திருக்கேதீச்சரத்துக் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ்
சி. இ. சதாசிவம்பிள்ளை அவர்கள் இயற்றியது.
tirukkEtIccarattu kaurinAyai piLLaittamiz
by catAcivam piLLai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Roja Muthiah Research Library, Chennai for providing a scanned PDF of this work.
Our sincere thanks go to Dr. Mrs. Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation of the soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருக்கேதீச்சரத்துக் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ்
சி. இ. சதாசிவம்பிள்ளை அவர்கள் இயற்றியது.
Source:
திருக்கேதீச்சரத்துக் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ்
சி. இ. சதாசிவம்பிள்ளை அவர்கள் இயற்றியது.
வெளியீடு :‘பழைய மாணவர் குழு' புங்குடுதீவு.
பதிப்பகம்: யாழ். விவேகானந்தா அச்சகம்
முதற்பதிப்பு: 1976 , விலை ரூபா 5-00
உரிமை ஆசிரியருக்கே
Published by Vidwan S. Arumugam
On behalf of The Old Students of Perasiriyar S.E. Sathasivam Pillai. Pungudutivu.
அச்சுப்பதிப்பு : விவேகானந்தா அச்சகம், யாழ்ப்பாணம்
---------
உ
சிவமயம்
அணிந்துரை - வெண்பா
தொண்டர் தொழுதேத்தத் தூய அருள்பொழியும்
அண்டர் புகழ்கௌரி அம்மைபால் - மண்டுமன்பைப்
பிள்ளைத் தமிழ்செய்த பெம்மான் சதாசிவ
வள்ளல்சீர் வாழ்க வளர்ந்து.
“மூவுலக மும்புகழு மாதோட்ட தலமகிமை
மொழிவதரி தென்றுசூதன்
முதனூலின் மும்முறை முழங்கினான்''
(முதனூல் தக்ஷிண கைலாச மான்மியம்)
"அமலர்கே தீச்சரந் திருஞானசம்பந்த
ராரூரர் திருவாய்மலர்ந்
தருள் செய்தே வாரம் பெறுந்தலம தாகலி
னதற்குநிக ரார்சொலவலார் ''
(ஈழமண்டல சதகம், ஆசிரியர் ம.க.வே. இயற்றியது.)
திருக்கேதீச்சர தல விசேடத்தால் இந்நூற்றாண்டில், கிடைத்தற்கரிய இருபெரும் புதையல்கள் - மரபு பிறழாதவைகள் - நமக்குக் கிடைத்திருக்கின்றன.
ஒன்று திருக்கேதீச்சர புராணம். மற்றையது கௌரி நாயகிபிள்ளைத்தமிழ். இரண்டும் ஆலய சந்நிதானத்தில் பாராயணம் பண்ணத்தக்க புனிதம் வாய்ந்தவைகள்.
புராணமகிமை பற்றி அதன் முகவுரையிற் காணலாம். புராண ஆசிரியரும், பிள்ளைத்தமிழ் ஆசிரியரும் அறிவுத்தூய்மையாலும், ஒழுக்க சீலங்களாலும் பிரசித்தமானவர்களாயினும் தம்மை வெளிக்காட்டாதவர்கள். அதனால் அவர்களின் கவித்துவ சாமர்த்தியம் குடத்துள் விளக்காய் இருந்தது.
பிள்ளைத்தமிழ் ஆசிரியரின் கவித்துவம் தூதுப் பிரபந்தமொன்றினால் சற்றே வெளிப்பட்டிருந்தாலும், முழுமையான ஆற்றல் பிள்ளைத்தமிழிலே தான் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
பிள்ளைத்தமிழின் சிகரமான மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் அடிச்சுவட்டைக் காட்டி இதற்கு நல்லதொரு விமரிசனம் காணலாம்.
நாவலர் பெருமான் மனங்குளிரும்படி, காரைநகர், அருணாசலப்பெருந்தகை ஈன்ற சைவாசிரியருள் தலைமைப் புதல்வர் நம் பிள்ளைத்தமிழ் ஆசிரியர். சக ஆசிரியரெல்லாம் தம் ஆசிரியரென்று மதித்தலால், அவர் பேராசிரியர்.
பேராசிரியர் சி. இ. சதாசிவம்பிள்ளை அவர்கள், கௌரி அம்மைபால் ஊற்றெடுத்த அன்பைக் குழைத்துப் பிள்ளைத்தமிழ் செய்து, அதனை நமக்கெல்லாம் வாரிவழங்கி வள்ளன்மை செய்திருக்கின்றார்கள்.
அவர்களின் வள்ளன்மைச் சிறப்பு வளர்ந்து வாழ்வதாக.
பிள்ளை அவர்களின் கண்காண, பிள்ளைத்தமிழ் அச்சு வாகனமேறி, தேவி சந்நிதியில் அரங்கேறுவதும் நிகழ்வது கிடைத்தற்கரியதொரு பேறு.
பிள்ளை அவர்களின் தவப்பேறு இருந்தவாறு !
கலாசாலை வீதி, சி. கணபதிப்பிள்ளை
திருநெல்வேலி,
23-3-76.
---------------------------------------
உ
சிவமயம்
பதிப்புரை
இலங்கையில் வாழ்கின்ற இந்து மக்களின் உயிரனைய திருத்தலம் திருக்கேதீச்சரம். பல்லாண்டுகாலமாக மறைந்து கிடந்த இத்தலத்தினை மீண்டும் வெளிப்படுத்த வல்லவர் எவரோ என்று ஏங்கியிரங்கி அழுது மறைந்தவர் நாவலர் பெருமான். நாவலர்பெருமானின் கனவு நனவாகிவிட்டது. ''கேடில்லாத கேதீச்சரம்'', “தொண்டர் நாடொறுந் துதிசெய அருள் செய் கேதீச்சரம்'' ஆகிவிட்டது.
இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் கேதீச்சரநாதர் மீது பத்தி மிகுந்து கிள்ளைவிடு தூது பாடிப் போற்றியவர் புங்குடுதீவைத் தாயகமாகக்கொண்ட பேராசிரியர் சி. இ. சதாசிவம் பிள்ளை அவர்கள். இவரை இளையப்பா உபாத்தியாயர் என்றே எல்லோரும் இனிதாக அழைப்பர். இவர் எங்கள் குருதேவர்; ஆசிரியர் குல தீபம்; எம் கண்கண்ட தெய்வம்.
பேராசிரியர் பழுத்த மனத்திருத்தொண்டர்; பத்திநெறி கைவந்த பண்பு மிகுசெல்வர்; சிறந்த கவிஞர், இவர் பழந்தமிழ் நூல்களில் பரந்த அறிவு படைத்தவர்; தோத்திர நூல்களிலும் சாத்திர நூல்களிலும் ஈடுபாடு மிகவுமுடையவர். கௌரிநாயகி மீது கொண்ட கரைகடந்த பத்தியினாலே திருக்கேதீச்சரத்துக் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தம் ஒன்றும் பாடி முடித்துள்ளார். இவருடைய மாணவருட் சிலரும்; நண்பர்களும், அன்பர்களும் நூலைப் படித்துச் சுவைத்தனராயினும் அதனை அச்சேற்றும் வாய்ப்பு எளிதிற் கிட்டவில்லை, இவ்வாண்டில் எல்லாம் வல்ல இறைவியின் திருவருளால் நூலும் அச்சாகி விட்டது. குருதேவரின் பழைய மாணவர்களும், நண்பர்களும் பொருளுதவி புரிந்தமையினால் நூல் பொலிவுடன் வெளிவருகிறது.
இந்நூல் வெளிவருதற்குப் பொருளுதவி புரிந்த பேரன்பர்களுக்கு முதலில் யான் உளங்கலந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்து நூலுக்கு அணிந்துரை வழங்கிய செந்தமிழ் முனிவர் பண்டிதமணி, சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும், நூலினை நன்கு சுவைத்து மதித்து முகவுரை வழங்கிய இலங்கைப் பல்கலைக் கழக யாழ்ப்பாண வளாகத் தலைவர் அறிஞர். உயர்திரு. க. கைலாசபதி M A. M. Lit-Phd. அவர்களுக்கும் பேராசிரியரின் வாழ்வும் வளமும் குறித்துக் கட்டுரை வழங்கிய பண்டிதர் மு. ஆறுமுகனார் - அவர்களுக்கும் நூலுள் நுழைந்து சுவைத்து ஆராய்ச்சியுரை வழங்கிய அன்பர் வித்துவான் பொன். அ. கனகசபை அவர்களுக்கும் எம் உளங்கனிந்த நன்றியும் வணக்கமும் உரியவாக.
இந்நூலினை அச்சிடுங்கால் திருப்பாடல்களை எழுத்தெழுத்தாகவும், சொல்சொல்லாகவும், சீர்சீராகவும் படித்துப் படித்துச் சுவைக்கும் பேறு தமியேனுக்குக் கிடைத்தது. கௌரிநாயகியின் புகழ் விரிக்கும் இந்நூலினைப் படித்தவண்ணமே இருக்கின்றேன். நூலாசிரியராகிய பேராசிரியர் மீது யான் கொண்டுள்ள அன்பின் பரிசு அது. நூல் முழுவதையும் ஒருமுறையேனும் படித்துச் சுவைப்பவர், இந்நூலினை அபிராமி அந்தாதி போல் ஆராதனை நூலாக அமைத்துக் கொள்வர் என்பது என் பணிவான கருத்து. இலக்கியச்சுவை கருதிப் படிப்போருக்கும் இந்நூல் நல்விருந்து அளிக்கும் என்பதில் எட்டுணையும் ஐயமில்லை.
இந்நூல் சிறப்புடன் வெளிவர உறுதுணையாக விளங்கிய நண்பர் வித்துவான் பொன். அ. கனகசபை அவர்களுக்கும், பேரன்பர் க. சிவராமலிங்கம் B. A. அவர்களுக்கும், நூலினை விரைவில் அச்சிட்டு உதவிய யாழ். விவேகானந்த அச்சக அதிபர், துணையதிபர், இலிகிதர், தொழில்புரி நிபுணர் அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றி.
பத்திச் சுவை கனிந்த இத்தெய்வீக நூலினை அச்சேற்றும் வாய்ப்பு, எனக்குக் கிடைத்த பெரும்பேறு. அவ்வாய்ப்பினை யன்புடனளித்த குருதேவர் பேராசிரியர் உயர்திரு. சி. இ. சதாசிவம்பிள்ளையவர்களின் பொன்னார் திருவடிகளுக்கு என் வணக்கம் என்றும் உரித்து.
''தமிழகம்'' சி. ஆறுமுகம்
புங்குடுதீவு-12 "பதிப்பாசிரியர்'' , (பழைய மாணவர் குழு)
5-3-76
-----------------------------------
முகவுரை
தமிழிலே தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள் உண்டென்பர். பிரபந்த இலக்கணம் வகுக்கப்பட்ட பின் எழுந்த சில வகைகளும் வழங்கி வந்துள்ளன. இப்பிரபந்தங்கள் அனைத்தும் ''தமிழ்கூறு நல்லுலகத்திற்குப்'' பொதுவானவை யெனினும், பலகாலமாக ஈழதேசத்திற் செய்யுள் இயற்றி வந்த புலவோர்கள் ஏறத்தாழ நாற்பது வகைப் பிரபந்தங்களைப் பாடியிருக்கின்றனர். ஈழத்துத் தமிழியல் பற்றிய ஆர்வமும், ஆய்வும் வளர்ச்சியுற்று வரும் இந்நாட்களில், ஈழத்துப் புலவர்கள் பாடியனவாக இதுவரை அறியப்படாத பிரபந்த வகைகள் இனிமேல் தெரிய வரவுங்கூடும்.
ஏறத்தாழ நாற்பது பிரபந்த வகைகள் ஈழத்தவராற் பாடப்பெற்றிருப்பினும் அவற்றுள்ளும் சிலவே பெரிதும் சிறப்பாகக் கையாளப்பட்டன; அந்தாதி, ஊஞ்சல், கீர்த்தனை, குறவஞ்சி, கோவை, தூது, பள்ளு, புராணம், மான்மியம், விருத்தம், வெண்பா என்பன நந்தேசத்துப் புலவர்கள் நாவில் நன்கு பயின்றவை. ஊஞ்சல், பள்ளு, புராணம் முதலியவற்றிலே ஈழத்து இயற்கைச்சூழல் குறிப்பிடத்தக்க பாங்கில் இடம் பெற்றிருக்கிறது. இயற்கை வருணனை, மக்கள் வாழ்க்கை முறை, ஒழுகலாறு முதலியவற்றை நுணுக்கமாய்ச் சித்திரிப்பதற்குச் சிற்சில இலக்கிய வடிவங்களின் உருவமைப்பு வாய்ப்பாக உள்ளது.
ஈழத்து எழுந்த பிரபந்தங்களுள், சமயத்தொடர்புடைய தலங்கள் பலவற்றின் பெருமையைப் பாடுவனவற்றிற்குத் தனியிடமுண்டு. தலபுராணங்கள் மட்டுமன்றிச் சிறிய உருவளவில் அமைந்த ஊஞ்சற் பாடல்கள் கூடத் தலங்களின் அருமை பெருமைகளைப் பேசுவதிற் சிறந்து விளங்குகின்றன. உண்மையில், பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இந்நூற்றாண்டின் முதற்காலிலும் ஊஞ்சற் பாடலைக் கையாளாத ஈழத்துப் புலவரே இல்லையென்று கூறுதல் மிகையாகாது. இப்பிரபந்தங்களில் இடம் பெற்ற தலக்காட்சிகள், பிரதேச வருணனைகள், ஊர் உணர்வுகள் முதலியவற்றினடியாகவே, காலப்போக்கில் தேசிய இலக்கிய மரபு ஒன்று இந்நாட்டிலே பரிணமித்துள்ளது என்று கூறலாம்.
திருகோணமலைக்கு அண்மையில் உள்ள கரைசை என்னும் தலத்தின் வரலாற்றையும் மகிமையையும் விவரிக்கும் திருக்கரைசைப் புராணம், காலிக் கதிரேசர் ஊஞ்சல், பாணந்துறைக் கந்தரந்தாதி, மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சி, கதிரமலைக் கந்தவேள் பதிகமும், தேவபாணியும், முன்னைநாத சுவாமி நவதுதி முதலிய பிரபந்தங்களை அங்கொன்று இங்கொன்றான முறையில் நோக்குவோர்க்கும், நாட்டின் பற்பல பகுதிகளும், பதிகளும் நமது கவிஞர்களின் கவனத்துக்குட்பட்டமை தெளிவாகும். ஒருகாலத்தில் நம்மவர் புலம்பெயர்ந்து சென்று பெருந்தொகையினராய் வாழ்ந்த மலாயா நாட்டிலுள்ள கோயில்கள் மீது சிலர் பிரபந்தங்கள் யாத்துள்ளனர். உதாரணமாக, குவாலாலம்பூர் சிவபெருமான் ஊஞ்சல், ஈப்போ தண்ணீர்மலை வடிவேலர் மும்மணிக்கோவை என்பனவற்றைக் காட்டலாம்.
ஈழத்துக்கே சிறப்பாகவுரிய சைவசமயத் தலங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை இருப்பினும், சமயகுரவர்களாகிய சம்பந்தரும் சுந்தரரும் போற்றிப் பாடிய கோணேஸ் வரம், கேதீச்சரம் ஆகியன தனிச்சிறப்பு வாய்ந்தவை. இவ்விரு தலங்கள் மீதும் கதிரமலைமீதும் பிற்காலத்து அன்பர்கள் பாடிய பனுவல்கள் அனந்தம். இந்நூலாசிரியரும் திருக்கேதீச்சரநாதர்மீது பாமாலை தொடுத்த பக்தர்களில் ஒருவர். ஏலவே, திருக்கேதீச்சரநாதர் கிள்ளைவிடுதூது என்னும் நூலைப் பாடியுள்ளார். அது சிவநேயச் செல்வர்களின் சிந்தையைக் கவர்ந்துள்ளது.
மரபுவழித் தமிழ்க்கவிதை வலிகுன்றி அருகிவரும் இக்காலத்திலே இலக்கிய இலக்கண மரபு பிறழாது இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தம் ஒன்று வெளியிடப் படுவதே விதந்துரைக்க வேண்டிய விசேட நிகழ்ச்சியாகும். கூர்ந்து பார்க்கின், சீரிய நூல்களை இயற்றுவோரது வாழ்க்கைமுறைக்கும், அவர்தம் நூல்களின் பண்புகளுக்கும் நெருங்கிய தொடர்பிருத்தல் புலனாகும். கேள்விஞானமும் இறையுணர்வும் வாய்க்கப்பெற்று, மரபுவழிப் பிரபந்தங்களை யாக்கும் புலவர்கள் ஆன்றவிந்தடங்கிய சான்றோராயுமிருத்தல் ஆங்காங்குக் காணக்கூடியவொன்றாகும். சுன்னாகம் குமாரசாமிப்புலவர் மாணாக்கரான சி. இ. சதாசிவம் பிள்ளையவர்கள், மதிப்புக்குரிய மரபொன்றின் வாரிசுகளில் ஒருவராய் நம்மிடையே வாழ்ந்து வருபவர். நூல்களை நுனித்துக் கற்றலும், கசடறக் கற்பித்தலுமே உயர் இலட்சியங்கள் எனக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கும் பிள்ளையவர்கள், பல வழிகளிலும் நமது மதிப்பிற்குரியவரே. அவரது வாழ்க்கையும் எழுத்தும் இசைபட இயங்கி வந்துள்ளன.
முன்னர் வெளிவந்த தூதுப் பிரபந்தத்திற் காணப்பட்ட சிற்சில அம்சங்கள் இந்நூலிலே விரிவுபெற்றுள்ளன. உதாரணமாக, தூது நூலிலே கேதீச்சரத்துக்குப் போகும் வழியிலே பாதையருகில் வீற்றிருக்கும் முறிகண்டிப்பிள்ளையாரை வணங்கி ஏகுமாறு கிள்ளையைப் பணிக்கும் புலவரவர்கள், பிள்ளைத் தமிழிலே காப்புப் பருவத்தில் குழந்தையைக் காக்குமாறு முறிகண்டி விநாயகரை வேண்டுகின்றார். முறிகண்டி, பாலாவிக்கரை, கேதீச்சரம் இவற்றின் வருணனைகள் நூலுக்கு அணி செய்கின்றன. பிற்காலத்து மரபுவழித் தமிழ்ச் செய்யுள் பலவற்றிற் காணப்படும் வரட்சி, சுவையற்ற சொல்லலங்காரம், உணர்ச்சியின்மை முதலிய குறைபாடுகளின்றி, பாடும் பொருளோடு 'தான் கலந்து' பாடும் தன்மை பிள்ளையவர்களிடத்துக் காணப்படுதல் கவனிக்கத்தக்கதாகும்.
புதுமைக் கவிதைகளாகக் கொள்ளப்படுவனவற்றின் சிறப்பியல்களில் ஒன்று, அவை முன்னோர் மொழி முறைகளிலிருந்து வேறுபட்டு நிற்றலாகும். அவ்வியல்பு தற் புதுமையின் பாற்படுவதாகும். மரபுவழித் தமிழ்க்கவிதையின் உயிர் நாடியே, அது பழந்தமிழ்ச் செய்யுட்களின் சான்றாக அமைந்திருத்தலாகும். சதாசிவம் பிள்ளையவர் களின் பிரபந்தத்திலே தேவார திருவாசகங்களின் சாயல் மட்டுமன்றிப் புராண நூல்கள், பிற்காலத்துப் பிள்ளைத்தமிழ் நூல்கள் முதலியவற்றின் செல்வாக்கும் காணப்படுதல் குறிப்பிடத்தக்கதே. வருகைப் பருவத்திலும் அம்மானைப் பருவத்திலும் ஆசிரியரின் கவித்துவம் ஆற்றலுடன் செயற்படுவதைக் கண்டு களிக்கலாம்; சிலவிடங்களிலே குமர குருபர சுவாமிகளது மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் நினைவு வராமற் போகாது.
பழந்தமிழ்ப் பனுவல்களின் பாரம்பரியச் சுவையும், இராவணன், மண்டோதரி ஆகியோர் பற்றிய ஐதிகங்களும் தலங்களின் மண் வாசனையும் சேர்ந்து கலந்து கவிதைக் குக் கவின் செய்கின்றன. புலவரவர்களின் புலமைக்கும் பக்திக்கும் காட்டாக மிளிரும் இந்நூல். இலக்கிய இரசிகர்களுக்கு இன் விருந்தாகவும் இலங்குகின்றது. ஈழத்துத் தமிழ்ப் பக்தியிலக்கியத்துக்கு இப்பிரபந்தம் பெருமைப் படத்தக்க பங்களிப்பாகும்.
யாழ்ப்பாண வளாகம், க. கைலாசபதி
திருநெல்வேலி.
76-4-1
------------------------------------------
உ
திருச்சிற்றம்பலம்
நூன்முகம்
ஈழமண்டலத்திலே தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இரண்டு. ஒன்று திருக்கேதீச்சரம். மற்றொன்று கோணமாமலை என்னும் திரிகோணமலை.
திருக்கேதீச்சரத்திற்கு திருஞானசம்பந்த சுவாமிகள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய இருவரது பதிகங்கள் உண்டு. மறைந்திருந்து மறுமலர்ச்சி பெற்றுவரும் திருக்கேதீஸ்வரத் துக்கு வழிபாட்டிற்கெனச் சென்றிருந்த சமயம் அங்குத் திருப்பணிச்சபைத் தலைவராய் இருந்த சிவமணி சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்கள் அடியேனிடம் இத்தலத்தைப் பற்றி ஏதாவது பாடும்படி பணித்தார்கள்.
நம் சமயாசாரியர் மேற்கொண்ட “பாடல் நெறி"யைப் பின்பற்றி நம் திருக்கோயில்களுக்குப் பல பிரபந்தங்கள் தோன்றல் வேண்டும் என்னும் கருத்துடையேனாதலாற் கிடைத்த ஆணையை மேற்கொண்டு எனது அறிவின் சிறுமையையும் பக்திப் பேறின்மையையும் நோக்காது திருவருள் துணைகொண்டு பாடமுற்பட்டேன்.
எம்பெருமான் மீது பிள்ளைத்தமிழ் பாடும் வழக்காறின்மையாலும், கௌரி அம்பிகையினிடம் சிறிது ஈடுபாடுடைமையாலும் “கௌரிநாயகி பிள்ளைத்தமிழ்'' எனத் திருவருள் கூட்ட இதனை எழுதி முடித்தேன்.
பண்டைய பிள்ளைத்தமிழ்கள் போலாகாது அருஞ்சொற்கள் கற்பனைகளின்றிக் காலத்திற்கேற்ப எளியநடையில் எழுத எண்ணினேன். எனது நோக்கம் எவ்வளவு நிறைவெய்தியதென்பதைப் படிப்பவர் தீர்மானத்துக்கே விட்டு விடுகிறேன்.
இதனை அச்சிட்டு வெளியிட எனது பொருளாதார நிலை இடந்தராமையாற் பல ஆண்டுகள் இது வெளியிடப்படாதிருந்தது. எனது முதுமையும் நோயுடன் போராடிக் கொண்டிருந்த நிலைமையும் கண்ட எனது அருமை மாணவரிற் சிலர் என் வாழ்நாளிலேயே இதனை வெளிப்படுத்த முன்வந்தனர். அவர்களுள்ளும் வித்துவான் சி. ஆறுமுகம் அவர்கள், வித்துவான் பொன். அ. கனகசபை அவர்களின் துணையோடும் எனது மாணவ அன்பர்களின் பொருளுதவி பெற்று இப்போது அச்சேற்றி வெளிப்படுத்துகின்றனர்.
இதனை ஆக்குங்காலை பிரதிபண்ணல், ஆலோசனை கூறல் முதலிய உதவியளித்த அன்பர்களுக்கும், பொருளுதவிய பெரியோருக்கும், கௌரிநாயகி அருளால் "சகலநன்மைகளும் பெருகுக" என வாழ்த்தி என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
“நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பி,'
கௌரிநாயகி சமேத கேதீச்சரநாதன்
திருவடி வாழ்க.
“அன்பகம்”
புங்குடுதீவு சி. இ. சதாசிவம்பிள்ளை
20-2-76
--------------------------------
கௌரி நாயகி பிள்ளைத்தமிழ் - நூற்பொருள்
அணிந்துரை,
பதிப்புரை,
முகவுரை,
நூன்முகம்,
நூற்காப்பு,
அவையடக்கம்,
1. காப்புப் பருவம்,
2. செங்கீரைப் பருவம்,
3. தாலாட்டுப் பருவம்,
4. சப்பாணிப் பருவம்,
5. முத்தப் பருவம்,
6. வருகைப் பருவம்,
7. அம்புலிப் பருவம்,
8. அம்மானைப் பருவம்
9. நீராடற் பருவம்.
10. ஊசற் பருவம்,
11. அருஞ்சொற் பொருள் விளக்கம்
12. அநுபந்தம்
--------------------------------
உ -- சிவமயம்
திருச்சிற்றம்பலம்
திருக்கேதீச்சரத் திருப்பதிகம்
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையின
ரறை கழல் சிலம்பார்க்கச்
சுண்ணமாதரித் தாடுவர் பாடுவ
ரகந்தொறு மிடு பிச்சைக்
குண்ணலாவ தோரிச்சை யினுழல்பவ
ருயர் தரு மாதோட்டத்
தண்ணனண்ணு கேதீச்சர மடைபவர்க்
கருவினை யடையாவே.
- திருஞானசம்பந்தர்
-------------------------------
உ -- சிவமயம்
திருச்சிற்றம்பலம்
திருக்கேதீச்சரத்துக் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ்
நூற்காப்பு
காக்குங்கே தீச்சரத்துக் கௌரிபிள் ளைத்தமிழை
ஆக்கும் பணியில் அருள் தந்து - நீக்கமற
ஐந்துகரத் தொந்திவயிற் றந்திமிளிர் இந்துமுடித்
தந்திமுகத் தெந்தைதிருத் தாள்.
ஆசிரிய விருத்தம்
ஓங்கா ரத்தி னுருவாயென்
னுள்ளங் கோயில் கொண்டருளி
ஒளிர்மா முடியி லாறறுகு
மொருவெண் பிறையு முடன்சூடிப்
பாங்கார் கரத்தி லங்குசமும்
பாச முடன்கூர் மருப்பொன்றும்
பருப்பி னியன்ற மோதகமும்
பரித்த களிற்றின் பதம்பணிவாம்
தேங்கா ரளிபண் பயில்சோலைத்
திருவார் கேதீச் சரத்தமரும்
தெய்வக் குழந்தை கௌரியெனுந்
தேவி யடிக்கோர் தமிழ்மாலை
பாங்காய்ப் பிள்ளைத் தமிழென்னப்
பகரப் பொருளும் செஞ்சொல்லும்
பண்ணும் உதவிக் கவிதைவளம்
பாலித் தருள்க வென்றென்றே.
-----------------------------------
அவையடக்கம்
சொல்லும் பொருளும் சுவைக்கவணி
சொட்டச் சொட்டச் செவிமடுப்போர்
சுரந்து கசிந்து வருகண்ணீர்
சொரியத் தெய்வக் கவிபாடும்
செல்வ ரிருக்க நாயடியேன்
தேவியடிக் கோர் பாமாலை
செப்பத் துணிந்த துணிபென்னே!
சிறுபுன் மதிகொண்டாசை யுந்த
நல்லோர் நகைக்கக் கவிபாடும்
நானும் கைக்க நாணமொடு
ஞானமின் றியரு ளின்றி
நாறாத்தொ டையல்பு னைந்தபிழை
வல்லோர் பொறுத்தே கௌரிதிரு
மலர்ச் சேவடிகட் குவந்தபல
மணமார் தொடையல் புனைகவென
வந்திக்கின்றே னவரடியே.
-----------------------------
நூல்
1. காப்புப் பருவம்
திருமால்
திருமகளு வந்துறையு மறுமார்பி னானையொண்
டிகிரி சங்கேந்தினானைச்
செங்கமல நயனத்தினானை யஞ்சனவணத்
திருமேனி யழகி னானை
மருவருந் துளவமணி வைகுந்த வாசனை
வராகமொடு கமடமீனம்
வாமனமு தற்பத்து வடிவுகொண் டானையடி
வந்தித்திறைஞ்சி நிற்பாம்
பருமணிக் கோவையொ டுபரிபுரமி ழற்றமறி
பாலாவி தீரமாடும்
பாவையை மருந்தீசர் பாகமுறு மம்மையைப்
பார்முத லளித்தபரையைக்
கருமணிக் கண்டர்முக் கண்விருந் தாய்நிலவு
கன்னியைக் கருதுமடியார்
களைகணா யமர்திருக் கேதீச் சரத்தம்மை
கௌரியைக் காக்க வென்றே. 1.
-------------------------------------------
கைலாசநாதர்
மடையில் வாளைபாய வெடிகொள் சேல்கள்மீள
மவுனமுற்ற மந்தி நனைமலர்
மருவுதேவ தாருவளர் பொதும்பர் பாயும்
வளமிகுத்த கைலைவ ரையினில்
வடிகொள் சூலவேலும் மழுவுமானு மேந்து
மதனை யட்டவங்கி விழியினார்
வனசபாத மீதுமறைக ளோதி யங்கைம்
மலர்கள் தூவிநின்று வாழ்த்துவாம்
படியின் முன்விழுந்து முடிகள்தாழ்த் திறைஞ்சும்
பருவ அன்பர்நெஞ்ச முருகிநாப்
பழகு நாம மோது கிளிகள் பூவைபாடல்
பயில நின்றசோலை மறுகுசூழ்
கடிகொள் இஞ்சி யோடுநெடிய கோபுரங்கள்
ககனமுட்ட வோங்கு தென்றிசைக்
கயிலை யாயகேது பணியு மீச்சரத்துக்
கௌரி மானைநன்கு காக்கவே. 2.
---------------------------------------
முறிகண்டி விநாயகர்
மருப்பொன் றொடித் துப்பார தத்தை
மாமேருப் பொன்னேட் டெழுதி
வந்தித் திருந்த மூதாட்டி வயமா
வுகைக் கும்மன் னர்முனம்
திருப்பொற் கயிலை சேரவிட்டுச் சிறுமாங்
கனிக்காய் அகில மெலாம்
சேரவு கைக்கும்மா மயிலோன் தெளியா
தயரக் குரவரை முன்
விருப்பில் வலம் வந்தது பெற்ற
வேழ முகனை முறிகண்டி
மேவியரு ளும்விநா யகனை வேண்டி
மலர்தூஉய்ப் பதம் பணிவாம்
கருப்பற் றறவந் தன்பர்தொழுங்
கழனி வளஞ்சேர் பாலாவிக்
கரையிற் கேதீச் சரத்தமருங் கௌரித்
தாயைக் காக்க வென்றே. 3.
--------------------------------------
கதிர்காம வேலவர்
வேலெ டுத்து வில்லெ டுத்து
வீர வாகு வாதியாம்
வீர ரோடு செந்தில் வந்து
வெய்ய சூரர் விறல்படுத்
தால மொத்த கண்ணிதேவ யானை
தோள ணைந்து பின்
அன்னை வள்ளி தேனளைந்
தளித்த மென்தி னைப்பதம்
மேலு முண்டு காதல் கூற
வீறு கொண்டு வந்தவில்
வேடர் காணு றாது மாய
வேங்கை யாகி மென்கிழக்
கோல மாகி மணமு வந்த
கதிர காம வேலவன்
கோம ளக்கு ழந்தை கௌரி
கூட நின்று காக்கவே. 4
_________________________
தேவேந்திரன்
திருமலி துணர்ப்பூங் கற்பக நீழல்
தேவியோ டரியணை யிருந்து
திலோத்தமை வரம்பை யூர்வசி முதல
தேவகன் னியர்நடம் கண்டும்
உருமலி வெள்ளை யீரிரு பிறைக்கோட்
டும்பல்ஐ ராவத மேறி
ஒளிவிரி குலிச மேந்திவிண் ணாண்டும்
ஒலிதிரைச் சீரலை வாயிற்
பருமணி மகுடச் சூருரங் கீண்ட
பன்னிரு தடக்கைவே லவர்க்குப்
பரிசெனத்தேவ யானையை யீந்த
பாகசா தனன்நிதம் பாக்க
கருமணிக் கண்டர் கைலையீ தென்னக்
கடவுளர் போற்ற வீற்றிருக்குங்
காமலி கேதீச் சரத்தினி லம்மை
கௌரிநா யகியைக் கண்ணெனவே. 5
------------------------------------------
திருமகள்
மலயம் பிறந்து மலர்சந் தளைந்து
வடபாலி லோடு மிரதம்
வருவேனில் வேளை மலரோனை யீன்று
வனசத் திருந்த திருவை
அலைகொண்ட பாலி னுததிக் கணாரு
மமுதோ டுதித்த பொறியை
அரிசெம்பொன் மார்பி லமர்கின்ற மின்னை
அடியஞ் சலித்து நினைவாம்
கலைகொண்ட வேணி கமழ்கொன்றை கொண்ட
கயிலாயர் பாக மருவுங்
கறைகொண்ட கண்ணி நறைமென் பதத்தி
கவிபாடு மன்பர் கனவில்
நிலைகொண்ட செல்வி நிலமாதி யாக
நெறிகொண்ட பூத வுருவாய்
நிலவம்ப ரத்தி கௌரிக் கொடிக்கு
நிழலாய்ப் புரக்க வெனவே. 6
--------------------------------------
கலைமகள்
வெள்ளைக் கமல நறும்போதில்
வேதன் நாவிற் பண்பயில்வார்
வீணை யிசையிற் கைவலவர்
விதிக்கு முயிரோ வியத்திலுயர்
உள்ளந் தெளிந்த பாவாணர்
உரைக்குங் கவியி லொளிர்சிறைய
ஓதி மத்தி லமர்வாணி
உபய பதங்க ளுன்னிடுவாம்
பள்ளத் துயருஞ் செஞ்சாலி
பழன மருங்கிற் பாலாவி
பாயு மறுகிற் கேதீசர்
பாகம் பயிலும் பசுங்கிளியைக்
கள்ளக் குறும்பர் காணரிய
களிமென் பிணையைக் கருதியெமைக்
காக்கும் கௌரி நாயகியைக்
கண்ணின் மணியாய்க் காக்கவென்றே. 7
-----------------------------------
துர்க்கை
புறங்கா டுறையுங் கடுஞ்சினத்துப்
புரிவெங் கொலைய மடங்கலெனும்
போரே றேறி முத்தலைய
புகரார் சூலப் படைபரித்துக்
குறுந்தாட் செங்கண் வளைமருப்புக்
கோல மகிடன் சிரமீது
கொஞ்சுஞ் சதங்கை யடிமிதித்த
குமரிக் கன்னி பதம்பணிவாம்
உறுங்கா ழியர்கோ னாரூரன்
உலக முய்யத் தமிழ்பாட
ஊழி யூழி வரமருளும்
ஒப்பில் திருக்கே தீச்சரத்தின்
நறுங்கா சூழுந் திருக்கோவில்
நாத னருளே யுருவாகி
நம்மைக் காக்குங் கௌரியினை
நாளும் நாளுங் காக்கவென்றே. 8.
-------------------------------------
சப்த மாதர்
வந்தித்து மறையோதி மலரடி மனங்கொள்வாம்
மகேசுவரி நாராயணி
வனிதைகௌ மாரிவான் மருவிந்தி ராணிமற
மாகாளி யபிராமியோ(டு)
அந்தவ ராகியென வமைசப்த மாதர்தமை
யணிகொள்கே தீச்சரத்தில்
அலைவீசு பாலாவி அயல்கோவில் கொண்டருளி
அடியருக் கருளுமம்மை
அந்தமி லுயிர்க்குடல் அளித்துப்ப ரிந்துவினை
யார்த்திப் பதங்களருளும்
ஆறுலவு சடைமதிக் கீறுலவு கேதீசர்
அருளுருவ மாயவமலை
கந்தநறு மென்குழற் கன்னிநமை யிமையாது
காக்குமுக் கண்ணியுலக
காரணி கடந்தபரி பூரணி கணம்பரவு
கௌரியைக் காக்கவென்றே. 9
---------------------------------
முப்பத்து முக்கோடி தேவர்
அருளி லாதுநெறி யொழுகி டாதுமலர்
அடிதொ ழாதுவரு சனனமீ(து)
அவல மாகவரு வினைகள் நேடிநெடி
தமர்வுறு மடிய மேமையும்
பொருள தாகவுள கருணை யாலடிகள்
புகழு மாறுபு ணர்த்தியெம்
புந்தி நின்றுலவு செந்த ளிர்ப்பத
புராரி பங்கிலுறு புனிதையைக்
கருதி யன்பர்தொழு கயிலை நாதர்விழி
களிகொ ளக்குலவு கன்னியைக்
கவுரி யென்னுமோர் கரும்பை நாளுமுறை
காக்க கண்ணுண்மணி யாகநன்(கு)
இரும ருத்துவர்கள் எண்வ சுக்கள்பதி
னொருவர் முக்க ணுருத்திரர்
இலகு பன்னிருவர் உதய சூரியர்கள்
என்னு முப்பதொடு மூவரே. 10
காப்புப் பருவம் முற்றிற்று.
---------------------------------------
2. செங்கீரைப் பருவம்
மையிட்ட வொண்கணார் வளையிட்ட செங்கைகொடு
மலரிட் டிறைஞ்சி நின்று
மானிட்ட கண்ணியே வானிட்ட வில்லினை
வகிர்ந்திட்ட நுதல ணங்கே
பையிட்ட நாகமுடி பணியிட்ட கேதீசர்
பாகம திருத்தி யிட்டுப்
பரிதிமதி யனலிட்ட பார்வையிட் டுள்ளமகிழ்
பாவையே யென்று பரவ
மெய்யிட்ட பணிகொண்டு மேதினிமுதற் புவன
மீதிட்ட வுயிரி னருள்சார்
விழியிட்டு மற்றவர்கள் வினைபுசிப் பித்திட்டு
மேனெறியி லிட்ட டிதரும்
செய்யிட்ட பங்கய பதத்தேவி கௌமாரி
செங்கீரை யாடி யருளே
செங்கண்மா லுக்கரிய தங்கையாய் வருகௌரி
செங்கீரை யாடி யருளே. 11.
----------------------------------
செங்கீரை யாடியருள் செங்கீரை யாடியருள்
தெய்வச் சுடர்க் கொழுந்தே
தேனூறு செவ்வாயில் அள்ளூற நகைதகச்
செங்கீரை யாடியருளே
வங்கம் மலிந்தகடல் மறுகினிற் கேதீசர்
வாமத் திருந்து பரிவால்
வானாதி பூதத்து மன்னுயிர்கள் வாழ்வுபெற
வந்தணையு மன்பர் மகிழ்வால்
அங்கம் பொடிப்பநின் னாடல்கண் டலர்தூவி
அம்மைவாழ் கென்ன வாழ்த்தி
அழகூறு கனிவாயி லமுதூற முத்தமிட
ஆடியருள் செங் கீரையே
செங்கமல மலர்வயற் செந்நெல்விளை மாந்தையிற்
செங்கீரை யாடியருளே
செங்கண்மா லுக்கரிய தங்கையாய் வருகௌரி
செங்கீரை யாடிய ருளே. 12
------------------------------
ஆடகச் சிற்சபையி லையனடி தூக்கிநின்
றைந்தொழிலி னடன மாட
அரிபிரம ரிந்திரர்க ளன்னைவா ழியவென்ன
அருமறைக ளோதி யாட
மாடகத் தந்தியாழ் வாணியிசை கொண்டாட
மருவு சசிபூமி னாதி
வானவர்கள் மகளிர்மலர் மாரிபெய் தடிபரவி
மங்கலங் கூறி யாடக்
காடகக் களிமயில் கலாபம் விரித்தாடு
காமறுகு சூழு மாந்தைக்
கைலையிற் கேதீசர் கண்ணின்மணி யாயாடு
கன்னியே சென்னி தூக்கிச்
சேடியர்கள் மகிழ்வுறத் தெய்வக் கொழுந்துநீ
செங்கீரை யாடி யருளே
செங்கண்மா லுக்கரிய தங்கையாய் வருகௌரி
செங்கீரை யாடி யருளே. 13.
-------------------------------------
மாசகல வலகிட்டு மனைமுன்றில் வாசநீர்
nbsp; வண்சாந்து கொண்டு மெழுகி
வண்ணப் பொடிக்கொண்டு மலர்கொண்டு கோலமிடு
மங்கைய ரொருக்கு குழுமி
நேசமொடு வந்துதிரு நீறிட்டு முத்திட்டு
நெற்றியிற் பொட்டு மிட்டு
நெஞ்சத் தணைத்துக் கவான்மிசை படுத்தன்னை
நீடுவாழ் கென்று வாழ்த்தப்
பாசமறு தீர்த்திகைப் பாலாவி யாடிவரு
பக்தர்கள் பணிந்து போற்றப்
பழமறை முழங்கிடப் பங்கய மலர்ந்தன்ன
பவளவிதழ் நகைய ரும்பத்
தேசடை முகந்தந்து சிவகாமி மகமாயி
செங்கீரை யாடி யருளே
செங்கண்மா லுக்கரிய தங்கையாய் வருகௌரி
செங்கீரை யாடி யருளே. 14
-------------------------------------
கொண்டலை யுயர்த்தவன் குமரன் தனஞ்சயன்
கோல்கண்டு பின்னு மெய்த
கோலங் குறித்துக் கொடும்போர் நிகழ்த்திக்
கொழுந்துமதி சிதற வில்லால்
எண்டோளி றைப்பரம னடிபட்ட போதினும்
எயினர்மக ளாய்க் குறிஞ்சிக்
கிறைவனையு மிருகரத் தேந்திமன மறுகியும்
ஏனென்றி டாது நின்றாய்
விண்டுமுத லமரரும் விழியிமைக் காதுள
விதிர்ப்பினொடு பார்த்தி ருந்தார்
விளையாட லிவைசாலு மருள்நாடி யடிபாடி
விரையாரு மலர்க ளிட்டுத்
தெண்டனிடு மெம்பிறவி சேதிக்க வளர்அன்னை
செங்கீரை யாடி யருளே
செங்கண்மா லுக்கரிய தங்கையாய் வருகௌரி
செங்கீரை யாடி யருளே. 15
---------------------------------------------
காலங்கி நீர்நிலங் காயமெனு மைம்பூத
காரணத் தாய வுலகு
கஞ்சன் படைக்கவுங் கருமேக வண்ணனவை
காக்கவுங் கைலை யாளி
மேலங் கழித்திட விதித்தவர்க டம்மையும்
வினையொ ழிந்திட வழித்தும்
மீண்டும் அவர்தமை யாக்கிமுத் தொழிலதாம்
விளையாட் டயர்ந்து வேண்டும்
கோலங் குறிக்கொண்டு கோமள வுருக்கொண்டு
குதலை மொழிகொண்டு மெம்மிற்
கூரரு ளுளங்கொண்டு கேதீச் சரத்தினிற்
குடிகொண்டு பணியு மடியார்
சீலங் கருக்கொண்டு தெய்வத் திருக்கொளச்
செங்கீரை யாடி யருளே
செங்கண்மா லுக்கரிய தங்கையாய் வருகௌரி
செங்கீரை யாடி யருளே. 16
-------------------------------------------
சந்தமலி தென்பொதிகை வந்தகுறு முனியோடு
சங்கத் திருந்த புலவோர்
சசிகுலத் துறுதென்னர் தழுவிப் புரந்திட்ட
தமிழென்னு மார ணங்கைச்
சிந்தையருள் கூர்தர வளர்த்துந் தமிழ்ப்பாடல்
செழியன் மடிமீதி ருந்து
திருச்செவி மடுத்தும் புரந்திட்ட மலைவல்லி
தேவிகே தீச்ச ரத்து
வந்துபா லாவி நீ ரதிலாடி வலமாகி
மலரடிகள் போற்று மன்பர்
மலவிருள் கடிந்தொளிரு முதயசூரி யனென்ன
மாசில்மெய்ஞ் ஞானமருளுஞ்
செந்தளிர்ப் பதவன்னை சிவநெறி தழைத்திடச்
செங்கீரை யாடி யருளே
செங்கண்மா லுக்கரிய தங்கையாய் வருகௌரி
செங்கீரை யாடி யருளே. 17
------------------------------------------
வேறு
பலபல பக்தர்கள் பணிமுறை நிற்பவர்
பழமறை பைந்தமிழின்
பரவ வரந்தரு பதும பதத்திடு
பரலுறு தண்டையொலி
கலகல வென்றொலி முரல நினைந்திரு
கழல்கள் பணிந்திடுமெம்
கணித மிகைப்படு பிறவி யறுத்திரு
கருணை விழிக்கடைதா
திலக நுதற்றிரு மலை தருமுத்தமி
சிவமலி கேதீசர்
திரிநய னத்திடை நிலவுப சுங்கொடி
செங்கோ செங்கீரை
அலகி லுயிர்க்குல மருணெறி பெற்றிட
வாடுக செங்கீரை
அருளி னுருக்கொடு கௌரி யிளங்கொடி
யாடுக செங்கீரை. 18
-----------------------------------
மலரய னச்சுதன் மகபதி மற்றுள
வானோர் கண்டறியா
மலரடி யெம்மக வரையில் மிதித்திட
வாடி வருந்திடுமோ
அலர்முகை யொத்துள துவரிதழ் வாயினில்
அஞ்சே லென்றொருகால்
அபய மளித்திடில் அணிநகை முத்தவை
அவனி யுதிர்ந்திடுமோ
கலைமுடி வைத்திடு கயிலை மலைக்கிறை
கருதிடு கண்மணியே
கசிவொடு முத்தமிழ் கழறி வழுத்திடு
கருணை யெனக்கருள்வாய்
அலையி லுதித்திடு மமிழ்த மொழிக்கொடி
யாடுக செங்கீரை
அருளி னுருக்கொடு கௌரி யிளங்கொடி
யாடுக செங்கீரை. 19
¬¬---------------------------------------
கனையொலி யிட்டிருள் ககன முகிற்பொரு
கரிய நிறத்திருமால்
களமணி கண்டரம் மழவிடை வித்தகர்
கழலிடு கமலமலர்
வினைவழி யொன்றற விரைவி லிடந்துகண்
வெறிமல ரென்றிடவே
வெயில்விடு சக்கர மருளிய முக்கணர்
விழிகொள நின்றாடும்
அனைகவு ரிக்கொடி யெமையினி யன்னைய
ரகறே விட்டாட்டா(து)
அபய மளித்தடி நிழல்தர வாடுக
செங்கோ செங்கீரை
சினைதொறு மலர்பொலி செறிதரு மருவிய
திருமலி மாதோட்டம்
ஜெயஜெய வென்றிட வருளுட னாடுக
செங்கோ செங்கீரை. 20
செங்கீரைப் பருவம் முற்றிற்று
-----------------------------
3. தாலாட்டுப் பருவம்
விண்ணோர் கான விசைகேட்டு
‘விருதுகுன்ற’ முறை கேட்டு
வேற்கைப் பாலன் மழலைமொழி
விருப்பிற் கேட்டு மிகுந்தசுவைப்
பண்ணார் தமிழி லபிராமி
பட்டர் பாடும் பாக்கேட்டுப்
பண்டு பழகும் திருச்செவிக்கெம்
பாட்டுங் கேட்கத் திருவுளமோ!
தண்ணார் பொழில்சூழ் திருக்கேதீச்
சரத்தில் வந்துன் தாள்பரவும்
தவத்தோர்க் கெல்லாந் தாயாகிச்
சகல லோக நாயகியாய்க்
கண்ணா யெமக்கிங் கெழுந்தருளுங்
கனியே தாலோ தாலேலோ
கயிலைக் கிறைவர் பங்கிலமர்
கௌரீ தாலோ தாலேலோ. 21
------------------------------------------
வெள்ளிக் கயிலை மலையெடுத்த
வீறார் மொய்ம்பன் இலங்கேசன்
வேற்கண் மனைமண் டோதரியும்
விண்ணார் அணங்கி னருமேத்தப்
பள்ளைத் திமில்வெள் விடையேறிப்
பரனார் பாகம் பாலனுடன்
பாலாவி யில்வந் தருள்சுரக்கும்
பரதே வதையே பதம்பணிவார்
உள்ளத் திலகு மொளிர்மணியே
உலவாக் கிழியே உயர்போதத்(து)
உச்சி மலர்ந்த பங்கயத்தில்
ஊறுந் தேனே புலவேடர்
கள்ளக் குறும்புக் களைவீட்டுங்
கன்னீஇ தாலோ தாலேலோ
கயிலைக் கிறைவர் பங்கிலமர்
கௌரீதாலோ தாலேலோ. 22
-----------------------------------------
பங்கப் பழன முளைச்சாலி
பாலா வித்தா யமுதூட்டப்
பருவம் பெற்று வளர்ந்துகுலை
பரித்து முற்றி யடிநோக்கிக்
கங்கைச் சடிலர் கேதீசர்
கமல பதங்கண் டவைசேருங்
காலம் பார்க்கு மெய்யடியார்
கவினைக் காட்டும் மாதோட்ட
மங்குல் தவழ வுயர்சிகரம்
மதில்சூழ் கோவில் மருந்தீசர்
வாமத் திருக்கு மடக்கிளியே
மலைமன் வளர்த்த மருக்கொழுந்தே
கங்குல் பகலற்றெமைக் காக்குங்
கண்ணே தாலோ தாலேலோ
கயிலைக் கிறைவர் பங்கிலமர்
கௌரீதாலோ தாலேலோ. 23
------------------------------------------
செங்கட் புனிற்றுக் காரெருமை
சேதாம் பலைமேய்ந் திரைமீட்டுத்
தெவிட்டிப் பெருகும் பாலாவித்
தெளிநீ ரருந்தி யயலுயர்ந்த
தெங்கின் நிழலிற் றுயில்கொள்ளுந்
திருக்கே தீச்ச ரஞ்சூழ்ந்த
தேர்வீ தியினிற் சிவதொண்டர்
சேரவி சைக்குஞ் சிவநாமம்
பொங்கும் மகரக் கடலொலிபோற்
பொலியக் கேட்டுந் தவமாதர்
போற்றி யிசைக்குந் தாலாட்டும்
புரிந்து கேட்கும் பூங்குயிலே
கங்கை முடித்த கேதீசர்
கண்ணுண் மணியே தாலேலோ
கயிலைக் இறைவர் பங்கிலமர்
கௌரீதாலோ தாலேலோ. 24
---------------------------------
செயலைத் தண்டார் புரள்மருமச்
சினவேற் காளை குன்றெறிந்த
செந்தில் முருகன் ஐந்துகரத்
தேவுக் கார்த்தி யாராமல்
வயலிற் றிபோந் தயலில்வளர்
மடற்பூ கத்தின் குலைசாய்த்து
வான்மீ னென்னச் சேலுலவு
வளஞ்சேர் காழி வேந்தரழ
அயலுற் றருத்துந் திருமுலைப்பால்
அடியே மாசைக் கனாதானோ!
அன்னாய் வாழி கேதீசர்
அருளின் உருவே தாலேலோ
கயலொத் தகன்று கருணைபொழி
கண்ணாய் தாலோ தாலேலோ
கயிலைக் கிறைவர் பங்கிலமர்
கௌரீ தாலோ தாலேலோ. 25
-------------------------------------
வேறு
மாதர் இளம்பிறை யூரமுடித்த
மலர்ச்சடை மேவியொரு
மங்கை தவழ்ந்திட அங்கதுகண்டு
மனத்திடை யூடல்கொளா(து)
ஆதரவோடிட மேவி மகிழ்ந்திடு
மம்மே தாலேலோ
ஐயர்விழிக்கு விருந்தருள் சுந்தரி
யன்னே தாலேலோ
தாதவிழ் கொன்றைக டம்புசெருந்தி
தழைத்திடு மாதோட்டத்
தளியிடை யன்றியெம்விழி யிடையும்பயில்
தாயே தாலேலோ
சாதல்பி றத்தலிலாத டிதந்தருள்
சங்கரி தாலேலோ
சதுர்மறை தந்தருள்கௌரி யிளங்கொடி
தாலோ தாலேலோ. 25
-----------------------------------
அன்னையி னின்று பிரிந்து கலங்கிடு
மஞ்சிறு பால கரின்
ஐவர் கலக்குற மம்மர் உழந்தழு
தழுதுபதைக்கு முயிர்க்(கு)
இன்ன லகற்றி யணைத்திரு தாள்தரு
மிறைவீ நாதாந்தத்
தெல்லை கடந்தபரா பரைசங்கரி
யின்றரு ளன்பர்குழீஇப்
பன்னு நலந்திகழ் செந்தமி ழாலிரு
பத்ம பதம்பாடிப்
பஞ்சணை யிற்றுயில் கென்று பராவொடு
பன்னி யிரக்கின்றார்
தன்னிக ரில்லரு ளன்னை மனோகரி
தாலோ தாலேலோ
சதுர்மறை தந்தருள் கௌரியிளங்கொடி
தாலோ தாலேலோ. 27
--------------------------------------
ஆடியல் நாகமொ டாறணி யுஞ்சடை
ஐயர் நுதற்கண்ணில்
அங்கி யுருக்கொடு வந்துத வழ்ந்திடு
மாறுரு வத்தினையும்
நாடி யணைத்த வையோ ருருவாக
நலந்திகழ் கந்தனென
நாமமூ மிட்டொரு வேலரு ளிச்சுரர்
நாடு புரந்திடென
நீடுப றந்தலை சூரொடு தானவர்
நீறுபடப் பொருது
நின்று பணிந்த புரந்தர னுக்குவிண்
ணீடர சோடருளித்
தாடரு சேயை யளித்த பசுங்கொடி
தாலோ தாலேலோ
சதுர்மறை தந்தருள் கௌரி யிளங்கொடி
தாலோ தாலேலோ. 28
---------------------------------
கொண்ட லெமுந்து முழங்கி யிருண்டு
குளிர்ந்து நெடுந்தாரை
கொண்டு பராபரை நின்கரு ணைகுதி
கொண்டென வேபெருகி
மண்டி நிறைந்து திளைந்திடு வார்பவ
மாற்றிடு பாலாவி
மாநதி யாயுயிர் வாழ வளிக்கு
மருங்கி லெழுந்தருளி
அண்டர்கள் மாமறை கண்டறி யாவடி
அம்புய மங்குதொழும்
அன்பரகத்தி லிருத்தி நிரந்தர
மாடுமனோன் மணிதாள்
தண்டனி டும்பணி கொண்டருள் செய்பரை
தாலோ தாலேலோ
சதுர்மறை தந்தருள் கௌரியிளங்கொடி
தாலோ தாலேலோ. 29
----------------------------
மாலரு ளிற்றுயில் வேலை கொதித்தெழு
மாலமெடுத் தருளால்
வையக மோடுயர் வானக மும்முயிர்
வாழவ யின்றபரன்
பாலிலி ருந்தனை யாமறி யாதுசெய்
பாவவினைக் கூற்றம்
பாடு தராவகை சாடியெ மக்கருள்
பாலிபரா பரையே
நீலி நிரந்தரி கோமளை யாமளை
நின்மலை யென்றடியார்
நித்தமு நின்னிரு பத்ம பதந்தொழ
நீடருள் செய்தாயே
சாலி வளந்திகழ் கேதுபதிக்கிறை
தாலோ தாலேலோ
சதுர்மறை தந்தாள் கௌரியிளங்கொடி
தாலோ தாலேலோ. 30
--------------------------------------
4. சப்பாணிப் பருவம்
காளக் கருக்கொண்டு ககனமுகில் மேனின்று
கட்டியங் கொட்ட நீலக்
காசினி வளைத்திட்ட கடலலைக் கைகொண்டு
கதிர்முத் தினங்கள் கொட்டப்
பாளைப் பசும்பூக மடல்விரிந் துதிர்மலர்கள்
பாங்கரிற் கொட்ட வலைநீர்ப்
பாலாவி யுறைபுட் குலங்கள்தஞ் சிறைகொண்டு
பல்லியங் கொட்ட மறுகில்
தாழைப் பொதும்பர்விரை நாறுபொற் சுண்ணங்கள்
தலமிசைக் கொட்ட வோங்குந்
தருநிரைகள் பலபலென மணமருவு மலர்மாரி
தண்ணற வினோடு கொட்டத்
தாளக் கரங்கொண்டு சார்கருணை மேல்கொண்டு
சப்பாணி கொட்டியருளே
சயிலந்த ருங்கௌரி தளிரிளஞ் செங்கைகொடு
சப்பாணி கொட்டியருளே. 31
--------------------------------------
அலகிலா வான்மகோ டிகள்தமக் கருளவு
மவைதமை மறைத் தழித்தும்
அருள்கொண்டு காக்கவும் ஆக்கவு முளங்கொண்டு
ஐவரை நிறுத்தி யகில
உலகெலா மாயநீ உறுதுணைவி யாயவர்க்
குயர்மனோன் மணிசத் தியாய்
ஓங்கிய மகேசுவரி உமைசலசை வாணியாய்
உடனின்று நடந வின்றும்
மலமிலா ரறியவரு விந்து நாதஞ்சத்தி
மாசிவமு மாகியங்கும்
மன்னிடு பராசத்தி மாதேவி நவசத்தி
வடிவாயு நின்றவனிதை
தலமெலாம் புகழ்திருக் கேதீச் சரத்தம்மை
சப்பாணி கொட்டியருளே
சயிலந்த ருங்கௌரி தளிரிளஞ் செங்கைகொடு
சப்பாணி கொட்டியருளே. 32
-------------------------------------------
கற்பகக் காநிழற் கண்ணிமைக் காதுசுரர்
கள்ளறா மலர்கள் தூவக்
ககனவட் டத்துலவு பலகணமு முன்னருட்
கதிர்உருக் கண்டு மேவப்
பொற்புறு புவித்தலத் தன்பர்சிவ சிவவென்று
பூங்கர மெடுத்து நீவப்
பொன்மேனி தாளாது தாளா தெனத்தாயர்
பொருமியுள மறுகி நோவச்
சொற்பத மெலாங்கடந் தருவாகி நின்றபொருள்
சோதிபெறு முருவ மாகி
துய்யமல ரணைமிசை யிளங்குழ வியாகிச்
சுடர்க்கர மெடுத்து மேலாந்
தற்பர னடத்தினுக் கொத்ததிரி புடைகொண்டு
சப்பாணி கொட்டியருளே
சயிலந் தருங்கௌரி தளிரிளஞ் செங்கைகொடு
சப்பாணி கொட்டி யருளே. 33
-------------------------------------
ஆடகப் பொதுநின்று மம்பலவர் நாதவொலி
யணிமுரசு கொட்ட மேலாம்
அருமறைகள் தவமுனிவர் அமரர்புடை சூழநின்
றாவலங் கொட்ட வருளை
நாடியயல் நின்றுருகு மன்பர்கண் ணீர்முத்தம்
நறைமலர்கள் கொட்ட வன்னை
நளினத் தளிர்க்கர மெடுத்திங்கு சப்பாணி
நகை கொண்டு கொட்டியருளே
மாடுற்றி டுஞ்சாலி வயல்மலியு மாதோட்ட
மன்னு கேதீச்ச ரத்தின்
மறைகளொடு திருமுறையி னொலிபெருகு திருவீதி
மருவுமடி யார்கள் வாழத்
தாடந்து கருணைபொலி சலசலோச னவன்னை
சப்பாணி கொட்டியருளே
சயிலந் தருங்கௌரி தளிரிளஞ் செங்கை கொடு
சப்பாணி கொட்டியருளே. 34
--------------------------------------------
பாலுததி யென்னப் பரந்தொழுகு பாலாவி
பாங்கரிற் பரத மாடும்
பாங்கிய ரொடும்மலர் பறித்துத் தொடுத்துமைம்
பால்சூட்டி யழகு பார்த்துங்
கோலமயில் கிள்ளைநா கணவாய்க் கருத்தியும்
குதலைமொழி கேட்டு வந்தும்
கூடிக் கழங்குகொண் டாடியும் மகிழன்னை
கூடுமிரு வினை யினாலே
ஞாலவட் டத்திலெமை ஞாயிறு முதற்கோள்கள்
நலியாது நின்று நன்று
நல்கிட வலர்ந்தநளி னக்கரம் கொண்டுநீ
நன்கு சப்பாணி கொட்டே
சாலத்தயா கொண்டு சாரருளு ளங்கொண்டு
சப்பாணி கொட்டியருளே
சயிலந் தருங்கௌரி தளிரிளஞ் செங்கைகொடு
சப்பாணி கொட்டியருளே. 35
-----------------------------------------
வேறு
மருங்கில் உடுத்த பட்டாடை
வண்ண மகளிர் ஆயமொடு
மறுகி லாடி மலினமுற
வளருங் கூந்தல் குலைந்தலைய
அரும்புங் குறுவேர் வுறத்திலத
மழிந்து நெற்றி யணிபிறழ
அதுகண் டன்னை மாரெடுத்தே
அணைத்தொப் பனையிட் டருகிருத்த
விரும்பிக் குழுவி னொடுபின்னும்
விளையாட் டயரும் பசுங்கிளியே
மென்கை விரித்துச் சப்பாணி
மெல்லக் கொட்டி யருளாயே
கரும்புங் கமுகுஞ் செஞ்சாலிக்
கரையில் வளர்கே தீசர்விழி
கண்டு களிக்கச் சப்பாணி
கௌரீ கொட்டி யருளாயே. 36
--------------------------------------
கையான் வாச மலர்தூவிக்
காலால் வலம்வந் துருகியிரு
கண்ணால் முத்தமு திர்த்துநின்று
கசிந்து கசிந்துன் புகழ்பாடி
மெய்யாற் பணிந்து வேண்டுதுமுன்
விரையார் மலர்மென் கரமெடுத்து
விண்ணும் மண்ணுங் கண்டுதொழ
மென்சப் பாணி கொட்டாயே
ஐயா றமர்செம் பொற்சோதி
யமல னருளி னுருவாகி
ஆகம் பகிர்ந்த மடப்பிடியே
ஆலந் திரட்டி யமுதமெனக்
கையா தருந்தி யெமைக்காத்த
கறையார் கண்டர் கேதீசர்
கண்டு களிக்கச் சப்பாணி
கௌரீ கொட்டி யருளாயே. 37
-------------------------------------
வான்பொய்ப் பினும்தான் பொய்யாத
வளஞ்சால் பொன்னி நாடுடைய
மன்ன னிராச ராசன்முதல்
வள்ளல் பலரின் திருப்பணியால்
தேன்பொய்ப் பில்லா மலர்க்காக்கள்
தேவ ருலகை யண்மியுயர்
திருக்கோ புரங்கள் குருகுலங்கள்
தேரூர் வீதி மடாலயங்கள்
தான்பெற் றுலவிக் காழியர்கோன்
தம்பிரானின் தோழர் முதல்
தமிழ்மாச் செல்வர் பாடல்கொளும்
தலத்தி லமருந் தாயேநின்
கான்பெற் றிலகு பலர்க்கரங்கள்
கருதி யெடுத்துக் கேதீசர்
கண்டு களிக்கச் சப்பாணி
கௌரீ கொட்டி யருளாயே. 38
------------------------------------
நறையிற் பொலியும் பூந்தவிசின்
நங்கை யிருவர் பாலாவி
நதியின் சாரல் வாலுகத்தின்
நளினப் பாயல் நடுவிருத்திப்
பிறையிற் றிகழு நுதலணங்கே
பிள்ளைக் கனியே யன்றிமவான்
பேணி வளர்த்த பசுங்கிளியே
பெண்ணா யகமே சப்பாணி
முறையிற் புரிக வெனவேண்ட
முகிழ்த்த நகைகொண் டருள்கொண்டு
மூவா முதல்வீ சப்பாணி
முன்னிக் கொட்டி யருளாயே
கறையிற் பொலிந்து கருணைபொலி
கண்ணாய் கேதீச் சரநாதர்
கண்டு களிக்கச் சப்பாணி
கௌரீ கொட்டி யருளாயே. 39
-----------------------------------
வேறு
மன்னுமைம் பூதத்தின் வடிவான வுடலல்லை;
மனமாதி கரண மல்லை
வல்வினைப் பயனுகர வவையா மளித்திட்ட
மாமருந் தறிதி யுடனாய்
முன்னுனை யணைந்துள்ள விருள்மல மயக்கினால்
மோகித்து நினை மறந்தும்
முத்திநிலை தந்தருளு மெம்மையு மறந்தனை
முதுக்குறைவு பெற்றெ மடியார்
பன்னுதிரு வைந்தெழுத் தோதிவாழ் கென்றுகுரு
பரனாயு மருளு முமையே
பாலாவி மறுகினிற் கேதீச் சரத்திலருள்
பாலிக்க வந்த பரையே
தன்னிகரி லாவன்னை தண்மலர்ச் செங்கைகொடு
சப்பாணி கொட்டி யருளே
சகலவுல கும்பரவு கௌரிநா யகியினிது
சப்பாணி கொட்டி யருளே. 40
------------------------------------
முத்தப் பருவம்
வீடகத் துறுமாசை மேலிட விரைந்துதிரு
மேவுபா லாவி யாடி
விரதங்கள் கொண்டுதவ நெறிநின்று தொண்டரொடு
விரவிப் புகழ்ந்து னாமம்
ஏடகத் தெழுதரிய விசையொடு பயின்றாடி
இருகணீர் மல்க வுள்ளம்
எரியிடைப் பட்டமெழு கெனவுருக வலமாகி
ஏத்தித் துதித்த லின்றி
நாடகத் தாலன்பர் போனடித் திடுமிந்த
நாயிற் கடைப்பட் டவெம்
நாவிருந் துன்னடிகள் பாடப் பணித்திட்ட
நல்லருளை நவில வறியேம்
காடகத் தொளிர்திருக் கேதீச் சரத்தம்மை
கனிவாயின் முத்த மருளே
கைலைநா யகர்பரவு கௌரிநா யகியுனது
கனிவாயின் முத்த மருளே. 41
--------------------------------------------
மட்டுலவு செங்காவி வயலுலவு வரிவாளை
வானுகண் டுடுவி னுலவி
மழைமுகிலி னொடுமீளும் வளனுலவு மாதோட்ட
மருவிப்பணிந்த வளமார்
பட்டுலவு மிடையினாள் பாவைமண் டோதரி
பரிந்துபணி செய்ய வருளும்
பரைதேவி கேதீசர் பாகம் பகிர்ந்துலவு
பானற் றடங்க ணம்மை
எட்டுலவு முருவாகி யாவுமாய் நின்றவுமை
இணையில் கேதீச்ச ரத்தில்
ஏத்துமடியார் கள்வினை தீர்த்திட வுருக்கொண்ட
ஏகநா யகிம யக்கும்
கட்டுலவு முயிரவை கடைத்தேற நின்சுவைக்
கனிவாயின் முத்த மருளே
கைலைநா யகர்பரவு கௌரிநா யகியுனது
கனிவாயின் முத்த மருளே. 42
-----------------------------------------
பொன்னிலவு செஞ்சடைப் புதுமதி யணிந்தரன்
பொற்றாலி சூட்டு மந்நாட்
புவனங்க ளத்தனையு மிருநாழி நெல்லிற்
புரக்கின்ற வன்னை நின்பால்
அன்னமலை யவையெலாந் தன்னக டடக்கியும்
அழிபசி கொள்குண் டோதரன்
அலறிடவு நனிநாணி யமலர்தரு செஞ்சோற்றி
னகழியி னளித்த வதனால்
மன்னுகே தீச்சரம் பணியவரு மன்பர்பசி
வாடாது காக்க வன்ன
மாமடம் பலகொண்டு வளரரு ளுளங்கொண்ட
மாதேவி மலய முதல்வீ
கன்னல்வயல் சூழ்திருக் கேதீச் சரத்தன்னை
கனிவாயின் முத்த மருளே
கைலைநா யகர்பரவு கௌரிநா யகியுனது
கனிவாயின் முத்த மருளே. 43
---------------------------------------
அன்றுகா ளத்தியினி லையனொரு வேடனிடு
மவியூ னுகந்து தின்றான்;
அலைவீசு கடலினிடை வலைவீசி னான்;கூலி
யாளாகி மண்சு மந்தான்;
சென்றுபலி கொள்ளநிர் வாணியாய்த் தெருவெலாம்
தேடித் திரிந்த லைந்தான்;
தேனார் மொழிப்பரவை பாலிர விடைத்தூது
சென்று சென்றலை தலுற்றான்;
பன்றியி னுருக்கொண்டு பாலூட்டி னான்;விறற்
பார்த்த னார்வில்லி னடிகள்
பட்டுநின் றானிவைகள் பரிபவ மெனக்கொளாப்
பாலிருந் ததர முத்தம்
கன்றை நாடிய புனிற்றாவினிற் றருமம்மை
கனிவாயின் முத்த மருளே
கைலைநா யகர்பரவு கௌரிநா யகியுனது
கனிவாயின் முத்த மருளே. 44
-----------------------------------
காணுங்க ணறியாது கருதுமன முணராது
காட்டுவா னின்றி யதனாற்
காயமுட னுள்ளங் கலந்துகாட் டிடுஞான
கதிரவ னெனத் திகழ்ந்து
மாணுற வுயிர்த்தொகை மயக்கறுத் தரனடியில்
மருவிடப் புரிய வருளால்
மன்னுபா லாவியின் மறுகணைந் தன்பர்சிவ
வாழ்வு பெற் றுய்யவேண்டிப்
பூணுறு சொரூபநிலை நீங்கித் தடத்தமாய்ப்
புகலுமரு ளுருவு கொண்டு
பொன்மேனி கொண்டுமெய் யன்பரிற் றயைகொண்டு
பொற்புறு மிளங்கு ழவியாய்க்
காணுற்ற மலைவல்லி கௌமாரி முருகுதவழ்
கனிவாயின் முத்த மருளே
கைலைநா யகர்பரவு கௌரிநா யகியுனது
கனிவாயின் முத்த மருளே. 45
-----------------------------------------
வேறு
மழைக்கார் கடுக்க மதம்பொழியும்
மணிவா ரணத்து வதனமுடை
மைந்தன் றனக்குஞ் சரவணத்தில்
வந்த குழந்தை வேலவற்கும்
முளைக்கால் வயலிற் சூல்நந்து
முழங்குங் காழி வந்துதிரு
முலைப்பால் வேண்டி யழுதுபெற்ற
முருகார் மலர்வாய்க் கவுணியற்கும்
அழைக்கா துதவுங் கனிவாயின்
அருளார் முத்த மின்றுதிரு
வடியே சரணென் றலறிநிற்கு
மடியேம் பெறநின் னருளுண்டோ?
கழைக்கா மனுக்கு மருளன்னை
கனிவாய் முத்த மளித்தருளே
கெளரித் தாயே யருளொழுகுங்
கனிவாய் முத்த மளித்தருளே. 46
------------------------------------------
கயிலை யெடுக்க நெரிந்துமறைக்
கானம் பாடி யம்மேநின்
கருணைப் பெருக்கால் அருள்பெற்ற
கடல்சூழ் இலங்கை யிராவணனார்
மயிலைப் பொருவு மென்சாயல்
மனைமண் டோத ரிக்குமருள்
வண்மை கண்டுன் னடியிணைகள்
வாழ்த்தி வணங்கி மலரிடுவோம்
அயிலைப் புறங்கண் டருளொழுகு
மணிநேத் திரத்தாய், அன்றரனார்
ஆலங் குடித்த போதுகனி
யதர முத்த மருளாயேல்
கயிலைக் கிறையைக் காப்பவரார்?
கனிவாய் முத்த மளித்தருளே
கௌரித் தாயேஅரு ளொழுகுங்
கனிவாய் முத்த மளித்தருளே. 47
---------------------------------------
வேறு
கருவா யுதித்து விளைபோக முண்டு
களியால் மயங்கி யுனதாள்
கருதா துனன்ப ரொடுமே விடாது
கவிபாடி யுள்ள முருகிப்
பெருகார் வமோடு பணியாது நின்ற
பெருமூட மேமை யருளாற்
பிரியா துணின்று பெருவாழ்வு தந்து
பிரசங் கொழித்து மலரு
மிருபாத நீழல் தருமம்மை யெம்மை
யிடரான வொன்று நலியா(து)
இனிவாழ்வி லன்பரொடு கூடியுன்ற
னிருபாத போது பரவும்
தெருளான தந்து சிவகாமி யம்மை
திருவாயின் முத்த மருளே
சிவனா ரிடத்தி லமர்கௌரி யம்மை
திருவாயின் முத்த மருளே. 48
------------------------------------
கஞ்சத் தளத்தி லமர்மாத ரோடு
ககனத் தலத்து மடவார்
கமலப் பதத்து மலர் இட்டுநின்று
கரமுச்சி கொண்டு பணிய
மஞ்சிற் பொலிந்த குழலா ளிலங்கை
மண்டோ தரிக்கு மருளி
மாதோட்ட மன்னு கேதீச் சரத்தில்
வந்தித் துநிற்கு மடியார்
நெஞ்சத் திருந்து களியூட்டு மம்மை
நிலமர்தி பூத வுருவாய்
நிலைகொண் டசத்தி யருள்கொண்டு மண்ணில்
நிலவும் குழந்தை வடிவாய்ச்
செஞ்சொற்கள் கொண்ட மழலைக் கொழுந்து
திருவாயின் முத்த மருளே
சிவனா ரிடத்தி லமர்கௌரியம்மை
திருவாயின் முத்த மருளே. 49
-------------------------------------------
ஆவாவிதென்னை கொடுநஞ்ச மெம்மை
யலறத் துரப்ப தடியேம்
அழிகின்றமைய வரனே யடிக்க
ணபயம் மடிக்க ணபயம்
சேவேறிவந்து தெறுநஞ்சி னின்று
சிறியேமை யாளு கடிதே
சிவனே யென்றோல மிடநஞ்சையுண்டு
தேவர்க் கிரங்கி யவரைக்
கூவித்தெருட்டி யபயங் கொடுத்த
குழகன் னிடத்தி லருளாய்க்
கோலங்கொ ளம்மை கேதீச் சரத்திற்
குடிகொண்ட தேவி யடிகள்
சேவித்து நிற்கு மடியேமை யாண்டு
திருவாயின் முத்த மருளே
சிவனா ரிடத்தி லமர்கௌரி யம்மை
திருவாயின் முத்த மருளே. 50
----------------------------------------
6. வருகைப் பருவம்
தெய்வத் தமிழி னுடன்பிறந்த
தென்கா லசைப்ப விறாலுடைந்து
சிந்தச் சிந்த மழையென்று
தேறாக் கானமயில்க ளெல்லாம்
பையக்கலா பம்விரித்து நடம்
பயில் தண் டலைகள் சூழ்ந்துபரம்
பரனின் கருணை யெனப்பரந்த
பாலாவி யின்சார் பயில்கோவில்
வையஞ் சிறக்க விடங்கொண்ட
மாசில் மணியே கேதீசர்
வாமம் பகிர்ந்த மறைக்கொழுந்தே
மழலைக் கிளியே வருகவே
ஐயன் கருணை யுருவான
அன்னை வருக வருகவே
அருளார் கௌரி யடிசூட்டி
யாள வருக வருகவே. 51
-----------------------------------------
காழி யுதித்த சிவஞானக்
கன்றுங் கமலை நம்பியுமுன்
கனிந்து கனிந்தன் றமுதூறக்
கழறும் பாடல் கேட்டருளும்
நாளன் றிதுவெம் புன்பாடல்
நயத்தல் கடனே நாகமணி
நஞ்சுண் டிருண்ட கண்டனிடம்
நாடிப் படரும் பூங்கொடியே
வாழி கேதீச் சரமுடைய
மயிலே யுததி வருமமுதே
வளஞ்சேர் பாலா வித்துறையின்
மானே வருக மலரடிதந்
தாளும் பழைய வடியருடன்
அடியேங் கூட வருள்கண்டாய்
அருளார் கௌரி யடிசூட்டி
யாள வருக வருகவே. 52
-------------------------------------
தேனார் சோலை மாதோட்டத்
திருக்கே தீச்ச ரத்துறையுந்
தெய்வப் பிடியே! பசுங்கிளியே!
சிவனார் முக்கண் களிக்கவரு
மானே! யிமவான் மடமகளே!
மறைநான் களித்த மயிற்பெடையே!
வையம் போற்றும் பாலாவி
மருங்கில் வளரும் பூங்கொடியே!
தேனாய்க் கனியாய் இன்னமுதாய்த்
தெளிந்த அன்பர் மனக்கோயிற்
றெய்வச் சுடரே வருகவிளந்
தென்றல் கமழுந் திருவீதி
ஆனே றுயர்த்த கொடியாட
அன்னை வருக வருகவே
அருளார் கௌரி யடிசூட்டி
யாள வருக வருகவே. 53
--------------------------------------
மத்தங் கமழுந் திருமுடியில்
வளரும் பிறையை வகிர்ந்துநுதல்
மருவப் பதித்து நகைபூப்ப
மதியற் றிருந்தமறி யேந்தும்
அத்தர் அணைத்தங் கயலிருத்தி
அம்மே முகமா நிறைமதியுண்(டு)
அளித்தி யந்தக் குறைமதியென்
றாடல் காட்ட அவருடனே
முத்தங் கொடுத்து விளையாடும்
முதல்வீ வருக நான்குமறை
முதலே வருக இருசரண
முகையார் கமல மெம்மகத்தும்
அத்தன் கேதீச் சரத்தினும்வைத்
தாட வருக வருகவே
அருளார் கௌரி யடிசூட்டி
யாள வருக வருகவே. 54
----------------------------------------
செம்பஞ் சுனது சிற்றடிகள்
தீட்ட வருக தேன்மழலை
தெவிட்ட வருக இருகரங்கள்
தீண்ட வருக பிறைநுதலில்
பைம்பொற் றிலக மிடவருக
பானல் விழிக்கு மையெழுதிப்
பார்க்க வருக பாலாவிப்
பாங்கர் பசுங்கா வலர்ந்தநறை
கொங்குண் மலர்கள் பறித்துனது
குழலிற் சூட்ட வருகஅடி
கொஞ்ச வருக அண்டமெலாம்
குலவுங் கழங்காய் எடுத்தருளால்
அங்கு குழுமு மாயமுட
னாட வருக வருகவே
அருளார் கௌரி யடிசூட்டி
யாள வருக வருகவே. 55
---------------------------------------
மலயத் துவசன் மகளாகி
வண்ட லாடி முடிசூடி
வளருங் கன்னித் தமிழ்புரந்து
மதுரை யாண்ட மாதரசே
சிலையொன் றேந்திக் குறட்பூதத்
தெய்வப் படைகள் சாய்த்துவெயில்
செய்ய வனல்தண் ணிலவுமிழுந்
தேவு முக்கண் ணேறுபட
முலையொன் றிழந்து வலியிழந்து
முன்னைத் தருக்கு மிழந்துகனி
முத்தங் கொடுத்தும் முடிகொடுத்தும்
மூவா முதல்வற் காளாகும்
அலையொன் றியகே தீச்சரத்தி
னணங்கே வருக வருகவே
அருளார் கௌரி யடிசூட்டி
யாள வருக வருகவே. 56
----------------------------------------
கருணை சுரந்து பொழியவரு
காள முகிலே! கறைநீல
கண்டன் மகிழ்ந்து சுவைத்திடுசெங்
கரும்பே! கயிலைக் கொளியூட்டும்
தருண, மணியே! கடலமுதே!
சயிலத்தி ருந்தசு வைத்தேனே!
தருவிற் பழுத்த நறுங்கனியே!
தளிர்மென் பதங்களெ டுத்தாட
வருக! வருக! வெனவேத்தி
மலரிட் டுன்சீ றடிபரவும்
வண்ண மகளி ருடனாட
மறியுந் திரைநீர் பாலாவி
அருகு வருக! அன்பர்துய
ரகற்ற வருக வருகவே
அருளார் கௌரி யடிசூட்டி
யாள வருக வருகவே. 57
-----------------------------------------
செக்கச் சிவந்த முகையவிழச்
சேல்கள் வெடிப்பச் சிவனடியார்
திருவா சகத்தி னிசைபாடிச்
சென்று சென்று தீர்த்திகையிற்
புக்கு முழுகி நூற்றெட்டுப்
பொன்னார் கலசம் பூரித்துப்
புலன்கள் ஒடுக்கி மகாலிங்கப்
புனித னார்க்கு நீராட்டும்
மைக்கண் டத்தர் அருளென்ன
வாரிப் பெருகும் பாலாவி
மறுகிற் கைலை மகிழ்நருடன்
வாமம் பகிர்ந்த மடப்பிடியே
அக்கம் புனையு மன்பரகத்
தம்மை வருக வருகவே
அருளார் கௌரி யடிசூட்டி
யாள வருக வருகவே. 58
--------------------------------------
சந்தார் பொதியத் தவமுனிக்குத்
தமிழ்தேர் வுறவன் றுரைத்தருளித்
தாதைக் கோதி மறைப்பொருளைச்
சயிலத் தொடுசூர் தடிந்தவயிற்
செந்தூர் முருகன் றனையளித்த
தேவீ வருக மலர்ப்பொழில்சூழ்
திருக்கே தீச்ச ரத்தமலன்
செம்மார் பகத்து வடுப்படுத்த
பந்தார் முலையி னமுதூட்டிப்
பலகோ டியவா முயிர்க்கூட்டம்
பாச மகன்று சிவபோகம்
பயிலப் புரக்கும் பராபரையே!
அந்தா மரையி னணங்கினரோ
டாட வருக வருகவே
அருளார் கௌரி யடிசூட்டி
யாள வருக வருகவே. 59
----------------------------------------
விழுந்தார் வத்தி னொடுபணிந்து
விம்மி விம்மி விழிபொழிநீர்
வெள்ளம் பெருகி வெண்ணீற்றின்
மேனி நனைப்ப வியன்கங்கைக்
கொழுந்தார் கொன்றை மதிசூடுங்
குழக னோடு மமர்நினது
கோயில் வலம்வந் துருகிமனங்
குழைந்து குழைந்து தமிழ்பாடித்
தொழுந்தா ளன்ப ருடன்கூடித்
துரியங் கடந்த சிவபோகந்
துய்த்து நினைப்பு மறப்புமிலாச்
சுகவா னந்த நிலை வேண்டி
அழும்பா லரையா தரிக்கவருள்
அன்னை வருக வருகவே
அருளார் கௌரி யடிசூட்டி
யாள வருக வருகவே. 60
------------------------------------------
7. அம்புலிப் பருவம்
மதியமே யஞ்சனீ வாவாவு னங்கமுள
மறுவோடு க்ஷயமு மினிநீ
மாற்றலாந் தேயாத வாழ்வடைய லாமிரவி
மானவொளி பெற்று லவலாம்;
ததிமத் துடைந்தெனச் சஞ்சல முறாதுவான்
தனிலாட்சி பெற்று லவலாம்;
சாருமடி யார்களங் கத்திலுறு மின்னல்கள்
தவிர்த்திடக் கருணை கொண்டு
பதியெலாம் புகழ்திருக் கேதீச் சரத்தினிற்
பரமனொரு பாதி கொண்டு
பாலாவி மறுகினிற் பயிலுநடை கொண்டுலவு
பாவையுட னாட வாராய்
அதுகொண்டு நோயகலு மலைவுண்டு திரியாம
லம்புலீ யாட வாவே
அருமறைக ளறிவரியஅன்னைகௌ ரிக்கொடியொ
டம்புலீ யாட வாவே. 61
----------------------------------------
பாகத் திருந்தபர மேசர்செஞ் சடைமீது
பயிலுநின் னழகு கண்டோ!
பண்டுசிறு விதியிட்ட சாபந் தொலைக்கவோ!
பாந்தளுக் கஞ்சல் கண்டோ!
ஆகத் துறும்பிணி யகற்றவோ மால்துயிலு
மலையாழி வந்த வுறவோ!
அறிகிலே மம்புலீ யனைகௌரி நாயகி
யழைக்கிறா ளாட வாவே
பூகத்து மலர்சிந்த வயல்வாளை தாவிப்
புடைக்கு நீர்வளமி குந்து
பொங்குபா லாவியின் புடைகோயில் கொண்டவெம்
புனிதர்கே தீசர் பாகம்
ஆகப் பதம்பணியு மடியருக் கருளம்மை
யம்பிகையொ டாட வாவே
அருமறைக ளறிவரிய அன்னைகௌ ரிக்கொடியொ
டம்புலீ யாட வாவே. 62
-----------------------------------------
வானகத் துலவினும் வளையரா வுண்டிடும்
மழைமுகில் மறைக்கு மதனன்
வைகுகுடை யாயிடின் மறைமுத னுதற்கணெரி
மருவிடும் வண்ண மடவார்
பானல்விழி முகமுறிற் பருவம் பெயர்ந்திடப்
படரொளி யழிந்து படுவாய்
பாலாவி மறுகினிற் பயில்வண்ட லாடிடப்
பரைகௌரி கூவி நின்றாள்
தேனுண்டு வண்டுசெவ் வழியாட மயிலாடு
தேர்வீதி சூழ்ந்த பூங்காச்
செறிநிழ லரம்பையரொ டைந்தொழிலி னாடல்புரி
தெய்வக் குழந்தை யுடனே
ஆனந்த மாகவிளை யாடலாம் பாடலாம்
அம்புலீ யாட வாவே
அருமறைக ளறிவரிய வன்னைகௌ ரிக்கொடியொ
டம்புலீ யாட வாவே. 63
--------------------------------------
முத்தெறி திரைக்கடல் முளைத்தெழுந் தொளிவீசு
முழுமதி குதலை மொழியால்
முளரிக் கரங்கொண்டு வாவா வெனச்சிறார்
முடிவறா நாள ழைத்துக்
கத்துமொழி கேளாது ககனத் துலாவுவது
கடனன்று காசி னியுள
கதியற்ற பாலரென வெண்ணிடேல்; கௌரியிவள்
கைலாயர் பன்னி கண்டாய்!
பத்தருக் கருளும் பராபரை சினந்திடிற்
பகிரண்ட கூட மெல்லாம்
பஸ்மீ கரப்படும்; பரைசிறிது வெகுளுமுன்
பாலாவி நதிம ருங்கே
அத்தனரு ளுருவாய அம்மையுட னயலமர்ந்
தம்புலீ யாட வாவே
அருமறைக ளறிவரிய வன்னைகௌ ரிக்கொடியொ
டம்புலீ யாட வாவே. 64
----------------------------------------
கலையால் நிறைந்திட்ட கண்ணும்வா ளரவமது
கௌவிடக் காத்தி ருக்குங்
கதிரவ னுதிக்கக் கரந்திடும் வாளொளி
கவின்பெறக் கருதி மேரு
மலையால் வலம்வந்து வந்தலைந் தாலுமுன்
மாசு சிறித கலாதுகாண்
மணிகண்டர் சடையிடை மறைந்திருந் தெக்காலம்
வாழ்வுபெற வெண்ணி நின்றாய்?
தலையால் நடந்தாலு முன்குறைகள் தீராது
தண்மதி கேதீச் சரத்
தலமமர்ந் தன்பரிடர் சகலமும் போக்கியருள்
சைலமட மங்கை யுடனே
அலையால் வளம்பெற்ற பாலாவி நதிமருங்
கம்புலீ யாட வாவே
அருமறைக ளறிவரிய வன்னைகௌ ரிக்கொடியொ
டம்புலீ யாட வாவே. 65
-----------------------------------
மதுமலர் கரங்கொண்டு மலரடி மனங்கொண்டு
மறைகொண்டு தமிழ் கொண்டுநாம்
வழிவழிநு மடியரென வந்துபதி னெண்கணமும்
வந்தித்து நிற்க மேலும்
துதிகொண்டு மெய்யன்பர் தொழுதுகண் ணீர்கொண்டு
தோத்திர மியம்பி நிற்கச்
சுருதியின் முடிவிலுறை கௌரிநா யகியுனது
துணைநாடி வருக வெனவும்
மதிகொண்டு தேராது மதியமே நீவானில்
மகிழ்கொண்டு லாவன் முறையோ
வானாதி பூதத்து மன்னுயிரொ டுன்னையும்
வாழ்விக்கு மம்மை யிவள்காண்
அதுமனங் கொண்டுதீ அருளுருவின் அம்மையுடன்
அம்புலீ யாட வாவே
அருமறைக ளறிவரிய அன்னைகௌ ரிக்கொடியொ
டம்புலீ யாட வாவே. 66
------------------------------------
வேறு
உலவாக் கலைகொ ளுவர்க்கடொறு
முண்டுண் டுமிழு முரகமினி
உன்னை வணங்கப் பெறுவைதளி
ரொத்த கரங்கொண் டுடனாட
மலர்வாய் திறந்திங் கழைக்கின்றாள்,
வாவா வாவம் புலியேநீ
மதியென் றொருபேர் பெற்றனையே
மதியுண் டாயின் வாவாவா
சிலையிற் கணையிற் கைலைவரு
தெய்வக் கணங்கள் புறங்கண்ட
தேவி கௌரி யுடனாடுஞ்
செவ்வி கிடைத்தல் சிறிதோநீர்
அலையிற் பொலியும் பாலாவி
அழகார் மருங்கி லாடிடவா
அருளார் கௌரி நாயகியொ
டாட வருக அம்புலியே. 67
------------------------------------------
முந்நீர்ப் புணரி யொளித்தெழுந்த
முழுமா மதியே வாவாவா
முக்கட் பிரானின் முடிவளரு
மொய்ம்பின் றருக்கோ கலைகுறையும்
அந்நாட் பெற்ற சாபமதை
அயர்த்தி கொல்லோ ஆடலுகந்
தம்மை கௌரி யழைக்கின்றா
ளாட வாவுன் னங்கமுள
பின்ன மகலுங் கறையகலும்
பேணு மடியார் உடற்பிணியும்
பிறவிப் பிணியு மாற்றவலை
பிறழப் பிறழும் பாலாவி
அன்னம் பயில்தண் டலைநீழ
லாட வருக அம்புலியே
அருளார் கௌரி நாயகியொ
டாட வருக அம்புலியே. 68
-----------------------------------
வேறு
முன்னமோ ரம்புயன் முடிகாண வெண்ணியொரு
மோட்டெகின மாகி மேல்போய்
மூதண்ட கூடங்க ளெல்லாங் கடந்தும்
முரண்வலி யழிந்து காணா
அன்னமுடி யிற்றவழ்தி யம்புலீ யதுகண்
டழைக்கிறா ளம்மை வாவா
ஐந்தொழிலி னாடல்புரி யகிலாண்ட நாயகியொ
டம்புலீ யாட வாவா
செந்நெல்வயல் சூழ்திருக் கேதீச் சரத்தினிற்
சிவசக்தி கௌரி யுடனே
தேனமரு நாண்மலர்கள் கொய்துவிளை யாடலாஞ்
சீறுமர வணுகி டா(து)
அன்னைமுடி யுந்தவழ்ந் தாடலாம் பாலாவி
யாறும் படிந்தா டலாம்
அமரர்முனி வரர்பரவு கமலவடி போற்றலா
மம்புலீ யாட வாவே. 69
-----------------------------------------
வானகத் தாறுகொள லாலிரவி லுறுதலால்
மானிடங் கொண்டு லவலால்
மன்னுபல கணமும் மருங்கணை தலாலந்தி
வானத் தொளிர்ந்து வரலால்
நானிலம் போற்றலால் நவையுறுந் தக்கனார்
நன்மருக னாகி யுறலால்
நாண்மதி நம்மிறையை யொப்பையோ வென்றறிய
நாயகி வரக் கூவினாள்
பானத்த மூர்துறைப் பாலாவி மறுகினிற்
பைந்தரு நிழற்க ணிமையோர்
பாவைய ரொடைந்தொழிலி னாடல்புரி பரையோடும்
பான்மதீ யாட வாவா
ஆனத்தி யூரம்மை யயலமர்ந் தருள்பெறுவை
அம்புலீ யாட வாவா
அமரர்முனி வரர்பரவு கமலவடி போற்றலா
மம்புலீ யாட வாவே. 70
--------------------------------------
8. அம்மானைப் பருவம்
கானாறு கஞ்சப் பொகுட்டுறு பிதாமகன்
கழறுமறை யோதை யுடனே
கழுமல முதித்தமுத் தமிழ்விரக ராதியோர்
கண்டதிரு முறையோ தையும்
தேனோடு பால்கலந் தென்னமெய் யன்பர்செவி
தித்திக்க நித்த மோங்கும்
திருவீதி சூழுநீள் மதில்வாயில் வானளவு
திகழ்கோ புரங்க ளோங்க
வானாடர் காணொணா மறைமுத லிருந்துவர
மருளுகே தீச்ச ரத்தில்
வாமபா கம்பகிர்ந் தன்பருக் கருளுமலை
வல்லியா மளைவ ராகீ
ஆனாத அருளினொடு பாலாவி மறுகதனில்
அம்மானை யாடி யருளே
அரிபிரம ரறிவரிய வமலரிட மமர்கௌரி
யம்மானை யாடி யருளே. 71
--------------------------------------
கஞ்சமலர் மீதினுங் கருதுமறை முடிவினுங்
கைகுவித் துருகு மன்பர்
கண்ணினும் மற்றவர் கருத்தினுங் கேதீசர்
காணநட மாடு மடியெம்
நெஞ்சினு மிதித்தாட வல்லையோ மல்லல்வள
நீடுகே தீச்ச ரத்தில்
நீணாக மோரிரண் டின்றுதங் கிழமையால்
நிதமடி பராவு பரையே
தஞ்சமுன் னடியெனத் தாழ்ந்துருகு மன்பர்தஞ்
சஞ்சலம் போக்கி மேலாம்
சகலபோ கங்களுஞ் சிவபதமு மவர்பெறத்
தந்தருளு முமைசங் கரீ
அஞ்சலென வன்பருக் கபயங் கொடுத்துநீ
அம்மானை யாடி யருளே
அரிபிரம ரறிவரிய அமலரிட மமர்கௌரி
அம்மானை யாடி யருளே. 72
-------------------------------------------
பண்ணாறு செந்தமிழ்ப் பாடலா லன்னைநின்
பாதபத் மங்கள் பரவிப்
பல்லூழி யர்ச்சித்த பலனல்ல வோதேவர்
பதியாகி யிந்தி ரன்றான்
விண்ணா டளிப்பதும் வேதன் படைப்பதும்
விண்டுதிரு மகளை யெய்தி
விரிபடப் பாயற் கிடந்துலகு காப்பதும்
மெல்லிதழ்ச் சிற்ற டியெனுங்
கண்ணாறு கமலங் கருத்திடை யிருத்திக்
கசிந்துகவி பாட வருள்தா
காரணி குழற்கமலை பூரணி புராந்தகீ
கௌமாரி மாதங் கியே
அண்ணாறு சாலிவயல் அயல்சூழு மாந்தைதனி
லம்மானை யாடி யருளே
அரிபிரம ரறிவரிய அமலரிடம் அமர்கௌரி
அம்மானை யாடி யருளே. 73
--------------------------------------
கார்கொண்ட கந்தரக் கனல்கொண்ட செங்கரக்
கதிர்மதிய மங்கி கொண்ட
கண்கொண்ட முடியிலொரு பெண்கொண்ட மும்மதக்
கரியுரிவை போர்வை கொண்ட
போர்கொண்ட மூவிலைச் சூலவேல் கைக்கொண்ட
புரிசடைப் புராரி சிவனார்
புண்கொண்ட மேனியொரு புடைகொண்டு பல்கோடி
புவனங்கள் கொண்ட வுயிர்கள்
பேர்கொண்ட தனுகரண புவனபோ கங்களாம்
பேறுகொண் டுய்ய வுன்னிப்
பேரரு ளுளங்கொண்ட பெரியபெரு மாட்டியெம்
பிழைகொண்டு தாழா துவந்(து)
ஆர்கொண்ட முடிமீதி லணிகொண்ட பிறையணிந்
தம்மானை யாடி யருளே
அரிபிரம ரறிவரிய அமலரிடம் அமர்கௌரி
அம்மானை யாடி யருளே. 74
------------------------------------------
வஞ்சரைம் புலவேடர் மாயவலை யிற்சிக்கி
வாழுநெறி யறிவு றாது
வல்வினை புரிந்துதனை யறியாது நின்கமல
மலரடி மனங்கொ ளாது
சஞ்சலம் கொண்டுலவு முயிர்களிற் றயைகொண்டு
சற்குருவி னுருவு கொண்டு
தாணிழ லிருத்தியருள் வாழ்வளித் தருளம்மை
சங்கரி பரா சக்திசெங்
கஞ்சமென் மலரடிக் கௌமாரி மாதங்கி
காமாட்சி கங்கா தரீ
காளகந் தரிநீலி மாலவன் தங்கைசிவ
காமிவா ராகி யுமையே
அஞ்சலென் றபயங் கொடுத்தருளு முலகன்னை
அம்மானை யாடி யருளே
அரிபிரம ரறிவரிய அமலரிட
அம்மானை யாடி யருளே. 75
---------------------------------------------
தஞ்சமுன் னடியென்று சரணடையு மன்பர்தஞ்
சஞ்சித மலங்க ணீக்கிச்
சச்சிதா னந்தநிலை சாரவைத் திடுபாத
தாமரை மறப்பின் றியெம்
நெஞ்சிருத் திப்புவன தத்துவா திகளெலா
நின்னருளி னான கற்றி
நிர்க்குணா னந்தபர வெளியிலே நானற்ற
நின்மல சுகந்தரு வையோ
பஞ்சியலு மெல்லடிப் பரிபுர மிழற்றஒலி
பாலாவி மறுகி லாடும்
பாவையே வள்ளிகுஞ் சரிமருவு குமரனைப்
பாலனென வீன்ற பரையே
அஞ்சலென வன்பருக் கபயங் கொடுத்துநீ
அம்மானை யாடி யருளே
அரிபிரம ரறிவரிய அமலரிட மமர் கௌரி
அம்மானை யாடி யருளே. 76
-----------------------------------------
கொந்தவிழு மென்மலர்க் கூந்தற் பெதும்பையர்கள்
கோலமிட் டதனி னாப்பண்
கும்பமிட் டலர்தூவி மணநாறு தூபமொடு
கோவினெய்த் தீப மிட்டுப்
பைந்தளிர்ப் பதம்இட்டு வந்தனை புரிந்திடப்
பனிமலர் கரங்க ளிட்டுப்
பாலாவி மறுகதனில் ஆடவரு கென்றுபல
பாடிப் பரிந்து நிற்கச்
சிந்தைசெய் யாதிரு திருச்செவி மடாதுநீ
செயலற் றிருத்தல் முறையோ
தேவிசங் கரிநீலி மாதவன் சிறுதங்கை
சிவகாமி திரியம் பகீ
அந்தமென் மகளிரொடு மாடரங் கதனில்வந்
தம்மானை யாடி யருளே
அரிபிரம ரறிவரிய வமலரிட மமர்கௌரி
அம்மானை யாடி யருளே. 77
------------------------------------
தேனாறு கஞ்சத் தளத்தினும் மெய்யன்பா
சிந்தைத் தளத்து மகிடன்
சிரமீது மிமமேரு வரைமீது மலருமுன்
சீறடி செழுங்க ழனியிற்
பானாறு தீர்த்திகைப் பாலாவி மறுகினிற்
பந்தாடு மங்கை யரொடும்
பாடலினொ டம்மானை யாடிற் பனிக்குமோ?
பங்கயச் செங்கை நோமோ?
பூநாறு சுரிகுழற் பொன்னாடர் மகளிரொடு
பொங்கு பாலாவி தீரம்
புரியுமைந் தொழிலாய வம்மானை யாடவா
பூரணி புராந்த கீவெள்
ளானே றுயர்த்தபரை யலகிலுயி ருய்யநீ
யம்மானை யாடி யருளே
அரிபிரம ரறிவரிய வமலரிட மமர்கௌரி
அம்மானை யாடி யருளே. 78
-----------------------------------------
வெறிநாறு பூங்குழல் விரிந்தாட வாணுதலில்
மின்னுசிந் தூர மாட
வேலொத்த செங்கயல் விழிக்கடைகள் அருளமுத
வெள்ளம் பெருக்கி யாட
மறிநாறு செங்கரம் வனசமலர் கொண்டாட
வதனசந் திரனு மாட
மறைவான நூலிடை மருங்கினி லசைந்தாட
மணிநூ புரங்க ளலறும்
நெறிநாறு சிற்றடி யெடுத்தன்பர் நெஞ்சத்து
நின்றாடு சாமுண் டியே
நின்னடிகள் பரவாத வெம்மனப் பாறையினும்
நித்தநின் றாட வருள்வாய்
அறியாது மறைதேடு மன்னைகே தீச்சரத்
தம்மானை யாடி யருளே
அரிபிரம ரறிவரிய அமலரிட மமர்கௌரி
அம்மானை யாடி யருளே 79
----------------------------------------
காருற்ற வாணவங் கன்மமா யாமலக்
கட்டினின் றெம்மை மீட்டுக்
கருணைநற வூறுமுன் கமலவடி கதியெனக்
கருதுமெய் யறிவு தந்து
சீருற்ற நின்னடியர் சேர்க்கைதந் தவரடிகள்
சேவிக்கு மன்பு தந்து
சிவபோக வாழ்வுதந் தடியேமை யாளவுந்
திருவுள்ள முண்டு கொல்லோ?
பேருற்ற வண்டகோ டிகளெலா மாக்கியவை
பேணிப் புரக்கு முமையே
பெரியநா யகிபரம னுருவநா யகியுயிர்கள்
பெற்றநா யகிபூ ரணி
ஆருற்ற செஞ்சடையி லழகுற்ற பிறையணிந்
தம்மானை யாடி யருளே
அரிபிரம ரறிவரிய அமலரிட மமர்கௌரி
அம்மானை யாடி யருளே. 80
------------------------------------------
10. நீராடற் பருவம்
வேறு
மலர்த்தேங் கூந்தல் குலைந்தாட
வரிவண்டி னங்கள் கலைந்தாட
மகரக் குழைகள் அசைந்தாட
மணிமுத் தலங்கல் மருங்காடக்
கலைப்பூம் பட்டு நனைந்தாடக்
கலவைச் சாந்து கரைந்தாடக்
கலந்த வாய மொருங்குமிகு
களிகொண் டாடக் கரங்கூப்பித்
தலத்தே பரவும் தொண்டர்பதம்
தலைகொண் டாட வானுலகோர்
தண்கற் பகக்கா மலர்சொரிந்து
தாய்வாழ் கென்று தளிர்த்தாடப்
புலத்தே பாயும் பாலாவிப்
புதுநீ ராடி யருளுகவே
பொன்னம் பொருப்பில் வருகௌரி
புதுநீ ராடி யருளுகவே. 81
-----------------------------------
சால்பிற் சிறந்த கபிலனெனும்
தவமா முனியால் நீறாய
சகரர்க் காகப் பகீரதனாற்
றலத்து வந்த வான்கங்கை
ஏலப் பரந்து படியுமவர்க்
கிகமும் பரமும் கொடுத்தருளி
எண்ணிப் புலங்கள் உழுமள்ளர்
ஏற்ற மமைத்து வழிகோலக்
காலிற் பாய்ந்து வளம்பெருக்கிக்
கரையிற் றிரையால் முத்தொதுக்கிக்
கரவற் றுன்றன் னடியரவும்
கவிஞர்க் கம்மை நின்கருணை
போலப் பெருகும் பாலாவிப்
புதுநீ ராடி யருளுகவே
பொன்னம் பொருப்பில் வருகௌரி
புதுநீ ராடி யருளுகவே. 82
-------------------------------------
தேனாறு கொன்றையுந் திங்களு மலர்ந்திடும்
செஞ்சடா டவியின் மருவித்
தேவருல கோடுபா ருலகும் பணிந்திடச்
செம்மாந்து திரைகள் வீசும்
வானாறை யொத்துவரி வண்டுபண் பயில்சோலை
மாடுகொண் டாடு மன்பர்
மலமாயை கன்மமொடு முடனோ யகற்றிடும்
மாட்சியுங் கொண்டு கெண்டை
மீனாறு செஞ்சாலி வயல்பாயு மடைதோறும்
வெள்ளம் பெருக்கு மள்ளர்
வெறிநாறு செங்காவி களையப் பரந்துலவி
விளைவூட்டி யுயிர்கள் போற்றும்
பானாறு தெண்டிரை பரந்தாடு தீர்த்திகைப்
பாலாவி யாடி யருளே
பரமசிவ னருளுருவில் வருகௌரி பொங்குநீர்ப்
பாலாவி யாடி யருளே. 83
-------------------------------------
மலயத் திருந்தகுறு முனியுண்ண லால்மாயம்
வல்லசூர் மாவி னுருவாய்
வலிகொண் டலைத்தலால் மதுரையுக் கிரவருமர்
வற்றவே லெறித லால்நின்
வலமுற்ற பரமனொரு வலைகொண்டு வீசலால்
மந்தர மதித்த லால்முன்
வசையுற்ற வுவர்வேலை யன்றுகெண் ணீர்மருவி
வந்தாடு மன்பர் மலநோய்
உலவப் புரிந்துனது கருணைப் பெருக்கென்ன
உலகிற் பரந்து பலகால்
ஊடேறி மாடுபைங் கூழன்னை யெனவளர்ந்
தொப்பி லாநல் வளங்கள்
பலபெற்று வெண்டிரை நுரைத்துப் படர்ந்துலவு
பாலாவி யாடி யருளே
பரமசிவ னருளுருவில் வருகௌரி பொங்குநீர்
பாலாவி யாடி யருளே. 84
-----------------------------------
வந்துதிர் புகுமன்பர் வல்வினை பிரிந்தென்ன
மதுகரமி ரைத்தெ ழும்ப
வாளைசேல் கயல்கெண்டை மாயைக ளகன்றோடு
மாறுநிலை யின்றி யோட
நந்துமுத லாயவுயிர் நாடிநிலை கெட்டலறி
நலியாண வத்தி னகல
நாதாந்த ரூபியுன் னறைமலர்ப் பதநெஞ்சி
னடமாடு மடியா ரெல்லாம்
அந்தியொடு சந்திதின மாடிக் களிக்கின்ற
அன்னசெயல் கண்டு கந்தே
அருள்புரிய அன்னைநின தயலுற்ற வன்பர்குழு
அரகரமு ழக்க வருளால்
பந்தமற நாமெலாம் பண்ணினேர் மொழியன்னை
பாலாவி யாடி யருளே
பரமசிவ னருளுருவில் வருகௌரி பொங்குநீர்ப்
பாலாவி யாடி யருளே. 85
-------------------------------------
மாடெலா மறையினொலி வயலெலா மள்ளரொலி
மடையெலாம் நீரி னொலியால்
வளமுற்ற மாதோட்ட மருவுதென் கயிலையாய்
மன்னு கேதீச ரத்து
வீடுற் றிடும்பெரு விருப்புற்று வந்துபணி
மெய்யன்பர் உள்ள வுடனோய்
வீட்டிப் பெருங்கருணை யாட்டிப் பதங்கள் தர
வெள்ளே றுகந்த வரனார்
ஆடலாற் செஞ்சடை யணிந்தபா கீரதியை
அங்குவைத் தென்ன நிலவி
அணிகொண்டு முத்தமெறி யலைகொண்டு தெண்ணீ
ரகங்கொண் டுநிலை கொண்டுதன்
பாடெலாம் வழிகொண்ட பரவைநிகர் செந்துறைப்
பாலாவி யாடி யருளே
பரமசிவ னருளுருவில் வருகௌரி பொங்குநீர்ப்
பாலாவி யாடி யருளே. 86
-----------------------------------------
அஞ்சிடேல் ஆடுதற் கன்னையிது கம்பைநதி
யன்றுதென் மதுரை நகரை
அலைகொண் டழித்திடுது மெனவந்த வைகையன்
றையன்விட வங்கு பெருகி
விஞ்சலை புரண்டொழுகு கங்கையா றன்றுலகில்
மெய்ந்நெறியில் நின்று பணிவார்
வினையொழிந் துய்திபெற விடையேறு கேதீசர்
மேதினியில் வைத்த மென்னீர்
கொஞ்சலைப் பாலாவி குடையநின தாயமொடு
குறுகிமா மறுகில் வந்து
கூடிக் களித்தாடி மாடுற்ற தருநிழற்
கொண்டபே ரயர்வு போக்கிப்
பஞ்சிற் பொலிந்தநுரை திரைவீசு தண்டுறைப்
பாலாவி யாடி யருளே
பரமசிவ னருளுருவில் வருகௌரி பொங்குநீர்ப்
பாலாவி யாடி வருளே. 87
-----------------------------------------
வேறு
மதிநாற வுச்சி மணிநாக நாற
மதுமத்த நாறு முடியார்
வலமாக நாலு மறைநாறு முந்தி
மலர்நாறு வெள்ளை விடைமேல்
துதிநாறு மன்பர் சுவைநாறு பாடல்
தொடர் வேதவோ தையுடனே
சுரர்தூவு புஷ்ப மழையூடு மன்னை
துணையாய வாய மருவ
நதிநாறு நீரு நறைநாற வந்து
நவைதீரு மன்பி னடியார்
நமவோதை யோடு பணிமாந்தை மேய
நகர்கேது பூசை புரியும்
பதிநாறு தீர மணிநாற வுந்து
பாலாவி யாடி யருளே
பரமேசர் கண்ணின் மணியான கௌரி
பாலாவி யாடி யருளே. 88
--------------------------------------
அலைமென் கரத்தி லமரம் புயத்தி
னலர்கண்ணி னீல மலரின்
அணிபுன் சிரிப்பி லமைமுத் தினத்தில்
அமர்பச்சை வண்ண வுருவின்
நிலைகொண் புள்ளி னொலிவாக் கிலன்னை
நினையொத்து நீடு மருள்போல்
நிலவிப் பரந்து பரைநீ யளித்த
நிறைபொற் கலத்தி னமுதம்
உலகுய்ய வுண்டு சிவஞான முற்ற
வுயர்சண்பை மன்ன னாரூர்
உறுசுந் தரன்ற னருளூறு பாடல்
ஒலிபொங்க வேத்து மடியார்
பலமுற்று நின்ற னருளார வாடு
பாலாவி யாடி யருளே
பரமேசர் கண்ணின் மணியான கௌரி
பாலாவி யாடி யருளே. 89
-------------------------------------
மழையென்ன வந்து வரைநின்றி ழிந்து
வலமாய்வ ளைந்து னடியார்
மனதிற்றெ ளிந்து மலர்சந் தொதுக்கி
வயலிற்பு குந்து பெருகி
விளைசெந்நெல் கன்னல் விரவிப்பு ரந்து
விதியோடு மாடு மடியார்
வினையான பந்த முடனோயி னோடு
விலகத்து ரந்து மலர்கா
விழிகின்ற தேனி னுடனொன்றி ஐயர்
எழுதச்சி றந்த தமிழ்போல்
இனிதாகி யுன்ற னடிபாடு மன்பர்
இதயத்தி லூறு மருள்போல்
பழகச்சுவைக்கு மிசைபோல வோடு
பாலாவி யாடி யருளே
பரமேசர் கண்ணின் மணியான கௌரி
பாலாவி யாடி யருளே. 90
-----------------------------------------
10. ஊசற் பருவம்
நிகமா கமங்கால் விட்டமதாய்
நீள்சாத் திரங்கள் வடமாக
நெறியிற் பொலிந்த வுபநிடத
நேர்பொற் பலகை மீதிருத்தும்
தகவார் பிரண வப்பீடத்
தவிசி லமர்ந்து பல்லுயிர்க்கும்
சார்ந்த பிறவிப் பிணி நீக்கித்
தருநின் னருளாஞ் சிவபோகச்
சுகவாழ் வளிக்க வருள்கொண்டு
சோதி முகத்தின் னகைகொண்டு
சூழு மடியார் துதிகொண்டு
தூய வடங்கள் கரங்கொண்டே
அகிலார் கூந்தல் அவிழ்ந்தாட
ஆடி யருள்க பொன்னூசல்
அணியார் கேதீச் சரக்கௌரி
ஆடி யருள்க பொன்னூசல். 91
--------------------------------------
செம்பொற் பதங்கள் சிலம்பாடச்
சிறுநுண் ணிடையிற் பட்டாடத்
திருமார் பலங்கல் முத்தாடச்
செந்தாம ரைக்கண் ணருளாட
வம்பார் குழலின் வண்டாட
வாழ்த்து மடியார் மகிழ்ந்தாட
வரவும் போக்கும் புரிந்துழன்று
வாடும் உயிர்கள் வாழ்வுபெற
உம்பர் பொழிமா மலர்மாரி
உலகு புதைப்ப வோங்குமறை
யுடனின் றமிழி னொலிபொலிய
உள்ளத் தருள்கொண் டுவந்தேறி
அம்பொன் மணியார் பீடமமர்ந்
தாடி யருள்க பொன்னூசல்
அருளார் கேதீச் சரக்கௌரி
ஆடி யருள்க பொன்னூசல். 92
------------------------------------
வேறு
மலையி லுதித்திடு மரகத மெய்த்திரு
மாதே சொக்கேசர்
மதுரை புரந்திட மணிமுடி யன்றருள்
மானே தண்டமிழின்
வலையிடை பட்டொரு கவிவழி பின்செலு
மாலோ னுக்கிளைய
மயிலென வந்துயர் கயிலை மலைக்கிறை
வாமத் தமர்தேவீ
சிலை நுதல் கயல்விழி மதிமுக மரைமலர்
திருவடி யென்னவுளந்
தெரிய வு ருக்கொளு மருள்வடி வாகிய
திருவே பாலாவி
அலைபொரு தழகுறு மணிகே தீச்சரத்
தாடுக பொன்னூசல்
அரகர வொலியொடு கௌரியி ளங்கொடி
யாடுக பொன்னூசல். 93
------------------------------------
அமல ரிடத்துறை அமுத மொழிக்குயி
லாடுக பொன்னூசல்
அருளுரு விற்றிகழ் பவள விதழ்க்கொடி
யாடுக பொன்னூசல்
இமய மலைத்திரு விருவினை பற்றற
விணையடி தந்தருளும்
இறைவி பதம்பணி யடிய ருளங்கொளு
மெழிலி யயன்றிருமால்
அமயமி தென்றுநி னடிபர வத்திரு
நகையுட னூசலுகந்
தடிமலர் முன்னுற அருளொ டமர்ந்தினி
தாடுக பொன்னூசல்
அமரர் குலக்கொடி அருள்மலர் பொற்கொடி
ஆடுக பொன்னூசல்
அரகர வொலியொடு கௌரியிளங்கொடி
யாடுக பொன்னூசல். 94
------------------------------------
ஏமத் தியன்றுநவ மணிகுயிற் றித்திகழு
மெழிலூஞ்சல் இனிதி னேறி
இசையின்வழி நடநவிலு மினவரம் பையர்முன்ன
ரேத்தித் துதிக்க வண்ணத்
தாமரைத் தவிசிலமர் திருவாணி யிருபுறந்
தாய்வாழ்க வென்ன வாழ்த்தித்
தமனிய வடங்கள்கை தொட்டாட்ட அன்பர்சிவ
சத்திசிவ சத்தி யென்ன
மாமறை பசுந்தமிழின் மங்கலம் பாடவருள்
மலர் வதனம் நகையரும்ப
மயிலொன்று பூங்கொடியில் வாவிநின்றா டல்போல்
மன்பதைக ளுய்ய வருளால்
பூமலர்ச் சோலைமலி கேதீச் சரத்தம்மை
பொன்னூசல் ஆடி யருளே
பூந்தராய் வேந்தரழ முலைசுரந் தருள்கௌரி
பொன்னூசல் ஆடி யருளே. 95
---------------------------------------
அருள்தந்து நின்னடி யகந்தந்து கருணைமலர்
அரியகட் கடைகள் தந்தே
அஞ்சே லெனத்திகழு மபயகர மலரினோ
டாசிமொழி தந்து சிந்சைத்
தெருள் தந்து செம்மனத் தெளிவுதந் தடிபரவு
செந்தமிழ்ப் புலமை தந்து
சீர்பரவு நின்னடியர் திருவடித் தொண்டாய
சேவையுந் தந்து கடுவுண்(டு)
இருள்தந்த கண்டத்தெ மிறையடிகள் மறவாத
இன்பநிலை தந்து கருவுற்
றினிவந்து பிறவாது னிணையடிப் போதினிடை
எய்துசிவ போகமார் மெய்ப்
பொருள்தந்து மெமையாளு கேதீச் சரத்தன்னை
பொன்னூசல் ஆடி யருளே
பூந்தராய் வேந்தரழ முலைசுரந் தருள்கௌரி
பொன்னூசல் ஆடி யருளே. 96
-------------------------------------------
சிறையார் மடக்கிளிகள் திருவீதி தோறுமலர்
செறிகா விருந்து பூவை
செவிவாய் மடுக்கவுயர் சிவநாம மோதமயில்
சிவசத்தி யென்ன வகவ
மறையோடு செந்தமிழின் முறையோதை யுயர்வான
மண்டில நிறைந்து மலிய
மகவா னொடுஞ்சுரர்கள் மழைபோல வைந்தருவின்
மலர்மாரி பெய்து வாழ்த்தப்
பிறைவா ணுதற்கணிள மடமாதர் மங்கலம்
பொங்குசுடர் ஏந்தி யேத்தப்
பெய்கொண்ட லிடைதவழு மின்னலென வாலிப்
பிறங்குபொற் பலகை யேறிப்
பொறையோடு நின்னருளி னிறைவோடு படரொளிப்
பொன்னூசல் ஆடி யருளே
பூந்தராய் வேந்தரழ முலைசுரந்தருள் கௌரி
பொன்னூசல் ஆடி யருளே. 97
------------------------------------------
நாமணக் குந்தெய்வ நாமங்க ளோதியருள்
நாடிப் பரிந்து னடியார்
நறைமணக்கும் வண்ண நாண்மலர்கள் கொய்துனது
நளினவடி தூஉய் வழுத்தத்
தேமணக் குஞ்சுவைச் செம்பொருள்க ளமைவுறச்
செந்தமிழ் கனிந்து சொட்டச்
சிவமணக் கும்பாடல் ஓதியே தெரிவையர்
செங்கரங் கொட்டி வாழ்த்த
மாமணத் தென்றலிள மாருத மதாய்வீச
மலர்முகங் கொண்டு ளத்தில்
மன்னுதிரு வருள்கொண்டு வந்துபணி யன்பர்சிவ
வாழ்வு கொண் டுய்யவுன்னிப்
பூமணக் கும்பொழிற் கேதீச் சரத்தம்மை
பொன்னூசல் ஆடி யருளே
பூந்தராய் வேந்தரழ முலைசுரந் தருள்கௌரி
பொன்னூசல் ஆடியருளே. 98
--------------------------------------------
வையகத் துயிர்கள்சுப மங்களத் தொடுவாழ
மணியூச லாடி யருளே
வரமருள அருளுருவில் வருகௌரி யம்மையணி
மணியூச லாடி யருளே
ஐயரிட மாயமர்ந் தன்பர்பணி கண்டுவந்
தணியூச லாடி யருளே
அரகர முழக்கினொடு மடியர்புடை யடிபரவ
அணியூச லாடி யருளே
மெய்ம்மைபெறு சைவநெறி வேதநெறி வாழவென
மின்னூச லாடி யருளே
மெல்லடிக் கீழன்பர் சிவபோக வாழ்வுபெற
மின்னூச லாடி யருளே
பொய்ந்நெறி யகன்றுயிர்கள் புனிதமுற வருளன்னை
பொன்னூச லாடி யருளே
பூந்தராய் வேந்தரழ முலைசுரந் தருள் கௌரி
பொன்னூச லாடி யருளே. 99
----------------------------------------
திருமருவு கேதீச் சரம்வாழ வந்துபணி
சிவநெறிச் செல்வர்வாழத்
தெண்ணீர் நிறைந்துபொலி பாலாவி வாழத்
திருப்பணிகள் வாழவோங்கும்
அரனைந் தெழுத்தோடு மரியமறை யாகமம்
அணிகொள் திருமுறைகள்வாழ
ஆனினம் வாழமறை யந்தணர்கள் வாழமழை
யமைவுறப் பெய்துவாழ
மருவரும் சைவநெறி வாழநின் னடிபாடும்
வண்டமிழ்ப் புலவர்வாழ
வளரா ரியத்தினாடு தமிழ்வாழ வுயர்கலைகள்
மருவுகுரு குலமும்வாழப்
பொருவிடைக் கேதீச் சரத்தமரு நாதனொடு
பொன்னூச லாடியருளே
பூந்தராய் வேந்தரழ முலைசுரந் தருள் கௌரி
பொன்னூச லாடியருளே. 100
---------------------------------
ஊசற் பருவம் முற்றிற்று
திருக்கேதீச்சரத்துக் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ் நிறைவுற்றது
திருச்சிற்றம்பலம்.
-----------
கௌரிநாயகி பிள்ளைத்தமிழ்
அருஞ்சொற் பொருள் விளக்கம்
1. காப்புப் பருவம்
(குழந்தையைத் திருமால் முதலிய தெய்வங்கள் காக்கவென வேண்டல்) இது மூன்றாம் மாத நிகழ்ச்சி.)
1. திகிரி - சக்கரம்; வராகம் - பன்றி; கமடம் - ஆமை; களைகணாய் - புகலிடமாய்.
2. வாளை, சேல் - மீனினங்கள்; பூவை - நாகணவாய்; பொதும்பர் - சோலை; இஞ்சி -மதில்; ககனம் - வான்
3. குவடு - மலைச்சிகரம்; மூதாட்டி – அவ்வை; உகைக்கும் - செலுத்தும்.
4. கோமளம் - இளமையழகு.
5. துணர் - பூங்கொத்து; உம்பல் - யானை; பாகசாதனன் -இந்திரன்; கா - சோலை.
6. மலையம் - பொதியமலை; வேள் - மன்மதன்; உததி - கடல்; மின் - இலக்குமி; அம்பரத்தி - சிதாகாசரூபி.
7. ஓதிமம் - அன்னம்; உபயம் - இரண்டு; பிணை - பெண்மான்.
8. மடங்கல் - சிங்கம்; மகிடன் – மகிடாசுரன்.
9. ஆர்த்தி - ஊட்டுவித்து; உலககாரணி - பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமானவள்.
10. இருமருத்துவர்கள் - இரண்டு கோடி அசுவினி தேவர்கள்; எண்வசுக்கள் - எட்டுக்கோடி வசுக்கள்; பதினொருவர் முக்கணுருத்திரர்- பதினொரு கோடி உருத்திரர்கள்; பன்னிருவர் உதய சூரியர்கள் - பன்னிரு கோடி சூரியர். ஆக முப்பத்து மூன்று கோடி தேவர்கள்; கோடி - முடிவு.
------------
2. செங்கீரைப் பருவம்
( ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டி இருகையுமூன்றித் தலை நிமிர்ந்து செங்கீரையசைதல் போல முகம் அசைய ஆடல். இது ஐந்தாம் மாத நிகழ்ச்சி)
11. பை - படம்; பருதி - சூரியன்; மதி - சந்திரன்; அனல் – நெருப்பு.
12. அள்ளூற - வாயூற; வங்கம் - தோணி; வாமம் – இடப்பாகம்; மாந்தை - மாதோட்டம்.
13. மாடகம் - யாழின் முறுக்காணி; தந்தி - நரம்பு.
14. கவான் - தொடை; தீர்த்திகை - தீர்த்தம்; தேசு - ஒளி.
15. கொண்டலையுயர்த்தவன் - இந்திரன்; தனஞ்சயன் - அர்ச்சுனன்; கோல் - அம்பு; கோலம் - பன்றி.
16. கால் - காற்று; அங்கி - நெருப்பு; காயம் - ஆகாயம் முதல் எழுத்து குறைந்து நின்றது. 17. சசிகுலம் - சந்திர வமிசம்; செழியன் - மீன்கொடியோன். பாண்டியன்
18. படிறு - வஞ்சகம்
19. அகவரை - மனமாகியமலை; துவர்- பவளம்.
20. அகடு - வயிறு; சினை - கொம்பர்;
----------------------------------
3. தாலாட்டுப் பருவம்
(நாவசைத்துப் பாட்டுப்பாடிப் பிள்ளையைத் தாலாட்டுதல்; இது ஏழாம்மாத நிகழ்ச்சி)
21. விருது குன்ற - சம்பந்தர் செந்தமிழ் முதற்சீர்; முறை - தேவாரத் திருமுறை.
22. பள்ளை - பருத்த; திமில் - ஏரி.
23. பங்கம் - சேறு; பழனம் - வயல்; முளைச்சாலி - முளை நெல்லு; மலைமன் - மலையரசன்.
24. புனிறு - ஈன்றணிமை- இளமை; மகரம் - சுறா;
25. செயலை - அசோகு; பூகம் - கமுகு; காழிவேந்தர் - சம்பந்தர்.
26. மாதர் இளம்பிறை - அழகிய இளம்பிறை; மங்கை -கங்காதேவி.
27. மம்மர் - மயக்கம்; பரா - பாராட்டு.
28. பறந்தலை - போர்க்களம்;
30. யாமளை - பச்சைநிறமுடையாள்
----------------------------------
4. சப்பாணிப் பருவம்
(கைகளைச் சேர்த்துக் கொட்டுமாறு வேண்டுதல் - ஒன்பதாவது மாத நிகழ்ச்சி )
31. பூகம் – கமுகு.
32. பிரமா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவனாகிய பஞ்சகர்த்தாக்களுக்கும் முறையே சரஸ்வதி, இலக்குமி, உமை, மகேஸ்வரி, மனோன்மணி என்போர் சத்தி
களாவர்.
33. திரிபுடை - திரிபுட தாளம்
34. ஆடகப்பொது - பொன்னம்பலம்; சலசலோசனம் - செந்தாமரை ஒத்தகண்.
35. பாலுததி - பாற்கடல்.
36. ஆயம் - கூட்டம்
39. நங்கையிருவர் - சரஸ்வதி, இலக்குமி; வாலுகம் - வெண்மணல்;
-------------------------------
5. முத்தப் பருவம்
(குழந்தையை முத்தம் தருக என வேண்டல் - இது பதினோராம் மாத நிகழ்ச்சி )
42. பானல் - கருங்குவளை; கட்டு - பாசம்.
43. அகடு - வயிறு
45. சொரூப நிலை - சிறப்பு நிலை; தடத்தம் - பொதுநிலை.
46. வாரணம் - யானை; நந்து - சங்கு; கவுணியர் - ஞானசம்பந்தர்; கழை - கரும்பு.
47. அயில் - வேல்;
48. பிரசம் - தேன்; தெருள் - ஞானம்.
49. கஞ்சம் - தாமரை; மஞ்சு - முகில்.
-----------------------------
6. வருகைப் பருவம்
(குழந்தையைத் தம்மிடத்தில் வருகவென அழைத்தல் - பதின்மூன்றாம் மாத நிகழ்ச்சி. )
51. தென்கால் - தென்றல்; இறால் - தேன்கூடு; வாமம் - இடப்பாகம்.
52. காழி - சீர்காழி; கமலை - திருவாரூர்; நம்பி - சுந்தரர்.
55. பானல் - குவளை.
56. மலயத்துவசன் - மலயத்துவச பாண்டியன்
57. விபுதர் - தேவர்; மதலை - தூண்.
58. தீர்த்திகை - பாலாவித் தீர்த்தம்; அக்கம் - உருத்திரமணி; வாரி - நீர்.
59. சந்து - சந்தனம்; சயிலம் – கிரௌஞ்சமலை.
60. துரியம் - சுத்தநிலை - நான்காவதுநிலை
-----------------------------
7. அம்புலிப் பருவம்
(அம்புலியைக் குழந்தையோடு விளையாட வருகவென அழைத்தல், பதினைந்தாம் மாத நிகழ்ச்சி)
61. ததி - தயிர்
62. சிறுவிதி - தக்கன்; பாந்தள் - பாம்பு.
63. மதனன் - மன்மதன்; செவ்வழி - ஒருபண்.
64. முளரி - தாமரை; பஸ்மீகரம் – சாம்பராதல்.
66 சுருதி - வேதம்.
67. உவா - பூரணை.
68. முந்நீர்ப்புணரி - சமுத்திரம் (இருபெயரொட்டு); தண்டலை - சோலை; பின்னம் - தாழ்வு; கறை - மறு.
69. அம்புயன் - பிரமன்; மோடு - பெருமை; எகினம் - அன்னம்.
70. நவை - குற்றம்; பானத்தம் -(பால் + நத்தம் )- வெண்சங்கு; ஆன் - எருது; நத்தி – விரும்பி;
-------------------------------------
8. அம்மானைப் பருவம்
(பிள்ளையைத் தோழிகள் அம்மானையாட வேண்டுவது -பதினேழாம் மாத நிகழ்ச்சி)
71. கான் - வாசனை; பிதாமகன் - பிரமன்; முத்தமிழ் விரகர் - ஞானசம்பந்தர்; ஆனாத -குறையாத.
72. நீணாகம் - நீண்டபாம்பு; கிழமை - உரிமை ( முன்னர் கேது என்னும் நாகம் பூசித்த தலமாகையால் ஏற்பட்ட உரிமை)
73. விரிபடப்பாயல் - விரிந்த படத்தையுடைய பாம்பணை; விண்ணாடு - தேவருலகம்; விண்டு - திருமால்.
74. கந்தரம் - கழுத்து; தனு - உடம்பு; கரணம் – உட்கருவி - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை.
75. ஐம்புலவேடர் - ஐம்பொறிவழிப் புலன்களாகிய வேடர்; உருவகம்.
76. பரிபுரம் - சிலம்பு; குஞ்சரி – தேவயானையம்மை;
77. பெதும்பையர் - இளம் பெண்கள்; நாப்பண் - நடு; கோ - பசு.
-------------------------------
9. நீராடற் பருவம்
(பிள்ளையைத் தோழியர் ஆற்று நீராட வேண்டல் - பத்தொன்பதாம் மாத நிகழ்ச்சி)
81. மகரக்குழைகள் - சுறா மீன் வடிவான தோடுகள்; அலங்கல் - மாலை.
82. ஏல - ஒப்ப; உழுமள்ளர் - உழவர் ( வினைத்தொகை) கரவு - வஞ்சகம்.
83. செஞ்சடாடவி -சிவந்த சடையாகிய காடு; செம்மாந்து - இறுமாந்து; மாடு – பக்கம்;
84. மலயம் - பொதியமலை; உலவ - நீங்க.
85. பிரிந்தென்ன - விட்டு விலகினாற் போல; மதுகரம் - வண்டு; நந்து - சங்கு.
86. வீட்டி - ஒழித்து.
88. நாலுமறை நாலுமுந்தி - நான்கு வேதங்களை ஓதும்பிரமன் தோன்றும் விட்டுணுவின் உந்திக்கமலம். வெள்ளைவிடை - விட்டுணுவாகிய இடபம். நரைவெள்ளேறு - தேவாரம்.
89. அலைமென்கரத்தில் - பாலாவியின் அலையாகிய மென்மையான கையில்; அம்புயத் தினலர்கண்ணி நீலமலரின் - தாமரை மலர்போலலர்ந்த கண்போன்ற நீலமலரையும்;
அணிபுன் சிரிப்பிலமை முத்தினம் - அழகிய சிறுநகை போலமைந்த முத்துக்களையும்: பச்சை வண்ணவுரு - பச்சை நிறமேனிப்படிவம்; புள்ளின் ஒலிவாக்கில் - பறவைகளின் ஒலியாகிய வாக்கையும்; அன்னை நினையொத்து - தாயே உன்னை ஒப்பாக; சண்பைமன்னன் - சம்பந்தன்.
90. கன்னல் - கரும்பு; ஐயர் எழுதச் சிறந்த தமிழ் - சிற்றம்பலவர் திருக்கரத்தால் எழுதுஞ் சிறப்பமைந்த திருவாசகம்.
-----------------------------------
10. ஊசற் பருவம்
(தோழியர் பிள்ளையை ஊஞ்சலில் ஏற்றி வைத்து ஆடும்படி வேண்டல் - இருபத்தோராவது மாதத்தில் நிகழ்வது.)
91. நிகமம் - வேதம்; நிகமங்கால் - வேதங்கள் கால்களாக; ஆகமம் விட்டமதாய் -ஆகமங்கள் விட்டமாக.
92. அலங்கல் முத்து - மாலையிலிலங்கும் முத்து; வம்பர் - வாசனை பொருந்திய; உம்பர் -தேவர்.
93. கவி - கணிகண்ணன்; மாலோன் - விட்டுணு.
95. ஏமம் - பொன்; தமனியம் - பொன்; பூந்தராய் வேந்தர் - சம்பந்தர்.
97. மகவான் - இந்திரன்; ஐந்தரு - கற்பகம் முதலிய ஐவகை மரங்கள்; கொண்டல் - முகில்.
98. நாண்மலர் - புதியமலர்; நளினம் - தாமரை.
---------------------------------------
அநுபந்தம்: : பேராசிரியர் வாழ்வும் வளமும்
சிதம்பரத்திலே திருக்குளம் தொட்ட நல்லூர் ஞானப் பிரகாசசுவாமிகள் மரபிலே அவதரித்தவர் நாவலர்பெருமான். சுன்னாகம் குமாரசாமிப் புலவர் நாவலரையாவின் மாணவர். அவரிடம் கல்விபயின்று சீலம் நிரம்பியவர்களுள் இருவர் இப்பொழுதும் கற்றோர் மனத்துட் களிக்கும் குருமணிகளாகப் புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒருவர் திருநெல்வேலி ஆசிரிய கலாசாலைப் பேராசிரியராக இருந்தவரும், சான்றோருமாகிய பண்டிதமணி அவர்கள். மற்றவர் ஈழத்திலெடுத்த சிலப்பதிகார விழாவில் “பேராசிரியர்'' எனப்பட்டமளித்து பாராட்டப்பட்ட பெருந்தகையாவர்.
இவர் தமது இருபத்துநான்காம் வயதில் கோலாலம்பூர், விவேகானந்தா வித்தியாலய நிருவாகத்தின் அழைப்பின் பேரில் மலாயா சென்று நாலரை ஆண்டுகள் தமிழ்த் தொண்டு புரிந்தவர். மாந்தருள் மாணிக்கமான காந்தியாரின் கொள்கைகளைப் பின்பற்றி ஒழுகுபவர். ஆங்கில அறிவும் சமய சமரச நோக்குமுள்ளவர். மாணவர்கள் பண்புடன் வாழ நீண்ட நாட்கள் ஆசிரியத்தொழில் புரிந்த எங்களாசிரியர் தமது முப்பத்திரண்டாம் வயதில் அருமைத்தாயாரின் கிட்டிய சொந்தமான முத்துக்குமாரு அவர்களின் மகள் தங்கம்மாவை மணந்தவர்; சிவசுப்பிரமணியம், சிவகாமசுந்தரி, பாலசுப்பிரமணியம் எனப் பெயரிய மக்களைப் பெற்றவர்; சமநிலையுள்ளம் படைத்த தெளிவுக்காட்சியர்.
இவருக்கு வைத்தியர் கனகசபை அவர்கள் (பேரனார்) ஆரம்பகால ஆசிரியராக வாய்த்திருந்தார். இளங்காலக் கல்வியைத் தாயகத்தில் கற்றுத் தேறியவர். தமது பதினேழாம் வயதில் பயிற்றப்படாத ஆசிரியத் தகமைப் பரீட்சையில் சித்தியெய்தினார். அப்பொழுது சைவாசிரிய கலாசாலைகள் இருக்கவில்லை. தெல்லிப்பழையிலிருந்த மிசன் ஆசிரிய கலாசாலைப் புகுமுகத் தேர்வில் சித்தியெய்தியும் கிறிஸ்தவராகச் சேர விரும்பாமையால் அச்சந்தர்ப்பத்தை இழந்தார். இவரது தொடர்ந்த ஊக்கத்தினாலேயே கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை ஆரம்பமானது.
சைவபரிபாலன சபைப் பிரசாரகராய் இருந்தவரும் நகுலாசல புராண ஆசிரியரும், புலவருமாகிய மாதகல் ஏரம்பையரிடம் கீரிமலையிலிருந்து கல்வி பயின்றவர். அக்காலத் தில் இவருக்கு கல்லடி வேலனாரின் நட்பும் வாய்த்திருந்தது. வித்துவசிரோன்மணி கணேசையா அவர்களுடன் நயினையம்பதியில் ஆசிரியராகவும் இருந்தவர். உடன்பிறந்த சோதரர் சித்தாந்தச் செம்மல் கணபதிப்பிள்ளை வைத்தியர் அவர்களும் தேசத்தொண்டரும் உத்தமருமாகிய பசுபதிப்பிள்ளை (பரமசிவம்) அவர்களும் இவரது வழிகாட்டிகளாவர்.
சைவ வேளாள பரம்பரையிலே வந்த சின்னையா அவர்களே இவரின் தந்தையார். தாயார் செம்மனச்செல்வி வள்ளியம்மை அவர்கள். சதாசிவம்பிள்ளை என்பது தாய் தந்தையர் இட்ட பெயர். ஊரார் இளையப்பா என்னுஞ் செல்லப் பெயரால் அழைப்பர். இவருடைய அருமைத் தம்பி அமரர் கதிர்காமபிள்ளையவர்களுஞ் சிறந்த பண்பாளர்.
நடேசர் கிள்ளை விடுதூது, கணேசவித்தியாலய வரன் முறை, கேதீச்சர நாதர் கிள்ளை விடு தூது, மீனாட்சி சுந்தரேசர் திருவூஞ்சல், என்னும் நூல்களை இயற்றிப் பாராட்டுப் பெற்ற இவர் இப்பொழுது திருக்கேதீச்சரத்துக் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ் என்னும் அரிய நூலையும் பாடியுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பி கணேச வித்தியாலயத்திற்கு ஆசிரியரானார். வந்த தொடக்கத்திலேயே பாரதியாரின் தேசியப் பாடல்களை மாணவர் ஆசிரியர் மத்தியில் பாடிக் காட்டி விளக்கி வந்தவர். சிங்க நடை, எடுப்பான நெஞ்சம், ஒரே பார்வையில் முந்நூறு மாணவர்களையும் பார்க்கும் தெளிந்த கண்கள், தோளோடு வட்டித்து உறவாடும் கேசங்கள் அத்தனையுஞ் சேர்ந்து கதருடை தரித்து ஆசானுபாகுவெனுந் தோற்றப் பொலிவுடன் காட்சி தந்து கொண்டிருப்பார்.
“கனைகடல் தண்சேர்ப்ப கற்றறிந்தார்
கேண்மை நுனியில் கரும்பு தின்றற்றே"
என்ற நாலடியாரின் அருமந்த செய்யுளுக்கு அப்படியே அமைந்த உவமையாளர். இப்பிறப்பிலே நல்லாசிரியராகப் பிறந்து விட்ட இவரிடம் கற்ற மாணவர்கள் பணத்திலும் பண்பு இனிதென்ற கொள்கையினர். வருங்கால இளம் சமுதாயம் நம் பேராசிரியரது இலட்சியங்களைப் பின்பற்றுவதாக.
''ஜனகாபுரி'', ஜெயந்திநகர்
கிளிநொச்சி மு. ஆறுமுகன்
1-3-76
----------------------------------
ஆராய்ச்சி
இலங்கையிலுள்ள திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் கௌரியம்பிகையைக் குழந்தையாகக் கொண்டு அவர்மீது பாடப்பெற்ற துதிநூல் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ். பருவந்தோறுமுள்ள பாட்டுக்கள் வேறுபட்ட சீர்களையும், வெவ்வேறு சந்தங்களையுங் கொண்டன; ஆற்றொழுக்குப் போன்ற ஓசையுடையன. இந்நூலில் 103 பாட்டுக்கள் உண்டு. அவற்றில் ஒன்று வெண்பா; ஏனையவை விருத்தப்பாவினத்தைச் சேர்ந்தன.
''பாழ்த்த பிறப்பறுத்திடுவான் யானுமுன்னைப்பரவுவனே” என்ற திருவாசக மணி ஓசை, பிள்ளைத்தமிழ்க் கோவிலில் பிரார்த்தனையின் பொழுது கேட்கின்றது. மீளப் பிறவா நிலையாகிய சாக்கிராதீத நிலையை ''என்னையினி அன்னையர் அகடுற விட்டாட்டாது அபயம் அளித்து அடிதர'' (செங்.10) என்பது போன்ற பகுதிகள் விளக்கமாகக் காட்டுகின்றன. இவற்றிலிருந்து இப்பிள்ளைப்பாட்டு வீடுபேற்றைக் கருதியே பாடப்பெற்றதென்பது வெளிப்படையாகின்றது. அயரா அன்பின் அரன் கழல் போற்றியவராதலின், மலரிலும் வேதசிரசிலும் அன்பாளர் கண்ணிலுங் கருத்திலும் நடமாடும் அன்னையே, ''என் நெஞ்சிலும் மிதித்தாடவல்லையோ'' (அம்.2) என்று ஏங்குகின்றார். “மனமலையில் மிதித்திடின் மலரடி வருந்திடுமோ” (செங். 9) எனத் துடிக்கின்றார். ''அரஅர ஒலியொடு கௌரி இளங்கொடி ஆடுக பொன்னூசல்'' எனப் பிள்ளைத்தமிழ் இறுதிப் பருவம் சைவாசார மரபு போற்றி மங்களகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது.
கற்பனையழகுக்கே அழகு செய்வனவாக அணிகள் விளங்குகின்றன. அன்பர்களுக்கு இன்பந்தரும் இறைவிகௌரி என்னுமோர் கரும்பு (காப்.10) என உருவகிக்கப்பட்டுள்ளார். எம்பிராட்டி உருவம் முழுவதும் இனிக்கும் கரும்பாகவே கவிஞரால் உருவகம் செய்யப்பட்டுள்ளது. முக்கட்செங்கரும்பான கேதீசருக்கே தித்திக்குங் கட்டிக்கரும்பன்றோ கௌரிநாயகி. சங்ககாலப் புலவர்களைப் போன்று இப்புலவரும் இயற்கையிலுள்ள எழில் நலன்களை இயற்கை நவிற்சியணிபெற அமைத்துக் காட்டியுள்ளார்.
இந்நூலிற் சைவசித்தாந்த உண்மை இலகுவாக விளக்கப்பட்டிருக்கின்றது. 'சொற்பதமெலாங் கடந்து அருவாகி நின்ற பொருள் சோதிபெறும் உருவமாகி' (சப். 3) எனப்பதியின் சொரூப தடத்தங்கள் காட்டப்படுகின்றன. வஞ்சர் ஐம்புல வேடர் மாயை வலையிற்சிக்கி, வாழு நெறியறியாது, சஞ்சலங் கொண்டுலவும் உயிர், (அம். 10) என்ற பகுதியில் பசுவின் இலக்கணம் கூறப்படுகின்றது. காருற்ற ஆணவங் கன்ம மாயைகள் (அம். 5) எனப் பாசங்கள் விரிக்கப்படுகின்றன. 'பரமசிவன் அருளுருவில் வருகௌரி' (நீரா. 3) நாயகியே * உயிர்களில் தயை கொண்டு சற்குருவின் உருவு கொண்டு ' (அம். 10) வருகின்றாள். 'மன்னும் ஐம்பூதத்தின் உடலல்லை திருவைந்தெழுத்தோதி வாழ்கென்று’ (சப். 10) தம் முதல் குருவாய் வந்து உணர்த்துகின்றது. குருவின் உபதேசம் கேட்டு, சிந்தித்து, தெளிந்து பாசஞான பசுஞானங்கள் நீங்கப்பெற்ற உயிர், இருள்கடிந்தொளிரும் உதயசூரியன் என்ன மாசில் மெய்ஞ்ஞானம் (செங். 7) விளங்கித் தோன்றப் பெறும்; முப்பாழும் அற்று பசுகரணமற்று சிவகரணமுற்றுச் சிவஞானத்தால் 'நிர்க்குணானந்த பரவெளியிலே நானற்ற நின்மலசுகம்' (அம். 6) பெறும்; துரியங்கடந்த சிவபோகந் துய்த்து (வரு. 10) பேரின்பப் பெருவாழ்வடையும்.
மகாமந்திரமான ஓங்காரத்தில் இருந்தே இந்நூல் உதயமாகியது. இந்நூலிலுள்ள எழுத்துக்கள் திருவைந்தெழுத்தைக் குறிப்பன. சொற்கள் பக்திச்சுவை சொட்டுவன. இந்நூற்பொருள் செம்பொருளைப் பற்றியது. பொருளுணர்ந்து இந்நூலைக் கற்பவர் தமிழின்பம் நுகர்வர். கௌரிநாயகி என்னும் தெய்வக் குழந்தையை ஞானக்கண்ணால் கண்டு ஐம்புலப் பேரின்ப அநுபவமுறுவர். திருக்கேதீஸ்வரத்தில் பாம்பும் மயிலும் பகை மறந்து இன்புற்று வாழ்வது போல் வாழ்ந்து பிறவிப் பேறடைவர். கௌரிநாயகி பிள்ளைத்தமிழ் எல்லோர்க்கும் இன்பந் தந்து ஆசிரியரின் நல்லியல்புகளை அகில உலகம் முழுவதும் பரப்பி நீடுநின்று நிலவ எல்லாம் வல்ல கௌரி பங்க கேதீச்சரநாதர் திருவருள் பாலிப்பாராக.
“தமிழகம்'' பொன். அ. கனகசபை
30-2-76 புங்குடுதீவு
--------------------------------------------
நால்...........
“ஈழத்துப் பத்தி இலக்கியத்துக்கு
இப்பிரபந்தம் பெருமைப் படத்தக்க பங்களிப்பு”
- அறிஞர், க. கைலாசபதி
***
“பொருளுணர்ந்து இந்நூலைக் கற்பவர்
தமிழின்பம் நுகருவர்''
வித்துவான், பொன். அ. கனகசபை
***
"பத்தி நலங்கனிந்த இந்நூல், அபிராமி அந்தாதி
போல் ஆராதனை நூலாக அமையும்"
வித்துவான், சி. ஆறுமுகம்
***
நூலாசிரியர்..
“பேராசிரியர் சி. இ. சதாசிவம்பிள்ளை அவர்கள், கௌரி அம்மைபால் ஊற்றெடுத்த அன்பைக் குழைத்துப் பிள்ளைத்தமிழ் செய்து, அதனை நமக்கெல்லாம் வாரி வழங்கி வள்ளன்மை செய்திருக்கிறார்கள்''
- பண்டிதமணி, சி. கணபதிப்பிள்ளை
***
“சிங்க நடை, எடுப்பான நெஞ்சம். தெளிந்தகண்கள், தோளோடு வட்டித்து உறவாடும் கேசங்கள் பொருந்தி ஆசானுபாகுவானுந் தோற்றப்பொலிவுடன் காட்சிதந்து கொண்டிருப்பவர் எங்கள் பேராசிரியர்.”
-- பண்டிதர். மு. ஆறுமுகன்
------------------------------
This file was last updated on 20 March 2021
Feel free to send the corrections to the webmaster.