குறட் செல்வம்
தவத்திரு குன்றக்குடி அடிகள்
kuRat celvam
by kunRakkuTi aTikaL
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
குறட் செல்வம்
தவத்திரு குன்றக்குடி அடிகள்
Source:
குறட் செல்வம்
தவத்திரு குன்றக்குடி அடிகாரர்
கலைவாணி புத்தகாலயம்
2, சிவஞானம் ரோடு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை -600017.
கலைவாணி வெளியீடு K 483
திருத்திய முதற் பதிப்பு : பிப்ரவரி, 1996 பதிப்புரிமை பெற்றது.
விலை : ரூ. 30-00
அச்சிட்டோர் : அலெக்ஸ் பிரிண்டர்ஸ், சென்னை -94.
---------
திருக்குறள் நெறியில் செயலாற்றும் யாவர்க்கும்
சீனிதிருநாவுக் கரசின் காணிக்கை.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு. - பாரதியார்
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள். - ஒளவையார்
ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் - போய் ஒருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம். - நத்தத்தனார்
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம், இனநலம்
எல்லாப் புகழும் தரும். - திருவள்ளுவர்
செந்தமிழ்க் குறளோசை திசையெலாம் மேவ
உலக மறை யாகும். - சீனி. திருநாவுக்கரசு
வள்ளுவத் தமிழ் பிறந்து வான்
சிறக்கும் வள நாடு. - சு. செந்தாமரை சிவன்
------------
மதிப்புரை
வள்ளுவன் குறளை வையகம் முழுதும் அறியும். தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்துள்ள விளக்கமும் அதிகம். வாழ்க்கையின் அடி முதல் நுனிவரை அளந்து காட்டக் கூடிய ஒரே நூல் திருக்குறள். மனித வாழ்க்கை மூன்று துறைகளில் போகிறது என்பதைத்தான். அறம் பொருள் இன்பம் என்ற பகுப்பு நமக்குக் காட்டுகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு திருக்குறள் எதிரொலிக்கிறது.
தோண்டத் தோண்டச் சுரக்கும் கற்பப்போல், படிக்கப் படிக்கப் புதிய பொருள்களைக் காட்டுகிறது திருக்குறள். வேறு எந்த மொழியிலும், இவ்வளவு தெளிவான ஒரு நீதி நூல் இருக்குமா என்பது சந்தேகமே.
பேராசிரியர்களின் வழியில் வள்ளுவரின் கண்ணோட்டத்தை ஆராய்கிறார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். நடையின் எளிமை, படிப்பதைச் சுலபமாக்குகிறது. அடிகளாரின் திறனாய்வு நடை, பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் அமைந்திருக்கிறது.
ஒரு குறளுக்கு ஒரு தலைப்பு என விளக்கம் தருவது புதிய முறை. பெரும்பாலும், ஓர் அதிகாரத்துக்கு ஒரு கலைப்பு என்ற முறையில் தான், மற்றவர்கள் எழுதி உள்ளனர். எல்லா குறள்களுமே பொருள் உள்ளவைதான் என்றாலும். சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கையில் ஒட்டிவரும் குறள்கள் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டியவை.
ஆயிரத்து முந்நூற்று முப்பது அரும் குறள்களில் நாம் தேடி, சாறு திரட்டிக் கொண்டிருக்கும் வேலையை, சுலபமாக்க - தாமே திரட்டித் தந்திருக்கிறார் அடிகளார்.
வாழ நினைப்பவர்களுக்கு வழி காட்டும் நூல் இது. பொருட் செறிவுள்ள நூல்களை வெளியிடும் , கலைவாணி புத்தகாலயம்' உரிமையாளர் நண்பர் சீனி. திருநாவுக்கரசு அடக்கம் மிக்கவர். ஆழ்ந்த கருத்துகளில் பற்றுள்ளவர். ஒவ்வொரு வீட்டிலும் புத்தக நிலையத்திலும் இருக்க வேண்டிய சிறந்த நூல் இது.
சென்னை -17 அன்பன்,
11--1- 74 கண்ணதாசன்.
-------------------
அணிந்துரை
குருமகா சந்நிதானம் சீலத்திரு
ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
குறட் செல்வம்' எனப் பெயருடைய தமிழுரைச் செய்யுள், திருவள்ளுவர் அருளிய பாச் செய்யுளை ஆராய்ந் தெழுதியதாகும். நாற்பத்தேழு தலைப்பில் குடிமை, ஊழ், மொழியுறவு, மக்கள், அறம், பொருள், இன்பம். வீடு முதலிய பல பொருள் குறித்த நுண்பொருட் பெருந் திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பாய் விளங்கிக் கற்போர் அறியாமையைக் களைந்து, மெய்ப் பேரறிவை வளர்ப் பதாக உள்ளது இச் செந்தமிழ்ப் பனுவல்.
இதன் ஆசிரியர் குன்றக்குடி அடிகளார் என வழங்க விளங்கும் திருவண்ணாமலை ஆதீன குருமகா சந்நி தானம் சீலத்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், மதி நுட்பம் நூலோடு உடையார்; நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோர்; சொற்பொழிவில் வல்ல பொருட்பொழிவாளர்; பற்பல பனுவல் எழுதிய ஆசிரியர். அவர்கள் சீலத்தை அறிந்து கொள்ள விழையும் அன்பர் அனைவரும் இதில் 34 ஆவது தலைப்பின் (பக்கம் 117) முடிவுரையை நோக்குதல் இன்றியமையாதது.
நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாயது யாது! அதைத் தங்களது கடனாகக் கொண்டு உலகிற்கு ஆற்றும் நெறிவழுவாத அவர்களே இன்ன சீரிய நூல் ஆக்கத்திற்கு உரியவர்கள். அவர்கள் நீடினிது வாழக. இன்ப அன்பாகிய சிவானுபூதியில் திளைக்க.
இவ்வாசிரியர் நூல்களை வழக்கமாக மிக்க சிறப்புடன் அழகாக வெளியிட்டு வரும் கலைவாணி புத்தகாலயத்து முதல்வர், நிறைநாட் செல்வர், சீனி. திருநாவுக்கரசு அவர்கள் இச் செல்வத்தையும் மற்ற எட்டுச் செல்வத்தை யும் எய்தி நன்கு வாழ்க!
சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக
மெய்கண்ட தேவர் ஆதீனம் பரமாசாரிய சுவாமிகள்.
காஞ்சிபுரம்
----------------
முன்னுரை
திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள், மறை யெனப் போற்றத்தக்கது; நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரிய ஒப்பற்ற சமயத் தெளிவினைத் தரும் தெள்ளு தமிழ் மறை; உலகப் பொதுமறை.
திருக்குறள், கடவுள் நம்பிக்கையை ஒத்துக் கொள்கிறது. அந்தக் கடவுளை நிறை குணங்களின் உருவ மாகவே படைத்துக் காட்டுகிறது; ஆயினும், உயிர்க்குப் பற்றுக் கோடாகத் திகழ வேண்டும் என்ற அடிப்படையில் திருவடியைக் காட்டுகிறது. இறைவன்றன் திருவடியைப் பேசுதல் - பற்றுதல் அருள் முதிர்ந்த நிலையாகும்.
திருக்குறளுக்கு உயிர் உண்டு என்ற கொள்கை உடன்பாடு. இந்த உயிர் ஒன்றல்ல, பலப்பல என்பதைப் பன்மை விகுதியிட்டுக் குறிப்பிட்டதனாலேயே அறிய முடிகிறது. அதோடு உயிர் இயல்பிலேயே அறியாமை உடையது என்பதும், உயிர் முயன்று அறிவினைப் பெற்று உயர முடியும் என்பதும், திருக்குறள் கொள்கை.
வானோர்க்கும் உயர்ந்த உலகம் அடையும் வழி காட்டும் அருள் நூல். திருக்குறள் பயிற்சி, தெளிந்த அறிவைத்தரும். பிறப்பின் அருமை காட்டி, பிறப்பின் பயன் கூட்டும் பேரற நூல். திருக்குறள் ஒழுக்கம் உயர்வு நலஞ்சான்ற ஒழுக்கமாகும். வாழ்க்கையில் ஏற்று ஒழுகுதல், இன்ப அன்பினைத் தரும்; இறையருளில் சேர்க்கும். அனைவரும் திருக்குறள் பயில்க ! குறள் நெறியை வாழ்க்கையில் பயில்க! வாழ்த்து!
நமது நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் கலைவாணி புத்தகாலயத்தாருக்கு நன்றி! கலைவாணர் புத்தகாலய உரிமையாளர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நல்ல பதிப்பாசிரியர், கவிஞர், எழுத்தாளர். ஆக்கம் கருதாது பதிப்புத்தொழிலில் மக்கள் நலம் கருதியே ஈடுபட்டிருப்பவர் 'கலைவாணி' சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இன்ப அன்பு.
--- குன்றக்குடி அடிகளார்
--------------------
பதிப்புரை
வள்ளுவரின் திருக்குறள், வாழ்க்கையின் ஒளிவிளக்கு.
உலக அரங்கில் தமிழ் நாட்டிற்கு மிகச் சிறந்த மதிப்பைத் தருவது பொதுமறையாகத் திகழும் தனிச் சிறப்புடைய திருக்குறளே.
திருக்குறளுக்குப் பல்வேறு விளக்கங்களும் விரிவுரைகளும் வந்திருந்த போதினும், அனைவரும் எளிதிற் கற்று, தேர்ந்து ஒழுகி வாழ்க்கையில் மேன்மையுற மிகச் சிறந்த மேற்கோள்களுடனும், விரும்பி ஏற்கும் விளக்கங்களுடனும் வாழ்க்கைக்கியைந்த கருத்துக் கருவூலமாக 'கலைவாணி' புத்தகாலயத்தின் மிகச் சிறந்த திறனாய்வு நூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உலக மக்களின் சமுதாயச் சிறப்பினைக் கண்டு மகிழவும், வள்ளுவர் வழி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனவும், என் கடன் பணி செய்து கிடப்பதே எனவும் நாளும் சலியாது சிறப்புற பணியாற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு மக்கட் சமுதாயமே மிகவும் கடமைப்பட்டிருக்கின்றது.
வாழ்க்கைக்கு வளம் தரும் அறநெறிக் கருத்துக்களை மக்களுக்குப் பயன் தரும் முறையில் எளிய இனிய நடையில் ஏற்றம் தரும் வகையில் தந்தருளியுள்ள தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு இதய நன்றி.
அரியதோர் அணிந்துரை அளித்து ஆசிவழங்கி அருளும் காஞ்சி மெய்கண்ட தேவர் ஆதீன குரு மகா சந்நிதானம் சீலத்திரு. ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கும் மதிப்புரை தந்து மகிழும் கவியரசுக் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கும் இதய நன்றி.
மாந்தருலகம் இச்சிறந்த திறனாய்வு நூலை விரும்பி ஏற்றுப் பயன் பெற்று மகிழ எல்லாம் வல்ல கலைவாணி யின் திருவருளை வேண்டுகின்றேன்.
கலைவாணி புத்தகாலயம் - சீனி, திருநாவுக்கரசு
தி. நகர், சென்னை - 17. பதிப்பாசிரியர்
---------------
பொருளடக்கம்
1. மனிதன் தெய்வமாகலாம்
2. மனத் தூய்மையே அறம்
3. வானும் ஒழுக்கமும்
4. உணர்வோர் கண்ணே உலகு
5. இன்பமே எந்நாளும்
6. அறமும் சிவிகையும்
7. மனையறத்தார் கடமை
8. பெய்யும் மழை
9. அறிவறிந்த மக்கட்பேறு
10. வெய்யிலும் அறமும்
11. மனிதனும் மாமும்
12. வித்துமிடல் வேண்டுமோ?
13. இம்யையும் மறுமையும் இன்பந்தரும்
14. செய்ந்நன்றி
15. எச்சத்தாற் காணப்படும்
16. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்
17. குடிமை
18. உண்மைக் குடிமக்கள் யார்?
19. நிலத்தியல்பு
20. ஏன் சுற்றம் கெடும்?
21. அழுக்காற்றை அகற்ற வழி
22. புறஞ்சொல்லும் புன்மை
23. தீது உண்டோ ?
24. பயனில சொல்லாமை
25. தீயும் தீவினையும்
26. உயிர் வாழ்வான் யார்?
27. இரப்பாரும் ஈவாரும்
28. ஈதலும் இரத்தலும்
29. யாக்கை பொறுத்த நிலம்
30. செல்வத்துட் செல்வம்
31. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை
32. பொருளைப் போற்று
33. எது தவறு?
34. காரணம் என்ன?
35. மழித்தலும் நீட்டலும்
36. அருளும் பொருளும்
37. துறவும் துய்த்த லும்
38. அறிவிற்குப் பயன்
39. பகுத்துண்ணாமையும் கொலையே
40. இறப்பும் பிறப்பும்
41. சார்பு கெடின் நோயில்லை!
42. இருவேறு உலகத்து இயற்கை
43. கசடறக் கற்க
44. மொழியும் உறவும்
45. ஆள் முக்கியமல்ல
46. தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்க
47. ஊழா? முயற்சியா?
----------------
1. மனிதன் தெய்வமாகலாம்
வாழ்க்கை மிகவும் சுவையுடைய ஒன்று. வாழ்வது என்பதும் ஒரு கலையே. மனிதன் முறையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த முறையான வாழ்க்கையை - வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதே சமயநெறியின் விழுமிய பயன்.
வாழ்க்கைக் கலையில் கைவந்தவர் திருவள்ளுவர். அவர், இந்த வையகத்து மக்களெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்து வளமுறவே திருக்குறளைச் செய்தார்.
உலகியலில், மக்களிற் பலர் தெய்வத்தைத் தேடிச் செல்வதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில், தெய்வத் தன்மைகளைப் போற்றிப் புகழ்ந்து தங்கள் வாழ்க்கையில் அவற்றை மேற்கொள்ளாத நிலைமையையும் பார்க்கிறோம்.
இயற்கையில் மானிட யாக்கைகளுக்குள் யாதொரு வேற்றுமையுமில்லை. உயிர்களுக்குள்ளும் பொதுவில் வேற்றுமையில்லை ; தகுதிப்பாட்டிலேயே வேற்றுமை உண்டு.
வீணை பொதுவாக இருந்தாலும் மிழற்றுபவனின் திறமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப இசைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்க்கிறோம். மிழற்றத் தெரிந்தவர் வீணையை மிழற்றினால் இன்னிசை பரவும். மிழற்றத் தெரியாதவர் மிழற்றினால் அபசுரமே பிறக்கும்.
வீணை போன்றதே மானிட யாக்கை. அந்த யாக்கையை அறிவின் விளக்கமாகவும் ஆக்கலாம்.
அன்பின் விளைநிலமாகவும் ஆக்கலாம். அருள் ஒழுக்கத்தின் செயற்பாடாகவும் ஆக்கலாம். அங்ஙனமின்றிக் குப்பைத் தொட்டியை விடக் கேடானதாகவும் ஆக்கலாம். அது. இயக்குவோரின் ஆற்றலையும் தகுதிப்பாட்டையும் பொறுத்தது. இதை உணர்ந்தே,
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
...................
வல்லமை தாராயோ? - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
என்று கேட்கிறார் பாரதியார்.
காடுகளைக் கழனிகளாக்கிப் பயன் காண்பது மனித ஆற்றல். கல்லை பேசும் பொற்சிற்பமாக்கிக் கவின் செய்வது மனித ஆற்றல். இவைபோன்றே, குறைமலிந்த மனித வாழ்க்கையை நிறைவுடையதாக்கித் தெய்வத்தின் நலம் பொதுளச் செய்வதும் மனித ஆற்றலேயாகும். ஏன்? மனிதனே தெய்வமாகலாம், வாழ்வாங்கு வாழ்ந்தால்! ஆம்! தெய்வமாக மதிக்கப் பெறுவான்.
இத்தகு பேராற்றல் அவனுக்குள்ளேயே அடங்கிக் கிடக்கிறது. ’தெய்வம் நீ என்றுணர்' என்று நமக்கு உணர்வூட்டுகிறார் பாரதியார். ’கை வருந்தி உழைப்பவர் தெய்வம்' என்கிறார்.
இந்தப் பேருண்மைகளை உள்ளடக்கியே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
என்றார் திருவள்ளுவர்.
-----------
2. மனத் தூய்மையே அறம்
கருதியதை முடிப்பதற்குரிய வழிவகைகளைக் காட்டுவதில் திருவள்ளுவர் வல்லவர். ஒன்றினைச் சாதித்துக் கொள்வதன் மூலம் பலவற்றை அடைந்து அனுபவிக்கும் வண்ணம் வழி காட்டுவதில் வல்லவர் அவர்.
அறம் செய்தல் பற்றிப் பல்வேறு வகையான கருத்துக்கள் இவ்வுலகில் உண்டு. 'அறத்தைச் செய்க என்று ஆணையிடுவது பிறமொழிகளின் மரபு. ”அறம் செய்ய விரும்பு” என்பது தமிழ் மொழியின் மரபு.
மனம், மொழி, மெய் - இவற்றின் துணைகொண்டு அறம் இயற்ற வேண்டும்; செய்ய வேண்டும். இவற்றுள் மொழியால் - மெய்யால் செய்யக்கூடிய அறங்களில் பொய்ம்மையும் வஞ்சனையும் இருக்கக்கூடும். மனத்தால் எண்ணிச் செய்யக்கூடிய அறமே சிறந்தது. மொழியும் மெய்யும் இரட்டை வேடம் போட முடியும்.
ஆனால் மனத்தால் இரட்டை வேடம் போட முடியாது. அதன் இயற்கை இயல்பு , ஒரே தன்மையாக இருக்கிறது. செயல்கள் அனைத்திற்கும் சிந்தனையே அடிப்படை. சிந்தனையின் நிலைக்களன், மனம்.
நாம் செய்யும் செயல்கள் பலவற்றில் தூய்மை காண வேண்டும் என்று தனித்தனியாக முயல்வதைவிட, செயல்கள் அனைத்திற்கும் பொறுப்பாக உள்ள சிந்தனையைத் திருத்தி மனத்தை மாசின்றி வைத்துக் கொள்வது நல்லது; சிறந்தது. இதன் மூலம் நாம் செய்யும் அறங்களும், மிகச் சிறந்து விளங்கும்.
மேலும், வாழ்வியல் முறை எண்ணத்தின் வழி இயங்கி பயன் கூட்டுவிக்குமே அன்றி, செயல்கள் வழி மட்டுமல்ல. மனத்தூய்மை இன்றிச் செய்யப்பெறும் அறங்கள் செய்பவர்க்கும் பயன் தராது; செய்யப் பெறுவோர்க்கும் பயன் தராது.
மனத்தூய்மை வாழ்க்கை முழுவதையுமே சாதித்துத் தரக்கூடியது. அதை முயன்று பெறுவதே அறம். மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மையுடையன என்றே திருவள்ளுவர் கூறுகிறார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
-----------
3. வானும் ஒழுக்கமும்
திருவள்ளுவர் மனித குலத்தின் ஒழுக்க நெறியை உயர்த்த, நூல் செய்தவர். அவர் செய்த திருக்குறள் ஒரு முழு ஒழுக்க நூல். பல்வேறு வகையான துறைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் உரிய இயல்பான ஒழுக்கத்தை வலியுறுத்தி உள்ளார்.
ஆனாலும் திருவள்ளுவர் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் பொழுது நாட்டின் நடைமுறையை யதார்த்த நிலையை மறந்துவிட்டு உபதேசிக்கவில்லை. சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்தே சொல்லுகிறார். பொதுவாக ஒழுக்கத்தைப்பற்றி உபதேசிப்பது எளிமையானதொன்று. ஆனாலும், அதைத் தன் வாழ்வில் கடைப்பிடிப்பதும், மற்றவர் கடைப்பிடித்து ஒழுகுதற்குரிய முறையில் சூழ்நிலையை உருவாக்குவதும் அவசியமாகும்.
பெரும்பான்மையான மனிதர்கள் இயல்பில் நல்லவர்கள். ஆனாலும் தவறுகள் செய்வதற்குக் காரணம் அவர்களின் சூழ்நிலையேயாகும். உதாரணமாகக் களவு, பொய் வெஃகுதல் , அழுக்காறு ஆகிய ஒழுக்கக் கேடுகள் மனித குலத்தில் தோன்றிய செயற்கைத் தவறுகளே. ஏன்? வாழ்க்கைக்குரிய இன்றியமையாத் தேவைகளை மனிதன் பெற்றுவிட்டால் , இக் குறைகள் குறையும் - இல்லாமலே கூடப் போகலாம். மேலும், செல்வ உலகத்தில் அருவருக்கத்தக்க வகையில் விபத்துக்களை உண்டாகக்கூடிய வகையில் மேடு பள்ளங்கள் இருப்பதும் குறைகளை வளர்க்கத் தக்க சூழலே.
ஆதலால் இவ்வுலகில் எல்லோரும் எல்லாச் செல்வங்களும் உடையவர்களாக வாழும் சூழல் அமைந்த சமநிலைச் சமுதாயம் அமைய வேண்டும். இத்தகு சமுதாயத்தை, இருப்பதை விநியோகிப்பதன் மூலம் அமைக்க முடியாது. இம் முறையில் வறுமையைத்தான் பங்கிட முடியும்.
எனவே, வளத்தைப் பெருக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். இவ்வாறு வளத்தைப் பெருக்கும் முயற்சியில் மனித குலத்திற்குத் துணை நிற்க வேண்டியது - துணை நிற்பது மழையேயாகும். மழை யின்றேல் மண்ணில் வளமில்லை. ஊற்று வளமும் குன்றும். இதன் பயனாக வறுமையே தோன்றும். பசிப் பிணியால் உந்தப் பெற்ற மக்கள் ஒழுக்கக்கேடான செயல்களிலும் ஈடுபடுவார்கள். ஆதலால், மனித குல ஒழுக்கத்திற்கு மழையே இன்றியமையாதது என்கிறார் திருவள்ளுவர்.
நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு
என்பது திருக்குறள். இக் குறட்பாவை மேற்கூறியவாறு சிந்தனை செய்யாமல், "வான் இன்றி மழையில்லை" என்று பொருள் காண்பது நிறைவாகாது.
மேலும், ஒழுக்கச் சூழல் காண, குளித்தாலும் தண்ணீர் குடித்தலும் அவசியமாகும். மனித உடலின் வெப்ப நிலை அதிகமாகும் சூழ்நிலை ஒழுக்கக் கேடுகளையும் விளைவிக்கிறது. உடலின் வெப்ப நிலையை அளவோடு வைத்துக் கொள்ளத் தண்ணீரில் குளித்தலும், தண்ணீரைக் குடித்த லும் அவசியம். அதனாலன்றோ உடல் நலம் பற்றிய நூல்கள் பலகாலும் குளித்தலையும், தண்ணீர் குடித்தலையும் வற்புறுத்துகின்றன. நல்ல உடல் நல்ல மனம் ஆகியவை ஒழுக்கத்தின் விளை நிலங்கள். எனவே, வான் இவ் உலகிற்குத் தண்ணீர் வளம் தருவதோடு, ஒழுக்கம் சிறக்கவும் உதவுகிறது.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
--------------
4. உணர்வோர் கண்ணே உலகு
உயிர் ஓர் அறிவுப் பொருள். உயிரின் இயல்பு பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தின் வழிச் செல்வதன்று. வெள்ளத்தை எதிர்த்து நீந்துவது உயிரின் கடமை. ஆனால் நடைமுறையில் கோடானுகோடி உயிர்கள் இங்ஙனம் வாழ்வதில்லை.
இவ்வுலகம் ஐம்பெரும் பூதங்களின் கூட்டினால் ஆனது. இப் பருவுலக நடைமுறைக்கும், உயிரியல் வளர்ச்சிக்கும் நிறையத் தொடர்புண்டு.
உயிரின் அனுபவ வாயில்கள், புலன்கள். புலன்களின் அனுபவக் கருவிகள் பொறிகள். அனுபவக்களம் ஐம்பூதங்களாய் உலகமும், பூதங்களின் வழித்தாய உணர்வுகளுமாம். பூதங்கள் - அவைகளாலாய உணர்வுகள் வழியே உயிர்கள் செல்லுமாயின், இம்மையிலும் பயனில்லை. மறுமையிலும் பயனில்லை.
அதற்கு மாறாக அவற்றின் கூறுபாடுகளை அறிந்து, அவைகளைத் தூய்மை செய்து, உணர்ந்து உணர்வு கொண்டு அனுபவிக்கும் பொழுது வாழ்வின் குறிக்கோள் கைகூடுகிறது. அவர்கள் பக்கத்தில் உலகம் நிலைபெற்றி குக்கும். இக் கருத்தினையே திருவள்ளுவர்,
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
என்று பேசுகின்றார்.
------------------
5. இன்பமே எந்நாளும்
உயிரினம் ஆசைகளால் உந்தப்பெற்று, விருப்பு வெறுப்புகளுக்குள்ளாவது இயற்கை. ஆசைகள் விருப்பு வெறுப்புகளின் தாய். விருப்பு வெறுப்புகள் வினைகளின் நிலைக்களன். வினைகள் இன்ப துன்பத்திற்குக் காரணம். இன்ப துன்பங்கள் பிறப்பிற்கு அடிப்படை. பிறப்பு துன்பத்தோடு தொடர்புடையது.
ஆனாலும், பிறப்பின் வழிப்பட்ட இவ் வாழ்க்கையின் இலட்சியம் பிறப்பிலிருந்தும், அவ்வழிவரும் துன்பத்தில் இருந்தும் விடுதலை பெறுவது. ஒன்றின் இயல்பு ஒன்றாக இருக்குமானால் இதனோடு அதற்கு மாறுபட்ட இயல்பு ஒன்றை முறையாகக் கூட்டுவித்தால் அவ்வியல்பு மாறும் - வளரும்.
உயிரின், மேற்கூறிய இயல்பை மாற்றி, அன்பின் வழிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தூய்மையான நல்வாழ்க்கையைப் பெறச்செய்ய வேண்டுமானால் இயல்பிலேயே விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்ட கடவுளோடு - சிவ பரம்பொருளோடு இந்த உயிருக்குத் தொடர்பு ஏற்பட வேண்டும்.
கடவுள் தொடர்பின் வழியாக உயிர்களிடம் உள்ள குற்றங்கள் குறைந்து நிறைவு பெருகும். அவ்வழி உயிர்கட்கு எங்கும் எப்பொழுதும் இன்பமே கிடைக்கும்.
இக் குறிப்பினையே அப்பரடிகள் "இன்பமே எந் நாளும் துன்பமில்லை" என்று குறிப்பிடுகின்றார். இக் கருத்தினையே திருவள்ளுவரும் "யாண்டும் இடும்பை இல" என்று பேசுகின்றார்.
ஆதலால் வாழ்க்கையில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வேண்டுதல் வேண்டாமை பாராட்டுவது சமய ஒழுக்கமாக மாட்டாது.
வேற்றுமைகளைக் கடந்த விழுமிய மனித குல ஒருமைப்பாடே சமய உலகத்தின் நியதி. ஆதலால், அன்றாட வாழ்க்கையில், இந்தச் சமய சமுதாய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து உய்தி பெறுவோமாக!
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து என்றும் இன்பமாக வாழ்ந்து, வாழ்விப்போமாக!
--------------
6. அறமும் சிவிகையும்
திருவள்ளுவர் முற்போக்கான கருத்துக்களையுடையவர். அவர் சமுதாயத்தின் குணங்களையும் குறைகளையும் நடுநிலை உணர்வோடு விமரிசனம் செய்கிறார். அந்த விமரிசனப் போக்கில் பழமையை ஏற்றுக் கொண்டதும் உண்டு; பழமையைச் சாடியதும் உண்டு.
ஒருவன் பல்லக்கிலே போகிறான். இன்னொருவன் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு போகிறான். பல்லக்கில் ஏறிச் செல்பவன் அறம் பண்ணினவன் என்றும், பல்லக்கைத் தூக்கிச் செல்வோன் அறம் செய்யாதவன் என்றும், அதன் பயனாகவே பல்லக்கைச் சுமந்து செல்லுகிறான் என்றும் சொல்லுவது தமிழகத்தின் பழைய பழக்கங்களில் ஒன்று.
"அறத்தாறிது என வேண்டா" என்ற இந்தத் திருக்குறளுக்குக் கூட அந்தப் பழைய வழக்குப்படியே பலர் பொருள் கொண்டுள்ளார்கள். ஆனால், திருவள்ளுவரின் கருத்து அஃதன்று.
திருவள்ளுவர் பல்லக்கில் சவாரி செய்வதையும், பல்லக்கைத் தூக்குவதையும் காரணமாகக் காட்டி, அறத்தாறுதான் இந்த வேற்றுமைக்குக் காரணம் என்று சொல்லாதே என்று சொல்லுகின்றார். "இதுவென வேண்டா' என்ற சொற்றொடர் இந்தப் பொருளையே தருகிறது.
சிவிகை ஊர்தலுக்கும், தூக்குதலுக்கும், அறத்திற்கும் உறவில்லை. காசுக்குத்தான் உறவு. நிறையச் செல்வம் உடையவர்கள் - ஜமீன்தார்கள் - ஜமீன்தாரிணிகள் ஆகியோர் கூலி கொடுத்துத் தூக்கச் செய்து போகிறார்கள். இஃதெப்படி அறமாகும்?
செல்வமுடைமையும் அறமன்று. ’பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள' என்று பின்னே வள்ளுவர் பேசுகிறார். அதனால், சிவிகை ஊர்தல் - தாங்குதல் என்ற வாழ்க்கை வேறுபாடுகள் உலகியலாலும் செல்வ வேறுபாட்டாலும் தோன்றுவதே தவிர, அறத்தின்பாற் பட்டதன்று என்பதே திருவள்ளுவரின் தெளிந்த கருத்து.
ஒரோ வழி அறத்தின் காரணமாகவும் சிவிகை ஊர்தலும் உண்டு. சிவிகை தாங்குதலும் உண்டு. அப்பொழுது சிவிகை ஊர்கிறவர்களும் சிவிகை தாங்குகிறவர்களும் ஒத்த உணர்வினராய் - ஒத்த தகுதியுடையவராய் இருப்பர்.
அங்கு ஒருவருக்கொருவர் பெருமைப்படுத்திக் கொள்ளும் பண்பாட்டின் வழியிலேயே, சிவிகை தாங்குதல் திகழ்கிறது. அங்கு சிவிகை தாங்குதலும் அறமேயாம்.
இக் காட்சியைத் திருஞான சம்பந்தர் ஊர்ந்த சிவிகையைத் திருநாவுக்கரசர் தாங்கியதிலிருந்து நன்கு உணரலாம்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
----------------
7. மனையறத்தார் கடமை
வாழ்க்கை குறிக்கோள் உடையது. தோழமை கொள்வதும் துணை நிற்பதும் துயர் துடைப்பதும் வாழ்க்கையின் இன்றியமையாத பணிகள். இப்பணி களற்ற வாழ்க்கை வாழ்க்கையாகாது. மனிதன் ஊண் உண்பதும் காதற் பெண்டுடன் களித்து மகிழ்ந்து மனையில் வாழ்வதும், குறிக்கோள் பாதையில் இனிதே நடைபோடத்தான்.
இன்று பலர் உண்பதே தொழிலாகக் கொண்டு இருக்கின்றனர்; பெண்ணின்பமே இன்பமெனக் கருதுகின்றனர். இவர்கள் உருவத்தால் மனிதர்கள் ; உணர்ச்சியில் விலங்குகள். வனத்தில் வாழ்வதற்குத் தப்பிப்போய் நாட்டில் நடமாடுகின்றனர்.
வள்ளுவம் வாழ்வாங்கு வாழும் நெறியுணர்த்தும் நூல். வாழும் மனிதனுக்குத் துறைதோறும் கடமைகள் உண்டு. சில துறைகளைத் திருவள்ளுவரே எடுத்து விளக்குகின்றார். உழைப்பையே உயர் துணையாகக் கொண்டு பொருள் பல செய்து குவித்து, பகுத்துண்டு பல்லுயிரோம்பி வாழ்தல், வாழ்வாங்கு வாழும் நெறி யாகும். இங்ஙனம் பொது வகையாக மட்டும் கூறாமல் பகுதி பிரித்தும் கூறுகிறார்.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
துறந்தார் என்பவர் யார்? கனிந்த கனியென உள்ளத்தால் பழுத்து யாதொரு பற்றுமின்றிப் புகழ் இதழ்களில் நாட்டமின்றிப் பழுத்த மனத்தடியாராக வாழ்பவர்களே துறவிகள். அவர்கள் உள்ளம் கருணையின் ஊற்று: நாடெல்லாம் வாழக் கருதும் பேருள்ளம். அவர்களைப் பாதுகாப்பது நாட்டின் பாதுகாப்பாகும் ; மனையறத்தின் மங்களத்திற்கு அரணாகும்.
துறந்தாரோ உரிமையுடையதென யாதொன்றையும் பெற்றிலர்; ஓடும் பொன்னும் ஒக்க நோக்கி வாழும் சீலமுடையார்; கந்தை ஆடையையும் மிகையெனக் கருதுவோர். ஆதலால் அவர்களுக்காக அவர்கள் நலங்கருதி மனையறம் நிகழ்த்துவோர் பணி செய்தல் பாங்காகும். இந்தத் திருக்குறள் நெறியையே திருத்தொண்டர் புராணம் விளக்கி அருளுகிறது.
அடுத்துப் பேணத் தக்கவர் 'துவ்வாதவர்’ திருவள்ளுவர் துவ்வாதவர் என்ற ஓரினத்தைப், பேணுதற் குரியவராக விளக்கி அறம் வகுத்தல் மிக உயர்ந்த பெரு நெறியாகும். உயிர்களின் இயற்கை துய்த்தலாகும்.
உயிர்கள் துய்ப்பனவற்றைத் துய்த்து வேட்கை தணிந்துழியே நலமுறுகின்றன. இதுவே சமயத்தின் அடிப்படை நியதி.
துய்த்து அனுபவிக்கப் பிறந்த உயிர்களுக்குத் துய்ப்பன வழங்காமல் ஏழ்மையில் அவலமுறச் சேய்துவிட்டுத் துய்க்கும் நெறிக்கும் அப்பாற்பட்ட இறைவனின் முன்னே துய்த்தற்குரிய பொருள்களைப் படைப்பது பேதைமையேயாம். அதுமட்டுமின்றி ஏமாற்றமும் ஆகும்.
இறைவன், துய்த்தற்குரிய பொருள்களைப் படைத்துக் காப்பது, உயிர்கள் துய்த்து மகிழ்ந்து, உய்தி பெறுதற்காகவே யாம். அங்ஙனம் துய்த்தற்குரிய புலன்களை பெற்றிருந்தும் துய்த்தற்குரிய வாயில்களாகிய பொறிகளைப் பெற்றிருந்தும் இறைவன் கருணையால் துய்த்தற்குரிய பொருள்களைப் பெற்றிருந்தும், பலர்துய்க்கும் வழியின்றித் தொல்லைப்படுகிறார்கள்.
தன்னலச் செறிவின் காரணமாகவும், துய்த்தல் துறத்தலுக்கு வாயில் என்ற அறிவின்மையினாலும், இறைநெறி, பல்லுயிரையும் பேணிப்பாதுகாக்கும் நெறியே என்ற உணர்வின்மையினாலும் இந்த அவலங்கள் ஏற்படுகின்றன. மனையறத்தைப் பெயரளவின்றி உண்மையிலேயே அறமாக நிகழ்த்த வேண்டுமாயின் துவ்வாதவரைப் பேணவேண்டும்.
அடுத்து, பேணத்தக்கவராக வருபவர் இறந்தாராவர். அதாவது நம்முடைய தமிழ்மரப்புப்படி, அவாவும் வேட்கையும் தணிந்தபோதுதான், உயிர் நிலையான நிலையை எய்துகின்றது. அதுவரையில் பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கிச் சுழல்கிறது. சில சமயங்களில் பருவுடலோடு இந்த உலகிடை நடமாடித் துய்த்து மகிழும்; சில பொழுது பருவுடலினின்று பிரிந்து இறந்து பட்டதாகக் கருதப் பட்டாலும் நுண்ணுடலோடு உலவிப் பொறிகளால் துய்க்காமல் புலன்களால் மட்டும் துய்க்கும்.
அங்ஙனம் பருவுடல் இறந்து பட்டு நுண்ணுடலில் திரியும் இறந்தார்க்கும், இல்வாழ்வோர் துணையாக நின்று, நீத்தார் நினைவு நாட்கள் கொண்டாடுவதன் மூலம் அவர்களுடைய துய்ப்புக்குத் துணை நின்று அவ்வழி வேட்கை தணியச் செய்யவேண்டும்.
இங்ஙனம் நுண்ணுடலில், வாழ்வோர் உலகியலில் இறந்து பட்டாரென்று கருதப்பெற்றாலும், உண்மையில் இறந்தவர்களாகார். இவர்கள் நிலை பரிதாபகரமானது. துய்ப்பார்வத்தைத் தூண்டும் புலன்கள் செத்தபாடில்லை.
ஆனால் துய்ப்பனவற்றைத் தேடிப் பெறுதற்குரிய கருவிகளாகிய பொறிகளோ இல்லை. புலன்கள் எண்ணும் கற்பனை செய்யும்; ஆசைப்படும். ஆனால் தாமே அடைதற்குரிய ஆற்றல் அவர்களுக்கில்லை. ஆதலால், அந்த உயிர்களின் துய்ப்பு நலன்களைப் பாதுகாப்பது இல்வாழ்வோரின் கடமையாகிறது.
'இறந்தார்" என்ற சொல்லில் உள்ள றகரத்தை இடையின ரகரமாகக் கொண்டாலும் யாப்பில் பிழை யில்லை. அப்படி "இரந்தார்" என்று கொண்டால் யாதொரு பற்றுக்கோடுமின்றி - உடலில் உறுப்புக் குறை யினராக - உடற் தொழிற்பாடு செய்ய முடியாமல் பிறரை நோக்கி வாழவேண்டிய நிலையில் இரந்து நிற்பாரைக் குறிக்கும்.
இன்றைய உலகில் இரப்பாரினம் கண்டுகொள்ள முடியாமல் குழம்பிக் கிடக்கிறது. யாதோர் உடற் குறையு மின்றி உழைப்பிற்கேற்ற முழுத் தகுதியுடையதாய் உடல் விளக்கமுற இருந்தும் கருவி கரணங்கள் யாதொரு பிழையு மின்றி இயங்கினாலும் உழைக்கும். சுபாவம் இன்மையின் காரணமாக இரந்து வாழ்கின்ற "சுகவாழ்வினர்” பலரைச் சந்திக்கிறோம்.
மனத்தினால் துறவாது, துறவை, வாழ்க்கையின் வாயிலாகக் கருதி மேற்கொண்டோர் பலரும் இரவலர்களாக, ஆங்காங்கு திரிவதைப் பார்க்கின்றோம். துறவி இரக்க மாட்டான்.
துறவி, இரவலன் ஆதல், இடும்பைக்கு வழிவகுக்கும். உடல் கட்டுக்கோப்புடையவன் அந்தப் பெயரைச் சொல்லி அழைக்காமல் ஏய்த்து வாழ்ந்தாலும் இரத்தலோடொக்கும் ஆனால் இத்தகையோரை இரவலர் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.
நல்லூழின்மையின் காரணத்தாலோ, அல்லது இயற்கையின் கொடுமையினாலோ உடற்குறையுடையரா விருப்போரே இரவலர் ஆவர். அவர் தமக்குங்கூட என்னும் இரந்து வாழ்தல் ஏற்ற நெறியன்று.
இரத்தல், வாழ்க்கைக்காக அன்று. வாழ்க்கையை வகைப்பட நடத்துவதற்குரிய முதலை இரத்தலே இரத்தலாகும். பின் அம் முதலைக் கொண்டு இயன்ற தொழில் செய்து முதலை உண்ணாது, வருவாயை உண்டு மகிழ்ந்து வாழ்தலே ஏற்ற முறை. இந்த அடிப்படையில் இரப்பவரா யிருப்பவர்க்கு உற்றுழி உதவுவதும் மனையறத்தார்க்கு உரிய மாண்புள்ள கடமை.
இங்ஙனம் பலருக்கும் துணை நின்று வாழச் செய்து வாழ்தலே, இயல்புடைய இல்லறம் என்றார் வள்ளுவர். இன்றோ , பலருக்கு பால்வேறுபட்ட இருவர்கூடி, ஒரு வீட்டில் உண்டு உடுத்தி வாழ்ந்து, மக்களைப் பெருக்கி வாழ்தலே மனையறம் என்றாகிவிட்டது. அதனாலேதான் துன்பம் சூழ்ந்து வருத்துகிறது. வள்ளுவம் காணும் மனையறம் வையகத்தில் மலர்ந்தால் துன்பம் நீங்கும்; இன்பம் பொங்கும்.
வளர்க வையகம். வாழ்க உலகெலாம்.
----------------
8. பெய்யும் மழை
”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழு வாள்" என்ற திருக்குறள் இன்றைய யுகத்தில் விவாதத் திற்குரிய குறளாக இருக்கிறது. சிறந்த கற்புடைய பெண்ணுக்கு இலக்கணம் வடித்துத் தருவது இந்தக் குறள்.
ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் கடமைப்பாடும் தாங்கியதே நல்வாழ்வு. இந்த உயரிய வாழ்க்கை நெறியில் உலக மனித சமுதாயம் செல்லும் வரை இன்பமே; எந்நாளும் துன்பமில்லை.
கணவனுக்கு மனைவி நம்பிக்கைக்குரியவளாக இருக்க வேண்டும். மனைவிக்குக் கணவன் நம்பிக்கைக் குரியவனாக இருக்க வேண்டும். நண்பனுக்கு நண்பன் நம்பிக்கைக் குரியவனாக இருக்கவேண்டும். ஏவல் கொள்வோர் - ஏவல் செய்வோர் இவர்களுக்கிடையேயும் நம்பிக்கை நிலவ வேண்டும்,
கடமைப்பாட்டு நெறி உயிர்ப்போடிருக்க வேண்டும். இந் நெறிமுறை பிறழும் காலங்களிலெல்லாம் மனித உலகம் துன்பத்தால் சூழப்படுகிறது. பெண்ணினத்துக் கற்பை மட்டும் பெரிதுபடுத்தியதற்குக் காரணம், பெண்ணிடத்து நம்பிக்கை மோசம் ஏற்படும் பொழுது ஏற்படும் ஏமாற்றமும் பகையும் அளவிடற்கரியதாக யிருப்பதேயாகும்.
நிலப்பிரபுத்துவ சமுதாயமும், தனியுடைமை ஆதிக்கமும்; பெண் அடிமைத்தனமும் பரவலாக இருப்பதன் காரணமாகப் பெண்ணின் ஒழுக்கக்கேடு மட்டும் பெரிதும் படுத்தப்படுகிறது. அதனால், மற்ற இனத்திற்குத் தேவை யில்லையென்று கொள்ளக்கூடாது. ஆதலால் மனித சமூகத்தின் எல்லா உறவுகளிலும் நம்பிக்கையும் கடமைப்பாட்டுணர்வும் நிலவ வேண்டும்.
சிறந்த கற்புடைய பெண் தெய்வம் தொழமாட்டாள் தெய்வம் கடவுளாகாது. தெய்வம் என்ற சொல்லைப் பெரும்பாலும் சிறு தெய்வங்கள் என்றே அறிஞர்கள் ஏற்றுவர். கணவனைக் கூட்டுவிக்கும் காமதேவதையைத் தொழுதலையே ”பீடன்று" என்று மறுத்தாள் கண்ணகி காரணம், தெய்வத்தைத் தொழும் பொழுது தன் கணவனின் குற்றத்தைக் கூறித் தொழவேண்டும். தன்னுடைய கணவனின் பழியை மற்றவர் அறியக்கூறுதலும் தூற்றுதலும் கற்புடையப் பெண்ணுக்கு அழகல்ல.
அதனையே, பிறிதோரிடத்தும் திருவள்ளுவர். சொல் காத்தலையும், பெண்ணுக்குக் கடமையாக்கினார். ஆதலால், தெய்வம் தொழுகின்ற பழக்கத்தைக் கற்புடைப் பெண்ணுக்கு திருக்குறள் விக்குகிறது.
”கொழுநன் தொழுதெழுவாள்" என்பது கற்புடைய பெண்ணின் அடுத்த இலக்கணம். திருக்குறளின் சொல்லமைப்பு ஆழ்ந்த சிந்தனைக்குரியது. 'தொழுதல்’ என்பதற்கு உடலால் செய்யும் வணக்கம் என்பது மட்டும் பொருள் அன்று. உள்ளத்து உணரவில் ஒன்றாகி உணர்வு தலைகாட்டும் பொழுதெல்லாம் இனந்தெரியாது. பணிவும், பரிவும் கொண்டு வாழ்தலென்றும் பொருள் கொள்ள வேண்டும்.
"தொழுது எழுவாள்" என்ற சொல் முறை வைப்பு இந்தப் பொருளையே சிறப்பாகத் தருகிறது. உடல் வணக்கம் என்றே பொருள் கொள்வதாயின் ”எழுத்து தொழுதல்" என்று முறைவைப்பு இருக்க வேண்டும்.
அடுத்து, உணர்வில் கலந்து ஒன்றான பெண்ணுக்கு கணவனின் இயல்பு, குறை, நிறை, தேவை அனைத்தும் தெரியும். அவனுக்கு எது, எப்பொழுது தேவையோ, அப்பொழுது, அவ்வண்ணம் அவள் துணை செய்வாள்.
வேளாண்மை செய்த ஒருவன் விரும்பியபொழுது மழை பெய்தால் அம் மழையினால் அவனடைந்த வேளாண்மைப் பொருள் பெருக்கமும், மன மகிழ்வும் அளவிடற்கரியன. அதுபோலவே, உற்ற இடத்து உரியவாறு துணை செய்யும் வாழ்க்கைத் துணைவியின் மூலம் கணவன் காரியங்களின் சாதனையைப் பெறு கிறான்; மகிழ்வு கலந்த இன்பமும் பெருகிறான்; புகழும் பீடு நடையும் பெறுகிறான். வேண்டிய பொழுது பெய்யும் மழை போல் வேண்டிய பொழுது உதவி செய்வாள். அதிலும் நுட்பமிருக்கிறது. வேண்டாத பொழுது மழை பெய்யக்கூடாது. அதுபோலவே கணவன் வேண்டாத பொழுதும் மேவித் துணை செய்யக்கூடாது. அங்ஙனம் செய்யப்புகின் அடக்கமின்மையாகவும், தன் முனைப்பாகவும் கருதப்பெற்று உறவு கெடும்.
ஆதலால் ’பெய்யெனப் பெய்யும் மழை' யென்ற சொற்றொடர், சிந்தனைக்கு இன்பம் தருவது. வேண்டிங் பொழுது காலந் தாழ்த்தாமலும் உடனடியாகப் பெய்யும் மழையும் சிறப்புக்குரியது. அதுபோலவே கணவனுக்கு வேண்டிய பொழுது உடனடியாகத் துணை செய்யாமல் ’இதோ வருகிறேன்' என்றோ ”இப்பொழுதென்ன அவசரம்?" என்றோ நீட்டித்துக் காலந்தாழ்த்தாமல் உடனே விரைந்து உதவி செய்யும் பெண்ணே உயரிய வாழ்க்கைத் துணைவியாவாள்.
சிறு தெய்வங்களைத் தொழாது கணவனுடன் ஒன்றிய உணர்வால் ஒன்றித்து வாழ்தலின் காரணமாக உணர்வு நிறைந்த உறக்கத்தினின்று கண் துயில் நீங்கியவுடனேயே கணவனை உள்ளத்தால் நினைந்து, உணர்வால் தொழுது எழுகின்ற பெண், வேளாண்மை செய்தவன் வேண்டிய வாறு பெய்யும் மழை வேளாளனுக்குப் பயன்படுவதைப் போல இந்தப் பெண், தன்னைக் கொண்ட கணவனுக்கு ஒப்பற்ற வாழ்க்கைத் துணைவியாக விளங்குவாள்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
----------------
9. அறிவறிந்த மக்கட்பேறு
வீடும் நாடும் சிறப்பது நன்மக்களாலேயேயாம்: நன் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களன் மனைவற வாழ்க்கை. வாழ்க்கைத் துணை நலத்தைத் தொடர்ந்து, திருவள்ளுவர் 'மக்கட் பேறு' பேசுகின்றார். ஒன்றிற்கொன்று தொடர்பிருக்கிறது.
நன்மக்கட்பேறு வேண்டுமானால், தலைவனும் தலைவியும் நல்லவர்களாக இருத்தல் வேண்டும். ஒழுக்கம், பண்பு போன்றவை வழி வழி வளரக்கூடியன. அதனாலன்றோ கம்பன் ’குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட் கெல்லாம்' என்று பேசுகின்றான். திருவள்ளுவரும் 'குலமுடையான் கண்ணே யுள்' என்கிறார்.
பொதுவாக பால்வேறுபட்ட ஒருவர் - ஒருவன் ஒருத்தி கூடி வாழ்ந்தாலே குழந்தை பிறக்கும் - மக்கட்பேறு கிடைக்கும். அஃது இயற்கை. ஆனால், திருவள்ளுவர் இத்தகு இயற்கையான மக்கட் பேற்றினைப் பாராட்டிப் பேசவில்லை. அவர் விரும்புவதெல்லாம் 'அறிவறிந்த மக்கட்பேறு.'
இந்த அறிவறிந்த மக்கட் பேற்றினைப் பெற விரும்பும் தலைவனும், தலைவியும் தங்களை, முதலில் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் சீலத்தால் சிறந்த வாழ்வு நடத்துதல் வேண்டும். வித்தின் இயல்பு - நிலத்தின் இயல்பு ஆகியவற்றைச் சார்ந்ததே பயிரின் இயல்பு பயிரின் - நலம்.
அடுத்து, இன்பத்திற்காக மட்டுமே மணவாழ்க்கை யல்ல. இலட்சியத்தை நோக்கி நடைபோடும் வாழ்க்கை நில் - வழியிலே களைப்புத் தோன்றாமல் பயணம் செய்யவே உலகியல் இன்பங்கள். மனைவாழ்க்கையும் அத்தகையதே. சிலர் கருதுவது போன்று அது தீமையு மன்று - சிற்றின்பமுமன்று. எனினும், இலட்சியத்தை மறந்த நிலையில் - இங்கேயே தங்கிக் கிடக்கும் போது சான்றோரால் அது தவறு எனக் கண்டிக்கப்பெற்று வந்திருக்கிறது..
வாழ்க்கையின் இலட்சியம் துன்பங்களினின்றும் விடுதலை பெறுதல். பிறப்பு இறப்புச் சுழற்சியினின்றும் நீங்கி திருவருட் சார்பு பெறுதல். இந் நோக்கத்தை நோக்கிப் பயணம் செய்யும் போதே. பிற உயிர்களுக்குத் தொண்டு செய்தலும் இணைக்கப் பெறுகிறது. மனையறத்தில் தலைவன், தலைவியாக இருந்து ஒருவருக்கொருவர் உதவி, இன்பம் பெற்று வாழ்தல் அமைப்பு.
இந்த அமைப்பிலேயே, இலட்சிய உணர்வோடு கூடிய வாழ்வியற் பயணம் செய்ய உதவும் மனித உடம்பைப் பெறாத உயிர்களுக்கு - துணை செய்யக் கூடிய மனித உடம்பைப் பெறாமல் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு மனித உடம்பைத் தந்து உதவி செய்யக் கூடிய அரிய சாதனமாகவும் மனைவாழ்க்கை பயன்படுகிறது. ஆதலால், மனைவாழ்க்கையைச் சாதாரண ஒன்றாகக் கருதாமல் அதையே ’தவம்' செய்யும் சாதன மாகக்கருதி, பயன்படுத்தினால் அறிவறிந்த மக்கட்பேறு கிடைக்கும்.
திருஞானசம்பந்தரை ஈன்றெடுத்த குடும்பம் மனையறத்திலேயே தவம் செய்த குடும்பம் சிவநெறி வளர்க்கும் திருப்பிள்ளை வேண்டும் என்ற குறிப்பிட்ட குறிக் கோளோடு தவம் செய்தே அவர்கள் அப்பேற்றினைப் பெற்றார்கள். இத்தகு நோன்பினை எல்லாக் குடும்பங்களுமே நோற்க வேண்டும்.
திருவள்ளுவர் அறிவறியும் மக்கட்பேறு என்று கூறாமல் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று கூறியமையால், 'தந்தை தாயாரின் முயற்சியால் கருவிலேயே அறிவறிந்த’ என்ற குறிப்பினை உணர்த்துகின்றார். கருவிலே அறிவுடையவர்கள் - இளமைப் பருவத்திலேயே - குழந்தைப் பருவத்திலேயே கூர்ந்த மதியுடையராகத் திகழ்கின்றார்கள். திருஞானசம்பந்தர் தம் மூன்றாம் ஆண்டிலேயே திருநெறிய தமிழைப் பாடியது நினைவு கூரத்தக்கது.
கவிஞன் பாரதியும், பிறப்பிலேயே கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்றவர்கள் கருவிலேயே அறிவுடையர் என்று குறிப்பிடுகின்றார். இதனையே வள்ளுவர்.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
என்ற குறட்பா வாயிலாக உணர்த்துகின்றார்.
---------------
10. வெய்யிலும் அறமும்
காய்கதிர்ச் செல்வன் ஆக்கத்தின் சின்னம். இருள் நீக்கி ஒளிதருவது கதிரொளி; மடிநீக்கி ஏற்றத்திற்குரிய எழுச்சியை ஈவது ஞாயிறு. செந்நெல்லும் செங்கதிரும் பயனுறச் செய்வதும் செங்கதிரோன் ஒளியே யாம்! எழுகின்ற ஞாயிற்றின் ஒளி இருள் நீக்கும் - ஒளி பெருக்கும் - உறுதி பயக்கும் - வாழ்வளிக்கும்!
எனினும், எலும்பில்லாத புழுக்களை அது தாக்கி வருத்தும்! வெயிலின் கொடுமையினின்றும், தற்காத்துக் கொள்ள எலும்பு தேவை. எலும்பிருந்தால் தற்காத்துக் கொள்வது மட்டுமின்றிக் கதிரவனின் ஒளி கொண்டு வாழவும் முடியும்.
அநீதியை நீக்கி நீதியை நிலை நிறுத்துவது அறம். துன்பத்தை நீக்கி இன்பத்தை நிலைபெறச் செய்வது அறம். அறத்திற்கு விலை அன்பேயாகும். அன்புடை யோருக்கு அறம் தென்றல் ! அன்பில்லாதவர்களுக்கு அது வருத்தும் வாடைக் காற்று - துன்பப் புயல் ! ஏன்? அன்பின் விளைவு அறம். அன்பின் பயன் அறம். அன்பு பண்பு. அறம் பயன் ! இன்பத்தின் தாய் அன்பு -
அன்பில்லாமல் மனித குலத்திற்குத் தீமை செய்து வாழ்பவனை அறக் கடவுள் வருத்தும். இதிகாச உலகில் இராவணனும், பௌராணிய உலகில் பத்மாசுரனும், அரசியல் உலகில் ஜார் மன்னனும் இதற்கு எடுத்துக் காட்டாவர்.
வெய்யிலின் காய்ச்சலிலிருந்து ஒரோவழி தப்பித்துக் கொள்ளமுடியும். வெளியில் தலை காட்டாமல் மண்ணின் உள்ளேயே புழு வாழுமானால் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அறக்கடவுளின் காட்சியிலிருந்து அன்பில்லாத மனிதன் தப்பித்துக் கொள்ள முடியாது. அறக்கடவுள் எல்லாமுமாய் - முழுவதுமாய் இலங்குகிறார். அவரது பார்வை ஆழ்ந்தகன்றது. ஆதலால், அன்புடையராக வாழ்தலும், அறக்கடவுளின் கருணையில் வளர்தலும் நமது கடமை.
அன்புடையராக வாழ்தலின் மூலம் தற்காத்துக் கொள்ளுதல் முன்னேறுதல், இன்பம் துய்த்தல், திருவருள் நிலை பெறுதல் ஆகிய பேறுகள் கிடைக்கின்றன. அன்பின்மையால் இவற்றை இழக்கிறோம். அழிவும் ஏற்படுகிறது.
என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்.
---------------
11. மனிதனும் மரமும்
வறண்ட பாலைவனம்!
நீரூற்றின் சாயலே இல்லாத நிலப் பரப்பு - அந்தப் பாலைவனத்தில் ஒரு பட்டமரம்! அது தளிர்த்தது!
என்ன, திகைக்கிறீர்களா? நாம் சொல்வது வியப்பாக இருக்கிறதா?
ஆம். மேலே சொன்னவை நடக்கக் கூடாதவை. நடக்க முடியாதவை என்பதற்கு எடுத்துக் காட்டுக்கள்! அதுபோலவே, அகவாழ்வில் அன்பைப் பேணி வளர்க்காதவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமில்லை! அவர்கள் செல்வத்தால் செழிக்க முடியாது! புகழால் பீடுநடை போட முடியாது!
தமிழனின் மரபுப்படி நிலம் நான்குதான். அவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியன. ஐந்தாவது நிலம் ஒன்றுண்டு! அதுதான் பாலை. ஆனால் பாலை, இயல்பாக இருப்பதல்ல. நான்கு நிலங்களின் திரிபாலும் மாறுபாட்டாலும் தோன்றுவதுதான் பாலை.
இத்தகு மாறுபாட்டின் - திரிபின் காரணமாக வளம் தருகின்ற பொருள்களின் உறவிலிருந்து நிலம் ஒதுங்குவதனால், வளத்தைப் பெறவோ, தரவோ முடியாத வறட்சி நிலை ஏற்பட்டு விடுகிறது. வளம் பெறுதலும் தருதலும் ஆகிய குழல் அல்லது கடமைப்பாடு என்ற இயற்கை நியதியிலிருந்து மரம் விலகி விடுதலின் காரணமாகப் பயன் தராத - பெறாத நிலையில் அது வற்றிப் போய் விடுகிறது.
அது போலவே, கொண்டும் கொடுத்தும், அன்பும் உறவும் காட்டி, கூடி வாழ வேண்டிய மனிதன், அன்பு காட்டும் ஒழுக்க நெறியிலிருந்து விலகியவனின் சுற்றுச் சூழல் வறண்ட பாலைவனமாகி விடுகிறது. அன்பைப் சொரிதற்குரிய வாய்ப்பையும், அன்பைப் பெறுதற்குரிய வாய்ப்பையும் அவன் இழந்து விடுகின்றமையின் காரணமாக வற்றல் மரம் போலக் சாரமற்றவன் ஆகிவிடுகிறான்.
வற்றல் மரம் எப்படித் தளிர்க்காதோ, அதுபோலவே மணத்தகத்தே அன்பில்லாதவனின் வாழ்க்கை சிறக்காது. ஆதலால், மற்றவர்களிடத்தே மனங் கலந்த அன்பு காட்டுவதே வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுதற் சூரிய வழி என்பது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி. ஆம்; பிறரை வாழ்வித்து வாழ்தலும், மகிழ்வித்து மகிழ் தலுமே நல்வாழ்க்கையின் இயல்பு என்ற உண்மையினை அழகாக உவமையின் மூலம் வள்ளுவர் நமக்கு உணர்த்துகின்றார். இதோ குறளைப் பாருங்கள்.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
---------------
12. வித்துமிடல் வேண்டுமோ?
தமிழர் நாகரிகத்தின் மிகச் சிறந்த ஒழுக்கம் விருந்தோம்புதல். உண்பதன் முன், தன் வீட்டு முகப்பில் உணவு அருந்த வேண்டியவர்கள் யாரேனும் உள்ளனரோ என்று பார்த்து, அவ்வாறு எவரேனும் இருந்தால் அவர்களை அழைத்து உண்பித்துப் பின்னர், தாம் உண்பதென்பது தமிழர்களின் விழுமிய ஒழுக்கம். விருந்தினர்கள் சுதந்திரமாக - உரிமையுடன் வந்து தங்குவதற்கு திண்ணைகள் அமைத்து வீடு கட்டுவது நமது மரபு.
திருமூலர் திருமந்திரம்,
"யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி"
என்று வரையறுத்து ஓதுகிறது.
விருந்தோம்பும் சால்பினர் வாழும் ஊரில் அடிக்கடி அயலூர்ச் சான்றோர் வருவர். அவ்வழிச் சிறந்த அறிஞர்கள், புலவர்கள், முனிவர்கள் ஆகியோருடைய உறவும் உள்ளக் கருத்தும் எளிதில் சமுதாயத்திற்குக் கிடைக்கும். வந்தோரை உண்பித்தலின் காரணமாக அவ்வூரின் புகழும் பரவும்.
இத்தகு சிறப்புக்களுக்குக் காரணமாகத் திகழ்கின்ற நல்லோரின் கழனிகள் நல்லோரின் உடைமைகள் உரிமையால் ஒருவரின் உடைமைகளாக இருப்பினும் அதன் விளைவுகள் பலருக்கும் பயன்படுவதன் காரணமாக உரிமை யாளரைவிட உரிளரே அவர்தம் உடைமைகளைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டுவார்கள். அவர்களே விருந்தோம்பி வேளாண்மை செய்வோரின் நிலங்களை வளப்படுத்துவதோடு மட்டுமின்றி, விதைகளும் தூவுவார்கள். அங்கே, உடைமை உரிமை உணர்வு - இன்மை யுணர்வு இரண்டுக்கும் மோதல் ஏற்படாது. துன்பம் ஏற்படாமல் ஒரு சிறந்த சமுதாய அமைப்பே கால் கொள்ளுகிறது. அதனாலேயே திருவள்ளுவர்,
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
என்று கேட்கின்றார். இக் கருத்தினில் நம்பிக்கையில்லாதோர் சில பேர் இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகக் கருதினார்கள்.
பாவேந்தர் பாரதிதாசன்கூட இதில் நம்பிக்கை யில்லாமல், ”மிடல்" என்பதனை வேலி என்று பொருள் கோண்டு வேலியிட வேண்டுமோ? என்று பொருள் கண்டிருக்கிறார். அதில் துளியும் ஐயப்படவில்லை. அத்தகைய பண்பாடுடையவர்களின் நிலத்துக்கு வேலியடைக்க வேண்டியதில்லை - ஊரே காப்பாற்றும் என்று கூறுகிறார். அவர் அத்தகு கருத்துக் கொண்டதற்குக் காரணம், நிலம் விதை போடாமலேயே விளையும் என்று வள்ளுவர் சொல்லியிருப்பதாகக் கருதியதே போலும்!
திருவள்ளுவர் அப்படிச் சொல்லவில்லை. நிலத்தை உடையவர்கள் விதை பாவ வேண்டுமோ ' என்ற குறிப்பிலேயே திருவள்ளுவர் பேசுகிறார் என்று கருதுவதில் தவறில்லை.
--------------
13. இம்மையும் மறுமையும் இன்பந் தரும்
மனித வாழ்வின் இலட்சியம் இன்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுதல். சில ஒழுக்கங்கள் இம்மைப் பயன் மட்டுமே தரும். மிகச் சிலவே இம்மை மறுமை ஆகிய இரண்டுக்கும் இன்பந் தரும்.
இருமையும் இன்பம் தரும் அம்மிகச் சிலவற்றுள்ளும். பெரும் முயற்சியின்றி எளிமையில் கைவரக் கூடிய ஒழுக்கம் இனியவை கூறல்.
மனித குலத்தின் உறவுக்கும் இன்பத்திற்கும் அடிப் படை இனியவை கூறலேயாகும். இனியவை கூறினும், இனிய வார்த்தைகளைப் பேசினும், அகமும் புறமும் ஒத்துப் பேசுதல் பெரும் தவ ஒழுக்கமாகும்.
சிலர் உதட்டில் இனிய வார்த்தைகளைப் பேசுவர். ஆனாலும் அகத்தே கருப்பு வைத்து வாழ்வர். அதனாலேயே திருவள்ளுவர், ’சிறுமையுள் நீங்கிய இன்சொல்' என்று குறிப்பிடுகின்றார்.
இதற்குச் சிறுமைப் பண்புகள் நீங்கிய மனிதன் சொல்லும் இன்சொல் என்றும் பொருள் காணலாம். சொல்லும் சொற்களின் விளைவினால் தீமையில்லாத - தீமை பயவாத நற்சொல்லும் இன்சொல்லேயாம்.
சிறுமை - சிறுமிய மரபுகள் அகத்திலும் கூடா - செயன்களிலும் கூடா. சிறுமையினின்றே சிறுமை தோன்றும். பிறருக்குச் சிறுமை தரத்தக்க செயலைச் செய்கின்றனவனும் சிறுமை உடையவனேயாம்.
இனிய பண்புகளிலிருந்தே இனிமை பிறக்கிறது. இனிமை - இனிய சொற்கள் இம்மை வாழ்வில் நண்பர் களைக் கூட்டுவிக்கும்; துன்பத்தை நீக்கும். இன்பத்தைப் பெருக்கும். அவ்வழி மறுமையும் கூட்டுவிக்கும். மறுமை இன்பததை அளிக்கவல்ல இறைவனும் இனிமை தவழும் புன்சிரிப்படையவன். ஆதலால், வருந்தி உழைத்துப் பெறக்கூடிய மறுமை இன்பத்தையும் இனிய சொற்களை வழங்குவதன் மூலமே எளிதிற் பெற்றுவிட முடியும் என்பது திருவள்ளுவர் கருத்து.
ஆனால் உலகியலில் இந்த இனிய - எளிய பண்புகூட வளராதது வியப்பாக இருக்கிறது.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்
--------------
14. செய்ந்நன்றி
இறைமை என்பது நற்குணங்கள் பலவற்றின் கூட்டு. குணங்கள் பண்பு; இறைவன் பண்பி. நற்குணங்கள் பலவற்றுள்ளும் தலையாயது நன்றியறிதல். சிசிரோ என்ற பேரறிஞன் நற்குணங்களுக்கெல்லாம் தலையாக விளங்கும் நற்குணம் ’நன்றி காட்டுதல்' என்றும் எல்லாக் கடமைகளுக்கும் மூலமுதல் நன்றி காட்டும் குணம் என்றும் கூறிச் சிறப்பிக்கிறார்.
அதாவது, ஒருவர் செய்த நன்மையை - உதவியை பாராட்டி நினைவில் கொண்டு கடமைகளாற்றுதல். நன்றி காட்டும் ஒழுக்கம் சொல்லி வரக்கூடியதன்று. இயல்பாகவே மனிதன் கொண்டு ஒழுக வேண்டிய ஓர் ஒழுக்கம். அதனாலன்றோ திருவள்ளுவர் ’செய்ந் நன்றி அறிதல்' என்றே குறிப்பிட்டார்.
வாதவூரடிகள் தமது தேனமுதத் திருவாசகத்தில் அடிக்கடி நாயினை இழுப்பார். நாயினுங் கடையேன் என்ற சொற்றொடர் பெருகிக் கிடக்கின்றது திருவாசகத்தில். அதாவது, நாய்க்கு நன்றிகாட்டும் உணர்ச்சி உண்டு. பகுத்தறிவு படைத்த மனிதனாகிய எனக்கு அக்கீழான நாய்க்குள்ள குணமும் இல்லாமற் போயிற்றே என்பது குறிப்பு. நாயும் கூட மனிதனை நோக்க நன்றி காட்டும் உணர்ச்சியில் பாராட்டக் கூடியதேயன்றி, அதனிடத்திலும் முழுமையாக நன்றி காட்டும் பண்பில்லை.
இறைவனின் திருவருளைப் பெறுதற்குரிய வாயில்கள் கருணை காட்டுதல் , நன்றி காட்டுதல் ஆகிவைகளேயாம். இறைவன் மகிழ்வுடன் தங்கியிருக்கும் இடங்கள், ஒன்று சொர்க்கம் அல்லது விண்ணுலகம். மற்றொன்று அமைதியான நன்றி காட்டும் பண்பிற் சிறந்த உள்ளம். ஆதலால் நன்றியறிதல் - நன்றி காட்டுதல் என்பது உலகியல் ஒழுக்கம் மட்டுமன்று. அருளியல் ஒழுக்கமுமாகும்.
உலகில் செய்யக் கூடாத பாவங்கள் பல. அவற்றை யெல்லாமே செய்தாலும், வருந்துதல், நோன்பிருத்தல் முதலியவைகள் மூலம் கழுவாய் தேடிக்கொள்ளலாம் என்றும் நன்றி மறக்கும் தவறு செய்தால் கழுவாய் இல்லையென்றும் கூறுகிறது தமிழரின் வாழ்வியல் காட்டும் புறநானூறு.
"ஆன்முலை யறுத்த அறனிலோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவென"
என்று கூறி, நிலமே நடுக்குற்றுப் பெயர்ந்தாலும் நன்றி மறக்கக் கூடாதென வலியுறுத்துகிறது. அது.
நிலம்புடை பெயர் வதாயினு மொருவன்
செய்திகொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம்பா பிற்றே ஆயிழை கணவ"
என்றும் பேசுகிறது.
கற்றோர் ஏத்தும் கலித்தொகையும், ஒருவன் தனக்கு இடர் வந்துற்றபோது உதவியவர்க்கு அவர்க்குத் தேவைப் படும் காலத்தே உதவாது போனால், தானே தானாகத் தேய்வான் என்று கூறுகிறது. நன்றி கொன்ற பாவம் இவ்வுடல் ஒழிந்த பிறகும் கூட உயிரைத் தொடர்ந்து நின்று துன்புறுத்தும் என்றும் கலித்தொகை கூறுகிறது.
கற்பித்தான் நெஞ்சழுங்கப்
பகர்ந்துண்ணான் விச்சைக்கட்
டப்பித்தான் பொருளே போற்
றமியவே தேயுமா
ஒற்கத்துள் உதவியார்க்
குதவாதான் மற்றவன்
எச்சத்துள் ஆயினும் அஃது
ஈறியாது விடாதே காண்."
கவியரசன் கம்பன் ’உதவி கொன்றோர் உய்தற்கு உபாயமே இல்லை' என்று கூறுகின்றான். திருவள்ளுவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ வகுத்துக் காட்டிய அறநெறிகளுள் செய்ந் நன்றி மறவாமை ஒன்று. திருவள்ளுவர்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
என்ற குறட்பாவில் பயன்களை அல்லது விளைவுகளை அறுதியிட்டு உறுதியாகக் கூறுவது. உணர்ந்து இன்புறத் தக்கது.
எந்நன்றி என்பதன் மூலம், நன்றல்லா எல்லாவற்றினையும் உள்ளடக்கினார். கொன்றார்க்கும் என்பதி லுள்ள உண்மை நன்றல்லாதனவற்றைச் செய்யக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது. உய்வுண்டாம் என்ற சொல்வழி உய்தல் கூடும் என்று பொருள் கொள்ள முடிகிறதே யன்றி, உறுதிப் பாடில்லை. செய்ந்நன்றி கொன்ற மகற்கு உயவில்லை என்பதில் தெளிவும் உறுதியும் இருக்கக் காண்கிறோம். உய்வில்லை என்பது னாலேயே பல பிறப்புக்களிலும் உய்வில்லை என்பதும் பெறப்படுகிறது.
ஆதலால், நாம் அனைவரும் நன்றியறிந்து கடமைப் பாடுடையவர்களாக வாழ வேண்டும். நமக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றிக்கடப் பாடாக அவனை வாழ்த்துதல் வேண்டும். வாழ்த்துதல் மட்டும் இறைவனை மகிழ்விக்காது. அவன் உவக்க கூடிய வகையில் அவனுடைய அருமைக் காரியப்பாடாக இருக்கின்ற உயிரினங்களுக்குத் தொண்டு செய்தலும் ஒருவகை வழிபாடேயாகும். பல்வேறு உயிரவர்க்கத்தின் உழைப்பினாலும், உதவியினாலுமே நாம் வாழ்கின்றோம். மீண்டும் அந்த உயிர்வர்க்கத்திற்கு நாம் உதவி செய்ய வேண்டாமா எனன்? அதுவே நன்றி காட்டும் பண்பு. அதுவே சிறந்த இறை வழிபாடு.
ஆண்டவன் எண்ணத்தோடு அல்லது திருவருட் சிந்தனையோடு நாம் தொண்டு செய்யவேண்டும். நன்றி காட்டுதலும் ஒருவகை வழிபாடேயாகும்.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
--------------
15. எச்சத்தாற் காணப்படும்
மனித குலத்தின் விழுமிய சிறப்புக்களுள் ஒன்று தன்னை அவ்வப்பொழுது நினைந்தும், நினைவுறுத்தியும் ஒழுக்க நெறிப்படுத்திக் கொள்வதாகும். இவ்வாறு ஒழுக்க நெறிப்படுத்திக் கொள்ளும் முயற்சிக்கு இன்றியமையாத் தேவை பகுத்தறிவு. இங்கு பகுத்தறிவு என்பது நன்மை தீமைகளின் கூறுபாடுகளை ஆராய்தலும், அறிதலும் ஆகும்.
அங்ஙனம் ஆராய்ந்தறிகின்ற போழ்து. சார்பின்றி ஆராய்தல் வேண்டும். செய்திக்கு உரியாரிடத்திலும், அச் செய்தியால் விளையக்கூடிய பலாபலன்களிலும் பற்றுதல் இருக்குமானால் பகுத்தறிவுத் தரத்துடன் செயல் பட முடியாது. ஒன்றை அல்லது ஒருவரைச் சார்ந்து நின்று ஆராய்வதற்குப் பகுத்தறிவு என்று பெயரில்லை.
எந்தவிதமான சார்பும் பற்றுக்கோடும் விருப்பும் வெறுப்பும் இன்றிச் செய்தியைச் செய்தி அளவிலேயே ஆராய்ந்து அறிதலும், அவற்றை வலியுறுத்தலும் தம்மைச் சார்ந்தோரை வழி நடத்துதலும் போற்றுதலுக் சூரிய பண்பாடாகும். இப் பண்பாட்டையே நடுவு நிலைமை என்று அற நூல்களும் ஒழுக்க நூல்களும் வலியுறுத்துகின்றன.
திருவள்ளுவர் நடுவு நிலைமை என்றே ஒரு அதிகாரம் வைத்தார். நடுவு நிலைமைக் கொள்கையை மேற் கொண்டொழுகுதலை ’தவம்' என்று கூடச் சொல்லலாம். நடுவு நிலைமைக் கொள்கையை ஏற்றுக்கோடலில் வருகிற இடுக்கண்களைத் தொல்காப்பிய மெய்ப்பாட்டி யலிலே பேராசிரியர் விளக்குகின்றார்..
செஞ்சாந் திரியினும் ஏத்தினும் போத்தினும்
நெஞ்சோர்ந் தோடா நிலைமை.
என்று காட்டி 'அது காமம் வெகுளி மயக்கம் நீங்கினோர் கண்ணே நிகழ்வது" என்றும் பேசுகின்றார்.
நடுவு நிலைமைக் கொள்கையுடையோர் விருப்பு வெறுப்புக்களினின்றும் விடுதலை பெறுதல் வேண்டும். இறைவனும் "வேண்டுதல் வேண்டாமை இலான்” அன்றோ? அவ் இறைவனை வாழ்த்தி வணங்குகிறவர் களுக்கும், இக் குணவியல்பு இன்றியமையாததுதானே!
நடுவு நிலைமைக் குணம் இல்லார், நல்லவர்களாக இல்லாததோடு மட்டுமின்றித் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தீயவர்களாக இருப்பதோடு மட்டுமின்றி மற்றவர்களையும் கெடுத்து அறமில்லாத வழிகளில் செலுத்துவார்கள்.
அரசு அமைச்சின் வழி. அமைச்சு கெட அரசு கெடும். கெட்ட அரசு - கொடுங்கோல் அரசு, கதிரவன் சுடுகிக் காய்கின்ற காய்ச்சல் பயிர்களைச் சுடுதல் போன்று மக்களைச் சுடும். ஆதலால், அமைச்சர் நடுவு நிலைமை உடையோராயிருத்தல் வேண்டும், இக்கருத்தினையே பாலைக் கலி ,
"நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக்
கொடிதூர்ந்த மன்ளவள் கோல்போல் ஞாயிறு
கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினங் தெரிதலின்"
என்று பேசுகிறது.
நியாயம், நியாயமின்மை ஆகியவற்றிற்குக் கருவி நடுவு நிலைமை யுணர்வேயாகும். செல்வர்க்கும், வறியர்க்கும் ஒப்ப நியாயம் வழங்குவதே - வாழ்வியல் முறை. இதனை ,
முறை தெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்
இறை தெரியா நேரொக்கல் வேண்டும்"
என்று பழமொழி பேசுகிறது. ஆனால் உலகியலில் இன்று செய்தியை ஆராய்வதற்குப் பதிலாகச் செய்தி யாரால் சொல்லப்படுகிறது என்றே பார்க்கப்பெறுகிறது. மேலும் "செய்தியைச் சொல்லுகிறவர்கள் செய்தும் காட்ட வேண்டும் - அப்பொழுதுதான் சொல்லலாம்” என்றும் சொல்லப்படுகிறது.
தீமையின் அனுபவத்தின் விளைவில் தான் நன்மை அரும்புகிறது. ஆனாலும், அந்த நன்மையைத் தோற்று விப்பதற்குக் காரணமாக இருந்த அந்தத் தீய அனுபவத்தில் எப்படி நன்மையைக் காண முடியும்? அதனால் ஆராய்வு செய்தி பற்றியதாகவே இருத்தல் வேண்டும்.
நடுவு நிலைமைக் கொள்கை பண்படாத சமுதாயத்தில் - நட்புலகின் தொடக்கத்தில் இன்பம் இருக்காது. மாறாகத் துன்பம் தரும். நண்பர்களும் பகைவர்களாவர். எனினும், தொடர்ந்து நடுவு நிலைமைக் கொள்கையைக் கடைப்பிடித் தொழுகின் இறுதியில் இன்பம் வந்தெய்தும் ஆகவே தன்னுடைய வாழ்க்கை - தன்னலம் ஆகியவற்றை விடக் கொள்கைக்கும் சீலத்திற்குமே உயர்வு தந்து ஒழுகுதல் வேண்டும்.
அங்ஙனம் ஒழுகிய ஒருவன் அக்கொள்கையின் காரணமாகவே இறந்து பட்டாலும் கூட உலகத்து மக்கள் அக்கொள்கைக்கும் சீலத்திற்குமே உயர்வு தந்து ஒழுகுதல் வேண்டும். அந்தக் கொள்கைகள் தங்கி நின்று ”விளக்கம் பெற வாய்ப்பில்லாது போயிற்றே" என்று உலகத்து மக்கள் இரக்கமுறுதலின் மூலம் புகழ் சேர்ப்பர். நடுவு நிலைமையை "நன்னர் நடுவு" என்று நெய்தற் கலி பாராட்டுகிறது. அதாவது. "நன்மையை உடைய நடுவு நிலைமை" என்கிறது. திருவள்ளுவர்,
தக்கார் தகவிலர் என்பர் அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
என்கிறார். இக்குறட்பாவுக்கு உரை கண்ட பரிமேலழகர் எச்சத்தை நன்மக்கள் மீதேற்றினார். அதோடு இயற்கைக்கு மாறாக - உடற்கூற்றுக்கு முரண்பாடாக மக்கட்பேறு உண்டாதலையும் இல்லாமற் போதலையும் உள்ளடக்கியும் உரை கண்டுள்ளார்.
நன்மக்கள் என்ற உரை ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியது. பின்னையது ஏற்றற்கில்லை. மணக்குடவர் ஆரவாரத் தொழிலின் மீதேற்றினார். காளிங்கர் ஒழுக்கத் தின்பாற் படுத்தினார். மேற்கண்ட உரைகள் அனைத்தும் ஆராய்ச்சிக்குரியனவாகவே தோன்றுகின்றன. திருவள்ளுவரின் திருவுள்ளத்தைக் கண்ட அமைதி, தோன்றவில்லை. மேலும், உரையாசிரியர்கள் தத்தம் காலத்தே வழக்கில் இருந்த செய்திகளின் சார்பிலேயே உரை எழுதியிருக்கின்றனர்.
இலக்கண மரபுப்படி எஞ்சுதல் எச்சம் ஒருவனுடைய மரணத்திற்குப் பிறகு அவனுடையதாக இந்த உலகில் எஞ்சுவது அவனுடைய புகழ் அல்லது பழியேயாகும். நடுவு நிலைமை கொண்டொழுகியோருக்குப் புகழ் நிற்கும். அல்லாதோர்க்குப் பழி நிற்கும்.
வரலாற்றுப் போக்கிலும் இவ்விரண்டு காட்சிகளையும் பார்க்கிறோம். பாரியின் புகழ் எஞ்சி இன்றும் உலவுகிறது. அழுக்காற்றின் காரணமாக நடுவிகந்து பாரியின் பறப்பு மலையை முற்றுகையிட்ட மூவேந்தரின் இகழ்ச்சியும் - பழியும் இன்றும் எஞ்சி நிற்கிறது. ஆதலால்,
தக்கார் தகவிலர் என்பர் அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
என்ற குறட்பாவுக்கு - எச்சத்தாற் காணப்படும் என்பதற்கு அவர்களுக்குப் பின் எஞ்சி நிற்கின்ற புகழ் அல்லது பழி இவையே. அவர்களின் நடுவு நிலைமைச் சிறப்பைக் காட்டும் என்று பொருள் காண்பதே சிறப்பாகத் தெரிகிறது.
--------------
16. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்
மனிதனைக் கெடுதலில் வீழ்த்தும் குணக் கேடுகளில் தலையாயது ஆணவம். ஆணவத்தின் வழிப்பட்டது அகங் காரம். அகங்கார குணம் படைத்தவன் பிறரை மதிக்க மாட்டான். நல்ல வார்த்தைகள் பேச மாட்டான் இழித்துப் பேசுதலையும், பழித்துக் கூறுதலையுமே தொழிலாகக் கொள்வான். அதன் காரணமாகப் பகை வளர்ப்பான்; நண்பர்களை இழப்பான். தான் உயர்ந்தவன் என்ற நம்பிக்கை அவனிடத்தில் இருப்பதனால், வளர்ச்சிக் குரிய கூறுபாடுகள் அவனிடம் இரா.
அவன் வாழ்க்கையில் மாறுதலும் இருக்காது - வளர்ச்சியும் இருக்காது. ஆணவத்தின் பகை அடக்க முடைமை. அடக்கமுடைமையை அணிகலனாகக் கொண்டவர்களுக்கு ஆணவத்தின் வாசனையே இருக் காது. பணிவும் இன்சொல்லுமே அவர்கள் பால் குடி கொண்டிருக்கும்.
அடக்கமுடைமை என்பது அச்சத்தினால் பணிந்து செல்லும் கோழைத்தனத்தைக் குறிப்பதன்று. எதிர்த் தாக்குதல் செய்யும் ஆற்றல் இருந்தும், அதனைச் செய்யாமையே அடக்கமுடைமை ! அறிவு, செல்வம், புகழ் ஆகியவைகள் இல்லாமற் போயினும் அடக்கமுடைமையின் காரணமாக மேற்கண்டவற்றைப் பெறுவதோடன்றிச் சிறப்பாகவும் வாழமுடியும்! ஆனால், மேற்கண்ட எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் அடக்கம் இல்லாமற் போனால், அவர் பெற்றிருக்கிற அனைத்திலுமாய சிறப்புக்களையும் இழந்து இழி நிலை எய்துவார். ஆகை யால் நற்குணங்களுள் மிகமிகச் சிறந்தது அடக்கம் உடைமை!
அடக்க முடைமை எல்லோருக்கும் தேவை. எப்பொழு தும் தேவை. அதுவும் எல்லாவிதமான தகுதிப்பாடுகளும் இருக்கின்ற போழ்து, அடக்கமுடையவராக இருத்தல் சிறப்பிற்கெல்லாம் சிறப்பு.
'ஒருவனுடைய இயல்பான பண்பை அவனுடைய செல்வம், புகழ், பதவி ஆசிய தகுதிப்பாடுகள் உயர்கின்ற போழ்து காணவேண்டும்' என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. பொதுவாக அறிவினாலும், செல்வத்தி னாலும், பதவியினாலும், தவத்தாலும் இன்ன பிறவற்றா லும் செருக்கு தோன்றுவதுண்டு.
அறிவினால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று அருணந்தி சிவாச்சாரியார் ; செல்வத்தால் செருக்கடைந்து அடக்கப்பெற்றதற்குச் சான்று ஜார் பேரரசன். பதவியினால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று நான்முகன். தவத்தினால் செருக் கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று கொங்கண மாமுனி.
ஆதலால் , திருவள்ளுவர் அறிவு, செல்வம், புகழ், பதவி முதவிய இல்லாதார் அடக்கப் பண்பில்லாதவராக இருப்பதைவிட இவையனைத்தும் உடையார் அடக்கப் பண்பில்லாதவராக இருப்பது ஆபத்தானது என்று குறிப்பிடுகிறார்.
ஆம், செல்வத்திற்குப் பிறிதொரு செல்வமாகத் திகழக் கூடியது அடக்கமுடைமை. ஆதலால், 'எல்லார்க்கும் தன்றாம் பணிதல்' என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
அடக்கமுடைமை விரிந்த ஒழுக்க நெறி. ஒழுக்கத்தின் பாற் பட்டதாகவும் அடக்கத்தினைக் கருதலாம். கற்றோர் போற்றும் கலித்தொகை அடக்கம் அறிவால் சிறந்த தென ஆராயப் பெற்று முடிவு ஏற்றுக்கொள்ளப் பெற்றது' எனக் குறிப்பிடுகிறது.
வேண்டியவாறு ஒழுகுதலை அடக்கமின்மை என்றும், ஆற்றல் இருந்தும் அடங்கி நிற்றலே அடக்கமுடைமை என்றும் கலித்தொகை பேசுகிறது.
"புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள்
இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி"
என்பது கலித்தொகை. தோற்றத்தால் புரவலன் - வாரி வழங்குவதில் வள்ளல் - எனினும் இரந்து வாழ்வோர் கூறி இரக்கின்ற பணிவான மொழிகளைச் சொல்லிப் பழகு கின்றானாம். இதற்குப் பழங்கால அரசர்கள் புலவர் களிடத்தே பழகிய முறையைச் சான்றாகக் காட்டலாம்.
'கொள்ளிக் கட்டை கூரையைக் கொளுத்தும் ஆற்றல் உடையது. ஆயினும் கூரையைக் கொளுத்தும் முன், கூரையில் செருகப் பெற்ற பொழுது அது பலருக்குத் தெரிவதில்லை. அதுபோல அதியமான் மாற்றாரை வீழ்த்தும் வல்லமையுடையோனாகக் களத்தே தோன்றி விளங்குவான். ஆயினும் தன்னுடைய நண் பர்கள், உறவினர்கள் மத்தியில் இருக்கும் பொழுது அடங்கியே இருப்பாள்"
என்று அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாராட்டுகிறார்.
இல்லடைச் செருகிய நெலிகோல் போல் என்பது ஒளவையின் வாக்கு. அடக்கமின்றி நடத்தலை தருக்கித் தலையில் நடந்தேன்' என்று மாணிக்கவாசகர் குறிப்பிடு கிறார். தருக்கித் திரிவோரை 'நெறியில் நீங்கியோர் என்று பேசுகின்றார் இளங்கோவடிகள்.
அதனாலன்றோ சிவநெறி விளக்க நூலாகிய சிவஞான சித்தியார். 'சைவ சீலங்களுள் முதன்மையாக எடுத்துக்கொள்ளக் கூடியது தாழ்ந்து செல்ல்' என்று குறிப்பிடுகின்றது.
தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது'
என்பது சித்தியார் வாக்கு.
ஆக , அடக்கமுடைமை ஓர் உலகியல் ஒழுக்கம். ஏன்? அருளியல் ஒழுக்கமும் கூட. அடக்கமுடைமை இம்மையில் ஏற்றம் தரும். இனிய புகழ் சேர்க்கும். மறுமையில் திருவடி இன்பம் தரும்.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
என்பது திருக்குறள்.
---------------
17. குடிமை
ஒழுக்கம் என்பது ஒன்றல்ல - இரண்டல்ல. பல கூறுகளை உடையது. எனினும் இரண்டு பெரும் பிரிவாக ஒழுக்க நெறியை வகைப்படுத்தலாம். தனி மனிதன் தன் னுடைய வாழ்க்கை வட்டத்தில், தனக்காகக் கடைப் பிடிக்கும் ஒழுக்கம் ஒன்று. பிறிதொன்று தனிமனிதன் தான் வாழும் சமுதாயத்தோடு தொடர்புகொள்ளும் முறையில் கடைப்பிடிக்கும் ஒழுக்கம்.
இந்த சமுதாய ஒழுக்கத்தைக் குடிமை ஒழுக்கம் என்று சொல்லலாம். இதையேதான் குடிமைப் பயிற்சி என்று தமிழிலும், Citizenship என்று ஆங்கிலத்திலும் வழங்குகிறார்கள்.
ஒரு நாட்டின் பெருமை அந் நாட்டுக் குடிமக்களின் சிறப்பாலேயே அமைகின்றது. குடிமக்களின் நிலையும் சமுதாயக் கூட்டு ஒருமைப்பாட்டுணர்வு இன்றியமை யாதது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமுதாய வாழ்வியல் நூலை ஆக்கித்தந்த திருவள்ளுவர் இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றார். திருக்குறளின் ஒழிபியலே குடியியல் பேச எழுந்ததாகும்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
என்பது குறள். இக் குறளுக்கு சாதிகள் வழிப்பட்ட நச்சு நாகரிகச் சூழலில் வாழ்ந்த பரிமேலழகர் சாதி முறைகளுக்கு உட்பட்டு உரை எழுதுகின்றார். ஒழுக்கத்திற்கு அவர் தரும் விளக்கம் "அவரவா வருணத்திற்கேற்ற ஒழுக்கம்' என்பது வள்ளுவத்தில் இல்லாத வருணத்தைக் கூட்டிக் கலக்க முயற்சிக்கிறார்
ஆனால் திருவள்ளுவர் கருதிய கருத்து வேறு. ஒரு மனிதன் ஒரு பெரிய சமுதாயத்தில் ஓர் உறுப்பின்னாக இருக்க வேண்டுமானால், அந்தச் சமுதாயம் முழுமைக்கும் நலன்தரக் கூடியதென முடிவெடுக்கப் பெற்ற அடிப் படைச் சமுதாய ஒழுக்கங்களைக் கடைப் பிடிக்க வேண்டும். குடி என்பது நாட்டின் குடிமகன் என்பதை உணர்த்துமே தவிரச் சாதியை உணர்த்தாது.
தனிமனித ஒழுக்கங்களைப் போலவே, நாட்டு ஒழுக் கங்கள் என்றும் சில உண்டு. சிறப்பாக இன்று நம் பாரத நாட்டை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னுடைய உரிமையைப் பெற மூன்று ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இவை இன்றையச் சூழலில் பாரத நாட்டுச் சமுதாயப் பொது ஒழுக்கம்.
இந்த நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களும் சாதி, இன, மொழி, மத வேறுபாடின்றி ஒரே குலம்' என்று கருதிப் போற்றுவது முதல் ஒழுக்கம்.
தன்னிச்சை வழி இயங்காமல், பலர் கருத்தறிந்து, பலரின் முடிபுக்கிணங்கி வாழும் மக்களாட்சிப் பண்பு இரண்டாவது ஒழுக்கம். அடுத்து இந்நாடு பொது வீடு - இவ் வீட்டிலுள்ள உடைமை அனைத்தும் எல்லோரும் அனுபவிப்பதற்கேயாம். சிலரிடத்து புளிச்ச ஏப்பமும், இன்னும் பலரிடத்தில் பசியேப்பமும் இருப்பது - இருக்க அனுமதிப்பது நியாயமுமல்ல - நீதியுமல்ல.
ஆதலால் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று அனுபவிக்கக் கூடிய சமவாய்ப்புச் சமுதாயத்தை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது மூன்றாவது ஒழுக்கம். வாழ்வில் இம் மூன்று ஓ ழுக்கங்களையும் கடைப்பிடித்து ஒழுகுவோரே இந்தியக் குடியுரிமைக்கு ஏற்புடையராவர். அவர்தம் பெயரே பாரத நாட்டு மக்கள் பட்டியலில் என்றும் நின்று விளங்கும்.
அப்படி மக்கட் பண்புடன் வாழாதார் பெயர்கள் மக்கள் பட்டியலிலிருந்து விலக்கப்பெற்று, இழிதன்மை யுடைய கால் நடைகளின் கணக்கில் சேர்க்கப்படும். இக் கருத்திலேயே 'ஒழுக்கமுடைமை , குடிமை' என்ற குறள் எழுந்தது.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
---------------
18. உண்மைக் குடிமக்கள் யார்?
மனித சமுதாய அமைப்பின் வழியிலேயே தான் நகர, நாட்டு அமைப்புகள் தோன்றுகின்றன. மனித சமுதாயம் நாடுகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில், நாட்டின் வழி மனித சமுதாயம் பெருமை பெறுகிறது. புகழ் பெறுகிறது. இந்த உணர்ச்சி வடிவத்தில் வோன்றுவது தான் தாய் நாட்டுப் பற்று.
ஒரு நாட்டின் குடியுரிமை பெற்று வாழுதல், மனிதனின் விழுமிய சிறப்புகளுள் ஒன்று. உலகில் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை பெறாத மக்கள் நாடற்றோர் என் வாழ்கின்றார்கள். அது பீடன்று. மேலும் நிரந்தமான நல்வாழ்வுக்கும் உத்தரவாதமில்லை.
ஒரு நாட்டின் சட்டபூர்வமான குடியுரிமை பெற்றால் மட்டும் போதாது. அந் நாட்டு மக்களின் மொத்த நலனை எண்ணத்திற் கொண்டு ஒழுகுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். தனிமனித ஒழுக்கங்களைப்போல, நாட்டு ஒழுக்கங்கள் என்று சில இருக்கும். அவ்வொழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்களே உண்மையான குடி மக்கள்.
ஒரு நாட்டில் பிறந்து விட்டதனாலோ அல்லது மக்கள் தொகைக் கணக்கெடுப்பவர்கள் கணக்கில் சேர்த்து கொண்டமையினாலோ ஒருவர் ஒரு நாட்டின் உண்மையான குடிமகனாகி விடுவதில்லை.
முடியாட்சி நிலவிய காலத்தில் தோன்றிய திருக்குறள் சிறந்த குடிமக்கள் ஆட்சியைப் பற்றியும் கூறுகிறது.
திருவள்ளுவர், நாட்டு ஒழுக்கம் பற்றி, நகைச்சுவை ததும்பப் பேசுகின்றார்; மக்கட் கணக்கு எழுதி வைக்கும் அலுவலர், மக்கள் வரிசையில் ஒருவர் பெயரை எழுதி வைத்திருந்தார்.
ஆனால், அவரிடத்திலோ , சமுதாய ஒழுக்கம், நாட்டு ஒழுக்கம் என்பது சிறிதளவும் இல்லை. அவர் சாதிப் பகையை வளர்ப்பார். ஒன்றுபட்டு வாழ்தலுக்கு உலை வைப்பார். பிறர் கருத்தை அறிய மறுப்பார். தன் கருத்தையே சாதிப்பார். எல்லாரும் எல்லா நலன்களும் பெற்று வாழ்கின்ற சமநிலைச் சமுதாயத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார். தன் லாபம் ஒன்றையே கருதுவார்.
சமூதாய பகை ஒழுக்கக் கேடுகளாகிய அழுக்காறு. வெஃகுதல், வெகுளி, புறங்கூறல், கலகம் செய்தல் ஆகியவற்றையே மேற்கொண்டு ஒழுகுவார். சமுதாய ஒழுக்கத்தை, கட்டிக் காக்கின்ற அன்புடைமை, பொறை யுடைமை, ஒப்புரவறிதல் ஆகிய இனிய ஒழுக்க நெறிகள் அவர் அறியாதன. இப்படிப்பட்ட ஒருவர் பெயர், மக்கள் கணக்கில் இருக்கிறது.
திருவள்ளுவர் சொல்கிறார், மக்கள் கணக்கிலிருந்து அவர் பெயரை நீக்கிவிடும்படி. நீக்கிவிடுவது மட்டுமின்றி, இழிந்த உயிர்வர்க்கங்களுக்கு ஏதாவது கணக்கிருந்தால், அதில் சேர்த்துக் கொள்ளும்படியும் சொல்லுகின்றார்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
குடிமைப் பண்பை எவ்வளவு அழகாகத் திருவள்ளுவர் விளக்குகிறார். பரந்த பாரதநாட்டு மக்களிடத்தில், சிறந்த குடிமக்கள் இயல்பு வளர்ந்து, நாட்டு ஒழுக்கம் சிறந்து வளர வேண்டும். பாரதநாட்டில் தொட்டு ஒழுக்கமாகச் சிலவற்றை நாம் தியதி செய்து கொண்டு அந்நெறியில் ஒழுக வேண்டும்.
பாரத நாடு மிகப் பெரிய நாடு. பல்வேறு மக்கள் வாழும் பெரிய நாடு. பல்வேறு சமய நெறிகளைக் கொண்டு ஒழுகுகிற நாடு. எனினும் மொழி, சமய வேற்றுமைகளைக் கடந்த ஓர் உணர்ச்சி பூர்வமான ஒருமைப் பாட்டைக் கொள்வது, நமது நாட்டொழுக்கங்களில் ஒன்று.
இரண்டாவதாக நாம் அனைவரும் விரும்பி, ஒரு பரிபூரண மக்களாட்சி முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். மக்களாட்சி முறைப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் சிந்திக்கவும், கருதவும் உரிமை உண்டு. அவ்வழி அஃதானது, கருத்து வேறுபாடுகளின் காரணமாகக் காழ்ப்பும், பகையும் காட்டுதல் கூடாது. அவ்வழி , கலகங்களும் தோன்றக் கூடாது.
மக்களாட்சி முறை நிலவும் நாட்டில் நல்ல கருத்து மாற்றம், மனமாற்ற முயற்சிகள் நடைபெற வேண்டுமே ஒழிய, பகைவழி முயற்சிகள் கூடாது.
மூன்றாவதாக, இந் நாடு கூட்டுக் குடும்ப அமைப் புடையது. இந்நாட்டின் உடைமைகள் அனைவர்க்கும் பொதுவுடைமை. இந் நாட்டின் செல்வ வாழ்வு சமநிலை உடையதாக இருக்க வேண்டும். எல்லாரும் எல்லா நலன்களும் பெற்று வாழும் சமநிலைச் சமுதாய அமைப்பை நாம் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
இந்த மூன்று தலையாய ஒழுக்கங்களும் இன்றைய பாரத நாட்டின் நாட்டொழுக்கங்கள். இவ்வொழுக்கங்களை மனப்பூர்வமாக சற்று ஒழுகுபவர்களே, திருவள்ளுவர் கருத்துப்படி, இந்நாட்டின் உண்மையான குடிமக்கள் ஆவார்கள்.
---------------
19. நிலத்தியல்பு
திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். கனவிலும், கற்பனையிலும் திளைக்கும் வாழ்க்கைப் போக்கைத் திருக்குறள் ஒதுக்கித் தள்ளுகிறது. மேலும், திருக்குறள் உணர்ச்சியைத் தொடுகின்றது - தூண்டுகிறது - தூண்டி வளர்க்கிறது.
எனினும், உணர்ச்சிகளால் மட்டும் நடத்தப் பெறும் வாழ்க்கை இயலை - வாழ்க்கைப் போக்கைத் திருக்குறள் மறுக்கிறது. இன்ப வேட்கை கொண்டு நடத்துகிற வாழ்க்கையை விட, துன்பங்களால் தொடரப்பெற்ற வாழ்க்கையாயினும் நெறிமுறைப் பட்டதாக - வளர்ச்சி யுடையதாக அமைவதே சிறந்தது என்பது திருவள்ளுவர் கருத்து.
திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் எளியன போலத் தோன்றும். ஆனாலும், உணர்ச்சி வசப்பட்ட மக்களுக்கு அவை அரியவாம். அறிவும் தெளிவும் கொண்ட மனிதர்களுக்குத் திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் எளியன, இனியன. திருக்குறள் பொறையுடைமைப் பண்பை மிகுதியும் வற்புறுத்துகின்றது.
பொறையுடைமைப் பண்புக்கு திருக்குறள் கூறும் உவமை நிலம். நிலம் கொடிய கருவிகளால் தன்னை கொத்திக் கிளறி, கொடுந்துன்பம் இழைப்பாரையும் வீழ்த்தாமல் தாங்குகிறது. தனது மாசற்ற மேனியில், மாசுகளை உண்டாக்கினாலும் பொறுத்தருளி அவர்கட்கும் வாழ்வு தருகிறது. பொறுப்பதோடு மட்டுமன்றி, அத் துன்பங்களையே தன்னுடைய செழிப்புக்கு உரியவைகளாக மாற்றிக்கொண்டு தன் பெருமையை உயர்த்தி வளம் பெருக்கித் தீங்கிழைத்தோருக்கும் உண்ண உணவும் பருக நீரும், தந்து வாழ்விக்கிறது.
ஆக, தீங்கு செய்தோரைப் பொறுத்தல், அத் தீங்குகளையே தன்னுடைய வளர்ச்சியின் நிலைக்களன்களாக மாற்றிக்கொண்டு வளர்தல், பொறுத்தலினும் மிஞ்சிய வாழ்விக்கும் பணியினைச் செய்தல் ஆகியவற்றால் நிலத்தின் பெருமை உயர்கிறது.
அதுபோலவே, தீங்கு செய்வோரை எதிர்த்து அழித்தல் நலமன்று. அங்ஙனம் அழித்தால், தீங்கு செய்யப்பட்டார் மட்டும் அழிவதில்லை. தீங்கு செய்தாரின் நல்லியல்பும் கெட்டு - காலப்போக்கில் அவர்தம் செங்குருதி முறிந்து அழிவையும் அணைத்துக் கொள்ள நேரும்.
உலகியல் பரிணாம தத்துவப்படி, ஒன்றிலிருந்து பிறிதோன்று தோன்றாது. அழிவிலிருந்து அன்பு தோன்ற முடியாது - ஆக்கம் தோன்ற முடியாது. அழிவிலிருந்து அழிவே தோன்றும்.
பகைவரை ஒறுக்கத் தோன்றும் பகையுணர்ச்சி நம்மையும் அழித்தொழிக்கும். அதனாலன்றோ, புராணங்களிலும் கூட அசுரர்களின் அழிவு பேசப்படவில்லை. அவர்களின் மனமாற்றமே பேசப்படுகிறது.
பகைவர் நமக்குச் செய்யும் தீங்குகளால் நாம் அழிகிறோம் என்பது உண்மையன்று. நம்முடைய குறைகள் மிகுந்திருக்குமானால் பகைவர்களுக்கு இடமேற்படும். இதற்கு மாறாக அவர்களால் நமக்கு விளையும் துன்பங்களையும் தொல்லைகளையுமே வாயில்களாகக் கொண்டு, புது அறிவும் புது முயற்சியும் செய்வோமாயின் கிளறிய நிலத்தில் பயிர் விளைவது போல நாமும் அறிவால் - ஆற்றலால் செழித்து வளர முடியும்,
நம்முடைய வளர்ச்சி மிகுகின்றபோது, பகைவர்களும் பகையாற்றல் ஒடுங்கி நம் நிழலில் வாழ முற்படுவர். நாமும் வாழ்வளிக்க முடியும்.
பழிவாங்குதல், பழியினைச் சுமத்தும் - புகழைக் கெடுக்கும். பொறுத்தல் புகழைத் தரும் - புதுமை நிறைந்த பொலிவுடைய எதிர்காலத்தை உருவாக்கும். திருக்குறளைப் படித்து, சிந்தனை செய்து வாழ்க்கையோடு இணைத்து, செயல்படுத்த முயல்வோமாக!
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
-----------
20. ஏன் சுற்றம் கெடும்?
குற்றம் செய்தவனுக்கு, குற்றத்திற்குத் தண்டனை உண்டு. அதுதான் நியாயமும் நீதியும்கூட. ஆனால் திருவள்ளுவர் ஒருவன் செய்கின்ற குற்றத்திற்காக, அவனுடைய சுற்றம் முழுவதுமே உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும் என்று கூறியுள்ளார். இதில் என்ன நியாயத்தன்மை இருக்கிறது என்று ஆராய்தல் வேண்டும்.
ஒரு தனி மனிதன் உருவத்தால், தோற்றத்தால் தனி மனிதனைப் போலவே காட்சியளிக்கிறான். அவன் பருவுடல் தோற்றத்தால் தனி மனிதனே தவிர, உண்மையில், அவன் தனி மனிதனல்லன். ஒரு தனி மனிதனிடத்தில் முக்கியமாக விளங்குவன மனமும் உள்ளமுமேயாம்.
அதாவது மனச்சாட்சியும், உள்ளத்து உணர்வுமே மனிதனின் வாழ்வில் இன்றியமையாதன. உணர்வோ அறிவோ, ஒழுக்கமோகூட, தனி தனிதனின் விளைவுகளுமல்ல; படைப்புக்களும் அல்ல. அவற்றை அவன் வாழும் மனித சமுதாயத்திலிருந்தே எடுத்துக் கொள்கிறான்.
உள்ளுணர்வுகளை உருவாக்குவதில், ஒரு , தனி மனிதன் வாழும் சுற்றம் மிக முக்கியமான
பங்கை வகிக்கின்றது. திருவள்ளுவர் 'மனத்துளது போலக் காட்டி ஒருவருக்கு இனத்துளதாகும் அறிவு' என்கிறார்.
”குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகளுக்கு எல்லாம்" என்று கம்பனும் பேசுவான். 'ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் வாழும் ஊரில் வாழ்தல் முப்பையும் தடுக்கும்’ என்று புறநானூறு பேசும்.
ஒருவன் ஒருவனுக்கு ஒன்றை வழங்க இருக்கிறான் அதை அழுகாறுடையவன் தடுக்கிறான். தடுக்கும் குணம் தன்னலத்தால் மட்டும் வந்து விடுவதில்லை. தன்னலத்தின் நோக்கம், தான் அனுபவிக்க வேண்டும் என்பதாகும். இங்கு அனுபவிக்க வேண்டுமென்று எடுத்துக் கொள்வதில்லை. மற்றவர்களுக்கு வழங்குவதைத்தான் அழுக் காறுணர்வோடு தடுக்கிறான். அழுக்காற்றுக்கும் அவாவுக்கும் வேறுபாடுண்டு.
அழுக்காறு பிறர் துய்ப்பதைக் கண்டு பொறாதது. எனவே அவன் அனுபவிக்காமல் இருந்தாலும் இருப்பான். மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்றே எண்ணுவான். அழுக்காறுடையவன் தன்னையும் உயர்த்திக் கொள்ள மாட்டான். மற்றவர் உயர்வையும் தாழ்த்துவான்.
இந்த அழுக்காற்றுணர்வு இயல்பாக ஒரு மனிதனிடத்து வந்து விடுவதில்லை. ஏன்? ஒழுக்கமே தனி மனிதன் படைத்துக் கொண்டதல்ல. அவனுடைய குடும்பமும் சூழ்நிலையுமே படைத்துக் கொடுக்கின்றன ஆகவே அழுக்காற்றுக் குணத்தைக் கற்றுக் கொடுத்த சுற்றம் கெடும் என வள்ளுவர் கூறுகிறார்.
மேலும், ஒருவன் தன்னுடைய சுற்றத்திற்குத் தேவையாக இருக்கக் கூடும், என்ற எண்ணத்தில் அழுக்காறு கொள்கிறான். அந்த அழுக்காற்றுக்கும் காரணமாக இந்தச் சுற்றம் இருப்பதால் திருவள்ளுவர் சுற்றம் கெடும் என்று சொல்கிறார். ஆதலால் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்து வாழும் ஆர்வம் தனி மனிதனுக்குத் தேவையாக இருந்தாலுங்கூட, ஒழுக்க நெறிகளை, இளமையிலேயே படைத்துத் தருவது அவனுடைய சுற்றமேயாகும் என்பதை திருவள்ளுவர் தெளிவாகக் கூறுகின்றார்.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
--------------
21. அழுக்காற்றை அகற்ற வழி
மனித வாழ்க்கையின் சிறப்பியல்புகள் உணர்வுகளாலும் குணங்களாலும் அமைவனவேயாம். பல கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப் பெறுவதால் சுவர் எழுந்து வீடு உருவாகிறது. அவ்வீட்டின் நிழல் வாழ்வதற்கு இனிமையாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. அமைதியும் அளிக்கிறது. அது போல, பல்வேறு வகைப்பட்ட நல்உணர்வுகளாலும், குணங்களாலும் வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கை , சமுதாயம் என்ற கட்டிடத்தை எழுப்புகிறது.
அவ்வாறமைந்த சமுதாய அமைப்பு இனிய அமைதி கலந்த வாழ்க்கை அமைப்பைச் சமுதாயத்திற்குத் தருகிறது.
நற்குணங்களிலும் கூட ஒன்றிலிருந்து தொடர்ச்சியாகப் பல நற்குணங்களை வளர்க்கிற தாய்மை நிலையுடைய நற்குணமுண்டு. அழுக்காறாமை , அதாவது பொறாமைப் படாதிருத்தல், ஒரு முதனிலைத் தாய்மை நற்குணம். அழுக்காறாமையை மேற்கொண்டொழுகுவதன் மூலம், அவாவை அறுக்கலாம். ஆசைகளினின்று விடுதலை பெறலாம்.
ஏனெனில், ஆசையின் தாயே அழுக்காறு. ஆசையிலிருந்து விடுதலை பெறுவதால், வெகுளியினின்றும் விடுதலை பெறலாம். வெகுளியினின்று விலகினால் இன்னாச் சொற்களைப் பேசல், ஒறுத்தல் முதலிய பல்வேறு தீச் செயல்களினின்றும் விடுதலை பெறலாம். அழுக்காறு கொள்ளுதல் நரகத்தை இந்த நிலவுலகத்தில் உருவாக்குவதையே ஒக்கும்.
அழுக்காறு, கொண்டவரை மட்டும் அழிப்பதில்லை. யாரை நோக்கிக் கொள்ளப்படுகிறதோ அவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. முடிவில் சமுதாயம் முழுவதுமே பற்றி எறிந்துவிடும். தன்னைக் கொண்டவரையும் அழித்து, சமுதாயத்தையும் அழிக்கின்ற பேராற்றல் அழுக்காற்றிற்குண்டு. அதனால், பெறுதற்கரிய உயர்ந்த மாமேதைகளுக்கும் மகாத்மாக்களுக்கும் கூட துன்பம் விளைவிக்கப்படுகின்றது. ஏன்? கடைசியில் அவர்களை இழந்தே விடுகிறோம்.
உலக வரலாற்றில் நிகழ்ந்துள்ள போர்கள் யாவற்றுக்கும் அடிப்படை அழுக்காறேயாகும். இயேசு, நபிகள், சாக்ரடீஸ், அண்ணல் காந்தியடிகள் ஆகியோரை எல்லாம் காலத்திற்கு முந்தியே நாம் இழந்ததற்குக் காரணம் அழுக்காறே யாகும். அதனாலன்றோ , எந்த நற்குணம் இருந்தாலும், இல்லையாயினும் அழுக்காறாமை ஒன்றைப் பெற்றிருப்பது பெரும்பேறு என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
திருவள்ளுவர் அழுக்காறாமை என ஓர் அதிகாரமே வகுத்து, பத்துக் குறட்பாக்களில் அழுக்காற்றின் தீமையை விளக்குகின்றார். உலகியல் வழக்காற்றுச் சொல்லால் ”அழுக்காற்றைப் பாவி" என்று ஆத்திரத்தோடு குறிப்பிடுகின்றார், திருவள்ளுவர்.
அழுக்காறு என ஒரு பாலி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
என்பது திருக்குறள். பாவங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பதால் அழுக்காற்றைப் ’பாவி' என்று குறிப்பிடுகின்றார். அழுக்காறு வேறு - பாவி வேறல்ல , என்று கருத்தை விளக்குவதற்காக என ஒரு ’பாவி' என்று குறிப்பிட்டிருக்கிறார். சில தீமைகள் யாரை நோக்கிச் செலுத்தப்படுகிறதோ அவர்களுக்கே அதிகம் தீமை தரும்.
அழுக்காறு என்பதோ, செலுத்துபவர்களுக்கே அதிகத் தீமை தரும். அழுக்காற்றின் நிலைக்களன்கள் பெரும்பாலும் செல்வமுடைமை, அறிவுடைமை, புகழுடைமை ஆகியனவாம். இவற்றை, மற்றவர்கள் பெற்று விளங்குவதைக் கண்டு மனம் பொறுக்கமாட்டாமலும் அவற்றை அவர்களைப்போல் நன்கு முயன்று பெற, தமக்கு ஆற்றல் இல்லாமையாலும் தோன்றுவதே அழுக்காறு.
அழுக்காற்றின் காரணமாகப் பிறருடைய செல்வம், அறிவுடைமை, புகழுடைமை, ஆகியவற்றிற்கு, குற்றம் குறைகளைக் கற்பித்து, அழுக்காற்று நெஞ்சுடையோர் களங்கப்படுத்துவர். இதன் விளைவு. தன் முயற்சியை அழித்துக் கொள்ளுதல், பிறர் முயற்சிக்கும் ஊறு விளைவித்து அழித்தல், பொதுவில் - முடிவாக, முன்னேற்றமும் ஆக்கமும் தடைப்படுகின்றன. இதனை விளக்க வந்த திருவள்ளுவர் 'திருச் செற்றுத் தீயுழி உய்த்து விடும்' என்றார்.
அழுக்காறுடையான் ஒருவன் செல்வத்தைப் பெறுவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட மாட்டான். அவனுடைய முழுநேர வேலை குற்றங் காணல், தூற்றல், தீங்கு விளைவித்தல் ஆகியனவே. இத் தீயவரிடம் செல்வம் எப்படிச் சேரும்? ஆதலால் செல்வத்தை அழித்து என்றார்.
செல்வம் இன்மையின் காரணத்தாலும், அழுக்காற்றின் காரணத்தாலும் பல்வேறு தீச்செயல்களைச் செய்வதால் நரகத்திற்குச் செல்ல ஏதுவாகிறது. இதனைத் தீயுழி உய்த்து விடும் என்றார். இம்மைக்கு வேண்டிய செல்வம், மறுமைக்கு வேண்டிய வீடு இரண்டையும் கொடுப்பதால் அழுக்காறு கொடுமையினும் கொடுமை யானது. வள்ளுவரே 'பாவி' என்று வசைபாடுவாராயின் நம்நிலை என்ன?
அழுக்காறு கொள்ளுதல் தீது. முற்றிலும் உண்மை - முக்காலும் உண்மை. எந்த ஒரு தீமையும் தோன்றாமல் தடுப்பதும் பாதுகாக்க வழிவகை உண்டல்லவா? அத் தீமை தோன்றாமல் தடுப்பதும் சமுதாய நெறியில் மிகச் சிறந்ததாகும். கயவர்களின் அழுக்காறு மாற்ற முடியாதது. அவர்கள் கொல்லத்தான் பயன்படுவார்கள். ஆனாலும், சாதாரண - நடுத்தர மக்களிடமிருந்து அழுக் காற்றை அகற்ற, உடையோர் முயன்றால் முடியும். அழுக்காறு கொள்ளுதல் எப்படித் தீதோ அப்படியே பிறர் எளிதில் அழுக்காறு கொள்ளும்படி நடந்து கொள்ளுதலும் தீதாகும்.
அதனால் செல்வம் உடைமையினும் எளிய வாழ்க்கை - கொடுத்து. உவந்து - ஒப்புரவு அறம் பேணி வாழ்தல் அவசியம். அறிவுடைமையில் தன்னடக்கம் தேவை புகழை விரும்பாமல் அடக்கமாய் வாழ்தல் அவசியம். பிறர் புகழ்ந்து கூறும் சந்தர்ப்பங்களையெல்லாம் தவிர்க்க முயல வேண்டும். இங்ஙனம் வாழ்ந்தால் இல்லாதோரிடம் அழுக்காறு எழாமல் - தோன்றாமல் தவிர்க்கலாம். காரணம் அங்கு இன்மை அவ்வளவு பெரியதாகத் தோற்றம் அளிக்காது.
அழுக்காறாமை குணத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு முதன் முயற்சி, மற்றவர்கள் எல்லாவற்றையும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புதல் - பிறர் இன்பத்தில் தான் மகிழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் அழுக்காறு அகலும் - அருளியல் தோன்றும்.
அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
--------------
22. புறஞ்சொல்லும் புன்மை
திருக்குறள் நடைமுறை வாழ்வியலின் விளைவுகளை விளக்கும் நூல். குற்றங்களையும் குணங்களையும் அவற்றின் காரண காரியங்களையும் தெளிவாக விளக்கி வழி காட்டுகிறது. அதுமட்டுமன்று. ஒன்றின் முழுத்தன்மையையும் அளந்து காட்டுவதில் திருக்குறள் மிகச் சிறந்து விளங்குகிறது.
மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பகை, புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தல். புறங்கூறி வாழ்தலின் மூலம் பொய் பெருகுகிறது. பகை வளர்கிறது. நட்பு கெடுகிறது. நல்லவை தேய்கிறது. அல்லவை பெருகுகிறது.
புறங்கூறுதலைவிட மோசமான குணக்கேடு பிறி தொன்றில்லை என்று ஒழுக்க நூலார் வரையறுத்துக் காட்டுகின்றனர். ’புறங்கூறுதல்' வெறுப்பை வளர்க்கிறது. வெறுப்பு, வேற்றுமைகளை விளைவிக்கிறது - வேற்றுமைகள் பிரிவினைகளை உண்டாக்குகின்றன! என்று குவாரில்ஸ் என்ற மேனாட்டு அறிஞர் கூறுகிறார்.
மனித இயலும், திருவருட் சிந்தனையும் இல்லாத மானிதர்கள், தீமைகளைத் தோண்டி எடுக்கிறார்கள். அத் தீமைகளை உதட்டில் தாங்கிப் பகை என்னும் பெரு நெருப்பை எரிக்கிறார்கள். தற்காலிகமாகப் பிறர் குற்றத்தில் குளிர் காய்கிறார்கள். ஆனால் அடையக் கூடிய வயனோ அழிவு! அழிவு! அழிவு!
அதனாலன்றோ அப்பர் அடிகளும் கூட சமுதாயத் தோடு பழகுதற்குரிய இனிய பழக்கமாக, குணங்களைச் சொல்லியும் குற்றங்களைப் பேசியும் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
சொல்லுதலுக்கும் பேசுதலுக்கும் இடையேயுள்ள வேற்றுமையைப் பற்றி நாம் சாதாரணமாக நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் அப்பரடிகள் பெரிய வேற்றுமையைக் காண்கிறார். சொல்லுதல் என்பது பிறரிடத்தில் ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிய குற்றங்களைச் சொல்லுதலைக் குறிக்கும். அவ்வாறு சொல்லுதல் குற்றம். சொல்லுதல் மட்டும் குற்றமன்று. அத்தகு சொல்லாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் குற்றம்.
அதனாலன்றோ, அறங்கூறும் அவையில் இருபாலும் கேட்டு, மறுக்கவோ உடன்பாடாகவோ உரிய வாய்ப்புகள் முழுமையும் கொடுத்து, பின் அறங்கூறப் பெறுகிறது. ஆனால், இன்றோ புறங்கூறலே பெருகி வளர்ந்திருக்கிறது. அதையும் உண்மையென்று நம்பி உரியவரைக் கேட்காமலே கூட மாறுபாடும், சினமும் கொள்கிறவர்கள் பொறுப்பு வாய்ந்தவர்களில் கூட இருக்கிறார்கள் என் றால் என்னென்று கூறுவது?
ஒருவர் இல்லாதபோது அவருடைய குற்றங்களைச் சொல்லுதல் - கூறுதல் புறங்கூறல் ஆகும். அதனைத் கூடாதென்று தேவாரம் கூறுகிறது. அடுத்து. ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையிலும் கூட புறங்கூறும் குற்றம் விளக்கப் பெறுகிறது. "தீக்குறளைச் சென்றோதோம்" என்பது ஆண்டாள் வாக்கு. குறளை என்பது கோள், புறம் ஆகிய சொற்களைக் குறிக்கும். அதுவும் தீக் குறளை என்று சொன்னது உண்மையல்லாத பொய்யை, தீமை பயக்கக் கூடியதை வலியத் தாமே சென்று மற்றவர்களிடம் சொல்லுதலைக் குறிக்கும்.
அதனால், குற்றங்களைச் சொல்லுதல் தீது. குணங்களைச் சொல்லவேண்டும். குற்றங்களைப் பேசவேண்டும் என்கிறார் அப்பர் அடிகள். பேசுதல் என்பது நேரில் நின்று பேசுதலைக் குறிக்கும். ஒருவரை நேரில் சந்தித்துப் பேசும் பொழுது அவர் தம் குற்றங்களை இனிய முறையில் எடுத்துக்காட்டிப் பேசவேண்டும். அது குற்ற முடையார் திருந்துதற்கு வாய்ப்பாக இருக்கும். இதனையே திருவள்ளுவரும்,
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்னோக்காச் சொல்
என்று குறிப்பிடுகின்றார்.
புறங்கூறுபவர்கள் - பிறர் குற்றம் பேசித் திரிபவர்கள் அறம் பேசுவது போல நடிப்பார்கள். நன்மைக்காகப் பரிந்து பேசுவதாகப் பாவனை காட்டுவார்கள். நடிப்பிலும் பாவனையிலும் மயங்குகிறவர்கள், அவர் கூற்று உண்மையோ என்று ஐயப்படுவார்கள். ஐயத்தின் வழி களங்கம் பிறக்கும். களங்கத்தின் வழி மனங்கலந்த நட்புக் கெடும். பிரிவர் - பேதுறுவர்.
அதனாலன்றோ தமிழ் மறை, 'ஆழ்க தீயது’ என்றோதுகிறது. தீயவர் அழிதல் அன்று. அதனாலன்றோ , புராணங்களிலும் கூட, அரக்கர்கள் தீமை யொழித்து நல்லவர்களாக மாறி, வளர்ச்சியுற்றுத் திருவருளுக்குப் பாத்திரமானார்கள் என்ற செய்தி பேசப் பெறுகிறது.
சொற்களால் பகை வளர்க்கும் ஒருவர் நெஞ்சம் எங்ஙனம் அறச்சார்புடையதாக இருக்க முடியும் என்பது வள்ளுவர் கேள்வி. புறங்கூறுபவர் சொல்லை நம்ப வேண்டாம்.
நெஞ்சத்தின் இயல்பு எதுவோ, அதை விளைவுகள் காட்டும், சொற்களெல்லாம் நெஞ்சத்தின் இயல்பு முழுவதையும் காட்டுவதும் இல்லை. நமது தலைமுறைக் கவிஞர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்,
'சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது மீதி.
என்று குறிப்பிடுகிறார். அறநெஞ்சுடையார் குற்றமுடையோரைக் கூட எளிதில் பகைக்க மாட்டார்கள். காரணம், குற்றத்தைத் திருத்த முடியும் என்று நம்புவார்கள். அதற்குரிய வழிவகைகளைக் கண்டு முயற்சிப்பார்கள். அறநெஞ்சுடையார்க்கு , குற்றத்தின் மீது வெறுப்பு இருக்குமே யன்றிக் குற்றமுடையார் மாட்டு வெறுப்பிருக்காது. அவனுடைய மனம் அறவழிப்பட்டதன்று. அவனுக்கு அறம் தெரியவே தெரியாது. அவன் மனம் தீது. கருதியது முடிக்க அறம் சொல்லிக்கொள்வது போலக் காட்டு கின்றான் என்று திருக்குறள் விளக்குகிறது.
நீரில் நெருப்பிருக்காது என்பதுபோல், புறம் சொல்லும் புன்மையவரிடத்து அறம் இருக்காது - இருக்க முடியாது என்பதை உணர்ந்து வாழவேண்டும். புறம் கூறும் பழக்கத்தினின்றும் நம்மை விலக்கிக் கொள்ள வேண்டும். அதனைக் கேட்கும் பழக்கத்தையும் கைவிட வேண்டும்.
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
------------------
23. தீது உண்டோ ?
மனித உலகத்தின் விழைவு இன்பமேயாம். உலகத்து இயற்கையும் இன்பமே யாம். இங்ஙனம் கூறுவது ”இன்னா தம்ம இவ்வுலகம்” என்று முன்னோர் மொழிந்த கூற்றுக்கு முரணாகாதா? இயற்கை என்பது மாற்ற முடியாத ஒன்றேயாம்.
மாற்றுதலுக்கும், மாறுதலுக்கும் உரியன எல்லாம் இயற்கையாகா. அவை ஒருவகை செயற்கையேயாம். அதனாலேயே "இன்னாதம்ம இவ்வுலகம்' என்று மொழிந்தவர் அதனைத் தொடர்ந்து 'இனிய காண்க" என்று ஆணையிட்டார்.
இன்னாதன என, கருதத் தக்கவை பெரும்பாலும் முறைகேடான தன்னலச் சார்புகளிலும், தற்சலுகைகளிலுமே தோன்றுகின்றன. முறைகேடான தன்னலச் சார்பு என்பது பிறர்க்குத் தீங்குகளைத் தந்து அவ்வழி தன்னலமாக விளங்குபவை யாகும்.
ஆதலால் ஒரு தனி மனிதனிடத்தில் திடீரென்று குற்றங்கள் தோன்றிவிடா. அந்தக் குற்றங்களைத் தோற்றுவிப்பவர்கள் - குற்றங்கள் தோன்றுவதற்கு உரியவாறு வாழுகிறவர்கள் தங்களுடைய குற்றங்களை எண்ணிப் பார்க்காமல் தங்களுடைய குற்றங்களின் காரணமாகப் பிறரிடம் தோன்றும் குற்றங்களை மட்டுமே எடுத்துக் காட்டுகிறார்கள்.
காவிரி நதியை தஞ்சையிலும் பார்க்கிறோம். திருச்சியிலும் பார்க்கிறோம். அதனால், காவிரி தஞ்சையிலோ திருச்சியிலோ தோன்றுகிறது என்று சொல்ல முடியாது. அது குடகு மலையில் தோன்றியே தஞ்சையையும், திருச்சியையும் வந்து சேர்ந்தது. அதுபோலவே குற்றங்களுக்குரிய காரணங்கள் தோன்றும் இடம் வேறு. குற்றங்கள் விளங்கிப் புலனாகின்ற இடம் வேறு.
உண்மையை ஒத்துக்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள் பொய்யைத் தோற்றுவிக்கிறார்கள். நியாயமான உரிமைகளை ஏற்று வழங்காதவர்கள் பொய்யினைத் தோற்றுவிக் கிறார்கள். மற்றவர்களுடைய மன உணர்ச்சிகளை மதித்து உடன்படவோ அல்லது மாற்றவோ சக்தி அற்றவர்கள் ஒடுக்கம் கொள்கையின் மூலம் பொய்யினைத் தோற்றுவிக் கிறார்கள். இவறிக் கூட்டிச் செல்வம் சேர்ப்பவர்கள் செல்வத்தின் பயனை மறைப்பதன் மூலம் கள்வர்களைத் தோற்றுவிக்கிறார்கள்.
அழிபசி தீர்க்கும் பொருள் வைப்புழித் தெரியாத புல்லறிவாளர்கள் களவினைத் தோற்றுவிக்கிறார்கள். மற்றவர்கள் அன்றாட வாழ்வுக்கே வறுமையில் ஆழ்ந்து அவலப்படும் பொழுது வளம் பல படைத்து ஆடம்பரமாக வாழ்பவர்கள் அழுக்காற்றினைத் தோற்றுவிக்கிறார்கள், பலர் துய்க்காதனவற்றைப் பலர் அறியத் துய்த்து மகிழ் கிறார்கள். அவாவினைத் தோற்றுவிக்கிறார்கள். ஆதிக்கம் செலுத்துபவர்கள் அடிமைத்தனத்தையும் வளர்ந்துழி அடங்காமையையும் தோற்றுவிக்கிறார்கள்.
இங்ஙனம் ஆய்வு செய்யின் குற்றங்களுக்குக் குற்றங்களை உடையோரும் குற்றங்களைச் செய்வோரும் மட்டுமே பொறுப்பினர் ஆகார். அவர்களோடு தொடர் புடைய மற்றவர்களுக்கும், குறிப்பாகச் சமுதாய அமைப் பிற்கும் நிறைய பொறுப்பும் பங்கும் உண்டு. இங்ஙனம்
ஆராய்ந்து முடிவு செய்வதே நியதியும், நீதியும் ஆகும் இந்த ஒப்பற்ற நீதியைப் புதுமை என்றும், பொதுமை என்றும் இன்று பலர் கூறுகின்றனர். ஆனால் நமது வள்ளுவர். அன்றே கூறியுள்ளார்.
ஏதிலார் குற்றம் போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
என்பது குறள். இந்தக் குறள் நினைந்து நினைந்து உணரத்தக்க குறள். புதுமையும் புரட்சியும் நிறைந்து குறள். நிலைபெற்ற மனித உயிர்கள் உலகத்தைப் பற்றிப் பிடித்து அலைக்கும் பகைமைக்கும் ஒழுக்கக் கேட்டிற்கும் அருமருந்தென விளங்கும் குறள். ஏதிலார், அயலார் என்பது பொதுவான பொருள். சிறப்பாக மாறுபட்ட பகை உணர்ச்சி உடையவர் என்றும், பொருள் கொள்ளலாம்.
முதலில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அயலார் பகைவர் என்று கருதுதலே அடிப்படையில் தவறு. அங்ஙனம் கருதுகின்ற பகையினாலேயே நல்லனவும் தீயனவாகத் தோன்றும். அன்புடையார் மாட்டுத் தீமையே தோன்றினாலும் நன்மையே தோன்றும். ஆதலால் ஒருவன் பிறிதொருவனை ஏதிலானாகக் கருதுதல் மூலமே குற்றங்கள் தோன்றுவதற்குரிய களம் ஏற்பட்டு விடுகிறது.
அடுத்து பிறரிடத்தில் காணப்படும் குற்றங்களுக்குத் தன்னிடத்தில் உள்ள குற்றங்கள் எவ்வளவுக்குக் காரணமாக அமைந்து கிடக்கின்றன என்பதைப் பார்க்கக்கூடிய தைரியம் ஏற்பட்டு சுய விமரிசனத்திற்கு உரிய அறிவு பெற்றுத் தன்னுடைய குற்றங்களை நீக்கிக் கொண்டால் பிறருடைய குற்றங்களும் நீங்கிப் போகும். அதன் மூலம் சமுதாயத்திலும் குற்றங்கள் குறையும்; நிறை பெருகும். பகை மாறும்; பண்பு வளரும்.
இதனையே இந்த அறநெறியையே இந்தக் குறள் வலியுறுத்துகிறது. அதாவது ஒழுக்கக்கேடு என்பது ஒருவரை மையமாகக் கொண்டது மட்டுமன்று; பலரை - அதாவது மனித சமுதாயத்தை மையமாகக் கொண்டு வளருவதே ஒழுக்க நெறி.
இந்தக் குறள் புறங் கூறாமையில் இருக்கிறது. புறங் கூறுகிறவர்கள் நேரடியாகச் சொல்லுதற்குரிய ஆளுமையும் அசைவிலா உறுதியும் இன்மையின் காரணமாகவே புறங் கூறுகிறார்கள். புறங்கூறுவதே ஒரு குற்றம் என்று கருதும் அறிவு இருக்குமானால் புறங்கூற மாட்டார்கள். அவ்வழித்திரிபுகள் ஏற்படா. ஒரு தவற்றில் பலர் பங்கு ஏற்கக்கூடிய வாய்ப்பும் தடைப்படும். காலமும் மிஞ்சும். மனித சக்தியும் மிஞ்சும், பகையும் குறையும். எதிர்பார்க் கின்ற குறைகளும் நீங்கி, நிறைகளும் ஏற்படும்.
ஆதலால் பிறர் குற்றம் காண்பதற்கு முன் நமது குற்றத்தை நாமே பார்த்து திருத்திக் கொள்வோமாக.
நாம் அனைவரும் நல்லவர்களாகி அவ்வழி மற்றவர்களையும் நல்லவர்களாக வாழச் செய்வோமாக!
-------------
24. பயனில சொல்லாமை
இன்றைய உலகியலில் பேச்சு அதிகம். மனிதர்கள் தம்முள் ஒருசிலர் கூடினாலும் பேசித் தீர்க்கிறார்கள். பலர் கூடினாலும் - (கூட்டங்கள் என்ற பெயரில்). பேசித் தீர்க்கிறார்கள். ஆக, கடந்த நூற்றாண்டைவிட, இந்த நூற்றாண்டில் பேச்சு அதிகம். வீட்டிலும் அதிகம். நாட்டிலும் அதிகம். இங்ஙனம் வளர்ந்துவரும் பேச்சு முறை ஆக்க வழிப்பட்டதாக - பெரும் பயன் தரத்தக்கதாக வளருமானால் அது பாராட்டுக்குரியதாகும்.
மனிதனிடத்தில் சொல்லாட்சி தோன்றியதே பொருளை உணர்த்துவதற்குத்தான்! பொருள்வழிப் பயன் பெறுதலும், தருதலுமே சொல்லாட்சியின் நிறைவு இலட்சியம். மேலும், உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப் படையாகக் காட்டி உறவுமுறையை வளர்த்துக்கொள்ளலே சொல்லாட்சி. மனிதர்களுக்குள் வளர்கின்ற பகை, பிளவு உணர்ச்சிக்கும் பெரும்பாலும் காரணம் தகுதியில்லாதோர். சொற்களை, தகுதியில்லாத முறையில் கையாளுவதே யாம்.
இயற்கையமைப்பில் பல்வேறு தடைகளைக் கடந்து மனிதனின் வழிவழிப்பட்ட முயற்சியால் தோன்றும் சொற்கள் பயனற்றவைகளாக, போவதைப் பார்த்து, திருவள்ளுவர் வருந்துகிறார். சொல்லாட்சியும் உழைப்பின் விளைவே. இத்தகு மேம்பட்ட சொல்லாட்சி பெரும்பான்மையான மக்கள் வாழ்வில் அவர்கட்கும் பிறருக்கும் பயனில்லாமலே அழிவதைப் பார்த்து, கழிவிரக்கம் கொள்கிறார் திருவள்ளுவர்.
பயனற்ற சொற்களைப் பேசிப் பொழுது போக்கும் புல்லியமாந்தரை இளங்கோவடிகள் ’வேறுமொழியாளர்' என்று ஏசுகின்றார். திருவள்ளுவர் பயனற்ற சொற்களைக் கேட்டு மகிழ்வோரையும் கண்டிக்கின்றார்.
பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கட் பதடி எனல்.
என்று கூறுகிறார். நெல்லோடுதான் பதரும் சேர்ந்திருக்கிறது. அதனாலேயே , அதுவும் நெல்லாகி விடுமா என்ன? பயன்படுத்துவோர் விழித்தெழும் வரையில் பதரும் நெல் லோடு சேர்ந்திருக்கும். பின்னர் பதர் தூற்றப்பெறும்: நெல்லினின்றும் பிரிக்கப் பெற்று, கழிக்கப் பெறும்.
அதுபோலவே, பயனற்ற சொற்களைப் பேசிக் கொண்டு தம்மை உயர்ந்தார் போல - நீதிமான்களைப் போல கருதிக்கொண்டும் - காட்டிக் கொண்டும் சிலர் வாழ்கின்றார்கள். ஏன்? பலர் வாழ்கின்றார்கள் என்பது அறிந்ததே. ஆனாலும் காலம் வருகின்ற போழ்து, பயனில் சொல் பாராட்டித் திரிந்தவர்களை நாடு ஒதுக்கும்; ஒறுக்கும்.
ஒரு மனிதனுடைய உள்ளுணர்ச்சி எத்தகையது என்பதை அவனுடைய சொற்கள் காட்டும். நிலத்தின் இயல்பை, தண்ணீர் காட்டுவது இயற்கை. அது போலவே, உணர்ச்சி, எண்ணம் ஆகியவற்றின் இயல்புகளைச் சொற்களே காட்டும். பயனற்ற சொற்களை வழங்குகின்றவன். அறிவுடையவனாகவோ, இனிய பண்புடையவனாகவோ இருக்க முடியாது. நீதி நெறி வழிப்பட்டவனாகவும் இருக்க முடியாது என்று திருவள்ளுவர் கருதுகிறார்.
பயனில் பாரித்து உரைக்கும் உரை நயனிலன் என்பதை சொல்லும் - என்று திருக்குறளைக் கொண்டு கூட்டிப் பொருள் சொல்லும் போழ்து, அமுதினும் இனிதாக இருக்கிறது கருத்துச் சுவை. சொல்லும் சொற்களோ பயனற்றவை. அதையும் சுருங்கச் சொல்லுகிறார்களா எனில், உண்ட உணவு செரித்து அடுத்த வேளை பசி தோன்ற வேண்டுமே! அதுவரையில் பேச வேண்டும்; பேசித் தீர்க்க வேண்டும் என்ற உணர்ச்சியோடு தெருவோரத்தில் - திண்ணைகளில் உட்கார்ந்து வம்பு அளப்பவர்களுக்கு, காலத்தின் அருமை தெரியாது!
ஆதலால், பயனற்ற சொற்களாக இருந்தும் கூட, விரித்துரைத்து மகிழும் இயல்பு இவரிடத்தில் இருக்கிறது. இந்த அளவிலேயே திருவள்ளுவர் முடிவு கட்டச் சொல்கின்றார். என்ன முடிவு? பயனற்ற சொற்களைப் பேசித் திரிவோரை அறிவில்லாதவர் என்று கருதி, எட்டடி தூரத்தே நிறுத்து; அல்லது நெருங்காதே. நெருங்கினாலும் காது கொடுத்து விடாதே! நீதியற்றவன் என்று கருதி நீண்ட தூரத்தில் காணும் போழ்தே உன்னைக் காப்பாற்றிக் கொள் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இக்கருத்து நடைமுறைக்கு வரவில்லை. எல்லார்க்கும் வாய் இருக்கிறது. எல்லாரும் பேசலாம் என்று பேசுகின்றார்கள். பொய்க்கும் புனைந்த வடிவம் கொடுத்து மெய்யாக்கு கின்றார்கள். பொழுது போகாதவர்கள், உழைத்து வாழும் அவசியம் இல்லாதவர்கள். தற்பெருமையில் களிக்கும் செல்வந்தர்கள், போக்கிரிகள் இன்றும் பயனில சொற்களைச் சொல்லிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள்.
இந்தச் சூழ்நிலையில் எங்ஙனம் மனிதகுலம் ஆற்றல் நிறைந்த முயற்சிகளில் ஈடுபட முடியும்? எப்படி, அவர்களிடையே நம்பிக்கையுணர்வு வளர முடியும்? சிந்தனை செய்து பாருங்கள். "பயனற்ற சொற்களைப் பேசாதீர்கள். அது போலவே, அவற்றைக் கேட்காதீர்கள்". இம்முயற்சியால் காலத்தின் அருமை வெளிப்படும். கருத்தில் தெளிவு ஏற்படும். நம்பிக்கை வளரும். நாடு செழிக்கும்.
மீண்டும் ஒரு தடவை அக் குறட்பாவைப் படித்து, நினைத்து அன்றாட வாழ்க்கைக்கு உரியதாக்கிக் கொள்ள முயற்சி செய்வோமாக.
நயனிலன் என்பது சொல்லும் பயனில்
பாரித்து உரைக்கும் உரை.
---------------
25. தீயும் தீவினையும்
தற்காத்துக் கொள்ளுதல் என்பது இயல்பான உயிரியல் உணர்வு. உயிர்வர்க்கம் எல்லாமே தம்மைத் துன்பத்தினின்றும் மரணத்தினின்றும் காப்பாற்றிக் கொள்ளவே விரும்புகின்றன - முயற்சி செய்கின்றன.
விலங்கியலில் உயிர் அறிவும் உணர்வும் மிகமிகக் குறைவு. மனித இயலிலும் உடலியலை விட உயிர் உணர் வும் அறிவுமே மிகுந்து காணப் பெறுகின்றன. அது இயற்கை : பரிணாம வளர்ச்சியிலும் கூட இதுவே நியதி.
விலங்குகள் உடல் தற்காப்பிலேயே ஈடுபடும். உயிரியல் அறிவு கைவரப்பெற்றமையின் காரணமாக மனிதன் ஆன்மாவையும் தற்காத்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறான். அதனாலேயே விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும், விருப்பம், சிந்தனை ஆகியவற்றோடு தொடர்பு படுத்தி வற்புறுத்தப் பெற்றன. தீவினை அச்சம்' என்றே திருக்குறள் அதிகார வைப்பு ஓதுகின்றது.
தீவினை செய்தலில் அச்சமல்ல - தீவினை பற்றிய அளவிலேயே அச்சம் பெருவெள்ளத்தைக் கண்டு விலகி ஓடுதல் போன்றது. தீவினையுணர்வுகளினின்றும் அஞ்சி ஒதுங்கிக் கொள்ளுதல் தனக்குத்தான் உண்மையான அறிவொடுபட்ட விருப்பம் இருக்குமாயின் அவன் பிறருக்கு யாதொரு தீங்கும் - சிறியதேயாயினும் செய்யற்க என்று திருவள்ளுவர் வற்புறுத்துகின்றார்.
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
என்பது திருவள்ளுவர் அருள்வாக்கு.
பிறருக்குத் தீங்கு செய்யும்போது - பிறருக்குத் துன்பம் உண்டாக்குவது போலத் தோன்றினாலும், அது பயன்விளையுங் காலத்துத் துன்பம் செய்தாருக்கும் துன்பம் தருதலின் தற்காத்துக் கொள்க என்ற கருத்து இங்கு பெறப்படுகிறது.
நாம் பிறிதொருவருக்குத் தீங்கு செய்யத் திட்டம் தீட்டலாம் - பேசலாம் - திட்டப்படி செய்யலாம். நம்மால் துன்பம் இழைக்கப் பெறுகிறவன் நம்முடைய துன்பத்தை அனுபவிக்கவும் செய்யலாம். அவன் திரும்பித் தீங்கு செய்யத் தெரியாதவனாக இருக்கலாம். செய்வதற்குரிய ஆற்றல் அற்றவனாகக்கூட இருக்கலாம்.
ஆனாலும் அறக்கடவுள் தீங்கு செய்தார்க்குத் தீங்கு செய்யத் திட்டமிடும் - சூழ்ந்து செய்யும் துன்பப்பட்டவன் பொறுப்பை அறக்கடவுள் எடுத்துக் கொள்ளும். பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் - ஆனால், பிறர் இழைக்கும் துன்பத்தால் அவதியுறுபவன் கேடும் இழப்பும் இல்லாமலேயே நலம் பெறுகிறான். காரணம், அறக்கடவுள் அவனுக்குப் பாதுகாப்பாக இயங்குகிறது. அறக் கடவுளின் ஆற்றல் அளப்பரிது. ஆதலால், தீங்கிழைத்த வனை, அது துன்புறுத்தியே தீரும். இதனை,
மறந்தும் பிறன்கேடு சூழற்க ; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
என்று திருக்குறள் வலியுறுத்துகிறது.
இனி, பிறருக்குத் தீமை செய்ய நினைக்கின்ற அளவிலேயே நினைக்கின்றவன் தீமையுறுகின்றான் என்பது சான்றோரின் அனுபவ உரை. 'தீங்கு நினைக் கின்றவனுக்கே தீங்கு ' Evil to him who evil thinks. என்பது ஆங்கிலப் பழமொழி. தனக்குத் தீங்கு நேராமல் இன்னொருவனுக்குத் தீங்கு செய்ய முடியாது என்று ஓர் அனுபவ உரையுண்டு.
திருவள்ளுவர் , தீமையையும் தீயையும் ஒப்பு நோக்கி தீச் செயலின் இழிநிலையை - அதன் கொடுமையை நமக்கு உணர்த்துகின்றார். தீ வைத்த இடத்தில் மட்டுமே எரியும். தீ, வைக்கின்றவனின் கை, பற்றி எரிவதில்லை. தீ, வைக்கப்பெற்ற கூரை மட்டுமே பற்றி எரியும். இது ஒருபால் கேடு.
அது மட்டுமின்றி தீயினை யார் வைத்தாலும் வைத்தவர்களே அணைக்க வேண்டுமென்ற அவசியமில் லாமல் மற்றவரும் அணைக்கலாம். ஏன்? இன்று தீயனைக் கும் படையே இருக்கிறது. ஆனால் ஒருவரிடம் உள்ள தீமையைப் பிறிதொருவர் தணிக்க முடிவதில்லை. ஆனால், முயலலாம். அந்த முயற்சி தூண்டுதலும் வழி தடத்தலும் என்ற அளவிலேயே அமையும். தீமையுடை யவர் உணர்வசைந்து உடன்பட்டாலேயே மாறுதல் உண்டு. அப்படியில்லையேல், ஒருவரிடமுள்ள தீமை தணிவதில்லை.
இந்தத் சிறந்த நோக்கந்தான் தன்னிடமுள்ள தீமையை, தானே உணர்ந்து நொந்து, வருந்தி அழுது பாடி. தீமையிலிருந்து விடுதலைபெற , சான்றோர்கள் முயன்றிருக்கிறார்கள். இந்த, சிறந்த நோக்கத்துடனேயே சமயங்களில் பிரார்த்தனையும், வழிபாட்டு முறைகளும் தோன்றின. உண்மையான பிரார்த்தனை என்பது ஓருயிர்தன்னையே நோக்கித் தன் தீமை கருதி, அழுது, தன் கண்ணீரால், தன்னுடைய தீமையைக் கழுவுதலேயாம்.
ஆனால், மனிதனின் வியாபாரப் புத்தியும், சோம்பலும் இந்தக் தூய சமயத்தையும் விட்டபாடில்லை. இதன் விளைவகாவே புரோகித் சமயம் தோன்றிற்று. ஒருவருக்காகப் பிறிதொருவர் அழத் தொடங்கிவிட்டனர். பாபர் போல அழுதால் பயனிருக்கலாம். அது உண்மையிலேயே அழுறது. ஆனால், இவர்கள் அழுவதோ பெறக்கூடிய காசுகளுக்கேயாம். காலப் போக்கில் அழுவதுகூட விடுபட்டுப் போயிற்று. அவர்கள் சமயத்தின் முதலாளிகளாகி விட்டார்கள்.
முழு நிலவை மறைத்த நிழலைக் கருதி முதலைக் கண்ணீர் வடித்துக் குளத்தில் மூழ்கும் மனிதர்கள் - நிறைவுடைய நன்னெறியாம் சமயத்தில் படிந்த தீமையை நினைத்து அழாதது ஏனோ? ஒருவனிடமுள்ள தீமையை அவனே உணர்ந்துதான் மாற்றிக்கொள்ள முடியும். பிறர் அணைக்கும் தீயைவிட தம்மிடமே உள்ள பொறுப்பான தீமை கொஞ்சம் சிக்கலானதே' யாம்.
அதோடு, தீ எரியத் தொடங்கியவுடனேயே வெளிப் படையாகத் தெரிகிறது. ஆதலால், உடனடியாக அணைக்கும் முயற்சியும் தோன்றிவிடுகிறது. ஆனால், தீமையோ உடனடியாகத் தெரிவதில்லை. உடனிருந்தும் ஒட்டியும், பச்சை உறவு காட்டியும் இன்ப நயங் காட்டியும் பையப்பைய அரித்துக் கெடுப்பது.
பலர், தன்னிடமுள்ள தீமையையே கூட அறியாயை பின் காரணமாக நன்றென்றே கருதிக்
கொண்டிருக்கிறார்கள். அல்லது 'அவரிடமில்லையா? இவரிட மில்லையா? அதற்கு இது
என்ன மோசம் போய்விட்டது?" என்று சமாதானம் கற்பித்துக் கொள்கிறார்கள்.
பலரிடம் வறுமை இருப்பதனால், வறுமையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்களோ? சிலரிடமுள்ள செல்வத்தில் தானே நாட்டம் வைக்கிறார்கள் ! ஆதலால் வெளிப்பட இருந்து காட்டி, சீக்கிரத்தில் அணைக்கப் பெறும் தீயைவிட உள்ளிருந்து எரித்து அழிக்கும் தீமை மிகவும் கொடியது.
தீயினால் எரிவது வீடுகளேயாம். வீடுகள் மனிதனின் படைப்புகள். ஆனால் தீமையினால் அழிவதோ மனிதனே யாம். படைப்புப் பொருள்கள் அழிந்தால் திரும்பப் படைக்கலாம். படைப்புக்குரிய மனிதனே அழிந்து போனால்......... இந்த வகையிலும் தீமை மிக கொடியது.
தீயினால் விளையும் தீது ஒரே வழி எல்லைக்குட்பட்ட தன்று. நில எல்லைக்கும் உட்பட்டதன்று. கால எல்லைக்கும் உட்பட்டதன்று. தீமை மனித சமுதாயத் தையே அழிக்க வல்லது. ஏழேழ் தலைமுறைக்கும் அழிக்க வல்லது. இந்த வகையிலும் தீயினும் தீமை கொடியது.
தீ, கூரையிலிருந்தால் கேடு, ஆனால், அடுப்பிலிருந்தால் ஆக்கம். அணையா அடுப்பு வளம் நிறைந்த மனையின் சிறப்பு. ஆதலால், அடுப்பிலிருக்க வேண்டும். ஆனால், தீமையினால் ஒரு வழியிலும் பயனில்லை. எந்த அளவிலும் பயன் தராது. பயன் தருவது போலத் தோற்ற மளித்தாலும் சர்க்கரைப்பாகு தடவிய நஞ்சுருண்டையேயாம்.
நாவில் கரும்பின் இனிமை தென்படும். உடனேயே உயிர் கொல்லும் நஞ்சும் தென்படும். தீமையினால் வரும் பயன் கள்ளுண்டு களித்தல், வரைவின் மகளிர் மயக்கு - எல்லாவற்றையும்விடப் பிணந் தழுவிய முயக்கு ஆகியன போலாம். ஆக ஒருபோதும் பயன்படாது. ஆதலால், தீயைவிடத் தீமை கொடியது. அதனாலன்றோ திருவள்ளுவர்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
என்று குறிப்பிடுகின்றார். தீயவை தீய பயத்தலால் என்ற சொற்றொடரும், தீயினும் என்பதிலுள்ள உம்மையும் அறிவுக்கு விருந்து. ஆழச் சிந்திப்பாரின் அக உலகிற்குப் பாதுகாப்பு.
தீமை செய்வோர் தீமை செய்யட்டும், செய்து கொண்டே இருக்கட்டும். அதனால் நாய்கள் தாம் சுக்கியவற்றைத் தாமே தின்பது போலத் தம்முடைய. செயல் களின் விளைவுகளை, அவர்களே அனுபவிப்பார்கள். அறக்கடவுள் சூழ்ந்து ஊட்டுவிக்கும்.
ஆதலால், அச்சமின்மை பேசிய திருவள்ளுவர் அஞ்சச் சொல்லுகிறார். தீயனவற்றிற்கு அஞ்சச் சொல்கிறார். புறத்தில் தாக்கும் தீமைகளைக் கண்டு அஞ்சுவது போலவே. ஏன்? அதனினும் ஒருபடி மேலாக அகத்தில் தோன்றித் தாக்கும் தீமையைக் கண்டு அஞ்சச் சொல்கிறார். மடியில் தீயினைக் கட்டிக்கொண்டு, நானிலத்தில் நடப்பாரில்லை. அதுபோல் மனத்தில் தீமை தாங்கி நடப்பாருமில்லை என்கிற நிலை உருவாக வேண்டும். அதுவே வள்ளுவர் விரும்பும் உலகம்.
-----------
26. உயிர் வாழ்வான் யார்?
திருக்குறள் ஒரு சமுதாய ஒழுக்க அமைப்பு நூல். மனிதர்கள் தம்முள் கூடிவாழக் கடமைப்பட்டவர்கள். அதுவே, மனித நாகரிகத்தின் விழுமிய சிறப்பு. மனிதன் ஒரு ’சமூகப் பிராணி' என்றார் ஓர் ஆங்கிலப் பெரும்புலவர். விலங்குகளில் கூட்டு வாழ்க்கை இல்லை. ஒரோ வழி சில விலங்கினங்களிடத்தே கூட்டு வாழ்க்கைமுறை இருந்தாலும் கூட அது அச்சத்தின்பாற் பட்டதேயொழிய, அன்பின் பாற் பட்டதன்று.
சமுதாயக் கூட்டு வாழ்க்கையை வளர்ப்பதென்பது மிக நுண்ணிய ஆற்றல். தம் இச்சைவழிச் செல்லும் பொறிகளின் மீது தனியரசு செலுத்துவோரே பொதுவாழ்விலும் கூட்டுப் பொதுவாழ்க்கையைத் திறமையாக நடத்த முடியும். சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கு உரிய சிறந்த பண்புகளில் ஒன்று ஒப்புரவு அறிதல்.
ஒப்புரவறிதல் அதிகாரத்தில் வரும் குறட்பாக்களுக்கு உரையாசிரியர்கள் பெரும்பாலும் ’இல்லாதவர்களுக்குக் கொடுத்தல் - உதவி செய்தல்' என்ற தன்மையிலேயே பொருள் கண்டுள்ளனர். இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் பண்பை - இயல்பை, ஈகை என்ற தனி அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகின்றார்.
ஈகை, ஒப்புரவறிதல் இவ்விரண்டும் ஒன்றுபோலத் தோற்றமளித்தாலும் ஆழமான கருத்து வேறுபாடு
உடையன. ஈகை வழிப்பட்ட சமுதாயத்தில் : உடையோர் - இல்லோர் என்ற வேற்றுமை விரிந்திருக்கும். அவ்வழிப் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் தலை தூக்கி நிற்கும். ஒப்புரவு அறிதலில் உடையோர் இல்லோர் வேற்றுமையின்றி, உயர்வு தாழ்வு இன்றிக் கொடுத்தல் கடமை எனவும், கொள்ளல் உரிமை எனவும் கருதும் அடிப்படையிலேயே அந்த அதிகாரம் அமைந்துள்ளது.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
என்பது திருக்குறள். இங்கு ஒத்தது என்ற சொல்லுக்கு வழக்கம் போல பரிமேலழகர் 'உலகநடையினை’என்று எழுதித் தப்பித்துக்கொண்டு விட்டார். அது நிறைவான கருத்தன்று. 'தன்னைப்போல் பிறரை’ நினை என்பது ஒரு விழுமிய ஒழுக்க நெறிவாக்கு.
இன்றையச் சமுதாயத்தில் பலர் தம்மோடு பிறர் ஒத்துவர வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர பிறரோடு தாம் ஒத்துப்போக வேண்டும் என்று கருதவில்லை.
பலருக்கு எது ஒத்ததோ அதற்கு சிலர் இணங்கியே வாழவேண்டும். அதுவே சமுதாய நியதி - ஒழுக்கம். அங்ஙனம் உணர்ந்து வாழ்பவர்களே வாழ்பவர்கள். அவர்கள் வாழ்க்கையிலேயே இன்பமும் அமைதியும் இருக்கும். மற்றோர்க்கும் அவர்தம் வாழ்க்கையால் பயனுண்டு.
இங்ஙனம், ஒத்தறிந்து ஒழுகத் தெரியாதவர்கள் வாழ்ந்தாலும் நடமாடினாலும் பிணம் என்றே கருத வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது. காரணம், பிணத்திற்கு மனித உருவ அமைப்பு இருந்தாலும் உணர்ச்சியில்லை. உதவும் பணியில்லை. அதுபோலவே, ஒத்ததறிந்து வாழும் இயல்பில்லாதவர்களுக்கும் அன்பு. சமுதாயம் ஆகிய உணர்ச்சிகள் இல்லை. அவர்களும் உதவ மாட்டார்கள்.
பிணத்தை நடுவீட்டில் நடுத்தெருவில் பல நாட்கள் வைப்பதரிது. காரணம் நாற்றமெடுக்கும். காற்றைக் கெடுக்கும். சமுதாயத்திற்கு நோய் தரும். அதுபோலவே, ஒத்ததறிந்து உதவி வாழமுடியாத மனிதன் நெஞ்சத்தால் நாற்றமெடுத்தவனாவான். பிணம் போல் நாறுவான்.
நாற்றத்தைத் தன்னுடைய சொற்களாலும் செயல்களாலும் வெளிப்படுத்துவான். உபத்திரவம் செய்வான். பிணத்தை வீட்டிலிருந்து விரைவாக எடுத்துச் செல்வது போல , சமுதாயத்திலிருந்து இந்த மனிதர்களையும் விரைவில் எடுத்தாக வேண்டும்.
ஒத்தது அறிவான் என்று சொன்னமையால் தானே வலிய முயன்று அறிந்து செய்தலையே
திருவள்ளுவர் இங்கு குறிப்பிடுகின்றார். இதையே (Volunteer Service) என்று குறிப்பிடுகிறார்கள். குறட்பாவைப் பாருங்கள்.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
------------
27. இரப்பாரும் ஈவாரும்
உயிர்கள் குறைகளினின்று விடுதலை பெற்று நிறைவைப் பெறவே மனித வாழ்க்கை தரப்பெற்றது. இந்த நிறைவைப் பெறும் சாதனங்களிற் சிறந்தது கிளர்ந்தெழும் அன்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்வது. அவ்வாறு செய்யும்போது. உயிரின் தன்மை வளர்கிறது, சிறப்படைகிறது. அப்பொழுதே உயிருக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதன் காரணமாக உயிர், உயிர்த் துடிப்போடு வாழ்கிறது.
ஓர் உயிர் நலம் பெற்ற உயிரோட்டத்தோடு கூடி வாழ் வேண்டுமானால் அதற்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் தேவை. அந்த வாய்ப்புகள் இல்லையானால், உயிரின் இயல்புகளும் ஆற்றல்களும் வெளிப்படுதற்கு வழியில்லாமற் போகும். அதனாலேயே திருவள்ளுவர் இரப்பாரே இல்லாத உலகம் உயிரற்ற பாவை சென்று வந்தாற் போன்றது என்றார்.
மனித உணர்வின் வெளிப்பாடுகள் துன்பம் கண்ட போது அழுதலும், இன்பம் கண்டபோது மகிழ்தலும் ஆகும். இத்தகு பண்பு தன்னளவினதாக இருக்கும் பொழுது பெரிதும் பயன்தராதது மட்டுமின்றி ஆக்கமில்லாமலும் போய் விடுகிறது. பிறர் துன்பம் கண்டு நோதலும். பிறர் இன்பம் கண்டு மகிழ்தலும் பண்பாட்டின் விளைவு; உயிர் வாழ்வதற்குரிய வழி.
இக் குறிப்பிலேயே திருவள்ளுவர் இரப்பாரும் இவ்வுலகில் இருத்தல் வேண்டும் என்று பேசுகின்றார். இரப்பார் ஏழ்மையின் காரணமாக இரக்க வேண்டும் என்பதற்காக அல்ல. பிறரின் அன்பு உணர்ச்சியைத் தூண்டி உயிர்பெற்று வாழவும் உய்தி பெறவுமேயாகும். இப் பார்வையோடு இரப்பாரைப் பார்த்தால் ஏழ்மையின் துன்பமும் ஏளனமும் தோன்றாது. இடுவோர் இயல்பு, இரப்பாரின் துன்பம் மாற்றுவதாக இல்லாமற்போனால் இரப்போர் வாழ்க்கை கொடுமையானது.
ஈத்துவக்கும் இன்பம் பெற விழைவோர்க்கு இரப்பார் இல்லையானால் அவ்வின்பத்தைப்
பெற முடியாமல் அன்றோ போய்விடும் ! வைத்துடைமை வன்கணாளர் வாழும் நாட்டிலே இரப்பார் இருத்தலைவிட இறத்தலே நன்று என்று வள்ளுவரே வகுத்துப் பேசுகின்றார்.
ஆனால், வள்ளுவர் காலச் சூழல் வேறு, நாம் வாழும் சூழல் வேறு. வள்ளுவர் காலத்தில் பிறர் துன்பம் மாற்ற முடியாதபோது - பிறருக்கு உதவி செய்ய முடியாத இயல்பு வந்துற்றபோது தம்மைத்தாமே மாய்த்துக் கொண்ட காலம். இன்றோ பொருள் பெரிதாகி, ஈர நெஞ்சின்றி இவறிக் கூட்டிப் பொருள் சேர்க்கும் காலம்.
இந்தக் காலத்தில் இரப்போர் நிலை இரங்கத் தக்கதாக உள்ளது. முழங்கால் கடுக்க முயன்று ஏறி "முதலாளி" என்றாலும் காசு தராமல் "உடம்பு சரியில்லையா?' என்று கேட்கும் காலம். ஆதலின் இரப்போர் தொகை குறைவதே நல்லது. எனினும் உதவி, சேவைகளின் மூலம் தான் மனித உயிர்கள் வளர்ச்சியடைய முடியும்.
ஆதலால், இரப்பார் ஆலையில் உள்ளார் இரக்காம லேயே வலியச் சென்று கொடுப்பது - அல்லது வாழ்விப்பது நலம் தரும். அத்தகு சமுதாயப் பணிமனைகள் நாடு முழுவதும் பெருக வேண்டும். இக் கருத்திலேயும் வள்ளுவர் கூறி உள்ளார்.
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.
என்ற குறள் இக் குறிப்பினதே யாகும்.
-------------
28. ஈதலும் இரத்தலும்
மனித குலம் பலவகையாலும் நெருங்கிய தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழக் கூடியதேயாகும். அறம் விளக்கும் அற நூல்களும், ஒழுக்க நூல்களும், சமய நூல்களும் ஒருமுகமாக ஈதலின் சிறப்பைப் பேசுகின்றன.
தமிழ் இலக்கியங்கள் கூட ஈதலின் சிறப்பைப் பேசுகின்றன. காதலின்பத்தை விட ஈதலால் பெறுகின்ற இன்பம் பெரிது என்பது தமிழர் கருத்து. ஈந்து வாழ முடியாத வாழ்க்கை மரணத்திலும் கொடுமையானது என்பது திருவள்ளுவர் கருத்து.
நல்ல மனம் படைத்தவர்கள், பிறருக்கு உதவி செய்வதைப் பெரும் பேறாகக் கருதுவார்கள். அப்படிப் பட்ட வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். குறுந்தொகையில் தலைவன் பொருள்வயிற் பிரிகின்ற பொழுது, தலைவியிடத்தில் பொருள் திரட்டிக் கொண்டு கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவதாக உறுதி கூறிச் செல்கின்றான். கொடுத்த உறுதிச் சொல்லை நிறைவேற்றாமல் தவறிவிட்டால், ’இரவலர் வாரா வைகல் பலவாகுக; யான் செலவுறுதகவே' என்று குறிப்பிடுகின்றான் கொடுத்து உவந்து வாழாத வாழ்க்கை கொடிய துன்பமான வாழ்க்கை என்பது தமிழ்க் கருத்து.
சிலர் நாள்தோறும் பலர் தம்முடைய உதவியை நாடு தலைப் பேறாக - சிறப்பாகக் கருதுவர். இரத்தல் எவ்வளவு துன்பமோ அதுபோலவே இரக்கப்படுதலும் சான்றோர்க்குத் துன்பம் தரும். இரந்து கேட்பவர்களுடைய மனம் நிறைவுபெறும் வண்ணம் ஈவதுதான் ஈதலுக்குச் சிறப்பு. அங்ஙனம் இன்றி, ஏதோ பெயரளவில் கொடுப்பதும் இரந்தவர்களுடைய வறுமை நோய்க்கு மருந்தாகாவண்ணம் வழங்குதலும் சால்பல்ல.
இரந்தார் பேராசைக்காரராக இருந்தால் இரக்கப் படுதலும் தீது. அதுமட்டுமின்றி தினைத்துணை நன்றி செய்யினும் அதைப் பனைத்துணையாகக் கொண்டு மனநிறைவு அமையத்தக்க பண்பாடு இல்லாதவர்களாக இருப்பின் ஈதலில் மகிழ்ச்சி ஏது?
அதனாலன்றோ, உதவியின் சிறப்பு உதவியின் தரத்தையும் தகுதியையும் பொறுத்த தல்ல - உதவியைப் பெறுவோரின் தகுதியைப் பொறுத்தது என்று திருக்குறள் கூறுகிறது.
சான்றோர், நன் மனமுடையோர் ஒருவேளை உப்பில்லாக் கூழே குடித்திருந்தாலும் அதை என்றைக்கும் எண்ணிப் பார்ப்பர். அக் கூழ் இட்டவர்க்கு நல்லது எண்ணுவர். நல்லது செய்வர். அற்பமனத்தர் கீழ்மக்கள் எவ்வளவு பெற்றாலும் பெற்றதைச் சுருக்கி, பெறாததையே பெரிதுபடுத்திக் காட்டுவர். பெற்ற உதவிக்கு நன்றி செலுத்தும் இயல்பின்றி, பெறாது போனவைகளுக்குப் பகை காட்டுவர்.
ஆதலால், ஈதல் இழப்பே எனினும் வறியோர்க்கு ஈதல் வேண்டும். வறியோரினும் இன்றியமையாத் தேவை கிடைத்தவுடன் மன நிறைவு கொண்டு மகிழ்ந்து வாழத் தெரிந்தவர்களே இரப்பவர்களாக வந்தால் ஈதல் இனிது இனிது! மீண்டும் மீண்டும் பெறவேண்டும் என்ற பெரு வேட்கை யுடையவர்களாக இரக்கப்படுதல் தீதே யாம்,
இன்றைய உலகில் தன் தேவைகள் மட்டுமே தெரிந்தவர்கள் பெருகி இருக்கிறார்கள். கொடுப்பவர் சக்தி அறிந்து கேட்பவர்கள் இல்லை. கிடைத்த மட்டும் பார்க்கலாம் என்ற உணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது. அதிலும் வறியவர்கள் மட்டும் இரப்பதில்லை. வாழ முடிந்தவர்களும் கூட இரக்கிறார்கள்.
கொடுப்பதன் மூலம் பெறுகிறவர்களுடைய இனிய மகிழ்ச்சி நிரம்பிய முகத்தை
காண்பதென்பது இன்றைக்கு அருமையாகிவிட்டது. அப்படியே ஒரோ வழி கண்டாலும் நீரின் மேல் சலனத்தைப் போல் சில பொழுதேயாம். வாங்கிக் கொண்டேயிருக்கும்போது மகிழ்ச்சி. ஒரு நாள் தடைப்பட்டாலும் மகிழ்ச்சி மறைந்து ஆச்சரியம் தோன்றும்.
இந்த உலகத்தில் எப்படிப் பலர் கேட்கக் கொடுத்து வாழும் வாழ்க்கையை இன்பம் என்று கருத முடியும்? அதனாலன்றோ திருக்குறள்.
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.
என்று உலக நடையை அறிந்து ஒதுகிறது.
---------------
29. யாக்கை பொறுத்த நிலம்
”நாடென்ப நாடா வளத்தன" என்பது திருவள்ளுவர் வாக்கு. ஒரு நாடு பல்வளமும் கெழுமிய நாடாக சில அமைந்து விடுவதுண்டு.
நீர்வளமும், நிலவளமும் உள்ள நாடுகள் மட்டும் வளமுடையவனவாக இருப்பதில்லை. அந் நாட்டில் வாழும் மக்களுக்கும் வளத்திற்கும் தொடர்புண்டு. அதனாலன்றோ புறநானூற்றுப் புலவர், நாடு நாடாக இருந்தாலென்ன? காடாக இருந்தாலென்ன? கவலை இல்லை. அந் நாட்டில் வாழும் ஆடவர்கள் மட்டும் நல்லவர்களாக - உழைப்பாளிகளாக - உத்தமர்களாக இருப்பின் காடும் நாடாகும் - பள்ளமும் மேடாகும் என்றார்.
ஒரு நாட்டின் வளத்திற்கும், வறுமைக்கும், எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அந் நாட்டு மக்களின் மனநிலையே அடிப்படையாக அமைகின்றது. கற்றோர் போற்றும் கலித்தொகையிலும் கூட மலைவாழ் மக்கள் அல்லன செய்து வாழ்தலின் மலைபடு வளம் சுருங்குகிறது என்று கூறப்பெறுகிறது.
ஒரு தாய், தான் பெற்றெடுத்து வளர்த்த அருமையான பிள்ளை புகழ்மிக்க வாழ்வு வாழவேண்டும் என்று விரும்புகிறாள். அந் நோக்கத்தோடு வளர்க்கிறாள். ஆனால், அவன் தவறுகள் பல செய்து தண்டனைக்கு ஆளானான் என்ற செய்தியை அந்தத் தாய் கேட்டான். அவள் நிலை என்னாகும்?
துன்பத்தால் துடிதுடிப்பாள் - உணர்விழந்து ஊக்க மிழப்பாள். அவள் உள்ளமும் உடலும்
கொதிகலனாக மாறும். இந்த நிலையில் அவளிடத்தில் எப்படி ஆக்க பூர்வமான செயற்பாட்டை எதிர்பார்க்க முடியும்?
அதுபோல, நிலமகளும் ஓர் அன்னை. அவளுடைய மணிவயிற்றில் கோடானு கோடி மக்கள் தோன்றி வளர்கிறார்கள் - வாழ்கிறார்கள். இனிய பல நறுஞ்சுவை உணவுகளை ஊட்டி வளர்க்கிற நிலமகளாகிய அன்னை. தன்னுடைய மக்கள் அன்போடும், பண்போடும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதே நிலமகளின் விருப்பம்.
அதற்கு மாறாக, இவர்கள் தம்முள் மோதிப் பகை வளர்த்துக் கொண்டு, தம்முடைய வாழ்க்கையையும், உலகியல் வாழ்க்கையையும் களங்கப்படுத்துவதைக் கண்டும் கேட்டும் கலங்குகிறாள் - கவலை கொள்கிறாள். நிலவளம் வெப்பத்தன்மை அடைகிறது!
ஆறாத் துயரத்தில் நிலமகள் அழுந்துகின்றமையின் காரணமாக, நிலமகளின் வளம் குன்றும் என்பது திருவள்ளுவரின் கருத்து. "குற்றமற்ற நிலையில் குறை விலாது வளம் சுருங்கும், புகழற்ற உடம்புகளை நில மகள் தாங்கும் பொழுது" என்று குறிப்பிடுகிறார்.
இசையிலா யாக்கை என்று குறிப்பிட்டது, சிந்தனைக் குரிய செய்தி. உயிருடைய ஒருவன் அன்பு காட்டுவான்: அறஞ் செய்வான். புகழ்பட வாழ்வான். அஃதில்லையானால், உயிரற்றவன் என்பது தெளிவு. இக்குறிப்பினை ’இசையிலா யாக்கை' என்ற குறிப்பின் மூலம் உணர்த்துகிறார்.
உயிருள்ள மனிதனால் நிலத்திற்குப் பயனுண்டு. உயிரற்ற பிணத்தைத் தாங்குதலால், நிலத்திற்குப் பயனில்லை என்பதைக் குறிக்க, ’பொறுத்த நிலம்' என்று குறிப்பிட்டார். ஆக, மனிதர்கள் நல்வாழ்க்கையின் மூலம் தான் நிலத்தின் வளத்திற்கு அடிப்படையாக அமைய முடியும். இக் கருத்தினை,
வகையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
என்ற குறட்பாவின் மூலம் தமக்குத் தெளிவாக்குகிறார் திருவள்ளுவர்.
---------------
30. செல்வத்துட் செல்வம்
உலகியல், அருளால் வந்த விளைவு. இவ்வுலகத்தின் தோற்றமும், வளர்ச்சியும் கூட அருள் ஆக்கத்தின் பொருட்டேயாம். இவ் உலகைக் கவிந்து எழிலும், இனிமையும் தரும் இயற்கை அருளின் சின்னம். இயற்கைக்கு எழிலும் வளமும் வழங்கும் வான் மழையே அருளின் பொழிவு.
'அருளென்னப் பொழியேலோர் எம்பாவாய்' என்பது மணிமொழி. இத்தகு அருட் செல்வம் பலவற்றுள்ளும் சிறந்ததாகும்.
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் செல்வத்தைப் பற்றிய தவறான கருத்து மக்கள் மன்றத்தில் நிலவியது. அஃதாவது நிலம், வீடு, பொன் ஆகியவைகளையே செல்வம் எனக் கருதினர். அதனாலன்றோ இன்றையப் புற உலகில் செல்வம் நன்றாக வளர்ந்திருக்கிறது.
அறிவுச் செல்வம், அருட் செல்வம் இரண்டும் - சேல்வம் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் வளர்க்கத் திருவள்ளுவர் முயற்சித்தார். அது செல்வம் மட்டுமல்ல. செல்வத்துள்ளும் சிறந்தது - தலையாயது என்று வலியுறுத்துகின்றார்.
பொருட் செல்வம் ஈட்டும் பொழுதும் துன்பம் தரும் - இழப்பிலும் துன்பந் தரும். அதுமட்டுமின்றி, பொருட் செல்வம் அருளோடு - அருள் உணர்வோடு உறவு கொள்ளாத பொழுது குவியும். பயன்படாதவர்களிடம் தேங்கும். அவ்வழி அழுக்காறு, அவா, வெகுளி போன்ற குணக்கேடுகள் தோன்றத் துணை செய்யும்.
அருட் செல்வமோ, எஞ்ஞான்றும் இன்பந் தருவது. உடையவருக்கும் இன்பம் தரும். மற்றோர்க்கும் இன்பம் தரும். அருட் செல்வத்தினால் - அருட் செல்வம் உடைமையினால் சான்றாண்மை வளரும்; புகழ் பெருகும். அருளுடையோர் நெஞ்சம் தண்ணென்றிருக்கும். அங்கு அன்பின் ஈரம், கருணையின் கசிவு, எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
இத்தகு அருட்செல்வம், பொருட் செல்வத்தைப் போல எளிதில் கிடைக்கக் கூடியதன்றி, பலகாலும் முயன்று பெற வேண்டிய பெரும் பேறு. அன்பு நெறியில் பல்லாண்டொழுகியவர்களுக்கே அருள் உணர்வு அரும்பும். உலகியலில் பொருள் உடையார் பலர். அருளுடையார் அருமையினும் அருமை.
எனினும், வள்ளுவர் காலத்திலேயே ஒரு பொய்வாதம் தோன்றி இருந்திருக்கிறது. செல்வம்
உடைமை புண்ணியத்தின் பயன் - அருளின் ஆக்கம் என்றெல்லாம் பிழைபடக் கருதி வந்திருக்கின்றனர். இதனை, திருவள்ளுவர் கடுமையான குரலில் மறுக்கிறார்.
'பொருட்செல்வம் பூரியர் கண்ணும் உள்' என்று இடித்துக் கூறுவதன் மூலம், மனிதனின் தகுதிப்பாட்டுக்கு. பொருள் உடைமையைத் திருவள்ளுவர் அளவுகோலாகக் கையாள விரும்பவில்லை. திருவள்ளுவர் மனிதகுலத்தை ஒன்றாக இணைத்து 'ஓருலகம்' சமைப்பதையே இலட்சியம் மாகக் கொண்டவர்.
அத்தகைய இலட்சிய உலகத்தைப் படைப்பதற்கு அன்பும் அருளுமே இன்றியமையாத் தேவை. அவையே துணை செய்ய முடியும் என்று அவர் கருதினார். அந்த நம்பிக்கையில் தோன்றியதே திருக்குறள்.
வாழ்க்கையின் தொடக்க நிலை அன்பு. முழுநிலை அருள். இத்தகு அருள் உணர்வு துன்பத்தைக் கண்டால் துடிக்கும். துன்புறுத்தலுக்கு நாடு, இன மொழி வேறுபாடு ஏது? யார் துன்புற்றாலும், எவ்வுயிர் துன்புற்றாலும், இதயம் கலந்த அருள் உணர்வோடு துன்பம் துடைப்பவனே மனிதன்.
அதனாலன்றோ. வாடிய பயிரிலிருந்து, வாட்டமுறும் மக்கள் வரை, வாட்டம் நீக்கி வளம் சேர்க்கும் வான் மழை அருளாயிற்று! பற்றுக் கோடின்றி பாரில் உள்ள உயிர் அனைத்தும் துய்த்து வாழ்ந்து தூநெறிசேரத் துணை நிற்கும் இறைவனின் கருணை அருளாயிற்று.
பொருட் செல்வம் தேடி அலையும் மனித உலகம் உடன் கருணையையும் நோக்கி அலையுமானால், பெரும் பயன்பெறும்; அமைதி நிலவும் : வந்த காரியமும் நிறைவுறும்.
ஈர நெஞ்சினர் இறைவனைக் காண்பார் என்றார் அப்பரடிகள். உமிழ்நீரால் தொண்டையை நனைத்து உலா வருதல் போல , பருகும் நீரால் வயிற்றை ஈரப்படுத்து வதுபோல, காய்ச்சற் பாட்டில் திகழும் இவ்வுடலை நீரில் அமிழ்த்தி நனைப்பதுபோல , நெஞ்சத்தையும் இனிய அருளில் நனைக்க முயற்சிப்போமாக !
--------------
31. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை !
மனித சமுதாய வாழ்க்கையின் இரட்டை நாடிகள் பொருளும் அருளும் ஆகும். இவை இரண்டும் முரண் பட்டன அல்ல. இணைந்த இரட்டைகளாம். ஒன்றின்றி ஒன்றில்லை. ஒன்றற்கொன்று அரணுமாகும். ஒன்று பிரிதொன்றைக் கொண்டுவந்து சேர்க்கும். இவ்விரட்டை எங்காவது பிரிந்து காணின், அது பொருளுமன்று அருளுமன்று.
அறியாதார் சிலர், அருள் உணர்ச்சியால் பொருளை இழக்க நேரிடும் என்பர். பொருள் இழத்தலே , மேலும் பெறுதற்குரிய வழி! ஆனால், சூதில் இழத்தல் இதில் சேராது. அருள் கருதி, பசித்தவர் பசிப்பிணி நீக்கப் பொருளை இழப்பவர் பொருளை இழப்பதில்லையே இதனை வள்ளுவம், ’பொருள் வைப்புழி' என்றது.
பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை. இது வள்ளுவத்தின் தெளிந்த முடிவு. ஆனால், இன்று நாட்டில் ’பொருள்' என்பதற்குப் பிழையான கருத்தே கொள்கின்றனர். பொருள் என்பது இன்று நாணய மாற்று விகிதத்தில் நம்மிடையே நடமாடுவதன்று.
நாணயத்திற்குள்ள மதிப்பு அதில் கலந்திருக்கிற உலோகத்தைப் பொருத்ததன்று, ரூபாய் நோட்டுக்குள்ள மதிப்பு, அது செய்யப்பட்டுள்ள தாளுக்குரியதன்று. அதனுடைய மதிப்பு, அதற்குப் பின்னணியாகவுள்ள மனிதர்களுடைய அனுபவத்திற்குள்ள பொருள்களை வைத்தே யாகும்.
இன்னும் தெளிவாகக் கூறினால் அப்பொருள்களை உற்பத்தி செய்வதற்கு மனிதன் செலவழித்த அறிவு - உடல் உழைப்புக்களை மையமாகக் கொண்டதேயாகும். சக்தியை எவர் உடையவராக இருக்கிறாரோ அவரே அந்த அளவுக்குப் பொருள்களையோ நாணயங்களையோ, பெறவும் அனுபவிக்கவும் உரியவர் என்ற நியதியே உயர்ந்த ஒழுக்கமான நியதி. இந்த நியதி நின்று நிலவினால் நீதியும் நின்று நிலவும்.
இன்று நம்மிடையில் இந்த நியதியுமில்லை; நீதியும் இல்லை! உழைப்பென்றால் இன்னதென்றே அறியாது ஒரு நூறு பேர்களிடம் பல நூறு கோடியல்லவா முடங்கிக் கிடந்திருக்கிறது! இந்த முடக்கத்தை உடைத்து, மக்கள் மன்றத்திற்கு மடைமாற்றிய பெருந்தகைமை சான்ற பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, இந்த நாட்டின் வரலாற்றில் புது யுகத்தைத் தோற்றுவித்து, புகழ்பெற்று விளங்குகிறார்கள்.
பொருள் என்பது, மனிதன், உண்டு, தின்று, உடுத்தி அனுபவிக்கத் தக்கனவே யாம். உடல் - உயிர்க்கூட்டு நிலைபெற்றியங்க இந்த எந்திர வாழ்க்கைக்கும் எரி பொருள் தேவை. அதுவே தம் உணவு. உணவில்லாதார் , இவ்வுலகத்தில் இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடுதல் இயலாது. இதனையே திருவள்ளுவர் 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை ' என்றார்.
இவ்வுலகம் என்பது அண்மைச் சுட்டு. இவ்வுலகம் என்பது குடும்பத்தைக் குறிக்கும். பொருள் பெற்று கூடித் துய்த்து மகிழ்வதுதானே குடும்பம் ! அஃதில்லையேல் குடும்பம் ஏது? அதனால், பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றும் கூறலாம்.
அடுத்து ’அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை' என்று கூறுகிறார் ’அவ்வுலகம்' என்பதை வீடு என்று பொருள் கொள்வது மரபு. அங்ஙனம் பொருள் கொள்வதில் தவறில்லை. ஆயினும், இந்த 'அவ்வுலகம்' என்பது கேள்விக்குறி! அஃது அறிவொடு படாதது. அதனால் ஆய்வு இருக்கவே செய்யும், அதைவிடச் சிறப்பாக அருளின் பொருள் விளக்கமாக விளங்கும் சிறந்த பொருள் ஒன்று கொள்ள முடியும்.
அவ்வுலகம் என்பது சேய்மைச் சுட்டு. குடும்பத்தினின்று விலகி, சற்றுத் தூரத்தில் இருப்பது. அதுவே மக்கட் சமுதாயம்!
பொருளுடையான் அருள் உணர்ச்சியுடையவனாக - மக்கட் சமுதாயத்திற்குப் பயன்படும் வழியில் பயன்படுத்தத் தவறிவிடுவானானால் அவனுக்குச் சேய்மையில் விளங்கும் சமுதாயம், அவனை நினைத்துப் பார்க்கமாட்டாது.
அவனை ஒரு பொருளாக மதிக்கமாட்டாது. சமுதாயத்தின் மத்தியில் அவனைப் பற்றிய பேச்சு இருக்காது.
ஒரோ வழி இருந்தாலும் அது பேணுதற்குரிய பெருமையைத் தராது. சிறுமையையே தரும் அவ்வுலகம் என்பதற்குச் சமுதாயம் என்று பொருள் கொள்வதே ஐயத்திற்கிடமின்றித் தெளிவுபடுத்துவதாகவும், அருளுடைமை விளக்கத்தின் மையமாக இருக்கிற சமுதாயத்தைப்பற்றி நிற்பதாகவும் இருக்கிறது. இது சிறந்த கருத்தாகும்.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள்
இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
----------
32. பொருளைப் போற்று
திருவள்ளுவர். வாழ்க்கைகளுக்கு அப்பாற்பட்ட கற்பனை உடையவரல்லர். அவருடைய சிந்தனைப் போக்கு வாழ்வியலை ஒட்டியே அமைந்திருந்தது. எதார்த்த உண்மைகளுக்கு அவர் மாறுபட்டவரல்லர்.
ஆதலால், மனித வாழ்க்கைக்கு மிகமிக இன்றியமை யாததாகிய பொருளைப் பற்றிய திருவள்ளுவரின் கருத்து இரண்டு பட்டதன்று. குழப்பமானதுமன்று. மிகமிகத் தெளிவானது, பொருளின் அடித்தளத்திலேயே தனிமனிதனின் வாழ்க்கையையும். சமுதாயத்தின் வாழ்க்கையையும் காட்டுகின்றார். ஏன்? பழந்தமிழ் மரபும் அதுதானே!
மனிதன் அடையக்கூடிய பேறுகள், நான்கு என்பது தமிழ்மறை. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். அவற்றில் நடுவனவாகிய பொருள் எய்த இருதலையும் எய்தும் என்பது தமிழ் நூல் முடிபு.
அதனாறன்றோ திருவள்ளுவர் அறம், பொருள். இன்பம் என்று முப்பால் நூல் செய்தார். வீடுபற்றி அவர் தனி இயல் அமைக்கவில்லை. காரணம், அறம், பொருள், இன்பம் ஆகியவை மனிதன் முயன்று செய்யக் கூடியவை - பெறக் கூடியவை.
ஆனால் வீடு , அறம் - பொருள் - இன்பத்தை முறையாகச் செய்து அனுபவித்து வெற்றி பெற்றவர்களுக்கு இறைவனால் வழங்கப் பெறுவது. வாழும் மனிதர்க்கே திருவள்ளுவர் நூல் செய்தமையில் காரணமாக, வீடு பற்றிய தனிவியல் அமைக்கவில்லை எனினும் ஒரே வழி குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளுவர் ஒரு பொருளியல் துறை அறிஞர். பொருளின் தோற்றத்திற்குரிய நிலைக்களனான பாது காத்தல், பங்கீடு ஆகியவை பற்றி தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். பொருளில்லையானால், உலகியல் இல்லை என்று கூறுகிறார்.
வறட்சித் தன்மையுடைய மாயா வாதம், பெளத்தம், சமணம் ஆகிய சமயக் கருத்துக்கள் தமிழகத்தில் ஊடுருவத் தொடங்கிய பிறகுதான், தமிழர் வாழ்வியல் கெட்டது வாணிகம் வீழ்ந்தது. ஆட்சி அந்நியர் கைக்கு மாறியது.
இந்த நிலையினை உணர்ந்த தமிழக சிவ நெறி சான்றோர்களாகிய மாணிக்கவாசகர், அப்பரடிகள், சுந்தரர் போன்றோர் பொருளின் மேம்பாட்டினை வலியுறுத்தினர். 'முனிவரும் மன்னவரும் முன்னுவ பொன்னால் முடியும்’ என்பது மாணிக்கவாசகரின் வாக்கு.
”ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய்” என்றும், ”பொன்னானாய், மணியானாய்" என்றும்
அப்பரடிகள் பாடுகின்றார். சுந்தரர் வாழ்க்கைக்கு இறைவன் பொற் காசு வழங்கியதைச் சேக்கிழார் சிந்தை இனிக்கப் பாடுகின்றார்.
பொருள் உலகியலின் அச்சு; அதை வைத்தே உலகியல் நடைபெறுகிறது. திருவள்ளுவர், பொருளைப் போற்ற வேண்டும் என்று கூறுகின்றார். பொருளை போற்றுதல் என்றால், பொருளைப் பூசித்தல் என்பது பொருளன்று. பொருளைப் பாதுகாத்தல் என்பதுதான் பொருள்.
பாதுகாத்தல் என்றால் செல்வத்தின் பயனாகிய இன்பம் நுகர்தல், கொடுத்து மகிழ்தல், ஆகியன. செய்யாமல் பூட்டி வைத்துப் பாதுகாப்பது என்பதும் பொருளன்று. பொதுவாகவே, போற்றுதல் என்ற சொல்லுக்கு நிறைந்த பொருள் உண்டு. போற்றுதல் என்ற சொல்லிலேயே வளர்த்தல், பாதுகாத்தல் என்ற இரு கருத்துக்களும் அடங்கும்.
”பொருட் செல்வம் போற்றுவார் கண்ணே உள" என்கிறார் திருவள்ளுவர். பொருட் செல்வம் போற்றுதற்கு வேண்டிய முதற் குணம். பொருளின் மதிப்பினை - சிறப்பினை உள்ளவாறு உணர்தல்.
பொருள் என்றால், அது வளரும் இயல்புடையதே அன்றிக் குறையும் இயல்புடையது அன்று. பொரும் செல்வத்தை வாழ்க்கை என்ற களத்தில், உழைப்பு என்ற நீரூற்றிச் சிக்கனம் என்ற வேலி கட்டிப் பாதுகாத்தல் வேண்டும். பொருளின் தாய் உழைப்பே யாகும், உழைப்பின்றேல் பொருள் இல்லை. வந்த பொருளைச் சிக்கன முறையில் பாதுகாக்க வேண்டும்.
அதனாலன்றோ, அப்பரடிகள், ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய் என்றார். ஏரிக்குக் கரைக்கட்டித் தண்ணீரைக் காப்பது போல, பொருளுக்கு சிக்கனம் என்ற கரை தேவை. சிக்கனம் என்றால் கஞ்சத்தனம் என்று பொருளல்ல - அப்படிப் பொருள் கொள்ளக்கூடாது.
ஒரு ரூபாய் செலவில் முடிக்கக்கூடிய காரியத்திற்கு இரண்டு ரூபாய் செலவு செய்வது பொருள் இழப்பிற்குரிய வழியாகும். அத்தகையோரிடத்தில் செல்வம் தங்குவது இல்லை.
மேலும், பொருள் வருவதற்குரியனவாகக் கிடைத்து உள்ள வாய்ப்புக்களை இழக்காமல் முறையாகப் பயன் படுத்திப் பொருளீட்ட வேண்டும். வாய்ப்புக்களை இழப்பதும் கூடப் பொருள் இழப்பேயாகும்..
அதுபோல ஒரு களம் - அதற்குப் பயன்படுத்தக் கூடிய உழைப்பு ஆகியவை மூலம் எவ்வளவு பொருள் ஈட்டவேண்டுமோ, அவ்வளவையும் ஈட்டவேண்டும். அதற்குக் குறைவாக ஈட்டுதலும் பொருள் இழப்பிற்குரிய வழியேயாகும்.
பொருள் இழப்பு ஒற்றையல்ல - அதைத் தொடர்ந்து வருகிற இழப்புக்கள் பல உண்டு. பொருள் இழப்பினைத் தொடர்ந்து சிறப்பிழத்தல், வறுமை, நோய், வாழ்க்கைச் சுமை ஆகியவையும் அவற்றினைத் தொடர்ந்து நரகமும் வரும்.
”பொருளாட்சி போற்றாதார்க் கில்லை” என்பதைத் திருவள்ளுவர் 'புலால் மறுத்தல்’ என்னும் அதிகாரத்தில் வைத்து விளக்கியுள்ளார். இது, பொருளாட்சியின் அவசியத்தை எளிதில் மனங்கொள்ள உணர்த்துதற்கே யாம்.
திருவள்ளுவர் 'புலால் மறுத்தல்' அதிகாரத்தை துறவற இயலில் வைத்துள்ளார். ஆதலால், புலால் உண்ணாமை எல்லோரும் மேற்கொள்ளக்கூடிய ஒழுக்க மன்று என்று திருவள்ளுவர் கருதினார் போலும் எனக் கருதவும் இடமுண்டு. திருவள்ளுவர் இல்லற இயலிலும், குடியியலிலும் புலால் உண்ணாமையைக் கூறவில்லை. துறவிகள் அல்லாதார் புலால் உண்ணுதலுக்கு உடன்பட்டார் என்பது நமது கருத்து.
தற்போது உலகத்தை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ள உணவுச் சிக்கல்களுக்குச் சரியான தீர்வு புலால் உண்ணுதலைப் பெருக்குதல் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இன்றைய அறிஞர்களின் கருத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவரின் சிந்தனை!
ஆனாலும், துறவிகள் புலால் உண்ணக்கூடாது என்பது திருவள்ளுவரின் திட்டவட்டமான கருத்து. இன்றைய உலகியலில் உயிர்க்கொலையை அடியோடு எதிர்த்த புத்தரின் வழிவந்த பௌத்தத் துறவிகள் புலால் உண்ணலில் முதலிடம் வகிக்கிறார்கள்.
அருளொழுக்கத்தின் தாயகமாகிய தமிழகத்திற்கு அண்மையில் வந்திருந்த திபெத்தின் பௌத்த மதத் தலைவர் தலாய்லாமா அவர்கள் இனிமேல் புலால் உண்பதில்லை என்று நோன்பெடுத்துள்ளார்.
துறவிகளின் வாழ்க்கைக் கடமை புறநிலைத் தொடர் புடையது மட்டுமன்று. உள்ளுணர்வு சார்புடையதுமாகும். சிறப்பாக அவர்கள் இதயத்தில் அருளுணர்வு இடம்பெற வேண்டும்.
அருள் என்பது யார் மாட்டும், எதன் மாட்டும் விருப்பு, வெறுப்புக்களின் கலவையில்லாத மாசற்ற பரிவும் பாசமும் காட்டுதலாகும். இத்தகு அருளுணர்வுடையோர் எங்ஙனம் கதறக்கதறக் கழுத்தையறுத்து இரத்தம் சொட்டச் சொட்ட இரக்கமின்றிப் புலாலை உண்பார்கள்? அப்படி உண்பவர்களை எங்ஙனம் அருளாட்சியுடையோராகக் கருத முடியும்? என்று வினவுகின்றார் திருவள்ளுவர்.
துறவற உலகிற்கு அருளாட்சியும், இல்லற உலகிற்குப் பொருளாட்சியும் இன்றியமையாதன. இவ்விரு வேறு உலகமும் தமக்குரிய அருளாட்சியையும், பொருளாட்சியையும் போற்றுமாயின், பொருளால் அருள் வளரும் - அருளால் இன்பம் பெருகும்!
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊண்தின் பவர்க்கு.
----------------
33. எது தவம்?
திருக்குறள் ஓர் ஒழுக்க நூல் - அற நூல். ஆயினும், விஞ்ஞானப் பார்வையில் தலை சிறந்து விளங்கும் நூல். திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறி அற நெறி. மனித இயல்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நடைமுறைப் படுத்தக்கூடியவையாகவே கூறப்பெற்றிருப்பது எண்ணி உணரத்தக்கது.
வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட - நடைமுறை சாத்திய மற்ற ஒழுக்க நெறிகளைத் திருக்குறள் கூறவில்லை. "வாழ்வாங்கு வாழ்தல்" என்பதையே திருக்குறள் சிறந்த அறமாகப் பாராட்டுகிறது. அங்ஙனம் வாழ்பவர்கள் தெய்வமெனப் போற்றப்படுவார்கள் என்றும் திருக்குறள் கூறுகிறது.
வாழ்க்கை என்பது கடமை என்ற செயற்பாட்டுக் காகவே. சிறந்த சமய நெறியின்படியும் உயிர்கள் வாழ்க்கைக் களத்தில் கடமைகளைச் செய்வதன் மூலம் அறிவும் அனுபவமும் பெற்று முடிவில் துன்பச் சூழலினின்றும் விடுதலை பெறுகின்றன என்றே கூறுகின்றது.
எல்லா உயிர்களும் தமக்கு இயைபான களங்கள் அமைத்துக் கொள்ளுகின்றன. அத்தகு களங்களே இல்லறம் துறவறம் என்றமைகின்றன. இவை இரண்டும் கடமைகளின்பாற் பட்டனவே.
இல்வாழ்வான் கடமைகள் சற்று தன்னலச் சார்பும், குடும்பச் சார்பும் தழுவியனவாக
இருக்கும். இந்த வாழ்க்கைக்குச் சில விதிகள் உண்டு. துறவற வாழ்க்கைக்குத் தன்னலச் சார்பே இல்லாத - பிறர் நலம் கருதிச் செய்கின்ற கடமைகளே உண்டு. இங்கு விதிவிலக்குகள் மிக மிகக் குறைவு. ஏன்? இல்லையென்றே கூறலாம்.
ஆயினும், இவ்விரு வகை வாழ்க்கையின் இலட்சியமும் கடமைகளைச் செய்தலேயாகும். துறவறம் அல்லது தவ வாழ்க்கை என்றால் கடமைகளினின்றும் விடுதலை பெறுவதல்ல.
கதே என்ற தத்துவ ஞானி கூறியதுபோல, ஞானிகளின் கடமை உலகத்தைத் துறந்து ஓடி விடுவதன்று. உலகத்தோடு ஊடுருவி உண்ணின்று அதன் இயல்பறிந்து அதனுள் வீழாமல் - வீழ்பவர்களையும் காக்கப் பணிகள் செய்தலேயாகும்.
திருவள்ளுவர் துறவற இயலில் 'தவம்' என்ற அதிகாரத்தில்,
தவம் செய்வார் தங்கருமம் செய்வார் மற்றெல்லாம்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.
என்று குறிப்பிடுகின்றார். இந்தத் திருக்குறளுக்கு உரை கண்டவர்கள், வாழ்க்கையைத் துறந்து தவம் செய்கின்றவர்கள் தம்முடைய காரியத்தைச் செய்கிறார்கள் என்பது போலப் பொருள் காண்கிறார்கள். அங்ஙனம் செய்யாதவர்கள் ஆசையுட்பட்டும் பாவம் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
இந்தத் திருக்குறளுக்கு இன்னும் சற்று ஆழமாக - விரிந்த நிலையில் பொருள் காண்பது நல்லது. "தம் கருமம் செய்வார் தவம் செய்வார்" என்று கொண்டு கூட்டிப் பொருள் காண்பது சிறப்பாக இருக்கும்.
மனித வாழ்வியலில் அவர்களுக்கென்று கடமைகள் அமைந்துள்ளன. அவர்களும் அவரவர் கடமைகளை உணர்ந்து செய்யாமையினால் தம்மையும் கெடுத்துக் கொள்கிறார்கள், அவர்களோடு தொடர்புடையதாக இருக்கிற சமூகத்திற்கும் கேடு செய்கிறார்கள்.
இதன் விளைவாகச் சமூகச் சிக்கல்கள் பெருகி, அழுக்காறு, அவா, வெகுளி போன்ற இழி குணங்கள் பெருகி வளர்ந்து, மனித சமுதாயத்தை அலைக்கழிக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, கடமைகளைச் செய்தவன் மூலமே உயிர்களைப் பரிணாம
வளர்ச்சியில் ஈடுபடுத்தித் தகுதிப்படுத்தி ஆட்கொண்டருளும் இறைவனுடைய திருவுள்ளத்திற்கும் மாறாக வாழ்ந்து, பாவத்தை விளைவித்துக் கொள்கின்றனர்.
ஆதலால், தமக்குரிய கடமைகளைச் செய்தலையே திருவள்ளுவர் 'தவம்' என்று கருதுகின்றார். இல்லறத் தாராக இருப்பாராயின் தமது மனைவி, மக்கள், சுற்றம் தழுவிப் பாதுகாத்து வாழ்தல் கடமை.
துறவறத்தாராக இருப்பாராயின் மனித சமுதாயத்தையே தழுவி, அவர்கள் நன்னெறி நின்றொழுகி நல்லின்பத்தோடு வாழ சிந்தனையாலும் செயலாலும் கடமைகளைச் செய்தல் வேண்டும். இஃதன்றி, உலகியலை ஒழித்த தவம் என்று பொருள் கொள்ளுதல் சிறப்புடையதன்று.
கடமைகளை முறையாகச் செய்தல் சிறந்த கடவுள் வழிபாட்டுக்கு ஈடு அல்லது இணையானது என்னும் பொருள் படச் சான்றோர் பலரும் பேசியிருக்கிறார்கள்.
'கடமையே மிகச் சிறந்த நோக்கம் ஏனெனில் அது கடவுட் கருத்தைத் தழுவியதாக இருக்கிறது' என்று லக்கார் டயரும்,
'கடமையை விருப்பத்தோடு செய்பவர்களுக்குக் கடவுள் எப்போதும் உதவியாக இருக்கிறார்' என்று கெய்லரும், 'கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்தல் அறிவை யும் மனத்தையும் பலவீனப்படுத்தித் தூய்மையான தவ வாழ்க்கையைப் புதைத்து விடுகிறது' என்று ட்ரயான் எட்வர்ட்ஸ் என்பாரும், 'உயிர்கள் தம்முடைய கடமைகளை உடனடியாகச் செய்வதாக முடிவெடுத்துக் கொள்வது கடவுள் இதயத்தின் சந்நிதி' என்று பேகனும் பேசியிருக்கின்றனர்.
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட சான்றோர்களின் வரலாற்றை நமக்கு அருளிய சேக்கிழார் பெருமானும் தவம் என்ற வாழ்க்கையை உலகியல் வாழ்க்கையோடு இணைத்துக் கூறுவதை நூல் முழுவதும் பரக்கக் காணலாம்.
சங்கிலியாருக்குச் சுத்தரரைச் - சிவபெருமான் அறிமுகப்படுத்தும் போது, ”மேருவரையின் மேம்பட்ட தவத்தினான்" என்று கூறுவதாக சேக்கிழார் பெருமான் சித்தரித்திருப்பது அறிந்து இன்புறத்தக்கது.
ஆதலால், திருக்குறள் காட்டும் தவம், தத்தம் கடமைகளைச் செய்தல்; அவம், கடமைகளைச் செய்யா தொழித்துப் பிறவற்றைச் செய்தல்.
--------------
34. காரணம் என்ன?
இந்த உலகில் செல்வந்தர்கள் மிகச் சிலரே உள்ளனர்; வறியவர்கள் பலர். இந்த அவல நிலை ஏன்? உலகு தொடங்கிய நாள் தொட்டு, எல்லாரும் செல்வந்தர்களாக விளங்கவே விரும்புகின்றனர்; முயலுகின்றனர். சிலருக்கே வெற்றி கிடைக்கிறது பலர் தோல்வியடைகின்றனர்.
இந்த வெற்றி - தோல்வியின் விளைவாக ஏற்பட்டுள்ள விளைவுகள் மனித சமுதாயத்தின் நல்வாழ்க்கைக்குக் கேடு பயப்பன ஆகும். பல்வேறு ஒழுக்கத் தவறுகளைத் தோற்றுவிப்பனவாகவும் அமைந்துள்ளன. அதனாலேயே, செல்வம் உடைய சிலரை எதிர்த்து, கிளர்ச்சிகளும், புரட்சிகளும் தோன்றின - தோன்றுகின்றன.
இந்த அவல நிலை பற்றிய ஆய்வு, இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருக்குறளில் செய்யப் பெற்றுள்ளது. திருவள்ளுவர் ஒரு முற்போக்குக் கருத்துடைய கவிஞர் - சித்தாந்தங்களைக் கண்டு சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டவர்.
செல்வம் உடையவராகச் சிலரும், இல்லாதவராகப் பலரும் இருப்பதற்கு, திருவள்ளுவர் காரணம் கூறுகிறார். அவர் கூறும் காரணம் புதிது - புகழுடையது. உலக அரங்கில் தோன்றிய முற்போக்குக் கருத்துக்கள் அனைத்தினும் ஆன்ற சிறப்புடையது.
எனினும் வள்ளுவரை விளக்க வந்தவர்கள் அவர்தம் கருத்துக்கு மாறாக, பழைய பத்தாம் பசலிக் கொள்கைகளையே கூறி, அவருடைய புதுமைக்குத் திரையிட்டனர்.
இடைக் காலத்தில் செல்வம், ஆதிக்கம் ஆகியவற்றோடு இறுகப் பிணைத்துக் கொண்ட சமயக் கணக்கர்கள் செல்வம் முன்னைத் தவத்தின் பயன், வறுமை முன்னைத் தவமின்மையின் பயன் என்று மயக்க உணர்வோடு கூறி வைத்தனர். அதன் காரணமாகப் பொது மக்களிடத்தும் கூட செல்வம் முன்னைப் புண்ணியத்தின் பயன் - வறுமை பாவத்தின் பயன் என்ற கருத்து வேரூன்றி நிலவியது.
திருவள்ளுவரோ, செல்வம் உடைமை புண்ணியத்தின் பயன் அன்று என்பதை உறுதியாக
கூறுகின்றார். ’பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள' என்று கூறுகின்றார். செல்வம் அற்றவர்கள், முயற்சியால் செல்வம் உடையவராக முடியும் என்பதையும் ஒத்துக் கொள்ளு கின்றார். 'பொருளற்றார் பூப்பர் ஒருகால்' என்று குறிப்பிடுகின்றார்.
ஆதலால் திருவள்ளுவர், செல்வம் உடைமைக்கும், இன்மைக்கும் முன்னைத் தவத்தையோ பயனைளோ காரணமாக ஒத்துக் கொள்ளவில்லை.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
என்பது திருக்குறள்.
நோன்பு முறை பலப்பல. எல்லா நோன்புகளினுள்ளும் மிகச் சிறந்தது செல்வத்தின்கண் உள்ள பற்று நீங்கி, அவ்வழி தான் பெற்ற செல்வத்தைப் பலருக்கும் வழங்கி அவர்தம் வறுமையை மாற்றுதல். அதனாலன்றோ , ஈகையிலுங்கூடே
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
என்று கூறுசின்றார்.
புறநானூற்றிலுங்கூட, கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி, இவ்வுலகம் உள்ளதாக விளங்குவதற்குப் பல்வேறு காரணங்களை வகுத்துக் கூறிவிட்டு இறுதி முடிவாக, ’தமக்கென முயலா நோன்றாருள் பிறருக்கென முயலுநர் உண்மையானே' என்று கூறுகின்றார்.
அதாவது, தனக்கென முயற்சி செய்யாது பிறருக்கென முயன்று பொருள் ஈட்டி வாழ்விப்பான் உள்ளமையானே, உலகம் இருக்கிறது - நடைபெறுகிறது - இயங்குகிறது என்று குறிப்பிடுகின்றார்.
அகநானூற்றிலுங்கூட தலைமகள், தன் தலைவனுக்குத் தன்மீது உள்ள, காதலைவிடப் பொருளின் மீது காதல் அதிகம். ஆதலால், பொருள்வழியிற் பிரிந்து சென்றவன் திரும்பி வருவானோ மாட்டானோ என்று ஐயுறுகின்றாள்.
தலைமகனுக்குப் பொருள் மீது காதல் மிகுந்தமைக்குக் காரணம் தான் நுகர்ந்து வாழவேண்டும் என்பது அன்று. இல்லாதவர்களுக்கு வழங்கி, அவர்களது வறுமையைத் தொலைக்க வேண்டும் என்பதேயாகும் என்றும் அவள் கூறுகின்றாள்.
இரப்போர்க்கு இல்லென்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப.
"நம்மினும் பொருளே காதலர் காதல்” என்பது அக நானூறு. இங்கு, இயைவது என்று குறிப்பிட்டது பொருளுடைமையின் தகுதி மட்டுமன்று. அப்பொருளை ஈட்டக் கூடிய ஆற்றலையும் உட்படுத்தி நிற்கிறது.
புறநானூறும் தெளிவாகக் கூறுகிறது. "செல்வத்துப் பயனே ஈதல்” என்று. ஆதலால், செல்வத்தை ஈட்டுதலும், அச் செல்வத்தைப் பிறர்க்கு வழங்குதலும் ஒரு நோன்பாகும். இந்த நோன்பைச் செய்கின்றவர்கள் - நோற்பவர்கள் சிறரேயாக இருக்கிறார்கள்.
எனவே, இலர் பலராக இருக்கிறார்கள். இந்த நோன்பை நோற்பார் பலரானால், செல்வம் உடையரும் பலராவார்கள். இதுதான் நியாயமான உரை. இன்றையப் பொருளியல் சிந்தனையுலகும், புதுமை உலகும் தெளிவாகப் பேசுகின்றன.
”மனிதன் ஒரு சமுதாய உறுப்பினன்; அவனுடைய ஆற்றல் சமுதாயத்தின் பொதுவுடைமை. அவனுடைய ஆற்றலால் விளைகின்றவை அனைத்தையும் அனுபவிக்கச் சமுதாயத்திற்கு உரிமையுண்டு" என்பது. ஒருவர் தனது ஆற்றலால் செல்வம் ஈட்டினாலும் அவர் ஓரளவே அனுபவிக்கலாம். எஞ்சியதைச் சமுதாயத்திற்கு தருதல் வேண்டும் என்று இன்றைய நியாயம் கூறுகிறது - நீதி பேசுகிறது - சட்டம் வழி வகுக்கின்றது,
இக் கருத்தினையேதான் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருவள்ளுவர் செல்வத்தை முயன்று ஈட்டிப் பலருக்கும் வழங்கும் நோன்பை நோற்பார் பலரானால் செல்வம் உடையவரும் பலராக இருப்பார்கள். அங்ஙனம் நோற்பார் சிலராயின் வறியவர் பலராவர் என்று தெளிவாகக் கூறினார்.
திருக்குறளை, கீழ்க்கண்டவாறு இணைத்துப் பொருள் கொண்டு சிந்திக்கவும்.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
இக் குறட்பாவில், 'நோற்பார் சிலர்" என்று ஒரு பகுதியும், பலர் நோலாதவர் ”இலர் பலர்" என்றும் கொண்டு கூட்டிப் பொருள் காணுதல் சாலும். குறட்பாவில் இலர் வெளிப்படையாகச் சொல்லப் பெற்றுள்ளது. உடைமை உய்த்துணர்விக்கப் பெற்றுள்ளது.
நோற்பார் என்றும், சிலர் என்றும் இருப்பதால், நோற்பாரை உயர்வு கருதிய ஒருமையாக ஏற்றுக்கொண்டு பொருள் காணுதல் வேண்டும். அவ்வழி நோற்பாரும் சிலரும் ஒருவரேயல்லர்; நோற்பார் வேறு; சிலர் வேறு. நோலாதவர் வேறு; பலர் வேறு.
உலகியலுங்கூட ஒரு மனிதனுடைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவனைச் சார்ந்த சமுதாயம் பொறுப்புள்ளது ஆகிறது என்ற வழக்கின் அடிப்படையையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.
மேற்கண்ட உரை துறவியலில் வரும் ’தவம்' என்ற அதிகாரத்திற்குப் பொருந்துமோ என்ற ஐயப்பாடு சிலருக்குத் தோன்றலாம். பொருந்தும் - முக்காலும் பொருந்தும் என்பதே நம்முடைய கருத்து.
தவம், ஒழுக்கத்தின் முதற்படி. பொருட் பற்று நீங்கு தலேயாம். அதனால், பொருந்தும். தவமுடையார்க்குப் பொருள் ஏது என்ற வினா எழலாம். தவமுடையார் தாமே நேரில் பொருள் ஈட்டாது போனாலும், அவர் தம் தவத்தினால் கவர்ச்சிக்கப்பட்டவர்கள் - நன்மைகளைப் பெற்றவர்கள் காணிக்கை தருவார்கள்.
அங்ஙனம், சாதாரண மக்களும் மன்னர்களும் கூடத் தந்துள்ளனர் என்பதை நமது நாட்டு வரலாறே பேசுகின்றது. அவ் வழித் தோன்றியவையே அறநிலையங்களும், திருமடங்களும். அங்ஙனம் தரும் பொழுது, அவற்றையும் வழங்கிப் பிறரை வாழ்வித்து, தான் வறியவராக வாழ்தலே தவத்திற்கு அழகு.
இக் கருத்தினை அப்பரடிகள், ’கந்தை மிகையாம் கருத்தும்' என்று பேசுகின்றார். இதனைச் சேக்கிழார் அடிகளும்,
”கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினால் கும்பிடலேயன்றி
வீடும் வேண்டார் விரலின் விளங்கினார். ”
என்றும், அடுத்து
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணியல் தொன்றிலர்
என்றும் குறிப்பிடுகின்றார்.
ஆதலால், தவத்தினை மேற்கொண்டவர்களாவது தமக்குக் கிடைத்த செல்வத்தைப் பிறருக்கு வழங்கி மற்றவர்தம் வறுமையை மாற்றி - அல்லல் நீக்கி - அவலம் போக்க சிவ சிந்தனையில் ஈடுபட வேண்டியது. அவசியம். எனவே, இவ்வுரை முற்றிலும் பொருந்துவதே யாகும்.
--------------
35. மழித்தலும் நீட்டலும்!
தவம் ஒரு சோதனைப் பட்டறை. பட்டறையில் இடப்பட்ட பொன் தூய்மை பெற்று ஒளிர்தல் போல, தவத்தில் ஈடுபட்டோர் துன்பங்களால் தூய்மைப்படுத்தப் பெற்று, ஒளி பெற்றுத் திகழ்தல் வேண்டும்.
துன்பம் இருவகையது. ஒன்று உடல்வழி வரும் பசி, நோய் முதலியன. பிறிதொன்று உயிர்வழி விருப்பு வெறுப்புக்களால் வரும் உணர்வுகள் ஆசைகள் முதலியன. இவ்விருவகைத் துன்பங்களையுமே கவலையின்றி, மகிழ்வுடன் ஏற்று அனுபவித்துத் திருவருளை நினைந்து வாழ்தல் தவம்.
அதனாலன்றோ திருவள்ளுவர், "உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு" என்று தெளிவாகத் தேற்றேகாரம் போட்டு அறிவுறுத்தினார்.
உற்ற நோய் நோற்றல் முதல் வகை. அந் நோயில் இருந்து விடுவித்துக் கொள்ள விரும்புதலும் விருப்பம், முயற்சி ஆகியவற்றின் காரணமாகப் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் பிறிதொரு வகை.
தவம் செய்யும் ஒரு பழக்கம் உடற் பழக்கம் - உயிர் பழக்கமும் கூட. உடலையும் உள்ளத்தையும் முறைப்படி யழக்குதல் எளிதன்று. கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி எடுத்து கொண்டு ஓடுவது போல.
கிண்ணம் ஆடினாலும் தண்ணீரும் அலையும் ; வெளியே சிந்தும். தண்ணீர் அலைந்தாலும் ஒரோ வழி கிண்ணம் ஆடும். ஓடுவதோ ஓட்டம். இந்த அமைப்பில் ஓடவும் வேண்டும். கிண்ணத்தை ஆடாமல் பாதுகாக்கவும் வேண்டும். அதனுள் இருக்கும் தண்ணீர் அலைந்து வழியாமல் பாதுகாக்கவும் வேண்டும். இத்தகையதே தவம் செய்யும் முயற்சி.
நாம் வாழும் உலகியல் ஆசைகளால் நிறைந்து அலைவது. இதில் உடலையும் உயிரையும் ஒருங்கே பாதுகாக்க வேண்டும். உடல் கெட்டாலும் உயிர் கெடும் - உயிர், உணர்வு கெட்டாலும் உடல் கெடும். ஆதலால், உடலை, உயிர் நிலைப் பாதுகாப்பு என்று கருதுவதில் தவறில்லை.
உடல் நிலை உயிர் உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும் நிலைக்களன். உடலியற் கூறுகளுக்கு ஏற்றவாறு, உயிர் உணர்ச்சிகள் தோன்றும் - வளரும். அதனாலன்றோ தவம் செய்வோர் உடல், ஆசைகளைத் தோற்றுவிக்கும் நிலைக்களனாக விளங்குவதை விரும்புவதில்லை.
ஆதலால். உடலைத் தவத்தால் வருத்துவர், உடல் அழகினைக் கெடுத்துக் கொள்வர். இவ் வழித் தோன்றியதே மழித்தலும், நீட்டலும் ஆகிய செய்முறை. ஒரோவழி நீட்டல் மட்டும் தன் இயல்பாகவே நிகழ்தல் உண்டு.
அதாவது தன்னையும், தன்னுடைய உடலையும் மறத்தலின் காரணமாகத் தோன்றுதல். எனினும் இங்கு நீளுதல் என்றின்றி நீட்டல் என்றே திருவள்ளுவர் வினை வழிப் படுத்திக் கூறி இருத்தலான் செய்முறை என்றே கொள்ளல் வேண்டும்.
திருவள்ளுவர் இச் செய்தவத்தின் முறையை மறப்பது போலப் பலர் கருதுகின்றனர். அதற்குக் காரணமாக இருப்பது,
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
என்ற குறள். திருவள்ளுவர் உலகியல் முழுவதும் கண்டு உணர்ந்த சான்றோர். ஆதலின், அவர் முறையாகவே கூறியுள்ளார். அவர் மழித்தலையும் நீட்டலையும் முழுதுமாக மறுக்கவில்லை. அச் செயல் முறையைத் தன்னுடைய உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்திப் பழக்கத்திற்குச் சாதனமாகக் கைக் கொள்ளுவதற்கு உடன்படுகின்றார்.
தவம் முடிவல்ல முயற்சியே. இம் முயற்சியில் வெற்றி அடைவோர் சிலர்; தோல்வியுறுவோர் பலர். ஆனாலும் தவம் செய்வதை மனப்பூர்வமான இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, தவம் செய்யும் பொழுது ஏற்படும் வெற்றித் தோல்விகள் வேறு.
அந் நிலையில் ஏற்படும் தோல்விகளை, தவறுகளைப் பற்றியதல்ல திருவள்ளுவரின் கவலை. தவம் செல்வாக் குடையது என்று கருதி அதனை மேற்கொள்வதின் மூலம், தம்முடைய உலகியல் வேணவாக்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதி, உலகியல் வாழக்கையை இலட்சியமாகக் கொண்டு அதனையடைய தவத்தினை ஒரு கருவியாகத் திட்டமிட்டு வஞ்ச மனத்தோடு மேற் கொள்வாரைப் பற்றியதே திருவள்ளுவரின் கவலை. இதனை,
வலியின் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந் தற்று.
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதர் மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்ந் தற்று.
ஆகிய குறட்பாக்களில் வருகின்ற இரு உவமைகளும் திட்டமிட்டுச் செய்கின்ற நிகழ்ச்சிகளை குறிப்பனவாக இருப்பது அறிந்துணரத் தக்கது.
ஆதலால், உலகியல் இன்பங்களை அடைவதை நோக்கமாகக் கொண்டு, தவ வேடம் பூண்டாலும் அதாவது தவம் செய்வதற்குத் துணை செய்யக்கூடிய மழித்தல், நீட்டல் ஆகிய சாதனங்களை மேற்கொண்டாலும் தாம் விரும்பிய - விருப்பு வெறுப்புக்களுக்கு ஆளான உலகியலையே செய்வதால், திருவள்ளுவர் அவர்களை நோக்கி அறிவுறுத்துகின்றார். இன்றைய நிலையை நுண்ணியதாக உணர்ந்தவர்களுக்கு இந்த உரை விளங்கக் கூடும்.
உலகம் பழித்ததை ஒழிக்கவன்றோ தவம். அம் முயற்சிக்குரிய சாதனமல்லவா மழித்தலும், நீட்டலும். அங்ஙனமிருக்க உலகு பழிப்பதை ஒழிக்க விருப்பமேயின்றி அதனைச் செய்வதையே இலட்சியமாகக் கொண்டு சாதனங்களை மேற்கொண்டவர்களைப் பார்த்து திருவள்ளுவர் கூறுவது உலகு பழிப்பதை செய்து கொள்வதற்குரிய சாதனம் அல்ல தவ வேடம்.
உலகு பழித்ததை ஒழித்துவிடின் சாதனமே வேண்டாம் என்ற குறிப்பிலேயே திருவள்ளுவர் பேசுகின்றார்.
உலகம் பழித்ததை ஒழித்து விடின் மழித்தலும் நீட்டலும் வேண்டா என்பதே திருவள்ளுவரின் தெளிவான கருத்து.
-------------
36. அருளும் பொருளும்
மானிட வாழ்க்கை அருள் நலத்தால் சிறக்க வேண்டிய ஒன்று. அருளின்பம் அன்பினால் பெறக்கூடிய ஒன்று. ஒன்றினைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் காட்டப் பெறுவது அன்பு.
யாதொரு குறிக்கோளுமின்றி, காட்டப் பெறுவது அருள். இறைவன் உயிர்களிடம் காட்டுவது அருள். உயிர்கள் அருளைப் பெறுவதற்கு இறைவன்பாற் காட்டுவது அன்பு. இதனை.
”....................... யாமிரப் பவை
பொன்னும் பொருளு போகமும் அல்ல
அருளும் அன்பும் அறனும் மூன்றும்"
என்று பரிபாடல் குறிப்பிடுகின்றது. இறைவன் உயிர்களுக்கு யாதொன்றும் எதிர்பாராமலேயே அருள் வழங்குகின்றான். அதனாலேயே அவனுக்குப் ’பித்தன்' என்று பெயர் வந்தது. ’குறியொன்றும் இல்லாத கூத்து' என்று திருவாசகம் பேசுகின்றது.
இறை நெறி நிற்போரும், அருள் நலம் கனிந்தவர்களாக இருப்பர். தேனிலோ, உப்பிலோ ஊறிய பொருள் அவற்றின் சுவையைப் பெறுவதுபோல, இறைவனுடைய திருவருளை நினைந்து நினைந்து, அந்த இன்ப அனுபவத்தில் ஊறித் திளைத்தவர்கள் அருள் வசமாகி விடுவார்கள். அவர்களே அந்தணர்கள் - துறவிகள் - சான்றோர்கள் - அருளாளர்கள்.
இத்தகு சிறப்புடைய வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதன்று. பலர் அன்புடையராதல் உண்டு. மக்களிடத்திலும், இறைவனிடத்திலும் அன்பு காட்டுவார்கள். அருச்சனை செய்வார்கள். எனினும் இந்த அன்ப , அருள் கருதிச் செய்யப்படுவது அன்று. அவர்களின் நோக்கம் பொருள் ஒன்றுதான். பொருளைக் கவர்வதற்கு, திட்டமிட்டு அன்பு காட்டுவர். அதற்குப் பெயர் அன்பன்று - நடிப்பு ,
கவிஞர் பட்டுக்கோட்டை சொன்னது போல, வெள்ளாட்டுக்கு இரை வைக்கும் மனிதர்களின் கருணையை ஒத்தது. பொருள் கருதி ஏற்படும் அன்பு தொடராது - நிலை பெறாது. அவர்கள், தாம் கருதியதை முடிக்கக் காலத்தை எதிர்நோக்கி நிற்பர்.
அதாவது தம்மோடு பழகுகின்றவர்களின் மறதி, சோர்வு ஆகியவைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். காலம் வாய்க்கும் போது கருதியதை முடித்து காற்றெனக் கடுகி விடுவர்.
அத்தகையோரிடத்து ஒருபொழுதும் அன்பு இருந்து தில்லை. ஒரு வெளிமயக்கு இருந்தது. அவ்வளவுதான். அவர்களின் நோக்கம், குறிக்கோள் பொருள் ஒன்றுதான்.
நேர் வழியில், உழைப்பால் பொருளீட்ட முடியாதவர்கள், இந்த மறைமுக வழியைக் கையாளுவர். அவர்களிடத்து அன்பு இல்லை. அருளும் கிடைக்காது. அவம் பெருகும். இதனை,
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள் கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
---------------
37. துறவும் துய்த்தலும்
மனித குலத்தின் ஏக்கம் பெரும்பாலும் ஏன்? முழுமையும் கூட பொருளியலின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. பொருள், உலக இயக்கத்தின் அச்சாணியாக அமைந்து விளங்குகின்றது. மண்ணோடு தொடர்புடைய வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பொருள் தேவை.
அதனால் அன்றோ, ஞான நிலையில் நின்ற மாணிக்க வாசகரும். 'முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்' என்றார். அருள் பழுத்த நெஞ்சினராய் அவர் எடுத்த திருப்பெருந்துறைக் கோயில் திருப்பணிக்கும் பொருள் வேண்டுவதாயிற்று.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிக மிக இன்றியமை யாது வேண்டப்படுவதாகிய இப் பொருளினிடத்து மக்களுக்குப் பற்றிருத்தல் இயற்கையேயாம் - முரண் பாடன்று.
எனினும், பொருளை நாம் அடையும் வழிவகைகளில் நன்றும் தீதும் தோன்றுகின்றன. பிறர் பொருளை விரும்புதலும், வழி தவறிய முறைகளில் பொருள் பெறுதலும், நேரிய வழியாகா.
துறவற இயலில் திருவள்ளுவர் கள்ளாமையை வைத்திருக்கிறார். முறை வைப்பு திருவள்ளுவர் வைத்ததா, இல்லையா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் முடிவு எப்படியாயினும், ஆருக.
திருவள்ளுவர் அதிகார முறைவைப்பைச் செய்யாமல் அவருக்குப்பின் வந்தோர் எவரேனும் செய்திருப்பாரேனும் முறைவைப்புக்கும் பொருள் காண வேண்டுமல்லவா? துறவி பொருட்பற்றிலாதவர்; பொருள் தேடும் முயற்சியினின்றும் தன்னை விடுதலை செய்துகொண்டவர்.
அத்தகைய வாழ்வில் களவுக்கு இடமேது? களவினும் இருவகையுண்டு. வறுமையின் காரணமாக ஏற்படும் களவுணர்ச்சி ஒருவகை, பொருள் வந்தடைந்த பின் அதைப் பாதுகாத்துத் தமக்கே அல்லது தம்மை சார்ந்த ஒரு சிலருக்கே உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றும் களவுணர்ச்சி பிறிதொரு வகை. இவற்றில் முன்னையது பெருங் குற்றமன்று - மன்னித் தற்குரியது.
துறவிகள் சான்றோராக வாழ்வர். பலருடைய நலனுக்குப் பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டியவாகள். அதன் காரணமாகப் பொது மக்கள் தமது ஆமை நலன் உள்ளிட்ட பெரு நலனைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுத் துறவிகளிடம் தமக்குரியனவற்றை உரிய போழ்து செய்வார் என்று கருதி நம்பிப் பொருளைக் கொடுத்து வைத்தல் உண்டு.
பின்னர், தரையில் ஓடிய நீர், தரையினை ஈரம் ஆக்குதல் போல, தீரத் துறவாதார் கையில் பொருள் புழங்கினாலும் பொருள்வழிப் பற்று அவர்களைச் சாரும்; அதுபோழ்துதான் துறவுடையவர்களைச் சார்புடைய பெருநிறுவனங்கள் தோன்றுகின்றன.
நிறுவனங்களின் தொடக்கம் அன்பு, அருள், துறவு ஆகியவைகளின் வழியதாகத் தோன்றிய பொதுமக்களின் நம்பிக்கை காலப்போக்கில் இது தலைகீழ்ப் பாடமாகி வரலாறு கறைப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இப்படி ஒரு நிறுவனம் தோன்றியது. தோன்றுதற்குக் காரணமாக இருந்தவர் தமது கடைசி காலத்தில். அந்நிறுவனத்தை தம்முடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு (கொள்கைவழி உறவல்ல - குருதிவழி உறவு) எழுதி வைத்துவிட்டார். அறநிலையங்களின் அடிப்படை நம்பிக்கையே யாகும்.
ஆதலால் துறவு வழியில் பொருள் சேரும். அங்ஙனம் சேர்வதியற்கை. அங்ஙனம் சேர்ந்த பொருளை அதாவது. பிறர் நலனுக்காகத் தம்மிடம் விடப் பெற்றிருக்கும் பொருளைத் தமக்காக்கிக் கொள்ளுகின்ற கீழ்மையைத் துறவற இயலில் ’கள்ளாமை' என்ற அதிகாரத்தின் மூலம் கடிந்துரைக்கின்றது திருக்குறள்.
பாபிலோனியாவில் ஓர் அரிய அனுபவ வாக்கு உண்டு. "எவனொருவன் தன்னுடையதை உன்னுடையது தென்றும், உன்னுடையதை உன்னுடையதே என்றும் கூறுகின்றானோ அவன் சாது; எவனொருவன் தன்னுடையதைத் தன்னுடையது என்றும் பிறருடையதைத் தன்னுடையது என்றும் கூறுகின்றானோ அவன் இழிந்தவன்" என்பதே அந்த அனுபவ வாக்கு.
அதனால் தான், தமிழகத் திருமடங்களின் தலைவர்கள் பலகாலும் ’நாம்' என்றும், ’நம்முடையது' என்றும் வழங்கி வருகின்றனர் போலும்
இச் சொல்வழக்கு பொருள் விளக்கமாக வளர்ந்து. வாழ்க்கையில் பொருளின் பெரும்பயன் விளையும். ஆதலால், துறவற இயலில் கள்ளாமை அதிகார இயல்பு இயல்புடையதே யாகும்.
அளவின்கண் நின்றொழுகல் ஆந்நார் களவின்கண்
கன்றிய காத லவர்.
என்ற திருக்குறள் சிந்தனைக்குரியது. முன்னர் விளக்கி யுள்ளது போல, பொருள் வரலாம், அங்ஙனம் வருவது துறவிகளின் நலன் கருதி மட்டுமல்ல - பலர் நலன் கருதியே யாகும்.
ஆயினும், பலன் நலன் கருதிப் பொதுப் பணி ஆற்றுவோருக்கும் துறவு நெறி மேற்கொண்டோருக்கும் கூட வாழ்க்கையுண்டு - அவர்களுக்கும் தேவையுண்டு. அத் தேவையை அவர்கள் அளவோடு அடைந்து அனுபவித்தல் தவறன்று.
அங்ஙனமின்றி, பொதுப் பணியின் பேரால் துறவு நிலையை முதலாகக் கொண்டு தோன்றிய பொருளைத் தவறான வழிகளிலும், தேவையற்ற ஆடம்பரங்களிலும் செலவழித்து, துய்த்தலும் - அனுபவித்தாலும், அவ்வழி அச்சம் தோன்றுதலால் தன்னலம் கருதி, தனி நிதி சேர்த்து வைத்துக் கொள்ளுதலும் களவேயாகும்.
ஆதலால், பெரும் பொருள் தேட வேண்டும் - அனுபவிக்க வேண்டும், என்ற விருப்பத்தோடு தவம் மறைந்து அல்லவை செய்வார் அளவின்கண் நின்றொழு கார் தம்முடைய வாழ்க்கைக்கு தேவைகளை எளிய முறையில், அளவுக்கு உட்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அளவிறந்த ஆடை ஆபரணங்கள் சுகபோக வசதிகள் ஆகியவற்றில் வாழ்வார்கள். அவர்கள் மகிழ்வார்கள்.
ஆனால் அந்தப் பொருளின் தோற்றம் அவர்கள் மகிழ்தற்கல்ல - பிறரை மகிழ்வித்து வாழ. பிறரை மகிழ்விக்கத் தோன்றிய பொருளில் தாம் மகிழ்தல் துறவின் பாற்பட்டதன்று. இதனையே திருக்குறள் வலியுறுத்துகின்ற து.
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
-----------------
38. அறிவிற்குப் பயன்
மனித வாழ்வுக்கு அறிவு இன்றியமையாத ஒன்று வாழ்க்கையை நல்வழிப்படுத்துவது அறிவு. குழப்பத்தி னின்றும் தெனிவு தருவது அறிவு. வாழ்வுக்கு ஆக்கம் தருவது அறிவு. வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டுவது அறிவு.
அதனாலன்றோ திருவள்ளுவர் 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று கூறினார். திருவள்ளுவர் அறிவு பெறும் முயற்சிகளை, பலபடக் கூறுகின்றார். கற்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றார். கற்க வாய்ப்பில்லாதவர்களுக்குக் கற்றிலராயினும் கேட்க வென்று அறிவுறுத்துகின்றார்.
இத்தகு அறிவு முயற்சி மானிட சாதியில் வளர்த்து வந்திருக்கின்றது. இன்னமும் வளரும். இங்ஙனமெல்லாம் மானிடர் அறிவில் முயன்று அறிவு பெறுவது எதற்காக? ஏன்? என்ற கேள்விகள் கேட்கப்படாமலில்லை. அறிவு ஆராய்ச்சிக்காக மட்டும் தானா?
அதிலும் விவாதத்திற்காகத்தானா? அல்லது புலமைக் காச்சலில் சிக்கித் தவிப்பதற்காகவா? அல்லது குறைந்த நேரத்தில் எவ்வளவு அதிகப்படியான மக்களைக் கொன்று குவிக்கலாம் என்ற ஆராய்ச்சிக்காகவா? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது.
ஆம். இன்றைய உலகப் போக்கைக் கவனிக்குமிடத்து வேறு என்ன சொல்லமுடியும்?
ஆனால் பண்பட்ட அறிவு பகைமைக்கு அப்பாற் பட்டது. விவாதத்திற்குட்பட்டதல்ல. விளங்கவைக்கும் தகைமை உடையது. தண்ணளிமிக்கது. அறிவுடைமையை பற்றிப் பேசிய திருவள்ளுவர் அறிவினால் பெறும் பயன் பற்றியும் கூறுகின்றார். பிறருக்குப் பயன்பட வாழ்தலே சிறப்புடைய தொன்று.
பொருள் வேறு பயன் வேறு. அறிவுடைமை வேறு. அதன் பயன் வேறு. இந்தத் தத்துவம் தெளிவாக விளங்கிக்கொள்ளப் பெறுதல் வேண்டும்.
இந்திய அரசின் உறுதி முத்திரையிட்ட நாணயத்திற்குத் தனியே ஒரு மதிப்பில்லை. அந்த நாணயத்தைக் கொடுத்து அதற்கு மாறாகப் பெறக்கூடிய பொருளை வைத்துத்தான் (பண்டங்களை) நாணயத்துக்கு மதிப்பு.
அது போலவே அறிவுக்கும் அறிவுடைமையின் பயனாகத் திருவள்ளுவர் காட்டுவது கருணையேயாகும்.
பழனிமலை மீது வீற்றிருந்தருளும் இறைவனை வழிபட ஒரு பக்தர் போகின்றார். அவர் செல்வமுடையவர் அவர் மலை மீது ஏறிச் செல்லும் போது படிகளின் ஓரத்தில் இருக்கும் நோய்வாய்ப்பட்டு அவதி உறுவோருக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டு போகின்றார்.
திருவள்ளுவர் இந்தக் காட்சியைப் பார்க்கின்றார். நாம் எல்லாம் நினைக்கின்றோம், இந்தச் செல்வ பெருமகனை வள்ளுவர் பாராட்டுவார் என்று. ஆனால் வள்ளுவர் பாராட்டவில்லை.
அச் செல்வப் பெருமான் நோயாளிகளுக்கு அள்ளிக் கொடுத்ததை வள்ளுவர் சடங்காகக் கருதுகிறார்.
செல்வத்தின் எக்களிப்பு என்று கருதுகின்றார். அல்லது பழக்கத்தின் வழிப்பட்ட செயல் மட்டுமே என்று கருதுகின்றார். அள்ளிக் கொடுத்த செயலுக்கும் நெஞ்சுக்கும் தொடர்பில்லை என்று வள்ளுவர் கருதுகின்றார்.
அங்ஙனம் அள்ளிக் கொடுப்பதைவிட அந்த நோயாளிகளின் நோயின் வழிப்பட்ட துன்ப அனுபவத்தை, தமதாக எண்ணி அனுபவித்து அவதிப்படுவோனை அன்பால் முழுக்காட்டுவதையே அறிவுடைமைக்கு ஏற்ற பயன்படு செயலென்று வள்ளுவர் கருதுகின்றார். இதனை,
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
என்று திருக்குறள் விளக்குகிறது.
----------------
39. பகுத்துண்ணாமையும் கொலையே
திருக்குறள் அதிகார அமைப்புகளை உடையது. இந்த அதிகார அமைப்பினைத் திருவள்ளுவரே செய்தார் என்று கருதுவோரும் உண்டு. அங்ஙனமின்றி இந்த அதிகார முறை வைப்புகள் திருவள்ளுவரால் செய்யப் பெறவில்லை என்றும், பின் வந்த உரையாசிரியர்கள் செய்தனர் என்றும் கூறுவாரும் உண்டு.
யார் செய்தால் என்ன? அதிகார அமைப்பிற்கேற்றவாறு திருவள்ளுவர் குறள்களைப் பாடி வைத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அதிகார அமைப்பிலும் நிறைந்த பொருளாக்க மிருக்கிறது. பயன் இருக்கிறது.
ஒரு செய்தியை ஒரு தடவைக்குப் பத்து தடவை திரும்பத் திரும்ப நினைத்தாலேயே நெஞ்சகம் அந்த நெறிவில் ஈடுபடுகிறது. அதனால் ஒரு நன்னெறியினைப் பல வகைகளில் - பல கோணங்களில் பல தடவை ஆராய்ந்து உணர்தலே வாழ்க்கைக்கு ஏற்ற முறை என்பதால் அதிகார அமைப்பு சாலச் சிறந்ததேயாம்.
இங்ஙனம் தனித்தனி நெறிகளுக்கு ஏற்றவாறு திருக்குறள் அதிகாரங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அதிகார அமைப்பில் கொல்லாமையும் ஒன்று. உயிர்கள் உடம்பொடு தொடர்பு கொண்டு வாழ்க்கை நிகழ்த்தி தம்மை வளர்த்து உயர்த்திக் கொள்ளும் சாதனமே வாழ்வியல். இந்த வாழ்வியலுக்கு ஏற்றவாறு இசைந்துள்ள உடம்பொடு உயிரிடை ஏற்பட்டுள்ள நட்பை - உறவை, பாதுகாப்பது ஒரு பேரறம்.
ஆதனாலன்றோ, "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்" என்றார் திருமூலர். உடம்பிற்கும் உயிருக்கும் ஏற்பட்டுள்ள உறவை நீக்குதலையே கொலை என்று கூறுகிறோம். கொல்லப் பெறுதல் உடம்பே யாயினும் உயிர்க் கொலை என்றே கூறுகிறோம். காரணம் உடம்பு இல்வழி உயிரின் இயக்கமும் - துய்த்தலும் நுகர்தலும் வளர்ச்சியும் - இல்லாது போதலினாலே யாம்.
அதுபோலவே உயிர் தாங்கி உலவும் உடலியக்கத்துக்கு எரிபொருளாகிய உணவினை வழங்குதலை. பேரறம் என்றும் கூறுகிறோம். உணவு இல்வழி உடலியக்கம் இல்லை. உடலியங்காவழி உயிர்க்கும் இலாபமில்லை.
அதனாலேயே உடல், உயிர், உறவு இயக்கத்தைப் பாதுகாக்கின்ற உணவு, மருந்து முதலியன வழங்கும் உடன்பாட்டு அறங்களாகும். அதுபோலவே உடல், உயிர், உறவை நீக்காமையைக் கொல்லாமை என்ற எதிர் மறை அறத்தாலும் மனித உலகம் போற்றுகிறது.
திருக்குறளில் கொல்லாமை என்று ஓர் அதிகாரம் உண்டு. கொல்லுதலின் கொடுமையை வள்ளுவர் நினைந்து நினைந்து கொதித்து, கண்டிக்கின்றார். இந்த அதிகாரத்தில் முதற் குறளாக கொல்லாமையை அறம் என்று பொதுவாக உணர்த்தி அடுத்த குறளில்,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
என்று கொல்லாமை நெறியை வற்புறுத்துகின்றார். இக் குறளில் பலரோடு பங்கிட்டு உண்பதும், பல உயிர்களைப் பேணிக் காப்பதும் பேரறம் என்று குறிப்பிடுகிறார். இந்த குறளுக்கும் கொல்லாமைக்கும் என்ன தொடர்பு?
இதனை விருந்தோம்பலில் கூறக் கூடாதா? அல்லது ஈதலில் தான் கூறக் கூடாதா? இங்ஙனம் அங்கெல்லாம் கூறாமல் கொல்லாமை அதிகாரத்தில் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பாங்கான நெறியைக் கூறியது ஏன்? கொல்லுதலும் குற்றமே. அதைவிடப் பெரிய கொலைக் குற்றம் உண்டி முதலியன வழங்கிக் காப்பாற்றாமல் சாக விடுவதும் ஆகும் என்பதனை உணர்த்த இங்கு கூறினார்.
கூடி வாழும் மனித சமுதாயத்தில் சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக விளங்கும் மனிதனுக்கு சமுதாய ரீதியாகக் கடமைகளும் உண்டு. உரிமைகளும் உண்டு. சமுதாயத்தில் ஒரு உறுப்பினனாகப் பிறந்த மனிதனைச் சோறு இன்றி சாகவிடும் சமுதாயம் கடமை உணர்வு இல்லாத சமுதாயமாகும். அதையே ஒரு கொலைகார சமுதாயம் என்று கூறினாலும் பொருந்தும்.
கத்தி எடுத்துக் கொன்றால் மட்டுமே கொலை என்பதன்று. பெற்ற செல்வத்தைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து பலரையும் பேணி வளர்க்காமல், சோறிட்டு மருந்து முதலியன வழங்கி பலரையும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமே என்பதனை உணர்த்தவே, இந்தக் குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த அடிப்படையில் இன்று நம்முடைய நாட்டினை நோக்கிக் கொலைகாரர்கள் மிகுதியும் உள்ளனரோ என்ற வினா எழுந்தால் மறுப்பார் யார்?
----------------
40. இறப்பும் பிறப்பும்
மனிதன் ஓயாது உழைக்கும் இயல்பினன். பகல் எல்லாம் உழைக்கின்றான். உழைப்பில் முழு ஆர்வத்துடன் ஈடுபட்டால் ஓரளவே மனிதசக்தி செலவாகும். சூழ்நிலையின் காரணமாக விருப்பமின்றி உழைப்பில் ஈடுபட்டால் நிறைய மனித சக்தி வீணாகிறது. உழைப்பில் இழந்த மனித சக்தியை ஈடுசெய்ய மனிதன் உறங்குகின்றான்.
உறக்கம், அதியற்புதமான மருந்து. உழைப்பில் இழந்த சக்தியை ஈட்டித் தருவதுடன் சோர்வை அகற்றி சுறுசுறுப்பைத் தருகிறது. மனிதன் உறங்கிய பிறகு எழுச்சியுடன் எழுந்திருக்கின்றான். இது இந்தப் பருவுடலைப் பொறுத்த நிகழ்ச்சி முறை.
அதுபோலத்தான் ஆன்மாவும் அதன் நுண்ணுடலும் இப்பிறப்பில் பல் வேறு வகையான வேதனைகளுக்கு ஆளாகிறது. அதில் உயிருக்கு அலுப்பும் சோர்வும் ஏற்படுகிறது. அதனாலேயே பிறப்மைத் துன்பமென வர்ணிக்கின்றனர்.
இந்த ஆன்ம நுண்ணுடல் சம்பந்தமான துன்பங்கள் நீங்கவே, மனிதனுக்கு இறப்பு வருகிறது. சிந்தனையிலும் உணர்விலும் கிழடு தட்டித் துன்பத்தில் உழன்று அழுது கொண்டே சாகும் மனிதன் திரும்பவும் கிழடு இல்லாத - இளமை நலன்கள் செறிந்த உடலுடன் தன்னுடைய ஆன்மப் பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறான்.
ஆனாலும் முன்னைய அத்தியாயத்தின் துன்பச் சார்புகள் சூழ்நிலைக்கு அமுங்கிப் போகும். நினைவிற்கு வாரா முன்னைப் பயணத்தின் பயனாகப் பெற்ற அறிவும் பண்பும் மட்டும் கைகொடுக்கும். மீண்டும் வாழ்ந்து தன்னுடைய இலட்சியப் பயணத்தை அடைகின்றான்.
ஆதலால், ஒரு மனிதன் துன்பச் சூழலில் இறப்பது குறித்து அவ்வளவாக வருந்தவேண்டிய அவசியமில்லை. அஃது அவனுக்கொரு கொடையே; இதனைத் திருவள்ளுவர்,
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
என்று கூறுகின்றார். அன்றாட வாழ்க்கையில் உறக்கமும் விழிப்பும் எங்ஙனம் இயல்பாக நடைபெறுகிறதோ அது போன்ற இயல்பான தொன்று மரணமென்பது வள்ளுவர் கருத்து. இதனையே அப்பரடிகளும்,
துறக்கப் படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு
இறப்பன் இறந்தால் இருவீசும் பேருவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன் கொலோ என்றென் உள்ளங் கிடந்து மருகிடுமே
என்று பாடுகிறார்.
இதுபோலவே மிகப் பெரிய அளவில் தோன்றிய உலகம், திரும்பத் திரும்ப, தோன்றுதலுக்கு ’இளைப் பொழித்தல்' என்று மாதவச் கிவஞான முனிவர் கூறுவர்.
ஆதலால். மரணம் பற்றிக் கவலைப்படுவதை விட வாழ்க்கையைப் பயனுடையதாக்கிக் கொள்ள வேண்டும் - என்று கவலைப்பட்டு முயலுதலே. முறையான வாழ்க்கை. ஆதலால், எல்லோருடைய மரணம் பற்றியும் அழுதல் நெறியன்று. முறையாக வாழத் தெரியாதவன் மரணத்திற்கு ஆட்படுதல் மீண்டும் புதிய வாய்ப்பு கிடைத்தற்கு ஏதுவாகும்.
ஆனால். இந்தப் பொதுவிதி நல்லோருக்கல்ல. அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள், ஆதலால் மரண வாயிலில் அழமாட்டார்கள்; மாறாக மகிழ்வார்கள்.
ஆனால், இந்த நிலத்தியலின் வாழ்க்கைக்கு வித்தென விளங்கும் நல்லவரை இழப்பது குறித்து அழுவார்கள். நாம் சிரிக்க மற்றவர்கள் அழ. வாழ்க்கை முடியுமானால் அது வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கையே! நாம் அழவும் மற்றவர்கள் சிரிக்கவும் வாழ்க்கை முடியுமானால் அஃது இரங்கத் தக்கது. இத்தகையோரின் மரணமும் வரவேற்கத் தக்கது.
---------------
41. சார்புகெடின் நோயில்லை !
உலகியற்கையின் அமைப்பு இன்பமேயாம். உலகத்தின் தோற்றம், வைப்பு, நடைமுறை ஆகிய அனைத்தும் உயிரின்பத்தினை மையமாகக் கொண்டதேயாம். ஆக இன்பமே இயற்கை. துன்பமோ செயற்கை.
ஆனால், துன்பத்தின் கர்த்தாக்களாகிய தீய மனிதர்கள் அல்லது அறியா மாந்தர்கள் துன்பமும் இயற்கையென்றே பறைசாற்றுகின்றனர். பலர் நம்பியும் விடுகின்றனர். துன்பத்தின் தொடக்கம் பருப் பொருளிலும் அல்ல; பரந்த உலகத்திலுமல்ல.
துன்பம் மிக நுண்ணிய இடத்தில் - நுண்ணிய அளவிலேயே தோன்றி வளர்கிறது. ஆனால், தோற்றம் நுண்ணிய இடத்திலேயாயினும் அது வளர்ந்து வளர்ந்து பரந்த இடத்தைப் பிடித்து விடுகிறது.
துன்பம் ஒரு மனிதரிடத்துத் தோன்றி பல மனிதரைப் பற்றியதா? அல்லது பல மனிதரிடத்தில் ஒரே நேரத்தில் பற்றியதா? என்று ஆராய்ந்தால் ஒரு மனிதரிடத்தில் தொடங்கித்தான் உலகில் கவிழ்ந்து மூடியது என்று அறியலாம்.
ஒரு வீட்டின் கூரையில் பட்ட நுண்ணணுப் பிரமாணமான ஒரு நெருப்புப் பொறி, பல நூற்றுக்கணக்கான வீடுகளை எரித்தழிப்பதைப் போலத் துன்பமும் ஒரு முனையில் தோன்றிக் கவிந்திருக்க வேண்டும். துன்பம் காரியமேயாம், காரணமன்று.
உடல், உணர்வு, அறிவு ஆகியவற்றை நிறை நல உழைப்பில் ஈடுபடுத்த மறுப்பவர்கள் காரியங்களைப் பற்றியே கவலைப்படுவார்கள். காரணங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்குக் காரியம் நடந்தால் சரி. காரணம் வேண்டிய அவசியமில்லை.
இந்த மனப்போக்கு உடையவர்களே உயர்ந்த மாளிகையைக் கட்டியவர்கள், மதிற் சுவர்களைக் கட்டியவர்கள், பூட்டுகளைப் படைத்துத் தந்தவர்கள். களவு. காவல் தத்துவத்தின் படைப்பாளர்கள். இவர்களே நியதியாகிய விதிக்கு இல்லாத வலிமையை உண்டாக்கியவர்கள்.
காரியங்களைப் பற்றிக் கவலைப்படுவது பயனற்றது. ஆனால், காரணங்களைப் பற்றிக் கவலைப்படுதல் வாழ்க்கையின் இன்றியமையாக் கடமை. துன்பத்தின் காரணம் தீமை. துன்பம் சேய்; தீமை தாய். அது என்ன தீது? தன்னையே சுற்றி வட்டமிடும் தீமை.
ஒன்றைப் பிடித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே சுற்றினால் மயக்கம் வராதா? வேடிக்கைக்காக வேண்டுமானால் ஓரிரண்டு தடவை சுற்றலாம். பக்திக்காக வேண்டுமானால் இன்னும் சில தடவை சுற்றலாம். இந்த இரண்டு வகையில் சுற்றுவதற்கும் அடிப்படை உணர்வு உண்டு.
அந்த உணர்வுக் கலப்பின் சிந்தனையை, நிறுத்திச் சுற்றினாலேயே பொருளுண்டு. மயக்கமும் வராது. உணர்வின் ஆற்றல், மயக்கத்தோடு போராடி மயக்கத்தின் ஆற்றலைத் தடுத்து நிறுத்தும். வெறும் சுற்று வெற்றுச் சுற்றேயாம். மயக்கத்தைத் தரும். அஃதென்ன உணர்வு? எல்லா உலகமும் ஒன்று.
எவ்வுயிரும் எமதுயிர் என்ற ஆன்மநேய ஒருமைப் பாட்டினை - மனிதகுல ஒருமைப்பாட்டுணர்வினை எண்ணி நினைந்து அதற்கேற்ப ஒழுக வேண்டுமென்ற விழுமிய விருப்பத்தைப் பெற்று அதை நிலை நிறுத்திக் கொள்ள, உலகின் சிறுவட்டமாகிய நான்கு திசைகளைத் திருப்பிச் சுற்றுதல் ஒரு பாடம்; ஒரு பயிற்சி முறை. முன்னையது உடற் பயிற்சி ; பின்னையது உணர்வுப் பயிற்சி.
இங்ஙனம் காரணங்களை அறிந்து நெறி முறையில் நின்று வாழ்தல் தீமையினின்றும் விடுதலை தரும். துன்பமும் மாறும். தீமைக்கெல்லாம் தீமை தன்னலமே வாம். தனது நலமின்றி மனிதன் வாழ முடியுமா? நியாயமான வினா. நலம் வேறு. தன்னலம் வேறு. எல்லாரும் நலமுடையராகவே வாழ வேண்டும். இஃதே இயற்கை. இதுவே பொதுவிதி. இதுவே மனித உலகத்தின் ஒழுக்கமும்கூட.
நலம் இருவகையன. தான் படைத்துக் கொள்ளும் இன்ப நலன். பிறர் படைத்து வழங்கும் இன்ப நலன். தான் படைத்துக்கொள்ளும் நலன்களாவன : அறிவு. அன்பு, ஆள்வினைத் திறன் முதலியனவாம். பிறர் வழங்கும் நலன்களாவன, தான் பேணப்படுத்தலும் போற்றப்படுதலுமாம். தன்னைத்தானே பேணிக் கொள்வதைவிடப் பேணப்படல் சிறப்பாகும்.
தன்னலம் என்பது பிறருக்கு நலமின்மை விளைத்துத் தனக்கு வருகிற நலனே தன்னலம் என்று கூறப்பெறும். தன்னிடமுள்ள தன்னலச் சார்பினையறிந்து அச்சார்பு கெடவும் பிறர் நலம் பேணும் சார்பு பற்றி நின்று ஒழுகவும் எல்லோரும் முயன்றால் தனிமையிலும் துன்பமில்லை. பொதுவிலும் துன்பமில்லை. எங்கும் இன்பம், எல்லோ ருக்கும் இன்பம், எப்பொழுதும் இன்பம். இதனை,
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துக்
சார்தரா சார்தரு நோய்.
என்று திருக்குறள் கூறுகிறது.
------------
42. இருவேறு உலகத்து இயற்கை
இந்த உலகில் அறிவுடையவர்கள் பலர் ஏழைகளாக இருக்கிறார்கள். அறிவில்லாதவர்கள் சிலர் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். இஃது உலகியலின் நியதி ஆகாது; நீதியும் ஆகாது. முறைகேடான ஓர் அமைப்பை - முறையை நியாயத் தன்மைப்படுத்துவது அநீதியே ஆகும்.
வாழும் மனித உலகிற்கு அறம் பேசவந்த வள்ளுவர் மனித உலகத்தின் நலனையே நியாயமெனக் கருதுகிறார் நீதி என்று கருதுகிறார். வழக்கில் பொய்மையாக இருந்தாலும் மனித உலகம் தீதற்ற நன்மையே பெறுமானால் அதுவே முறையென உரை கண்டவர் வள்ளுவர். வள்ளுவம் மனித குலத்தின் நலனையே மையம் கொண்டு கால்பரவி நிற்கிறது.
இன்று அறிவுடையோர் ஏழையாக யிருக்கலாம். எத்தனையோ எழுத்தாளர்கள் - புலமை நலம் பெற்றவர்கள் பதிப்பாளர்களின் உடும்புப் பிடியில் சிக்கி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பதிப்பாளர் சம்பாதிப்பது பல ஆயிரங்கள். படித்தவர் சம்பாதிப்பது சில நூறுகள். இந்தக் கொடுமைக்கு இன்னும் விடுதலை வரவில்லை.
ஆனால், அறிவுடையோர் எல்லாரும் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. எழுத்தாளரும் பதிப்பாளரும் ஒருவராகவே விளங்கும் புலமைச் சான்றோர். இன்று இல்லையா? டாக்டர் மு.வ. அவர்கள் இல்லையா?
அறிவு என்றால் ஒரு காலத்தில் இலக்கியப் புலமை மட்டுமே என்ற கருத்து இருந்தது. அதுபோலவே, செல்வம் என்றால் நிலவுடமை என்ற கருத்தேயிருந்தது. நிலவுடைமை பரம்பரையானது. நிலவுடைமைச் செல்வ முடையோர் அறிவாற்றலோ தொழில் நுட்பமோ, தொழில் திறனோ உடையவர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லாமலிருந்தது.
முதற்காரணம் பரம்பரை. அடுத்த காரணம் அவர்கள் உழுவோரல்லர். வேளாண்மைக் கல்வியும் திறனும் உடையோரைக்கூட நில உடைமை முறை வற்றச் சிதறடித்திருக்கிறது. அந்த யுகத்திற்கு வேண்டுமானால் பழைய முறை பொருந்தும்.
அறிவு என்றால் ஒரு துறை அறிவு முழு அறிவாக முடியாது. அதிலும் உடல் தேவைக்குரிய பொருள்களை ஈட்டத் தெரியாத அறிவு முழுத் தன்மை உடையதாக ஆக முடியாது. நம்முடைய மொழியும் நம்முடைய இனமும் மற்ற நாடுகளைப்போல மேலோங்கி வளராததற்கே காரணம் அறிவும் உழைப்பும் இணைந்து செயல்படாததே ஆகும்.
கருத்துக்கள் தோன்றியிருந்தாலும் வாழ்க்கையில் மாறுதல் இல்லை. இந்த முறை கெட்ட மரபை - அநீதியை - நெறியல்லாத நெறியை வள்ளுவரும் நியாயப்படுத்தி இருக்கிறாரென்று கூறுவது வள்ளுவத்திற்குப் பெருமை நன்று.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
என்ற குறளுக்கு அறிவும் செல்வமும் உலக இயற்கையில் மாறுபாடுடையன. இவ்விரண்டும் உடைவவராக வாழ்வதரிது என்பது புலால் வேட்கையுடையவன் கடவுள் பெயரால் பலியிட்டதைப்போலவே ஆகும்.
'திரு' என்ற சொல்லுக்குக் 'கண்டோரால் விரும்பப் படும் தன்மை' என்று பொருள் கொண்டார் பேராசிரியர். இது மிக சிறந்த கருத்து. கண்டோரால் விரும்பப்படும் தன்மையுடையவராக வாழ்தல் அரிய முயற்சியாகும்.
அறிவோ, ஆற்றலோ, வளம்பல உடைமையோ கண்டோரால் விரும்பத்தக்க வாழ்க்கையை வழங்கி விடுவதில்லை. தன்னலத் துறவும், பிறர் நலம் பேணும் வேட்கையும், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப்பார்க்கும் உண்மையும் கொண்டு தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை என்று கருதிக் கருதி இனிய அன்பால் அருளார் வத்தால் பலரைத் தழுவி வாழும் வாழ்க்கையே பலரால் விரும்பப்பெறும் வாழ்க்கை.
இதனையே, 'திரு’ என்றார். தெள்ளிய அறிவு உடையோர் பலர் சமுதாய வாழ்க்கையில் தோற்று இருக்கின்றனர். அறிவின் காரணமாகவே பலரையும் ஆராய்ந்து பகை வளர்த்துக்கொண்டவர் இல்லையா? அறிவுடையோர் என்ற முனைப்பால் அழிந்தவர்கள் இல்லையா? அறிவுடையோரெல்லாம் அன்புடையோராக இருப்பதில்லை என்ற ஐயத்தின் வினாவே.
அறிவினால் ஆகுவது உண்டோ ? பிறிதின் நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை.
என்பது குறள்.
ஆதலால் தெள்ளிய அறிவும் கண்டோரால் விரும்பப்படும் எளிமையும் ஏற்றப் பண்பும் ஒருசேர உடையவராக வாழ்தல் அரிது.
மாணிக்கவாசகர் கடவுளைத் " திரு" என்றே அழைக்கிறார். 'திருவே, என் செல்வமே" என்பது மணிமொழி. இறைவனை சிந்தித்தலுக்கும் அவன்றன் திருவருளைப் பெறுதலுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை.
தெள்ளிய அறிவுடையோர் இறைவனைப் பற்றியே ஆராய்ந்தாலும் கூட இறைவனை ஆராய்கிறார்களே தவிர அனுபவிப்பதில்லை. எந்த ஒன்றையும் எப்பொழுதும் ஆராய்ந்து கொண்டேயிருப்பவர்களுக்கு அவர்கள் ஆராயும் பொருளில் ஒன்றி உடனாகும் வாய்ப்புக் கிடைக்காது. இறைவனும் அவனது இன்பமும் ஆய்வுக் கூடத்திற்கு உரியனவல்ல. அனுபவத்திற்கு உரியன.
தெள்ளிய அறிவுடையோர் ஆராய்கிறார்கள் ! ஆராய்கிறார்கள் !! ஆனால், ஐயகோ , அவர்களுக்கு அனுபவம் இல்லை! இதனைத்தானே ”கற்றதனால் ஆய பயனென் கொல்?" என்று வள்ளுவர் வினவுகிறார். மாணிக்க வாசகர ும் ”கற்றாரையான வேண்டேன்" என்று ஒதுக்குகிறார். திருஞானசம்பந்தரும் 'தெளிவினுள் சிவமாகி' என்று குறிப்பிட்டுத் தெளிவு சிவமாதலிலேயே பயன் கூட்டுகிறது என்று அருளிச் செய்துள்ளார்.
ஆதலால், "திரு வேறு தெள்ளியராதலும் வேறு" என்ற குறளுக்குக் கண்டோரால் விரும்பப்படும் தன்மை உடையாராதலும், தெள்ளிய அறிவுடையாராதலும் உலகியற்கையில் வேறுபட்டன என்றும், இறைவன் திருவருளைச் சிந்தித்துப் பெற்று அனுபவித்தலும் தெள்ளிய அறிவும் உலகியற்கையில் வேறுபட்டன என்பதுமே சிறந்த கருத்துக்களாகும்.
இந்த இரண்டு உணர்வுகளும் அதாவது கண்டோரால் விரும்பப்படும் தன்மையும், இறைவன் தன் திருவருளைப் பெற்று அனுபவித்தாலும் தன் முயற்சியினாலேயே ஆகக் கூடியனவாகும்.
செல்வம் உடையராதல் தன் முயற்சியின்றியே பிறர் முயற்சியினாலும் ஆகமுடியும். எப்படி செல்வந்தர்கள் ஆனோம் என்று தெரியாமலே உலகத்தில் செல்வந்தர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள். ஏன்? பரிசுச் சீட்டுகூட செல்வந்தன் ஆக்கிவிடுகிறதே ! தெள்ளிய அறிவினைப் பெற்று அதனைச் சார திருவுடையோராகவும் ஆக முயலுவோமாக.
"இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு"
-------------
43. கசடறக் கற்க
உயிர் வாழ்க்கையின் இன்றியமையாத் தேவை இன்பம். இன்பம் நேரிடையாகக் கிடைப்பதன்று. பிறர் வாயிலாக வந்து அமைவதேயாம். இன்பத்தினை வழங்கும் ஆற்றல் நல்லறிவுக்கே உண்டு. நல்லறிவைப் பெறுதற்குச் சாதனம் கல்வி.
இன்று நம்மிடையில் கல்வி வேறு. அறிவு வேறு என்ற உணர்கூட வளரவிம்லை. கல்வி அறிவைப் பெறுதற்குரிய வாயிலேயாம். நம்முள் கற்றாரிலும் மூடர்கள் உண்டு. அவர்கள் எழுத்தெண்ணி ஒப்பிப்பர். எடுத்துக்காட்டுகள் ஏராளம் காட்டுவர். நமக்கே பிரமிப்பு ஏற்படும். ஆயினும் அண்டி நின்று பார்த்தால் கல்வியின் - கற்ற கல்வியின் அடையாளத்தைக் கூட அவர்தம் வாழ்க்கையில் பார்க்க முடியாது.
உண்ணும் உணவு செரித்துச் செங்குருதியாதல் வேண்டும். செங்குருதி வலிமையாகப் பயன்பட வேண்டும். இதுவே உணவின் பயன். அதுபோலவே கல்வி வாழ்க்கைப் பட்டறையில் அறிவாக மாறி ஒழுக்கமாகப் பயன் தரவேண்டும். இந்தப் பரிமாற்றங்கள் நடைபெறாது போனால் கல்வியாற் பயனில்லை.
கல்வி இருதரப்படும். ஒன்று பொதுக் கல்வி. மற்றொன்று சிறப்புக் கல்வி. பொதுக் கல்வி எல்லோருக்கும் தேவையான சில பொது அறிவு தரும் செய்திகளை கற்றுக் கொள்வதாகும். சிறப்புக் கல்வி என்பது தன் தகுதியினை மேலும் உயர்த்திக் கொள்ள கற்பதாகும்.
ஒருவர்க்கு உடலில் நலமில்லையானால் மருத்துவ நிடம் உடலைக் காட்டிச் சோதனை செய்தல் வேண்டும். மருத்துவர் உடலைச் சோதனை செய்து நோயுற்ற உடம்பினில் இன்னின்ன உயிர்ச்சத்து இல்லையென்று குறிப்பிடுவர். இல்லாத உயிர்ச்சத்தைப் பெறக்கூடிய உணவை - மருந்தைத் தேடி உண்டு. இன்மையை ஈடு செய்து கொள்வது இயல்பு.
உடலைப் போலவே நம்முடைய உயிரியலில் சில தகுதிக் குறைபாடுகள் இயல்பிலேயே உண்டு. அந்தத் தகுதிக் குறைபாடுகள் என்ன என்பதை நாமே நம்முடைய நேற்றைய வாழ்க்கையின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அல்லது நமது வாழ்க்கையில் நெருங்கிய தொடர்புடைய பெற்றோர். ஆசிரியர், நண்பர் ஆகியோர் மூலமாவது எந்த வகையில் நாம் தகுதிக் குறைபாடு உடையோர் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்ஙனம் தெரிந்து கொண்ட பிறகு நம்முடைய உயிர்த் தகுதிக் குறைபாட்டை நீக்கி நிறைநலத்தை வழங்கக்கூடிய இலக்கியங்களை - கருத்துக்களைக் கற்றுத் தகுதியுடையவராக ஆக்கிக்கொள்ள வேண்டும். இதனை.
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
என்ற குறளால் அறியலாம்.
இந்தக் குறளை , "கசடறக் கற்பவை கற்க" என்றும் "கசடறக் கற்க" என்றும் "கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக" என்றும் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். நம்முடைய மனக்குற்றம் இன்னதென்பதை அறிந்து கொண்டு அதனை நீக்குதற்குரிய நூல்களாகத் தேர்ந்தெடுத்து, கற்கவேண்டும்.
எகிப்திய நாட்டினில் பழமொழி ஒன்று உண்டு. "நல்ல நூல்கள் உயிர்க்கு மருந்து போல்வன" என்பது அது. குற்றம் நீங்குகிற வரையில் கற்க வேண்டும். குற்றம் நீங்கிய பிறகு பெற்ற புது நெறியில் நிலைத்து நின்று ஒழுகவேண்டும் என்பதே குறளின் திரண்ட கருத்து.
இங்ஙனமின்றிக் "கசடறக் கற்க" என்பதற்கு ஐயந்திரிபறக் கற்க வேண்டுமென்று பொருள் கூறுவது பொருந்துமாயினும் சிறப்புடையதாகாது.
இந்தப் பார்வையில் வெகுளியுடையவர்கள், பொறை யுடைமையை வற்புறுத்தும் நூல்களையும், கோழைமைத் தன்மையுடையவர்கள் ஆள்வினையாற்றலைத் தரும் நூல்களையும், இன்னமும் அவரவர் தம் தம் நிலை நோக்கிக் கற்க வேண்டும். இங்ஙனம் கற்றால் தவறுகள் தொடர்ந்து வாரா.
உலகில் தனிமனித வாழ்க்கையிலும், சமுதாயப் பொது வாழ்க்கையிலும் மாறுதல்கள் நிகழும். இத்தகு சிறந்த கல்வியை வழங்கும் கல்விக்கூடம் ஒன்று திறந்தால் ஒன்பது சிறைச்சாலையை மூடலாம் என்பது ஆன்றோர் கருத்து.
ஆனால் இன்றோ கல்வியும் பெருகி வளர்கிறது. சட்டப் புத்தகங்களும் மலைபோல் குவிகின்றன. சிறைச் சாலைகளும் மூடப்பட்ட பாடில்லை. காரணம் கசடறக் கல்வி இல்லாமையே யாகும்.
பல நூறு ஆயிரம் ஆண்டுகளாகக் கவிஞர்களின் பாட்டுடைப் பொருளும் மாறாமலே இருந்து வருகிறது. எழுத்தாளருக்கும் அதே கதிதான். ஏன்? சொற்பொழிவாளர் பரம்பரையும்கூட ஓராயிரம் ஆண்டுகளாக ஒரே மையத்தைத்தான் சுற்றி வருகிறார்கள்.
கடவுள் அவதாரங்களில் கூட வடிவ மாறுதல்கள் ஏற்பட்டாலும், நோக்க மாறுதல் ஏற்பட்டதாகத் தெரிய வில்லை.
இந்த சமுதாயத்தில் சென்ற நூற்றாண்டில் குற்றமாகத் திகழ்ந்த ஒன்று, குற்றம் என்று கண்டு உணர்த்தப் பெற்ற ஒன்று இன்னமும் நீங்கின பாடில்லை. பலாறிய அதைக் குற்றம் என்று கற்றாலுங்கூடத் குற்றத்தை நீக்குவதில்லை. கற்றபடி நின்று ஒழுகுவதில்லை. இது
ஒரு பாணி.
அதனால் கவிஞர் உலகக் கருத்துச் சிந்தனையும் வளரவில்லை. நாடும் நாளும் வளர வில்லை. ஆதலால் குற்றத்தை உணர்த்தி நீக்கும் கல்வியும் குற்றம் நீங்கி நின்றொழுகும் ஆற்றலைத் தரும் கல்வியும் வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது வள்ளுவத்தின் திரண்ட முடிபு.
---------------
44. மொழியும் உறவும்
தமிழகத்தின், வரலாறு எவ்வளவுக்கெவ்வளவு பெருமைப்படத் தக்கதாக அமைந்திருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு வருத்தப்படுவதற்குரிய செய்திகளும் உள.
தமிழர்கள் கடல் நாடு என்று கருதப் பெறுதற்குரிய இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயருக்கு முன்னோடி யாகவே கடலில் கலம் செலுத்தியவர்கள். கடல் கடந்த நாடுகளோடு வாணிகம் செய்தவர்கள்.
சிறப்பாக இந்திய கிழக்காசிய நாடுகளைத் தன்னகத்தே கொண்ட பெருந்தமிழ் நாடு உடையவர்கள். இமயத்தின் மடியிலும், கங்கைக் கரையிலும், சிந்துநதியின் ஓரத்திலும் தமிழர்கள் உலாவினர் - வாழ்ந்தனர் என்று வரலாறு பேசுகின்றது.
எனினும் இன்றையத் தமிழர்கள் நிலை என்ன? அந்தப் பழைய தமிழகம் எங்கு போயிற்று? தமிழர்கள் தங்களுடைய உறவு கலந்து வாழும் பண்பை வளர்த்துக் கொள்ளாமையின் காரணமாகவே, இவற்றையெல்லாம் இழந்தனர் - இழந்து கொண்டிருக்கின்றனர் - இனியும் இழப்பர் போல் தோன்றுகிறது.
வேறுபட்ட பல்வேறு மனித இனத்தினரிடையேயும் அன்பைப் பெருக்கி உறவை வளர்ப்பது மொழியினாலாய விழுமிய பயன். மொழியின் இந்த விழுமிய நோக்கத்தைக் ரெலப் போக்கில் தமிழர்கள் மறந்தார்கள்.
நாம் வேறொருவரோடு உறவு கொண்டு வாழ விரும்பினால், அவரைப் புரிந்துகொள்ள வேண்டியதவசியம். புரிந்துகொண்டு பேசிப் பழகி வாழ்வதற்கு தம்மைத் தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் சிங்களவர்களைப் புரிந்து கொண்டு பழக, இவர்கள் சிங்களத்தைப் படித்துக் கொள்ளவுமில்லை. அவர்கள் இவர்களைப் புரிந்துகொள்ள - பழக அவர்கட்கு தமிழை கற்றுக் கொடுக்கவுமில்லை. இந்த நிலைமையில் மொழி அல்லது இனத்தினாலாய ஒற்றுமைகள் வளர்ந்து காலப் போக்கில் பகைமையாக மாறி உறவைக் கெடுத்து விட்டது.
நாம் எந்த நாட்டில் வாழுகிறோமோ, அந்த நாட்டை நம்முடைய நாடாக ஆக்கி கொள்ள முயல வேண்டும். அச்சாதனையை நாம் அடைவதற்காக அதற்குரிய வகையில் நமது கல்வியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆங்கிலேயர்களும், ஆரியர்களும் எந்தெந்த நாடுகட்குச் சென்று வாணிகம் செய்தார்களோ அந்தந்த நாடுகளின் மொழிகளைப் படித்துக்கொள்வதில் அக்கறை காட்டினார்கள்.
அதுபோலவே, ஆங்காங்குள்ள மக்கட்குத் தங்கள் மொழியை கற்றுக் கொடுப்பதிலும் அக்கறை காட்டினார்கள். அதன் காரணமாகவே ஆங்கிலம் உலக மொழியாயிற்று. சமஸ்கிருதம் இந்திய மொழியாபிற்று.
தமிழர்கள் தம் முயற்சியைச் செய்யாமையின் காரணமாக - தமிழ் மொழி தமிழ் நாட்டு மொழியாகக்கூடப் பூரணமாக இடம் பெறவில்லை. ஆதலால் தமிழர்கள் உலக அரங்கோடு - உலக மனித சமுதாயத்தோடு உறவு கொண்டு புகழ் பெற்று வாழவே மொழிகளையும் பயில வேண்டும்.
பலமொழி வழிப்பட்ட மக்கட்கும் பைந்தமிழைக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அன்றே உலகம் நம்வழி நடக்கும். இதனை வள்ளுவர்.
யாதானும் நாடாமல் ஊராமால் என் ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
என்று கூறியிருக்கிறார்.
-------------
45. ஆள் முக்கியமல்ல
மனிதர்களுக்குள் பொருளியல் சண்டைகள் வருவது போலவே, கருத்து வழிச் சண்டைகளும் தோன்றுவதுண்டு. ஒருவருடைய கருத்தைவிட இன்னொருவருடைய கருத்து உயர்ந்தது என்கிற எண்ணம் தோன்றுகிறபோதும் தன் கருத்தை மற்றவர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற முயற்சி தலைகாட்டுகிற பொழுதும் சண்டைகள் தோன்றுகின்றன.
ஒரு கருத்தை ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது என்பதனை அக் கருத்தைச் சொல்லுகின்றவர்களை வைத்து மட்டும் முடிவெடுக்க முடியாது.
எந்த ஓர் இனத்திற்கும் தன்னுடைய தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருப்பது மனித இயல்பை ஒட்டியது தான்; தனிந் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதும் பிறருடைய கருத்தை ஏற்றுப் போற்ற மறுப்பதும் ஒன்றல்ல.
தனித் தன்மையைக் காப்பாற்றாது போனாலும், ஒரு இனவழிப்பட்ட நாகரிகத்திற்கு - கலாச்சாரத்திற்கு அடிச்சுவடே இல்லாமற் போய்விடும். அது மட்டுமல்ல - நாடுகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்றவண்ணம் ஒழுக்கம். ஒழுக்கமின்மைகளிற் கூட வேறுபாடுகள் நிலவுவது இயற்கை.
மகாபாரத கலாச்சாரத்தில் ஒருத்தி ஐவருக்கு மனைவியாக இருக்க முடியும். அது சமுதாய ரீதியாக ஏற்றுக் கொள்ளப் பெற்ற ஒழுக்கம். இதை நாம் அநாகரிகம் என்று கூறுவதற்கில்லை. இதற்கு அடிப்படை அந்தக் கால சமுதாயத்தில் உள்ள ஆண் பெண்களின் விகிதாசார எண்ணிக்கையே ஆகும்.
ஆனால் தமிழகத்தின் சூழ் நிலை வேறு. ஆதலால் பிறருடைய கருத்தைக் கேட்டு, சிந்தித்து, அக்கருத்து தன்னுடைய தனித் தன்மைக்கு இடையூறு செய்யாமல் - தன்னுடைய நாகரிகத்தை வளர்த்துச் செழுமைப்படுத்த உதவுமானால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது என்பதே வள்ளுவப் பெருந்தகையின் கருத்து.
திருவள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் சமய சமுதாயக் கருத்துக்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து மோதின.
புத்தரின் கருத்துக்கள் பரவின. மகாவீரர் கருத்துக்கள் பரவின. ஆரிய மதக் கருத்துகளும் பரவின. இக்கருத்துகளைச் சார்ந்தோர் அனைவரும் தங்களை பல்லாற்றானும் உயர்த்திக் கொண்டு கூறினர்.
அந்தச் சூழலில் தான் திருவள்ளுவர் , யார் சொல்லுகிறார் என்பது பற்றிக் கவலைப்படாதே! என்ன சொல்லுகிறார்கள் என்பதைத் தெரிந்து - தெளிந்து - அது உண்மையானதாக - வாழ்க்கைக்கு இயைபுடையதாக இருக்குமானால் ஏற்றுக்கொள் என்று கூறினார்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
-----------
46. தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்க
அரசு பொறுப்புள்ள ஒன்று. அரசின் அதிகாரத்திற்கு எல்லைகளுண்டு. ஆனால் அரசினுடைய பொறுப்புகளும் கடமைகளும் மிகப் பரந்தன. நாட்டு மக்களிடையே நல்லொழுக்கமும் நன்னெறிச் சார்பும் நிலைபெற்றிருக்கும் படி செய்ய வேண்டிய பொறுப்பு அரசினுடைய தேயாகும்.
அதனாலன்றோ 'நன்னடை நல்குதல் வேந்தர்க்குக் கடனே' என்று புறநானூறு பேசுகிறது. நன்னடை நல்குதல் என்றால் உத்தரவுகள் மூலம் என்பது பொருளன்று. சட்டங்கள் மூலமும் அன்று. கட்டுப்பாடுகள் மூலமும் அன்று, தண்டனைகள் மூலமும் அன்று.
அரசன், தான் வாழ்தலின் மூலம் நாட்டு மக்களுக்கு நல்லொழுக்கத்தை எடுத்துத் தரவேண்டும். மேலும் நாட்டில் தனிமனிதனுடைய - சமுதாயத்தினுடைய ஒழுக்கச் சார்பு நல்வாழ்க்கைக்கு அரசே பொறுப்பு.
ஒழுக்க நெறிகளைப் பற்றி உரத்துப் பேசினால் போதாது. அல்லது, தண்டனையைக் காட்டி அரசும், நரகத்தைக் காட்டி மதத் தலைவனும் மிரட்டினால் ஒழுக்கம் வளர்ந்து விடுமா என்ன? போக்குமடை கட்டாமல் அணையில் தண்ணீரைத் தேக்கினால் உடைப் பெடுப்பதைத் தவிர, வேறு வழி யென்ன?
அதுபோலவே வாழ்க்கையின் தேவைகளை பெற்று சீராக வாழும் வழிவகைகளைக் காட்டாமல் -பெற துணை நிற்காமல் - அல்லலுற்று அழச் செய்தால் ஒழுக்கமா வளரும்? நரகத்தைத்தான் காட்டுங்களேன்?........ ஒருக்காலும் முடியாது.
குற்றம் இருக்கிற இடம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. ஆனால் அந்தக் குற்றத்தின், பிறப்பிடம் நமக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மறுக்கிறோம். காரணம் நாமே கூட அந்தக் குற்றங்கள் தோன்றக் காரணமாக இருப்பதனால் தான்.
பொய் சொல்லுவது குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றமுடையது பொய் சொல்ல உருவாக்கிய சமுதாயமேயாம். திருடுவது பெரிய குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் திருடக்கூடிய சூழலில் சமுதாயத்தை அமைத்திருக்கிறோம்.
அழுக்காறு கொள்வது குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் அழுக்காறு தோன்றுமளவுக்கு ஏகபோகமாக வாழ்வதை அனுமதிப்பது. மேற்கண்ட குற்றங்களின்றி சமுதாயத்தின் நடைமுறையை ஒழுங்கு படுத்தி எல்லோரும் எல்லாவற்றையும் பெற்று வாழும் இயல் புடைய சமுதாயமாக அமைப்பது அரசின் பொறுப்பு.
ஆனால் இன்றோ அரசுகள் இந்தப் பொறுப்பினையா மேற்கொண்டு செய்கின்றன? இன்றோ அரசு வல்லாளர்கள் கையிலேயே சிக்கி அவர்கள் கைப்பொம்மையாக இருக்கிறது.
அரசு நாட்டு மக்களிடையே குற்றத்தைப் பார்க்குமானால், அந்தக் குற்றம் மக்களிடையே தோன்றி வளர்வதற்கு அரசின் ஆட்சி முறையின் குறைபாடே காரணம் என்பதை அறியவேண்டும். இது முற்போக்கான அரசாங்கத்தின் சிறந்த கருத்தும் அமைப்புமாகும்.
ஆதலால் அரசு மக்களிடமுள்ள குற்றத்தை காணுமானால் அந்தக் குற்றங்கள் தோன்றுதற்குரிய தன்னுடைய குற்றத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது தான் நாட்டு மக்களிடையே குற்றங்கள் தோன்றுவதற்குரிய வாய்ப்புகள் இல்லாமற் போகும். எவ்வளவு சிறந்த முற்போக்கான அரசியல் கருத்து என்பதை எண்ணி மகிழ்ந்து செயற்படுத்த வேண்டும். இதனை,
தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு.
என்று திருக்குறள் பேசுகிறது.
அரசின் தன் குற்றம் நீங்கிய அளவிலேயே, பிறர் குற்றம் ஒன்று இல்லை யென்பது உணரத்தக்கது. ஆனால் இன்றைய நடைமுறையில் அரசுகள் அதிகார அமைப்பின் மேல் மட்டங்களாக விளங்குகின்றனவே யொழிய, அற நெறியின் மேல் மட்ட அமைப்புகளாக விளங்கவில்லை.
ஆட்சியின் வட்டங்களைச் சார்ந்தவர்களுக்கு இலாபம் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். பலரும் அந்த மையத்தைப் போட்டா போட்டி மனப் போக்குடன் வட்ட மிடுகிறார்கள். அங்கு ஆர்ப்பாட்டமிருக்கிறது. ஆரவாரம் இருக்கிறது. போட்டா போட்டிகள் இருக்கின்றன. தந்திரங்களும் மந்திரங்களும் தலைகாட்டத் தொடங்கி விட்டன.
இவைகள் அரசு அறநெறிச் சார்பினின்றும் பிறக் கின்றனவோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அதுமட்டுமின்றி அரசின் அறிக்கைகளும் கூட குற்றங்களை கண்டுபிடிப்பதில் அரசு சாதித்த சாதனைகளைப் பட்டியல் போட்டுக் காண்பிக்கின்றன. அதற்கு மாறாக மக்கள் மன்றத்தின் நிறை நல வளர்ச்சி குறித்து மதிப்பிடுவதில்லை.
பொதுவாக இன்று ஒரு அரசு மிக மிகச் சாதாரணமான காவல் உத்தியோகத்தையே வகிக்கிறது. ஆனால் அரசினுடைய பொறுப்போ தன் குடிமகனுடைய அறிவைத் தொட்டுத் தோண்டி வளர்ப்பது, ஆள்வினையாற்றலை வளர்ப்பது; ஒழுக்க நெறியில் நிறுத்துவது.
என்னுடைய தேவைகளை நான்பெற என்னை முறையான வழியில் வழி நடத்துவது. பெற வேண்டுவன வற்றைப் பெற்று வாழத் துணை நின்று பாதுகாப்பது. இவ்வளவும் அரசின் பொறுப்பு.
இத்தகைய எந்தவொரு பொறுப்பினின்றும் அரசு நழுவினால் மக்கள் மன்றத்தில் குற்றம் மலியும். குற்றத்தைக் கூறிப் பயனில்லை. அரசு குற்றமுடைய தாக இருந்து கொண்டு மக்களுக்குத் தண்டனை வழங்குவது அறநெறியும் அன்று.
அதனாலேயே தன் குற்றம் கண்டு தன்னுயிர் தந்தனன் பாண்டியன் நெடுஞ்செழியன். கோவலனிடத்தில் குற்றமில்லை. பாண்டியனிடத்திலிருந்த குற்றம் கோவலனிடத்தில் குற்றத்தை உண்டாக்கியது என்பதையும் அடியிற்கண்ட குறளையும் இணைத்து நோக்கினால் தமிழர் அரசியலின் விழுமிய சிறப்புக்கள் விளங்கும்.
தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு.
என்பது திருக்குறள்.
---------
47. ஊழா? முயற்சியா?
ஊழ் சர்வ சக்தி படைத்தது; அதை எதிர்த்து மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது; மனித ஆற்றலை விட ஊழின் ஆற்றலே வலிமை படைத்தது' என்றெல்லாம் கருத்துக்கள் நிலவிய காலத்தில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
பொதுவாக நம்முடைய மக்களிடத்தே இன்றுவரை விவாதத்திற்குரியதாக இருப்பது ஊழ் பெரியதா? உலையா முயற்சி பெரிதா? என்பதுதான். ஊழ் வலிமை யானது என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் கீழ்க்கண்ட சான்றுகளைக் காட்டுவார்கள்.
கல்பொருந் திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தனம். - புறம்
ஆற்று வெள்ளத்தில் போகும் படகு, வெள்ளத் துடனேயே அடித்துச் செல்லப்படும் என்பது உவமை. படகு ஆற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுத்தலில் என்ன வியப்பு? அது சடப் பொருள் தானே? படகுக்கு ஏது பகுத்தறிவு? படகுக்கு ஏது சிந்தனை? ஏது அறிவு? ஏது செயல் திறன்?
மனிதனோ சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன். அறிவும் செயல் திறனும் உடையவன். இவன் வெள்ளம் போகிற போக்கிலேயே இழுத்துச் செல்லப் பெறுவானானால் மதியிலி - நீந்தத் தெரியாதவன் - ஆற்றல் இல்லாது சோம்பேறி என்றுதான் கொள்ள வேண்டும். சக்தி படைத்த - மதியுடைய - நீந்தத் தெரிந்த மனிதன் படகில் இருந்தால் ஆற்றுப்போக்கை எதிர்த்து அல்லவா செல்லுவான்?
திருவள்ளுவர் பெருமகனாரின் நூலிலுள்ள ’ஊழிற் பெருவலி யாவுள?' என்ற வினாவை எழுப்புவர் சிலர். ஆனாலும் அவர் எடுத்துக் கொண்ட ஒரு பொருளை எப்படி முடிக்கிறார்? கருத்துக்கு எப்படி ஊட்டங் கொடுக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். அந்தக் குறளையே முடிக்கும் பொழுது 'ஊழ் முந்துறும்' என்கிறார்.
ஊழ், உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் உன்னுடைய முயற்சியை முந்திக்கொண்டு வந்து நிற்கும் என்கிறார். எனினும் ஊழ் வெற்றி பெற்றதாக அவர் சொல்லவில்லை.
நீண்ட ஓட்டப் பந்தயத்தில் முதற் சுற்றில் சிலர் முந்தி ஓடி வருவதுண்டு. ஆனாலும் முதற் சுற்றில் முந்தி ஓடியவர்களே இறுதியிலும் வெற்றிபெற்று விடுகிறார்களா? இல்லையே! முதலில் பிந்தி ஓடியவர்கள் போகப் போக தமது ஆற்றலைப் பெருக்கி முந்தி ஓடியவர்களைப் பின்தள்ளி வெற்றிபெற்று விடுவதுண்டு.
அதுபோலவே ஊழ் முந்தினாலும், அது மனிதனுடைய குறைவற்ற முயற்சியால் பின் தள்ளப்படுவதற்கு உரியது - பின் தள்ள முடியும். அந்த ஆற்றலுக்கே முயற்சி என்று பெயர். முயற்சியைப் பற்றி வள்ளுவர் பேசும் போது,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
என்று குறிப்பிடுகிறார்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும்.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டு அவர்க்கு.
என்ற குறட்பாக்கள் முயற்சியின் பேராற்றலை வலியுறுத்து கின்றனவேயன்றி ஊழே வெற்றி காணும் என்று அறுதி யிட்டு உணர்த்தவில்லையே.
புராண வழி பார்த்தாலும், ஊழின் வழி ஏற்பட்ட மரணத்தை முயற்சி வழி, பெற்ற நோன்பின் பயனாக வென்ற மார்க்கண்டேயன் வரலாற்றை நாம் பார்க்கிறோம்.
நிலத்தினுடைய இழுப்பாற்றல் விண்ணோக்கிச் செல்லும் பொருளை இழுத்துத் தள்ளும் வலிமை உடையதே ஆயினும், அதையும் தடுத்து நிறுத்தி வானத்தே மனிதன் மிதக்கவில்லையா? ஆதலால், ஊழின் வலியையைவிட, நமது முயற்சியே வலிமையுடையது என்று கருதி முயற்சியுடைய வாழ்க்கையில் ஈடுபடுவோமாக!
முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் !
------------------
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூல்கள்
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
எங்கே போகிறோம்?
வாழ்க்கை நலம்
சிந்தனைச் சோலை
சிலம்பு நெறி
சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்
சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்
சமுதாய மறுமலர்ச்சி
திருவாசகத் தேன்
Tirukkural a World Literature
------------
This file was last updated on 07 May 2021.
Feel free to send the corrections to the webmaster.