பண்டாரசாத்திரம் சன்மார்க்க சித்தியாரும்
சிவாச்சிரமத்தெளிவும் (உரையுடன்)
ஸ்ரீ அம்பலவாணதேசிகமூர்த்திகள்
paNTAra cAttiram - canmArka cittiyArum,
civAcciramat tElivum (with commentaries)
by ampalavANa tEcikar of tiruvAvaTuturai AtInam
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Archive.org/Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பண்டாரசாத்திரம் சன்மார்க்க சித்தியாரும்
சிவாச்சிரமத்தெளிவும் (உரையுடன்)
திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகமூர்த்திகள்
Source:
பண்டாரசாத்திரம் சன்மார்க்க சித்தியாரும்
சிவாச்சிரமத்தெளிவும் (உரையுடன்)
திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகமூர்த்திகள்
அருளிச்செய்தன
திருவாவடுதுறை ஆதீனம் வெளியீடு எண் 142.
ஒன்பதாவது சித்தாந்த சைவ மாநாட்டு மலர்
சார்வரி புரட்டாசி விசயதசமி
திருவாவடுதுறை ஆதீனம்
30-9-1960
விலை 5-00
ஸ்ரீ நமசிவாயமூர்த்தி அச்சகம் - திருவாவடுதுறை
-------- -
உ
சிவமயம் திருச்சிற்றம்பலம்
குருமரபு வாழ்த்து
கயிலாய பரம்பரையில் சிவஞான
போதநெறி காட்டும் வெண்ணெய்
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர்
மெய்ஞ்ஞான பானு வாகிக்
குயிலாரும் பொழில் திருவா வடு துறைவாழ்
குரு நமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு
நீடூழி தழைக மாதோ.
- ஸ்ரீ மாதவச் சிவஞானயோகிகள்.
----------------
சிவமயம்
முகவுரை
கடவுள், உயிர், உலகம் என்ற முப்பொருள்களில் இயல்பு களையும், அவைகளில் ஒன்றோடு ஒன்றற்குள்ள தொடர்பையும் உள்ளவாறு உணர்ந்து. உண்மையின்பத்துறையில் என்றும் பெயராமே வாழும் பெற்றியை, சிற்றறிவும் சிறுதொழிலும் உடை யவர்களாகிய நாமே உணர்ந்து கொள்ளுதல் முடியாது. அதற் காக, பரம கருணாநிதியாகிய சிவபெருமான், தாமே எளிவந்து, தக்க தவசீலர்க்கு முதற்கண் உணர்த்தி, அவர்கள் வாயிலாக ஞான பரம்பரையை இந்நிலவுலகத்து நிறுவியருளினர். இந்த உண்மையை ''ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவு கொண்டு, காரணன் அருளானாகில் கதிப்பவர் இல்லையாகும்" என்னும் சிவ ஞானசித்தியார் திருவிருத்தமும் விளக்கியருளும்.
இவ்வண்ணம் கருணையுருக்கொண்ட பரமகாரணராகிய ஸ்ரீகண்ட பரமசிவம் முதல் பரஞ்சோதி முனிவர் ஈறாக உள்ள குருமுதல்வர் சந்தானம், தெய்வ பரம்பரையாகத் திருக்கயிலையி லிருந்து திருவெண்ணெய் நல்லூருக்குக் கால்கொண்டு வந்தது. இது அகச்சந்தானம் என்றும் அழைக்கப்பெறும். தென்றிசை நோக்கி எழுந்தருளிய பரஞ்சோதி முனிவர் என்னும் ஞான மேகம், திருவெண்ணெய் நல்லூர் என்னும் ஞானபரிபாக சிவானுபவத் தண்பொழிலைக்கண்டு அங்கேயிறங்கி, தெய்வபரம்பரையில் வந்த ஞானவாரியை அப்பொழிலில் பொழிந்தது. மெய்கண்ட தேவரா கிய வேளாளர், பகீரதன் கொண்டுவந்த ஆயிரமுகத்தோடு கூடிய கங்கையைச் சடையில் அடக்கி ஒருவழிக்கொளச்செய்த சிவபரம் பொருளைப்போல, பரந்துபட்ட சிவஞானக்கங்கையைத் தம் மன மலையில் தேக்கி, பொதுவதிகாரம் உண்மையதிகாரம் என்னும் இரண்டு ஆறுகளாக வெட்டி, அவற்றினின்றும் பிரமாணவியல் இலக்கணவியல் சாதனவியல் பயனியல் என்ற சிற்றாறுகளைப் பிரித்து, அவற்றினின்றும் மும்மூன்று சூத்திரங்களாகப் பன்னிரு சூத்திரங்களாகிய கால்களையமைத்து, பரிபாகிகளின் உள்ளமா திய வயலிற் பாய்த்திச் சிவஞானப்பயிர் தழையச் செய்து சிவ போகம் விளைவித்தனர்; தம்மைப்போலவே ஞானம் வளர்க்கும் உழவர்களையும் நல்கியருளினர். அங்ஙனம் வந்த பரம்பரையே மெய்கண்டார் முதல் உமாபதிசிவ மீறாகவுள்ள உபதேசப்பரம்பரை. இதுவே புறச்சந்தானம் என்று அழைக்கப்படுவது.
உமாபதிசிவத்தினிடம் உபதேசம் பெற்றவர் சீகாழி மச்சுச் செட்டியாராகிய அருணமச்சிவாயதேசிகர். அவரிடம் சித்தர் சிவப்பிரகாசரும், அவரிடம் மூவலூர் நமசிவாயமூர்த்திகளும் ஞானோபதேசம் பெற்றனர். மூவலூர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளே திருவாவடுதுறை ஆதீனத்து முதற்குரவர் ஆவர். இவ்வண்ணம் புறச்சந்தானத்திலிருந்து உபதேச பரம்பரை பெருகித் திருவா வடுதுறை ஆதீனம் நிலைபெறுவதாயிற்று.
ஆதீனக் குருமுதல்வர்களில் மூன்றாம் பட்டத்து எழுந் தருளியிருந்தவர்களே இந்நூல்களை யருளிச்செய்த ஸ்ரீ அம்பல வாண தேசிகமூர்த்திகள். இவர்கள் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளிடம் நேரே ஞானோபதேசம் பெற்று, ஞானபீடாதிபதியாக விளங்கிய வர்கள். இவர்கள் காலத்து, தென்றமிழ் நாட்டில் சைவாசார் சில முடைய இல்லறத்தார்களும் நைட்டிகர் துறவிகள் முதலிய அனை வர்க்கும் சிவதீட்சை முதலியன செய்விக்கும் தொழிலுடையவராக இருந்தனர். அவர்களிடம் உபதேசம் பெற்றோரும் குருத்துவம் வகிக்கத் தொடங்கினர். ஆதலால் உண்மையான சிவாநுபவ ஞானநெறி பிறழ்வதாயிற்று. அதனைத்திருத்தி மீட்டும் தமிழ் நாட்டை உய்யவைக்கும் பெரும்பணிக்காகவே சன்மார்க்கசித்தி யார், சிவாச்சிரமத்தெளிவு என்ற நூல்களையருளிச்செய்தனர்.
சன்மார்க்கசித்தியார் :
சைவசித்தாந்தத்துட் கூறப்படுகின்ற ஞானநெறி, சரியை கிரியை யோகம் ஞானம் எனச் சரியாதிகளோடு ஒருங்குவைத்து எண்ணப்படும் ஞானநெறி அன்று; அதனிற்சிறந்தது; ஏனைய சமயத்தார் கூறுகின்ற யோகநெறியால் எய்தமுடியாத சிறப்பினை யுடையுது என விதக்கின்றது. இந்நூற்கருத்தை, -
''மோகமேயாதி மூன்றையுங் கடிந்த
முனிவர்செல் நெறியின் தியல்பும்
விதிகொள்சோபான வகையும் மெய்ச்செறிவும் -
விதிப்பது மார்க்க சித்தியதே"
எனவரும் கொளுப்பகுதியால் நன்கு உணரலாம்.
இந்நூல் இருபத்தெட்டு வெண்பாக்களால் இயல்வது. முதல் வெண்பா அவையடக்கம் கூறுகிறது. என் அறியாமையை யானே தீர்த்துக்கொள்ளும் புத்தியில்லாதவன்; ஆயினும் மரபில் வந்த பெரிய ஞானியைப்போல அடியேனும் ஞான முதிர்ச்சி பெறக்கேட்கிறேன்; ஆசாரியவரியரே ! அருளிச்செய்யவேண்டும் என்று தொடங்குகிறது. பின், கண்ணை மூடிக்கொண்டிருந்தால் மட்டும் அது தவமாய்விடுமா? அகண்ட பரிபூரணமான சிவ குருநாதனைத் தியானிக்கும் போது வெளிப்பட்டு, கண் திறந்தால் அந்நியமாவது ஏன்? கண் திறந்தால் பிரபஞ்சஞானம் பற்று மெனக் கண்ணை மூடிக்கொண்டால் மட்டும் பற்றாதா? நூலாய்வா? உபதேசமா? எது சிவனருளைப்பெறுதற்கேற்ற உபாய நிட்டையாகும்? அடியேன் வந்து வணங்குகின்றபோது என்னோடு ஒன்றா யும், நீறிடும் போது வேறாயும் தேவரீர் இருப்பதன் காரணம் என்ன? தேவரீரைச்சார்தல் ஒன்றாலேயே ஞானம் சித்திப்பதாயிருக்க, சுழுமுனை நாடித் தியானத்தால் எச்சிலை அமிழ்தம் என்று எண்ணி உண்பதா ஞானவாயிலாகும்? என முதல் ஏழு வெண் பாக்களால் தமது ஞானாசாரியமூர்த்தியைப் பார்த்து வினாவுவது போலத் தடைகளை எழுப்பி , இவை ஞானவாயில்களாகா; ஞானா சாரியனையடைந்து, அவர் திருக்கரத்தால் நீறிடப்பெற்று அவரை வணங்கி, அவரைத் தியானித்து, 'இவ்வுடல் பிராரத்தநுகர்ச்சிக் காக இறைவனால் உதவப்பட்ட கருவி' எனத் தன்னின் வேறாக உணர்ந்து, சிவபரம்பொருளையே எண்ணாமலெண்ணியிருத்தல் ஞானமாம் என்பதுணர்த்தப்பெறுகிறது.
எட்டு முதல் பதினான்காம் பாடல் முடிய, சன்மார்க்கமென்னும் ஞானமார்க்கம் ஒன்றேயாம்; அது ஏனைய பல சமய நெறிக ளோடு ஒருங்குவைத்து எண்ணப்படுவதன்று; அது உடலின் வேறாக உயிர் உளது என்றறிவதாலன்றிக் கண்மூடித் தவத்தால் காணக்கிடைப்பதொன்றன்று என்ற உண்மையைப் பலவேறு திருட்டாந்தங்களில் வைத்து விளக்கிச் செல்கின்றது.
பதினைந்தாம் பாட்டு, சரியாதி நெறியில் நின்றோர்க்குச் சாலோகம் முதலிய பதமுத்திகளே சித்திக்கும்; சற்குருவாயிலாக நூலோதி உபதேசமும் கேட்பார்க்கே ஞானம் சித்திக்கும் என் கின்றது. அடுத்த பாடல்கள் பதின்மூன்றும் , உபாய் நிட்டை உண்மை நிட்டையியல்புகளை விளக்கி, உண்மை நிடடை கூடினால் சிவானந்தசாகரத்துள் அழுந்தி இன்பமயமாயிருக்கலாம் என்று அறிவிக்கின்றன.
இவ்வாறு இந்த நூல், உபாய நிட்டையாகிய கண்மூடிக் கருத்து மூடாமல் செய்யும் தியானயோகத்தாற்பயனில்லை; அதனைப் பயக்கின்ற கிரியைகளும் பயன்தரா; அதிற்புகுத்துகின்ற ஆசாரி யர்களும் உண்மையாசாரியர் ஆகார் என உணர்த்தி, உண்மை நிட்டையில் ஆசாரியன் இருத்துவன்; அது பெற்றார் ஆனந்தக் கடலினின்றும் நீங்கார்; அதனுள்ளே இன்பவடிவாய் என்றும் வீற்றிருப்பர் என்று கூறுகின்றது.
இந்நூலின் முதலிலும் இறுதியிலும் உள்ள வெண்பாக்கள் இரண்டும் சிறப்புப்பாயிரமாக அமைந்தன. இவை இரண்டும் இந்நூலைப் பயின்ற ஒருவராலோ, அல்லது இந்நூலாசிரியரின் மாணாக்கர் ஒருவராலோ இயற்றப்பெற்றிருத்தல் வேண்டும்.
சிவாச்சிரமத்தெளிவு :
ஆச்சிரமம் - நிலை. சிவாச்சிரமம் - சிவத்தையறிந்து அநுப வித்தற்காக ஆன்மாக்கள் மேற்கொள்ளத்தக்க நிலை. சிவாச் சிரமத்தெளிவு, அந்நிலையினை அடையும் நெறி யாது? அதற்குத் துணை செய்யத்தக்க ஆசாரியர் யார்? அந்நிலை பெற்றார் மேற் கொள்ள வேண்டிய கடமைகள் யாவை? என்ற உண்மைகளை விதிமுகத்தானும் மறைமுகத்தானும் தெளிவுப்படுத்துவது. சிவாச் சிரமத்தெளிவு என்னும் காரியத்தின் பெயர், அதனைச் செய்தற்குக் கருவியாகிய நூலுக்கு ஆயினமையின் காரியவாகுபெயராம். இது காப்பு முதலாக எழுபது வெண்பாக்களையுடையது. தீட்சை முறைகளையும், அது செய்விக்கும் தகுதியுடையார் இயல்புகளையும், தீட்சை பெறுவார் இயல்புகளையும், தீட்சையின் பயன் வேறுபாடு களையும் தடை விடைகளோடு பல நூல்களால் உண்டாகும் மலைவு களைப் போக்கி, உண்மையை வலியுறுத்திச் செல்லுகிறது.
இந்நூலால் விளங்கும் தீட்சை முறைகளாவன : தீட்சை, சைவ நூல்களைப் படிப்பதற்கும், அவற்றிற்கூறியாங்கு ஒழுகுவதற் கும் தகுதியுண்டுபண்ணுவது. சிவஞானசுவாமிகள் அருளிய 'வேதம் ஓதுதற்கண்ணும், வைதீக ஆசாரத்தின் கண்ணும். உப நயனப்பேறுடையார்க்கன்றி அதிகாரமின்மை போலச் சைவாக மம் ஓதுதற்கண்ணும் , சைவாசாரத்தின் கண்ணும் சிவதீக்கைப் பேறுடையார்க்கன்றி அதிகாரம் இல்லையெனக்கொள்க'' என்னும் மாபாடியச் சிறப்புப் பாயிரப்பகுதியான் இதனை அறியலாம். அன் றியும், ஸ்காந்தம் காசிகாண்டத்தில் அத்துவசுத்தியாகிய தீக்கை யில்லாமல் வீடுபேறு அடைய விரும்புபவன், கோலின்றி நடக்க விரும்பும் குருடனைப்போலவும், தோணியின்றி ஆற்றைக்கடக்க விரும்பும் அறிவிலி போலவும் ஆவன் எனக்கூறுவதும் காண்க. தீக்கை, பாசநீக்கமும் சிவத்துவவிளக்கமும் செய்விப்பதாகிய சிவ சத்திரூபமானது. இது, மலபரிபாகம் பெற்ற நால்வகை வருணத் தார்க்கும், மந்தன், குருடன், செவிடன், ஊமை , பெண்கள் ஆகிய எல்லாருக்கும் உரித்து. இவ்வண்ணம் பரிபாகம் பெற்ற அனை வருக்கும் உரியதாயினும், பரிபாக விசேடத்தால் தீட்சையுள்ளும் வேற்றுமை உண்டு. அது இருவகைப்படும் பெளதிக தீட்சை, நைட்டிக தீட்சை என. அவற்றுள், பெளதிகம், அறம் பொருள் இன்பமும், விடும் கருதினவர்க்குச் செய்யப்படுவது. அதன்கண் சாதிபேதங்களும், பிரமசாரி கிருகத்தன் வானப்பிரத்தன் என்ற நிலைவேறுபாடுகளும் உண்டு. நைட்டிகதீட்சையாவது, சாதி பேதம் கருதாது நைட்டிகப் பிரமசாரிகளுக்கும் , நைட்டிகப்பிரம சாரியாயிருந்து துறந்தவர்கட்கும் செய்யப்படுவது.
அது நிராதாரம், சாதாரம் என இருவகைப்படும். அவற் றுள், நிராதார தீட்சையாவது, விஞ்ஞானகலர் பிரளயாகலர். களாகிய ஆன்மாக்கட்கு, தீவிரம் தீவிரதரம் என்னும் சத்திநி பாதத்தால், பரசிவம், தானே முன்னின்று செய்வது. அங்ஙனம் செய்யும்பொழுது விஞ்ஞானகலராகிய ஆன்மாக்களுக்கு உயிர்க் குயிராய் உள் நின்று தீட்சை செய்வர். பிரளயாகலருக்குச் சதாசிவ மூர்த்தமாய் முன்னின்று அருள் செய்வர். இவற்றுள் முன்னையது தீவிரதரசத்திநிபாதத்தால் வீடுபேறே உதவுவது. பின்னையது தீவிரசத்தி நிபாதத்தால், அனந்தேசுவரர் முதலிய பதவிகளை அளிப்பது.
சாதார தீட்சையாவது மூவகை மலங்களோடும் கூடிய சகலான்மாக்களுக்கு, மந்த்தரம் மந்தம் தீவிரம் ' தீவிரதரம் என்னும் நால்வகைச் சாத்தி நிபாதத்தால் ஆசாரிய மூர்த்தியை அதிட்டித்து நின்று செய்யப்பெறுவது. அது நயன தீட்சை, பரிசதீட்சை, வாசகதீட்சை, பாவனாதீட்சை , தாந்திரதீட்சை, யோகதீட்சை, அவுத்திரிதீட்சை, சாம்பவதீட்சை முதலியனவாகப் பலவேறுவகைப்படுவதாம். இவற்றுள் நயன தீட்சை முதலிய ஆறும், அவுத்திரிதீட்சைக்கு உரியரல்லாதார்க்குச் சுதந்தரமாகச் செய்யப்படுவனவும் அவுத்திரிதீட்சைக்கு அங்கமாகச் செய்யப் படுவனவும் என இருவகைப்படும். அவற்றுள் சிறந்தது அவுத் திரிதீட்சையேயாம். அவுத்திரிதீட்சை சபீசம், நிர்ப்பீசம் என இருவகைப்படும். சபீசமாவது, சைவ ஒழுக்கத்தில் நிலைபெற் றோர்க்கு அவற்றை நிலை நிறுத்தி மற்றவற்றைச் சுத்தி செய்வது. அது சிவதருமிணி , . உலகதருமிணி என இருவகைப்படும். நிர்ப்பீசமாவது, சைவாசாரம் அனுட்டிக்கும் வன்மையில்லார்க்கு அதனை ஓமத்தால் சுத்திசெய்து செய்யுந்தீக்கை.
சபீசதீட்சை பெற்றோர் சாதகாசாரியரும் ஆசாரியருமாக இருந்து, நாட்பூசை, சிறப்புப்பூசை, காமியப்பூசை ஆகிய இவை அனைத்தும் செய்தற்குரியவர்களாவார்கள். அவர்களுக்கு அவ் வதிகாரத்தைக் கொடுப்பது சபீச நிர்வாண தீட்சையாம். இதற்கு அங்கமாகச் செய்யப்படுவன சமய விசேடங்களாம். இம்மூன்று தீட்சைகளும் அதிகாரம் வழங்குதலின் சாதிகாரி எனப்படும்.
நிர்ப்பீசதிட்சை பெற்றார்க்கு , நாட்பூசையிலன்றிச் சிறப்பி லும் பயன்கருதிச் செய்யப்படும் கிரியைகளிலும் அதிகாரம் இல்லா மையால், நிர்ப்பீச நிருவாணமும் சமய விசேடங்களும் நிரதி காரை என வழங்கப்படும். இவ்விருதீட்சைகளில் ஒவ்வொன்றும் கிரியாவதி, ஞானவதி என்று இவ்விருவகைப்படும்.
கிரியாவதியாவது குண்டமண்டலங்களைப் புறத்தேயிட்டுக் கிரியை செய்வது. இது உலகதருமிணிக்ரு உரியது. உலக தருமிணியாவது, லௌகீக வைதீக சிவதருமங்களோடு கூடியதும், அதருமம்மாத்திரம் சோதிக்கப்பெற்றதும், சிகாச்சேதமற்றதும், தேகாந்தத்தில் அவ்வவ்வான் மக்களுக்கு இஷ்டமான புவனங்க ளில் அணிமா முதலிய சித்திகளோடு உறுவிப்பதுமாகக் கிருகத் தருக்கு உரியது.
ஞானவதியாவது, குண்டமண்டலங்களை மனத்தால் கற் பித்துக்கொண்டு பாவனையால் கிரியை செய்வது. அப்படிச் செய் யுங்கால் நாபியே குண்டம்; அங்குள்ள அக்கினியே அக்கினி; விந்துத்தானத்தில் ஊறும் அமிழ்தமே நெய் ; இடையும் சுழு முனையுமே சிருக்கு சிருவங்கள். இப்படிப்பாவித்து மனோபாவனை யால் செய்யப்படுவது.
திட்சை, சமயம் விசேடம் நிருவாணம் என மூவகைப்படும். அவற்றுள் சமய தீட்சையாவது, மாணாக்கனைச் சைவாசாரத் திற்கு அதிகாரியாக்கச் சம்பாத ஓமத்தால் சுத்திப்படுத்துவது. விசேட தீட்சையாவது, சமய தீட்சை பெற்ற மாணாக்கனது ஆன் மாவை வாங்கி, குண்டத்தில் ஆவாகிக்கப்பட்ட வாகீசுவரியின் கர்ப்பத்தில் வாகீசுவரன்வாயிலாகச் செலுத்திக் கிரியைகளை மும்மூன்று ஓமத்தால் நிறைவேற்றி, குண்டத்தினின்றும் சிஷ்ய னுடைய ஆன்மாவை மீளவாங்கி, மாணாக்கனுடைய இதயத்தில் தாபித்துச் சிவபுத்திரனாக்கி, சிவபூசைக்கும் சிவயோகத்திற்கும் சிவாகம பாராயணத்திற்கும் அதிகாரியாக்குவது.
நிருவாண தீக்கையாவது உயிர்கள், மனம் வாக்குக் காயங் களால் இயற்றும் கன்மங்களுக்கு இடமாகிய அத்துவாக்களின் இயல்பையும், அவை ஒன்றினொன்று அடங்கும் முறைமையையும் அறிந்து, மந்திரம் முதல் ஐந்து அத்துவாக்களையும் ஐந்து கலை களில் அடக்கி, அவற்றை ஒவ்வொன்றாகச் சோதித்துக் கலைகளி லிருந்து நீங்கிய மாணாக்கனதான்மாவைப் பிராசாதக்கிரமத்தால் பரசிவத்தில் ஒடுக்கி , அவ்வான்மா பசுபோதமடங்கிப் பதிபோதம் மிக்கு விளங்கும்படிச் செய்வது. இதனால் சிவாகமங்களின் உண் மைப்பொருளை நன்கு ஆராய்வதற்கு ஏற்ற வன்மை சீடனுக்கு விளைகிறது; அதனாற் சிவஞானம் பிரகாசிக்கிறது; சிவம் விளங்கு கிறது; வாசனா மலமும் தாக்காது அகலுகிறது; வீடுபேறு அடைகிறான். இந்தத் தீட்சை, சத்தியோ நிருவாணம் என்றும், அசத்தியோ நிருவாணம் என்றும் இருவகைப்படும்.
- சத்தியோ நிருவாணம், அதிதீவிர சத்திநிபாதம் உடையவ ருக்குத் தீட்சை செய்தமாத்திரத்தில் பொருளின் சிறப்பியல்புகளை உணர்த்தி உடம்போடு அற்று நீங்கச் செய்வது. ஆதீனத்து இரண்டாம் பட்டத்து எழுந்தருளியிருந்த ஸ்ரீ மறைஞான தேசிக மூர்த்திகள் அடைந்த நிலை இது.
அசத்தியோ நிருவாணம், மந்தம் முதலிய சத்திநிபாதம் உடையார்க்குத் தீட்சை செய்த பின்னர் எடுத்ததேகத்திற்கு உரிய பிராரத்தம் கழியும் வரையும் உடம்போடு கூடியிருந்து, உடம்பு நீங்கிய பின்னாவது, பதமுத்திகளைப் பெற்றுக் காலங் கழித்தாவது முத்தியடையச் செய்வது. இத்தீட்சையே, உலகதருமிணி சிவதரு மிணி, என இருவகைப்படுவதாம். இவையே பௌதிகமெனவும் நைட்டிகமெனவும் கூறப்படுவன.
இந்த மூன்றற்கும் மேலானது ஆசாரிய அபிடேகம். இது திவிரதர பரிபாகமுற்றவர்க்கு , பிறரையும் ஆட்கொள்ளுதற்குரிய அதிகாரத்தை வழங்குவது. அபிடேகம் பெற்றவர்கள் பிரணவம் முதலிய மந்திரங்களுக்கும், ஸ்தாபனம் முதலியன செய்தற்கும், தீட்சை செய்தற்கும் உரியவராவர்.
இவற்றின் விரிவும் நுணுக்கமான கருத்துக்களுமே இந்த நூலுள் சொல்லப்படுவன. அவற்றுள்ளும் சிறப்பாக உலக தருமிணிகளாகிய கிருகத்தர்களுக்குக் குருத்துவம் இருப்பினும் அதனைக்கடைபோகச் செய்யமாட்டாமைக்கேதுவாய தடைகளைப் பலவெண்பாக்களால் அறிவிக்கின்றார்கள். ஞான தீட்சை பெற்ற நைட்டிக்கத் துறவிகளாகிய சிவதருமிணிகளின் உயர்வை விளக்கி அவர்களையே ஆசிரியர்களாகக் கொள்க என்று அறிவிக்கின்றது.
இந்நூலை அருளிச்செய்தவர்கள், திருவாவடுதுறை ஆதீ னத்து மூன்றாம் பட்டத்து எழுந்தருளியிருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகமூர்த்திகள் ஆவார்கள். சிவாகம நூல் தேர்ச்சி, அருளனு பவம் ஆகிய இவைகள் மிக்கிருந்தமையால், தமது அனுபவத்தை ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் அவரவர்கள் பரிபாகத்திற்கேற்ப நூல்களாகவும், உரையாகவும், அட்டவணையாகவும் அருளிச்செய் தார்கள். இவர்களால் புறச்சமயத்தினின்றும் எடுத்தாளப்பட்ட ஞானக்குழவி, உலகுடைய நாயனாராகிய பெரியபிள்ளை என்பார். தேசிகமூர்த்திகள் பரிபூரணம் அடைந்த நாள் சித்திரைத் திங்கள் அவிட்ட நட்சத்திரமாகும். இவர்கள் அருளிச்செய்த நூல்களே சன்மார்க்க சித்தியாரும், சிவாச்சிரமத் தெளிவும் பிறவும். இவர் களுடைய காலம் சற்றேறக்குறைய கி. பி. 1475 ஆகலாம். இந் நூல்கள் பண்டாரசாத்திரத்துள் , தசகாரியங்களை அடுத்து அமைந்துள்ளன. சில ஏடுகளில், முன்பு சிவாச்சிரமத்தெளிவும், அடுத்துச் சன்மார்க்கசித்தியாரும் அமைந்துள்ளன. அவை ஏடு எழுதுவோராலும், கோப்போராலும் நேர்ந்த பிழைகளுமாகலாம். தனித்தனியான நூல்களின் கோவையில் முறைவைப்பையறிவது யாங்ஙனம் !
''இந்த நூல்களும், பண்டார சாத்திரம் என்ற பெயரோடு சீர்காழி பெருநிலக்கிழார் சதாசிவமுதலியார் அவர்களால் 1926ல் மூலம் மட்டும் அச்சிடப்பெற்றுள்ளது. அவற்றுள்ளும் பலபாடல் க்ளுக்கு உரை காண்பது மிக அரிதாக இருந்தது. திருத்தமான பாடங்கள் தேவைப்பட்டன. ஸ்ரீ-ல -ஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருவருளாணையின் வண்ண ம், ஆதீனத்துச் சரசுவதி மகாலிலிருந்து இரண்டு ஏடுகள் ஒப்பு நோக்கக் கிடைத்தன. அவற்றால் பெற்ற திருத்தங்கள் பல.
பண்டாரசாத்திரங்கள் அனுபவ நூல்கள்; அருள் விளக்க முடையார்க்கு அவரவர்கள் நிலைக்கு ஏற்பப் பெரும் பொருள் விளங்கும். பெறுதற்கரிய மணி ஒன்றேயாயினும், அவரவர்களின் பொருள் நிலை இரத்தின பரீட்சையறிவு நாட்டின் சூழல் பாட வேளை முதலியவற்றின் சூழலுக்கேற்ப மதிப்பு உயர்வதுபோல், அடியேனுடைய அறிவு நிலைக்கு ஏற்பப் பதப்பொருள வாத்து உரைக்கப்பெறுகின்றது. இவற்றில் நலங்கள் காணப்படுமானால் அவை சிவஞானசித்தியார் , மாபாடியம், கிரியாதீபிகை, அகோர சிவ்பத்ததி முதலியவற்றால் பெற்றனவாகும். சைவசித்தாந்த ஞானசாத்திரங்கள் தமக்கே உரியவை எனப் பன்னூற்பயிற்சியும் தொல்லாகமத் துணிவும் நோக்காது, துணிந்து உரைவகுக்க முற்பட்டேனல்லேன்; பல்காற்பழகியும் தெரியா உளவேல் எந் நூல் விதியோ என்றே எண்ணுக என்ற ஆசிரிய வசனத்தை அகங்கொண்டு திருந்தி வருகிறேன்; திருத்தியும் வருகிறேன். ஆதலால் இவ்வுரை இந்நூற்கு இன்றியமையாத காண்டிகை போல்வதன்றி விருத்தியாகாது. விருத்தி இயற்றுவதற்கேற்ற திருவருள்வாய்ப்பினையும், ஞானசாதனங்களையும் சிவஞானப் புலமாகிய திருவாவடுதுறை ஆதீனம் உதவி வருகிறது. அவை காலத்தால் வளர்ந்து விளக்கம் பெறும்.
இப்போது ஞானபீடத்தில் இருபத்தோராவது பட்டத்து - எழுந்தருளி அருட்செங்கோல் செலுத்திவரும் ஸ்ரீ -ல - ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகசுவாமிகள் அவர்கள் அடியேனும் அருள் நூல் கற்றுத் தெளிந்து தேறுதல் வேண்டும் என்ற குறிப்பால் இட்ட கட்டளையை ஸ்ரீ ஞானமா நடராசப் பெருமான் திருவருள் துணைக்கொண்டு ஸ்ரீ நமசிவாயமூர்த்திகளுடைய அடிமலரை நெஞ்சத்தடத்தலர்த்தி இனிது நிறைவேற்றி வருகிறேன். சைவத்தமிழுலகம், இதனை ஏற்றுப் பயன் கொண்டும் கொடுத்தும், குடிகுடியீசற்காட்படுக என வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வெளியீடு , மலக்கோண் நீக்கி அகக்கோண் அகற்றி அறிவுதந்து ஆன்மாக்களைப் பவசாகரத்தினின்றெடுத்துத் தவக் கரை சேர்ப்பிக்கும் தாயாகிய பராசக்தியின் வெற்றித்திரு நாளிலே - விசயதசமியிலே, திருவெண்ணெய் நல்லூர் ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார் சந்நிதியில் நிகழும் ஒன்பதாவது சித்தாந்த சைவ மாநாட்டு மலராக வெளிவருகிறது. நவந்தருபேதமாக நடிக்கும் நாதன் திருவருளால் நலமெலாம் விளைக!
'வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன் முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.''
திருவாவடுதுறை.) இங்ஙனம்,
25-9-60 ஆதீன மகாவித்துவான்,
ச. தண்டபாணி தேசிகர்.
------------
முந்துமா கமத்தை அருட்டுறை அண்ணல் மொழிபெயர்த் துரைத்த நூல் முதலா
முதல்வழி சார்பா மூன்று நூற் கருத்தும் முறைதெரியாமலே கருதி
நந்தவே எழுதும் உரைதனைக் குருவாய் - நாடிய குரவரை நம்பி
நற்கதி யடையா உயிர்களுக்(கு) இரங்கி நற்கதி கொடுத்திட வேண்டிச்
சிந்தனை யாக்கிப் பதிபசு பாசந் தெரிந்திட லளிதமா உரைத்(து) உன்
திருவடி நீழல் மருவிட வைத்த தேசிக சிகாமணி நீ காண்
ஐந்தலை அரவின் நடித்தமால் ஈரைந் தாதிய பிறவி நோய் தவிர்த்த
ஆவடு துறைசை அம்பல வாணா அடியவர்க்(கு) அருளுமா நிதியே.
- உலகுடைய நாயனார்.
---------------
சிவமயம்
1. சன்மார்க்கசித்தியார்
சிறப்புப்பாயிரம்
அறிந்தேமெய் யாவடு தண்டுறையிற் கூட்டஞ்
செறிந்தேமெய் யம்பலவாணன்சீர் - நிறைந்தேமே
சன்மார்க்க சித்தி தருதலினான் முன்னுறைந்த
துன்மார்க்கம் போக்குதற்குச் சூழ்.
இவ்வெண்பா , சிறப்புப்பாயிரம் உணர்த்தியது.
இதன் பொருள் : சன்மார்க்க சித்தி தருதலினால் - சன்மார்க்க சித்தி என்னும் நூலைத் தருதலினால் , மெய் அறிந்தேம் - யாம் உண்மையை உணர்ந்தேம், ஆவடுதண்டுறையில் கூட்டம் செறிந்தேம் - திருவாவடுதுறைக்கண் எழுந்தருளியிருக்கின்ற மெய்யடியார் கூட்டத்துள் தங்கினேம், மெய் அம்பலவாணன் சீர் நிறைந்தேம் - உண்மைப் பொருளாகிய ஞானமா நடராசப் பெருமானுடைய புகழ் எங்கண் நிறைந்து விளங்கினேம்; ஆதலால் நெஞ்சே!, முன் உறைந்த துன்மார்க்கம் போக்கு தற்குச் சூழ் - நீ முதற்கண் தங்கிய நெறியல்லா நெறிகளைத் தொலைத்தற்கு ஆவன சூழ்வாயாக என்றவாறு.
தருதலினான். அறிந்தேம்; செறிந்தேம்; நிறைந்தேமே; ஆதலால், உறைந்த துன்மார்க்கம் போக்குதற்குச் சூழ் எனக்கூட்டுக. சூழ் என்பதற்கேற்ப, நெஞ்சே நீ என்ற விளியும் வினை முதலும் வருவிக்கப் பட்டன.
மெய்யறிதலாவது, பொல்லாப் புலைச்சமயநெறியில் போகாமே உண்மைச்சமயம் இதுவென்றும், அதுகூறும் நித்தியப் பொருள்கள் இவை என்றும், இத்தன்மைய என்றும் அறிந்து கடைப்பிடித்து ஒழுகி உய்தலாம்.
"நின்னடியார் நடுவுள்ளிருக்கும் அருளைப் புரியாய்'' என்றருளிய வாறு, திருவாவடுதுறைக்கண்ணுள்ள திருக்கூட்டத்தினருள் ஒருவ னாகத் திகழ்வேம் என்றருளியது.
மெய்யம்பலவாணன் என்றது உண்மைப் பொருளாகிய நடராசப் பெருமானையும், குரு மேனி தாங்கிவந்த அம்பலவாண தேசிக மூர்த்தி களையும் அறிவிப்பதாகும். செறிந்தேம், நிறைந்தேம் என்றது வேறொன்று புகுவதற்கு இடமின்றி ஒழிவறச் செறிந்தும், குறைவற நிறைந்துமுள்ள தன்மை கூறியது . நிறைந்தேமே என்றதில் ஏகாரம் வியப்புமாம்.
சன்மார்க்கசித்தி - சிவஞானசித்தி. அஃதாவது பதிஞானம் சித்திக்கப்பெறுதல் : ஈண்டு அதனைத் தருவதாய நூலினை உணர்த் திற்று. பதிஞானமேவரற்கு முன்பு, அதற்குமாறாய பாச பசுஞானங் களும், அவற்றால் விளையும் தீமைகளுமே பெற்று உயிர்கள் வருந்து மாதலின் 'முன் உறைந்த துன்மார்க்கம் போக்குதற்குச் சூழ்' என்றருளினார்கள். சூழ்தல் - இடைவிடாது ஆராய்தல்.
இந்த வெண்பாவும், இறுதிக்கண்ணதாகிய சன்மார்க்க சித்தி யென' என்ற வெண்பாவும் குருமூர்த்திகள் அருளியன அல்ல; ஆசாரிய அனுக்கிரகத்தைப்பெற்ற அடியார் பெருமகனார் அருளிச் செய்தவை.
--------------
நூல்
வெண்பா
சிறியே னறியாமை தீர்ப்பதற்குப் புத்தி
யறியே னெனினு மருளி - னெறியே
முளைத்தார்க ணீர்மை முதிரவினா வுற்றே
னளித்தா ணமச்சிவா யா. 1
இ - பா , ஸ்ரீ பஞ்சாக்கரதேசிகமூர்த்திகளைப் பார்த்து . ஸ்ரீ அம்பல் வாண தேசிகமூர்த்திகள் தன திழிவும் சிவஞானியர் சிறப்பும் கூறி, அவர்கள் கேட்கும் வினாவைக் கேட்கின்றேன் : அதற்கு வடை தாளுக என வேண்டிக்கொள்வதாக அமைந்தது.
இ-ள் : சிறியேன் எனினுடம் - ஒன்றற்கும் பற்றாத சிறியேன் ஆயினும், அறியாமை தீர்ப்பதற்குப் புத்தி அறியேன் என னும் - அநாதியேயுள்ள ஆணவத்தால்விளைந்த அறியாமையை விலக்கிக்கொள்ளுவதற்கு இன்றியமையாத உபாய ஞானத்தை யேனும் அறியேன் எனினும், அருளின் - பரமாசாரிய மூர்த்தி யாகிய தேவரீருடைய கிருபாகடாட்சம் இருந்தபடியினாலே, நெறியே முளைத்தார்கள் நீர்மை முதிர - சன்மார்க்கத்தின் கண் திளைத்துச் சிவா நுபவம் தோன்றப்பெற்ற சிவஞானியர் தன்மை அடியேனிடத்தும் முதிர்ச்சியடைய , வினாவுற்றேன் - பின்னர்வரும் ஐயங்களை அறிய வினவினேன்; நமச்சிவாயா. ஸ்ரீ பஞ்சாக்கரமூர்த்திகளாகிய அடியேனுடைய குருநாதரே! அளித்து - அவற்றை அநுக்கிரகித்து, ஆள் - ஆண்டருளுவீரா என்றவாறு.
உயிர் ஆணவத்தோடு அநாதியே இயைந்துள்ளமையான் தன் வியாபகம் கெட்டு, அணு என்னும் பெயரை யடைதலின் சிறியேன் என்றதாம்.
இவ்வண்ணம் ஆணவம் கூடி நின்று அறியாமை விளைப்பதை பூர்வபுண்யத்தால், சிவனடியார் வழிபாடு சிவாலயவழிபாடு சிவாகம படனம் இவற்றால் அறிந்திருந்தும், அதனினீங்கி உய்தற்குரிய சாத னங்களை அந்த நூல்களும், ஆசாரியனுபதேசமும் அறிவித்திருந்தும், அவற்றை எண்ணியிருந்தாய்தற்குரிய ஞானம் பெற்றிலேன் ஆயினும் என்பது போதர அறியாமை தீர்ப்பதற்குப் புத்தியறியேன் எனினும்' என்றருளியது.
அருளின் - ஆசாரிய அனுக்கிரகத்தால். அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்' காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே' 'காணுமா காணே' என்ற சுருதிகள் துணைக்கொண்டு அடியேனிடத் துச் சிவஞானியர் அனுபவம் அவனருளாலேயே முதிர்ந்தமையைத் துணிக.
தம் அநுபவத்து எழும் ஐயங்களை ஆசாரியனைக் கேட்டு அறிதல் மரபாதலின் பெரியவர்கள் கேட்கத்தக்க 'வினாக்களை அடியேனும் கேட்டேன் என்பதாம்.
நமச்சிவாயா' என்பது நாமமந்திரமாதலின் அதனைச் செபித்த தன்றி, ஆசிரியர் பெயர்கூறி அழைப்பதாகாமை உணர்க.
-----------------
பாசமாய்ச் சுத்தப் பசுவாய்ப் பதியாகித்
தேசுற்ற வாவிச் சிறப்பென்றா - னேச்
முடைத்தாய்த் தனுவற் றுணராமற் கண்ணை
யடைத்தாய்வ தேதா மறை. 2
இ - பா , கண்மூடி மௌனமாயிருத்தலாற் பயனில்லை; உடலை மறந்து, உணர்தலே உண்மை அநுபவமாம் என்பது உணர்த்து கின்றது.
இ - ள் : பாசமாய் - பாசத்தோடு கூடி நின்றவழிப் பாச மாயும் (அதனைவிட்டு நீங்கியவழி), சுத்தப்பசுவாய் - சுத்தான் மாவாகியும், பதியாகி - பதியொடு சார்ந்தவழிப் பதியாகி யும் இருத்தலே, தேசு உற்ற ஆவிச் சிறப்பு என்றான் - அறி வொளி பெற்ற ஆன்மாவிற்குள்ள சிறப்பியல்பு என்றுபதேசித் தான் எமது ஆசாரிய மூர்த்தி, நேசம் உடைத்தாய் - அவன்
திருவடிகளில் நீங்காத அன்பு பூண்டு, தனு அற்று - தனுவாதி மாயைதனை உதறி, உணராமல் - ஞானமே உருவாக நின்று அனுபவிக்காமல், கண்ணை அடைத்து ஆய்வது ஏது ஆம் அறை - கண்ணைமட்டும் மூடிக்கொண்டு ஆராய்வது என்ன பயனைத் தருவதாம் சொல்லுக என்றவாறு.
ஆவிச்சிறப்பு பாசமாய், சுத்தப்பசுவாய், பதியாகித் தேசு உற்ற என்றால், நேசம் உடைத்தாய் தனுவற்றுணராமல் கண்ணையடைத்து ஆய்வது ஏது ஆம் எனக்கூட்டிப் பொருள் கோடலுமாம்.
பன்னிறங் காட்டும் படிகம் போல் இந்திரியம் தன்னிறமே காட்டும் தகைமையே ஆவி பாசமாதல் . பன்னிறத்துப் பொய்ப்புலனை வேறுணர்தலே பற்றுவிட்டுப் பற்றற்றான் பற்றினைச் சார்நிற்கு நிலையாகிய சுத்தப்பசுவாதல். அங்ஙனமாய சுத்தான்மாவே பொருளாகிய சிவத்திற்கு அடிமையாய், அப்பரம்பொருளின் இயல்பு தன்மாட்டு விளங்கச் செய்தலே பதியாதலாம். இவ்வண்ணம் விளக கம் பெறுதலே ஆன்மாவிற்குரிய சிறப்பியல்பாம் என்பது.
தனுவற்றுணர்தலாவது தன்னைச்சார்ந்த இந்திரியங்களினியல் பையே தன்மாட்டு விளக்குவதாகிய தனது சார்ந்ததன் வண்ணமாந் தன்மையைச் சிந்தித்துணர்தலாகிய பொதுவியல்பு பொதுவியல் பாயே ஒழியுமாறு தனது சிறப்பியல்பை உணர்தல்.
கண்ணை அடைத்து ஆய்வது - கண்ணிந்திரியம் புலன்களிற் சென்று பற்றி ஏனையிந்திரியங்களையும் தன் வழிப்படுத்தாதவண்ணம் வலியத்தடுத்து உபதேசவழியன்றி ஊகஞானவழி நின்று ஆய்வது. பயன் ஒன்றும் பயவாதவினையாம் என்பார் ஏது ஆம் என்றருளியது.
-----------------
அறிவாய்ப் பரிபூ ரணமா யகண்ட
செறிவா யுளமொளித்த தேசா - பிறிவாகி
யுன்னிற் றனுவா யுறுங்கண்ணிமைதீக்கி
லந்நியமே னாவா யறை 3
இ -பா , ஒழிவற நிறைந்த ஒளியாய் ஆன்மாவின் உள்ளுறை கின்ற தேவரீர், உடனாயும் வேறாயும் நிற்பது ஏன் என்று வினாவு கின்றது .
இ-ள் : அறிவாய் - தடையகன்ற ஞானமே சொரூபமாய். பரிபூரணமாய் - குறைவற நிறைந்த பொருளாய். அகண்ட செறிவாய் - எங்கும் நிறைந்த பொருளாய், உளமொளித்த தேசா - ஆன்மாவினிடமாகக் கலந்து உறைகின்ற ஒளிப்பொரு ளான கருணாமூர்த்தியே! பிறிவாகி உன்னில் - மாயேயங்க ளான தனு கரண புவன போகங்களிற் பொருந்தி அதுவாய் நிற்கும் நிலையினின்று நீங்கித் தியானிக்கும் போது. தனுவாய் - அருளே திருமேனியாகக் கொண்டு வெளிப்பட்டு, உறுங்கண் இமை நீக்கில் - ஒன்றோடொன்று பொருந்திய கண்ணிமைகளைத் திறந்து விஷயங்களிற் செலுத்தும் போது, அந்நியம் ஆவாய் ஏன் - வேறாய் நிற்பது எதற்கு? அறை - அறிவித்தருளுவீராக என்றவாறு.
எங்கும் என்றும் ஆன்மாவின் உள்ளும் புறமும் செறிந்த தேசுப் பொருளாகிய தேவரீர் , அடியேன் சிந்தனைக்காலத்தும், உலகைப் பற்றி நிற்கும் காலத்தும் ஒருத்தன்மையராய் அறியப்படு பொருளா யன்றித் தியானகாலத்து அருண்மேனி தாங்கிக் காட்சி தந்தும், அதனிற் பிறிந்து தனுவாதிகளைச் சார்ந்த காலத்தும் வேறாய்ப் பிரிந்தும் நிற்பது என்னே என்று வினாவியறியலுற்றபடி.
பரிபூரணம் - குறைவிலா நிறைவு; எஞ்சாதபூரணம். அகண்டம் - வரம்பற்றது. செறிவு - இடையீடற நெருங்குதல். அகண்ட செறிவு - எல்லையின்றி நெருங்கியிருத்தல். எல்லை - கால எல்லையும் இட எல்லை யும். உளம் - ஆன்மா .
-------------
உளக்கண் விழித்தார்க் குறுங்கதிரா யுன்னை
விளக்கிச் செகவிருளை வேறா - யொளிப்பையென
மாயுஞ் செகமுளத்து மன்னுமெனக் கண்ணை மறைத்
தாயுமரு ளேதா மறை. 4
இ . பா , கண்ணை மூடிக்கொண்டு தியானித்தலின் பயனுணர்த் துகின்றது.
இ-ள் : உளக்கண் விழித்தார்க்கு உறும் கதிராய் உன்னை விளக்கி - எமது ஆசாரியமூர்த்தியே ! ஞானக்கண் திறந்த சிவஞானிகட்குப் புலனாம் சூரியனாக உன்னை விளங்கச் செய்து. செக இருளை - மாயேயமான தனு கரணாதிகளாகிய இருளை வேறாய் ஒளிப்பை என - உணர்த்த உணரும் ஆன்மாவின் வேறாக மறைத்தருள்வை எனவும், மாயும் செகம் உளத்து மன்னும் என - நிலை நில்லாதழியும் பிரபஞ்சம் உயிரினிடமாக நிலைபெறும் எனவும் எண்ணி , கண்ணை மறைத்து ஆயும் அருள் ஏதாம் - கண்ணை மூடிக்கொண்டு சிந்திக்கும் அருள் என்ன பயனைத் தருவதாம்? அறை - சொல்லுவீராக என்றவாறு.
உளக்கண் - உயிரினிடமாக விளங்கும் ஞானம். கண் விழித்தல் அவனருளால் சிவஞானம் பெற்று அதனால் அறிதல். உறும் கதிர் மிக்க கதிர்; அஃதாவது சூரியனை. உன்னை விளக்கி - தேவரீர் உம்மை அடியேற்கு விளக்கிக்காட்டி. பேரொளியைக் காணும் பெற்றிமையை யும் அடியேற்கு அருளி உம்மைக் காட்டித்தந்து. பிரபஞ்சமாகிற மாயையிற் பொருந்தாது அதனின் வேறாய் நின்று திரோதானிப்பாய் என்பது விளக்க செகவிருளை வேறாய் ஒளிப்பை' என்றருளியது.
மாயும் சகம் என்றது உலகவியல்பை உணர்த்தியது. சகம் - தோன்றியழியுந்தன்மையது; அது உலகம் . உளத்து மன்னுதலாவது உயிரினிடமாகப் பற்றி நிற்றல். உலகமாயை , பற்றும் ; ஒளியாய் உணர் வாய் உணர்த்திய இறைவன், ஒளிப்பான் என, கண்களை மூடி ஆய்வ தாற் பயனில்லை என்பதாம். விழித்தகண் குருடாகத்திரியும் வீரராய், உலகம்பற்றாது, பேரொளிப்பிழம்பாகிய பெருமானை விளங்க இருத் தலே சீரிய அநுபவம் என்பது அருளியவாறு.
--------------------
அம்பகத்தை மூடியரு ளாய்வதுவோ நூலோதிச்
செம்பொருளைக் கேட்டுத் தெளிவதுவோ - நம்பனருட்
கேற்றவு பாயநிட்டை யேதாகு மும்மலத்தைப்
பாற்றுவா யொன்றைப் பகர். 5
இ - பா, உபாய நிட்டை எதுவென்பது உணர்த்துகிறது.
இ - ள் : மும்மலத்தை பாற்றுவாய் - சகச மலத்தையும் ஆகந்துக மலங்களையும் போக்கும் அருள்வள்ளலே! அம்பகத்தை மூடி அருள் ஆய்வதுவேர் - கண்களை மூடிக்கொண்டு அடியே னிடமாகத் தேவரீர் விளங்கும் அருட்டிருமேனியை ஆராய் வதோ அன்றிக்கே , நூல் ஓதிச் செம்பொருளைக் கேட்டுத் தெளிவதுவோ - சைவ நூல்களை ஓதிச் செம்பொருளை ஆசான் மூலமாகக் கேட்டுச் சிந்தித்துத் தெளிவதுவோ , நம்பன் அருட்கு ஏற்ற உபாயநிட்டை ஏதாகும் ஒன்றைப் பகர் - சீபரமேசுர னுடைய திருவருளைப் பெறுதற்குச் சாதனமான நிட்டை எது ஆகும்? இரண்டில் ஒன்றை அருளிச்செய்வீர் என்றவாறு.
அம்பகம் - கண். கண்களை மூடிக்கொண்டு தியானிப்பதோ, சிவாகமங்களை ஓதித்தெளிவதோ எது சிவனருளைப்பெறச் சிறந்த உபாயம்; தெரிவித்தருள்க என்று வேண்டிக்கொண்டவாறு. அருள்
ஆய்தல் - அருளைத் தேடியடைய முயலுதல்; அஃதாவது அனுபவம். நூலோதித்தெளிதலாவது ஆகமக்கேள்வி.
பாற்றுதல் - சிதறச்செய்தல் . அஃதாவது வன்மை கெடுத்தாலும், முழுதும் கெடுத்தலுமாம். இது ஆசாரியன் செய்யும் உபகாரம். பாலுக்குப் பசு என்றாற்போல, அருளை யடைதற்கு ஏற்ற உபாயம் என அடையப்படுபொருள் தோன்ற விரிக்க.
----------------
அணியாய்த் திருநீ றணிவார்கள் கண்ணின்
மணியே யுனை வேண்டி வந்து - பணியத்
தொடும்போது மூர்ச்சை துயரகல நீற்றை
யிடும்போ தகல்வா யிதென். 6
இ . பா , ஒன்றாயிருக்கும் நீர் வேறாவதென்ன என்பதை விளக்கு கின்றது.
இ - ள் : அணியாய் - அழகாக, திருநீறு அணிவார்கள் - திருநீற்றைத் திரிபுண்டரமாகத் தரிப்பவர்களுடைய , கண்ணின் மணியே - கண்ணிற் கருமணியாக ஒன்றிவிளங்கும் பரமாசாரிய மூர்த்தியே! உனை வேண்டி வந்து பணியத் தொடும் போதும் - தேவரீரையன்றி உறுதுணையாவார் பிறரில்லை என்று விரும்பி வந்து திருவடிகளிற் பணியத் தீண்டும் போதும், மூர்ச்சை துயர் அகல - அறியாமையும் மயக்கமும் வினையால் வரும் துன் பங்களும் நீங்க, நீற்றை இடும் போதும் - திருநீற்றைத் தமது திருக்கரத்தால் எடுத்து அடியேன் நெற்றியின் நடுவில் இடும் போதும், அகல்வாய் - கண்ணுள்மணியாய் எழுந்தருளியிருந்த தேவரீர் அடியேனின் வேறாய் ஆசான் மூர்த்தியாய் அடியேனுக்கு எதிரில் அமர்ந்திருப்பாய்; இது என் - இது என்ன உள்ளமோ என்றவாறு.
அணியாய்த் திருநீறு அணிவார்கள் . அழகாகத் திருநீற்றை. அணியத்தக்க இடங்களாகிய சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ் முழந்தாள் , தோள், முழங்கை, மணிக்கட்டு, முதுகு, விலா , காது என்னும் பதினாறு இடங்களிலும் அணிபவர்கள். கண்ணின் மணியே - காணக் கண்ணினைக் கண்டு காட்டும் உபகாரஞ்செய்து ஒன்றியிருக் கும் கருமணியே. ''கண்ணே கண்ணுட் கருமணியே மணியாடு பாவாய்'' என்றது காண்க .
வேண்டி வந்து - பிணிதீர்க்கு மருந்தாயும், மருத்துவனாயும் இருப் பவன் உனையன்றிப் பிறரின்மையான் விரும்பி வந்து. தொடும் போது. இடும்போது என்பனவற்றுள் எண்ணும்மை தொக்கன. திருநீற்றை ஆசாரியன் தீண்டியிடுவதால் மூர்ச்சையும் துயரும் அகலுகின்றன. மூர்ச்சையாவது மயக்கம். அது ஆணவமல காரியமான அஞ்ஞான மயக்கமும், மாயாமல . காரியமான மோக மயக்கமுமாம். துயர் - வினையால் விளைந்த துயர்.
இந்நூலை அருளிச்செய்த தேசிகமூர்த்திகள் தம் அநுபவத்தில் எஞ்ஞான்றும் காணப்படும் பொருளும், கருதப்படும் பொருளுமாக இருப்பவர்கள் சீபஞ்சாக்கர தேசிகமூர்த்திகளையன்றிப் பிறரின்மையின் ஆசாரியர் கண்மணியாக ஒற்றித்து நின்ற நிலையையும், பரிசிக்கும் போதும் நீறிடும்போதும் தரிசித்து உய்யக்கூடிய நிலையில் தன் னெதிரே வீற்றிருக்கும் நிலையையும் சொல்லிக்காட்டி நமக்கெல்லாம் அருள நுபவம் சித்திக்க வைத்தவாறு.
----------------
நினைத்தார்தந் நெஞ்சத் தமுதாகு முன்னைத்
தனைத்தா னறிவாரே சார்வா - ரெனத்தாலோ
ஞானஞ் சுழுமுனையா னல்குமென வாய் நீரைப்
பானம் பணலென் பகர். 7
இ- பா. அவயோகம் பயில்வதாற் பயனில்லை என்கின்றது.
இ - ள் : நினைத்தார்தம் நெஞ்சத்து அமுதாகும் உன்னை - இடைவிடாது பாவிப்பவர்கள் மனத்தில் அமுதாக இன்பூட்டும் தேவரீரை, தனைத் தான் அறிவாரே சார்வார் - தன்னை இறை வனுக்கு அடிமையாக உணரும் ஞானிகளே அடையத்தக்கவர்; அங்ஙனமாக , எனத்தாலோ - என்ன காரணத்தாலோ , ஞானம் சுழுமுனையால் நல்குமென - சுழுமுனைத் தியானத்தால் ஞானம் சித்திக்கும் என்று எண்ணிக்கொண்டு, வாய் நீரை பானம் பணல் - எச்சிலை அமுதமென்று பேரிட்டு விழுங்குதல், என் பகர் - என்ன பயனைத் தருவதாம் அருளிச்செய்க என்றவாறு.
தனை, எனத்தாலோ . பணல் என்பன தொகுத்தல் விகாரங்கள். சுழுமுனை - நடுநாடியாகிய புருவமத்தி. அங்கே வைத்துத் தியானிப்ப தால் சிவஞானம் சித்திக்கும் என்பர் யோக நூலார். வாய் நீர் என்று மதியமுதத்தைக் கூறியது இழிவுபடுத்த . ஆசாரியன் வாயிலாக அடைய வேண்டிய ஞானத்தை யோகநெறியால் சாதிக்க முயல்வார் அறியார் என்பதாம். தம்மையுணர்ந்து. தமையுடைய தன்னுணர் வார்களே ஆசாரிய அனுக்கிரகம் பெறத் தகுதியுடையார் என்று விளக்கியவாறு.
----------------
சன்மார்க்க மென்னத் தகுமார்க்க மோரியல் பாம்
பன்மார்க்க மென்னப் படாததனா - னன்மார்க்கங்
காயமற வாவி கருதானாங் கண்மூடு
மாயமென் மாணா வரும். 8
இ -பா, உடற்பற்று நீங்கி ஆவியை அரனுடைமையாகக் கருது தலே சன்மார்க்கம் சித்திப்பதற்கு உபாயமாம் என்று உணர்த்து கின்றது.
இ-ள் : சன்மார்க்கம் என்னத்தகும் மார்க்கம் - சன்மார்க் கம் என்று. சைவத்திறத்திற் சொல்லப்படுகின்ற நெறி, ஒர் இயல்பாம் - ஆன்மா என்றும் அரனுடைமை என்று எண்ணு கின்ற ஒரே இலக்கணத்தை உடையதாம், பல்மார்க்கம் என்னப் படாது - பலவழிகள் என்று சொல்லப்படாதது, அதயை நன்மார்க்கம் காயமற ஆவி கருதானாம் - நன்மார்க்கமாகிய சன்மார்க்கத்தை எடுத்த உடலோடு இனிவரும் உடலில்லை யாகக்கழிய ஆன்மாவாகியதனன்
அன்மாவாகியதன்னைக் கருதமாட்டானாம், மாணா கண் மூடு மாயம் என்வரும் - மாணவகனே! கண்ணை மூடிக் கொண்டிருக்கும் மாயத்தால் விளைவதொரு பயன் யாது? கூறாய் என்றவாறு.
பன்மார்க்கம் - இயம நியமாதி பல மார்க்கங்கள். ஆவி கருதரனாம் எனப் பாடங்கொண்டு உயிர் சீபரமேசுரன் போல சிதாநந்த நிலையை எய்தும். என உரைகோடலும் ஒன்று. மாணா - மாணாக்கனே!
-------------------
நேத்திரத்தை யுற்றபொரு ணேத்திரத்தை நீங்கின்மன
மாத்திரமே யன்றியுள மன்னாதா - னீத்துடலை
யாவிப் பயனறிவா ரம்பகத்தை மூடியருட்
பாவிப்ப ரல்லரெனப் பார். 9
இ -பா , கண் மூடியிருத்தலாற் பயனின்று என்பதை உணர்த்துகிறது.
இ - ள் : நேத்திரத்தை உற்ற பொருள் நேத்திரத்தை நீங்கின் - கண்ணிற் பொருந்திய பொருள்கள் கண்ணைவிட்டு நீங்கின், மனம் மாத்திரமே அன்றி - கண்ணை வழியாகக் கொண்டு சென்று பற்றிய மனமாகிய அந்தக்கரணத்தில் மட்டுமன்றி, உளம் மன்னாது - உணர்வாகச்சென்று உயிரைப் பற்றாதாம்; உடலை நீத்து - தனுவாதிகளை விட்டு, ஆவிப் பயன் அறிவார் - ஆன்மாவின் பயனை ஆராய்ந்து அறிபவர்கள், அம்பகத்தை மூடி - கண்ணை மூடிக்கொண்டிருந்து, அருள் பாலிப்பார் அல்லர் என பார் - அருளாகிய சிவஞானத்தைத் தியானிப்பவரல்லர்; இதனை ஓர்வாயாக என்றவாறு.
பார்க்கப்படுகின்ற பொருள்கள் கண்ணைவிட்டு நீங்கின் கண்ணைக் கருவியாகக்கொண்டு புலன்களிற் சென்று பற்றிய மனத்திலே மட்டும் அந்தப் பொருள்கள் வாசனாரூபமாகத் தங்கியிருக்குமேயன்றி ஞான சொரூபமாக ஆன்மாவைப் பற்றியிராது; ஆகவே கண்ணை மூடிக் கொண்டு திருவருளைத் தியானிப்பதால் பயனென்ன என்பதாம். ஆவிப்பயன் - ஆன்மபிரயோசனம்; அஃதாவது அருளைச் சார்தல்.
-----------
காயமனத் தாற்சிவனைக் காணலா மென்பதனுக்
காய மறையு மறையாதான் - ஞாயத்
னுமாய வாவி தனுவா மிறைவர்க்
கினிமாய மில்லையென வெண். 10
இ.பா , இறைவனை மனத்தாற் காணல் முடியாது; ஆன்மாவையே உடலாகக்கொண்டு அறிக என்கின்றது.
இ-ள் : காயமனத்தால் சிவனைக் காணலாம் என்பதனுக்கு உ.டலின் கண்ணதாகிய மனத்தினால் சீபரமேசுரனைக் காணல் கூடு மென்பதற்கு, ஆய மறையும் அறையாதால் - ஆகமப்பிரமாண மும் இல்லையாம்; ஆதலால், ஞாய தனு மாய - உயிர்கள் வினைப்போகத்தை வீட்ட இறைவனால் அருளப்பட்ட முறை மையினையுடைய உடல் கெட, இறைவர்க்கு ஆவி தனுவாம் - சர்வேசுரனுக்கு உயிரே உடலாம்; ஆதலால், இனி மாயம் இல்லை என எண் - இனிமேல் மயக்கம் சிறிதும் இல்லையாம் என்று எண்ணுவாயாக என்றவாறு.
சென்ற வெண்பாக்கள் வரை இறைவனைக்காணுதற்கு, தியானம் மட்டும் காரணமாகாது என்பதனை யுத்தியானும், அனுபவத்தானும் உணர்த்திய தேசிகமூர்த்திகள், இந்தப் பாடலில் சுருதிப்பிரமாணமும் இல்லையாம் என்று வற்புறுத்தியபடி . ஞாயம் - முறை. ஆவி தனுவாதல் - இறைவன் உயிர்க்கு உயிராக வீற்றிருப்பதால் உயிரையே உடலாகக் கொண்டு விளங்குகிறார் என்பதனை அறிந்து உயிர் உணருஞ்செயல் கள் யாவும் இறைவனுடையனவே என்று அறிந்து அனுபவித்தல். இங்ஙனம் உணரின் மோகமில்லை என்றபடி.
------------------
அறிவாய்த் தனுவை யறிவார் மலத்தைப்
பிறிவா ருளம்பே ரறிவாய்ச் - செறிவாந்
தனுவா லறிவா ருளமே தனுவா
யுனுவார் திருவுருவென் றோர். 11
இ - பா. இறைவனை ஞான சொரூபியாக அறிபவர்கள் தாமும் ஞானமாய்ச் செறிந்தும், உருவமாகத் தியானிப்பவர்கள் உருவாயும் உறைவர் என்கின்றது.
இ - ள் : தனுவை அறிவாய் அறிவார் - இறைவனது திரு மேனியை ஞானமேயுருவாக அறிபவர்கள், மலத்தைப்பிறிவார் - மலகன்மங்களை விட்டுப் பிரிவார்கள்; உளம் பேரறிவாய் செறி வாம் - அவர்கள் உள்ளமும் பேரறிவாக எங்கும் ஒழிவற நிறைந் திருக்கும்; அங்ஙனமன்றி, தனுவால் அறிவார் - இந்த உடற் கண்ணதாகிய மனத்தைக் கொண்டே அறிவார்களது , உளமே தனுவாய் - உள்ளமும் உடலாக உருவுடையதாய், திருவுரு உன்னுவார் என்று ஓர் - சகளத்தியானமே மேவவர் என்று ஓர்வாயாக என்றவாறு.
இறைவனை ஞான சொரூபியாகத் தியானிப்பவர்கள் தாமும் ஞானமே வடிவாக எங்கும் செறிந்திருப்பர்; உருவமாகத் தியானிப் பவர்கள் ரூபத்தியானமே மேவி ஒருசிறை விளங்குவர் என அருவத் தியானம், உருவத்தியானம் இவற்றின் வேறுபாடு காட்டப்பெற்றது.
ஆன்மாக்கள் சிற்றறிவு நீங்கிப் பேரறிவு படைத்தற்குத் தடை யாக இருந்தது மலம்; அது இறைவனை ஞானசொரூபமாகத் தியானித்தலால் நீங்கும்; நீங்கவே உயிர் பேரறிவ சொரூபமாக விளங்கும்; அங்ஙனமன்றி உருவைத் துணைக்கொண்டு உருவையே எண்ணுபவர்களது மனத்து என்றும் உருவமே நிலைபெறும் என்றும். அவற்றால் ஞானமேயாய் விளங்குதலாகிய பரமுத்தியும் உருவமாக விளங்குதலாகிய சாரூபமுத்தியும் பயனாகக் கிடைக்கும் என்றும் குறிக்கப்பெறுகின்றன.
-----------------------
ஊனா யுயிரா யுணர்வா யுரையிறந்த
தேனா யுளமறைந்த சிற்பரத்தை - வானா
யொளியா யுருவா யொலியா யுணர்வார்
தெளியார் தமையென்னத் தேர். 12
இ -பா , இறையின் உண்மை நிலையறியார் அவனைத் தெளியார் என்கின்றது.
இ - ள் : ஊனாய் - உடலாயும், உயிராய் - அவ்வுடலை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் உயிராயும், உணர்வாய் - அவ் வுயிரினிடமாக விளங்கும் ஞானமாயும், உரையிறந்த தேனாய் - வாக்கின் எல்லையைக் கடந்த தேன் போல இனிப்பதாயும் உள்ள, உளம் மறைந்த சிற்பரத்தை - அடியேனுடைய ஆன்மாவை உடலாகக் கொண்டு அதனுள் பாலின்கண் நெய்போல மறைந் திருக்கின்ற சிற்பரம்பொருளை, வானாய் ஒளியாய் உருவாய் ஒலியாய் உணர்வார் - மாயாகாரியமான வானாயும் அதனுள் விளங்கும் ஒளிப்பொருள்களாயும் அவைகள் துணை நின்றுணர்த் தும் உருவாயும் உருவத்தால் எழுப்பப்பெறும் ஒலியாயும் உணர்பவர்கள், தமை தெளியார் என்னத் தேர் - என்றும் தம்மைத் தெளியாதவர்கள் என்றே துணிவாயாக என்றவாறு.
இறைவன் அஷ்டமூர்த்தி சொரூபன் என்று மட்டும் எண்ணி, உயிருக்கு உயிராயும் உணர்வாகியும் கலந்து நிற்கின்ற நிலையை மறந்து ஒழுகுகின்ற ஆன்மாக்கள், என்றும் ஆன்மதரிசனமும் அதன் வாயிலாக முறைமுறையே உயர்ந்து சிவதரிசனமும் உணரப் பெறாதவரே ஆவர் என்பதாம்.
தேன் இங்ஙனம் தித்தித்தது என்று சொல்லக்கூடாத தன்மை யுடைத்தாதல் போல இறைவனும் அநுபவத்தில் இங்ஙனமிருந்தது' என்று சொல்லமுடியாத் தன்மையனாதலின் 'உரையிறந்த தேனாய்' என்றருளியது. 'தேனா யின்ன முதமுமாய்த் தித்திக்கும் சிவபெரு மான்" என்றதும் இக்கருத்தை விளக்கும்.
உளம் மறைந்த சிற்பரத்தை - சிற்பரம்பொருளாகிய சிவம் வியா பகமாய் ஆன்மாவைத் தன்னகத்தடக்கித் தன் குணமேமேவ வீற்றிருத் தலின் இங்ஙனம் கூறியது. தலைவனை அறியார் தன்னையும் அறியார் ஆதலின் 'தமைத்தெளியார்' என்றது.
-----------------
தனைத்தானிவ் வாறென்னத் தானறியார் சம்பு
வினைத்தானெவ் வாற்றிந்து மேவ - நினைத்தா
ருறுமோ மனமதனி லொண்கணிமை நீக்க
வறுமோ நமையா ளருள். 13
இ - பா , முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதுபோல, தம்மையறியார் தலைவனை அறிந்து அடைவது எப்படி என்கின்றது.
இ - ள் : தனைத்தான் இவ்வாறு என்ன தான் அறியார் - உயிராகிய தன்னை இவ்வண்ணம் அமைந்தேன் என்று அறியா தவர்கள், சம்புவினை தான் எவ்வாறு அறிந்து மேவ நினைத் தார் - சிவபரம்பொருளைத் தான் அறிந்து அடைய நினைத்தது எப்படியோ ! மனம் அதனில் உறுமோ - அச்சிவபரம்பொருள் மனமாகிய அந்தக்கரணத்தை இடமாகக் கொண்டு பொருந் துமோ? ஒண் கண் இமை நீக்க நம்மை ஆள் அருள்வறுமோ - ஒளி பொருந்திய கண்களை இமைத்தல் தொழிலினின்றும் நீக்க நம்மை ஆட்கொண்டருள்கின்ற சிவத்திருவருள் கிட்டுமோ
என்றவாறு.
தன்னை இவ்வாறென அறிதலாவது, ஆன்மாவாகிய தான், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையேன்; கருணாநிதியாகிய சிபரமேசுரன் உணர்த்தினாலன்றி எதனையும் உணரும் ஆற்றல் அடியேற்கில்லை; அவன் அருளாற்றந்த தனுவாதிகளைக் கொண்டு வினைகளை வாட்டி, மலவலியை மாற்றமுயல்பவன், எனக்கு என்றும் சுதந்திரமில்லை என்று உணர்தலாம். அங்ஙனம் தன்னிழிவு கண்டபோது, தலைவனுடைய பேரியல்பும், அவன் நம்மையாட்கொண்டருளும் கைம்மாறு கருதாத கருணையின் சிறப்பும் அறியப்பெறும். அங்ஙனம் அறியப்படவே, என்னே! நாம் சாண் கோலைக்கொண்டு முழத்தண்ணீரை அளக்க முற்பட்டேமே; இது முடியுமா? என்ற தன் மாட்டாமை அறியப்படும். சாண் கோல்போன்ற மனமாகிய கருவியைக்கொண்டு கண்களை மூடிக்கொண்டிருத்தலாகிய தொழிலால் கடவுளைக்காண முயலுகிற தன்னறியாமை வெளிப்படும். அறியாமை அறிவுடைமைக்கு வழி வகுக்கும். வகுக்கவே ஞான சாத்திரங்களையும், நல்லாசான் அனு பவத்தையும் ஓதி, கேட்டு, அதன் வழி நின்று, தன்னைக் கண்டு, தடையைக்கண்டு, அதனை நீங்கித் தலைவனைக் காணும் தகுதி கிட்டும் என்பதாம்.
இமை : முதனிலைத் தொழிற்பெயர் ; இமைத்தல். வருமோ எனற் பாலது எதுகை நோக்கி வருமோ என வல்லினமாயிற்று.
---------------
சட்டகத்தை நீக்கச் சதுரறியார் கண்மூடி
நிட்டையெனப் பாவித்து நிற்பதனாற் - சுட்டிப்
பதமடைவ தல்லாற் பரசிவத்தோ டத்து
விதமடைவ தின்றாம் வினை. 14
இ - பா , பாவிப்பதால் பதமுத்தியே அன்றிப் பரமுத்தி சித்தி யாது என்கின்றது.
இ - ள் : சட்டகத்தை நீக்க சதுர் அறியார் - வினைப் போகத்திற்காகக் கிடைத்த உடலை நீக்கிக்கொள்ளும் உபா யத்தை அறியாராய், கண் மூடி - கண்களை மூடிக்கொண்டு,
நிட்டை என பாவித்து நிற்பதனால் - நிஷ்டை எனப் பாவனை கொண்டு நிற்பதனால், சுட்டி - சுட்டப்பெற்று, வினை - வினை யால், பதம் அடைவது அல்லால் - பதமுத்திகளை அடைவது அன்றி, பரசிவத்தோடு - சிவபரம்பொருளோடு, அத்துவிதம் அடைவது இன்றாம் - இரண்டறக்கலத்தல் இல்லையாம் என்ற வாறு.
சட்டகம் - உடல். உடலை நீக்கும் உபாயமாவது இறைவன் திருவருளை இடைவிடாதுமேவி ஆகாமிய சஞ்சிதாவினைகளை ஒழித்து சுத்தான்மாவாக, சிவஞானத்தைப் பொருந்துதல் . கண் மூடி நிட்டை எனப் பாவித்து நிற்பதனால்' என்பது இகழ்ச்சிக்குறிப்பு. விழித்தகண் விழித்தபடியே இருந்தும் புவன போகங்களைச் சென்று பற்றாது குருடு போல இருக்கவேண்டியிருக்க, அங்ஙனம் மாட்டாமையால் கண்களை இறுக மூடிக்கொண்டு உண்மையாக நிட்டை கூடாமல் பாவிப்பதனால் பதமுத்தியே கிட்டும் என்பதாம்.
----------------
சிந்திப்பா ரர்ச்சிப்பார் சேர்ந்திமையா லம்பகத்தைப்
பந்தித் திதயத்திற் பாவிப்பார் - பெந்தித்த
சாலோக மாதிப் பயனோக்குச் சற்குருவா
னூலோதி னார்க்கறிவே நோக்கு. 15
இதுவும் அது.
இ - ள் : சிந்திப்பார் - இறைவனை இடைவிடாது சிந்திப் பார்கள்; சேர்ந்து - இடைவிடாது தியானித்து, அர்ச்சிப்பார் - புறம் பேயும் அரன்கழலே அர்ச்சிப்பார்கள்; இமையால் - கண் இமைகளால், அம்பகத்தை பந்தித்து - கண்களை மூடிக்கொண்டு, இதயத்தில் - மனத்தில், பாவிப்பார் - தியானிப்பவர்களுக்கு . பெந்தித்த சாலோகம் ஆதி பயன் நோக்கு - மலகன்மங்களால் கட்டுண்ட சாலோகம் முதலான பத முத்திகளை அடைதலாகிய பயமன நோக்காம்; சற்குருவால் நூல் ஓதினார்க்கு - சற்குருவை அடுத்து அவர்வாயிலாக ஞானசாஸ்திரங்களை ஓதினவர்களுக்கு, அறிவே நோக்கு - ஞானமே நோக்கமாம்.
சிந்திப்பார் என்றது சரியாவான்களாய்த் தாம் செய்யும் சிவப் பணிகள் அனைத்தையும் சிவசிந்தனையோடு செய்பவர்களை; அவர் அடைவது சாலோகபதமாம்; கிரியா வான்களாய் சேர்ந்து அர்ச்சிப் பார் எய்துவது சாமீபமுத்தியாம்; கண்களை மூடி இதயத்தில் தியானிப் பவர்களாகிய யோகவான்கள் எய்துவது சாலோகமுத்தியாம்; ஞான சாஸ்திரம் ஓதியவர் எய்துவது சிவஞானப்பேறாம் என்பது கருத்து. நோக்கம் எனற்பாலது நோக்கு என ஈறுகெட்டு நின்றது. நூல். ஞான நூல்கள்.
--------------
புரையேய் செவிதா ரகமாப் புகுமால்
வரையே யருணூலின் மாண்பவ் - வுரையே
பதிபசுபொய்ப் பாசத்தின் பண்புதேர் வித்துக்
கதிசேர்க்குஞ் சன்மார்க்கக் கற்பு. 16
இ.பா, ஆகமக்கல்வியே சன்மார்க்கக்கல்வி என்கின்றது.
இ-ள் : புரை ஏய் செவி . தாரகமா புகும் - பொள்ளல் பொருந்திய செவியையே வழியாகக் கொண்டு புகும், வரையேய் அருள் நூலின் மாண்பு - அளவைகளைப் பொருந்திய அருள் நூல்க ளாகிய சாஸ்திரங்களின் மாண்பாம், அவ்வுரையே - அந்த சாஸ்திர வசனங்களே, பதி பசு பொய் பாசத்தின் பண்பு தேர் வித்து - பதியும் பசுவும் பொய்யாகிய பாசமுமாகிய இவற்றின் பொதுவும் சிறப்புமாகிய இயல்புகளைத் தெளியச்செய்து, சதி சேர்க்கும் சன்மார்க்க கற்பு - பரமுத்தியைச் சேர்ப்பிக்கும் சன்மார்க்கக் கல்வியாம் என்றவாறு.
சிவாகம சாஸ்திரங்கள் செவித்துளை வழியாகப் புகும் இயல்பின. அவ்வுரைகள் முப்பொருளியல்பை விளக்கி முத்தியைச் சேர்க்கும் கல்வியாம்.
புரையே செவி எனப் பாடங்கொண்டு செவிப்புரையே எனச் சொல் நிலைமாற்றிப் பொருள் கொள்ளுதலும் உண்டு. பதி பசு போய் பாசத்தின் எனப்பாடங்கொண்டு, பசு, பதியினிடம் சென்று பாசமாகிய இருளின் பண்பையும் தெளிவித்து என்று உரைகோடலுமாம். சன் மார்க்கம் தலைவனும் தலைவியுமாயிருந்து பரம்பொருளோடு கலக்கும் நெறி ஆதலின் அதற்கு ஏற்பச் சன்மார்க்கக்கல்வியைச் சன்மார்க்கக் கற்பு' என அருளியவாறு.
------------------
அறிவா லுணர்த்தி யறியாமை நீக்கிப்
பெறுமாறே யத்துவிதம் பேரா - மறுமாற்றி
யாவியே யீச னருவினையைக் காட்டாமற்
பாவியென்பார் சற்குருவோ பார். 17
இ -பா , சற்குருவின் இயல்பை உணர்த்துகின்றது.
இ-ள் : அறிவால் உணர்த்தி - தமது அநுபவ ஞானத்தால் சைவஞானத்திறன்களை சீடனுக்குணர்த்தி, அறியாமை நீக்கி - அவனுக்கு ஆணவத்தால் விளைந்த அறியாமையாகிய இருளைப் போக்கி, அத்துவிதம் பெறுமாறு - சிவத்தோடு இரண்டற்ற நிலையை அடையும் வண்ணம், பேரா மறு மாற்றி - திருவருளா லன்றி வேறு ஒன்றாலும் நீங்காத ஆணவக்கறையின் வலி மையை மாற்றி, ஈசன் அருவினை யை - ஈசனார் இயற்றும் அரிய அருட்கிரியைகளை, ஆவியே காட்டாமல் - ஆன்மாவின் கண்ண தாகவே விளங்கித் தோன்றுதலைக் காட்டாமல், பாவி என்பார் - மனத்தில் தியானித்துக் கொள் என்பவர்கள் , சற்குருவோ பார் - சற்குரு ஆவார்களா? நீ ஆராய்ந்து பார்ப்பாயாக என்றவாறு.
பெறுமாறேயத்துவிதப்போறாம் மறு மாற்றி எனப் பாடம் கொள் ளின் பெறு மால் தேய துவிதப்பேறாம் மறுமாற்றி எனப் பிரித்து அடையப் பெறுகின்ற மயக்கமும் நீங்க இறைவனும் ஆன்மாவும் இரண்டாயிருக்கும் நிலை ஆகிய குற்றத்தையும் நீக்கி எனப் பொருள் கோடலுமாம்.
ஆவியே - ஆவிக்கண். ஈசன் அருவினை - இறைவன் ஆன்மாக் களுக்காகக் கருணை கொண்டு இயற்றும் வினைகளை. பாவி - பாவனை செய். தாமும் கண்டு, தம் உரையாலும் நூல் உரையாலும் ஆன்மா வின் அறியாமையை அகற்றி, அத்துவிதபாவனை அருளிச்செய்து, பஞ்சகிருத்தியம் ஒழிந்த ஈசன் தொழில்களை ஆன்மாவினிடமாகக் காட்டுபவரே உண்மைக்குரவராவார் என்பது கருத்து.
------------------
உன்னைத் தனுவை யுயிர்க்குயிரை யுள்ளத்துப்
பின்னமற நிற்குமலப் பெற்றியையுஞ் - சொன்ன
சுருதிகுரு வாக்குச் சுவானுபவ மொன்றத்
தெரிவிப்பான் தேசிகனாய்த் தேர். 18
இ - பா , தேசிகராவார் யாவரெனத் தெரிவிக்கின்றது.
இ - ள் : உன்னை - உயிராகிய உன்னையும், தனுவை - உயி ருக்கு ஆதாரமாக இருக்கிற உடலையும், உயிர்க்கு உயிரை - அனைத் துயிர்க்கும் உயிராக இருக்கின்ற சிவத்தையும், உள் ளத்து பின்னமற நிற்கும் மலப்பெற்றியையும் - உயிரிடமாக அத்துவிதமாய் நிற்கும் ஆணவமலத்தன்மையையும், சொன்ன சுருதி - இறைவன் திருவாய்மலர்ந்தருளிய வேதம், குருவாக்கு - தமது ஆசாரியர் தமக்கு உபதேசித்த உபதேசம், சுவானுபவம் - தன் அனுபவம், ஒன்றத் தெரிவிப்பான் - இவையெல்லாம் பொருந்தத் தெரிவிப்பவனையே , தேசிகனாய் தேர் - ஆசாரிய னாகத் தேர் என்றவாறு.
சொன்ன என்பதற்கு எழுவாய் வருவித்து உரைக்க. உயிர் மெய்ஞ்ஞானத் தாணுவினோடு அத்துவிதமாயிருக்கும் என்பதனை 'உயிர்க்குயிர்' என்பதாலும், ஆணவத்தோடு அத்துவிதமாயிருக்கும் நிலையினை 'உள்ளத்துப் பின்னமற நிற்கும் மலம்' என்பதலுைம் விளக்கியருளியபடி
---------------------
எங்கு மறிவா யெழுந்தசிவா னந்தத்தைத்
தங்கு நயனத்தடக்கித் தான் விழிக்கப் - பங்கமுறக்
கற்கு நிட்டை யாகுங் கருதியறி வாய் நிறைந்து
நிற்கு நிட்டை யல்லவென நில். 19
இ - பா , உண்மை நிட்டை இதுவாம் என்கின்றது.
இ - ள் : எங்கும் அறிவாய் எழுந்த சிவானந்தத்தை - எவ் விடத்தும் ஞான சொரூபமாய்த் தோன்றிய சிவானந்தத்தை , தங்கும் நயனத்து அடக்கி - கண்ட பொருள் ஒன்றிலேயே நிலைத்து நிற்கும் கண்ணுள் அடக்கி, தான் விழிக்கப் பங்கமுறக் கற்கும் நிட்டையாகும் - தான் விழித்துப்பார்க்கக் கூசி நிற்கு மது கற்பதொரு நிட்டையாம்; கருதி அறிவாய் நிறைந்து நிற்கும் நிட்டையல்ல என - எண்ணி ஞானவடிவாய் எங்கும் நிற்கும் உண்மை நிட்டையாகாது என்று, நில் - உண்மை நிட்டையிலேயே உறைத்து நில் என்றவாறு.
எங்கும் நிறைந்த சருவவியாபகமான சிவானந்தத்தை ஞான சொரூபமாகக் கருதி அதில் நீக்கமற நிறைந்து நிற்பதே உண்மை நிட்டையாம். அங்ஙனமன்றி அதனைத் தம்கண்ணிலடக்கி, விழித்துப் பார்க்கக் கூசுகின்ற அது கற்கு நிட்டையாம். அதனால் சிவானந்தானு பவம் சித்தியாது. ஆகவே கற்கும் நிட்டையை ஒழித்து, நிறைந்து நிற்கும் நிட்டையில் நிற்க என்றருளியதாம்.
------------------
அகக்கண் டிறந்தார்க் கறிவல்லா லொன்றும்
புகத்தக்க தில்லையெனும் பொற்பான் - முகக்க
ணிறைத்தார்மற் றோர்கத்தி னீடிருளாற் கண்ணை
மறைத்தார் செகத்தஞ்சு வார். 20
இ -பா, அகக்கண் திறந்தார்க்கும் புறக்கண் திறந்தார்க்கும் வேற்றுமை விளக்குகின்றது.
இ - ள் : அகக்கண் திறந்தார்க்கு - ஆன்மாவின் கண்ணாகிய ஞானசித்தி எய்தினார்க்கு , அறிவு அல்லால் ஒன்றும் புகத்தக்கது இல்லை - ஞானமன்றி வேறொன்றும் புகத்தக்கதில்லையாம், எனும் பொற்பால் - என்கிற அழகால், முகக்கண் நிறைத்தார் - முகத் தின்கண் கண்படைத்தவர்களாய், ஓர் அகத்தின் - ஓரிடத்தில், நீடு இருளால் கண்ணை மறைத்தார் - நீண்ட இருளாலே தம் கண்ணை மூடியவர்கள், செகத்து அஞ்சுவார் - பிரபஞ்சத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் ஆவார்கள்; ஆகவேவீரராகார் என்பதாம் என்றவாறு.
அகக்கண் - ஞானம். ஒளி ஒளியை அறியுமதுபோல ஞானம் ஞானத்தையே அறியும்; இருளை அறியாது. ஓரகம் - ஓரிடம் ; தனித்த ஓரிடத்தில் என்பது. இருளால் கண்ணை மறைத்தலாவது, ஒளியான பிரபஞ்சத்தில் விழித்தேயிருந்து பற்றற்று இருக்கமாட்டாமை. எங்கே செகம் தம்மைப்பற்றிவிடுமோ என்று அஞ்சுவார் ஆவர் என்பதாம்.
-------------------
அகத்திமிரத் தாலாவி யாகமாய்த் தீய
செகத்துமய எாமூர்ச்சை செய்யா - விகத்தரனைப்
பெற்றார் தங் காயமதும் பேரறிவா மெய்மூர்ச்சை
யுற்றார் பொய்த் தீவினையென் றோர். 21
இ - பா , ஞானசாரத்திற்கும் கன்மசரீரத்திற்குமுள்ள வேற்றுமை கூறுகின்றது.
இ - ள் : அகத்திமிரத்தால் - உயிரினிடமாக அநாதியே பற்றி நிற்கும் ஆணவ இருட்டால், ஆவி ஆகமாய் - உயிரே உட லாக, தீய செகத்து மயலாம் மூர்ச்சை செய்யா - கொடிய பிரபஞ்சத்தில் மயக்கமாகிற மூர்ச்சையை அடையாது. இகத்து அரனை பெற்றார் தம் காயமதும் - இம்மையில் சிவபெருமானை அடைந்தார்கள் உடம்பும். பேரறிவாம் - பெரியஞானமாம்; மூர்ச்சை உற்றார் மெய் பொய்த் தீவினை என்று ஓர் - மயங்கி யவரது உடல் நிலையற்ற தீவினைவடிவு என்று துணிவாயாக என்றவாறு.
திமிரம் இருள் ஆணவம் என்பன ஒருபொருட்கிளவிகள். உயிர் ஆணவச்சேர்க்கையால் உடலெனவே கருதப்பட்டு, பிரபஞ்சமயலிற் பட்டு மூர்ச்சிக்காமல், இம்மையிலேயே அரனை அறியப்பெற்றவர் களின் உடல் ஞான வடிவாம் : மயங்கினார் உடல் கன்ம உருவாம் என்பது கருத்து.
ஆகமாய், மூர்ச்சை செய்யா அரனைப்பெற்றார் காயம் அறிவாம் எனக்கூட்டுக. செய்யா என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். செய்யாத காயம், அரனைப்பெற்றார் காயம் எனத் தனித்தனியே கூட்டுக. பிரபஞ்சமோகத்தில் மயங்குவார் ஆணவச்சேர்க்கையால் உடலே உயிர் என்றிருப்பார் என்பது 'அகத்திமிரத்தால் ஆவி ஆக மாய்' என்றதால் உணர்த்தப்பெற்றது.
-
அரனைப் பெறுதலாவது அரனைத் தலைவனாக, தம்மை உடையவ னாகப் பெறுதல். அங்ஙனம் பெறுதற்கும் ஆன்மாக்களுக்குச் சுதந்தர மின்மையின் இங்ஙனம் கூறியதும் உபசாரமாம்.
பேரறிவு - இருந்த நிலையிலே எல்லாவற்றையுமே அறிந்துய்யும் சிவா நுபவத்திற்கு வாயிலான ஞானம்.
மூர்ச்சை உற்றார் மெய் என மாறுக. பொய்த்தீவினை என்றது தம் பயனை உயிர்களுக்கு நுகர்த்துமளவும் மெய்போல நின்று, ஊட்டிக் கழித்தவுடன் நில்லாதொழிதலின்.
--------------------
உரையே யகவிருளுக் கொண்கதிரே யாமால்
வரையா ரறிவுடையோர் மாண்பைப் - பரஞானஞ்
சாதிப்பா ருங்கேட்டல் சிந்தனையைச் சார்ந்துமலஞ்
சேதிப்பா ரென்னத் தெளி. 22
இ- பா , ஆசாரியனுபதேசமே ஆணவஞ்சேதிப்பது என்கின்றது.
இ-ள் : உரையே - ஆசானுபதேசமும் ஆகமக் கேள்வியுமே, அக இருளுக்கு - அறியாமையைச் செய்கின்ற ஆணவமாகிய இருளுக்கு , ஒண்கதிரே ஆம் ஆல் - ஒளி மிகுந்த சூரியனாம் ஆத லால், வரை ஆர் அறிவுடையோர் மாண்பை - மலையை ஒத்த ஞானியர் மாட்சிமையை , பரஞானம் சாதிப்பாரும் - எல்லா ஞானத்தினும் மேலதாகிய பரஞானத்தைச் சாதித்து ஒழுகு கின்றவர்களும், கேட்டல் - இடைவிடாது கேட்டலாலும், சிந்தனையைச் சார்ந்து - சித்தத்தைச் சார்ந்து நின்று சிந்தனை செய்தலாலும், மலம் சேதிப்பார் என்ன தெளி - ஆணவமலக் காட்டை வெட்டி ஞான ஒளியைச் செய்பவர்கள் என்று மாண வகனே நீ தெளிவாயாக என்றவாறு.
உரை - ஆகமக்கேள்வியும், ஆசாரியனனுபவ உபதேசமுமாம். ஒன்று, இறைவன் வாக்காக நின்று வழிவகுப்பது; மற்றொன்று அநு பவ வாக்காக நின்று அவ்வழியில் அழைத்துச்செல்வது. அடர்ந்த காட்டில் வழிதெரிந்தாலும், இடர் நீக்கி அழைத்துச் செல்கிறவனும், தேவையாதல்போல உரைவகைகளிரண்டும் உதவுமாறு அறிக.
அக இருளாவது உயிரைப் பற்றி நின்று அதன் வியாபகத்தை மறைத்து நிற்கும் அறியாமையைப் பயக்கும் ஆணவம்; பொருள் புலப் படா வண்ணம் மறைக்கும் இருள்போலத் தன்னையும் தலைவனையும் காட்டாமையால் உவம ஆகுபெயராய் ஆணவத்திற்காயிற்று.
உரை கதிராம் என்க. அடர்ந்த காட்டிலே சூரிய கிரணங்கள் ஒவ்வொரு பகுதியினும் ஊடுருவியும் வளைந்தும் சென்று இருளை நீக்குதல்போல, இருவகையுரைகளும் ஆன்மாக்களுடைய பரிபாகத் திற்கு ஏற்பச்சென்று அறியாமை நீக்கும். உரை கதிராகவே அதனை உரைப்போரைச் சிவசூரியனும், ஞான சூரியனுமாகக் கொள்க.
வரை ஆர் அறிவுடையோர் - மலையை ஒத்த அறிவுடையோர். மலை அளக்கலாகா அளவும் பொருளும், துளக்கலாகா நிலையும் தோற்றமும், வறப்பினும் வளந்தரும் வண்மையும் உடையது. அதுபோல, அறிவு உடையோரும் அளக்க முடியாத அறிவினெல்லையும், அதனாற் பெறு பொருளும், காலதேச நிகழ்ச்சிகளால் விளையும் புத்தறிவுப் புயல்கள் கால்மாறிச் சுற்றியடித்தாலும் அவற்றிற்கெல்லாம் அசைந்து கொடுக் காத மனவுறுதியும், கண்டாரைக் கவரும் ஈடும் எடுப்புமில்லாத தோற்றமும், உலகமே அறிவின்றிப் பாலையான காலத்தும் ஞானவளத் தைப் பொழிகின்ற வண்மையும் உடைமையால் ஆசாரியனுக்கு மலை ஒப்பாயிற்று.
வறப்பினும் வளந்தந்தமைக்கு மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை யாருந்தவிர நாடு முழுதும் சமண்வேனில் கொண்டு வெதுப்பிய காலத் துச் சிவஞான மழையைப் பெய்வித்த சிவஞானசம்பந்த முகிலையும், திலகவதியாரைத்தவிர ஏனையோர் அனைவரும் புறநெறிப்புயலிலே சிக்கியகாலத்து மீட்ட திருநாவுக்கரசரையும் நோக்குக.
பரஞானஞ் சாதிப்பாரும் என்ற உம்மை உயர்வுசிறப்பு. பாச பசு ஞானமுடையோர்க்கே உபதேசமும் நூலுந்தேவை; ஏனையோர்க்கு அத்துணை அன்று என்பாரை மறுத்து, பரஞானமுடையோர்க்கும் வாசனாமலத்தால் வரும் அறியாமையுண்டு; அதற்கு ஆகமவசனமும், ஆசாரியவசனமும் இன்றியமையாதன என்று வற்புறுத்த உம்மை கொடுத்து ஓதியருளப்பெற்றது.
கேட்டல் சிந்தனையைச் சார்ந்து - கேட்டலாகிய முதற்றொழிலால் சிந்தித்துப் பின்பு அதன் வழிநின்று என்றவரை, அநுபவங்கண்டு என்க. அதனாலாம் பயன் மல நீக்கம்.
சேதித்தல் என்ற சொல்லாற்றலால் ஆணவம் மரம் போல உள் வயிரமாய் உறுதியானது என்பது உணர்த்தப்பெற்றது.
-----------------
மனுவே திருநீற்றை மன்னுமான் ஞானத்
தனுவே தவிர்க்கத் தகாதே - துனவே
யருண்மா றிருநீ றணிய வகலு
மருண்மா லெனவே மதி. 23
இ -பா, சிவஞானியர்கட்கும் சாதனங்கள் இன்றியமையாதன என்கின்றது.
இ - ள் : மனுவே திருநீற்றை மன்னும் ஆல் - மந்திர அர சாகிய சீபஞ்சாக்கரமே திருநீற்றை நிலைக்களமாகக் கொண்டு விளங்கும் ஆதலால், ஞானத்தனுவே தவிர்க்க தகாதே - சிவ ஞானம் பெற்றோராயினும் அதனைத் தரிக்காமல், தவிர்த்தல் ஒண்ணாது, அருள் துனவே - சிவனருளைப் பொருந்துவதற்கு உப காரமாம், மால் திருநீறு அணிய - பெருமையினையுடைய திரு நீற்றுச் சாதனத்தைத் தரிக்க, மருள் மால் அகலும் எனவே மதி - அறியாமையாகிய மயக்கம் நீங்கும் என்று அறிவாயாக என்றவாறு.
மனு - மந்திரம்; ஈண்டு சீபஞ்சாக்கரம். திருநீறும் சீபஞ்சாக்கரமும் அங்காங்கிபாவம்போல இணைபிரியாதன என்பது விளக்க மனுவே திருநீற்றை மன்னும் என்றது. அஃதாவது திருநீற்றை யெடுத்துப் பூசத்தொடங்கின் 'நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" எனப் பூசுந்தொழிலோடு செபிக்கும் தொழிலும் உடனிகழ்தல்.
ஞானத்தனு - ஞானசரீரம்; 'சிவஞானத் தனுவுடையோர்' என்ற ஆட்சியும் நோக்குக. ஞானத்தனுவுடையோர்க்கு அறியாமையின்மை யின், அவர்க்குத் திருநீறும் கண்டிகையும் மந்திரமும் வேண்டா என்பாரை மறுத்து, அவருக்கும் பெருங்காயமிருந்த பாண்டம் போல வாதனை ஓரொருகால் தாக்கும் ஆதலின் அங்ஙனம் தாக்காதபடிச் சாதனங்கள் வேண்டும் என்பதாம்.
அருள் துன என மாறுக. துன்ன என்பதன் தொகுத்தல் துன; பொருந்த என்பது பொருள். திருநீறணிவதால் அருள் வந்தடையும்; அடையவே மருள்மால் அகலும் எனக் காரணகாரியமுறை தோன்ற அருளியவாறு.
அருள் மால் துன்ன மருள்மால் அகலும் எனக்கூட்டலும் ஒன்று. அருளும் ஆன்மாவைத் தன்மயமாக்கி நிற்றலின் மாலாயிற்று எனலு மாம்; உபசாரவழக்கு. ஒருமால் அடைய ஒருமால் அகலும் என்ற நயமும் தோன்றுதல் காண்க.
-------------------
வன்னமுற்ற காயத்தை மாற்றியறி வேயென்னத்
தன்னையுற்றார்க் கின்பாகுந் தாணுவறப் - பின்னமுற்ற
வூனீர்மை தானா யுணரும் பொய் மக்கட்கு
வாய் நீ ரமுதாய் வரும். 24
இ - பா. சிவஞானியர், யோகியர் இவர்தம்முள் வேற்றுமை இது என்கின்றது.
இ-ள் : வன்னம் முற்ற காயத்தை மாற்றி - எழுத்துக்கள் முதலான திருமேனியை மாற்றி, அறிவே என்ன தன்னை உற்றார்க்கு - ஞானமே இறைவனுடைய உண்மைத் திருமேனி என்று அடைந்த சிவஞானியர்க்கு, தாணு இன்பாக பரம்பொருளே இன்பமாக அநுபவத்திற்குக் கிட்டும்; அற பின்னம் உற்ற ஊனீர்மை தானாய் உணரும் பொய் மக்கட்கு - மிகவும் வேறுபட்ட உடலின் தன்மையே தானாக அறிந்த நுபவிக் கின்ற பொய்யான அபக்குவான்மாக்கட்கு, வாய் நீர் அமுதாய் வரும் - எச்சிலே அமுதாக அநுபவத்திற்கு வரும் என்றவாறு.
மிகவும் வேறுப்புக்குவான்மாரைவரும் என்றவாறு
வன்னம் - அகாராதி க்ஷகாரந்தமான எழுத்துக்கள். முற்ற - முதன்மையாகக்கொண்ட. வன்னமுற்ற காயம் - வர்ணத்துவாவை முதலாகக்கொண்டு வருகின்ற அத்துவாக்கள் ஆறுமாகிய திருமேனி . இறைவன் அத்துவாக்களையே திருமேனியாகக் கொண்டவன் என் பதை வேதங்கள் கூறும். இதனை,
'' அத்துவா மூர்த்தியாக அறைகுவது என்னையென்னில்
நித்தனாய் நிறைந்து அவற்றின் நீங்கிடா நிலைமையானும்
சித்துடன் அசித்திற்கெல்லாம் சேட்டிதன் ஆதலானும்
வைத்ததாம் அத்துவாவும் வடிவென மறைகள் எல்லாம் "
எனவரும் சித்தித் திருவிருத்தத்தானும் தெளிக. ஆகவே அத்துவா இறைவற்குத் திருமேனியென்றது உபசாரவழக்கு ஆதலின் அதனை மாற்றி நந்தம் கருமேனி கழிக்க வந்த கருணையாகிய ஞானமே வடிவு என்றுணர்ந்து அனுபவிப்பார்க்கு, சிவமே அநுபவப்பொருளாக எழுந்தருளி, கரும்பைத் தேனைப் பாலைக் கட்டியை ஒத்திருக்கும் ஆதலால், தாணுவே இன்பாகும் என்று விளக்கியது. ஸ்ரீ அம்பலவாண தேசிகமூர்த்திகள் இத்தகைய அநுபவமுடைய சிவஞானச்செல்வ ராதலின் தெளியும் முறையைத் தெரிவித்தருளினார்கள்.
கானலை நீரென மதித்த மான்போல, உடற்றன்மையாகிய சட ஞானத்தையே பிரமம் என மதித்து ஒழுகுவார்க்குச் சிவா முதம் இல்லை. தாகத்தாலும் அறியாமையாலும் கானல் நீரை நாவால் நக்கி மேலும் தாகத்தைப் பெருக்கிக்கொள்ளும் மான்போல, வாய் நீராகிய எச்சிலையே அமுதாக எண்ணித்துய்த்து இன்பம் வற்றி உழல்வர் என்பதாம். வாய் நீரைச் சிவநீர் என்றல் பொய்ய நுபவம் என்பது.
---------------------
அருந்துமனம் வாயா லகற்றியறக் கோழை
திருந்தவருள் சேருமெனுஞ் சேயாய்ப் - பொருந்துந்
தனுக்கோழை நீங்காது தாதனறி ஞான
முனக்கேழை யெந்நா ளுறும். 25
இ - பா , அநுபவஞானமில்லார்க்குச் சிவஞானம் சித்தியாது என்கின்றது.
இ - ள் : அருந்தும் மனம் - விஷயங்களை நுகர்கின்ற மனத்தை, வாயால் அகற்றி - வாயாலே அடங்கச் செய்தோம்' என்று நீக்கி, அறக்கோழை திருந்த - அறங்களின் உள்ள மாசு நீங்கின் , அருள் சேரும் எனும் சேயாய் - அருள் பொருந்தும் என்று சொல்கின்ற சேய்மைக்கண் உள்ளவனே! பொருந்தும் தனு கோழை நீங்காது - எடுத்த சரீரமாகிய குற்றம் உன்னை விட்டகலாமல், தாதன் அறி ஞானம் - வள்ளலாகிய சிவத்தை யறியும் பேரறிவு, ஏழை - அறிவிலியே, உனக்கு எந்நாள் உறும் - உனக்கு எந்நாளிற் பொருந்தும் சொல்வாயாக என்றவாறு.
மனத்தை அகற்றிவிட்டோம். என்று வாயால் மட்டும் சொல்லிக் கொண்டு, செய்யும் கன்மங்களில் குற்றங்கள் நீங்கினால் திருவருள் வந்தடையும் என்று கனாக்காண்பவனே! உடலாகிய மாயேயமும், பற்றும் நீங்காதபோது உனக்கு எங்ஙனம் சிவஞானப்பேறுண்டாம் என்பது கருத்து.
அருந்துமனம் - ஞானேந்திரியங்களை வாயிலாகக்கொண்டு புலன் களிற் சென்றுபற்றிப் போகங்களைத் துய்க்கின்ற மனம். மனம் சடமாய் ஆன்மாவின் உட்கருவியாக இருத்தலின் அது தானே அருந்தும் என்றது சோழன் குதிரையாகிய கோரம் வென்றது என்பதுபோல்வ தொரு உபசாரம்.
வாயால் அகற்றி: பிராணாயாமத்தை முறைப்படிச்செய்யின் மனம் அடங்கும். மனம் பிராண வாயுவோடு நெருங்கிய தொடர்புடையது.. ''பிராணன் மனத்தொடு பேராது அடங்கிப், பிராணன் இருக்கிற் பிறப் பிறப்பில்லை" "புறப்பட்ட வாயு'' என்ற திருமந்திரப் பாடல் களைக்கொண்டு பிராணன் கட்டுப்பட மனம் கட்டுப்படும் என்பதை அறிக. இங்ஙனன்றி மனத்தை அகற்றினோம் என்று வாய்ச்சொல் லான் மட்டும் நீக்கி
அறக்கோழை - அறத்தின்கண்ணிகழும் குற்றங்கள். கோழை - குற்றம். அறம் செய்யுங்கிரியைகளான பசு புண்ணியங்கள். அதன் கண் நிகழும் கோழைகள் - பொய், குறளை, கடுஞ்சொல் முதலியனவும், தியபயப்பனவாக முடிவுறுவனவும். திருந்த - அக்குற்றங்கள் நீங்கிப் புண்ணியம் புண்ணியமேயாக. அருள் சேரும் - திருவருள் கிட்டும் சேயாய் - சேய்மைக்கண் உள்ளாய். அருள் அடைவதற்குரியது ஞான வழியென்ற ஒன்றே என்பதனைவிட்டு, வழியல்லா வழியைப்பற்றிச் செல்வதால் சேயாய் என்றருளியது. அன்றி, பிள்ளைத்தன்மையுடைய வனே என்று கோடலும் ஆம்.
தனுக்கோழை - உடம்பாகிய குற்றம் : கன்மத்தைப் புசித்துத் தொலைப்பதற்காக இறைவனால் அருளப்பட்ட தனு, ஆன்மாவைத் தானேயான்மா என்கிறவரையில் மயக்கி நிற்றலானும், மேலும் ஆகா மிய சஞ்சிதங்களை ஈட்டி நிற்றலானும், பஞ்சபூதங்களின் காரியமாய், சத்த தாதுக்களாகிய ஊன் முதலியவற்றால் ஆன இழிதகைமை யுடைமையானும் தனுக்கோழை என்றருளியது. அக்கோழை நீங்கின், ஆன்மா தன்னையும் தலைவனையும் உணர்தற்கேதுவாகிய சிவஞானத் தைச் சேரும். தனுவே நான் என்னும் கோழைத்தனத்தால் விளைந்த அறியாமையிருக்கும் வரையில் ஞானம் எவ்வாறு வரும் என்பதாம். தாதன் - தாதா என்னும் வடசொல்லின் திரிபு: வள்ளல் என்பது பொருள்.
--------------------
செகத்திமிரந் தீர்க்கும் வான் செல்கதிர்போ லாவி
யகத்திமிரந் தீர்க்கு மருணூல் - பகுத்தறியப்
புத்தியில்லார்க் கெல்லாம் பொருளாகுங் கண்ணற்றா
ரத்திகண்டாற் போலென் றறி. 26
இ - பா , பொருளல்லவற்றைப் பொருளாகக்காண்டல் கூடாது என்கின்றது.
-
இ - ள் : செகத்தி மிரம் தீர்க்கும் வான் செல் கதிர்போல் - பிரபஞ்சத்தில் உள்ள புறவிருளைப் போக்கும் விண்ணிலியங்கும் சூரியனைப்போல , ஆவி அகத்திமிரம் தீர்க்கும் அருள் நூல் - உயிரினிடமாக விளங்கும் ஆணவ இருளைப்போக்கும் ஞான சாத்திரங்கள், பகுத்தறிய புத்தி இல்லார்க்கு - மெய்ச்சமயம் இதுவெனவும் பொருணூல் இவையெனவும் பகுத்தறிய அறி வற்றவர்களுக்கு, எல்லாம் பொருளாகும் - பொருளல்லாதன எல்லாம் பொருளாகத் தோன்றும், கண் அற்றார் அத்தி கண்டாற்போல் என்று அறி - குருடர் கண்ட யானையைப் போல என்று அறிவாயாக என்றவாறு.
அருள் நூல் - வேதசிவாகமங்கள் ; மெய்கண்ட நூல்கள். ஆரணம் ஆகமங்களை அருளினால் உருவுகொண்டு காரணன் அருளியன ஆதலின் அருள் நூல் எனப்பட்டது. அகவிருளைப் போக்குதலின் அருள் நூல் சூரியனாம்.
பகுத்தறிதல் - இது கொள்ளத்தகும் மெய்ச்சமயம் எனவும், இவை பொருள் நூல்கள் எனவும் அறிந்து அதன்படி ஒழுகுதல்.
பொருள் - செம்பொருள். பொருளல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளானாம் மாணாப்பிறப்பாதலின் புத்தியில்லார்க்கு எல் லாம் பொருளாகும்' என்று இகழ்ச்சி தோன்ற அருளியது. அதற் குவமை கண்ணற்றார் அத்திகண்டாற்போல் என்பது . யானையைத் தடவிப்பார்த்த பிறவிக்குருடர்கள் தாம் தாம் கண்ட கால், வால், துதி முதலியவற்றையே யானையின் முழு உருவம் என்று மயங்கினாற்போல, பதமுத்தியில் நிற்பாரையும் இருமலம் மும்மலமுடையாரையும் இறை யென்று உணர்தல், எல்லாம் பொருள் என்றுணர்தலாம்.
------------------
நன்மார்க்க நற்குரவோர் நாட்டு மரு ணூனோக்கிச்
சன்மார்க்க சித்தியெனத் தானுரைத்தேன் - புன்மார்க்க
மற்றார் தந் நெஞ்சத் தமுதாகுஞ் செகமார்க்கம்
பெற்றார்க் கிதுபேத மாம். 27
இ - பா , வழியும், பெயரும் உணர்த்துகின்றது.
இ - ள் : நன்மார்க்க நற்குரவோர் நாட்டும் அருள் நூல் நோக்கி - நல்ல விதிமுறைகளைக்கண்ட நல்லாசிரியர்கள் நிலை நாட்டிய வேதசிவாகம நூல்களை ஆராய்ந்து, சன்மார்க்க சித்தி யென உரைத்தேன் - சன்மார்க்க சித்தி என்னும் இந்த நூலை யான் சொன்னேன் : புன்மார்க்கம் அற்றார் தம் நெஞ்சத்து அமுதாகும் - இந்நூல் புன்னெறியதனிற் செல்லாத புண்ணி யர்தம் மனத்திற்கு அமுதுபோல இனிமைதருவதாம்; செக மார்க்கம் பெற்றார்க்கு இது பேதமாம் - பிரபஞ்சநெறியில் ஒட்டி வாழ்வார்கட்கு இது வேறுபாடாகத் தோன்றுவதாம் என்றவாறு.
நல்லாசிரியர் அருளிச்செய்த நூல்களின் வழியே செய்யப்பட்ட சன்மார்க்கசித்தியார் என்னும் இந்நூல், புன்மார்க்கம் பொருந்தா தார்க்கு அமுதமாம் : பிரபஞ்சமார்க்கத்தில் உழலுவார்க்கு வேறு பட்டுத் தோன்றுவதாம் என்பது கருத்து.
---------------
காயமெனக் குள்ளடங்கக் காதலித்த யான் கருணை
நேய நீ யாயடங்கி நிற்பதனுக் - காயநிட்டை வைத்தாய்
சிவஞான வாரியருண் மல்லேறே
யத்தா நமச்சிவா யா. 28
இ - பா , ஆசாரியர் தமக்கு நிட்டையருளியதை வியந்தது.
இ-ள் : சிவஞானவாரியருள் மல்லேறே - சிவஞானக்கடலை அடியேனுக்கு அருளிய வளம் பொருந்திய ஏறுபோல்பவரே! அத்தா - ஞானத்தந்தையே! நமச்சிவாயா - நமச்சிவாயமூர்த்தி களே! காயம் எனக்குள் அடங்க காதலித்த யான் - உடலுக்குள் யான் அடங்காது எனக்குள் காயம் அடங்க விரும்பிய யான், கருணை நேயம் நீயாய் அடங்கி நிற்பதனுக்கு - கருணையே வடிவாய் அறியப்படுபொருளாய தேவரீராக அடியேன் அடங்கி நிற்பதற்கு, ஆய - பொருந்திய, நிட்டை வைத்தாய் - நிட்டை யில் அடியேனை வைத்தாய் என்றவாறு.
மாயைக்குள் யானாகாது, மாயை எனக்குள் அடங்கியிருக்க விரும்பிய யான் சிவபரம்பொருளின் அகண்டாகாரவியாபகத்துள் தன்செயலற்றுத் தாமற்று நிற்கும் வண்ணம் நிட்டையை உபதேசித்து அதனுள் அடியேனை நிலைத்து நிற்கவைத்த நின்கருணையிருந்தபடி இது என்பது கருத்து.
----------
சன்மார்க்க சித்தியெனச் சாற்றுமிரு பானெட்டைப்
புன்மார்க்கஞ் சென்றோர்க்குப் போக்கினா - னன்மார்க்கங்
காட்டா வடுதுறையிற் கண்ணம் பலவாணன்
றாட்டா மரையெனக்குத் தந்து. 29
இ - பா, அம்பலவாண தேசிகர் அருளை வியந்தது.
இ - ள் : நன்மார்க்கம் காட்டு ஆவடு துறையில் - தன்னை அடைந்தார்க்கு நன்னெறியருளும் திருவாவடுதுறையென்னும் கோமுத்திபுரத்திலே, கண் அம்பலவாணன் - கண்போலும் அம்பலவாண தேசிகமூர்த்திகள், தாள் தாமரை எனக்கு தந்து - திருவடித்தாமரைகளை அடியேற்கு அருளி, சன்மார்க்க சித்தி என சாற்றும் இருபான் எட்டை - சன்மார்க்கசித்தியார் எனப் பெறும் இருபத்தெட்டு வெண்பாக் கொண்ட இவ்வருணூலை. புன்மார்க்கம் சென்றோர்க்கு - புறச்சமய நெறியினின்றும் அகச் சமயம் சார்ந்தோர்களுக்கு, போக்கினான் - அருளிச்செய்தனர் என்றவாறு.
புன்மார்க்கம் சென்றோர் என்றது புறச்சமயநெறிக்கண் சென்ற வர்க்கு எனப் பொருள் கொள்ளின் அந்திகாரிகட்கு இந்நூலாற் பயனில்லையாதலின் அப்பொருள் பொருந்தாமையுணர்க. ஆதலால் ஐந்தாவது விரித்து நீக்கப்பொருள் கொள்க.
கண்ணொத்த அம்பலவாணன் என்றதற்கேற்ப, போக்கினான் என முடிபு வழங்கினார்கள். போக்குதல் - செலுத்துதல். திருக்கண்ணோக்கு தல். கண் செய்வது காட்டும் உபகாரம் . ஆசாரியனும் காணக் கண்ணினைக் கண்டு காட்டுபவனாதலின் இங்ஙனம் கூறினார்கள். தாட்டாமரை எனக்குத் தந்து - திருவடி சூட்டுதலாகிய பரிசதீட்சை செய்து. பரிசவேதியினால் இரும்பு பொன்னானது போல, என்னை மல மகற்றி ஆட்கொண்டு என சீபஞ்சாக்கர தேசிகன் வழிவந்த அம்பல வாணதேசிகர் தனக்குச் செய்த உதவியை வியந்தது.
சன்மார்க்க சித்தியார் முற்றிற்று.
------------------
பண்டாரசாத்திரம்
''தரசமயத் தசகாரியங்கண் மூன்று
சன்மார்க்க சித்திசிவாச் சிரமத் தேற்றம்
பரசமயப் பற்றொழிபஃறொடை கண் மூன்று
பகருஞ்சித் தாந்தசிகா மணிய தொன்று
முரசமையச் சித்தாந்த வுபாய நிட்டை
முயல் நிட்டை விளக்குமுப தேச வெண்பா
அரசமயத் ததிசயமைந் தெழுத்தின் மாலை
அருடருமெய்ப் பண்டார நூல்களாமே''
------------
சிவமயம்
2. சிவாச்சிரமத்தெளிவு
காப்பு
திருவா வடு துறையிற் றேவே யடியேற்
கொருவா வினைமா லொருவக் - குருவாய்த்
திரள்வா யறத்தின் சிறந்தவினா வுற்றே
னருள்வாய் நமச்சிவா யா. 1
இ-ள் : திருவாவடுதுறையில் தேவே - திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் மாசிலாமணிப்பெருமானே!. அடியேற்கு ஒருவா வினை மால் ஒருவ - அடியேனுக்கு வேறொன்றானும் நீங்காத கன்மமாகிய மயக்கம் நீங்க, குருவாய் திரள்வாய் - குருவாகத் திருமேனி கொண்டு - எழுந்தருள்வாயாக; நமச்சி வாயா - சீபஞ்சாக்கரமூர்த்திகளே , அறத்தின் சிறந்த வினா வுற்றேன் - அறங்களுட் சிறந்தனவற்றைத் தேவரீரை வினாவி யறியலுற்றேன் , அருள்வாய் - அருளிச்செய்வீராக என்றவாறு.
திருவாவடுதுறைக்கண்ணிருந்து, அடியேனுடைய வினைமயக்கு ஒழியக் குருவாக எழுந்தருளிய சீபஞ்சாக்கரமூர்த்தியே! அறத்திற் சிறந்தவற்றை வினாவியறியலுற்றேன்; அவற்றை அடியேற்கு அருளிச் செய்வீராக என்பது கருத்து.
நூல்
வருகரும பாகர்க்கு மாயமற நோக்குத்
தருமலபா கர்க்குந்தா னொன்றா - நிருமலமாந்
தீக்கையொரு நான்காஞ் சிறப்பீசர் பாகமிரண்
டாக்குவதெவ் வாறா மறை. 2
இ - பா , கன்மபரிபாகமுற்றவர்க்கும், மலபரிபாகமுற்றவர்க்கும் தீக்கை ஒன்றாகவும் பரிபாகம் வேறுபடுவானேன் என்கின்றது.
இ - ள் : வருகரும் பாகர்க்கும் - பொருந்திய கன்மபரிபாக முடைய உலகர்க்கும், மாயம் அற நோக்குதரும் மலபாகர்க்கும் - அறியாமை நீங்க ஞான நோக்கினைத்தரும் மலபரிபாகமுடை யார்க்கும், ஒன்றாம் நிருமலமாம் தீக்கை - ஒன்றாயும் மலவலிமை வாட்டுவதாயுமுள்ள தீக்கை, ஒரு நான்காம் - சமயம் விசேடம் நிருவாணம் அபிடேகம் என நான்காம், சிறப்பு ஈசர் பாகம் இரண்டாக்குவது எவ்வாறாம் அறை - சிறப்பாக இறைவன் பக்கலில், இவை இரண்டும் அடைவிப்பது எவ்வாறாம் நீ சொல்லுவாயாக என்றவாறு.
கருமபாகர் - பிராரத்தகன்மத்தை நுகர்ந்தும் வலிவாட்டியும் ஆகாமிய சஞ்சிதங்களை இறையருளால் விலக்கியும் பரிபாகம் உறுத் திய அடியார்கள் . மலபாகர் - கன்மமலமும் மாயாமலமும் அகல, ஆணவமலத்தின் வலிகுன்ற மலபரிபாகம் பெற்ற பெரியோர். இவர் கள் இருவரும் பரியாக விசேடத்தால் வேறாவர் ஆதலின் இவர் களுக்குச் செய்யப்படும் தீக்கையும் வேறாகவே இருத்தல் வேண்டும்; அங்ஙனமின்றி ஒரேவகையாக , தீக்கை நான்காக அமைந்தது: இவை இரண்டும் சிறப்பாக ஈசர்பாகம் ஆக்குவது எப்படிப் பொருந்து வதாம் என ஐயம் எழுந்தது; அதனையே வினாவியவாறு. சிறப்பு இரண்டு ஈசர்பாகமாக்குவது எவ்வாறாம் அறை எனப் பிரித்துக் கூட்டுக. .
----------------
செய்யு முலக தருமிணிக்குஞ் சேர்சிவமா
யுய்யுஞ் சிவதரும வொண்மணிக்கு - மெய்யுறவே
பாவுஞ் சமயாதிப் பண்பொன்றா நற்றரும
மாவதுவென் பேத மறை. 3
இ-பா, தருமம் இரண்டாவதேன் என்கின்றது.
இ-ள் : செய்யும் உலகதருமிணிக்கும் - வினைகளைச் செய் கின்ற உலகதருமிணிக்கும், சேர் சிவமாய் உய்யும் சிவதரும் ஒண்மணிக்கும் - அடையப்படுகின்ற சிவமாக மலங்களினீங்கி உய்யும் சிவதருமிணிக்கும், மெய்யுறவே பாவும் சமயாத்திப் பண்பு ஒன்றா - உண்மையாக மேற்கொள்ளப்படுகின்ற சமயாதி தீக்கைகள் ஒன்றாக, நற்றருமம் பேதமாவது என் அறை - நல்ல தருமங்கள் மட்டும் வேறுபடுவது என்ன பயன்கருதியாம் அறிவித்தருள்க என்றவாறு.
உலகதருமிணியாவது அதன்மமாத்திரை சுத்திசெய்யும் தீக்கை. இதுவே பௌதிக தீக்கை எனப்படுவது. இது பௌதிகப்பிரமசாரி கட்கும். இல்வாழ்வார்க்கும், வானப்பிரத்தர்க்கும் செய்யப்படுவது. பௌதிகப் பிரமசாரியாவான் குறித்த காலம் வரையிற் பிரமசரிய விரதம் முடித்து இல்லறத்திற்செல்வோன். இல்வாழ்வான் பௌதிக பிரமசரியம் முடித்து, இல்லறத்திற்புக்கோன். வானப்பிரத்தன் இல் லறத்திருந்து மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்து மிக்ககாமத்து வேட்கை தீர்ந்துழி , சிவஞானப்பேற்றிற்கேதுவாகிய தவம் விரதம் - இவைகளை மேற்கொண்டு, மேனிலையாகிய துறவையும், ஞானத் தையும் குறிக்கோளாகக்கொண்டு, மனைவி வழிபாடு செய்யவேனும், மனைவியை மக்களொடு விட்டேனும் வனத்திற்புகுந்து வசிப்போன். - இம்மூவருமே உலகதருமிணிதீக்கைக்கு உரியர்.
சிவதருமிணிதீக்கை நைட்டிகப்பிரமசாரிகட்கும், துறவோருக்கும் உரியது. தன்மமும் அதன்மமுமாகிய எல்லாக்கன்மங்களையும் சுத்தி செய்யும் தீக்கை. இது நைட்டி கதீக்கை எனவும் படும். நைட்டிகப் பிரமசாரியாவான் மரணாந்தம் பிரமசரிய விரதம் பூண்டு கொண்டோன். இவனுக்கு அங்கிவேட்டல் முதலிய கன்மங்கள் உண்டு. அதனால் ஒரோவழி மனஞ்சலிக்குமாயின் ஆசாரியர் அனுமதி பெற்று நைட்டிகந் துறந்து இல்லறத்திற் சேறலும் ஒரோவழிக்கூடும். துறவோர் எல்லாக் கன்மங்களையும் விட்டவர்கள். இவர்களுக்கே சிறப்பாக நைட்டிக தீக்கையாகிய சிவதருமிணி உரியதாகும்.
சிவதருமிணிதீக்கை பெற்றார் பாசக்ஷயம் பெற்று, சிவமாகவே விளங்குவராதலின் 'சிவமாய் உய்யும் சிவதருமாண்மணி' என்றருளி யது. சிவதருமிணி உலகதருமிணி யென்பன தீக்கைகளையும் தீக்கை பெற்ற மெய்ஞ்ஞானியரையும் விளக்கும். இடம் நோக்கிக்கொள்க.
--------------
அனுக்கிரகந் தீக்கைக் கதிகார மீகை
மனுக்கிரகர்க் காமாறும் வைத்தாய் --தனித்துறவோ
டில்லஞ் சரியா மிசைந்ததொழி லார்க்காமஞ்
சொல்லுவதென் பேதமதாய்ச் சொல். 4
இ - பா , துறவிக்குள்ள சிறப்பியல்பு கூறுகின்றது.
இ-ள் : அனுக்கிரகம் தீக்கைக்கு அதிகாரம் ஈகை - தம் மிடம் வந்தடைந்த பக்குவர்களான சீடர்கட்குக் கருணை வழங் குதல் தீட்சை செய்கின்ற அதிகாரம் உபதேசமாகிய கொடை இவைகளை, மனு கிரகர்க்கும் ஆமாறு வைத்தாய் - நிலைபே றுடைய கிருகஸ்தர்கட்கும் பொருந்துமாறு அனுக்கிரகித்தனை, தனி துறவோடு இல்லம் காமம் சரியா மிசைந்த தொழிலார்க்கு தனித்த துறவோடு இல்லத்திலேயிருந்து காமவொழுக்கத்தில் ஈடுபடாத மேலான பதி புண்ணியம் செய்வார்களாகிய அவர் களுக்கு, பேதமதாய் சொல்லுவது என் சொல் - வேறுபாடாக
அமைந்தது யாதென்று சொல்லுவாயாக என்றவாறு.
அனுக்கிரகம் - சீடர்களிடத்துச் செய்யப்பெறும் கருணை. தீக் கைக்கு அதிகாரம் - தீட்சை செய்தற்குரிய அதிகாரம். அதாவது ஆசாரியத்துவம். மனு கிரகர் - மன்னு கிரகர்: நிலைபெற்ற இல்லறத் தார். தனித்துறவு - அகப்பற்று புறப்பற்று இவைகளை விடுதலோடு, அக்கினிகாரியம் முதலியவற்றையும் துறத்தல் . மிசைந்த - மேலான. மிசை - மேல். இல்லம் காமம் சரியா எனக் கூட்டி, இல்லத்திலிருந்து காம ஒழுக்கிற்றிளைக்காத எனப் பொருள் கொள்க. இல்லறத்தார்க்கும்
துறவறத்தார்க்கும் தீட்சாதிகாரம், உபதேசம் முதலியவற்றில் அதி காரம் உண்டெனில், துறவறத்தார்க்குள்ள ஏற்றமென்ன இயம்புக என்பதாம்.
------------
தீக்கை செபம் பூசை தியானமரு ணூலோத
லூக்கிப் பிறர்க்கு முரைத்திடுத - னோக்கிற்
றுறவில் லறத்துஞ் சொலுமார்க்க மொன்றா
மறமிரண்டே னாமா றறை. 5
இதுவும் அது.
இ-ள் : தீக்கை செபம் பூசை தியானம் அருள் நூல் ஓதல் ஊக்கிப் பிறர்க்கும் உரைத்திடுதல் - தீட்சை செபம் பூசை தியானம் சிவாகமபடனம் ஊக்கமுறுத்திப் பிறர்க்கும் ஞானசாஸ்திரங்களைப் பயிற்றுவித்தல் ஆகிய இவைகளை, நோக் கின் - ஆராயுமிடத்து, துறவு இல்லறத்தும் சொலும் மார்க்கம் ஒன்றாம் - துறவறம் இல்லறம் ஆகிய இரண்டற்கும் சொல் லும் நெறி ஒன்றாம்; அங்ஙனம் இருந்தும், அறம் இரண்டு ஆமாறு ஏன் அறை - இல்லறம் துறவறம் என அறம் இரண்டு வகைப்படுவது ஏன் அருளிச்செய்வாயாக என்றவாறு.
தீக்கை என்பது தீக்ஷா என்பதன் திரிபு. தீ -- கொடுப்பது. க்ஷா - கெடுப்பது. புத்திமுத்திகளைக்கொடுத்துப் பாசத்தைக் கெடுப் பது என்னும் காரணம்பற்றி வந்த பெயர். இதுவே சைவாகமங்களை ஓதவும், சைவாசாரங்களை அனுட்டிக்கவும் அதிகாரம் அளிப்பது. இத்திக்கை நிராதாரம், சாதாரம் என இருவகைப்படும், அவற்றுள் நிராதாரமாவது விஞ்ஞானகலர், பிரளயாகலராகிய ஆன்மாக்களுக் குத் தீவிரம், தீவிரதரம் என்னும் இருவகைச் சத்திநிபாதத்தால் ஆசாரியனை அதிட்டித்து நில்லாமல், இறைவனே உயிர்க்குயிராய் நின்றும், சதாசிவமூர்த்தியாய் எழுந்தருளிவந்தும் செய்யப்படுவது. சாதாரதீக்கையாவது சகலருக்கு இப்பூமியில் ஆசாரியனை அதிட்டித்து நின்று செய்யப்படுவது. இது நால்வகைச் சத்திநிபாதத்தால், திட்சை முதல் பலவகைப்படும். அவற்றுள் குண்டமண்டலங் வப் பறத்தேயிட்டுச் செய்யப்படுவதாகிய ஔத்திரி சிறந்தது. அது
நிர்ப்பீசம் என இருவகைப்படும். அவற்றின் விரிவையெல்லாம் பத்ததிகளிலும், சிவாகமங்களிலும் தேர்க.
செயம் - ஜபம் : சீபஞ்சாக்கரத்தை எண்ணுதல். செபம் மான சிகம். வாசிகம் என இருவகைப்படும். வாசிகம் தன்காதிற்கு மட்டும் கேப்பதும், பிறர்காதிற்குக் கேட்பதும் என இருவகைப்படும். இவற்
பிறர்காதிற்குக் கேட்கச் செபிப்பதைக்காட்டிலும் தன் காதிற்கு மட்டும் கேட்கச்செயிப்பது மேலான தாம். அதனினும் மேலானது மானசிக ஜபம்.
பூசை : ஐவகைச்சுத்தியும் அமைத்து இறைவனை உள்ளும் புறம்பும் பூசனை செய்தல். உட்பூசை - அந்தர்யாகபூசை. புறப்பூசை - வெளியே சிவலிங்கம் சந்தனம் முதலியவற்றில் சிவத்தைத்தாபித்துப் பூசிப்பது.
தியானம் : பூசைகொண்ட பெருமானை இதயத்தாமரையில் எழுந் தருளுவித்து இடைவிடாது எண்ணுதல். அருள் நூல் - ஆன்மாக்கள் அறிந்து கடைத்தேற்ற்பொருட்டு இறைவன் கருணையால் அருளிச் செய்த சிவாகம நூல்கள். ஊக்கி , ஊக்கமுறுத்தி . பிறர்க்கும் உரைத் திடுதல் - பரிபாகமுடைய பிறர்க்கும் ஞானசாத்திரங்களை ஓதுவித்தல். நோக்கின் - ஆராயுமிடத்து.
----------------
மலமகலத் தீக்கை வருவிப்பாய் நான்கா
யிலமகலு வார்க்குமிலத் தோர்க்கும் - புலமிலரை
விட்டறிவிற் றேசிகர்பான் மேவுகென நூலோதப்
பட்டதென்னை யீசா பகர் 6
இ - பா , இருவகை அறத்தினர்களுக்கும் தீட்சைபெறத் தேசிகர் எற்றுக்கு என்கின்றது.
இ - ள் : இலம் அகலுவார்க்கும் - இல்லத்தைவிட்டு அகன்று சென்ற துறவிகளுக்கும், இலத்தோர்க்கும் - இல்லத்தில் மனைவி யோடு கூடிவாழ்கின்ற கிருகஸ்தருக்கும், மலம் அகல தககை நான்காய் வருவிப்பாய் - மலமாயா கன்மங்கள் நீங்கச் சமயம்
விசேடம் நிருவாணம் அபிடேகம் எனத் தீட்சைகள் நான்காக வரச்செய்வாய்; அங்ஙனமாகவும், நூல் - சிவாகமங்களில், புலம் இலரைவிட்டு - அறிவற்றவர்களை நீக்கி, அறிவின் தேசிகர் பால் - சிவஞானியராகிய ஆசாரியர்களிடத்து, மேவுக் என - அடைக என்று, ஓதப்பட்டது என்னை - சொல்லப்பட்டது என்னை! ஈசா பகர் - கடவுளே சொல்லியருளுவாயாக என்றவாறு.
தேவரீரே. ஆன்மாக்களுடைய மலகன் மங்களை வாட்டுவதற்காக நால்வகைத் தீக்கைகளை அருளிச்செய்திருந்தும், தேவரீர் அருளிச் செய்த நூல்கள் குருவை அடைக எனக் கூறியது ஏன் என்பது கருத்து. அகல என்றது வலிகெட என்றதாம்; மலம் நித்தியமாதலின் இலம் என்பது தொகுத்தல் விகாரம். புலமிலரை விட்டு என்றது அசற்குருவை அகற்றி என்றதாம். அசற்குருவாவார்,'
''உணர்வொன் றிலாமூட னுண்மையோ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பர நிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே"
'ஆமா றறியா தோன் மூடன திமூடன்.
காமாதி நீங்கரக் கலதி கலதிகட்
காமாற சத்தறி விப்போ னறிவிலோன்
கோமா னலசத் தாகுங் குரவனே "
''குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர்
முரளும் பழங்குழி வீழ்வரா முன்பின்
குருடரும் வீழ்வரா முன்பின் னறவே
குருடரும் வீழ்வார் குருடரோ டாகியே"
என்று திருமந்திரத்தில் சொல்லப்பட்ட இயல்புடையோர். அறிவின் தேசிகர் - ஞானாசாரியர்; சற்குரு. இவரது இயல்பை ,
"தாடந் தளிக்குந் தலைவனே சற்குரு
தாடந்து தன்னை யறியத் தரவல்லோன்
தாடந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாடந்து பாசந் தணிக்கு மவன்சத்தே''
“பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோ ரறிவற்றுப்
பூசற் கிரங்குவோர் போதக் குருவன்றே ''
" பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தரும் பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலய மெல்லாந்
திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே"
எனவரும் திருமந்திரங்களான் உணர்க.
--------------
போகி விரத்தர் பொதுவாய்ச் சமயாதி
யாகுமபி டேகாந்த மாதரித்துந் - தேகமா
மந்தியத்தில் யோசனைக ளொன்றா மறமிரண்டாய்ப்
புந்தியுற்ற தேதாம் புகல். 8
இதுவும் அது.
இ - ள் : போகி விரத்தர் பொதுவாய் - போகியாகிய கிரு கஸ்தருக்கும் விரத்தராகிய துறவறத்தோருக்கும் பொதுவாகிய , சமயாதி ஆகும் அபிடேகாந்தம் ஆதரித்தும் - சமய தீட்சை முதல் அஸ்திராபிஷேகம்வரை உள்ள தீட்சைகளை ஆதரித்தும், தேகமாம் அந்தியத்தில் யோசனைகள் ஒன்றாம் - உடல் அழிவ தாகிய இறுதியிலே இறைவனோடு இரண்டறக்கலத்தலாகிய ஒன்றே பயனாம்; அங்ஙனமாகவும், அறம் இரண்டாய் புந்தி யுற்றது ஏதாம் புகல் - அறங்கள் இருவகையாகத் திருவுளம் பற்றியது என்னபயன்கருதியோ புகல்வாயாக என்றவாறு.
போகி - ஐம்புல இன்பங்களை ஆரத்துய்த்துக்கொண்டே சைவா சாரமும் சீலமும் தவறாதவர்கள். விரத்தர் - இருவகைப் பற்றையும் முற்றத் துறந்தவர்கள். இவ்விருவருக்கும் நால்வகைத் தீக்கைகளும் ஏகாந்தத்தில் அவர்கள் அடையும் முத்திகளும் ஒன்றாக இருக்கவும் இல்லறம் துறவறம் என்ற வேறுபாடு எதற்கு என்பது கருத்து.
-------------
ஓதினிய நூலை யுணர்ந்தும் பிறர்க்குரைத்து
மேதினியிற் றீக்கை விரித்தளித்துந் - தீதினிமை
யுற்றா ரறிவோ வுறாஅ துலகதனை
யற்றா ரறிவோ வறை. 8
இ -பா , இருவகை அறத்தினர்களுள் எவரறிவு உயர்ந்தது என்கிறது .
இ - ள் : ஓது இனிய நூலை உணர்ந்தும் - ஓதுதற்கு இனிய நூல்களாகிய சிவாகமங்களை அறிந்தும், பிறர்க்கு உரைத்தும் - அந்நூல்களை ஞானதாகமுடைய நன்மாணாக்கருக்கு விரித்துச் சொல்லியும், மேதினியில் தீக்கை விரித்து அளித்தும் - உலகில் தீட்சைகளைப்பற்றிய விதிகளை விரித்து அந்த விதிகளின்படி பரிபாகமுற்ற மாணாக்கர்களுக்கு அளித்தும், தீது இனிமை உற்றார் அறிவோ - துன்ப இன்பங்களை அடைந்தவர் அறிவோ, உறாது உலகதனை அற்றார் அறிவோ - அத்துன்ப இன்பங்களை அடையாமல் உலக இன்பத்தையே அற்றாராகிய துறவிகள் ஞானமோ, அறை - மேலானது எது என்று அறிவிப்பாயாக என்றவாறு.
உணராது உலகதனை எனவும் பாடம். தீது இனிமை உற்றார் - துன்ப இன்பங்களை அறிந்து நுகர்பவர்களாகிய இருவினையொப்பு வரப்பெறாதவர்கள் : என்றது போகிகளை. உறாது உலகதனை அற்றார். இன்பதுன்பங்களை உறாமல் உலகியலைக் கடந்து நிற்கின்ற, இருவினை யொப்பும் மலபரிபாகமும் பெற்ற மெய்ஞ்ஞானிகள். இதனால் மெய்ஞ் ஞானியர் அறிவே சிறந்ததென்று குறிப்பித்தவாறு.
-------------
வந்தனையா லொன்றா மருவுமரன் பாலுற்ற
சிந்தனையாற் பேதமெனச் செப்புவதா - நந்தனையாய்
வையந் துறந்தார்க்கு மற்றதனை யுற்றார்க்குஞ்
செய்யு மறத்தின் றிறம். 9
இ - பா , ஞானவதியும், கிரியாவதியுமாகிய இவையே தம்முள் வேற்றுமை என்கின்றது.
இ - ள் : நந்து அனையாய் - சங்கு போலும் வெண்மையான வனே! வையம் துறந்தார்க்கும் - உலகியலைத் துறந்த சிவதரு மிணிகட்கும் துறவிகட்கும், அதனை உற்றார்க்கும் - உலகத்தை யொட்டி வாழ்கின்ற லோகதருமிணிக்கும், செய்யும் அறத்தின் திறம் - அவரவர்கள் செய்கின்ற அறத்தின் தன்மையால், வந்தனை யால் - பூசை முதலிய கிரியைகளாலும், ஒன்றா மருவும் அரன் பால் உற்ற சிந்தனையால் - எக்கணமும் ஒன்றாகவே பொருந்தி யிருக்கின்ற சிவத்தைச் சிந்திக்கின்ற சிந்தனையாலும், பேதம் எனச் செப்புவதாம் - வேறுபாடு எனச் சொல்லுவது பொருந்து வதாம் என்றவாறு.
முதல் வெண்பாவிலே கருமபாகர்க்கும் மலபாகர்க்கும் தீக்கை முதலியன ஒன்றாகவே விதிக்கப்பட்டிருந்தும் அவர்களில் வேற்றுமை யாது என வினவிய வினாவிற்கு விடையாக, கன்மபரிபாகராகிய உலக தருமிணிகள் கிரியைகளை மேற்கொண்டு அதனால் ஞானம் மருவி முத்தியையடைவர்; மலபரிபாகராகிய சிவதருமிணிகள் ஞானத்தால் தைலதாரை போன்ற அநவரததியானத்தோடிருந்து முத்தியெய்துவர்; இதுவே வேற்றுமை என்று இவ்வெண்பாவில் உணர்த்தியவாறாம்.
வந்தனை - வழிபாடு. ஒன்றா மருவும் அரன் - ஆன்மாவோடு பரிபாக நிலைக்கு ஏற்ப அநாதி நித்திய சம்பந்தமுடையவனாக ஒன்றாய் விளங்குகிற பரசிவம். அரன்பால் உற்ற சிந்தனை - துறந்தோரும் நைட்டிகருமாகிய சிவதருமிணிகட்கு. உலகப்பற்று சிறிதுமின்மையின் அவர்கள் பற்றுவது திருவடிப்பற்று ஒன்றேயாதலின் இங்ஙனம் அருளியது.
நந்து அனையாய் - சங்கு எப்போதும் நாத தரிசனம் செய்து. பிரணவநாதத்தை உயிரோடு இருக்கும்போதும், உள்ளூன் அற்று விளங்கும்போதும் செய்வது; அதுபோல அநவரத பரநாததரிசனம் செய்யும் மாணவகனே என அதிகாரி பேதம் அறிவித்தவாறு. நம் தனையாய் . நம் மகனே. தனையன் என்பது விளியேற்றுத் தனையாய் என்றலுமாம்.
வையம் என்றது உலகபோகங்களை. துறந்தார்க்கும், உற்றார்க் . கும் அறத்தின் திறத்தால், வந்தனையால் சிந்தனையால் பேதம் எனச் செப்புவது ஆம் எனக் கூட்டுக.
-------------
போற்றுஞ் சமயாதி பூணுமபி டே காந்த
மாற்றுந் தவவேட மாதரித்தும் - பாற்றிய்டு
மச்சு முதலா வனைத்துமல பாகமதி
லிச்சைகன்ம பாகமென வெண். 10
இ - பா, மலபாகம் கன்மபாகம் இவையாம் என்கின்றது.
இ - ள் : போற்றும் சமயாதி பூணும் அபிடேகாந்தம் - மேற்கொள்ளப்பெறும் சமய தீக்கைமுதலாக அணியப்பெறுகிற அபிடேகாந்தமாக , ஆற்றும் தவ வேடம் ஆதரித்தும் - செய்யப் படுகின்ற தவவேடங்களைத் தாங்கியும், பாற்றியிடும் அச்சு முதலா அனைத்தும் மலபாகம் - அவற்றில் ஆசையை விடுத்த ஆன்மா அதனறிவு முதலாகிய எல்லாம் மலபரிபாகமாம்; அதில் இச்சை கன்மபாகம் என எண் - தவத்திலும் வேடத்திலும் இச்சை கொண்டு உலக இச்சையையும் அதற்கு உரிய கன்மங் களையும் விடுத்தல் கன்மபரிபாகமாம் என எண்ணுவாயாக என்றவாறு.
சமயதீக்கை முதலிய சமயாசாரசீலங்கள் கொள்ளத்தக்கன என மாணாக்கனே வலிந்து சென்று போற்றத்தகுவன ஆதலின் போற்றும் சமயாதி' என விசேடிக்கப்பட்டது. அபிடேகம் அழகுக்கு அழகு செய்தல் போல ஞானவிசேடத்தால் ஆன்மா பூணுவது ஆதலின் பூணும் அபிடேகாந்தம்' என்றருளப்பெற்றது. கிரியைகளே முத்தி தருவனவாகும் என்று அவற்றையே பற்றி நில்லாது. கிரியைகள் ஞானங்கிடைத்தற்கு வாயில் என்ற அளவிலே கொண்டு ஞானம் பெற்றபின் அவைகளை விடுத்து உயிர் ஞானமே வடிவாக இருத்தலே மலபாகமாம். மலபரிபாகமாவது மலம் தனது திரோதசத்தி தேய்தற் குரிய துணைக்காரணங்கள் எல்லாவற்றோடும் கூடுதல் . கன்மபாக மாவது புண்ணியம் பாவம் இரண்டினும், அவற்றின் பயன்களிலும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து, விடுவோனதறிவின்கண் அவ்விருவினையும் அவ்வாறொப்ப நிகழ்தலாம். இது முத்திக்குப் பரம்பரை ஏதுவாம்; மலபரிபாகமும் சத்திநிபாதமும் நேரே ஏதுவாம் என்க. பாற்றுதல் - கெடுத்தல். அச்சு - உடல் . தனு கரண புவன போகங்களை நுகர்ந்து கெடுத்தல் மலபாகம் என்பதாம். மலபாகத்தில் இச்சைவந்து, மல பரிபாகம் பெறவேண்டும் என்று விழைதல் கன்மபாகம் எனலுமாம்.
---------------
வஞ்சத்தில் வாஞ்சை மறவாமல் மாசிவத்திற்
கொஞ்சத்தி லாசை கொளுவாரைச் - செஞ்சொ
லுலக தருமிணியென் றோதும் பொய் வஞ்சத்
திலகார் சிவதரும ரென். 11
இ - பா, இருவகைத் தருமிணிகளின் இயல்பும் கூறுகின்றது.
இ - ள் : வஞ்சத்தில் வாஞ்சை மறவாமல் - பிரபஞ்ச ஆசை மறவாமல், மா சிவத்தில் கொஞ்சத்தில் ஆசை கொளுவாரை - பரசிவத்தினிடம் சிறிது அன்பு பூணுமவரை, செஞ்சொல் உலக தருமிணி என்று ஓதும் - செஞ்சொல்லால் உலகதரு மிணி என்று சொல்லுக; பொய் வஞ்சத்து இலகார் சிவதருமர் என் - பொய்யான பிரபஞ்சத்தில் பற்றுக்கொண்டு விளங்காதவரைச் சிவதருமிணியென்று சொல்லுக என்றவாறு.
வஞ்சம் - பிரபஞ்சம் என்பதன் முதற்குறை. ''மாயையின் உள்ள வஞ்சம் வருவது போவதாகும்' என்ற சித்தியாரினும் இப்பொருள தாதல் காண்க. உலக ஆசையையும் விடாமல், சிவனிடத்துச் சிறிது பற்றுவைப்பவர் உலகதருமிணி : உலகப்பற்றை அறவே விட்டு சிவனடிப்பற்றே கொண்டவர்கள் சிவதருமிணி என்பதாம். செஞ் சொல் - சொற்கள் மூவகையுள் தம்பொருளை நேரேபயக்கும் சொல்.
-----------------
பூசையுடன் கல்வி பொருந்து மதிகார
மாசையுடன் றீக்கை யளிப்பதுள்ளும் - வாசமலர்த்
தாமமே யிட்டுத் தருக்கு மட வார்வாழ்க்கைக்
காமமிலத் தோர்க்கெனவே காண். 12
இ - பா , உலகதருமிணியினியல்பு கூறுகின்றது.
இ-ள் : பூசையுடன் கல்வி பொருந்தும் அதிகாரம் ஆசை யுடன் தீக்கை அளிப்பதுள்ளும் - பூசை கல்வி அதிகாரம் விருப்பத்தோடு தீக்கையளித்தல் ஆகிய இவற்றையெல்லாம் பெற்றிருந்தும், வாசமலர் தாமமே இட்டு - மணம் பொருந்திய மலர்மாலையை அணிந்து, தருக்கு மடவார் வாழ்க்கைக்காமம் - தருக்கிய பெண்களோடு கூடியவாழ்க்கையில் விருப்பம், இலத் தோர்க்கு எனவே காண் - இல்லறத்தோராகிய உலகதருமிணி கட்கே உரியதாம் எனக்காண்பாயாக என்றவாறு.
பூசைமுதலிய சைவாசாரங்களனைத்தையும் பெற்றிருந்தும், மகளி ரோடு மாலை சந்தனம் முதலிய போகப்பொருள்களைப் பொருந்தி, வாழ்க்கையில் விருப்பமுடையார் உலகதருமிணிகள் என்பதாம்.
பொருந்தும் அதிகாரம் என்றது தீட்சா பரிபாகத்தால் விளையும் அநுபவமுதிர்ச்சியால் அரசர் முதல் அனைவரையும் வகித்து நடத்தும் அதிகாரம். ஆசையுடன் தீக்கையளித்தல் - வருகின்ற சீடர்களுக்கு மனமுவந்து தீக்கை செய்வித்தல். இத்துணைக் காரியங்களிருந்தும் இவற்றிலே மனம்பதிந்து ஈடேறமாட்டாமல் இல்லற வாழ்க்கையை யும் விரும்புகின்றனரே; இவர் நிலை இதுவாம் என இகழ்ச்சி தோன்றக் கூறியது 'அளிப்பதுள்ளும் மடவார் வாழ்க்கைக் காமம் இலத் தோர்க்கு' என்றது. இல்லத்தோர் என்றது இலத்தோர் என்றாயிற்று.
-------------
கொலையிற் களவிற் கொடுந்தொழிலிற் கோப
வலையிலுவப் புள்ளு மருவும் - பலபுட்பத்
தாமமே சாத்தித் தருக்குமர னாயுற்ற
காமந் துறவோர்க்கே காண். 13
இ - பா , துறவோர்விருப்பு இதுவெனக் கூறுகிறது.
இ - ள் : கொலையில் களவில் கொடுந்தொழிலில் கோப வலையில் உவப்புள்ளும் மருவும் - கொலை முதலிய தீய காரியங் கள் செய்யினும் பொருந்தியிருக்கும்; பல புட்பத்தாமமே சாத்தி - கோட்டுப்பூ முதலிய நால்வகைப் பூக்களாலும் கட்டப் பெற்ற மாலைகளை அணிவித்து, தருக்கும் அரனாய்உற்ற காமம் - ஞான நிலையிற் சலியாதே தருக்கியிருக்கின்ற சிவமேயாகப் பொருந்திய விருப்பு, துறவோர்க்கே காண் - துறவிகளாகிய சிவதருமிணிகளுக்குரியது என்று காண்பாயாக என்றவாறு.
ஞானிகள் செயல்கள் அனைத்தும் சிவச்செயல்களே ஆதலின், அவர்கள் எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப்பட்டாலும் அவர்கள் மனம் மோனத்தே சிவமாகவே விளங்குவர் என்பதாம். ஆகவே புறத்தேசெய்யும் எந்தத் தீவினைகளும் அவர்களைச் சென்று பற்றா என்பதாம்.
'ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுக்கடைக்கே கிடந்தும் இறைஞானங்
கூடுமவர் கூடரிய வீடுங்கூடி
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே யிருப்பர்''
ஆதலின் இங்ஙனம் கூறியது.
கொடுந்தொழில் என்றது முற்கூறிய இரண்டும் போக எஞ்சிய பாதகங்களை உணர்த்திற்று. கோபவலை என்றது, கோபம் தன்னை உடையானையும் பின்னி , செலுத்தப்படுமிடத்தையும் பின்னி நின்று அகப்படுத்துதலின் கூறியது .
உவப்பு - சிவபுண்ணியஞ் செய்வாரிடத்து அவர்களுக்கு விளையும் மகிழ்ச்சி. மருவும் காமம், அரனாய் உற்ற காமம் எனத்தனித்தனியே கூட்டுக. சிவோகம்பாவனையாலும், இதயத்தே அரனைக்கூடும் பண்பி னாலும் அரனாய்' என்றது. இதனை,
'அறிவரியான் தனையறிய யாக்கையாக்கி
யங்கங்கே யுயிர்க்குயிராய் அறிவு கொடுத்தருளாற்
செறிதலினாற் றிருவேடம் சிவனுருவே யாகும்
சிவோகம்பா விக்குமத்தாற் சிவனுமாவர்
குறியதனால் இதயத்தே யானைக் கூடும்
கொள்கையினால் அரனாவர் குறியொடு தாமழியும்
நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுவர் என்றால்
நேசத்தாற் றொழுதிடு நீ பாசத்தார் விடவே.
என்னும் சித்தித்திருவிருத்தத்தானும் உணர்க.
---------------
ஊக்குஞ் சமயாதி யுற்றவபி டே காந்த
மாக்குமுண்மை நற்சரியைக் காம்பருவ - நோக்கித்
துறந்தார்க ளுண்மைச் சரியாதி பற்றிச்
சிறந்தா ரருட்பாகந் தேர். 14
இ - பா , உண்மைச்சரியாதி பற்றினோர் உயர்ந்தாரென்கிறது.
இ-ள் : ஊக்கும் சமயாதி உற்ற அபிடேகாந்தம் ஆக்கும் - சைவத்திறத்தில் மேன்மேலும் ஊக்குவிக்கும் சமய தீட்சை முதல் பொருந்திய அபிடேகம் இறுதியாக உள்ள தீட்சைகளால் விளைவிக்கப்படுகின்ற, உண்மை நல் சரியைக்கு ஆம் பருவம் நோக்கி - உண்மைச்சரியைக்கு உதவும் பரிபாகம் பார்த்து, துறந்தார்க்ள் - இல்லத்தைப் பற்றைத் துறந்தவர்களே, உண் மைச்சரியாதி பற்றிச் சிறந்தார் - உண்மைச்சரியை முதலிய வற்றைப் பற்றி நின்று சிறந்தார் ஆவர்; அருள் பாகம் தேர் - அவர்கள் அருட்பகுதியையே அடைக்கலத்தானமாவது என்று தெளிவாயாக என்றவாறு.
சரியையாதிகள் உண்மை என்றும் உபாயம் என்றும் இருவகைப் படும். அவற்றுள் உபாயம் சரியையிற்சரியை முதல் ஞானத்தில் ஞான மீறாகப் பதினாறுவகைப்படும். உண்மையும் சரியையிற்சரியை முதல் யோகத்தில் ஞானமீறாகப் பன்னிருவகையும், ஞானத்திற் சரியை முதல் ஞான மீறாக நான்குவகையும் ஆம் என்க. இவ்வெண்பாவிற் கூறப் பெற்றது பின்னையதாம் என்க. தீக்கை பெற்று உபாயச்சரியாதிகளில் நின்று உண்மைச்சரியாதிகளை மேற்கொள்ளும் பரிபாகம் பெறத் துறந்தவர்களே உண்மைச் சரியாதிகளைப்பற்றிச் சத்திநிபாதம் பெறுவர்; அதனால் சிவசாயுச்சிய முத்தியைப் பெறுவர் என்க. இதன் விரிவையும், பயனையும் சிவஞான போதம் எட்டாம் சூத்திரத்து பசித் துண்டு' என்பதன் உரையில் திருவாவடுதுறை ஆதீனத்துச் சிவ ஞானக்கொழுந்தாக, சாத்திரமரபு விளக்கவந்த மாதவச் சிவஞான சுவாமிகள் எழுதும் விளக்கங்களாற்றெளிக.
-------------
நண்ணு முபாயச் சரியாதி நான்குமில்லோர்
பண்ணு மனுக்கிரகப் பண்புமிக - வெண்ணித்
துறந்தார்க ளுண்மைச் சரியாதி தொக்கிச்
செறிந்தா ரறிவென்னுந் தேசு. 15
இ -பா, உபாயச் சரியாதிகளால் வருகின்ற பயனை நோக்கி மேனிலையை அடையத் துறந்து உண்மைச் சரியாதிகளைப்பற்றியோர் இயல்பு கூறுகின்றது.
இ-ள் : இல்லோர் - இல்லறத்தோராகிய உலகதரு மிணி கள், நண்ணும் உபாயச் சரியாதி நான்கும் பண்ணும் அனுக்கிர ' கப்பண்பு மிக எண்ணி - மேற்கொள்ளுகின்ற உபாயச்சரியை முதலிய நான்கும் அளிக்கும் அனுக்கிரகமாகிய பண்பினின்றும் சிறக்கத் திருவுள்ளங் கொண்டு, துறந்தார்கள் - துறவிகளாய், உண்மைச்சரியாதி தொக்கி - உண்மைச்சரியாதி நான்கினும் கூடி, அறிவு என்னும் தேசு செறிந்தார் - ஞானத்தில் ஞான மாகிய ஒளி நிறையப்பெற்றாராவர் என்றவாறு. .
உபாயச்சரியாதிநான்கும் கிருகத்தர் செய்வன : அவற்றால் வரும் பயனை நோக்கி, அவற்றிற் சிறந்த பயனை அடைய எண்ணி, துறவை மேற்கொண்டு சிவதருமிணிகளாய், உண்மைச்சரியாதி நான்கையும் கூடி ஞானவொளியாய் விளங்குவர் என்பது கருத்து. இல்லோர் - கிருகத்தர் . உபாயச்சரியை நான்கும் பண்ணும் அனுக்கிரகப்பண்புக ளாவன ; காலாக்கினிருத்திரர் முதல் குணதத்துவமத்தகத்தில் சீகண்ட புவனத்தின் கீழுள்ள உருத்திரரீறான அவ்வப்புவனபதிகள் உலகத்தில் சாலோகம் முதலியவற்றைப் பெறுதல். அதினினின்றும் மிகுதலாவது உண்மைசரியாதிகளில் நின்று சீகண்ட புவனம் முதல் சுத்தவித் தைக்குக் கீழுள்ள அந்தந்தப் புவனபதிகளுடைய சிவலோகத்துச் சாலோக முதலிய பதமுத்திகளைப் பெறுதலும், சுத்தவித்தை முதலிய அதிகாரதத்துவம் போகதத்துவங்களில் வைகும் மந்திரர் மந்திர மகேசர் முதலியோர் புவனத்துச் சாலோகம் முதலிய அபரமுத்தியைப் பெறுதலும், இந்நிலைக்கு மேலான பரமுத்தியை எய்துதலும் ஆம்.
பண்புமிக : எல்லைப்பொருட்டாகிய ஐந்தனுருபு தொக்க தொகை யாகக்கொள்க. தொக்கி - தொக்குப் பொருந்தி .. செறிதல் - உரலாணி யிட்டாற்போல இடையீடின்றி எங்குமாதல். விளக்கொளிபோலாது காலதேச வர்த்தமானங்களாகிய தடைகளையுங்கடந்து செறிவது, அறி வொளியாதலின் செறிந்தார் என்றது. தேசு - தேஜஸ்; என்பது வட மொழி.
-------------
பாவனையாற் றீக்கை பணிப்பரத்தில் யோசித்துத்
தீவினையு மாங்கே சிதைத்ததனாற் - பூவினையைப்
பாற்றுவார் தீக்கைப் பலமடைவார் பண்பிலத்தி
லாற்றுவார் நற்றரும ராம். 16
இ.பா. உலகதருமிணிகள் வினைகழித்துத் தீக்கைப்பலம் அடை வர் என்கின்றது.
இ - ள் : இலத்தில் பண்பு ஆற்றுவார் நற்றருமர் - இல்லறத் தினின்றே சிவபுண்ணியங்களைச் செய்பவர்களாகிய நல்ல உலக தருமிணிகள், பாவனையால் தீக்கை பண்ணி - சிவோகம்பாவனை யால் சிவஹத்தம் சிவகரணம் பாவித்துத் தீக்கைகளைச் செய்து, பரத்தில் யோசித்து - சிவபரம்பொருளினிடத்துச் சுத்தான் மாவைக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து, தீவினையும் ஆங்கே சிதைத்ததனால் - பிறவிக்கு ஏதுவாகிய ஆகாமியசஞ்சித தீவினைகளையும் தீக்கை பெற்ற ஆங்கே கொடுத்தமையால், பூ வினையைப் பாற்றுவார் - பூமியின்கண் பிறத்தலாகிய தொழிலைக் கெடுத் தார்களாய், தீக்கை பலம் அடைவார் ஆம் - பெற்ற தீக்கைக்கு ஏற்ற சாலோகாதிப்பயன்களை எய்துவாராம் என்றவாறு.
பாவனை - சிவமாகத் தன்னைப் பாவித்தல். பண்ணி என்பதன் விகாரம் பணி. யோசித்தல் - கூட்டுதல். சிவசம்யோஜனம் என்று கூறப்படுவது. ஹும்பட் அஸ்திர மந்திரத்தால் மலமாயாகன்மாதி களைக்கழித்து ஆன்மாவைத் தூய்தாக்க , ஆன்மா சாலோகாதி பத முத்திகளை எய்தும்; ஆகவே, இதுவே பயன் உலகதருமிணிகட்கு என்றவாறாம். பூ வினை - பூமியில் பிறத்தற்கேதுவாகிய ஆகாமிய சஞ்சித வினைகள்; அன்றிப் பிறத்தலாகியவினை எனலுமாம்.
----------------
சரியைக்கே சாலோகந் தன்னில்யோ சித்தால்
தெரிய நடந்தவர்க்கே சேர்வாம் - பிரியா
நிலவுலகி லிச்சை நிறைந்தோர்க்குத் தீக்கைப்
பல நிலவு நற்றருமம் பார். 17
இ-பா, தீக்கை, பயனளிக்கும் நற்றருமம் என்கின்றது.
இ - ள் : சரியைக்கே சாலோகம் தன்னில் யோசித்தால் - சரியையில் நின்றோர்களையே சாலோக பதவியிற் சேர்த்தால், தெரிய நடந்தவர்க்கே சேர்வாம் - சிவஞானத்தால் அனைத்தை யும் சிவமாகக்கண்டு தெளிய அனுட்டித்த ஞானியர்க்கு இரண் டறக்கலத்தலே பயனாம்; தீக்கை - சிவதீக்கையானது. பிரியா நிலவுலகில் இச்சை நிறைந்தோர்க்கு - பிரியாது இந்நிலவுல கத்திலே பற்றுக்கொண்ட உலகதருமிணிகட்கு , பலம் நிலவு நல் தருமம் பார் - பயன் விளங்கும் நல்ல தருமமாகும்; இதனை ஆராய்ந்து பார் என்றவாறு.
சேர்வு - சேர்தல்; அஃதாவது சாயுச்சிய நிலை. பிரியா - பிரியாது என்ற வினையெச்சம் ஈறு குறைந்து நின்றது. பிரியா நிறைந்தோர்க்கு எனக்கூட்டுக. பலம் - பலன் ; பயன்.
----------------
பரிபாகத் தாற்றீக்கைப் பண்புற்றார் தீதைத்
தெரிவா ரிலந்துறந்து சேர்வார் - பிரிவா
மிலத்துச் சரியாதி யேமெய்ச் சரியைப்
பலத்துக் குபகரணம் பார். 18
இ - பா, உபாயச்சரியாதிகளே உண்மைச்சரியா திகட்கு உப கரணமாம் என்கிறது.
இ - ள் : பரிபாகத்தால் தீக்கைப்பண்பு உற்றார் - சிவ புண்ணிய மேலீட்டால் விளைந்த பரிபாக விசேடத்தோடு தீக்கையின் பயனை அடைந்தவர்கள், தீதைத் தெரிவார் - பாச குணங்களாகிய தீமைகளையும் வினையின் தீமைகளையும் அறி வாராய், இலம் துறந்து சேர்வார் - இல்லறத்தைத் துறந்து ஞானானுபவத்தைச் சேர்வார்; பிரிவாம் இலத்து சரியாதியே - இங்ஙனம் உவர்ப்புக்கண்டு விட்டு நீங்கிய இல்லறத்திற்கண்ட உபாயச் சரியாதிகளே , மெய்ச்சரியைப் பலத்துக்கு - உண்மைச் சரியாதிகளால் அடையும் பயனுக்கு, உபகரணம் பார் - சாதனங்களாம்; ஆராய்வாயாக என்றவாறு.
பரிபாகத்தான் என்பது தூங்குகையான் ஓங்கு நடைய' என்புழிப் போல உடனிகழ்ச்சிப்பொருளில் வந்தது. தீக்கைப்பண்பை வெறுஞ் சடங்குமாத்திரமாய்க் கொள்ளாது பரிபாகத்தோடும் பெற்றவர்கள், பிரபஞ்சத்தில் மாயையின் தீங்கையும், வினைப்போகங்களின் விளைவை யும் அறிவார்கள் என்றவாறு. பரிபாகம் பெற்று, தீயன இவையென்று அறிந்த பிறகு, தீயவற்றிற்கேதுவாய இல்லறத்தைத் துறப்பார்; ஞான மார்க்கத்தை நண்ணுவார்; ஆதலால், உபாயச்சரியை முதலாயினவே உண்மைச்சரியாதிகட்கு உபகரணமாவன என்பதாம்.
------------
கருமாற்றுந் தீக்கையாற் கற்பொன் றெனினும்
வருமா றிரண்டாகு மாணா - திருமா
மனுக்கிரகர்க் காகும் வருமறிவின் மார்க்க
மனுக்கிரக நீத்தோர்க்கே யாம்.' 19
இ - பா. தீக்கை செய்யும் முறை ஒன்றாயினும் அது வரும்வழி இரண்டு என்கிறது.
இ-ள் : மாணா - மாணவகனே! கரு மாற்றும் தீக்கையால் கற்பு ஒன்று எனினும் - கருவிற் பிறப்பதை ஒழிக்கும் தீட்சை யினால் பெறும் கல்வி ஒன்றானாலும், வரும் ஆறு இரண்டாகும் - அது வருகிறவழி இரண்டாம் , திருமா மனுக்கிரகர்க்கு ஆகும் - செல்வத்தில் தோய்தல். கிருகஸ்தர்களாகிய உலகதருமிணி களுக்கு ஆகும்; வரும் அறிவின் மார்க்கம் அனுக்கிரகம் நீத் தோர்க்கே ஆம் - வருகின்ற ஞானநெறியும் அனுக்கிரகமும் இல்லறத்தைத் துறந்தவர்க்கே இயைவதாம் என்றவாறு.
கரு - மீட்டும் பிறத்தற்காகக் கருவிலாதல். தீக்கையின் பயன் பிறவியை ஒழித்தல் என்பது. கற்பு - கற்றல் . அது ஒன்றாதலாவது பாசக்ஷயமும், மல நீக்கமுமாகிய கற்பனை ஒன்றேயாதல். வரும் ஆறு - வருகின்ற வழிகள். அஃதாவது தீட்சை செய்யும் முறைகள்.
திருமா - ஒருபொருட்பன்மொழி; செல்வம். செல்வம் எனவே உலக ஆசையைப் பற்றி நின்று போகத்தழுந்துதல் : செல்வத்துப் பயன் துய்த்த லாதலின்.
இல்லறத்தார்க்குக் கிரியாவதியும், சந்நியாசாச்சிரமிகட்கு ஞான வதியும் விதிக்கப்பட்டன ஆதலை வற்புறுத்தியவாறு. மன்னும் என்பது மனு என்றாயிற்று. மனு முதனிலைத் தொழிற்பெயர் ; அது தொகுத்தல் விகாரம்.'
------------
மந்திரமொன் றாக மதிக்குஞ் செபத்துக்குத்
தந்திரமே பேதமெனுந் தன்மையாற் - புந்திப்
பலமா மிலத்தோர்க்குப் பண்ணவர்க்குத் தீய
மலமாய்க்கு மென்றே மதி. 20
இ - பா. கற்பொன்றே என்றலை விளக்குகிறது.
இ - ள் : மந்திரம் ஒன்றாக மதிக்கும் செபத்துக்கு - சீபஞ்சாக்கரம் ஒன்றாகவே மதிக்கப்பெறும் செபத்திற்கு, தந்திரமே போதம் எனும் தன்மையால் - கிரியைகளை விரித்து உணர்த்தும் ஆகமங்களே வேற்றுமை என்னும் தன்மையைப் போல , புந்தி பலமாம் இலத்தோர்க்கும் - போகமே பயனாகக் கொண்ட கிருகஸ்தர்க்கும், பண்ணவர்க்கும் - முனிவர்கட்கும், தீய மலம் மாய்க்கும் என்றே மதி - ஆன்மப் பிரகாசத்தைத் தடுத்து நிற்கும் தீமை பொருந்திய ஆணவாதி. மலங்களைக் கெடுக்கும் என்றே மதிப்பாயாக என்றவாறு.
சீபஞ்சாக்கரமாகிய மந்திரம் ஒன்றாகவும், மதிக்கப்படும் செபத் திற்குரிய முறைகள் வேறாதல் தந்திரபேதமாதல் போல, உலகதரு மிணிக்கும் சிவதருமிணிக்கும் தீட்சையின் பயன் பாசக்ஷயம்பண்ணு தல் ஒன்றேயாகவும் ஆகமங்கூறும் விதிமுறை வேறாம் என்றவாறு. தந்திரம் - ஆகமம்.
-------------
துறவனிவ் வஞ்சத்திற் றோயிலிவ் வஞ்ச
மிறைவனா மாணா விலத்தா - மறவ
னிறவா வரன்பூசை யேத்துகினும் வஞ்ச
மறவா னதனான் மதி. 21
இ.பா. இருவருக்கும் உள்ள பேதம் இதுவாம் என்கிறது.
இ - ள் : மாணா - மாணவ்கனே! துறவன் இவ்வஞ்சத்தில் கோயில் - சிவதருமிணி இப்பிரபஞ்சத்தில் தோய்வானாயின், இவ்வஞ்சம் - இப்பிரபஞ்சம், இறைவன் ஆம் - சிவமாகவே காட்சி வழங்கும்; இலத்தாம் அறவன் - இல்லறத்தானாகிய உலக தருமிணி , இறவா அரன் பூசை ஏத்துகினும் - சிறிதும் விதி தவறாது சிவனைப் பூசித்து வழிபடினும், வஞ்சம் மறவான் - பிர பஞ்சத்தை மறக்கமாட்டான்; அதனான் மதி - அதனாலே வேற் றுமையுளதாம் என்று எண்ணுவாயாக என்றவாறு.
துறவி பிரபஞ்சத்தில் தோய்ந்தாலும் பிரபஞ்சம் சிவமாகக் காட்சி வழங்கும். அப்பர் சுவாமிகள் களிறும் பிடியும், கிள்ளையும் பெடையும், நாகும் ஏறும் ஆகிய இவற்றைச் சிவசத்திகளாகவே கண்டமை கொண்டு தெளிக. மேலும் இதனை .
"பிறியாத சிவன்றானே பிரிந்து தோன்றிப்
பிரபஞ்ச பேதமெல்லாம் தானாய்த் தோன்றி
நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி
நின்றென்றுந் தோன்றிடுவர் நிராதர னாயே"
எனவரும் சித்தித் திருவிருத்தப்பகுதியானும் உணரலாம். உலக தருமிணி எத்துணைப்பூசைதான் செய்யினும் பிரபஞ்சத்தை மறவான். இதுவே வேற்றுமையென்றறிக என்பதாம்.
-------------------
தேசனையே நெஞ்சிற் றியானிக்கி. லில் வாழ்க்கை
வாசனையு மாங்கே மறைக்குமாற் - காசினியை
யற்றார்க் ககில மணுகிற் றியானத்தின்
பற்றா யதுமறைக்கும் பார். 22
இதுவும் அது.
இ-ள் : தேசனையே நெஞ்சில் தியானிக்கில் - பேரொளிப் பிழம்பாகிய பரசிவத்தையே மனத்தில் தியானிக்கிலும், இல் வாழ்க்கை வாசனையும் - இல்வாழ்க்கைக்கண் நிற்றலால் விளைந்த வாசனாமலம், ஆங்கே மறைக்கும் - தியானம் நிலைக்காதவாறு மறைத்துத் தடை செய்யும், காசினியை அற்றார்க்கு - உலகைத் துறந்த சிவதருமிணிகட்கு, அகிலம் அணுகில் - உலகம் தாமே வந்தணுகினும், அது - அப்பிரபஞ்சம் , தியானத்தின் பற்றாய் - அவர் செய்யும் தியானத்திற்கு ஆதாரமாய், மறைக்கும் - தன் வியாபகத்துள் அடக்கி நிற்கும் என்றவாறு..
தேசன் - ஒளிமயமானவன். சூரிய கோடி சம: பிரப:' என ஆக மங்கள் தியானம் சொல்வது காண்க. தியானிக்கில், அணுகில் என்ற ஈரிடத்தும் உம்மை புணர்த்துப் பொருள் காண்க. இல்வாழ்க்கை வாசனை தேசனை மறைக்கும் என்றது மேகம் சூரியனை மறைத்தாற் போல்வதொரு வழக்காகுமன்றி, வாசனை இறைவனை மறைக்கும் ஆற்றலிலதென்று தெளிக. காசினி - பூமி. அகிலம் என்றது பிரபஞ்ச வாசனை. தாருகாவனத்து. மகரிஷிகள் ஏவிய பாம்பு, முயலகன் முதலாய பகைப்பொருள்கள் இறைவற்கு அணிகளாயவாறுபோல, சிவதருமிணிகளின் பிரபஞ்சவாசனையும் சிவமேயாய், தியானத்திற்கு ஆதாரமாய், பிரபஞ்ச வாசனையை மறைத்துச் சிவஞானமே மேவி நிற்கும் என்பதாம்.
--------------
உறையு மிலந்துறந்தா ருள்ளஞ் சிவமென்
றறையு மருணூல்க ளாய்ந்துஞ் - சிறையைக்
கழியா ரிலத்தறவர் கற்றதிறஞ் சற்று
மொழியார் துறவோரென் றோர். 23
இதுவும் அது .
இ - ள் : உறையும் இலம் துறந்தார் உள்ளம் - வினைப் போகங்களை நுகர்வதற்கு வாயிலாக உறையும் இல்லறத்தைத் துறந்த சிவதருமிணிகளின் உள்ளம், சிவம் என்று அறையும் அருள் நூல்கள் ஆய்ந்தும் - சிவமேயாம் என்று சொல்லுகின்ற அருள் நூல்களாகிய சிவாகமங்களை ஆராய்ந்தும், இலத்தறவர் - கிருகத்தர்கள், சிறையை கழியார் - பற்றாகிய பிரபஞ்சச் சிறையை நீக்காராய் அதனுள்ளேயே புகுந்து வருந்துவர், துற வோர் - சிவதரு.மிணிகள், கற்ற திறம் சற்றும் ஒழியார் - படித்த தன்மைகளினின்றும் சிறிதும் தவறார்; என்று ஓர் - என்று நீ தெளிவாயாக என்றவாறு.
வளர்ந்தும் கூட்டை நீங்காப் புழுப்போல அறிந்தும் காயச்சிறை யில் பற்றுவிலங்கை விடாராய் அதனுட்பட்டு அவலமுறுவர் உலக தருமிணிகள்; சிவதருமிணிகளோ சைவ நூல்களைக் கற்று அதன் வண்ணமே நிற்பர் என்பதாம்.
---------------
இலங்குநூற் கர்த்த மிலத்தா ரிசைப்பிற்
றுலங்கவிலம் பேணிச் சொலுவார் - விலங்க
விலந்துறந்தார் கூசா திசைப்பரிவ் வில்ல
மலந்தகைய வாராத வாறு. 24
இ -பா, சைவ நூல்களுக்குப் பொருள் செய்யும் முறையினும் இருவரும் வேறுபடுவர் என்கின்றது.
இ - ள் : இலத்தார் இலங்கு நூற்கு அர்த்தம் இசைப் பின் - இல்லறத்தார் விளங்குகிற சைவ நூல்கட்குப் பொருள் கூறின், துலங்க இலம் பேணி சொலுவார் - விளங்க இல்லறத் தைப் போற்றியே சொல்லுவார்கள்; இலம் துறந்தார் - சிவ தருமிணிகள், இவ் இல்ல மலம் தகைய வாராதவாறு விலங்க கூசாது இசைப்பர் - இந்தப் பிரபஞ்ச மாயையும் அதுபற்றி நிகழும் அறியாமை விளைவிக்கும் மலமும் ஆன்ம அறிவைத் தடுக்க வராத முறையில் விலகிப்போகும் வகையில் கூசாமல் சொல்லுவார் என்றவாறு.
கூசுதலாவது உள்ளதை உள்ளவாறு சொல்ல. உலகியலும், தற் பெருமையுந் தடுக்க அதனால் நாணுதல். துறவி அதனையுந் துறந்தவ ராதலின் கூசாதுரைப்பர் என்றருளியது. அவரவர் வினைவழி யநுபவ மாதலின் சைவ நூல்களுக்கே இல்லறத்தார் தம்மநுபவம் தோன்ற வும், துறவறத்தார் தம் சிவாநுபவம் தோன்றவும் பொருள் உரைப்பர் என்பது கருத்து.
------------
துறந்தார் முன் பாகஞ் சொலிக்குந் துறவை
யிறந்தார் முன் காம மெழுமா - னிறைந்தவிலந்
தொட்டாரை விட்டறிவிற் றோய்ந்தாரைத் தோய்வது நூற்
பட்டாங்கி லுள்ள படி. 25
இ - ள் துறந்தார் முன் - சிவதருமிணிகளின் முன்பு, பாகம் சொலிக்கும் பரிபாகம் தணலில் தீப்போலச் ' சொலிக்கும்; துறவை இறந்தார் முன் - துறவைக் கடந்தவர்களாகிய உலகதரு மிணியர்பால், காமம் எழும் - பற்று மிகும், நூல் - ஞான நூல்கள், பட்டாங்கில் உள்ளபடி - மெய்ந்நூல்களில் உள்ளபடி, நிறைந்த இலம் தொட்டாரை விட்டு - காமம் நிறைந்த இல்லறத்துப்பற றுக்கொண்டாரைவிட்டு, அறிவில் தோய்ந்தாரை தோய்வது - ஞானத்திற் புகுதியுடையாரையே பொருந்துவதாம் என்றவாறு.
முன்பு ஆகம் சொலிக்கும் எனப்பிரித்து, உடல் பொன் போல மிளிரும் என்றுரைப்பாரும் உளர். துறவையிறத்தலாவது உண்மை ஞானம் பெறுதற்கேற்ற துறவிற்கு வாயில்களான தீக்கைகளைப் பெற் றிருந்தும் அவற்றைக்கொண்டு கரையேறமாட்டாது இல்லறத்தி னின்று , புக்க வழி புக்கு, உண்டதே உண்டு , செய்தவற்றையே செய்து பயனிறத்தல். நிறைந்த இலம் என்றது குறிப்பு மொழியுமாம். பட் டாங்கு - மெய்ந்நூல்கள்.
---------
பண்ணு மனுக்கிரகப் பான்மை தனுப்போக
நண்ணுதற்கே யிற்குரவர் நாடியதா - மெண்ணித்
துறந்தகுர வோராவித் தொன்மலத்தை மாற்றச்
சிறந்ததென மாணா தெளி. 26
இ -பா . சிவகருணையைத் தொன்மைமலம் போக்கத் துணையாகக் கொள்வோர் துறவோர் ; போக ஏ துவாகக் கொள்ளுவர் இல்லறத் தோர் என்கின்றது.
இ-ள் : மாணா - மாணகவனே ! பண்ணும் அனுக்கிரகப் பான்மை - இறைவன் ஆன்மாக்களிடம் கைம்மாறு வேண் : டாதே - செய்யும் கருணையை, தனுப்போகம் நண்ணுதற்கே இற்குரவர் நாடியது ஆம் - எடுத்த உடம்பால், நின்ற உலகி லேயே நிலைபெற்ற போகத்தை அடைவதற்கே உலகதருமிணி கள் விரும்பியதாம்; எண்ணி - மாயேயத்தால் விளையும் தீமை களை எண்ணி, துறந்த குர்வோர் - சிவதருமிணிகளாகிய ஆசாரி யர்கள், ஆவி தொன் மலத்தை மாற்ற சிறந்தது என தெளி - ஆன்மாவை அநாதியே பற்றியுள்ள பழைமையான ஆணவமலத் தைப் பரிபாகப்படுத்தச் சிறந்தது என எண்ணியதாம்; இந்தப் பேதத்தை ஐயமகற்றித் தெளிவாயாக.
சிவகருணையைக் காமியப்பயனுக்குச் சாதனமாகக் கருதுவர் - உலகதருமிணிகள்; மலபரிபாகத்திற்குத் துணையாகக் கருதுவர் சிவ தருமிணிகள் என்பதாம்.
------------
பாவனையாற் றீக்கை பணவருகா லன்றில்ல
மாவினையே நெஞ்சின் மருவுமாற் - றீவினையை
மாற்றுவார் சீடன் வரும்பொருளா னீத்தோர்கள்
பாற்றுவார் பாவனையாற் பார். 27
இ - பா , இல்லறத்தார்க்குப் பாவனை செய்யுங்கால் மா வினையே வரும் என்கிறது.
இ-ள் : பாவனையால் தீக்கை பணவருகால் அன்று இல்லமா வினையே, நெஞ்சில் மருவும் - சிவோகம்பாவனை செய்து தீக்கை செய்யுங் காலமாகிய அப்போது வீட்டில் நடைபெறும் பெரிய வினைகளே நெஞ்சில் தோன்றும்; வரும் பொருளான் நீத்தோர் கள் - வினை காரணமாகப் போக ஏதுவாக வரும் பொருட்கண் பற்றை விட்ட துறவிகள், சீடன் தீவினையை மாற்றுவார் - சீட் னுடைய தீவினைகளை மாற்றுவார்கள்; பாவனையால் பாற்று வார் - சிவோகம்பாவனையால் வினைகளைக் கெடுத்தேவிடுவார் கள்; பார் - இதனை ஆராய்ந்து பார் என்றவாறு.
தீக்கை செய்யும்போது சீடனுடைய மலமாயாகன்மங்களை ஒழிக்க எண்ணி, கிருக ஆசாரியன் சிவோகம்பாவனை செய்வார். அவர் மனம் வீட்டு வேலைகளை எண்ணும் ; துறவியேர் ஸ்திரபாவனையால் தீவினையை மாற்றுவார்கள்; வினைகளைக் கெடுத்தும் விடுவார்கள்; இதுவே இவ்விருவர்கட்கும் உள்ள வேறுபாடாம் என்பது கருத்து. சீடன் வரும்பொருளால் நீத்தோர்கள்' என்று சிவதருமிணியரை விசேடித்தமையால், சீடன் தரும் பொருளால் தீக்கை செய்து அதனையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் கிருகர் எனக் கொள்ள வைத்தவாறுமாம்.
-------------
கொடுவிடங்கண் மாயக் குடரியாற் கொத்தி
யிடுவர்வர் மாணா விலத்தார் - கடுகும்
பறவைக் கரசு தனைப் பாவிப்பார் போலுந்
துறவர்க் கரசர் தொழில். 28
இ - பா , கிரியாவதிக்கும் ஞானவதிக்கும் உள்ள வேற்றுமை கூறுகிறது .
இ - ள் : மாணா - மாணவகனே! கொடு விடங்கள் மாய - கொடிய விடம் நீங்க, குடரியால் கொத்தி, இடுவரவர் இலத் தார் - கோடரியால் கொத்தி மருந்திடுபவர்களைப் போன்ற வர்கள் கிருகிகளாகிய ஆசாரியர்கள் : துறவர்க்கு அரசர் தொழில் - சிவதருமிணிகளின் செயலோ , கடுகும் பறவைக்கு அரசுதனைப் பாவிப்பார் போலும் - விரைந்து செல்லும் திருட னைப் பாவிப்பவர்கள் போலும் என்றவாறு.
தீட்சை செய்யுமுறையில், கருடபாவனையால் விடம் நீக்குபவர் களைப் போன்றவர்கள் துறவிகள்; கொத்தி மருந்திட்டு விடம் நீக்கு பவர்களைப் போன்றவர்கள் கிருகிகள் என்பது கருத்து குடாரி என்பது, குடரியாயிற்று : மாணா இலத்தார் எனக்கூட்டி மாட்சிமை! யில்லாத கிருகிகள் எனலுமாம்.
---------------
உடல்விடத்தைத் தீர்ப்பா ருறுமுயிருக் குற்ற
நடை நடப்பிப் பாரோ நவில்வாய் - திடனாகப்
போக்கும் பொருட்குவமை புண்ணியனோ டொன்றாக
வாக்கு முவமைக் கடா.. 29
இ-பா, போக்குவதும் ஆக்குவதும் ஒன்றாமா என்கிறது.
இ - ள் : உடல் விடத்தைத் தீர்ப்பார் - உடற்கண் உற்ற விடத்தைப் போக்குபவராகிய ஒருவர், உறும் உயிருக்கு உற்ற நடை நடப்பிப்பாரோ - தம்மிடம் வந்துற்ற ஆன்மாவிற்குப் பரிபாகத்திற்கு ஏற்ற அனுபவங்களில் பயிற்றுவிப்பாரோ, நவில்வாய் - சொல்லுவாயாக; திடனாக போக்கும் பொருட்கு உவமை - உறுதியாகக் கழிக்கும் பொருளுக்கு உவமையான. ஒன்று, புண்ணியனோடு ஒன்றாக ஆக்கும் உவமைக்கு - சீபரமே சுரனோடு அநந்நியமாகச் சேர்ப்பிக்கும் உவமைக்கு , அடா - பொருந்தா என்பதை அறிவாயாக என்றவாறு..
இது ஏ துவிலக்குவமையணி. கிருகிகள். உடம்பில் தீண்டிய விடத்தைப் போக்குபவர்கள்; துறவிகள் உயிர்க்குற்ற விடத்தையும் போக்கி, சிவத்தோடு இரண்டறக் கலக்கச் செய்பவர்கள். ஆதலால் இந்த இருவரும். ஒவ்வார் என்பதாம். அதற்கு ஏது தீட்சையாகிய கன்மத்தால் பாச்க்ஷயம்பண்ணுதல் கிருகிகள் செயல். பாசக்ஷயமும் பண்ணி , சிவத்தோடு ஒன்றாக இருத்துதில், துறவிகள் செயல். இவ விரண்டு உவமைகளும் ஒன்றற்கு ஒன்று பொருந்தாது எனக.
------------
சத்தியா லாத றருங்கருமத் தாலாத
லத்துவா சுத்தி யடைதலுமா - முத்தி
செறிவிக்கு நூலிற் சிறந்தவத்தை பத்தா
லறிவித்தல் சாத்தியமே யாம். 30
இ - ள் : சத்தியால் ஆதல் - ஞானவ தீக்கையினாலாவது, தருங்கருமத்தாலாதல் - கிரியாவதி தீக்கையாலாவது. அத்துவா சுத்தியடைதலும் ஆம் - அத்துவாக்கள் ஆறும் சுத்தியடைத் லாகும்; அவற்றுள், முத்தி செறிவிக்கும் நூலின் - பந்தமறுத்து முத்தியைக் கூட்டும் சைவ நூல்களாலும், சிறந்த அவத்தை பத்தால் - சிறந்த அவத்தைகள் பத்தாலும், அறிவித்தல் சத்தி யமேயாம் - உணர்த்துவதே ஞானவதிதீக்கையாம் என்றவாறு.
அத்துவாக்கள் ஆறாவன தத்துவம், கலை, புவனம், வன்னம், பதம், மந்திரம் என்பன. இவற்றுள் தத்துவம் புவனம் கலை மூன்றும் திரவியவடிவானவை; ஏனைய மூன்றும் ஒலிவடிவானவை. இவற்றுள் புவனம் தத்துவத்தைப்பற்றியும், தத்துவம் கலையைப்பற்றியும் நிற்கும். ஒலிவடிவாகிய மூன்றும் புவனத்தில் தோன்றிய சரீரத்தைப்பற்றி நிற்கும். அவற்றைச் சுத்தி செய்தலாவது இவற்றை ஒரோவொன் றாகக் கழித்துக்கொண்டு சிவபதத்தில் சேர்தற்கு உபாயம் பெறுதல். தத்துவமுதல் ஐந்தத்துவாக்களையும் தம்முளடக்கி நிற்கும் கலாத்துவா திரோதாயிரூபமாக நின்ற சிவசத்தியிலடங்க, சிவசத்தி சிவத்தினி டத்து அடங்குமாற்றை அறிதலாம். இதனை விளைவிப்பது தீக்கை. இதனை ''அங்கு அத்துவாத் துடக்கறவே சோதித்து" எனவரும் சிவஞானசித்தியார் திருவிருத்தப் பகுதியையும், அதற்குச் சுவாமிகள் வகுத்த உரையையும் கொண்டு தெளிக.
சிறந்த அவத்தை - நிலைகளுக்குள் மிகச் சிறந்ததாகிய சுத்தா வத்தை. அவை பத்தாமாறு ; சாக்கிரத்தில் சுத்தவித்தையீறாகிய ஐந்து கருவியும், சொப்பனத்தில் மயேச்சுரமீறாகிய நான்கு கருவியும், சுழுத்தி யில் சாதாக்கியமீறான மூன்று கருவியும், துரியத்தில் சத்தியீறாகிய இருகருவியும், துரியாதீதத்தில் சிவதத்துவமாகிய ஒரு கருவியும் கலாதி களைச் செலுத்தி நிற்பதால் விளைவன.
''ஐந்துசாக் கிரத்தி னான்கு கனவினிற் சுழுனை மூன்று !
வந்திடுந் துரியந் தன்னின் இரண்டொன்று துரியாதீதம்
தந்திடுஞ் சாக்கிராதி யவத்தைகள் தானந்தோறும்
உந்திடுங் காணந்தன்னிற் செயல்தொறு முணர்ந்து கொள்ளே ”
என்ற சிவஞானசித்தித் திருவிருத்தத்தால் தெளிவாம். இவற்றால் சுத்தாவத்தை நிகழுமாற்றை நுண்ணிதின் உணர்த்துதலே சத்திய தீட்சையாகிய ஞானவதியாம்.
------------
பிறியாக் கலைகள் பிறிக்குங்கான் மாண
னறியாத சத்தியமே யாகு - நெறியாக
வாங்கவையை யாசா னறிவித் தகற்றுகையா
லோங்கிய நற் சத்தியமென் றோர். 31
இ - பா. கிருகி, துறவி இருவரும் செய்யுந் தீக்கையாற் பயன் முறையே அசத்தியமும் சத்தியமுமாம் என்கின்றது.
இ - ள் : பிறியாக் கலைகள் மாணன் அறியாது பிறிக்குங் கால் - தேகத்தைவிட்டுப் பிரியாத நிவிருத்தியாதி பஞ்சகலை களையும் தீட்சிக்கப்பெறும் மாணாக்கன் அறியாதவாறு கிரியா வதி முறையில் பிரிக்கும் போது (அது), அசத்தியமே ஆகும் - வெறும் பாவனையாலியற்றுதலின் அது மெய்ம்மையாகாதாம்; ஆசான் நெறியாக வாங்கு அவையை அறிவித்து அகற்று கையால் - ஞானாசாரியன் முறையாக வாங்குகின்ற கலைகளை மாணாக்கனுக்கு அறிவித்து நீக்குகையால், ஓங்கிய நற்சத்தியம் என்று ஓர் - சிறந்த நல்ல மெய்ம்மையாம் என்று அறிவாயாக என்றவாறு.
கலைகள் நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை. சாந்தி, சாந்தியத்தை என்பன. நிவிருத்தி கலையாவது. ஆன்மாக்களைப் பந்தத்தினின்று நிவிர்த்திசெய்யும் சிவசத்தி நிவிர்த்தியெனப்படுவதால் அச்சத்திக்கு இடமாகிய சுத்தமாயையின் விருத்தியும் நிவிர்த்தியெனப் பெயர் பெறும். இங்ஙனமே பிரதிட்டாதி நான்கு சத்திகளுக்கும் இடமாகிய சுத்தமாயாவிருத்தியும் நால்வகைப்பட்டு பிரதிட்டை, வித்தை, சாந்தி. சாந்தியத்தை என நால்வகைப்படும். இவ்வைந்து கலைகளும் தத்துவ முதலிய ஐந்தத்துவாக்களையும் உள்ளடக்கி அவற்றிற்கு ஆதாரமாய் நிற்கும். இங்ஙனம் ஆதாரமாய் நிற்கும் கலைகளையே 'பிறியாக்கலைகள்' என்றருளியது. அவற்றைப் பிறித்தலாவது ஆசாரியன் சிவோகம் பாவனையால், மாணாக்கனை நோக்குதல் தீண்டுதல் முதலியன செய்து கலைகள் நீங்கியதாகப் பாவித்தல். கிரியாவானாகிய ஆசாரியன் இதனை இயற்றுங்கால் பாவனையாற்செய்தலின் அதனை மாணவன் உணரான் அதனால் அது அசத்தியமேயாகும்.
ஞானாசாரியன் அவற்றை நன்கு விளக்கி, அக்கலைகளுக்குள் இவ் வண்ணம் அத்துவாக்கள் அடங்கியுள்ளன ; அவற்றை அறிந்து நீக்கியவர் எய்தும் பதங்கள் இவை என்று உணர்த்தி அநுபவம் வருவித்து மேற்பதத்துய்க்க அவற்றை நீக்குகையால் அது சத்திய மாயிற்று என்க. கலைகளின் விளக்கத்தை மாபாடியம் 2-ம் சூ. 3-ம் அதிகரணத்துட் காண்க. கலாசோதனையைச் சிவாக்கிரபத்ததி , அகோரசிவபத்ததிகளுள் நிருவாண தீட்சாவிதியுள் கலாசோதனைப் பகுதியுட்காண்க.
-------------
உற்ற நிரு வாண மிருவகையா வோதியதிற்
செற்றா ரனுக்கிரகஞ் செய்வதா - மற்றில்ல
நல்லா ரசத்தியமே நண்ணுவதாம் மேலவத்தை
செல்லாத வாதலினாற் றேர். 32
இ - பா , மேலதற்குக் காரணம் உணர்த்துகின்றது.
இ-ள் : உற்ற நிருவாணம் இருவகையா ஓதியது - பொருந் திய நிர்வாண தீக்கை ஞானவதி கிரியாவதி என இருவகையாகக் கூறியது, இல் செற்றார் அனுக்கிரகம் செய்வதாம் - இல்லறத்தை விட்ட சிவதருமிணிகள் ஞானவதியால் வீடுபேறளித்தலாகிய அநுக்கிரகத்தைச் செய்வதாம்; மற்று இல்ல நல்லார் அசத்தி யமே நண்ணுவதாம் - இல்லறத்திலுள்ள நல்லோர்களாகிய உலக தருமிணிகள் செய்வது அசத்தியத்தையே அடைவிப்பதாம்; இதற்குரிய ஏது என்னவோ எனின், மேல் அவத்தை செல்லாத ஆதலின் (என) தேர் - மேல்நிலைக்கண் செல்லமுடியாத நிலை யினால் என்று தெளிவாயாக என்றவாறு.
மேனிலைக்கண் செல்ல முடியாமையாவது, கிருகிகள் சிவோகம் பாவனை செய்யும் போது, அவர்கள் சித்தம் இல்லறத்தாற் பற்றப்பட்டு இழிதல் என முன் வெண்பாவிற் கூறியது கொண்டு அறிக. தான் மேனிலை எய்தமாட்டாதார் பிறரை எய்துவிப்பது எங்ஙன் என்று
ஒழிக.
-------------
கடுவடக்கு நோக்குக்குக் காட்டுமருந் துற்ற
கொடுவிடத்தைக் கொன்று மொப் பாமோ - மடமடக்கு
நோக்குக் கிணையாமோ நுண்பொருளா லாகுதியை
யாக்கியது மாணா வறி. 33
இ - பா , இருவர் நோக்குக்குமுள்ள ஏற்றத்தாழ்வை உவமை முகத்தான் விளக்குகின்றது.
இ - ள் : கடு அடக்கும் நோக்குக்கு - விடத்தை வலி ஒடுக்கி அடக்கும் கருடபாவனையால் நோக்கும் நோக்கிற்கு, காட்டு மருந்து - காட்டு மூலிகைகளாகிய மருந்துக்கள், கொடுவிடத் தைக் கொன்றும் ஒப்பாமோ - கொடியவிடத்தை நீக்கியும் ஒப்பாகுமோ? மடம் அடக்கு நோக்குக்கு - அறியாமையை நீக்குகின்ற அருட்பார்வைக்கு , நுண்பொருளால் ஆகுதியை ஆக்கியது - ஓமத்திரவியங்களால் ஓமஞ்செய்தது, இணையாமோ - ஒப்பாகுமோ? மாணா அறி - மாணவகனே அறிந்து கொள் என்றவாறு.
இதன் விளக்கம் முன்னர் இந்நூல் இருபத்தெட்டாம் வெண்பா வால் உணர்த்தப்பெற்றது.
------------
பிறவா வறிவு பிறந்திலத்தை மாற்றித்
துறவா வருளாந் துறவர்க் - கிறவா
வதிகாரத் தாற்றீக்கை யாக்குவோ மென்னு
மதிகா ரகர்க்கென் வரும். 34
இ - பா. சாதிகாரையில் கிருகஸ்தர்க்கு அதிகாரமில்லை என்று கூறுகிறது.
இ - ள் : பிறவா அறிவு பிறந்து - ஆன்மாவினிடமாக ஞானம் விளக்கம் பெற்று, இலத்தை மாற்றி - இல்லறத்தை விட்டு, துறவா அருள் ஆம் துறவர்க்கு - நீங்காத திருவருளில் உறைத்து நிற்கும் சிவதருமிணிகட்கு , இறவா அதிகாரத்தால் - சாதி காரையால், தீக்கையாக்குவோம் என்னும் - தீக்கை புரிவோம் என்னும், மதிகாரகர்க்கு என் வரும் - அறிவையுடைய கிருகத் தர்க்கு என்ன பயன் விளைவதாம் என்றவாறு.
பிறவா அறிவு - பூவினிற்கந்தம் பொருந்தியவாறுபோல், சீவனுக் குள்ளே தோன்றிய சிவமணம். அது பிறத்தலாவது பரிபாகத்தால் மாசு நீங்கி அதன் ஞானம் வெளிப்படல். இலம் - இல்லம் - இல்லறம். இல்லறம் பொன் விலங்கு போல ஆன்மசுதந்தரத்தையும் தடை செய்து. வியாபகத்தையும், தலைவனோடு இடைவிடாது கூடியிருக்கும் நிலையை யும் தடை செய்வதாகலின் அதனைத் துறந்து என்பவர்கள் 'இலத்தை மாற்றி' என்றருளினார்கள்.
துறவா அருள் - குட்டி பற்றாதேயிருந்தும் தான் கவ்விச்செல்லும் பூனை போல , ஆன்மா விட்டாலும் ஆன்மாவைத் தான் துறவாத திரு வருள். திருவருளை நீங்காத துறவர் எனக்கூட்டிப் பொருள்கோடலு மாம். இறவா அதிகாரம் - கடவாத அதிகாரம் ; என்றது அதிகாரத் தோடு கூடியது. அஃதாவது சாதிகாரம் என்பதாம். சாதிகாரையாவது சபீசதீக்கைப் பேறுடையார் சாதகரும், ஆசிரியருமாய் நித்தியத்தும் நைமித்திகத்தும் காமியத்தும் அதிகாரிகளாதலின் அவ்வதிகாரத்தைப் பயக்கும் சபீச நிர்வாணமும், அதற்கங்கமாகிய சமய விசேடங்களும் ஆம். அவ்வதிகாரத்தைக்கொண்டு, துறவர்க்குத் தீக்கை செய்வோம் என்னும் மதிகாரகர் என்க.
துறவிக்குத் துறவியும், நைட்டிகருமே தீக்கை செய்தற்கு அதிகாரிக ளாதலின் காரகராகிய உலகதருமிணிகளை மதிகாரகர் என இழித்துக் கூறியது. மதிகாரகர் - மதியையுடைய காரகர் என்க.
-------------
சித்தத் தறியாமை சேர்ந்திலத் தின்பண்பாய்ச்
சத்தியே யெவ்விடத்துஞ் சாருமா - லொத்தே
யளிப்பா னுடல் பொருளோ டாவியெல்லா மாங்கே
யொளிப்பான் குருவோ வொழி. 35.
இ - பா , பொருட்பற்றுக்கொண்டார் குருவாகார் என்கிறது.
இ - ள் : சித்தத்து அறியாமை சேர்ந்து - மனத்தில் அறி யாமையைப் பொருந்தி, இலத்தின் பண்பாய் - தாம் சேர்ந் திருக்கின்ற இல்லத்தின் குணமே தமது குணமாய், சத்தியே எவ்விடத்தும் சாரும் மால் ஒத்தே - ஆற்றலாக எங்கும் பொருந்தும் மாயையின் காரியமாகிய மயக்கவுணர்வால் ஒத்து, அளிப்பான் உடல் பொருளோடு ஆவி எல்லாம் - தமக்கு அளிப்ப வனாகிய மாணவகனது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும், ஆங்கே - பெற்ற அக்கணமே , ஒளிப்பான் - தமக்காம் என்று மறைத்து வைப்பவன், குருவோ ஒழி - குரு ஆவானோ? ஆகான்; அவனை நீங்கு என்றவாறு.
தாம்பெற்ற தீக்கையாதிகளால் மல நீக்கம் பெற்று விளங்க வேண் டியவர்கள் அங்ஙனம் ஆகாமல் , மலத்தின் காரியமாகிய அஞ்ஞானத் தால் பற்றப்பட்டிருக்கிறார்களே என்றிரங்கும் திருவுள்ளம் சித்தத்து அறியாமை சேர்ந்து' என்பதால் விளக்கப்பெற்றது. ஆன்மாக்கள் சிவத்தைச் சார்ந்து சிவமாயும், தனு கரணாதிகளாகிய பாசத்தைச் சார்ந்து பாசமாயும் இருக்குந் தன்மையன. ஆயினும் சிவதீட்சை பெற்றுப் பரிபாகமுற்று ஆன்மாக்கள் சிவத்தைச் சார்ந்து சிவமாயே விளங்க வேண்டியிருக்க, கிருகிகள் இல்லத்தைச் சார்ந்து இல்லத்தின் பண்பேயாய் இருக்கின்றார்களே. என்ன இல்லத்தின் பண்பு ஆய்' என்றது. சத்தி - ஆற்றல் ; ஈண்டுப் பசுபோத ஆற்றல். அதனால், தீட்சாதிகாரமுள்ள ஆசாரியனாகச் சிவோகம்பாவனையில் இருக்கிற போதும், ஆணவத்தின் வலியொடுக்க அரனாலருளப்பெற்ற மாயை யால் மயங்கிய நிலையில் ஒத்து.
அளிப்பான் - அளிப்பவனாகிய சீடன். ஆங்கே ஒளிப்பான் என்றது பொருட்கண் உள்ள இவறன்மை காட்டி நின்றது. பற்ற வேண்டிய அருளை விட்டும், விடவேண்டிய பொருளா திபற்றுக்களைப் பற்றியும் இருக்கின்ற உலக தருமிணியா குருவாவான்? ஆகான் என்று அறிந்து ஒழிக என்பதாம்.
-------------
அகத்தகலா வீசன்பா லன்பாகித் தீய
செகத்தகலு வாரே சிவமாய்ப் - புகுத்திடுமா
லார்ப்பா ருடல் பொருளோ டாவியெல்லா மாங்கேறச்
சேர்ப்பா ரவர்குருவாய்த் தேர். 36
இ -பா, குருவாகக் கொள்ளத்தக்காரியல்பு இதுவெனல்.
இ-ள் : அகத்து அகலா ஈசன்பால் - மனத்தைவிட்டு என்றும் நீங்காமல் எழுந்தருளியிருக்கின்ற சீபரமேசுரனிடம், அன்பு ஆகி - என்றும் நீங்காத அன்பை உடையவராகி, தீய செகத்து அகலுவாரே - தீமை பொருந்திய உலகப்பற்றிலிருந்து நீங்குமவர்களே, சிவமாய்ப் புகுத்திடும் மால் ஆர்ப்பார் - சிவ பரம்பொருளாகி நம்மனத்துப் புகுத்தும் பெருமையை என்றும் நீங்காமல் நம்மோடு இணைத்துவைப்பவர்கள்; உடல் பொருள் ஆவி எல்லாம் ஆங்கு ஏற சேர்ப்பார் - நாம் கொடுக்கும் உடலாதி மூன்றையும் சிவபரம்பொருளினது திருவடிக்கண் பொருந்தச் சேர்ப்பவர்கள்; அவர் - அவர்களையே , குருவாய்த் தேர் - குருவாகத் தெளிவாயாக என்றவாறு.
இறைவன் எல்லா ஆன்மாக்களிடத்தும் உயிர்க்கு உயிராய் உறைவானாயினும், அவன் உறைதலை உணர்ந்து அவனிடத்து நீங்கா அன்பு பூண்பவன் குரு என்பது தோன்ற அகத்தகலா ஈசன்பால் அன்பாகி' என்றருளியவாறு.
விலங்கறுக்கக் கொடுக்கப்பெற்ற கருவியே தடையானாற்போல அறியாமை நீங்கி ஆன்மாக்களுய்ய இறைவனால் வினைக்கீடாக அளிக்கப்பெற்ற பிரபஞ்சமே அறியாமை மிகச்செய்து தீய பயத்தலால் தீயசெகம் என்றது. அகலுவார் என்றது சிவதருமிணிகளை . மால் - பெருமை. ஆங்கு - சிவனருளில். ஏற - உயர்ந்து பொருந்த.
---------------
தனக்குப் பலன்கருதான் றக்கவுயிர்க் குற்ற
வினைக்குற்றந் தீர்ப்பான் விரத்தன் - மனைக்குற்றத்
தோங்குவான் றீக்கைக் குறுங்கூலி வாங்கியில்லந்
தாங்குவான் றேசிகனோ தான். 37
இ - பா , கிருகி தேசிகனாகான் என்கின்றது.
இ - ள் : தனக்குப் பலன் கருதான் - மலக்கோண் நீங்கி சிவபோகத்தமர்ந்திருத்தலாகிய பலனைத்தவிரத் தனக்கு வேறு பலனைக் கருதான்; தக்க உயிர்க்கு உற்ற வினைக்குற்றம் தீர்ப் பான் - பரிபாகமுற்ற ஆன்மாக்களுக்கு உற்ற வினைகளாகிய குற்றங்களைத் தீர்ப்பான், விரத்தன் - பற்றற்றவன், மனை குற்றத்து ஓங்குவான் - ஆயினும் இல்லறத்திலிருப்பதால் அதன்கண்விளையும் குற்றத்தில் மிக்கவன், தீக்கை குறுங்கூலி வாங்கி இல்லம் தாங்குவான் - தாம் செய்யும் தீக்கைக்காகச் சிறு ஊதியம் பெற்று அதனைக் கொண்டு குடும்பத்தைப் பாது காப்பவன், தேசிகனோ - குரு ஆவானோ என்றவாறு.
தன் குற்றம் போக்காமல் பிறர் குற்றம் போக்குபவனும், பற்றில் லாதவனாயினும் இல்லறத்தால் விளையும் குற்றங்களில் மிக்கவனும், தீக்கைக்குக் கூலி வாங்கிக் குடித்தனம் பண்ணுமவனுமாகிய கிருகி தேசிகனாவானோ? ஒருபோதும் ஆகான் என்பதாம். தான் - அசை.
-------------
அனுக்கிரகஞ் செய்தங் கவர்பா லணுகி
யினிக்கிரகந் தாங்கென் றிரவார் - தனிக்கதிராய்க்
காய்வார் பிரவஞ்சக் காரகல நோக்கியரு
ளீவார் துறவோரென் றெண். 38
இ - பா , சிவதருமிணியரே சிறந்தார் என்கிறது.
இ - ள் : அநுக்கிரகம் செய்து - சீடர்களுக்கு உபதேசமும் கருணையும் பாலித்து, அங்கு அவர்பால் அணுகி - அச்சீடர்பால் அணுகி, இனி கிரகம் தாங்கு என்று இரவார் - நீ எனக்குச் சீடனாதலின் என் குடும்பத்தை வறுமைவாட்டாமல் தாங்கு வாயாக என்று யாசிக்கமாட்டார்கள் : தனி கதிராய் காய்வார் - ஒப்பற்ற சூரியனாக விளங்குவார், பிரவஞ்ச கார் அகல நோக்கி - பிரபஞ்சமாகிய மேகம் நீங்க அருட்பார்வை செய்து, அருள் ஈவார் - அருளை வழங்குவார்; துறவோர் என்று எண் - சிவ தருமிணிகளாகிய துறவிகள் என்று எண்ணுவாயாக என்றவாறு.
சிவதருமிணிகளுக்கு எவ்வகைப்பற்றும் இல்லாமையால், யாரை யும் சென்று எதனையும் யாசியார்கள்; ஞான சூரியனாக விளங்குவார்கள்; அருளை வழங்குவார்கள் என்பதாம்.
------------
பிணிதீர்ப்பார் மக்கள் பிணியுற்றார் கூலி
யெணியோரா மக்கட் கிரங்கி - யணிநோயை
மாற்றுவார் போல மலப்பிணியை மன்னுயிர்க்குப்
பாற்றுவார் தேசிகராய்ப் பார். 39
இ - பா , உலகதருமிணியரின் இயல்பு கூறுகிறது.
இ-ள் : மக்கள் பிணி தீர்ப்பார் - மக்கட்குற்ற நோயைப் போக்குவார்; பிணி உற்றார் - தாம் பிணியை அடைவார்; கூலி எணி - கைக்கூலியைக் கருதி, ஓரா மக்கட்கு இரங்கி - எதனையும் ஆராய மக்களுக்கு இரங்கி, அணிநோயை மாற்றுவார் போல - நிரலாகிய பிணியை மாற்றுவார் போல , மலப்பிணியை மன் உயிர்க்கு பாற்றுவார் - மூலமலமாகிய நோயை நிலைபேறுடைய உயிர்கட்குப் போக்குவார்; தேசிகராய் பார் - இவரே கிருகிகளா கிய தேசிகர் ; நீ ஆராய்ந்து பார் என்றவாறு.
பிறர் பிணியைத் தீர்ப்பார். தாம் பிணியை அடைவார்; நோயைப் போக்குபவர்களைப்போல மலப்பிணியை உயிர்கட்குப் போக்க மாட் டார்; இவர்களையே தேசிகராகப் பார் என்று இகழ்ச்சி தோன்றக் கூறி யருளியவாறாம்.
------------
தன்னாகத் துற்றார் தருமகுரு வாகுமென
வின்னா விலத்தா ரிசைவென்னா - மின்னா
மனித்தியத்தைச் சேர்ந்தங் கறிவறிவிற் சேர்ந்து
செனித்தவரே தேசிகர்தே சால். 40
இ - பா , தேசொடு செனித்தவரே தேசிகர் என்கிறது.
இ - ள் : தன் ஆகத்து உற்றார் தரும் குரு ஆகும் என - தன்னைப்போல உடலொடு வந்தார் அனைவரும் தத்தம் தருமத் திற்றவறாத ஆசாரியனாகும் என்று, இன்னா இலத்தார் இசைவு என்னாம் - துன்பம் பொருந்திய கிருகிகள் எண்ணுவது என்ன பயனைத் தருவதாம்; மின்னாம் - மின்னலை ஒத்த, அனித்தியத் தைச் சேர்ந்து - அநித்தியத்தை வஸ்துக்களில் அறிந்து, அங்கு அறிவு அறிவில் சேர்ந்து - பதிஞானத்தால் ஞானமே வடிவான சிவத்தில் அந்வரதமும் பொருந்தி, தேசால் செனித்தவரே - ஒளியால் தோற்றியவரே , தேசிகர் - குரு ஆவார் என்றவாறு.
உடலெடுத்தவரனைவரும் தேசிகராகார்; நித்தியா நித்தியங்களை உணர்ந்து, பசுபோதங்கழன்று, பதிபோதமேவரப்பெற்று, அதனால் அறிவுருவச்சிவனை அநவரதமுங்கண்டு, அவ்வொளியோடு தோன்றி யவரே தேசிகராவார் என்பதாம்.
----------
திலமளவு தானந் திகழ்மலைபோ லாகிப்
புலம் விளையச் செய்யும் புகழா - லில மகன்ற தேசிகர்க்கே
யாவிதனுச் செல்வமுமொத் தீவாரை
மாசிவமாய் மாணா மதி. 41
இ - பா , ஞானிகட்கே ஈக என்கிறது.
இ - ள் : திலம் அளவு தானம் திகழ்மலை போல் ஆகி - எள் ளளவு ஈந்த தானம் விளங்குகின்ற மலைபோல் ஆகி, புலம் விளையச்செய்யும் புகழால் - ஞானத்தை மேன்மேலும் விளை விக்கும் புகழையுடைமையால், இலம் அகன்ற தேசிகர்க்கே - இல்லறத்தை இளமையிலேயே விட்ட நைட்டிகரான ஆசாரி யருக்கே , ஆவி தனு செல்வமும் ஒத்து ஈவாரை - உடல் பொருள் ஆவிகளை மனமொத்து அளிப்பவர்களை, மாணா - மாணவகனே, மா சிவமாய் மதி - பரமசிவமாகப் புத்திபண்ணு என்றவாறு.
'திலமத் தனைபொன் சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோகமுந் தரும்
நிலமத்தனை பொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே "
"கோல வறட்டைக் குனிந்து குளகிட்டு
பாலைக் கறந்து பருகுவதே யொக்கும்
சீலமும் நோன்பு மிலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது வாமே"
எனவரும் திருமந்திரங்களும் காண்க.
----------------
பலவிசிட்டத் தாலும் பவமறவே நோக்கு
நிலைவிசிட்டத் தாலுநிறை வாலுங் - கலைவிசிட்டங்
காட்டி யறிவிற் கலப்பானு நீத்தோரை
நாட்டிய நற் றேசிகராய் நாடு. 42
இ -பா, நைட்டிகரையே குருவாக அடைக என்கிறது .
இ - ள் : பல விசிட்டத்தாலும் - சிறந்த பயன்களையுடைமை யானும், பவம் அறவே நோக்கும் நிலை விசிட்டத்தாலும் - மாணாக்கனைப் பிறவி வேரறச் சிவோகம்பாவனையால் நோக்கு கின்ற நிலைச்சிறப்பானும், நிறைவாலும் - எஞ்ஞான்றும் பூரண மாய் விளங்குவதானும், கலை விசிட்டம் காட்டி - பஞ்சகலைகளும் சிறந்து விளங்கும் நிலையை அறிவித்து, அறிவிற் கலப்பானும் - அறிவுருவச் சிவத்தினிடம் இடைவிடாது கலந்திருப்பதாலும், நீத்தோரை - நைட்டிகராகிய துறவிகளை, நாட்டிய நல் தேசிக ராய் நாடு - நிலைபெற்ற நல்லாசிரியனாகத் தெளிந்து கடைத் தேறுவாயாக என்றவாறு.
பலவிசிட்டம் - பயனாற்சிறந்தது; என்றது ஏனையாசாரியர் பயனாற் குறையுடையர். அஃதாவது காமியாதி பயன்களையும், பதமுத்திகளை யும் அளிக்க வல்லவர்கள். இவர்களோ நிஷ்காமியப் பயனையும், பரமுத்தியையும் அளிக்கவல்லவர்கள். ஆதலால் பலவிசிட்டம் உடை யார் என்றது.
அவர்கள் சிவோகம்பாவனை செய்யினும், இல்லறவாசனை தாக்க அதனால் நிலையிற்றாழ்வர். இவர்கள் அவ்வாசனையே இல்லாமையால் பிறவியைக் கெடுக்கும் சிவநோக்குடையர்.
அவர்கள் வீட்டில் தேவையால் உண்டானகுறை சித்தத்தில் காமாதிகளால் உண்டாகும் குறை. எல்லாவகையிலும் குறையுடைய ராய் ஏகதேச ஞானிகளாய் இருப்பர். இவர்கள் எல்லாம் எங்கும் என்றும் பரிபூரணமாக இருப்பதால் குறையேயில்லாதவர்கள்.
சுத்தமாயையின் விருத்தியாகிய நிவிருத்தியாதி பஞ்சகலைகளும், சாத்திதத்துவத்திற் புவனரூபமான பஞ்சகலைகளும் வேறாக நிற்கின்ற நிலையினையும், அவற்றுள் மாயாவிருத்தியாகிய பஞ்சகலைகள் ஐவகை யத்துவாக்களை உண்டாக்கி நிற்கும் நிலையையும் அறிவித்தலே கலை விசிட்டம் காட்டுவதாம்.
----------
ஆகையினா லார்க்கு மனுக்கிரக ராஞ்சிவத்தோ
டேகமா யாவிக் கிசைந்தபரி - பாகமே
நோக்குந் துறவோரை நுண்ணறிவா யுள்ளத்தி
லாக்குவதே யாவிக் கணி. 43
இ - பா , நைட்டிகாசாரியரைத் தியானிப்பதே ஆன்மாவிற்கு அணியாம் என்கின்றது .
இ - ள் : ஆகையினால் ஆர்க்கும் அனுக்கிரகராம் சிவத் தோடு - ஆன்மாக்கள் அனைவர்க்கும் அநுக்கிரகராகிய சிவபெரு மானோடு , ஏகமாய் - ஒன்றாய், ஆவிக்கு இசைந்த பரிபாகமே நோக்கும் துறவோரை - ஆன்மாக்களுக்குப் பொருந்திய பரி பாகத்தை அருளும் நைட்டிகாசாரியரை, நுண் அறிவாய் - நுட்பமான அறிவினையுடைய மாணவகனே ! உள்ளத்தில் ஆக்கு வதே ஆவிக்கு அணி - மனத்தில் தியானிப்பதே உன் உயிர்க்கு அழகு செய்வதாம் என்றவாறு.
நைட்டிகாசாரியர், பரம கருணாமூர்த்தியாகிய சிவத்தோடு ஏகமாய் நின்று, தம்மை வந்தடைந்த ஆன்மாக்களுக்கு இசைந்த பரிபாகம் அருளிச்செய்பவர்கள்; அவர்களை மனத்தில் தியானிப்பதே உன் னுயிர்க்கு ஓரணியாம் என்பது கருத்து.
நுண் அறிவாய் ஆக்குவதே எனக் கூட்டுதலுமாம்.
--------------
விடப்பட் டதனு விடுவிப்பார் தம்மாற்
றொடப்பட் டதனைவிடச் சொல்லார் - தடைப்பட்ட
வில் வாழ்வார் நன்கென் றிசைப்பா ரிதனைவிடச்
சொல்வா ரலரே துணி. 44
இதுவும் நைட்டிகரியல்பும், கிருகிகளியல்பும் உணர்த்துகிறது.
இ-ள் : விடப்பட்ட தனு விடுவிப்பார் - பிராரத்த புசிப் பிற்காக விடப்பட்ட தனுவின் கண்ணதாகிய பற்றை விடச் செய்வார்; தம்மால் 'தொடப்பட்டதனை விடச்சொல்லார் - தம்மால் தொடப்பட்டதாகிய சிவபரம்பொருளை விட்டிடு என்று பணியார்; இல்வாழ்வார் - இல்வாழ்வாராகிய உலக தருமிணிக்ளோ , தடைப்பட்ட நன்கு என்று இசைப்பார் - மலகன்மங்களால் தடைப்பட்டனவே நன்று என்று சொல்வர்; இதனை விடச் சொல்வார் அலர் - தடைகளை விட்டு விலகு என்று சொல்லமாட்டார்கள்; துணி - இவர் பேதத்தைத் துணிவாயாக என்றவாறு.
பின்னர் இல் வாழ்வார் என எழுவாய் கூறுதலின் முன்னதற்கு நைட்டிகர் என எழுவாய் வருவித்துரைக்க.
நைட்டிகர் , பிராரத்த கன்மப்புசிப்பிற்காக இறைவனால் விடப் பட்ட உடம்பில் விளையும். பற்றை விடுவிப்பார்கள்; சீடனுக்குத் தம்மால் தொடப்பட்ட சிவத்தை அநவரதமும் பற்றி நிற்கச்செய்வாரே யன்றி விடச்சொல்லார்; கிருகிகளோ மலகன் மங்களால் தடைப்பட்ட வாழ்வே நல்லது; அதனைவிட்டு விலகுக என்று சொல்லார் என இருவர் உபதேசமுறையும் விளக்கப்பெற்றமை காண்க.
---------------
உண்ணான் புலாறீதென் றோதுவா னுண்பான்றீ
தெண்ணா னிலந்தீதென் றேத்துவான் - பெண்ணைத்
துறந்தா னிலத்துறைவான் றோய்ந்த நலஞ் சற்று
மறந்தா னலனே மதி. 45
இதுவும் அது .
இ - ள் : புலால் உண்ணான் புலால் தீது என்று ஓதுவான் - புலால் உண்ணாதவன் புலால் தீமையானது என்று சொல்வான்; உண்பான் தீது எண்ணான் - புலால் உண்பவன் அது தீமையானது என்பதை எண்ணவும் செய்யான்; அதுபோல, பெண்ணை துறந்தான் இலம் தீது என்று ஏத்துவான் - பெண்ணைத் துறந்த நைட்டிகன் தம் சீடன் இல்லறத்தை மேற்கொள்ளுதல் தீமை யானது என்று. உயர் நிலைக்கண் உயர்த்துவான்; இலத்து உறை வான் - இல்லறத்தை மேற்கொண்ட உலகதருமிணியான ஆசாரி யன், தோய்ந்த நலம் சற்றும் மறந்தான் அலன் - தான் தோய்ந்த இல்லற இன்பத்தைச் சிறிதும் மறந்தானல்லன், மதி - எண்ணு வாயாக என்றவாறு.
புலால் உண்பவன் புலாலைத் தீதென்று எண்ணாததுபோல, இல் லறத்தில் தோய்ந்தவன் சிற்றின்பத்தை மறவாமைமட்டுமேயன்றித் தீதென்று எண்ணவும் செய்யான் என உவமையடையைப் பொருட் கண்ணும் பொருளடையை உவமைக்கண்ணுந்தந்து பொருள் கொள்க. இப்பாடல் எடுத்துக்காட்டுவமையணி.
--------------
சரியாதி நான்கிற் றருங்குரவோர் நான்காய்
வரையா மரபின் வரினு - முரைசேரு
மூனக் குரவ ரொருமூவர் மற்றொருவர்
ஞானக் குரவரென நாடு. 46
இ - பா. ஊனக்குரவரும் ஞானக்குரவரும் இத்துணையரென்கிறது.
இ - ள் : சரியாதி நான்கின் தரும் குரவோர் நான்காய் - நான் குமார்க்கங்களால் தரப்படுகிற ஆசாரியர்கள் நால்வராய், வரையா மரபின் வரினும் - வரையப்பெற்று முறைமையாக வரினும், உரைசேரும் ஊனக்குரவர் ஒருமூவர் - சொல்லப்படு கின்ற குற்றமார்ந்த ஆசாரியர்கள் மூவராம்; ஞானக்குரவர் ஒருவர் என நாடு - ஞானாசாரியர் ஒருவரேயாவர் என அறிக என்றவாறு.
சரியாதி மூன்றிலும், அனுபவமுடையராய், நிர்வாணமொழிந்த தீக்கை பெற்றோர் ஊனக்குரவர் : ஞானம் பெற்று நல்லருள் அனுபவ நெறிக்கண் நிற்போர் ஞானாசாரியராவர் என்பது கருத்து. வரையா - வரைந்து; நிர்ணயிக்கப்பெற்று. செய்யா என்னும் எச்சம். இது வரினும் என்பதுடன் முடிந்தது. சரியாவானும், கிரியாவானும், யோக வானும் ஊனக்குரவர் என்பது. இவர்களுக்குத் தம் எல்லையினும், கீழெல்லையினும் அதிகாரம் உண்டு. ஞானியோ நாலினுக்கும் உரியன் என்பதாம்.
-------------
கரும குரு நிலைமை கைவிட்டு ஞான
தரும குரவனடி சர்ரென் - றொருமித்தே
யெல்லா மொழியு மிசைக்குந் துறவோர்க்கின்
றில்லா ரிணையலவா யெண். 47
இ -பா, நைட்டிகர்க்குக் கிருகி இணையாகார் என்கிறது.
இ - ள் : கரும குரு நிலைமை கைவிட்டு - கன்மாந்த குரவன் நிலைமையைக் கைவிட்டு, ஞான் தரும் குரவன் அடி சார் என்று - ஞானாசாரியன் திருவடியை அடைந்தொழுகுக என்று, எல்லா மொழியும் ஒருமித்தே இசைக்கும் - வேதம் சிவாகமம் முதலிய எல்லா மொழிகளும் ஒன்றாக மொழியும்; ஆதலால், இன்று துறவோர்க்கு இல்லார் இணை அலவா (க) எண் - இன்று துறவி களாகிய நைட்டிகர்க்குக் கிருகிகள் இணை அல்லர் என எண்ணுக என்றவாறு.
அலவா என்ற வினையெச்சத்திற்கு வினைமுதல் இணை என்க. கருமகுரு - கிரியாவதி தீட்சை செய்பவனாகிய உலகதருமிணி.
-----------
ஆய்ந்து கிரி யாவிதிவீடாயாக் குரவனைவிட்
டாய்ந்தறிக வாய்ந்தவர்க்கா ளாயென்று - தோய்ந்த நெறி
வல்லான் கருணை மறைஞான மாமுனி நூல்
நல்லா னுரையதனை நாடு. 48
இ - ள் : கிரியாவிதி ஆய்ந்து வீடு ஆயாக் குரவனை விட்டு - கிரியாவிதிகளை ஆராய்ந்து வீட்டினைப்பற்றி ஆராயாத ஆசாரி யனை நீக்கி, வாய்ந்தவர்க்கு ஆளாய் ஆய்ந்து அறிக என்று - சிவஞானப்பேறுடையார்க்கே அடிமையாக ஆராய்ந்து தெளிக என்று, தோய்ந்த நெறி வல்லான் கருணை மறைஞான மாமுனி நல்லான் நூல் - கனிந்து தோய்ந்த சிவநெறிக்கண் வல்லவனும் கருணை நிறைந்தவனுமாகிய மறைஞானசம்பந்த தேசிகராகிய நல்லவன் அருளிச்செய்த நூலின்கண்ணுள்ள, உரையதனை நாடு - ஆப்தவாக்கியமாகிய அதனை ஆராய்ந்து தெளிக என்றவாறு.
கிரியாவிதி - சோமசம்பு , சிவாக்கிரயோகியர், இராமகண்டர், அகோரசிவர் முதலியோரியற்றிய பதினெண்பத்ததிகள். அவைகள் கன்மாந்தகுரவர்கள் குண்ட் மண்டலங்களைப் புறத்தேயிட்டு உபகர ணங்களைக்கொண்டு இயற்றப்படும் கிரியாவிதியை விளக்குவன. கிரியையென மருவும் யாவையும் ஞானங்கிடைத்தற்கு 'வாயிலாமே யன்றி அதுவே ஞானமாகாது. ஆதலின் அவற்றைப் படித்தலால் ஆய்தலால் மட்டும் போதிய பயனில்லை என்றுணர்த்தியவாறாம். ஆசா ரியன் கடமை பதி பசு பாசம் தெரித்தலாதலின் அதனையுணர்ந்து , வீடடைதற்குரிய வழிகளைக் கேட்டலாதிகளும் கேட்பித்தலாதிகளும் செய்தல். அதுசெய்யாது கிரியாவிதியாய்வாரை விடுக என்பதாம். தம் கூற்றிற்கு ஆசிரிய வசனமும் உண்டென்று உணர்த்தியவாறு. "ஆய்ந்துகிரி யாவிதிவீ டாயாக் குரவனை விட், டாய்ந்தறிக வாய்ந் தவற்கா ளாய்" என்பது சைவசமய நெறிக்குறள்.
--------------
பிரமவுப தேசம் பெறுதலே பாங்கு
கருமவுப தேசங் கழியென் - றுரமதுற
வுற்ற மறைஞான மாமுனிவ னோதிய நூ
னற்றுமவர்க் கன்றோ நலம். 49
இ - பா , பிரமோபதேசம் பெறுக , கருமோபதேசம் கழிக என்கிறது.
இ - ள் : பிரம உபதேசம் பெறுதலே பாங்கு - பிர மோப தேசத்தைப்பெறுதலே பாங்கானது; ஆதலால், கரும உபதேசம் கழி என்று - கன்மங்களைப்பற்றிக் கூறும் கிருகிகள் உபதேசங் களை நீக்குக என்று, உரம் அது உற - ஸ்திரஞானம் பொருந்த, உற்ற மறைஞான மாமுனிவன் ஓதிய நூல் - மா நிலம் செய்த தவத்தால் வந்துற்ற மறைஞான தேசிகர் அருளிய நூலாகிய சைவசமயநெறியை , நற்றுமவர்க்கு அன்றோ நலம் - விரும்பு வார்க்கன்றோ நலம் விளையும் என்றவாறு.
பிரம உபதேசம் - சிவஞானோபதேசம். பெயரொற்றுமை கொண்டு நாம் பிரமம் என்னும் ஏகான்மவாத உபதேசம் என்று கொள்ளற்க. பிரமம் பெரியது என்னும் காரணப்பொருளதாய், பெரியவற்றுள் பெரிதாய சிவஞானத்தையும், திருவைந்தெழுத்தையும் உபதேசித்தலை உணர்த்தியது. பாங்கு - அழகு . உரம் - ஞானம். நற்றுதல் - நத்துதல்
என்பதன் எதுகை நோக்கிய விகாரம் . நத்துதல் - நச்சுதல் : விரும்புதல். ''பிரமோபதேசம் பெறுதலே பாங்கு, கருமோப தேசம் கழி'' என்பது மறைஞானசம்பந்தர் வாக்கு.
-----------
உயர்ந்தோரைச் சேர்ந்தோ னுறுமிலத்தைத் தாங்கு
நயந்தோரைச் சார நலமோ - கயந்தோர்
மலங்களையத் தோன்றி மருவுகுர வோர்க்கு
மிலங்களைவா னன்றோ விவன். 50
இ - பா. சார்புணர்ந்து சாரவேண்டும் என்கிறது.
இ-ள் : உயர்ந்தோரைச் சேர்ந்தோன் - உயர்வற உயர்ந்த சிவானுபூதிமான்களைச் சேர்ந்தவன், உறும் இலத்தைத் தாங்கும் நயந்தோரைச் சாரல் நலமோ - தம் வினை போக உற்ற இல் லறத்தையே இடைவிடாது தாங்கிக்கொண்டிருக்கும் காமத் தில் விருப்புடையாரை ஆசானாக அடைதல் நலம் பயப்பதொரு செயலாமோ? இவன் - உயர்ந்தோரைக்குருவாக அடுத்த இவன், கயந்தோர் மலம் களைய தோன்றி மருவு குரவோர்க்கும் - உவர்ப்புக்கண்டுவந்தவர்களுடைய மலங்களை நீக்க அவதரித்துத் தம்மோடு மருவிய ஆசாரியருக்கும், இலம் களைவான் அன்றோ - இல்லறப்பற்றைக் களைபவனல்லனோ என்றவாறு.
இவ்வெண்பா , தேசிக சுவாமிகள் காலத்து நிகழ்ச்சியொன்றை திருவுளத்துக்கெநண்டு கூறுவது போலத் தோன்றுகிறது. அதனை யாம் விரித்தெழுத விரும்புகிற்றிலம். உயர்ந்தோர் - இயல்பாகவே பாசங்களினீங்கி, முற்றறிவும் முற்றுத்தொழிலும் படைத்த சிவபரம் பொருள். அதனைச் சேர்ந்தோர் - பண்டை நற்றவத்தால் சிவனைச் சார்ந்தோர் . உறுமிலம் - வினைப்போகத்தின் கழிவிற்காக வந்தடைந்த இல்லறம். தாங்குதல் - எஞ்ஞான்றும் அதைப்பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருத்தல். நயந்தோரை - ஏறவிட்டு ஏணியை உதறிவிடுதல் போலவும், கடக்கவிட்டுக் கலத்தை மறத்தல் போலவும் போகக்கழி வின்கண் , விட்டுத்தொலைக்காது அதனை எப்போதும் நயந்திருத்தல். சாரல் - அத்தகைய கிருகிகளை ஆசாரியனாக அடைதல்.
கயந்தோர் - கசந்தோர்; இருவகைப்பற்றிலும் உவர்ப்புக்கண்டு ஞானதாகம் ஏற்பட்டு ஓடிவந்தவர்கள். உயர்ந்தோரைச் சார்ந்த அவன் தமது ஞானாசாரியனாம் கிருகிக்கும் இல்லறப்பற்றைத் துடைக் கும் அவ்வளவு பெருந்தகுதி உடையவனன்றோ என்றவாறாம்.
-------------
அறத்துறந்தா ரிற்கதிக மானாலு மங்கத்
திறத்த கல்வார்க் கொப்பாமோ தேரின் - புறத்துறவோர்
மேலவத்தை செல்லார் மிகுசகளத் தொன்றாவ
ராலவரைக் கீழா யகல். 51
இ - பா. நைட்டிகரையே ஆசாரியராகக்கொள்க என்கிறது.
இ-ள் : அறத் துறந்தார் - பற்றறத் துறந்தவர்கள், இற்கு - இல்லறத்தார்க்கு , அதிகம் ஆனாலும் - மேலாவராயினும், அங்கு அத்திறத்து அகல்வார்க்கு - அவ்வில்லறத்தைப் பொருந்தாதே அகன்றவர்க்கு , தேரின் ஒப்பு ஆமோ - ஆராயின் ஒப்பு உள தாமோ? புறத்துறவோர் - வெளித் துறவு பூண்டவர்கள், மேல் அவத்தை செல்லார் - மேனிலையை எய்தார், மிகு சகளத்து ஒன்றாவரால் - மிக்க சகளத்து ஒன்றான பதமுத்தியையே எய்து வர் ஆதலால், அவரை கீழாய் அகல் - அவரைக் கீழானவராகக் கொண்டு விட்டு நீங்கு என்றவாறு.
இல்லறத்திலிருப்பவர்களைவிட இல்லறத்தைத் துறந்தவர்கள் மேலானவர்கள். அவர்களைவிட இல்லறத்தைப் பொருந்தாமலே நைட்டிகராகவே துறந்தவர்கள் மேலானவர்கள். இல்லறத்தில் இருப் பவர்களும், இருந்து விட்டவர்களும் சைவத்திற்குச் சலியாது ஒழுகுவா ராயின் சாரூபம் வரையுள்ள சகளமுத்தியையே எய்துவர் . நைட்டிகர் பரமுத்தியை எய்துவர். ஆதலால் அவரையே ஆசாரியனாகக்கொள்ளுக என்பதாம்.
-------------
இல்லறத்தார்க் கெல்லா முறினுமிவ் வில்லத்தைக்
கொல்லுதற்குண் டாமோ குணநெறிகள் - புல்லறத்தைத்
தீர்ந்தார்க்கு நல்லறிவு சேர்ந்திடினு மேலறிவு
சார்ந்தாய்தற் குண்டோ சதுர் . 52
இ -பா , கிருகிகட்குச் சிவஞானப்பேறு இல்லை என்கிறது.
இ - ள் : இல்லறத்தார்க்கு எல்லாம் உறினும் - உலகதரு மிணிகட்கு எல்லா ஆற்றலும் அடையினும், இவ் இல்லத்தைக் கொல்லுதற்கு குணநெறிகள் உண்டாமோ - தாம் பொருந்திய இந்த இல்லறத்தைத் துறத்தற்குரிய குணங்களும் மார்க்கங் களும் உளதாமோ ; புல்லறத்தைத் தீர்ந்தார்க்கு - இழிதக்க இல்லறத்தினின்று தீர்ந்தாராயினும் அவர்க்கு, நல்லறிவு சேர்ந்திடினும் - நல்ல அறிவு பொருந்தினும், மேல் அறிவு சார்ந்து ஆய்தற்கு சதுர் உண்டோ - மேலான சிவஞானத்தைப் பெற்றுத் தெளிந்து சிந்தித்து நிட்டை கூடற்கு ஏற்ற சாமர்த் தியம் உளதோ? இல்லை என்றவாறு.
நல்லறிவு - பசு பாசஞானம். இவை கிடைத்தவழி அவற்றின் துணைக்கொண்டு தம்மியல்பையும் தடையியல்பையும் உணர்ந்து, தடை நீங்கும் உபாயமும் அறிந்து, சாதன வழி நின்று சாதிக்கத்தக்க தாகிய சிவஞானம் பெற வன்மையுண்டோ என்பது கருத்து.
-------------
சகளத் தபிமானஞ் சாலோக மாதி
நிகளத் தழுத்தி மல நீக்கு - மகளத்தை
யுற்றார் நிராமயமாய் நீள்சிவத்தோ டோரறிவா
யற்றார் தமையென் றறி. 53
இ -பா, சகளம், நிஷ்களம் இவற்றின் பற்றுடையார் எய்தும் நிலைவேறுபாடு இவை என்கிறது.
இ - ள் : சகளத்து அபிமானம் - இறைவனுடைய உருவத் திருமேனியில் பற்றுவைத்தல், சாலோகம் ஆதி நிகளத்து அழுத்தி மலம் நீக்கும் - சாலோகம் முதலான சிறையில் அழுத்தி வைத்து மலத்தை அகற்றும், அகளத்தை உற்றார் - அருவத்திரு மேனியை உணர்ந்தவர்கள், நிராமயமாய் நீள் சிவத்தோடு ஓர் அறிவாய் தமை அற்றார் என்று அறி - தாங்களும் பெரிய சிவத்தோடு ஒன்றிய அறிவையுடையராய்ப் பசுக்களாய தம்மை நீக்கப்பெற்றவர் என்று அறிவாயாக என்றவாறு.
சகளத்திற் பற்றுக்கொண்டால் சாலோகம் முதலிய பதமுத்தியே கிட்டும்; நிஷ்களத்திற் பற்றுக்கொண்டால், ஞானமே வடிவாக, பதி போதமிக்கு, பசுத்துவம் நீங்கி வாழலாம் என்பது கருத்து. சாலோ காதி பதவிகளும் சிறைபோல ஆன்மவியாபகத்தைத் தடைசெய்வன வாதலின் அவற்றை 'நிகளம்' என்றது. அழுத்தி - பதமுத்திகளி லேயே பெரிதும் அபிமானிக்கச்செய்து. அகளம் - அருவத்திருமேனி , "அகளமாய் அறிவாய்....... சகளமாய் நின்றதென்றுந் தீபற" என் பதன் கண்ணும் அகள சகள இலக்கணம் ஓர்க.
-------------
காய மறுங்காற் கருதியமெய் யாவிவிட்டுப்
போயோர் தனுவிற் புகுகையா - லாயகலைத்
தந்திரமா யோசித்துத் தானியத்தா லாகுதியை
மந்திரத்தாற் செய்வான் மகிழ்ந்து. 54
இ - பா , கலாசோதனையாற் பயன் பிறவியறுதல் என்கிறது
இ-ள் : காயம் அறுங்கால் - உடல் நீங்குங்கால், ஆவி கருதிய மெய் விட்டுப்போய் - உயிரானது தனது என்று கருதி யிருந்த உடலை விட்டுச்சென்று, ஓர் தனுவில் புகுகையால் - வினைக்கீடாக வாய்த்த மற்றோர் உடலில் புகுதலால், ஆய கலை தந்திரமா யோசித்து - அதற்குக் காரணமாசிய கலைகளை ஆகம விதிப்படிக் கூட்டி, தானியத்தால் - நெல் முதலிய நவதானியங் களைக் கொண்டு, ஆகுதியை மந்திரத்தால் மகிழ்ந்து செய் வான் - ஆகுதியை மந்திரத்தோடு மகிழ்ந்து செய்வானாவன் என்றவாறு.
உயிர் வினைக்கிடாக ஓருடலைவிட்டு ஓருடலில் மாறிமாறிப் புகுந்து வருவதால் அதற்குக் காரணமாய பஞ்சகலைகளையும் ஆகமவிதிப்படி. மந்திரங்களுடன் ஆகுதிசெய்து கூட்டுவிப்பான் கிரியாவானான ஆசா ரியன் என்பதாம். யோசித்து - யோஜித்து என்பதன் திரிபு.
------------
ஆவி பிறிதுடலை யாவரிக்கு மாசரியன்
பாவிக்கு மாறு படாததனாற் - பூவிற்
றரும்பொருளா லாகுதியைத் தக்கவரற் காக்க
வருமதனா னற்கதிக்கு மால். 55
இ - பா , கிரியாவதி தீக்கை பயன்தராமைக்குக் காரணம் கூறு கிறது.
இ-ள் : ஆசரியன் - ஆசாரியன், பாவிக்குமாறு படாதத னால் - சிவோகம்பாவனை செய்கின்ற முறை சரிவரப்பொருந் தாமையால், பூவில் தரும் பொருளால் - பூமியில் உண்டான தானியம் சமித்து முதலிய மாயேயப் பொருள்களால் , ஆகு தியை - ஓமத்தை , தக்க அரற்கு ஆக்கவரும் அதனால் - தக்க பாருள் யாவற்றிலும் தக்க சிவபரம்பொருளுக்குச் செய்யும் முறைமையால் , நற்கதிக்கும் ஆவி - நற்கதி அடைய வேண்டிய ஆவி , மால் - மயக்கம் கொண்டு, பிறிதுடலை ஆவரிக்கும் - வேறு ஓர் உடலைச் சென்றடையும் என்றவாறு.
மாயேயமான பொருள்களைக் கொண்டு இயற்கையே மாயையிற் படாத பரசிவத்திற்கு ஆகுதியால் அற்பணிக்கும் அதனாலும் சிவோ ஏ சாவரப் பலியாமையானும் கிரியையால் தீட்சிக்கப்படுகிற றகதி அடைய வேண்டி இருக்க, நற்கதி அடையாது மீட்டும்
பிறவியைச் சாரும் என்பது கருத்து.
ஆவரிக்கும் - தனக்கு ஆவரணமாகக்கொள்ளும். ஆவரணம். போர்வை. ஆசாரியன் என்னும் சொல் செய்யுளோசை சிதையாமைப் பொருட்டு ஆசரியன் எனக்குறுக்கல்விகாரம்பெற்றது. பாவிக்குமாறு - தம்மைச் சிவமாகவும் தமது கரணங்களைப் பதிகரணங்களாகவும்,
தம் செயலைச் சிவச்செயலாகவும் பாவித்தல். அது படாமையாவது பாவிக்கும் போதே இல்லறவாசனை தாக்கப்பெறுதல். பூவில் தரும் பொருளால் என்றது அசுத்தமாயா காரியமான பொருட்பிரபஞ்சத்தி லிருந்து தோன்றிய பொருள்களால் என அதன் இழிவுதோன்ற நின்றது. தக்க அரன் எனவே, பொருள்கள் தகாதன. என்பதும் பெறப்பட்டது. கதிக்கும் என்றது பெயரெச்சம். கதிக்கும் ஆவி மாலால் பிறிதுடலை ஆவரிக்கும் எனக்கூட்டுக.
------------
அடைந்ததனுப் பொய்யென் றறிவிக்க வாய்ந்து
மிடைந்ததனு விட்டருளை மேவித் - துடர்ந்த
குருவருளைப் பற்றிக் குறித்தவத்தை யஞ்சில்
வருந்துறவோர்க் கன்றோ வரம். 56
இ -பா , சிவகதி அடைவார் துறவோரே என்கிறது .
இ - ள் : அடைந்த தனு பொய் என்று அறிவிக்க - வினைக் கீடாக நாம் பெற்ற இச்சரீரம் நிலையற்றது என்று மெய்கண்ட சிவாசாரியன் தெரிவிக்க, ஆய்ந்து - அவன் - தந்த ஞானம் தமக்கும் அனுபவமாதல் உண்மையை ஆராய்ந்து, மிடைந்த தனு விட்டு - ஆன்மவியாபகத்தைச் சிறிதும் வெளிப்படாவாறு செறிந்திருக்கின்ற உடலை நீங்கி, அருளை யேவி - திருவருளையே தாரகமாகக் கொண்டு அதனைப் பொருந்தி, துடர்ந்த - இடை விடாது திருவருளையேபற்றி இருக்கிற , குருவருளைப்பற்றி - குரு நாதனுடைய திருவருளைப்பற்றி நின்று, குறித்த அவத்தை அஞ் சில்வரும் துறவோர்க்கு அன்றோ - முன் குறிக்கப்பெற்ற நிர்மல சாக்கிரம் முதலான ஐந்து நிலைகளிலும் இடைவிடாது பழகு கின்ற துறவிகளுக்கு அல்லவோ , வரம் - மேலான பர முத்தியாம் என்றவாறு.
அடைந்த தனு - எழுவகைத் தாதுக்களால் வினை நுகர்ச்சிக்காகப் பெற்ற பூத சரீரம். மிடைந்த தனு என்றது ஆன்ம அறிவை விளங்க ஒட்டாது தடுத்து நிற்கும் பிராணமயாதி கோசங்களை. ஞானாசாரியன் தனு கரண புவன போகங்களைப் பொய்யென்றறிந்து, அதனில் பற்று விட்டு, திருவருளையே பொருந்தி நிற்பவர். அவரருளைப்பற்றி நிர்மலா வத்தைகளை எய்துகின்ற துறவோர்க்குப் பரமுத்தி சித்திக்கும் என்ப தாம். பரம் என்பதன் போலி வரம்.
------------
தத்துவத்தை நீங்க றகுமறிவோர் தேகாந்த
மொத்தவுயிர்க் கந்தியட்டி யோதக்கேள் - முத்தி
யவத்தை கழித்தருளோ டாக்கிக் கருணைச்
சிவத்தி லழுத்துவதைத் தேர். 57
இ - பா . ஞானாந்தியேட்டி இது என்கிறது.
இ - ள் : தத்துவத்தை நீங்கள் தகும் அறிவோர் - தத்து வங்களைக் கடந்த ஞானிகளின் , தேகாந்தம் ஒத்த உயிர்க்கு - தேக முடிவின்கண் பொருந்திய ஆன்மாக்களுக்கு, அந்தியேட்டி ஓதக்கேள் - இயற்றப்பெறுகின்ற அந்தியேட்டியைச் சொல்லக் கேட்பாயாக; முத்தி அவத்தை கழித்து - மலமாயா கன்மங் களினின்று விடுபடுதலாகிய நிலையையும் நீக்கி, அருளோடு ஆக்கி - சிவத்திருவருளோடு ஒன்றவைத்து, கருணைச்சிவத்தில் - கருணையாகிய , சத்தியைத் தன்னகத்துக்கொண்ட சிவத்தி னிடத்தில், அழுத்துவதை தேர் - அழுத்திவைப்பதையே அந்தி யேட்டியாக அறிவாயாக என்றவாறு.
ஞானாந்தியேட்டியாவது ; முத்தி அடைகின்றோம் என்ற பேத ஞானத்தையும் அகற்றி, திருவருளிலேயே ஒன்றச்செய்து, சிவத்தோடு இரண்டற இணையச்செய்தலாம். இதுவே சிவதருமிணிகளாகிய ஞானிகள் செய்யும் ஞான அந்தியேட்டி என்பது.
-----------
வரையகில மாதின்ப மாதவரைச் சேரும்
புரையகல வென்னும் புகழ் நூல் - கரையகலக்
கற்றும் பொய் வஞ்சத்தைக் காமுறுவார் நூலதனை.
யுற்று முறாதாரென் றோர். 58
இ - பா , கற்றும் கல்லாதார் கிருகி என்கிறது.
இ - ள் : புகழ்நூல் - புகழப்படுகின்ற சிவ நூல்கள், வரை அகிலம் மாதின்பம் - எல்லையையுடைய பூமியும் மாதரின்பமும், புரை அகல - தமக்குள்ள குற்றம் நீங்க, மாதவரைச் சேரும் என்னும் - ஞானியரைப் பொருந்தும் என்று சொல்லா நிற்கும். நூல்தனைக் கரை அகலக்கற்றும் - சிவாகமங்களை எல்லையின்றிக் கற்றும், பொய் வஞ்சத்தைக் காமுறுவார் - பொய்யான பிர பஞ்சத்தை விரும்புபவர்களாகிய கிருகிகள், நூலதனை உற்றும் - நூலறிவைப் பெற்றும், உறாதார் என்று ஓர் . பெறாதவர்களே ஆவார் எனத் தெளிவாயாக என்றவாறு.
வரை அகிலம் - எல்லையையுடைய பூமி; என்றது புவனத்தை. மாதின்பம் - மாதராற்பெறும் போகத்தை. இவை இரண்டுங்கூறவே இடைநின்ற தனு கரணங்களும் அடங்கின. இவைகள் ஞானியைப் பொருந்துவதால் ஞானி குற்றப்படான். இவற்றின் குற்றமே அகலும் என்பதாம்; அங்கியைச் சார்ந்த கோமயமாதிகள் தங்குற்றம் நீங்கினாற் போல என்க. கரையகல - எல்லை நீங்க. வஞ்சம் - பிரபஞ்சம்; என்றது பிரபஞ்சபோகங்களை. நாலறிவிருந்தும் பாசமகற்றி அதனாற் பயன் மன் நூலறிவுற்றும் உறாதார் ஆயினர் என்பதாம்.
--------------
அருணூல் சிவதீக்கை யற்று மகில
மருண்மா லகல்வார் மதியாம் - பொருணூ
லறிந்தும் பிறர்க்கே யனுக்கிரகஞ் செய்திற்
செறிந்தா ரறிவலவாய்த் தேர். 59
இ - பா , அறிவும் அறிவல்லாததும் இவை என்கிறது.
இ - ள் : அருள் நூல் சிவதீக்கை அற்றும் - சிவாகமஞானம் சிவதீட்சையாகிய கிரியை இவைகளை நீங்கியும், அகில மருள் மால் அகல்வார் மதி - பிரபஞ்சமயக்கத்தை நீங்கிய துறவிகளின்
ஞானம், ஆம் - கடைப்பிடித்துச் சீடர்களால் ஒழுகத்தக்கதாம்; பொருள் நூல் அறிந்தும் - பதி பசு பாசங்களின் பொதுவும் சிறப்புமான இலக்கணங்களைத் தெரிவிக்கும் சைவ நூல்களை அறிந்தும், பிறர்க்கே அனுக்கிரகஞ் செய்து - தாம் கடைத்தேற மாட்டாது பிறருக்கே உபதேசமும் கருணையும் செய்து, இல் செறிந்தார் அறிவு - இல்லறத்தில் ஒட்டிவாழும் கிருகிகளின் ஞானம், அலவாய் தேர் - கடைப்பிடித்து ஒழுகத்தக்கவல்ல எனத் தெளிவாயாக என்றவாறு.
கன்மானுட்டானங்களும் கிரியைகளும் கழன்றிருந்தாலும், சிவா கமப்பயிற்சி இல்லையாயினும் சிவதருமிணிகளின் ஞானம் கொள்ளத் தக்கது; எல்லாமிருப்பினும் கிருகிகளின் ஞானம் தள்ளத்தக்கது என்பதாம். அற்றும் அறிந்தும் என்ற உம்மைகள் சிறப்பும்மைகள்.
-------------
மருணீக்குந் தீக்கை வகை நான்கு முற்றும்
பொருணீக்கு மில்லிற் புணர்வா - ரிருணீக்க
முற்றா ரலரா மொரு நூலுந் தீக்கையுமற்
றற்றா ரறிவென் றறி. 60
இ - பா, சிவதருமிணிகளின்ஞானமே சிறந்தது என்கிறது.
இ - ள் : மருள் நீக்கும் தீக்கை வகை நான்கும் - ஆன்மாக் களுக்கு ஆணவமலத்தால் விளைந்த அறியாமையை நீக்குகிற தீக்கைவகை நான்கையும், உற்றும் - குறையாமல் தாம் பெற்றிருந்தும், பொருள் நீக்கும் இல்லில் புணர்வார் - செம் பொருளிலிருந்து பிரித்துவைக்கும் இல்லறத்திற் சேர்வார்கள்; இருள் நீக்கம் உற்றார் அலராம் - ஆணவ இருளிலிருந்து நீக்கத் தைப் பொருந்தியவர் அல்லராம்; ஒரு நூலும் தீக்கையுமற்று அற்றார் - சிவாகமப்பயிற்சியும் சிவதீக்கைகளும் மற்றுமுள்ள சாதனங்களும் அற்றவர்களாகிய துறவிகளின் அறிவு - உபதேச பரம்பரையில் வந்த ஞானம், அறி - ஞானம் என்று அறிவாயாக என்றவாறு.
'இருள் நீக்கம் உற்றார் அல ஆம்' எனவும் பாடம். இப்பாடத் திற்கு, அற்றார் அறிவு இருள் நீக்கம்; உற்றார் அறிவு அலவாம் எனக் கூட்டி, சிவதருமிணிகளின் ஞானம், உலகதருமிணிகளின் ஞானம் போல்வதல்லவாம் எனப் பொருள்காண்க.
தீக்கைவகை நான்கும் முற்கூறப்பட்டன. உற்றும் : உம்மை இழிவு சிறப்பு. பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரச்செய்யும் மருள் விளைப்பதாகலின், இல்வாழ்க்கை , பொருள் நீக்கம் இல் என விசேடிக் கப்பட்டது. உபதேசபரம்பரையில் வருவாருக்கு, பாசஞானமாகிய கல்வியும், கிரியைகளாகிற தீக்கையும் இன்றியேயும் ஞானம் சித்திக்கு மென்பது. அரும்பிஞ்சை முதிர்கனியாக்கும் சிவானுபவசீலருக்குச் சாதனங்கள் ஏன் என்பதாம்.
------------
நிறைந்த கல்வி தீக்கை நிறைவாலும் பாகஞ்
சிறந்த தலவகிலஞ் சிந்தத் - துறந்தநெறிச்
சீரகத்தார்க் காவி சிறந்ததாந் தீக்கையுற்றுங்
காரகத்தார்க் காவியிலை காண். 61
இ - பா. பாசஞானத்தார்க்குப் பரிபாகம் இல்லை என்கிறது.
இ - ள் : நிறைந்த கல்வி தீக்கை நிறைவாலும் - வேதசிவா கமங்கள் அனைத்திலும் நிறைந்த படிப்பும் நிறைந்த தீக்கை களும் இருந்தாலும், பாகம் சிறந்தது அல - பரிபாகம் சிறந்தது அல்லவாம்; அகிலம் சிந்தத் துறந்த நெறி சீர் அகத்தார்க்கு பிரபஞ்சப்பற்றை அறவே கெடத் துறந்த நெறிக்கண் விளங்கும் சிறப்பினை மனத்தகத்துக்கொண்ட சிவதருமிணிகளுக்கு, ஆவி சிறந்ததாம் - ஆன்மா பரிபாகமுற்றுச் சிறந்தது ஆகும்; காரகத் தார்க்கு - கிருகத்தர்களுக்கு, ஆவி சிறந்தது இல்லை - ஆன்மா பரிபாகத்தாற் சிறந்ததாகாது, காண் - இதனை அனுபவத்திற் கண்டறிவாயாக என்றவாறு.
நிறைந்த படிப்பாலும், தீக்கையாலும் மட்டும் மலபரிபாகம் வராது; பற்றறத் துறந்த சிவஞானியர்களுக்கே மலபரிபாகம் வரும் என்பது கருத்து. நிறைந்த கல்வியும் தீக்கைகளும், இத்துணைக்கற்றோம் ; இன் னின்ன தீக்கைபெற்றோம்' என்ற செருக்கை வளர்த்து, சிந்தையிற் சிவம் விளங்கச்செய்யாது ஆதலின், காரகத்தார் கல்வி தீக்கை உற்றும் ஆவி சிறந்தது இல்லை என்றார்.
------------
அநித்தியத்தை நித்தியமென் றாய்வார் மலத்திற்
செனித்தவரென் றாகமங்கள் செப்புந் - தனித்தறிவாய்
நித்தியத்தை நித்தியமென் றாய்வார்க ணீள் சிவத்துற்
பத்தியென நீத்தோரைப் பார். 62
இ - பா , சிவதருமிணிகள் சிவத்தில் தோன்றியவர்கள் என்கிறது.
இ - ள் : அநித்தியத்தை நித்தியம் என்று ஆய்வார் தோன்றி நின்று அழிதன்மாலைத்தாகிய புவன போகாதிகளை அழியாதன் என்று எண்ணி அவற்றையும் அவற்றிற்கு ஆவன வற்றையும் ஆராய்கின்றவர்கள், மலத்தில் செனித்தவர் என்று மலமாயை கன்மங்கள் காரணமாகத் தோன்றியவர்களென்று, ஆகமங்கள் செப்பும் - சிவாகமங்கள் சொல்லும்; தனித்து அறிவாய் - கருவி கரணங்களாகிய மாயேயங்களோடு கூடாது தனித்து ஞானமே உருவாய், நித்தியத்தை நித்தியமென்று ஆய்வார்கள் - அநாதி நித்தியமான சிவபரம்பொருளை அதன் சிறப்பியல்பாகிய அநாதி நித்தியத்தன்மை உடையதென்றும் அதனைச் சாராமை சார்ந்து நிற்றலால் ஆன்மாக்களாகிய தாங்களும் நித்தியமென்றும் ஆராய்ந்தறிகின்ற மெய்ஞ்ஞானி கள், நீள் சிவத்து உற்பத்தி என - அருளான் மிக்க பரசிவத்தி னிடத்துத் தோன்றியவர்களென்று, நீத்தோரைப் பார் - துறவி களான ஆசாரியர்களைப்பார்த்துத் தெளிவாயாக என்றவாறு.
சிவதருமிணிகளுக்கும், உலகதருமிணிகளுக்கும் பிறப்பிலே வேறுபாடு தோன்ற, சிவதருமிணிகள் சிவத்துற்பத்தி எனவும், உலக தருமிணிகள் மாயாமலத்து உற்பத்தியெனவும் கூறி, கிருகிகள் தேகம் மாயாகாரியம் என்றும் துறவிகள் தேகம் ஞான சொரூபம் என்றும் அறிவித்தவாறு.
--------------
உலக தருமிணியோ டொண்கரும் பாகங்
குலவுமிற் காமக் குணமு - நிலவியிடும்
புல்லறத்தை மாற்றிப் பொருந்துஞ் சிவதீக்கை
யில்லறத்தார்க் காகுமென வெண். 63
இ.பா. இல்லறத்தார்க்கு ஆவன இவை என்கிறது.
இ - ள் : உலக தருமிணியோடு - உலகதருமிணி தீக்கை யோடு ; ஒண் கருமபாகம் - விளங்குகின்ற கர்ம மலபரிபாகமும், இல் குலவும் காமக்குணமும் - இல்லறத்தில் கூடி வாழ்வதால் உண்டாகிய காமக்குணங்களும், நிலவியிடும் புல்லறத்தை மாற்றி - ஒரு சேரவிளங்குகிற இழிதக்க ஒழுக்கத்தைப்போக்கி, பொருந்தும் சிவதீக்கை - ஞானத்தைப் பொருந்துதற்கு வாயி லான கிரியாவதி தீக்கைகள், இல்லறத்தார்க்கு ஆகும் என எண் - இல்லறத்தார்களாகிய ஆசாரியர்கட்குப் பொருந்தும் என எண்ணுவாயாக என்றவாறு.
உலகதருமிணிதீக்கையால் கர்மபரிபாகம் வருமாயினும் கன்ம பரிபாகத்திற்கு வாய்ப்பான காமமாதிய குணங்களும் இடைக்கிடையே விளங்குமாதலின் அத்தகைய புல்லறத்தை மாற்றுதற்கேற்ற தீக்கை களே இல்லறத்தார்க்கு ஏற்றதாம் என்பது கருத்து. கிரியை என மருவும் யாவும் ஞானம் கிடைத்தற்கு வாயிலாதலின், புல்லறத்தை மாற்றிப் பொருந்தும் சிவதீக்கை இல்லறத்தார்க்கும் ஆகும் என
அருளியது.
-------------
சிவதரும் நன்மணியுஞ் சேருமல் பாக
மவமறைக்கு மீசற் கவாவும் - பவமா
யிறை மறைக்கு மில்லிற் கிசையாத வீசன்
துறவறத்துக் கென்றே துணி. 64
இ -பா, சிவதருமிணியியல்பு கூறுகின்றது.
இ - ள் : சிவதரும் நன்மணியும் மலபாகம் சேரும் - சிவ தருமிணி மலபரிபாகத்தைப் பொருந்துவன் ; அவம் மறைக்கும் ஈசற்கு அவாவும் தவத்திற்கு எதிராய அவத்தொழிலில் புகுதாதே தடுத்தாட்கொள்ளும் பரமேசுவரனை விரும்பும்; பவமாய் மறைக்கும் - பிறவிக்கு ஏதுவாய் இறைவனை அறிந்து அனுபவிக்க வொட்டாது மறைக்கும், இல்லிற்கு இசையாத ஈசன் - இல்லறத்திற் பொருந்தாத பரசிவம், துறவறத்துக்கு என்றே துணி - துறவறத்திற்கே வெளிப்படுமென்று துணிவா யாக என்றவாறு.
இதனால், நைட்டிகனும் துறவியுமான சிவஞானி மலபரிபாகம் பெற்று, ஈசனிடமே பற்றுக்கொண்டிருப்பதால் அவருக்கே ஈசன் வெளிப்பட்டருளுவன் என்பது உணர்த்தியவாறாம்.
சேரும், அவாவும் என்ற செய்யும் என்னும் வாய்பாட்டு வினை முற்றுக்கள். சிவதருமிணி என்ற உயர்திணை ஆண்பால் எழுவாய்க் குரிய பயனிலைகள். ஈசன் துறவறத்தார்க்கே உரியவர் என்று சொல்ல வந்தவர் இல்லறத்தார்க்குள்ள இடையூறும் விளங்க , இறைமறைக்கும் இல்லிற்கு இசையாத ஈசன்' என உடம்பொடு புணர்த்தி உரைத்தார்.
-------------
தாரகை நேரிற்குரவர் தண்மதிக்கு நேராகுங்
காரகத்தை நீத்த கனகுரவர் - பாரகத்தி
லார்க்கு மிருடீர்க்கு மாதவனேர் மையலறத்
தீர்க்கு மருட்குருவாந் தேசு. 65
இ - பா. இருவர் இயல்பையும் உவமைமேல் வைத்து விளக்குகிறது.
இ-ள் : இற்குரவர் தாரகை நேர் - இல்லறத்தோர்களாகிய குருமார்கள் விண்மீனுக்கு ஒப்பாவார்கள்; காரகத்தை நீத்தகன குரவர் தண்மதிக்கு நேராகும் - இல்லறத்தைத் துறந்த மேலாகிய குருமார்கள் குளிர்ந்த நிறைமதிக்கு ஒப்பாவார்கள் ஆகும்; மையல் அறத்தீர்க்கும் அருட்குருவாம் தேசு - அறி யாமை நீங்க மலபரிபாகம் வருவிக்கின்ற அருட்குருவாகிய போரொளி, பாரகத்தில் - இப்பூமியில், ஆர்க்கும் இருள் தீர்க்கும் ஆதவன் நேர் - நிறைந்திருக்கின்ற இருளைப் போக்கும் சூரியனுக்கு ஒப்பாம் என்றவாறு.
முன்னைய நேர் இரண்டும், நேர்வர் என்னும் பொருளன ; தேசு நேராகும் எனக்கூட்டுக. இவ்வெண்பா , இல்லறத்தாசாரியர் , இல்ல றத்தைத் துறந்தோர், அருட்குரவர் என்ற இம்மூவரையும் தாரகை மதி ஆதவன் இவர்களோடு ஒப்பித்து வேற்றுமை விளக்கியது.
'காரகத்தை நீத்த கன குரவர்' என்றது முதற்கண் கிருகியா யிருந்து இல்லறத்றைவிட்டோர் . அருட்குருவாம் தேசு' என்றது இயற்கையே இல்லறத்தைப் பொருந்தாதே, அருள்வழி நின்று சிவ ஞானம் பெற்றவர்கள். இற்குரவர். கிரியாவதிமுறையில் தீட்சை பெற்றுக் கன்மபரிபாகம் ஏற்பட்டவர்கள். காரகத்தை நீத்தவர்கள். முற்கூறிய தீக்கையால் கன்மபரிபாகமும் மாயாமலபரிபாகமும் பெற்ற வர்கள். அருட்குரவர் , ஆணவமல பரிபாகமும் பெற்ற சிவஞானியர். தாரகை , தானுண்மையைத் தெரிவிக்குமேயன்றிப் பிறருக்கு விளக்கம் தராது; அதுபோலக் கன்மமல பரிபாகம் மட்டும் பெற்றுப் பதி நூலால் ஞானவிளக்கம் பெற முயல்பவர்கள். தண்மதி தானும் விளங்கிப் பிற பொருள்களையும் விளக்குமாயினும், தடையுட்பட்ட இருளை விளக்க மாட்டாமையே அன்றித் தன்னகத்துக் களங்கமும் பொருந்தி இருப் பது. அதுபோல, இல்லறத்திலிருந்து துறந்த ஆசிரியர் சிவபுண்ணிய மேலீட்டால், தானும் ஞானம் பெற்றுப் பிறருக்கும் ஞான உபதேசம் செய்யவல்லவனாயினும், பரிபாகக் குறைவுடையார்க்கு, விளக்கந்தர முடியாமை மட்டுமின்றித் தமக்கும் விட்ட இல்லறத்து வாசனை ஓரொ ருக்கால் தாக்க அகக்களங்கமுடைய-ராயிருப்பர்.
தானும் களங்கத்தைச் சாராது எத்தகைய தடைகளிருப்பினும், உள்ளகமெல்லாம் ஊடுருவிச்சென்று பொருள்களைப் புலப்படுத்து வதோடன்றித் தம்மகத்துக் களங்கமின்றி விளங்குவது ஆதவன். அவ்வண்ணமே அருட்குரு இருட்கு உறைவிடமாகாது, ஒளியே உருவாய், ஆன்மாக்களுற்ற அக இருளையும் போக்கி ஆட்கொள்வன் என உவமை நலம் உணர்ந்து இன்புறுக.
-----------------
சாதிக் கதிகந் தகுமறையோர் சட்சமய
நீதிக்குட் சைவ நிலையதிக - மாதி
மறைக்கதிக மாகமமே வாண்மதஞ்சே ரில்லாந்
துறைக்கதிக நீத்தோர் துணி. 66
இ - பா . ஒருவரில் ஒருவர் உயர்ந்தார் என்கிறது.
இ - ள் : சாதிக்கு அதிகம் தகும் மறையோர் - நால்வகைச் சாதிக்குள் மேலானது தவவொழுக்கத் தகுதிவாய்ந்த மறை யோர் சாதியாம்; சட்சமய நீதிக்குள் - அறுவகைச் சமயங்கள் உணர்த்துகின்ற நீதிகளுக்குள், சைவநிலை அதிகம் - சைவ சம யத்தின் நிலையான உண்மைகளே மேலானவை; ஆதிமறைக்கு ஆகமமே அதிகம் - இறைவனால் அருளிச்செய்யப்பட்ட வேதங் களுக்கு அவரருளிய ஆகமங்களே மேலானவை; வாள் மதம் சேர் இல்லாம் துறைக்கு - ஒளி பொருந்திய மதமாற்சரியங் களோடு கூடிய இல்லறத் துறைக்கு, நீத்தோர் அதிகம் - துறவி களின் நிலையே மேலானது ; துணி - தெளிவாயாக என்றவாறு.
சாதி: அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்பன. இவை வருணம் என்றும், சாதி அதன் உட்பிரிவென்றும் ஓர்க. சட்சமயம் - அகம் , அகப்புறம், புறம், புறப்புறம் ஆகிய அவ்வாறு வகையான சமயங்கள். வேதமும் ஆகமமும் இறைவன் நூல்களேயாயினும், பொதுவும் சிறப்புமாகிய வேறுபாடுடைமையின், வேதங்களினும் ஆகமங்கள் சிறந்தன வாயின. இல்லறம், ஒளிபொருந்திய செருக்குடை மையின் அது நீங்கிய துறவு இதனிற் சிறந்ததாயிற்று. 'தாழ்வெனும் தன்மையொடும்' சைவத்திறத்தில் சார்ந்தது துறவறம் ஒன்றுமே யாதலின் இங்ஙனம் கூறினார்.
-------------------
நிலைத்த வறமிரண்டு நேரொக்கத் தூக்கிற்
பலத்திற் குறையதிகம் பார்க்கி - லிலத்தோர்
கடுகி லணுவளவுங் காணாது நீத்தோர்
நெடுமலையும் வானினு நீட்டு. 67
இ -பா, முன் இரண்டனுள் பயனாற் சிறந்தது துறவே என்கிறது.
இ - ள் : நிலைத்த அறமிரண்டும் நேர் ஒக்க தூக்கில் - நிலை பேறான இல்லறம் துறவறம் இரண்டையும் சமமாக ஆராயின். பலத்தில் குறை அதிகம் பார்க்கில் - பயனால் குறைநிறைகள் ஆராயின், இலத்தோர் - இல்லறத்தார்க்குள்ள பயன், கடுகில் அணுவளவும் காணாது - கடுகளவும் அணுவளவுங்கூடக் காணப் படாது : நீத்தோர் - துறவிகளாகிய ஆசிரியர்களான் எய்தும் பயன், நெடு மலையும் வானினும் நீட்டு - இமயத்தினும் வானத் தினும் நீளமானதாம் என்றவாறு.
நிலைத்த அறம் - வேதங்களில் நிலைபெற்ற பயன் அளிப்பன என்று விதிக்கப்பட்டனவாகிய இல்லறமும் துறவறமும். நேர் ஒக்க ; ஒரு பொருட் பன்மொழி ; நேர்மையால் ஓக்க எனினும் ஆம். நேர்மை - சிறப்பு. குறையதிகம் - குறைகளும் நிறைகளும். பலம் - பயன். கடுகில் அணுவளவும் - கடுகளவும் அணுவளவும் எனக்கூட்டுக. இலத்தோர் என்றது. அவரான் ஆகும் பயனை உணர்த்தி, காணாது என்னும் அஃறிணைப் பயனிலையைக்கொண்டு முடிந்தது : நீட்டு என்பது , மலை யொடு ஓட்டும் போது நீளத்தையும், வானத்தோடு ஒட்டும் போது பரப்பையும் உணர்த்தும்.
நெடுமலை - பூமிக்கு அளவுகோல்போலமைந்த இமயம். இந்தக் கருத்து. குமாரசம்பவத்தில் காளிதாசனால் கருதப்பட்டது.
---------------
அறிவித்தா லொத்தங் கறிவார் பொய் யங்கம்
பிறிவித்தா லக்கலைகள் பேரு - மறிவித்தா
லொன்று மறியா தவர்க்குமுறும் பாவனையாற்.
கொன்றிடுவான் நீத்தோன் குறித்து. 68
இ - பா, சிவோகம்பாவனையால் சிவத்துவம் சித்திக்கச் செய்யும் சிவதருமிணியே சிறந்தான் என்கிறது.
இ - ள் : அறிவித்தால் ஒத்து. அங்கு அறிவார் - கருணாநிதி யாகிய ஆசாரியன் அறிவித்தால் அறிவித்த அளவை ஒத்து அறிந்து கொள்ளுதற்கேற்ற : பரிபாகமுடைய சீடர்கள், பொய் அங்கம் பிறிவித்தால் - நிலையற்ற சரீரத்தை மந்திரத்தோடு கூடிய கிரியைகளால் பிரியச்செய்யின், அக்கலைகள் பேரும் - அவ்வங்கங்களையுடைய கலைகளும் பேரும், அறிவித்தால் ஒன் றும் அறியாதவர்க்கும் - அறிவித்தாலும் அறிய ஒண்ணாத அபக் குவிகளுக்கும், நீத்தோன் - துறவியாகிய ஆசாரியன் , உறும் பாவனையால் குறித்து கொன்றிடுவான் - மிக்க சிவோகம்பாவனை யால் சீடனை உற்று நோக்கி இவனுடைய மலமாயாகன்மங்கள் ஒழிக என்று எண்ணி அவற்றை நீக்குவான் என்றவாறு.
பக்குவிகளாகிய சீடனாயினும் உலகதருமிணிகள் அத்துவ சோதனை, கலாசோதனைகள் செய்து கிரியைகளால் சுத்தி செய்யின் கலைகள் நீங்கும். அபக்குவிகளாயினும், சிவதருமிணிகள் தம்முடைய நினைப்பால் - பார்வையால் - பரிசத்தால் மலமாயாபாசங்களை அகற் றுவர் என்பது கருத்து. ஆகவே, பக்குவருக்கு மாயாகன் மங்களை வரு விக்கும் கிருகஸ்தாசாரியனைக்காட்டிலும், அபக்குவிகளுக்கும் பாச க்ஷயம் விளைவித்துப் பரிபாக முறுத்துகின்ற சிவதருமிணி சிறந்தவன் என்பது உணரப்படும்.
-------------
பவுத்தர் முத லாய பலசமய மெல்லாந்
தவத்துக் குரித்தாய்த் தகுமா - னவத்தா
மறமிரண்டா மில்லுக்கு மந்தந்த மார்க்கத்
துறவதிக மென்றே துணி. 69
இ- பா . புறச்சமயத்திலும் துறவியே பெரியவன் என்கிறது.
இ - ள் : பவுத்தர் முதலாய பலசமயம் எல்லாம் தவத்துக்கு உரித்தாய தகுமால் - பவுத்தம் முதலாய எல்லாச் சமயங்களும் தவத்துக்குரிய தகுதியுடையனவே, நவத்து ஆம் அறம் இரண் டாம் - அவற்றுள் ஒவ்வொன்றிலும் புதுமையைப் பயப்பதாகிய அறங்கள் இல்லறம் துறவறம் என இரண்டாம்; அந்தந்த மார்க் கத்து - அந்தந்தச் சமயங்களிலும், இல்லுக்கு துறவு அதிகம் என்றே துணி - இல்லறத்தைக் காட்டிலும் துறவறம் சிறந்த தென்று துணிவாயாக என்றவர்று.
அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என நால்வகை ஆறு சமயங் களும் தவத்துக்குரியனவே; ஆதலால் அவற்றுள் ஒவ்வொன்றிலும், இல்லறம் துறவறம் என ஈரறமுண்டு; அவற்றுள் துறவறமே இல்லறத்தின் ஏற்றமானது என்பதாம்..
----------------
பேறிதுவே யாதலினாற் பெற்றவதி காரத்தை
மாறுபட்டார்க் கன்றோ வரும் பிறவி - யாறுபட்ட
செஞ்சடையான் செஞ்சொல்லைச் சேர்த்தே னறிவுடைமை
நெஞ்சடைய மாணா நினைந்து. 70
இ - பா , முறைதப்பியார்க்குப் பிறவி தப்பாதென்கிறது.
இ-ள் : பேறு இதுவே ஆதலினால் . இதுவே ஆன்மாக்கள் அடையும் சிவநெறிப்பேறு ஆதலினால், பெற்ற அதிகாரத்தை தாம்தாம் பெற்ற தீட்சாதிகாரத்தை , மாறுபட்டார்க்கு மாறு பட்ட குருமார்கட்கு , பிறவி அன்றோ வரும் - மீட்டும் உற்பவித் தல் அல்லவா சித்திக்கும்; மாணா - மாணவகனே, அறிவுடைமை நெஞ்சு அடைய நினைந்து - நீ அறிவுடையனாந்தன்மையை நின் மனத்துப் பொருந்த எண்ணி , ஆறுபட்ட செஞ்சடையான் செஞ்சொல்லைச் சேர்த்தேன் - கங்கையாறு விளங்குகின்ற சிவந்த சடையையுடைய சீபரமேசுவரனது செவ்விய சொல்லை உன் உள்ளத்தே பொருத்தினேன் என்றவாறு.
பேறு - வாய்ப்பு. பெற்ற அதிகாரம் - கிருகி தத்தம் வருணத் துள்ள சரியை கிரியை யோகவான்களுக்கு ஆசிரியனாதல் உரிமையை யும், ஞானியாகிய சிவதருமிணி, நால்வர்க்கும் ஆசாரியனாதல் உரிமை யையும், ஆகமங்கள் விதித்திருக்க, அதில் மாறுபட்டு, கிருகத்தன் நைட்டிகனுக்கும் தீக்கை செய்யப்புகின், செய்வித்த ஆசிரியன் மீட்டும் பிறத்தலே அன்றி, செய்துகொண்ட சீடனும் பிறவியில் தப்பான் என்பதாம்.
ஆறுபட்ட செஞ்சடையான் செஞ்சொல்லை என்பதனுள் ஆறுபட்ட என்பதனைச் செஞ்சடைக்கு அடையாக்காது, ஆறுபட்டசெசொல், செஞ்சடையான் செஞ்சொல் எனத் தனித்தனியே கூட்டி, சீகண்ட சிவம் முதலாக உபதேசமரபில் வருகின்ற சொல் எனலும் ஆம். செஞ் சொல் - தனக்குரிய பொருளை நேரே உணர்த்தும் சொல். செஞ்சொல், ஆக்கச்சொல், குறிப்புச்சொல் என்னும் சொல் மூன்றனுள் ஒன்று.
சிறப்புப்பாயிரம்
சிவாச்சிரமத் தின்றெளிவைச் செய்தெழுப தாகப்
பவாச்சிரம் மாற்றிப் பணித்தான் - சிவாச்சிரமந்
தென்னா வடுதுறையிற் றேவாம் பலவாண
னென்னாகத் தின்பா யெழுந்து.
இ - ள் : சிவாச்சிரமம் தென் ஆவடு துறையில் - சிவாச்சிர மங்கள் நிறைந்த அழகிய திருவாவடுதுறைக்கண், தேவ அம்பல வாணன் - அதிகாரமுடையாராக எழுந்தருளியிருக்கிற தெய்வ மாகிய சீ ஞானமா நடராசப்பெருமான், என் ஆகத்து இன்பாய் எழுந்து - என்னெஞ்சில் இன்பவடிவினராக எழுந்தருளிவந்து, பவாச்சிரமம் மாற்றி - பிறவியாகிய நிலையிலிருந்து தடுத்தாட் கொண்டு, சிவாச்சிரமத்தின் தெளிவை - சிவாச்சிரமத்தெளிவு என்னும் நூலை, எழுபதாகச் செய்து - எழுபது வெண்பாக் களாக இயற்றி, பணித்தான் - இதனை யாவரும் அறிந்துய்க என்று ஆணை தந்தருளினான் என்றவாறு.
மாற்றிப் பணித்தான் என்பதனைச் செயவென்னெச்சமாக்கி, ஏதுப் பொருண்மைதந்து உரைத்தலும் ஒன்று. தேவ அம்பலவாணன் என்பது தேவாம்பலவாணன் எனத் தீர்க்கசந்தி பெற்றது.
ஞானமா நடராப்பெருமானாகிய லயசிவம், என்னுள்ளத் தெழுந் தருளி தனதுரை என துரையாக அருளிச்செய்யவந்தன இத்த எழுபது பாடலும் என்பதாம். ஆகம் - நெஞ்சம் ; என்றது மனத்தை.
ஆகத்து இன்பமாய் எழுதலாவது. பூவினிற் கந்தம். பொருந்திய வாறு போல் சீவனுக்குள்ளே சிவமணம் கமழ நிற்றல். பவாச்சிரமம் - பிறவியாகிற நிலை. சிவாச்சிரமம் - சிவனடியார்கள் எழுந்தருளியிருக் கும் ஆச்சிரமசாலைகள் . சிவாச்சிரமத்தெளிவு : சிவனையே முழுமுதற் கடவுளாகக்கொண்டு பாவிக்கும் சிவநிலையாகிய உலகதருமிணி, சிவதருமிணிகளின் இயல்பைத் தெரிவிப்பது . எழுபது - எழுபது பாடல்கள்; எண்ணாகு பெயர்.
சிவாச்சிரமத்தெளிவு முற்றிற்று.
-----------------
This file was last updated on 22 June 2021.
Feel free to send the corrections to the webmaster.