ஒட்டக்கூத்தர் இயற்றிய
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
kulOttungkan piLLaittamiz
by oTTakkUttar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Saraswathi Mahal Library, Thanjavur, India for providing a scanned PDF of this work.
Our sincere thanks go to Dr. Mrs. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the
preparation of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஒட்டக்கூத்தர் இயற்றிய
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
Source:
ஒட்டக்கூத்தர் இயற்றிய
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
பதிப்பாசிரியர் : வித்துவான் T. S. கங்காதரன் M.A., திருவையாறு
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின்
சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்
2014
விலை : ரூ.160
தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீட்டு எண் : 154
-----------------
நூற்பதிப்பு விளக்கக் குறிப்பு
நூற்பெயர் : குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
பதிப்பாசிரியர் : வித்துவான் T.S.கங்காதரன், எம்.ஏ.,
வெளியிடுபவர் : இயக்குநர், சரசுவதி மகால் நூலகம்
வெளியீட்டு எண் : 154
மொழி : தமிழ்
பதிப்பு : இரண்டாம் பதிப்பு
வெளியீட்டு நாள் : ஜூன் - 2014
பக்கங்கள் : 178
படிகள் : 500
அச்சிட்டோர் : சிவகாசி பிரஸ், ரயிலடி, தஞ்சாவூர் - 1.
புத்தகக்கட்டு : மல்டிகலர் ஆர்ட் போர்டு
பொருள் : இலக்கியம்
விலை : ரூ.160
------------------------------
பொருளடக்கம்
தலைப்பு
பிள்ளைத்தமிழின் தோற்றம்
பாடினோர் வரலாறு
பாடப்பட்டோன் வரலாறு
குலோத்துங்கன் மரபு
இரண்டாம் குலோத்துங்கன் - மெய்க்கீர்த்திகள்)
நூலாராய்ச்சி
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் - பாட்டும் குறிப்புரையும்
பிற்சேர்க்கை
பாடல் முதற்குறிப்பு அகரவரிசை
அருஞ்சொற்பொருள் முதலியவற்றின் அகரவரிசை
----------------------------------------------------
வெளியீட்டாளர் முகவுரை
பைந்தமிழ்ச் சுவடிகள் உள்ளிட்ட பன்மொழிச் சுவடிகளின் கருவூலமாகவும், களஞ்சியமாகவும் சரசுவதி மகால் நூலகம் திகழ்கின்றது. இந்நூலகத்தை அணி செய்யும் சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கணம், இலக்கியம், சமயம், கணிதம், சித்த மருத்துவம், சோதிடம் முதலிய பொருண்மையின் அரிய நூல்களை பதிப்பித்து வெளியிடும் அரும் பணியை சரசுவதி மகால் நூலகம் தொடர்ந்து ஆற்றி வருகின்றது. அவ்வரிசையில் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் என்னும் இந்நூல் தற்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.
பிற்காலத்தெழுந்த சிறு நூல்கள் பிரபந்தம் என்று பெயரிடப்பட்டன. அண்மைக் காலத்தில் அவை 96 என்று வரையறுக்கப்பட்டன. அவற்றுள் முதலாவதாக எண்ணப்படுவது பிள்ளைத்தமிழ். ஏனைய பிரபந்தங்களை விடப் பிள்ளைத்தமிழ் நூல்களே தமிழில் மிகுதியாக உள்ளன. இவை பெரும்பாலும் ஆண்பாற் கடவுளரைப் பற்றிய தலங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. சிறுபான்மை பெண்பாற் கடவுளரைப் பற்றிய தலங்களை ஒட்டி இயற்றப்பட்டன. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலாண்ட இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. பிள்ளைத்தமிழ் இலக்கணம் புலவர்களால் நன்கு வரையறுக்கப்பட்ட காலத்துக்கு முந்தியதாகிய இந்நூலில் சில வரையறைகள் பின்பற்றப்படவில்லை. இந்நூலை சிறப்பாகப் பதிப்பித்த சிறப்புக்கேண்மை பதிப்பாசிரியர் திரு. T. S.கங்காதரன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
இந்நூல் வெளிவரத் தேவையான நிதியுதவி நல்கிய அரசுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நூல் சிறப்புற வெளிவர ஆவன செய்துள்ள சரசுவதி மகால் நூலக நிருவாக அலுவலர் (பொ.) திரு. ம. சங்கரநாராயணன் B.A., அவர்களுக்கும், நூலகர் முனைவர் எஸ்.சுதர்ஷன் M.A., B.Lit., M.L.I.S., Ph.D., அவர்களுக்கும் மற்றும் நூலகப் பணியாளர்களுக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிள்ளைத்தமிழ் இலக்கிய வரிசையில் இந்நூலும் அரிய ஒன்று என்பதில் ஐயமில்லை .
டாக்டர் என்.சுப்பையன் இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் இயக்குநர்,
சரசுவதி மகால் நூலகம்.
தஞ்சாவூர் 03.06.2014
---------------
பதிப்பாசிரியர் முன்னுரை
பிற்காலத்தெழுந்த சிறுநூல்கள் பிரபந்தம் என்று பெயரிடப்பட்டன. அண்மைக்காலத்தில் அவை 96 என்று வரையறுக்கப்பட்டன. அவற்றுள் முதலாவதாக எண்ணப்படுவது பிள்ளைத்தமிழ். ஏனைய பிரபந்தங்களை விடப் பிள்ளைத்தமிழ் நூல்களே தமிழில் மிகுதியாக உள்ளன. இவை பெரும்பாலும் ஆண்பாற் கடவுளரைப் பற்றித் தலங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. சிறுபான்மை பெண்பாற் கடவுளரைப் பற்றித் தலங்களை ஒட்டி இயற்றப்பட்டன. சில பிள்ளைத்தமிழ் நூல்கள் சான்றோர், அரசர், வள்ளல்கள் ஆகியோர் மீது பாடப்பட்டன. பத்துப் பத்துப் பாடல்களையும் பத்துப் பருவங்களையும் உடைய பிள்ளைத்தமிழ் நூல்களில் முதல் ஏழு பருவங்கள் இருபாலாருக்கும் ஒப்பன. இறுதி மூன்று பருவங்கள் ஆண்பாற்குச் சிறுபறை, சிற்றில், சிறுதேர் எனவும், பெண்பாற்குக் கழங்கு, அம்மானை, ஊசல் எனவும் அமைவன. கழங்கை விடுத்து நீராடலைச் சேர்த்தலும் உண்டு. காப்புப்பருவம் பதினொரு பாடல்களாக அமையும். திருமாலே முதலில் பாடப்படுவான்.
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகு தியிலாண்ட இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. பிள்ளைத்தமிழ் இலக்கணம் புலவர்களால் நன்கு வரையறுக்கப்பட்ட காலத்துக்கு முந்தியதாகிய இந்நூலில் சில வரையறைகள் பின்பற்றப்படவில்லை.
இந்நூலினைத் தஞ்சைச் சரசுவதிமகால் நூல்நிலையச் சுவடியோடு, உ. வே. சாமிநாதையர், ரா. ராகவ ஐயங்கார், சர்க்கரை ராமசாமி புலவர் முதலியோற்பால் தாம் கேட்ட பாட வேறுபாடுகளையும் குறிப்புக்களையும் நாற்பது ஆண்டுகளுக்கு முன் பெரும் புலவர் உலகநாத பிள்ளையவர்கள் அச்சிட்ட நூலையும் கொண்டு, முன்னுரை, நூலாராய்ச்சி, உரைக்குறிப்பு முதலியவற்றுடன் செய்யுட்களைச் சந்திபிரித்துப் பதிப்பித்தல் வேண்டும் என்று அந்நூல் நிலையக் கௌரவ காரியதரிசி முதுபெரும் புலவர் நீ. கந்தசாமி பிள்ளையவர்கள் எனக்கு ஆணையிட்டார். அச்சுப் புத்தகத்தில் காணப்படும் பிழைகளை நீக்குமளவிற்குச் சுவடிகள் பெரும்பயன் தரவில்லை. ஏறத்தாழப் பதினைந்து பாடல்கள் சிதைந்துள்ளன. எஞ்சிய பாடல்களில் சில, உண்மை காண இயலாத வகையில் பிழைபட அமைந்துள்ளன. ஆயினும் என் அறிவிற்கு எட்டிய வகையில் பிள்ளைத் தமிழின் தோற்றம், இந்நூலைப் பாடினோர் வரலாறு, இந்நூலால் பாடப்பட்டோன் வரலாறு, நூலாராய்ச்சி, உரை விளக்கக் குறிப்புக்கள், அருஞ்சொல் அகராதி முதலியவற்றை வரைந்து இந்நூலைப் பதிப்பிக்கத் தொடங்கினேன். சில சொற்றொடர்களுக்கு ஓரளவு உரை எழுதியுள்ளேன்.
இவ்வரிய நூலினைப் பதிப்பித்தற்கு வாய்ப்புத்தந்த தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதிமகால் நூல் நிலையத்தார்க்கும், இந்நூலை நன்முறையில் அச்சிட்டளித்த திருச்சிச் சேவா சங்க அச்சகத்தாருக்கும் நன்றி செலுத்தி, இறைவன் திருவடிகளை வணங்கி அமைகிறேன்.
46, மேலமடவளாகம், திருவையாறு T. S. கங்காதரன்
31-5-73.
-----------------------------
பிள்ளைத்தமிழின் தோற்றம்
இறைவனுடைய படைப்புக்கள் பலவற்றுள்ளும், மன அறிவு பெற்றுக் கற்பனைத்திறம் அமையப்பெற்று, உள்ளத்திற்பட்ட செய்திகளை ஓராற்றான் மொழி வாயிலாக வெளியிடும் ஆற்றல் பெற்ற மனிதப்படைப்பே மிக மேம்பட்டது என்பதை எல்லோரும் அறிவர்.
ஏனைய உயிரினங்களின் குழவிப்பருவத்தை விட மனிதனுடைய குழந்தைப்பருவமே, நீண்ட காலவரையறையை உடையதாய், எல்லோரும் சாலவும் சுவைத்து இன்புறத்தக்கதாக அமைந்துள்ளது. மூன்றாண்டளவு நீண்டுள்ள குழந்தைப்பருவத்தினராகிய மக்கள் பெற்றோருக்கும் மற்றோருக்கும் மகிழ்வூட்டுகின்றனர். மக்கள் இல்லாத மனை பொலிவற்றுக் காணப்படும் என்ற செய்தி,
‘தொக்கிள மலர்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிரி விலாத அந்தியும்
மக்களை இலாததோர் மனையும் ஓக்குமே '
[சூளா. மந்திர 175]
என்ற பாடலில் உவமவாயிலாக விளக்கப்பட்டுள்ளது.
ஏனைய செல்வங்கள் யாவும் நிரம்பப்பெற்றவர் தம் வாழ்க்கை மக்கட்செல்வம் இல்லையேல் பயனற்றதாகும் என்ற செய்தி, அறிவுடைநம்பியின் புறப்பாட்டில் விளக்கப்பட்டுள்ளது.
‘படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருந் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைதாம் வாழு நாளே ' [புறநா-188]
என்ற பொருள் மொழிக் காஞ்சித் துறைப் பாடல் அது.
‘பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்(று)
என்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில்
புக்களையும் தாமரைகை பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர் '
என்ற நள வெண்பாப் பாடலும் இக்கருத்தை வலியுறுத்துகிறது.
ஈன்று புறந்தரும் தாய் மக்களிடத்துக் கொள்ளும் அன்பு தலையாயது.
'தாய்முலை தழுவிய குழவி போல' (பட், 95) என்ற தொடரை நோக்குக.
'தாய் சிற்சில காலையில் வெகுண்டு தன் குழந்தையை அலைத்தலும் உண்டு. அந்நேரத்தும் குழந்தை 'அம்மா' என்று தாய் பெயரைக் கூறியே அழும். ஒறுத்தாலும் குழந்தைக்குப் பற்றுக்கோடு அதன் தாயே. அதுபோல, வெகுளினும் இத் தலைவிக்கு நீயே பற்றுக்கோடு என்று தோழி தலைவற்கு ஓம்படை சாற்றுவதாக அமைந்த குறுந்தொகைப் (397) பாடலடிகள்,
'தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட்டு
அன்னா யென்னும் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின் வரைப் பினள் என் தோழி'
குழந்தைக்குள்ள தாய்ப்பாசத்தை உவமமாகக் காட்டிச் சிறப்பிக்கின்றன.
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடிய பாடலில்
‘ஈன்றோள் நீத்த குழவி போலத்
தன்னமர் சுற்றம் தலைத்தலை இனைய' புறநா- 230
‘எம் தலைவியின் நலத்தைப் புதுவதாக நுகர்ந்துவைத்தும், நீ அறிந்தனையல்லை. ஆதலின், உள்ளம் வருந்தி குற்றமற்ற கற்பினையுடைய மடவாளொருத்தி தன் குழவியைப் பலிகொடுப்ப வாங்கு தலும் அவள் அதனைக் கைவிட்டாற் போல, எம்முடன் வளர்ந்து வந்த நாணத்தையும் விட்டொழிந்தோம், என்று வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாய அறிவுடை நம்பியின்
‘பூவின் அன்ன நலம்புதி துண்டு
நீ அறிந் தனையே அன்மையின் யாமே
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி
மாசில் கற்பின் மடவோள் குழவி
ஓய்ய வாங்கக் கைவிட் டாங்குச்
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்க இவ் வூரே ' நற்-15
நற்றிணைப் பாடல் தன் குழந்தையைப் பிரிதற்கண் தாய்க்கு உள்ள துயரை உவமை வாயிலாக விளக்குதலும் காண்க.
‘பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு' என்ற பாடமும் உண்டு. வந்த விருந்தினரைத் தம் குழந்தைகளைக் கொண்டு முறைப் பெயரிட்டு அழைப்பச் செய்து மகளிர் விருந்தோம்பும் திறம்,
‘தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப’ சிறு பாண்-192
‘நறுமல ரணிந்த நாறிரு முச்சிக்
குறமக ளாக்கிய வாலவிழ் வல்சி
அகமலி உவகை ஆர்வமொடு அளைஇ
மக முறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் '
மலைபடு-182.5
என்ற பாடலடிகளில் காண்கிறோம்.
பொதுவாகத் தாய்ப்பாசம், குழந்தைப்பாசம், மக்கட் செல்வம், அச்செல்வத்தால் இல்லறம் சிறத்தல் என்பன பற்றிச் சிற்சில இடங்களில் குறிப்பிடும் சங்க இலக்கியத்துள், ஆண் பெண் என்ற இருபாற் குழந்தைகளில் ஆண் குழந்தையின் சிறப்பே பரக்கக் கூறப்பட்டுள்ளது. பொதுவாகக் குழந்தை என்று கூற வேண்டும் பல இடங்களிலும், புதல்வன் என ஆண் குழந்தையே சுட்டப்படுவதைக் காண்கிறோம். ஆண் குழந்தைக்கே சிறப்புக் கொடுத்த காலம் சங்ககாலம் என்பதனை உளங்கொளல் வேண்டும்.
உயர் திணையோடு அஃறிணை விரவிய விரவுப் பெயர்களைக் குறிப்பிடும் இடத்திலேயே, அஃறிணைக்கண் பெண்மைக்கு உயர்வு கொடுத்துப் பெண்மை விரவுப்பெயரை முதற்கண் குறிப்பிடும் தொல்காப்பியம், உயர்திணைக்கும் பொதுவான மரபுப் பெயர்களைக் குறிப்பிடுமிடத்து மரபியலில் ஆண்மை மரபுப்பெயரை முற்கூறியே பெண்மை மரபுப்பெயரைச் சுட்டுகிறது. அங்ஙனமே உயர்திணைப் பாற்பாகுபாடுகளைக் குறிப்பிடுமிடத்து, ஆண்பாலைக் கூறிய பின்னரே பெண்பாலைச் சுட்டுகிறது; பொருட் படலத்தில்
'தந்தையை ஒப்பர் மக்களென் பதனால்
அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும் '
தொ. பொ 147.
என மக்கள் - மக - என்ற பொதுப்பெயர்களைக் கூறினும், குறிப்பால் ஆண் குழந்தையையே சுட்டுகிறது.
‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை
மாயப் பரத்தை உள்ளிய வழி' தொ. பொ. 147
என்ற தொடரால் ஆண் குழந்தையையே சுட்டிச் சிறப்பிக்கும் தொல்காப்பியம் பெண் குழந்தை பற்றிய துறை எதனையும் குறிப்பிடவில்லை.
இனி, சங்க இலக்கியத்தில் குழந்தை பற்றி வருகின்ற செய்தியை நிரலே காண்போம்:
பரத்தையரை மணந்து வந்த தலைவற்குத் தோழி வாயில் மறுத்து 'ஊரனே! நீ பரத்தையரை எம் இல்லத்துக் கொணர்ந்து குலமகளிரைப் போல மணம் செய்து கொண்டாலும், அவர்கள் மனத்தில் உண்மையன்பினைக் காண்டல் இயலாது. அவர்கள் புதல்வியரையும் புதல்வரையும் பெற்றெடுத்துக் கற்புக்கடம் பூண்டு எம்பக்கத்தில் அமர்தலும் இயலாது' என்ற கருத்தில் பாடப்பட்ட
‘யாணர் ஊர! நின் மாணிழை மகளிரை
எம்மனைத் தந்து நீ தழீ இயினும் அவர்தம்
புன்மனத் துண்மையோ அரிதே அவரும்
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்போடு
எம்பா டாதல் அதனினும் அரிதே' நற் - 330
என்ற நற்றிணைப்பாடலடிகள், ஆண் பெண் என்ற இருபாற் குழந்தைகளைப் பெற்று இல்லறம் நடத்தும் குலமகளிரின் சிறப்பைப் புலப்படுக்கின்றன. சங்க இலக்கியத்துள் இப்பாடல் போன்று இருபாற் குழந்தைகளையும் சுட்டி அமைந்த பாடல்களைக் காண்பது அரிது. மக்கட்செல்வம் என்பது பெரும்பாலும் ஆண் மக்கட்செல்வமாகவே அமைந்துள்ளது.
நல்வினையால் செல்வம் மிக்கார்தம் பொன்னணி அணிந்த புதல்வர்கள், அடிக்கும் பக்கத்தில் குருவியின் ஓவியம் வரையப்பட்ட சிறிய பறையினைத் தோளில் மாட்டிக் கோலால் அடித்து ஒலிப்பர் என்பது
‘பெறுமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் பெ
சிறுதோள் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ண கத் தெழுதிய குருவி' நற் - 58
என்ற பாடலடிகளில் காணப்படுகிறது.
காந்தளின் பூங்கொத்தோடு பொருந்திய வாழைப்பூவின் மடலிலிருந்து பெருகிவரும் இனிய நீரைப் பெண் குரங்கு பருகும் செயலுக்கு, புதல்வன், தாய் தன் வாயில் உறுவிக்கும் கொங்கையிலிருந்து பெருகும் பாலை நுகரும் செயல் உவமமாக,
'புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை
முலைவா யுறுக்கும் கைபோல் காந்தள்
குலைவாய்த் தோயும் கொழுமடல் வாழை
அம்மடற் பட்ட அருவித் தீநீர்
செம்முக மந்தி ஆரும் நாட' நற் - 355
என்ற பாடலடிகளில் கூறப்பட்டுள்ளது.
தலைவி தன் முதற் சூலில் ஆண்மகப் பெற்றுத் தன் குடிக்கு உதவி செய்து தனக்கு மகிழ்ச்சியளித்த செய்தியைத் தலைவன் குறிப்பிடும் இடம் ஒன்றில்,
‘நேரிழை, கடும்புடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி
விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப்
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ்வரித்
திதலை அல்குல் முது பெண் டாகித்
துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஒதி' நற்- 370
என்று பேசுவதனைக் காண்கிறோம்.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைவற்கு வாயில் மறுத்ததாக அமையும் பாடலில் ‘எம் ஆடை நெய்யும் நறும்புகையும் அளாவிப் புதல்வற்குத் தீட்டும் மையும் இழுகி மாசுபட்டுள்ளது. கொங்கைகள் பால் சுரப்ப அதனைப் பருகும் புதல்வனைத் தழுவுதலால் எம் தோளும் முடை நாற்றம் வீசும்' என்ற கருத்து,
‘நெய்யும் குய்யும் ஆடி மையொடு
மாசுபட் டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலைத் தீம்பால் பிலிற்றப்
புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மே ' நற் - 380
என்ற அடிகளில் இடம் பெறுகிறது.
பரத்தையிற் பிரிந்த தலைவன், தன் தந்தையின் பெயரனாகிய தன் புதல்வன் பிறந்துள்ள செய்தியைக் கேட்டு, பரத்தையர் அறியாமல், நடு இரவில் கள்வனைப் போலத் தன் புதல்வனைக் காணும் அவாவினால் தன் மனைக்கு வந்த செய்தி,
‘நள்ளென் கங்குல் கள்வன் போல
அகன்றுறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே' நற் - 40
என்ற பாடலடிகளில் காணப்படுகிறது.
தலைவன் தலைவியின் விருப்பப்படித் தன்னுணர்வின்றிச் செயற்படுகிறான் என்று பரத்தை கூறும் கூற்றில், பரத்தை தலைவியைப் 'புதல்வன் தாய்' என்று சுட்டி, அப்புதல்வற் பயந்த சிறப்பினால் தான் தலைவிக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பாகச் சுட்டும் செய்தி,
‘ஊரன்-கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே' குறுந் - 8
என்ற பாடலில் காணப்படுகிறது.
‘தலைவன் பரத்தையர் தொடர்பால் ஏற்பட்ட விளக்கத்தோடு வருதலைக்கண்டு தலைவியின் மனம் சுழலுகிறது' என்று தோழி குறிப்பிடுமிடத்துத் தலைவியைச் ‘சிறுவன் தாய்' என்று குறிப்பிடும் செய்தியை,
‘வாலிழை மகளிர்த் தழீ இய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென
மறுவரும் சிறுவன் தாயே' குறுந் - 45
என்ற பாடலடிகளில் காண்கிறோம்.
தன் மகள் அருகில் படுத்திருக்கவும் அவளை விடுத்துத் தாய் புதல்வனைத் தழுவியபடியே, தன் மகளை விளித்த செய்தி,
‘புலிப்பல் தாலிப் புதல்வற் புல்லி
அன்னாய் என்னும் அன்னையும்' குறுந்-161
என்ற பாடலடிகளில் காணப்படுகிறது.
தன் மகனும் ஆற்றாமையும் வாயிலாகப் புக்குத் தலைவியை அண்மிய தலைவன் தன் மகனைத் தழுவினானாக, தலைவி ஊடல் தீர்ந்து தலைவனுடைய புறத்தைத் தழுவினாள் என்று,
‘பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையின்
புதல்வற் றழீஇயினன் விறலவன்
புதல்வன் தாய் அவன் புறம்கவைஇ யினளே' குறுந்-360
குறுந்தொகைப் பாடலொன்று குறிப்பிடுகிறது.
பொருள் வயின் பிரியக் கருதிய தலைவனிடம் தோழி 'உன்னையே விரும்பித் தங்கியிருக்கும் தலைவியின் முதற்கருவில் தோன்றிய புதல்வனுடைய புன்சிரிப்பைக் காண்பதைவிட, நீ வெளியிடத்துச் சென்று பொருள் தேடிப் பெறும் இன்பம் பெரிதோ?' என்று
‘நின்னயந் துறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறுவரை நாட நீ இறந்து செய் பொருளே' ஐங்குறு -309
குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
கடிமனை சென்று வந்த செவிலித்தாய் உவந்த உள்ளத்தாளாய் நற்றாயிடம் கூறும் செய்தியில், மகனை நடுவில் கிடத்திக் கொண்டு தலைவனும் தலைவலியும் படுத்திருக்கும் செய்தி
‘மறியிடை படுத்த மான்பிணை போலப்
புதல்வன் நடுவண னாக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை' ஐங்குறு-401
என்ற பாடலடிகளில் காணப்படுகிறது.
புதல்வனைத் தழுவிக் கொண்டிருந்த தலைவியின் முதுகினைத் தழுவியவாறு தலைவன் அன்போடு வதிந்த செய்தி,
'புதல்வற் கவை இய தாய்புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை... இனிதால்' ஐங்குறு-402
என்ற அடிகளில் பேசப்படுகிறது.
தன் மகன் புன்சிரிப்போடும் தளர்நடையோடும் சிறுதேர் உருட்டும் அழகினைக் கண்ட தலைவனுடைய உள்ளம் தலைவியிடத்தைவிடப் புதல்வனிடத்து ஈடுபட்ட செய்தியை,
‘புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிதா கின்றே
அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன்னகை பயிற்றிச்
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே' ஐங்குறு-403
என்ற பாடலில் காண்கிறோம்.
புதல்வனுக்குத் தலைவி பால் சுரந்து ஊட்டவும், தலைவன் அவள் முதுகுப்புறத்தைத் தழுவி வதிந்தான் எனவும், புதல்வனைப் பெற்ற தலைவி தன் இல்லத்தில் விளக்கின் ஒளிப்பிழம்பு போல விளங்குகின்றாள் எனவும், தலைவன் தன் புதல்வனைத் தழுவத் தலைவி இருவரையும் தழுவி வதிந்தாள் எனவும், மனைவி அருகிருக்கப் புதல்வன் மழலையோடு தலைவனின் மார்பில் ஊர்ந்து வருங்கால் அவன் பெறும் இன்பம் யாழ் கேட்கும் இன்பத்தினும் மிக்கது எனவும்,
‘வாணுதல் அரிவை மகன்முலை ஊட்டத்
தான் அவள் சிறுபுறம் கவை இயினன்' ஐங்குறு-404
‘ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
மனைக்கு விளக் காயினள்.....புதல்வன் தாயே' ஐங்குறு-405
'புதல்வற் கவைஇயினன் தந்தை மென்மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவையினள்' ஐங்குறு-409
‘மனையோள் துணைவியாகப் புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே
மென்பிணித்து அம்ம பாணனது யாழே' ஐங்குறு-410
என்ற பாடலடிகள் முறையே குறிப்பிடுகின்றன.
தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லின் அவன் புதல்வன் முலைப்பாலுக்கு அழும் நிலைமை ஏற்படும் என்று தலைவியின் இறப்பினை
'ஒண்ணுதல் பசப்பநீ செல்லின்
காதலம் புதல்வன் அழும் இனி முலையே' ஐங்குறு-424
என்ற அடிகள் குறிப்பால் புலப்படுகின்றன.
தலைவன் தலைவியைச் சேணிலத்து நினைக்குமிடத்துத் தன் புதல்வனுடைய தாயாகவே நினைத்தலை,
‘அருந்ததி அனைய கற்பின்
குரும்பை மணிப்பூண் புதல்வன் தாயே' ஐங்குறு - 442
என்ற அடிகளில் காண்கிறோம்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடிய பதிற்றுப்பத்துப் பாடலொன்றில் (57) அச்சேரலாதன் தேவிமார்கள் இளைய துணையாகிய புதல்வர் என்னும் செல்வத்தைப் பயந்தவர் என்று,
‘இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த
ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை
ஒண்ணுதல் மகளிர்' பதிற்-57
என்ற அடிகள் குறிப்பிடுகின்றன.
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடிய பதிற்றுப்பத்துப் பாடலொன்றில் (70) இவன் வேள்வி செய்து தேவர்களையும், வேதம் ஓதித் தெய்வ இருடியரையும், புதல்வரால் குல முன்னோர்களாகிய பிதிரர்களையும் இன்புறுத்தினான் என்பது
‘வேள்வியின் கடவுள் அருத்தினை; கேள்வி
உயர் நிலை உலகத்து ஐயர்இன் புறுத்தினை;
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்' பதிற்-70
என்ற அடிகளால் போதருகிறது.
பெருஞ்சேரலிரும்பொறையை அரிசில்கிழார் பாடிய பாடலொன்றில், அவன் நாடு காவற்குப் பொருந்திய அரசியல் துறை போகிய மேம்பட்ட புதல்வற் பேற்றினால் இவ்வுலகிலுள்ளார்க்கு அரிய கடனைச் செய்து முடித்தமை,
‘காவற் கமைந்த அரசுதுறை போகிய
வீறுசால் புதல்வற் பெற்றனை இவணர்க்கு
அருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப!' பதிற்-74
என்ற அடிகளால் புலனாகிறது.
நல்லழிசியார் பாடிய பரிபாடற் பகுதியில், மகளிர் தத்தம் புதல்வரையும் அழைத்துக்கொண்டு கணவன்மாரோடு வையை நீராட்டயர்ந்த நிகழ்ச்சி,
‘வலஞ்சுழி யுந்திய திணைபிரி புதல்வர்
கயந்தலை முச்சிய முஞ்சமொடு தழீஇத்
தத்தம் துணையோ டொருங்குட னாடுந்
தத்தரிக் கண்ணார் தலைத்தலை வருமே' பரிபா-16
என்ற அடிகளில் காணப்படுகிறது.
தலைவனுடைய பிரிவு தாங்காமல் அழுத கண்கள் புதல்வனைத் தலைவி தழுவிக் கொள்வதனால் ஒரு கால் உறக்கத்தை மேற்கொள்ளுதலும் உண்டு என்பது,
‘அகல நீ துறத்தலின் அழுதோவா உண்கண் எம்
புதல்வனை மெய் தீண்டப் பொருந்துதல் இயைபவால்’ கலி-70
என்ற கலியடிகளில் கூறப்படுகிறது.
'தலைவன் பரத்தைமை காரணமாக ஊடியிருப்பேனாயின், அவன் தன் தந்தைபெயரை முறையாகப் பெற்ற பெயரனாகிய தன் பிள்ளையைத் தழுவிக்கொண்டு பொய்யுறக்கம் உறங்குகிறான். அவன் புதல்வனைத் தழுவிக் கிடப்பதனைக் காணவே என் புலவி நீங்கி விடுகிறது' என்று தலைவி தோழியிடம் கூறும் செய்தி,
‘பகலாண் டல்கினை பரத்த என்றியான்
இகலி இருப்பே னாயின் தான்தன்
முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற
புதல்வற் புல்லிப் பொய்த்துயில் துஞ்சும்.
……………………
அரும்பெறல் புதல்வனை முயக்கம் காண
ஆங்கவிந் தொழியும் என் புலவி' கலி-75
என்ற கலிப்பாவில் இடம் பெற்றுள்ளது.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனை நோக்கி 'எம் புதல்வனைத் தீண்டாதே. அச்செயல் உன் பரத்தையை வெகுளச்செய்யும்' என்று தலைவி கூறும் கூற்று
'அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி
மணிபுரை செவ்வாய்நின் மார்பகலம் நனைப்பதால் .....
சாந்தினால் குறிகொண்டாள் சாய்குவள் அல்லளோ'
'புல்லல் எம் புதல்வனைப் புகலகல் நின்மார்பின்
பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானால்
பூணினால் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ’,
'கண்டேஎம் புதல்வனைக் கொள்ளாதி நின் சென்னி
வண்டிமிர் வகையிணர் வாங்கினன் பரிவானால்
கண்ணியால் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ’,
என்ற பாடலடிகளில் காணப்பெறும். அப்பாடற் சுரிதகம்,
'பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே அவர்வயின் சென்றீ அணிசிதைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து' கலி-79
என்பது. இதன் கண்ணும்
புதல்வன் ஊடல் தீர்க்கும் வாயிலாகப் புலப்படுகின்றமை குறிப்பால் போதரும்.
‘வருக எம் பாக மகன்'
கிளர்மணி ஆர்ப்பார்ப்பச் சாஅய்ச்சா அய்ச் செல்லும்
தளர்நடை காண்டல் இனிது;
ஐய, காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின்
தேமொழி கேட்டல் இனிது;
ஐய, திங்கட் குழவி வருக என யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது;
ஐய, எங்காதில் கனங்குழை வாங்கிப் பெயர் தொறும்
போதில் வறுங்கூந்தல் கொள்வதை நின்னையான்
ஏதிலார் கண்சாய நுந்தை வியன்மார்பில்
தாதுதேர் வண்டின் கிளைபாடத் தைஇய
கோதை பரிபாடக் காண்கும்' கலி-80
என்ற பாடற் பகுதியில், புதல்வனைத் தலைவி அழைத்து அவன் தளர்நடை கண்டு மழலைமொழி கேட்டு அம்புலி காட்டித் தன் காதணியை அவன் இழுப்பதை மகிழ்ந்து, அவன் தந்தையின் மார்பில் பூண்டமாலையை அறுத்து விளையாடும் செயலை வேட்ட செயல் கூறப் படுகிறது.
‘மையற விளங்கிய மணிமருள் அவ்வாய் தன்
மெய்பெறா மழலையின் விளங்குபூண் நனைத்தரப்
பொலம்பிறை யுள் தாழ்ந்த புனைவினை உருள்கலம்
நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர
உருவெஞ்சாது இடைகாட்டும் உடைகழல் அந்துகில்
அரிபொலி கிண்கிணி ஆர்ப்போடு அடிதட்பப்
பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்துக்
காவல்தேர் கையின் இயக்கி நடைபயிற்றா
ஆலமர் செல்வன் அணிகால் பெருவிறல்
போல வரும் என் உயிர்' கலி-81
என்ற பாடற்பகுதியில், புதல்வன் எச்சில் ஒழுக மழலைமொழி பேசி, அணிகலன்கள் அசைய, உடுத்துதல் கழன்ற ஆடை சதங்கை ஒலிக்கும் பாதங்களின் நடையைத் தடுக்க, பால் குடித்தலை மறந்து, முற்றத்துச் சிறுதேர் உருட்டி முருகனைப் போன்ற வனப்போடு வரும் அழகைத் தலைவி சுவைத்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்' கலி-81
எனத் தன் தந்தை பெயரனாகிய புதல்வனைத் தலைவன் தூக்கிக் கொண்டு மகிழ்ந்த செய்தியும் அப்பாடலில் உள்ளது.
‘மைபடு சென்னி மழகளிற்று ஓடைபோல்
கைபுனை முக்காழ் கயந்தலைத் தாழப்
பொலஞ்செய் மழுவோடு வாளணி கொண்ட
நலங்கிளர் ஒண்பூண் நனைத்தரும் அவ்வாய்
கலந்து கண் ணோக்காரக் காண்பின் துகில்மேல்
பொலம்புனை செம்பாகம் போர்கொண் டிமைப்பக்
கடியரணம் பாயாநின் கைபுனை வேழம்
தொடியோர் மணலின் உழக்கி அடியார்ந்த
தேரைவாய்க் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என்
போர்யானை வந்தீக ஈங்கு' கலி-85
இக்கலியில், 'களிற்றின் தலையில் தொங்கும் மூன்றுவடம்போல மூன்று வடம் தலையில் தாழ, கையில் பொன்மழுவோடு வாளைப்பிடித்து, எச்சில் மார்பணிகளை நனைக்க, பொன்யானையோடு, அடிகளில் சதங்கை ஒலிக்க நடந்து. யானைபோல என் உயிராகிய புதல்வன் வருகிறான் ' என்று தலைவி மகிழ்ந்து கூறுதலும்,
'குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்குத்
தந்தை வியன்மார்பில் பாய்ந்தான்' கலி-85
என்று அவன் மலைமீது சிங்கம் பாய்ந்தது போலத் தந்தை மார்பினை நோக்கிப் பாய்ந்து சென்ற செய்தி கூறு தலும் காண்க.
“நாயுடைய முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அயலிதழ் புரையும்
மாசில் அங்கை மணிமருள் அவ்வாய்
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைப்' அகநா-16
பரத்தை தெருவிடைக்கண்டு எடுத்துத் தழுவி மகிழ்ந்த செய்தியைக்காண்கிறோம்.
‘புதல்வற் பயந்த பூங்குழைமடந்தை புதல்வற்றடுத்த பாலொடு தடைஇத் திதலையணிந்த தேங்கொள்வனமுலை, வீங்கமுயங்கலைத்' தான்வேண்டலும், தீம்பால் படுதலைத் தலைவன் அஞ்சி அகலுதலைக்கண்டு,
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாமென'
மெல்லத் தன் மகன் வயின் தலைவி சென்றாள்
என்று அகநானூறு 26 குறிப்பிடுகிறது.
பரத்தையர் சேரியை நோக்கி வதுவை அயர்தலுக்குச் சென்ற தலைவனது தேரினைப் புதல்வன் தடுத்து ஆண்டுச் செல்லாதவாறு செய்ததால்,
'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம்' அகநா-66
என்று தலைவி தன் புதல்வற்பேறு குறித்து மகிழ்ந்த செய்தியையும் காண்கிறோம்.
பரத்தையை ஏசும் தலைமகள் 'எங்களைப்போலப் புதல்வரைப் பெற்றுச் செல்வவளமுடைய மனையில் தலைவன் இல்லாத நாள்களிலும் இல்லறத்தை நல்லறமாகச் செய்யும் கடமை அவளுக்கு உண்டா ?' என்று குறிப்பிடும்
'எம்போல், புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து
நெல்லுடை நெடுநகர் நின் இன்று உறைய
என்ன கடத்தளோ மற்றே' அகநா.176
என்ற அகப்பாட்டடிகளை நோக்குக.
வினை முடித்து மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம்,
'முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத்திங்கள் !
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி
வருகுவை யாயின் தருகுவன் பால் என
விலங்கமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றும்
திதலை அல்குல் எங் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே
கடாவுக! காண்குவம் பாக' அகநா - 54
என்று கூறும் கூற்றில், தலைவன் பிரிந்திருந்த நாள்களிலும் தலைவி தன் மகனுக்கு அம்புலி காட்டி விளையாட்டயர்ந்து மகிழ் பூக்கும் காட்சியைத் திரும்பி வந்த தலைவன் காண்டல் வேட்டமை சுட்டப்பட்டுள்ளது.
தலைவன் வினைவயிற் பிரிந்து மீண்டு வந்தமை தனக்கும் தலைவிக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியைக் குறிப்பிடும்
‘கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்ன ராட்டிக்கு அன்றியும் எனக்கும்
இனிதா கின்றால் சிறக்க நின் ஆயுள் ......
சீர்மிகு குரிசில் நீ வந்து நின்றது வே' அகநா - 184
இத்தோழி கூற்றில், தலைவி புதல்வற் பயந்ததால் புகழ் சிறந்த செய்தி உணர்த்தப்பட்டுள்ளது.
பெண்யானையோடு படுத்துறங்கும் ஆண்யானை மீது யானைக்கன்று ஏறி இறங்கிய செய்திக்குத் தலைவியோடு தங்கிய தலைவனுடைய மார்பில் புதல்வன் ஏறி இறங்கும் செய்தி உவமமாகக் கூறப்பட்டுள்ளது.
‘தோள்தாழ்பு இருளிய குவையிருங் கூந்தல்
மடவோட் டழீஇய விறலோன் மார்பில்
புன்தலைப் புதல்வன் ஊர்புஇழிந் தாங்குக்
கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு
இனஞ்சால் வேழம் கன்று ஊர்பு இழிதரப்
பள்ளி கொள்ளும்' அகநா- 197
என்ற அடிகளை நோக்குக.
பாலைநில மறவர் ஊர்ப் பொதுவிடங்களில் விளையாடும் தம் புதல்வரைக் கள்விலை கொடுப்பதற்காக வீட்டிலிருந்து யானைத் தந்தங்களைக் கொணருமாறு பணித்துப் பணிகொண்ட செய்தி,
‘அரிய லாட்டியர் அல்கு மனை வரைப்பின்
மகிழ்நொடை பெறாஅ ராகி நனைகவுள்
கான யானை வெண்கோடு சுட்டி
மன்றோடு புதல்வர் புன் தலை நீவும்' அகநா - 245
இறந்தோருக்கு நீர்க்கடன் செய்தற்குரிய ஆண்மக்கட் பேற்றினை ஒவ்வொருவரும் விழுச்செல்வமாகக் கொண்டமை. பகைவர் நாட்டினைத் தாக்கும்முன் புதல்வற் பெறாதோர் பாதுகாவலான இடத்திற்குச் செல்லுமாறு செய்தி உய்ப்பதாக,
'தென்புல வாழ்நருக்கு அருங்கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறா அ தீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்' புறநா - 9
கோப்பெருஞ்சோழன் தன்னோடு வடக்கிருக்க வந்த பொத்தியாரைப்
'புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா' புறநா - 222
என்று ஆணையிட்டுப் பின் புதல்வனைப் பெற்றபின் அவர் வர, அவருக்குத் தான் கல்லாகியும் தன் பக்கலில் வடக்கிருக்க இடம் கொடுத்த செய்தி புறநானூற்றில் உள்ளது.
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுடைய பகைமன்னர்கள் தீய நிமித்தங்களையும் தீக்கனவுகளையும் கண்டு மனம் மயங்கித் தம் இறுதி அணிமையில் உள்ளதை உணர்ந்து, தம் செல்வப் புதல்வருக்கு முத்தமிட்டு மனைவிமார்களுக்குத் தம் மனத்துயரம் புலனாகாமல் மறைத்த செய்தி,
‘மையல் கொண்ட ஏமமில் இருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு
எவ்வம் கரக்கும் பைதல் மாக்கள்' புறநா- 41
என்ற பாடலடிகளில் காணப்படுகிறது.
எத்தகைய வெகுளியும் தன் ஆண்மகனைக் கண்ட அளவில் நீங்குதல் மனித இயற்கை என்பதை உட்கொண்டு, ஒளவையார், அதியமான் பகைவரிடம் கொண்ட கோபம், அவனுக்கு அணிமையில் பிறந்த சிறுவனைக் கண்ட போதும் தீர்ந்திலது என்ற கருத்தை ,
‘செறுநரை நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பா னாவே' புறநா - 100
என்ற அடிகளில் தெரிவிக்கிறார்.
என்ற அகப்பாட்டடிகளில் இடம் பெற்றுள்ளது.
குமணனிடம் பெருஞ்சித்திரனார் தம் வறுமையை விளக்கிக் கூறுமிடத்து, வீட்டில் உணவின்மையின் வீட்டை மறந்து வெளியிலேயே விளையாடும் தம் புதல்வன், தம் மனைவியின் பாலற்ற முலையைச் சுவைத்துப் பாலின்மையின் கூழும் சோறும் வேண்டி உணவில்லாத வறுங்கலத்தைத் திறந்து அழும் செய்தியை,
'இல்உணாத் துறத்தலின் இல்மறந்து உறையும்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறு முலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள்ளில் வறுங்கலம் திறந்துஅழக் கண்டு' புறநா-160
என்ற பாடலடிகளில் குறிப்பிடுகிறார்.
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் பாடிய 198ஆம் புறப்பாட்டில்,
'உன்னை ஒத்த உன் புதல்வர் பகைவரை வென்று திறை கவர்ந்து சிறந்த நின் முன்னோரைப் போலக் கண்ணோட்டத்தால் பொலிக. நீ நின் புதல்வர் தம் புதல்வரைக் காணுந்தொறும் விரும்பிய செல்வத்துடன் நீடு வாழ்க' என்ற கருத்தில்
‘நின்னோ ரன்னநின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அருங்கலம் தந்துநும்
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்கஇவர் பெருங்கண் ணோட்டம்;
இவர் பெறும் புதல்வர்க் காண்டொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழினிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை'
என்ற பகுதி காணப்படுகிறது.
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்கிழார் பரிசில் நீட்டித்தமையால் வெறுத்துப் புறப்பட்ட காலத்துப் பாடிய பாடலில்,
‘இல்லெலி மடிந்த தொல்சுவர் வரைப்பில்
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து
முலைக்கோள் மறந்த புதல்வனொடு
மனைத்தொலைந் திருந்தஎன் வாணுதற் படர்ந்தே' புறநா-211
என்ற அடிகள், அப்புலவர் தம் குடும்பத்து வறுமையில் புதல்வன் வறுமையையே பெரிதாக உட்கொண்ட செய்தியை வெளியிடுகின்றன.
வீரன் ஒருவன் இறந்துபட்ட செய்தியைத் தாயங்கண்ணனார்
‘முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே' புறநா-250
என்று குறிப்பிடுமிடத்து, அவன் புதல்வர் தந்தையாகிய செய்தியைத் தனிச் சிறப்பாகச் சுட்டுகிறார்.
போருக்குச் சென்ற வீரன் தேர் மீண்டு வரவில்லையே என்ற செய்தியை எருமை வெளியனார் சுட்டுமிடத்து,
‘புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வன் ஊரும் மாவா ராதே' புறநா- 273
என அவன் புதல்வர் தந்தை ஆயின தனிச்சிறப்பை வெளியிடுகிறார்.
பரிசில் நீட்டித்த நன்மாறனை ஆவூர் மூலங்கிழார் குறிப்பாக வசை பாடுமிடத்தும் ‘நோயில ராக நின் புதல்வர்' புறநா-196 எனப் 'புதல்வர் தம் வாழ்நாள் குறுகுக' எனக் குறிப்பு மொழியால் சுட்டியதனையும் காண்கிறோம்.
ஔவையார் தம் பாடல் அதியமானுக்குத் தன் மக்கள் மழலை போல இன்பம் செய்யும் என்று கூறுமிடத்து, தந்தைக்குக் குழந்தையின் மழலை இன்பம் தரும் என்று பொதுவாகக் கூறாது, தந்தைக்குப் புதல்வர் மழலை இன்பம் தரும் என்று புதல்வரைச் சுட்டியே குறிப்பிடுவது வியப்பைத் தருகிறது.
'யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லும் அன்ன' புறநா - 92
என்ற பாடற் பகுதியை நோக்குக.
சிறுபாணாற்றுப்படை பாண்டிய நாட்டு வருணனையில் கொற்கையைக் குறிப்பிடுமிடத்து, குரங்குகள் குழந்தைகளோடு கிலுகிலி ஆடுதல் வருணிக்கப்படுகிறது. அங்குப் பொதுவாகக் குழந்தைகள் என்ற பெயரின்றிப் புதல்வர் என்ற பெயரே காணப் படுகிறது.
'மகா அர் அன்ன மந்தி மடவோர்
நகாஅர் அன்ன நளிநீர் முத்தம் .......
உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்
தத்துநீர் வரைப்பின் கொற்கை' சிறுபாண் 56-62
என்ற தொடரை நோக்குக.
பெரும்பாணாற்றுப்படையில் சிறுதேர் உருட்டிய புதல்வர் கள் அயர்ச்சி தீரச் செவிலித்தாயரிடம் பாலுண்டு அவரைத் தழுவித் தூங்கும் செய்தி,
‘தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நற்றேர் உருட்டிய புதல்வர்
தளர்நடை வருத்தம் வீட வளர்முலைச்
செவிலியம் பெண்டிர்த் தழீ இப் பாலார்ந்து
அமளித் துஞ்சும்' பெரும்பாண் - 248 - 52
என்ற அடிகளில் விளக்கப்பெற்றுள்ளது.
மதுரைக்காஞ்சியில், வளமனை மகளிர் கணவர் உவப்பப் புதல்வர்ப் பயந்து, பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊறக் குளநீர் அயர்ந்த செய்தி (600-603) விளக்கப்பட்டுள்ளது.
இங்ஙனம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை இவற்றை நோக்கப் பொதுவாகிய மக்கட் செல்வத்தில் ஆண்மக்கட் பேற்றினையே மக்கள் பெரிதும் விரும்பியதும், புலவர்கள் பொதுவாகக் குழந்தையைச் சுட்ட வேண்டிய இடத்துப் புதல்வர் என்ற பெயரால் ஆண் குழந்தையையே சுட்டியதும், புதல்வற்பேறே ஆடவருக்குப் பெருமகிழ்வைத் தந்ததும் புலனாகாநிற்பவும், அந்நூல்களில் தோய்ந்து திருக்குறளுக்கு உரை வரைந்த பரிமேலழகர் புதல்வற்பேறு என்று தலைப்பிட்டதும், பதிற்றுப்பத்தின் 70 ஆம் பாடலை ஒட்டி அதற்கு விளக்கம் எழுதியதும் இக்காலப் புலவருள் சிலருக்கு மாறுபட்ட கருத்தாகத் தோன்றுவது, அக்கால நிலையை இலக்கியங் கொண்டு கணித்துணராமையால் ஏற்பட்ட ஏதமே என்று கருதவேண்டியவராயுள்ளோம்.
சங்கச் செய்யுட்கள் ஆண் குழந்தைகள் சிறுபறை அறைதல், சிறுதேர் உருட்டுதல், அவர்களுக்குத் தாயர் அம்புலி காட்டுதல் என்பனவற்றை எடுத்தியம்புகின்றன.
'சுடர்த்தொடீ இ கேளாய் தெருவில்நாம் ஆடும்
மணற்சிற்றில் காலில் சிதையா ....
நோதக்க செய்யும் சிறுபட்டி' கலி - 51
என்ற கலித்தொகை அடிகள் சிற்றில் சிதைத்தலையும் குறிப்பிடுகின்றன. மேலும் காதற்புதல்வன் புலவி தீர்க்கும் வாயிலார்களில் ஒருவனாக இடம் பெறுகிறான். புதல்வருடைய அருமையை உட்கொண்டே பெருங்காப்பிய இலக்கணத்துள் சிறுவரைப் பெறுதல் பற்றிப் பாடப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகக் கொள்ளப்பட்டுள்ளது. கம்பர் பெருமான் இராமன் முதலியோர் குழந்தைப்பருவ விளையாடல்களைக் கூறாது மிகச் சுருக்கமாக
‘அமிர்துகு குதலையர் அணிநடை பயிலா
திமிரமது அறவரும் தினகரன் எனவும்
தமரமது உடன் வரும் சதுமறை எனவும்
குமரர்கள் நிலமகள் குறைவற வளர் நாள்'
(பால. திரு அவ.125)
என்று தாம் குறிப்பிட்டதனை உட்கொண்டு, இந்திரசித்து இறந்தபோது மண்டோதரி புலம்பிய கூற்றில் அவன் பிள்ளைப்பருவ விளையாடல்களை விளக்கிக் கூறியுள்ளதும் உளங்கொளத் தக்கது. மகளிர் குழந்தைப் பருவச் செய்திகள் இல்லை எனினும், அவர் தம் பேதை பெதும்பைப் பருவச் செய்திகள் சங்க இலக்கியத்தில் அருகி இடம் பெறுகின்றன.
'மகளிர் கழங்கில் தெற்றியாடும்
தண்ஆன் பொருநை' புறநா. 36
என்ற புறப்பாட்டடிகளும்,
‘வையெயிற் றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ
தையின் நீ ராடிய தவந்தலைப் படுவையோ'
‘பொய்தல மகனையாய்ப் பிறர்மனைப் பாடிநீ
எய்திய பிறர்க்கீத்த பயம்பயக் கிற்பதோ'
‘சிறுமுத் தனைப்பேணிச் சிறுசோறு மடுத்துநீ
நறுநுத லவரொடு நக்கதுநன் கியைவதோ' கலி-59
என்ற கலியடிகளும்,
'தாழை வீழ்களிற் றூசல் தூங்கி' அகநா-20
முதலிய அகப்பாட்டடிகளும், சிலப்பதிகாரத்து அம்மானை வரி, ஊசல் வரிப் பாடல்களும் போல்வன பெண்கள் கழங்காடுதல், அம்மானை ஆடுதல், ஊசலாடுதல், நீராடுதல், சிறு சோறு அடுதல், குழமகனைப் பேணல் முதலிய செயல்களை இளம்பருவத்தில் கொண்ட செய்திகளைக் குறிப்பிடுகின்றன. இவையே பிற்காலப் பெண்பாற் பிள்ளைத் தமிழின் இறுதி மூன்று பருவ அமைப்பிற்குக் கருவாக அமைந்துள்ளன.
இனி, சங்ககாலத் தெய்வங்கள் பற்றி நோக்குவோம் :
சங்க காலத்தில் தெய்வங்களின் உருவ வழிபாடு இருந்தது. முல்லை நிலத்துக்கு மாயோன், குறிஞ்சி நிலத்துக்குச் சேயோன், மருத நிலத்துக்கு வேந்தன் என்னும் இந்திரன், நெய்தல் நிலத்துக்கு வருணன் ஆகியவரையே மக்கள் தெய்வங்களாகக் கொண்டு வழிபட்ட செய்தி,
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்' தொ. பொ. 5
என்ற நூற்பா அடிகளால் போதருகிறது. இத்தெய்வங்களையன்றிப் பிற தெய்வவழிபாடும் சங்க காலத்தில் இருந்தது.
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற நூல்களின் கடவுள் வாழ்த்தும் சிவபெருமானைப் பற்றி அமைந்திருத்தலைக் காண்கிறோம். மாயோன் என்ற பெயரில் கண்ணனை வழிபட்ட தமிழ்மக்கள் வாலியோன் என்ற பெயரில் கண்ணனுடைய அண்னாகிய பலதேவனையும் வழிபட்டனர். அப்பலதேவனுடைய வழிபாடும் தமிழகத்தில் சிறந்திருந்தமை பரிபாடலால் போதருகிறது. பலதேவன் 'ஒருகுழை ஒருவன்' எனவும், 'கொடுமிடல் நாஞ்சிலான்' (கலி 36) எனவும் வழங்கப்பட்டான். காமன், சாமன் என்ற தெய்வங்களும் வழிபடப்பட்டன.
‘மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன தூவெள் ளருவி' நற்-32
என்ற நற்றிணை யடிகளையும்,
‘கொடுமிடல் நாஞ்சிலான் தார்போல மராத்து
நெடுமிசை சூழும் மயிலாலும் சீர' கலி-36
என்ற கலியடிகளையும்,
‘ஒருகுழை ஒருவன் போல் இணர்சேர்ந்த மராஅமும்
பருதியஞ் செல்வன்போல் நன ஊழ்த்த செருந்தியும்
மீனேற்றுக் கொடியோன்போல் மிஞிறார்க்கும் காஞ்சியும்
ஏனோன்போல் நிறம்கிளர்பு கஞலிய ஞாழலும்
ஆனேற்றுக் கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்குத்
தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல்' - கலி-26
என்ற கலியடிகளையும் நோக்குக. இக்கண்ணன் பலராமன் தம் திருவிளையாடல்கள் முல்லைக்கலியில் பரக்கக் கூறப்பட்டுள்ளன.
‘கொடிநிலை கந்தழி வள்ளி என்னும்
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே' தொ. பொ. 88
என்ற தொல்காப்பிய நூற்பா சூரியன், சந்திரன் இவர்களைத் தெய்வமாகக் கொள்கிறது. 'ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம் ....... உயர்திணை மேன'. (தொ. சொ. 58.ந) என்ற பாற்பாவும் இக்கருத்தை வலியுறுத்துகிறது.
'மறங்கடைக் கூட்டிய துடி நிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே' தொ.பொ.59
என்ற நூற்பாவில் தொல்காப்பியனார் போருக்குப் புறப்படும் வெட்சியாருக்குக் கொற்றவை வழிபாட்டினைச் சுட்டவும், சங்க இலக்கியத்துள் கொற்றவை பற்றிய தனிப்பாடல் எதுவும் இன்று,
‘பெண்உரு ஒருதிறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்' புற. கட. வாழ்த்து
‘ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே' அக.
'நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்' ஐங்
‘கொடு கொட்டி ஆடுங்கால்,
கொடிபுரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ' கலி.
'பண்டரங்கம் ஆடுங்கால்,
வண்டரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ'
'காபாலம் ஆடுங்கால்,
முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ'
'பாணியும் தூக்கும் சீரும் என்றிவை
மாணிழை அரிவை காப்ப'
‘உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்' முருகு - 153, 154.
என உமாதேவியாம் பெண் தெய்வம் சிவபெருமானோடு இணைத்தே கூறப்பட்டிருத்தலையும்,
'மேனித் திருஞெமிர்ந் தமர்ந்த மார்பினை' பரி. கட. வாழ்த்து.
எனத் திருமகளாம் பெண் தெய்வம் திருமாலோடு இணைத்தே கூறப்பட்டிருத்தலையும்,
‘மறுவில் கற்பின் வாணுதல் கணவன் ' முருகு. 6 எனவும்,
'தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவி னன்குடி அசைதலும் உரியன்' முருகு - 175, 176 எனவும்,
'ஒருமுகம், குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே' 102
எனவும், தெய்வயானையம்மையாரும் வள்ளியம்மையாரும் முருகப்பெருமானோடு சார்த்திக் கூறப்பட்டிருத்தலையும் காண்கிறோம்.
‘வெண்டலைப் புணரி அலைக்குஞ் செந்தில்
நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை' புறநா - 55
'மாயோன் மேய ஓண நன்னாள்' மதுரை - 561
எனத் திருத்தலங்களும் திருவிழாக்களும் ஆண் தெய்வங்கள் பெயராலேயே சுட்டப்பட்டிருத்தலையும் நோக்குக.
‘மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்
ஞாலங் காக்குங் கால முன்பின்
தோலா நல்லிசை நால்வர்' புறநா - 56
எனப் புற நானூற்றுள்ளும்,
‘புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் ......
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய ...... திருக்கிளர் செல்வனு... முருகு 151 :59
என முருகாற்றுப்படையுள்ளும் தெய்வங்களை விளக்கிச் சுட்டும் நக்கீரர் நாற்பெருந்தெய்வம் (இந்திரன், இயமன், வருணன் சோமன்) பலர் புகழ் மூவர் (அயன், அரி, அரன்) நால்வேறு இயற்கைப் பதினொருமூவர் (ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், அசுவனி தேவர் இருவர்) ஒன்பதிற்றிரட்டி உயர்நிலை பெறீஇயர் (தேவர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், கிம்புருடர், இயக்கர், விஞ்சையர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், பூதர், பைசாசகணத்தர், தாரகாகணத்தர், நாகர், ஆகாசவாசிகள், போகபூமியோர்) என்போரையும் குறிப்பிடுகிறார்.
இம்முப்பத்து மும்மைத் தேவர் - பரிபாடலில்
'உலகிருள் அகற்றிய பதின்மரும் இருவரும்' (8)
'மாசில் எண்மரும் பதினொரு கபிலரும்'
'தாமா இருவரும்' (3) என்றும்,
பதினெண் கணத்தவர் - புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தில்
'அவ்வுரு, பதினெண் கணமும் ஏத்தவும் படுமே' புற. கட வாழ்த்து
என்றும் சுட்டப்பட்டுள்ளனர்,
பெண்ணினத்துக்குச் சிறப்புத் தர எழுந்த சிலப்பதிகாரக் காப்பியத்தும், புகார்நகரில் அமரர் தருக்கோட்டம், வெள்ளையானைக் கோட்டம், புகர் வெள்ளை நாகர் தம் கோட்டம், பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க்கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான்வாழ் கோட்டம். நிக்கந்தக் கோட்டம், நிலாக்கோட்டம், பரசண்டச்சாத்தன் கோட்டம், காமவேள் கோட்டம் என்ற கோயில்கள் இருந்த செய்தி கனாத்திறம் உரைத்த காதையிலும்,
'பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்,
மாலை வெண் குடை மன்னவன் கோயிலும்'
இருந்த செய்தி இந்திர விழவூரெடுத்த காதையிலும்,
மதுரை நகரில்,
'நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும்'
இருந்தமை ஊர்காண் காதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் எதுவும் பெண் தெய்வக் கோயிலன்று.
மதுராபதித் தெய்வத்திற்கும் கலையமர் செல்விக்கும் கோயிலிருந்தமை கட்டுரைக் காதையில் காணப்படுகிறது. சம்பாபதித் தெய்வத்துக்குப் புகார் நகரில் கோயிலிருந்தமை மணிமேகலையில் சுட்டப்படுகிறது. இவையே தொடக்கக்காலப் பெண் தெய்வத் தனிக் கோயில்கள் போலும்.
பாலை நிலத்துக்குக் காளியைத் தெய்வமாகக் கொண்ட இளங்கோவடிகள் வேட்டுவவரியில் காளியைப் பலபடியாக வருணித்தலே, தமிழகத்துப் பெண்தெய்வ முதல் வருணனை யாகும். அது பின் வருமாறு:
“மதியின் வெண்தோடு சூடும் சென்னி
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி; தவளவாள் நகைச்சி;
நஞ்சுண்டு கறுத்த கண்டி; வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற்று உரகக் கச்சுடை முலைச்சி;
வளையுடைக் கையில் சூலம் ஏந்தி;
கரியின் உரிவை போர்த்து அணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி;
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை
இரண்டு வேறு உருவின் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற்கு இளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை
தமர் தொழ வந்த குமரி”.
வழக்குரை காதையில்,
‘அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு, சூர்உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்’
என்ற அடிகளில் சத்த மாதர்கள் ஒருவாறு சுட்டப்பட்டுள்ளனர்.
இவற்றை நோக்கச் சங்க காலத்தில் 'மலைமகள் மகனே, கொற்றவை சிறுவ, பழையோள் குழவி' என்றாற் போலச் சார்த்து வகையால் கூறப்பட்ட பெண் தெய்வத்தின் தனி வருணனை வழிபாடு போல்வன, சிலப்பதிகார காலத்தில் ஓரளவு தமிழகத்தில் நிலை பெற்றமை தேற்றம். நாயன்மார் ஆழ்வாராதிகள் காலத்திலும் தத்தம் வழிபடு தெய்வங்களின் சக்திகளாகிய பெண் தெய்வங்கள் சார்த்து வகையாலேயே உடன் கூறப்பட்டுள்ளதனைக் காண்கிறோம். தெய்வங்கள் பற்றிய இம்மரபு அரசரிடையும் காணப்பட்டது. அரசியர் அரசரோடு
‘செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ' புறநா-3
'ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ' பதிற்-14
என்றாற்போலச் சார்த்து வகையாலேயே கூறப்பட்டிருத்தலைக் காண்கிறோம். இவற்றை நோக்கப் பிற்காலச் சோழர் ஆட்சிவரை ஆண் உயர்ச்சியே மக்களிடையும், தெய்வங்களிடையும் கொள்ளப்பட்டுப் பாடிப் போற்றப்பட்டமை தேற்றம்.
'காமப் பகுதி கடவுளும் வரையார்' தொ. பொ. 83
என்று குறிப்பிட்ட தொல்காப்பியனார், அக்காமப்பகுதி
'குழவி மருங்கினும் கிழவ தாகும்' தொ. பொ. 84
என்று சுட்டிக் குழந்தையிடத்துக் கொண்ட அன்பால் அதனைப் பாடுவதற்கும் வழிவகுத்துக் கொடுத்துள்ளார். குழவி என்று பொதுப்படக்கூறினும், ஆண்குழந்தையே சங்ககாலத்தில் பெரிதும் போற்றப்பட்டமை விளக்கமாகக் காணப்பட்டது. தெய்வங்களுள்ளும் இந்நிலை உண்டு என்பது முருகப்பெருமான் 'பழையோள் குழவி' என்று சுட்டப்படுதலால் உணரப்படும். ஆண் குழந்தைகளை வருக என்றழைத்தல், அவற்றிற்கு அம்புலி காட்டல், அவை சிற்றில் சிதைத்தல், சிறுபறை அறைதல், சிறுதேர் உருட்டல் ஆகிய செய்திகள் சங்கச்செய்யுட்களில் அருகிப் பாடப்பட்டுள்ளன. முருகன் தெய்வக்குழந்தையாகி விளையாடிய போரில், இந்திரன் முதலிய தெய்வங்களும் அவனுக்குத் தோற்றுக் காணிக்கை வழங்கிய செய்தி,
'ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளை யாடிய
போரால் வறுங்கைக்குப் புரந்தரன் உடைய,
அல்லலில் அனலன் தன் மெய்யில் பிரித்துச்
செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து
வளங்கெழு செல்வன்தன் மெய்யில் பிரித்துத்
திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன்;
திருந்துகோல் ஞமன்தன் மெய்யில் பிரிவித்து
இருங்கண் வெள்யாட்டு எழில்மறி கொடுத்தோன்
ஆஅங்கு, அவரும் பிறரும் அமர்ந்து படையளித்த
மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும்
பொறிவரிச் சாபமும் மானும் வாளும்
செறியிலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும்
தெறுகதிர்க் கனலியும் மாலையும் மணியும்
வேறுவேறு உருவின் இவ் வாறிரு கைக்கொண்டு
மறுவில் துறக்கத்து அமரர்செல் வன்தன்
பொறிவரிக் கொட்டையொடு புகழ்வரம்பு இகந்தோய்' பரிபாடல் - 6
என்று பரிபாடலில் விளக்கப்பட்டுள்ளது.
திருமாலைக் குழந்தையாகக் கொண்டு அதற்கு வாழி என்று பல்லாண்டு பாடிப் பலபருவங்களில், பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துக்குத் தோற்றம் வழங்கியருளியவர் பெரியாழ்வார் என்னும் விட்டுசித்தரேயாவர். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் அவர் தம் பாசுரங்களே தொடக்கத்தில் இடம் பெறுகின்றன.
பெருமானுக்குத் தொடக்கத்தில் திருப்பல்லாண்டு பாடிய அவர், தொடர்ந்து, கண்ணன் திரு அவதாரச் சிறப்பு - அவனுடைய பாதாதிகேச வருணனை - தாலப்பருவம்-அம்புலிப்பருவம் – செங்கீரைப்பருவம் - சப்பாணிப்பருவம் - தளர் நடைப்பருவம் - அச்சோப்பருவம் – புறம்புல்லல் – பூச்சிகாட்டுதல் - முலையுண்ண அழைத்தல் - அவனுக்குக் காதுகுத்த அழைத்தல் - அவனை நீராட அழைத்தல் - அவன் குழல் வாரக் காக்கையை அழைத்தல் - அவன் ஆயர் மகனாதலின் அவனுக்குக் கோல் கொண்டுவரப் பணித்தல் - அவனுக்குப் பூச்சூட்டல் - அவனுக்குக் காப்பிடல் - அவன் இளம்பருவ விளையாட்டு - அவனைப் பற்றி அயலகத்தார் முறைபாடு - அவனுக்கு உணவிடல் - அவனைக் கன்றின்பின் போக்கி வருந்தல் - அவன் வரவுகண்டு அன்னை மகிழ்தல் – அவனைக் கண்டு கன்னியர் காமுறல் - அவன் கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த திறம் - அவன் குழலூதற் சிறப்பு - அவன் மேல் தன் மகள் மாலுண்டதனைத் தாய் கூறல் - அவன்பின் சென்ற தன்மகளை உன்னித் தாய் புலம்பல் - அவன் பெயர் சொல்லி உந்தி பறத்தல் என 28 தலைப்புக்களில் பெரும்பாலன அவன் பிள்ளைப்பருவச் செய்திகளாக விரித்து அருளிச்செய்துள்ளார். சங்ககாலச் செய்திகள் சிலவும், இவ்வாழ்வார் அருளிய செய்திகள் சிலவும் பிள்ளைத்தமிழுக்கு அடிகோலியுள்ளன.
'முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப் படும்' குறள்-388
அரசன் பிறப்பான் மகன், ஆயினும், சிறப்பால் கடவுள் என்று வேறு வைத்து எண்ணப்பட்ட காலம் சங்ககாலம்.
'மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலை' தொ.பொ.60
என்ற துறையால் அரசரைத் திருமாலோடு ஒப்பிட்டுப் பாடுதற்குத் தொல்காப்பியனார் வழி வகுத்தார். சங்ககாலப் புலவர்கள் அரசர்களை,
'வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்தலுற் றோர்க்கு மாயோ னன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற' புறநா-57
எனத் திருமாலோடும்,
'ஓங்குமலைப் பெருவில் பாம்புநாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒரு கண் போல
வேந்து மேம் பட்ட பூந்தார் மாற' புறநா-55
எனச் சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணோடும்,
'பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமி யோனும்என்று
இருபெரு தெய்வமும் உடன்நின் றாஅங்கு
உருகெழு தோற்றமோடு உட்குவர விளங்கி' புறநா-58
எனப் பலராமன் கண்ணன் ஆகியவரோடும் ஒப்பிட்டுப் பேசினர்.
கோபத்தால் சிவபெருமானையும், வலிமையால் பலராமனையும், புகழால் கண்ணனையும், நினைத்தது முடிக்கும் ஆற்றலால் முருகப்பெருமானையும் மன்னன் ஒருவனே ஒத்திருந்தான் என்ற கருத்தும்,
'கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனை
புகழொத் தீயே இகழுநர் அடுநனை
முருகொத் தீயே முன்னியது முடித்தலின்
ஆங்காங்கு அவரவர் ஒத்தலின்' புறநா-56
என்ற பாடலடிகளில் நிலவுகிறது.
'திருவுடை மன்னரைக் காணின்
திருமாலைக் கண்டேனே என்னும்’ திவ். பிர. 3047
என்ற நம்மாழ்வார்பாசுரம், தொல்காப்பியனார் கருத்தை ஒட்டி அரசரிடம் திருமாலின் அம்சத்தை இணைத்துப் பேசுகிறது.
சங்க காலத்தில் வள்ளல்களாகிய அரசர்களையும், இடைக் காலத்தில் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை ஈயும் தெய்வங்களையும் பாடிப் பயனுற்ற தமிழகம், சோழப்பேரரசு மீண்டும் தலைதூக்கிய இடைக்காலச் சோழர்கள் காலத்தில் அரசர்களிடம் தெய்வாம்சத்தைப் புணர்த்துப் பாடிப் பயன் கொள்ளத் தொடங்கியது. விக்கிரமசோழனை ஒட்டக்கூத்தர்,
'கையும் மலரடியும் கண்ணும் கனிவாயும்
செய்ய கரிய திருமாலே! - வையம்
அளந்தாய்! அகளங்கா! ஆலிலைமேற் பள்ளி
வளர்ந்தாய்!' விக். உலா. இறுதிச் செய்யுள்
என்று திருமாலாகவே குறிப்பிடுவதும் காண்க.
இக்காலத்திலேயே தமிழகத்தில் சிறுபிரபந்தங்களின் தோற்றமும் சிறப்பதாயிற்று. பாட்டியல் நூல்கள் இச்சிறு பிரபந்தங்களுக்கு இலக்கணம் வகுக்கத் தொடங்கின. தமிழில் பாட்டியல் நூல்கள் பலவும் இயற்றப்பட்டன. பன்னிருபாட்டியல், சிதம்பரப்பாட்டியல், இலக்கணவிளக்கப் பாட்டியல் முதலியன இவற்றுள் புகழ் வாய்ந்தவை. இவை குறிப்பிடும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்தை நோக்குவோம்:
சிறுபிரபந்த நூல்களுள் பிள்ளைத்தமிழுக்கே முதலிடம் வழங்கப்பட்டது.
பிள்ளைத்தமிழ் பற்றிப் பன்னிரு பாட்டியல்,
174 'பிள்ளைப் பாட்டே தெள்ளிதின் கிளப்பின்
மூன்று முதலா மூவேழ் அளவும்
ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே.'
175 'ஒன்று முதல் ஐயாண்டு ஒதினும் வரையார்.' (பொய்கையார்)
176 'தோற்றம் முதல்யாண்டு ஈரெட் டளவும்
ஆற்றல் சான்ற ஆண்பாற்கு உரிய.'
177 ‘காப்புமுத லாகிய யாப்புவகை எல்லாம்
பூப்புநிகழ் வளவும் பெண்பாற் குரிய.' (இந்திரகாளியர்)
178 ‘தொன்னில வேந்தர் சுடர் முடி சூடிய
பின்னர்ப் பெறா அர் பிள்ளைப் பாட்டே.! (பரணர்)
179 ‘காப்பொடு செங்கீரை தால்சப் பாணி
யாப்புறு முத்தம் வருகஎன் றல்முதல்
அம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர்
நம்பிய மற்றவை சுற்றத் தளவென
விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர்.'
180 'தந்தை தாயே பாட்டன் பாட்டி
முந்துற உரைத்தல் முறைமை என்ப.'
181. 'பெண்மக வாயின் பின்னர் மூன்றும்
மன்னுதல் நீக்கினர் வாய்மொழிப் புலவர்.'
182. சிற்றில் சிறுதேர் சிறுபறை ஒழித்து
மற்றவை மகளிர்க்கு வைப்ப தாகும்.'
183 'சிற்றில் இழைத்தல் சிறுசோ றாக்கல்
பொற்பமர் குழமகன் புனைமணி ஊசல்
யாண்டீ ராறதில் எழிற்காம நோன்பொடு
வேண்டுதல் தானுள விளம்பினர் புலவர்.'
184 ‘திருமால் அரனே திசைமுகன் கரிமுகன்
பொருவேல் முருகன் பருதி வடுகன்
எழுவர் மங்கையர் இந்திரன் சாத்தன்
நிதியவன் நீலி பதினொரு மூவர்
திருமகள் நாமகள் திகழ்மதி என்ப
மருவிய காப்பினுள் வருங்கட வுளரே.'
185 'காப்பின் முதல் எடுக்கும் கடவுள் தானே
பூக்கமழ் துழாய்முடி புனைந்தோ னாகும்.'
186. 'அவன் தான்,
காவற் கிழவன் ஆக லானும்
பூவின் கிழத்தியைப் புணர்த லானும்
முடியும் கடகமும் மொய்பூந் தாரும்
குழையும் நூலும் குருமணிப் பூணும்
அணியும் செம்ம லாக லானும்
முன்னுற மொழிதற் குரிய னென்ப.'
187. விரிசடைக் கடவுளும் வேய்த்தோள் எழுவரும்
அருளொடு காக்கஎன்று அறையுங் காலைக்
கொலையும் கொடுமையும் கூறா ராகிப்
பெயரும் சின்னமும் பிறவும் தோன்றக்
கங்கை திங்கள் கடுக்கை மாலை
மங்கல மழுவொடு மலைமகள் என்றிவை
விளங்கக் கூறல் விளம்பிய மரபே'
188 'ஒன்பது பதினொன்று என்பது காப்பே.' (பரணர்)
189. "அகவல் விருத்தமும் கட்டளை ஒலியும்
கலியின் விருத்தமும் கவின் பெறு பாவே.'
190 'பிள்ளைப் பாட்டே நெடுவெண் பாட்டெனத்
தெள்ளிதின் செப்பும் புலவரும் உளரே.'
191 'முதற்கண் எடுக்கும் அகவல் விருத்தம்
எழுத்தின் பகுதி எண்ணினர் கொளலே.'
192 'நீள் நெறி உவகை ஆண்மக விற்குஏழ்
ஐம்மூ வாண்டே அவர் முதல் சாற்றல்.'
193. 'பொங்கு கதிர் இளம்பிறை புலியின் சிறுபறழ்
குஞ்சரக் குழவி கோளரிக் குருளை
அடல்இள விடையே ஆறிரண் டாண்டின்
இடைநிகழ் உவமை என்மனார் புலவர்.’
194 'பெண்மக விற்குப் பேசு மிடத்து
மானின் கன்று மயிலின் பிள்ளை
தேனின் இன்பம் தெள்ளாத் தேறல்
கரும்பின் இள முளை கல்லாக் கிள்ளை
இளந்தளிர் வல்லி என்றிவை எல்லாம்
பெய்வளை மகளிர்க்கு எய்திய உவமை.'
195 'இளங்கதிர்த் திங்கள் எல்லார்க்கும் உரித்தே.' (பரணர்)
196 'அவைதாம், பிள்ளையைப் பாடலின் பிள்ளைப் பாட்டாய்ப்
பிறப்பே ஓகை காப்பே வளர்ச்சி
அச்ச முறுத்த லுடன் செங் கீரை
தால்சப் பாணி முத்தம் வாரானை
அம்புலி சிற்றில் குழமகன் ஊசல்
என்றனர் பிறவும் தொன்னெறி மரபின்
தத்தம் தொழிற்குத் தகுவன புகறல்
எத்திறத் தோர்க்கும் உரிய என்ப
கொச்சக் கலியொடு நெடுவெண் பாட்டே.
197. 'நெடுவெண் பாட்டின் முந்நான்கு இறவாது
தொழிலொடு குறித்துத் தோன்றும் செய்யுள்
ஒன்றுமூன்று ஐந்தேழ் ஒன்பான் பதினொன்று
என்றிவை யிற்றின் இகந்தன இழுக்கே.'
198. 'பிறப்பே ஒகை பேணுறு வளர்ச்சி
சிறைப்பட அச்ச முறுத்தலொடு நான்கும்
ஆரா யுங்கால் ஐந்துமூன்று இடையாய்
ஒரேழ் ஒரு பொருட்கு உயர்ச்சி இழிபு ஒன்றே.' (இந்திரகாளியர்)
என்று பல திறப்படக் குறிப்பிட்டுள்ளது. அந்நூல் கூறும் செய்திகளைச் சுருங்கக் காண்போம்:
பிள்ளைத்தமிழ் குழந்தை பிறந்த மூன்று மாதத்திலிருந்து இருபத்தொருமாத அளவிற்குள் பாடப்படுதல் வேண்டும். அஃதில்லையேல், முதலாண்டு தொட்டு ஐந்தாண்டிற்குள்ளாகப் பாடினும் அமையும். பிறப்பு முதல் பதினாறாண்டளவும் ஆண் மகனையும், பூப்பெய்துமளவும் பெண்மகளையும் குறித்துப் பிள்ளைத்தமிழ் பாடுதலும் ஆம். அரசர்க்கு முடிசூட்டு விழாவிற்கு முன் பிள்ளைத்தமிழ் பாடப்படல் வேண்டும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்ற பத்தும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களாம். முதலில் தந்தை தாய் பாட்டன் பாட்டி இவர்கள் பெயர் சுட்டப்படல் வேண்டும். பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கு ஆண்பாலின் பின் மூன்று பருவங்களை நீக்கிச் சிற்றிலிழைத்தல், சிறுசோறாக்கல், குழமகன், ஊசல், பன்னீராண்டில் காமன்நோன்பு இவற்றில் ஏற்றனவற்றைக் கொண்டு பின் மூன்று பருவங்களை அமைத்தல் வேண்டும். காப்புப் பருவத்தில் திருமால், அரன், பிரமன், விநாயகன், முருகன், சூரியன், வடுகன், சத்தமாதர்கள், இந்திரன், சாத்தன், குபேரன், காளி, முப்பத்து முத்தேவர், திருமகள், நாமகள், சந்திரன் ஆகியோர் பாடப்படுவர். காத்தற் கடவுளும், திருமகள் கேள்வனும், பல அணி அணிபவனுமாகிய திருமாலே காப்பின் முதற்கண் பாடப்படல் வேண்டும். சிவபெருமானும் சத்தமாதர்களும் பற்றிய காப்புச் செய்யுள்களில், அவர்கள் செய்த மறச்செயல்களை விடுத்து அவர்தம் அருளிச் செயல்களும் அவற்றிற்குப் பயன்படுவனவுமே கூறப்படல் வேண்டும். காப்புச் செய்யுட்கள் ஒன்பதாகவோ பதினொன்றாகவோ இருத்தல்வேண்டும். ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலிப்பா கலிவிருத்தம் இவற்றால் பாடுதல் மரபு. பஃறொடை வெண்பாவால் பாடுதலும் உண்டு.
முதலில் பாடப்படும் ஆசிரிய விருத்தம் எழுத்தெண்ணிப் பாடப்படும் கட்டளை விருத்தமாக இருத்தல் வேண்டும். ஆண்மகவிற்குப் பதினைந்தாண்டே முடிவான வரையறை இளம்பிறை, புலிக்குட்டி, யானைக்கன்று, சிங்கக்குட்டி, இளங்காளை என்பனவும், மான்கன்று, மயில் பிள்ளை, தேனின்பம், தெவிட்டா அமுதம், கரும்பின் முளை, கிளி, தளிர், கொடி என்பனவும் முறையே ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவத்திற் கேற்ற உவமங்களாம். சந்திரன் இருபாலாருக்கும் ஏற்ற உவமமாகும். குழந்தையின் பிறப்பு, சுற்றத்தார் மகிழ்ச்சி, காப்பு, வளர்ச்சி, அச்சமுறுத்தல், செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், குழமகன், ஊசல் முதலியவற்றில் ஏற்பனவற்றைக் கொச்சகக் கலியாலும் பஃறொடை வெண்பாவாலும் பாடி அமைக்கும் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தமும் உண்டு. பன்னீரடியைக் கடவாத பஃறொடை வெண்பாவால் 1, 3, 5, 7, 9, 11 என்ற வரையறையில் பருவங்களை வருணிப்பதுண்டு. பிறப்பு, மகிழ்ச்சி, வளர்ச்சி, அச்சமுறுத்தல் என்ற நான்கு செய்திகளும் ஓரோ ஒரு பாடலில் பாடுதல் இழிபு; ஐந்து அல்லது மூன்று பாடல்களில் பாடுதல் இடை நிகரது; ஏழு பாடலில் பாடுதல் உயர்பு என்ப. இவ்வாறு பிள்ளைத்தமிழ் பற்றிய பல திறக் கருத்துக்களும் கூறப்பட்டிருத்தலின், 'இதனைத் தான் தவறாது பின்பற்ற வேண்டும்' என்ற வரையறை தொடக்கத்தில் செய்ய இயலாத நிலை இருந்தமை தெளிவாகிறது. பிற்காலத்து வெண்பாப்பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் என்பன தமக்கு முற்பட்ட இலக்கியம் கண்டு இலக்கணம் கூறவே, அவ்விலக்கணம் பெரிதும் பிற்காலத்தவரால் சிதைவின்றிப் பின்பற்றப்படுவதாயிற்று.
இலக்கண விளக்கம் பிள்ளைத்தமிழின் இலக்கணத்தைத் தெளிவாக,
46. 'கடுங் கொலை நீக்கிக் கடவுட் காப்புச்
செங்கீரை தால்சப் பாணி முத்தம்
வாரானை முதல வகுத்திடும் அம்புலி
சிறுபறை சிற்றில் சிறுதேர் என்னப்
பெறுமுறை ஆண்பால் பிள்ளைப் பாட்டே.'
47 'அவற்றுள், பின்னைய மூன்றும் பேதையர்க்கு ஆகா
ஆடும் கழங்கம் மானை ஊசல்
பாடும் கவியால் பகுத்து வகுப்புடன்
அகவல் விருத்தத்தால் கிளை அளவாம்.'
48. 'மங்கலம் பொலியும் செங்கண் மாலே
சங்கு சக்கரம் தரித்த லானும்
காவற் கடவுளாத லானும்
பூவினட் புணர்தலானுமுற் கூறிக்
கங்கையும் பிறையும் கடுக்கையும் புனை உமை
பங்கனென் றிறைவனைப் பகர்ந்து முறையே
முழுதுல கீன்ற பழுதறும் இமையப்
பருப்பதச் செல்வியை விருப்புற உரைத்து
நாமகள் கொழுநன் மாமயி லூர்தி
ஒற்றைக் கொம்பன் வெற்றி வேலன்
எழுவர் மங்கையர் இந்திரை வாணி
உருத்திரர் அருக்கர் மருத்துவர் வசுக்கள்
பூப்புனை ஊர்தியில் பொலிவோர் அனைவரும்
காப்ப தாகக் காப்புக் கூறல்.'
49. ‘மூன்று முதல்மூ வேழு திங்களின்
ஒற்றை பெற்ற முற்றுறு மதியின்
கொள்ளுக பிள்ளைக் கவியைக் கூர்ந்தே.'
50 ‘மூன்றைந் தேழாம் ஆண்டினும் ஆகும்.'
51 'ஒன்பது பதினொன்று என்பது காப்பே.'
என்ற ஆறு நூற்பாக்களில் குறிப்பிடுகிறது.
சிதம்பரப் பாட்டியல் பிள்ளைத் தமிழிலக்கணத்தைச் சுருக்கமாக,
'துறுகொலை நீக்கித்தெய்வக் காப்பாய்ச் சுற்றத்
தொகையளவு வகுப்பகவல் விருத்தந் தன்னால்
முறைகாப்புச் செங்கீரை தால்சப் பாணி
முத்தம் வாரானையம் புலியி னோடு
சிறுபறைசிற் றில்சிறுதேர் இவைபின் மூன்றும்
தெரிவையர்க்குப் பெறாகழங்கம் மானை ஊசல்
பெறுமூன்று முதலிருபத் தொன்றுள் ஒற்றை
பெறுதிங்கள் தனிற்பிள்ளைக் கவியைக் கொள்ளே.'
என்று வெளியிடுகின்றது. இனி, குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் பற்றி நோக்குவோம். முதலில், பாடினோர் வரலாறு, பாடப்பட்டோன் வரலாறு இவற்றைக் காண்பாம்.
---------------
பாடினோர் வரலாறு
செங்குந்த முதலியார் வகுப்பினராகிய இந்நூலாசிரியர் கூத்தர் என்னும் இயற்பெயரினர். இப்பெயர் நடராசப்பெருமானுடைய திருநாமம். 'மலரிவரும் கூத்தன்றன் வாக்கு' என்ற தொடரால் (தண்டி. உதாரணம்) இவரது பிறந்தவூர் மலரியென்பது போதரும்.
இப்புலவர் பெருமான் இயற்றிய நூல்களாலும், அவற்றுள் தக்கயாகப் பரணிக்கு வரையப்பட்ட உரையாலும் இவருடைய சிவபத்திச் சீலமும், கலைமகள் வழிபாடும் புலப்படுகின்றன. தமிழிலக்கிய இலக்கணப் பெரும்புலமையோடு இவர்க்கு வடமொழி நூற்பயிற்சியும் மிக்கிருந்தமை தெளிவு. வடமொழிச் சொற்களையும் சொற்றொடரையும் தற்பவமாகத் திரித்தோ திரிக்காமலோ செய்யுளிடை வழங்குவதில் இவர்க்குத் தனித்த ஆற்றலோடு விருப்பமும் மிக்கிருத்தல் இவருடைய நூல்களில் வெள்ளிடை. அவை வலியப் புகுத்தலன்றி இடம் நோக்கி நயம் செய்யுமுகத்தான் வந்தமை பயில்வோருக்கு அரிய புலமை விருந்தாம். மாணாக்கர்க்கு முறையாகத் தமிழ் பயிற்றி வந்த போதகாசிரியராகவும் இவர் திகழ்ந்தவர். விக்கிரம சோழனும், அவன் மகன் குலோத்துங்கனும், அவன் மகன் இராசராசனும் இவருடைய மாணாக்கரேயாவர். அம் மூவர் தம் அவைக்களப் புலவராகவும் இவர் திகழ்ந்து வந்தார். என்னேயோர் அரிய பேறு!
புலவர் பலரை ஆதரித்தமையோடு, அவர்களைக் கொண்டு நூல்கள் இயற்றுவித்தும் தாமும் பல நூல்கள் இயற்றியும் கூத்தர் தமிழ்த்தொண்டு பேணினார்; சோழமன்னர் மூவர் மீதும் தனித்தனியே உலாவும், குலோத்துங்கன் மீது பிள்ளைத் தமிழும் பாடினார். அரிசிலாற்றங்கரை மீதுள்ள கூத்தனூர் நம்புலவர் பெருமானுக்கு அம்மூவருள் ஒருவனால் புலவர் முற்றூட்டாக இவர் பெயரால் வழங்கப்பெற்றிருத்தல் வேண்டும். அவ்வூரில் இவர் கலைமகளுக்குத் திருவுருவத்தைக் கடவுள் மங்கலம் செய்து கோயிலெடுப்பித்து வழிபட்டு வருவாராயினார். இன்றும் இக்கோயில் நிலவுகிறது. தக்கயாகப்பரணியில் (தாழிசை 813) “ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே" என்னும் தொடர் இக்கோயில் இறைவியைச் சுட்டியதேயாம் என்க.
ஒட்டக்கூத்தர் என்னும் முன்மொழியது பெயர்க்காரணம் பற்றிப் பலவாறு உரைப்ப. விக்கிரம சோழனுலாவை இவர் அரங்கேற்றுகையில், மிக்க நயமாக அமைந்த ஒரு கண்ணியை ஒட்டி மன்னன் ஒரு செய்யுள் விரைந்து புனையும்படி இவரை வேண்ட, இவரும் அவ்வாறே பாடியமை பற்றி இவ்வடைமொழி எய்திற்று என்பர் ஒரு சாரார். இது சாலவும் பொருந்தும்.
விக்கிரமன் தமது புலமையைப் போற்றித் தமக்கு யானை, காளம், கொடி முதலிய விருதுகளை நல்க, அவற்றை இவர் ஏற்க இசையாமல் தமது எளிமை தோன்றப் பாடிய சில கவிகளால் இவர் தம் பணிவுடைமைப் பண்பு போதரும். இராசராசனுலா அரங்கேறிய காலை, அம்மன்னன் இவர்க்குக் கண்ணிதோறும் ஆயிரம் பொன் வழங்கினான் என்பது, சங்கரசோழனுலாவினாலும் தமிழ்விடு தூதினாலும் தெளிவாகின்றது.
இருவேறு உலகத்தியற்கை; திருவேறு - தெள்ளிய ராதலும் வேறு' என்னும் குறள் வாக்கினைப் பொய்ப்பித்தாற் போன்றது இவரது வளமிக்க செல்வ வாழ்க்கை. சோழப் பெருமன்னர் மூவராலும் பெரிதும் போற்றப்பட்டுப் புகழ் பொருள் பூசை யாவும் குறைவறப் பெற்றுக் கவற்சியெதுவு மின்றி வாழ்ந்த இப்புலவர் பெருந்தகை 'ஆக்கம் பெருக்கு மடந்தை வாழியே' (தக்க 813) எனத் தம்மைத் திருவுடையராய்த் திகழ்வித்து வரும் திருமகளை வாழ்த்தியிருத்தல் காண்க. கலைமகளது திருவருள் இவர் நிரம்ப வாய்த்தவர் என்பது, நரை முதிர் பருவத்தும் நடுங்கா நாவின் உரை மூதாளராய் இவர் திகழ்ந்தவாற்றால் உணரலாம். மூவருலாவில் இராசராசசோழனுலா பலசுவை நலனும் பழுநியுள்ளமை இதற்குச் சான்று.
இவர் காலத்துப் பிற புலவர்கள் நம்பிகாளியார், நெற்குன்றவாண முதலியார் முதலியோர். கம்பரும் புகழேந்தியும் இவர்காலத்து வாழ்ந்தனர் என்றற்கு ஏற்ற ஆதாரங்கள் இல்லை. ஆதலின் அப்புலவர்களோடு இவரை இயைபுபடுத்திக் கூறுவன வெல்லாம் பிற்காலத்தே படிப்போர்க்குச் சுவைதோன்றப் புணர்க்கப்பட்ட புனைந்துரைகளே என்பது தமிழறிஞரிற் பலர் கருத்து. 'தலையிரண்டா ஏறப்போட்டு -- வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை' என்ற தனிப்பாடற் செய்தி புன்மைக் கவிஞரை இழித்துக் கூறவே எழுந்தது போலும்.
இப்புலவர் பெருமான் புலவர் பிறரைத் தகுதி கண்டு வாயாரப் போற்றும் பெருந்தன்மையினர் என்பது, பரணி பாடுவதில் தாமே வித்தகராய் வைத்தும், முதற்குலோத்துங்கன் மீது சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியை வியந்து ‘பாடற்பெரும்பரணி தேடற் கருங்கவி கவிச்சக்ரவர்த்தி பரவச் செஞ்சேவகஞ் செய்த சோழன் திருப்பெயர' (குலோத். பிள்ளைத் தமிழ்) என்று போற்றிய அடிகளாற் போதரும்.
உலகொழுக்கினை இறந்து உயர்வு நவிற்சியணிபடப் பாடும் இப்புலவரைக் கெளடகவி யென்பர். கவிராக்ஷசர், கவிச் சக்கரவர்த்திகள், சக்கரவர்த்திகள், காளக்கவி, சருவஞ்ஞகவி என்பன இவர்க்கமைந்த வேறு சிறப்புப் பெயர்கள், தொண்டை மண்டலச் சதகம் கவிராக்ஷசர் என்ற பெயரை வழங்குகிறது. பிறவெல்லாம் தக்கயாகப்பரணியுரையுட் கண்டவை. அரசனாற் காள முதலிய சிறப்புப் பெற்றமையால் காளக்கவி யெனவும், இருமொழிப் புலமையும் செறிந்தமையால் சருவஞ்ஞகவி யெனவும் காரணம் கொள்க.
இவர் யாமள சாத்திரப் பயிற்சியும் சைன முதலிய பிற மதநூல் அறிவும் வாய்க்கப் பெற்றவராதல், அப்பிற மதநூற் கருத்துக்களோடு பரிபாடைகளை எடுத்தாள்வதாலும் பெற்றாம். இவரது வாக்கு நயம் பற்றித் தண்டியலங்கார மேற்கோட்செய்யுளொன்று,
'சென்று செவியளக்கும் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே
நின்றளவில் இன்பம் நிறைப்பவற்றுள் - ஒன்று
மலர் இவரும் கூந்தலார் மாதர்நோக்(கு); ஒன்று
மலரிவரும் கூத்தன்றன் வாக்கு'
எனப் போற்றுவது காண்க. இப்பாடலைப் புனைந்த தண்டியலங்கார ஆசிரியர் இப்புலவர்பிரான் காலத்தவரே என்பர். கூத்தரது வாக்கின் நயத்தைத் தாம் அனுபவித்துப் பாடியுள்ள அருங்கவி இது.
ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல்கள் காங்கேயன் நாலாயிரக் கோவை, அரும்பைத் தொள்ளாயிரம், மூவருலா, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி, ஈட்டியெழுபது முதலியன. பல தனிப்பாடல்கள் அவ்வப்போது இவர் யாத்தவை தமிழ் நாவலர் சரிதை முதலியவற்றுள் இடம் பெறுகின்றன. விக்கிரமனது கலிங்க வெற்றி குறித்து இவர் ஒரு பரணி பாடியுள்ளமை,
‘விரும்பரணில் வெங்களத் தீ வேட்டுக் கலிங்கப்
பெரும்பரணி கொண்ட பெருமாள்' (குலோத் உலா )
‘தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப்
பரணி புனைந்த பரிதி' (இராச. உலா)
என்னுமடிகளாலும், தக்கயாகப்பரணியுள் 776ஆம் தாழிசையுரையாலும் காணக்கிடக்கிறது. சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் காட்டியுள்ள தாழிசைகள் இவ்விக்கிரம சோழனைப் பற்றிய பரணித் தாழிசைகள் எனக் கருத இடனுண்டு.
ஒட்டக்கூத்தர் முறுகிய சிவபத்தர் என்பது இவரியற்றிய நூல்களெல்லாவற்றுள்ளும் வெளியாகப் புலனாம். தக்கயாகப் பரணித் தாழிசை சிலவற்றால் கலைமகள் மாட்டு இவரது பத்தியுடைமை பெறப்படும். செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அகத்திய முனிவர் மாட்டு இவரது பெரும்பத்தி அந்நூலுள் 40, 233, 621ஆம் தாழிசைகளுட் காணலாம். ‘தமிழ் நூல் மரபிற்கேற்பத் தும்பை மாலையை வீரபத்திரர் மிலைச்சினார்' (624) என்றமையும், அகத்தியரை 'ஒரு தமிழ் முனிவரன்' என்றமையும், அவரது பொதியிலைத் ‘தமிழ்க்குன்று' என்றமையும், 'தமிழ்க்கொத்தனைத்தும் வாழியே' என வாழ்த்தியமையும் பிறவும் இவர்க்குள்ள தமிழ்ப்பற்று மிகுதியைக் கரிபோக்குவன. தக்கயாகப்பரணியுட் கடவுள் வாழ்த்தில் திருஞானசம்பந்த மூர்த்தியை வாழ்த்தியிருத்தலும் பிறவும் அவர்பால் இவர்க்குள்ள பேரீடுபாட்டைத் தெரிக்க வல்லன.
தம்மையாதரித்த சோழமன்னரையும், காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த உபகாரிகளையும், நம்பிப்பிள்ளைகளையும் இடனறிந்து தம் கவியுள் இவர் இயையப் புனைந்திருக்கும் செய்தி இவரது செய்ந்நன்றியறிதற் றிறனுக்கு ஓர் உரைகல்.
இவரும் புகழேந்திப்புலவரும் முறையே சோழனையும் பாண்டியனையும் சிறப்பித்து உறழ்ந்து பாடியுள்ளனவாகக் காணப்படும் நயமிக்க பாடல்களும், 'ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்' எனக்கூறிச் சோழமாதேவி இவர் அந்தப்புரம் வருகை நோக்கிக் கதவடைத்த நிகழ்ச்சியும், இவ்வியைபுடைய பிறவுமெல்லாம், ஒட்டக்கூத்தர் மீது எக்காரணத்தாலோ பொருந்தாதவொரு காழ்ப்புணர்ச்சி மேற்கொண்டு பிற்காலத்தவர் புனைந்துவிட்ட செய்திகளே என்று இன்றைய அறிஞர் பலரும் கருதுகின்றனர். யாமும் அத்துணிவோடு ஒட்டக்கூத்தர் பால் கவி நயம் நுகரப் புகுவோம். அதுவே அறிவுடைமை.
--------------
பாடப்பட்டோன் வரலாறு
இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி. பி. 1133 - 1150)
முதற்குலோத்துங்கன் மகனாகிய விக்கிரம சோழனுடைய வீர மைந்தன் இரண்டாம் குலத்துங்க சோழனாகிய இப்பிள்ளைத்தமிழின் பாட்டுடைத் தலைமகன். தந்தை விக்கிரமசோழன் ஆட்சிக் காலத்தேயே கி. பி. 1133 - இல் இவன் இளவரசுப்பட்டம் சூட்டப்பெற்றான். விக்கிரமசோழன் கி. பி. 1135 - இல் புகழுடம்பெய்தினான். இளவரசன் இரண்டாம் குலோத்துங்கன் சோழர் அரியணையமர்ந்தான். இளவரசுப் பட்டம் பெற்ற காலம்தொட்டே இவனது ஆட்சியாண்டு சாசனங்களில் இடம் பெறுகிறது. தந்தை பரசேகரிப்பட்டம் புனைந்தமையால், இவன் இராசகேசரிப்பட்டம் கொண்டான். இவனுடைய மெய்க்கீர்த்திகள் நற்றமிழ் நடை வாய்ந்தவை; 'பூ' என்னும் மங்கலமொழியால், இம்மெய்க் கீர்த்தி (இத்தலைப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது) 'பூ மன்னு பதுமம்' , 'பூமன்னு பாவை', 'பூமேவு திருமகள்' முதலாகத் தொடங்கி, உயர்வு நவிற்சியணிபட இவனது அரசியலைப் பலபடப் புனைந்து செல்கின்றன. அப்புனைந்துரைகள் வரலாற்று வாய்மைக்கு விளக்காக ஒளிகாட்டுவன அல்ல. வேறாக இடம் பெறத் தக்க விசேடச் செய்திகள் இவன் காலத்து இன்மையே இன்னோரன்ன புனைந்துரைக்குக் காரணம் எனலாம்.
ஆயினும் இவனது தில்லைத் திருப்பணி குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்தது. இவனது ஆட்சியில் தில்லையம்பதி பல்வகை வளனும் பல்கித் திகழ்ந்தமையும், அப்பதியில் இவனுக்கு முடிசூட்டுவிழா நிகழ்ந்தமையும், அப்பதியிடத்தும் அம்பலவாணனிடத்தும் தனக்கு மிக்கிரந்த ஈடுபாடு தோன்ற அத்தலத்தில் பல திருப் பணியும் திருமன்றில் பல பெரும்பணியும் இவன் ஆற்றியமையும் திருமாணிகுழியில் காணப்படும் கல்வெட்டொன்றால் வலியுறுகின்றன. 'தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் முதலான தொடர்களை நோக்குக. தில்லைத் திருமன்றில் இவன் கண்ட அரிய திருப்பணிகள் ஒட்டக்கூத்தரால் இவன் மீது பாடப்பட்ட குலோத்துங்க சோழனுலாவிலும் (அடிகள் 77-116), இராசராச சோழனுலாவிலும் அடிகள் 57- 66, தக்கயாகப் பரணியிலும் (தாழிசைகள் 802, 806-810) பரக்கப் பாடப்பட்டுள.
“ஈசனது பரமானந்தக்கூத்தைக் களிகூரக் கும்பிட்டான் குலோத்துங்கன்; தில்லையம்பல முன்றிலில் வரங்கிடந்த திருமாலின் மமதையாகிய குறும்பைக் கீழ்ப்படுத்தான்; அம்பலத்தே பசும்பொன்னால் பூரண கும்பம் நிறைத்தான்; பசும்பொன்னால் நிலம் செய்தான்; அதில் வச்சிரப்பலகை ஆதனமாகப் பதித்தான்; முத்துமாலையைச் சுற்றிலும் தொங்க விட்டான்; சேடனது சூடாமணி கொண்டு திருத்தீபம் ஏற்றினான்; வயிர ஒளியால் குளமாய், சூழக் கிடந்த மரகதத்தால் பசிய இலையாய், பருமுத்தால் இலை நடுவே சரற்காலத்து ஆலியாய், பதுமராகமணியால் திருமிக்க செந்தாமரையாய், மிகுதியான நீலமணியால் வண்டின் கூட்டமாய் இவ்வாறாகக் கோயிற்பணியாகப் பதுமபீடம் சமைத்தான். திருப்பேரம்பலமும் கோபுர மாடம் பரந்தோங்கு மாளிகையும் மாமேருவும் சக்கரவாளகிரியும் போலக் காட்சி வழங்கின; ஏழு கோபுரங்களும் சப்தகுல பருவதங்களை ஒத்தன; தலையில் மகரங்களையுடைய கோபுரங்கள் வானில் உலவும் விமானச் சிகரங்களாகக் கவின் செய்தன; அம்பிகை கோயிலிலுள்ள முற்றம் செம்பொன்படர் பாறையென விளங்கிற்று; பொற்கடாரத்தில் சொரியப்பட்ட பனிநீர் மேருமலையிலுள்ள பொற்றடாக நீராகத் ததும்பிற்று; இரவு பகலாமாறு பல கற்பக வருக்கத்தின் ஒளி விஞ்சிற்று; மகளிர் தாம் அணிந்த பொன்னணிகளால் தேவமகளிரை ஒத்தனர்; அம்மை தான் பிறந்த கடவுட் குன்றினையும் மறக்குமாறு பெருஞ்செல்வம் ஆண்டு நிறைந்தது. இப்பரிசாக இவன் இறைவியது திருக்காமக் கோட்டத்தைத் திகழ்வித்தான்; வீதிதோறும் நிலைத்தேர் வகுத்தான்; நாற்பெருவீதிகளையும் அமராவதி மூதூரின் பெருவீதிகளும் நாணுமாறு பொலிவுறுத்தினான்.”
குலோத்துங்க சோழனுலா இவ்வாறு இவன் செய்த திருப்பணிகளை விரித்துப்பாடுகிறது. இராசராசசோழனுலாவும் இக்கருத்துக்களையே சுருங்கப் பாடுகிறது. தக்கயாகப்பரணி தில்லைத் திருமன்றின் முன்றிலில் கிடந்த கருங்கடலை (-திருமாலைப்பண்டு போலவே கடலிற் புகுமாறு அவ்விடத்தினின்றும் பெயர்த்து எறிந்து திருப்பணி விரிவுறச் செய்யுமாறு மன்றில் இடம் கண்ட திறத்தைச் சற்றே விளங்கப் போற்றுகிறது.
நம் குலோத்துங்கன் பெயர்த்தெறிந்த திருமால் மூர்த்தம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப்பல்லவமன்னனால் நிறுவப்பெற்றது என்ப. சோழமன்னர் சைவப் பெரும்பற்றுடையராயினும் சமயப்பொறை மிக்கிருந்தமைக்கு, முதற்குலோத்துங்கன் விஷ்ணுவர்த்தனன் என ஒருபெயர் புனைந்திருந்தமையும், இராசமன்னார் கோயிலில் (தஞ்சைமாவட்டம்) தன் பெயரால் குலோத்துங்க சோழ விண்ணகரம் ஒன்று திருமாலுக்கு எடுத்தமையும் போல்வன தக்க சான்று பகர்வன. அம்பலவாணனிடத்துப் பேரீடுபாடுடைமையால், தில்லைமன்றில் விரிவான திருப்பணிக்கு இடங்காண வேண்டி இம்மன்னன் முயல்கையில், கோவிந்தராசர் பத்தராம் வைணவப் பெருமக்கள் பலர் அதற்கு இடையூறு செய்யப் புக்கமையால் மன்னன் திருமால் மூர்த்தத்தையே அவ்விடத்தினின்று பெயர்த்து, வழிபாட்டுக் குறை முதலிய ஏதம் நிகழாமலிருத்தற் பொருட்டுக் கடலில் எறிந்துவிட்டான் என்றே அமைதி காண்பர். எவ்வாறாயினும், பெருமன்னனது இச்சிறு செயல் அவனது புகழிற்குச் சற்றே களங்கம் விளைத்து விட்டமை துணிவு அன்றி கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் தமது முறுகிய சிவபத்தியால் குலோத்துங்கன் செயலை மிகைப்படுத்திவிட்டதாகக் கருதவும் இடனுண்டு.
'கிருமிகண்ட சோழன் ' என வைணவ நூல்கள் இவனை இழித்துப் பெயர் புனையிலும், இவன் ஆட்சிக் காலத்தில் நாட்டில் எவ்வகைக் கொடுமையும் போர்வினையும் நிகழ்ந்தில. அமைதியில் சோழநாடு நலம் திளைத்த நற்காலங்களில் இவனாட்சிக் காலமும் ஒன்று. தந்தைக்குத் திறையிறுத்த சிற்றரசர்கள் இவனாட்சியிலும் பணிந்திருந்தனர். மேலைச்சளுக்கியர்பால் தந்தை கொண்ட வேங்கி நாடு இவனாட்சியிலும் தொடர்ந்து திறையிறுத்துவந்தது. இம்மன்னனுடைய கல்வெட்டுக்கள் ஆந்திர தேசப் பகுதியில் பலவாக உள்ளமை மேலதற்குச் சான்று கூறும்.
'தில்லைக் கூத்தப்பிரான் திருவடித் தாமரை மலரிடை அருள் தேனை ஆரும் வண்டு போன்றவன்' என இவனது சைவப் பெரும்பற்றைத் திருவாரூர்க் கல்வெட்டொன்று புகழ்கிறது. அப்பர் சம்பந்தர் சுந்தரர் இம்மூவருடைய திருமேனிகளைத் திருவாரூர்க்கோயிலில் எழுந்தருளுவித்து நித்தல் விழா அணி நிகழ்த்த நிவந்தம் பல இவன் வழங்கியுள்ளமையும் அவ்வூர்க் கல்வெட்டொன்றால் போதருகிறது. இதனால் சைவசமயக்குரவர் மூவர் பாலும் இவனது முறுகிய ஈடுபாடு தேற்றம். இவ்வாற்றால் இறையருள் நிறைந்த நிறைமதிச் செல்வனாய் ஆட்சி நடத்திய இம்மன்னன் காலத்தில் மக்களும் பழிபாவம் நேராது கடவுட்கொள்கை சிறந்து அமைதியுற வாழ்ந்துவந்தனர் என்பதும் ஒருதலை.
நம் பெருந்தகை தன் பாட்டனாகிய முதற்குலோத்துங்கனைப் போலவே அருங்கலை விநோதனாகத் திகழ்ந்தமை காண்கிறோம். தன் தந்தைக்கு ஆசிரியராக அமர்ந்த ஒட்டக்கூத்தர்பால் இவனும் தமிழ்க்கல்வி பயின்றான்; கவிபுனையும் ஆற்றலும் பெற்றான். இயற்றமிழில் மாத்திரமன்றி இசைத்தமிழிலும் இவனது தேர்ச்சியை 'நித்திய கீதப் பிரமோகன்' என்ற இவனது சிறப்புப் பெயர் சுட்டும். குதிரை நூலில் இவனது வல்லமையைத் ‘துரகவித்தியா விநோதன்' எனவும், வில் விச்சையில் இவனது ஆற்றலை 'வில்விநோதன்' எனவும், இவனைப்பற்றிய பிள்ளைத்தமிழில் பாடி மகிழ்கிறார் கூத்தர். இப்புலவர் பெருமான் பல சிறப்புப்பெயர்களால் தம் மன்னனைப் புகழ்கிறார். அவற்றுட் சில வருமாறு: வீரியன், வானவன், மீனவன், வீரகண்டீரவன், விமலன், இராசாதிராசன், சூரியன், வியாகரன், நேரியன், சயதரன், குணபரன், நித்யகல்யாண பூஷணன், ஆரியன் எனக் காண்க. நாட்டில் போர் நிகழ வாய்ப்பின்றி அமைதி நிலவ ஆண்டுவந்த இம்மன்னர் பெருந்தகை, 'போர் எனில் புகலும் மறவன்' எனபதை வீரம்பற்றிய இவனுடைய சிறப்புப் பெயர் சிலவற்றில் காண்க.
தமிழ்க்கல்வி மிக்க இம்மன்னன் தமிழ்ப்புலவரைப் பாணரோடு ஆதரித்தமை கற்றவர் குடிபுடை சூழ் கற்பக இள அனமே' (பிள்ளைத்தமிழ்-80 ) 'கோடியர் புலவர் விறலியர் பாணர், குலகிரிகளும் குறை நிறையத் - தேடிய நிதியம் குலோத்துங்க சோழன் உருட்டுக சிறுதேரே' (பிள்ளைத்தமிழ்-103) பெரும்புலவரும் அருங்கவிஞரும் - நரம்புறு நல் லிசைப்பாணரும்--இரவலரா யிடும்பை நீங்கிப் - புரவலராய்ப் புகழ்படைப்ப' (குலோத், மெய்கீர்த்தி) என்னும் தொடர்களால் வலியுறும். இளமைதொட்டே இவனுக்கு நல்லாசிரியராக அமர்ந்து - இவனது அவைக்களத்தைச் சிறப்பித்த கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் இவன் மீது உலா ஒன்றும், பிள்ளைத்தமிழ் ஒன்றும் பாடிப் போற்றியுள்ளமை இவனது அரும்பெறற் பேறு எனலாம். வடமொழிப் புலவர் தண்டி இயற்றிய காவியாதர்சம் என்ற வடமொழி அணிநூலைத் தமிழில் ஆக்கித்தந்த தமிழ்த் தண்டியாசிரியர் இவன் காலத்தவரே என்று கருத இடனுண்டு.
இம்மன்னனது கோநகராக விளங்கியது கங்காபுரி எனவும், கங்காபுரம் எனவும் பாடப்பெறும் கங்கைகொண்டசோழபுரமேயாகும். தான் தெய்வத் திருப்பணியாற்றிய திருத்தலமாகிய தில்லையும் இவன் விரும்பியெழுந்தருளும் நகரமாக விருந்தமை தெளிவு. இவன் பிறப்பித்த ஆணைகள் கீழைப்பழுவூர், பிரமதேசம், ஏமப்பேரூர் என்ற ஊர்களினின்று வரையப்பட்டனவாகக் காணுதலின், அவ்வூர்களில் அவ்வப்போது சில காலம் இவன் தங்கியிருப்பானாதல் வேண்டும் எனலாம்.
கல்வெட்டுக்களின் வாயிலாக. இவனுக்கு வழங்கியவாக அறியப்படும் சிறப்புப்பெயர்கள் அநபாயன், எதிரிலாப் பெருமாள், கலி கடிந்த சோழன், பெரிய பெருமாள் என்பன; திருநீற்றுச்சோழன், அபயன் என்பனவும் காணப்படுகின்றன. அவை முதற்குலோத்துங்கனுக்கு வழங்கியவை உபசார வழக்கால் இவனுக்கும் எய்தின என்க.
திருமழபாடிக் கல்வெட்டொன்றினின்று இம்மன்னர் பிரானுடைய மனைவியர் தியாகவல்லி, முக்கோக்கிழானடி என்னும் இருவர் என்பது புலனாகிறது. பட்டத்தரசியாகிய தியாகவல்லிக்குப் புவன முழுதுடையாள் என்பது ஒரு சிறப்புப்பெயர். முக்கோக்கிழானடி சேதி நாட்டு மன்னன் ஒருவனுடைய மகளாதல் வேண்டும் என்பது, 'பெருங்கற்பின் மலாடர் குலமணி விளக்குத் - திருந்து நித்தில மணிமுறுவல் தெரிவை - முக்கோக்கிழானடிகளும்' என்ற இவனது மெய்க்கீர்த்தித் தொடரால் தெளிவுறுகிறது.
இவ்வேந்தன் கி.பி. 1136-இல் தன் மைந்தன் இராசராசனுக்கு இளவரசுப் பட்டம் புனைந்தான்; கி. பி. 1150-இல் அம்பலவாணர் தம் அடியிணையடைந்தான்.
இவனது ஆட்சிக் காலத்தில் அரசியல் அதிகாரிகளாகவும் சிற்றரசராகவும் இருந்து பணியாற்றிய பெருமக்கள் சிலர் கல்வெட்டுக்களில் பெயர் சுட்டப்பெறுகின்றனர்: அம்மையப்பன் கண்ணுடைப்பெருமாளான விக்கிரம சோழ சம்புவராயன் என்பான் பல்லவர் மரபினைச் சார்ந்த செங்கேணி என்னும் குடிப் பெயரினன்; தொண்டை மண்டலத்தே இன்றைய வட ஆர்க்காடு தென்னார்க்காடு மாவட்டப்பகுதிகளை இவன் ஆண்டு வந்தவன். ஏழிசைமோகன் ஆட்கொள்ளியான குலோத்துங்க சோழ காடவராயன் என்பானும் பல்லவமரபினன்; இன்றைய தென்னார்க்காடு மாவட்டத்தில் திருமாணிகுழிச் சூழலை இவன் ஆண்டு வந்தான். இராசராச மகதை நாடாழ்வான் என்பான் மகத நாட்டு வாணர் மரபினன்; இவனும் இன்றைய தென்னார்க்காடு மாவட்டப் பகுதியில் நாடுகாவல் புரிந்துவந்தான். விக்கிரமசோழ சேதிராயன் என்பான். திருக்கோவலூரைச் சார்ந்த நிலப்பரப்பைக் காவல் பூண்டு வந்தவன். குலோத்துங்க சோழ யாதவராயன் என்பான் யதுகுலச் சிற்றரசன்; காளத்தியைச் சூழ்ந்த நிலப்பரப்பினைக் காவல் மேற்கொண்டிருந்தவன். சீயகங்கன் என்பான் கங்கர் மரபினன்; மைசூர்த்தேயத்தே கங்கநாட்டுப் பகுதியை யாண்டுவந்த இச்சிற்றரசன் நன்னூல் ஆசிரியர் பவணந்தியை ஆதரித்த சீயகங்கனுக்குப் பல தலைமுறை முன்னோன் என்க. அதிகமான் என்பான், கொங்கு நாட்டுத் தகடூரை ஆட்சி புரிந்து வந்த அதிகமான் மரபினன். மதுராந்தக பொத்தப்பிச் சோழ சித்தரசன், கடப்பை மாவட்டத்துப் பொத்தப்பிச் சூழலையாண்டுவந்த குறுநில மன்னன். மற்று, ஆந்திரதேயத்தில் நம் மன்னனுக்குத் திறையிறுத்து வந்த குறு நிலமன்னர்கள் மகா மண்டலேசுவரன் பல்லயசோடமகாராசன் முதலாகச் சிலர் கல்லெழுத்துக்களில் இடம் பெற்றுள்ளனர்.
‘பாடற்பெரும் பரணி தேடற்கருங்கவி கவிச்சக்ரவர்த்தி பரவச் செஞ்சே வகஞ் செய்த சோழன் திருப்பெயர செங்கீரை யாடியருளே' எனவும், ‘கோமன்னன் புவனதரன் விக்கிர சோழன் குலமதலை குலோத்துங்க சோழனைக் காத்தருள்க' எனவும் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் செங்கீரைப் பருவத்தும் காப்புப்பருவத்தும் முறையே வருதலால், இப்பிள்ளைத்தமிழ் நூலைக் கூத்தர் பாடக் கொண்டான் கலிங்கத்துப் பரணி கொண்ட முதற்குலோத்துங்கனாகிய அபயன் பெயரனும், விக்கிரம சோழன் புதல்வனுமாகிய இரண்டாம் குலோத்துங்கசோழனே என்பது தெளிவாம்.
-------------------
குலோத்துங்கன் மரபு
இரண்டாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகள்
1. பூமன்னு பதுமம் பூத்தவே ழுலகுந்
தாமுன்செய் தவத்தாற் பரிதிவழித் தோன்றி
நெடுமா லிவனெனச் சுடர்முடி சூடி
இருநில மகளை யுரிமையிற் புணர்ந்து
திருமகள் பணைமுலைச் செஞ்சாந் தணைந்து
பருமணி மார்வம் பனிவரை நிகர்ப்பச்
சயமகள் செழுந்தண் சந்தனச் சுவட்டாற்
புயமிரு கயிலைப் பொருப்பெனத் தோன்ற
நாமகள் தானுமெங் கோமகன் செவ்வாய்ப்
பவளச் சேயொளி படைத்தன னியானெனத்
தவள நன்னிறந் தனித்துடை யோரெனப்
புகழ்மகள் சிந்தை மகிழு நாளிலும்
ஒருகுடை நிலவும் பொருபடைத் திகிரி
வெயிலுங் கருங்கலி யிருளினைத் துரப்ப
நீடுபல் லூழி யேழ்கடற் புறத்தினுங்
கோடாச் செந்தனிக் கோலினி துலாவ
மீனமுஞ் சிலையுஞ் சிதைத்து வானுயர்
பொன்னெடு மேருவிற் புலிவீற் றிருப்ப
உம்ப ரியானை யோரெட் டினுக்குந்
தம்ப மென்னத் தனித்தனி திசைதொறும்
விசயத் தம்ப நிற்பப் பசிபகை
யானது தீங்கு நீங்க
மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க
மாதவர் தவமு மங்கையர் கற்பும்
ஆதி யந்தண ராகுதிக் கனலு
மீதெழு கொண்டல் வீசுதண் புனலு
மேதினி வளருஞ் சாதி யொழுக்கமும்
நீதி யறமும் பிறழாது நிகழப்
பாவும் பழனப் பரப்பும் பணைக்கை
மாவு மல்லது வன்றளைப் படுதல்
கனவிலுங் காண்டற் கரிதென வருந்திப்
புடையினும் பல்வேறு புள்ளினு மல்லது
சிறையெனப் படுத லின்றி நிறைபெருஞ்
செல்வமோ டவனி வாழப் பல்லவர்
தெலுங்கர் மாளுவர் கலிங்கர் கோசலர்
கன்னடர் கடாரர் தென்னர் சேரலர்
சிங்களர் கொங்கணர் சேதியர் திரிகர்த்தர்
வங்க ரங்கர் வத்தவர் மத்திரர்
கங்கர் சோனகர் கைகயர் சீனரென்
றறைகழல் வேந்தரு மெல்லா வரைசரும்
முறைமையில் வருந்தித் திறைகொணர்ந் திறைஞ்ச
அம்பொன் மலர்க்கொடி செம்பியன் கிழானடி
ஒருமருங் குடனமர்ந் திருப்ப வருள்புரி
சிமயப் பொற்கொடி யிமயப் பாவையுஞ்
சிவனும் போலப் புவனமுழு துடையா
ளிவன்திரு மணிமார்வத்
துலகமுழு துடையா ளெனவுட னிருப்பச்
செம்பொன் வீர சிம்மா சனத்துப்
புவனமுழு துடையாளொடும் விற்றிருந் தருளிய
இராசகேசரி வன்மரான திரிபுவன சக்ரவர்த்திகள்
குலேத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு
--------
2. பூமன்னு பாவை காமுற்று முயங்க
இருநிலக் கிழத்தியைத் திருமணம் புணர்ந்து
கலையின் செல்வி தலைமை யோங்கப்
போர்மகள் காப்பச் சீர்மகள் போற்ற
மரகதப் புரவி யிரவிகுலம் விளங்கப்
பாற்கடற் றெய்வப் பள்ளி நீங்கி
நாற்கடல் வட்ட நாடொறுந் தாங்கி
எண்டிசை யானை தண்டுவிடை நிற்பக்
காவற் றேவர்க ளேவல் கேட்பக்
கலிப்பகை யோட்டிப் புலிக்கொடி யெடுத்துத்
தென்னவர் கேரளர் சிங்களர் தெலுங்கர்
கன்னட ரிலாடர் கலிங்கர்முத லாகக்
கொற்றவர் வந்து குடிமை செய்ய
ஒற்றை வெண்குடை யுலகுதனி கவிப்ப
ஊழிபல கோடி யாழி நடாத்திச்
செம்பொன் வீர சிம்மா சனத்துத்
திரிபுவன முடையாளொடும் வீற்றிருந் தருளிய
கோவிராசகேசரி வன்மரான திரிபுவன சக்ரவர்த்திகள்
ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு -……..
---------------
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் - நூலாராய்ச்சி
தெய்வங்களுள் கண்ணனுடைய இளமை விளையாட்டுக்களை அறிவதற்குப் பாகவத புராணம் போன்ற நூல்கள் கருவியாக இருப்பது போன்று, ஏனைய தெய்வங்களின் இளமைவிளையாட்டுக்களை அறியக் கருவியின்று. ஆதலின் அவர்களைக் குழந்தையாகக் கற்பனை செய்து பாடுங்காலும், பிள்ளைத் தமிழ்ப்பருவச்செய்திகளைச் செய்யுட்களின் இறுதியில் கூறி ஏனைய பகுதிகளில் அவர்களின் வீரச்செயல் அருட்செயல் இவற்றையே கற்பனை செய்து கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. தெய்வங்களைப் பாடிப் பெரும்பாலும் மறுமைப்பயன் பெறுவதை விட வேந்தர்களைப் பாடி இம்மைப்பயன் பெறுதலையே புலவர் பலரும் உட்கொண்டனர்; வேந்தர்கள் குறைந்த காலத்தில் வள்ளல்களைப் பற்றிப் பிள்ளைத்தமிழ் பாடத் தொடங்கினர்.
மக்களைப் பற்றிப் பிள்ளைத்தமிழ் பாடுங்கால், தாம்பாட விரும்பும் தலைவன் குழந்தையாயிருந்த காலத்தில் யாரும் அவனைப்பற்றிப் பிள்ளைத்தமிழ் பாடவில்லை. குழந்தைப்பருவத்தில் மூன்றாண்டுக்குட்பட்ட எல்லாக்குழந்தைகளின் விளையாட்டும் ஒரு நிலையினதாகவே இருக்கும். அவ்விளையாட்டுக்கள் கண்டு மகிழற்குரியனவேயன்றிப் பலப்பல பாடல்களாகப் பாடற்கேற்ற கருவை உட்கொண்டன அல்ல. ஆதலின் வாலிபப் பருவங் கடந்த பின்னர் ஒரு தலைமகன் புகழுடன் இருக்குங் காலத்திலேயே, அவனைப் பற்றிக் குழந்தையாகக் கற்பனை செய்து பிள்ளைத்தமிழ் பாடும் மரபு ஏற்பட்டது.
மக்களுக்குத் தலைவனான அரசனைத் திருமாலின் அமிசமாகத் தமிழகத்து முன்னோர் கருதினர். ஆதலின், அவனைப் பற்றிய பிள்ளைத்தமிழில் அவனைத் திருமாலாகவே உருவகம் செய்து, திருமாலுடைய வீரச்செயல் அருட்செயல் இவற்றை அவனுக்கு ஏற்றிப் பாடிய பாடல்களே பலவாக அமைதல் இயற்கை. மேலும் அவனுடைய வீரச்செயல் கொடைச்செயல் என்பனவற்றோடு அவன்குல முன்னோர், புராண காலத்து அவன் முன்னோர் ஆகியவர்களின் செயல்களையும் பலபடியாகப் புகழ்ந்து 'அவர்கள் மரபில் பிறந்தவன் இவ்வேந்தன்' என்று கூறுவதும், ஒற்றுமை நயத்தால் அவர்களுடைய செயல்களையும் இவன் செயல்களாகவே கூறுவதும் கவிஞர்களுடைய வழக்கமாயின. இம்முறையில் அமைந்தது ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்.
குலோத்துங்கன் திருமாலின் பல அவதாரங்களின் வீரச்செயல்களும் தன் மேல் ஏற்றிக் கூறப்பெற்றுள்ளான். இத்தகைய பாடல்களில் அவன் கண்ணனாகவும், இராமனாகவும், நரசிம்மமாகவும், மகாவராகமாகவும், பரவாசுதேவனாகவும் கூறப்பட்டிருத்தலைக் காண்கிறோம். அவனுடைய முன்னோர்களாகிய முதல் இராசராசன் முதலியோருடைய வெற்றிகளும் அவன் பெற்ற வெற்றிகளாக அவனுக்கு வீறுசெய்தலைக் காண்கிறோம். புராண காலமன்னர்களான சுரகுரு, காகுத்தன், பகீரதன் முதலியோர் செயல்களும் சங்ககாலத்தை ஒட்டிய கரிகாலன், செங்கணான் முதலியோர் செயல்களும் இடையிடையே இவனைச் சிறப்பிக்கும் முகத்தான் கூறப்பெற்றுள்ளன. இவற்றை இனி விரிவாகக் காண்போம்.
பத்துப்பருவங்களிலும் 103 பாடல்களைக் கொண்ட இந்நூலில் 16 பாடல்கள் சிறிதும் பெரிதுமாகக் சிதைந்துள்ளன. ஏனைய பாடல்களில் காணப்படும் நூற்செய்திகளை நிரல்படக்காண்போம்:
சிவபெருமான் - பகையாகிய அசுரர்களுடைய முப்புரங்களும் வெந்து நீறாகுமாறு அம்புவிடுத்தவர்; மூகன் என்ற அசுரனுடைய தொல்லைகள் தீர அவனை அழித்தவர்; தலையிலணிந்த சந்திரன் அஞ்ச, பாம்பு திடுக்கிடப் பல திரைகளோடு வேகமாக வந்த கங்கையைத் தம் சடைமுடியில் அமைதியுறுமாறு ஏற்றவர்; மரகதமலை போன்ற திருமாலும் மேருமலை போன்ற பிரமனும் இருமருங்கும் சிறக்க, மாணிக்க மலை போன்று அவர்கள் நடுவே காட்சி வழங்குபவர்; பாண்டிய நாடு வற்கடமுற்றகாலை அதனை நீத்து வேற்று நாடு போந்த புலவருள், நாடு செழிப்புற்ற பின் மீண்டாரிடைப் பொருளதிகாரம் வல்லார் இலராக, அது பற்றிக் கவன்ற வழுதியின் வருத்தம் தணிய அறுபது நூற்பாக்களைக் கொண்ட இறையனார் அகப்பொருள் நூலை அருளியவர். (1, 2)
பிரமன் - சனகர் முதலிய தெய்வ இருடியருடைய ஞானப்பொறிகளுக்கும் எட்டாத செந்தாமரையும் வெண்டாமரையும் பாதிப்பாதிப் பொற்றாமரையும் வெள்ளித்தாமரையுமாக ஒளி வீசும் வண்ணம், தன் செஞ்சோதியும், தன் தேவியின் வெண்சோதியும் ஒளிவீச, இருவகைத் தாமரையிலும் ஒருபோதும் நீங்காது பல்லூழிக்காலமும் இருப்பவன். (3)
சூரியன் - ஐங்கதிகளும் பொருந்திய குளம்புகள் பூமியில் படியாமல், தேர்ச் சக்கரத்தை விட்டு ஒருபோதும் நீங்காமல், பூண்ட நுகத்தை நீக்காமல், கண் இமைக்காமல், பிடரிமயிர் சிலிர்க்காமல் கட்டிய மாலையை அசைக்காமல், பூண்ட மந்தாரமாலை துவளாமல் 'இவை ஓவியக் குதிரை' என்னுமாறு இவ்வுலகமும் தேவருலகமும் புகழும் ஏழ்பெரும்புரவியைச் செலுத்துபவன். (4)
விநாயகன் - சிவபெருமானுடைய மகன்; முகபடாமணிந்த மதச்சுவட்டை உடைய யானைமுகத்தை உடையவன்; வாழைப்பழம், பலாச்சுளை இவற்றைத் தனக்கு நிவேதிப்பவர் தம் துயரம் பொடியாகுமாறு, தன் அடியார்களுடைய இல்லங்கள் தோறும் வீற்றிருந்து பாதுகாப்பவன்; காலையில் வண்டுகள் தும்பைக் கொத்தில் திளைத்து, பகலில் மதநீரில் மூழ்கி, மாலையில் தான் அணிந்த சந்திரனின் அமுத கிரணங்களை வாய்மடுத்து, வைகறையில் தன் கொன்றைமாலையில் புகும் அழகிய முடியணிந்தவன். (5)
முருகன் - இந்திரனும் ஏனைய தேவர்களும் தனக்கு அளித்த அரியவில், வேல், கடம்பு, ஆரம், மதி, தூரம் (இசைக்கருவி) சிந்தூரகிரி, தோகை, கொம்பு, யானை, குழல், சேவற்கொடி இவற்றையெல்லாம், தான் பின் மணக்கப்போகும் இந்திரன் மகள் தெய்வயானைக்கு வழங்கப்படும் சீதனம் போல, முன்னரே இந்திரன் முதலியவரிடம் பெற்றவன். (6)
காளி - தன் கரிய கண்களுக்கு மேல் நெற்றியில் பிறைச்சந்திரனை அணிந்தவள்; கங்கை தங்கும் சடைக்காட்டினள்; கொடிய சுறாமீன் வட்டமாக அமைத்துத் தொங்கவிடப்பட்ட குழையை அணிந்த காதினள்; கீழ் நோக்கிச் சாய்ந்து தாழ்ந்த மூன்று இலை வடிவமாக அமைந்த சூலத்தள்; படம் எடுக்கும் கோபங்கொண்ட பாம்பினைக் கங்கணமாக அணிந்தவள்; மடிப்பு மடிப்பாகக் கீழே தொங்கும் மஞ்சள்நிறப் பட்டாடையள்; பசிய துழாய் அணிந்த உச்சிக்கொண்டையை உடையவள்; பக்கலில் நின்று தனக்கு வாகனமாகும் ஆண் சிங்கத்தை உடையவள். (7)
சத்தமாதர் - திருவிக்கிரமாவதார காலத்தில் வானளாவ நீண்ட கால்களை உடைய நாராயணி, திரிபுரம் அழியுமாறு வில்லை வளைத்த உருத்திராணி, தாமரைப்பூவில் அமர்ந்து யோகம் புரியும் பிராமணி, மதசலம் பெருகும் ஐராவதத்தின் மீதமர்ந்த பெண் யானை போன்ற இந்திராணி, சிவந்த உச்சிக்கொண்டையை உடைய கோழியாக மாறிய சூரனுக்குப் பகையாகிய கௌமாரி, கொன்றைமாலை மணம்வீச வீற்றிருக்கும் மாகேசுவரி, கடற்பட்ட பூமியைத் தன் கொம்பால் வெளிப்படுத்தி எடுத்து வந்த வாராகி ஆகியோர். (8)
முப்பத்து முத்தேவர் - குதிரைகள் பூட்டிய தேரில் வரும் ஆதித்தர் பன்னிருவர், விடைகளின்மேல் வரும் உருத்திரர் பதினொருவர், ஆயுள்வேதத்தின் மேல் வரும் அசுவினி தேவர் இருவர், மதமொழுகும் கன்னங்களை உடைய யானைகளை இவர்ந்து வரும் வசுக்கள் எண்மர் ஆகியோர். (9)
ஐயனார் - கிரவுஞ்சமலையும் அதில் மறைந்த அசுரனும் பிளக்குமாறு முருகப்பெருமான் வேல் எறிந்தபோதும், திரிபுரத்தை எரிக்கச் சிவபெருமான் அம்பு எய்தபோதும், முருகனுடைய இளவலும் சிவபெருமானுடைய புதல்வனும் ஆகிய சாத்தன், படையணியின் நடுவில் யானை மீதிவர்ந்து தோன்றும் சிங்கம் போலத் தோன்றிப் போரிட்டவனாவான். (10)
திரிபுரசுந்தரி - உலகத்து உயிர்களின் துயரைத் தீர்ப்பவள்; தன் பிறை போன்று வளைந்த பற்களும், வளையலணிந்த கைகளும், காதணிகள் பிறழும் தோட்புறமும் இவை அழகிய ஒளிவீச இருப்பவள்; வலப்புறவிழி வெயில் வீச, இடப்புறவிழி நிலவு வீச, நெற்றி விழி தீயொளி பரக்க வீற்றிருக்கும் இத்தேவி தன் கரிய நிறத்தால் இருளையும் பரப்புபவளாவாள். (11)
இத்தெய்வங்கள் யாவும் குலோத்துங்கனைக் காக்குமாறு வேண்டப்பெறுகிறார்கள். குலோத்துங்கன் திருமாலின் அவதாரமாகவே கூறப்படுதலின், திருமாலுடைய பல அவதாரச்செயல்கள் பலவும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
எட்டாம் பாடலில், குலோத்துங்கன் நறுமணம் கமழும் திருத்துழாய்மாலை அணிந்தவன், பாற்கடலாகிய நெய்தற் பகுதித் தலைவன், முதலைவாயிலிருந்து கசேந்திரனைக் காத்தவன், (98) கண்ணனாகிய காலத்தில் செவிலியால் பாதுகாவலுக்காகத் திருநீறு அணியப்பட்டவன், ஆய்ச்சியரோடு குரவைக்கூத்தாடியவன், காளீயன் என்ற பாம்பை வென்று அதன் மீது கூத்தாடியவன், அருச்சுனனுக்குத் தேர் செலுத்தியவன் என்ற செய்திகள் காணப்படுகின்றன.
பதினெட்டாம் பாடலில், குலோத்துங்கன் கண்ணனாகி அரவக்கொடி உயர்த்த துரியோதனனுடைய கோநகராகிய அத்தின புரிக்குத் தூதனாகச் சென்று, அவன் அமைத்த பொய்யாசனத்திலமர்ந்து, தன் பேருருவால் தன் பெருமை காட்டி, அவனுடைய பதினோர் அக்குரோணி அளவுடைய படை அழிய, தருமன் முடிசூடுதற்கு அருச்சுனனுக்குத் தேர்ப்பாகனாகி ஒரு முட்கோல் பிடித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
இருபத்து மூன்றாம் பாடலில், குலோத்துங்கன் ஆகிய பாண்டவர் தூதன் வேய்ங்குழல் ஊதி எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்தவன், நப்பின்னையை மணத்தற்குப் பந்தயமாக விடப்பட்ட ஏழ்எருதுகளையும் அடியோடு அழித்தவன் என்ற செய்திகளைக் காண்கிறோம்.
25ஆம்பாடலில், துழாய்மாலை அணிந்தவனும் திருமகள் கேள்வனும் ஆகிய குலோத்துங்கன் இரண்டு மருதமரங்களிடையே தன்னைக் கட்டிய உரலோடு தவழ்ந்து சென்று அவற்றை வீழ்வித்தவன், கேசி என்ற அசுரனை வாயைப் பிளந்து கொன்றவன், நூற்றுவர் படையோடு மடிய அருச்சுனனுக்குத் தேரோட்டியவன் என்ற செய்திகள் உள்ளன.
26ஆம்பாடலில், அருச்சுனனைப் பாதுகாப்பதற்காகச் சயத்திரதன் அழிவதற்குக் கதிரவன் மறையுமுன் தன் சக்கரத்தால் சூரியனை மறைத்து இரவு வந்து விட்டது போல்வதொரு தோற்றம் உண்டாக்கிய கண்ணன் செயல் குலோத்துங்கன் செயலாகக் கூறப்படுகிறது; மேலும் அவன் தூணிலிருந்து தோன்றிய நரசிங்கமாகவும் கூறப்படுகிறான்.
36ஆம்பாடலில், மைத்துனனாகிய தருமன் தூதன், ஒரே அடியில் மல்லர் இருவரையும் ஓர்யானையையும் அழிக்கும் அற்புத மற்போர் புரிபவன், அழகிய கோவியர் துகிலைப் பற்றிய சிற்றாயன், அதிரதரும் அஞ்சும் தேர்ப்பாகன், இருசிறகருள் பதினாலுலகையும் அடக்கும் கருடவாகனன் என்ற செய்திகளைக் காண்கிறோம்
குலோத்துங்கன் கண்ணனாய் வடமதுரையில் சிறுமியர் கூடி நின்ற தெருவெல்லாம் ஒளிபெறத் திருவுலா வந்த செய்தி 34ஆம் பாடலிலும், தாதிபோல வந்த பூதனையின் உயிரோடு இடைச்சியர் உறிகளில் வைத்த பானைகளிலிருந்த வெண்ணெயையும் உண்டமை 40ஆம் பாடலிலும், வானளாவக் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து இந்திரன் விடுத்த கல்மாரி காத்து ஆய்பாடியைக் காத்த செயல் 41ஆம் பாடலிலும், கவுத்துவ மணியைத் திருமார்பில் அணிந்த செய்தியும் பின்னையை மணத்தற்கு வலிய இடபங்கள் ஏழினை வென்ற செய்தியும் 44ஆம் பாடலிலும் அருச்சுனனுக்கு மைத்துனனாய் வாயுவேகத்தில் அவனுக்குப் பாரதப் போரில் தேரோட்டிய செயல் 46ஆம் பாடலிலும், துவாரகையை ஆண்ட செயல் 57ஆம் பாடலிலும், தன்னையே உயிரும் உடலுமாகக் கருதிய கோவியருடைய துகில் கவர்ந்தமை 66ஆம் பாடலிலும், கஞ்சன் வஞ்சனையாக விடுத்த அசுராவேசமுடைய ஏறுகள் ஏழனையும் வென்றதும் துழாய்மாலை அணிந்ததும் பாரதப் போரில் வலம்புரிச்சங்கினை ஊதியதும் 87ஆம் பாடலிலும் கூறப்பட்டுள்ளன.
குலோத்துங்கன் இராமனாய்த் தான் வழி வேண்டவும் விடை தாராது வாளா விருந்த கடல்மீது மீன்கள் துண்டாக கடல்நீர் கொதிக்க மேகங்கள் அஞ்சி ஓட அம்பு எய்து வருணனைத் தனக்கு வழிபாடு செய்யுமாறு வைத்த செயல் 56, 89ஆம் பாடல்களிலும், முனிவர் தம் குறை நீங்க முதலைகள் தங்கும் கடலில் அணை கட்டியமை 80ஆம்பாடலிலும், மிதிலையில் வில்லை முறித்த செயல் 89ஆம் பாடலிலும் காணப்படுகின்றன.
அழகிய வீதிகளை உடைய இரணியன் நகரில் மேரு அனையதொரு தூணிடைத் தோன்றி, பதினாலுலகும் தனியாளும் அசுரர் கோனாம் இரணியனுடைய வலிய மலை போன்ற மார்பு நடுவில் பிளக்குமாறு தன் நகங்களைப் பணிகொண்ட நரசிங்கமே விக்கிரமன் (58) என்று கூறப்பட்டுள்ளது.
குலோத்துங்கன் திருமாலாய்ப் பாம்புகளிடமிருந்து சந்திரனைக் காத்த செயலை 68, 70ஆம் பாடல்களிலும், பாற்கடலைக் கடைந்த செய்தியை 72ஆம் பாடலிலும், கடலில் புக்கு அசுரர் பலரையும் வென்ற செயலை 79ஆம் பாடலிலும் காண்கிறோம். குலோத்துங்கன் திருவிக்கிரமனாய், கடலேழும் மலையேழும் நிலமேழும் நதிகளுடன் அளந்த திருவடிகளை உடையவன் என்ற செய்தியை 94ஆம் பாடல் சுட்டுகிறது. இவற்றால் குலோத்துங்கன் பெரும்பாலும் கண்ணனாகவும், சிறுபான்மை இராமன் நரசிம்மன் வராகமூர்த்தி திருவிக்கிரமன் திருமால் ஆகியோராகவும் வருணிக்கப்பட்டிருத்தல் புலனாம்.
குலோத்துங்கன் வம்சத்துப் புராணகால சங்ககால அரசர் சிலருடைய சிறப்புக்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
பகீரதன் - சூரியன்குலத்து மன்னனாம் குலோத்துங்கன் இரவும் பகலும் சிறந்த மணிகளைக் கொழித்துப் பாதலத்திலும் நிலத்திலும் வானுலகிலும் மிக வேகமாகச் சுழன்றோடி வரும் கங்கையைக் கொண்டு வந்த பகீரதனாவான் (பாடல் 86). பகீரதன் குலத்தில் தோன்றிய தலைவன் குலோத்துங்கன் (பாடல்-84)
ககுத்தன் - நில உலகம் முழுதும் தன்ஆணை தவழ, வானத்தை நோக்கிச் சென்று இருபாலும் கவரிவீசக் குடை கவித்து, வலிமை மிக்க அமரர்படை தனக்குத் துணையாகச் சூழ, அரமகளிர் மகிழ்வூட்டுவதற்காகப் பாட, ஆயிரங்கண்ணோனாகிய இந்திரன் தனக்கு இட வாகனமாக வா, அவன் கழுத்திலமர்ந்து அவுணரோடு போரிட்டு வெற்றி பெற்ற ககுத்தன் (மாட்டுக்கழுத்தில் ஏறிப் பொருதவன்) என்ற பெயருடைய மன்னன் மரபினன் குலோத்துங்கன் (பாடல் 60).
சுரகுரு - உயிரைப் போக்கும் யமன் விடும் சூலம் ஒடிபட, அவன் ஊர்ந்த எருமை மாய, அவன் உயிர்கள் மீது விடும் பாசமாகிய கயிறு அறுபட, யமதூதர்கள் தோற்றோட, அவன் தேவியர்போல் வார் தன்னைச் சரணடைய, முதியோர் பலரும் தன் நாட்டில் முதுமக்கட் சாடியிலமர்ந்து பல்லாண்டு வாழ வழி வகுத்த சுரகுருவின் மரபினன் குலோத்துங்கன் (பாடல் -39).
கரிகாலன் - தோற்ற மன்னர்களைக் குலநதியாம் காவிரிக்கு மண் சுமக்கச்செய்து வானளாவக் கரை அமைத்தோன் (53); தன் புயவலிமையாலே காவிரிக்கு இருகரையும் அமைக்கச் செய்தவன் (48)- இத்தகைய கரிகாலன் மரபில் தோன்றியவன் குலோத்துங்கன் (59)
கோச்செங்கணான் - தன்னோடு திருப்போர்ப்புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற்கோட்டத்துச் சிறையிருந்த சேரமான் கணைக்கால் இரும்பொறையை, தன் வெற்றியைச் சிறப்பித்துப் பொய்கையார் பாடிய களவழி நாற்பது என்ற நூலைக் கேட்டு அந்நூற்குப் பரிசாகச் சிறைவீடு செய்தவன். இவன் மரபினன் குலோத்துங்கன் (103).
இனி இவன் குலமுன்னோர் சிறப்புக்களை நோக்குவோம்.
இராசராசன் - தமிழ்ப்புலவரும் வடமொழிப் புலவரும் ஏனை அரசர்களை அண்மிப் பரிசில் பெறுவதற்கு அலமரும் துயரை ஒழித்துக் காத்தவன் இராசராசன். இவன் தன் தானையின் வலிமையால் காடுகள் பலவற்றை அழித்துப் பகலவன் வெப்பம் பரவச்செய்து, பல இடங்களையும் தீக்கு இரையாக்கி, தன்னோடு போரிட வந்த கலிங்கரை அழித்த சிறப்பினன். இவன் செயல் குலோத்துங்கன் மேல் ஏற்றிக் கூறப்பட்டுள்ளது (71).
இரசேந்திரன் - பொறிகள் கடிது பணிசெய்யும் மதிலையும் வில்லையும் காவலாகக் கொண்ட வஞ்சிமா நகரை விட்டுச் சேரன் தங்கிய திருவஞ்சைக்களத்தின் மதிற்கதவினையும் போக்கி, சேரநாட்டுப் பதினெண்சுரமும் பொடியாய் அழியுமாறு செய்து மீண்டவன் பண்டித சோழனாகிய இராசேந்திரன். இவனுடைய மகளுக்கு மகன் பெற்ற மன்னவனுடைய மரபினன் குலோத்துங்கன் (42). சாவகத்தை அழித்து, அருமண நாட்டோடு பொருது சிதைத்து, மலையூரிலிருந்த மதிலைச் சிதைத்து. அரசர்கள் மனம் குலையுமாறு கடாரங் கொண்டவன் இரசேந்திரன் (92). சோம்பியிராது அங்கம், வங்கம், கலிங்கம், கங்குலிங்கம், திரிகத்தம், மாளுவம், சோனகம், பப்பளம், கொப்பளம், மகதம் என்ற நாட்டு அரசரை வென்று, அருமணம், சாவகம், வங்காளம், ஈழம், கடாரம், சீனம் என்ற நாடுகளைக் கைப்பற்றிப் பின் அவரவர் நாடுகளை அவரவர் ஆளவிட்டு, அவர்களைக் கொண்டு கங்கை நீரைத் தென்திசையிலுள்ள தன் நாட்டுக்குக் கொணரச் செய்து, அவர்களது அடிமையைப் பணிகொண்டவன் இராசேந்திரன் (77)
இராசாதிராசன் - மண்ணைக்கடக்கத்தில் நிகழ்ந்த போர் ஆரவாரம் விண்ணைப் பிளக்கப் போரிட்டு, தன் யானைப்படையைக் கொண்டு சாளுக்கியர் தம் வருக்கமே அழியுமாறு வேளுக்கிராமத்தில் வென்று, கொல்லாபுரத்தில் போரிட்டு, கல்யாண நகரின் பழைய மதிலை அழித்துக் கொங்கணப்பகுதி ஏழனையும் முன்னாள் தன் ஆட்சிக்கு உட்படுத்தியவன் இராசாதிராசன். (12) கோபக்கனலால் உதிரம் கொதிக்க வங்காளர் விட்ட யானைத்திரள் ஆலகாலவிடமென வந்து இரட்ட நாட்டில் போரிட்டு அழிய, மராட்டர்கள் விடுத்த யானைகளின் பதினான்கு வரிசைகளும் எண் திசைக்கரிகளும் திடுக்கிடுமாறு தன் படைகள் அவற்றோடு மோதி முழங்க, கலிங்க நாட்டு யானைகள் பின்னணியில் கவிழ, புண்பட்டுச் சுழலும் யானைகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிய குருதிவெள்ளம் ஓடி வடக்கே விந்தியமலைப்பகுதிக்குச் செல்ல, வேதாளங்கள் அடிபெயர்த்திட்டு ஆடிய ஆட்டத்தினால் பாதலத்தின் முகடு விரிசலடைய வீமாபுரத்தில் ஒப்பற்ற அம்பினைத் தேர்ந்து செலுத்தியவன் ஜயங்கொண்ட சோழனாவான் (13). தன் முரசொலியாலேயே வடநாட்டு வேந்தர்கள் அஞ்சியோடுமாறு செய்த பெருவீரன் ஜயங்கொண்ட சோழன். இவன் மரபில் வந்தவன் குலோத்துங்கன் (101). முதற்குலோத்துங்கன் - வெம்மைமிக்க குருதி நர்மதையாற்றில் மிதந்து ஓடி மேல்கடல் சிவக்குமாறு புக, குருதிவெள்ளம் பரவிப் பல பெரிய ஆறுகளாய்க் கீழ்கடலில் மேன் மேலும் வெள்ளமிட, கெடாத பெரிய அரண்களை உடைய கலிங்கர் படை ஏழும் ஒருசேர எழுகடல் போல எதிரே வந்து தடுப்ப, போர்முனையில் வென்று ஏழ்கலிங்கமும் பாழாகுமாறு செய்த தன் ஐந்து ஆயுதங்களால் பகைமன்னன் நாற்படையும் வலிமை கெட வெற்றி பற்றிக் கலிங்கத்துப்பரணி என்ற சிறந்த பிரபந்தம் பாடும் கவிச்சக்ரவர்த்தியாகிய ஜயங்கொண்டார் புகழுமாறு தன் வீரத்தைக் காட்டியவன் முதற்குலோத்துங்கன் (14).
கொங்கு நாட்டை வென்று, மண்ணைக்கடக்கத்தில் இரட்டரைக் கலங்கப்பண்ணி, கோகன்னம் என்ற ஊரை வென்று, வாதாபியைக் கைப்பற்றிக் கங்கைக்கும் கோதாவரிக்கும் நடுவே கலிங்கருடைய யானைப்படைகள் இறுதி வரிசையில் அழிய, முன்னோக்கி எதிர்த்துவந்த கொடிய களிறுகளின் இரண்டு கும்பங்களிலிருந்தும் முத்துக்கள் உதிர, வெற்றி நல்கும் கொற்றவையை ஒத்து, வயிராகரத்தில் தன் படையை வந்து எதிர்த்த யானைகளின் உடல்தொகுதி வானளாவ முட்டுமாறு வாளேந்திச் சிவந்த கைகளால் வெட்டி வீழ்த்தியவன் முதற்குலோத்துங்கனாவான் (19).
விக்கிரமன் - பருந்துகள் பந்தர் இட்டாற் போல வானத்தில் செறிவாகப் பறந்து விட்டுவிட்டு ஒலிக்கப் போர்க்களத்தில் சிந்து மன்னனும், மேலைச்சாளுக்கியனும் அவன் மக்களும் இறந்துபட்டாராக, அதுகண்டு பொறாது முன்னிலும் பன்மடங்காக வந்த ஏழ்கலிங்கர் ஓட வென்றவன் (9).
ஒட்டரும் இரட்டரும் மிலைச்சரும் விதர்ப்பரும் வானாள, வழிபாடு கூற மனமில்லா மராட்டரும் சனகரும் பரதரும் போர்க்களத்தில் பட்டொழிய, தலையில் தும்பை சூடிப்பொருத கைதவரும் மாகதரும் மாளுவரும் இலாடரும் ஒருங்கு போர்க்களத்து ஒழிய, போரில் இறக்கும் வாய்ப்பினைப் பெறாத ஒரு குறைபாட்டால் வட கலிங்கன் புறமுதுகிட்ட காலை அவனோடு போரிடாமல் அவனை விடுத்து, பண்டு இமயமலை யருகே அகப்பட்ட யானைத்திரளின் வெட்டுண்ட கைகள் சொரிந்த இரத்தவெள்ளம் வானளாவ அலை வீசிவர, உலகில் தனித்துள்ள திசைஎல்லை வரை மோதிப் பரக்கும் சேனை செல்லும் துகள் பரவிவரக் கம்பீரமாக நிற்பவன் விக்கிரமன் (16). துளு நாடு, ஈழம், கொல்லம். கலியாணம், குதிரம், கோகன்னம், கலிங்கம், கவுடம், கொல்லாபுரம் இவற்றை அழித்துக் கைப்பற்றியவன் விக்கிரமன் (31).
தான் கைப்பற்றிய தகடாபுரமும் பதினெண்சுரமும் துளுநாடும் குடகம் முதலிய குன்றுகளும் தூளாகுமாறு அழித்தவன் விக்கிரமன் (32). அசையும் மேகங்கள் படிந்த உலகங்கள் நிலைபெற நிறுத்தி வறுமையாகிய துயரினை அழித்து, அது மீண்டும் இடர் தாராதபடி மனுநூல் வழியதாகிய அறச்செங்கோலை வேலியாக நிறுவி அரசர்க்கு அரசனாய் நிலமகள் கணவனாய் வாழ்ந்தவன் விக்கிரமன் (44).
பாண்டியன் தன் தேவியுடன் ஒளிந்து கொள்ளப் பழைய மலையிலேறிச் செல்ல, வானளாவிய அவன் கோயிலோடு மதுரையை அழித்தவன் விக்கிரமன் (63). பகைவர் நாட்டையழித்துப் புலவர் தனக்குப் பரணி பாடுமாறு கங்கையளவும் வெற்றித் தூண் நட்டு இமயமலை எல்லை கண்ட நரபதி விக்கிரமன் (65).
தீக்கடவுள் வளைத்துக்கொண்டு எழுபாற்பட்ட கலிங்க நாட்டை விழுங்கச் செய்து யானைகளை வெட்டிப் பெரும்பரணிகொள்ளும் வீரன் விக்ரமன் (88). திருமாலும் பிரமனும் பதினெண் தேவகணத்தவரும் வந்து வழிபடத் தன் வீரத்தாற் பெற்ற பொருளால் புலியூரில் வீதி அமைத்தவன் அவன் (92); யாவரும் தன் வெற்றியை அறியுமாறு, ஒளி வீசும் கொடிகள் கட்டிய நெடிய தேரை உடைய வானவனும் மீனவனும் வல்லவனும் ஓட, கலியைக் கோபித்து அழித்தவன் (94). சேரன் யானையினின்றும் இறங்கி ஓடியது கண்டு சிரித்தவன் (100).
தன்னை எதிர்த்த பாண்டியனுடைய முடி, வில், வேம்பமாலை, மதுரைமாநகர் கயல் முத்திரை இவற்றையும், சேரனுடைய முடி, வில், உதகைநகர், வில்முத்திரை இவற்றையும் கைப்பற்றி மலைநாட்டவனாய், பொதியமலைத் தலைவனாய் மேல் கடலில் நீராடியவன் (102).
குலோத்துங்கன் II- முன்னோர் பற்றிய செய்திகள் சில.
காவிரியாற்றுப் போக்கிற்கு இடையே குறுக்காக இருந்த பனையை வெட்டி வீழ்த்தினவன், உலகம் முழுதும் தனது உடைமை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இமயமலையில் புலிமுத்திரை பொறித்தவன், தன் புயவலியினால் காவிரிக்கு இருகரையும் கட்டுவித்தவன், 'இவனை ஒப்பார் யாரும் இலர்' எனப்புகழத்தக்கவன், பகைவர் உயிரைப் போக்கிய உருத்திரனை ஒத்தவன் -- ஆகிய குலமுன்னோர் செயல்கள் குலோத்துங்கன் செயலாக ஏற்றி உரைக்கப்பட்டுள்ளன (48).
பனை மரத்திலிருந்து பழுத்துதிர்ந்த பொற்கனியைக் கொண்டு உலகத்துயரைக் கெடுத்தமை, ஆற்றொழுக்குக்குக் குறுக்காக இருந்த பனையை வீழ்த்தி ஆற்று நீர் கடல் நோக்கிப் புக வழி வகுத்தமை, பகைவரும் மக்களும் காஞ்சி நகரைத் தஞ்சமாக அடையுமாறு பகை நிலங்கள் பலவற்றை அழித்தமை, காவிரிக்குத் தோற்ற அரசர்களைக் கொண்டு உயர்ந்த கரை கட்டியமை இமயத்தின் இருபுறமும் புலிமுத்திரை பொறித்தமை, முகரி என்ற மன்னனுடைய படத்தை எழுதி, அதில் இருந்த மூன்றாவது கண்ணைக்குத்த, உண்மையிலேயே அவன் மூன்றாம் கண் அழிய வைத்தமை, கலியுகத்து வறுமையை அழித்தமை - ஆகிய முன்னோர் செயல்கள் 53 ஆம் பாடலில் இவன் மேல் ஏற்றப்பட் டுள்ளன.
இரண்டாம் குலோத்துங்கனுடைய வீரச் செயல்களும் ஏனைய செய்திகளும்:
சேரமன்னனுடைய மைந்தர், பாண்டியமன்னனுடைய மைந்தர், இலங்கை மன்னனுடைய மைந்தர் ஆகியோர் உதகை, கூடலூர், அனுரை என்ற ஊர்களிலமைந்த தங்கள் பாடிவீட்டை விட்டு ஓட, போரிட விரும்பி வந்த அதிகருடைய படைகளும் கொங்கருடைய படைகளும் அடியோடு வெந்து அழியுமாறு படையுடன் புறப்படும் ஒப்பற்றவன் குலோத்துங்கன் (4).
விளையாடும் சிறுமியருக்கு முல்லையும் மௌவலும் பூத்து வளந்தரவும், தேவர்களும் தேவாதிதேவரும் பெருவாழ்வடையவும் கடல் முத்துக்களைச் சொரியவும், இலங்கை மலையைக் கிழித்து மாணிக்கம் கிட்டவும், நாகத்தின் தலைமணி கிடைக்கவும். சுரங்கங்களிலிருந்து வயிரம் வெளிப்படவும், மேகத்தைப் பிணித்த மேம்பட்ட குல நாயகன் குலோத்துங்கன் (43).
வீரர் தம் கழல் ஒலிப்ப, வட மன்னர் பொரவந்த முட்ட நாடு அழிய, எதிர்த்த வடுகர் முழுதும் கெட, போரிட்ட கட்டிமான் மடிய, எதிரிட்ட தயிலன் மரபு அழிய, மக தன் முதுகிட்டு ஓட, மச்ச மன்னனுடைய மலையும் மிதிலையும் மதிலும் மிதிபட, மலைய மன்னன் தலை இடிய, இமயத்தில் விற்பொறித்த சேரர்தம் மேலைமலை ஆணிவேர் ஆட்டங்கொள்ள, கடல் சுவற வேல் விட்ட பாண்டியன் அழிய இவற்றைக் கண்டு கோபம் நீங்கியவன் குலோத்துங்கன் (49).
தயிலன் என்ற மன்னன், அவனுடைய புதல்வர்கள், பெயரர்கள் ஆகியோர் படையுடன் எதிர்த்துச் சரிய, வட நாடுகள் எரிய, மலை நிலை தளர, தமிழ் வீரர் சிலருக்குப் பகைவர் பலரும் அஞ்சிஓட, தேவர்கள் பலவாறு புகழ, இருசுடர்களும் தவறாது ஒளிவீச, தலையற்ற குறைஉடல்கள் செறிய, குருதிவெள்ளம் செவ்வானம் போல ஒளிவீசும் போர்க்களத்தில் தேர்க்கால்பதிய, வாட்போரை முதன் முதலாகக் கற்றுக் களத்துப் பகைவரை எதிர்த்த முதற்போரிலேயே அருவி பாயும் மலையை ஒத்த யானையைப் போர் முனையில் செலுத்தியவன் குலோத்துங்கன் (50).
குலோத்துங்கன் மழைமுகில் இடியோடு செறிந்தாற்போன்ற கொற்றவன்; காற்றினும் விரைவாகத் தேரைச் செலுத்தும் தேர்ப் பாகன்; மலையர் மகளொடு வரையின் மகளிரும் இனிது மகிழ் தர, வடபுல அரசர்களின் படையணிகள் சாயவீழ்த்தித் தன் ஆளுகைக்கு உட்பட்ட தேவர்கள் தங்கும் குலகிரிகள் முழுதும் வெற்றித் தூண்கள் நாட்டித் தனக்கு ஓப்பார் பிறர் இலர் என்று பலரும் கூறுமாறு வருபவன் (51).
கருநாடர், துருக்கர், வடகவுசலர், குகுத்தர், கவுரியர், மகதத்தர் முதலியோர் யாவரும் வானளாவப் பேரொலி செய்து வளைத்த போர்க்களத்தில் விரைந்து வந்த குதிரை நிரைகளைத் துவைத்து, யானை நிரைகளைத் துணிபடுமாறு வெட்டி மருப்புக்களை முத்துக்கள் தெறிக்குமாறு ஒடிக்கச்செய்தவன்; உரகை, கொற்கை, உதகை, காஞ்சி இவற்றிலிருந்து மணிமுத்துக்களைத் திறையாகக் கொண்டவன். உதயகிரி, அத்தகிரி, இமயகிரி, சக்ரகிரி இவற்றில் வளர்ந்த மூங்கில்களிலிருந்தும் முத்துக்கள் கிடைத்தன; அவனுக்கு உடைமையான நதிகளும் கடல்களும் மடுக்களும் மேகங்களோடு முத்துக்களைச் சொரிந்தன (52).
உயிர் நீங்கிய கருநாடருடைய உடல்கள் கூத்தாட, பாம்புகளின் பிளந்த வாய்களில் உதியர்கள் குதித்துவிழ, அவருடைய கோநகராகிய உதகை தீக்கு இரையாக, கடல் அலைகள் தீய்ந்து போக, பகைவருடைய செயலால் குணவாயிலுடைய வழி சிதைய, மலை நாட்டினை அழித்து விக்கிரமன் முனிவு ஆறினான் (58).
தன்னோடு போரிட்டு வீரர் பலரும் அழிந்த ஈழத்தவருடைய நாட்டைக் கைப்பற்றப் பழைய கடலூடு புதிய கடல் செல்வது போலத் தன் சேனைக்கடலைச் செலுத்தி வென்று, தலையில் முடிசூடிய கூட்டமான கடல் போன்ற அரசர் தொழுதியின் முடிகள் தோய்ந்து அழகு செய்யும் அடிகளை உடையவன் குலோத்துங்கன் (63).
வானத்தின் இடியை ஒத்து, அரசரினம் அஞ்சி ஓடி ஒளிக்குமாறு அதிரும் முரசுடையவன் (65).
குன்றங்கள் யாவும் பிணக்குன்றமாக, ஆறுகள் வறண்டு குருதி ஆறாக, நிழல் தரும் பெருமரக்காடுகள் குறைக் காடுகளாக, பாடிவீட்டுப் பழைய பந்தர் போய்க் கழுகுகள் பந்தரிட, கலிங்க மன்னர் முடியொடும் குடையொடும் போய் இமயமலையில் புக்கு ஒளிப்பத் தான் வென்றானாக, தனக்கு வழிபாடு சொல்லி அம்மன்னவர் திரும்பி வந்த அளவில் அவர்க்கு நிழலாகி அவரோடு போரிடும் அவாவை நீக்கியவன் குலோத்துங்கன் (69).
தாமரையில் வாழும் திருமகள் மணவாளன், காவிரியும் கோதாவரியும் தோன்றும் மேலைமலைத்தலைவன், கூவகர் போர் செய்ய விடுத்த யானைகளையழித்து நாட்டைக் காத்த கொடைத்தொழில் வல்ல கைகளையுடைய அபயன், குலநதிகள் பாயும் குமரிப் பகுதிக்குத் தலைவன் குலோத்துங்கன் (88).
தன்படைவலியால் விழிஞம் என்ற ஊரைத் தகர்த்து, சேரருக்கு உரிமையான காந்தளூர்ச் சாலையைக் கைப்பற்றி அடுத்துள்ள முத்துச்சலாபத்தையும் கைப்பற்றி, வயிரங்கள் ஒளி வீசும் புனங்களையுடைய நேரிமலைத் தலைவனாய், இரவலர்களைக் காக்கும் சோழனாய், வேப்பமாலையை அணிந்த பாண்டியன் இமயமலையில் எழுதிவைத்த கயல்பொறியைச் சிதைத்துப் புலிப்பொறியைப் பொறித்தவன் குலோத்துங்கன் (91).
இருக்கு முதலிய வேதங்களில் கூறப்பட்ட முதற்குலமாகிய சாளுக்கியர் குலமும், வானத்தில் எழும் சூரியன் குலமும் என்று உலகவர் வழிபடும் இருகுலமும் விளங்கத் தோன்றி அரசோச்சும் வீரன் (93).
கடலேழும் மலையேழும் நிலமேழும் ஆண்டுத் தோன்றும் நதிகளும், சிறுமலைகளும் ஆகியவற்றைத் திருவடிகளால் அளந்து உலகளிப்பவன் (94).
இந்திரனுக்கும் விக்கிரமனுக்கும் திருமகனாக அமைந்து கூத்தாடுநாயகனான கண்ணனாகவும் குலோத்துங்கன் விளங்கினான் (96).
சேரனுடைய வில், பாண்டியனுடைய மேம்பாடு, ஏனை மன்னருடைய களிறு, பல்லவனுடைய விடை இவற்றை வென்று நான்கு திசைகளிலும் வெற்றிச்செய்தியை நிலை நாட்டினவன் (99).
ஆதிசேடன் பூமியைத் தாங்கித் தளர்ந்தமைகண்டு அவன் தளர்ச்சி போக்கிப் பூமியைத் தாங்கப் பிறந்தவன் (100).
மறு நீதியையும் வேதங்களையும் வளர்க்கத் தோன்றியவன் (101).
குலோத்துங்க சோழன் வயது ஏறாத மனு, யாரும் குறைகூற முடியாத நேரிய வழி, வனப்பு மாறாத ஓவிய நலம், அலை வீசாத பெருங்கடல், வற்றாத காவிரி, குறையாத தேவருலகச் செல்வம், குணம் மாறாத வலிய யானை, தெவிட்டாத புதிய அமுதம், ஆடாத நாடகசாலை, அஞ்சாத புலி, குறையாத யோகபலம், குறையாத முத்தமிழ் இன்பம், பண்பு மாறாத கற்பகமரம், மற்றவரால் வரைய வாராத சித்ரகவி, வாடாத குவளைக்காடு, சாணையிடாத மாணிக்க மாலை, மற்றவர் அடைய முடியாத தத்துவங்களுக்குப் புகலிடம், ஒளிகுறையாத முழுமதி, கோபியாத சிறிய இடி, பெய்து தீராத பச்சைமேகம் என வருணிக்கப்பட்டுள்ளான் (15).
உயிர் நீங்கவே, அற்ற குறையுடல் நெருங்கிய இடமாகிய களத்தில் பெரிய பூதங்கள் அவற்றைத் தாம் உண்பதற்காகக் கிழிக்கவும், கடலையே மூடத்தக்க அளவு பெருகிய வானளாவிய புழுதி ஏழுகுன்றங்களும் சூழவும், மதநீர் பொழியும் யானைகள் தரையில் புரள அவற்றைக் கண்டவர் யாவரும் கலக்கமடையவும் போர்க்களத்தில் உறவினர் யாவரும் இறக்கவே, எஞ்சியிருப்போர் நெஞ்சம் விடம் உண்டாரைப் போலக் கலங்கவும், அரசர் தம் செல்வத்தைச் சேமித்து வைத்த வைப்பிடங்களோடு இன்ப நுகர்ச்சிப் பொருட்டொகுதிகளும் அழியவும், அவர் தம் மதிலைக் கைப்பற்றி வென்ற பெருமிதம் சிறக்க, பாண்டியர் விட்டயானைகள் அழியுமாறு அவற்றைத் தாக்க மேல் நோக்கி எழுந்த புலி போல்பவன் குலோத்துங்கன் (21).
வேனிற்காலத்தில் காடுகளில் பயிலும் குயில்கள் தளிர்களைப் பூங்கொத்துக்களோடு கோதவும், களிப்போடு தேன் பருகும் வண்டுக்கூட்டங்கள் பண்பாடவும், தாரகாகணங்கள் சூழ்ந்த முழுச்சந்திரன் நிலவில் கூடியிருப்பவர் தம் தாபம் தீரவும், உப்பங்கழிகளில் நாரைகள் பூசலிடுமாறு கடல்வெள்ளம் மிகவும், புருவமாகிய நீண்ட வில்லை நன்கு வளைத்தாற் போன்ற தன் கரும்புவில்லை வளைத்து மணந்தவர்கள் மீது மலரம்புகளைச் சொரியத் தென்றலாகிய தன் தேரின் மீது இவர்ந்து தெருக்களில் மன்மதன் உலா வருமாறு செய்பவன் குலோத்துங்கன் (22).
வளைந்து காணப்படும் கடலிடத்திலுள்ள பவளத்தின் வடிவமுடையவன். பூமியை முழுவதும் தன் கொம்பில் எடுத்துக் கடலிலிருந்து வெளிக்கொணர்ந்தவன், நான்கு வேதங்களும் கூறும் நெறிமுறைகளைப் பின்பற்றுபவன், செங்கோல் கோடாது இவ்வுலகமாம் மரக்கலத்தைச் செலுத்தும் மீகாமன், தன் மனைவியரையன்றிப் பிறபெண்டிரைத் தவறான எண்ணத்தோடு நோக்காத பண்புடைமையால் காமன், அஞ்சத்தக்க பிணவோடு நீர்நாய் மீனை மேயும்போது மலர்ந்துள்ள தாமரையின் தாதினை ஊதாமல் வண்டுகள் அஞ்சிப்போய்ப் பக்கத்திலுள்ள சோலைகளில் வட்டமிடும் சோணாடன் என்று இவன் வருணிக்கப்படுகிறான் (24).
மதம் ஒழுகும் யானைகள் விரும்பிக் குளிக்கும் குளங்கள் பலவற்றை உடைய கருவூரை வென்றவன், கூரிய வாளினாலே நிலமகளின் தனிமைத்துயரைப் போக்கிய சிறத்தகுதிரை வீரன், சுற்றியுள்ள ஒட்டுமா மரங்களின் பழச்சாறு பாய்தலால், ஆடவர்களும் வழுக்கி விழுமாறு சேறு சூழ்ந்த பெரிய கோயிலை உடைய மாமன் ஆளும் ஊரிலே பேரில் வல்ல சிங்கம் போல்பவன் (28).
பிரமன் நாவில் வீற்றிருக்கும் கலைமகளையும், தாமரையில் வீற்றிருக்கும் திருமகளையும் ஒருசேரப் பெற்றவன் (29).
தன்னையே விரும்பிய நிலமடந்தை பூண்டிருக்கும் கடவுட்டன்மை பொருந்திய ஒப்பற்ற மங்கல நாணிடத்துத் திருவாய், சூரியனாய், சந்திரனாய், கங்கையாய், வேதமாய், மனுநூலின் செயலாய், அமுதம் பொழியும் புயலாய், இயலாய், இசையாய் கற்பகத் தருவாய் உதவும் செங்கோலினை உடையவன் (33).
இவனுக்குத் தோற்றுத் தம் தலைநகரிலிருந்து ஓடிய பாண்டியர்கள் வேடர்தம் இல்லந்தோறும் சிறிய யானைகளைக்கொண்டு இரந்தும், குற்றேவல் செய்தும் வாழ்பவராயுள்ளனர். கருநட மன்னன் மான்தோலால் சட்டைதைத்துக் கொடுக்கும் தொழிலில் அமர்ந்துள்ளான். சேரமன்னருடைய உதகை நகரில் தீநிமித்தங்கள் பல தோன்றியுள்ளன. இடையே வந்து எதிர்த்த சனகரும் மகதரும் இடருற்றுத் தம் ஆண்மையை இழந்துவிட்டனர். உலகம் முழுதும் இவன் உடைமையாதலின், தமக்கு இனிச் சுமக்கும் துன்பம் இல்லை என்று திசையானைகள் ஓய்வு கொண்டு மதத்தைப் பெருக்குகின்றன. இவன் நாட்டு அந்தணருடைய ஊர்கள் தோறும் பட்டாடைகள் கொடிகளாக வானளாவப் பறக்கின்றன. இத்தகைய மன்னன் மரபு இதுவே (37).
கடல்போல ஒலி மிக்கிருக்கும் உதகைநகரைக் கைப்பற்றி அதற்குத் தலைவனாயினவன் குலோத்துங்கன். அவன் நாட்டில் எந்தத் துறையிலும் தோணிகள், எந்த ஆற்றங்கரையிலும் மதயானைகள், எந்த உப்பங்கழியிலும் முத்துச்சிப்பிகள், எந்தக் கடற்கரைச்சோலையிலும் சங்குகள் உள. இருவேளையிலும் படைகள் செல்வங்களைக் கொணர்கின்றன. பனைமரங்கள் கனிகளையும் பாளைகளால் கள்ளினையும் தருகின்றன. கயல்மீன்களும் வேளைமலர்களும் நெய்தல்நில மகளிர் கண்களை நிகர்க்கின்றன. நீர் நிலைகளிலுள்ள சுழல்களிலும் சோலைகளிலும் மன்மதனும் மகளிரும் மகிழ்கின்றனர் (38).
அரசர்கள் முரசங்கள் ஒலிக்கப் போரிட்ட நெட்டூரில் பகை மன்னன் பட, அவன் கோட்டையைக் கைப்பற்றி மதில்வலிமை சான்ற புத்தூரைத் தீவைத்துக் கோபம் அடங்கினவன் குலோத்துங்கன் (40).
‘துழாய் மணம் கமழ நீராடும் குமரித்துறையை உன் தமக்கை பெறுவாள்; உன் தேவி வானளாவியுள்ள உன் நிலப்பரப்பைப் பெறுவாள்; இளநிலா எறிக்கும் புன்முறுவலை உடைய தோழி எழுபுவனமும் பெறுவாள்; கொற்றவை உன் சக்கரத்தையும் வில்லையும் தனக்கு இருப்பிடமாகப் பெறுவாள். நாமடந்தை உன் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழைத் தனதிடமாகப் பெறுவாள்; நீ கடலில் குளித்தபொழுது உன்புயத்தில் எழும் அழகைத் திருமகள் பெறுவாள், உன் பரந்த மார்பில் தங்குதலை நிலமகள் பெறுவாள், (55) என்று குலோத்துங்கன் போற்றப்படுகிறான்.
குலோத்துங்கனுடைய முத்திரையாகிய புலியின் இரண்டடிகள் பன்றியை நகத்தால் கிழித்தன; இரண்டடிகள் தம்முடைய ஆற்றலை அறியாமல் எதிர்த்த கயல்மீனையும் முதலையையும் அள்ளின; வாய் களிற்றினைக் கவ்வித் துன்புறுத்தியது; வால் கலப்பை, வீணை ஆகிய இவற்றைச் சுற்றியது. இப்புலியின் ஓசை இடியோசை ஒடுங்க உலகம் நடுங்கக் கடலென ஒலித்தது. இப்புலி மேருமலைமீது இருக்கும் என்று அஞ்சி வறுமை நடுங்கியது. இவ்வாறு பன்றி, கயல், முதலை, களிறு, கலப்பை, வீணை முதலிய முத்திரைகளை உடைய அரசுகளை அடக்கிக் கலி கடந்து குலோத்துங்கன் ஆள்கிறான் (64).
எட்டுத்திசைகளும் இவனுடைய பட்டத்து யானையின் ஆலயம். எட்டுப்பிலங்களும் இவனுடைய பகைமன்னர், ஓடிப் பதுங்கும் இடம். ஏழ்கடலும் இவன் தன் தேவிமார்களாகிய திருமகள் நிலமகள் என்பாரோடு குளிக்கும் இடம். ஏழ்பொழில்களை உடைய ஏழுலகும் இவன் உலாப்போந்து மகிழும் நந்தவனம். மூங்கில் முத்துகள் நீங்காத ஏழ்மலைகளும் இவனுடைய யானைப்படைகள் தங்குமிடம். மேருமலை இவனுடைய புலிப்பொறிக்கு அரியணை. அண்டத்து உச்சி இவனுடைய வெண்குடை (76).
இவன் தில்லையிலுள்ள கூத்தப்பிரான் திருவடிகளை என்றும் மனத்தில் கொள்பவன் (87).
நாவலனாகிய இவன் எளிதில் பெற இயலாத நவமணிகள் கொண்டு கட்டப்பட்ட மண்டபத்தைப் பாவலனுக்குப் பரிசாக அளித்தவன் (83).
கூத்தர் புலவர் விறலியர் பாணர் ஆகியோர்களுக்கும் குலகிரிகளுக்கும் தத்தம் குறைகளை அடியோடு நீக்கித் தம்மை மகிழ்வுறுமாறு செய்யும் மாநிதி குலோத்துங்கனாவான் (103).
இம்மன்னன் வீரியன் - அநுபமன் - வானவன் - மீனவன் - விநீதன் - வில்விநோதன் - வீரகண்டீரவன் - வீர நாராயணன் - விமலன் - ராசாதிராசன் - சூரியன் - வியாகரன் - துங்க அமலன். வரன் - துரசவித்யா விநோதன் – சோழவம்சாதிபன் - ஏகோபமன். உத்துங்கன் - உத்துங்கதுங்கன் - நேரியன் - பஞ்சவன் - சேரலன் - செம்பியன் - நித்திய கீதப் பிரமோகன் - நிருபமன் - ஜயதரன் - மனுபரன் – குணபரன் - நித்யகல்யாண பூஷணன் – ஆரியன் - ராஜ ராஜாசிரியன் என்ற பல பட்டப்பெயர்களை உடையவன் (78).
இந்நூலில் காணப்படும் எனைய கற்பனை வளங்களை 17, 24, 35, 47 ஆம் பாடல் போன்றவற்றில் காணலாம்.
பிள்ளைத்தமிழ் நூல்களில் காலத்தால் முற்பட்ட இந்நூல் பாட்டியல் நூல்கள் பிள்ளைத்தமிழ் இலக்கணத்தைத் தக்காங்கு வரையறுத்த காலத்துக்கு முற்பட்டது ஆதலின், இதன்கண் அவ்வரையறையை முழுதும் காண்டல் இயலாது. காப்புப்பருவம் ஒன்றனையே 11பாடல்களில் பாடுவது மரபு. இந்நூலில் பல பருவங்கள் 11 பாடல்கள் உடையன. அம்புலிப்பருவம் 12 பாடல்களை உடையது. சிறுபறைப்பருவம் 7 பாடல்களையும், சிறுதேர்ப்பருவம் 8 பாடல்களையும் உடையது. காப்புப்பருவத்தில் தொடக்கத்தில் திருமால் போற்றப்படல் வேண்டும் என்று பாட்டியல் நூல்கள் வரையறை செய்யினும், திருமாலைப் பற்றிப் பலபடியாகப் பாடப்படும் இந்நூலில் திருமால் பற்றிய காப்புச்செய்யுளே இல்லை. இவ்வரசனே திருமால் அவதாரம் ஆதலின் திருமாலுக்குத் திருமால் காப்பு வேண்டா என்று விடுத்தார் போலும்.
அம்புலிப்பருவத்தில் அம்புலியைச் சாம தான பேத தண்டங்களால் தலைவனுடன் விளையாட வருமாறு அழைத்துப் பாடுதல் பிற்காலத்தில் சிறக்கக் கொள்ளப்பட்டமை போல, இதன்கண் காணப்படவில்லை. அச்செய்தி ஓரளவு வலிந்து கொள்ளப்பட வேண்டியதாயுள்ளது. ஏனைய செய்திகள் பலவும் பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.
-----------------------------------------------
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
காப்புப்பருவம்
நூலுக்குரிய கணபதி காப்பு
பொங்கு புரத்ரயம் வெந்தழ லில்புக
அம்பு திரித்தவர், தம்
பூதரம் முகடுஉக மூக மிருகபதி
பொடிபட இடறி அடும்,
பைங்கத லிக்கனி மென்பல வின்சுளை
அன்பொடு அளிப்பவர்தம்
படுதுயர் பொடிபட அடிபடு முழுநிரை
மனைதொறும் முன்புஅவிரும்:
திங்கள் வெருக்கொள ஐந்தலை வெக்கைகள்
சிந்து பணிக்குஅரசுன்
திடுதர, மணிமுடி அடிபடும் முழுதிரை
திசைதொறும் உதிரவிழும்
கங்கை குதித்திடு கண்கனி யப்படர்
செஞ்சடை அப்பர்தரும்
கடதட முகபட வரகட கரிமுக
கணபதி கழலிணையே.
உரைக்குறிப்பு
கணபதி காப்பு:- அம்பு திரித்தவராகிய இடறியடும் செஞ்சடையப்பர் எனக்கூட்டுக. பிறை அஞ்ச, முடிமேல் பாம்பு திடுக்கிட, திரை சிதறக் குதித்திடு கங்கை படர் செஞ்சடை. திரிபுரம் எரித்தல், மூகன் என்ற பன்றியுருவனாகிய அசுரனை அழித்தல், கங்கையைத் தாங்குதல் ஆகியவை செஞ்சடையப்பருக்கு அடை. 'அவர் தரும் கணபதி கழலிணை அன்பொடு அளிப்பவர் தம் மனை தொறும் முன்பு அவிரும்' என முடிக்க.
புரத்ரயம் - முப்புரம்; பூதரம்-(கயிலை) மலை ; வெருக் கொளல் - அஞ்சு தல்; வெக்கை-கொதிப்பு(விடம்); பணி - பாம்பு; திடுதரல்- திடுக்கிடல்; கடதடம் - யானையின் கன்னப்பகுதி; முகபடம் - முகமூடி; கடம்- மதம்.
--------------------------------------
1. சிவபெருமான்
பூமன்னு பொழில்ஏழும் கடல் ஏழும் கடவுள்
பொருப்புஏழும் எனநிலவு மதுரைக்கும் புகார்க்கும்
கோமன்னன், புவன தரன், விக்கிரம சோழன்
குலமதலை குலோத்துங்க சோழனைக் காத்தளிக்க:
தேமன்னு தாமரையாள் மகிழ்ந்திருக்கும் மார்பின்
திருமாலும், நான்முகனும், இருமருங்கும் சிறந்து,
மாமன்னு மணிவரையும் பொன்வரையும் கிளைத்த
மாணிக்கவரை அனைய வானிடைக்கற் பகமே.
காப்புப் பருவம்
குழந்தை பிறந்த ஏழாம்நாள் காப்பிடும் வழக்கை ஒட்டி அமைந்தது இப்பருவம்.
1. பொழில் ஏழு- நாவல், இறலி, கிரவுஞ்சம், குசை, இலவம், தெங்கு, புட்கரம் என்ற பெயரின.
எழுகடல் - உப்பு, தேன், கருப்பஞ்சாறு, தயிர், நெய், பால், தூய நீர் நிரம்பியன. எழுமலை - கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி என்பன. இங்ஙனம் கூறுதல் புராணமரபை ஒட்டிய கவிமரபு.
'என நிலவு புவனம்' எனக் கூட்டுக. மதுரையையும் புகாரையும் கோநகரங்களாகக் கொண்டு, பூமியைத் தாங்கியவன் என்க. தேன்மன்னு தாமரையாள் - திருமகள். நிறத்தினால் திருமால் நீலமலையையும், பிரமன் பொன்மயமான மேருமலையையும், சிவபெருமான் மாணிக்கமலையையும் ஒப்பவர். சிறந்து - சிறக்க. (1)
-----------------------------------------
2. இடைவி டாப்பொழில் எழிலி காத்தவன்
இளைய கோற்றொடிசேய்,
இருகு லோத்தமன் மகன்,வ ரோத்தமன்,
எதிரி லாப்பெருமாள்,
படியில் நாற்கவி பயில வாய்ப்பவர்
பரசு பார்க்குஅதிபன்,
பதும வீட்டுஉறை பரம னால்பெறு
பரிசு காப்பவர்தாம்:
வடுவில் காப்பிய மதுர வாய்ப்பொருள்
மரபு வீட்டியதால்,
வழுதி ஆட்சியை வளவன் மாற்றிட
மதுரை கூப்பிடும்நாள்,
அடைவு கோத்தன அமுத சூத்திரம்
அறுப தாய்ச்சமைநூல்,
அமரர் கீழ்ப்பட அறிஞர் மேற்பட
அருளும் மூர்த்திகளே.
2. இடைவிடாப் பொழில் - மண் திணிந்த நிலன்; எழிலி காத்தவன் - மேகத்தைச் சிறையிட்ட உக்கிரகுமார பாண்டியன்; (திருவிளை. 1-14-41) விக்கிரமன் தாய் பாண்டிய மன்னன் தங்கையாவாள். இருகுலம் - கீழைச் சளுக்கியர் குலமும் சோழர் குலமும்.
நாற்கவி - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்பன; பரசுதல் - துதித்தல்; பதுமவீட்டு உறை பரமன் - பிரமன்; வளவன் - இந்திரனாகிய மழைக்குக் கடவுள். பாண்டியன் துயர் தீரச் சிவபெருமான் இறையனார் அகப்பொருள் நூல் அருளிய வரலாறு கூறப்பட்டுள்ளது.
வரோத்தமன் - வரத்தினால் தோன்றிய உயர்ந்தவள்; வீட்டுதல் - அழித்தல்; கூப்பிடுதல் -புலவரை மீள அழைத்தல்; அடைவு - முறைமை. (2)
----------------------------------------
3. பிரமன்
வெறிக்குங் குமத்தோள் விசயா பரணன்,
அபயன், உபய குலதீபன்
விபுதர் வெருவு சமர்க்களத்தில்
வேழப் பொருப்புக் களின்மருப்புத்
தறிக்கும் சுடர்வாள் வயவன், அமலன்
அதுலன், சயவிக் ரமசோழன்,
சத்தா பரணநகர் ஈசனைக்காத்து
அளிக்க: சனகா திகள்ஞானப்
பொறிக்கும் தெரியாச் செந்தா மரையும்
வெண்டா மரையும் பப்பாதிப்
பொற்றா மரையும் கடவுள்வெள்ளி
நற்றா மரையும் ஆக,போந்து
எறிக்கும் தனது செஞ்சோ தியும்தன்
தேவி வெண்சோ தியும்கொள்ள
இருபோ தகத்தும் ஒருபோது அகலாது
எல்லா யுகத்தும் இருப்பாரே.
விசயாபரணன் - வெற்றியை அணிகலனாக உடையவன்; உபயகுல தீபன் -சளுக்கியகுலம், சோழகுலம் இரண்டையும் விளங்கச் செய்யும் விளக்குப் போன்றவன். விபுதர் - மிகக்கற்றவர்; தறித்தல் - வெட்டுதல்; வயவன் - வலிமையுடையவன்; அமலன் - களங்கமற்றவன்; அதுலன் - ஒப்பற்றவன்; சத்தாபரணம் - ஏழு மதில்கள். பிரமன் அமர்ந்த செந்தாமரையும், அவன் தேவி கலைமகள் அமர்ந்த வெண்டாமரையும், இவர் தம் உடல் நிறம் வீசுதலால் செம்பாதி நிறம் மாறின.
இருபோது - பகல் இரவு; ஒருபோது - ஒப்பற்ற தாமரைப்பூ. (3)
-------------------------------------------------
4. இரவி
உதியர் மைந்தரும் செழியர் மக்களும்
சிங்க ளேசர்தம் புதல்வரும்
உதகை கூடல்ஊர் அனுரை என்றுதம்
பாடி வீடுவிட்டு, ஓடிவீழ்
அதிகர் அங்கமும் கொங்கர் அங்கமும்
அடைய வெந்துஎழ, படைஎழும்
அதுலன் எங்கள்கோன் அரசர் கோமகன்
அபய னைப்புரந்து அருளுமால்:
கதிஅ மைந்தபைங் குரம்நி லத்திடா,
கொண்ட கால்விடா, நுகம்எடா,
கண் இமைப்பு உறா, உளைஅ திர்ப்புஉறா,
கட்டி விட்டதார் அசைவு உறா,
பொதிஅ விழ்ந்தமந் தாரம் நாலுறா,
இவைது ரங்கஓ வியமெனப்
புவியும் உம்பரும் புகழும் ஏழ்பெரும்
புரவி இவருதேர் இரவியே.
உதியர் - சேரர்; கூடலூர் - மதுரையாகிய பெரிய நகரம்; அனுரை - சிங்களர் தம் தலை நகரான அனுராதாபுரம்; உதகை - சேரருக்கு உரிய ஊர்; அங்கம் - படைக்கூறுகள்; அபயன் - அச்சமற்றவன். கதி - ஈண்டு ஆதி எனப்படும் நெடுஞ்செலவு; குரம் - குளம்பு; உளை - பிடரிமயிர்; நாலுதல் - தொங்குதல்; துரங்கம் - குதிரை; இவருதல் - மேற்கொண்டு செலுத்தல். கதிரவன் குதிரைகளுக்கு ஏனைய நிலவுலகக் குதிரைகளின் இயல்பு விலக்கப்பட்டமை காண்க. (4)
-------------------------------------
5. விநாயகன்
சாலைப்போர் வடகொப்பத்து எடுத்தபோர் என்ன
தனிக்கடந்தான் திருப்புதல்வி, தருணமட மாது,
சேலைப்போர் கடந்தவிழித் திரிபுவனம் உடையாள்,
திருமகற்கு மகன்எங்கள் செம்பியனைக் காக்க:
காலைப்போய் மதுகரங்கள் கிளைத்தும்பை திளைத்துக்
கடும்பகல்போய் இருகரடக் கடக்கலுழி கவர்ந்து,
மாலைப்போய் மதிக்கதிர்கால் அமுதுஎடுத்து மடுத்து,
வைகறைபோய்க் கொன்றைபுகும் மணிமுடிவா ரணமே.
சாலை - காந்தளூர்ச்சாலை என்ற சேரநாட்டு ஊர்; தனிக்கடந்தான் - விசயராசேந்திரன்; புதல்வி - மதுராந்தகி; அவள்மகன் விக்கிரமன். கடக்கலுழி - மதநீராகிய கலங்கிய நீர்; காலுதல் - வெளிப்படுத்தல். விநாயகனை அடுத்து வரும் வண்டுகள் தும்பை மலரை ஊதி, மதநீரில் திளைத்து, மதிக்கதிர்களை நுகர்ந்து கொன்றைமலரில் புகும் என்க. (5)
--------------------------------------
6. முருகன்
நாவலந் தீவுமுதல் ஏழ்பெருந் தீவுஉடைய
நாதன்எங் கோன்அபயன் ஞானகம் பீரன்இசைக்
காவலன், கோடிபல காலமும் சூழ்திகிரி
காவல்கொண்டு ஆளஒரு காதல்கொண்டு ஆளுவன:
தூவலம் போர்அருவில் வேல்,கடம்பு ஆரம்,மதி
தூரம்,சிந் தூரகிரி, தோகை, கொம்பு, யானை, குழல்,
சேவலங் கோழிஇவை யாவையும் தேவிபெறு
சீதனம் போலுடைய சேவகன் சேவடியே
ஞானகம்பீரன் - அறிவினால் வந்த பெருமிதமுடையோன்; தூரம் - இசைக்கருவி. இந்திரன்மகள் தேவயானையை முருகன் மணந்தமையின், இந்திரன் முதலியோர் அவற்கு வழங்கிய பொருள் சீதனம் ஆயின. இந்திரன் முதலியோர் பலபொருளும் வழங்கியமை பரிபாடல் என்ற நூலுள்ளும் (5-55-68) காண்க. (6)
-------------------------------------------
7. காளி
மைத்தடங்கண் மேல்ஏந்தும் மாமதிக் கீற்றினள்,
வைத்தகங்கை நீர்தேங்கும் வார்சடைக் காட்டினள்,
வட்டவெஞ்சு றாநான்ற வார்குழைத் தூக்கினள்,
மற்றுஅசைத்து நேர்தாழ்ந்த மூஇலைக் கூற்றினள்,
பைத்துஅடங்கு வாய்காய்ந்த மாசுணக் காப்பினள்,
பத்திகொண்டு கீழ்தாழ்ந்த பீதகக் கோக்கையள்,
பச்சையந்து ழாய்வேய்ந்த வாசிகைச் சூட்டினள்,
பக்கம்நின்று தாள்ஏந்து கோள்அரிப் போத்தினள்,
முத்துஒடுங்கு சூல்வீங்கு வால்வளைக் கோட்டுஇனம்
முத்துஎறிந்த போதுஏங்கி மீதெழக் கூப்பிட,
முற்புகும்பு கார்நீங்கும் நீள்புனல் கோட்டகம்
முட்டமண்டி மேல்வீழ்ந்த சூழ்சிறைப் பார்ப்பொடு,
கொத்துஅடங்க மீன்மேய்ந்து கானலில் போய்ச்சில
குக்குடங்கள் வாய்ஓய்ந்து, பாசடைக் காட்டுஒளி
கொட்பவிண்டு தாதுஏய்ந்த தாமரைக் கூட்டுஉறை
கொற்கைஎங்கள் ராசேந்திர சோழனைக்காக்கவே.
சிவபெருமானுடையன பலவும் காளிக்கும் ஏற்றி உரைக்கப்படும். மூவிலைச்சூலம் கீழ்நோக்கிச் சாய்ந்திருக்கிறது. பைத்து - படம் எடுத்து; மாசுணம் - பாம்பு; காப்பு -கங்கணம்; பத்தி - கொய்சகமடிப்பு; வாசிகை - தொடுத்தமாலை; சூட்டு - மகளிர் முடிமாலை; அரிப்போத்து - ஆண் சிங்கம்.
சங்கங்கள் முத்தீன்று ஒலித்து நீங்கும் கடற்கரையில், பார்ப்பொடு மீன்களை மேய்ந்து, கடற்கரைச் சோலையை அடுத்த குளங்களிலுள்ள தாமரைகளில் கொக்குகள் தங்கும் கொற்ககை என்க. புகார் - கழிமுகம். (7)
--------------------------------------------
8. சத்தமாதர்கள்
பொலன்முகடு உடையநீட் டியநீலக் கால்குயில்,
புரம்அற வறிதுகோட் டியசாபக் கோற்றொடி,
பொதிஅவிழ் முளரிமேல் புரியோகப் பார்ப்பனி,
பொழிமத அருவிதூக் கியவேழப் போர்ப்பிடி,
இலவுஇதழ் அனையசூட்டு எறிகோழிச் சூர்ப்பகை,
இதழியின் முருகுதேக் கியவாசத் தார்க்கிளி,
இருநில மகளைமீட்டு எழும்ஏனக் கோட்டுஉழை,
எனஇவர் எழுவர்போற்று அரியாரைப் போற்றுதும்:
உலகுஅறி செறிதுழாய்ப் பெருவாசச் சூட்டனை,
உமிழ்திரை பெருகுபாற் கடல்ஓதச் சேர்ப்பனை,
உறுபகை முதலைவாய்ப் படும்யானை காத்தனை,
ஒருவிசைச் செவிலிசாத் தியபூதிக் காப்பனை,
அலம்வரு குரவைஆய்ச் சியர்சேரித் தூர்த்தனை,
அரவொடு பொருதுதோற் றியகோலக் கூத்தனை,
அழகிய குருகுலோத் தனைத்தேரில் கூட்டனை,
அபயனை, எதிரிலாப் பெருமாளைக் காக்கவே.
ஓங்கி உலகளந்த நாராயணி, திரிபுரம் எரிசெய்த உருத்திராணி, தாமரையில் யோகம் புரியும் பிராமணி, ஐராவதத்தை இவரும் இந்திராணி, கோழிவடிவெடுத்த சூரனுக்குப் பகையாகிய கௌமாரி, கொன்றைமாலை அணிந்த மாகேசுவரி, பூமியைக் கோட்டால் எடுத்த வாராகி என்போர் சத்தமாதர். பொலன் முகடு - மேருவின் உச்சி; வறிது - சிறிது; சாபம் - வில்; சூட்டு - கொண்டை; இதழி - கொன்றை; ஏனம் - பன்றி.
இப்பாடலில் குலோத்துங்கன் திருமாலாகக் கூறப்படுகிறான். துழாய் அணிதல், பாற்கடலில் பள்ளி கொள்ளுதல், கசேந்திரனைக் காத்தல், கண்ணனாக அவதரித்தபோது செவிலி பூசிய விபூதிக்காப்பு அணிந்தமை, ஆய்ச்சியருடன் குரவைக் கூத்தாடியமை, காளீயன் படத்தில் நடித்தமை, அருச்சுனனது தேர் ஓட்டியமை ஆகியவை சுட்டப்பட்டுள்ளன. தூர்த்தன் - காமுகன். (8)
------------------------------
9. முப்பது முத்தேவர்
பாறுஇரட் டித்த எருவைமீது இட்ட
பந்தரில் சிந்து ராசனும்
பழையசா ளுக்கி மக்களும் பட்ட
படுக ளங்கண்டு, பண்டையின்
தூறுஇரட் டித்த ஏழ்கலிங் கத்தர்
ஓடிடச் செற்ற சென்னிசேய்,
சோழகம் பீர னைப்புரப் பார்கள்:
துரகம் மேல்எழும் சூழ்நுகத்து
ஆறுஇரட் டித்த தேரில்,வேறு ஒன்றோடு
ஐந்து இரட்டித்த விடையில்,செப்பு
அரியவே தத்தின் ஆயுள்வே தத்தில்,
அளிகு லம்பாட அடியிடும்
சேறுஇரட் டித்த கடதடப் பத்தி
எட்டுஇரட் டித்த யானையில்,
திகழும்ஆர் வத்த ராகிநிற் கின்ற
தேவர் முப்பத்து மூவரே.
பாறு - பருந்து; எருவை - தலைவெளுத்து உடல் சிறுத்திருக்கும் பருந்துவகை; தூறு - புதர்; சோழன் சிந்துமன்னன், மேலைச்சாளுக்கியர், கலிங்கர் இவர்களைக் களத்தில் வென்றமை கூறப்படுகிறது. இரட்டித்தல் - விட்டு விட்டு ஒலித்தல். குதிரை பூட்டிய தேரில் வரும் சூரியர் பன்னிருவர், விடைகளின்மேல் வரும் உருத்திரர் பதினொருவர், ஆயுள்வேதம்மீது வரும் அசுவனி தேவர் இருவர், யானைகள்மேல் வரும் வசுக்கள் எண்மர் ஆகியோர் முப்பத்து முத்தேவராவார். யானைக்கு மதம் ஒழுகும் கதுப்புப்பகுதி இரண்டு உளவாதல் காண்க. (9)
-------------------------------------------
10 சாத்தனார்
அறிந்த சிங்களர் அனந்த ரும்சுரர்
அநேக ரும்பழைய தென்னரோர்
ஐவரும் பொருது, செம்பொன் மாரியில்
அனைத்து வாயிலினும் அன்றுபோய்
முறிந்த ஞாயிலென முன்கி டந்தற
முனிந்த சென்னிமகன், மன்னர்கோன்
மூரிவாள் அபயன் எங்கள்செம் பொன்முகி
லைப்பு ரக்க:அடி விட்டவீழ்
செறிந்த மேருசிக ரத்தொ ழுங்குதக
ரப்பு ரண்டதொரு குன்றமும்,
சென்ற தானவன் உடம்பும், அப்படி
நிறம்தி றக்கஒரு செங்கைவேல்
எறிந்த தன்னுடைய தன்னை தன்னொடு,
புரத்ர யம்அடத் தமப்பனார்
எய்த நாளில், அமர் செய்த பேரணியில்
யானை ஏறிவரும் யாளியே.
அனந்தர் - அளவற்றவர்; சுரர் - வானவர் எனப்படும் சேரர்; ஞாயில் - அம்பு எய்து மறைதற்குரிய மதிலுறுப்பு; சிங்களர், சேரர், பாண்டியர் ஆகியோர் மதிலையழித்துக் குருதியாறு பரக்க வென்ற விக்கிரமன் மகன் குலோத்துங்கன். மூரி - வலிமை.
கிரவுஞ்சம் மேரு சிகரங்களில் ஒன்று காற்றால் புய்த்துச் சேய்மையில் உய்க்கப்பட்ட கூறாகும் என்பது. கிரவுஞ்சமலையும் அதில் மறைந்திருத்த தாருகனுடம்பும் முருகனது வேலால் பிளக்கப்பட்டபோதும், சிவபெருமான் முப்புரத்தை அழிக்க முற்பட்டபோதும், ஐயனார் படை நடுவண் யானைமேல் ஏறிய சிங்கம் போலத் தோன்றித் தொழிற்பட்டார். யாளி - சிங்கம், யானை போன்ற முகமுடையதும் சிங்கத்தை அழிக்கவல்லதுமானதொரு விலங்கு. (11)
-----------------------------------------
11. திரிபுர சுந்தரி
வருகரு நாடருக் கூரின் மறுகினர், கபடம் உட்காறு
மலைபட, எறிவளைப் பேறு மதவரை யதன்எழப் பேர,
அருமுனை வினைவிளைத் தாடு மவன்மகள் மகன் முதற் பேரன்,
அபயனை, இனிதுஅளிப் பாளும் அகிலமும் இடர் கெடுப் பாளும்:
இருபிறை வளைஎயிற் றாலும் இனவளை அணி கரத் தாலும்
இருகுழை பிறழ்புறத் தாலும் எழில்ஒளி அவணிடைக் கூட,
ஒருவிழி வெயில்எறித் தாலும் ஒருவிழி நிலவுஎறித் தாலும்
ஒருவிழி அழல்எறித் தாலும் ஒருபுடை இருள் எறிப் பாளே. 11
விளைவித்து ஆடுமவன் - முதல் இராசேந்திரன்; மகள் - அம்மங்கதேவி; மகள் மகன் - முதல் குலோத்துங்கன். சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்றும் தேவியின் முக்கண்களாய் ஒளி உமிழவும், அவள் உடலின் கருநிறம் இருள் வீசுகிறது என்பது. (11)
------------------------------------------------
2. செங்கீரைப் பருவம்
12. கல்விக்கு மதுரைக்கும் மரந்தைக்கும் நாயகன்,
உறந்தைப் பிரான்,அ கிலமும்
கண்ஆர மேருவில் எடுக்கும் புலிக்கொடி
கலிக்கள்வ னைப்பொரு துபோர்
வெல்விக்கும் மானதன், மகோதைக்கு மன்னன்முடி
கொண்டான் மகற்கு மகன்,என்
வெற்றிக் கவித்தநில மண்ணைக் கடக்கஇகல்
விண்ணைக் கடக்க இகலிக்
கொல்விக்கும் யானைகொடு சாளுக்கிய வர்க்கம்அற
வேளுக் கிராமம் இடறிக்
கொல்லா புரம்பொருது கல்யாண மூதெயில்
பறித்துஏழு கொங்கணம் முன்னாள்
செல்விக்கும் ராசாதி ராசன் திருப்பெயர!
செங்கீரை ஆடி யருளே!
சேரா! பெருங்கவிகை வீரோதை யா!வாழி!
செங்கீரை ஆடி யருளே.
செங்கீரைப்பருவம்
12. செங்கீரை- குழந்தை இருகைகளையும் முழந்தாள் களையும் ஊன்றித் தலை நிமிர்ந்திட்டு ஆடுதல்.
மரந்தை - சேரன் ஊர்; கலிக்கள்வன் - வறுமையாகிய கள்வன்; மானதன்- மனுமரபில் தோன்றியவன்.
மூன்று தமிழ் நிலங்களையும் வென்று, கலிகடிந்து, மேருவில் புலிபொறித்து, சளுக்கியரை வென்று அவர்தம் ஊர்கள் பல அழித்து, ஏழுகொங்கணமும் அடிப்படுத்திய முதற்குலோத்துங்கன் பெயரன் இவன். வீரோதயன் - வீரனாய்த்தோன்றியவன். (1)
-----------------------------------
13. எரிக்கும் கனல்சோரி வங்காளர் வேழஅணி
வெங்காள கூடம் எனவந்து
ஈரட்ட மும்புரள, மாராட்டர் வேழஅணி
ஈரேழும் எண்தி சையில்எண்
கரிக்கும் திடுக்குவர, நெற்றிப் புகுந்துபடை
முற்றிப் புகுந்து பொரும,
காலிங்க யானைகள் கடைக்கூழை யிற்கவிழ
மட்டித்த கைம்ம லைகளால்,
விரிக்கும் கடற்குருதி வெள்ளம் பரந்துவட
விந்தா டவிப்பு டவிபோய்,
வேதாளம் இட்டஅடி பாதாள முட்டுஅவிழ,
வீமா புரத்துஒ ருசரம்
தெரிக்கும் சயங்கொண்ட சோழன் திருப்பெயர!
செங்கீரை ஆடி யருளே!
சேரா! பெருங்கவிகை வீரோதை யா!வாழி!
செங்கீரை ஆடி யருளே!
13. காள கூடம் - ஆலகாலவிடம்; இரட்டம் ஈரட்டம் என நீண்டது. திடுக்கு - அச்சம்; நெற்றி - படையின் முன்னணி; கூழை - படையின் பின்னணி; மட்டித்தல் - அழித்தல்; கைம்மலை - யானை; விந்தாடவிப்புடவி - விந்தியமலைப் பகுதி; முட்டு அவிழ்தல் - மேலிடம் பிளத்தல். வங்காளர், இரட்டர், மராட்டர், கலிங்கர் ஆகியோர் தம் யானைப்படைகளை அழித்து, பேய்கள் கூத்தாட, வீமாபுரம் வென்றவன் முதற்குலோத்துங்கன். (2)
-----------------------------------
14. வெஞ்சோரி நன்மதை மிதந்துஓடி மேல்கடல்
சிவக்கப் புகக்கு ருதிநீர்
வெள்ளம் பரந்துபல பேராறு கீழ்கடலின்
மேல்மேல் நடப்ப, எதிரே
எஞ்சா அரண்பெரிய காலிங்கம் ஏழும்எழ
முந்நீர்கள் ஏழும் எனவந்து
ஏறித் தடுப்ப,முனை மாறிக் கலிங்கம்ஏழ்
பாழ்போக, வென்ற ஒருதன்
பஞ்சா யுதங்களில் அவன்சாது ரங்கபலம்
முற்றுந் தரைப்ப ட,அடல்
பாடல் பெரும்பரணி தேடற்கு அருங்கவி
கவிச்சக்ர வர்த்தி பரவச்
செஞ்சே வகம்செய்த சோழன் திருப்பெயர!
செங்கீரை ஆடி யருளே!
சேரா! பெருங்கவிகை வீரோதை யா!வாழி!
செங்கீரை ஆடி யருளே.
14. முந்நீர் - கடல்; பஞ்சாயுதம் - திருமாலுக்குரிய சங்கு, சக்கரம், வில், வாள், கதை என்பன; சாதுரங்கம் - யானை, குதிரை, தேர், காலாள் என்ற நால்வகைப் படை; சேவகம் - வீரச்செயல்; இது குதிரையின் பெயராகிய சேவல் என்பதனை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய தமிழ்ச்சொல்.
இப்பாடலில் முதற்குலோத்துங்கன் கலிங்கம் வென்று சயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. சயங்கொண்டாரைக் கவிச்சக்கர வர்த்தி என்று ஒட்டக்கூத்தர் போற்றும் திறன் பாராட்டத்தக்கது. (3)
----------------------------------------
15. ஏறாத அற்றைமனு, ஏசாத செப்பநெறி,
ஏகாத சித்ர மதுரம்,
எற்றாத பேருததி, வற்றாத பொன்னிநதி,
எய்யாத இந்த்ர விபவம்,
மாறாத மத்தகசம், ஆராத புத்தமுதம்,
ஆடாத நிர்த்த நிலையம்,
அஞ்சாத புண்டரிகம், எஞ்சாத யோகபலம்,
ஆறாத முத்த மிழ்நலம்,
மாறாத கற்பதரு, வாராத சித்ரகவி,
வாடாத உற்ப லவனம்,
மண்ணாத ரத்னகிரி, நண்ணாத தத்வகதி,
மட்காத சந்த்ர வலையம்,
சீறாத சிற்றசனி, தீராத பச்சைமுகில்,
செங்கீரை ஆடி யருளே!
சேரா! பெருங்கவிகை வீரோதை யா!வாழி!
செங்கீரை ஆடி யருளே.
15. ஏறாத - வயது முதிராத; அற்றை - குலோத்துங்கன் வாழ்ந்த அக்காலம்; உததி -கடல்; ஏறாத - கரை கடவாத; மாறாத - மதத்தால் செயல் மாறாத; புண்டரிகம் - புலி; ஆறாத - குறையாத; மாறாத - என்றும் பண்புமாறாத; வாராத - மற்றவரால் வரையவாராத; உற்பலம் - குவளை; மண்ணாத - சாணையிடப்படாத; மட்காத -ஒளிகுறையாத; அசனி - இடி; தீராத - பெய்து தீராத. குலோத்துங்கனுக்கு வழங்கப்பட்ட இவ்விலக்கு உருவங்கள் பாராட்டத் தக்கன. (4)
-------------------------------------------
16. வானாள ஒட்டரும் இரட்டரும் மிலைச்சரும்
விதர்ப்பரும், வழிப்ப டவிடா
மாராட்ட ரும்சவுன ரும்சனக ரும்பரத
ரும்போய் முடிந்துஅ ற,முடிப்
பூநாறு கைதவரும் மாகதரும் மாளுவரும்
இலாடரும் ஒருங்கு மடிய,
போரில் படாததொரு பேர்இன்மை யால்வட
கலிங்கன் புறக்கிட் டந்நாள்,
மேனாள் இமத்தருகு கட்டுண்ட வேழஅணி
வெட்டுண்ட கைக்கு ருதிநீர்
விண்மேல் எடுத்துவர, மண்மேல் வெறுந்தனி
திகாந்தங்கள் முட்டி விரியும்
சேனாப ராகம்உற, நிற்கும்பி ரான்மதலை!
செங்கீரை ஆடி யருளே!
சேரா! பெருங்கவிகை வீரோதை யா!வாழி!
செங்கீரை ஆடி யருளே.
16. பேர் இன்மை - பெரிய இழப்பு; போரில் உயிர் நீத்துத் துறக்கம் புகுதலே அரசர்க்குப் பெரும்பேறு. புறக்கிட்டந்நாள் - விரித்தல் விகாரம். திகாந்தங்கள் - திசைகளின் இறுதி எல்லை; சேனாபராகம் - சேனை செல்லுதலால் பரக்கும் துகள். இப்பாடலில் விக்கிரமசோழன் அரசர்பலரை வென்ற செய்தியும், புறமுதுகிட்ட வடகலிங்கன் மீது தொடர்ந்து போரிடாத செய்தியும் சுட்டப்பட்டுள்ளன.
------------------------------------------------
17. கூடம் கொடுத்துஅகில லோகம் கவித்தவெளி
கோள்மண்டி மேல்கு வியவோ?
கோலும் திரைப்பரவை நாலும் கிடைத்தனைய
பூகங்கு லைத்த லையவோ?
ஆடம் பரப்பணிலம் ஆரம் படப்புலவும்
ஆழங்கெ டச்சொ ரியவோ?
ஆறும் கடற்கழியும் வேறும் பணித்தட மும்
மீனம்தெ விட்டி எழவோ?
மாடம் கணித்தஎழு பாரும் குவித்ததிறை
வான்வென்று எழப்பொ தியவோ?
வாரும் குலக்கிரியும் மாதங்க வர்க்கம்இடு
மானம்பு எழப்பு குதவோ?
சேடன் கழுத்துஒசியும் நாடன் திருப்புதல்வ!
செங்கீரை ஆடி யருளே!
சேரா! பெருங்க விகை வீரோதை யா! வாழி!
செங்கீரை ஆடி யருளே.
17. இவன் செங்கீரையாடும் அதிர்ச்சியால், விண்வெளியிலுள்ள கோள்கள் இடம் பெயர்ந்து ஒருசேரக் குவிதல் கூடும்; நாற்கடல் சூழ்ந்த உலகமாகிய உருண்டை குலைந்து தடுமாறல் கூடும்; கடல் ஆழம் குறையுமாறு சங்குகள் முத்துக்களைச் சொரிதல் கூடும்; ஆறுகழிகுளங்கள் எல்லாம் மீன்கள் மேலெழுமாறு கொப்புளித்தல் கூடும். ஏழுலகும் அளித்த திறை போதாதென்று வானத்தை வெல்லப் புறப்படும் ஆயத்தம் போல, இவன் செங்கீரையாடல் அமைந்துள்ளது. இவன் உலகைத் தாங்குவான் ஆதலின், இனி இளைப்பாறும் எட்டுத்திக்கு யானைகளும் வெளிப்படுத்தும் மதநீர் வெள்ளத்தில் குலமலைகளும் மிதக்கும் நிலையும் ஏற்படக்கூடும். இவன் தந்தை நிலத்தைத் தாங்குதலால், இனி ஆதிசேடன் கழுத்துக்கு ஓய்வு ஏற்படும்.
கூடம் - அண்டவெளி; கோள் - கிரகங்கள்; பூகம் - உருண்டை; புலவு - புலால் கமழும் கடல்; தடம் - குளம்; தெவிட்டுதல் - கொப்புளித்தல்; மாதங்கம் - யானை; மான் அம்பு - மத நீர்; ஒசிதல் - ஓய்தல். 6
---------------------------------
18. வெங்கோள் அராஎதிர் கொடிக்கோள ராவெல்
வலத்தின் புரத்தி டை,அவன்
மெய்த்தூது வெல்லஒரு பொய்த்தூது சென்று,ஒரு
ப(த்)து அக்குரோணி ஒன்றொ டுமிகும்
சங்குஓ லிடும்படைகி டந்து ஊ திடும்படு
கள.......... .........................
…………………பல உத்தர குருக்கள் பல
யோகத் தனித்தனிப்பெற,
பொங்குகோ ளரியா தனம்தருமன் ……………
ஏற, ஒருபொய்ப் பாசனம்
போய்ஏறி, அக்குரிசில் பேரி...................
தேர் ஆழி உய்த்து,இ னிதவன்
செங்கோல் நடத்தொரு முட்கோல் பிடித்தவன்!
செங்கீரை ஆடி யருளே!
சேரா! பெருங்கவிகை வீரோதை யா!வாழி!
செங்கீரை ஆடி யருளே.
18. கொடிக்கோளரா - துரியோதனன் கொடியிலுள்ள பாம்பு; புரம் - அத்தினபுரம்; மெய்த்தூது - உலூகனை விடுத்ததூது; அக்குரோணி - யானை 21870, குதிரை 56410, தேர் 21870, காலாள் 109350 கொண்ட சேனைத்தொகை. துரியோதனன் படை பதினோர் அக்குரோணி அளவிற்று என்க. உத்தர் குருக்கள் - எதிர்காலத் தலைவர்கள். கண்ணன் துரியோதனனிடம் தூது நடந்து போர் மூட்டித் தலைவர் பலரையும் அழிக்க அருச்சுனன் தேர்ப்பாகனாகி இறுதியில் தருமன் அரியணைஏறத் தான் தூதுசென்ற காலை, துரியோதனனிட்ட பொய்யாசனத்தமர்ந்து பேருருவெடுத்துத் தன் பெருமை காட்டிய செய்தி இம்மன்னன்மேல் ஏற்றி உரைக்கப்பட்டுள்ளது. 7
-----------------------------------
19. கொங்கைத் துவைத்து,வட மண்ணைக் கடக்கத்து
... ... ... .... இரட்டம் உழறி,
கோகன்னம் வென்று,குட வாதாவி கொண்டு,
……………………………………….
கங்கைக்கும் நம்முடைய கோதாவி ரிக்கும் நடு
வெங்கு .......... ………….. ……………
காலிங்கர் யானைகள் கடைக்கூழை யில்கவிழ,
முன் வந்த ...... ………. ……………….
வெங்கைக் களிற்றுஉபய கும்பத்தும் முத்துஉதிர,
விசையம் பணாம ணியும் ... … … …
விந்தை நிகர்த்துவயி ராகரத் தார்த்தொகுதி
விண்முட்ட, வாள்கொ டுநெடுஞ்
செங்கை (களிறுய்க்குஞ்) சோழன் திருப்பெயர!
செங்கீரை ஆடி யருளே!
சேரா! பெருங்கவிகை வீரோதை யா!வாழி!
செங்கீரை யாடி யருளே.
19. உழறி - கலங்கச் செய்து; உபயகும்பம் - தலையின் இருபக்கம்; விந்தை - கொற்றவை; தார் - காலாட்படை. இப்பாடலில் முதற்குலோத்துங்கன் வெற்றிகள் பலவும் சுட்டப்பட்டுள்ளன. 'நம்முடைய கோதாவிரி' எனவே, கோதாவிரி இவன் நாட்டு எல்லைக் குள் ஓடுவது என்பது. (8)
-------------------------------------
20. தகரந றுங்குழல் சரி..... …………………….
……………………………….
தரளம்அ ரும்பிய நுதலின் விளங்கிய
சிந்தூ ரம் தீர,
புகர... ………….......... விலும் சில
செம்பா கம்கோட,
புகவிழு விஞ்சையர் இருவரி... …………..
... ..... ..... ..... போக,
பகரவ ரும்படு கொலை முலை கொண்டு, இடை
…. ….. …… …… …..
பரிபுர மங்கையர், வரைஅர மங்கையர்,
பந்தா டுஞ்சாரல்
சிகர .... ..... ... குடக! அறவ!
செங்கோ செங்கீரை!
தினகர! செம்பிய! செயதர! பஞ்சவ!
செங்கோ செங்கீரை!
20. தகரம் - மயிர்ச்சாந்து; செம்பாகம் - சமபாதி; அறவன் - அறமே வடிவானவன்; குடகன் - குடகு நாட்டு மன்னன். இப்பாடலில் குடகுமலைச் சாரலில் சிலம்பணிந்த நிலவுலக மங்கையரும் வானுலக மங்கையரும் குழல்சரிய, நெற்றியிலெழுந்த வேர்வையால் திலகம் அழிய, புருவவில் பாதி வளைய, நகில்கள் அசையப் பந்தாடும் செய்தி கூறப்பட்டுள்ளது. அரமகளிர் மலையில் பந்தாடுவர் என்ற கற்பனை கலித் தொகையிலும்
‘விண்டோய் வரைப்பந்து எறிந்த வயாவிடத்
தண்டாழ் அருவி அரமகளிர் ஆடுபவே' (கலி - 40)
என்று காணப்படுகிறது.
-------------------------------------
21. கழியவ றுங்குறை துறுமிடப் படுங்காடு
இரும்பூ தம்பீற,
ககனம் நிறைந்தெழு கடல்பரு கும்துகள்
குன்றுஏ ழும்சூழ,
பொழிய விழும்கட களிறு புாண்டன
கண்டார் திண்டாட,
பொருதும்உ டன்கிளை முழுதும் இழந்தவர்
நெஞ்சே நஞ்சாக,
பழுதுஇல் புரந்தர குலதனம் முன்புகு
பண்டா ரம்போக,
பரவைபெ ருந்துணி படஎயில் கொண்டுஎறி
கெம்பீ ரம்போக,
செழியர் விடுங்களிறு அழிய எழும்புலி!
செங்கோ செங்கரை!
தினகர! செம்பிய! செயதர! பஞ்சவ!
செங்கோ செங்கீரை!
21. கழிய வறுங்குறை துறுமிடம் - உயிர் நீங்க வெற்றுடல்கள் குவிந்து கிடக்கும் இடம்; பீறல் - கிழித்தல்; பொழிய - அம்பு பொழிய; திண்டாட - கலங்க; நஞ்சாக - விடம் போல வருத்த; பண்டாரம் - சேமிக்கும் அறை; போக - மிக.
சேனை சென்றபோது எழுந்த தூசி கடல்களையும் பருகி மலைகளையும் சூழும் அளவிற்று. பரவை - கடல் போலப் பரந்தசேனை; புரந்தரகுலதனம் - இந்திரன் உக்கிரகுமாரனுக்குக் கொடுத்த மாலை; அஃது இவன் பண்டாரத்தை அடைந்தது என்க; இது பாண்டியரை வென்று கைப்பற்றியதாம். முதல் இராசேந்திரன், இவ்விந்திரன் ஆரத்தைப் பாண்டியன் பாதுகாவலுக்காக வைத்திருந்த ஈழத்தரசனுடைய நாட்டிலிருந்து கைப்பற்றிய செய்தி அவன் மெய்க்கீர்த்தியில் காணப்படு கிறது. (10)
----------------------------------
22 பருவவ னங்குயில் பயில்வன பைந்தளிர்
கொந்தோ டும்கோத,
பருகுபெ ருங்களி அளிகுல பந்திகள்
கந்தா ரம்பாட,
கருவிவி யன்கதிர் கனியம ணந்தவர்
சந்தா பம்தீர,
கழிகுரு கின்கிளை கலகம் இடும்படி
பொங்குஓ தம்போக,
புருவநெ டுஞ்சிலை புரளவ ளைந்து,ஒரு
வெஞ்சா பம்கோலிப்
புதுமலர் அம்புகள் பொழிய,ம ணந்தவர்
தன்தேர் அன்றுஏறித்
தெருவில்ம தன்புகு, மதலை!அ பங்குர!
செங்கோ செங்கீரை!
தினகர! செம்பிய! செயதர! பஞ்சவ!
செங்கோ செங்கீரை!
-
22. அபங்குரன் - மனக்கோட்டமில்லாதவன். வண்டுகள் கந்தாரம்பாட, சந்திரன் கூடியிருப்பார் உள்ளத்து வெப்பத்தைப் போக்க, நாரைகள் ஒலிக்குமாறு கடல் பொங்கி எழ, மன்மதன் கருப்புவில் வளைத்து மலரம்புகள் பொழிவதற்குத் தென்றலாகிய தன் தேரில் ஏறி ஊர்த்தெருக்களில் புகுமாறு இவன் செங்கோலாட்சி அமையும் என்பது. (11)
------------------------------
3. தாலப்பருவம்
23. குருகு லோத்தமர் தூதா! மாபூத ஆதாரா!
கோல வேய்க்குழ லாலே மால்சூழ் கோபாலா!
அருகு பார்த்திப ரானார் கோல்ஊ டாடாமே
அவனி காக்கும் அமோகா! தாலோ தாலேலோ!
சுருதி நூல்தொடை மாலா காரா! மேனாள்கார்
தொடரின் வீக்கிய வீரா! சேரா! சோழா!ஏழ்
எருது கோள்பட மூள்போர் மார்பா! தாலேலோ!
எதிரி லாப்பெரு மாளே! தாலோ தாலேலோ!
தாலப்பருவம்
23 தால் - நாக்கு. நாவினை அசைத்துக் குழந்தை உறங்குமாறு செவிலியர் பாடும் தாலாட்டு.
குருகுலோத்தமர் - பாண்டவர் ; ஆதாரன் - அடிப் படையாயுள்ளவன்;மால்-மயக்கம்; கோல் ஊடாடுதல் - செங்கோல் கலத்தல் ; அமோகன் - செல்வ மிகுதி உடை யவன். வேதத்தை மாலையாகத் தொடுப்பவன் என்பது வேதத்தை முறையாக ஓதுபவன் என்றவாறு. மேகத்தைப் பிணித்தவன் என இவன் பாண்டியனாகவும் கூறப்படு கிறான். ஏழ் எருது வென்றமை கண்ணனுடைய செயல். (1)
-------------------------------
24. முரியும் நீர்த்துகிர் ஆகா ரா!கீழ் காலூடே
முழுது கோட்டுஎழு பாரா வாரா! தாலேலோ!
உரிய நால்பெரு வேதா சாரா! கோல்கோடாது
உலக மாக்கலம் ஊர்மீ காமா! தாலேலோ!
அரிய சூர்ப்பிண வோடே நீர்நாய் மீன்மேய்போது
அலரும் நூற்றிதழ் மீதுஆர் தாதுஊ தாதே,தேன்
இரியல் போய்ப்பொழில் சூழ்சோ ணாடா! தாலேலோ!
எதிரி லாப்பெரு மாளே! தாலோ தாலேலோ!
24. முரியும் நீர் - உலகை வளைத்தகடல்; துகிர் ஆகாரன் - பவளம் போன்ற செந்நிறமுடைவன்; பாராவாரம் - கடல். கடலிலிருந்து பூமியை வராகமாகி எடுத்தவன் என்பது. வேத ஆசாரன் - வேதத்துவழி ஒழுகுபவன்; மீகாமன் - மாலுமி. சோழ நாட்டில் தாமரைப் பொய்கைகளில் நீர் நாய்கள் பிணாக்களோடு நீர் துளும்ப மீன்மேயும்போது, தண்ணீரின் சலனத்தால் வண்டுகள் தாமரையில் தேன் ஊதாது சோலைகளை அடையும் என்பது. (2)
------------------------------
25. முருகு வாய்த்தது ழாயே சூழ்தோ ளா!வாயா
முளரி மேல்குடி வாழ்வாள் கேள்வா! தாலேலோ!
வரிவ ரால்பகடு ஆண்மே லேபாய் சோணாடா!
மருது சாய்த்துஒரு மாவாய் கீள்வாய்! தாலேலோ!
அரிய மாத்தனில் மேல்ஆம் ஓரோர் தேராளோடு
அரசர் நூற்றுவர் நேர்வோர் மீள்வார் போர்போதாது
இரிய, ஏற்றுஎதிர் தேர்ஊர் பாகா! தாலேலோ!
எதிரி லாப்பெரு மாளே! தாலோ! தாலேலோ!
25. வாயா - வாய்த்து; ‘ஆயா' எனக் கண்ணனாக விளித்ததுமாம். வரால் கரைச்செல்வார்மேலும் பாயும் என்பது. துழாய் அணிந்தவன், திருமகள் கேள்வன், மருத மரங்களைச் சாய்த்தவன், கேசி என்ற அசுரனது வாயைப் பிளந்தவன், அதிரதர்களும் தோற்றோட அர்ச்சுனனுடைய தேரைச் செலுத்தியவன் ஆகிய கண்ணனாக இம்மன்னன் கூறப்படுகிறான். (3)
-------------------------------------------
26. பரவு காட்டிய நாவோ டே,கூர் நோவோடே,
பனிசெய் பொற்கிரி கோள்மா மீன்வாய் வீழாமே,
வரவு காட்டுமு ராரீ! மேவார் நேரேதூண்
வயிறு வாய்த்தபி ரானே! தாலோ தாலேலோ!
அரவு காட்டிய தேரோன் ஏழ்பார் ஆளாமே,
அருணன் ஓட்டிய தேர் போய் மேல்பால் வீழாமே,
இரவு காட்டிய மாலே! தாலோ தாலேலோ!
எதிரி லாப்பெரு மாளே! தாலோ தாலேலோ!
26. உயிர்கள் துயரம் தீர வந்து முரன் என்ற அசுரனை அழித்தமை, தூணிடைத் தோன்றி இரணியனை அழித்தமை, அபிமன்யுவைக் கொன்ற சயத்திரதனைச் சூரியன் மறைவதற்குள் கொல்வதாக அருச்சுனன் இட்டசூள் நிறைவேறுவதற்கு, பிற்பகலிலேயே சூரியனைத் திகிரியால் மறைத்து, சூரியன் மறைந்து விட்டதாகக்கருதி அச்சயத்திரதன் வெளிப்பட்ட அளவில் திகிரியை நீக்கிக் கதிரவனைக் காட்டி அவனை அருச்சுனன் கொல்லக் கண்ணன் வழி வகுத்த செயல் - ஆகியவை இம்மன்னன் செயல்களாகக் கூறப்படுகின்றன. (4)
--------------------------------------
27. அமர மெய்ப்பெண் ... ... ..... ....
... ..... .... .... .... யூதமும் வீழ்
குமரி ஆய்ச்சியர் மால்கூர் வார்நோய்கூர்
... ... ... ... ... தாலோ தாலேலோ!
சமரம் ஏற்றெதிர் கூடாதார் ...................
... .... ......... மே கூர்வாளாலே
எமரை ஆற்றிய கோவே! தாலோ தாலேலோ!
எதிரி லாப்பெரு மாளே! தாலோ தாலேலோ!
27. பசுக்கள் மேய்த்தமை, ஆய்ச்சியரோடு உறவு கொண்டமை, பகைவரை அழித்தமை ஆகியவை கூறப்படுகின்றன (5)
----------------------------------
28. கடவாய் நால்வாய் வீழ்சயம் மாறாக் கருவூ ரா!கூர் வாளாலே
பாராள் கூர்தனி மைக்குமே
இடரது போக்கிய, தேமா வார்சா (று) ஈரா மேவ வீழ்தேன்
நேரே போயாளும்
இடறு சேற்றுப் பெரிய கோட் டத்து
மாமான், ஆள்ஊர் போர்மா வாய்,மிளிர்
……… ………. ......... தாலேலோ!
28. யானைப்படையால் கருவூரை வென்றமை, நிலமகள் தனிமையைப் போக்கியமை, சுற்றியுள்ள ஒட்டு மாஞ்சோலைகளின் பழச்சாற்றினால் வருவார் வழுக்கிக் கொண்டு நடக்கும் வளம் சான்ற பெருங்கோயிலை உடைய தன் மாமன் ஆளும் தஞ்சைக்கு வந்தமை ஆகிய முதல்குலோத்துங்கன் செயல்கள் கூறப்பட்டுள்ளன போலும். (6)
-----------------------
29. அரிய பார்ப்பனி நாமே லாள் சேர் ............ தாலேலோ!
உரிய பாற்கடல் போலே மேலே பாழா மாறே சூழா,மாறு
இரிய நாற்றிசை சூழிப் ......... ……… ………… ………
..………… .... எதிரி லாப்பெரு மாளே ! தாலே தாலேலோ!
29. பிரமனது நாவின் மேலாளாம் பார்ப்பனி - கலைமகள்; சூழா - சூழ்ந்து; இரிதல் - கெட்டோடுதல்; சூழி - முகபடாம்; இது போர்யானைக்கு அடை போலும். முதற் குலோத்துங்கனுடைய கலைமாட்சியும், போர் வென்றியும் சுட்டப்பட்டுள்ளன. (7)
----------------------------
30. .... .... ... .... ..... னாளூர் தேர்ஆரூர்
பகரு தேர்த்தொகை, பாய்மா, யானை
மேற்படு தியாகா சாரா! ... .... .... ......
… …. ... ... ... ... ... வீரன் ஏறு ஊர்
.... ..... .... ... .... வாளா! தோளா! தாலோ தாலேலோ!
பிழைபொறுக்கும் பெருமாளே! தாலோ தாலேலோ!
30. பகைவரிடம் கைப்பற்றிய தேர், யானை, குதிரை இவற்றை மீண்டும் அளித்து அவர்கள் பிழைகளைப் பொறுக்கும் பெருமான் என்றவாறு. (8)
---------------------------
31, துளுநாடு ஈழம் கொல்லம்கல் யாணம்
குதிரம்கோ கன்னம் கங்கம் கவுடம்
கொல்லா புரம்அட மடியக் கொண்டான்
மதலாய்! குதலைக்க னி ... ... ... ... ...
…. .... .... குழியில் சுழியில் பழுவத்தில்
படுவில் குறையில் பழனத்தில்
சங்கந் தவழ்தமிழ் நாடுடையாய்!
சவளவாள் அபயா! தாலோ தாலேலோ!
31. விக்கிரமன் வெற்றியும், தமிழ் நாட்டு வளமும் கூறப்பட்டுள்ளன. பழுவம் - காடு; குழி - பள்ளம்; சுழி - நீர்சுழித்து நிற்கும் பகுதி; படு - குளம்; குறை - ஆற்றிடை அமைந்த திட்டு. இவற்றில் சங்குகள் தவழ்கின்றன. சவளம் - ஈட்டி அபயன் ஈட்டியும் வாளும் உடையவன். (9)
---------------------------
32. கொள்ளும் தகடா புரமும் பதினெண் சுரமும் துளுநாடும்
குடகத் தொடக்கக் குன்றெங் குந்துகள் பட்டெரிய,
…. ... ... ... ... ... ... ... .
...... கலி ...... பெருமாள் மகனே! முகன்நேர் இளகும் கழைமேலே
தெங்க ...... மடலில் கடலோ தம்செருமப் பெருகிப் புரள,
..... ..... ….. …………….. .........
தெரியா உரகா புரிஆள் தலைவா! தாலோ தாலேலோ!
32. இப்பாடலில் விக்கிரமன் வெற்றியும், சோணாட்டுக்கரையில் மூங்கிலும் தென்னையும் செழித்து வளர்ந்த திறமும் இடம் பெறுகின்றன. (10)
---------------------------------
33. .... … …. …. ….. ….. ….. …… ……
பேணும் புவியாள் பூணும் கடவுள் பெருமங் கல நாணின்
திருவாய், ரவியாய், மதியாய், நதியாய், மறையாய், மனுநூலின்
செயலாய், அமுதப் புயலாய், இயலாய், இசையாய், ஒருதெய்வத்
தருவாய், உதவும் செங்கோல் உடையாய்! தாலோ தாலேலோ!
சயவாள் அரியே! வயவாள் அபயா! தாலோ தாலேலோ!
33. இவ்வரசனுடைய செங்கோல் பூமிதேவியின் மங்கல நாணில் கலந்திருக்கும் திரு முதலாக உலகுக்குப் பயன்படும் செயல் கூறப்பட்டுள்ளது. (11)
----------------------------------
சப்பாணிப் பருவம்
34. கடலென மலையென மழையென வருவது
பற்றிய இத்தானை,
கசரத துரகதம் நடுவிடை அறவிடை
ஒப்பன அப்பாதி
உடன்மலை பட,ஒரு திகிரியை விடுதலின்,
விக்ரம முக்கூடல்
ஒருதனி முதுகிட வருமவன் வழிமுதல்!
கொட்டுக சப்பாணி!
வடமது ரையில்ஒரு புடையிடை, வனிதையர்
மெய்க்கவின் மைக்காவின்
வயிறுஅற மணிஉக வரிவளை யுடன்அணி
பொற்றொடி சிற்றாடை
கொடிமறுகு அடையவும் ஒளிபெற வருமுகில்!
கொட்டுக சப்பாணி!
குணதர! சயதர! குவலய! தினகர!
கொட்டுக சப்பாணி!
34. ஸ: பாணி-சப்பாணி; கையோடு கை சேர்த்துக் கொட்டுதல் என்பது இதன் பொருள். குழந்தையை நோக்கிக் கையோடு கைசேர்த்துக் கொட்டும்படி வேண்டுவது இப்பருவம் குறிப்பிடும் செய்தியாகும்.
பகைவருடைய காலாட்படை கடல் போலவும். யானைப்படை மலை போலவும், தேர்ப்படை மேகம் போலவும் வந்தன என்பது. கசரத துரகதம் - யானை, தேர், குதிரை. இவனது சக்கரப்படை ஒன்றே பகைவர் படையின் பாதியை அழித்தது என்பது.
வடமதுரையில் கண்ணன் சிறுமியர் மகிழுமாறும் வீதிகள் ஒளி பெறுமாறும் திருவுலா வந்த செய்தி கூறப்பட்டுள்ளது. (பாகவதம்:10-16) சோலைகளும் நகரமும் மக்களோடு மகிழ்வுற்ற செய்தி விளக்கப்படுகிறது. (1)
--------------------------------
35. இடையிடை சுனைகுடை வரைஅர மகளிர்கள்
கச்சரி, பச்சோலை,
எறிதிரை நிரைதரு இறுவரை மிசையன
புத்தகில், முத்தாரம்,
அடையவும், அடைபரி அடைவன கதிர்முதிர்
நெல்,பனை, கற்பூரம்,
அளிமுதல் இசைவர மிசைவரு வனசில
பச்சிலை, கச்சோலம்,
உடைமது நதிதர ஒழுகுஎழு தலைவனம்
முக்கனி, தக்கோலம்,
உடுநிரை பிறைவளை நெடுவரை தழுவிய
பித்திகை, கத்தூரி,
குடதிசை தர,இவை கொணர்தரு நதிஇறை!
கொட்டுக சப்பாணி!
குணதர! சயதர! குவலய! தினகர!
கொட்டுக சப்பாணி!
35. கச்சரி - கைச்செறி என்பதன் மரூஉ. வளையல்; பச்சோலை - காதணி; கச்சோலம் - ஏலப்பட்டை; தக்கோலம் - பஞ்சவாசத்தில் ஒன்று; பித்திகை - சிறு சண்பகம். காவிரியாறு மேற்குமலையிலிருந்து, நீராடும் அரமகளிர் தம் வளையல், காதணி, மலையிலுள்ள மணிகள், அகில், சந்தனம், மலைநெல், பனை, கற்பூரமரம், பச்சிலைச் செடிகள், ஏலப்பட்டைகள், வாழைமாபலாக்கனிகள், தக்கோலம், சிறுசண்பகம், கத்தூரி இவற்றை அடித்துக் கொண்டு வரும் செய்தி கூறப்படுகிறது. (2)
--------------------------------
36. இடிமுரசு எழுதிய கொடியுடை ஒருதிரு
மைத்துனன் மெய்த்தூதா!
எழுகடல் எழுகிரி எழுபொழில் எனஇவை
சுற்றிய பற்றாளா!
அடியினில் இருமுரு டொடுபொரு களிறுஅடும்
அற்புத மற்போரா!
அழகிய பொதுவியர் அகில்கமழ் துகில்பல
பற்றிய சிற்றாயா!
பொடிவிடு புரவியின் எதிர்பொரும் அதிரதர்
உட்கிய முட்கோலா!
பொரும்இரு சிறகரில் இணைஎழு புவனமும்
உட்படு புட்பாகா!
கொடிவிடு மீனவன் தொடிஒளிர் தளிர்கொடு
கொட்டுக சப்பாணி!
குணதர! சயதர! குவலய! தினகர!
கொட்டுக சப்பாணி!
36. அருச்சுனனுக்கு மைத்துனன் கண்ணன். கண்ணன் துரியோதனனிடம் தூது சென்றவன், அவன் அவையில் பேருரு எடுத்துப் பலகால்கள் கொண்டு உலகு முழுதையும் சூழ்ந்தவன், மதுரையில் கஞ்சன் விடுத்த சாணூரன் முட்டிகன் என்ற மல்லரையும் குவலயாபீடம் என்ற யானையையும் அழித்தவன், கோபியர் துகில் கவர்ந்தவன், அதிரதர் அஞ்ச அருச்சுனனுக்குத் தேர்கடவியவன், உலகையே சிறகரில் அடக்கும் கருட வாகனன் என்ற செய்திகள் உள்ளன. இம்மன்னனுக்குப் பாண்டியன் மாமனாதலின், இவனுக்குத் தொடி அணிவித்தான் என்பது. (3)
--------------------------------
37. உடைபுர வழுதியர் வனசரர் கடைதொறும்
உய்ப்பன கைப்பானை;
உழைமுழு வரிகொடு கருநடர் குலபதி
தைப்பன குப்பாயம்;
அடையவும் உதகையில் அவனிபர் குடபுவி
ஒப்பன உற்பாதம்;
அருமறை யவர்பதி மறுகுகள் தொறும்முகில்
முட்டிய பட்டாடை;
இடைதரு சனகரும் மகதரும் இடர்உற
விட்டனர் கட்டாண்மை;
இகல்இடம் இவனது பரம்இலம் எனமதம்
மிக்கன திக்குஆனை;
குடைநர பதிஇவன் மரபுஎன வரும்முகில்!
கொட்டுக சப்பாணி
குணதர! சயதர! குவலய! தினகர!
கொட்டுக சப்பாணி!
37. தனக்குத் தோற்றோர் ஆண்மையை விட்டுக் குற்றேவல் செய்து துயருறவும், தன் நாட்டு மறையவர் மகிழவும், திக்குயானைகள் பாரம் நீங்கி இளைப்பாறி மதநீர் பெருக்கவும், குடை நிழலில் குடியோம்பி முகில் போன்ற கொடையினன் இவன். (4)
-------------------------------------
38. பரவரும் மதலைகள் மதகரி சொரிவன
எத்துறை, எத்தீரம்,
பணிலமும் வளைகளும் ஒளிர்திரி வனவனம்
எக்கழி, எக்கானல்,
இருபொழு தினும்எழ இருநிதி தருவன
எப்படை, எப்பாகை,
இருகனி களும்இள நறவமும் உமிழ்வன
எப்பனை, எப்பாளை,
பரதவர் வனிதையர் மதர்விழி நிகர்வன
எக்கயல், எக்காவி,
படுகொலை மதனனும் மகளிரும் மகிழ்வன
எச்சுழல், எச்சோலை,
குரைகடல் எனஒளி மிகும்உத கையர்பதி!
கொட்டுக சப்பாணி!
குணதர! சயதர! குவலய! தினகர!
கொட்டுக சப்பாணி!
38. மரக்கலங்கள் யானைகளைக் கொணர்ந்து சேர்க்கும் துறைகள், சங்குகள் திரியும் உப்பங்கழிகள், கடற்கரைச் சோலைகள், பகலும் இரவும் பெருநிதி தொகுத்து வரும் பரிவாரங்கள், கனிகளையும் தேனையும் வெளிப்படுத்தும் பனைமரங்கள், செம்படவப் பெண்களின் கண்களை ஒத்த கயல்கள், குவளை மலர்கள், மன்மதனால் மகளிர் மகிழும் சூழலையுடைய சோலைகள் ஆகிய இவற்றால் ஆரவாரம் மிக்க உதகையாம் சேரர் ஊரை இவன் கைப்பற்றி ஆண்டவன். (5)
-----------------------------------------
39. தடிநறவு அறவிறல் மறலிதன் விடுகவர்
நெட்டிலை விட்டேறு
தலைஅற, யமெனொடு தனிபல திசைசுழல்
கொட்புஎரி கண்பூணி
மடிதர, உலகினில் உயிர்தொறும் உயிர்தொறும்
மெய்ப்புடைக் கைப்பாசம்
வருபிணி துணிபட, வரைபுரை கருநடர்
நெட்டையர் கெட்டோட,
அடிநிழல் வனிதையர் பெறஒரு குடிநிழல்
வைப்பன ஒப்பாகும்
அணிபெற எழுதிய அழகிய குரைகவின்
உட்செறி மட்சாடிக்
குடிபுக, முடிபுனை, சுரகுரு வழிமுதல்!
கொட்டுக சப்பாணி!
குணதர! சயதர! குவலய! தினகர!
கொட்டுக சப்பாணி!
39. தடி நறவு - ஊன் நாற்றம்; விட்டேறு - சூலம்: கொட்பு எரிகண் - தீச்சுழலும்கண்; பூணி - எருமைக் கடா; பாசம் - கயிறு;நெட்டையர் - உயர்ந்த தோற்றத்தர்.
சுரகுரு எமனுடைய சூலத்தின் தலையைத் தகர்த்து, அவன் வாகனமாகிய எருமைக்கடாவினைச் செயல் ஒழியச் செய்து, அவன் பாசத்தை அறுத்து, நாட்டில் சாவினைப் போக்கி, வயது மிக்கவர்கள் தங்க முதுமக்கட்சாடி அமைத்து மக்களைப் பாதுகாத்தவன். இவன் யமனைச் செயலற்றவன் ஆக்கியதால், இவனொடு பொர வந்த உயர்ந்த தோற்றமுடைய கருநடர் தோற்றோடும் நிலை ஏற்பட்டது. ஓடியபோது அவர்கள் விடுத்துச் சென்ற மகளிரையும் சுரகுரு முறைப்படி பாதுகாத்தான். அவன் மரபில் வந்தவன் இம்மன்னன். இச்சுரகுருவின் வரலாறு மூவருலாவிலும் (விக்.கண்ணி 8) இந்நூல் 96 ஆம் பாடலிலும் உள்ளது. (6)
----------------------------------
40. அறைபடு திகிரியின் அலைகடல் இருள்கெட
விட்டெறி வட்டானம்
அலம்வரு பொழுதினில், அரசொடும் முரசொடும்
முட்டிய நெட்டூரில்,
இறைபட, அவன்எயில் எழவிடு முனைமதில்
குத்திய புத்தூரை
எரியிட, முனிவுஒழி இரவிதன் வழிமுதல்!
கொட்டுக சப்பாணி!
உறைபடு தடமுலை மளிஇதழ் புகொரு
கைத்தரு மெய்த்தாதி
உயிரொடு, பொதுவியர் ஒழுகுஒழுகு உறிமிசை
வைப்பன நெய்ப்பானை
குறைபட, ஒருவிசை அமுதுசெய் திருமுகில்!
கொட்டுக சப்பாணி!
குணதர! சயதா! குவலய! தினகர!
கொட்டுக சப்பாணி!
40. அறைபடு - புகழப்படுகின்ற; திகிரி - சக்கரப் படை; வட்டானம் - சுற்றுப்புறம்; வட்டாரம் என இன்று வழங்குகிறது. அரசன் ஒருவனை நெட்டூரில் அவன் நண்பரொடும் எதிர்த்துச் சக்கரப்படையால் நாட்டவர் கலங்குமாறு வென்று, அவன் புத்தூர் அரணைக் கைப்பற்றித் தீயிட்டுக் கோபம் ஆறிய மன்னன் மரபினன் இவன்.
பூதனை உயிரையும், உறியிடை வைத்த நெய்யையும் உண்ட திருமாலே இம்மன்னவன். (7)
------------------------------
41. அன்று கவிக்கு வியந்து நயந்து
தரும்பரி சிற்குஒருபோர்
ஆழியில் வந்து, தராதலம் நின்று,
புகாரில் அனைத்துஉலகும்
சென்று கவிக்கும் அகத்தது, தூண்வயி
ரத்தினும் முத்தினும்மெய்
செய்ததுஓர் பொற்றிரு மண்டபம் நல்கிய
செயகுல நாயகமே!
நின்று தவித்த தனிக்குடை வானவர்
ஞாலம் நிரந்தரம்நேர்
நிற்ப, நிறுத்திய கற்பெரு மாரி
மறித்தவன் நெஞ்சுபுகக்
குன்று கவித்த திருக்குல நாயக!
கொட்டுக சப்பாணி!
குஞ்சர! வல்லப! வல்லபை வல்லவ!
கொட்டுக சப்பாணி!
41. கவிஞன் ஒருவனுக்குப் புகார்நகரில் வயிரத்தூண் நாட்டி முத்தால் செய்யப்பட்ட மண்டபத்தைப் பரிசிலாக அளித்தவன் இவன் குல முன்னோன். (83) இந்திரன் தன் ஆற்றலை உட்கொள்ளுமாறு அவன் விடுத்த கல்மாரியைக் கோவர்த்தன மலையைக் குடையாகக் கவித்து நீக்கியவன் இவன். கண்ணனது செயல் இவன்மீது ஏற்றிக் கூறப்பட்டுள்ளமை காண்க. (8)
----------------------------
42. மறிப்ப மறிந்துஉகு மல்அர ணப்பொறி
வில்அர ணத்தினர்தாம்
வஞ்சியை விட்டு,இகல் அஞ்சிய கோதை
மகோதை மதில்கதவம்
பறிப்ப, எழில்பதி னெண்சுர மும்பொடி
யாமடி ய,பெயரும்
பண்டித சோழன் மகட்கு மகன்பெறு
மன்னவன் நன்மகனே!
வெறிப்ப அளக்க உடுக்கள் சுழிப்ப,
அடுக்கர் உடுக்கரெலாம்
வெள்ளம் நிலந்துகள் கொள்ள, விலங்கிய
கவுரவர் வெம்முனையில்
குறித்த வலம்புரி கொண்ட கரங்கொடு
கொட்டுக சப்பாணி!
குஞ்சர! வல்லப! வல்லபை வல்லவ!
கொட்டுக சப்பாணி!
42. மதிற்பொறிகளையும் வில்லையும் காவலாகவுடைய சேரர் வஞ்சியையும் மகோதையையும் விட்டு நீங்க, அவர்கள் நாடாகிய பதினெண்சுரத்தை அழித்த முதல் இராசேந்திரன் மகள் அம்மங்கதேவியின் மகனுடைய பெயரன் இவன்.
தூளிகள் வானளாவி எங்கும் பரக்கக் கவுரவர் எதிர்த்த போர்க்களத்தில் வலம்புரிச்சங்கு ஊதிய கண்ணனே இம்மன்னன். விண்மீன்கள், மலைகள், மலைப் பகுதிகள், கடல்கள், நாடுகள் யாவும் படைகளால் எழுந்த தூளி படிந்தன என்பது. (9)
-------------------------------------------
43. வண்டல் இழைப்பவர் மவ்வலும் முல்லையும்
ஒல்லை வளம்படவும்,
வானமும் வான மகசுர ரும்சுர
ரும் பெரு வாழ்வு உறவும்,
கண்டல் நிரைக்கரை வாருதி யிற்கதிர்
முத்தம் முகந்தெழவும்,
காவல் இலங்கை விலங்கல் கிழித்துஇருள்
கால்மணி கைப்படவும்,
சண்ட லகைப்புகை சூழ்விழி நாகப
ணாமணி கைவரவும்,
சார விலங்கல் இடுக்கு மிடைக்கிடை
ஆய்வயி ரந்தரவும்,
கொண்டல் பிணித்த திருக்குல நாயக!
கொட்டுக சப்பாணி!
குஞ்சர! வல்லப! வல்லபை வல்லவ!
கொட்டுக சப்பாணி!
43. மேகங்களைப் பிணித்த குலநாயகனாகிய இவன் சப்பாணி கொட்டிய மகிழ்ச்சியில் மவ்வலும் முல்லையும் வளமாகச் செறிந்தன; தேவரும் பெருந்தேவரும் பெரு வாழ்வுற்றனர்; கடல்கள் முத்துக்களை முகந்து பொங்கி எழுந்தன; இலங்கையிலிருந்த மலைப்பிளப்புக்களினின்றும் மாணிக்கங்கள் வெளிப்பட்டன; நச்சுப்புகை உயிர்க்கும் நாகங்களும் மணிகளைக் கான்றன; மலைப்பிளப்புக்களினின்றும் வயிரங்கள் வெளிப்பட்டன. (10)
---------------------------------
44. ஆலின் முகில்தொகை அண்டம்அ கண்டமும்
நிற்கநி றுத்தி,அதற்கு
அப்புற மேகலி குப்புற நூறி,
அதற்கென அம்மனுநூல்
வேலி அமைத்தவன், மன்னவர் மன்னவன்,
மேதினி யாள்கணவன்,
விக்ரம சோழன், வரைத்திரு மார்பில்
விளங்கு கவுத்துவமே!
காலி புரத்துஎதிர் முன்னை உகத்துஎதிர்
பின்னையும் நிற்க,நிரைக்
காவலர் முன்சில கோவலர் விட்டிடும்
மதக்களி ஏறுஉடைய,
கோலி அணைத்த துணைப்பது மங்கொடு
கொட்டுக சப்பாணி!
குஞ்சர! வல்லப! வல்லபை வல்லவ!
கொட்டுக சப்பாணி!
44. அசையும் மேகக்கூட்டம் பருவமழை தவறாது பெய்யுமாறு நிறுத்தி, உலகுக்கு வெளியே வறுமையைத் துரத்தி, அது மீண்டு வாராதபடி மனுநூலாகிய வேலியை அமைத்த நிலமகள் கேள்வனாகிய விக்கிரமன் மார்பில் கவுத்துவமணி போலத் தங்கி விளையாடுபவன் இவன்.
காலிபுரத்தில் ஏழு இடபங்களையும் வென்று நப்பின்னையை மணந்த வரலாறு கூறப்பெறுகிறது. அகண்டமும் - முழுதும்; முன்னை உகம் - துவாபரயுகம்; பின்னை நப்பின்னை; ஏறு உடைய- இடபங்கள் தோற்க. (11)
-----------------------------------------
5. முத்தப் பருவம்
45. எழுது மதலையர் பரதர், இனநிரை
அனைய பனையன, நச்சுஅரா
எயிறு கதுவிய தனைய கடுநற,
மிசைய அரியது நெற்குவால்,
விழுது நுகமிடு பகடு தலம்நடு
கடையர் கடைசியர் பச்சிறால்,
விரவு பொரியலொடு அயிலும் அளவு,ஒரு
மளவர் மகளிரும் ஒக்கலோடு,
உழுது வருமவர் பணில வனம்மடு
உமிய விடுமணி பத்திடா,
உமிழும் நிலவுஎழ, அளலை தர,மிடறு
உடைய வனமது முத்திடா
முழுதும் அணிஎழ, விலைகொடு உரகையர்
முதல்வ! பணிமணி முத்தமே!
முருக! நிருபம! அபய! ரவிகுல
திலக! பணிமணி முத்தமே!
முத்தப்பருவம்
குழந்தையை முத்தம் கொடுக்க வா என்று அழைப்பதைக் கூறும் பகுதி.
45. மதலையர் - மரக்கலத்தை உடையவர்; பரதர் - நெய்தல் நிலத்தவர்.
அராவின் விடம் ஏறுவது போன்ற உணர்ச்சி தரும் கடியகள், உண்பதற்கு அருமையான அரிசிச்சோறு இவற்றைப் பசிய இறால்மீன் கலந்த பொரியலோடு உண்கின்றனர் மருதநில மக்கள் ஆகிய உழவரும் உழத்தியரும். உழவர்கள் உறவினரோடு வயல்களை உழும்போது சங்குகள் முத்துக்களை ஈன, அவை நிலவொளி வீசுவன. நச்சரா - விடப்பாம்பு; கடு நற - நாட்பட்ட தேறல். மிசைதல் - உண்ணுதல்; விழுது நுகம் - ஆலம் விழுதினாலாகிய நுகத்தடி: பகடு - எருது; கடையர் - மருத நில ஆண்மக்கள்; கடைசியர் - மருத நிலப்பெண்கள்; பச்சிறால் பசிய இறால் மீன்; மளவ - உ.ழவர்; ஒக்கல் - சுற்றம்; பணிலவனம் - சங்குக்கூட்டம்; மடு - குளம். இம்முத்துக்களை விலையாகப் பெற்றுக்கொண்டு நீ முத்தம் தருக. நிருபம - உவமையில்லாதவனே. (1)
------------------------------------
46. பகலும் இருளொடு முனையில் அயிலொடு
பயிலும் மதுரையர் கொற்றவா!
பவன கதியிலும் முடுக ரதம்விடு
பழைய வலவரில் உத்தமா!
அகில நினைவுஒரு தொடையல் வரைதரின்
அகர தசமறு மத்தனாள்
நெடியர் பலர்கரு குவர நடுநடு
உவரும் ....... ஒரு நித்ததா!
அகில பதியொடு பொருத குருபதி
விசயன் ஒருதிரு மைத்துனா!
அதிரும் முதுகடல் கமல மகள்விடும்
அரசு பணிஅணி அச்சுதா!
முகிலின் இருள்சுருள் வளைய முகம்மலர்
நடுவு பணிமணி முத்தமே!
முருக! நிருபம! அபய! ரவிகுல
திலக! பணிமணி முத்தமே!
46. முனை - போர்முனை. போர்முனையில் பகல் இரவு என்ற இருபோதும் பயிலும் மதுரை மன்னவன் இவனே. பவனகதி - வாயு வேகம்; முடுக - விரைய; வலவர் - பாகர். செல்வம் மிக்க அரசர்கள் கொடுக்கும் அணிகளை அணியும் அச்சுதன், முகில் போன்ற சுருண்ட தலைமயிர் வளைத்திருக்கும் முகமலரின் நடுவில் முத்தம் தருக. விசயன் மைத்துனன் - கண்ணன். (2)
---------------------------------
47. அதிரும் முகில்அணி குடக விரிகரி
ககன வெளிகெட வைத்ததேன்,
அடவி இழுதொடு தயிரொடு ..நிரை
அமுத முலைமடை விட்டபால்,
எதிரி அகல்வயல் உழவர் இசைபடு
படுகர் இடையிடை விட்டவாது
இருளும் மதுவென முழுதும் அளிகுலம்
இரிய, இளமடல் உக்கசாறு
உதைகொள் வப்படு கலுழி இவையிவை
ஒழுக, எழுமடி தித்தியா,
உடைய விறகடல் உடைய, ஒருதனி
உவரி உவர்வரும் உப்பு நீர்
முதிய பரவையில் அருளும் முகநதி
முதல்வ! பணிமணி முத்தமே!
முருக! நிருபம! அபய! ரவிகுல
திலக! பணிமணி முத்தமே!
47. குடகுமலையில் பெருக வைத்த தேன், காடுகளில் அகப்பட்ட வெண்ணெய், தயிர், பசுக்கள் கறந்த பால், பள்ளங்களில் தென்னை பனை இவற்றின் மடல்களிலிருந்து வழிந்தோடிய சாறு இவற்றின் வெள்ளம் தன் நீரோடு கலத்தலால் ஏழு மடங்கு தித்திப்புற்றுக் காவிரி கடலில் கலந்து அதன் உவர்ப்பை நீக்குகின்றது. அந்நதித் தலைவன் இவன். இழுது - நெய்; படுகர் - பள்ளம்; அளி - வண்டு; கலுழி- நீர்ப்பெருக்கு: உவரி - கடல்; பரவை - கடல்; விறகடல் - செறிகடல். (3)
------------------------------------
48. ஒழுகு பெருநதி உவரி சிறிதுஎன
உமிழ ஒருபனை வெட்டினான்;
உலகம் முழுதுஇனி இவனது எனஇம
கிரியில் ஒருபுலி ஒட்டினான்;
எழுவின் உயர்புய வலியின் ஒருதிரு
நதிபின் இருகரை கட்டினான்;
இவனை அனையவர் எவர்கொல் எனவரும்
இறைவன்; உயிர்பொரு முக்கணான்;
இழிவர் நுதலியர் விரவு கரிகளின்
இரவு பறைஅறை கச்சவாய்
எயிலும் அகழியும் நறவும் நதிகளும்
நிறைய விடுதுளை பத்துநாள்
முழவு மழைதர அருளும் நரபதி!
முதல்வ! பணிமணி முத்தமே!
முருக! நிருபம! அபய! ரவிகுல
திலக! பணிமணி முத்தமே!
48. காவிரியின் போக்கிற்குக் குறுக்காக இருந்த பனையை வெட்டினவன் (53), உலகுமுழுதும் சோழனுடையது என்னுமாறு இமயத்தில் புலிபொறித்தவன், தன்புயவலியால் காவிரிக்கு இருகரையும் கட்டியவன் - ஆகியவர் இவன் குலமுன்னோர். முழவு மழைதர - முழா மேகம் போல அதிர. (4)
-------------------------------------------
49. அடியர் கனைகழல் அதிர, வடபுவி
அரசர் பொரவரு முட்டநாடு
அழிய, எதிரிடு வடுகு முழுவதும்
அழிய அமர்பொரு கட்டிமான்
மடிய, மறலிய தயிலன் வழிஅற,
மகதன் முதுகிட, மச்சர்கோன்
மலையும் மிதிலையும் மதிலும் மிதிபட,
மலைய குலபதி உச்சிபோய்
இடிய, இமகிரி எழுது வரிசிலை
உதியர் குடபுல வெற்புவேர்
இளக, இகலிய வருணன் உரம்இரு
பிளவு படஎறி கொற்கையோன்
முடிய, முனிவுஒழி இரவி! சயதர!
முதல்வ! பணிமணி முத்தமே!
முருக! நிருபம! அபய ரவிகுல
திலக! பணிமணி முத்தமே!
49. தன் வீரர்களின் கழல்கள் ஒலித்த அளவிலே வட புவிமன்னர், வடுகர், கட்டிமான், தயிலன், மகதன், மச்சர்கோன், மலைய குலபதி, இமயத்தில் விற்பொறி பொறித்த சேரன், கடல் சுவற வேல்விட்ட பாண்டியன் ஆகியோர் தோற்றனர், அவர்களை வென்று கோபம் நீங்கினவன் சூரியன் மரபில் உதித்த சயதரன். மறலிய - எதிர்த்த; வழி-வம்சம்; வேர் இளக - ஆட்டங் கொள்ள; வருணன் உரம் இருபிளவுபட எறிதல் - கடலில் வேல்விட்டு அதனைச் சுவறச் செய்த உக்கிரகுமாரன் செயல். இதனைத் திருவிளையாடற் புராணத்தால் அறிக. (5)
---------------------------------
50. தனையர் பலரொடு தயிலன் மகன்மகன்
மகனும் அனிகமும் முட்டநேர்
சரிய, வடபுலம் எரிய, மலைநிலை
தளர வருதமிழ் விற்குழாம்
எனையர் சிலர்பலர் வெருவ, இமையவர்
பரவ, இருசுடர் தப்பவாய்
எரிய அறுகுறை செறிய, உடல்உகு
குருதி நதிஎதிர் செக்கர்வான்
அனைய களனிடை இலகு திகிரிகள்
இளக, முதன்முதல் கற்றவாள்
அளவு முதுகிரி பிளவு படநடு
அருவி வரைபுரை மத்தமா
முனையில் நடவிய குரிசில்! செயதர!
முதல்வ! பணிமணி முத்தமே!
முருக! நிருபம! அபய! ரவிகுல
திலக! பணிமணி முத்தமே!
50. அனிகம் - சேனை; முட்ட - எதிர்க்க; விற்குழாம் - வில்வீரர் கூட்டம். தமிழ்வீரர் சிலருக்கு ஏனைய நாட்டு வீரர் பலர் அஞ்சினர் என்பது. இருசுடர் தப்ப வாய் எரிய -சூரியசந்திரர் மறையுமாறு புகைசூழ அப்பக்கம் நெருப்பால் எரிய; அறுகுறை செறிய - அற்ற குறை உடல்கள் மிக. போர்க்களம் குருதிப்பெருக்கால் செவ்வான் போன்றது. அதில் சென்ற தேர்களின் சக்கரங்கள் தரையில் பதிந்தன. மதம் சொரிதலால் யானைகள் அருவி பாயும் மலைகளை ஒத்தன. (6)
----------------------------------
51. பழியில் இசைவன பருவ மழைமுகில்
உருமு வகைசெறி கொற்றவா!
பவன கதியினும் முடுக ரதம்விடு
பழைய வலவரில் உத்தமா!
வழியும் எழுகடல் மலையர் மகளொடு
வடிய விடும்எழு கொட்டிநீர்
மலரும் எழுபொழில் வரையின் மகளிரொடு
இனிது மகிழ்தர வைத்து,கார்
விழியின் வழிவரவு ஒழியும் வடபுல
விருதர் அணிவிழ வெட்டி,ஆள்
விபுதர் குலகிரி முழுதும், எழுதிய
விசய வலிபெற நட்டதூண்
மொழியில், 'இவன்எதிர் எவன்கொல்' எனவரும்
முதல்வ! பணிமணி முத்தமே!
முருக! நிருபம! அபய! ரவிகுல
திலக! பணிமணி முத்தமே!
51. பருவமேகம் இடியோடு பழியில்லாத புகழுற இவன் செங்கோலால் பெய்தது. இவன் வாயுவேகத்தில் தேர் செலுத்தும் தேரோட்டிகளில் மேம்பட்டவன்; எழுகடலும் எழுபொழிலும் மகிழ்தர வைத்து, வடபுல மன்னர் படைகள் சாய, வானவர்கள் தங்கும் குலகிரி முழுதும் வெற்றித்தூண் நாட்டித் தனக்கு ஒப்பவர் இல்லை என வருபவன். விருதர் - படைவீரர்; விபுதர் - வானவர். (7)
------------------------
52. கருநடர்து ருக்கர்வட கவுசலர்கு குத்தர்விடு
கவுரியர்ம கதத்தர் பிறர்சூழ்
கடலெனவ ளைத்துஅமரர் ககனதலம் முட்ட,ஒலி
களிபெருகு களத்தி னிடையே,
துரகரத வர்க்கநிரை விரைவனது வைத்து,வரு
துடியடிஅ ளக்கர் நிரையே
துணிபடுபி றக்கநடுவு ஒடிமடிம ருப்பிணைகள்
சொரிகுருதி முத்தம் நினையோம்;
உரகையன கொற்கையன உதகையன கச்சியன
ஒழுகுமணி முத்தம் நயவோம்;
உதயகிரி அத்தகிரி இமயகிரி சக்ரகிரி
உதிரும்வெதிர் முத்தம் உகவோம்;
அருந்தியும் அக்கடலும் அவன்மடுவும் மெய்ப்புயலும்
அருள்விளையும் முத்தம் உகவோம்;
மரகதநி றத்துஅபய! மனுசரித! சக்ரதரன்
மதலை!இதழ் முத்தம் அருளே!
52. கருநடர் முதலியோர் சூழ்ந்து கடலென ஒலிபெருகப் பொருத களத்தில், சோழன், குதிரையினத்தை அழித்து யானைகளைத் துண்டித்து மருப்புக்களை ஒடிக்கும்போது, குருதியோடு வெளிப்படும் முத்துக்களை விரும்பி நினையோம்; உதகை முதலிய ஊர்களில் கிடைக்கும் முத்துக்களை விரும்போம். உதயகிரி முதலியவற்றில் உதிரும் மூங்கில் முத்தை உகவோம்; அவன் நதியும், கடலும், குளங்களும், அவன் நாட்டில் மழை பெய்யும் மேகங்களும் தரும் முத்துக்களை விரும்போம். சக்கரத்தைத் தரிக்கும் விக்கிரமன் குழந்தையே! நீ முத்தம் தருக.
யானைத்தந்தம், கடல், மூங்கில், மழைநீர் ஆகிய முத்துப்பிறக்கும் இடங்கள் இப்பாடலில் கூறப்பட்டுள்ளன. 'கத்தும் தரங்கம்' (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்) என்ற பாடலை நோக்குக. (8)
-----------------------------------
53. ஒருபனைப ழுத்துதிரும் ஒழுகுகனி பொற்கனியில்
உலகிடர் கெடுத்தது அறிவோம்;
ஒருபனைகி ழித்துஅதனில் உவரிசிறு கப்பெருக
ஒருநதி வகுத்தது அறிவோம்;
முருகுகமழ் கச்சிபுக முழுவதும்வி ளக்கவிதி
முறைமையில் அழித்தது அறிவோம்;
முழுகுல நதிக்குஅரசர் முடிகொடு வகுத்தகரை
முகில்தொட அமைத்தது அறிவோம்:
இருபுறமும் ஒக்கநினது ஒருபுலிபொ றிக்கவட
இமகிரிதி ரித்தது அறிவோம்;
இகல்முகரி முக்கணிலும் ஒருகண்இழி யக்கிழியில்
எழுதுகண் அழித்தது அறிவோம்;
வருகலிவி லக்குவன இவைஇவை கொடுத்தகதை
வழிவழி பிடிப்பது அறிவோம்;
மரகதநி றத்துஅபய! மனுசரித! சக்ரதரன்
மதலை! இதழ் முத்தம் அருளே!
53. நின்முன்னோர் ஒப்பற்ற பனையிலிருந்து பழுத்து உதிரும் பொற்கனியால் உலகத்துயர் துடைத்தமை, குறுக்காக இருந்த பனைமரத்தை வெட்டிக் காவிரி பெருகிவர வழி வகுத்தமை (48), காஞ்சிநகர் முழுதும் அழித்தமை, காவிரிக்குப் பகையரசரைக் கொண்டு வானளாவிய கரை கட்டுவித்தமை, இமயத்து இருபுறமும் புலி பொறித்தமை, முகரி என்ற மன்னன் படத்தை எழுதி அதிலிருந்த மூன்றாம்கண்ணை 'இது மிகைக்கண்'ணென்று வேலால் எறிந்து உண்மையில் அவன் மூன்றாம் கண்ணை அழித்தமை, வறுமையைப் போக்கப் பலருக்கும் பலபல கொடுத்தமை ஆகியவற்றை அறிவோம்.
அத்தகைய எமக்கு நீ முத்தம் தருக.
முகரி பற்றிய செய்தி கலிங்கத்துப் பரணியிலும் உள்ளது. 'தொழுது மன்னரே' என்னும் தாழிசை நோக்குக. (9)
----------------------------------------
54. வெருவரும்மு கக்கடல்கள் வரவரஇ ருக்கஅயல்
விரைதரும லர்க்கை தருவோம்;
விடம்ஒழிய எப்பொழுதும் அமுதுகடை யக்கடைய
விரைவதுஒர் அளக்கர் தருவோம்;
உரும்என முழங்கஎழு முருகியம ழைக்குஅதிர்வு
சிறுபறையும் தக்க தருவோம்;
உருகவடி வித்திவிட வெளிறுஉரைநி றக்கடவுள்
உருகெழுக லப்பை தருவோம்;
அருநடம்ந டித்துநினது அறிதுயில்அ றத்திசையில்
அரவரசின் உச்சி தருவோம்;
அழகொடுதி ருக்கைவளை திகிரிகளின் ஒப்புடைய
அலர்கதிர் இரட்டை தருவோம்;
வரிசையின் அளித்தருள வளைகள் எறிகச்சியினில்
மறைநிதிவெ றுக்கை தருவோம்;
மரகதநி றத்து அபய! மனுசரித! சக்ரதரன்
மதலை! இதழ் முத்தம் அருளே!
54. அஞ்சத்தக்க கடல்கள் உன் கைகளுக்குள் இருக்குமாறு அடக்கித் தருவோம். விடம் நீங்கக் கடையக் கடைய அமுதமே நல்கும் பாற்கடலையும் தருவோம். மேகத்துக்குப் போட்டியாக இடிபோல ஒலிக்கும் சிறுபடை தருவோம். பகைப்புலத்தே கவடிகளை விதையாக விதைக்க, வெள்ளை நிறத்தவனான பலராமனுடைய ஆயுதமான அஞ்சத்தக்க கலப்பையைத் தருவோம். நீ அறிதுயில் நீங்கி அழகிய நடனமாட ஆதிசேடனுடைய தலையாகிய அரங்கினைத் தருவோம். உன் கைகளிலுள்ள சங்குசக்கரங்களுக்கு இணையான சந்திரசூரியர்களைத் தருவோம். வருவோருக்கு வழங்கக் காஞ்சிநகரில் பொதிந்து வைத்திருக்கும் செல்வத்தைத் தருவோம். சக்ரதரன் மதலையே! முத்தம் தருக.
வெருவரு - அஞ்சத்தக்க; அளக்கர் - கடல்; முருகிய - முதிர்ந்த; மழை - மேகம்; தக்க - தகுதியுடையன; கவடி - சோழி; வெளிறு உரை நிறக்கடவுள் - பலராமன்; உரு - அச்சம்; அரவரசு - ஆதிசேடன்; கதிர் இரட்டை - சந்திர சூரியர்; வளைகள் எறி - சங்குகள் மோதும்; மறை நிதி - புதையல். (10)
---------------------------------------
55. துளவுகம ழத்தழுவும் முறைபுகுது றைக்குமரி
குலசெழியர் தத்தை பெறுவாள்;
சுரருலகம் எட்டுமது தொழுகுலம்வி ளக்கவரு
துறைகெழுகி ழத்தி, பெறுவாள்;
இளநிலவுஎ றித்தனைய முகிழ்நகைஇ ழைத்தெரிவை
எழுபுவனம் மித்ரை பெறுவாள்;
இருள் அறவளைத்துஇலகு திகிரியில் இடத்தனுவில்
இனிதுஅ மரும்நித்தை பெறுவாள்;
அளவில்தலை பெற்றபி(ள்)ளைத் தமிழ்முளரி(இ) தழ்த்தசிவில்
அலகில்பரி சுத்தை பெறுவாள்;
அலைகடல்கு ளித்தபொழுது அழகியபு யத்தில்எழு
பரிமிதைவி தத்தை பெறுவாள்;
வளஅளவுஇ றப்பெரிய பரவைஅக லத்துமகிழ்
வளர்சகல முத்தை பெறுவாள்;
மரகதநி றத்தபய! மனுசரித! சக்ரதரன்
மதலை!இதழ் முத்தம் அருளே!
55. தத்தை - முன்பிறந்தாள்; கிழத்தி - உரியவள்; மித்ரை - தோழி; நித்தை - உமை (கொற்றவை); பரிசுத்தை - தூய வெண்ணிறத்தவளான கலைமகள்; பரிமிதை - அலங்காரம்; விதத்தை - (முகடிக்குப்) பின் பிறந்தவளான திருமகள்; சகலமுத்தை - சகலமித்யை - உலகத் தோற்றக் காரணமான பிரகிருதி சக்தி, நிலமகள். செழியரின் குமரித்துறையைத் தமக்கையும், தேவலோகத்தை ஒத்த சிறப்புடைய சோணாட்டை உன் தேவியும், எழுபுவனத்தையும் நிலாவை ஒத்த பற்களை உடைய தோழியும், சக்கரம் வில் ஆகிய இடத்தைக் கொற்றவையும், உன் பிள்ளைத்தமிழை வெண்டாமரை வாழ் கலைமக ளும், கடலில் குளித்தபொழுது உன் புயத்தில் எழும் அழகைத் திருமகளும், உன் பரந்த மார்பில் மகிழ்வதை நிலமகளும் முறையே பெறுவர் என்பது. மரகத நிறத்தன் விக்கிரமன் என்பதும், பவளநிறத்தன் குலோத்துங்கன் (24) என்பதும் அறிக. (11)
-------------------------------------
6. வாரானைப்பருவம்.
56. முறுகிய கலியும் முரணிய அரசும்
முகமலர் கருக வருகவே!
முளரியின் மகளும் முழுநில மகளும்
முறைமுறை பெருக வருகவே!
குறுகிய பகைஞர் குருதியை நினது
கொடுவரி பருக வருகவே!
குடையுடன் இகலும் தளிர்மதி பழைய
குரைகடல் செருக வருகவே!
இறுகிய மகரம் இடைஇடை துணிய,
எழுபெரு வயிறும் எயிறுமே
எரிசெறி புகழ, விடுசுடி கைமினில்
எழிலியும் இரிய, இரியல்போய்
மறுகிய வருணன் வழிபட, முதுகு
வளைசிலை அபயன்! வருகவே!
மனுகுல திலகன் ரவிகுல திலகன்
மகன்மகன்! வருக வருகவே!
வாரானைப் பருவம்
தளர்நடையிட்டு வரும் குழந்தையைத் தம்மை நோக்கி வருமாறு தாயர் அழைப்பதாகக் கூறுவது இப்பருவச் செய்தி. வாரானை - வருகை; ஆனை - தொழிற்பெயர் விகுதி.
56. வறுமையும் பகையரசும் முகம் கருகவும், திருமகளும் நிலமகளும் மகிழவும், அணுகிய பகைவர் குருதியை உன் புலி பருகவும், உன் குடை வனப்பை ஒத்திருக்கும் மதி அவ்வனப்பிற்குத் தோற்றுக் கடலில் மறையவும், இராமாவதார காலத்தில் கடலில் மீன்கள் துண்டங்களாக, கடல் வயிறு தீயினால் கொதிக்க, நீர் முகப்பதற்குக் கடலுக்கு வந்த மேகங்கள் அஞ்சி ஓட, வருந்திய வருணன் வழிபடுமாறு வில் வளைத்த பெருமானே! வருக. முறுகிய - கொடிய; முளரி - தாமரை; கொடுவரி - புலி; இகலுதல் - ஒத்திருத்தல்; இரிய - அஞ்சிஓட; மறுகிய - மனம்வருந்திய; ரவிகுல திலகன் - முதல் குலோத்துங்கன். (1)
---------------------------
57. இரைகவர் மகரம் மதிநிழல் கதுவ
எறிகடல் கதுவு துவரைவேள்!
இலைமுனி உமிழ்வ புரைபுரை மறையில்
இடுதுடர் பறியும் எழிலியோன்!
உரைவளர் நிலவும் உபநிடம் அருளும்
உலகறி பிறவி யுடைய சேய்!
உடைய அவனியில் உடுபதி மரபில்
உறுமவன் மருகன்! வருகவே!
பரவர மகளிர் எழுபுட வியினும்
வரும் ஒரு பவனி அயர,ஈது
அகம்மகிழ் பொழுது புனல்அர மகளிர்
எழுகடல் களினும் இரிய,ஏழ்
வரைஅர மகளிர் மனைதொறும் மறுகி
மனம்முழுது உருக, வருகவே!
மனுகுல திலகன் ரவிகுல திலகன்
மகன் மகன்! வருக வருகவே!
57. மகர மீன்கள் சந்திரன் நிழலை உணவென்று கவருமாறு கடலிடையே அமைக்கப்பட்ட துவாரகைத் தலைவனே! பகைவருடைய மலைகளை அழிக்கும் அம்புமாரியால் கார்மேகம் போன்றவனே! உபநிடதம் கூறுமாறு பிறவியையுடைய தலைவனே! சந்திரகுல மன்னனாகிய பாண்டியன் மருகனே! உன்னை வணங்கும் மேம்பட்ட உலக மகளிர் ஏழுலகிலும் பவனி வந்து மகிழ, அது பொறாது நீரிலுள்ள அரமகளிர் கடல்களில் மறைய, மலைகளிலுள்ள வான் அரமகளிர் தத்தம் இருப்பிடங்களில் வருந்தி மனம் உருக, வருவாயாக.
துவாரகை கடலின் நடுவே கண்ணனால் புதிதாக அமைக்கப்பட்ட ஊர். கதுவுதல் - கைப்பற்றுதல்; உடுபதி - சந்திரன். (2)
பரவுவர மகளிர் - பரவர மகளிர்; தொகுத்தல் விகாரம். உன்னை வழிபடும் மேம்பட்ட மகளிர் என்றவாறு.
-----------------------------------
58. உயிர் இல்கரு நாடர் உடல்கள் நடம்ஆட,
உரகர்பகு வாயின் உரிமையோடு
உதியர்குதி பாய, உதகைஎழ வேவ
உவரிதிரை தீய, உட லினோர்
செயலில்குண வாயில் உடைய, இழிவால
அடையமலை நாடு வகையிலே
சிதைய,முனிவு ஆறும் இரவிதன தாதன்
மருக!செக தீரன்! வருகவே!
அயரின்மணி வீதி அசுரர்புரம் மேரு
அனையதொரு தூணின் இடைஎழா,
அவனிமுத லாய உலகுபதி னாலும்
அரசுதனி ஆளும் அவுணர்கோன்
வயிரவரை ஆகம் நடுவுபிள வாக
வகிரும்உகி ராளி! வருகவே!
மலையமலை வாணன், இமயமலை ஆளி!
வளவன்நகர் ஈசன்! வருகவே!
58. கருநாடர் உடல் துண்டமாகி அசைய, சேரர் உரிமைமகளிர் பாம்புகளின் வாயில் புக, உதகை வேவ, கடல் தீய, குணவாயில் சிதைய மலைநாட்டை அழித்துக் கோபம் நீங்கிய சூரியகுல மன்னன் பரம்பரையினனே! அசுரர் கோநகரில் தூணிடைத் தோன்றி இரணியன் மார்பை உகிரால் பிளந்தவனே! மலையமலைத் தலைவ! இமயமலைத் தலைவ! சோழனுடைய கோநகருக்குத் தலைவ! வருக.
பகுவாய் - பிளந்த வாய்; உரிமை - மனைவி; உடலினோர் - பகைவர்; தாதன் - பாட்டன்; மருகன் - வழித் தோன்றல்; உகிர் ஆளி - நகங்களை உடைய சிங்கம்; ஆளி - ஆள்பவன். (3)
-------------------------------
59. தகரமணம் நாறு தொடையல்வட நாடர்
பொருது,குட கூடல் அமரிலே
தரணிதர, வேறும் உடையகவி ராசர்
பரணிதர, மீது தனிமைகூர்
சிகரவட மேரு கிரியைமதி யோடும்
நளினபதி யோடும் இகலிஓர்
திகிரிவர, ஏவு குரிசில்கரி காலன்
மருக!செக தீசன்! வருகவே!
பகரஉயர் சூத பனசடல வேரி
வனசநற வோடு பருகவே,
பகடுபடு வான முகடுதொட வாவு
பரியபெரு வாளை, வயல்புகா,
மகரலய வேறு பலவும்மிக மூரி
வலியதிரு நாடன்! வருகவே!
மலையமலை வாணன்! இமயமலை ஆளி!
வளவன் நகர் ஈசன்! வருகவே!
59. தகரம் - மயிர்ச்சாந்து, வாசனைப் பண்டம்; தொடையல் - மலை; நளினபதி - சூரியன்; சூதம் - மாமரம்; பனசம் - ஈரப்பலா; வனசம் - தாமரை; பகடு - பெருமை; மகரம் - சுறாமீன்; வய ஏறு - வலிய ஆண்; மூரி - எருது; வடநாடர் தரணி தர, கவிராசர் பரணி பாட, சூரிய சந்திரர் சுற்றும் மேருமலையைத் தன் ஆணைச் சக்கரமும் சுற்றி வர ஏவிய குரிசில் கரிகாலன். மா, பலா இவற்றின் சாற்றைத் தாமரையின் தேனோடு பருகிய வாளை, வானளாவக் குதித்து வயலில் புக, சுறாமீன் பலவும் அவற்றோடு மிக, வலிய காளைகளையுடைய நாடனே! வருக. (4)
------------------------------
60. கடலுடைய பூமி முழுதும்ஒரு நேமி
கறுவுபகை தீர நிறுவியே,
ககனநெறி ஊடு கவரிஇரு பாலும்
அசைவசைய, ஓரு கவிகையோடு,
அடலுடைய தானை அமரர்புடை சூழ,
அரமகளிர் பாட, அவுணர்மேல்
அடர்விழிஅ நேகம் உடையவிடை ஊரும்
அரசன்வழி வீரன்! வருகவே!
படலுடைய வாயில் பயில்மதகு காவல்
அழகுகுலை வாணர் மறைபோரு
பதபதென மேதி படுகர்விட வாவி
படியில்வெடி போய பருவரால்
மடலுடைய பூக வனமிடறு நூறி
வரஉகளும் நாடன்! வருகவே!
மலையமலை வாணன்! இமயமலை ஆளி!
வளவன்நகர் ஈசன்! வருகவே!
60. நேமி - ஆணைச்சக்கரம்; ககனம் - ஆகாயம்; அடர் விழி அநேகம் உடைய விடை - ஆயிரங் கண்ணனாகிய இந்திரன் ககுந்தன் என்ற அரசனுக்கு வாகனமாகிய காளை; பூகம் - பாக்கு; மிடறு – கழுத்து; மேற்பகுதி.
பகை தீர நில உலகைத் தன் ஆணைக்கு உட்படுத்தி, வான வழியே சென்று, அரமகளிர் பாட அமரர் குடை கவித்துக் கவரி வீச இந்திரனாகிய காளை மீது அமர்ந்து, அவுணரோடு போரிட்டு வென்ற ககுத்தன் மரபில் வந்தவன். மதகுகளின் காவலையும் கடந்து எருமைகள் குளங்களில் பாய, அந்த அதிர்ச்சியால் வாளைகள் பாக்குமரங்களின் கழுத்து ஒடியத் தாவிக் குதிக்கும் நாடன். (5)
-----------------------------------
61. விடுவடுவு மீன விசயமுடி சூடி
அரசுதனி ஆளும் அருமையோர்
விளைவொழிய, வானம் மழைபொழிய, வேத
விதிவளரும் மாதர் விலையில்பூண்
அடுநடுவு கூரும் இடர் ஒழிய, ஞாலம்
அடையஇடர் தீர அருளினான்,
அபயன்!மது ரேசன்! உபயகுல தீபன்!
அகிலகலி கோபன்! வருகவே!
நடுநடுவு நேயர் மகளிரொடு ஞாள
நளினவள வாவி நதிகளால்,
நலிவுபடு வாளை முதுபகடு ராகு
வருவதென வாவு நதியதுஓர்
மடுநடுஉ லாவ, அடுநதுஇது போது
மதிவெருவு நாடன்! வருகவே!
மலையமலை வாணன்! இமயமலை ஆளி!
வளவன்நகர் ஈசன்! வருகவே!
61. பண்டு அரசாண்ட பாண்டியர் செயல் ஒழிய அவர்தம் குற்றமற்ற மீன் பொறியினையுடைய முடி சூடி, பருவமழை பொழிய, வேதநெறி தழைக்க, மகளிர் மங்கலியத்துக்கு இடர் நீங்க, உலகு துயர் நீங்க அருளினவன் அபயன். நேயமகளிரொடு கொடிகள் படர்ந்த தாமரைக் குளங்களிலும் நதிகளிலும் முழுகுவதால் சலனமுற்ற வாளைகள், இராகு என்ற கோள் மேல் நோக்கிச் செல்வதுபோல மேல் நோக்கிப்பாய, தன்னை இராகு வருத்த வருவதாகக் கருதிச் சந்திரன் அஞ்சும் நாடன்.
விடு வடுவு - குறை நீங்கிய; அருமையோர் - பாண்டியர்; விலையில் பூண் - திருமங்கலியம்; ஞாளம் - படர் கொடி. தண்டு; அடுநது இதுபோது - இப்பொழுது வருத்துவது. (6)
----------------------------------
62. திருடுபொருள் மூகர், பழையமொழி யாளர்,
வெளியர்இள நீரர், இளமையே
திகழுமொழி யாதர் இவர்கள்ஒரு நால்வர்
சிறிதும்மதி யாது, பரர்களே
நெருடுவன தீர நிகரில்கவி ராசன்
நிலவுகவி மாலை குலவுதோள்
நிருபன்மகன்! மோகன்! நடன்!நடவி நோதன்!
நிருபகுல தீபன்! வருகவே!
முருடுபடு மூரி அகிலின்முகில் ஏறி
முரலும்முது நேரி முதுகின்மேல்
முறுகுவன சோதி குறுகுவன கூசி
முருகுகமழ் சாரல் அருகுபோய்,
வருடைகுதி பாய நடவுநதி தோறும்
மதிதிடறும் நாடன்! வருகவே!
மலையமலை வாணன்! இமயமலை ஆளி!
வளவன் நகர் ஈசன்! வருகவே!
62. பொருள் திருடும் வறியவர், பழம்பெருமையே பேசுவோர், அறிவிலிகள், அறிவுக்குருடர் இவர்களை விடுத்துச் சான்றோரையே பாடும் கவியரசர் தம் பாமாலைகளைச் சூடிய விக்கிரமன் மகன்! வருக. காய்ந்து வளைந்த அகில்மரத்தின் உச்சியில் ஏறி முகில்கள் முழங்கும் நேரிமலையின் மணம் கமழும் சாரலில் வருடைமான்கள் குதிக்கும் நதிகள், அறிவைத் திடுக்கிடச்செய்யும் நாடன்! வருக. மூகர் - வறியவர்; வெளியர் - நுட்பமான அறிவு அற்றவர்; ஆதர் - குருடர்; முருடு - விறகு; முருகு - நறுமணம்; வருடை - மான் விசேடம்; மதி - அறிவு; திடறுதல் – திடுக்கிடல். (7)
---------------------------
63. குறுகுகழல் வீரர் பொருதுபடும் ஈழம்
உடைய,எழு நூறும் அடைய,மீ
குடவுதிரை நீரின் முதியகட லூடு
புதியகடல் காணும் இரவிசூடு
அறுகுசெறி கோடி அரசர்முடி தோறும்
அணியும்அபி டேகம் அணியதாள்
அபயன்!மது ரேசன்! உபயகுல தீபன்!
அனுபமன்!உ லோகன்! வருகவே!
முறுகுபுனை ஏய களரிவிரி காளம்
முடியும்நிலை பேறு வழுதிபோய்
முதியவரை ஏறி உரிமையுடன், வான
முகடுதொடு கோயில் முழுதுமே,
மறுகுபல காண, மதுரைஎறி சோழன்
மதலை!கலி கோபன்! வருகவே!
மலையமலை வாணன்! இமயமலை ஆளி!
வளவன்நகர் ஈசன்! வருகவே!
63. குடவு - வளைந்த; அபிடேகம் - முடி; அணிய - அணிகலனாகக் கொண்ட; முறுகு - முதிர்ச்சி; காளம் - எட்டிமரம்; மறுகுதல் - வருந்துதல்.
பழைய கடலூடு புதிய கடல் செல்வது போலச் சேனைக்கடலைச் செலுத்தி ஈழநாட்டை வென்று, அரசர் தம் முடிகள் தன் அடிக்கு அணிகளாகச் செய்த அபயன்! வருக. முதிர்ந்த எட்டிமரக் காடுகளை உடைய பழைய மலை மீது தன் மனைவியுடன் முடியும் நிலையை அடைந்த பாண்டியன் ஏற, அவனது மதுரை மாநகர அரண்மனையைப் பலவகைத் துயரங்களையும் ஆண்டுள்ளார் எய்துமாறு அழித்த விக்கிரமன் மகன்! வருக. (8)
---------------------------------
64. ஏறும்ஒரு பன்றியை நகங்கொடு துடக்கியது;
இரண்டடி இரண்டுஅ டியிடா
ஏழைஎதி ரிட்டகயன் மீனையும் இடங்கரையும்
அள்ளிய; எயிற்ற பகுவாய்
ஊறுபட நொந்துபிளி றிக்களிறு கவ்வியும்,
முறுக்கியும் முறுக்கியும் நிலத்து
ஊழிபல வந்துபகை மேழியையும் வீணையையும்
முற்றும்இடை சுற்றும் ஒருவால்;
கீறும்உரு முக்குரல் ஒடுங்க உலகங்களும்
நடுங்கவும் இருந்த குரலால்;
சென்றுவட மேருகிரி யிற்சிகர வுச்சியில்
இருக்கும்இது; என்று திசையா
மாறுபடு வெங்கலி புலிக்கு வெருவப்புவி
புரக்கும் உரவோன்! வருகவே!
வஞ்சியும் உறந்தையும் மரந்தையும் மகோதையும்
அளிக்கும் அபயன்! வருகவே!
64. இப்பாடலில் இவனுக்கு முத்திரையா யமைந்த புலியின் செயல் கற்பனையாகக் கூறப்பட்டுள்ளது. பன்றியை நகத்தால் அழித்து, இரண்டு முறை தாவிய அளவில் கயல் மீனையும் முதலையையும் துகைத்து, வாயினால் யானையைக் கௌவித் துன்புறுத்தி, கலப்பை, வீணை என்பனவற்றை வாலினால் சுற்றி, தன் குரலால் இடியோசையை ஒடுக்கி, மேருமலை உச்சியில் வீற்றிருந்த இவனுடைய புலிப்பொறிக்கு அஞ்சி வறுமை தடுமாற, இவன் புவிபுரப்பவன். பன்றி, மீன், முதலை, யானை, கலப்பை, வீணை, இடி என்பன பிற நாட்டவர் கொடிகள் பொறிகள் இவற்றிலுள்ள சின்னங்கள். (9).
----------------------------------
65. பட்டுத்தரணி பரணிக் கவிதர, ஒருவிசை
பகிரதி நதியள வும்பல திசைவிச யத்தறி
நட்டுத் தமதுஇம கிரிகண் டருளிய நரபதி
நகரவாழ் விக்ரம சோழன் திருமகன்! இனிதளி
இட்டுப் பொழிமழை இடப்பெயல் தொகுபுடை அதிர்குரல்
எதிரிட்டு அரசர் இளவெதிர் அதிர்தலும், இறுவரை
மட்டுத் தடம்இடி வடவெற்பு உடையவன்! வருகவே!
வளவன்! பஞ்சவன்! உதியன்! செம்பியன்!
வயவன்! குணபரன்! வருகவே!
65 புலவர் பரணிபாட, கங்கைவரையிலுள்ள பகைவர் நாடுகள் அழிய, பல திசைகளிலும் வெற்றித்தூண் நாட்டி இமயமலையை அடிப்படுத்தியவன் விக்கிரமசோழன். பருவமழை தவறாது பெய்ய, அவ்வெள்ளம் ஓடிவரும் ஒலியை இவனது முரசொலியாகக் கருதிப் பகைமன்னர்கள் உயிர்பிழைக்க மலை நோக்கி ஓடுகின்றனர். செம்பியன் - சோழன். (10)
-------------------------------
66. உயிர்ஆ தியும்எமது உடல்ஆ தியும்உன் னினன்என,
ஒளிபெரு குங்கோ வியர்குடை உடை நீர் உடையினில்
தயிர்ஆ சையின்எதிர் தழுவும் சிறுமுகில்! வருகவே!
தண்டா ரகுகுல தனிநா யகன்மகன்! வருகவே!
அயிரா பதகிரி எதிரா வரவிட்ட தயிலனும்
அடையத் தன்படை வயிரத் தோள் துணை கவர்ந்துஎழ,
வயிரா கரகிரி முரிவித் தமகன்! வருகவே!
வளவன்! பஞ்சவன்! உதியன்! செம்பியன்!
வயவன்! குணபரன்! வருகவே!
66. தமக்கு உயிராகவும் உடலாகவும் கண்ணன் இருக்கிறான் என்று மகிழும் கோவியர் உடையைத் தயிரைக் கவர்வது போலக் கவர்ந்த முகிலே! வருக. தன் பட்டத்து யானையாகிய அயிராவதத்தை எதிர்த்து வந்த தயிலனுடைய படைவலியை அழித்து, வயிராகரத்தில் யானை ஈட்டங்களை அழித்த விக்கிரமன் மகனே! வருக.
பட்டத்துயானை அயிராவதத்தின் சிறப்பு மூவருலாவில் (விக். உலா) பரக்கக் கூறப்பட்டுள்ளது. (11)
-----------------------------------
7. அம்புலிப்பருவம்
67. கோழிகா வலன்இவன் செங்கண்மால் காண்;மகோ
ததிகள்ஏ ழும்கு ழம்பிக்
குழவியாய் நின்னினும் குளிரும்அம் புலிகளே
கொண்டுகொண்டு உறவு கொள்ளும்
பாழிகாண்; வந்தஇப் பெரியவற்கு இனியையாய்
நிற்பதே; நின்கு லத்துப்
பஞ்சவன குடையொடும் படையொடும் பொருதுஅகப்
பட்டநாள் அமலன் அறிவன்;
ஊழிகா லங்குலாய் நிலவுஎறிக் கின்றதால்;
வெயில்எறிக் கின்ற காலம்
உனதுசந் திரோதயத் தினகரோ தயமும் உண்டு
என்னில்,அங்கு ஒன்று சங்குஒன்று
ஆழிகாணிய; கிடந்து அலமராது இவனுடன்
அம்புலி! ஆட வாவே!
அனுபமன், சயதரன், மனுகுலா திபனுடன்
அம்புலி! ஆட வாவே!
அம்புலிப் பருவம்
67. சந்திரனைக் குழந்தையோடு விளையாடவா என்று அழைப்பது இப்பருவச்செய்தி.
உறையூர் மன்னனாகிய இவன் திருமால்; பெரியகடல்கள் ஏழும் குழம்ப, உன்னினும் குழந்தையாகத்தோன்றும் அம்புலிகள் இவனோடு உறவு கொள்ளும் வலிமை உடையவன். இவனுக்கு இனிமையாக இரு. உன் குலத்துப் பாண்டியன் இவனோடு படையும் குடையும் கொண்டு பொருது சிறைப்பட்டான், இவன் கைச்சங்கு சந்திரன் ஒளியையும், சக்கரம் சூரியன் ஒளியையும் பல்லூழிக் காலமாக வெளிப்படுத்துகின்றன. மனம் தடுமாறாது இவனோடு விளையாட வா. அனுபமன் - ஒப்பற்றவன்.
இப்பாடலில் சந்திரனினும் சோழன் மிக்கான் என்ற செய்தி கூறப்பட்டிருப்பது நால்வகை உபாயங்களுள் பேதமாகும். (1)
-----------------------------------
68. சூழியா னைப்புறத்து உதையணன், சோழதுங்
கன்திருத் தம்பி, தூய
துணைவனா கியசெயங் கொண்டசோ ழற்கு இளங்
கோமகன், தும்ப ளத்துஎம்
மேழியால் இரவுபோல் இராசரா சன்குலக்
களிறுகாண்; இவன்முன் இந்த
வெற்பில்வா சவன்நக ரப்பெரும்புயல் விளக்
கும்பிரான், வேலை காணீர்!
தாழியாய் அமுதிடத் தங்கிளை செய்ததற்கு,
உங்களைப் புகவி ழுங்கித்
தழல்விழித்து எதிர்வரும் இராகுகே துக்கது
விட,உடல் இடமது அற,வேந்து
ஆழியால் அறஎறிந் தருளிலோன் தெரியுமோ?
அம்புலி! ஆட வாவே!
அனுபமன், சயதரன், மனுகுலா திபனுடன்
அம்புலி ஆட வாவே!
68 சூழி - யானையின் முகபடாம்; வாசவன் - இந்திரன். இவன் நாட்டில் இந்திரனருளால் பருவமழை தவறாது பெய்கிறது.
அங்கு இளை செய்தல் - அமுதம் பகிர்ந்தளித்த இடத்துக் காவல் செய்தல். சூரிய சந்திரரை விழுங்கும் இராகுகேதுக்களை வெருட்டி இவர்களைத் திருமால் காப்பான் என்பது. 'கோள்வாய் மதியம் நெடியான் விடுத்தாங்கு' (சீவக. 456) என்றார் பிறரும்.
பாற்கடலினின்றும் அமுதம் தோன்றியபின், மோகினி அவதாரம் கொண்டு அசுரரை மயக்கி வஞ்சித்துவிட்டுத் திருமால் தேவர்களுக்கு அவ்வமுதத்தை அகப்பையால் கொடுத்துவருகையில், சிம்மிகையின் புதல்வனான சைம்மிகேயன் அசுர உருவத்தைக் கரந்து தேவர் உருக்கொண்டு அவ்வமுதத்தைப் பெற்றானாக, சூரிய சந்திரர் அவ்வசுரனைக் காட்டிக்கொடுத்தாராக, திருமால் அமிர்தம் பகிர்ந்து கொடுத்த அகப்பையினல் அவ்வசுரனைத் தாக்க, அவன் தலைவேறு உடல்வேறு பிளவுபட்டானாயினும் அமுதுண்டமையால் உயிர் நீங்காது நின்று இராகு கேதுக்கள் என்று இருவடிவாகிப் பெயர்பூண்டு, கோள் சொன்ன சூரியசந்திரர்களைச் சில காலங்களில் பற்றிக்கொள்ள, அவர்களைத் திருமால் பற்றுக்கோளினின்றும் விடுவிக்கின்றான் என்று புராணம் கூறும்.
சந்திரன் துயர் காத்தமை தானம். (2)
------------------------------------
69. மணிநிழல் குன்றம்யா வையும்அடிப் பொடிபடர்
வன்பிணக் குன்ற மாக,
வாரிஆறுகள் வறந்து ஏழ்கலிங்க மும்உடன்
சோரிஆறும்வ யங்க,
பணிநிழல் படஎழும் பருமனுக் காடுபோய்
அறுகுறைக் காடு துன்ற,
பாடிவீ டுகள்பெறும் பந்தர்போல் எங்கணும்
கழுகுநற் பந்தர் பம்ப,
தணிநிழல் குடையொடும் படையொடும் போய்இமக்
குலகிரிப் புக்குஒ ளிக்கும்
தானைமன் னவர்மறிந் தனமெனப் படிதடிக்
கொடிகள் தோ றுந்த னதுபேர்
அணிநிழல் போர்அவா செற்றகோன் இவனுடன்,
அம்புலி! ஆட வாவே!
அனுபமன், சயதரன், மனுகுலா திபனுடன்
அம்புலி!ஆட வாவே!
69. குன்றுகள் பிணக்குன்றாக, ஆறுகள் குருதி ஆறுகளாக, பெருங்காடுகள் குறைக்காடுகளாய் அழிய, பாடி வீடுகளின் பந்தர்கள் கழுகுகள் வட்டமிடும் பந்ததராகத் தோற்றோடிய பகைமன்னர் மீண்டு வந்து அடிகளைப் பணிந்த அளவில் போராற்றும் விருப்பினை நீக்கினவன் இவன்.
தன்னை வழிபடுவார்க்கு அருள் செய்யும் தானம் இப்பாடலில் காண்க. வாரி - வெள்ளம்; வறந்து - நீர் அற்று; பருமனுக்காடு - பருத்து நிரம்பிய காடு; மறிந்தனம் - மீண் டனம்; படி தடிக் கொடி - தாழ்த்தி வணங்கும் கொடி. (3)
------------------------------------
70. கரவுகோள் இன்றிநின்று அமுதிடும் போதகத்து
உலகம்மெய்த் தண்த மிழ்க்கும்
காலகலை ............... ஈரெட்டும் நீள,நின்
கழலினில் கருணை வைத்து,
பரவுகோள் அரிவைநும் பாயலே மீதெழுந்து
ஒழிகஎனச் சிகர கோடிப்
படிப்பத்தி மத்துத்தி வில்மத்தி மத்துஉதிர்த்
தவன்இவன், தாயும் அப்பண்டு
இரவுசேர் சோதியின் மீதெழும் எழுச்சியில்
அடிக்கடி யேஎ திர்த்தே,
எயிறுபுக்கு உருவவாய் அகவையின் கடிதினில்
புகமடுத்து, எழவி ழுங்கும்
அரவுகோள் வீடுகொண் டவன்இவன்; இவனுடன்
அம்புலி! ஆட வாவே!
அனுபமன், சயதரன், மனுகுலா திபனுடன்
அம்புலி! ஆட வாவே!
70. கரவுகோள் - மறைத்து வைத்தல்; காய - வெளிப்படுத்த; பத்திமத்து உத்தி - அன்புடைய இணக்கம்; மத்திமம் - நடு.
நின் அமுதகலை ஈரெட்டையும் தமிழுக்கும் வழங்கியதால் உன்னிடம் கருணை வைத்து, உன்னைக் கவர வரும் அரவு கோள் விடுத்தவன் இவன்.
இதுவும் தானம். (4)
-----------------------------------
71. பாயிரம் புனைதமிழ்த் தென்திசைப் புலவரும்
வடகலைப் புலமை யோரும்
பண்படா, உடைசெவிக் கண்படா உறுகளத்து
அரசர்தம் அடிகள் தோறும்
போய்இருந்து ஒழிவரும் படர்ஒழிந்து உவள்வரும்
கவிகையான் ராச ராசன்,
பொருதகா லிங்கரைப் போர் தொலைத்து அவர்கள்பின்
போயதன் சேனை யாலே,
வேய்இரங்கு அடவிபோய் வெளிபடப் பகலவன்
வெஞ்சிலா வட்டம் எல்லாம்
வெயில்படப் படநெருப் புப்பொருப் புச்சுடர்
விடுநெடுஞ் சிகைக ளான
ஆயிரம் பொடிபடச் செற்றகோன், இவனுடன்,
அம்புலி! ஆடவாவே!
அனுபமன், சயதரன், மனுகுலா திபனுடன்
அம்புலி! ஆட வாவே!
71. புலவர் பாடும் வெற்றியும் செங்கோலுமுடைய இராசராசன். காலிங்கரை வென்று தன் சேனையால் அவரது நாட்டைச் செற்றவனாகிய இவனுடன் ஆடவா.
இது வாராவிடின் ஒறுப்பன் என்றலின், தண்டம். (5)
-------------------------------
72. பல்லவேந் .... . தரும்பரிய ஆயிரம்
பஃறலைப் பகைஅ ராவும்,
பண்டுதான் பாரமே கொண்டுபோய் எறிவதுஓர்
பரவையும் தவிர, நின்னைப்
புல்லநே மிப்பிரான் வந்தழைத் தனன்;இனிப்
புகவிழுங் கியும்எ டுத்தும்
பொருபடைக்கு அஞ்சல்நீ; என்னபயம்? என்னவும்,
பின்னும்,அப் புரவ லன்தான்
நல்லனோ? கடல்கடைந்து அமுதுகொண் டருளும்நாள்,
நஞ்சுகால் கயிறு, சூழ்பொன்
நாகமத் துக்கு,நே ரா,நெடுந் தூணினுக்கு
உன்னையே நாடி நட்டான்
அல்லனோ? இன்றுமே இரியல்போ கப்பெறாய்;
அம்புலி! ஆட வாவே!
அனுபமன், சயதரன், மனுகுலா திபனுடன்
அம்புலி! ஆட வாவே!
72. நின்னைக் கவரும் பாம்பும், நீ ஒய்வு கொள்ளும் கடலும் தவிருமாறு நின்னைத் தழுவுதற்கு இந்நேமிப்பிரான் அழைக்கிறான். அவன் நேமியால் உனக்குத் துயர் நேராது. அவனே அமுது கடைந்த காலத்தே வாசுகி நாண்கொண்டு மந்தரமலையால் கடையும்போது, மத்தினை இணைக்கும் தூணுக்கு உன்னை நட்டுப் பெருமை செய்தவன். இன்னும் அவனை விடுத்து நீங்காதிருப்பின் சிறப்பருளுவான். நல்லனோ - நல்லன் அல்லனோ.
இது தானம். (6)
-------------------------------------
73. ஏனைநீ வெண்டலைக் கொண்டல்வண் ணவன்,இவன்
ஏழ்பெருங் கொண்டல் வண்ணன்;
இரவிலே தனிவிளங் குவதுநீ, இப்பிரான்
இரவும்எல் லியும்வி ளங்கும்;
பானுமீது எழும்உனக்கு ஒன்றுமண் டலம்,இவற்கு
ஏழுமண் டலம்;உ தித்துப்
படிவதுஓர் பரவையின், இவன்உகந்து ஏழ்பெரும்
பரவையும் படிய வந்தான்;
மேல்நிலா வியஇடத்து ஒருபொழிற்கு இறைவன்நீ,
ஏழ்பொழிற்கு இறைவன் இக்கோ;
மேருவின் திகிரிசூழ் வருவை நீ, இவன்திகிரி
வருவதுஏழ் வெற்பும் அன்றே;
‘ஆனபோது இவனைநாம் அடைவதே தருமம்'என்று
அம்புலி! ஆட வாவே!
அனுபமன், சயதரன், மனுகுலா திபனுடன்
அம்புலி! ஆட வாவே!
73. நீ வெண்கொண்டல் வண்ணன்; இவன் ஏழ்கொண்டல் வண்ணன். நீ இரவில் மாத்திரம் ஒளி விடுவாய்; இவன் இருநேரமும் விளங்குவான். உனக்குச் சஞ்சரிப்பதற்கு ஒரு மண்டலமே உண்டு; இவனுக்கு ஏழு மண்டலம் உண்டு. நீ தோன்றிப் பின் குளிப்பது ஒரே கடலில்; இவன் ஏழ் கடலிலும் குளிப்பவன். நீ ஒரே உலகிற்குத் தலைவன்; இவன் ஏழு உலகங்களுக்கும் தலைவன். நீ மேருமலையையே சுற்றி வருவாய்; இவன் திகிரி ஏழுமலைகளையும் சுற்றும். ஆதலின் நின்னின் மிக்கானாகிய இவனை அடைவதே ஏற்றது.
இது பேதம். (7)
----------------------------------
74. மேல்இவன் திகிரியும் தொட்டதே தொட்டதுஇவன்
வெய்யதோள் விருதம் அன்றோ?
வெளியயாம் உருவர்என்று ஒழியவே மொழியில்இவன்
முன்னவன் வெளியன் அன்றோ?
பாலில்வெந்து எழும்முடைக்கு உடைதியேல் முன்புஇவன்
பள்ளிகொள்வு அதனில் அன்றோ?
படர்மறுக் கவருதி நீசுடர் மறுப்பொதி(இ)வன்
பைந்துழாய் மார்பன் அன்றோ?
கோலிவந்து உதவும் எட் டெட்டுஇவன் கலைகள்உன்
கலைகள்ஈ ரெட்டில் ஒன்றைக்
கொளுவநீ வெருக்கொள்வது ஏன்?அதன் தேனினைக்
கொள்இன்பகம் கொள்வன் அல்லால்,
ஆலி(இ)வன் கொள்ளுமோ ? தலம்வரா, இவனுடன்
அம்புலி! ஆட வாவே!
அனுபமன், சயதரன், மனுகுலா திபனுடன்
அம்புலி! ஆட வாவே!
74. இவன் கையில் சக்கரம் வைத்திருக்கிறானே என்னின், அதனை இவன் தோள் சுமத்தல் விரதமாகும். நீ வெண்ணிறம் பற்றிப் பெருமிதமுற்றால், இவன் அண்ணன் பலராமனும் வெள்ளை நிறந்தனே. நீ இவனிடம் பால்நாற்றம் வீசுமென நினைக்கின், நீ பிறந்த பாற்கடலிலேயே இவன் பள்ளிகொள்கிறான். நீ கரிய மறுவினை வைத்துள்ளாய். இவன் மார்பில் ஒளி வீசும் ஸ்ரீவத்சம் என்ற மச்சம் உள்ளது. இவன் அறுபத்து நான்கு கலைகளையும் உடையவன். அத்தகையவன் உன் கலைகள் பதினாறனுள் ஒன்றைப் பற்றினால் அது பற்றி நீ அஞ்சுவது ஏன்? உன் கலையின் அமுதத்தைக்கொள்ளும் இன்பத்தைத் தவிர உன் குளிர்ச்சியை இவன் கவரான். ஆதலின் இவனுடன் ஆடவா.
வாரா என்பது விகாரமாய் நின்றது.
மதியினும் இவனை மேம்படுத்துவதால், இதுவும் பேதம். (8)
------------------------------------
75. செஞ்சொல்அம் புலி!இவன் புகழ்நிலா அகிலமும்
சென்றுநின் றது தெளிந்தும்,
திருவநா யகன்இவன் குடைநிலா உயிர்தொறும்
கருணைவீ சுவது கண்டும்
சஞ்சலம் பெருகநின் செறுநிலா விடுதியைச்
செறிநிலா வென்று விட்டான்,
தறுகணன்ஆ குவன்இவன்; பரவைஓர் ஏழையும்
தனிக்கொழுப் பித்தது இக்கோ;
மஞ்சுஅலம் பியசிலம்பு ஏழினும் சிலசிலா
தலம்உருக் குதி;இ வன்பூ
வலையம்ஏ ழினும்எழும் கமலரா சிகளையே
வந்துசீ றுதி;இ வற்றால்,
அஞ்சல்;உன் சிறுமையால் அவைபொறுத் தனன்இவன்
அம்புலி! ஆட வாவே!
அனுபமன், சயதரன், மனுகுலா திபனுடன்
அம்புலி! ஆட வாவே!
75. இவன் புகழ்நிலா உலகு முழுதும் வீசுகிறது; இவன் குடைநிலா உயிர்தொறும் கருணை பொழிகிறது; நின் ஒளியை இவன் தன் ஒளியால் வென்றவன்; ஏழு கடல்களையும் சிறக்கச்செய்த இவன் அஞ்சாநெஞ்சமுடையவன்; தன் மலைகளில் கற்களை உன் கிரணங்களால் உருக்கியும், தன் உலகில் தோன்றும் தாமரைகளை நீ கோபித்தும் செய்யும் செயல்களை இவன் பொறுத்து அழைக்கின்றான்.
வாரா விடின் ஒறுப்பன் என்றலின், தண்டம். (9)
-----------------------------------
76. எண்திசா முகம்அடங் கலும்இவன் கடதடத்து
எண்களிற்று ஆல யம்காண்;
எண்பிலங் களும்இவன் திறையிடா அரசருக்கு
இடுசிறைப் பேரி டம்காண்;
மண்டும்ஏழ் கடல்இவன் திருவொடும் படியொடும்
படியும்அஞ் சனம டுக்காண்;
மல்லல்ஏழ் பொழிலும்ஏழ் புவனியும் பவனிபோய்
மகிழும்நந் தனவ னம்காண்;
விண்டவேய் முத்துஅறா ஏழ்விலங் கலும்இவன்
வேழவா ரிப்பு லம்காண்;
மேருமால் வரைஇவன் கொடுவரிக்கு இட்டதுஓர்
வீரசிங் காத னம்காண்;
அண்டகோ ளகைஇவன் கவிகைகாண்; ஆதலால்,
அம்புலி! ஆட வாவே!
அனுபமன்! சயதரன்! மனுகுலா திபனுடன் அம்புலி! ஆட வாவே!
76. எட்டுத் திசை எல்லையும் இவனுடைய பட்டத்து யானையின் ஆலயம்; எட்டுக் குகைகளும் இவன் பகைமன்னர் சிறை வைக்கப்படும் இடம்; ஏழ்கடல்களும் இவன் திருமகளோடு நீர் விளையாடும் மடு; ஏழ்பொழிலும் ஏழ் உலகும் இவன் உலாப்போந்து மகிழும் நந்தனவனம்; மூங்கில் முத்துக்களை உடைய ஏழ்மலைகளும் இவன் யானைகள் தங்குமிடம்; மேருமால்வரை இவன் முத்திரையிலுள்ள புலிக்குச் சிங்காதனம்; அண்டத்து உச்சி இவனுடைய வெண்குடை.
மதியைவிடப் பன் மடங்கு சோழன் ஏற்றம் கூறலின், இது பேதம். (10)
----------------------------------
77. மடிமையால் வறிதுஇராது, அங்கவங் கம்கலிங்
கம்குலிங் கம்த்ரி கத்தம்
மாளுவம் சோணகம் பப்பளம் கொப்பளம்
மகதம்என்று இவையும், மறவம்
கடியுமோ னங்களாம் அரசுவேர் அறஎறிந்து,
அருமணம் சாவ கம்வங்
காளம் ஈழம்கடா ரம்தவாச் சீனம்என்று
யாவையும் கைப்படுத்தி,
குடிமையாள் அரசரே ஆகவிட்டு, அவர்சிகர
மகுடகோ டிகளில் வைக்கும்
கொடிகளே வடதிசைக் கங்கையைத் தென்திசைக்
கொண்டுஎழப் பண்டு கொண்டு,அங்கு
அடிமையா ளும்பிரான் மகன்மகன், இவனுடன்
அம்புலி! ஆட வாவே!
அனுபமன், சயதரன், மனுகுலா திபனுடன்
அம்புலி! ஆட வாவே!
77. சோம்பியிராது அங்கம் முதலிய நாட்டு அரசர்களை வேரோடு அழித்து, அருமணம் முதலிய நாடுகளைக் கைப்பற்றி, மீண்டும் அம்மன்னர்களையே அவ்வந்நாட்டு அரசராக்கி, அவர்களைக் கொண்டு கங்கைநீரைத் தமிழ் நாட்டிற்குக் கொணரச் செய்த அரசன் பரம்பரையினன் இவன்.
இவனும் நின்னை ஒறுத்துப் பணிகொள்வன் என்றலின் தண்டம். (11)
-------------------------------------
78. வீரியன், அனுபமன், வானவன், மீனவன்,
வினியதன், வில்வி னோதன்,
வீரகண் டீரவன், வீரநா ராயணன்,
விமலன்,ரா சாதி ராசன்,
சூரியன், வியாகரன், துங்கஅம லன்,வரன்,
துரகவித் தியாவி னோதன்,
சோழவம் சாதிபன், சாலஏ கோபமன்,
உத்துங்கன்,உத் துங்க துங்கன்,
நேரியன், பஞ்சவன், சேரலன், செம்பியன்,
நித்தியகீ தப்பிர மோகன்,
நிருபமன், சயதரன், மனுபரன், குணபரன்,
நித்யகல் யாண பூஷணன்,
ஆரியன், ராசரா சாரியன், இவனுடன்
அம்புலி! ஆட வாவே!
அனுபமன், சயதரன், மனுகுலா திபனுடன்
அம்புலி! ஆட வாவே!
78. வீரியன் - ஆற்றலுடையவன்; வினீதன் - சான்றோரிடம் பணிவுடையவன்; கண்டீரவன் - சிங்கம் போல்பவன்; வியாக்ரன் - புலிபோல்பவன்; துங்க - பரிசுத்தமான; துரகவித்யா - குதிரையேற்றம்; ஏகோபமன் - ஒப்பற்றவன்; உத்துங்கன் - உயர்ந்தவன்; உத்துங்கதுங்கன் - உயர்ந்த தூயவன்; நேரியன் - சோழன்; பஞ்சவன் - பாண்டியன்; பிரமோகன் - விருப்பமுடையவன்; கீதம் - இசைப்பாடல்; ஆரியன் - வணங்கத் தக்கவன்; கல்யாண பூஷணன் - மங்கலத்தை அணிபவன்.
உயர்ச்சி கூறலின் பேதம்.
இப்பாடலில் இம்மன்னன் பெயர்கள் பலவும் கூறப்பட்டிருத்தல் காண்க. (12)
------------------------------------------
8. சிறுபறைப் பருவம்.
79. அலைஉமிழ முழக்குமடு நடுநடு புக்குஅசுரர்
குலையமலை யப்பெயரும் இறைவ!கு மரித்துறைவ!
மலையமலை வெற்ப!தமிழ் மதுரைமது ரக்கலைவ!
சிலைய!மனு சக்ரதர! சிறுபறை எருக்குகவே. 1
சிறு பறையைக் கொட்டுமாறு குழந்தையை வேண்டுதல்.
79. முழக்கும்மடு - ஒலிக்கும் கடல். இவன் அசுரரை அழித்தமை குல முன்னோர் பற்றிய புராணச் செய்தி. மதுரம் - இனிமை; கலைவன் - கலைஞன்; சிலையன் - வில் ஏந்தியவன்; எருக்குதல் - தட்டி ஒலி எழுப்புதல். (1)
--------------------------------
80. நற்றவர் அறுகுறையால் நக்ரஅ ணைவிடுவாய்!
கற்றவர் குடிபுடைசூழ் கற்பக இளவனமே!
செற்றவர் குடிகெடவே செப்பிடு மழகளிறே!
கொற்றவன் மகன்மகனே! கொட்டுக சிறுபறையே.
80. தவத்தோர் குறையை அறுக்கப் படுக்கையை விட்டு இராமனாக வந்தவன். இவன் வெகுளிச்சொல் கேட்ட அளவில் பகைவர் குடி கெட்டது. நக்ரம் - முதலை. பள்ளிகொண்ட பாற்கடலும் கடலாதலின் கடலுக்கு உள்ள அடை புணர்க்கப்பட்டது. (2)
----------------------------------
81. நின்றவன், நிகர்வடகா லிங்கர் நெருக்கியபோர்
வென்றவன்; அரசர்பிரான், விக்ரம சோழ!வலம்
சென்றவன், இரவி,பசும் புரவிசி வந்துஎழுபோர்
கொன்றவன், மனுசரிதா ! கொட்டுக சிறுபறையே.
81. நின்றவன் - நிலைபெற்ற புகழுடையவன். இரவிகுலத்தவனை இரவி என்றழைத்துள்ளார். குதிரைப்படை கோபித்தெழும் போரில் பகைவரைக் கொன்றவன். (3)
---------------------------------
82. வலவரை வென்றுபொர, மனுமுத லாகவரு
நிலவரை ஏழ்உடைய, நீள்கடல் ஏழ்உடையாய்!
புலவரை ஏறவிடாப் புகர்முக மாபொழியும்
குலவரை ஏழ்உடையாய் கொட்டுக சிறுபறையே.
82. வலவர் - போரில் வல்ல வீரர்; புலவரை ஏறவிடா - குறுநிலமன்னர் தமதாகக் கொண்டு தங்கியிருத்தல் இயலாத. யானைகள் பலவாக இருக்கும் மலைகளைப் 'புகர் முகமாப் பொழியும் குலவரை ' என்றார். (4)
--------------------------------------
83. நாவல னே!கிடையா நவமணி மண்டபம்நின்
பாவல னேகவரப் பண்டுப ணித்தவனே!
ஓவல னேஎழுபேய் ஒருபுடை யாகக்கை
கோவல னே!அபயா ! கொட்டுக சிறுபறையே.
83. கிடையா - எளிதில் பெற இயலாத; முன்னோன் பாவலனுக்கு நவமணி மண்டபம் பரிசிலாக அளித்தமை 14ஆம் பாடலிலும் காண்க.
பால் கொடுக்க எழுந்த பேயாகிய பூதனை உயிர் நீங்கி ஒருபுடை கிடக்குமளவும் தன் செயல் நீங்காது பால் குடித்த கண்ணன் செயல் கூறப்பட்டது. (5)
-------------------------------
84. விடைப்பெரு மான்,முதிரா வெண்பிறை சூடியசெஞ்
சடைப்பெரு மான்,நதியைத் தந்தகு லத்தலைவா!
புடைப்பதி னால்உலகும் பொதுமைவி டப்பொதியும்
குடைப்பெருமான் மதலாய்!கொட்டுக சிறுபறையே
84. விடைப்பெருமான், சடைப்பெருமான் - சிவபெருமான்; தலைவன் - பகீரதன்; பொதுமை - பிறருக்கும் உரிமையாதல். (6)
------------------------------------------
85. பெருமகன் முதல்தலைவா! பிறைபெரிது உவக்கும்முதல்
மருமகன் மலைத்தலைவா ! மழைவழி வருத்தவரும்
உருமுகில் முழக்கமென ஒலிவிடு கடக்களிற்றுத்
திருமகன் அருட்சிறுவா! சிறுபறை முழக்குகவே.
85. பிறை உவக்கும் மருமகன் - பாண்டியன்; உரு - கருநிறம்; திருமகன் - விக்கிரமன். (7)
-----------------------------------
9. சிற்றில் பருவம்
86. சொல்லும்மன மும்செயலும் நல்லபெரு மாளே!
சூரியன் விளங்கவரு சோழகுல துங்கா!
வில்லும்இரு கெண்டையும் நடுங்க,நடு வேநின்
வெம்புலி இருந்ததுஒரு மேருவட வெற்பா!
வெல்லும்இர வும்பகலும் வால்மணி கொழித்துப்
பிலத்தினும் விசும்பினும் நிலத்தினும் எடுத்துச்
செல்லும்மிக வேகநதி கங்கைகொடு போதும்
செங்கைஅ பயா!எமது சிற்றில்சிதை யேலே.
சிற்றில் பருவம்
சிறுமியர் 'யாம் இழைக்கும் மணற்சிற்றில்லங்களைக் கால்களால் சிதைக்காதே' என்று குழந்தையிடம் வேண்டுதல்.
86. பிலம் - பாதாளம்; விசும்பு - தேவர் உலகம்; 'கங்கை கொடு போதும் செங்கை அபயன்' எனப் பகீரதன் செயல் இவன் மேல் ஏற்றப்பட்டது. (1)
---------------------------------------
87. மல்லையில் வழங்கும்இள ஏறுமுது கஞ்சன்
வஞ்சவய வேறுமடி யத்தழுவும் மல்லா!
முல்லையில் வெறுஞ்சில துழாய்கமழ் முகுந்தா!
முன்பு ஒரு வலம்புரி முழக்கு முகில்வண்ணா!
எல்லையில் அனந்தபல வேதசுர கீதத்து
இசைத்தபல தானவழி, இட்டும்எழ விட்டும்
தில்லையில் நடஞ்செய்கம லங்களை வளைக்கும்
சிந்தைஅப யா!எமது சிற்றில்சிதை யேலே.
87. மல்லை - வளமுடைய காலிபுரம்; முதுகஞ்சன் - வஞ்சனையால் முதிர்ந்த கம்சன்; வயவேறு - வலிய தந்திரம்; முன்பு - பாரத யுத்த காலத்தில் (42).
இவன் தில்லைப் பெருமானிடம் கொண்ட ஆராக்காதல் கூறப்படுகிறது. கமலங்கள் - சிவபெருமான் திருவடிகள்; இவை வேத ஒலிக்கேற்ப நடிப்பன. (2)
--------------------------------------
88. பூஅகம் நிறைந்தவனி தைக்குமண வாளா !
பான்னி யொடு கவுதமை தருங்குட பொருப்பா!
கூவகர் விடும்களிறு அழித்துஉலகு அளிக்கும்
கொடைக்கை அபயா!குல நதிக்குமரி கொண்கா!
பாவகன் வளைத்துஎழு கலிங்கம் விழுங்கப்
பகட்டணி துணித்துஒரு பெரும்பரணி கொள்ளும்
சேவகன் அபங்கன்அக ளங்கன்மத லாய்!நின்
சேவடி களால்எமது சிற்றில்சிதை யேலே.
88. வனிதை – திருமகள்; கவுதமை - கோதாவிரி; திக்குமரி - நதிகளைக் கொண்ட குமரிப்பகுதியாகிய பாண்டிய நாடு; கொண்கன் - கணவன், நெய்தல்நிலத் தலைவன்; பாவகன் - அக்கினி; பகடு - ஆண்யானை; சேவகன் - வீரன்; அபங்கன் - குறைவில்லாதவன்; அகளங்கன் - மறு இல்லாதவன். (3)
----------------------------
89. முன்மிதிலை வில்இற முரித்துஇசை தரித்தாய்!
முழங்குகடல் ஏழும்முனி யும்படி முனிந்தாய்!
இன்மதுர முத்தமிழும் நான்மறையும் முன்னாள்
எடுத்தமுகி லே!எதிரி லாதபெரு மாளே!
வன்மதில் இலங்கைஎயில் அன்று;உதியர் கோமான்
மகோதைஎயில் அன்று;மதில் மண்ணைநகர் அன்று;
தென்மதுரை அன்று;வட கம்பிலியும் அன்று;உன்
சேவடிக ளால்எமது சிற்றில்சிதை யேலே.
89. முரித்தல் - வளைத்தல்; முறித்தல் - இரு துண்டமாக்குதல். இவன் முன்னோர் ஆட்சியிலும் முத்தமிழும் நான்மறையும் சிறந்தன என்பது. வில் முறித்தல், கடல் முனிதல் என்பன இராமனுடைய செயல்கள். இலங்கை, மகோதை, மண்னை, மதுரை, கம்பிலி என்பன சோழர்கள் கைப்பற்றியன. பெருஞ்செயல் செய்தற்குரிய நீ சிற்றில் சிதைத்தலாகிய சிறுசெயல் செய்யாதே. (4).
-------------------------------
90. வெய்யகலி என்னும்ஒரு பேர்ஒருவ னும்போய்
வேலைபுக வே,முறையின் மீளஉல கெல்லாம்
உய்ய,உர கம்தளை ஒழித்து,அகில லோகத்து
உயர்ந்தமனு வின்குலம் உவந்தபெரு மாளே!
வையக மடந்தையும், நினக்குஅமுதம் நாணின்
வாருதி கடைந்துதர வந்ததிரு மார்பின்
செய்யதிரு மங்கையும், உவந்துவருடு அம்பொன்
சேவடிக ளால்,எமது சிற்றில்சிதை யேலே.
90. கலி கடிந்து, ஆதிசேடன் பாரத்தைத் தான் தாங்கி அதன் பாரம் போக்கி, மனுவின் குலத்து உவந்து வந்த திருமாலே இவன். பூதேவியும் சீதேவியும் இவன் அடிகளை வருடுவர். உரகம் - பாம்பு; நாண் - வாசுகியாகிய கடை கயிறு; வாருதி - (பாற்) கடல். (5)
-----------------------------------
91. தண்டில்விழி ஞத்துஎயில் தகர்த்து,உடைய முத்துச்
சலாபமுழு தும்,பொறையர் சாலையோடு கொண்டாய்!
கெண்டிவயி ரத்துஒளி துளும்புபுனம் நேரிக்
கிரிப்புரவ லா!இரவ லர்க்குஉரிய கிள்ளி!
வண்டின்நெகிழ் தார்வழுதி பண்டுஎழுதி வைக்கும்
மதக்கயல் சிதக்கி,ஒரு வல்லியம் இருத்தச்
செண்டில்இமை யக்கிரி திரித்தசய துங்கா!
சேவடிக ளால்எமது சிற்றில் சிதையேலே.
91. விழிஞத்து மதிலை அழித்துச் சேரருடைய காந்தளூர்ச்சாலையோடு முத்துக் குளிக்கும் துறைகளையும் கைப்பற்றினாய். உன் நேர்மலையில் வயிரங்கள் ஒளி வீசுகின்றன. நீ வள்ளலாயுள்ளாய். இமயமலையைச் செண்டாயுதத்தால் வணக்கி, அதில் பொறித்த பாண்டியர்தம் மீன்பொறியை அகற்றிப் புலிப்பொறி பொறித்தாய். சிதக்கி - பொறித்ததை அழித்து; வல்லியம் - புலி. (6)
-----------------------------------
92. சாவகம் எறிந்து,அரு மணம்பொருது சிந்தத்
தகர்த்து,மலை யூரின்உரு வப்புரிசை தள்ளி,
கோஅகம் நெகிழ்ந்துகுலை யும்படி கடாரம்
கொள்ளும்ஒரு சோழன்மரு கா!குமரி கொண்கா!
பாவகம் நிரம்புதிரு மாலும்மல ரோனும்
பரந்தபதி னெண்கணனும் வந்துபர வத்தன்,
சேவகம் நிரம்புதிரு வீதிபுலி யூரில்
செய்தபெரு மான்மதலை! சிற்றில்சிதை யேலே.
92. சாவகம், அருமணம், மலையூர், கடாரம் இவை வென்ற முதல் இராசேந்திரன் மரபினன் இவன். பாவகம் - தூய்மை. திருமாலும் பிரமனும் தேவகணங்களும் வழிபட, தன் வீரத்தால் பெற்ற செல்வங்கொண்டு விக்கிரமன் சிதம்பரத்தில் திருவீதி அமைத்தமை சுட்டப்படுகிறது. (7)
இப்புத்தகத்துள் பக்கம் 43-இல் அத்திருப்பணி விரிவுகளைக் காண்க.
---------------------------------
93. முருக்குநிலை யாததிரு வாய்மலரி னாலும்
மூரிநகை யாலும்அடி யோம்உயிரை முன்னி
உருக்குமது நன்று;தனி உங்கள்கவி கைக்கீழ்
உள்ளபதி னாலுலகும் உய்ந்தன; பிழைத்தோம்;
இருக்குமுதல் ஆரண முதற்குலமும், விண்மேல்
எழுபக லவன்குலமும் என்று,உலகு இறைஞ்சும்
திருக்குலம் இரண்டும்மிக வாயிர ..... .............
சேவகன் விடுங்களிறு! சிற்றில் சிதை யேலே.
93. முருக்கு - முள் முருங்கை; மூரி - பெருமை: பதினாலுலகும் காக்கும் நீ, வாய் மலராலும் முறுவலாலும் எம் உயிரை உருக்குமாறு என்ன தவறு செய்தோம்? வேதம் கூறும் முதற்குலமாகிய கீழைச்சளுக்கியர் குலமும் சூரியன் குலமாகிய சோழர்குலமும் சிறக்கத் தோன்றியவன் நீ. ஆயிரங்கண்ணோனாம் இந்திரனைக் காளையாக்கி இவர்ந்த காகுத்தன் செய்தி இவன் மீதேற்றிக் கூறப்பட்டுள்ளது போலும். (8)
-------------------------------------
94. வலம்புகலு மாறுஅறிய வில்கொடி நெடுதேர்
வானவனும் மீனவனும் வல்லவனும் ஓட,
பிலம்புக முனிந்தகலி கோபன்அக ளங்கன்
பெற்றகளி றே!எதிரி லாதபெரு மாளே!
அலம்புகடல் ஏழும்மலை ஏழும்நிலம் ஏழும்
அலர்ந்தநதி யாவையும் ஆமிவை அனைத்தும்
சிலம்புகளும் உட்பட அளந்து,உலகு அளிக்கும்
சேவடிக ளால்,எமது சிற்றில்சிதை யேலே.
94. வலம் புகலுமாறு - தன் வெற்றியைக் குறிப்பிடுமாறு; அறிய - உலகத்தவர் உணர; கலிகோபன் - வறுமையை வெகுண்டவன். இவன் திருவிக்கிரமனாயிருந்தகாலை உலகு முழுதும் அளந்தான் என்பது. (9)
-------------------------------------
95. மருக்கமழும் வடமதுரை வளநகர்க்கும் பழையோம்;
வண்துவரை கடலுடனே மகிழுறநற் புகுந்தோம்;
இருக்கில்வரும் பெருந்தகைக்கும் எத்தனைக்கும் பழையோம்;
எயில்வரையைத் தொடர்ப்படுத்த முகில்நிழல் கீழ்இருந்தோம்;
குருக்கஅடி மைக்குடியாய் வருகுடிகள் அடியோம்;
கொற்றவனே! கூத்தாடு நாயகனே! உங்கள்
திருக்குலநா யகிபுகுதப் புகுந்தோம்சிற் றடியோம்;
சிற்றடியோம் யாம்இழைக்கும் சிற்றில்சிதை யேலே.
95. சிறுமியர் இவற்குப் பழைய அடியவராந்திறம் கூறப்படுகிறது. வடமதுரையிலும், புதிதாகக் கடலினுள் அமைக்கப்பட்ட துவாரகையிலும் பண்டு இருந்தனர்; வேதம் புகழும் இப்பெருமானுக்குப் பழைய அடியவர்களாய், இவன் கோவர்த்தனமலையைக் குடையாகப் பிடிக்க அக்குடை நிழற்கீழ் இருந்தனர்; இவன் குல நாயகியுடன் இப்பிறப்பெடுத்துள்ளனர். இத்தகைய பழைய அடியவர் தம் சிற்றில்லைச் சிதைத்தல் தகாது என்பது. கூத்து - குடக்கூத்து முதலி கண்ணன் நடனங்கள். (10)
--------------------------------
96. சுரகுருவி னுடன் சென்று, சுரர்நாடு புகுந்தே,
சுரபதிக்கும் நரபதிக்கும் தொடுத்துஎடுத்த கவரி
அரமகளிர் பணிமாற, யாங்கள்பணி மாற,
அரவணையைச் சேவித்தோம்; அந்திக்காப்பு எடுத்தோம்;
புரவலற்கும் புரந்தரற்கும் உடன்எடுப்ப எடுத்த
பொற்கலத்தோர் மனம்தொடர்ந்தோம்; புரந்தரற்கும் இறைக்குத்
திருமகனே! கூத்தாடு நாயகனே! உங்கள்
சிற்றடியோம் யாம்இழைக்கும் சிற்றில் சிதையேலே.
96. சுரபதி - இந்திரன்; நரபதி - சுரகுரு என்னும் சோழன். அவனோடு இம்மகளிர் வானுலகம் செல்லும் வாய்ப்புப் பெற்றபோது, அரமகளிர் தேவேந்திரனுக்குச் செய்த குற்றேவல்களைத் தாங்களும் சுரகுருவுக்குச் செய்யும் வாய்ப்பினைப் பெற்றனர்; திருமாலை வந்தித்து ஆலத்தி சுழற்றினர். காகுத்தன் தேவேந்திரனையும் பணி கொண்டமையின், சோழன் புரந்தரனுக்கும் தலைவனாயினான். அச்சோழன் மரபினன் இவன். புரந்தரன் - இந்திரன்; இறை- தலைவன். (11)
-------------------------------
10. சிறுதேர்ப் பருவம்
97. மாறிய கலிக்கு வழிவிலக் காக,
படியினுள் மனுவரம் பாக,
கூறிய கடவுள் குலக்களிறு எட்டும்
எண்திசை யினும் குறிக் கொள்ள,
ஏறிய கலிங்கமும் ஏழுமா ராட்டமும்
ஏழரை இலக்கமும் இரியச்
சீறிய அபயன்! குலோத்துங்க சோழன் !
உருட்டுக சிறுதேரே.
சிறுதேர்ப் பருவம்
விளையாடுதலுக்காகச் செய்யப்பட்ட சிறிய தேரினை உருட்டி விளையாடுமாறு குழந்தைக்குக் கூறுதல்.
97. கலியின் வழியை விலக்கி, மனுநெறியை வேலியிட்டு, எட்டுத்திசையிலும் கலிங்கரும் மராட்டரும் ஏழரை இலக்கத்தாராகிய இரட்டரும் ஓடுமாறு சீறியவன் அபயன்.
மாறிய - உலகொழுக்கம் மாறக்காரணமான கடவுள் உறையும் அட்ட குலவரைகள் என்க. (1)
-----------------------------------
98. அங்கண்மா ஞாலம் ஒருபுடை பொதிந்த
அணிகுடை மனுகுலா திபனே!
எங்கன்நா யக!நம் குலநதி வளவன்
இராசரா சன்பெறு மவுலி
வெங்கண்மால் யானை முதலைவாய் முடியும்
வேலைவாய், வீடுகொண் டருளும்
செங்கண்மால்! வளவன்! குலோத்துங்க சோழன்!
உருட்டுக சிறுதேரே
98. உலகை ஒருகுடைக்கீழ் ஆண்ட மனுகுலத் தலைவன். ஞாலத்தைத் தன்கீழ் ஒரு சார் கவித்த குடையென, அதன் பெருமை கூறினார். குலநதி வளவன் - காவிரியின் போக்கை ஒழுங்குபடுத்திப் பயன்கொண்ட சோழன். ‘இராசராசன் பெறுமவுலியை அவன் வழி வந்து சூடிய செங்கண் மாலாம் வளவன்' எனக் கூட்டுக. திருமால் கசேந்திரனைக் காத்த செயல் கூறப்பட்டுள்ள து. (2)
--------------------------------
99. பூட்டிய சிலையும் வயிர்ப்பித்த அரமும்
செயிர்ப்பித்த கேள்வரை, போன்று
காட்டிய களிறும் கிளர்வித்த விடையும்
தனித்தனி பிலத்தில் வீழ்ந்து அழுந்த,
நாட்டிய ........... ..... ........ நெருங்க
நாலிரு திசையினும் விசையம்
தீட்டிய சென்னி! குலோத்துங்க சோழன்!
உருட்டுக சிறுதேரே.
99. சிலை - சேரர்பொறி; வயிர்ப்பித்த - கறுவு கொள்வித்த அரம் - அரம் போன்ற கூரிய வாயையுடைய இலைகளையுடைய வேம்பு; இது பாண்டியர் அடையாள மாலை. சேரரும் பாண்டியரும் சோழன் கோபத்துக்கு ஆளானபோது, பதுங்குதற்கு நட்பாய் அமைந்தன மலைகளே. ஏனைய யானைப்பொறி விடைப்பொறியுடைய மன்னர் பிலம் புகக் குலோத்துங்கன் எண்திசைகளிலும் தன் வீரத்தைத் தீட்டினான். போன்று - அவரை போன்று. (3)
----------------------------------
100. தரித்தனன் சேடன் தளர்ந்தனன் என்று
தலத்தினைத் தாங்குவ தாக
வரித்தவ னின்முன் வந்தகோன் அனுரை
மாதவன் ... ப... ... கண்டு வயிறு
கரித்தியல் உதியர் ... ..... ..................
கைவரை இழிந்தமை முன்கண்டு
சிரித்தவன் மதலை! குலோத்துங்க சோழன்!
உருட்டுக சிறுதேரே.
100. ஆதிசேடன் அசைவு கண்டு தானே உலகைத் தாங்கியவன். சேரர் யானையிலிருந்து இறங்கி ஓடியதைக் கண்டு சிரித்தவன் ஆகிய விக்கிரமன் மகன் இவன். (4)
------------------------------------
101. ஆற்றிய முரசால் வடபுல வேந்தர்
அஞ்சினர் காணும் என்று அறைந்து
சாற்றிய வளவன் சயங்கொண்ட சோழன்
... ... ... ... தலத்து
மாற்றிய கலியான் மயங்கிய தங்கள்
மனுவையும் மறையையும் வளர்க்கத்
தோற்றிய சென்னி! குலோத்துங்க சோழன்!
உருட்டுக சிறுதேரே.
101. முரசொலி கேட்ட அளவிலேயே வடபுல வேந்தர் அஞ்சிஓட, போரைத் தவிர்த்து, வறுமையை மாற்றி, மனுநீதியையும் வேதத்தையும் வளர்த்த இராசாதிராசன் மரபினன் இவன். (5)
----------------------------------
102. என்றவன் முடியும், வளர்சிலை வேம்பும்,
மதுரையும், உதகையும், மற்று
நின்றவெஞ் சிலையும், கிடந்தசெங் கயலும்
நெருப்புண்டு, நீறுநீறு ஆக;
குன்றவன் பொதியில் கொற்றவன் முனியப்
புது .... ..... ... ... குடகடல் குளிப்பச்
சென்றவன் மதலை! குலோத்துங்க சோழன்!
உருட்டுக சிறுதேரே.
102. என்றவன் - ஏன்றவன் என்பதன் குறுக்கம். போரை ஏற்ற பாண்டியனுடைய முடி, சிலை, வேம்பு, மதுரை, கயல் என்பனவும் சேரனுடைய உதகை, வில் முதலியனவும் தீப்பட்டுச் சாம்பராயின. இவ்வெற்றிக்குப் பின் மேல்கடலில் நீராடியவன் விக்கிரமன். முனிதல் - வெறுத்து(ப்போரை) நீங்குதல். (6)
------------------------------------
103. பாடிய பொய்கை களவழி கேட்டு,
படிப்படி யே அட்டு எறிந்து
வாடிய பொறைய னைச்சிறை மீட்ட
மன்னவன் ஒருதிரு மருகன்!
கோடியர், புலவர், விறலியர், பாணர்,
குலகிரி களும்குறை நிறையத்
தேடிய நிதியம்! குலோத்துங்க சோழன்!
உருட்டுக சிறுதேரே.
103. பொய்கையார் பாடிய களவழி நாற்பது என்ற நூலைக் கேட்டுத் தான் வென்று சிறைப்பிடித்த சேரமான் கணைக்கால் இரும்பொறை முன்போல அரசனாகுமாறு சிறை மீட்ட செங்கணான் மரபினன் இவன். கூத்தர் முதலியோருக்குத் தேடி வைத்த செல்வக் குவியல் போல்வான். கோடியர் - கூத்தர். (7)
----------------------------
104. ஒருவா .... ... ... யென நின்றோர் பண்டுரகாரங்கம்
கால்கொண்டு முறிக்கை ... ... ... வாய் பிளவிட்டவன்
மன்னவர் மன்ன ன் விடையும் ........ ...
தனித்தனி பிலத்தில் வீழ்ந்தழுந்த, .... .... .........
நெருங்க, நாலிரு திசையினும் விசையம்
தீட்டிய சென்னி! உருட்டுக சிறுதேரே. 8
104. பகைவர் பிலத்தில் வீழ்ந்து அழிய, எண்திசையினும் தன் வெற்றியைத் தீட்டிய குலோத்துங்கனே! நீ சிறுதேர் உருட்டுக.
உரகாரங்கம் - பாம்பின் தலையிடம். காளிங்கன் தலையில் நடமிட்டமை, மா வாய் பிளந்தமை, விடைகளை அடர்த்தமை என்னும் கண்ணன் செயல்கள் இவன்மீது ஏற்றிக் கூறப்பட்டுள்ளன. (8)
--------------------------------------------
அருஞ்சொற்பொருள் முதலியவற்றின் அகரவரிசை
எண்: பாடலெண்
அகவை - உள்ளிடம் 70
அகளங்கன் - குற்றமற்றவன் 88, 94
அங்கம் - படைக் கூறு, அங்க நாடு 4; 77
அச்சுதன் - நிலை பெற்றவன் 46
அசன - இடி 15
அடுக்கர் - மலை 42
அடுநது -- வருத்துவது 61
அண்டகோளகை - விண்வெளியில் திரியும் கோளங்கள் 76
அத்தகிரி - கதிரவன் மேற்கே மறையுமலை 52
அதிகர் - தகடூரையாண்ட அதிகமான் மரபினர் 4
அதிரதர் -- தேரோட்டுவதில் வல்லுநர் 35
அதுலன் - அளத்தற்கு அரியவன் 3, 4
அந்திக்காப்பு - ஆலத்தி 96
அபங்கன் - குறைபாடில்லாதவன் 88
அபங்குரன் - மனக்கோட்டமில்லாதவன் 22
அபயன் - பகையச்சமில்லாதவன் 3. 4, 6, 8, 10, 11. 45, 56, 61, 63, 84, 86 - 88, 97
அமலன் - குற்றமற்றவன் 67
அமோகன் - குற்றமற்றவன் 23
அயர் - விழா அயர்வு 53
அயிராபதகிரி - ஐராவதயானை 66
அயில் - வேல் 46
அயிலுதல் - விழுங்குதல் 45
அரசுபணி - அணிகளுள் தலையாய கவுத்துமம் 46
அரணம் - மதில் 12
அரமகளிர் - தேவருலக மகளிர் 60
அரிப்போத்து - ஆண் சிங்கம் 7
அருமணம் -- கீழைக்கடல் தீவுகளுள் ஒன்று 92
அருணன் - கதிரவனுடைய தேர்ப்பாகன் 26
அலம் வருதல் - சுழலுதல் 8, 40
அவனி - பூமி 23, 53
அவனிபர் - பூமிகாவலர் 37
அவுணர் - அசுரர் 58, 60
அளக்கர் - கடல் 52, 51
அளி - வண்டு 22, 35, 47
அறிதுயில் - திருமாலது யோகநித்திரை 54
அனிகம் - சேனை 50
அனுபமன் - உவமை கூறப்படாதவன் 63, 67 - 78
அனுரை - அனுராதபுரம் 4, 100
ஆதர் - குருடர் 62
ஆய்ச்சியர் - இடைச்சியர் 8
ஆரணம் - வேதம் 93
ஆரம் - முத்து 17
ஆரியன் - வணங்கத்தக்கோன் 78
ஆல் - ஆலுதல் - அசைதல் 44
இடங்கர் - முதலை 64
இதழி - கொன்றை 8
இந்த்ர விபவம் - இந்திரனது செல்வம் 15
இரட்டம் - இராட்டிரகூட நாடு 19
இரட்டர் - இராட்டிர கூடர் 36
இரவி - கதிரவன் 4, 40, 45 - 51, 63
இரிதல் - கெட்டோடுதல் 24, 47, 57, 97
இருக்கு - இருக்கு வேதம், வேதம் 93, 95
இருகுலோத்தமன் - தந்தையது குலமும் தாயது குலமும் சிறக்கத் தோன்றியவன் 2
இலாடர் - இலாட நாட்டவர் - 16
இழுது - நெய் 47
இளை - காவல் 68
இறுவரை - பெரியமலை 35, 65
ஈழம் - சிங்கள நாடு 63, 77
உகிராளி - நகத்தைப் பணிகொண்டவன் 58
உட்குதல் - அஞ்சுதல் 36
உடுக்கர் - உடுக்கை - ஒருகட்பறை 42
உடுபதி - சந்திரன் 57
உத்துங்கன் - உயர்ந்தவன் 78
உதகை - 4, 52, 58, 102
உததி - கடல் 15
உதயகிரி - கதிரவன் கீழ்த்திசையில் தோன்றுமலை 52
உதியர் - சேரர் 49, 58, 65, 66, 89, 100
உதையணன் - உதித்தோன் 68
உபயகும்பம் - தலையின் இருபக்கம் 19
உபயகுல தீபன் - தந்தைதாயர் குலங்களை விளங்கச் செய்தவன் 3, 61, 63
உபனிடம் - உபநிடதம் 57
உம்பர் - தேவர் 4
உமிதல் - உமிழ்தல் 45
உரகம் - பாம்பு 90, 104
உரகை ... 52
உரும் - இடி 54
உருமு - இடி 51, 64
உவரி - கடல் 47, 48, 53, 58
உவள் வரல் - பரத்தல் 71
உழை - மான் (போன்றவள்) 8
உளை - பிடரிமயிர் 4
உற்பாதம் - தீ நிமித்தம் 37
உற்பலம் - குவளை 15
உறந்தை - உறையூர் 64
எதிரிலாப்பெருமாள் - இரண்டாங் குலோத்துங்கனது பட்டப்பெயர் 2, 8, 23 - 26, 89, 94 எருவை - தலை வெளுத்து உடல் சிறுத்திருக்கும் பருந்து வகை 9
எல்லி - பகல் 73
எழுகடல் - பக்கம் 70 - இல் காண்க - 36, 51, 57,76
எழுகிரி - ஏழுமலைகள்; பக்கம் 70 - இல் காண்க. 36
எழுபுடவி - ஏழுலகம்; பக்கம் 70 - இல் காண்க. 57
எழுபுவனம் - ஏழுலகம் 36.
எழுபொழில் -- பக்கம் 70 - இல் காண்க. 51
ஏழ்புவனி - ஏழுலகு 76
ஏழ்பெருங்கொண்டல் - சம்வர்த்தம், ஆவர்த்தம். புட்கலா வர்த்தம், சங்காரிதம், துரோணம், காளமுகில், நீலவருணம், என்னும் பெயரின 73
ஏழ்விலங்கல் - ஏழுமலைகள் 76
ஏறு - இடபம் 44, 87
ஏனம் - பன்றி 8
ஐந்தலை வெக்கை - ஐந்தலையும் உமிழும் வெவ்விடம். (காப்பு
ஒக்கல் - சுற்றம் 45
ஒட்டர் - ஒட்டர தேசத்தவர் 16
ஓவலன் - ஒழியாதவன் 79
ககன தலம் – பொன்னுலகம் 52
ககனம் - ஆகாயம் 21, 47
கச்சோலம் - ஏலப்பட்டை 35
கஞ்சன் - கம்சன் 87
கட்டிமான் - கட்டி நாட்டார் கோமான் 49
கட தடம் - மதமொழுகும் கதுப்பு 9
கடவுட் பொருப்பேழு - தெய்வம் உறையும் ஏழுமலைகள் 1
கடாரம் - இன்றைய பர்மாப் பகுதி 77, 92
கடுநற - நாட்படுதேறல் 45
கண்டல் - நீர்முள்ளி, தாழை 43
கண்டீரவன் - சிங்கம்போல்பவன் 78
கந்தாரம் - காந்தாரம் (பண் விசேடம்) 22
கபடமுட்காறுமலை - வஞ்சனை தங்கிய யானை 11
கம்பீலி -- பாஞ்சால நாடு 89
கரடம் - மதம் பாயும் சுவடு 5
கரவுகோள் - மறைத்துவைத்தல் 70
கரு நடர் - கன்னட நாட்டினர் 37, 39, 52, 58
கலிகோபன் - வறுமையைச் சினந்தழிப்போன் 61, 63, 94
கலுழி - கலங்கல் நீர் 5, 47
கலைவன் - கலைஞன் 79
கவடி - சோழி 54
கவிகை - குடை 12 - 19, 60, 71, 76, 93
கவுத்துவம் - திருமாலினது மார்பின் மணி 44
கவுதமை - கோதாவிரி 88
கவுரவர் - துரியோதனாதியர் 42
கவுரியர் - பாண்டியர் 52
கள வழி - போர்க்கள வெற்றியைப் பாடும் இலக்கியம் 103
களரி - காடு 63
கற்பதரு - கற்பகத் தரு 15
காலுதல் - வெளிப்படுத்தல் 5, 71
காளம் - எட்டிமரம் 63
கிழத்தி - உரியவள் 55
கிழி - துணி 53
கிள்ளி - சோழன் 91
கீளுதல் - கிழித்தல் 25
குக்குடம் - நாரை 7
குருத்தர் - 52
குடகம் - மேற்கு மலை நாட்டுப் பகுதி 47
குருகுலோத்தமர் - பாண்டவர் 23
குட கூடல் - 23
குட பொருப்பன் - மேற்கு மலைத் தலைவன் 89
குணபரன் - நற்குணங்களுடையோன் 65, 66, 78
குணதரன் - குணங்களைத் தாங்கியோன் 34 -40
குணவாயில் - சேரர் வஞ்சியை அடுத்ததோர் ஊர் 58
குப்பாயம் - சட்டை 37
குமரிகொண்கன் - குமரித் துறைத் தலைவன் 88
குரவை - கைகோத்தாடும் கூத்துவிசேடம் 8
குருகு - நாரை 22
குருபதி - குருகுலத்துப் பெருமகன் 46
குல தனம் - செல்வ ஈட்டம் 21
குலிங்கம் - 77
குவலயன் - உலகினையுடையோன் 34-40
குழை - காதணி 7, 11
கூழை - படையின் பின்னணி 13, 18
கூவகர் - 88
கெண்டுதல் - கீறுதல் 91
கொட்பு - சுழற்சி 7, 39
கொடுவரி - புலி 56, 76
கொண்கன் - கணவன் 88, 92
கொந்து - பூங்கொத்து 22
கொப்பளம் - 77
கொம்பு - யானைக்கோடு 6
கொல்லாபுரம் - 12
கொற்கை - பாண்டி நாட்டகத்து முத்துக் குளிக்கும் துறைமுகப் பட்டினம் 7, 52
கோட்டகம் - கரைப்பக்கம் 7
கோடியர் - கூத்தர் 103
கோண்மா - புலிப்பொறி 26
கோதை - சேரன் 42
கோவியர் – இடைச்சியர் 66
கோழி – உறையூர் 8
கோளரி - பகையைக் கொள்ளவல்ல சிங்கம் 7
கோற்றொடி - திரண்ட தொடிகளை அணிந்தவள் 2, 8
கைதவர் - 16
கைவரை - யானை 100
சக்ரகிரி - சக்கரவாள மலை 52
சக்ரதரன் - சக்கரத்தைத் தரித்த திருமால் 52, 55, 79
சகலமுத்தை - நிலமகள் 54
சத்தாபரணம் - ஏழுமதில்கள் 3
சந்த்ரவலையம் - சந்திர மண்டிலம் 15
சந்தாபம் - உள்ள வெப்பம் 22
சமரம் - போர் 27
சயதரன் - இரண்டாங் குலோத்துங்கனது பட்டப்பெயர் 34, 40 50, 67, 68
சனகர். 37
சனகாதிகள் - சனகன், சனாதனன், சனற்குமாரன், சனந்தனன் என்ற தெய்வ இருடியர் 3 சாதுரங்கம் - நரற்படை 14
சாபம் - வில் 22.
சாவகம் - சாவகத் தீவு 77, 92
சாலை - சேரர்க்குரிய காந்தளூர்ச்சாலை 5, 91
சிங்களேசர் - சிங்கள நாட்டரசர் 4
சிதக்குதல் - எழுதியதை அழித்தல் 91
சிலம்பு - மலை 75, 6
சிலா தலம் - சந்திரகாந்தக்கல் 75
சிலை - சேரர் பொறியாம் வில் 99, 102
சிறகர் - சிறகு 36
சிறைப்பார்ப்பு - சிறகுகளையுடைய குஞ்சு 7
சுடிகை - தலையணிமணி 56
சுரகுரு - சோழர் முன்னோன் ஒருவன் 39, 96
சுரபதி - இந்திரன் 95
சுரர் நாடு - தேவருலகு 96
சூதம் - மாமரம் 59
சூல் - கரு 7
செண்டு - ஓராயுதம் 91
செம்பியன் - சோழன் 5, 65, 66, 78
செயதுங்கன் - வெற்றியாற் சிறந்தேன் 91
செழியர் - பாண்டியர் 21, 55
சென்னி - சோழன் 9, 10, 99, 104
சேடன் - ஆதிசேடன் 100
சேர்ப்பன், கடற்றுறைவன் 8
சேரலன் - சேரன்; இரண்டாங் குலோத்துங்கனது பட்டப் பெயர் 78
சேவகன் - வீரன் 6, 14, 88
சேனாபராகம் - சேனை நடக்கையில் எழும் துகள் 16
சோரி - குருதி 13, 14, 69
சோழதுங்கன் - சோழரிடை மிக்கோன் 68, 96
சோனகம் 77
ஞாயில் - அம்பு எய்து மறையும் மதிலகத்ததோர் உறுப்பு 10
ஞானப்பொறி - ஞானவுணர்வு 3
தக்கோலம் - பஞ்சவாசத்துள் ஒன்று 35
தகரம் - மயிர்ச் சாந்து 20, 59
தடி நறவு - ஊன் நாற்றம் 39
தண்டு - சேனை 91
தத்தை - முன் பிறந்தவள் 55
தயிலன் - மேலைச் சாளுக்கிய மன்னன் 49, 50, 66
தரணி - நிலம் 51, 59, 65
தரளம் - முத்து 20
தராதலம் - பூமி 41
தருணம் - செவ்வி 5
தவாமை - கெடாமை 77
தறித்தல் - வெட்டுதல் 3
தனையர் - தனயர் - புதல்வர் 50
தாதன் - பாட்டன் 58
தாமரையாள் - திருமகள் 1
தார் - முன் நடக்கும் காலாட்படை 19
தானவன் - அசுரன் 10
திகாந்தம் - திசையின் இறுதியெல்லை 16
திகிரி - ஆணைச்சக்கரம், சக்கரப்படை 6; 40
திடறுதல் - திடுக்கிடல் 62
திரிகத்தம் - 77
திரிபுவனமுடையாள் - மதுராந்தகி 5
தினகரன் - பகலவன் 34, 40
துகிராகாரன் - பவளம் போன்ற செந்நிறமுடையோன் 24
துங்கம் - தூய்மை 78
துடியடி - யானை 52 .
தும்பளம் - 68
துரகதம் - குதிரை 34
துரகம் - குதிரை 9, 52
தூங்க ஓவியம் - ஓவியக் குதிரை 4
துவரை - துவாரகை 57, 95
துழாய் - துளசி 7, 8, 25, 87
துளவு - துளசி 55
துறுதல் - செறிதல் 21
தூர்த்தன் - காமுகன் 8
தூரம் - இசைக்கருவி 6
தூறு - புதர் 9
தென்னர் - பாண்டியர் 10
தோகை - மயில் 6
நக்ரம் - முதலை 79
நரபதி - சுரகுரு 96
நளின பதி - கதிரவன் 59
நறவம் - கள் 38
நால்வாய் - யானை 28
நாவலன் - நன்மொழி பகர்வோன் 83
நாற்கவி - ஆசு, மதுரம், சித்திரம், அகலம் என்னும் நால்வகைக்கவி 2
நித்ததன் - நிலைபெற்றவன் 46
நித்தை - உமாதேவி 54
நிர்த்த நிலையம் - நடன சாலை 15
நிருபமன் - உவமை கடந்தவன் 45 - 51, 78
நிரை - பசுக்கூட்டம் 44
நிறம் - மார்பு 10
நூற்றி தழ் - தாமரை 24
நூறுதல் - அழித்தல் 44
நெற்குவால் - நெற்குவியல் 45
நேரி - சோணாட்டகத்ததொரு மலை 62
நேரியன் - சோழன் 78
பகீரதி - கங்கை 65
பச்சிறால் - பசிய இறால் மீன் 45
பச்சோலை - காதணி 35
பஞ்சவன் - பாண்டியன் 65 - 67, 78
பஞ்சாயுதங்கள் - திருமாலின் ஐம்படைக்கருவிகளாம் சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்னுமிவை 14
பத்திடா - பத்தியிடா - பத்தியிட்டு 45
படு - குளம் 31
படுகர் - பள்ளம் 47, 60
படுகளம் - வீரர் இறந்துபட்ட போர்க்களம் 9
பண்டாரம் - சேமிக்கும் அறை 21
பண்டிதசோழன் - முதல் இராசேந்திரன் 42
பணாமணி - நாகரத்தினம் 19
பணித்தடம் - குழிந்தகுளம் 17
பணிமாறல் - குற்றேவல் புரிதல் 96
பணிலம் - சங்கு 17, 38, 45
பத்திமத்துத்தி - அன்புடைய இணக்கம் 70
பதக்குரோணி - பத்து அக்குரோணி (பக். 86 - இல் காண்க.) 18
பதினெண்சுரம் - சேரரது நாட்டுப் பகுதி 42
பதினெண்கணன் - பதினெட்டுத் தேவகணங்கள் 92
பதுமவீடு - தாமரையாகிய மனை 2
பப்பளம் - 77
பம்புதல் - செறிதல் 69
பரணி - ஆனையாயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுக்கும் பிரபந்தம் 59, 65
பரத(வ)ர் - நெய்தல் நிலத்தவர் 38, 45
பரவுகாட்டிய நா - (பாண்டியர்க்கு) வழிபாடு சொல்லும் வாய் 26
பரவை - கடல் 17, 21, 47, 55, 72, 73, 75
பரிசுத்தை - கலைமகள் 55
பவனகதி - வாயுவேகம் 46, 51
பழுவம் - காடு 31
பனசம் - ஈரப்பலா 59
பனிசெய்பொற்கிரி - இமயமலை 26
பாகை - பகுதி 38
பாசடை - பசிய இலை 7
பாயிரம் - பெருமை 71
பாராவாரம் - கடல் 24
பாவகம் - தூய்மை 92
பாவகன் - அக்கினி 88
பாழி - வலிமை 67
பாறு - பருந்து 91
பிணவு - பெண் (நாய்) 24
பித்திகை - சிறு சண்பகம் 35
பிரமோகன் - விருப்பமுடையோன் 78
பிலம் - பாதலம், குகை 86,94
பீதகம் - பீதாம்பரம் 7
புகார் - கழிமுகம் 7
புட்பாகன் - கருடவாகனன் 36
புண்டரிகம் - தாமரை, புலி (காப்பு); 15
புத்தூர் - 40
புரத்ரய - முப்புரம் (காப்பு), 10
புரந்தரன் - இந்திரன் 21, 96
புரவலர் - காவலர் 91, 96
புரவி - குதிரை 4, 36
புரிசை - மதில் 91
புலியூர் - தில்லை 92
புவன தாரன் - பூமியைத் தாங்குவோன் 1
பூகம் - உருண்டை 17
பூகம் - கமுகு 60
பூதாமுகடு - மலையுச்சி (காப்பு) பூதி - விபூதி 8
பூஷணன் - ஆபரணம் அணிந்தோன் 78
பொதுவியர் - இடைச்சியர் 36, 40
பொரியல் - கறியுணவு விசேடம் 45
பொன் முகடு - பொன்மயமான மேருசிகரம் 8
பொறையன் - சேரன் 91, 103
பொன்வரை . மேருமலை 1.
பொன்னி - காவிரியாறு 15, 88
பைங்குரம் - வளவிய குளம்பு 4
மகரம் - சுறாமீன் 56, 57
மகோததி - பெருங்கடல் 67
மகோதை - கொடுங்கோளூர் (சேர நாட்டகத்தது) 12, 42, 64, 89
மச்சர்கோன் - மச்ச நாட்டார் கோமான் 49
மட்டித்தல் - அழித்தல் 13
மடு - குளம் 45
மண்ணுதல் - சாணையிடுதல் 15
மண்ணைக்கடக்கம் - மான்யகேடம் என்னுமூர் 12, 19
மண்ணை தகர் - மான்யகேடம் 89
மணவாளன் - கணவன் 88
மத்தமா - யானை 50
மதலை - மைந்தன் 1, 22, 100, 102
மதலை - மரக்கலம் 38
மதவரை - வலிய மலை 11
மதுகரம் - வண்டு 5
மதுரேசன் - மதுரைக்கு இறைவன் 61, 63
மதுரையர் - பாண்டியர் 46
மரந்தை - சேரர் நாட்டகத்ததோரூர் 12, 64
மராட்டம் - மாராட்டிர நாடு 97
மராட்டர் - மாராட்டிர நாட்டார் 13, 16
மரு - மணம் 95
மருது - மருதமரம் 25
மல்லை - வளமுடைய காலிபுரம் 87
மலரோன் - பிரமன் 92
மவ்வல் - மல்லிகை 43
மளவர் - உழவர் 45
மறலி - இமயன் 39
மறிதல் - மீளுதல் 69
மறுகுதல் - வருந்துதல் 56
மனுகுலாதிபன் - மனுகுலத் தலைவன் 67 - 78, 98
மனுசரிதன் - மனுநெறியில் ஒழுகுவோன் 52 - 55
மனுபரன் - மனுகுலத்தரசருள் மிக்கோன் 78
மாக்கலம் - பெருங்கப்பல் 24
மாகதர் - மகத நாட்டினர் 16
மாசுணம் - பாம்பு 7
மா தங்கம் - யானை 17
மாலாகாரன் - மாலை தொடுப்பவன் 23
மானதன் - மனுமரபில் தோன் றியவன் 12
மானம்பு - மதநீர் 17
மிலைச்சர் - மிலேச்சர் - சோனகர் 16
மீன் வாய் வீழாமை - பாண்டியர்க்கு அடிமைப்படாமை 26
மீகாமன் – மாலுமி 24
முகபடம் - முகமூடி (காப்பு) முகரி - பொன்னிக்குக் கரைகட்ட மறுத்து வாராத
மன்னனொருவன் 53
முகுந்தன் - திருமால் 87
முட்டநாடு 49, 50
முத்துச் சலாபம் - முத்துக் குளிக்கும் துறை 91
முந்நீர் - கடல் 14
முராரி - முரனையழித்த திருமால் 26
முருக்கு - முண் முருங்கை மலர் 93
முருகு - மணம் 25
முருடு - விறகு 62
முருடு - வெட்டு மரத்தினடி 36
முளரி - தாமரை 25
மூக மிருகபதி - மூகன் என்ற பன்றியுருவ அசுரன் (காப்பு)
மூகர் - வறியவர் 62
மூரி - வலிமை, பெருமை 10; 93
மூரி - எருது 59
மேழி - கலப்பை 64, 68
வங்காளர் - வங்காள நாட்டு வீரர் 13
வட்டானம் - சுற்றுப்புறம் 40
வடகலை - வடமொழிக் கல்வி 71
வடுகு - தெலுங்கர் 49
வண்டல் - சிறுமியர் அயரும் விளையாட்டு 43
வயவன் . வலியுடையோன் 31, 65, 66
வயிர்ப்பித்தல் - வயிரங்கொள் வித்தல் 99
வயிராகரம் - 19,
வருடை - மான் விசேடம் 62
வரோத்தமன் - வர்த்தினால் தோன்றிய மிக்கோன் 2
வரையர மகளிர் - மலையிற் பயிலும் தேவமகளிர் 20, 35, 57
வல்லபன் - வல்லுநன் 41 - 44
வல்லபை - பிரிய நாயகி 41 - 44
வல்லியம் - புலி 91
வலம் - வெற்றி 94
வழுதி - பாண்டியன் 2, 63, 91
வளவன் - சோழன் 2; 65, 66, 69
வளை - சங்கு 7, 38, 54
வறிது - சிறிது 8
வனசம் - தாமரை 59
வனசரர் - காட்டில் திரிபவர் 37
வனம் - பூகவனம் 45
வனிதையர் - மகளிர் 34, 38, 39
வாசிகை - தொடுத்த மாலை 7
வாதாவி - மேலைச்சளுக்கியரது கோநகர் 19
வாரணம் - யானை 5
வாரி - வெள்ளம் 69
வாருதி - கடல் 43, 90
வானவன் - சேரன்; இரண்டாங் குலோத்துங்கனது பட்டப் பெயர் 94; 78
விக்ரம முக்கூடல் - வெற்றியுடைய முத்தமிழ் மதுரை 34
விசயத்தறி - வெற்றித்தூண் 65
விசயன் - அருச்சுனன் 46
விசயாபரணன் - வெற்றியை அணியாக வுடையோன் 3
விசும்பு - தேவருலகம் 86
விஞ்சையர் - வித்யாதரர் 20
விட்டேறு - சூலம் 39
விடை - காளை 9, 60
விட்டவாது - விண் தவாது - விண்ணில் நீங்காமல் 47
வித்தியா வினோதன் - அருங்கலை வினோதன்; இரண்டாங் குலோத்துங்கனது பட்டப்பெயர் 78
விதத்தை – திருமகள் 54
விந்தாடவி - விந்தமலைக்காடு 13
விந்தை - கொற்றவை 19
விபுதர் – மிகக்கற்றோர் 3
விமலன் - குற்றமற்றவன் 78
விருதர் - படை வீரர் 51
வினியதன் - நன்னெறியில் ஒழுகுவோன் 78
வீக்குதல் - பிணித்தல் 23
வீட்டுதல் – அழித்தல் 2
வீமாபுரம் – 13
வீரியன் - ஆற்றலுடையோன் 78
வீரோதயன் - வீரனாய்த் தோன்றியவன் 12
வெஞ்சிலா வட்டம் - சூரியகாந்தக்கல் 71
வெறி - மணம் 3
வெறுக்கை - செல்வம் 54
வேரி - தேன் (போன்ற சாறு) 59
----------xxxxxx-------------
This file was last updated on 18 may 2021.
Feel free to send the corrections to the webmaster.