசவ்
வாதுசண் ணித்துமிளிர
மேனியிற் பூசுசந் தனக்கலவை யுடன்நெற்றி
மேவுசிற் தூரதிலகம்
தந்திடும் பேரெழில் சிந்திடும் பரிமளத்
தரத்தினைச் செப்பலாமோ?
தன்னெழில் அறியாத தன்மையள் இன்றுனைத்
தன்னுடன் ஆடவேண்டல்
விந்தையிற் பெருவிந்தை ஆயினும் மறுக்காது
வெண்மதி ஆடவாவே
மேலான ஈசனது வேணியில் உறைகின்ற
வேண்மதி ஆடவாவே. 67
__________________________
பன்னெடிய காலமாய் விண்வெளி யிலேயுனைப்
பார்த்தவர் மாய்ந்தொ ழிந்தார்
பழைமையொடு முதுமையும் பிணியுமுற் றுற்றதைப்
பரையறிவள் என்ற பயமோ?
உன்னுடைய வெண்ணிறம் காமாலை யென்றதை
உலகினுக் கொளிக்க நினைவோ?
உவையெலாம் உண்மையா மெனினும்நீ அஞ்சற்க
உனைப்போன்ற முதியோ ரையும்
பன்னரிய பெருமையள் எம்பிள்ளை வெறுக்கிலாள்
பாட்டன்என் றன்பு செய்வாள்
பாரினில் முதியோர்க்கு விழாவெடுத் திடுநாளிற்
பரிகசித் திடுதல் செய்யாள்
அன்னவாம் உண்மையினை உளத்தினிற் கொண்டிங்ஙன்
அம்புலி ஆட வாவே
அம்மையுளங் களிகொள்ள முன்னையம் பதியினில்
அம்புலி ஆட வாவே. 68
____________________________
அற்பனுக் குப்பவிசு வந்திடிற் பெரியோரை
அலட்சியம் செய்து தன்னை
ஆகாய உச்சியில் அமர்ந்தவன் போற்பெருமை
அளக்குவன் என்னு முண்மை
உற்பவித் ததுஉன்னி லோஎன்ற பேரையம்
உளத்தினிற் பிறக்க வைக்கும்
உலுத்தனே! தக்கனது சாபத்தி னாலுன்றன்
உருக்குலைந் ததும றந்தாய்
உற்றுநீ எம்பிரான் அடிபற்றி னாயின்றுன்
உருத்தேய்ந்தும் அழித லற்றாய்
உன்னதத் தவன்பன்னி முன்னையில் உறைகன்னி
உலகநா யகியு ணர்வாய்
அற்றவர்க் காதரம் ஆனஇவள் அழைப்பேற்பை
அம்புலி ஆட வாவே
அழுங்கெனப் பிடிவாதம் ஆகாது காணுடன்
அம்புலி ஆட வாவே. 69
____________________________
"மதி, மதி" என்னுன்னை மதிப்புடன் அழைப்பினும்
மதித்திடா மூடமதியே!
மகத்தினில் நீபெற்ற மதுரசம் உன்றனை
மயக்கவும் நிலைமறந்தாய்
பதிந்துனில் நிலையாகக் கறையிருந் திடுவதும்
பாவலர் முயலென்றதைப்
பாடியுன் குறையினை மறைத்தலும் எமக்கெலாம்
பகிரங்க மானபோதும்
நதியினைச் சடையினில் வைத்தவன் பாகத்து
நாரியின் வேண்டுகோளால்
நாமுன்னைப் பலவா றிரக்கின் றனம்வானில்
நடமிடல் விட்டு முன்னைக்கு
அதிவிரைவி னோடுமவள் முகமலர வைக்கவே
அம்புலி ஆடவாவே
அரன்முடி யிலேயினும் இடம்பெறுதல் வேண்டுமேல்
அம்புலி ஆடவாவே. 70
_________________________
8. அம்மானைப் பருவம்
ஆயிரத் தெட்டண்டம் கைப்பந்த தென்னவே
ஆடிடும் எங்கள் அன்னாய்!
அவையுன்றன் அணிபாதச் சிலம்பின்ஒலி என்னவே
அதிர்ந்திடச் செய்ய வல்லாய்!
*தாயிலைத் தந்தையில்லைத் தண்ணளிசெய் ஜனனிநீ
தாய்முலை சுவைக்கி லாதாய்
தந்திடுவை உன்னமுத கலசமத னாலுலகு
தழைத்துச் செழிக்கு மன்றோ?
பாயிருட் பட்டுலகு வாட்டமுறு வேளைதனிற்
பரிந்தருளை ஈய வல்லாய்!
பாலகி ஆனதெம் மேலதிற் கொண்டவருட்
பாலிப் பெனல்சத்ய மாம்
ஆயெமக் கென்றுமாய் முன்னைக்கு வந்தனை
அம்மானை ஆடி அருளே
அருளுளக் கருத்தெமக் கறிவித்து நின்றுந்
அம்மானை ஆடி அருளே 71
____________________________
ஐம்பொறி எனுந்தீயில் அர்க்கியம் ஆகவுயர்
அரள்ஞானம் அவிச தாக
அதனோடு ஞேயாமாம் வத்துகளை இட்டுமே
அயர்விலா ஞானி செய்யும்
உம்பருஞ் செய்யொணா உயர்மகப் பாவனை
உத்தமச் சித்து நிலையில்
அறிவானும் அறிவதும் அறிபொருளும் என்கின்ற
அஞ்ஞானம் தீய்ந்து போகும்
இம்பரில் அம்மையே! உன்றனுக் காற்றிடும்
ஏற்றமார் ஸ்ரீ சக்கர
இயல்பமை பூசையின் உச்சமென் றிதனினை
இயல்புணர்ந் தார்உரைப்பர்
அம்பொனே! முன்னையில் இப்பூசை ஏற்றுநீ
அம்மானை ஆடி அருளே!
அரியயன் காணொணா அரனுடைய பன்னியே!
அம்மானை ஆடி அருளே. 72
______________________________
நிற்பதும்நீ நடப்பதும்நீ நிலைபே றின்றி
நிகழ்ந்துமுடி வனவெல்லாம் நினது தோற்றம்
நிர்விகா ரப்பொருளாய் நின்ற வண்ணம்
நீள்புவியில் விகாரங்கள் நிகழ்த்துவித்தே
அற்பமிவை எனக்காட்டி மறைப்பு நீக்கி
அருள்ஞானம் இறுதியிலே அளிப்பாய் நீயே
ஆதலால் உனையல்லாற் கதியொன் றில்லை
அறிதோறும் அறியாமை அகலச் செய்யும்
சிற்பரையே! சியாமளையே! சிந்தாகூலம்
தீர்ப்பவளே! ஜகத்ஜன்னி! சிவனார் போற்றிச்
சித்திரமாய் உளத்தெழுதி அழகு பார்க்கும்
சவுந்தரியே! நிரந்தரியே! சம்புபாரி!
அற்பரெமக் கிரங்கியிளம் பாலையாகி
அழகாக அம்மானை ஆடநன்கே
அசைந்தசைந்து கைபரப்பி மேலெறிந்தே
அன்னாய்! நீ அம்மானை ஆடு நன்கே. 73
__________________________
ஆன்மா என்றிடில் அஃதொன்றே
அதுவே நிலையாம் பராசக்தி
அன்றிமற் றுளவேலாம் அசத்தியமாம்
ஆகவே ஒன்றே பரப்பிரமம்
என்றும் உள்ளது வேறில்லை
உள்ளன இல்லன பிறவெல்லாம்
ஓர்ந்திடின் வானத் தாமரையென்
றுணர்ந்தே சாக்தர் உரைத்திடுவர்
உன்னிடு சத்துசித் தானந்தம்
ஒன்றிய சங்கமம் சக்தியலால்
உரைத்திடப் பிறிதொன்றும் இல்லையென
உணர்வதே உண்மையென் றிசைத்திடுவார்க்(கு)
இன்னிலை ஈந்திடு சிற்பரையே!
இனிதாய் ஆடுக அம்மானை
ஏரார் முன்னைப் பதிநிதியே!
இசைந்தே ஆடுக அம்மானை. 74
_________________________
காலையிற் காயத் திரியாவாய்
கடுமதி யஞ்சரஸ் வதியாவாய்
மாலையிற் சாவித் திரியாவாய்
மாண்பார் ஒளியினில் திளைத்திதுவாய்
சால மிகுந்திடு பத்தியுடன்
சாற்றியுந் நாமஞ்சொல் லித்துதிப்பார்
சங்கடம் போக்கிநல் லின்புறுதல்
சரதம் என்பதற் கையமுண்டோ?
சால்புடை வேதாந்த தத்துவத்தின்
சத்திய நெறியது நித்தியமே!
சகமுயர் ஸ்ரீசக்ர மத்தியளே!
சாற்றுதற் கரியவெம் வித்தகியே!
ஆலென எமக்கெலாம் ஆகிடுவாய்
அன்னே! ஆடுக அம்மானை
உரையினைக் கடந்தவெம் முன்னையவளே!
ஒளியே! ஆடுக அம்மானை. 75
___________________________
கோடுமே கோடினுங் கோடெனக் கோடுவர்
கோடத்திற் கலையெழில் காண்பர்
கோலது கோடிடி லோஅது கொடுங்கோல்
கொண்டிடா ததனைநல் லரசு
"காட்திற் புலியோ டுறைந்திடல் நன்றாம்
கசிவிலா ஆட்சிசார் நாடு
கனிவளந் தரினும் துயர்க்கிட" மென்று
கருதியே உரைத்தனர் முன்னோர்
வீடெலாந் துறந்து மென்மைகள் இழந்து
வேதனைக் கடலிலாழ் வோர்க்கு
வித்தகி! முன்னை மேவிய எழிலே!
மீண்டும்நல் லின்பம் மேவிட
ஆடிட அருள அருகினில் வந்தே
அம்மானை ஆடிநீ அருளே
ஆதரித் திவரை அளிக்குவை அன்னாய்!
அம்மானை ஆடி நீ அருளே. 76
_________________________
உருவை மருவி அருவை ஒருவி வருவை சிறுமி அருகிலே
ஒருமை அருமை யுறநீசிறுகை தனிலே பொருவில் பெருமைகொள்
விரியு மெழிலம் மனையி னுடனெம் விழிகள் விரிய மகிழ்வுற
விரைவில் திருவும் கலையின் உருவும் விறலி னெழிலும் உடன்வர
எருவை உரிவை செறியு மருவ முரியன் களிகொள் ளிமவதி!
இரவு ஒருவ மருவு பகலில் முனைய ரிடையில் வருகுவாய்
தருவை அனைய நிழலைத் தருமொர் அருளில் மருவு பெரியைநீ
தயவு மிகவம் மனைய எறிந்து தழைவோடாடி அருள்கவே. 77
__________________________
பழவினை புதுவினை எவைஎவை உள அவை
பாறி அழிந் திடவே
பரங்க ருணைத்தடங் கடலென வந்திடு
பர்வத வர்த்தனியே
குழைவுடன் உன்னடி கொள்பவர் உள்ளினிற்
கோயில் கொள்பவளே!
குற்றம் இழைப்பினும் பெற்றவ ளாதலின்
குணமாய்க் கொள்பவளே!
விழவுகள் மிக்கிடு முன்னையில் என்றும்
வீற்றிருந் தருள்பவளே!
மெல்லடி மண்ணினில் வைத்து நடந்து
மிக்கம கிழ்வுடனே
இழையணி மேனியொ ளிக்கதிர் வீசிட
ஆடுக அம்மானை
ஈசன் உவக்கத் தேசு மிகுக்க
ஆடுக அம்மானை. 78
_____________________________
பொற்றா மரைத்தடம் பொலிவுமிகு கோபுரம்
பொலிகின்ற மதுரை என்ற
புகழ்பூத்த நற்பதியில் அமிழ்தொத்த நற்றமிழ்
புரக்கின்ற கயற்கண்ணியாய்க்
கற்றவர் மிகுந்திடும் தொண்டைமண் டலத்தினிற்
காஞ்சிநன் னகர மதனில்
கனிவினொடு முப்பத்தி ரண்டாகும் அறஞ்செய்து
காட்டியருள் காமாட்சியாய்
நற்றவர்க் கினியஅருள் நாள்தொறும் நல்கிடும்
நளிர்கடல் நடு வணுள்ள
நலமிகும் நயினையம் பதியினில் அமர்ந்தருள்
நாகபூ ஷணிஅம் மையாய்
அற்றவர்க் கிரங்கிநன் முன்னையில் வடிவழகி
யாகவே நிலவுமம்மே!
ஆனந்த மாகவே ஞாலம் விளங்கநீ
அம்மானை ஆடி யருளே. 79
____________________________
அகிலம் எங்கும் அமைதி பெற
அன்பும் அறமும் தழைத்தோங்க
அழிவுகள் கொடுமைகள் பாறிவிழ
அன்பில் செயல்கள் நீக்கமுற
இகலில் நீங்கி எல்லோரும்
இணைந்து சமமாம் வாழ்வையுறச்
இதயத் தூய்மை மிக்கோராய்
எதிலும் நலமே நினைவையுறச்
சகல வழியிலும் சத்தியமே
தழைத்துச் செழித்து மேன்மையுறச்
சாடும் பிணிநோய் துயரெல்லாம்
சற்றுந் தலைகாட் டாதொளிக்க
அகங்கொண் டெங்களின் முன்னையளே!
ஆடி யருள்க அம்மானை
அவலம் நீங்கிப் புவியோங்க
ஆடிய ருள்க அம்மானை. 80
___________________________
9. நீராடற் பருவம்
நெருப்பனைய திருமேனி நீற்றினைப் பூசியெந்
நேரமும் வெப்பமிகவே
நிலவிடும் நிமலனின் ஆகத்தி னிற்பாதி
நிலைகொண்ட எம்பிராட்டி!
பொருப்பினன் செல்வியாய் உருக்கொண்டு மலையினிற்
பொலிவுடன் வளர்ந்தகாலை
பொழுதெலாம் மழைபனி குளிர்வாடை யாலங்கு
புனலாட மறந்திருந்தாய்
ஒருப்படல் நீராட உனக்கு விழைவின்மையை
உணர்ந்தனம் எனினுமெங்கள்
உளமெனுந் தாமரைத் தடத்திலும் முன்னையின்
ஒருபுனித ஆறுதனிலும்
விருப்புடன் நீராடி அனுபவம் கொண்டஉனை
வேண்டநீ ராடியருளே
மிகுமணச் சுகந்தமளை குளிர்நீ ரிதாமிதில்
விரும்பி நீ ராடியருளே. 81
_________________________
அமணர்கள் திகம்பரர் ஆதலால் அவர்போல
ஆடையணி யாத பேரை
அம்மணம் ஆகவே திரிகிறார் என்றுமுன்
அவமதித் திழித்து ரைத்தார்
அமையமை தோளியர் அவர்முனர் வாராமல்
அஞ்சிநா ணுற்றொ ளித்தார்
ஆயினும் குழவியர் மேனியினில் ஆடையை
அணியாமை எள்ளல் உண்டோ?
உமை!எம தினியநற் குழவிநீ அமுதம்நீ
உன்வெறும் மேனிகண் டுவப்போம்
ஒருமுறை எமதுமன் றாட்டினை ஏற்றுவந்
துளங்குளிர நீராடுவாய்
எமைமிகுத் தெய்த்திடா தெளிவந்து கணத்தினில்
இளயை!நீ ராடியருளே
இத்தரை யிலேநினது சித்தத்தை வைத்துமே
இனிதுநீ ராடியருளே. 82
___________________________
அஞ்சு தலைக்குரியார் நஞ்சுமிடற் றிறையார்
அம்பொன் மலைக்கவரே - பதியாவார்
அஞ்சொல் உரைத்திடென்னக் கஞ்சம் எனஅருகில்
கொஞ்சம் முகமலர்வாய் - உனைவேண்ட
நெஞ்சம் இளகியெழில் மஞ்ஞை! உரைத்திடுவாய்
தஞ்சம் தனையடையும் - நெறியாக
விஞ்சும் திறம்அமைந்த தந்த்ரம் மிகவிரிவாய்த்
தலைவர் உரைத்தவகை - தருவாயே
அஞ்சும் உளத்தினராய்க் கெஞ்சும் அடியவர்க்காய்
வஞ்சப் பவந்தொலைய - வழிகாட்டும்
அஞ்சொல் லினிலமைந்த செஞ்சொற் சிறப்பமைந்த
அற்றம் தவிர்க்கும்நெறி - அருள்வாயே
எஞ்சும் வினைதொலைய முன்னைப் பதியினிலே
எங்கள் அழைப்பிதனை - உவந்தேற்ற
ஏத்தித் தொழும்எமது பாசம் தொலைக்கவிந்த
இன்னீரில் நீராடி - அருள்வாயே. 83
_____________________________
ஐந்துமா கடலும் அலையெறிந் தார்த்தும்
அவனியை அழித்திடா தருள்வாய்
அலைத்துலைத் தெழுந்து சுழல்வளி வரினும்
அஞ்சிடோம், நீயரு குள்ளாய்
வெந்துகாய்ந் துலறி வெந்தழற் பிழம்பாய்
விளங்கிடும் பாலையிற் சோலை
மேவிடச் செய்வாய் மேலுமே பலவாய்
வியத்தகும் அருட்செயல் புரிவாய்
அந்தமொன் றில்லா அநாதியே! உன்றன்
ஆற்றலுக் கிறுதியும் உண்டோ?
ஆயினும் இன்று குழவியாய் மாறி
அடம்பிடித் தழுதிடல் நன்றோ?
எந்தமின் அன்புப் பணிப்பினை மறுக்கேல்
எழுந்துவா, நீராடி அருளே
ஏன்பிடி வாதம்? முன்னையின் தவமே?
இசைந்து நீராடி அருளே. 84
__________________________
பாலுடன் தயிர்பழம் நெய்யோடு சுகந்தநற்
பரிமளம் அளைந்த நீரிற்
பல்லாண்டு பல்லாண்டு பலகால மாகநீ
பரிந்துநீ ராட விலையோ?
சேலுறழ கண்ணியுன் திருவிழா நாள்களிற்
றிருமறையி னொலியி னுடனே
தேர்ந்தசிவா சாரியர் அபிடேகம் ஆட்டிடச்
சிலிர்த்துநீ மகிழ விலையோ?
மாலுறுத் தும்வசந்த சரத்தெனும் ருதுக்களில்
வருகின்ற நவராத்திரி
மகிமைபெறு மிருபெரிய விழவிலும் அபிடேக
மாட்சியிற் றிளைக்க விலையோ?
ஏலமார் குழலிநீ இன்றுபிடி வாதமேன்?
எழுந்துநீ ராடி அருளே
எத்திக்கும் முன்னையெனு முத்தமப் பதியினில்
இன்றும்நீ ராடி அருளே. 85
_________________________
கண்ணனெனும் உன்னண்ணன் தாய்சொலைக் கேளாது
கடிதுமே தவழ்ந்து சென்று
கட்டிவை பசுத்தொழுவி லேயருண் டழுக்குடன்
காட்சிதரக் கண்ட அன்னை
உண்ணெகிழ்ந் “தென்னுடைய மைந்தனே! நீராட
ஓடிவா" என்ற ழைத்தால்
ஒருகாலும் வாராது மேலுமுருண் டிடுதலுன்
உதிரத் திலுங்க லப்போ?
மண்ணினிற் புரண்டுநீ மாசுற்ற மேனியொடு
வருவதும் அழகா யினும்
மாயவன் ஆண்பிள்ளை நீயோபெண் ணாதலால்
மற்றவர் நகைக்கு முன்னர்
எண்ணியெங் குட்டனே! இனியும் மறுக்காமல்
எழுந்துநீ ராடியருளே
எற்றுக்குச் சீற்றமோ? முன்னையர் செல்வமே!
இனிதுநீ ராடியருளே. 86
____________________________
பொன்னினிற் செய்திட்ட பாத்திரத் திற்பல
புதுமண மலர்களிட்டுப்
போதாத தற்குநற் பன்னீர் கலந்திட்ட
புதியநீர் தன்னி லுன்னை
இன்புடன் நீராட்டிப் பட்டினா லேதுடைத்
தினியஅகிற் புகையு மிட்டே
எழிலான பாவாடை சட்டையிட் டேநெற்றி
இலங்கிடவெண்ணீற ணிந்து
பொன்னுதற் பொலிவுறப் பொட்டுமிட் டுப்பார்த்துப்
பூரிக்க அன்னை மேனை
பொழுதெலாங் காத்திருந் திருந்தஇட மீதினிற்
புற்றெழச் சலித்து விட்டாள்
இன்னமும் வாரா திருந்திடில் என்செய்வாள்?
எழுந்துநீ ராடி அருளே
இன்னிய ராம்முன்னைப் பதியினர் ஏக்கமற
இன்று நீராடி அருளே. 87
______________________________
எண்டிசைகள் எங்கணும் கண்டவர்கள் இடியேற்றை
ஏற்றரவு கொள்ளும் அச்சம்
எய்தியே உயிர்ப்புமிக் கொடுங்கிட் டொளிப்பிடம்
எங்கெனத் தேடி ஓடச்
சண்டர்முண் டர்எனுந் சண்டாளர் சென்றவர்
சாவினை அடைய வைப்பார்
சற்றுமே இரங்கிடா மாகொடிய பாதகர்
சகத்திலும் விண்ணி டத்தும்
மண்டியே செய்கொடுமை மாளாது மாளார்கள்
மாதேவி! உற்று ரைக்க
மட்டுவார் குழலிநீ அக்கொடிய பேரினை
மர்த்தனம் செய்த ருளினாய்
சண்டியே! நாங்களச் சண்ட முண்டர் அல்லர்
சற்றுநீ கடைக்க ணித்துச்
சகத்துயர் முன்னையில் எங்கட் கிரங்கியே
சார்ந்துநீ ராடி யருளே. 88
__________________________________
கரியநீர்க் கடலிடைப் படிந்திட வெண்முகில்கள்
கடிதெழும் தம்விடாய் தணிந்த
களிப்புடன் கறுத்துமிக இடித்துமின் னிச்சேய
காணுமலை களிற்ப டிந்தே
பெரியமழை பொழிவ தற்காயகோ லத்தினைப்
பேதையர் கண்டஞ் சுவோம்
பேசுதற் கரியதாம் குளிர்வாடை உன்றனைக்
கொடுகொடுத் திடச்செய் யமுன்
அரியநற் றவத்தளாம் உன்னன்னை மேனையாள்
அழைப்பினுக் கிரங்கி வாராய்
அன்னையின் வேண்டுதற் கிரங்காத பேரிந்த
அகிலத்தில் எவரும் உண்டோ?
பரிவுடன் ஓடிவந் தவளையும் எம்மையும்
பார்த்துநீ ராடி யருளே
பாலகி! ஞாலமிசை வந்துவிளை யாடுவாய்
பகவதி!நீ ராடியருளே. 89
________________________
சந்த மிகுத்திடு சிந்து மிழற்றிடு
சதங்கைகள் கல்கலெனச்
சங்கினிற் செய்வளை எங்கணும் எதிரொலி
தந்துநல் லோசையிட
வந்தனை தந்தவர் பந்தம தந்தமும்
வந்ததென் றுணர்வூற
வங்கம தற்களி தங்கொளி விளக்கென
வழிதுறை காட்டிடுவாய்
சிந்தனை கொண்டுனை எந்தம துளத்தினில்
சேர்ந்திடச் சேயுருவில்
செந்தளிர் விஞ்சிடு கந்தம லர்ப்பதம்
சிறந்தெமைக் காத்திடநீ
அந்தமில் முன்னையில் வந்தனை இன்புற
ஆடுக நீரினிலே
அஞ்சொ லிளங்கிளை! மஞ்சணி குழலினை!
ஆடுக நீரினிலே. 90
__________________________
10. ஊஞ்சற் பருவம்
சொலற்கரிய ஒளிதவழுஞ் சிவந்தபவ ளங்கொண்டு
துவன்றிட இயற்று தூண்கள்
தொகுநான்கி னவற்றுமிசை தூயவொளி வைரத்திற்
சுடருநல் விட்ட மிட்டு
நிலையவாய் மாணிக்க மணிகள் கொண் டமைத்திட்ட
நேரிய பலகைமீதில்
நிலவுமெழி லிரத்தினக் கம்பளம் விரித்ததின்
நிலைபெற வீற்றிருந்து
நிலவினொளி தவழுமுக மதியினிற் குவளைபொரு
நீள்விழி மலர்த்தி இன்பில்
நிலைத்துமிக வெளிப்படுவ தென்நித் திலவரிசை
நேரிலா எயிறு சிறிதே
புலப்படக் கொவ்வையிதழ் பூத்துமே நன்கிலகப்
புன்னகை புலப்படுத்திப்
பொன்னரின் இன்பினிய முன்னைப் பதிக்கரசி
பொன்னூச லாடி அருளே. 91
_________________________________
நீலநிறை வைரவன் மாகாளி சீதரன்
நின்னருகு வந்து நிற்க
நிழல்போல அவருடன் திருமகள் வாணியெனும்
நேரரிய தெய்வ மாதர்
சாலநின் னூசலினை ஆட்டுதற் கமைந்ததாம்
சால்புடைக் காட்சி ஓரிற்
சகமீது கவிகின்ற ஆகாய மீதிலொளிர்
சகஉடுக் கூட்ட மெனலாம்
ஆலமன் றுண்டமிர்த மாக்கினா னவனுடன்
ஐங்கரன் ஆறு முகனாம்
அரியபெரு கடவுளர் சூழ்ந்திடுந் காட்சியினுக்
காருவமை கூற வல்லார்?
போலவென் றெவற்றையும் காட்டிடற் கில்லை அவர்
பூரித்து நிற்கவேஎம்
பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னூசல் ஆடியருளே. 92
__________________________
காமாட்சி நிறைகாஞ்சிக் காமாட்சி யாயுலகு
காத்திடப் பல்லறங்கள்
கருதியருள் செய்தநின் கடைக்கணருள் வேண்டியே
ககனத் திருந்துவந்து
நாமாட்சி மிக்கநற் கவிவாணர் சூழ்ந்துன்னை
நாள்தொறும் பாடியுருகும்
நல்லபதி முன்னையில் குழுமியுளர் அவர்பாரம்
நாகத் தலைநெரிக்கும்
கோமாட்சி யாற்பெருமை கொண்டநற் குளக்கோட்டன்
குலவுபராக் கிரமபாகு
கோடில் கீர்த்திஸ்ரீ ராஜசிங்க கன்முதல்
கூட்டுபணி யாலுயர்ந்து
போமாட்சி என்றொன்று மின்றியே நின்றுலவு
புகழாட்சி யாலுயர்ந்த
பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னூசல் ஆடியருளே. 93
___________________________
கார்முகில் இதுவென் றுன்னிய கடல்தன்
கடனினைத் திருப்பென அதனைக்
கைகளாம் அலைகள் விரித்தழைத் திடவாம்
கருங்குழற் கற்றைமிக் கொளிகால்
ஏர்மிகு மதியம் இதுவென விழுங்க
எழுந்தவாள் அரவது நாணி
ஏங்கிட அமைந்த பேரெழில் வதனம்
இவைமலர்க் குவளையென் றெண்ணி
ஆர்வமாய் மதுவை நாடியே வந்த
அளிக்குலம் ஏய்ப்புறு விழிகள்
அருஞ்சுவைக் கனியைக் கொந்திடும் ஆர்வத்(து)
அணுகுபுள் ளலந்திடுங் கதுப்பு
போர்க்கள ஆர்ப்பிற் புலம்புறு சிலம்பாற்
பொலிந்திடு பாதபங் கயங்கொள்
பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னூசல் ஆடி அருளே. 94
______________________________.
முப்பத்து முக்கோடி தேவரொடு கந்தருவர்
முற்றமுள கின்னரர்கள்
மூவாத மலவாதை தாவாத நந்தியொடு
முதன்மை பெறு சிவகணங்கள்
பப்பத்தெனும் நெடிய பலவாண்டு பெருந்தவம்
பலசெய்த முனிபுங்கவர்
பகர்ஞான நெறிநின்று நினையருவ நிலையினிற்
பதித்தவுளப் பெருமையாளர்
செப்புற் கரியநற் பத்தியிற் றிளைத்தபேர்
ஸ்ரீசக்ர பூசை செய்வோர்
சேல்நெடுங் கண்ணியுனை வேதநெறி தவறாது
வியன்பூசை செய்யு மறையோர்
பொற்பதுமை யாயுனைக் கண்டுமே வணங்கிடப்
புகுகின்ற வர்களிக்கப்
பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னூசல் ஆடியருளே. 95
__________________________
செங்கதிர் பொங்கொளியின் வெய்யவர் பலகோடி
சேரினும் பொருவி லாத
செவ்வொளி முகத்திலகு பவ்வியத் திருவொளியைச்
சிறிதாய் ஒடுக்கி அடியார்
பொங்கிமல ரப்பொலியும் அங்கருணை தங்கியுறை
புவனஈச் சரியெ மன்னாய்
பூப்புனை ஆரமும் புகழ்புனை ஆரமும்
பொலியுமெம் ஆதாரமே!
துங்கமணி மின்னுமுடி தங்கமொளிர் கங்கணமும்
தொக்கபல வைரவணியும்
தோயுமெழி லுக்கழகும் ஏயவல வென்றமையும்
ஜோதிஸ்வ ரூப மதலாய்!
பொங்கிவரு கடலலைக ளென்னவுன் திருநாமம்
போற்றிசெய் ஒலிமிகுக்கும்
பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னூசல் ஆடியருளே! 96
_____________
முக்கணார் நெற்றியின் விழியெனுந் தீயிலே
மூவிரு முகங்களுங் கொண்டு
முத்தைய னானவன் மூடனாஞ் சூரனின்
மோகபா சங்களை அழித்தான்
சொக்கமாந் தங்கநற் றமிழினைப் புரந்தனன்
'சொற்றனில் உயர்தமிழ்ச் சொல்லே'
தூய்கலை வாணரும் அச்சொலாற் புனைந்துமே
துதித்திடச் சூழ்ந்துநிற் கின்றார்
தக்கணந் தன்னிலே மிக்கதாம் மேன்மையில்
தரித்திடும் அம்மொழி யினிலுன்
தயைமிகு பெருமை இயைந்திடப் பான்தேன்
தந்திடச் செவிமடுத் தருந்தப்
புக்கஎம் பாவாய்! புரமெரி மடுத்திட்ட
புல்லியர்க் காய்ந்தவ ரான
பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னூசல் ஆடி யருளே. 97
______________________________
செந்தா மரைக்கெழில் தருமுகச் செல்வியுன்
திருமுனர் ஆடிடார் யார்?
செயம்செயமென் றுன்னடிச் சிலம்புகள் நனிமிகச்
சேர்ந்துமே கலக லென்ன
மந்தா கினிச்சடையர் தொந்தோ மெனப்பதம்
மண்ணிற் பதித்தும் ஆட
மாலுடன் திசைமுகனும் ஐங்கரன் தன்னினொடு
வள்ளிமண வாள னாடக்
கந்தார் மலர்க்குழற் பூமகள் நாமகளும்
கலைக்கரசி கூடி ஆட
களிவிழி பொழிநந்தி சுரருடன் நாரதர்
கந்தருவர் பலரும் ஆடப்
பொந்தார் அரவினொடு மஞ்ஞையும் குருகுகளும்
பூரித்து மிகவும் ஆடப்
பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னூசால் ஆடி யருளே. 98
________________________________
இல்லா மருங்கினில் மேகலை இலங்குவ(து)
எவ்வாறென் றயிர்க்க வைக்கும்
இருக்கும் எழிலமுதம்! நீயூச லாடுகையினில்
இருங்குழல் இல்லையென் றார்க்கும்
பொல்லாத புருவவில் விழிகள்கணை வேலெனிற்
பொருந்திநாம் நோக்க லாமோ?
புன்னகை புரியினும் பற்களின் தரளவொளி
புகுந்துவிழி கூச வைக்கும்
மல்லார்ந்த திண்டோளர் ஆனவுன் மணவாளர்
மறைந்திடப் பணித்த துண்டோ?
மாபெரிய தாயின்று மழலையுரை குழவியாய்
மாறியது யார்கு றித்தோ?
புல்லியுன் அடியிணைகள் பிடிக்க விழைஎங்களைப்
புரிந்துநீ காட்சி தந்தே
பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னூசல் ஆடி அருளே. 99
_____________
நலிவுசெய் தீமைகள் கொடுமைகள் நீங்கிநாம்
நன்மையில் திழைக்க என்றும்
நாய்களாய் அச்சமிகு கோழையாய் உலகினில்
நகர்ந்திடா திருக்க என்றும்
கலியுகம் விலகிநற் கிருதயுகம் உதித்திங்கு
களிப்பெமக் காக என்றும்
கடமையைப் புரிந்துபயன் உனது கடனென்னவே
களித்துநா மிருக்க என்றும்
பலியினுக் கிடவளர் கடாக்களாய் மாந்தர்கள்
பதைத்திடா திருக்க என்றும்
பாரினில் வாய்மையோ டன்பருளென் றின்னவை
பண்டுபோ லமைய என்றும்
பொலியுமருள் நிறைந்தபெண் ணமுதமே! எங்களது
புகலிடம் ஆன பொருளே!
பொன்னரின் இன்பினிய முன்னைக் கரசிநீ
பொன்னூச லாடி அருளே. 100
____________
நிறைவுரை
நூலாசிரியர் எவரும் ஒரு நூலினை எழுதி நிறைவு செய்தபின் அது பற்றிக் கூறவுள்ள அமிசங்களைத் தொகுத்து எழுதும் அறிமுகவுரை, முகவுரை என்னும் பெயரால் நூலின் தொடக்கத்திலேயே இடம்பெறுவதே மரபு. இதில் நன்மையும் உண்டு. ஆசிரியர் எதிர்பாராத தீமை விளைவதும் உண்டு.
நூலைப் படிப்பவர் முகவுரையைப் படிப்பதன் மூலம் அதன் பயன்பாடுகளை உணர்ந்து நூலில் ஈடுபாடு கொள்ளத் தூண்டப்படுவது நன்மை. நூலின் உள்ளடக்கம் இவ்வளவுதானா என்று முகவுரைக்கப்பாற் செல்லாது நூலைப் புறந்தள்ளுவது தீமை.
'முன்னீச்சரத்து அருள்மிகு ஸ்ரீ வடிவழகாம்பிகை பிள்ளைத்தமிழ்’ என்ற இந்நூலுக்கு நான் நிறைவுரை எழுதுவது மேற்குறித்த நன்மை, தீமையைக் கருத்திற் கொண்ட அச்சத்தினாலன்று.
அகிலாண்ட கோடிகளையம் அளித்தருளும் வடிவழகாம்பிகை மீது ஒன்றுக்கும் பற்றாத சிறியேனாகிய யான் பாடிய இப்பிரபந்தத்தினை அவளின் அடியார் கூட்டம் படிக்கும் என்பதற்கு எவ்வித ஐயமும் இல்லை. ஏனெனில்,
செப்ப லுற்ற பொருளின் சிறப்பினால்
அப்பொ ருட்குரை யாவருங் கொள்வரால்
என்னும் அவையடக்கம் (சேக்கிழார் சுவாமிகள் அருளியது) இந் நூலுக்கும் நல்லரணாகும் என்பது என் நம்பிக்கை.
இந்நூல் வாயிலாகச் செப்பலுற்ற பொருள், எம்பிராட்டி முன்னையாளைப் பற்றியதாகும். எனவே அப்பொருளே இந்நூலினைப் படிக்கப் போதிய தூண்டுதலாகும்; அரணுமாகும்.
கல்லிலும் உலோகங்களிலும் தெய்விகப் பொலிவும் கலையழகும் இணைந்திடும் வகையிலே சிற்பிகள் பிள்ளையாருக்குப் படிமங்கள் அமைத்து, அவை ஆலயங்களிலே எழுந்தருளி அடியவரின் வழிபாட்டிக்கு இடமாவது உண்மையே. ஆனால் சாணகத்திலே பிடித்து வைக்கும் பிள்ளையாரை வணங்கமாட்டோம் என்று எவரும் அடம் பிடிப்பதில்லை
எனது இந்நூலும் சாணகத்திலே பிடித்து வைத்த பிள்ளையாரை போன்றதாயினும் துதித்தலாகிய பயன்பாட்டைப் பெறும் என்றே நம்புகின்றேன்.
பரம்பொருளை அம்மையாயும், அப்பனாயும் ஆண்டானாயும் தோழனாயும் பாவனை பண்ணிப் பரவும் மரபு மிகப் பழைமையானது. பிள்ளையாய்ப் பாவனை செய்யும் வழக்கத்தினைத் தொடக்கி வைத்தவர் பெரியாழ்வார் என வைணவ உலகு போற்றும் விட்டணுசித்தர் ஆவார். 'குழவி மருங்கினும் கிழவதாகும்' என்று தொல்காப்பியம் குறித்த இலக்கிய மரபு, பிள்ளைத் தமிழுக்கு அடிகோலியது என்பதோர் கருத்தும் நிலவுகின்றது. ஆனால் அவ்வகையிற் பிள்ளைப் பாவனை செய்து பாடப்பட்டமைக்கு இலக்கியச் சான்று இல்லை.
சோழர் காலத்திலே ஒட்டக்கூத்தர் 'குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்' பாடி, பெரியாழ்வாரின் முன்னோடி முயற்சிக்குப் பிரபந்தவடிவம் அளித்தார். கடவுளின் இடத்தைப் புவிகாவலன் பெறும் புதுமை அவரால் தொடக்கி வைக்கப்பட்டது. சென்ற நூற்றாண்டிலே மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை 'சேக்கிழார் பிள்ளைத்தமிழ்' பாடித் தொண்டர் சீர் பரவிய பெருந்தகையைப் பாலனாக்கிப் பரவசம் அடைந்தார். இவரின் அடி ஒற்றி எம் ஈழத்து அறிஞர் பெருமக்கள் சுந்தரமூர்த்தி நாயனார், ஸ்ரீலஸ்ரீ ஆறமுகநாவலர் ஆகியோர் மீது பிள்ளைத்தமிழ் பாடியதும் குறிப்பிடத்தக்கது. சாதாரண அரசியற்றலைவர்களும் பிள்ளைத்தமிழ் நாயகர்கள் ஆனதற்குக் 'காமராசர் பிள்ளைத் தமிழ்’ சான்று பகரும்.
ஆனால், பிள்ளைத்தமிழ் மரபின் செழுமையும் மகிமையும் பெருமையும் குமரகுருபரசுவாமிகள், பகழிக்கூத்தர் முதலாம் புலவர் பெருமக்கள் முருகன், மீனாட்சி ஆதியாம் தெய்வங்கள் மீது பாடியருளிய பிள்ளைத் தமிழ்கள் வாயிலாகவே பெரிதும் உணர்ந்து உருகித் தன்வசம் இழக்க வைக்கின்றன; பத்திக்கனிவினை மிகுவிக்கின்றன.
கடவுளரைக் கனிமழலை மிழற்றிடும் பிள்ளைக் கனிகளாய்ப் பாவித்துத் தங்களைத் தாய்மை நிலையில் ஆக்கிக் கொண்டு உருகி உருகிப் பாடிய புலவர் பெருமக்களின் பாதாரவிந்தங்களுக்குப் பல்லாண்டு கூறிப் போற்றுகின்றேன். தமிழ் மொழியானது அவர்களின் கரங்களிலே எவ்வாறெல்லாம் வளைந்து குழைந்து தனது முழுமையான ஆற்றலையும் வெளிப்படுத்தியது என்று வியக்கின்றேன்; பிரமிக்கின்றேன்.
தண்ணுலா மழலைப் பசுங்குதலை அமுதினிய
தாய்வயிறு குளிரவூட்டித்
தடமார்பு நிறைகுங் குமச்சே றளைந்துபொற்
றாள்தோய் தடக்கைபற்றிப்
பண்ணுலாம் வடிதமிழப் பைந்தாமம் விரியும்
பணைத்ததோள் எருத்தமேறிப்
பாசொளிய மரகதத் திருமேனிப்
பசுங்கதிர் ததும்ப மணிவாய்.
என்றும்
பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே
என்றும் வருவனபோன்ற அமுதப் பாடலடிகளின் ஒரு சீர்தானும் என்னால் கற்பனை செய்யவும் முடியுமோ என்ற அச்சமும் தளர்ச்சியும் மீதூரவே இப்பிள்ளைத்தமிழ் பிள்ளைமை நிலையில் என்னால் ஆக்கப்பட்டது.
எனினும் முதலிற் கூறியாங்கு செப்பலுற்ற பொருளினால் எனது பிள்ளைப்பாட்டாகிய வெள்ளைப்பாட்டும் சிலகாலமாவது வாழவேண்டும் என்று அன்னையின் அன்புக் குழவியாகிய நல்லை முருகப்பெருமானின் மலர்ப் பாதங்களை வழுத்தி அமைகின்றேன்.
சொக்கன்.
----------------------&---------------------
குறிப்புரை
குலதெய்வ வணக்கம்:
பொலம் – பொன்
விநாயகர் வணக்கம்
விக்கினங்கள் - தடைகள். நவை - குற்றம். அகில + அண்டம் (அகிலாண்டம்) எல்லா அண்டங்களும். ஆதரம் - ஆதாரம். தழைய - சிறக்க.
1.காப்புப் பருவம்
1. துன்னம் - கிழிந்த கந்தலாடை, கோவணம் -1. கௌபீனம் (கச்சை), 2. அரச இயல்பு. மன்றாடி - மன்றில் ஆடும் சிவபெருமான், நால்வர் - சமயகுரவர் நால்வர். நம்பன் - நம்பெருமான் (சிவன்), சாவணம் - சாகும் வண்ணம், பூண் - ஆபரணம். ஆகம் - உடல், மார்பு.
2. கவல - வருந்த, ஆய்ச்சியர் - இடைச்சியர், திரு - இலக்குமி, கார் - முகில். கவின் - அழகு, கனி - கனியை ஒத்த வடிவழகாம்பிகை.
3. பரிபூரணன் - முழுமையானவன், மேதை - பேரறிவாளி, கண்டம் - கழுத்து, சீதம் ஆர் - குளிர்மை மிகுந்த, மோக லாகிரி - ஆசையாகிய மயக்கம், முன்னை - முன்னீச்சரத்தின் மருஉ.
4. அனலாடி - தீயைத் திருக்கரத்தில் ஏந்தி ஆடியருளும் சிவன், வேதன் பிரமன், சுவானம் - நாய், புலி அதழ் - புலித்தோல், கயத்துரி - (கயம் - யானை) யானைத்தோல், புரக்க - காக்க.
05. அகிலத்தின் - உலகத்தின், புக்க - புகுந்த, புகல் - ஆதாரம், புல்லியர் - இழிந்தோர் (தேவர்கள்), சூதினர் - சூழ்ச்சியாளர், பரவி - போற்றி, வேய் - மூங்கில்.
6. பசுமம் - நீறு, ஏற்றினான் - எருத்து வாகனத்தனான சிவன், கனி - கனி போலும் அழகி, ஊர்தி - (வாகனமாகக் கொண்டு) செலுத்துவோன்.
7. பிழம்பூ - கட்டி, கதம் - கோபம், பூட்கை - உறுதிப்பாடு, வதம் - அழிப்பு, பதம் - (பாதம்) கால்கள் - கழை - மூங்கில்.
8. அனைய - போன்ற, ஞாலம் - உலகம், இசை - புகழ், நவை - குற்றம், குவலயம் - உலகம், வாலை - சிறுமி, வழுத்தி - வணங்கி.
9. அழி - கடல், மருவா - அணையாத, வாதனை - வேதனை, அளகாபுரிக்கு அதிபன் -குபேரன் (அளகை - அலகை எனலுமாம். அலகை - பேய், முனி, (முனி+ஈச்சரம்) முனீச்சரம் முனி வழிபட்டதால் - அலகேசுரம் எனவும் முன்னர்த் தோன்றியது என்னும் பொருளில் முன்னீச்சரம் எனவும் வழங்கும்.
10. தெய்வதம் - தெய்வம், ஆரியம் - சம்ஸ்கிரும், பந்தம் - கட்டு, தளை, அரண் - காப்பு.
-------------------------------------
2.செங்கீரைப் பருவம்
11. பன்னுதல் - கூறுதல், பழமறை - பழைமையான வேதங்கள், கன்னல் - கரும்பு, கவின் - அழகு, அம்புவி - அழகிய பூமி (அம் - அழகிய), செங்கீரை - தவழும் பொழுது குழந்தை வாயிலிருந்து எழும் 'கிர் கிர்' எனும் செழுமையான குரலொலி.
12. ஆற்றுதல் - செய்தல், நெறி - முறைமை, கூற்று - யமன்.
13. சராசரம் - நிற்பனவும் நடப்பனவுமான உயிர்கள், பாலிக்கும் காத்தருளும், பாலகி - சிறுமி, காப்பவள் எனவும் கொள்ளலாம், தோகை - மயில் (சினையாகு பெயர்) இமவான் என்ற இமயமலை அரசனும் அவன் மனைவியான மேனையும் செய்த தவத்தின் பயனாக அவர்களுக்குப் புதல்வியாக உருக்கொண்டு தாமரை மலரிலே எழுந்தருளினாள் எம்பிராட்டி.
14. ஈன்ற பின்னை - பெற்றபின்னர், மாணி - பிரமசாரி, பவவினை - பிறவிக்கான நல்வினை, தீவினை, எய்ப்பில் வைப்பு - தளர்வுறும் காலத்திற்கென்று சேர்த்து வைக்கும் சேமிப்பு, செம்பொருள் - செம்மையான (மேலான) பரம்பொருள்.
15. ஏடு - பூவிதழ், இனிமை +நறும் (இன்னும்) - இனிய நன்மணம், குறவர் - குறிஞ்சிநில வாழுநர், அவனி - பூமி.
16. தில மலர் – எட்பூ (திலம் - எள்) மகளிரின் மூக்கினை எட்பூவுக்கு உவமிப்பது புலவர் மரபு, வஞ்சி - ஒரு கொடி (சீந்திற் கொடி) பெண்களின் மெல்லுடலுக்கு உவமை, சிகை -(மயிலின்) கொண்டை, ஆல (ஆடல்) - மயிலின் குரலையும் அதன் ஆடலையும் குறிக்கும், சகம் - பூமி.
17. நித்யை - என்றும் உள்ளவள், தண்கலைகள் - குளிர்ந்த (சந்திரனின்) கூறுகள், நந்தல் - கெடுதல், நவமான - புத்தியில் உள்ளத்தில், வந்திக்க - வழிபட, புராதனி - பழையவள், எழில் - அழகு, சுந்தரி - அழகி, சீலம் - ஒழுக்கம்.
18. நவபுவனம் - ஒன்பது உலகங்கள். இவற்றை நவ வியூகம் எனவும் கூறுவர். (வியூகம் - படைவகுப்பு) "சக்தி கோணம் ஐந்துடனே சிவகோணம் நாலும் கூடுவது முத்தொழிலும் உண்டாவதற்குக் காரணம்" என்று வாமகேசுர தந்திரம் குறிப்பதாய் சைவ எல்லப்ப நாவலர், சௌந்தரியலகரி உரையிலே கூறியுள்ளார். சங்கமித்தல் - கூடுதல், ஆலம் - விடம்.
19. கார் - மழைக்காலம், கூதிர் - பின் மழைக்காலம், வேனில் - கோடைகாலம்,
காலவாதீதை - (கால+அதீதம்) காலங்கடந்தவள், பரமாணு (பரம அணு), அணுவைக் கூற செய்த மிகச்சிறிய கூறு, அகம் - உள்ளம்.
20. மால் - விட்டுணு, மெய் - உடல், இதழ் - உதடு.
------------------------------------------
3.தாலப் பருவம்
21. பாரித்தல் - சுமத்தல், பகழி - அம்பு, பிரமகத்தி - அந்தணனான இராவணனைக் கொன்ற பாவத்தின் வடிவான பிரமகத்தி, இராவணன் - கைகசி என்ற இயக்கிக்கும் விஸ்ரவசு முனிவருக்கும் மகன், அத்தன் - தந்தை (சிவன்) அஞ்சுகம் - கிளி, குதலை - விளங்காச் சொல்.
22. சால – மிக. தயாபரி - கருணையுடையாள், ஒருமை - மனத்தை ஒருமுகப்படுத்திப் பரம்பொருள் ஒன்றே என்று உணரல். வதனம் - முகம்.
23. கணநாதன் - விநாயகர், முருகார் - அழகுமிக்க, இளவல் - இளையோனாகிய முருகன், ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன், குழவி - குழந்தை.
24. ஆழி - கடல், அண்ணல் - பெரியோன், நிபந்தம் - இறையிலியாய் வழங்கும் நிலம் முதலியன, கேளீர் - உறவினர். இகபரம் - இம்மை, மறுமை, சீர்த்தி - சிறப்பு, கேழில் - (கேழ்இல்) - ஒப்பிலாத.
25. அரன் - சிவன்.
26. பொன்றும் - அழியும், பொன்றா - அழியாத, விழைவார் - விரும்புவார், மன்னும் - நிலையாயுள்ள.
27. கார் - முகில், கவின் - அழகு, ஓடியும் - முறியும், ஒல்கும் - ஒதுங்கும், ஏரார் - (ஏர்+ஆர்) அழகுமிக்க, எழில் - எழுச்சி, அழகு, என்பை - எலும்பை , அனநடை - அன்னம் போன்ற நடை, (அன - இடைக்குறை)
28. நித்தியர் - நிலையானவர், என்றும் இருப்பவர் (சிவன்), நச்சிட - விரும்பிட, சதித்துவம் - (சதி - மனைவி) வாழ்க்கைத் துணைநலம், வித்தகி - திறமையாளி, வித்தி - விதைத்து, நற்றரு (நன்மை தரு) நல்லமரம், பழனம் - வயல், இன்னிய - இனிமையான, தத்தை - கிளி.
29. முயங்கி - கூடி, பேரும் - பெரும், பிறங்கும் - விளங்கும், கூபம் - கிணறு, அஞ்சனம் - கண்களுக்குத் தீட்டும் மை.
30. மட்டு - தேன், ஆழி - சக்கராயுதம், சாபம் - வில், தாதை - தந்தை, விநாசினி - அழிப்பவள், விலாசினி - அழகுடையாள்.
---------------------------------------------------
4. சப்பாணிப் பருவம்
31. கதிர்- சூரியன்
32. கோடு - கொழுகொம்பு, இங்கிதம் - இனிமை, காசினி - உலகம்.
33. கந்தமலர் - மணமுள்ள மலர் (கந்தம் - மணம்), தடம் - குளம், மோனம் - மௌனம், பிணை - பெண்மான், காழியன் - சீர்காழியில் அவதரித்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். இவரை முருகனின் அவதாரம் எனக் குறிப்பதும் உண்டு. ("வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே" திருப்புகழ்)
34. வடவைத்தீ - வடவாமுகாக்கினி, உருத்து - கோபித்து, யாதவன் - யாதவ குலத்தினனான கண்ணபிரான், வெகுளி - கோபம், வேய் - மூங்கில்.
35. பணம் - (பாம்பின்), படம், பணிகள் - ஆபரணங்கள், பிணங்கதல் - மாறுபடுதல்.
36. இமையவர் - தேவர், கோவலன் - கண்ணபிரான்.
37. குழாம் - கூட்டம், விள்ளல் - எடுத்துரைத்தல்.
38. செரு - போர், மர்த்தனி - வதம் செய்தவள், மகிடன் - எருமை முக அசுரன், (மகிடம் - எருமை) விமலி - மலங்களற்றவன், சமரி - துர்க்கை, அமிர்தவர்ஷனி - அமிர்தம் பொழிபவள், (வர்ஷம் - பொழிவு), புயங்கள் - சிவன், சருவ - (சர்வ) அனைத்தும்.
39. வயங்கும் - விளங்கும், மாற்றலர் - பகைவர்.
40. பாங்கரும் – சிறப்புமிக்க
-----------------------------------------
5. முத்தப் பருவம்
41. மும்மதம் - கன்னமதம், கபோதமதம், பீஜமதம் ஆகிய மும்மதங்கள், வேழம் - யானை, நத்தும் - விரும்பும் முத்து, முத்தம் என்பன முத்தையும், முத்தத்தையும் (முகர்தல், கொஞ்சுதல்) குறிக்கும்.
42. தரளம் - முத்து, இலகு - இலக்கு(ம்) எயிறு - பல், இழைக்கும் - ஆக்கும், மருவி - கூடி, சுழியும் - (கன்னத்தில் விழும்) அழகிச் சுழிகளும், மதுகரம் - வண்டு, முன்னையின் என்பது - முனையின் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. இனிவரும் இடங்களிலும் இவ்வாறே கொள்க.
43. புளகம் - மயிர்க்கூச்சு (உரோமாஞ்சலி), கள் - தேன்.
44. புன்மைகள் - இழிவுகள், பிஞ்ஞகன் - சடாமுடிதரித்தவன் (சிவன்), பின்னையள் - தங்கை.
45. மஞ்சு - முகில், மகத்துவம் - மேன்மை, பாவையர் - பாவை போலும் அழகிய பெண்கள், தண்ணளி - இரக்கம், கருணை, விழவு - விழாக்கள்.
46. புரை - குற்றம்.
47. மத்தம் - களிப்பு (மதம்)
48. மாலாகி - மயக்கம் கொண்டு, காலாந்தகி (கால அந்தகி) - யமனுக்கும் யமனானவள், ஏலார் - (ஏலம் ஆர்) - மணம் ஊட்டப்பட்ட, குழலி - கூந்தலை உடையவள், ஏந்திழை - ஆபரணம் தரித்தவள், (வினைத் தொகைப்புற்றத்துப் பிறந்த அன்மொழித் தொகை), மெல்லியல் - மென்மையான இயல்பினள் (பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை)
49. தயா - தயவு
50. சேலேர் - சேல் ஏர், (சேல் +ஏர்) - மீனைப் போலும் அழகிய, சேல் - ஒருவகை மீன், ஏர் - அழகிய சின்மயம் - (சித்+மயம்) ஞானமயம், இடைச்சி - இடையை உடையவளே! கால் -காற்று.
---------------------------------------------
6. வாரானைப் பருவம்
51. நளினம் - தாமரை, அனையே - அன்னையே என்பதன் தொகுத்தல் விகாரம்.
52. உததி - சமுத்திரம், மகதி - பார்வதி, கடிது - விரைந்து.
53. சண்ணித்தல் - பூசுதல், செல்வேள் - முருகன், சிவன், உமை, கந்தன் மூவரும் கூடி அமர்ந்தருளும் மூர்த்தம் சோமாஸ்கந்த மூர்த்தம், முன்னீச்சரத்தில் மகோற்சவங்களிலே சோமாஸ்கந்த மூர்த்தியும், சந்திரசேகர மூர்த்தியும் (சந்திரனைச் சடையில் தரித்த மூர்த்தமும்) எழுந்தருளுவதும் பூசைபெறுவதும் வழக்கம்.
54. அணங்கு - மயக்கம்.
55. முகாரவிந்தம் - (முக + அரவிந்தம்) முகமாகிய தாமரை. "சக்தியின் ஆற்றல் அறியாது அவளை மதியாத தேவர்களின் முன்பு சிறுதுரும்பாய்த் தோற்றியருளி, தன்னை அழிக்க முடியுமானால் அழிக்க என அறை கூவ. வாயுவும் அக்கினியும் முயன்று தோற்றபின் சக்தியானவள் தன்னுடைய பேருருவினை அவர்களுக்குக் காட்டியருளினாள் என்பர்., இறைஞ்சுதல் - வணங்குதல்.
56. அம்பாள் தன் நாமத்தினை அவனது நாவிலே தீட்டியதால் கவிச்சக்கரவர்த்தியானவன் காளிதாசன் என்பது கதை.
57. தூவி - சிறகு, தாளினை - இரு திருப்பாதங்கள், பதுமம் - தாமரை, காந்தள் - கார்த்திகைப்பூ.
58. தமியேம் - தனித்தவரான (ஆதாரமற்றவரான) நாம், நுதல் - நெற்றி, கிறங்கல் - தலை சுற்றி மயக்கம் உண்டாதல்.
59. திங்கள் - மாதம், நீசமாந்தர்- இழிவான மக்கள், நேரில் - (நேர்+இல்) ஒப்பில்லாத, தாசன் - அடியவன்.
60. அலந்திடுதல் - வாடிவருந்துதல்.
--------------------------------
7. அம்புலிப் பருவம்
61. தாரகை - நட்சத்திரம், தோற்றிட - தோல்வி அடைய, கா - பூஞ்சோலை, காமம் - பக்கச் சார்பு, கந்தரம் - கழுத்து, கடுவர்- நஞ்சினர் (கடு - நஞ்சு, ஆலகால விடத்தை அருந்தியவர்.) 62. சீதளம் - குளிர்மை, எழிலி - அழகுடையாள் (அம்மை), ஆதரம் - அன்பு.
63. பாரி - மனைவி, அடஞ்செய்தல் - பிடிவாதம் பிடித்தல், உகுத்தல் - சிந்துதல்.
64. பரு - சிறிய பருவின் (குரு) அளவான, முன்னவன் - தமையன் (திருமால்), கறைகண்டன் - நஞ்சுக்கறை பொருந்திய கழுத்தினன் (சிவன்).
65. மதலை - குழந்தை, அனந்த குண சோபினி - முடிவில்லாத குணங்களாலே ஒளிர்பவள் (அம்மை)
66. நவி - (நவ்வி என்பதன் தொகுத்தல் விகாரம்) பெண்மான், எள்ளலறு - (எள்ளல் +அறு) பரிகசித்திற்கு இடமே இல்லாத, மதியூகி – சிறந்த.
67. இந்திரகோபம் - தம்பலப்பூச்சி, தரளம் - முத்து, சிந்தூர திலகம் - சிவப்புப்பொட்டு, பரிமளம் - நறுமணம்
68. அஞ்சற்க - பயப்பட வேண்டாம். பன்னிரிய - (பன்னுதற்கு அரிய) சொல்கடந்த, அன்னவாம் - அத்தகையனவான.
69. பவிசு - பெருமை, உற்பவித்து - பிறந்து, பன்னி - பத்தினி என்ற சொல்லின் திரிபு, மனைவி, அற்றவர் - துணையில்லாத அகதிகள், ஏதும் இலிகள்.
70. 1. மதி - சந்திரனே (விளி) 2. மதிப்புடன் - கௌரவமாக, மதித்திடா - மதிப்பளிக்காத, மூடமதியே - மூடமான புத்தி (மதி - புத்தி) உள்ளவனே, மகத்தினில் (முகம் - அத்து+இல், மகம் - வேள்வி) வேள்வியில், நாரி - பெண்.
----------------------------------------------
8. அம்மானைப் பருவம்
71. *சிவபிரான் போலவே அம்மையும் அநாதி. எனவே அவளும் தாயும் தந்தையும் இல்லாதவளே. சாக்தர், பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் அவளுக்குப் புராணங்களே தக்கன், இமவான் ஆகிய தந்தையரைக் கற்பிக்கின்றன. ஆய் - அன்னை, அம்மானை - பெண்கள் எறிந்தாடும் கறங்கு போன்றதொரு கருவி.
72. ஐம்பொறிகள் - மெய் (உடல்), வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்துறுப்புக்கள், அர்க்கியம் - நீர்வழிபாடு, அவிசு - வேள்வித்தீயில் இடப்படும் உணவு (அவிர்ப்பாகம், அவி எனவும் வழங்கும்) ஞேயம் - நெய் வத்து (வஸ்து) அவிர்ப்பாகத்துள் இடப்படும் பிறபொருள்கள், உம்பர் - தேவர் இம்பர்- இவ்வுலகம், ஸ்ரீ சக்கர பூசை - அம்பிகையை ஸ்ரீ சக்கரம் என்ற யந்திரத்தில் வழிபடல், இயல்புணர்ந்தார் - சாக்தர்.
73. நிர்விகாரம் - விகாரம் (பாதிப்பு) அடையாமை, விகாரம் - பாதிப்பு, மாறுதல், சிந்தாகூலம் - மனக்கவலை, ஜகத்ஜனனி - உலகத்தாய் (ஜனனி - தாய்)
74. சத்து, சித்து ஆனந்தம் - சச்சிதானந்தம்: உண்மை, அறிவு, தூயமகிழ்வு இவை மூன்றும் இணைந்த சச்சிதானந்த சொரூபிணியாக அம்மையைச் சாக்தர் கொள்வர், இன்னிலை - இனிமையான உயர்நிலை (முத்தி), பதிநிதி - (முன்னையாகிய), தலத்தின் செல்வம்.
75. சரதம் - உண்மை, நிச்சம் ஸ்ரீசக்கரத்தின் நடுவிலே அம்பிகை எழுந்தருளி அருள் பாலிப்பாள் என்பர்.
76. கோடு – வரி (-) கோடினும் - வளைந்தாலும் கோடு என அதனையும் (கோடு என்ற சொல்லாலேயே), கோடுவர் - கொள்வர், கோல் செங்கோல் (நடுவுநிலைக்கு அடையாளமாக உள்ள நேரியகோல்), கோடிடின் (நடுவிநிலைநில்லாது ஒருபக்கம் சார்ந்து) வளையுமானால் ஆடிட - மகிழ்ச்சிக்கு அறிகுறியான ஆடல்பாடல்.
77. உருவை - (தூல) உருவினை, மருவி - அணைத்து, அருவை - உருவற்றி நிலையை, ஒருவி - விடுத்து, சிறுமி - அம்பாளைக்குறிக்கும் பொருவில் - (பொரு +இல்) ஒப்பிலாத, அம்மனை - அம்மானை (மானை மனை எனக் குறுகிற்று) திரு - இலக்குமி, கலையின் உரு - சரசுவதி, விறலின் எழில் - (வீரத்திருவான) அழகிய துர்க்கை (மலைமகள்), எருவை - புலி, உரிவை - போர்வை, மருமம் - மார்பு, இமவதி - ஹைமவதி என்ற வடசொல்லின் திரிபு (ஹிமவானின் மகள் ஹைமவதி) என்றாவதை வடநூலார் தத்திதாந்தம் என்பர், முனையர் - முன்னையர் தொக்கு முனையர் ஆயிற்று, தரு - மரம், தழைவு - மகிழ்ச்சியோடு.
78. தடங்கடல் - பெரியகடல், இழைப்பினும் - செய்யினும், தேசு - ஒளி.
79. புரக்கின்ற - காக்கின்ற, கயற்கண்ணி - கயல் பொன்ற கண்களையுடைய மதுரை மீனாட்சியம்மை, நளிர் - குளிர்மை, பெருமை.
80. இகல் - பகை, சாடும் - தாக்கும், மோதும்.
---------------------------------------
9. நீராடற் பருவம்
81. பொரும்பினன் - இமவான் (பொருப்பு - மலை), சுகந்தம் - நறுமணம்.
82. அம்மணம்-ஆடை தரியாமை, நிர்வாணம், அமை - மூங்கில், (மூங்கில் போல) அமைந்த, எய்த்திடல் - ஏமாற்றதல் (ஏய்த்திடலின் குறுக்கல் விகாரம்)
83. திருப்புகழ் சந்தத்தில் அமைந்த பாடல் - ஒவ்வோரடியின் ஈற்றுச் சீரின் ஈற்றசை இரண்டும் நேரசைகளாய் அமைக்கப்பட்டன. கஞ்சம் - ஹம்சம் (அன்னம்), மீண்டும் உரைக்க வேண்டினார் என்பது கற்பனை) இன்னீர் - இனிமை+நீர்
84. சுழல்வளி - சூறாவளி.
85. சேல் - ஒருவகைமீன், ருதுக்கள் - (கால) பருவங்கள்
86. உதிரம் - இரத்தம், குட்டன் – சிறுபிள்ளை.
88. அரவு - பாம்பு, சண்டமுண்டர் - சண்டன் முண்டன் என்ற கொடியோர் அவர்களை வதைத்தமையால் (மர்த்தனம் - வதை) அம்பிகையைச் சண்டி எனவும் அழைப்பர்.
90. சந்தம் - இன்னோசை, சிந்து - பாட்டு, அந்தம் - இறதி, மஞ்சணி - (மஞ்சு அணி) மேகமென அழகிய, வங்கம் - கப்பல், ஒளி விளக்கு - கலங்கரை விளக்கம்.
------------------------------------------------
10. ஊஞ்சற் பருவம்
91. துவன்றிட - பொலிந்திட, மிசை - மேலே, விட்டம் - மேற்றட்டி, பொரு - போன்ற, பொன்னர் - பொன் போலும் மேனியரான் (பொன்னம்பல வாணரான) சிவபெருமான்.
92. சீதரன் - திருமால் மார்பிலே தரித்த திருமால் (ஸ்ரீதரன் - ஸ்ரீ (சீ எனத் தமிழ் வடிவம் பெறும்) - இலக்குமி) ஓரில் -ஆராய்ந்தால், சகஉடுக்கூட்டம் - கூட்டாளிகளான நட்சத்திரக் கூட்டம் (உடு - நட்சத்திரம்)
93. காமாட்சி - (கா+மாட்சி) பூஞ்சோலையின் சிறப்பு, நாமாட்சி - நா+மாட்சி - நாவின் சிறப்பு (நாவன்மை), நாகம் - (பூமியைத் தாங்கும்) ஆதிசேடன் என்ற நாகம், கோமாட்சி - அரசன் என்ற சிறப்பு, கோடில் - கோடு இல் - (வளையாத, தாழாத), கீர்த்தி - மிகுபுகழ், போம்+ஆட்சி - (போமாட்சி) ஆட்சி போகும் என்ற அச்சம்.
94. கடலானது தன்னிடம் முகந்த நீராகிய கடனைத் திருப்பித் தா என்று கார்முகிலைத் தன் அலைகளாகிய கைகளை நீட்டிக் கேட்பது, உண்மையிற் கார்முகிலை அன்று; கார்முகில் போன்ற காட்சி தந்த அம்மையின் கூந்தலைக் கார்முகில் என்று மயங்கியதால் விளைந்த விளைவு என்பது கற்பனை, மது - தேன், அளிக்குலம் – வண்டுக்கூட்டம்.
95. கந்தருவர், கின்னரர் - தேவ உலக இசைவாணர், பப்பத்து - நூறு (நூற்றுக்கணக்கான)
96. வெய்யவர் - ஆரியர், பொருவிலாத - ஒப்பிலாத, பவ்வியம் - புனிதம், மென்மை, ஆரம் - மாலை, துங்கமணி - தூய இரத்தினம், கங்கணம் - காப்பு, ஏயும் - ஒக்கும்.
97. முக்கணார் - மூன்று விழிகள் உள்ள சிவன், சொக்கம் – அழகு; சொற்றனில் - சொல்தனில், சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - பாரதி, தக்கணம் - தட்சணபீட பூமி, தென்னிந்தியப் பிரதேசம், மடுத்து - அழித்து.
98. நனிமிக - மிகமிக (நனி - மிகுதியைக் குறிக்கும் உரிச் சொல்), மந்தாகினி - கங்கை, பொந்து - புற்று, மரத்தடியில் உள்ள (துவாரம்) துளை.
99. மருங்கு - இடை
100. நலிவு – துன்பம்.
--------------xxxx-----------------
This file was last updated on 20 Feb. 2021.
Feel free to send the corrections to the webmaster.