சிதம்பரக் குறவஞ்சி
பதிப்பாசிரியர் : மு. அருணாசலம்
citamparak kuRavanjci
author not known, publisher: M. Arunachalam
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
Our sincere thanks go to Dr. Mrs. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சிதம்பரக் குறவஞ்சி
பதிப்பாசிரியர் : மு. அருணாசலம்
Source:
சிதம்பரக் குறவஞ்சி
பதிப்பாசிரியர் : மு. அருணாசலம்
தமிழ் நூலகம், தியாகராயநகர் : : சென்னை
முதற் பதிப்பு, உரிமை பெற்றது
1949; விலை அணா பத்து
கிடைக்குமிடம்: தமிழ் நூலகம், 3. சாம்பசிவம் தெரு, தியாகராயநகர், சென்னை ;
ஆசிரியர், கீழ மூங்கிலடி, சிதம்பரம்
சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை, சென்னை
-------------------------------
முகவுரை
தமிழ்ப் பிரபந்த வகையில் குறவஞ்சி யென்பது பிற்காலத்தில் எழுந்தவொன்று. இசையுடன் கூட, நாடகப் பண்பும் அமையப் பெற்றிருத்தலின், இது குறவஞ்சி நாடகம் என்றும் சொல்லப்பெறும். குறவஞ்சி என்ற சொல் (குறப்பெண்) நூலில் வரும் கதாபாத்திரமாகிய குறத்தியைக் குறிப்பிடும். ஒரு தலைவன் மீது காதல் கொண்ட தலைவிக்குக் குறத்தியொருத்தி தோன்றிக் குறி சொல்வதாகிய கதைப்போக்காக அமைத்துச் செய்யப் பெறுவதே இவ்வகைப் பிரபந்தம்.
குறவஞ்சிப் பிரபந்தங்களில் மிகவும் சிறப்பானது திருக்குற்றாலக் குறவஞ்சி. பெரும்பாலும் அதன் பொருட்போக்கைத் தழுவித் தமிழில் அனேகக் குறவஞ்சிகள் பாடப்பெற்றுள்ளன. அச்சில் வந்தனவும் வராதனவும் அனேகம் உள்ளன. இவை தெய்வங்கள் மீதும், அரசர், வள்ளல்கள் மீதும் பாடப்பெற்றவையாகும்.
குறம், குளுவ நாடகம் என்ற பிரபந்தங்கள் குறவஞ்சியில் காணும் உறுப்புக்களிற் சில குறைந்து வருவனவாகும்.
சிதம்பரக் குறவஞ்சி யென்பது, சிதம்பரம் நடராஜப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவர்மீது ஒரு பெண் காதல் கொண்டதாகவும், அவளுக்குத் குறத்தியொருத்தி குறி சொல்லியதாகவும் பாடப்பெற்ற ஒரு சிறு பிரபந்தம். இதன் ஆசிரியர் பெயரோ ஊரோ காலமோ தெரியவில்லை. இதில் இப்போது கிடைத்துள்ள பாடல்கள் 68. கிடைத்த ஏட்டுப் பிரதியில் நூலின் தொடக்கத்தில் சில பகுதி சிதைந்து போனமையால், காப்பு, கடவுள் வணக்கம், அவையடக்கம் முதலிய பாடல்கள் கிடைக்கவில்லை; மங்களம் என்ற பகுதியுடன், நூல் தொடங்குகிறது. இடையிலும் சிற்சில சொற்களும் அடிகளும் சிதைந்து போயின. நூலின் இடையில் வரும் வசனப்பகுதி, ராக தாளக் குறிப்பு ஆகியவை ஏட்டில் கண்டவை.
குறவஞ்சிப் பிரபந்தங்கள் தமிழில் அனேகம் உள. இவற்றின் வரிசையில் இந்நூலுக்கு உன்னதமான இடம் உண்டு என்று சொல்வதற்கில்லை. எனினும், பழமையான இப்பிரபந்தம் இறவாமல் காக்கும் நோக்கத்துடனேயே இப்போது இதை வெளியிடுகிறேன். இதுபோன்ற சிறு நூல்கள் இன்னும் சிலவுள்ளன. மற்றவை வெளியிடும் போது, குறவஞ்சி பற்றிய விரிவான ஆராய்ச்சி சேர்த்து வெளியிட எண்ணியிருக்கிறேன். சிதம்பரநாதன் அருள் முன்னிற்பதாக.
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலம் சென்றடைந் துய்ம்மினே.
காந்தி ஆசிரமம், 10-2-1949 மு. அருணாசலம்
-----------------------------------------------------
சிதம்பரக் குறவஞ்சி
(இந்நூற் பதிப்புக்குக் கிடைத்த எட்டுப் பிரதி ஒன்றே; அதன் தொடக்க ஏடுகள் காணப்பெறவில்லை. காப்பு, கடவுள் வணக்கம் முதலிய பகுதிகள் சிதைந்து போயின. மங்களம் என்ற பகுதியில் பின்வரும் இடத்திலிருந்து ஏடு தொடங்குகிறது.)
[1] மங்களம்
… ... ... வேதியர்களும்
மிஞ்சு தபோதனர்கள் வெகுகின்னரர் கந்தருவர்
தஞ்ச மென்று துதிகொள் சபாபதிக்கு (மங்களம்)
சிந்தை மகிழ்புரியும் தில்லைமூ வாயிரவர்
சந்தோஷ மாயவர்கள் சதுர்வே தியர்கள்
மந்திர தந்த்ரத்தாலே வரிசையாய்ப் பூசைசெய்ய
சந்தத பூசைகொண் டுகந்தசபை வாணருக்கு (மங்களம்)
சகல சுராசுரர்கள் தாரணி தன்னிலுள்ளோர்
வெகுவாயஞ் சலிசெய்ய வேண்டுவார் வேண்டும்வரங்கள்
சுகமாய் முத்தியளிக்கும் சுந்தரர் புகழம்பலத்தில்
(சிவகாமியம்மைகாணத் திரு)நடம் புரிந்தவர்க்கு (மங்களம் )
---------------------
குறிப்புரை: - தில்லை மூவாயிரவர்: அனாதி காலமாய்த் தில்லையில் நடராசப் பெருமானைப் பூசை செய்யும் உரிமைபெற்ற தீக்ஷிதர்கள் ; தில்லைவாழந்தணர். சபை வாணர் - நடராசர். [ ] இக்குறிக்குள் வரும் சொற்களும் எழுத்துக்களும் ஏட்டில் சிதைந்து போயின.
--------------------------
[2] நடராசப் பெருமான் பவனி வருதல்.
அதிருப மோகினி கண்டு மயல் கொள்ளுதல். அவள் வர்ணனை.
அகவல் - தோடி ராகம்
செயசெய தேவ செயதாண்ட வேசா
செயபக்த வத்சலா செயநீல கண்டா
செயநித்ய ரூபா திரிபுர சங்காரா
சத்திய சொரூபா சகலலோ கேசா 5
ருத்ராட்ச மார்பா ரூப அலங் காரா
பரம தயாளா பார்வதி நாதா
திரிசூல தாரா திவ்யாகங் காதரா
சம்பு கபாலி சங்கர தூர்ச்சடி
உம்பர்கள் போற்றிசெய் உக்கிர மூர்த்தி
தாயினு மன்புள தர்மசிவ கங்கையும் 10
ஆயிரந் தூணுயர் ஆத்தான மண்டபம்
பேரிற் பெரியதோர் பிராகார கோபுரம்
மேருவுக்கதிக விமானமணி மண்டபம்
பூலோக கயிலைசிவ மாலோக தெய்விகம்
கனகசபை சிற்சபை கனராச ரீகசபை 15
புனிதமா நிர்த்தசபை பூரண தேவசபை
ஐந்து சபைதனில் ஆனந்த மாக
சந்ததம் நடம்செய்து தயவருள் புரிவோன்
அன்ன வயல்சூழ் ஆதி சிதம்பரம்
தன்னில் ஆனந்தத் தாண்டவம் புரிவோன் 20
பரிகல முழுதும் பதினா றாயிரம்
திருக்கூட் டங்கள் செய்யும் பணிவிடை
கண்டு மகிழ்ந்தே கருணை யளித்தோன்
வண்டுறை கொன்றை மாலிகை மார்பன்
சிவசமயத்தைச் சிந்தை மகிழ்ந்து 25
நவமுறு முத்தி நயம் பெறத் தந்தோன்
சதுர்மறை யாகம் சாலா ப்ரவேச
முதல்வர் இவராம் மூவா யிரவர்
ஆறுகா லந்தனில் அபிடே கங்களை
மாறாமற் செய்ய மனது மகிழ்ந்தோன் 30
குவலய ரட்சகர் கோவிந்த ராசரை
இவர்மைத் துனரென இயற்கை படைத்தோன்
வாமபா கத்துறை மாதுமை யாள்சிவ
காமிம னோகரன் கந்த விலாசன்
வரதன் விருதன் மருதன் நிருதன் 35
வாணநிர் வாணன் கீர்வாண புராணன்
புத்தி விவர்த்தன சித்த ப்ரசித்தன்
பத்திகொள் வித்துடன் முத்தி யளித்தோன்
அம்பர வம்புலி யும்புனை சம்பு
அங்கச பங்கன் நிரங்குச துங்கன் 40
அட்சய வட்ச ருத்ராட்ச தெட்ச
ஆதி யனாதி யுன்னீத வினோதன்
கந்தன் விநாயகன் காதல்சேர் சந்ததி
மைந்தர் இவரென மனமகிழ் கொண்டோன்
தில்லையில் வாழும் சிதம்பர நாதன் 45
வல்லவ னானதோர் மாதேவ தேவன்
விடையின் மீதேறி வீதியிற் பவனி
தொடியவர் பேசுஞ் சுந்தரங் கண்டு
மாமய லானாள் தோகை பெண்ணரசு
கொந்தள பாரம் அந்திருள் மேகம் 50
புருவ மிரண்டும் பொருமதன் வில்லு
கண்க ளிரண்டும் அங்கச பாணம்
இருகுழை ஓலை ரவிச்சி மண்டலம்
பூவை தன்னதரம் கோவைக் கனிநிறம்
தனம் அதி பாரம் கனகிரி மேரு 55
கொடியது போலே இடையது துவள
இருசர ணங்கள் மருவர விந்தம்
மின்னடை கண்டுடன் அன்னமே நாணும்
மோகம் தாகத் தோகைவந் தனளே.
------------------
அடி 1 - 47 வரை சிதம்பரநாதர் பெருமை. 50 - 59 அதிரூப மோகினி வர்ணனை. சம்பு - சுகத்தைத் தருபவன். தூர்ச்சடி - பாரமான சடையைத் தரித்தவன். சிவகங்கை - தில்லைக் கோயிலினுள் இருக்கும் திருக்குளம். கனகசபை - பொன்னம்பலம்; சிற்சபை ஞானசபை, ராசரீகசபை - ராஜசபை; நிர்த்தசபை, தேவசபை இவை ஐந்தும் தில்லையிலுள்ள நடராச சபைகள். அன்னவயல் சூழ் ஆதி சிதம்பரம்: ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்' என்பது தேவாரம். பரிகலம் - பரிவாரங்கள். ஆகம சாலாப்பிரவேச முதல்வர் என்க. கோவிந்தராசர்: இப்பெயர் கொண்ட திருமால் இங்கு எழுந்தருளியிருக்கிறார். அவர் பதி தில்லைத் திருச்சித்ரகூடம் என ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. வடபாகம் - இடப்பாகம். கீர்வாணம் - வடமொழி. பத்தி கொள்வித்து உடன் முத்தியளித்தோன் என்க. அம்பு அரவு அம்புலி எனப் பிரிக்க. முறையே கங்கை, பாம்பு, பிறைச்சந்திரன். அங்கசபங்கன் - மன்மதனைப் பங்கம் செய்தவன். நிரங்குசன் - கட்டில்லாதவன். தொடியவர் - தொடியணிந்த பெண்டிர். ரவி சசி - சூரிய சந்திரர்.
-----------------------------------------
[3] அதிருபமோகினி வருதல்
தரு - ராகம் கேதார கௌளம், ஆதிதாளம்
அதிரூப மோகினி வந்தாள் - புலியூர் தனில்
அதி ரூப மோகினி வந்தாள்.
மதிவதன ஒய்யாரி - ஆதிசவுந்தரியும் புகழ்
ரதிபோலச் சிங்காரி - மதுர ........ சங்கர்
அதி காரி புலியூர்தனில் (அதிரூப)
பாரக் கொங்கைள் குலுங்கக் - குமுகுமெனப்
பரிமள தேகந்துளங்க
ஆரம் மார்பினில் விளங்க - நடேசர் நாட்டில் (அதிரூப)
---------------
புலியூர் - புலிக்கால் முனியாகிய வியாக்கிரபாதர் பூசித்த தலம்; சிதம்பரம்.
------------------------------------------
[4] விருத்தம் - ராகம் காம்போதி
சதுர்முகக் கபாலிபஞ் சாட்சரப் பரப்ரும்ம
சகலலோ கைக கர்த்தா
விதுமுடிசேர் நடராசன் விடபமது மீதேறி
வீதிவாய்ப் பவனி பணிவாள்
மதனவச தேகமோடு சம்போக வாஞ்சையோடு
மாதர்சகி சேனைக ளுடனே
ரதிதேவியே அந்த ரமணீய வனிதை இந்தி -
ராணியுமிவள் விந்தையே.
------------
கபாலி - பிரமகபால மேந்தியவன். சகல லோக ஏக கர்த்தா என்க. விது - சந்திரன். விடபம் - விடை.
---------------------------------------------
[5. அதிருபமோகினியின் இயல்பு
தரு - ஆகிரி ராகம், ரூபக தாளம்
சரச விகசித அதர ம்ருதுரச மதுரபாகம் - இவள்
நிரதபரவச மதனகலகசந் தாப தேகம்
வரிசை வரிசையாயிழையும் தனங்களிரண்டும் கோகம் - இவள்
பெருமை என் சொல்லலாகும் மோகினி நாக ரீகம்.
-------------
கோகம் - சக்கரவாகப்புள்.
---------------------------------
[6] மன்மதோபாலம்பனம்
கண்ணிகள் - ஆகரி ராகம், ஆதி தாளம்
கங்குலானை ஏறிவரும் காமராயா - வெகு
காமரூப வேடனே நீ காமராயா
மங்கைரதியால் பிழைத்தாய் காமராயா - என்னை
மாதென்றும் அறியாயோ காமராயா.
--------------
உபாலம்பனம்: பழித்தல். மன்மதனுக்குரிய சின்னங்களில், கங்குல் (இருள்) யானை என்று சொல்லப்பெறும். காமராயன் - மன்மதராசன். ரதியால் பிழைத்தாய் என்றது, எரிந்து போனவனை நதியின் வேண்டலுக்கிரங்கிச் சிவபிரான் உயிர் கொடுத்தார் என்ற வரலாறு. தானும் ரதிபோல் மாது ஆதலால், தன்னிடத்துக் கொடுமை செய்யலாகாது என்றவாறு.
------
[7] உன்னை நான் அறியேனோ காமராயா - இன்னம்
உனக்கொரு வேளைவரும் காமராயா
என்னன்பர் சபைவாணர் காமராயா - உனக்(கு)
ஏற்ற புத்தி சொல்லுவேன்காண் காமராயா.
என்றது, உன்னை எரித்தவரே என்னன்பர் ஆதலால் புத்தி சொல்லுவேன் என்றபடி.
--------
[8] சந்திரோபாலம்பனம்
........ ராகம், ஆதி தாளம்
வானி லெழுந்திருந்த சந்திரனே - புவி
மாதைக்காய் வந்தாய்நீ சந்திரனே
ஏனென் உனக்கிது சந்திரனே - பகை
ஏறாது காண்பொறு சந்திரனே.
----------
[9].
பூரண தேகமான சந்திரனே - உன்னைப்
பிறையா யணிந்ததேன் சந்திரனே
விரரம் பலவரைச் சந்திரனே - நான்
வேண்டிக்கொள் வேனினிச் சந்திரனே.
----------------------------------
[10] குயிலைப் பழித்தல்
தரு - ... ராகம், ஆதி தாளம்
லோகத்திலிப் படியுண்டோ கோகிலமே - மெத்த
லூட்டிகளேன் செய்கிறாய் நீ கோகிலமே
காகத்தாலே நீவளர்ந்து கோகிலமே - இந்தக்
காவில் நின்று லாவுகிறாய் கோகிலமே.
லூட்டி - துன்பம். குயில் தன் முட்டையை அடை காக்க அறியாது: காகத்தால் குயில் முட்டைகள் பொரிகின்றன என்பதைக் குறிப்பிட்டவாறு.
--------
[11] மாமயலா கினேனிப்போ கோகிலமே - செம்பொன்
மாசபையைச் சேர்ந்துமென்ன கோகிலமே
ஏம சபாபதியைக் கோகிலமே - மெல்ல
இங்கழைத்து வரக்கூவாய் கோகிலமே.
ஏமசபாபதி - பொன்னம்பலர்: ஏமம் - பொன்.
---------
[12] தென்றலைப் பழித்தல்
தரு - ...... ராகம், ஆதி தாளம்
மலயப் பர்வதத்தெழுந்து
குளிர்மையுன் குணம் மறந்து
தழலாக வீசுறாய் தென்றலே - என்மீதிலிப்போ
தழலாக விசுறாய் தென்றலே.
நிலை தரியாமல் மின்னாரை
அலையாத் தலை செய்ய
வல்லதோ உனக்கிது தென்றலே.
மலயபர்வதம் - பொதிகைமலை; தண்மை பொருந்திய தென்றலின் பிறப்பிடம். அலையாத்தலை செய்ய (?) - அலைக்க, துன்புறுத்த.
---------
[13]
தாடியிட வேண்டாம் மெல்லத்
தப்பியோடிப் பிழைஇனித்
தரமல்ல வுனக்குத் தென்றலே
ஆடரவப் பூணணிவோர்
அம்பல வாணரென் மீதில்
அருள் செய்குவார் பொறு தென்றலே.
தாடியிடுதல் - கொட்டியாடுதல். தப்பிப்பிழை என்றது, அம்பலவர் அணியும் பூணாகிய அரவுக்குக் காற்றே உணவாதலின், தென்றலுக்கு இனித்தரமல்ல என்றவாறு.
----------
[14] வசந்த காலம்
எண்சீர் விருத்தம் - ராகம் நீலாம்புரி
கந்தபரி மளங்கள் மிகப் பூசுங் காலம்
கம்பீரமாய்க் குயில்கள் கூவுங் காலம்
சந்தரநில வுதயமெங்குந் தாவுங் காலம்
தண்ணளிசூழ் சொல்குளிரத் தழைக்குங் காலம்
மந்தபவ னன்பவனி மகிழுங் காலம்
மாதர் தின மேமகிழ்வ சந்த காலம்
சுந்தரர் அம் பலவாணர் இங்கு வந்து
சுரதசம் போகஞ்செயச் சுகிக்குங் காலம்.
முற்செய்யுட்களில், தலைவி, மன்மதனுக்குரிய சந்திரன், குயில், தென்றல் என்பவற்றைப் பழித்தமை போலவே, அவனது மற்றோரங்கமாகிய வசந்தகாலம் இங்கு சொல்லப்பெறுகிறது. மந்தபவனன் - மென்மையான காற்று வீசுகிற வாயுதேவன்.
---------
[15] பாங்கி வருதல்
விருத்தம் - ராகம் காம்போதி
சூலதர பாணி திகழ் துய்யநட ராசர்
வாலசசி சூடர்திரு மாபுலிசை நாட்டில்
பாலனைய மாமொழிசொல் பாங்கிம்ருது ளாங்கி
கோலமொடு தூதுபுகல் கோதைவந் தனளே.
வாலச்சி - பாலசந்திரன். சூடர் - சூடுபவர். புலிசை - புலியூர்.
----------
[16] தரு - ஆதி தாளம்
பல்லவி
அந்தரங்கப் பாங்கியும் வந்தாள் - ஒய்யாரமுடன்
அந்தரங்கப் பாங்கியும் வந்தாள்.
சரணம்
1. சுந்தர நடராசர்
சிந்தை மகிழ் மந்தார
ப்ருந்தா வனங்கள் சூழும்
அந்தப் புலிசை நாட்டில் (அந்தரங்க)
2. வில்லனைய நுதல் மின்னார்
சொல்லும் வகையிலுள் ளாக்கிக்
கல்லனைய கருத்தை
வெல்லு முசிதங்கள் செய்யும் (அந்தரங்க)
3. காசினியில் காமுகர்கள்
ரோசமிகச் செவியில்
ராசியங்கள் பேசி மெல்ல
ஆசைவளர் செய்து தவும் (அந்தரங்க)
4. கும்பமுலை மடவார்க்கோர்
அன்புசெய் தூதிகை மின்னார்
அம்பலவாணர் நாட்டில்
சொம்பு சொகுசுடனே மெல்ல (அந்தரங்க)
ராசியம் - ரகசியம். தூதிகை - தூது சொல்பவள், தூதி. சொம்பு - அழகு.
--------
[17] பாங்கி அதிருபமோகினியை வினவ, அவள் கூறுதல்
இன்னிசை - ராகம் பந்துவராளி
பொன்னுகர்ந்த மாமணிபோல் பூநுகர்ந்த வண்டினம்போல்
நின்னடர்ந்தி ருந்தஎனை நீநினைந்த தேதுரையாய்
மின்னணங்கே பாங்கியேகேள் விஞ்சுபுகழ் நடராசர்
தன்னையீண்டு கண்டுமயல் தாங்கச் சகியேனே.
இன்னிசை: ராகம் என்றே பொருள் படும்; அல்லது திருமலை முருகன் பள்ளு ஏடுகளில் கண்டபடி, கலிப்பா என்றும் பொருளாகலாம். இப்பாடலில் முதலிருவரிகள் பாங்கி கூற்று; பிந்திய வரிகள் அதிரூபமோகினி கூற்று.
---------
[18] தரு - ஆதி தாளம்
1. பேராசை கொண்டே னிப்போ மானே - இந்தப்
பெண்கள் நகைக்கப் பேதையா னேனே
தீரா மதன்கணைக் குள்ளா னேனே - தில்லைச்
சிதம்பரர் மீது மயலா னேனே (பேரா)
2. இந் நிலத்தில் ஒரு துணை காணேன் - தாதியர்
ஏது சொன் னாலும் மன தூணேன்
சின்ன வயதில் துயர் வீணேன் - நான்
செய்வ தேது புலம்ப நாணேன் (பேரா)
3. இந்த நிலவும் அதி கோரம் - நான்
ஏதொன்றும் அறியேன்வி சாரம்
சந்ததம் புண் ணாகுது சரீரம் - இந்தச்
சமயம் துணை எவர்ஆ தாரம் (பேரா)
4. கங்கு லிளங்குயில் கூவுது - என்றன்
காம விகாரந்தணி யாது
கொங்கை தனில் கந்தஞ்சகி யாது - புகழ்
கோலப் பொன்னம்பலவர் மீது (பேரா)
மதன் கணை - மன்மதன் விடும் அம்பு. மனது ஊணேன்: ஊன்றேன்.
------------
[19] தூது சொல்லுமாறு பாங்கியை வேண்டல்
தாழிசை - தோடி ராகம்
சிவகாமி மணாளர் சர்வேசர் கயிலாசர்
திரிசூலா யுதமேந்திய செகநாத நடேசர்
தவராசர்கள் துதிசெய் திகழ் சகலாகம சீலர்
சபைவாணர் என்றனை நேரிட சமதானமே புகல்வாய்.
எவராகிலு முண்டோ உனைக் கிணையாகவே சொலவே
இதுவேளையில் உதவிக்கினி எதிராயுப காரம்
புவிமீதினில் ஒரு கோடிபொன் பொருள்நேர் சொல்ல லாமோ
புனை தூதது புரிவாய்வரு புகழ்சேர்சகி மானே.
நேரிட - அருள் செய்து எதிர்ப்பட. சமதானம் - சமாதானம்.
[பாங்கியைத் தூது விடுத்து, அதிரூப மோகினி அவள் வரவை எதிர்பார்த்திருக்கிறாள். அச்சமயம் குறி சொல்லும் குறத்தி வருகிறாள்.)
---------
[20] குறத்தி வருதல்
வண்ண விருத்தம் - ராகம் காம்போதி, ஆதி தாளம்
சாத்திரத் தாகம வேதத்தி னுட் பொருள்
வாக்கியத் தாலொரு முதலென நின்றதோர்
தாட்டிகத் தேவம காதேவ சங்கர -நடராசர்
வீற்றிருப்பா ரென்றும் அனவயல் சூழ்ந்திடும்
பாக்கியத் தாலனை வோரும்ம கிழ்ந்திடும்
மேட்டிமை சேர்புலி யூரெனு மிஞ்சிய - திருநாட்டில்
நேர்த்தி அக் காமணி பலகறை பூண்டுயர்
சூட்சுமத் தாலிவு லேகவ சீகர
நேர்ப்பமைத் தேவெகு நாகரி கப்ரிய -வனமாது
மாத்திரைக் கோலக் குறக்கூடை கொடுங்கையில்
ஏர்ப்பரித் தேமட மான்மகிழ் குறிபுகல்
வார்த்தை எடுப்பாய் மாது மகாசபை - வந்தாளே.
அனவயல் - அன்னவயல்; 1 - 19. மேட்டிமை - மேன்மை. அக்காமணி - ருத்திராக்கமணி. பலகறை - சோகி மணி. உல்லேகம் -- புனைந்துரைக்கும் திறன். கொடுங்கை - மடித்த கை.
----------
[21] குறவஞ்சி வருணனை
அகவல் - ராகம் கேதாரகௌளம்
சகல லோகேசன் சதாசிவ ருத்திரன்
சுகபல தாயகன் சோபன சரிதன்
தத்வப்ர காசன் தாண்டவராயன்
முத்தி சொரூபன் முராரிக்கு மைத்துனன்
சிற்பர தேவன் சிதம்பர நாதன் 5
தற்பர லோகன் காட்சி சொரூபன்
நித்தியநிர் வாணன் நிறம்பல உக்ரன்
சத்திய லக்ஷண தாபர மானோன்
பதஞ்சலி வியாக்கிர பாதமா முனிக்குப்
பதம் பெற முத்திப் பாக்கிய மளித்தோன் 10
மன்மத னுக்கும் துற்சக னுக்கும்
நன்மையாய் முத்தி நானெனத் தந்தோன்
தெரிசிக்க முத்தி ஒருமித் தளிப்போன்
மன்று ளாடும் மாநட ராசன்
என்றும் சபையில் எழில்பெற நடித்தோன் 15
திங்கள் பன்னிரண்டும் மங்களம் பெற்றோன்
பார்புக ழாளன் பணிபதி பூஷணன்
நீர்புகழ் மேகம் நீண்டபொற் சடையோன்
கால சங்கரன் கபாலதரக் கையன்
சூலதர பாணி தோகையுமை பாகன் 20
காலிற் சிலம்பு கலின்கலின் எனவே
ஞாலம் விளங்க நடம்புரிந் தருள்வோன்
குஞ்சித பாதக் கூர்மணிக் கெச்சை
எஞ்ச லொலிக்கு என்றும் நடித்தோன்
சுந்தரக் கையால் சூடிநின் றாடச் 25
செந்தழல் மானிரு செங்கை விளங்க
வெம்புலித் தோலணி மெய்யில் துலங்க
அம்பொற் சடைமீ தம்புலி யாட
எண்டிசைப் பிரமன் வெண்தலை மாலை
அகண்டித மார்பில் அமர்ந்திய லாட
அரவப் பணிகுழை அதிசய மாக 30
இரவிப் பிரபையொளிர் இந்நிலம் விளக்கச்
செங்கையில் அரவக் கங்கண பூஷணம்
முன்கரந் தோளும் முழுதும் விளங்கத்
தேகமாத் தியந்தம் திருநீ றணிந்து 35
லோகமெங் கெங்கும் ஒளிவளந் திகழக்
கண்டத் தில்விட கண்டந் துலங்கக்
குளிர்நகை வதனம் ஒளிதிகழ் பெறவே
முக்கிய மானதோர் முக்கண் விளங்க
அம்பலத் தாடும் செம்பொனம் பலவர் 40
அரியயன் ருத்திரன் அமரர்கள் முனிவர்
இருளசு ரர்களும் இருடி கந்தருவர்
கின்னரர் தேவர் கிம்புருடர்களும்
மின்னில வேந்தன் இரணிய வன்மனும்
தெரிசிக்க முத்தி சீபதந் தந்தோன் 45
தில்லையில் வாழும் சிதம்பர தேவன்
சொல்லரி தாயதோர் சுந்தர நாட்டில்
அதிரூப மோகினி அவளுடைப் பாங்கி
மதிமுக வனிதை மாதுசொற் பொருட்டால்
புலிசையில் வந்த புனிதமா மாது 50
காலினில் நூபுரம் கலின்கலின் எனவே
ஒலக்க மாக ஒளிதிகழ் பெறவே
மேகலா பாரமும் வாகுடன் ஒலிக்கக்
காதினில் ஓலை சீதமதி நேர
நெரிதன பாரம் கிரிபோ லகாரம் 55
சங்கு மணிச்சரடும் அங்கமதி லப்பணி
அக்கர மணிமெய்யில் லெக்கா யணிந்து
மாத்திரைக் கோலும் நேர்த்தியாப் பிடித்து
குறிக்கா ரணமே குறக்கூடை யதனை
இடுக்கிக் கொண்டிய லடக்கத் துடனே 60
விரகம தாகிய திரள்மா திற்குள
சஞ்சலந் தீர்குற வஞ்சிவந் தனளே.
தாயகன் - தருபவன். முராரி - திருமால். துற்சகன் இரணியவர்மன் முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்றோர். ஓலக்கம் - கொலுக்காட்சி. நேர - ஒத்திருக்க.
-----------
[22 ] நிரைத் தரு
காண முத்திநிர் வாண மருள்செய்கீர்
வாணர் சகலபு ராணிகர்
வாணர் விசயகல் யாணர் அம்பல
வாணர் புலிசைநன் னாட்டிலே -
லோக வசீகர தேக ஒளிவளர்
நாக ரீகப்ரிய கேசரி
யோக விசயவி வேக விதரணி
வாகுபுரி மெய்யில் விளங்கவே - குறவஞ்சி வந்தாள்.
வாகுபுரி - தோளில் அணியும் ஆபரணம். குறவஞ்சி -குறப் பெண்.
-----------
[23]
ஈசர் கயிலைவி லாசவரதர் உல்
லாச மகிமை ப்ர காசகர்
பாச மகல் செய்வி லாசதிருநட
ராசர் மனமகிழ் சபைதனின் -
காதல் வளர்மட மாது மனதறிந்
தோது பலகுறி நீதமாய்ப்
போதனைகள் திரளோதி வரிசை கொள்
மாது வகை சொல்வி னோதமாய்க் – குறவஞ்சிவந்தாள்.
----------
[24]
இன்ப மருள்சக தம்பை உளமகிழ்
நண்பர் நிகிலசி தம்பரர்
உம்பர் முனிவர்நி தம்புகழ் திரு
அம்பலவர் மகிழ் சபைதனில் -
அக்கு மணியொடு மிக்க வரிசையாய்ப்
பக்க மணிகள்து லக்கமாய்
ஒக்க பணியொரு மிக்கவே யணிந் -
திக்குளதிசெய மாகவே - குறவஞ்சி வந்தாள்.
சகதம்பை - உலகநாயகி. நிகில் சிதம்பரர் - பிரபஞ்சமெல்லாம் ஆடரங்காகவுடையவர். அக்குமணி - உருத்திராக்கமணி.
------------
[25]
எண்டி சைகொள்பிர மாண்ட நாயகர்
குண்டி லீகுல பூஷணர்
சண்ட வேகவுத் தண்ட மாவிட
கண்டர் சபைவாணர் நாட்டிலே -
நேர்த்தியானதோர் மாத்திரைக் கோல்கையில்
வாய்த்த குறக்கூடை ஏற்கவே
சேர்த்துக் கொடுங்கையில் ப்ரார்த்தனை யுங்கை
பார்த்துப் பலகுறி சொல்லவே - குறவஞ்சி வந்தாள்.
உத்தண்ட - உக்கிரமான.
----------
[26] வெளித்தரு - ராகம் ஆதிதாளம்
செஞ்சொ லிரஞ்சித மஞ்சுள பஞ்சர
இன்சொ லிரஞ்சித மிஞ்சப ரஞ்சி - வஞ்சிவந்தாள்.
உலகத்தில் பலவிதத் தலமிக்க நிலைதனில்
இலகுசஞ் சலமகலப் புலிசைநன் னாட்டில் - வஞ்சி வந்தாள்.
பாசவி மோசன ஈசந டேசப்ர
காசவி ராசித ராச சபைதனில் - வஞ்சி வந்தாள்.
லக்ஷவி தெக்ஷண கட்செவி கச்சணி
சிற்சபை தெக்ஷகர் இச்சை கொள் நாட்டில் - வஞ்சி வந்தாள்.
மஞ்சுள பஞ்சரம் - அழகிய வடிவம். விதெக்ஷண - விதர்க்கண; பேச்சுத்திறமையுள்ள. கட்செலி - பாம்பு.
-----------
[27] குறத்தி வாசல் வளம் கூறுதல்
தரு
1. திருமருவும் வாசலிது
சிற்சபைதன் வாசலிது
கருணையுடன் நடஞ் செய்யும்
கனக சபை வாசலிது.
2. செகதலத்தோர் போற்றி செய்யும்
தேவசபை வாசலிது
அகிலமெல்லாம் பணிந்தோங்கும் - அம்மே
ஆதிசபை வாசலிது.
3. ரமணியமாய் ஒளிவிளங்கும்
ராசசபை வாசலிது
கமலன்கம லாசனன் முக்
கண்ணனுந்தே வேந்திரனும்.
4. முனிவர்களும் அமார்களும்
மூவாயிர வேதியரும்
அனவரதம் பணிந்தோங்கும்
அம்பலவர் வாசலிது.
5. காசினியில் அனைவோர்க்கும்
காணமுத்தி வரம்பெறவே
மாசணுகா நடம் புரிந்து
வாழ்வுதவும் வாசலிது.
6. விஞ்சு செம்பொன் னால்நிரைத்த
விபவநவ கும்பமுடன்
பஞ்சாட்சரப் படி விளங்கும்
பரமசபை வாசலிது.
7. கோபுரப்ரா காரமுடன்
கொடிக்கம்ப மண்டபமும்
சோபனஞ்சேர் மணியொலிக்கும்
துய்யசபை வாசலிது.
8. தித்திமத் தளதாளச்
சின்னமுடன் நாகசுரம்
ஒத்துடமா னங்கள் மிக
ஓலமிடும் வாசலிது.
9. சுத்த சங்கீ தங்க ளென்றும்
துய்யவேதப் பா ராயணமாம்
நித்த கல்யாணம் விளங்கும்
நிர்த்தசபை வாசலிது.
10. தேவதேவர் நடராசர்
தேவிசிவகாமி பங்கர்
மூவர்தமிழ்க் கிரங்கியதோர்
முக்ய சபை வாசலிது.
11. சிவராஜ தானி எனும்
சிதம்பரமா தலத்தில்
தவராசர் பணிந்தோங்கும்
சபைவாணர் வாசலிது.
வாசல் வளம் கூறுதலாவது, பாட்டுடைத் தலைவரின் வாயிற் பெருமையைப் புனைந்து கூறுதல். கமலன் - திருமால். கமலாசனன் - பிரமன். டமானம் - டமாரம். சிவராஜதானி - சிதம்பரத்தின் பெயர்களில் ஒன்று.
----------------
[28 ] அதிருபமோகினி குறத்தியின் குலமும் வரலாறும் வினவுதல்
எழுசீர் விருத்தம் - ராகம் காம்போதி
மாநாக கங்கைநதி தாராள திங்கள்முடி
மாறாமல் என்பும் அணிவோன்
மேனாக மென்பணிகொள் சீராரும் அம்பலவர்
வீறோத வந்த மயிலே
தேனே வளர்ந்தமொழி மானே விளங்குமொளி
சீராரும் அரம்பையர்கள் சொல்நீ
நானே தெரிந்துகொள நீயாருன் வங்கிசமென்
நாணாமல் நின்று ரையுமே.
என்பு - எலும்பு. நாகமென்பணி - பாம்பின் திருத்தொண்டு. வீறு - சிறப்பு. வங்கிசம் - வம்சம், குலச்சிறப்பு.
----------
[29] குறத்தி தன் குலச் சிறப்புரைத்தல்
தரு - அடதாளம்
1. எங்கள் குலம் தெய்வகுலம் அம்மே - அதை
ஈசர் நடராசர் அறிவர் அம்மே.
தென்கயிலை நாட்டினில்வந் தேனே - நானே
சித்தக்குறி சொல்குறத்தி என்பேர் தானே அம்மே.
2. காணிபூமி முழுதும் ஆளப் பிறந்தோம் - ஒரு
காசளவும் இறையிறுக்க மனம் பொருந்தோம் அம்மே.
வீணுக்கே யுழைக்கும் வேளாண்மை வேண்டோம் - என்றும்
வேலை செய்வது சோலி என்றதைத் தீண்டோம்.
3. விசய னெங்கள் குலவேடம் புரிந்தான்காண் - அந்த
மின்னாளைக் கைவசம் கொண்டான் காண் அம்மே.
உசிதமான தெய்வக் குறச் சாதி - இந்த
உலகில் அதி சயங்கள் எங்கள் சேதி.
4. ஈசனுக்குக் கண் கொடுத்தான் அந்நாளில் - அவன்
எங்கள் குலம் காண் விருதன் வாழி அம்மே.
மாசணுகாக் குறி சொல்வோம் அம்மே - நாங்கள்
மலையாளக் குறத்தி கேளும் அம்மே.
இறையிறுக்க - அரசனுக்கு வரி செலுத்த, கண் கொடுத்தான். வேடரான கண்ணப்பர். விருதன் - வீரன்.
---------
[30] குறத்தியின் மலை வினவுதல்
விருத்தம்
ஆதி அந்தமாய் விளங்கும் அம்பலவர் நாட்டில்
சீத சந்திரோதயம் போல் சேர்ந்த குற மாதே
சாதி வங்கிச மேயு ரைத்தாய் தரணிவள் மாதே
நீதிரிந்த மாம லைகள் நேர்ந்துரை செய் வாயே.
-------------
[31] குறத்தி மலைகளைக் கூறுதல்
தரு - சங்கராபரண ராகம்
1. சந்திரனும் சூரியனும்
சகலராசி நவக்ரகமும்
விந்தையாய் வலம்புரிகொள்
வித்தார மேருமலை.
2. மேருவைச் சூழ்ந்திருக்கும்
மேலான தோர் ஏழுமலை
காரண சிவன் வீற்றிருக்கும்
கயிலைகிரி காந்தமலை.
3. காந்திவளர் சிவகாமி
கன்னிசிவன் கயிலைமலை
சேர்ந்திருப்பார் முனிவரென்று
சித்ரகூடப் பர்வதமும்.
4. சிந்துமலை அஷ்டகிரி
சிம்மாத்திரி அருணகிரி
விந்த்யமலை சேஷகிரி
வேதகிரி ஸ்ரீசைலம்.
5. சந்தரகிரி விருத்தகிரி
சக்ரவாளப் பர்வதமும்
சிந்துராசன் தன்னிடமாய்ச்
சேர்ந்திருக்கும் பினாகமலை.
6. கொங்குமலை குடகுமலை
கோவர்த்தன பர்வதமும்
வேங்கடா சல முதலாய்
வேணமலை சஞ்சரித்தேன்.
7. சிங்கார நடராசர்
தேவதேவர் நடஞ்செய்யும்
தென்கயிலை ஸ்ரீ சிதம்பரம்
தெரிசிக்க வந்தேனம்மே.
காந்தமலை - கந்தகிரி, முருகனுடைய மலை; கயிலைமலையருகே யுள்ளதென்பர். வேதகிரி - கழுக்குன்று. விருத்தகிரி - விருத்தாசலம்.
----------
[32] குறத்தியை மலையிலுள்ள வளங் கேட்டல்
வண்ண விருத்தம் - ராகம் காம்போதி
முத்திக ளருள்செய்வி சித்ரசபைவரு
முக்கிய மமைகொள் நடராசர்
நித்திய மகிழ்புரி வர்த்தன புலிசையின்
லட்சண முரைசெய்த குறமாதே
இத்தனை வரைகள் படித்த உன்னதிசயம்
எத்தனை யின்னமின்னம் அறிவாய்நீ
உற்றதோர் மலைகளில் உச்சித வகைகளை
ஒப்பனை யுடனிங்குப் புகல்வாயே.
--------------
[33] குறத்தி சிதம்பரநாதருக்குரிய மலையின் வளங் கூறுதல்
தரு
1. தெரிசன வேதியுண்டு திரள் ரத்ன ராசியுண்டு
பரிசன வேதியுண்டு பவளக் கொடிக ளுண்டு.
2. சிவகங்கைப் படித்துறையும் திகழ் சந்த்யா மண்டபமும்
நவநவமாய் ஆயிரக்கால் நாகரிக மண்டபமும்.
3. நாலுமகா மேருவெனும் நாலுகோபு ரங்களுமே
கோலநவ ரத்னகாந்தி கொடிக்கம்ப மண்டபமும்.
4. பாண்டிநாயக மண்டபமும் பாவுபிரா காரங்களும்
தாண்டவ மாகின்றதோர் சபை ஐந்தும் மற்றுமுள்ள
5. தருமசி வாலயத்தில் சகலதி ருப்பணிகள்
வரிசைவ ளர்ந்ததெங்கள் மலை அதி சயமம்மே.
6. காதலரம் பலவருக்குள் கற்பூர விளைவுண்டம்மே
போதரவாய்ப் பூசுகின்ற புனுகுபூனை உண்டம்மே.
7. நடராசர்க் கன்பாகிய நவதள வில்வதரு
தொடர்மலர்க் கொன்றை வ்ருக்ஷம் துங்கமலையிலு சிதம்.
8. இச்சையாம் அனவரத ஏமசபை வாணருக்குப்
பச்சைப்பாலும் பிச்சிமலர்ப் பர்வதத்தில் உண்டம்மே.
9. சுந்தர நடராசருக்குத் துய்ய நரவா கனமும்
தெந்தத்தினால் நிருமிக்கவே திரளான கொம்புண்டம்மே
10. வீறரம்பலவர் தரிக்க வியாக்ரசர்மம் உண்டம்மே
கூற அதிசயமான குறிஞ்சித் தேன்கள் உண்டமேம்.
11. சம்பு சிவகாமி பங்கர் சச்சிதானந்த சொரூபர்
அம்பலவர்க் கானவஸ்து அதிசயப் பொருள்களுண்டு.
தரிசன வேதி - தாழ்ந்த வுலோகங்களைப் பொன்னாக்கவல்ல பச்சிலை; பரிசன வேதி - அதற்கான மருந்து. பாண்டிய நாயகம் - தனியே யமைந்துள்ள முருகன் கோயில். வியாக்ரசர்மம் - புலித்தோல்.
----------
[34] குறத்தியை நாட்டு வளங் கேட்டல்
தாழிசை - தோடி ராகம்
காரணிசிவ காமிவல்லபர் காளியுடனூ டாடினோர்
காலகால தேவதேவ காம சங்கர கண்ணனார்
ஆரணர்பரி பூரணர் உரி வாரணர் மகா காரணர்
ஆவலுடனம்பலவர் நாட்டில் அடர்ந்து வந்ததோர்கோதையே
பாரமலையில் மீதிலுசிதம் பகர்ந்துரை செய்த குறப்பெண்ணே
பாக்கியசாலி யோக்கியமே உன்வாக்கியே என் சிலாக்கியமே
தாரணிதனில் நேருகைக்குநீ தானேசுந்தர மானநீ
சஞ்சரித்துள தேசவார்த்தைகள் தயவுடனுரை செய்யுமே.
------------
[35] குறத்தி நாட்டு வளங் கூறுதல்
அகோ சரசகோகிலமான அதிரூபமோகினி!
தரு – ராகம் .. அடதாளம்
1. காசி காச்மீர கேகய பாஞ்சால
காம்போச பப்பர தேசம்
போச சௌராஷ்டிர மாகத கூர்ச்சரம்
*..னைந்த வச்சிர தேசம்.
2. அங்க வங்கக் கலியாணம்
ஆரி அத்திய தேசம்
கொங்கு வங்காள சிங்கள மராட்டிய
கொங்கண தெலுங்காண தேசம்.
3. சிந்து கேரள வாட்டக் காதமும்
சீனந் தீவாந்தர தேசம்
விந்தை சாளுவ காந்தார வங்கம்
விதர்ப்பம் காஞ்சிப்ர தேசம்
4. பாண்டிய திராவிடம் ஐம்பத்தறு தேசம்
பாரில் சஞ்சாரங்கள் செய்தேன்
தாண்டவம் புரிந்தோங்கும் நடேசற்பொற்
சபைகாண வந்தேன் காணம்மே.
-----------
[36] குறத்தியைத் தலப்பெருமை கேட்டல்
விருத்தம்
வெண்ணிதரு தென்புலிசை வீறு நடராசர்
நண்ணிவளர் எல்லைதிகழ் நாட்டில் வரு மானே
பண்ணுலவு தேசம் பகர்ந்த குறமாதே
புண்ணியத் தலங்களவை பூண்டுரை செய்வாயே.
-------------
[37] குறத்தி தலங்கள் கூறுதல்
தரு - ராகம் பந்துவராளி, அடதாளம்
பல்லவி
புண்ணியத் தலஞ் சொல்லக் கேளாய் - என்றுந்
தண்ணளி சூழ்தில்லைச் சபை வருமானே (புண்ணிய)
சரணம்
1. காசி பதரி கேதாரம் திருக்
காளத்தி கோகர்ணம் ஸ்ரீ அரித்துவாரம்
பாசுபதம் காஞ்சிபுரம் சிவ
பஞ்சநதம் கௌரி மாயூரம் (புண்ணிய)
2. விருத்தாசலம் மத்தியார்ச்சுனம் - சதுர்
வேதாரண்யம் சேது மல்லிகார்ச் சுனம்
சித்தருணையும் திருபுவனம் - ஆரூர்
திருக்கழுக்குன்றமும் கும்பகோணம் (புண்ணிய)
3. ஆயிரத் தொன்றெங்குந் துலங்கும் - அது
அர்த்த சாமந் தன்னிலம்பலத் தொடுங்கும்
மாயிரு ஞாலத்தி லிலங்கும் - சபை
வாணரைத் தெரிசித்துடன் முத்தி விளங்கும் (புண்ணிய)
பஞ்சநதம் - திருவையாறு. மத்தியார்ச்சனம் - திருவிடை மருதூர்.
------------
[38] குறத்தியைத் தீர்த்த மகிமை கேட்டல்
அறுசீர் விருத்தம் - ராகம் சாவேரி
போற்றிகொள் வாமதேவர் புகழ்நட ராசர் மேவிக்
காத்திடும் புலிசை நாட்டில் கருத்துடன் வந்த மின்னே
பார்த்திடுந் தலங்கள் முற்றும் பகர்ந்தனை குறப்பெண்ணேநீ
தீர்த்தமா நதிக ளெல்லாம் தெரிந்துரை செய்குவாயே.
வாமதேவர் - சிவபிரான்; ‘வண்டார் கொன்றையாய் வாம தேவா’ -தேவாரம் . வாமதேவம் என்பது சிவபிரான் ஐம்முகங்களில் ஒன்று.
---------
[39] குறத்தி தீர்த்த மகிமை கூறுதல்
தரு - ராகம் கண்டாரவம், ஆதிதாளம்
தீர்த்த மகிமை கேளம்மே
தீர்த்த மகிமை கேள்.
1. தீர்த்த மகிமை கேள் பெரும்பற்றப் புலியூர்
செம்பொனம் பலவர் திகழ்வள நாட்டில்
நேர்த்தி யாகவரு குறவப் பெண்ணரசே
நியம மாகவுரை செய்கிறே னிப்போ.
2. கெங்கை மாநதி சரசுவதி யமுனை
க்ருஷ்ண வேணி கோதாவரி சரயு
துங்கபத் திரிநதி நர்மதை கண்டகி
சொர்ண பத்திரிநதி சிலநதி அறிவேன்.
3. உபயகா வேரி தாம்பிர வேணி
உசித வகை பவானி பினாகி
சபல சேதுமணி முத்தா நதிமுதல்
சகலநதியும் அறிவேன்கா ணம்மே.
4. குப்பி தன்னில் மந்தாகினி சத்துடன்
கோதா வரிசலம் பூரிக்க வேணும்
கற்ப கோடிக்காலம் சிவகங்கை நீர்வேறு
கலந்தி டாமலும் பரிசுத்த மாகும்.
5. சிதம்பரத் தலத்தில் குளப்படித் தண்ணீர்
சிவகெங்கா சலமே யதில் மூழ்கிப்
பதந்தரும் நடராசரைத் தெரிசிக்கப்
பரிவுகொண் டிங்கே வந்தேன்கா ணம்மே.
கண்டகி - கங்கையில் கலக்கும் ஓர் உபநதி. பினாகி - பெண்ணை. சபலசேது - பலந்தரும் சேது தீர்த்தம். சிவகங்கை - சிதம்பரம் ஆலயத்துள் இருக்கும் சிவ தீர்த்தம்.
----------
[40] குறத்தியைச் சாதி வழக்கம் கேட்டல்
இன்னிசை - ராகம் பந்துவராளி
பொங்க மானமகா நந்தி வாகனர்
புண்டரீகர் புலிசை நன் னாட்டிலே
மங்களா கிருதி யாகவே வந்ததோர்
வஞ்சி யேகுற மாதெனும் அன்னமே
கங்கை மாநதி தீர்த்த முரைத்ததென்
காதுக் கின்ப மாச்சுது காண்மின்னே
உங்கள் சாதி வழக்கமே கேட்கிறேன்
ஓது நீஎனக் குசித மாகவே.
-------
[41] குறத்தி சாதி வழக்கம் கூறுதல்
தரு – ராகம், சம்பை தாளம்
சாதி எங்கள் சாதிகுறச் சாதியடி யம்மே
நாதமுறு சிதம்பரர் நாட்டில் வரு மானே.
1. மாணிக்கத்தால் மதிலெடுத்து மரகதத்தால் தூண் நிறுத்தி
வாசனைகள் வீசும் சந்தன வனப்பலகை சேர்த்து
ஆணித்தர மாகஆனைக் கொம்பதனால் மேய்ந்து
அரண்மனைக ளாகநாங்கள் அமைத்துக்குடி யிருப்போம்.
2. தேனுலையில் சேர்த்துத்தினை தீட்டிச்சமைத் திடுவோம்
தேக்கிலையில் பரிமாறித் தினந்தினமும் புசிப்போம்
பூனை மணிச் சங்குவக் காமணி தரிப்போம்
புலித்தோலில் படுப்போமம்மே அரிதழைகள் உடுப்போம்.
3. மங்களமாய் அம்பலவர் மைந்தனெங்கள் குலத்தில்
வள்ளியம்மை யைமகிழ்ந்து மணம்புரிந் தான்காண்
எங்கள்குறச் சாதிவண்மை இவ்வுலகில் புதுமை
இன்னமின்னம் அதிசயங்கள் ஏராளம் அம்மே.
----------
[42] குறத்தியின் வித்தை கேட்டல்
கலித்துறை - ராகம் பைரவி
சிற்சபை யுற்று நடம்புரிந் தோங்கும் சிதம்பரர்வாழ்
நிச்சய நற்புலி யூரில்வந் தாய் நல்ல நேரிழையே
மெச்சிட முக்யமுன் சாதிகண் டாய்குற மின்னரசே
உச்சித வித்தைகள் யாவையும் நன்றா உரை செயுமே.
----------
[43] குறத்தி வித்தையின் பெருமை கூறுதல்
தரு- ராகம் முகாரி, ஆதி தாளம்
சாதிவித்தை சொல்லக் கேளம்மே - எங்கள்
நாதர்பொன் னம்பலவர் நாட்டில்வரு மானே.
1. யோகசித் தறிவு விசாலம் - கெச
கோகர்ணம் இந்தர சாலம் - இந்த
லோகவசிய மிந்த்ர சாலம் - முற்றும்
ஏகாதசப் பரிட்சை எனக் கனுகூலம்.
2. ஆயிர முண்டுபாய சூத்திரம் - பர
காயப்ரவேசம் திரண மாத்திரம் - வெகு
மாயாவினோத மென்வி சித்திரம் - பாரில்
ஆயகலைக் கியானிநா னதற்கான பாத்திரம்.
3. ஆதி மனிதசரித வித்தை - மறை
ஓது பூசைகள் கிரியா வித்தை - சபை
நாதர் தியானமே யோக வித்தை - பொருள்
பேத மன்றிலறிவு பிர்மஞான வித்தை.
4. காலப் பருவமறி வோங்காண் - என்னைப்
போலில்லை என்றுமிருப் போங்காண் - இந்த
ஞாலத்தில் கீர்த்திபெற்ற நான்காண் - பாரில்
கோலக்குறி சொல்வதெங்கள் குலவித்தைதான்காண்.
கசகர்ணம், கோகர்ணம் ஆகிய வித்தைகள். (கசம் - யானை, காணம் - காது; யானை போல் காதை ஆட்டுதல். கோ - பசு) உண்டு உபாய சூத்திரம் என்க. திரண மாத்திரம் - துரும்பு போல.
வசனம்
அகோ அதிருபமோகினி! நானறிந்த கெசகர்ணம் கோகர்ணம்
இந்திரசாலம் அக்கினித்தம்பம் சிரத்தம்பம் ஆகாச கமனம்
காயப்பிரவேசம் வச்சமவாதம் வயத்தம்பனம் அதிருசம் அஞ்சனம் ஆகர்சனம்
சரியை கிரியை யோகம் ஞானம் இவை முதலான வித்தைகளெல்லாம்
அறிவேனடி அம்மே.
---------
[44] குறத்தி சொன்ன குறிகளும் பெற்றவரிசையும் வினவுதல்
அறுசீர் விருத்தம் - ராகம் சாவேரி
வன்கண நாதர் சூழும் மாசபை வாணர் நாட்டில்
மின்கொடி போலு தித்த மெல்லியே குறப்பெண்ணேநீ
முன்குறி யார்க்குச் சொல்லி மோகன வரிசை பெற்றாய்
உன்கனவரிசை எல்லாம் உண்மையாய் உரைசெய்வாயே.
வசனம்
அகோ வாரும் பெண்ணே குறத்தி நீ அறிந்த வித்தை யெல்லாம் கேட்டு
மிகுதியும் சந்தோஷமாச்சுது. நீ முன்னாலே யார்யாருக்குக் குறி சொல்லி
வரிசைபெற்றுவந்தாய்? சொல்லடி குறத்தி.
----------
[45] குறத்தி தான் முன் சொன்ன குறிகளும் பெற்ற வரிசையும் கூறுதல்
வசனம்
ஆனால் சொல்கிறேன் கேளடி அம்மே.
ராகம் சாவேரி - தாளம் பஞ்சகாதமெட்டியம்
செனகமகாராசன் மகள் சீதைகுறி கேட்கச்
செயராகவன் திருமார்பு ஸ்திரமாமுனக் கென்றேன்
கனகமணிச் சிலம்பும் மார்பில் கண்டசரப் பதக்கம்
கனமாயவள் வெகுமானங்கள் கருத்தாயெனக் களித்தாள். 1
வாணிசர சுவதி என்னை மகிழ்ந்தேகுறி கேட்க
மறையோன் நாவில் உறைவாயென்று வளமாய்க்குறி சொன்னேன்
காணிக்கைத் தரமாயிரு காதில் கொந்த ளோலை
ஆணித்தர மாக எனக் களித்தாள் மனங் களித்தேன். 2
மலையோன்மகள் உமையாள் என்னை மகிழ்ந்தேகுறி கேட்க
மாதேவர்தம் இடபாகமே வருங்காண்உனக் கென்றேன்
பலபூஷண வெகுமானங்கள் பவளத்திரள் கோவை
பட்டாடைமேல் ஒட்டியாணமும் பரிந்தே எனக் களித்தாள். 3
அம்புவிமேல் மடவார்க்கென்றும் ஆசைக்குறி சொன்னேன்
அபிமானம் அவர் செய்ததில் அடியேன் மனம் மகிழ்ந்தேன்
என்பட்சமீ தறியாயெனக் கீதெல்லாம் பொருளல்லவே
செம்பொற்சபை நடராசரைத் தெரிசித்திட வந்தேன். 4
மறையோன் - பிரமன். கொந்தளவோலை - ஒரு காதணி; கொந்தளம் - மாதர் கூந்தல்.
வசனம்
அகோ அதிரூப மோகினி! நான் முன்னாலே சீதை லட்சுமி முதலான இந்த லோகத்தில் உண்டான ஸ்திரீ சனங்களுக்கெல்லாம் குறிசொல்லி ஆடையாபரணமும் சகலபூஷணமும் வாங்கினேன். அதுவெல்லாம் எனக்குதவி விசேஷமல்ல. அம்பலவாண சுவாமியைத் தெரிசிக்க வேணுமென்று வந்தேனடியம்மே.
-----------
[46] அதிருப மோகினி குறத்தியைக் குறிகேட்டல்
விருத்தம் - ராகம் சாவேரி
புட்பசோலை கள்சூழ் தில்லைப் பொற்சபை வாணர் நாட்டில்
விற்பன மாக வந்த மென்குற மாதே கேளாய்
கற்புள மாதர்க் கெல்லாம் முகக்குறி ரேகை பார்த்தல்
இப்படி யேசொல் லென்கை இலட்சணம் உரைசெய் வாயே.
வசனம்
அகோ வாரும் பெண்ணே குறத்தி! நீ முன்னாலே குறி சொல்லி
வரிசை பெற்றுவந்த தெல்லாம் கேட்டு மிகுதியும் சந்தோஷமாச்சுது.
இனி என் கை இலட்சணம் பார்த்துச் சொல்லடி குறத்தி.
குறத்தி குறி சொல்லுதல்
கை இலட்சண மென்றல்லோ கேட்கிறாய். ஆனால் சொல்லுகிறேன் கேளடியம்மே.
----
[47 ] கை பார்க்கிற தரு - சம்பை தாளம்
கை பார்க்கிறேனம்மே - கை காட்டுச் செம்பொன்
கை பார்க்கிறேன் கனகசபை வாணரருளால் (கை)
1. உன்றன் காதற்சிறப்பும் உள்ளங் - கையில் நிறை சிவப்பும்
ஐந்து விரல் சார்ந்த குறிப் - பானந்த மம்மே (கை)
2. அங்குட்ட ரேகை முதல் ரேகை - அதற்கடுத்த மேல்ரேகை
சங்கிலி போல் சன்ன பின்னல் - தானிய ரேகை அம்மே. (கை)
3. கனிட்டவிரல் மூளை - அனாமிகையில் மூன்றா
முனக்களவுன் தீர்க்காயுசு - உண்மை சொன்னேனம்மே. (கை)
4. சங்கரேகை சக்கரரேகை - பத்மரேகை இதுகாண்
உன்கைரேகை வெகு உச்சிதம் - உத்தம் மீதம்மே (கை)
5. முகக்களையில் லெட்சணமும் முப்பத்திரண் டுறுப்பும்
பகுத்துரைத்தேன் அம்பலவர் பரவு கருணையினால் (கை)
அங்குட்டம் - பெருவிரல். கனிட்டவிரல் - கடைசிவிரல். அனாமிகை - மோதிரவிரல்.
வசனம்
அகோவாரும் பெண்ணே, மோகினி! அம்பலவாண சுவாமி கிருபையினாலேயும்
உன் கை இலட்சணம் தானியரேகை தனரேகை சங்கரேகை சக்கரரேகை
பத்மரேகை புத்திரரேகை வித்தியாரேகை உன் முகக்களை முப்பத்திரண்டுறுப்பும்
பார்க்குமிடத்தில், நன்றாகத்தானே யிருக்குதடி அம்மே.
--------
[48] தான் நினைத்த காரியம் சொல்லுமாறு குறத்தியைக் கேட்டல்
விருத்தம்
அருட்பிரளய வாரிதிபொன் னம்பலவர் நாட்டில்
பெருக்கமுடன் வந்துறுதி பேசுங்குற மாதே
உருக்கமுடன் என்கையில் உறுப்பது உரைத்தாய்
கருத்ததில் நினைத்த குறி கண்டுரை செய்வாயே.
வசனம்
அகோ வாரும் பெண்ணே, குறத்தி! நீ என் கையில் ரேகை பார்த்துச்
சொன்ன தெல்லாம் கேட்டு மிகவும் சந்தோஷமாச்சுது. நான் நினைத்த காரியம்
இதை இன்ன காரியம் என்று சொல்லடி குறத்தி.
-----------
[49] குறத்தி சொல்லுதல்
ஆனால் சொல்லுகிறேன் கேளடி அம்மே.
தரு
1. சந்தனங் குங்கு மத்திலே சதுரமாக மெழுகியே
தங்கப் பொடியில் கோலம் நிரைத்துச் சங்கற்பம் செய்ய வேணுமே.
2. நித்தவி நாயகனை வைத்துச் சிரசில்லறுகு சூட்டியே
மெத்தத் தூப தீபமெடுத்து ஆலத்திகளும் வேணுமே.
3. முப்பழந்தேன் சர்க்கரை மோதகம் நைவேத்தியம்
கர்ப்பூரப் பிரார்த்தனைகள் செய்து கருத்தில் மகிழ்வோமே.
4. கோடி செம்பொன் சோமன்புட்பம் கூர்ந்து காணிக்கை வேணும்
சோடசோப சாரம் புரிந்து தோத்திரம் செய்ய வேணுமே.
5. சிற்சபாபதி கருணை என் சிந்தையில் வளர்ந்திருக்கவே
நிச்சய மதுதானே நீ நினைத்தகுறி சொல்வேனம் மே.
-----------
[50] குறத்தி இஷ்ட தேவதையைப் பிரார்த்தித்தல்
அகவல்
சிவசம்பு ருத்திரர் சிற்பர தேவர்
தவராசர் போற்றும் சங்கர உக்கிரர்
சிற்பர விற்பன்னா தற்பரா தென்கயிலை
சங்கரா பஞ்சாட் சரசெய் துரங்கா
அம்பர லிங்கா ஆதிபாஞ் சோதி 5
சம்பு சதாசிவா சதுர்வேத வேத்தியா
சிதம்பர தேவா சிவகாமி பங்கா
பரம கல்யாணா பக்தபரி பாலா
தரும சொரூபா சச்சிதா னந்தா
சினமய ரூபா சிற்பர நாதா 10
காண முத்தியருள் கனகசபை வாணா
நீணுலவு செஞ்சடை நிராகார தேவா
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகா
ஈசசர் வேசா சபேச நடேசா
மருவளர் மோகினி மனத்தில் நினைந்தது 15
தெரிந்து நான் சொல்லச் செயந்தரு வாயே.
அம்பரலிங்கம் - ஆகாசலிங்கம்: பஞ்சபூதத் தலங்கள் ஐந்தினுள் சிதம்பரம் ஆகாசம் என்பது அறியத்தக்கது.
------------
[51] குறத்தி நல்ல குறி கண்டதெனச் சொல்லுதல்
வசனம்
அம்மே அம்மே! நல்ல நல்ல குறி கண்ட தடியம்மே.
தரு
1. வலப்புறத்தில் கெவுளி காதல் சிறப்பும் - அந்த
மாதொன்றைக் குறித்துச் செவ்வாய் சொல்லிப்பலிப்பும்
இலக்கணத்தில் சுபகிரகங்கள் உதிப்பும் - உன்றனுட
கண்ணுமிடத் தோளும் ... த்திசெய் துடிப்பும்.
2. மனதில் செயமாச்சுதடி அம்மே - இனி
வரவரப் பாக்கியங்கள் மகிழ்ச்சி யுனக்கம்மே
கனவரிசை வளருதடி அம்மே - மெத்தக்
கண்காட்சி வருமுனக்குக் கல்யாண மம்மே.
இடக்கண்ணும் தோளும் துடித்தல் நல்ல சகுனம் என்பர்: ‘பல்லியும் பாங்கொத்திசைத்தன, நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே’ என்பது ஒரு கலித்தொகைப் பாடல்.
வசனம்
கு:- அகோ வாரும் பெண்ணே, அதிரூப மோகினி! நல்ல குறி கண்டதடியம்மே.
மோ:- என்ன குறி கண்டது, சொல்லடி குறத்தி.
கு:- அதோ தெட்சண கெவுளி சொல்லுது . உ பட்சி ஆச்சுது. லெக்கினத்தில்
சுபக் கிரகம் உதயமாச்சுது, உன்றன் இடக்கண் இடத்தோள் துடிக்குது.
கெருடன் வட்டமிடுது. ஆனபடியினாலே நீ நினைத்த காரியங்களெல்லாம் செயமாகுதடியம்மே.
---------
[52] குறத்தியை நினைத்த குறி கேட்டல்
விருத்தம்
அனுக்கிரக விராட்டிதய அம்பலவர் நாட்டில்
தனித்தினிய தென்றனுயிர் தந்தகுற மாதே
எனக்குறுதி நல்லகுறி என்றியல்பு ரைத்தாய்
நினைத்தகுறி இன்னதென்று நீயுரைசெய் வாயே.
விராட்டிதய அம்பலவர்: விராட் புருடனுக்குச் சிதம்பரம் இதயத்தானம் என்று புராணங்கள் கூறும்.
வசனம்
மோ: - அகோ குறத்தி! நல்ல குறி கண்டது என்று சொன்னாயல்லோ!
நான் இன்ன காரியம் நினைத்திருக்கிறேனென்று தெரியச் சொல்லும் பெண்ணே.
கு:- ஆனால் சொல்லுகிறேன் கேளடியம்மே.
--------
[53] குறத்திதன் மாத்திரைக்கோல் கொண்டு குறி சொல்லுதல்
தரு - ராகம், அடதாளம்
1. அருள் பெற்ற மாத்திரைக் கோல் அதிசய மாத்திரைக்கோல்
திருவம்பலவர் தந்த வரிசைவெகு மானமம்மே.
2. உரிமைப் பிள்ளை நினைத்தால் உதிரத்தைக் காட்டுமம்மே
அருமைத்துணை நினைத்தால் இருதோள் கூர்ந்திடுமம்மே.
3. கணவனுக்குக் கழுத்து காட்டில்தனக் கிதயம்
குணமாய்க் காட்டும் மாத்திரைக் கோலிது சொன்னே னம்மே.
4. கூச வேண்டாம் அம்மே மாத்திரைக்கோல் இதயத்தைக் காட்டுது
ஆசை யொருவன் மேல் தோன்றுது அம்பலவர் அருளால்.
வசனம்
அகோ அதிரூபமோகினி! என் கை மாத்திரைக்கோல் லட்சணம் கேளும் பெண்ணே.
இது அம்பலவர் தந்ததாக்கும். பிள்ளை என்றால் வயிற்றைக் காட்டும்.
சகோதரமானால் தோளைக் காட்டும். கணவனுக்கானால் கழுத்தைக் காட்டும்.
ஆசைக்கானால் இதயத்தைக் காட்டும். உன் இருதயத்தைக் காட்டுது.
இருதயத்தைக் காட்டும் ஆனபடியினாலே, ஒருவன் பேரிலே ஆசை கொண்டிருக்கிறாய்
பெண்ணே.
-----------
[54] அதிருபமோகினி தன் காதலன் பேரும் ஊரும்
சொல்லுமாறு குறத்தியைக் கேட்டல்
விருத்தம் - ராகம் சாவேரி
ஏமச பையில் வாழும் இயல்நட ராசர் நாட்டில்
வாசமா மலையி ருந்து வருகுற மாதே கேளாய்
நேசமா யென்சு ருத்தில் நினைந்திருந் தேனென் றாயென்
ஆசைநா யகன்பேர் வண்மை ஆர்ந்துரை செய்கு வாயே.
ஏமசபை - பொன்னம்பலம்; ஏமம் - பொன்.
வசனம்
மோ: - அகோ வாரும் பெண்ணே, குறத்தி, நான் ஒருவன் பேரில் ஆசை
கொண்டே னென்றாயல்லோ?
அந்த ஆசை நாயகன் பேரும் ஊரும் சொல்லடி குறத்தி.
கு:- அப்படியே சொல்லுகிறேன். அல்லாமல் ஒரு தெய்வத்தின் பேர் சொல்லு.
மோ: - அம்பலவாண சுவாமி.
கு:- ஒரு தலத்தின் பேர் சொல்லு.
மோ: - சிதம்பரம்.
கு:- ஒரு மலையின் பேர் சொல்லு
மோ:- தென்கயிலை.
கு - ஒரு நதியின் பேர் செல்லு.
மோ - கங்காநதி.
கு - ஒரு வாகனத்தின் பேர் சொல்லு.
மோ: - ரிஷபவாகனம்.
கு: - ஒரு ஆயுதத்தின் பேர் சொல்லு.
மோ:- திரிசூலாயுதம்.
கு: - அம்மே அம்மே, உனக்கு ஆசை தந்த நாயகன் பேரும் ஊரும்
நன்றாகத் தானே சொல்லுறேன், கேளடி அம்மே .
---------
[55] குறத்தி சொல்லுதல்
தரு - ராகம்...... அடதாளம்
ஆசை தந்தவர் பேர்குறிப் பதுகே ளம்மே
ஈசர் நட ராசர் மகிழியல் நாட்டில்வரு மானே.
1. சிவதலம் சொல்லச் சொன்னால் சிதம்பரமென்றுரைத்தாய்
சிவதல மது அவர்க்கு ஸ்திரவா சம்மம்மே.
2. குவிந்ததோர் மலைகேட்கக் கூர்ந்துதென் கயிலைஎன்றாய்
அவரென்றும் நடம்புரிந்த ததுசெம்பொன் சபையம்மே.
3. நதியின்பேர் சொல்லென்றால் நதிகங்கை என்றுரைத்தாய்
அதுஅவர் சடைமுடியில் அணிந்திடும் நதியம்மே.
4. மதிவாக னஞ்சொல்லென்றால் பாயிட பம்மென்றாய்
அதிலேறி வருவா ரென்றும் அவர்காண் மிகவு முனக்கே.
5. திகழாயுதம் சொல்லென்றால் திரிசூலா யுதமென்றாய்
சுகமாகத் தரிக்கும் சூலபாணி காணம்மே.
6. புகழ்தெய்வப் பெயர்சொல்லென்றால் பொன்னம்பலவாணரென்றாய்
மகிமைப்போ அதுஅவர்க்கு வரிசைப்பேர் காணம்மே.
(ஆசைதந்தவர்)
வசனம்
மோ:- ஆசை தந்த நாயகன் பேரும் ஊருங் கேட்டு மிகுதியும் சந்தோஷமாச்சுது.
இன்னமொரு தரம் நன்றாய்ச் சொல்லடி குறத்தி.
கு:- ஆனால் சொல்லுகிறேன் கேளடி அம்மே.
----------
[56] அம்பலவாணர் அருள் செய்வாரென்று கூறுதல்
தரு – ராகம் …... ஆதிதாளம்
1. தென் கயிலை வாசனடி அம்மே
சிற்சபை நாதனடி அம்மே
திங்கள் நதி சூடனடி அம்மே
தேவர் நட ராசனடி அம்மே
2. ஆகாச லிங்கனடி அம்மே
அம்பல வாணனடி அம்மே
நாகாப ரணனடி அம்மே
நஞ்சுண்ட கண்டனடி அம்மே.
3. வ்ருஷப கேதனனடி அம்மே
வேதவே தாந்தனடி அம்மே
துடியாடுங் கையனடி அம்மே
துய்யநதி வாணனடி அம்மே.
4. கொன்றை மலர் மார்பனடி அம்மே
குங்குமத் தாமனடி அம்மே
என்றும் நடம் புரிவோனடி அம்மே
ஏமசபை வாணனடி அம்மே.
5. சங்கர சம்புவடி அம்மே
சாம்பசிவ ருத்ரனடி அம்மே
சிங்கார நடராசன் உன்னைத்
திருவுளம் மகிழ்வானடி அம்மே.
சூடன் - சூடுபவன். கேதனன் - கொடியுடையவன். துடி - நடராசர் கையிலுள்ள டமருகம்.
வசனம்
அகோ வாரும் பெண்ணே, அதிரூபமோகினி, உன் கை காட்டும் பெண்ணே !
-1 - 2 - 3 - மூன்று வருஷமல்ல, மூன்று மாதமல்ல, மூன்று நாளல்ல, மூன்று நாழிகையுமல்ல
- இதோ மூன்று நொடிக்குள்ளே முணுகு முணுகென்று வருகிறாரடியம்மே.
-------
[57] அம்பலவாணர் அருள் செய்தல்
விருத்தம் - ராகம் சாவேரி
தென்புலிசை வந்தருள் திகம்பரர் சர்வேசர்
சம்புசிவ சங்கர சதாசிவ மகேசர்
சம்பிரம திகம்பர பரம்பர நடேசர்
அம்பலவர் மோகினியை அன்புடன் அணைந்தார்.
வசனம்
அம்பலவாண சுவாமியும் அதிரூப மோகினியும் மகிழ்ந்திருந்தார்கள்.
----------
[58] குறத்தியைக் காணாத சிங்கன் தேடி வருதல்
அறுசீர் விருத்தம் - ராகம் சாவேரி
சங்குமுத் தாரம் பூண்டு சல்லடம் கச்சிறுக்கி
சுங்குவிட் டாடு கின்ற சுளுக்கிகை யாடிக் கொண்டு
வங்கணப் பார்வை பார்த்து மாசபை வாணர் நாட்டில்
சிங்கியைத் தேடிக் கொண்டு சிங்கனும் தோன்றினானே.
சுங்கு - தொங்கல். சுளுக்கி - பிராணிகளைக் குத்திப் பிடிப்பதற்கான கருவி. வங்கணப் பார்வை - காதற் பார்வை; 'என் வங்கணச் சிங்கியைக் காணேன்' என்பது குற்றாலக் குறவஞ்சி. சிங்கி - குறத்தி; சிங்கன் - குறவன்.
---------
[59] …..ராகம் - ஆதி தாளம்
சிங்கனும் வந்தானே - சுந்தரச்
சிங்கனும் வந்தானே.
1. உம்பர் முனிவர் போற்றும் செம்பொனம் பலவர் நாட்டில்
சொம்புச் சொகு சுடனே சுந்தரச் சிங்கனும் வந்தானே
சுந்தரச் சிங்கனும் வந்தானே.
2. கங்கண புசங்க சிவ காமி வல்லபர் நாட்டில்
சங்கு மணி தரித்துச் சம்பிரமச் சிங்கனும் வந்தானே
சம்பிரமச் சிங்கனும் வந்தானே.
3. சந்திர சேகரர் சிவசம்பு நடேசர் நாட்டில்
விந்தை யுடன் நடந்து வேடிக்கைச் சிங்கனும் வந்தானே
வேடிக்கைச் சிங்கனும் வந்தானே.
4. காண முத்தி அளிக்கும் கனக சபேசர் நாட்டில்
நாணயம் பேசிக் கொண்டு நட்டணைச் சிங்கனும் வந்தானே
நட்டணைச் சிங்கனும் வந்தானே.
வசனம்
அகோ வாரும் பிள்ளாய் சிங்கா! உன் சாதி வண்மையாக ஒரு பறவை பிடித்துத்
தாரும் பிள்ளாய்.
------------
[60] சிங்கனுக்குப் பறவை மேய்வதைச் சொல்லுதல்
தரு - ராகம் கண்டாரவம், ஆதி தாளம்
மேயுது அய்யே - பறவை - மேயுது அய்யே
அகணித குணமந்த நடனம்
மகிழ் புரிந் தருள்வோன் மாசபை வாணன்
திகழ் புலிசையில் (மேயுது அய்யே)
------------
[61] சிங்கன் பறவை குத்துதல்
தரு - ராகம் தோடி, அடதாளம்
சேருது அய்யே - பறவைகள் - சேருது அய்யே
ஆரணபரி பூரணப் பொருளாம்
அம்பல வாணர் நாட்டில் (சேருது)
1. சிறகு குளுவை கானாங் கெளிறு
தெளிவயலதிற் சேர்ந்து மேயுது
குறுங்கண்ணி சேற்றி விறங்கிக் குத்திக்
குனிந்து நிமிர்ந்து ஒருகை பார்ப்போம் (சேருது)
2. உள்ளான் குருவி கொக்கு மடையான்
வெள்ளம் வடியத் தாவில் மேயுது
மெள்ளப் பள்ளத்தில் சிலகண்ணி குத்தி
விலகியே இருந் தொருகை பார்ப்போம் (சேருது)
3. குருகு நமடு செங்கால் நாரை
குறுங்கண்ணித் தாவில் இறங்கி மேயுது
திரள் நெடுங் கண்ணி ஒருமிக்கக் குத்தி
செடிமறை விலே பதுங்கி நிற்போம் (சேருது)
4. அந்தரப் பறவை கண்ணுக்குச் சிக்கிச்சு
இந்தரப் பறவை கண்ணிவிட் டோடுது
சிந்தாததுக்கள் சேர்த்துப் பிடித்து
முந்தானையதில் மூட்டா குளுவா (சேருது)
குளுவை முதலியன மீன் வகை, உள்ளான் முதலியன, நீரையொட்டி வாழும் பறவை வகை. தாவு - பள்ள நிலம். நமடு - நமுடு; நாரை வகை. நாரையின் கால் சிவப்பென்பதைச் 'செங்கால் நாரை' என்று குறிப்பிடும் இலக்கிய வழக்கால் அறியலாம். குளுவன்: சிங்கனுடைய தோழன்.
---------
[62]
கெம்பா ரையே பொறு பொறு
கெம்பாரையே
கெம்பாரையே பொறு பொறு
சொல்லுகிறேன்.
கெம்பாரையே - கெம்பாதே அட ஐயே; கெம்புதல் - உரத்துப் பேசுதல்.
----------
[63] சிங்கன் சிங்கியைத் தேடுதல்
கெம்பீரமாக நடம்புரிந் தோங்கும்
அம்பலவாணர் அனுதினமே மகிழ்
தென்புலிசை நாட்டில் சேரவந்தாளாம்
- சிங்கியைக் காணீர்களோ.
--------
[64] தரு - ராகம் தோடி, அட தாளம்
1. சம்பு சதாசிவர் தூர்ச்சடி ருத்திரர்
செம்பொனம் பலவர் மகிழ்
தென்புலிசை வளர் நாட்டில்
அன்புக் குறிப்பள் - இன்ப மளிப்பள்
கண்பறிவிப்பள் - கருத்தொரு மிப்பள்
- சிங்கியைக் காணீர்களோ
2. தட்ச விபட்ச சுகிட்ச பரிட்சை ருத்
ராட்ச மணிந்தே அட்சய வட்ச ருத்
ராட்சர் அம்பலவர் நாட்டில் -
அட்சய பாத்திரம் - லட்சண சித்திரம்
சிட்சை சொல் நேத்திரம் - லட்ச களத்திரம்
- சிங்கியைக் காணீர்களோ.
பறிவிப்பள் - தன் அழகினால் பறிப்பாள் என்றபடி.
----------
[65] சிங்கியைக் காணாது வருந்துதல்
1. வல்லமை சொல் மலையாளக் குறத்தி காணய்யே - சபை
வாணரை என்றும் மனத்தில் மகிழ் கொள்வாள் காணய்யே
தில்லைச்செம் பொன்சாமி தெரிசிக்க வந்தாள் காணய்யே - எங்குந்
தேடிக்கொண்டு மிக ஓடித் தயங்குறே னய்யே.
2. மன்றுளாடும் நடராசரைக் கும்பிடவே காணய்யே - என்றன்
மாணிக்கக் கட்டியைக் காணத் தியங்குறே னய்யே
இன்று சபை வாசல் நின்று பணிந்தாளாமய்யே - என்றன்
ஏந்திழையைக் காட்டிக் கூர்ந்திடப் புண்ணியமய்யே.
குளுவன் சிங்கனை வினவுதல்
அகோ வாரும் பிள்ளாய் சிங்கா! உன் சிங்கியைக் காட்டித் தருகிறேன். அல்லாமல் உன் வசத்திலே என்னென்ன உசிதமுண்டு சொல்லும் பிள்ளாய் சிங்கா.
-------
[66] சிங்கன் கூறுதல்
தரு - ராகம் ... ஆதிதாளம்
1. தண்சோலைகள் சூழுந்தில்லைச்
சபைமேவும் நடராசருக்கு
வெண் சாமரம் வீசவே நல்ல
வெண்கவரி மிருகத் திரளுண்டு.
2. தென்கயிலை மேவு மெங்கள்
செம்பொ னம்பல வாணருக்குக்
குங்குமப் பூவும் முத்தும்
கோவைக்கு நவ ரத்ன முண்டு.
3. கருணா மிருத ரசவாரிதி
கனகசபை வாணருக்குத்
திரளான ...... த முண்டு என்றன்
சிங்கியைக் காட்டினால் தருவேனய்யே.
குளுவன் சிங்கியிருக்குமிடம் காட்டுதல்
வாரும் பிள்ளாய் சிங்கா! அதோ இருக்கிறாள் (பார் நீ தேடி வந்த சிங்கி) தானய்யே.
------
[67] சிங்கனும் சிங்கியும் உரையாடல்
தரு
என்றனை மறந்து நீ எங்கே யிருந்தாய் சிங்கி - என்றும்
உன்றனை நானொரு நாளும் மறப்பனோ சிங்கா. 1
...........................மகிழ்ந்தேன் காண்சிங்கி ............
மகிழ் கொண்டொரு மித்துக் கண்டுகளித்தேன் காண்சிங்கா. 2
காட்டுக் கொம் பொன்று கண்டத்திலிருப்பானேன் சிங்கி - இது
காட்டுக் கொம்பல்ல கண்ட சரப்பளி சிங்கா. 3
நெற்றியில் மாப்பொடி மெத்தத் தரித்த தேன் சிங்கி - இது
நெற்றியில் பொடியல்ல மஞ்சணை தரித்தது சிங்கா. 4
சிங்காரக் கொங்கையில் சேற்றைப் பூசுவதேன் சிங்கி - இது
மங்களஞ்சேர் கெந்த வாடை தரித்தது சிங்கா. 5
.................. நன்றாயெந் நாளுமே சிங்கி - நாம்
மகிழ்ந்திருந்து வாழ்ந்திருக்க வேணும் (காண்) சிங்கா. 6
பொன்னம்பலவர் திகழ் புலிசைத்திருக் கோயில் போற்றி
இன்னம் பலகாலம் இசைவுடன் சேர்ந்திருப்போம் சிங்கா. 7
------
[68] வாழ்த்து
அறுசீர் விருத்தம்
சம்பிர மாக முற்றும் தாரணி எங்கும் வாழி
உம்பரு முனிவர் தாமும் ஓங்கிடும் பத்தர் வாழி
தண்புலி யூர்ம கிழ்ச்சி சேர்சிவ காமி பங்கர்
அம்பல வாண ரென்றும் அன்பருள் வாழி வாழி.
மங்களம்
……………………………....ல வாணருக்குத்
தெரிந்து தமிழ் வாசிக்கச் செல்லப்பிள்ளை தோன்றினானே.
மணந்த தமிழ்ப் புலியூர்மா நடராசர் நாட்டில்
........ ந்தமிழ் வாசிக்கச் செல்லப்பிள்ளை தோன்றினானே.
வளந்திகழ்ந்த புலியூர்மா நடராசர் நாட்டில்
…. ….. ……
(இதனுடன் எடு முடிகிறது; கடைசியான தனி ஏட்டில் இப் பாடல் காணப் படுகிறது. இதிற் காணப்படும் செல்லப் பிள்ளை என்ற பெயர் ஆசிரியர் பெயர் எண்ணுவதற்கில்லை. ஒரு வேளை இது ஏட்டுக்குரியவர் பெயராயிருத்தல் கூடும்.)
------
முற்றும்
This file was last updated on 20 May 2021.
Feel free to send the corrections to the webmaster.