பண்டார சாத்திரம் -
அனுபோக வெண்பா (உரையுடன்)
அம்பலவாண தேசிகர்
paNTAra cAttiram - anupOka veNpA (with commentaries)
by ampalavANa tEcikar of tiruvAvaTuturai AtInam
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Archive.org/Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பண்டார சாத்திரம் -
அனுபோக வெண்பா (உரையுடன்)
அம்பலவாண தேசிகர்
Source:
திருவாவடுதுறை ஆதீனத்துப்
பண்டாரசாத்திரம்
அனுபோக வெண்பா (உரையுடன்)
திருக்கயிலாயபரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்
இருபத்திரண்டாவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீ-ல-ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்
கட்டளையிட்டருளியபடி வெளியிடப்பெற்றது.
திருவாவடுதுறை ஆதீனம்
கீலக - புரட்டாசி - பரணி 1968
உரிமை பதிவு, விலை ரூ. 5.00
வெளியீடு எண் 238
ஸ்ரீ நமசிவாயமூர்த்தி அச்சகம்
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக மூர்த்திகள் (இருபத்தொன்றாவது குருமூர்த்தம்)
முதலாவது ஆண்டு நினைவுமலர்
-----------
சிவமயம்
முகவுரை
இந்நூல் பண்டாரசாத்திரம் பதினான்குடன் இணைந்துள்ளது. அனுபோகம் என்பது ஒன்றில் தோய்ந்து ஒன்றிய காலத்து உளதாம் பயிற்சியின் மிகுதி. ஈண்டுச் சிவ தன்மத்திலும் சிவானுபவத்திலும் திளைத்து விளைந்த பயிற்சி நிலைகளைக் கூறுவதாக வெண்பாயாப்பான் அமைந்தமையின் அனுபோக வெண்பா எனப் பெயர்பெற்றது. அறிவின் முதிர்ச்சியே அனுபவம். அனுபவத்தால் விளையும் பயனை நுகர்ந்த நிலை அனுபோகம். நுகரப்பட்டது என்ற பொருளில் வருவது. இதனை அருளிச்செய்த ஆசிரியர் இவ்வாதீனத்து மூன்றாவது பட்டத்து எழுந்தருளியிருந்த ஸ்ரீ அம்பலவாணதேசிக மூர்த்திகள் என்று கருதப்பெறுகின்றார்.
இவர்கள் சிவோகம் பாவனையில் எழுந்தருளியிருந்து, வெளிவந்தவுடன் அக்கணத்துத் திருவுளத்துத்தோன்றிய கருத்துக்களைத் தம் நெஞ்சிற்கும், பரிபாகமுற்ற சீடர்களுக்கும் உலகவர்க்குமாக உரைக்கும் அமைப்பில் இச்செய்யுட்கள் அமைந்துள்ளன ; சிவஞான போத முதலிய ஞான சாத்திரங்களை அனுபவத்திற்குக் கொண்டுவரும்போது விளையும் ஐயங்களை அகற்றும் முறையிலும் அமைந்துள்ளன.
இந்நூல் இருநூற்றுப்பதினெட்டு வெண்பாக்களாலாகியது. திருவுள்ளத்தில் செறிந்து எழுந்த அனுபவங்கள் சில சொற்களாலாகிய வெண்பாவாக வெளிப்படுதலின் பொருள் ஆழமும் உற்றுநோக்குந்தோறும் புதிய புதிய அனுபவங்களும் தெளிவும் இவை சிறக்க விளங்குவன் .
பல காலங்களில் உண்டான பலவகை அனுபவத் தேக் கங்கள் நிறைந்திருத்தலின் பாடல்கள் கருத்தால் தொடர்பு உடையன அல்லவாயினும் பொருள் அமைதிக்கேற்பத் தொகுத்து நோக்கப் பேரின்பந்தருவன.
இந்த நூல் அனுபவசித்திக்கு ஆசாரியனை வணங்கித் தொடங்குகிறது. முதற்கண் ஆன்மாக்களுக்கு அறிவு விளக்கம் திருவருளால் அன்றி விளையாது. அத்திருவருளும் குருவின் உபதேசத்தாலன்றிக் கைகூடாது. உயிர்கள் தம்மை ஈசனுக்கு அடிமையாக உணர்ந்து உண்மை அன்பு செய்ய பிறவி நீங்கப் பெற்றுப் பேரின்பம் எய்தும். உயிர்கள் மலநீக்கமும், இருவினை யொப்பும் எய்தியவழி தற்போதங்கெட்டு திருவடியையே சார்ந்து நிற்கும். அக்காலத்து உயிர்களுக்கு வினை ஏறாமையான் அருளனுபவம் ஒன்றையே தாரகமாகக் கொண்டு சீவித்திருக் கும். சிவம் வேறு சீவன் வேறு என்று அறியவராத அருள் அனுபவ அத்துவிதத்தில் சிவானந்தப் பெருவாழ்வெய்தி என்றும் இன்பம் பெருக இருக்கும் என்பன இந்நூலுள் ஆங்காங்கு எழுபதிற்கு மேற்பட்ட பாடல்களால் விளக்கப் பெறுகின்றன .
வினைப்போகங்களைத் துய்த்து அவற்றில் வெறுப்புத் தோன்றி வீடு காதலிப்பவர்-களுக்காக உடற்பற்றும் உலகப் பற்றும் உடைமைப் பற்றும் நீக்கும் உபாயங்கள் இருபது பாடல்களால் உணர்த்தப்படுகின்றன. உடல் உலகம் வினைப் போகங்கள் இவைகளை மருந்தாக உருவகித்து, அம்மருந்தை அளிப்பவன் வைத்தியநாதப் பெருமானே எனத் தெளிவித்து, மலநோய் விலகுமாற்றை விளக்குவன நாற்பதிற்கு மேற்பட்ட பாடல்கள். ஏனைய பாடல்களால் பதிஞானம்மிக மலவலி நீங்கும் என்பதும், சீவகன்மம். சிவகன்மமாம் முறையும், வினை களே மலவலி வாட்டும் என்பதும், பரிபாக முற்றோர்க்குக் கன்மத்தொடர்ச்சி இல்லை என்பதும், ஆதலால் சிவதன் மத்தி லேயே ஈடுபடுக என்பதும், சிவம் சிவஞானியர்க்கு உபகாரப் படும் முறைமையும், நித்திய சுகத்தில் இருத்தற்குரிய இலக்கணமும், சிவதுரியம், சிவாதீதம், சிவயோகம், சிவபோகம் இவற்றின் இயல்புகளும் விளக்கப் பெறுகின்றன.
ஆன்மா பரிபாகத்திற்குச் சோபான கிரமமாக தீட்சைகள் இன்றியமையாதன. தீட்சை அனுட்டானம் இவைகளால் உபாயமும் உண்மையும் ஆகிய சரியையாதி நான்கு பாதங்களின் அனுபவத்திறன் அறிவிக்கப்படுகிறது. இங்ஙனம் இந் நூல் முழுவதும் சிவானுபவத்தையே சொல்லுதலின் அனுபோக வெண்பா எனப்பட்டது.
இந்நூலை அருளிச்செய்தவர்கள் இன்னார் என்று விளக்கமாக அறியக்கூடவில்லை. ஆனாலும் மூன்றாவது பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகர் அருளிச் செய்ததாகக் கூறுகிறார்கள். மூன்றாவது குருமூர்த்திகளாகிய அவர்கள் இயற்றிய தசகாரியம், சன்மார்க்க சித்தியார், உபாய நிட்டை வெண்பா முதலான பத்து நூல்களைப் போல ஆழமும், அனுபவமும், அருளிப்பாடும் அமையப் பெறமையே அக்கருத்துக்குச் சான்றாகலாம்.
அன்றியும் 'தாச சமயத் தசகாரியங்கள் மூன்று' எனவும் 'முதுமறைநுவலு மூவகைப் பொருளும்' எனவும் வரும் பண்டாரசாத்திர நூற்றொகுப்பையும் அவற்றின் கருத்தையும் விளக்கும் செய்யுட்களில் இந்நூற் பெயர் இடம் பெறாமையும் எண்ணுதற்குரியது.
அன்றியும் "அனுபோக வெண்பா'' என்பது சைவசித்தாந்த உண்மைகளை அனுபூதியாக் கண்ட பெரியவர் ஒருவர் கூறும் அருள் நூலாக விளங்கும் என்ற கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் எழுத்தும் இக்கருத்தை வலியுறுத்தும். ஆயினும், சைவ மரபு வழுவாது மெய்கண்டான் பன்னும் அருட் போதத்தை சென்னி மேற்கொண்டு செய்யப்பெற்றதால் இதனை, பண்டார சாத்திரத்தின் இறுதியில் பண்டையோர் சேர்த்தனர்.
இதனை இருபத்திரண்டாவது குருமகாசந்நிதானமாக எழுந்தருளி இதுகாலை ஞானச் செங்கோல் செலுத்திவரும் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் கட்டளையிட்டருளியவண்ணம் வழக்கம்போல பொழிப்புரை, கருத்துரை முதலியவற்றுடன் இருபத்தோராவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் அவர்களின் முதலாவது ஆண்டு குருபூசை நினைவுமலராக வெளிவருகிறது.
சொல்லும் செயலும் அடங்கிச் சிந்தை செயல்பட அதனாலே உயிரினிமைாக அமைவது அனுபோகம். அதனை உரை யான் எடுத்துரைக்க இயலாது. ஆயினும் மகா சந்நிதானத்தின் திருவருள் இருந்தபடி எண்ணி அதனைத் துணைக்கொண்டு இவ்வுரையும் நூலும் வெளிவருகின்றன எனல் மிகையாகாது. ஆதலால் சைவத்திறம் தெரிந்த பெரியோர்கள் இதனைச் சிந்தை யேற்று பயன் எய்துவார்களாக.
ஞானபீடத்திலிருந்து அருட்கோலோச்சி ஆன்மாக்களை உய்விக்கும் ஸ்ரீலஸ்ரீ இருபத்திரண்டாவது குருமகாசந்நிதானம் அவர்களின் திருவருள், குருவருளால் என்றும் நம்மை ஆட் கொள்ளுமாக.
திருவாவடுதுறை இங்ஙனம்,
7- 9 - 68. ஆதீன மகாவித்துவான்.
ச. தண்டபாணி தேசிகர்.
---------------
சிவமயம்
அனுபோக வெண்பா
ஆசிரிய வணக்கம்
அளித்த கருணை யனுபோகந் தன்னை
விளக்கியொரு பாவின் விரிக்க - வுளக்கணிரு
மெய்யாகோ முத்தி நகர் மேவியசீர் நற்கருணை
யையா நமச்சிவா யா. 1
இதன் பொருள் : உண்மையே வடிவானவனே! திருவாவடுதுறைக்கண் எழுந்தருளியுள்ள சீர்த்தியையும் நல்ல கருணையையும் உடைய குருநாதனே!! நமச்சிவாயா!! திருவருள் எமக்கு உதவிய அனுபவங்களை விளக்கி ஒரு பாவிலே விரித்துரைக்க அடியேன் உள்ளத்தில் என்றும் எழுந்தருளி யிருப்பாயாக என்றவாறு.
நமச்சிவாயாகருணையால் கிடைத்த அனுபவத்தை விளக்கிச் சொல்ல என் மனத்தில் எப்பொழுதும் இருக்கவேண்டும் என்று வேண்டுகிறார்கள்.
உண்மை என்றும் அழிவில்லாதது; அனைத்திற்கும் காரணமாக உள்ளது. காரியப் பொருள்கள் அனைத்தும் அழியும். காரணப் பொருள்கள் காரியத்திற்கு முதற்காரணமாய், நித்தமாய் இருப்பன. ஆதலால் மெய்யா என்றார்.
கோமுத்திநகர் - திருவாவடுதுறை. அம்மை, பசுவுருவம் நீத்து இறைவனை அணைத்தெழுந்தத் தலமாதலின் இப்பெயர் பெற்றது. மேவிய - விரும்பி எழுந்தருளிய . கருணையளித்த என மாறுக. அனுபவங்களனைத்தும் இறைவன் திருவருள் ஒன்றானே அடைவன ஆதலின் கருணையளித்த அனுபவம் என்றார். அறிவு துணையாக அனுபவிக்கும் அனுபவங்களைச் சொல்லால் விளக்குவது அருமையாகலின் அதற்கு ஆசாரியன் திருவருளை வேண்டுகின்றார்.
--------------
அறிவு அருளால் விளைவது
ஆசுற்றார்க் கில்லை யறிவுடைமை யாங்கரன்பால்
தேசுற்றார்க் கெல்லாந் தெரிவாகு - மாசற்ற
நல்லார்க் கறிவு நடக்குமா லென்கருத்தைச்
சொல்லாய்த் தொடுத்தேன் றுணிந்து. 2
இ-ள் : ஞான சொரூபமாக இருக்கையும், ஞானத்தை யுடைமையும், மலத்தால் மாசுற்றார்க்கு இல்லையாம். சிவபெருமானிடம் அறிவொளி அமையப் பெற்றார்க்கு இருந்த நிலையிலேயே எல்லாம் புலப்படும். குற்றமற்ற நல்ல பெரியோர்களுக்கு அறிவு இயங்கும்படியாக, எனது கருத்தைச் சொல்லாகத் துணிவு கொண்டு தொடுத்துச் சொன்னேன் என்றவாறு.
ஆசு - குற்றம், அஃதாவது ஆன்மாவின் அறிவை அநாதியே பந்தித்துள்ள ஆணவ மலத்தின் காரியம். அவர்கட்கு அறிவுடைமை என்றும் இல்லையென்பது விளக்கப் பட்டது.
அரன் - சிவபெருமான். தேசு - ஞானவொளி. தெரிவு விளக்கம். பளிங்கறையுட்பொருள் போல உலகத்திலுள்ளன அனைத்தும் சிவனருள் பெற்றார்க்குத் தெற்றென விளங்கும் என்பது தெரிவிக்கப்பட்டது.
மாசற்ற நல்லார் - ஆணவமல மறைப்பற்ற சுத்தான்மாக் கள். நடக்குமால் என்றது அவர்கட்குப் பயன்படும்படிச் சொல்லாய்த் தொடுத்தேன் என்பதாம்.
------------
குருவின் இன்றியமையாமை
தோற்றும்போ துற்றுத் தொடர்ந்த குருடதனை
மாற்றும்போ தின்றா மறைப்பேனுந் - தேற்றுதற்கு
மற்றொருவர் சொல்ல மதித்ததுபோற் றீயமலம்
அற்றவற்குச் சற்குருவே யாம். 3
இ - ள் : பிறவிக்காலத்திலேயே உடனிருந்து தொடர்ந்து வரும் குருட்டுத்தன்மையைப் போக்கிய காலத்து மறைப்பு இல்லையாயினும், பொருள்களை இது இன்னது இது இன்னது என்று தெரிவித்தற்கு மற்றொருவர் சொல்ல, அவைகளை மதித்து அறிதல் போலக் கொடிய மலம் நீங்கிய சுத்தான் மாக்களுக்கும் சற்குருநாதன் உபகாரம் இன்றியமையாததாம் என்றவாறு.
பிறவிக் குருடனுக்குக் குருட்டுத் தன்மை நீங்கிக் கண் தெரிந்தாலும் பொருள்களைச் சுட்டியறிவிக்க ஒருவன் தேவைப் படுதல் போல, மலநீக்கம் பெற்ற ஆன்மாவுக்கு ஆசாரியன் அவசியம் என்றவாறாம்.
---------------
உடைமையும் - அடிமையும்
சரமசர மென்னத் தரிக்கு முயிரச்
சரமசர மன்றாகத் தங்குஞ் - சரமசரம்
ஈசற் குடைமை யிசைந்தவுயிர் தொண்டாகும்
மாசெவர்க்கும் பேதமென மன். 4
இ - ள் : இயங்குவனவும் நிற்பனவுமாகிய உடலைத் தரிக்கும் உயிர் , அந்த இரு நிலைகளின் வேறாக அவற்றுள் தங்கியிருக்கும். இயங்குவ நிற்பவான அவை இரண்டும் ஈசனுக்கு உடைமைகளாம். அவ்வுடலிற்றங்கிய உயிர் அடிமையாம். ஆன்மாக்களில் ஒன்றற்கொன்று உள்ள பேதம் மலச்சேர்க் கையின் வன்மை மென்மைகளான் விளைவதாம் எனக்கருதுக என்றவாறு.
தனுகரணாதிகளும் பிறவுமாகிய இயங்குவனவும் நிற்பன வும் இறைவற்கு உடைமைகள். ஆன்மா என்றும் மீளா அடிமை என்பதாம்.
இசைந்த உயிர் . மலத்தோடு இயைந்து அறியாமையான் மயங்கியிருந்து ஆசாரியன் அருளால் அதன் வலியொடுங்கித் திருவருளைச் சார்ந்திருந்த உயிர் என்க.
எவர்க்கும் பேதம் மாசு எனமன் எனக்கூட்டுக.
-----------------
சுத்தான்மா மறுபிறவி எய்துமெனல் இழுக்கு என்பது
பொறியும் புலனும் பொருந்திச் சகத்தில்
அறியும் பகுதி யறிந்து - நெறியின்
நடக்கு முடலதனை நண்ணியதோ ராவி
எடுக்குமென்ப தெல்லா மிழுக்கு. 5
இ-ள் : கருவிகரணங்களையும் விடயங்களையும் பொருந்தி, உலகத்திலே அறிய வேண்டுவனவற்றை அறிந்து, ஆகம நெறியின் வண்ணம் சிவதன்மம் புரியும் தேகத்தைச்சார்ந்த ஆன்மா மீட்டும் உடலை எடுக்கும் என்பது குற்றம் என்றவாறு.
பதிகன்மம் புரியும் புண்ணிய தனுவைப் பொருந்திய ஆன்மா மீளவும் உடல் எடுக்கும் எனல் பொருந்தாது என்பதாம்.
பொறி - கண் காது முதலிய இந்திரியங்கள். புலன் - அவைகளால் உணரப்படும் விஷயசுகங்கள்.
சகம் - போகத்திற்காக இறைவன் உதவிய பிருதிவியாதி உலகங்கள். அறியும் பகுதியாவன - செய்வன தவிர்வன. நெறி - சிவதன்ம நெறி.
--------------
மலநீக்கம் பெற்றவனுக்கு ஆன்மபோதம் இல்லை எனல்
பாதாதி கேசப் பரப்புமே னின்றுதனைப்
பாதாதி கேசப் பரப்புள்ளே - யேதாகும்
தானென்ன நோக்கித் தனையறவே கண்டமல
வீனனுக்கே யாவியிலை யென். 6
இ-ள் : கால் முதல் மயிரீறான பரப்பின் மேல் நின்று ஆன்மாவாகிய தன்னை இவற்றுள் யான் எது என்று ஆய்ந்து. தன்னை அவற்றின் வேறாகக்கண்ட மல நீக்கம் பெற்றவனுக்கு ஆன்மபோதம் இல்லையாம் என்றவாறு.
ஆன்மபோதம் அகலும் எனவே பதிபோதமே முற்பட்டு நிற்கும் என்பதாம். தனுவைத் தானென மயங்கி, தெளிந்து, தன்னை அதனின் வேறாகக்கண்ட ஆன்மா பதிபோதம் விஞ்சி நிற்கும் என்பதாம்.
------------------
அதிகாரிகளாவார் இவர் எனல்
பரந்த கருவிப் பரப்பெல்லாந் தானாய்
விரிந்த வறிவினையும் விட்டுத் - தெரிந்த
மனமோ பொறியோ மருவிய நாற் பூதத்(து)
இனமோவென் பானுக் கிசை. 7
இ - ள் : பல பொருள்களிலும் சென்று பற்றிப் பரந்துள்ள கருவிகள் அனைத்தையும் தான் எனக் கருதும் அறிவை விட்டு , யான் மனமோ ஐம்பொறிகளோ நான்கு பூதங்களின் கூட்டமோ என்று ஆராய்ந்து இவை நானல்லன் எனக் கண்ட சாதகனுக்கு உபதேசிக்க என்றவாறு.
உலகமும், கருவிகரணங்களும் தான் என்ற அறிவு நீங்கப் பெற்று, அறிதற் கருவியான அந்தக்கரணங்களும் பிறவும் தானல்ல என்றுணர்ந்த சாதகனே உபதேசித்தற்குரியான் என்பதாம்.
நாற்பூதம் என்றது ஆகாயம் ஒழிந்த பூதங்களை; அவை களை நீங்கித் தான் அகண்டமாய் ஆகாயமாய் இருத்தலின். நாற்பூதத்தினமோ என்பானுக்கு இசை என்றது.
-------------
ஆன்மரூபம் முதலிய மூன்றன் அனுபவம் கூறல்
தானென்ற காயந் தனதென்ற போதாவி
தானொன்றி நின்றதுபோற் சாருமே - யூனொன்றி
நின்றவனே செத்தா னிகழ்பிணமாங் காயமறச்
சென்றதனா லுள்ளதெனத் தேறு. 8
இ-ள் : இதுவரை தான் என்று கருதிய - சொன்ன உடல் ’தனது' என்ற காலத்து உயிரானது அதனோடு ஒன்றி நின்றது போலப் புலப்படும். உடலொடு பொருந்தியவன் இறந்தால் உடல் பிணமாம். அவ்வுடல் கழிந்து போனதால் உள்ளது உயிர் எனவே தெளி என்றவாறு.
தான் தான் என வழங்கிய உடல் தனது என்று உணரப் பட்டபோது, உணர்பவனும் உடைமையாகக் கொள்பவனுமாகிய உயிர் ஒன்றி நின்றது போல உடலின் வேறாகப் புலப்படும். பிரிந்தது உயிர். உடல் பிணம். அவ்வுடல் நீங்கியதால் உள்ளதாய உயிரே நித்தியப்பொருள் எனத் தெளிக என்பது கருத்து.
உடல் சடமாயிருந்தும், உயிர் மலமறைப்பால் அதனொடு கூடியிருந்த காலத்துத் தானல்லாத உடலைத் தானெனக் கருதி வியவகரித்திருந்தது. பின்னர் தனது உடல் என்று தன்னின் வேறாகத் தன்னுடைமையாகக் கருதியபோது தான் புலப்படுவ தாயிற்று என்றது ஆன்மதரிசனம் கூறியதாம். ஆகவே இச் செய்யுள் ஆன்மரூபம் முதலிய மூன்றையும் கூறியதாம்.
-----------------
தத்துவரூபம் முதலிய மூன்றும் கூறல்
தான்றிரிந்து காயமே தானாய்க் கருதுமுயிர்
ஊன் பிரிந்து காண்டலுடற்குருவந் - தீன் பொருந்தும்
காயஞ் சடமென்னக் காண்டல் தெரிசனமாம்
மாயுமுட லென்கைசுத்தி மாண்பு. 9.
இ - ள் : ஆன்மா மலபந்தத்தால் தன்னறிவு மாறுபட்டுத் தன்னுடலே தானெனக் கருதுகின்ற ஆன்மா, அவ்வுடலைப் பிரிந்து தன்னையே காண்டல் உடலுக்கு உருவமாகிய தத்துவ ரூபமாம். உணவருந்தும் இவ்வுடலைச் சடமெனக் கருதுதல் தத்துவ தரிசனமாம். இவ்வுடல் அழிவது என்று அறிதல் தத்துவசுத்தியாம் என்றவாறு.
உடல் என்னுடையது. நான் அதனுள் வசிப்பவன் என ஆன்மா எண்ணுதல் தத்துவ-ரூபமாம். உடல் சடமெனக் காண்டல் தத்துவ தரிசனம். அது அழியும் எனக்காண்டல் தத்துவசுத்தியாம் என்பது .
திரிந்து - ஆன்மா சித்தாய், உணர்த்த உணர்ந்து, இன்புருவாய் நிற்கும் தன்னிலை மாறுபட்டு என்க. ஊன் - உடல். உடல் - போகசாதனமான தனுவாதியனைத்து தத்துவங்களும். தீன் - உணவு.
----------------
நான் பிரமம் ஆகேன் எனல்
காயமே யுற்றுக் கருதும் பிரமமலம்
மாயமே யுற்ற மயக்கமாம் - ஞாயமாம்
அங்கமே யற்றா லகன்ற பிரமமேல்
சங்கமே யில்லைத் தனி. 10
இ - ள் : உடலைப்பொருந்தி எண்ணுகிற பிரமம், மலமும் அதனால் ஆகிய மாயமும் பொருந்திய மயக்க ஞானமாம். நியாயமான உடல் நீங்கின் உடலைவிட்டுப் பிரிந்த பிரமம் மேலே கூடுதற்குரிய இடமின்றித் தனிக்குமே! என்றவாறு.
பிரமம் உடலைப் பொருந்தி நிலைக்குமாயின், உடலைப் பிரிந்த உயிராகிய பிரமம் சார்வதற்கு இடமின்றித் தனித்திருக் குமே . அன்றியும் மலத்தொடு பொருந்தி மயக்கமுறுமே! அது பிரமமாகுமா? என்பது.
அகம் பிரமவாதிகள் தம்மைப் பிரமம் என்பர். உடலொடு கூடிய அவர்களே பிரமமாயின், மல கன்ம மாயைகளோடு பிரமம் பொருந்திச் சுகதுக்க ரூபமான மயக்கத்தைப் பொருந் துமே ! உடல் நீங்கினால் பிரமம் சார்வின்றித் தனித்திருக்குமே! ஆதலால் நான் பிரமம் எனல் பொருந்துவதன்றாம் என்பது. ஞாயம் - நியாயம் என்பதன் மரூஉ. சங்கம் - சார்பு அல்லது பற்றுக்கோடு.
-------------
நீ பிரமமானால் வரங்கேட்பது ஏன் எனல்
பரமன் கருணைப் பசுபதியாய் நின்ற
பிரமனா னென்றுமிகப் பேசில் - வரமெனக்குத்
தாதா வெனவிறைஞ்சித் தாழ்ந்து நிற்கும் பேதமுனக்(கு)
ஏதா மிதனை யியம்பு. 11
இ - ள் : மேலானவற்றிற்கெல்லாம் மேலானவனும், கருணையோடு கூடிய பசுபதியுமான பிரமம் நானே என்று நீ பேசுவாய் ஆயின், இறைவன் திருமுன்பு சென்று பெருமானே! எனக்கு வரங்களைக் கொடு கொடு என்று கேட்கும் பேதம் உனக்கு ஏதாய்முடியும், இதனை விளக்கிச்சொல் என்றவாறு.
நீ பிரமமாயின், நீ வேறொன்றினிடம் வரங்கேட்டல் அறி வுடைமையாகாதே என்பதாம்.
பேதம் - பிரமம் கொடுக்குந்தாதா. நான் வாங்கும் யாசகன் என்ற வேறுபாட்டுணர்ச்சி.
--------------
நான் பிரமம் என்பதால் இழப்பு இவை எனல்
கோனானே யென்னிற் குறித்திரண்டுங் காணாமல்
போனதே யன்றோ புகலுங்கால் - தானான
வாறே திரிவதற மன்னிற் கருணைநெறிப்
பேறே யுறுவதுமெய்ப் பேறு. 12
இ - ள் : நானே முதல்வன் எனில், அறிபவனாகிய தன்னையும், அறியப்படு பொருளாகிய சிவத்தையும் அறியாமல் போனதேயாம் அன்றோ! தானே ஆனபடியால் தருமநெறிகள் பிறழ்வனவாம்; அரசனாகிய பெருமானிடமிருந்து அருள் வழியே போறானது; அதன் வாயிலாக அடைவது உண்மையான முத்திப்பேறேயாம் என்றவாறு.
நானே முதல்வன் எனின் தன்னையும் தலைவனையும் அறிய மாட்டாமற்போகும். அன்றியும் அறத்திற்றிரிந்து கெடநேரும். இறைவனிடமிருந்து பெறும் கருணை வழியில் உண்மையான முத்தியைப் பெறுவதே நலமாம் என்பது.
இரண்டும் குறித்துக் காணாமல் போனதேயன்றோ எனக் கூட்டிப் பொருள் காண்க.
----------------
இரண்டுங்கெட்டான் ஆதலோ முத்தி எனல்
தன்னடையும் பாழாய்த் தகுமப் பிரமமெனும்
மன்னடையும் பாழாக வந்ததால் - துன்னும்
இருவருமே கேடா யிருப்பதுவோ முத்தி
வரமெனக்குச் சொல்வாய் மகிழ்ந்து. 13
இ - ள் : தன் நடக்கையுங் கெட்டு, தக்க அந்தப் பிரமத்தின் தன்மையும் பாழாக நேர்ந்தமையால் இருவரும் கெட்ட நிலையா? முத்தி என்பது. எனக்கு எது மேல் என்பதைத் தெரிவிப்பாயாக என்றவாறு.
தன்னடையுங் கெட்டு, பிரமத்தின் நடையும் பாழாகப் போதல் முத்தியாகாது என்பது.
பிரமம் எனும் மன் - பிரமன் எனப்படும் அரசன். தன்னடை பாழாதல் - குருடன் இராசவிழி விழித்தாற்போல ஆன்ம இயல்பு கெட்டுத் தன்னைப் பிரமம் என எண்ணிக்கொண்டு அடைய வேண்டியவற்றை அடையமாட்டாது பாழாதல்.
பிரமத்தின் நடை பாழாதலாவது - உயிராய் மல மாயை கன்மங்களுள் சிக்கிச் சிற்றறிவும் சிறுதொழிலும் உடையராக மதிக்கப்படுதல். வரம் - மேலானது.
-----------------
உயிர் பாசத்தைச் சார்ந்து பாசமானாற்போல
பதியும் திரிய வைத்தனையே எனல்
பாசம் பதியென்னப் பற்று மிரண்டாக
நாசமே யின்றி நடக்குமால் - பாசமாய்த்
தான்றிரிந்து நின்ற தகைமைபோல் தற்பதியாம்
வான்றிரிந்து வைத்தாய் மதி. 14
இ - ள் : பாசமும், பதியும் என பற்றும் இருவகைப் பட்டு அழிவின்றி நடக்கும். ஆன்மாவாகிய தான் பாசத்தைச் சார்ந்து பாசமாகவே திரிந்து நின்ற தன்மையைப் போல தனக்குப் பதியாகிய சிதாகாயத்தையும் திரிந்து போக வைத்தனை. இதனை நன்கு ஆராய்ந்து பார் என்றவாறு.
பாசப்பற்று, பதிப்பற்று எனப் பற்று இருவகைப்படும். இவற்றிற்குக் கேடின்று. பற்றினைப்பற்றி நிற்பதால் ஆன்மா வாகிய தானும் பற்றப்பட்ட பொருள் மயமாய் நிற்கும். நான் பிரமம் என்றால் பாசப்பற்றால் பிரமமும் பாசமாக மயங்கி நிற்க நேருமே? என்பதாம்.
தற்பதியாம் வான் - பதிப் பொருளாகிய சிதாகாயம். திரிந்து - திரிய எனச் செயவெனெச்சமாகத் திரித்துப் பொருள் கொள்ளுக.
---------------
நானே பிரமம் எனில் சார்பில்லையாம் எனல்
மருவுதனுத் தானாக மன்னியதோ ராவி
திரிவாய்த் தனையிழந்த சீர்போ - லொருவா
வரனே யெனக்கருதி யாங்குனக்குக் கேடு
தரினே யுனக்கேது சார்பு. 15
இ - ள் : இதுவரை, பொருந்திய உடலையே தானாக மதித்து அதில் குடியிருந்த உயிர் தன் தன்மை திரிந்து தன்னை இழந்தாற்போல . நானே பிரமம் என்றெண்ணி உனக்கே அழிவை நீயே தேடிக்கொண்டால், உனக்குச் சார்பு வேறு ஏது? சொல் என்றவாறு.
உடலைச்சார்ந்து உடலே தான் எனப் பெத்த நிலையில் மயங்கிய ஆன்மா அவ்வுடலுக்குத் தன்னை இழந்தாற்போல, நானே பிரமம் எனின், நீ ஒரு பொருளில்லையாம். உனக்கு வேறு சாரத் தக்கதொரு பொருளுமில்லையாம் என்பது.
ஆன்மா முதல்வனைச் சார்ந்து இன்புறும் என்பதே முத்தி யாகவும், நீயே பிரமம் எனின், பிரமம் வேறொரு பிரமத்தைச் சாரமாட்டாமையான் உனக்குச் சார்பு ஒன்றுமின்றிக் கெடுவாய் என்பதாம்.
-------------
அறிவுக்கும் உடலுக்கும் வேறுபாடுரை என வினாதல்
நாடியோ வென்போ நரம்புசீக் கோழையோ
தேடி யெனையறியேன் தேருங்கால் - கூடியதோர்
பாதாதி கேசப் பரப்பெல்லா நீயான(து)
ஏதா மறிவே தியம்பு. 16
இ-ள் : உடல் நிலையை உணர்த்தும் வாத பித்த சிலேட்டு மம் முதலிய நாடிகளோ! கூரையாகிய என்போ ! கட்டப் பட்ட கயிறு போல்வதாகிய நரம்பு மண்டலமோ ! சீயோ! கோழையோ ! இவற்றின் கூட்டமோ இவற்றுள் எது நான் எனத் தேடி என்னை அறியமாட்டேன் ஆயினேன். இவை அனைத்தும் கூடிய உள்ளங்கால் முதல் உச்சிவரையான இடமெல்லாம் நீ என எண்ணுவதால் என்ன பயனாம்? இவற்றுள் சித்துப்பொருள் ஏது சொல்வாயாக என்றவாறு.
உடலே நீ என்பையாயின், உடல் நாடி முதலியவற்றின் கூட்டம். ஆகவே அவற்றுள் நீ எது. அவையனைத்தும் சடம். நீ சித்து. ஆகவே நாடி முதலியவற்றுள் சித்து ஏது செப்பு. என்பதாம்.
இவ்வெண்பாவின் முன்னிரண்டடியும் சிவஞானபோத வெண்பாவின் பகுதியாக முன்னோர் மொழியைப் பொன்போற் போற்றியனவாம்.
--------------
ஆன்மாவைத் தரிசிக்கும் முறை
தன்றமரை நோக்கித் தகும் பேருங் கேட்டென்னைக்
கண்டீரோ வென்னக் கருதிப்பின் - மண்டிப்
புறப்பட்டான் பூதலத்தார் போற்றுமிறை தானென்
றுறப்பட்டான் போலவுனை யோர். 17
இ - ள் : தன் உறவினர்களை நோக்கித் தனக்குரிய பேருங் கேட்டு, என்னைக் கண்டீர்களா? என்று எண்ணி, பின் நெருங்கி வெளிப்புறப்பட்டான் ஒருவன், பூவுலகில் உள்ளார் போற்றும் அரசன் தான் என்றுணர்த்த அவ்வுணர்வு அடைந்தானைப்போல உன்னை நீ அறிக என்றவாறு.
தான் மனித சாமான்யனல்லன்; இவ்வூர் அரசன் என உணர்த்தப் பெற்றவன் போல யான் உடல் அல்லன். உடலை இயக்கி வினைகளை ஆற்றும் உயிர்த்தலைவன் என உணர்க என்பதாம்
'என்னைக்கண்டீரோ என்னக்கருதிப் புறப்பட்டான்' என்ற பகுதி ஐம்புல வேடரின் என்ற பகுதிக்கு விளக்கமாக, ஊரும் பேரும் உற்ற ஒருவன் காணாமற்போய், பின் ஒருவன் இன் னான் என்று உணர்த்த, 'யான் இந்நகர் அரசன்' என்று உணர்ந்து வந்து சேர்ந்தவனைப் போல எண் என்ற பொரு ளைத்தந்து நின்றது .
-------------------
உயிர் நீங்கின் உடல் சடம் எனல்
அறியும் பொறியி லறியாத போது
பிறியுந் தனுவே பிணமால் - குறியதனை
நட்டார்க் கறிவே நடக்குமே யாங்கதனை
விட்டார்க் கறிவேர வியப்பு. 18
இ-ள் : அறியும் இந்திரியங்களான் அறியாத போது உயிர் நீங்கிய உடல் பிணமாம். ஆகையால் அதனை ஆராய்ந்து பார். உயிரோடு கூடியவர்களுக்கு அறிவு காரியப்படும். உயிரைத் துறந்தார்க்கு அறிவுளதாமோ? ஆச்சரியந்தான் என்றவாறு.
உயிருடன் இருந்தால் அறிவு காரியப்படும் : பிறியின் அறிவு செயற்படாது. ஆதலின் ஞானேந்திரியங்கள் காரியப் படாதபோது உடல் சடமாயிற்று. ஆகையால் உயிர் நீ என் பதை உணர்க என்பதாம்.
அதனை குறி என மாற்றி அதனை ஆய்ந்து பார் எனப் பொருள் கொள்க.
----------------
பிறப்பிறப்பு உயிருக்கில்லை எனல்
தோற்ற மொடுக்கஞ் சொலுமாவிக் கில்லாத
மாற்றம் பொறிதனக்காய் மன்னுமால் - போற்றும்
உடலகல வைத்தார்க் குயிர் நிலைமேலையப்
படவருவ தில்லையெனப் பார். 19
இ - ள் : பிறப்பும் - இறப்பும் சொல்லப்படும் உயிருக்கு இல்லாத பேச்சு. அவை இந்திரியங்களுக்காயினவாம். உயிரைப்போற்றும் உடலை வேறாக எண்ணுவார்க்கு உயிர் நிலை மேல் ஐயப்படக் கூடிய தொன்றும் இல்லை என்பதை அறிக என்றவாறு.
தோற்ற ஒடுக்கங்கள் உயிருக்கில்லை; இந்திரியங்கட்கே. உயிரின் உடல் வேறு என உணர்பவருக்கு உயிர் உடலில் நிற்கிறது என்பதில் ஐயமேயில்லை என்பதாம்.
அகலவைத்தார் - வேறாக எண்ணுவார். உயிர் நிலை - உயி ரும். அது நிலைபெறும் தன்மையும் என உம்மைத் தொகை யாக விரிக்க. உயிர் நிற்றலில் ஐயமில்லை எனலுமாம்.
----------------
உடலினளவான வியாபகம் உடையது உயிர் எனல்
அங்கமே யாவிக் ககம்புறம்பா லங்கமெனும்
சங்கமற்றா லுண்டோ தரிக்குமிட - மங்கம்
ஒருபடித்தே யன்றங் குயர்விழிவா லாவி
பெருவடிவே யாகப் பெறும். 20
இ - ள் : உடலே உயிர்க்கு இடம். புறம்பாக உறுப்புக்களின் கூட்டமானது நீங்கின் உயிரைத் தரிக்கும் இடம் வேறுண்டோ ? உடல் ஒரு தன்மையானதன்று ; உயர்வு தாழ்வு களையுடையது. உயிர் பெருவடிவே உடையதாகக் கருதப் பெறும் என்றவாறு.
உடல் சிறிது பெரிது என்ற வேறுபாடுடையது. உயிர் என்றும் பெருவடிவே யுடையது என்பதாம்
உயிர் பூரணமானதால் எடுத்த தேகங்கள் அனைத்திற்கும் ஏற்ப ஒத்த நிலையுடையது என்க.
-------------
உயிரியல்பை வேறோருபாயத்தான் விளக்குதல்
நிறைவே குறைவை நிறைக்குமற் றாவி
குறைவேல் நிறைவு செய்யக் கூடா - வறவே
பெரிதுஞ் சிறிதுமுறும் பெற்றியென மண்ணில்
வருமே சடமாய் மரித்து. 21
இ - ள் : என்றும் பூரணமான பொருளே குறைவை நிறைவிக்கும் பொருளாம். உயிர் பூரணமன்றிக் குறைவானால் அதனை நிறைவு செய்ய இயலாது. அத்தகைய உயிர் பெரிய உயிர் சிறிய உயிர் என இப்பூமியில் சடமாக இறந்து வருமோ? வராது என்றவாறு.
உயிர் என்றும் நிறைந்த பொருள். அதில் பெரிதும் சிறிதும் இன்று என்பதாம்.
-------------
சர்வ வியாபகம் சிவசீவர்களுக்குப் பொருந்தாது எனல்
சம்புவுக்கே யல்லாற் சருவ வியாபியென்ப(து)
அம்புவியின் மாக்கட் கடாதென்னி - னம்புதற்கங்(கு)
உற்றபோ தத்துவித மன்றோதா னொவ்வாமல்
சற்றே குறையிற் சடம். 22
இ - ள் : எங்குமாயிருத்தல் இறைவற்கே அன்றிப் பூமி யிலே மக்களுக்குப் பொருந்தாது எனின், பொருந்தும் என நம்பத் தொடங்கியபோது ஆன்மாவும் சிவமும் அத்துவிதமாவது அன்றோ! இந்நிலையில் ஆன்மா சற்று குறையுமானால் சடமாம் என்றவாறு.
சர்வ வியாபகம் சிவ சீவர்களுக்குப் பொருந்தும் என்ற போதுதான் அத்துவிதபாவனை சித்திக்கும் : குறையுமாயின் சீவன் சடமாம் என்பது கருத்து.
அத்துவித நிலையில் சித்துப் பொருள்கள் இரண்டுமே கலப்பன. சித்தும் சடமும் தம்முள் இரண்டற்ற நிலையிற் கலவா . ஆதலான் இங்ஙனம் கூறியவாறு.
---------------
ஆன்மாக்களுக்கு அறிவின் குறைவுவருதற்கேது கூறுகின்றது
நிறைவே யரன்போ னிகழ வறிவின்
குறைவேன் வருமாறு கூறேல் - பொறியில்
உணர்த்துவா ரின்றி யுணராதா லங்கண்
குணர்த்துமா றில்லையெனக் கொள். 23
இ - ள் : ஆன்மாக்களுக்கும் அரன் போல நிறைவே விளங்க அறிவில் குறைவு வருவது ஏன் கூறுக எனின், உயிர்கள் பொறிகட்கு உணர்த்துவாரின்றி உணராது : அவ்விடத்துக் கொண்டுவந்து சேர்க்கும் உபாயம் வேறில்லை என அறிக என்றவாறு.
ஆன்மாக்கள் உணர்த்த உணருவனவே அன்றித் தாமாக உணரா. கொண்டுவந்து புணர்த்துவான் உதவி வேண்டும். அதனாலே ஆன்மாக்கள் உணர்த்த உணரும் அறிவின் குறை யுடையன எனப்படும் என்பதாம். குணர்த்துமாறு - கொணர்த் துமாறு என்பது எதுகை நோக்கி மருஉ மொழியாயிற்று.
--------------
இறைவற்கும் சிவசீலர்க்கும் உள்ள அநாதி நித்திய சம்பந்தம் உணர்த்துவது
அரையனைப்போ லெண்சாணவனடிமை யாவார்
அரையனுக்கொப் பாமோ வறையி - லரையனவன்
ஏவுதலே செய்ய வியன்ற பணி கேட்பதுபோல்
ஆவதுவே யாவிக் கணி. 24
இ-ள் : அரசனைப் போலவே அவனடிமையும் எண்சாண் உடம்புடையவனே. ஆயினும் சொல்லுமிடத்து அரசனுக்கு அடிமை ஒப்பாவனோ! அரசன் ஏவுதல் வினை ஒன்றே செய்ய, அவனுக்கியன்ற பணிகளை இயற்றுதலே உயிர்க்கு அணியாவ தாம் என்றவாறு.
இறைவன் அரசன். உயிர் அடிமை . இறைவன் தொழில் ஏவுதல். அடிமையின் தொழில் இறைவன் இட்ட பணிகளை இயற்றுதல் . இதுவே இவர்களுக்குள்ள அநாதி நித்திய சம் பந்தம் என்பதாம்.
--------------
அறிவு அறியாமைகளின் தன்மையை விளக்குவது
எல்லாப் பொருட்கு மியன்றநிறை வாலறியச்
செல்லா குணமதற்கே சேருமா - னல்லாய்
நிறைவே யறிவாமால் நீங்கா மலத்தின்
குறைவோ வறியாமை கூறு. 25
இ - ள் : உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் அநாதியே இயைந்துள்ள பரிபூரணக் கலப்பால், ஆன்ம அறிவால் அறியவொண்ணாத குணம் எல்லாப் பொருளிடத்தும் பொருந்துவதாம். நல்ல சீடனே! பரிபூரணமே ஞானம் ; முத்திக் காலத்திலும் ஆன்மாவை விட்டுப் பிரியாத ஆணவமலத்தின் குறைவோ அறியாமையே நீ கூறுவாயாக என்றவாறு.
இயங்குவ நிற்பவான எல்லாப் பொருள்களிடத்தும் நிறைந்துள்ள பரிபூரண சிவத்தால், பிறராலும் பிற ஏதுக்களாலும் அறியவாராத குணம் அப்பொருள்களுக்குப் பொருந்தும். நிறைவே அறிவு. மலத்தின் குறைவோ அறியாமை கூறுக என்பது கருத்து.
மலம் மறைப்பதாய் ஆன்ம வியாபகத்தைத் தடுப்பதாக இருள் தன்னையும் காட்டாதவாறுபோல, மலம் தன்னையும் அறிய இயலாததாக இருக்கும். அதன் குறைவோ நாம் மலத் தால் அறியாமையுடையேம் என உணரப்படுவது. ஆதலின் மலத்தின் குறைவு அறியாமை என்றதாம். குறைவோ என் பதில் ஓகாரம் வியப்புப் பொருளில் வந்தது.
--------------
உயிர்க்குக் குறைவு மலத்தால் வந்தது எனல்
நிறைவேற் பிறவி நிகழும்போ தாவி
குறைவே நிறைவதற்குக் கூடா - நிறைவேபொய்
யங்கத்தை யொத்தங் கதுவா யறியுமலச்
சங்கத்தா லுற்ற சதுர். 26
இ - ள் : ஆன்மா நிறைவானதாயின் பிறவியெடுக்கும் பொழுது அது குறைவானதாகவே எண்ணப்படும். அன்றியும் நிறைவதற்கு மியலாதாம். நிறைவெனப்படுவது பொய்யான மெய்யைச்சார்ந்து அதனோ டொத்து அவ்வுடலாய் நின்று புவன போகங்களை அறியும் அளவில் பயன்படுவதாகிய ஆணவ மலத்தின் செயற்கையால் விளைந்த சதுராலாம் என்றவாறு.
ஆன்மா பிறவியைச் சாரும்பொழுது குறைவறிவினதாகவே குறிக்கப்படும். அப்போதும் நிறைவானதென்பது பொய் யுடலை மெய் எனல் போல மலச்சேர்க்கையால் விளைந்த சதுராம் என்பது கருத்து.
------------
பிறவி நீக்கும் உபாயம் உணர்த்துதல்
நிறைவா முயிரி னினைவாற் பிறவி
துறையாய் நடக்குந் தொடர்பை - யிறையான்
நிலவுமறி வானீத்து நீடருளைச் சேர்ந்து
விலகாத தன்றோ விபு. 27
இ - ள் : பூரணமான உயிரின் அறிவால் பிறவி இடையறாது இயங்கும் தொடர்பை பதி போதத்தால் நீக்கி சிவகருணை யைச் சேர்ந்து என்றும் பிரியாது கருணையே தாரகமாகக் கிடப்பதன்றோ இறைமையாம் என்றவாறு.
பிரவாக அநாதியாய் வருகின்ற பிறப்பை சிவஞானத்தா லறுத்து திருவருளில் தோய்ந்து அதில் பிரியாதிருப்பதே சிவ மாகுந் தன்மை யென்பது கருத்து.
உயிரின் நினைவால் துறையாய் நடக்கும் பிறவித் தொடர்பு. உயிர்கள் இடைவிடாது ஒன்றை எண்ணுவதாலேயே மறு பிறப்பு எய்துகின்றன என்பது மரபாதலானும், அவா என்ப யார்க்கும் எஞ்ஞான்றும் தவாப்பிறப்பீனும் வித்தாகலானும் பிறவி நேரும் என்பதும், அது வினைக்கடலுக்கோர் துறையாம் என்பதும் இடையறாது நீரொழுக்குப்-போல் தொடர்ந்து வரும் என்பதும், உணர்த்தியவாறு. இறையான் நிலவும் அறிவு - சிவபெருமான் உணர்த்த உண்டான அறிவு; சிவஞானம். தொடர்பை நீத்தென்க.
விபு - பிரபு. ஆன்மாவை விபு என்றது நீக்க வேண்டிய வற்றை நீத்து. சாரவேண்டிய அருளைச் சார்ந்து, அருளைப்பிரி யாதிருக்கும் செல்வமுடைமை. செல்வன் கழலேத்தும் செல்வம் உடையராதல் என்க.
---------------
ஆன்மதரிசனம் செய்யும் முறைமை
இலங்கும் விளக்கங் கிலங்காத போது
துலங்கு நயனந் துலங்கா - இலங்குமுடல்
தோற்றும்போ தாவி துலங்கு மதனையற
மாற்றும்போ துண்டோ மதி. 28
இ - ள் : எங்கும் ஒளி வீசும் விளக்கு அவ்விடத்தில் இல்லாத போது கண்ணும் தெரியாது. அது போல உடல் உண்டாகும் போது உயிர் விளங்கித் தோன்றும். உடலை அறவே மாற்றும் போது உயிர் உளதாக மதிக்கப்படுமோ இதனை ஆராய்ந்து பார் என்றவாறு.
விளக்கிருந்தால் கண்தெரியும், அதுபோல உடலிருந் தால் உயிர் தோன்றும். உடலில்லையாயின் உயிர் காணப் படுமோ? இதனை ஆராய்க என்பது கருத்து.
ஆவி துலங்குதலாவது உணர்தல் முதலான உயிர்ப் பண்புகளால் உயிர் இவ்வுடலுள் உண்டென்று அறியப்படல்.
-------------
விளக்கொளி கண்ணொளியில் சார பொருள்கள் புலப்படுமெனல்
போக்கும் வரவும் பொருந்தியதோர் தீபத்தைத்
தாக்கு நயனத்தைத் தாக்காவாம் - நோக்கத்தை
உற்றபோ துண்டா முறுங்காட்சி யொண்டீடம்
அற்றபோ தின்றா மதற்கு. 29
இ - ள் : தோற்ற ஒடுக்கங்கள் தீபத்தைச் சார்ந்திருக் கின்ற கண்ணைத்தாக்கா . தீபம் கண்ணைச் சார்ந்த பொழுது தான் பொருள் புலப்பாடு உண்டாம். விளக்கு இல்லாத போது கண்ணுக்குக் காட்சி இல்லையாம் என்றவாறு.
போக்குவரவு - அழிவும் ஆக்கமும், அதாவது அவிதலும் பொருத்தப்படுதலும்.
-----------
உருகருவியின் நிறைவெனல்
கருவிநிறை வன்றோ கருதுங்கா லென்னின்
உருவாய்த் திகழ்ந்தங் குறுமால் - வருமெய்
யுறுப்புக்குப் போக்கு வரவே யுறுதல்
சிறப்புக் கினியதெனத் தேர். 30
இ - ள் : ஆராயுமிடத்து கருவிகரணங்கள் நிறைவானவை அன்றோ எனின் அவை வடிவுடையனவாக விளங்கி அங்கே பொருந்தும். உடம்பில் உள்ள உறுப்புக்களுக்குப் போக்கும் வரவும் புணர்ப்புமாகிய தொழில் புரிதல் சிறப்பான இனிமை பொருந்திய செயலெனத் தெளிக என்றவாறு.
உருவெனப்படுவது கருவியின் நிறைவே. அதனை இட மாகக்கொண்டு உயிர் உறையும். போக்கும் வரவும் புணர்ப்பும் புரிதல் உறுப்புக்குச் சிறப்பான தொழிலாம் என்பது கருத்து. இச்செய்யுள் மெய்யென்பது உறுப்புக்களின் கூட்டமாய் உணர்வு கருவியாய்த் தொழில் புரிவதாய் இருப்பது. என்று விளக்கியவாறு.
-------------
பிறப்பிறப்பின் இயல்பு
நினைவே சென்ன நிகழ்தனுவைப் பற்றா
மனமே மரண மெனுமால் - கனவே
உலகமெனக் கண்டங் குறுமரனைச் சார
விலகுமறி யாமை விதி. 31
இ - ள் : இடைவிடாது நினைவே பிறப்பு. உடம்பைப் பற்றாது ஒதுங்கியிருக்கும் மனமே இறப்பு . உலகத்துள் காணப்படும் அனைத்தும் கனவு என, உணர்ந்து சிவபெருமான் திருவடியைச்சார அறியாமையும், அவை பற்றிவரும் ஊழ் எனப்படும் வினையும் விலகும் என்றவாறு.
பிறப்பு, இறப்பு, கனவு இவற்றின் இயல்பறிந்து இறைவன் திருவடியைச்சார அறியாமை நீங்கும், விதிவிலகும் என்பதாம்.
விதி - ஊழ்வினை. விதி வலிதாய் ஊட்டுதல் அறியாமையான் ஆதலின் அதனை முற்கூறினார்.
------------
அத்துவித மாதற்குரிய காலம்
சிறந்த கருவி திகழாவி தன்னில்
பிறந்திறந்து நிற்கின்ற பேதம் - அறிந்தொருவன்
அற்றபோ தன்றோ வரனிறைவோ டொன்றாகப்
பெற்றிடுவ தாகம் பெறும். 32
இ-ள் : விளங்குகின்ற ஆன்மாவானது சிறந்த கருவியாகிற தனுவில் தோன்றியும் அழிந்தும் நிற்கின்ற வேறு பாட்டினை அறிந்து, ஒரு பரிபாகி மலவாசனையும் அற்றபோ தன்றோ சிவத்தின் பரிபூரணத் தன்மையோடு ஒன்றாம் நிலையைப்பெறும் என்றவாறு.
ஆன்மா மலமற்று பிறப் பிறப்பற்றாலல்லது சிவத்தோடு ஒன்றாந் தன்மை எய்த இயலாது என்பது கருத்து.
திகழ் ஆவி - அறிவுருவாய் விளங்குகின்ற ஆன்மா. சிறந்த கருவி – வினைப் போகங்களைத் துய்த்து ஒழிப்பதற்காக இறைவனால் உதவப்பெற்ற கருவியாகிய உடல். பேதம் எண்பத்து நான்கு நூறாயிரமான யோனி பேதங்கள். அரன் நிறைவு - சிவனைப்போல எங்குங்கலந்து என்றும் இருக்கும் தன்மை. ஒன்றாக - அநித்தியமாய்க் கலந்து.
-------------
குணிகுணங்களின் இயல்பு
குணிகுணத்தின் றன்மை குறித்த பேர்க் கன்றோ
வெணுமுயிரின் றன்மை யியல்பாம் - குணியின்
திறமே மயமாகுஞ் சேர்குணத்தின் றன்மை
குறையாச் செயலாகக் கொள். 33
இ-ள் : குணகுணிகளின் வேறுபாட்டை ஆராய்ந்தவர் களுக்கன்றோ அதனைப் பார்க்கின்ற உயிரின் இயல்பு வேறாகத் தோன்றும். குணியின் தன்மை வடிவாகவும், குணத்தின் தன்மை குன்றாத அக்குணியின் செயலாகவும் கொள்க எ - று.
குணகுணிகளை ஆராயின் உயிரியல்பு விளங்கும். குணம். குணியின் செயல். குணி - வடிவு என்பதாம்.
குணி - குணத்தையுடைய பொருள். குணம் - பொருள் தன்மை.
---------------
குணகுணிகள் ஒன்றேயாதல்
குணிகுணம தென்னக் குறிக்குங்காற் பேதம்
எணிலவையு மொன்றா யிருக்கும் - நணியறியில்
நீரிற் குளிர்மை நிகழ்படிகத் துள்ளொளியும்
ஆருக்கு நேரா மறி. 34
இ-ள் : குணி என்றும் குணம் என்றும் இவை தம்முள் பேதம் ஆயுமிடத்து, இவையிரண்டும் ஒன்றாகவேயிருக்கும். கிட்டி ஆராயின் நீரில் குளிர்ச்சியும், படிகத்தில் ஒளியும் போல அனைவருக்கும் அபேதமாதலே சம்மதமாம். இதனை அறிக என்றவாறு.
குணகுணிகளுள் வேற்றுமையேயில்லை என்பதாம்.
எண்ணில் என்பது எணில் எனவும், நண்ணி என்பது நணி எனவும் தொகுத்தல் விகாரம் பெற்றன.
----------------
மாயையினீங்கப் பிறவியில்லை எனல்
மயத்தைக் குணமே மருவ மயமச்
செயலை யனுசரிக்கச் செய்யு - மயலையய
லாக்கும் போ தந்த மயமா யரனருளை
நோக்குதற்குச் சேரு முறை. 35
இ - ள் : வடிவைக் குணம் பொருந்த, அவ்வடிவு வினைகளைச் செய்யத் தூண்டும். மயக்கத்தைத் தன்னின் வேறாகப் பிரித்த போது, பிரிக்கப்பட்ட அந்த சுத்தமயமான ஆன்மா வின் வடிவே தன் வடிவாகிய சிவன் தன்னருளையே நோக்கச் செய்வன். இதனை ஆய்க என்றவாறு.
மல மாயைகளைப் பிரிந்த காலத்து இறைவன் ஆன்மாவிற் கலந்து நின்று அருளையே நோக்கச் செய்வர் என்பதாம்.
மயம் - வடிவம். குணம் - சாத்துவிகாதி குணங்களாகிய தன்மை. செயல் - நல்வினையும் தீவினையுமாகிய கன்மங்கள்.
--------------
ஆன்மா வினைகளிற் பிரிந்தகாலத்தே முத்தி எய்துமெனல்
செயலே பிறப்பிறப்பைச் செய்யுஞ் செயலின்
மயமே யதுவாக மன்னுஞ் - செயன்மயத்தை
யொத்தபோ தன்றோ வுறும் பிறவி மாறியருண்
முத்தியினைச் சேரு முறை. 36
இ - ள் : கன்மங்களே பிறப்பிறப்பை விளைவிப்பன. அச் செயல்களின் மயமாகவே ஆன்மா நிலைபெறும். கன்மமும் அதனை நுகருஞ் சாதனமாகிய தனுகரணங்களும் கூடிய போது தான் பிறவியுண்டாம். இந்நிலை மாறி அருளைச்சாரின் முத்தியினை எய்தும். இதுவே முத்தியை எய்தும் முறையாம் எ - று.
மலகன்மங்களை நீங்கியபோது முத்தியுண்டாம் என்பதாம்.
--------------------
சிவதரிசனம் சித்திக்குமுறையிதுவாம் எனல்
தன்னைத்தா னோக்கித் தகுங்குணியோ டொன்றினருண்
மன்னைத்தா னோக்க வருமன்றோ - வுன்னித்தான்
என்னறிவா லெல்லா மறிந்தே னெனவொருவன்
சொன்னதனாற் பேதமதோ சொல். 37
இ - ள் : ஆன்மாவாகிய தன்னைத்தானே ஆய்ந்து, தக்க குணிப்பொருளாகிய தனுவாதிகளோடு கூடின், திருவருளே வடிவான சிவபெருமானையும் தரிசிக்க நேரும். நினைத்துப் பார்த்து என்னறிவால் யான் எல்லாவற்றையும் அறிந்தேன் என சொன்ன அதனாலேயே மல நீக்கம் விளையுமோ? விளையாது என்றவாறு.
தன்னையும் தலைவனையும் தடைகளையும் ஆராயச் சிவதரி சனம் நிலைபெறும். அங்ஙனமன்றி யான் அனைத்தும் அறிந்திருக்கிறேன் என எண்ணினால் மட்டும் மலமகலாது என்பதாம்.
------------
சித்தாகிய ஆன்மா சிவத்தைச்சார உயர்வடையும் எனல்
வித்தோ டடங்குமுளை வீரியத்தால் வித்துமதை
ஒத்தே யடங்கி யுறுமன்றோ - சித்தையொத்து
நின்றதோ ராவி நிகழ்சிவத்தோ டொன்றாகச்
சென்றேறு மென்னத் தெளி. 38
இ - ள் : விதையில் முளை அடங்கியிருக்கும், விதையும் வீரியத்தால் அம்முளையை ஒத்து அதனுள் அடங்கியேயிருக் கும். சித்துப் பொருளாய் அறிவொத்து அடங்கிய ஆன்மா சிவத்தோடு கலக்கச் சென்று உயர்பதவி உறும் எனத் தெளிக என்றவாறு.
வித்தில் முளையும், முளையில் வித்தின் வீரியமும் அடங்கி யிருப்பதுபோல, ஆன்மாவினிடமாகச் சிவம் பிரகாசிக்கின், ஆன்மா முத்தி எய்தும் என்பதாம்.
-----------
மலச்சேர்க்கையிலேயே பிறப்பு எனல்
பிறப்பிறப்பாம் பெத்தத்தைப் பேசுங்கா லீசன்
சிறப்புடைய னாதலினாற் செல்லா - மறைப்பாம்
மலமே சடமுயிர்க்கு மாறாப் பிறப்பாம்
இலையா லெவர்க்குமிலை யாம். 39
இ - ள் : பிறப்பு இறப்பாகிய பெத்த நிலையைப்பற்றிப் பேசுங்கால், ஈசன் சிறப்புடையன் ஆதலினால் அவனைப் பற்றிய நிலை செல்லாவாம்; ஆன்மாவை மறைத்து நிற்கும் மலம் சடப்பொருளாம்; அதனால் ஆன்மாக்களுக்கு இடை யறாத பிறப்புண்டாம்; மலமில்லையேல் பிறப்பும் இல்லையாம் என்றவாறு.
பெத்த நிலையில் முத்திக்கு ஏதுவாகிய சிவத்தைப்பற்றி அறிதல் செல்லாவாம் ; சடமாகிய மலம் உள்ளவரை பிறப்புண்டு; அது நீங்கில் பிறப்பு இல்லை என்பது கருத்து.
பெத்தம் - மல மாயை கன்மங்களாற் கட்டுண்ட நிலை. ஈசனுக்குள்ள சிறப்பு - அநாதியே மலமாயைகளிற் கட்டுண்ணாமை. சடம் - அறிவிலாப்பொருள். இலையால் என்பதற்கு எழுவாயாகப் பிறப்பு என்பதை வருவித்துப் பிறப்பு இலையா னால் எனப்பொருள் கொள்க.
----------
மலமாயைகள் கூடிய போது பிறப்புண்டாம் எனல்
மலமே கருவி மருவா பசுவின்
குலமே பிறப்பிறப்பைக் கூடாச் - சொலுமிரண்டும்
ஒத்தபோ தன்றோ வுறும் பிறவி யொவ்வாமல்
வைத்தபோ தின்றாக மன். 40
இ - ள் : மலத்தையும் கருவியாகிய தனுகரணங்களையும் கூடாத ஆன்மக் கூட்டங்கள் பிறப்பையும் இறப்பையும் பொருந்தமாட்டா . உயிர்கட்கு அவையிரண்டும் வந்து ஒத்துக் கூடிய போது அன்றோ பிறவி பொருந்தும். அவை பொருந்தாதபோது பிறவியும் இல்லையாம் என எண் என்றவாறு.
மலமும், மாயாகாரியமான கருவிகளும் கூடின் பிறப்புண் டாம்; இன்றேல் இன்றாம் என்பது கருத்து.
---------------
பிறவி நன்மைபயப்பதெனல்
ஆவிக்கு நன்கா மரிய பிறப்பதனை
ஆவிக் கிலையென் றறைவதென் - மேவும்
மலப்பிணியைத் தீர்க்கு மருந்தா லதற்கிங்
கிலைப்பிணிமற் றென்னா மியம்பு. 41
இ - ள் : ஆன்மாக்களுக்கு நன்மை புரிவதான பிறப்பை அவைகட்கு இல்லையாம் எனத் தேவரீர் சொல்லுவதென்னே! அப்பிறவி மலநோயைப் போக்கும் மருந்தாமாதலால் அதற்கு இங்குப் பிணிப்பு இல்லை என்று சொல்லேம். நீயே உணர்ந்து சொல் என்றவாறு.
பிறவி என்பது மலவலி வாட்டும் மருந்து போல்வதாகலின் அப்பிறவிப் பிணிப்பு இல்லை என்னேம். நன்றாக உணர்ந்து உரை என்பதாம்.
பிணியிலை என்றது அம்மருந்தாகிய பிறவிக்கு நோயில்லை இயன்றவாறே திருவருள் இருந்த வண்ணமே ஆன்மாக்களைப் பொருந்தும் என்றவாறு.
---------------
உயிருக்குப் பிறவி இயல்பாக - இறைவன் தருவான் எனல்
உயிர்க்குப் பிறவி யுறுமியல்பா லென்றும்
மயக்க மதற்கியல்பாய் மன்னும் - இயக்குமரன்
தானென் தருவான் தகுமுணர்வைத் தாரணிமேல்
ஊனென் தருவா னுரை. 42
இ - ள் : உயிருக்குப் பிறவி இயல்பாகவே பொருந்தும்; அதற்கு மாயையால் மயங்கும் நிலையும் இயல்பாகவே பொருந் தும்; இயக்கும் சிவன் ஏன்? இவ்வுலகத்துத்தக்க ஞானத்தைத் தருவதற்காக உடலையுதவுவான் என்பதும் என்ன? உரைப்பா யாக என்றவாறு.
ஆன்மாக்களுக்குப் பிறப்பும், மறைப்பும், மயக்கமும் இயல் பாதலின் இறைவன் செய்யும் உபகாரம் என்ன? என வினவு வதன் வாயிலாகச் சடமானவற்றைக் கூட்ட ஒருவன் வேண்டும் என்பதை விளக்கியவாறு.
---------------
வினை நுகர்ச்சிக்கு மலப்பிணிப்பே காரணம் எனல்
பிணிக்கோ மருந்ததனைப் பெற்றவர்க்கோ வென்னில்
பிணியே மருந்தைப் பிணியா- வணியுமுயிர்
வீணே யருந்தா வியாதியோ டொன்றாகப்
பூணும்போ துண்டாம் பொசிப்பு. 43
இ - ள் : மருந்து நோய்க்கா? நோயுண்டவர்க்கா? எனின் நோய் மருந்தைக் கட்டுப்படுத்தாது ; உயிர்களோ மருந்தை வீணாக உண்ணா; உயிர்கள் மலப்பிணியோடு ஒன்றாகப் பூணும் போது நுகர்ச்சிகள் விளைவன்வாம் என்றவாறு.
நோய் மருந்துக்கு நோயாகாது. உயிர்கள் பயனின்றி மருந்தை உண்ணா ; ஆகவே உயிர்கள் மலமாயைகளாகிற பிணியோடு ஒன்றான போது வினைப்பொசிப்புகள் உண்டா கின்றன. ஆகவே பிறப்பு என்னுமருந்து மலமாயைகள் நீங்க அளிக்கப்படுவது என்பதாம்.
------------------
உயிரும் மலமும் ஒன்று கூடினாலல்லது பெத்தநிலையிலை எனல்
பிணிக்கோ மருந்ததனைப் பேறாகு மங்கந்
தனக்கோ பிறித்தொன்றைச் சாற்றின் - கனக்கவிவை
சந்தித்தா லல்லால் தரியா துயிர்மலமும்
இந்தவா றாகுமென வெண். 44
இ - ள் : மருந்து பிணிக்கோ ? அதனைப் பெற்றுள்ள உடலுக்கோ? ஒன்றைப் பிரித்துச் சொல்லின், உயிர் உடலைச் சந்தித்தாலல்லது பிணியை எய்தாது. உயிரும் மலமும் ஒன்று கூடினாலல்லது பெத்த நிலையாகிற பிணி எய்தாது என்று இவ் வாறு எண்ணுக என்றவாறு.
பிணிக்கா - உடலுக்கா மருந்து. உடல் உயிரொடு சேர்ந்தா லல்லது பிணி எய்தாது. அதுபோலத் தான் உயிரை மல மாயைகளாகிற பிணி சார்ந்தாலல்லது பெத்தநிலை எய்தாது என்பதாம்.
---------------
ஆன்மா மலத்தொடுசார்ந்து அதன்மயமாய் நிற்றல்
பளிங்கொளியே வன்னத்தைப் பற்றிப் பளிங்கு
விளங்குதலைச் செய்யா விதிபோல் - களங்கமலத்
துற்றபோ தாவி யுறுமலமாய்த் தீப்பிறவி
பற்றிநிற்கு மென்றதனைப் பார். 45
இ - ள் : பளிங்கின் ஒளியானது வந்தடுத்த வர்ணத்னதப் பற்றிப் பளிங்கைக் காட்டாது அதுபோல , ஆன்மா களங்க மாகிய மலத்தைச் சார்ந்த போது மலமாய்ப் பிறவியைப்பற்றி நிற்கும். இதனை ஆய்ந்து பார் என்றவாறு.
ஆன்மா வெண்பளிங்கு போலச் சார்ந்த மலமாயையின் தன்மையைப் பெற்றுப் பிறவியடையும் என்பதாம்.
விதி - முறைமை. களங்கம் - குற்றம் , கறை.
-------------
மலநீக்கம் உயிருக்கு அழகாம் எனல்
தனிக்கு மலமுந் தகுமுயிரு மொன்றாய்
நினைக்கப் பிறவி நிலையாம் - அனைத்தினையும்
உற்று நடப்ப துறுமலமே யாங்கதனை
அற்றிடுவ தாவிக் கணி. 46
இ - ள் : உயிரும் மலமும் ஒன்றான காலத்துப் பிறப்பு நிலைத்து நிற்பதாம். கன்மங்கள் அனைத்தையும் பொருந்தி உயிர்கட்குப் பொசிப்பூட்டி நடப்பது மலமே . அம்மலத்தை யகற்றுவதே உயிருக்கு அணியாம் என்றவாறு.
மல நீக்கமே உயிருக்கு அணி. மலச்சேர்க்கை வினைப் பொசிப்புக்கு ஏதுவாகிய பிறப்புக்கு ஏ.துவாம் என்பது கருத்து.
தனிக்கும் மலம் - பற்றாது சடமாய் நிற்கும் மலம். தகும் உயிர் - மலத்தையும் நீங்கித் திருவடிசாரும் தகுதிபெற்ற உயிர்; அதனைவிட்டு என்க. அணி - அணிபோல்வதாம்.
------------
அநாதி மலபெந்தனாகையிலேயே பிறப்பு எனல்
அனாதி மலபெந்த னாகையினா லன்றோ
பினாதிதனுப் போகம் பெறுத - லனாதிமலக்
கூட்டமே யின்றேற் குறித்தமல நான்குமுன்
னோட்டமே யன்றோ வுணர். 47
இ - ள் : ஆன்மா , அநாதியே மலத்தாற்கட்டுண்டவனா தலா லேயே பின் தனுவாதிகளைப் பெறுதல். அநாதி மலத் தொடு கூடானாயின் தனு கரண புவன போகமாகிற நான்கு மலங்களும் முதலிலே ஓடிவிடுமன்றோ ? என்றவாறு.
மலச்சேர்க்கையே தனுவாதி நான்கையும் பெறுதற்கு ஏது. அஃதில்லையாயின் தனுவாதிகளின் சேர்க்கையும் உளவாகா என்பதாம்.
பின் தனுவாதிபோகம் எனப் பிரித்துக்கூட்டி தனு முதல் போகம் ஈறான நான்கு மாயேய மலங்கள் எனப் பொருள் கொள்க. மாயேயங்களும் ஆன்மாவின் வியாபகத்தை மறைப் பனவாகலின் மலம் எனப்பட்டன.
----------------
கேவல சகல நிலைகள் இவையாம் எனல்
முப்பொருட்கு மின்றா மொழியுங்கால் தோற்றம்பின்
தப்பறவே நின்று தனிக்குமால் - எப்பொருளும்
ஒன்றாகும் போதங் குதிக்கு முயிர்மலமாய்
நின்றார்க் கிதுவே நிலை. 48
இ - ள் : சொல்லுமிடத்து பதி பசு பாசமாகிய மூன்று பொருள்கட்கும் தோற்ற-மில்லையாம். பின் அவை தவறின்றி நின்று தனித்தே நிற்கும். பசுபாசங்கள் அனைத்தும் ஒன்றாகும் போது உயிர் பிறப்பை எய்தும். மலத்தைச் சார்ந்து மல மாயே நின்ற சகலான்மாக்களின் நிலை இதுவேயாம் எ - று.
முப்பொருள்களும் அநாதி நித்தியமானவை. பசு பாசத் தோடு கூடின் பிறக்கும். பாசத்தோடுசார்ந்து பாசமாய் நிற்கும் இதுவே ஆன்மாக்களின் நிலை என்பது கருத்து.
---------------
உடற்பற்றுக் கழியப் பிறவியறும் எனல்
சங்கத்தா லுற்ற தனிப்பிறவி சங்கமலம்
அங்கத்தா னுற்ற வகையன்றோ - வங்கந்தான்
போக்குவதே யாகப் புகுந்ததாந் தீப்பிறவி
யாக்குதற்கே யாகா தறி. 49
இ - ள் : தனித்த பிறவி மலச்சேர்க்கையால் உற்றவை; கூட்டப்பட்டதான மலம் எடுத்த உடலான் அடைந்ததன்றோ! உடல் கழிக்கப்படுவதாக வந்த கொடிய பிறவி விளையா எ-று.
மலச்சேர்க்கையால் வந்த பிறவி தனுவாதி மாயேயங்கள் நீங்கப் பிறவி இல்லையாம் என்பது கருத்து.
சங்கம் - சேர்க்கை . சங்கமலம் - கூட்டப்பட்ட மாயாமலம். உடற்பற்று நீங்கப் பிறவியறும் என்பதாம்.
--------------------
காமன்மேல் இச்சைகொள்ள மலமாயைகள் விளையும் எனல்
காயமே லிச்சையுறக் காட்டியது தீயமலம்
மாயமே யாமான் மலமன்றோ - வாயதோர்
ஈசன்மே லிச்சை யிசைவதற்கே நின்றவுடல்
வாசமே யாங்காற்கா மன். 50
இ - ள் : அருளேயாய ஒப்பற்ற சிவபரம்பொருளின் மேல் அன்பு கொள்ளுவதற்காகவே இருந்த இவ்வுடல் மன்மதனுக்கு இடமானால், ஆணவமலம் உடல் மீது விருப்பம் விளையச் செய்தது; அம்மலம் அறியப்படாத மாயமேயாம் அன்றோ! என்றவாறு.
இறைவனை வணங்கக் கிடைத்த உடல் மன்மதனுக்கு இட மாயின் அதனால் விளைவது மலகாரியமான தேகப்பற்றாம். மலமோ தானும் அறியப்படாமல், விளைவும் அறியப்படாமல் இருப்பது என்பது கருத்து.
-------------
மலநோய் நீங்கத் தனுகரணாதிகளே மருந்தெனல்
மலமே பிணியுடலு மற்றதனோ டுற்ற
குலமேல் மருந்தேது கூறு - பலமருந்து
தோற்றும் பிணிக்குத் துடர்ந்துடனாய் நிற்பதுபோல்
மாற்றுந் தனுவே மருந்து. 51
இ - ள் : மூலமலம் நோய்; தனுகரணாதிகள் அம்மலத் தோடுவந்த கூட்டம்; அங்ஙனமாக நோய் தீர்க்கும் மருந்து எது? கூறுவாயாக எனின், உண்டாகிற வியாதிக்குப் பலவகை யான மருந்துகள் தொடர்ந்து உடனாகவே இருப்பது போல மலவன்மையை மாற்றும் தனுகரணாதிகளே மருந்தாம் எ-று.
தனுவோடுற்ற குலம் - தனு கரண புவன போகங்கள்.
-----------------
காயமே மருந்தெனல்
கரும மருந்து கருவிமலந் தானாய்
மருவிவரு மென்னின் மருவாப் - பருகக்
கருவிதனுப் போகங் கருமமாற் காய
மருவுமருந் தென்ன மதி. 52
இ-ள் : கன்மமலம் மருந்து. கருவி மலம் இவை தாமாகவே உயிர்களைப் பொருந்திவரும் எனின், அவை சடமாதலின் தாமே மருவா ; கருவாகிய தனு போகத்தைப் பருகக் கன்மங்கள் விளைகின்றன. ஆகவே உடலே மருந்து என்று உணர்வாயாக என்றவாறு.
கன்மங்களும், மலமும், மருந்தும், கருவியுமாகா; கன்மம் என்பது தனுபோகத்தை நுகர விளைவதாம்; காயமே உண்ணும் மருந்தாம் என்பது கருத்து.
----------------
அரன் காயத்தை வைத்து மலந்தன்னை அடுப்பான் எனல்
ஊட்டு மருந்தை யுறும்பிணிக்குக் காயத்தை
வாட்டியதோர் பாத்திரமாய் வைத்துமிகக் - கூட்டிக்
கொடுப்பான் மருத்துவன் போற் கொண்டமலந் தன்னை
யடுப்பா னரனென் றறி. 53
இ-ள் : உறுகின்ற நோய்க்கு உண்பிக்கும் மருந்தை உடலைக் கொள்கலமாக வைத்து மிகமருந்தைக் கூட்டிக் கொடுக்கும் வைத்தியனைப்போலச் சிவபெருமான் உயிரைப் பற்றிய பிணியாகிய மலத்தை அழிப்பன் என்றவாறு.
உடலை இடமாகக்கொண்டு மருந்தையூட்டிப் பிணி தீர்க்கும் மருத்துவன் போல வைத்திய நாதப்பெருமான் அடுத்த உடலை இடமாகக்கொண்டு மலநோயை வாட்டுவன் என்பது கருத்து.
----------------
தாக்கும் நோய்க்குத் தருமருந்தா? பிணி போக்கும் மருந்தா எனல்
தாக்கும் பிணிக்குத் தருமருந்தே லாவியுற்றங்
கூக்கு மறிவி லுறுமன்றோ - போக்கு
மருந்தேற் பிணியகலின் மாறு முயிர்க்குப்
பொருந்துமியல் பன்றே புகல். 54
இ-ள் : உயிரைத்தாக்கும் நோயாகிய மலத்திற்குக் கொடுக்கு மருந்தாயின், அம்மருந்து உயிரைப் பொருந்தி, ஆன்மாவை ஊக்கப்படுத்துகின்ற அறிவில் பொருந்துவதாம். பிணியைப் போக்குமளவில் பயன்படு மருந்தாயின் நோய் அகன்றவுடன் அதுவும் கெடும். உயிருடன் என்றும் பொருந் தும் தன்மையுடையதாகாது. நீ சொல் என்றவாறு.
மலம் உயிரைப்பற்றி நின்று நற்சார்பும் நமசிவாயசிந்தனை யும் மாறியபோது வந்து தாக்குவது. அதற்குத் தரும் மருந் தாயின் உயிரோடு ஒன்றி என்றும் மருந்தும் இருக்கும். பிணி போக்கும் மருந்தாயின் பிணி அகன்றவுடன் தானும் கெடும். இவ்விரண்டுள் நீ சொல்லு மருந்து எது? என்பதாம்.
--------------
சிவனடியாரே மருந்தாவார் எனல்
வருத்தும் பிணியகற்றி வந்தமருந் தேதன்
கருத்தன்பா னிற்குங் கணக்கா - லொருத்தன்
மலமே யறுத்து வருந்தநுவே யீசன்
குலமே யெனவறிந்து கொள். 55
இ - ள் : நம்மை அநாதியே பற்றி நின்று வருத்தும் நோயை நீக்கி வந்த மருந்து தம் முதல்வனாகிய சிவனிடம் நிற்கும் கணக்காம். ஈசனாகிய பரசிவத்தின் கூட்டமாகிய அடியார்களே, பரிபாகமுற்ற ஓர் ஆன்மாவின் மலத்தை நீக்க வரும் திருமேனி என அறிந்து கொள்வாயாக என்றவாறு.
நம் நோயைப் போக்கும் மருந்து கருத்தனே; சிவனடி யார்களே பரிபாகமுற்ற நம் மலத்தைப் போக்கவந்த சிவத் திருமேனி என உணர்க என்பது கருத்து.
கணக்கால் என்பதில் ஆல் அசை. தன் கருத்தன்பால் நிற்கும் கணக்காவது முதல்வனையே இடைவிடாது எண்ணும் இயல்பு. அதனால் பிணியகலும்; சிவனடியார் மல நீக்கி அருள் வழிச் செலுத்துவர் என்பதாம்.
---------------
மலமே நோய் சிவபுண்ணியமே மருந்து எனல்
மூன்று மலமு மொழியுங்காற் றீதாகத்
தோன்றுமா னோயாகச் சொல்லுவதா - மேன்றசிவ
புண்ணியமே நன்மருந்தாய்ப் போக்குமென வாங்கதனை
நண்ணிய நூ லோதுமதை நாடு. 56
இ - ள் : சொல்லுமிடத்து மும்மலங்களும் தீமை பயப்பன வாகத் தோன்றும் பெரிய நோயாகச் சொல்லப்பெறுவன வாம். ஏலுமான சிவபுண்ணியங்களே நல்ல மருந்தாக அப் பிணிகளை அகற்றும் என ஆகமங்கள் அறிவிப்பதை ஆராய்ந்து பார் என்றவாறு.
மலம் நோய், சிவபுண்ணியங்கள் மருந்து என ஆகமங் கள் அறிவிக்கின்றன. அவற்றை ஆராய்ந்து மனங்கொள்க என்பது கருத்து.
-------------------
பிணி யாருக்கு இல்லை எனல்
தருமா தருமமெனத் தங்கு மிரண்டும்
வருமாம் பொசிப்பாக மன்னி - மருவிமிக
வுற்றசிவ புண்ணியமே யொண் மருந்தா யோங்குமிதைப்
பெற்றவர்க்கே யில்லைப் பிணி. 57
இ - ள் : தருமம் அதருமம் என்ற இரண்டும் அனுபவத் திற்குரியனவாகச் சுகம் துக்கமாக வரும். இவையிரண்டும் நீங்கலாக ஆன்மாவிற்கு அனுபவமாகப் பொருந்தி வருகின்ற சிவபுண்ணியமே மருந்தாக வரும். இதனை அடைந்தவர்கட்கே பிறவிப்பிணி இல்லையாம் என்றவாறு.
புண்ணிய பாவங்கள் சுகதுக்க ரூபமாக அனுபவத்திற்கு வருமாயினும் சிவபுண்ணியமே சிவானுபவமாகப் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாவது என்பது.
சிவபுண்ணியம் - சிவபெருமானுக்குச் செய்யும் சரியை கிரியையாதிகள். அவற்றின் பயன் சிவஞானம். அதன் பயன் சிவபோகம். அது பிணிதீர்க்கு மருந்து ஆம் என்க.
-----------------
சிவம் ஒன்றே இன்பந்தருவது எனல்
மலப்பிணியை மாற்று மருந்தே லதனைச்
சொலப்பிணியொன் றற்றாரே தோய்வ - ரலற்பிணியை
ஓட்டு மருந்தங் குறுமரனை யல்லாமல்
நாட்டுவதே யன்றோ நலம். 58
இ-ள் : மலமாகிய பிணியைப் போக்கும் மருந்தினைச் சொல்லப்பெற்ற அந்த மலமாகிய பிணியின் வன்மை அற்ற வர்களே அம்மருந்தினைப் பொருந்துவர் . துன்பப் பிணியைத் தொலைக்கும் மருந்து சிவனை அன்றி வேறெதனைத் துணியக் கூடும்? சிவம் ஒன்றே அன்றோ நலம் தருவது என்றவாறு.
மலவலி வாடியவர்களே மலம் நீக்கும் மருந்தினை உண்பர். மருந்து சிவனையன்றி வேறின்று; அதுவே இன்பம் பயப்ப தாம். அலல் பிணி - அல்லலாகிய நோய்; தொகுத்தல்.
--------------
மலபந்தம் அற்றவர்க்கே சிவம் தெரியும் எனல்
பிணியற்றா ரன்றோ பிரியா வருளைப்
பணிவுற்றங் கன்பு பரிவார் - பிணியதனை
யுற்றார்க்குச் சற்று முறுமரனைத் தோன்றாதங்
கற்றார்க்கே யாமென் றறி. 59
இ - ள் : மலநோய் அற்றவர்களே அங்கியிற் சூடுபோலச் சிவத்தை விட்டுப் பிரியாத திருவருளைப் பெற்று வணங்கி அன்பு செய்வர். மலநோய் உற்றவர்களுக்குச் சிவம் சிறிதும் வெளிப்படாது. மலம் அற்றவர்க்கே சிவதரிசனம் ஆம் எ - று.
மலம் அற்றவர்க்கே சத்திநிபாதமும் சிவப்பேறும் சித்திக் கும் என்பதாம்.
--------------
சிவதரிசனம் பெறின் மலம் சேட்டியாதெனல்
மறைக்கு மலங்கருவி மாற்றாக்கா லென்னி
னுறைக்குங் கருவிகளு மொத்தே - மறைப்புக்
குறைப்பட்ட தன்றோ குறித்தரனை நோக்கிற்
சிறைப்பட்ட தாகுமெனத் தேர். 60
இ - ள் : ஆன்மா வியாபகத்தை மறைப்பதாகிய மலம், மாயேயங்களாகிற கருவிகளால் வலி கெடாதாயின், எனக் குள்ளே தங்கும் பாயை கன்மங்களாகிற கருவிகளும் அம் மலத்தோடு கூடி நின்று மறைப்புத் தொழிலையே மிகுதியாகச் செய்யும். ஆதலால் சிவபரம்பொருளையே எண்ணிப் பார்க்கு மாயின் அவைகள் சேட்டியாது சிறைப்பட்டன போலாம் என்றவாறு.
மலவலி வாட்ட இறைவன் கூட்டிய மாயையும் கன்மமும் ஆகிய கருவிகள் மலத்தைச் சார்ந்து மறைப்புத் தொழிலையே மிகுதியாகச் செய்யும். சிவதரிசனமும் சிவயோகமும் செய்யின் அவைகள் சிறைப்பட்டனபோலத் தம் சேட்டைகளைச் செய் யாது அடங்கிப்போம் என்பது கருத்து.
தேர் - தெளிவாயாக.
-----------
சிவத்தைச் சாரச்சாரத் திருவருள் சேரும் எனல்
பிரியா வருளைப் பிரிக்கு மலநோய்
திரியா வினை மருந்து சேர்ந்தங் - குரியமல
நந்தநந்த நாதனையே நண்ணி நண்ணியம்மருந்தால்
வந்திப்ப தாக வரும். 61
இ - ள் : என்றும் பிரியாது மறைந்தும் வெளிப்பட்டும் ஆன்மாவைச்சார்ந்து நிற்கும் திருவருளை ஆன்மாவை விட்டு வேறாக்கும் மூலமலமாகிற பிணியும், தன் தன்மை கெடாத கன்மங்களும் மலவலிமாற்றும் மருந்தாகச் சிவம் சேர்த்த ஆகந்துக மலமாகிய மாயையும் ஒத்து மலவலி குறையக் குறையச் சிவத்தைச் சேர்ந்து, அம்மருந்தாலே வணங்குவ தாக ஆன்மாவுக்குக் கோசரமாம் என்றவாறு.
மலவலி கெடத் திருவருளாலே சிவதரிசனம் சித்திக்கும் என்பது கருத்து.
--------------
நோயும் கருவியும் மருந்தும் மருத்துவனும் எவை எனல்
நிலையே மலங்கருவி நீக்காத போதிங்
கிலையேற் பொறியு மிசையா - மலமிருட்டுத்
தீபங் கருவி திகழ் மருந்து சேர்வினையாம்
பூபதி போ லீசனையே போற்று. 62
இ - ள் : அநாதியே ஆன்மாவை முத்திக்காலத்திலும் விட்டு நீங்காதது மலம். அதனைக் கருவியாகிய மாயை நீக் காதபோது ஞானமும் பொருந்தாதாம். மலம் இருள்; கருவி யாகிய மாயை தீபம் ; கன்மங்கள் மருந்து; ஈசன் வைத்திய பூபதி எனப்போற்றுக என்றவாறு.
ஆணவ வலியை மாயையாகிய உபகாரமலம் அகற்றாத போது சிவஞானப் பேறில்லையாம்; ஆகவே மல இருளை, மாயைத் தீபங்கொண்டு, கன்ம மருந்தை நுகர்ந்து, பரம பதியை மருத்துவனாக நம்பிப்போக்குதல் வேண்டும் என்பதாம்.
பூபதி - வைத்திய பூபதி.
---------------
மலம் நீங்கின் அருள் உருக்கொள்ளும் எனல்
இருளை யொதுக்கு மிசைந்த கருவி
மருளுருவாய்க் கன்ம மருவும் - அருளும்
மறைப்புற்றார் காண மருவுமுருப் போலச்
சிறப்புற்று நிற்குமெனத் தேறு. 63
இ-ள் : இறைவனால் உபகரிக்கப்பெற்று உயிரைப் பொருந்திய கருவியாகிய மாயை மலவலியை அகற்றும். கன்மமலம் அழுந்தி அனுபவிக்கச் செய்யும் மருள் வடிவாக ஆன்மாவைப் பொருந்தும். அந்நிலையில் திருவருளும் மல மறைப்புற்றவர்கள் அறியும் வண்ணம் உருக்கொண்டது போலச் சிறந்து விளங்கும் என்றவாறு.
மலபரிபாகமுற்ற காலத்துத் திருவருள் தெரிசிக்கப்பெறும் என்பது கருத்து.
--------------
பிராரத்தகன்மம் நுகர்ந்தாலன்றி ஒழியாது எனல்
கருமமருந் தென்றுங் கருது பிராரத்த
வுருவுக் கிசைய வுறுமென்றுங் - கருதில்
உடற்கிசையத் தானே யுறுமேற் றொடர்ந்து
விடற்கிசையா தென்ன விதி. 64
இ - ள் : கன்மமலம் மருந்து போல்வதென்றும் அவற்றுள் ஒன்றாகக் கருதப்பெறும் பிராரத்த கன்மம் அடுத்த தேகத் திற்கு இசைய அடையும் என்றும் எண்ணின், அடுத்த தேகத் திற்கு ஏற்பத் தானே பிராரத்தகன்மம் அடையுமானால் அது தொடர்ந்து விடுதற்கும் இயலாததாக முடியும் எனத் துணிக என்றவாறு.
பிராரத்த கன்மம் உண்டாலல்லது ஒழிக்க இயலாதது என்பது கருத்து.
----------------
பிராரத்த கன்மம் பிணிபோக்கும் எனல்
பிணிக்கு மருந்து பிராரத்தந் தானே
தணிக்கும் வகையாற் றணிக்கும் - திணிக்கும்
இரைவழியே சேரு மிருளொளியா மென்னு
மரபுமருந் தென்ன மதி. 65
இ - ள் : பிராரத்த கன்மம் மலப்பிணியைத் தணிக்கும் வகையால் தணிக்கும்; அறியாமையைப் பயக்கும் ஆணவ இருள், ஆன்மாவோடு திணிக்கப்படுகின்ற போகமாகிற தீனி யின் வழியே சேருகின்ற ஒளியாகிய முறையே மருந்தாவது என்று கருதுவாயாக என்றவாறு.
பிராரத்த நுகர்ச்சியே மலவலி வாட்டும் மருந்தாம். மல நோய் மாயையின் உதவியால் இருள் தன்மைகெட ஒளிவழங் கும் உபகார மலமாம் ; ஆதலால் அது மருந்துமாம் என மதிப் பாயாக என்பது கருத்து.
---------------
பிரபஞ்சவாழ்வில் மயங்கிச் சிவத்தையறியாதார்க்கு ஞானமில்லை எனல்
மலத்தையிருட் போலென்று மன்னுகுரு டென்றும்
பிலத்தநோய் போலென்றும் பேசின் - மலத்துமன
மோகத்தால் வஞ்சத்தை மூண்டரனைக் காணாத
தேகத்தாற் கில்லைக்கண் டேறு. 66
இ - ள் : ஆணவமலத்தை இருள்போல்வதென்றும், நிலை யான குருட்டுத்தன்மை என்றும், வலிய நோய் என்றும் சொல்லின் அறியாமையாம். ஆன்மா மயங்கிப் பிரபஞ்சத்தில் மூழ்கிச் சிவனைக் காணாத போது உடலை எடுத்த உயிர்க்கு ஞானக்கண் இல்லை என்று தெளிக என்றவாறு.
ஆன்மா ஆணவத்துள் அழுந்தி அஞ்ஞான மயமான போது பிரபஞ்ச வாதனையிற் சிக்கிச் சிவத்தையறியாது : அப் போது அதற்குச் சிவஞானம் பிறவாதாம் என்பது கருத்து.
--------------
கன்மம் சிவதன்மமாகும் உபாயம்
வறுமையால் நோயால் வணக்கத்தான் மன்னர்
சிறுமையாற் செல்வத்தாற் சேரும் - மறுமையால்
ஈட்டும் வினையா லியன்றவரத் தாலரன்மேல்
நாட்டமுற்ற தால் மருந்தாய் நாடு. 67
இ - ள் : வினை, வறுமையாலும், நோயாலும், பணி வாலும், அரசர்கள் செய்யுந் தண்டமுதலிய சிறுமைகளா லும், செல்வத்தாலும் சேர்வனவாகிய மறுமைக்கென்று சம்பாதிக்கப் படுவனவாம். அதனை மறுமைக்கு எனத் தேடப் பெறும் பதிபுண்ணியங்களால் விளைந்த மேன்மையால் சிவன் மேல் அழுந்தியபோது மருந்தாக மதிக்க என்றவாறு.
வறுமை முதலியவற்றால் விளைந்த வினை, சிவப்பணி செய் யும் சென்மத்தைச் சேர்ந்தபோது சிவனருள் நோக்கம் பெறும் மருந்தாகிறது என்பது கருத்து.
-----------
பிணிக்கு மருந்து இயல்பாயினும் அதனை
மறுக்குஞ்செயலை அளித்தது ஏன் எனல்
உரக்கும் பிணியா லுறுமருந்தை யென்றும்
தரக்கண் டிருக்குந் தனிமை - நரர்க்கின்(று)
இயல்பே யெனுமா லிசைந்ததனை மாற்றச்
செயலேன் தொடுத்தான் சிவன். 68
இ-ள் : வருத்தும் நோய்க்கேற்ற மருந்தை என்றைக்கும் வைத்தியநாத சுவாமி தர அதனை ஆராய்ந்து கண்டிருக்குந் தனிமை மக்களுக்கு இயல்பே. அங்ஙனமிருக்க அதனை மாற்று வதற்கேற்ற செயலை சிவன் ஏன் சீவனுக்கு உதவினான் எ - று.
நோயும், நோய்க்கு மருந்து உதவுதலும், உயிர்களுக்கு இயற்கை. அதனை மறுக்கும் செயலை உயிர்களுக்கு உதவியது ஏன்? உரக்கும் - வலியுறுத்தும். மாற்று அச்செயல் எனப் பிரிக்க.
----------------
இறைவன் மலநாசம் செய்தல் இவ்வாறெனல்
அனாதி மயக்கமுயிர்க் காகையினா லீசன்
பினாதி யுடல் பெருக்கு வித்துத் - தனாதி
யறிவுள்ள தெல்லா மளிப்பன் மலத்தின்
திறமுள்ள தெல்லாந் தெகித்து. 69
இ-ள் : உயிர்களுக்கு ஆணவமலக்காரியமாகிய அறி யாமை அநாதியே உள்ளது; ஆதலின் இறைவன் பின்பு உடல் முதலியவற்றை உதவி தன்னுடையதான அறிவனைத்தையும் மலத்தின் வலிமையை வாட்டி அளிப்பன் என்றவாறு.
உயிர்களுக்கு அறியாமை அநாதியாதலின் அதன் காரண மாகிய மலத்தை ஞானத்தை உதவி வலியொடுக்குவன் சிவன் என்பதாம்.
பினாது தனாது என்பன யகர முதன்மொழி வரக் குற்றிய லிகரமாயிற்று. மலத்தின் திறம் என்றது மலகாரியமாகிய அவிச்சை முதலிய எட்டையுமாகும்.
-----------
இதனால் எழுவது உயிருக்குப் பிறவி வாய்த்தது மலத்தொடக்கால் எனல்
தன்னியல்புக் கில்லைத் தகும்பிறவி யெப்பொருட்கும்
மன்னு பொதுவியற்கே வாய்த்ததாம் - துன்னும்
உயிர்க்குப் பிறவி யிலையென்றான் மற்றொன்றால்
மயக்கப் படாவிடத்தே மன். 70
இ-ள் : , உலகிலுள்ள எவ்வகைப் பொருளுக்கும் தக்கப் பிறவி உண்டாவது உயிர் தன் இயல்பில் நிற்பதாகிய சொரூப நிலைக்கு இல்லையாம்; நிலைபெற்ற பொது இயல்பாகிய தடத்த நிலைக்கே பொருந்துவதாம். அங்ஙனமாக உயிர்களுக்குப் பிறவி இல்லையென்றால் உயிரின் வேறாகிய மலத்தால் மயக்கப் படாத இடத்திலேயே என்று எண்ணுவாயாக என்றவாறு.
தன் இயல்பு - சொரூபநிலை. பொதுவியல்பு - தடத்த நிலை. துன்னும் - பொருந்தும். இதற்கு ஏற்பத் தனுகரணங்களைத் துன்னும் எனச் செயப்படுபொருள் வருவிக்க.
--------------
பெத்தநிலை முத்திநிலை இரண்டற்குமுள்ள வேறுபாடு
அறிவித்தா லெல்லா மறியுந் தனித்து
மறுவற்று நின்ற வழக்கால் - செறியில்
அறிவித்தா லெல்லா மறியா பொதுவாய்
மறுவுற்று நின்ற வழக்கு. 71
இ - ள் : மலத்தால் அவிச்சையற்று நின்ற வழக்கத்தால் ஆன்மா தனித்து நின்று அவரவர் தகுதிக்கேற்ப உள் நின்றும் முன்னின்றும், குருவாயும், அறிவித்தால் எல்லா உயிரும் அறியும். பொதுவாக ஆணவ மலத்தைச் சார்ந்திருந்தக் காலத்து எல்லா உயிர்களும் அறிவித்தாலும் அறியா எ - று.
மலவலி ஒடுங்கியகாலத்து இறைவன் உணர்த்த உயிர்கள் உணரும், நீங்காதகாலத்து உணரமாட்டா என்பது கருத்து. இவ்வெண்பா "உணர்த்தினாலன்றி உணராவுளங்கள்" என்ற சிவஞான போத வெண்பாவை அடியொற்றி எழுந்தது.
-------------
ஆன்மா படிகம் போன்றதெனல்
படிக மொருபொருளைப் பற்றிவிட்டுப் பற்றி
முடியி னொரு பொருண்மேன் முற்று - நெடிய
மலமொருகா லாவி மனுவொருகா லீசன்
னிலையொருகா லென்ன நினை. 72
இ :ள் : வெண்பளிங்கு ஒரு பொருளைப் பற்றி நின்று. பின் அதனை விட்டு வேறொன்றைப்பற்றி முடிவில் ஒரு பொருள் மேல் முடிந்து நிற்கும். அதுபோல உயிர் ஒருகால் மலத்தையும் ஒருகால் உடலையும் ஒருகால் ஈசனையும் சார்ந்து, சார்ந்ததன் வண்ணமாகவே இருக்குமென நினைப்பாயாக என்றவாறு.
ஆன்மா வெண்பளிங்குபோல சார்ந்ததன் வண்ணமாய் இருக்குமென்பது.
---------------
நண்பகலில் படிகம்போல ஆன்மா உபாதியற்று விளங்குமெனல்
பன்னிறத்தோ டொத்த படிகம் பகனடுவில்
தன்னிறமே கண்ட தகைமையென - மன்னிறந்தான்
உற்றபோ தாவிக் குபாதியற்றுத் தன்னியல்பே
பெற்றிடுவ தாகப் பெறும். 73
இ - ள் : பலவகையான நிறத்தோடு ஒத்துச் சார்ந்த படிகம் நண்பகலிலே தனது நிறத்தையே தான் காட்டும் தன்மைபோல சிவத்தின் வண்ணத்தைச் சார்ந்தபோது உயிருக்குத் துன்பம் நீங்கி சிவமாகிய தன் இயல்பே பெற்று விளங்குவதாகப் பெறும் என்றவாறு.
நண்பகலில் வெண்பளிங்குபோல சிவத்தைச் சார்ந்த சீவன் சிவமயமாகவே விளங்கும் என்பதாம்.
மன் - கடவுள். நிறம் - தன்மை . உருவமிலாத கடவுளுக்கு வண்ணமில்லை; ஆதலின் இங்ஙனம் உரைக்கப்பட்டது.
உபாதி - சார்பினால் விளையும் துன்பங்கள்.
--------------
சிவச்சார்பு பெற்றார்க்கு வேற்றுச்சார்பு விளையாது எனல்
பற்றும் படிகமது பற்றைவிட்டுப் பற்றியபின்
முற்று மொருபொருளை முற்றினால் - மற்றொன்றைப்
பற்றா ததுபோற் பரசிவத்தோ டொன்றுபட்டங்(கு)
உற்றார்க் கிலைபிறிதென் றோர். 74
இ - ள் : சார்ந்த பொருள்களின் நிறத்தைப் பற்றி நிற் கும் படிகம். அச்சார்பைவிட்டு முழுவதும் ஒரு பொருளையே பற்றிய பிறகு அந்த முழுத்தன்மையால் வேறொன்றைச் சாராதது போல பரசிவத்தோடு அநந்நியமாய்கலந்த பேருக்கு வேற்றுச் சார்பு விளையாதென்று அறிவாயாக என்றவாறு.
படிகம் தன் சார்பை விட்டு எங்குமாயிருக்கின்ற ஆகாயத் தைப் பற்றின் மற்றொன்றையும் பற்றாது போல பரசிவத்தோடு ஒன்றுபட்ட ஆன்மா வேறொன்றையும் சாராது என்பதாம்.
முற்றினால் - பூரணத்தன்மையால் என்பதாம்.
------------------
சகல முதலாகிய நிலை இவையெனல்
உற்ற சகல முறுங்கே வலமலத்தால்
குற்றமுற்ற நித்திரையே கொண்டதான் - மற்றவருள்
தட்டி யெழுப்பத் தகும் பிரம மாய்த்திரிந்தங்(கு)
ஓட்டியதே சாக்கிரமென் றோர். 75
இ-ள் : பொருந்திய சகல நிலையாவது மலங்களோடு கூடியிருக்குந்தன்மை. மலங்களால் குற்றம் பொருந்திய கேவல நிலை நித்திரையே வடிவானது. திருவருளானது தட்டியெழுப்ப தானே பிரமமாய் ஊர் எங்குந்திரிந்து அங்கு உடனாயதே சாக்கிராவத்தை யென்று அறிவாயாக எ - று.
மும்மலங்களோடு உற்றநிலை சகலம். மலத்தோடு கூடி மலமாய்கைகள் மாத்திரையாய் நித்திரையுற்ற நிலை கேவலம். திருவருட்சத்தித் தட்டியெழுப்ப தானே பிரமமெனத் திரிந்து உலகத்தோடு ஒட்டி வாழ்வதே சாக்கிராவத்தையாம் என்பது கருத்து.
-------------
முடிந்த முடிவும் இறுதியுண்மையும் இவையெனல்
நெடிய வுடலனைத்து நீக்கித்தா னாதல்
முடியு மதுவே முடிவால் - படியிலுறச்
செய்யா திருக்குந் திறமே மறுமையென்கை
மெய்யா யிருக்கும் விதி. 76
இ-ள் : பருத்து நீண்ட உடலாதி அனைத்தையும் நீக்கித் தானே தானாய் முடிவதுவே முத்தி நிலையாம். இப்பூமியில் மீட்டும் பிறவாதிருக்கும் தன்மையே மறுமையாம் என்பதே உண்மையான வேதவிதியாம் என்றவாறு.
மாயேயமாகிய தனுகரணாதிகளை விட்டு உயிர் சிவத்தோடு லயித்தலே முத்தி. மீட்டும் பிறவாதிருக்கையே மறுமை. இதுவே உண்மையான வேதவிதி என்பது கருத்து.
பிறந்தும் பயனெய்தாமையின் நெடியவுடல் என்றார். உடல் அன்னமயம் முதலாக ஐவகைத்தாதலின் உடலனைத்து மென்றார். தானாதலாவது சீவன் சிவத்தோடொன்றி வேறற்று நிற்றல். அதுவே முடிவு. அதுவே சித்தாந்த முத்தி. மெய் - வேதம்.
--------------
சிவானுபவத்திறன் இதுவெனல்
சுத்தப் படிகமெனத் தோய்வற்ற போதாவி
நித்தியமே யென்ன நிகழ்த்தித்தன் – சத்தியோ(டு)
ஒன்றா யனுபவித்தங் குற்றதனை நோக்கிப்பின்
நின்றாவ தன்றோ நிலை. 77
இ - ள் : ஒன்றையுஞ் சாராத வெண்பளிங்கு போல தோய் வற்று நின்ற நிலையிலே உயிர் நித்தியம் என்பதை உணர்த்தி தன் திருவருட்சத்தியோடு ஒன்றாய்க் கூடி நுகர்ந்து அங்குற்ற சிவத்தைத் தரிசித்து, பின் அதனோடு ஒன்றாய் நிற்பதே சிவ
போகமாகிய நிலை என்றவாறு.
வெண்பளிங்குபோல ஆன்மா தூயதாய்த் திருவருளோடு ஒன்றி சிவத்தைச் சார்ந்து அத்துவிதமாய் நிற்பதே முத்தி என்பது கருத்து.
------------
உலகு உற்பவிக்கும் முறை இதுவெனல்
தன்னை யநுபவிக்குஞ் சம்புத்தன் சத்தியெனும்
மின்னை யநுபவிக்க மேவுங்கால் - துன்னும்
உலகுதிக்கு மாங்கவனை யொன்றும்போ தெல்லாம்
விலகுமுயிர்க் கீதே விதி. 78
இ - ள் : சத்தியைத் தன்னுள் அடக்கித் தான் தானாய்த் தன்னையே அனுபவித்திருக்குஞ் சிவம், தன் சத்தியாகிய பெண்ணை அனுபவிக்க விரும்பும் போது தெரிந்த இவ்வுலகம் தோன்றும். இங்ஙனமே சிவத்தோடு ஒன்றும் போதெல்லாம் விலகி நிற்கும் சீவனுக்கும் இதுவே முறைமையாம் எ - று.
சிவம் சத்தியைக்கூட விரும்பின் உலகம் தோன்றுவது போல சீவன் சிவனைவிட்டுப் பிரியின் உலகம் தோன்றும் என்பது கருத்து.
அஃதாவது சீவன் சிவத்தோடு ஒன்றியிருக்கும் போது சிவனை அன்றி வேறொன்றையும் அறியாத சீவன், சிவத்தை விட்டு விலகுமாயின் பொன்னும், பொருளும், மாடும், மனையும், உலகமும் நுகர்பொருளாகத் தோன்றும். இது சிவம் சத்தியை தன்னோடு அபின்னமாகக் கருதாது சிருட்டி உன் முகமாக திரு வுளத்தடைந்து சத்தியை நுகர எண்ணுங்கால் உலகம் தோன்று வதுபோல என்பது விளக்கியவாறு.
------------
அறிவால் அரனை அறியும் போது வேறுபட்ட நிலையும், சிவனருளைச் சார்ந்து
நினையும் போது ஒன்றாம் நிலையும் உளதாமெனல்
தன்னறிவை நோக்கித் தழுவும்போ தீசற்குப்
பின்னமுற்ற தாகப் பெறுமன்றோ - துன்னும்
இவனை யறிவுற் றிசையும் போ திங்கே
சிவனருளைச் சேர்வனெனத் தேர். 79
இ - ள் : ஆன்மா தன்னுடைய அறிவை துணையாகக் கொண்டு சிவத்தை நோக்கி தழுவிய போது சிவத்திற்குச் சீவன் வேறு ஆனதாக நினைக்கப் பெறும். சிவத்தையடைந்த சீவனை சிவஞானம் பொருந்தி ஒன்றாயொன்றும் போது இங்குச் சீவன் சிவனைச்சேர்வன் எனத் தெளிவாயாக என்றவாறு.
அறிவால் அறிகின்றேமெனின் அறிவானும் அறியப்படும் பொருளும் வேறாதலும் சீவனே சிவஞானத்தால் அறியலுறின் அருளே தானான ஒன்றாதலும் உளதாம் என்பது கருத்து.
---------------
பிறப்புக்கேதுவான சத்தி பிறவியைக் கொடுக்கும்
சிவசத்தி பிறவியை நீக்குமெனல்
சிவசத் தியைப்புணருஞ் சீவன்முத்த ரென்ப(து)
அவசத்த மென்ப தறிவேல் - பவசத்தி
ஈட்டுவிக்குந் தீப்பிறவி யீங்கிதனை யீசனருள்
ஓட்டுவிக்கு மென்றே யுணர். 80
இ - ள் : சீவன் முக்தர்கள் சிவசத்தியைக் கூடுவார்கள் - என்னும் சொல் மிகக்கீழான வழக்காமென்பது அறிவுடைமை - யாகுமானால் பிறவிக்கேதுவான இறைவனது ஆற்றல் ஆன் மாக்களோடு கூடிய பிறவியை உண்டாக்கும். இதனை இறை வனுடையத் திருவருட் சத்தி ஓட்டுவிக்கும் என்றே உணர் வாயாக என்றவாறு.
தாயைப் புணர்ந்தான் என்பதுபோல சீவன் முத்தன் சிவ சத்தியைப் புணர்ந்தான் எனல் பழிச்சொல்லாமெனில், சிவ சத்தியுள் பிறவிக்கு ஏதுவானது பவசத்தி என்றும் அதனை ஒழிப்பது அருட்சத்தியென்றும் கூறப்படும். அதனுள் மகன் தாயொடு கூடினான் என்றால் தாயின் கருணைக்கு இலக்கானான் என்பதன்றி அவசத்தமா காமை தெளிவாதலின் பெத்த நிலை, முத்தி நிலை இரண்டினும் சிவனுக்கே சிவசத்தியைப் புணருதல் இயல்பென்பது தெளிவித்தவாறு.
இச்செய்யுள் சிவசத்தியைப் புணர்வர் சீவன் முத்தரென் னும் அவசத்தம் மாபாதமென்னும் மறைஞானசம்பந்தர் செய்த பதி பசுபாச பனுவல் செய்யுளுக்கு மறுப்பென உணர்க.
-----------
ஆன்மாவின் அஞ்ஞானத்தை ஓட்டியது யாதோவெனல்
கண்ண தனை யுற்ற கடிய விருளதனைக்
கண்ணொளியோ வுற்ற கதிரொளியோ - கண்ணகல
ஓட்டியதிங் கேதோ வுறுமுயிரின் தீதிருளை
வாட்டியதிங் கேதோ மதி. 81
இ - ள் : கண்ணைப்பற்றிய கொடிய இருட்டை ஓட்டியது கண்ணின் ஒளியோ, அதனை வந்தடைந்த கதிரின் ஒளியோ, இருள் கண்ணை விட்டு நீங்க ஓட்டியது இங்கு எது? அது போல உயிரை அடுத்துள்ள கொடிய ஆணவ இருளை வாட்டி வலி
யொடுக்கியது எதுவோ ? ஆராய்ந்து பார்ப்பாயாக எ - று.
புற இருளை நீக்க, காணும் கண்ணொளிக்குக் கதிரொளி துணையானாற்போல உயிரைப் பற்றி நின்ற அஞ்ஞானத்தை நீக்க உயிர் அறிவுக்குச் சிவனருள் துணையாயிற்று என்பதாம். இச்செய்யுள் "காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காணக் கண்ணினைக் கண்டு காட்டலின்'' என்ற சிவஞான போதச் சூத்திரமும் அதன் மேற்கோள் வெண்பாவும் துணை செய்யுமாறு அறிக.
---------------
தெளிந்த மனமே சிவம் பிரகாசிக்கப் போதாதெனல்
நீங்கு மலத்தை நிகழருளே மெல்லமெல்ல
வாங்குதலைச் செய்த வகையன்றோ - தீங்ககலச்
செய்தா ருளத்திருக்கத் தேற்றமே போதுமென்கை
பொய்யாகு மென்னப் புகல். 82
இ - ள் : சிவம் சீவனிடமாகச் செலுத்துமருளே மெல்ல மெல்ல நீங்குகின்ற ஆணவமல இருளை வாங்குதலை அருளிய வகையன்றோ; அதுபோல குற்றங்களை நீக்கிய நல்லோருளத்து சிவம் என்றுமிருக்க மனத்தெளிவொன்றுமே அமையுமென் றல் பொய்யான கொள்கையாம் என்றவாறு.
ஆன்மாவினிடமாக அநாதியாக நிற்கும் ஆணவமலத்தை திருவருளே மெல்ல மெல்ல வாங்குதலைப்போல மனத்தெளி வொன்றுமே சிவம் விளங்க அமையுமென்றல் பொருந்தாக் கூற்றாமென்பது கருத்து.
பிராரத்தக் கழிவாலும் பரிபாகமுற்ற மனத்தாலும் தானே மலம் நீங்குகின்றதென்பார் நீங்குமலத்தை என்றார். முருக்க விழ்கின்ற தாமரை மொட்டை சூரிய கிரணங்கள் மெல்லமெல்ல அலர்த்துவதுபோல திருவருள் மலத்தை மெல்ல மெல்ல வாங்கும். அதனால் தெளிவுண்டாம். அதுவே சிந்தையில் சிவம் பிரகாசிக்கப் போதுமென்று சொல்லுதல் பொருந்தாக் கூற்று என்பதாம்.
----------------
சிவத்தை மறந்தால் மீளவும் மலம் பற்றுமெனல்
நீக்கு மறைப்பதனை நீக்கி யுடலனைத்தும்
போக்குதற்குச் செய்ததருட் பொற்பன்றோ - காக்கும்
அரனே யிலையா லகன்றமல மெல்லாம்
வருமே யுளத்தை மருவி. 83
இ - ள் : இறைவன் தனுகரணாதிகளைத் தந்தது. நீக்குதற் குரிய மலமறைப்பை நீக்கி மலத்தின் வலிமையைப் போக்கு தற்கு உதவிய திருவருட் சிறப்பன்றோ வாசனா மலமும் தாக் காதவாறு பாதுகாக்கின்ற சிவவிளக்கம் சிந்தையில் இல்லை யானால் ஆன்மாவை விட்டு அகன்ற மலமெல்லாம் மீண்டும் ஆன்மாவைப் பொருந்த வரும் என்றவாறு.
இறைவன் தனுகரணாதி மாயேயங்களை உதவியது மல மறைப்பை நீக்குதற்காக.
அங்ஙனம் காக்கும் இறைவனே இல்லையானால் சென்ற மலம் திரும்பவும் வந்து பற்றும் என்பது கருத்து .
பொற்பு - அழகு.
------------
அறிதற் கருவியாம் உடலைப் பொய்யென்றால்
வேறு அறிதற் கருவியாவது எது? எனல்
அறிவித்தா லொன்று மறியாய் பொய் வஞ்சம்
பிறிவித்தா லுண்டோ பிறிவங் - கறிவதற்கங்
குற்றவா றேதோ வுறுமுடலைப் பொய்யாக
வற்றவா றேதோ வறை. 84
இ-ள் : ஏ மாணவனே! நீ அறிவித்தாலும் ஒன்றறியாய் : அத்தகைய உனக்குப் பொய் வஞ்சனை இவற்றைப் பிரித்தால் அவற்றினின்று பிரிவுண்டாகுமோ? நீ அங்கு அறிதற்கேற்ற உபாயம் யாதோ? உடலை பொய்யாக உரைத்தது ஏனோ? இதனை விளங்கச்சொல் என்றவாறு.
சொன்னாலே தெரியாத உனக்கு பொய் வஞ்சனை இவற்றி னின்றும் பிரிவித்தால் பிரிவுண்டாகுமோ. அறிதற்குக் கருவி யாகக்கிடைத்த உடலை பொய் என்பாயாயின் அறிதற்குக் கருவி தான் எது? உன்னை விட்டுப் பிரிந்ததுதான் எது? சொல்வா யாக என்பதாம்.
சுதந்தரனாகிய இறைவனுக்குப் பரதந்திரனாகிய ஆன்மா நிகராகாது எனல்
பிறப்பித்தா லன்றிப் பிறவா வுலகில்
இறப்பித்தா லன்றி யிறவா - துறப்பித்த
தாரோ வெனவு மறியா யுயிராற்கு
நேரோ வெனவு நினை. 85
இ - ள் : ஆன்மாக்கள் பிறக்கச் செய்தாலன்றி தாமாகப் பிறக்கமாட்டா. இறக்கச் செய்தாலன்றி உலகத்தில் தாமாக இறக்கமாட்டா. தம்மை இவ்வாறு துறக்கச் செய்தவர்கள் யார் என அறியவுமாட்டா. ஆகவே உயிர்கள் அரனுக்கு எவ்வகையினும் நேராகா என எண்ணுவாயாக என்றவாறு.
உயிர்கள் இறைவன் இயக்க இயங்குவன அன்றித் தாமாக இயங்கா . ஆகவே யாமே சிவமெனல் ஒருவாற்றானும் பொருந் தாது என்பதாம். இது சிவசமவாத மறுப்பிற்குரியதாம்.
--------------
இறைவன் மலமகற்றானெனின் பிறவி அறாது என்பது
மாற்றும் பளிங்கொன்றை மாற்றுமோ உச்சியின் மேல்
தோற்றுங் கதிர்வந்து தோற்றாக்கால் - போற்றும்
உடலனைத்துந் தீர ஒழிப்பாரா ரீசன்
தடையனைத்துந் தீரானேற் றான். 86
இ-ள் : பளிங்கு சார்ந்ததின் நிறத்தைத்தானாக மாற்றுமோ தன்னுச்சியின் மேல் சூரியன் வந்து தோன்றாத போது. அது போல ஈசன் தானே வலியவந்து ஆன்மாவின் தடைகளையகற் றானாயின் தனுகரணாதிகள் அனைத்தையும் அடியோடு ஒழிப் பவர் யார்? ஒருவருமிலர் என்றவாறு.
சூரியன் பளிங்கின் உச்சியிலெரிக்கச் சார்ந்த நிறங்கள் அகலு வதுபோல இறைவன் தடைகளை நீக்கித் திருவருளைச் சொரிய - மாயேயங்கள் ஆன்மாவை விட்டு அகலுகின்றன என்பதாம்.
தடை , ஆன்மாவின் அறிவு வியாபகத்தைத் தடுத்து நிற்கும் ஆணவமலம் முதலாயின.
-------------
சீவன் சிவசந்நிதியினின்று விலகச் சீவனை மலம் தாக்குமெனல்
பற்றைவிட்டுப் பற்றும் படிகங் கதிர்கன்று
நிற்றலினா லன்றோ நினையுங்கால் - மற்றது போல்
தொட்ட வரனே தொடாதவற்றா லாவிமுதல்
விட்டதனைத் தேடும் விரைந்து. 87
இ-ள் : சார்பைவிட்டு மற்றொரு சார்பைப் பற்றுவதாகிய படிகம் அங்ஙனம் செய்வது சூரியன் விலகி நிற்பதனால் அல்லவோ . அதுபோல ஆன்மாவைத் தீண்டி இரும்பைப் பொன்னாக்கிய இறைவன் தீண்டாததால் அல்லவோ ஆன்மா முதலில் விட்டு நீங்கிய மல கன்மங்களை மீளவும் விரைந்து பற்றுவது என்றவாறு.
சூரியன் ஒளியகலப் படிகம் சார்ந்ததின் வண்ண மாய் இருத் தல் போல ஆன்மாவிடமாகக் கலந்து நின்ற கடவுள் வெளிப் படாதொழிய , ஆன்மா விட்ட மலத்தைத் தொட்டுக்கொள்ளும் என்பதாம்.
-------
சிவனருள் பெற்றோரே சிவமாம் தன்மை எய்துவர் எனல்
இச்சை யறிவுதொழி லெல்லாமெய் யாவியின் மேல்
வைச்சன்றோ தீர்த்தான் மலமனைத்தும் - நச்சும்
அவனா யிருக்கைக் கருள் பெற்றா ரன்றோ
சிவனா யிருப்பரெனத் தேர். 88
இ-ள் : இறைவன் உயிரினிடமாக இச்சா ஞான கிரியை களை வைத்து மலம் அனைத்தையும் போக்கினான். விரும்பப் படுகின்ற சிவமேயாய் இருக்குந்தன்மைக்கு அவன் அருளை என்றும் பெற்றவரன்றோ சிவமாம் தன்மை எய்துவர் என் பதைத் தெளிந்து கொள் என்றவாறு.
சிவனுடைய அருளைப் பெற்றார் அல்லது வேறு எவரும் சிவமாம் தன்மையெய்தும் சிறப்பிலர் என்பதாம்.
நச்சும் - விரும்பும்.
----------------
துரியசொப்பனமும் முத்தியும் இவை எனல்
திரிவற் றுயிர்க்கோர் செயலற் றருளிற்
பிரிவற்று நிற்கின்ற பெற்றி - தெரிவுற்று
நிற்பதுவே சொற்பனமாம் நீள்சிவத்தி லொன்றாக
வைப்பதுவே முத்தி வழக்கு . 89
இ - ள் : நிலையினின்று மாறுபாடின்றி, சீவச் செயல் அறவே நீங்கப்பெற்று, திருவருளிலேயே தோய்ந்து அதனிற் பிரிவற்று, சிவன் நிற்கின்ற தன்மையைத் தெரிந்து நிற்பதே துரிய சொப்பனமாம். பெரிய சிவத்தோடு ஒன்றாக வைப் பதுவே முத்தியாம் இவை வழக்கு என்றவாறு.
ஆன்மபோதமும், பசு கன்மமும் நீங்கி நிற்பதை அறிதல் சொப்பனம். சிவத்தோடு அபின்னமாக நிற்பதே முத்தி என் பது கருத்து.
ஒன்றாக - அபேதமாக அல்லது பிரிப்பின்றி என்க.
-----------------
பாசங்களோடு ஒன்றிய போது அதனை வெறுப்பதும், அருள் உண்மையை
உணர்த்திய போது விரும்புவதும் இல்லையாம் எனல்
கருவி யனைத்துங் கருதித்தா னாக
விரவும்போ துண்டோ வெறுப்பு - மருவுமருட்
காட்டியபோ தன்றோ கருதுமுடல் வேறாக
வோட்டியவா றன்றோ வுணர். 90
இ - ள் : தனுகரணாதிகளாகிய கருவிகள் அனைத்தும் எண்ணி யாய்ந்து ஆன்மாவாகிய தானே என்று கருதியபோது, அவற்றி னிடம் வெறுப்புத் தோன்றுவதில்லை. ஆன்மாவைக் காரண மின்றியும் கைம்மாறு வேண்டாதும் மருவுகின்ற திருவருள் உணர்த்திய பின்னரே உடலை நம்மின் வேறாகக் கருதி ஓட்டியவாறு. இதனை ஆய்க என்றவாறு.
தனுகரணாதிகளே நானென மயங்கியிருக்கிற போது அதனை வெறுப்பது உண்டோ . திருவருள் அவற்றின் வேறாகி அவற் றைக் கருவியாகக் கொண்டு உணர்பவன் நீ என உணர்த்திய போது அன்றோ அவ்வுடலை நம்மின் வேறாக ஓட்டியது உள தாயிற்று என்பது கருத்து.
விரவும் போது - அவற்றுடன் கலந்தபோது.
-----------------
சிவஞானம் பிறக்குங்காலம் இதுவெனல்
காயமே யுள்ளங் கருதுமுயி ரீசனெனத்
தோயி னறிவு தொடுமென்றான் - ஞாயத்
தொழிலோ டுடன் பட்டுத் தோன்றியதிங்
கெல்லாம் 'வழுவா திருக்கவுமாம் வந்து. 91
இ-ள் : உடலே உள்ளம் ; தியானிக்கின்ற உயிரே ஈசன் என்றுணர்ந்து அடங்கினால் சிவஞானம் சிந்தையைச் சிறிதே தீண்டும் என்றால், அறிவோடு கூடி உடனாகத் தோன்றிய அனைத்தும் நழுவாமலிருக்கவும் ஆம் என்றவாறு.
என்னுடலே மனம். என்னுயிரே ஈசன் எனத் தியானத்தில் ஆழின் சிவஞானம் சிறிது தோன்றும். நேர்மை தவறாத கன்மங்களோடு கூடிய அனைத்தையும் கைவிடாதிருத்தலுமாம் என்பது கருத்து.
ஞாயத்தொழில் - நியாயமான செயல். வழுவுதல் - நழுவுதல்.
------------------
அருளில் தோய்ந்தது அரனருளே எனல்
ஆணவத்தை நெஞ்ச மடையும்போ தாங்கதுவாய்க்
கோணுவதே யன்றியதைக் கொண்டதுண்டோ - தாணுவுனைக்
காமித்து மிக்க கரிசறுத்துத் தன்னருளில்
சேமித்த தீசன் செயல். 92
இ - ள் : ஆணவத்தை மனம் பொருந்தும் போது மனம் ஆணவமேயாகக் கூறப்படுவதையன்றி அவ்வாணவத்தை அம் மனம் ஏற்றுக்கொண்டது உண்டோ? தாணுவே ஆன்மா வாகிய உன்னை நேசித்து. உன்னிடமுள்ள மலக்குற்றங்களைப் போக்கித் தன்னருளிலே என்றும் சேமித்துவைத்தது ஈசன் செயலேயாம் என்றவாறு.
ஆணவத்தோடு ஆன்மா சாரும்போது தன்மயமாதலே யன்றி, ஆணவத்தை நான் அடைந்தேன் என்று கருதுவது தான் உண்டோ ? மாணவ ! உன்னை அருளில் ஆழ்த்தியது ஈசன் செயல் என அறி என்பதாம்.
காமித்து - விரும்பி . கரிசு - குற்றம். சேமித்தது - பாது காத்தது.
-------------
உயிர் உடலானதோ உடலே அனைத்திலும் தங்கியதோ உரை எனல்
ஆவி யனைத்தினுக்கு மாதிக்க மாம்போது
மேவி யதுவாய் விளங்கிற்றோ - வாவியன்றித்
தானே யவையையுறத் தங்கிற்றோ பேதமற
வூனே ததனை யுரை. 93
இ-ள் : உயிர் சடமாகிய கருவிகரணங்கட்கு ஆதிக்க மாகி, அவற்றை இயக்கும் போது, அவற்றினிடமாக வியா பித்து நின்று, உடலே தானாக விளங்கியதோ? உயிர் அன்றி உடலே உயிர் என்று ஐயுறத்தங்கிற்றோ? வேறுபாடகல உடல் ஏது? அதனை உரைப்பாயாக என்றவாறு.
உயிர் உடல் முதலியவற்றில் ஆதிக்கம் செலுத்தும் போது உயிர் உடலானதோ அல்லது உடல் உயிர் என ஐயுற நின்றதோ. வேறுபாடகல இதனை விளக்குக என்பதாம்.
ஆதிக்கம் - இயக்க இயங்கும் பேறு.
-----------------
உடலோடு ஒன்றான உயிர் துன்பக்காலத்து மட்டும் பிரியுமோ எனல்
வீட்டுந் தநுவினுக்கு வேண்டும் பணியதனைப்
பூட்டும் போ தொன்றுபட்டுப் பூட்டுமா - லாட்டியவன்
அங்கத்தைக் கையா லறுக்கும் போ தவ்வங்கஞ்
சங்கத்தை மாற்றுமோ தான். 94
இ-ள் : அழிந்துபடுவதாய உடலுக்கு வேண்டும் பொன்னணிகளைப் பூட்டும் போது ஒன்றாய் நின்று அணிவிக் கும் உயிர், உடலைத் தன் கையாலறுக்கும் போது மட்டும் உயிர் உடலின் கூட்டத்தை விட்டுப் பிரியுமோ என்றவாறு.
அணி செய்யும்போது ஒன்றான உயிர் வெட்டும் போது மட்டும் விலகி நிற்குமோ என்பதாம். வீட்டும் - அழியும். பணி - ஆபரணம். சங்கம் - சேர்க்கை .
------------
உயிர் சென்றவழி உடலெனல்
உள்ள நடந்தவழி யூனடக்கு மூனதனைத்
தள்ளவழக் குண்டோ தரிக்குங்கால் - மெள்ள
நடத்துவான் றானாய் நடப்பதல்லா னண்ணித்
தொடுப்பதுவு முண்டோபின் சொல். 95
இ - ள் : உயிர்போன வழியில் உடல் நடக்குமாதலால் உடம்பை வேண்டாமென்று விலக்க வழியுண்டோ? மெது வாக உடலோடு கூடிய வழி அதனை நடத்துகின்றவன் தானாக இருப்பதல்லாமல் அதனை மறுத்து தொடுத்துரைக்கக் கூடிய வேறு கருத்துக்களும் உளவோ சொல்வாயாக என்றவாறு.
உயிர் இயக்க இயங்குவது உடல். அங்ஙனமாக அதனை வேண்டாமென்று ஓதுக்கவும் வழியுண்டோ . உயிராகிய நீதானே நடத்துபவனாயிருக்க அதன் வழி நடப்பதல்லாமல் வேறொன்று சொல்ல இயலாது என்பது கருத்து.
உள்ளம் - உயிர் . ஊன் - உடல் ; ஆகுபெயர்.
-----------------
சர்வசங்காரகாலத்து மும்மூர்த்திகளும் இலர் எனல்
தோற்றுவிப்பா னெங்கே துலங்குவா னாங்கதனைப்
போற்றுவா னெங்கே புகுந்திடுவான் - மாற்றுமருள்
ஈசனா ரெங்கே யிருப்பாரோ வெவ்வுலகும்
நாசமே யாமா னயந்து. 96
இ - ள் : எல்லா உலகமும் விரும்பி அழியுங்காலத்துப் பிரமன் எங்கே விளங்குவான். திருமால் எங்கே புகுவான். அழிக்கும் கடவுளாகிய உருத்திரன் எங்கே இருப்பான் எ - று.
சர்வசங்கார காலத்து மும்மூர்த்திகளுள் ஒருவரும் இலர் என்பதாம்.
----------------
ஐந்தொழிலும் இறைவனே ஆற்றுவான் எனல்
ஆதலினாற் றோற்றமுதலைவருக்கு மோரிடமே
பூதலத்தி லுண்டோ புகலுங்காற் - றீது நன்கு
செய்வா ருளத்திருந்து செய்வரெனினைந்தொழிலும்
இய்யாமற் றானா மியல்பு. 97
இ.ள் : ஆதலால் படைப்பு முதலாகிய தொழில்களைச் செய்யும் ஐந்து முதல்வர்களுக்கும் இவ்வுலகில் ஓரிடமாகச் சொல்லுமிடத்துப் புண்ணிய பாவங்களைச் செய்வாருள்ளத்தி லிருந்து பஞ்சகிருத்தியங்களைச் செய்வாராயின் அதுவே எஞ்சாமல் தானாகிய சொரூப இலக்கணமாம் என்றவாறு.
பஞ்சகிருத்தியங்களைச் செய்யும் ஐவருக்கும் இவ்வுலகில் ஓரிடமின்று. புண்ணிய பாவங்களைச் செய்யும் மக்கள் உள்ளத்தையே இடமாகக் கொண்டு இருப்பார்களென்றால் ஐந்தொழி லும் தாமேயாயிருக்கும் இறைவனது சிறப்பியல்பாம் என்பது கருத்து.
இய்யாமல் - எஞ்சாமல்.
--------------
இறைவன் கழுத்தில் விடம் அடங்கிய காரணத்தை விளம்பல்
எல்லாத் தொழிலு மியற்றுவிப்பா ரில்லாமல்
வல்லார்கள் வல்லவகை போல - வெல்லாம்
நடத்துவான் மற்றோர் வினைவழியை நாட்டி
மிடற்றில் விடம் வைத்தான் விரைந்து. 98
இ-ள் : ஐந்து தொழில்களையும் ஏவுவான் இல்லாமல் இயற்றுவான் இயற்றுவதைப் போல எல்லாவற்றையும் நடத்துகின்ற பரம்பொருள், மற்றத் தேவர்களின் ஊழ் வினையின் மரபை நிலைநாட்டிக் கழுத்தில் நஞ்சை விரைந்து வைத் தான் என்றவாறு.
ஆகவே இறைவன் திருமிடற்றில் விஷத்தை அடக்கியது ஏனைய தேவர்களின் ஊழ்வினையை நிலை நிறுத்து தற்காக என்பது .
வல்லார்கள் என்பதற்கியைய இயற்ற வல்லார்கள் என எச்சம் வருவித்து முடிக்க. அங்ஙனமே வல்ல வகையென்பதற் கும் இயற்றவல்ல வகை என்க.
மற்றோர் - இந்திரன் மால் பிரமன் ஆகிய தேவர்கள்.
-------------
இறைவன் அறிவுக்கறிவாய்ச் செறிந்து மலமகற்றுவான் எனல்
தொடர்ந்தமல மைந்துந் தொடர்ந்துயிரைப் பற்றி
மிடைந்திடவே செய்யும் விதியால் - நடந்த
அறிவோ டறிவா யறிவுறுத்தி யீசன்
செறியுமலந் தீர்ப்பனெனத் தேர். 99
இ - ள் : அநாதியே தொடர்ந்து வருகின்ற மூலமலமும் அதனை நீக்கத் தொடர்ந்து வருகின்ற ஏனைய மலங்களுமாகிய ஐந்தும் ஆன்மாவைப்பற்றி அதன் வியாபகத்தைத் தடை செய்யும். இதுவே விதி. இறைவன் உயிரினிடமாகத் தோன்று கின்ற அறிவோடு அறிவாய்க் கலந்து நின்று ஆன்மாக்களுக்கு அறிவூட்டி மிகச் செறிந்துள்ள மலங்களை நீக்குவன். இதனை நன்றாகத் தெளிவாயாக என்றவாறு.
ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி, என்ற ஐந்து மலங்களும் உயிரைப்பற்றி நின்று உயிர் உடம்பி னுள்ளேயே சிறைப்பட்டிருக்கச்செய்யும். உயிரைச்சிறை மீட்கத் திருவுளம் பற்றும் இறைவன் ஆன்மாக்களுடைய அறிவுக்கறி வாய் நின்று அறிவுறுத்தி மலத்தை நீக்குவன் என்பது கருத்து.
செறியும் மலம் - அறையுள் இருள் நிறைந்தது என்பது போல உயிரின் அளவாய் நெருங்கியுள்ள ஆணவம்.
--------------
முற்றுணர்வு. ஈய எளிதன்று எனல்
அஞ்சு தொழிலு மவையறியு மாவியுற்ற
நெஞ்சின் மேல் வைத்த நெறியாகு - மிஞ்சுமரன்
எல்லா மறித லியல்பறிவா லீதலுக்குச்
செல்லா தெனவே தெளி. 100
இ - ள் : ஐந்தொழில்களும் அவற்றையறியும் அறிவும் உயிரோடு கூடிய உள்ளத்திற்கு உரிமையாக வைத்த முறை மைகளாம். ஆன்மாக்களை விட எல்லாவற்றாலும் உயர்ந்த சிவன் இருந்த நிலையில் எல்லாவற்றையும் ஒருசேர அறிதல் இயல்பான அறிவாம். அது ஆன்மாக்களுக்கு அருளத்தக்கது ஒன்றன்றாம் என்பது கருத்து.
ஆகவே கடல் வெள்ளத்தைக் குடுக்கையுள் அடக்க முடி யாதவாறு போல இறைவனது இயல்பான அறிவை ஆன்ம அறிவினுள் அடக்க இயலாது என்று அறிவித்தவாறு.
--------------
பதி பசு பாசங்களின் அறிவின் இயல்பை அறிவித்தல்
பேரறிவே யீசனுக்குப் பேராத சிற்றறிவு
சாரு முயிர்க்குத் தகுமலத்துக் - கோரறிவும்
இன்றா மிவையே யியல்பாங் குணிகுணங்கள்
ஒன்றாம் பிரிப்பதல் வோர். 101
இ - ள் : ஈசனுக்கு என்றும் நிலை பேராத ஒருபடித்தான பேரறிவாம். பிற பொருளைச் சாரும் இயல்புடைய உயிருக்கு உண்ர்த்த உணரும் : 'சிற்றறிவாம்.- ஆன்மாவைச் சார்ந்த மலத்திற்கு ஒருவகையான அறிவும் இல்லையாம். இம்மூன்றும் பதி முதலாய மூன்றின் இயல்பாம் . குணியாகிய இவற்றின் குணங்கள் என்றும் பிரிக்க முடியாதவையாய் அபின்னமாய் இருப்பனவாம். இவற்றை ஆராய்ந்துணர்க என்றவாறு.
பதி - பேரறிவுப் பொருள். பசு - சிற்றறிவுப் பொருள். மலம் - சடம். இந்த குணகுணி சம்பந்தம் என்றும் பிரிக்க முடியாதது என்பது கருத்து.
-----------------
உயிர் நித்தியமெனல்
பதிக்குப் பசுவன்றோ பற்றிய தோர் மேனி
விதிக்கிற் சுதந்தரமாய் மேவு - மதித்துத்
துடைக்கி லயலாந் தொடர்ந்தவுரு வாவி
துடைப்பதல வென்னத் துணி. 102
இ - ள் : பதிப்பொருளுக்கு ஆன்மாவாகிய பசுவே பற்றி நிற்பதோர் திருமேனியாம். அதனை ஆராயும் அவருக்கு அவ்வுரு சுதந்தரமாக அடையப்பெறும். நம்மைத் தொடர்ந் திருக்கின்ற உரு அழிக்கப்படின் நம்மிற் பிறிதாக விலகும். உயிராகியத் திருமேனியோ அங்ஙனமன்று என்று துணிவா யாக என்றவாறு.
இறைவனுக்கு உயிர்களே உடல். அவ்வுடலை இறைவன் தன்னிச்சையின் படி எய்துவன். நம்முடல் அழிக்க அழியும். அவனுடலாகிய ஆவி அங்ஙனமன்று என்பது கருத்து.
-----------------
சிவனுக்கு மலப்பிணி யாங்ஙனம் எனல்
ஆவி மலப்பிணியா லான துட லாலரற்கு
மேவும் பிணியை விளம்பென்னக் - கூவும்
மகப்பித்தை மாற்ற மருவியதோர் தந்தைக்
ககப்பித்தை யுற்ற தறி. 103
இ - ள் : உயிருக்கு ஆணவமலமாகிய கட்டால் உடலா யிற்று. சிவன் திருமேனியில் தங்கக் காரணமாகிய நோய் யாது? சொல்லென்று வினவ, தந்தைக்குப் பிள்ளைப் பித்தைப் போக்கப் பொருந்திய தொன்று அகப்பித்தாகியது எ - று.
மகனையடையும் பைத்தியத்தைப் போக்க மகனை அடைந்த தந்தைக்கும் மனத்திற் பைத்தியம் பிடித்தாற்போல உயிராகிய உடலைப் பொருந்திய இறைவனுக்கும் உயிரின் கலப்பால் மலப்பிணி உண்டாயிற்று என்பது கருத்து.
---------------
துன்பநீக்கம் பெறாதார்க்குப் பிறவி மேலும் விளையுமெனல்
உடற்குயிர்போ லீச னெனுமா லுயிரின்
நடக்கையற நின்ற நடையா - லெடுக்கும்
பிறப்புத் துயரம் பிரியா தவர்க்கே
அறப்புகுதும் போலு மறி. 104
இ - ள் : உயிரின் செயலற நின்ற செயலால், உடலுக்கு உயிர் போல , உயிர்க்கு ஈசன் என்று சொல்லப்பெறும். வரும் பிறவிகள், துன்பம் நீங்கப் பெறாதவர்கட்கே மிகுதியாகப் பொருந்தும் என்று அறிக என்றவாறு.
ஆன்மாவின் செயலற்றுச் சிவச்செயல் மேவலால் உயிருக்கு ஈசன் உடலுக்கு உயிர்போலக் கலந்து இயக்குவன். அங்ஙன மன்றித் துன்பம் நீங்காதவர்களுக்குப் பிறவி மேலும் மேலும் வரும் என்பது கருத்து.
ஆல் - அசை. நடக்கை - செயல். எடுக்கும் பிறப்பு - இனி வரும் பிறவி. துயரம் பிரியாதவர்க்கே எடுக்கும் பிறப்பு அறப் புகுதும் போலும் எனக்கூட்டிப் பொருள் கொள்க. அற – மிக.
-------------
பிறவித்துன்பம் பேரறிவிற்கே புலனாம் எனல்
பிறப்புத் துயரமது பேரறிவுக் கல்லால்
சிறப்பித் துயிர் நோக்கச் செல்லா - மறைப்பகலத்
தோற்றமுதலைந்துந் தொடுத்தான் கருணையினான்
மாற்றுதற்கே யாக மதித்து. 105
இ-ள் : பிறப்புத் துன்பம் என்னுமது பேரறிவாகிய சிவஞானத்திற்கே அல்லாமல் உயிர் சிறப்பித்து நோக்க இயலாது. கருணாமூர்த்தியாகிய இறைவன் மல நீக்கம். ஒன் றையே திருவுளத்தடைத்து அது நீங்கப் படைப்பு முதலான ஐந்து தொழில்களையும் உயிரொடு பொருத்தினான் எ - று.
பிறவி ஒரு துன்பம் என்பது சிவஞானமாகிய பேரறிவு பெற்றார்க்கே அன்றி, ஆன்மா தன்னறிவால் எவ்வளவு நோக்கினாலும் அதற்குப் புலனாகாது. அங்ஙனமிருந்த உயிர்க்கு மறைப்பு நீங்குவதற்கு என்றே படைத்தலாதி ஐந்தொழில்களையும் கருணைக்கடலாகிய இறைவன் உயிருக்குக் கூட்டினான். என்பது கருத்து.
படைப்பாதி ஐந்தொழிலையும் கடவுள் ஆன்மாவுக்குக் கூட் டியது மறைப்பகலவே என்பதாம்.
------------
மலம் இறைவனைத் தீண்டாதெனல்
பிணிக்கு மருந்து - பிரியாம னின்று
திணிக்கு மவனதனைத் தீண்டான் - தணிக்குமலம்
ஈசன் பிறப்பிறப்பை யாக்கியவை யெல்லாம்
நாசமே யாக்குமென நாடு. 106
இ-ள் : அவ்விறைவன் மலநோய்க்கு மருந்தாக மாயை கன்மங்களை ஆன்மாவைவிட்டுப் பிரியாமல் நின்று ஊட்டுவன். ஆனால்... அவன் அம்மலத்தைத் : தீண்டவும் . செய்யான். இறைவன் ஆன்மாக்களுக்குப் பிறப்பு இறப்புக்களை அருளி மலவலியை வாட்டுவன் ; இறுதியில் அவையனைத்தையும் வாசனையும் கொடும்படி மூலநாசம் செய்வான். இவற்றை ஆராய்ந்து பார் என்றவாறு.
இறைவன் மலவலி வாட மருந்தாக மாயை கன்மங்களைக் கூட்டிப் பிறப்பு இறப்பை அருளுவன். ஆனால் மலமாயைகளைத் தீண்டவும் செய்யான் என்பது கருத்து.
பிரியாமல் என்றது, உயிர்கள் மலத்தைச் சார்ந்து மயங்கிய காலத்தும் பரிபாக காலம் பார்த்துப் பிரியாமல் கலந்திருக்கும் அருளுடையன் என்பதை விளக்கியவாறு.
------------
பிறப்பிறப்புக்கள் அரனுக்கு இல்லையெனல்
எல்லா வுயிர்க்கு மிசைந்தவுயி ராலுமிக
நில்லாமல் மாய நிலாதாலுஞ் - செல்லாப்
பிறப்பிறப்பா மென்னுமிந்தப் பேத மரற்கே
உறப்படுவ தல்லவென வோர். 107
இ - ள் : இறைவன் ஊர்வன முதல் தேவரீறான எல்லா உயிர்களிடத்தும் கலந்து பிரிப்பின்றி விளங்குகின்ற உயிராக இருப்பதாலும், அவன் மிக்கு விளங்காத வழி உயிர்கள் மாட்டு மாயமாகிய அறியாமை நீங்காமையாலும் ஆன்மாக்களை விட்டு நீங்காத பிறப்பிறப்புக்கள் என்னும் இவ்வேறுபாடுகள் சிவபெருமானுக்கு இயைவன அல்ல என ஆய்வாயாக எ-று.
இறைவன் உயிர்கள் அனைத்திலும் கலந்திருப்பதாலும், அவன் உயிர்களினிடத்து விளங்கித் தோன்றினாலன்றி மாயச் சேட்டை விலகாமையானும் உயிர்களை விட்டு நீங்காத காலத் தும் உயிர்கட்கு வரும் பிறப்பிறப்புக்கள் இறைவனைச் சார மாட்டா என்று துணிக என்பது கருத்து.
------------
அருள் முதலியன உண்மை இவ்வாறெனல்
ஈச னருளுக் கிசைந்ததனு வுள்ளமெனப்
பேசுவதே யுள்ளதெனும் பெற்றியா - னாசமிலா
அங்கமே யின்றேலறியா வுடற்கு மதன்
சங்கமே யின்றேற் றடை. 108
இ-ள் : இறைவனுடைய திருவருளைப் பெறுதற்கேற்ற பரிபாகமுற்ற உடலே உள்ளம். அங்ஙனம் பேசப்படுவதே நித்தியம் எனப்படுவதன் இயல்பாம். அங்ஙனம் அழியாத உள்ளமெனும் அங்கம் இல்லையானால் சிவத்தை உயிர்கள் அறிந்தனுபவிக்கமாட்டா. உள்ளத்தை அங்கமாகக் கொண்ட உடலுக்கும் உயிரின் சேர்க்கை இல்லையானால் உயிருக்கு மலத்தடையொன்று உண்டென்பது அறிய இயலாமற்போம் என்றவாறு.
அருளுக்குப் பாத்திரமான மனமே நித்தியமானது : அங் ஙனம் நித்தியமான உறுப்பு இல்லையாயின், உயிர்கள் எந்தக் கருவியைக்கொண்டு அறியும். அவ்வுறுப்புடைய உடலுக்கு உயி ரின் கூட்டுறவாலேயே மல உண்மை அறியப்படும் என்பதாம்.
--------------
பதியும் பசுவும் கலந்ததன் பயன்
பதிபசுவை யின்றியொன்றும் பற்றா பசுவும்
பதியையின்றி யொன்றினையும் பற்றாப்- பதிபசுவோ(டு)
அத்துவித மாயங் கனைத்துமறி வித்துமலப்
பித்தறுத்து நிற்குமருட் பேறு. 109
இ-ள் : பதிப்பொருளாகிய பரசிவம் பசுவாகிய உணர்த்த உணரும் சித்துப் பொருளையன்றி வேறு எதனையும் பற்றி நில்லாது. பசுவும் இயல்பாகவே முற்றும் உணரும் பதிப்பொருளையன்றி மற்றவற்றைப் பற்றி நிற்கமாட்டா. பதிங்பொருள் பசுவோடு அநந்நியமாய்க் கலந்து உயிர்கட்கு இவை சித்து, இவை சடம், இவை தத்துவங்கள், இவை தாத்துவிகங்கள், இவை இன்பம், இவை துன்பமெனக்காட்டி மலமாகிற பித்தத்தைக் கெடுத்து நிற்பதுவே திருவருட் பேறாம் என்றவாறு.
பதி பசுவோடு அத்துவிதமாயக்கலந்து மலநீக்கம் புரியும் நிலையே திருவருட்பேறாம் என்பது கருத்து.
----------------
மலநீக்கம் பெற்றதின் அறிகுறி
பசுபதியோ டத்துவிதப் பண்பதனைப் பற்றி
அசிபதமே யென்பதனை யாய்ந்து - விசிவசித்தங்
கொத்ததனோ டொத்தங் குறுவதன்றோ தீயமலக்
கொத்தறுத்து நிற்குங் குறி. 110
இ - ள் : ஆன்மாக்கள் பதியாகிய சிவத்தோடு இரண் டறக் கலத்தலைப் பொருந்தி, 'ஆகிறாய்' என்ற பதத்தின் அநுபவ நிலையை ஆராய்ந்து, முற்றும் நம்பி , இருவினை யொப் பும் பரிபாகமும் பெற்று, சிவத்தோடு பிறியா நிலை பெறுவ தன்றோ கொடிய மலக்கூட்டங்களை வேரறுத்து விளங்கும் அடையாளமாம் என்றவாறு.
அது நீ ஆகிறாய் என்ற அனுபவ வேறுபாடின்றி அத்து வித நிலையில் உறைத்து நிற்கும் அனுபவமே மல நீக்கம் பெற்றதற்குரிய அடையாளமாம்.
-------------
அருளை அடையாதபோது உடலாற் பயனில்லை எனல்
அரற்கோ சறுவிக் கினமாகு மாவி
நரர்க்கோ சிறிதறிவை நண்ணும் - பரக்குமருள்
ஆவியே யங்கத்தைப் பற்றியறி யாவேல்
தேவையே யில்லையங்கத் தேர் . 111
இ .ள் : சிவபரம்பொருளோ எல்லாம் அறியும் இயல் பினதாம். ஆன்மாக்களாகிய மக்களோ சிற்றறிவுடையவர்க ளாவர். சர்வ வியாபகமான திருவருளை உயிர் உடலைப்பற்றி நிற்கும் போதே நீ அறியமாட்டாயாயின் இவ்வுடல் உனக் குத் தேவையேயில்லை எனத் தெளிவாயாக என்றவாறு.
உடலெடுத்ததன் பயன் எங்கும் பரந்துள்ள திருவருளைப் பெற்றுணர்தலேயாம் என்பது.
---------------
உயிர்கள் திருவருளைச் சார்வது எற்றுக்கு எனல்
பற்றைவிட்டுப் பற்றும் பசுவதனைப் பற்றி நின்றங்
குற்றறிவ தென்னோ வுணருங்கால் - நற்று
மரற்கொன்றை வேண்டி யறியான் மலத்தைத்
துரத்துதற்கே யாகலெனச் சொல். 112
இ - ள் : உலக பாசங்களை விட்டு அருளையே பற்றி நிற்கும் ஆன்மாக்கள் அவ்வருளைப் பற்றி நிற்பதன் காரணத்தை ஆராயும் போது, தம்மைச் சார்ந்து கலந்து நின்று இயக்கும் சிவத்திற்கு ஏதோ ஒரு பயன் உண்டாக வேண்டி அறிகின்றா னல்லன்; பின்னையோ மலத்தைத் துரத்துவதற்காக என்றே எனச் சொல்லுவாயாக என்றவாறு.
ஆன்மா அருளிற்றோய்ந்து நிற்பது சிவத்திற்கு வரும் நன்மை கருதியதன்று; தம்மைப் பற்றி நிற்கும் மல நீக்கத்திற் காகவே என்பதாம்.
-------------
இறைவன் எண்ணுவார் இடர் தீர்ப்பான் எனல்
உணர்த்துவா ரின்றி யுணர்வா னெனினும்
குணத்தின்மா லுற்றுக் குறியான் - நினைத்தவர்கள்
ஊழனைத்து நோக்கி யொழிப்பான்மற் றல்லாத
பாழனைத்து நோக்கான் பரிந்து. 113
இ-ள் : உயிர்கள் உபதேசிப்பார்களின்றித் தாமே தம் அறிவு துணைக்கொண்டு சிறிதளவு உணருமாயினும், குணத் தில் மயக்கம் பொருந்தி நன்றாக உணர வேண்டியவற்றைக் குறித்து உணரமாட்டா. இறைவன் தம்மையே தைலதாரை யாக நினைக்கும் அடியார்களின் பிராரத்த கன்மங்கள் அனைத் தையும் போக்குவான் ; தியானிக்காமற் பாழான உள்ளங்களைக் கருணை கொண்டு திருக்கண்ணோக்கம் புரியான் என்றவாறு.
ஆன்மாக்கள் ஆன்மபோதத்தால் அறிவனவாயினும் குணங்களான் மயங்கி உண்மையை உற்றுணரமாட்டா; ஆத லால் இறைவனே தன்னைத் தியானிப்பவர்களைத் திருக்கண் ணோக்கிப் பிராரத்தகன்மத்தைப் போக்கி அருளுவன்; ஏனை யோரை ஏறெடுத்தும் பாரான் என்பதாம்.
----------------
பெத்த முத்தி நிலைகளில் சிவக்கலப்பை விளக்கியருள் எனல்
அரனுயிர் போலென்று மாவியுட லென்றும்
வரினே பொதுவாக மன்னுந் - தரமே
பிரித்தெனக்குப் பெத்த முத்திப் பேதமெலாங் காண
விரித்தெனக்குச் சொல்வாய் விரைந்து. 114
இ - ள் : சிவன் உயிர்; ஆன்மாக்கள் உடல் என்றுவரின் இது பொதுநிலையாம். ஆதலால், இவற்றின் தன்மைகளை வேறுபடுத்திப் பெத்த நிலையில் ஆன்மாவும் அரனும் கலந்த நிலையின் அனுபவங்களையும் முத்தி நிலையிற் கலந்துள்ள இயல் பினையும் நன்றாயுணரும்படி அடியேற்கு விரித்து விரைவாகச் சொல்வாயாக என்றவாறு.
சிவமும் ஆன்மாவும் உயிரும் உடலும் போலக் கலந்திருந் ''தாலும் பெத்த நிலையிலும், முத்தி நிலையிலும் உள்ளதன் வேறு பாட்டை உணர விரித்துரைக்க என வேண்டிக் கொண்ட வாறாம்.
----------------
ஐந்தொழில்களும் யார் யாருக்கு உரிய எனல்
தோற்ற முதலாகத் தோன்றியபேர் நால்வருமே
யாற்றியதோர் பெத்தருக்கே யாகுமால் - மாற்றியெல்லாம்
நின்றார் தமக்கே நிகழு மனுக்கிரகர்
ஒன்றாவார் முத்திக் குணர். 115
இ - ள் : படைத்தலாதி தொழில்கள் நான்கையும் அடிப் படையாகக் கொண்டு உண்டான பெயர்கள் அத்தொழில் களைச் செய்கின்ற நால்வராலும் படைக்கப்பட்ட பெத்தான் மாக்களுக்கே உரியனவாம். இந்நான்கையும் மாற்றி நின்றவர் கட்கே அனுக்கிரகமாகிய அருளல் உண்டாவதாம். இவர்களே முத்தி நிலைக்கு ஒன்றாந்தன்மை உடையர் என உணர்வாயாக என்றவாறு.
பிரமன், திருமால், உருத்திரன், மகேசன் நால்வராலும் படைக்கப்பெற்ற படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் -- என்ற நால்வகைத் தொழிலிற்பட்ட மக்கள் பெத்தான்மாக்க ளாவர். இந்நான்கையும் கடந்து சதாசிவமூர்த்தியின் அருளைப் பெற்றவர் அனுக்கிரகத்திற்கு உரியவர்கள். இவர்களே முத்தி நிலைக்குரியர் என்பதாம்.
-----------------
முத்திநிலையில் கன்மப்பொசிப்பு இல்லையெனல்
ஊனற்று மாவி யுயிரற் றுறுமலமாய்த்
தீனற்று மாங்கதற்கே செல்லாதால் - தானற்று
நின்றபோ தாவிக்கு நீள்பொசிப்பே யில்லைமலம்
வென்றபோ துண்டோ வினை. 116
இ - ள் : ஆன்மா உடலை நீங்கியும், உயிர்த்தலாதி தொழி லற்று மலத்தைச் சார்ந்து மலமேயாய்க் கேவல நிலையிற் கன்மப்பொசிப்பற்றுக் கிடந்த போதும், அம்முத்தி நிலையிற் சாராதாம். தான் என்ற முனைப்பற்று நின்றபோது ஆன்மாக் களுக்கு வினைப்போகங்களை நுகர்தல் இல்லையாம். ஏனெனின் மலத்தை வென்றடக்கிய போது வினைகள் ஏது? என்றவாறு.
நான் என்ற தன்முனைப்பாகிய மலம் அடங்கியபோது வினைகளே இல்லை. ஆகவே வினைப்போகங்களை நுகர்தல் எங்ஙனம் விளையும் என்பது கருத்து.
-------------
உயிர், தானென்ற முனைப்பற்ற போது சிவமாம் எனல்
ஊனு முயிரு மொருங்கொப்ப நிற்பதுயிர்
ஊனதனை யாகா வொழுங்கென்ன - வூனின்று
தீனற்றும் போது செலுத்து முடலுயிரில்
தானற்ற போதானாந் தான். 117
இ - ள் : உடலும் உயிரும் ஒன்று கூடி ஒத்து நிற்பன வாயினும் உடல் உயிராகாது. அம்முறைபோல நுகர்ச்சிக் கேற்ற கருவியாகிய உடலிலிருந்து நுகரப்படுவன ஆகிய கன்மவினைகளை நுகருங்காலத்து உடலைச் செலுத்தும் உயிரி னிடமாகத் 'தான்' என்ற முனைப்பு அடங்கிய காலத்து உயிர் சிவமேயாய்விடுமோ என்றவாறு.
உடலும் உயிரும் ஒன்றுபட்டிருப்பினும் உடல் உயிராகாத வாறுபோல. கன்ம நுகர்ச்சியற்றால் தற்போதமிழந்த உயிர் சிவ மாகாது என்பதாம். தான் ஆம் என்பது தானாமோ என்னும் எதிர்மறைக் குறிப்புத்தோன்ற நின்றதாம்.
----------------
நுகரும் உயிரை நுகர்வித்ததாகக் கூறல் பொருந்தாது எனல்
அருந்து முயிரை யருத்தியதாய்ச் செப்பல்
பொருந்தியதே யன்று புகலில் - வருந்திமிக
வுண்ணவா வென்றா லுடற்கிசையா தென்றுமிக
வெண்ணியவா றேதோ வியம்பு. 118
இ - ள் : தத்தம் வினைக்கீடாக வினைப்போகங்களை அனுப விக்கும் ஆன்மாவை அனுபவிக்கச் செய்வதாகக் கூறுதல் சிறிதும் பொருந்துவதன்றாம் என்று சொல்லின், உடலை வருந்தி வருந்தி உண்ணவா என்று அழைத்தால் அது உடற்கு இசையாது என்று எண்ணியவாறு ஏனோ சொல் என்றவாறு.
உண்பது உடல், அங்ஙனமாயும் அதனை உண்ணவருக என அழைத்தல் போல உயிர் அருந்தும் வினைமுதலாயினும் அதனை ஊட்டும் வினை முதல் போலக் கூறியது வினைப்பயனை நுகர்வதும், அதனாலாய புண்ணிய பாவங்களைத் துன்ப இன்ப வடிவாகக் காண்பதும் அதுவே யாகலான் என்று அமைதி தோன்றக் கூறியவாறாம்.
----------
மேலெழுந்த ஐயம் உடலையும் உயிரையும் வேறாக உணராதாற்கே எனல்
உண்டே னெனவுரைத்த தெல்லா முயிர்மலமாய்ப்
பண்டே யிழந்துடலாம் பண்பன்றோ - வுண்டே
யுடலோ டுயிரென் றுணராத வற்கே
திடமா யுரைப்பதிலைத் தேறு. 119
-இ-ள் : ஆன்மா உண்டேன் என உரைத்தனயாவும், கன்மமலமாகி முன்பே தன் தன்மையிழந்து மாயேயமாகிய உடலான தன்மையதன்றோ ! உடலையும் உயிரையும் வேறாக உணராதார்க்கே உறுதியாக உரைக்க முடிவதில்லையாம். இதனை நன்குதெளிக என்றவாறு.
உயிர்முன்பு நுகர்ந்தன யாவும் கன்மமலமாய் ஆகாமிய சஞ்சிதங்களாம். பரிபக்குவமான பின் உடலுக்குப் போகமாம். ஆகையால் உடல் - உயிர் துணைக்கொண்டு நுகர்தலின் உயிரை அருத்துவதாக முன்பாட்டிற் கூறியது ஏற்புடைத்தே யாம். இவ்வுண்மை உடலுயிரை வேறாக உணராதார்க்கு உணர்த்தமுடியாதாம் என்பது கருத்து.
----------------
இனம் இனத்தைச்சாரும் எனல்
தனுவே வினையதனைச் சாரு முயிரின்
நினைவே யறிவாகி நிற்கும் - இனமே
யினத்தோ டிசைத்தங் கிருப்பதல்லான் மாறி
மனுமேல் மயக்கமேன் மன். 120
இ-ள் : உடல் , கன்மங்களைச் சார்ந்து விளங்கும்; உயிர் நினைவாகிய அறிவே வடிவாகி நிற்கும்; இனம் இனத்தோடு சேருமேயல்லாமல் மாறிச்சாரா . அதனால் சொன்ன மந்திரத் தின்மேல் உனக்குச் சந்தேகம் ஏன் எண்ணிப்பார் எ - று.
உடலாகிய சடம் கன்மமாகிய சடத்தைச் சாரும். அறிவா கிய உயிர் அறிவொடு சார்ந்து அறிவாகி விளங்கும். அதனால் உனக்கு ஏன் ஐயம் உண்டாயிற்று?
மன் - எண்ணு . அறிவு - சிவம். மனு - மந்திரம்.
-------------------
இறைவன் உயிர்க்கு உயிராவன் எனல்
வாழுந் தனுவுயிரான் மற்றமல நோயாக
வூழை யுறுமருந்தா யூட்டியென்றும் - வாழ்விக்கும்
ஆதலினா லீச னுயிர்க்குயிரா மென்றுமவை
யோதலா மென்ன வுணர். 121
இ - ள் : உயிரோடு கூடி வாழ்கிற உடலும் உயிரேயாம் : உயிரைப் பற்றி நிற்கின்ற மலம் நோயாக - ஊழ்வினையாகிற பிராரத்தகன்மத்தை அந்நோய்க்குக் கொடுக்கும் மருந்தாக ஊட்டி - இறைவன் என்றும் உயிரை வாழ்விக்கின்றார் . ஆத லால் இறைவன் உயிர்க்கு உயிராக விளங்குவன் என்று நன் றாகச் சொல்லலாம் என்றவாறு.
உயிரோடு கூடிய உடல் உயிர்; மலம் அதன் நோய்; ஊழ் மருந்து. மருந்தையூட்டி இறைவன் உயிர்களைப் பிணி நீக்கி வாழ வைக்கின்றார். ஆதலால் இறைவன் உயிர்க்கு உயிரா கிறார் என்பதில் ஐயமேயில்லை என்பதாம்.
---------------
கன்ம மலத்தின் இயல்பு இதுவெனல்
தனுவுக் கிசைந்தகிலந் தங்கியதே யாவி
மனுவுக் கிசைய மருவா - நினைவுக்கு
வேண்டியது முண்டோ விரும்பு முலகதனிற்
பூண்டதுவே யாகும் வினைப் பொற்பு. 122
இ-ள் : உயிர் அடுத்த உடலுக்கு இயைய உலகில் வாழ் கின்றன. தான் எண்ணும் மன எண்ணத்திற்கியைய விரும் பிய உலகைப் பொருந்தா . நினைப்புக்கு வேண்டியதும் உண்டோ ? கன்ம மலத்தியல்பு உலகிற் பூண்ட முயற்சிகளே யாம் என்றவாறு.
வினைப்போகத்திற்கேற்ப உடல்; உடலுக்கு ஏற்ப உலகு உண்டாமேயன்றி நம் மன விருப்பின்படி உண்டாவதில்லை; நினைவுக்கு வேண்டியது உண்டாகமாட்டாது. உலகில் நாம் விரும்பிச் செய்தவற்றின் பயனே கன்ம இலக்கணம் என்பதாம்.
மனு - எண்ணம். வினைப்பொற்பு - கன்ம இயல்பு.
-----------------
உலக அறிவையுதறி மேலறிவைப் பெற்றவர்க்கே
நித்தியமான சுகம் உண்டெனல்
உற்றதோ ராவிக் குறுந்துன்பம் வஞ்சமெனச்
சொற்றதென்ன வேறே சுகமுண்டோ - குற்றமற
விட்டவர்க்கே யாகும் விரிந்தறிவால் மேலறிவைத்
தொட்டதனா லாகுஞ் சுகம். 123
இ - ள் : உடலைப் பொருந்திய உயிர்க்கு உற்ற துன்பம் இப்பிரபஞ்சமே என்று சொல்லியது ஏன்? இதனின் வேறாகச் சுகம் என்பதும் ஒன்றுண்டோ ? எனின், மலக் குற்றங்களை விட்டவர்கட்கே விளைவதாய எங்குமான அறிவால் மேலான சிவஞானத்தைப் பற்றிய பேர்களுக்கே நித்தியானந்த சுகம் உண்டாம் என்றவாறு.
இவ்வுலகம் துன்பம் எனின், இவ்வுலகைவிட்டு அடையப் படும் சுகம் என்பதொன்று உண்டோ எனின், மலபரிபாகம் பெற்றுப் பாசமற்றுப் பரிபாகமுற்ற ஆன்மஞானத்தால் திரு வருளோடு இயைந்த சிவஞானத்தைப் பெற்றவர்கட்கே சுகம் உளதாம் என்பது.
--------------
அறிவு அருவா? உருவா? அறிவதெங்ஙனம்? எனல்
அருவே லெவரு மறியா ரறிவங்
குருவே லுலகத்தோ டொன்றாம் - மருவுமுயிர்
காமித் தருந்தக் கருதியதோர் மேலறிவைச்
சேமித் திருப்பதெங்ஙன் செப்பு. 124
இ - ள் : அறிவு அருவம் என்னப்படுமாயின் அதனை எவரும் அறியமாட்டார்கள்; உரு என்பையாயின் உலகத்தோ டொன்றாக வைத்து எண்ணப்பட்டு மாயேயமான சடப் பொருளாம். ஆகவே அறிவு இரண்டும் அன்று. பின் என்னை யோ எனில், உடலை மருவிய உயிர் விரும்பி நுகரக் கருதிய நிலை அறிவாம், இதனை நன்கு ஆராய்ந்து பார்.
அங்ஙனமிருக்க உயர்ந்த ஞானத்தைப் பாதுகாத்து வைப்பது என்பது எப்படி? சொல் என்றவாறு.
அறிவு என்பது உயிரின் இச்சையால் விளைவது. அதனில் உயர்ந்த சிவஞானம் என்பது ஒன்றுண்டு. அதனைச் சேமிக்க வேண்டும் என்பது எப்படி? எண்ணிப்பார் என்பதாம். நீரை மடைமாறிப் பாய்ச்சுவது போல ஆன்ம அறிவு உலகைப்பற்றும் போது பாசஞானமாம். பதியைச் சார்ந்து நுகரும்போது பதி ஞானமாம் என்பது நன்கு விளக்கியவாறு.
---------------
உலக இயல்பு இதுவெனல்
அறிவோ டறிவா யறிந்து முயிரில்
நிறைவாகி யெவ்விடத்து நின்றும் - பிறவா
முருவாகி யெங்கு முறைந்தும் பொறியில்
வருமா லுலகமென மன். 125
இ - ள் : உலகம் , ஆன்மாவின் அறிவோடு அறிவுருவாய் அறியப்பட்டும், எங்கும் உயிர்கடோறும் நிறைந்த பொரு ளாய் நிறைந்திருந்தும், பிற சடப்பொருள்களாக எங்கும் நிறைந்து தங்கியும், இந்திரிய கோசரமாம் என எண்ணுவா யாக என்றவாறு.
உலகம் அறியப்படுபொருளாயும் சடமாயும் இந்திரியங் களான் நுகரப்பட்டு புலனாவதாம் என்பது.
பொறி - இந்திரியம். அகப்பொறி - புறப்பொறி இரண் டானும் அறியப்படுவதாம் என்க.
----------------
சிவனடிக்கு அன்பு மலமற்ற போதே உண்டாமெனல்
மருவும் பொறியை மருவாத போது
தெரியும் பொருளைத் தெரியா - ஒருவுமலம்
ஆட்டியபோ துண்டோ அரற்கன்பங் காங்கதனை
யோட்டிய போ துண்டாமென் றோர் . 126
இ-ள் : உயிரின் தன்மையாகிய உணர்வு அந்தக்கரணங் களை மருவியிருக்கிற கண் முதலிய பொறிகளைப் பொருந்தாத போது அறிய வேண்டிய பொருள்களை அறிய மாட்டாவாம். அதுபோல கடியத்தக்க மலம் ஆன்மாயைப் பற்றி நின்று அலைக்கின்ற போது சிவபெருமான் பக்கல் சீவனுக்கு அன்பு உண்டாகுமோ? அம்மலவலிமையை வாட்டி ஓட்டிய போது அரனடிக்கன்பு உண்டாகுமென்று உணர்வாயாக என்றவாறு.
அந்தக்கரணங்கள் வாயிலாக ஆன்மா ஐம்பொறிகளைப் பொருந்தி புலன்களைப் பற்றாதபோது, ஒன்றையும் உணரா தாம். அதுபோல மலத்தால் பெத்தனாய் இருக்கும் பொழுதும் இறைவன் மாட்டு அன்பு செய்யாது.
----------
மலநீக்கம் பெற்றவர் இயல்பு இதுவெனல்
மலமற்றார் தம்மை மதிக்குங்கால் வஞ்சக்
குலமற்றா ரென்னக் குறிப்பான் - நலமுற்ற
காயந் தனதாய்க் கருதுமுயிர் தானாயும்
தோயுமா லீசனெனச் சொல். 127
இ-ள் : மல நீக்கம் பெற்றவர்களை ஆராயுமிடத்து அவர் கள் பிரபஞ்ச வாசனையின் தீமையற்றார்கள் என்று குறித்து உணர்வோம். பரிபாகமுற்ற அதாவது பிராரத்தப் பொசிப்பு முற்றுப்பெற்ற உடல் தன்னுடையதாயும் இவ்வாறு தன் னுடையதென்று எண்ணுகின்ற உயிர் தானாயும் கொண்டு ஈசன் அவ்வுயிரின் பால் கலந்து விளங்குவன் என்பதாம் எ - று.
மல நீக்கம் பெற்றவர்கள் பிரபஞ்சவாசனை யற்றவர்கள் என்போம். அவர்கள் உடலைத் தன்னுடையதாகவும், உயிரைத் தானாகவும் கொண்டு இறைவன் விளங்குவன்.
ஈசன் தோயும் என்பது நீருள் தோய்ந்தான் என்புழிப் போல வியாபகத்துள் அடங்கிய வியாப்பியமாய் இறைவன் நிற்குமென்பது பெறப்படுமாதலின் அற்றன்று. சிற்றறிவின தாய உயிருள் பேரறிவும் நித்திய சுதந்திரமுமுடைய இறைவன் இடைவிடாது பொருந்தும் என்னுமளவினதாகக் கொள்க.
---------------
மலவாதனை அற்றபேருக்குச் சிவமே தெரியுமெனல்
வஞ்சங் கெடுப்பாரை வஞ்சமென்ப தெல்லாம் பொய்
நெஞ்சத்தார்க் குள்ள நினைவாகுங் - கொஞ்சம்
மலவே ரறுத்தார்க்கு வாய்த்தசிவ மல்லால்
சொலவேறொன் றில்லையெனச் சொல். 128
இ - ள் : மாயையால் விளையும் வஞ்சனையைக் கெடுத்து அதனின்றும் அகன்றாரை வஞ்சனையுடையார் என்பதெல்லாம் பொய்ம் மனம் உடையாருக்குப் பொருந்திய நினைவாகும் : சிறிது மூலமலத்தின் வேரைக் களைந்த பேருக்குக்கூட , சொல் லப்படுவதற்கு அநாதியே வாய்க்கப்பெற்ற சிவபரம்பொருளை அல்லாமல் வேறொன்றுமில்லை என்று சொல்வாயாக எ - று.
வஞ்சனையை ஒழித்து சிவத்தையே நாடும் பரிபாகிகளுக்கு வஞ்சனை உண்டு என்பது, பொய்ம்மனமுடையார் கூற்றாகும். மல நீக்கம் சிறிது பெற்றார்க்கும் செப்பலாவதொரு பொருள் சிவமன்றி இல்லையென்பதாம்.
வஞ்சம் முதற்குறையாகக்கொண்டு பிரபஞ்ச ஆசை அற்ற வர்களைப் பிரபஞ்ச வாசனை உடையவர்களென்று சொல்லுவ தெல்லாம் பொய்நெஞ்சத்தாருடைய பொய்யுரை-யென்று உரை காண்டலுமாம். மலவேர் கொஞ்சமறுத்தார்க் கென்பதனால் வேர் அறத்தொடங்கியபோதே மரம் வாடுதல் போல மலமறத் தொடங்கியவுடனேயே அறியாமையும் போகமும் அகல சிவம் தெளிவாகத் தெரியுமென்பதாம்.
------------
முப்பொருள்களும் ஒன்றைச்சார்ந்தே இருக்குமெனல்
ஓட்டுமல மாவி யுயர்சிவமு மோருருவைத்
தொட்டு நிற்கு மார்க்காகச் சொல்லுவே - னட்டதோ
ராதிக்க மெங்கே யடைந்த தவர்க்காகச்
சோதித்து நன்றாகச் சொல். 129
இ-ள் : அநாதியே ஆன்மாவைச் சார்ந்துள்ள மலமும், ஆன்மாவும், உயர்ந்த சிவபரம் பொருளும் ஒரு உடலைப் பற்றியே நிற்கும். இதனை யாருக்காகச் சொல்வேன் எனில் கூடிய ஆதிக்கமானது எங்கே எவரால் அடையப்பட்டதோ அவருக்காகச் சொன்னேன் என்று நன்றாக ஆராய்ந்து சொல் என்றவாறு.
பாசம், பசு, பதிமூன்றும் ஓர் உருவத்தைப் பற்றி அன்றித் தனித்து நில்லா என்ற உண்மையை யாருக்காகச் சொல்வே னெனின் கலந்த இம்மூன்றனுள் எதன் ஆதிக்கம் எவருக்கிருக் கின்றதோ அவருக்காகச் சிவோகம் பாவனையாகிற போகத்தி லிருந்து சொன்னேனென்று உணர்வாயாக என்பது கருத்து.
ஒட்டுமலம் - அநாதியே ஒட்டிய மலமும், ஆகந்துகமாய் வந்தமலமும் ஆகிய இரண்டையும் அகப்படுக்க பொதுமையில் கூறியவாறு.
நட்டதோர் ஆதிக்கம் என்றது இம்மூன்று பொருளும் தம்முள், கூடுவதால் உண்டான சிறப்புத்தன்மை. அதாவது பாசம் விஞ்சிப் பதி பிற்பட்டிருத்தலும், பதிபோதம் விஞ்சிப் பாசஞானம் பிற்பட்டிருத்தலுமாகிய வேறுபாடென்க.
---------------
மலத்தால் விளையும் தீமை இவையெனல்
காயமே தானாய்க் கருதுவிக்கும் வஞ்சத்தைத்
தோயவே நெஞ்சைத் துணிவிக்கும் - நேயமா
மீசனையே நெஞ்சி லிழப்பிக்கும் மங்கையர்பால்
வாசமே யாக்கும் மலம். 130
இ - ள் : அடுத்த உடம்பைத் தன்னுடையது என்றும், வினைப்போகங்களைத் துய்ப்பதற்குக் கருவியான தென்றும் கருதாது அதுவே தானாகக் கருதச்செய்யும் ; பிரபஞ்ச சுகத்தில் தோய்ந்து ஈழையிலகப்பட்ட ஈப்போலச் சிக்கி நெஞ்சு தவிக் கச்செய்யும்; பரிபாகமுற்று நெஞ்சமாகிய கோயிலுள் அறி யப்படுபொருளாய் அடைந்திருக்கிற சிவத்தை மறக்கச் செய் யும்; எப்பொழுதும் அந்தப்புர அழகியர்பால் அனவரதமும் வாசம் செய்விக்கும் என்றவாறு.
ஆணவமலம் அடுத்த உடலைத் தானேயெனக் கருதச்செய் வது. பிரபஞ்சவாசனையில் மனத்தைத்தோயச்செய்வது. சிவனை மறக்கச்செய்வது. பெண்ணாசையை மிகுவிப்பது என்பதாம்.
வாசம் - வசித்தல்.
----------------
சிவமாம் தன்மையெய்திய சீவனின் இயல்பு இவை எனல்
அங்கங் கசந்தங் கறிவே யினித்துமலச்
சங்கமெலாந் தீதாகத் தள்ளிப்பின் - பொங்குமரற்(கு)
அன்பே புகுவித் ததுவா முயிரென்னுந்
தன்பெருக் குற்ற சதிர். 131
இ - ள் : உடலைவெறுத்து ஞானத்தை இனிமையாகச் சுவைத்து, மலக்கூட்டங்களைத் தீமையென்று உதறித்தள்ளி, இறைவனுக்கு அன்பையுண்டாக்கிச் சிவமே உயிர் என்னும் தற்பெருமையை அடைந்த வன்மையே சீவன்முத்தருக்குரிய சிறப்பாம் என்றவாறு.
ஆன்மா தானாகவே எண்ணியிருந்த தனதாகிய உடலை வெறுத்து, ஞானமே இனிதெனக்கொண்டு, மலக்கூட்டங்களை தவிர்த்து , அரனடிக்கன் பாய், அது அதுவாகவிருக்கும் ஆனந் தத்தை எய்துதலே அதற்குற்ற வல்லமையாம் என்பது கருத்து.
சதிர் - வலிமை.
-----------------
அருள்பெற்றோர் செயல்
தோற்று முயிரின் றுயர்க்கிரங்கல் மற்றதனைத்
தேற்றுதற்கே யுள்ளத் திறஞ்செய்தல் - போற்றன்மிகும்
பூசை யனுக்கிரக மெல்லாம் புணர்தலருள்
தேசனார்க் குற்ற செயல். 132
இ-ள் : உலகத்தில் உற்பவித்த உயிர்கள் படுகின்ற துன்பத்திற்கு இரங்குதலும், அவ்வுயிர்களை அத்துன்பத்தி லிருந்து தேற்றுதற்கான உபாயங்களை ஆராய்தலும், புகழத் தக்க பூசை. அனுக்கிரகம் எல்லாவற்றையும் அடைதலும் ஆகிய இவைகளேயாம் என்றவாறு.
பிற உயிர்களின் துன்பத்திற்கிரங்குதல், அவற்றைத் தேற் றுதற்கெண்ணுதல், இறைவனைப் பூசித்தல், இறைவனுடைய கருணையை எய்துதல் என்னும் இவைகளே அருள் பெற்றார்க்கு உளவாம் செய்கைகளாம்.
தேசு - ஒளி. தேற்றுதல் - தெளிவித்தல். திறம் - உபாயம்.
--------------
தனுகர்ணங்கள் அரன் தந்தனவே எனல்
உலகுடமை யாவி யுறுமடிமை யாக
நிலவுலக மெல்லா நிறைந்து - குலவுமரன்
ஆட்டியதே யல்லா லவனுக்கு மற்றொருவர்
ஊட்டியவா றேதா முரை. 133
இ - ள் : உலகம் உடைமை , உயிர் அடிமை இவை முதலாக உலகமெல்லாம் நிறைந்து விளங்குவன யாவும் சிவபெருமான் நமக்காகப் படைத்தனவே அல்லாமல் சிவபெருமானுக்கு வேறொருவர் ஊட்டியது ஏதாயினு முண்டோ ? ஆராய்ந்து சொல்வாயாக என்றவாறு.
தனு, கரண, புவன. போகங்களனைத்தும் இறைவன் நமக் காகப் படைத்தனவே; இவற்றை அவனுக்காக ஆக்கிப்படைத் தவர்கள் யாரேனும் உலகத்தில் உளரோ? இலர் என்பது கருத்து .
---------------
தனு கரணாதிகள் அநாதியே ஆன்மாவிற்கு அளிக்கப்பட்டவை எனல்
நீராகிப் பூவாய் நெருப்பாய் நிகழ்மூரல்
சீராகி யெங்குஞ் செறிவாற்குச் - சார்வாவார்
ஊட்டுதற்கு முன்ன முறைவானதுவாய்க்கை
காட்டும்போ துண்டதல காண். 134
இ - ள் : நீரும், பூவும், நெருப்பும், புன்சிரிப்பும் ஆக எங்கும் செறிந்துள்ள சிவத்திற்குச் சார்பான அடியார்கள் ஊட்டுதற்கு முன்பே அவற்றினிடமாக நீக்கமின்றி நிறைந் திருப்பன். அது வாயின் பக்கல் கை சென்று காட்டும் போது உண்டது அல்லவாம், இயற்கையே அமைந்ததாம். இதனைக் காண்பாயாக என்றவாறு.
நீர் முதல் எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கும் சிவபரம பொருளுக்குச் சார்வான அடியார்கள் அவற்றின் இடமாக அரனைக் காண்பதற்கு முன்பேயே நீக்கமற நிறைந்திருக்கின் றான். அவன் அங்ஙனம் இருத்தல் கை உணவைக்கொண்டு போய் வாயினிடம் காட்டும்போது உண்டது போல்வது அன்று என்பதாம்.
சார்வாவார் - பற்றுக்கோடாக கொண்ட அடியார்களே.
--------------
அனைத்திலும் கலந்திருக்கும் அரனுக்கு யாம் கொடுக்க வேண்டியது ஒன்றுமில்லையெனல்.
கண்டிருப்பார் தங்களுக்கே காட்டிய துங் காதலித்தங்(கு)
உண்டிருப்பார் தங்களுக்கே யூட்டியதும் - பண்டறியோம்
எல்லாத்தி னுள்ளு மிசைவார்க்கே யாங்கொடுக்கச்
செல்லா தெனவே தெளி. 135
இ - ள் : உலகத்தில் எல்லாவற்றையும் கண்டு அனுப விப்பவர்களுக்கே காட்டி அருளுவதும், விரும்பியவற்றை நுகர்வார்களுக்கே ஊட்டி அருளுவதும் யாம் முன்பே அறி வோம். ஆனால் இயங்குவ நிற்பவான எல்லாப் பொருளிடத் தும் கலந்து விளங்கும் கடவுளுக்கு யாம் கொடுக்க அது அவர் மாட்டுச் செல்லாது என்று தெளிவாயாக என்றவாறு.
காண்பார்க்கே காட்டுவதும் உண்பார்க்கே ஊட்டுவது. மன்றி எல்லாவற்றினுங் கலந்து, எல்லாவற்றையும் இயக்கும் இறைவனுக்கு யாம் கொடுக்கத்தகு பொருள் ஒன்றுமில்லை என்பதாம்.
----------
ஆன்மாக்கள் சிவனை முதலெனத்துணியின் மலம் நீங்கும் எனல்
அத்துவா வாறு மவரவர்க்கே யாய் நிறைந்தங்(கு)
ஒத்ததா லீசனதை யோர்கிலான் - கத்தனென
நற்றினானாகி னயவாப் பிணியவர்க்கு
முற்றினாற் போலு மொழி. 136
இ - ள் : அந்தந்த ஆன்மாக்களின் பரிபாக நிலைக்கேற்ப அத்துவாக்களாறும் நிறைந்து ஒத்திருக்கும். இங்ஙனம் இறைவன் அத்துவாக்களாறிலும் கட்டுப்பட்டு உள்ளதை ஆராயாதவராய் தானே கர்த்தனென ஆன்மாவைப் பற்றி நின்று பின் விரும்பத்தகாத மலநோயையுடைய ஆன்மாக் களுக்கு அந்நோய் முடிவடைந்தாற்போலும் இதனை மொழி வாயாக என்றவாறு.
அத்துவாக்களில் ஆன்மாக்கள் கட்டுண்டு இருந்தாலும் இறைவன் அதனைப் பொருட்படுத்தாதவராய் தானே முதல்வன் என ஆன்மா விரும்புவானாயின் விரும்பத்தகாத மலபந்தம் ஆன்மாக்களுக்கு முடிவடைந்தது போலாம் என்பது கருத்து.
அஃதாவது ஆன்மாக்கள் அத்துவாக்களில் தொடக்குண் டிருந்தாலும் அதனைப் பொருட்படுத்தான். உயிர்கள் சிவனே முதலென்று விரும்பின் அவர்களுடைய மலநோயை முற்றுப் பெறுவிப்பன் என்றவாறு.
அத்துவா ஆறாவன - வர்ணம், பதம், மந்திரம், தத்துவம், புவனம், கலை என்பன. நற்றினன் ஆகில் - எதுகை நோக்கித் திரிந்தது.
-------------
இறைவன் ஊட்டினாலல்லது உயிர்கள் உண்ணா எனல்
ஈசனே யெல்லா மிசைப்பான்மற் றெவ்வுயிர்க்கும்
ஈசனே யெங்கு மிசைவதா - மீசனே
ஊட்டுவா னெவ்வுயிர்க்கு முண்ணா னொருவன்கை
காட்டினா னல்லாமற் காண். 137
இ-ள் : சிவனே எல்லாவற்றையும் பொருத்துபவன். எல்லாவற்றிலும் எங்கும் பொருந்துபவன். எல்லா உயிர் களுக்கும் ஊட்டுபவன். ஒருவனும் இறைவன் கை காட்டினால் அல்லது உண்ணான் என்றவாறு.
ஈசனே எங்கும் பொருந்தி எல்லாவற்றையும் பொருந்தச் செய்பவன். தான் ஒன்றையும் நுகராது எல்லாவற்றையும் நுகரச் செய்பவன். இறைவன் உண் என்று கைகாட்டினால் அல்லாது ஒருவனும் உண்ணான் என்பதனைத் தெளிக என அறிவுறுத்தியவாறு.
----------
நோயுள்ள போதே மருந்து முண்டெனல்
பித்துள்ள போதே பெருமருந்து முண்டாய்ப்பின்
பித்தகற்ற வந்ததன்றோ பேசுங்கால் - சித்தமலம்
ஓட்டுதற்கே யாமா லுறுங்கன்ம மீசனுக்கங்
கூட்டுதற்கே யாமாமென் றோர். 138
இ - ள் : உயிர்களுக்கு பித்து உண்டானபோதே அதனைத் தீர்க்கும் பெரிய மருந்தும் உண்டாயிற்று. பின் அந்தப் பித்தை அகற்றுவதற்காக வந்து உதவவும் செய்ததன்றோ? சொல்லுமிடத்து இறைவனால் உதவப்பெற்று வந்தடைகின்ற கன்மவினைகள் மனத்திலுள்ள மலமுதலிய அறியாமைகளைப் போக்குதற்காக ஈசனால் உயிர்களுக்குக் கொடுக்கப்படும் மருந்தாம் அறிவாயாக என்றவாறு.
பித்து என்ற நோயுள்ள போதே அதையகற்றும் மருந்தும் உளதாதல் போல மலமுள்ளபோதே அதன் வலியை ஓடுக்கும் கன்மமாகிய மருந்து முள்ளது. மருத்துவன் பித்தகற்ற மருந்து கொடுக்குமாறுபோல ஈசன் மலநோய் அகற்ற மருந்தை ஊட்டு வான் என்பது கருத்து.
-------------
அரனே அருள் செய்வன் எனல்
சரமசர மென்னத் தரிக்குமரன் றானே
வரமெவர்க்கு மீய வருமாற் - றரமறிந்தங்
கூட்டியபே ரன்றோ வுறுமலத்தோ டைந்தினையும்
வாட்டியபே ராவார் மதி. 139
இ-ள்: இயங்கும் பொருள் நிலைப்பொருள் என்று இரு வகையான உலகத்தையும் தாங்குகிற சிவனே எல்லாருக்கும் வரமருள எழுந்தருளும். ஆன்மாக்களின் தரமறிந்து வினைப் போகங்களை நுகர்த்திய பேர் அன்றோ ஐந்து மலங்களையும் வலி ஒடுக்கிய முதல்வராவர். இதனை எண்ணிப்பார் என்றவாறு.
ஆன்மாக்களின் பரிபாகமறிந்து கன்மமலத்தைக் கூட்டிய வரே ஆணவாதி ஐம்மலங்களையும் வலியொடுக்கியவராவார். ஆகவே சராசர வடிவான உலகத்தைத் தாங்கும் சிவனே உயிர்களுக்கு மல நோயைப் போக்கி இன்பமாகிய வரத்தை
யருள வருவாரென்பது கருத்து.
----------
கன்மமலம் இறைவன் திருவடியைக் காட்டுதற்குற்ற கருவியாமெனல்
மருத்துவற்கே மற்ற மருந்துடைமை பித்தைத்
துரத்துதற்கே யுற்றதொரு தொந்தங் - கருத்தனடி
காட்டுதற்கே யுற்ற கருவி கருமமரற்(கு)
ஊட்டுதற்கே யாகுமென வோர். 140
இ - ள் : வைத்தியனுக்கே மருந்து சொந்தம். ஆனால் அந்த மருந்தின் சம்பந்தம் பித்தத்தை ஓட்டுவதற்காக உற்ற தாம். அது போலக் கன்மமலம் கர்த்தாவினுடைய திருவடி யைக் காட்டுவதற்கு ஏற்ற கருவியாம். அது சிவபெருமானால் சீவர்களுக்கு ஊட்டுதற்குமட்டும் உரியதாம் என்றவாறு.
மருந்து மருத்துவனுக்குச் சொந்தமாக இருந்தாலும் நோய்க்குக் கொடுக்கப்படுவதாய் இருத்தல் போலக் கன்மமலம் திருவடியைப் பெறுதற்குரிய கருவியாய் வைத்தியநாதப் பெரு மானால் ஊட்டப்பெறுகின்றதாம் என்க.
----------------
முத்தான்மாக்களுக்குப் போகங்களை இறைவனூட்டுவதே ஒழுங்காமெனல்
கருவற்றா ரேனுங் கருணையே தோற்றும்
உருவுற்றான் மெய்ப்பசியும் உண்டாம் - தெரிவுற்றங்
ஊட்டாத போதொன்று முண்ணார் பசிப்படுவர்
ஊட்டுவதே முத்தற் கொழுங்கு. 141
இ-ள் : பிறவி அற்றவராய் இருப்பினும் சிவகருணையால் பிறவி அடைந்தாராயின் எடுத்த உடலுக்கேற்ற பசியும் உடனே உண்டாகும். இறைவன் ஆராய்ந்து ஒன்றையும் நுகர் வியாதபோது ஒன்றையும் உண்ணமாட்டாதவராய்ப் பசியின் கண்ணே பட்டு வருந்துவர். ஆகையால் முத்தான்மாக்களுக்கு இறைவன் ஊட்டுவதே ஒழுங்காம் என்றவாறு.
முத்தான்மாக்களாய்ப் பிறவியற்றாரேனும் சிவகருணையால் மீளவும் தோன்றில் எடுத்த தேகத்திற்கேற்பப் பசியும் தாகமும் உண்டாகும். அங்ஙனம் பசித்தாலும் ஆண்டவன் அருத்தினா லல்லது அடியார்கள் ஒன்றையும் அருந்தார். பசித்தே இருப் பர். ஆகையால் முத்தான்மாக்களுக்கும் இறைவன் ஊட்டு வதே ஒழுங்குமுறையாம் என்பது கருத்து. 'இருக்கும் இடம் தேடி என் பசிக்கன்னம் அருத்தியுடன் அளித்தால் உண்பேன்' என்ற பட்டினத்தடிகள் அனுபவமும் இதனையே வலியுறுத்தும். ஆதலால் சுந்தரப்பெருமான் மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திட தீதிலா திருத்தெநண்டத்தொகை தர தென்திசைக்கு , சிவபெருமானால் ஏவப்பட்டாராயினும் பூதலத்தில் திருமேனி தாங்கிய போது. கறிவிரவு சோறும், கட்டுச்சோறும், தண்ணீ ரும், தேவைப்பட்டதும், அதனை இறைவனே வந்தூட்ட அவர் உண்டதும், ஆதிய நிகழ்ச்சிகள் இந்தக் கருத்தை நன்கு
விளக்குவன.
-------------------
கன்மவினை தன்மமே எனல்
கருமமல மல்லக் கருதுங்கா லீசன்
றருமமே யாகத் தருமாற் - பொருமலத்தை
யோட்டி யுயிருக் குறுமன்பே யாக்கியரற்(கு)
ஊட்டுதற்கே நிற்குமென வோர். 142
இ-ள் : ஆராயுமிடத்து கன்மங்கள் மலங்கள் அல்ல. இறைவனே ஒரு தன்மமாக இவற்றையுதவுகிறான். ஆகையால் கன்மங்கள் இடைவிடாது உயிரோடு பொருகின்ற மலத்தை ஓட்டி, மிக்க அன்பைவிளைவித்து, சிவனோடு சேர்ப்பதற்கேற்ற உபகாரமாகவே நிற்குமென அறிவாயாக என்றவாறு.
கன்மம் ஒரு மலமல்ல, ஆன்மா மலத்தின் நீங்கி சிவனடிக்கு அன்பு செய்து சிவனோடு கூட்டுதற்கேற்ற துணையாமெனக் கொள் என்பது கருத்து.
------------
மலநோயைத் தந்தவரே மருந்தும் தரவல்லவரெனல்
பொருந்தும் வினை யெல்லாம் புகுமலமே தானா
மருந்து மலத்தா ரருந்தத் - திருந்தமலந்
தந்தவர்க்கே யூட்டத் தகுமாற் றகுமருட்குச்
சந்தையமின் றாகத் தகும். 143
இ-ள் : ஆகந்துகமான மலமே தானாக நுகரும் மூலமல நோயையுடைய சகலான்மாக்கள் இறைவன் கூட்ட வந்து பொருந்துகின்ற வினைகள் அனைத்தையும் உண்ணவும், திருந் தவும் மலத்தைத் தந்தவர்க்கே மருந்து ஊட்டவும் தகும். அவரே அன்றி அவருடைய அபின்னா சத்தியாகிய திருவரு ளுக்கும் சந்தேகமின்றித் தகும் என்றவாறு.
மூல மலத்தோடு கூடிய உயிர்கெட்டு மாயைகன் மங்களாகிற மலகன்மங்களையும் மருந்தாகத் தந்தவரே நோய்க்கு மருந்த ளிக்கும் தகுதியராவர். அவருடைய சக்தியாகிய திருவருளுக் கும் தகும் என்பதாம்.
ஆகந்துக மலம் - உள்ளமலத்தைக் கழிப்பதற்காகக் கூட் டப்படும் மாயை மலம். சந்தையம் - சந்தேகம்.
-------------
மலநீக்கம் பெற்ற சுத்தான்மாக்களே நிவேதித்தற்குரியார் எனல்
தோற்று மலப்பிணியைத் தோய்வார்க்கு நன்மருந்தான்
மாற்ற வரனே மருவுமால் - தோற்றமாய்
எல்லாப் பொருளு மிசையுமா லீசனுக்கு
நல்லா ரருத்துவதே நன்று. 144
இ-ள் : தோற்றமாய எல்லாப் பொருளும் இறைவற்குப் பொருந்தும். ஆயினும் நல்ல மெய்யன்பர்கள் நிவேதிப்பதே நல்லது. அங்ஙனம் நல்லவர்கள், உடன் பிறந்த மலமாகிய நோயை நல்ல மருந்தால் அகற்றச் சிவபெருமானே சீவனைச் சாருவர் என்றவாறு.
சகசமலமாகிய நோயை நல்ல மருந்தாகிய கன்மத்தால் மாற்றச் சிவனே சீவனைப்பொருந்துவர். உலகில் தோன்றிய பொருள்கள் யாவும் இறைவர்க்கு இயையுமாயினும் அவற்றை மல நீக்கம் பெற்ற நல்ல அன்பர்களே நிவேதிக்கத் தகும் என்பதாம்.
--------------
தனு கரண புவன போகங்கள் மலத்தை ஓட்டுதற்கும், இறைவற்கு
நிவேதனங்களை ஊட்டுதற்கும் ஆகுமெனல்
தனுவும் வினையுந் தகுமுலகந் தானா
மனமு மலமு மருவி - வினைமலத்தை
யோட்டுதற்கு மாகு முறுமரற்கே யன்பாக
ஊட்டுதற்கு மாகுமென வோர். 145
இ - ள் : உடலும், அது நுகரும் வினையும், நுகர்தற்குத் தக்க இடமாகிய உலகமும், உயிராகிய உள்ளமும், மாயை முதலான மலங்களும் உயிரோடு பொருந்தி, வினைகளுக்கு ஏது வாகிய மலத்தை ஓட்டுதற்கும் ஆகும்; கருணையால் வந்து கலந்தாண்டு கொண்ட இறைவற்கு அன்பை ஊட்டுவதற்கும் ஆகும் என ஓர்க என்றவாறு.
தனுகரணாதிகளை இறைவன் தந்தது மலவன்மையை ஓட்டு தற்கும் தன்னடியில் அன்பை ஊட்டுதற்கும் ஆம் என்பதாம்.
------------
ஆண்டவனே அருளானாயின் மலநீக்கம் விளைவதெங்ஙனம் எனல்
நீண்ட தவத்தோர்க்கும் நிகழ்மலத்தார் தங்களுக்கும்
ஆண்டவனே யுண்டங் கருளானேல் - வேண்டும்
பலமடைவ தெவ்வாறு பண்பிலார் தங்கள்
மலமுடைவ தெவ்வாறா மன். 146
இ-ள் : பெருகிய தவமுடையார்க்கும். மலத்தோடு கூடியவர்களுக்கும், அவர்களைத் திருவுளங்கொண்டு அருளா னாயின் தவமுடையோர் வேண்டிய வலிமையைப் பெறுவது எவ்வாறு? மலத்தாராகிய பண்பிலார் தங்கள் மலம் நீங்கு வதும் எவ்வாறு விளைவதாம். எண்ணிப்பார் என்றவாறு.
இறைவனே முன்னின்றருளாவிடின் தவமுடையார் வேண் டுவபெறுதலும் மலமுடையோர் மலநீக்கம் பெறுதலும் எங்ஙனம் என்பதாம்.
---------------
உயிரின் கன்மங்களை யான் கழிப்பதேனோ எனல்
மலநோய் கரும் மருந்தா லுயிர்க்கு
நலமா யருந்துதலே நன்றா - மலநோய்
வருத்துமவன் றின்ன மருவு மதனை
யருத்துமரற் கேனா மறை. 147
இ - ள் : கன்மம் என்னும் மருந்தால், மலநோய் நீங்கும். உயிர்க்கு நன்மை உண்டாக அம்மருந்தை உண்ணலே நல்ல தாம்; மலநோய் கொண்டவன் தின்னப்பொருந்திய மருந் தைச் சிவனுக்கு ஊட்டுவது எதற்காகவாம் சொல் எ - று.
கன்மம் மருந்து. மலம் நோய், நோயை மருந்தால் நீக்க நன்மை விளையும். அது உயிர்க்கு ஊட்டப்பெறும். ஆகாமிய சஞ்சித கன்மங்களாகிற மருந்தை, ஊட்டுபவனையே உண்ணச் செய்வது எதற்காகவாம் என்பது.
----------
வினைப்போகங்களை நானுகர்கிறேன் என்னாமல் சிவார்ப்பணம் செய்க எனல்
ஆவி யனாதி யடிமை தனுவினையு
மேவு முடைமையென மேவியதால் - பாவும் வினை
உண்ணும் போ தீசனுக்கே யூட்டிப்பின் னுண்ணுமதே
நண்ணுமுயிர்க் குற்ற நலம். 148
இ-ள் : உயிர் இறைவனுக்கு அநாதியே அடிமையா னது. உடலையும் விரும்பும் உடைமையாக ஏற்றது ஆதலால் பரந்த வினைகளை நுகரும் போதே சிவனுக்கு ஊட்டி உண்பதே வீட்டுலகை நண்ணும் ஆன்மாக்களுக்குப் பொருந்திய நல மாம் என்றவாறு.
இறைவற்கு உயிர் அநாதியே அடிமையும், உடல் உடை மையும் ஆவன. ஆதலால் வினைகளை நுகரும் போது சிவார்ப் பணம் செய்தலே முத்திகாமியான உயிர்க்கு நலம் பயப்ப தாகும் என்பது கருத்து.
பசு கன்மங்களைப் பதிகன்மமாகச் செய்யுமுறை கூறியவாறு.
---------------
கன்மத்தை இறைவற்கே ஊட்டுக எனல்
அருத்துமவ னேனோ வருத்து மலத்தைத்
துரத்துதற்கே யாமாற் றொலையக் - கருமத்தை
ஈட்டுந் தவத்தா லிசைந்ததெல்லா மாங்கவற்கே
ஊட்டுதற்கே யாகுமென வோர். 149
இ-ள் : உயிர்களுக்கு வினைப்போகங்களை அருத்துகின்ற சிவன் ஏன் அருந்தச் செய்கின்றார் எனின் ஆன்மாக்களை வருத்துகின்ற மலத்தைத் துரத்துவதற்கென்றே எண்ணுக. அங்ஙனம் மலந்தொலைய கன்மஞ்சேர்க்கும் தவத்தால் வந்த பயன் அனைத்தும் அச்சிவனுக்கு ஊட்டுவதற்கு ஆம் என ஓர்ந்துணர்வாயாக என்றவாறு.
இறைவன் மல நீக்கத்திற்காகவே வினைகளைக் கூட்டினான். நாம் வினைகளை நுகரும்போது அவை ஏறாமலிருக்கச் சிவார்ப் பணம் செய்க என்பதாம்.
--------------------
வினையை மருந்தாக உட்கொள்வதும் சிவத்தியானத்திற்காகவே எனல்
ஆற்றுந் தனுவி லடைந்த பொசிப் பாலுற்றுத்
தோற்று மரனைத் துடருமால் - தேற்றும்
வினையே மருந்தாய் விரும்பியது மீசன்
தனையே நினைவதற்காந் தான். 150
இ - ள் : வினைகளைச் செய்யும் உடலில் சேர்ந்த நுகர்ச்சி கள் அனைத்தாலும் வந்தடைந்து காட்சி வழங்கும் சிவபரம் பொருளைத் தொடரும். அங்ஙனமாக அவ்வினையைத் தெளி விக்கும் மருந்தாக விரும்பியது சிவனை அனவரதம் தியானிப் பதற்காகவே என்றவாறு.
ஆன்மா வினைகளை நுகருங்கால் ஆன்மாவினிடமாக விளங்கும் சிவம் தோன்றும். வினைகள் அவரையும் தொடரும். அங்ஙனமாக. கன்மம் மருந்தாமோ வெனில் ஆம் மருந்து நோயை நீக்கி ஆன்மாவைத் தெளிவிப்பதுபோல, கன்மங்க ளும் மலத்தை நீக்கி உயிரை ஞானத்தோடு கூட்டித் தெள் விக்கும் என்பதாம். ---------------
தானதுவான ஆன்மாக்களுக்குச் சிவமே பொசிப்புக்குரிய பொருள் எனல்
ஊனு முயிரு மொருங்கொப்ப நிற்பினும்பின்
ஊன் புசிப்பை நோக்க லொழுங்காகும் - வானேயும்
ஆவிக்குப் போக மானா மதுவாக
மேவியபேர்க் காகும் விதி. 151
இ-ள் : உடலும் உயிரும் ஓரிடத்து ஒத்து நிற்பினும், பின்பு உடலின் நுகர்ச்சியை மட்டும் அறிதல் முறைமையாம். சிதாகாயத்தைச் சேர்ந்த உயிர்க்குப் போகம் சிவனேயாம். இது. சிவமே தானாகப் பொருந்திய போர்க்கே ஆகும். இதனை விதி என்று உணர்க என்றவாறு.
உடலும் உயிரும் ஒருங்கியைந்து இருப்பினும் உடலின் பொசிப்பு எத்துணை என்று அறிதல் முறைமை. இவ்வுடலை நீத்த உயிர்க்கு - தான் அச்சிவமான உயிர்க்குச் சிவமே பொசிப்பாம் என்பது கருத்து.
பொசிப்பு - நுகர்ச்சி. உடலின் புசிப்பையாய்தலும், சிவத் தையே போகப் பொருளாக நுகர்தலுமாகிய இரு நிலையும் சிவமே தானான பரிபாகிகட்கு என்று தெளிக.
-----------------
கன்மம் அருகின் சிவமாம் பேறு சித்திக்கும் எனல்
பொசிப்பாங் கருமம் பொசிப்பாரைப் பற்றி
யிசைப்பா னரனூனை யெண்ணான் - பொசிப்பு
மலையாம னின்று மருவுமா லுண்டு சிலவான போதானாந் தேர். 152
இ-ள் : கன்மவினைகள் நுகர்ச்சியாம். நுகர்வார்களைப் பிடித்துக் கூட்டுவான் சிவன். பொசிப்புக்குரிய உடலைப்பற் றிக் கருதான். நுகர்ச்சிகள் முன் பின்னாகவும் ஒரு சேரவும் வந்து மோதிக்கொள்ளாமல் இன்ன தின் பின் இது என நியதி யின்படி ஆன்மாவை வந்து சாரும். நுகர்ந்து கன்மத் தொகுதி குறைந்து சிலவானபோது தானாந்தன்மை எய்தும். இதனைத் தெளிவாயாக என்றவாறு.
நுகர்ந்து கன்மம் அருகியபோது சிவமாந்தன்மை பெற லாம் என்பது கருத்து.
----------------
பசுகன்மத்தைப் பதிகன்மமாகப் பாவித்தலால்
சிவதரிசனம் பெறலாம் எனல்
அருத்து மருந்தீசற் கருத்து மதனாலோ
வருத்து மலப்பிணியை மாய்த்தோம் - திருத்துங்
கரும மருந்திக் கருதுமத னாலோ
வருமவையா லொன்றை மதி. 153
இ - ள் : ஈசன் நமக்கு ஊட்டும் மருந்தாகிய பசுகன்மங் களை ஈசற்கு அருத்திப் பதிகன்மங்களாகச் செய்ததால் நம்மை மயக்கஞ் செய்து வருத்தும் மலநோயை அழித்தோம். அங்ஙனம் திருத்தப்பெற்ற கன்மங்களை நுகர்ந்ததால் அடை யும் அனுபவங்களால் ஒன்றான சிவத்தை எண்ணு எ.று.
ஈசன் உயிர்கட்கு ஊட்டும் கன்மபோகங்களை ஈசனுக்கு ஊட்டின் அவை அவனுடையதாம். நமக்கு மலவலி குன்றுவ தோடு கன்மத்தொகுதியும் குவியாது. சிவத்தியானமே மிகும் என்பதாம்.
-----------------
மலம் கெட புவனபோகமே மருந்து, மருந்திலும்
மயங்காதபோது சிவம் வெளிப்படும் எனல்
மையலே தானாய் மருவு மலநோய்க்கு
வையமே நன்மருந்தாய் வாய்த்ததால் - கையகல
நோக்கும் போ தீசனையே நோக்குமா லாங்கதனைப்
போக்குமே நெஞ்சே புகுந்து. 154
இ - ள் : மயக்க ஞானமே வடிவாக ஆன்மாவை மருவும் மலநோய்க்குப் புவன போகங்களே நல்ல மருந்தாக வாய்த்தது. அதன்கண் உள்ள ஒழுகலாறுகெட ஆராயும் போது, ஆன்மா சிவத்தைத் தரிசிக்கும். மாயேயங்களாகிற புவன போகங்களை யும் நுகர்ந்து கழிக்கும். நெஞ்சே! இவற்றை எண்ணிப்பார் என்றவாறு.
மலவன்மையைக் கெடுக்க புவன போகங்களே நல்ல மருந்து. புவன போகங்களே பரம லட்சியமென்று அழுந்தி அனுபவிக்கும் ஒழுகலாறு கெடின் மல நீக்கத்தால் சிவப்பேறு உண்டாம் என்பதாம்.
---------------
மலமகன்ற பலமே அரனைக் காண்பதெனல்
மலமகன்றா ரன்றோ வருமரனை நோக்கும்
மலமுடையா ரெவ்வாறு மன்னும் - பலமே
பரிந்தரனை நோக்கும் பரிவினாற் சற்றுந்
தெரிந்ததல வென்னத் தெளி. 155
இ-ள் : மலநீக்கம் பெற்ற பரிபாகரே வெளிப்பட்டுத் தோன்றும் சிவனைக் காண்பர்; அங்ஙனம் காண்கின்றோம் என்ற மலமுனைப்பு உடையார் எங்ஙனம் சிவத்தைச் சார்ந்து சிவமாயே விளங்குவர் ? பார்க்கிறோம் என்ற பலம் கொண்டு அரனைப் பார்க்கும் துன்பந்தரும் முயற்சியால் சிவம் சிறிதும் தெரியப்படாதாம் என்று தெளிவாயாக என்றவாறு.
நாம் காண்கின்றோம் என்ற முனைப்பும் மடங்கினால் அல் லது சிவம் வெளிப்பட்டு அருள் வழங்காதாம் என அனுபவம் கூறியவாறு.
-------------
சிவம் தானே வெளிப்பட்டருளுவார் எனல்
வினை நோக்க மல்லால் விரும்பியதோ ரீசன்
தனை நோக்க மின்றாய்த் தகுமால் - மனநோக்கம்
மாற்றியபோ தன்றோ மருவுமரன் றானாகத்
தோற்றியவா றாகுமெனச் சொல். 156
இ-ள் : வினைகளை நோக்கலாமேயல்லாமல், விரும்பிய சிவத்தை நோக்குதல் இல்லையாம். மனத்தால் கருதி நோக்கு தலை மாற்றியபோதே ஆன்மாவை அநாதியே மருவியுள்ள இறைவன் தானாகவே வெளிப்பட்டு அருளுவன் எனச் சொல் வாயாக என்றவாறு.
கண்டறிதல் என்பது கன்மங்களுக்குப் பொருந்துமே அன்றிச் சிவத்திற்கு ஆகாது. மனத்தால் அறிதலையும் மாற்றி மனம் அடங்கியவிடத்தில் தான் சிவம் வெளிப்படும் என்பதாம்.
ஆகவே சிவம் மனங்கருவியாக அறியப்படுவதன்று என் பது கருத்து.
---------------
மலபரிபாகமும் - மலநாசமும் இவை எனல்
ஆகத்தார் தீதா மருவினையை நோக்கின்மல
பாகத்தா ராகப் படுவரான் - மோகத்தால்
ஈசன்மே லன்பே யிசைவார்க்கே தீயமல
நாசமே யாகுமென நாடு. 157
இ .ள் : உடலொடு கூடிய ஆன்மாக்கள் தம் நுகர்ச்சிக்கு வரும் கொடியவினைகளை யாராயின், மலபரிபாகம் பெற்றவர் ஆவர். ஈசன்பால் மோகங்கொண்டு இடைவிடாது அன்பு செய்வார்க்கு மலம் கெடும் என ஆராய்ந்து பார் என்றவாறு.
வினைகளை நுகர்ந்தபோது உளதாம் அனுபவம் மலபரி பாகம். சிவன்பால் இடையறாப் பேரன்பு செய்யும்பொழுது உளதாம் அனுபவம் மலநாசம் என்பதாம்.
--------------
மல வலி கெடும் நிலைமை யாது எனல்
இருளி லிசையா திசைந்த கருவி
மருளி லிசைய வருமா - லருள்தனை
யொட்டவொட்டத் தானே யுறுமலத்தின் சத்திகெடப் பட்ட
தென்ன நெஞ்சே பகர். 158
இ-ள் : அஞ்ஞானத்தில் முந்திக்கிடக்கும்போது வந்து பொருந்தாத தனு முதலிய கருவிகள் தெளிவு பெறாத மயக்க நிலையில் காரியப்படும். அங்ஙனம் காரியப்படக் காரியப்படத் தெளிவு பிறந்து திருவருளைச் சாரச்சார தானாகவே மலத்தின்வன்மை வாட் உனக்குண்டான அனுபவம் என்னவா யிருந்தது மனமே விளங்கச்சொல் என்றவாறு.
அறியாமையில் அழுந்திக்கிடந்தபோது அறியப்படாத கருவிகரணங்கள் மருளிலே சிறிது காரியப்பட , மருளையும் தெருட்டத் திருவருள் சார்ந்தபோது மலவலிகெட அதனாலுண் டான அனுபவத்தைச் சொல் என்பதாம்.
-------------
பிணி உடலுக்கா ? உயிர்க்கா?
உயிர்க்கோ பிணிமற் றுறுமுடற்கோ வென்னின்
மயக்க மிருவகைக்கு மன்னு - மியக்குந்
தனுவும் வினையுந் தகும்பிணியே யாயு
நினைவா லடங்கி வெலு நேர். 159
இ - ள் : மலநோய் உடலுக்கா உயிர்க்கா எனின், மலத் தின் விளைவாகிய மயக்கம் இரண்டற்கும் ஆம். உயர் இயக்கப்படுகின்ற உடலும், அவ்வுடல் கருவியாக நுகரப் படும் வினைகளும் பிணியே ஆனாலும், எண்ணத்தால் அடக வெல்லப்படுவனவாம். இதனை நேர்ந்து பார் என்றவாறு.
மலநோய் உடலுக்கா உயிர்க்கா எனின் அதன் விளைவாகிய மயக்கம் இரண்டற்கும் தான். உடலும், அது கொள்ளும் களும் பிணி எனப்படினும், எண்ணத்தால் மாற்றப்படுவன் வாம் என்பது கருத்து.
எண்ணத்தால் மாற்றப்படுதல் நீற்றறை மாசில் வீணையும் மாலை மதியமும் தென்றலும் போல நுகரப்பட்டமையால் அறிக.
---------------
பதிகன்மம் மலமறுக்கும் உபாயமாம் எனல்
காட்டத் தடங்குங் கருதியதீத் தானந்தக்
காட்டமே யாகாக் கணக்கே போல் - நாட்டு மலத்(து)
ஒத்த கரும முறுமரன்பா லொத்துமலக்
கொத்தறுக்கு மென்னக் குறி. 160
இ - ள் : விறகில் அடங்கியுள்ள தீ அந்த விறகாகாமை போல, நிலைபெற்ற மலத்தோடொத்து நுகர்ச்சிக்கண் ஆம் கன்மம், ஆன்மாவிடம் அநாதியே கலந்துள்ள சிவன்பால் ஒத்து மலக்கூட்டங்களைக் கொத்துடன் நீக்கும் என அறிவா யாக என்றவாறு.
விறகிலுள்ள தீ விறகாகாதுபோல. மலத்தொடு சார்ந்து ஆன்ம நுகர்ச்சிக்கான கன்மங்கள் சிவத்தொடு கலந்து சிவ கன்மமாய் மலத்தை நீக்கப் பயன்படும் என் அறிக என்பதாம். ஆகவே மல நீக்கத்திற்காகப் புணர்க்கப்பட்ட கன்மங்கள் பதி கன்மங்களாயின் மல நீக்கம் செய்யும் மருந்தாகும் என்பது உணர்த்தியவாறு. .
கன்மமலம், மூலமலம் பக்குவப்படும் அளவு தனியே இருக்கும் எனல்
மருந்து நோய் தன்னை மருவு மருந்தும்
பொருந்துநோய் தானாய்ப் புகுமால் – திருந்து
மலநோ யறுக்கு மருந்து மருவிச்
சிலநா ளிருக்குமெனத் தேர். 161
இ - ள் : பிணிக்குக் கொடுக்கப்படும் மருந்து நோயொடு பொருந்தும்; பின்னர் நோய் நீங்குதற்குரிய பரிபாகமுற்ற காலத்து நோயொடு நோயாகப் புகுந்து நோய் நீங்கும் போது தானும் நீங்கிவிடும். அதுபோல, திருந்திய மலநோயைப் போக்கும் மருந்தாகிய கன்மமலமும் ஆன்மாவைப்பொருந்தி மலபரிபாகப்படும்வரை இருக்கு மெனத் தெளிவாயாக எ - று.
மருந்து நோய் நீங்கும்வரை உடலிலிருந்து பின்னர் நீங் குவதுபோலக் கன்மமலமும் மூலமலமும் பரியாகப்படும் வரை இருந்து பின் நீங்கும் என்பதாம்.
-----------
கன்மபரிபாகம் இவ்வாறு ஆம் எனல்
மலப்பிணியை மாற்று மருந்தாங் கருமம் -
பிணியோ டொன்றா யழுந்தி - மலப்பிணியை
மாற்றி யரனை மருவி யவனாகத்
தோற்றுமே நெஞ்சே துணி . 162
இ -ள் : மலநோயை நீக்கும் மருந்தாகிய கன்மமலம், மலநோயோடு ஒன்றாகி, அதில் கலந்து, மலநோயை வலி ஒடுக்கி, உயிர் சிவத்தைச் சாரச்செய்து, சிவமேயாக விளங்கச் செய்யும். இவ்வுண்மையை மனமே உறுதியாக நம்பு எ - று.
கன்மமலம் மலம் நீங்கியவழிச் சீவன் சிவத்தைச் சார்ந்து சிவமேயாக விளங்கத் துணை செய்யும் என்பதாம்.
-------------
கன்மங்களைச் சிவத்தின்பாலதாக்கலே சிறப்பாம் எனல்
அருந்து மருந்தை யருந்துமவற் கூட்டித்
திருந்தவழி பாடெவருஞ் செய்யார் - மருந்து
ததியே யெனுமாற் றந்தவர்க்கே யன்பர்
மதியா லருத்துவதே மாண்பு. 163
இ-ள் : உண்ணுமருந்தை உண்பவர்கட்கு உண்பித்து. திருந்த வணக்கங்களை உலகில் எவரும் செய்யமாட்டார்கள். மருந்து தயிர்போல்வதாம். அதனை உதவிய சிவனுக்கே ஊட்டுதல் சிறப்பாம் என்றவாறு.
கன்மங்களைச் சிவனுக்கேயாக்குதல் சிறப்பாம் என்றவாறு. தனக்கேயாக்கின் ஆகாமிய சஞ்சிதங்களாக வினைமிகும். பிறவி இடையறாது. ஆதலால் பதிகன்மங்களாகச் செய்யின் பிறவி யறும் என்பது விளக்கியவாறு.
-----------------
கன்மம் மலம் நீங்கக் கொடுக்கும் மருந்தாம், அதுவே சிவகன்மமுமாம் எனல்
மலமே பிணிகரும் மாற்றுமருந் தீசன்
குலமே யென நடக்குங் கொள்கை - மலமகல
ஊட்டுதற்கு மாகும் பின்னூட்டுமரற்கே கருதி
யூட்டுதற்கு மாகுமென வோர். 164
இ - ள் : மூலமலமாகிய ஆணவமே ஆன்மாவைப் பற்றி நிற்பதாகிய நோய். கன்மங்கள் அம்மல நோயைப் போக்கும் மருந்து. இவையனைத்தும் இறைவன் நமக்கு உதவிய கூட் டங்களே என எண்ணி நடக்கும் கொள்கைகளாம். இக்கன்ம மலம், மூல மலம் நீங்க உயிர்களாகிய நமக்குக் கொடுக்கும் மருந்தும் ஆம்; மலபரிபாகத்தின் பின் அதனை நாம் சிவனுக்கே ஏற்பித்தலுமாம். என்று எண்ணி ஆய்வாயாக எ - று.
கன்மமலம் மலபரிபாகத்தின் பின் சிவகன்மங்களாகச் சிவப் பணிக்கே அர்ப்பணிக்கத் தக்கனவாம் என்பது கருத்து.
---------------
மலகன்மங்களின் இயல்பு இவை எனல்
மலமே யனாதி மருவும் கருமக்
குலமே யரனீந்த கொள்கை - நலமாம்
உயிரே மலமா யொடுங்குமா லெல்லாம்
செயிரே யெனவே தெளி. 165
இ-ள் : மலம் அநாதியே ஆன்மாவைப் பொருந்தியது. கன்மக்கூட்டங்கள் அம்மலவாதனை யகற்றச் சிவன் உதவிய கொள்கைகளாம். அதனால் ஆன்மா பரிசுத்தமாய் இன்பம் எய்தும். உயிரைப்பற்றி நின்ற மயக்கம் அனைத்தும் மலமாய் வலிகெடும் குற்றம் எனத் தெளிவாயாக என்றவாறு.
மலம் அநாதி . கன்மம் ஆகந்துகம். கன்மத்தால் மலமகல ஆன்மா சுத்தனாம். அதுவரை ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் மலத்துள் ஒடுங்க மலம் வலிகுன்றும். அம்மலமும், அதன் விளைவாகிய மயக்கங்களுமே ஆன்மாவிற்கு உள்ள குற்றங்களாம் என்பது கருத்து.
---------------
பதி பசு பாசங்கள் கலப்பால் ஒன்றாயினும் வேறாவன எனல்
மலமுந் தனியாகு மற்றுயிரா யுற்ற
குலமுந் தனியாகக் கொள்ளு - நலமாகும்
ஈசனேயாகு மிசைந்த தனுவினையு
மாசறுகுஞ் சாத்தியென மன். 166
இ - ள் : மலம் ஆன்மாவை அநாதியே பற்றி நிற்பதாயி னும் சிவஞானம் பெற்றவழி வேறாகும்; அதனைப்பற்றி நிற்கும் ஆன்மக் கூட்டங்களும் வேறாகவே கொள்ளப்படுவன வாம். சிவனே பேரின்பப்பொருளாகிய நலமாம் : இதனைக் கூடிய உடலையும் ஆன்மாவின் குற்றங்களை யறுக்கவந்த சத்தி யாகிய மாயை யென எண்ணுவாயாக என்றவாறு.
மலம் பரிபாகம் பெற்ற வழி நீங்குவதொன்று. அதனொடு கலந்து நிற்கும் ஆன்மாவும் வேறாவனவே. சிவனே பேரின்பம். உடல் மலமறுக்க வந்த சிவசத்தியாகிய மாயையே என்பதாம்.
--------------
மலத்தின் இயல்பு இவை எனல்
பிரியா தறியாமை பேரா தனாதி
செறிவாந் தனுவினைமேற் சிந்தை - குறியாம்
சிவத்தோ டணையாது சேர்ந்ததெல்லாம் பொல்லாப்
பவத்தோ டணைக்குமலம் பார். 167
இ - ள் : ஆணவமலம், அறியாமையினின்றும் என்றும் ஆன்மாவைப் பிரியாமற் செய்யும்; ஆன்மாவை விட்டு வில காது அநாதியே செறிந்ததாம்; உடலும், அதனாலியற்றப் படும் வினைகளுமாகிய இவற்றின் மேற் சிந்தை குறியாக நிலைக்கச் செய்வதாம்; சிவத்தோடு ஆன்மாவை இணைய விடாது அடைந்த எவைகளையும் மிகப் பொல்லாத பிறவியுட் படுத்தும் இதனை ஆய்ந்து பார் என்றவாறு.
ஆணவமலம், அறியாமையே வடிவாய். ஆன்மாவில் பிறி வின்றி அநாதியாய்ச் செறிவாய், உடலும் வினையுமாகிய இவற் றின் மேல் இடைவிடாத பற்றுக்கொள்ளச் செய்வதாய், உயி ரைச் சிவத்தோடு இணையவிடாமல் தடை செய்வதாய், இடை விடாது பிறப்புட்படுத்துவதாய் இருப்பது என்பதாம்.
பவம் - பிறவி. தனு வினைமேற் சிந்தை செறிவாம் எனக் கூட்டி எடுத்த உடம்பின் மீதும் வினைப்போகங்களின் மேலும் மனம் செறிந்தீடுபடச் செய்வதாம் எனவும், குறியாம் சிவத் தோடு அணையாது எனக்கூட்டி - இலட்சியமாகிய சிவத்தோடு சேராமல் எனவும் பொருள் கூறலுமாம்.
----------
மலத்தான் விளையும் தீமை இவை எனல்
வையமெல்லா மெய்யாக வந்ததுவு மற்றுயிரின்
செய்கைமற மாகத் திரிந்ததுவு - மெய்யாந்
தனுவும் பொசிப்புத் தகுமரற்கு மாறா
நினைவுமல மென்ன நினை. 168
இ - ள் : அநித்தியமான - காரியா ரூபமான பிரபஞ்சம் நித்தியமாகத் தோன்றுவதும், ஆன்ம கன்மங்களனைத்தும் பாவகன்மங்களாகவே திரிவதும், தனு கரண போகங்கள் அனைத்தும் மெய் என்ற புத்தியும், ஆன்மாவை உய்விப் பதற்குத் தக்க சிவபெருமானிடம் மாறிச் சென்று பற்றாத எண்ணமும் மலத்தான் வந்த விளைவு என நினைப்பாயாக என்றவாறு.
அநித்தியமான தனு கரண புவன போகங்களை உண்மை என மதிக்கச் செய்வதும், சிவபெருமானுக்கு மாறான எண்ணமும் மலத்தின் விளைவு என எண்ணுக என்பதாம்.
சீவகன்மம் சிவகன்மம் ஆகாது பாவகன்மமாகத் திரியும் என்பார் உயிரின் செய்கைமறமாகத் திரிந்ததுவும் என்றார்.
---------------
மலச்சார்பால் உயிர்கட்கு உறுவன இவை எனல்
மலமே யதன்மத்தை மன்னு மதனி
னலமே தருமத்தை நண்ணு - மலமே
தெசித்தார்க்கே யாகுஞ் சிவதரும் முற்று
நசித்தபோ தா முத்தி நாடு. 169
இ - ள் : மலம் அதர்மத்தை நிலைபெறச் செய்யும் ; மதத் தினின்று விலகிய நன்மையே தருமத்தைச் சாரும்; மலத்தைக் கண்ட பேருக்கே சிவதன்மம் ஆம். அதுவும் கெட்டு முழுதும் தற்போத மிழந்தார்க்கே முத்திவிளைவதாம் என்றவாறு.
மலம் அதன்மம் அஞ்ஞானம் அவைராக்கியம் முதலிய வற்றை உயிரினிடமாக விளைக்கும். அம்மலங்கெட்டுச் சுத்தனான போது தன்மம் ஞானம் வைராக்கியம் முதலியன உண்டாம். இங்ஙனம் மல விலக்கணத்தை அறிந்தார்களுக்கே சிவதன்மம் விளையும். அதுவும் கெட்டுத் தற்போதமுங்கெட முத்தியுண்டாம் என்பது கருத்து.
--------------
மலச்சார்பால் விளையும் தீமைகள் இவை எனல்
மலப்பிணியை யுற்றார்க்கு மாசிவமே கைப்பாம்
இலத்தொழில்க ளெல்லா மினிப்பாம் - மலப்பிணி நோய்
தீரும்போ தீசனிலை தித்திக்குங் கைப்பாகும்
சாரு மிலத்தொழிலே தான். 170
இ-ள் : மலநோய் உற்றவர்களுக்குப் பெரிய சிவபரம் பொருள் கசக்கும். மனையில் இருந்து இயற்றப்படும் போக போக்கியங்களின் நுகர்ச்சியனைத்தும் இனிப்பாம். மலநோய் நீங்கின் இறையனுபவம் தித்திக்கும். இல்லறத்தில் ஈடுபட்ட போது கசக்கும் என்றவாறு.
மலச்சார்பால் புவன போகங்கள் இனிக்கும்; சிவம் கசக்கும் என்பதாம்.
---------------
கன்மங்கள் மருந்தாய்ப் பின் விளையாதோ எனல்
கருமமருந் தோபின் கருதானோ வென்னில்
இருவகையு மொன்றா யிசையும் - மருவும் –
திருவுருவே தானாந் திகழ்கரும் மாமால்
மருவுமருந் தென்ன மதி. 171
இ - ள் : கன்மங்கள் மருந்தாமோ? நோய் தீர்ந்த பின் அதனைக் கருதானோ? எனின் மருந்தாதலும், அதனை மீட் டும் புரிய எண்ணுதலும் ஆகிய இரண்டு வகையும் ஆன்மாவி னிடம் ஒன்றாகவே பொருந்துவதாம். சார்ந்த உருவமே தானாம். அதனிடமாகவே கன்மங்கள் விளையும். ஆயினும் அக்கன்மங்களை மலநோய் நீக்கும் மருந்தாக எண்ணுக எ - று.
கன்மம் மருந்தாய் அருந்தியபின் அதனை எண்ணானோ எனின், அவ்விருவகையும் ஒருசேர விளைவனவாம். அதுபோல உயிர் உடலைச் சார்ந்து உடலே தானாம். அப்போது வினைகள் விளைவனவாம். கன்மங்கள் மருந்தாவனவாம் என்பது.
விளையும் வினைகளுக்கு விளைந்து முற்றிய வினைகள் மருந் தாவன என்க.
--------------
நோய் தணிப்பது மருந்தா? மருத்துவனா? எனல்
பிணிக்கு மருந்து பிரியாம னின்று
தணிக்கு மருத்துவனைச் சார்ந்து - பிணியை
வருத்தியதிங் குற்ற மருந்தோ மருத்துவனோ
திருத்தமா யொன்றதனைச் செப்பு. 172
இ-ள் : நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகள் வைத்தி யனைச் சார்ந்து நின்று நோயைத் தணிக்கும். அப்படியாயின் நோயைத் தணிப்பது மருந்தா? மருத்துவனா? திருத்தமாக இரண்டில் ஒன்றைச் சொல் என்றவாறு.
மருத்துவனைச் சார்ந்து நின்ற மருந்து நோயைத் தணிக் கிறது. ஆகவே நோய் தணிப்பது மருந்தா? மருத்துவனா ? ஆய்ந்து சொல் என்பதாம்.
------------
கன்மம் மலவலி ஒடுக்குமாயின் இறைவணக்கம் ஏன் எனல்
மருந்தே பிணியை வருத்தின் மருத்துவனைத்
திருந்தவழி பாடெவரென் செய்வர் - பொருந்துமரன்
உற்ற மலத்தை யொழிப்பன் கருமத்தால்
பற்றிவழி பாடெவர்க்கும் பாங்கு. 173
இ .ள் : மருந்து நோயை வருத்தித் தொலைக்குமாயின் யார் எதற்காக வைத்தியனைப் போற்றுவார்கள்? சிவன் ஆணவவலியைக் கன்மமருந்தால் போக்குவானாயின் வழிபாடு எவர்க்கு ஏற்ற பாங்காகும்? என்றவாறு.
மருந்து நோயைப் போக்குகின்றது. வைத்தியனை வணங் குவார் யார்? அதுபோலக் கன்மமலம் ஆணவமலத்தைப் போக்குகின்றது. கன்மமலத்தைக் கூட்டிய சிவனைப் போற்றுவ தால் பயன் என்ன என்பதாம்.
பாங்கு - ஏற்றதன்மை.
-----------------
உபாயங்களாலேயே சிவன் பிரியாதுறைவன் எனல்
ஆவி நிருமலமே யான தரனுக்கு
மேவி யருத்தும் வினையாமால் - கூவும்
சரியாதி நான்குந் தரித்ததனா லன்றோ
பிரியாச் சிவனான பேறு. 174
இ-ள் : சிவன் கருணை கூர்ந்து ஊட்டும் வினையால் ஆன்மா நின்மலமாயிற்று. சொல்லப்படுகின்ற சரியை முதல் நான்கு உபாயங்களையும் மேற்கொண்டதால் அன்றோ சிவன் ஆன்மாவைவிட்டு நீங்காத பேறானவாறாம் என்றவாறு.
சரியையாதிகளால் சிவன் சீவனைப் பிரியா துறைய, அவன் ஊட்டிய வினைகளால் ஆன்மா நின்மலனாவன் என்பதாம்.
-------------
இறைவனே மலத்தைப்போக்கி அருள்வன் எனல்
நிருமலனே யாவி நிருமலமே யாக்கி
ஒரு நலமாய் நிற்கை யொழுங்கா - முருமலத்தை
மாற்றி யவனே மருவுமா லாங்கவற்குந்
தேற்றமே யில்லையெனத் தேர். 175
இ - ள் : அநாதியே நின்மலனாகிய சிவன், ஆன்மாவையும் நின்மலனாக்கி உடனாய் இன்பமயமேயாய் நிற்பதே முறைமை யாம். அச்சத்தை விளைவிக்கின்ற மலத்தை மாற்றிய சிவனே சீவனோடு ஒன்றுவான். அதற்குச் சிறிதும் சந்தேகப்பட்டுத் தெளிய வேண்டுவதில்லையாம் என்று தெளி என்றவாறு.
நின்மலப் பொருளாகிய சிவமே சீவனையும் நின்மலனாக்கி அதனோடு சார்ந்து இன்பமயமாய் நிற்கும் இதில் தெளிய வேண்டுவதின்று என்பதாம்.
தெளிவு என்பது ஐயப்பட்ட ஒன்றற்கு அன்றே. ஐயமே உண்டாகாதபோது தெளிவு எதற்கு என்றவாறாம்.
-------------
மலம் நீங்கின் காயத்தையும் கோயிலாக்கி உயிர்
இறைவனோடு அத்துவிதமாம் எனல்
இருளகலா தாகு மிசைந்தவொளி யல்லான்
மருளகலு மீசன் மருவில் - தெருளுங்கால்
அத்துவித மாமா லடைந்த தனுவினையுங்
கத்தனுக்கே யாகுமெனக் காண். 176
இ - ள் : ஏற்ற ஒளியில்லாது இருள் நீங்காது. ஈசனாகிய ஞானப்பிழம்பு ஆன்மாவைச் சாரின் ஆன்மாவைப் பற்றி நின்ற அறியாமை இருள் அகலும். அங்ஙனம் மருளகன்று தெருள் விளையுங்கால் உயிர் இறைவனோடு இரண்டற்று ஒன்றாதலையடையும். அப்போது தானடைந்த இவ்வுடலையும் இறைவனுக்கே கோயிலாகச் செய்யும் என்றவாறு.
மலமகல இறைவனோடு உயிர் அத்துவிதமாம். உடலையும் கோயிலாக்கும் என்பதாம்.
------------
மலநீக்கம் பெற்றகாலத்தில் வினைகள் இறைவனைச்சாரும் எனல்
ஊனற்றும் போக முயிர் நற்றித் தென்னவுயிர்
தானற்றும் போகந் தலைவற்காந் - தீனற்ற
லுற்ற மலத்தா லுறுமே லரன்கருணை
பற்றியதா லுண்பான் பரிந்து. 177
இ - ள் : இதுவரை உடலை நத்தியிருந்த போகங்கள் உயிரை நத்தியதுபோல . உயிரை நத்திய போகங்கள் இறை வனுக்கு ஆம். நுகர்ச்சிக்கு வராத வலிகுன்றிய மலத்தால் சிவன் சீவனிடம் விளங்கித் தோன்றுவன்; அதனால் சீவர்கள். இடத்துக் கருணை பிறக்கும் அதனால் அவர்கள் வினையைத்தான் நுகர்வன் என்றவாறு.
மல நீக்கம் பெற்ற உயிர்களோடு இறைவன் கலந்து விளங் குவதால் அவர்கள் வினையைத் தான் நுகர்வன் என்பதாம்.
---------------
ஈசன் வினைகளை நுகரான் எனல்
மலத்தோ டடங்கி மருவியபே ருண்பர்
மலமே யருந்த மருவா - நலமாகும்
ஈசனோ டொன்றா யிசைவா ரருந்துமிக்க
வீசனே யுண்ணானென் றெண். 178
இ - ள் : மலத்திற் கட்டுண்ட உயிர்கள் வினைப்போகங் களை நுகர்வர். அவர்களைக் கட்டியமலம் வினைகளை நுகர்வ தில்லை. அதுபோல இன்பமயமான ஈசனோடு ஒன்றாகிப் பொருந்திய சீவன்முத்தர்கள் வினைப்போகங்களை நுகர்வர். ஈசன் நுகரான் என்றவாறு.
மலம் வினைகளை நுகரா. மலச்சார்புடைய உயிரே நுகரும் அதுபோல சிவச்சார்புடைய சீவனே நுகர்வன் அன்றிச் சிவன் நுகரான் என்பதாம்.
-------------
பெத்தான்மாக்களின் இயல்பு இதுவெனல்
ஆவி மலத்தோ டடங்கவது தானாக
மேவி யதுவாய் விளங்குமா - லாவியெனத்
தானே யிலையால் தகுமலமே தானாகும்
ஊனு மதுவாமென் றோர். 179
இ.ள் : ஆன்மா மலத்தில் கட்டுண்டு அதிலே அடங்க, மலமே தானாக . மலமேயாய் விளங்கும். உயிர் என்பதொரு பொருள் இல்லையாம். மலமே தானாகும் இவ்வுடலும் அம் மலமேயாம் என்று எண்ணுவாயாக என்றவாறு.
மலத்தில் கட்டுண்ட உயிர் மலமேயாய்த் தன்னையும் அறி யாது என்பதாம்.
---------
சீவகன்மம் சிவகன்மமாகச் சீவன் ஏற்ற உரு சிவனுருவாம் எனல்
சிற்றுயிரே யுற்ற செயலானற் றேவனுக்கு
மற்றுருவாய் நின்று மருவுமா - லுற்றமலச்
சேட்டையே மாற்றுஞ் செயலால் சிவனாகு
நாட்டமே யாகுமென நாடு. 180
இ-ள் : சிறிய ஆன்மா தான் பொருந்திய கன்மங்க ளான் நல்ல தேவதேவனாகிய சிவனுக்கு உருவாக நின்று பொருந்துவதாம். அநாதியேயுற்ற மலச் சேட்டைகளை மாற் றிய செயலால் சிவமே தானாகும் விருப்பம் விளையும் எ - று.
சீவகன்மங்களைச் சிவகன்மமாக்க சீவன் சிவனுக்குடலாம். மலச்சேட்டைகளை மாற்ற சிவமேயாய் பெரும்பேறு சித்திக்கும் என்பதாம்.
நாட்டம் - விருப்பம்.
--------------
பதிஞானம் மிக மலவலி வாடுமெனல்
வினை மருந்தா னோக்கி விரும்புங்கா லீசன்
நினைவனைத்துந் தானாகி நிற்பன் - பினைமலத்தின்
நாட்டமே யின்றே நடந்தமல மைந்தும்பின்
ஓட்டமே யன்றோ வுணர். 181
இ-ள் : வினை என்னும் மருந்தால் பாசஞானத்தின் நீங் - கிப் பதியை நோக்கப் பதி ஆன்ம அறிவு முழுதுமாய் வியா பித்து ஆன்மஞானத்தைத் தானாக்கி நிற்பன்; பின்பு மலத்தின் நாட்டமேயின்றாம் ; இதுவரை நிகழ்ந்த மலம் ஐந்தும் ஓட்டம் பிடிக்கும் அல்லவா? இதனை நன்றாக உணர்ந்து பார் எ று.
வினைகளை மருந்தாக நோக்கி, மலமயக்கத்தின் நீங்கிப் பதியை விரும்பப் பதி உயிரனைத்துமாய் நிற்பன். அதனால் மலமகலும். மலமகல ஆன்மா நித்தியானந்தப் பெருவாழ்வு எய்தும் என்பதாம்.
---------------
சிவனியல்பு சீவற்கு ஆம் உபாயம் இவையெனல்
மருத்துவனே யீவான் மருந்து பிணியைத்
துரத்துதற்கே யன்றோ தொலைந்தால் - கருத்தனடி
நோக்குவதே யாமா னுண்ணியதோர் தீமலத்தைப்
போக்குங்கா லீசற்காம் பொற்பு. 182
இ-ள் : பிறவிப்பிணி மருத்துவனாகிய வைத்தியநாதப் பெருமானே நோய் தணிக்க மருந்தளிப்பன் ; எதற்காக எனில் நோயை வெருட்டுவதற்காக அன்றோ? நோய் நீங்கின் நமக் குப் பல்லாற்றானும் உபகரித்த கருத்தனடியை நோக்குவதே நம் கடமையாம். கொடிய மலத்தைப் போக்குங்கால் சிவனுக் குரிய இயல்புகள் அனைத்தும் உயிரின்கண் ஆம் என்றவாறு.
வினையாகிய மருந்தை மருத்துவ நாதன் கொடுத்து மல வலி வாட்டுவன். அதனால் தன்னை அறிந்து தாள் சேர்ந்து இன்பம் நுகர என்பதாம்.
------------
சீவகன்மம் சிவகன்மமாம்முறை இதுவெனல்
அற்றார் தனுவி லடைந்தவினை யெல்லாம்பின்
மற்றா ரருந்த மருவா - ருற்றவுயிர்
மன்னியவன் றானானான் மற்றுயிரைப் பற்றும் வினைக்(கு)
அன்னியமே னாவா னரன். 183
இ - ள் : பற்றற்ற ஞானிகள் உடம்பில் நுகர்தற்கான கன்மங்களைப் பின் வேறு யார் நுகரப் பொருந்துவார்கள்? உயிர்க்கு உயிராக நிறைந்து விளங்கும் இறைவன் உயிரே ஆனான். அங்ஙனம் ஆன போது வினைகளுக்கு வேறாக அரன் எங்ஙனம் ஆவான்? என்றவாறு.
மலம் நீங்கித் தூயரான உயிர்களுக்கு உயிராக விளங்கும் இறைவன் அவ்வுயிரே தானான பொழுது உயிரைப் பற்றிய வினைக்கு அந்நியமாவது எங்ஙனம் என்பதாம்.
-----------
வினைகளே மலவலி வாட்டும் எனல்
அடைந்தார் தனுவி லடைந்தவினை யன்றோ
தொடர்ந்தார் மலத்தைத் துடைக்கு - மிடைந்த
தொடர்பே யிலையாற் றொடர்ந்தமல மாற்ற
நடையேது மில்லையென நாடு. 184
இ - ள் : எடுத்த உடம்பிலே இயைந்த கன்மங்களே அநாதியே தொடர்வதான மலத்தைத் துடைக்கும். வினை கட்குத் தொடர் பேயில்லையானால் தொடர்ந்து வருகின்ற மலத்தை மாற்றச் செயலொன்றுமில்லை எனத் துணிக எ - று.
பிராரத்த கன்மங்களே மலவாதனை அகற்றுவன. வினைத் தொடர்பின்றேல் மலவலியை மாற்றுவதெங்ஙனம் என்பதாம்.
அடைந்து ஆர் தனு - பெற்றுப் பொருந்திய தேகம். தொடர்ந்து ஆர் மலம் - அநாதியே தொடர்ந்து உயிரை வியாபித்துள்ள ஆணவம். இலையால் - இல்லையானால்.
---------------
கன்மத்தைக் கடவுள் உதவியது மலத்தானாம் மயக்கம் போக்கவே எனல்
புன்மலமே யற்றார் பொருந்துந் தனுவினையு
நின்மலமே யாய்நிறைந்து நிற்குமேற் - கன்மம்
பலர்பா லிருக்கப் படுமேற் றருவார்
மலமா லறுக்குமென மன். 185
இ - ள் : புல்லியமலம் அற்ற ஞானிகளின் உடலையும் நின்மலமான சிவம் பொருந்தி நிற்குமாயின், கன்மம் பலரிடம் இருக்கப்படுமாயின் இறைவன் அவற்றை உதவியது மலத் தான் விளையும் அஞ்ஞானத்தைப் போக்கவே என எண் எ - று.
இங்ஙனம் நின்மலசிவம் நின்மலான்மாவின் தனுவையும் இடமாகக்கொண்டு விளங்குமாயின், கன்மம் பலரிடத்தும் விளங்குதல் அவரவர்கள் மலவாதனையை அகற்றி ஞானத்தை அளிப்பதற்காகவே என்பதாம்.
--------------
வினை தொடர்ந்து வராது எனல்
கருமத் தொடர்ச்சி கருதிலிங்கத் தின்றா
மருவும்வினை யெங்ஙன் வருமோ - பெருகுந்
தவத்தோர்க்கே யிச்சை தருமாற் றகுதி
சிவத்தோ டணையுமெனத் தேர். 186
இ-ள் : கன்மங்கள் பிரவாகம் போலத் தொடர்ந்து வருதல் தியானிக்கப்படுகிற சிவலிங்கத்தினிடம் இல்லையாம். அங்ஙனம் இருக்க பிராரத்தவினைகள் எங்ஙனம் வரும்? தவ மிக்க ஞானிகட்கே தன்னையடையும் இச்சையைச் சிவன் அளிப்பன். இச்சையின் முதிர்ந்த தகுதி சிவத்தோடணையச் செய்யும் என்றவாறு.
சிவத் தியானம் புரிவார்க்கு கருமத் தொடர்ச்சி இல்லை. அங்ஙனமிருக்கப் பிராரத்த கன்மம் அவர்களை எப்படியடையும்? சிவம் தவமிக்கோர்க்கே தன்னடிசாரும் விருப்பத்தை அளிப்பர். அத்தகுதி முதிர ஞானிகள் சிவத்தோடு இரண்டறக் கலப்பர் என்பதாம்.
----------------
திருவருள் பெற்றோர் செய்யும் கன்மங்கள் உயிரைப்பற்றா எனல்
அருந்தும் வினையை யருந்தின் மலத்தால்
திரிந்து தனுவே செனிக்கும் - பொருந்தும்
அருளோ டணைவா ரருந்தியதிங் கெல்லாம்
உருவோ டணையாதென் றோர் . 187
இ - ள் : பிராரத்தகன்மங்களைப் பொசிப்பின் மூலமலந் துணையாக நிற்க மீட்டும் பிறவியே உளதாம். திருவருளைச் சார்ந்தவர்கள் நுகர்ந்த கன்மங்கள் அனைத்தும் பிறவிக்குக் காரணமாகாது எனத் தெளி என்றவாறு.
மலச்சார்புடையார் நுகரும் கன்மங்கள் மீட்டும் பிறவிக் கேதுவாயது சிவச்சார்புடையார் நுகரும் கன்மங்கள் பிறவிக் கேதுவாகா என்பதாம்.
-----------------
கன்ம நுகர்ச்சியையும் சிவ நுகர்ச்சியையும் பெறும் உபாயம் இவை எனல்
தனுவு முயிருந் தகுமலத்தா லொன்றாந்
தனுவே பொசிப்பதனைச் சாரு - நினைவாகும்
ஆவிக்குப் போக மரனா முடலுயிரு
மேவியபோ தொன்றாயும் வேறு. 188
இ - ள் : உயிரும் உடலும் தக்க கன்மமலத்தால் ஒன்றா யின. உடல் நுகர்ச்சியைப் பொருந்தும்; தியானத்தில் திளைக்கும் ஆன்மாவுக்குச் சிவம் போகப்பொருளாம். உட லும் உயிரும் ஒன்றான போது சிவம் அவற்றுடன் வேறாயும் இது உடல் இது உயிர் என தத்துவ தரிசனமும், ஆன்ம தரிசனமும் பெற்ற வழி உயிருடன் கலந்து ஒன்றாயும் நிற்கும் என்றவாறு.
உயிரும் உடலும் ஒன்றான போது அதாவது உடலே தானென உயிர் நிற்கும் போது கன்மப்பொசிப்பும், சிவதரிசனம் பெற்றபோது சிவப்பொசிப்பாகிய சிவபோகமும் உளதாவ தாம் என்பது கருத்து.
----------------
சிவதன்மத்தில் ஈடுபடுக எனல்
தனுவும் பொசிப்பைத் தவிரா மலத்தை
மனுமாற் பிறவி மருவுந் - தனுவும்
பொசிப்புஞ் சிவத்தைப் பொருந்தின் மலத்தைத்
தெசிக்குமென நெஞ்சே தெளி. 189
இ-ள் : உடல் ஒரு போதும் நுகர்ச்சியை நீக்கா . மலத் திலேயே மடங்கிக் கிடக்கும். அதனால் பிறவியுளதாம். உடலும், நுகர்ச்சியும் சிவபரம்பொருளைச் சாருமாயின் உயிர் மலத்தையறிந்து அதனின்று நீங்கும் என மனமே தெளி எ - று.
உடலோ போகத்திற்கு உரிய கருவி. அது ஒரு போதும் போகத்தினின்று நீங்காது. அதனால் மலத்தில் முந்தியே மயங்கிக்கிடக்கும். அதனால் சகடக்கால்போலப் பிறவி மாறிமாறி யுளதாம். உடலும் போகமும் சிவதன்மத்திலே ஈடுபட்டுச் சிவத்தையே சாருமாயின், மல நீக்கம் பெற்று உயிர் உய்யும் என்பதாம்.
---------------
மலநீக்கம் இறைவன் கன்மங்களை ஊட்டுவதால் கழியும் எனல்
உயிர்க்கு மயக்க முறுமலமே தானாம்
செயற்குக் கருமந் திகழ்மருந்தால் - நயக்கும்
அரனே மருத்துவனா யாங்கருத்தி நின்று
வரலா லகலுமென மன். 190
இ - ள் : உயிருக்குள்ள மயக்கம், பொருந்திய மலத்தா லாவதே . அம்மலத்தோடு கூடி மலமே தானான வினைக்கு கன் மங்களின் நுகர்ச்சியே மருந்தாவதாம். கன்மங்களை உயிர் களுக்கு ஊட்டும் சிவனே வைத்தியனாம். அவர் அங்ஙனம் கன்மங்களை உண் பித்தலால் மலம் நீங்கும் என எண் எ - று.
உயிர்களுக்கு அறியாமை உண்டாவது மலத்தால். அதற் குரிய மருந்து கன்மப்பொசிப்பு ஒன்றே. சிவனே வைத்தியன். அவனூட்ட நாம் நுகர்தலால் மலம் நீங்கும் என அறிக என்பதாம்.
---------------
சிவன்பால் அன்பாயிருக்க மலம் தேயும் எனல்
உருவும் வினையு முறுமருந்தே யாமால்
கருது முருவரனைக் காட்டு - மிருவினையும்
ஊட்டுமரற் கன்பா யுறுமான் மலப்பிணியை
ஓட்டுமென நெஞ்சே யுணர். 191
இ-ள் : தனுவும், அது நுகரும் வினைகளும் மருந்தா வன. தியானிக்கப்பெறுகின்ற உரு சிவனையே காண்பிக்கும். நல்வினை தீவினைகளையுமவர்கட்கு ஊட்டி மலவலியை வாட்டு கின்ற சிவத்திற்கு அன்பாயிருந்தால் சிவன் மலநோயைப் போக்கி யாட்கொள்வன் என்றவாறு.
எடுத்த இந்த உடம்பும் இது நுகரும் வினையும் மருந் தாவன. உயிர் இந்த உடம்போடிருந்து அறியப்படுகின்ற ஞானவுரு சிவதரிசனம் காட்டும். இருவினைகளை ஊட்டுகின்ற அரனுக்கு அன்பாயிருத்தல் மலநோயைப் போக்கும் உபாயம் என்றுணர்க என்பதாம்.
-------------
உடல் கன்மநுகர்ச்சிக்கும் சிவமேதானாம் செயற்கும் ஆகுமெனல்
கருமத்தா லாகுங் கருதுமுட லீசன்
தருமத்தை நோக்குதற்குஞ் சாரும் - வருமத்தால்
ஊட்டதற்கு மாகு முறுமரனைத் தானாக
வீட்டுதற்கு மாகுமென வெண். 192
இ - ள் : கருதப்படுகின்ற இவ்வுடல் கன்ம வினைக்கீடாக உதவப்பெற்று உண்டானதாம். இது சிவதன்மங்களை அறிதற் கும் உதவும்; வருதற்குக் காரணமான கன்மவினைகளை யூட்டிக் கழிப்பதற்கும் உற்ற கருவியாம். தன்னிடம் பரமகருணையால் வந்தடைகின்ற பரசிவத்தை நுகருதலுக்கும் ஆகும் என எண்ணுவாயாக என்றவாறு.
உடல், சிவ தன்மங்களைச் செய்தற்கும், கன்ம நுகர்ச்சிக்கும், சிவனைச் சார்ந்து சிவமேயாதற்கும் கருவியாகும் என்பதாம்.
-----------------
சிவஞானியர்க்குச் சிவம் உபகாரப்படும் நிலை இது எனல்
தனுவுள்ள போதே தகும் புசிப்பு முண்டாய்
மனதிருந்த வாறே மருவும் - பினமா
மலத்தோ டணைவார்க்கு மன்னுசிவந் தானா
நலத்தோ டணைவார்க்கு நன்று. 193
இ - ள் : உடலுள்ளபோதே நுகர்ச்சியும் உண்டாய், மனம் இருந்தபடியே சிவத்தையோ பாசங்களையோ மருவும். வேறான மலத்தோடு பொருந்திய உயிர்கட்கு உயிர்க்குயிராக நிலைபெற்ற சிவம் தானேயான பரிபாகத்தோடு சேரும் ஞானி கட்கு நன்மை தருவதாக அமையும் என்றவாறு.
உடல் போகத்திற்கு ஏதுவாய்ச் சார்ந்ததன் தன்மையாய் மயங்கி நிற்கும். அது மலத்திற் பிரிந்த உயிர்கட்கு சிவத்தொடு சார்ந்து சிவமாந்தன்மையை உதவும் கருவியாம் என்பது.
மனது இருந்தவாறே மருவுதலாவது மனம் மலத்தில் மயங்கிக் கன்மங்களைப் பொசிக்கும் பொழுது மலமேயாயும், சிவத்தைச் சார்ந்து சிவகன்மங்களையே செய்து சிவத்தையே நுகரும்போது சிவபோகமாயும் இருத்தல் என்க. பினமாம் மலம் - உயிரைவிட்டுப் பின்னமான மலம். நலத்தோடு அணை வார்க்கு நன்று ஆம் என ஒரு சொல் வருவித்து முடிக்க.
--------------
மலத்தைப் பிணி என்றது ஏன் எனல்
அணியு மலமே யறியாமை யாமால்
பிணியா மெனவுரைத்த பெற்றி - பணியும்
கருமமருந் தென்னக் கருதியது மீசற்(கு)
ஒருமைப்பா டாக்குமா லுற்று. 194
இ-ள் : உயிர்கள் அணிந்துள்ள மலமே அறியாமை. அதுவே உயிர்களைப் பிணித்து நிற்றலால் பிணியாயிற்று எனச் சொன்னதன்மையாம். இறைவனை இடைவிடாது வணங்கும் கன்மமே மருந்து எனக்கருதியதும், சிவத்தோடு ஒருமைப் பாடு உண்டாக்குவதற்காக என்றவாறு.
மலத்தால் விளைந்த மயக்கைப்போக்கும் மருந்து கன்மம். அதனை அங்ஙனம் கூறியது சிவத்தோடத்துவிதக் கலப்பால் இன்பம் ஊட்ட என்பதாம்.
--------------
மருந்துண்டு நோய் நீங்கி இன்பம் உறுக எனல்
வினையுந் தனுவு மிகுமருந்தே
நினைவே தனுவாக நிற்கு - மினமாம்
கருமம் பிரியாக் கருதரனைக் காட்டும்
தருமம் புசிப்பாய்த் தகும். 195
இ - ள் : கன்மங்களும் - அவற்றை நுகர்தற்காக உதவிய உடலும் மருந்தாவன. நம் நினைப்பே உடலாக அமையும். அவ்வுடலைவிட்டு நீங்காது உடன் நிகழ்கின்ற கன்மங்களே உயிரை விட்டுப் பெத்தகாலத்தும் முத்திக்காலத்தும் நீங்காத சிவத்தைக் கூட்டும். சிவகன்மங்களை நுகர்தலே சிவபோக மாகும் என்றவாறு.
மருந்தாகக் கிடைத்த உடலையும், கன்மங்களையுங்கொண்டு நோய் நீங்கிச் சிவதரிசனம் செய்து சிவபோகத்து அழுந்திச் சிவமேயாக விளங்குக என்பதாம்.
--------------
பசுகன்மம் பதிகன்மமாம் உபாயம் இவை எனல்
அறிவா யிருந்தங் கருந்துங்கா லாகம்
செறிவாம் வினையுந் திரிவாம் - பிறியா
மலப்பிணியு மாறு மருவுமரன் றாளில்
தலைப்படுவ தர்கத் தகும். 196
இ-ள் : உயிர் ஞான சொரூபமா யிருந்து கன்மங்களைப் புசிக்குங்காலையில், உடலில் நிறைந்துள்ள வினைகள் தம் நிலை திரியும். ஆன்மாவை என்றும் பிரியாதிருந்த மல நோயும் வலிகுன்றும். சிவபெருமானுடைய திருவடியில் சேரத்தக்க நிலையுண்டாம் என்றவாறு.
ஆன்மா ஞானசொரூபனான போது கன்மங்கள் சிவகன் மங்களாம். மலமகலும். திருவடிப்பேறுண்டாம் என்பது.
----------------
முத்தான்மாக்களுக்குச் சிவமே பொசிப்பாம் எனல்
மலமேமற் றெல்லா மருவும் பின் னீசன்
குலமே யதைமாற்றிக் கொள்ளு - மிலையாம்
புசிப்பே யுயிர்க்குப் பொருந்துமர னல்லால்
வசிப்பேது மில்லையென மன். 197
இ-ள் : உலகிலுள்ள சீவராசிகளனைத்தையும் ஆணவ மலமாகிய மூலமலம் ஒன்றே அநாதியே பொருந்தி நிற்பதாம். பின் சிவமும், அவர் கூட்டமாகிய அடியார்களும் ஆசாரியர் களுமே அம்மலத்தின் வன்மையை மாற்றி ஆன்மாக்களை அதி னின்று உய்யக்கொள்ளுவர். அப்போது உயிர்களுக்குச் சிவத்தைத் தவிர போக நுகர்ச்சியே இல்லையாம். மீட்டும் பிறந்து பூமியில் வசிப்பதும்இல்லையென எண்ணுவாயாக என்றவாறு.
அனைத்துயிர்களையும் பற்றி நிற்கும் மலவலி சிவனாலும் சிவனடியார்களாலும் நீங்கிய பிறகு, உயிர்களுக்குக் கன்ம நுகர்ச்சியில்லை. அத்தகைய முத்தான் மாக்கள் சிவத்தையே நுகர்ந்து சிவானந்தத்தில் திளைப்பர்; பிறவார் என்பது கருத்து.
--------------
உடலும் ஞானசொரூபமாம் எனல்
அறிவே தனுவை யடையி னறிவும்
பிறியாத் தனுவாகும் பெற்றி - மறமாந் த
னுவே யறிவோ டடையின் றனுவும்
அறிவா மெனவே யறி. 198
இ - ள் : ஆன்மாவின் அறிவு உடலைப் பொருந்துமாயின் உடலே தானாய்ப் பிறியாமல் நிற்கும் தன்மை எதுபோல எனின், பாவகன்மங்களையே விளைப்பதாய சடமாய உடல் சித்தாகிய ஞானத்தோடு மருவுமாயின் அதுவும் ஞான சொரூபமாம் என அறிக என்றவாறு.
சித்தாகிய ஆன்மா சடமாகிய உடலைச் சார்ந்து உடலா கவே இருந்தது போலச் சடமாகிய உடல் ஞானத்தைச் சார்ந்து ஞானசொரூபமாகவே விளங்கும் என்பதாம்.
--------------
சிவத்தைச்சார்ந்து நித்திய சுகத்தில் இருக்க எனல்
அறியாமை நோய்க்கங் கறிவா மருந்தை
நெறியா யருந்துங்கா னீங்குஞ் - செறிவா
யகத்தோ டணையு மரனோடெந் நாளும்
சுகத்தோ டிருக்கத் துணி. 199
இ-ள் : அறியாமையாகிற நோயைப் போக்க ஞான மாகிற மருந்தை முறையாகத் தவறாதேயுண்டு வரின் அறியா மைப்பிணி அகலும். நீக்கமின்றி ஆன்மாவாகிய உன்னை வந்தணையும் சிவத்தோடு ஒன்றிச் சுகமாக என்றும் இருக்கத் துணி என்றவாறு.
அறியாமை அறிவு மருந்தால் நீக்கி அரனைப் பொருந்தி ஆனந்தமாக என்றும் இரு என்பதாம்.
--------------
பரிபாகிகட்கே கருணை செறியும் எனல்
பாகத்தா ரெல்லாம் பருகுவார் நற்கருணை
ஆகத்தை யன்றோ வறையுங்கால் - மோகத்தார்
எல்லார்க்குந் தோற்ற மிசையுமரன் மேற்கருணை
வல்லார்க்கு மீதே வழக்கு. 200
இ - ள் : பரிபாகமுற்ற ஆன்மாக்கள் அனைவரும் நல்ல சிவகருணையாகிற உடலையன்றோ பருகுவர். சொல்லுமிடத்து, இறைவனிடம் ஒன்றும் நீங்காத மோகமுடையவர்க்கே சிவ பெருமான் வெளிப்பட்டருளுவர். அவன்பாற் கருணையை எய்த வல்லவர்கட்கும் இதுவே வழக்காம் என்றவாறு.
பரிபாகம் பெற்ற ஆன்மாக்களே சிவகருணை உடலைப் போகஞ்செய்பவர். நீங்காத அன்பர்கட்கே ஆண்டவன் தோன்றுவன் ; கருணை செய்வன். அந்தக் கருணையை அடைய வல்லவர்களுக்கும் சிவனை நுகர்தலே வழக்காம் என்பது.
--------------
உடலிடங்கொள்ளுதல் இறைவன் கருணையாம் எனல்
காய மலமலவே யானாலுங் காணுமலம்
தோயுமா லாங்கதுவாய்ச் சொல்லுவதாம் - ஞாயமாம்
காய மருளலவே யானாலுங் காணுமரன்
தோயுமா லாங்கருளாய்ச் சொல். 201
இ - ள் : இவ்வுடல் மலமல்ல ; ஆனாலும் காணப்படுகின்ற மலத்திற்றோய்ந்து மலமேயாகி மறைப்புண்டுக் கிடக்கும். மல மறைப்பு அகன்று அறியப்படு பொருளான உடல் அறியாமை யைச் செய்வதன்று; ஆனாலும் சிவனைக் கண்டு அவனிடம் அனவரதமுந்தோயும். அவ்விடத்து அதனை அருள்வடிவே யாம் எனச் சொல்லுக என்றவாறு.
மலத்தொடு கூடி மருளாய் இருந்த உயிர் மலம் அகன்று அருளாம் என்பது கருத்து.
--------------
முத்தி பெற்றார்க்குரிய அனுபவநிலை இதுவாம் எனல்
ஆவிதா னற்றங் கருளோ டழுந்தியருள்
தேவி செயலனைத்துஞ் செய்வதெனக் - கூவல்
சுழுத்தி பிரித்தரனே தானாகச் சூழ்ந்தங்(கு)
அழுத்தியதே முத்திக் கழகு. 202
இ - ள் : ஆன்மா , தான் என்ற முனைப்பற்று, அருளிலே அழுந்தி, அருளே தானாய்த் திருவருட் சத்தியின் தொழிலே தம் தொழிலாய், விளங்கும் எனக் கூறல். சுழுத்தி நிலையில் தன்னை மறந்து கிடக்கும் ஆன்மாவைத் தயாளுவான சிவன் பிரித்துத் தானாகச்செய்து, அருளில் பிரியாதிருக்க அழுத்தி அருண்மயமாகச் செய்ததே முத்திக்கு அழகாம் என்றவாறு.
மருளில் தோய்ந்திருந்த ஆன்மாவை எடுத்து அருளில் அழுத்தி ஆனந்தமாக்கியதே முத்தி என்பதாம்.
--------------
அருளில் லயமாதலைவிடச் சிறந்த பேறில்லை எனல்
அருளிலய மாமா லாங்கதற்கு மேலாம்
பொருளுண்டே லில்லைப் புகுவா - ரிருளை
விலக்கி யொளியே விரிகதிரைக் காட்டிக்
கலக்குமரு ளீங்கிதுபோற் காண். 203
இ - ள் : மலம் நீங்கிய ஆன்மாக்கள் அருளில் லயமாவர். அதனில் சிறந்த பொருள் இல்லை. ஒளி தம்மிடம் புகுவாரின் இருளை விலக்கி, விரிந்து பரந்த கிரணங்களைக் காட்டிக் கலந் திருக்கும். இதுபோலத்தான் அருளும் என்று அறிவாயாக என்றவாறு.
ஒளி இருளை நீக்கிக் கதிரைக்காட்டித் தன்மயமாக உயிர் களைச் செய்வதுபோலத் திருவருளும் மலத்தை ஓட்டிச் சிவத் தைக்காட்டித் தன்மயமாகச் செய்யும் என்பதாம்.
-------------
சிவத்தை அடுத்த ஆன்மா தன்னிலைகெட்டுச் சிவமேயாம் எனல்
பன்னிறம்வந் துற்ற படிகம் பலவனமாய்த்
தன்னிறமே காட்டுந் தகைமையென - மன்னிறம்வந்(து)
ஓட்டியபோ தாவி யொடுங்கிவிளங் காததனால்
நட்டமே யில்லையென நாடு. 204
இ - ள் : பல நிறங்கள் வந்து பொருந்தப் படிகக்கல் அவற்றைச் சார்ந்து தன்னிறத்தைப் பல வர்ணங்களாகக் காட்டுவதுபோல , ஆன்மா தலைவனாகிய சிவத்தின் தன்மையை அடுத்த போது, தன் தன்மை கெட்டு, முனைந்து தோன்றாதாம். அதனால் உயிருக்கு லாபமே ஒழிய நட்டமில்லை என்றவாறு.
ஆன்மா சிவத்தைச் சார்ந்து சிவமேயாங்கால் ஆனந்தா தீத அனுபவமாகிய இலாபம் விளையுமே அல்லது கேடொன்று மில்லை என்பதாம்.
----------------
முத்திநிலையில் ஆன்மா சிவத்தின் வியாபகத்தில் அடங்கிச்
சிவமாய் நித்தியமாம் எனல்
அவி சிவத்தி லயமாவ தல்லாற்பின்
மேவி விளங்கா விதியென்னி - லாவியரன்
வாசமே யாக மருவியதோ ரங்கமாய்
நாசமே யில்லையென நாடு. 205
இ - ள் : ஆன்மாவானது சிவத்தில் ஒடுங்குமே அல்லாது. பின் தனித்து இருந்து தன்னுணர்வும் தன் செயலும் பெற்று விளங்காத முறை என் என்னில், உயிர் சிவத்தில் வசிக்க, அச் சிவத்திற்கு ஆன்மா ஓரங்கமாகிக் கேடின்றி இருக்குமெனத் தெளிவாயாக என்றவாறு.
ஆன்மா சிவத்தினிடம் கேடின்றி அதன் அங்கமாக விளங் கும் என்பதாம்.
-------------
சிவதுரியம் - முத்தி இவற்றின் இயல்பு இவை எனல்
அளியி லழுந்து மரு ளானந்தந் தானாய்
ஒளியி லொளிக்கு முருவை - வெளியில்
ஒடுக்குவதே நற்றுரியம் ஒத்தசிவம் தானாய்
அடக்குவதே முத்திக் கழகு. 206
இ-ள் : சிவகருணையிலே மூழ்கியிருக்கும் சச்சிதானந் தமே தானாகி , ஞானத்தில் அடங்கும் ஞானவடிவான ஆன்மா வைப் பர வெளியாகிய சிவத்தில் ஒடுக்குவதே சிவதுரியமாம். ஒத்த சிவமே தானாக அடங்கியிருப்பதே முத்திக்கு அழகாம் என்றவாறு.
பரவெளியில் ஞானசொரூபியான ஆன்மா ஒடுங்குவதே சிவதுரியம். சிவமே தானாகி ஆனந்தத்து அழுந்தியிருப்பதே முத்தி என்பதாம்.
----------------
சிவாதீதநிலை இதுவெனல்
மனத்தினி லுற்ற மறைப்பதனை மாற்றி
அனைத்துலக மெல்லா மகற்றி - எனக்குயிராய்த்
தேற்று மருளின் செயலகற்றித் தானாகத்
தோற்றஞ் சிவமதீதஞ் சொல். 207
இ - ள் : மனத்தில் நிறைந்த அஞ்ஞானத்தைப் போக்கி, உலக முதலான மாயேய மலங்களையும் போக்கி, அடியேற்கு உயிரைப்போலக் கூடவே தானாகியிருந்து, என்னைத் தெளிவிக் கும் அருளின் செயல்களையும் அகற்றிச் சிவமே தானாகக் காணப்படுதலே சிவா தீதமாம் எனச் சொல்லுவாயாக எ - று.
மலமறைப்பைப் போக்கி, தனுகரணாதிகளையும் தானல்ல எனக் கழித்து, அருளிற்றோய்ந்து, அருட் செயலும் மறந்து, சிவமே தானாகத் தோன்றும் தோற்றமே சிவாதீதமாம் என்பது கருத்து.
--------------
சிவபெருமானுக்கு உண்மை உரு இதுவெனல்
தோற்றுவிப்பான் காப்பான் றுடைப்பானுயிரனைத்தும்
ஏற்றுவிப்பான் தீநிரயத் தென்றுமுற - மாற்றியிவை
போக்கித்தா னாகப் பொருந்துமர னென்னுமிந்த
நோக்கே யரற்குருவாய் நோக்கு. 208
இ - ள் : இறைவன் தோன்றச் செய்வன் ; காப்பன்; அழிப்பன்; கொடிய நரகத்தினின்றும் உயிர்களைக் கரை யேறச் செய்வன் என்னும் வேறுபாடுகளை அகற்றிச் சிவன் ஆன்மாவாகிய தானேயாகப் பொருந்துவன் என்னும் இந்த நோக்கமே சிவபெருமானுக்கு உருவமாக எண்ணு எ - று.
இறைவன் பஞ்சகிருத்தியங்களைச் செய்வன் என்ற பேத ஞானமின்றித் தான் தானேயாக விளங்குகிறான் என்பதே சிவ பெருமானின் உண்மையுருவென உணர்க என்பதாம்.
-------------
அகங்காரமமகாரம் அகலின் சிவதரிசனம் பெறலாம் எனல்
என்னதியா னற்றா லிறைவனடி தானாகும்
தன்னதனை யீயிற் றகுமுகமாந் - துன்னும்
அவனேதா னாக வடையின் முடியாம்
சிவனேர் தெரிசனமாய்த் தேர். 209
இ - ள் : இது என்னுடையது, நானென்ற அகங்காரமும் மமகாரமும் நீங்கின் இறைவனுடைய திருவடி தானே நம் மனத்துள் ஆகும். ஆன்மா தன்னது என்று எண்ணும் அன் பையும், கிவத்தை அனுபவிக்கின்றோம் என்ற உணர்வையும் சிவனுக்கே அர்ப்பணம் செய்துவிட்டால் தக்க திருவருள் முகங்கொண்டு தானே வந்தடையும். அவனே தானாக எண்ணி பிருப்பின் திருமுடி தெரியும். இங்ஙனம் சிவதரிசனம் நேரும் என்று தெளிவாயாக என்றவாறு.
அகங்கார மமகாரம் அகலின் திருவடி கிடைக்கும். ஆன் மார்ப்பணம் செய்யின் இறைவன் திருமுகம் தோன்றும். அவனே தானாயின் திருமுடி காணப்பெறும். இங்ஙனம் சிவ தரிசனம் நேரும் என்பதாம்.
--------------
சிவயோக இயல்பிவை எனல்
சேரும் பொருளனைத்துஞ் சேருமா லீசனுக்குச்
சாரும் பொருளறிந்து தாங்குவதாய்ச் - சீரானை
அல்லதொன்றைச் சாராம லாங்கவனோ டொன்றாகச்
செல்லல் சிவ யோகமெனத் தேர் 210
இ - ள் : நம்மை வலிய வந்தடையும் பொருள்கள் அனைத் தானும் மயக்கமே சேரும். ஆதலால் அவற்றை நீக்கி, இறைவனைச் சாரும் உபாயமான பொருள்கள் எவை என ஆராய்ந்து, அவற்றையே சுமந்து, சிறந்த செய்பொருளாகிய சிவத்தையன்றி வேறெதனையும் சாராமல், ஒன்றாகச் செல்லு தலே சிவயோகம் எனத் தெளிவாயாக என்றவாறு.
சார்புகளைக் கெடுத்து, சிவத்தையே சார்ந்து, அதனோடு ஒன்றியிருத்தலே சிவயோகமாம் என்பது கருத்து.
---------------
சிவபோக இயல்பு இதுவெனல்
பாதகத்தை யுற்ற பலவினைகள் செய்தாலென்
தீதகற்று நல்வினைகள் செய்தாலென் - பேதமற்ற
நாத னுடலுயிராய் நண்ணியதால் மிக்கவருட்
போதஞ் சிவபோகப் பொற்பு. 211
இ - ள் : பழிவிளைக்கும் பல கன்மங்களைச் செய்தால் என்ன? தீமைகளைப் போக்கும் புண்ணியங்களைச் செய்தால் தான் என்ன? பேதஞானம் நீங்கிய சிவபரம்பொருள் உடலும் உயிருமாக வந்தடைந்தது. ஆகவே, திருவடி ஞானமே சிவ போகத்தின் இயல்பாம் என்றவாறு.
எதைச் செய்தால் என்ன? அபேதமாய்ச் சிவத்தொடு ஒன்றிச் சிவனையே அனுபவித்தல் சிவபோகமாம் என்பது கருத்து.
---------------
நிர்வாண நிட்டையில் நிற்போர்க்கே சிவதரிசனமாம் எனல்
இந்தவா றாகு மிசைந்த நிரு வாண நிட்டை
முந்தியதோர் நூலின் மொழிந்ததால் - சந்ததமும்
தேற்றியதோர் நூலிற் றெளிந்தபேர் நெஞ்சிலுறத்
தோற்றுமர னென்னத் துணி. 212
இ-ள் : பழைய ஆகம நூல்களில் கூறிய நிருவாண நிட்டை இங்ஙனம் இயற்றப்படுவதாம். இடைவிடாமல் எப்போதும் தெளிவு வழங்கும் சைவ நூல்களில் பயின்று தெளிந்த ஆன்மாக்களின் மனத்திலே அரன் நன்கு தோன்று வன் எனத் துணிவாயாக என்றவாறு.
சிவாகமத்தெளிவும் சிவானந்த நிட்டையும் உடையோர் மனத்தில் சிவம் ஒன்றும் என்பது கருத்து.
--------------
சமய தீட்சிதர் கடமையும் பயனும் இவையெனல்
சரியைக்குத் தீக்கை சமயமா நிட்டை
வரிசைத் திருவுருமேன் மாலாய்த் - தெரியுந்
தொழிலோ டுடன் பட்ட சுத்தசா லோகம்
வழுவா திருப்பர் மகிழ்ந்து . 213
இ-ள் : சரியாவான்களுக்கு உரிய தீட்சை சமய தீட்சை யாம். அவர்களுக்கு உரிய நிட்டையாக மாகேசுர வடிவங் களின் மேல் பித்தாகி, அதற்குரிய தொழில்களோடு ஒன்றி, சுத்த சாலோக பதவியைப் பெற்று, அதினின்றும் வழுவா திருப்பர் சரியாவான்கள் என்றவாறு.
சரியவான்கள் சமய தீட்சையைப் பெற்றுச் சிவத்தொண்டு செய்து, உருவத்திருமேனியில் பற்றுக்கொண்டு, சாலோக பதவியைப் பெறுவர் என்பது கருத்து.
-------------
கிரியாவான்களின் இயல்பு இவையெனல்
கிரியைக்குத் தீக்கை கிளக்கில் விசேடந்
தெரியுநிட்டை மேனிச் சிறப்புப் - பெரியோர்க்குப்
பூசைத் தொழிலனைத்தும் பூண்டடைவர் சாமீபம்
மாசற்ற வன்பை மதித்து. 214
இ - ள் : கிரியாவான்களுக்கு உரிய தீட்சை விசேட தீட்சையாம். அவர்கட்கு உரிய நிட்டையாவது, இறை வனுடைய சிறந்த திருமேனியாகிய சிவலிங்கத்தைப் பூசை செய்தும், அடியார்கட்குப் பூசனைக்கு வேண்டிய பணிகளைச் செய்தும், பின் குற்றமற்ற அன்பால் சாமீப முத்தி அடைத லாம் என்றவாறு.
கிரியாவான்கள் விசேட தீக்கை பெற்றுச் சிவபூசையும் அடியார் பூசையும் செய்து அன்பே வடிவாய்ச் சாமீபமுத்தி எய்துவர் என்பது கருத்து.
-------------
யோகர் இலக்கணம் இவையெனல்
யோகத்துக் கில்லை யுறுந்தீக்கை யாகிலுமெய்
யோகஞ் சமய விசேடமே - யோகம்
இருதிறத்து முற்றங் கிசையிற் றியானம்
தருமவர்க்குச் சாரூபந் தான். 215
உள் : யோக நிலை நிற்பார்க்கு உரிய தீட்சைகள் ஒன் றும் இல்லையாம். ஆனாலும் உண்மையோகம் சமய விசேட தீட்சைகளேயாம். இவ்விரு நெறியானும் யோகம் கைவரப் பெறின் அனவரத தியானத்தை யருளுவன் அரன். அதனால் சாரூப முத்தி சித்திக்கும் என்றவாறு.
யோகர்க்கு உரிய தீட்சைகள் சமய விசேடங்களாம். இவ் விரண்டானும் தியான யோகம் சித்திக்கும். அவர்களடையும் முத்தி சாரூபமாம் என்பது கருத்து.
---------------
தியானத்தைச் சிவன்பால் ஒடுக்கத் திருவருளனுபவம் வருமெனல்
இருத்தித் தனுவை யிசைந்தொருமைப் பாடாய்
வருத்தி யறிவதற்கு வாராக் - கருத்தையரன்
பாலி லொடுக்கிப் பலதொழிலும் பாங்கவர்தம்
மாலி லொடுக்க வரும். 216
இ - ள் : உடலை ஓரிடத்திலே இருத்தி, உடலைப் பொருந்தி மன ஒருமைப்பாட்டுடன் வருத்தி அறியவராத கருத்தைப் புறம் போகவிடாது சிவத்தின்பாற் செலுத்தி அங்கே ஒடுங்கும் வண்ணம் செய்து, இயற்றப்படும் கன்மங்கள் அனைத்தையும் அவர் தம்மால் இயன்றனவாக எண்ண , ஒடுக்கவரும் எ - று.
எப்போதும் கன்மத்திற்கீடாக வினைகளை நுகர்வதிலே பசப்பிக்கும் உடலை ஓரிடத்திலே இருக்கச்செய்து, மனத்தையும் ஒருமைப்படுத்தி, நோன்பு தியானம் முதலியவற்றால் வருத்தி அறியவராத கருத்தைச் சிவன் பாற்செலுத்தி, நாம் செய்யும் கன்மங்களனைத்தையும் சிவகன்மங்களாகச் செய்யின் ஆன்மா அவர்பால் ஒடுக்க வரும் என்பதாம்.
--------------
உண்மை நிட்டை இதுவாம் எனல்
ஈங்கிவையே யல்லா லிசைந்த நிட்டை யெல்லாம் பொய
தீங்கதுவே யாகச் செயும துவால் - பாங்குடைய
நல்லார்க் கிவையே நலமா மறிவுடைமை
இல்லார் தமக்கேது மில். 217
இ - ள் : ஈங்கு இவைகளே யல்லாமல் வேறுவகையால் இசைந்த நிட்டை என்பன அனைத்தும் பொய்யானவைகளே; அன்றியும் தீமை செய்வனவாம். சைவசீலங்கள் அமைந்த நல்லவர்கட்கு இவைகளே நன்மை பயப்பனவாம். சிவஞானம் கைவரப்பெறாதார்க்கு இவற்றால் ஒரு பயனும் இன்றாம் எ று.
உண்மை நிட்டையாகிய இவைகளே யன்றி வேறுவகை யான் இயற்றப்படுவன அனைத்தும் பொய்யானவை; அன்றி யும் தீமை பயப்பனவாம். ஞானிகளுக்கு உரியன உண்மை நிட்டையே. சிவஞானம் பெறாதாற்கு ஒன்றுமின்றாம் என்பது கருத்து.
-------------
முதனூலும் - அதிகாரிகளும்
பன்னரிய மெய்கண்டான் பன்னுமருட் போதத்தைச்
சென்னிமேற் கொண்டொரு நூல் செய்தேனால் - இந்நூன் மெய்
முத்தர்க்கு நெஞ்சத் தமுதாம் பொய் மூடர்க்கும் மூடாக்கும்
பெத்தத்தைத் தீர்க்கு மருட் பேறு. 218
இ - ள் : சொல்லுதற்கரிய சிவானுபவத்திற் சிறந்த பரமாசாரியனாகிய மெய்கண்டதேவநாயனாருடைய சிவஞான போதத்தைச் சிரமேற்கொண்டு இந்த அனுபோக வெண்பா என்ற நூலைச் செய்தேன். இந்நூல் சீவன்முத்தர்க்குத் தேவா முதமாகும். பொய்யான மூடர்களுக்கும் கட்டினைக் களையும் திருவருட்பேறாகும் என்றவாறு.
இந்நூல் சிவஞான போதத்தைச் சிரமேற்கொண்டு செய் யப்பட்டது. இது சீவன் முத்தர்க்குத் தேவாமுதம் போல இனிப் பது. மூடர்க்கு மலபந்தத்தைக் கெடுக்கும் திருவருட்பேறாம் என்பது கருத்து.
அனுபோக வெண்பா முற்றியது.
----------------
அனுபோக வெண்பா செய்யுள் முதற்குறிப்பகராதி
[வெண்பா எண்]
அருத்துமவ னேனோ 149
அருந்தும் வினையை 187
ஆற்றுந் தனுவி 150
உருவும் வினையு 191
கண்டிருப்பார் தங்களுக்கே 135
சரியைக்குத் தீக்கை 213
சிற்றுயிரே யுற்ற 180
தனுவு முயிருந் 188
நீராகிப் பூவாய் 134
பன்னிறம்வந் துற்ற 204
மருந்து நோய் தன்னை 161
மருந்தே பிணியை 173
மலமுந் தனியாகு 166
மனத்தினி லுற்ற 207
வினை மருந்தா 181
அங்கங் கசந்தங் 131
அங்கமே யாவிக் 20
அஞ்சு தொழிலு 100
அடைந்தார் தனுவி 184
அணியு மலமே யறியாமை 194
அத்துவா வாறு 136
அரற்கோ சறுவிக் 111
அரனுயிர் போலென்று 114
அருத்து மருந்தீசற் 153
அருந்து மருந்தை 163
அருந்து முயிரை 118
அருவே லெவரு 124
அருளிலய மாமா 203
அரையனைப்போ 24
அவி சிவத்தி 205
அளித்த கருணை 1
அளியி லழுந்து மரு 206
அறியாமை நோய்க்கங் 199
அறியும் பொறியி 18
அறிவா யிருந்தங் 196
அறிவித்தா லெல்லா 71
அறிவித்தா லொன்று 84
அறிவே தனுவை 198
அறிவோ டறிவா 125
அற்றார் தனுவி 183
அனாதி மயக்கமுயிர்க் 69
அனாதி மலபெந்த 47
ஆகத்தார் தீதா 157
ஆசுற்றார்க் கில்லை 2
ஆணவத்தை நெஞ்ச 92
ஆதலினாற் றோற்ற 97
ஆவி நிருமலமே 174
ஆவி மலத்தோ 179
ஆவி மலப்பிணியா 103
ஆவி யனாதி 148
ஆவி யனைத்தினுக்கு 93
ஆவிக்கு நன்கா 41
ஆவிதா னற்றங் கருளோ 202
இச்சை யறிவுதொழி 88
இந்தவா றாகு 212
இருத்தித் தனுவை 216
இருளகலா தாகு 176
இருளி லிசையா 158
இருளை யொதுக்கு 63
இலங்கும் விளக்கங் 28
ஈங்கிவையே யல்லா 217
ஈச னருளுக் கிசைந்த 108
ஈசனே யெல்லா 137
உடற்குயிர்போ லீச 104
உணர்த்துவா ரின்றி 113
உண்டே னெனவுரைத்த 119
உயிர்க்கு மயக்க 190
உயிர்க்குப் பிறவி 42
உயிர்க்கோ பிணிமற் 159
உலகுடமை யாவி 133
உள்ள நடந்தவழி 95
உற்ற சகல முறுங்கே 75
ஊட்டு மருந்தை 53
ஊனற்று மாவி 116
ஊனற்றும் போக 177
ஊனு முயிரு 117
ஊனு முயிரு மொருங் 151
எல்லா வுயிர்க்கு 107
எல்லாத் தொழிலு 98
எல்லாப் பொருட்கு 25
என்னதியா னற்றா 209
ஓட்டுமல மாவி 129
கண்ண தனை யுற்ற 81
கரும மருந்து 52
கருமத் தொடர்ச்சி 186
கருமத்தா லாகுங் 192
கருமமருந் தென்றுங் 64
கருமமருந் தோபின் 171
கருமமல மல்லக் 142
கருவற்றா ரேனுங் 141
கருவி யனைத்துங் 90
கருவிநிறை வன்றோ 30
காட்டத் தடங்குங் 160
காய மலமலவே 201
காயமே தானாய்க் 130
காயமே யுள்ளங் 91
காயமே யுற்றுக் 10
காயமே லிச்சையுறக் 50
கிரியைக்குத் தீக்கை 214
குணிகுணத்தின் றன்மை 33
குணிகுணம தென்னக் 34
கோனானே யென்னிற் 12
சங்கத்தா லுற்ற 49
சம்புவுக்கே யல்லாற் 22
சரமசர மென்னத் 139
சரமசர மென்னத் 4
சிவசத் தியைப்புணருஞ் 80
சிறந்த கருவி 32
சுத்தப் படிகமெனத் 77
செயலே பிறப்பிறப்பைச் 36
சேரும் பொருளனைத்துஞ் 210
தருமா தருமமெனத் 57
தனிக்கு மலமுந் 46
தனுவுக் கிசைந்த 122
தனுவும் பொசிப்பைத் 189
தனுவும் வினையுந் 145
தனுவுள்ள போதே 193
தனுவே வினையதனைச் 120
தன்றமரை நோக்கித் 17
தன்னடையும் பாழாய்த் 13
தன்னறிவை நோக்கித் 79
தன்னியல்புக் கில்லைத் 70
தன்னை யநுபவிக்குஞ் 78
தன்னைத்தா னோக்கித் 37
தாக்கும் பிணிக்குத் 54
தானென்ற காயந் தன 8
தான்றிரிந்து காயமே 9
திரிவற் றுயிர்க்கோர் 89
தொடர்ந்தமல மைந்துந் 99
தோற்ற முதலாகத் 115
தோற்ற மொடுக்கஞ் 19
தோற்று மலப்பிணியைத் 144
தோற்று முயிரின் 132
தோற்றும்போ துற்றுத் 3
தோற்றுவிப்பா னெங்கே 96
தோற்றுவிப்பான் 208
நாடியோ வென்போ 16
நித்தியமான சுகம் 123
நிருமலனே யாவி 175
நிலையே மலங்கருவி 62
நிறைவா முயிரி 27
நிறைவே குறைவை 21
நிறைவே யரன்போ 23
நிறைவேற் பிறவி 26
நினைவே சென்ன 31
நீக்கு மறைப்பதனை 83
நீங்கு மலத்தை 82
நீண்ட தவத்தோர்க்கும் 146
நெடிய வுடலனைத்து 76
பசுபதியோ டத்துவிதப் 110
படிக மொருபொருளைப் 72
பதிக்குப் பசுவன்றோ 102
பதிபசுவை யின்றி 109
பரந்த கருவிப் 7
பரமன் கருணைப் 11
பளிங்கொளியே வன்னத்தைப் 45
பற்றும் படிகமது 74
பற்றைவிட்டுப் பற்றும் 87
பற்றைவிட்டுப் பற்றும் 112
பன்னரிய மெய்கண்டான் 218
பன்னிறத்தோ டொத்த 73
பாகத்தா ரெல்லாம் 200
பாசம் பதியென்னப் 14
பாதகத்தை யுற்ற 211
பாதாதி கேசப் 6
பிணிக்கு மருந்து 106
பிணிக்கு மருந்து 172
பிணிக்கு மருந்து 65
பிணிக்கோ மருந்ததனைப் 43
பிணிக்கோ மருந்ததனைப் 44
பிணியற்றா ரன்றோ 59
பித்துள்ள போதே 138
பிரியா தறியாமை 167
பிரியா வருளைப் 61
பிறப்பித்தா லன்றிப் 85
பிறப்பிறப்பாம் 39
பிறப்புத் துயரமது 105
புன்மலமே யற்றார் 185
பேரறிவே யீசனுக்குப் 101
பொசிப்பாங் கருமம் 152
பொருந்தும் வினை 143
பொறியும் புலனும் 5
போக்கும் வரவும் 29
மயத்தைக் குணமே 35
மருத்துவற்கே மற்ற 140
மருத்துவனே யீவான் 182
மருவுதனுத் தானாக 15
மருவும் பொறியை 126
மலத்தையிருட் போலெ 66
மலத்தோ டடங்கி 178
மலநோய் கரும் 147
மலப்பிணியை மாற்று 58
மலப்பிணியை மாற்று 162
மலப்பிணியை யுற்றார்க்கு 170
மலமகன்றா ரன்றோ 155
மலமற்றார் தம்மை 127
மலமே கருவி 40
மலமே பிணிகரும் 164
மலமே பிணியுடலு 51
மலமே யதன்மத்தை 169
மலமே யனாதி 165
மலமேமற் 197
மறுக்குஞ் 68
மறைக்கு மலங் 60
மாற்றும் பளிங் 86
முப்பொருட்கு 48
மூன்று மலமும் 56
மையலேதானாய் 154
யோகத்துக் 215
வஞ்சங் 128
வருத்தும் பிணி 55
வறுமையால் 67
வாழுந் தனுவு 121
வித்தோ 38
வினை நோக்க 156
வினை மருந்தா 181
வினையுந் தனுவு 195
வீட்டுந் தநு 94
வையமெல்லா 168
------------------
This file was last updated on 21 June 2021.
Feel free to send the corrections to the webmaster.