கம்பன் கண்ட ஆட்சியில் -
அரசியல் சமூகம் (சொற்பொழிவு)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
kampan kaNTa araciyal - araciya camUkam (speeches)
by kunRakkuTi aTikaL
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கம்பன் கண்ட ஆட்சியில் -
அரசியல் சமூகம் (சொற்பொழிவு)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
Source:
கம்பன் கண்ட ஆட்சியில் – அரசியல் சமூகம் (சொற்பொழிவு)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
source
கம்பன் கண்ட ஆட்சியில் – அரசியல் சமூகம்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வானதி பதிப்பகம்
13, தீனதயாளு தெரு
தி.நகர், சென்னை - 17.
முதற் பதிப்பு : ஆகஸ்ட், 1994
(சென்னை கம்பன் விழாவில் வெளியிடப்பெற்றது)
ஏழாம் பதிப்பு : ஜனவரி, 2005
அமரர் ஏவி.எம். நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு-1994
© தவத்திரு குன்றக்குடி அடிகளார்
திருநாவுக்கரசு தயாரிப்பு
விலை: ரூ. 18.00
------
Title : ΚΑΜΒΑΝ ΚΑΝDΑ ΑΑΤCΗΙΥΗ ARASIYAL SAMOOGAM
Author :KUNDRAKUDI ADIGALAR
Language : Țamil
Edition : Seventh Edition, January, 2005
Pages : 109
Published by : Vanathi Pathipagam, 23, Deenadayalu Street,
T.Nagar, Chennai - 600 017.
Price : RS. 18.00
Printed at : Malar Printers, 044-28224803
---------
முதற் பதிப்பின் பதிப்புரை
சென்னை கம்பன் கழகம் 1975–இல் நிறுவப் பெற்றது. திரு. ஏவி. மெய்யப்பன் அவர்கள் 12.08.1979 அன்று இயற்கை அடைந்தமை வரையில், கழகத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவராக இருந்து வந்தார்கள்.
சினிமாத்துறையில் பெரும் பெயர் பெற்றிருந்த அவர்கள், கம்பன் கழகத்தோடு தொடர்பு கொண்டதிலிருந்து கழகத்தின் வளர்ச்சியிலும், கம்பனுடைய கவி நயத்தைப் பருகுவதிலும், முழுமையான ஈடுபாடு கொண்டிருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தாம் தலைவராக இருந்த ஏவி.எம். அறக்கட்டளையினுடைய ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் கம்பன் விழா நிரந்தரமாக நடைபெறுவதற்கு வழி வகுத்ததோடு, கழகத்திற்கு அவ்வப்போது தேவையான உதவிகள் அனைத்தையும் நிறைந்த உள்ளத்துடனும், மட்டற்ற மகிழ்ச்சியுடனும் செய்து வந்தார்கள்.
அன்னாருடைய மறைவுக்குப்பின், அமரர் ஏவி.எம். அவர்களின் குடும்பத்தினர், அதே ஈடுபாட்டையும் அக்கறையையும் காட்டி வருகிறார்கள். அமரர் ஏவி.எம். அவர்களுடைய நினைவில், ஆண்டுதோறும் கம்பனைப் பற்றிச் சென்னைக் கம்பன் கழகத்தின் ஆதரவில், ஒரு நினைவுச் சொற்பொழிவு நடக்க வேண்டுமென்று விரும்பி அதற்காக ஆவன செய்வதற்கு முன் வந்தார்கள்.
அந்தத் திட்டத்தின்படி அமரர் ஏவி.எம். அவர்களின் இவ்வாண்டின் (பதினோராம் ஆண்டைய) நினைவுச் சொற்பொழிவு 1994–ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள் 28–ஆம் நாள் ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
சொற்பொழிவைத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் “கம்பன் கண்ட ஆட்சியில்-அரசியல், சமூகம்” என்ற தலைப்பில் நிகழ்த்தினார்கள். இந்தியன் வங்கித் தலைவர் திரு. எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்றார்கள்.
இந்த நினைவுச் சொற்பொழிவின் நூல் வடிவமே இது.
இந்தச் சொற்பொழிவினை ஏற்பாடு செய்து, அதனைக் கம்பன் கழகத்தின் மூலம் நிறைவேற்றிய ஏவி.எம். குடும்பத்தார்க்கு எங்கள் மனம் கனிந்த நன்றி.
12–08–1994 கம்பன் கழகத்தார், சென்னை.
---------
முதற்பதிப்புக்கு அடிகளார் எழுதிய முன்னுரை
சென்னை, கம்பன் கழகத்தார் ஏவி.எம். அறக் கட்டளையின் சார்பாக கம்பராமாயணச் சொற்பொழிவு நடத்தி வருகின்றனர். ஏவி.எம். மெய்யப்ப செட்டியார் காரைக்குடியில் பிறந்து வளர்ந்தவர். திரைப்பட உலகச் சக்கரவர்த்தியாக விளங்கியவர். தரமான படம் எடுப்பதில் புகழ் பெற்றவர். நல்ல அன்பர்; இலக்கியங்களை அனுபவிப்பவர். ஆதலால், சென்னை கம்பன் கழகத்தின் வழி ஆண்டுதோறும் கம்பராமாயணத்தைப் பற்றி ஓர் ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக அறக்கட்டளை நிறுவியுள்ளார்.
சென்னை கம்பன் கழகச் செயலாளர் கம்பன் அடிப் பொடியின் அடிப்பொடி என்று பெருமையுடன் அழைக்கப் பெறும் திரு. பழ. பழனியப்பன் அவர்கள் இந்த ஆண்டு, கம்பன் கழகத் தலைவர் - கம்பன் புகழ் பரப்பும் நீதியரசர் எம்.எம். இஸ்மாயீல் அவர்கள் இசைவுடன் நமக்கு வாய்ப்பளித்தார். எளிதென ஏற்றுக் கொண்டோம். ஆனால், எழுதும்போதுதான் காலமும் பழ.பழ. அவர்கள் மனமும் நெருக்கடி தந்ததை உணர முடிந்தது. கம்பன் கழகத்தின் உயர் மரபுகளில் ஒன்று காலம் போற்றுதல். குறித்த காலத்தில் எழுதித் தர இயலவில்லை. மிகுந்த இடர்ப்பாட்டுடன் சொற்பொழிவு நாளன்றுதான் எழுதி முடித்தோம். கம்பன் கழகத்தினரும் பதிப்புத்துறைக் கலைஞருமாகிய திரு. வானதி திருநாவுக்கரசு அவர்களும் பொறுத்தாற்றிக் கொள்ள வேண்டும்.
சொற்பொழிவு 28.07.1994 மாலை, கம்பன் கண்ட ஆட்சியில்–அரசியல், சமூகம், பொருளாதாரம் என்பது தலைப்பு. நமது நாடு மக்களாட்சி முறையில் குடியரசு நாடாக விளங்குகிறது. குடியரசு நாட்டில் வாழ்கிற மக்களுக்கு அரசியல்–ஆட்சியியல் பற்றிய அறிவு தேவை: விழிப்புணர்வு தேவை. இன்று நமது நாட்டு அரசியலை மக்கள் அரசியலைக் கட்சிகளிடம் ஒப்படைத்துவிட்டோம். இது தவறு. கட்சியினர் ஆளட்டும்! ஆனால், எப்படி ஆள வேண்டும் என்று சொல்கிற உரிமை நமக்கு– நமது நாட்டு மக்களுக்கு இருத்தல் வேண்டும். நாடு முழுதும் பரவலாக அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டும். ஒரு நாட்டு மக்கள் எதைப் பற்றிச் சிந்திக்கிறார்களோ, எதைப்பற்றிப் பேசுகிறார்களோ அந்தத் திசையில் நாடு நகரும். இது வரலாற்று உண்மை. சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு’ என்று பாரதி பாடினான். நாடு சுதந்திரம் பெற்றது.
இவ்வாறு நமது நாடு சிறந்த ஜனநாயக நாடாக விளங்க வேண்டும். கம்பன் காட்டும் கோசல நாட்டு அரசு, முடியரசு, ஆயினும் குடியாட்சிப் பண்பு இருந்தது. கோசல நாட்டு மன்னன் உடல்; மக்கள் உயிர். இது ஒரு வளர்ந்த அரசுக்கு அடையாளம்! இன்று நமது நாட்டில் முற்றாக ஜனநாயக ஆட்சியில் எதிர்மறை நிலை! ஏன்? நாம், நம்முடைய அரசியல் கடமையைச் செய்வதில்லை. கம்பன் ஒரு இலட்சிய நாட்டைப் படைக்க ஆசைப்படுகிறான்; அந்த விருப்பத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவிக்க, இராமாயணம் இயற்றுகிறான்.
கோசல நாடு பற்றி மிக உயர்வாகப் பாடுகிறான். ஆனால், கோசல நாடு உண்மையில் கம்பனின் இலட்சியத்திற்கு இசைந்திருந்ததா? என்று வினாத் தொடுத்தால் கிடைக்கும் விடை எதிர்மறையாகத்தான் அமையும். கூனியின் துன்பமும் ஆட்சிக் கட்டிலில் இருப்போர் பக்கம் சொத்துக்கள் எல்லாம் போய்விடும்; மற்றவர்கள் உறவினர் கூட (கைகேயியை) கேட்டுத்தான் வாங்க வேண்டும் என்ற உண்மையையும் அறியலாம். கம்பன் பாடிய நாட்டுப்படலம் கம்பனின் இலட்சிய நாடு பற்றியதேயாம், என்று உணர முடிகிறது.
சொற்பொழிவு முழுதும் கம்பனின் விருப்பத்தை, ஆர்வத்தை, இலட்சியத்தைக் காட்ட முயற்சி செய்து உள்ளோம். மன நிறைவா? சொல்லத் தெரியவில்லை! வாசகர்கள்தாம் சொல்ல வேண்டும்! வாய்ப்பளித்த சென்னை கம்பன் கழகத்திற்கும் அறக்கட்டளையின் இன்றைய புரவலர் திரு. ஏவி.எம். சரவணன் அவர்களுக்கும் நன்றி பாராட்டு! வாழ்த்துக்கள்!
கம்பன் புகழ் வாழ்க! கன்னித் தமிழ் வாழ்க!
– அடிகளார்
-----------
பொருளடக்கம்
1. அரசியல்
2. சமூகம்
3 பொருளாதாரம்
4. போர் நெறி
5. கம்பனின் குறிக்கோள்
------
கம்பன் கண்ட ஆட்சியில் : 1. அரசியல்
முன்னுரை
இந்தியா, வரலாற்றுப் பழைமைமிக்க ஒரு பெரிய நாடு. பல பேரரசுகளைக் கண்ட நாடு. அரசியல் ஞானிகளைத் தந்த நாடு. வடக்கே கெளடில்யரும், தெற்கே திருவள்ளுவரும் சிறந்து விளங்கிய நாடு. பழங்காலத்திலேயே தொழிலிலும் வாணிகத்திலும் சிறந்து விளங்கிய நாடு. ஆயினும் இந்தியா மெள்ளத் தன் ஆற்றலை இழந்து அடிமைப்படும் நிலைக்கு வந்தது; ஏன்? பெரும்பகுதி உள்நாட்டுச் சண்டைகள் காரணம். நுகர்பொருள் அதிகமாகிச் சண்டை சச்சரவுகள் ஆயின. அத்தடுத்து யுத்தங்கள் நடந்தன; அவற்றுள் மூன்று படையெடுப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. ஜீலம் நதிக் கரையின் பேரரசுகளுக்கும் மகா அலெக்சாந்தருக்கும் நடந்த யுத்தத்தில் இந்தியா தன் ஆத்மாவை இழந்தது. அடுத்து முகம்மது கோரிக்கும் பிரிதிவிராஜனுக்கும் நடந்த யுத்தத்தில் இந்தியாவின் அரசியல் போய்விட்டது. அடுத்து ராபர்ட் கிளைவ் நடத்திய பிளாசி யுத்தத்தில் இந்தியாவின் பொருளாதாரம் போய்விட்டது. இங்ஙனம் இந்தியா தனது மகத்தான் பெருமையை இழந்து மங்கி வந்தது; அடிமைப்பட்டது. திரும்பவும் எழுந்து நின்று போராடி 1947-ல் சுதந்திர உயிர் பெற்று நிமிர்ந்து நிற்கிறது.
இந்தியா இன்று சுதந்திர நாடு. இந்தியாவில் நடைபெறுவது சுதந்திரக் குடியரசு; மக்களாட்சி. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மக்களுக்கு அரசியல் அறிவு வேண்டும்; அரசியல் ஞானம் வேண்டும்; பொருளாதார அறிவு வேண்டும்; சமூக விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒற்றுமையுடன் கூடி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களாட்சி முறை வெற்றிக்கு மக்கள்தான் பொறுப்பு. ஆதலால், நமது நாட்டு இலக்கியங்கள் அரசியலை மையமாகக் கொண்டு ஊடும் பாவுமாகத் தோன்றின. நமது நாட்டு மக்களிடையில் அரசியல், சமூக, பொருளாதார, அறிவு வளரவேண்டும் என்று அடிப்படையில் கம்பனின் அரசுகள் என்ற தலைப்பு எடுத்துக் கொள்ளப்பெற்றது. ஆயினும் அரசியல், சமுதாயம், பொருளியல் ஆகிய இன்றையச் செய்திகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பெற்றுள்ளன.
இன்று நமது நாட்டில் வசதியும் வாய்ப்புமுடையோர் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை. அது மட்டுமல்ல; அரசியலை அலட்சியப்படுத்துகின்றனர். அவர்கள் ஆட்சியினர்க்குக் கப்பம் கட்டிக் காரியங்களை முடித்துக் கொள்ள எண்ணுகின்றனரேயன்றி அரசியலில் ஈடுபடுவதில்லை. இவர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிப்பது கூட இல்லை. நடுத்தர வர்க்கத்தினர் நுகர்வுச் சந்தையை விரிவாக்கியதன் மூலம் சுக வாழ்வில் நாட்டம் செலுத்துகின்றனர். அறிஞர்கள் நிலை, அரசியலைப் பொறுத்த வரையில், அஞ்ஞாத வாசமே! சிந்தித்தும் பலர் வாக்களிப்பதில்லை. இந்த நிலையில் இந்தியா சிறந்த அரசியலை ஆட்சியியலைப் படிப்படியாக இழந்து வருவதை உணர முடிகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கம், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், பாதுகாப்பின்மை, உத்தரவாத-மின்மை ஆகியவற்றால் தனி மனிதனுடைய சுதந்திரம் மறைமுகமாக வில்லங்கப்படுதல் நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டு மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வு வேண்டும். கம்பனின் இராமகாதையில் வரும் பாத்திரங்கள் பலவும் அரசியல் நெறி பேசுவதை உய்த்துணர்க. கம்பனின் அரசியல் பேச்சு, நம்மனோரை அரசியலில் ஈடுபடுத்து-மானால் அது பேச்சுக்கு வெற்றி! ஏவி.எம். அறக்கட்டளைக்கு வெற்றி! இனி, பொதுவாக அரசியலுக்கும், அடுத்துக் கம்பனின் அரசியலுக்கும் போகலாம்.
அரசியலின் தோற்றம்
மனித குலம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. மனிதகுல வரலாறு ஒரு தொடர் வரலாறு. தொடக்கத்தில் மனிதகுலம் அரசியலில், ஆட்சியியலில் பரிபூரண சுயேச்சையுடன் வாழ்ந்திருந்தது. அப்போது சொத்துரிமை இல்லை; பணப்புழக்கம் இல்லை; பண்டப்புழக்கம் மட்டும்தான். அதுவும் தேவைக்குத்தான்! அந்தக் கால வாழ்வியல் முறையை ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் என்று கூறுவர். அந்தக் காலத்தில், பழக்கங்கள் வழக்கங்களாகி மரபுகளாக இடம் பெற்று, மக்கள் இயற்கையாகவே ஒழுங்கும் ஒழுக்கமும் உடையவர்களாக வளர்ந்தனர்; வாழ்ந்தனர்; வாழ்வித்தனர். தேவைக்கே பொருள். பொருள், மனிதனின் கருவியாக இருந்தது. வரலாற்றுப் போக்கில், மெள்ளமெள்ளப் பொருள் தேவைக்காக மட்டும் அல்லாமல் கெளரவம், அந்தஸ்து, ஆதிக்கம், பிற்காலப் பாதுகாப்பு என்ற நிலைகள் தோன்றின. இந்தப் பொய்ம்மையின் அடிப்படையில் அல்லது அவசியமற்ற காரணங்களின் அடிப்படையில், மக்கள் தலைவன் தோன்றுகின்றான். காலப்போக்கில் மக்கள் தலைவன் வேந்தனாகின்றான்; அரசியல் தோன்றியது; சட்டங்கள் இயற்றப்பட்டன; சிறைக்கூடங்கள் தோன்றின; படைகள் தோன்றின; போர்கள் தோன்றின; பெருகின. இவ்வளவு தீமைகளும் மனிதனின் ஒழுங்கு, ஒழுக்கம் கெட்டுப் போனமையால் விளைந்த விளைவுகள். இதற்கு மூல காரணம் தனிச் சொத்துடைமை தோன்றியதோடு, காவல் என்ற பெயரில் வேலிகள் இடப் பெற்றதாகும். வீடுகளுக்கிடையே சுவர்கள் தோன்றின. பின் சொத்துடையவர்கள் எல்லாரும் கூடித் தங்களுடைய சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள, புயபலமுள்ள தலைவனைத் தேர்வு செய்தனர். இங்ஙனம் தலைவனிடம் தொடங்கிய அரசியல், ஏகாதிபத்யமாக இன்று உருக்கொண்டு பூதாகாரமாக வளர்ந்துள்ளது. இங்ஙனம் வளர்ந்த ஆட்சிமுறை, முடியாட்சி என்றும் குடியாட்சி என்றும் இருவகையாகப் பிரிந்தன. நமது நாடு மக்களாட்சி முறை தழுவிய நாடு.
கம்பனின் இராமகாதை
கம்பன் காலம் தந்த கவிஞன். கம்பனின் இராமகாதை காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது. கம்பனின் கவிதை கம்பன் வகுத்துக் காட்டிய ‘சான்றோர் கவிதை’க்கு ஓர் எடுத்துக்காட்டு. மனிதரில் சிறந்தோர் சான்றோர். சான்றோர் யார் மாட்டும் எவ்வுயிர் மாட்டும் சம பார்வையுடையவர்கள். கம்பனின் இராமகாதையில் அவனுடைய பொருள்நோக்கு எளிதில் விளங்குகின்றது. என்றுமுள இனிய தமிழில் இராமகாதையைப் பாடி இசைகொண்டு புகழ்மிக்க கவிச்சக்கரவர்த்தியாகக் கம்பன் விளங்குகின்றான். கம்பனின் இராமகாதையில் ஏற்றம் பெற்றோர் உண்டு. ஆனால், முற்றாக இகழப்பட்டோர் யாரும் இல்லை என்று துணிந்து கூறலாம். அந்தப் பாத்திரங்களை நடுவுநிலையுடன் குறைகளையும் நிறைகளையும் மதிப்பீடு செய்து, தமது காவியத்தில் இடம் பெறச் செய்துள்ள அருமை உணரத்தக்கது. ஆதலால், சான்றோர் கவிதைக்குக் கம்பனின் இராமகாதையே எடுத்துக்காட்டு.
கம்பனின் இராமகாதை முழுதும் வாழ்வியலைச் சார்ந்த அறிவியல் பொதுளுகிறது. கம்பனின் இராமகாதை ஓர் அரசியல் சாத்திரம், கம்பனின் இராமகாதை ஒரு நெடிய காதை. நீதிகளின் ஊற்று; அறநெறிகளை நாடு முழுதும் எடுத்துச் சென்ற இலக்கியப் பேராறு; உயிர்ப்புள்ள இலக்கியம். கம்பன் கடவுளைப் பாடியது உண்மை. அதுபோலவே விண்ணையும் பாடியது உண்மை. ஆனால் கம்பன் மண்ணை— பூமியை மறக்கவில்லை. மண்ணிற் பிறந்து வாழும் மானுடத்தையும் பாடி இருக்கிறான். மானுடன் வெற்றிபெற வேண்டும் என்பது அவனது கொள்ளை ஆசை! மாந்தரில் பலவகை. பலவகை மாந்தரையும் பாடியிருக்கிறான். மாந்தரின் குறை— நிறைகளை உணர்ந்தவன் கம்பன். ஆயினும் மாந்தரின் குறைகளைக் கண்டு புழுதி தூற்றவில்லை. குறைகளை நீக்கவே முயற்சி செய்திருக்கிறான். குறைகளிடையே நிலவிய நிறைகளையும் கண்டு காட்டக் கம்பன் தவறவில்லை. கம்பனின் இராமகாதையில் ஒரு சமுதாயத்தைக் காண முடிகிறது. இல்லை, பல்வேறு நாடுகள், பல்வேறு சமுதாய அமைப்புக்களைக் காண முடிகிறது. கம்பன் இராமகாதையை இயற்றியது 800 ஆண்டுகளுக்கு முன் ஆயினும், சமுதாய இயக்கத்தில் கம்பன் பல திருப்பு மையங்களைக் காப்பியத்தில் அறிமுகப்படுத்தியுள்ளான். கம்பன் காலம் முடியாட்சிக் காலம். ஆயினும் மக்களாட்சி அறிமுகம் ஆகிறது.
இந்திய கலாசாரத்தில்—தமிழர் சமுதாய வாழ்க்கையில் ‘ஊழ்’ (கர்மாவின் பலன்) மிகவும் முக்கியமான இடத்தை வகித்து வந்திருக்கிறது; இன்றுவரை வகித்து வருகிறது. ‘ஊழிற் பெருவலி யாவுள?’ என்று திருக்குறள் கூறுகிறது. ஆனால், தமிழக வரலாற்றில் ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்றும்
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”
என்றும் கூறி, ஊழையும் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையைத் திருவள்ளுவர் தந்தார். ஆயினும் ஊழ் பற்றிய சிந்தனையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. ஊழை மையமாகக் கொண்டு ‘ஊழ்வினை உருத்து வந்தூட்டும்’ என்ற கோட்பாட்டையே மையமாகக் கொண்டு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். ஆனால் சமய ஆசிரியராகிய திருஞானசம்பந்தர், உய்யுமாறு தேடிச் செய்யும் வினை செய்யாது ‘அவ்வினைக்கு இவ்வினை’ என்று சொல்லித் திரிவாரை மறுக்கிறார்.
“அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்”
என்பது திருஞானசம்பந்தர் வாக்கு.
ஊழ் என்பதுதான் என்ன? ஆன்மாவின் பழக்கங்கள், வழக்கங்களே! பிறப்புதோறும் ஆன்மாவினிடத்தில் புலன்களில் முகிழ்ப்பதே ஊழ். எனவே, பழக்கங்களையும் வழக்கங்களையும் மனிதன் சிந்தித்து அறிவார்ந்த முயற்சியில் ஈடுபட்டானானால் ஊழை வெற்றி பெறமுடியும். ஊழின் ஓய்வு ஒழிவு இல்லாத தாக்குதலிலிருந்து தப்ப, துன்பங்கள் துயரங்கள் ஆகியவற்றால் கலங்காத துணிவுடன் கூடிய முயற்சி தேவை. ஒவ்வொரு நாளும் முந்தைய வினையைவிட எந்த வகையிலும் குறையாத கூடுதல் முயற்சி தேவை. அப்பொழுதுதான் ஊழை வெற்றி பெற இயலும். ஆதலால் இலக்குவன்,
“உதிக்கும் உலையுள் உறுதீ என ஊதை பொங்க
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதிஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்
விதிக்கும் விதி ஆகும் என் வில் தொழில் காண்டி”
(கம்பன்-1735)
என்றான்.
“விதிக்கு விதியாகும் என் வில் தொழில்” என்று இலக்குவன் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இலக்குவனால் முடியும். ஆனால், இராமனுடைய செந்தண்மை இலக்குவனைச் செயற்படத் தடுத்தமையினாலேயே இலக்குவனால் விதிக்கு விதி செய்ய இயலவில்லை. இன்று நம்முடைய நாட்டில் ஏராளமான மக்கள் ஏழைகளாக இருப்பதற்குக் காரணம் விதியின்பால் உள்ள நம்பிக்கையே. தாம் முயன்றாலும் முன்னேற முடியாது என்று முயற்சியின்றி வாழ்கின்றனர். திருவருட் சிந்தனையுடன் இடையறாது அறிவறிந்த ஆள்வினையில் ஈடுபட்டால் ஊழினை வென்று நமது நாட்டை வளமுடைய நாடாக ஆக்கமுடியும். இது உறுதி.
ஆதலால் நாம் அன்றாட வாழ்க்கையில் பழக்கங்களை ஏற்றுக்கொள்ளும் பொழுது, நன்றாக ஆலோசனை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பழக்கங்கள் சில கால எல்லையில் வழக்கங்களாக மாறும். ஒரு பழக்கம் வழக்கமாக மாறிய பிறகு அந்த வழக்கத்திலிருந்து விடுபடுவதும் கடினம். ஆதலால், பழக்கம், வழக்கமாகும் முன் தீர ஆய்வு செய்து பொருந்தா வழக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிட்டால், ஊழ் உருவாக்கம் பெறுதலைத் தவிர்த்துவிடலாம். கம்பனின் காலம் ஊழ்—விதியின் ஆட்சிக்காலம். ஆயினும், ‘விதிக்கு விதியை’ அறிமுகம் செய்கிறான். அறியாமல் செய்யும் தவறுகள் கம்பனின் இராம காதையில் மன்னிக்கப்படுகின்றன. கம்பனின் காலம் நிலப்பிரபுத்துவ காலம். ஆனாலும் “உடையாரும் இல்லை; இல்லாரும் இல்லை” என்று பொதுமை நலச் சமுதாயம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கம்பனின் இராமகாதையில் ஐந்து நாடுகளின் அரசுகள் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளன. இவற்றுள் இரண்டு பேரரசுகள், மூன்று சிற்றரசுகள். பேரரசுகளில் ஒன்று அயோத்தி. மற்றொன்று இலங்கை, சிற்றரசுகளில் மிதிலை அரசு ஒன்று; கங்கைக்கரை அரசு ஒன்று; கிட்கிந்தை அரசு ஒன்று. இந்த ஐந்து அரசுகளில் கிட்கிந்தை அரசைத் தவிர, மற்ற நாட்டு அரசுகளில் குழப்பங்கள் இல்லை. மிதிலை (ஜனகர்) அரசு கதைப் போக்கிற்காக அமைந்த அரசு, விரிவான செய்திகள் கிடைக்கவில்லை.
அரசுகளின் நிலை
மனித சமுதாயத்தில் அரசுகளின் தோற்றமே மகிழ்ச்சியைத் தரக்கூடியதல்ல. நல்லதைக் கருவாகத் தாங்கி அரசுகள் தோன்றவில்லை. நிலப் பிரபுத்துவமும் — தனி உடைமையும், உழைப்பும்—கூலியும் என்ற சமுதாய நெறிமுறை தோன்றிய பிறகு, உடைமைக்காரர்கள் தங்களுக்குப் பாதுகாப்பாக அரசைத் தோற்றுவித்து, அதிகாரங்களை வழங்கினர். அரசுகள் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை - மக்களாட்சியிலும் கூட - அரசுகள் உடைமை வர்க்கத்தைப் பாதுகாப்பதாகவே இயங்கி வருகின்றன. பின், காலப்போக்கில் அரசே ஓர் அசுர அமைப்பாகிவிட்டது. அரசுக்கு நிலம்; கஜானா; படை என்றெல்லாம் அமைந்துவிட்டன. ஏன்? அரசுகளே ஒரு காரணமும் இல்லாமல் மக்கள் விரோத அமைப்பாக மாறின; இயங்கின; இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகில் பெரும்பான்மையான அரசுகள் கொடுங்கோல் அரசுகளாக விளங்கின. உலக வரலாற்றின் ஏடுகளில் போர்ச் செய்திகளே நிரம்பியுள்ளன என்பதே இதற்குச் சான்று. காலப்போக்கில் முடியாட்சிகளை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். இந்தக் கிளர்ச்சியில் பல அரசர்கள் முடியிழந்தனர்; கொல்லப்பட்டனர். சில அரசுகள் விழித்துக் கொண்டு, மக்களாட்சி முறையைத் தழுவிய ஆட்சியை நடத்தித் தப்பித்துக் கொண்டன. இதற்கு இங்கிலாந்து சிறந்த எடுத்துக்காட்டு. ஆயினும் வரலாற்றுப் போக்கில் நல்லரசுகள் சில அமைந்திருந்தன என்பதை மறக்க இயலாது; மறக்கக் கூடாது. குறிப்பாக இந்தியாவிலும், அதிலும் தமிழகத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் சீனாவிலும் பண்டு நல்ல அரசுகள் இருந்துள்ளன. குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசுகளில் பல அரசுகள் மக்கள் நல அரசுகளாகவே திகழ்ந்தன. அதனாலேயே அரசை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்த வரலாறு தமிழக வரலாற்றில் இல்லை. மக்கள் சமுதாயத்திற்கு அரசு இன்றியமையாதது. அரசுக்கு மக்கள் தேவை. ஆதலால், இலக்கியங்கள், குறிப்பாக இந்திய இலக்கியங்கள் அரசியலை மையமாகக் கொண்டே தோன்றி விளங்குகின்றன. கம்பனின் இராமகாதை ஓர் இலக்கியம் மட்டுமல்ல, அரசியல் நெறி விளக்கும் அரசியல் நூலாகவும் விளங்குகின்றது. கம்பனின் இராமகாதையில் இரண்டு பேரரசுகளும் மூன்று சிற்றரசுகளும் பேசப்படுகின்றன என்பது அறிந்ததே. இந்த அரசுகளின் அமைப்பு, செயல்முறை ஆகியனவற்றை ஆய்வு செய்து எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று உரிமை கொண்டாடும் இக்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் பேச்சு அமைகிறது.
அயோத்திச் சிறப்பு
கோசல நாட்டு அரசு பேரரசு; அதன் தலைநகரம் அயோத்தி. இன்றும் அயோத்தி பழைய வரலாற்றுச் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. நாகரிகத்தில் வளர்ந்த மக்கள்; இயல், இசைப் பயன் துய்த்து மகிழ்ந்து வாழ்வர். கேள்வி ஞானம் வளரும். நாட்டு மக்கள், ஆழ்ந்து அகன்ற பல்துறை அறிவுடையோராக விளங்குவர். அயோத்தி நாட்டு மக்கள் செவியிற் சுவையுணரும் கேள்வியை ‘மருந்தினும் இனியது என்று மாந்துவார்’ எனக் கம்பன் சொல்லும் அருமை நோக்குக. திருவள்ளுவரும் கூடக் கேள்வியைச் ‘செவிச் செல்வம்’ என்றார். கம்பன் பிணி அகற்றும் மருந்தினும் இனியது என்று கூறுவது உற்றறிதலுக்குரியது. அறியாமைக்குக் கேள்வி ஞானத்தைப் போல் பிறிதொரு மருந்தில்லை.
‘வெண்மை இல்லை; பல் கேள்வி மேவலால்’ என்று கூறுவதையும் ஒப்பு நோக்குக. விருந்தினரை ஓம்பலும், விழாக்கள் நிகழ்த்தலும், நல்ல நாட்டின் நிகழ்வுகள், அடையாளங்கள்.
“பொருந்திய மகளி ரோடு
வதுவையில் பொருந்து வாரும்
பருந்தொடு நிழல் சென் றன்ன
இயல்இசைப் பயன்துய்ப் பாரும்
மருந்தினும் இனிய கேள்வி
செவியுற மாந்து வாரும்
விருந்தினர் முகங்கண் டன்ன
விழாவணி விரும்பு வாரும்” (கம்பன்-46)
என்று பாடுகிறான் கம்பன்.
நமது நாட்டில் பெண்களுக்குக் கல்வி தருதல் என்பது இன்று ஒரு பெரிய பிரச்சினை. நமது நாட்டில் பெண்களில் படித்தவர்கள் 24.8% பேர். பெண்களில் இந்த அளவுக்குப் படித்தவர்கள் உருவானதற்குக் காரணம் பெண்கள் முன்னேற்ற இயக்கம், பாரதியின் பாடல்கள் ஆகியனவாம். பழந்தமிழகத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தது; ஆட்சியுரிமையும் கூட இருந்தது. இதற்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் சான்று. சமுதாய நடைமுறைகளே திருக்கோயில்களிலும் அமைகின்றன என்பதை நினைவிற் கொள்க. நமது சுதந்திரக் குடியரசின் அரசியல் சட்டத்தில் பெண்களுக்கெனக் கல்விக்கும் சொத்துடைமைக்கும் விதிகள் இயற்றப்பட்டுள்ளன. ஆயினும் 10 விழுக்காட்டுப் பெண்களுக்குக்கூட இந்தியாவில் சொத்துரிமை இல்லை. ஆனால், அயோத்தியில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினர் என்று கம்பனின் காவியம் கூறுகிறது. இது பற்றிப் பாடும் பாடலில் கம்பன், ஒரு வாழ்வியல் தத்துவத்தை— உண்மையைக் கூறுகின்றான். பிறர் வருத்தத்தை மாற்ற, செல்வம் கருவி, அறிவு உடையோரே பிறர் வருந்தும் வருத்தம் அறிவர். மனிதம் போற்றும் அறிவில்லாதவர்களிடம் செல்வம் இருந்தாலும் பிறர் துன்பம் மாற்றார். இவ்விரண்டில் செல்வம் இல்லாது போனாலும் அறிவு இருந்தால் முயன்று, மற்றவர் துன்பத்தை மாற்றுவர். பிறருடைய வருத்தத்தை மாற்றும் முயற்சியினையே ‘நோன்பு’ என்று தமிழ் நெறி கூறுகிறது. ‘பிறர்க்கென முயலா நோன்றாள்’ என்பது புறநானூறு. பிறிதின் நோய்— பிறர் வருத்தம் பொறா மனம் அறிவுடையோருக்கே உண்டு என்ற கொள்கை கம்பனுடையது. கோசல நாட்டுப் பெண்கள் வருந்தி வந்தவர்க்கு ஈதலிலும், விருந்து ஓம்புதலிலுமே ஈடுபட்டுள்ளனர். கோசல நாட்டில் ஏற்றுமதி— இறக்குமதி பெருகி வளர்ந்திருந்தன. வளம் கொழிக்கும் நிலம், கோசல நாட்டு மக்கள் ஒழுக்கம்; சிறந்த குலமரபினர் என்றெல்லாம் புகழ்கின்றான் கம்பன்.
ஒழுக்கம் சிறந்த மக்களைப் பெற்றுள்ள நாடே வளரும் நாடு. இதனால் ஆட்சிச் செலவு குறையும். குலம், குடி என்ற சொற்கள் தமிழ் இலக்கியங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன. குலம் வேறு, சாதி வேறு. சமூக அமைவுக்கும் குடும்ப அமைவுக்கும் இடையில் அமைந்து விளங்குவது குலம் என்பது. இது வழிவழியாகச் சிறந்து விளங்கி வரும் தலைமுறையைக் குறிக்கும். குலத்திற்குத் திருக்குறள் மிகவும் ஏற்றம் தருகிறது. கம்பனும் ‘குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்’ என்று விளக்குகின்றான். ஒழுங்குகள், ஒழுக்கங்களாக உருப்பெறுகின்றன. ‘நல்ல ஒழுங்குகள்தான் எல்லா விஷயங்களுக்கும் அடிப்படை’ என்றார் எட்வர்டு பர்க்,
ஒருவன், தான் பிறந்து வளரும் குடும்பம், குலம், ஊர், அந்நாட்டு அரசின் நடைமுறை இவைகளுக்கேற்பவே உருவாகின்றான்; உருவாக்கப்படுகின்றான். ‘ஒழுக்கத்திற்குப்’ பிறப்பின் சார்பு காரணம் என்பதைச் சேக்கிழார்,
“பிறப்பின் சார்பால் குற்றமே குணமா வாழ்வான்”
(பெரிய புராணம், கண்ணப்பர்-8)
என்று பாடுவார். ஒழுங்கு என்பது கட்டுப்பாட்டுடன் வாழ்தல். சுதந்திரம் இல்லாத கட்டுப்பாடு அடிமைத்தனத்தைத் தோற்றுவிக்கும். கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் அராஜகத்தைத் தோற்றுவிக்கும். ஆதலால், கட்டுப்பாடு தேவை. கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே கடலும் பாலைவனமும் உருவாகின்றன. ‘நல்நடை நல்குதல் வேந்தர்க்குக் கடனே!’ என்றது புறநானூறு. இன்றைய அரசுகள் மக்களை இரவலர்களாகவும் பேராசைக்காரர்களாகவும் ஏமாற்றுபவர்களாகவும் குடிகாரர்களாகவும் ஆக்க முனைகின்றன. கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். கம்பன் காட்டும் கோசல நாட்டில்,
“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் யுரைஇ லாமையால்
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்” (கம்பன்-84)
ஆக, கோசல நாட்டில் வறுமைத் துன்பமும் இல்லை, பகைவரால் வளரும் துன்பமும் இல்லை என்றால் அயோத்திப் பேரரசு, ஒரு நல்ல பேரரசாக அமைந்து விளங்கியது என்பது புலப்படுகிறது.
கோசல நாடு பேரரசாக விளங்கியது என்பதைக் கம்பன் ‘மன்னவர் தருதிறை அளக்கும் மண்டபம்’ பற்றிக் கூறுவதன் மூலம் உய்த்துணர முடிகிறது. அயோத்தியில் கள்வரும் இல்லை; காவல் செய்வாரும் இல்லை. கொள்வாரும் இல்லை; ஆதலால் கொடுப்பார்களும் இல்லை.
கள்வர், காவலர் இவர்களுள் யார் முதலில் தோன்றினர்? நடைமுறையில் கள்வர் தோன்றின பிறகே காவலர் தோன்றுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கினால் காவலுக்குப் பின்தான் கள்வர் வருகின்றனர். ஆம்! பிறருடைய செல்வத்தையெல்லாம் அழக்கொண்டு இவறிக் கூட்டிப் பிறர் வாட, வருந்தப் பூட்டி வைத்து அழகு பார்க்கும், சுரண்டும் வர்க்கத்தைச் சேர்ந்த செல்வர்கள்செல்வத்தைக் காப்பவர்கள். ‘செல்வத்தின் பயனே ஈதல்’ என்ற நெறி போற்றாமையினால் காவற்காரராகின்றனர். இந்தச் சூழ்நிலையில்தான் கள்வர்கள் தோன்றுகின்றனர். ஆனால் கோசல நாடு குறைவற வளர்ந்த நாடாக விளங்கிற்று.
கோசல நாட்டின் பேரரசர் அன்பில் தாய், நலம் பயப்பதில் தவம், விண்ணில் உய்த்துச் செலுத்தும் சேய்; நோய்க்கு மருந்து அறிவு என்று கம்பன் பேரரசின் புகழ் பாடுவதைக் காப்பியத்தில் படித்து அனுபவிக்க முடிகிறது.
மக்களுக்காகவே மன்னன்
மக்களை உடம்பாகவும் மன்னனை உயிராகவும் கண்டு பாடியது புறநானூறு. ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்பது புறநானூறு. ஆனால், கம்பன் குடிமக்களை உயிராகவும் அயோத்தியில் இருந்த பேரரசன் தசரதனை— மன்னனை— உடம்பாகவும் கூறுவதை அறிந்து அனுபவிக்க வேண்டும். உயிர்தான் முக்கியமானது. உயிருக்குக் கருவிதான் உடம்பு. ‘உயிர் எலாம் உறைவதோர் உடம்புமாயினான்’ என்றான் கம்பன். அதாவது, மக்களுக்காகவே அரசு, மன்னன் எல்லாம். இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் அரசனைக் கடவுளாகவும் அரசனது ஆணையைக் கடவுளின் ஆணையாகவும் போற்றப்பட்டிருப்பதை நோக்கும்பொழுது, கம்பன் கண்ட அரசு, மக்கள் அரசாக விளங்குவதைக் காண மகிழ்வு மேலிடுகிறது. ஆனால், இன்றோ மக்கள் சட்ட ரீதியாக உரிமை பெற்றிருந்தாலும் அரசின் நடைமுறையில் குடிமக்களாகக் கூட நடத்தப்படவில்லை. அரசின் உடைமையாக — வாக்களிக்கும் எந்திரங்களாக மதிக்கப்படுகின்றனர்; நடத்தப்படுகின்றனர் என்ற வேதனையை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை.
இராமனின் எளிமை
இன்று ஆள்வோருக்கு அச்சம் மிகுதி. காவலர்கள் புடைசூழவே உலா வருகின்றனர். குண்டுகள் துளைக்காத கார்கள், மேடைகள் இன்றைய ஆள்வோருடைய தேவையாகிவிட்டன. கோசல நாட்டில் அப்படியில்லை.
இராமனுக்குப் பகைவர் என்று யாரும் இல்லை. சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனிடம் பகை கொண்டானில்லை. இராவணனை அழிக்க நினைத்தானில்லை. தூதுவர்கள் மூலம் சீதையை விட்டுவிட்டு உயிர் பிழைத்துப் போகும்படி சொல்லியனுப்பியதை நினைவிற் கொள்க. செருகளத்தில் கூட இராமன், ‘இன்று போய் நாளை வா!’ என்று கூறும் அறநெஞ்சினன் என்பதைப் புரிந்து கொண்டால், இராவணன் அழிவு இராமனால் ஏற்பட்டது என்பதைவிட, வீரத்தின் பேரால் பொய்மையான மானத்திற்கு அஞ்சி, இராவணன் கடைசிவரையில் போரிட்டு அழிந்தான் என்பதுதான் உண்மை.
இராமன் இளவரசன். விளையாடிவிட்டு அரண்மனைக்கு திரும்பும் பொழுது தேரூர்ந்து வருகின்றான். தேரோடும் வீதியின் இருமருங்கிலும் தன்னைக் காணக் கூடியிருக்கும் மக்களைக் கண்டவுடன் தேரிலிருந்து இறங்கி மக்களை நோக்கி நடந்து வந்து அணுகுகின்றான். மக்களிடம், ‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? துன்பத் தொடக்கில்லாமல் வாழ்கின்றீர்களா? உங்களுடைய மனை வளமாக அமைந்திருக்கின்றதா? உங்களுடைய பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்குகின்றார்களா? வலிமையுடையோராக வாழ்கின்றார்களா?’ என்றெல்லாம் கேட்டறியும் பாங்கினை நோக்கின்— கோசல நாட்டுப் பேரரசு, மக்கள் நல அரசாகவே விளங்கியது என்பது மட்டுமல்ல, இன்றைய மக்களாட்சி முறை அரசுகளை விடக் கூடச் சிறந்து விளங்கியமையை உய்த்துணர முடிகிறது.
எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிர
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்
மதிதரு குமரரும் வலியர்கொல்?’ எனவே! (கம்பன்-311)
என்ற பாடல் இங்கே நினைந்து நினைந்து நோக்கத் தக்கது.
அயோத்திப் பேரரசு நடுவுநிலை பிறழ்ந்ததாக வரலாறு இல்லை. நல்ல அமைச்சர்கள், பேரரசனைச் சூழ்ந்து நன்னெறியில் அரசை உய்த்துச் செலுத்தினார்கள்.
நடுநிலை பிறழாத அரசு
அயோத்திப் பேரரசு வீரமும் வளமும் திருவும் பெற்று விளங்கினாலும் அதற்கு யாரோடும் பகை கொள்ளும் பழக்கமும் இல்லை; வழக்கமும் இல்லை.
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங் காது; தன்
தார் ஒடுங்கல் செல் லாது; அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண் டாகுமோ? (கம்பன்-1419)
என்பதறிக. இங்ஙனம் அயோத்திப் பேரரசு பலவகையில் சிறந்து விளங்கினாலும் குற்றங்களே இல்லாத அரசாகவும் அது இல்லை என்பதையும் நாமறிதல் வேண்டும். கோசல நாட்டு மக்கள் அரசியலில் ஏற்பாடும் நல்ல மாற்றங்களை வரவேற்றனர் என்றும் தீயனவற்றைக் கண்டு அழவும் செய்தனர் என்றும் தெரிய வருகிறது. இராமன் முடிசூடிக் கொள்ளும் விழாவை நினைத்து மக்கள் மகிழ்ந்தனர். எதிர்பாராத நிலையில் இராமன் முடிசூடாமல் காடு செல்ல இருப்பதறிந்து அழுதனர். அதாவது உடலும் உயிரும் போல அரசியலில் மக்கள் பங்கேற்றமை பாராட்டுதலுக்குரிய செய்தி. பேரரசனுக்கு நல்ல அமைச்சர்கள் இருந்ததாகக் கம்பன் பாடுகின்றான். இராமனுக்கு முடிசூட்டும் விஷயத்தில் அமைச்சர்கள் கலந்து ஆலோசிக்கப் பெற்றனர். தசரதன் கோசல நாட்டைச் சேர்ந்த பல சிற்றரசர்கள் கூட்டமும் கூட்டி அவர்களுடைய இசைவும் பெற்றான். எனினும் ஒரு நாட்டின் முடிசூட்டு விழா அக்குடும்பத்தில் பிறந்த ஒருவனாகிய பரதன் இல்லாமலேயே ஏற்பாடு செய்யப்படுவது எந்த நியாயத்தைச் சேர்ந்தது? அது மட்டுமல்ல. கடைசியாக ‘நாட்டை ஆள்வது யார்?’ என்பது கைகேயியின் அந்தப்புரத்தில் முடிவு செய்யப்படுகிறது. இது விடை காண முடியாத வினாவாக இன்றும் விளங்குகிறது.
கைகேயி மனம் திரிந்தது ஏன்?
அரசியல், அழுக்காற்றுக்கும் காமத்துக்கும் பலியாகிறது. அது போலவே, ஆட்சிபுரியும் அதிகாரம் உடையவர்களிடத்திலேயே செல்வம் இருக்கும்— மற்றவர்களுக்கு ஒன்றும் இல்லை என்ற கருத்தும் அறிவுலகுக்கு, நீதி சார்ந்த உலகத்திற்கு, ஏற்புடையதாக இல்லை. இராமனுக்கு முடிசூட்டுவதில் கைகேயிக்கு மறுப்பில்லாதது மட்டுமல்ல, விருப்பமும் கூட இருந்தது.
மனிதகுலத்திற்குத் தீமை செய்யும் தீயொழுக்கங்களில் அழுக்காறே தலைமை ஏற்கிறது. ‘அழுக்காறு என ஒரு பாவி’ என்று திருக்குறள் திட்டுகிறது. அழுக்காறு பொறாமை இவை ஒரு பொருள் குறிக்கும் இரு சொற்கள். அழுக்காறு, என்னும் உணர்ச்சி நல்ல மனிதனைக்கூட நச்சரவமாக மாற்றிவிடும். புனிதமானவையும் கூட அழுக்காற்றின் வசப்பட்டால் அழிந்துவிடும். இதற்குக் கைகேயி ஓர் எடுத்துக்காட்டு.
கைகேயி மிகவும் நல்லவள்; உயர்ந்த பண்பினள். ஆயினும் கூனி, கைகேயியின் நெஞ்சத்தில் ஏற்றிய அழுக்காறு, பகை உணர்ச்சி கூட உடனடியாகப் பலன் தரவில்லை— பலன் தராதது மட்டுமின்றி, கூனியின் மீது கைகேயி சினம் கொண்டு பேசிக் கூனியை ஒதுக்க முயற்சி செய்கிறாள். ஆனால், வஞ்சினம் கொண்ட கூனி பழிவாங்கும் எண்ணத்துடன் அவமானத்தையும் பொருட்படுத்தாமல் நின்று, கைகேயியின் மனத்தைத் திரிபுறச் செய்ய முயற்சி செய்கிறாள். கைகேயி, கூனியின் பேச்சக்குச் செவி கொடுக்காமல் விலகியிருந்தால் கைகேயி காப்பாற்றப்பட்டிருப்பாள். ஆயினும் இராமகாதை நீள வேண்டுமே! அதனால், கைகேயி தொடர்ந்து கூனியின் பேச்சைக் கேட்கிறாள். மெள்ள மெள்ள, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கைகேயியின் தூய சிந்தையும் திரிந்தது. முதலில் கூனியிடம் கைகேயி, ‘இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ?’ என்று வினவுகின்றாள். இடர் இல்லை என்பது கைகேயியின் துணிபு: முடிவு. இராமனை, தான் ஈன்றெடுத்த மகன் என்றே உரிமை கொண்டாடிய பால்மனம் உடைய கைகேயியின் உள்ளத்தில் சொட்டுச் சொட்டாக நஞ்சைக் கலக்கிறாள் கூனி. பின் மனம் திரிந்த கைகேயி இப்போது பரதனை என் மகன் என்று கூறுவதுடன் தன் மகன் பரதன் ஆட்சியைப் பெறக் கூனியிடமே ஆலோசனை கேட்கிறாள். திரிந்த சிந்தையளாகிய கைகேயி தசரதனிடம் வரம் கேட்டபொழுது, பரதனை ‘என் செல்வன்’ என்றும், இராமனைச் ‘சீதை கேள்வன்’ என்றும் குறிப்பிடுவதை ஓர்க. ‘இராமனைப் பயந்த எற்கு’ என்று உரிமையுடன் பேசிய கைகேயி, அழுக்காற்றின் வழிப்பட்டு இராமனைச் ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுவது, மூலம் படிமுறையில் மனந்திரிந்த போக்கினை அறிவது நல்லது.
கூனியின் சூழ்ச்சி தொடக்கத்தில் பலிக்கவில்லை. கடைசியில் கைகேயியின் மனம் மாறுகிறது. கைகேயியின் மன மாற்றத்துக்குக் கூனியின் திறமை காரணமல்ல; அயோத்தியில் இருந்த நிலவரம்—சமூக அமைப்பே காரணம் என்று தெரிய வருகிறது. இன்ப துன்ப உணர்வுகளுக்குத் தந்தி சேவகன் காரணம் ஆகான். தந்தியின் செய்தியே காரணமாக அமையும். கோசல நாட்டில் சமூக உத்தரவாதம் இல்லை. அதிகாரம், செல்வம் எல்லாம் பதவியில் உள்ளோரையும் அவர்களைச் சார்ந்தோரையுமே சென்றடைந்தன—மற்றவர்களுக்கு வாய்ப்பில்லை என்ற நிலவரத்தைக் கூனி கருவியாக்கிக் கொள்கிறாள். இராமனுக்கு முடி சூட்டிவிட்டால் அதன்வழி சொத்துக்களும் அதிகாரங்களும் கோசலைக்குப் போய்ச் சேர்ந்துவிடும். உன் மகன் பரதனுக்கு ஒன்று தேவையானால் நீ, கோசலை இடத்தில் கேட்டுத்தான் பெற வேண்டும். கேகய நாட்டு இளவரசியாகவும், தசரதச் சக்கரவர்த்தி மனைவியாகவும் திகழும் நீ, உனக்கொன்று தேவையானால் கோசலையைக் கேட்டுத்தான் பெறவேண்டும் என்று கூறுகிறாள். தற்சார்பும் பாதுகாப்பும் உத்தரவாதமும் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பார்த்த கைகேயி எதிர்காலத்தை நினைவிற் கொண்டு மனம் மாறுகிறாள்.
புரியும் தன்மகன் அரசு எனின் பூதலம் எல்லாம்
விரியும் சிந்தனைக் கோசலைக்கு உடைமை ஆம்; என்றால்
பரியும் நின்குலப் புதல்வற்கும் நினக்கும் இப்பார் மேல்
உரியது என், அவள் உதவிய ஒரு பொருள் அல்லால்! (கம்பன்-1477)
சிந்தை என்செயத் திகைத்தனை? இனி, சில நாளில்
தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க
உந்தை, உன்ஐ, உன்கிளைஞர், மற்று உன்குலத்து உள்ளோர்
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ? மதியாய்! (கம்பன்-479)
என்னும் பாடல்களை எண்ணுக. ஆக, கம்பன் உடையாரும் இல்லை; இல்லாரும் இல்லை என்று கூறியது கோசல நாட்டின் அமைப்பு அல்ல; கம்பன் காண விரும்பிய இலட்சிய நாடு இது. மேலும், கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை என்றும் அல்லவா பாடுகிறான். ஆனால், இராமன் அயோத்தியை விட்டுப் புறப்படும் பொழுது பார்ப்பனன் ஒருவன் இரந்து வருகிற செய்தியைக் கம்பன் பாடுகின்றான்.
பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்து, அவன்
கருத்தின் ஆசைக் கரை இன்மை கண்டு. இறை
சிரித்த செய்கை நினைந்து, அழும் செய்கையாள் (கம்பன்-5094)
என்ற பாடல் கவனத்திற்குரியது.
இதனால் கம்பன் ஒரு சிறந்த பொதுமை நலம் கெழுமிய நாட்டை இலட்சியமாகக் கொண்டிருந்தான் என்பது உணரத்தக்கது. இன்னமும் கம்பனின் இலட்சியம் நிறைவேறவில்லை. கம்பனின் ஆர்வலர்கள்-மனிதநேயம் உடையவர்கள்—கம்பனின் இலட்சியத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
நிறையும் குறையும்
கம்பன் கோசல நாட்டில், பெண்கள் மதிக்கும் சமூக அமைப்பு இருந்ததாகப் பாடுகிறான். ஆனால் மீட்சிப்படலத்தில் சீதையை இராமன் கண்டபடி திட்டுகிறான்.
“ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம்: பாழ்பட
மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு, எனை விரும்பும் என்பதோ?” (கம்பன்-10013)
“யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
சேதியா நின்றது உன் ஒழுக்கச் செய்தியால்
சாதியால்; அன்று எனின் தக்கது ஓர் நெறி
போதியால் என்றனன்–புலவர் புந்தியான்” (கம்பன்-10019)
என்றெல்லாம் இராமன் திட்டுகின்றான். இதில் என்ன நியாயம் இருக்கிறது? அறிஞர்களில் சிலர் சமாதானம் கூறுகின்றனர். நாடாளும் அரசனாக இருந்தால் சொல்லினால் சுடும் உரிமை உண்டா? நெருப்பினால் சுட்டதை வேண்டுமானால் நியாயப்படுத்தலாம். நாவினால் சுட்டதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதனால் பெண்களைப் பெருமைப்படுத்தும் ஒழுக்கம் அயோத்தியில் இருந்ததா என்பதே கேள்விக் குறியாகிவிட்டது.
ஆக, அயோத்திப் பேரரசு நிறைகளும் குறைகளும் உள்ள அரசாகவே விளங்கியுள்ளது என்று அறிகின்றோம்.
கோசல நாட்டில் நிலவிய பேரரசின் குறைபாடுகளினாலேயே இராமகாதை நீளுகிறது. கூனியின் துன்பம் மாற்றப்படாமை; தயரதனின் வரம், இராமனுடைய முடிசூட்டும் விழாவில் பரதனைப் புறக்கணித்தது ஆகியனவே இராமன் முடியிழந்தமைக்குக் காரணம். காட்டுக்குச் சென்றதற்குக் காரணம் கூனி, கருவி கைகேயி,
கோசல நாட்டு அரசில் குறைகள் காணப்படினும் கோசல நாட்டு அரசு அறம் சார்ந்த அரசு என்பதை மறக்க முடியாது. கம்பன் தன்னுடைய இலட்சிய நாடாகக் கோசலநாட்டைத்தான் பாடுகின்றான். கம்பனுக்குத் தன்னுடைய இலட்சிய அரசை அமைக்கும் ஆற்றல் அயோத்திப் பேரரசுக்கே உண்டு என்ற நம்பிக்கை போலும். ஆதலால், அயோத்திப் பேரரசில் கம்பன் அரசியலை முறையாகப் பாடுகின்றான். பாத்திரங்கள் பலவற்றையும்— அரசியல் சிந்தனையாளர்களையும்— அரசியல் பேசுபவர்களையும் படைத்துக் காட்டுகின்றான். கம்பனின் அரசியலறிவு அயோத்தியா காண்டத்தில் பூரணமாக வெளிப்படுகிறது. அயோத்தி அரசில் கம்பன் அரசியல் கோட்பாடுகளையும் வலியுறுத்துகிறான். கம்பன் தன் இராமகாதையில் ஒரு நல்ல ஆட்சியமைந்த நாட்டை உருவகம் செய்து காட்டுகிறான்.
மிதிலை அரசு
அடுத்துக் காணப்படும் அரசு மிதிலை அரசு. மிதிலை அரசைப் பற்றி விரிவான செய்திகள் இல்லை. மிதிலை அரசு புகழ்மிக்க அரசு. மிதிலை அரசன் சனகன் இராமகாதையில் பேசப்படுகிறான். சனகனை ‘ராஜரிஷி’ என்று கூறுகிறார்கள் சிறந்த அறிஞர்கள். சனகன் வரலாற்றிலும் புகழ்பெற்றவன். சனகனின் தலைநகரம் மிதிலை. செல்வச் செழிப்பின் காரணமாக மிதிலையின் தெருக்களில் ஆடவரும் மகளிரும் வெறுத்துப் போட்ட பொன்னணிகள் குவிந்து கிடந்தன. மிதிலை நகரத்து இளைஞர்கள் வெஞ்சினமே உருவு கொண்டனையர். ஆயினும் வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் நெஞ்சினையும் பெற்றிருந்தனர். அகழியும் அரணும் ஓங்கி உயர்ந்த மாடங்களும் அமைந்தது மிதிலை என்று கூறுவதால், மிதிலை செல்வவளத்தில் சிறந்திருந்தது என்பது புலனாகிறது.
கங்கைக்கரை அரசு
இராமன், தந்தையின் ஆணைப்படி முடி துறந்து வனத்தில் பயணம் செய்யத் தொடங்கினான். இராமன் பயண வழியில் கங்கைக்கரையை அடைகிறான். கங்கைக்கரையின் வடகரையில் இரவு தங்குகின்றான். உடன் சீதையும் இலக்குமணனும் உள்ளனர். கங்கைக் கரையில் வேடுவகுல அரசு ஒன்று அமைந்திருந்தது. அதன் தலைவன் குகன். ஆயினும் படகுகளுக்கு உரிமை உடையவன். ஆழ நீர்க் கங்கை போல் நெடிய உருவினன்; நெடுந்தானை உடையவன்; முரட்டு வடிவினன்; சினம் இல்லாத போதும் அவன் நெருப்பைப் போன்ற கண்ணினன்; கையில் வில்லும் இடையில் வாளும் கொண்டவன். ‘குகன்’ என்றும் ‘கங்கை நாவாய்க்கு இறை’ என்றும் கம்பன் இவனைக் குறிப்பிடுகின்றான்.
இவன் இராமனைக் காணும் விரும்பினனாய்த் தேனும், மீனும் திருத்தி எடுத்துக் கொண்டான். இராமனைக் காண நெடுந்தானை சூழச் சென்றான். குகனுடைய சுற்றம் உடன் வந்தது. இராமன் இருக்கும் இடத்தை அண்மித்தவுடன் நெடுந்தானையையும் சுற்றத்தினையும் உடன் வராதவாறு நிற்கப் பணித்தான். அது மட்டுமல்ல, தன்னிடமிருந்த வில்லையும், வாளையும் ஒதுக்கிவிட்டுத் தனிமையில்—தனி மனிதனாகக் கருவிகள் சுமக்காத உடலையும் இராமன்பால் கொண்ட அன்பு நெஞ்சத்தினையும் சுமந்து கொண்டு, இராமன் இருக்கும் இடத்திற்குச் செல்கின்றான் குகன். போர்க் குகன், ஆயிரம் நாவாய்க்குரிய தலைவன். ஆயினும் அடக்கம், எளிமை, பத்திமைப் பண்பு மிகுந்தவன். இராமனைக் கண்ணினால் நோக்கிக் கனிந்தனன், மண்ணுறப் பணிந்து வணங்கினான். கையினால் வாய் புதைந்து நின்றான். இராமனை, தன் உயிர் தந்து காப்பேன் என்று உறுதி கூறினான்; ஆனால் இராமன் ‘நீ இந்த உலக முழுவதும் உடையாய்’ என்று சொல்லி ‘நான் என்றும் உனக்கு உரிமையுடையேன்’ என்று ஆறுதல் கூறினான். ஆக, குகன் நெடுந்தானையுடைய அரசனாக இருந்தும் அவனுடைய எளிமையை நோக்கும் போது, அமைதி தழுவிய அரசு கங்கைக்கரை அரசு என்று தெரிய வருகிறது.
“புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
இரவன் மாக்களின் பணி மொழி பயிற்றி”
என்ற சங்கப் பாடலுக்கு இலக்கணமாகக் குகன் அமைந்திருந்தான்.
போர்க் குகனின் படகுத் துணை கொண்டு இராமன் கங்கையைக் கடக்கின்றான். குகனை ‘யாதினும் இனிய நண்ப’ என்று நட்புரிமை கொண்டாடுகின்றான். இராமன் செல்லும் இடத்தில் தனது உயிர்மேவ, குகன் தங்கினான்.
அசோகவனத்தில் சிறையிருந்த சீதை, பழைய நிகழ்வுகளை நினைவு கூர்கிறாள். அந்தப் பழைய நிகழ்வுகளில் சீதையின் மனத்தில் பசுமையாக நின்றது, இராமன் குகனை ‘யாதினும் இனிய நண்ப’ என்று அழைத்துப் பாராட்டியது ஆகும். சீதை, இராமன் குகனைக் தோழமையாகக் கொண்ட நிகழ்ச்சியை,
ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி, நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள். (கம்பன்-5091)
என்று நினைத்துப் பார்க்கிறாள்.
மனித வாழ்க்கையில் பெறும் பேறுகளில் சிறந்தது நட்பு. ‘செயற்கரிய யாவுள நட்பினது போல்’ என்று வள்ளுவம் கூறும். நட்பு, பழக்கத்தாலேயே வளரும்; பழக்கத்தாலேயே நிலைபெறும். ஆனால், குகன் போன்ற உத்தமர்களுக்கு நன்மை அடிப்படையில் நட்புத் தோன்றுகிறது. எல்லாம் வல்ல கடவுளே, நம்பியாரூரருடன் தோழமையுறவு கொண்டதை ஓர்க. நட்பில்லா வாழ்க்கை சுவையற்றதாகவும் இறுதிக் காலத்தில் பயனற்றதாகவும் போய்விடும். காட்டிற்கு வந்த இராமன் தோழமைத் தம்பியர் உறவுகளைத் திசைதோறும் வளர்த்துக் கொண்டு வலிமை பெற்றான்; அமைதி பெற்றான்; ஆறுதல் பெற்றான். குகனுக்கும் இராமனுக்கும் இடையில் வளர்ந்த நட்பு வழிப்பட்ட அன்பு இருதய சுத்தமானது; அர்ப்பணிப்புத் தன்மையுடையது. அவர்களுடைய நட்பு எல்லையற்றது—இன்றும் நட்புக்கு எடுத்துக்காட்டு குகன்தான்- இன்றுவரை வேறோர் உதாரணம்— சான்று கிடைக்கவில்லை.
கிட்கிந்தை அரசு
அடுத்து, இராமன் அடைந்த நாடு கிட்கிந்தை. இஃது ஒரு அரசு, வானர அரசு. வானர அரசு என்றாலும் ஒரு அரசுக்குரிய அமைப்பு, மந்திரி சபை முதலியன அமைந்திருந்ததாகக் கம்பன் கூறுகின்றான். சுக்கிரீவன் இரண்டு தடவை மந்திரி சபையைக் கூட்டி ஆலோசனை செய்ததாக இராமகாதை கூறுகிறது. முதல் மந்திரி சபைக் கூட்டம் இராம—இலக்குமணர்களைச் சந்திப்பது குறித்து நடந்தது. இக்கூட்டத்தில் இராம—இலக்குமணர்களைச் சந்திக்கும்படி சுக்கிரீவன் கேட்டுக் கொள்ளப்படுகிறான். இந்த மந்திரி சபை, சுக்கிரீவன் வாலியால் முடி பறிக்கப் பெற்று மலைக்குகைகளில் வாழ்ந்த போது கூடியது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
இலக்குவன் கிட்கிந்தைக்கு வந்தபொழுது, கிட்கிந்தை அரசிடம் வலிமை வாய்ந்த வானரப்படை இருந்தமையை இராமன் முன் அணிவகுத்து நிரூபணம் செய்கின்றான் சுக்கிரீவன். இராமனும் இலக்குமணனும் வானர சேனையின் அளவையும் ஆற்றலையும் கண்டு பிரமிக்கின்றனர் அல்லது அதிசயிக்கின்றனர்.
கம்பனின் படைப்பில் சுக்கிரீவன் நல்ல பாத்திரம். மிகவும் உத்தமமான பாத்திரம். வாலிக்கும் மாயாவி என்ற அவுணன் ஒருவனுக்கும் போர் மூண்டது. போரிட்டுக் கொண்டே மலையின் குகையில் நுழைந்தனர். பல காலம் வாலி திரும்பவில்லை. வாலியொடு பொருத்திய அவுணனும் வரவில்லை. சுக்கிரீவன், வாலி அந்தப் போரில் மாண்டிருப்பானோ என்று ஐயப்பட்டான். ‘நான் குகைக்குள் சென்று அண்ணனைத் தேடுவேன். அவன் இறந்து விட்டிருந்தால் மாயாவியைத் தேடிச் சென்று அழிப்பேன். அஃது இயலாவிடின் உயிர் விடுவேன்’ என்று குகைக்குள் செல்ல முயன்றான். ஆனால் மற்றவர்கள் அவனுக்குச் சமாதான்ம் கூறித் தடுத்து அரசாட்சியை ஏற்கச் செய்தனர். வாலியை மாயாவி கொன்றிருந்தால் அவன் குகைவாசல் வழி மேலேறி வருவான் என்று பயந்து மலைகளைக் கொண்டு குகை வாசலை அடைத்து வைத்தனர். எனவே, வாலி வரக்கூடாது என்றோ, வாலியின் ஆட்சியைத் தான் கவர்ந்து கொள்ள வேண்டும் என்றோ சுக்கிரீவன் எண்ணவில்லை. எதிர்பாராமல் வாலி மீண்டும் வந்தபோது, சுக்கிரீவன் ஆட்சி செய்வதைக் கண்டு சினம் கொண்டான்; சுக்கிரீவனை அடித்து விரட்டினான். சுக்கிரீவன் மனைவி உருமையைக் கவர்ந்து கொண்டான், எதிர்பாராமல் நடந்த சம்பவங்களைத் தேர்ந்து தெளிதல் வாலியிடத்தில் இல்லாதது ஒரு குறையே. குற்றமற்ற சுக்கிரீவன் துன்பத்திற்கு ஆளானான். பின் இராமனால் மீட்சி ஏற்பட்டது.
கிட்கிந்தையில் சமுதாய அமைப்பு இருந்ததா? குரங்கினம் ஆனாலும் கம்பன் மானுடம் போலவே அமைத்துப் பாடுகிறான்.
கிட்கிந்தா நாட்டில் சொல்லின் செல்வனாகிய அனுமன், சாம்பவான், அங்கதன் முதலிய சிறந்த பாத்திரங்களையும் அந்தப் பாத்திரங்களின் இயல்புகளையும் திறன்களையும் அறிந்து அனுபவிக்க முடிகிறது. ஆதலால், கிட்கிந்தையில் சமுதாய அமைப்பும் உயர்ந்து விளங்கியது என்று நம்பலாம்.
இராமன் கூறிய அரசியல் நெறி
கிட்கிந்தை அரசு எவ்வளவுதான் வலிமையுடையதாக இருந்தாலும் ஆங்கு உள்நாட்டுச் சண்டை நிலவியது; பதவிச் சண்டை நடந்தது. வாலி, சுக்கிரீவனிடமிருந்த அரசையும், சுக்கிரீவன் மனைவி அருமருந்தன்ன உருமையையும் கூடக் கவர்ந்து கொண்டான். பின் இராமனின் உதவியால் அனுமனின் வழிகாட்டுதலுக்கிசைய, வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு இராமன் முடி சூட்டுகிறான். முடி சூட்டியதோடன்றி ஒரு நல்ல அரசியல் அறிவுரையையும் வழங்குகின்றான்.
“வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்
தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரோடும்
தூய்மைசால் புணர்ச்சி பேணி, துகள் அறு தொழிலை ஆகி
சேய்மையோடு அணிமை இன்றி, தேவரின் தெரிய நிற்றி.” (கம்பர்-4122)
வாய்மையோடு பொருந்திய அறிவுரை தரும் அமைச்சர் பெருமக்களோடும் தீமை ஒன்றும் செய்யாத மறவரோடும் தூய்மையான உறவைப் பேணி வளர்த்துக் கொள்க என்கிறான் இராமன். அறிவு, கூர்மையாகும் பொழுது பொய்யும் தீமையும் நிகழ்தல் உண்டு. ஆதலால் ‘வாய்மையொடு பொருந்திய அறிவு’ என்றான் போலும்! அமைச்சர்களுடனும் மறவர்களுடனும் நல்ல உறவு பேணுதல் வேண்டும். அவர்களை விட்டு அகலவும் கூடாது. அதிகமாக அணுகவும் கூடாது என்பது அரசியல் நெறிமுறை.
பகைமை ஒரு தீய பண்பு. மனிதகுலம் தோன்றிய நாள் தொடங்கிப் பகை இருந்து கொண்டிருக்கிறது; வளர்ந்து கொண்டு வருகிறது. ஏன் பகைமை? சண்டை? பொருள் காரணமாகப் பகைமை வரும். பொதுவுடைமை வந்தால் பகைமை நீங்குமா? நீங்காது என்பது பொதுவுடைமை நாடுகள் தந்துள்ள படிப்பினை. அழுக்காறு அகன்றால் பகைமை வராது தவிர்க்கலாம். பழங்காலத்தில் மூன்றின் அடிப்படையில் பகைமை தோன்றியது. அவை முறையே பொன், பெண்; மண், அல்லது மண், அதிகாரம், பெண் என்றும் கூறலாம். இன்று இவற்றுடன் பதவியும் புகழும் சேர்ந்து கொண்டிருக்கின்றன. பகைமைக்கு மூல காரணம் அழுக்காறேயாம். இவ்வுலகில் எந்தக் காலத்திலும் பகைமை, பகைமையால் தணிந்ததாக வரலாறில்லை. பகைமை அன்பினாலே தணியும். இதுவே அறநெறி. பகைமை தீ என்றால், அத்தியைத் தணிக்கும் தண்ணீர் நட்பு.
பகை உடைய சிந்தையார்க்கும்
பயன்உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி
இன் உரை நல்கு (கம்பன்-4123)
என்று இராமன் சுக்கிரீவனுக்கு அரசியல் நெறி உணர்த்தினான்.
‘தீயன சிந்தித்தல் ஆகாது. பகையே யாயினும் நீ திரும்ப இனியனவே கூறு. சிறியர் என்று கருதித் தீமை செய்யாதே, துன்புறுத்தாதே’ என்று கூறிய இராமன், தன் வாழ்க்கையையே முன்னுதாரணமாக எடுத்துக் கூறுகிறான். ‘நான் நெறிமுறை பிறழ்ந்து கூனிக்கு ஒரு தீமை செய்ததால், இன்று நாடு விட்டுக் காடு வந்து, அரசை இழந்து, மனைவியை இழந்து அல்லலுறுவதைச் சான்றாக எடுத்துக்கொள்’ என்று இராமன் கூறும் அறிவுரையை உன்னுக.
‘சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு
குறியது ஆம் மேனி ஆய கூனியால் குவவுத் தோளாய்
வெறியன எய்தி, நொய்தின் வெந்துயர்க் கடலின் வீழ்ந்தேன்’
(கம்பன்-4126)
என்பான் இராமன்.
கூனிக்கு நான் இழைத்த தீமையால் கூனியின் பகைமை உணர்ச்சி நீண்டது. ஆயினும் காலம் வந்துழி அந்தச் சாதாரணக் கூனியும் கூடப் பகை முடித்துக் கொள்ள முடிந்தது. அதனாலேயே நான் நாடு இழந்தேன்; காடு வந்தேன்; மனைவியை இழந்தேன்!” என்று இராமன் கூறுவதால், கூனிக்கு இழைத்த தீமை அவன் நெஞ்சத்தை உறுத்திக் கொண்டிருந்தது என்பது தெரிகிறது. ஆனால், அந்த உறுத்தல் ஏன் செயலாக்கம் பெறவில்லை. காரணம் அவள் சிறியள் என்ற எண்ணம்தானே! இன்று நமது நாட்டு அரசியலில்—ஆட்சியில்— அல்லற்படுவோர் சிறியோர்தாம் என்பதை எவரேனும் மறுக்க இயலுமா? ஏன் நமது அன்றாட வாழ்விலும் கூடப் பெரியோர் பெரும்பிழை செய்தாலும் பார்த்தும் பாராமல் இருக்கிறோம். சிறியோர் ஒரு சின்னத் தவற்றைச் செய்தாலும் சினந்து வீழ்கின்றோம். இது தவறு என்று சுக்கிரீவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இராமன் வாயிலாகக் கம்பன் அறிவுறுத்துகின்றான்.
காமம் கொடிது. நாடாள்வோர் பெண்வழிச் சேறல் ஆகாது என்றார் திருவள்ளுவர். இங்கு இராமனும் ‘மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்’ (அரசியற் படலம்—12) என்று கூறுகிறான். இதற்கு வாலியும் தயரதனும் சான்றாவர் என்பது உணர்க. நமது தலைமுறையில்கூட இத்தகு நிகழ்வுகள் உண்டு. பரபரப்பான உலகம் ஆதலால் நினைவில் தங்கவில்லை. மக்கள் மறந்து போயினர். ‘தாய் ஒக்கும் அன்பில்’ என்று முன்கூறிய கம்பன் இங்கு இராமன் வாயிலாகத் தம்மைத் தாங்கி நிற்பாரைத் தாங்குதல் வேண்டும். அதாவது யாதொரு துன்பமும் வராது பாதுகாத்தல் வேண்டும், என்று அறிவுரை கூறுகின்றான். நாடாள்வோருக்கு அறமே உயிர்; உறுதி; ஆக்கம்; பயன். அறம் கெடுமாயின் நாடாள்வோர் வாழ்நாள் கெடும். அவர்களுக்கு அறமே கூற்று. கோவலனைக் கொன்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வரலாற்றை நினைவிற் கொள்க.
ஆக, கிட்கிந்தை அரசில் அரசின் வடிவம் இருந்தது, வலிமை இருந்தது. படை வலிமை இருந்தது. ஆயினும் உட் சண்டைகள் இருந்தன. அறம் மெலிந்து இருந்தது. இதற்குக் காரணமாகிய வாலியின் வதைக்குப்பின் கிட்கிந்தை அரசு நிமிர்ந்து நிற்கிறது. கிட்கிந்தை நாட்டுக்கு அரசன் சுக்கிரீவன். ஆனாலும் அந்நாட்டு அரசு நிலைபெற்று உயர அனுமனும் அங்கதனுமே கருவிகள் என்பது காவியம் உணர்த்தும் உண்மை.
இலங்கை அரசு
கடைசியாக நாம் காண இருப்பது இலங்கைப் பேரரசு. இலங்கைப் பேரரசு சிறந்த முறையில் இயங்கியது என்று கருதுவோரும் உண்டு. ‘இல்லை, இல்லை! இலங்கை அரசு அரக்கத் தன்மையுடையது’ என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியாயினும் இலங்கை அரசு, பேரரசு, வலிமை வாய்ந்த அரசு. இலங்கை அரசின் தலைநகர் அமைப்பை இராமனே கண்டு வியப்புற்றான் என்று கம்பன் பாடுவது, இலங்கையில் இருந்த அரசு பேரரசு என்பதை உறுதி செய்கிறது. அயோத்தியில் மக்கள் வாழ்ந்ததைப் போலவே இலங்கையிலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் என்பதை,
‘களிக்கின்றார் அல்லால் கவல் கின்றார்
ஒருவரைக் காணேன்!’ (கம்பன்-4864)
என்று கம்பன் அனுமன் வாயிலாகக் கூறுவதை ஓர்க. இராவணனின் இலங்கை நகர அமைப்பு மாடமாளிகைகள், அகழிகள், அரண்கள் ஆகியன இலங்கைப் பேரரசு வன்மையில் அமைந்த ஒரு பேரரசு என்பதை உணர்த்து கின்றன. அது மட்டுமல்ல; இராவணனது வலிமை, தேவர்களை எல்லாம் ஏவல் கொண்டு விளங்கிய பேரரசு என்பது இராமகாதை வாயிலாக அறியக்கிடைக்கும் செய்தி.
இராவணன் செயல்முறைகள்
இங்ஙனம் சிறந்து விளங்கிய பேரரசுக்குக் கூற்றாக வந்தாள் சூர்ப்பணகை. சூர்ப்பபணகை இராமனை நெறிமுறை தவறி விரும்பி, மூக்கறுபட்டாள். மூக்கறுபட்ட வேதனையால் தனது மூக்கை அறுத்த இராமனைப் பழி வாங்கத் திட்டமிடுகிறாள். இராவணன் அவையில் அழுகிறாள். சூர்ப்பணகையின் நாடகத்திற்கு முதலில் இராவணன் உடன்படவில்லை. ‘நீ என்ன செய்தனை?’ என்றே இராவணன் கேட்கிறான். சூர்ப்பணகை சீதையைப் பற்றி வருணித்த செய்திகள் தொடக்கத்தில் இராவணனைக் கவர்ச்சிக்கவில்லை. கரைப்பார் கரைத்தால் கல்லும் மெள்ள மெள்ளக் கரையுமல்லவா? இராவணன் மனம் திரிந்தது. சீதையைக் கவர்ந்துவரத் திட்டமிட்டு மாரீசனை மாயமானாக அனுப்பி, தான் சந்நியாசி வேடத்தில் சென்று, சீதையைக் தனிமைபடச் செய்து எடுத்து வருகிறான். சீதையைக் கைபடாமல் மண்ணோடு எடுத்து வந்ததாகக் கூறுவது கவிச்சக்கரவர்த்தி கம்பனின் உத்தி. இராவணன் எளிதில் நெறிமுறை பிறழாதவன் என்று கம்பன் உணர்த்த ஆசைப்பட்டதின் விளைவு இந்த உத்தி! சீதையைக் கவர்ந்த இராவணன் தனது அரண்மனையிலோ அந்தப்புரத்திலோ அவளைத் தனிமைப்படுத்தி வைக்காமல், திறந்த வெளியில் அசோகவனத்தில் பல மகளிர் சூழக் காவலில் வைத்தது இராவணனுடைய நடையைப் பற்றிய ஆய்வுக்குரிய செய்தி.
சீதை உணர்த்திய அரசியல் நெறி
சீதையை இராவணன் வேண்டுகின்றான். அப்போது சீதை இராவணனுக்கு ஒரு அரசியல் நடைமுறையை உணர்த்துகின்றாள். ஆட்சியாளர்களை—அரசை—விமர்சனம் செய்பவர்களும் அரசின் தவறுகளைக் கடிந்து கண்டனம் செய்பவர்களும் இல்லாதுபோனால் அந்த அரசு அழியும் என்பது திருக்குறள் கருத்து.
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னர்
கெடுப்பா ரிலானும் கெடும்’
என்பது திருக்குறள்.
சீதை இராவணனை நோக்கி,
“கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம்; களிக்கின் றோயை
‘அடுக்கும், ஈ(து) அடாது’ என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை; உள்ளார்; எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர்; என்ற போது முடிவு அன்றி முடிவது உண்டோ”
(கம்பன்-5204)
என்று சீதை, இராவணனுக்கு அரசியல் நெறிமுறையை உணர்த்தியதை ஓர்க, உணர்க.
தம்பியர் தகவுரை
இராவணனின் உரிமைச் சுற்றத்தினர் இராவணனின் செயலை அறமாகாது, தகாது என்றே கூறினார்கள். தூதுவனாக வந்த அனுமனை இராவணன் கொல்ல முயன்றபோது வீடணன் தலையிட்டுத் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறுகின்றான்.
“அந்தணன், உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன், அன்புக்கு ஆன்ற தவசெறி உணர்ந்து, தக்கோய் !
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ; “இயம்பு தூது
வந்தனென்” என்ற பின்னும் கோறியோ, மறைகள் வல்லோய்!”
(கம்பன் - 5916)
என்பது வீடணன் அறிவுரை.
இலங்கைக்கு அனுமன் வந்து போனபின், இராவணன் தனது மந்திரி சபையைக் கூட்டி ஆலோசனை செய்கின்றான். மந்திரிசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கும்பகருணன் இராவணன் செய்கையை மறுக்கின்றான்; கண்டிக்கின்றான்.
ஆக இல் பர தாரம்.அவை அம் சிறை அடைப் பேம்;
மாசு இல் புகழ் காதலுறுவேம், வளமை கூரப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று, நம் கொற்றம்! (கம்பன்-6122)
இப்பாடலில் கும்பகருணன் ‘குற்றமற்ற பிறருடைய மனைவியைச் சிறையில் வைப்பது நல்லரசுக்குரிய நடைமுறையன்று, காமமும் மானமும் ஓரிடத்தில் இருத்தல் இயலாது’ என்றெல்லாம் கடிந்து கூறுகின்றான். ஆதலால், திருக்குறள் அரசியலில் கூறுவதுபோல, மடவார் கற்புக்கு அரசு காவலாக விளங்க வேண்டும். அங்ஙனம் இன்றி ஆள்வோரே மற்றவர் மனைவியைச் சிறையில் வைப்பாராயின் அவ்வரசு எங்ஙனம் நல்லரசாக விளங்க முடியும்? என்பது கும்பகருணன் வினா.
வீடணன் இராவணனை எங்ங்னம் மதித்தான், உறவு கொண்டான் என்பதை,
“எந்தை நீ; யாயும் நீ எம்முன் நீ; தவ
வந்தனைத் தெய்வம் நீ; மற்றும் முற்றும் நீ;
இந்திரப் பெரும் பதம் இழக்கின் றாய்!” என
நொந்தனென் ஆதலில் நுவல்லது ஆயினேன். (கம்பன்-6143)
என்ற பாடலால் அறியலாம். இவ்வளவு பெருமதிப்பை வீடணன் இராவணனிடம் கொண்டிருந்தாலும் இராவணன் சீதையைக் கவர்ந்த செய்கையைக் கண்டிக்கத் தவறவில்லை. அது மட்டுமன்று. இராவணனையே துறந்து விடுகின்றான். கும்பகருணன் செஞ்சோற்றுக் கடன் அடிப்படையில் பொருகளத்தில் போரிட்டு உயிரிழக்கிறான்.
இந்திரசித்து அறிவுரை
இராவணனை அவனுடைய மகன் இந்திரசித்துவும் இடித்துக் கூறுகின்றான். ஆனால், இராவணன்தான் திருந்தவில்லை. இராவணனுடைய உரிமைச் சுற்றத்தினராகிய கும்பகருணன், இந்திரசித்து ஆகியோர் இராவணன் சீதையைச் சிறைப்படுத்தியிருப்பது தவறு மட்டுமன்று, அறநெறி பிறழ்ந்த பாவமும் ஆகும் என்று உணர்ந்திருந்தனர், இராவணனுக்கும் உணர்த்தினர். ஆனால், இராவணன் திருந்தியபாடில்லை. இவர்களுக்கு உறவா? அறமா? கடமையா? என்ற போராட்டம். கடைசியில் உறவு நலமே வெற்றி பெற்றது. உறவுக்காகப் போராடி இராவணனுக்காகச் செருகளத்தில் மரணத்தைத் தழுவ அனைவரும் ஆயத்தமாயினர். இராவணன் சுத்த வீரன். அதனால், அடைக்கலம் புக நாணப்படுகிறான். இராமனின் பகையை நல்ல பகை என்று பாராட்டுகின்றான்.
‘என்னையே நோக்கியான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன்’
என்கிறான்; தனித்து நின்று போராடுகின்றான்.
இராவணன் மரணம் உறுதியான பிறகும் கூட, அவன் நெறிமுறை பிறழ்ந்த காமத்தின் வழி செல்லாமல் செருகளத்தில் போரிட்டு மாயவே விரும்பினான். இறுதி நாள் செருகளத்துக்குச் செல்லும்போது, இன்று போர் முடியும். போரின் முடிவில் இராமனின் மனைவி சீதை வயிற்றில் அடித்துக் கொண்டு அழுவாள் அல்லது என் மனைவி மண்டோதரி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுவாள் என்று கூறிவிட்டுப் போர்க்களத்திற்குப் புறப்படுகின்றான்.
“மன்றல் அம் குழல் சனகிதன் மலர்க் கையான் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன் மகள் அத்தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்” என்றான். (கம்பன்-9667)
இறுதிக் காலத்தில் இராமனின் மனைவி சீதை என்பதை இராவணன் உறுதிப்படுத்துகின்றான். இராவணன் சீதையை வலிய அணுகாததற்குக் காரணம், விரும்பாத ஒரு பெண்ணை இராவணன் தீண்டுவானாகில் அவனுடைய தலை வெடிக்கும் என்ற சாபம் உண்டு என்று திரிசடை வாயிலாகக் கூறப்படுகிறது. மரணம் உறுதியான நிலையில், காமவெறியனாக இராவணன் இருப்பின் சாபத்தைப் பற்றியா யோசித்திருப்பான்? அது அன்று. இராவணன் முற்றிலும் கெட்டவன் அல்லன். சராசரி மனிதனுக்குள்ள பலவீனம் இருந்தது உண்மையாயினும், அரசியல் நெறி பிறழ்ந்து சீதையைத் துன்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ இராவணன் விரும்பவில்லை என்பதே உண்மை. ஆக, ஒரு பெரிய இலங்கைப் பேரரசு ஒரு சிறு தீப்பொறியால் அழிந்தது. பிறர் மனை நயந்த தீமையால் வன்மை பொருந்திய பேரரசு அழிந்தது. இலங்கைப் பேரரசு வன்மை சார்ந்த பேரரசு, வன்மையில் முடிந்த பேரரசு, அயோத்திப் பேரரசு அறம் சார்ந்த பேரரசு, அது வெற்றி பெற்றது அறநெறியாலேயே!
கம்பனின் இராமகாதை பல்வேறு அரசுகளை நமக்கு அறிமுகப்படுத்தியது. அவற்றில் இலங்கைப் பேரரசு திருந்தாமல், வல்லாண்மை மீதிருந்த நம்பிக்கையால் அழிந்தது. கிட்கிந்தை அரசு திருந்தி வரலாற்றிலும் காவியத்திலும் இடம் பிடித்துக் கொண்டது. கங்கைக் கரையரசும், மிதிலை அரசும் விவாதங்களைக் கடந்த அரசுகளாக விளங்கின. அயோத்திப் பேரரசு, குறைகளும் நிறைகளும் உடைய பேரரசாக விளங்கி, எந்தச் சூழ்நிலையிலும் அறம் சார்ந்த நெறிமுறைகளையே பின்பற்றியதால் வெற்றி பெற்றது. நம்முடைய காலத்திலும் கம்பன் அடிச்சுவட்டில் அறஞ்சார்ந்த அரசு காண்போமாக.
-------------
2. சமூகம்
அரசியல், சமுதாயம், பொருளாதாரம் இவை மூன்றும் ஒன்றிற்கு ஒன்று காரணமாக அமைவன. ஒன்று பிறிதொன்றுக்கு அரணாக அமைவது. ஆதலால் கோசல நாட்டில் சமுதாய அமைப்பு எப்படி இருந்தது, எனச் சிந்திக்கலாம்.
பொதுவாக மனித குலத்தில் சமுதாயம் உருவாவது எளிதன்று. ஆதி பொதுவுடைமைக் காலத்தில் பகைமை அதிகம் இருந்ததில்லை. ஆனால், சமுதாய அமைப்பு உருவாகி இருந்தது என்று நம்ப இயலவில்லை. நம்முடைய புராணங்களைப் படித்தாலே தெரிகிறது— சமுதாய அமைப்புத் தோன்றவில்லை என்பது. தேவர்களுக்குள்ளேயே சண்டை, தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையில் சண்டை, கடவுள்களுக்கிடையில் சண்டை நடந்ததாகக் கூடப் புராணங்கள் கூறும். கிரேக்க ஞானி சாக்ரட்டீஸ் ‘நமது பிள்ளைகளுக்குக் கடவுள் போட்ட சண்டைகளைக் கற்றுக் கொடுக்கக் கூடாது’ என்றான். ஆம்! இந்தச் சமுதாய அமைப்பில் மனிதர்கள் ஒன்றாகச் சேராமல் நாடு, மொழி, மதம், இனம், சாதி முதலியவற்றின் பெயரால் பிரிந்து பிரிந்து தம்முள் பொருதிச் சீரழிந்து போயினர்.
அலைகடலில் தண்ணீர் வெள்ளம், பல கோடிக்கணக்கான திவலைகளையுடையது. அந்தக் கோடிக் கணக்கான நீர்த்திவலைகள் ஒன்றாக இருக்கும் வரையில் கடலுக்குக் கடலின் வடிவம், தன்மை, முத்து ஈனும் பண்பு உண்டு. ஆனால், அக்கடலிலிருந்து ஒரு துளித் தண்ணீர் பிரிந்து கரையில் வீழ்ந்தால் அந்தத் துளிக்கு என்ன நேரிடும்? ஒரு சில நொடிகளுக்குள்ளாகவே கதிவரன் ஒளியில் காய்ந்து மறைந்து போகும். அதுபோல மனிதன் பலருடன் கூடிச் சமுதாயத்தின் ஒரு பகுதியாகப் பிரிக்கப்பட முடியாமல்—பிரியாமல்—வாழ்ந்தால் சமுதாயம் அமையும்; சமுதாயம் உருவாகும். மனிதக் கூட்டம் சமுதாயமாகாது. இலட்சிய அடிப்படையும் உறவும் இன்றிக் கூட்டமாகக் கூடும் மனிதக் கூட்டம்! அவ்வளவுதான். கூட்டம் வேறு, கூடி வாழ்தல் வேறு. கூடி வாழ்தலே சமுதாயம்.
இப்படிக் கூடி வாழும் பண்புடைய மக்களையே பாவேந்தன் பாரதிதாசன்.
“பாரடா உனது மானிடப் பரப்பைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்; அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைத்துக் கொள்! உன்னை சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!”
என்றும்,
“இமயச் சாரலில் ஒருவன் இருமினால்
குமரியி லிருந்து மருந்துகொண்டு ஓடினான்.”
என்றும் கூறினான்.
ஒரு சிறந்த சமுதாய அமைப்பின் ஒழுகலாறு எப்படி அமையும் என்று இவற்றின் மூலம் காட்டியுள்ளான். ஒரு சிறந்த சமுதாய அமைப்பு நமது உடலின் பொறிகள், புலன்களைப் போல ஒத்துழைக்கும். இத்தகைய சமுதாய அமைப்பு இன்னும் இந்தியாவில் பூரணமாக உருவாகவில்லை. எல்லோரும் இந்தியராகும் நாளே இந்திய சமுதாயம் உருவாகும் நாள். கோசல நாட்டில் முழுமையான — பூரணமான சமுதாயம் உருவாகவில்லை என்றாலும் ஒரு நல்ல சமுதாய அமைப்புக்குரிய அமைவுகள் இருந்தன, சில துரதிர்ஷ்டங்களைத் தவிர!
கோசல நாட்டுச் சமூகம்
ஆறுகள் ஊருக்கு வளம் சேர்ப்பன; அழகூட்டுவன. கோசல நாட்டை சரயு நதி அழகு செய்கிறது; வளமூட்டி வாழ்விக்கிறது. சரயு நதியை வருணிக்க வந்த கம்பன் கோசல நாட்டு மக்களை உவமையாகக் காட்டிச் சரயு நதியை அறிமுகப்படுத்துகின்றான்.
ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்,
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்: (கம்பன்-12)
என்றான்.
அயோத்தியைத் தலைநகரமாகக் கொண்ட கோசல நாட்டுமக்கள், ஆடவர்—மகளிர் நெறிபிறழாத நேர்மையுடையவர்கள். கோசல நாட்டு மக்களின் நெறி, அறத்தாறு. நேர்மை என்று நாம் அடிக்கடி கேட்கும் ஒரு சொல். இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோட்டுக்கு நேர்கோடு என்று பெயர். அதுபோல, சொல்லையும்— செயலையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் இணைப்பதே நேர்மை எனப்படும். மனமும், சொல்லும்— சொல்லும் செயலும் ஒன்றுபடுவது நேர்மை. நேர்மை, உலகியலை நடத்தும் ஒழுகலாறு. மென்ஷியஸ் என்ற சிந்தனையாளன் ‘எனது உயிர் எனக்கு மிக அருமையானது. நேர்மையைக் கடைப்பிடிப்பதும் அதைப் போலவே எனக்கு அருமையானது. இரண்டில் ஒன்று எனக்குக் கிடைக்கும் என்றால் எனது உயிரைவிட்டு விடுவேன்; நேர்மையைத்தான் கடைப் பிடிப்பேன்!’ என்றான். கோசல நாட்டு மக்கள் நேர்மை நெறி பிறழாதவர்கள் என்பது கம்பனின் வாக்கு.
அறம்–தருமம்
வாழ்வியலின் அடிப்படைப் பண்புகளை அறம் என்று கூறுவர். தர்மம் என்ற வட சொல்லுக்கு நேராக அறம் என்று தமிழில் கூறுவதுண்டு. பொருத்தப்பாடு பற்றி ஆய்வு தேவை.
நெறிப்படி செய்யப்படுதல், ஒழுகலாறு என்று திருக்குறள் கூறுகிறது. தருமம் என்பது நூற்றுக்கு நூறு ஒழுகலாறாக வலியுறுத்தப் பெறுகிறது. எவரையும் மனம், வாக்கு, உடல் ஆகியவற்றால் மறந்தும் துன்புறுத்தாமை, வாய்மை (சத்தியம்) பேணுதல், களவு, காமம், வஞ்சம், உலோபத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுபடுதல், எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வாழ்க்கை வாழ்தல், நூல்களைப் படித்தல், பிறருக்கு உதவுதல், ஆணவத்தை அறவே விலக்குதல், பகிர்ந்துண்ணல் எல்லா உயிர்களையும் தம் உயிர் போலவே பாவித்தல், எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் உள்ளமையை உணர்தல் இவையெல்லாம் தருமம்.
ஔவையார் ‘அறம் செய விரும்பு’ என்று கூறும்பொழுது கொடுத்தலையே குறிப்பிடுகிறார். பொதுவாக அறநெறி சார்ந்த வாழ்க்கை போற்றப்படுகிறது. சீனத் தத்துவஞானி கன்பூஷியஸ், ‘அறமே அரச மரியாதையை விடச் சிறந்தது, என்றார். ‘அறத்தின் வழிநிலையில் அஞ்ச வேண்டா’ என்பது ஷேக்ஸ்பியர் வாக்கு ‘அறத்தால் வருவதே இன்பம்’ என்பது வள்ளுவம். கோசல நாட்டு மக்கள் அறத்தாற்றில் நின்று ஒழுகியவர்கள். அறம் போல், சரயு நதி கால்கள் வழி ஓடி நாடெலாம் வளர்த்துக் கடலில் கலந்தமையை விளக்கும் பாடல்கள் பலப்பல.
மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறி
போன தண்குடை வேந்தன் புகழ் என,
ஞானம் முன்னிய நான்மறை யாளர்கைத்
தானம் என்னத் தழைத்தது – நீத்தமே. (கம்பன்-16)
என்பது அவற்றுள் ஒரு பாடல்.
மருதநில மக்கள்
கோசலநாடு மருதநில வளமும், முல்லைநில வளமும் கொழித்த நாடு. அந்த நிலப்பகுதிக்கு ஏற்றவாறு மக்களின் ஒழுகலாறு, பொழுதுபோக்கு, மகிழ்ச்சி முதலியன அமைந்திருந்தன என்று கம்பன் விளக்குகின்றான். மருதநிலம் இயலுக்கும் இசைக்கும் களமாகும். விழாவயர்தலும் மருத நில மக்களின் பழக்கம். கோசல நாட்டு மக்கள் சொற்பொழிவுகள் கேட்டு மகிழும் இயல்புடையோராயிருந்தமை மகிழ்வுக்குரிய செய்தி. நமது உடலுறுப்புக்களில்— பொறிகளில் எல்லாவற்றிற்கும் கதவுகள் உண்டு. அவை நாம் விரும்பி இயக்கினால் மட்டுமே இயங்கும். ஆனால், செவிகள் அப்படியல்ல. செவிகள் எப்போதும் திறந்த நிலையின; கேட்கும் இயல்பின.
செவிச் செல்வம் .
செவியின் இயக்கம் வாழ்க்கையின் வளர்ச்சிக்குத் தேவை. செவிச்செல்வமாகிய கேள்வியின் பெருமையைத் திருக்குறள் நன்றாக உணர்த்துகிறது. உடன்பாட்டாலும் செவிச் செல்வமாகிய கேள்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறது; எதிர்மறையாகவும் பேசுகிறது.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. (திருக்குறள்-411)
‘செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்’ (திருக்குறள்-420)
என்ற குறட்பாக்களை எண்ணுக. மேலும் ‘கற்றிலனாயினும் கேட்க!’ என்றும் அறிவுறுத்துகிறது.
முல்லைநிலத்தில் கால்நடை வளம் நிறைந்துள்ளது. கால்நடைகளை—பால் மாடுகளை— மையமாகக் கொண்டு முல்லை நிலத்தில் வாழ்பவர் இடையர் குலத்தினர்.
மகளிர் நிலை
கம்பன் கோசல நாட்டு மகளிருக்கு, ‘விளைவன யாவையே?’ என்று ஒரு வினாத் தொடுக்கின்றான். அதாவது, கோசல நாட்டு மகளிருக்கு வைகலும்—விருந்தோம்பல், வருந்தி எதிர்ப்படுவோருக்கு ஈதல் இவை தவிர வேறு வேலை இல்லையாம். ஏன் வேறு வேலை இல்லை? கல்வி அறிவு இன்மையாலா? இல்லை! இல்லை! கோசல நாட்டுப் பெண்கள் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்து விளங்கியவர்கள். செல்வம் தலைமகன் உழைப்பினால் வீட்டிலேயே பூத்து விளங்கியதால் வேறு வேலைக்குப் போக வேண்டிய நிலை மகளிருக்கு இல்லை! இன்றையநிலை தலைகீழ்த் தடுமாற்றம்! பெண் வேலைக்குப் போகாது போனால் வாழ்க்கையை நடத்த இயலாது; இதனால் இன்று வீட்டு வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைந்துள்ளது. குழந்தைகள் வளர்ப்பில் கவனக்குறைவு ஏற்பட்டுச் சமூக அமைப்புச் சீர்குலைகிறது. கோசல நாட்டில் நல்லொழுக்கம் உடைய குடிகள் சிறந்து விளங்கியதால் வழிவழி ஒழுக்கமும் வளர்ந்தது.
பெருந் தடங்கண் பிறைநுத லார்க்கு எலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்
விருந்தும், அன்றி, விளைவன யாவையே? (கம்பன்-67)
என்ற பாடல் மீண்டும் மீண்டும் நினையத்தக்கது.
கல்வி நலம்
ஒரு நாட்டின் சிறப்புக்கு அந்நாட்டு மக்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். கல்வி பெறாத மக்கள் ஒன்றுக்கும் பயன்படார். அர்த்தசாத்திரம் ‘கல்வி, மக்களுக்கு அணிகலன்’ என்று கூறுகிறது. ‘கேடில் விழுச் செல்வம் கல்வி’ என்றது வள்ளுவம். ‘கல்வி கற்காதவன் ஏன் பிறந்தான்?’ — இது பிளேட்டோவின் வினா! ‘கற்றல் கேட்டல் உடையார் பெரியார்’ என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. மக்களுக்குச் சக்தியைத் தருவது கல்வி. இந்தக் கல்வி மக்களுக்குக் கிடைக்காது போனால் வாழ்க்கையில் தேக்கம் ஏற்படும். கல்வி மக்களுடைய ஆன்மாவிற்கு உணவு.
‘கல்வியும், ஞானமும்’ என்று கம்பன் குறிப்பிடுவான். கல்வி அறிவாக உருப்பெறுதல் வேண்டும். கவிச்சக்கரவர்த்தி கம்பன் பம்பையை வருணிக்கிறான். நடுப்பகுதி நீர் தூய்மையாக வெண்மையாக இருந்தது. இதற்கு அறிவுடையோர் உதாரணம். அறிவுடையோர் ஒரு நிலையினராக இருப்பர்; விளங்குவர். கரையோரத்து நீர் நிறம் மாறிமாறிக் காணப்படுகிறது. இது தமக்கென அறிவு இல்லாதவர்களாக இடத்திற்கு ஏற்ப மாறிமாறி ஒழுகுபவர்களைக் குறிக்கும் என்பான்.
“ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈர்ம்புனல்
பேர்ந்து, ஒளிர் நவமணி படர்ந்த பித்திகை
சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால்,
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது” (கம்பன்-3710)
என்பது கம்பன் பாடல். ஆதலால் சேரிடம் அறிந்து சேர வேண்டும்.
மனிதப் பண்பு நலனைப் பற்றிப் பேசுபவர்கள் ‘மனத் தூய்மையை’ குறித்து நிறையக் கூறுவர். மனத்தில் தூய்மையின்மை இயற்கையா, செயற்கையா? ஆய்வு தேவை. மனம் இயல்பாகத் தூய்மையானதுதான். மனத்துக்குத் தூய்மையின்மை எங்கிருந்து வந்தது? அல்லது தூய்மை எங்கிருந்து வருகிறது? வாழ்நாளில் சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் நட்பாக, உறவாகக் கிடைக்கும் மனிதர்கள்தாம் ஒருவனுடைய மனத்தூய்மைக்கும் கேட்டிற்கும் காரணம்.
‘மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு’ (திருக்குறள்-454)
என்றது திருக்குறள். கம்பனும் ‘குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட் கெல்லாம்’ என்றான்.
கோசல நாட்டு மக்கள் நூற்றுக்கு நூறு கல்வி கற்றவர்கள். கோசல நாட்டில் கல்வி கற்காதவர்கள் இல்லை. இன்று நம்முடைய நாட்டில் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கை 36.2% இவ்வளவுதான்! கல்லாதாரைக் கற்பிக்கும் நோக்கத்துடன் அறிவொளி இயக்கம் நடத்தப்படுகிறது. காலம்தான் விடை சொல்ல வேண்டும். மணம் நிகழ்ந்த முறை
பழந்தமிழ்ச் சமுதாயத்தில் வீரத்தை அடிப்படையாகக் கொண்டே திருமணம் நடந்தது. தொன்மைக் காலத்தில் ஆண்கள் ஏறு தழுவித் திருமணம் செய்து கொண்டனர். மிதிலையில் சனகன் வல்வில் வளைத்து மகள் கொடுக்கும் மரபை அறிமுகப்படுத்தினான். இராமன் வில்லை ஒடித்துச் சீதையை மணக்கின்றான். வீரமும் இல்லாமல், பொருளீட்டும் முயற்சியும் இல்லாமல், மணமகள் வீட்டில் வரதட்சிணை கேட்டுப் பெறும் தீய பழக்கம் அல்லது வழக்கம் அயல் வழக்கு; தமிழ் வழக்கு அன்று. இது முற்றிலும் தீது,
கோசல நாட்டு மக்கள் தங்கள் இளவரசன் இராமனின் திருமணம் காண மிதிலை நோக்கிப் பயணம் செய்கின்றனர். பயணம் அவரவர்களுடைய சக்திக்கு ஏற்றவாறு அமைந்திருப்பதை உணர்த்துகின்றான் கம்பன்.
‘தேர்மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும்,
ஊர்தியில் வருவாரும், ஒளிமணி நிரை ஓடைக்
கார்மிசை வருவாரும், கரிணியில் வருவாரும்,
பார்மிசை வருவாரும், பண்டியில் வருவாரும்’ (கம்பன்-1194)
என்று பாடுகின்றான். மேலும் கால்நடைப் பயணமாக வருபவர்களும் உண்டு. இங்ஙனம் கோசல நாட்டு மக்கள் பலதுறைகளில் சிறந்து விளங்கினார்கள். அதனாலேயே தசரதனின் கொற்றம் சிறந்திருந்தது.
இலங்கைச் சமூகம்
இலங்கை வளம் கெழுமியதாக விளங்கியது என்ற கருத்துக்கு மாறுபாடில்லை. ஆயினும் இலங்கை மக்களிடையிலிருந்த களிப்பு— மகிழ்ச்சி, பொங்கி வழிந்த களிப்பா? மது நெறியில் திளைத்த களிப்பா? உய்த்துணர்தல் அரிது. ‘களிக்கின்றார்கள் அல்லது கவல்கின்றார் இல்லை’ என்று கூறிய கம்பன் பிறிதோரிடத்திலும் ‘இலங்கையில் அழுகையோ புலம்பலோ இருந்ததில்லை, கேட்டதில்லை’ என்று பாடுகின்றான். இலங்கை மக்கள் இசை ஒலிகளைக் கேட்டுப் பழகியிருந்தனர். ஒருபோதும் புலம்பலைக் கேட்டதில்லை என்று சூர்ப்பணகை புலம்பலின் போது குறிப்பிடுகின்றான் கம்பன்.
முழவினில், வீணையில், முரல் நல் யாழினில்,
தழுவிய குழலினில், சங்கில், தாரையில்,
எழுகுரல் இன்றியே, என்றும் இல்லதுஓர்
அழுகுரல் பிறந்தது, அவ் இலங்கைக்கு அன்று அரோ. (கம்பன்-3102)
இது இலங்கையின் சிறப்பு
இலங்கையில் மக்கள் தங்களுடைய எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளிப்படுத்த உரிமை பெற்றிருந்தனரா? அல்லது வன்மை சார்ந்த ஆட்சியின் காரணமாக வாய் மூடி மெளனிகளாகப் போய்விட்டார்களா? இலங்கையில் மக்களின் இயக்கத்தையே காணோம்! இலங்கை அரசன் இராவணன் அனுமனால் அழிக்கப்பெற்ற நகரத்திலும் சிறந்த புதிய நகரம் ஒன்று அமைத்தான். அப்போது மக்கள் மகிழ்ந்ததாகக் கம்பன் பாடவில்லை. இராவணன் செத்த பொழுதும் இலங்கை மக்கள் அழுததாகத் தெரியவில்லை. வன்முறை அரசின் காரணமாக இலங்கை மக்கள் சிரிப்பதற்கும் அழுவதற்கும் தெரியாமல் மறந்துவிட்டனர். ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டுமாயின் அந்நாட்டு மக்கள் புவியை நடத்தக் கூடிய வகையில் சிரிக்கவும் அழவும் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லை, அரசின் நடைமுறையில் பங்கேற்க வேண்டும்.
நமது நாடு விடுதலை பெற்று நாற்பத்தேழு ஆண்டுகள் ஆகியும் குடியாட்சியாக இருந்தும் நமது நாட்டின் அரசியலில் மக்கள் பங்கேற்கவில்லை. நமது நாட்டு மக்கள் வாக்களிப்பது என்று ஒரே ஒரு அரசியல் கடமையை மட்டுமே நிறைவேற்றுகின்றனர். இந்தக் கடமையைக் கூடச் சிலர் செய்வதில்லை, வாக்களிப்பதும் கூட இல்லை. வாக்குகள் வேட்பாளரால் வாங்கப்படுகின்றன. நமது நாட்டு அரசியலில் வர வர பணத்தின் ஆதிக்கமும் வன்முறைகளும் வளர்கின்றன. காலப் போக்கில் இந்த நிலைமை நீடித்தால், இலங்கை அரசைப் போன்ற அரசு உருவாகும். இஃது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்காது என்பதை உணர்ந்து நாம் குடிமக்களுக்குரிய கடமையாற்ற வேண்டும்.
தனி உடைமைச் சமுதாய அமைப்பு தோன்றிய வழி, சமுதாய அமைப்பு உருவம் பெறத் தொடங்கியது. ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமைய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதன் விளைவாகச் சமுதாய அமைப்பு உருக்கொண்டது. ஆயினும் உள்ளார்ந்த நட்பு— உறவு உணர்வுடன் உருக்கொள்ளவில்லை. பொருளின் ஆதிக்கமே மேலோங்கியது. சமுதாய அமைப்பு உருக்கொள்ளவில்லை. வீட்டுக்கும் வீட்டுக்கும் இடையே சுவர்கள் தோன்றின. குடும்ப அமைப்புக்கள் கூடச் சிதைந்தன. ஒரு குடியில் உடன் பிறந்த அண்ணன் தம்பிகளுக்கு இடையிலும் கூடச் சண்டைகள் தோன்றின. இந்தத் தாக்கத்தை இராமகாதை தெளிவாகக் காட்டுகிறது.
சகோதரத்துவம்
அயோத்தியிலிருந்த அமைப்பின் வழி உடன்பிறந்தார்களிடையில் சண்டை இல்லை. எனினும் இயற்கை அமைப்பு தனது வீச்சைக் காட்டுகிறது. பரதன் அதற்கு விதிவிலக்கு. தனக்குக் கிடைத்த அரசை ஏற்க மறுத்து விட்டான். ஆனால், கிட்கிந்தை அரசியலில் சண்டை இருந்தது. இலங்கையில் சமுதாய அமைப்பு இருந்தது. உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இலங்கை அரசன் இராவணனுக்காகத் தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். விபீடணன் மட்டும் விதிவிலக்கு. தமக்குரிய அரசையும் துறந்த பரதனின் புகழ் காவியத்தில் சிறந்து விளங்குகிறது. பரதன் புகழ் என்றும் நின்று விளங்கும். இதனை இராமன்,
“எத்தாயர் வயிற்றிலும் பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால், பரதன் பெரிது உத்தமன் ஆதலுண்டோ?” (கம்பன்)
என்று கூறுவதால் அறியலாம்.
குகனும்,
“தாய் உரை கொண்டு தாதை
உதவிய தரணி தன்னை,
‘தீவினை’ என்ன நீத்து
சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்ற போழ்து,
புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின்கேழ்
ஆவரோ, தெரியின் அம்மா!” (கம்பன்-2337)
என வியந்து போற்றுகின்றான்.
----------------
3. பொருளாதாரம்
ஒரு நல்ல அரசு அமைய நல்ல சமுதாய அமைப்புத் தேவை. நல்ல சமுதாயம் அமையப் பொருளாதார அமைவு சீராக இருக்கவேண்டும். நாம் எவ்வளவுதான்— பொருளை இரண்டாந்தர இடத்திற்குத் தள்ளினாலும் பொருள் முதலிடத்திற்கு வந்து அமர்ந்து கொள்கிறது. ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று திருக்குறள் கூறுகிறது. ‘கடவுள் பக்திக்கு அடுத்தபடியாக முக்கியமான கடமையாக இருப்பது, அறவழியில் செல்வம் ஈட்டுதலேயாம்’ என்றார் முகம்மதுநபி.
கோசல நாட்டுப் பொருளாதாரம்
கோசல நாட்டில் பொருள்வளம் நிறைந்து இருந்தது என்பதைக் கம்பன் பல பாடல்களில் விளக்குகின்றான். கடல் கடந்த நாடுகளில் எல்லாம் வர்த்தகம் செய்ததன் மூலம் நிறைய நிதி வந்து குவிந்தது. ஒரு நாட்டில் ஏற்றுமதிதான் அந்நாட்டின் செல்வத்தை அளந்தறிதற்குரிய அளவுகோல். விளை நிலங்கள் நன்றாக விளைந்தன. நிலத்தடியிலிருந்து வைரக் கற்கள் அகழ்ந்தெடுக்கப்பெற்றன. இங்ஙனம் பலவகையாலும் செல்வம் செழித்த கோசலை நாட்டைக் கம்பன்,
“கலம் சுரக்கும் நிதியம்; கணக்கு இலா
நிலம் சுரக்கும், நிறைவளம்; நல்மணி
பிலம் சுரக்கும்” (கம்பன்-69)
என்று குறிப்பிடுகின்றான்.
கோசல நாட்டில் வறுமை இல்லை. வறுமை கொடியது. சமய நூலாகிய சித்தியார், ‘வறுமையாம் சிறுமை தப்பி’ என்று கூறும் ‘நெருப்பினுள் தூங்கலாம் ஆனால் வறுமையில் தூங்க முடியாது’ என்று திருக்குறள் கூறும். வறுமை மனிதனுடைய உணர்ச்சியை மரத்துப் போகச் செய்து விடுகிறது. உயரிய பண்புகளை இழக்குமாறு செய்துவிடுகிறது. வறுமை மனிதனுடைய ஊக்கத்தையும் பண்பையும் பறித்துவிடுகிறது. ஆதலால்,
“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது” (திருக்குறள்-153)
என்றது திருக்குறள். மக்களிடத்தில் வறுமை இருக்குமானால், அந்நாட்டில் நல்ல சமுதாய அமைப்பும் இராது, நல்லாட்சியும் இராது என்று கூறுவர். கோசல நாட்டில் வள்ளன்மை இல்லை. ஏன்? வறுமையில்லாமையால்! கோசல நாட்டில் ‘எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை’ என்பது கம்பனின் பாடல். எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் பெற்றிருந்தார்கள் என்பது நடைமுறைச் சாத்தியமா? அல்லது கம்பனின் இலட்சியமா? ‘எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தி வாழ்தல் பொதுவுடைமைச் சமுதாயத்தில் இயலும்’ என்பது மாமுனிவர் மார்க்சின் கருத்து. இதுவரையில் பொதுவாக உலக அரங்கில் எந்த நாட்டிலும் பொதுவுடைமைச் சமுதாயம் அமையவில்லை. பொதுவுடைமைச் சமுதாயம் அமைப்பதற்கு முன்னோடியாக அமையக் கூடிய சோஷலிச சமுதாய அமைப்பே— சமவாய்ப்புச் சமுதாயமே இன்னும் உலக அரங்கில் கால் கொள்ளவில்லை. ‘சம வாய்ப்புச் சமுதாயத்தில் சக்திக்கேற்ற உழைப்பு. உழைப்புக்கேற்ற ஊதியம். பொதுவுடைமைச் சமுதாயத்தில் சக்திக்கேற்ற உழைப்பு. தேவைக்கேற்ற ஊதியம்’ என்பது கோட்பாடு. இன்னமும் மக்கட் சமுதாயத்தில் பலர் உழைக்க விரும்புவதில்லை; ஆனால் அனுபவிக்க விரும்புகின்றனர்; துய்க்க விரும்புகின்றனர். இத்தகையோர் வாழும் இந்தச் சமுதாயத்தில் எங்ஙனம் சோஷலிசம் உருவாகும்? பொதுவுடைமைச் சமுதாயம் அமைய இயலும்? என்றைக்கு மனிதர்கள் விருப்பார்வத்துடன், ஆவேசத்துடன் உழைப்பதை உயிரின் இயல்பாக (ஜீவசுபாவமாக) ஏற்றுக் கொள்கின்றார்களோ அன்றுதான் சோஷலிச சமுதாயம் மலரும்; பொதுவுடைமைச் சமுதாயம் தோன்றும்.
ஆதலால், கம்பன் பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் ஓர் இலட்சிய உலகம் பற்றி எண்ணி இருந்தான் என்பதை உணர முடிகிறது. அந்த இலட்சியம் அவன் படைத்த கோசல நாட்டில் கூட நடைமுறையில் இல்லை. உறுதியான, பண்பார்ந்த சிந்தனையுடன் இராமனுக்கே முடிசூட்ட வேண்டும், பரதனுக்கன்று என்று கூனியுடன் வாதாடிய கைகேயியின் தூய சிந்தையும் திரிந்தது எப்படி? கூனி என்ன மந்திர வித்தையா செய்தாள்? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கோசல நாட்டின் பொருளாதார குவியல் முறையில் இருந்தது. எல்லோருக்கும் செல்வம் கிடைக்கவில்லை. ஏன்? கைகேயிக்கே கிடைக்காது. கைகேயியின் மகன் பரதனுக்கும் ஒன்றும் கிடைக்காது. எல்லா உரிமையும் இராமனின் தாய் கோசலைக்கே உண்டு. கோசலை விரும்பிக் கொடுப்பதைத்தான் பெற்று வாழவேண்டும் என்ற பொருளாதார அடிப்படை, கைகேயியின் தூய சிந்தையையும் திரியும்படி செய்துவிட்டது.
கைகேயி ஒரு சாதாரணப் பெண் அல்லள். கேகய நாட்டு இளவரசி, தசரதனையே மரணப்பிடியிலிருந்து காப்பாற்றிக் கைம்மாறாக வரம் பெற்றவள். அயோத்தியில் பல ஆண்டுகள் அரசியாக வாழ்ந்திருக்கிறாள். இந்த விஷயத்தில் கூனி கூறியது தவறாக இருந்திருக்குமானால், கைகேயி வாதாடி இருப்பாள். கோசல நாட்டின் நடைமுறை, அதிகாரம் உள்ளவர்களுக்கே பொருள்; ஆள்வோர் பக்கமே எல்லாம்; ஆளப்படுவோருக்கு ஒன்றும் இல்லை என்றுகூட எண்ண வேண்டியிருக்கிறது. இந்தக் கருத்துக்கு அரண் செய்யும் வகையில் பிறிதொரு நிகழ்ச்சியும் உள்ளது. இராமன் காட்டுக்குப் பயணம் செய்யும் நிலையில் ஒரு பார்ப்பனன் பசு தானம் கேட்கிறான். எத்தனை பசு என்று இராமன் கேட்கிறான். பார்ப்பனன், ‘ஒரு கம்பை எடுத்துச் சுழற்றி எறி! அந்தக் கம்பு விழும் எல்லைப் பரப்பளவுக்குப் பசுக் கூட்டத்தை நிரப்பிக் கொடு’ என்று கேட்கிறான். இராமன் அப்படியே கம்பைச் சுழற்றி எறிகிறான். கம்பு விழுந்த எல்லை அளவு பசுக்களை நிரப்பித் தருகிறான். ஆனால் அந்தப் பார்ப்பனன் பேராசை காரணமாக இராமன் சுழற்றி எறிந்த கம்பு, மேலும் தூரம் கடந்து விழவில்லையே என்று கவலைப்பட்டதை இராமன் கண்டு நகைத்தானாம். இது சீதை, அசோகவனத்தில் நினைந்து அழுத செய்தி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ‘கொள்வார் இலாமை, கொடுப்பார்களும் இல்லை’ என்பதும்; ‘எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்துதல்’ என்பதும் கம்பனின் இலட்சியம் என்று தெரிகிறது. அது இந்த மண்ணில் எப்படி நடக்கும்? எப்போது நடக்கும்?
அடுத்து, ‘கள்வர் இலாமை, காவலும் இல்லை’ என்று. கம்பன் கூறுகின்றான். களவு வந்து காவல் வந்ததா? காவல் வந்து களவு வந்ததா? பரிணாம வளர்ச்சியின்படி பார்த்தால் காவலைத் தொடர்ந்துதான் களவு வந்திருக்கும். மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டிய பொருளைப் பூட்டி வைத்துக் காவல் காக்கின்றனர். தேவைப்படுவோர் எடுத்துக் கொள்கின்றனர். இதனை உலகியலில் களவு என்று கூறுகின்றனர். ஆனால், தமிழக வரலாற்றில் தொன்மைக் காலத்தில் களவு இருந்ததில்லை. சீன யாத்திரிகர்கள், பாஹியான், ஹூவான்சுவாங் போன்றவர்கள் ‘தமிழ்நாட்டில் வீடுகள் திறந்து கிடந்தன. நள்ளிரவில் பயமின்றி மக்கள் நடமாடினர்’ என்று தங்களுடைய யாத்திரைக் குறிப்புக்களில் எழுதியுள்ளனர். களவும் காவலும் இலாத நாடு கோசலநாடு என்பது பெருமைக்குரிய செய்தி. வறுமையுடையோன் பொருளைப் போற்றி வாழ்வான். வறுமையுடையோன் தனக்குரிய ‘நன்செய் நிலம் சிறிதே எனினும் வளமாகப் பேணி வைத்து விளைவு கண்டு வாழ்வான். வறிஞன் ஓம்புமோர் செய்யெனக் காத்து’ என்பான் கம்பன்.
இந்தியா ஏழைகள் நிறைந்த நாடு. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கை 58.9% ஆயினும் இந்த நாட்டின் தரிசு நிலம் ஏராளம். வீட்டுப்புறத் தோட்டத்தைப் பயன்படுத்துவோர் மிகமிகக் குறைவு. நிலத்தின் மண்வளத்தைப் பாதுகாத்தால் நாடு வளம் கொழிக்கும். இன்று கோதுமை, சர்க்கரை, எண்ணெய் முதலியன இறக்குமதி செய்யப்படுகின்றன. ஏன்? நமது நாட்டில் விளைவிக்க இயலாதா? இயலும்! ஆனால் போதிய முயற்சி இல்லை!
கம்பன் ‘தவமும் முயற்சியும் வேண்டும்’ என்றான், வாழ்க்கை பயனுடையதாதல் முயற்சியினாலேயாம். முயற்சியினாலேயே வாழ்க்கையின் மதிப்பு உயர்கிறது. இரும்பைக் காய்ச்சி உருக்கி அடித்தால் அதன் விலை மதிப்புக் கூடுகிறது. அது மட்டுமல்ல, அது இரும்பு துருப்பிடித்து அழிந்து போகாமலும் பாதுகாக்கப்படுகிறது. அதுபோலத்தான் முயற்சியின் விளைவாக, பயனாகத் துன்பங்களையும் துயர்களையும் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து உழைப்பவர்கள் மாமனிதர்களாகிறார்கள்; சாதனை செய்தவர்களாகிறார்கள். வரலாற்றில் இடம் பெறுகிறார்கள். முயற்சியில் ஈடுபடாதவர்கள் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகிச் சாகின்றனர். வாழ்க்கை என்பது போராட்டம்! இந்த போராட்டத்தில் அக்கறையும் முயற்சியும் உடையவன் வீழ்ந்துவிட்டாலும் தரையில் மோதிய பந்துபோல் மீண்டும் எழுந்துவிடுவான். முயற்சியில்லாதவன் கோழை. வீழ்ச்சியடைந்தால் மண் உருண்டை போல உடைந்து மண்ணோடு மண்ணாகி விடுவான்.
தவத்தின் சின்னம்
தவத்தின் சின்னமாக விளங்குபவன் இராமன். ஆம்! முடியைத் துறந்தபோதும் அப்பொழுதலர்ந்த செந்தாமரை போன்றிருந்தான். ‘என் பின்னவன் பெற்ற பெருஞ் செல்வம் அடியேன் பெற்றதன்றோ’ என்றும், ‘மன்னவன் பணியன்றாகில் நும் பணி மறுப்பனோ?’ என்றும் கூறி உவகையுடன் காட்டிற்குள் புகுந்தானே! இது தவம் அல்லவா?
முயற்சியின் சின்னம்
முயற்சியின் சின்னம் சுக்கிரீவன். ஆம்! இழந்ததைத் தொடர்ந்து முயன்று பெற்றவன் அவன். ஆதலால், சுக்கிரீவனை கம்பன் முயற்சியின் திருவுருவமாகப் பாராட்டுகின்றான். வாழ்க்கையை வலிமையுடையதாக்கிக் கொள்ள, தீமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, நாளும் நல்லன பல செய்ய, முயற்சி தேவை. முயற்சியே மனிதனை முழுமைப்படுத்துகிறது; வளர்க்கிறது; வாழ்விக்கிறது. செல்வத்துப் பயன்
பொருள் ஈட்டல், சேர்த்தல், பாதுகாத்தல் மனித வாழ்க்கையில் நடைபெறும் ஒரு பணி — இல்லை — ஒரு போராட்டம்! பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம். அதை விடப் பெரிய காரியம் அதைக் காப்பாற்றுவது. அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும், கொடுத்து மகிழ்தலுமாகும். வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு. பொருள் தேடல் வாழ்க்கையின் இலட்சியமன்று. பொருள் வாழ்க்கையின் கருவியே. நல்லறிவும் பண்பும் உடையவர்களுக்குப் பணம் பணியாள்; ஆனால், இவை இல்லாதவர்க்கோ மோசமான எசமானன், வாழ்க்கையைப் படித்துக் கொள்ளச் செல்வம் மட்டும் துணை செய்யாது. வறுமையும் அதற்குத் துணை செய்ய இயலும். பொருளும் தேவை; அதைத் துய்க்கத் திறனும் தேவை. பொருளும் திறமும் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சி பெறலாம். வேறு உபயோகம்தான் என்ன ? செல்வத்தைத் தனியே அனுபவித்தல்—இழத்தலுக்கு சமம்.
“செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.”
என்கிறது புறநானூறு.
ஆற்று வெள்ளத்தில் படகு போகிறது. ஆற்றுத் தண்ணீர் படகினுள் புகுந்துவிட்டால் படகில் நிறைந்த தண்ணீரை உடன் வெளியேற்ற வேண்டும். அதுபோல வீட்டில் செல்வம் நிறைந்துவிட்டால் அதையும் மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்வதோடு ஆன்மிக அழிவு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கம்பன் கிட்கிந்தா காண்டத்தில் கார்கால வருணனையில் செல்வத்தினைத் துய்த்த மாந்தரை வருணிக்கிறான். மேகம் கருத்துச் சூல் கொள்கிறது. நீர் வளம் சுமந்து திரிகிறது. மேகம் அதனை மழையாகப் பொழிந்து மண்ணக மாந்தரை வாழ வைக்கிறது. அதனால் மேகம், நீர் வளத்தை இழந்து விடுகிறது. நீர்வளத்தை சூல் கொண்ட மையால் கருத்து இருந்த மேகம்—மழைபெய்தவுடன் வெளுத்துப் போகிறது. எப்படி? பொருளுடையோர் தம்மை இரந்து வருவோருக்கு வழங்கி, பின்வரும் இரவலர்களுக்குப் பொருள் தர இயலாமல் நாணுவது போல் என்கிறான் கம்பன். ஈட்டிய பொருளில் வாழ்வின் தேவைக்குப் போக மீதிச் செல்வம் சமூகத்திற்கே சொந்தம்.
“மன்கல் இல் பெருங் கொடை மருவி, மண் உளோர்
உள்கிய பொருள் எலாம் உதவி, அற்ற போது
எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால்,
வெள்கிய மாந்தரின் வெளுத்த–மேகமே” (கம்பன்-4251)
என்ற கம்பன் பாடல் நினைந்து நினைந்து ஒழுகலாறாக ஏற்கத் தக்கது.
--------------
4. போர் நெறி
சமூகம், அரசியல் என்றால் அவற்றைத் தொடர்ந்து போர் வரும். இஃது இயற்கை. உலகந் தோன்றிய நாள் தொட்டு மனிதன் போராடி, இந்த மண்ணைச் செங்குருதியால் நனைத்திருக்கிறான். சில நாடுகளில் சில இனங்கள் அழிக்கப்பட்டே விட்டன. நமது நாட்டில் போர்கள் நிறைய நடந்தன. ஆயினும், நமது அரசர்கள் நடத்திய போர் முறையில் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. இராமகாதையில் பல போர்கள் நிகழ்ந்துள்ளன. எல்லாப் போர்களும் அறநெறிப் போர்களேயாம். போருக்கு முன்பு தூது அனுப்புவது மரபு. தூதில் உடன்பாடு ஏற்படாவிட்டால்தான் போர். போரும் குறித்த காலத்தில், குறித்த களத்தில் நடைபெறும். இரவில் போர் நடக்காது. இந்தப் போர்களினால் பொதுமக்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை; துன்பமும் நேராது.
அனுமன் தூது
தமிழ் இலக்கியங்களில் வரும் தூது பற்றிய பகுதிகள் அறநெறிக் களஞ்சியங்கள். இராமகாதையில் இலங்கைப் பேரரசன் இராவணனுக்கு அனுப்பப் பெற்ற முதல் தூதுவன் அனுமன். காப்பிய அமைப்புப்படி நோக்கினால் அனுமன் சீதையைத் தேடிப் போனவன்தான். இலங்கையில் நடந்த நிகழ்வுகளோ அவனைத் தூதுவனாக்கியது. இராவணன் முன் அனுமன் தூதுவனாக அமர்ந்து பேசுகின்றான். உலக வரலாற்றில் தீமை ஒரு பொழுதும் நன்மையையோ, வெற்றியையோ பெற்றதில்லை. வெற்றி பெற இயலாது. பொருளையும், காமத்தையும் அனுமன் ‘இருள்’ என்று குறிப்பிடு கின்றான். வாழ்க்கையின் தெரிவு ஈதலும் அருளுமேயாம். அனுமன் கடைசியாக இராவணனை எச்சரிக்கை செய்கிறான்:
“ஆதலால் தான் அரும்பெறல் செல்வமும்
ஒது பல்கிளையும் உயிரும் பெற,
‘சீதையைத் தருக’ என்று எனச் செப்பினான்
சோதியான் மகன் நிற்கு” எனச் சொல்லினான். (கம்பன்-5910)
என்பது கம்பன் பாடல்.
மனித இயல்பு
மனிதன், மனிதனுமல்லன்; விலங்குமல்லவன், தெய்வமுமல்லன். மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி, கடவுள் தன்மையை அடைய வேண்டிய படைப்பு. இந்த உண்மையை உணர்ந்து, அறிந்து, தெளிந்து வாழ்பவர்கள் பலர் இல்லை. மிகமிகச் சிலர்தான் உள்ளனர். இந்த நிலையிலும் எப்போதும் மனிதனிடத்தில் மிருகக் குணம், மனித இயல்பு, தெய்வப் பண்பு ஆகியன உடன் சேர்ந்து கலவையாக இருக்கும். சூழ்நிலைமையின் நிகழ்வுகளுக்கு ஏற்ப அவற்றில் ஒன்று கூடும்; பிறிதொன்று குறையும். மனித இயல்புகளை நுண்ணிதில் கண்டுணர்த்திய சான்றோர் மனிதனை தேவாங்கு, பாம்பு, பன்றி, நாய், வேட்டைநாய், கிளிப்பிள்ளை, கழுதை, வான்கோழி, தூண், கழுகு, ஆந்தை என்று கூறினர். ஆந்தைக்கு வெளிச்சம் பிடிக்காது. மனிதனுக்கு உண்மை பிடிக்காது. உழைக்காமல் பிறர் பிழைப்பில் வாழ்பவன் கழுகு. கல்வியறிவு இல்லாதவன் விலங்குமல்லன், ஏன்? விலங்குகளுக்குள்ள ஐந்தறிவு இந்த மனிதனுக்கு வேலை செய்யாது. அவன் உணர்ச்சியற்ற தூண், வீண் ஆடம்பரம் செய்பவன் வான்கோழி, அநீதியைத் தட்டிக் கேட்காமல் இருப்பவன் கழுதை, அறிவை வளர்த்துக் கொள்ளாமல் படித்த சாஸ்திரங்களைப் படித்துப் படித்து ஒப்புவிப்பவன் கிளிப்பிள்ளை. அடிக்கடி கோபம் கொள்கிறவன் வேட்டைநாய். சுயநிர்ணயம் இல்லாமல் பிறரை நச்சி வாழ்பவன் நாயாவான். அற்ப சுகத்தில் நாட்டமுள்ளவன் பன்றி. நல்லது என்று பெயர் வாங்கித் தீமை செய்பவன் பாம்பு. ஊக்கமில்லாமல் இருப்பவன் தேவாங்கு. இங்ஙனம் பலபடக் கூறினாலும் மானுட இயல்பில் ஆக்கிரமிப்புக் குணம்— போர்க் குணம் இருப்பதைக் குறிப்பிடவில்லை.
போருக்குக் காரணம்
மனிதன் அழுக்காறு, அவா, வெகுளி, ஆகியவற்றால் ஆட்டிப் படைக்கப்படும் பலவீனமுடையவன். அவன் மற்றவர்களுடன் ஒத்துப் போகமாட்டான். ஆனால் மற்றவர்கள் —உலகமே அவனுடன் ஒத்துழைத்துப் போக வேண்டும் என்று விரும்புவான். ஒவ்வொரு மனிதனும் உலகத்திற்குச் சமமானவன். ஒருவன் தானே என்று அலட்சியப்படுத்துவதற்குரியவன் அல்லன். இந்த மனித உலகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன என்பதைச் சற்றும் உன்னான்; ஓரான். ஆனால், இந்த உலகம் அவனுக்குக் கடமைப்பட்டிருப்பதாக எண்ணிக் கொள்வான். அதனாலேயே இந்த உலகம் கெட்ட போரிடும் உலகமாக மாறியது.
மனிதனுக்கு வெறிபிடித்துவிட்டால் அவன் பேய், பிசாசு போல ஆகிவிடுகிறான். முன்னேற்றத்துக்கான சாதனங்களைக் கொண்டே மனிதகுலத்திற்குத் தீமை செய்கிறான். மனித குலத்தை நாசம் செய்கிறான். மனிதகுலம் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற முகடுகளுக்கு ஏறுவதற்கென உதவிய ஏணியைக் கொண்டே இறங்கி விடுகிறான். அணு, அழிவுப் பொருளன்று. ஆனால் அந்த அணு, அழிப் பொருளாக மாறிவிடுமோ என்ற அச்சம் இன்று நிலவுகிறது.
மனிதன் அரசியல், அரசு என்ற அமைப்புக்களின் வழி நெடிய பயணம் செய்து வந்துவிட்டான். இன்று அரசுகள் ஆதிபத்திய அரசுகளாக உள்ளன. ஆதலால், ஆதிபத்திய போட்டியில் ஈடுபடும் பொழுது மனிதன் விலங்காக மாறிவிடுகிறான். போர்கள் மனித மனத்தில் தோன்றி மக்கள் நலனைப் பறிக்கின்றன. ஆதலால், போர் வெறி மனிதனுடன் பிறந்தது. அவனுடைய போர் வெறியை மாற்றப் போராட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டம் இந்த உலக மக்கள் அனைவருடைய மனத்திலும் நடைபெற வேண்டும்.
போரினால் ஏற்படும் இழப்பு
சண்டை போடுதல் தவறு; தவறு என்று மக்கள் உணர வேண்டும். அதுவும் போர் என்றால் அறவே எதிர்க்க வேண்டும். எந்தப் போரிலும் இருவருக்கும் வெற்றி கிடைக்காது. ஒருவர்தான் வெற்றி பெற இயலும். மற்றவர் தோற்பது உறுதி. இதில் வெற்றி பெற்றவரும் மனிதர்தாம்; தோற்றவரும் மனிதர்தாம்! இதில் என்ன வெற்றி தோல்வி வேண்டியிருக்கிறது?
“இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்பதும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும் ஓர் அன்ன வேந்தர்க்கு,
மெய்ம்மலி உவகை செய்யும், இவ்விகலே!” (புறம்-45)
என்ற புறநானூற்றுப் பாடல் இங்கு எண்ணத் தக்கது.
போரினால்—போருக்கு முன்பும், போர்க்காலத்திலும், போருக்குப் பின்பும், மக்கள் பல நலன்களை இழக்கின்றனர். நல்வாழ்வு வளரவும், பாதுகாப்புப் பெறவும், அரசுகளையும் ஆட்சிகளையும் அமைத்தனர் மக்கள். போரை விரும்பும் நாடுகளும் அரசுகளும் இதனை மறந்தது ஏன்? இரண்டாவது உலகப்போரின் அழிவு பற்றி,
“It has been calculated, for example, that the resources swallowed up, by the second world war, were enough for building a five-room house for each family in the world and also a hospital in each town with a population of over 5,000 people and to maintain all these hospitals for ten years. Thus, the resources wasted on one world war would be enough for radically solving the housing and health problems that today are so acute for the majority of man kind.”
(Fundamentals of Marxism-Leninism P–713)
என்று கணித்துள்ளனர். அதாவது இரண்டாவது உலகப்போரில் அழிந்த செல்வத்தைக் கணக்கிட்டால், இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஐந்து அறைகள் கொண்ட வீடுகளும் ஒவ்வொரு நகரத்திற்கு ஒவ்வொரு மருத்துவமனையும் கட்டிவிடலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாவது உலகப்போரின் அழிவு இந்த நிலை என்றால் இன்று சொல்லவும் வேண்டுமோ?
வன்முறையும் ஆக்கிரமிப்பும் கண்டனத்திற்குரியவை. இவற்றை அறவே அகற்றி நிலையான அமைதி காண வேண்டும். நிரந்தரமாக ஆக்கிரமிப்புப் பயம் ஒழிந்து மக்கள் ஒன்றுகூடிச் செயலாற்ற வேண்டும். இந்த உலகில் பிறந்து வாழும் அனைவரது சமூகப் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் உத்தரவாதம் வேண்டும். மக்களுக்கு நல்வாழ்க்கை அமைத்துத் தருவதே அரசின் கடமை.
போர் அச்சம்
போரைவிடக் கொடுமையானது போரைப் பற்றிய அச்சம். அமைதிக் காலத்திலும் சில நாடுகள் வேற்று நாடுகளை எதிரி நாடுகளாகக் கருதி, எப்போதும் எதிர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும்; சிறு சிறு தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கும். இதனைப் பனிப்போர் (Cold war) என்பர். இன்று நமது நாட்டுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் இடையில் பனிப் போர்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காஷ்மீரில் நாள்தோறும் சிக்கல்! இதற்குப் பதில் போரே வந்தாலும் வரவேற்கலாம். அன்றாடம் செத்துப் பிழைப்பதைவிட இரண்டில் ஒன்று, விடை தெரிந்து கொள்வது நல்லது. அதனால் நாம் இந்தியா—பாகிஸ்தான் சண்டையை வரவேற்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. நமது விருப்பம் வேறு.
இரண்டாவது உலகப் போரில் வல்லரசுகளால் பிரிக்கப்பட்ட கிழக்கு ஜெர்மனிக்கும், மேற்கு ஜெர்மனிக்கும் இடையில் இருந்த சுவரை இன்று இடித்துவிட்டு, ஒரே ஜெர்மனி நாடாக்கியுள்ளனர். அதுபோல, எதிர்காலத்தில் இந்திய இளைஞர்களும் பாகிஸ்தானின் இளைஞர்களும் ஆவேசத்துடன் சேர்ந்து இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரு நாடாக்க வேண்டும். இது எதிர்காலத்தில் நடக்கும். இது வரலாற்றின் தேவை. ஆதலால், பகை மூட்டமும் அச்சமும் இல்லாத நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடைய ஒரு சமுதாயமாக மனித குலம் உருப்பெற்று ஆர்த்தெழ வேண்டும். புத்துலகம் படைப்பதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும்; விண்ணின் ஆட்சியை மண்ணில் காண வேண்டும்.
இதயம் சுருங்கியது ஏன்?
மனிதனிடத்தில் பண்டங்களைப் பணமாக மாற்றுதல், பணத்தை நிலையான சொத்தாக மாற்றுதல், சொத்துக்களைப் பாதுகாக்க அரசு, — ஆதிபத்தியம் தோன்றல் எனப் படிப்படியாக வளர்ந்த நிலையில், அறிவு வறண்டு இதயம் சுருங்கியது. மனிதன் எதையும் செய்து எப்படியாவது தன்னுடைய நிர்வாணமான சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தலைப்பட்டான். இரக்கம் என்ற ஒன்று இல்லாதவர்களாக மக்கள் வளர்ந்து வந்தார்கள். விலங்கும் கூடக் கூட்டமாகக் கூட்டி வைத்துப் பழக்கினால், பழக்கத்தின் காரணமாக ஒன்று சேர்ந்து வாழும் இயல்பினவாக வளரும். இங்ஙனம் ஒரு குரங்கும், பூனையும் இணைந்து வாழும் பாங்கினை அண்மைக் காலத்தில் நாம் பார்த்தோம்; கேட்டோம். ஆனால், மனிதன் பகையுணர்விலும் போரிடும் மனப்பான்மையிலும் வளர்ந்தே வந்துள்ளான். படிப்படியாகப் போர்க் கருவிகளை ஆற்றல் மிக்குடையனவாக வளர்த்து, இன்று நீர்வாயுக்குண்டு எல்லையில் வந்து நிற்கின்றான்.
பழைய காலத்துப் போர்களில் உலகம் முற்றாக அழிந்த நிலை இல்லை. ஆனால், இக்காலப் போர்களில் உலகம் அழிந்துவிடுவது மட்டுமல்ல—பல தலைமுறைகளுக்கு உறுப்புக் குறைவாகக் குழந்தைகள் பிறக்கின்ற கொடிய நிலை உருவாகி வருகிறது. இரண்டாவது உலகப் போரில் ஜப்பானுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் அளப்பரியன. ஹிரோஷிமா, நாகசாகியின் இடிபாடுகளைக் காணின் கல்நெஞ்சம் கரையும். இந்த உலகில் இதுவரை 50,000 போர்களுக்கு மேலாக நடந்துள்ளன. பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்த போர்களும் உண்டு.
போர்மயமான வரலாறு
போர்களை மையமாகக் கொண்டு காவியங்கள் இயற்றியவர்களில் புகழ் பெற்றவர்கள் வால்மீகி, வியாசர், கிரேக்கக் கவிஞர் ஹோமர், மில்டன் முதலியோர். இந்தப் போர்கள் கற்பனைகளல்ல; நடந்தவை. இராம காவியத்தைப் போல, பாரதம் போல, இலியாட்டில் வரும் டிராய் சண்டை அறப்போர் அன்று. சூது நடத்தி வெற்றி பெற்றது ஸ்பார்ட்டா நாடு. சர்வதேச அரங்கில் மராத்தான் ஓட்டம் 42 கி.மீ. ஓட வேண்டும். இந்த மராத்தான் ஒரு பந்தய வீரன். பெர்ஷிய நாட்டுக்கும் கிரேக்க நாட்டுக்கும் நடந்த சண்டையில் கிரேக்கர்கள் பெற்ற வெற்றியைச் சொல்ல ஓடி வந்தவன். அதனால் மராத்தான் ஓட்டம் என்று பெயர் பெற்றது. இங்ஙனம் வரலாற்றில் இடம் பெற்ற போர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. கிரேக்க நாடு நகரப் பேரரசுகள் உடையதாகும். அதிலும் குறிப்பானது ஏதென்சு. அது ஏராளமான போர்களைச் சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறது. அலெக்சாண்டர் நடத்திய போரில்தான் முதல்முதலாகத் தோற்றது. உலகத்தில் சரிபாதியை வென்ற பெருமை அலெக்சாண்டருக்கு உண்டு. அடுத்து பிரிட்டன், பெரிய போர்களை நடத்தி, கதிரவனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திய பெருமை பெற்றது. முதல் உலகப்போர் புகழ்பெற்ற போர். இனிமேல் போர் வேண்டாம் என்ற எண்ணம் வல்லரசுகளிடையே அரும்பிற்று. சர்வதேச சங்கம் தோன்றியது. ஆயினும் சங்கம் வலிமையுடன் இயங்க முடியவில்லை; போரைத் தவிர்க்க இயலவில்லை. இரண்டாவது உலகப்போர் நடந்தது. அலெக்சாண்டர், நெப்போலியன் ஆகியோருக்குப் பிறகு, மாவீரனாக அதே போழ்து ஆதிபத்திய வெறியுடையவனாகத் தோன்றினான் இட்லர். இட்லர் ஐரோப்பிய நாடுகளைச் சடசடவென்று வீழ்த்தினான். சோவியத் மீது படையெடுத்தபோது, சோவியத் நாட்டு மக்கள் தியாகத்துடனும் தீரத்துடனும் போராடி, இட்லரின் நாசிசப் படையைத் தோற்கடித்து மகத்தான வெற்றி பெற்றனர். இங்ஙனம் நடந்த போர்கள் பலப்பல. உலக வரலாற்றின் பக்கங்களில் தாமஸ் ஆல்வா எடிசன், சேக்ஸ்பியர், திருவள்ளுவர், ஏசு, நபிகள் முதலியோருக்குக் கிடைத்த பக்கங்கள் சிலவே! ஆனால் கெட்ட போரிட்டவர்களுக்கும் போர்களினால் ஏற்பட்ட அழிவுகளுக்கும் கிடைத்த பக்கங்கள் பலப்பல.
இந்தியா ஒரு துணைக்கண்டம். இந்தியாவில் ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான அரசுகள் இருந்தன. இவர்களுக்கிடையே சண்டைகள் நடந்து கொண்டேயிருந்தன. தமிழ்நாட்டு வரலாற்றிலும் அப்படித்தான்! நாடு சிறியது; ஆனால் போர்கள் அதிகம்! பல அரசர்கள் இந்தியாவை ஒரு குடையின் கீழ்க் கொண்டுவர முயற்சி செய்தனர். சந்திர குப்த மெளரியன் ஒரு பேரரசன். இவனுடைய அரசியல் குரு சாணக்கியர். இவரியற்றிய அரசியல் சாத்திரம் அர்த்த சாத்திரம். இந்த நூலில் முரண்பட்ட செய்திகள் பல உண்டு. ஆயினும் நல்ல நூல். அடுத்து அசோகர், இவர் இந்தியாவில் பேரரசை நிறுவியவர். சிறந்த வீரர். தொடக்க காலத்தில் போர்க்களங்கள் பல கண்டு வெற்றி பெற்றவர். ஆயினும் பிற்காலத்தில் போரை வெறுத்தார். சமாதானக் காவலராக விளங்கினார். தமிழ் நாட்டில் மாமன்னன் இராஜராஜன், இராஜேந்திர சோழன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், கரிகாற்சோழன் முதலிய பேரரசர்கள் போர்க்களங்களில் வாகை சூடியவர்கள்.
பண்டைய போர்களும் இன்றைய போர்களும்
இங்ஙனம் உலக வரலாறு, போர்களாலேயே நடத்தப் பெற்றது. இடையிடையே மனிதகுல முன்னேற்றத்திற்குரிய பணிகள், கலைப் பணிகள் நடந்தன. மிகத் தொன்மைக்காலத்தில் நடந்த போர்கள் அறநெறி சார்ந்த போர்கள். பின் விஞ்ஞான யுகத்தில் நடந்த போர்கள் அழிவுப் போர்கள். அறநெறிச் சார்பே இல்லாத போர்கள். ஏன்? பழங்காலத்தில் போராடிய வீரர்களுக்கு இருந்த வீரத்தில் குறைந்த சதமானம் கூட இக்காலத்தினருக்கு இல்லை. ஔிந்திருந்தும், மறைந்திருந்தும், இரவிலும், நடத்தும் போர் இன்றைய போர் ஏவுகணைப் போரில் ஏவுகணையைச் செலுத்துபவர் பத்திரமான — பாதுகாப்பான அறைக்குள் தங்கிக் கொள்கிறார். இந்தப் போர்களை வீரப்போர் என்று கூற இயலாது. இந்தப் போர்களில் பெறும் வெற்றிகளை வெற்றியென்றும் பாராட்ட இயலாது.
தமிழ் நாட்டில் நடந்த போர்கள் வீரப் போர்கள். எதிரியிடம் ஆயுதம் இல்லையென்றால் போர் நடத்தமாட்டான்; எதிரிகளின் முதுகில் குத்தமாட்டான். ஒரு குறிப்பிட்ட இடத்தில், களத்தில் பொருதுவான்; பொருது மேற்செல்வான். இரவில் போர் இல்லை. இவையெல்லாம் பண்டையக் காலப்போரில் நிலவிய அறநெறி. இன்று போர்க்களத்தில் அறநெறி இல்லை. பண்டையப் போர் முறையில் பொருள்களுக்கு, சொத்துக்களுக்கு இழப்பு ஏற்படுவது இல்லை. இக்காலப் போர்களில் அளவற்ற இழப்பு ஏற்படுகிறது. பண்டு போர் என்றால் பொதுமக்களுக்குத் துன்பம் இல்லை, மரணம் இல்லை. இன்றோ பொது மக்கள்தான் போரில் சாகிறார்கள். ஏராளமான சொத்துக்கள் அழிகின்றன. மனித குலத்திற்குப் போரற்ற உலகம் தேவை. அது எப்போது கிடைக்கும்? அமைதிக்கும் சமாதானத்திற்கும் போராட வேண்டிய மதங்கள் கூட வேறுபட்ட நிலையில் உள்ளன. எந்த நாட்டில் உள்ள மத நிறுவனங்களும் போர் ஓய்வுக்கும் அமைதிக்கும் பிரார்த்தனை செய்வதில்லை. அந்தந்த நாட்டிற்கு வெற்றி வேண்டியும், எதிரி நாடுகள் தோற்கும்படியுமே பிரார்த்தனை செய்துள்ளன. வெற்றி தோல்வி என்கிற நிலை நீடிக்கும் வரையில் போர்கள் தொடரும்.
வேறு காப்பியங்கள்
இந்தியாவில் போரை மையமாகக் கொண்ட மூன்று பெரிய காப்பியங்கள் தோன்றின. ஒன்று இராமாயணம், மற்றொன்று மகாபாரதம், பிறிதொன்று கந்தபுராணம். இவற்றுள் இராமாயணமும் மகாபாரதமும் நாடு தழுவியவை. ஏன்? ஆரிய நாடுகள் தழுவிய இதிகாசங்களாகும். கந்த புராணம் தமிழகத்திற்கே உரிய தனித்தன்மையுடைய புராணம். இராமகாதையில் வரும் போர் பெண் அடிப்படையில் நடந்த போர். பாரதப் போர்; நாடு—அரசு அடிப்படையில் நடந்த போர். கந்தபுராணப் போர்ஆட்சி—ஆதிக்க அடிப்படையில் நடந்த போர். முடிவுகள் வெற்றி—தோல்வி என்று முடிந்தன. இராமாயணப் போரில் இராமனால் இராவணன் கொல்லப்ப்ட்டான். மகாபாரதப் போரில் துரியோதனாதியர் அழிக்கப்பட்டு விட்டார்கள். இந்திய நாகரிகத்திலும் உயர்ந்தது தமிழ் நாகரிகம். தமிழ் நாகரிகத்தில் அழிவும் இல்லை; அழிக்கப்படுவதும் இல்லை. அதனால் கந்தபுராணத்தில் சூரபதுமன் அழிக்கப்படவில்லை; திருத்தப்பட்டான்; அங்கீகரிக்கப்பட்டான்.
அனுமன் தூது
பழங்காலத்தில் போர் நடைபெறுவதற்கு முன் தூது அனுப்புவது வழக்கம். எந்தக் காரணத்தினால் போர் வரும் என்று கருதப்படுகிறதோ அது பற்றி எதிரி அரசுடன் பேச்சு நடத்துவார். தூதுவர் மூலம் பேசுவார். இராம காதையில் சீதையைத் தேடிப்போன அனுமன், எதிர்பாராத விதமாகத் தூதுவனாகவும் மாறினான்.
அனுமன் இராமனை முதன் முதலில் சந்தித்த போதே, அனுமனின் சொல்லாற்றலை இராமன் வியந்து;
"இல்லாத உலகத்து எங்கும்
இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக்
கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே!
யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில்ஆர் தோள் இளைய வீர!
விரிஞ்சனோ? விடைவ லானோ?” (கம்பன்-3768)
என்று இலக்குவனிடம் பேசுகின்றான்.
இத்தகைய அனுமனின் தூது இலக்கியப் புகழ் மிக்க தூது. தூதுவர்கள் அடக்கம், அமைதியுடையவர்களாகவும், அதே போழ்து துணிவும் உறுதியுடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். எதிரிக்கு எந்தச் சூழ்நிலையிலும் எரிச்சலும், கோபமும் உண்டாகும்படி நடந்து கொள்ளக் கூடாது. எதிரிகள் எரிச்சலுண்டாகும்படிப் பேசினாலும் செயல்பட்டாலும் தூது போனவர் எரிச்சலடையக் கூடாது. தூதின் முடிவு காரிய சாதகமாகவும் போரைத் தவிர்ப்பதுமாகவும் அமையும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில், எதிர் முனையின் பிடிவாதத்தாலும் அடாவடித்தனத்தாலும் சமாதானம் உருவாகாவிடின் அவசியமாயின், இறுதியில் போரை வரவேற்கவும் தூதன் அஞ்சக் கூடாது.
இலங்கைப் பேரரசன் இராவணன் அவையில் அனுமன் இராமனின் சிறந்த தூதுவனாகப் பணியாற்றியமையை உலகம் உள்ளளவும் பாராட்டும். அனுமன் இராவணனைப் பார்த்த நிலையில் அவனைக் கொன்றொழிக்க எண்ணுகிறான். ஆயினும், தலைவன் ஆணை இல்லையே என்று கொலை செய்வதைத் தவிர்த்துக் கொள்கிறான். அனுமன், சீதையைத் தேடிப் போனவன்தான். ஆயினும் அனுமனுக்கும் அரக்கர்களுக்கும் போர் நடக்கின்றது. அனுமன், தன்னந்தனியனாக, அரக்க வீரர்களைப் போர்க் களத்தில் சந்தித்துக் கொன்று குவிக்கிறான். இது தூதனுக்குள்ள கடமையன்று. இலங்கையர்களும் அனுமனைத் தூதன் என்று எண்ணவில்லை. அனுமனைத் தூதன் என்று எண்ணியவன் விபீடணன் மட்டுமே!
அனுமனுக்கு இலட்சியம் இரண்டு, ஒன்று சீதையை மீட்பது, மற்றொன்று இராவணனும் மற்ற அரக்கர்களும் கொடுந் தொழிலிலிருந்து விடுபட வேண்டும் என்பது. இவ்விரண்டும் நடைபெறும் வகையில் அனுமன் முயற்சி செய்தான். இராவணன் மனத்தில் ‘ஆற்றலும் நீதியும் மனங்கொள நிறுவ' என்பது அனுமனின் ஆசை, ஆனால், இராவணன் கேட்க வேண்டுமே! அனுமன் இராவணனிடம் தன்னைத் தூதன் என்று அறிமுகப் படுத்திக் கொள்கின்றான். அனுமன் தனது தலைவன் பரம்பொருள்—மண்ணில் பிறந்து நடமாடும் பரம்பொருள் என்று குறிப்பிடுகின்றான். அறநெறி சார்ந்த முயற்சி பலனளிக்கவில்லை. அனுமன் தன் வாலில் வைக்கப்பட்ட தீயைக் கொண்டு இலங்கை எழில்களை அழித்துவிட்டு இராமனிடம் மீண்டான். இராமனிடம் மீண்ட அனுமன் இராமன் முன்னிலையில் சீதையிருந்த திசை நோக்கித் தொழுதான்.
எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல்தன்
மொய்கழல் தொழுகிலன், முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழிஇ நெடிதுஇறைஞ்சி வாழ்த்தினான். (கம்பன்-6028)
என்று பேசுவான் கம்பன். மேலும் சீதையின் கற்பு நிலையை உறுதிப் படுத்த அனுமன், ‘கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்’ என்றும்,
"தீண்டிலன் என்னும் வாய்மை
திசைமுகன் செய்த முட்டை
கீண்டிலது, அனந்தன் உச்சி
கிழிந்திலது, எழுந்து வேலை
மீண்டில; சுடர்கள் யாவும்
விழுந்தில; வேதம் செய்கை
மாண்டிலது–என்னும் தன்மை
வாய்மையால்; உணர்தி மன்னோ” (கம்பன்-6039)
என்றும் கூறுகின்றான். இராமனும் அனுமனின் நடத்தையாலும் வாக்கினாலும் 'இவன் கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று' என்று தெளிந்தனன்.
தாடகை வதம்
கம்பனின் இராமகாதையில் இரண்டு சிறு போர்களும் ஒரு பெரும் போரும் நடைபெறுகின்றன. முதற்போர் தாடகையுடன் நடத்திய போர். தாடகை உருவத்தால் பெண். ஆனால்—
"... அரும் பாவம் ஈண்டி, ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்” (கம்பன்-360)
என்று விசுவாமித்திரர் தாடகை பற்றி இராமனுக்கு விளக்கினார். தாடகை, மருத நிலத்தை அழித்துப் பாலைவனமாக்கி விட்டாள். எது போல எனில், உலோபகுணம் என்ற குணம் ஒன்றினாலேயே எல்லாக் குணங்களும் அழிந்துவிடுவது போல், தாடகை மருத நிலத்தைப் பாலைவனமாக்கி விட்டாள்! ஆயினும் இராமன், தாடகை பெண்ணாக இருப்பதால் அவளோடு போரிடத் தயங்கினான். மீண்டும் விசுவாமித்திரர் தாடகை தீமையின் வடிவம்; அவள் பெண் உருவமுடையவளே தவிர, பெண் அல்லள் என்று கூறித் தாடகையைக் கொல்லுமாறு இராமனைத் தூண்டுகின்றார். இராமன் தாடகை மீதுவிட்ட அம்புகள் தாடகையின் நெஞ்சில் பாய்ந்து அப்புறம் கழன்று போயின. அவை, அற்பர்களுக்கு அறிஞர்கள் சொன்ன அறிவுரை போல ஆயின.
சொல் ஒக்கும் கடிய வேகச்
சுடுசரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது,
அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருள் எனப்போயிற்று அன்றே! (கம்பன்-388)
என்று விளக்குகின்றான் கம்பன்.
வாலி வதம்
அடுத்து நடந்த போர் வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் நடந்த போர். வாலி வலிமை மிக்கவன். வாலி சுக்கிரீவனை விரட்டி விரட்டி அடித்தான். இப்போரில் இராமன் தலையிட்டதனால் போர் என்று கூற இயலாது. இராமனுடைய அம்புக்கு வாலி இரையாகிறான்.
"ஆழிசூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள, நீ போய்,
தாழ்இருஞ் சடைகள் தாங்கி,
தாங்கரும் தவம் மேற் கொண்டு
பூழிவெங் கானம் நண்ணி,
புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டின் வா என்(று)
இயம்பினன் அரசன்” என்றாள். (கம்பன்-1601)
என்ற கைகேயியின் ஒரு சொல்லுக்குக் கட்டுப்பட்டு மகிழ்ச்சியுடன், 'தாயே! தந்தை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, 'உன்னுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்; மறக்க மாட்டேன்' என்றதோடன்றி.
"பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்ற தன்றோ!
என் இனி உறுதி அப்பால்" (கம்பன்-1604)
என்று கூறி கைகேயியிடம் விடை பெற்றுக் கொண்டு நகரினின்று நீங்குகின்றான்; காட்டை நோக்கி நடக்கின்றான். மனித உலகத்தில் இத்தகு பண்பாட்டின் மணி முடியை வரலாறு கண்டதில்லை. கம்பனின் இராமகாதையைத் தவிர வேறு காப்பியங்களில் இருப்பதாகத் துணிந்து கூற இயலவில்லை. அடுதலும் பொருதலும் அழித்தலும்தான் அரசியல் என்று வரலாறுகள் கூறுகின்றன.
பேரரசு தனக்கு என்ற பொழுது இராமன் மகிழ்ந்திலன்; பேரரசு இல்லை— காடுதான் என்ற நிலையிலும் இராமன் கவலைப்படவும் இல்லை. சுக்கிரீவன், வாலியிடம் எல்லாம் உனக்குத்தான் என்று சொல்லிய பின்பும் ஆத்திரத்தில் சுக்கிரீவனை அடித்து விரட்டுகின்றான். சுக்கிரீவனின் மனைவி உருமையையும் கவர்ந்து கொள்கிறான். வாலி, சந்தேகப் பிராணியாகவும் ஆத்திரக்காரனாகவும் விளங்கினான். மேலும் தன்னை; யாரும் வெல்லாமல் இருக்கும்படிப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தவம் செய்து வரம் வாங்கிக் கொண்டிருக்கிறான். அது என்ன வரம்? வாலியுடன் பொருந்துகின்றவர்களின் பலத்தில் பாதி பலம் வாலியைச் சேர்தல் வேண்டும்; வாலிக்கு உரிமையாதல் வேண்டும். இப்படி ஒரு வரம்! நமது வழிபடும் கடவுள்களும் இத்தகைய வரங்களைக் கொடுப்பது தான் வேடிக்கை; முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். முள்ளை எடுக்கப் பயன்படும் முள்வாங்கி, முள்ளைப் போல் கூர்மையாகவே இருப்பதை அறியாதார் யார்? ஆதலால், வாலியிடம் பேச வேண்டிய அவசியமோ சூழலோ இராமனுக்கு எழவில்லை. காரணம் பேச்சுக்களின் எல்லைகளைக் கடந்த நிலையில் வாலியின் செயல்முறைகள் அமைந்துவிட்டன, ஆதலால்.
வாலியின் பொருந்தாச் செயல்களையும் வரத்தையும் முறியடிக்க வேண்டிய நிலையில் மறைந்து நின்று அம்பெய்கின்றான். வாலியை மறைந்து கொன்றதில் ஒரு குறையும் இல்லை; ஒரு குற்றமும் இல்லை. அதனால் இராமன் மறைந்து நின்று கொன்றான் என்று சொல்லப் படுவது முறையல்ல. ஆனால், காவியப் போக்கில் அப்படித்தான் உணர்த்தப்படுகிறது.
அடுத்து நடந்த பெரிய போர் இலங்கையில் நடந்த இராம—இராவணப் போர். போருக்கு முன்பு மரபுப்படி இராமன், விபீடணன், சுக்கிரீவன் ஆகியோருடன் ஆலோசனை செய்யப் பெறுகிறது. முதலில் போர் முறைப்படி இராவணனுக்குத் தூது அனுப்ப முடிவு செய்யப் பெறுகிறது. தூதனாக அனுப்ப வாலியின் மகன் அங்கதன் தேர்வு செய்யப்பெற்றான். வாலி, இராவணனைத் தனது வாலில் கட்டிச் சுற்றி வந்த மாவீரன்! அதனால் போலும் அவன் மகன் அங்கதன் தூதனாகத் தேர்வு செய்யப் பெற்றான்! அங்கதன் இலங்கையை அடைகின்றான். தான் தூதனாகத் தேர்வு செய்யப் பெற்றதில் அளவற்ற மகிழ்ச்சி அங்கதனுக்கு! அதனால்,
"மாருதி அல்லன் ஆகின்,
நீ” எனும் மாற்றம் பெற்றேன்;
யார் இனி என்னோடு ஒப்பர்?
என்பதோர் இன்பம் உற்றான். (கம்பன்-6986)
தூதன் அங்கதன், தன்னுடைய தலைவன் இராமனைப் பற்றி இராவணனிடம் புகழ்ந்து பேசுகின்றான்: “இராமன், ஐம்பூதங்களுக்கும் தலைவன்: உலகத்திற்குத் தலைவன்; சீதையின் கணவன்; தேவ தேவன்; வேதநாயகன்! இராவணா! நீ பயின்ற வேதங்கள் தேடும் தலைவன் இராமன்; கல்வி அறிவு ஊழின்முன் நிற்பதில்லை. ஊழ்வினையை உய்த்துச் செலுத்தி ஊட்டுவிக்கும் தலைவன்; ஊழித் தலைவன். அவனுடைய தூதன் நான்” என்கிறான் அங்கதன்.
இராவணன் அங்கதனை நோக்கி அவனுடைய வரலாற்றைக் கூறும்படிக் கேட்கின்றான். அதற்கு அங்கதன் ‘முற்காலத்தில் இராவணன் என்பானைத் தன் வாலில் கட்டிச் சுருட்டிக் கொண்டு, பல மலைகளையும் தாண்டிச் சுற்றி வந்த இந்திரன் மைந்தன் வாலியின் மகன்’ என்றனன். உடன் இராவணன் அங்கதனுக்கு வானர ஆட்சியைத் தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றான். ‘உன் தந்தை வாலியைக் கொன்றவன் பின் திரிதல் சுற்றுதல் அழகன்று; இராமனிடமிருந்து பிரிந்து விடு. என்னைச் சேர்க; நான் உன்னை என் மைந்தனாக ஏற்றுக் கொள்கிறேன்!’ என்று இராவணன் அங்கதனிடம் பேசி, ‘வாலியைக் கொன்றவன் இராமன்’ என்ற வாயில் வழிப் பகை மூட்ட எடுத்த முயற்சி அங்கதனிடம் பலிக்கவில்லை! இராவணன் சொல்லைக் கேட்டு அங்கதன் நகைத்தான். ‘என்னைப் புரிந்து கொள்ளாமல் வாயில் வந்தபடியெல்லாம் பேசுகின்றாய்! இதனால் எல்லாம் நான் உன் வசப்பட மாட்டேன்! நாயிடம் சிங்கம் ஆட்சி பெறுமோ? ஒரு போதும் பெறாது!’ என்றான் அங்கதன். “இராவணனே! அரக்கர் குலத்து அழிவிற்கு மூலகாரணமாக உள்ள இராவணனே! போருக்கு அஞ்சி அரண்மனையில் ஔிந்து கொண்டிருக்கின்றாய்! ‘தேவி சீதையை விட்டு விடு! அல்லது இராமனுடன் போர் புரியப் போர்க்களத்திற்கு வருக!’ என்று என் தலைவன் இராமன் அறிவிக்கச் சொன்னான்!” இராவணனின் பாட்டி தாடகையை வெட்டி வீழ்த்திப் பருந்துக்கு இரையாக்கிய காலத்தில் இராவணன் எங்கே போனான்? இராவணன் மாமன் சுபாகு என்பவன் போராடி அழிந்த காலத்திலும், எங்கிருந்தான் என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தான். ஏன்? இராவணன் தங்கை சூர்ப்பனகை இலக்குவனால் மூக்கறுபட்டு மானபங்கப் படுத்தப்பட்ட போதும் இராவணன் போருக்கு வரவில்லையே! ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்பதற்கு இலக்கியம் இராவணன், ‘இராவணனுக்கு ஆண்மையே இல்லை’ என்று இராமன் இராணனைப் பழித்துரைத்ததையும் அங்கதன் எடுத்துக் கூறினான். தூது பயன் தராததால் அங்கதன் இராமனை வந்தடைந்தான். இராமனிடம் தூதின் முடிவை மிகவும் சுருக்கமாக,
“முற்றஒதி என்? மூர்க்கன், முடித்தலை
அற்றபோது அன்றி ஆசை அறான்”. (கம்பன்-7016)
என்று கூறினான். ‘சமாதானம் இல்லை; சீதையின்பால் உள்ள ஆசையை அவன் முடியிழக்கும் வரையில் விடமாட்டான். இராவணனின் முடி வீழ்தலுக்குரிய போர் தேவை. இதுவே என் தூதின் முடிவு’ என்றான் அங்கதன்.
இராம–இராவணப் போர்
போர் மூண்டு விட்டது! இராவணன் போர்க்களத்திற்கு வந்துவிட்டான். இராவணன் செருகளம் வந்த செய்தி இராமனுக்குப் பூரிப்பைத் தருகிறது. அனுமனின் தோளில் இராமன் ஆரோகணித்துச் செருகளம் புகுந்தான்; வில்லை வளைத்து நாணேற்றினான்; அந்த நாணோசை ஊழிக் காலத்துப் பேரோசை போல் கேட்டது. இராவணன் போர்க் களத்தில் தோற்றான்! ஆயுதங்களை இழந்தான்! வெறுங்கையுடன் நின்றான்.
தாயிற் சிறந்த தயவுடைய இராமன், இராவணனுக்குப் பரிவுரை கூறுகிறான்; “இராவணா! பெரும் போரில் வெற்றி பெற வீரம் மட்டும் போதாது. அறவழியிலும் ஒழுகுந்திறன் வேண்டும்! அறத்தினைத் துறந்தவர்கள் தேவர்களேயானாலும் போரில் வெற்றி பெற இயலாது. இராவணா, உயிர் பிழைத்துப் போ! ஆயுத மில்லாது வெறுங்கையினனாக நிற்கும் உன்னை நான் கொல்ல மாட்டேன்!” என்றான் இராமன். ‘ஆண்மைக் குணமுடைய இராவணனே, கேள்! உனது நால்வகைப் படைகளும் சிதறி ஓடிவிட்டன. இன்று போ! நாளை வா!’ என்றான்.
'ஆள்ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா!' என நல்கினன்-நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்! (கம்பன்-7271)
மீண்டும் இராவணனுக்கு, படைதிரட்டிக் கொண்டு வர, போராட வாய்ப்பளிக்கின்றான்– அறநெறி யண்ணல் இராமன்! காலம் கருத்தை மாற்றும் என்ற அடிப்படையில் ‘இன்று போய், நாளை வா’ என்று வழங்கப் பெறும் கால இடைவெளியில் இராவணன் சிந்திப்பான்; சீதையை அனுப்பி வைப்பான் என்று இராமன் நம்பி இருக்கக் கூடும். இராமனது நம்பிக்கை முற்றிலும் நிறைவேறாது போனாலும் ஓரளவு பயன் தந்தது.
திசை யானைகளை வென்ற வலிமை; சிவம் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற தோள் வலிமை, நாரதர் மகிழ இனியன கூறிய நாவாற்றல்; சிவபெருமான் அருளிய வாள்; வாகை மாலைகள் சூடியிருந்த பத்து மணி முடிகள்; இவையெல்லாவற்றுடன் தன் வீரத்தையும் சேர்த்து இராவணன் போர்க்களத்தில் போரிட்டு வெறும் ஆளாக இலங்கையினுள் நுழைந்தான். தோல்வியின் காரணமாக நாணித் தலைகுனிந்தவாறே, தனியே இலங்கையினுள் புகுந்து தனது மாளிகை அடைந்தான். இராவணனுடைய நாணமும், சீதை நகைப்பாளே என்ற அடிப்படையில் அமைந்த நாணமே யாம் என்று கம்பன் கூறுவது நகைச்சுவை நிறைந்த கருத்து. ஆம்! இந்த உலகில் ஆடவர் பலரும் தமது செயலின்மை கருதி நாணப்படுதல் பெரும்பாலும் இல்லை. பெண்கள் பரிகசிப்பார்களே என்ற அச்சமும் நாணமும்தான் ஆடவர்களுக்கு மிகுதியும் உண்டு. இதற்கு இராவணனும் விதிவிலக்கல்லன்.
கும்பகருணன் அறிவுரை
இராவணன், போரில் தோல்வியைத் தழுவியதைக் கண்ட அரக்கர்கள், நெடுந்துயில் கொண்டிருந்த கும்பகருணனை எழுப்பினார்கள். கும்பகருணன் துயில்விட்டு எழுந்ததும் இராவணன் அவையை அடைந்து இராவணனுக்கு அறிவுரை கூறினான். சீதையை விடுதலை செய்யும்படி அறிவுறுத்தினான். விபீடணனுடன் கலந்து உறவாடி வாழ்க என்றான். இந்த இடத்தில் கம்பன் விபீடணனுக்குத் தந்துள்ள அடைமொழி அல்லது இலக்கணம், சிந்தனைக்குரியது. ‘ஐயறு தம்பியோடு அளவளாவுதல்’ என்று கம்பன் குறிப்பிடுகின்றான். ஐயத்திற்கிடமில்லாத விபீடணன் என்று கம்பன் குறிப்பிடுவது எண்ணத்தக்கது. விபீடணன் இராவணனை விட்டுப் பிரிந்து இராமனைச் சென்றடைந்தமையால் ‘விபீடணன் போருக்குப் பயந்து விட்டான்! கோழை! உடன்பிறந்த அண்ணனுக்குத் துரோகம் செய்து விட்டு, இராமனுடன் சேர்ந்து ஆட்சியை, அதிகாரத்தைப் பற்றிக் கொள்ளத் திட்டமிட்டான்’ என்றெல்லாம் பழி வரும் என்பதை எண்ணி விபீடணனை ஐயத்திற்கு இடமளிக்காத ஒழுகலாறுடையவன்; அறநெறி ஒன்றே அவன் சார்பு என்பதை நிலை நிறுத்த ‘ஐயறு தம்பி’ என்று கம்பன் கூறினான். சீதையை விடுதலை செய்து விபீடணனுடன் உறவு கலந்து வாழவில்லையாயின் நம்முடைய பல வலிமைகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டு போராட வேண்டும் என்று கும்பகருணன் கூறினான்.
“தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து, நின்
ஐயறு தம்பியோடு அளவளாவுதல்
உய்திறம்; அன்று எனின் உளது, வேறும் ஓர்
செய்திறம்; அன்னது தெரியக் கேட்டியால்” (கம்பன்-7359)
“பந்தியில் பந்தியில் படையை விட்டு, அவை
சிந்துதல் கண்டு, நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம்” என்று உணரக் கூறினான். (கம்பன்-7360)
என்ற பாடல்கள் பலகாலும் எண்ணத் தக்கன.
கும்பகருணன் கூறிய இந்த அறிவுரைகளால் இராவணனிடத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக இராவணன் போருக்குப் போகப் புறப்பட்டான். கும்பகருணன் இராவணனை விலக்கி விட்டு, தானே போருக்குப் போகத் தலைப்பட்டான். அப்போது, கும்பகருணன், ‘அண்ணா! போருக்குச் செல்கிறேன். நான் வெற்றி பெறுவது உறுதியல்ல. சாவையே தழுவி நிற்பேன். என்னை இராம—இலக்குவர் வெற்றி பெற்றுவிட்டால் உன்னை எளிதில் வெற்றி பெறுவர். ஆதலால், என் மரணத்திற்குப் பிறகாவது சீதையை விட்டுவிடு! அது உனக்கு நன்மை! தவமும் ஆகும்’ என்று கூறி இராவணனிடம் விடை பெற்றுக் கொண்டு போருக்குச் செல்கிறான்.
கும்பகருணன்–விபீடணன் சந்திப்பு
போர்க்களத்தில் விபீடணன் கும்பகருணனைச் சந்திக்க வருகின்றான். கும்பகருணன் விபீடணன் வந்தமையை ஏற்கவில்லை. ‘குலத்தின் இழுக்கின் வழி விளைந்த விளைவா?’ என்று விமர்சிக்கின்றான் கும்பகருணன். அழிவுக்காலம் வந்தால் அழிவுக்குரிய பலவும் ஒருங்கு கூடி வரும் போலும்!
‘ஏந்திய வில்லுடன் இராமன் நிற்கிறான். அவன் அருகில் வெல்லுதற்கரிய இலக்குவன் நிற்கிறான். எமனும் நிற்கிறான்; ஊழ்வினை உருத்து வந்து நிற்கிறது. எங்கள் தோல்வி உறுதி. இந்தச் சூழ்நிலையில் ஏன் வந்தாய்?’ என்பது கும்பகருணன் வினா! விபீடணன், கும்பகருணனை அறநிலை கருதி, இராமன்பால் வந்து சேரும்படியும் இலங்கை ஆட்சியை ஏற்கும்படியும் அழைக்கின்றான், நிலந்தோய வணங்கிக் கேட்டுக் கொள்கின்றான். கும்பகருணன்—விபீடணன் உரையாடல் ஒப்பற்ற வாழ்க்கைத் தத்துவம். அறத்திற்கும் பாசத்திற்கும் நடக்கும் போராட்டம் பற்றிக் கம்பன் அழகுற, அமைவுற விளக்குவது பலகாலும் படித்துணரத்தக்கது.
கும்பகருணன், போர்க்களத்தில் தனக்கு நேரிடும் மரணம் இழிவானது என்று கூறுகிறான். அதே போழ்து அந்த மரணம் புகழுடையது என்றும் கூறுகிறான். மரணத்தின் காரணத்தால் மரணம் இழிவாகிறது. மரணத்தின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டால் புகழாகிறது. ஆம்! நன்றியறிதல் என்ற பண்பு உலகத்தில் உள்ளளவும் கும்பகருணன் மரணம் புகழுடையதுதானே! ஆன்முலை அறுத்தல் முதலிய தீமைகளைச் செய்யினும் உய்தி உண்டு! செய்ந்நன்றி மறந்தார்க்கு உய்தியில்லை.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.” (திருக்குறள்-110)
என்று திருக்குறள் கூறுவதை அறிக. ஒரு தலைவன் ஆலோசனையின்றித் தீமை செய்தால் திருத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும். அங்ஙனம் திருத்த முடியாவிடில் அவருடன் இருந்து சாதலே அறம்; ஒழுக்கம் என்பது கும்பகருணன் கொண்ட அறம்; துணிவு. ‘இலங்கை அரசு நிலையில்லாதது. நான் அதை விரும்பவில்லை. நான் என் அண்ணன் இராவணனுக்காகப் போராடி அவனுக்கு முன் சாதலையே விரும்புகின்றேன்! அதுவே எனது கடமை’ என்றான் கும்பகருணன்.
கும்பகருணன் மறைவு
கும்பகருணன், இராமனுடன் போர் செய்கின்றான். இராமனது அம்புகளால் அரக்கர் சேனை அழிந்தது. கும்பகருணன் கை கால்களை இழந்தான். இராவணனுக்கு அழிவு நேரிடப் போவதை நினைத்து வருந்தினான்! உடன் பிறப்புப் பாசத்தில் தோய்ந்து கும்பகருணன் தன்னுடைய அழிவு சங்கமித்துக் கொண்டிருக்கும் பொழுதும் இராமனிடம் விபீடணனைக் காப்பாற்றுக! என்று கேட்கும் பாங்கு, கும்பகருணனிடத்தில் நமக்கு இனம் தெரியாத ஒரு மதிப்பை உண்டாக்குகிறது— மூக்கை இழந்து தன்னை மற்றவர்கள் பார்த்து நகைக்காமல் இருக்கத்தக்க வகையில் உடனே தன் தலையைக் கொய்து கடலில் வீசும்படி கேட்டுக் கொள்வது வீரத்திற்கு அணி செய்யும் வீரம் என்பது இராமகாதை நிலவும் வரையில் நிலவும்.
மாயா சனகன்
இராவணன் ஆசை காட்டுதல், கெஞ்சுதல், சினத்தல் ஆகியவற்றால் சீதையை வசப்படுத்த முடியாமல் போன நிலையில், மாயவித்தைகளைக் காட்டிச் சீதையை அச்சுறுத்த நினைக்கின்றான். சீதையின் தந்தை சனகன் போல மாயையால் ஒரு சனகனைத் தோற்றுவித்துச் சிறைப்படுத்தித் தொல்லைப்படுத்துகின்றான். மாயா சனகனைக் கண்ட சீதை அழுது புலம்புகின்றாள். ஆயினும், மாயா சனகன் இராவணனை ஏற்றுக் கொள்ளும்படி சீதையிடம் சொன்ன அறிவுரையைக் கேட்டபின் சீதை உண்மை உணர்கின்றாள். தான் காண்பது உண்மையான சனகன் அன்று என்று தேறுகிறாள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது ஆன்றோர் வாக்கு ஆதலால், இவன் சனகனாக இருந்தால் தருமம் அழியத்தக்கவைகளைக் கூறான்; வழி வழி வரும் முறைமைகளை மீறான்; பழி உண்டாகும்படி நடந்து கொள்ளமாட்டான். ஆதலால் உண்மையான சனகன் அல்லன் என ஐயப்பட்டாள்.
“நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல்” (திருக்குறள்-959)
என்ற திருக்குறள் நெறியோடு இந்நிகழ்வினை ஒப்பு நோக்குக
மாயா சீதை
சீதை எந்தச் சூழ்நிலையிலும் தான் கொண்ட உறுதியில் தளரவில்லை. அது மட்டுமன்று— இராவணனை எச்சரிக்கை செய்யவும் தவறவில்லை. இராம—இராவணப் போர் தொடர்ந்து நடக்கிறது. அதனைப் பற்றிய முழுச் செய்திகளையும் கூறுவதை நாம் விரும்பவில்லை. அவசியமும் இல்லை. நாகபாசத்தாலும், பிரமன் அம்பாலும் இராமன், இலக்குமணன் துயருறுதல்: இதைக் கண்ட சீதை துயருறுதல், முதலியன நிகழ்கின்றன. கடைசியாக சாம்பவான் சஞ்சீவி பர்வதத்தின் மூலிகைகளை கொணரச் சொல்கிறான்: அனுமன் மூலிகைகளைப் பறிக்கக் காலமாகும் என்று கருதி மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வருகின்றான். அனுமன் தூக்கி வந்த சஞ்சீவி மலையின் காற்றினால் அனைவரும் பிழைத்து எழுந்தனர். மீண்டும் இந்திரசித்து மாயையால் ஒரு மாயா சீதையை தோற்றுவித்துக் கொள்கின்றான். மாயையென்று அறியாமல், சீதையைக் கொல்வதைக் கண்ட அனுமன் அழுதான்: புலம்பினான். தன்னுடைய முயற்சியெல்லாம் பயனற்றுப் போயிற்றே என்று வருந்துகின்றான். விபீடணன் சீதையின் மரணத்தை நம்புகின்றான். இராமன் சோர்கின்றான். ஆனால் இலக்குமணன் மட்டும் உயிர்த் துடிப்புடன் வீர உணர்வுடன் நிற்கின்றான். சோர்ந்து நிற்கும் இராமனையும் தேற்றிப் போர் புரியத் தூண்டுகின்றான். ‘கற்புத் தெய்வத்தை, யாதொரு துணையும் அற்று விளங்கியவளை இந்திரசித்து தீண்டிக் கொன்றான் என்ற பிறகும் சோர்ந்து நிற்பதா அழகு? நாம் துன்பத்தைச் சுமப்பது ஏன்? பிழைத்திருப்பதற்காகாவா? அல்லது அரக்கர்கள் மேலுள்ள கருணையினாலா? உழன்று என்ன பயன்? போர் புரிய வருக!’ என்று இராமனை அழைக்கின்றான். ‘யாராக இருந்தாலும், நம்மால் மூவுலகையும் அழிக்க இயலும்’ என்கிறான் இலக்குமணன்.
இந்திரசித்து அயோத்தியை அழிக்கச் சென்றுள்ளான் என்ற செய்தி கேட்டு மேலும் இராமன் சோர்ந்தான். தன்னைச் சேர்ந்த எல்லோருக்கும் துன்பம் ஏற்பட்டு உள்ளதே என்று உழன்றான். இப்போதும் இலக்குமணன், ‘என்னைப் போன்றவனல்லன் பரதன், இந்திரசித்தன் பிரமபாணத்தால் விழ! பரதன் எமனையும் துணைக்கு அழைத்துப் போராடி இந்திரசித்தை வீழ்த்துவான்! நீ காணலாம்’ என்று மனப்புழுக்கத்துடன் இராமனைத் தேற்றினான். இலக்குமணனுக்கு ஏன் மனப்புழுக்கம்? மலையே நிலை குலைந்ததே என்பதுதான் காரணம். இராமனின் நிலை கண்ட விபீடணன், அசோகவனம் செல்கின்றான். உயிருள்ள பதுமையோ, உயிரற்ற பதுமையோ என்று ஐயப்படும் நிலையில் இருந்த சீதையைக் கண்ணாலும் கண்டான்; கருத்தாலும் கண்டான். விபீடணன் கண்ணால் கண்டது சீதையின் திருவுருவத்தை, கருத்தால் கண்டது சீதையின் தூய்மையை, கற்பை, தவத்தின் திருவுருவை!
மீண்டும் அரக்கர்கள் வீரத்தை விலை போகவிட்ட மாயம், மந்திரத்தை தொடர்ந்து, இந்திரசித்து நிகும்பலை யாகம் செய்து இராம—இலக்குமணரை அழிக்க முற்பட்டான். இலக்குமணனை இந்திரசித்துடன் போராட அனுப்பி வைத்தான் இராமன். உயிரும் உடலுமாக இருந்த இலக்குமணன் போர் கருதிப் பிரிந்து சென்றான். இராமன் வருந்தினான். அந்த வருத்தம் விசுவாமித்திரருடன் இராமனை அனுப்பியபோது தசரதன் அனுபவித்ததுபோல் இருந்தது என்று கூறி, இராமன் இலக்குமணனிடம் காட்டியதை தந்தையின் பரிவாக விளக்குகின்றான் கம்பன்.
இந்திரசித்து அறிவுரையும் மறைவும்:
இலக்குமணன்—இந்திரசித்துக்கிடையே நடந்த போரில் இந்திரசித்து தோற்றான். தோற்ற இந்திரசித்து இராவணனிடம் சென்று, சீதையை விடுதலை செய்து பிழைத்துக் கொள்ளும்படிக் கூறினான். இராவணன் கேட்டபாடில்லை. அதற்கு மாறாக, “நான் யாரையும் நம்பவில்லை;
“என்னை நோக்கி யான் இந் நெடும்பகை
தேடிக் கொண்டேன்” (கம்பன்-9123)
என்று கூறினான். ‘சாதல் உறுதியேயானாலும் இராமன் புகழ் உள்ளளவும் என் புகழும் நிற்கும்’ என்றனன் இராவணன். இந்த இடத்தில் இராவணன் மனப் போக்குத் திரும்புகிறது. இராமனை ‘நல்லதோர் பகை’ என்றனன். 'சாவது உறுதி' என்ற முடிவுக்கு வந்துவிட்டான். இராமனுடன் போரிட்டான் என்ற புகழ் உண்டென விரும்பிப் போரிடுகின்றான் என்பது திருப்பம். கடைசியாக இந்திரசித்து இலக்குமணனால் கொல்லப்படுகின்றான். இந்திரசித்தின் மரணம் இராமனுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது. விம்மிதமுற்றான். சீதையை மீட்டுவிட்டதாகவே எண்ணினான். ‘தம்பியுடையான் பகை அஞ்சான்’ என்று இலக்குமணனைப் பாராட்டினான். இந்திரசித்தின் மரணத்தால் இராவணன் அழுது புலம்புகின்றான். மண்டோதரி புலம்புகின்றாள்.
மூலபலப் படை
இந்த நிலையில் வன்னி என்னும் ஓர் அரக்கன் வருகின்றான். அவன் ‘இனி, சீதையை இராமனிடம் கொண்டு விட்டாலும் இராம—இலக்குமணர்கள் நம்மைக் கொல்லாமல் விடப்போவதில்லை. ஆதலால், நமது படை முழுதும்—மூலபலப்படை உட்பட அனைத்தையும் கொண்டு போராடி இராம-இலக்குமணர்களையும், வானரப் படைகளையும் அழிப்பதே நம்முன் உள்ள கடமை’ என்றனன்.
‘இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?’ என்று இன்று வழங்கும் பழமொழி கம்பன் தந்ததே! இராவணனின் மூலபலச் சேனையைக் கண்டு வானர வீரர்கள் அஞ்சி ஓடுகின்றனர். அப்போது வானரர்கள் கூறியது.
‘மனிதர் ஆளின் என், இராக்கதர் ஆளின் என் வையம்?’ என்பது.
இந்த மனப்போக்கு நாடு முழுதும் மக்களிடம் காணப்படுகின்றது. தங்களுடைய நாட்டின் ஆட்சி எப்படி அமையவேண்டும் என்ற சிந்தனை இன்றைய மக்களுக்குக் கிடையாது. குடியரசு நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியற் கடமை உண்டு. ஆனால், இந்தியாவில் பெரும்பாலான குடிமக்கள் அரசியல் பற்றிச்சிந்திப்பதே இல்லை. சிலர் அப்படிச் சிந்திப்பது பாவம் என்றே கருதுகின்றனர். நாட்டில் அற நெறியும் பண்பும் அமைதியும் சமாதானமும் நிலவ நல்லாட்சி தேவை. இதை அன்று வானரர்கள் உணரவில்லை. இன்று மக்களே உணரவில்லை. மூல பலப்படை வானர வீரர்களைக் கலக்கியது.
இராமன் போருக்கு எழுந்தான். அரக்கர்களை அழித்தான். அரக்கர் குலமே அழிந்தது என்று சொல்ல வந்த கம்பன் ‘நீதி மன்றத்தில் பொய்ச் சாட்சி சொன்னவர் குலம்போல அழிந்தது’ என்கின்றான். ‘வறுமையில் துன்பப்பட்டு இறப்போரைப் போல இறந்தனர்’ என்கின்றான்.
இலக்குமணன் வேலேற்றல்
விபீடணன் மீது இராவணன் ஏவிய வேலை ஏற்க, விபீடணன், சுக்கிரீவன், அனுமன், அங்கதன், இலக்குவன் ஆகியோர்களிடையே போட்டி ஏற்பட்டது. இலக்குவனே முந்தினான். வேலை மார்பில் ஏற்றான்; மூர்ச்சையடைந்தான். அனுமன் கொண்டு வந்த மருந்தால் மறுமுறையும் உயிர் பிழைத்தான். இந்தப் போரின் முடிவில் இராம—இலக்குமணர்களுக்கும் வானவர்களுக்கும் ஒரு தெளிவு பிறந்தது. அதுதான் ‘அறம் வெல்லும்; பாவம் தோற்கும்’ என்பது.
இறுதிப்போர்
இராவணன் கோபுரத்தின் உச்சியில் ஏறிப் பார்க்கிறான். பின் அரண்மனைக்குச் சென்று, தான் தருமம் செய்கிறான். மீண்டும் போருக்குப் போக ஆயத்தமானான். இப்போது மூன்றாம் முறையாக போருக்குச் செல்லும் போது, இராவணன் போக்கில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதாவது, இராமனின் மனைவி சீதை என்பதை உறுதிப் படுத்துகின்றான். ‘இன்று போர் முடிவில் இராமனை இழந்து அவன் மனைவி சீதை அழவேண்டும். அல்லது என் மனைவி என்னை இழந்து அழவேண்டும்; இரண்டில் ஒன்று நடக்கும்’ என்று கூறுகின்றான். இராமனும் போர்க்களத்திற்கு வந்துவிட்டான். போர் நடந்தது. இராவணன் படிப்படியாக மனம் மாறுகின்றான்; உணர்கின்றான். ஆனால், மாற்றம்தான் ஏற்படவில்லை. இன்றும் மக்களில் பலர், நல்லதை அறிவார்கள், உணர்வார்கள். ஆனால், துணிவுடன் ஏற்கமாட்டார்கள், செயலாக்கத்திற்குக் கொண்டுவரத் தயங்கித் தயங்கி மற்றவர்களுடைய உறவை இழக்கின்றனர்; வாழ்க்கையை இழக்கின்றனர் இராவணன் இந்த வர்க்கத்தினன் போலும்! இராவணனுடைய சுத்தவீரத் தன்மையைக் கம்பன்,
“ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான்”
என்று கூறி விளக்குகின்றான்.
செருகளத்தில் நின்ற இராவணனுக்குத் தெளிந்த சிந்தனை அரும்புகிறது; தனக்கு எதிரில் நின்று போரிடுபவன் மனிதன் அல்லன்; பரம்பொருள் என்று உணர்கின்றான்.
“சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன் திருமாலாம்
அவனோ? அல்லன், மெய்வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அவ் வேத முதல் காரணன்” என்றான். (கம்பன்-9837)
இராமன், இராவணனது தலையில் ஒன்றை அம்பினால் கொய்து வீழ்த்துகின்றான். இந்த அரிய பேறு தவத்தினால் மட்டுமே வாய்க்கும். இராவணன் கைகள் வெட்டப்படுகின்றன, தலைகள் வீழ்த்தப்படுகின்றன. இராவணன் மூர்ச்சித்து விடுகின்றான். இராவணன், இராமனுடைய பிரமன் அம்பும், சக்கராயுதமும் சேர்ந்து தாக்க, உயிரிழக்கிறான். இராவணன் மரணம் எய்தினான். கடவுள்கள் அருளிச் செய்யும் வரம், வீரம் எதுவும் நிற்காது போலும்!
இதனைக் கம்பன்,
முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய
பெருந் தவமும், முதல்வன் முன்நாள்
‘எக்கோடி யாராலும் வெலப்படாய்’
எனக் கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த
புயவலியும் தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போயிற்று
இராகவன் தன் புனித வாளி! (கம்பன்-9899)
என்று கூறி விளக்குகின்றான்.
பொருது வீழ்ந்த சீர்
இராவணன் போர்க்களத்தில் செத்துக் கிடக்கின்றான். இராவணன் கீழ்மையானவன் அல்லன்; கோழையும் அல்லன், சுத்த வீரன். இராவணன் கடைசி வரையில் வீர வேள்வியே செய்தான். போர்க்களத்தில் மாண்டு கிடக்கும், இராணனை இராமன் சென்று பார்க்கும் காட்சியைக் கம்பன்.
“போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப்
போர் வீரன் பொருது வீழ்ந்த
சீரினையே மனம் உவப்ப, உரு முற்றும்
திருவாளன் தெரியக் கண்டான்” (கம்பன்-9904)
என்று கம்பன் வருணிக்கின்றான். இராவணன் போரில் எவருக்கும் புறங்கொடாதவன். இராம—இராவணன் யுத்தத்திலும் கூட அவன் வீரப்போரே செய்தான்; புறமுதுகு காட்டி ஓடவில்லை. இத்தகு சீர்மையுடைய இராவணனை இராமன் கண்டான். ‘இராவணனை எவராலும் எளிதில் வெற்றி கொள்ள முடியாது. இராமனே, நீ வெற்றி பெற்றதற்குக் காரணம் உன் வீரமன்று. இராவணன் சீதையின் பால் வைத்த காதலினாலேயாம். உடன் துணை நின்றது நின் கோபம். இவ்விரண்டினாலன்றி இராவணனை வெல்ல இயலாது’ என்று கூறுகிறான் விபீடணன்.
மும்மடங்கு பொலிந்த முகங்கள்!
போர்க்களத்தில் மாண்டு கிடந்த இராவணனின் முகம் முன்பு இருந்ததைவிடப் பொலிவடைந்ததாகக் கம்பன் பாடுகின்றான். பொதுவாகப் பலருக்கு உயிருடன் வாழும் பொழுதே முகத்தில் சவக்களை தட்டும். இராவணனுக்கோ அவன் மாண்டு பிணமான பிறகு, அவனுடைய முகங்கள் மும்மடங்கு பொலிந்தன என்கிறான் கம்பன். மும்மடங்கு பொலிவு எனின் எப்படி? இராவணன் சீதையைத் தன் மனச்சிறையிலிருந்து விடுவித்ததில் ஏற்பட்ட பொலிவு ஒன்று. இராமனை ‘நல்லதோர் பகை’ என்று எண்ணியதால் ஏற்பட்ட பொலிவு இரண்டு. இராமன் பரம்பொருள் என்று தெரிந்தும் புகழ் ஒன்றையே விரும்பிச் சாகும்வரை போர் செய்ததால் ஏற்பட்ட பொலிவு மூன்று என எண்ணலாம். அங்ஙனம் எண்ணுவது முறையும்கூட!
இராமனின் ஏச்சும் சீதையின் துயரும்
சீதை மீட்கப்படுகின்றாள்; விபீடணன் சீதையை இராமனிடம் அழைத்து வருகின்றான். இந்த இடத்தில் இராமகாதை தடம் மாறுகின்றது. எதிர்பாராமல் இராமன் சீதையைத் திட்டத் தொடங்குகின்றான். வில்லிலிருந்து அம்புகள் புறப்படுவது போல் சுடு சொற்களால் சீதையைச் சுடுகின்றான்.
“ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? எனை விரும்பு என்பதோ?” (கம்பன்-10013)
“பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்
திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்” (கம்பன்-10017)
என்பன அவற்றுள் சில பாடல்கள். தவத்தின் தவமாய சீதாதேவி, காப்பியம் முழுவதிலும் நெடிது பேசாது வந்த சிறையிலிருந்த செல்வி பேசுகின்றாள். இல்லை! வினாத் தொடுக்கின்றாள். கற்புக்கனலியாகிய சீதை அழுத்தமான குரலில் இராமனை அடக்க நிலைமாறா வகையில் சுடுகின்றாள்! “தலைவனே! அசோகவனத்தில் சோர்ந்து கிடந்த—கற்புத் தவத்தில் இருந்த—என்னை, அனுமன் கண்ட வண்ணம் தங்களிடம் கூறவில்லையா? அனுமன் தங்களுடைய தூதன் அல்லவா? ஒரு தூதன் கண்டதையும் கேட்டதையும் ஒளிக்காமல் சொல்லும் கடமையுடைய வனல்லவா? அல்லது தூதனாகிய அனுமனிடம் தாங்கள் நம்பிக்கை வைக்கவில்லையா? மேன்மையான குணத்தையுடையவரே! நான் வருந்திச் செய்த தவம், பேணிக் காத்த நற்குணம், கற்புடைமை எல்லாம் பைத்தியக்காரத்தனமாகி அவமாகி விட்டதே! உத்தமரே, உங்கள் மனத்து உணராமையால்” என்று பேசுகிறாள். இத்துடன் சீதை நிறுத்திக் கொள்ள வில்லை. ஆண் ஆதிக்கத்தின் அற்பச் செயல்களை, கொடுமைகளைச் சாடுகின்றாள்; பொதுவாகப் பெண்களின் மனத்தை உள்ளவாறு அறியும் அல்லது உணரும் தன்மை ஆடவருக்கு இல்லை! இது இன்று வரையில் உள்ள நடைமுறை, இந்தக் குறை மாந்தருக்கு மட்டுமா? நான்முகன், திருமால், சிவன் முதலியோரும் இதற்கு விதிவிலக்கல்லர் என்பது சீதாபிராட்டியின் வாதம்! ‘என் கணவர் இராமனும் ஓர் ஆண் மகன் தானே! அவர் எப்படி என்னை, என்னுடைய உள்ளத்தை, உணர்வினைப் புரிந்து கொள்வார்? பரம்பொருளே! இனி நான் யாருக்கு என்னுடைய கற்புத் தவத்தைக் காட்ட வேண்டும்? இப்பொழுது நான் இறப்பதே நன்று. உமது கட்டளையும் பொருத்தமானதே! இப்போது சாவதே என் கடமை’ என்றாள்.
சீதை, எரியில் மூழ்க ஆயத்தமானாள்; ‘அக்கினி தேவனே! நான் என் மனத்தினாலும் உடம்பினாலும் வாக்கினாலும் என் கற்புக்குக் குற்றம் உண்டாகும்படி நடந்திருந்தால் நீ கோபத்தோடு என்னைச் சுடுவாயாக!’ என்று கூறி இராமனுக்கு வணக்கம் செய்துவிட்டு எரியில் இறங்கினாள்! ஐயோ, பாவம்! அன்னை சீதா பிராட்டியின் கற்புக் கனலால் அக்கினிதேவன் சுடப்பட்டான்! அதனைக் கம்பன்,
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள், பாய்தலும், பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால்! (கம்பன்-10036)
என்று பாடுவான்.
தீக்கடவுள் தன்னுள் மூழ்கிய சீதையை எடுத்து வருகின்றான்; வந்து ஆற்றாது புலம்புகின்றான்; கற்புக் கனலியாகிய சீதா பிராட்டியார் வெகுண்டால், ‘இந்த உலகம் அழிந்து விடுமே! படைப்பாளனாகிய நான்முகனும் அழிந்து விடுவான்! வான்மழை பொய்க்கும்! இப்புவிக்கோள் உடையும்! ஐயனே! சீதா பிராட்டியை ஏற்றருள்க’ என்று வேண்டுகின்றான். தீக்கடவுளின் உரைகேட்ட இராமன் மகிழ்ந்தான். உலகில் தீயே அழிக்க முடியாத சாட்சி! எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் தூய்மையாக இருப்பது தீ! ஆதலால், சீதை ஏற்றுக் கொள்ளத்தக்கவளே என்றான்! இந்த இடத்தில் ‘இனிக் கழிப்பிலள்’ என்று இராமபிரான் கூறியது பூரணமாக மனமாற்றத்தைக் குறித்ததாகத் தெரியவில்லை. அல்லது உணர முடியவில்லை.
‘கழிப்பிலள்’ என்றாரே தவிர, ஏற்றுக் கொண்டதாகக் கூறவில்லை. மீண்டும் நான்முகன் வேண்டுகின்றான். சீதையை இராமன் ஏற்றுக் கொள்கின்றான்.
நெடிய பயணம் நிறைவேறியது
நந்தியம்பதியில் இராமனது பாதுகையைத் தலைமையாகக் கொண்டு ஆட்சி செய்த பரதனிடம் அனுமனை அனுப்புகிறான் இராமன். ஆனாலும் காலம் நீட்டித்து விட்டது.
இராமன் வருகைக் காலத்தை நீட்டித்ததில், பரதனுக்கு வருத்தம். ஏரியில் மூழ்கி மாள நினைத்தான். அனுமன் காலத்தில் தோன்றிக் காத்தான். இராமன் வருகிறான். கோசலநாடு இராமனின் ஆட்சியைப் பெறுகிறது! எங்கும் மகிழ்ச்சி! ஒரு நெடிய பயணம் நிறைவேறியது.
---------------
5. கம்பனின் குறிக்கோள்
மானுடம் உயர்ந்தது
கம்பன் என்றொரு மானிடன் பிறந்த பெருமைக்குரியது தமிழ்நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றான் பாரதி. ஆம்! கம்பன் மானுடத்தைப் பாடிய கவிஞன்! ‘மானுடம் வென்றதம்மா!’ என்று பாடுகின்றான்! கடவுள்கள் வெற்றி பெறுவது அதிசயமன்று. அரசர்கள் வெற்றி பெறுவது அதிசயமல்ல. மனிதன் வெற்றி பெற வேண்டும். இது கம்பனின் குறிக்கோள்! கம்பன் தனது பாத்திரங்களைச் சராசரி மனித உணர்வுகளுடைய பாத்திரங்களாகப் படைத்துள்ளான். போர்க்களத்தில் மாயாஜாலங்கள் பேசப்பட்டாலும் மானுடமே உயர்ந்து விளங்குகின்றது.
மதப் பிணக்குக் கூடாது
கோசல நாட்டிலிருந்து இலங்கை வரையில் இராமன் நடக்கின்றான். எத்தனை எத்தனை வகையான இயற்கைக் காட்சிகள்! அவன் சந்தித்த மனிதர்கள். விலங்குகள், எண்ணற்றவை காவியத்தைப் படித்து முடித்த பிறகு நமக்கு ஏற்படும் உணர்வு கம்பன் ஒரு கவிச்சரவர்த்தி என்பதுதான்! கம்பன் தனது கொள்கை, கோட்பாடுகளைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூற, இராமகாதையைக் கருவியாகக் கொண்டான் என்பதே உண்மை. தமிழக வரலாறு கம்பனை மிகுதியும் பாதித்திருக்கிறது. தமிழ்நாடு சைவ, வைணவச் சண்டைகளில் ஈடுபட்டு வலிமை இழந்ததை உணர்ந்த கம்பன் சமய ஒருமை நலம் கருதி,
“உலகம் யாவையும் தாம் உள வாக்கலும்
நிலைபெறுத்தலும்; நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்–அவர் தலைவர்;
அன்னவர்க்கே சரண் நாங்களே!” (பாயிரம்-1)
என்று பொதுமையாகக் கடவுள் வாழ்த்துப் பாடுகின்றான்.
“அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன்"
என்று உரைக்கும் அறிவி லோர்க்குப்
பரகதி சென்று அடைவரிய பரிசேபோல்” (கம்பன் - 4470)
என்று பேசுவான்.
நன்றியறிதல்
தமிழ் மக்கள் பல்வேறு பண்புகளில் சிறந்திருந்தாலும் நன்றி பாராட்டும் நற்பண்பில் மேலும் வளரவேண்டும் என்பது கம்பனின் விருப்பம். அந்த உணர்வின் தூண்டுதலிலேயே கும்பகருணப் பாத்திரத்தைப் படைக்கின்றான். இராமகாதையில் மிக உயர்ந்து விளங்கும் பாத்திரங்களில் கும்பகருணன் ஒருவன். அறநெறியின் பெயரால், உறவை, உடன்பிறப்பை, பரிவை, பாசத்தைத் துறத்தல் கம்பனுக்கு முழு உடன்பாடன்று. காவியம் முழுதும் மனிதம் மேம்பட்டு நிற்கின்றது. ஏன்? கம்பன் தன் புரவலராக விளங்கிய திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் பெயரை இடம் தேர்ந்து அமைத்து நன்றி பாராட்டுகின்றான். இராமனுக்கு முடி சூட்டும்போது சடையப்ப வள்ளல் மரபினர் மணிமுடியை, எடுத்துக் கொடுக்க வசிட்டர் சூட்டினார் என்பது காவியம். பழங்காலத்தில் முடியெடுத்துக் கொடுக்கும் உரிமை வேளாண் குடியினரிடமே இருந்தது. பின்னர் வணிகர்கள் கைக்கு மாறியது. அடுத்து அடுத்துப் புரோகிதர்கள் கைக்கு மாறியது. கம்பன் காலத்தில் வேளாண்குடி மரபினர் சிறந்து விளங்கியமையை இராமகாதை முழுதும் உய்த்துணர முடிகின்றது.
சகோதர பாசம்
தமிழ்நாடு சிறிய நிலப்பகுதி உள்ள நாடு. ஆயினும் மூவேந்தர்கள், பல சிற்றரசர்கள் இவர்களுக்குள் ஓயாத போர்! தமிழரசர்களின் ஆட்சி மறைந்ததற்குக் காரணம் அந்நியப் படையெடுப்புக்கள் அல்ல. தமிழ்நாட்டு அரசர்கள் தம்முள் பொருதியே அழிந்து போயினர். அதனால் கோசல நாட்டரசிலும் சரி, இலங்கையிலும் சரி, ஆதிக்கப் போட்டிகள் இல்லை என்ற காட்டுகின்றான் கம்பன். கெட்ட போரிடும் கலகம் இரண்டு அரசுகளிலும் இல்லை. இராமகாதையில் பண்பாட்டின் சிகரமாக விளங்கும் பாத்திரம் பரதன். இராமனுடனேயே இருந்தவன் இலக்குமணன். ஆனால், பரதன் இராமனுடன் இருந்த காலம் குறைவே. அந்த நிலையிலும் பரதனின் அன்பு விஞ்சியது. பரதன் இராமன் பால் கொண்ட அன்பு ஆயிரம் இராமன் அன்பிற்கும் மேம்பட்டது. தாயின் ஆணை, தமையன் இராமன் ஆணைகளுக்குப் பின்னும் ஆட்சியை நஞ்சென நினைத்தான்; முடிசூட்டிக் கொள்ள மறுத்தான்; இராமனுக்கே முடி சூட்டுவேன் என்று சூளுரைக்கின்றான். பரதன் பாராட்டப்படும் முறையிலிருந்து பரதனின் தூய அன்பு, துறவுள்ளம், அர்ப்பணிப்பு உள்ளம் வெளிப்படுகின்றது. பரதனைக் கண்ட குகன்,
“ஆயிரம் இராமர் நின் கேழ்
ஆவரோ தெரியின் அம்மா”
என்று பாராட்டுகின்றான். பரதனின் தியாகம், புகழ் இராமனையும் விஞ்சியது! ஆம்! இராமனுக்கு முடிமறுக்கப் பெற்றது! அதனால் துறந்தான்! ஆனால் பரதனுக்கு முடி வழங்கப் பெற்றது. பரதன் ஏற்க மறுத்துத் துறந்தான். ஏன்? இராமனே பரதனைச் சிந்தை மகிழ, செவி குளிரப் பாராட்டுகின்றான். உடன் பிறந்து, உடன் பயின்று, உடன் விளையாடிக் காட்டுக்கும் உடன் வந்திருந்த இலக்குமணனிடம் இராமன் பரதனின் பெருமையைப் பாராட்டிக் கூறுகின்றான்.
‘எத்தாயர் வயிற்றிலும் பின் பிறந் தோர்கள் எல்லாம்
ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ?’
என்று பாராட்டுகின்றான். ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள். அனைவரும் ஒத்து இருப்பதில்லை. பங்காளிச் சண்டை, பங்காளிக் காய்ச்சல் என்றெல்லாம் வழிவழியாக வழக்கில் வந்துள்ளன. உடன்பிறந்தாரைப் பேணார். தம்பிகளிடத்தில் அன்பு காட்டார்! ஆனால், கடவுளுக்கு ஆயிரம் ஆயிரம் பூசைகள் செய்வர்.
“பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பன் அவர் தம்மை நாணியே”
என்பது அப்பர் வாக்கு! பரதன் மூலம் கம்பன் நம்மனோர்க்கு உணர்த்துவது செல்வம் பெரிதன்று, உடன் பிறப்பு அன்பே பெரிது பெறுதலுக்குரியது; காட்டுதலுக்குரியது என்பதாகும். பரதனைப் போல் பல உத்தமர்கள் தோன்ற வேண்டும். அப்போதுதான் குடும்பங்கள் அமையும்! சுற்றம் அமையும்.
வறுமை நீங்க வேண்டும்
கம்பன் தன் நெடிய காவியத்தில் வாழ்க்கை நெறிகளை அமைவாக உணர்த்திச் செல்கின்றான்.
ஏழையாக இருப்பது பாவமன்று! ஏழ்மையைத் துன்பமாக, துயரமாக வளர்த்துக் கொள்வது தீது, ஏழ்மையின் காரணத்தை அறிந்து கொண்டு அறிவார்ந்த நிலையில் மாற்ற முயற்சி செய்தால் ஏழ்மை மாறும்! முயன்றால் ஏழைகளால் எதையும் செய்ய இயலும். ஏழைகளால் செய்ய இயலாதது என்ற ஒன்று இல்லை. பாரதி,
“கஞ்சி குடிப்பதற் கில்லார்–அதன்
காரணங்கள் இவை யெனும் அறிவு மில்லார்”
என்று கூறியதுபோல், இன்றைய ஏழைகள் கஞ்சியில்லாமல் இருப்பதற்குரிய காரணத்தை அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொள்ளாதது மட்டுமன்று, தங்கள் ஏழ்மைக்குக் கடவுளும் விதியும் காரணம் என்று பிழை படக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. அண்ணல் இராமபிரான், இலக்குவன் அமைத்த பர்ணசாலையைக் கண்டு வியந்தபோது,
“தா இல் எம்பிகை சாலை சமைத்தன
யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே.” (கம்பன்-2095)
என்று கூறுவதை உணர்க!
நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இந்தத் துணிவு வரவேண்டும். வரவழைக்கப் படவேண்டும். அன்றே நமது நாடு வளரும். இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதனும் தற்சார்புடைய பொருளாதார வசதி பெறுதல் வேண்டும். சார்ந்து வாழ்தல் தீது, சுரண்டும் பொருளாதாரச் சமுதாயம் அறவே கூடாது. நாடும் நாடா வளத்தனவாக வளர வேண்டும். அந்நிய மூலதனத்தின் சந்தை நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு இல்லை. அந்நிய மூலதனம் ஊளைச் சதை போலத்தான்! ஆதலால், கம்பனின் கருத்துப்படி ஏழ்மை அழிவுக்குரியதல்ல; ஆக்கந்தரும் உந்து சக்தி என்பதை ஓர்க!
தொண்டலால் ஊதியமில்லை!
மனிதகுல வரலாறு இடையறாது வளரத் துணையாய் அமைவது தொண்டு. பேசுதல் எழுதுதல் ஆகியவற்றைவிடத் தொண்டு செய்தலே உயர்ந்தது. இதனைக் 'கைத்திருத் தொண்டு' என்பார் சேக்கிழார். சிவமும், கைத்திருத்தொண்டு செய்த அப்பரடிகளுக்கு வாசியில்லாத காசு தந்தருளிய பான்மையை உணர்க! அப்பரடிகள், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றும் தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை என்றும் அருளிச் செய்ததையும் உணர்க.
கம்பன், இராமன் வாயிலாகத் தொண்டு பற்றிக் கூறும் கருத்து, பலகாலும் படித்துணரத் தக்கது. செல்வத்திற்கு வரம்பு உண்டு. எண்ணியபடி செல்வம் வருவதில்லை. வந்தாலும் நிற்பதில்லை. தொண்டுக்கு வரம்பில்லை. தொண்டு செய்யச் செய்ய மேலும் மேலும் விருப்பம் தூண்டப்பெறும். ஆர்வம் வளரும். இந்த உலகத்தில் உடலுக்குத் தரப்பெறும் உணவு, தற்காலிகமாகப் பசியைத் தணிக்கும். ஆனால், மீண்டும் பசிக்கும் உணவுக்குப் பயன்படுவது கூலி. ஊதியம்! உண்ட உணவு அன்றாடம் கழிப்பறைகளைத் தூர்க்கும் வாழ்க்கை, முடிவில் இடுகாட்டில் கிடக்கும். ஆனால், தொண்டும் தொண்டின் பயனும் உயிர்க்கு ஊதியமாவனவாம். ஊதியம் உயிர்க்கு ஊதியம். கம்பனின் பாடல் இதோ:
பின்னும் தம்பியை நோக்கி, பெரியவன்
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு; இதற்கு
என்ன கேடுண்டு? இவ் எல்லை இல் இன்பத்தை
உன்னு ‘மேல் வரும் ஊதியத் தோடு’ என்றான். (கம்பன்-2100)
ஆம்! மானுட வரலாற்றில் இடம்பெற விரும்பினால் தொண்டு செய்ய வேண்டும். இது கம்பனின் வாழ்க்கை நெறி.
யாரொடும் பகை கொள்ளற்க
கம்பன் ‘யாரொடும் பகை கொள்ளக்கூடாது’ என்ற வாழ்க்கை நெறியை வலியுறுத்துகின்றான்.
‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங் காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?’ (கம்பன்-1419)
ஆம்! கருத்து வேற்றுமைகள் வரலாம். உடன்பாடு இல்லாமற் போகலாம்! இவை பகையாக வளர வேண்டும் என்ற அவசியமில்லை! பகைவளரின் கலகம், போர் முதலிய அழிவுச் செயல்கள் நிகழும். கம்பன் உயிர்க்குல ஒருமைப்பாட்டை, ஆன்மநேய ஒருமைப்பாட்டை உணர்த்துகின்றான். இராமன் காட்டிற்கு வந்த இடத்தில் அவனுடன் உடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை ஏழு ஆயிற்று.
‘குகனொடு ஐவர் ஆனேம்
முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகழ் அருங் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை! (கம்பன்-6507)
என்ற பாடலை ஓர்க. இன்று, பல நாள் பழகினாலும் உடன்பிறப்பாளரை, உறவினரைத் தேர்ந்தெடுக்க இயலாத நிலையில் அன்பு ஊற்று—சுயநலத்தால், ஆணவத்தால் தூர்ந்து கொண்டு வருகிறது. இந்த நிலை, நமது சமுதாயத்திற்கு நல்லதன்று. பகையைத் தவிர்க்கும்படி கம்பன் அறிவுறுத்துகின்றான். பகைமையைத் தவிர்த்தால் ‘போர் ஒடுங்கும்’ என்பது கம்பன் கருத்து. போர் ஒடுங்குவதால் பாருக்கும் புகழ் குறையாது என்றும் உறுதி கூறுகின்றான். மக்களுக்குள் அடிக்கடி சண்டை வீடுகளுக்குத் தீ வைப்பு! பேருந்துகளுக்கு நெருப்பு கொலை, கொள்ளை இவை ஏன்? ஏன்? வலிமையைக் காட்ட விரும்புகின்றார்கள்! வறுமையை, புன்மைச் சாதிகளை எதிர்த்துப் போராடுவதில் வலிமையைக் காட்டலாமே! ஆற்றலை, அடுத்தவனைக் கெடுப்பதற்குப் பதில், அடுத்தவனிடம் காட்டுவதற்குப் பதில், தரிசு நிலங்களைப் பசுமைப் புரட்சி செய்வதில் காட்டலாமே! நல்லதற்காகப் போர் என்று கூறுவது கூடச் சமாதானம்தான்! நல்லதை அமைதி வழியாகவும் சாதிக்கலாம். ஆனால் இஃது உண்மையன்று, எந்தப் போரும் சிக்கல்களைத் தவிர்த்ததாக வரலாறு இல்லை! போரின் மூலம் சிக்கல்கள் வளர்ந்துள்ளன. அது மட்டுமா? மனிதர்களிடையில் வஞ்சினமும் கடின சித்தமும் தோன்றி வளர்ந்து வருகின்றன. வரலாறு திரும்புகிறது. என்பது அறிவார்ந்த நிலையன்று. வரலாற்றி லிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு வரலாற்றைப் புதுப்பிப்பதே வாழும் மாந்தர் கடமை. வரலாறு திரும்பத் திரும்ப வருதல் சிந்தனையும் செயலுமற்ற மாந்தர் வாழும் உலகத்தில்தான் நிகழும். நமது நாட்டைப் பொருத்த வரையில் வரலாற்றில் மாற்றம் இல்லை! பல நூறு ஆண்டுகளாக மாற்றம் இல்லை! கம்பனை, காலத்தை வென்றெடுக்கும். கவிஞனாக்க வேண்டும். அதற்குள்ள ஒரே வழி கம்பன் கண்ட நாட்டை, ஆட்சியைக் காண்பதுதான்!
போரற்ற உலகம்
இன்று போரற்ற உலகம் தேவை. படைக்கலன்கள் குறிப்பாக அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும்; தடை செய்யவேண்டும். உலக நாடுகளவை (ஐ.நா.சபை) உண்மையிலேயே உலக நாடுகளின் அவையாக விளங்க வேண்டும். உலக நாடுகளின் அவையில் உள்ள நாடுகள் சிறியதாயினும் பெரியதாயினும் தைரியத்துடனும் உறுதியுடனும் வல்லரசுகளுக்குப் பயப்படாமல் வாக்களிக்கும் நிலைமையை உருவாக்க வேண்டும். வரலாறு கொடிய போர்களைக் கண்டு, பல கோடி மக்களைப் பலி கொடுத்தாயிற்று. பல நூறு ஆண்டுகள் உழைப்பினால் உருவான உடைமைகளை, சொத்துக்களை இழந்தாயிற்று! இனி போர் வந்தால் மனிதப் பூண்டே இருக்காது. பழைய கற்காலத்திற்குச் செல்ல வேண்டியதுதான்! ஆதலால், போரினைத் தவிர்க்க வேண்டும். பேரரசுகள், சிறிய நாடுகளை பொருளாதார ஆதாயத்தைக் காட்டித் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்யக் கூடாது. எந்த ஒரு நாட்டிலும் எதற்காகவும் காந்திய நெறியில்— அறவழியில் போராட வேண்டுமே தவிரப் படை அடிப்படையிலும் வன்முறையிலும் போராடுவதை ஊக்குவிக்கக் கூடப் போரினை நினைவூட்டும் திருவிழாக்களை நிறுத்திவிடுவது நல்லது. பள்ளிகளில், கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி முதலியவற்றுடன் பண்பாட்டுப் போட்டி, சண்டை போடாமைப் போட்டி ஆகிய போட்டிகள் வைத்து மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கலாம்.
சங்க காலத்திலேயே— அதாவது போர் செய்வது அரசனின் ஒழுகலாறு என்று இருந்த காலத்திலேயே ஔவையார், அதியமான்—தொண்டைமானின் போரைத் தவிர்க்கத் தூது போனார். ‘சமாதானம் செய்து வைப்பவர்கள் பாக்கியவான்கள்’ என்று சமய நூல்கள் அனைத்தும் ஒரு முகமாகக் கூறும்.
கம்பன் இராமகாதை வாயிலாக இராவணனின் உறவுச்சுற்றம் மூலமாகப் போரைத் தவிர்த்திருக்கும்படிக் கூறுகின்றான். இராமனுக்குப் போர் இலட்சியமன்று. சீதையை மீட்பதுதான் இலட்சியம்! சீதையை இராவணன் விடுதலை செய்திருந்தால் இராவணன், சீதையை நினைத்ததும், எடுத்ததுமாகிய குற்றத்தை இராமன் மன்னித்திருப்பான் என்று மாலியவான் கூறுகின்றான். ஆனால், இராவணன் மறுத்துவிட்டான்.
தமிழில் வழங்கும் ஒப்பற்ற காவியங்களாகிய இராமகாதை பெண்ணின் காரணமாகவும், பாரதம் நிலத்தின் காரணமாகவும், கந்தபுராணம் ஆதிக்கத்தின் காரணமாகவும் நடந்த போர்களைக் கூறுகின்றன. இராம—இராவணப் போரில் இராவணன் இராமனால் கொல்லப்பட்டான்! பாரதப் போரில் துரியோதனாதியர் அழிந்து போயினர். கந்த புராணத்தில் சூரபதுமன் திருத்தப்பட்டு வாழ்விக்கப் படுகின்றான்.
அழித்தல் அறமன்று, திருத்தப்படுதலும் வாழ்விக்கப்படுதலுமே அறம். தமிழ் மரபு, ‘ஆழ்க தீயதெல்லாம்’ என்பது தான். இந்தக் கந்தபுராண மரபு பின்பற்றப் பட்டால் போர் ஒடுங்கும்; புவி வளரும். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு போர் வராமைக்குக் காரணம் அச்சமேயாம்—அறிநெற சார்ந்த எண்ணத்தினால் அன்று. வீட்டையும் நாட்டையும் அமைதியில் நடத்துக!
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்பதும்,
“காக்கை குருவி எங்கள் சாதி–நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்”
என்பதும் நமது மந்திரங்களாகட்டும்; வாழ்க்கை நெறியாகட்டும்! வளர்க! வாழ்க!
✽✽✽
தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
குன்றக்குடி என்றாலே யார்க்கும் நினைவுக்கு வரும் குன்றுதோறாடும் குமரப்பெருமான் நினைவோடு தம் பெயரையும் பிரிக்க முடியாமல் இணைத்துக் கொண்ட பெருந்தகை அடிகளார் அவர்கள்.
மர யானையில் மரத்தைப் பார்க்கிறவர்களுக்கு மரம் மட்டுமேயும் யானையைப் பார்க்கிறவர்களுக்கு யானையே தெரிவது போலவும், சமயவாதியாகப் பார்ப்பவர்களுக்கு, அவர் திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்; அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு, அவர் சட்டமேலவை உறுப்பினராய் அருந்தொண்டாற்றியவர்; இலக்கியக் கண்ணோடு பார்ப்பவர்களுக்கு, திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அளவுக்கு குறளுக்கு புத்தம்புது உரைகள் கண்ட இலக்கியச் செல்வர்; சமுதாயக் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு, அவர் தம் உற்ற நண்பர் பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்களைச் செயற்படுத்தும் சமயப் புரட்சி வீரர்; கிராமநலம் விரும்புவோர்க்கு ‘குன்றக்குடி திட்ட மாதிரி’ என்ற பெயரில் ஒரு புரட்சிகரமான வளமையான கிராம அமைப்பை உருவாக்கி, அதற்காக தேசிய விருது பெற்ற சமூகத் தொண்டர்; அறிவியல் கண்ணோடு பார்ப்பவர்களுக்கு, அவர் தேசிய மின் வேதியியல் கழகத்தோடு இணைந்து சுதேசி அறிவியல் இயக்கத்தை கிராமங்களில் பரப்பி, அதற்காக தேசிய விருது பெற்ற அறிவியல் நிபுணர். இப்படித் தொட்ட துறையில் எல்லாம் மேதாவிலாசம் உடையவராய்த் திகழும் ஓர் இலக்கிய அறிவியல் புரட்சியாளர்.
முப்பத்து ஐந்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களுக்கு ஆசிரியரும், ‘அறிக அறிவியல்’ என்ற மாத அறிவியல் இதழின் ஆசிரியருமான இவர், அண்ணாமலை பல்கலைக் கழகத்தால் சிறந்த தமிழ் அறிஞர், என்பதற்காக கெளரவ முனைவர் பட்டம் வழங்கப் பெற்று கெளரவிக்கப் பெற்றார்.
கேட்டார் பிணிக்கும் தகையவராய், கோளரும் வேட்ப மொழியும் சொல் நயம் மிக்க அடிகளார் சுவை பிலிற்றும் தேனும், சுகந்த மணமும் நிறைந்த ஒரு ஞானத்தமிழ்க் கவின்மலர் ஆவார்.
----------------
This file was last updated on 27 April 2021.
Feel free to send the corrections to the webmaster.