பண்டார சாத்திரம் -
உபதேச வெண்பா (உரையுடன்)
அம்பலவாண தேசிகர்
paNTAra cAttiram - upatEca veNpA (with commentaries)
by ampalavANa tEcikar of tiruvAvaTuturai AtInam
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Archive.org/Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பண்டார சாத்திரம் -
உபதேச வெண்பா (உரையுடன்)
அம்பலவாண தேசிகர்
Source:
திருவாவடுதுறை ஆதீனத்துப் பண்டார சாத்திரம் உபதேச வெண்பா
(உரையுடன்)
பதினான்காவது சித்தாந்த சைவ மாநாட்டு மலர்
திருவெண்ணெய்நல்லூர்
விசுவாவசு - புரட்டாசி - விசயதசமி
திருவாவடுதுறை ஆதீனம்
4-10-1965
வெளியீடு எண் 207
இது திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்
இருபத்தொன்றாவது குருமகாசந்நிதானம் ' ஸ்ரீ - ல - ஸ்ரீ சுப்பிரமணியதேசிக பரமாசாரிய சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி வெளியிடப்பெற்றது.
அச்சகம் ஸ்ரீ நமசிவாயமூர்த்தி - திருவாவடுதுறை -
உரிமை பதிவு
-------------
உ
சிவமயம்
முகவுரை
மனத்தை உயர்த்தி மனிதனை என்றும் வாழவைப்பன சமயங்கள். அவை அகமும், புறமும், அகப்புறமும், புறப் புறமும் என நால்வகையாய் ஒவ்வொன்றும் அவ்வாறாய் இருபத்து நான்கு வகைப்பட்டு நிற்பன; மக்களின் பரிபாக நிலைக்கு ஏற்ப வழிகாட்டுவன. அவற்றுள் மிகச் சீரியதும், அநுபவத்திற்கு மிக ஒத்ததுமான சமயம் தன்னேரில்லாச் சித்தாந்த சைவமே.
சித்தாந்தசைவத்திற்குரிய நூல்கள் வேதசிவாகமங்க ளாகும். அவற்றுள் வேதத்தைக்காட்டிலும் சிவாகமமே சிறந்த ஞானசாதனம் என்பதை 'வேதம் பசு அதன்பால் மெய் ஆகமம்' என்ற ஆன்றோர் வாக்கே அறிவுறுத்தும். சிவாகமங்களின் திரண்ட வெண்ணையாய் விளங்குவது மெய்கண்ட சாத்திரங்கள். அவற்றை நன்றாக ஓதியும் உணர்ந்தும் தெளிந்தும் உயர்ந்த அநுபூதிச்செல்வர்கள் தத்தமக்கு இறைவன் உள் நின்றுணர்த்தியதை உபதேச உரையாக அவ்வப்போது அருளிச்செய்தார்கள். அவையே பண்டாரசாத்திரங்கள்.
பண்டாரம் என்பது சிவஞானக்களஞ்சியம்; பண்டார சாத்திரம் என்பதுசிவஞானக் களஞ்சியங்களாக விளங்கிய சிவா நுபூதிச் செல்வர்கள் அருளிய திருவாக்கு என்பதாம். சாத்திரம் என்பதற்கு ஆணை வழங்கி அதன்வழி ஒழுகச் செய்து அனைவரையுங்காப்பது என்பது பொருளாம். இப் பண்டார சாத்திரங்கள், உபதேசபரம்பரையில் வருகின்ற மாணாக்கர்களைச் சிவநெறிப்படுத்தி உய்விப்பது; திருக் கயிலாய பரம்பரை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ் ஞான பானுவாக விளங்கிய ஸ்ரீ நமசிவாயமூர்த்திகளின் வழிவருகின்ற திருவாவடுதுறை ஆதீனத்துப் பண்டாரச் சந்நிதிகளாகிய மகாசந்நிதானங்களும், சங்காபிஷேகம் பெற்ற தேசிகமூர்த்திகளும் அருளிச்செய்த பதினான்கு நூல்களைக் கொண்டது.
அவற்றுள் பன்னிரண்டாவது உபதேசவெண்பா. இது அம்பலவாண தேசிகர் அவர்களால் அருளிச்செய்யப் பெற்றது ; நாற்பத்து மூன்று வெண்பாக்களை உடையது. அடுத்து, நூலைச் சிறப்பிக்கும் முறையில் வெண்பாக்கள் இரண்டுள்ளன. இந்நூலின் அமைப்பு சிவாநுபவத்தால் அன்றாடம் பெறும் அனுபவங்களைத் தம் மாணாக்கர்களுக்கு உபதேசிப்பதுபோல நேரிசை வெண்பாவால் இயன்றது. சிவஞானப்பேற்றிற்குச் சிவகுருவே துணையாதலால் இந் நூலுக்கும் சிவகுருவாகிய ஞான குருவணக்கமே காப்பாக அமைந்துளது. அடுத்து உண்மைத் தவமுடையாரியல்பும், சற்குரு வைத்தபடி நடப்பாரின் தனிச்சிறப்பும், அவரை இடைவிடாது வணங்குவார் எய்தும் பேறும், மறந்தும் புறந்தொழாதார் எய்தும் மாண்பும், முக்திகாமி புக்திகாமி களின் இலக்கணமும், சிவகுருவே சிவனெனத் தெளிக என்பதும், பேதஞானம் உள்ளவரையில் சிவஞான சித்தி எய்தாது என்பதும், உண்மை நிட்டை உபாயநிட்டைக் ளின் வேறுபாடும் பிறவும் உணர்த்தப்படுகின்றன. இறுதி வெண்பாவில் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் ஆதலால், இந்த நூலே ஸ்ரீ நமசிவாயமூர்த்திகளின் திரு மேனியாமென்பது இருந்து எண்ணி இன்புறுதற்குரியது.
இப்பண்டாரசாத்திர நூல்களின் கருத்தைத் தெரிவிக்க வந்த அபியுக்தர் ஒருவர் இந்நூலைப்பற்றி,
''துடி துடித் தோடும் மனத்தினை நிறுத்தித்
தூயதாக் கண்டவட் டவத்துத்
தொன்னெறி நின்று சுரர்க்கரி தாகும்
சோதியின் ஞானத்தை வழங்கல் து
களறும் உபதே சத்துவெண் பாவாம்.''
என்று குறித்துள்ளார்.
பண்டாரசாத்திரம் மூலம் மட்டும் 1926 ஆம் ஆண்டில் சீர்காழி சதாசிவமுதலியாரவர்களால் வித்துவ சிரோமணி ப. அ. முத்துத்தாண்டவராயபிள்ளை அவர்களைக்கொண்டு பதிப்பிக்கப்பெற்றது. பின், பதினான்கு நூல்களும் தனித் தனியே பல அறிஞர்களால் பல பதிப்புக்களைப் பெற்றன.
செந்தமிழ்ப்பணியும் சிவநெறிப்பணியும் சிவஞான உபதேசமும் செய்துவரும் திருவாவடுதுறை ஆதீனத்தில் அவ்வப்பொழுது விளங்கிய வித்துவ சிரோமணிகளாகிய முனிபுங்கவர்கள் இதனைத் தாம் தாம் பல படிகள் செய்து பாராயணம் செய்துவந்தார்கள். அந்த ஏட்டுப் பிரதிகள் அனைத்தும் திருவாவடுதுறைச் சரசுவதி மஹாலில் விளங்கி வருகின்றன. அவற்றுடன் இதனை ஒப்பு நோக்கும் போது பல பாடபேதங்களும் சில குறிப்புக்களும் கிடைத்தன.
21-வது குருமகாசந்நிதானமாக ஞானபீடத்தமர்ந்து சிவஞானச்செங்கோலோச்சும் ஸ்ரீ - ல - ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் எல்லாரும் கற்று உணரும் வண்ணம் எளிமையாக உரையும் எழுதுவித்து வெளியிட வேண்டும் என்று திருவுள்ளம் பற்றினார்கள்; ஞானச்செங்கோல் ஏந்திய நாள் முதலாக நவராத்திரியை , பராசக்தி ஆதிசக்தி மனோன்மணி இவர்களின் வழிபாடு களாகவும், விசயதசமியை மும்மலங்களை வென்று முத்தி யின்பம் எய்தக்கூடிய வெற்றித்திருநாளாகவும் கொண் டாடவேண்டும் என்ற குறிப்பால் ஆண்டுகள் தோறும் திருவெண்ணெய் நல்லூரில் ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார் சந்நிதானத்திலே மகாபிடேகம், மகேசுவரபூசை எல்லாம் நடத்தி, அதிலே ஒவ்வொரு நூலாக வெளியிடத் திரு வுளங்கொண்டார்கள். அவ்வண்ணம் இந்த விசுவாவசு ஆண்டு விசயதசமித்திருநாளில் பதினான்காவதுமா நாட்டு மலராக இந்நூல் திருந்திய பதிப்பாக வெளிவருகிறது.
இந்த நூலுக்கு வழக்கம்போல் கருத்து பொழிப்பு விளக்கம் என்ற அமைப்பில் உரை எழுதப்பெற்றுள்ளது. இவ்வுரை எழுதுதற்குப் பெரிதும் துணையாக இருந்தவை மெய்கண்ட சாத்திர சிந்தனை உரைகளும், சிவஞானபோத மாபாடியமுமாம்.
அனுபவத் திருநூலாகிய இதற்கு அந்த அளவு அனு பவம் பெற்ற திருவருள் விலாசமுடையாரே செவ்வையாக உரை எழுதுதற்கு உரியவர். ஆயினும், ஆசாரியனுடைய அருள் நோக்கம் அடியேன்மீது விழுந்தமையால் இச்சிவப் பணி அடியேனால் இயங்குகிறது. இப்பணியில் ஈடுபடுத்தி எளியேனை ஏழேழு பிறவியிலும் உய்விக்கும் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளின் திருவருளை வழுத்துகின்றேன். ஸ்ரீ-ல -ஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் பேரருளைப் போற்றுகின்றேன்.
இவ்வுரையை ஏற்றுப் பேரறிஞர்கள் பெரிதும் போற்று வார்களாக. விசயதசமியாகிய வெற்றித்திருநாள் இந்த ஆண்டு உண்மையான வெற்றித்திருநாளாகப் புறச்சமய இருள் நீங்கி ஞானசூரியன் விளங்கு நாளாக ஆனமையைப் பெரிதும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம் அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே"
திருவாவடுதுறை இங்ஙனம்
25-9- 65 ஆதீன மகாவித்துவான்.
ச. தண்டபாணி தேசிகர்.
-----------------
நூலாசிரியர் வரலாறு
ஸ்ரீ அம்பலவாண தேசிகர் திருவிடைமருதூரிலே பரம்பரைச் சைவ வேளாளர் மரபிலே தோன்றியவர். இவர் தம் சிறுபிராயத்திலேயே திருவாவடுதுறைப்பதியை அடைந்து, ஞானாசாரியரை அடுத்துத் துறவு நிலை பெற்றுத் தொண்டு பூண்டொழுகியவர். இவருடைய சிவஞான அனுபூதிநிலையை அறிந்தே தமக்குப் பின் சித்தாந்த ஞானோபதேசம் செய்து வருமாறு பரமாசாரியராக ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகரால் நியமித் தருளப்பெற்றவர். இவர்களுக்கு முன்பு சிவஞானோபதேசம் பெற்றுச் சிவானந்த நிட்டையிலே இருந்துவந்த மறைஞான தேசிகர் திருவாவடு துறையிலே ஒரு தைமாதத்துச் சுவாதி நாளில் சிவபரிபூரணமாயினர். அந்த ஞானசமாதியில் இவர், திருக்கோயில் அமைத்துச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து கும்பாபிஷேகம் முதலியன இயற்றி, நாடோறும் பூசித்து வழி பட்டு வருவாராயினர். தம்மை அடைந்த பக்குவர்களுக்குக் குருமரபிலே பெற்ற சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம் முதலிய நூல்களைப் போதித்துச் சிவஞானோப தேசம் செய்து விளங்கினர்.
இவர் சித்தாந்த சாத்திரங்களில் அங்கங்கு இலைமறைகாய் போல் மறைந்து கிடந்த அரும்பொருள்களை யெல்லாம் எளி திலே மாணவர் அறிந்து உணர்ந்து உய்யவேண்டும் என்ற திருவுளம் உடையராய்த் தமது சிவானுபவமும் துணை செய்ய அவற்றின் சாரமாகப் பல நூல்களை இயற்றியருளினர். அவை வருமாறு : தசகாரியம், சன்மார்க்க சித்தியார், சிவாச்சிரமத் தெளிவு, சித்தாந்தப் பஃறொடை , சித்தாந்த சிகாமணி, உபாயநிட்டை வெண்பா , நிட்டைவிளக்கம், உபதேசவெண்பா, அதிசயமாலை, நமச்சிவாயமாலை என்னும் பத்து நூல்களாம்.
ஒரு சமயம் வைணவப் பிராமணர் ஒருவர் ஞானதேசிக ராகிய அம்பலவாணதேசிகரைச் சரணாக வந்து அடைந்தார்; உபதேசம் பெற விரும்பினார். ஞானதேசிகர் கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த அவரை நன்கு சோதித்து அறிந்து சைவ சன்னியாசமும் நைட்டிக நிர்வாண தீட்சையும் செய்து, சிவஞானோபதேசமும் செய்தருளினர். பின்பு, மெய்கண்ட நூல்களையும் தாம் அருளிய தசகாரியம் முதலிய நால்களையும் உபதேசித்தனர். அவருக்குத் தீட்சாநாமமாக 'உலகுடைய நாயனார், எனப் பெயர் கொடுத்தார். உலகுடைய நாயனார் சிவஞானோபதேசம் பெற்று, நல்ல சிவானுபூதி உடையவர் ஆனார். பின்பு, சைவசித்தாந்த சாத்திரக் கருத்துக்களை உள்ளடக்கித் தோத்திரவடிவமாகத் தம் ஞானாசிரியர்மீது பத்துத் திருவிருத்தங்களை இயற்றினர். அது உலகுடைய நாயனார் திருவிருத்தங்கள்' எனப் பெயர்பெற்று விளங்குவ தாயிற்று. உலகுடைய நாயனார் கழிநெடில் எனவும் அது வழங்கப்பெறும்.
உலகுடைய நாயனார் செய்தருளிய திருவிருத்தங்களில் முதற்பாட்டு 'மலமெனும் தடத்தில் கருமசே தகத்தின்' என்று தொடங்குகிறது.
முந்துமா கமத்தை அருட்டுறை யண்ணல் மொழிபெயர்த் துரைத்த நூல் முதலா
முதல்வழி சார்பா மூன்று நூற் கருத்தும் முறைதெரியாமலே கருதி
நந்தவே யெழுதும் உரைதனைக் குருவாய் நாடிய குரவரை நம்பி
நற்கதி யடையா உயிர்களுக் சிரங்கி நற்கதி கொடுத்திட வேண்டிச்
சிந்தனை யாக்கிப் பதிபசு பாசந் தெரிந்திட லளிதமா வுரைத்துன்
திருவடி நிழல் மருவிட வைத்த தேசிக சிகாமணி நீ காண்
ஐந்தலை அரவின் நடித்தமால் ஈரைந் தாதிய பிறவி நோய் தவிர்த்த
ஆவடு துறைசை அம்பல வாணா அடியவர்க் கருளுமா நிதியே.
என்பது இறுதித் திருவிருத்தம்.
ஸ்ரீ பஞ்சாக்கரதேசிக பரமாசாரியர் பால் சிவஞானோப தேசமும் , சித்தாந்த சாத்திரங்களும் ஞானாசிரியத்தன்மையும் ஸ்ரீ அம்பலவாணதேசிகருடன் பெற்றுச் சங்காபிடேகமும் செய்துகொண்டு, திருவாவடுதுறையிலே சிவானந்தநிட்டையி லிருந்து சிவானுபூதியில் உறைத்த ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர் தசகாரியம், உபதேசப் பஃறொடை என்னும் இரு
ஞான நூல்களையும் அருளிச்செய்தார்.
ஸ்ரீ அம்பலவாண தேசிகரிடத்திலே ஞான தீட்சையும் சிவ ஞானோபதேசமும் பெற்றுச் சிறந்த சிவபுரம் - பெரிய பிள்ளை என்பவர் தமது ஞானாசிரியர் மீது தோத்திரப்பாடல்களாகப் பத்துத் திருவெண்பாக்களைப் பாடியருளினார். அவை சிவபுரம் பெரியபிள்ளை பாடல்கள் என வழங்கப்படும். அந்த மலத் தத்துவிதம்' எனத் தொடங்குவது முதல் திருவெண்பா.
ஆதியே தென் துறைசை யம்பலவா ணாவெனை நீ
பேதமறக் கூடி நின்ற பெற்றிதனை - ஓதிலது சாக்கிரா தீதந் தருமான்ம லாபமின்பம்
ஆக்கு சிவ போகமென லாம்.
என்ற திருவெண்பாவால் ஆசாரியர் தமக்குச் செய்தருளிய பரமோபகாரச் செயலை விளக்குகின்றார்.
---------------
குருமரபு வாழ்த்து
கயிலாய பரம்பரையிற் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணெய்
பயில் வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானு வாகிக்
குயிலாரும் பொழிற்றிருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு நீடூழி தழைக மாதோ.
- ஸ்ரீ மாதவச் சிவஞானயோகிகள்.
------------------
உ
சிவமயம்
ஸ்ரீ அம்பலவாண தேசிகர் அருளிச்செய்த உபதேச வெண்பா
உரைத்த கருணை யுபதேசந் தன்னை
விரித்தொரு பாவில் விளக்கக் - கருத்துவரல்
ஒத்தாசை நீயே யுணர்த்தா வடுதுறையென்
அத்தா நமச்சிவாயா. 1
இதன் பொருள் : திருவாவடுதுறையின்கண் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனாகிய ஸ்ரீ பஞ்சாக்கரதேசிகமூர்த்திகளே! கருணையால் அடியேனுக்கு உரைத்தருளிய உபதேசங்கள் அனைத்தையுந் தொகுத்து ஒப்பற்ற பாவாகிய வெண்பாவினாற் சொல்ல, அடியேற்குக் கருத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக வந்தருளும் வண்ணம் உபகாரத்தை உள் நின்று உணர்த்துவாயாக என்றவாறு.
ஸ்ரீ நமசிவாயதேசிகமூர்த்திகளே ! தேவரீர் திருவருளாற் சொன்ன உபதேசங்களை வெண்பாவாற் சொல்ல, கருத்துக்களை உள் நின்று உணர்த்தியருள வேண்டும் என்பது கருத்து.
பிறவிநோயைப் போக்கிப் பேரின்ப வீடெய்தும் உபகாரம் புரிவதால் என் அத்தா' என்றதாம். அத்தன் - தந்தை. குரு ஐவகைப் பிதாவில் ஒருவராதலின் அத்தா என்றதாம்.
உரைத்த கருணை உபதேசந்தன்னை என்பதைக் கருணை உரைத்த உபதேசந்தன்னை எனக் கொண்டு கூட்டிக் கருணையினால் உரைத்தருளிய உபதேசங்களை எனப் பொருள் கொள்க.
விரித்து - பரிபாகர் மனங்கொள்ளும் வண்ணம் தன் அனு பவமும் ஆகமமேற்கோளும் காட்டி விரித்து என்க.
ஒரு பா - ஒப்பற்ற முதற்பாவாகிய வெண்பா . கருத்து வர - கருத்துக்கள் கோவைப்பட ஒன்றன் பின் ஒன்றாகவர. ஒத்தாசை - உதவி.
-------------------
தவமுடையார் இயல்பு
முத்திக்கு மூல மொழியுங் குருக்கிருபை
பத்திக்கு மூலம் பகருமன்பு - புத்திக்கு
மூல மரனெவர்க்கு மூலமே யென்றறிவில்
சாலமதிப் பாரே தவர். 2
இ - ள் : நூல்கள் மொழியும் ஆசாரியனின் திருவருளே முத்திக்கு மூலமாம் ; இறைவனிடம் செலுத்தப் பெறுகின்ற உயர்ந்த பத்திக்கு மூலம் சொல்லப்படுகின்ற அன்பாகும்; ஞானம் விளைதற்கு அடிப்படை சிவமேயாம் ; அந்தச் சிவ பெருமானே அரி பிரமனாதி பதமுத்தியிலுள்ளவர் அனைவர் களுக்கும் மூலமாவர் ; இதனை அறிவால் மிக மதித் தொழுகுபவர்களே தவமுடையார் ஆவர் என்றவாறு.
எத்துணைஞான பரிபாகம் எய்தியிருப்பினும் சுட்டிக்காட்டும் ஆசாரியன் இல்லாதவழி முத்தி சித்தியாதாம். சனகாதியர்கள் எத்துணைப் பெரிய படிப்பாளிகளாக இருந்தும் முத்தியும் சிவஞானமும் விளையத் தட்சிணாமூர்த்தியாகிய பரமாசாரியனைக் கொண்டு சித்தம் தெளிந்தமை காண்க. திருஞானசம்பந்தர் முதலான சாமுசித்தர்கட்கும் ஊட்டியும் காட்டியும் உணர்த்தி உய்விக்கச் சிவம் குருவாக எழுந்தருளியதைப் பெரியபுராணத் திலும் பிறவற்றுள்ளும் காண்க.
பத்தி - வழிபடும் மனபரிபாகத்துடன் இறைவன் அவனது அடியார் ஆசாரியன் முதலியோரிடம் செலுத்தப்பெறும் அன்பு. அன்பு - மனைவி மக்கள் தாய் தந்தை முதலிய தொடர்புடையா ரிடத்துக் காதலுடையனாதல். அன்பு உயர்ந்த இடத்து உறுதி யுடன் செலுத்தப்படும் போது பத்தியாகிறது. ஆகவே அன்பே பத்திக்கு மூலமாம் என்று தெரிவித்தவாறு.
பகரும் அன்பு - நூல்களால் பாராட்டிக் கூறப்படும் அன்பு. உடல்கொள் உயிர்க்குணமாகக் கூறப்படும் அன்பு எனலுமாம்.
புத்தி - நித்திய அநித்திய விவேகத்தை உண்டுபண்ணும் அறிவும், எல்லாவற்றிற்கும் மேலான பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானமுமாம். அது சிவனருள் விளைந்தால் அல்லது ஆன்மாவினிடம் முகிழாது. ஆதலால், புத்திக்கு மூலம் அரன் எனப்பட்டது.
எவர்க்கும் - அரி அயன் முதலான செயல் முதலாய் இருப் பவர்களுக்கும், அட்டவித்தியேசுரர் முதலான பதமுத்தியில் நிற்பார்களுக்கும். எவர்க்கும் அரனே மூலம் ஆவன். அவனிட மிருந்தே எல்லாரும் எல்லாமும் தோன்றுவன. எவன் எல்லாம் தத்தம் காரணத்துள் ஓடுங்க எல்லாரையும் எல்லாவற்றையும் தன்னகத்து ஓடுக்கி ஓய்வு அளிக்கின்றானோ அவனே புனருற் பவம் தரவல்லவன் ; அவனே அவரனைவர்க்கும் மூலமாவன் என்றவாறு. எவர்க்கும் என்பதற்கு இயைய அரனே என்னும் எழுவாயைப் பின்னும் கூட்டுக.
இங்ஙனம் உண்மை உணரும் பரிபாகம் சிவதன்மமாகிய தவத்தானேயன்றிச் சித்தியாது என்பார். இதனை மிக நன்கு மதித்து ஒழுகுபவரே தவர் என்றார்.
--------------
சிவகுரு தெரித்தநெறிநிற்றலே விதி எனல்
புற்றரவே யாடும் புகழ்மந் திரத்தார் முன்
மற்றரவுக் காட மதியுண்டோ - சற்குருவை
ஒட்டி நடக்கு முயர்தவர்க்கு மொவ்வாமல்
விட்டு நடப் பார்க்கும் விதி. 3
இ-ள் : உலகினரால் புகழப்படும் கருடமந்திரத் தியானம் உடையார்முன் புற்றிலுள்ள நாகப்பாம்பு படம் எடுத்து, அவர்வழி நின்று ஆடும்; மற்று அந்த அரவுக்குத் தானாக ஆட அறிவுவல்லமையும் சுதந்திரமும் உண்டோ ? சற்குருநாதனை ஒட்டி, அவன் விட்ட நெறியிலே ஒழுகும் தவம் உடையார்க் கும், சற்குருவின் உபதேசச்சார்பு இல்லாமல், அவனை விட்டு நடப்பார்க்கும் உள்ள வேறுபாடு இதுவேயாம் என்றவாறு.
பாம்பு மந்திரத்தால் கட்டுண்டு, மந்திரவாதியின் வழியே நடப்பது போலத் தவமுடையவர்கள் சற்குருவின் ஆணையின் வண்ணம் உபதேசவழியே ஊன்றி நடப்பார்கள். குருவின்
ஆணையைவிட்டு நடக்க அவர்களால் இயலாது; தன்னுணர் வும் சுதந்திரமும் இன்மையான் என்க.
-------------
சற்குருவை வழிபட்டவர்க்கே சிவஞானம் விளையும் எனல்
நீரரவு மந்திரத்தி னில்லாது நீதியல்லாப்
பார் நரருக் குண்டோ பரமகுருச் - சீரருளைச்
சிந்தித்தார்க் கன்றோ சிவஞானஞ் சற்குருவை
வந்தித்தார்க் கன்றோ வரும். 4
இ-ள் : தண்ணீரில் வாழும் நீர்ப்பாம்பு மந்திரத்துக்குக் கட்டுப்படாது ; அது போல, உலகியலிலே உழன்று உலகே தானாய் அழுந்தி அனுபவிக்கும் நீதியற்ற பாமர மக்களுக்குச் சிவகுருவின் அருள் இல்லையாம் ; சிவனருளைச் சிந்தித்த பேர்க்கே சிவகுரு வாய்ப்பன் ; அவனை வந்தனை செய்தவர்க்கே சிவஞானப்பேறு உண்டாம் என்றவாறு.
நாகப்பாம்பொன்று மட்டுமே மந்திரத்தின் வழி நடக்கும். ஏனைய சாரைப்பாம்பும், நீர்ப்பாம்பும் மந்திரத்திற்குக் கட்டுப் பட்டு நடக்கும் பண்பு இயற்கையே இல்லாதன. அதுபோலச் சரியை கிரியைகளினின்று பரிபாகப்படாது, பொறியுணவே தானாயழுந்திப் போகங்களையே பெரிது. என நுகரும் பாமரர்க் குப் பரமகுருநாதன் வாய்க்கப்பெறான். மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொழுதவர்க்கேயன்றி, ஓர் வார்த்தை சொலச் சற்குரு எதிர்ப்படான் என்றவாறு.
பார் நரர் - உலகமே தான் எனமயங்கி மலத்துள் அழுந்தி நிற்கும் மக்கள். பரமகுரு காட்டாதனவெல்லாம் காட்டித் தாட்டாமரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டும் சிவகுரு .
சற்குரு வாய்க்கப்பெற்றாலும் அவனருளாலே அவன்றாள் வணங்கல் முறையாகலின் சீரருளைச் சிந்தித்தல் ஒன்றானே சிவஞானம் விளையும் என்றதாம்.
சற்குரு - சிவனே குருவெனக் கூறினன் நந்தி' ஆகலின் அருட்பிழம்பான குருநாதனாம் என்க. குருவழிபாடு ஒன்றானே சிவஞானம் சித்திக்கப்பெறும் என்பார் 'சற்குருவை வந்தித் தார்க்கன்றோ சிவஞானம் வரும்' என்றார். வரும் என்னும் வழக்கால் சிவஞானம் எங்கிருந்தோ வரும்பண்பு அன்று; பூவினில் கந்தம் பொருந்தியவாறுபோலப் பரிபாகம் பெற்ற காலத்துச் சீவனுக்குள்ளே சிவமணம் வெளிப்படுதலளவே என்க .
--------------
சிவபெருமானே முத்திகாரணன் எனல்
அரியைப் பதியென் றறிவிப்பார் தம்மைப்
பிரிவித்தார்க் கன்றோ நற்பேறாம் - பெரியவரன்
பாதத்தின் மோகப் படுவாரை நீத்தரியைப்
போதித்தார்க் கே நிரயப் போக்கு. 5
இ-ள் : பதமுத்தியினின்று அரனேவலால் அனைத்துயிர் களையும் காத்தருளும் திருமாலை முதல்வன் என்று உணர்த்த முற்படும் பசுஞானியர்களை விட்டுத் தம்மனத்தைப் பிரிவிப் பவர்க்கே சாயுச்சியமாகிய முத்தி சித்திக்கும்; அங்ஙனமன்றி எல்லாரினும் உயர்ந்தவனாகிய சிவபெருமானுடைய திருவடி களிலே இடைவிடாத அன்பு பூண்டவர்களை விட்டு விலகி, திருமாலே முதற்பொருள் எனப் போதித்தார்க்கு நரகமே விளையும் என்றவாறு.
தமக்கெனத் தனிமுதன்மை என்றும் இலனாதலின் அரியை என வாளாகூறியும், அநாதி நித்தியமான முழுமுதற்றன்மை தனக்கேயன்றி வேறெவர்க்கும் என்றுமில்லாமையின் 'பெரிய அரன்' என விசேடித்தும் கூறியுள்ளமை காண்க.
உண்மையான முழுமுதற்கடவுள் இன்னாரென அறியாது மயங்கி நிற்பார்க்கு விளைவது மயக்கவுணர்வேயாதலின் முத்தி என்றும் அவர்கட்கு இல்லையாம். ஆகவே பரிபாகப்பட்டுவரும் மாணவர்களை அயல்நெறியில் புகுத்துதலும், புகுதலும் நரகத் துன்பத்தை ஊட்டும் என்றவாறு.
----------------
மோட்சகாமிகட்கே மோட்சம் ஆம் எனல்
தேமருவு காமச் செயலிரண்டாஞ் செல்புத்தி
காமரையே நீத்துக் கருது முத்தி - காமரையே
உற்றார் தமக்கே யுறுமுத்தி நீத்ததனைப்
பெற்றார்க்கு முண்டோமெய்ப் பேறு. 6
இ - ள் : இனிமை பொருந்திய விருப்பச் செயல் இரண்டு வகைப்படும். அவற்றுள் போகத்தை விரும்பும் புத்திகாமிகளை விட்டு, என்றும் எல்லாரும் எண்ணுகிற மோட்சகாமிகளையே தமக்கு ஆசாரியனாக அடைந்தார்களுக்கே மோட்சம் ஆம். மோட்ச ஆசையைவிட்டுப் போகத்தையே விரும்புமவர்க்கு உண்மைப்பேறாகிய மோட்சம் உண்டோ ? இல்லை என்றவாறு.
காமம் - பொருள்கள் மேற்றோன்றும் பற்றுள்ளம். அது தனு கரண புவன போகங்களில் வினைக்கீடாகச்செல்லும்போது போககாமம் ஆகிறது. புத்தி - நுகர்ச்சி. அங்ஙனம் செல்லும் அறிவைத் திருவருளானும் ஆசாரியன் உபதேசத்தானும் தன் அனுபவத்தானும் திருப்பி மோட்சத்தை விரும்பச்செய்தல் முத்திகாமமாம். அதனையுடையார் முத்திகாமிகள். இவர்கள் மோட்சகாமிகள் எனவும்படுவர். மோட்சகாமிகட்கே மோட்சம் ஆம் என்றவாறு.
------------------
திருவேடம் சிவமாம் எனல் >
ஆகமல பாகமே யானாலு மாகத்தின்
மோகமரன் பாலாக முற்றுமால் - தேகம்
ஒருவடிவே யானாலு முற்றவிகற் பத்தால்
திருவேட மீசனெனத் தேறு. 7
இ - ள் : எடுத்த இவ்வுடல் மலகாரியம் ஆனாலும், இந்த உடலை இடமாகக்கொண்டு உயிர் செய்யும் உணர்வுவடிவாகிய விருப்பு சிவபெருமான் கண்ணதாக விளங்கும். சிவபெருமா னிடம் இடையறாப் பேரன்பு கொண்ட பேருக்கும் மற்ற உல கியல் போகங்களில் பற்றுக் கொண்ட பேருக்கும் உடல் ஒரு வகையாகவே ஒத்திருப்பினும், பதி விருப்பும் பாச விருப்பு மாகிய வேறுபாட்டால் மெய்யன்பர் கொண்ட திருவேடம் சிவனே எனத் தெளிக என்றவாறு.
நேயம் மலிந்தவர் வேடத்தை அரன் எனவே தெளிக என் பதாம். இவ்வுடல் மாயாமல காரியமானது. ஆயினும், அதனு ளிருந்து வினைப்போகங்களை நுகரும் ஆன்மா இவ்வுடலையே அன்பு செய்யுமாயினும், அவ்வன்பு "உடம்பினுள் உறுபொருள் கண்டேன்'' என்றாங்குச் சிவன்பாலே சென்று இயைவதாம். ஆதலால், எடுத்த தேகம் திருவேடமாம்; திருவேடம் சிவனே யாம் என்க.
-----------------
ஆன்மா அறிவுவடிவு எனல்
அங்கமே பொல்லா வவத்தமா மாவிபொய்
யங்கமே யல்ல வறிவாகும் - அங்கத்தை
மாற்றினார்க் கன்றோ மதியாகு மையலுற்றுத்
தேற்றினார்க் குண்டோ செயல். 8
இ - ள் : இவ்வுடல் மிகக் கொடிய பிழைகளை உடைய தாம். உயிரோ தோன்றி அழியும் இயல்பினவாகிய உடல் அன்று ; அறிவு வடிவானது ; உடலின்கண் பற்றுச்செலுத் தாது அப்பற்றினை மாற்றி உயிரைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற உத்தமனிடம் செலுத்துவதே அறி வுடைமையாம். மயங்கி இந்த உடலோம்பல் ஒன்றையே தெளிந்தவர்களுக்குச் செய்யலாவதொரு செயல் உண்டோ ? இல்லை என்றவாறு.
உடற்பற்றை ஒழித்து, உயிரினிடமாகக் கலந்து விளங்கும் சிவபரம்பொருளினிடம் பற்றுவைப்பதே ஞானம் என்பதாம்.
தபம் தவம் என்றாற் போல, அபத்தம் - அவத்தம் எனப் போலியாயிற்று; இது சுபத்தம் என்ற சொல்லின் எதிர்மறை. சுபத்தம் - நன்கு ஆக்கப்பட்டது. அபத்தம் - நன்கு ஆக்கப் படாதது. இவ்வுடல் நரம்பும் தோலும் என்பும் இறைச்சியு மாகிய பல தீய பொருள்களினாலே ஆக்கப்பட்டுள்ளமையான் அங்கமே பொல்லா அவத்தமாம்' என்றார். இங்ஙனம் அழிந்து ஒழியும் பொருள்களான் ஆக்கப்பட்ட யாக்கை நிலையினதன்று ஆகலின் 'பொய் அங்கம்' என்றார். இவ்வுடலே உயிர் என்பார் தேகான்மவாதிகள். அதனை மறுத்துச் சடமாகிய இந்த உடல் உயிர் அன்று உணர்வதாகிய அறிவே ஆன்மாவாம் எனத் தெளிந்தவாறு.
அங்கத்தை மாற்றுதலாவது, இவ்வுடல் உயிர் நிற்பதோர் இடம் ; இறைவனை அடைந்து உய்வதற்கு உதவப்பெற்ற சாதனம்; சாதனமாந்துணையும் இதனை ஓம்புதல் மிக இன்றி யமையாதது என்று தெளிந்து அன்பு செய்தல் . மதி - சிவ ஞானம். மையல் - ஆணவத்தால் விளையும் அஞ்ஞானம். தேற் றினார் - பரமல்லாத்தைப் பரமென்றும், சுகமல்லாததைச் சுகம் என்றும் தெளிந்த விபரீத ஞானிகள்.
---------------
பாசஞான பசுஞானங்கள் அறும்முறைமை
பற்றற்ற கண்ணே பசுவிளங்கும் மேலருளைப்
பற்றுதலா லந்தப் பசுவுமறும் - குற்றமற்ற
முத்திக்கு முண்டோ மொழியு முடல்விகற்பம்
புத்திக்கே வாய்க்கும் பொருள். 9
இ-ள் : யான் எனது என்னும் அகப்பற்றும் புறப்பற்றும் அற்ற இடத்திலே யான் ஓர் ஆன்மா என்னும் ஞானம் விளங்கப் பெறும். எல்லாவற்றுக்கும் மேலான திருவருளைப் பற்றுதலால் யான் பிரமம் என்னும் பசுஞானமும் அகலும்; சொல்லப்படுகின்ற தூலம் சூக்குமம் காரணம் என்கின்ற உடல் வேறுபாடுகள் அனைத்தும் முத்தி நிலையில் இல்லையாம்; அவை போகங்களை நுகர்தற்கண் வாய்க்கும் பொருள்களாம் என்றவாறு.
பற்றறுதல் - ஆன்மா தன்னை இந்திரியங்களின் வேறாகக் காணுதல். அஃதாவது ஆன்மா இந்திரியங்களின் வாயிலாகப் புலன்களை நுகருகின்றபொழுது அவ்விந்திரியங்கள் தாமாய்ப் புலன்களை நன்கு அழுந்தி அனுபவித்தலே பற்றெனப்படுவது. அவ்விந்திரியங்களைத் தன்னின் வேறாகக் கண்டபோது தான் உணர்த்த உணர்வதாகிய சித்துப்பொருளென்பதனை அறியும். அதனைப் பசு விளங்கும்' என்பதனால் அருளிச்செய்தார்.
மேல் அருள் - எல்லாவற்றிற்கும் மேலதாகிய திருவருள். அதனைப் பற்றுதலால் அப்பசுஞானமும் அகலும் என்பதாம். பசுஞானமாவது ஆன்மா தன்சிற்றறிவினால் நான் பிரமம் என்று உணரும் உணர்ச்சி. இத்தன்மை நீங்கித் திருவடி ஞானமே தானாய் விளங்கும் நிலை முத்திக்கு ஏதுவாம்.
ஆன்மா தன் பரிபாகத்திற்கு ஏற்ப வினைப்போகங்களைத் துய்க்கும் ஞான்றே தூலம் சூக்குமம் காரணம் என்ற உடல் விகற்பங்களை எய்தியிருந்து சிவனருளே தானாயிருக்கு நிலையில் உடல் வேறுபாடு ஒன்றும் இல்லையாம். அதனையே மொழியும் உடல் விகற்பம் முத்திக்கும் உண்டோ ' என்றருளியவாறு.
புத்தி - நுகர்ச்சி; அஃதாவது தன்கருமங்களைத் துணையாகக் கொண்டு புவன போகங்களில் துய்த்தல். இதற்கு உடல் விகற்பம் இன்றியமையாததாம்.
-------------
ஆன்மாவிடம் திருவருள் விளங்கச்செய்யும் உபாயம்
எனதென்று மில்லத்தை யானென்றுங் காய
மனதொன்றித் தன்றோ மலத்தால் - நினைவொன்றி
அங்க மெனதா யடைந்தபோ தன்றோமெய்
தங்குமரு ளாகத் தரும். 10
இ - ள் : ஆணவமலத்தின் மயக்கத்தால் உயிர் உறைதற் குரிய வீடாகிய உடலை எனது என்றும் அதனை யான் என்றும் மனமானது ஒன்றி உணர்ந்து நின்றதன்றோ! அங்ஙனம் இருந்த இருவகைப் பற்றையும் விட்டு மனம் ஒன்றி அங்கம் என் உடைமையாக அடைந்தபோதன்றோ நித்தியமாகிய திருவருளுண்டாக இறைவன் உதவுவன் என்றவாறு.
இல்லம் - வீடு. ஈண்டுப் புறப்பொருள்களை உணர்த்திற்று. இல்லத்தை எனதென்றல் - புறப்பற்றுப் பூண்டு நிற்றல். உயிர் உடலோடு ஒன்றியிருக்கும் போது தன்னின் வேறாக உடலை அறியமாட்டாமையான் யான் என்றே உணரும். அதனையே 'காயம் யானென்றும் மலத்தால் மனது ஒன்றித்தன்றோ ' என்றார். இதன் கருத்து எனது என்னும் புறப்பற்றையும் யான் என்னும் அகப்பற்றையும் தாங்கி ஆன்மா மலத்தால் மறைப்புற்றவாற்றை உணர்த்தியதாம்.
அங்ஙனம் சென்று பற்றற்று மனம் ஒன்றிக் கருவிகரணங்க ளனைத்தும் என்னுடைமை; யான் அவற்றின் வேறாயவன் என்று உணர்ந்தபோது, இவை எனக்கு உடைமையாதல் போல யான் இறைவனுக்குடைமை என்ற எண்ணம் தோன்றத் திருவருள் ஆன்மாவிடம் என்றும் நிலைபெறும் என்பதாம்.
--------------------
உயிர் உடற்பற்று நீங்கிச் சிவத்தை அடையுமுறை
யானென்ற காய மெனதென்ற போதுமலந்
தானகன்ற தன்றோ தரிக்குங்கால் - ஊனகன்ற
ஆவியே நேய மடையு மலாதார்க்குப்
பாவிப்ப தன்றோ பயன். 11
இ - ள் : யான் என்னும் உடலை எனது என்ற போது அறியாமையைத் தரும் ஆணவமலம் அகன்றது அன்றோ அங்ஙனம் உண்மைஞானத்தைத்தாங்கும் உடற்பற்று அகன்ற உயிர் , அறியப்படுபொருளாகிய சிவத்தை அடையும் எ - று.
பாவிப்பது - சிவோகம்பாவனை செய்வது; அங்ஙனம் உடற் பற்றகன்று, அறியப்படுபொருளாகிய சிவத்தை அறியாதவர் கட்குச் சிவோகம் பாவனையே பயன் தருவதாம் என்றவாறு.
----------------
தேகத்தை யான் என்னும்போதும் எனது என்னும்போதும் உளதாம் அநுயவ வேறுபாடு
காயமே தானாய்க் கருதும் போ தாவிமல
மாயமே யல்லாது மற்றுண்டோ - காயம்
தனதாகும் போது தகுமுயிரு மொன்றாய்
நினைவாகு மன்றோ நிறைந்து. 12
இ-ள் : எடுத்த இவ்வுடலே தான் என்னும் கருத்துள்ள போது உயிர் மலத்தால் மறைக்கப்பட்ட அறியாமையாத லல்லது ஞானவடிவாதலுண்டோ ? உடலை எனது என்னும் போது அங்ஙனம் உடலை உடைமையாகக்கருதும் உயிரும் உடலின் வேறாய் ஒரு பொருளாய் உடலுட்பூரணமாய் நினைக்க வரும் அன்றோ என்றவாறு.
உடலே தான் என எண்ணும்போது அறியப்படாமையே வடிவான உயிர் , எனது உடல் என்றறியும்போது உடலின் வேறாய்த் தான் சித்தாயிருப்பதை உணரும் என்பது கருத்து. மல மாயம் - மலத்தால் விளைந்த அறியாமை.
--------------
உயிர்க்குளதாம் இருவகையியல்புகள் இவை எனல்
யானென்னுங் காய மெனதென்று போதித்தும்
ஊனொன்றி நிற்கு முயிரன்றோ - தானொன்றில்
நில்லாத போது நிறைவாகல் தன்னியல்பாம்
இல்லார் பொதுவியல் பென் றெண். 13
இ - ள் : யானெனக் கருதியிருக்கும் உடலை எனதென்று - தன்னின் வேறாக எண்ணியும் உயிர் அவ்வுடலோடு கூடியிருக்கு மன்றோ ? அந்த உயிர் ஒரு பொருளில் வியாபகமாய் நிற்காத போது பூரணமாய் நிற்றல் அதன் சிறப்பியல்பாம்; அங்ஙனம் அன்றி உடலே தானென உடலுள் வியாப்பியமாய் நிற்றல் உயிரின் பொதுவியல்பாம் என்றுணர்வாயாக என்றவாறு.
உயிர் உடலொடு கூடி உடலே தானாய்ப் போகங்களை நுகர்வது அதன் பொதுவியல்பு; உடலின் வேறாகப் பூரண மாய் நிற்றல் அதன் சிறப்பியல்பு என்பதாம்.
யான் என்னும் காயம் எனது என்று பேதித்தும் - உயிர் தானாகலே எண்ணியிருக்கும் உடலை எனதென்று வேறுபடுத்தி உணர்ந்தும் என வேண்டுவன வருவித்துரைக்க.
ஊன் ஒன்றி நிற்றலாவது தன்னை உடலின் வேறாக உணராது உடலே தான் என மயங்கி நிற்றல். அங்ஙனம் உடலாகிய ஒன்றுள் வியாபகமாய் நில்லாது எங்கும் நிறைந்த பொருளாதலே ஆன்மாவிற்குச் சிறப்பிலக்கணமாம்; உடலுக் குள் நிறைவாதல் பொதுவிலக்கணமாம் என ஆன்மாவின் பொதுவியல்பும் சிறப்பியல்பும் தெரிவித்தவாறு.
''யானென்றுங் காயம் எனதென்றும் பேதித்தும்" எனவும் பாடம்.
-------------
தேகப்பற்றைவிட்டுச் சிவத்தைச் சார்ந்த போதே நிறைவெனல்
சாயத்தை யேற்ற தகும்பளிங்கு போலங்க
மாயத்தை யேற்ற மதியன்றோ - காயத்தை
நீத்தபோ தன்றோ நிறைவா நிகழ்சிவத்தை
ஆர்த்தபோ தன்றோ வவர். 14
இ-ள் : ஒரு நிறத்தைச் சார்ந்த பளிங்கு அந்நிறமே காட்டல் போல அறிவு உருவாகிய ஆன்மா உடல் என்னும் மாயத்தை ஏற்றுள்ளது அன்றோ! அவ்வுயிர் உடலை யான் அல்லன் என அதனைவிட்டபோதன்றோ நிறைவினை எய்தும்; அதுவுமன்றிச் சிவத்தைச் சார்ந்த போது சிவமேயாம் எ - று.
தேகத்தைச் சார்ந்து தேகமாய் இருக்கும் உயிர் சிவத்தைச் சார்ந்து சிவமான போதே பூரணத்தன்மை எய்துகின்றது என்பதாம்.
"பன்னிறங் காட்டும் படிகம்போல் இந்திரியந்
தன்னிறமே காட்டுந் தகைநினைந்து - பன்னிறத்துப்
பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய் பொய்யா மெய்கண்டான்
மெய்ப்பொருட்குத் தைவமாம் வேறு"
என்னும் சிவஞானபோத வெண்பாவும் இதனை விளக்கும்.
-----------
சிவத்தைச் சார்ந்தோர்க்கே நிட்டையாம் எனல்
சீவிக்குங் காயஞ் செயலற்ற போதன்றோ
ஆவிக்குத் தன்னியல்பே யாகுமால் - தேவனையே
ஓட்டியபேர்க் கீதா முறுநிட்டை யொவ்வாமல்
தெட்டியபேர்க் குண்டோ சிவம். 15
இ - ள் : மாயாகாரியமாய் வினைப்போகங்களை நுகரும் சாதனமாய உடல் செயலற்று அடங்கியபோதன்றோ உயிருக் குச் சிறப்பியல்பு என்பது உளதாம். இந்நிலை தேவதேவனா கிய சிவனை ஒட்டியபேர்களுக்கே உளதாவதாம். இத்தகைய நிட்டை கூடாமல் திருட்டுத்தனமாக ஒழுகுபவர்களுக்குச் சிவமாகுந்தன்மை சித்திக்குமோ? சித்திக்காது என்றவாறு.
சிவத்தைச் சார்ந்தோர்க்குச் சிவமாகுந்தன்மை சித்திக்கும்; அல்லாதார்க்கு இல்லையாம் என்பது கருத்து.
காயம் சீவித்தலாவது உயிரோடு கூடிப் போகங்களை நுகர்ந்து கன்மங்களை ஈட்டுதல். இது ஆன்மாவின் பொது வியல் பாம் . தன் செயலற்றுத் தானறப்பெறுதல் சிறப்பியல்பாம் என்றவாறு. அதற்குரிய உபாயமாவது தேவனைச் சார்ந்து தேவனாதல். தெட்டிய - கள்ளமுற்ற . ' தெட்டாது இரார் பணி செய்யாது இரார்' என்ற தனிப்பாடற்பகுதியும் தெட்டுதல் திருடுதல் என்னும் பொருளதாதலை விளக்குவது.
------------
அறிவை அறிவாலேயே எய்தக்கூடும் எனல்
அகளத்தை மற்ற வகளத்தா ரல்லால்
சகளத்தார் சாரத் தகுமோ - அகள்
நிராமயமே யாமால் நிராமயற்கே யல்லால்
பராவமுத மாகப் படா. 16
இ-ள் : உருவற்ற அருவாகிய ஞானத்தை அத்தன்மை எய்திய அனுபூதிமான்கள் அன்றி, உடலொடு கூடிய சகலான் மாக்கள் சார்தல் கூடுமோ? அருவச்சிவம் ஞானத்தானன்றி அறியப்படாதது ; அதனை அங்ஙனம் அறிவுருவானவர்களே அடைய இயலும்; ஏனையோர்க்கு அது நுகரப்படும் அமுதம் ஆகமாட்டாது என்றவாறு.
ஞானத்தால் அறியவேண்டிய ஞானவடிவான சிவத்தைச் சகலான்மாக்கள் ஒருஞான்றும் அறிய இயலாது. சிவம் அவர் கட்கு அனுபவமாகாது என்பதாம்.
அகளம் - அரு. சகளம் - உரு . அமுதமாதல் . நுகர்ச்சிக்கு உரியதாதல்.
-------------
பதமுத்தி - பரமுத்திகளில் நிற்பாரியல்பு
உடற்பகுதி மற்ற வுயிர்ப்பகுதிப் பேதந்
திடப்பட்டார் முத்தித் திறத்தார் - விடப்பட்ட
அங்கத்தை யொட்டி யறிவார் பதமுத்திச்
சங்கத்தா ரென்னத் தகும். 17
இ-ள் : உடலுக்கும் உயிருக்கும் உளதாகிய வேறாந் தன்மையை நன்கு உணர்ந்து, உடல் சடமே சித்தாகிய உயி ராகாது; சித்தாகிய உயிர் சதசித்தாகிய சிவத்தைச் சார்ந்து என்றும் மாறாத பேரின்பத்திருத்தலே அதற்கு உரிய சிறப் பியல்பு என்ற திடஞானம் பெற்றவர்களே முத்திப்பகுதி யைச் சார்ந்தவர்கள்; விடத்தக்கனவாகிய உடலைப்பொருந்தி, அதனின்றும் உயிரை வேறாக உணர்ந்து சுவர்க்காதி இன்பங் களை விரும்புகிறவர்கள், மால் பிரமன் முதலான பதமுத்திக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறத்தக்கவர்கள் ஆவர் என்றவாறு.
சிவஞானச் செய்தியுடையோரே பரமுத்தர்; உடற்பற்று நீங்காது உணர்பவர்கள் பதமுத்தர் என்றவாறாம்.
'அங்கத்தை யோட்டி' என்பது பாடமாயின் அங்கத்துள் உயிரைப் பொருந்தச் செய்து சிவத்தை உபாசிப்பவர்கள் காமி யப்பயனை விரும்பும் பதமுத்தர் என்றருளியதாகக் கொள்க.
------------
உபதேசத்துடன் அனுபவமும் அவசியம் எனல்
வாதித்த காயத்தை மாற்றாம லாசிரியர்
போதித்த தெல்லாம் பொதுவியல்பாம் - பேதித்த
அங்கத்தை மாற்று மனுக்கிரக ஞானத்தின்
சங்கத்தா லுற்ற சதுர். 18
இ - ள் : ஆன்ம வியாபகத்தை மறைத்துச் சுகதுக்கங் களில் ஈடுபடுத்தி நிற்பதான உடலை இறைவன் அடித்தொண் டினுக்குக் கிடைத்த சாதனமாக மாற்றாமலிருக்கும் போது, ஆசாரியன் உபதேசித்தவையனைத்தும் பொதுத்தன்மையாம்; இங்ஙனம் வினைச்சூழலில் அகப்படுத்தி நம்மைப் போதித்த உடலைச் சிவப்பணிக்காகவே மாற்றும் திருவருளுபாயம் ஞானி களின் சங்கத்தால் விளையும் சதுராம் என்றவாறு.
சிவகுருநாதன் தொட்டுக்காட்டிய அநுபவ நிலையை, நாம் அந்த அநுபவ நெறியுடையார் சங்கத்திலிருந்து தெளிந்து உய்ய வேண்டும் என்பது கருத்து.
காயத்தை மாற்றுதலாவது வினைப்போகங்களைத் துய்ப்ப தற்காக எடுத்த இவ்வுடலைச் சிவப்பணிக்கு உரியதாக்குதல் ; உண்ண உடுக்கப் படுக்கக் கிடைத்த உடலை, சிவச் சரியை
கிரியை யோக ஞானங்களை இயற்றப் பழக்குதல்.
வாதித்த காயம் - சிவப்பணி செய்து செம்மையுறாது வினைப் போகங்களிலேயே அழுத்திக் கரையேறவிடாதபடி தடுக்கின்ற உடல். காயம் சடமாயினும் அது தடுக்கும் இயல்பிலதாயினும் போர்த்த போர்வை போல உயிரை மறைத்து நிற்கின்றது என்பது உபசாரம்.
ஆசிரியர் - ஆன்மபரிபாகம் அறிந்து உடலாதிகளிற் செல் லும் பற்றை ஒழிக்கவும், சிவச்சார்பு எய்திச் சீர்பெறவும் அரு ளுபதேசம் செய்பவராகிய குருநாதர். போதித்த - உபதேசித் தனவாகிய முப்பொருளுண்மையும் முத்தியெய்தும் முறையும் முதலாயின.
பொது இயல்பாம் - ஆன்மா அநுபவத்தில் கொணர்ந்து பயன் எய்தாமையின் பொதுவகையாம் என்றது.
ஆகவே சிவஞானிகளோடு கூடுக; சிவஞானச் செய்தி களே செய்க; அதுவே அங்கத்தை மாற்றும் சதுராம் என்று உணர்த்தியவாறு.
-------------
ஆன்மாவின் இருவகை நிலையால் எய்தும் பயன்
இயல்பு பொதுவா யிசையும்போ தாவி
அயலே மயலா யடையும் - இயல்புநிலை
தன்னையே நோக்கிற் றடுத்தமல மத்தனையும்
அன்னியமே யாக்கப் படும். 19
இ-ள் : ஆன்மாவின் சொரூபநிலையாகிய சிறப்பியல்பு தடத்தமாகிய பொதுவியல்பாக ஆன்மாவினிடம் விளங்கும் போது ஆன்மா சிவத்தின் வேறாய், ஆணவத்தைச் சார்ந்து மயங்கி நிற்கும்; தன் சொரூபநிலையாகிய சிவத்தையே சார்ந்து நிற்குமாயின், ஆன்மா அருளைச் சாராதவண்ணம் தடுத்து நின்ற தடையாகிய மலம் அனைத்தும் ஆன்மாவின் வேறாகப் பிரிக்கப்படும் என்றவாறு.
ஆன்மா பெத்தநிலையின் நீங்கி முத்தி நிலையில் நின்றால் ஆணவாதிமலங்கள் அகலும் என்பதாம்.
ஆவி இயல்பு பொதுவாய் இசையும் போது - உயிர் பொது இயல்பாய்ப் பொருந்தும்போது என்க. பொது இயல்பாவது இருளில் இருளாகி நிற்கும் கண்போல ஆன்மா மல மாயை கன் மங்களோடு கூடிய பெத்தநிலையில் அவையேயாய், இறைவனை அறியாது மயங்கி நிற்றல். அங்ஙனம் நிற்கும் ஆன்மா தன்னை யும் அறியாது தலைவனையும் அறியாது மலத்தைச் சார்ந்து. அதனையும் அறியாது மலமேயாய்த் தன்னிலையின் வேறாய் நிற்கும் என்பார் ஆவி அயலே மயலாய் அடையும்' என்றருளினார்.
இயல்பு நிலை - சிறப்பியல்பு. அஃதாவது, எல்லிடத்து எல்லாய் நிற்கும் கண்போலச் சிவத்தைச் சார்ந்து சிவமாய் இன்பவடிவினதாய் நிற்பது. அங்ஙனம் நிற்கும் தடை தடை யாகக் காணப்பட்டுத் தன்னின் வேறாய்க் கழியும் என்பதாம்.
-------------
உபாயநிட்டையால் பயனின்று எனல்
கேட்டலொரு நான்குங் கிடைத்தபேர்க் கேகருணை
வீட்டை யடைதல் வினோதமாம் - மாட்டாதார்
வீட்டை மருவ வெறுநிட்டை செய்வதங்கச்
சேட்டையென்ப தன்றோ திடம். 20
இ - ள் : கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகூடல் என்கின்ற நான்கையும் பெற்ற பரிபாகிகளுக்கே திருவருள் மயமான வீடுபேறடைதல் விளையாட்டாகப் பொருந்துவதாம். இவற்றின் நிற்கமாட்டாதார் வீடு பெறுதற்காகப் பயனற்ற நிட்டையைச் செய்வது உடற்பயிற்சி அன்றி வேறு யாதாம் ? பயனின்று என்பது உறுதி என்றவாறு.
கேட்டல் முதலான நான்கு சாதனங்களிலும் முறையே தேர்ந்தார்க்கன்றி, உபாயநிட்டை புரிவார்க்கு வீடுபேறில்லையா மெனத் தெளிவித்தவாறு.
கேட்டலாவது, நற்பொருளை ஆசாரியன் உபதேசிக்கத் தான் கேட்டலாம். 'நற்பொருளைத் தான் கேட்டல்" என்ற சிவஞானசித்தி வாக்கும் அறிக.
சிந்தித்தலாவது, ஆசாரியன் உபதேசித்தவற்றை எண்ணி எண்ணித் தம்வயப்படுத்தலாம். இதனை ''ஈனமிலாப் பொரு ளதனைச் சிந்தித்தல்' என்னும் சித்தியார்.
தெளிதலாவது, எமக்கு உறுதியைப் பயக்கும் உயர்நெறி இதுவே எனக் கடைப்பிடித்தல்.
நிட்டையாவது, தெளிந்த நிலையில் பற்றற்ற பரமனைப் பற்றி நிற்றல். இங்ஙனமாய இந்த நான்கையும் பெற்றோரே வீடடைந்திடுவர். ஏனையோர்கள் செய்யும் நிட்டைகள் உடற் பயிற்சிமாத்திரமேயன்றிப் பயனின்று என்பதாம்.
------------
சரியை கிரியைகளில் யோகம் ஒடுங்குமாறு
சரியை கிரியையெனத் தங்கு மிரண்டுள்
உரியதொரு யோக மொடுங்கும் - தெரிய
வருமவர்க்கே யெல்லா மதியா மதனைப்
பிரிவார்க்கு முண்டே மெய்ப் பேறு. 21
இ-ள் : சரியை கிரியை என உலகில் தங்கிய இரண்டு உபாயங்களுள் ஞானவாயிலாதற்கு உரியதொரு சிவயோகம் அடங்கும்; இதனை உணருவார்க்கே எல்லாம் ஞானமாம்; இவ்வுண்மையை உள்ளவாறு உணராது பிரிந்து நிற்பார்க்கு உண்மைப்பேறு உண்டாமோ? உண்டாகாது என்றவாறு.
சரியையாவது சகளமாகிய தூலவடிவைப் பொருளென்று உணர்ந்து காயத்தொழில் மாத்திரையான் ஆகமத்தின் விதித்த வாறு வழிபடுவது. இச்சரியைநெறி தாசமார்க்கமெனவும்படும். இதனியல்பை ,
"தாதமார்க் கஞ்சாற்றின் சங்கரன்றன் கோயிற்
றலமலகிட் டிலகு திரு மெழுக்குஞ் சாத்திப்
போதுகளுங் கொய்துபூந் தார்மாலை கண்ணி
புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடித்
தீதில் திரு விளக்கிட்டுத் திருநந்த வனமுஞ்
செய்து திரு வேடங்கண் டாலடியேன் செய்வதி
யாது பணி யீரென்று பணிந்தவர் தம் பணியும்
இயற்றுவதிச் சரியை செய்வோ ரீசனுல கிருப்பர் ''
என்னும் சித்தித்திருவிருத்தத்தான் உணர்க.
கிரியையாவது சரியை அடிப்பட்டு வரவர நிகழும் பக்குவ விசேடத்தான் நுண்ணுணர்வுடையராய்ச் சகள நிட்களமாகிய சூக்கும வடிவமே பொருள்; சகளவடிவம் அதனை வழிபடுதற்கு இடமாய திருமேனியென்று இவ்வாறு உணர்ந்து புறத்தொழி லானும் அகத்தொழிலானும் விதித்தவாறே வழிபடுவதாம்.
" புத்திரமார்க் கம்புகலின் புதியவிரைப் போது
புகையொளிமஞ் சனமமுது முதல் கொண் டைந்து
சுத்திசெய்தா சனமூர்த்தி மூர்த்தி மானாஞ்
சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த
பத்தியினா லருச்சித்துப் பரவிப் போற்றிப்
பரிவினொடு மெரியில் வரு காரியமும் பண்ணல்
நித்தலுமிக் கிரியையினை யியற்று வோர்கள்
நின்மலன்ற னருகிருப்பர் நினையுங் காலே''
என்னும் சித்தித்திருவிருத்தத்தான் இதனை உணர்க.
யோகமாவது அகத்தொழின்மாத்திரையான் ஆண்டைக்கு விதித்தவாறே வழிபடுவது. இது சகமார்க்கம் எனப்படும்.
" சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்துவளி யிரண்டுஞ்
சலிப்பற்று முச்சதுர முதலாதா ரங்கள்
அகமார்க்க மறிந்தவற்றி னரும்பொருள்க ளுணர்ந்தங்
கணைந்து போய் மேலேறி யலர்மதி மண்டலத்தின்
முகமார்க்க வமுதுடல முட்டத் தேக்கி
முழுச்சோதி நினைந்திருத்தன் முதலாக வினைகள்
உகமார்க்க வட்டாங்க யோக முற்றும்
உழத்தலுழந் தவர் சிவன்ற னுருவத்தைப் பெறுவர் ''
என்னும் சித்தித்திருவிருத்தத்தான் அறிக. யோகம் சரியை கிரியைகளுள் அடங்குதலாவது சரியை கிரியை இயற்றும் போது சிந்தை சிவத்தைப் பிரியாது சார்ந்திருக்கையாகிய யோகத்தைப் புரியும் ஆதலான் என்க.
இங்ஙனம் சரியை கிரியைகள் யோகமாம்படியை உள்ளபடி உணர்வதே ஞானமாம் என்பார் எல்லாம் மதியாம்' என்றார். மதி - ஞானம். அதனைப் பிரிவார்க்கு - தியான நிலையில் உண்மை
ஞானம் உறாது சிவத்தைப் பிரிவார்க்கு என்க. மெய்ப்பேறு என்றும் நிலைத்த முத்திப்பேறு.
-------------
யோகம் புரிவது எங்ஙனம்? எனல்
சமயம் விசேடமெனத் தங்கியதே தீக்கை
அமையும் தொழிலோ டமையும் - இமையுமெடா(து)
உற்றிருப்ப தெங்ங னுறுந்தொழிலோ
டொன்றாகப் பற்றி நிற்ப தெங்ஙன் பகர். 22
இ - ள் : சமயம் விசேடம் என நிலவுலகத்தில் தங்கியதே தீக்கைகளாக அமையும். இவை கிரியைகளோடும் பொருந்து வதாம். அங்ஙனமாக , இமை திறக்காமல் சிவத்தையுற்றுச் சிந்தை பிரியாதிருப்பது எங்ஙனம்? பொருந்தும் கிரியைக ளோடு ஒன்றாகப் பற்றி நிற்பதும் எங்ஙனம்? விளங்கக் கூறுக என்றவாறு.
சமயதீக்கையாவது மண்டப பூசை செய்து, விதிமுறையே மாணாக்கனை வழிபடுவித்துச் சம்பாத ஓமத்தால் சுத்தி செய்வது. இதனாற் சீடன் சைவாசாரத்திற்கு அதிகாரியாகிறான்.
விசேட தீக்கையாவது அங்ஙனம் சமயதீக்கை செய்து குண்டத்தில் வாகீசுவரனையும் வாகீசுவரியையும் ஆவாகித்து, மாணாக்கன் ஆன்மாவைச் சங்காரமுத்திரையால் வாங்கி வாகீ சுவர வாகீசுவரிகருப்பத்தில் செலுத்திக் கர்ப்பாதான முதலான கரியைகளை மும்மூன்று ஆகுதிகளால் செய்து கரு முதிர்ந்த தாகவும் பயந்ததாகவும் பாவித்துக் குண்டத்தினின்றும் ஆன் மாவை வாங்கி மாணாக்கனது இதயத்தானத்தில் தாபித்துச் சிவபுத்திரனாகச் செய்வது. இதனால் சிவபூசை முதலியவற்றிற்கும் யோகநெறிக்கும் சிவாகமம் ஓதுதற்கும் மாணாக்கன் அதிகாரி யாகிறான். இவ்விரண்டுமே தீக்கைகள். இவ்விரண்டும் கிரியை களாக அமைவன. கிரியைகளை மேற்கொள்ளும் போது இமை கொட்டாமல் யோகம் புரிவது எங்ஙனம்? தியானமாகிற தொழி லோடு ஒன்று தல் யாங்ஙனம்? என ஆசிரியனை வினாவியவாறு காண்க.
-----------------
தீக்கையின் பயன் இது எனல்
சத்திநி பாதஞ் சதுவிதமா மாங்கதனை
ஒத்த சரியாதி யொரு நான்காம் - முத்தி நலத்(து)
உற்றதொழி னான்கா முறுமுத்தி யோர் நான்காய்ப்
பெற்றதன்றோ தீக்கையின் மெய்ப் பேறு. 23
இ - ள் : சத்திநிபாதம் தீவிரதரம் தீவிரம் மந்தம் மந்த தரம் என நான்காம்; அவற்றை ஒத்த சரியை முதலானவை களும் நான்காம் ; அவற்றான் விளையும் முத்தியும் சாலோக, சாமீப , சாரூப , சாயுச்சியம் என நான்காம் ; இங்ஙனம் நால் வகை முத்திகளையும் பெற்றதன்றோ சிவதீக்கையின் பயன் என்றவாறு.
சத்தி நிபாதம் - சத்தியின் வீழ்ச்சி. இதனியல்பை மாபாடி யத்து 8- ம் சூத்திரம் முதலதிகரணத்தில் காண்க.
சரியாதிகள் - சரியை கிரியை யோகம் ஞானம் என்பன. அவற்றுள் சரியையாவது ஆன்மாக்கள் பரிபாகமுதிராமையான் சிவத்தைச் சகளத்திருமேனியில் வைத்துக் காயத்தொழின் மாத்திரையால் ஆகமத்தில் விதித்தவாறு வழிபடுதல். இதனை "நிலைபெறுமாறு எண்ணுதியேல்'' என்னும் திருவாரூர்த் திருத் தாண்டகத்தால் உணர்க.
கிரியையாவது சரியைவழிநின்ற பக்குவ முதிர்ச்சியினால் நுண்ணுணர்வு பெற்றுச் சகள நிட்களமாய அதிசூக்கும வடிவமே பொருள்; சகளவடிவம் அதனை வழிபடுதற்கிடமாகிய திருமேனி என்று உணர்ந்து புறத்தொழிலானும் அகத்தொழி லானும் வழிபடுவது.
யோகமாவது சரியை கிரியைகளினின்ற பக்குவமுதிர்ச்சி யால் அதிநுட்ப உணர்வுடையராய், நிட்களமாகிய அதிசூக்கும் வடிவமே பொருள் ; சகளமும், சகள நிட்களமும் அதனை வழிபடற்கிடமாகிய திருமேனி எனத் தெளிந்து அகத்தொழின் மாத்திரையான் விதித்தவாறே ஒழுகுவது.
ஞானமாவது யோகநெறியில் நின்ற பக்குவமுதிர்ச்சியான் உள்ளவாறுணர்வு விளங்கி, சச்சிதானந்தப்பிழம்பே சொரூபம். சகளம் முதலியன உணர்தற்கும் வழிபடற்கும் உரிய திருமேனி எனத் தெளிந்து, காயத்தொழில் மனத்தொழில் இரண்டனையும் கைவிட்டுக் கேட்டல் முதலிய அறிவுத்தொழின்மாத்திரையாய் வழிபடுவது.
முத்தி நலத் துற்ற தொழில் நான்காவன : புறத்தொழிலும், அகத்தொழிலும், புறத்தொழிலும் அகத்தொழிலும், அறிவுத் தொழிலுமாகிய நான்குமாம்.
முத்தி நான்காவன : சாலோக சாமீப சாரூப சாயுச்சியங் களாம். இவற்றின் விரிவுகளைச் சாத்திர நூல்களில் கண்டு தெளிக. இவையே தீட்சையின் பயனாம் என்றபடி.
---------------
கிரியைகள் இறைவனை அடைதற்காகவே எனல்
சமய விசேடந் தகுஞான மென்ன
உமையொரு பாக ருரைத்த - தமையவிருந்(து)
எட்டுதற்கோ வீசற் கிசைந்த தொழி லோடிசைந்தங்
கொட்டுதற்கோ வொன்றை யுரை. 24
இ - ள் : உமையொருபாகராகிய சிவபெருமான், சமய தீட்சையும் விசேட தீட்சையும் ஞானம் அடைதற்குவாயிலாம் எனத் திருவாய்மலர்ந்தருளியது. தன்னோடு பொருந்த இருந் தும் சேய்மைக்கண் விலகிப்போதற்கோ அல்லது தமக்குப் பொருந்திய கிரியைகளோடு மருவி இறைவனையும் அவனடி யாரையும் ஒட்டி வாழ்தற்கோ? உரைப்பாயாக என்றவாறு.
இறைவன் சிவாகமங்களில் சமய விசேட தீக்கைகள் ஞான மடைதற்கு வாயிலாம் எனத் திருவாய்மலர்ந்தருளியது தம் பரிபாக நிலைக்கு ஏற்ற கிரியைகளை மருவிச் சிவபெருமானைச் சார்ந்து வாழ்தற்காகவேயன்றி விலகி வாழ்தற்காக அன்று என்பதாம்.
சமயம் - சமயதீட்சை . இது ஆசாரசீலமும் சைவ ஒழுக்க மும் பொருந்திய சமயி புத்திரனுக்கு ஏழாவதாண்டிற்குள் செய் விக்க வேண்டிய தீக்கை. இதனால் சீடன் சமய சீலங்கள் மேற் கொள்ளுதற்கும் சிவாகமங்களை ஓதுதற்கும் தகுதி பெறுவன்.
விசேடம் - கிரியையும், யோகமும் கலந்த சிவபூசை. இதனால் சீடனுக்குச் சிவத்தையே சாரும் பயிற்சி முதிருகின்றது. இவை இரண்டும் ஞானம் கிடைத்தற்கு வாயிலாவன. ஆதலின் சமயத் தானும் விசேடத்தானும் ஞானம் தகும் என்றருளியது.
உமையொருபாகர் - அனுக்கிரகமே இலக்காகக் கொண்டு அம்மையப்பராக எழுந்தருளியிருக்கும் இறைவர் , உரைத்தது. சிவாகமங்களில் தெரிவித்தது. அமைய இருந்தும் என்பதில் உள்ள உம்மை விகாரத்தாற்றொக்கது. இறைவன் நூலும், அதனை அறியும் ஆன்ம அறிவும், இயற்றும் ஆற்றலும், அகச் சாதனங்களும், புறச்சாதனங்களும் பொருந்த இருந்தும் என்க. எட்டுதல் - விலகிப்போதல். ஈசற்கு இசைந்த தொழில் - இறைவ னுக்கு உவப்பான தொண்டுகள். ஓட்டுதல் - சிவத்தையே இடைவிடாது எண்ணிச் சிவமாந்தன்மை எய்துதல். ஒன்றை உரை - இவ்விரண்டனுள் பரிபாகமுறத்தக்க ஆன்மா எய்தக் கடவது ஒன்றை உரைப்பாயாக என்பதாம்.
--------------
தியானமே யோகமாம் எனல்
சாதித்த யோகஞ் சமய விசேடமதில்
போதித் தடங்கப் பொருத்தியதாம் - பேதித்த
தீக்கையென்ப தின்றாந் தியானமே யோகமதால்
ஏற்குமெவ்வி டத்துமென வெண். 25
இ-ள் : பொறி புலன்களை அடக்கி, மனத்தைக் காட்டிச் சாதித்த யோகம் அனைத்தும் சமய தீட்சையினும் விசேட தீட்சையினும் அறிவுறுத்தி, அவற்றில் அடங்கி இருக்கப் பொருந்தியதாகும். இவற்றின் வேறாகப் பேதப்படுத்திய தீட்சை என்பது ஒரு கிரியையின்றாம்; ஆதலால், தைலதாரை போல இடைவிடாத தியானமே யோகமாம். இவ்வுண்மை எவ்விடத்தும் பொருந்து மென மதிப்பாயாக என்றவாறு.
சமயவிசேடங்கள் யோகத்தை உள்ளடக்கிய செயல்களாம். யோகத்தின் வேறாகத் தீட்சை என ஒன்று இல்லை. யோகமோ தியானமாம். என்றும் எங்கும் பொருந்துவதொரு கருத்து இதுவாம் என்பது.
சாதித்தது - இடையூறுகள் பல குறுக்கிட்டும் அவற்றை வென்று, கருதிய நிலையை எய்துதல். யோகம் - இயம நியமாதி எண்வகை உறுப்புக்களுடையதாய் அரிதின் ஆற்றப்படுவது. அதனால் சாதித்த யோகம்' என்றார். அதில் - அந்த யோகத்தில்.
நாயகன் சேவடி தைவரு சிந்தையும் என்றாற்போல என்றும் இடையறாத தியானமே யோகமாம் என்பார் தியானமே யோகமாம்' என்றார்கள்.
-----------
யோகமென்பது இடையறாத்தியானமே எனல்
யூகித் திதனை யுணராதா ரன்றோமெய்
யோகத்தை வேறே யுணர்வதுமெய் - யோகம்
பிரித்தறிவ தன்று பிரியாத் தொழிலில்
தரித்தறிவ தாகத் தகும். 26
இ - ள் : இவ்வுண்மையை அறிவினாலே நுனித்தறிய மாட்டாதார், யோகம் இதனின் வேறானது என்று வேறாக உணர்வர்; யோகம் தியானிப்பானும் தியானிக்கப்படுகின்ற பொருளும் வேறு என்று பிரித்தறிவதன்று; தியானிப்பவனும் பொருளும் வேறன் றென்று அனுபவித்தலே யோகமாம் எ - று.
யூகத்தால் யோகவியல்பை உள்ளபடி உணரமாட்டாதார் யோகமும் தியானமும் வேறு என்பார்; உண்மையான யோக மாவது உயிரும் இறையும் ஒன்றாம் வண்ணம் தியானித்தலே என்பது கருத்து.
பிரியாத்தொழிலிற்றரித்தலாவது திருவடி மறவாத சிந்தை யினராயிருந்து உணர்தல்.
---------------
உடற்பற்றறுதலே உண்மையோகம் எனல்
போதித்த காயம் பிரியாம னிட்டையெனச்
சாதிப்ப தெல்லாந் தவறன்றோ - வாதித்த
காயமற்றா லாவி கருதுமரன் போற்கருணை
நேயமுற்ற தன்றோ நிலை. 27
இ-ள் : உயிரையும் இறையையும் வேறுபடுத்திய உடலைவிட்டு நீங்காமல், நான் நிட்டை கூடினேன் என்ப தெல்லாம் தவறான செயல்களாம்; இறைவனை நம்மின் வேறாக வைத்து வாதிக்கும் மாயா காரியமான தனுவகன்றால், உயிர் தியானிக்கப்பெறுகின்ற சிவத்தைப்போலத் திருவருளாகிற அறியப்படுபொருளை அறிந்தனுபவிப்பதன்றோ எய்தக்கடவ தாகிய நிலை என்றவாறு.
உடலோடு கூடியிருந்து அறிவதும் அனுபவிப்பதும் நிட்டையாகாது; உடற்பற்று ஒழிந்தபின் உயிர் சிவத்தைப் போலக் கருணையாகிற ஞேயத்தைச் சார்வதன்றோ உண்மை நிட்டை என்பது கருத்து.
காயம் பிரிதலாவது உடற்பற்று அறுதல். கருதும் அரன் தியானிக்கப்படுகின்ற சிவன். நேயம் - ஞேயம் என்பதன் திரிபு; அறியப்படுபொருள் என்பது கருத்து.
------------
ஆகம அனுபவமே நிட்டை எனல்
நீதித் தரும் நிறுத்துஞ் சிவாகமத்தை
சாதித் தாலன்றோ தகு நிட்டை - வாதித்த
அங்கத்தோ டாவி யரனெறியு மாயாத
சங்கமோ நிட்டைச் சதுர். 28
இ - ள் : உண்யைான நீதியையும் அறத்தையும் நிலை பெறுத்தும் சிவாகமச்செம்பொருளை அனுபவத்தில் கொண்டு வருதலே நிட்டையாம் ; வாதம் புரிதற்கு உதவும் உடல், உயிர், இறை, இறைவனை அடைதற்குரிய உபாயம் இவற்றை ஆராயாத சங்கமோ சதுரப்பாடுடைய நிட்டையாவது எ-று.
ஆகமத்தை அனுபவத்தில் கொணருதலே நிட்டையாம்; உடலாதிகளை உள்ளவாறு உணர்ந்து உயிர் இறையை அடையும் உபாயங்கள் இவை என ஆராயாத கூட்டத்தால் நிட்டை உண்டாகாது என்பதாம்.
நீதித் தருமம் - நீதியும் தருமமும். நீதி - சமய ஒழுக்கம். அறம் - பதி புண்ணியம். ஆயாத - ஆராயாத .
சிவாகமங்களே சிவதருமத்தையும் சிவநெறியையும் உல கத்து நிலைபெறச்செய்வன ஆதலின் 'நீதித் தருமம் நிறுத்தும் சிவாகமம்' எனப் பெற்றன.
-------------
உண்மைநிட்டையின் இயல்பு
சொல்லும் சிவாகமத்தின் சூழனைத்தும் பாராமல்
வெல்லும் புலனைந்தும் வெல்லாமல் - செல்லுநெறி
தன்னை வினையைத் தலைவனையுங் காணாமல்
மன்னுதலே நிட்டை வளம். 29
இ-ள் : சதாசிவமூர்த்தி சொல்லியருளிய சிவாகமத்தின் சூழல்கள் எல்லாவற்றையும் கண்ணால் கூடப் பாராமலும், சகலான்மாக்களை வென்று அடிப்படுத்தியுள்ள விஷயசுகங் களைத் தாம் வென்று அடக்காமலும், அடைதற்குரிய நெறி யாகிய முத்தியினையும், அதற்குத் தடையாயுள்ள வினைகளை யும், வினைகட்கும் அதன் நீக்கத்திற்கும் ஏற்ப அளந்தறிந்து ஊட்டும் சிவபரம்பொருளையும் உள்ளவாறு உணராமலும் வாளாயிருத்தலோ சிறந்த நிட்டை என்றவாறு.
கற்க வேண்டிய ஞான நூல்களைக் கற்று, முத்தியை விரும்பித் தன்னையும் தலைவனையும் தடைகளையும் நீக்கும் உபா யத்தையும் தெளிந்து சிவத்தோடு அந்நியமாக இருத்தலே சிவயோகமாகிற நிட்டையாம் என்பது.
சொல்லும் சிவாகமம் - ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் முப்பொருளுண்மைகளைச் சொல்லுகின்ற ஞான நூல்களாகிய சிவாகமங்கள். சூழனைத்தும் - மூலாகமங்களும் உபாகமங்களு மாகிய அனைத்தையும். பார்த்தல் - ஆராய்தல். செல்லுநெறி - கதி. மன்னுதலே என்பதில் ஏகாரம் வினாவின்கண் வந்தது.
-----------
ஞானநூல் ஓத ஞானநிட்டை கைகூடும் எனல்
அறியும் பகுதி யறிவறியத் தானே
பிறியும் பகுதி பிறியும் - நெறியாகும்
சன்மார்க்கத் தாற்கே தகுஞான நூலோதல்
நன்மார்க்கத் தாகு நலம். 30
இ - ள் : பரிபாகமுற்ற ஆன்மா அறியத்தக்க நூற்பகுதி களை இறைவன் திருவள் துணை செய்ய அறிவான்; அறியுமாயின் ஆன்மாவை விட்டுப் பிரியத்தக்கனவாகிய அஞ்ஞானம் முதலியன தாமே அகலும்; சிறந்த மார்க்கமாகிற சன்மார்க்க மாகிய நெறிக்கண் நிற்போர்க்கே தக்க ஞான நூல்களை ஓதல் பொருந்துவதாகும் ; அவர்கட்கே அங்ஙனம் ஓதுதல் நன்னெறியை அளிக்கும் என்றவாறு.
சிவாகம நூலோதச் சிவஞானம் உண்டாம் ; சிவஞானமே சன்மார்க்கமாகிய நன்னெறியைப் பயப்பதாம் என்பது கருத்து.
அறியும் பகுதி : கருவிநூலறிவு கொண்டும், ஆன்மபோதம் கழன்ற நிலையில் அறியத்தகுவன நூல்கள் ; அதனை அருள் உணர்த்து நெறிநின்று அறிவான் அறிய, மாயாகாரியமான தனு கரண புவன போகங்களிலுள்ள பற்று நீங்கும் என்பார் 'அறிவால் அறியும் பகுதி அறியப் பிறியும்பகுதி தானே பிறியும்' என்றார் .
சன்மார்க்கம் - ஞானநெறி. 'ஞானநெறி நில்லார் ஞானம் பூண்டு என்பயன்' என்பார்களாதலின் ஞானநெறி நிற்பார்க்கு ஞான நூல் ஓதுதல் பயன் தருவதாம் என்றருளிச்செய்தவாறு.
------------
உண்மையோகம் இது எனல்
பாதத்துக் கேற்ற பணிபலவுஞ் செய்துமலஞ்
சேதித்தார்க் கன்றோ திடமாகும் - நீதி
நடையே நடந்தரனை நண்ணியென்று நீங்காத்
தடையே சமாதிச் சதுர். 31
இ - ள் : சிவகுருநாதன் திருவடிகட்கு ஏற்புடைத்தான தொண்டுகள் பலவற்றையும் செய்து, மலவலியை வாட்டின பேர்கட்கே உறுதியான உண்மைஞானம் உண்டாம்; சிவாக மங்களிற்கூறப்பட்டுள்ள நீதி நெறிக்கண் ணேயொழுகிச் சிவ பெருமானை இடையறாது சிந்தித்துச் சிந்தனையால் நணுகி, அவரைவிட்டு என்றும் பிரியாது விளங்குவதாய தடையை ஏற்படுத்திக்கொள்ளுதலே சிவசமாதியின் சதுரப்பாடாம் என்றவாறு.
சிவாகமங்கள் விதித்தவண்ணம் ஒழுகிச் சிவத்தைச் சார்ந்து பிரியாதே கூடாதே கூடிவாழ்தலே சிவசமாதியாம் என்பது கருத்து.
பாதம் - ஆசாரியன் திருவடி. சரியை முதலான நிலை எனலு மாம். பணி பலவும் செய்தலாவது ஆலயவழிபாடு சிவபூசை சிவத்தியானம் முதலான தொண்டுகளைச் செய்தல்.
மலம் சேதித்தல் - மலத்தை வெட்டுதல். வெட்டுதலாவது செம்பிற்களிம்பு போல ஆன்மாவை அநாதியே மறைத்துள்ள ஆணவமலத்தையும், அதன் வன்மையை வாட்டவந்து மேலும் மறைப்பினைச் செய்யும் மாயாமலத்தையும், கன்மமலத்தையும் வலிகுன்றச்செய்தல்.
திடம் - சிவயோகம் உறுதிப்படுதல். என்றும் நீங்காத் தடை - என்றும் இறைவனை விட்டுப்பிரியாத தடை. சமாதிச் சதுர் - சமாதியின்கண் உள்ள சாமர்த்தியம்.
-------------
தீக்கையும் பூசையுமே நிலையான பயன் தருவன எனல்
தீக்கைதனக் குற்ற செயல்பலவுஞ் செய்துமல
நீக்குதலே யன்றோ நிலையாகும் - பாக்கியமாம்
பூசையின் மேன் மோகப் புணர்ப்பல்லான் மற்றுமோர்
ஆசையின்மே லுண்டோ வரன். 32
இ - ள் : மண்டபபூமி பரீட்சை முதல் யாக விசர்ஜனம் ஈறான செயல்கள் பலவற்றையும் ஆசாரியன் சத்திநிபாதம் வரப்பெற்ற சீடனுக்குச் செய்து ஆணவமலத்தை அகற்றுதலே நிலைபேறானதாம்; பாக்கியம் போல அடையத்தக்க பேறுகளுட் சிறந்ததான பூசையின் மேல் மோகம் வைத்து அப்பூசையைப் பொருந்துவதல்லாமல் வேறொன்றன் மேல் ஆசைவைப்பதால் அரனருள் உண்டாமோ? இல்லை என்றவாறு.
தீக்கை - மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுப்பது. தீக்கை மூவகைப்படுதலின் அவற்றிற்குரிய கிரியைகளாவன மண்டபபூமியை ஆய்தல் முதலாக யாகத்தை அனுப்புதலீறாக உள்ள பலசெயல்களாம். இவற்றின் முறையையும் விதியையும் பத்ததிகளில் பரக்கக்காணலாம்.
பாக்கியமாம் பூசை - ஆன்மாவிற்குப் பெருஞ்செல்வமான பூசை. மோகப் புணர்ப்பு - ஆசைவைத்தல். மற்றுமோராசை - பொறிகட்கு விஷயமான போகங்களில் இச்சைகொள்ளுதல். வரன் உண்டோ எனப் பிரித்து மேலான முத்தி உலகமானது உண்டோ எனலுமாம். அரன் என்றது அரனருளை .
-----------
அத்துவித பாவனையான் மட்டும் அரனையடைதல் ஒண்ணாது எனல்
பூசை தியானம் பொருந்துந் தொழிலனைத்தும்
நேசித்தார்க் கன்றோ நிலையாகும் - தேசுற்ற
அத்து விதத்தோ டடைவதெல்லாம் நன்மேனி
புத்தியின்மே லுற்ற பொருள். 33
இ - ள் : ஞானவிளக்கம் பெற்றதான அத்துவித பாவனை யான்மட்டும் சிவத்தை அடைவேம் என்பதெல்லாம், நல்ல உடலொடு ஆன்மா புத்தி பண்ணுதலால் உற்ற பயனேயன்றி உண்மையாகாது; ஆதலால் பூசை தியானம் முதலான ஏற்ற கிரியைகளை உண்மையில் நேசித்தவர்களுக்கே சிவத்தைச் சாருதல் நிலையுடையதாகும் என்றவாறு.
அத்துவிதபாவனை. உடலொடு கூடிய உயிரின் உணர்வு வழிவந்த அனுபவம். அது உண்மையான சிவப்பேறு ஆகாது; பாவனையே ; பூசை தியானம் முதலியன செய்யின் உண்மைச் சிவப்பேறு உளதாம் என்பது கருத்து.
இல்லறத்தானாயின் சூரியபூசை முதல் சண்டேசுரபூசை வரையிலும், துறவியாயின் பிராணாயாமம் முதல் குருதியானம் வரையுள்ள ஞானபூசையும் செய்யத்தக்கது. ஆதலால் பூசை,
பூ முதலிய சானங்களைக் கொண்டு இயற்றப்படுவது.
தியானம் - மனத்துள் மகேசனை நினைத்து எல்லாச் சாத னங்களையும் மனத்தானே அமைத்து மனத்தானே வழிபட்டு மகேசனையே எண்ணியிருத்தல்.
தேசுற்ற அத்துவிதம் - பசுஞானத்தான் விளைந்த நானே பிரமம் என்னும் ஞானம். இந்த ஞானம் உயிர் உடலொடு கூடியவழி உளதாவதாய உணர்வு. இதனையே 'நன்மேனிபுத்தி' என்றருளினர். உடல் நீங்க உயிர் உணருந்தன்மையிழக்கும். பூசைமுதலியவற்றால் விளைந்த சோகம்பாவனை நிலைத்திருக்கும். ஆதலால் அதுவே சிறந்தது என்பது விளக்கப்பெற்றது.
--------------
கருணை கற்குஞ்சரக்கன்று எனல்
கற்பிப்ப தெல்லாங் கருணைவடி வல்லாது
கற்பிப்ப தல்ல கருணை நலம் - அற்புதமாய்ப்
போக்குவ தும் போக்கிப் போகாப் பொருளறிவில்
ஆக்குவதே நிட்டைக் கழகு. 34
இ-ள் : நம் முன்னே இருந்து கற்பிப்பது கருணைவடி வாகிய சிவகுருநாதனேயல்லாது, கற்பிக்கப்பெறும் தன்மைய தன்று திருவருளின்பம்; கற்பிப்பவன் கற்பிக்க அதன் வண்ண மிருத்தலாகிய நிட்டைக்கு அழகு , நம்மிடம் போக்கத்தக்கன வாகிய மலமாயா கன்மங்களைப் போக்கி நம்மறிவின்கண்ணே என்றும் அழியாப்பொருளாகிய சிவத்தை விளங்கச் செய்தலே என்றவாறு.
திருவருளின்பம் பூவினில் கந்தம் பொருந்தியவாறுபோலச் சீவனுக்குள்ளே சிவகுருவின் உபதேசத்தால் விளைவதேயன்றிச் சொல்லிக்கொடுப்பது அன்று. ஆதலால், உண்மை நிட்டைக்கு அழகாவது போக்கவேண்டிய மல மாயாதிகளைப் போக்கிப் போகப்பொருளாகிய பரசிவத்தை அறிவின்கண் ஆக்குதலாம் என்பது கருத்து.
உறையுள் வாளும் குடத்துள் விளக்கும் போல இது என்று எடுத்துக்காட்ட ஒண்ணாத அன்பு போலக் கருணையின்பமும் அனுபவத்தான் அறிவதன்றிப் பொறிகளுக்குப் புலனாகாதது என்பார் 'கற்பிப்பது அல்ல கருணை நலம்' என்றருளினர்.
ஆணவம் தான் கலந்தமையை ஆன்மாவும் அறிய ஒண்ணா மல் எங்ஙனம் இருந்ததோ அங்ஙனமே போனதும் தெரியாமல் 'விளக்குப்புக இருள் மாய்ந்தாங்கு' கெடும் ஆதலின் அற்புத மாய்ப் போக்குவதும் போக்கி' என்றருளியவாறாம்.
போகாப்பொருள் - மனத்திடை மன்னியமன்னாதலின் சிவம் போகப்பொருள் எனப்பட்டது. சிவம் விளங்கும் இடம் மெய் யடியார்களின் உண்மைஞானத்தில் ஆதலின் அறிவில் ஆக் குவது' என்றார்.
------------------
ஞானவழக்கத்தின் இலக்கணம்
சுருதிகுரு வாக்குச் சுவானுபவ மொன்ற
மருவுவதே ஞான வழக் காகும் - சுருதி
அடையாமல் நிட்டை யடைவதெல்லா முத்தித்
தடையாகு மென்னத் தகும். 35
இ - ள் : சுருதி, குரு உபதேசம், தன் அனுபவம் இந்த மூன்றும் பொருந்த அடைவதே ஞான வழக்கமாம்; சுருதி யைப் படிக்காமல் நிட்டை கூடுவது அனைத்தும் முத்தி எய்து தற்குத் தடையாகும் என்றவாறு.
சுருதி, குருவார்த்தை , அனுபவம் மூன்றும் ஒன்றுபட்ட உணர்வே ஞானவழக்கம் ஆம்; அங்ஙனமன்றிக் கண் மூடி இருத்தல் நிட்டையாகாது என்பது கருத்து.
சுருதி - வேதம். அதாவது, சிவஞானத்தைப் பயப்பன வாகிய ஞான நூல்கள். அவை இறைவன் நூல்களாகிய வேதமொடு மெய் ஆகமங்களாம்.
குருவாக்கு - சீடனுடைய மல மாயா கன்மங்கள் நீங்குதற் காக ஆசாரியன் உபதேசிக்கும் உபதேச கலைகளும், மந்திர கலைகளும், தந்திர கலைகளுமாம்.
சுவானுபவம் - வேதாகமங்களை ஓதி உணர்ந்தும் குரு உபதேசம் கேட்டும், சிந்தித்துத் தெளிந்து தன்னனுபவத்திற் காண்டலாகிய உண்மையுணர்வு.
மேற்கூறிய இம்மூன்றும் ஒத்த இடத்திலே உளதாவது சிவஞானம். இம்மூன்றும் ஒவ்வாவிடத்து உளதாகும் நிட்டை முத்திக்குத் தடையாமேயன்றிப் பயன் அளியாது என்பதாம்.
--------------
ஆகமஞானம் அவசியம் எனல்
அளவையொரு மூன்றா மறிபொருளுக் காவி
உளவறிவார்க் கேதளவை யோது - மௌவறியும்
அக்கங் கருத லடையா நல் லாகமத்தின்
பக்கமுமின் றாமேற் பழுது. 36
இ - ள் : சாதித்து அறியும் பொருளுக்கு இன்றியமை யாத அளவைகள் மூன்றாம் ; உயிருக்குயிராகிய சிவத்தையும், பற்றி நிற்பனவாகிய மலங்களையும் அறியலுறுவார்கட்குத் தக்க அளவை எது? சொல்லும் பார்க்கலாம்; பயிலப்படாத ஆகம நூல்களின் பக்கமும் போகாராயின் மெள்ள அறியப் படுவதாகிய பஞ்சாக்கரங்களை எண்ணுதல் குற்றமாம் எ-று.
சிவஞானச்செய்தி உடையார்க்கே அக்கரங்கள் குற்றமற்ற ஞானத்தைத் தந்து, பிறவி அறுக்கும் உபாயமாம் என்பது கருத்து.
அளவை மூன்றாவன : ஆகமமும், அனுமானமும், காட்சியு மாம். ஒரு பொருளைத் துணிய இந்த மூன்றும் இன்றியமை யாதன என்பது.
ஆவி உள - உயிரைக் கலந்து உள்ளனவும், உயிரை அநாதியே பற்றி உள்ளனவும் ஆகிய இறை, பாசங்கள். உயிரைக் கலந்து உயிர்க்குயிராக இருந்தும் அறியப்படாதது இறை. உயிரைச் சார்ந்து இருளாய் அறியப்படாதது மலம். இவ்விரண்டையும் ஆகம அளவையான் உணர்ந்து தெளிதல் ஏனைய இரண்டு அளவைகளையும் சாதித்தற்கு அடிப்படையாம் என்று அறிவித்தவாறு.
அக்கம் - அக்கரங்கள். அவை திருவைந்தெழுத்துக்கள். ஆகமஞானம் இல்லாதார் திருவைந்தெழுத்தின் உண்மையை உணரமாட்டாது மயங்குவர். அங்ஙனம் உணருவாராயினும்
திரிபாக உணர்ந்து குற்றப்படுவர் என்பதாம்.
------------
நிட்டை சமாதிகளின் வேற்றுமை இவை எனல்
முந்தியதோர் செய்யுண் முதனினைப்பா ரெல்லார்க்கும்
சந்தயமே யில்லைத் தகுநிட்டை - இந்த நூல்
வந்தித்தார்க் கன்றோ மருவுஞ் சமாதியதைச்
சந்தியார்க் கேதாகுந் தான். 37
இ - ள் : முந்திய ஒரு பாடற்கண் உள்ள முதலளவையை நினைப்பவர்களனைவர்க்கும் நிட்டை கை கூடும்; சந்தேகமே யில்லை; இந்த நூலை வந்தித்த பேர்க்குச் சமாதி கைகூடும்; இந்த நூலைச் சேராதவர்கட்கு என்ன பயன் விளையும் ? எ - று.
ஆகம அளவையை அறிந்தவர்கட்கு ஆகமஞானத்தால் நிட்டை கூடும். அனுபவம் கூறும் இந்நூலை உணர்ந்தவர்க்கு நிட்டையின் முதிர்ந்த நிலையாகிய சமாதி கைகூடும் என்பதாம்.
முந்தியதோர் செய்யுள் : அளவை ஒரு மூன்றாம் அறிபொரு ளுக்கு' என்பதில் முன்னதாகிய ஆகமம். ஆகமங்கள் - சிவ ஞானத்தைப் பயப்பிக்கும் இறைவன் நூல்கள். ஆகமங்களை ஓதின் நிட்டை உளதாம் என்பது.
சந்தயம் - சந்தேகம் என்பதன் மரூஉ.
இந்த நூல் - உபதேசவழி நின்று தெளிந்து அனுபவம் கூறும் இந்த அனுபவ நூல். வந்தித்தல் - வணங்கலும் வாழ்த் துதலும் ஆகிய சுவானுபவம் சேருதல்.
நிட்டை - மனம் புறம் போகாது அறிபொருளாகிய சிவத் தைப் பற்றியிருத்தல். சமாதி - அந்நிலை முதிர்ந்து தன்னுணர் வற்று ஆனந்தானுபவத்தில் அழுந்தியிருக்கை.
----------
உடற்பற்றற்றபோது சிவம் பூரணமாய் விளங்கும் எனல்
வாக்கு மனக் காய மருவா வறிவுமையல்
ஆக்கையுற்று நிற்பார்க்ககப்படுமோ - நீக்கமிலாக்
காயமறும் போது கருதுமரன் போலாவி
நேயமுறு மன்றே நிறைந்து. 38
இ - ள் : திரிகரணங்களையும் பொருந்தி ஆன்மா மயக்குந் தன்மையதான உடலைப் பொருந்தித் தேகமே நானென்று மயங்கி நிற்கும் போது சிவம் வெளிப்படுமோ? வெளிப்படாது. உரியகாலம்வரை நீங்காத உடல் வீழ்ந்த காலத்து, தியானப் பொருளாய சிவம் போல , ஆன்மா பூரணமாய் அறியப்படு பொருளாகிய சிவத்தைப் பொருந்தும் அன்றே ! என்றவாறு.
ஆன்மா உடலொடு சார்ந்து பொறி புலன்களின் வயப் பட்டு மயங்கி நிற்கும் போது சிவதரிசனம் சித்தியாது. உடலற உயிர் பரிபூரணமாய்ப் பரத்தைச் சாரும் என்பது கருத்து.
அறிவு - அறியுந்தன்மையதாகிய ஆன்மா. மையல் - மயக் கம். வாக்கு மனக்காயம் மருவா அறிவு என்பதற்கு இந்த முக் கரணங்களோடு கூடாது தானேயறியும் அறிவுவடிவான சிவம் எனலுமாம். மயக்கம் பொருந்திய உடலைப் பொருந்தியிருப் பார்க்குச் சிவம் புலப்படாது எனக் கருத்துக்கொள்க.
நீக்கமிலாக் காயம் என்றது உபசாரம். வினையுளவழியும் தளை நீங்காத உடல் என்ற அளவில் நீங்காமைக்கு எல்லை கொள்க.
கருதும் அரன் - என்றும் தியானப்பொருளாகவேயிருக்கும் உணர்வுவடிவான சிவம். நேயம்: ஞேயம் என்பதன் மரூஉ-.
-----------
மலபரிபாகம் பெற்றார் - பெறாதார் இயல்புகள்
யூகமனு போகமென வோரிண்டா மும்மலங்கள்
பாகப் படாதார்க்கும் பட்டார்க்கும் - ஆகமுறப்
பட்டார்க் குபாயம் பகர் நூலோ டூகித்தல்
விட்டார்க்கனுபோகம் வீடு. 39
இ-ள் : மும்மலங்கள் பரிபாகப்படாதார்க்கும் பரிபாகப் பட்டார்க்கும் உளவாய உபாயங்கள் யூகம் அனுபோகம் என இரண்டாம்; அவற்றுள் உடலொடு பொருந்திய பரி பாகம் உறாதார்க்கு ஞானம் பெறுதற்குரிய உபாயம் சிவாக மத்தோடு தம்மறிவான் ஊகித்தலாம்; தேகப்பற்றை விட்ட வர்க்கு உபாயம் அனுபோகம் ஆம்; அதன்பயன் வீடாம் என்றவாறு.
மலபரிபாகம் பெற்றார்க்கு அனுபவமும், பெறாதார்க்கு நூலறிவோடு யூகமும் உபாயங்களாம் என்பது கருத்து.
மலபரிபாகமாவது மலம் தனது சக்தி தேய்தற்குரிய துணைக் காரணங்கள் எல்லாவற்றோடும் கூடுதலாம். யூகம் - அநுமா னித்தறிதல் . கண்டதைத் துணையாகக் கொண்டு இஃது இவ் வாறாம் எனக் காணாததையும் தம்மறிவின் கற்பனையால் அறிதல்.
அனுபோகம் - தம்மறிவில் உணர்ந்து தெளிதல். ஆகவே அநுபவத்தான் விளைவது வீட்டின்பம் என்றாராயிற்று.
------------
கருவிகரணங்களைப் பொருந்தாதவரே சுகர் எனல்
முத்தியென மற்றொன்றைப் பற்றி முயல்வதெல்லாம்
புத்தியற்ற தன்றோ புகலுங்கால் - சித்தமுற்றங்
கோயாத துன்பத் துறுவிக்குந் தேகத்தைத்
தோயா தவரே சுகர். 40
இ - ள் : வீடுபேறென்று எதை எதையோ சொல்லி அதனை அடைய முயலுவதெல்லாம் மதியற்ற செயலாம்; சொல்லு மிடத்து மனம் பொருந்தியுள்ளதும், ஓயாத துன்பத்திற்கு உறைவிடமானதுமாகிய உடலைப் பொருந்தாதவர்களன்றோ சுகவடிவினர் என்றவாறு.
தேகப்பற்று விட்டவரே ஆனந்தவடிவமான ஆன்மாக்கள் என்றதாம்.
உடலில் பற்றுக்கொண்டு இரைதேடித்திரியும் அவர்கள் வீட்டின்பம் பெற்றவராகார் என்றவாறு.
---------
சிவஞானத்தைப் பொருந்திச் சிவமேயானவர் சுகர் எனல்
சன்மார்க்க மென்னத் தகுநூலை யோதியதன்
புன்மார்க்க மெல்லாம் புறம்பாக்கி - நன்மார்க்கம்
சார்ந்தறிவைச் சார்ந்து தகும்பூ ரணமாகத்
தோய்ந்தபோ ரன்றோ சுகர். 41
இ-ள் : சிவஞானத்தைப் பயக்கும் சிவாகம் நூல்களை ஓதி, அதனால் ஆன்மா பசுபோத முனைப்பால் சென்று பற்றும் புன்னெறியதனிற் செல்லும் புத்தியை அகற்றி, நல்ல நெறியா கிய உண்மைச் சரியையாதிகளைச் சார்ந்து, சிவஞானத்தைப் பொருந்தி, எங்கும் நிறைந்த பொருளாகச் சிவத்தைச் சார்ந் தவர்களே ஆனந்த வடிவினராவர் என்றவாறு.
சிவஞானத்தால் சிவத்தைச் சார்ந்து எங்கும் நிறைவான வர்களே முத்தியெய்தினோர் என்பது கருத்து.
சிவம் வேறற்று நின்று உணரும் அநுபவஞான மாத்திரை யான் விளங்குவதாகலான், அறிவைச் சார்ந்து தகும்பூரண மாகத் தோய்ந்த பேரே சுகர் என வலியுறுத்தப்பெற்றது.
-----------
சிவபூசைசெய்பவர்களே ஆனந்தவடிவரெனல்
ஆகமுற்றார்க் கெல்லாம் பொய் யங்கமுற்ற மங்கையர்கள்
போகமுற்ற தல்லாற் பொருளுண்டோ - மோகந்
தணிந்தானை நோக்கித் தகும் பூசை செய்யத்
துணிந்தபே ரன்றோ சுகர். 42
இ - ள் : உடலொடு பொருந்தி அவ்வின்பத்தையே பெரி தெனக்கருதி அலைபவர்கட்கு எல்லாம் நிலையாமையையுடைய உடலைப் பொருந்திய மாதர் போகத்தை அடைதலல்லாமல் வேறு அடையத்தக்க நிலையான பொருள் ஒன்று உண்டோ ? ஒரு பொருளினும் பற்றில்லாதானும், மயக்கவுணர்வற்றவனு மான இறைவனைச் சார்ந்து, தக்க சிவபூசையைச் செய்யத் துணிந்த பேர்களே சுகவடிவினர் என்றவாறு.
மாதர் போகத்தை விடுத்துச் சிவபோகத்தை விரும்பிச் சிவ பூசை செய்பவர்களே ஆனந்தவடிவினர் என்பது கருத்து.
ஆகம் - பொறிகளுக்கு விருந்தளிக்க உழைக்கும் உடல். பொய் அங்கம் - கருத்தினைக் கவரும் அழகாக , கண்ணாக, நகிலாக, இடையாக, அல்குலாக, தொடையாக இருந்து பின், மூத்து நெகிழ்ந்து சரியும் உடல் . மோகம் - கண்ட பொருளே கதி என மயங்கும் மயக்கஞானம். அது இறைவற்கு என்றும் இன்றாதலின், மோகம் தணிந்தானை என்றது.
சிவபூசை செய்தற்கு உளவாம் இடையூறுகள் பலவாதலின் பூசை செய்யத் துணிவுவேண்டும் என்பார் துணிந்தபேரன்றோ சுகர்' என்றார்.
----------
உபதேசவெண்பா சிவகுருவின் திருமேனி எனல்
செஞ்சொலா னின்னுரையைச் சேர்த்தேனறிவுடைமை
நெஞ்சடைவ தாக நினைந்தருளாஞ் - செஞ்சடைசேர்
மெய்யா வுபதேச வெண்பாவே நீயாமென்
ஐயா நமச்சிவாயா. 43
இ-ள் : என் தலைவனே! நமசிவாய குருநாதனே! தேவரீ ருடைய திருவாக்காகிய உபதேசங்களைச் சிவஞானம் அடியேன் மனத்துள் பொருந்துவதாக எண்ணிச் செஞ் சொற்களினாலே சேர்த்து ஒரு மாலையாகச் சமைத்தேன்; சிவந்த சடையை யுடைய உண்மைப்பொருளானவனே! உபதேச வெண்பாவே தேவரீர் என்றவாறு.
அடியேற்குச் சிவஞானம் சுரக்க வேண்டித் திருவருளே யான நின் உபதேசங்களைச் செஞ்சொற்களால் பார்த்தேன் ஆதலால் இவ்வுபதேச வெண்பா தேவரீர் திருவுருவேயாம் என்பது கருத்து.
செஞ்சொல், ஆக்கச்சொல், குறிப்புச்சொல் எனும் சொல் வகை மூன்றனுள் நேரிய பொருளை உணர்த்தும் சொல் செஞ் சொல்லாம். சிவஞானத்தைச் செஞ்சொல்லாலன்றி, ஆகுபெயர் முதலிய ஆக்கச்சொல்லானும், மறைத்து மொழிகிளவி முதலிய வாகிய குறிப்புச்சொல்லானும் உணர்த்துதல் மரபன்றாதலின் செஞ்சொலால் சேர்த்தேன்' என்றருளியவாறாம்.
அறிவுடைமை என்றது சிவஞானம் பெற்றமையாம். அது நெஞ்சடைதலாவது மலரின் கண் மணம் போலச் சீவனுக்குள் சிவஞானம் கமழ இருத்தல்.
சிவகுருநாதனே உபதேசமாம் என்பதனைத் 'தெளிவு குரு வின் திருவார்த்தை கேட்டல், தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே" என்பதனானும் தெளிக.
-----------
நூலருளிய சிவகுருநாதன்
உபதேச வெண்பா நாற் பத்து மூன் றுய்யும்
உபதேச மாக வுரைத்தான் - உபதேசம்
பண்ணா வடு துறையிற் பண்ணம் பலவாணன்
கண்ணா ரமுதாய்க் கலந்து. 44
இ - ள் : உபதேசம் புரிகின்ற திருவாவடுதுறைக்கண் எழுந்தருளியுள்ள அழகே வடிவான ஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள், அடியேனுடைய கண்ணிறைந்த அமுதமாய் என் னுடன் கலந்திருந்து உபதேசவெண்பா நாற்பத்து மூன்றையும் அடியேன் உய்தற்குரிய உபதேசவுரையாக அருளிச்செய்தான் என்றவாறு.
காட்சிக்கு இனியனாய், கண்ட கண் நிறைந்த இன்பை எய்துதலின் கண்ணார முதாய்' என்றதாம்.
-------------
இன்னம் பெறுமே யெமக்கிவ் விருசெவியும்
மன்னம் பெறுமம் பலவாணன் - பொன்னா
வடுதுறைமேற் செய்த வுபதேச வெண்பாத்
தொடு துறையைக் கேட்கையினாற் சூழ்ந்து. 45
இ-ள் : நிலைபேற்றினைப்பெற்ற அழகிய அம்பலவாண தேசிகர், பொன் போலும் போற்றத்தக்க திருவாவடுதுறைக் தண் எழுந்தருளி, எனக்கு வழங்கிய உபதேச வெண்பாவாகிய ஞானநெறியினைத் தொடுகிற துறையை ஆய்ந்து கேட்கையினால் எமக்கு இவ்விரு செவிகளும் மீளவும் இப்பேற்றினைப்பெறுமே என்றவாறு.
மீட்டும் கேட்கும் திருவருள்வாய்ப்பினை எய்துமோ என்று வியந்து கூறியவாறு.
உபதேச வெண்பா முற்றியது
--------------
உபதேச வெண்பா செய்யுள் முதற்குறிப்பகராதி
(வெண்பா எண்)
அகளத்தைமற்ற 16
அங்கமேபொல்லா 8
அரியைப்பதியென் 5
அளவையொரு 36
அறியும் பகுதி 30
ஆகமலபாகமே 7
ஆகமுற்றார்க்கெல் 42
இயல்பு பொதுவா 19
இன்னம் பெறுமே 45
உடற்பகுதி மற்ற 17
உபதேசவெண்பா 44
உரைத்தகருணை 1
எனதென்றுமில்ல 10
கற்பிப்பதெல்லாம் 34
காயமே தானாய் 12
கேட்டலொரு நான் 20
சத்திநிபாதஞ் 23
சமயவிசேடந் 24
சமயம் விசேடம் 22
சரியைகிரியை 21
சன்மார்க்கமென்ன 41
சாதித்தயோகஞ் 25
சாயத்தையேற்ற 14
சீவிக்கும்காயஞ் 15
சுருதிகுருவாக்கு 35
செஞ்சொலானின் 43
சொல்லுஞ்சிவாகம 29
தீக்கைதனக்குற்ற 32
தேமருவுகாமச் 6
நீதித்தரும் 28
நீரரவுமந்திரத் 4
பற்றற்றகண்ணே 9
பாதத்துக்கேற்ற 31
புற்றரவேயாடும் 3
பூசைதியானம் 33
போதித்த காயம் 27
முத்திக்கு மூல 2
முத்தியெனமற் 40
முந்தியதோர்செய் 37
யானென்றகாய 11
யானென்னுங்காய 13
யூகமனுபோக 39
யூகித்திதனை 26
வாக்குமனக்காய 38
வாதித்தகாயத்தை 18
------------------
This file was last updated on 21 June 2021.
Feel free to send the corrections to the webmaster.